kiwkiya«-- 4 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) மறைபொருளியல் 2  மனித வசியம் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 32+304 = 336 விலை : 420/- மறைமலையம் - 4 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 336 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுந்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத் திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தை யும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டு களும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக் காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந் தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமை யூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக் கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் இதுவரை வெளியிட்டுள்ள தமிழ்மண் பதிப்பகத்தின் நூல் தொகுப்புகள் 1. பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 52 நூல்கள் 2. தொல்காப்பியம் - உரைகளுடன் 15 தொகுப்புகள் 3. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் - 30 நூல்கள் 4. கோபாலையரின் தமிழ் இலக்கணப் பேரகராதி -18 தொகுப்புகள் 5. சாமிநாத சர்மா - 31 தொகுப்புகள் 6. ந.சி.க. நூல் திரட்டு - 24 தொகுப்புகள் 7. சாத்தன்குளம் இராகவன் நூற்களஞ்சியம் - 16 நூல்கள் 8. சதாசிவப் பண்டாரத்தார் - 10 நூல்கள் 9. நா.மு.வே.நாட்டார் தமிழ் உரைகள் - 24 தொகுப்புகள் 10. செவ்விலக்கியக் கருவூலம் - 15 தொகுப்புகள் 11. தேவநேயம் - 14 தொகுப்புகள் 12. திரு.வி.க. தமிழ்க்கொடை - 26 தொகுப்புகள் 13. உரைவேந்தர் தமிழ்த்தொகை - 28 தொகுப்புகள் 14. கருணாமிருத சாகரம் - 7 தொகுப்புகள் 15. பாவேந்தம் - கெட்டிஅட்டை - 25 தொகுப்புகள் 16. புலவர் குழந்தை படைப்புகள் - 16 தொகுப்புகள் 17. கவியரசர் முடியரசன் படைப்புகள் - 13 தொகுப்புகள் 18. நாவலர் சோம சுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் - 5 தொகுப்புகள் 19. முனைவர் இராசமாணிக்கனார் நூல்கள் - 39 நூல்கள் 20. தமிழக வரலாற்று வரிசை - 12 தொகுப்புகள் 21. உவமைவழி அறநெறி விளக்கம் - 3 தொகுப்புகள் 22. முதுமொழிக் களஞ்சியம் - 5 தொகுப்புகள் 23. சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 22 தொகுப்புகள் 24. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 தொகுப்புகள் 25. அறிஞர் க. வெள்ளை வாரணனார் நூல் வரிசை - 21 தொகுப்புகள் 26. ஐம்பெருங் காப்பியங்கள் - 5 தொகுப்புகள் 27. பதினெண் கீழ்க்கணக்கு - 3 தொகுப்புகள் 28. நீதி நூல்கள் - 2 தொகுப்புகள் 29. பி. இராமநாதன் - 10 நூல்கள் 30. யாழ்ப்பாண அகராதிகள் - 2 தொகுப்புகள் 31. வெள்ளி விழாத் தமிழ்ப் பேரகராதிகள் - 3 தொகுப்புகள் 32. ந.சி. கந்தையா அகராதிகள் - 2 தொகுப்புகள் 33. முதுமுனைவர் இளங்குமரனார் தமிழ்வளம் - 40 தொகுப்புகள் 34. இளங்குமரனார் அகராதிகள் - 2 தொகுப்புகள் விரைவில் வெளிவர இருக்கும் அறிஞர்களின் நூல்கள் 1. மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை 2. வ.சுப. மாணிக்கம் 3. பெரியாரியம் (தந்தை பெரியார்) 4. தமிழர் மருத்துவக் களஞ்சியம் 5. தமிழ் - தமிழ் அகராதி பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதி யிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகச் சேர்த்து பொருள்வழிப் பிரித்து, கால நிரலில் ஒரே வீச்சில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டி களாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோஜா முத்தையா நூலகம் புலவர் கா. இளமுருகன் (மறைமலையடிகள் மன்றம், புன்சை புளியம்பட்டி) மறை. தாயுமானவர் (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: புலவர். கா. ஆறுமுகம் மணிமொழி கருப்பையா நாக. சொக்கலிங்கம் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி கோ.சித்ரா, திருமதி செல்வி, திருமதி மலர், திருமதி ஹேமலதா, திரு. ஆசம், பிராசசு இந்தியா (Process India), திருமதி கலைவாணி, திருமதி புகழ்ச்செல்வி நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்ரா மேலட்டை வடிவடைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், திராவிடன், வே. தனசேகரன், மருது தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை, எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, பிராசசு இந்தியா மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்கு பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. நூலுரை உடலின் அழகினும் உள்ளத்தின் அழகே உயரழகு என்பதை நயமுற விளக்கும் அடிகள், இருவகை அழகும் ஒருங்கே அமைந்திருத்தல், அழகு மங்கை அணிகலம் பூண்ட தொக்கும் என்கிறார். மன ஒருமைப்பாடே, `மனக் கவர்ச்சியின் அடிப்படை என்பதை, ஓவியம், இசை, புலமையர் பா என்பவை படிமான வளர்ச்சியாய் அமைதலை விளக்கி இறைமையோடு ஒன்றும் நிலைக்கு உயர்த்துகிறார். முற்றும் உணர்ந்த முனிவர் இவ்வுலகங்களையும் இவ்வுலகத்துப் பொருள்களையும் ஒரு பொருட்டாக நினையாது திருவருள் ஒளியிலேயே தமது அறிவைத் தோய்த்து அதனை நோக்கியவாறாகவே நிற்கும் உள்ள ஒருமையினும் பெரியது வேறுண்டோ? என வினவுகிறார். நினைவை ஒருவழி நிறுத்தும் நிலையை விரிய விளக்கி, குதிரைபோலவும் குரங்கு போலவும் ஒரு நிலைப்படாது சுழலும் மனத்தை ஒருவழியிலே நிலைப்பித்தல் வேண்டும் என்கிறார். ஐம்பொறிகளும் கருவிகளே. உயிருக்கு உதவியாம் பொருட்டு அமையப் பெற்றவை. இக்கருவிகளைப் பயன்படுத்தும் வகை நன்கு அறிந்தவன் அவற்றால் நலம் பெறுவான். பயன்படுத்தும் வகை தெரியாதவன் அவற்றால் நலம் பெறான். இங்ஙனம் இல்லாமல் அக்கருவிகளே ஒருவனுக்கு நன்மையைத் தருதலும் தீமையைத் தருதலும் சிறிதும் இல்லை எனத் தெளிவிக்கிறார். கண்ணின் சிறப்பை விரித்துக் கூறி, அக்கட் பார்வையை நிலையுறுத்தத் தக்க பயிற்சியை எளிமையாக விளக்குகிறார். கண்ணாடியில் வரைந்த நாரத்தம் பழத்தை நோக்க வைத்து, கடுகளவு நோக்கும் பயிற்சியை விளக்குகிறார். உற்றுப் பார்த்தல், உறுத்துப் பார்த்தல் ஆகிய இரண்டன் வேறுபாட்டை நயமாக விளக்குகிறார். காதல் மனைவியைக் கண்முன் இருக்க வைத்து, காலைத் துண்டிக்கும் சான்றையும், மக்களினும் தாழ்ந்த சில உயிரிகளும் கூடப் பிற உயிர்களை, உற்றுப் பார்க்கும் தம் கட்பார்வையின் வன்மையினால் தன் வயப்படுத்துதலையும் விரிக்கிறார். `கட்செவி எனப்படும் பாம்பு இக்கவர்ச்சித் திறத்தில் மேம்பட்டிருத்தலைப் பலப்பல சான்றுகளால் நிலைப்படுத்துகிறார். `எண்ணம் என்னும் பகுதியில் கண்ணேரில் நாம் காணும் வழிவழிக் காட்சியைக் காட்டி அடிகள் விளக்குகிறார். நீர்க்குடத்தைத் தலைமேல் சுமந்து செல்லும் ஓர் வெற்பெண் தன்தோழி மாரொடு சிரித்து விளையாடிப் பேசிக் கொண்டு கைவீசிச் சென்றாலும் அவளது எண்ணமெல்லாம் தலைமேலுள்ள நீர்க்குடத்தின் மேல் நிலைபெற்று நிற்றலைக் கூறுகிறார். மனம், அறிவு, நினைவு, உணர்வு, எண்ணம் என்பவற்றை விளக்குகிறார். எண்ணத்தை வலுப்படுத்துதலுக்கு, அறிதுயிலில் விளக்கிய மூச்சுப் பயிற்சியைக் கூறித் தெளிவிக்கிறார். கடைக்குப் பொருள் வாங்கச் செல்லும் சிறுவர்க்கு `இன்ன பொருள் வாங்கி வருக எனின், அதனை மீள மீளச் சொல்லிச் சென்று அப்பொருளை வாங்கி வருதலைக் காட்டி, உருவேற்றுதலாம் மந்திர மொழியை எளிதில் விளக்குகிறார். தொல்காப்பியர், திருவள்ளுவர் திருமூலர் வழியாக மந்திர மொழியை விளங்க வைக்கிறார். தாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உருவேற்றின் அவ்வுருவேற்றம் நிறைவேற்றமுறும் என்கிறார். மன் + திரம் = மந்திரம் : இயன்+ திரம் = இயந்திரம் ஆவது போல என்பார் பாவாணர். `வசியச் செயல்கள் எனக் கடிதம் எழுதுதல், பொருள்களைத் தூயதாகவும் ஒழுங்கு முறையிலும் வைத்தல், நேர்காணல், உரையாடல், தோற்றம், அகமும் புறமும் ஒத்தல், உள்குதல் எனப்பகுத்துக் கொண்டு சான்றுகள் காட்டிக் காட்டி விளக்குகிறார். ஒருவர் தாம் முன்னைப் பழகி இருந்த இடம் பொருள் முதலியவை கொண்டு கவர்தல், `சேர்க்கைப் பொருள் கவர்ச்சியாம். கவர்ச்சிக்கு ஏற்ற காலம் நள்ளிரவின் நடுயாமம் என்கிறார்! பிறரெல்லாம் தம்மை மறந்து உறங்கும் நேரம் அஃதாகலின் பயன்விளை காலம் அது என்கிறார். நடுயாமத்துச் செய்யும் கவர்ச்சி முறைகளைக் கூறி, மந்திர மொழிகளையும் கூறி, நல்லாசிரியன் ஒருவன்பால் பயின்று செய்தலே பெருநலம் பயக்கும் என நூலை நிறைவிக்கிறார். நூல்வழக்கும் உலகியல் வழக்கும் தம் பட்டறிவும் பயிற்சியும் விளங்கச் செய்த படைப்பு மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சியாம். இதனை ஆகா வகையில் பயன்படுத்தின் `கவர்ச்சி என்பது, `கவற்சி யாகி (கவலையாகி) விடுதலை எப்பாலும் தீதாம்! இரா. இளங்குமரன். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோஜா முத்தையா நூலகம் புலவர் கா. இளமுருகன் (மறைமலையடிகள் மன்றம், புன்சை புளியம்பட்டி) மறை. தாயுமானவர் (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: புலவர். கா. ஆறுமுகம் மணிமொழி கருப்பையா நாக. சொக்கலிங்கம் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: திருமதி வி. சித்ரா, திருமதி செல்வி, திருமதி மலர், திருமதி ஹேமலதா, திரு. ஆசம், பிராசசு இந்தியா (Process India), திருமதி கலைவாணி, திருமதி புகழ்ச்செல்வி நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்ரா மேலட்டை வடிவடைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், திராவிடன், வே. தனசேகரன், மருது தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை, எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, பிராசசு இந்தியா மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்கு பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும். மறைமலையம் தொகுப்பில் இடம்பெறாத நூல்கள் முதற்குறள் வாத நிராகரணம் (1898), துகளறு போதம் (1898), சித்தாந்த ஞானபோதம் சதமணிக் கோவை குறிப்புரை (1898), வேத சிவாகமப் பிரமாண்யம் (1900), இந்த நான்கு நூல்களும் தமிழகத்தின் பல இடங்களில் தேடியும் எங்கள் கைக்குக் கிடைக்க வில்லை. ஆதலான், மறைமலையம் தொகுப்பில் மேற்கண்ட நூல்கள் இடம் பெறவில்லை. மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி 2003 இல் பூம்புகார் பதிப்பகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப்பற்றியகுறிப்புரை... இந்நூல் கட்டுரை வடிவில் 1910ஆம் ஆண்டு ஞானசாகரம் ஐந்தாம் பதுமத்தில் ஆறாவது இதழில் தொடங்கியதாகும். திருக்குறள், திருமந்திரம், சித்தர் நூல்களில் வந்துள்ள வசிய முறைகளை உணர்தலால் தமிழ் மக்களின் வறுமைகளையும் அறியாமை நிலைகளையும் போக்க முடியுமென்று கருதினார் அடிகளார் வசியத்தின் உண்மைநிலை, நினைவை ஒருவழி நிறுத்தல், நினைவை ஒருவழி நிறுத்தும் வகை, கண், எண்ணம் எண்ணத்தை வலுப்படுத்துவன, மந்திர மொழி, வசியச் செயல்கள், சேர்க்கைப் பொருள் கவர்ச்சி, கவர்ச்சிக்கு ஏற்ற காலம்,நடு யாமத்துச் செய்யும் கவர்ச்சி முறைகள் ஆகிய உட்தலைப்பு களைக் கொண்டு இந்நூல் விளங்கு கிறது. மக்களின் உள்ளத்தைக் கவர்ந்து இழுக்கும் - ஈர்க்கும் ஓர் ஆற்றலே மனித வசியம் எனக் கூறும் அடிகளார். உள்ளத்து நிலைகள் உணர்வு நிலைகள் மனித வசியத்தின் பயன் முறைமை ஆகிய பல செய்தி களையும் குறிப்பிட்டுள்ளார். நூல் : மறைமலை அடிகளாரின் இலக்கியப் படைப்புகள் - பக்கம் : 21 ஆசிரியர் : நா. செயப்பிரகாசு பொருளடக்கம் பக்கம் 1. வசியத்தின் உண்மை நிலை 5 2. நினைவை ஒருவழி நிறுத்தல் 18 3. நினைவை ஒருவழி நிறுத்தும் வகை 32 4. கண் 41 5. எண்ணம் 56 6. எண்ணத்தை வலுப்படுத்துவன 66 7. மந்திர மொழி 89 8. வசியச் செயல்கள் 111 9. சேர்க்கைப்பொருள் கவர்ச்சி 165 10. கவர்ச்சிக்கு ஏற்ற காலம் 179 11. நடுயாமத்துச் செய்யும் கவர்ச்சி முறைகள் 184 பின்னிணைப்பு சான்றோர்கள் பார்வையில் - அடிகளார் 236 1. வசியத்தின் உண்மை நிலை மனித வசியம் என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வதாகிய ஓர் ஆற்றலை உணர்த்தும். இந்த ஆற்றலானது இயற்கையாக எல்லாரிடத்துங் காணப்படவில்லை. சிலரிடத்து மட்டுமே காணப்படுகின்றது. நல்லது. சிலரிடத்தும் மட்டும் உள்ள இந்த ஆற்றல் எதனால் உண்டாகின்றதென்றால், அவரிடத் தமைந்த அழகினால் என்று பெரும்பாலும் எல்லாரும் நினைக் கின்றார்கள். ஆனாலும் , இஃது உண்மையாகத் தோன்றவில்லை. அழகுடைய சிலர் பிறரைத் தம் வழிப்படுத்த மாட்டாமல், தம்மைக் கண்டு அவர்கள் வெறுப்படைந்து போகும்படி செய்தலையும், அழகில்லாத சிலர் பிறர் தம்மை விரும்பும்படி செய்து அவரைத் தம்மாட்டு ஈர்த்தலையும் நாம் வழக்கத்திற் காண்கின்றோ மாகையால், அழகுதான் மனித வசியத்திற்கு காரணமென்று சொல்வது பொருத்தமாகக் காணப்படவில்லை. அப்படியானால், உலகத் தாருங் கற்றறிவுடையாரும் அழகைப் பற்றிச் சிறப்பித்துப் பேசுவது ஏன் என்றால் இங்கே அழகு என்றது உள்ளத்தின் அழகே யல்லாமல், உடம்பின் அழகு மட்டும் அன்று. ஒருவருடைய உள்ளத்தின் அழகைத்தான் கற்றாரும் மற்றாரும் பாராட்டிப் பேசுவர். உடம்பின் அழகைக் கண்டும் எல்லாரும் வியந்து பேசுவதை நாம் பழக்கத்திற் பார்த்திருக்கின்றோமே எனின், உடம்பின் அழகானது பார்வைக்கு மட்டும் முதலிற் சிறிது நேரங் கவர்ச்சியை உண்டு பண்ணுமேயல்லாமல், உள்ளத்தின் அழகைப்போல் எப்போதும் அஃது இன்பத்தைத் தராது. ஒருவன் உடம்பின் அழகால் மிகச் சிறந்தவனா யிருந்தாலும், அவன் நல்ல குணமில்லாதவனாய் எந்நேரமும் பொய்யே பேசிக்கொண்டும், பிறரை ஏமாற்றிக் கொண்டுங் கள் அருந்துதல் கொலை செய்தல் திருடுதல் முதலான தீய ஒழுக்கங்களிற் பழகிக்கொண்டும் வருவனாயின் அவனைக் கண்டு யாரேனும் உவப்பார்களா? ஒரு பெண் பேரழகாற் சிறந்தவளாயிருப்பினும் மடமை நிரம்பினவளாய்ச் செவ்வையாகப் பேசவும் தெரியாமல், அழுக்காடை யுடுத்து அருவருக்கத்தக்க செய்கையும் உடையவளாயிருந்தால் அவளைக் கண்டு யாரேனும் மனம் விரும்புவார்களா? ஆதலால், உடம்பின் அழகே எல்லார்க்கும் விருப்பத்தை உண்டுபண்ணும் என்பது எங்ஙனம் பொருந்தும்? உடம்பின் அழகு இல்லாத வராயிருந்தும் நற்குணமுஞ் சொல்நயமுந் தூயநடையும் உள்ள ஒருவரை எல்லாரும் விரும்புதல் ஒவ்வொரு நாளும் பழக்கத்திற் காணலாமன்றோ? அப்படியானால், உடம்பின் அழகிலே நம் எல்லார்க்கும் இயற்கையாகவே விருப்பமுண்டாவது ஏன் என்று வினவின், முதலிற் சிறிது நேரமேனும் பார்ப்பவர்களுக்குக் கவர்ச்சியை உண்டுபண்ணுவதுபற்றி உடம்பழகிலே நமக்கு விருப்பமுண்டாகின்றது. என்றாலும் உடம்பழகு மட்டுமே எப்போதும் நிலையாக மக்களைக் கவரமாட்டாது. உள்ள அழகு மட்டுமே அவர்களை எப்போதுந் தன்மாட்டு இழுக்கும் ஆற்றலுடையதாயிருக்கின்றது. அவ் வாறாயின், உடம்பினழகு வேண்டுவ தில்லையோவென்றால், உள்ளத்தின் அழகுடை யார்க்கு உடம்பினழகும் அமைந்திருந்தால், அஃது அழகுள்ள மங்கைக்கு அணிந்த மணிக்கலங்கள் போற் சிறக்குமே யல்லாமல், மனநன்மையில்லாதார்க்குள்ள உடலழகானது, அழகற்ற பெண்ணுக்கு மாட்டிய அணிகலன்கள் போற் பயனின்றி மங்குமென்பது எவரும் அறிந்ததேயாம். இனி, உள்ள அழகு என்பது யாதோவென்றாற் கூறுகின்றோம். உள்ளம் என்பது அறியும் அறிவுடைய உயிரு மாகும். அறிவுடைய உயிர் ஒன்றை அறிதலும், ஒன்றை அறியு மிடத்து அதன் அறிவு அழகுற்றும் விளங்கும், அழகின்றியுந் துலங்கும். ஒன்றை விரும்புமிடத்தும் அதன் விருப்பம் அழகுடனுந் துலங்கும் அழகின்றியுங் கலங்கும். ஒன்றைச் செய்யுமிடத்தும் அதன் செய்கை அழகாயும் இருக்கும். அழகின்றியுங் கருக்கும். இப்படிப்பட்ட இயற்கை எல்லா உயிர்களிடத்துங் காணப் பட்டாலும், மக்களாய்ப் பிறந்த உயிர்களிடத்து மட்டுமே அது மிகவும் நன்றாய்ப் புலப்பட்டுத் தோன்றுகின்றது. இன்னும், இந்த மக்கட் பிறவியிலேஅறிவும் விருப்பமுஞ் செய்கையும் அழகுடன் தோன்றுவது மிகுதியோ அழகின்றித் தோன்றுவது மிகுதியோ என்று நாஞ் சிறிது ஆராய்ந்து பார்ப்போமாயின், அவை அழகின்றித் தோன்றுதலே மிகுதியாய்க் காணப்படுகின்றது. அழகான அறிவுடை யாரையும், அழகான விருப்ப முடை யாரையும், அழகான செய்கை யுடையாரையுங் காண்பது அரிதினும் அரிதாயிருக்கின்றது. மக்களிற் பெரும்பாலார் அழகல்லா அறிவு விழைவு தொழில்களையே மிகுதியும் உடையராய் இருக்கின்றனர். இப்படி எல்லாரும் அழகல்லாத வற்றையே அறிந்தும், விரும்பியுஞ், செய்தும் வருகின்றாராயினும், அழகான அறிவு விழைவு செயல்களைப் பிறரிடங் காணும்போது அவர்கள் அவற்றிற்காக அவர்களிடம் மிகுந்த நன்கு மதிப்பும் விருப்பமும் வைத்து அவர்களுக்கு அடங்கி நடக்கின்றார்கள். இஃதென்ன புதுமையென்றால், மாந்தர் தம்மைப்போலவே நடக்கும் பிறரைக் கண்டால் அவர்களிடத்துச் சிறந்ததொன்றும் இல்லாமை பற்றி அவர்களைக் கருதிப்பாராமற் போகின்றனர். ஒவ்வொருவரும் அழகல்லாத வற்றையே செய்து வருதலால், எல்லார்க்கும் பொதுவான அச்செய்கையின் காரணத்தாலே ஒருவர் மற்றொருவரை உன்னிப்பதற்கு இடமில்லாமற் போகின்றது. இதனை ஒரு நிகழ்ச்சியில் வைத்து விளக்கிக் காட்டுகின்றோம். ஒரு நகரத்தின் கடைத்தெருவிலே அந் நகரத்திலுள்ள குடிமக்கள் போய்த் தத்தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுக்கொண்டு போகும்போது ஒருவரையொருவர் கருதிப் பாராமற் செல்கின்றனர். ஏன் அங்ஙனம் அவர்கள் தம்மிலே ஒருவரை மற்றொருவர் உன்னியாமற் செல்கின்றனர்? எல்லாரும் ஒரே வகைப்பட்ட நடையுடை பழக்கம் உடையராக இருத்தலால், ஒருவரையொருவர் உன்னிப்பதற்கு அங்கே இடமில்லாமற் போகின்றது. அவ்வாறு அவர்கள் போய்க்கொண்டிருக்கையில் அத் தெருவிற் சடுதியிலே சீனதேசத்து மகனார் ஒருவர் வரக் கண்டால், ஒருவரையொருவர் பாராமற் சென்ற அந் நகரத்து மக்களெல்லாம் அங்கங்கே நின்று அவரை உன்னித்து நின்று பார்ப்பதைக் கண்டிருக்கின்றோம். அன்றோ? ஏன்? அச் சீனக்காரரின் வடிவமும் நடையுடை பழக்கங்களுந் தம்மின் வேறான பான்மையுடன் காணப்படுதலினாலேயே அவர்கள் அவரைக் கருதிப் பார்க்கின்றனர். இதுபோலவே, மக்களில் ஒவ்வொருவருந் தம்மைப்போல் இருப்பவர்களை உன்னி யாமலும், நன்கு மதியாமலும் ஒழுகுவர். தம்மைப்போலன்றி அழகிய அறிவு செயல் விழைவுகள் உடையாரைக்காணும் வழி அவர்கள் தம்மினும் வேறான தன்மையுள்ளவராய் இருப்பது உணர்ந்து, அவர்களிடத்து அச்சமும் நன்கு மதிப்பும் உடையராய் மக்கள் எல்லாரும் அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி நடக்கின்றனர். அழகிய உள்ளம் உடையாரிடத்து மக்கள் அச்சமும் நன்கு மதிப்பும் மட்டும் வைத்து நடப்பார்களென்று நினைக்க வேண்டாம். அவர்களோடு பழகப்பழக அவர்களின் அருமைக் குணங்களை நன்குணர்ந்து அவர்களிடத்து நெகிழாத பேரன்பும் உடையவர்களாக நடப்பார்கள். ஆகவே பிறருள்ளத்தைக் கவரவேண்டுமென எண்ணுபவர்கள், பிறரைவிடத் தம்மிடத்து உயர்குணங்கள் சிறப்புற்று விளங்கும்படி செய்து கொள்வார் களானால், அதுகண்ட பிறர் அவரது அருமை யுணர்ந்து அவர்க்கு அடங்கி யொடுங்கி நடப்பர். அப்படியானால், தம்மிடத்து உயர்குணங்களை விளக்குதல்தான் எவ்வாறு என்றாற் பிறரைப்போல் அறிவு விழைவு தொழில்களை அழகல்லா வழிகளில் நுழைய விடாது அழகுமிக்கவற்றில் மட்டுமே புகுத்தல் வேண்டும். இனி, ஒன்றை அறியுமிடத்து மக்கள் அறிவு தீய வழியிலுஞ் செல்கின்றது, நல்வழியிலுஞ் செல்கின்றது. நல்ல நூல்கள் பல இருப்பவும் அவற்றைக்கல்லாமற், பொய் கொலை களவு காமங்கட்குடி முதலியவற்றை மிகுத்துப்பேசுந் தீய நூல்களைக் கற்பதிலேயே பலர்க்கும் அறிவு செல்கின்றது. பிறர்க்குத் தீங்கின்றிப் பொருள்தேடும் நல்ல வழிகள் பல இருப்பவும் அவற்றைவிடுத்து, எல்லார்க்குந் தீமையே தரும் பொல்லாத சூழ்ச்சிகளாற் பொருள் தொகுப்பதற்கே எத்தனை பேர் அறிவைச் செலுத்திப் பாடுபடுகின்றார்கள்! பொய்கள் பற்பல சொலியுங், கொலைகள் பல செய்துங், களவாடியும், பெண்களைக் கூட்டிவிட்டுங், கள்ளால் மயக்கம் ஏற்றியும் பிறர் பொருளைக் கவர்ந்துகொண்ட ஒருவர் எத்தனை நாள் அப் பொருளை வைத்துப் பயன் பெறுவர்? குற்றங்கள் பலவுஞ் செய்து பொருள் ஈட்டியவர் அப்பொருளைக் காணும் போதெல்லாந் தாஞ்செய்த குற்றங்களை நினைத்து வருந்துவ ரல்லரோ? அல்லது இறக்குங் காலத்தேனுந் தாந்தொகுத்த பொருளில் ஒரு தினையளவாவது அவர் எடுத்துக் கொண்டு போகவல்ல ராவரா? காதற்ற ஊசியும் வாராதுகாண் நின்கடைவழிக்கே என்ற பட்டினத்து அடிகள் திருமொழியின் உண்மையைச் சிறிதாயினும் நினைத்துப் பாருங்கள். மலையளவாகக் குவித்த பொருளும் ஒருவனிடத்தே மட்டும் நிலையாக இராது. அஃது இன்றைக்கு ஒருவன் கையிலும் நாளைக்குப் பிறனொருவன் கையிலுமாக இங்ஙனம் மாறிமாறிக் கொண்டே போகும். மக்களுக்குப் பொருள் ஈட்டும் முயற்சியில் அறிவு செல்வதுபோல, மற்றவற்றில் அறிவு செல்வதில்லை. உயிரோடிருக்குங்காறும் பொருளினாற் பெறும் பயன்கள் பலவாயிருத்தலால், அவ்வளவு பயன்றருவதான பொருளை ஈட்டுவது குற்றமென்று யாஞ் சொல்கின்றிலேம். பிறர்க்குத் தீங்கில்லா வழிகளில் அதனைத் திரட்டுவதுதான் இப் பிறவிக்கும் மறுபிறவிக்கும் நன்மையைத் தருமாதலால், அவ்வாறு செய்ய வேண்டுமென்பதே நமது கருத்தாகும். மேலும், இந்த மக்கட் பிறவி எடுத்தது எதற்காக என்று சிறிதாயினும் எண்ணிப் பார்த்து, இப் பிறவியைப் பயன்படுத்துதற்கான முயற்சிகளைத் தேடாமற், பொழுது விடிந்து அந்திபடும் வரையிலும் பணமோபணம் என்று அலைவதைக் காட்டினும் வேறு இழிந்தது யாது இருக்கின்றது? மேலும், ஒருவன் தனக்கு இன்றியமையாத குறைகளை நீக்கும்பொருட்டு வேண்டிய அளவுக்குப் பொருள் தேடவேண்டுமேயல்லாமற் பொருளையே பெரிதா எண்ணி அலைவது சிறிதுந் தக்கதன்று. உண்ணச் சோறும் உடுக்கக் கூறையும், இருக்க வீடும், மனைவி மக்களைப் போற்றத்தக்க வருவாயும் இருந்தாற் போது மன்றோ? இவ்வளவு வசதிகளையும் பெறுவதற்குப் போதுமான பொருள் ஒருவன் ஒரு பகலிற் பாதிநாள் நல்வழியே முயன்றால் இனிது பெற்று இன்புறலாம். போதுமான அளவுக்குமேற் பொருளைத் தேடி வைத்து, அதனைக் காப்பாற்றுதற்குப் படும் வருத்தஞ் சிறிதன்று. மேலும், இப்பொருளின் தேட்டத்தைக் கண்டு மனைவி மக்கள் மிகச் செருக்குற்று, எமக்கு இத்தனை பொருள் இருத்தலின் எமக்கு யாது குறை? எமக்கு யார் நிகராவர்? என்று நினைத்து, நற்குணங்களின்றிப், பலரும் வருந்த ஒழுகிக் கடைசியில் அப்பொருளையும் அழித்துச் சோம்பேறிகளாய் அலைந்து துன்புற்றிருப்பார்கள். ஆகையால், அளவுக்குமேற் பொருள் தேடித் தொகுப்பது, தொகுப்பானுக்குப் பலவகைத் துன்பங்களைத் தருவதேயன்றியும், அவன் மனைவி மக்கள் முதலாயினாரையும், நற்குண நற்செய்கைகளில் மேம்பட ஒட்டாமற் றடைசெய்து அழித்துவிடும். இவ்வியல்புகளைப் பொது மக்கள் சிறிதும் நினைந்து பாராராயினும் மனிதவசியத்தினை விரும்பும் மேலோர் இவற்றை நன்கு அறிந்து, தமது அறிவைப் பெரும்பாலும் பேரின்பப் பொருள் தேடும் அழகிய முயற்சியிலே புகுத்தல் வேண்டும். பேரின்பப் பொருளிலே கருத்தை வைத்து அதனையே பெறுதற்கு நாட்டங் கொண்டிருப்பவனுக்குச் சிற்றின்பப் பொருள் அவன் வேண்டுங் காலத்திலெல்லாந் தானாகவே வரும். பொருளை ஒரு பொருட்டாகக் கருதாதவனுக்குப் பொருள் தானே வந்து சேர்தலும், பொருளையே நினைவில் வைத்திருப்பவனுக்கு அஃது அவனிடம் வாராமற் போதலும் யாம் பழக்கத்தில் அறிந் திருக்கின்றேம். அஃதெப்படி யென்றாற் பொருளிலே நோக்கம் வைத்திருப்பவனோடு பழகுகின்றவர்கள், அவனுடைய மனப்போக்கைத் தெரிந்து கொண்டவுடனே, இவன் பணந் தொகுப்பதிலேயே நாட்டமாயிருக்கின்றானாதலால் இவன் நமது பணத்தை எங்கே ஏமாற்றிக் கைப்பற்றுவனோ என்று அஞ்சி அவனைவிட்டு அகலுவர்; இப்படியே பலரும் அவனை விட்டு அகன்றால், அவன் பிறருடைய உதவியுந் துணையும் இன்றித் தானாகவே தான் நினைத்தபடி பொருள் ஈட்டக் கூடாமல் வறியனாய்ப் போவன். இனிப் பொருளைப் பொருட் படுத்தாதவன் இவன் என்று பழக்கத்தினால் மற்றொருவனை அவர்கள் தெரிந்த பிறகு , இவன் பொருளை ஒரு பொருட்டாக எண்ணாதவனாதலால், நாம் எத்தனை கோடி பொன்னை இவனிடம் வைப்பினும் இவன் நம்மை ஏமாற்றி அவற்றைக் கைப்பற்றமாட்டான் என்று பலரும் உறுதி கொண்டு அவனைத் துணையாக்கித் தம் வருவாயை மிகுதிப் படுத்திக் கொள்வதுடன், துணைநின்ற அவனுக்கும் வேண்டிய பொருள் தந்து அவனை வளம்படுத்துவர். ஆகவே, பொருளைப் பொருள் பண்ணாதவனுக்குப் பொருள் தானே வருதல் திண்ணமாகும் என்றறிக. மனிதவசியத்தினை விரும்புகின்றவர் பொருள் திரட்டும் அழகல்லா வழியில் அறிவைப் போகவிடாமற், பேரின்பப் பொருள்தேடும் அழகிய நெறியின்கண் அதனைப் புகுவித்தலே மிகவும் வேண்டற் பாலதாம். நிலையில்லாத பொருள்களைப் பற்றி விரித்துக் கூறும் பொய்ந்நூல்களை அறிவதனால் அழகிய உள்ளமுடையவர்களுக்கும் அறிவு மலினம் அடையும் ஆதலால், நிலையான பேரின்பப் பொருளைச் சொல்லும் உண்மை நூல்களை இடைவிடாது கற்றுவருதலே அறிவு விளக்கம் அடைதற்கு எளிதான வழியாகுமென்க. இனி, ஒன்றை விரும்புமிடத்தும் மக்களது உணர்வு தீய வழியிலுஞ் செல்கின்றது, நல்ல வழியிலுஞ் செல்கின்றது. தீயவழியிற் செல்கின்ற விருப்பமானது பற்றுதலுடனே கூடி நிகழும், நல்ல வழியிற் செல்கின்ற விருப்பமோ பற்று தலின்றியே நிகழும் முழு நீலமணிகளுஞ் சிவப்பும் வைரமும் பதித்துச் செய்த அழகிய பொற்கிண்ணம் ஒன்றைச் செல்வன் ஒருவன் வைத்திருக்கக் கண்ட அவன் நேசன் அதன் அழகை மிகவும் பாராட்டி வியப்பதுடன் போகாமல், அதனைத் தான் கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தால், அப்படி அவன் நினைப்பது பற்றுதலுடன் கூடிய விருப்பமாகையால் அது தீய விருப்பமாய் முடியும். அழகிய அப்பொருளைக் கண்டு வியந்து பாராட்டுவது குற்றமன்று. அதனைத் தான் எப்படியாவது கைப்பற்றிக்கொள்ள வேண்டுமென்று எண்ணுவதுதான் குற்றமாகும். மற்றொரு நண்பன் அக் கிண்ணத்தைக் கண்டு மிகமகிழ்ந்து வியந்தானாயினும் அவன் அதன்மேற் சிறிதும் அவா வைத்திலன். ஆகவே, இவனது விருப்பஞ் சிறிதும் பற்றின்றி நிகழ்ந்தமையால் இது மிகவும் நல்லதென்று சொல்லப் படுவதாகும். இவ்வாறே உலகத்திலுள்ள அழகிய பொருள் எதனையுந் தான் கண்டு விரும்பி மகிழலாமே யல்லாது. அதன்மேற் பற்று வைத்து ஒழுகுதல் சிறிதும் நன்மை தராது. பொருள்கள் மேற் பற்று வைக்கக் கவலையும் மனத் துயரமும் வந்து வந்து வருத்தும். பொற் கிண்ணத்தின்மேல் பற்று வைத்தவனுக்கு அஃது அவன் கைக்கு எட்டாமையால் அளவிறந்த துயரமும் மனக்கவலையும் தருகின்றன. அதன்மேற் பற்றுவையாதவனுக்கோ அது மகிழ்ச்சியைத் தருமேயல்லாமற் சிறிதுந் துயரத்தைத் தராது. இங்ஙனமே மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் முதலிய எல்லாரிடத்தும் விருப்பமும் அன்பும் மேற்கொண்டு அவர்கட்கு வேண்டுவன செய்து ஒழுகுதல் ஒருவனுக்குக் கடமையே யல்லாமல், அவர்களைத் தனக்கே உரியவர்களாகக் கொண்டு பற்றுவைத்து நடத்தல் சிறிதும் பொருந்தாது. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுந் தத்தங் கடமைகளை வழுவாமற் செய்து, அறியாமையினையுந் துன்பத்தினையும் ஒழித்துப் பேரின்பத்தைப் பெறுதற்கு வந்திருக்கின்றன. இவ்வெல்லா உயிர்களையும் உலகத்தையும் உலகத்துப் பொருள்களையும் முற்றும் உடையவர் கடவுள் ஒருவரே. அவருக்கு உரிமையான இவ்வுயிர்களிடத்தும் பொருள்களிடத்தும் அன்பு வைத்து ஒழுகுதல் இனிது. பற்று வைத்து ஒழுகுதல் தீது. தம்முடைய அல்லாதவற்றைத் தம்முடையன என்று நினைத்துப் பற்று வைத்தலினாலன்றோ மக்கள் சொல்லற்கரிய துன்பக் கடலிலே கிடந்து உழல்கின்றனர்! உள்ள மட்டும் உரிய கடமைகளைச் செய்து அவரவர் தாந்தாம் வேறு வேறு செல்லுதற்குரிய வழிகளிற் பிரிந்து போகும்போது, பற்றில்லாதவர்களுக்கு எவ்வகைத் துன்பமும் வருவதில்லை. வழிப் போக்கர்கள் ஒரு பெரும் பாட்டையில் ஒன்று கூடிச் செல்லும்போது ஒருவரோடொருவர் அளவளாவி மிக மகிழ்வராயினும், அவர்கள் தனித்தனியே பிரிந்து வெவ்வேறு வழிகளிற் செல்லுங்காற் சிறிதும் பற்றின்றிப் போவதுபோல, இவ்வுலகமென்னும் பெரும்பாட்டையில் வந்த வழிப்போக்கர் களான நாம் நமக்குரிய கடமைகளை மகிழ்ந்து நிறைவேற்றிப் பற்றின்றி இருக்க வேண்டுமேயன்றோ? ஆனால் உலகத்திலிருக் கின்ற மக்கள் அப்படி நடக்கின்றார்களாவென்றால், ஆ! சிறிதும் அவர்கள் இவ்வுயர்வழியிற் செல்கின்றாரில்லையே! இஃது என் வீடு என்கின்றார்கள், என் நிலம் என்கின்றார்கள், பிறன் என் வீட்டுத் திண்ணையிலும் இருக்க இசையேன் என்கின்றனர்! என் நிலத்திற் பிறன் நடக்கவும் உடன்படேன் என்கின்றனர்! ஆ ! இவர்கள் வீடாயின், இவர்கள் நிலமாயின், இவர்களே என்றும் அவற்றிற்கு உரியவர்களாக இருக்க வேண்டுமன்றோ? இவர்கள் அவற்றிற்கு உரியவர்களாயது எத்தனை நாள்! எத்தனை திங்கள்! அவர்கள் எமது என்று சொல்லிய வாய் மூடுவதற்குள்ளும் இறந்து போகக் கண்டோமே! உயிர் இருந்தும் உணர்விழந்து போகவுங் கண்டோமே! என் மனைவி, என் மக்கள் என்று உரிமை பாராட்டினவர்கள் அவர் தம்மையிழந்து, அவருடம்பைப் பிறன் கையிற் கொடுத்துச் சுடுவிக்கவுங் கண்டோமே! அந்தோ! புல்லியரான மக்களெண்ணம் எவ்வளவு பிழைபட்ட தாயிருக்கின்றது! அவரது உரிமை எவ்வளவு நிலையற்ற தாயிருக்கின்றது! அவர் தம்மை உயர்த்திப்பேசும் உயர்ச்சி எவ்வளவு மாயமாயிருக்கின்றது! இவ்வியல்பினரான எளிய மக்கள், அத்தன்மையரான மாயவாழ்க்கை யுடையார், பிழைபட்ட உணர்ச்சி யுடையார் ஒருவரையொருவர் தம்மாட்டு ஈர்த்தல் எப்படி? சிறிதும் பற்றில்லாத விருப்பமுடையரான பெரியோரன்றோ மற்றையோரையெல்லாம் தம்மாட்டு ஈர்த்து நடப்பிக்க வல்லராவர்? பற்றுடையவர்களைக் கண்டால் உலகத்தாரும் வெறுக்கின்றனர். பற்றில்லாதவர்களைக் கண்டால் எல்லாரும் அவரை உவக்கின்றனர். பொருள்களிற் பற்றுடைய உலகத்தாரே பற்றுள்ளவர்களைக் கண்டு அருவருக்கின்றன ரென்றாற் பற்றுவைத் தொழுகல் தீது என்பதனை யாம் சொல்லவும் வேண்டுமோ! அது நிற்க. இனி, ஒன்றைச் செய்யுமிடத்தும் மக்களறிவு தீய வழியிலுஞ் செல்கின்றது, நல்ல வழியிலுஞ் செல்கின்றது. தீய வழியிற் செல்வது மிகுதியோ நல்ல வழியிற் செல்வது மிகுதியோ என்று பகுத்துப் பார்த்தாற், பெரும்பாலும் மாந்தரின் செயல் களெல்லாந் தீயநெறிக் கண்ணேதான் முனைத்துப் போகின்றன. பாருங்கள்! ஒருவன் நாள் முழுதும் வருத்தி உழைத்துக் கூலியாகப் பெற்ற நான்கு பணத்தில் மூன்று பணத்தைக் கள்ளுக்கடையிற் கொடுத்துக் கள்ளை வாங்கிப் பருகி அறிவு திரிந்து வீட்டிற்போய் மனைவி மக்களுடன் கலகம் விளைத்து, அவர்கள் மிச்சமான ஒரு பணத்தைக் கொண்டு ஆக்கிய உணவையுந் தானே உண்டுவிட்டு அவர்களைப் பசியிலும் பட்டினியிலும் வருந்த விட்டுப் போகின்றான். ஒருவன் தான் தேடும் பொருளில் முக்காலே மூன்று வீசம் பங்கை வேசிமார் வீட்டிற் கொண்டு போய்ச் செலவிட்டு மனைவி மக்களைத் தெருவிற்றியங்க விட்டு நோய்கொண்டு வறுமைப்பட்டு இறக்கின்றான். ஒருவன் சூதாடிப் பொழுதையும் பொருளையும் போக்குகின்றான். ஒருவன்பிறரை ஏமாற்றிப் பொருள் ஈட்டிக், குதிரைவண்டி பகட்டுப் பேச்சு ஆரவார ஒப்பனை மேற்கொண்டு திரிகின்றான். ஒருவன் திருடி வாழ முயல்கின்றான். ஒருவன் கொலை புரிந்து காலங்கழிக்க விரும்புகின்றான். ஒருவன் பொய்ச் சொற்களே பேசி நாளைக் கடத்துகின்றான். ஒருவன் கல்வி கற்றும், அக் கல்வி யாலாய பெரும் பயனைப் பெறாமற் செல்வமுடையார்பாற் சென்று அவரிடத்து இல்லாத குணங்களை எடுத்துச் சொல்லிப் பாட்டுப் பாடி பொருள் பெற்று வயிறு கழுவுகின்றான். ஒருவன் பொருளுடையார் நேசம் பெறுவதற்காக அவர் வீட்டுத் தலைக்கடை நாய்போல் அவரிடங் காத்திருந்து, அவர் விரும்பும் வண்ணம் இனிக்கப் பேசி வாணாளை வீணாளாக்குகின்றான். ஒருவன் நாடகசாலைக்குப் போய் மகிழ்ச்சியாய்ப் பொழுது கழித்தலையே செய்கின்றான். ஒருவன் பலரொடு பலவூர்க்குஞ் சென்று உண்டாட்டிற் காலங்கழிக்கின்றான். இன்னும் ஆடவன் தன் வாணாளிற் புரியுந் தீய செய்கைகளோ அளவிறந்தன. தமது நெற்றித் தண்ணீர் நிலத்தில் விழ நல் வழியில் வருந்தித் தேடிய பொருளைப் பகுத்து இரப்போர்க்கு மனங் கசிந்து கொடுத்துத் தாமுந் துய்த்து வாழ்வோர் உலகில் மிகச் சிலரினுஞ் சிலரே. மேலும், இக்காலத்திற் புதிய நாகரிகத்தைப் பின்பற்றினவர்களிற் பெரும்பாலாரும், வேறு மொழியைப் பயின்றவர்களும் மன அடக்கஞ் சிறிதும் இன்றி அறிவையும் ஒழுக்கத்தையும் வளரச் செய்யாமலும், ஏழை எளியவர் களுக்குங் கூன், குருடு, நொண்டி, சப்பாணி முதலான செயலற்றவர்களுக்கும் எள்ளளவேனும் உதவி செய்யாமலும், நெஞ்சம் பாறைபட்டுச் செய்யும் பயனற்ற செயல்களும் ஆரவாரங்களுந் தீமைகளுஞ் சொல்லப் புகுந்தால் நம் சொல்லளவில் அடங்கா. ஆ! என்னைப்போலவே இங்கே பிறந்த இவன் கூனனாயிருக்கின்றான்; கண் குருடாயிருக்கின்றான். யானோ கண் முதலான கருவிகளெல்லாம் முற்றும் பொருந்தப் பெற்றிருக்கின்றேன். ஆகவே, கண்ணில்லாத இவனுக்கு கண்ணுடை யனாகிய யான் உதவி செய்யும் நிலையில் வைக்கப் பட்டிருத்தலால், இவனுக்குத் துன்பம் உண்டாகா வண்ணம் யான் இவனைப் பாதுகாத்தல் வேண்டும். இவனோ கைகால்கள் இல்லாத முடவனாயிருக்கின்றான். யானோ கைகால்கள் முதலிய உறுப்புகள் முற்றும் உடையனாயிருக்கின்றேன். ஆகவே, யான் வருந்திப் பாடுபட்டு இவனைப் பாதுகாக்கக் கடவேன். இவனோ உடம்பில் வலியற்றவன், இவனோ தள்ளாத கிழவன், இவர்களோ தாய் தந்தையர் அற்ற ஏழைப் பிள்ளைகள், இவளோ கணவனை யிழந்த காரிகை; யானோ உடம்பில் வலிமையுடையேன், இளம் பருவத்தினன், உறவினர் துணையுடையேன்; ஆகவே, யான் வருந்தித் தேடிய பொருளால் இவர் தம்மை முதலில் ஊட்டிப் பிறகு யான் உண்ணக் கடவேன். என்று எண்ணி அதன்படியே செய்வார் நில உலகத்தில் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? எண்ணிக்கைக்கும் அகப்படாமற் பெருகியிருக்கின்ற மக்கட் பரப்பில் இத்தன்மையோர் சிலரேயாயினும் எண்ணிச் சொல்வதற்கு இடமில்லாமற் போகின்றதென்றால், மக்கள் வாழ்க்கை எவ்வளவு இழிந்த நிலைமையில் இருக்கின்ற தென்பதனை வேறு எடுத்துப் பேசுதலும் வேண்டுமோ? தம்மிடத்துள்ள வியக்கத்தக்க ஆற்றல்களையெல்லாம் மக்கள் இங்ஙனம் வீண் செலவு செய்துவிடுவாரானால் அவர் மனக்கவர்ச்சி கைவரப்பெறுதல் எங்ஙனங் கைகூடும்? இக்காலத்தில் எங்கும் பரவிவருங் கல்வியும், அக் கல்வியினுதவியாற்பெறும் நிலைகளும், அந்நிலைகளால் உண்டாகுந் தலைமையும் மக்கட் பிறப்பின் நோக்கத்தை மறக்கச் செய்து, பேர் அவாவிலுஞ் செருக்கிலுந் தம்மையுடையாரைக் கொண்டு போய் அழுத்தித் தீயவொழுக்கங்களான புதைசேற்றில் நுழைந்து உயிர்மாளச் செய்கின்றன. புதுக்கல்வி கற்றவர்கள் உலகமே பொருள் என்கிறார்கள். ஐம்பூதங்களைத் தவிர வேறு உயிரும் இல்லை, கடவுளும் இல்லை என்கின்றார்கள். ஆற்றைக் கடந்து வந்த அறிவில் குருவின் மாணவரைப்போல், தாம் எல்லாங் கற்றும் அங்ஙனங் கற்றவருந் தம்மையே இல்லாத வெறும் பாழ் என்கின்றார்கள். நின் தாய் தந்தையார் யார் என்றால் அவரை யான் அறியேன் என்று சொல்லும் அகதிப் பிள்ளையைப் போல், இக்காலத்துப் புதுக்கலை ஞானிகளுந் தம்மையும் உலகத்தையும் ஈன்ற கடவுளான அம்மையப்பரையும் இல்லையென்று சொல்லி வழக்கிடுகின்றார்கள். தம்மையும் இழந்து, தாமிருக்கும் உடலையும் உலகையும் ஒவ்வோர் இமைப்பொழுதும் போற்றிவரும் அம்மையப்பரையும் இழந்து மண்ணேதாம் என்று சொல்லி வெறும் மண்ணாய்ப் போகும் புதுக்கலை ஞானிகளின் கல்வி ஆ! எவ்வளவு அழகிது! தாம் அலவலுந் தலைமையும் பெற்றது தம்மோடொத்த மாந்தர்க்கு உதவி செய்தற்பொருட்டே என்று உணராமல், அவ்வலுவலையுந் தலைமையையுமே துணையாகக் கொண்டு மன்னுயிர்க்கெல்லாம் இன்னல் இழைத்து அறக்கொடியராய் வாழ்வதிலுந் தம் உயிரை விட்டு நல்லரெனப்போதல் நன்றன்றோ? தனது தலைமையைச் செலுத்தி ஏழை எளியவர்களை வருத்தி அவர் பொருளைப் பறிக்கும் ஓ கொடிய மகனே! உன் அவா எஞ்ஞான்று தணியப் போகின்றது? நீ முற்பிறவியில் எத்தனை ஏழைக் குடும்பங்களைப் பாழாக்கி எவ்வளவு பொருளைக் குவித்து வைத்தனையோ, அப்பொருள் எல்லாம் இப்பிறவியில் வந்தனவா? இல்லையே, அங்ஙனம் வராதது தெரிந்தும் உன் அவாமட்டும் ஒழிந்திலதே! இப்பிறவியிலும் உன்னைப் போலவே பலரை வருத்திப் பொருள் பறித்தவர் அப்பொருளையும் இங்கே விட்டுத் தம்முடலையும் இங்கே விட்டுச் செத்துச் சாம்பராகக் கண்டும், நீ மட்டும் என்றும் நிலையா யிருப்பவன்போற் பின்னும் பொருள் தேடுதலிற் பேரவாக் கொண்டு உழல்கின்றனையே! நின்போற் றீது செய்யா எளிய விலங்குகள் நின்னினுஞ் சிறந்தனவல்லவோ! சிறிது நினைத்துப் பார். விலங்குகளினும் மேம்பட்ட பகுத்தறிவு நினக்கு வாய்த்தும் நீ அதனால் அடைந்த பயன் யாது? மனிதவசியம் என்னும் இவ்வரிய நூலின் பெயரைக் கேட்டவுடனே ஓ! பொல்லாத மகனே, நீ மற்ற ஞானத் துறைகளில் எல்லாம் வெறுப் படைந்திருந்தும், இதனை மட்டும் ஏன் உடனே பயில விரும்பு கின்றாய்? ஏன் விரும்புகின்றாய்? இந்த நூலைப் படித்து எல்லாரையும் உன் வழிப் படுத்திக்கொண்டு, அவர்களுடைய பொருள்களையெல்லாம் பறித்துக்கொள்ளலாம் என்னும் அவா மிகுதியனாலன்றோ? ஆசைக்கோர் அளவில்லை என்னுந் தாயுமானச் செல்வரின் அறவுரையை எண்ணிப் பார்க்கையில் உனது பேரவாவுக்கு ஒரு வரம்பில்லையென்று தோன்று கின்றதே! மனிதவசியம் என்னும் இந்தப் புதிய நூலில் மக்கள் மனத்தைக் கவர்தற்கு எளியவான பல அருமையான முறைகளை எடுத்துச் சொல்லப்போகின்றோம். ஓ பொல்லா மகனே! உன் பொருட்டு இவற்றைச் சொல்லப்போகின்றோம் என்று நீ மனப்பால் குடித்து மகிழாதே. தீயனுங் கொடியனுமான நீ அந்த முறைகளைக் கையாண்டு மக்களை வசஞ்செய்து ஏமாற்ற முந்துவையானால் நீ உடனே அழிந்து போதல் திண்ணம். அம்முறைகள் உனக்குச் சிறிதும் பயன்படாமற் போகக்கடவன. மற்று நற்குண நற்செய்கை வாய்ந்த நல்லோர் அம் முறைகளைக் கையாண்டு உலகில் உள்ள எல்லா உயிர்கட்கும் நன்மைகள் பலவுஞ் செய்வராதலால், அவர்களுக்குப் பயன்படுமென்று கருதியே அவற்றை இனிது விளக்கப் புகுகின்றோம் என்று அறிந்துகொள்க. நற்குண நற்செய்கை வாய்ந்தோர் தாமாகவே உலகை வசஞ் செய்ய வல்லவராவர். ஆகையால் அவர்கட்கு வசியமுறைகளை எடுத்துக் காட்டல் பயன் இல்லையே யென்றாலும், அப்படியன்று நாற்பக்கங்களும் மலையாற் சூழப்பட்ட காட்டின் நடுவிலே உள்ள ஒரு பெரிய ஏரியின்கண் அமிழ்தம் போன்ற தண்ணீர் நிரம்பியிருந்தாலும், அது நாட்டிலுள்ளார்க்குச் சிறிதும் பயன்படமாட்டாது. அவ் வேரியினின்றும் பல வாய்க்கால்கள் வெட்டுவித்து அதன் தண்ணீரை அவற்றின் வழியே கொண்டுபோய் நாட்டிலுள் ளார்க்குச் சேர்ப்பித்தால்தான் அவர்கள் அதனால் அளவிறந்த பயன்களைப் பெறுவார்கள். அதுபோல் ஒருவர் தாம் நற்குணநற் செய்கைகளால் நிறைந்திருந்தாலும் அவை தம்மைப் பிறர்க்குப் பயன்படுத்தும் வகை தெரிவாரானால் அவரால் உலகத்தார் சொல்லற்கரிய நன்மைகள் எல்லாம் பெற்று இன்புறுவார்கள். ஆகையால், மனிதவசிய முறைகளை வரிசையாக எடுத்துச் சொல்லுதல் அவர்கட்கு மிகவும் பயன் படற்பாலதேயாம் என்று தெளிக. 2. நினைவை ஒருவழி நிறுத்தல் உலகத்திலே எந்தச் செயலையும் மக்கள் முடிக்க வேண்டியக் கால், அதனிடத்தே அவர் தமது கருத்தை நன்றாய்ப் பதியவைத்துத்தான் அதனை முடிக்கின்றனர். ஒருவர் மற்றொரு வரிடத்தில் ஒரு செய்தி கொண்டுவந்து சொல்லுகையிற், செல்பவருங் கேட்பவரும் அதனிடத்தே தமது கருத்தை ஊன்ற வைத்தே சொல்வதுங் கேட்பதுஞ் செய்கின்றார். அவ்வாறு அதில் மனத்தை ஊன்றாமல் வேறொன்றிலே அதனைச் செலுத்தி யிருந்தாற், சொல்பவர்க்குத் தாம் இன்னது சொல்வதென்பது தெரியாது கேட்பவர்க்குந் தாம் இன்னது கேட்பதென்பது புலப்படாது. ஒருவர் ஒரு பெரிய நகரத்திலே உள்ள தம் நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காகப் புகுந்து பல தெருக்களுங் கடந்து அவரிருக்குந் தெருவிற் போய் அங்குள்ள பல வீடுகளையும் விட்டு அவரிருக்கும் வீட்டைத் தெரிந்து அவரைக் கண்டுபேசித் திரும்பித் தம்மமூர்க்குப் போயினார். அவ்வாறு போனவர் தாம் போகும்போது தம் நண்பரது வீட்டை நன்றாக உன்னித்துப் பாராமற் போய்விட்டார். பின்னர் ஒருகால் மறுபடியுந் தம் நண்பரைக் காண்பதற்காக அப் பெரிய நகரத்திற் புகுந்து மிக அலைந்து திரிந்து திரும்பவும் அவரது வீட்டைக் கண்டுபிடித்தார். நண்பரைக் கண்டு பேசி இரண்டாந்தரம் பிரியும்போது, வீடு அடையாளந் தெரிவதற்குத் தாம் பட்ட பாட்டை நினைத்து, அந் நண்பர் வீட்டின் அமைப்புகளையும் அத்தெருவில் அஃதிருக்கு மிடத்தையும், அத் தெருவைக் கடந்து எளிதாகப் போகும் வழிகளையுஞ் செவ்வையாகக் கருத்திற் பதியவைத்துப் போனார். பின்னரும் ஒருகால் மூன்றாவது முறை தம் நண்பரைக் காண அந் நகரத்திற் புகுந்தபோது, சிறிதுங் கலக்கமின்றித் தெருக்களை எளிதிற் கடந்து வந்து அவ்வீட்டின் அடையாளமும் தெரிந்து உட்புகுந்தார். இந் நிகழ்ச்சியைக் கொண்டு, கருத்தை ஒரு வழியிலேயே நிறுத்திப் பொருள்களின் அமைப்பையும் இடத்தையும் உற்றறிதலாலே உண்டாகும் நன்மையும், அங்ஙனம் நிறுத்தாமற் பலவற்றையும் பற்றிப்பற்றி மனம் அலைந்து திரியவிட்டு வருந்துதலால் வருந் தீமையும் நன்கு அறியலாம். இன்னும், ஒரு மாணாக்கன் கணக்குநூல் பயிலும் போது, அதிற் சொல்லப்பட்ட கணக்குவகைகளிற் கருத்தை அழுந்தவையாமல், தான் விளையாடப்போம் இடத்தையும் தன் நேசரையும் தின்பண்டங்களையும் எண்ணிக்கொண்டே அதனைப் பார்ப்பனானால் அக் கணக்கின் வகைகள் அவற்குச் சிறிதும் புலப்படாமற் போகும். போகவே மனச்சோர்வடைந்து எத்தனை முறை பயின்றாலும் இக் கணக்குகள் என் மண்டையில் ஏறவில்லையே என்று புத்தகத்தை வீசி எறிந்துவிட்டுப் போய்விடுகின்றான். அவன் அக் கணக்கு நூலைக் கையில் எடுத்தவுடனே, தன் விளையாட்டுத் தொழில்கள் எல்லா வற்றையும் முற்றும் மறந்துவிட்டு, எடுத்த பாடத்திலே அறிவை நாட்டுவானானால், எவ்வளவு விரைவில் அவன் அதன் பொருள்களைச் செவ்வையாகத் தெரிந்து தேர்ச்சி பெறுவான்? கலாசாலை மாணாக்கரிற் பெரும்பாலார் இங்ஙனமே எடுத்த பாடத்திற் கருத்தைப் பதியவையாமற் பொழுதை வீணாக்கு கின்றார்கள். இன்னும், ஒரு பெண் சமையல் வேலையை முதன் முதற் கற்கப் புகுகின்றாள். அரிசி பருப்பு முதலியவற்றை வேவுவித்தற்கு அளவான நீர் தெரிந்து கலப்பியாமையால் முதலில் அவற்றைக் கெடுத்துவிட்டாலும், நேற்று இவ்வளவு நீர் மிகுந்ததனாலோ குறைந்ததனாலே அவை கெட்டுப்போயின. இன்றைக்கு இவ்வளவு நீர் சேர்த்து வேவுவித்தாற் பதமாக வரும் என்று ஆராய்ந்து செய்து மறுநாட் செவ்வையாக அவற்றைச் சமைத்திடுகின்றாள். அவ்வாறே குழம்பு, மிளகுநீர், கூட்டுக்கறி, அவையல், வறல், துவையல், பாயாசம் முதலிய சமையல் வகைகளையும் வேவுவிக்கும் அளவும், அவற்றிற் சேர்க்க வேண்டுங் காரம் உவர்ப்பு, புளிப்பு தித்திப்பு முதலியவற்றின் அளவும், இனிது அறிந்து பாகஞ்செய்தலால் அவை நாவிற்கு மிக்க சுவையைத் தந்து உடம்பையுஞ் செழுமையாக வளர்த்து வருகின்றன. இங்ஙனமெல்லாந் தன் கருத்தைப் பாகஞ் செய்யும் வகைகளிற் பதியவையாமல் வேடிக்கையிலும் விளையாட்டிலுந் தன் காலத்தைக் கழிப்பளாயின், அவள் மனம் பாகஞ்செய்யும் துறையில் ஒன்றுபட்டு நில்லாது. நில்லாது போகவே அவள் செய்யுஞ் சமையல் சிறுபிள்ளைகள் செய்யும் மணற்சோற்றுக்கே ஒப்பாம். இவ்வாறு மனம் ஒருமைப்பட்டு நிற்றலின் சிறப்பை நமது உலக வாழ்க்கையின் பொதுவான நிகழ்ச்சிகளில் வைத்தே நாம் நன்கறிந்து கொள்ளலாம். இனி, உயர்ந்த துறைகளிற் கருத்து ஒன்றுபட்டு நிற்பதனால் விளையும் அருமை பெருமைகளிற் சிலவற்றையும் இங்கே எடுத்து உரைப்பாம். ஓவியம் எழுதுவதிற் கைதேர்ந்தவன் ஒருவன் தான் எழுதும் பொருள் வடிவங்களை எவ்வளவு நன்றாய் உறுத்து அறிகின்றானோ, அவ்வளவு நன்றாய் அவற்றை அப்படியே வரைந்து காட்டி அவற்றைப் பார்ப்பவர்க்கு மிக்க வியப்பையும் மகிழ்ச்சியையும் விளைத்திடுகின்றான். மரங்கள் ஒன்றோடொன்று சன்னல் பின்னலாய் அடர்ந்திருக்குங் காடுகளையும், பல்வகைப் பூண்டுகளால் மேல் மூடப்பட்டுப் பச்சைப்பசேல் என்று தோன்றும் மலைகளையும், அம் மலைப்பக்கங்களில் ஒருபுறம் புயல்கள் தவழ மற்றொரு புறம் ஆடுமாடுகள் மான்மரைகள் நிரைநிரையாய் மேயுங் காட்சிகளையும், அம்மலைகளிலிருந்து கீழ்வழிந்தோடி வரும் அருவிகள் கீழேயுள்ள பள்ளத்தாக்குகளில் நிறைந்து துளும்ப நாரைகளுங் கொக்குகளும் உள்ளான் குருவிகளுந் துள்ளி நீந்தும் மீன்களை நாடித்திரிதலையும், அழகிய வேட்டுவப் பெண்கள் அந்நீரில் தங்கூந்தலை அவிழ்த்து விட்டு முழுகு தலையும் நுணுக்கமாய் அறிந்து அவற்றையெல்லாம் பச்சை, நீலம், வெண்மை, சிவப்பு முதலிய வண்ணங்களினாற் குழைத்து எழுதி, அத் தோற்றங்களைச் சிறிதும் வழுவாமற் காட்டும் ஓவியக்காரன் மன ஒருமையின் வன்மையை என்னென்பேம்! இவன் வரைந்து காட்டும் அரிய ஓவியங்கள் அவன்றன் மனத்தை ஒருவழி நிறுத்தும் வன்மையினாலன்றோ யாம் கண்டுகளிக்கக் கிடைக்கின்றன! இரவிவர்மர் எழுதிய மோகினிப் படத்தின் அருமை பெருமைகளை உற்றுப்பாருங்கள்! காட்டகத்திலே மிக ஓங்கிய ஒரு மரம் நிற்றலும், அம் மரத்தின்றும் பலகையிட்ட ஓர் ஊசல் தொங்குதலும்,அவ்வூசலின்கண்ணேயிருந்து அழகெல்லாஞ் சேர்ந்து உருவெடுத்தாற் போற்றோன்றும் மோகினியானவள் பவளத் துண்டுபோலுந் தன் மெல்விரல்களாற் கயிற்றைப் பிடித்துக் கொண்டு ஊசலை உதைந்தாடுதலும் ஆ! எவ்வளவு அருமை யான அழகுடன் விளங்குகின்றன! அவ்வோவியத்தை உற்றுப் பார்க்கப் பார்க்க உலக இயற்கையோடும் மக்கள் இயற்கை யோடும் பொருந்தச் சிறிதும் வழுவாமற் றீட்டிய அதன் சிறப்புகள் பார்ப்பவர் மனமெல்லாங் கவர்கின்றனவல்லவோ! கிடைத்தற் கரிய இவ்வோவியத்தை எழுதின இரவிவர்மர் அதனை வரைந்த போது தமது கருத்தை எவ்வளவு ஒன்றுபடுத்தி யிருந்தாராகல் வேண்டும்! இனிப் புல்லாங்குழல் இசைப்பதில் திறமை வாய்ந்த ஒருவர் தாம் இசைக்கும் இசையிலும் பண்ணிலும் தமது மனத்தை ஒடுக்கிப் பாடும்போது, பட்டுப்போன மரங்களுந் தளிர்க்கும் நிலைமை யடைதலையும், பகுத்தறிவு குறைந்த சிற்றுயிர்களும் அவ்விசையின் வயப்பட்டு அறிவு மயங்கி யிருத்தலையுங், கன்னெஞ்சம் உடைய மக்களும் மனம் உருகிப் பேரின்ப வழிப்பட்டவராய்க் கற்போல் அசையா திருத்தலையும் நீங்கள் கண்டதில்லையா? இவ்வளவுஞ் செய்தது யார்? என்று சிறிது நீங்கள் உற்று ஆராய்வீர்களாயின், பாடினவரின் கருத்தொருமையே அவ்வளவுஞ் செய்த தென்பதனை எளிதில் அறிவீர்கள். எதற்கும் வயப்படாதவர்கள் இசைக்கு வயப்படுவர் என்பது அறிவுடையோர் உறுதிமொழி. எதற்குங் கட்டுப்படாத கொடிய நச்சுப்பாம்பானது பாம்பாட்டியின் குழலோசைக்கு வசப்பட்டுத் தன் தீய இயற்கையினையும் மறந்திருக்கின்றதன்றோ? தாய் எப்படிச் சீராட்டினாலும் அழுகை அடங்காத குழந்தையானது, அவள் தனது இனிய குரலைத் திறந்து பாடினவுடன் அழுகை தீர்ந்து நன்றாக உறங்குகின்றதன்றோ? கடவுளும் இசையிலே உவப்படைந்து அன்பர்களுக்கு அருள் செய்கின்றார் என்பதனை உணர்ந்தன்றோ மாணிக்கவாசகர் முதலான சமயாசிரியப் பெரியோர்களும் அருந்தமிழ்ப் பாட்டுகளினாலே இறைவனைப் பாடிப் பரவினார்கள். மனம் எவ்வளவுக்கு அடங்கி உறைத்து நிற்கின்றதோ, அவ்வளவுக்குப் பாட்டும் பாட்டின் இசையும் பேரின்பத்தைத் தருவன வாயிருக்கும். நினைவின் உறைப்பினாலே பாடப்படுகின்ற பாட்டைக் கேட்போரது மனமும் ஒன்றுபட்டு ஒருவழியிலே நிற்கும். உலக வாழ்க்கையிலே ஈடுபட்டிருக்கின்ற ஒவ்வொருவர் உள்ளமுங் கற்பாறைமேல் விழுந்த மழை பல சிறு திவலைகளாகச் சிதறிப்போதல் போற், பலமுகமாய்ச் சிதறிஉடைந்து போகின்றது. இத்தன்மையினரான மக்கள் சில நாழிகைப் பொழுதேனும் இனிமையான இசைப்பாட்டைக் கேட்பார்களானால் அவர்கள் மனம் ஒன்றுபட்டு நின்று அவர்கட்குப் பெருமகிழ்ச்சியினையும் உடல்நலத்தையுந் தரும் ஆகவே, தேன் பெருக்கெடுத்தாற் போல் நடைபெறும் இசைப்பாட்டுக்கும் மன ஒருமையே காரணம். பிறர் மனங்களை ஒன்று படுத்துவதற்கும் மன ஒருமையே காரணம். இனி, ஓவியம் வல்லான் காட்டும் ஓவியக்காட்சியும் இன்னிசை வல்லான் பாடி மகிழ்விக்கும் இசையின் மாட்சியும், ஒருகால் ஓரிடத்தே ஒருங்கு பொருந்தித் தோன்றும் வண்ணம் ஆடியுங் பாடியுங் காட்டும் நாடகக்காரர் தமது மனவொருமை யாற்றம்மை காண்பார்க்கு விளைக்கும் இன்பத்தின் றன்மையை என்னென்று கூறுவேன்! ஓவியம் வல்லான் எழுதிக்காட்டும் ஓவியங்களிற் றோன்றும் உருவங்களும் பொருள்களும் உயிரில்லாத வெறும் போலிப் பொருள்கள். இசைவல்லான் பாடும் பாட்டுகளோ செவியுணர்வு ஒன்றுக்கு மட்டும் ஒருகால் இன்பந் தரு வதல்லால், ஒரே காலத்தில் மற்றைப் பொறியுணர்வுகளுக்கும் இன்பந்தர வல்லன அல்ல. ஆகையால், இவையிரண்டுங் கண்செவி என்னும் பொறிகள் இரண்டிற்குந் தனித்தனியே சிறிது நேரம் மட்டுமே இன்பந்தந்து, பிறகு காண்பார்க்குங் கேட்பார்க்கும் அத்தனை மகிழ்ச்சியினைத் தராவாய் ஒழியும். மற்று, நாடகக்காரர் செய்யுந்திறங்களோ, ஒரே காலத்திற் கண்ணுக்கு இனிய காட்சியினையுங் காதுக்கு இனிய இன்னிசையினையுந் தந்து காண்பார் மனத்தை ஒரு துறையில் நிற்கச் செய்து அவர்க்குப் பெருங் களிப்பினை விளைவிக்கின்றன. எல்லார் உள்ளத்தையும் உருக்கும் ஓரு செவ்விய கதையினைத் தழுவி நாடகம் நடத்தப்படும்போது, நாடக அரங்கிலே பெண் உரு ஆண் உருப்பூண்டு அழகின் மிக்க ஆடை அணிகலன்களைச் சிறக்க அணிந்து தாந்தாம் பூண்ட உருவிற்கு ஏற்பத் திறம்படப் பேசியும் உளம் நெகிழ்ந்துருகப் பாடியும் பலவகைக் குறிகள் காட்டி ஆடியும் உலகிற் பல திறப்பட்ட மக்களியற்கையை உள்ளவாறே தோன்றச்செய்யும் நாடக மாந்தர் தஞ் செய்கைகளைக் காணக்காணக் காணும் மனம் ஒரு வழிப்பட்டு உறைத்து நிற்பதனைப் பழக்கத்திற் பார்த்திருக்கின்றனம் அல்லமோ? நாடக அரங்கில் ஆடும் நாடகமாந்தர் தாந் தாம் பூண்ட கோலங்களுக்கு ஏற்பச் சிறிதும் வழுவாமல் தம்மை அக்கோலங்களாகவே முழுதுங்கருதி ஆடஆட, அவர் செய்கைகள் இயற்கையழகு வாய்ந்தனவாய் மிக்க மகிழ்ச்சியினைத் தரும். அழகிய ஒரு பெண்ணுருவைப் பூண்டவன் தன்னை அப்பெண்ணாகவே முற்றும் நினைந்து, அவளுக்குரிய குணங்குறி செய்கைகளை இயற்கைப் படுத்திக் காட்டவல்லனாயின், அவனுடைய திறத்தைக்கண்டு உவப்படை யாதார் உலகில் யாருமே இரார் என்பதனை உறுதியாகச் சொல்வேம். வனப்பின் மிக்க ஓர் இளவரசன் கோலம் பூண்டு வந்தவன். அவ்வரசனுக்குரிய ஆண்டன்மை அழகின் றிறங்களைத் திரிபின்றித் தெரித்துக் காட்டுவனாயின், அவனைக் கூத்தன் என நினையாமல் இளவரசனென்றே எல்லாரும் நினைந்து அளவில்லாக் களிப்படைவர்கள். ஒருவர்க்குரிய கோலத்தைப் பூண்டவன் தன்னை அக்கோலமுடையாரின் வேறாகச் சிறிதும் நினையாமல், அவராகவே தன்னைக் கருதும் அத்தனை மனவொருமை காட்டுவனாயின், அவனைக் காண்பாரும் அவன் மனவொருமையின் வயப்பட்டு அவனை ஆட்டக் காரனாகக் கருதாமல், அக்கோலத்திற்கு முற்றும் உரியனாகவே பெரிதும் நினைந்து அகம் மகிழா நிற்பர். இங்ஙனம் ஒருமையில் முதிர்ச்சி பெற்ற நாடகக்காரரை வியத்தகும் ஆற்றல் வாய்ந்தவர்களென அறிவான் மிக்கோர் கொண்டாடுவர். அஃதொன்றோ, அவ்வக் கோலங்களுக்கு ஏற்ப அவர்கள் பாடும் இன்னிசைப் பாட்டுகளைக் கேட்குந்தோறும் வன்னெஞ்சக் கள்வருந் தம்மனம் நெக்குவிட்டுருக இன்புருவாய் நிலவுவர். இங்ஙனம் ஓவியக் காரனாலும், இன்னிசை வல்லானாலுந் தரலாகாப் பெரு மகிழ்ச்சியினை நாடகக்காரர் விளைக்கலாயினது எதனால் என்பீரேல், மனவொருமையின் மாட்சியினாலென்று அறிமின்கள்! இனிக்கற்றாரும் மற்றாருங் கூடிய பேரவையிலே நின்று தேன்மாரி பொழிந்ததெனப் பேசும் பெறற்கருந் திறமைவாய்ந்த கற்றார் தமது மனவொருமைப் பாட்டினால் விளைக்கும் வியப்பினை என்னென்பேம்! அவர்க்குள்ள அவருடைய மனவொருமை அவர்தங் கண்களிலே மின்னென வீசுதலைப் பார்த்தவுடனே, அவையிலுள்ளார் அனைவரும் அடக்க ஒடுக்க முடையராய்க் கற்பாவைபோல் அசைவற்றிருக்கின்றனர்! பிறகு அவர் தமது வாய்திறந்து சொல்லழகு பொருளழகு நிரம்பக் கடல்மடை திறந்ததெனப் பேசுகையில் அவையினர் அத்தனை பெயரும் அடங்காப் பெருமகிழ்ச்சியுந் துயரமும் பொங்க அறிவு துலங்கப் பெறுகின்றனர்! பேசும் புலவர் தாம் பேசுகையில் மகிழ்ச்சிக்குக் காரணமானவற்றை எடுத்துச் சொல்ல எல்லாரும் மகிழ்கின்றனர்! அவர் துயரத்திற்குக் காரணமானவற்றை எடுத்துச் சொல்ல எல்லாருந் தேம்பித் தேம்பிக் கண்ணீர் சிந்திக் கலுழ்கின்றனர்! சொல்வன்மை யுடையார் அவையிலுள்ளாரை யெல்லாம் பாவைபோல் தாம் விரும்பு மாறெல்லாம் ஆட்டி வைக்கின்றனர்! தமது கருத்துக்கு இணங்காதவரையும் அதற்கு இணங்கும்படி செய்விக்கின்றனர்! தீய செயல்களில் மிகப் பழகி நெஞ்சங் கருங்கல்லாகப் பெற்றவர்களையும், நெஞ்சம் இளகச் செய்து தாஞ்செய்யுந் தீய செயல்களைக் கண்டு தாமே வெறுப்படையும்படி திரித்து விடுகின்றனர்! நல்லொழுக்க முள்ளவர்கள் தமது நல் லொழுக்கத்தின் மேன்மையை அவர் சிறப்பித்துப் பேசக் கேட்கும் ஒவ்வொரு நொடியும் பேரின்பத் தால் உளந்துளும்பி மேன்மேல் மனக்கிளர்ச்சி மிகப் பெற்றுத் தூயராகின்றனர்! கல்வி கற்கும் பெரும்பேறு வாய்க்கப் பெறாதவர்கள், அக் கலைவல்லார் பலநூற் பொருள்களின் பிழிவாய்த் திரட்டித்தரும் நுண்பொருள் அமிழ்தத்தைக் காதாரப்பருகி அறியாமை நீங்கி அறிவு மிக விளங்கப் பெறுகின்றனர்! இன்னும் அவர் சொற்களைக் கேட்டு உலகத்தின் இயற்கையும் உயிரின் இயற்கையுங் கடவுளின் இயற்கையும் வருத்தமின்றி எளிதில் உணர்ந்து மக்கள் அடையும் பயன்களை அளவிடப் புகுந்தால் அவை நஞ்சொல்லில் அடங்காவே! ஆ! சொற்றிறம் உடையார் விளைக்கும் உதவிக்கு உலகம் யாது கைம்மாறு செய்ய வல்லது! இத்தனையும் அவர் எதன்றுணையாற் செய்தனர் என்று கேட்பீரேல், மனவொருமை என்னும் அறிவுக்களஞ்சியத்தால் என்று அறிமின்கள்! இத்தகைய மனவொருமையே மனிதவசியத்திற்குங் காரணமாம் என்று தெளிமின்கள்! இனி மேற்சொல்லிய துறைகள் எல்லாவற்றினுஞ் சிறந்த நல்விசைப் புலவனுக்கு உள்ள மன ஒருமையின் வலிவைச் சிறிது நினைத்துப் பாருங்கள்! ஓவியக்காரனுக்கோ சிவப்பு நீலம் மஞ்சள் முதலான வண்ணங்கள் இருக்கின்றன. இவ்வண்ணங் களின் துணைகொண்டு தான் கண்ட பொருளின் உருவைத் தான் கண்டபடியே ஓவியத்தில் எழுதி அதனை அவ்வாறே நங் கண் எதிரே காட்டிவிடுகின்றான். நாடக அரங்கில் ஆடும் மாந்தரோ தஞ்சொற்களைக் கொண்டே தாம் எண்ணிய மேம் பொருள்களைக் கேட்பார் உள்ளத்தில் இன்பம் ஊறப் பேச்சினாலுந் தம்முடைய கண் கால் கை உடம்பு முதலிய உறுப்பின் அசைவுகளினாலும் பலவகைக் கோலங்களி னாலுந் தாம் தம்மனத்திற் கருதியதைக் கருதியவாறே புறத்தே கேட்பார்க்கு இனிது விளங்கும்படி செய்ய வல்லராகின்றனர். ஆகவே, இவர்க்குச் சொற்களோடுகூட உறுப்புகளின் அசைவுகளும் ஆடை அணிகலங்களாற் சிறந்த கோலங்களும் பெருந்துணையாய் இருந்து பேர் உதவி புரிகின்றன. இவ்விருவரின் வேறான நல்லிசைப் புலவனுக்கோ, வெறுஞ் சொற்களின் உதவியன்றி வேறு உதவி சிறிதுமில்லை. ஆயினும், இவ் வெறுஞ் சொற்களின் உதவிகொண்டு இவன் செய்யுஞ் செய்கையோ நமது அறிவினால் அளவிட்டுச் சொல்லப்படுந் தன்மையுடையதன்று. வல்லவன் ஆட்டும் பம்பரம் மணலினும் ஆடும் என்னும் பழமொழிக்கு இணங்கச் சொற்களை இடம் அறிந்து பொருத்தி எண்ணிய பொருள்களை எளிதிற் பிறர் அறியும்படி இனிய செய்யுளிலே இன்பம் ஊற அமைத்துவிடுகின்றான். அவன் எழுதிய செய்யுட்களைப் பயில்வோர் அச் செய்யுட்களில் அமைந்த பொருள்களைத் தங் கண்களின் எதிரே காணாவிடினும், அவை தம்மை நேரே கண்டாற்போல் அகக் கண்ணால் தெளியக்கண்டு அளவுபடாப் பேரின்பம் அடைகின்றனர். புள்ளிமான்கள் துள்ளியோடிப் புதிது வளர்ந்த புல்லைக் கறிக்கவும், புதர்களில் மறைந்த தூநிற முயல்கள் புதர்களை விட்டுப் பொள்ளென ஓடவும், நல்லிசைப் பாடும் நாணுவம் பறவைகள் ஓங்கி வளர்ந்த மூங்கில் நெற்களைப் பொன்வாய் அலகாற் பொறுக்கித் தின்னவும், எங்கும் மரங்கள் அடர்ந்தமையால் அவற்றின் ஊடே வெய்யவன் கதிர்கள் சிற்சில தோன்றச் சில்லென்று வீசுங் காற்றின் அசைவால் அசையும் இலைகளின் ஓசையும், மரப் பொந்துகளிலிருந்து கூவுங் குயிலின் இனிய குரல் ஒலியும் வேறு பல்வகைப் புள்ளினங்கள் செய்யும் ஓசையும் அன்றிப் பிரிதோர் ஓசையும் இன்றித் தனியே விளங்கும் ஒரு காட்டின் நடுவே சிறிது இடைவெளியா யிருக்கும் ஓர் இடத்தில் ஒரு புல்வேய்ந்த குடிசை கட்டி அதனுள் ஒரு வேட்டுவனும் ஒரு வேட்டுவிச்சியும் அவர் மக்களும் உவப்புடன் ஒருங்கிருந்து தேனுந்தினைமாவுங் கூட்டித் தேக்கிலையில் வைத்து உண்டு கொண்டிருக்கும் அருங்காட்சியினை அந்த நல்லிசைப் புலவன் தன் செய்யுட்களில் அமைத்துக் காட்டு மிடத்தும் அவையிற் சொல்லிக் காட்டுமிடத்தும் அதனைத் தமது அகக்கண் எதிரே கண்டு களியாதவர் யாரேனும் உளரோ? காதலிற் பிணைந்த ஒரு காதலனும் ஒரு காதலியுஞ் சுடுமணல் வெளியிற் றனியே நடந்துபோய் ஒரு ஊரில் ஓர் ஏழைக் குடிசையிலே இரவிற்றங்கி, மான்றோலிலே தாம் இனிது துயில்கொண்ட காட்சியினை மாணிக்கவாசகப் பெருமான் திருச்சிற்றம்பலக் கோவையாரில் அருளிச் செய்திருக்கும் அருமையினைத் தம்மகத்தே நினைந்து நினைந்து இன்பம் எய்தாதார் இந்நிலவுலகில் உளரோ? இங்ஙனம் உலக இயற்கைத் தோற்றங்களையும் மக்கள் செய்கைத் தோற்றங்களையுங், கற்போர் தமக்கு நேரே விளங்கக் காணுமாறு வெறுஞ் சொற்களினாலே திறம்பட அமைத்துக் காட்டும் நல்லிசைப் புலவனது திறமை அரிதரிது! வண்ணங்களாலுங் குறிகளாலுங் கோலங்களாலும் பொருள்களின் தோற்றங்களைக் காண்பார் கண்ணெதிரே காட்டும் ஓவியக்காரனது திறமையும் நாடகக்காரனது அருமையும் நல்லிசைப் புலவன் பெரும்புலமைத் திறத்திற்குமுன் எவ்வாறாம்? ஓவியக்காரன் எழுதிய ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியும் நாடகக்காரன் காட்டிய செய்கைத் திறங்களைக் கண்டு அடைந்த களிப்புஞ் சிறிதுநேரஞ் சென்றால் மறைந்துபோகும். நல்லிசைப் புலவன் புறக்கண்ணெதிரே யில்லாமல் அகக்கண்ணெதிரே காட்டு வியத்தகு தோற்றங்களோ, அவ்வறிவுக் கண் கொண்டு அவற்றைக் காணப்பெற்றார் அவற்றால் தாம் அடைந்த இன்பப் பெருக்கை என்றும் மறவாது, அதன் வயத்தராய் நின்று தூய்மை எய்தி இறைவனது திருவருள் இன்பத்திலே படிந்து விளங்குவர். செவிக்கு இன்பம் பயக்கும் இன்னிசைகளைப் பாடும் இசைப் புலவனுங்கூட நல்லிசைப் புலவனுக்குச் சிறிதும் ஒவ்வான் உடல் உருகத் தித்திக்கும் இசைப்புலவனது இசையுங் கண்களிக்கக் காட்டும் ஓவியம் வல்லானது ஓவியமுங் கண்ணுஞ் செவியும் மகிழ ஆடும் நாடகக்காரனது நடையும் நல்லிசைப் புலவன் செய்யுளைப் போல் எக்காலத்தும் நிலைபெற்ற இன்பத்தைத் தரமாட்டா. அவர்கள் விளைக்கும் இன்பங்கள் எல்லாம் ஐம்பொறிகளின் நுகர்ச்சியளவாயுள்ள சிற்றின்பங்களாய் ஒழிகின்றன. நல்லிசைப் புலவன் விளைக்கும் இன்பமோ உயிரின் அறிவு நுகர்ச்சிக்கண் விளையும் பேரின்பமாய் நிலை பெறுகின்றது. இத்தனை விழுமியதாகிய பேரின்பத்தினை விளைக்கும் பேராற்றல் நல்லிசைப் புலவனுக்கு எங்ஙனம் வந்தது? அவன் பல் பிறவிகளிலும் பழகிப் பழகிப் பழுக்க வைத்த உள்ள வொருமையால் வந்ததாகும். இவ்வுள்ளவொருமை, ஓவியக் காரன், நாடகக்காரன், இசைக்காரன் பழகிய உள்ள வொருமை யினும் மிக மேம்பட்ட வலிமை வாய்ந்ததாகும். எங்ஙனமென்றால், ஓவியக்காரன் முதலான எல்லாரும் பொறிகளுக்குப் புலனாய்த் தோன்றும் உலகியற் பொருள்களின் வெளித்தோற்றங்களை மட்டுமே உற்றுணர்ந்து காட்ட வல்லராவர். நல்லிசைப்புலவனோ அவ்வுலகியற் பொருள்களின் வெளித் தோற்றங்களோடு அத்தோற்றங்களின் அகத்தே நிறைந்த இறைவன் அருள் ஒளியையும், அவ்வுலகியற் பொருள்களினும் மிக மேம்பட்ட உயிர்களின் உண்மை நிலையையும் அவ்வுயிர்களுள் உயிராய் நிறைந்த கடவுளின் இன்பக் கனிவையும் ஆழ்ந்து செல்லுந் தனது மெய்யறிவால் ஒன்றுபட்டு நின்றுணர்ந்து, உயிர் இளகி உணர்விளகி உரைததும்ப உடல் சிலிர்க்க அமிழ்தமழை பொழிந்ததென அழகிய செய்யுட்களைத் திருஞானசம்பந்தப் பெருமானே போற் பொழிந்திட வல்லனாதலால், அந் நல்லிசைப் புலவனுக்கு வாய்ந்த உள்ளவொருமையின் அழுத்தத்தையும் விழுப்பத்தையும் எங்ஙனம் எடுத்துரைக்க வல்லேம்! உலகத்திற் பிறந்த உயிர்களில் எல்லாம் மக்களுயிரே சிறந்ததாகும். அம் மக்களுயிர்களினும் நல்லிசைப் புலவனே தன் உள்ள வொருமையின் மேம்பாட்டால் தெய்வமேபோல் விளங்கு கின்றான். அறிவுப் பொருள்கள் அறிவில் பொருள்கள் இயல்பெல்லாம் முற்றும் உணர்ந்து உள்ள வொருமை மிகப் பெற்றவன் நல்லிசைப் புலவன் ஒருவனே யாகையால், அவன்தன் சொல்லாற் பிறரை ஆக்கவும் அழிக்கவும் வல்லனாவன். இது பற்றியன்றோ, நல்லிசைப் புலவர்களாற் புகழ்ந்து பாடப்படும் பெருந்தவம் வாய்ந்தோர் வானவூர்தி ஊர்ந்து துறக்க வுலகஞ் செல்வர் எனப் புறநானூற்றில் அவரது புகழ் வியந்து சொல்லப் பட்டது. நல்லிசைப் புலவர்கள் வருந்துமாறு பெரும்பிழை செய்தவர்கள், அவர்களால் வையப்பட்டு இவ்வுலக வாழ்க்கையை விட்டு நீங்குதலேயன்றி நிரயத் துன்பத்திலும் பட்டு உழல்வர் என்பதற்குத் தமிழை யிகழ்ந்து நக்கீரரால் வசைபாடப் பட்டவன் வரலாறே சான்றாமன்றோ? இங்ஙனம் எல்லாம் வல்லாராகிய நல்லிசைப் புலவரின் ஆற்றலும் அருமையும் உணர்ந்தன்றோ, தாமப்பல்கண்ணனார் என்னும் புலவர் வெகுண்டபோது தானும் வெகுளாது பொறுத்திருந்து அவரைப் பணிந்து பிறகு அவராற் புகழப்பட்டான் மாவளத்தான் என்னுஞ் சோழ மன்னன்? இன்னுந் தனது கட்டிலின் மேல் ஏறி உறங்கிக் கிடந்த மோசிகீரனார் என்னும் புலவரை எழுப்பாமல் அவர் உறங்குமளவும் அவர்மேற் றானே கவரி கொண்டு வீசிய பெருஞ் சேரலிரும்பொறை என்னுஞ் சேர மன்னன் செயலை உணருங்காற், பண்டைக்காலத்து அரசர்கள் நல்லிசைப் புலவர்களின் அருமையை உணர்ந்து அவர்களை எங்ஙனம் நன்கு மதித்து வந்தார்கள்! என்பதனை இனிது அறிகின்றனம் அல்லமோ? நல்லிசைப் புலவர் தமக்கு உள்ள உள்ள ஒருமையின் வலிவு மிகப் பெரிதாகலின், அவர் அதன்றுணையாற் செயற்கரிய செயல்கள் எல்லாஞ் செய்யவல்லராவர் என்று உணர்க. இனி, அங்ஙனமெல்லாஞ் சிறந்த நல்லிசைப்புலவர்களைக் காட்டினும் உள்ள வொருமை வலிவில் மேம்பட்டவர்கள் முற்றத்துறந்த முனிவர்களேயாவர். இவர்கள் புறம்பே உள்ள உலகியற் பொருள்களில் தமது உணர்வை ஒரு சிறிதும் ஓடவிடாமல், எந்நேரமும் அதனை அகத்தே திருப்பி அங்கே உணர்வுக்கு உணர்வாய் விளங்கும் இறைவன் றிருவருளாகிய உள்ளொளியை இடையறாது நாடியிருப்பர். அங்ஙனம் அவர்களால் நாடப்படுவதாகிய திருவருள் ஒளியானது தனக்கு ஒப்பும் உயர்வும் இன்றி விளங்கும் இறைவனது உண்மைத் தன்மையேயாகும். அத் திருவருள் ஒளியே இவ்வெல்லா உலகங்களையும் ஆக்குவதும் நிலைப்படுத்துவதும் அழிப்பதும் அருளுவதுஞ் செய்வது. அதனுடைய அறிவுக்கும் அதனுடைய ஆற்றலுக்கும் ஓர் எல்லையே இல்லை. அதுவே மிகவும் இரக்கம் உள்ள இறைவனது குணமும் ஆகும். இத் தன்மைத்தாகிய இறைவனது திருவருள் ஒளி ஒன்றுமே என்றும் மாறாமல் ஒரு தன்மையாக விளங்கும் பேரின்பப் பொருள் ஆகும். இதனிடத்தே கிடந்து சுழலும் இவ்வுலகும் இவ்வுலகின் வேறான எண்ணிறந்த மேலுலகுகளும் நிலையில்லாத பருப்பொருள்கள், இவற்றிற்கு அறிவு இல்லை. இவைகள் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டே இருக்கின்றன. சில பிறக்கின்றன, சில இருக்கின்றன, சில அழிந்துபோகின்றன. அழிந்தவை திரும்பவும் பிறக்கின்றன, இருக்கின்றன, இறக்கின்றன. இவற்றிடையே அகப்பட்டுக் கொண்டு கூடச்சுழலும் உயிர்களோ அறிவுடையன; என்றாலும் இவை தமது அறிவு ஓர் இருளினால் மறைக்கப்பட்டு இருத்தலால், நிலையில்லா இவ்வுலகங்களையே தமக்கு நிலையாக மருண்டு எண்ணி மிகவுந் துன்புற்றுச் சுழல்கின்றன. தமது அறிவு ஒருநிலைப்பட்டு நிற்கமாட்டாமற் குரங்கு போலவுங் காற்றாடி போலவுஞ் சுழன்று, நிலையில்லாத இவ்வுலகங்களில் அலைந்தலைந்து திரிகின்றன. நிலையற்ற வுலகத்தைத் துணையெனச் சார்ந்தமையாலன்றோ இவ்வுயிர் களின் அறிவும் நிலையற்ற தன்மையுடையதாகி இடர்ப்படு கின்றது? அவ்வாறன்றி, என்றும் ஒரே தன்மையாக விளங்கும் இறைவன் திருவருள் ஒளியையே துணையெனக் கொண்டு அதனையே இடையறாது சார்ந்து நிற்குமாயின், இவ் வுயிர்களின் அறிவு அத் திருவருள் ஒளிவயமேயாகி மாறாத பேரின்ப வடிவாயே நிற்குமன்றோ? அப்போது அதற்குத் துன்பமும் அதற்குக் காரணமாகிய அறியாமையுந் தொலைந்து அறிவே தன் உண்மை வடிவாக் கொண்டு துலங்குமன்றோ? இவ்வுண்மை களை முற்றும் உணர்ந்த முனிவர் இவ்வுலகங்களையும் இவ்வுலகத்துப் பொருள்களையும் ஒரு பொருட்டாக நினையாது திருவருள் ஒளியிலேயே தமதறிவைத் தோய்த்து அதனை நோக்கியவாறாகவே நிற்கும் உள்ள வொருமையினும் பெரியது வேறு உண்டோ சொல்லுமின்! அங்ஙனந் திருவருள் ஒளியினையே நோக்கியிருக்கும் அவர் உடம்போடும் உலகத்தோடும் கூடியிருப்பினும், அவை அவரைச் சிறிதும் வருத்தவல்லன அல்ல. அவர்களுடம்பினுள்ளே அருள் ஒளியான தெய்வநெருப்பு நிறைந்து பரவியிருத்தலால், வெளியே தோன்றும் வெப்ப தட்பங்கள் அவருடம்பிற்குச் சிறிதும் வருத்தம் பயப்பன அல்ல. எளியரான மாந்தர் சென்றால் ஒரு நொடிப்பொழுதில் உயிர் துறப்பதற்குக் காரண மான இமய மலையிற் பனிப்பாறைகளின் மேல் இத்தகைய முனிவரர் சிறிதும் வருத்தமின்றித் தவம் இயற்றுதலை இன்றும் பார்க்கலாம். திருநாவுக்கரசு நாயனாரைச் சுண்ணாம்புக் காளவாயில் நுழைத்தவிடத்தும் அங்குள்ள கொடிய தீ அவரைச் சிறிதும் வருத்தியதில்லை. திருஞான சம்பந்தப் பெருமானைத் திருமடத்துடன் வைத்துச் சமணர் கொளுத்திவிட்ட பெருந்தீப் பிழம்பானது அவரைச் சிறிதும் வருத்தாமல், அவரது கட்டளையால் அம்மடத்தை விட்டகன்று பாண்டியனைப் பற்றியது. இவை தம்மை நுணுகி நோக்குங்கால், இறைவனருள் ஒளியிற் றோய்ந்து மெய்ந்நிலையிலிருந்த தாயுமான அடிகளை இராமநாதபுரத்திலெவனோ தீ வைத்துக் கொளுத்த அஃது அவரது உடம்பினைப் பழுது படுத்தினதென்று அறியார் சிலர் எழுதி வைத்த கதை வெறும் பொய்க் கதையேயாம் என்று அறிவான் மிக்கோர் இனிது உணர்ந்துகொள்வர். தாயுமான அடிகள் வரலாற்றினை மெய்ப்பட உணர்ந்த பெரியார் அது வெறும் பொய்க் கதையேயெனவும், நெருப்பால் அவர் அருமைத் திருவுருவஞ் சிறிதும் பழுதுபட்ட தில்லையெனவும் உரைப்பக்கேட்டேம். இனிப் பசியும் விடாயும் அருள் ஒளியிற் றோய்ந்த முனிவரைச் சிறிதும் வருத்துவதில்லை. இதற்குப் பெரிதும் வியக்கத்தக்க சான்றாக நாகப்பட்டினத்தில் விளங்குஞ் சில யோகியாரைக் கண்டு எல்லாரும் ஐயம் அகலப் பெறுவார்களாக. சென்ற ஒன்றரை ஆண்டுகளாகச்சோறு தண்ணீர் சிறிதும் இன்றித் தவநிலையில் இருக்கும் இப் பெரியாரின் அருமைத் திருவுடலஞ் சோறும் நீரும் இல்லாமைபற்றி ஒரு சிறிதாயினும் வருந்தாதாய் மாற்றற்ற பொன்வண்ணம் பெற்றுப் பொலிகின்றது. இவரது முகமோ பொற்பாவையின் வடிவம்போல் திருத்தம் முதிர்ந்து பேரொளி வீசுகின்றது. தலையிலுள்ள குஞ்சியும் மோவாய் கன்னங்களில் வளர்ந்திருக்கும் மயிர்களுங் கன்னங்கறேல் என்று பளப்பளப்பாய் மிளிர்கின்றன. இவரது பொதுவான தோற்றமானது தெய்வ அழகு கனிந்த ஓர் இளைஞரின் வடிவாய்க் காணப்படுகின்றது. இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போற் சோறு தண்ணீரின்றிப் பட்டினி கிடக்க முடியாத மக்கள் நிறைந்த இந் நிலவுலகில் இச் சிவயோகியார் சோறு தண்ணீர் சிறிதுமின்றித் தவநிலையிலிருக்கும் நிலை புதுமையினும் பெரும்புதுமையாய்த் திகழ்கின்ற தன்றோ? இதனால் இறைவன் அருள் ஒளியிற் றோய்ந்தவர்களுக்கு இவ்வுலகியற் பொருள்களின் உதவி சிறிதும் வேண்டப்படாது என்பதும், இவ்வுலகத்துப் பொருள்களாற் சிறிதுந் துன்பம் எய்தாது என்பதுந் தெள்ளிதின் விளங்கும் என்க. அங்ஙனம் உலகத்துப் பொருள்களின் உதவியை அவர் வேண்டாதது என்னையெனின், உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் எல்லா உயிர்களையும் வைத்துத் தாங்குவது இறைவன் திருவருளேயாகும். அத் திருவருளைக் காட்டினும் வலிமையில் மிக்கதும் நன்மையைத் தருவதுமான வேறு ஒரு பொருள் எங்குமே இல்லை. அத் தன்மைத்தாகிய திருவருளையே தமக்கு ஒப்பற்ற பெருந்துணையாகக் கொண்டால் அதனால் அடையாத வலிமையும் நன்மையும் வேறுண்டோ? சொல்லுமின்! ஆகவே, இதன் உண்மையை இனிதுணர்ந்த பெரியோர் எந்நேரமும் இடைவிடாது தமதறிவை அத் திருவருளிலேயே நிலைபெற வைப்பர்; அவரது அறிவின் ஒருமைத் திறத்தை இவ்வளவென்று வரையறுத்துச் சொல்லல் எவர்க்கும் ஏலாததொன்றாம். இத்தனையுஞ் சொன்னமையால் நினைவை ஒருவழி நிறுத்தல், ஒவ்வொரு துறையிற் படிப்படியாய் முதிர்ந்து கடைசியாகத் திருவருள் வெளியிற் சென்று ஒன்றுபட்டு நிலைபெயராது என்றும் அதே வடிவாய் நிற்குந் தன்மை நன்கு விளங்காநிற்கும். 3. நினைவை ஒருவழி நிறுத்தும் வகை புறத்தே காணப்பட்டு இன்பந்தரும் ஓவியம், இசை, நாடகம் முதலிய துறைகளிலேயெல்லாம் மக்கள் நினைவு வருத்தம் இன்றி எளிதாகவே ஒன்றுபட்டு நின்றுவிடுகின்றது. இனி, அகத்தே வைத்து ஆராயப்படும் நல்லிசைப் புலவர் செய்யுட்களிலுந் திருவருள் ஒளியிலும் அந் நினைவு அங்ஙனம் ஒன்றுபட்டு நிற்றலோ மிகவும் வருத்தமாயிருக்கின்றது. ஐம்புல இன்பத்தில் மக்களுக்கு அவா மிகுதிப்படுதல்போல, அறிவியல் இன்பத்தில் அவா வரக் காண்கிலேம். இதற்குக் காரணம் யாது? என்று ஆராயுங்கால் மக்களுக்குள்ள அறியாமையே காரணமென்பது தெற்றெனப் புலப்படுகின்றது. நிலையாத பொருளை நிலையுள்ளதென்று நினைக்கின்றார்கள், நிலையுள்ள பொருளை ஓர் இமையளவேனும் நினைக்கின்றார்கள் இல்லை. பொன்னை மாதரைப் பூமி யைத் தமக்கு நிலையான துணையென மயங்குகிறார்கள்; மெய்யுணர்வை நல்லறிவைத் திருவருளைத் தமக்கு நிலையென நினைப்பதோ இல்லை. பொன்னும் மாதரும் நிலமுந் தமக்குத் துணையாய் நிலைப்பது எத்தனை நாள்? துணையாய்க் கூட வருவது எங்கே என்று தினையளவாயினும் நினைக்கலாகாதா? பொன்னும் மண்ணும் அறிவில்லாத பருப்பொருள்கள். அவற்றை மாந்தர் பயன் படுத்தினால் அல்லாமல் அவை தாமாகவே பயன்படுவன அல்ல. பொன் ஒருவர் கையினின்று ஒருவர் கைக்கு மாறும், நிலமும் இருந்தவிடத்தேயிருக்க அதனைப் பயன்படுத்துவோர் மாறிக்கொண்டே போவர். மாதரோ அறிவுடைய உயிர்களா யினும் அவர்களிற் பெரும்பாலார் பலதிறப்பட்ட எண்ண முடையராய் ஓர் உறுதியின்றி, ஒருகால் ஒருவனை விரும்பி மற்றொருகால் மற்றொருவனை விரும்பி ஒழுகும் இயல்புடையர் ஒருவனுடைய அருமை பெருமைகளை யுணர்ந்து அவனிடத்தே மட்டும் உறுதி வாய்ந்த மனமும் மெய்யன்பும் வைத்து ஒழுகுவோர் பெண்மக்களில் மிக அரியர். மேலும், அம்மாதரைத் தமக்குத் துணையென்று கொள்ளினும், அவர் தங் காதலருக்கு நேர்ந்த நோய் முதலிய துன்பங்களை நீக்கமாட்டுவாரா? காலன் வந்து உயிரைக் கொள்ளை கொள்ளும்போது சாவித்திரியைப் போல் அவனைத் தடுக்க வல்லராவரா? இல்லையே. இங்ஙன மிருக்க அம் மாதர்கள் துணையாவது எப்படி? மேலும், ஒரு பிறவியில் நாம் நமக்குத் துணையென எண்ணிய பொன்னும் மாதரும் மண்ணும் அப்பிறவி யொழியும்போது அவை தாமுங் கூடவே ஒழிந்து போக, மறுபடியும் எடுக்கும் மற்றொரு பிறவியில் வேறு பொன்னும் வேறு மண்ணும் வேறு மாதரும் வந்து சேர்கின்றமை வழக்கத்தில் நாடோறுங் காணப்படும் உண்மை யாதலை மாந்தர் சிறிதும் அறியாதது என்னோ! இங்ஙன மெல்லாம் நிலை யில்லாமல் மாறிக்கொண்டிருக்கும் இப் பொருள்களின் தன்மையைப் பகுத்தறிந்து, அவற்றிற் கருத்தை ஊன்றாமற் புளியம் பழமும் அதன் ஓடும்போல் எல்லா வற்றுடன் கூடியுங் கூடாத உள்ளங் கொண்டு, உள்ளொளியில் நாட்டம் வைத்தலே யாவருஞ் செயற்பால தாகிய கடமையாகும். இங்ஙனமன்றி வெளிப்பொருள்களிற் பற்று மிகுதியாய் வைத்து, அகத்தேயுந் தம் நினைவைத் திருப்பித் திருவருளிலே நிறுத்தலாமென்றால், அஃது எவர்க்குங் கைகூடாத செயலாகும். ஏனெனிற், புறப்பொருளிற் பற்று வைக்க வைக்க, அகத்தே திருப்பப்படும் நினைவு அப் புறப்பொருள் நினைவோடு உடன்கூடியே இயங்கும் அல்லாமல் அது திருவருள் ஒளியையே நாடி நிற்கமாட்டாதாகும். எதிலே ஒருவர் நினைவு ஊறியதோ அந்நினைவிலே அதன் சுவை ஏறிநிற்கும். மாந்தர்க்கு இனத் தியல்பதாகும் அறிவு என்ற திருவள்ளுவனார் திருமொழியின் உண்மையைச் சிறிதேனும் நினைந்து பாருங்கள்! பொன்னையே பொருளையே ஒருவன் நினைத்துக் கொண்டிருப்பானானால், அவன் நினைவு உள் முகமாய்த் திரும்பிய வழியும் அப் பொன்னையே பொருளையே நினைக்கும் அல்லாமல் உணர்வுக்கு உணர்வான அருளை நாடாது. ஏலேலசிங்கர் உள்முகமாய்த் தமது நினைவைத் திருப்பி யிருக்கையில், அவரது நினைவு அவரது வாணிகக் கணக்கில் அழுந்தி அருளை நாடாது நிற்க, அங்கே சென்று திருவள்ளுவநாயனார் அவரது நினைவின் நிலையைத் தமது அறிவுக்கண்ணாற் கண்டு, செட்டியார் வழிபாட்டில் இல்லை, கடைக்கணக்கிலிருக்கின்றார் என்று சொல்ல, அதுகேட்ட ஏலேலசிங்கர் தமது நினைவின் உண்மை கண்டு கூறிய ஆசிரியரைப் பணிந்தனர் என்னும் வரலாறு யாம் உரைப்பதன் உண்மையை இனிது புலப்படுத்தும். அவ்வளவு கூடப் போக வேண்டாம் இதனைப் பயிலும் ஒவ்வொருவருஞ் சிறிது நேரந் தனியே யிருந்து, தமது நினைவை உள்ளே இழுத்துத் திருப்பிப் பார்க்கட்டும். வெளிச்செல்லும் நினைவை உள்ளே இழுத்து இறைவன் திருவுருவிலே நிறுத்த முயலும் அந்தப் பொழுதே தாம் பற்றுவைத்த பொருள் நினைவுகள் ஆயிரம் ஆயிரமாகக் கிளைத்துத் தமதுள்ளத்தைச் சூழ்ந்து கவிந்து கொள்வதை அவர்கள் எளிதிற் கண்டு கொள்வார்கள் அல்லது கோயிலுக்குள்ளே கடவுளைத் தொழச் செல்வோரைச் சிறிது நேரம் உன்னித்துப் பாருங்கள். அங்கே இறைவனைத் தொழப்புகுந்த அவர்கள் அந் நினைவை மறந்து, தொழில் நிலைகளைப் பற்றியும் வாணிக வருமானங்களைப்பற்றியுந் திருமண நிகழ்ச்சிகளைப் பற்றியும் அரசியல் முறைகளைப் பற்றியும் இன்னும் எத்தனையோ எண்ணற்ற நிகழ்ச்சிகளைப் பற்றியும் இடைவிடாது பேசிக் கொண்டு செல்வதைக் காணலாம். கடவுளின் எதிரே சென்று அவர்கள் கைகூப்பித் தொழுகையிலுங் கூடத் தம் நினைவில் வெளிப் பொருள் எண்ணங்களையே நிரப்பிவிடுகின்றனர். கோயிலுக்குச் செல்வோரிற் பலர், பிறர் தம்மை மெச்சிக் கொள்வரென நினைந்துந் தம்மைக் கடவுளடியார் என்று மயங்கிப் பலருந் தமக்கு பொருளுதவி செய்வரென எண்ணியும், உலகத்தாரைப் பல வகையில் வஞ்சிப்பதற்கு அஃது ஏற்றதொரு வழியெனக் கருதியுமே அங்கே செல்கின்றனர். உண்மையன்பால் உள்ளம் உருகி உணர்வை ஒருவழி நிறுத்திக் கடவுளைத் தொழுதற் பொருட்டாகவே செல்லும் உண்மை அடியார் உலகில் மிகச் சிலர். இவற்றிற் கெல்லாங் காரணம் யாது? புறப்பொருள்களிற் பற்று மிகுதியும் வைத்தலேயன்றி வேறென்னை என்க. அவ்வாறாயிற், பற்றுவைத் தொழுகுதலுக்கும் பகுத்தறிந் தொழுகுதலுக்கும் வேறுபாடு என்னை யென்றால் அதனை முன்னே விளக்கிக் காட்டினாமாயினும், பின்னும் அதனையே ஓர் எடுத்துக்காட்டில் வைத்து விளக்கிக்காட்டுவாம். உலக இயற்கையழகினை நேரே கண்டு மகிழ விரும்பிய புலவன் ஒருவன் ஒரு கானகத்தை நாடிச்செல்ல, அங்கே ஓடும் ஒரு கான்யாற்றின் கரையிலே பச்சென வளர்ந்திருக்குங் கொழும்புல்லைப் பொன்னிறமான புள்ளிமான் ஒன்று மேய்ந்துக் கொண்டிருக்கக் கண்டு, அதன் அழகினையும் அதனைப் படைப்பித்த இரக்கமுள்ள தனிப்பெருங் கடவுளின் பேரருட்டிறத்தினையும் நினைந்தவாறாய் மகிழ்ந்திருக்கும் நிலையே பகுத்தறிந்து ஒழுகுதலாகும். அப்புலவன் அவ்விடத்தைவிட்டுச் சென்றபின் அங்கேயுள்ள வேடன் ஒருவன் அவ்விடத்தே வந்து அம்மானைக் கண்டு அதன் கொழுவிய தசையினைத் தின்ன விழைந்து அதனைக் கொல்லக் கருதும் நிலையே பற்றுவைத்து ஒழுகுதலாகும். பகுத்தறிந்தொழுகும் நிலையில் உலக இயற்கையின் அழகையும், அவ்வியற்கையிற் காணப்படும் பொருள்களின் அமைப்பின்றிறத்தையும், எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம் வைத்துள்ள ஆண்டவனின் அருட் பெருந்தகை மையையும் அறிவதிற் கருத்து ஊன்றித், தமக்கென ஒன்றையும் வேண்டாமல் அவ்வாண்டவனின் அருள் வழிப்பட்டு நிற்பதில் ஒருவரின் அறிவு முயற்சி செல்லுதலால், அந்த நிலையிலேயே பழகி வருகின்றவர்களுக்கு அவர்களது புறப்பொருள் அறிவானது அவர்கட்கு எவ்வகையிலுந் தீமையை விளைவியாமல், அவர்கள் அதனை அகத்தே திருப்புங்காலத்தும் அஃது எளிதாகத் திருவருளிலே படிந்து நிற்கும் . பற்றுவைத்து ஒழுகும் நிலையில் ஒருவரின் அறிவு முயற்சியானது பிறவுயிர்களின் நன்மை தீமைகளைக் கருதாமல் தம்முடைய நன்மையையே மிகவுங் கருதி, உலகவியற்கையழகையும் அதிலுள்ள பொருள்களின் அமைப் பின் றிறத்தையும் அவற்றைப் படைப்பித்த ஆண்டவனின் அருட்டன்மையையுஞ் சிறிதும் நினையாமல் அறியாமை வயப்பட்டு ஒழுகாநிற்கும். இந்த நிலையில் தனக்கென்று எந்தப்பொருண்மேல் நாட்டம் ஓடியதோ, அந்தப் பொருள் தனக்குக் கிட்டும் பொருட்டுப் பலவகையால் அல்லல் உழந்தும் பல தீமைகளைப் பிறவுயிர்கட்குச் செய்தும், அது கிட்டாவிடிற் பெரிதும் மனம் உளைந்தும் வருதலால், இந்நிலையில் நின்றவன் தன் பகுத்தறிவுணர்ச்சிகளை உள்ளே மடக்கி, இறைவன் அருளொளியிலே அவற்றை நிறுத்த முயல்வனாயின் அஃது அவனுக்குச் சிறிதுங் கைகூடாமற் போம். பகுத்தறிந்து ஒழுகும் நிலையிலோ ஒருவன் தனக்கென ஒன்றும் வேண்டிடாமல், உலக அமைப்புகளை வியக்கும் வழியே சென்று ஆண்டவனை நினைவு கூருந்திறம் வாய்க்கப்பெறுதலால், அதுவே ஒருவன் திருவருளைப் பெறுதற்கும், அத் திருவருள் வல்லமையால் மன ஒருமை மிகப் பெற்று எல்லாவுயிர்களையுந் தன்வழிப்படுத்தி நல்வழி காட்டுதற்கும் உரிமையினை உண்டாக்கும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் எல்லாப் பொருள்களையும் பகுத்தறிந்து பெற்றுப் பயன்படுத்தப் பாருங்கள். ஆனால், அவற்றிலே பற்று மிக வைத்து அவைகள் எல்லாம் உங்கட்கே வேண்டுமென்று நினையாதீர்கள்! தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு என்னுந் திருவள்ளுவனார் திருக்குறளை எக்காலும் இடைவிடாது கருத்தில் இருத்துமின்கள்! ஏராளமான பொருளைத் தேடுதற்கு முயலுமின்கள்! ஆனால், அப் பொருண் முழுதும் நான் பிறவுயிர்கட்கு நன்மை செய்தற் பொருட்டு ஆண்டவன் எனக்குத் தந்தருளினான் என்று கருதி, அதனை எல்லார்க்கும் வழங்கி இன்புறுமின்கள்! பாருங்கள் எண்ணிறந்த கோடி உயிர்கட்கு எண்ணிறந்த கோடி உடம்புகளையும், அவ்வுடம்புகளோடு இயைந்து அவ்வுயிர்கள் உலவ எண்ணிறந்த கோடி உலகங்களையும், அவ்வுலகங்களில் அவ்வுயிர்கள் நுகர்தற்கு எண்ணிறந்த நுகர்ச்சிப் பொருள்களையும், அவைகளை யெல்லாம் நுகர்தற்கு ஏற்ற கண் செவி மனம் முதலான அகக்கருவி புறக்கருவிகளையும் எல்லாம்வல்ல ஆண்டவன் எவ்வளவு இரக்கத்தோடும் எவ்வளவு அருளோடும் படைத்துக் கொடுத்திருக்கின்றான்! அங்ஙனம் அவன் இவற்றை யெல்லாம் உங்களுக்குப் படைத்துக் கொடுத்தது உங்களிடம் ஏதெனும் ஒரு கைம்மாறு பெறுதற் பொருட்டா? இல்லையே! அல்லது அவற்றைப் படைத்துக் கொடுத்தமையால் தனக்கு ஏதேனும் ஒரு நன்மை உண்டென்று அம் முதல்வன் கருதினனா? அதுவும் இல்லையே! ஏழையுயிர்களுக்கு இன்பத்தைத் தரல் வேண்டு மென்னும் இரக்கம் அன்றோ, அறியாவுயிர்களுக்கு அறிவு தரவேண்டும் என்னும் அருள் அன்றோ அவனை இங்ஙன மெல்லாம் உதவி புரியும்படி ஏவின! அவன் தனக்கொன்றும் வேண்டாது எல்லாவுயிர்கட்கும் நன்மை செய்வது போல, நீங்களும் உங்களுக்கென்றே ஒன்றும் வேண்டாமல் எல்லாவுயிர்கட்கும் உதவி செய்தல் கடமையன்றோ? நீங்கள் பிறரிடம் ஓர் உதவியை எதிர்பார்ப்பது போல, மற்றவர்களும் உங்களிடம் ஓர் உதவியை எதிர் பார்ப்பரன்றோ? அங்ஙனமாக, நீங்கள் பிறவுயிர்களின் நன்மையை ஓர்ந்து பாராமல் உங்கள் நன்மையிலே மட்டுங் கருத்தூன்றிப் பற்று வைத்தொழுகுதல் என்னை? அப் பற்றினால் நீவிர் பெற்ற பயன்கள் யாவை? துன்பமுங் கவலையும் இகழ்வும் பழியும் இறப்பும் பிறப்பும் அல்லவா? ஆகையால், முதலிற் பொருட்பற்றை ஒழிமின்கள்! பொருள் ஈட்டுதற்கு முயலும் போதெல்லாம் அப் பொருளிற் பற்று வையாது, அப் பொருள் பிறவுயிர்களுக்கும் பயன்படல் வேண்டும் என்னும் பகுத்தறிவு கொண்டு எல்லாவுயிர்களிடத்தும் நெஞ்சம் இளகி உதவி செய்து ஒழுகுமின்கள்! இங்ஙனஞ் செய்து வரவர நுங்கள் அறிவு தூயதாகி அகமுகமாய்த் திரும்பினால் இறைவன் அருள் வெளியையே நாடி நிற்கும் . இனி, மனைவி மக்கள்மேல் மெய்யன்புகொண்டு, அருமையிற் சிறந்த இவ்வுயிர்களை ஆண்டவன் என்னோடு பொருத்தியது, இவர்கட்கு நான் உதவிசெய்தும், இவர்கள் உதவியை நான் ஏற்றும், மற்ற எல்லாவுயிர்கட்கும் இடையறாது நன்மை செய்தற்கே என்று பகுத்தறிந்து, அவர்களுடன் கூடி எல்லா உயிர்கட்கும் வேண்டும் உதவிகளெல்லாஞ் செய்து ஒழுக நினைமின்கள்! ஆனால், அம் மனைவி மக்கள்மேற் பற்று மிகுதியும் வைத்து, இவர்களே எனக்குப் பொருள்கள், இவர்கட்கே வேண்டியன வெல்லாம் யான் செய்யக் கடவேன், எவர் எக்கேடு கெட்டாலும் என் மனைவி மக்கள் மேற் பற்று மிகுதியும் வைத்து, இவர்களே எனக்குப் பொருள்கள், இவர்கட்கே வேண்டியனவெல்லாம் யான் செய்யக் கடவேன், எவர் எக்கேடு கெட்டாலும் என் மனைவி மக்கள் வாழ்ந்தாற் போதும், யார் குடியைக் கெடுத்தாயினும் என் மனைவி மக்களைச் செல்வத்திற் புரள வைப்பேன் என்னுங்கொடிய பற்றுதல் நினைவை அறவே ஒழிமின்கள்! இங்ஙனம் அவர்கள்மேற் பற்று வைத்தலாற் பிறவுயிர்களைக் கெடுத்து நீவிருங் கெடுதலன்றி, நும் மனைவி மக்களையும் பாழாக்கி ஒழித்து விடுவீர்கள்! இங்ஙனம் பற்றுவைக்கும் உறைப்பால் ஒரோவொருகால் நீர் அகமுகமாக நும் நினைவைத் திருப்பினால், அந் நினைவு நும் மனைவி மக்களையே நினைந்திருக்கும் அல்லாமல் வேறு திருவருளொளியைச் சிறிதும் நாட மாட்டாதாகும். மனைவி மக்களுடன் கூடி இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் பற்று வைத்தொழுகுதற்கு அன்று, பகுத்தறிந்து ஒழுகுதற்கேயாம். இவ்வுண்மையை இனிதுணர்ந்த தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் , இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம், விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் 81) என்று அருளிய திருக்குறளைக் கடைபிடித் தொழுகுதலே இல்லறத்தி லுள்ளார் தமது நினைவைத் தூயதாக்கி ஒரு வழியில் நிறுத்துதற்குச் சிறந்த வழியாகும் என்க. இனி, மக்கள் மனம் இந் நிலவுலகிற் பிறந்தகாலந் தொட்டுப் புறப்பொருள்களிடத்து ஓடிஓடி அவற்றின் மேற் பற்று வைத்து வைத்து ஒழுகுதலால், அத் தன்மைத்தாகிய அம் மனத்தைச் சடுதியிலே அகமுகமாய்த் திருப்பப் புகுந்தால் அது சிறிதும் வழிப்பட மாட்டாது. ஒருகால் மிக வருத்தப்பட்டு அஃது அகத்தே திருப்பப்பட்டாலும், பற்றுவைத்த புறப்பொருள் நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாய் எழுந்து அக நினைவினை மறைத்துக் கொள்ளும். அஃது எதுபோலவென்றாற், பாகன் வயப்படாது வழிதுறை தெரியாமல் விரைந்து ஓடும் ஒரு முரட்டுக் குதிரையினைத் திடுமெனப் பிடித்து நிறுத்தப் புகுந்தால், அதற்குச் சிறிதும் படியமாட்டாது அல்லது பிடித்து வலிந்து நிறுத்தினாலும், அது தனக்குரிய முரட்டுத் தன்மையாற் சினங்கொண்டு பாகனையும் அருகிலுள்ளவர்களையும் உதைத்துக் கடித்துத் தீங்கு செய்யும். பின்னை அதனை அடக்கும் வகை அறிந்தவன், அஃது ஓடுமிடமெல்லாம் அதனைவிட்டு, அஃது அவ் வோட்டத்தால் இளைப்புற்று ஓடமாட்டாது நிற்கும் நேரங் கண்டு அதனைப் பிடித்துப் பழக்கி வழிப்படுத்துவான். அது முற்றுந் தன்வயப்படுங்காறும் அதற்குத் தீனி முதலியன வெல்லாங் குறைவாகவே வைப்பான். இந்த முறையிலே வைத்துக் குதிரைபோலவுங் குரங்கு போலவும் ஒரு நிலைப்படாது சுழலும் மனத்தை ஒரு வழியிலே நிலைப்பித்தல் வேண்டும். மனமென்னுங் குதிரையின் முரட்டுத் தன்மை யாதெனின், அது புறப்பொருள்களிடத்து அளவிறந்த பற்று வைத்து நடத்தலேயாம். பற்ற வைக்க வைக்க மனம் ஒரு சிறிதும் உயிரின் வழிப்படாது ஓடும். ஆகவே, பற்றுவைத்தலைச் சிறிது சிறிதாக ஒழித்தால் அதன் முரட்டுத் தன்மையும் படிப்படியாய்க் குறைந்துவிடும். பற்றுதலை ஒழித்த அளவானே அதனை அகமுகமாகத் திருப்பிவிடலாமோ வென்றால், அதுவுங் கூடாது. புறப்பொருள்களிடத்தே ஓடிஓடிப் பழகிய அதனை எத்துணை தான் அகத்தே மடக்கினும், அது பின்னும் பின்னும் அப் புறப் பொருள்களையே நாடி ஓடும் பழக்கம் மிகக் கொடிது! ஆதலாற், பின்னை எங்ஙனந்தான் அதன் ஓட்டத்தை ஆற்றுவித்து மடக்கல் கூடும் என்றால், அஃது யாம் மேலெடுத்துக் கூறிய பகுத்தறிந் தொழுகல் என்னும் முயற்சியினாலேதான் எளிதிற் கைகூடற் பாலதாம் என்க. இனி, மனம் என்னும் இவ்வகக்கருவி மேற்கூறியவாறு பலவகைப்பட்டு ஓடுதற்கு ஏது ஐம்பொறிகளேயாகும். கண்ணாற் காணப்பட்ட பொருள் களிடத்துஞ், செவியாற் கேட்கப்பட்ட பொருள்களிடத்தும், மூக்கால் முகரப் பட்ட பொருள்களிடத்தும், நாவாற் சுவைக்கப்பட்ட பொருள்களிடத்தும், மெய்யாற் றொடப்பட்ட பொருள்களிடத்துமாக மனம் பற்று வைத்து வைத்து நடக்கின்றது. இவ்வைம்பொறிகளும் இல்லையானால், மனம் பற்று வைத்து ஒழுகுதற்குச் சிறிதும் இடமே இல்லை. அவ்வாறாயின், இவ்வைம்பொறிகள் ஏன்றான் நம்முடம்பின்கண் அமைத்து வைக்கப்பட்டனவெனின், அவை இல்லையானால் நம் உயிரின் அறிவு சிறிதேனும் விளங்குதற்கு வகையில்லாமற் போம். அதுவானால், உயிரின் அறிவு விளக்கத்தின் பொருட்டு அமைத்து வைக்கப்பட்ட இவ்வைம் பொறிகள் பற்றுவைத் தொழுகுதற்கும் இடஞ்செய்வதேன் என்றால், ஐம்பொறிகள் உயிருக்கு உதவியாம் பொருட்டே படைக்கப்பட்ட கருவிகள்.இக் கருவிகளைப் பயன்படுத்தும் வகை நன்கு அறிந்து அவற்றை ஆள்பவன் அவற்றால் நலம்பெறுவன். அவற்றைப் பயன்படுத்தும் வகை தெரியாதவன் அவற்றால் துன்புறுவன். இங்ஙனம் அல்லாமல் அக் கருவிகளே ஒருவனுக்கு நன்மையைத் தருதலுந் தீமையைத் தருதலுஞ் சிறிதும் இல்லை. அஃது எதுபோல வெனின்; செவ்வையாக வடித்துச் செய்யப்பட்ட கூர்ங்கத்தி ஒன்று தொழிலாளி ஒருவன் கையிலிருந்தால் அதுகொண்டு அவன் பயன்படும் பல தொழில்களைச் செய்வான். அஃது அவன் கையிலன்றி ஒரு கொலைஞன் கையிலிருப்பின் அதனால் அவன் பல வுயிர்களைக் கொன்று தீங்கு இழைப்பன். இங்ஙனமே, ஐம்பொறிகளையும் பயன்படுத்தும் முறை தெரிந்து ஆள்பவன் அவற்றால், அறிவு மிக விளங்கப்பெற்றுத், தன் அறிவை அகமுகமாகத் திருப்பி இறைவன் அருளிலே நிறுத்தி எல்லையற்ற பேரின்பத்தைப் பெறுவன். அம்முறை தெரியாதவனோ உள்ள நாள் உள்ள வரையில் உலகத்திற்கே அழுதழுது இறுதியிற் சொல்லற்கரிய பெருந் துன்பத்தில் ஆழ்குவன். ஆகவே, இவ் வைம்பொறிகளாலும் நுகரப்படும் பொருள்கள்மேற் சிறிதும் பற்று வைத்தல் இல்லாமல், இந் நுகர்ச்சிப் பொருள்கள் எமக்கு உரியனவாய் இருத்தல் போலவே உலகத்தின்கண் உள்ள எல்லா உயிர்களுக்கும் இவை பொதுமையில் உரியனவாகும் என்றும், நாம் பெற்ற இவைகொண்டு நமதறிவையும் நம்மோடொத்த எல்லாவுயிர்களின் அறிவையும் விளக்கி எல்லாம் இன்புறும்படி செய்யக்கடவேம் என்றுங் கருத்தில் ஊன்றி ஒழுகுதல் எல்லார்க்கும் இன்றியமையாத கடமையாம். இத்தன்மையவாகிய இப்பொறிகள் ஐந்தையும் பற்றுண்டாவதற்கு இடந்தராமற் பகுத்தறிந்தொழுகுதற்கு உதவி கிரம்படி பழக்கி, நினைவைச் சிதறவிடாமல் ஒருவழிப்படுத்தும் முறைகளை அடைவே விளக்குவாம். 4. கண் எல்லா உறுப்புகளினும் மிக மேலானது கண்ணேயாகும். இதுபற்றி யன்றோ முற்றறிவுள்ள கடவுள் நமது முகத்தின்கண் அதனை மேலான இடத்திலே அமைத்து வைத்திருக்கின்றார். கண்ணிற்குக் கீழ்ப்பட்ட இடங்களிலேதாங் காது மூக்கு வாய் முதலான உறுப்புகள் அமைந்திருக்கும் உண்மையை உற்றுப் பாருங்கள்! கண்ணின் வாயிலாகத்தான் நம் மன அறிவு மிகவும் புலப்பட்டுத் தோன்றுகின்றது. உள்ளே மனத்தில் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளுங் கண்களிடத்தே தோன்றாமல் இரா. கண்களிற் காணப்படுங் குறிப்புகளைக் கொண்டு கட்புலனாகாத ஒருவன் உயிரின் இயற்கைகளை யெல்லாந் தெளிந்து கொள்ளலாம் என்பதனை இனிதுணர்ந்தே ஆசிரியர் திருவள்ளுவ நாயனார், குறிப்பறிதல் என்னும் இயலை வகுத்துக் கூறினார்; பொய்யா மொழிப் புலவருங், கண்ணிற் சிறந்த உறுப்பில்லையாவதுங் காட்டியதே என்று மொழிந்தார். ஆகையால், நம் மனவறிவு மிக ஒன்றுபட்டு நடக்கும் வெளி உறுப்பான கண்ணை முதலிற் பழக்குதல் வேண்டும். பொதுவாக மக்கள் வாழ்க்கையிற் கட்பார்வையானது ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பொருளை நாடி நாடி மாறிக் கொண்டேயிருக்கின்றது. இங்ஙனங் கட்பார்வை இடை விடாது மாறிக்கொண்டிருத்தலால், இதனோடு ஒன்றுபட்டு நடக்கும் மன அறிவும் இடைவிடாது மாறிக் கொண்டேயிருக்கின்றது. ஓரிடத்திலாவது ஒரு பொருளிலாவது கட்பார்வை முனைத்து நில்லாமல் எந்நேரமும் அசைந்து கொண்டே யிருத்தலால் அதன் வழிப்பட்ட மனமும் எந்நேரமும் அசைந்து கொண்டே யிருக்கின்றது. இப்படிப் பட்ட ஒழியா மன அசைவினால் மக்களுக்கு நினைவின் ஆற்றல் குறைந்து போகின்றது. எந்தப் பொருளையும் அவர்கள் செவ்வையாக நினைவு கூரக் கூடவில்லை. எல்லாவற்றையும் அடுத்தடுத்து மறந்து போகின்றார்கள். நாடோறும் பழகிக் கொண்டிருக்கும் பொருள்களையுங்கூட அவர்கள் உற்றுப் பார்த்து அறிவ தில்லாமையால் அவற்றையும் அவர்கள் மறந்து போகின் றார்கள். ஒருவன் தான் நாடோறும் பழகிவந்த தன் மனைவி மக்களின் உறுப்பு அடையாளங்களைச் செவ்வையாக நினைத்துப் பார்த்துச் சொல்லும்படி ஒருவர் கேட்டால், அப்போது அவன் அவற்றைச் சொல்லத் தெரியாமல் விழிக்கும் விழிப்பைத் தெரிந்துகொள்ளலாம். அவன் நாடோறும் பழகி வரினுந், தன் மனைவி மக்களின் உறுப்பு அடையாளங்களை அவன் பகுத் தறிந்து பாராமையால், அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்கள் அடையாளங்களை நினைவுகூர்ந்து சொல்லும் நினைவின் ஆற்றல் இல்லாதவனாகின்றான். ஒரு மாணாக்கன் தன் புத்தகமொன்றை இழந்துவிட, அதனை எடுத்தவன் அவனைப் பார்த்து உன் புத்தகத்தின் அடையாளத்தைச் சொல்வா யானால் உனக்கு அதனைத் தருவேன் என்று சொன்னான்; புத்தகத்திற்கு உரியவன் அதனைத் தான் நாடோறும் வைத்திருந்தும் அதன் அடையாளங்களை உற்றுப் பாராமையால் விழிப்பானாயினான்; எடுத்தவன் அவனை நோக்கி உன் புத்தகத்தை நீ நின் கண் எதிரே விரித்துப் பார்ப்பதுபோல் மனத்திலே எண்ணிக்கொண்டு, இப்போது அதில் உள்ள ஏதேனும் ஓர் அடையாளத்தைக் குறிப்பிட்டுச் சொல்? என்று கேட்டான்; உடனே அவன் சிறிதுநேரம் பேசாதிருந்து ஆம், நூறு பக்கங்களுக்கு அப்பால் என் கைப் பெருவிரல் மையோடு அழுந்திய அடையாளம் இருக்கிறதா? பார் என்றான்; அங்ஙனமே அவன் அதனைத் திருப்பிப் பார்க்க அவ்வடையாளம் இருக்கக் கண்டு, அதனை அவன் புத்தகமென்றே துணிந்து கொடுத்து விட்டான். இவ்வெடுத்துக் காட்டினாற், கட்பார்வை ஒரு பொருளில் அழுந்திச் செல்லாவிட்டால் அப்பொருள் நினைவுக்கு வாராதென்பதும், அதனை நினைவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் அதனைக் கண்ணெதிரே பார்ப்பதுபோல் மனத்தால் எண்ணிப் பழக வேண்டுமென்பதும் இனிது விளங்குகின்றன அல்லவோ? மனத்தாற் பார்த்துப் பழகிய விடத்துங் கட்பார்வையாற் சிறிதேனும் உற்றுப் பார்க்கப்படாத பொருள் நினைவுக்கு வாராமல் மறைந்து போவதே பெரும்பாலும் இயற்கை. இன்னுந் தாம் வைத்திருக்கும் பொருள்களைப் பற்றியுந் தாம் இருக்கும் இடங்களைப் பற்றியுந், தாம் வழிநடந்து சென்ற ஊர்களைப் பற்றியும் வேறு பலவற்றைப் பற்றியும் விரித்துச் சொல்க என்றால், அங்ஙனமே சொல்லத் தெரியாமல் விழித்துத் தம் அறியாமையை வெளிப்படுத்தும் மக்கள் அந்தோ! தம்மை அறிவுடையார் என இறுமாந்து எண்ணியிருப்பது எவ்வளவு பேதமை! இங்ஙனம் ஒவ்வொரு நொடியுங் கட்பார்வையானது மாறிமாறிச் சென்று, ஒரு பொருளிலாவது அழுந்தி அதனைப் பகுத்தறிந்து செல்லாமையால் மக்களுக்கு நுண்ணறிவு விளங்காமற் போவதுடன், நினைவினாற்றலுங் குறைந்து போகின்றது. இதனால், அவர் அடைந்த பயன் யாது? அறியாமையேயாம். அறியாமை மிக்க இவர்க்கும் நிலத்திற் சிதர்ந்து கிடக்குங் கூழாங்கற்களுக்கும் வேறுபாடு என்னை? சொல்லுமின்! இவ்வறியாமையாற் பெறுவது யாது? சாக்காடுதான். எங்ஙனம் எனின், மக்கள் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையா நிலைக்களனாயுள்ளது தலையின்கண் அமைந்துள்ள மூளையேயாகும். இம் மூளையானது, மக்களினறிவு விளங்குதற்கு ஓர் அருமருந்தன்ன கருவியாகத் தரப் பட்டிருக்கின்றது. அம் மூளையில் அமைந்த நுண்ணிய நரம்புகள் பலவுங் கண் செவி முதலான ஐம்பொறிகளோடு இயைந்து நிற்பதனால், அவ்வைம்பொறிகள் அசையுந்தோறும் அவற்றில் வந்து பதிகின்ற வெளிப்பொருட்டன்மைகள் அத்தனையும் அந் நரம்புகளின் வழியே சென்று மூளையிற் பதிந்துவிடுகின்றன. ஆனால், இவ்வைம்பொறிகளும் இடைவிடாது வெளிப் பொருள்கள் ஒவ்வொன்றையும் விட்டுவிட்டு அறிவதனால், மூளையிற் பதியும் அவற்றின் தன்மைகள் அழுத்தமாக நில்லாமல் மெல்லென நிற்கின்றன. அழுத்தமாகப் பதியுந் தன்மைகளால் நினைவினாற்றல் மிகுதிப்படும் மெல்லென நிற்பனவற்றால் அவ்வாற்றல் குறைவுபடும். வெளிப்பொருட்டன்மைகள் மூளையில் அழுந்திப் பதிவதனால் அம் மூளையின் அணுக்கள் இறுகி வலுப்படுகின்றன. அங்ஙனம் அவை வலுப்படவே மூளையும் வலுப்பட்டு வாழ்நாள் நீளும் இனி, வெளிப்பொருட் டன்மைகள் அங்ஙனம் அழுந்திப் பதியாவிட்டால் மூளை வலிவுகுன்றி வாழ்நாளுங் குறையும். வாழ்நாள் குறைவதொன்று மட்டுமோ? நினைவினாற்றலுங் குறைந்து, அதனால் உயிருக்கு அறிவு விளங்குதலும் இல்லையாகி இவ்வுடம்பு வெறும் பயனற்றதாகி ஒழிகின்றது. பாருங்கள்! நமது அறிவு விளங்குதற் பொருட்டுத் தரப்பட்ட ஐம்பொறிகளே, தெரிந்து பயன்படுத்தப் படாவிட்டால் அவ்வறிவினைத் தடை செய்து உடம்பையும் பாழாக்கும். ஆகையால், அவற்றைத் தெரிந்து பயன்படுத்தித் தமது அறிவை விரிவு செய்ய வேண்டுவார் எவரும் ஐம்பொறிகளிற் சிறந்த கட்பொறியை உற்றுப் பார்க்கும் வழக்கத்திலே வைத்து இடைவிடாது பழக்கி வரல் வேண்டும். இனிப் பார்வைக்கு இனிமை தராத பொருள்களிலே மனம் அழுந்தி நிற்கமாட்டாதாகலின், முதலில் அதனை இனிமை வாய்ந்த பொருள்களிலே நிறுத்தி வைக்க முயலல் வேண்டும். எடுத்துக்காட்டாகப் பால் போல் நீர் நிரம்பின ஒரு குளத்திலே செக்கச்செவேல் என அலர்ந்திருக்குஞ் செந்தாமரை மலர்களைக் காணும்படி நேர்ந்தால், அம் மலர்களின் ஒவ்வொரு உறுப்பையும் நன்றாக உற்றுப் பார்த்து அவற்றின் தன்மைகளை யெல்லாஞ் செவ்வையாக நினைவிற் பதித்தல் வேண்டும். அதன் இலைகளின் அமைவையுந் தண்டின் வடிவையும் நினைவில் இருத்தல் வேண்டும். ஒரு கலைமானைப் பார்க்க நேர்ந்தால் அதன் அமைவுகளை உற்றுப் பார்த்து, மற்றவகை மான்களுக்கும் அதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் குறிதவறாமல் நினைவு கூரல் வேண்டும். நண்பர் ஒருவரைப் பார்க்கும்படி நேர்ந்தால் அவருடைய உடம்பின் அடையாளங்களை உற்றுப் பார்ப்பதுடன், அவர் பேசும்போது செய்யும் உறுப்பின் அசைவுகளையும் முகத்தின் நெளிவுகளையுங் கண்ணின் குறிப்புகளையும் மிக நுணுக்கமாக அளந்தறிந்து நினைவில் அழுத்தல் வேண்டும். ஒரு தெருவில் நடக்கும்படி நேர்ந்தால் அத் தெருவின் இருபுறத்தும் உள்ள வீடுகளின் கட்டிடப்பாங்கையும் அத்தெருவின் வளைவுகளையும், அதிற் பிரியுங் கிளை வழிகளையும் முறை பிசகாமல் தெரிந்துணரல் வேண்டும். தாம் நாடோறும் பார்க்கும் மாடு குதிரை முதலான உயிர்களின் வடிவ வேறுபாடுகளையுங் கண்டறிதல் வேண்டும். எத்தனைபேர் மாட்டுக்கு இரட்டைக் குளம்புங் குதிரைக்கு ஒற்றைக் குளம்பும் உண்டென்பதனை அறியாதவர்களாய் இருக்கின்றார்கள்! கொம்புள்ள விலங்குகள் எல்லாம் இரட்டைக்குளம்பு உடையன என்பதை எத்தனைபேர் இன்னும் அறியாதவர்களாய் இருக்கின் றார்கள்! இன்னும் மரங்கள் மிக்க தோப்புகளிலும் நாட்டுப் புறங்களிலும் மலைகளிலுஞ் செல்ல நேர்ந்தால் அங்குள்ள பலவகை மரங்களின் அமைப்புகளையும் நுணுக்கமாய்த் தெரிந்து அம்மரங்களின் பெயர்களையுங் கேட்டறிதல் வேண்டும். அவ்விடங்களில் இயங்கும் பல்வகைப் பறவைகளின் பண்புகுறி செயல்களையெல்லாம் இனிது நோக்கி நினைவிற் பதித்து மாறாப் பெருமகிழ்ச்சி அடைதல் வேண்டும். இக்காலத்துப் புலவர் களுக்கும் முற்காலத்துப் புலவர்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்! இக்காலத்துப் புலவர்கள், தாம் கண்ணாற் காணாத பொருள்களையும் பழம் புலவர்களின் பாட்டுகளிற் பார்த்துப் பாடுவார்களே அல்லாமல் தாமாகவே புதிதாகக் கண்டு பாடுந்திறம் இல்லாதவர்களாய் இருக்கின்றார்கள். ஒரு பெண்ணின் கண்ணைப் புனைந் துரைக்கப் புகுந்தால், கருவிளை கடல்வேல் தாமரை மான் குவளை முதலிய ஒப்புமைப் பொருள்கள் எல்லாவற்றையும் ஒரு வரைதுறையின்றி ஒருங்கே எடுத்துக் கூறிவிடுவார்கள். பழைய புலவரோ எந்தப் பெண்ணின் கண்ணுக்கு எந்தப் பொருள் பொருந்துமோ அதனை மட்டும் எடுத்துச்சொல்வார்கள். ஒரு பெண்ணின் கண் நீலநிறம் படர்ந்த வெண்மையொடு கூடி விளங்குமானால், அதற்குக் குவளை மலரின் இதழை மட்டும் ஒப்பாகக் கூறுதல் பொருந்துமேயன்றி அதற்குத் தாமரையிதழை ஒப்பாகக் கூறுதல் சிறிதும் பொருந்த மாட்டாது. எந்நேரமும் மருண்டு புரளும் ஒரு பெண்ணின் கண்ணுக்கு மானை ஒப்பாக எடுத்துச் சொல்லலாமேயன்றி அமைந்த நோக்கம் உடைய ஒரு மாதின் கண்ணுக்கு அதனை ஒப்பாகச் சொல்லுதல் குற்றமாகும். நெட்டிப்பூவைத் தாம் பாராதிருந்தும் இக்காலத்துப் புலவர் அதனை மாதரின் இதழுக்கு ஒப்பாக எடுத்துச் சொல்லி விடுகின்றனர்! ‘bešY¡ fhŒ¡F« ku« ïJjhndh? என்று கேட்கும் நகரத்துச் சிறார்க்கும் இக்காலத்துப் புலவர்க்கும் வேறுபாடு மிகுதியாய் இல்லை. பழைய புலவர் சொன்னதையே இவருஞ் சொல்வார்கள். உலகத்துப் பொருள்களை ஆராய்ந்து அறிந்து பழக்கம் ஏறாத இவர்கள் எதுகையும் மோனையுந் தம் கையில் அகப்பட்டு விட்டனவே என்று அகம்மகிழ்ந்து ஆயிரம் ஆயிரமாகப் பாட்டுகள் பாடிவிடுவது அறிவுடையோர் கண்டு நகுதற்கே இடந்தருகின்றது. பத்துப்பாட்டு முதலான பழைய செந்தமிழ்ப் பாட்டுகளில் உள்ள இரண்டு அடிகளுக்கு இக் காலத்தார் பாடும் இரண்டிலக்கம் பாட்டுகள் கூட ஈடாகமாட்டா. ஏன் என்றாற், பழைய புலவர்கள் தமது அறிவை ஒருவழியில் நிறுத்தும் ஆற்றல் வாய்ந்தவர்கள். கண் முதலிய பொறிகளாற் காணப்பட்ட பொருள்கள் ஒவ்வொன்றையும் ஆழ்ந்தறிந்து அவற்றின் அமைவுகளை முற்ற உணர்ந்தவர்கள் பிற்காலத்தவரோ அவ்வுணர்ச்சி இல்லாமல் முன்னோர் சொன்னவற்றையே திருப்பித் திருப்பிக் குழறுபடையாய்ச் சொல்லுங் கிளிப் பிள்ளைகள். ஆகையினாலேதான் பின்னோர் பாட்டுகள் முன்னோர் பாட்டுகளைப் போற் சிறப்படைவதில்லை என்க. மேற் சொல்லியவாறு உலக இயற்கைப் பொருள்களை உற்றுப் பார்க்க பார்க்க, இதற்கு முன்னெல்லாம் பலவாறு ஓடிச் சிதறிப்போன நம் நினைவுகளானவை இனி அங்ஙனஞ் சிதறாமற் குவிந்து நின்று துலக்கமுற்று விளங்கும். நம் அறிவானது கண்வழியே சென்று ஓர் அழகிய பொருளை உற்றுப் பார்க்குங்கால் நம்முடைய கண்கள் சிறிதும் இமையாமல் திறந்தபடியே நிற்றலைக் காண்கின்றோம் அல்லமோ? இன்னும் நம் அறிவானது ஒன்றனை ஆய்ந்து அறியுங் காலத்தும் நம் கண்கள் சிறிதும் இமையாமல் திறந்தபடியே நிற்றலையும் வழக்கத்தில் அறியலாம். இதனால், அறியப்படும் உண்மை யாது? நமதறிவு ஒருவழிப்பட்டு நிற்கும் போதெல்லாம், நம் மனம் எங்குஞ் சென்று அலையாமல் அமைந்து நிற்குங்காலெல்லாம் நம்முடைய விழிகள் இமையாமல் நிற்கும் என்பதும், ஆகவே கண்களை அடிக்கடி இமையாமல் திறந்தபடியே வைத்துப் பழக்குவது மனத்தை ஒருவழிப்படுத்துதற்கு ஏற்ற முறையா மென்பதுமே யன்றோ? இவ் வுண்மையை உணர்த்துதற்கன்றோ மக்களினும் உயர்ந்த தேவர்கள் இமையா நாட்டத்தின ரென்று சொல்லப்படுவாராயினர்? தேவர்கள் நம்மினும் உயர்ந்தவர்களானது எதனால்? தமதறிவை ஒரு வழியில் நிறுத்தியதனாலேயாம். அவர்கள் அறிவு மக்களறிவு போல எந்நேரமும் பல துறைப்பட்டு ஓடி வலிவு குன்றாமல், எந்நேரமும் இறைவன் திருவருள் ஒளியையே நாடி அதன்கண் உறைத்து நிற்றலினாலேயே அவர் கண்களுஞ் சிறிதும் இமைத்தல் இல்லாமல் திறந்தவாறேயாய் நின்று விளங்குகின்றன. அவ்வாறின்றி மக்கள் மனமானது இடைவிடாது ஓடிஓடி வழிதுறை தெரியாமல் திரிவதனாலன்றோ, அவர்கள் கண்களும் இடைவிடாது இமைத்துக் கொண்டே யிருக்கின்றன. இனி, ஓயாது இமைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய கண்களைத் திடீரென இமையாமல் நெடுநேரம் நிறுத்திவிட்டால், அதனால் நம் ஊனக்கண்கள் பழுதுபட்டுப் போகும். ஆகையால் திடீரென நிறுத்தப் பழகாமல் அவற்றைச் சிறிது சிறிதாக நிறுத்தப் பழகிவரல் வேண்டும். முதன்முதல் வெண்மையான சுவரில் நீல மையினால் ஒரு நாரத்தம்பழம் அவ்வளவு வட்டமான ஒரு வடிவு தீட்டல் வேண்டும். அங்ஙனந் தீட்டப்படும் வடிவானது தன் பார்வைக்கு நேராக அமைக்கப் படுதல் வேண்டும். நின்ற நிலையிற் பார்வை செல்லுதற்கு நேராகவேனும் நாற்காலியிற் உட்கார்ந்த நிலையிற் பார்வை செல்லுதற்கு நேராகவேனும் அவ்வடிவு சுவரில் இருக்கலாம். நின்றாலும், நாற்காலியில் இருந்தாலும் முதுகு கூனாமல் நேராக நிற்றல் வேண்டும். இங்ஙனம் இருக்கும் நிலையில் ஆடாமல் அசையாமற் கண்களைப் பரக்கத் திறந்து, அமைதியோடுஞ் சுவரில் உள்ள நீலவட்டத்தை இமையாமற் பார்க்க வேண்டும். துவக்கத்தில் மூன்று நிமிஷ நேரம் பார்த்தல் போதும். இவ்வாறு காலைமாலை இரண்டு வேளையுந் தன்னந்தனியே ஓர் அறையில் இருந்து கொண்டு மூன்று நாட் செய்து வருக. அதன்பின் சுவரில் தீட்டிய நீலவட்டத்தை வரவரச் சிறிதாக்கி வருவதோடு, அதனை உற்றுப் பார்க்கும் நேரத்தையும் படிப்படியே மிகுதிப்படுத்தி வருதல் வேண்டும். இவ்வாறு அந்த நீலவட்டத்தை ஒரு கடலையளவுள்ளதாகச் செய்து, அதனை ஒரு கால்மணி நேரம் வரையிற் கண்ணிமை யாமல் உற்றுப் பார்க்கப் பழகிய பின்னர், நல்ல ஒரு தெளிவான கண்ணாடியிற் கறுப்பு மையினாற் கடுகளவு ஒரு சிறு புள்ளியை இட்டு, அதனை அரைமணி நேரத்திற்குக் குறையாமல் உற்றுப் பார்க்கப் பழகிக் கொள்ளல் வேண்டும். இங்ஙனமெல்லாம் பழகவே, கண்களிலுள்ள நரம்புகள் வலிவடைவதுடன், அந் நரம்புகளோடு தொடர்புடைய மூளையின் பகுதியும் வலிவெய்தி அதனோடு ஒற்றுமைப்பட்டு நிற்கும் உயிரின் மனமும் வலிவுகூடி ஒன்றிலே உறைத்து நிற்கவல்லதாகும். கண் இமையாது நிற்க அதன் வழியே உள்ளமும் அசைவின்றி ஒன்றிலே நிலைபெற்று நிற்குமாயின், அப்போது அவ் வுள்ளத்தால் நினைக்கப்பட்டது நினைந்தபடியே கைகூடும். இனி, இங்ஙனம் பழகிய கண்களின் உதவிகொண்டு எந்த வுயிரையுந் தன்வழிப்படுத்தல் எளிதிலே கைகூடற் பாலதொன்றாம். கண்ணுள்ள எல்லா வுயிர்க்கும் அவற்றின் மன அறிவு கண்களின் வாயிலாகவே விளங்கி வருகின்றதென்னும் உண்மை முன்னரே எடுத்துக்காட்டப்பட்டிருப்பதனால், எந்த உயிரைத் தன்வழிப்படுத்தல் வேண்டுமாயினும் அதனை அவற்றின் கண்களின் வாயிலாகவே செய்தல் வேண்டுமென்பது எவர்க்கும் இனிது விளங்கும். ஆகவே, கண் உள்ள எந்தவுயிரையுங் கண்ணுள் உற்றுப்பார்த்துத் தான் நினைத்தபடி ஆகவேண்டு மென்று கோரினால், அஃதப்படியே ஆகும் என்பதிற்றடை யில்லை. அங்ஙனமாயின், உற்றுப்பபார்க்கப் பழகிய ஒருவர் மற்றொருவரை உற்றுப் பார்த்துத் தாம் நினைத்தபடி நடத்த முயல்வராயின், அம் மற்றவரும் அங்ஙனமே அவரை எதிருற்று நோக்கித் தாம் நினைந்தபடி நடத்த முயல்வரன்றோ? அங்ஙனம் ஒருவரை யொருவர் எதிரிட்டு நோக்கும் இருவரில் எவரது எண்ணம் ஈடேறும் என்றால் வலிமையில் மிகுதிப்பட்டு நிற்பவர் உள்ளமே அதனிற் குறைந்து நிற்பவரைத் தன்வழிப்படுத்திக் கொள்ள வல்லதாகும். அங்ஙனமாயின், ஒருவரினும் வேறொரு வர்க்கு வலிமை மிகுதியாதற்கு ஏது யாதோவெனின், உள்ளத்தைப் பலவாறு ஓடவிடாமல் ஒரு துறையில் மட்டுமே உறைத்து நிற்பிக்க மிகப் பழகினவர்க்கு வசிய ஆற்றலும் மிகுதிப்பட்டுத் தோன்றும். இந்தப் பழக்கத்துடன் மூச்சை அடக்கவுந், தமது கருத்தை இறைவன் திருவுருவத்தில் இடையறாது நிறுத்தவும் பழகிக் கொண்டவர்க்கு எல்லையில்லாத வசிய ஆற்றல் உண்டாகுமென்பது திண்ணம். இனி, ஒருவர் பிறர் ஒருவரை உற்றுப் பார்க்குங்காற், பார்க்கப்பட்டவர் பார்த்தவரைக் குற்றமாக நினைத்து அவர்மேல் அருவருப்புஞ் சினமுங் கொள்வரே என்றால், அஃது உண்மை யன்று. உற்றுப்பார்த்தலுக்கும் உறுத்துப் பார்த்தலுக்கும் வேறுபாடு நிரம்ப உண்டு. உற்றுப் பார்த்தலென்பது கருத்தை ஒருவழிப்படுத்தி அமைதியான நோக்கத்தோடும் இனிதாக மற்றொருவர் கண்ணுள்ளே நோக்குதலாகும். இச்செயல் அமைதித் தன்மையின் பாற்பட்டு நடப்பது. உறுத்துப்பார்த்தல் என்பதோ சினங்கொடுமை பொறாமை பகைமை இணை விழைச்சு முதலான ஏதுப்பற்றி உள்ளம் நிலைகலங்கி இன்னா நோக்கத்தோடும் ஒருவர் பிறரொருவரை வெறித்துப் பார்த்த லாகும். இச் செயல் இழிந்த இயற்கையின்பாற் பட்டு நிகழ்வது. உறுத்துப் பார்க்கும் பார்வையே பிறருக்கு அருவருப்பையும் வருத்தத்தையும் வெருட்சியையும் உண்டாக்கு மேயல்லால் உற்றுப் பார்க்கும் இனிய பார்வை அவற்றை உண்டுபண்ண மாட்டாது. இது விருப்பத்தையும் அன்பையும் எழுப்பிப் பார்ப்பவர் பார்க்கப்பட்டவர் இருவரையும் அன்பிற் பிணிப் புண்ணச் செய்து பெருநலங்களைப் பிறப்பிப்பதாகும். அன்பிற் சிறந்த இருவர் ஒருவரையொருவர் அமைதியோடும் இனிதாக உற்றுப் பார்த்து அகம் மகிழும் நிகழ்ச்சியில் இவ்வுண்மையை வைத்துக் கண்டுகொள்க. எனவே, உற்றுப்பார்க்கும் இனிய நோக்கத்தைச் செவ்வையாகத் தெரிந்து பழகுமவர்க்குக் கைகூடாத தொன்றில்லையென்பது தெரிந்து கொள்ளற்பாற்று. இங்ஙனங் கண்களை இமையாமல் வைத்துப் பார்த்து அவ்வழியே தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுஞ் செயல் மக்களுள்ளும் மக்களினுந் தாழ்ந்த உயிர்களுள்ளுஞ் சிறுபான்மை இயற்கையாகவே நிகழ்ந்து வருவதுங் காணலாம். இதனைப் பின்னே எடுத்துக்காட்டுஞ் சில உண்மை நிகழ்ச்சி களினால் இனிது விளக்கிக் காட்டுவாம். தொலைவான தீவு ஒன்றிலுள்ள ஒருவகை மக்கள் ஒரு காலத்தில் தற்செயலாய் நிகழ்ந்த ஓர் இடரில் அகப்பட்டுப் பிழைக்க முடியாத காயம் அடைந்தார்கள். அவர்களுள் ஆண்டு முதிர்ந்த ஒரு கிழவனுக்குக் கால்முறிந்து போய் விட்டமையால் அதனை வெட்டியெடுத்துவிட்டு மருந்து கட்டல் வேண்டி யிருந்தது. அவனுக்கு மயக்கத்தை உண்டு பண்ணி அதனைச் செய்யவேண்டுமென்று புண் மருத்துவர் தெரிவித்தனர். அக் கிழவனோ அங்ஙனம் உணர்விழந்து கிடக்க இணங்காதவனாய்த் தன் மனைவியைக் கிட்ட அழைத்துத் தன்னெதிரே உட்கார்ந்து கொண்டு கண் இமையாமல் தன்னை அவள் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும்படி கற்பித்தான். அவனது கட்டளைப்படியே அவனை அவள் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க, அப் புண் மருத்துவர் அவன் காலை அறுத்தெடுக்கப் புகுந்தார். புகுந்து அதனை அறுத்தெடுக்கும் முயற்சியில் அவர் கருத்தூன்றி யிருக்கையில், அக் கிழவனுக்கெதிரிலிருந்து அவனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவன் மனைவி கண்களில் நீர் வரிவரியாய் ஒழுகக் கூக்குரலிட்டுப் புலம்பி அழுவாளானாள். அக் கிழவனோ தன் கால் அறுப்புண்ணும் நோய் சிறிதும் உணராதவனாய், மிக்க அமைதியோடுந் தன் மனைவி அழுவதைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான். இது செய்து முடிந்த பின், அறுத்தெடுத்தபோது அவன் நோய் சிறிதும் உணராமல் இருந்ததெப்படி என்று கேட்க, அவன்தான் அதனைச் சிறிதும் உணரவில்லை யென்றுந், தன் மனைவியே வெளிப்பார்வைக்கு அத்துன்பத்தை அடைந்தாள்போற் காட்டினள் என்றும் விடை பகர்ந்தான். இதனால் அறியப்படுவது யாது? தீவுகளிலுங் காடுகளிலும், மலைகளிலும் உள்ள காட்டுமிறாண்டிகளுங்கூட உற்றுப் பார்க்கும் பழக்கத்தாற் பல நன்மைகள் அடையும் வழியை இயற்கையாகவே உணர்ந்திருக் கிறார்களென்பதேயாம். ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்களுங் கலக்க, அவ்வழியே அவர்தம் மனங்களும் அவை வாயிலாக அவர்தம் உயிர்களுங் கலக்க, இங்ஙனம் நிகழும் உயிர்க்கூட்டுறவில் அவரது உயிர் உடம்பில் உறைத்து நில்லாமல் மேல்நிலையிலுள்ள அறிவுவெளி அல்லது அன்பு வெளியில் உருகி ஒன்றுபட்டு நிற்கின்றது. அங்ஙனம் நிற்கப்பெறும் அவர் அவ்வாறு தம் உடம்பின்கண் முனைப்பின்றி நிற்கும் நேரம் வரையில் தமதுடம்பில் நிகழும் நிகழ்ச்சிகளை ஒரு சிறிதும் உணர மாட்டார். இங்கே எடுத்துக்காட்டிய கிழவன் தன் மனைவி கண்களையும், அவன் மனைவி அவன்றன் கண்களையும் உற்று நோக்கி கொண்டிருந் தமையால் அவனது உயிர் அவனுடம்பிகண்முனைத்து நில்லா தாயிற்று; முனைத்து நில்லாதாகவே, புண் மருத்துவர் தன் காலை அறுத்தெடுக்கவும் அதனால் உண்டான நோயைச் சிறிதும் உணரானாய் அவன் அமைதியோடும் மகிழ்ந்திருந்தான். இவ்வுண்மையை எமது அறிவு நிகழ்ச்சியால் ஆராய்ந்து பார்த்த உண்மைகளுஞ் சில உண்டு. அவற்றுள் ஒன்றை இங்கே எடுத்துக் கூறுகின்றோம். ஏறக்குறையப் பதினாறு ஆண்டுள்ள எம் மாணவர் ஒருவரை ஒருகால் எமதில்லத்தில் வருவித்து, எம் எதிரே நிறுத்திக்கொண்டு, எம்முடைய கண்களை உற்றுப் பார்க்கும்படி கற்பித்தேம். அவரும் அங்ஙனமே கண் இமையாமல் எங்கண்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். இவ்வாறு இரண்டொரு நிமிஷங்கள் இருந்த பிறகு அவரது வலக்கையைத் தூக்கிக் கவிழ்த்து இவ்விடத்தே ஒரு குண்டுசியை நுழைக்கப் போகின்றேன், அங்கே செந்நீர் வராது. அதனால் நீர் நோய்த் துன்பம் உணரவும் மாட்டீர் என்று சொல்லிக் கொண்டே ஒரு குண்டூசியை அவரது புறங்கையின் மேற்சதையிற் செருகி வைத்தேம். ஊசியைச் சதையில் நன்றாய் அழுந்தச் செருகியும் அங்கே சிறிதுங் குருதி வரவும் இல்லை. அவரதனால் துன்பம் எய்தவும் இல்லை. சிறிது நேரஞ் சென்ற பின் அவ்வூசியைப் பிடுங்கிவிட்டு, அவ்விடத்தை எமது விரலாற்றேய்த்து விட்டேம். ஊசி குத்திய காயஞ் சிறிதேனும் அங்கே காணப்படவில்லை. இங்ஙனஞ் செய்து பார்த்த பிறகு, யாம் அம் மாணவரை நோக்கி, யான் நுமது கையின் புறத்தில் ஊசி ஏற்றியபோது நீர் வருந்தாமல் இருந்ததெப்படி? என்று வினவினேம். அதற்கவர், நீங்கள் கற்பித்தபடி யான் உங்கள் கண்களையே நோக்கிக் கொண் டிருந்தேன். அதனால் ஊசி ஏற்றிய நோயை யான் உணர்ந்திலேன் என்று விடை கூறினார். அவர் சொல்லிய மறுமொழி பொருத்த மாகவே இருந்தது. இன்னும், ஆங்கில மொழியில் மிகவுங் கிளர்ச்சியொடு பேசுஞ் சொற்றிறம் வாய்ந்த கற்றார் ஒருவர் ஒருகால் ஒரு பேரவையிற் பேச நேர்ந்தபோது, தாம் அவைத்தலைவரை நோக்கிக், குறிக்கப்பட்ட கால எல்லையைக் கடந்து யான் பேசிக்கொண்டு போவேனாயின், எனக்கு அதனைக் குறிப்பிடுங்கள், என்று சொல்லிவிட்டுத், தாம் பேச வேண்டிய பொருளை எடுத்து விரித்துப் பேசுவாரானார். விழித்தகண் விழித்தபடியே யிருக்க, அவர் மிகுந்த மனவெழுச்சியோடும் மாரிகாலத்து மழையே யென்னப் பேசிக்கொண்டு போவா ராயினர். இதற்குட் குறிக்கப்பட்ட கால வெல்லையும் கடந்து விட்டது. அவைத் தலைவரும் அதனை அவர்க்குக் குறிப்பிக்க வேண்டிப் பின்னே அவரது சட்டையைப் பிடித்து முதலில் இழுத்துப் பார்த்தார், அதனை அவர் உணரவில்லை. பிறகு அவரது கைவிரலைப் பிடித்து அழுத்தினார். அதனையும் அவர் உணரவில்லை. அதன்பின் அவரது பின் கையைக் கிள்ளிப் பார்த்தார். அதனையும் அவர் அறியாமற் பெருங்கிளர்ச்சி யோடும் பேசிக் கொண்டே போனார். அதற்குமேல் ஒரு குண்டூசியை எடுத்து அவரது காலின் கெண்டைச் சதையினுள் நன்றாய்ப் பதியக் குத்தினார், அதனையும் அவர் சிறிதும் உணர்ந்திலர். இங்ஙனந் தம்மால் ஆனமட்டும் முயன்று பார்த்தும் அவைத்தலைவர் அவரை நிறுத்த முடியாமை கண்டு வாளா இருந்துவிட்டார். கடைசியாக அவ் விரிவுரைகாரர் தாம் பேச எடுத்த பொருளை முடித்துக் களைப்போடும் அவைத் தலைவர் பக்கமாய்த் திரும்பி, யான் பேசுதற்குக் குறித்த காலம் ஆயிற்றா? என்று கேட்டார். அது கடந்து நெடுநேரம் ஆயிற்று என்று அவைத் தலைவர் விடை பகர்ந்தார். அங்ஙன மாயின் அதனை ஏன் நீங்கள் எனக்கு அறிவிக்கவில்லை? என்று அவ்விரிவுரைகாரர் கேட்டார். அதற்குப் புன்சிரிப்போடும் அவர் இதோ உங்கள் கெண்டைக்காலைப் பாருங்கள். இதுதான் கடைசியாக உங்களுக்கு யான் தெரிவிக்கச் செய்த வழி, இதுவும் பயன்படவில்லை என்று ஊசி குத்தியிருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டி அதனை அவர் காலினின்றும் பிடுங்கினார். உண்மையாக நிகழ்ந்த இந் நிகழ்ச்சியினால், ஒருவர் உள்ளமுங் கண்ணும் ஒன்றுபட்டு உயர்ந்ததொரு பொருளை நாடி நிற்குங்கால் உடம்பிற்கு எவ்வகை வேறுபாடு நேரினும் அதனை அவர் ஒரு சிறிதும் உணரார் என்பது தெற்றென விளங்கு கின்றதன்றோ? பேருணர்வோடும் மிகுந்த மனக் கிளர்ச்சியோடும் ஓரரிய பொருளை எடுத்துப் பேசுவார் ஒருவரின் கண்களை நோக்கினால் அவை இமையாமல் திறந்தபடியே இருத்தலைக் காணலாம். மனம் ஒருவழிப்பட்டு நின்றாலல்லாமற் சொற் பொழிவு செய்யுந்திறம் வாய்ப்பது அரிதாகலின், கிளர்ச்சியான விரிவுரைகள் நிகழ்த்துவோர்க்குக் கண்கள் இமையாமல் நிற்கின்றன. தேவர்கள் இமையா நாட்டத்தவரென்பதனை எண்ணிப் பார்க்குங்கால், அவர்களது உள்ளம் எப்போதும் ஒருவழிப்பட்டு நிற்குமெனவும், அதனால் தம் கண்கள் இமையாதிருக்கப் பெற்றனரெனவும் அறிகின்றோம். இனிப் பிறவுயிர்களைக் கண்களின் வழியாக வசியப் படுத்தும் ஆற்றல் மக்களினுந் தாழ்ந்த உயிர்களினிடத்துங் காணப்படுகின்றது. இதனைச்சில உண்மை நிகழ்ச்சிகளால் விளக்கிக் காட்டுவாம். ஒருகால் துரைமகனார் ஒருவர் தமது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருக்கையில், ஒரு புதர் மறைவிற் பாம்பு ஒன்றைச் சடுதியிற் பார்த்தார். அதன் கண்கள் ஒருவகையாய்ப் பளீரென்று மின்னவே அதனை உற்று நோக்கினார். சில நேரங்களுக்குப் பிறகு அவர் தம்முடைய கண்களை அதனைவிட்டு அப்புறந் திருப்ப முயன்றும் முடியாத வராயினர். அந்தப் பாம்பு விரைவிற் பேர் அளவினதாய்ப் பெருக்கவும் , பளபளப்பான பல நிறங்களை அடுத்தடுத்துக் காட்டவுங் கண்டார். உடனே அவருக்கு ஒரு வகையான மயக்கம் உண்டாயிற்று. அந்தப் பாம்பு இருந்த முகமாய்க் கீழே அவர் விழுந்திருப்பர். அந் நேரத்தில் அவர்தம் மனைவியார் சடுதியில் அவர்கிட்ட வந்து, அவரது இடுப்பில் தமது கையைச் சுற்றி அவரை அப்பால் இழுத்து, அம் மயக்கத்தைத் தீர்த்துப் பாம்புக்கு இரையாகாமல் அவரைக் காப்பாற்றினார். இதனாற் பாம்புகள் சிலவற்றிற்கு மக்களையுந் தம்வசப்படுத்தக்கூடிய ஆற்றல் உண்டென்பது புலப்படுகின்றதன்றோ? இன்னும், ஓர் ஊரில் ஒருகால் இருவர் சேர்ந்து ஒரு பாட்டையில் நடந்து சென்றனர். அவருள் ஒருவர் பாட்டையின் ஓரத்தில் ஏதோ ஒன்றனை நோக்குவதற்கு நின்றனர். சிறிது முன்னே சென்ற மற்றவர் தந் தோழர் பின்னே நின்றதைத் திரும்பிப் பார்த்தார். திரும்பிப் பார்த்ததுந் தம்மை அவர் கருதாமல் வேறெதனையோ பார்ப்பது கண்டு அவரை இழுத்துக் கொண்டுபோகக் கிட்டே வர, அவரோ ஒரு சாரைப்பாம்பின் மேல் தமது பார்வையைப் பதியவைத்து நிற்கவும், அப் பாம்பானது தனது தலையை உயர எடுத்து மினுமினுவென்று தன் கண்களால் அவரை ஊடுருவப் பார்த்துக் கொண்டிருக்கவுங் கண்டார். பாவம்! அந்த ஆளோ அப் பாம்பின் முகமாய்க் குனிந்து கொண்டு, அஃதென்னைக் கடிக்கும்! அஃதென்னைக் கடிக்கும்! என்று இரக்கப்படத்தக்க வகையாய் மெலிந்த குரவிற் கதறினார். mj‰F mt®j« e©g®, “M«, Ú® Xo¥ nghfhÉ£lhš mJ fo¡Fªjh‹,” v‹W brhšÈ, ‘ešyJ, Ú® vj‰fhf ï§nf ɻ֮? என்று கேட்டார். அவர் ஒன்றுக்கும் மறுமொழி சொல்லாமல் ஊமைபோல் நிற்கக் கண்டு, மற்றவர் அங்குள்ள மரத்தின் கிளையொன்றை முறித்து அதனால் அப் பாம்பை அடித்துக் கொன்றார் அதன்பின் தம் நண்பரை முடுகி இழுத்துக் கொண்டு அப்பாற் போனார். திருவருட் செயலால் இங்ஙனம் பாதுகாக்கப்பெற்ற அவ்வாள் அவ் வசியமயக்கந் தீர்ந்த பிறகுஞ், சில நேரம் வரையில் நோய்ப்பட்டிருந்தார். இன்னும், பாம்புகள் தமக்கு இரையாகத்தக்க உயிர்களைத் தங் கண்களால் தம் வயப்படுத்தி இழுத்து விழுங்கவல்ல வசிய ஆற்றல் மிகுதியும் வாய்ந்தனவாயிருக்கின்றன. இதனை மெய்ப்படுத்துதற்கு உண்மை நிகழ்ச்சிகள் சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுதும். ஓர் ஊரிற் கற்றவர் ஒருவர் ஒருகால் தம் நண்பர் ஒருவருடன் ஓர் யாற்றின் பக்கத்தேயுள்ள ஒரு பாட்டை வழியே வண்டியிற் போய்க் கொண்டிருந்தார். பாட்டையோ மிகவுங் குறுகலாய் இருந்தது. ஒரு பக்கத்தில் தண்ணீரும், மற்றொரு பக்கத்திற் புதல்கள் அடர்ந்த செங்குத்தான கரையும் இருந்தன. ஓரிடத்திற் போகையில், அங்கே பலதிறப்பட்ட சிறிய பறவைகள் பல வழியின் குறுக்கே பறந்து போவதுந் திரும்பிப் பறந்து வருவதும் அடிக்கடி கீச்சிடு மொலியோடு வட்டமிட்டுப் பறப்பமாய் இருந்தனவேயல் லாமல், தாஞ் சுற்றிக் கொண்டிருக்கும் அவ்விடத்தை விட்டுப் பெயர்ந்து சென்றில. அஃது அவரது கருத்தைக் கவர்ந்தது. அக் கற்றவர்க்கும் அவர்தம் நேசருக்கும் அப் புதுமையை அறிய மிகுந்த ஆவல் உண்டாயிற்று. உடனே, சாலவும் பெரியதான ஒரு கரும்பாம்பு அங்கே வட்டமிட்டுக் கொண்டு தலையை உயரத் தூக்கி மிக்க கிளர்ச்சி யோடுந் தன் கண்கள் மினுமினுவென்று மிளிரத் தன் நாவை அடிக்கடி விரைவாய்ச் சுழற்றிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்பறவைகள் அங்ஙனந் திகிலோடும் வட்டமிட்டுச் சுழலுதற்கு அப்பெரும் பாம்புதான் ஏதுவென்று அவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் ஏறியிருந்த வண்டி கிட்ட நெருங்கும் அரவந் தட்டியவுடனே அப்பாம்பு திடுக்கிட்டுப் புதர்களுட் சென்று மறைந்தது. அப் பறவைகளுங் கலக்கந் தீர்ந்தன. என்றாலும், அவை அவ்விடத்தை விட்டுப் போகாமல், அருகிருந்த மரக்கிளைகளில் இறங்கி இருந்து கொண்டு மறுபடியும் அக்கொடிய பகைப் பாம்பின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. இன்னும், ஓர் ஊரில் ஒருவர் வேனிற்காலத்தில் ஒரு நாள் ஒரு கரிய பறவையையும் அதனை உற்றுப் பார்த்துக் கொண் டிருந்த ஒரு பெருங் கரும்பாம்பினையுங் கண்டார். அப் பறவையோ அப் பாம்பைச் சுற்றி வட்டமிட்டுப் பறந்து பறந்து வரவர அதற்குமிக அருகில் துயரத்தொடு கூக்குரலிட்டுக் கொண்டு வரலாயிற்று. ஏறக்குறைய அந்தப் பறவை அப் பாம்பின் தாடையண்டை வந்துவிட்டதென்றே சொல்லலாம். அந் நேரத்தில் அதனைப் பார்த்த அவர் தமது கையிலிருந்த சாட்டையால் அப் பாம்பைத் துரத்திவிடவே, அப் பறவை களிப்புற்ற குரலோடுந் தப்பிப் பறந்தோடிப் போயிற்று. இன்னும், ஒரு குடாக்கடலின் பக்கத்தே பெருமான் ஒருவர் ஒரு நாள் வழிநடையாய்ப் போய்க்கொண்டிருந்தார். அப்போது ஓர் அணில் அக்குடாவுக்கும் அதற்குச் சிறிது எட்டநின்ற ஒரு பெரிய மரத்திற்கும் இடையில் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டேயிருந்தது. அவ்வணிலின் மயிர்கள் சிலிர்த்து நின்றமையால் அது மிகவுந் திகில் கொண்டிருந்ததென்பது புலனாயிற்று. வரவர அதன் திரும்பி வருகை சிறுகிற்று. அப்பெருமான் அதற்கு ஏது என்னென்று நோக்க நின்றார். உடனே அங்கொரு சாரைப்பாம்பு தலையையுங் கழுத்தையுந் தூக்கிக் கொண்டு அப் பெரிய மரத்தின் பொந்திலிருந்து ஒரு தொளை வழியே அவ்வணிலை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கக் கண்டார். அந்த அணில் கடைசியாக ஓட்டம் ஓய்ந்து அப் பாம்பின் தலைக்கிட்டத் தன் தலையை வைத்துச் சும்மா கிடந்தது. அதன் மேல் அப்பாம்பு தன் வாயை விரியத் திறந்து, அவ்வணிலின் தலையைக் கௌவிற்று. அத்தறுவாயில் அப் பெருமான் தமது சவுக்கினால் அப் பாம்பின் கழுத்தில் ஓர் அடி கொடுக்கவே, அது கௌவிய அவ்விரையைக் கக்கிவிட்டுத் தன் தலையை உள்ளிழுத்துக் கொண்டது. உடனே அவ்வணில் தப்பிப் பிழைத்தோடிப் போயிற்று என்று இங்ஙனம் உண் மயாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளால் மக்களினுந் தாழ்ந்த சில உயிர்களுங் கூடப் பிறவுயிர்களை, உற்றுப் பார்க்குந் தங்கட் பார்வையின் வன்மையினால் தம் வயப்படுத்தும் பான்மை நன்கு விளங்கும். எனவே, அச் சிற்றுயிர்களினும் எத்தனையோ மடங்கு மிகச் சிறந்த மாந்தர்கள் தமது கட்பார்வையினை வலுப்படுத்தி உற்றுநோக்கப் பழகுவராயின், அவர் வசிய ஆற்றலில் எவ்வளவோ மேம்படுவரென்பது நாம் சொல்லாமலே விளங்குமன்றோ? 5. எண்ணம்* இனிக், கண்ணை அடுத்தடுத்து இமைக்கவிடாது நெடுநேரம் ஒன்றை உற்றுப் பார்க்கும்படி பழகியபின், அதனோடு ஒருங்கியைந்து நிற்கும் மனமும் பலமுகமாய்ச் சிதறியோடாது ஒருவழிப்பட்டு நிற்கும் மனஓட்டந் தவிரப் பெறுவதே உயர்ந்த நிலையை அடைய வேண்டுவார்க்கு ஒரு சிறந்த வழித்திறப்பாகும். என்றாலும், வசிய ஆற்றல் மிகப் பெறுதற்கு இன்னுஞ் சில உயர்ந்த பழக்கங்களும் இன்றியமையாது வேண்டப்படுகின்றன. மனந்தான் கண்ணில் உறைந்து நின்றாலும், அம் மனத்தினுள் ளிருந்து இயங்கும் உயிரின் எண்ணமானது ஒரு துறைப்பட்டு நிற்பதில்லை. உலகத்துப் பொருள்கள் பலவற்றையும் உயிர்கள் பலவற்றையும் விட்டுவிட்டு எண்ணிக்கொண்டேயிருக்கும். இதுபற்றியே உண்பது நாழி யுடுப்பது நான்கு முழம், எண்பது கோடி நினைந்தெண்ணுவன கண் புதைந்த, மாந்தர் குடிவாழ்க்கை என்னுந் திருமொழியும் எழுந்தது. இங்ஙனம் பலவற்றையும் பற்பல காலும் எண்ணி எண்ணி நாட்கழிப் பார்க்கு எந்த எண்ணமுங் கைகூடி வருவதில்லை. முதன்மையாக ஓர் எண்ணத்தையே கடைப்பிடித்து அதனை நிறைவேற்று தலிலேயே உறைத்து நிற்பார்க்கு உலகத்தில் ஆகாதது ஒன்று மில்லை. அங்ஙனமாயின் ஓரெண்ணத்தையே கடைப்பிடித் திருப்பவர் அதனை நிறைவேற்றுதற்குப் பலவகை வழிகளை யெல்லாம் ஆராய்ந்து பார்க்குங்கால், அவர் அதன்கண் மட்டுமேயன்றி வேறு பல எண்ணங்களிலுங் கருத்தை ஓடவிட வேண்டுமாகலின், ஓரெண்ணத்திலேமட்டும் அழுந்தி நிற்றல் எவ்வாறு கூடுமெனின், அதனைச் சிறிது விளக்கிக் காட்டுவாம். ஓரெண்ணத்திலே உறுதியாய் நிற்பவர் அதனை நிறைவேற்றுதற் பொருட்டு வேறு பல எண்ணங்களிலுங் கருத்தை நுழையவிடுவராயினுந், தாம்முதன்மையாய்ப் பிடித்த ஒன்றிலே மட்டுந் தமது கருத்தை எக்காலும் நிலைபெற வைத்து, மற்றையவற்றில் அதனைச் சிறிது சிறிதே செல்லவிடுத்து மீட்டுக்கொள்வர். ஒருவர் ஓர் இனிய இசையின் ஒலியைக் காது கொடுத்துக் கேட்கப் போகுங்கால், அவரது எண்ணமானது முதன்மையாய் அவ்வோசையைக் கேட்டறிதலின்கண்ணேதான் நிலைபெற்று நிற்கும்; அங்ஙனம் நிற்குமாயினும், அதனைப் போய்க் கேட்கும் வரையில், அவ்விசை நடக்கும் இடத்திலுங் காலத்திலும், அங்கே போவதற்குரிய வழியிலும், அவ்வழியில் நடந்து செல்லுங்கால் வழியிலுள்ள பொருள்களால் தடை நேராமற் போற்றிச் செல்லுதலிலுஞ், சென்றபின் தமக்கு இசைந்த இடந்தேடி அமர்தலிலும், இத் தொழில்களைச் செய்யும்போது அவ்வத் தொழிலுக்கு ஏற்பத் தம் உறுப்புகளை இயக்குதலிலும் எல்லாம் அவர்க்கு எண்ணங்கள் பல கிளைக்குமாயினும் அவை யெல்லாம் இசை கேட்கும் முதன்மையான எண்ணத்தின் பிற்பட்டுப்போக, இசை கேட்கும் எண்ணம் ஒன்றுமே அவர்பால் முற்பட்டுத் தலைசிறந்து நிற்கும் . எதுபோலவெனின், ஒரு வண்டியை இழுத்துச் செல்லுங் குதிரையின் ஓட்டத்திற்கு அவ்வண்டியும் அவ்வண்டியின் உருள் முதலான உறுப்புகளும் உதவியாய்ப் பிற்பட்டு நிற்க அதன் ஓட்டமே முற்பட்டு முதன்மையாய் நிற்குமாறு போல என்க. இங்ஙனமே ஒருவர் ஓர் உணவு கொள்ளுங்கால் அவருடைய எண்ணங்கள் சோற்றிலுங் குழம்பிலுங் கறிவகைகளிலும் அவற்றை எடுத்து உண்டற் றொழிலிலுமெல்லாம் பலவாறாய் நிகழினும், முடிவில் அவர் அவ்வுணவைச் சுவைத்து இன்புறுந் துறையில் அவையெல்லாம் ஒன்றுபட்டு ஓரெண்ணமாய் நிற்றலும் நாடோறும் நாம் பழக்கத்தில் அறியக்கிடந்த தொன்றாம். ஆகவே, ஓரெண்ணத்தில் நிலைபெற்றிருப்பவர்க்கு வேறு பல எண்ணங்கள் கிளைப்பினும், அவை அவரது உள்ளத்தைக் கவரமாட்டா. அவர் கொண்ட முதன்மையான எண்ணத்தை முடிப்பதற்கே அவை உதவி செய்யும் சிற்றருவிகள் பலவுஞ் சென்று ஓர் யாற்றிற் கலத்தல் போல, அச் சிறிய எண்ணங்கள் பலவும் அவர்க்குள்ள ஒரு பேரெண்ணத்திற் சென்று அடங்கும் என்க. இனி, முதன்மையாக நினைவில் வைத்திருக்கும் ஓர் எண்ணத்தை வலிவு செய்ய விரும்புவாரெல்லாம், அவ் வெண்ணத்தைக் கைகூட்டு வனவாய் அதனோடு இயை புடைய வேறு சிலவற்றைத் தீரத்தெளிய ஆராய்ந்து பார்க்க லாமேயல்லாமல், அதற்கு இயைபில்லாதனவற்றை ஒரு சிறிதும் எண்ணலாகாது. அன்றி அவ்வாறெண்ணினால் அவர்கொண்ட முதன்மையான எண்ணம் பழுதுபட்டுப் போக, அவரெண்ணியது எண்ணிய வாறே முடியமாட்டாது. எனவே, ஒன்றை நிறைவேற்ற முயலுபவர் அது முற்றுப் பெறும் வரையில் அதனையன்றி வேறு அதுபோல் முதன்மையான மற்றொன்றனை எண்ணலாகாது. கல்வியில் வல்லராக விரும்பும் ஒருவர் அந் நோக்கம் ஈடேறும் வரையிற் பிறிதொன்றனையும் நாடாது அதனிடத்து மட்டுமே கருத்துஊன்றி நிற்றல் வேண்டும். அவ்வாறன்றி அதனோடு கூடவே கொண்டு விற்றலுஞ் செய்து பொருளீட்ட வேண்டுமென்னும் நோக்கமுங் கொள்வராயின், இரண்டும் நிறைவேறப்பெறாமல் துன்புறுவர். அங்ஙனமாயிற் கொண்டு விற்றல் செய்யும் எண்ணமுள்ளவர் அதனோடு கூடக் கல்வி பயிலும் எண்ணமும் உடையராதல் குற்றம் ஆகுமாவெனின், குற்றமாகாது. உலகத்தின்கண் உள்ள எத்தகைய முயற்சியும் நன்கு நடைபெறுதற்குக் கல்வியறிவு உடைமையே ஒப்பற்ற கருவியாகும். ஆதலால், மக்களாய்ப் பிறந்தவர் எல்லாருந் தமது பிள்ளைமைப் பருவந் தொட்டு இளமைப் பருவம்வரையில் இடையறாது பயின்று கல்வியறிவை நிரப்பிக்கொண்டு, அதன் பிற்பொருளீட்டும் முயற்சியிற் புகுதல் வேண்டும். கல்வியறிவு பெறுதலே மக்களெல்லார்க்கும் முதற்பெரு நோக்கமாய் இருத்தல் வேண்டும். அவ்வரும்பெரும் நோக்கம் ஈடேறுமுன் பொருள் தேடப் புகுவோரது செயல் பெரிதும் இரங்கற்பால தொன்றாம். அறியாமையென்னும் பேரிருள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையிற் கல்வியென்னும் நந்தாமணிவிளக்கங் கை யிலின்றிப் புகுவோர் தீவினைப் படுகுழிகளில் வீழ்ந்து பெரிதும் வருந்துவர். ஆதலாற், கல்வியறிவு நிரம்பிய பின்னரேதான் பொருள்தேடுந் துறைகளிற் செல்லல் வேண்டும். அஃது உண்மையேயாயினுங் கல்வியறிவு பெறாமுன்னே பொருள் ஈட்டும் முயற்சியிற் புகுந்த பின்னர்க் கல்வியருமை யுணர்ந்தால் அதனைக் கற்குமாறு யாங்ஙனமெனின், எல்லா மாந்தர்க்குங் கல்வியறிவு பெறுதலே முதற்பெரு நோக்கமாயிருத்தல் வேண்டும். பொருளீட்டும் முயற்சிகளெல்லாம் அக் கல்வியறிவைப் பெறுவித்தற்கு இசைந்த உதவி நோக்கங்களாயிருத்தல் கடனாகும். எனவே, கொண்டு விற்றல், உழவு, கைத்தொழில் முதலிய முயற்சிகளைச் செய்வோருஞ் செய்யும் நோக்கம் உடையோரும், இந் நோக்கங்களைக் கல்வியோடொத்த முதன்மை நோக்கமாகக் கொள்ளாமல் அதனைத் தருதற்கு இசைந்த கருவிகளாகவே கொள்ளல் வேண்டுமென்பதும், அங்ஙனங் கொண்டால் இம் முயற்சிகளும் முட்டின்றி நடைபெற அழியாச் செல்வமாகிய கல்வியறிவும் முறை முறையே வளர்ந்து நிரம்பும் என்பதும் அறியப்படும். இனிக் கல்விப்பேற்றில் நிலைநின்ற எண்ணமே முதற் பேரெண்ண மானால், இவ்வுலக வாழ்க்கையில் நிறைவேற்று வதற்குரிய பலவகை முதன்மையான பல பெருங்கடமைகளையும் எங்ஙனங் கொள்வதெனின், அதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கிக் காட்டுதும். ஓர் அரசன் நடத்தும் அரசியலில் அமைச்சன் முதல் ஊர்காவற்காரன் ஈறாக உள்ள ஏவலாளரில் ஒருவர் ஒருவரை நோக்க உயர்ந்தவராய்ச் சென்று அமைச்சரில் முடிய , அவ்வமைச்சரிலும் உயர்ந்தோர் அரசராய் முடிந்து நிற்றல் போல, இவ் வுலகவாழ்வில் நடைபெறும் முயற்சிகளும் அம்முயற்சிகளைப் பற்றிய எண்ணங்களும் ஒன்றில் ஒன்றுயர்ந் தனவாய்ச் சென்று கடைசியாகக் கல்வியறிவு பெறுதலிலே தனி முடிந்து நிற்கும். ஆகவே, அவ்வக்காலங்களில் அவ்வவ் விடங்களில் தனித்தனியே முதன்மையுற்றுத் தோன்றும் முயற்சிகளும் அவற்றிற்குரிய எண்ணங்களும் பலப்பல உள. என்றாலும், ஒரு காலத்து ஓரிடத்துத் தோன்றும் முயற்சியும் அதனைத் தொடர்ந்த எண்ணமும் வேறொரு முயற்சியையும் வேறொரெண்ணத்தையுங் கலவாமல் முதன்மை பெற்று ஒருவரிடத்தே தோன்றப் பெறுமாயின் அவை இனிது நிறைவேறி இன்பம் பயக்கும் என்பதே இங்கே, கூறியதன் கருத்தாகும். ஒரு முயற்சியை ஒரு காலத்துச் செய்யப் புகுந்தவர் அதன்கண்ணே தமது கருத்தைப் பதியவைத்து அதனை நடத்துதலாலேதான், இவ்வுலகத்திற் பலதிற முயற்சிகளும் நன்கு நடைபெற்று வருகின்றன. இம் முயற்சிகளின் நிறை வேற்றத்தாற் பலரும் பலவகை நன்மைகளை அடைந்து இன்புறுகின்றனர். ஒரு முயற்சியிற் கருத்து ஊன்றப் பெற்றவர், அதனோடு வேறு பல முயற்சிகளையுஞ் செய்வார் போல் வெளிப் பார்வைக்குக் காணப்படினும், அவரது எண்ணமெல்லாம் தாம் முதன்மையாகக் கொண்ட ஒன்றிலேயே உறைத்து நிற்கும். நீர்க்குடத்தைத் தலைமேற் சுமந்து செல்லும் ஓர் ஏவற் பெண் தன் றொழிமாரோடு சிரித்து விளையாடிப் பேசிக்கொண்டு கைவீசிச் சென்றாலும் அவளது எண்ணமெல்லாந் தலைமேலுள்ள நீர்க்குடத்தின் மேல் நிலைபெற்று நிற்றலை அறிகின்றேம் அல்லமோ? இங்ஙனமே கருத்தை ஒருவழிப்படுத்தியிருக்கும் அறிவோர்கள், வேறு பல முயற்சிகளைச் செய்வார்போற் காணப்படினும், உண்மையில் அவர் தாங்கொண்ட ஒன்றிலேயே கடைப்பிடியாய் நிற்பரென்று உணர்ந்து கொள்ளல் வேண்டும். இவ்வாறு ஒரு காலத்து ஒரு முயற்சியை எடுத்தவர் அம்முயற்சியில் தமது கருத்தைப் பதியவைத்துப் பழகி வரவர, அவரது எண்ணமானது படிப்படியே வலிவெய்தி முதிர்ந்து அவர் எடுத்த அம்முயற்சியை நன்கு நிறைவேற்றி வைக்கும் எங்ஙனமெனிற், காட்டுவதும்: உலகத்தில் எங்கும் நிறைந்து அழியாத உண்மைப் பெரும் பொருளாயிருப்பன எண்ணங்களே யாகும். இவ்வெண்ணங்கள், தாம் வேறு உயிர்கள் வேறு என்று பகுத்தறிய வாராமல் அவ்வுயிர்களைப் பற்றிப் பிரிவறநிற்கும் பண்புகளேயாகையால், இவை அவ்வுயிர்கடோறும் வெவ்வேறாய் அவ்வுயிர்களின் அறியாமை நீக்கத்திற்கு ஏற்பப் பெரியவுஞ் சிறியவுமாயிருக்கும். அறிவுடைய உயிர்ப் பொருள்கள் எல்லாவற்றினும் பெரிதாய் உள்ளது கடவுள் ஒன்றேயாம். கடவுளின் அறிவு எல்லையற்ற பெருமையுடையதாகலின், அவ்வறிவோடு ஒருமித்து நிகழும் அவரது எண்ணமும் வரம்பில்லாத பெருமையும் வலிமையும் உடையதாகும். அவ்வெண்ணமானது, கடல் மணலை அளவிடினும் அளவிடப்படாத எண்ணிறந்த உலகங்களின் உள்ளும் புறம்பு மெல்லாம் பிரிவின்றி நிறைந்து விளங்குகின்றது. அவ்வெண்ணத் தினால் உந்தப்பட்டே இவ்வுலகங்களெல்லாம் உருவுடன் தோன்றி ஓயாமல் இயங்கு கின்றன. அவ்வெண்ணத்தினால் ஒருங்கு பொருத்தப்பட்டே எண்ணிறந்த உயிர் வகைகளெல்லாந் தத்தமக்குரிய உடம்புகளோடு பொருந்தி அறிவுகளும் எண்ணங்களும் உடையவாய்ப் போதருகின்றன. இத்துணைப் பெரிதாகிய இறைவனது எண்ணம் என்கின்ற பெருவெளியிலே இடையிடையே தோன்றும் மின்மினி விளக்கம் போலப், புன்முதல் மக்கள் தேவர் ஈறான எல்லாச் சிற்றுயிர் களின் எண்ணங்களும் மிளிர்கின்றன. இச் சிற்றுயிர்களின் எண்ணங்களுள்ளும் இறைவனது பேரெண்ணம் ஊடுருவிப் பொலிகின்றது. அவற்றின் புறம்பேயும் அது தொடர்புபட்டு நின்று எல்லா வுயிர்களின் எண்ணங்களையும் இயைத்து வைக்கின்றது. மாசற்ற ஒரு பளிங் குருண்டையின் உள்ளே நடு மையத்தில் வைக்கப்பட்ட மின்னொளியானது (Electric light) அவ்வுருண்டை முழுதும் ஊடுருவி நிறைந்து அதனை விளங்கச் செய்யுமாறு போல, அறியாமை நீங்கிய தூய உயிரின் அகத்தே யுள்ள இறைவனது அருளொளியானது அவ்வுயிர் முழுதும் நிறைந்து அதனை விளங்கச் செய்யும். அதுமட்டுமோ, அவ்வருளொளி மாசு நீங்கிய தூய உயிர்களெல்லாவற்றோடும் விளக்கமாகத் தொடர்புபட்டு நிற்றலால் தூயதான ஓருயிரின் நல்லெண்ணந் தன்போற் றூயதான வேறு பல்லுயிர்களின் எண்ணங்களோடும் உடன் இயைந்து அரியபெரிய முயற்சி களை யெல்லாம் நிறைவேற்ற வல்லதாகும். தூயவான அவ்வுயிர்க ளெல்லாவற்றிலும் பிரிவறக் கலந்து விளங்கும் இறைவனருள் எல்லாவுயிர்களுக்கும் பேரின்பத்தைத் தரல் வேண்டும் என்னுந் தனிப்பெரு நல்லெண்ணம் வாய்ந்த இயற்கையுடையதாகையால், அஃது அத்தூய உயிர்கள் எண்ணிய எண்ணங்களையெல்லாம் எளிதிலே நிறைவேற்றி வைக்கும். எனவே, நன்முயற்சியடையார் ஒவ்வோருவருந் தம்மைப்பற்றிய அறியாமையை நீக்கித் தாம் துவங்கிய ஒரு நன்முயற்சியில் அது முடியுங்காறுந் தமது எண்ணத்தை நிலைபெற நிறுத்தல் வேண்டும். எண்ணம் ஒன்றிலே நிலைபெற நிலைபெற அதனைப்பற்றிய அறியாமை தேயும். மலைப்பக்கத்திலுள்ள தனிமையான ஓர் அழகிய ஏரியில் நீர் பருகும் ஓர் எருதின் வடிவத்தை ஓவியத்தில் எழுதும் எண்ணம் உடைய ஓவியக்காரன் ஒருவன் அம் முயற்சியில் தன் எண்ணத்தைச் செலுத்தாமல் வேறு பலவற்றில் அதனை ஓட விட்டுக் கொண்டிருப்பனாயின் அதனை எழுதமாட்டுவனா? மாட்டானன்றோ? அங்ஙனமே, அது பலமுகமாய் ஓடுமாறு விடுவதைவிட்டு, அவ்வெருதின் வடிவத்தையும் அவ்வேரியின் அமைப்பை யும் உற்றுநோக்கி எண்ணத்தை அவற்றின்கட் பிசகாமல் நிறுத்துவனாயின், அப் பொருள்களின் அமைப்பு நுணுக்கங்கள் அவனுக்குத் தெளிவாகப் புலனாகும். ஆகப் பின்னர் அவன் அவற்றைப் பல நிறங்களால் ஓவியத்திற் செவ்வனே எழுதிக்காட்டுவான். பள்ளிக்கூடத்துச் சிறுவன் ஒருவன் தன் பாடத்திற் கருத்தை வையாமலிருக்குமளவும், அவன் அதனை உணராமல் விழித்தலும், அதில் அதனை ஊன்றிய அளவானே அப் பாடப் பொருளை நன்குணர்ந்து வல்லனாதலும் நமது பழக்கத்தில் நன்கறியக் கிடக் கின்றனவன்றோ? இங்ஙனம் ஒரு பொருளிற் கருத்தைப் பதிய வைக்க வைக்க அப் பொருட் டன்மைகள் அறிவின்கண் மேன்மேற் புலனாய் விளங்குமாகலின் அவ்வறிவைப் பற்றியிருந்த அறியாமை யென்னும் இருளும் வரவரக் குறைந்துபோகும். இன்னும், நினைப்பின் ஆற்றல் மிகுதிப்படுதற்கும் எண்ணத்தை ஒருமுகமாய் நிறுத்துதலே ஏதுவாயிருக்கின்றது. ஒரு பொருளின் உறுப்பு அடையாளங்களை நன்றாய்க் கருத்தில் அமைத்தவனுக்கு அவற்றைப் பற்றி மறதியே வருவதில்லை. அவை எஞ்ஞான்றும் அவன் நினைப்பில் அழுந்தி நின்று அவன் வேண்டிய போதெல்லாம் விளங்கித் தோன்றும். இதற்கு, மேற்காட்டிய கல்வி கற்குஞ் சிறானது பழக்கமே போதிய சான்றாகும். நினைப்பின் ஆற்றல் மிகுதியாய் வளரப் பெற்றால் அரியபெரிய உண்மைநூற் பொருள்களையும் இயற்கைநூற் பொருள்களையும் உலக ஒழுக்கங்களையும் எல்லாம் நன்கு நினைவில் அமைத்துப் பேரறிவினராய்த் திகழலாம். பேரறிவுடையராய் வாழ்வார்க்கு வயப்படாத மக்கள் எவருமேயில்லை. அது நிற்க. இங்கே சொல்லிய எண்ணம் என்பதற்கும் மனம், அறிவு, நினைவு, உணர்வு என்று மேலே கூறியவற்றிற்கும் வேறுபாடு கண்டிலமாலெனின், அவ் வேறுபாடும் ஒரு சிறிது காட்டுவாம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் இடமாக நின்று, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் புறப்பொருட்டன்மைகளைப் பற்றும் இயற்கை உடைய ஒரு நுண்ணிய கருவியே மனமெனப்படுவதாகும். இதுதான் சேர்ந்து நிற்கும் ஐம்பொறிகளைப் போல் அறிவில்லாத பருப் பொருளே யாயினும், அவற்றைவிட நுண்ணிய இயல்பு வாய்ந்த தொன் றாகும். இது, கண்ணை விளக்குங் கண்ணாடியைப் போல் உயிரை விளக்கும் ஒரு கருவியேயல்லாமல், அவ்வுயிரினின்றும் வேறாகாத பண்புப் பொருளன்று. இனி, மனத்தாற் பற்றப்பட்ட பொருள்களுள், இது நல்லது, இது தீயது, எனவும்; இஃது இதனை ஒப்பது, இஃது இதனின் வேறாவது எனவும் பகுத்தாராயும் உயிரின் இயற்கைத் தன்மையே அறிவு எனப்படுவதாகும். இஃது உயிரின் இயல்பாகுமேயல்லாமல், உள்பொருள்களிற் சேர்ந்த பருப் பொருளன்று. அங்ஙனமாயின், அறிவுக்கும் அறிவுப் பொரு ளுக்கும் வேறுபாடு யாதோவெனின், உயிரின் அறிவு நடை பெறுதற்கு அவ்வறிவோடு ஒருங்கியைந்து நிற்குங் கருவியாகிய அறிவுப் பொருள் (புத்தி) மனம்போல நுண்ணிய பருப் பொருளேயாகலின் அஃது அறிவின் வேறாமென்றே துணிந்துகொள்க. இனி, அறிவாற் பகுத்தாராயப்பட்ட பொருட்டன்மை களோடு ஒத்த தன்மைகள் உயிரின்கண் விளங்கித் தோன்றுதலே நினைவு எனப்படுவதாகும். ஆகவே இந் நினைவு பருப்பொருள் அன்றென்பதும், இதுவும் உயிரின் தன்மையே யாகுமென்பதுந் தெளிவுபெற உணர்ந்து கொள்ளல் வேண்டும். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் புறத்தே யுள்ள பொருட்டன்மைகளே அகத்தேயுள்ள உயிருக்கும் பண்புகளாய் அமைவது போற் காணப்படுதலின், அவையே நினைவென்றுரையாமல், அவற்றோடு ஒத்த உயிர்ப் பண்புகளின் தொகுப்பே நினைவென்று கூறுதல் என்னையெனின், ஒரு பொருளின் இயல்பு அதனைவிட்டுப் பிரிதலும் வேறொரு பொருளை ஒட்டி அதற்கும் இயல்பாய் அமைதலும் எஞ்ஞான்றும் இல்லை. ஆகையால், வெளியேயுள்ள புறப் பொருட்டன்மைகள் அவற்றைவிட்டுப் பிரிந்துபோய் அகத்தேயுள்ள உயிருக்குப் பண்புகளாதல் ஒருவாற்றானும் இல்லை. மேலும், ஐம்பொறி களுக்குப் புலனாகும் பொருள்கள் அத்துணையும் அறிவில்லாப் பருப்பொருள்கள்; அவற்றின் தன்மைகள் அவற்றை விட்டுப் பிரிந்துபோய் அறிவுப் பொருளான உயிருக்கும் பண்புகளாய் அமையும் என்றுரைத்தால், அப் பண்புகளோடு ஒன்றான உயிரும் அவைபோல் அறிவில்லாத பருப்பொருள்களே ஆதல் வேண்டும்; ஆனால் அங்ஙனம் ஆகக் காணாமையின் அவ்வாறுரைத்தல் சிறிதும் பொருந்தாது. இவைபோன்ற நுணுக்கங்களெல்லாம் எமது சிவஞானபோத ஆராய்ச்சியின் கண் விளங்க எடுத்துக்காட்டினோம். அவற்றை ஈண்டு விரித்தல் ஆகாது. இனி, உணர்வு என்பது, மனம் ஐம்பொறியென்னும் அகக்கருவி புறக்கருவிகள் முழுதும் நிறைந்து நின்று அவற்றின் உதவி கொண்டுங் கொள்ளாதும் புறப்பொருள் அகப்பொருட் டன்மைகளைக் கவர்வதும், அக் கவர்ச்சியால் இன்ப துன்பங்கள், அன்பு அருள் ஆர்வங்கள், இரக்கஞ் சினம் வருத்தங்கள் முதலான உயிர்ப்பண்புகள் புலப்படுதற்கு இடனாவதுமாய் உள்ளது. ஒருவன் ஒரு செங்கழுநீர்ப் பூவை முகருங்கால் அதன் நறுமணத்தைப் பற்றும் மனத்தின்கண் நின்று அதனைக் கவருவதும், அவ்வாறு கவர்ந்த அளவானே உயிரின் கண் இன்பவுருவாய்த் தோன்றுவதுமெல்லாம் அவ்வுயிர்த் தன்மையாகிய உணர்வேயாகும். இனி, இக் கருவிகளின் துணைவேண்டாது தொலைவிலே நிகழும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளைத் தானாகவே கவர்வதும், எதிரே புதியராய் வந்த ஒருவரின் இயற்கைத் தன்மையைத் திடீரெனத் தெரிவதும் இவ்வுணர்ச்சியேயாகும். உயிரின் இவ்வியற்கைத் தன்மை, மனத்தாற் பற்றப்பட்ட பொருட் பண்புகளை ஆராய்ந்து தெளியும் அறிவுத் தன்மையின் வேறாதல் மயங்காமல் உணர்ந்துகொள்ளல் வேண்டும். இனி, எண்ணம் என்பது இவையெல்லாவற்றினும் வேறாய் உயிரின் முயற்சியைப் பிறப்பிப்பதாய், இஃது இவ்வாறு ஆகுக என்று எண்ணும் உயிரின் இயற்கைத் தன்மையேயாகும். இவ்வெண்ணத்தினாற் செலுத்தப் பட்டே ஏனை மனம் அறிவு நினைவு உணர்வு முதலியனவெல்லாம் இயங்குகின்றன. இவ் வெண்ணம் வலிவேறப் பெற்றவன் எத்தகைய முயற்சியையும் எளிதில் முடிக்க மாட்டுவான். அது வலி குறையப் பெற்றவன் எளிய முயற்சியையுங் கைசோர விடுவான். எனவே தன்முன் ஒரு வரிசைப்பட நிற்குஞ் சிறாரைத், தான் பின் நின்று தள்ளும் ஒரு வலிய சிறானைப் போல், ஏனையெல்லாவற்றையும் பின் நின்று ஊக்குவது இவ்வெண்ணமேயாமென்று கடைப்பிடித்தல் வேண்டும் என்று இதுகாறும் விளக்கிய வகையால் எண்ண மானது, மற்றை மனம் அறிவு நினைவு உணர்வு முதலியவற்றின் முற்றும் வேறாதல் நன்கு தெளியப்படும். இனி, எண்ணத்தை ஒருமுகமாய் நிறுத்திப் பழகு கின்றவனுக்கு முதலிற் பெரியதொரு வருத்தந் தோன்றினாலும், பழகப்பழக அது மிகவும் எளிதாய் விடும். யாழ் இசைக்கப் பழகும் ஒருவன் முதலிற் பாடும் பாட்டை உற்றுப் பாருங்கள்! நாளேற நாளேற அவன் அதிற் பழகிக் கைதேர்ந்தபிற் சிறிதும் வருத்தம் இன்றி மிகவும் எளிதாய் அதனைத் திறம்பட இனிதாய் இசைத்தலையும் நினைத்துப் பாருங்கள்! நடை கற்குங் சிறு குழந்தையானது முதலில் அடியெடுத்து வைத்துத் தத்தித் தத்திக் கீழ்வீழ்ந்து எவ்வளவு வருத்தப் படுகின்றது! அங்ஙனமெல்லாம் வருத்தப்பட்டாலும், அஃது அம் முயற்சியைக் கைவிடாதாய் நடக்கக் கற்றுக்கொண்ட பின்னர் அதிற் கருத்தைச் செலுத்தாமல் எவ்வளவு எளிதாய் நடக்கின்றது! இங்ஙனமே மாந்தர்கள் துவங்கும் ஒவ்வொரு முயற்சியும் முதலில் அளவிறந்த வருத்தத்தைத் தருவதாயினும், அதிற் கருத்தை இறக்கிப் பழகப்பழக அது செய்து முடித்தற்கு மிகவும் எளியதாய் விடும் என்க. 6. எண்ணத்தை வலுப்படுத்துவன ஒரு முகப்பட்டு நிற்குங்காலத்து எண்ணமானது இயற்கையிலேயே வலுப்படுமாயினும், அதனை இன்னும் மிகுதியாய் வலுப்படுத்துவன வேறு சில இருக்கின்றன. அவை யாவையோவெனின், பிற உயிர்க்கு உதவி செய்ய வேண்டு மென்னும் விருப்பமுந், தன்னுயிர்போல் மன்னுயிரை எண்ணி அவை எல்லாவற்றினிடத்தும் அன்பும் அருளும் பூண்டு நடத்தலேயாகும். பிறர் நலங் கருதலும் அன்பும் அருளுந் தெய்வத் தன்மைகளேயாகும்; தன்னலங் கருதலுங் கொடுமையும் மருளும் விலங்கின் தன்மைகளேயாகும். பிறர் நலங் கருதி அன்பும் அருளொழுக்கமும் வாய்ந்தவர் கடவுள்; அக் கடவுளுக்கு அருமைப் புதல்வராகி அவரது பேரின்பத்தை அடைய விரும்புகிறவர்கள் அக் கடவுளின் உயர்ந்த தன்மைகளைத் தம்மிடத்தும் வருவித்துக் கொள்ளல் வேண்டும். ஏனென்றால், நல்லவர் ஒருவரைச் சேர்ந்து அவரோடு உறவாட எண்ணுபவர், அவர்போல் தாமும் நல்லவராய் நடத்தல் வேண்டும்; தீயவர் ஒருவரைச் சேர்ந்து அவரோடு உறவாடக் கருதுபவர் அவர்போல் தாமுந் தீயவராய் நடத்தல் வேண்டும். இனம் இனத்தையே நாடும் என்பது இயற்கை நிகழ்ச்சியாகலின் ஆகவே, கடவுளின் தெய்வத் தன்மையை அடைய முயலுபவர் அவர்போற் பிறர் நலங்கருதி அன்பும் அருளும் உடையராய் ஒழுகல் வேண்டும். அங்ஙனமின்றி எப்போதுந் தந்நயமே கருதிக் கொடுமையும் மருளுமாகிய விலங்கின் றன்மைகளைத் தம்மிடத்துத் தோற்றுவிப்பர் அவ்விலங்குகளைப்போற் கீழ்ப்பட்ட நிலையை எய்துவர். இரக்கமும் உதவும் இயல்பும் உடையவர்களைக் கண்டால் அவர்களைத் தெய்வமே போல் எண்ணி எல்லாரும் அவர்களிடத்து அன்புடையராகின்றனர். கொடுமையுந் தந் நயமும் வாய்ந்தவர்களைக் கண்டால் அவர்களை விலங்கு களினுங் கடைப்பட்டவர்களாக நினைந்து எல்லாரும் அவர்களை அருவருத்துத் தள்ளுகின்றனர். அதனால், இரக்கமும் இரக்கச் செய்கையுமாகிய தெய்வத் தன்மைகளே எல்லாராலும் விரும்பப்படுவனவுஞ் சிறந்தெடுத்துப் பாராட்டப்படுவனவும் வலிவுடை யனவும் ஆகும். கொடுமையும் வெகுளியுமான விலங்கின் இயற்கைகளே வலிவுடையனபோல் தோன்றுகின்றன வல்லாமல், இரக்கமும் அன்பும் அவ்வாறு தோன்ற வில்லையேயெனின் அங்ஙனமன்று; கொடுமையுஞ் சினமும் உண்டான விடத்து மக்கள் ஒருவரையொருவர் பகைத்து வேறு வேறாய்ப் பிரிந்துபோவதை நாம் நங் கண்ணெதிரே காண்கின்றோம்; இரக்கமும் அன்பும் நிகழுமிடத்து அவர்கள் ஒருவரோடொருவர் அன்பிற் சிறந்தாராய் அளவளாவி ஒன்று சேர்ந்து இனிது வாழ்வதையும் நங் கண்முன்னே காண்கின்றோம். பலரை ஒன்று சேர்த்துக்கட்டி அவராற் பல பெரு நன்மைகளை விளைவிக்குந் தன்மை வலியதோ, அவரை வேறு வேறு பிரித்துத் தீமையை உண்டுபண்ணுந் தன்மை வலியதோ என்பதைச் சிறிது ஆராய்ந்து பாருங்கள்! பலரை அல்லது பலவற்றை ஒன்று கூட்டுதற்கே மிக்க வலிமை வேண்டுமென்பதும், அவரை யல்லதவற்றை வேறு வேறு பிரித்தற்கோ அத்துணை வலிமை வேண்டுவதில்லை யென்பதுஞ் சிறுமகாரும் உணர்வர். அதுவேயுமன்றி, அன்பும் இரக்கமும் உடையவர்க்கு உடம்பிலுள்ள கருவிகளெல்லாந் தூய இரத்தத்தால் ஊட்டப்பட்டுத் திருத்தமாயும் அழகாயும் வலிவாயும் பொலிவுற்றிருத்தலைக் காணலாம். கொடுமையுஞ் சினமும் உள்ளவர்க்கு இரத்தம் நஞ்சாய்ப் போதலால், அந் நச்சு இரத்தத்தில் வளர்ந்த அவருடைய உறுப்புகளெல்லாந் திருத்தமின்றிப் பலவகை வேறுபாடுகள் உடையனவாய் வலிவுகுன்றியிருத்தலையும் நாடோறும் நாம் வழக்கத்திற் காணலாம். மிகுந்த சினம் அடைந்தவர் அதனால் தமது இரத்தக் குழாய்கள் பழுதுபட்டுப் போகச் சடுதியில் உயிர் துறந்த நிகழ்ச்சிகளும் பல உண்டு. மிகுந்த சினத்திற்கு ஆளான வேறு பலர் தமது சினந் தீர்ந்த பிறகு எழுந்து நடக்கவும் வலியற்றவர் களாய்க் களைத்துக் கிடத்தலையும் நம்மனோர் பார்த்திருக்கலாம். சினத்திற்கு இரையான மற்றும் பலர் பலவகை நோய்களாற் பற்றப்பட்டுத் துன்புறுதலை அமெரிக்கா தேயத்திலுள்ள மருத்துவநூற் புலவர் (Professor Elmer Gates) ஒருவர் நன்கு ஆராய்ந்து எழுதியிருக்கின்றார். இனிய தன்மைகள் உடம்பை இனிது வளர்க்குந் தூய நுண்ணிய வன்பொருள்களைப் பிறப்பிக்கின்றனவென்றும் அவரே பின்னும் விளக்கமாக ஆராய்ந்து உரைக்கின்றார். இவ்வாற்றால் தீய தன்மைகள் வாய்ந்தவர்க்குக் களைப்பும் நோயும் உண்டாத லோடு, எல்லா முயற்சிகளையும் நிறைவேற்றுதற்குரிய அவரது எண்ணமும் வலிவிழந்து போகின்றது. மற்று, நல்ல தன்மை களுடையவர்க்கோ மனக்கிளர்ச்சியும் உடம்பு வலிவும் மிகுதலோடு அவரது எண்ணமும் நாளுக்கு நாள் வலிவு முதிர்ந்து உயர்ந்த பல முயற்சிகளை நிறைவேற்றி உலகிற்குப் பெரிதும் பயனுடைய தாகின்றது. இன்னும், அன்பினாலும் இரக்கத்தினாலும் இரத்தந் தூயதாகி உடம்பிலுள்ள கருவிகள் வலிவெய்தவே, இக் கருவிகள் எல்லாவற்றையும் இயக்குதற்கேற்ற அருந்திறல் வாய்ந்த மூளை யென்னும் வியத்தகும் உறுப்பானது நுட்ப ஆற்றல் சாலவும் பெருகப்பெற்று விளங்கும். அஃது அங்ஙனம் விளங்குமாயின் அதனைப்பற்றிய மனமும் அம் மனத்தினுள் இயங்கும் உயிரின் எண்ணமும் அளவிறந்த ஆற்றலுடையவாகும். இங்ஙனமெல்லாம் எண்ணங்கள் வலுப்படுதற்கு முதல் ஏதுவாய் இருப்பன: அன்பும் அருளும் அருளொழுக்கமுமே யாமென்பது தெளிவாகப் புலப்படுதலால், தம்முயிரின் அகத்தேயுள்ள எண்ணங்களை வெளித்தோற்றுவிக்குங் காலத்து அவற்றை அவ்வுயர்ந்த தன்மைகளின் வாயிலாகவே செல்லவிடுதல் வேண்டும். யாங்ஙனமெனிற் காட்டுதும். ஒருவன் தன் மனைவி மக்கள் உற்றார் பெற்றார் முதலாயி னாரையுந் தன்னையும் பாதுகாக்கும் பொருட்டு ஒரு தொழின் முயற்சியிலேனும் அல்லது ஓர் அலுவல் முயற்சியிலேனும் இறங்குங்கால் எப்படியாகவேனும் பணஞ் சேர்க்க வேண்டும் என்னும் ஓர் இழிந்த எண்ணங் கொள்ளாது, என் ஆண்டவன் என்னை இவ்வுலகத்திற் பிறப்பித்ததும், என்னோடு இவ்வுயிர்களை மனைவி மக்கள் முதலான உறவினிற் சேர்த்து வைத்ததும் நான் அவர்கட்கும், அவர்கள் எனக்குமாகத் துணை நின்று, இருவரும் ஒருங்கு சேர்ந்து உலகத்திலுள்ள பல்வகை உயிர்கட்கும் பலதிறப்பட்ட உதவிகளைச் செய்தற் பொருட்டேயாம். இவ்வுதவிகளைப் பிறவுயிர்கட்குச் செய்யவும், இவற்றைச் செய்தற்குரிய எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் இன்றியமையாது வேண்டப்படும் பொருளை எவர்க்குந் தீங்கு நிகழாமல் நான் தேடித் தொகுத்தல் வேண்டும். அங்ஙனந் தேடித் தொகுத்தற்கு ஒரு சிறந்த வழியாக இத் தொழில் முயற்சியில் அல்லது இவ்வலுவல் முயற்சியில் யான் புகுகின்றேன். இம் முயற்சி எல்லார்க்கும் பயனுடையதாய் நடைபெறல் வேண்டும்; இதனால் வரும் வருவாய்ப் பொருள் எனக்கும் என்னைச் சேர்ந்தவர்க்கும் உலகத்தில் அரிய பெரிய நன்மைகள் பலவற்றைச் செய்தற்கும் உதவியாதல் வேண்டும் என எப்போதும் எண்ணி வந்தால் அருட்டன்மையின் வழித் தோன்றிய அவ்வெண்ணமானது பெரிதும் வலிவேறப்பெற்று, அவன் மேற்கொண்ட அத் தொழின் முயற்சியினைச் செவ்வையாக நடைபெறச் செய்து பெரியதோர் ஊதியத்தைத் தரும். அவன் அமர்ந்திருக்குங் கடையைச் சூழக் கட்புலனுக்குத் தென்படாத ஓர் அருளொளி பரவியிருக்கும். அவனது கடைப்பக்கமாய் வருவாரெல்லாரும் அவ்வருளொளி யினால் இழுக்கப்பட்டு அவனிடத்திலேயே கொடுக்கல் வாங்கல் செய்ய விரும்புவர். எண்ணங்களின் அருளொளியில் தோய்ந்த அவனது முகங் கவரும் ஆற்றல் மிகுதியும் பெற்று விளங்கும். அவனது முகத்தைப் பார்ப்பவர்க்கெல்லாம் அன்பும் மகிழ்ச்சியும் எழும். இனி, எண்ணமானது இங்ஙனம் அருட்டன்மையின் வழித்தோன்றியதற்கு ஏற்பவே, பேசுகின்ற சொற்களும் இனிமைவாய்ந்து உண்மையே கூறுவனவாய் இருத்தல் வேண்டும். நல்லண்ணமுடையவர்களும் இனிதாகப் பேசுந்திறம் அறியாராயின் அவரெடுத்த முயற்சி நன்கு நிறைவேறாதாகும். இனிமையாகவும் உண்மையாகவும் பேச அறிந்தாலும் எடுத்த பொருளை விட்டு வேறு பலவற்றை ஓயாமற் பேசிக் கொண்டிருத் தலுமாகாது, எடுத்த செய்தியைப் பேசுங்காலுங் கேட்டவர்க்கு மனக்கிளர்ச்சி தோன்றி அவர் கருத்து அதிற் பதியுமாறு பேசுதல் வேண்டும். இவற்றுடன் பேசுகின்ற தனக்குங் கேட்கின்ற பிறர்க்கும் ஏதாயினும் ஒரு பயன் விளைவதான செய்தியையே எடுத்துப் பேச வேண்டுமல்லாற் பயனற்றதொன்றைத் தொடுதலும் ஆகாது. ஏனென்றால், இனிமையில்லாத சொற்கள் எவ்வளவு உண்மை யுடையனவாயினும் அவை கேட்பவரைத் தம்வழிப் படுத்த மாட்டா; ஏதொரு கெடுதியுஞ் செய்யாதிருக்கையுலுங் கழுதையின் குரலைக் கேட்பவர் ஏன் அருவருப்படைகின்றனர்? ஏதொரு நன்மையுஞ் செய்யாதிருக்கையிலுங் குயிலின் குரலைக் கேட்டு எல்லாரும் ஏன் உவப்படைகின்றனர்? இனிமையாகப் பேசுகிறவர்களைக் கண்டால் எவரும் மகிழ்ச்சியடைகின்றனர். இங்ஙனம் இனிமையான சொல் எல்லாரையுந் தன்வழிப் படுத்து மாயினும், அதனைப் பேசுவோர் உண்மையல்லாத செய்திகளை எடுத்துரைப் பராயின், கேட்பவர் அவர் சொல்லின் பொய்ம்மை யறிந்தவளவானே அவர் மேற் பெரிதும் வெறுப்புக் கொள்வர். எவ்வளவு திறமையொடு கட்டிப்பேசிய பொய்யுஞ் சில நாட்களில் தன் நிலைமையைக் காட்டிவிடும் கெட்டிக் காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்னும் பழமொழி பொய் நிலைக்கு நில்லாது என்பதை அறிவிக்கின்றதன்றோ? மேலும், பொய் பேசுகிறவர் தாஞ்சொல்லும் ஒரு பொய்யை மறைக்கப் பல பொய்கள் சொல்லவேண்டி வருமாதலாலும், அங்ஙனஞ் சொல்லுமிடத்து அவர் கூற்றில் ஒன்று மற்றொன்றனொடு மாறுபடாமல் இராததாலும் அவர் உள்ளம் அதனைப் பேசுகிறதற்கு முன்னும் பின்னும் பேசும்போது மெல்லாங் கலக்கத்தையே அடையும். உள்ளங்கலங்கவே அதனுள் நின்று இயங்கும் எண்ணமுங் கலங்கி வலிவு குன்றிப்போம். இனி, இனிதாக உண்மையே பேசுவாராயினுஞ் சிலர், கேட்பவர் நிலை உணராமலும் வாய் ஓயாமலுந் தம் பிறப்பு வளர்ப்பு தமது குடும்பச் சீர்கேடுகள் கவலைகள் முதலியவற்றை நீளக் கூறிக்கொண்டே போகின்றனர். இங்ஙனம் பேசுவது பெரிதும் அருவருக்கற்பாலதொன்றாம். உலகத்தின்கண் ஒவ்வொரு வருக்குந் துன்பமுங் கவலையும் இருக்கின்றன. இவையில்லாதவர் முற்றத்துறந்த முனிவரேயன்றி வேறெவருமே இலர். இங்ஙனம் இங்குள்ள துன்பங்கள் போதாவென்றோ, இவர்கள் பிறரைக் காணும் போதெல்லாம் தம்முடைய துன்பங்கள் கவலைகளை எடுத்துரைக்கின்றனர்! தாம் பட்ட இடர்களை நினைவுக்கு கொண்டுவந்து பேசப்பேச, இவர் மேலும் மேலுந் தமக்கு மனநோயை வருவித்துக் கொள்வதோடு தஞ் சொற்கேட்பாரையும் மனம் உளையச் செய்கின்றனர். இதனாற் பேசுகின்றவர் கேட்கின்றவர் இருவர்க்கும் எண்ணம் நிலைகுலைந்து போதலின், அறிவு வளங்குன்றி அறியாமையும் அதன் வாயிலாக வருந் துன்பங்களும் அவரைச் சூழ்ந்து கொள்கின்றன. இவை யிரண்டன் பிடியில் அகப்பட்டுக் கொண்டவர்க்கு ஏதோர் இன்பமுந் தோன்றாதாகலின், அவர் தமக்கு இறைவன் வகுத்த வாழ்நாள் கழியுந்தனையும் இடரையே அடைந்து இறந்து மேலுலகங்கட்குச் சென்றால் அங்கும் நுண்ணுடம்புகளில் துன்பமே உழப்பர். ஆதலாற், பிறர் எவரிடத்துங் கட்டாயமான ஏது இருந்தாலன்றித், தமது துன்ப நிலைமையை எடுத்துப் பேசலாகாது. ஏதேனும் ஒரு துன்பத்தில் அகப்பட்டவர் அதனினின்றுந் தம்மை மீட்கும் ஒருவரைக் கண்டால் அவரிடத்து மட்டும் அதனைச் சுருக்கமாகக் கூறி, அது தீரும் வழியைக் கடைபிடிக்கலாம். உலகத்திற்குப் பயன்படும் ஓர் அரும்பெரும் முயற்சியை மேற்கொண்டவர் அதற்கு இடையூறாவன வந்து வருத்தினால் அவை நீக்குதற்குரியாரைக் காண நேர்ந்தவிடத்து அவற்றையெடுத்துச் சொல்லித் தீர்த்துக்கொள்ளலாம் . இவ்வாறன்றி வீணே கண்டவரிடத் தெல்லாந் தமது துயரைப் பற்றிப் பேசுதல் சிறிதும் பொருந்தாது. அவ்வாறாயின், தம்மோடு அளவளாவுவாரிடத்துத் தாம் அடைந்த இன்பங்களைப் பற்றியாவது பேசலாமோவென்றால் அதற்குந் தக்க இயைபு இருந்தாலன்றி அவ்வாறு கூறுதலும் ஆகாது. ஆழ்ந்த குளமானது தனது ஆழத்தை எவர்க்கும் எளிதிற்காட்டாமல் அமைதியாய் இருத்தல்போல, அரும்பெருந் தன்மைகளால் நிறைந்து ஆழமான அறிவுடையராய் இருப்பவர் தமதுள்ளத்தில் நிறைந்த செய்திகளை எளிதிற் பிறர்க்குத் தெரிவித்துவிட மாட்டார். ஆழமில்லாக் கால்வாயில் ஓடும் நீர் சலசலவென்றோடிப் பின் இல்லையாதல் போல ஆழ்ந்த நெஞ்சம் இல்லாதவர் தம்மிடத்துள்ளவற்றை யெல்லாம் வெளியே பிதற்றிக் கொட்டிவிடுவர். ஆகையால், தம்மையுந் தமதுள்ளத்தையும் அதில் நிறைந்த செய்திகளையுங் காத்துக் கொள்வது எண்ணத்தை வலுப்படுத்திக் கொள்வார்க்கு இன்றியமையாத தொன்றாகும். உள்ளீடு நிறைந்து உறுதி யாயுள்ள இருப்புத்தூண் காற்றுக்கும் மழைக்குஞ் சிறிதும் அசையாமல் நேர்நின்று, தன்மேலேற்றிய பெருஞ் சுமையையும் ஒரு பொருட்படுத்தாமல் ஏற்று நிலைபெறும்; உள்ளீடில்லாப் புழலையான மூங்கிற் கோலோ தன்மேல் வைத்த சிறு சுமையையும் பொறுக்கலாற்றாது சிறு காற்றினாலும் இடைமுறிந்து விழும். இவைபோலவே, தமதுள்ளத்தைச் சிதறவிடாது காத்துக் கொள்ள வல்லவர் எவ்வளவு துன்பங்கள் எவ்வளவு இடையூறுகள் மேன்மேல் வந்து தாக்கினாலும் அவற்றாற் சிறிதுங் கலங்காமல் எத்தனைப் பெருமுயற்சியையும் ஏற்று நடத்துவர்; உள்ளத்தின் வலிமையில்லாதவர்களோ சிறிய துன்பம் வந்தாலும் நினைவு கலைந்து சிறு முயற்சியையுங் கொண்டு நடத்த மாட்டார். ஆதலாற் றாம் அடைந்த இன்பங்களையுந் தமக்கே யுரியவான மறைவுகளையும் பிறரெவர்க்கும் புலப்படுத்தாமல் ஒழுகுதலே பெரிதும் நன்மை தருவதொன்றாம். மேலும், மக்களில் ஒவ்வொருவர் கருத்தும் ஒவ்வொருவர் நினைவும் ஒரே தன்மையாய் இராமல் பல தன்மையாயும் ஒன்றோடொன்று மாறுபட்டும் இருக்கின்றன. ஒருவர்க்குப் பொருத்தமாகக் காணப்படும் எண்ணமுஞ் செயலும் வேறொருவர்க்குப் பொருத்தமில்லாதனவாய்த் தோன்றும், ஒருவர்க்கு மாறாய்த் தோன்றுவன பிறர் ஒருவர்க்கு நேராய்த் தோன்றும். இங்ஙனம் பல வேறு வகைப்பட்ட மக்கட்பரப் பினிடையேயிருந்து காலங்கழிக்கும் ஒருவர் தமக்கு இனியன வாயும் பொருந்துவனவாயுந் தோன்றிய மறை இயற் செயல்களைப் பிறர்க்குப் புலப்படுத்துவராயின், அவருடைய தன்மைக்குப் பெரும்பாலும் மாறுபட்ட நிலையிலுள்ள அம் மற்றவர் அவற்றை இன்னாதனவாயும் பொருந்தாதனவாயும் இருக்கவே கண்டு அவர்மேல் அருவருப்புக் கொள்வர். இதனாலன்றோ இருவர் கலந்து பேசுங்காலெல்லாம் முக்காலே மூன்று பங்கு பிறர் குற்றங்களையே எடுத்துப் பேசுகின்றனர்? மக்களியற்கையைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பவர்க்கும் மாந்தர்கள் எப்போதும் பிறர் குற்றம் பேசுதலிலேயே மகிழ்ச்சியுங் கிளர்ச்சியும் வாய்ந்தவரா யிருக்கின்றார் என்னும் உண்மை தென்படாமற் போகாது. இவ்வளவு தீய நிலைமையிலுள்ள மாந்தர்களின் நடுவேயிருந்து ஒருவர் தமது உள்ளத்தே பாதுகாத்து வைக்கற்பாலனவற்றை அங்ஙனம் வையாமல் எங்கும் பறையறிந்து தெரிவித்தாற்போல் வெளிப்படுக்குவராயின், அவர் அதனால் எத்துணைக் கொடுந் துன்பத்திற்கு உள்ளாகுவர் என்பதனை யாம் விண்டு விளம்புதல் வேண்டா. அவ்வாறாயிற், பிறரொடு பேசுங்கால் உண்மையே பேசுதல் வேண்டுமென முதலிற் கூறிவைத்து, இப்போது அதனைப் பேசுதலாகாதெனக் கிளத்தல் என்னையெனின் நமது கருத்து அங்ஙனங் கொள்ளப்படுவதாகாது. உலகத்திற்குப் பயன்படும் பொருள்களைப் பற்றி உரையாடுங்காலத்து மெய்யே கூறுதல் வேண்டும்; தம்மைப் பற்றியது ஏதும் வெளிப்படுத்த லாகாதென்பதே நமது கருத்தாவதாம் அன்றித், தம்மொடு நெருங்கிப் பழகுவார் சிலர் தம்மை அணுகித் தம் மறைவுகளைச் சொல்லும்படி விரும்பிக் கேட்டால், அவற்றை வெளிவிடாமல் நயமாக மறைத்துக்கொள்ளல் வேண்டுமேயல்லாமல் தமது உண்மையைப் புலப்படுத்தலுமாகாது, அதனின் வேறான பொய்ம்மையைப் பேசுதலும் ஆகாது. இங்ஙனமே எல்லாரிடத்தும் நடந்துகொள்ளல் வேண்டுமோவென்றால், தம் மனங் கயந்து உயிர்க்குயிராய்த் திகழும் நண்பர் ஒருவர் இருவர்பால் தம் உண்மையைப் பிறர் அறியாமலிருக்கும்படி ஒழுகுதலே எண்ண வலியுடையார்க்குச் சிறப்பாவதாம். ஏதுபற்றியெனின், மக்கள் தம்மால் நன்கு அறியப்பட்ட ஒருவரைப் புறக்கணித்து விடுதல் வழக்கமாய் இருக்கின்றது; ஒருவரிடத்துத் தாம் எதனையேனும் பிழையெனக் கண்டு கொள்வராயின், பின்னர் அவரிடத்து நூறாயிர நல்லியல் பிருந்தாலும் அவற்றைப் பாராட்ட மாட்டார்; அவர்பாற் றாங் குற்றமெனக் கண்ட அதனையே இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டு மற்ற நலங்களை யெல்லாம் இழந்துவிடுவர். தம்மால் நன்கு அறிந்து கொள்ளப் படாமல் மறைவான நிலைமையில் உயர்ந்து நிற்கும் பெரியோன் ஒருவனைக் கண்டாலோ அவனைப் பெரிது பாராட்டி வணங்கி அவனுக்கு வேண்டுவனவெல்லாஞ் செய்வர். தம்மிற் சிலர் பலர் அவனை எங்ஙனம் இகழினும் அவ்விகழுரைகளை ஒரு பொருட் படுத்தார். ஆதலால், எண்ணத்தை வலுப்படுத்தி உலகத்திற்கு அரும்பெரு நலங்களைச் செய்ய விரும்பும் பெரியோன் எவனுந் தன்னுண்மையை இயன்ற வரையிற் பிறர்க்குப் புலப்படாமல் மறைத்து வைத்து ஒழுகுதலே இன்றியமையாக் கடமையாம் என்க. இனித் தன் உண்மையை வெளிப்படுத்தாது தன்னிலையில் திண்ணமாய் நிற்றல்போலவே, பிறர் தமக்கே உரிய மறை பொருள்களை அறிய விரும்பாமையும் முயலாமையும் அப்பெரியோனுக்கு விழுமிய கடமையாகும். மாந்தருள் ஒவ்வொருவர்க்கும் உயிர்போற் சிறந்த மறைபொருள்கள் சில பல உண்டு. அவற்றை அறிய ஆவலுறுவது எவர்க்கும் பெருந்தன்மையாக மாட்டாது. ஒவ்வொருவர் மறைவுகளையும் வருந்தி யுணர்தலாற் போதரும் பயன் சிறிதும் இன்றாம். உலகத்தைத் தருத்துதற் பொருட்டு இனிய கட்டுக்கதைகள் எழுதும் புலவனுக்கு மட்டும் இன்னோரன்ன மறைபொருட் குறிப்புகள் பயன்படுமேயல்லாது, மற்றையோர் அவற்றை யுணர்வது அல்லலுக்கே இடனாய் முடியும். மாண்டுபோனவர் கடல்மணலினும் பலர், மாளப்போபவரும் அங்ஙனமே, மீளப் பிறப்பவரை எண்ணப்புகுதல் கடனீரிலுள்ள அணுக்களைப் பகுத்துக் கணக்கிடப் புகுதலுக்கே ஒப்பாம். இவ்வாறெல்லாம் அளவிடப்படாத வெள்ளக் கணக்காய் மாறிமாறி வரும் மாந்தர் ஒவ்வொருவரின் மறைவுகளையுஞ், சில நாளில் இவ்வுலகத்தை நீத்துப் போகும் ஒருவர் அறிந்துகொள்வதனால் யாது பயன் விளையப் போகின்றது! ஆகையால், நிலையில்லா வாழ்க்கையை யுடைய மாந்தர் மின்னல்போற்றொன்றி மறையும் இப் பிறவியில் ஒவ்வொரு வர்க்குஞ் சிறப்பாயுள்ள மறை பொருள்களை அறிதற்கு எள்ளளவும் ஆவலுறாதிருக்கக் கடவராக! இங்ஙனந் தமதுள்ளளத்தைத் தம்மை நோக்கியும் பிறரை நோக்கியும் வறிதே கலைய விடாது பாதுகாத்து எண்ணத்தை வலிவேறச் செய்தால், அதனால் எல்லாரும் அளவிறந்த நலங்களைப் பெறலாம். இங்ஙனம் வீணான செய்திகளைப் பேசாமற் சொல்லடக்கம் வாய்க்கப் பழகிக்கொண்டவர்களும், பிறர்க்குப் பயன்படும் நலங்களை மட்டும் எடுத்துரைக்குங்காற் கேட்பவர்க்கு மனக்கிளர்ச்சி பிறவாமல் வழவழவென்று மொழிகுவராயிற் கேட்பவர் அலுத்துப் போய்விடுவர்; சக்கிமுக்கிக் கல்லில் இருப்புச் சுத்தியால் தட்டியவுடன் அதிலிருந்து தீப்பொறி பறத்தல்போல, அறிவான் மிக்கவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லுங் கேட்போர் உள்ளத்திற் கிளர்ச்சியினை எழுப்புதல் வேண்டும். இஃது தெங்ஙனங் கூடுமெனிற், பேசும் அறிஞர் தாம் பேசத் துவங்கிய பொருளைத் தமதறிவில் தெளிவாய் நன்குணர்ந்திருப்பராயின், அவரதனை எடுத்துப் பேசும் பொழுதுந் தெளிவாய் நன்றாகப் பேசுவர்; கேட்பவரும் அதனைத் தெளிவாய் அறிந்து கொள்வர். இன்னும் அப்பொருளை அவர் அறிவுறுத்தி வருங்கால் அதற்குப் பல எடுத்துக் காட்டுகளும் உலக வழக்கிலிருந்து எடுத்துக்காட்டி வரல் வேண்டும்; தாங்கூறும் பொருளை உலக வழக்கிற் பொருத்திக் காட்டாதவரையிற் கேட்பவர்க்கு அப் பொருள் விளங்காது, விளங்கினும் இன்பந் தோன்றாது. இன்னுந், தாம் வலியுறுத்திப் பேசும் பொருளின் தன்மைக்கு ஏற்ப அவர் பலவகை உருக்கத்துடன் அதனைப் பேசி வரல் வேண்டும்; இரக்கமானதொன்றைச் சொல்லும் போது மனம் உருகத்தக்க பாங்காகவும், மகிழ்ச்சிக்கு ஏதுவான தொன்றை விளக்கும் போது உள்ளம் பொங்கத்தக்க வகையாகவும், அருவருக்கத்தக்க தொன்றைக் குறிக்கும்போது அவரதன்பால் வெறுப்படையத் தக்கவாறாகவும் எல்லாம் பேசப் பழகல் வேண்டும். இவற்றிற் கெல்லாந் தாம் அறிந்த மொழியில் தேர்ந்த புலமையிருக்க வேண்டுமாதலின், தத்தம் மொழிப் பயிற்சியிற் பாராமுகமாய் இராமல் அதனைச் செவ்வையாகக் கற்றறிந்து பழகுதல் அவ்வத் தேயமாந்தர்க்கும் இன்றியமையாத கடமையாம். இனிப், பயன்றராத செய்தி கேட்கும்போது எவ்வளவு தித்தித்தாலும், நாட் செல்லச் செல்ல அது பயனற்றதாதல் கண்டு அதனைச் சொன்னவர்பால் எல்லாரும் மனம் உவர்க்கத் தொடங்குவர் அங்ஙனமாயிற், பயன்றரும் பொருள்கள் தாம் யாவையோவெனின் அவை இம்மையுலகத்தைப் பற்றியனவும் மறுமை யுலகத்தைப் பற்றியனவும் என இரு பகுப்பில் அடங்கும். இம்மையுலகைப் பற்றியன: உழவு, கைத்தொழில் கொண்டு விற்றல், இல்லறவியல், அரசியல் என்பன ஆகும்; மறுமை யுலகைப் பற்றியன: கடவுள், உயிர், உலகு, வினை, அறியாமை யென்னும் இவற்றைக் குறித்த ஆராய்ச்சிகளுந், துறவு, இரக்கந், தவம், திருக்கோயில் வழிபாடு, அன்பர் பெருமை, அடியார்ப் பேணல் முதலியனவும் ஆகும். இவ்விரு பகுதியிலும் அடங்கும் உயர்ந்த இனிய பயன்படு பொருள்களையே எடுத்துச் சொல்லி வந்தால், அவற்றைக் கேட்பவர் தமதறியாமை நீங்கப்பெற்று அறிவில் ஓங்கிப் பொலிகுவர் ; அவரங்ஙனஞ் சிறக்கவே உலகத்தார்க்குப் பலதிறப்பட்ட நன்மைகளெல்லாங் கிளைப்பதுடன் தமக்கு அறிவு விளக்கிய அவர்மாட்டுங் கேட்பவர் நன்றி மிக்கவராய் ஒழுகுவர் இதனாற் பயன்படு சொல்லின் அருமையும், அஃதெல்லாரையுந் தன்வழிப்படுத்தி நன்மை பயத்தலும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்கு விளங்குகின்றன அல்லவோ? சொல்லுஞ் சொல்லினுயிராய் நின்று விளங்கும் எண்ணமும் ஒன்றோடொன்று பிரிவறத் தொடர்பு பட்டிருத்தலாற், சொல்லைப் பாதுகாத்து வழங்குதல் எண்ணத் திட்ப முடையார்க்கு இன்றியமை யாததாமென்பதும், அதனைக் காவாது கண்டவாறு பிதற்றித் திரிதல் எத்துணைப் பெரியார்க்கும் பெருந் துன்பமாமென்பதும் வலியுறுத்து தற்கன்றே ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார், யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (குறஙள 127) என்று கூறியருளினார். இஃது இத்துணைச் சிறந்ததாயிருத்தல் பற்றியே சொல்லடக்கத்தை இங்ஙனஞ் சிறிது விரித்தெழுத லானேம். இனி, அருட்டன்மையின் வாயிலாகவும் இனிய சொல்லின் வாயிலாகவும் புனிதமாக்கி வலிவேற்றிய எண்ணத்தைச் செய்கையிலும் அங்ஙனமே புனிதமாக்கி உறுதிப்படுத்தல் வேண்டும். மக்களுடைய செய்கைகள் ஒவ்வொன்றும் எண்ணத்தோடு கூடி நடப்பது வலுவுடைய தாயிருக்கும், கூடாதது சோர்வுள்ளதாயிருக்கும். ஒருவர் நடந்து செல்லும் போது அச்செயலின்கண் தமது எண்ணத்தைச் செலுத்தி நடப்பராயின் அந்நடை முறுக்குடையதாயிருத்தலும், அதனை அதன்கட் செலுத்தாமல் நடப்பராயின் அது தளர்ச்சியுடையதா யிருத்தலுங் கண்டு கொள்ளலாம். முறுக்கான நடை மனவெழுச்சியினைத் தரும், தளர்வான நடையோ சோம்பலையுங் களைப்பினையும் உண்டுபண்ணும். அங்ஙன மாயின் எண்ணத்தின் சேர்க்கையின்றி உடம்பின்கட் பலவகைச் செயலுங் காணப் படுமோவெனின்; மனத்தின் சேர்க்கையால் அச் செயல்கள் நடைபெறுதலின், தளர்ந்த செயல்கட்கு எண்ணத்தின் தொடர்பு இல்லையென்க. மனந் தீர்மானஞ் செய்யும் இயல்பின்றி ஒரு தொழிலை நடாத்தும் அம்மட்டே வல்லது; எண்ணமோ தீர்மானஞ் செய்யும் இயல்பிற்றாயிருத்தலின் தான் உந்தும் ஒரு தொழிலைக் கடைப்பிடியாகவே செய்யும் ஆற்றல் மிக்கது. மேலும் மனம், நுண்ணிய பருப்பொருட் கருவிகளில் ஒன்று. எண்ணமோ பருப்பொருட் கருவிகளிற் சேர்ந்த தன்று, உயிரின் இயல்பாய் அறிவுப் பொருளாய் வயங்குவது. ஆகவே உயிரின் தீர்மானமான முயற்சியை எண்ணமானது ஏவி முடித்தல்போல, மனமானது செய்து முடிக்கமாட்டாது. உயிர் உடம்பைவிட்டுப் பிரிந்து போனால் எண்ணமும் அதனோடு கூடவேபோம். உயிர் பிரிந்து சென்றால் மனமோ அதனோடு செல்லாது சிறிது காலம் வரையில் மூளையிலேயே அமைந்து கிடக்கும். உயிர்போன பின்னும் மனம் மூளையில் உண்டென்பதனை எதனால் அறிந்தோமெனின்; பிணமாய்க் கிடக்கும் ஓர் உடம்பின் மூளையிற் பலவிடங்களிலும் மின்னற்கம்பி முனையை வைத்து மின்னை ஏற்றினால், உடனே அவ்வுடம்பிலுள்ள பல உறுப்புகளும் இயங்குகின்றன. அம் மூளையின் ஓரிடத்தை அதனாற் றொட்டாற் கண் விழிக்கின்றது, வேறு மோரிடத்தைத் தொட்டால் வாய் திறக்கின்றது, பின்னும் ஓரிடத்தில் அது பட்டால் கை அசைகின்றது, மற்றுமோரிடத்திற் பொருத்தினாற் கால் அசைகின்றது; இங்ஙனமே அம் மூளையின் ஒவ்வோரிடமும் மின் ஊட்டப்பட்ட போதெல்லாம் உடம்பின் கண் அவ்வவ் விடங்களோடு தொடர்புபட்டுள்ள உறுப்புகள் இயங்குகின்றன. இம் முறையால், உயிர் நீங்கிய பின்னும் மூளையின்கண் மனத்தின் பருப்பொருட் கருவியேயாகுமென்பதும், மின்னலால் உந்தப்பட்டு மூளையின் வழியே எல்லா உறுப்புகளையும் மனம் இயக்குமிடத்துஞ் செத்த பிணத்தின்கண் எண்ணம் என்னும் பண்பு ஒரு சிறிதுங் காணப்படாமையான், அது மனம் போற் பருப்பொருளாகாமல் அறிவுப் பொருளான உயிரிற் கூடிய அறிவுப் பொருளே யாமென்பதும் நன்கு பெறப்படும். எனவே, தீர்மானிக்கும் ஆற்றல் வாய்ந்த எண்ணத்தின் வழி வைத்துச் செய்யுஞ் செயல்களே மிக்க வலிவினவாதல் தெளியப்படும். ஆதலாற், காண்டல் கேட்டல் மோத்தல் செய்தல் எழுதல் நடத்தல் ஓடல் முதலான எத் தொழிலைச் செய்தாலும் எண்ணத்தைச் சேர்த்து அவற்றைச் செய்தல் வேண்டும். பிறர்க்குத் தீங்கு தருஞ் செயலும் முழு எண்ணத்தோடு செய்யக் கூடியதே யாயினும், அது செய்தவனுக்கு முடிவிற் பெருந் துன்பத்தையே தருவதாய் இருத்தலால் அது சிறிதும் ஆகாது; பிறர்க்கு நன்மை ஆவனவற்றை முழு எண்ணத்தோடுஞ் செய்து வரல் வேண்டும். வறுமையால் வருந்துமவர்க்கு உண்டியும் உடையும் பொருளும் இயன்ற வரையில் உதவுவதோடு, பிறருதவியை நாடாமல் அவர் தாமாகவே பொருள் தேடிப் பிழைத்தற்கேற்ற வழிவகைகளையும் அவர்க்குக் காட்டல் வேண்டும். இவ்வாறு வறியவர்க்கும் ஏழை எளியவர்க்குந் தள்ளாதவர்க்கும் நொண்டி கூன் குருடு முதலான உறுப்பறைகட்கும் அருள்சுரந்த எண்ணத்தோடும் உதவி புரிந்துவரின், அருட்செய்கை வழிப்பட்ட அவரது எண்ணம் மிகவும் வலிவேறி அவர்க்கு வசிய ஆற்றலினை அளவின்றி வளரச்செய்யும். அவரைக் கண்டு வணங்காதவரும் வாழ்த்தாதவரும் எங்கும் இரார். அவர்தம் அருள் உதவியானது அவரால் உதவி செய்யப்பட்டார் எல்லார் உள்ளத்திலும் அன்பையும் அருளையும் எழுப்பும் ; பலர் அங்ஙனம் அன்போடும் அருளோடும் நினைக்கும் எண்ணங்கள் அவ்வுதவி செய்தாரைச் சூழ்ந்துகொண்டு மேன்மேலும் அவர்க்குப் பெருங்கிளர்ச்சி யினையும் இன்பத்தினையும் விளைவிக்கும்; அவரெடுத்த முயற்சிகள் எல்லாந் தவறாமற் கைகூடும். ஒருவருள்ளத்திற் றோன்றும் அருள் எண்ணத்தின் வலிமையையே அளவிடுதல் அரிது; அங்ஙனாயிற், பலர் உள்ளத்திற் கிளைத்து ஒன்றாய்த் திரளும் அருளெண்ணத்தின் வலிவை அளவிட்டுரைத்தல் எவராலும் இயலுமோ? எண்ணமானது எவற்றினும் வலிது உலகத்தில் நடைபெறும் அரும்பெருஞ் செயல்களெல்லாம் எண்ணத்தின் கடைப்பிடியால் வந்தனவே யாம். பல்லாயிரம் மக்களையும் பல்லாயிரஞ் சரக்கு மூடைகளையும் ஏற்றிக் கொண்டு நெடுவழி மிகு விரைவாய்ச் செல்லும் நீராவி வண்டிகளும் நீராவிக் கப்பல்களும் எங்ஙனந் தோன்றின? நீராவியின் ஆற்றலைக் கடைப்பிடியாய் நின்று கண்டறிந்த மேலோனது அரியபெரிய எண்ணத்தின் வலிவினா லன்றோ? எத்தனேயோ ஆயிரம் கல் (மைல்) தொலைவில் அகன்றிருக்கும் மக்கள் தம் வீட்டுக்குள் இருந்து பேசுவதுபோற் காற்றினுங் கடுகிச் சென்று செய்தி அறிவிக்குங் கம்பிச் செய்தியைக் கண்டுபிடித்த அறிஞனது எண்ணத்தின் ஆற்றலை என்னென்று எடுத் துரைப்பேம்! இன்னும் மாந்தர்கள் செய்யும் பல்வேறு கைத் தொழில்களையுஞ் சுருங்கின காலத்தில் அருந்திறமையோடு செய்து முடிக்கும் பல திறப்பொறிகளையும் பொறுமை யோடு அமைத்துக் கொடுத்த நுண்ணறிவினரின் எண்ணத்தின் வலிவை எவ்வாறு வியந்துரைப்பேம்! சோறும் நீரும் வேண்டாமல் தம் அறிவைப் பலநாளும் ஒருமுகப்படுத்தி யிருந்து அரியபெரிய உண்மை நூல்கள் எழுதிய புலவரது எண்ணத்தின் கட்டுப் பாட்டை எவர்தாம் எடுத்துச் சொல்ல வல்லார்? இங்ஙனமே எண்ணத்தின் வலிவால் இம் மண்ணுலகில் நடைபெறும் அருஞ் செயல்களை விரித்துச் சொல்லப் புகுந்தால் இவ்வேடு இடங்கொள்ளாது. இந் நிலத்தின்கண் உள்ள மக்களின் முன்னேற்றமெல்லாம் எண்ண வலிவினாலேயே நடைபெற்று வருகின்றன; எத்தொழிலைப் பார்த்தாலும் அத்தொழிலினுள்ளே எண்ண வலிவிருக்கக் காண்பீர்கள். எண்ண வலிவில்லாதார் செய்யும் எதுவுஞ் சிறப்புடையதாகாது. இருளையும் ஒளியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! இருள் வந்து மூடுங்கால் எல்லாத் தோற்றமும் அற்றுப் போகின்றன; எல்லாவுயிர்களும் முயற்சி குன்றி உறங்கப் போகின்றன; மற்றுக், கதிரவன் ஒளி கீழ்ப்பாற் றோன்றுங்கால் அஃது எவ்வளவு கிளர்ச்சியோடு மினுமினு வென்று மிளிர்கின்றது; அப்போது எல்லாப் பொருள்களும் எவ்வளவு தோற்றப் பொலிவு வாய்ந்து துலங்குகின்றன! அந் நேரத்தில் எல்லாவுயிர்களும் எவ்வளவு மனக்கிளர்சி யோடுங் களிப்போடுந் தத்தம் முயற்சிகளைச் செய்யப் புகுகின்றன! புறத்தே காணப்படும் இவ்விருவகைத் தோற்றங்களைப் போலவே, சோம்பலும் எண்ணவலிவும் உணரற்பாலனவாம். சோம்பலுள்ளவர்க்கு அறிவு மழுக்கம் அடைந்துபோக அவரது அறிவை அறியாமை இருள் வந்து முற்றுங் கவிந்து கொள்கின்றது. எண்ண வலிவுடைய வர்க்கோ அறிவொளியானது கிளர்ந்து விளங்கி எல்லாப் பொருள்களின் உண்மையையும் அவர்க்குப் பிழைபடாமல் அறிவிக்கின்றது. அதனோடு அருள்வழிப்பட்ட எண்ணம் உடையார்க்கு உடம்பின் உள்ளமைந்த கருவிகளெல்லாந் தூயவாய் வலிவேறித் திகழ்தலின், அவ்வகப்பொருள் அமைதிக்கு இசைய அவருடம்பின் முகம் முதலான புறத்துறுப்புகளும் அழகும் அமைதியுங் கவர்சியும் உடையனவாய்க் கிளர்கின்றன. அது மட்டுமோ, அவருடம் பெங்கும் அருளொளி நிறைந்திருத்தலால், அவர்தம் கைகளால் எவரைத் தொட்டாலும் அவர் உடம்பும் உள்ளமுந் தூயவாகப்பெறுவர். அருள் எண்ணத்தால் அருளொளி வண்ணமாய் விளங்கின துறவிகளும் புலவரும் அரசரும் பிறருந் தம்மை அணுகின நோயாளிகள் பற்பலரைத் தம் கைகளாற் றொட்டு, அவர்க்கிருந்த நோயை போக்கிய நிகழ்ச்சிகள் வரலாற்று நூல்களிற் கற்றுணர்த லல்லாமலும், இஞ்ஞான்றும் அவர்தம் கைகளாற் றொட்டுப் பலர்க்கு நோய்த் தீர்த்தலை ஆங்காங்கு நேரிற் கண்டும் உணரலாம். இது மட்டுமன்று; அவர்தம் கைகளிற் றொடாமல் நினைவு மட்டாலும் பல பெரு நன்மைகளையெல்லாம் பலர்க்குஞ் செய்துவருவர்; தமக்கிசைந்தவர் உள்ளங்களிற் றாம் நினைக்கும் நினைவுகளைத் தோன்றப் பண்ணுவர். இப்போது இந் நிலவுலகத்துள்ள மக்களெல்லாரும் பொதுவாக நல்லறிவும் நன்னாகரிகமும் அடைந்து வருதல், மேற்கூறிய மேலோர்கள் இடைவிடாது நினைந்துவரும் நல்லெண்ணத்தின் பயனேயாம். இத்தகைய நல்லெண்ணங் கொண்டு மனத்தாலுஞ் சொல்லாலும் உடம்பாலும் பிறர்க்கு ஆற்றும் உதவிகள், இயல்பாகவே அவற்றைச் செய்வார்க்கும் மேன்மேல் எண்ண வலிவினைத் தரும். எண்ணத்தை வலிவேற்றுதற்கு இது மிக எளிதான வழியாம் என்க. இனித் தமது எண்ணத்தை வலிவேற்றப் பெரிதும் விழைந்திருப்பவர் இன்னும் ஒரு முதன்மையான முறையைப் பின்பற்றி ஒழுகுதல் இன்றியமை யாத கடமையாய் இருக்கின்றது. பிறர்க்குதவி செய்யும் முயற்சியில் நல்லெண்ணத்தோடு முனைந்து நிற்பவர்கள், அம் முயற்சிகளிலிருக்குங் காலத்தே மட்டும் எல்லா மாந்தரோடுங் கலந்து உறவாடலாம். அம் முயற்சி தீர்ந்து ஓய்ந்திருக்கும் பொழுது எல்லாருடனுங் கலந்திருத்தல் ஆகாது. ஏனென்றால், ஒருவர் ஒரு முயற்சியில் முனைந்திருக்கும் போது அவரது அறிவாற்றல் மிக நுண்ணிய வடிவிற் பரந்து சென்று மற்றவர் எண்ணங்களைத் தன் வழியில் அடக்கி ஆள்கின்றது. அம் முயற்சியை விட்டுத் தாம் ஓய்ந்திருக்கையில் மற்றவருடைய எண்ணங்கள் அவ ருள்ளத்தை வந்து தாக்குகின்றன. தம்மொடு கூடியிருப்பவர் உயர்ந்தோராயும் அறிவில் மேம்பட்டவராயும் இருந்தால், அவருடைய தூய நல்லெண்ணங்கள் ஓய்ந்திருக்குந் தமதுள்ளத்தில் வந்து பதிந்து தமக்கு மிக்க ஆறுதலையும் இன்பத்தையும் வலிவையும் அறிவு விளக்கத்தையுந் தரும். அவ்வாறன்றிக், கீழ்ப்படியான நிலையுலுள்ளவர்கள் தம்மைச் சூழ்ந்திருக்க அவரிடையே ஓய்ந்திருப்பவர்கள், அக் கீழோர் நினைக்குந் தீய இழிந்த பயனற்ற எண்ணங்களால் தாக்கப்பட்டு நோயுங் கவலையுந் துன்பமுங் கொண்டு வருந்துவர். நமது கட்புலனுக்குத் தென்படாமல் நுண்ணிய நிலையில் நடைபெறும் இந் நிகழ்ச்சிகளை எவரேனுங் கண்ணெதிரே காணக்கூடுமாயின், கீழோர் நடுவில் இருத்தல் எவ்வளவு பொல்லாங்காகும் என்பதனை நன்குணர்ந்து திடுக்கிடுவர்! நமதுடம்பிற் பன்னூறாயிரம் நரம்புகள் அங்கும் இங்குமாய் ஓடி, அகத்தும் புறத்தும் உள்ள எல்லா உறுப்புகளையும் இணைத்து ஒன்றுகூடி நிற்றல்போல, நமதுடம்புக்கு வெளியிலுங் கட்புலனாகா நரம்பு போன்ற நினைவின் ஓட்டங்கள் அங்கும் இங்குமாய் ஓடி, நம் எல்லார் மனங்களையும் ஒருங்கு பிணைத்து நிற்கின்றன. ஒருவர் நினைக்கும் நினைவுகள் வெளியே நான்முகமாய்ப் பரவி மற்றவர் உள்ளங்களிற் சென்று படிய, அங்ஙனமே மற்றவர் நினைக்கும் நினைவுகளும் நாற்புறமும் பரவி ஓடி அவருள்ளத்தில் வந்து பதிகின்றன. வேறு வெளியென்று நாம் பிழைபட நினைக்கும் இடைவெளியின்கட் பலருடைய நினைவுகளுஞ் சன்னல் பின்னலாய்ப் பிணைந்தோடுதலைத் தெளிவுக் காட்சி யுடையார் (Clairvoyants) எந்த நேரமும் நன்றாய்க் கண்டு சொல்லக் கூடும். ஒவ்வொரு நொடியும் நமது கட்புலனுக்குத் தெரியாமல் மிகுந்த வலிவோடும் விரைவோடும் ஓடிக்கொண்டிருக்கும் இந் நினை வோட்டங்களில் நலமுடையன நம்மை வந்தணுகுதற்கு இடந்தருதல் வேண்டுமே யல்லாமல் நலமல்லாதனவுந் தீயனவும் வந்து நெருங்க வழிவிடுதல் ஆகாது. ஆகையால், மேலான பொருள்களை நினைக்க மாட்டாமையொடு, தாழ்ந்தவற்றையுந் தீங்கு பயப்பனவற்றையுமே எந் நேரமும் நினைத்துக் கொண் டிருக்குங் கீழ்மக்கள் பக்கத்தே உயர்ந்தோர் ஓய்ந்திருத்தல் சிறிதும் ஆகாதென்பது இதுகொண்டு இனிது பெறப் படுகின்றதன்றோ? அங்ஙனமாயின், அவரைவிட்டுப் பிரிந்திருக்கும் வகைதான் யாங்ஙன மெனிற் காட்டுதும். மாந்தர்களைத் திருத்தும் பொருட்டும், அவர்க்கு அறிவு விளக்கும் பொருட்டுந் தாம் முயன்று முனைந்து நிற்றலை விடுத்து, ஓய்ந்திருக்க வேண்டிய போது அவர்கள் தம்மைப் பின்பற்றி வராமற் சென்று தனிமையான ஓரிடத்திற் றனித்திருத்தல் வேண்டும். தனித் திருத்தற்குச் சிறந்து தனிமையான இடங்கள் யாவையோ வெனின், ஊர்க்குப் புறம்பே தொலைவிலுள்ள யாற்றங்கரையில் அடர்ந்த மாந்தோப்பு கமுகந் தோப்புகளும், மலைமேலுள்ள மண்டபங்களும், மலைக் குகைகளும், ஏரிக்கரையில் அமைத்த குடில்களும், மாளிகைகளில் உள்ள தனியறைகளுந் தனியேயிருந்து அமைதி பெறுதற்கு ஏற்றனவாம். ஏனென்றால், இறைவனால் அமைக்கப்பட்ட உலக இயற்கையின் அழகிய தோற்றங்களையும் அமைதிகளையும் இவ்விடங்கள் நம் கண்ணெதிரே காட்டி, ஓய்ந்திருக்கும் நம்மை நிரம்பவும் ஆறுதல் பெறச் செய்து இன்பத்தைத் தருதலாலும், தாழ்ந்த படியில் உள்ள மக்கள் பெரும்பாலும் இவ்விடங்களை நாடிச் செல்லாமையால் இவை என்றுந் தனிமையாகவே யிருத்தலாலுமேயா மென்க. இவ்விடங்களில் ஒன்றைத் தெரிந்து சென்றவர்கள், அவ்விடத்தின் அழகையும் அமைதியையும் ஆறுதலொடு கண்டு மகிழ்ந்திருந்து அவ்விடத்தை அமைத்த எல்லாம்வல்ல இறைவனது அருட்டிறத்தை வியந்தபடியே இளைப்பாறுக; உறக்கம் வரினும் அந்நினைவோடு உறங்குக. அங்ஙனம் அவ்விடத்தில் இளைப்புத் தீரும்போது, அல்லது இளைப்புத் தீர உறங்கும்போது, அவரிடத்தில் எல்லாம்வல்ல அருளொளியும் அருள் வலியும் அருளறிவும் வந்து நிரம்பும்; அவரது உயிர் அதனால் அறியாமைக் கறை கழுவப்பெற்றுத் தூயதாய்ப் பேரின்பத்திற் படிந்திருக்கும்; அவரதுடம்பும், அவ்வுடம்பி லமைந்த அகக்கருவி புறக்கருவிகளுந் தூநெருப்பிற் பட்டு மாற்றேறிய பொன்போற் சுடர்மிகுந்து தூயதாம். அவ்வாறு அருளிற் றூங்கி எழுந்தபின், வலது காலை இடது தொடைமேல் மடித்து ஏற்றி முதுகுந் தலையும் நிமிர இருந்து, உள்ளும் வெளியும் நோக்காது கண்களை அரைப் பார்வையில் நிறுத்திப் பிற்கூறுமாறு மூச்சுவிடப் பழகுதல் வேண்டும். வலதுகைப் பெருவிரலால் வலது மூக்கை அடைத்து உள்ளுள்ள நச்சுக் காற்றை இடது மூக்கால் மெல்லென வெளிவிட்டுக் கழித்துவிடுக. பிறகு வலது மூக்கை அடைத்த படியே இடது மூக்கால் வெளியேயுள்ள தூயகாற்றை மெல்லென உள்ளிழுக்க. அதன்பின் இடது மூக்கை வலதுகைக் கணையாழி விரலால் அடைத்துக்கொண்டு உள்ளிழுத்த காற்றை ஐந்து நொடிப்பொழுது உள்ளடக்கிப் பின்னர் வலது மூக்கைச் சிறுகத் திறந்து அடக்கிய காற்றை வெளியே மெல்லெனக் கழித்துவிடுக. திரும்பவும் அவ் வலது மூக்கினாலேயே மெல்லென வெளிக்காற்றை இழுத்து முன்போலவே சிறிது உள்ளடக்கிய பின்னர் இடது மூக்கைச் சிறுகத் திறந்து அதனை மெல்ல வெளிவிடுக. இங்ஙனம் இடது புறத்திருந்து வலதுபுறஞ் சென்று பின்னர் வலதுபுறத்திருந்து இடதுபுறந் திரும்புவது ஒரு மூச்சுப் பழக்கம் ஆகும். இவ்வாறு முதலிற் சிலகாலங் காலை மாலை ஏழுமுறை செய்க. பின் நாளேற நாளேறப் பத்து முறை பதினைந்து முறையாகப் பெருக்கிப் பழகுக. இங்ஙனம் மூச்சுவிடும் பழக்கத்தின் மேன்மையையும் விரிவையும் நூறு ஆண்டு உயிர்வாழ்க்கை என்னும் எமது நூலிற் கண்டு கொள்க. இன்னும் இதன் நுணுக்கங்களை ஒரு மெய்க்குருவின் வழியே தெரிந்து பழகுதலே நலம் உடைத்தாம். இவ்வாறு மூச்சுவிடும் முறையை ஓர் ஒழுங்குபடுத்திக் கொண்டால், உடம்பினுள்ளியங்கும் மின்னல் ஓட்டம் ஓர் ஒழுங்குபட்டு நடக்கும்; அதனால், இரத்தமும் மற்றைக் கருவிகளுந் தூயவாகி நோய் அணுகாமல் நுணுக்கமாய் வலிவேறி வயங்கும்; அதனால் நினைவுக் கருவியான மனம் தூயதாம்; அதனால், உயிரும் உயிரின் எண்ணங்களுந் தூயவாய் ஆற்றல் நிரம்பி விளங்கும். இங்ஙனம் விளங்குங் காலத்து எண்ணியது எண்ணியபடியே கைகூடும். இந்நிலையில் எண்ணத்தைச் செலுத்துமாறு யாங்ஙனமெனின்; மூச்சுப் பழக்கஞ் செய்தபின்னர், அப்பழக்கத்தில் இருந்த நிலையைவிட்டுப் பெயராமல், உடம்பின் நடுவே வயிற்றின் அடியின் முதலிலிருந்து மேன்முகமாய்ச் சென்று உச்சந்தலையில் முடியும் பெரு நரம்பை மின்னொளி வடிவாய்ப் பார்த்து, அதிலிருந்து எம்மருங்கும் பேரொளி விரிவதாக நினைத்தல் வேண்டும். இவ்வாறு உள்ளத்தை ஒருவழிப்படுத்தி நினைக்க நினைக்க, அங்ஙனம் நினைப்பவரைச் சூழப் பிறர் கண்ணுக்குப் புலனாகாத கிளரொளிவட்டம் (Human Magnatic Aura) ஒன்று தோன்றும். தூயோர் உடம்பைச் சூழ்ந்திருக்கும் இக் கிளரொளி வட்டம் பொதுவாக எல்லார் கண்களுக்கும் புலப்படுவன்றேனுந் தெளிவுக்காட்சி (Clairvoyant Vison) யுடைய சிலர் கண்களுக்கு மட்டும் அது நன்கு புலப்படும். இங்ஙனந் தோன்றுங் கிளரொளி வட்டமானது பிறர் நினைக்குந் தீய எண்ணங்கள் தன்னுள் வந்து நுழையாமல் தடைசெய்து, தன்னை யுடையார்க்கு எதனாலுந் தகராத அரண்போலிருந்து அவரைக் காக்கும். தூயவராயுள்ள மேலோர் நினைக்கும் நினைவுகளை அது தன்மாட்டு இழுத்துத் தன்னையுடையார்க்கு மேலும் மேலும் அறிவு விளக்கத் தினையும் பயக்கும். இந்த நிலையில் நிற்கும்போது எவ்வகையான நன்னினைவை நினைத்தாலும் அஃதுடனே தன் பயனைத் தரும். மக்கள் பலர்க்கு அறிவுக் கண்ணைத் திறப்பித்தற்கு உதவியாக ஒரு கல்விக்கழகம் நிலைபெறுத்தல் வேண்டுமென்று அப்போது நினைத்து வந்தால், அந் நினைவின் உறைப்புக்குத் தக்கபடி விரைவிலேனும் அன்றிச் சிறிது மெதுவிலேனும் அதனை அங்ஙனமே நிலை நிறுத்துதற்கு ஏற்ற வழிகள் உண்டாகும். இவ்வரும்பெரு முயற்சியைச் செய்தற்கு வேண்டும் பொருளும், அம் முயற்சியைச் செய்யுந் தன்னைப் பாதுகாத்தற்கு வேண்டும் பொருளுந் தரற்பாற்றென்று இறைவனை எண்ணிக் கேட்டால் அப்பொருளும் எம்முகமா யேனும் வந்து சேரும். நோயால் வருந்தி அது தீர்தற்பொருட்டுத் தன்பால் வந்து அணுகுவோர்க்கு அந்நோய் தீர்தல்வேண்டு மென்று இறைவனை நினைத்துக் கேட்டால் அதுவுங் கைகூடும். தன் உண்மை தெரியாமல் தன்னைப் பகைத்திருப்பவர் அப் பகை தீர்ந்து தன்பால் உறவுகொள்ளல் வேண்டுமென்று விரும்பினால் அஃது அங்ஙனமே நடக்கும். தானெடுத்த ஓர் அரும்பெரு முயற்சி விரைவில் நிறைவேறுதற்கு உதவியாகப் பலருந் தன்னை யணுகித் தனக்குத் துணையாதல் வேண்டுமென எண்ணினால் அதுவும் எண்ணியபடியே வந்து சேரும். இன்னும் பிறர் நலத்தின் பொருட்டும், அதனால், தன் பொருட்டும் நினைக்கும் நல்லெண்ணங்கள் எல்லாங் கட்டாயமாக நிறைவேறுமென்று கடைப்பிடிக்க. என்றாலும், இங்கே கருத்திற் பதிக்கவேண்டுவ தொன்றுண்டு. தான் எண்ணும் நல்லெண்ணங்கள் உடனே கைகூடினாலுங் கைகூடும்; சிறிது காலந்தாழ்த்துக் கை கூடினாலுங் கைகூடும். ஏனென்றால், இறைவன் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் அறிவும் இன்பமும் பெறல்வேண்டு மென்று அருளினால் அமைத்துவிட்ட நிகழ்ச்சிகள் பொதுவாக எங்கும் ஒரே தன்மையாய் நடைபெற்றுச் செல்கின்றன. ஒரு நாளிற் பாதியை ஞாயிறு மாறாமல் விளக்கி வருகின்றது . மறுபாதியை பெரும்பாலுந் திங்கள் விளக்குகின்றது. வேனிற் காலத்தில் வெயில் கடுமையாய் எரிக்கின்றது. கார்காலத்தில் மழை அடுத்தடுத்து மிகுதியாய்ப் பெய்கின்றது. குளிர்காலத்திற் குளிரும் பனிக்காலத்திற் பனியுங் காணப்படுகின்றன. நிலத்தில் இட்ட விதைமுளைத்து மரஞ் செடி கொடிகளாகிப் பயன்றரப் பல நாட்கள் செல்கின்றன. அங்ஙனமே ஓர் ஆண்மகனுந் தாய் வயிற்றிற் கருவாய்த் தங்கி வளர்ந்து பிறந்து மகவாய்ப் பிள்ளையாய் இளைஞனாய் ஆண் மகனாய் முதியனாய் முதிரப் பல ஆண்டுகள் கழிகின்றன. இன்னும் இவை போன்ற பொது நிகழ்ச்சிகள் எண்ணிறந்தன. எல்லாம்வல்ல இறைவன் தனது பேரிரக்கத்தினாலுந் தனது பேரறிவினாலும் அமைத்து விட்ட இப்பொது நிகழ்ச்சிகள் அவ்வளவும் உயிர்களின் ஒரு பெருநன்மையின் பொருட்டே நடைபெறுகின்றன. அல்லாமல், அவற்றிற்கு ஒரு சிறிதுந் துன்பத்தைத் தருதற்கல்ல. இந் நிகழ்ச்சிகளின் இயல்பைச் சிறிது நுனித்துக் காண்பார்க்கும் அவற்றில் துன்பத்தைத் தரும் பகுதியுங் குறைபாடுடைய பகுதியும் எள்ளளவும் இல்லையென்பது புலனாம். அவ்வாறிருக்க, நோயுங் கொலையுந் துன்பமுங் கவலையும் மூப்பும் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் இவற்றின் இடையிடையே யாங்ஙனம் வந்தன வென்று கேட்டால், இறைவன் வகுத்த அப் பொது நிகழ்ச்சிகளின் வழியே நின்று உயிர்கள் தம் அறிவை விளக்கி இன்பத்தை அடையாமல், தமக்கு இயல்பாகவேயுள்ள அறியாமை வழிப்பட்டுத் தம் அறிவையும் விருப்பத்தையுஞ் செய்கையையும் அப்பொதுநிகழ்ச்சிகட்கு மாறாக நடைபெற விடுதலால் மேற்கூறிய துன்பங்களெல்லாம் ஒன்றன்மேல் ஒன்றாய்க் கிளைப்பஆயின. நன்றாய் வெயிற்காயும் வேனிற்காலத்திலே நிலத்தை நன்றாய் உழுது மண்ணைக் கீழ் மேலாய்ப் புரட்டிக் காயவைத்துக் காலத்தே பெய்யும் மழையில் மண்ணைத் திருத்தி விதைத்தால் நல்ல விளைச்சலைப் பெற்று இன்புறலாம்; அவ்வாறின்றிப் பனிக்காலத்தே உழுது வெயிற்காலத்தே விதைத்தால் முளை சுருங்கிக் காய்ந்து பயன்றராமையொடு பட்ட பாட்டையும் பாழாக்கி வறுமைக்கும் நோய்க்குந் துன்பத்திற்கும் இடஞ்செய்யும்; இறைவன் அமைத்த இப்பொது நிகழ்ச்சியோடு ஒத்துப்பாடுபடவேண்டுங் காலத்தே அது செய்யாமல் அறியாமையிற் சோம்பலுற்றிருந்தவன் பெருந் துன்பத்தை உழத்தலும், அவற்றோடு ஒத்து முயன்றவன் பேரின்பத்தை நுகர்தலும் நாம் கண்கூடாய்க் காணக்கிடப்பன வல்லவோ? கடவுளை வழிபடுபவர்களுங்கூடக் கடவுள் அமைத்த பொது நிகழ்ச்சிக்கு மாறுபட்டு நடந்தால் துன்பத்தை அடையாமற் போகார்; அதனாற், கடவுளமைப்பிற்கு மாறுபட்டு நடப்பவர் கடவுளை வழிபட்டாலும் அவரை வழிபட்ட வராகாமல் அவரை இகழ்பவராகவே முடிகின்றனர். சிலர் கடவுளுக்கு வழிபாடு ஆற்றுதலிற் கருத்தொருப்பட்டு நின்றாலும் இறைவன் அமைத்த தமது உடம்பின் நிகழ்ச்சிக்கு இசைய அதனைச் செய்யாமல் நடந்து நோய்க்கும் முற்றாச் சாக்காட்டிற்கும் ஆளாகின்றனர். கடவுளுக்கு வழிபாடு ஆற்றியன்றி உணவு கொள்ளேம் என்னும் ஓர் ஏற்பாடு வைத்துக் கொண்டு, பகலிற் பெரும்பாகம் பட்டினி கிடந்து பிற்பகலில் இருபது அல்லது இருபத்தைந்து நாழிகைக்குமேல் உணவுகொள்ளச் செல்வாரும் உளர்; இறைவனமைத்த உடம்பின் நிகழ்ச்சிக்கேற்பப் பசி எழுங்காலத்து உணவு கொடுத்துப் பசி தீராமற் பட்டினி கிடந்தால் அப் பசித் தீ மிகுந்து இரத்தத்தை உரிஞ்சி நோயை உண்டாக்குமன்றோ? இறைவனது உள்ளக்கிடையை அறிந்து உண்மையான வழிபாடு ஆற்றுபவர், தமதுடம்பிற் பசி எழும் நேரத்தை அறிந்து அதற்கு முன்னரே கடவுள் வழிபாடு ஆற்றிப் பசி தோன்றும்போது அடிசிலுண்டு இன்புற்றிருப்பர். எவராலும் ஒரு திணைத்துணையுஞ் செய்ய இயலாத வியத்தகு அமைதி வாய்ந்த இவ்வுடம்பின் இயல்பறிந்து இதனைப் பேணுதற்கு வேண்டுவனவற்றை வழுவாமற் செய்தலே கடவுள் கருத்துக்கு மிகவும் இசைந்ததாகும்! இவ் வுடம்பினுள் விளங்கும் முதல்வனை உள்ளத்தால் உருகி வழிபடுதலே எல்லா வழிபாட்டினும் மேம்பட்டதாகும். மக்களால் அமைக்கப்படுங் கோயில்கள் மக்களுடைய அறிவால் வந்தனவாகும். இறைவனால் அமைக்கப் பட்ட உடம்பாகிய கோயில்களோ இறைவனது அருளறிவால் வந்தனவாகும். மக்கள் அறிவோமாசு படிந்து குறைபாடுடைய தாய் இருத்தலின், அதனாற் செய்யப்படுவன எவ்வளவு திருத்த முடையனவாகக் காணப் படினும் அவை யெல்லாங் குறைபாடுடையனவேயாம். இறைவன தருளறிவு களங்கம் அற்ற பேராற்றல் வாய்ந்ததாகலின், அதனால் அமைக்கப்பட்டது அளவுக்கடங்காத பெருமை யுடையதாகும். உயிரற்ற கல்மண் முதலியனவுங் கடவுள் அமைப்பே யாயினும் அவை உயிர் களிருந்து விளங்குதற்கு ஏற்றவை ஆகாமையால், அவை தம்மை வியக்கத்தகும் வகை திருத்தமாகப் படைத்திலன். இனி, உயிருடைய உடம்பு களுள்ளும் மேன்மேலறிவு விளங்கப் பெறும் நிலையிலுள்ள மக்களுயிர் வாழும் உடம்புகளைப்போல் ஏனை உயிர்களின் உடம்புகளையும் அமைத்திலன். ஆகவே, எல்லா அமைப்பு களினுஞ் சிறந்ததோர் அமைப்பை மக்களுடம்பின் மட்டுமே நம் ஆண்டவன் வகுத்திருத்தலால், இஃதொன்று மட்டுமே அவனது பேரறிவு விளக்கத்திற்கு ஏற்றதாய்த் திகழா நிற்கின்றது. இத்துணைச் சிறப்புப் பொருந்திய இவ் வியற்கை யுடம்பாகிய திருக்கோயிலைப் பாதுகாத்து அதன்கண் இயற்கையாகவே முனைத்து விளங்கும் முதல்வனை வழிபாடு ஆற்றும் முறையினை ஒரு சிறிதுங் கூர்ந்து பாராது இகழ்ந்து , புறத்தே செயற்கையாய்க் குறைபாடுடைய மக்களறிவால் வகுத்துக்கொண்ட வடிவங்களில் ஆற்றும் வழிபாட்டையே மேலதாக் கருதி வழிபாடியற்றுவோர் இறைவனருளைப் பெறாது பலவகை நோய்களாற் பற்றப்பட்டுத் துன்புற்றிருப்பர். இதுகொண்டு நாம் புறவழிபாட்டை இகழ்ந்தேமென்று கொள்ளற்க. புறவழிபாடு அகவழிபாட்டிற்குப் பெரிதுந் துணை செய்வதாய் நிற்றலின் அது சிறிதும் இகழற்பாலதன்றாம். புறவழிபாட்டினும் அகவழிபாடே சிறந்ததாமென்பதும், அகவழிபாடிற்கு இசையப் புறவழிபாடு செய்தலே இறைவன் றிருவுளத்திற்கு ஒப்பதாமன்றிப் புறவழிபாட்டின் பொருட்டு அகவழிபாட்டை இகழ்ந்துசெல்லல் இறைவன் கருத்துக்கு மாறாய்ப் பெரிதுங் குற்றமுடையதா மென்பதும் அறிவித்தலே நமது கருத்தாமென்று கடைப்பிடிக்க இதனால், இறைவன் வகுத்த பொதுநிகழ்ச்சிக்கு ஏற்ப ஒழுகுதலே எல்லா இன்பத்தையும் பயக்கும் என்பதும் அறியற்பாற்று. இவ்வியல் பிற்றாகிய பொது நிகழ்ச்சிக்கு மாறுபடாமல் ஒருவர் எண்ணும் நல்லெண்ணங்கள், அப் பொதுநிகழ்ச்சியோடு ஒன்றுகூடி நடந்து அவை தம் பயனைத் தரத்தக்க காலத்திலே தான் அவற்றைத் தரும். நம்மெண்ணங்கள் விரைவிற் பயன்றர வில்லையே என்று ஏங்கி மனந்தளர்தலாற் போதரும் பயன் ஒன்றுமில்லை. இன்ன எண்ணமும் அதன் செயலும் இன்ன காலத்திலே தான் தம் பயனைத் தருமென்று உறுதியாக முடிவு கட்டிச் சொல்லல் ஏலாது. ஓர் எண்ணம் மிகு விரைவிற் றன் பயனைத்தரினுந் தரும்; மற்றோர் எண்ணஞ் சிறிதுகாலந்தாழ்த்துத் தன் பயனைக் காட்டினுங் காட்டும்; பிறிதோர் எண்ணம் நெடுங் காலஞ் சென்று தன் பயனைத் தோற்றினுந் தோற்றும். ஆயினும், ஒருமுகப்பட்டு முனைத்து வலிவாகி இறைவன் அருளையே பற்றிக்கொண்டிருக்கும் ஒருவரது எண்ணம் விரைவிற்றன் பயனைத் தராமற் போகாது. என்றாலும், பயன்விளையுங் கால எல்லை நம்மனோரால் அறிய வாராது. இதனாலன்றோ தெய்வத் தன்மை வாய்ந்த ஔவையாரும், அடுத்து முயன்றாலும் ஆகுநா ளன்றி எடுத்த கருமங்கள் ஏலா- தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம் பருவத்தா லன்றிப் பழா என்று அருளிச் செய்தனர். இங்ஙனம் எண்ணங்கள் பயன்றருங் காலம் நம்மனோரால் முடிவாகஅறியவாராவாயினும், அவை விரைவிற் பயன்றர வேண்டுமென உறுத்து எண்ணி வரல் இழுக் காகாது. பிறழாமல் உறுதியாக எண்ணப்படும் எண்ணத்தில் இறைவனருள் முனைத்து நிற்றலால் அது தன் பயனை விரைவுற் றருவது திண்ணம். இன்னும் இவ்வெண்ணத்தைப் பசுமரத் தாணிபோல் ஒன்றில் நிலைப்பித்து வலிவேற்றுதற்கு இன்னுமோர் எளிய வழி இருக்கின்றது. இப்போது அதனை ஒரு சிறிது விளக்குவாம். 7. மந்திர மொழி மக்களுக்கும் விலங்கினங்களுக்கும் உள்ள பல வேறுபாடுகளுள் முதன்மையானது மக்கள் பேசத் தெரிந்திருக்க விலங்கினங்கள் அது தெரியாது இருத்தலேயாம். குழந்தையாய் இருந்த காலந்தொட்டே மக்கள் எல்லாருந் தமக்குத் தோன்றும் ஒவ்வொரு நினைவினையும் ஒவ்வொரு சொல்லுடன் சேர்த்தே நினைந்து வருகின்றனர். எழுதக் கற்கத் தெரியாத குழவியும் பால் என்னுஞ் சொல்லைக் கேட்ட அளவானே அதன் பொருளையும், பாலைக் கண்டவுடன் அதன் சொல்லையும் ஒருங்கு சேர்த்து நினைப்பதையுந், தன் தாயைக் கண்டவுடன் அஃது அம்மே என்றழைப் பதையும், அம்மை என்று சொல்லக் கேட்டவுடன் அது தன் தாயைத் திரும்பிப் பார்ப்பதையும் நாம் நன்கறிந்திருக்கின்றனமே! பின்னர், எழுதக் கற்கத் தெரிந்தவுடனே ஒவ்வொரு பொருளையுங் குறிக்கும் ஒவ்வோர் ஓசையினையும் எழுத்திட்டு எழுதி நினைவில் அழியாமற் பதித்துக் கொள்ளுதலும் நமக்குள் வழக்கமாய்ப் போதருகின்றதன்றோ? இவ்வியற்கை முறையை நுணுகி ஆராயுங்கால் ஒவ்வொரு பொருளைப் பற்றிய நினைவும் ஒவ்வோர் ஓசையைப் பற்றிக்கொண்டு நிற்குந் தன்மை இனிது புலப்படா நிற்கும். ஓசையைப்பற்றாது பொருளை மட்டும் பற்றிக்கொண்டு நிற்கும் நினைவும் பொருளைப் பற்றாது ஓசையை மட்டும் பற்றிக்கொண்டு நிற்கும் நினைவும் எவரிடத்துந் தோன்றுவதில்லை. குதிரையைக் கண்டவர் அப் பொருளைப் பற்றிய சொல்லைக் கூடவே நினைப்பர்; குதிரையென்னுஞ் சொல்லைக் கேட்டவரும் அல்லததனைநூலிற் பயின்றவருங் கூடவே அப்பொருளின் உருவத்தை நினைவர். இங்ஙனஞ் சொல்லும் பொருளும் ஒன்றையொன்று விட்டு நீங்காமல் உயிரின் நினைவிற் பிணைந்து தோன்றுதலால், ஒருவர்க்கு ஒரு பொருளின் நினைவை அவருள்ளத்தில் நன்கு பதிக்க வேண்டினால் அப்பொருளைக் குறிக்குஞ் சொல்லை அடுத்தடுடுத்து நாம் அவர்க்கு எடுத்துச் செல்லுதல் வேண்டும். கடையிற் பல பண்டங்கள் வாங்கச் சொல்லுதல் வேண்டும். கடையிற் பல பண்டங்கள் வாங்கச் செல்லும் ஒருவரை நோக்கி நமக்கு வேண்டுஞ் செவ்வாழைக்கனி சில வாங்கி வரும்படி ஏவுங்கால் அவர் அப்பொருளை மறவாமல் விலை கொடுத்து வாங்கிக்கொண்டு வரும் பொருட்டு அச் சொல்லைப் பலகாலும் அவர்க்கு எடுத்துச் சொல்ல, அவரும் அச் சொல்லைத் தாமும் பலகாற் சொல்லிக் கொண்டேபோய் அப் பொருளை நினைவு கூர்ந்து வாங்கிவரல் கண்டாமன்றே? இது கொண்டு, ஒரு சொல்லை அடுத்தடுத்துக் கூறுதலும் அடுத்தடுத்து நினைதலும் அச் சொல்லாற் குறிக்கப்படும் பொருளைச் செவ்வனே நினைவிற் பதித்தற்கு உதவியாதல் தெளிவாக உணரப்படும். இனிக் கண் முதலான பொறிகளுக்குப் புலனாகும் உருவுடைப் பொருள்களை அறிதற்கே சொற்கள் இத்துணை உதவி புரியுமானாற், பொறிகளுக்குப் புலனாகா அருவப் பொருள்களை நினைவுகூர்தற்குச் சொற்கள் எத்துணை யின்றி யமையாதனவா யிருக்கவேண்டும்! நன்மை தீமை அறம் மறம் அறிவு அறியாமை உயிர் உணர்வு அன்பு அருள் முதலான அருவப்பொருள்கள் சொற்களின் உதவியாலன்றி வேறு ஒருவாற்றானும் உணரப்படுவதில்லையன்றோ? இவ்வருவப் பொருள்களை மக்களினுந் தாழ்ந்த விலங்கினங்கள் உணர மாட்டாமை எதனால் என்று ஆராய்ந்து பார்க்குங்கால் அவை மக்களைபோற் பேசத் தெரியாமையினாலே தான் என்பது நன்கு புலனாகின்றது. கண் முதலான பொறிகளுக்குப் புலனாகும் புறப் பொருள்களை மட்டும் அவை தமதியற்கை யுணர்வால் அறிந்து கொள்கின்றன; ஐம்பொறிகளுக்கு எட்டாத மேனிலை யிலுள்ள நன்மை தீமை முதலான அவ் வகப்பொருள்களை அவை உணர்வதில்லை. பொருள்களின் ஒற்றுமை வேற்றுமைகளைப் பகுத்துணரும் அறிவு மக்களிடத்துக் குழவிக் காலந்தொட்டே சொற்களின் வழியாக வளர்ந்து, பொறிகளுக்கு அப்பாற்பட்ட அகப்பொருள்களையும் உணர வல்லதாய் விளங்க, விலங்கு களினிடத்துள்ள இயற்கையறிவோ சொற்களின் வாயிலாக வளராமல் வெளிப்பொருட்டன்மை களை மட்டும் அறியுந் தன்மையதாயிருக்கின்றது. அங்ஙனமாயினும் விலங்குகளுக்குஞ் சொற்களின் இயல்பு புலப்படும்படி பழக்கினால் அவற்றிற்கும் பகுத்துணரும் அறிவு சிறிது உண்டாகக் கூடும் என்பதற்குக் குதிரை, யானை, நாய், கிளி, குயில், மயில் நாகணவாய்ப்புள் முதலிய வற்றைத் திறம்படப் பழக்குவோர் அவற்றின்கட் காட்டும் வியப்பான செயல்களால் நன்றாய்க் கண்டு தெளியலாம். மக்களினுந் தாழ்ந்த படியிலுள்ள விலங்கு களுக்குஞ் சொற் பழக்கத்தாற் பகுத்துணர்ச்சியும் அதனால் அகப் பொருளறிவுஞ் சிறிது சிறிதாத் தோன்றி வருமாயின், அவற்றினும் மிக உயர்ந்த மக்களுக்குச் சொற் பயிற்சியாற் பகுத்துணர்வும் அதனால் அகப்பொருளறிவும் மேன்மேல் வரம்பின்றி மிகும் என்பதனை யாம் வலியுறுத்துதலும் வேண்டுமோ? ஆகவே, சொற்களை வழங்குந் திருத்தமான முறையினாலேதான் மக்கள் புறப்பொருள் அகப்பொருள் அறிவுகளை நன்கு திருத்திப் பல சிறந்த நலங்களையெல்லாம் பெறுதற்குரியராய் இருக்கின்றார். இதுகொண்டு, தாம் வழங்கும் மொழி தமிழாய் இருப்பினும் வேறெதுவா யிருப்பினும் அதனைத் திருத்தமாகவும் பிறமொழிக் கலப்பில்லாமலும் ஒழுங்காக உழைப்பெடுத்துப் பயிலும் மக்கள் அறிவிலும் இன்பத்திலும் மேம்பட்டு விளங்குவ ரென்பதுந் திண்ணமாய்ப் பெறப்படும். இங்ஙனஞ் சொற்பயிற்சிக்கும் மக்கள் அறிவு வளர்ச்சிக்கும் உள்ள இயைபு பெறப்படவே, தாங்கருதிய நன்மையைப் பெறுதற்பொருட்டு அந் நன்மைக்குரிய சொற்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லி அந் நன்மையை நினைவிற் பதிவுறச் செய்தால், அந் நினைவு துலக்கமுற்றுத் திகழ, அந் நினைவினுள் நிற்கும் இறைவன் விளங்கித் தோன்றுமாகலின், அதனால் அந் நன்மை எளிதில் நிறைவேறுமென்பதுந் தானே பெறப்படும். இவ்வாறு ஒரு நினைவினை வலிவேற்றுதற் பொருட்டு, அந் நினைவோடு நெருங்கிய தொடர்புடைய சொல்லை அடுத்தடுத்துக் கூறுதலையே மந்திரம் என்று உரைப்ப. தான் கொண்ட நினைவை, அதனொடு தொடர்புடைய சொல்லைக் கூறு முகத்தால், வலிவேற்றுதலில் இருவகை நலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லுந் தனக்குரிய ஒலியோடு திருத்தமாகச் சொல்லப் படுமாயின், அச் சொல்லின் ஒலி ஓசைக்கு இடமாகிய வெளியின்கண் உள்ள அணுக்களை அலைத்து அவ்வெளி பரந்த இடமெங்குந் தன்னொலியினை எழச்செய்யும். அங்ஙனம் அவ்வெளியிட மெங்கும் எழும் ஒலி செவிப்புலனாகாதாயினும், நுண்ணிய வடிவுடைத்தாய் அவ்வெளியின் கண் உயிர் வாழும் பலகோடிஉயிர்களின் உள்ளத்திலுந் தோன்றித் தன்னோடு தொடர்புடைய நினைவினை எழச்செய்யும் ஒருகாற் சொல்லிய சொல் தன்னொலியினை வெள்ளிடையெங்கும் நுட்பமாய்த் தோற்றுவிக்கு மென்பதும், அங்ஙனம் நுட்பமாய்ப் பிறந்த ஒலி தான் செவிப்புலனாதற் கிசைந்த வகைகள் வாய்த்த வழித் தவறாமற் கேட்குமென்பதும் இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூலாரும் நன்கு ஆராய்ந்து காட்டியிருக்கின்றனர். மெல்லிய பித்தளைத் தகட்டாற் சட்டிபோற் செய்த ஓர் ஏனத்தை ஒரு கோல்மேற் குறுக்கில் நிறுத்தி அதைப்போன்ற மற்றோர் ஏனத்தையும் அதற்கு நேராக முப்பது அல்லது நாற்பது அடி தொலைவில் அங்ஙனமே மற்றொரு கோல்மேற் குறுக்காக நிறுத்தி, ஓடிக்கொண்டிருக்குங் கைக்கடியாரம் ஒன்றை அதன்பின் அவ் வேனம் ஒன்றில் வைத்துவிட்டு மற்றோர் ஏனத்தின் அண்டையிற் சென்றால் அதன்கண் அக் கடியாரத் தின் ஒலி விளக்கமாய்த் தோன்றி யொலித்தலைக் கேட்கலாம் அல்லது ஒருவர் ஓர் ஏனத்தின் அருகிலிருந்து மெல்லப் பேசினால், அவர் பேசிய சொற்களைல்லாம் மற்றோர் ஏனத்தின் அண்டையிலிருப்போர் செவியில் தெளிவாகச் சென்றுபடுதலுங் கேட்கலாம். இங்ஙனங் கேட்கும் எதிரொலியின் இயல்பைச் சில குளக்கரை களிலும் மலைகளி னிடையேயுள்ள பள்ளத்தாக்குகளிலும் அடைப்பாகவுள்ள சில பெரிய கட்டிடங்களிலும் எவரும் நேரே கண்டறிந் திருக்கலாம்; இத்தகைய இடங்களில் ஒரு பக்கத்தில் நிற்குஞ் சிறார் அம்மே அப்பா என்று கூவினால், அதற்கு எதிர் பக்கத்தில் எவரும் இல்லாதிருக்கவும் அங்கிருந்தும் அம்மே அப்பா என்று எவரோ எதிர் கூவுவது போல் அச்சொற்களின் ஒலி உடனே தோன்றா நிற்கும். இங்ஙனமே நாம் பேசும் ஒவ்வோர் ஒலியும் இடைவெளியிற் பரவித் தான் செவிப்புலனா தற்குரிய அமைவுகளிருந்தால் அங்கே புலப்படுதலும், அவை இல்லையானாற் செவிப்புலனாகாமல் இருத்தலும் இயல்பாக நிகழ்ந்து வருகின்றன. இதுகொண்டு ஒருவர் பேசிய ஒரு சொல் வெளி எங்கும் பரவிச் செவிப் புலனாயினும் ஆகாவிடினுந் தன்னாற் சுட்டப்படும் பொருள் நினைவை எல்லார் உள்ளங் களிலும் புலப்படும்படி செய்யும் என்பது பெறப்படுதல் காண்க. அஃதுண்மையாயின் ஒருவர் பேசிய சொற்களின் பொருள் நினைவுகள் அத்தனையும் மற்றையோர் எல்லார் உள்ளங்களிலுந் தோன்றக் கண்டிலமே யெனின், அவ்வாறன்று. ஒவ்வொருவருந் தத்தமக்கு இசைந்த நினைவுகளிலும் முயற்சிகளிலுந் தமது நினைவை முனைக்கவிடுதலால், பிறர் சொற்களாற் றோன்றற் பாலனவான நினைவுகள் அவரவர் உள்ளங்களிற் சென்றுபட்டும் அங்கு நிலைபெற்றுத் தோன்றுதற்கு இடமில்லாமையால் மறைந்து போகின்றன. எதுபோலவெனின், ஓர் அங்காடியிற் பல பண்டங்கள் வாங்கச் செல்லும் பலரும், அங்குள்ள பல வேறு பொருள்களின் வடிவங்களுந் தங்கண்ணிற் படும்படி அவற்றைப் பார்த்துச் செல்கின்றாராயினுந் தாந்தாங் கருதிய பண்டங்களை யன்றிப் பிறவற்றைக் கைக் கொள்ளவும் அவற்றை நினைக்கவும் மாட்டாதவராய் இருத்தல்போல என்க. அங்ஙனமாயினும், அவ்வங்காடியில் மற்றைப் பண்டங்களைக் காட்டினும் ஏதேனும் ஒரு பண்டம் மிகுதியாய் எப்புறத்துங் காணப்படுமாயின், அஃது அங்கு வருவார் எல்லார் பார்வையிலும் அடுத்தடுத்துப் படுதலால் அதனை வேண்டாதவரும் அதனைக் கருதிப் பார்ப்பவராய் அதிற் சில விலைகொண்டுஞ் செல்வதுபோல, அடுத்தடுத்துச் சொல்லப்படும் ஒரு சொல் தன் பொருளை வேண்டாதவர் உள்ளத்திலும் தன்னைப் பற்றிய நினைவினை எழுப்பித் தன் பயனை விளைவிப்பதும் உண்டு. என்றாலும் அச் சொற்பொருளை ஏற்கும் நிலைமை யில் உள்ளோர் வலிய உள்ளமும் அதனை ஏற்கலாகாது என்னும் மன உறுதிப்பாடும் மிக்குடையராயின், அஃதவர் நினைவில் ஏறாமற் பின்வாங்கி ஒழியும். பிறர்க்கு நன்மை பயக்கத்தக்க சொற் பொருள்கள் பிறர் நினைவில் ஏறுவதுபோல் அவர்க்குத் தீமை பயக்கும் பொருள்கள் அவர் உள்ளத்தில் ஏறாமை இவ் ஏதுப் பற்றியேதான். ஆதலால். நாம் இங்கே சொல்லியது கொண்டு, ஒருவர் தாம் பிறர்க்குத் தீங்கு செய்யத் துணிந்து தீங்கான சொற்களைப் பலகாற் சொல்லி உருவேற்ற விரும்புவராயின், அவர் அவ் விருப்பத்தையுந் தீயவெண்ணத்தையும் அறவே விடக் கடவராக . தீமைகள் அணுகாவாறு ஒவ்வோர் உயிரையும் பாதுகாத்துவரும் இறைவனருளானது தீமை செய்ய விழைவோர் எண்ணங்கள் நிறைவேறாவாறு அவற்றைத் தடைசெய்தலோடு, அத் தீயவை தம்மை நினைப்பவரிடமே திரும்பிச்சென்று அவரை அழித்து விடுமாறும் எதிர் ஏவுகின்றது. ஆகையால், நல்லோர் சொல்லும் நற்சொற் பொருள்கள் மட்டுமே அவரோடு அன்பினால் தொடர்புடையராய் அவரெண்ணங்களை ஏற்கும் நிலைமை யிலுள்ளவர்களை அணுகி அவர் நினைவிலேறித் தாங்கருதிய பயன்களைத் தவறாமல் விளைத்துத் தரும். இவர்தம் எண்ணங்களுக்கு உதவியாய் இறைவனருளும் உடன் நிற்றலால் அவரெண்ணங்கள் எளிதில் நிறைவேறுவது திண்ணமா மென்க. எனவே, நற்பொருள் பொதிந்த ஒரு சொல்லைப் பலகால் உறைத்துச் சொல்லச் சொல்ல, அஃது இடைவெளியிற் பரவித் தன்னை, ஏற்றுக் கொள்ளுதற்குரிய நல்லோர் பலர் உள்ளத்திலும் பதிந்து தான் கருதிய பயனை வழுவாமற் பயந்தேவிடும். இங்ஙனஞ் சொல்லை உருவேற்றுதற்கண் அச் சொற்பொருளைப் பற்றிய நினைவும் முனைந்து வலிவுடன் நிற்குமாயின், அந் நினைவினால் உந்தப்படும் நினைவு வெளியின் அணுக்களும் அங்ஙனமே அலைக்கப்ட்டு அவ் வெளியெங்கும் பரவி அதனோடு தொடர்புடைய பலர் நினைவுகளையுந் தன்னோடொப்பதாக எழுப்பித், தான் கருதிய பயனை உறுதிபெற விளைவிக்கும் வெளியானது இடைவெளி என்றும் நினைவுவெளி யென்றும் இருவகைப்படும். இடைவெளியினும் நினைவுவெளி மிக நுண்ணியது. ஒலியினும் நினைவுமிக நுண்ணியதென்பது எல்லார்க்கும் உடம்பாடாகலின், அந் நினைவினியல் போடொத்து அதன் இயக்கத்திற்கு இடமாய் நிற்கும் வெளியும் மிக நுண்ணியதாய் இருக்குமென்பதும், நினைவை நோக்கிப் பரியதென்று கொள்ளப்படும் ஓசை உலவுதற்கு இடமாய் நிற்கும் இடைவெளி நினைவுவெளியினும் பரியதா மென்பதும் பெறப்படும். இவ்வாறு இரு வகைப்பட்ட இரு வெளிகளைப் பற்றிக்கொண்டு எல்லா மாந்தருடைய ஓசையும் நினைவும் இயங்குதலால், நினைவைத் தான் கூறுஞ் சொற்பொருள்மேல் நிறுத்திச் சொல்லையுந் திறம்படத் திருப்பித் திருப்பிக் கூறி, ஒருவன் உருவேற்றிவரின் அச் சொல்லும் நினைவும் அவ் விரண்டு வெளிகளையும் ஒருங்கே இயக்கி, அவற்றை ஏற்கத்தக்க மக்கள் உள்ளத்தில் தம்மோடொத்த சொல்லையும் நினைவையும் ஒருங்கே எழுப்பிவிடும் மறைவில் நிகழும் இந் நிகழ்ச்சியின் திறத்தை யுணர்ந்த சான்றோர்கள் உலகிற்குத் தாம் ஒரு நன்மை செய்ய வேண்டினாராயின், முதலில் அதனை மக்களின் நேரே சென்று உரைப்பார் அல்லர். தனிமையான ஓரிடத்தில் தனித்திருந்து தாம் உலகிற்குச் செய்யவெண்ணிய பொருளிற்றமதுள்ளத்தை முனைக்க நிறுத்தி அதற்குரிய சொல்லை இடைவிடாது சொல்லி உருவேற்றுவர்! அங்ஙனம் அவர் செய்யச்செய்ய அவரது நினைவோடொத்த நினைவு அதனை ஏற்கத் தக்கார் எல்லார் உள்ளத்திலுந் தோன்றி அவர்க்குள் அந் நினைவொற்றுமையினை உண்டாக்கி அவர் தம்மையெல்லாம் பதப்படுத்தி வைக்கும். அங்ஙனம் அவர்கள் பதப்பட்டு நின்ற காலம் பார்த்து அச் சான்றோர் வெளிப்போந்து அவர்க்கு எதிர் முகமாய் நின்று தம் எண்ணத்தைக் கிளர்ச்சியோடும் வெளியிட்டுக் கூறுவர். அதனைக் கேட்பவரெல்லாரும் முன்னமே அத்தகைய நினைவினாற் பதப்படுத்தப்பட்டிருத்தலால் அந் நினைவிற்கு இசைந்த இச் சான்றோர்தஞ் சொற்களைக் கேட்ட அளவானே அவை தமதுள்ளத்தில் ஊன்றி முளைத்து அவர் கருதிய பயன்களைத் தவறாமற் றரும்படி ஒழுகுவர். இவ்வாறன்றி, முதலிலேயே மக்கள் எதிரில் நின்று நலந் தருவன வற்றைக் கூறினால் வரும் இழுக்கென்னையெனின், ஒவ்வொருவரும் பிறர் முன்னிலையில் தாம் ஒன்றை நினைக்குமிடத்துந் தம்மை யுயர்வாகவே எண்ணுதல் இயற்கை. இங்ஙனமெல்லாந் தம்மை ஒவ்வொன்றிலும் உயர்வாகக் கருதி அறிவு முனைப்போடு நிற்கும் மக்கள் எதிரில், அவர் நினைவிற் றென்படாத ஒரு புதுப்பொருளைச் சடுதியில் எடுத்துக்கூறினால், அவர் அதன் உண்மையை இதற்குமுன் நினைந்து பாராமையினாலுந், தாம் அதனை ஏற்கு நிலைமையில் இல்லாமையினாலும், அதனை ஏற்றுக்கொள்வது தமக்குத் தாழ்வும் எடுத்துக் கூறுவோர்க்கு உயர்வுமாம் என்று கருதுதலாலும் அதனைச் செவியிற் கொள்ளார்; செவியிற் கொள்ளினும் அதனை ஒரு பொருட்டாகப் பாராட்டித் தம் உள்ளத்திற் பதியார். ஒருவர் ஒரு பொருளைக் கூறினால் அதனை ஏற்றுக்கொள்வது தமக்குத் தாழ்வென்றும் அதனை மறுத்துக் கூறுவது தமக்கு உயர்வென்றுங் கருதுதலே எல்லா மாந்தர்க்கும் இயற்கையாகக் காணப்படுகின்றது. இதனாலேதான் எவ்வளவு உண்மையான கொள்கையாயிருந்தாலும், எதிரிலிருப்பவர் நிலை தெரியாமல், அதனை அவர்க்கெடுத்துக் கூறுதலாகாது. அன்றிக் கூறினால், அவர் அதனை மறுக்கப் பிறகு இவரதனை எதிர்மறுக்கத் தொலையா வழக்கும், அதனடியாகச் சினமும் வருத்தமும் உண்டாகும் என்பதனை அறிவுறுத்தவே வாதுமுற் கூறேல் என்று ஔவையாரும் அருளிச் செய்தனர். அவ்வாறானால் எதனைப் பேசுவதானாலும் அதனைப் பேசுவதற்குமுன் சில திங்களோ அல்லது சில ஆண்டுகளோ தனியே ஓரிடத்தில் உள்ளம் பதிய நினைந்திருந்து, அதன் பின்னரும் அந் நினைவை ஏற்கும் நிலையில் மக்களுள்ளம் பதப்பட்டிருக்கின்றதா என்று ஆராய்ந்து பார்த்தன்றோ பேசல் வேண்டும். இவ்வாறு பேசுவதென்று ஏற்பாடு செய்து கொண்டால் ஒவ்வொரு நொடியும் உலகியல் நடத்தற் பொருட்டுக் கலந்து பேசவேண்டிய நிலைமையில் உள்ள மக்களுக்கு அவ்வுலகியல் நடைபெறுவது எங்ஙனமெனின் இங்கே கூறியதன் கருத்து அவ்வாறன்று. உலகத்தார்க்குப் புதுமையாய்க் காணப்படும் ஒரு நன்மையை அல்லது உலகத்திற் பலரும் பலவாறு ஒன்றுபடாது நினைத்தற்குரிய ஓருண்மைக் கொள்கையைப் பரப்பி நிலைநாட்ட வேண்டுமென்று நினைப்ப வர்களே அதனைச் சில பல திங்கள் தனித்திருந்து எண்ணி அவ்வெண்ணத்தின் முனைப்பால் அதனைப் பரவச் செய்து பின் அதனை வெளியிட்டுக் கூறல் வேண்டும். உலகியல் நடத்தற்கு வேண்டும் மற்ற எண்ணங்களுங் கொள்கைகளும் பெரும்பாலும் எல்லார்க்குந் தெரிந்தன வாயிருத்தலால், அவற்றை நீண்ட காலந் தனித்திருந்து நினைக்க வேண்டுவதில்லை. ஒவ்வொரு நாளுங் காலை மாலையிலும் உறங்கப் போம் பொழுதுந் தாம் மற்றைநாளிற் செய்யவேண்டிய கடமைகளை நன்கு எண்ணிப் பார்த்து, அவை எளிதில் நிறைவேறும்படி உள்ளத்தே உறுத்தி நினைந்து விரும்பினால், அவை அடுத்த நாளில் இனிது முடியும். இக்கடமைகளின் பொருட்டுப் பிறரொடு கலந்து பேச நேருங்கால், அவர் தாங் கூறுவதனை மறவாமல் ஏற்றுக் கொள்ளும் வகைதெரிந்து பேசல்வேண்டும். அல்லது அதனை அவர் மறுத்துப் பேசினாலுந் தாம் மனம் வருந்தாதிருந்து இனிய முகத்தோடும் இனிய சொல்லோடும் அவர் தம்மைத் தாமே உயர்வாகக் கருதியிருப்பதற்குக் குறைவு வராதவகையாய், மேலும் மேலும் அவர் மறுத்துக் கூறுதற்கு இடமில்லாதபடி எடுத்து மொழிதல் வேண்டும். கேட்போர் தாங் கூறும் உண்மைப் பொருள்களைச் சிறிதும் எற்றுக் கொள்ளாமல் வீணே வழக்குப் பேசித் துன்புறுத்துபவராயிருந்தால், அவர் வாய்திறந்து பேசாதபடி திறம்பட அடக்கித் தாங் கூறுவதனையே அவர் முற்றுங் கேட்கும்படி செய்து , இறுதியில் என் கருத்து இஃது, இப்போது இதனை மறுத்துக் கூறல் வேண்டாம்; பின்னர் ஆராய்ந்து பார்த்து யான் கூறியது பொருந்துமாயின் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லையேல் கழித்து விடுங்கள் என்று நயம்படக் கூறி அவரைப் போக்கிவிடுதலே நலமுடைத்து அல்லது அவர் பேசுவனவற்றிற்கு எதிர் பேசாதிருத்தல் நன்று. இன்னுந், தாம் ஆராய்ந்து கண்ட உண்மைகளைப் பிறர்க்கு அறிவிக்க வேண்டுவோர் கைக்கொள்ளுதற்குரிய எளியமுறை மற்றொன்று உண்டு. தாங் கண்ட உண்மைகளை ஒவ்வொருவரிடமும் எதிரே சென்று அவரவரை ஏற்கு நிலைமையில் வைத்து உரைப்பதென்றால் அது பெரிதோர் உழைப்பினைத் தருதலுடன் பல அல்லல்களையும் விளைவியா நிற்கும். ஆதலால், அங்ஙனம் உரைக்கும் முயற்சியினைக் கைவிட்டுப் பலரை ஓரிடத்தில் ஒன்றுகூடச் செய்து, அவரை யெல்லாங் கேட்பவராகவும், தாம் மட்டுங் கூறுபவராகவும் நின்று அவர் உள்ளம் பற்றும்படி அழகாகவுந் திருத்தமாகவுங் கிளர்ச்சியோடுந் திறமாக விரித்துரைப்பாராயின், தாங் கண்ட அப் பொருள்கள் அவர் உள்ளத்தில் எளிதில் சென்று பதியும். இங்ஙனம் அவைக்களத்தில் ஒருவர் கூறும் பொருளைச் சென்று கேட்போர் பலராய்க், கூறுவோரை மறுக்கு மெண்ணம் இல்லாதவராய்க் கூறுவோர்க்கு எதிரில் அந் நேரத்தில் தம்மை உயர்வாக நினையாமல் அவர் சொல்வனவற்றைக் கேட்கும் எண்ணமே மீதூரப் பெற்றிருத்தலால் கூறுவோர் சொல்லும் பொருள்களை அமைவுடன் கேட்டு உள்ளத்தில் அமைத்துக் கொள்வர். ஆதலால், தாங் கருதிய பொருள்களைப் பரப்புதற்கு அவை கூட்டிப் பேசுதலே மிகவுஞ் சிறந்த எளிய முறையாகு மென்று உணர்ந்து கடைப்பிடித்தல் வேண்டும். அவை கூட்டிப் பேசிய பின்னும் நேரிற் சிலர் வந்து பேசுவராகலின் அதற்கு என்செய்வதெனின், நேரே பேசுங்காற் கைக்கொள்ள வேண்டிய முறைகளை மேலெடுத்துக் காட்டினமாகலின், அவற்றின்படி நடத்தலே செயற்பாலது. சுருங்கச் சொல்லுங்கால், எவரிடத்தும் இனிமை யொடு வேண்டு மளவுக்குப் பொருத்தமாகப் பேசுவ தோடு, தாங் கூறுவதைஅவர் மறுத்து நீளப் பேசுதற்கு இடமில்லாமலுஞ் செய்து கொள்ளல் வேண்டும். இவ்வா றெல்லாஞ் சொல்லின் இயல்பறிந்து பேச வல்லார்க்குப் பிறரை வசியப்படுத்தும் ஆற்றல் மிகுதியும் உண்டாம் என்று அறிந்து கொள்க. இனி, மந்திரங்களை உருவேற்றுதலென்பது ஒரு பொருளைப் பற்றிய ஒரு சொல்லையேனும், அல்லதொரு சொற்றோடரையேனும் அடுத்தடுத்துச் சொல்லுதல் அல்லது நினைவிற் கொண்டு வருதலென்பது மேலே பெறப்பட்ட தாகலின், முதன்முதல் அங்ஙனம் நினைவிற்கொண்டு வருதற்குரிய பொருளும் அதனைப் பற்றிய சொல்லும் எவையென்பதனை இங்கே ஒரு சிறிது பேசல் வேண்டும். எத்தகைய மாந்தர்க்கும் முதன்மையாக வேண்டப் படுவது யாதென்று நோக்குமிடத்துத், தமது உடம்பை நோய் அணுகாமல் வைத்துப் பார்த்துக் கொள்வதேயாம். எவ்வளவு மேல் நிலையில் இருந்தாலும், எவ்வளவு செல்வமுங் கல்வியும் வாய்க்கப் பெற்றிருந்தாலும் ஒருவர்க்கு உடம்பு நன்னிலையில் இராவிட்டால் அவையிருந்தும் இல்லாதனவேயாம். அறுசுவையோடு ஆக்கிய உண்டி எதிரேயிருப்பினும், அதனை உண்டு மகிழ்தற்கு ஏலாத செரியா நோயும் அருவருப்பும் உடைய ஒருவர் அதனை நுகரப் பெறுவரோ? அணிதற்கினிய ஆடை, அணிகலன்கள் மிகுதியாய் இருப்பினுந் தொழுநோய்கொண்டு வருந்துவோர் அவற்றை யணிந்து இன்புறல் கூடுமோ? இவற்றை எண்ணிப் பார்க்குங்கால் நோயற்ற வாழ்வே எல்லா நலன்களையும் பெறுதற்கு இசைந்த வழியாமென்பது நன்கு விளங்கும். ஆதலால், நோய் தோன்று தற்கு இடமில்லாதபடி உடம்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுவது எல்லார்க்கும் இன்றியமையாத கடமை யாம். ஆனால், மக்களிற் பெரும்பாலாரோ நோயை உண்டாக்குஞ் சொற்களையுஞ் சொற் றொடர்களையும் பிறரிடம் பேசி நோயைப் பற்றிய நினைவை வருவித்து அதனால் மெய்யாகவே நோயையும் அடைந்து துன்புறுகின்றார்கள். காணவருகின்ற வர்கள் ‘செம்மையாய் இருக்கின்றீர்களா? என்று வினவினால் தமக்கு ஏதொரு நோயும் இல்லாதிருக்கவும் அஃதுடையார் போல் முகத்தைச் சுளித்துக் கொண்டு தின்ற சோறு செரிக்கவில்லை என்றும், இரவில் தூக்கம் பிடிக்கவில்லை என்றுந், தலையிற் கிறுகிறுப்பும் உடம்பிற் குத்தலும் வருகின்றன என்றும் இன்னும் பலவாறாகவுஞ் சொல்லி முறையிடுகின்றவர்களை நாம் நாடோறும் பார்க்கலாம். மருத்துவர் ஒருவரைக் கண்டு விட்டால் நோயில்லாதவர்களும் பல நோய்களைச் சொல்லி முறையிட்டு மருந்துகள் கேட்பதைக் கண்டிருக்கலாம். உண்மையில் நோய்கள் இருந்தாலும் அவற்றிற் கருத்து வையாது அவை நீக்குதற்கான முறைகளைச் செய்து விட்டு, நினைவை வேறு நல்ல துறைகளிற் செலுத்த வேண்டுவதாய் இருக்க, அங்ஙனஞ் செய்யாமல் இல்லாதவற்றையும் இருப்பனவாக எண்ணி அவற்றைப்பற்றி அடுத்தடுத்துப் பேசுதல் அந் நோய்களை வருவிக்கும் மந்திரங்களை உருவேற்றுதலாகவே முடிகின்றது. எந்தச் சொல்லை அடுத்தடுத்துச் சொல்கின்றமோ அந்தச் சொல்லைப்பற்றிய பொருளின் நினைவு திரும்பத் திரும்ப நமதுள்ளத்தில் எழுதலாலும், எந்த நினைவு இடைவிடாது தோன்றுகின்றதோ அந்த நினைவின் றன்மையாய் நமதுயிர் நிற்றலாலும், நமதுயிர் அங்ஙனம் நிற்கவே அதற்கிருப்பிடமான நமதுடம்பும் அந்த நினைவிற்கேற்ற மாறுதலை அடைதலாலும் ஒரு நோயைப் பற்றிப் பலகாலும் பேசப்பேச அந் நோய் வந்து தோன்றுதல் திண்ணமேயா மென்க. இதற்கு ஒவ்வொரு நோய்களைத் தீர்ப்பதில் வல்லவராய் இருக்கும் மருத்துவர் இறுதியில் அந் நோய் கொண்டிறப்பதே சான்றாம் என்க. குண்டிக்காய் நோய்களைத் தீர்ப்பதில் வல்லுனரான ஒரு மருத்துவர் அக் குண்டிக்காய் நோயினாலே இறந்தார்; நரம்பு நோய்களைத் தீர்ப்பதில் வல்லுநரான மற்றொரு மருத்துவர் அந் நரம்பு நோய்கொண்டே இறந்தார்; நோய்தீர்க்கும் முறைகளைக் கற்கும் மருத்துவ நூல் மாணவர் தாம் ஆராய்ந்து காணும் நோய்களின் அடையாளங்களைத் தம்மிடத்துங் கண்டு அந் நோய்களால் வருந்துகின்றனர் (See Dr. H.A. Parkyn’s Auto - Suggestion) இவ்வுண்மைகளை நன்கு நினைவிற் பதிப்பவர் நோய்களைக் குறித்து பேசுதலும் ஆகாது. நினைப்பதும் ஆகாது, என நன்கு உணர்தல் வேண்டும். இன்னும், இக்காலத்தில் நோய்களை அறிவிக்கும் விளம்பரங்களும் அந்நோய்களைத் தீர்க்க மருந்துகள் விற்கும் அறிவிப்புத் தாள்களும் எங்கே பார்த்தாலும் ஆயிரக்கணக்காக நாடோறும் பரப்பப்படுகின்றன. இவைகளை வாங்கிக் கருத்தூன்றிப் படிப்பவர்களும், அவற்றிற் கண்ட மருந்துகளை ஆவலோடு வாங்கித் தின்பவர்களும் எண்ணிறந்தவராய்க் காணப்படு கின்றனர். இதுவேயுமன்றிப் பலவகை நோய்களின் கொடுமைகளை எடுத்துக் கூவிப் பலர்கூடும் அங்காடிகளில் மருந்து விற்போரையும் அவ்விடங்களிற் பார்த்திருக்கலாம். நோய்களைத் தீர்ப்பதற்கென்று பரப்பப்படும் இவ்வறிவிப்புகள் எல்லாம் அந் நோய்களை மேன்மேல் வருவிப்பதற்கும், அவற்றை நெடுகப் பரவச் செய்தற்கும் ஏற்ற வழிகளாய் இருக்கின்றன. இதனாலன்றோ மருத்துவர் தொகை மிகுதியாயில்லாத முற்காலங்களில் நோய்களும் மிகுதியாய் இல்லாதிருந்தன; இந்நாட்களிலோ மருத்துவர் தொகை மிகுதிப்படப்பட நோய்களும் புதியபுதியவாய் அளவின்றிப் பெருகிவருகின்றன. இங்ஙனம் நோய்கள் பல்குவதற்கு வாயில் யாதென்று நுணுகி ஆராயுமிடத்து, நோய் தீர்க்கும் மருந்துகளும் அவற்றைக் குறித்த அறிவிப்புகளும் நோய் தீர்ப்போரும் பலவகை நோய்களைப் பற்றிய நினைவுகளை மக்கள் உள்ளத்திற் பிறப்பித்துவிட அந்நினைவுகள் வரவர வேர்ஊன்றி அந் நோய்களைத் தோற்றுவிக்கும் ஏதுக்களாய் அமைதலேயா மென்பது நன்கு புலனாகின்றது. ஆகையாற் செம்மையாய் இருப்பவர்கள் நோய்களைப் பற்றிய வரலாறுகளை உற்றுக் கேட்டலும், அவற்றைக் குறித்த அறிவிப்புகளைக் கருத்தூன்றிப் படித்தலும், மருந்துகளையும் மருத்துவர்களையும் நினைவில் வைத்தலுஞ் சிறிதும் ஆகாவாம். அங்ஙனமாயின் நோய்கள் மருந்துகளைப் பற்றிய அறிவிப்புகளும் மருத்துவர்களும் இல்லையானால் நோய்கொண்டோர் நோய் நீங்கப் பெறுவது யாங்ஙனமெனில், அவ்வறிவிப்புகளும் மருத்து வரும் வேண்டாமென்று யாம் மறுக்கவில்லை. உண்மையிலே நோயாளிகளாய் இருப்பவர்கள் மருந்துகளின் உதவியையும் மருத்துவர் உதவியையும் வேண்டிய வர்களாயே இருத்தலால், அவர் மட்டும் அவற்றையும் அம் மருத்துவரையும் நாடுதல் வேண்டும்; மற்று நல்ல நிலைமை யிலிருப்பவர் அவற்றையும் அவரையும் நாடுதல் ஆகாதென்பதே நமது கருத்தாவதாம். மேலுந், தக்க அறிவும் மனவலிமையும் இருந்தால் எவ்வகைப்பட்ட நோயையும் பிறருதவியைப் பெரிதும் நாடாமல் தாமாகவே தீர்த்துக் கொள்ளலாமாதலால், அத்தகைய அறிவின் மாட்சியுடையோர் மருந்துகளையும் அவை கொடுத்துத் தீர்ப்பவரையுஞ் சிறிதும் நாடவேண்டுவதில்லை. நலத்தைப்பற்றிய நினைவுகளை அடுத்தடுத்து நினைந்து வருவதோடு, உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு நீர் காற்று முதலியவற்றையும் ஒழுங்காக உட்கொண்டு, அவ்வப்போது உடம்பினின்று வெளிப்படுங் கழிவுகளையும் உடம்பிற் றங்காமல் அகலும்படி செய்துவரின் எவ்வகைப்பட்ட நோயும் எளிதில் நீங்கச் செம்மையாய் இருந்து உயிர் வாழலாமென்பது திண்ணம். நான் மிகவுஞ் செம்மையாய் இருக்கின்றேன். என் உடம்பின் உள்ளே யுள்ள உறுப்புகளுந் திருத்தமாகவுஞ் செவ்வையாகவும் நடைபெறுகின்றன. யான் தூய்மையான நல்ல உணவை உண்பதனாலும், நல்ல தண்ணீரைப் பருகுவதனாலுந், தூயகாற்றை உட்கொள்வதனாலும் என் தீனிப்பையும் நெஞ்சப்பையும் ஒழுங்காக இயங்கி இவற்றை நன்றாய்ச் செரிக்கச் செய்கின்றன. கழிவுகளை வெளிப்படுத்துங் குழாய்களும் பைகளும் உடனுக்குடன் அவற்றை வெளிப்படுத்தி என் உடம்பைத் துப்புரவாக வைக்கின்றன. யான் தூய்மையாகவுஞ் செம்மையாகவும் மனமகிழ்ந்து இன்பத்தோடிருக்கின்றேன் என்னும் இச் சொற்றொடர்களை மெதுவாய் ஒவ்வொரு சொல்லிலும் உள்ளத்தைப் பதிய வைத்துத் திருப்பித் திருப்பிச் சொல்லி ஒருவர் உருவேற்றி வருவராயின் அவர் இவற்றிற் குறிப்பிட்ட நலங்களைத் தவறாமற் பெறுவரென்பது உறுதியே யாம். நினைவிற்கும் உடம்பின் இயக்கத்திற்கும் நெருக்கமான இயைபுண்டென்பதனை அறியாதார் யார்? பார்க்க வேண்டு மென்று நினைத்தாற் கண் பார்க்கின்றது, கேட்கவேண்டுமென்று நினைத்தாற் செவி கேட்கின்றது. பேசவேண்டுமென்று நினைத்தால் வாய் பேசுகின்றது, எழுதவேண்டுமென்று நினைத்தாற் கை எழுதுகின்றது , நடக்கவேண்டுமென்று நினைத்தாற் கால் நடக்கின்றது; இன்னும் இங்ஙனமே பிற உறுப்புகளும் நாம் நினைத்த வண்ணமெல்லாம் இயங்குகின்றன. நன்று சொன்னீர், நாம் நினைந்தபடி இயங்குவன உடம்பின் புறத்தேயுள்ள உறுப்புகளே யல்லாமல் உடம்பின் அகத்தேயுள்ள உறுப்புகள் அவ்வாறியங்கக் கண்டிலமாலெனின் அறியாது வினாயினாய், உடம்பின் புறத்துள்ள உறுப்புகளின் அசைவும் உடம்பின் அகத்துள்ள நரம்புகளின் அசைவினாலேயே நடைபெறுதலானும், அகத்துள்ள அந் நரம்புகள் அசைதற்கு நினைவே ஏதுவாய் இருத்தலானும் புறக்கருவிகள் மட்டுமே நினைவால் இயங்குகின்றன என்று கூறுதல் பொருந்தாது. அகம் புறம் என்னும் இரண்டிடத்துமுள்ள கருவிகள் அத்தனையும், நினைவால் உந்தப்படுங்கால் அந் நினைவுக்கேற்றவாறு இயங்குமென்றே கடைப்பிடித்தல் வேண்டும். அவ்வாற்றான், தன் உடம்பினகத்தே யுள்ள நெஞ்சப்பை தீனிப்பை முதலியன வெல்லாம் நாம் வேண்டியபடி இயங்குவனவாய்த் தெரிய வில்லையே யெனின் பெரும்பாலும் மக்களறிவு புறப் பொருளையே நாடி நிற்றலால் அது புறப்பொருளை அறியவும் இயக்கவும் வல்லதாய் இருக்கின்றது. அங்ஙனமே அஃது அகப்பொருளையும் நாடி நிற்குமாயின் அங்குள்ளவற்றையும் அறியவும் இயக்கவும் வல்லதாகும்; ஆனால், இப்போது அஃது அகநாட்டம் இன்றியிருத்தலால் அவற்றை அறியவும் இயக்கவும் மாட்டாதாய் இருக்கின்றது. அக் கருவிகளை யறியவும் இயக்கவும் வல்ல ஆற்றல் உயிரின் கண் மறைபட்டிருத் தலினாலேயே, மக்களுடம்பின் அகக் கருவிகள் எல்லா வற்றையும் எல்லாம் வல்ல இறைவன்றிருவருள் இயக்கி வருகின்றது .உயிரின் நாட்டம் எந்த இடத்தில் முனைகின்றதோ அந்த இடத்தை அறியவும் அங்குள்ளவற்றை இயக்கவும் அது வல்லதாதலைப் புறப்பொருள்களிடத்தும் நன்கு காணலாம். ஓசையைச் செவியின் உள்ளிருந்து உணர்வதே மக்கட்குப் போதியதாய் இருத்தலின், அவர் செவியின் வெளியேயுள்ள காதின்கண் நாட்டம் வைத்திலர், அதனாற், காதை அசைக்கும் ஆற்றல் அவர்க்கு இல்லையாயிற்று. யாடு, மாடு, குதிரை யானை நாய் பூனை முதலான விலங்கினங்களுக்கோ செவியின் உள்நாட்டம் இருத்தலொடு செவியின் புறத்துள்ள காதிலும் நாட்டம் உண்மையின் அவை அக்காதையும் அசைக்க வல்லனவாயிருக்கின்றன. செவியின் புறத்தே மக்கட்கு நாட்டம் இன்மையும் விலங்குகட்கு நாட்டம் உண்மையும் எதனாலெனின் மக்கட்குப் பலவகையாலும் பெரிது பயன்படும் இரண்டு கைகள் அமைந்திருத்தலால் அக்கைகளின் உதவி கொண்டு காதில் ஏறும் ஈ எறும்பு முதலியவற்றை அவர் அகற்றல் கூடும். விலங்கு களுக்கோ அங்ஙனம் பயன்படுங் கைகள் இல்லாமையால் அவற்றின் காதுகளைக் கடிக்கும் பலவகைப் பூச்சிகளையும் அவை அகற்ற மாட்டா. ஆதலால், அவை அவற்றை அசைக்குங் கருத்து மிக உடையனவாய் அவற்றின் கண் நாட்டம் வைத்திருத்தலின் அவற்றை அவை அசைக்க வல்லனவா யிருக்கின்றன. மக்கட்கோ கைகளால் தங் கருத்து நிறைவேறுதலின் அவர் அவற்றின்கண் நாட்டம் வைத்தலிலர் அதனால் அவை அவர் தம்மால் அசைத்தற்கு இயலாவாயின. மற்றுக் காதை அசைக்க வேண்டுமென்னும் எண்ணம் மிக உடையராய் அதன்கண் நாட்டம் வைத்துப் பழகுவார்க்குக் காதை அசைக்கக்கூடிய தன்மையும் உண்டாதலைச் சிலரிடத்து நாம் நேரே கண்டிருக் கின்றோம். புறக்கருவிகளிலேயே பெரும்பாலும் மக்கள் எல்லாராலும் அசைக்கக்கூடாத காதை அவருட் சிலர் அதன்கண் நாட்டம் வைத்துப் பழகுதலான அசைக்க வல்லரா யிருத்தல்போல, இப்போது மக்களில் எவரானும் இயக்கப் படாமல் இறைவன் திருவருளால் மட்டும் இயக்கப்பட்டு வரும் உடம்பின் அகக்கருவிகளை அசைக்க வேண்டுமென்னுந் தீர்மானம் மிக்குடையராய் அவற்றின்கண் நாட்டம் வைத்துப் பழகுவார்க்கு அவ்வாற்றல் தவறாமல் வருமென்பது திண்ணம். ஆகவே, தாம் பெறுதற்கு நினைந்த பொருளிலும் அதனைப் பற்றிய சொல்லிலும் நினைவை ஒருமுகப்படுத்திப் பதியவைத்து மேற்கூறிய மந்திரத்தை உருவேற்றி வருவார்க்கு உடம்பு நோய் அணுகப் பெறாமற் செம்மையாய் இருக்குமென்பது நன்கு பெறப்படும் என்க. இங்ஙனம் மனநிலையை ஒழுங்கு செய்து கொள்ளுமாறு போலவே, அம் மனத்தொடு நெருங்கிய தொடர்புடைய உடம்பின் செம்மைநிலைக்கு இன்றியமையாது வேண்டப்படும் உணவு தண்ணீர் காற்று முதலியவற்றைத் தெரிந்து உட்கொள்ளு மாறும் ஒழுங்காக நடைபெறல் வேண்டும். முதலில், உண்ணும் உணவு தூயதாய் இருத்தல் வேண்டும்; பிற உயிர்களைக் கொன்று எடுக்கும் ஊனைத் தின்னுதல் ஒருசிறிதும் ஆகாது. ஊன் தின்னும் புலி கரடி ஓநாய் முதலியன விலங்கினங்கள் எவ்வளவு கொடியனவாய், எவ்வளவு பயனற்றனவாய் இருக்கின்றன! புல்லையும் வைக்கோலையும் தழைகளையுந் தின்னும் யாடு மாடு குதிரை யானை ஒட்டை முதலான விலங்குகள் எத்துணை அமைதியும், எத்துணைப் பயனும் உடையனவாய் இருக்கின்றன! இவ் வேற்றுமையைக் கருதிப் பார்க்குங்கால், விலங்குகளினும் எத்துணையோ மடங்கு உயர்ந்த மக்கள் தூய சைவ உணவை உட்கொண்டுவரின் எவ்வளவோ சிறந்த நலங்களையெல்லாம் அடைவார்க ளென்பதனை உணர்கின்றன அல்லமோ? ஆகையால் அவ்வக்காலங்களுக்கு ஏற்ற தூய உணவைப் பசியெடுத்த நேரத்தில் மிகாமலுங் குறையாமலுஞ் செரிக்கும் அளவறிந்து உட்கொண்டுவரின் உடம்பு நல்ல நிலைமை யிலிருக்குமென்பது சொல்லாமலே விளங்கும், பெரும்பாலார் உணவை வாயிலிட்டவுடனே விழுங்கி விடுகின்றனர். இது பெரிதுங் குற்றமாகுமென்று இக்காலத்திய உடம்பு நூல் வல்லார் நன்கு ஆராய்ந்து உரைக்கின்றனர். வாயின்கண் ஓயாது சுரக்கும் உமிழ்நீரை இறைவன் வகுத்தது, அஃது உணவுடன் சேர்ந்து குழம்பாய் உள்ளிறங்கி விரைவிற் செரிக்க வேண்டுமென்னும் நோக்கம் பற்றியேயாம். உணவைச் செரிப்பித்தற்குரிய தன்மை உமிழ்நீரில் அமைந்திருக்கிறது. வாயிலிடும் உணவு நன்றாக உமிழ்நீரிற் கலக்க வேண்டுமாயின், அதனைப் பலமுறையும் மெல்லல் வேண்டும். இங்ஙனம் மெல்லுதலால் உமிழ்நீர் உணவில் மிகுதியாய்க் கலப்பதோடு, பின்னும் ஒரு நன்மையும் இருக்கின்றது. வாயினுள் அரைக்கப்படாமற் கீழ் இறங்கும் உணவு தீனிப்பைக்கு மிகுந்த உழைப்பைத் தருகின்றது புறத்தேயுள்ள உடம்பின் உறுப்புகட்கெல்லாம் இரவில் ஓய்விருக்கின்றது; அகத்தேயுள்ள தீனிப்பைக்கோ இரவிலும் ஓய்ச்சல் இல்லை; ஆகையாற், பகலிரவு இரண்டுபொழுதும் ஒழிவின்றி இயங்குந் தீனிப்பைக்கு மிகுந்த உழைப்பைக் கொடுத்தால் அது புண்பட்டு நோயை உண்டாக்கும். நன்றாய் மெல்லாமல் தின்னப்படும் உணவுகள் தீனிப்பைக்கு மிகுந்த உழைப்பினைத் தருதலினாலே தான் வயிற்றுளைச்சல் குலைநோய் முதலான கொடும் பிணிகள் உண்டாகின்றன. ஆதலால், நன்றாய் மென்று தின்னப்படும் உணவு உமிழ்நீரோடு நிரம்பக் கலந்து தீனிப்பையிற் சென்ற அளவானே விரைவிற் செரித்து, அதற்கு உழைப்பினைத் தராதாய் நன்மையை உண்டாக்குவதாய் அமைகின்றது. உணவு கொள்ளுங்கால் மற்றோரு முதன்மையான செய்தியுங் கருத்திற் பதிக்க வேண்டுவதாய் இருக்கின்றது. உண்டு முடியும்வரையில் ஒரு கவளத்திற்கும் மற்றொரு கவளத்திற்கும் இடையே நீர் பருகுதலும் ஆகாது. அன்றிப் பருகினால் உமிழ்நீர் நீர்த்துப் போவதோடு, தீனிப்பையினிற்று கசிந்து கொண்டிருக்கும் இரைப்பை நீரும் நீர்த்துப்போகும். வாயிலிருந்து இறங்கும் உமிழ்நீருந் தீனிப்பையிற் கசியும் இரைப்பை நீரும் உணவைச் செரிப்பித்தற்குரிய இயற்கை வாய்ந்தனவாக இறைவனால் வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் உண்மை தெரிந்து இவை தம் நிலையில் உள்ள படியே உணவோடு கலந்திறங்கி உடம்புக்குப் பயன்படும் வண்ணம் செய்துகொள்ள வேண்டுவது உடம்பின் நலம் பேணவேண்டு வார்க்கும் பிறரது உள்ளத்தைக் கவரவேண்டுவார்க்கும் இன்றியமையாத கடமை யாம். அங்ஙன மாயின், இடையிடையே நாவறட்சியும் விடாயும் உண்டானால் என் செய்வதெனின் செவ்வனே மென்று தின்பார்க்கு உமிழ்நீர் மிகப் பெருகுதலின் அவர்க்கு நாவறட்சியும் விடாயும் உண்டாகா; வாயிற் பெய்த உணவை மெல்லாமல் உடனே விழுங்கி விடுவார்க்கே அவை உண்டாகும்; ஆதலால், அமைதியாய் மென்று உண்பார்க்கு இடையிடையே நீர் அருந்தல் வேண்டாம் என்க. உணவு முடிந்த பிறகு சிறிது நீர் அருந்துவது குற்றமாகாது. இனி உணவுக்கு அடுத்தபடியில் நீர் உடம்பின் நலத்திற்குக் கட்டாயம் வேண்டப் படுவதொன்றாம். உடம்பில் ஓடும் இரத்த ஓட்டத்திற்கும், அஃது உடனுக்குடன் தூய்மைப்படுதற்கும், உடம்பின் கழிவுகளை நீக்குங் குழல்கள் துப்புரவாதற்கும் நீர் மிகவும் பயன்படுவதாகலின், உணவுகொள்ளாத மற்றைக் காலங்களில் அதனை அடுத்தடுத்துப் பருகிவரல் வேண்டும். இப்போது மக்களிற் பெரும்பாலார்க்கு வரும் பலவகை நோய்கள் எல்லாம் நீர் அருந்தப் பழகுவாரிடந் தலைக்காட்டாமல் ஒழியும். எப்போதும் இருந்தபடியே உழைப்பவர்க்குக் கீழ் உறுப்புகளிலுங் குழாய்களிலுஞ் சூடு மிகுதிப்படுதலால், வெளியே கழிய வேண்டிய சக்கைகள் அங்ஙனங் கழிவுபடாமல் வறண்டு இறுதிக் கடுப்பினையும் நரம்புக் குழாய்களிற் கொடிய புண்ணினையும் வருவிக்கும். இவ்வியல்பினார் தூயநீரை ஒரு நாளிற் பலகாலும் பருகி வருவராயின் அந் நோய்கள் அவரை அணுகமாட்டா. நீர் மிகுதியாய்ப் பருகி வருவார்க்கு இரத்தத்திலுள்ள கழிவு களெல்லாம அடிக்கடி வியர்வைப் புழைகளின் வழியே வெளிப்படுமாதலால், அவர்கள் நாடோறுந் தண்ணீர் விட்டுக் கழுவி உடம்பைத் துப்புரவாக வைத்துக் கொள்ளல் வேண்டும். அங்ஙனஞ் செய்யாக்கால் உடம்பிலெழும் முடைநாற்றம், அன்பினால் இழுக்கப்பட்டு நெருங்கிப் பழகுவார்க்கும் அருவருப்பினை விளைவிக்கும் . இவற்றொடு, முழுகுதற்கும் பருகுதற்கும் பயன்படுத்தும் நீர் மிகவுந் தூயதாய் இருத்தல் வேண்டும். முழுகுதற்குப் பயன்படும் நீர் மிகவுந் தூயதாய் இல்லாவிட்டாலும், பருகுதற்கு எடுக்கும் நீர் நச்சுக்காற்றும் நச்சுப்பொருள்களும் கலவாத தூய்மை யுடையதாய் இருத்தல் வேண்டும். இனி, உள்ளிழுக்குந் தூய காற்று உடம்பின் நலம் பேணுதற்கு நிரம்பவுஞ் சிறந்ததாதலால், தூய அல்லா இடங்களில் உள்ள நச்சுக்காற்றை உள்ளிழுத்தல் ஆகாது. குடிகள் நெருங்கியுள்ள நகரங்களிற் பெரும்பாலும் நச்சுக்காற்று மிகுந்திருத்தலால், நகரங்களில் உயிர் வாழ்வதைக் காட்டிலும் நாட்டுப் புறங்களிற் போய்க் குடியிருப்பதே நன்றாகும். எல்லாரும் நாட்டுப்புறங்களிற் போய்க் குடியிருத்தல் ஆகாமையின், பட்டினங்களில் உள்ளார் நலமாயிருத்தற்கு வேறுவழி இல்லையோவெனின்; அவர் பெரும்பாலும் நச்சுக்காற்றுக்குத் தப்பல் இயலாது; என்றாலும், நச்சுக்காற்று நிலத்தின் அருகிற் கீழே உலவுவதன்றி மேலே செல்லாதாகலின் உயரமான மேன்மாடங்களில் தங்கிருப்பவர் நச்சுக்காற்றின் பிடிக்குச் சிறிது தப்பல்கூடும். மேலும், நகர மாந்தர்கள் இடைக்கிடையே கடற்கரைகளிலும் ஆற்றோரங்களிலுந் தோட்டந் தோப்பு களிலும் உலவி வருகுவரானால் நச்சுக் காற்றினால் விளையுந் தீங்குகளைச் சிறிது சிறிது அகற்றிக் கொள்ளலாம். இத்துணையே யன்றி, அவர்கள் முழுதும் அதற்குத் தப்பி வாழ்தல் மிகவும் அரிதேயாம். எங்கிருந்தாலுந் தூய காற்றை உட்கொள்வதற்கு எவ்வெவ் வகையால் முயலல் வேண்டுமோ அங்ஙனமெல்லாம் முயலல் இன்றியமையாததேயாம் என்க. இனி, மனநிலையை மட்டும் ஒழுங்கு செய்து கொண்டால் உடம்பு செம்மையாகாதோ. உடம்பையும் வேறு தனியே இங்ஙனமெல்லாம் ஒழுங்குபடுத்தல் வேண்டுமோ வெனின்; ஒருவர்க்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் மற்றொருவன் தனது கையில் ஏதுங் குறைபாடில்லாத வனாயினுந், தான் எழுதுதற்குக் கருவியாய்க் கொண்ட இறகும் மையுங் கடிதமுஞ் செவ்வனே அமையாவிட்டால் அவன் அதனை எழுதிமுடிக்க மாட்டுவான் அல்லன். அதுபோலவே மனநிலை செவ்வையாய் இருந்தாலும், அம் மனம் இயங்குதற்கு இடமான இவ்வுடம்பின் அகக்கருவி புறக்கருவிகள் அத்துணையுஞ் செவ்வையாக இராவிட்டால் அம் மனநிலையும் பழுதுபட்டே போகும். மேலும், உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு பெரிதும் நெருக்கமான தொன்றாய் வாய்ந்திருத்தலால், ஒன்றிற்றோன்றுங் குறைபாடு மற்றொன்றிலுந் தாவா திராது. உயிரின் நினைவில் ஒரு குறைபாடு வந்தால் அஃது உடம்பிலுங் காணப்படுகின்றது. உடம்பில் ஒரு குறை நேர்ந்தால் அஃது உயிரின் நினைவையுந் தாக்குகின்றது. இங்ஙனம் ஒன்றிற்றோன்றும் நிகழ்ச்சி மற்றொன்றிலும் உடனே தோன்றுதலை நாம் நாடோறும் ஒவ்வொரு நொடியுங் கண்டறியலாம். நகைப்புக்கு இடமான தொன்றை நினைந்தால் உடனே நமக்கு நகை வருகின்றது; அல்லது நாம் வேண்டுமென்று நகைத்தால் உடனே தானாகவே நகை வருகின்றது. ஒரு துயரமான செய்தியை நினைந்தால் நமது கண்ணில் நீர் கலங்குகின்றது; அல்லது கண்ணீர் சிந்தி அழுவாரை உற்றுப் பார்த்தால் நமக்கு உடனே கண்ணீர் வருகின்றது. இவ்வாறு உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள ஒற்றுமை மிக நெருங்கியதாய் இருத்தலின், மனநிலையை ஒழுங்குபடுத்துங்கால் உடம்பின் நிலையையும் ஒழுங்குபடுத்தல் இன்றியமையாத தேயாம். அல்லாக்கால், தான் வேண்டிய பயனை வேண்டிய படியே பெறுதல் ஏலாது. ஆகவே, இரண்டையுந் திருத்திச் செம்மையாய் வைப்பவர்கட்கு நோய் அணுகா தென்பதும், ஏதோ கால வேறுபாட்டாற் சிறிது அணுகினாலும் மருத்துவர் உதவி இல்லாமலே அதனைத் தீர்த்துக்கொள்ளலாமென்பதும் பெறப்படும். இது கொண்டு மருந்துகளை முற்றுமே கையாள லாகாதென்று யாங் கூறுவதாகக் கொள்ளலாகாது. பாரா முகமாய் இருந்ததானாலும், தொற்றுநோய் கொண்டாரை நெருங்கினமையாலும், எதிர்பாராத வேறுசில வழிகளாலும் வரும் நோய்களைத் தீர்க்கும் பொருட்டு வல்ல மருத்துவரை அழைத்து அது தீரும் வழி தெரிதலும் இசைந்த சில மருந்துகளை உட்கொள்ளலும் நலமேயாம். அப்பொழுதுங்கூட யாம் முன்னரே விரித்து விளக்கியபடி தமது மன நிலையினையும் உடம்பின் நிலையினையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளுதலே நோய் விரைவிற்றீருதற்கு வழியாம்; இதுபற்றியன்றோ ஆன்றோரும் தனக்கு மருத்துவன் தானே என்று மொழிவாராயினர். இனி, மனநிலையினையும் உடம்பின் நிலையினையும் ஒழுங்கு செய்து கொண்ட பின்னர் வேறு நினைக்கத் தகுவது யாதெனின்; கல்வியிற் சிறக்கவேண்டுமென்பதேயாம். கல்வியானது அறிவை விளக்கி அறியாமையினைப் போக்குவது. இந்த உடம்போடு கூடிப் பிறவியெடுத்தது எதன் பொருட் டென்று ஆராய்ந்து பார்த்தால், இவ்வுடம்பின் வாயிலாக அறிவை விளக்கி இன்பத்தைப் பெறுதற்கே யாமென்பது புலப்படுகின்றது. அறிவை விளக்கிக் கொள்ளாவிட்டால் இவ்வுடம்பினாற் பெற்ற பயன் சிறிதும் இன்றாம். கைவருந்தி மெய்வருந்தி மனம் புழுங்கி அல்லும் பகலும் உழன்று தேடித்தொகுத்த பொருளும் மனையும் நிலமுங் கூடவரப் போகிறதில்லை. அறிவும் அறிவோடு கூடித் தோன்றும் இன்பமுமே உயிரைவிட்டுப் பிரியாமல் அதனோடு எங்கும் ஏகும். ஆகையால் அத்தனைச் சிறந்த அறிவை மேன்மேல் விளங்கச் செய்யும் கல்வியைக் கற்றலில் நினைவை நிலைபெறச் செய்தல் வேண்டும். கற்ற கல்விப்பொருள் நினைவை விட்டு அகலா திருக்கும் படி நினைவை வலிமைபெறச் செய்தல் வேண்டும்.யான் கற்றபொருள்கள் அவ்வளவும் என் நினைவில் நன்றாய்ப் பதிந்திருக்கின்றன. யான் வேண்டும் போதெல்லாம் அவை என் நினைவில் விளக்கமாய்த் தோன்றும். யான் நினைவில் வலிமை பெற்றிருக்கின்றேன் என்னுஞ் சொற் றொடர்களை அடிக்கடி நினைவுமுனைப்போடு சொல்லுக. உறங்கச் செல்லும்போதும் உறக்கம் நீங்கி விழிக்கும்போதும் இச் சொற்றொடர்களைக் கருத்தூன்றிச் சொல்லுக. இங்ஙனம் இம் மந்திர மொழிகளைச் சொல்லி வரவர எவ்வளவு மறதியுடைய வர்களும் அம் மறதி தீர்ந்து நினைவு மிகப் பெறுவார்கள். கற்றவை யெல்லாம் நினைவிற் கலையாமல் வந்து தோன்றக் காண்பார்கள். இனிக் கல்வியில் வல்லராயபின் இம்மைப் பயன்கள் எல்லாவற்றையும் பெறுதற்குக் கருவியான செல்வப்பொருளைத் தேடுதற்குப் பெரிதும் முயலல் வேண்டும். ஒரு தொழில் முயற்சியைத் தொடங்கும் முன் தமக்குள்ள அறிவும் ஆற்றலும் எத்தகைய முயற்சியைச் செய்தற்கு இசைந்தவை என்பதைத் தெளிய ஆராய்ந்தறிய வேண்டும். தம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் இசையாதது ஒன்றைத் தொடங்குவோர் பல பிழைகளைச் செய்து எடுத்த முயற்சியை முடிக்கமாட்டாமல் வருந்துவ தோடு, முன்னமே தம் கையிலுள்ள பொருளையும் அதனால் இழந்து, பலரானும் அருவருக்கவும்படுவர். ஒருவரை மற்றவர் விரும்புவதெல்லாம் அவரது அறிவின் திறத்திற்காகவும் அவர் எத் தொழிலையும் திறமையாகச் செய்து முடித்தற் காகவுமேயாம். இந் நிலவுலகத்தின்கண் உள்ள ஒவ்வொருவரும் தாம் உயிர்வாழும் பொருட்டுப் பலதிற முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அங்ஙனம் அவற்றைச் செய்து வருகையில் அது தம்மால் மட்டும் முடிவதாய் இராவிட்டால் அதனை முடித்தற் பொருட்டுத் துணையாக வேறு சிலரைத் தம்மோடு சேர்த்துக் கொள்கின்றனர். அவ்வாறு தாம் துணைசேர்க்குங்கால் தமது முயற்சியை நன்கு முடிக்கத்தக்க அறிவும் ஆற்றலும் உடையாரையே தேடி எடுக்கின்றனர்; அவ்விரண்டும் இல்லாத வரை எவரும் நாடவே மாட்டார். அவ்விரண்டும் உடையாரை எவரும் எவ்வளவு கொடுத்தும் தமக்கு உதவியாக வைத்துக் கொள்வர். ஆதலால், எற்ற முயற்சியையும் முடிக்கத்தக்க அறிவும் ஆற்றலும் உடையவர்க்கு எவரையும் தம்வசப்படுந்தன்மை தானே வருமென்று அறிந்து கொள்க. உலகத்திற் பல நலங்களைப் பெற்று இன்பவாழ்க்கை செலுத்துதற்குப் பொருள் இன்றியமையாது வேண்டி யிருத்தலால், அப்பொருள் தேடு தலிலேயே எல்லா மாந்தருங் கண்ணுங் கருத்துமா யிருக்கின்றனர். உலகப்பற்றை முற்றும் ஒழித்த துறவிகளுங் கூட ஒரோவொரு கால் பொருளை நாட வேண்டியிருத்தலின், இவ்வுடம்போடு கூடி இவ்வுலகத்தில் இருக்குங்காறும் பொருளின் உதவி எல்லார்க்கும் இன்றியமை யாததாய் இருக்கின்றது. அத்துணைச் சிறந்த பொருளை ஒருவர் தேடும் முயற்சியில் வருந்தி நிற்கும் போது அவருக்கு உதவியாய் நின்று அதனை எளிதில் வருமாறு தமது அறிவின் நுட்பத்தால் வழிகாட்டி அதற்குத் தக்க முயற்சியும் எவர் செய்து காட்டு கிறார்களோ அவர்களையே எல்லாரும் விரும்பித் தேடுவர். ஆனதுபற்றிப் பொருள் தேடும் பல துறைகளையும் நன்கு ஆராய்ந்து பார்த்துத் தமது அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற தொன்றனைத் தெரிந்தெடுத்தும் தாம் முயலல் அல்லாமலும், தம்போல் முயல்வார்க்கும் அம் முயற்சியில் இயன்ற உதவி செய்தல் வேண்டும். இனி, இங்ஙனம் ஒரு முயற்சியைத் தெரிந்து முயலுங் காலத்தும் உண்மைக்கு மாறு இல்லாமலும் பிறர்க்குத் தம்மால் தீங்கு வராமலும் பாதுகாத்து அம் முயற்சியை முட்டின்றிச் செய்தற்கு உறைத்து நிற்றல் வேண்டும். அதனைத் தொடங்கு வதற்கு முன் அதனை இவ்விவ்வாறு செய்தல் வேண்டுமென்றும் ஆராய்ந்து பார்த்தது போலவே, அதனைச் செய்து வருங்காலும் அதனை மேலும் மேலும் செவ்விதின் நடத்தும் வகைகளையும் ஆழ்ந்து ஆராய்ந்துகொண்டே செல்லுதல் வேண்டும். அது நன்றாய் நடைபெறுக என்னுஞ் சொற்றொடரை மந்திரமாகக் கொண்டு உருவேற்று தலும் இடையிடையே செயற்பாலதாம். இங்ஙனமெல்லாம் கருத்தூன்றி நினைத்தலுஞ் சொல்லுதலும் கடைப்பிடித்துச் செய்து வருவார்க்கு அவரவர் தகுதிக்கேற்ற எவ்வகை முயற்சியும் நன்கு நிறைவேறும் என்க. 8. வசியச் செயல்கள் மேற்சொல்லியவாறு நினைவுஞ்சொல்லும் ஒழுங்கு படுத்தப்பட்டபின் அவற்றைக்கொண்டு புறத்தே செய்தற்குரிய வசியச் செயல்களைப் பற்றிச் சிறிது ஆராய்வாம். ஒருவர் ஓர் அலுவலிற் புகுந்தால் அதனைச் செய்தற்குரிய காலத்தில் அதனைப் பிறழாமற் செய்து வரல்வேண்டும். எந்த நேரத்தில் அதனை நிறுத்தி வைக்கவேண்டுமோ அதிற்றுவங்கி, எந்த நேரத்தில் அதனை நிறுத்தி வைக்கவேண்டுமோ அதில் நிறுத்தி, அதனைக் காலந் தவறாமல் ஒழுங்காக நடத்தி வந்தால் அம் முயற்சியுடையாரைக் காண்பவரெல்லாரும் பெரிதும் விரும்புவர். அங்ஙனம் அதனை நடத்தாதவரைக் காண்பவரெல்லாம் மிகவும் அருவருப்பர். யாம் இருந்த கல்விக் கழகத்தில் எம்மோடிருந்த ஒரு தமிழாசிரியர் தாம் காலத்தின் ஒழுங்கைக் கருதாமையால் அடைந்த அல்லல்கள் பல. பதினொரு மணிக்குமேல் வகுப்பு ஒன்றிற்குக் கற்பிக்க வரவேண்டிய அவர் முறையாய் அந் நேரத்தில் வராமல் சிறிதுநேரங் கழித்து வியர்க்கப் பதறிக்கொண்டு வருவர். இதற்குள் அவர் வருதற்குரிய வகுப்பின் மாணவர்கள் சும்மா இராமல் இரைச்சல் இடுவர். அதனால் மற்ற வகுப்பிற் கற்பிக்கும் ஆசிரியர்க்கும் கற்கும் மாணாக்கர்க்கும் பெரியதோர் இடைஞ்சல் உண்டாக, அது கண்டு கல்லூரித் தலைமையாசிரியர் வெகுளப், பதறி நேரம் சென்றுவந்த ஆசிரியர் மனக்கலக்கத்தோடு வகுப்பினுள் நுழைய, அப்போது அம் மாணாக்கரெல்லாம் காலையுங் கையையுந் தட்டி ஏளனஞ் செய்திருப்பர். இப்படியே இவ்வாசிரியர் பலகாலும் நேரஞ் சென்று வந்தமையால் மாணாக்கர்க்கு இவரிடத்தில் நன்கு மதிப்பு இல்லாமலே போயிற்று; கல்லூரித் தலைவரும் அவரைப் பெரிதும் அருவருக்கலானார். இன்னும், நேரந் தப்பாமல் நீராவி வண்டித் தொடரிற் சென்று ஏறியிருப்பவர்கட்கு உள்ள மகிழ்ச்சியையும், அது நகரும்போது நேரந் தப்பி ஓடி வருபவர் களையும், ஓடிவந்து ஏறமாட்டால் ஏமாந்து நிற்பவர்களையும் வண்டி நகரும்போது ஏற அங்குள்ள வேலைக்காரர்கள் அதட்டிப் பின் இழுக்கப்பட்டு நாணி நிற்பவர்களையும் காணும்போது நமக்கு எவ்வளவு நகைப்பும் இரக்கமும் வருகின்றன! இன்னும், செய்ய வேண்டிய முயற்சி ஒரு நொடிப் பொழுது தவறினமையால் எத்தனையோ பெயர்கள் உயிர் இழந்தமையும், அந்த நொடி நேரமுந் தவறாமற் செய்தமையால் எத்தனையோ பெயரின் போகுந் தறுவாயிலிருந்த உயிர் மீண்டு பிழைத்தமையும் பலரும் தம் வாழ்நாளிற் பார்த்துங் கேட்டும் நூல்களிற் படித்தும் அறிந்திருக்கலாம். ஈதல்லாமலும், ஒருவர் மற்றொருவர்க்கு ஒன்றைக் குறித்து ஒரு கடிதம் எழுதினால் அதனைப் பெற்றவர் உடனேயாவது, அது முடியாதாயிற் பொறுக்கத்தக்க வகையாய்ச் சில நாட்கள் கழித்தாவது பொருத்தமான விடை எழுதியனுப்பல் வேண்டும். அங்ஙனம் எழுதின கடிதங்களுக்கு விடை எழுதாமல் நாள் நீளவிட்டுப் பாராமுகமாயிருத்தலும், தமக்கு முடை வந்தால் மட்டும் அவரை வேண்டிக் கடிதங்கள் அடுத்தடுத்து எழுதி வருத்துதலும் வெறுப்பை உண்டாக்குஞ் செயல்களாம். தாம் எழுதிய கடிதத்திற்கு மற்றவர் விடை எழுதாராயின் தமக்கு எப்படியிருக்குமென்பதை ஒவ்வொருவருங் கருதிப் பார்க்க வேண்டும். தாமே கடிதங்கள் எழுதும்போதும் வந்த கடிதங்கட்கு விடையளிக்கும்போதும் குறித்த பொருளை விடுத்து இயைபில்லாதவைகளையும் வேண்டாதவைகளையும் வளர்த்தி வளர்த்தி எழுதுதல் ஆகாது. குறித்த பொருளை விளக்குதற்குரிய சொற்களால் இயன்ற வரையில் தெளிவுபடுத்திச் சுருக்கமாக எழுதல் வேண்டும்; பொருளைத் தெளிவுபடுத்துவது மட்டும் போதாது; கையெழுத்தும் தெளிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டும். தெளிவில்லாமற் கோழி சீத்தாற் போல் எழுதியனுப்புங் கடிதங்கள் அவற்றைப் பெறுவோர்க்கு விளங்காமையால் மிகுந்த துயரத்தை உண்டுபண்ணும். கடிதம் எழுதித் தரக் கேட்டால் கால் வலிக்கிறது என்று சொன்னவன் கதைபோல், கடிதம் எழுதினவரே அதனைப் பெற்றோரிடம் சென்று படித்துக் காட்டும்படியான நிலைமையில் தம்மை வைத்துக்கொள்வோரும் பலர் உண்டு. தெளிவில்லாக் கடிதங்கள் வீண் காலப்போக்கு கவலை பணச்செலவு முயற்சிக்கிடையூறு வெறுப்பு முதலான தீமைகளை விளைவித்தலால் அத்தகைய வற்றை எழுதுதலினும் சும்மா இருத்தலே நலமுடைத்து. கடிதப் போக்குவரவினாலேயே இக்காலத்தில் உயிர் வாழ்க்கை செவ்வனே நடைபெற வேண்டியிருத்தலாலும், கடிதங்களின் வாயிலாகவே எட்டாக் கையிலுள்ள மக்களோடெல்லாம் அளவளாவி அவர்களுடைய நட்பையும் உதவியையும் பெறவேண்டியிருத்தலாலும் கடிதமுறைகளைப் பற்றி இன்னுஞ் சிறிது பேசுவாம். கடிதம் எழுதுவோர் அயலாரும் நண்பரும் பகைவரும் என முத்திறப்படுவர். அவருள் அயலார் எனப்படுவோர் நட்பும் பகையும் இல்லாதவர். முதலில் அயலாராய் இருப்பவர் பின்பு பழகப் பழக நண்பராகவாவது பகைவராகவாவது மாறல் கூடும். ஆதலால், அயலாராயுள்ளவர் முதலில் எழுதிவருங் கடிதங் களில் உள்ள பொருள்களை ஆழமாக ஆராய்ந்து பார்த்துப் பார்த்து அவரது இயற்கையைக் கூடுமான வரையில் தெரிந்து கொள்ளல் வேண்டும். அவர் நண்பராதற்கு உரிய உயர்ந்த இயல்புகள் உடையவராயிருந்தால் அவரது நட்பைப் பெற்று வளரச் செய்தற்கு இசைந்தபடியாகவும், அவர் அதற்குத் தகாத தீய இயல்புகள் உடையவராகக் காணப்பட்டால் அவரோடு நட்புப் பகை இரண்டுங் கொள்ளாமல், அவரோடு கூடி முடிக்கவேண்டிய தொன்றை முடிக்கும் அவ்வளவில் மட்டும் கடிதங்கள் எழுதிப் பிறகு அவரது தொடர்ச்சியினைக் கைந்நெகிழ விடுதல் வேண்டும். இனி, அன்பின் மேம்பட்ட நண்பர்க்குக் கடிதங்கள் எழுதி அளவளாவு மிடத்து ஒருவன் தன்னை உயர்த்தியாயினும் தாழ்த்தியாயினும் எழுதுதல் கூடாது; தன்னை உயர்த்திப் பேசினால் அவனுக்கு உள்ள அன்பு கெடும். எவ்வளவு சிறந்தோராயினும், ஒருவர் தம்மைத்தாமே உயர்த்திப்பேசிக் கொள்ளுஞ் சொற்களைப் கேட்பவர்கள் அவரிடத்து மிக்க அன்பு பூண்டொழுகு வோராயினும், அந்நேரத்தில் அவற்றால் அவர் மேல் அருவருப் படைகின்றனர். இங்ஙனமே தம்மிடத் திலுள்ள குற்றங் குறைபாடுகளைச் சொல்லித் தம்மைத்தாமே தாழ்வுபடுத்தினால் அதனாலும் நண்பர்க்கு அன்பு கெடும். குற்றங் குறைகள் இல்லாத மக்கள் உலகத்தில் யாண்டும் இல்லையாயினும், அவற்றைக் கேட்டவுடன் அவற்றை யுடையாரை இழிவாக நினைத்தல் எவர்க்கும் இயற்கையாய் இருக்கின்றது. ஓயாமல் குடித்து வெறிப்பவனும் பிறனொரு குடிகாரனைக் கண்டால் அவனை இழித்துப் பேசுகிறான்; திருடன் பிறனொரு திருடனைக் கண்டால் அவனை இகழ்ந்து பேசுகிறான். தம்மிடத்தில் மலைபோற் குற்றம் இருப்பினும் அதனை ஒருவர் குற்றமாக நினைப்பதில்லை; பிறர்பால் தினையளவு குற்றங் காணினும் அவர்பாலுள்ள நலங்களை யெல்லாம் முற்றும் விடுத்து அவரது அச் சிறு குற்றத்தையே பாராட்டிப் பேசுகின்றனர். தமக்குள்ள குற்றங்களை ஆராய்ந்து பார்த்துப் பிறர் குற்றங்களை ஆராயாமலும் அவற்றைப் பாராட்டாமலும் ஒழுகும் பெருந்தகைமை வாய்ந்தோர் உலகத்தில் மிக அரியர். ஆதலால், தோழனோடும் ஏழைமை பேசேல் என்ற முதுமொழிப்படி, தன் தோழனிடத்தும் ஏனை நண்பரிடத்தும் தனக்குள்ள குறைபாடுகளை எடுத்து மொழிதல் ஆகாது. அன்பாக நடத்தலும், ஒருவருக்கு ஒருவர் வேண்டிய உதவிகளைச் செய்து கொள்ளுதலும், ஏளனம் இல்லா இன்சொற்களை எப்போதும் மொழிதலும், இவற்றிற்குத் தக்கவற்றையே எழுதுதலும் நண்பராயினார் தமக்குட் கடைப்பிடித்துச் செய்தற்பாலனவாம் என்க. இனி, உண்மையறியாமற் பிழைபட்டுப் பகைகொண்டு கடிதம் வரைவார்க்கு விடையளிக்குங்கால் நிரம்பவுங் கருத்தாயிருத்தல் வேண்டும். கடிதத்தில் வரைந்தவைகள் மறுக்க முடியாத உண்மைகளாய் நிலைபெறுமாதலால் அவற்றைத் துணைகொண்டு பகைவர் பல தீமைகளை விளைப்பர். ஆனதனால், மாறுபட்டு நின்று எழுதுவார்க்கும் அவரால் தூண்டப்பட்டு நண்பரைப்போல் எழுதுவார்க்கும் விடைகள் எழுதப் புகுந்தால் பன்முறை ஒன்றை ஆராய்ந்து பார்த்து எழுதுக. இவர்களுடைய மனக்கோணலை நயமாய்த் திருத்தத் தக்க வழியிருந்தால் அதனால் திருத்த முயல்க. அவர்பால் வன் சொற்களும் வசைமொழிகளுங் காட்டி எழுதற்க. அவற்றாற் பகை மேலும் வளர அவர் மேலும் தீங்கியற்ற முந்துவர். ஒருவகை யாலும் அவரைத் திருத்த முடியாதானால், அவருடைய தொடர்பு நீளத் துன்பத்தையே தருவதானால் அவர் எழுதுவனவற்றிற்கு விடைதராது வாளா இருந்து விடுதலே நலமுடைத்து. இன்னும், நண்பரைப்போற் காட்டி உளவுகளை அறிந்து அவற்றைப் பிறர்க்குச் சொல்லி அவரைக்கொண்டு பல தீமைகளை விளைக்கும் போலி நண்பர் செயல், கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு (குறள் 819) என்ற அருமைத் திருமொழிப்படி பெரிதும் அஞ்சத்தக்க தொன்றாதலால், அவர் நெருங்காமல் அகன்றொழியும்படி எழுத்தினாலேயே செய்துவிடல் வேண்டும். அன்பினாற் கண்ணீர் சொரிவாரைப்போற் காணப்படினும் பகைவர் நேரம் பார்த்துக் கொல்வர் என்பதனைத், தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து (குறள் 828) என்னும் அருளுரை விளக்குதல் காண்க. அத்தகையோரிடத்துத் தாமும் அவர்போல் நட்புக்காட்டி அவராற் பிடிபடாமல் இருக்கும் வழி தெரிந்தெழுதி அமயம் நேரும்போது அவரது தொடர்பினை அறவே தொலைக்க. இங்ஙனம் இம் முத்திறத்தார் மாட்டும் நேரிலுங் கடிதத்திலும் நடந்துகொள்ளும் முறை கடைப்பிடிக்கற்பாற்று. இனித் தாம் குடிவாழும் இடங்களிலும் அலுவல் பார்க்கும் இடங்களிலும் உள்ள தட்டுமுட்டுகளையும் பிறவற்றையும் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் வைத்தலில் மிகவுங் கருத்து ஊன்றுக. ஒழுங்கான அறிவும் நேர்த்தியான செயலும் உடையவர்கள் எங்கேயிருந்தாலும் எவற்றையும் அவ்விரண்டு தன்மையும் பொருந்த அழகாகவே வைத்திருப்பார்கள். அவ்விரண்டும் இல்லாதவர்கள் ஏதோ நல்வினையாற் சிறிது உயர்ந்த நிலைமைக்கு வந்தாலும் தமது இழிந்த தன்மையினைக் காட்டியே விடுவார்கள். உயர்ந்த ஆடையணிகலன்களையும் மேசை நாற்காலி படுக்கைகளையும் புத்தகங்கள் பத்திரிகை களையுங் கையாள நேர்ந்தாலும் அவற்றை நேர்த்தியாக ஆளத் தெரியாமல் அவற்றைத் தாறுமாறாக அருமையில்லாமல் அழுக்கும் குப்பையுமாய்க் குழம்பிக் கிடக்கவிட்டு, இவ்வரு வருக்கத்தக்க செயலிலும் தம்மைப் பெரியராக இறுமாப்புடன் வைத்து நடப்பர் முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை இந்திரனா எண்ணி விடும் என்ற சொற்படி கீழ்மக்கள் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும் அவரது புல்லியசெயல் அதிலும் புலப்பட்டு விடும். ஆதலால், உயர்ந்த நிலையிலிருந்தாலும் தாழ்ந்த நிலையி லிருந்தாலும் தாம் இருக்கும் இடங்களையும் அவ்விடங் களிலுள்ள பண்டங்களையும் துப்புரவாகவும் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுதலில் ஒவ்வொரு இளமைக் காலத் தொட்டே தாம் பழகிக் கொள்வதோடு தம்மைச் சேர்ந்த சிறுவர்களும் அங்ஙனமே பழகுமாறும் செய்தல் வேண்டும். இளமைக் காலத்திலேயே இதனைப் பழக்கத்திற்குக் கொண்டு வராக்கால், பிற்காலத்தில் இதனைப் பழகுவது வருத்தமாய் முடியும். ஆகையால், பிறரை வசியப்படுத்துவதற்குச் சிறந்ததான இந்த ஒழுங்கைக் கருத்திற் பதியவைத்து அதன்படி வழுவாமல் நடந்து வருக. இனி ஒருவரிடத்து ஓர் உதவி பெறும்பொருட்டு அவரைப் பார்க்கச் செல்லும்போதும், தம் இல்லத்திற்கு வரும் சிறந்தோர் ஒருவரை வரவேற்கும் போதும் விலையுயர்ந்த ஆடை அணிகலன்களைப் பூண்டு வீண் ஆரவாரம் செய்தல் ஆகாது. அவ்வாரவாரங்களைக் கண்டு முதலிற் பாராட்டுவார் களாயினும், பின்னே அவ்வாரவாரங்களையும் அவற்றை யுடையாரையும் இகழ்வாகவே நினைப்பர். அதனாற் றாம் கருதிய செயல் நிறைவேறாது ஆனது பற்றி, விலையுயர்ந்த அல்லவாயினும் பார்த்தற்கு உவப்பைத் தருவனவாய்த் தூயவாய் உள்ள உடைகளையும் அவரவர் தகுதிக்கேற்ற சில அணிகலன் களையும் மட்டுமே மேற்கொள்ளல் வேண்டும். ஆண்பாலார்க் காயின் அணிகலன்களும் வேண்டா. சிறிது தெரிந்தவர் களானாலும் ஒருவரையொருவர் பார்க்கும்பொழுது மலர்ந்த முகமும் புன்சிரிப்பும் மேல்வளரும் அன்பிற்கு அறிகுறியாய் இயல்பாக உண்டாதலால், எவரைப் பார்க்கச் சென்றாலும் எவரை வரவேற்றாலும் அன்பின் குறியான அம் மலர்ந்த முகமும் புன்சிரிப்பும் உண்மையாகவே தமது முகத்திற்றுலங்க இருத்தல் வேண்டும். ஆனாலும், தம்மின் மேற்பட்டவர்களைக் காணுங் காலும் வரவேற்குங்காலும் அடக்க ஒடுக்கமும் பணிவுமுடைய வராய் மகிழ்ந்த முகத்தோடு நடக்க வேண்டுமே யல்லாமல் புன்சிரிப்புக் காட்டலாகாது. ஆகவே, எவ்வெவரிடத்து எவ்வெவ்வாறு நடந்து கொள்ளல் வேண்டுமோ அவ்வவை யெல்லாம் வழுவாது கடைப்பிடித்துச் செய்தல் மனக்கவர்ச்சியை விரும்புவார்க்கு இன்றியமையாத கடமையாம். தாம் ஒருவரிடத் தேனும், தம்மிடத்து வேறொருவரேனும் அணுகியபின் அவரவர் தகுதியறிந்து அன்பும் அடக்கமும் பணிவும் உண்மையும் வாய்ந்த சொற்களால் அளவளாவி இனிமையாய்ப் பேசல் வேண்டும். பிறரிடம் பேசும்போது கடுஞ்சொற்களும் இறுமாப்பான நிலையும் வராமற் பாதுகாத்துக் கொள்க. எத்துணை அன்புடைய வரானாலும் கடுஞ்சொற்களைக் கேட்கவும் இறுமாந்த நிலையைப் பார்க்கவும் எவரும் ஒருப்படமாட்டார். உணவுப் பண்டங்கள் விற்கும் அடுத்தடுத்துள்ள இரண்டு கடைக்காரரில், ஒருவரிடத்து வாங்குவார் பெருந்திரளாய்ச் சென்று அவர் சொன்ன விலை கொடுத்துப் பண்டங்கள் வாங்குதலும், மற்றொருவரிடத்து அவ்வாறின்றிச் சிற்சிலர் மட்டுஞ் சிற்சில நேரங்களிற் சென்று பொருள்கள் வாங்குதலுங் கண்டு இதன் உண்மையைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அவரை அணுகிப் பார்த்தேம். பார்க்க, நல்ல விற்பனை செய்பவர் நல்ல பண்டங்களை நேர்த்தியாக வைத்திருப்பதோடு தம்பால் வருவா ரிடத்தெல்லாம் மலர்ந்த முகம் உடையராய் அன்பும் பணிவும் உண்மையும் உள்ள சொற்களால் இனிதாகப் பேசக்கண்டு அவர்பால் எமக்கும் விருப்பம் உண்டாயிற்று. அவரிடத்து ஏதேனும் ஒன்று விலைகொடுத்து வாங்கவேண்டுமென்னும் விழைவும் உடையமாயினேம். அதன்பின் ஒரு நாள் மற்றொரு கடைக் காரரிடம் செல்ல அவர் முதலிலேயே மலர்ந்த முகம் இல்லாத வராய்க் காணப்பட்டார்; அவர் கடையிலுள்ள பண்டங்களும் மற்ற கடையில் உள்ளவைகளைப்போல் நல்லவை களாயும் இல்லை; அந்த அழகில் அவர் அடுத்த கடைக்காரரிடம் பொறாமை யுடையவராய் நான் எவ்வளவோ நல்ல பண்டங்கள் வைத்திருக்கிறேன். விலையும் நயமாய்க் கொடுக்கிறேன்: அப்படியிருக்க இந்தப் பாழும் மக்கள் கண்மூடித் தனமாய் அவனிடம் போய் விழுகிறார்களே! v‹d fÈfhy«! என்று இன்னும் பலவாறாய்க் கடுகடுத்த முகத்தோடு பொய்யான சொற்களை மனமெரிந்து கூறக்கேட்டேன்; எவராவது தப்பித்தவறி வந்தால் அவரிடத்துங் கொடுஞ் சொற்களையே பேசினார். இவர் தன்மைகளையும் செயல்களையும் பார்த்ததும் இவரிடத்து விற்பனை செவ்வையாய் நடவாமையின் காரணம் எமக்கு இனிது புலப்பட்டது. பின்னுஞ் சில திங்கள் கழிந்து அவரது கடையே எடுபட்டுப்போகக் கண்டேம். ஆதலால், மலர்ந்த முகமும் அன்பும் பணிவுமுள்ள சொற்களும் உலகத்தில் மேன்மை பெறுதற்கும் பலராலும் விரும்பப்படுதற்கும் எவ்வளவு சிறந்தனவா யிருக்கின்றன என்பது எவர்க்கும் இனிது புலனாம். மேற்கூறிய இனிய தன்மைகளும் இனிய செயல்களுந் தம்மிடத்தில் இயற்கையாக இல்லாவிட்டாலும், அவற்றைத் தம்மிடத்தில் வருவித்தற்கு ஒருவர் சில நாட்கள் கருத்தூன்றி முயல்வராயின், முதலில் வருத்தமாய்த் தோன்றிய அவை பிறகு இயற்கையில் உள்ளனபோல் எளிதாகிவிடும். முதலில் ஓரிளம் பெண் சமையற் றொழிலைக் கற்றுக்கொள்ளும் போது எத்தனை முறை தன் விரல்களை நெருப்பில் இட்டுத் தீய்த்துக் கொள்கின்றாள், எத்தனை தரங் கஞ்சியைத் தன் காலில் வீழ்த்திக் கொண்டு துடிக்கின்றாள், உணவுப் பண்டங்களை வேக்காட்டில் மிகுத்தோ குறைத்தோ எவ்வளவு கெடுத்து விடுகின்றாள், உப்பு புளிப்பு காரம் முதலியவற்றை அளவறிந்து கூட்டத் தெரியாமல் எவ்வளவு பிழைபடுகின்றாள். ஆனாலும், அதனை விடமாட்டாமல் நாட்சென்று பழகப் பழகப் பிறகு அவள் சமையற்றொழிலில் வல்லவளாய் அதனைத் திருத்தமாய் எளிதிற் செய்து முடித் தலையுங் காண்கின்றேம் அல்லமோ? இவை போலவே, இனிய தன்மைகளிலும் இனிய செய்கைகளிலும் இடைவிடாது பழகப் பழகப், பின்னர் அவை எக்காலத்தும் மாறாதனவாய்த், தங்குறிப்பின்றியே எளிதாக நிகழும். இவ்வாறு உள்ளமுஞ் செயலும் இனியவாய்த் தோன்றுதல் போலவே, உடம்பின் தோற்றமும் இனியதா யிருத்தல் இன்றியமையாததாகும். அவரவர் தகுதிக்கு ஏற்றபடி உடுக்கும் உடையை ஆரவாரமின்றி அழுக்கில்லாமல் தூயதாக உடுத்தல் வேண்டும். விலையுயர்ந்த பட்டாடைகளேயாயினும், அடுத்தடுத்து நீரிற்கழுவித் துப்புரவு செய்யப்படாவிட்டால், பார்ப்பதற்குப் பளபளப்பாயிருந்தாலும், அவற்றிற் படிந்த வியர்வைநீரும் கட்புலனாகாத அழுக்கும் தம்மைச்சூழ அருவருப்பான நச்சுக் காற்றைப் பரப்பும். அத்தகைய காற்று கண்ணுக்கும் மூக்குக்கும் புலனாகாதாயினும், நுண்ணுணர் வினார் உள்ளத்திற்குப் புலனாகித் தவறாமல் அருவருப்பினை விளைக்கும். ஆகையால், விலையுயர்ந்தனவாயினும் அல்லாதனவாயினும் தாம் உடுக்கும் உடைகளை நாடோறும் நல்ல தண்ணீரிற் றோய்த்துக் கழுவித் தூயவாக அணிதல் பெரிதும் நினைவுகூரற்பாலதாகும். முன்னமே காட்டியபடி உடம்பையும் நன்றாய்க் கழுவி முடைநாற்றம் வீசாதபடி வைத்துக்கொள்ளல் வேண்டும். உடம்பின் மேற்பரப்பை மட்டுங் கழுவி விடுதலாலேயே துய்மை உண்டாய்விடும் என்று நினைப்பது பிசகு. உடம்பின்மேல் வந்து சேரும் அழுக்குகளெல்லாம், உடம்பினுள்ளே பிரியும் மலங்களின் கசிவுகளேயாதலால், அகத்துள்ள மலக்குடரில் அழுக்குச் சேராமைப் பொருட்டு அவ்வப்போது நீரேற்றி கொண்டு அதனையுங் கழுவித் துப்புரவு செய்தல் வேண்டும். உடம்பை எத்தனை முறை தேய்த்துக் கழுவினாலும் சிலர்க்கு வாய் நாற்றமும் உடம்பில் முடைநாற்றமுங் கிளம்பி வீசி அருகில் உள்ளவர்க்குப் பொறுக்க முடியாத துன்பத்தையும் அருவருப்பையும் விளைக்கின்றன. இத்தகைய தீய நாற்றம் அவர்கள்பாற் றோன்றுதற்குக் காரணம், அவர்களது மலக் குடலில் மலக் குப்பை சேர்ந்திருத்தலேயாகும். ஆதலால், உடம்பின் புறத்தைக் கழுவுதல் ஒரு தூயவினையாய்க் கருதப்படுதல் போல, அதன் அகத்தைக் கழுவுதலும் அதனினும் பன்மடங்கு சிறந்ததொரு தூய வினையாகக் கருதிச் செய்யப்படுதல் வேண்டும். இனி, முகம் அக்குள் முதலான இடங்களில் வளரும் மயிரை அவ்வப்போது எடாமல் வளரவிடுதலும், கைகால் விரல்களில் நகத்தைக் களையாமல் நீளவிடுதலும், அங்ஙனமே அழுக்குச் சேர்ந்து முடைநாற்றம் வீசுதற்கு இடஞ்செய்வதோடு, பார்ப்பதற்கு அருவருப்பான தோற்றத்தையுங் காட்டும். முகம் முதலிய உறுப்புகளில் வளரும் மயிரை உடனுக்குடன் அகற்றி வந்தால், அவ்விடங்கள் அழுக்குச் சேராமல் பளபளப்பாக ஒளிவீசித் திகழும்: பார்ப்பவர்க்கும் மகிழ்ச்சியைத் தரும். மக்களிற் பலர் மூக்கின்கீழ் மேலுதட்டில் மீசைவைத்துக் கொள்ளு கிறார்கள்; மீசையானது சிலருடைய முகத்திற்கு அழகு பயப்பதேயாயினும், உள்ளிருந்து வெளிவரும் மூச்சிற் கழிக்கப் படும் நச்சுத்துகள்கள் மூக்கின் கீழுள்ள மீசைமயிரிற்றங்கித், திரும்ப வெளியிலிருந்து உள்ளிழுக்கப்படும் மூச்சின் வழியாக நெஞ்சப்பையினுட் சென்று, செந்நீரிற் கலந்து கொடிய பல நோய்களை வருவிக்கின்றனவென்று இதனை ஆராய்ந்து பார்த்த பிரெஞ்சு நாட்டு மருத்துவர்கள் கூறுதலானும், அவர்கள் கூற்று நமதறிவுக்கும் உண்மையாகவே காணப்படுதலானும் மீசைமயிர் வைத்தலும் நன்றாகாதென்பதே துணிவு. இங்ஙனமே, கைவிரல்களில் வளர்ந்த நகங்கள் களையப்படாமல் வைக்கப் படின், அந் நகங்களில் உள்ள நஞ்சு விரல்களால் தொடப்படும் நீரினும் உணவுப் பண்டங்களிலுங் கலந்து நோயை வருவிக்கும். சதைக்குமேல் வளர்ந்த நகங்களில் நஞ்சு உளதென்று அதனை ஆராய்ந்து பார்ப்பவர் உரைக்கின்றனர். கால் விரல்களிலுள்ள நகங்களும் அத்தன்மையவேயாகலானும், அவை நீண்டிருந்தால் கீழே கிடக்கும் கற்களினும் வாயிற்படி முதலியவற்றினும் இடறி முழுதுமே பெயர்ந்து புண்ணை யுண்டாக்குமாகலானும் அவையும் உடனுக்குடன் களைந் தெறியப்படல் வேண்டும். எவை எவை துப்புரவாய் இல்லையோ அவை நஞ்சாயும் அழகற்றன வாயும் இருக்கும்; எவை எவை துப்புரவாய் இருக்கின்றனவோ அவை அமுதமாயும் அழகாயும் இருக்கும் என்று தேர்ந்து கொள்க. தூயவாயும் அமிழ்தமாயும் அழகாயும் இருப்பனவே எல்லார்க்குங் கவர்ச்சியை உண்டுபண்ணுமென்பதூஉம் இது கொண்டு உணரற்பாலதாம் என்க. அழகில்லாதவர்களும் தூயவான பழக்க வொழுக்கங்களைக் கடைப்பிடித்துத் தொடர்பாக நடப்பரானால் அழகுபெற்றுத் தோன்றுவார்கள். இயற்கையாகவே அழகுடனிருப்பவர்களும் அருவருக்கத் தக்க பழக்க வொழுக்கங்களைக் கைப்பற்றி நடப்பரானால் தமது அழகு கெட்டு வெறுக்கப்படுவர். எனவே, ஒன்றோடொன்று தொடர் பாக உள்ள அழகையும் தூய்மையையும் பாதுகாப்பார்க்கே அன்பும் அறிவுங் கவர்ச்சியும் மேன்மேற் கிளைத்து இம்மை மறுமைப் பயன்களைப் பயப்பிக்கும் என்று உணர்க. இனி அழகாயிருப்பது அவாவினைப் பெருக்கிப் பல தீமைகளை விளைவிக்குமாதலால், அது விரும்பற் பாலது அன்று என்று சிலர் கூறுவராலெனின், அங்ஙனங் கொள்வார் கூற்றுப் பிழைபாடு உடைத்தாம். செல்வமானது பல பெருந்தீமைகளை யெல்லாம் விளைவித்தற்குங் கருவியாதலிற் செல்வமே கூடாதென்பாரும், கல்வியும் அங்ஙனமே செவ்வையான முறையிற் பயன்படுத்தப்படா வழி அதுவும் பல பெருந்தீமை களையும் வருவித்தலிற் கல்வியே கூடாதென்பாரும், உடம்போடு கூடி இவ்வுலகிலிருத்தலே எல்லாத் தீமைகளுக்கும் ஏதுவாகலின் உடம்பே ஆகாதென்பாரும் உளரோ! அங்ஙனமே அழகா யிருப்பதும் ஒரு சில நேரங்களில் தீது செய்தல்பற்றி அதனை வேண்டாமென்று கூறுதலும் பொருந்தாது. அழகு ஆகாது என்று வெளிப்பேச்சுக்குப் பேசுகின்றவர்களும் உள்ளத்தில் அதனை விரும்புகின்றவர்களாகவே காணப்படுகின்றனர். அங்ஙனஞ் சொல்லுவோரை நோக்கி, ‘நீர் எவ்வளவு அருவருப்பான அழகில்லாத தோற்றமுடையவராய் இருக்கின்றீர்’ என்று மற்றொருவர் சொன்னால், அச் சொற்களைக் கேட்ட அவர் உள்ளம் வெதும்புதலையும், அவ்வாறன்றி ‘ நீர் எவ்வளவு அழகாயிருக்கின்றீர்! என்று சொன்னால் உடனே அவருள்ளம் மகிழ்ச்சியாற் றதும்புதலையும் அவரது முகக்குறிப்பினால் நன்கு உணரலாம். எனவே தீயவருந் தம்மை நல்லவர் என்று கூறுவார்பால் மனமகிழ்ந்து அன்பு பாரட்டுதல் கொண்டு எல்லார்க்கும் நன்மையிலேயே விருப்பமிருத்தல் அறியப்படுதல் போல, அழகில்லாதவரும் தம்மை அழகுள்ளவர் என்று கூறுவார்பால் அன்பு பாராட்டும் இயல்பைக் கொண்டு எல்லார்க்கும் அழகில் விருப்பம் உண்டென்பதுந் தெளியப்படும். அழகு அறிவு அன்பு என்பவற்றின் விளக்கம் தெய்வத்தின்கண் இயற்கையாக இருத்தலானும், தெய்வத்தின் அருட்பேறு உடைய உயர்ந்த நன்மக்களுக்கே அம் மூன்றன் விளக்கம் வருதலானும், மேன்மேல் உயர்ந்தவற்றை இடைவிடாது நாடும் மேலோர்க்கு இம்மூன்றுந் தெய்வத்தினருளால் உண்டாகுமென்று உணர்ந்து கொள்க. மக்கள் தீயவற்றையும் அருவருப்பானவற்றையும் நினைப்பதினுஞ் செய்வதினுந் தமது காலத்தைக் கழித்து வந்தாலும் அவர்களது இயற்கையானது எப்போதும் உயர்ந்தவற்றை விரும்பிய படியாகவே யிருக்கின்றது. எவ்வளவு தீயவனாயிருப்பவனும் நல்லோரையும் நல்லவற்றையும் விரும்பு கின்றான்; தான் நல்லவனாய் நடக்க வேண்டுமென்றும் ஆவலுறுகின்றான்; ஆனால், அவனது உள்ளத்தில் ஏறியிருக்கும் அறியாமை மயக்கமோ அவனறிவையும் உணர்வையுந் தீயவற்றிலும் இழிந்தவற்றிலும் ஏவுகின்றது; அம் மயக்கம் அவனைவிட்டு நீங்க நீங்க அவன் படிப்படியே நன்னெறியிற் செல்ல இடம் பெறுவானென்பது திண்ணம். ஆகவே, அழகென்பது உயர்ந்த நிலையிற் செல்லும் மக்களுக்கு அவர்களது உயிரின் தன்மைக்கு ஏற்ப அவர்களின் உடம்பிலும் வருவதொரு பெரும் பொலிவாகலின், அஃது எத்திறத்தாரானும் விரும்பற் பாலதேயா மல்லது வெறுக்கற்பாலதன்றெனத் துணிக. அங்ஙனமாயின், தம்மை அழகுபடுத்திக் கொள்வாரை நோக்கிப் பிறர் இகழ்ந்து கூறுவதென்னையெனின்; விலையுயர்ந்த ஆடையணிகலன்கள் அணிந்தும், பொட்டிட்டும் மையிட்டும் மண் எண்ணெய் கொண்டு கூந்தல் முடித்தும் முகமினுக்கியும் எந்நேரமுந் தம்மை அழகு படுத்தி ஆரவாரம் புரியுங் கருத்தும் முயற்சியும் உடையாரைக் கண்டு பிறர் இகழ்வாய் நினைத்தலுங் கூறுதலும் இயற்கை யேயாம். அவ்வாறின்றிக் குளித்து முழுகி, மிகுவிலை இல்லாதன வாயினும் தூயவான ஆடைகளும் இன்றியமையாத சில திருத்தமான அணிகலன்களும் பூண்டு, தத்தஞ் சமய அடையாளங்களையும் அமைதியாக மேற்கொண்டு, நல்லெண்ணமும் நற்செய்கையும் உடையராய்க், கடவுளின் பேரருளை நினைந்தொழுகுவார்பாற் காணப்படும் அமைந்த ஒளியழகினையும், அதனைப் பழுதுபடுத்தாமல் அவர் ஆரவாரமின்றிக் காக்கும் முறையினையும் இகழ்வாக நினைப்பவரும் உரைப்பவரும் எங்கும் இரார்; இத்தகைய நல்லழகு வாய்ந்தோரையும் இகழ்ந்துரைப்பார் உளராயின் அவர் பொறாமைப்பேய் பிடித்தவராகவாதல், எல்லாரும் அருவருக்கத் தக்க சொற் செயல் நினைவுகள் உடையராகவாதல் இருத்தல் வேண்டும். முழுநிலா வொளியைக் கண்டு குலைக்குங் குக்கலும் உளதன்றோ? பாலைப் பருகாது கள்ளைக் குடிப்பாரும் உளரன்றோ? பித்தமேறிய சிலர் நாவுக்கும் கன்னலுங் கசப்பதுளதன்றோ? இவ்வியல்பினரான கீழோர் எவற்றையும் இகழ்ந்துரைத்தல் இயல்பேயாகலின், இவருரை கொண்டு அழகினை அருவருப்பார் எவரும் இல்லை. ஆகவே, ஆரவார மில்லாத அமைதியான முறையாற் றம்மைத் தூயராக அழகு செய்து, பிறகு தம் நினைவையுஞ் செயலையும் உயர்ந்த நெறிகளிற் செலுத்தல் மேலோர் கடமையேயாமென்க. இனி, அகமும் புறமும் ஒத்த இனிமை வாய்ந்தவர்பால் எல்லாருங் கவர்ச்சியுடையராய் இருப்பராயினும், அவ்வினிய இயல்புடையர் தமக்குள்ள அம் மேன்மைத் தன்மையைத் தாமே நன்குணர்ந்து தமது ஆற்றலில் நம்பிக்கையுடையராய் ஒழுகினல்லது அது மிக்க பயன்தராது. தமக்குள்ள இனிய இயல்புகளால் தாம் எல்லார்க்கும் மிக எளியராய் அவர்கள் வேண்டியபடியெல்லாம் இசைந்து நடத்தல் கண்டு, தீயோர் சிலர் அவரை ஏமாற்றி அவர்க்குள்ள பொருள்களையெல்லாங் கவர்ந்து கொள்ளவும் முயல்வர். ஆதலால், தம்பால் வந்து சேர்வாரிடத்தும், தாஞ் சென்று சேருமிடத்தும், இனிய இயல்புடையார் ஒருவர், தாம் எவ்வளவுக்கு எவ்வெவர்பால் இனிமையாய் எளிமையாய் நடத்தல் வேண்டுமென்பதைப் பகுத்தாராய்ந்து நடத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவர் எல்லாவகையினுந் தம்மிற் குறைந்த மற்றொருவர்பால் அளவுக்கு மிஞ்சிய இனிமையும் எளிமையுங் காட்டி நடப்பராயின், அம் மற்றவர் அவ்வுயர்ந்தோரின் மேம்பாட்டைக் கருதாமல் அவரைத் தமக்கு இசைந்தபடி யெல்லாம் நடப்பித்து அவரால் உலகத்திற்கு உண்டாகும் நன்மைகளைத் தடைசெய்து நிற்பர்; அவரைத் தாம் இழிவாகவும் நினைப்பர். அங்ஙனமே, அவ்வினியவர் தம்மினும் உயர்ந்தார்பால் அளவுகடந்த அன்பு வைத்துத் தம்மை அவர்க்கு மிக எளியராய் வைத்து நடப்பரானால், அவர் அவரால் தாழ்ந்த அலுவல்கள் பார்க்கும்படியாகவும் ஏவப்படுவர். தமிழ்ப் புலவரிற் சிலர் தம்மினுஞ் செல்வத்தால் மிக்காரிடத்தும் தமக்கு உதவிசெய்வோரிடத்தும் வரைகடந்த எளிமை காட்டி அவர்களைப் பொய்யுரைகள் பலவற்றாற் பலபடப் புகழ்ந்து நடத்தலால், அச் செல்வரும் பிறரும் அப்புலவர் பாலுள்ள அழியாத கல்விச் செல்வத்தின் ஒப்புயர்விலாப் பெருமையையும் உணராராய், அவரைத் தாழ்வாக நினைத்துத் தம்மோடு சூதாட அழைத்தும், தம் காமக்கிழத்தியர்பால் தூதாக ஏவியும், இன்னுந் தாஞ்செய்யுந் தகாத செய்கைகட்கெல்லாம் அவரை உடன்படுத்தியும் தமிழ்க் கல்வியின் உயர்வையும், அது கற்றார் பெருமையையும் பாழாக்குகின்றனர். அதனால், அப்புலவர்கள் தமது கல்வியறிவு கொண்டு உலகத்திற்குச் செய்யும் நலங்களெல்லாந் தலையெடாமல் ஒழிகின்றன. ஆ! தமிழ்ப் புலவர்கள் தமது கல்வியினுயர்வையுந் தமதுயர்வையும் எள்ளளவும் உணர்ந்து பாராமல், நிலையில்லாப் பொருளைப் பெற்று நிலையில்லாத் தமது புலாலுடம்பை ஓம்புதற் பொருட்டாகப் பொருளீவாரைப் பலவாறு பொய்யாகப் புகழ்ந்து பாடித் தமிழின் சிறப்பையும் அது கற்றார் பெருமை யையும் பாழாக்குதல் பெரிதும் இரங்கத்தக்க தொன்றாம்! இது கொண்டு, பொருளுதவி செய்யுஞ் செல்வரிடத்தும் பிறரிடத்தும் அன்பின்றித் தலையெடுப்போடு நடக்கவேண்டுமென்பது நமது கருத்தாக நினையற்க. தமதுபெருமையை இழவாமலே தமிழ்ப் புலவர் தமக்கு உதவி செய்வார்பால் அன்போடும் நன்கு மதிப்போடும் நடந்து கொள்ளலாம். சில நேரங்களில் அவர்க்குள்ள உண்மைப் பெருமைகளை உண்மையாகவே புகழ்ந்து பேசி அவர்க்கு உள்ளக் கிளர்ச்சியினை எழுப்புதலுந் தீதன்று. ஏனென்றால், மக்களுள் எவரும் முற்றுமே நல்லரும் அல்லர், முற்றுமே தீயரும் அல்லர்; எத்துணை நல்லோரிடத்தும் தீய இயல்புகள் சிலவுங் காணப்படும்; எத்துணைத் தீயோரிடத்தும் நல்ல இயல்புகள் சிலவுங் காணப்படும்; ஒருவரிடத்துள்ள தீய தன்மைகளை எடுத்துச் சொன்னால் அவர் அதுகேட்டு நெஞ்சம் புண்ணாகி அன்பினை இழப்பர்; அதனாற் பெரும் பகைமை விளைதலுங் கூடும்; ஆனது பற்றித் தீயவற்றை எடுத்துக் கூறுவது பயன்படாமையோடு தீயவற்றையும் பயக்கும்; மற்றுத் தீயராயிருப்பவர் மாட்டும் அவர்பாலுள்ள நன்மைகளை ஆழ்ந்தாராய்ந்து அவற்றை அவர் முன்னிலையிலும் பிறர் முன்னிலையிலும் எடுத்துக் கூறினால், அதனைக் கேட்ட அவர் மனவெழுச்சி மிகப்பெற்றுத் தம்மை உயர்த்துக் கூறினார்பால் அன்புடையராதலோடு, தாமும் நல்வழியில் நடத்தற்கு மிக விரும்புவர்; எல்லாரிடத்தும் எவ்வகையிலேனும் நன்மை யிருத்தல் திண்ணமாதலால் அந்த நன்மையை மட்டும் ஆராய்ந்தெடுத்துப் புகழ்ந்து பேசுதல் பொருத்தமாதலோடு, புகழ்வார் புகழப் படுவாராகிய இருதிறத்தார்க்கும் அன்பினைத் தோற்றுவித்துப் பல நலங்களையும் பயக்கும். ஆகவே, ஒருவரைப் புகழ்தற் பொருட்டு அவரிடத்தில் இல்லாத நலங்களை இருப்பனவாகக் கட்டிப் பொய்த்துப் பேசுதல் வேண்டாம். இஞ்ஞான்றைத் தமிழ்ப் புலவரிற் பலர் ஒரு செல்வரிடத்தில்லாத நலங்களை இருப்பனவாக வைத்து வாய்கொண்ட மட்டும் மனங்கொண்ட மட்டும் தமிழ்ப் பாக்களாற் பாடுதலையே புகழ்ச்சியாகப் பிழைபடக் கருதுகின்றார்கள். தாங் கூறுவது பொய்யென்பது அப்புலவர் தம் மனத்திற்கும் நன்றாய்த் தெரியும் ; அவராற் பாடப்பெறுஞ் செல்வரும் அப்பொய்ப் புகழ்ச்சியுரை கேட்டு மகிழ்வரேனும் அவருள்ளத்திற்கும் அது பொய்யென்று நன்றாய்த் தெரியும்; இன்னும் அவ்விருவரையுஞ் சூழ்ந்திருப் பார்க்கும் அது பொய்யென்று தெரியும்; இங்ஙனம் எல்லாரும் பொய்யென்றறிந்த அப் புகழ்ச்சியுரை பின்னர் எல்லாரானும் ஏளனஞ் செய்யப்பட்டு அருவருப்பினைத் தருதலால், அது பிறகு நிலைபெறாமலே யழிந்து அப்புலவர்க்கு ஏதோர் உண்மைப் பயனையுந் தராமல் ஒழிகின்றது. இவ்வாறன்றி, அச் செல்வர்பால் உண்மையாக உள்ள உயர்ந்த தன்மைகள் சிலவற்றை மட்டுந் தெரிந்தெடுத்து, அவற்றை அவர் உருக்கத்தோடு சில சொற்களா லேனும் சுருக்கமுந் திறமுடைய சில செய்யுட்களாலேனும் புகழ்ந்து உரைப்பராயின், உண்மைப் புகழுரைகளாகிய அவை கூறுவார்க்குங் கேட்போர்க்கும் உள்ளக் கிளர்ச்சியினையும் நிலைபெற்ற மகிழ்ச்சியினையுந் தந்து பெரும் பயன் விளைக்கும். பண்டைக் காலத்திருந்த செந்தமிழ்ப் புலவர்கள் தமக்கு உதவி செய்த செல்வர்களை அவர்பாலுள்ள உண்மை நலங்களைக் கண்டு புகழ்ந்து பாடியதும், அச் செல்வர்கள் ஒரோவொருகாற் பிழைபட நடந்தவழி அப் பிழைகளை மிக இனிதாயும் மெலிதாயும் எடுத்துக்காட்டி அவர் திருந்துமாறு செய்ததும் புறநானூறு, பத்துப்பாட்டு, பதிற்றுப்பத்து முதலிய தொகை நூல்களிலுள்ள ஒப்புயர்வில்லாச் செந்தமிழ்த் தேன் பிலிற்றும் பைந்தமிழ்ப் பாடல்களால் நன்கு விளங்கா நிற்கின்றன. மற்று இக் காலத்தவரான தமிழ்ப் புலவர்கள் புகழ்ந்து கட்டும் பாட்டுகளோ பொய்யும் புளுகும் மலிந்தனவாய்க் கையிலெடுத் தற்கும் அருவருப்பினைத் தருகின்றன. எனவே, இனிய இயல்புகளுங் கல்வியறிவும் வாய்ந்தோர் தாம் பிறர்பால் ஓர் உதவியை வேண்டிஅவரைச் சார்ந்தொழு குங்கால், தம்மை அவரினுந் தாழ்த்திக் கொள்ளாமலும், அவர்பாலில்லாத நலங்களை இருப்பனவாகப் பொய்படச் சொல்லிப் புகழாமலும், தம்மையுந் தம்பாலுள்ள கல்விப் பெருமையினையும் பாதுகாத்துக்கொண்டு, தமக்குதவி செய்யுமவர்பாற் காணப்படும் சில நல்லியல்புகளை மட்டுங் கிளர்ச்சியும் நன்மையும் உண்டாகும் அளவறிந்து அளவாகப் புகழ்ந்து பேசல் வேண்டும். இங்ஙனம் முறைதெரிந்து ஒழுகப் பெற்றாற், பிறரை வசியப்படுத்தித் தாம் வேண்டியவற்றைப் பெறுதல் எளிதிற் கைகூடும். இனி, இவ்வாறெல்லாம் முறை வழுவாமல் நடந்துந் தமக்கு இணங்கி உதவிசெய்வாரைப் பெறுதல் இயலாமற் போனால் என்செய்வதெனின்; அதுபற்றிச் சிறிதும் மனந் தளர்தல் ஆகாது. இந் நிலவுலகம் எவ்வளவோ பெரிதாயிருக்கின்றது! இதன்கண் உயிர்வாழும் மக்களும் எவ்வளவோ பெருந்தொகை யினராயிருக் கின்றனர். அவருட் சிலர் நுமக்கு உதவி செய்யாரானால், அவ்வளவில் எல்லாரும் அங்ஙனமே யிருப்பரென எண்ணி மனந்தளர்தல் பொருத்தமன்று. முதலிற் சிலமுறை பழகிப் பார்த்த சிலர் நுமக்கு ஏதோர் உதவியும் செய்திலராயின் பின்னும் பின்னும் அவரையே அவ்வுதவிக்கு எதிர்பார்த்து ஏமாந்து நிற்றல் பெரிதுங் குற்றமுடைத்து. எக்காலத்தும் எவ்விடத்தும் தம்முள் ஏறக்குறைய ஒத்த இயல்புடைய இருவருக்கே நேசமும் தமக்குள் உதவி செய்துகொள்ளும் உள்ளக் கசிவும் உண்டாகின்றன. எவ்வாற்றானும் ஒற்றுமையில்லாத இருவர்க்கு அவையுண்டாதல் அரிதினும் அரிது. ஞாயிற்றினைக் கண்டால் நெருப்பைக் கக்குந் தீக்கண்ணாடி திங்களைக் கண்டால் அங்ஙனஞ் செய்யுமோ? திங்களைக் கண்டால் நீரைக் கசியவிடும் நிலாமணிக்கல் ஞாயிற்றினெதிரில் அவ்வாறு செய்ய மாட்டுமோ? இருப்பூசியை இழுக்குங் காந்தம் மரவூசியை அங்ஙனம் இழுக்குமோ? இவை போலவே, மக்களியற்கையும் பெரும்பாலும் அமைந்திருக் கின்றதென அறிந்துகொண்மின்கள்! ஒருவரைக் கண்டால் மனம் உவக்கும் ஒருவர் மற்றொருவரைக் கண்டால் வெறுக்கின்றனர். ஒருவருக்கு அஞ்சிப் பணிந்து அடங்கியொழுகும் ஒருவர், பிறரொருவர்க்குச் சிறிதும் அடங்காராய் அவரைக் கண்ட வுடனே சீறிச் சினக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் ஏது என்னை யென்று ஆராய்ந்தால் ஒன்றும் புலனாவதில்லை. இவ்வாறு ஏதோரியைபுமின்றி ஒருவரைக் கண்டால் உவத்தலும், மற்றொரு வரைக் கண்டால் வெறுத்தலும் மக்களுள் இயற்கையாக நிகழப்பெறுதலின், அவ்வவ் வியற்கைப்படி பொருந்தும் இருவர்க்கே அன்பும் தமக்குள் உதவுந் தன்மையும் உண்டாம். இயற்கையிலேயே பிறர் ஒருவர்பால் அன்பு நிகழப்பெறும் ஒருவர்க்கு அவர் இனியராய் இசைந்து ஒழுக, ஒழுக அவர்க்கு அவர்பால் அன்பு மேன்மேல் முறுகி வளரும். இங்ஙனந் தத்தம் மியல்புக்குப் பொருத்தமான இயல்பினர் இவரென்று செவ்வையாகத் தெரிந்துகொண்ட பின்னர், அவர்பால் அன்பும் எளிமையுங் காட்டத்தக்க எல்லையறிந்து பழகுதல் வேண்டும். மக்களறிவு சிற்றறிவேயாதலானும், அச் சிற்றறிவுகொண்டு ஒவ்வொருவரது நிலையான இயற்கையை இன்னதென்று திட்டமாய் அறிதல் இயலாமையானும் மக்களியற்கையும் என்றும் ஒருபடித்தாய் இராமற் காலத்திற்கும் இடத்திற்கும் உலக நிகழ்ச்சிகட்கும் இணங்க இடையிடையே மாறக் காண்டலானும், முதலில் அவர் நமக்குப் பொருத்தமானவர் என்றுணர்ந்து, நெருங்கிப் பழகப் பழக அவரது தன்மை தமக்கு முற்றும் மாறாவதென்று கண்டாற், பகைமையுண்டாகாமலும், தாம் அவரைவிட்டு நீங்குவதை அவர் உணராமலும், அத்துணை மென்மையாக அவர்பாற் கொண்ட தொடர்பினை ஒழித்துவிடுக. அங்ஙனம் எல்லா மக்களுமே மாறுந் தன்மையுடையராயின், மாறாத தொடர்புடையாரைத் தெரிந்துகொள்ளுதல் யாங்ஙனமெனின்; மக்கள் மாறுந் தன்மையினரென்றது அவருட் பெரும்பாலாரிடங்காணும் இயல்பு பற்றியேயாம்; மற்று மாறா இயற்கையினராய் நிலைபெற்ற தொடர்பும் நேயமும் கொள் வாரும் கொள்ளத் தக்காரும் அவருட் சிறுபான்மையோர் எங்கும் உளராகலின் அவரைத் தெரிந்து அவர்பால் நிலைபேறான நட்புவைத் தொழுகல் இயல்வதேயாகும். அற்றேல், அத்தகை யாரைத் தெரிந்து கொள்ளுதற்கு வழி யாதெனின்; அத்தகையவர் தாங்காணும் பலரிடத்தும் மலர்ந்த முகனும் இனிய சொல்லும் உடைய நல்லராய் ஒழுகுவாரேனும், அவரெல்லாரிடத்தும் நிலைபேறான தொடர்பும் நேயமும் வைப்பாரல்லர்: அவ்வாறா யினுந் தம்மிடத்து மாறாத நேயமும் நட்புங் கொண்டு நிலைதிரியாது நடப்பார் சிலரைத் தாமே முயன்று பெறாமல் ஊழ்வழியே பெற்றக்கால் அவர் மாட்டுத் தாமும் நிலை திரியாத அன்பும் அருளும் பூண்டு நடப்பர். அவர் அத்தன்மையராதல் எவ்வாறு தெளியப்படுமெனின்; தம்பால் நிரம்பிய அன்பும் நேயமும் வைத்து ஒழுகுவோர் அறிந்தோ அறியாமலோ குற்றமானவைகளைச் செய்து பிழைபட்டு நடந்தவிடத்து, அக் குற்றங்களையும் பிழைகளையும் அவர் தமதுள்ளத்தில் நிலைபெற வையாமலும், அவைகளைப் பாராட்டாமலும் அன்பின்கண் முன் நின்றபடியே ஒரே தன்மையாகப் பின்னும் நிற்பர். இதுவே அவரைத் தெளிதற்குரிய வழியாம். ஏனெனிற், குற்றங்களையும் பிழைகளையும் பாராட்டாமல் இருப்பதற்கு மாறாத பேரன்பே ஏதுவாகும். தம் அன்பிற் குரியவர்பாலுள்ள குற்றங் குறைபாடுகள் அவர்பால் உண்மையன்பு கொண்டார்க்குச் சிறிதுந் தோன்றா. உண்மையன்பின் நிலை பிழைபாடுகள் நேர்ந்தவிடத்துத்தான் இனிது விளங்கிடத் தோன்றும். கரிய இருள் சூழ்ந்த இராக்காலத்தில் விளக்கினொளி சிறந்து காணப்படுதல் போலப் பகலவனொளி பரந்த பகற்காலத்திற் காணுமோ? இங்ஙனமே இழுக்குப்படாத காலத்தில் ஒருவர்பால் ஏனையெல்லாரும் பொதுவான அன்புகாட்டி ஒழுகுதல் இயற்கையேயாம். ஆனால், அவர் இழுக்குப்பட்ட விடத்தோ அவரைக் சூழ்ந்து நின்றாரெல்லாரும் அவர்பால் அன்பிலராய் அவரைவிட்டு அகன்று போவர் எனினும், அவரிடத்து மெய்யன்பு கொண்டார் ஒருவர் இருப்பினும், அவர் அவரைவிட்டு அகலுதற்கு இறையளவும் மனம் பொறாராய் அவரோடுடன் வருந்தி அவர்க்கு உறுதுணையும் ஆறுதலுமாயிருப்பர். பொருளும் புகழும் பெருமையுங் கொண்டு அவர் உயிர் வாய்ந்தபோது அவரோடுடன் கலந்து களித்தவாறு போலவே, அவர் பொருளும் புகழுங் குன்றிச் சிறுமையுற்று வருந்தும்போதும் அவரோடுடன் வருந்தி முன்னையிலும் அன்பு மிகப்பெற்று வாடியிருப்பர். உண்மையன்பர் செயல் இவ்வாறாதல் தெரிதற்கே கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை, நீட்டி யளப்பதோர் கோல் என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவரும் அருளிச்செய்தார். தம் உண்மையன்பைப் புலப்படுத்தற்குத், தம் நண்பர் இழுக்குப்படுங் காலம் உதவி செய்தலின், அக்காலத்தினை மெய்யன்பர் வெறார் என்பதுங் கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு, நாளிழுக்கம் நட்டார் செயின் என்று நாயனார் அருளிச்செய்த வாற்றால் நன்கு பெறப்படும் . மாறாத அன்புடையார் தமது அன்பைக் கவர்ந்தார்பால் இங்ஙனம் மாறின்றி யொழுகும் நீர்மையராதலால், அவரைத் தெரிந்து அவர்தம் அன்பைப் பெறுதற்குரிய முறைகளைக் கடைப்பிடித்துச் செய்தலினும் நன்மை தரவல்லது மனிதவசியத்தினை நாடுவார்க்குப் பிறிதொன்று இல்லை. மாறாத அன்புடைய உயர்ந்தார் ஒருவர் இருவரை நண்பராகப் பெற்றாலும் இம்மை மறுமைப் பயன்களெல்லாந் தப்பாது பெறுதல் திண்ணமேயாம் என்க. இங்ஙனஞ் சிறந்த அன்புடையார் சிலரது நட்பைப் பெறுவதிற் கண்ணுங் கருத்துமாயிருந்து முயன்றுவரினும், சிலர்க்கு அத்தகைய மேலோர் கிடைத்தல் அரிதாயும் போகின்றது. மேம்புல அறிஞர் ஒருவர் தமது இல்லத்தினுள்ளே தாம் தனித்திருக்கும் ஓர் அறையில் தாம் அமரும் இருக்கையின் பக்கத்தே மற்றுமோர் இருக்கை இடுவித்திருந்தார். அவர் தம் வாழ்நாள் எல்லை அணுகும் வரையில், அவ்விருக்கையில் வந்து அமர்வார் எவரும் இன்றி அது வெறுமையாயிருந்ததைக் கண்ட ஒரு நண்பர் ‘அஃது அங்ஙனம் இருப்பது ஏன்? என்று வினவ, என் மனம் ஒத்த உண்மையன்பர் ஒருவரைப் பெற்றால், அவரோடு தனியிருந்து அளவளாவுதற்காக இங்கு இவ்விருக்கையை இடுவித்தேன்; என் வாழ்நாளும் முடியப்போகின்றது; ஆயினும் அத் தன்மையினர் ஒருவரை இதுகாறுங் காணப்பெற்றிலேன்; அதனால், இவ்விருக்கை இன்னும் வெறுமையாகவே கிடக்கின்றது! என்று அவ்வறிஞர் விடைபகர்ந்தனராம். இதுகொண்டு, ஒருவர் அன்பிலும் அறிவிலும் உயரஉயர அவர் தமது உயர்ச்சிக்கு ஏற்றவர் மற்றொருவரைப் பெறுதல் அரிதாய் முடியுமென்பதும் உணரல் வேண்டும். ஏனெனில், உயர்ந்த அன்பும் உயர்ந்த அறிவும் வாய்க்கப் பெற்றோர் நூறாயிரவரிலும் ஒருவர் இல்லை. ஆகையால், அத்தகைய உயர்ச்சி வாய்ந்தார் அங்ஙனமே உயர்ச்சி வாய்ந்த பிறரொருவரை யாங்ஙனம் பெறுவர்? இந்நிலவுலகத்திற்கு ஒரே ஒரு ஞாயிறும் ஒரே ஒரு திங்களு மல்லவோ இருக்கின்றன? ஒரு ஞாயிறு தன்னையொத்த பிறிதொரு ஞாயிற்றினைப் பெறுதலும், ஒரு திங்கள் தன்னை யொத்த பிறிதொரு திங்களைப் பெறுதலும் இயலாமை போல, மிகச் சிறந்த அன்பும் அறிவும் உடைய ஒருவர் தம்மோடொத்த இயல்பினர் மற்றொருவரைப் பெறுதலும் பெரும்பாலும் இயலாததாகின்றது. என்றாலும், தமதியல்பிற்கு முழுதும் ஒத்தவர் எவரும் அகப்படவில்லையேயென மனந்தளர்ந்து, மக்களெல் லாரிடத்தும் வெறுப்புற்று நடத்தல் ஆகாது. அன்றி, அங்ஙனம் எல்லாரையும் வெறுப்பவர் மக்கள் கூட்டத்திற் சிறிதுங் கலந்திருத்தலும் ஆகாது; அவர்கள் காட்டிலோ மலையிலோ மலைக்குகையிலோ மரப்பொந்திலோ தனித்திருந்து காலங் கழித்தல் வேண்டும். மக்கள் இனத்திற் கலந்திருப்பவரோ ஒவ்வொருவரிடத்துமுள்ள குற்றங்களைக் கருதாது, அவ்வவர் பாலுள்ள நன்மைகளிலேயே கருத்தை வைத்துச் சிறிதேறக் குறையத் தம்மோடொத்தவர்பால் நேயம்பூண்டு ஒழுகுதல் வேண்டும். இனி, நிலைபெற்ற அன்பும் உயர்ந்த அறிவும் உடையாரைப் பெறும் நோக்கம் இன்றித், தாம் உலகத்திற்குச் செய்ய வெண்ணிய நன்மைகளின் பொருட்டு, மக்கள் பலரின் அன்பையும் உதவியையும் பெறவேண்டினார் கைக்கொள்ளுதற்குரிய வசியச் செயல்கள் சிலவற்றை ஈண்டெடுத்துக் கூறுவாம். தாம் நிறைவேற்றக் கருதியதொரு நன்மையைச் செய்யத் துவங்கும் முன் அந் நன்மையின் வகைகளைப் புறக்கண்ணின் எதிரே காண்பது போல அகக்கண்ணின் எதிரே தெள்ளத் தெளியக் கண்டு அக் காட்சியில் நினைவை உருக்கத்தோடும் வைத்துச் சிலநாட் பழகுக. தம்மால் விழையப்பட்ட நேயர் ஒருவர் தம்மை விட்டுப் பிரிந்து போயபின், அவரை அன்போடு நினைந்துருகும் மற்றவர் தன்மையை நினைந்து பார்மின்கள்! தம் அன்பரின் சாயலையும், அவருடைய கண் வாய் மூக்கு முகம் கூந்தல் கை கால் முதலிய உறுப்புக்களின் வடிவையும், அவர் பேசும் முறை இருக்கும் நிலை நடக்கும் நடை அசையும் வகை முதலியவைகளையும் நினைந்து நினைந்து சொல்லிச்சொல்லி உருகுவது அவர்பால் அன்பு பூண்டார்க்கு இயல்பாக நிகழ்கின்றது; இவ்வாறு அவருடைய ஒவ்வோர் உறுப்புகளையும் அவற்றின் வடிவுகளையும் அவற்றின் அசைவுகளையும் வகுத்து வகுத்து நினைத்தலாலும், அவற்றை விளக்கி விளக்கிப் பேசுதலாலும் அங்ஙனஞ் செய்வாரது உள்ளம் அவ்வன்பரின் உருவத்தைத் தன்னெதிரே தெளியக் கண்டு அதன்பால் அன்பு நெகிழப் பெறுகின்றது. தம்மால் விரும்பப்பட்டாரது வடிவத்தை வெளியே புறக்கண்ணெதிரிற் காண்பார் அதன் அமைப்புகளைத் தெளிவுறக் கண்டு கண்டு மகிழ்ந்து அவர்பால் அன்புமீதூரப் பெறுதலும், தம்மால் விரும்பப்படாதாரை அங்ஙனம் வகை வகையாய் உற்று நோக்குதல் இன்மையின் அவர் அவரது உருவத்தை நினைந்து அன்புகொளப் பெறாமையும் நாடோறும் உலக நிகழ்ச்சியில் நன்கறியக் கிடத்தலால், அதுபோல தாம் விரும்பியதொன்றைப் பகுதி பகுதியாய்ப் பிரித்து ஆராய்ந்து காண்பார்க்கும் அப்பொருள் அவரது அகக்கண்ணெதிரே உருவு கொண்டு தெற்றெனப் புலப்பட்டுத் தோன்றாநிற்குமென உணர்ந்து கொள்க. அவ்வாறு விளக்கமாகத் தோன்றக் கண்டதொரு நன்மையில் நினைவை முனைக்க நிறுத்தவே, அந் நினைவு தன்னோடு இயைபுடைய நினைவுவெளியில் எங்கும் அத்தோற்றத்தினை விளைவிக்கும்: அஃது அவ்வாறு விளையவே, அவ்வெளியோடு இயைந்து நிற்கும் நல்லோர் பலர் உள்ளத்திலும் அந் நன்மையின் றோற்றம் புலனாகி அவரெல் லார்க்கும் அந் நன்மை செய்தலிற் கருத்துண்டாம். அதன் பின்னர், அந்நன்மையின் திறத்தையும் அதனால் உலகுக்கு உண்டாம் பயனையும் அவைக்களத்திலாதல், புதினத்தாள் களிலாதல் (News papers) எடுத்துரைத்தால், முன்னரே அந் நினைவு ஏறப்பெற்றார் பலரும் அதற்கு உடம்பட்டாராகி வேண்டும் உதவிகள் புரிந்து அதனை இனிது நிறைவேற்றி வைப்பர். தாம் கருதியதொரு நன்மையின் கூறுபாடுகளை அகத்தே இங்ஙனம் விளக்கமாகக் கண்டு அதன்கட்டமது நினைவை முனைக்க நிறுத்தும் வழி தெரியாதவர்களுக்கு அதனைப் புறத்தே பலர்க்கும் ஏற்பக்காட்டி, அவரால் அதனை நிறைவேற்றிக் கொள்ளுதல் இயலாததாகும். எதுபோலவெனின், ஒருவர் தம்மால் விரும்பப்படாத மற்றொருவரது வடிவ அடையாளங் களை அறிய மாட்டாமையின், அவைகளைப் பற்றிக் கேட்க நேர்வார்க்கு அவர் அவ்வடையாளங்களை எடுத்துச் சொல்ல இயலாமல் விழித்தல்போல வென்க. தாங் கருதிய நன்மையின் கூறுபாடுகளைத் தாமே நன்குணரமாட்டாதார் அவற்றைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லுமாறு யாங்ஙனம்? எனவே, புறத்தே ஒருவரை நன்குணர்ந்து அவர்மாட்டு அன்புமீதூரப் பெறுவா ரெல்லாம் அவருடைய வடிவ வகைகளைத் தெளிய அறிந்திருத்தல் போல, அகத்தேயும் ஒரு நன்மையின் கூறுபாடுகளைத் தெற்றென வுணர்ந்து அதன்கண் வேட்கை மீதூரப் பெறுவாரும் அவற்றைத் தெளியவுணர்ந்து அவை எல்லார் உள்ளங்களிலும் பதியுமாறு செய்யவல்லராவரென்க. அவ்வியல்பினை ஓர் எடுத்துக் காட்டான் விளக்குவாம். தம்முடைய நினைவுகளைத் தொலைவிலுள்ளார்க்குத் தோற்றுவிப்பதில் தேர்ந்த பழக்கம் வாய்ந்த ஒரு துரைமகனார் முதன்முதல் தாம் அப் பழக்கத்தைச் செய்யத் துவங்கி அதனைச் செய்து பார்த்தமையினைப் பின்வருமாறு வரைந்திருக்கின்றார். 1881- ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலைக்காலத்தில், மக்கள் தம் எண்ணமானது விளைக்கக் கூடிய பேராற்றலைப் பற்றி ஒரு நூலிற் கற்றறிந்ததும், இருபத்தைந் தாண்டும் பதினோராண்டும் உள்ள இரண்டு பெண்மக்கள் எனக்குப் பழக்கமானவர்களாய் இருந்தமையின், அவ்விருவரும் கென்சிங்டன் நகரத்தில், ஓகார்த் தெருவில், 22 ஆவது இலக்க முள்ள இல்லத்தின் இரண்டாம் மேன்மாடத்தின் முகப்பின்கண் இருக்கும் படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருக்கையில் அவர்கள் பக்கத்தே ஆவியுருவில் யான் போய் நிற்க வேண்டுமென எனக்குள்ள எண்ணத்தின் முழு ஆற்றலோடும் தீர்மானஞ் செய்தேன். அப்போது யான், ஓகார்த் தெருவிற்கு மூன்று மைல் எட்டியுள்ள கில்டேர் தோட்டம், 23 ஆம் இலக்கமுள்ள வீட்டை எனக்கு உறைவிடமாய்க் கொண் டிருந்தேன். இங்ஙனம் ஆராய்ந்து பார்க்க எண்ணிய எனது கருத்தை அவ்விருவர்க்கும் எந்த வகையிலும் தெரிவித்திலேன்; ஏனெனில், இந்த ஞாயிற்றுக் கிழமை யிரவு யான் படுக்கைக்குச் சென்றபிறகுதான் இங்ஙனஞ் செய்து பார்க்க மனவுறுதி செய்தேன். யான் அவ்விடத்திற் போயிருத்தற்கு உறுதி செய்த நேரம் நள்ளிரவு ஒரு மணியாகும்; எனதுருவத்தைக் கட்புலனுக்கு விளங்கும்படி செய்யவேண்டு மென்றும் உறுத்து நினைத்தேன். அதற்குப் பின்வந்த வியாழக்கிழமையன்று மேற் குறிப்பிட்ட பெண்மக்களைப் பார்க்கச் சென்றேன்; அவர்களோடு பேசிக்கொண்டு வருகையில் (யான் அந் நிகழ்ச்சியைக் குறித்து ஏதொன்றுஞ் சொல்லாதிருக்கவும்) முந்திய ஞாயிற்றுக் கிழமையிரவு தனது படுக்கையண்டை யான் நிற்றலைக் கண்டு தான் பெரிதுந் திகிலடைந்ததுடன், எனது ஆவி வடிவம் தன்னை நோக்கி வருதலைப் பார்த்துத் தான் இட்ட கூச்சல் தன் சிறிய தங்கையையும் எழுப்பிவிட, அவளும் அதனைக் கண்டாள் எனவும் அப் பெரிய பெண்பிள்ளை எனக்குச் சொன்னாள் இவ் வுண்மை நிகழ்ச்சியினால் தமது வடிவத்தை உறுத்து நினைத்து அதனைத் தமக்கு அறிமுகமானவர்கள் ஆவியுருவிற் காணுமாறு செய்தல் கூடும் என்பதும், அதுபோலவே தாம் நிறைவேற்றக் கருதிய நன்மைகளை அவற்றின் கூறுபாடுகளோடு உறுத்து நினைந்து அவற்றைப் பிறர் உள்ளங்களிற் பதியுமாறு செய்தலும் இயலுமென்பதும் நன்கு புலப்படுகின்றன அல்லவோ? இவ்வுண்மையை வற்புறுத்துதற்கு மேற்கூறியபடியாகவே நிகழ்ந்த மற்றுமோர் உண்மை நிகழ்ச்சியினையும் இங்கெடுத்துக் காட்டுவாம். ஆங்கிலமாதர் ஒருவர் தமக்குத் தெளிவுக்காட்சி யுணர்வு உண்டாகல் வேண்டி, அதிற் றம்மைப் பழக்கத்தக்க மற்றோர் ஆங்கிலமாதர்பாற் றம்மை ஈடுபடுத்தினார். 1886 ஆம் ஆண்டு தாம் அம் முறையிற் பழகுகையில், தாம் தமது புறப் பொருளுணர்வினை இழந்து அறிதுயிலிற் சென்ற அளவானே, தம் அன்னையார்க்கு நண்பரான ஒரு மாதரின் உருவந் தம்முன்னே தோன்றக் கண்டார்; கண்டபின் நிகழ்ந்த நிகழ்ச்சி களைப் பற்றி அவர் பின்வருமாறு கூறுகின்றார்: பொய்த் தோற்றத்தால் ஏமாறினேனோ இல்லையோ என்பதை எனக்கும் எனது மனநிறைவிற்கும் இசைவாக மெய்ப்படுத்திக்கொள்ளும் பொருட்டு யான் யாது செய்தல் வேண்டும் என்பதைப் பற்றி யான் எனக்குள்ளேயே வழக்காடிக் கொண்டிருந்தேன். உலக வாழ்க்கையின் முயற்சியிலேயே ஈடுபட்ட இயற்கையறிவு வாய்ந்தவனும் எனக்குத் தெரிந்த வனுமான ஓர் ஆண் மகனிடத்தில் இதனைச் செய்து பார்க்கலா மென்று பளிச்செனத் தீர்மானித்தேன், பலவற்றைப் பற்றி அவனுடைய கருத்துகளும் என்னுடைய கருத்துகளும் பெரிதும் முரண்பட்டவைகள்; என்னுடைய கொள்கைகளை ஒரு சிறிதும் ஏற்பவனும் அல்லன்; இப்போது யான் செய்து பார்க்க விரும்பிய ஆராய்ச்சிகளிலும் பழக்கங்களிலும் அவன் எட்டுணையும் எனக்கு ஒருப்பட்டு வராததோடு, ஏமாற்றுவார் கையிற் சிக்கிக்கொண்ட ஒரு பேதைமைக் கருவியென்றும் நினைத்து என்னை நகுவான். அத்தகைய ஆண்மகனே எனது ஆராய்ச்சிக்கு ஏற்றவன் என்று உறுதி செய்தேன். என்னெதிரே தோன்றிய நரை முதியோள் யான் உறுத்து நினைக்கும்படி என்னிடத்தொரு விருப்பத்தைப் பதிய வைத்தாள்; தனக்குள்ள அக்கறையால் என்னை நோக்கி வருவது போலவும் காணப் பட்டாள். அவளது எண்ணமும் எனது எண்ணமும் ஒன்றா யிருப்பதாக உணர்ந்தேன்; உடம்பும் மனமும் ஒருமிக்க உறுத்து நினைந்தேன்; அவ்வாறு செய்தது என்னை அங்ஙனங் குப்புறப்படுக்க வைத்தது; யான் அவ்வாண்மகன் அருகிலிருந்து அவனுதவியை வேண்டுவதாக அவன் உணர்தல் வேண்டு மென்றும், யான் ஏதொன்றும் எடுத்துச் சொல்லாமலே அவனே எனக்கு வலிந்தெழுதித் தான் இன்றிரவு என் வயமாய் நின்றதனைத் தெரிவிக்க வேண்டு மென்றும் எண்ணினேன். அதன் பின் அந் நரை முதியோள் மறைந்து போயினாள். யான் களைப்புடன் நாற்காலியில் அமர்த்தப் பட்டிருந்தேன்; அதன்பின் என்றுமுள்ள பழக்கப்படி யான் இயற்கையான நிலையில் திரும்பவும் இருப்பதுணர்ந்தேன். நரைமுதியோள் எனக்குத் தோன்றியதையும், இது நிகழ்ந்த நாளையுங் குறித்துக் கொண்டோம்; ஆனால், இந்நிகழ்ச்சியைப் பற்றி எவரிடத்தும் பேசிற்றிலோம். சில கிழமைகள் கடந்தன; அதன் பிறகு அவ்வாண்மகனிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது; சூலைத்திங்களில் ஒரு நாள் மாலைக் காலத்திற் குறிப்பிட்ட மணி நேரத்தில் யான் எவ்வகையான முயற்சியில் இருந்தேன் என வினவியும், அந் நேரத்தில் தான் தூங்கிக் கொண்டிருக்க அப்போது கனவில் தான் சில நிகழக் கண்டமையின் அவற்றைப் பின்னர் எனக்குத் தெரிவிப்பதாகவும், தன்னிடமிருந்து ஏதோ யான் வேண்டியதுபோல் தனக்குண்டான ஓர் உணர்ச்சியோடும் அக் கனவினின்றுந் தான் விழித்துக் கொண்டதாகவுங் கூறித் தான் அத்தனை கருத்தாய்க் குறித்துச் சொல்லிய நேரத்தில் தன்னைச்சுட்டி யான் ஏதேனுஞ் செய்திருந் தால் தனக்கு அதனைத் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்டும், அவ்வாண்மகன் அதில் எழுதியிருந்தான். அதன் பின்னர்தான், யான் இங்கே விரித்தவை களை அவனுக்குத் தெரிவித்தேன். இவ்வுண்மை நிகழ்ச்சியினாலும், ஒன்றைப் பாகுபாட்டுடன் தெளிவுபட உறுத்து நினைந்து, அதனைப் பிறருள்ளத்திற் றோன்றுமாறு செய்தல் கூடுமென்பது நன்கு புலனாகா நிற்கும். இனி, மக்களினது உள்ளம் ஒரு நொடிப்பொழுதேனும் ஒரு நினைவின்கண் உறைத்து நில்லாமல் ஒன்றைவிட்டு மற் றொன்றைப் பற்றியபடியாகவே ஓயாமல் ஓடிக் கொண்டிருக்குந் தன்மைத்தாகலின், அஃது ஒரு பொருளின் அல்லது ஒரு முயற்சியின் கூறுபாடுகளைத் தெளிய வுணர்ந்து அவற்றின்கண் உறைத்து நிற்குமாறு செய்தல் யாங்ஙனங் கூடுமெனின்; ஒன்றில் நிலைபெற நிற்கும் பழக்கம் ஏறாத உள்ளத்தை அகத்தே ஒரு நினைவில் ஊன்றி நிற்குமாறு செய்தல் அரிதுதான். உள்ளமானது அகத்தே மடங்கி நிலைபெற நிற்றல்வேண்டின், முதலில் அதனைப் புறத்தே யுள்ளவற்றில் நிலைத்து நிற்குமாறு பழக்கல் வேண்டும். புறத்தே நன்றாய்ப் பழகிய பிறகுதான் அகத்தேயும் அஃது அவ்வாறு நிற்றல் கைகூடும். வெளியே ஒரு கிளியின் வடிவத்தை நன்றாய் உற்றுப் பார்த்து மனத்தில் அமைத்துக் கொள்ளாத வனுக்கு அதனுருவம் அவன் அகத்தே தோன்றுதலும், அதன்கண் அவன் உள்ளம் நிலைபெற்று நிற்றலும் எங்ஙனங் கூடும்? ஆகையால், அகத்தே நிலைபெறாது இயங்கும் உள்ளத்தைப் புறத்தேயுள்ள பொருள்களிற் கொணர்ந்து மடக்கி, நிறுத்தி நிறுத்திப் பழக்கினாற் பின்னர் அஃது அகத்தேயுந்தனது ஓட்டந் தவிர்ந்து ஒரு நிலையில் நிற்கும். ஒரு பொருளை அன்றி ஓர் அரும்பெரு முயற்சியைப் பகுத்துணர்ந்து அதன்பாற்றனது உள்ளத்தை நிறுத்த முயன்றவனுக்கு, அவனுள்ளம் அவன் வழிப்படாமல் ஓடுமாயின், அதனை அங்ஙனம் ஓடாமல் நிறுத்துதற் பொருட்டு, அதனைப் புறத்தே கொணர்ந்து ஒரு முயற்சியில் நிறுத்துக. அஃது யாங்ஙனமெனிற் காட்டுதும். அழகியதோர் இல்லம் அமைக்க வேண்டினவன், அதன் உறுப்புகளான அறைகள் கூடங்கள் தாழ்வாரங்கள் நடைகள் முற்றங்கள் முகப்புகள் திண்ணைகள் முதலியவைகளை எவ்வெவ்விடங்களில் எவ்வெவ்வாறு அழகாக அமைக்க வேண்டுமெனத் தன்னுள்ளத்தாற் பலகால் நினைந்து பார்த்தும், தனதுள்ளம் ஒருவழிப்படாமல் ஓட, அவை அவனுக்குப் பிடிபடா வாயின், உடனே அவன் அங்ஙனம் மனத்தால் எண்ணும் முயற்சியை விட்டு, ஒரு தாளும் எழுதுகோலுங் கைக்கொண்டு, அவ்வில்லத்தை மேற்கூறிய உறுப்புகளோடு வரையத் தொடங்குக; அவ்வாறு வரையப்புகுந்த அளவிலே உள்ளே கலங்கலாய் நின்ற அவனதுள்ளம் வரவரத் தெளிவடையும்; அவ்வுள்ளம் முன்னே அறியாமையென்னும் ஓர் அகவிருளாற் கவரப்பட்டிருத்தலின், அக் கட்டிட உறுப்புகளை வரை கின்றுழியும், தன்னையறியாமற் பல பிழைகளைச் செய்ய, அதனூடு விளங்கும் அவனதறிவு அம் முயற்சியிற் றெளிவு பெறுகின்றமையிற் பின்னர் அப் பிழைகளை அறிந்து கோடுகளை அழித்துத் திருத்த, இங்ஙனம் நடைபெறும் அவ் வரைதன் முயற்சியானது சில நாட்களில் அவ்வில்லத்தின் அமைப்பை அத் தாளில் திருத்தமாக அமைப்பதற்கும் அதனால் அதனை வரைகின்றவனது அறிவு தெளிவுற்று விளங்கி ஒரு நிலைப் படுத்தற்கும் பெரியதோர் உதவிபுரியும். ஆகவே, உள்ளத்தைத் தெளிவுபடுத்தற்கும், அஃது ஒன்றில் நிலைபெற நிற்றற்கும், ஓவியம் வரைதலுங் கடிதம் எழுதலும் நிரம்பவும் உதவியாய் நிற்கின்றன. கட்புலனுக்கு விளங்கத்தக்க பொருள்களை ஓவியத்தில் வரைந்து அம் முறையால் உள்ளத்தைத் தெளிவுபடுத்தி ஒரு துறைப் படுத்தல் எளிது. கட்புலனுக்குப் பிடிபடாத அறம் மெய்ம்மை தூய்மை அழுக்காறாமை அவாவின்மை முதலான பண்பின் இயல்களை அதற்குப் புலனாம் வடிவில் வைத்துத் தீட்டுதல் எவர்க்கும் இயலாமையின், அவற்றின் கூறுபாடுகளை ஆராய்ந்து திருத்தமாகச் சொல் வடிவிற் கடிதங்களில் எழுதுதலே உள்ளத்தை மேலான துறைகளில் தெளிவுற்று நிற்கச் செய்தற்கு ஏற்ற வழியாகும். நமது இனிய செந்தமிழ் மொழியை வளப்படுத்து வளர்த்தற்கு விழையும் ஒருவர் அதனைச் செய்து முடித்தற்குத் தம் கையிற் பொருள், இல்லாமையின் அஃது உடைய நல்லார் ஒருவரைத் தெரிந்து, அவர் அதனைச் செய்யுமாறு தமது கருத்தினாலேயே அவரை ஏவி முடிக்க வேண்டுவராயின், தாம் அதைப்பற்றி அவருக்கு நேரே எழுதுகிற வழியாகவே பொறுக்கான சொற்களால் திறமையாகத் திருத்தமாக அழுத்தமாக ஒரு கடிதம் எழுதி முடித்து, அக் கடிதத்தை விடியற்காலையில் உறக்கம் நீங்கி எழுந்தவுடனும், இரவில் துயில்கொள்ளச் செல்லும்போதுங் கருத்தூன்றிப் பார்த்து அதனை மடித்து வைத்துவிடுக; இங்ஙனம் சில நாட்கள் அக் கடிதத்தை நினைவுறைத்துப் பார்த்த பின், அதனைக் கிழித்து எறிந்து விடுக. இவ்வாறு சில நாட்கள் செய்த பிறகு உடனே யாவது, அன்றிச் சிலகாலங் கழித்தாவது அங்ஙனந் தூண்டப் பட்ட செல்வர் தாமாகவே தமிழை வளர்த்தற்குரிய முயற்சியைச் செய்யத் துவங்குவர். இங்ஙனமாகத் தாம் நிறைவேற்றக் கருதியதோர் அரிய முயற்சியை, அதற்குதவி புரியத்தக்க இயைபுடையார்க்குக் கடிதத்தில் எழுதி, அக் கடிதத்தை அவர்பாற் செலுத்தாமலே வைத்து நிறைவேற்றும் முறையைக் கல்வியறிவிற் சிறந்த ஓர் அறிஞர் (Mark Twain) செய்து பயன்பெற்றமை பல ஆண்டுகட்கு முன் நிகழ்ச்சிக் குறிப்பு இதழ்களில் (News Papers) வெளியிடப் பட்டது. அவர் செய்த முறை இது. தாம் கருதியதொரு பொருளை எவர்க்குத் தெரிவிக்க வேண்டினரோ அவர்க்கு அதனை ஒரு கடிதத்தில் எழுதிப் பின்னர் அக் கடிதத்தை ஓர் உறையில் இட்டு மூடி, அவ்வுறையின் மேல் அவர் தம் பெயர் ஊர் இருப்பிடம் முதலியனவும் எழுதிப், பிறகு அதனை அவர்பாற் போகவிடாமல் துண்டு துண்டாகக் கிழித்தெறிந்து விடுவர்; இங்ஙனஞ் செய்தபிற் சில நாட்களிலெல்லாம், குறிப்பிட்ட வரிடமிருந்து கடிதம் வரவும், அக் கடிதத்தில் தம் கேள்விகளுக்கு விடையேனும் அல்லது தாங்கருதிய பொருளைப் பற்றிய குறிப்பேனும் வரையப் பட்டிருக்கவுங் காண்பராம். இம்முறை நூற்றுக்குத் தொண்னூறு விழுக்காடு தவறாமல் நிறைவேறிய தாகும். இஃது அருகிலிருப்பவர் பாலன்றிப், பல்லாயிரம் மைல் எட்ட இருப்பவர்பாலும் தாம் இருக்குமிடமும் தம்மைப்பற்றிய செய்தியும் ஆண்டுகளாய்த் தெரிவியாதவர்பாலும் செய்யப் பட்டுப் பயன் தந்ததாகும். ஆனாலும், இதன்கண் நினைவிற் பதிக்கற்பாலது ஒன்றுண்டு, அஃதாவது, இம் முறையைச் செய்து பார்த்தற்கு ஏற்ற இசைவுடையாரைத் தெரிந்து கொள்வதேயாம். கல்வியறிவிற் சிறந்தார் ஒருவர் தம் போல் அதில் சிறந்தார் ஒரு நண்பரை உறுத்து நினைந்து தாங் கேட்க விரும்பியவற்றை ஒரு கடிதத்திற் பொறித்துப் பின்னர் அக்கடிதத்தை அழித்து விடுவராயின், அவர் அவற்றிற்கு விடை அந் நண்பர்பாலிருந்து வருமென்று எதிர்பார்க்கலாம். அவ்வாறன்றிக் கல்வியறிவு வாய்ந்தார் ஒருவர் அது வாயாத மற்றொருவர்பால் உயர்ந்த துறைகளைப்பற்றிய வினாக்களை நிகழ்த்தி மேற்காட்டியவாறு கடிதம் எழுதிப் பார்ப்பராயின், அவர்க்கும் அம் மற்றவர்க்கும் நினைவு வெளியில் இசைவு இன்மையின் அஃது அவர் எதிர்பார்த்தபடி நிறைவேறாது. வறுமையாற் பொருளின்றி, அஃதுடைய ஒருவர்பால் அதனைப் பெறும் நோக்கத்தோடு கடிதம் எழுதிப் பார்ப்பவரும் அங்ஙனமே தமக்குப் பொருள் தரும் இசைவு அவரிடமிருக்கின்றதாவென்று ஆய்ந்து பார்த்து அதனைச் செய்தல் வேண்டும்; சிறிதேனும் மனக்கசிவு இல்லாதார்க்கு ஈகை நினைவினைப் பிறப்பித்தல் கல்லில் நார் உரிப்பதற்கே ஒப்பாகும்; உள்ளக்கனிவுடையராய்ச் சிறிதாயினும் பிறர்க்கீயும் இயல்பு வாய்ந்தார்க்கு மேற்கூறியவாறு கடிதம் எழுதிப்பார்த்துப் பயன்பெறுதல் தவறாமற் கைகூடும். ஈரநிலத்தில் விதையை ஊன்றினால் அது முளைத்துப் பயன்றருதல் திண்ணம். வறண்டு இறுகிய பாறை நிலத்தில் ஊன்றினாலோ அது முளையாது அழிதல் எவரும் உணர்வர். இவை போலவே தாங்கருதியதொரு பொருளைக் கடிதத்தில் எழுதிப் பார்த்துப் பயன் பெறுதற்கு ஏற்ற தகவும் தகவின்மையும் உடையாரை ஆய்ந்துணர்ந்து இம் முறையைக் கையாண்டு வந்தால், உயர்ந்த தன்மைகள் வாய்ந்தோர் பிறர்பால் நேரிற் சென்று தமது குறையை அறிவித்து வாயிழந்து மானம் அழிந்து வருந்தாமற் பல நலங்களையெல்லாம் எய்தி இன்புற்று வாழலாம். பண்டைக்காலத்துத் தமிழ் முதுமக்கள் பிறரைத் தம் வழிப்படுத்தும் பொருட்டு இம் முறையைத் தெரிந்து பயன்படுத்தி வந்தார்கள் என்பதற்கு அவர் கால்வழியில் வந்தோரான மந்திரகாரர் இந் நாளிலும் இதனைச் செய்து வருதலே சான்றாகும். ஒருவரோடு அவர் விரும்பிய மற்றொருவரைச் சேர்த்து வைத்தற்கு இடைநின்று உதவும் மந்திரகாரர் செய்யும் முறைகளை உற்று நோக்கினால், இவ்வுண்மை நன்கு விளங்கும். ஒரு பனையோலையின் நறுக்கிலோ, அல்லதொரு செப்புத் தகட்டிலோ அல்லதொரு கடிதத்திலோ வசியப்படுத்த வேண்டியவர் பெயரைப் பொறித்து, அவர் இன்னார்க்கு வசியமாதல் வேண்டுமென்பதும் அதிற் பொறித்துத் தாம் வழிபடுங் கடவுளின் பெயரிலுள்ள எழுத்துக்களையும் அவற்றைச் சூழ எழுதி, அதன்பின் அதனைத் தங்கடவுள் திருவுருவத்தின் அடியில் வைத்து நீராட்டிப் பூச்சாத்தித் திருநீறு பூசிச் சாந்தம் அப்பி அகில் புகைத்துப் பழம் பால் முதலிய உணவுஊட்டி இலையும் மலரும் இட்டு வணங்கிக் கருப்புரங் கொளுத்தி, அதன்பின் அமைதியாய்த் தனியிருந்து, உள்ளத்தை ஒருவழி நிறுத்தி, அவ்வேட்டில் எழுதிய சொற்களையுஞ் சொற்றொடர் களையுந் தங்கடவுளினது பெயரொடு புணர்த்திப் பலகால் ஓதிப், பின்னர் அதனை எடுத்துச் சுருட்டி ஒரு வெள்ளிக் குழாயிலோ அன்றியொரு பொற்குழாயிலோ நுழைத்துப் பொதிந்து, வசியஞ்செய்ய விரும்பினார் கையிலேனுங் கழுத்திலேனும் இடுப்பிலேனும் அதனை ஒரு சரட்டிற் கோத்து கட்டி விடுகின்றனர். இவ்வாறு செய்யும் மந்திரக்காரரின் முறை உண்மையாகவே அவர் கருதிய பயனை விரைவில் தருகின்றது; அவர் எவரை அடைய வேண்டுமென விழைந்தனரோ அவர் அவரைத் திண்ணமாகவே அடையப் பெறுகின்றனர். வசியமாக வேண்டியவர் அறியாதபடி எட்டியிருந்து செய்யும் இச் செயல் அவரை எங்ஙனம் வசியப் படுத்துகின்றது? என்று அம் மந்திரக்காரரைக் கேட்டால், அவர் அதன் உண்மை தெரியாமல் இவையெல்லாம் வழிபடும் தெய்வத்தின் வல்லமையால் நடக்கின்றன வென்று விடை கூறுவர். இவரது கூற்று ஒரு வகையில் உண்மையேயாயினும், மற்றொரு வகையில் உண்மை யாகாது. நாம் நமது கட்புலனாற் பொருள்களைக் கண்டறிதற்குக் கதிரவன் ஒளி இன்றியமையாது வேண்டப்படுகின்றது. கதிரவனொளியின்றி நாம் எப்பொருளையும் கண்டறிதல் செல்லாது; விளக்கினொளியுங் கதிரவனொளியில் அடங்கும்; காட்சியுணர்வு நிகழ்தற்குக் கதிரவனொளி இன்றியமையாத தேயாயினும் அக் கதிரவனொளியே எல்லாவற்றையுங் கண்டது, யானும் என் கண்ணும் அவற்றைக் கண்டிலேம், எனக் கூறுவர் உளரோ? ஒருவன் தன் கண்ணினால் நல்லதைக் காண்டற்கும் தீயதைக் காண்டற்கும் ஞாயிற்றினொளி பொதுவாய் நின்று உதவுகின்றது; நல்லதைக் கண்டு மகிழ்தலுந், தீயதைக் கண்டு நோதலும், காண்கின்ற ஆண்மகன் பால் நிகழக் காண் கின்றோமே யல்லாமல், நடுநின்று காட்சிக்கு உதவிபுரியும் ஞாயிற்றின்பால் நிகழக் காண்கின்றிலேம். அதுபோலவே, கடவுளும் தமது அருளொளியினால் நமது அகக்கண்ணை விளக்கி நாம் பல வினைகளைச் செய்தற்கு உதவியாய் நிற்கின்றார். நல்வினை தீவினைகளைச் செய்து அவற்றால் விளையும் இன்ப துன்பங்களை அடைபவர்கள் சிற்றுயிர் களாகிய நாமேயல்லாமல, நமதறிவை விளக்கி எவற்றுக்கும் பொதுவாய் நிற்குங் கடவுள் அல்லர். ஆகையால், மந்திரக்காரர் செய்யும் வசியச் செயல் நல்லதாயினுந் தீயதாயினும், அஃது அவரது அறிவின் செயலால் நடைபெறுவதாகும்; அவ்வறிவின் உள்நின்று அவர் நினைக்குமாறெல்லாம் பொதுநின்று இயக்குபவர் கடவுள். மந்திரக்காரரது அறிவு ஒன்றை நிறைவேற்றுதலில் முனைந்து நிற்றலால், இறைவனது செயல் அவரது அறிவின் பின்நின்று அதனை உந்தி, அவ்வறிவினை வந்துபற்றும் நல்வினை தீவினைப் பயன்களில் தான் தாக்கற்று நிற்கும். இனித் தமது அறிவையுந் தமது செயலையும் ஒருங்கிழந்து எல்லாம் இறைவன் செயலாய்க் கண்டிருக்குஞ் சான்றோர்பால் இறைவனறிவு முன்னும் அவர்தம் அறிவு பின்னுமாய் நிற்கும். அப்பெற்றியரான சான்றோர் தமது அறிவு முனைப்பால் ஒன்றையுஞ் செய்யமாட்டாராகலின், அவர்க்குப் பிறர் செய்யும் நன்மை தீமைகளை அவர்பால் முனைத்து நிற்கும் இறைவனே என்று கொண்டு அவற்றின் பயன்களை அவை செய்தார்க்கு அளிப்பன். ஆகவே தமது அறிவுமுனைப்பு கொண்டு மந்திரக்காரர் செய்யும் வசியச் செயல்களின் பயன் அவர்தம் அறிவின் இயக்கத்தால் நேர்வதே யன்றி, அவர் வழிபடு தெய்வத்தின் உதவியால் நேர்வதன்றென உணர்ந்துகொள்க. தம்மறிவு செயல்களை மறந்த சான்றோர் தஞ்செயலாகவன்றி இறைவன் செயலாகத், தாஞ் செய்வன மட்டும் இறைவனது வல்லமையால் நடைபெறுவன வாமென்றும் பகுத்துணர்ந்து கொள்க. மந்திரக்காரரது நினைவு தான் நினைப்பதை நிறைவேற்றுதலில் முனைத்து நிற்க, அவர் தாங் கருதியதனை ஏட்டில் எழுதுஞ்செயல் அந்நினைவினைத் தெளிவுபடுத்தி அதற்கு மேலும் மேலும் வலிவேற்ற, அதனால் அந் நினைவு தன்னோடு இயைபுடைய நினைவுவெளியினை இயக்கா நிற்கும். அவ்வளவில் அவர் நில்லாது, அந்நினைவோடு தொடர் புடைய சொற்களையுஞ் சொற்றொடர்களையுந் திருப்பித் திருப்பிப் பலகாற் சொல்லுதலின் அந் நினைவு வெளியின் இயக்கமும் அதனோடு தொடர்புடைய ஓசை வெளியின் இயக்கமும் முறுகி இயங்கி, அந் நினைவினாற் சுட்டப்பட்டாரது உள்ளத்தை அசைத்து அந்நினைவின் படியெல்லாம் அவர் நடக்குமாறு செய்துவிடும். இங்ஙனம் ஆறறிவுடைய மக்கள் தம்போல் ஆறறிவுடைய மக்களைத் தம்வழிப்படுத்துதலே யன்றித் தம்மினுந் தாழ்ந்த நல்லபாம்பு, புலி, கரடி, அரிமா, யானை, குதிரை முதலிய சிற்றுயிர்களையும் தம்வழிப்படுத்தி, அவை தாம் விரும்பிய வாறெல்லாம் ஏவல் புரியும்படி அடக்கியாள்கின்றனர். நச்சுப் பாம்புகளைத் தம்மாட்டு வருவித்து அவற்றையடக்கி ஏவல் வாங்கும் மந்திரக்காரர்களும் இதே முறையைத்தான் கையாள்கின்றனர். தாம் கருதிய நச்சுப் பாம்பின் வடிவத்தை ஒரு கடிதத்தில் எழுதி, அதனைச் சூழத் தாங் குறித்த ஏவல்களைச் சுருக்கமாக வல்லோசை வாய்ந்த சொற்றொடர்களால் எழுதித் தம்மை ஒரு பருந்தின் உருவாக எண்ணிக்கொண்டு, எழுதிய அக் கடிதத்தைத் தாம் வழிபடுந் தெய்வத்தின்கீழ் வைத்து, அதிற் குறித்த சொற்றொடர்களை வாயால் ஓயாமற் சொல்லியோ அல்லது உள்ளத்தாற் சொல்வது போல் எண்ணிக் கொண்டோ உருவேற்றுகின்றனர்; அவ்வாறு சிலபல நாள் உருவேற்றித் தமது உள்ளத்தை வலிவுடையதாக்கி நினைவு வெளியில் இயைபு படுத்தித், தாம் வேண்டியபோதெல்லாம் அவ்வெளியை இயக்கி அதனோடு தொடர்புடைய அப்பாம்பின் உள்ளத்தையும் கட்டுப்படுத்தித் தம் எண்ணப்படியெல்லாம் அதனை ஏவல் வாங்கும் நிலை தமக்குக் கைகூடி வருவதனையே மந்திரக்காரர் மந்தர சித்தி யென வழங்குவர். அவர் இம் முறையிற் பழகித் தேர்ந்தபின் எவ்வகை நச்சுப் பாம்பினையுந் தம்பால் வருவிக்க வல்லராவர்; பாம்பு கடித்து இறக்குந் தறுவாயில் உள்ளவர்க்கு ஏறிய நஞ்சை அப் பாம்பு தானே வந்து உறிஞ்சிப் பாலிற் கக்குமாறு செய்து, அவர் உயிர் பிழைக்குமாறும் செய்ய வல்லராவர்; அல்லது அப்பாம்பு அடியுண்டு இறந்து போனாலும், அத்தகைய மந்திரக்காரர் அந் நஞ்சேறினாரைத் தமது கட்பார்வையால் உற்றுநோக்கி அந் நஞ்சை இறக்கி அவர் உயிர் பெற்றெழச் செய்வர். இதைப்போலவே, எவ்வெவ் விலங்குகளைத் தம் வழிப்படுத்தி ஏவ விரும்பினாலும், அவ்வவற்றை எண்ணிச் செய்யும் பழக்க முதிர்ச்சியால் அவற்றையெல்லாம் அடக்கி யாளுதல் அஃதுடையார்க்கு நன்கு கைகூடும் என்பது திண்ணமாமென்க. அஃது யாங்ஙனம்? ஒருவர் ஓரிடத்திருக்க அவர்தம் நினைவும் அந் நினைவோடு கூடிய சொல்லும் அவரிடத்து மட்டுமன்றோ நிகழக் காண்கின்றோம். அவை இயக்கும் நினைவுவெளி ஓசைவெளியென்னும் இவற்றைக் கண்டில மாகலின், அவ் வெளிகளின் வாயிலாக அவை பிறருடைய உள்ளங்களை அசைக்குமென்றல் உண்மையன்றாம் போலு மெனின்; அறியாது கூறினாய். ஒருவர் ஓரிடத்திலிருந்து பேசுஞ்சொற்கள் அவரினின்றும் விலகி எட்ட இருப்பார் செவிகட்கும் புலனாதலும், ஒரு குடத்தினுட் கட்டிய மணியின் ஓசை அக் குடத்தினுட் காற்றிருக்குமளவும் வெளியே செவிப்புலனாகி அதன்கணுள்ள காற்றைக் காலுரிஞ்சு பொறி (Air pump) யால் வாங்கிக் குடத்தின் வாயை யடைத்தபின் அது செவிப்புலனாகாமையும் என்னையென ஆராய்ந்து பார்ப்பின் ஓசை செவிப்புலனாம்படி செய்யுங் காற்றும், அக்காற்று உலவுதற்கு இடங்கொடுக்கும் ஓர் இடைவெளியும் உண்டென்பது நன்கு பெறப்படும் அன்றோ? அதுபோல, ஓசையினும் மிக நுண்ணிய நினைவுகள் இயங்குதற்கும் நினைவுவெளி ஒன்று இல்லாக்கால் ஒருவருள்ளத்தில் ஒரு காலத்து ஓரிடத்துத் தோன்றிய நினைவுகள் பிறரொரு வருள்ளத்தில் அதே காலத்தில் வேறோரிடத்துத் தோன்றுதல் கூடாது; மற்று அவை அவ்வாறு தோன்றுதல் உண்மை நிகழ்ச்சியேயாவது உண்மையாராய்ச்சி வல்ல அறிஞர் பலரானும் இஞ்ஞான்றும் உறுதியாகக் காட்டப்படுதலானும், ஒருவர்க்குத் தோன்றும் ஒரு நினைவு அதே நேரத்திற் பிறரொருவர்க்குத் தோன்றுதல் நமது வழக்கத்திற் கண்கூடாகக் காணப்பட்டு வருதலானும், இந் நிகழ்ச்சிகளும் அவற்றின் முறைகளும் தொலைவிலுணர்தல் என்னும் எமது நூலின்கண் விரிவாக எடுத்துக்காட்டி விளக்கியிருக்கின்றே மாகலானும், நுண்ணிய நினைவின் றன்மையோடு ஒத்து அஃது இயங்குதற்கு இடந்தரும் நினைவுவெளி (காலுரிஞ்சு பொறி - Air-Pump) ஒன்றுண்டென்பதும் தேற்றமேயா மென்க. அவ்வாறாயின், இயற்கைப் பொருளாராய்ச்சியிற் சிறந்து விளங்கும் ஐரோப்பிய ஆசிரியர்கள் ஓசையும் ஒளியும் உலவுதற்கு இடைவெளி (Ether) ஒன்றுமட்டும் உளதென்று கொண்ட தென்னை யெனின்; ஐரோப்பிய ஆசிரியர்களும் ஓயாது ஆராய்ந்து கொண்டு புதிய உண்மை நுண்பொருள்களைக் கண்டறிந்து வெளியிட்டு வருகின்றார்களேயல்லாமல், எல்லாவற்றையுந் தாம் அறிந்து விட்டதாக முடிவுகட்டி, இனிமேல் அறியற்பாலன வேறெவையு மில்லையென்று கூறுகின்றார்களில்லை. முன்னே, காற்று என்னும் நுண்பொருள் வரையில் ஆராய்ந்து சென்று, அதற்கு மேல், விசும்பு ஒன்று அதனினும் நுண்ணியதாய் உளதென்பதை அவர் அறியாதிருந்தார். பின்னர், மேலும் மேலுஞ் செய்த பல ஆராய்ச்சிகளால் ஓசையும் ஒளியும் உலவுதற்கு இடமாக விசும்பு என்னும் இடைவெளியொன்று இன்றியமையாது வேண்டப்படு மென்று உறுதி கட்டினார். கம்பியின்றி விடுக்கும் மின்செய்தி (கம்பியில்லா மின்பொறி - Wireless telegraphy) பல்லாயிர மைல் இடத்தைக் கடந்து சென்று சேர்தற்கு விசும்பு என்னும் இவ்விடைவெளி உதவிபுரிகின்றதெனவும் இஞ்ஞான்று தெளியக் காட்டு கின்றார்கள். மின்செய்தியும் அஃதியங்கும் விசும்புங் கட்புலனுக்குத் தென்படாவாயினும், அவற்றின் இருப்பு அவை தம் நிகழ்ச்சியால் உண்மையெனத் துணியப்படுகின்றது. இங்ஙனமே, இருவகைப்பட்ட நுண்ணொளிக் கதிர்கள் உண்மையும், அவை விளக்கமில்லாத் தடித்த பருப்பொருள் களையும் ஊடுருவிப் பாய்ந்து அவற்றின் உட்பொருள்களை விளக்கிக் கட்புலனாம்படி செய்யவல்லனவாதலும் பிரஞ்சுநாட்டு இயற்கைப் பொருணூற் புலவர்களால் (Rontgen and Blondlet) ஆராய்ந்து கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டில் ஒருவகையிற் சேர்ந்த நுண்ணொளிக்கதிர் ஞாயிற்றினொளி யோடு ஒப்பதாய் அதனினும் மிகுவிரைவாய் இயங்குவது; அதனால் இதனை பகலியற்கதிர் (Rontgen or X-Rays) என வழங்குதல் பொருந்தும்; இஃது ஒருவர் உடம்பின்மேற் பட்டால் அவ்வுடம்பின் உள்ளேயுள்ள எலும்புகளை நம் கண்களுக்குப் புலனாம்படி காட்டும். போர்க் களத்தே பகைவர் ஏவிய குண்டுகள் தம் உடம்பினுள்ளே நுழையப் பெற்றுத் துன்புற்ற போர் மறவர்க்கு அத் துன்பத்தை மாற்றுவான் புகுந்த மருத்துவர் அக் குண்டுகள் உள்ளே இருந்த இடந் தெரியாமற் பிழையாக வேறிடங்களை அறுத்தறுத்துப் பார்த்துத் தாம் ஏமாறியதோடு, அம் மறவர்க்குஞ் சொல்லற்குரிய நோவினை விளைத்து வந்தார்கள். இத் துன்பத்தை நீக்குதற்குரியதொரு வழி தெரிதல் வேண்டி முயன்று வந்த இராஞ்சன் என்னும் அறிஞர் கடைசியாக இப் பகலியற் கதிரைக் கண்டு பிடித்தார்; இக் கதிரொளி, தன்னை நம் கட்புலனுக்கு விளங்கக் காட்டா தாயினும், தான்பட்ட உடம்பினுள் உள்ள எலும்புகளையும் அங்கு வந்து பதிந்து கிடக்கும் ஈயக்குண்டு இருப்புக்குண்டு முதலானவைகளையும் புலப்படக் காட்டுவ தாயிற்று; இதனுதவி கொண்டு புண் மருத்துவர் குண்டுகள் பதிந்துகிடக்கும் இடங்களைத் திட்டமாய்த் தெரிந்து, அம் மறவரின் உடம்பி னின்றும் அவற்றை வெளிப்படுத்தி அவர்க்குற்ற அப்பெருந் துன்பத்தைப் போக்கி வருவாராயினர். இனித் தடித்த பருப் பொருள்களை இங்ஙனம் ஊடுருவி விளக்கும் இப் பகலியற் கதிர் அலுமினியம் என்னுங் கருப்பொருளில் மட்டும் ஊடுருவிப் பாயாது. ஆனால், மற்றொரு வகையிற் சேர்ந்த நுண்ணொளிக் கதிரோ அவ் வலுமினியம் என்னுங் கருப்பொருளையும் ஊடுருவிப் பாய்ந்து விளங்கச் செய்யவல்லது; இக் கதிர் மக்களுடம்பினின்றும் போதருவது; அதனால், இதனை உயிரியற்கதிர் (N-Rays) என்று வழங்குவது பொருந்தும்; இது பகலியற் கதிரைவிட விரைவிற் குறைந்த தாயினும், வெப்பக்கதிர் களைவிட விரைவில் மிக்கது; இது மக்கள் சிலரிடத்து மிகுதியாயும், வேறு சிலரிடத்துக் குறைவாயும் வெளிப்படு கின்றது. செம்மையுங் கிளர்ச்சியும் வாய்ந்த உடம்புகள் உடையார் இயற்கையாகவே பிறர்க்கு நோய்நீக்க வல்லுநர் ஆவர். உள்ளத்தை நினைவொரு மையால் உரப்படுத்து தலானும், நரம்புகளை வலிவேற்றுதலானும் இக் கதிரொளி யினை ஆற்றலினும் விரைவினும் மிகச் செய்யலாம். இத் தன்மைய வாகிய இவ்விருவகைக் கதிரொளியும் நம் கண்களுக்குப் புலனாகாவாயினும் எரிகந்தகம் பூசிய திரையை அவ்விரண்டின் அருகே வைத்தால் அத் திரையின் கண் வெளிச்சம் மிகுதிப் படுத்தல் கொண்டு அவற்றின் உண்மை நன்கு துணியப்படும். இவ்வுயிரியற் கதிரொளி வாய்ந்தவர் தாம் செம்மையான யாக்கையுடையராய்ப் பிறர்க்கு வரும் நோயை எளிதில் நீக்கவல்லராதலோடு, தொலைவில் நடப்பனவற்றையும் மறை பொருள் நிகழ்ச்சிகளையும் உணர்ந்துரைக்குந் தெளிவுக் காட்சியுடையராயும் இருப்பர். மக்களுள் இவ்வொளி வாய்ந்தாரைத் தெரிந்துகொள்ளல் வேண்டின், ஓர் இருட்டறை யில் எரிகந்தகம் பூசிய திரை ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு அதன் பக்கத்தே ஒவ்வொருவராகப் போய்ச் சிறிதுநேரம் இருக்கும்படி பலரை ஏவுக; இயற்கையாகவே இவ்வொளி வாய்ந்த ஒருவர் அத்திரையின் அருகிற் சென்றிருந்தவுடன் அத் திரையின் ஒளி வரவர மிகும்; அவ்வொளி வாயாதவர் அதனருகில் எவ்வளவு நேரம் இருப்பினும், அத் திரையின்கண் ஏதொரு மாறுதலுங் காணப்படமாட்டாது. இவ்வாற்றால், உயிரியற் கதிரொளி இயல்பிலுடையாரைத் தெரிந்துகொள்க. இங்ஙனமாக, இருவேறு வகைப்பட்ட நுண்ணொளிக்கதிர்கள் இவ்வுலகின்கண் இருத்தல் நங்கண்களாற் காண்டல் இயலா தேனும், ஆழ்ந்த ஆராய்ச்சியால் தெற்றென விளங்குகின்ற தன்றோ? இதுபோலவே ஒருவர் உள்ளத்திற் றோன்றும் ஒரு நினைவு அதே நேரத்தில் அருகிலோ தொலைவிலோ இருக்கும் ஏனையொருவர் உள்ளத்திலுந் தோன்றுதற்கு அவ்விரு வருள்ளத்தின் இடைநின்று கருவியாய் உதவும் நினைவுவெளி ஒன்றுண்டென்பது தேற்றமாம் என்க. இனி, ஓசையைத் தனக்குப் பண்பாக உடைய விசும்பு என்னும் இடைவெளியைப் போலவே, ஊறு ஒளி சுவை நாற்றம் என்பவற்றைத் தனித்தனிப் பண்புகளாக உடைய கால் தீ நீர் மண் என்னும் நாற்பொருள்களும் நுண்ணிய வடிவில் நிற்கும் நால்வேறிடைவெளிகளும் எங்கும் உளவாம். யாங்ஙனமெனிற் காட்டுதும்; தொட்டறியக் கூடிய தடித்த பொருளெல்லாம் எஞ்ஞான்றும் அதே தன்மையில் நிற்பன அல்ல; பனிக்கட்டி உருகி நீராதலும், அஃது ஆவியாக மாறுதலும் நாம் வழக்கத்தில் நேரே கண்டிருக்கின்றோம். இளஞ்சூட்டில் உருகும் பனிக் கட்டியைப் போலவே, இரும்பு செம்பு வெள்ளி பொன் முதலிய கருப்பொருள்களுந் தத்தமக்கேற்ற சூடுபட்டால் நீராய் உருகும் மரபினவாம்; இனி இவற்றினுங் கடிய கருங்கல் செங்கல் மண் முதலியனவுங் கூடத் தத்தமக்கேற்ற கடுஞ்சூட்டில் நீராய் உருகிவிடுகின்றன; அங்ஙனம் உருகிய அவையெல்லாம் பின்னும் பின்னுஞ் சூடுதாக்க அந்நிலை மாறி ஆவியாகத் திரிந்து விடுகின்றன. இவ்வாறு கட்டிப்பொருளும் நீர்ப்பொருளும் வெப்பத்தின் மிகுதியால் தம்மில் ஒன்று கூடி அணுக்கள் பிரிக்கப்பட்டு ஆவியுருவத்தை அடைதல் போலவே, அவ்வாவி யின் மாட்டும் பின்னும் பின்னுஞ் சூடு தாவுதலால், அதுவுந் திரிபெய்தித், தன்னினும் நுண்ணிய விசும்பின் றன்மையை அடையும். நுண்ணிய விசும்புங்கூட மிக வெய்யதொரு மின்சூட்டால் தன்நிலை நுணுகிப் பின்னும் நுண்ணியதோர் உருவெய்தும் என்றும், இவ்வாறே, மண் புனல் அனல் கால் என்னும் ஏனை நாற்பொருளுங்கூட இறப்ப நுண்ணியதோர் இடைவெளி நிலையைப் பெறும் என்றும், இங்ஙனம் இடைவெளி நிலையில் நிற்கும் ஐம்பெரும் பொருள்களும் ஐந்து தன் மாத்திரைகள் என வழங்கப் படுமென்றுஞ் சாங்கியமுஞ் சைவசித்தாந்தமுங் கூறா நிற்கும். இவ்வைம்பெரு வெளியின் இயல்புகளும், இவற்றில் நிகழும் வியத்தகு நிகழ்ச்சிகளும் தெளிவுக்காட்சி (Clairvoyant vision) யுடையார்க்கன்றி, ஏனைப் புறக்கண் மட்டுமே யுடையார்க்கு ஒரு சிறிதும் புலனாகா வாயினும், இவ்வைவகை வெளிகளும் மெய்யாகவே யுளவாதல் மேற்காட்டியபடி நம் புறக்கண் எதிரே அவற்றின்கட் காணப்படும் மாறுதல் நிகழ்ச்சி கொண்டு நன்கு துணியப்படும். இவ்வைந்து வெளிகளுங்கூட மேலும் மேலும் நுண்ணியவாய்த் திரிந்து திரிந்து சென்று கடைப்படியாகத் தன்னில் வேறுபாடு சிறிதும் விளங்காத மெய்யான மாயைவெளியாய் நிற்கும். தடித்த பருப்பொருள்கள் இங்ஙனஞ் செயற்கையாக அழிவு காலத்தில் திரிந்து நிற்குமாறு போலவே, அவ்வப் பொருள் களோடொத்த நுண்ணிய வெளிகளும், எல்லாம் நிலைபெற்று நிகழ்கின்ற இந் நிலைக் காலத்திலும் இயற்கையாக உளவாம். இங்ஙனம் இயற்கையாய் என்றும் உளவாய் நிற்கும் வெளிகளிலிருந்தே ஏராளமான பொருள்கள் காலங்கடோறும் புதிய புதியவாய்த் திரண்டுருண்டு நாம் நுகர்வதற்கு எளிய பருவடிவிற் றோன்றுகின்றன. மண்வெளியிலிருந்து எவ்வளவோ புதுப்புதுப் பொருள்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன; நீர் வெளியிலிருந்து எவ்வளவோ புதுப்புது நீர்ப்பண்டங்கள் தோன்றுகின்றன; தீவெளியிலிருந்து சூடான பண்டங்களுஞ் சூட்டினைத்தரும் பொருள்களுந் தோன்றுகின்றன; கால் வெளியிலிருந்துங் கணக்கற்றவை பிறக்கின்றன! வான் வெளியிலிருந்தும் அங்ஙனமே பலப்பல போதருகின்றன. நமதுயிர் வாழ்க்கைக்குப் பலவகையிற் பயன்படும் பொருள்களையும் உணவுப் பண்டங்களையும் நன்காராய்ந்து பார்த்தாலே, அவையெல்லாம் அவ் வெளிகளிலிருந்து தோன்றுமுண்மை தெற்றென விளங்கும். நூறுக்கு நூறடியுள்ள ஒரு சிறு நாற்பால் எல்லையிடத்தில் முப்பத்தாறு தென்னங்கன்றுகள் வைத்துப் பயிராக்கினால் அவை ஏழெட்டு ஆண்டிற் பெரிய மரங்களாய் ஓங்கி வளர்ந்து பருந் தேங்காய்களைக் குலை குலையாய் ஓயாமற் காய்க்கின்றன: அம் மரங்களின் பருமையும் பயனும் அவ்வளவும் வெறு மண்ணிலுந் தண்ணீரிலுமிருந்தே உண்டாகின்றனவென்று அவற்றின் வளர்ச்சியை ஆழ ஆராய்ந்து பார்ப்பவர் எவரும் உரையார்; அவற்றின்கட் காணப்படும் மண்கூற்றில் ஒரு சிறு கூறு பருநிலத்திலும் ஏனைப் பெருங்கூறு நுண்ணிய நிலவெளியிலு மிருந்தே தோன்றுகின்றன: இங்ஙனமே அவற்றின்கண் உள்ள ஏனை நீரின்கூறு தீயின்கூறு காலின்கூறு வானின்கூறு என்பவை யெல்லாம் பெரும்பாலும் நீர்வெளி தீவெளி கால்வெளி வான்வெளி என்பவற்றினின்றே போதருகின்றன வென்று உணர்ந்து கொள்க. இஃது எதனால் அறிதுமென்றால், நிலத்தின்கண் நின்று அளவற்ற பருமரங்கள் முன்னே தோன்றியும் பின்னும் பின்னுந் தோன்றியும் நீண்ட காலம் நிலைபெற்று நிற்கவும் நிலத்திலுள்ள மண்துகள் சிறிதுங் குறையாதிருத்தல் கொண்டு அறிதும் என்பது. அங்ஙனங் குறையாதிருத்தலேயன்றி நுண்ணிய நிலவெளியிலிருந்து ஒவ்வொரு நொடிப்பொழுதும் அளவற்ற நுண்டுகள்கள் வந்து சேர்ந்து இந் நிலவுலகம் வரவரப் பருத்து வருகின்றதென்றும் இஞ்ஞான்றை வானநூலார் ஆராய்ந்து உரைக்கின்றார். அஃதொக்கு மேனும், பருத்து மரமாய் நின்றவை பின்னர் அழிந்து மண்ணும் நீருமாய் மாறிப்போதலால், அவைவளருங் காற் குறையும் நிலத்தின் துகள்களும் நீரின் துகள்களும் திரும்ப அவ்வாற்றால் நிறைக்கப்படுமென்று கொள்ளுதலே பொருத்த முடைத்தெனின்; முன்னரே தோன்றி நிலைபெற்று நிற்கும் மரத் தொகுதிகளையும், புதிய புதியவாய் முளைத்துப் பயிராகும் மரத் தொகுதிகளையும் சேர்த்துப் பார்க்குங்கால், அவற்றில் தாமே அழிந்துபடுவனவும், பிறரால் அழிக்கப்படுவனவும், மலையள வாகவுள்ள ஒரு பொருளில் அழிந்துபடும் ஒரு தினையளவிற்கே ஒப்பாகச் சொல்லப்படும். அற்றன்று, ஒவ்வோர் இமைப் பொழுதும் நிலவொளியிலிருந்து நிலத்தின்கண் வந்துசேரும் மண்துகள்கள் அளவிறந்தனவாயிருக்கின்றனவென்று மேலே சொன்னமையால் மரங்களின் வளர்ச்சியாற் குறையும் நிலத்துகள்கள் அவ்வாற்றால் நிறைக்கப்பட்டு வருகின்றன வெனலே உண்மையா மெனின்; அங்ஙனங் கொள்ளினும், நிலத்திற்குத் தாயகமாய் எண்ணிறந்த நிலப்பகுதிகளைத் தோற்று வித்தற்குரிய வளப்பம் வாய்ந்த நிலவெளி ஒன்று உண்டென்னும் எமது கொள்கையே அதனால் நாட்டப்படுதலின், அவ்வாறு கொள்ளினும் அஃது இழுக்காகாது; என்றாலும் உண்மையாக நோக்குங்கால், ஒவ்வோரிமைப்பொழுதும் நிலவெளியிலிருந்து வந்துசேரும் நிலத்துகள்களின் அளவு, முன்னரே நிற்கும் மரத் தொகுதிகளின் அளவினும் புதியபுதியவாய்ப் பயிராகும் மரத்தொகுதிகளின் அளவினும் மிக மிகக் குறைந்ததாதல் புலப்படும். எனவே, நிலத்தின்மேற் காடுகளினும் மலைகளினும் மற்றையிடங்களினும் வரையறைப்படாமல் நிரம்பி வளர்ந்து நிற்கும் மரங்களிலுள்ள கூறுகளில் நிலத்தின் கூறு பெரும்பாலும் நிலவெளியிலிருந்தும், நீரின் கூறு நீர்வெளியிலிருந்தும் தீ வளி வெளி முதலியவற்றின் கூறுகள் அவ்வவ் வெளிகளிலிருந்தும் அவை தம்மால் உரிஞ்சப்படுகின்றனவென்பது பெறப்படும். இம் மரங்களைப் போலவே ஏனைச் சிறு பயிர்களின் உடம்பின் கூறுகளும், ஏனையாறறிவுடைய மக்களுடம்பின் கூறுகளும், ஆகியவெல்லாம் பெரும்பாலும் இவ்வைவகை வெளிகளிலிருந்து மூச்சின் வாயிலாக உள்ளுரிறிஞ்சப்படுகின்றன வென்று உணர்ந்து கொள்க. இன்னும், இம் மரஞ்செடி கொடிகள் நிலத்தையும் நீரையுமே நிலைக்களனாகப் பற்றியிருப்பினும், இவை நுண்வடிவில் எங்கும் விரிந்துள்ள ஐம்பெரு வெளிகளிலிருந்தே தமக்கு வேண்டும் ஊணைப் பெறுகின்றன வென்பதற்கு இவற்றினின்றுண்டாகும் இலை பூ காய் கனி யென்னும் பயன்படு பண்டங்களில் உள்ள கூறுகளின் இயல்புகளே சான்றாகும். வள்ளிக்கிழங்கு, கொட்டிக் கிழங்கு, கருணைக் கிழங்கு, இஞ்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு முதலியவற்றில் நிலத்தின் கூறு மிகுந்திருக்கின்றது; வள்ளிக் கிழங்கிலும் உருளைக் கிழங்கிலும் அதனோடு காற்றின் கூறுஞ் சேர்ந்திருக் கின்றது; கொட்டிக் கிழங்கிலும் இஞ்சியிலும் நிலத்தின் கூறோடும் நீரின் கூறுஞ் சேர்ந்திருக்கின்றது; இஞ்சியிலுங் கருணைக் கிழங்கிலுந் தீயின் கூறுஞ் சிறிது சேர்ந்திருக்கின்றது; இங்ஙனமே, ஏனை உணவுப் பண்டங்களினும் ஒவ்வொரு கூறு மிகுந்தும் ஒவ்வொரு கூறு குறைந்துங் கலந்திருத்தலை ஆராய்ந்தறிந்து கொள்ளலாம். இவ்வாறு, கட்புலனாம் பருவடிவிற் காணப்படும் பொருள் களெல்லாம் தம்மைப்போற் பருவடிவினவாய் இருக்கும் நிலனையும் நீரையும் பெரும்பாலும் நிலைக்களனாகப் பற்றி யிருந்தாலும், அவை தம்மினும் நுண்ணிய இடைவெளிகளின் உதவியின்றி நிலைபெறா. ஓரறிவுடைய மரஞ்செடி கொடிகளும் இடைவெளியிற் பரவிவரும் ஞாயிற்றின் வெப்பமும் ஒளியும் இல்லாமலும், காற்றினுதவியில்லாமலும் உயிர்வாழாவாயின், ஐயறிவு ஆறறிவுகளுடைய ஏனையுயிர்களின் உயிர்வாழ்க்கைக்கு நுண்உருவினவாய அப்பொருள் வெளிகளின் உதவி எத்துணை இன்றியமையாததாம் என்பது தானே விளங்காநிற்கும். பருவடிவில் நிற்கும் அறிவில்லாப் பொருள்களுங் கூட ஒவ்வொரு நொடிப்பொழுதும் தம் அணுக்கள் தேய்ந்து கரையப் பெறுதலால், அவை திரும்பத் திரும்ப முன்னைவடிவம் எய்திக் காணப்படுதற்குத் தம்மோடு ஒத்த இயைபுடைய இடை வெளியின் உதவியையே நாடி நிற்கின்றன. இந் நிலத்தின்கண் உள்ள நீர் வரவரக் குறைத்து ஆவியாக மாறிப் போயினும் திரும்பத் திரும்ப அது நீர்வெளியிலிருந்து கட்புலனாம் வடிவில் மழைத் துளிகளாய்க் கீழ் இறங்குதல் காண்டுமன்றோ? இவ்வாறு, நங் கண்ணெதிரே தோன்றும் பருப்பொருளாராய்ச்சி கொண்டே நுண்ணிய பலவேறு இடைவெளிகள் உண் டென்பது தெளியப்படும். இவ்விடை வெளிகள் ஒவ்வொன்றும் தத்தம் இயல்போடொத்த பொருள்களுடன் இயைந்து நிற்றல் போலவே, மக்களும் பிறவுயிர்களும் நினைக்கும் நினைவுகளோ டொத்து அவை இயங்குதற்கு இடமாய் நிற்கும் நினைவுவெளி ஒன்று உண்டென்பதுந் தேற்றமாம் என்க. இனி, உறுத்து நினைத்த நினைவு கடிதத்திலேனும் ஏட்டிலேனும் தகட்டிலேனும் சொற்களின் உதவியாற் பொறிக்கப்பட்டு உருவேற்றப் படுகையில், அந்நினைவு நிரம்பவும் வலிவேறி நினைவு வெளியை அசைத்துத் தனக்கு இலக்காயினார் உள்ளத்திலுந் தன்னோடு ஒத்த நினைவினை எழுப்பி விடுதலே யன்றித் தான் நினைந்ததோர் உருவத்தினைக் கட்புலனாம்படி காட்டுதலும் வல்லது. மேலெடுத்துக் காட்டிய உண்மை நிகழ்ச்சிகள் ஒன்றில் ஒரு துரைமகன் தனக்கு நெடுந் தொலைவான ஓரிடத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாதரிருவரின் படுக்கை யண்டை ஆவியுருவில் தான்போய் நிற்றல் வேண்டுமென உறுத்து நினைந்தும், அவன் நினைந்தபடியே அவனது ஆவியுருவம் தமது படுக்கையருகில் நிற்கக் கண்டு அம் மாதரார் வெருண்டதும் அறிந்தோமாதலின் உறுத்து நினைக்கும் நினைவே தான் நினைந்தபடியெல்லாம் ஆவியுருவங்களைக் கற்பிக்கவல்லதாம் உண்மை நன்கு கருத்திற் பதிக்கற் பாலதொன்றாம். பிறர்க்கு நன்மை செய்யும் பொருட்டாகவோ, அன்றித் தீமை செய்யும் பொருட்டாகவோ மந்திரக்காரர் ஏவிவிடும் ஆவியுருவங்களிற் பெரும்பாலன அவர் இங்ஙனந் தமது நினைவு முனைப்பாற் கற்பிக்கும் நினைவுருவங்களே யல்லாமல் வேறல்ல. ஆனாலும், இவ்வுண்மை அம் மந்திரக்காரர்க்கே தெரியமாட்டாது. அவை, தம் கட்டளைக்கு இணங்கி ஏவல்புரியுந் தெய்வங்களெனவே அவர் பிழைபட நினைப்பர். பிறர்பால் தாம் எந்தெந்த ஆவியுருவிற் செல்லல் வேண்டுமென எண்ணினாலும், அந்தந்த உருவத்தினை மேற்கொண்டு அவரது எண்ணமே மற்றவர்கள்பாற் செல்கின்றது. அழகியதோர் ஆண்மகன் வடிவிலோ, அன்றியொரு பெண்மகள் வடிவிலோ அல்லது யானை குதிரை அரிமா புலி பன்றி நாய் பூனை காக்கை முதலான சிற்றுயிர்களின் வடிவிலோ, அல்லது அஞ்சத்தக்க பேய் வடிவிலோ அவன் தன் நினைவைப் பிறர்பால் ஏவுவனாயின், அவன் நினைந்ததொரு வடிவில் அந்நினைவு உறுத்துத் தோன்றுதல் திண்ணம். ஏவிய அந் நினைவினுருவம் ஏவப்பட்டபடியே பிறர்க்கு நன்மையான செயல்களையேனுந் தீமையான செயல்களையேனும் இயற்றும் திறமும் வாய்ந்த தாகும் அங்ஙனமாயின், தனிமுதலான உயிருள்ள ஆவியுருவங் கட்கும், நினைவினாற் கற்பிக்கப்படும் இந் நினைவுருவங்கட்கும் வேறுபாடு என்னையெனின்; நினை வுருவங்கள், தம்மைக் கற்பித்தவரின் நினைவு கலைந்தவுடனே தாமுங் கலைந்து போகும்; மற்றுத் தனியுயிருள்ள ஆவியுருவங் களோ தாம் அங்ஙனம் கலையாவாய் ஏனை மன்னுயிர்களைப் போல் நல்வினை தீவினைப் பயன்களை நுகர்ந்து பல பிறவிகளிற் சென்று அறிவு விளக்கத்தை அடையும். அற்றேல், மந்திரக்காரர் ஆவியுருவில் நிற்கும் முனிவர் களையும், முருகப்பிரான் பிள்ளையார் காடுகாள் முதலான பெருந்தெய்வங்களையும் பரசிவேண்டி, அவர்தம் உதவியாற் பிறர்க்கு நன்மை தீமைகளை விளைக்க வல்லுநர் ஆகின்றார் என்று உலகின்கட் பலரும் வழங்குதல் பொய்யாமோவெனின்; உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பவாகலின், இவ்வுண்மையை நன்காய்ந்துணர்ந்த உயர்ந்தோர் அதனை ஒப்பார்; அறிவிலார் ஆயிரக்கணக்காய்க் கூடிக்கொண்டு அதனை மெய்யென்று உரைப்பரேனும் அது பொய்யேயாதல் திண்ணம். தவத்திலும் அறிவிலும் முதிர்ந்த முனிவரர் இவ்வுலக நடைகளை முற்றும் முனிந்து, தமது யாக்கையையும் பற்றின்றி விடுத்து, நுண்ணுருவில் நின்றபடியாய் இறைவன் அருட்பேற்றையே நாடி மேலுலகங்களிற் செல்லுதலால், எல்லாப் பற்றுங் குற்றமும் உடைய மந்திரக்காரர் வேண்டுகோளுக்கு இசைந்தேனும் அல்லதவர் கட்டளைகட்கு அஞ்சியேனும் அவர்கள் தாம் வெறுத்துவிட்டுப் போன இவ்வுலகிற்குத் திரும்பிவந்து அவர் வேண்டியபடி யெல்லாஞ் செய்வரென்பது எட்டுணையும் பொருந்தாது. இனி, முருகப்பிரான் பிள்ளையார் முதலான தெய்வங்கள் இறைவன் மெய்யன்பர்க்கு அருள் செய்தற் பொருட்டு ஓரொருகாற் கொண்ட அருளுருவங்களே யாகலான், அவரெல்லாம் எல்லாவுயிர்கட்கும் எக்காலும் பொதுப்பட நின்று அருளும் நீரரேயல்லாமல், மந்திரக்காரர் விருப்பப்படி யெல்லாம் நடுநிலை வழுவி ஒரு சிலர்க்கு நன்மையும் வேறு சிலர்க்குத் தீமையுஞ் செய்வாரல்லர்; அதனால் அங்ஙனங் கூறுதலும் ஒரு சிறிதும் ஏலாது. மிகவுந் தூயரான தேவர்கட்கும் எட்டாத கடவுளும், அவரருளைப் பெற்ற அடியார்களும் எல்லா அழுக்கும் நிறைந்த மந்திரக்காரரின் ஏவல்வழி நிற்பரென்றல் நகைக்கற்பாலதேயா மென்க. அன்பால் அகங்குழைந்து, தஞ்செயலற்று, அருட்செயலின் வழியராய் நிற்கும் மெய்யடியார் தமக்கு மட்டும் இறைவன் எளியனாய் நின்று அவர் வேண்டிய வாறெல்லாம் புரிவனல்லது, ஏனையோர்க்கு அவன் எண்ணவும் இசைக்கவும் படாதவனா மென்றுணர்க. இந்நிலவுலகத்தில் நல்லராயுந் தூயராயும் இருப்பவருங்கூட, மேலுலகங்களிற் சென்ற சான்றோரை உலக நன்மையின் பொருட்டு மீண்டும் இங்கே அழைத்துப் பேச முயன்றக்கால், அதற்கவர் இணங்கி எளிதில் வராமையும், அதன்மேல் அவர்கள் நெஞ்சங் குழைந்து குழைந்துருகி வேண்டியதன்பின் அவர் வேண்டாவிருப்பாய்த் திரும்பிவந்து, உலகப் பற்றைவிட்டுச் சென்ற தம்மை அங்ஙனம் வருந்தியழைத்துத் துன்புறுத்த வேண்டாமென்று அவர்கட்குக் கட்டளை தந்தமையும் மரணத்தின்பின் மனிதர் நிலை என்னும் எமது நூலில் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றேம். மேலுலகங்களில் ஆவியுருவிற் செல்லும் சான்றோர் தம்போல் நல்லராயிருப் பாரின் வேண்டுகோளுக்கே இணங்கிவர விருப்பம் இலராயின், காசுகொடுப்பார்க்கு வேண்டியபடியெல்லாம் செய்யும் மந்திரக்காரரின் விருப்பத்திற் கிசைந்து அவர் வருவரோ? இந்நிலவுலகத்திலிருந்து தூயராகி மேலுலகங்களிற் சென்ற சான்றோரை வருவித்தலே மந்திரக்காரர்க்கு இயலாதிருக்க, இயற்கையாகவே தூயராய் மேலுலகங்களில் இயங்கும் கடவுளரை வருவித்தல் அவர்க்கு எவ்வாறு கைகூடும்? ஆகவே, மந்திரக்காரர் தெய்வங்களையும் முனிவரரையும் வருவித்து, அவர் தந்துணையால் தாம் வேண்டிய நன்மை தீமைகளைச் செய்வரென்பது முழுப் பொய்யுரையேயாகும் அல்லது அறியாமையாற் சொல்லும் வழுக்குரையேயாகும் என்க. அஃதப்படியாயினும், இவ்வுலக வாழ்க்கையிற் பற்று நீங்காமையால் மேலுலகங்களிற் செல்லும் நல்வினையின்றி இதனைச் சார உலவும் பேய் கூளி முதலிய இழிந்த ஆவி யுருவங்களை வருவித்து, அவை தம் உதவியாற் பிறர்க்கு நன்மை தீமைகளைச் செய்தல் மந்திரக்காரர்க்கு இயல்வதன்றோ வெனின்; அஃது இயல்வதேயாயினும், இத் தீய முறையிற் பழகும் மந்திரக்காரர் இதனாற் பெருந் துன்பத்தையுழந்து கொடுஞ் சாக்காட்டிற்கே உள்ளாவர். இஃது இந்நிலவுலகத்தின்மேல் உயிரோடிருப்பவரின் சேர்க்கையை ஆராய்ந்து பார்த் தலினாலேயே இனிதறிந்து கொள்ளலாம். குடி, சூது, திருட்டு, புரட்டு, கூத்தியர் கூட்டுறவு முதலான தீவினையிற் பழகுமவர் தம்மைப்போல் அத் தீவினைகளிற் பழகுவரையே தேடிச் சேர்ந்து நேசங்கொள்வர்: அச் சேர்க்கையாற் சொல்லற்கரிய துன்பத்தையும் அடைவர்: தமது இயற்கைக்கும் பழக்கத்திற்கும் மாறான நல்லோரைக் காணவும் அவரொடு நட்புக் கொள்ளவுந் தினைத்தனையும் விரும்பார்; விரும்பாமையேயன்றி அந் நல்லோரைக் கண்டால் அருவருப்பதுஞ் செய்வர்; அல்லதவரை அணுகாமலே ஒழுகுவர். இவ்வாறு இம் மண்ணுலக வாழ்க்கையிற் றீவினைகளிலேயே பழகித் தேர்ந்தவர், தாம் இதனை விட்டு இறந்தொழியுங் காலும் அத் தீவினையிற் பதிந்த உள்ளத்தை யுடையராகவே இறப்பர்; இறந்தபின் மேலுலகங் களிற் செலுத்துதற்கேற்ற நுட்ப அறிவும் நுட்பவுடலமும் தமக்கு இல்லாமையால், தீவினைப்பற்றாற் கீழ் இழுக்கப்பட்டுக் கரிய பரிய பேய்வடிவங் கொண்டு, இந்நிலத்தைச் சாரவே உலவுவர்; அவ்வாறு உலவுங்காலும் தம் மனத்திற்கினிய கள் விற்கும் இடங்கள், சூதாடும் மரத்தடிகள், கள்வர்கூடும் மறைவிடங்கள், பொய்யர் மலிந்த அங்காடிகள், கூத்தியர் உறையும் சேரிகள், ஊன்விற்குங் கடைகள் என்னும் இவற்றின் பக்கங்களிலேயே நிரம்பாத வேட்கையுடையராய் அலைந்து திரிகுவர். அத்தகைய பேய்வடிவங்கள் தாம் விரும்பியவற்றைத் தாமாகவே பெற்று நுகரமாட்டாமல் அலறித் திரிதலால், தமக்கு வேண்டியவற்றைத் தேடிக்கொடுக்கும் இழிந்த மந்திரக்காரர் சிலர்க்கு அவை வயமாகி அவரேவிய சில புல்லிய செயல்களைச் செய்கின்றன என்பது உண்மைதான். அத்தகைய இழிந்த பேய்களுடன் பழகும் மந்திரக்காரர் தாம் மிக இழிந்த செயல்களைச் செய்தற்கு ஒருப்பட்டவராயிருப்பதோடு, அப்பேய் மனம் உவக்குமாறு அவை வேண்டிய பொழுதெல்லாம் அவை வேண்டிய தீய பண்டங்களைத் தேடித் தருபவராகவும் இருத்தல் வேண்டும். மாட்டின் ஈரல், அழுகிய பிணங்கள், முடைநாற்றம் வீசுங் கருவாடுகள், ஆடு கோழி முதலிய சிற்றுயிர்களின் மூளை, இரத்தங்கள், பழைய கள், சாராயம் முதலான பல அருவருப்பான பொருள்களையே அப் பேய்கள் உணவாக வேண்டித் திரிதலால், அவற்றையெல்லாம் அம் மந்திரக்காரர் அவை வேண்டும் போதெல்லாம் தேடிக் கொடுத்தல் வேண்டும். இங்ஙனமெல்லாம் அவற்றைக் கொடுத்து, ஏவல் வாங்குமிடத்தும் அவை தாம் அணுகுதற்கு ஏற்ற இழிந்தார்க்கே சில தீமைகளையும் சில புல்லிய நன்மைகளையும் செய்ய வல்லனவன்றித் தம்மினும் உயர்ந்த அறிவுஞ் செயலும் உடைய நல்லார்பால் அவை கிட்ட நெருங்க வேமாட்டா. அதுவேயுமன்றித் தம்மை அந் நல்லார்பால் ஏவின மந்திரக்காரர்க்குந் தீங்கிழைக்கும். ஆகவே, தீய பேய்களை வயப்படுத்துதல் கீழ்மக்களான மந்திரகாரர் சிலர்க்கு எளிதாதல் கண்டு, நல்வழியில் நடக்கும் ஏனையோர் அவற்றைத் தம்பால் வருவித்து ஏவல் வாங்குதற்குச் சிறிதும் விரும்பாதிருக்கக் கடவராக. ஏனெனில், அவற்றை வருவிக்கும்முன், உயர்ந்த நிலையிலுள்ள தாம் அதனை விடுத்துக் கீழிறங்கிக் கீழ்மக்களாதல் வேண்டும்; அதனோடு, அவை வேண்டியபொழுதெல்லாம் அவை விரும்பிய தீய பண்டங்களைத் தேடிக் கொடுத்தல் வேண்டும்: வேண்டியபோது அவற்றைக் கொடாதொழியின், தம்மை வருவித்தோனை அவை உயிர்மாளச் செய்யினும் செய்யும். நல்லோரென்று தெரியாமல் அவர்பால் ஏவிவிட்டால் அவர்க்குத் தீதுசெய்ய மாட்டாமையிற், சினமுடன் திரும்பி வந்து ஏவினவனையே அறைந்து கொன்றுவிடும். ஆகவே, இந்நிலத்தில் உயிரோடுலவும் தீயோரது சேர்க்கை நல்லோர்க்கு வேண்டப் படாமைபோல, இந்நிலத்தை விட்டுப்போய் பேய் வடிவில் உலவும் தீயோரது சேர்க்கையும் நல்லோர்க்கு எட்டுணையும் வேண்டப்படாதென்க. தாம் நல்வழியைவிட்டு விலகாமலும், தமக்கு அப் பேய்களால் தீது விளையாமலும் பாதுகாத்துக்கொண்டு, அவற்றைத் தம்வயப்படுத்தி, அறக்கொடியராய் எவற்றுக்கும் அடங்காமல் ஒழுகுந் தீயோர்பால் ஏவி அவரைத் துன்புறுத்துதற்கு மட்டும், அவற்றோடு உறவுகொள்ளுதலாற் போதரும் இழுக்கென்னையெனின்; நல்லோர் எத்துணைதான் தாம் நல்வழியிற் பாதுகாத்து ஒழுகினும், தம்மின் மிகத் தாழ்ந்த கீழோருடன் உறவாடப் புகுங்கால் அக் கீழோர்க்குள்ள இழிந்த தன்மைகளைப் பெறாது போகார்; ஆதலால், தம்மைக் கீழிறக்கிக் கொள்ளாமலே இழிந்த பேய்களுடன் பழகி அவற்றைத் தம் வயப்படுத்தலாமென்றல் பொருந்தாவுரையாம்; தம்மை அவை அணுக இடங் கொடுத்தலும், அவை வேண்டிய பொல்லாத பண்டங்களை அவற்றிற்குத் தேடித்தருதலுமே உயர்ந்தாரை நிரம்பவும் இழிந்தாராக்குதற்குப் போதுமானவைகளாகும். அறிவாற்றலினும் அகந் தூய்மையினுஞ் சிறந்த ஒருவர், தம் கண்ணெதிரே மந்திரக்காரர் சிலர் செய்து காட்டிய சில புதுமைகளைக் கண்டு வியப்படைந்து அம் முறைகளைக் கற்றுக் கொள்ளும் பொருட்டு அவர்களை நெருங்கினார். அவர்களும் அவற்றை அவர்க்குக் கற்றுக்கொடுக்க ஒருப்பட்டார். அம் மந்திரமுறைகளைத் தெரிந்துகொள்ளுதற்குச் செய்யவேண்டிய சடங்குகளும் எளியவாகவே இருந்தன. ஆனால், அம் முறைகளால் தமக்கு அடங்கித் தாம் ஏவியவைகளைச் செய்யும் ஆவியுருவத்திற்கும் அவ்வுயர்ந்தோர்க்கும் முதன்முதல் உண்டாக வேண்டிய உறவு, மக்கள் கழுத்தை வெட்டிச் சொரியும் பச்சை இரத்தப்பலியால் ஆகவேண்டியிருந்தது. அங்ஙனம் மக்கட் பலிகொடுத்து அவ்வாவியுருவத்தின் உதவியைப் பெற்றிருந்தால், அவர் திரண்ட செல்வத்தை அடையலாம், பார்ப்பவர் வியக்கும்படி பல புதுமைகளைச் செய்து காட்டலாம். ஆனாற், பலவாற்றானும் உயர்ந்த அப் பெரியவரது உள்ளம் அக் கொடுந்தீவினையைச் செய்தற்குச் சிறிதும் இசையவில்லை. தமது உயர்ந்த அறிவு நிலையைச் சீரழித்துத், தம்மைக் கொடிய விலங்கினுந் தாழ்மை பெறச்செய்து, அறக்கொடிய நிரயத் துன்பத்தில் அழுத்துதற்கு இப் பொல்லாத செயலினும் பிறிதொன்று வேண்டுவதில்லையென நடுக்கத்தோடும் உணர்ந்து, அம் மந்திரக்காரர் கூட்டத்தைவிட்டு அகன்றார். இந் நிலவுலகத்தின் மேலிருந்த நாட்களில், தம்மையொத்த மக்களைக் கொன்று தின்று பழகி, இறந்தொழிந்தபின் இதனையடுக்கவே அவ் அவாவினாற்றிரியுங் கொடிய பேய்களும் உளவாதலால், இன்னோரன்னவற்றைத் தமக்கு உதவியாக அடக்கியாளப் புகுவோர் எத்துணைக் கொடுஞ்செயலுக்கு உள்ளாக வேண்டுமென்பதை யாம் இன்னும் விரித்துக் கூறுதல் வேண்டா. இத்தகைய கொடும்பேய்களை மகிழ்வித்தற்பொருட்டு இரக்கமில்லா வன்னெஞ்சக் கொடியரான மந்திரக்காரர் சிலர் செய்த தீச்செயலால், தம்மை அரிதிற்பெற்ற தாய்தந்தை யரினின்றும் பிரித்துக்கொண்டு போகப்பட்டுக் கொலையுண்ட இளஞ்சிறாரும் பலர்! தம் ஆருயிர்க்கினிய கணவனிலிருந்தும் குடும்பத்தாரிலிருந்தும் மயக்கிக் கொண்டுபோகப்பட்டுத் தம் வயிற்றிலுள்ள இளங் கருவோடு வெட்டுண்டு உயிர்நீத்த சூல்கொண்ட இளமகளிரும் பலர்! ஆனாலும், எல்லா இரக்கமுமுடைய இறைவன் அக் கொடும்பேய்களின் ஆட்டத்தையும், அவற்றை மேற்சொல்லியவாறு கொண்டாடித் தீங்கிழைக்குங் கொடிய மந்திரக்காரரின் கொட்டத்தையும் நன்மைமிக்க ஆங்கில அரசின் வாயிலாகப் பெரும்பாலுந் தொலைத்து வருகின்றான். எவற்றுக்கும் அஞ்சாமற் கொடுந் தீவினைகள் செய்வோரை அடக்கி ஒறுத்தற்கு இந் நல்லரசினர் இருக்கையில், அதன் பொருட்டுத் தீய பேய்களைக் கைப்பற்ற வேண்டுமென்பது சிறிதும் அடாது. அன்றி, அரசினர் ஒறுப்புக்கு அத் தீயோர் தப்பிக் கொளினும், எல்லாம்வல்ல இறைவனொருவன் எங்கும் உளனாகலின், அவனது ஒறுப்புக்கு அவர் தப்புதல் இயலாது. அங்ஙனங் கொடும்பேய்களை உறவுகொள்ளுதல் குற்றமேயாயினும், அம்மைநோய் வெப்புநோய் கொள்ளைநோய் முதலியன ஊரிற் பரவாமல் நீங்கும்பொருட்டு, மாரி பிடாரி இயக்கி எல்லையம்மன் வீரன் கருப்பன் முதலான சிறு தெய்வங்களை வணங்குதல் இன்றியமையாத தன்றோவெனின்; இவ்வுலகத்திற் காணப்படும் எண்ணிறந்த உயிர்களுக்கு எண்ணிறந்த உடம்புகளையும், அவை அவ்வுடம்புகளோடு கூடி வாழ்வதற்கு இவ்வுலகத்தையும் இவ்வுலகத்துப் பலதிறப் பொருள்களையும் வகுத்துக் கொடுத்தவன் எல்லா அறிவும் எல்லா வல்லமையும் உடைய முழுமுதற் கடவுள் ஒருவனேயாம். அவனையின்றி ஓர் அணுவும் அசையாது. எவன் இந்த உடம்பை நமக்குக் கொடுத்து இந்த உலக வாழ்க்கையில் நம்மைக் கொணர்ந்து இருத்தி வைத்தனனோ, அவன் நாம் இங்கிருக்க வேண்டிய காலம் வரையில் நம்மைப் பாதுகாத்து, நம்மை இங்கிருந்து அகற்றவேண்டிய காலத்தில் அகற்றி வருகின்றான். அவன் நம்மைப் படைக்கும்போது அங்ஙனம் செய்யாமல் அதனைத் தடுக்கவல்லவர் எவரும் இல்லை; அவன் நம்மைக் காக்கும் போதும் அதற்கு மாறாய் நின்று அதனைச் சிதைக்க வல்லவரும் எவரும் இல்லை; இவ்வுலகத்தினின்று நம்மை அவன் அகற்றும் போது அதனைத் தடுப்பவரும் எவரும் இல்லை. இங்ஙனம் இவ்வுலகத்திலும், ஏனையுலகங் களிலும் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளும் அவனையின்றி யேனும் அல்லது அவனுக்கு மாறாயேனும் நடவாமையால், மேற்கூறிய சிறு தெய்வங்கள் தாமாகவே மக்கட்கு நோயை வருவிக்கவும் பின்னர் அவற்றை நீக்கவும் வல்லனவென்று கூறுதல் முற்றும் அறியாமையேயாகும். இச் சிறு தெய்வங்களைக் கனவிலும் நினையாத துலுக்கர் கிறித்துவர் முதலானவர்கட்கு அவரவர் வினையால் நோய்கள் வருதலும் போதறும்போலவே அவற்றை நம்பி வணங்கும் இந்து சமயத்தவர்க்கும் அவர்தம் வினையால் நோய்கள் வருதலும் போதலும் இயற்கையாய் நிகழ்கின்றன. இச் சிறு தெய்வங்களை வணங்காதவர்க்கு நோய் வருதலும், அவற்றை வணங்குவார்க்கு நோய் தீர்தலும் உண்மையானால், அவற்றை வணங்காத துலுக்கர் கிறித்துவர்க்கு மட்டும் தீராத நோய் வருதல் வேண்டும்; அவற்றை வணங்கும் இந்து சமயத்தவர்க்கு நோயே வருதலாகாது. மற்று அவ்வாறின்றி, நோய் வருதலும் அது தீர்தலும், செல்வமும் வறுமையும், இறப்பும் பிறப்பும் எல்லா மக்களிடத்தும் பொதுவாகவே நிகழக் காண்டலால் இவை அச் சிறு தெய்வங்களால் வருமெனவும் நீங்குமெனவுங் கூறுதல் அறிவில்லார் கூற்றேயாம். அற்றேற், சிறு தெய்வங்கள் சிலவற்றை வணங்கும் ஊரார் சிலர், இடையே அவற்றை வழிபடாதொழிவாராயின், அவர்க்கும் அவர் இருக்கும் ஊர்க்கும் சில பல தீங்குகள் உண்மையாகவே நேரக் காண்கின்றோமே யெனின்; உயிரோடிருப்பவர் களுள்ளேயே, குடிகாரருங் குறும்பருஞ் சூதாடிகளுங் கள்வருந் தீயருந் தம்முடன் நேயங்கொள்ளுதற்கு முதலில் இடந்தந்தவர், பின்னர் அவரது சேர்க்கையை ஒழிக்குங்கால் அவராற் பகைக்கப்பட்டு அவர் செய்யுந் தீங்குகட்கு ஆளாகியே தீர வேண்டும். அல்லது அவர் செய்யுந் தீமைக்குத் தப்பல் வேண்டின் தம்மினும் அவரினுஞ் சிறந்த பெரியாரது நட்பைத் துணையாக் கொண்டே அங்ஙனம் அதற்குத் தப்பல்வேண்டும். இது போலவே, தீய பேய்களின் உதவியை நாடி அவற்றோடு உறவு கொள்ளுதற் கேற்ற தீய தன்மையைத் தம்மிடம் முதலில் உண்டாக்கிக் கொள்வோர், அங்ஙனந் தாம் தம்மில் உண்டாக்கிய தீய இயல்பால் துன்புறுத்தப்படுகின்றன ரேயல்லாமல் அப்பேய்களால் துன்புறுத்தப் படுகின்றனர் அல்லரென்று உணர்ந்து கொள்க. ஒருவன் தன்னிடத்து வருவித்துக்கொள்ளும் நம்பிக்கையினாலேயே நன்மை தீமைகளை யடைகின்றான். முழுமுதற் கடவுளையும் அவரடியார்களையும் நம்பி வாழ்பவன் அந் நம்பிக்கையால் அவரருளைப் பெற்று நன்மையை அடைகின்றான். சிறு தெய்வங்களை வழிபடுவோன் தான்செய்யும் அவ் வழிபாட்டிற் சிறிது தவறினும் தனக்கு நோயுண்டாம் என்று நடுக்கத்தோடும் நம்பிக்கை வைத்தலின் அதனால் தீமையை அடைகின்றான். கடவுளை நம்பாதவர்க்கு அவனருளால் வரும் நன்மை இன்றாதல்போலச், சிறு தெய்வங்களை நம்பாதவர்க்கு அவற்றால் வருந் தீமையும் இல்லையாம். நம்பிக்கையின் வாயிலாகப் புகுந்து கடவுளின் றிருவருள் ஒருவற்கு நன்மையைப் புரிகின்றது; பேயின் செயலோ அதன் வாயிலாக அவற்குத் தீமையைத் தருகின்றது. நம்பிக்கை ஒன்றுமே இச் சிற்றுயிர்களுக் குள்ள தனிச்செயல். இதனைத் தவிர, வேறு இச் சிற்றுயிர்களாற் செய்யலாவதொன்றுமில்லை; இதனைத் தவிர மற்றெல்லாச் செயல்களும் இறைவனருளால் நடைபெறுகின்றன; இறைவன் உடம்புகளைப் படைத்து, அவற்றில் இவ்வுயிர்களை அடைத்து இங்கு விடுத்ததெல்லாம், அவற்றிற்கு இந் நம்பிக்கையினைத் தோற்றுவித்து, அதன் வழியே தனதருளைச் சொரிந்து, அவை தம்மைப் பொதிந்த அறியாமையைக் களைந்து, பேரின்பத்தை வளர்த்தற்கேயாம். உயிர்களின் நன்மைக்கு வேண்டும் ஏனையெல்லாத் தொழில்களையும் இறைவன் செய்ய, அவை அத் தொழில்களைத் தமது நன்மையின்பொருட்டுப் பயன்படுத்திக் கொள்ளுதற்குத் தாஞ் செய்யவேண்டுவது அவனை நம்புதல் ஒன்றேயாம். அவனை நம்பாதார்க்கு அவன் அவர் பொருட்டுச் செய்யும் நன்மைகள் எவையும் பயன்றராமைபோலத் தீய பேய்களை நம்பாதார்க்கும் அவை செய்யுந் தீமைகள் சிறிதுந் தீங்குபயவா என்று கடைப்பிடிக்க. அவ்வாறு கொள்ளின் அவரவர் நம்பிக்கையின் வேறாக நன்மை தீமைகளைத் தரும் ஆற்றலும், அதனையுடைய இறைவனும் பேய்களும் இல்லை யென்று முடிக்கப்படுமேயெனின் அற்றன்று. பஞ்சைக் கொளுத்தும் ஆற்றல் நெருப்பின்கண் உளதாயினும், நீரில் நனைந்த பஞ்சின் கண் அது செல்லாமைபற்றி, அவ்வாற்றலும் அதனையுடைய தீயும் இல்லையென்றல் பொருந்தாமை போலவும், ஐம்பொறி யானும் நுகர்தற்கினிய பண்டங்களும் அவற்றைப் பெறுதற்குக் கருவியான பொற்றிரளுந் தனக்கெளியவாய்த் தன்னைச் சூழ ஏராளமாயிருப்பினும் எந் நேரமும் அறிவு மயங்கி உறக்கத் திலேயே கிடப்போன் அவற்றையறிந்து நுகராமைபற்றி அப் பொருள்கள் இல்லையென்றல் ஏலாமை போலவுங் கடவுளையும் அவற்குள்ள பேராற்றலையும் பேய்களையும் நம்பாதார்க்கு அந் நம்பிக்கையின்மை பற்றி அவர் தாமும் இல்லையென்றல் ஒரு சிறிதும் பொருந்தாதாம். காய்ந்த பஞ்சுபோல் முறுகிய அன்பும் நம்பிக்கையும் உடையார்பால் இறைவனது அருட்டீ தாவிப் பற்றுதல்போல, அந் நம்பிக்கையில்லா ஈரப் பஞ்சனையார்பால் அது தாவுதல் இல்லையாகும். இங்ஙனமே பேய்கள் உளவாயினும் அவற்றின் தீச்செயல் அவற்றை நம்பாதார்பாற் சிறிதும் அணுகுதல் மாட்டாதென்று கடைப்பிடிக்க. அங்ஙனமாயிற், கடவுளை நம்புவார்க்கு அவன் நன்மையைத் தருதல்போலப், பேய்களை நம்புவார்க்கும் அவை நன்மை தீமைகளைச் செய்யவல்லனவாமென்பது பெறப்படு மாதலால், அவை கடவுளுக்கு மாறாக நின்று எவையுஞ் செய்ய வல்லன அல்ல என்று மேற்கூறிய தென்னையெனின்; அவ்வியல்பினையும் ஒரு சிறிது விளக்குதும்: உயிர்கள் தம்மையுண ராமலும், தமக்குத் தலைவனான இறைவனை யுணராமலும் இன்னதென்று சொல்லுதற்கும் நினைத்தற்கும் ஆகாத ஒரு பேரிருளிற் புதைந்து கிடந்தனவாக, அவை தம்மைப் பொதிந்த அவ்விருள் வலியை மெலிவித்து அவற்றின் அறிவை விளங்கச் செய்வான்பொருட்டு அவை தமக்கு மிக வியப்பான பலதிற வுடம்புகளையும், அவை அவற்றோடு கூடி உலவுதற்கு எண்ணிறந்த உலகங்களையும், நுகர்தற்கு அவ்வுலகங்களிற் பலதிறப் பொருள்களையும் தனது பேராற்றலாலும் தனது பேரறிவாலும் படைத்துக் கொடுத்துப் பேருதவி செய்து வருகின்றான். எல்லாம்வல்ல கடவுள் எல்லாஅறிவும் எல்லா ஆற்றலும் உடையனாகலான், எண்ணிறந்த வுயிர்கள் தன்னைக் கேளாதிருக்கையிலும் அவற்றிற்கிரங்கி அவற்றிற்கு இந் நன்மைகளைத் தானாகவே செய்து வருகின்றான். அவனுதவியைப் பெறும் ஏனை யெல்லாவுயிர்களும் அவனது கட்டளையின்றித் தாமாகவே முதன்மையாய் நின்று எதுவுஞ் செய்யவல்லன அல்ல. பருவுடம்பில் நிற்கும் மக்கள் ஆவியுடம்பில் நிற்கும் உயிர்களை உறுத்து நினைந்து ஏவினால் மட்டும் சில நன்மை தீமைகளைச் செய்யவல்லன ஆகும்; அல்லாக்கால் அவை தாமாகவே கடவுளுக்கு மாறாய் நின்று ஏதுஞ்செய்வன அல்ல. பருவுடம்பில் நிற்கும் மக்களாவது தமக்கெனச் சிறிதொரு செயலுடையர். ஆவியுடம்பில் நிற்பனவோ முழுதும் இறைவன் உதவியையே அவாவி நிற்பன. ஆதலால், அவை அவனுக்கு மாறாய் எங்ஙனம் நடக்கக்கூடும்? அதனாலன்றோ, அவை தாம் விரும்பிய சிற்றுயிர்களின் ஊனைத் தாமாகவே பெறுதற்கு இயலாமல், தம்முதவியை வேண்டும் மக்களின் வாயிலாகப் பெற்றுத் தமது பேரவாவைத் தணித்துக் கொள்கின்றன? தாம் விரும்பிய ஊனின்பொருட்டு எந்தச் சிற்றுயிரையேனும் அவை தாமாகவே கொல்லுமானால், எல்லாம்வல்ல கடவுள் சொல்லற்கரிய துன்பத்தைத் தருங் கொடுநிரயங்களிற் படுத்து அவற்றைப் பன்னெடுங்காலம் வருத்துவன். அத் துன்பத்திற்கு நடுநடுங்கியே ஆவியுடம்பில் நிற்குங் கொடிய பேய்கள் தாமாகவே எந்த உயிரையுங் கொல்வதில்லை: தம்மை வருவிக்கும் மந்திரக்காரரே ஆடு மாடு கோழி முதலியவற்றை வெட்டிப் பலியூட்டி அதனால் வருந்தீவினைக்கு உள்ளாக, அப் பேய்கள் அத்தீவினைக்குத் தப்பிக் கொள்கின்றன. பிறருயிரைக் கொள்ளை கொள்ளுமாறு மந்திரக்காரரால் ஏவப்பட்டவிடத்தும், அவை ஏவப்பட்டார்பாற் சென்று அவரைஅச்சுறுத்தவும் அவர்க்குச் சில துன்பங்களை விளைக்கவும் வல்லனவேயல்லாமல், அவரைக் கொலைபுரிய வல்லனவல்ல. அன்றி அவை அங்ஙனஞ் செய்ய விரும்பினாலும், தப்பக்கூடிய அரசன் ஆணையைக் கடந்து தப்பக்கூடாத கடவுளின் திருவருளாணை வழிநிற்கும் அவை அதற்குச் சிறிதும் இடம்பெறா. மந்திரக்காரரால் ஏவப்பட்ட அவை பிறருயிரைக் கொள்ளைகொள்ள மாட்டாமைபோலவே, பிறர்க்குரிமை யாயுள்ள செல்வப் பொருள்களையும் பண்டங்களையுங் கொள்ளையிடவும் மாட்டா. அவ்வாறல்லாக்கால், மந்திரக் காரராவார் எளிதிலே திரண்ட செல்வராய்விடலாம். அதுவேயு மன்றித் தாம் அணுகுதற்கேற்ற தீய இயல்புகள் இல்லார்பாலும் அவை அணுகப்படாதென்பதூஉம் இறைவனதாணை. அங்ஙன மில்லையேல், எத்துணையோ உயர்ந்த தன்மைகள் வாய்ந்தோர் மந்திரக்காரர் ஏவிய பேய்கட்கு இரையாயொழிந்திருப்பர்; உலகத்தில் நன்மையும் நல்லோரும் இல்லையாகி எங்குந் தீமையுந் தீயோருமே நிறைந்திருத்தல் கூடும். மற்று அங்ஙனம் இருப்பக் காணாமையால், தீய பேய்கள் தாமாகவே பிறர்க்கு ஏதுந் தீங்கிழைக்க மாட்டாமையோடு, தம்மை ஏவும் மந்திரக்காரர் விரும்புமாறெல்லாந் தீங்கிழைக்கவும் மாட்டாவென்றுணர்ந்து கொள்க. ஆகவே, அப் பேய்கள் கடவுளின் றிருவருளாணைக்கு மாறுநிற்க மாட்டாமையால், மந்திரக்காரரால் ஏவப்பட்டுத் தாஞ்செய்யும் சில நல்வினை தீவினைகட்கும் அவை முற்றும் உரியவாகமாட்டா; அவற்றை ஏவும் மந்திரக்காரரே அவற்றிற்கு உரியராவர் என்க. அஃதொக்குமென்றாலும், கடவுள் தன்னை நம்பாதார்க்கு நன்மையைத் தரார் என முன்னர்ச் சொல்லிப் பின்னர்த் தம்மையுந் தலைவனையும் உணராமற் பேரிருளிற்கிடந்த எல்லா வுயிர்க்கும் அவர் நன்மையைச் செய்து வருகின்றாரென்று மாறுபடக் கூறுதலென்னையெனின்; உயிர்கள் தன்னையறிந்து கேளாதிருக்குங் காலையிலும், அவற்றிற்கு எல்லா நன்மை களையுஞ் செய்துவருதல் கடவுளின் இயற்கையே யென்றாலும், அவர் செய்யும் அந் நன்மைகளாற் பயன்பெறுதல், அவற்றை யுணர்ந்து அவற்றை நம்புவார்க்கே உளதாவதாம். உண்ணற்கினிய அறுசுவைப் பண்டங்களுந் தன்னைச்சூழ இருப்பவும், அவற்றை யறிந்தெடுத்துப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்க்கு அந் நலங்கள் பயன்படாது போதல் திண்ணமேயாம். தன்னியற்கை யாய் இறைவன் உயிர்கட்கு எஞ்ஞான்றும் நலங்களையே செய்து வருகுவன். அவற்றையறிந்து பயன்படுத்திக் கொள்ளுதலே உயிர்கட்குக் கடமையாவது. அவ்வாறு செய்யாதார் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கழுவாரையே ஒப்பாராவர். அவன்றரும் நலங்களைப் பயன்படுத்திக் கொள்வோர் எக்காலும் அவனை மெய்யன்பால் நம்பி அவன்றிருவருள் வழியிலேயே நிற்பவராவர். இங்ஙனம் நிற்பவே, அவனது திருவருட் பெருக்கு அவர்க்குள்ள அறியாமைக் கறையைக் கழுவி அவரைப் புனிதராக்கி எவர்க்கும் இல்லாப் பெருஞ்சிறப்பை அவர்க்கு நல்காநிற்கும் என்க. இனி, உலகின்கண் உள்ள மன்னுயிர்கட்குப் பெருநலங் களைச் செய்வதிலேயே கருத்தூன்றி நிற்பவர், மேலுலகங்களில் ஆவியுருவில் உலவா நிற்கும் சான்றோரை வருவித்து, அவர்தம் உதவியால் அவைகளை நிறைவேற்ற முயன்றால், அஃது ஒரோவொருகாற் கைகூடினுங் கூடும். ஆனால், அம் முயற்சியிற்றலையிடுவோர் மிகவுந் தூய உள்ளமுஞ் சொல்லுஞ் செயலும் உடையராதலோடு, அன்பினாற் குழைந்து குழைந் துருகும் இயல்பினராயும் இருத்தல் வேண்டும். தாம் வருவிக்க விரும்பிய சான்றோர், தாம் வருந்தி அழைத்த காலத்தும் வந்திலராயின் அதுபற்றி மனந்தளர்ந்து அவர்பால் வைத்த அன்பை நெகிழவிடாது, மேலும் மேலும் அன்பில் அகம் நெகல் வேண்டும். எல்லாம்வல்ல இறைவனே எல்லா உயிர்கட்கும் வேண்டிய உதவிகளையெல்லாம் புரிந்துவருதலாற், கீழேயுள்ள நிலவுலகத்தைவிட்டுச் சென்ற சான்றோர் இதனை நன்குணர்ந்து இங்குள்ளார்க்கு வேண்டும் உதவிகளைப் புரிதலிற் றாம் சிறிதுங் கருத்து வையாது, தம்மோடு ஒருங்கு உலவும் தம்மையொத்த ஆவியுருவங்கட்கு உதவியுந் துணையுமாய் நின்று, இறைவனது அருட்பேற்றை வேண்டியபடியாகவே இருப்பர். ஆதலால், அவர் இங்குள்ளார் வேண்டுகோளை ஏற்று, இங்கே மீண்டு வந்து உதவிபுரிதல் அரிதேயாம். மேலும், இக் கீழுலகத்தைவிட்டுப் போய் நீண்டகாலங் கழிந்தால், அவர்களது ஆவியுடம்பு வரவர நுண்ணிதாகி அவர்தம் நினைவுகளும் மேன்மேல் அருளில் ஊறி நினைவுக்கும் எட்டாத அத்துணைச் சேய்மையிலுள்ள உலகங்களிற் போய் விடுமாதலால், அவர்களைத் திரும்ப இங்கு வருவித்தல் எளிதான செய்கையன்று. அவர்கள் இந் நிலவுலகத்தை விட்டுச் சென்ற சில நாட்கள், அல்லது சில திங்கள் அல்லது சில ஆண்டுகள் வரையில் முறுகி முயன்றால் அவர்களை வருவித்தல் ஒருவாறு கைகூடும். நீண்டகாலங் கடந்த பின்னரோ அது கைகூடாது. அல்லாமலும் மேலுலகங்களிற் சென்ற சான்றோர் தம் வினைகள் அங்கே தூயவானபின் மீண்டும் பிறவிக்கு வர வேண்டியவர்களானால், இந்த மண்ணுலகத்திலோ அன்றி இதைப்போலுள்ள வேறு மண்ணுலகங்களிலோ போய்ப் பிறப்பராதலின், அத்தகையோரை எத்துணை தான் உருகி வேண்டினும் அவர் எங்ஙனம் இங்கே வந்துதவி செய்யகூடும்? ஆயினும், எல்லாம்வல்ல கடவுளே இங்கிருந்து நம்மனோர் செய்யும் வேண்டுகோளைத் தமது திருவுளத்தேற்று, நமக்கிரங்கி நாம் நினைந்த அப் பெரியோர் வடிவில் வந்து அருள்செய்தலுங் கூடும். நினைந்தார் நினைந்த வடிவுகளிலெல்லாந் தோன்றி அருள் செய்யும் ஆற்றலும் இரக்கமும் இறைவன் ஒருவனே உடையன். ஆனது கொண்டு, தீய பேய்களை வருவித்தற்கு வருந்தி முயன்று துன்புறுதலை அறவே கைவிடுத்துச் சான்றோரையும் எல்லாம் வல்ல இறைவனையும் நெஞ்சாரக் கருதி வழிபட்டு அவர்தம் உதவியையுந் துணையையும் வேண்டுதலே தப்பாமற் பயன்றரு வதாமென்க. இதுவேயுமன்றி, மேலுலகங்களில் இயங்குந் தூயருள் ஒரு சாரார் பேரிரக்கத்தான் உந்தப்பட்டுக் கீழ் உலகங்களில் உள்ளார்க்கு நேருந் துன்பங்களையும் பேரிடையூறுகளையும் நீக்கும் முயற்சியும் உடையராதலால், பிறர்க்கு நன்மை செய்தலையே விரும்பிக் கீழிருந்து நம்மனோர் ஆற்றும் அரும் பெரு முயற்சிகளைக் கண்டு அகம்மகிழ்ந்து அவர் தாமாகவே வந்து நின்று அன்னார்க்கு உதவி செய்தலை மேள்கொள்வர். இங்கிருந்து நன்மை செய்தலிலேயே ஓவாது முயல்வார்க்கு எதிர்பாராமல் நேரும் இடர்களையும் அவர் முன்னறிந்து விலக்கு கின்றனர். மறை பொருளாராய்ச்சியில் தேர்ந்த நல்லோரான துரைமகன் ஒருவர் (C.W. Lead Beater). ஒரு நகரத்தில் அமைதியான ஒரு தெரு வழியே ஓர் இரவு நடந்து சென்றார். அவ்விரவு மழையும் புயற்காற்றும் மும்முரமாய் இருந்தன. அவர், தமது கையிற் பிடித்திருந்த குடை காற்றாற் பிடுங்கப்படாமைப் பொருட்டு அதனை நிமிர்த்தி இறுகப் பிடித்தற்குப் பெரிதுந் தத்தளித்தார். அந் நேரத்தில் அவர் திடுக்கிடுப்படியாகப் பின்னே குதி! என்னுஞ் சொற்கள் அவர் செவியின்கண் வந்து கூவின. உடனே ஏதொன்றும் நினைத்தற்கு நேரம் இல்லாமலே அவர் திடுமெனப் பின்வாங்கிக் குதித்தார். அங்ஙனம் அவர் குதிக்கையில் அவரது கைக்குடை முன்னே சாய்ந்தது; கூடவே, பேருருவினதான புகைப் போக்கி மூடுந் தகட்டுக்குடம் ஒன்று அவர்க்கெதிரில் மூன்றடி விலகிப் பேரொலியோடும் மேலிருந்து கீழ் விழுந்தது. அக் குடத்தின் எடையும் அது கீழ் விழுந்த விசையும் நோக்குங்கால், அஃது அவர்மேற் பட்டிருந்தால் அவரை உடனே நசுக்கி உயிர்மாளச் செய்திருக்கும். ஆனால், ஆவி வடிவில் நின்று கூவிய பெரியவரின் குரலொலி அவரை அவ்விடருக்குத் தப்புவித்தது. இன்னும், ஒரு வெள்ளைக்காரப் பெருமாட்டி ஒருகால், மிகவுங் கடுமையாக நடந்த ஒரு தெருச்சண்டைக் கூட்டத்தின் நடுவே அகப்பட்டுக் கொண்டார். அவ்வம்மையாரைச் சூழ ஆண்மக்கள் பலர் கடுமையாக அடிக்கப்பட்டுக் கீழ்விழுதலைக் கண்டு தமக்கும் அங்ஙனமே நேருமென்று அவர் எதிர்பார்த்தார்; ஏனென்றால், அக் கூட்டத்தைவிட்டுத் தப்பிப்போவது அவர்க்கு முற்றிலுங் கூடாததாயிருந்தது. அந் நேரத்தில் அவர் சடுதியில் தாம் அக் கூட்டத்தினின்றுஞ் சுழற்றியெடுக்கப்படுவதாக உணர்ந்தார்; பின்னர் ஓர் இமைகொட்டும் முன், சண்டை நடக்குந் தெருவிற்குப் பக்கத்தே நெடுகச் செல்லும் மற்றொரு சிறு தெருவின்கண் ஏதோர் இடருமின்றி அவர் தன்னந் தனியே நிற்கக் கண்டார். பக்கத்துத் தெருவில் இன்னுஞ் சண்டை நடக்கும் ஓசை அவர்க்குக் கேட்டது. தமக்கு நேர்ந்ததைப் பற்றி நினைந்து அவ்வம்மையார் பெரிதும் வியப்படைந்து கொண்டிருக்கையில், அச் சண்டைக் கூட்டத்தினின்றுந் தப்பி ஓடி வந்த இரண்டு மூன்று ஆண்மக்கள் அத் தெருவின் கோடியிற் புகுந்தபோது அவ்வம்மையாரைக் கண்டு, இறும்பூதுற்று, அவ்வாண்மைமிக்க பெருமாட்டியார் அக் கூட்டத்தினின்றுஞ் சடுதியில் மறைந்து போனதனால், அவர் அடிபட்டுக் கீழ் விழுந்திருக்க வேண்டுமென எண்ணியதாகக் கூறி, அவர் தப்பிப் பிழைத்ததற்காக மகிழ்வுற்றார்கள். ஆவியுருவில் நின்ற ஓர் உயர்ந்தோர் இங்ஙனம் அவ்வம்மையாரை அச் சண்டைக் கூட்டத்தினின்றும் எடுத்துத் தப்புவியாதொழியின் அவ்வம்மையார் அடிபட்டு வீழ்ந்து இறந்திருப்பர் அல்லது கடுங்காயப்பட்டு நீண்ட நாள் துன்புற்றிருப்பர். ஆவியுருவில் நிற்கும் நல்லோர் இங்ஙனம் தாமாகவே பிறவுயிர்க்கு நேரும் இடர்களை நீக்கும் அருள் உள்ளம் வாய்ந்தாராயிருத்தலின் அவருதவியை நாடி வேண்டுதல் வீண் போகாது. வேண்டப்பட்ட நல்லோர் அவ் வேண்டுகோளை ஏலாமல், தமதுள்ளத்தை இறைவன் திருவடிப் பேற்றின்கண் நிறுத்தித் தம்மை வேண்டினாரை நோக்காராயினும், அவரோடு அம் மேலுலகங்களில் உலவும் ஏனை நல்லோர் சிலர் இங்குள்ள நல்லோர்க்கு உதவிசெய்யும் எண்ணமும் உடையராதலால் அவர் தாம் வேண்டப்படாவிடினும் தாம் அவர் வேண்டுகோளைத் தமது திருவுளத்தேற்று அவர் வேண்டியதொரு நன்மையைச் செய்குவர். இனி, மேலுலகங்களுக்குத் தலைவராயும் அவரேவல் வழி நிற்போராயும் முழுமுதற் கடவுளால் நிறுத்தப்பட்ட தூய கடவுளரும் பலர் உளர். அக் கடவுளரை நோக்கி இங்கிருப்போர் செய்யும் வழிபாடுகளும் வேண்டுகோள்களும் நல்லனவா யிருப்பின் அவை அவரால் ஒரோவொருகால் ஏற்றுக் கொள்ளப்படுதலும் உண்டு. அவர் அவற்றைக் கண்டு தமது திருவுளங் கனியப்பெற்றால், தம் அன்பர்க்கு வேண்டிய பல பெருஞ் சிறப்புகளெல்லாம் தாமாகவே உவந்து செய்வர். அத்துணையேயன்றிப், பொருந்தா ஒழுக்கமுடையராய் அன்பு மிலரான மந்திரக்காரர் விரும்புமாறெல்லாம் அவர் இணங்கிச் செய்தல் ஒரு ஞான்றுமில்லையென்க. 9. சேர்க்கைப்பொருள் கவர்ச்சி இதுகாறும், மனஞ் சொற் செயல்களின் பழக்கத்தாற், பிறபொருளின் உதவியை வேண்டாமலே யாவரும் எல்லார் மாட்டும் செய்தற்கிசைந்த வசியச்செயல்களை எடுத்துக் கூறினாம். இங்கே பிறபொருள் என்றன உயிர் அற்றனவாய், ஓருயிரோடு இயற்கையாயும் செயற்கையாயும் சேர்ந்திருந்த பொருள்களேயாம், மேலெடுத்துரைத்த வசியச்செயல்கள் பெரும்பாலும் எல்லார்மாட்டும் யாவரும் செய்துபார்த்தற்கு இசைந்தனவாகும். இனி ஒருவர் மற்றொருவரைத் தனியே வசியஞ்செய்தற் பொருட்டுக் கைக்கொள்ளும் முறைகளும் பல உண்டு. மக்கள் பலரை ஒருங்கே தம்வழிப்படுத்தல் வேண்டிச் செய்யும் வசிய முயற்சியினும், ஒருவரைத் தனியே தம் நல்வழிப்படுத்தச் செய்யுந் தனி முயற்சி பெரிதும் வலிவுடைத்தாம். எதுபோலவெனின், மிகவும் அகன்றதோர் யாற்றிற்பரவி ஆழமின்றிச் செல்லும் நீர்முழுமையும் ஆய்ந்து குறுகியதொரு காலிற் செலுத்தப் படுமாயின் அது மிகுந்த வலிமையும் விரைவுங் கொண்டு செல்லுதல்போலவென்பது. உலகின்கண்ணும் ஒருவர் பல துறைகளிற் புகுந்து முயலுங்கால் அவரது முயற்சி வலிவிழந்து தக்க பயனைத் தராமையும், அவ்வாறன்றி அஃது ஒரு துறையில் மட்டும் முனைந்து நின்று நடைபெறுங்கால் அது மிக்க பயனைத் தருதலும் நாம் கண்கூடாய் அறியக் கிடந்தனவேயாம். ஆகவே, ஒருவரை வசியப்படுத்தும் முயற்சி பெரும் பான்மையுந் தவறாமற் கைகூடும். மந்திரக்காரர் சிலர் இம் முயற்சியில் வெற்றி பெறுதலெல்லாம், அவர் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் ஒருவரை நோக்கியே தம்முடைய நினைவையும் முயற்சியையுஞ் செலுத்து தலாலேயாம். இங்ஙனம் அவர் ஒருவரை நோக்கிச் செய்யும் வசிய முயற்சியின்கண், அது பிழையாமற் பயன்றரும் பொருட்டுச் சில பொருள்களையுந் துணைக்கருவிகளாகக் கொள்கின்றார்கள். அவை யாவையோவெனின்; வசியமாக வேண்டியவரோடு சேர்ந்திருந்த பொருள்களேயாம்; அப் பொருள்கள் அவர்கட்கு இயற்கையால் உரிய மயிர் நகம் இரத்தம் முதலியனவும், செயற்கையால் உரிய ஆடை, அணிகலன்கள், புழங்கும் ஏனம், எழுதுங் கடிதம், பயிலும் புத்தகம் முதலியனவும் ஆம்; இவ்வாறிருவகையால் உரிய ஒருவர் தம் ஒரு மயிர்ச்சுருளையேனும், நகக்களைவுகளையேனும், ஒரு சொட்டு இரத்தத்தையேனும், அவர் அணிந்து கழித்த ஆடையில் ஒரு துண்டையேனும், ஒரு நகையையேனும், அவர் உணவெடுத்த ஒரு தட்டையேனும், எழுதிய அல்லது தொட்ட ஒரு கடிதத்தையேனும், பயின்றதொரு புத்தகத்தை யேனுங் கைப்பற்றிக்கொண்டு, அப்பொருளின் வாயிலாக அவரது உள்ளத்தை வசியஞ் செய்து விடுகின்றார்கள். அஃது யாங்ஙனம்? அவருடன் சேர்ந்திருந்த அப் பொருள்கள் உயிரில்லாத வெறும் பருப்பொருள்களாய் அவரினின்றும் வேறு பிரிக்கப்பட்டனவாதலால், அவற்றுள் ஒன்றைக் கொண்டு அவரை வசஞ் செய்தற்கு ஏதொரு தொடர்புங் கண்டிலமாலெனிற் கூறுதும்: ஓருயிர்ப் பொருளோடு சேர்ந்திருந்த ஏனையுயிரில் பொருள்களெல்லாம் அவ் வுயிரின் நினைவுகளாலுஞ் செயல்களாலும் பதிவு செய்யப்பட்டு, அவ்வுயிரோடு தமக்கு உளதாய தொடர்பினையும் அவ்வுயிரின் றன்மைகளையுங் காட்டும் இயல்பினவாய் இருக்கின்றன. இவ்வாறு ஓருயிரின் சேர்க்கையால் அதனோடு சேர்ந்திருந்த பொருள்களிடத் துண்டாகும் பதிவுகள் எக்காலத்தும் அழிவ தில்லை. ஓர் உயிர் தான் இருந்த உடம்பை விட்டுச் சென்று பல நுற்றாண்டுகள் கழிந்தாலும், அதனோடு சேர்ந்திருந்த பொருள்கள், தம்மிடத்துள்ள பதிவுகளைக் காணவல்லார்க்கு, அவ் வுயிரின்றன்மைகளை நன்கு விளங்கக் காட்டுகின்றன. ஒலியெழுதி (Phonograph) என்னுங் கருவியானது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இருந்தோர் பாடிய பாட்டுகளையும் பேசிய பேச்சுக்களையும் அவர் பாடிய பேசியபடியாகவே ஓர் இழையளவும் பிசகாமல் இப்போது பாடியும் பேசியுங் காட்டுதல் போல, இவ்வுலகின்கண் உள்ள எல்லாப் பொருள் களுந் தம்மொடு சேர்ந்திருந்தார் நினைவு சொற்செயல்களையும், வாழ்க்கையின் இயல்புகளையும், பிறவற்றையுந் தெளிவுற எக்காலத்துங் காட்ட வல்லனவா யிருக்கின்றன. என்றாலும், இவை மக்களின் புறக் கண்களுக்கு இவற்றைக் காட்டுவதில்லை. புறக்கண் பார்வை ஒன்றேயுடையார் மறைவான இந் நுண்ணிய வுண்மைகளைக் காண மாட்டாமையின் இவை தம்மைப் பொய்யென்று இகழ்ந்துரைப்பராயினும், அகக்கண் பார்வை யுடையார் இவற்றைத் தெளியக்கண்டு கூறி அவர்க்கு அவ் வுண்மைகளைத் தெரிவுறுத்தி வருகின்றார். இவ்வகக் கண் பார்வை மக்கள் எல்லார்க்கும் பொதுமையில் உரியதேயாயினும், அது சிலரிடத்துத் தெளிவுற்று விளங்கியும் வேறு பலரிடத்துத் தெளிவின்றி மழுங்கியும் இருக்கின்றது. முயற்சியுடைய சிலர்க்குச் சில நாட் பழக்கத்தில் அது தெளி வெய்தி விளங்குதல்போல, ஏனைப் பலர்க்கு அஃது அங்ஙனம் எளிதில் விளங்குவதில்லை. ஆனாலும், விடாப் பிடியாய்த் தொடர்ந்து முயன்று இவ்வகக்கண் பார்வையைப் பெற விழைவார் எவர்க்கும் அப்பேறு வாய்த்தல் திண்ணமேயாமென்க. மேற்பிறவிகளிற் செய்த முயற்சியின் பயனாக இப் பிறவியில் இவ்வகக் கண் பார்வை வாய்க்கப்பெற்றார் சிலரைக் கருவியாகக் கொண்டு, அறிவான்மிக்க சான்றோர் சிலர் பொருட்பதிவுகளை ஆராய்ந்து அப் பதிவுகளுக்கு ஏதுவாயிருந்த உயிர்களின் நிகழ்ச்சிகளை நன்கறிந்து நூல்கள் எழுதியிருக்கின்றார்கள். இம் மறைபொருட் பதிவாராய்ச்சியில் முதன்முதற் றலையிட்டு அதனை வெளிக்கொணர்ந்தவர் மருத்து நூலறிஞரான ஜோசப் ரோட்ஸ் புக்கானன் (Dr. Joseph Rodes Buchanan) என்னும் அமெரிக்க துரைமகன் ஆவர். பலருடைய மண்டைகளின் அமைப்புகளை அளந்து பார்த்து, அவற்றினுள் உள்ள அவர்தம் மூளையின் ஆற்றல்களைத் தெரிந்துரைப்பதில் இவர் நிகரற்ற புலமை வாய்ந்தவர். ஒரு நாள் இவர் ஒரு கிறித்துவ குருவின் தலையைப் பார்த்ததும் அவரை நோக்கித் தாங்கள், கட்புலனா காமற் சுற்றிலும் நிகழும் வளியின் நிலைகள் மின்னோட்டங்கள் முதலான இயற்கைப் பொருணிகழ்ச்சிகள் பலவுங் கூர்த்துணரும் இயற்கை நுண்ணுணர்ச்சி வாய்க்கப் பெற்றிருக்கின்றீர்கள் என மொழிந்தார். அதற்கவர் அவ்வறிஞர் சொல்லியது உண்மைதான் என ஒத்துக்கொண்டு, நள்ளிருளில் தாம் தொடுவது இன்ன தென்று அறியாமலே தற்செயலாக ஒரு பித்தளைத் துண்டைத் தொட்டாலும், உடனே தமதுடம்பில் ஒருவகையான உணர்வும், அதன்வழியே தமது நாவினிடத்து அப் பித்தளையின் அருவருப்பான சுவையும் தமக்குத் தோன்றுவதாக உரைத்தார். அங்ஙனங் கூறிய அவரது சொல்லைக் கேட்டது முதல், அம் மருத்துவநூலறிஞர், புறப்பொருட் சேர்க்கையால் நுண்ணுணர் வுடைய சிலர்க்குத் தோன்றுந் தோற்றங்களை ஆராய்ந்தறியத் தலைப்பட்டார். இயற்கை நுண்ணுணர்வுடைய சிலர் கையிற், சிலர் கையாண்ட பொருள்களைக் கொடுத்து, அவற்றிலிருந்து தம்முள்ளத்திற்படுந் தோற்றங்களை எடுத்துரைக்கும்படி அவர் கேட்ப, அவர்கள் அப் பொருட்குரியவர்களைத் தினைத்தனையுந் தெரியாதிருந்தும் அவர்களின் அடையாளங்களையும் அவர் களால் அப் பொருள்கள் கையாளப்பட்ட வகைகளையும், அவர்களுடைய வரலாறுகளையும் நேரேயிருந்து நெடுகக் கண்டவர்கள் போல் இழையளவும் பிசகாமல் உடனிருந்தவர்கள் பெரிதும் வியக்கும் படி நன்கெடுத்துக் கூறினார்கள். இதனாற், கடந்துபோன உயிர்களின் நிகழ்ச்சிகள் அவ்வளவும் அவற்றுடன் ஒருங்கு சேர்ந்திருந்த பொருள்களில் அழியாமற் பதிந்திருக்கு முண்மை நன்கு புலப்படலாயிற்று. இவ்வுண்மைக்குச் சான்றாக ஆங்காங்கு நிகழ்ந்த சில மெய்ந் நிகழ்ச்சிகளை இங்கெடுத்துக் காட்டுவாம். சிற்றுயிர்ப் பொருளாராய்ச்சியில் மிகச் சிறந்து விளங்கிய அகஸிஸ் (Agassiz) என்னும் அமெரிக்க துரைமகனார், பண்டை நாளிலிருந்து மடிந்து கல்லாய்ப்போன சிற்றுயிர்களின் உடம்புகளைத் தொகுத்து வருகையில், பாறைக்கல் ஒன்றின் மேல் அரைகுறையாய்ப் பதிந்திருந்த ஒரு மீனின் வடிவத்தைத் தெரிந்து கொள்ள முயன்றார். அஃது, இன்ன இனத்திற் சேர்ந்ததென்று உறுதிப்படுத்தும் பொருட்டு, அம் மீனின் முழுவடிவத்தைத் தெரிந்துணர அவர் எவ்வளவோ முயன்று பார்த்தும், அது முடியாமையின் அயர்ச்சியடைந்து அதனை அப்புறம் வைத்து விட்டார். அதன் பின் அவர் உறங்குகையில், அம் மீனின் முழு வடிவமும் தம்மெதிரே கனவிற் றோன்றக் கண்டார். ஆனால், அவர் உறக்கம் நீங்கி விழித்தவுடன் அதன் அவ்வடிவத்தை மறந்து போனார். என்றாலும், அம் மீனின் வடிவு அரைகுறையாய்ப் பதிந்த அப் பாறைக்கல்லைப் போய்த் திரும்பவும் பார்த்தால் கனவிற்கண்ட காட்சி திரும்பவும் புலனாம் என்றெண்ணி அங்கேயும் சென்று பார்த்தார்; அப்போதும் அது புலனாக வில்லை. அடுத்த நாளிரவும் தூக்கத்தில் அம் மீனின் முழு வடிவத்தையுங் கண்டார்; கண்டும் பயனில்லை; அவர் விழித்தவுடன் அஃது அவரது நினைவை விட்டு மறைந்து போயிற்று. அதன்மேல், மூன்றாம் நாளிரவும் அது தோன்றக் கூடும் என்னும் நம்பிக்கையுடையராய், உறங்கச் செல்லும் முன் ஓர் எழுதுகோலையும் ஒரு தாளையுந் தமது படுக்கையின் அண்டையில் வைத்துக் கொண்டார். அவர் எண்ணியபடியே, மூன்றாம் நாளிரவு விடியற்காலையில் அவரது கனவின்கண் அம் மீனின் முழுவடிவமும் முதலிற் கலங்கலாயும் பின்னர் மிகத் தெளிவாயும் விளங்கித் தோன்றவே, அஃதின்ன இனத்தைச் சேர்ந்ததென ஐயமறத் தெரிந்துகொண்டார்; முழு இருளில் இன்னும் அவர் அரைக் கனவிலிருக்கையிலேயே, தமது படுக்கையருகில் வைத்த தாளில் அதன் வடிவவடையாளங்களை நன்கு வரைந்து வைத்தார். தாம் வரைந்து வைத்த அதனை மறுநாட் காலையிற் பார்த்ததும், அது பாறைப்பதிவிற் புலப்படாத அம் மீனின் வடிவுமுற்றும் புலப்படுத்துவது கண்டு நிரம்பவும் வியப்புற்றார். உடனே, தாம் வரைந்த அத் தாளைக் கையில் எடுத்துக்கொண்டு, அப் பாறைக்கற் கிடந்த இடத்திற்குப் போய், அப் பாறையின் மேன்மாடத்திற் கரடுமுரடாயிருந்த பகுதிகளால், அம் மீனின் மற்றைப் பகுதிகள் மறைபட்டிருக்க வேண்டுமென அறிந்து, உளியால் அவற்றைச் செதுக்கிவிடவே, அம் மீன் வடிவின் மற்றப் பதிவுகளும் நன்கு கட்புலனாகித் தாம் வரைந்த முழுவடிவோடு முற்றும் ஒத்திருக்கக் கண்டு பின்னும் பெருவியப்படைந்தார். இம் மெய்வரலாற்றினால், எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் உயிரோடிருந்து இறந்துபோன ஒருவகை மீனின் உடம்பு கல்லாகி ஒரு கற்பாறைமேற் பதிய, அப் பதிந்த வடிவம், பின்னர்த் தன்மேல் உண்டாகி ஒட்டிய கற்களால் இடையிடையே மறைந்ததாயினும், தன் அரைகுறை வடிவை உற்றுநோக்கிய அத் துரைமகனாரின் இயற்கை நுண்ணுணர்வுக்குத், தன்னோடு தொடர்புடைய ஏனைப் பகுதிகள் எல்லாவற்றையுந் தெற்றெனப் புலப்படக் காட்டிய தன்மை இனிது விளங்கா நிற்கும். இனி, நிலநூல் (Geology) ஆராய்ச்சியிற் றேர்ந்த டெண்டன் (Professor Denton) என்னுந் துரைமகனார் ஓர் எரிமலையினின்றுங் குழம்பாய் உருகிவீழ்ந்து இறுகிய பொருளில் ஒரு சிறு துண்டை நுண்ணுணர்ச்சியிற் சிறந்த மாதரார் (Mrs. Gridge) ஒருவர் கையிற் கொடுத்தார். அஃது இன்னதென்றும், அஃது அவ்வறிஞரிடத்தில் நெடுநாளாக உள்ளதென்றும், அவர் அறியார். அம் மாதர் அதனைக் கையில் ஏற்று, அதன்மேற் றமது கருத்தை நிறுத்தியதும் பின்வருமாறு கூறுவாரானார்: கடலும் அதன்மேற் கப்பல்கள் பாய்விரித்து ஓடுதலுந் தோன்றக் காண்கின்றேன். இஃது ஒரு தீவாக இருத்தல் வேண்டும்; ஏனெனில், அதைச் சூழ வெறுந்தண்ணீர் காணப்படுகின்றது. இப்போது யான் மரக்கலங்களுள்ள இடத்தினின்றுந் திருப்பபட்டு, நிரம்பவுந் திகிலைத் தரும் ஏதோ ஒன்றனைக் காண்கின்றேன். செங்குத்தான ஒரு மலைமேனின்று ஒரு நெருப்புக்கடல் கக்கப்படுவது போலவும், அது கொதித்துக்கொண்டே விழுவதுபோலவுந் தோன்றுகின்றது. இத் தோற்றமானது என் உள்ளமெங்கும் ஊடுருவி, எனக்குப் பெருந்திகிலை விளைவிக்கின்றது. அந் நெருப்பு வெள்ளம் இப்போது ஓடிக் கடலுட் பாய்கின்றது; கடல்நீர் மிகக் கொதிக்கின்றது. யான் அதன் ஒரு பக்கத்தில் நிற்பது போற் காண்கின்றேன். இவ்வாறு அம் மாதரார்க்குண்டாகிய பெருந்திகில் ஒரு மணி நேரம் வரையில் தணியவில்லை; அவர் உண்மையாகவே அவ்விடத்திற் போயிருந்து, அதனைக் காண்பது போற்றோன்றினார். இவர் விளக்கிக் கூறியதொவ் வொன்றும் முற்றிலும் உண்மையாகவே இருந்தது. எத்தனையோ நுற்றாண்டுகட்குமுன் உருகியோடிக் குளிர்ந்த ஓர் எரிமலைக் குழம்பின் ஒரு சிறு கட்டி தன் வரலாறு முழுமையும் இங்ஙனம் இயற்கை நுண்ணுணர்வுடையார்க்கு இனிது புலப்படுக்கு மென்றால், எவ்வகைப் பொருள்களுந் தம்மோடு தொடர் புடைய ஏனைப் பொருள்களின் இயல்புகளைப் புலப்படுத்து தற்குரிய நுண்பதிவுகள் வாய்க்கப் பெற்றிருக் கின்றனவென்பது மறுக்கப்படாத பேருண்மையாய் நிலைபெறுமன்றோ? இன்னும் இதனை விளக்குதற்கு வேறுமோர் உண்மை நிகழ்ச்சியினை யும் இங்கெடுத்துக் காட்டுவாம்: இங்கிலாந்தி லுள்ள மான்செஸ்டர் நகரத்தில் ஒரு நாள் ஓர் இளைஞன் இனிது காலங்கழித்தல் வேண்டித் தனது வீட்டை விட்டுப் புறப்பட்டு நாட்டுப்புறத்தை நோக்கிச் சென்றான். சென்றவன் அன்று மாலையுந் திரும்பி வரவில்லை, அடுத்த நாளும் வரவில்லை, அதற்கடுத்த நாளும் வரவில்லை; அதனால், அவன்றன் குடும்பத்தார் மிகவுந் திகிலடைந்து அவன் இன்று வருவன், நாளை வருவன் என்று எதிர்பார்த்த வண்ணமாய் வருந்தலானார்; இங்ஙனமாக ஒரு கிழமை கடந்துவிட்டது. இன்னும், அவன் திரும்பி வந்திலன், அவனைப்பற்றி ஏதொரு செய்தியுங்கூடத் தெரியவில்லை. அதனால் அக் குடும்பத்தார் ஆற்றாமல் நைந்துருகியழுதலைக் கண்ட ஒரு நண்பர். அவ்விளைஞன் அணிந்திருந்த உடுப்புகளில் ஒன்றை வாங்கி, அது மற்றப் பொருள்களின் தொடர்பைப் பெறாதபடி அதனைக் கருத்தாய்த் தனியே மடித்து எடுத்துக் கொண்டு, பொருட்பதிவுணர்ச்சி (Psychometric sense) வாய்ந்த டெட்லோ (Mr. J.B. Tetlow) என்பவர்பாற் சென்றனர். நிகழப் போவதைச் சான்றாகக் கண்டுணரும் பொருட்டு மற்றொரு நண்பரும் அவர் கூடப் போயிருந்தார். காணாமற்போனவன் ஆடை டெட்லோ என்பவர் கையிற் கொடுக்கப்பட்டது. அவர் அதனைக் கையில் எடுத்தவுடனே, கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கினவனைப் போல் இருபது நிமிடங்கள் வரையில் உணர்வின்றிக் கிடந்தார். திரும்பவும் அவர் உணர்வு வரப்பெற்று எழுந்தபின், அவர்பால் வந்த நண்பர் தாம் அவரைக் காண வந்தது, சடுதியிற் காணாமற் போன தம் நேயர் ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ளுதற்கேயாம் என்று தெரிவிக்க, அவர்க்குத் தெரியாதிருந்த பல உண்மை நிகழ்ச்சிகளையும் டெட்லோ மிகவுந் திருத்தமாக எடுத்துக் கூறினார். அங்குள்ளவர் எவர்க்குமே தெரியாத ஓர் ஊரில் ஓர் யாற்றையும், அவ் யாற்றிற் படகுகள் நிற்கும் இடத்திற்குச் செல்லும் ஓர் இடுக்கு வழியிலே, காணாமற் போன அந்த ஆண்மகன் சென்றமையும், அவன் அவ் யாற்று நீரில் அமிழ்ந்தி இறந்து போனமையும், அவ்விடங்களின் அடையாளங்களும் அவரால் மிகவுஞ் செவ்வையாக எடுத்துச் சொல்லப்பட்டன. ஆனால், அவனது உடம்பு யாற்றங்கரைச் சேற்றிற் புதைந்து கிடந்தமையால் எவ்வளவோ முயன்று தேடியும் அஃது அகப்பட வில்லை; பின்னர் அவன் காணாமற்போன பதினான்காம்நாள், டெட்லோ என்பவராற் குறிப்பிடப்பட்ட அதே இடத்தில் அது மிதக்கக் கண்டார்கள். பிறகு, அவன் தானாக விழுந்திறக்கவில்லை யென்றும், தற்செயலாக வீழ்ந்திறந்தனன் என்றும் அவர் முன்னரே அறிவித்தபடியே, பின்னர்ச் செய்த ஆராய்ச்சியும் விளக்குவதாயிற்று. இவ்வாறாக, நீரில் வீழ்ந்திறந்துபோன ஓர் இளைஞனுக்கு எவ்வகையிலும் உறவினர் அல்லாதாரும், அவனைப்பற்றி ஏதொன்றுமே முன்னறியாதாருமான ஒரு நுண்ணுணர்வினர் அவனைச் சேர்ந்தார்க்கும் பிறர்க்கும் எவ்வாற்றானுந் தெரியாமல் நேர்ந்த அவனது சாவின் வரலாறுகளை, அவன் இதற்குமுன் அணிந்திருந்த ஓர் உடுப்பை யுதவியாகக் கொண்டு, நன்கறிந்துரைத்தமை எவர்க்கும் பெரியதோர் இறும்பூதினை விளைக்கற்பாலதாய்த் திகழ்கின்ற தன்றோ? இவ்வுண்மை நிகழ்ச்சி கொண்டு, ஒருவர் அணிந்திருந்த ஆடையானது அவருடைய முக்கால நிகழ்ச்சிகளோடுந் தொடர் புடையதாய் அவற்றை அறிவிக்க ஏற்றதாதலும், அவற்றை அறிதற்குரிய நுண்ணுணர்வுடைய ஒரு சிலர் அவற்றை யெல்லாஞ் செவ்வனே அறிந்து உரைக்கவல்லராதலும் தெற்றென விளங்கு கின்றனவல்லவோ? இதுபோலவே, நெடுங்காலத்திற்கு முன்னமே செய்யப் பட்டுப் புறக் கண் பார்வை மட்டுமேயுடையார் எவரானுங் கண்டறியக் கூடாமல் மறைந்துபோன திருட்டுகளுங் கொலை களும் ஏமாற்றங்களும் பிறவும் பிற்காலத்துத் தோன்றிய இத்தகைய நுண்ணுணர்வினாரால் நேரே கண்டாற்போற் கண்டறிந்து வெளிப்படுத்தப்பட்டன. நீண்ட காலத்திற்குமுன் ஒருவர்பாலிருந்து திருடப்பட்டுப்போன ஒரு பண்டம், பின்னொரு காலத்தில் நுண்ணுணர்வினார் ஒருவர் கையிற்பட, அவர் அதனைத் தொட்டவளவானே, அஃது இத்தனை காலத்திற்குமுன் இன்னார்க்கு உரியதாயிருந்ததென்றும், இன்ன காலத்தில் அஃது இன்னாராற் கவர்ந்து கொள்ளப்பட்ட தென்றும், அங்ஙனம் அதனைக் கவர்ந்தவர்க்குப்பின் அஃது இன்னின்னாரிடம் இருந்ததென்றுங் குறிபிழையாமற் சொல்லித் தாஞ் சொல்லியவைகளை உண்மைப்படுத்திக் காட்டியிருக் கின்றார். இன்னும், பன்னெடுங் காலங்கட்கு முற் பேர் அரண்மனைகளாயிருந்து பிறகு அவற்றை ஆண்டவர்கள் மாண்டு போக, நாளடைவில் அவை நுறுங்கி விழுந்து பாழாய்ப்போக, அப் பாழ்த்த இடங்களிற் சென்ற நுண்ணுணர் வினார் சிலர் அவற்றின்கண் வழிவழியிருந்தார் வரலாறுகளை வகுத்து வழுவாமற் சொல்லியிருக்கின்றனர். இன்னும் நிலத்தின் கீழ் எத்தனையோ அடிகளுக்குக் கீழே மறைந்து கிடக்குந் தீஞ்சுவைத் தண்ணீரைக் கிணறுகள் அகழ்ந்து மேல்எடுத்துக் கொள்ளுதற்கு இடங்குறித்துக் கொடுக்கும் நுண்ணுணர்வினார் சிலர் இஞ்ஞான்றும் ஆங்காங்கிருக் கின்றனர். 1919 ஆம் ஆண்டு கார்த்திகை மார்கழித் திங்களில் காலிப்பொலி (Gallipoli) என்னும் இடத்திற் பாடிவீடு கொண்டிருந்த பிரித்தானியப் படைகள் (British Expenditionary force) தம் தலைவன் ஏவிய வற்றைச் செவ்வனே செய்ய மாட்டாமற் களைத்துப் போனதற்கு ஏது என்னையென்று ஆராய்ந்து பார்க்க, அவ்விடத்தின் கடுவெப்பமும் அதனைத் தணிக்கத் தண்ணீர் அகப்படாமையுமே அங்ஙனம் அவர்கட்கு அயர்வினை விளைத்ததென அறிந்தார்கள். கப்பல்களாவது தண்ணீர்ப் படகுகளாவது போதுமான தண்ணீரைக் கடல் வழியே கொண்டுவந்து தரவுங் கூடவில்லை. நிலவளவைக் காரர்கள் (Engineers) எவ்வளவோ முயன்றுந் தண்ணீர் உள்ள இடந் தெரிந்துகொள்ள இயலாதவர் ஆனார்கள். இங்ஙனம் நேர்ந்த இடர்ப்பாடான நிலைமையில் சாப்பர்கெல்லி (Sapper Kelley, head of the firm Kelley and Bassett, Melbourne) என்பவர் நிலத்தின் கீழுள்ள தீஞ்சுவைத் தண்ணீரைக் கண்டறிந்து இடங் குறிப்பிடக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் என்னுஞ் செய்தி அப் படைத்தலைவர் செவிக்கு எட்டியது. அதன்மேல் அவர் அவரை வருவித்துக் கேட்க, அவருந் தம்மால் அஃது ஆகுமென்று கூறினார். மறுநாட் காலையில் அவர் தமது கையில் வளைந்த ஒரு செப்புக்கோலைப் பிடித்துக் கொண்டு நடந்து, படைகளிருந்த இடத்திற்கு முந்நூறடி தொலைவில் உள்ளதோர் இடத்தைச் சுட்டி அதின் கீழிருந்து இனிய தண்ணீர் அகப்படும் என்றார். உடனே அவ்விடத்திற் குழாய்களை இறக்கக், கீழிருந்து அவற்றின் வழியே தீஞ்சுவைத் தண்ணீர் ஏராளமாய் மேல்வந்து அப் படைஞரின் விடாயைத் தணித்தது; ஒரு கிழமைக்குள் அவரால் முப்பத்திரண்டு கிணறுகள் இங்ஙனமே ஏற்படுத்தப் பட்டன; அவற்றின் வாயிலாற் கிடைத்த இனிய குளிர்ந்த நீர் நூறாயிரம் படைஞர்க்கு நாடோறும் விடாய்தீர்த்து வரலாயிற்று. இங்ஙனமே இனிய நீருள்ள இடங்கள் கண்டறிந் துரைக்கப்பட்ட புதுமையினை வியந்து படைத்தலைவர் பலர் சான்று கூறியிருக்கின்றார்கள். இவ்வாறே ஸ்டீயர்ஸ் (Stears) என்னும் மற்றொரு துரைமகனார் நிலத்தின் கீழ்ப் புதைந்துகிடந்த புதையல்களைக் கண்டு சொல்லி, எடுத்துக் கொடுத்திருக்கின்றார். இன்னும் அவர் நிலத்தின் கீழுள்ள தீம்புனலையும் இரும்பு செம்பு ஆவி முதலியவற்றின் சுரங்கங்களையுந் தெரிந்துரைப்பதில் நிகரற்ற திறமை வாய்ந்தவராயிருந்தமையின், அவர் சிறிதேறக் குறைய முப்பது ஆண்டுகள் வரையில் அவைகளை அறிந்து சொல்லும் அலுவலிலேயே அமர்ந்திருந்தார். பலவகைப் பொற்சுரங்கங்கள் தண்ணீர் ஊற்றுகள் கீழே பொருந்திய நிலத்தின்மேற் சென்ற அளவானே, அவருடம்பின்கண் ஒருவகையான மின் அதிர்ச்சி உண்டாகா நிற்கும். அவ்வதிர்ச்சியின் அளவுக்குத் தக்கபடி தண்ணீர் உள்ள ஆழத்தையும் மற்றப் பொருள்கள் உள்ள ஆழங் களையும் பிழைபடாமல் எடுத்துரைப்பர். இங்ஙனமெல்லாம் உடம்பின்கட் காணப்படும் மிக நுண்ணிய ஊற்றுணர்வு வாயிலாக மறை பொருணிகழ்ச்சிகளைத் தெரிந்துரைக்கும் ஊற்றுணர்வுக் காட்சிக்கும் (Psychometric Sense), அவற்றைக் கட்புலனாற் காண்பதுபோல் அகக்கண்ணாற் கண்டுகொள்ளுந் தெளிவுக்காட்சிக்கும் (Clairvoyant Vision) சிறிது வேறுபாடுண்டு. ஊற்றுணர்வின் நுட்பம் வாய்ந்தார்க்கு, அவர் சில பொருள் களைத் தொட்டவுடனே அப் பொருள்களோடு தொடர்புடைய மக்களின் வரலாறுகள் தோன்றாநிற்கும்; மற்று அகக் கண்ணுணர்வின் நுட்பம் உடையார்க்கோ பொருள்களைத் தொட வேண்டாமலே தொலைவி லிருப்பனவும் அருகில் இருப்பனவும் முக்கால நிகழ்ச்சிகளும் புறக் கண்ணெதிரே தோன்றுமாறு போல் விளங்கித் தோன்றும். இதுவே இவை இரண்டற்கும் வேறுபாடு; எனினும், எல்லாவுணர்வுகட்கும் இருப்பிடமாவது ஓருடம்பில் ஓருயிரே யல்லாமல் ஓருடம்பிற் பலவுயிர் அன்மையால், இவையிரண்டில் ஓருணர்வு மிகப் பெற்றார்க்கு அதனையடுத்து ஏனை நுண்ணுணர்வும் தானே புலனாகித் தோன்றுதல் இயற்கையேயாம். ஊற்றுணர்வு நுட்பமுடையார் சிலர் சில பொருள்களைத் தொட்டவள வானே அவர்க்குத் தெளிவுக் காட்சியும் உடன்றோன்றி, அப் பொருள்களோடு தொடர்புடையார்க்கு நேர்ந்த - நேர்கின்ற - நேரும் நிகழ்ச்சிகள் அத்தனையும் ஒருங்கு காணா நிற்கும். இவ்வுண்மை மேலெடுத்துக் காட்டிய மெய் வரலாறுகளை ஆராய்ந்து காண்பார்க்கு நன்கு புலனாகும். என்றிதுகாறும் விளக்கிப்போந்த இப் பகுதிகளாற், பொருள்கள் தம்மோடு தொடர்புடையாரின் வாழ்க்கையின் இயல்புகளைத் தம்மிற் பதியப் பெற்றனவாயிருக்குந் தன்மை இனிது பெறப்படுவதாகும். இவ்வுண்மை கண்டே உலகத்தாருந் தமக்கு அன்பராயினார் இறந்துபட்டவிடத்து, அவரது வடிவம் வரைந்த ஓவியத்தையும், அவர் அணிந்திருந்த ஆடையணி கலன்களையும், அவர் புழங்கிய ஏனங்களையும், அவர் இருந்த இருக்கைகளையும், அவர் உறைந்த இல்லங்களையும் பேணி வைத்து அவற்றிற்கு வழிபாடு ஆற்றுகின்றனர். இவையெல்லாப் பொருள்களும் தம்மையுடையவரின் இயல்புகள் பதியப் பெற்றிருக்கின்றன; ஊற்றுணர்வு நுட்பமுந் தெளிவுக்காட்சியும் வாய்ந்தவர்கள் இவற்றின் அண்டையில் வந்து இவற்றைத் தொட்டவுடனே, இவற்றை யுடையராயிருந்தவர் தம் வரலாறு களை நேரேயிருந்து கண்டவர்கள்போல் நன்கெடுத்துக் கூறிவிடுவார்கள். இவ்வுண்மையை யறிந்தமையினாலே தான் பிறரைத் தம்வயப்படுத்துதற்கு முயலும் மந்திரக்காரர் அவர்தம் கூந்தலில் ஒரு சிறு மயிர்ச்சுருளையேனும் அல்லதவர் அணிந்திருந்த ஆடையணிகலன்களுள் ஒன்றையேனும் கைப்பற்றிக் கொண்டு, அதனை வைத்து மந்திரஞ்செய்து அவரைத் தம் வயப்படுத்திக் கொள்கின்றனர். ஒருவரோடு சேர்ந்திருந்த பொருள்கள் அவர்க்குரிய எல்லா இயல்புகளும் பதியப் பெற்றிருத்தலால், அவற்றுள் ஒன்றைக் கருவியாகக் கொண்டு அவரை வசியஞ் செய்தல் இயலுதல் போலவே, அவர்க்கு நேர்ந்த நோய் வறுமை மனக்கவலை முதலான துன்பங்களையும் அதன் வாயிலாக நீக்கலாம். ஒருவர்க்குரிய ஒரு மயிர்ச்சுருளாவது, அல்லதவரது கணையாழியாவது நல்லோர் ஒருவரது கையிற்பட்டால் அதற்குரியவர் நோய் முதலிய துன்பங்களினின்றும் நீங்கி நலம்பெறுவர். நல்லோரின் நன்னினைவும், நல்லெண்ணமும் அப்பொருளின் பதிவுகள் வழிச்சென்று அவற்றை யுடையார்க்கு நன்மையைத் தருவனவாகும். அவை தீயோர் கைப்படின் அவர் தம் தீயநினைவுந் தீய எண்ணமும் அவற்றையுடையார்க்குத் தீமையைத் தருவனவாகும்; இந்த நுண்ணியைபைக் கண்டே ஒருவர்க்குரிய பொருள்களைப் பிறரொருவர் தொடலாகா தென்னும் ஓர் ஏற்பாடு நம்மனோர்க்குள் ஏற்படலாயிற்று. ஒருவரை நல்லரென்றாயினுந் தீயரென்றாயினுந் தெளிய வுணர்தல் புறக் கண்ணுணர்ச்சி ஒன்று மட்டுமே யுடையார்க்கு இயலாமையின், தீயவர் தொடலாகா தென்ற முறைமையை விட்டு நல்லோர் தீயோர் எவருமே தொடலாகாதென்னுங் குருட்டு வழக்கத்தினை ஏற்படுத்தி விட்டார். அதுவேயுமன்றி, ஓர் இனத்திற்குள் ஒருவர் எத்தகையவராயிருப்பினும் அவர் அவ்வினத்தார்க்குரிய எவற்றையுந் தொடலாமெனவும் மற்றையினத்தவர் அங்ஙனம் அவற்றைத் தொடலாகாதெனவும் ஒரு பொருந்தாக் கட்டுப்பாடும் செய்து வைத்து விட்டார்கள். ஓர் இனத்திற்குள் எல்லாரும் நல்நினைவும் நல்லெண்ணமும் உடையரா யிருப்பரென்று எங்ஙனம் உறுதி சொல்லக்கூடும்? அவ்வினத்திற்குப் புறம்பான மற்றை இனத்தவரெல்லாரும் தீய நினைவுந் தீயஎண்ணமும் உடையராயிருப்பரென்றுதான் எங்ஙனஞ் சொல்லக்கூடும்? ஓரினத்திற்குப் புறம்பான மற்றோர் இனத்துள்ளும் அங்ஙனமே நல்லோரும் உளர், தீயோரும் உளர். தீயரானவர் ஓரினத்திலிருப்பினும், வேறினத்திலிருப்பினும் அவர் ஏனையோர்க்குரியவைகளைத் தொடுதலா காது; நல்லரானவர் வேறினத்திலிருப்பினும் அவர் அவற்றைத் தொடுதல் நன்றேயாம். இவ்வாறு பகுத்துணர்ந்து நல்லார் எவராயிருப்பினும் அவரோடு அளவளாவுதலே செயற்பாலதாயிருக்க, இம் முறையைக் கைவிட்டு வேறு பொருந்தாதவற்றைக் கைப்பற்றி யொழுகல் சிறிதும் நன்மை பயவாது. அற்றேல், மக்களெல்லாரும் நல்லியல்புகளோடு தீயவியல்புகளும் உடையரா யிருத்தலால், இவர் நல்லர் இவர் தீயர் என்று வரையறுத்துணர்ந்து நடத்தல் யாங்ஙனங் கூடுமெனின்; மக்களாய்ப் பிறந்தாரில் முற்றுமே நல்லரும், முற்றுமே தீயரும் இலர். முற்றுமே நல்லராயினார் இம் மண்ணுலகில் மக்கள் யாக்கையில் வந்து துன்புறுதற்குச் சிறிதுமே ஏதுவில்லை: அத்தன்மையோர் விண்ணுலகில் தேவர்களாய் இன்பம் நுகர்ந்திருத்தற்கே யுரியர். ஆகையால், மக்களுட் குற்றஞ் சிறிதுமில்லாரையும் நன்மை முற்று முள்ளாரையுங் காண்டல் ஒருவாற்றானும் இயலாது. எத்துணை உயர்ந்தாரிடத்தும் இழிந்த இயல்புகளுஞ் சில உளவாம்; எத்தனை இழிந்தாரிடத்தும் உயர்ந்த இயல்புகளுஞ் சில உளவாம்; இவ்வுண்மை நன்கு கண்டே தெய்வப்புலமைத் திருவள்ளுவரும், அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு (குறள் 503) என்று அருளிச் செய்தனர். ஆதலால், ஒருவரிடத்துள்ள குற்றங்களையும் நலங்களையும் நன்கு ஆராய்ந்து பார்த்துக் குற்றங்கள் சிலவாகவும் நலங்கள் பலவாகவும் இருக்கக்கண்டால், அவற்றுட் ற்றங்களை நினையாமல் மறந்து நலங்களையே பெரிதுமெடுத்துப் பாராட்டி அவரைச் சீராட்டல் வேண்டும்; இனி, நலங்கள் சிலவாயும் குற்றங்கள் பலவாயும் இருக்கக் கண்டால், அவர்தங் குற்றங்களை எடுத்துத் தூற்றி, அங்ஙனந் தூற்றுகின்றவராகிய தமது உள்ளத்தையும் பாழ்படுத்தி, அவ் வலர் மொழிதலைக் கேட்கும் பிறருள்ளத்தையும் மாசுபடுத்தித் தூற்றப்படு வோராலுந் துன்புற்று அலக்கணுறும் புன்செயலை விடுத்து, அத்தகைய தீயோரை வாய்பேசாது அகன்றொழிதலே செயற்பாலதாம். இவ் வொழுக்கலாற்றின் மேன்மை, குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (குறள் 504) எனத் திருவள்ளுவனாராலும் நன்கு வலியுறுத்தப்பட்டது. இங்ஙனங் காட்டிய முறையால், நல்லோராவார் எவ் வகுப்பின ராயிருப்பினும் அவரோடு வலிந்து சென்று அளவளாவுதலும், தீயோராவார் ஓரினத்தினராயிருப்பினும் அவரையணுகாது மிக விலகி யொழுகுதலும் பெருநலந் தருவனவாமென்க. அஃதொக்குமேனுங், கட்புலனாகாமல் ஒருவரதுள்ளத்தின் கண் மறைந்து கிடக்கும் நன்மை தீமைகளைத் தெரிந்துணர்ந்து, அவற்றையுடையார் இவர் இவரென்று தெளிதல் யாங்ஙனமெனின்; ஒருவரது உள்ளத்தின் தன்மை அவர்தஞ் சொல்லிலுஞ் செயலிலும் புலப்படாமல் இராது. இது, நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல் (குறள் 959) கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன வினைபடு பாலாற் கொளல் (குறள் 279) என்னும் அருமைத் திருக்குறள்களால் நன்கெடுத்துக்காட்டப் பட்டமை காண்க. ஆகவே, ஒருவர் கூறுவனவற்றிலுள்ள நுட்பங்களையும், அவர் செய்வனவற்றிலுள்ள வன்மை மென்மைகளையும் சில பொழுதுகள் நுனித்து ஆராய்ந்து காண்பார்க்கும், அவர்தம் உள்ளத்தியற்கை வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடக்கும், ஆதலால் ஒருவரது உள்ளத்தியற்கையை யுணர்தல் இயலாதது அன்று. முதலும் அதன் விளைவுமாய் வருந் தொடர்புகளை உய்த்தாராய்ந்தறிய வல்லார்க்கு விளங்காதன இல்லை. அவ்வாறத் தொடர்புகளை அறிதற்குரிய வேட்கையும் முயற்சியும் இல்லார்க்கு எத்துணை எளிய நிகழ்ச்சிகளும் அறிதற்கு ஆகாதனவேயாம். அவ் வியல்பினார் விலங்குகளினுங் கடைப்பட்டவரே யாகையால் அவரைப்பற்றி, ஓர் அரும் பேருண்மையை இயலாதென்றல் அடாதென்க. எந்நிலையில் நின்றாலும் எக்கோலங்கொண்டாலும் எவ்வகுப்பிற் பிறந்தாலும் நல்லியற்கையுடையோரைத் தெளிதல் சிறிதளவு முயற்சி யுடையார்க்கும் எளிதிற் கைகூடுவதேயாமென்று கடைப்பிடிக்க. பிறப்பினாலேயே இனம் எனப் பிழைபடக் கருதி ஒரு வகுப்பிற் பிறந்தார் பிறவகுப்பிற் பிறந்த நல்லாரோடு உறவுகொள்ளாமலும் அவரோடு அளவளாவாமலும், நல்லறிவு நற்செய்கையில்லாத தம் வகுப்பினரோடு மட்டும் உறவு கலந்து நன்மையடையாமல் வீணே மடிந்து போகின்றனர். இனித் தமதுயிர்க்கு ஆக்கத்தை வேண்டுவாரெல்லாம் அத் தன்மைய வாய போலிக் கட்டுப்பாடுகளைப் பிளந்தெறிந்துவிட்டு, எக்குடிப் பிறந்தவராயினும் நல்லாரோடு உறவுகலந்து, நோயும் வறுமையுங் கவலையும் நீங்கி, எல்லா நலங்களும் பெற்று வாழ்தற்கு முந்துதல் வேண்டும் என இதுகாறும் விளக்கிய வாற்றால், ஒருவர்க்குரிய பொருள்களைக் கருவியாகக் கொண்டு அவரை வயப்படுத்துதலும், அவர்க்குள்ள துன்பங்களைப் போக்குதலும் இயலு மென்பது பெறப்பட்டது. 10. கவர்ச்சிக்கு ஏற்ற காலம் தாம் வேண்டிய ஒருவரைத் தம்வழிப்படுத்துதற்கும், அவர்க்குள்ள நோயும் வறுமையும் முதலான துன்பங்களை நீக்குதற்கும் ஒருவர் கைக்கொள்ள வேண்டும் முறைகளை இதுகாறும் விளக்கிப் போந்தாமாகலின், இனி அம்முறைகளைச் செய்தற்கு ஏற்ற காலம் இன்னதென்பதனையும் விளக்குவாம். ஒருவர் தம்மோடிருக்கும் பிறர் ஒருவர்க்குத் தாம் ஒன்று கூறல் வேண்டினாராயின், அவர் ஏதும் பேசாமல் தாங் கூறுவதைக் கேட்டற்குரிய நிலையில் அமைதியாயிருக்கும் நேரத்தை நாடுகின்றனரன்றோ? தாங் கூறுவதைக் கேட்டற்கு இணங்காமற் பேசிக் கொண்டிருப்பவர்பால் ஒருவர் தாம் வேண்டியவற்றைச் சொல்லி அவற்றையவர் ஏற்குமாறு செய்தலும் இயலாதன்றோ? ஆகவே, ஒருவரைக் கேட்கும் நிலைமையிற் காண்பதற்கு முன், அவர் தமது முனைப்பை விட்டு அமைந்திருக்கும் நிலையையும் நேரத்தையும் தெரிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். அவை தெரிந்து ஒன்றைச் சொல்லும்போதும், தாம்சொல்வதை யன்றிப் பிறிது எதனையும் அவர் நினையாதபடியும் எண்ணாத படியுஞ் செய்தலும் வேண்டும். ஆனால் மக்களது மனமோ ஒரு நொடிப்பொழுதாயினுஞ் சும்மா இருக்குந் தன்மையதன்று; ஒன்றைவிட்டு ஒன்றுபற்றி ஓயாமல் ஓடுந்தன்மையதாகவே உள்ளது. அத்தகைய மனமானது தனது ஓட்டந் தவிர்ந்து, தாங் கூறுகின்ற பொருளிலே பதிந்து நிற்குமாறு செய்தல் எளிதில் முடிவதன்று. அங்ஙனம் செய்யவல்ல ஆற்றல் பேசுந்திறமுடைய ஒரு சிலர்க்கே உள்ளதாகும். ஏனைப் பெரும்பாலார் அஃது உடையரல்லர். இனிப் பேசுந்திறம் வாய்ந்தாருங்கூடக், கேட்போரது உள்ளத்தைத் தம்முகப்படுத்தி ஒன்றைச் சொல்கை யிலுந், தாங்கூறும் அப்பொருள் கேட்பார்க்கு இசையாததாயின் உடனே அவரதனைக் கேட்டல் கைவிட்டோ அல்லததற்கு மாறானதொன்றை நினைத்தோ மாறுபட்டு நிற்பராகலின், பேசுவோர் தமது சொல்வன்மை ஒன்றையே கொண்டு அவரைத் தம்வழிப்படுத்தும் முயற்சியில் வென்றி பெறார். ஆகையால், மக்களெல்லாரும் விழித்திருக்கையில் எவ்வளவுதான் அமைதி யோடிருந்தாலும், தம்மொடு பேசுவோர் எதிரில் இடை யிடையே மனங் கலைந்தோடவும், அவர் கூறும் பொருளோடு அது மாறுபட்டு முனைக்கவுங் காண்பராகலின், அவர் தம்மை விழித்திருக்கும் நிலையில் தம்வயப்படுத்துதற்குச் செய்யும் முயற்சி பெரும் பயன் தருவதன்றாகும். அங்ஙனமாயின், அவர் பகற்காலத்தே ஒரு சிலர் அயர்ந்துறங்கும் நேரம் அறிந்து அவரைத் தம்வயப்படுத்த முயல்வேமெனின்; அதுவும் ஆகாது. ஏனெனிற், பகற்காலத்தே ஒரு சிலர் அயர்ந்துறங்குவாரேனும், ஏனைப்பலர் அவ்வாறுறங்காது முனைத்திருந்து பலவற்றை எண்ணியும் பலவற்றைச் சொல்லியும் வேறு பலவற்றைச் செய்தும் போதருகின்றாராகலின், அவருடைய நினைவோட்டங்கள் கட்புலனாகாத நுண்ணிய வடிவில் இடைவெளி எங்கும் விரைந்தோடி உறங்குவார் உள்ளத்திலுங் கூட்டங் கூட்டமாய் ஊடுருவிப்பாயா நிற்கும். அதனால் அவரது மனம் ஒருகாலத்திலொருவர் செலுத்தும் பொருள் நினைவின் மட்டில் அமைந்து நில்லாமற், பலர் நினைவில் அகப்பட்டுச் சுழலாநிற்கும். எனவே, பகற்காலத்து அயர்ந் துறங்குவோரும் ஒருவரது நினைவால் வயப்படுத்தப்படுதற்கு ஏற்றவர் ஆகார். அற்றேல், இராக்காலத்து எல்லாரும் அயர்ந்துறங்கக் காண்டலின் அதுவே ஒருவரைத் தம் வழிப்படுத்துதற்கு ஏற்பதாமெனின் அதுதான் உண்மை. பெரும்பாலும் எல்லா வுயிர்களுந் தமது முயற்சி யவிந்து ஓய்ந்துறங்கி இளைப்பாறுதற் கேற்ற காலமாக இறைவனால் வகுக்கப்பட்டது இராப்பொழுது ஒன்றேயாகும். இராப்பொழுதிலும் பதினைந்து நாழிகை வரையிற் சிலர் பலர் முயற்சி அவியாராய் விழித்திருக்கக் காண்டலின், அவருடைய நினைவின் ஓட்டங்கள் வயமாதற் குரியார் உள்ளத்திற் புகுந்து அதன்கட் பலவகையான தோற்றங்களை விளைவியா நிற்கும். ஆழ்ந்த துயிலிற் செல்லாது சிறிது உணர்வோடு கூடி அமரும் உறக்க நிலையில், விழித்திருப்போர் நினைக்கும் நினைவுகள் ஊடுருவிப் புகுந்து இங்ஙனமெல்லாம் விளைக்கும் நினைவின் தோற்றங்களையே பெரும்பாலும் கனவு என ஒரு பெயரால் வழங்கி வருகின்றனர். இன்னும், இக் கனவு நிலையிற் பிறருடைய நினை வின்றோற்றங்களே யன்றிக் கனவு காண்பவர் தம் வாழ்நாளில் தாம் எண்ணிய பலவேறு வகை யெண்ணங்களுங் கூட உருவு கொண்டு தோன்றி ஒன்றன்பின் ஒன்றாய் விரைந்து செல்லவுங் கண்டு அவற்றால் தமதுள்ளம் நிலைகலங்கி இன்பதுன்பங்களை எய்துவர். இவ்வாறு நள்ளிரவு பதினைந்து நாழிகை வரையில் விழித்திருப்போரும், அவருடைய நினைவாலுந் தம்முடைய நினைவாலும் உந்தப்பட்டுக் கனவு கண்டு அரைத் தூக்கத்திலிருப்போரும் வயமாதற்கேற்ற அமைதி யில்லாதிருத்தலால் இராக்காலத்தின் முற்பொழுதுங்கூட வசியஞ்செய்தற்கேற்றதன்று. இனி, நள்ளிரவின் நடுயாமத்திற்குப் பின், இருபத்திரண்டரை நாழிகைமுதல் வரும் வைகறைப் பொழுதும் அதற்கு ஏற்றதன்று. ஏனென்றால், நடுயாமத்தில் அயர்ந்துறங்கப் பெற்றோர்க்கு, அது கழிந்தபின் வைகறைப் பொழுதில் தூக்கங் கலைதலுஞ், சிறிது உணர்வோடு கனவு காண்டலும் இயல்பாகலின், அக்காலத்திலும் அவரது மனம் பலவகை நினைவுகளுக்கு இடமாகி அவற்றால் இங்குமங்குமாக இழுப்புண்டு அலையும். இவ்வாறெல்லாம், வசியஞ் செய்தற்கு ஏலாத பகற்பொழுது இராப்பொழுதுகளைக் கழித்துக்கொண்டு செல்லவே, இராக்காலத்திற் பதினைந்து நாழிகைமுதல் இருபத்திரண்டரை நாழிகை யளவாகவுள்ள நடுயாமமே ஒருவர் தம்மால் வேண்டப்பட்ட பிறரொருவரைத் தம்வயப்படுத்த முயலுதற்கு ஏற்ற பொழுதாமென்க. ஏனெனில், எல்லா உயிர்களுந் தம் உணர்வும் முயற்சியும் மடங்கித் தம்மை மறந்து நிரம்பவும் அமைதியாய் ஆழ்ந்து துயில் கொள்ளும் நேரம் அதுவேயாகலான் என்க. அந்நேரத்தில் ஒருவர் விழித்திருந்து தம்மால் விரும்பப்பட்டாரது உள்ளத்தைத் தம்வழிப்படுத்தல் வேண்டி முனைந்து எண்ணுவாராயின், அவ்வெண்ணம் அயர்ந்துறங்கும் அவரது உள்ளத்திலே எளிதிற் பாய்ந்து அதனைத் தன்வயமாக்கிக் கொள்ளும். அவர் அவ்வுறக்கம் நீங்கி எழுந்தபின், தம்மை வேண்டினார்பால் அன்பு மிகப் பெற்றாராய் அவரது கருத்துக்கு இணங்கி ஒழுகுவர். அஃது யாங்ஙனம்? தம்மை மறந்து உணர்வற்று உறங்கும் ஒருவரது உள்ளத்தில் ஒருவர் ஏவிய நினைவு சென்று பதிதல் இயலாதெனின் அற்றன்று, தம்மை மறந்து துயில்வார்பால் உணர்வு இல்லையாயினன்றோ விழித்திருப்பார் ஏவிய நினைவு அவருள்ளத்திற் சென்று பதியமாட்டாதாகும்? மேலும், ஆழ்ந்த துயிலில் உயிர்க்கு உணர்வு இல்லையென்று கொள்ளின், அது விழித்தபோதும் அதற்கு அவ்வுணர்வு இல்லையாதல் வேண்டும். அவ்வாறின்றி விழிப்பின்கண் உணர்வு நிகழக் காண்டலானும், முன் இல்லாத ஒன்று பின் தோன்றுதல் எக்காலும் இன்மையானும், விழிப்பின்கட் காணப்படும் உணர்வு விளக்கம் அயர்ந்த உறக்கத்தின்கண் அஃது இன்றி அடங்கியிருக்குமென்று கொள்ளுதலே பொருத்தமாம். மேலும், அயர்ந்து துயில்வோன் ஒருவன் உடம்பில் ஒரு முள்ளை ஏற்றினால் அவன் துடிதுடித்தெழக் காண்டலானும், உயிரற்ற வெறும் பிணத்தில் அதனை எவ்வளவுதான் அழுந்த ஏற்றினாலும் அஃதவ்வாறு துடித்தெழக் காணாமையானும் ஆழ்ந்து துயில்வோன் மாட்டு உயிரும் அவ்வுயிரின்கண் உணர்வும் அமைந்தடங்கியிருக்கின்றன என்பதே தேற்றமாம். இனி, ஆழ்ந்த துயிலின்கண் அங்ஙனம் அடங்கியிருக்கும் ஒருவனது உணர்வு, அவன்பால் அன்பு பூண்டு முனைந்து நினைக்கும் மற்றொருவனது நினைவினை விரைந்தேற்று அதன்படி நடக்குமென்பதற்குத், தன்னை மறந்து யோக நித்திரை என்னும் அறிதுயிலில் இருக்கும் ஒருவனைத் துயிற்றிய பிறன் ஒருவன் தான் வேண்டுமாறெல்லாம் நடக்கும்படி செய்தலும், துயிலில் இருந்தவாறே அவன் துயிற்றுவோன் வேண்டியபடி யெல்லாஞ் செய்து விழித்தபின் தான் செய்தவைகளை உணராதிருத்தலுமே சான்றாமென்க. இவ்வறி துயிலின் வகையும் வரலாறும் பயனும் யோகநித்திரை என்னும் எமது நூலின்கண் நன்கெடுத்து விளக்கியிருக்கின்றேம்; அவற்றை அங்கே கண்டுகொள்க. ஆகவே, ஆழ்ந்து துயிலில் இருப் போர்க்கும் உணர்வு உண்மையும், அது தன்னை நோக்கி அன்பால் நினைப்பார் நினைவுகளை ஏற்று அந் நினைவுகளின் வழித்தாதலும் ஐயுறவின்றித் தெளியப்படும். அஃது உண்மையே யென்றாலும், நள்ளிரவின் நடு யாமத்திலும் விழித்திருப்பாருளாராகலின் அவருடைய நினைவு களும் அயர்ந்துறங்குவாருள்ளத்தை வந்து சூழ்ந்து கொள்ளும். கொள்ளவே, அப்போது ஒருவர் விழித்திருந்து அவரை வசியஞ் செய்தற்கு என்னும் எண்ணம் எவ்வாறதனை முடிக்குமெனின் நடுயாமத்தில் விழித்திருப்பார் மிகச் சிலரேயாவர்; எவர் எவரைநோக்கிக் கவர்ச்சி செய்ய எண்ணுகின்றனரோ அவரையே அங்ஙனம் விழித்திருப்பார் சிலரும் நினைப்பார் அல்லர்; அவரை இன்னாரென்றே அவரேல்லாம் அறியார்; அவ்வவருந் தாந்தாம் மேற்கொண்ட தொரு முயற்சியிலேயே கருத்தூன்றி நிற்பர்; ஆதலால், விழித்திருக்கும் அச் சிலருடைய நினைவுகளும் அயர்ந் துறங்குவோர் உள்ளத்தின் ஊடே ஊடே ஓடுமாயினும், அவை அதில் அழுந்தப் பதிந்து நிலைபெறமாட்டா. மற்று, அவ் யாமப்பொழுதில் எவர் எவரை நோக்கி உறுத்து நினைந்து, அந் நினைவினை உருவேற்றுகின்றனரோ, அவரது அந் நினைவு மட்டுமே அவர்தம் உள்ளத்திற் பாய்ந்து, அங்கு வந்து சூழ்ந்த ஏனையோர் நினைவுகளைத் துரத்திவிட்டுத் தான்மட்டும் நிலை பெறும்; ஆதலால், யாமப்பொழுதில் கவர்ச்சி செய்தற் பொருட்டு முனைந்திருந்து முயல்வாரது எண்ணமே தன் பயனைத் தப்பாமற் பயப்பிக்கும் என்க. 11. நடுயாமத்துச் செய்யும் கவர்ச்சி முறைகள் இனி நடுயாமத்து விழித்திருந்து கவர்ச்சி செய்ய விழைவோர் இன்றியமையாது கைக்கொள்ள வேண்டும் முறை களை வகுத்துக் கூறுவாம். அம் முறைகளுள் முதன்மையானது, உடம்பை வலிவுடன் வைத்துக் கொள்ளுதலேயாம். உடம்பை வலிவுடன் வைத்தற்குரிய செயல்களுள் முதல் நிற்பது, சிற்றின்ப வேட்கை மிகுதியால் உடம்பின் வலிய சாற்றை ஒழுகவிடா திருத்தலேயாம். மாதரை மருவாதிருப்போரெல்லாம் சிற்றின்ப வேட்கை யினை விட்டவர் அல்லர். அவ்வின்ப வேட்கையால் இரவும் பகலும் அதே நினைவு மீதுரப்பெற்று, அதனால் தமதுடம்பின் வலிமைக்கு முதற்கூறாகிய கறை உருகி ஒழுகிப் போக, நாளடைவில் தமது வலிமை குறைந்து மாய்வாரும் பலர். இவ்வாறு இன்ப நினைவாற் பிடியுண்டு இம்மை மறுமைப் பயன்களைப் பெறாது வறிதே மாய்வதினுந், தமக்கினிய மாதரை மணந்து அவர்பாற் புதல்வரைத் தோற்றுவித்து வளர்த்து இறைவனது படைப்புக்குக் கருவியாயிருந்து இறப்போர் மேலான பயன்களைப் பெறுவர். ஆதலாற் றமதுடம்பினை வலிவுறவைக்க வேண்டுவோர் மாதரை அடுத்தடுத்து மருவாமையேயன்றிச் சிற்றின்ப வேட்கையுந் தமதுள்ளத்தே சிறிதும் நிகழாதவாறும் பாதுகாத்தல் வேண்டும். கறை மிகுதியாய்க் கழியவிடுத்தால், உடம்புக்கு எவ்வளவு வலிவான உணவைக் கொடுத்தாலும், வேறுவகையில் உடம்பை எவ்வளவுதான் பாதுகாத்தாலும், பயனில்லை. கறையை மட்டும் வீண் செலவு செய்யாமற் பாதுகாத்தவரின் உடம்புக்கு வலிய உணவு கொடாவிடினும், அதனை வேறு வழிகளிற் கருத்தாய், பாதுகாவாவிடினுந் குற்றம் இல்லை. எத்தனையோ பங்கு குருதி சுண்டி ஒரு சிறிதளவு விந்துவாக மாறுகின்றது. இவ் விந்து வென்னுங் கறையிலிருந்தே மிகச் சிறந்ததாகிய இம் மக்களுடம்பு படைக்கப் படுகின்றதென்றால், இதன் வலிமையையும் மேன்மையையும் நாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ! ஆகவே, கறையானது வீண் போகாமற் பாதுகாத்து அது மறுபடியுஞ் செந்நீரிற் கலந்து சுவறுமாறு செய்துவிட்டால், உடம்பு மூப்படையாது, என்றும் இளமையாய்ப் பொன்நிறம் வாய்ந்து மிளிரும், நரை உண்டாகாது; பசியும் விடாயும் நிரம்ப உண்டாகா; உணவும் மிகுதியாய் வேண்டப்படாது. இத் தன்மையான உடம்புடையவன் உள்ளம் தூயதாயும் நினைத்ததை நினைத்தபடியே முடிக்கத்தக்க ஆற்றல் வாய்ந்ததாயும் இருக்கும்; அவனது கட்பார்வைபட்ட இட மெல்லாம் தூயதாம். அவனால் தொடப்பட்டாரெல்லாருந் தூயராவர். ஆதலாற், கறையை வீண் செலவு செய்யாது கட்டுப்படுத்துதற்கு இம் முயற்சியில் தலையிட்டோர் பெரிதுங் கருத்தாயிருத்தல் வேண்டும். அற்றேல், இந் நிலத்தின்கட் பிறந்து இன்பதுன்பநுகர்ச்சியால் தூயராகி இறைவன் திருவடிப் பேரின்பத்தை எய்தல் வேண்டிய உயிர்கள் இன்னும் எத்தனையோ கோடி கணக்கற்றனவா யிருக்கின்றன; இவ் வுயிர்களை யெல்லாம் பிறப்பித்தல் வேண்டியே இறைவன் ஆண் பெண் என்னும் இரு பாலாரை வகுத்து, அவர் ஒருவரையொருவர் விரும்பி மருவுமாறு எவராலுந் தடுத்தற்கேலாத இன்ப வேட்கை யினையும் அவர்க்குத் தந்து, அம் முறையால் அவ்வுயிர்களைப் பிறப்பித்து என்றும் ஓவாத ஒருபேர் அருளுதவியைச் செய்து வருகின்றான். இங்ஙனஞ் செய்துவரும் அவனது அருள் நோக்கத்திற்கு மாறாக ஆண்பாலாரும் பெண்பாலாரும் ஒருவரையொருவர் மருவுதல் ஒழிந்து, கறையைக் கட்டுப்படுத்தித் தனியராய் உயிர்வாழ்தல் குற்றமன்றோவெனின், நமது கருத்து அஃதன்று. பல்லுயிர்கட்கும் பயன்படும் உயர்ந்த நன்மைகளை உலகிற்குச் செய்யப் புகுந்து, அம் முயற்சிக்கு உதவியாயினாரைத் தமக்குத் துணையாக வயப்படுத்திக் கொள்ளல் வேண்டிநினைவைச் செலுத்துங் காலங்களில் தமதுடம்பின் வலிமையைப் பாதுகாத்தல் இன்றியமை யாததாகும் என்பதே நமது கருத்தாகும். அவர் மகளிரை மருவல் வேண்டிற் றிங்களுக்கு ஒரு காலன்றி மருவுதல் ஆகாது. இங்ஙனம் ஒரு வரம்புக்குள் நின்று ஒழுகுதலால், இறைவனது அருள் நோக்கத்திற்கு மாறாகாமையோடு, தாம் உலகிற்குச் செய்ய வேண்டிய அரும்பெரு நன்மைகளையும் எளிதிற் செய்து முடிப்பர். அற்றேல், முற்றுமே சிற்றின்ப வேட்கையினை யொழித்து அரிய பெரிய நன் முயற்சிகளை மேற்கொள்வார்க்கு அது குற்றமாகாதோ வெனின், தனது படைப்புத் தொழிலுக்குக் கருவியாக ஆண் பெண் என்னும் இருபாலார் உள்ளத்திலும் இறைவன் வலிவாக ஊன்றிய இன்ப வேட்கையினை யொழித்தல் எவர்க்கும் எளிதன்று. இறைவன் அமைத்த இம் முறைமைக்கு மாறாய் நடத்தல் எளிதாகாமை கண்டே, அருந்தவ முயற்சி யிலிருந்த பண்டைக்காலத்து முனிவரரும் தம் மனைவியரோடு ஒருங்கிருந்தே தமது தவவொழுக்கத்தினை நிறைவேற்றினர். அகத்தியர், வசிட்டர், காசியபர், கௌதமர் முதலான அருந்தவத்தோ ரெல்லாரும் தம் மனைவியருடனிருந்தமையே இதற்குச் சான்றாமென்க. அந் நன்முறையோடு திறம்பிச் சாக்கிய புத்தர் தமக்கு மாணாக்கராய் வந்த ஆண் பெண் பாலாரைத் தனித்தனியே பிரித்துத் தனித் துறவு நிலையில் வைத்தும், அவரெல்லாம் இந் நெறியில் நிற்க மாட்டாமல் வழுவிக் கரவாய் ஒருவரையொருவர் மருவிப் பல பழிகளைச் செய்த வரலாறு களும், இங்ஙனமே கத்தோலிக்க கிறித்துவரால் தனித்துறவு நிலையில் வைக்கப்பட்டோரும் அம் முறை பிறழ்ந்து நடந்த வரலாறுகளும், தமிழ்நாட்டகத்தும் வடநாட்டகத்தும் இங்ஙனமே தனித்துறவு நிலையிற் பல ஏதுக்களால் வலிந்து வைக்கப்பட்டவர் அந்நிலையில் நிற்க மாட்டாது வழுவிப் பல தீமைகளைச் செய்த செய்கின்ற வரலாறு களும், தனித்துறவு இறைவனருணோக்கத்திற்கு மாறாய் வலிந்து மேற்கொள்ளப் படுவதொரு கரவு நிலையாயிருத்தலின் அது நிலைபெறா தென்னும் உண்மையினை நன்கு புலப்படுத்தா நிற்கும். மேலும், உடம்பின் வலிவான கூறாய் ஓவாது விளையுங் கறையின் ஒரு கூறு ஆண் பெண் சேர்க்கையாற் புறங்கழிதல் அவ்விருவர்தம் உடம்பின் நலத்திற்கும் இன்றியமையாததாகும் என மருத்துவ நூல்கள் கூறுதலானும், அத்தகைய சேர்க்கை முற்றுமே ஒழிக்கற்பாலதன்று. அவ்வாறாயின், மகளிரை மருவுதலும் வேண்டுங், கறையை ஒழுகவிடாமற் பாதுகாத்தலும் வேண்டு மென ஒன்றற்கொன்று மாறான இரண்டு கொள்கைகளைக் கூறுதல் என்னையெனின், அவ்விரண்டற்கும் நடுநின்று அவ்விரண்டையும் மாறுபடாமல் நடப்பிக்கும் வழியுளதாகலின் அவை முரணாதல் இல்லை. யாங்ஙனமெனின் மாதரைத் திங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே மருவிவரின் தவவொழுக்கத்தால் உடம்பிற்சுவறிய பகுதிபோக மிச்சமாகிய விந்து மட்டுமே புணர்ச்சிக்கட் கழிந்து உயிருக்கு இன்பத்தையும் உடம்பிற்கு நலத்தையுந் தரும். இவ்வாறு ஒரு வரம்பிற்குட்பட்டு ஒழுகாது, வரைதுறையின்றி யடுத்தடுத்து மருவி வருகுவராயின் கறை அளவுக்கு மிஞ்சிக் கழிந்து போக அதனால் உடம்பு பழுதுபட்டு இன்பமுந் துன்பமாய் மாறி மாண்டுபோவர்; அவ்வாறொழுகுவார் எத்தகைய உயர்ந்த நன் முயற்சியினையுஞ் செய்தற்கு ஒருப்படார். ஒருப்படினும் அம்முயற்சியைக் கடைபோக முடிக்கமாட்டார். அஃதுண்மை யேயாயினும், மருவுதற்கினிய மாதர் அருகேயிருப்ப, அவரை யடுத்தடுத்து மருவும் வேட்கை பெருகுதல் இயல்பேயாகலின், அவரையகன்று உறைதலே செயற்பாலதாமெனின், அற்றன்று. பருகுதற்கினிய தீஞ்சுவைப் பாலுங் கொழுவிய பழமும் வேறு பல்சுவைய பண்டங்களும் நாடோறும் எளிதிற் கிடைக்கப் பெறுவானுக்கு அவற்றை அருந்துதலில் வேட்கை மிகுதியாய்ப் பெருகாது. மற்று அவை கிடைக்கப் பெறாமற் பசித்திருப் பானுக்கே அவற்றை யுண்டற் கண் எழும் விருப்பம் அளவின்றிப் பெருகா நிற்கும். இப்பெற்றி போலவே, மருவுதற்கினிய மகளிரை எளிதிற் பெற்றானுக்கும் அவரை மருவுதலில் வேட்கை பெருகாது. மற்று அவரைப் பிரிந்து தனித்து உறைவானுக்கோ அவ் வேட்கை அவன் வயமின்றியே பெருகா நிற்கும். அதனால், மகளிரோடு உறைந்து தவவொழுக்கத்தை மேற்கொள் வானுக்கு விந்துவைக் கட்டுப் படுத்துதல் எளிதாதல் போல, அவரைப் பிரிந்து தனித்துறவு நடத்துவானுக்கு அஃது அத்துணை எளிதாகாது. என்றாலும், ஆண்டின் முதிர்ந்தாரும், நோய்கொண்டு மெலிந் தாரும், ஆண்டன்மை பெண்டன்மை யிழந் தாரும், உறுப்பறை களும் வறுமையான் மிக நலிந்தாரும் உலகிற்கு நன்மை செய்ய விருப்பமில்லாமல் ஊக்கங்குன்றினாருந் தனித்துப் போய் ஓர் ஒதுக்கிடத்திலிருந்து தனித்துறவு நடத்தலே அவர்க்கு நன்றாம். மற்று, இளமைச் செவ்வியுடையாரும், நோயில்லாத வலிய திருத்திய யாக்கை யுடையாரும், செல்வ வளமும் உலகிற்கு நன்மை செய்யும் நோக்கமும் வாய்ந்தாருந் தம் மகளிரோடு உடனிருந்து பயன்படுந் துறவு நடாத்தலே எவர்க்கும் நன்றாம். இனி, இளமைக் காலத்திலேயே மனைவாழ்க்கை தாங்குந் திட்பமும், அதன்கண்வரும் அல்லல்களுக்கு அஞ்சாமையும் வாய்ப்பப் பெறாத மெல்லியல்புடையார் சிலர், தமது புத்திளமையிலேயே தனித்துறவு வேண்டினாராயின், அவர் இடைவிடாது நூல்கற்றலினுங், கற்றவற்றை ஆழ்ந்தாராய்தலினும், ஆராய்ந்த வற்றை நூல்களாக எழுதியும் விரிவுரைகளாகப் பேசியும் உதவுதலினும், இறைவனையும் அவனடியாரையும் நினைந்து நினைந்துருகுதலினும் தம்முடைய கருத்தையும் முயற்சியையும் இடையறாது செலுத்தி, இராக்காலத்தே இம் முயற்சியின் மிகுதியால் அயர்ந்த தூக்கந் தானே வந்துகூடத் தம்மை மறந்த துயிலிற் கிடத்தற்குப் பழகல் வேண்டும். இம் முயற்சிகளிற் சிறிது வழுவினும், இராக்காலத்தே துயில் பெறாதிருப்பினுஞ் சிற்றின்ப வேட்கை அவரையும் வந்து பற்றி அவரது உடம்பின் சாற்றை உருக்கி ஒழுகவிடும். ஆதலால், அவ்வின்பத்தின்கண் நினைவு செல்லுதற்கு அத்தகையோர் ஒரு தினைத்தனையும் இடங் கொடுத்தல் ஆகாது. மேலும், இளமைக் காலத்தே தனித் துறவு நிலையிற் புகுதற்கு விழைவோர் சிற்றின்ப நுகர்ச்சி இன்னதென்று சிறிதும் அறியா முன்னரே அதன்கட் புகுதலே நலமுடைத்து. நிலையை மேற்கொள்வோர் அதன்கண் மனம் ஒன்றுபட்டு நெடுக நிலைபெறார். அவர் எவ்வளவுதான் தமது மனத்தை ஒருக்கி நிற்பினும், அவ்வின்ப வேட்கை தன்னளவின் மிகப் பெருகி அவரைக் குற்றமான சிற்றின்பத் துறைகளில் இறக்கிவிடும் ஆகவே, அந் நுகர்ச்சியின் இனிமையை முன்னறிந்தோர் பின்னர்த்தம் மகளிரோடிருந்து துறவு நடாத்துதலே சிறந்த நெறியாம் என்க. அஃதொக்குமேனும், மனைவி மக்களோடொருங்கிருந்து கொண்டே தவவொழுக்கத்தை மேற்கொள்ளல், உருவகை யறமும் ஒன்றாக நடப்பித்தற்கு வேண்டிய பொருள்வருவாய் இல்லாக் குறையானும், அதன் வாயிலாக வரும் பல கவலைகளானும் இடர்களானும் துன்புறுதற்கு இடம் செய்யுமாகலின் சிற்றின்ப வேட்கை முற்றும் அவிந்த முதுமைக் காலத்தே தனித்துறவு பூண்டு அவ் வொழுக்கத்தில் நிற்றலே நல முடைத்தாமெனின், அற்றன்று. தவவொழுக்கத்தில் நிற்போர் அவ்வொழுக்கத்திற் கேற்றபடி பிறர்க்கு அறிவு நூற்பொருள் உணர்த்தும் பல வழிகளால், அவ் விழுப்பொருளுணர்த்தப் பெறும் நல்லார் சிலரேயாயினும் அவர் மனம் உவந்து தரும் நற்பொருள் கொண்டு அவ் விருவகையறமும் இனிது நடத்துதல் கூடுமாகலானும், முதுமைக்காலம் வரையில் உயிரோடிருத்தல் உறுதியின்மையின் அது வரும்பொழுது தவத்தைச் செய்வே மென்றல் பேதமையே யாகலானும், கருவிகள் வலிமை குன்றித் தத்தஞ் செயல்களைச் செவ்வனே செய்யமாட்டா. அம் முதுமைப் பொழுதில் அரிய பெரிய தவவொழுக்கத்தை மேற்கொண்டு புரிதல் இயலாமையானும், கருவிகள் சிறிதும் வலிமை குறையாத முதியோரும் உளராலெனின் அத்தகையோர்க்குச் சிற்றின்ப வேட்கை தணியாதாகலானும் முதுமை வந்தபின் தவத்தை மேற்கொள்வேமென்றல் ஒருவாற்றானுங் கைகூடா தென்க. இளமைக் காலந்தொட்டே அதனைத் தமக்கினிய மகளிர் மக்களோடு உடனிருந்து நடாத்தி அவரையும் முன்னேற்றித் தம்மையும் முன்னேற்றும் அரும்பேறு உடையார்க்கே முதுமையிலும் அஃது இனிது நடைபெறுவதாகு மென்றுணர்ந்து கொள்க. இனி, மேற்காட்டியவாறு மாதரை முழுதும் அருவருத்து அகலாமலும் அவரை அடுத்தடுத்து மருவி உடம்பின் வலிய சாற்றை வீணே செலவிடாமலும் இரண்டுக்கும் நடுப்பட்ட நிலைமையிலிருந்து ஒழுகவே, விந்துவானது இறுகி உடம்பின் அகப்புற உறுப்புகளை வலிவுறச் செய்யும். உடம்பு வலிவேறித் தூயதாகவே, அதனோடு இசைந்து நடக்கும் மனமும் அதன்வழிச் செல்லும் நினைவும் ஆற்றல்மிக்குத் தூயவாய்த் திகழும். ஆதலால், மந்திரங்களும் கவர்ச்சிமுறைகளுங் கைகூடுதற்கு விந்துவை வலிதாக்கல் இன்றியமையாததாகும். விந்துவுக்கு வலிவேற்றினாருங்கூட மாதரைப் புணர்ந்த நாட்களிலும் அதனை அடுத்த நாட்களிலும் மந்திரம் உருவேற்றதலும் கவர்ச்சி முறைகளைச் செய்தலும் ஆகா. ஏனென்றால், புணர்ச்சியில் விந்து கழிந்தபின் உடம்பும் மனமும் வலிவுகுன்றி நிற்கும். ஆகையால், அப்பொழுது செய்யும் மந்திரக் கவர்ச்சி முயற்சிகள் பயன்றரா. அதுவேயுமன்றி, வலிமைகுன்றிய அந் நிலையிற் செய்யுங் கடுமுயற்சிகள் எவையாயிருப்பினும் அவை உடம்புக்கு நிலைக்களனான மூளையைப் பழுதுபடுத்தி நோயையும் வருவிக்கும்; இவ்வுயர்ந்த முயற்சிகளையேயன்றி உலகிய லொழுக்கத்தின் பொருட்டுத் தொடங்கும் புதிய முயற்சிகளையுங் கூட அந் நாட்களில் தொடங்குதல் ஆகாது; அன்றித் தொடங்கினால் அவை கருதிய பயனைத் தராமையோடு கருதியதற்கு மாறானதொன்றை விளைத்துத் துன்பத்தைத் தரினுந் தரும். ஆதலால், விந்து கழிந்த நாளிலும் அதற்கடுத்த நாளிலும் கவர்ச்சி முறைகளைப் பழகுதலுஞ் செய்தலும் விட்டு ஓய்ந்திருந்து, மறுபடியும் விந்து ஊறி உடம்பு வலிவேறிய மூன்றாம் நாளிலிருந்து அவற்றைப் பழகுதற்குஞ் செய்தற்கும் புகுக. மேலும் மேலும் விந்துவை இறுகச் செய்தலிற் கருத்தை நிலைபெற ஊன்றுதல் வேண்டும். நினைவை உயர்ந்த பொருள்களில் ஒருவழி நிறுத்துதலும், மூச்சை ஒடுக்குதலும் விந்துவை இறுகச் செய்தற்குரிய முறைகளாகும். அடுத்தடுத்துக் காம இன்பத்தை நினைந்து கொண்டிருப்பார்க்கு விந்து நீர்த்துப் போகும். அதனை நினையாமல், முழுமுதற் கடவுளின் நிலைகளையும், உயிர் இறைவனைக் கூடுதலால் விளையும் பேரின்பப் பேறுகளையும், சான்றோர் ஆழ்ந்தாராய்ந்து வரைந்த அறிவுநூற் பொருள்களையும், உலகத்திற்குத் தாஞ் செய்ய வேண்டிய உயர்ந்த கடமைகளையும் தொடர்பாக நினைந்து வருதலால் விந்து முத்துமணி போல் இறுகும். இவற்றோடு, மனம் ஒருவழி நிற்றற்குப் பெரிதும் உதவி செய்வதாகிய மூச்சு ஓட்டத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து, அம் மூச்சை உள்ளே ஒடுக்கி வருதலும் வேண்டும். இவ் இருவகை அகமுயற்சி களுக்குந் துணையாகப் புறத்திருந்து உட்கொள்ளும் உணவைத் தூயதாகத் தெரிந்தெடுத்து உட்கொள்ளும் புறமுயற்சியும் அவற்றிற்கு அடுத்த நிலையிற் சிறந்ததாகும். காரமும் புளிப்பும் நிரம்பச் சேர்ந்த உணவு விந்துவின் ஆற்றலைக் கெடுக்கும் நீர்மைய தாகலின், அத்தகைய வுணவை மெல்ல மெல்ல விலக்கி வருதல் வேண்டும்; உயிர்க் கொலையால் வரும் எவ்வகையான ஊன் உணவையுந் தொடுதலும் ஆகாது; கொலைத் தொழிலானது இறைவனது இரக்க இயல்புக்கு முற்றும் மாறான தொன்றாக லானும், அத்தொழிலைச் செய்வாரைக் கண்டு எல்லா உயிர்களும் உளம் நடுங்குதலானும் அதனால் வரும் ஊனை உண்பார்க்குக் கவர்ச்சி ஆற்றல் உளதாகாது; ஏனென்றாற், படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம் (குறள் 253) என்று தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்தபடி, ஊனுண்பாரது எண்ணம் பிற உயிர்களின் துன்பத்தையும் நன்மையையுங் கருதிப் பாராதாகலின், அவர்க்கெழும் நினைவானது நினைவு வெளியில் நடுக்கத்துக்கு ஏதுவான அதிர்ச்சியைத் தோற்றுவித்து, அந் நினைவு வெளியில் தொடர்புபட்டு நிற்கும் எல்லா உயிர்களின் உள்ளத்திலும் அச்சத்தை விளைவிக்கும். அதனால் அவ்வச்சத்துட்பட்ட உயிர்கள் தம்முயிர் பிழைக்க அவரை அகன்று ஒழுகும் நினைவிலும் முயற்சியிலுமே ஈடுபட்டு முனைந்து நிற்கும். அங்ஙனம் நிற்கவே, ஊன் உண்பார் கொள்ளும் கவர்ச்சி நினைவு அவ்வுயிர்களின் உள்ளத்தை அணுக மாட்டாதாய்த் திரும்பித், தன்னையுடையார்பாற் சென்று அவரையே துன்புறுத்தும். மற்று, ஊனுணவு கொள்ளாத அருள் நினைவுடையாரைக், கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (குறள் 260) என்ற அருளுரைப்படி, எல்லா உயிர்களும் எளிதிற் றெரிந்து அவர்பால் அன்பு மீதூரப் பெறுமாகலின், அவர் நினைந்த படியெல்லாம் அவை அவர்க்கு வயமாகி நடக்கும். முன்னே நமக்குப் பழக்கமில்லாத சிலரை நாம் புதிதாய்க் காண நேருங்கால், அவருட் சிலரை நாம் விரும்புகின்றனம், வேறு சிலரை நாம் வெறுக்கின்றனம் அல்லமோ? அவ்வாறு நம்மை யறியாமலே நாம் புதியராய் வந்தார் சிலரை விரும்புதலும் மற்றுஞ் சிலரை வெறுத்தலும் என்னையென்று நுணுகி நோக்குங்கால், அறிவும் அன்பும் அருளும் வாய்ந்தாரது உள்ளம் தன்னை உடையாரது முகத்தில் ஒருவகை இனிய கவர்ச்சியினைத் தோற்றுவித்தலால் அக் கவர்ச்சியுடையார் சிலரைக் கண்டவளவானே ஏதோர் ஏதுவும் இன்றி நாம் அவரை விரும்புகின்றோம்; மற்று அத்தகைய உயர்ந்த இயல்புகள் வாயாதாரது உள்ளங் கொடுந்தன்மை களுக்கும் அறியாமைக்கும் இடனாய் இருத்தலால் அஃது அவரது முகத்தில் அருவருப்பான சாயலினைக் காட்டும்; காட்டவே அவ் வியல்பினாரைக் கண்ட நாம் கண்டபொழுதே ஏதோர் இயைபும் இன்றி அவர்பால் வெறுப்புக் கொள்கின்றோம். அதுவேயுமன்றி, மேலே விளக்கியபடி ஒவ்வொருவர் நினைவுகளும் நினைவுவெளியிற் பரந்து செல்லுதலால், உயர்ந்த இயல்பு வாய்ந்தார் தம் நினைவு தன்னோடொத்த உயர்ந்த நினைவுகளுடன் மட்டுமே இனிது இசைந்து நிற்கும். அங்ஙனம் நிற்கவே, அவ் விழுமிய நினைவு களையுடையா ரெல்லாரும் ஒருங்கு இழுக்கப்பட்டு, ஒருவர்பால் ஒருவர் உண்மையன்பு மீதூரப்பெறுவர். இங்ஙனமாகவே, மக்களினுந் தாழ்ந்த எல்லாச் சிற்றுயிர்களும் மக்களைப் போலவே உணர்வுள்ள உயிர்ப் பொருள்களாதலால், நினைவு வெளியில் தொடர்புபட்டு நிற்கும் அவைகளின் உணர்வும், ஊன் உண்ணுங் கொலைகாரர் தம் எண்ணத்தினையும் ஊன் உண்ணா அருளாளர் தம் எண்ணத்தினையும் எளிதிலே உணர்ந்து, முன்னையோரைக் கண்டு அஞ்சி யோடுதலிலும், பின்னை யோரைக் கண்டு விரும்பி நெருங்கி யொழுகுதலிலுங் கருத்துள்ளனவாய் இருக்கின்றன. ஆகவே, உயிர்களைக் கொல்லாமலுங், கொல்லப்பட்ட உயிர்களின் ஊனைத் தின்னாமலும் அன்பும் அருளும் நிரம்பிய உள்ளத்தனாய் இருப்பவனை எல்லா உயிர்களுந்தொழும் என்ற ஆசிரியர் திருவள்ளுவனார் உரை எட்டுணையும் பொய்யாகாத மெய்யுரையேயாம். அவ்வியல்பினானுக்கு எல்லா உயிர்களும் எளிதிலே வயமாதல் சொல்ல வேண்டா இன்னுங், கொழுப்பான உணவுகளை இடையறாது மிகுதியாய் உண்பார்க்கு உடலிற் கொழுப்புங் குருதியும் மிகுந்து விந்துவைப் பெருக்குவதோடு, உடம்பும் வரவரப் பெருத்துப் பெருஞ்சுமையாய்விடும். ஆதலாற், கொழுப்பான உணவுப் பண்டங்களை அளவில் மிகக் குறைத்துண்பதுடன் இடை யிடையே அவைகளை உட்கொள்ளாமலும் மறுத்துவிடல் வேண்டும். உணாப் பொருள்களின் வகைகளையும் அவற்றின் இயல்புகளையும் மக்கள் நூறாண்டு உயிர்வாழ்தல் எப்படி? என்னும் நூலில் விரித்து விளக்கி இருக்கின்றேம். அதனைக் கருத்தூன்றிக் கற்று அதன்படி ஒழுகுதல், கவர்ச்சி ஆற்றலைப் பெற வேண்டுவோர் இன்றியமையாது செயற்பாலதாகும். கொழுமையான பண்டங்களை அடுத்தடுத்து உண்ணாமல் மறுத்தல் ஒன்றுமே போதாது. ஒரு நாளில் பலகால் உண வெடுத்தலையும் விடுதல் வேண்டும். பகற்காலத்தில் உச்சிப் பொழுதில் மட்டும் வயிறு நிறையச் சாப்பிடலாம். காலைப் பொழுது மாலைப்பொழுது இராப்பொழுதுகளில் அவ்வாறு நிறையச் சாப்பிடுதல் ஆகாது. அப்பொழுதுகளில் நீர்த்த கஞ்சியேனும், பசி மிகுதியாயிருந்தால் இசைவான சில பழங்களேனும் உட்கொள்ளுதலே நன்று. இராக்காலத்திற் கோதுமைக் கஞ்சி, கோதுமையடை என்பவற்றைச் சிறிது ஆவின் பாலுடன் சேர்த்துண்டலே நலமுடைத்து. இனி, நண்பகற்காலத்தும் உணவு எடாமல் ஒரு திங்களிற் சில நாட்கள் பட்டினி கிடந்து நோன்பு நோற்றல், உடம்பைத் தூயதாக்கி அதனோடு ஒற்றுமைப் பட்டியங்கும் நமது மன வுணர்வையும் ஒளிபெறச் செய்தற்குச் சிறந்த வழியாகும். பட்டினி கிடப்பவர் பசித்துன்பத்தை உணரல் ஆகாது; பசியை உணர்கு வராயிற் பட்டினி கிடத்தலாற் பயன் இன்றாம்; அது பற்றியே தெய்வத் திருவள்ளுவர் ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் என்று அருளிச் செய்தார். ஈதென்னை? பசிமிகும் போது அதன் வருத்தத்தை உணராமல் இருத்தல் யாங்ஙனங் கூடுமென உணர்ந்துகொள்க. மிக விரைந்து முடிக்கவேண்டியதொரு கணக்கை முடிக்கும் முயற்சியிலோ, சிக்கலான ஓர் ஆராய்ச்சித் துறையில் இறங்கி ஆங்குள்ள பொருள்களை ஆழ்ந்தாராய்ந்து சிக்கு விடுவிக்கும் முயற்சியிலோ, பல பின்னலாய் உள்ள உயர்ந்த இயந்திரங்களைப் (பொறிகளைப்) பிழைபடாமல் இயக்கும் முயற்சியிலோ தமது கருத்து முற்றும் ஈர்க்கப்பட்டு நிற்பார்க்கு அம் முயற்சிகள் முடியும் வரையிற் பசியும் விடாயுந் தோன்றாமை நாம் கண்கூடாய் அறியக்கிடந்த தொன்றன்றோ? அங்ஙனமே அடியாரின் வரலாறுகளையும், கடவுள் அவர்கட்குச் செய்த அருட்டிறங்களையும், அன்பராயினார் ஒருவருக் கொருவர் ஆற்றிய உதவிகளையும், சிற்றுயிர்த் தொகைகளின் அமைப்புகள் செயல்களையும், பலதிறப் புற்பூண்டு மரஞ் செடி கொடிகளின் வகை வகையான அமைப்பின் அழகுகளையும், இயற்கைப் பொருட்டோற்றங் களையும், இன்னும் இவைபோல்வன வற்றையும் ஆழ்ந்தாழ்ந்து நினைந்து வியக்கும் முகத்தாற் பசித் துன்பத்தை உணராமலிருக்கலாம். அது சிறிதுகாலம் வரையிற் கூடுமேனும், நாட் செல்லச் செல்லப் பசித் துன்பமானது நாம் தாங்கும் அளவைக் கடந்து மிகுமாதலின், அப்போதும் அதனை உணராமலிருத்தல் யாங்ஙனமெனிற், காலமெல்லாம் பட்டினி கிடத்தல் வேண்டுமென்பது எமது கருத்தன்று. ஒவ்வோர் உயர்ந்த நோக்கத்தை மேற்கொண்டவர் அந்நோக்கம் ஈடேறும் பொருட்டுக், கிழமைக்கு ஒரு நாளோ மூன்று நாளோ, ஒரு திங்களுக்கு ஒரு கிழமையோ இரண்டு கிழமையோ, ஓர் யாண்டுக்கு முப்பது நாளோ நாற்பது நாளோ பட்டினி கிடந்தால் அவ்வளவே போதும். அங்ஙனம் பட்டினி கிடக்கு மிடத்தும், ஒன்று அல்லது மூன்றுநாள் வரையில் நோன்பியற்று வோர் காலையில் தூய வெறும் தண்ணீரையேனும், உச்சிப் பகலில் ஓர் உழக்கு ஆவின்பாலையேனும் பருகிவிட்டு நினைவைத் தாங்கருதிய உயர்ந்த நோக்கத்திற் பதித்திருக்கலாம். மூன்று நாட்களுக்குமேல் ஒருகிழமை ஏழு நாள்வரையில் நோன்பு நோற்போர், காலைப்பொழுதில் தூய தண்ணீரும், உச்சிப்பகலில் ஓர் உழக்கு ஆவின்பாலும் பேயன் அல்லது செவ்வாழை, குடகு, நாரத்தை என்னும் இவற்றின் சில பழங்களும், மாலைப் பொழுதிற் கற்கண்டு இட்டுச் சிறிது காய்ச்சிய ஓர் ஆழாக்கு ஆவின் பாலும் உட்கொள்ளலாம். ஒரு கிழமைக்கு மேல் இரண்டு கிழமை நோன்பு இயற்றுவோர் காலையிற் சிறிது தூய தண்ணீரும், நண்பகலில் ஓருழக்கு ஆவின்பாலின் அரைத்துக் குழைத்த சில வாதுமைப் பருப்பும் பேயன் செவ்வாழை நாரத்தையின் கனிகள் சிலவும், மாலையில் கற்கண்டும் வாதுமைப் பருப்புச் சிலவும் அரைத்துச் சேர்த்த ஓராழாக்கு ஆவின்பாலும் அருந்தலாம். இவற்றிற்கு மேல் வலுவான உணவுகளை உட்கொள்ளுதல் பட்டினி கிடந்து நோன்பு நோற்றல் ஆக மாட்டாது. முழு நிலாக் காலத்தும் மறைநிலாக் காலத்தும் ஏனைச் சில சிறப்பு நாட்களிலும் பட்டினிகிடந்து நோன்பு இயற்றுவேம் எனப்புகும் இக் காலத்தார் பலரும், மற்றை நாட்களில் உண்ணும் உணவைவிடப் பன்மடங்கு வலுவாகச் சமைத்த கொழுவிய பண்டங்களை விலாப்புடைக்கத் தின்று, கற்கண்டும் வாதுமைப் பருப்புங் கொடிமுந்திரிப் பழமும் நிரம்பப்பெய்து வற்றக் காய்ச்சிய ஒரு படி திரட்டுப்பாலையோ அவ்வது அதனோடொத்த தேநீரையோ வயிற்றில் இடம் இல்லாத வரையிற் பருகிவிட்டு இவ்வளவு பேருணவுக்குஞ், சிற்றுண்டி அல்லது பலகாரம் எனப் பெயரிட்டு இன்றைக்கு எமக்கு நோன்பு நாளாகையாற் பலகாரந்தான் பண்ணிணோம் என்று பெருமை பேசிக்கொள்கின்றார்கள்; பலகாரம் என்னுஞ் சொல்லோ பலாகாரம் என்னுஞ் சொல்லின் திரிபாகும். பலாகாரம் என்பது பல ஆகாரம் என்னும் இரண்டு சொற்களாய்ப் பிரிந்து பழமாகிய உணவு எனப் பொருள்படும். சான்றோர்கள் தாம் பட்டினி கிடக்கும் நாட்களிற் பசியின் கொடுமை தணித்தற்குச் சில பழங்களை மட்டும் அயின்று வந்தமை யால்,நோன்பு நாட்களிற் கொள்ளும் அவ்வுணவு பலாகாரம் எனப் பெயர் பெறலாயிற்று. ஆனால் இக்காலத்துப் பேரூண் அடைக்கும் மாந்தர்களோ, மற்றை நாட்களைவிட நோன்பு நாட்களில் நெய் சொட்டச் சொட்டச் செய்த இலட்டும் வாதுமைக் கொழும்பாகு உப்புமா உழுந்துவடை கடலை உருண்டை உருளைக்கிழங்குத் தோய்ப்பு வாதுமை நொய்ப் பொங்கல் இட்டிலி தோசை முதலிய மிகக் கொழுமையான உணாப் பண்டங்களுக்குப் பலகாரம் எனப் பெயர் வைத்துக்கொண்டு அவற்றை நிரம்பத் தின்கின்றார்கள். இவ்வாறு அளவுக்கு மிஞ்சித் தின்பதனாலேயே இவர்கள் இங்ஙனம் நோன்பு நோற்கும் நாட்களுக்குப் பின் நாட்களில் வயிறு கெட்டுப் பலவகை நோய்களுக்கு ஆளாகின்றார்கள். இந் நாட்டிலுள்ள மக்கள் நோய்ப்படும் நாட்களையும், அந் நாட்களுக்கு முன்நாட்களில் நிகழும் நிகழ்ச்சிகளையும் நன்காராய்ந்து பார்ப்பவர்க்கு யாங் கூறுவதன் உண்மை இனிது புலனாம். எனவே, பட்டினிகிடக்கும் நாட்களிற் சில பழங்களையும் பாலையுந் தவிர வேறு வலுவான பண்டங்களை உட் கொள்ளுதல் ஆதாதென்பது விளங்கற்பாலதாம். இம் முறைக்கு மாறாக நடப்பவர்க்குக் கவர்ச்சி ஆற்றல் உண்டாகாமையோடும் நோயும் வரும். ஆதலால், கவர்ச்சி முறையைக் கைப்பற்றி ஒழுகும் நாட்களிற் பாலையும் பழம் வாதுமைப் பருப்பு முதலான சிறிது சிற்றுண்டிகளையும் அன்றி, வேறு எவற்றின்மேலும் நினைவைச் செல்லவிடற்க. இவ்வாறு வசியத்தின் பொருட்டு நோன்பியற்றும் நாட்களில் நிரம்பவுங் கருத்திற் பதித்துச் செயற்பால தொன்றுண்டு. அஃது என்னையென்றால், உடம்பின் அகத்தையும் புறத்தையும் வெந்நீர் கொண்டு கழுவித் தூய்து செய்தலேயாம். உடம்பின் புறத்தைக் தான் நீரிற் குளிப்பித்துத் துப்புரவு செய்யலாம். அதன் அகத்தையும் அவ்வாறு துப்புரவு செய்தல் யாங்ஙனமெனின், நீரேற்றி ( எநிமா ) என்னுங் கருவி கொண்டு மலக்குடருக்கு ஒரு படி வெந்நீரை உட்செலுத்தி அதனை நாடோறுந் துப்புரவு செய்தலே உடம்பின் அகத்துள்ள அழுக்கைக் கழுவி விடுதலாகும். இங்ஙனம் மலக்குடரைக் கழுவி விடும் முறையினை மக்கள் நூறாண்டு உயிர்வாழ்தல் எப்படி? என்னும் எமது நூலில் விளக்கிக் காட்டியிருக் கின்றோம்; அதனை அங்கே கண்டுகொள்க. அகத்துள்ள மல அழுக்கைக் கழுவி விடாமல், உடம்பின் மேற்புறத்தை மட்டும் எத்தனை முறைதான் தண்ணீர் விட்டுக் கழுவினாலும், உடம்பு தூய்தாகாது. மலக்குடரிலுஞ் சிறுநீர்ப் பையிலும் ஒவ்வொரு நாளுஞ் சேரும் அழுக்கைவிட அருவருக்கற் பாலதும் நஞ்சாவதும் ஆன அழுக்கு வேறு யாண்டும் இல்லை.ஆதலால், முடைநாற்றம் நிறைந்த நஞ்சாகிய அம்மல அழுக்கை நாடோறும் கழுவித் துப்புரவு செய்துவந்தால், உடம்பின் மேற்புறத்தை அடுத்தடுத்துக் கழுவாது விடினுங் குற்றமில்லை. நாடோறும் நீராடத்தக்க உடம்பின் நலம் இசையாதவர்களுக்கு, ஒரு சிற்றாடையை வெந்நீரிற் தோய்த்துப் பிழிந்து மேலே தேய்ப்பின் உடம்பின் மேற்புறந் துப்புரவாகும். ஆனால், உள்ளுள்ள மல அழுக்கைக் கழுவாதவர்க்கோ, உடம்பின் புறத்தை நாள் ஒன்றுக்கு எத்தனைமுறைதான் தேய்த்துக் கழுவினாலுந், தூய்மை உண்டாகாது. மலம் நிறைந்த மட்குடத்தை மூடியிட்டு வாய்மறைத்து, அதன் மேற்புறத்தை கழுவி மஞ்சட் பூசிப் பொட்டிட்டுப் பூச்சூட்டி எவ்வளவுதான் ஒப்பனை செய்யினும் அதற்குத் தூய்மை உண்டாகுமோ? அது போலவே, உடம்பின்அகத்தை துப்புரவு செய்யாதார்க்குந் தூய்மையுண்டாகாதாகலின், வசியத்தின் பொருட்டு நோன்பியற்றுவோர் முதலில் அகத்தைக் கழுவித் துப்புரவு செய்தலை வழுவாமற் கைக்கொண்டு ஒழுகுக. இப் பழக்கத்தை முறையாகச் செய்துவருதல் போலவே மனத்தையும் மொழியையுந் துப்புரவாக வைத்தல் வேண்டும். பிறர்க்குத் தீங்கு பயப்பதான எதனையும் மனத்தின்கண் நினைத்தல் ஆகாது. தீய எண்ணங்கள் உள்ளத்தைப் பாழாக்கி மலினமாக்கும். நல்லெண்ணங்கள் அதனை வலிவாக்கித் துய்மை செய்யும். ஆதலால், தீய நினைவுகள் உள்ளத்தின்கட் புகுதற்குச் சிறிதும் இடங்கொடாமல், அவற்றிற்கு எதிரிடை யான நினைவுகளைக் கீழே குறிப்பிட்ட மந்திர மொழிகளின் உதவியால் அடுத்தடுத் துள்ளத்தின்கண் வருவித்திடுக: ஓம் அன்பும் அருளும் இரக்கமும் ஓங்குக! ஓம் இன்பமும் மகிழ்ச்சியும் எங்குந் தங்குக! என்னும் இம் மந்திரமொழிகளை நினைவில் உருவேற்றுக. இந் நினைவுகள் உள்ளத்திற் பதியப்பதிய அவ்வுள்ளந் தூயதாகி அளவிறந்த ஆற்றலுடைய தாகும். இங்ஙனம் உள்ளத்தைத் தூய்தாக்கும் பழக்கத்திற்கு ஏற்பவே, மொழியினையுந் தூய்தாக்கும் பழக்கத்தைக் கருத்தாய்ச் செய்துவருக. தெய்வத் திருவள்ளுவர், யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (குறள் 127) என்று அருளிச்செய்த அறிவுரையை மட்டும் ஒவ்வொரு வருந் தம் உள்ளத்தின்கண் நிலைபெறவைத்து ஒழுகுவராயின் இம் மண்ணுலகு விண்ணுலகினும் மேற்பட்டதாய் விளங்கும். நடவாத பொய்யைச் சொல்லிப் பிறரை ஏமாற்றி அவரைத் துன்பத்திற்கு உள்ளாக்குதலும், எந்நேரமும் பிறருடைய குற்றங்களை எடுத்துப் பேசுதலும், ஒருவரை அவரது முகத்தெதிரே புகழ்ந்து பேசி அவரில்லாதபோது இகழ்ந்து தூற்றுதலும், பயனில்லாத சொற்களை வீணே விரித்து உரை யாடுதலும், ஒருவரிடத்து இல்லாத நலங்களை இருப்பனவாக வைத்து பொய்யே புகழ்தலும், தாங் கூறும் பொருள்களை முன்பின் ஆராய்ந்து பாராமல் ஒன்றோடொன்று முரணச் சொல்லுதலும், பிறர் சொல்வனவற்றை யெல்லாம் மறுத்து மறுத்துக் கூறுதலும், எந்நேரமும் நகைப்புக்கு இடமானவை களையே நொடித்தலும், தன்னை எப்போதும் பெருமைப் படுத்தி இறுமாந்து இயம்புதலும் இன்னும் இவைபோன்ற உரையாட்டுக்களுந் தம்மிடத்து நிகழாமல் தம் சொற்களை நிரம்பவுங் கருத்தாய்ப் பாதுகாத்து வழங்கல் வேண்டும். ஆயிரம் பொன் வருவதாயிருந்தாலும் பிறர்க்குத் தீமையை விளைவிக்கும் பொய்ச் சொற்களைச் சிறிதுஞ் சொல்லலாகாது. பிறருடைய குற்றங்களை மகிழ்ந்து பேசுதற்கு இடம் வாய்க்கும் போதெல்லாம், தமதெண்ணத்தை உறுதியாக நிறுத்தி வாயைப் பூட்டிட்டு அதனைத் தடைசெய்து, வேறு நல்ல வழிகளில் நினைவைத் திருப்புதல் வேண்டும். ஒருவரை அவர்க்கு நேரில் உயர்த்துப் பேசுதலைப் பார்க்கினும் அவரில்லாத போது அவரைப் பன்மடங்கு மேலாக உயர்த்துப் பேசுதலே செயற் பாலது; நேரே ஒருவரை உயர்த்துப் பேசா விடினும் விடுக; அவரில்லாத போது அவர்தம் நலங்களை எடுத்துப் பேசுவிரேல் நும்மை உலகமெல்லாந் தலை வணங்கும். எதனைப் பேசினாலும் பிறர்க்குப் பயன்படுவனவற்றையும் நுமது அறிவு வளர்ச்சிக்கு இடஞ் செய்வனவற்றையுமே பேசுக. பொன்னையும் மணி களையும் வாரி வாரிச் சொரிபவரே யாயினும் ஒருவரிடத்தில்லாத நலங்களைப் பேசுதல் விட்டு, அவரிடத்துள்ள நலங்களை மட்டும் எடுத்துப் புகழவேண்டும் அளவு புகழ்க. முன் சொன்னதும் எழுதியதும் இதுவென்பதை நன்கு நினைவில் இருத்திப், பின் சொல்வது அதற்கு மாறுபடாமற் பேசுக; முன்னே கைக்கொண்டிருந்த ஒரு பொருளுக்குப் பின்னே மாறுபட்டுப் பேசும்படி ஒன்று நேருமாயின் அதற்குரிய ஏதுக்களைத் தெளிவாய் எடுத்துக் கூறுக. பிறர் சொல்வனவற்றில் மறுக்கத் தக்கதிருந்தாலுங்கூட அதனை மறாமல் நெகிழ விடுதலும், அவர் தாங்கூறும் பொருளைக் குறித்து நுமது கருத்தறிய வேண்டி வற்புறுத்திக் கேட்பராயின் அப்போதும் அதனை வெட்டென மறாமல் இவ்விவ்வேதுவால் எமது கருத்து இதுஎன நயமாய் மொழிதலும் இன்றியமையாதன. ஒருவரைச் சில பயன் கருதி எழுத்தில் வெட்டென மறுத்துரைப்பினும், நேர்முகமாயிருந்து உரையாடுங்கால் அங்ஙனம் வெட்டென மறுத்து உரையாடற்க. பிறர்க்கு நகையை விளைக்குஞ் சொற்களை அடுத் தடுத்துச் சொல்லிப் பகடிசெய்வோன், தன்னுடைய பெருந் தன்மைகளைத் தானே குறைத்துத் தன்னை இழிபுபடுத்திக் கொண்டாலன்றி அங்ஙனம் பிறரை விலாவிறச் சிரிக்கவைத்தல் இயலாதாகலின், அவ் வியல்பினானை அறிவுடையோர் பாராட்டார்; மற்றையோரும் அவன்பால் மைத்துனக்கிழமை கொள்வர்; ஆதலாற், பெரும்பாலும் அடக்கமான நிலை யிலேயே தான் சொல்வனவற்றைப் பெருந்தன்மையோடு எடுத்துரைப் போன் எல்லாரானுந் தெய்வமே போற் பணியப்படுவன். இனி, இன்றியமையாது தம்மைச் சிறிதுயர்த்திப் பேசவேண்டும் ஒரோவொரு காலமன்றி, மற்றை எக்காலங்களினுந் தம்மைத் தாமே உயர்த்துக் கூறுதல் அக் கூற்றினைக் கேட்பார்க் கெல்லாம் பெரியதோர் அருவருப்பினை உண்டாக்கும். ஆகவே, இக் குற்றங்கள் அணுகாமல் தன் சொற்களை நயம்பட உரைப்பானுக்கு இவ் வுலகின்கண் ஆகாதது ஒன்றுமில்லை. இவ்வாறாக உடம்பின் அகப்புறக் கருவிகளையும் மனமொழிகளையுந் தூயவாய் வைத்துக்கொண்டு பட்டினி கிடந்து நோன்பு இயற்றுவானுக்குத் தன் தகுதிக்தேற்ப நினைத்தவைகள் நினைத்தபடியே கைகூடும். தன் தகுதிக்கு ஏலாதவைகளைப் பெறுதற்கு விழைந்து, நீண்டகாலம் பட்டினி கிடந்து நோன்பியற்றி வருந்தற்க. ஏழைக்குடியிற் பிறந்தான் ஒருவன் தனது நிலையை எண்ணிப் பாராமல் தான் ஒரு நாட்டுக்கு அரசனாகித் திரண்ட செல்வ வாழ்க்கையில் அமரல் வேண்டு மென விரும்பி எத்தனை நாட்கள் பட்டினி கிடந்து நோற்றானா யினும் அஃதவனுக்கு இப் பிறவியில் வாய்க்குமோ? அவன் அங்ஙனம் மிகப் பெரியதொரு பேற்றை அவாவுதல் விட்டுத் தனது நிலைமைக்கேற்பத் தனக்குள்ள வறுமை தீர்தல் வேண்டு மென்றும், தான் செய்தற்கேற்ற ஓர் அலுவல் கிடைக்க வேண்டுமென்றும், தன்னையுந் தன்னைச் சேர்ந்தாரையும் இடர்ப்பாடின்றி இனிது வாழ்விக்கப் போதுமான பொருள் வேண்டுமென்றுங் கேட்டு நோற்பானாயின், அவன் கொண்ட அந் நோக்கம் விரைவிலே நிறை வேறும். அற்றேல், தவஞ் செய்தவர்களே அரச வாழ்க்கையைப் பெறுவர் என்று அறிவுடையோர் விளம்புவதென்னையென்றால் மிகவும் நல்கூர்ந்த நிலையில் உள்ளார் அரச நிலையைப் பெறல் வேண்டி நோன்பு இயற்றப் புகுந்தால், அந் நோன்பு அவர்தம் வாழ்நாள் முடியும் மட்டும் நடைபெறுவதாகல் வேண்டும். அங்ஙனம் நடைபெற்று அவர்தம் வாழ்நாள் முடிந்த பின், அடுத்த பிறவியில் அவர் ஓர் அரச குடும்பத்திற் பிறந்து அரச வாழ்க்கையில் அமர்வரென்பதே அறிஞர் கூறும் அவ்வுரையின் கருத்தாவதாம். ஆகவே, தமதளவுக்கு நிரம்பவும் மேற்பட்ட அரிய பெரிய நோக்கங்களையும் பெற விழைந்து நோற்பவர் இப் பிறவியிலேயே அந் நோக்கங்கள் கைகூடப்பெறுவரென்றல் இயலாது. இப் பிறவியிலேயே தாம் நோற்கும் நோன்பின் பயனை எய்த விரும்புவோர், தாம் இருக்கும் நிலைமைக்கும் தமது திறமைக்கும் இசைந்த நோக்கங்களைப் பெறுங்கருத்தோடு தமது நோன்பினைக் கடைப்பிடித்துச் செய்குவராயின், அந் நோக்கங்களின் சிறுமை பெருமைகட் கேற்ப அவை சில நாட்களிலோ, அன்றிச் சில கிழமைகளிலோ, அன்றிச் சில திங்களிலோ, அன்றிச் சில ஆண்டுகளிலோ கைவரப் பெறுவர். எனவே, எவ்வகையான நோக்கம் ஈடேற வேண்டினும், உணவின்மீது செல்லும் விருப்பத்தை விட்டு, அந்நோக்கத்தின் சிறுமை பெருமைகட்கேற்பச் சில நாட்களோ அன்றிப் பல நாட்களோ மேற்சொல்லியவாறு பட்டினிகிடந்து நோன்பு நோற்றல் வேண்டும். அங்ஙனம் முறையாகச் செய்து வருவார்க்கு அந்நோக்கங்கள் தம்முடைய வன்மை மென்மைகட்கு ஏற்றபெற்றியாகப் பல நாட்களிலேனுஞ் சில நாட்களிலேனுங் கட்டாயம் நிறைவேறும். நம் தமிழ்நாட்டுக்குப் புறம்பே தொலைவிலுள்ள அயல்நாட்டவர்களுங் கூடத், தாந்தாங் கருதிய பயனைப் பெறும் பொருட்டுப் பட்டினி கிடந்து நோன்பியற்றித் தம் முயற்சிகள் கைகூடப்பெற்று வருகின்றார்கள். அமெரிக்கா தேயத்தில் நியூயார்க்கு என்னும் நகரத்தில் உள்ள பியூரிண்டான் (purinton) என்னும் ஓர் இளைஞன் முப்பதுநாள் பட்டினிகிடந்து தமக்கிருந்த தீராப் பெருநோய் தீரப்பெற்றதும், அதனால் தம்மியல்புந் தமக்குள் விளங்கும் இறைவனியல்பும் நன்குணரப் பெற்றதும் அறியுந் தோறும் பெருவியப்பினைத் தருகின்றன. இவ்விளைஞர் தமது பிள்ளைமைக் காலம்முதற் பதினைந்து வகையான நோய்களால் மாறி மாறிப் பற்றப்பட்டுப் பெரிதுந் துன்புற்று வந்தனர். ஒருகால் ஆறு வகையான மருந்துகளை அருந்தினார்; அருந்தியும் பயன் பெறவில்லை. அம் மருந்துகளை உட்கொள்ளுமுன் தம்மை நிறுத்துப் பார்த்துத் தாம் ஐம்பது வீசையெடையிருக்கக் கண்டார். அவற்றை உட் கொண்ட பிறகோ தாம் முப்பத்தேழு வீசைதான் இருக்கக் கண்டார் பெரும்பாலும் நெருப்பண்டையிலுங் கட்டிலின் மேலுமே இருக் கலானமையின் இனித் தாம் தமக்கும் பிறர்க்கும் பயன்படப் போவதில்லை யென உணர்ந்தார். இவர் தங் குடும்பத்தாரும் நண்பர்களும் மருத்துவர்களும் இவரைக் கைவிட்டார்கள். இவரும் மருந்துண்பதை நிறுத்தி இயற்கை முறைகள் பலவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாய்ச் செய்து பார்த்தனர். அவற்றாற் சிற்சில நலங்கள் காணப்பட்டனவே யல்லாமல், முற்றும் நோய் தீர்ந்தபாடில்லை. கடைப்படியாக முப்பதுநாட் பட்டினிகிடக்கும் முறையைத் துணிந்து கைக்கொண்டார். இங்ஙனம் அவர் பட்டினி கிடந்த நாட்களில் வெறுந் தண்ணீரையும் புளிப்பான பழங்களின் சாற்றையும் இடை யிடையே பருகின தல்லாமல், வேறு ஏதும் உட்கொண்டிலர். அம் முப்பது நாளும் முடிந்து அவர் சிறிது சிறிதாகச் சைவவுணவு ஏற்று உடம்பை வலுப்படுத்தியபின் அவர் மறுபிறவி யெடுத்தவர் போல் ஆயினர். அவரை இத்தனை காலமாக வருத்திய நோய்களெல்லாம் அவரை முற்றும்விட்டு ஒழிந்தன; அவரது உடம்பெங்குந் தூய செந்நீரும் தூய தசையும் நிரம்ப வேண்டும் அளவுக்கு நிரம்பி உடம்பின் புறத்தே ஓரழகிய மினுமினுப்பினைத் தோற்று வித்தன; அவரது உள்ளந் தெளிவுபெற்று நுண்ணிய அறிவு விளக்கத்திற்கு இடந்தந்து பொலிந்தது. இவ்வாறாக அவர் முப்பதுநாட் பட்டினி கிடந்ததற்குப் பின் தாம் அடைந்த நலங்களையும், அந் நலங்களைப் பிறரும் பெற்று உய்யும் பொருட்டு நோன்பு நோற்கும் முறைகளையும் விரித்துப் பட்டினி கிடப்பதன் உண்மை MuhŒ¢á’ (‘The philosophy of Fasting’ by E.A. Puriton, published by Benedict Lust, 124, East 59th Street Newyork, USA) என்பதோர் அரியநூலை ஆங்கிலத்தில் எழுதி யிருக்கின்றார். இவரைப் போலவே நீண்டநாட் பட்டினிகிடந்து தம் உயர்ந்த நோக்கங்கள் ஈடேறப் பெற்றார். உலகின்கட் பற்பல இடங்களிலும் பற்பலர் உளர். ஆதலால், உலகத்திலுள்ள மக்களைத் தம்வயப்படுத்தித், தாங் கொண்ட அரும்பெரு நோக்கங்களை நிறைவேற்ற விரும்புவார் தமது நோக்கத்திற்குத் தக்கவாறு சில பல நாட்கள் பட்டினி கிடந்து நோன்பு இயற்றுதலைத் தவறாது கடைப்பிடித்துச் செய்யக்கடவராக. இனி இவ் வுயர்ந்த வசியமுறைகளைப் பழகி அவற்றில் தேர்ச்சிபெற வேண்டுவோர் இவைகளைத் தனித்திருந்து பழகுதற்கு இசைந்த இனிதான இடத்தைத் தேடி அமைத்துக் கொள்ளல் இன்றியமையாததாகும். மக்கள் மிக நெருங்கியுள்ள நகரங்களில் இருப்பதைவிட, நாட்டுப்புறங்களில் ஆற்றங்கரை களிலாதல் ஏரிக்கரைகளிலாதல் இறைவன் திருக்கோயில் களுக்கு அணிமையிலுள்ள இடங்களிலாதல் இருக்குஞ் சோலைகள் தோப்புகளின் இடையே இல்லம் வகுத்துக் கோடல் நன்று. ஏனென்றால், நகரங்களில் உள்ள மாந்தர்கள் பெரும்பாலும் பொருள் ஈட்டுவதிலேயே கருத்து இழுக்கப்பட்டுப் பொய்யும் புனைசுருட்டுஞ் செய்பவர்களாய் இருத்தலாலும், ஊனுங், கள், சாராயம் அவின் முதலிய மயக்கப் பொருள்களும், வெறுங் காமவயத்தராய் ஒழுகுவாரும் நகரங்களில் நிறைந்திருத்தலாலும், நகரங்களிற் பரந்திருக்குங் காற்று நஞ்சாயிருப்பதோடு, நினைவு வெளியும் அங்குள்ளாரின் தீய நினைவுகளால் நிரம்பித் தீய அசைவுகளை யுண்டாக்கு வதாய் இருக்கும்; ஆதலால், முதன்முதல் இவ் வுயர்ந்த பழக்கங்களைத் தொடங்குவார்க்கு அத்தகைய நகரக்காற்றும் நினைவுவெளியும் மாறாய் நின்று பலவகை இடையூறுகளை விளைக்கும். இவற்றில் தேர்ச்சி பெற்றவர்க்கோ எங்கிருப்பினுங் குற்றமில்லை. இவற்றில் தேர்ச்சி பெற வேண்டுவார்க்குந், தேர்ச்சி பெற்றவர்க்குங்கூட, நாட்டுப் புறங்களில் மேற்சொல்லிய இடங்களே ஏற்றவையாகுமென்று உணர்ந்துகொள்க. இத்தகைய இடங்கள் ஒன்றில் ஓர் அழகிய இல்லம் வகுத்து, அதன்கண் ஓர் இனிய அறை அமைத்துக்கொள்க. அவ்வறையுள் தூய நல்ல காற்று உலவுமாறும் வெயில் வெளிச்சம் படுமாறுஞ் சாளரங்கள் இருத்தல் வேண்டும். முருகப்பிரான், சிவபிரான், அம்மை, திருமால், கலைமகள், திருமகள் என்னும் உயர்பெருந் தெய்வங்களின் வடிவு தீட்டப்பட்ட அழகிய ஓவியங்களை அவ்வறையுள் திருத்தமாகத் தொங்க விடுக. இத்தகைய ஓவியங்களில் இரவிவன்மர் வரைந்தனவே மிகச் சிறந் தவை. ஏனைய பலவற்றில் அவ்வடிவங்களின் உறுப்புகள் செவ்வனே அமைக்கப்படாமல் கைகளுள் ஒன்று பெருத்தும் மற்றொன்று சிறுத்தும் ஒன்று நீண்டும் மற்றொன்று குறுகியும். கால்களுள் நேர்நிற்க வேண்டுவது பக்கத்திற் றிரும்பியும், கால்விரல்கள் இருக்க வேண்டும் வரிசைதப்பி ஒன்றன் மேலொன்றாய் புறந்திரும்பியும், நிழலும் ஒளியும் படவேண்டும் இடங்கள் உன்னிக்கப்படாமலும், மூக்கு முக்கோணமாய்க் கீழ் விரிந்தும் இதழ்கள் பருமனாயும், கட்பார்வையிற் காணப்படும் ஒளிப் புள்ளிகள் இல்லாமலும், செவிகள் பெருத்தும், நெற்றி அகன்று ஒரே மட்டமாயும் கூந்தல் மைக்குழம்பை வாரியப்பினாற்போல் இழைதெரியாமல், வகிர்ந்தும் பலவாறு பிழைபட வரையப்பட்டிருக்கின்றன. இயற்கைக்கு மாறான அவ் வோவியங்களின் வடிவங்களை உற்று நோக்குவார்க்கு அவற்றின்கண் உள்ள பிழைபாடுகள் அவர்தம் உள்ளத்திலுந் தோன்றி இனிய நினைவுகளின் இசைவுகெடுத்து ஒன்றுக்கொன்று மாறான எண்ண அசைவுகளைப் பிறப்பிக்கு மாதலால், அப் பெற்றிப்பட்ட ஓவியங்களை அவ்வறையுட் கொண்டுவருதல் ஒழிக. இரவிவர்மரைப் போன்ற சிறந்த ஓவிய ஆசிரியர்களால் வரையப்பட்டுத், தேவவடிவங் களும், முனிவரர்கள் சமயக் குரவர்கள் அடியவர்கள் புலவர்கள் அரசரில் உயர்ந்தோர்களின் வடிவங்களுங் திருத்தமாய் அமைந்த ஓவியங்களையே தெரிந்தெடுத்து, அவற்றின் தலைப்புறத்தை முன்சாய்த்துச் சுவர்களிற் சூழ நிறுத்துக. அவ்வறையின் சுவர்களுக்குப் பச்சை அல்லது நீல வண்ணம் முழுதுந் தீற்றிவைத்தல் நன்று. தனிச் சிவப்பு வண்ணந் தீற்றுதல் ஆகாது. ஏனென்றால், தனிச் சிவப்பு நிறந் தன்னருகி லிருப்பார்க்கு வெப்பத்தினை உண்டாக்கும். பச்சை நீலங்களோ குளிர்ச்சியினைத் தரும். தனித்திருந்து நினைவை ஒருவழி நிறுத்திப் பழகுவார்க்கு மூளையில் வெப்பம் ஏறுமாதலால், அதனைத் தணிவு செய்தற்குப் பச்சை அல்லது நீலநிறமே ஏற்றதாகும். அன்றி வேண்டுமாயிற் பச்சையுஞ் சிவப்புங் கலந்து குழைத்த வண்ணமும் பூசலாம். இவற்றோடு, சான்றோர் ஆக்கிய நூல்களைத் தெரிந் தெடுத்து, அவை தம்மை அழகாகச் சமைத்த நிலைப்பேழைகளில் ஒழுங்காக வைத்தல் வேண்டும். இஃது இன்றியமையாது செயற்பாலது. ஏனெனில், எவ்வாற்றானும் உயர்ந்த சான்றோர் களின் உயர்ந்த கருத்துக்கள் அத்தனையும் அவர் ஆக்கிய நூல்களிற் பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போதும் எப்போதும் இவ்வுலகத்தை ஆள்வன அவ் வுயர்ந்தோரின் உயர்ந்த கருத்துகளேயாகும். இவ்வுயர்ந்த கருத்துகள் மட்டும் பரவாதிருந்தால், இந் நிலவுலகம் முற்றும் புலியுங் கரடியும் ஓநாயும் முள்ளம்பன்றியும் அரிமாவும் மலைப் பாம்புகளும் நிறைந்த கொடுங்காடுகளைவிடக் கேடுகெட்ட நிலையை அடைந்திருக்கும். கண்காட்சி காட்டுந் திறமை யுடையோன் ஒருவனாற் பழக்கி அமைதிப் படுத்தப்பட்ட அக்கொடுவிலங்கு களைப் போலவே, அச் சான்றோர்களின் விழுமிய கருத்துக்களால் தங் கொடிய எண்ணங்களின் கொந்தளிப்புகள் தணிக்கப்பெற்று இம் மக்களெல்லாரும் ஒற்றுமையுடையராய் ஒருவரோ டொருவர் ஒருமித்திருந்து உயிர்வாழ்கின்றனர். ஆகவே, சான்றோரின் கருத்துகளுக்கு உள்ள ஆற்றல் அளவிடற்பாலதன்றென உணர்ந்து கொண்மின்கள்! அத்துணை ஆற்றல் வாய்ந்த அம் மேலோரின் கருத்துக்கள் பொதிந்து வைக்கப்பட்ட நூல்களின் அருமை பெருமைகளை எவர்தாம் அளந்துரைக்க வல்லார்! மேலே சேர்க்கைப்பொருள் கவர்ச்சியைப் பிடித்துப் பேசிய வழி, ஒருவர்க்கும் அவரொடு நெருங்கிய தொடர்புடைய பொருள்கட்கும் உள்ள இயை பினையும், அப் பொருள்கள் அவரைப் பிரிந்து எத்தனையோ ஆயிர ஆண்டுகளாயினும் அல்லது எத்தனையோ கல் தொலைவிலுள்ள இடங்கட்குச் செல்லினும், அகக்கண் காட்சியும் நுண்ணுணர்வும் வாய்ந்த சிலர் கையிற்படின் அவை தமக்கு உரியாரின் வடிவு இயல்பு செயல்களை விளங்கக் காட்டும் வகையினையும் மேலே விளக்கிப் போந்தாம். இவ்வாறு ஒருவரோடு நெருங்கிய தொடர்புடைய பொருள்களில், அவர்தம் விழுமிய கருத்துகள் பொதிந்து வைக்கப்பட்ட நூல் களினுஞ் சிறந்தது பிறிதில்லை. உயர்ந்த நூல்களை கற்றற்குரிய பெருந்தவம் இல்லாதவனுங்கூட அந் நூல்களை வாங்கி வணங்கி வாழ்த்தி அவற்றின் பக்கத்தேயிருந்து உயிர்வாழ்ந்து வருகு வனாயின், நினைவுவெளியிலே சுடர்விரிந்து நுட்பமாய் இயங்கிக்கொண்டிருக்கும் அந் நூற்கருத்துக்கள் அருகிருக்கும் அவனது உள்ளத்திலும் அவனையறியாமலே பாய்ந்து அவனைப் புனிதமாக்கும். கல்லாதவனே அந் நூல்களின் பக்கத் திருப்பின் அத்தனை யுயர்ந்த நலங்களை அடைகுவனாயின், அந் நூல்களை ஆவலோடு திறந்து அங்கு நிரம்பித் துளும்பும் அழியாக் கல்விப்பெருந் தேனைச் சுவைத்துச் சுவைத்து ஆராயமல் இரவும் பகலும் அருந்திக் கொண்டிருக்குங் கலைவல்லான்றன் பெருந்தவச் சிறப்பினையும் அவற்குளதாம் புனித அறிவுப் பெருவிளக்கத்தின் பொலிவினையும் எவரே எடுத்துரைக்க வல்லார்! அத்துணைச் சிறந்த நூல்களைக் கவர்ச்சியின் பொருட்டுத் தாம் நோற்கும் அறையில் வைக்க விரும்புவோர், இக் காலத்திற் கடல் போல் விரிந்துகிடக்கும் நூற்பரப்பில் இன்னவைதாஞ் சிறந்தவையென்று தெரிந்தெடுக்க மாட்டாமல் திகைப்பா ராகலின், அவர் பொருட்டு அவ்வறையுள் வைக்கற் பாலனவாம் நூல்களிற் சிலவற்றை இங்கெடுத்து மொழிகின்றாம். உலக வழக்கின்கண் மக்களாற் பேசப்படாமல் இறந்துபட்ட ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளில் உள்ள நூல்களை விட, உலகவழக்கின்கண் நாடோறும் பேசப்படுகின்ற மொழி களில் உயர்ந்த பொருள்கள் அடக்கித் திருத்தமாக இயற்றப்பட்ட நூல்களே சிறந்தனவாகும். இனி உலக வழக்கினுள்ளுஞ் சில நூற்றாண்டுகளாகத் தோன்றி வழங்கும் மொழிகளில் ஆக்கப்பட்ட நூல்களைவிடப், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே தோன்றி இன்றுகாறும் இறவாமற் புத்திளமையோடு நடைபெறும் மொழிகளில் அரும்பொருள் துறுமப் பெருஞ்சுவை குழும ஆக்கப்பட்ட நூல்களே எல்லா வற்றினுஞ் சிறந்தனவாகும். அங்ஙனஞ் சிறந்த நூல்களுள்ளுங் கடவுளை நேரே கண்டு அவன்றன் அருளை ஆரப் பருகி அருள் வடிவாய்த் திகழ்ந்தோர் அருளிச் செய்த நூல்களே சாலச் சிறந்தனவாகும். ஏனென்றால் உலகவழக்கிலில்லாது இறந்துபட்ட ஆரியம் இலத்தீன் முதலான மொழிகளில் உள்ள நூல்களின் சொற் பொருள்கள் எல்லார்க்கும் விளங்குவன அல்லாமையால், மிகவும் நாட்பட்டுப்போய் நினைவுவெளியில் மெல்லென இயங்கும் அவற்றின் இயக்கங்கள் எல்லாருள்ளத் தினும் ஊடுருவிச் சென்று நாம் வேண்டிய பயனைத் தருதற் கிசைந்த ஆற்றல் உடையன ஆகா. மேலும் ஆரிய மொழியில் உள்ள இருக்குவேதம் முதலான நூல்களில் உள்ள பாட்டுகள், எல்லா உலகிற்கும் முதல்வனான ஒரே முழுமுதற் கடவுளை வழுத்தாமல் நம்மனோரைப் போற்பிறந்து இறந்து போன சிறு தெய்வங்களை வழுத்துவனவாயிருத்த லாலும், அதன்கண் உள்ள ஏனை உபநிடதங்களுஞ் சாங்கியம், யோகம், நையாயிகம், வைசேடிகம், மீமாம்சம், வேதாந்தம் முதலான ஆராய்ச்சி நூல்களும், மற்றைப் புராணங்களும் முறையே பொருட் டெளிவு இல்லனவாயும், ஒன்றினொன்று மாறான கொள்கைகளை எடுத்துரைப்பனவாயுங், கடவுட்டன்மை மக்கட்டன்மைக்கும் உலக இயற்கைகட்கும் மாறான பொய்ப் பொருள்களைப் புனைந்துரைப்பனவாயும் இருத்தலாலும் அப் பெற்றிப்பட்ட அவ் ஆரிய நூல்கள் புறத்தே நூல்பயில் இடங்களில் வைக்கற் பாலனவே யன்றி, உயர்ந்த நோக்கம் பற்றி மனக்கவர்ச்சியினை நாடி நோன்பியற்றுந் தூய அறையுள் வைக்கற்பாலன அல்ல. இனி, உலகவழக்கின்கட் சில நூற்றாண்டுகளாகத் தோன்றி நடைபெறும் இந்தி, வங்காளி முதலான ஆரியஞ் சிதைந்த மொழிகளும், தமிழ்ச் சிதைவான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகளும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அழியாது நடைபெற்று வரும் தமிழ்மொழியைப் போல் நுண்ணிய பேராற்றல் உடையனவாகா; ஆகவே, அவற்றின்கண் ஆக்கப்பட்ட நூல்களும் நினைவு வெளியில் மிகச் சிறந்த இயக்கங்களை உண்டாக்கி எல்லார் உள்ளங்களையும் அசைக்கவல்லனவாக மாட்டா. இவ்வாறு பல்லாண்டுகளுக்கு முன்னரே இறந்துபோன மொழிநூல்களும் நோன்பியற்றும் இடங்களில் வைத்தற்கேற்ற தகுதியில்லனவாய் இருப்பப், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டு இன்றுகாறும் நடைபெறும் பேராற்றல் உடையதாகிய செந்தமிழ் மொழியில் உள்ள பழைய நூல்களோ நினைவு வெளியில் அரும் பேரியக்கங்களை எழுப்பி அவற்றை ஓவாது நடைபெறுவித்து மக்கள் உள்ளங்களையெல்லாந் தூய்மை செய்யுந் தகையவாய்க் காணப்படுதலின், அவைகளே தவமியற்றும் இடங்களில் வைத்தற்கு இன்றியமையாச் சிறப்பினவாகும். அவற்றுள்ளுந் தொல்காப்பியம் என்னும் அருந்தமிழ் நூல் தனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாத் தனிப்பெருந் தமிழ் நூலாகும். இஃது ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னரே இயற்றப்பட்ட மிகப் பழையதொரு நூல்; ஒரு மொழியாய்த் தொடர்புபட்டு நிற்கும் ஓசையின் இயல்புகளையும் அவற்றின் இசைவுகளையும் இயற்கையில் உள்ளபடியே நுணுகி ஆராய்ந்து வகுத்து முறைப்படுத்து உணர்த்துவது; சிறப்பு வகையால் நோக்குவார்க்கு இது தமிழ்மொழியின் இயற்கையை வகுத்துக் கூறுவது போற்காணப் படினும், பொது வகையால் நுனித் தாராய்வார்க்கு இஃது உலகத்தின்கண் உள்ள எல்லா மொழிகளுக்கும் நிலைக்களனான எழுத்தோசைகளின் பொது விலக்கணங்களையுணர்த்தி எல்லா மொழிகளுக்கும் இஃது ஒப்பற்ற தொரு பொது இலக்கண மாதலும் விளங்கா நிற்கும். அதுவேயுமன்றி, இது மக்களின் அகத்தேயுள்ள அகவியற்கை களையும் அவைபற்றி அவர்க்குப் புறத்தே யுண்டாம் புற நிகழ்ச்சிகளையும், இவ்விரண்டோடுந் தொடர்புபட்டுக் கிடக்கும் இயற்கைப் பொருட் பாகுபாடு களையுந் கூறு கூறாகப் போழ்ந்து அவற்றின் பரப்பெல்லாந் துழாவி ஆராய்ந்து விளக்குந் தனித்தலைமைப் பெருஞ் சிறப்பினதாயுந் திகழ்கின்றது ; இவற்றோடுகூட மக்களியற்கை உலக இயற்கைகளைக் கடந்து நின்றும் அவற்றுக்கு அணுக்கமாய் ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளிவிளக்கங்களிற் கட்புலனாய் விளங்கித் தோன்றி எல்லா உயிர்க்குந் தனது அருளொளியைப் பொழியும் முழுமுதற் கடவுளின் பெருமுதற்றன்மையை வழுவற யார்க்கும் வகுத்துக் காட்டி இஃது எமக்குரிய நுல், இஃது எமக்குரிய நுல் என எல்லாச் சமயத்தாரும் மகிழ்ந்தேற்றுத் தமது தலைக்கணியாய்ச் சூடிக்கொள்ளுந் தனிப்பெரு விழுப்பம் வாய்ந்தது. அளக்கலாகா இத்துணைப் பெருஞ் சிறப்பினதாகிய இத் தொல்காப்பிய முழுமுதல் நூல் கவர்ச்சியினையும் பிற உயர்ந்த பேறுகளையும் வேண்டித் தவங்கிடப்பார் எவராயிருப்பினும் அவர் தமது புனித இல்லத்திற் போற்றி முதல் வைத்து வழிபாடாற்றுதற்கு ஏற்ற தொன்றாமெனத் தெளிமின்கள்! இதனையடுக்க, இதனைப் போலவே குன்றாச் சிறப்பிற் பொன்றாது மிளிருந் தெய்வத் திருக்குறள் நூல் வைக்கற் பாலதாம். இதனைக் கற்பார் எந் நாட்டவராயினும் எச் சாதியினராயினும் எக் கொள்கையினராயினும் எம் மொழி யினராயினும், அவரெல்லாம் இதன்கண் அறிவுறுக்கப் படும் அரும்பொருள் வயத்தராகித் தம் மன மொழி மெய்கள் தூயராய், முன்னே தம்மைப் பற்றியும் தம் நாடு தமது சாதி தமது கொள்கை தமது மொழிகளைப் பற்றியும் உயர்வாக நினைத்துக் கொண்ட செருக்குகள் முற்றும் அற்றொழிய, எங்கும் வரையின்றி விரிந்த அன்புக்கும் அருளுக்குமே தமதுள்ளம் ஓர் உறையுளாய் அமரப்பெற்று, உலகினைத் தம் ஆணைவழி நிறுத்தித் தாம் வேண்டியனவெல்லாம் வேண்டியாங்கு எய்துவராதலால், இத் திருக்குறள் நூலின் அருமை பெருமையினை மேலும் விரிக்க வேண்டுவது எற்றுக்கு? எத்துணைதான் விரிப்பினும் அவை எஞ் சொல்லளவில் அடங்குமோ! இனி இத் திருக்குறளையடுக்க வைக்கற்பாலன பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு முதலிய பழந்தமிழ்த் தொகை நூல்களும், நாலடியார் முதலான ஏனைப் பதினெண் கீழ்க்கணக்கினுட்பட்ட அறநூல்களுமாம். இவை அறம் பொருள் இன்பம் வீடு என்னும் மக்களுயிர்க்கு உறுதி பயக்கும் நாற்பெரும் பொருள்களையும் இயற்கை வழாமல் உள்ளன உள்ளவாறே யுணர்த்தும் மெய்ந்நூல்களாதலின், இந் நூல்கள் தம்மைப் போற்றுவார்க்கும் ஓதுவார்க்கும் மெய்ப்பயன்கள் எல்லா வற்றையும் அளிக்கவல்லனவாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பொருட்டொடர் நிலைச் செய்யுட்கள் இரண்டும் மேற்காட்டிய நூல்களோடு ஒத்த சிறப்பினவாயினும், அவற்றின்கட் சொல்லப்பட்ட கோவலன் கண்ணகி வரலாறும், மணிமேகலை உதயகுமரன் வரலாறுந் தம்மைப் பயில்வார்க்கு ஆற்றலாகாப் பெருந் துயரத்தை விளைக்கும் நீரனவாயிருத்தலின், அவை, கவர்ச்சியின் பொருட்டு வகுத்த அறையுள் வைக்கற்பாலன அல்ல. இனி, மேலே குறித்த நூல்களையடுக்க வைக்கற்பாலன திருவாசகந், திருச்சிற்றம்பலக் கோவையார் என்பனவாகும். இவற்றையருளிச்செய்த மாணிக்கவாசகப் பெருமான் முழுமுதற் கடவுளால் நேரே ஆட்கொள்ளப் பெற்ற பெறற்கரும் பேறு உடையராகலானும், அவர் அருளிச்செய்த இந் நூல்கள் தம்மை ஓதுவார் நெஞ்சங் கல்லாயிருப்பினும் அதனை அன்பினாற் கரைந்துருகச் செய்து அவர் தம்மை இறைவன் திருவருட் பெருக்கின்பாற் படிவித்தல் திண்ணமாகலானும் இவை, வசியத்தினை வேண்டித் தவங் கிடப்பாரால் நாளுங் குழைந்து குழைந்து வழிபடற்பாலனவென்பதை நாம் வற்புறுத்துதலும் வேண்டுமோ! இனி, இவற்றையடுக்க வைக்கற்பாலது: திருமூலநாயனார் அருளிச் செய்த திருமந்திரமே யாகும். இம்மை மறுமைக்குரிய மறைபொருள் நுட்பங்கள் அனையவும் ஒருங்கெடுத்துத் தெளித்துரைப்பதில் இதனையொப்பதொரு முழுநூல் உலகின்கண் வேறெந்த மொழியினும் இல்லை. முடிவான மந்திரங்களும், அவற்றை உருவேற்றும் முறைகளும் அவற்றை அமைக்குஞ் சக்கரங்களும், அம் மந்திரங்களுக்குரிய மாப்பெருந் தெய்வங்களும், அத் தெய்வங்களெல்லாம் ஒரே முழுமுதற் கடவுளான சிவத்தின் ஆணை வழிநின்று தம்மை வழிபடுவார்க்கு இம்மை மறுமைப் பயன்களை அளிக்கும் வகைகளும், தவத்தின் பாகுபாடுகளும் அவற்றை மேற்கொண்டு ஒழுகுமாறும், அழிவிலாப் பேரின்பப் பேறாம் முடிந்த நிலையுமாகிய எல்லாம் இதுமுற்ற எடுத்து முடியக்கூறும் முழுமுதற் பெருநூலாம். இதனை வறிதே வைத்து அன்பினால் வழிபட்டு வருவார்க்கும் எல்லா மந்திரங்களும் எல்லாக் கவர்ச்சிகளும் எளிதிலே கைகூடுமென்றால், வேறிதன் பெருமையை விரித்துரைப்பதேன்? இனி இதனையடுக்க வைக்கற்பாலன: மூன்றாண்டுக் குழந்தையாயிருந்த ஞான்றே இறைவனையும் இறைவியையும் நேரே கண்டு அவர் குழைத்தூட்டிய ஞானப் பாலுண்டு, முழுமுதற் கடவுள் உண்மையை அக் கடவுளின் சிறப்பு நிகழ்ச்சிகளால் எவர்க்கும் விளங்கக்காட்டி, இத் தமிழ்நாட்டை ஒரு தேவநாடாக்கி, அதற்கொரு தெய்வ முதலாசிரியராய்த் திகழ்ந்த திருஞான சம்பந்தப் பெருமான் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களும், அங்ஙனமே தெய்வப் பெற்றியினராய் விளங்கிய திருநாவுக்கரசு நாயனார், சுந்தர மூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரப்பதிகங்களும், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பதினோராந் திருமுறை, திருத்தொண்டர் புராணம் என்பனவு மாம். இனி, இவற்றையடுக்க வைக்கற்பாலன: இறைவன் திருவருளால் உந்தப்பெற்று முப்பொருளாராய்ச்சியை முதன்முதற் கண்ட மெய்கண்டதேவநாயனார், தாங்கண்ட அவ்வாராய்ச்சிப் பரப்பெல்லாம் ஒருவழித் தந்து முறைப்படுத்து அருளிச்செய்த தனிப் பெருந் தமிழ்மெய்ம் முதல் நுலாகிய சிவஞானபோதமும், அதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்படுந் திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம், இருபா இருபஃது, உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா, கொடிக்கவி, உண்மைநெறி விளக்கம், போற்றிப் பஃறொடை, சங்கற் பநிராகரணம், நெஞ்சு விடுதூது என்னும் பதின்மூன்று மெய்கண்ட நூல் களுமாம். இனி, இவற்றை யடுக்க வைக்கற் பாலன: பிற்காலத்துச் சான்றோரான குமரகுருபர அடிகள், தாயுமான அடிகள் முதலாயினார் அருளிய அருட்செம்பாடல்களுஞ், சிவஞான முனிவர் அருளிச்செய்த சிவஞான போதப்பேருரையும், இந் நாளில் அரிய பெரிய ஆராய்ச்சிகள் செய்து அறிஞர் எழுதும் உரைநூல்களுமாம். இனி, இவற்றையடுக்க வைக்கற்பாலன: கிறித்து சமய வேதமாகிய விவிலியமும், மகமது சமய வேதமாகிய குரானும் ஆகும். புறச்சமய நூலாகிய இவை தம்மை மேற்கூறிய அருந்தமிழ்த் தெய்வ மறைகளோடு உடன் வைத்து வழிபாடாற்றுதல் ஒக்குமோ வெனின், அறியாது வினாயினாய், வேதங்கள் என நம்மனோர் ஆராயாது கொண்டாடும் இருக்கு முதலான ஆரியமொழி நூல்களைப் பார்க்கிலும், விவிலியம், குரான் என்பன எத்தனையோ மடங்கு உயர்ந்தனவாய் இருக்கின்றன. இருக்கு முதலிய ஆரியமொழி நூல்கள் நான்கினுந் தமிழராற் செய்து சேர்க்கப்பட்டவை போக, ஏனைப் பதிகங்களெல்லாம் பலப் பல சிறு தெய்வங்களை வணங்கு வனவாயும், அத் தெய்வங்களின் பொருட்டு ஆடு மாடு குதிரை மக்கள் என்னும் ஆருயிர்களைக் கொன்றும், சேர்மப்பூண்டில் இறக்கிய வெறிமிகுந்த கள்ளைக் குடித்துச் செய்யப்படும் வெறியாட்டு வேள்விகளை விரித்துரைப்பனவாயும் இருக் கின்றன; மற்று, விவிலியம், குரான் என்னும் நூல்களிலோ ஒருமுழுமுதற் கடவுள் வணக்கமே சொல்லப்பட்டிருக்கின்றது; உயிர்களைக் கொன்று வேட்கும் வெறியாட்டுகள் அவற்றின் கண் வெளிப்படையாக மறுக்கப்பட்டிருக்கின்றன; சிறு தெய்வங்களை வணங்குதலுங் குற்றமாமென்பது அவற்றின்கட் காட்டப் பட்டிருக்கின்றது; இவற்றோடு மக்கள் சைவ வுணவையே உட்கொள்ளல் வேண்டுமென்பதும், உயர்ந்த ஒழுக்கங்களையே கடைப்பிடித்து ஒழுகல் வேண்டுமென்பதும் பட்டினி கிடந்து நோன்பு நோற்றுந் தவங்கிடந்தும் அன்பினால் அகங்குழைந் துருகித் தீ வடிவிற் புலனாய்த் தோன்றும் முழுமுதற் கடவுளின் திருவடியைத் தலைக்கூடல் வேண்டுமென்பதும் அவற்றின் கண் வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கின்றன; அவற்றின் கட் கூறப்பட்ட இறைவன் அம்மையும் அப்பனும் மகனுமாய் நிற்கும் இயல்பும், எல்சடை, சிகோவா,அல்லா என்னும் இறைவற்கு உரிய பெயர்களும், அம்மையப்பனும் முருகனுமாய் நிற்குந் தமிழ்த் தெய்வ இயல்போடும், எல்லவன், சடையன்,சிவன் என்னுந் தமிழ்த் தெய்வப் பெயர்களோடும் முழுதொத்து நிற்கக் காண்டலின், ஈபுரு அராபி என்னும் மொழிகள் வழங்கிய நாடுகளிலிருந்த பண்டை மக்கள் தமிழ்மக்களின் இனத்தவரே யாதலும், அவர் கைக்கொண்டு ஒழுகிய கோட்பாடு சைவக் கோட்பாடே யாதலுந் தெற்றென விளங்கா நிற்கும். இன்னும் விரிப்பிற் பெருகும். இவற்றின் பரப்பெல்லாம் எமது சிவஞானபோத ஆராய்ச்சியிற் கண்டு கொள்க. எனவே, ஒரு முழுமுதற்றெய்வ வழிபாட்டை யும் மேலான ஒழுகலாறுகளையும் அறிவுறுக்கும் விவிலியம் (Bible) குரான் (koran) என்னும் மறைகளை மேற்குறித்த தமிழ் நூல்களோடு உடன் வைத்தல் சாலப் பொருந்துவதேயா மென்க. மேற்குறித்த நூல்களில் தொல்காப்பியமும், பரிபாடல், திருமுருகாற்றுப்படை அல்லாத ஏனைச் சங்க இலக்கிய நூல்களும், எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவான அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பெரும் பொருள்களை இலக்கண வகையாலுஞ் சுவை மிகுந்த இலக்கிய வகையாலும் வைத்து விரித்து விளக்குதலின், அவை தமிழ்ப் பொதுமறைகள் அல்லது வேதங்கள் என வழங்குதற்கு உரியனவாகும். மற்றப் பரிபாடல், திருமுருகாற்றுப்படை என்னுஞ் சங்கத் தமிழ் நூல்களுந், திருமந்திரம் அல்லாத திருவாசகந் தேவாரம் முதலான பதினொரு திருமுறைகளும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை முருகன், சிவன், திருமால் என்னுஞ் சிறப்புப் பெயர்களால் வழங்கி அவர் தம்மை வணங்குதலும் வாழ்த்துதலுஞ் செய்கின்றமையின், அவை சைவசமயத்த வர்க்கே யுரிய தமிழ்ச் சிறப்புமறைகள் என வழங்கற்பாலனவாகும். இனித் திருமந்திரமும், சிவஞானபோதம் முதலான மெய்கண்ட நூல்கள் பதினான்குஞ், சிவம், உயிர், மலம் என்னும் முப்பொரு ளாராய்ச்சிகளும், உயிர் மலப்பற்று நீங்கிச் சிவத்தைச் சென்று தலைக்கூடுமாறும் விரித்துக் காட்டிச் சைவசமயத்தவர்க்கே உரிய சிவாகமங்களா மென்று கடைப்பிடித்தல் வேண்டும். ஏனை விவிலியமுங் குரானுங் கிறித்துவர்க்கும் மகமதியர்க்கும் உரிய வேதங்கள் அல்லது ஆகமங்களாகும். இனி இற்றை அடுக்க வைக்கற்பாலன: பொய்கையாழ்வாரும் பேயாழ்வாருந் திருமாலை வழுத்தி அருளிச் செய்த அருந்தமிழ்ப் பாட்டுகளே யாகும். இவை தம்மைச் சைவசமய நூல்களை யடுக்க வையாமல், விவிலியங் குரான் என்னும் நூல்கட்கும் பின்னே வைக்க வென்றதூஉம், ஏனைப் பத்தாழ்வார்களின் பாடல்களைச் சேராமல்விட்டதூஉம் என்னை யெனிற் கூறுதும்; பிறப்பு இறப்புக்களில்லா இறைவியின் வடிவாகிய திருமாலுக்குப் பிறப்பு இறப்புக்கள் கூறும் புராணக்கதைகளைத் தழுவிக் கண்ணன் இராமன் என்பாரையும் திருமாலோ டொப்ப வைத்துப் பொய்கையாழ்வாரும் பேயாழ்வாரும் பாடிய பாட்டுக்களை, முழுமுதற் கடவுளை அங்ஙனம் பிறப்பு இறப்புக்களுட்படுத்து ஓதுதற்குச் சிறிதும் இசையாத சைவசமய நூல்கட்குப் பின்னும், அச் சைவசமய நூல்களைப் போலவே இறைவனுக்குப் பிறப்பு இறப்புக்கள் கூறுதற்கு எட்டுணையும் ஒருப்படாத கிறித்துவ மகமதிய வேதங்களுக்கு முன்னும் வைத்தல் நடுவுநிலை யுடையார் செய்கையாகாமையின், அவ்வாழ்வார் இருவரின் பாடல்களைக் குரானுக்கும் பின் வைத்தலே முறையா மென்க. இவ் வாழ்வார் இருவருந் திருமாலோடொப்பக் கண்ணன் இராமன் என்பாரையும் வழுத்தினும், இறைவனாகிய சிவ பிரானை இகழாமல் அவனைத் திருமாலோடு ஒருங்கியைத்துப் பண்டைத் தமிழ்த் தெய்வ மறைகட்கு மாறாகாமற் பாடுதலானுங், கண்ணனை மிகுத்தெடுத்துப் பாடினாற்போல இராமனைப் பாடாமையானும், இவர் இருவரும் பண்டைத் தமிழ்மறை உண்மை வழக்கினின்று சிறுபான்மை வழுவினும் ஏனைப் பெரும்பான்மை வழுவாதே செல்லுதலாலும் இவர்தம் பாடல்கட்குரிய தெய்வத்தன்மை முழுதுங் குறைபடாதென்க. இவ்விருவருந் தொண்டரடிப்பொடி, ஆண்டாள், திருப்பாண், மதுரகவி அல்லாத ஏனையாழ்வார்கள் அறுவரும், பொறாமையும் பொய்யும் புரட்டும் மலிந்த பின்றைக் காலத்துப் புராணக் கதைகளையே பெரிதுந் தழீஇ முழுமுதற் கடவுளாகிய சிவத்தை இகழ்ந்து பாடியிருத்தலின், இவர்கள் பாடிய பாட்டுகள் அமைதியையும் வசியத்தினையும் இறைவனருட் பேற்றையும் வேண்டித் தவங்கிடக்கும் அறையுள் வைக்கற்பாலன அல்ல. அன்றி வைப்பின், அவை பொய்யும் பொறாமையும் இகழ்ச்சியுந் தீவினையும் நிறைந்த எண்ணங்களை எழுப்பித் தவம் புரிவாரது உள்ளத்தை அமைதிகெடக் கலக்கி அவர் கொண்ட நோக்கங்களையுஞ் சிதைக்கும். ஆகையாற், பொய்கை பேய் என்னும் முதல் ஆழ்வார்களின் உயர்ந்த செய்யுட்களே ஆண்டு வைக்கற்பாலன எனவும், வேண்டுமாயின் அவற்றை யடுத்துத் தொண்டரடிப் பொடி, ஆண்டாள், திருப்பாண், மதுரகவி என்னும் ஏனையாழ்வார் நால்வரின் செய்யுட்களை மட்டும் வைத்தல் குற்றம் ஆகாதெனவும் ஏனைப் பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், திருமழிசையாழ்வார், குலசேகர ஆழ்வார், சடகோப ஆழ்வார் என்னும் அறுவரின் பாடல்கள் ஆண்டு வைக்கற்பாலன அல்ல எனவும் உணர்ந்து கொள்க. இனி, மேற்காட்டிய ஆழ்வாரின் பாடல்களுக்குப் பின்னே, இக்காலத்திற் பெரியதோர் அறிவாற்றலுஞ் செயலாற்றலும் உடையதாய் உலகமெங்கும் பரவி வழங்கும் ஆங்கில மொழியில் அறிவுமிக்க சான்றோர் பலரால் எழுதப் பட்டிருக்கும் நூல்களிற் சிறந்தன பலவற்றைத் தெரிந்தெடுத்து அமைத்துக்கொள்ளல் வேண்டும். இவ்வாறாக அறிவாற்றல் நிரம்பிய நூல்களை முறைப்பட வரிசைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தூய அறையிலிருந்து நோன்பு இயற்றுவார்க்கு, அவர் தந் தகுதிக்கேற்பக் கொண்ட எண்ணங்கள் எண்ணிய பயனைத் தருதல் திண்ணமாம் என்க. இனி நோன்பியற்றும் அவ்வறை அமைதியான இனிய மணம் நிறைந்து கமழ்வதாய் இருத்தல் வேண்டும். அகில், சந்தனங், கோட்டந், துருக்கம், தகரம் , பச்சைக் கருப்பூரம், புழுகுநெய் முதலான மணப்பண்டங்கள் கலந்த கூட்டுகள் புகைத்தலாலும்; மருகு, மருக்கொழுந்து, விலாமிச்சை, வெட்டிவேர் முதலான பூடுகளையும்; மகிழ், மல்லிகை, பிச்சி, செங்கழுநீர், சண்பகம், அல்லி, குவளை, தாமரை முதலான பூக்களையும், அவ்வறையுள் வைத்து வழிபடும் இறைவன் திருவுருவத்திற்கு நாடோறும் அணிதலாலும் அவ்விடம் என்றும் மணங்கமழ்வதாய் இருக்கும் இனி, நோன்புகிடந்து மந்திரம் உருவேற்றுவோர் தாம் அணிந்து கொள்ளும் ஆடைகளை அழகாகவுந் துப்புரவாகவும் வைத்துக்கொள்ளுதலில் நிரம்பக் கருத்தாய் இருத்தல் வேண்டும். ஆடு கவரிமா முதலியவற்றின் மயிர்களால் ஆக்கிய கம்பளி உடுப்புகளை உடுத்தல் ஆகாது. பனி குளிருக்கு அஞ்சி அவற்றை ஒரோவொருகால் உடுக்கவேண்டினும், அவை உடம்பின் தோற்புறத்திற் படும்படி உடுத்தல் ஆகாது. கம்பளி யுடைகள் தோல்மேற் படுதலால் உடம்பின் மயிர்ப்புழைகளில் வெளிவரும் அழுக்குகள் வறண்டு கட்டியாகி அவற்றை அடைத்துக் கொள்கின்றன; அதுவேயுமன்றி, வெளியேயுலவுங் காற்றும், அதிற் கலந்துள்ள ஞாயிற்றின் சூடும் உடம்பின் மேற் படாமலும், மயிர்ப்புழைகளின் வழிச்சென்று செந்நீரிற் கலவாமலுந் தடை செய்யப்படுகின்றன. ஞாயிற்றின் சூடும் நல்ல காற்றும் படாத உடம்புக்குக் கொறுக்குப்புண், சொரிசிரங்கு, கரும்படை முதலான கொடிய நோய்கள் வருதலை இஞ்ஞான்றை மருத்துவப் பேராசிரியர்கள் நன்காராய்ந்து கண்டிருக்கின்றார்கள். ஆதலாற், கம்பளி ஆடைகளைத் தோன்மேற்படும்படி உடுத்துதல் ஒழிக. பஞ்சுநூலிற் செய்த உடைகளையே இறுக்கமாக உடுத்தாமல் தளர உடுத்துக. மேலும், விலங்குகளின் மயிராற் சமைத்த ஆடைகள் அவ் விலங்குகளுக்கு உரிய இயல்புகள் பொருந்தப் பெற்றிருத் தலால், அவற்றை அணிவார்க்கு அவ்விலங்குகளின் தன்மைகளுந் தொடரு மென்பதூஉம் நினைவிற் பதிக்கற்பாற்று. ஆகவே தூவெண்மையான அல்லது வேறு அழகிய நிறங்களில் தோய்த்தவான பஞ்சுநூல் பட்டுநூல் உடைகளை நாள் ஒன்றுக்குக் காலை மாலை இரண்டு முறை களைந்து கழுவி உடுத்துக. இனி, இவ்வளவு தூய்மையோடும் அங்கு நோற்பவர், யாழ், குழல் முதலான இசைக்கருவிகளோடாவது, அவற்றிற் பழகியிராவிட்டால் தமது தனித்த இனிய மெல்லிய குரலிலாவது திருவாசகந்,தேவாரம் முதலிய தெய்வச் செந்தமிழ்ப் பாடல்களை உள்ளங்குழைந்து இறைவன் திருவடிகளிற் கருத்தையுங் கண்ணையும் இருத்தி இனிதாகப் பாடுதல் வேண்டும். இவ்வாறு பாடுதலால் அவரது மனம் அமைதிபெற்று அன்பின் வயமாகி அதன் உருவாய்த் திகழும், தேவர்களாலும் பெறுதற்கு அரிய பெருமான், மெய்யடியாரின் அன்புக்கும், அன்பினால் அவர் உருகிப் பாடும் இசைப் பாட்டுக்குமே எளிதில் வயமாகி அவர் வேண்டியவெல்லாம் வேண்டியவாறே அளிக்கின்றார். உருக்கத்தோடும் பாடுதற்கேற்ற குரலினிமை வாயாதவர்கள், அங்ஙனம் பாடவல்ல ஒருவரை அவ்வறையினுள் அழைத்து வைத்துப் பாடச்செய்து, அப் பாட்டைக் கேட்டு உருகி இறைவனைத் தொழலாம். ஆனால், அங்ஙனம் அவ்வறையினுள் வந்திருந்து பாடுவோர் தூயராயும், நோன்பு நோற்பவரின் இயல்புக்கும் நோக்கத்திற்கும் ஒத்தவராயும் இருத்தல் வேண்டும். அங்ஙனம் இல்லாத ஒருவரை அவ்வறையினுள் நுழையச் செய்தால், அதன் தூய தன்மை கெட்டு நோற்பவரின் நோக்கங்களையும் பழுதாக்கும். தூயர் அல்லாதார் ஒருவரின் சேர்க்கை அவ்வறையின் தூய்மையினைக் கெடுத்தல் எங்ஙனம்? அதனைக் கண்ணாற் கண்டிலமாலெனின்; புறக்கண்பார்வை பருப்பொருள்களையே காண வல்லதன்றி, அப் பருப்பொருள் களில் மிக நுண்ணியவற்றையும், அவற்றினும் மிக நுண்ணிய நினைவுவெளியின் இயக்கங் களையுங் காண வல்லதன்று. அகக்கண் பார்வை தெளியப் பெற்றார்க்கே அக் காட்சி களெல்லாம் நேரே புலனாம். ஏனையோர்ககு நுண்பொருள் இருப்புகளும் நினைவுவெளியின் அசைவுகளும் ஆராய்ந்து பார்க்கும் முகத்தால் மட்டுமே புலனாவனவாகும். ஓர் ஊரில் ஒரு தொற்றுநோய் வந்தால் அஃது அவ்வூரில் உள்ளார் பலரையும் எளிதிற் பற்றிக் கொள்கின்றது. அவ்வூரில் உள்ளவர் அந் நோயின் துன்பத்தைக் கண்டு, அத்தகையதொரு நோய் அங்கு உலவுதலை அறிகின்றனரேயல்லாமல், அந் நோயையாவது அந் நோய் எங்ஙனம் பரவுகிறதென்றாவது நேரே கண்ணாற் காண்கின்றிலர். தம் கண்கட்குப் புலனாகாத அந் நோயை அதனால் வருந் துன்பத்தையுஞ் சாவினையுங் கொண்டே ஆராய்ந்துணர் கின்றார்கள். ஆனால், மருத்து நூலாசிரியரோ நங் கண்கட்குப் புலனாகாத மிக நுண்ணிய அணுக்களையும் பருக்கச் செய்து விளங்கக் காட்டும் பெருக்கக் கண்ணாடியின் உதவி கொண்டு, அத் தொற்றுநோயை அங்கு உண்டாக்கினவை இடைவெளியில் வந்து நிறைந்த மிக நுண்ணிய நச்சுப் புழுக்களே யென்றும், அப் புழுக்கள் நீரிலும் உணவிலுங் கலந்து மக்களுடம்பின் உட்சென்று ஒன்று பலகோடியாய்ப் பெருகி உடம்பின் அகவுறுப்புகளை யெல்லாந் தமக்கு இரையாகக் கொண்டு தின்று அழிக்கின்றன வென்றும், ஆகவே நீரை நன்றாய்க் கொதிக்க வைத்தும் உணவைச் சூடு தணியாமல் வெய்தாக வைத்தும் உட்கொண்டால் அப்புழுக்கள் அழிந்து நோயை வருவியாவென்றும் நேரே காண்பதுபோற் கண்டறிந் துரைக்கின்றார்கள். ஆகவே, நுண்ணியவற்றைக் காட்டும் பெருக்கக் கண்ணாடி போல்வதாகிய அகக்கண்பார்வை யுடையார்க்கு எத்தகைய நுண்ணிய பொருள் நிகழ்ச்சிகளுந் தெற்றென விளங்குமாப்போல், ஏனையோர் கண்களுக்கு அவை விளங்காவாயினும், அவற்றால் விளையும் பின் நிகழ்ச்சிகளைக் கொண்டு அவற்றின் இருப்பும் இயற்கையும் உய்த்துணர்தல் அவர்க்குங் கைகூடுவதேயாம். என்றாலும், ஆராய்ச்சியுணர்வானது ஒரு நுண்பொருளியல்பினை அதன் பின்நிகழ்ச்சி கொண்டு பின் அறிவிக்குமே யல்லாமல், அந் நிகழ்ச்சிக்கு முன்னரே அதனையறிந்தறிவிக்க வல்லதன்று. இந் நிலைமையில் மக்களின் உணர்வைவிட மற்றைச் சிற்றுயிர்களின் உணர்வு மிகச் சிறந்ததாயிருக்கின்றது. எவர் கண்களுக்கும் புலப்படாமல் மறைத்து மூடிவைத்த நெய்யையுஞ் சர்க்கரையையும், கண்கள் இல்லாத எறும்புகள் எப்படியோ தெரிந்துகொண்டு வந்து அவைகளை மொய்த்துக் கொள்கின்றன. தன் தலைவனைச் சுமந்து செல்லும் குதிரையானது அவன் செலுத்தும் வழியிற் கள்வராலாவது புலி மலைப் பாம்பு களாலாவது அவனுக்கு வரப்போகும் இடரினை எப்படியோ முன் அறிந்து, அவன் எவ்வளவுதான் தன்னை அடித்துச் செலுத்தினும் அவ் வழியிற் செல்லாமல் வேறு வழியிற் சென்று அவனை அவ்விடருக்குத் தப்புவித்த உண்மை வரலாறுகள் எத்தனையோ இருக்கின்றன. அங்ஙனமே நன்றியறிவு மிக்க நாய் தன் தலைவனுக்குப் பின் வரப்போகும் இடர்களை முன்னறிந்து அவனைக் காத்த செய்திகளும் பற்பல. இவைகளை உற்றுணருங்கால், நம்முடைய கண்களுக்கு நேரே புலப்படவில்லையென்று நுண்பொருள் நிகழ்ச்சிகளை இல்லையென மறுத்தலும், அந் நிகழ்ச்சிகளை அறிந்தார் சொல்லக் கேட்டும் அவற்றை நம்பிச் செய்யத் தகுவதும் விலக்கத் தகுவதுஞ் செய்யாமலும் வறிதே அறியாமை யிற் புதைந்து வாணாளை வீணாளாக்குவது பழுதுடைத்தாம். ஆதலால், இவர் தூயர், இவர் தூயரல்லரென நன்காராய்ந்து பார்த்துத், தூயராயினாரை மட்டும் நோன்பியற்றும் அறையினுள் அழைத்துக்கொள்க. இனி, யாம் வரையப்புகுவன நம் ஆன்றோர்களால் மிகவும் மறைவாக வைத்துப் பாதுகாக்கப்பட்ட அரிய பெரிய மறை பொருள்களாகும். அம் மறைபொருள்களைப் போற்றி வைத்துப் பழகியே அவர்கள் இம்மை மறுமைப் பயன்களைப் பெற்றார்கள். இவ்வருமறைப் பொருள்களைத் தெரிந்து பழகி எல்லாரும் பெரும்பயன் பெறும்பொருட்டே, இவற்றை இங்கே யாம் திறந்து எழுதலாயினேம். இங்ஙனத் திறந்தெழுதியது பற்றி இவைகளை எளியனவாக நினைத்துவிடாமல், இவைதம்மை நிரம்பவுங் கருத்தாய்ப் போற்றிவைத்து, இவற்றின் உண்மைகளைத் தகுதியில்லாதார் எவர்க்குந் தெரியாதபடி மறைத்து, இவற்றைப் பழகுதற்கு இங்கே காட்டப்படும் முறைகளில் வழுவாமற் பழகி வருவார்க்குக் கைகூடாத இம்மை மறுமைப் பயன்கள் எவையுமே இல்லையென ஓர்க. மேற்சொல்லியவாறு ஒழுங்குபடுத்தப்பட்ட அறையினுள்ளே மேலண்டைப் பக்கத்துள்ள சுவரிலிருந்து எதிரே மூன்றடி இடை நிலம்விட்டு, நான்காம் அடி தொடங்கும் இடத்தில் ஒரு முக்கோணம் அமைத்துக்கொள்க. இம் முக்கோணத்தின் மூன்று பக்கத்தும் உள்ள கோடுகள் ஒன்று நீளம் ஒன்று குறுகலாய் இராமல் மூன்றும் ஒரேயளவான நிகளம் உடையவாய்க், கோணல் இன்றி நேராய்ச் சென்று ஒன்றன் முனை மற்றொன்றன் முனையுடன் பொருந்தியிருத்தல் வேண்டும். ஒவ்வொரு கோடும் ஒரு முழம் இருக்கலாம். பச்சரிசி மாவின் பொடியினால் இக் கோடுகளை வரைந்து முக்கோணம் ஆக்குதல் எளிது. இம் முக்கோணத்தின் ஒருமுனை கிழக்கு நோக்கு யிருக்குமாறு வரைந்து அதன் உள்ளே, ஒரு வட்டமான கோடு வரைக. அவ் வட்டக் கோட்டின்புறம், அம் முக்கோண மூன்றுகோட்டில் ஒவ்வொரு கோட்டின் நடு மையத்தையுந் தொடுமாறு அமைக்க. அதன் பின் அவ் வட்டக்கோட்டின்கண் பச்சரிசி யுமியை இரண்டு விரல் உயரம் மட்டமாய்ப் பரப்புக. அத்தி, அரசு, ஆல், இத்தி, கருங்காலி, ஒரு சிறு கூடையிற் கொணர்ந்து, முதலில் அச் சுள்ளிகளிற் பலாசு, மா, வன்னி என்னும் எட்டு வகையான மரங்களினின்றும், நாயுருவிப் பூடினின்றும் உலர்ந்த சுள்ளிகளை ஒரு சிறு கூடையிற் கொணர்ந்து. முதலில் அச் சுள்ளிகளிற் சிலவற்றை யெடுத்து வட்டக்கோட்டிற் பரப்பிய உமியின்மேல் அடுக்கிக்கொள்க. இவ்வெட்டு மரங்கள் நாயுருவிப்பூடு என்னும் ஒன்பதினின்றுஞ் சுள்ளிகள் கொண்டுவரல் வேண்டுமென்னுங் கட்டாயம் இல்லை. இவற்றுள் ஒன்றிலிருந்து சுள்ளிகள் கொணரினும் அமையும். இவ்வாறு முக்கோணத்தை அமைத்த பின் அதன் தெற்கு நோக்கிய முனையிலிருந்து துவங்கி மேலண்டைச் சுவரின் அடியில் வளைந்து, மறித்தும் அம் முக்கோணத்தின் வடக்கு நோக்கிய முனையில்வந்து தொட்டுச் சுழியுமாறு ஓர் ஓகாரம் வரைந்துகொள்க. அவ் வோகாரக் கோட்டினுள்ளே கிழிசல் இல்லாத ஒரு வாழை இலையை விரித்து, அதிற் பச்சரிசியை இரண்டு சிறு குவியலாக்கி உச்சிகளைக் குழித்து, அவ்விரண்டு உச்சியிலும் இரண்டு புதிய சிறு மண்குடங்களை அவற்றின் மேற்புறமெங்கும் நூல் சுற்றி, அவை ஒன்றனை ஒன்று தொடுமாறு நிறுத்துக. அங்ஙனம் நிறுத்தியபின், தூய தண்ணீரைத் தூயபாண்டம் ஒன்றில் முகந்து வந்து அவ்விரு சிறு குடங்களிலுங் கழுத்தளவு நிரப்புக. ஐந்திலையுள்ள மாங்கொத்துகள் இரண்டு ஒடித்துக் கொணர்ந்து, அவ்விரு குடத்தின் வாயினுள்ளுங் காம்பின் புறத்தை நுழைத்து, மேலே இலைகளை விரித்து, அவற்றிடையே இரண்டு நல்ல குடுமித் தேங்காய்களைக் குடுமி மேல்நோக்குமாறு வைத்திடுக. அதன்பின், வலது புறத்துள்ள குடத்திற்குப் புதிய வெள்ளிய ஆடைத்துண்டு ஒன்றும் இடதுபுறத்துள்ள குடத்திற்கு புதிய சிவந்த ஆடைத் துண்டு ஒன்றும் அணிக. வலதுபுறக் குடத் திற்குத் திருநீறுஞ் சந்தனமும், இடதுபுறக் குடத்திற்குத் திருநீறுஞ் சந்தனமும் மஞ்சளுங் குங்குமமும் இடுக. மணங்கமழும் இனிய மலர்மாலைகளை இரண்டுக்குஞ் சூட்டுக. வலக்குடத்தின் நீரின் உள்ளே சிவப்புமணியும் இடக்குடத்தின் நீரின் உள்ளே நீலம் அல்லது பச்சை மணியும் இடுதல் மிக நன்று. அவை வாயா வாயின், இரண்டினும் இரண்டு பொற்காசேனும் இரண்டு வெள்ளிக்காசேனும் இடலாம். குடங்களின் இருபுறத்தும் இரண்டு நெய்விளக்குகள் ஏற்றுக. அக் குடங்களுக்கு எதிரிலே மற்றொரு வாழையிலை விரித்துப் பழ வகைகள், பாலடிசில் நெய்யடிசில் சர்க்கரைப்பொங்கல், பாயசம், வடை முதலியன இயன்ற மட்டும் படைத்தற்கு ஒழுங்குசெய்து வைத்தல் வேண்டும். பக்கத்தே ஒரு கிண்ணத்தில் நெய்யும், அதனை எடுத்து விடுதற்கு மாவிலையை மடித்துத் தைத்த ஒரு சிறு அகப்பையுந், தூவுதற்கு நெற் பொரியுஞ் சந்தனத் துளும், இறைவனைப் போற்றி வணங்குதற்கு விடு பூக்களும் வைத்துக்கொள்க. நோன்பு இயற்றுவோர் இப்போது புறத்தும் அகத்தும் வேள்வி வேட்க வேண்டியவராயிருத்தலால், அவர் அங்கு வரைந்துள்ள முக்கோணத்தின் கிழக்கு முனைக்குச் சிறிது விலகி ஒரு பலகைமீது அமர்ந்து, திருநீற்றைக் கையில் அள்ளி, அதிற்றண்ணீர்விட்டுக் குழைக்கையில், ஓம் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் காண்க என்னும் மந்திரஞ் சொல்லிக் குழைத்து, அதன்பின் ஓம் நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி என்னும் மந்திரத்தை ஒருகாற் சொல்லித் தலையின் உச்சியிலும், பின்னும் ஒருகாற் சொல்லி நெற்றியிலும், அங்ஙனமே மார்பிலுங் கொப்பூழிலும் முழந்தாள் இரண்டிலும் அதனைத் தீற்றி, அதன் பின் மறுபடியும் ஓம் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் காண்க என்று சொல்லித் தண்ணீர்விட்டுக் குழைத்து, மறித்தும் ஓம் நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி என்று சொல்லிக் கொண்டே இரண்டு தோள்மேலும் முழங்கைகளிலும் மணிக்கட்டுகளிலும் இடுப்பின் புறத்தும் அங்ஙனமே அதனைத் தீற்றிக் கொண்டு, முன்போலவே தண்ணீர் மந்திரஞ் சொல்லிக் கைகழுவி வாய்பூசி, உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே, வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா, பொய்யா யின எல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே என்னும் அருண் மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே கருப் பூரத்தைக் கொளுத்தி, முக்கோணத்து வட்டத்தில் அடுக்கிய விறகில் இட்டு அதனை எரியவிடுக; அஃது அங்ஙனம் எரியுங்கால் நெய்யை இடையிடையே மாவிலை அகப்பை யிலெடுத்துச் சொரிந்து, பொரியும் இட்டு வேட்க; தீச்சுடர் மிகுந்தெரியுங்காற், சூழவுள்ள ஐம்பெரும் பொருள்களும் அவற்றின்கண் உலவுந் தேவர்கள் ஆவிகள் முதலியனவுந் தூயவாய்த் துணைநிற்கும் பொருட்டும், மாறான தீயபேய்கள் அணுகாமல் அகலுதற் பொருட்டும், அவற்றின் கண் ணெல்லாந் தீயினுருப்போல் மறைந்து நிற்கும் இறைவனே இப்போது இத் தீப்பிழம்பின்கண்ணும் உருவுகொண்டு அடியேமுக்கு எளியனாய்த் தோன்றினான் என்னும் நினைவோடு, நிலன்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்துநின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ என்னும் மந்திரத்தை மன உருக்கத்தோடுங் கூறிப் பின்னுந், தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி! அழிவிலா ஆனந்த வாரி போற்றி! அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி! முழுவதும் இறந்த முதல்வா போற்றி! மான்நேர் நோக்கி மணாளா போற்றி! வானகத் தமரர் தாயே போற்றி! பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி! அளிபவர் உள்ளத் தமுதே போற்றி! கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலும் நாயேற் கருளினை போற்றி! அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி! தென்னா டுடைய சிவனே போற்றி! எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி! அருளிட வேண்டும் அம்மான் போற்றி! இருள்கெட அருளும் இறைவா போற்றி! என்னும் மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி ஒருமுறை நெற் பொரியை வேள்வித்தீயில் இட்டும், மறுமுறை விடுபூவை அள்ளி வேள்வித் தீமேலும், அதற்குமுன் நிறுத்தியிருக்குங் குடங்கண் மேலும் இட்டும் வழிபடுக. அங்ஙனம் வழிபாடாற்றியபின், வேள்வித் தீப்பிழம்பின்கண் இயற்கையே முனைத்து விளங்கும் அம்மையப்பரைச், சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை, பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய் பங்கயத் தயனும்மால் அறியா, நீதியே செல்வத் திருப்பெருந் துறையில் நிறைமலர்க் குருந்தம்மே வியசீர், ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே என்னும் மந்திரஞ் சொல்லி அழைத்து, வலதுபுறக் குடத்தின் உள் உள்ள நீரிலே சிவத்தையும் இடது புறக் குடத்தின் உள் உள்ள நீரிலே அம்மையையும் புகுந்திடுமாறு மனத்தான் நினைந்து வேண்டிப் பின், பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந் தாடே லோ ரெம்பாவாய் என்னும் மந்திரத்தை நாவாலுஞ் சொல்லி வேண்டுக. இவ்வாறு மந்திரஞ் சொல்லி வேண்டியவளவிலே அம்மையும் அப்பனும் அக் குடங்களினுள் உள்ள நீரிலே முனைத்து விளங்குவர். அதன்பின் அந் நீரிலிட்ட மணி களிலேனும் பொன்னிலேனும் அவ் விருவரும் புகுந்து விளங்குமாறு வேண்டித், தேன்பழச் சோலை பயிலுஞ் சிறுகுயிலே இதுகேள்நீ வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய ஒருத்தன் மான்பழித் தாண்டமென்னோக்கி மணாளனை நீவரக்கூவாய் என்னும் மந்திரத்தை மனங்கரைந்து உரைக்க. அங்ஙனம் உரைத்த வளவானே அம்மையப்பர் இருவரும் அவ்விரண்டினும் விளங்கி நிற்பர். இப்போது அக் குடங்களின் நீரினும் மணியினும் முனைத்து விளங்கும் அம்மையப்பர்க்கு அகில் புகைத்துக், கருப்பூரங் கொளுத்தி ஓகார வடிவாகச் சுழற்றிக் காட்டிப், பழங்கள் நெய்யடிசில் முதலியன படைத்து, எம்பிரான் போற்றி! வானத் தவரவர் ஏறு போற்றி! கொம்பரார் மருங்குன் மங்கை கூற, வெண்ணீற போற்றி! செம்பிரான் போற்றி! தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி! உம்பரா போற்றி! என்னை ஆளுடை ஒருவ போற்றி! என மலர் துவித் தொழுது, வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே என்னும் மந்திரத்தைச் சொல்லி வழிபாட்டை முடித்து, அதன்பின் இம்மை மறுமையில் தாம் எதனைப் பெறக்கருதி நோற்கின்றனரோ, அதனை இப்போது நன்கு நினைவிற் கொணர்ந்து இருத்தி, உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீஇருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப தானால் அடியேன்உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத் தெம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்நின்றே என்னும் மந்திரத்தைச் சொல்லி வணங்கித் திருநீறிட்டுக் கொண்டு புறவழிபாட்டை முடித்துக் கொள்க. இனி இத்துணை விரிவாகக் காட்டிய புறவழிபாட்டு முறைகளின் பொருள் தெரிந்தாலன்றி, அவற்றின் கருத்தும் பயனும் விளங்காவாகலானும், அகவழிபாடாகிய தவத்தின் முறைகள் புறவழிபாட்டோடு ஒப்பச் செய்தலின் நுட்பம் புலனாகாதாகலானும், அவ் வியல்பினையும் ஈண்டு ஒரு சிறிது விளக்கிக் காட்டுகின்றாம். ஓரறிவுடைய புல் மரம் முதலாக ஆறறிவுடைய மக்கள் ஈறாக உள்ள எல்லா உயிர்களின் உடம்புகளும் ஏறக்குறைய ஒத்த அமைப்பு வாய்ந்தனவாய் இருக்கின்றன. இவ் வுடம்புகளின் அமைப்பும், இவ்வுடம்புகள் உலவுவதற்கு இடமான உலகங்களின் அமைப்பும் அங்ஙனமே ஏறக்குறைய ஒத்த இயல்பினவாய் இருக்கின்றன. ஆகவே, புறத்தே காணப்படும் உலகு பெரிய உலகு என்றும் அதன் அகத்தே காணப்படும் இவ்வுடம்பு சிறிய உலகு என்றுஞ் சொல்லப்படும். இவ்விருவகை யுலகுந் தீயினாலும், அத் தீ இறைவன் அருளாலும் இயக்கப்படுகின்றன. தீயின்கண் இருந்து உண்டாகுஞ் சூடும் ஒளியுமே எல்லாப் பொருள்களின் இருப்புக்கும் எல்லா உயிர்களின் அறிவு விளக்கத்திற்குங் கருவியாய் இருக்கின்றன. தீ இல்லையானால் எங்கும் குளிரும் இருளுமே நிரம்பி யிருக்குமாதலால், அறிவில்லாப் பொருள் களெல்லாங் குளிரால் இறுகி அசைவின்றிக் கிடக்கும். அறிவுடைய உயிர்களோ குளிராற் குருதி உறைந்துபோன உடம்புகளில் உயிர்வாழமாட்டா, சிறிது காலம் உயிர்வாழல் கூடுமேனும் எங்கும் இருளாயிருத்தலிற் கண் இருந்தும் ஒளியைக் காணா, ஒளியைக் காணாவாகவே அவைகளின் உள்ளமும் ஒளியைக் கருதமாட்டாமையால் இருண்டு கிடக்கும். சுருங்கச் சொல்லுங்காற், சூடும் ஒளியும் இல்லாதொழியின் இவ்வுலகமும் இரா, இவ்வுயிர்களும் இரா. ஆகவே, உயிர்கட்கு வந்த வாழ்வெல்லாந் தீயினால் வந்தனவே யாகும். தீ கட்புலனாய்த் தோன்றினும் அஃது ஏனைப் பருப் பொருள்கள் போல் நிறுத்து அளக்கப் படுவ தன்றெனவும், அஃதொருவகை யாற்றலே யாமெனவும் இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூலாரும் ஆராய்ந்துரைக்கு முறையைக் கருதிப் பார்க்குங்கால், தீயானது இறைவனோடொத்த அருவுரு வியல்பிற்றா மென்பதுஉம் அஃதொன்றின் மட்டுமே இறைவன் முனைத்து விளங்கி நின்று உயிர்கட்கு அருள்புரிகின்றா னென்பதூஉம் இனிது புலனாம். இறைவன் ஞாயிற்று மண்டிலத்தினை ஒரு நடு மையமாய்க் கொண்டு விளங்கி, அதன்கண் உள்ள தீ வடிவினை இயக்கி அம் மண்டிலத்தினைச் சுழற்ற, அது சுழன்ற அளவுபடா விசையினால் அதன் மேற்புறத்தில் இறுகிய பருப்பொருட்டுண்டங்கள் தெறித்தோடி, நாமிருக்கும் இந் நிலமண்டிலமும், திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய ஏனை ஆறு மண்டிலங்களும் ஆயின. தீ எரியுங்கால் அடியில் விரிந்து தலையிற் குவிந்து முக்கோணவடிவிற்றாய் நிற்குந் தன்மைய தேனும், அது விறுவிறுவென்று மிகுவிசையோடு சுழற்றப்படுங்கால் வட்ட வடிவினதாய்க் காணப்படும். ஆதலினாற்றான், அளவுக் கடங்கா விசையுடன் சுழலும் வெயில்மண்டிலம் வட்ட வடிவினதாகக் காணப்படுகின்றது. முன்னே தீத்திரளாயிருந்த இந் நிலமண்டிலம் முதலான மற்றையவும் அஞ் ஞாயிற்று மண்டிலத்தோடு உடன் சுழலுதலால், இவையும் பந்துபோல் வட்ட வடிவாகவே அமைவவாயின. எனவே, தீ வடிவினதாகிய ஆற்றல் தன் நிலையில் நிற்குங்கால் முக்கோணவடிவும், விரைந்து சுழலுங்கால் வட்டவடிவும் உடைத்தாதல் கருத்திற் பதிக்கற்பாற்று. வட்டவடிவாய் மிகுவிரைவோடு சுழன்றெரியுந் தீயையே குண்டலிசத்தி என அறிவுநூல்கள் புகலாநிற்கும். இக் குண்டலிசத்தியின் இயக்கம் புறத்தே ஞாயிற்று மண்டிலத் தினும், அதனைச் சூழ்ந்தோடும் ஏனை மண்டிலங்களினும் நன்கு காணப்படுமாறு போலவே, அகத்தே இவ்வுடம்பின் நடுமைய மாகிய அடிவயிற்றினுள்ளுங் காணப்படும். எருவிடும் வாயிற்கு இருவிரல் மேலுங், கருவிடும் வாயிற்கு இருவிரற் கீழும் இஃதிருக்கு மிடம் முக்கோண வடிவிற்றாய் மூலாதாரம் எனப் பெயர்பெற்று நிற்றலும், அங்கு எரியாநின்ற குண்டலியினுள்ளே திகழும் சிவவொளியை இடையறாது நினைய வல்லார் அவ்வொளி வடிவினராகித் தாம் வேண்டிய வேண்டியாங் கெய்தலுந் தவமுடிவுகண்ட தெய்வத் திருமூலநாயனார், எருவிடும் வாசல் இருவிரன் மேலே கருவிடும் வாசல் இருவிரற் கீழே உருவிடு சோதியை உள்க வல்லார்க்குக் கருவிடு சோதி கலந்துநின் றானே எனவும் மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர் ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழே எனவும், மூலத்து மேலது முச்சது ரத்தது காலொத் திசையிற் கலக்கின்ற சந்தினின் மேலைப் பிறையினுள் நெற்றிநேர் நின்ற கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே எனவும் அருளிச் செய்த அருமறைத் திருமொழிகள் கொண் டுணர்ந்து கொள்க. இவ்வாறு இவ் வுலகத்தினுள்ளும் இவ் வுடம்பினுள்ளும் நடைபெறும் மூலகுண்டலியின் இயக்கம், நாம் இருக்கும் இத் தமிழ்நாட்டகத்துங் காணப்படும். இச் செந்தமிழ் நாடு முக்கோண வடிவிற்றாயும் இந் நிலவுலகத்தின் மேற்சுற்றுக்கு நடு மையமாயும் இருத்தல், இஞ்ஞான்றை நிலநூல்வல்லர் வெளியிட்டிருக்கும் நிலஓவியத்தை (map) ஒரு சிறிது நோக்குவார்க்கும் நன்கு புலனாம். இச் செந்தமிழ்நாடு தீ வடிவிற்றாய் இருத்தலினாற்றான், இந் நிலவுலகத்திற்கு நடுவே செல்லுஞ் சுழுமுனை என்னுந் தீ நாடியானது (equator) இதனூடே செல்கின்றது . இத் தீ நாடியை இருபுறத்தும் நெடுக அடுத்துள்ள இடங்களிலெல்லாம் எரிமலைகள் இருத்தலும், இச் செந்தமிழ் நாட்டை அகன்று வடகோடியிலுந் தென் கோடியிலும் உள்ள இடங்களெல்லாங் குளிர்மிகுந்து பனிக்கட்டி களால் மூடப்பட்டிருத்தலுமே இதற்குச் சான்றாம். இச் செந்தமிழ் நாட்டில் ஓடும் அனல்நாடியின் நடு, தில்லைச் சிற்றம்பலத்தின் கண் இருத்தலால், அங்கு நடைபெறுங் குண்டலிசத்தியின் இயக்கமும், அதனை இயக்கும் இறைவன்றன் அசைவுமே சிற்றம்பலத்தில் ஆடும் இறைவன்றன் அருட்கூத்தாக வைத்து ஆன்றோரால் மொழியப்பட்டன. இங்ஙனமெல்லாம் உலகிலும் உடம்பிலும் இந் நிலத்திலும் நடுமையமாகிய இடத்திலே இறைவனருளால் உந்தப்பெற்று நடைபெறும் நுட்பமான தீயினியக்கத்தைப் புறத்தும் அகத்தும் இடையறாது கண்டு உயிரின் நினைவை ஒளிவடிவாக்கி, அம் முகத்தால் இவ்வுடம்பும் உயிரும் ஒளிவடிவாகிச் சிவத்தோடு ஒன்றுபட்டு நிற்கச் செய்தலே தவமுயற்சியின் முடிந்த கருத்தாகும். புறத்தே நடைபெறுங் குண்டலியசைவினைக் கண்டு தொழாதார்க்கு, உடம்பின் அகத்தே நினைவை நிறுத்தி அதனைக் கண்டு தொழுதலும் இயலாதாகலின், அதன் பொருட்டாகவே தீயின் அடையாள மான முக்கோண வடிவினை வரைந்து, அத் தீயின் இயக்கமாகிய குண்டலியின் அடையாளமாக ஒரு வட்ட வடிவினையும் அம் முக்கோணத்தினுள் வரையலாயிற்று. அவ் வட்டவடிவினுட் சுடர்விட்டெரியுங் குண்டிலி யனலுக்கு அடையாளமாகவே, சுள்ளிகளை யடுக்கித் தீ வளர்க்கலாயிற்று. இக் குண்டலியில் நமது அடிவயிற்றின்கண் முக்கோண வடிவாயிருக்கும் எலும்பைச் (sacral plexus) சார்ந்து தோன்றி உடம்பெங்கும் பரவுகின்ற தென்பதற்கு, வெப்புநோய் மிகுந்து உடம்பெங்கும் அனல் வீசப்பெற்றான் ஒருவனை அவனது அடி வயிற்றிற் குளிரச்செய்த அளவானே, உடம்பெங்கும் பரவி அவ்வனல் தணிந்து அந் நோயும் அவனைவிட்டு நீங்குதலே ஒரு பெருஞ் சான்றாம் என்க. இவ்வாறாகப் புறத்தே வரையப்பட்ட முக்கோணத்தையும், அதனுள் வரையப்பட்ட குண்டலி வட்டத்தையும், அதன்கண் இருத்தி, அதன்பின் விழிகளை மூடிக்கொண்டு அடிவயிற்றின் மூலத்தே அம் முக்கோணத்தையும் அதனுள் வட்டவடிவையும் அதன்கண் எரியும் அனற்பிழம்பையும் நேரே நோக்குவதுபோல் நோக்கித், தன் அறிவையே ஓர் அகப்பையாகக் கொண்டு தன் அன்பையே நெய்யாகக் கருதி இதனை அதனால் அள்ளி அவ் வனலின்கட் சொரிந்து, தன்னுள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் விரைந்து தோன்றும் பல்வகை நினைவுகளையே நெற்பொரியாக எண்ணி அவற்றை அந் நெருப்பிற் பெய்து, மேலே குறித்த திருவாசகத் திருமறை மந்திரங்களைச் சொல்லி இறைவனையும் இறைவியையும் வழுத்தித், தாம் பெறுதற்குக் கருதிய பொருளை மனத்தால் வேண்டி அவ்வளவில் அக வழிபாட்டை முடித்துக் கொள்க. அற்றேல், இவ்வளவின் முடிவதாகிய அகவழிபாட்டோடு ஒப்பது, புறத்தே எரிவளர்த்து அதனை வழிபடும் அத்துணையே யாதலால், மேலும் முக் கோணத்தை யடுக்க வரைந்த ஓகாரக் கோட்டினுள்ளே இரண்டு மட்குடங்கள் நிறுத்திச் செய்த ஏனை வழிபாட்டு முறைகளெல்லாம் வேண்டா செய்தலாம் பிறவெனின், அற்றன்று. தீ வடிவின்கண் இயற்கையே முனைத்து விளங்கும் அம்மையப்பரை, அங்ஙனம் இயற்கையே அவர் முனைத்து விளங்குதல் இல்லாத நீரினும் மண்ணினும் முனைத்து விளங்கச் செய்தற் பொருட்டாகவே அவ்வழிபாடுஞ் செயற்பாலதாயிற்று. அங்ஙனம் நீரினும் மண்ணினும் அவரை வருவித்து வைத்து வழிபடுதல் எற்றுக்கு? அனற்பிழம்பின் வைத்து வழிபடுதல் ஒன்றே அமையுமெனின், நாடோறும் எரிவளர்த்து அதனையோம்புதல், இஞ்ஞான்றை நாகரிகவழக்கிற் பட்டார்க்கு எளிதின் இயைவதன்றாகலானும், செல்லும் இடங்கடோறும் எடுத்துச் செல்லுதற்கும் தமக்கெழும் பேரன்பின் பெருக்கால் தொடுதற்கும் திருமுழுக்குச் செய்து சாந்தப்பி மலர்மாலை சூட்டி வழிபடு தற்கும் நெருப்பு இடந்தருவதன்றாகலானும், என்றுந் தம்முடன் வைத்துத் தொட்டு வழிபாடு செய்தற்கு இசைந்த மண் வடிவங்களாகிய கல் செம்பு வெள்ளி பொன் முதலிய உருக்களில் அம்மையப்பரை வருவித்து வைத்து வழிபடுதல் இன்றியமை யாததாயிற்று. இந்த ஏதுவினாலேயே, பண்டைக்காலத்தில் தீ வடிவின் வைத்து இறைவனை வழிபட்ட அம்பலங்களை யெல்லாம் பின்றைக் காலங்களில் திருக்கோயில்களாக்கி, அவற்றின் நடுவே தீப்பிழம்பின் வடிவு போல்வதாகிய கந்துருவினைச் (சிவலிங்கத்தை) நிறுத்தி வழிபடலாயினர். அஃதொக்குமாயினும், நெருப்பின்கண் இயற்கையே விளங்கும் முதல்வனை மண்வடிவுகளில் வருவித்தல் யாங்ஙனங் கூடுமெனிற் கூறுதும்: ஐம்பெரும் பொருள்களில் மண் வடிவொன்றே பருப்பொருட்டன்மை மிகுதியும் உடையது. அதற்கடுத்த தீயோ நுண்டன்மையோடு இயற்கையொளியும் வாய்ந்தது. அதற்கடுத்த காலும் விசும்பும் மிக நுண்ணியவாயினுங் கட்புலனாகாதனவாகலின் அவற்றின்கண் விளங்கும் இறை வனைக் காண்டல் இயையாது. ஆகவே, அவ் விரண்டனையும் விடுத்துக், கட்புலனாகும் ஏனை முப்பொருள்களில் மிக நுண்ணிதாகிய தீயில் விளங்கும் இறைவனை, நிரம்பவும் பருப்பொருட்டன்மையுடைய மண்ணிற் சடுதியில் வருவித்து அமரச்செய்தல் இயலாது. ஆதலாற், பருப்பொருட் டன்மையில் ஒருவாற்றால் மண்ணின் இயல்போடும், நுண் பொருட்டன் மையிலும் விளக்கத்திலும் ஒருவாற்றால் தீயின் இயல்போடும் ஒத்து நடுநிகர்த்ததாய் நிற்கும் நீரின்கண், தீயின் நிற்கும் அம்மையப்பரை வருவித்து அமரச்செய்தல் எளிதின் முடிவதாகும். அது பற்றியே இரண்டு மட்குடங்களில் நீரை நிரப்பி, நெருப்பின்கட் புலப்பட்டும் புலப்படாதும் பிரிவின்றி அருவுருவாய்க் காணப்படும் அம்மை யப்பரை அந் நீரின்கட் புகுந்து அமருமாறு வேண்டலாயிற்று. அங்ஙனம் அன்பினால் வேண்டிய அளவிலே அன்பர்க்கு எளியராம் அவ்விருவரும் நம்பொருட்டு ஒருவாற்றாற் பிரிந்து தனித்தனி யுருவுகொண்டு, வலது குடத்தின் நீரில் அப்பனும், இடதுகுடத்தின் நீரில் அம்மையுமாகப் புகுந்து அமர்ந்தருளுவர். அவ்விருவரும் ஒருவாற்றாற் பிரிந்தும் ஒருவாற்றாற் பிரியாதும் நிற்கும் இயல்பு தெரித்தற்கே அவ்விரு குடங்களும் ஒன்றையொன்று தொடுமாறு நெருக்கி வைக்கப்பட்டன. இனி, அக் குடங்களுள் இடப்பட்ட சிவப்புமணி இறைவன் திருவுருவத்திற்கும், நீலமணி இறைவியின் திருவுருவத்திற்கும் அடையாளங்களாகலின், அந் நீரில் அமர்ந்த அவ் விருவரையும் பின்னர் அந் நீரோடு ஒருபுடையொத்த அம்மணிகளிற் புகுந்தமருமாறு வேண்டுதல் எளிதாயிற்று. இங்ஙனம் அவ்வப் பொருள்களின் தன்மைக்கேற்ப, படிப்படியாக இறைவனை இறக்கி அவ்வவற்றின்கண் எழுந்தருளச்செய்து வழிபடும் முறை எவர்க்கும் எளியதொன்றாதல் கண்டுகொள்க. இவ்வாறு குடத்தின் நீரிலிட்ட மணிகள் எங்கு சென்றாலும் உடனெடுத்துச் சென்று தாம் வேண்டியவாறு வைத்து வழிபட்டுப் பயன் பெறுதற்கு உரியவாகும். மேற்சொல்லிய மணிகளை இடுதற்கு வேறாகக் கல்லிற் செம்பில் அழகுற அமைத்த அப்பன் வடிவினையும் அம்மை வடிவினையும் அக்குடங்களின் நீரிலிட்டு உருவேற்றி எடுத்து வழிபடுதலும் உண்டு. திருக்கோயிலினுள் நிறுத்தும் வடிவங்கள் பெரியனவாய்க் குடத்தினுள் நுழைக்கலாகாதனவாயிருத்தலால், மேலே காட்டியவாறு உருவேற்றிய குடங்களின் மந்திர நீரை எடுத்துச் சென்று, அத் திருவுருவங்கண்மேற் சொரிந்து, அந்நீரிற் பாய்ந்த அம்மையப்பர்தம் அருளொளிகளை அவ்வுருவங்களுள்ளும் பாயச் செய்குவர். இங்ஙனஞ் செய்யும் குடமுழுக்கு முறையையே கும்பாபிஷேகம் என வடமொழிப் பெயரால் இஞ்ஞான்று வழங்கி வருகின்றாரென்பது. அற்றேல் அஃதாக, அக் குடங்களிரண்டிற்கும் நூற் சுற்றியதும், ஐந்திலையுள்ள மாவிலை முதலியன வைத்ததும் என்னையெனின், அக் குடங்களிரண்டையும் அம்மையப்பர்க்கு உடம்புகள்போற் சமைத்தற்கு அங்ஙனஞ் செய்தபடியாம். அக் குடங்கள் உடம்பாகவும், மேற்சுற்றிய நூல்கள் அவ்வுடம்பின் நரம்புகளாகவும், உட்பெய்த நீர் அவ்வுடம்பில் நிறைந்த சோரியாகவும், நீரிலிட்ட மணிகள் உள்ளமர்ந்த உயிர்களாகவும், மேல்வைத்த ஐந்திலை மாங்கொத்துகள் ஐந்தெழுத்து மந்திரங்களால் இயங்கும் உயிர்ப்பாகவும், மேல்வைத்த தேங்காய்கள் முக்கண்களோடு கூடிய தலை யாகவும் எண்ணிக் கொள்ளப்படும். இங்ஙனமே அக் குடங்களிரண்டையும் அப்பனும் அம்மையுமாக எண்ணி அவற்றிற்குச் செய்த ஏனையவைகளையும் பொருத்திப் பார்த்துக்கொள்க. அவையெல்லாம் யாம் உரைக்கப்புகின் மிக விரியும். இனித் தீயில் இயல்பாகவே முனைத்து விளங்கும் இறைவனையும் இறைவியையும் மண்வடிவங்களில் வருவித்து வைத்து வழிபடுதற்குச் செய்த இம் முறையானது, கவர்ச்சியின் பொருட்டுப் பொன் வெள்ளி செப்புத் தகடுகளிற் கீறிய சக்கரங்களின் அறைகளில் ஐந்தெழுத்து ஆறெழுத்துகளை அடைத்து, அம் மந்திரங்களை உருவேற்றி உயிர்ப்பித்தற்கும் மிக இயைந்த தொன்றாம். யாங்ஙனமெனிற் காட்டுதும்: முன்னே வரையச் சொல்லிய முக்கோண சக்கரம் நமதுடம்பின் நடு மையத்தில் உள்ளதாகையாற், கீழ்நோக்கிய ஒரு முனையை யுடைய ஒரு முக்கோண சக்கரம் நமதுடம்பின் ஓர் அரைப் பகுதியைக் குறிப்பதொன்றாகும், ஆகவே, மேல்நோக்கிய ஒரு முனையையுடைய மற்றொரு முக்கோண சக்கரத்தையும் அதனொடு பிணைத்து வரைந்துவிட்டால், அங்ஙனம் பிணைக்கப்பட்ட அவ்விரண்டு முக்கோண சக்கரங்களும் ஒருங்கு சேர்ந்து ஓர் ஆண்மகன் அல்லதொரு பெண்மகளின் வடிவை ஒப்பதாகும். அங்ஙனம் வரைந்த அறுகோண சக்கரத்தைச் சிவபிரானாகக் கருதல் வேண்டின் ஓம் சிவனே போற்றி என்னும் மந்திரத்தில் ஓம் என்பதை நடு அறையிலுஞ் சி எனும் எழுத்தை மேல்நோக்கிய முனையின் அறையிலும், வஎனும் எழுத்தை அதனையடுத்த இடது முனையின் அறையிலும், னே எனும் எழுத்தை அதற்கடுத்த இடது முனையின் அறையிலும் போஎனும் எழுத்தைக் கீழ்நோக்கிய முனையின் அறையிலும்,ற் எனும் எழுத்தை அதற்கடுத்த வலதுபக்கத்து முனையின் அறையிலும், றி எனும் எழுத்தை அதற்கடுத்த வலதுபக்கத்து முனையின் அறையிலுமாகப் பொறித்துக் கொள்க. இனி, அதனை முருகப் பிரானாகக் கருதல் வேண்டின், ஓம் முருகா போற்றிஎன்னும் மந்திரங்களின் எழுத்துக்களை அவ்வாறே அவ்வறைகளிற் பொறித்துக் கொள்க. இங்ஙனம் பொறித்துக் கொண்டபின், நோன்பு இயற்றுவோர் எந்தப் பொருளைப் பெற விழைகின்றனரோ, அப் பொருளின் பெயரை அச் சக்கரத்தின் வலதுபுறத்தும் இடதுபுறத்தும் எழுதி முடித்து, அதன்பிறகு அக் குளிசத்தை, அப்பனாகக் கருதி வைக்கப்பட்ட குடத்தின் நீரினுள்ளிட்டு நான்கு நாள் வரையில் வேள்வி வேட்டு, மேலே காட்டிய மந்திரங்களைச் சொல்லி அழைத்து இறைவனை அக் குளிசத்தினுட் புகுந்தமருமாறு வேண்டுக. அதன்பின் அக் குளிசத்தை அக்குடத்தினின்றும் எடுத்து, அம்மையாகக் கருதி வைக்கப்பட்ட குடத்தினுள் இட்டுப், பின்னும் மூன்று நாள் வேள்வி வேட்டு இறைவியை அதன்கட் புகுதுமாறு மந்திரஞ்சொல்லி அழைத்து வேண்டுக. இவ்வாறு செய்தானபின் அக் குளிசத்தைப் புறத்தே எடுத்து வைத்து வழிபட்டு மெல்லச் சுருட்டி, ஒரு தாயித்தினுட் செலுத்தி, அதன் இருபுறத்து வாயிலையும் அடைத்துப் பின்னர் அத் தாயித்தை ஒரு சரட்டிற் கோத்துக் கழுத்தில் அணிந்து கொள்க. ஓராண்டுக் கொருகால் அக் குளிசத்தை அதன் தாயித்தினின்றும் எடுத்து, மேற்சொல்லியவாறே மந்திர உருவேற்றிப் பின்னர் அணிந்து கொண்டு வந்தால், அதன் கவர்ச்சி ஆற்றல் மேன்மேல் மிகுதிப்படும். இப் பெற்றித்தாகிய குளிசமானது கவர்ச்சிக்கே யன்றி, எத்தகைய நோய் நீக்குதற்கும், பேய்பிடியுண்டார்க்குப் பேய் ஓட்டுதற்கும், இன்னும் இவை போன்ற பல நலங்களைப் பெறுதற்கும் நிரம்பப் பயன் படுதலுடைத்தாம். ஆனால், இத்துணைச் சிறந்த மந்திரத் தகடுகளை முறை வழுவாமற் செவ்வையாக மந்திர வுருவேற்றிக் கொடுக்கவல்ல செவ்வியர் மிக அரியர். அவர் கல்வியிலுங் கடவுள் வழி பாட்டிலுந் தவப்பயிற்சியிலும் நல்லெண்ண நற்செய்கை களிலுஞ் சிறந்தாராயிருத்தல் வேண்டும். மற்று, இஞ்ஞான்று இவைகளை உருவேற்றிக் கொடுப்போமென்று வருவாரோ கல்வி மணம் இன்னதென்றே யறியாராய்க், கடவுளிடத்து அன்பிலாராய்த் தவவொழுக்கத்திற்கு முற்றும் புறம்பான வராய்ப், பிறரை ஏமாற்றும் எண்ணமே முழுதும் உடையராய், ஊன் உண்டுங் கட் குடித்தும் பொய் புகன்றும் பொதுமகளிர்ப் புணர்ந்துஞ் சூதாடியுஞ் திரிவாராய் இருத்தலின், இவர் உருவேற்றிக் கொடுப்பதாக ஏமாற்றித் தரும் மந்திரத் தகடுகள் எத்தகைய நன்மையையுந் தரா. அதுவேயுமன்றி, அத்துணைத் தீயரான அவர் தொட்ட மந்திரத் தகடுகள் அவர்தம் தீய இயல்பு பொருந்தப் பெற்றனவா யிருக்குமாதலால், அவை தம்மை அணிந்து கொள்வார்க்கு அவை அளவிறந்த துன்பங்களை வருவிக்கு மென்றும் உணர்ந்துகொள்க. எனவே, மந்திரத் தகடுகளை முறை வழுவாமல் மந்திர வுருவேற்றிக் கொடுக்கத் தக்க பெரியாரைத் தெரிந்து, அவர் உவக்குமாறெல்லாம் பணிந்தொழுகி, அவரைக் கொண்டு அதனை முடித்துக் கோடலே இம்மை மறுமைப் பயன்களைப் பெற்று இனிது வாழ்தற்குக் கருவியாமெனக் கடைப்பிடிக்க. இனி, மேற்காட்டியவாறு மந்திரக் கவர்ச்சி செய்யப் புகுவோர் தாங் கொண்ட நோக்கங்களுக் கேற்ற நாட்களில் அவ்வவற்றுக்குரிய பண்டங்களோடு அதனைத் துவங்கிச் செய்தல் இன்றியமையாததாகும். அறிவையுஞ் செல்வத்தையும் பெறல் வேண்டி நோற்போர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நோற்கத் துவங்குக. தாம் வழக்கமாய் உடுக்கும் உடையின் மேல் ஒரு சிறு சிவந்த ஆடையை யுடுத்திப், பொன்னாற் செய்த சில அணிகலன்களையும் அணிந்துகொள்க. ஏனைய மலர்களோடு பொழுது வணங்கி (சூரியகாந்தி) என்னும் மலரையும், புகைத்தற்கு மஞ்சள் செஞ்சந்தனம் என்னும் இவைகளையும் பயன்படுத்துக. குறிசொல்லுந் திறமையும் மறைபொருள் அறியும் ஆற்றலும் பெறவிழைகுவோர் திங்கட்கிழமையில் நோற்கத் துவங்குக, தாம் என்றும் உடுத்தும் உடையோடு தூவெள்ளை யான ஓர் ஆடையினையும், முத்தால் அல்லது பளிங்கு மணியால் அமைத்த ஒரு மாலையினையும் அணிந்து கொள்க. மஞ்சட்பூவும், புகைத்தற்கு வெண்சந்தனம் அம்பர் முதலியனவும் பயன்படுத்துக. கரிய நிறமுள்ள துணிகளேனும் பொருள் களேனும், வெள்ளியல்லாத பொற்கலங்களேனும் அன்றைக்கு நோற்கும் அறையில் இருத்தல் ஆகாது. பிறர்க்குத் தீங்கு இழைக்குஞ் செயல்கள் செவ்வாய்க் கிழமையில் துவங்கப்படுவன வாகையால், அப் பொல்லாத முறைகளை இங்கே குறியாமல் விடுகின்றாம். உயர்ந்த கலைநூல் ஆராய்ச்சியிற் சிறந்த புலமையுஞ் செவ்வனே பேசுந் திறமும் பெற விரும்புவோர் புதன்கிழமையில் நோற்கத் துவங்குக. அன்று உடுக்கற்பாலன பச்சை நிறமுள்ள அல்லது பலநிறக் கலப்புள்ள ஆடையேயாம். அணியற்பாலன இரசமணிகளேயாம். வழிபாட்டிற்குப் பயன்படுத்தற்பாலன மகிழம்பூவும், சாம்பிராணியுமேயாம். சமயத்துறைகளிலும் அரசியற்றுறைகளிலுஞ் சிறப்பெய்த வேண்டுவோர் வியாழக்கிழமையில் நோற்கற்பாலார். அவர்கள் குருதி நிறமுள்ளதோர் ஆடையுடுத்து, வியாழன் பெயர் பொறித்த பித்தளைத் தகடொன்றை நெற்றிமேற் கட்டிக் கொள்ளல் வேண்டும். அத்திப்பூ மாதுளம் பூக்களைத் தூவி, மீனம்பர் மஞ்சள் முதலியன புகைத்து வழிபாடு புரிதல் வேண்டும். பச்சை அல்லது நீலமணி யழுத்திய கணையாழி யொன்றையும் விரலில் அணிந்துகொள்க. காதலின்பப் பேற்றை விரும்பினோர் வெள்ளிக்கிழமையில் நோற்றல் வேண்டும். அன்று அணிந்துகொள்ளும் ஆடை வான்நீல நிறமாய் இருக்கற் பாற்று: அவ்வறையுள் தொங்கவிடப் பட்ட திரைகள் பச்சையும் உரோசா நிறமுந் தோய்ந்தனவாயும் அன்னத்தூவிகள் பிணைந்தனவாயும் இருத்தல் வேண்டும். பளபளப்பாக்கிய செப்புமணிகளாலும், ஊதா நிறம் வாய்ந்த மலர்களினாலும் (உரோசா) மலர்களினாலுஞ் சமைக்கப்பட்ட மாலை நிலத்தாமரைகள் அன்று பூணுதற்குரியனவாகும். வைடூரியங் கோமேதகம் என்னும் மணிகள் அழுத்திய கணையாழிகள் விரல்கட்கு இடற்பாலன. ஒரு செப்புத் தகட்டில் வெள்ளி மதனவேள் என்பாரின் பெயர்பொறித்து, அதனைத் தமது மார்பின்மேல் அணிந்து கொள்ளல் வேண்டும். மேற்கூறிய மலர்களையே தூவிச் சாம்பிராணி புகைத்து வழிபாடு ஆற்றுக. பிறரை வைது அவர்க்குச் சாவினை வருவித்தற்குரிய முறைகள் சனிக்கிழமையிற் செய்யற்பாலனவா யிருத்தலாற், பிறர்க்கு இன்னா விளைக்கும் அக் கொடிய முறைகளை ஈண்டு வரையாது விடுகின்றாம். பிறவுயிர்க்குப் பொல்லாங்கு தரும் முறைகளை மறந்துஞ் செய்யற்க. ஏனென்றால், அம் முறைகள் செய்தானுக்கே ஆற்றொணாத் துன்பத்தைத் தந்து, அவனுயிரையுங் கொள்ளை கொள்ளும். அது பற்றியே முற்று முணர்ந்த தெய்வத் திருவள்ளுவர், தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் (குறள் 202) எனவும் மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு (குறள் 204) எனவும் தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால் (குறள் 209) எனவும் அறிவுறுத்தருளினார். மேலும், பிறர்க்குத் தீங்கினைத் தரும் பில்லி சூனியங்களைச் செய்வோர், மனிதக் கொழுப்பிற் செய்த திரிகளைப் பிறர் கொலையுண்ட ஒரு வீட்டில் ஏற்றி வைத்து, வெள்ளாடு அகழெலி வௌவால் முதலியவற்றின் குருதியிற் பிசறிய கர்ப்பூரம், கரியபோளம், மீனம்பர் முதலியவற்றைக் கொளுத்திப் புகைத்துக் கொல்லப் பட்ட உயிரின் சோரி நிறைந்த ஒரு செப்புச் சட்டியையுந் தந்தையைக் கொன்ற ஒருவனது மண்டையோட்டையும் வைத்து, இன்னும் இங்ஙனமே நினைப்பினும் நெஞ்சம் நடுங்கும் ஏனைக் கொடுந் தீவினை முறைகளையுஞ் செய்து, நம்மனோரை விட்டகன்று இருளுலகத்திற்றாஞ் செய்த தீவினைப் பயனால் நிரம்பத் துன்புற்று அலறித் திரியுங் கொடும் பேய்களை வருவித்து, அவற்றிற்கு மனிதன் ஈரல் முதலியவைகளை உணவாகக் கொடுத்து உயிர்ப்பேற்றி, அவை தம்மை ஏவி விடுதலால், ஏவப்பட்ட அவை சென்று, குறிப்பிடப்பட்டாரை அச்சுறுத்து கின்றன. அத் தீய பேய்களைக் கண்டு அஞ்சாமல், இறைவன் திருவடிக்கண் அன்பு வைத்து, மனவுறுதியோடிருப் பார்க்கு அப் பேய்கள் ஏதுந் தீங்கிழைக்க மாட்டாமையின், அவை பெருஞ் சீற்றத்துடன் திரும்பிச் சென்று தம்மை ஏவினவனையே மிகவும் அச்சுறுத்திக் கொன்று விடுகின்றன. ஆகையால், யாம் இதுகாறும் விரித்து விளக்கிய வசிய முறைகளைத் தமக்கும் பிறர்க்கும் நலம்பயக்குந் துறைகளின் மட்டும் பயன்படுத்தி இனிது வாழ்க. இனித் தமக்குந் தம் மனைவிமக்கட்கும் பொருள் தொகுத்து வைத்தலிலும், உலக இன்பங்களை நுகர்தலிலுமே கருத்தை ஈடுபடுத்தி, அவற்றின் பொருட்டு வசிய முறைகளைப் பழகுதலிலேயே வாணாளைக் கழித்து விடற்க. எவ்வளவுதான் பொருளைத் திரட்டி வைத்தாலும், எவ்வளவுதான் மனைவி மக்கள்மேல் அன்புவைத் தொழுகினாலும், எவ்வளவுதான் உலக இன்பங்களை நுகர்ந்தாலும், இவையும் இவற்றிற்காகப் பாடுபடுவோரும் இவ்வுலகத்தில் நிலையாக இருக்கப் போவதில்லை. திரட்டிவைத்த பொருள் எங்கோ! மனைவி மக்கள் எங்கோ! நுகர்ந்த இன்பங்கள் எங்கோ! எந்த நேரத்திலோ எவராலும் அறிய இயலாதபடி கூற்றுவன் வந்து உயிரைக் கொள்ளை கொள்ளுங்கால், எல்லாம் இருந்தவிடந் தெரியாமல் மறைந்து போகின்றன! அப்போது, தாஞ் செய்த நல்வினை தீவினைகளுஞ், சிவபிரான் திருவடிகளுமே அவ்வுயிர்க்கு உடன்செல்லும் பொருள்களுந் துணையுமாயிருக்கின்றன! ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ் சீரும் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி யேகம்பனே என்ற பட்டினத்தடிகளின் அரிய அருளுரையை உள்ளத்திற் பதித்து, மேற்காட்டிய கவர்ச்சி முறைகளைக் கொண்டு உயிர் வாழ்க்கையை வறுமையும் நோயுந் துன்பமும் இல்லாமல் வைத்து, இறைவன் றிருவடிப் பேரின்பத்தைப் பெறும் முயற்சியிலேயே கருத்தை ஊன்றுக. அது மூச்சை யொடுக்கும் (பிராணாயாமப்) பழக்கத்தால் மூலகுண்டலியை எழுப்பிச் சுழுமுனையிலேற்றி மேலே ஆயிர இதழ்த் தாமரை போல் வயங்கும் நிலா மண்டிலத்திலே படிவித்து அம்மை யப்பரைத் தலைக்கூடுதலால் மட்டுமே வாய்ப்பதாகும். யாம் ஈண்டுக் காட்டிய கவர்ச்சி முறைகளும், அவற்றிற்கு மேலாந் தவ முறைகளும் நல்லாசிரியன் காட்டக்கண்டு செய்தலே, பிழை படாமற் பழகிப் பயன் பெறுதற்கு வழியாமாகலின், ஒரு நல்லாசிரியனை யடுத்து அவன் உவக்குமாறு ஒழுகி, இவை தம்மை அவன்பாற் பெற்றுப் பழகி எல்லாரும் இனிது வாழக் கடவராக! மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - முற்றும் - சான்றோர்கள் பார்வையில் - அடிகளார் பேராசிரியர். மறைதிருநாவுக்கரசு எழுதிய தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு என்ற நூலிலிருந்தும், மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலரிலிருந்தும் எடுக்கப்பட்டது. தலைமாமணி சோழ நாட்டின் நாகப்பட்டினத்துக்கு அருகில் காடம்பாடி என்ற ஊரில் சைவவேளாண் மரபினராய்த் தோன்றிக் கல்வியறி வொழுக்கங்களில் தலைசிறந்து, சென்னைக் கிறித்துவக் கலாசாலையில் தமிழாசிரியராகத் திகழ்ந்து, துறவு நிலையுற்று, இப்போது பல்லாவரத்தில் பொது நிலைக் கழகத் தலைவராய் வீற்றிருக்கும் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் தமிழ்நாடு செய்த பெருந்தவத்தின் தவவுருவினராவர். செந்தமிழினையும் சிவ நெறியினையும் அவற்றின் பகைவரால் நலிவுறாவண்ணம் பாதுகாத்தவர். தமிழ்ச் சைவ உலகத்தாரால் தலைமாமணியாக இவர் போற்றற்பாலர். தனித்தமிழிலேயே தேனும் பாலுங் கலந்தனைய தீஞ்சொற்சுவை மிக்க இனிய உயரிய உரைநடை எழுதுவதிலும், சொன்மாரி பொழிவதிலும் இவர்க்கு ஒப்பாவார் எவருமிலர். இவரது சொல்லினிமைக்கு ஏற்பக் குயிலோசை போன்ற குரலினிமையும் இவர்க்கு இயற்கையில் அமைந்துள்ளது பெருமகிழ்ச்சி தரத்தக்கது. தொல்காப்பியர் காலத்துக்குமுன் இருந்த பண்டைத் தமிழ் நாகரிக நிலையினுக்குப் புத்துயிரளித்து, அதனை இன்றும் என்றும் நின்று நிலவச் செய்தற்குரிய பெருமுயற்சியினை இவர் தமது தலையாய கடமையாகக் கொண்டவர். பண்டைத் தமிழ் நாகரிக ஆராய்ச்சியில் இவர் தலை சிறந்தோரென்பது, `பண்டைத் தமிழரும் ஆரியரும் என்னும் இவரது உரைநடை நூலால் தெற்றெனப் புலனாகும். தமிழ்ச் சங்க இலக்கியங்களைப் பலபடவகுத்துந் தொகுத்தும் இனிது விளக்கும் இவரது பேராற்றல், `முல்லைப் பாட்டாராய்ச்சியுரை, `பட்டினப் பாலையாராய்ச்சியுரை, `திருக்குறளாராய்ச்சி, `குறிஞ்சிப்பாட்டாராய்ச்சி முதலிய நூல்களால் மலையிலக்காக விளங்கும். வடமொழி நான்மறை, மறைமுடிவுகள் (உபநிடதங்கள்) மிருதி நூல்கள், கற்பசூத்திரங்கள், இதிகாசங்கள், யோக நூல்கள், சிவாகமங்கள் என்னும் வடமொழிப் பெரு நூல்களையும், மேலை நாட்டு ஆங்கில மெய்ந்நூல்களையும் பிற நுண்ணூல்களையும் நுணுகியாராய்ந்து, அவற்றின் அரிய உண்மைகளைக் கேட்போர் உள்ளத்தைப் பிணிக்குந் தகைத்தாய எளிய இனிய முறையிலேயே தமிழ் நன்மக்களுக்கு விரித்து விளங்க அறிவுறுத்தும் இவரது தனிப்பெருந் திறமை, இவர் நடத்திவரும் `அறிவுக்கடல் என்னும் பத்திரிகையிற் போந்த பல கட்டுரைகளிலும் சிறப்புற்று விளங்குகிறது. இவரது வரலாற்றாராய்ச்சி வன்மை, வேளாளர் யாவர், மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூல்களில் வெள்ளிடை விலங்கலாகத் திகழ்கின்றது. தமிழ்ப் புலவர்களுள் மேலை நாட்டாராய்ச்சி முறை யினையும், மேலை நாட்டு உயரிய கருத்துகளையும் தமிழ் மக்களுக்கு எடுத்து விளக்கிப் பெரும்பயன் விளைப்பதில் முதன்முதல் முயன்றவரும், அம் முயற்சியில் தனி மேம்பாடுற்ற வரும் இவரே. நூல்களுக்கு அகலவுரை காணும் இவராற்றல் இவரது, `திருவாசக விரிவுரையால் நன்கு போதரும். நாவலெழுதல் முறை இத்தகையதென்று நம்மவர்க்கு நன்கு அறிவுறுத்தும் இவர் நூல்கள் `கோகிலாம்பாள் கடிதங்கள், `நாகநாட்டரசி என்பன. பண்டைச் செந்தமிழ்ச்சுவை ததும்பும் செய்யுளியற்ற வல்ல இவரது திறமை, `திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை, `சோமசுந்தரக்காஞ்சி என்னும் சிறுகாப்பியங்களால் இனிது விளங்கும். ஆங்கிலத்திலும், வடமொழியிலும் உள்ள சிறந்த நூல்களை மூல நூல்களின் சொற்பொருளாற்றல் குறைவுபடா வண்ணம் தெள்ளிய செந்தமிழ் நடையில் மொழிபெயர்க்கும் சீர்மை, முறையே இவரியற்றிய `சிந்தனைக் கட்டுரைகள், `சாகுந்தல நாடகம் என்னும் நூல்களால் இனிது விளங்கும். சித்தாந்த மகாசமாசத் தினை நிறுவிச் சிலவாண்டுகளாக அதனைச் சிறப்புற நடத்தியவர் இவரே. 1940இல், இவர் சென்னையில் நிகழ்ந்த தமிழர் சமய மாநாட்டில் தலைமைபூண்டு இயற்றிய பேருரை `தமிழர் மதம் என்னும் நூலாக அமைந்துள்ளது. - தமிழறிஞர் திரு.கா. சுப்பிரமணிய பிள்ளை (பக்: 29-30) தமிழ் மலை சாய்ந்தது! மறைமலை சாய்ந்ததென்றபோது தமிழகமே சாய்ந்தது; தமிழ்மலை சாய்ந்தது; சைவ மலை சாய்ந்தது. இனி எந்நாளும் தமிழ் இறவாதிருக்க வேண்டுமானால் மறைமலையடிகள் திருவடிகளைத் தமிழர்கள் மறவாதிருக்க வேண்டும். நாற்பது வருடங்களுக்கு முன்னே முதன் முதலாக பாளையங்கோட்டையில் அவரைக் கண்டேன். கண்டபொழுதே கவர்ச்சிக்கும் உடல் நலம். பேசினதும் அவர் தமிழுக்கு எல்லோரையும் அடிமையாக்கும் மொழி நயம். குயில் கூவுகிறதோ அல்லது குழல் ஒலியோ என்று ஐயுறும் வண்ணம் இருக்கும் அவர் குரல். வீட்டில் பேசும்போதாயினுஞ்சரி, வெளியே மேடைகளில் பேசும்போதாயினுஞ்சரி, வடித்த தமிழே அவர் நாவினின்று வெளிவரும். அப்பெரியாருக்கு ஞாபகச்சின்னம் (நினைவு) எழுப்ப வேண்டியது அவசியம். ஆனால் அது அவருடைய பெருமைக்கு உகந்த முறையில் அமைக்கப்பட வேண்டும். - டாக்டர் ரா.பி. nrJ¥ãŸis, ã.V., பி.எல். (பக். 39) மறைந்த மாமலை இமயமலை எங்கள் மலை என்றும், `பொதிகை மலை எங்கள் மலை என்றும் பெருமையாக நாம் சொல்லிக் கொள்கிறோம். இமயமலைக்குச் சில நாளாக ஏதோ கொஞ்சம் ஆபத்து என்று கேட்டுக் கவலை அடைந்தோம். நம்முடைய சொந்தப் பொதிகை மலைக்கு எந்நாளானாலும் எவ்வித ஆபத்தும் வராது என்று எண்ணித் தைரியம் பெற்றோம். இந்தப் பூவுலகின் தொடக்கத்திலே உறுதியாக உலகத்தின் அச்சைப் போல் அமைந்துள்ளதல்லவா பொதிகைமலை? நம்முடைய பல மலைவளங்களிலே ஒரு தனிப்பெரும் தமிழ் மலை இருந்து வந்தது. பல்லாவரம் என்று அழைக்கப்படும் பல்லவபுரம் வழியாக ரயிலில் போகின்றவர்கள் அங்கே ஒரு சிறு மலையைப் பார்ப்பார்கள். ஆனால் ரயிலில் போகிறவர்களின் கண்களில் புலப்படாமல் இன்னொரு பெருமலை பல்லவபுரத்தில் இருந்து வந்தது. அதற்கு மறைமலை என்று பெயர். மறைமலை யிலும் அது தமிழ் மறைமலை. பொதிகை மலையைப்போலவே மறைமலைமலையும் என்றும் மறையாத மாமலையாக இருந்து வரும் என்று எண்ணியிருந்தோம். மக்கள் நூறு ஆண்டுகள் உயிர் வாழ்வது எப்படி? என்னும் நூலை எழுதிய மறைமலை அடிகள் சுவாமி வேதாசலம் அடிகள் - நூறாண்டு வாழ்ந்து, ஆயிர மாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடிய தமிழ்ப் பணிகளைப் புரிவார் என்று நம்பியிருந்தோம். அசலம் என்றும் மலை என்றும் அந்தப் பெரியாரின் பெயரிலேயே இருந்தபடியால் அவருக்கு என்றும் மறைவில்லை யென்றே எண்ணி இறுமாந்திருந்தோம். பாவி யமன் நம்மிடம் மறக்கருணை காட்டி ஏமாற்றிவிட்டான். தமிழ்த்தாய் தன் அரும்பெரும் புதல்வர் ஒருவரை இழந்து தலைவிரி கோலமாய் அழுதுபுலம்பும்படி செய்து விட்டாள். தமிழ்நாடும் தமிழ் மக்களும் ஏங்கிக் கண்ணிர் விடும்படி செய்துவிட்டாள். பல்லவபுரத்தில் வாழ்ந்து வந்த மறைமலையடிகள் என்னும் தமிழ்ப்பெரியார் செப்டம்பர் 15 அன்று இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகம் சென்றார்... ஆனால் உண்மையில் சென்றாரா? தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த அவர் திருவுடல் இந்தத் தமிழ் மண்ணிலேயே கலந்து விட்டது. ஆனால் அவருடைய ஆன்மா இந்தத் தெய்வத் தமிழ் நாட்டைவிட்டு விண்ணுலகத்துக்குத்தான் உண்மையில் சென்றிருக்குமா? அல்லது இந்தப் புண்ணிய பூமியிலேயே சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்குமா? முக்கியமாக, பல்லவ புரத்தில் அவருடைய இல்லத்தில் கோயில் கொண்டிருக்கும் நடராஜமூர்த்தியின் எடுத்த பொற்பாத நிழலை விட்டுச் செல்ல அவருடைய ஆன்மாவுக்கு விருப்பம் ஏற்படிருக்கக்கூடுமா? அந்த இல்லத்தின் அலமாரிகளில் சிறப்பா? அட்டை போட்டு அடுக்கடுக்காக வைத்திருக்கும் அழகிய அறிவுக் களஞ்சியமான ஆயிரக்கணக்கான நூல்களிலேயே அவருடைய ஆன்மா என்றென்றும் உலாவிக்கொண்டிருக்குமா? மறைமலையடிகள் இன்றைக்கு எழுபத்தைந்து ஆண்டு களுக்கு முன்னர் நாகைப்பட்டினத்தில் பிறந்தார். இளம் பிராயத்திலேயே தமிழிலும் சைவத்திலும் ஆர்வங்கொண்டார். தமிழை நன்கு கற்றார். சைவ சமயக் கொள்கையில் உள்ளத்தைப் பறிகொடுத்தார். ஆங்கிலத்தில் உள்ள அறிவு நூற் கடலில் இறங்கி நீந்தினார். சிலகாலம் கிறிதுவக் கலாசாலையில் தமிழாசிரியராயிருந்து தொண்டு புரிந்தார். ஆனால் அவருடைய உள்ளத்தில் பொங்கித் ததும்பிய தமிழார்வமும் சமயப் பற்றும் கலாசாலை வகுப்பு அறைக்குள் அடங்கி நிற்பனவாக இல்லை. பின்னர், தமிழ்நாடு முழுவதற்கும் பொதுவான தமிழ்ப் பணியும் சைவப் பணியும் செய்யத் தொடங்கினார். நாகநாட்டரசி, கோகிலாம்பாள் கடிதங்கள் முதலிய புதுக் கதைகள் எழுதினார். திருவாசக விரிவுரை, முல்லைப் பாட்டு ஆராய்ச்சி உரை முதலிய பல நூலாராய்ச்சிகள் எழுதினார். தொலைவிலுணர்தல், மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை, பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் முதலிய வாழ்க்கை நூல்கள் இயற்றினார். சாகுந்தலம், சிந்தனைக் கட்டுரைகள் முதலிய மொழிபெயர்ப்பு நூல்கள் ஆக்கினார். மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், என்னும் மகத்தான சரித்திர ஆராய்ச்சி நூலை எழுதினார். சிவஞான போத ஆராய்ச்சி, தமிழர் மதம் முதலிய சமய ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை இயற்றினார். தேனினும் இனிய செந்தமிழ் நடையைக் கைக்கொண்டு சுவாமி வேதாசலம் அவர்கள் முதலில் எழுத ஆரம்பித்தார். குமுதவல்லி, என்னும் நூலில் இனிமை சொட்டும் சுவாமிகளின் செந்தமிழ் நடையைக் காணலாம். பிற்காலத்தில் மறைமலை அடிகள் தனித்தமிழில் அரிய நடையைக் கையாண்டு நல்ல தமிழறிஞர்களுக்கு விருந்தாகக் கூடிய முறையில் எழுதலுற்றார். அடிகளின் தமிழ்நடை வரவரப் புலமை மிக்க அரிய நடையாக மாறினும் அதன் இனிமையும் வேகமும் அதிகரித்தனவே யன்றிக் குறையவில்லை. சுவாமிகளின் குரல் தனிச்சிறப்பு வாய்ந்தது. வண்டுகளின் ரீங்காரத்தை யொத்து இனிமைமிக்க உச்சதாயியில் நெடுந்தூரம் தெளிவாகக் கேட்கக்கூடியது. அடிகளின் சொல்லாற்றலோ மிகச் சிறந்தது. தமிழில் பல பொருள்களைப் பற்றியும் புலமை வாய்ந்த சொற்பொழிவுகளை எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதற்கு மறைத்திரு மறைமலையடிகளார் செவ்விய வழிவகுத்து அளித்தார். அடிகளின் முறையைப் பின்பற்றிப் பலரும் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்கள்.எனினும் அடிகளின் சொல் வன்மையும் குரல் இனிமையும் பொருள் ஆழமும் மற்றவர்களின் உரைகளில் காணக் கூடுவதில்லை. இளம்பிராயத்திலிருந்து இறைவன் திருவடி அடையும் காலம் வரையில் அடிகள் திங்கள் தோறும் ஐம்பது வெண் பொற்காசு (ரூபாய்)க்குக் குறையாமல் நூல்கள் வாங்கிவந்தார். வாங்கிய நூல்களையெல்லாம் ஆராய்ந்து படித்தபிறகு அழகாக அட்டைபோட்டு அலமாரிகளில் அடுக்கிச் சேர்த்து வந்தார். மற்றவர்கள் நிலபுலன்கள் துணிமணிகள், நகை நட்டுகள், பாத்திரம் பண்டங்கள் மற்றும் உடைமைகள் வாங்கிச் சேர்ப்பதில் காட்டும் ஆர்வத்தைக் காட்டிலும் பன்மடங்கு ஆர்வம் காட்டி அடிகள் நல்ல நூல்களைத் திங்கள் தோறும் பணம் கொடுத்து வாங்கிச் சேர்த்து வந்தார். இப்படி வாங்கிச் சேர்த்த புத்தகங்கள் ஏறக்குறைய ஐயாயிரம் (சுமார் முப்பதினாயிரம் ரூபாய் பெறுமானவை) அடிகளின் இல்லத்தில் கண்கவரும் காட்சியாக விளங்குகின்றன. அடிகள் வாழ்ந்திருந்த இல்லத்தையும் அவர் அதில்சேர்த்த நூல் நிலையத்தையும் தமிழ் மக்கள் முயன்று உரிய காணிக்கையை அவர் குடும்பத்தார்க்குக் கொடுத்துப் பெற்று, தமிழகத்தின் பொது உடைமை ஆக்க வேண்டும். அடிகளின் இல்லம் தமிழர்களுக்கு ஒரு புனித யாத்திரைப் பகுதியாக விளங்க வேண்டும். சுவாமிகள் சைவசமயத்தில் மிகப் பற்றுக் கொண்டவர். ஆனால் சைவத்தின் பெயரால் வெளியாகியிருக்கும் நூல்கள் அவ்வளவையும் புனித வேதமாக அவர் ஒப்புக் கொள்வதில்லை. தமது அறிவு ஆராய்ச்சிக்கு உட்படுத்திப் பொருத்தமான வற்றையே ஒப்புக் கொள்வார். அம்மாதிரியே தமிழில் உள்ள காரணத்தினாலேயே தமிழ் நூல்கள் என்று ஒப்புக் கொள்வ தில்லை. குப்பை கூளங்கள், இடைச் செருகல்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாக நிராகரித்து விடுவார். அறிவினால் ஆராய்ந்து ஒப்புக் கொள்வது என்று ஏற்பட்டபோது, ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றிக் கருத்து வேற்றுமை நிகழ்வது இயல்பேயாகும். அடிகள் கண்ட ஆராய்ச்சி முடிவுகள் சிலவற்றை மற்றவர்கள் ஒப்புக் கொள்ள முடியாமலிருப்பதும் இயல்பேயாகும். உண்மைக் கவிதையின் இலட்சணத்தை அறிந்து அனுபவிக்கும் துறையில் அடிகள் அதிகமாகக் கவனம் செலுத்த வில்லை. இதனால் கம்பரைப்பற்றிய அவருடைய கருத்துக்களைத் தமிழன்பர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். பிறருடன் கலந்து ஒத்துழைத்துப் பணியாற்றும் இயல்பை அடிகள் பெற்றிருக்கவில்லை. தனி நின்றுதொண்டு செய்வ திலேயே அவருடைய உள்ளம் சென்றது. சொற்பொழிவு ஆற்ற அழைப்போரிடம் அடிகள் மிகக் கண்டிப்பாக நடந்து கொள்வ துண்டு. இதனால் அவரை அணுகி அழைப்பதற்குத் தமிழன்பர்கள் தயங்கினார்கள் என்பது பலரும் அறிந்ததே. மேதைகள், மகான்கள், புலவர்கள் பெரியவர்களிடம் தனி இயல்புகள் சில இருக்கத்தான் இருக்கும். இவற்றினாலெல்லாம் அடிகளின் மகத்தான தமிழ்த்தொண்டு எள்ளளவும் குறைந்து விட்டதாகச் சொல்ல முடியாது. தமிழும், தமிழகமும், சைவ சமயமும் உள்ள வரையில் மறைமலையடிகளின் அரிய தொண்டின் பெருமை குன்றிலிட்ட விளக்காக என்றென்றும் ஒளி வீசிக்கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. - ஆர். கிருஷ்ணமூர்த்தி `கல்கி ஆசிரியர் (பக். 30-34) மறைமலையடிகள் சென்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி பல்லாவரத்தில் உயர்திரு. மறைமலையடிகள் அம்பலவாணர் திருவடியில் ஒன்றினார். அவருடைய பிராயம் 75. தமிழ் நாட்டில் தமிழைப் பற்றித் தெரிந்த அனைவருக்கும் மறைமலையடிகளைப் பற்றித் தெரியும். ஆழ்ந்த பரந்த படிப்பு, கூரிய அறிவு, ஆராய்ச்சித் திறமை, சொற்பொழிவாற்றும் ஆற்றல், கடவுள் அன்பு, அஞ்சா நெஞ்சம், சைவத்திலும் தமிழிலும் மாறாத பற்று இவற்றை உடையவர் மறைமலையடிகள். இவருக்குத் தமிழறிவோடு வடமொழி அறிவும் ஆங்கில அறிவும் இருந்தன. மற்ற மொழிகளில் இவருக்கிருந்த அறிவை இவர் தமிழாராய்ச்சிக்குக் கருவியாய்ப் பயன்படுத்தினார். இவருடைய தனிப்பற்றுத் தமிழினிடந்தான் இருந்தது. வடமொழி கலவாமல் தமிழில் எழுத வேண்டுமென்ற முயற்சியைத் தொடங்கி இவர் வெற்றிபெற்றார். இவரைப் பின்பற்றித் தனித்தமிழில் எழுதுவோர் பலர் இன்றும் இருக்கின்றனர். மறைமலையடிகள் வடமொழியின்பாலுள்ள வெறுப்பால் இந்தக் கொள்கையை மேற்கொள்ளவில்லை. தமிழின்பாலுள்ள முறுகிய அன்பே அதற்குக் காரணம். இவர், நூறு புத்தகங்கள் வரையில் எழுதியிருக்கிறார். பல துறைகளிலும் இவர் நூல்களியற்றினார். நாவல், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி, உரை முதலிய பல்வகைகளும் இவர் நூல் வரிசையிற் காணலாம். மாணிக்கவாசகர் காலம் என்ற நூல் தமிழ் ஆராய்ச்சி யுலகத்தில் மிக்க சிறப்பாக விளங்குகிறது. முல்லைப் பாட்டாராய்ச்சி ஓர் அழகிய நூல். கவிதைப் பண்பு பற்றி மிக அருமையாக ஆராய்ச்சி செய்து இனிய நடையில் இதில் எழுதியிருக்கிறார். சங்க நூல் நயத்தை அனுபவிக்கும் முறையை இந்த ஆராய்ச்சியால் தெரிந்து கொள்ளலாம். சாகுந்தலத்தைப் பற்றியும் இவர் ஒரு நூல் எழுதியுள்ளார். திருவாசகத்தின் முதல் நான்கு அகவல்களுக்கும் விரிவுரை எழுதியிருக்கின்றார். திருவாசகத்தில் இவருக்கு மிகுதியான ஈடுபாடுண்டு. அம்பலவாணருடைய திருவருளை நினைத்து உருகிப் பக்தி செய்து வந்தார். ஆங்கிலத்திலும் சில நூல்களை இயற்றியிருக்கிறார். ஞானசாகரம் அல்லது அறிவுக்கடல் என்ற மாதப் பத்திரிக்கையைப் பல ஆண்டுகளாக வெளியிட்டு வந்தார். சொற்பொழிவுத் திறமையுள்ள இவருடைய குரல் மென்மையும் இனிமையும் உடையது. பல மாபெருஞ் சபைகளில் தலைமை வகித்து விரிவுரையாற்றியிருக்கிறார். இவருடைய விரிவுரைகள் அனைத்தையும் செறிவுடையனவாய்ப் பலநூற் புலமை மணம் வீசுவனவாய், எழுதப் புகுந்தால் நூல்வடிவமாக அமையத் தக்கனவாய் இருக்கும். உடம்பைச் செவ்வையாகப் பாதுகாக்கும் கலையில் இவர் வல்லவர். சில ஆண்டுகளுக்கு முன் வரையில் இவரைக் கண்ட அளவில் இவருடைய பிராயத்தை வரையறுத்துச் சொல்ல முடியாது. உணவு, பேச்சு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் வரையறையை மேற்கொண்டு வாழ்ந்ததனால்தான் உடல் நலத்தை அவ்வாறு பாதுகாக்க முடிந்தது. எப்பொழுதும் படிப்பதில் இணையற்ற ஆர்வமுடையவர் மறைமலையடிகள். மிக அரிய நூல்களை வாங்கித் தொகுத்து வைத்திருந்தார். அவற்றை வாங்குவதில் இவர்தாம் ஈட்டிய பொருளின் பெரும்பகுதியைச் செலவிட்டார். அறுபதினாயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நூல்கள் இவரிடம் இருந்தன. மறைமலையடிகள் மறைந்தது தமிழ்நாட்டுக்கு நட்டம். இவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகளைத் தொகுத்துத் தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழாராய்ச்சி செய்பவர்களுக்குப் பயன்படும் வகையில் எந்த நூல் நிலையமும் சென்னையில் இல்லை. அவரவர்கள் பலகாலந் தேடித் தொகுத்து வைத்திருப்பவற்றை யன்றித் திடீரென்று ஒருவருக்கு ஒரு பழைய நூல் வேண்டுமானால் கிடைப்பதில்லை. பல அரிய தமிழ் இலக்கிய இலக்கணங்கள் இரண்டாம் முறை பதிப்பாகாமலே மறைந்துவிட்டன. ஆகவே, மறைமலையடிகளுடைய நூல் நிலையத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு இன்னும் வேண்டிய நூல்களைத் தொகுத்து அடிகளுடைய பெயராலேயே ஒருசிறந்த நூல் நிலையத்தை அமைக்கலாம். அது மறைமலை யடிகளின் நினைவை நிறுத்த உதவுவதோடன்றித் தமிழ் அறிஞர்களுக்கும் பேருபகாரமாக இருக்கும். - திரு. கி. வா. சகநாதன் கலைமகள் ஆசிரியர் (பக்.. 34 - 36) பெரும்புலவோர் பரிவு அவர் புகழ் என்றும் இறவாதது! உம்பருலகெய்திவிட்டு அடிகளார் நம் செந்தமிழ் மொழிக்குச் செய்துள்ள அரும்பெரும் பணிகள் அளவிடற் பாலன; பண்டைப் பெரு நூல்களின் நலங்களை இன்றைய அறிவாராய்ச்சி முறைக் கருவிகொண்டு எடுத்துக்காட்டியும், தனிப்பொலிவும் இன்பமும் பொதுளிய தீந்தமிழ் நூல் பல வெளியிட்டும் அவர்கள் தமிழை வளப்படுத்தியுள்ளார்கள். இந்நாளில், தமிழ் நூலாராய்ச்சி முறைக்கும் திருந்திய செந்தமி ழுரைநடைக்கும் அவர்கள் சிறந்த வழிகாட்டியாய் இருக்கின் றார்கள். பல நூற்றுக்கணக்கான மேனாட்டு நூல்களைக் கற்றுப் பாராட்டும் நம்மடிகள், நம் பண்டைக் சிவநெறியினையும், அதனை விளக்கத் தோன்றியருளிய திருஞானசம்பந்தர் முதலிய திருநெறித் தலைவர்களையும் தாமே பெரிதும் போற்றி வந்ததோடு, பிறர்க்கும் அவ்வுணர்வை ஊட்டி வந்துள்ளார்கள். தமிழ்மொழி வரலாற்றில் அடிகளார் பெயர் நிலைத்த இடம் பெற்றுள்ளது. அவர்களது அறிவுத் தொண்டினால் இயல்பான் விளைந்த புகழ் என்றும் இறவாதது. தமிழகத்தின் நன்றி அவர்கட்கு என்றும் உரியது. அவர்கள் அன்புடன் வழிபட்டுவந்த அம்பலவாணர், தம் தூக்கிய திருவடியின்கீழ், அவர்கட்குத் தக்க இடமளித்து இன்ப நிலையில் இருத்தியருளுவர். அடிகள் பெரும்பொருட் செலவில் தொகுத்த பெரிய நூல் நிலையத்தை அவர்கள் தமிழ்மக்கள் யாவர்க்கும் பயன்படுமாறு தந்தருளிச் சென்றமையும் தனியே பாராட்டுதற்குரியது. அடிகள் பல்லாண்டுகளாய் வாழ்ந்து தம் தொண்டுகளை யாற்றி வந்த மாளிகையையும், தனிமனிதர் கைப்பட்டுச் சாமானிய வீடாக ஒளியிழந்து போகாமல் காத்து, இத் தலைமுறையினரும் இனிவருந் தலைமுறையினரும் அடிகளார் நினைவுடன் - அறிவன்புத் தொண்டு வளர்க்கும் நோக்குடன் - ஒன்றுகூடிச் செந்தமிழும் சிவநெறியும் பேணும் நிலையமாக அமைத்துப் பேணிவருதல் நிரம்ப அழகியதாகும். அங்ஙனம் நிகழ அன்பர்கட்கு ஊக்கமும் ஆக்கமும் அம்பலக்கூத்தர் அருளவேண்டுமென்று அவரைச் சிந்தித்து வந்திருக்கின்றேன். - ச. சச்சிதானந்தம் பிள்ளை பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (பக். 36-37) தமிழ்க்காத்த பெரியர்! இப்பெரியாரின் காலத்திற்கு முன்பு ஆரியம் முதலிய பிற மொழிகள் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடின; தமிழ் மொழியைச் சீர்குலைத்தன. வடசொல்லையும், தமிழ்ச் சொல்லையும் கலந்து எழுதும் மணிப்பிரவாள நடை கற்றோரின் பற்றுக்கோடாக அமைந்தது. சங்க காலத்திருந்த தமிழின் தூய்மையும் அழகும் கெட்டன. இவ்வுருக்குலைந்த வடிவத்தில் தமிழ்மொழியை வழங்குவதில் அக்காலத்திருந்த போலிகள் வீண்பெருமை அடித்தனர். இந்த நிலை சிறிது நீடித்திருக்கின் தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய ஏனைய திராவிட மொழிகள் போலத் தமிழும் தனது பண்டைய உருமாறி ஆரிய மயமான மொழியாக இன்று இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அன்றியும், ஆசிரியர் தொல்காப்பியனார் தமிழ் மொழியில் வடமொழிக் கலப்பு வந்தபோது வட எழுத்தை விடுத்துத் தமிழ் எழுத்தையே வழங்கல் வேண்டும் என ஆணை தந்தார். இவ்வாணையைப் புறக்கணித்துத் தமிழ் நன்கு படித்த பண்டிதர்கள், வித்துவான்கள், மகாமகோபாத்தியாயர்கள், தட்சிணாத்திய கலாநிதிகள், பெரும் பேராசிரியர்கள் பலரும் வடசொற்களைத் தமிழில் வழங்கும்போது நேருக்கு நேராக வட எழுத்திலேயே அவற்றை எழுதுவதிற் பெருமை கொண்டனர். இம்மகா பண்டிதர்கள் எழுதிய மொழி நடையை இக்காலத்து நோக்கின் நகைப்பை விளைவிக்கு மன்றோ! இவர் செய்கை தமிழ் அணங்குக்குச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தியதை ஒக்கும். உண்மையான தமிழர் இவற்றைக் கண்டு துயரும் வெறுப்பும் கொள்வர். இவ்வகையான ஊழல்கள் யாவற்றையும் மறைமலை அடிகள் கண்டார். ஊன்றிநோக்கினார். உண்மையை உணர்ந்தார். உள்ளம் உடைந்தார். அதனால் அடிகளின் அறம் மறமாய் மாறியது. இச்சீர் கேட்டினின்று தமிழைக் காப்பாற்ற முனைந்தார். அக் காரணத்தால் தூய தமிழில் எழுதவும் பேசவும் தொடங்கினார். ஆரியம் முதலிய பிற சொற்களைக் கலந்து தமிழில் எழுதுவதும் பேசுவதும் முறையன்று என்று தமிழ்மக்களுக்கு இடித் துரைத்தார். எம் முயற்சியினால் தமிழ் மொழியை பண்டைக் காலத்திருந்த தூய நிலைக்குக் கொண்டுவந்தார். வடமொழியும் தமிழ்மொழியும் முறையே தாய்மொழியும் சேய்மொழியுமென்றும், வடசொல்லிலாது தமிழ்மொழி இயங்குதல் அரிது என்றும் கூறிக் கொண்டிருந்த அறிவிலாப் பெரியார் கூற்று பொய்யாயிற்று. மறைமலை அடிகள் இவ்வளப்பரிய தொண்டினால் தமிழுக்குப் புத்துயிரும் புதுவாழ்வும் அளித்தார். தமிழுக்கும் தமிழருக்கும் இவராற்றிய தொண்டு தலைசிறந்தது. இவராற்றிய தொண்டினும் சிறிய தொண்டினைத் தமிழ் மொழிக்காற்றிய பெரியோர்களின் நினைவுக்காக மண்டபங்கள் கட்டியும் விழாக்கள் எடுத்தும், சங்கங்கள் கூட்டியும் அவர் தொண்டினைத் தமிழ் மக்கள் பெருமைப் படுத்துகின்றனர். இவரின் செய்கை போற்றத்தக்கதே. எனினும், தமிழரின் பெருமையைக் காத்து அவரின் மொழியையும் சிறப்புறச் செய்தத் தமிழர் பெருந்தகை, மறைமலை அடிகளுக்கும் இவ்வாறு நினைவு நிலையங்கள் ஏற்படுத்திப் பெருமை செய்ய முன்வருதல் தமிழ் மக்கள் கடன். இவ்வரும்பணியில் ஈடுபடத் தமிழ்மக்கள் ஒன்று சேருவாராக. மறைமலை அடிகளுக்கு எடுக்கும் விழா தமிழன்னையைப் போற்றுதற்காகச் செய்யும் விழா எனக் கூறுதல் மிகையாகாது. இப் பெரியாரின் உயிர், இறைவன் திருவடி நீழலில் அமைதியோடு நிலவுவதாக. - டாக்டர். க. கணபதிப்பிள்ளை, இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர். (பக். 37-38) தனித்தமிழ் நடையின் தந்தை! அடிகள் அவர்கள் ஏறத்தாழ ஐம்பதாண்டுகள் தமிழ் மொழியின் ஆக்கத்திற்காகவும், தமிழ் மக்களின் முன்னேற்றத்திற் காகவும் அரும்பெருந் தொண்டுகள் ஆற்றிய பெரியார்களுள் தலை சிறந்தவர்கள். தமிழ் மொழி தனித்தியங்கவல்லது என்பதைத் தங்கள் எழுத்தாலும் பேச்சாலும் உலகறியச் செய்த பெருமை அவர்களுக்கே உரியது. நாட்டில் மறைமலையடிகளார் நடை என ஒன்று உருவெடுத்துத் தோன்றிப் பரவியுள்ளது. எனவே, அவர்கள் தனித்தமிழ் நடையின் தந்தை எனற்பாலர். அடிகளார் தமிழ் மக்கள் அனைவரும் தம் பழம் பெருமையை உணர வேண்டும் என்று விரும்பியவர்; இக்காலத் தாழ்ந்த நிலையையும் உணர வேண்டும் என்று விழைந்தவர்; அவை காரணமாக இனி வருங்காலத்தில் தம்மை உயர்த்தி நிறுத்த வேண்டித் தமிழர் பெருமுயற்சி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியவர். இந்தி பொது மொழியாகித் தமிழர்க்குக் கட்டாய மொழியாகும் பெற்றி உடையதன்று என்பதைத் தக்க காரணங்களோடு எடுத்துக் காட்டி வெளிப்படைக் கடிதம் எழுதியவர். - டாக்டர். அ. சிதம்பரநாதச் செட்டியார், எம்.ஏ. (பக். 37-38) ஒப்புயர்வற்ற தொண்டு! மறைமலை அடிகளைத் தெரியாத தமிழர்கள் இல்லை யென்றே சொல்லலாம். அடிகள் தமிழுக்காகச் செய்துள்ள தொண்டு ஒப்புயர்வற்றதாகும். அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் அன்னாரின் பெருமையைத் தமிழுள்ளளவும் எடுத்துக் காட்டும் என்பது உறுதி. சைவசமய வளர்ச்சிக்காக அடிகள் அல்லும் பகலும் அயராது உழைத்து வந்துள்ளார். தமக்கு நேர்மாறான கொள்கையுடையவர்களுடனும் தோளோடு தோள்நின்று இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் அடிகள் ஈடுபட்டது அன்னாருக்குத் தமிழ்மொழியின் மீதுள்ள அளவுகடந்த பற்றுதலை நன்கு விளக்குகிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்ச்சியுள்ள பேராசிரியர் மறைமலையடிகளாரது பிரிவு தமிழ் நாட்டுக்கு ஈடுகட்ட முடியாத ஒரு பெரும் நட்டமாகும் என்பதில் ஐயமில்லை. அடிகளின் ஆத்ம சாந்திக்காக நாம் இறைவனைப் பிரார்த்திப்போமாக. - கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை (பக். 40) மாண்புகழ் ஒளிவீசி நிற்கும் தமிழ் மொழிக்கும் சிவநெறிக்கும் அடிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அரும்பணியாற்றி யுள்ளார்கள். தமிழ் மொழியைப் போலவே, அடிகள் ஆங்கிலத்தையும் வடமொழியையும் நன்கு கற்றவர்கள். சாந்துணையும் கற்க வேண்டும் என்ற சாதனை படைத்தவர்கள் அடிகள். ஆகவே, தாம் தேடிய பொருளையெல்லாம் ஒரு பெரிய நூல் நிலையமாகத் திகழும்படி செய்து வைத்தார்கள். அடிகளின் தமிழ் உரை நடை நூல்கள் தமிழின் தனித்தூய்மை நிலைக்குச் சான்றாக மிளிர்கின்றன. எண்ணற்ற சொன்மாரிகள் பொழிந்து மக்களுக்கு உணர்ச்சியை ஊட்டிவந்த அடிகள் மறைந்து விட்டனர். தமிழ் உள்ளளவும் மறைமலையடிகளின் மாண்புகழும் மங்காது ஒளிவீசி நிற்கும். - டாக்டர் எ.ஜி. மணவாளராமாநுசம் துணைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம். (பக். 40) தனித்தமிழியக்கங் கண்ட தவச் செல்வர்! அடிகளார் தம் நுண்ணுணர்வால் தோற்றுவித்த தனித் தமிழியக்கமானது தமிழ் மக்களது சமயத்துறையிலும் சமுதாயத் துறையிலும் அரசியற்றுறையிலும் நன்கு கவடுவிட்டுக் கிளைத்து நற்பயன் தருஞ் செவ்வியினைக் கண்கூடாகக் கண்டு மகிழும் பேறு நமக்குக் கிடைத்துள்ளது. அடிகளாரவர்கள் எல்லையில்லாத பேரருட்கடலாகிய முழுமுதற் கடவுளிடத்துப் பேரன்புபூண்டு எவ்வுயிர்க்கும் அன்புடையராயொழுகிய அருட் செல்வராவார். திருவருளின் துணைகொண்டு `திசையனைத்தின் பெருமை யெல்லாம் தென்றிசையே வென்றேற அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்லத் தமிழன்னையின் திருக்கோயிலுக்குக் கடைகாலமைத்து விட்டார்கள். தமிழ் வளர்ச்சிக்கு அடிகளாரமைத்த அடிப்படையினை நன்குணர்ந்து தமிழ்மொழிக்குப் பல துறைகளிலும் தொண்டு புரிவதே தமிழ்ப் பெருந்தகையார் மறைமலையடிகளார்க்கு நாம் செய்தற்குரிய நன்றி நிரம்பிய வழிபாடாகும். - வித்துவான் க. வெள்ளைவாரணனார் அண்ணாமலைநகர். (பக். 41) இனித் தோன்றுவது அருமை! மறைமலையடிகளாரது கல்விப் பெருக்கத்தையும், நுணுகிய ஆராய்ச்சித் திறத்தையும் மிக நெருங்கி அனுபவித்தவர்களுள் நானும் ஒருவன். அவர்கள் பாடஞ்சொல்லும்போது மாணவர் அனைவரும் மிக்க குதூகலத்தோடு கேட்டு மகிழ்வர். அவர்களது சங்க இலக்கியப் பயிற்சி எங்களையெல்லாம் மிகவும் வசீகரித்தது. பிற உரைகாரர்களோடு மாறுபட்டுத் தமது கருத்தை அவர்கள் வெளியிடும் பெருமிதத்தை இன்று நினைத்தாலும் எனது உள்ளம் உருகுகிறது. அவர்களைப் போன்ற பேராசிரியர்கள் இனித் தமிழ்நாட்டில் தோன்றுவது மிகமிக அருமை என்றே சொல்லலாம். உயர்ந்த குறிக்கோளும், சீரிய தமிழ்ப் பண்பும், ஆழ்ந்தகன்று நுணுகிய தமிழாராய்ச்சியும், சைவ ஒழுக்கமும், சைவ சமயப் பற்றும், சைவ நூல்களில் தெளிந்த உணர்ச்சியும் அவர்கள் பால் நான் கண்டதுபோல வேறு எவரிடத்திலும் கண்டதில்லை. அவர்களுடைய பேச்சின் இனிமையும் வன்மையும், எழுத்தின் அழகும் வன்மையும் தமிழ் மக்களை வசீகரித்துவந்தன என்பது யாவரும் அறிந்த ஓர் உண்மையே. நான் படித்து வருங்காலத்தில் என்பால் அவர்கள் தனியன்பு காட்டிவந்தார்கள் என்பதை நினைக்குந்தோறும் என் மனம் பெரிதும் வருந்துகிறது. அவர்களுடைய நினைவைத் தமிழ் மக்கள் என்றும் பாராட்டும் கடமையுடையவர். - அறிஞர் எ. வையாபுரிப்பிள்ளை, பி.ஏ.பி.எல். சென்னைப் பல்கலைக்கழகம். (பக் 41-42) பெறலரும் பெரியார் தமிழ் வளர்த்த தந்தையை இழந்து தமிழகம் கண்ணீர் வடிக்கின்றது. மறைமலையடிகளைப்போல அரிய புலவரை இனித் தமிழகம் பெற முடியுமா? நனவிலும் கனவிலும் தமிழையே நினைந்து அதைத் தம் உயிரினும் மேலாகப் போற்றி வளர்த்த பெறலரும் பெரியார் அல்லவா! அடிகள். தம் வடமொழிப் புலமையினையும் ஆங்கிலப் புலமையினையும் தமிழ் ஆக்கத்திற்கே பயன்படுத்தி அதன் பெருமையை வெளிநாட்ட வரும் உணரச் செய்த பெருமை அவருக்கு உண்டு. அடிகள் மறைந்தார் எனினும் அவருடைய வீர உணர்ச்சி மறையவில்லை. அவருடைய சொற்பெருக்குகளும் நூல்களும் அவ்வுணர்ச்சியைத் தமிழகத்திற்கு ஊட்டிக் கொண்டிருக்கும். - திரு.. பி.ஆர். கிருஷ்ணமூர்த்தி நாயுடு (பக். 42) நினைவுச்சின்னம் அமைப்போம்! மறைமலையடிகள் ஒரு தவப்புத்திரர். அவர் தாயார் திருக்கழுக்குன்றத்தில் நாற்பது நாள் நோன்பு மேற்கொண்டு கடவுளை வழிபட்டு அவரருளால் அடிகளை ஈன்றார். இமயமலை பொதியமலை, இவற்றையெல்லாம் விடப் பெரிய மலை நம் மறைமலை. இந்து சமுதாயத்தில் யாவரும் சமமாய்இருக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் இந்து மதத்தைப் புனிதமாக்க, இந்து மதம் நல்வழிப்பட அரிஜனங்கள் முன்னுக்கு வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் தமிழுக்குச் செய்த தொண்டு அளவற்றது. தமிழ் மொழி மாத்திரமல்லாமல் ஆங்கிலம், வடமொழி மூன்றும் தெளிந்து சிந்தித்துச் சீர்தூக்கி ஆராய்ந்த பேரறிஞர். நம் அனுதாபத்தை அவர் சந்ததியார்க்குத் தெரிவிப்பதுடன் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைப்பது முக்கியம். - ஜே. சிவசண்முகம் பிள்ளை சென்னைச் சட்டமன்ற முன்னாள் அவைத் தலைவர். (பக். 42) தமிழர் தவச் செல்வர்! தமிழ் இலக்கியங்களில் காலம், பொருள் முதலிய கூறுகளை ஆராயும் முறை ஆங்கில நாட்டு முறையை அடியொற்றி வருவதொன்று. காலம் பற்றியும் ஒப்புமை பற்றியும் (Historical method and Comparative method) ஆராய்ச்சி நிகழும். இதனை முதற்கண் தமிழ் இலக்கியத்துறையுட் புகுத்தி இனிய உரையில் எழுதிக்காட்டிய பெருமை அடிகட்கே உரியதாகும். இவ்வாராய்ச்சிக்கு நாட்டின் சமய சமுதாய அரசியல் வரலாறு பற்றிய அறிவு அடிப்படையாக வேண்டுவதொன்று. இதனைத் தமிழ் வகையில் ஆராய்ந்து தமிழ் நாட்டுத் தமிழ்மக்களின் அரசியல், மொழி, சமயம், ஒழுக்கம் முதலியவற்றின் வரலாறுகளை ஆராய்ந்து அடிகள் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் எழுதிய கட்டுரைகளும் பலவாகும். மாணிக்க வாசகர் வரலாறும் காலவாராய்ச்சியும் என்ற பேருரை நூல், மாணிக்கவாசகரைப் பொருளாகக் கொண்டு எழுந்ததெனினும் அதன்கண் தமிழ் நூல்கள் பலவற்றின் காலமும் கருத்தும் ஆராய்ந்து காட்டி அறிஞர் பலரை அத்துறையில் ஈடுபட்டுச் சிறப்புறச் செய்தவகையில் அடிகள் தமிழிலக்கிய ஆராய்ச்சிநெறித் தந்தையாகின்றார். - ஔவை. சுகு. துரைசாமிப்பிள்ளை அண்ணாமலை நகர். (பக். 43) தமிழ்த் தலைவர்! தமிழ்த் தலைவர் மறைமலையடிகள் செய்துள்ள தொண்டு, குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு உரிய தொண்டு அன்று; தமிழின் நிகழ்காலத்திற்கும் எதிர் காலத்திற்குமாக நெடிதுநின்று பயன்தரும் தொண்டு செய்துள்ளார் அடிகள். தமிழ் மெல்ல மெல்ல மணிப்பிரவாள மொழியாக மாற இருந்த தறுவாயில், தன் செம்மையும் சிறப்பும் சிதைவுற நேர்ந்த நெருக்கடியான நிலையில், அதற்கு உறுதுணையாய் முன்னின்று தனித் தமிழியக்கம் தோற்றுவித்து வளர்த்த பெருந்தொண்டு அவர் ஆற்றியது ஆகும். தமிழ்மொழி தலை நிமிர்ந்து வாழும் என்று நம்பக் கூடிய நிலையில் தமிழை வாழவைத்த பெருமை அவரைச் சார்ந்தது ஆகும். எதிர்கால மொழிவரலாற்றில் இந்த அரிய தொண்டு பொன்போல் போற்றப்படும் என்பதை உணர்ந்தால் தான், அடிகளைப் பிரிந்த பிரிவு ஆற்றொணாத பிரிவு என்பது உணரப்படும். ஆயிரக்கணக்காகப் புத்தம் புதிய, உயரிய நூல்களை வாங்கி எழுத்தெழுத்தாகக் கற்று ஏடுஏடாகக் காத்துவந்தார் அடிகள். அவர்தம் வாழ்க்கையில் மிளிர்ந்த செம்மை, செழுமை, ஒழுங்கு என்னும் உயரிய பண்புகளை அந்த நூல்களின் ஏடுகள் ஒவ்வொன்றும் நமக்கு இன்றும் அறிவுறுத்தி நிற்கின்றன. வடமொழியை நன்கு கற்றுத் தமிழ் மொழியின் பெருமையை விளக்கியவர் மறைமலை அடிகள். ஆங்கில அறிவு நூல்களை ஆராய்ந்து தேர்ந்து, பழந்தமிழ்ச் சான்றோரின் புலமைத் திறனைத் தெளியச் செய்தவர் அடிகள். உலக வளர்ச்சியையும் முற்போக்கையும் கூர்ந்து உணர்ந்து தமிழரின் நல்வாழ்விற்கு ஆசி கூறித் தட்டி எழுப்பியவர் அடிகள். அவர்தம் புகழ் ஓங்குக! அவர்தம் தொண்டு விளங்குக! - டாக்டர் மு. வரதராசனார் பச்சயைப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் (பக். 43-44) தமிழுக்கு ஒரு வயிரத்தூண்! என் ஆசான் மறைமலை அடிகள் மறைநிலையரானார் எனக் கேட்டுத் துடிப்புற்றேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பாடங்களைப் போதிக்க மும்மணிகள் போன்று மூன்று ஆசிரியர்கள் இருந்தனர். ஒருவர் செம்மணி; அவரே தலைமைத் தமிழ் ஆசிரியர், பரிதிமாற் கலைஞன் எனப் புனைவுப் பெயர் கொண்ட வி.கோ. சூரியநாராயண சாதிரியார். பிறிதொரு ஆசிரியர் நீலமணி; நீனிறக்கடவுளின் அடியார் - இசைஞானம் கொண்ட திரு. கோபாலாசாரியார், பிறிதொரு ஆசிரியர் வெண்மணி; இவரே செந்தமிழின் ஊற்றொழுகு செந்நாவினர். இவரே வேதாசலம் பிள்ளை - இவரே சுவாமி மறைமலையடிகள். 1901 - 1902 ஆம் ஆண்டுகளில் பி.ஏ. வகுப்பில் இவரிடம் பாடம் கேட்கும் பேறுபெற்றேன். பின்னர் 1903ஆம் ஆண்டில் இவரது இல்லத்துக்குச் சென்றும் பாடங் கேட்டிருக்கிறேன். ஐம்பது ஆண்டுகளாய் சைவத்துக்கு ஆணி போலும், தமிழுக்கு ஒரு வயிரத் தூண் போலவும் பிறங்கி ஆக்கம் அளித்தவர் மறைமலை அடிகள். தமிழ்ப் பண்டிதராயிருந்தும் கணக்கிலாத அருமை வாய்ந்த ஆங்கில நூல்களை ஆய்ந்தாய்ந்து அறிந்த பேரறிவாளர். கேள்விப் பயன்பெற்ற பண்பிலர். கல்வி, உய்த்துணர்வு, சொல்வன்மை மூன்றும் வாய்ந்த மூதறிவாளர். செந்தமிழ் நடையின் சுவை காண வேண்டில் இவரது பேச்சில், இவரது எழுத்திற் கண்டு களித்திருந்தேன். மலரவன் செய்த வெற்றுடம்பு மறைந்தது. இவர் புகழ்கொண்டு செய்துள்ள உடம்பு தமிழ் உள்ள அளவும் தரணியில் ஒளிவீசிப் பிறங்கும் என்பதில் ஐயம் சிறிதளவேனும் இல்லை. மதியிலா விசும்பென்கோ! மணமிலா மலரென்கோ! நதியிலா ஊரென்கோ! நரம்பிலா யாழென்கோ! நிதியிலா வாழ்வென்கோ! நெய்யிலா உணவென்கோ! துதிகுலாம் மறைமலையார் தோற்றமிலாத் தமிழுலகை. - தணிகைமணி. t.மூ. செங்கல்வராய பிள்ளை, எம்.ஏ. (பக். 45) என்றும் அணையா விளக்கு! தமிழ் அன்னையின் இயல்பான அழகுமுகத்தை மக்களுக்குக் காட்டினவர் மறைமலை அடிகள். தூசு படிந்து துகள் நிறைந்திருந்த அன்னை முகத்தை அலம்பிக் கழுவித் தூயதாக்கித் தமிழின உண்மை எழிலை உலகுக்குக் காட்டிய தமிழின் தலைத் தனித் தவப்புதல்வர் நமது அடிகளார். பிறமொழியின் துணையின்றித் தமிழ் தானே தனித்தியங்கித் தலைசிறக்கவல்லது என்பதை உலகுக்குக் காட்டிய பெரியார் நமது அகளார். சொற்பொழிவுத்திறனை ஒரு கலையாக வளர்த்துக் கற்போல் வார் நெஞ்சிலும் உணர்ச்சியைப் பாய்ச்சி அறிவுகொளுத்திய பெரியார் நமது அடிகளார். உலகிற்குகந்த உயர்நெறி தமிழ்நெறியாகிய சித்தாந்தச் செந்நெறியே என்பதை பறையறைவது போல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி நூல்களாக வெளியிட்டும், பல்லிடம் சென்று திரளான மக்களுக்குப் பேசியும் தெளிவுபடுத்திய பெரியார் நமது அடிகளார். தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தடையேதுமின்றித் தனியாட்சிபூண்டு அரசு வீற்றிருந்த செம்மலார் மறைமலை அடிகள் இன்று உலகினை நீத்தனர். அவர்களின் ஆவி நிலைத்த அவ்வுடலும் காவி நனைத்த கல்லாடையும் இனி நாம் காண்பதரிது. ஆனால், அவர்களின் புகழ் உடம்பு உலகிற் பொன்றாது நிலைநிற்கும். தமிழ் உள்ளத்திலே அவர்கள் ஏற்றிவைத்தவிளக்கு என்றும் அணையாது இருள்கடிந்து ஒளி பெருக்கும் என்பது திண்ணம். - பேராசிரியர் கோ. சுப்பிரமணிய பிள்ளை (பக். 47) மறைமலையின் மறைவு! தமிழ்நாடு ஓர் அறிஞரை இழந்தது. தமிழர் தம் தலைவரை இழந்தனர். தமிழ் தன் தலை மகனை இழந்தது. தமிழுக்காவே பிறந்து, தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழுக்காகவே உயிர் நீத்தவர் அடிகள் ஒருவரே ஆவர். இத்தகைய சிறந்த அறிஞரைத் தமிழ்நாட்டு மக்களிற் பலர் அறிந்து கொள்ளவேயில்லை. வாழ்ந்தபோது அவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி வாழத் தவறிய மக்கள், அவர்கள் மறைந்த பிறகேனும் தங்கள் தவறை உணர்ந்து, அவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்ந்ததாக வேண்டும். இன்றேல் நாடு வாழாது! அவர்கள் நடத்திவந்த பொதுநிலைக் கழகம் தமிழ்நாட்டின் பொது நிலைக்கழகமாகத் திகழ வேண்டும். அவர்கள் வாழ்ந்து வந்தகட்டிடத்திற்குரிய விலையை அதற்குரியவர்களிடம் கொடுத்து விட்டுக் கட்டிடத்தைப் பொதுநிலைக் கழகத்திடம் ஒப்புவிக்க வேண்டும். கட்டிடமும் கழகமும் அடிகளின் நினைவுச் சின்னங்களாக ஒளிவீச வேண்டும். கழகம் தமிழ் நாட்டிலுள்ள தமிழ்க் கழங்களையெல்லாம் தம்முள் இணைத்துக்கொண்டு தமிழ்த் தொண்டு செய்வதகாவும், கட்டிடம் தமிழை ஆராய்வதற்குப் பயன்படுவதாகவும் இருக்கவேண்டும். இதனைச் செய்து முடிப்பதற்குத் தமிழ் இளைஞர்களின் தொண்டும். அடிகளுடைய குடும்பத்தாரின் ஒப்பமும், தமிழ் மக்களின் ஒத்துழைப்பும் தேவை. பிற நாட்டினருக்கும், பிற மொழியினருக்கும், பிற மக்களுக்கும் பெரும் பணச் செலவில் நினைவுச் சின்னங்களை வைத்துப் போற்றிவருகின்ற தமிழ்நாடு, தன் தலைவனுக்கு இதனை இச்சிறு செலவில் செய்து முடிக்கத் தவறாது என்பது எனது கருத்து. - முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பக். 45 மறை மறைந்ததே மறைமலையடிகளார் நோய்வாய்ப்பட்டு வருந்திக் கொண்டிருந்த போது செய்தியறிந்து கச்சியம்பதியிலிருந்து போந்து அடிகளாரில்லமடைந்தேன். அங்கு யான் கண்ட காட்சி, என்னைத் திடுக்கிடச் செய்தது! யாக்கையின் நிலையாமையை நினைந்து நெஞ்சு நெக்குருகி, அடிகளாரை நோக்கினேன். கவலை தோய்ந்த கருத்துடன் அடிகளார் பார்வை என் மீது திரும்பியது. அடிகளார் - எப்பொழுதும் என்னுடன் நெடுநேரம் மலர்முகத் துடன் அளவளாவும் அன்பினர் - பேச இயலாது சோர்ந்த முகத்துடன் தோற்றமளித்தார். அந்தோ! அப்பேசாப் பேச்சிற் பிறங்கிய பொருளை வருந்திய என் மனம் வாழ்நாள் இறுதி வரையில் மறவாது! மக்கள் நூறாண்டு உயிர் வாழ்வது எப்படி? என்னும் சீரிய நூலைச் செந்தமிழால் இயற்றித் தமிழ் நாட்டிற்களித்த தனிப் பெருந் தமிழர் - உடலோம்புதலிற் கண்ணுங் கருத்துமாயிருந்த ஒழுகலாறு உணர்ந்த உத்தமர் - எழுபத்தைந்தாவதாண்டின் எல்லையைக் கடவாமுன்னரே வாழ்வைத் துறந்து வானெய்தின ரென்றால், ஊழின் பெருவலியை என்னென்றியம்புவது! `வினைப்பயனை வெல்ல வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்துமில்லை, என்பது எத்துணை உண்மை விளக்கும் உரையாய் விளங்குகிறது! அடிகளார் வாழ்ந்தது முக்கால் நூற்றாண்டேயாயினும், அவரால் தமிழ்நாடு அடைந்த பயன் அளப்பரிது எனக் கூறுதல் மிகையாகாது. அடிகளார் வரன்முறை வழாது மும்மொழிப் புலமை பெற்ற முதுபெரும் புலவர்; சைவ சித்தாந்தத்தின் திட்பநுட்பங்களை நன்கு பயின்று மேனாட்டறிஞரும் மெச்சும் வகையில் ‘Mystic Mina’ என்னும் ஆங்கில வெளியீட்டின் மூலம் எங்கும் பரவச்செய்தவர். அடிகளார் புலமையிற் பழமையும் புதுமையும் பங்கு பெற்றோங்கின. அடிகளார் பயின்ற நூல்கள் கணக்கற்றன என்பதை மறைந்தன ஒழிய இருந்தனவாயொளிரும் நூல்களையுடைய அவர்களது நூற்கருவூலமே இனிது விளக்கும். அடிகளார் நுண்மாண் நுழைபுலப் செல்வராய் - நாவீறுடையராய் - எழுத்தாற்றலில் எவரும் வியக்கத்தக்க எழுத்தாளராய் இலங்கியும், அவர்கள் அவ்வாற்றல்களை அடிமை வாழ்விலீடுபட்டு விபழலுக்கிறைத்த வீணிராக்காமல், உரிமை வீறுடன் தனிமையிலுழைத்துப் பொருள் புகழும் ஈட்டி, வையத்து வாழ்வாங்கு வாழ்ந்த வகை பெரிதும் பாராட்டத்தக்கது. அவ்வகையில் அடிகளார் மாபெருங் கலைவீரர் எனப் போற்றுதற்குரியார். உறங்குவது போலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339) என்னும் உண்மையை உளங்கொண்டு, கழிந்ததற்கிரங்காது, நம்மைப் பிரிந்த நல்லவர் இன்னுயிர் அவர்தம் வழிபடு கடவுளின் மறைமலையரடிகளின் மன்னி வற்றா இன்பம் உற்று விளங்கவென மனங்கொளலன்றி மற்றென்செய வல்லோம்! - வித்துவான் மே.வீ. வேணுகோபால பிள்ளை. (பக். 47) மறைந்த அடிகளார்! தமிழ் ஞாயிறு சென்ற நூற்றாண்டின் இறுதியில், இந்நூற்றாண்டின் தொடக்கத்தில், இரண்டு நூற்றாண்டுக்கும் ஒரு பேரொளியாய்த் தமிழ் வானத்தில் சுடர்விட்ட, ஒரு முளையிள ஞாயிறு எந்தம் அடிகளார்! உலகத்தின் உயர்ந்த நூல்களெல்லாம், அழகொளிவீச, அணியணியாய்க் கொலுவீற்றிருக்கும் தமிழ்க்கலை மன்றம் அவர் இல்லம். அவ்வகை நூல்கள் பல பதினாயிரம்! அவர்க்கு அச்சம் தெரியாது; இச்சகம் பேசமாட்டார்! ஆங்கிலம், ஆரியம், தீந்தமிழ் - என்ற மூன்றையும் துறைபோக முற்றக்கற்ற ஒரு மூதறிஞர் எந்தம் அடிகள். மும்மொழிகளையும் ஒருசேர இவ்வாறு தமிழுலகில் மாசறக் கற்ற நல்லாசிரியர் இவர்க்கு முன்னுமில்லை; இவர்க்குப் பின்னு மில்லை. இது தமிழ் வரலாறு. வடமொழியும் தமிழும் வேறு வேறு என்பதை விளக்கிக் காட்டினார். ஆசிரியர் சிவஞானமுனிவர். (18ஆம் நூற்.) வட மொழியை அறவே அகற்றிவிட்டுத் தமிழ்தனித்து இயங்கவல்லது என்பதை ஆராய்ந்து சொன்னார் டாக்டர் கால்டுவெல் (19ஆம் நூற்.) அவ்வாறு பல்லாயிரம் ஏடுகள் தமிழில் எழுதிக் காட்டினார் ஆசிரியர் மறைமலையடிகள். (20ஆம் நூற்.) மொழி வரலாற்றில் இந்த மூன்றும் மூன்று மாணிக்க உண்மைகள். அடிகளார் ஏற்றிய விளக்கு இன்னும் எரிகின்றது சான்றோரே! எம்மை மறந்தாலும் யாம் மறக்கமாட்டேமால், நீவீர் அடிவைத்து நடந்த அவ்வழியை எமது நெஞ்சு நாடுகிறது. அடிகள் மறைந்த அத்திசை நோக்கி எந்தலை தாழ்வதாக! - வித்துவான் அ. கிருஷ்ணமூர்த்தி (பக். 48) மறைமலையடிகள் நூற்றாண்டுவிழா! அடுத்துவரும் கி.பி. 1976, சூலை 16 ஆம் பக்கல், தனித் தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளாரின் நூற்றாண்டு நிறைவு நாள் ஆகும். புலன் மழுங்கிக் கிடந்த தமிழர் உள்ளத்துத் தனித்தமிழ் ஒளியேற்றிய அடிகளாரின் பெருமை சொல்லில் அடங்காது. அவர்களின் வாழ்வியல் தொண்டு முக்கூறுகளைக் கொண்டது. மொழித் திருத்தம், சமயத் திருத்தம், இனத் திருத்தம் ஆகியவை அவை. மொழி நிலையில் நெடுங்காலமாக ஆரியத்தால் கட்டழிந்த செந்தமிழைத் தம் வளமை மிகும் புலமைத் திறனால் கட்டறுத்து, மீண்டும் செழுந் தமிழாக உலா வரும் நோக்கத்தையும், வரலாற்றையும் தொடக்கி வைத்த பெருமை அடிகளாரையே சாரும். அடுத்து, போலி மூட நம்பிக்கைகளாலும், சாதிச் சழக்குகளாலும் சீர்கெட்டு வந்த சைவ சமயத்தைத் தம் அகப்புற ஆய்வால் புலந்திருத்திய செவ்வி அடிகளாருடையது. மற்று, ஆரியப் பார்ப்பனரால் தாழ்த்தப்பட்டும், வீழ்த்தப்பட்டும், திசை மாற்றப்பட்டும் நிலை தடுமாறிய தமிழினத்திற்கு, மெய் வரலாற்றுக் கூறுகளைத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் நன்கு எடுத்துக் காட்டி, பழந்தமிழ் வரலாற்றில் ஒளியேற்றிய அவர் உரனுங் கொள்கையும் ஒருங்கு நினைக்கற்பாலன. இன்னோரன்ன சீரிய தொண்டுகளாலும், தம் கடல் போலுங் கல்விப் பரப்பால் முற்றிய புலமைக் கொழிப்பாலும், அருந்தமிழ் மொழியில் மேனாட்டாரின் மெய்யறிவுத் திறனையும், அறிவியல்பேற்றையும் முதன் முதல் தமிழ் மக்களுக்குத் தூய, தனிச் செந்தமிழில் தந்த பெருமையாலும், அடிகளாரின் வாழ்வு ஆண்டுதொறும் நினைத்தற்குரியது. அவ்வகையில் அவர்தம் நூற்றாண்டு நினைவு விழா தமிழ் மக்கள் நன்றியொடு நினைந்து போற்றுதற்குரிய பெருவிழாவாகும். அடிகளாரின் புகழ் நிலை இவ்வாறிருக்க, நந்தமிழரின் இகழ் நிலையோ எண்ணுதற்கும் இழிவாகி, பேரிரக்கத்துக்குரியதாக விருக்கின்றது. போலி ஆரவாரங்களிலும், புன்மை நாகரிகங் களிலும் மக்கள் குலமே இன்று தக்கதொரு பேணுதலும் தடுத்தாட்கொள்ளுதமின்றி, மிகவும் மதிமயங்கிக் கிடக்கின்றது. தமிழர்களின் தாழ்ச்சி நிலையோ சொல்லுந் தரமன்று. வருங் காலத்தை உருவாக்கவல்லஇளமை கொழுவும், மாணவ உள்ளங்கள் திரைப்படத் தேரோட்டங்களில் சிக்கித் தெருத் தெருவாகத் திண்டாடி உலா வருவதைக் கண்டு வருந்தாத நன்னெஞ்சமே இருக்க முடியாது. அரசியல் அரங்குகளையும், அலுவல் மனைகளையும் போலியும் பொய்ம்மையும், கரவும் கையூட்டும் வாட்டி வதைப்ப, கல்லூரிகளையும், கலைக்கூடங் களையும் காமநோய் பிடித்தாட்டுவதை என்னென்று சொல்வது? வள்ளுவமும் காந்தியமும் பேச்சுக்கும், கொண்டாட்டத்திற்கும், விளம்பரத்திற்கும் மட்டுமே உதவும் உயரிய கொள்கைகளாகவும், வாத்சாயனமும், கோயபல்லியமும் செயலுக்கும் ஆளுமைக்கு முரிய கோட்பாடுகளாகவும் மிளிர்ந்து விளங்குவதை நம் நாட்டிலன்றி வேறு எங்குப்போய்க் காணப்போகின்றோம்? இக் கால, வினைத்திரிபுகளுக் கிடையில்தாம் நாம் காந்திக்கும், காமராசுவுக்கும் மண்டபங்கள் எழுப்புகின்றோம்; அண்ணாவையும், பெரியாரையும் ஆண்டுதோறும் நினைவு கூர்கிறோம், அவ்வகையில் - தாம், நல்ல உள்ளங்கள் மறவாமல் நினைந்து போற்றுதற்குரிய நல்ல நாளாக, நம் மறைமலை அடிகளாரின் நூற்றாண்டு நினைவு நாள் வருகின்றது. பொதுவாகவே, ஒவ்வொருவர் நினைவுநாளும், ஒவ்வொரு வழியினர்க்கும், ஒவ்வொரு வகையினர்க்குமே உரிமையாக்கப் பெற்றுக் கொண்டாடப்பெற்று வருகின்றது. காந்தியடிகளின் நினைவு நாளைக் கூட ஒரு கட்சிக்கே உரிமையாக்கியவர்கள், நாம்! மக்களில் ஒரு சாராரின் நன்மை பிறிதொரு சாரார்க்குத் தீமையாகவே இருக்கின்ற தன்மைகளையே இவ்வேறுபட்ட நினைவு விழாக்கள் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. வேறுபாடின்றி மக்கள் அனைவருமாக நாம் கொண்டாடும் விழாக்களோ பெரிதும் மூடநம்பிக்கை நிரம்பிய முரட்டுவிழாக் களாகவே உள்ளன. எஃது எவ்வாறாயினும் இந்தியாவில் எந்த இனமும் தன் இன இழிவுகளையும் அதன் வகையில் பிறிதோர் இனத்திற்குச் செய்யும் இனக்கேடுகளையும் இன்றுவரை மாற்றிக்கொள்ளவே இல்லை. இவ்விந்தியநாடு தன்னுரிமை பெற்று இரு பத்தேழாண்டுகள் ஆகியும் நாம் துணிமணிகளைத் துவைத்துக் கட்டத் தெரிந்திருக்கின்றோமே யன்றி, நம் மனங்களைத் துவைத்து வைத்துக் கொள்ளத் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றோம். ஆகையால்தான் நாம் கொண்டாடும் விழாக்களில் நமக்கு மகிழ்ச்சி யிருப்பதில்லை; அவற்றின் படையல்களில் நாம் சுவை காணமுடிவதில்லை. அவ்வகையில், அடிகளாரின் விழாவும் ஒரு சார்பு விழாதான்! அடிகளார் தமிழைப் பேசியதைவிட, சைவ சமயத்தைப் பேசியதே மிகுதியாக இருக்கும். ஆனாலும் சைவர்கள் தம் சமய அடிப்படையில் அவர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவார்கள் என்று சொல்ல முடியாது. அப்படிக் கொண்டாடுமாறு அவரால் சைவத்துக்கு எந்தத் தனிப்பட்ட ஊதியமும் இருப்பதாக அவர்கள் சொல்லிக் கொள்ளுவதில்லை. வேண்டுமானால், இழப்பு இருக்கலாம். எனவே, அடிகளாரைத் தமிழ் என்னும் அடிப்படையில் தான் நினைவு கூர்கின்றனரே யன்றிச் சமயம் என்னும் அடிப்படையில் நினைவு கூர்வார்கள் என்று எண்ணுவதில்லை. ஆகவே, மறைமலையடிகளார் தனித் தமிழியக்கத்தார் மட்டுமே பெரிதும் கொண்டாடுவதற்குரிய ஒரு தனிப்பெருந் தலைவராக விளங்கு கிறார் என்று கொள்ளவேண்டி உள்ளது. இதே கரணியத்துக் காகவே ஆரியப் பார்ப்பனரும், அவரை அடிப்பற்றி விளங்கும் தமிழடிமைகளும், அடிகளாரை வெறுத்தும் பழித்தும் வருவதை நாம் உணரலாம். எனவே, மறைமலையடிகள் நூற்றாண்டு விழா என்பது தனித் தமிழியக்கத்தின் ஒரு தனிப்பெரும் விழாவாகும். உண்மையாகச் சொன்னால் இது தமிழினமே போற்றிக் கொண்டாட வேண்டிய ஒரு தனி விழாவாகும்! இக்கால் உள்ள தமிழக அரசு மறைமலையடிகளாரை ஒப்புக் கொண்டாலும், அவரின் தூய தமிழ்க் கொள்கையை இன்னும் முழுவதும் ஒப்புக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனாலும், பெரும்பாலும் மக்களை நோக்கிச் செய்யும் வினைகள் அதனுடையதாகலின், நாளடைவில், படிப்படியாகவேனும் தூய தமிழ் வழக்கைஇவ்வரசினர் ஒப்புக் கொண்டுதான் ஆகல்வேண்டும். அறிஞர் அண்ணா அவர்களே போற்றிய தமிழ் அடிகளாரின் தமிழ்! இக்கால் உள்ள தமிழர்களில் சிலர் அடிகளாரின் தமிழ்த் தூய்மைக் கொள்கையை இழித்தும், பழித்தும் பேசுவது, மொழி நிலையிலும் வரலாற்று நிலையிலும் அவர்களுக்குள்ள அறியாமையினையும், செரியாமையினையுமே காட்டுவதாகும். எனவே, இவை பற்றியெல்லாம் மெய்த்தமிழ் அன்பர்கள் எண்ணி, மனச்சோர்வு கொள்ள வேண்டுவதில்லை. இனி, மறைமலை யடிகளாரைத் தனித்தமிழ் இயக்கத்தார் மட்டுமன்றித் தமிழரனைவருமே போற்றுவது தலையாய கடனாம். மக்கள் தலைவர்களும், அறிஞர்களும் ஒக்கவைத்துப் போற்றப்படுவதையும், இனி, முன்னவரினும் பின்னவரையே மக்கள் வழிவழிப் பாராட்டி நினைவு கூர்வதையும், அறிவால் முன்னேறி ஆற்றலால் வலுப்பெற்றுள்ள மேலை நாடுகளில் இன்றும் பார்க்கலாம். எனவே, மக்களை விழிப்பூட்டிய, தலை சிறந்த ஓர் அறிஞர்க்கு அரசே முன்னின்று விழா எடுப்பது எவ்வகையிலும் குற்றமுடையதன்று. குணமுடையதே! நம் நாட்டில் சமயத் தலைவர்கள் மதிக்கப் பெறுகின்ற அளவில் அறிஞர்கள் மதிக்கப் பெறாமை பெரிதும் வருந்தத் தக்கதுமாகும். அறிஞரைக் கூட சமயந் தழுவிய ஒருவராக இருந்தால்தான் நம் மக்கள் மதிப்பர். மற்றவரைப் புறக்கணிக்கவே செய்கின்றனர். நாம் நரகாசுரனுக்கும், மகிசாசுரனுக்கும் கொடுக்கின்ற மதிப்பைக் கூட நம் அறிஞர்களுக்குத் தருவதில்லை. எனவேதாம் நம் நாட்டில் அறிவு வளர்ச்சி குன்றியுள்ளது. வெறும் சமயம் வளர்ந்துள்ளது என்று பெருமை பேசுவதால் ஒரு பயனும் இல்லை. மக்கள் நிலையில் அறிவுக்கே முதலிடம் கொடுத்தல் வேண்டும். அவ்வகையில் அடிகளாரைச் சமயப் பற்றாளர்கள் கொணடாடாமற் போனதும் ஒரு குறையன்று; நிறையே! அவர் தமிழைப் பொறுத்த அளவில் தூய தமிழுக்கும், தமிழரைப் பொறுத்த அளவில் தம் இனத்து அறிவு மேம்பாட்டிற்கும், உழைத்தது பெருமை மிக்கது; நினைவு கூர்ந்து மகிழ்தற்குரியது. சமயத்தைப் பொருத்த அளவில் அடிகளாரின் சமயமும்கூட ஒரு பொதுமைச் சமயமே என்று நினைவு கூர்தல் வேண்டும். அவர் போலிச் சைவரை யாவரினும் மேலாகக் கடுமையாகத் தாக்கி யுள்ளார். அவர்களின் மூட நம்பிக்கைகளையும் வெகுவாகக் கடிந்துள்ளார். திருநீறணிவதையும் உருத்திராக்க மணிகள் பூணுவதையும் கூட அவர் போலி ஆரவாரம் என்று கடிந்துள்ளதை நாம் அறிவோம். எனவே, நம் தமிழக அரசு மறைமலையடிகளாரைப் போற்றுவது, நம் தமிழ்க் கொள்கைக்கும் இனவொற்றுமைக்கும் ஏற்றந் தருவதே ஆகும். இனி, மறைமலையடிகளாரைப் போற்றுபவர்கள், உண்மையிலேயே அவர் கொள்கைகளைத் தாம் ஒப்புக் கொண்ட வகையிலேனும் போற்றுதல் வேண்டும். அதுவே அவருக்குச் செய்யும் நன்றிக் கடமைகளுள் தலையாயதாகும் என்பதை ஒப்புக்கொள்ளுதல் வேண்டும். அவர் கொள்கைப்படி நாம் கலப்புத் தமிழைத் தவிர்த்தல் வேண்டும். தூய தமிழிலேயே எழுதவும், பேசவும் வேண்டும். நம் பெயர்களை வடமொழிப் பெயர்களினின்றும் மாற்றித் தனித் தமிழ்ப் பெயர்களாகச் சூட்டிக் கொள்ளுதல் வேண்டும். நம் இன இழிவுகப் போக்கி இனப் பெருமைகளை நினைவில் இறுத்துதல் வேண்டும். நம் தமிழக அரசு இங்குள்ள ஊர்ப் பெயர்களையும், தெருப் பெயர்களையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றி இது தமிழ்நாடு என்று கூறுவதற்கேற்பப் பெருமை கொள்ளும்படி செய்தல் வேண்டும். அடிகளாரின் பெயரால் பல கல்வி நிறுவனங்களையும் தெருக்களையும் வழங்கச் செய்தல்வேண்டும். அவர்க்கும், அவர் போலும் நம் மொழித் தலைவர்களுக்கும், இனத் தலைவர்களுக்கும் அஞ்சல் தலைகளை வெளியிட்டுப் பெருமை செய்தல் வேண்டும். அவரின் நினைவு எச்சமாக உள்ள பல்லாவரம் பொதுநிலைக் கழக மாளிகையை மேலும் பலவாறு சீர்திருத்தி, வெளிநாட்டார் வந்து கண்டு போவதற்குரிய நினைவு மண்டபமாக மாற்றியமைத்தல் வேண்டும். அவரின் வாழ்க்கை வரலாற்றையும், நூலாக்கங்களையும் ஆய்வு செய்து, அவற்றைப் பொதுமைப்படுத்துதல் வேண்டும். பல்கலைக் கழக அளவில் அவரின் நூல்களில் பலவற்றைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக்குதல் வேண்டும். அவரின் கையெழுத்துப் படிகளை மேனாட்டறிஞரின் கையெழுத்துப் படிகளைப் போல் பேணிக்காத்து, அரசுடைமையாக்குதல் வேண்டும். அடிகளாரின் குடும்பத்தார்க்கு முற்றூட்டாக ஒரு தொகையைக் கொடுத்து அவர் பயன்படுத்திய பொருள்களைப் பெற்று, அவற்றை அவர் நினைவு மண்டபத்தில் வைத்துக் காத்தல் வேண்டும். அவரைப்பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் வரலாற்று நூல்கள் எழுதுவித்துப் பெருமைப் படுத்துதல்வேண்டும். அறிஞர்களை அவர்கள் வாணாளிலேயே நாம் தக்கவாறு போற்றிப் புரக்காமலேயே நாம் இழந்த அறிவிழப்புகள் பல. எனவே, அத்துறையில் நாம் இனியேனும் கவனத்துடனும் முன்னறி வுடனும் நடந்து கொள்ளுதல் நம் மொழிக்கும், இனத்துக்கும், நாட்டிற்கும் செய்யப்பெறும் தலையாய கடமைகளுள் ஒன்றாகக் கருதுதல்வேண்டும். தமிழ் காக்கும் நம் தமிழக அரசும், அதன் தலைவர்களும், அடிகளாரின் நூற்றாண்டு விழாவைப் பெருமையுடன் கொண்டாடித் தமிழறிஞர்களை இவர்கள் புறக்கணிக் கின்றார்கள் என்னும் குற்றத்திற்குச் சிறிதேனும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாமல், தக்கவற்றைச் செய்து பெருமை பெறுவார்கள் என்று மனமார நம்புகின்றோம். - பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ்ச்சிட்டு குரல் - 8, தி.பி. 2007 - துலை - நளி (நவ. 1975) இசை -12 புகழ் மாலை அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யான் அவரைச் சொல்லாலும் எழுத்தாலும் போற்றுவதுண்டு. வேதாசலனார் தமிழ் செந்தமிழ் - சங்கத்தமிழ் என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையைத் தமிழ்நாட்டுக்கு ஊட்டியபெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன். - திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் - 163 தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும். அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியன்மாரை அளித்தது; அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது. - திரு.வி.க மறைமலையடிகளின் மாண்பு - முன்னுரை தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரைநடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர். மாநிலத்தில் மக்கள் உள்ளவரை மறையாப் புகழ் பெற்ற மறைமலையடிகளே. - ஞா. தேவநேயப் பாவாணர்; வடமொழி வரலாறு; முன்னுரை. விரித்தது தொகுத்தல் என்னும் உத்தி பற்றித் தமது சொற்பொழிவில் விரித்து ஓதப்பட்ட பொருள்கள் யாவற்றையும் முடிவில் தொகுத்துரைக்கும் திறம் அடிகளார்க்கென்றே அமைந்த அரும்பண்பாகும். - ஔவை சு. துரைசாமிப் பிள்ளை. மறைமலையடிகளும் கா.சு. பிள்ளையும் என் வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள். - பெரியார் ஈ.வே. இராமசாமி சிலப்பதிகாரத்தில் `சித்திரமடத்துள் என்னும் கானல் வரியில், `யாழ்கையில் தொழுது வாங்கி எனவரும் பகுதியைக் கேட்ட அடிகளார், யாழ்கையில் தொழுது வாங்கியவர் யார்? கொடுத்தவர் யார்? என வினவினார். வாங்கியவர் மாதவி, கொடுத்தவள் வயந்தமாலை என்றேன். வயந்தமாலை ஏவற்பணிப்பெண்ணாகிய சேடியே அன்றோ! அவளை மாதவி எற்றுக்குத் தொழுதல் வேண்டும்? என வினவினார். வினாவை எதிர்பாராத யான் சிறிது தயங்கினேன். உடனே அடிகளார், மாதவி தொழுதது வயந்தமாலையை அன்று; யாழ்க் கருவியையே மாதவி தொழுதாள். இசைத் தெய்வம் அதன் கண் தங்கி உறைவதாகக் கலையுணர்வு மிக்க மாதவி கருதினாள் என்றார் அடிகள். - ந.ரா. முருகவேள். அடிகளார் நூல்களைத் தாம் பயன்படுத்தியபின் அதனைச் சேர்த்துத் தொகுத்து வைத்த முறை சுவையுடைய கனி கிழங்குகளைத் திரட்டி வைத்த சபரியின் செயலையே நினைவூட்டுவதாகும். இராமன் இலக்குமணன் ஆகியவர்கள் சேவையில் ஈடுபட்டு அவர்களுக்கு அளிப்பதற்காகவே சபரி அவற்றைத் தொகுத்து வைத்தாள். மறைமலையடிகள் இத்தொகுப்பைத் திரட்டியதும் இது போலப் பொதுமக்கள் சேவையை உளத்திற் கொண்டே தான் என்பது குறிப்பிடத் தக்கது. நூலக இயக்குநர் முனைவர் அரங்கநாதன்; மறைமலையடிகள் நூலகத் திறப்புரை வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலையடிகள் மறையாத் திருப் பெயர் - வாழ்த். ஆழ்ந்து கடலில் முத்தெடுப் பார் போல் அகன்ற உலக இலக்கியம் அனைத்திலும் வீழ்ந்து பொருளுண்மை விளக்கும் ஆற்றலால் வெல்ல முடியாத நல்லா சிரியனை - வாழ்த். தென்னாடு சார்ந்த குமரிப் பெருநிலம் திரைகடல் மறந்த உண்மைச் செய்திக்குப் பொன்னேடு காட்டும் புலவர்க்குக் புலவனைப் பொழுதெல்லாம் தமிழுக் குழைத்த தலைவனை - வாழ்த. மறையெனப்படுவது தமிழ் நான் மறைநூல் மற்றை மறைநூல் பின்வந்த குறைநூல் முறையாய் இவைகட்குச் சான்றுகள் காட்டி முழக்கஞ் செய்த முத்தமிழ் அறிஞனை - வாழத். - பாவேந்தர் பாரதிதாசனார். மறைமலையடிகளின் உலகியல் திறன் அடிகளார் இந் நிலவுலகில் 75 ஆண்டுகள் வாழ்ந்திருக் கிறார். பெரிய குடும்பம் ஒன்றை மிக இளமையில் இருந்து கடைசி வரையில் நடத்தி வந்திருக்கிறார்கள். குழந்தைகளை நோய் நொடியிலிருந்தும் காப்பற்றி வந்திருக்கிறார்கள். அதோடு அவரவர்கள் ஊக்கத்திற்கு ஏற்றபடி கல்வி, தொழில் முதலியனவும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு முயற்சிகளோடு, தாம் இந் நிலவுலகில் தோன்றிய நோக்கமாகிய சிவத்தொண்டும், தமிழ்த் தொண்டும், புது வகையான ஆராய்ச்சி கிளர்ச்சிகளோடு ஊக்கமாய்ச் செயல் புரிந்திருக்கிறார்கள். இவற்றிற்குக் குடும்பம் எப்போதும் தடையாய் இருந்ததில்லை. அடிகளுடைய சிவத்தொண்டு, தமிழ்த் தொண்டு என்றால், அவை அவ்வளவு எளிமையானவை அல்ல. உயர்ந்த இலக்கண, இலக்கிய தருக்க மெய்மைகளோடு இளமையிலேயே புலமை சிறந்து, தமிழகமும் உலகமும் பாராட்டும் முறையில், நூல்கள் பல எழுதிப் பெருந் தொண்டு நடந்திருக்கிறது. அடிகள் மிக இளமையிலேயே புலமையும், ஆராய்ச்சியும், பேச்சும், எழுத்தும் பெற்றுவிட்டதனால் அடிகளார் இளையவர் என்று எண்ணி, எதற்கெடுத்தாலும் மறுப்புக்கள் பாணங்கள் போல அடிகளைச் சூழ்ந்து கொள்ளும். சென்ற இடங்களிலெல்லாம் கேள்விகளுக்குமேல் கேள்வியாக அம்புப்பொதிகள் அவிழும். அத்தனை கேள்விக் கணைகளுக்கும் அடிகளார் தம் நுண்ணுணர்வினாலும் திருவருள் வலத்தாலும் தக்க விடைகள் பகர்ந்து எல்லாவற்றையும் முறியடித்து வீறி விளங்கி வென்று, உலகெங்கும் நலம் புரிந்திருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலும் இருபதாம் நூற்றாண்டின் முதலிலும் வாதம் புரிவதற்கென்றே ஒருவரை ஒருவர் கூட்டத்துக்கு அழைத்துக் களிப்பெய்துவார்கள். அடிகள் எதற்கும் அஞ்சுவதில்லை; உடையார் ஒருவர் தமர் நாம்; அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை என்று அருள் உரங்கொண்டு தோள் தொட்டு ஆர்ப்பரித்துக் களம் புகுவர். ஞான இளஞ்சூரியனாய்த் தோன்றி அங்கங்கும் முதிர்ந்தெழுந்த அறியாமை இருட் படலங்களைக் கிழித்தொதுக்கியும், சிங்க ஏறுபோல் களத்தில் ஒரு தனிப் பேருருவாய் உலவியும், வீறு மிக்கவர்களாய் விளங்கினார்கள். அடிகள் காலத்தில், வாதத்துக் கழைத்தவரே அடிகளாரைக் கண்ட மாத்திரத்தில் வெருண்டு நிலைகலங்குவர். இவ்வளவோடு அடிகள் நிற்கவில்லை, செய்த தொண்டுகள் தமிழகத்துக்கு ஏராளம். இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா வெற்றிக்கு, மறைமலையடிகள் மிகப் பெரிதும் பாடுபட்டார். சைவ சித்தாந்த மகா சமாசம் என்று ஒரு மாபெரும் கழகம் நிலையாக அமைத்து, மக்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். இளமையிலேயே வருவாய் தரக்கூடிய அலுவலை விட்டுவிட்டார்கள். பல்லாவரத்தில் குடிபுகுந்து, திருவருள் ஒன்றையே மிக அழுத்தமாய் நம்பி, பொது நிலைக் கழக நிலையம் நூல் நிலையம் , அச்சகம், வெளியீடுகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாத இதழ்கள், மாணவர்க்குப் பாடங்கள் திருக்கோயில் நெடுக யாத்திரை, அங்கங்கும் விளங்கும் சபைகளிலெல்லாம் தொடர்ந்த விரிவுரைகள் யாழ்ப்பாணம் முதல் இமயம் வரையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தக்க அளவளாவல் முதலியன இயற்றியிருக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம், பொருள் அடிப்படை, அவர்கள் காலத்தில், அத்துணை எளிதாக அமைந்துவிடவில்லை. பல்லாவரத்தில் குடிபுகுந்த இடம் தெருக்கோடியாதலால், தனிமை வாய்ந்தது. சூளைகள் இட்டு ஒவ்வொன்றுக்கும் தாமே, தரமறியாப் பல ஆட்களுடன் அவரவர் பண்பறிந்து பழகிப் பெரிய மாளிகை முதலிய மேற்காட்டிய பணிகளையெல்லாம் நிறைவேற்றி யிருக்கிறார்கள். ஏறத்தாழ இரண்டு நூறாயிரம் தொகைக்குப் பொருள் சேர்த்து இவ்வளவு பெரும் பணியினை அமைத்திருக்கிறார்கள். மேலும், அடிகள், கோட்பாடு பிறழாதவர்கள். பொருள் சாயுமிடமெல்லாம் தாமும் சாய்ந்துவிடாதவர்கள். படிப்போ அழுத்தந்திருத்தமானது. பெருந்தலைவர்களும் தலை வணங்கத்தக்க நிலை. இறுதி வரையில், நாள்தோறும், உயர்ந்த நூல்களில் ஒரு குறிப்பிட்ட நேரம், இவ்வளவு சூழலிலும் எப்படியோ படித்து வந்திருக்கிறார்கள். உயர்ந்த நூல்களை யெல்லாம் விலை கொடுத்து வாங்க ஒரு சற்றும் பின் வாங்குவது இல்லை. மேலும், பக்குவம் வாய்ந்த தக்க மாணவர்க்குத் தீக்கைகளும் புரிந்திருக்கிறார்கள். பற்றற்றநிலையில், அன்றாட வழிபாட்டில், பெரிதும் திளைத்து வந்திருக்கிறார்கள். எப்போதும் இனிய முகத்தோடு பலரையும், விருந்தினரையும் வரவேற்று, அளவளாவி, அருள் செய்திருக்கிறார்கள். உயர்ந்த செழுமை யான உணவுக்கும் வாழ்க்கை வசதிகளுக்கும் யார்க்கும் குறைவில்லை. ஆங்கிலம், சமக்கிருதம் முதலிய பன்மொழிப் பெரும் புலவராகவும் அடிகள் பயிற்சி பெற்றவர்கள். இவ்வளவு சிறப்புகளுக்கு அடிகளார் உலகியல் திறத்தில் எவ்வளவு மேம்பட்டவர்களாக இருந்தாக வேண்டும் என்பதை எல்லாரும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். `உலகம் பலவகை என்று பெரியோர் கூறுவர். மக்கள் பல வகையான உள்ளம் வாய்ந்தவர்களாக இருப்பதே அப் பழமொழிக்குக் காரணம். பலர் பல குறிப்பு உடையவர்கள் என்பது இதனால் தெரிகிறது. `உலகியல் உணர்வு என்பது குறிப்புணர்ந்து செயலாற்றுவதைப் பொறுத்திருக்கிறது. தெய்வத் திருவள்ளுவர், தமது பொதுமறையைச் சுருக்கமாக யாத்தவர். அத்தகைய பெரியவர், `குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தலைப்பை மட்டும் `பொருட்பாலில் ஓர் இடத்திலும், இன்பப் பாலில் மற்றோர் இடத்திலும் அமைத்திருக்கிறார். இன்பப் பாலிலேயே `குறிப்பறிவுறுத்தல் என்பது வேறோரிடத்திலும் வருகின்றது. அவ்வளவோடு நில்லாமல், குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் என்றும் அவர் அருளிச் செய்கின்றார். உடம்பையே இழந்து விட்டால், பின்பு, வாழ என்ன இருக்கிறது? குறிப்பினுள் குறிப்பறிவதா யிருந்தால் உடம்பின் உறுப்புக்களையும் வழங்கிவிடலாம் என்பது திருவள்ளுவர் கருத்தாயிருக்கிறது; கண்ணையும் இழந்து விடலாம் போலும். அப்படியானால் `குறிப்பறிதல் எவ்வளவு முதன்மையானது என்பது இதனால் தெரிந்து கொள்ளலாம். அறிவு பெருகும் பொருட்டுக் கற்பதுகூட, `உலகத்தாரோடு ஒட்ட ஒழுகுதலையே பொறுத்திருக்கிறது என்று அவர் தெரிவிக்கிறார். அல்லாதவரைக் கற்றவராகவே அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் என்பது அவர் பொய்யா மொழி. கோட்பாடு பிறழாமல் ஒழுக வேண்டும், குறிப்பறிந்தும் நடக்க வேண்டும், அவரவர் பண்பறிந்தும் செயலாற்ற வேண்டும், இன்னார் இன்ன செயலுக்கு உரியவர் என்னும் வகை தெரிந்து அவரை ஏவ வேண்டும், தன் இனத்தாரையும் காக்க வேண்டும் என்பன வெல்லாம் திருமறை கற்பிக்கும் நெறிகள். 1. குறிப்பறிந்து, காலம் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் 2. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல் 3. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். 4. இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல் 5. நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. 6. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு 7. கடிதோச்சி மெல்ல எறிக, நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர் 8. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். 9. ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க, சான்றோர் பழிக்கும் வினை 10. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய வெல்லாம் பிற 11. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். 12. ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். 13. இடுக்கண் வருங்கால் நகுக, அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல். இங்ஙனம் எத்தனையோ பல திருக்குறள் உண்மைகளுக் கேற்ப அடிகளார் தம் செயல்களை உலகியற்கைக் கண் கொண்டு நோக்கிச் செய்து நிறைவேற்றியிருக்கிறார்கள். இவற்றுள் முதற்குறள் குறிப்பறிதலைக் கூறியது; இரண்டும் மூன்றும் நான்கும் அறிவு நுட்பம் விளக்கின; ஐந்தும், ஆறும், ஏழும் எட்டும் செயல் முறை தேற்றின; ஒன்பது அறத்தின் அடிப்படை நவின்றது; பத்து மனத்திட்பமும், பதினொன்று பன்னிரண்டு ஊக்கமுடைமையும், பதின்மூன்று இடரில் தளராமையுமாகப் பல செய்முறைகளையும், தெளிவிக்கும்; இவ்வெல்லா வகையிலும் அடிகள் செயல்வீரரே என்பது அனைவரும் அறிந்ததே. இரண்டோ ரெடுத்துக்காட்டுகள் 1. சென்னைப் பல்கலைக் கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், பிற கல்லூரிகளிலும் அலுவலுக்கு அடிகளைத் தலைவர்கள் அழைத்திருந்தார்கள். ஊதியம் நிலையானதாக இருந்தாலும், அடிகள் அவற்றை விரும்பவில்லை. வாழ்க்கையில் தாம் மேற்கொண்ட சிவத்தொண்டும் தமிழ்த்தொண்டுமாகிய அறங்கள் தம் வாழ்நாள் நெடுக நடைபெற வேண்டுமென்பது அடிகள் கருத்து. பிறர்க்கு அடிமைப்படாமல் உரிமையாய் அவை நிகழவேண்டுமென்பது அடிகள் உறுதி. ஈன்றாள் பசி காண்பா னாயினும் செய்யற்க, சான்றோர் பழிக்கும் வினை என்பது அடிகள் வாழ்க்கையில் எப்போதும் கடைப்பிடியாய் இருந்தது. வேலைக்குப் போவது, `உலகியல் என்று சிலர் சொன்னார்கள்; `உயர்ந்தோர் இயற்கையே உலகியல் எனப்படும். தவறாகக் கருத்தைப் புரிந்துகொள்வதனால் உலகத்தில் எத்தனையோ முறை கேடுகள், இடையூறுகள், மோசங்கள், தவறுகள் முதலியன நிகழக் காண்கிறோம். `உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது, உயர்ந்தாரோடு அவர்கள் கொள்கைகளில் இணங்கி ஈடுபட்டு ஒழுகுதலையே குறிக்கும். 2. அம்பலவாணர் திருக்கோவிலைப், `பொதுநிலைக் கழகத்தின் மாடியில் அமைக்க அடிகளார் விரும்பினார். அம்பலவாணர், அம்மை, நால்வர் திருவுருவங்கள் வார்க்க வேண்டியிருந்தன. அடிகளுக்கு வழக்கமான சிற்பி மயிலாப்பூரில் இருந்தார். அவருக்கு ஓர் அஞ்சல் அட்டை அடிகள் எழுதினார். அதில், `இன்னின்ன திருவுருவங்கள் விரைவில் வார்க்க நினைவாய் இருக்கிறது என்று அதற்குரிய விளக்கங்கள்மட்டும் ஆர்வமாய் எழுதியிருந்தார். அந்த விளக்கத்தைப் படித்துப் பார்க்கும் எந்தச் சிற்பிக்கும், கட்டாயம் தம் தொழிலில் பேரார்வம் உண்டாகி விடும். அப்போது நான் அங்கே இருந்தேன். `சிற்பியை வரும்படி இதில் எழுதவில்லையே என்று அடிகளைக் கேட்டேன். ஆண்டில் இளைஞனாய் இருந்தமையால் எனக்கு அதன் உள்ளுறை தெரியவில்லை. அடிகளார் `அந்த அஞ்சல் அட்டையின் கருத்து அதுதான் என்றும், `வெளிப்படையாக எழுதக் கூடாது என்றும், `ஒருவர் மற்றொருவர்க்குக் கட்டளையிட வாய்ப்பில்லை யென்றும், எவரும் `உரிமையாய் ஒழுக வழி செய்ய வேண்டும் என்றும், கருத்தை விளக்கினார். `மாணாக்கராய், புதல்வர்களாய், அலுவலர்களாய், வேலைக் காரராய், வாழ்க்கைத் துணையாய் இங்ஙனம் பல நிகைளில் இணங்கியிருப்பவர்களுக்கு மட்டும், அதுவும் அவரவர் பண்பறிந்து கட்டளையிடலாம் என்றும் விளக்கினார். நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் கடிதங்கள் எழுதும்போது அடிகள் மிகப் பாங்காக அவரவர் பண்பறிந்து எழுதுவார். `ஆன்மா, கடவுளைப் போலவே முழுப் பரவலுடையது (சர்வ வியாபகம்) எனவும், `மலம், பல தரத்தில் உயிர்களைப் பிணிப்பதனால், ஆண்டவன் திருவருளால் உயிர்களின் அறிவு விழைவு செயல்கள் விளங்கும்போது பல இயல்புகளாக விளங்குகின்றன என்றும், ஒரு கருத்துப் பொதுவாகக் கூறப்படுகின்றது. முழுப் பரவலுடையனவாயிருந்தால் உயிர்கள் உடம்பு களுள் வரையறைப்படா. மலத்தால் அவ்வியல்பு வேறுபாடுகள் என்றால், தனியாக உயிர்கள் வேறு வேறு பண்புடையன அல்ல என்றும் கூறப்படும். ஆனால், திருமறைக் குரவராகிய தெய்வத் திருவள்ளுவர், `அவரவர் பண்பு என்று அவரவர்க்குரிய தனி இயல்புகளைச் சுட்டிக் கூறுகிறார். மலமறைப்புகளில் வேறுபாடுகள் இருந்தாலும், உயிர்கள் தனித்தனித் தன்மையும் உடையனவே என்பது, உலகியற் கையிற் கண்கூடாகக் காணப்படுகிறது. கோடிக் கணக்கான மக்கள் தொகையில், ஒருவராவது மற்றவரோடு முகம் ஒத்தவராய், இயல்பு ஒத்தவராய், இல்லை. மல மறைப்பின் வேறுபாடுகளால் உயிர்களின் இயல்புகளும் வேறுபடுவது உண்மையேயாயினும், அறிவற்ற மலத்தின் வேறுபாடுகள் அத்தனைக் கோடிக் கணக்காய் இருக்குமென்று நம்புவதற்கில்லை. சில வேறுபாடுகளுக்குள்ளாகவே அவை ஒன்றை ஒன்று ஒத்துத் தோற்றும். மக்கள் அப்படித் தோற்ற வில்லை. மற்ற சிற்றுயிர்களின் வேறுபாடுகளை நுனித்தறியப், பொதுமக்களுக்கு வாய்ப்பில்லை. இறைவன் திருவருள் ஒன்றேயானதனாலும், அவரவர் பண்புக்கு ஏற்றபடி அவரவர் ஆட்கொள்ளப்படுவர் ஆனதனாலும், திருவருளிலும் வேறுபாட்டியல்புகள் தோன்று மாயினும், உயிர்களின் பண்புகள் பலப் பலவாய் இயற்கையில் அமையாவிட்டால், மலத்தின் ஆற்றல், மறைப்பிலிருந்து நீங்கியவுடன் எல்லா உயிர்களும் ஒன்றுபோற் பேரின்பம் நுகர நேரும். மேலும், அருள் பெற்ற அடியார்களின் வாக்குகளெல்லாம் ஒரே வாக்காகத் தோன்றவில்லை; உலகமெங்கும் விளங்கும் சான்றோர்களின் கருத்து ஒன்று தானாயினும், அதனைப் புலப்படுத்து முறையில் அறிய நூல்கள் அவரவர் இயற்கைப் பண்புகளுக்கேற்றபடியே அமைகிறது. இவ்வாற்றால், `அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை என்னும் திருமறைக் குரல் எவ்வளவு உண்மைகளை நமக்குத் தெரிவிக்கின்ற தென்பது விளங்காமற் போகாது. அடிகளார் உண்மையான உலகியல் தெரிந்து அவரவர் பண்புக்கு ஏற்றபடி வாழ்க்கை நடத்தி வந்தார் என்பதை நாம் அறியவேண்டும். 3. கல்லா இளைஞன் ஒருவன் ஏதோ ஒரு வேலையைச் செய்து விட்டுக் கூலிக்கு அடிகளை எதிர்பார்த்து நின்றான். செய்த வேலைக்கு ரூபா 5-கூலி தருவது மரபு. மேற்பார்வையாளர் அதனை வழங்கினார். ஆயினும், வேலைக்காரன், மிகு பொருள் விரும்பி ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தான்; அடிகளார்க்கு இது தெரிந்து விட்டது. மேற்பார்வையாளரை அழைத்து, `மேலும், இரண்டு ரூபா கொடுத்தனுப்புங்கள்; நாளைக்கும் அவன் வரவேண்டியவன்; அதோடு வேலை முடிந்துவிடும்; நான்கு ரூபாவுக்கு நாம் பால்மாறினால் அவன் வேலையைப் பிறர் செய்து நேர்த்தியாக்குதல் அரிது; மாறுபடுத்தவும் கூறும் என்று கூறினார். அப்படியே அவர் வழங்கிவிட்டார். அறமும் முறையும் அறியாத அவனிடம் நமக்குப் பேச்சுத் தேவையில்லையென்பது, அடிகளார் கருத்து. நாட்டுப்புறத்து மக்களிடம் கற்றோர் பழகுதல் அவ்வளவு எளிதன்று. பொருள் ஒன்றே ஏழைகளின் குறிக்கோள்; செல்வர் களாயிருந்தாலும், நாட்டுப் புறத்தவர், அதற்கே உள்ளங் கொண்டிருப்பர். ஒரு முறையுமின்றி எல்லாம் செய்வர்; நிமிர்ந்தும் நடப்பர்; அவர்கள் கருத்தறிதலும் எளிதன்று. `நாளைக்கு வருகிறேன் என்பார்கள், ஆனால் வரமாட்டார்கள்; `சொல் மாறக் கூடாதே என்னும் முறைமை அவர்களுக்கு இல்லை; பிறரையும் வராதபடி நிறுத்திவிடுவர்; மிகச் சிறிய இன்னல்களையும் மிகப் பெரிய துயரங்களாக மேற்கொண்டு, அலுவலையும் கெடுத்துக் கொள்வார்கள். அவர்கள் பேச்சில் முன்பின் இயைபு இராது; உறவினர் பிணிப்பு மிகுதியும் உடையவர்கள் எந்தக் கூட்டத்தாரும் தமக்குள், அறத்துக்கு மாறான திருடு முதலிய ஒழுக்கக் கேடுகளுக்கும், ஓர் ஒற்றுமை உடையவர்கள். இங்ஙனம் எத்தனையோ பல, கற்றாரோடு மாறுபட்ட இயல்புகளை அவர்களிடையே காணலாம். `இன்னது மரியாதை தரும் சொல், இன்னது அல்லாதது; இன்னவர்க்கு இன்னபடி நடக்க வேண்டும்; நாட்டுக்கு நற்செயல்கள் முக்கியம் என்பனவெல்லாம் அவர்களுக்குப் பிழைப்பை ஒட்டியே கிடப்பன. `தமக்கு நல்லது இது, நீடித்தது இது என்பன வெல்லாம் அறியமாட்டார்கள்; அவர்கள் வாழ்க்கைப் போக்கே, உயர்ந்தோர் இயலுக்கு மிகவும் வேறுபாடானது. ஏனென்றால், பெரும்பாலார், அவர்களில் கற்றவர் அல்லர்; ஆனால், கற்றவர்களிடையே காணப்படும் மோசங்கள், வல்லமையாகச் செய்யும் இடையூறுகள் முதலியன அவர்களிடம் பெரும்பாலுங் காணமாட்டா. பெரும்பாலோர் கள்ளங் கவடற்ற மாந்தர்கள்! அடிகளார் எல்லா நிலைகளையும் நன்கறிந்தவர் களாதலின், நாட்டுப்புறத்தவர்மேல் மிக்க இரக்கமே கொண்டு, தமது இழப்பையும் பொருட்படுத்தாமல், பல வகையான உதவிகள் செய்து, அவர்களை மகிழ்விப்பார்கள்; அவர்கள் மகிழ்ச்சிக்கு ஏற்றபடி வேடிக்கைகள் செய்வர்; கதைகள் பலவும் கூறுவர். நல்ல நாட்களில் ஆடைகள், தின்பண்டங்கள், சில வெளிநாட்டுப் பொருள்கள் முலியனவும் வழங்குவார். உணவு இடாமல் வேலை வாங்க மாட்டார்; உணவு முதலிய அடிப்படைத் தேவைகளில் அம் மக்களின் உள்ளம் நிறைவு கொள்ளுதலை அடிகள் அறிவர்; அவர்களிடையே அடிகளைப் பார்த்தால், அவர்கள் ஒருவராகவே அவர் தோற்றுவார்; `அவரவர் பண்பறிந்தாற்றுதல் என்னும் திருவள்ளுவர் திருமொழி, அடிகளார்பால் நன்றாகச் செயலுற்றிருந்தது; திருத்தலங்களுக்குத் திருப்பயணம் சென்ற காலங்களில் இவ் வியல்புகள் பலவும் உடனிருந்து யான் கவனித்திருக்கிறேன். மாணவர்களேயாயினும், அவர்களை வேலையிட உரிமை இருந்தாலும், அவரவர் தரத்திற்குத் தக்கபடியே சில பணிகளை அவர் செய்யச் சொல்வார். ஒருவர் தம்மை மதிக்கா விட்டால், தாமும் அவரை மதியார்; தொடர்பை விட்டு விடுவார். தமக்கு ஒருவர் உதவ வில்லையென்றால், தாம் அவரைப் பின் தொடரார். ஒரு முறை, சொன்னபடி கேட்க வில்லையென்றால், அடுத்த முறையே அவரை ஏவமாட்டார்; தம் கருத்துக்கு மாறுபட்டவரைப் பகைப்பது அவருக்குப் பழக்கமில்லை. திருந்தி வந்தால், அன்பு கொள்வார்; அல்லாவிட்டால், மறந்து விடுவார்; மனிதர் என்னும் அளவுக்குமட்டும், எவையேனும் உதவிகள் செய்ய வேண்டுமானால், செய்வார்; அதற்குத் தயங்க மாட்டார்; உதவி செய்வதற்கென்றே ஒரு வைப்பும் உடையவர்; அடிகள் தம் இயல்புகளைப் போலவே மற்றவர் பெருமைகளையும் நினைந்து, தம்மால் இயலாத ஒன்றைப் பிறரைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தமாட்டார். யாரும் உரிமையுடன் வாழவேண்டும் என்பது அவர் கருத்தானதால், அலுவலுக்கு யாராவது முயலும் போதும், `பிறரிடம் வேலை பாராமலேயே தமிழகத்துக்குச் செய்ய வேண்டிய எத்தனையோ வகையான தொண்டுகளை மேற்கொண்டு காலங் கழிக்கலாமே என்று முதலில் சொல்லிப் பார்ப்பார். அவ்வாற்றல் அமைவது எளிதன்று; அமையாதவராய் இருந்தால், தாமே அவர் அலுவல்களுக்குக் கைச்சாத்துக்கள் கொடுத்தும், அறிந்தவர் களிடம் தெரிவித்தும், அலுவல் வாங்கித் தருவார். திரு.வி.க. அவர்களும் இக் கொள்கை உடையவர்களே. இளமையில் நான் அலுவலுக்கு முயன்ற காலங்களில் அடிகளும் திரு.வி.கவும் தம்முள் இவ்வகையில் ஒத்து நின்று, என்னைத் தனியிருந்தே தொண்டுகள் செய்ய உருவாக்கினார்கள்.அதன் காரணமாகவே 23-வது வயதில் ஓரளவு ஒழுங்கான ஊதியம் கிடைக்கக்கூடிய என் அலுவலை நான் விட்டு விட்டேன். முயன்று, தனி நிலையில் உரிமையுடன் வாழத் தெரிந்து கொண்டேன். வருவாய் அதனால் குறைவு படவில்லை; பொருட் பெருக்கமுறவும் அரிய பல தொண்டுகள் செய்யவும் வாய்ப்பாயிற்று; வணிகர்களும், எத்தனையோ கல்லாதார் பலரும், தொழில் தலைவர்களிடம் உழவும் வாணிகமும் தொழிலும் கற்றவர்களாகிப் பெருஞ் செல்வர்களாய்த் திகழ்கின்றார்கள்; அவர்களும் ஓரளவேனும் பொதுக்கல்வி உடையராதல் நன்று; உயர்ந்த பொதுக் கல்வி எல்லார்க்கும் வாய்ப்பது அரிது! வாய்ந்தாலும் பெரும்பான்மையோர் தொழிலில் ஈடுபடுதல் நல்லது; எல்லார்க்கும் நாட்டில் அலுவல் முறை அமைவதும் அருமை; அமைந்தாலும் உரிமைத் திறம் கூடிவராது. அடிகள் அடிக்கடி ஒன்று கூறுவார்கள். `உலகம் பொருளில் இருக்கிறது; பொருள் ஒன்றே அதன் குறிக்கோள்; அறம் முதலியனவெல்லாம் அதன் பின்புதான்; நீ உன் வாழ்க்கைக்குப் பொருளை நிலைநிறுத்திக் கொள்வது முதன்மை; அதற்காக, எளிய பொது மக்களைப்போல் பொருளையே நாடி, அறங்களை இழந்துவிடக் கூடாது. அறவழியிலேயே முடிந்த அளவு பொருள் தேடுதலில் கருத்திருத்தல் வேண்டும். அதற்கு ஏற்ற முறையில் ஒவ்வொரு நாளையும் வீணாக்காமல் நீ பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அறிவுரை எனக்கு மிகவும் பொருத்தமாய் அமைந்து, என்னை முன்னேற்றி யிருக்கிறது; தொடக்கத்தில் முயற்சியா யிருந்தாலும், வரவர அதன் இனிமையும் ஏற்றமும் நன்கு தெரிகிறது. நமது திருமறையாகிய திருக்குறள் நூலில், பொருட் பகுதியே மிகுதி; இது இடைப்பட்டதே தவிர முதற்பட்டது அன்று. அறவழியில் பொருள் தேடவைக்கும்; கடைசியில் இன்பம் கூட்டும். இது, திருக்குறள் கருத்து. திருவள்ளுவரை நாம் மதித்தால், அவர் சொல்லையும், போக்கையும் மதித்தொழுக வேண்டும்; வெற்று மதிப்பும் பேச்சும் எதற்குதவும்? பொருட்பால் 108 அதிகாரங்களில் ஓர் அதிகாரமே `பொருள் செயல் வகை என்பது. மற்ற 107 அதிகாரங்களும் அதனைக் கையாள்வோர் பெறவேண்டிய, பெற்றிருக்க வேண்டிய குண நலன்களையே கூறுகின்றன. அவற்றைப் பின்பற்றுவோர், சிறப்பு மக்களாக உயர்கிறார்கள்.அல்லாதோர் எவ்வளவு கல்வி உடையவரானாலும், எவ்வளவு சொத்து உடையவரானாலும், பதவிகளால் எவ்வளவு பெருமை கொண்டவரானாலும், அவரைத் திருவள்ளுவர் மதிப்பதில்லை. பொதுமக்களாகவே அவர்கள் கருதப்படுகின்றனர். இங்ஙனமெல்லாம் அடிகளார் உலகில் அமைந்துள்ள பொது மக்கள் நிலையையும், சிறப்புமக்கள் நிலையையும் அறிந்து அவரவர் பண்பறிந்து நடந்து கொள்வர்; உலகியல் திறம் மிகுந்து 75 ஆண்டுகள் நம் கண்ணெதிரில் ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்து, பல நூற்றாண்டுகள் செய்து மறைந்திருக்கிறார்கள்; அடிகளார் உலகியல், திருமறை உலகியல் !மறைமலையடிகளின் உலகியல் திறன் - சிவத்திரு அழகரடிகள் மறைமலையடிகள் நூற்றாண்டு நினைவு மலர் (பக். 1 - 10) மறைமலையடிகளின் மும்மொழிப்புலமை இவ்விருபதாம் நூற்றாண்டில் ஈடும் எடுப்புமின்றித் திகழ்ந்த மாபெரும் புலவர் மறைமலையடிகள் என்பது, எல்லார்க்கும் ஒப்ப முடிந்த வுண்மையாகும். உலக மொழிகள் (ஏறத்தா) மூவாயிரத்துள், ஒருபோதும் வழங்கா இலக்கியப் பெருமொழி யென்னும் வகையிற் சமற்கிருதமும், என்றுமுள்ள உலகமுதல் உயர் தனிச் செம்மொழி யென்னும் வகையில் தமிழும், உலகப் பொதுக் கலவைப் பெருமொழி யென்னும் வகையில் ஆங்கிலமும், தலைசிறந்த மொழிகளாகும். இம் மூன்றும் ஒருங்கே கைவந்தார் பலர் இருந்தாரேனும், அவரனைவருள்ளும், எவரெத்து (Everest) என்னும் வெள்ளிமலை போலுயர்ந்தும், அமேசான் (Amazon) என்னும் அமெரிக்க ஆறுபோ லகன்றும், அமைதி வாரியின் (Pacific Ocean) தென்னகழி போலாழ்ந்தும், பிறங்கித் தோன்றிய பெரும் புலமை வாய்ந்தவர் மறைமலையடிகளே யென்பது, மிகையாகாது. தமிழ்ப் புலமை தமிழகத்துத் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த புலவர் பல்லாயிரவருள் ஒவ்வொருவரும், வான்குருவி யின்கூட வல்லரக்குத் தொல்கறையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாங்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது (ஔவை. தனிப்.) என்னும் இயற்கை நெறிக் கிணங்க, ஒவ்வொரு துறையி லேயே வல்லுநரேனும், அடிகள் எல்லாம் வல்ல இறைவனருளால் இந்நெறிக்கு விலக்காகவே படைக்கப் பட்டாரென்பது, வெள்ளிடைமலை. எத்துணைய வாயினுங் கல்வி யிடமாறிந் துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்துஞ் சொல்வன்மை யின்றெனி னென்னாமஃ துண்டேற் பொன்மலர் நாற்ற முடைத்து அடிகட்குக் கல்வன்மையோடு சொல்வன்மையுங் கலந்திருந்ததனால், அவர் கல்வி நன்மணப் பொன்மலாயிற்று. கல்வன்மை மட்டுமுள்ளார் என்றும் மாணவராயே யிருப்பர்; கல்வன்மையொடு சொல்வன்மையு முடையாரே ஆசிரியராய் விளங்கிப் பிறர்க்குப் பயன்படுவர். சொல்வன்மை, உரைநடை வன்மையும் செய்யுள் வன்மையும் என இரு திறத்தது. அவ்விரு திறனும் உடையாரான அடிகள், நாவலரும் பாவலருமாகவும், நூலாசிரியர், நுவலாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், பெயர்ப்பாசிரியர் முதலிய பல்வகை யாசிரியராகவு மிருந்ததொடு, தலைசிறந்த ஆராய்ச்சியாள ராகவும் விளங்கினமை நாடறிந்தது, உலகறிந்தது. ஆங்கிலப் புலமை எழுத்தொலி யொழுங்கின்மை, (Shall, Will, Should, Would முதலிய) சில துணைவினை யாட்சி, வினையின்பின் முன்னீடு (Preposition) சேர்ந்துவரும் மரபு வழக்குப் (Idioms and Usages) பெருக்கம், சில சொற்றொடர்ப் பொருள் மயக்கு, இலத்தீன், பிரெஞ்சு முதலிய பிறமொழிச் சொற்றொடர்க் கலப்பு, சொற்பெருவளம் முதலியவற்றால், ஆங்கிலம் ஐரோப்பியரும் அவர் வழியினரு மல்லாதார் கற்கச் சற்றுக் கடினமான மொழியே. அதனால், மதிநுட்பம், நினைவாற்றல் முதலிய அகக்கரண வலிமையும், பேச்சுப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியுங் கூடிய பல்லாண்டுழைப்பும், உள்ளவரே ஆங்கிலப் புலமையும் பேச்சாற்றலும் பெறுதல் கூடும். அங்ஙனம் பெற்ற பின்பும், அழகிய இலக்கிய நடையிற் பேசுதலும் எழுதுதலும் அரிது. அடிகளோ இந்தியருள் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற ஆங்கிலப் பேராசிரியரும் எற்றே யிவர்க்கு நாமென்று கருத்தழியவும், ஆங்கிலருள்ளும் பெரும்பாலார் அம்மா பெரிதென்று அகமகிழவும், அழகிய இனிய இலக்கண நடையில் கேட்டார்ப்பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப. தமிழர் மதம், மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை, சைவசித்தாந்த ஞானபோதம், வேளாளர் நாகரிகம், சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா, பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை முதலிய பல நூல்களில் ஆங்கில முகவுரை வரைந்ததோடு, 133 பக்கங் கொண்ட “The Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge” என்னும் ஆங்கில நூலையும் வெளியிட்டுப் போந்தார். “Ancient and Modern Tamil Poets”, “Can Hindi be the Lingua Franca of Inida?” என்பனவும் அவரியற்றிய ஆங்கில நூல்களாகும். தம்மிடம் ஆங்கில நற்சான்று பெறவந்தவர்க் கெல்லாம், அவர் வேண்டியவுடன், அவர் விரும்பியவாறே ஒரு சிறிதும் முயற்சி யின்றித் தாய்மொழியிற்போல் மிக எளிதாக விரைந்து எழுதித்தந்த அடிகளின் அளவிறந்த ஆற்றலை, அவரிடம் பெற்றவர் அனைவரும் அறிவர். சமற்கிருதப் புலமை ஆங்கிலத்தினும் மிக மிகக் கடினமானது சமற்கிருதம். எழுத்துப் பெருக்கம் (51), ஒலிக்கடுமை, மூவெண் இலக்கணப் பால், பிரியா வேற்றுமை யுருபு, புணர்ச்சி நெறிகளின் பல்வேறு விலக்கு பெயர்களின் வேற்றுமைப் பாடும் (Deciension of Nouns) வினைகளின் புடைபெயர்ச்சியும் (Conjugatiar of verbs) பல்வேறு முறைப்படல், பேச்சுவழக்கின்மை, பன்மொழிச் சொற்கலப்பு, வேர் தெரியாச் சொற்சிதைவு முதலியன பொதுவாக மொழி வெறியரும் கடுவுழைப்பாராய்ச்சியாளருமன்றிப் பிறர் கற்க முடியாவாறு சமற்கிருதத்தைக் கடினமாக்குங் கூறுகளாம். ஆயினும் அடிகள் அம் மொழியையும் அதன் இலக்கியத்தையும் அமைவுறக் கற்றுத் தேர்ந்தது வியக்கத் தக்கதே. அடிகளின் சமற்கிருதப் புலமை, காளிதாசனின் சாகுந்தல நாடகத் தெள்ளிய தமிழ் மொழி பெயர்ப்பு நூலாலும்; ஆரிய வேத நூற் கல்வி, சிவநெறி தமிழரதே என்று நிலைநாட்டும் வண்ணம் தமிழர் மதம் பற்றிய நூல்களிலெல்லாம் வேதபிரமாண உபநிடத இதிகாச புராணங்களினின்று எடுத்துக் காட்டும் சான்றுகளாலும், தென் புலத்தார் யார்? என்பது போன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளாலும், தெற்றெனத் தெரியலாகும். இதுகாறும் எவரும் அவற்றைப் பற்றிக் குறை கூறாமையும் இதனை உறுதிப்படுத்தும். பொதுநலத் தொண்டு பொது மக்களாயினும் புலமக்களாயினும், மக்கள் மனப்பான்மை இருவேறு வகைப்பட்டதாகும். அவற்றுள், ஒன்று பெரும் பொருளீட்டித் தம் குடும்பத்தையே பேணுவதையும், இன்னொன்று தெளிந்த அறிவு பெற்றுப் பொதுநலத் தொண்டே சிறப்பாக ஆற்றுவதையும், குறிக்கோளாகக் கொண்டனவாகும். இதனையே, இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு (குறள் 374) என்றார் திருவள்ளுவர். தமிழர் தம் முன்னோர் நிலையினின்று இறப்ப இழிந்து, அறிவிலிகளாய் அடிமைத் தனத்தில் உழல்வதைக் கண்டு பொறுக்கமாட்டாது, அவரைக் கரையேற்றுதற்கே அடிகள் வருந்திக் கற்று மும்மொழிப் புலமையும் செம்மையிற் பெற்றார். அவர்க்கு வேண்டிய படைக்கலம் பரந்த கல்வியறிவே. `ஆற்றவும் கற்றார் அறிவுடையார் என்றார் முன்றுறையரையனார். இக்கால வுயர்கல்வி அறிவியலும் (Science) கம்மியமுமே (Technology) யாதலாலும், அதனைப் பெறும் வாயில் ஆங்கிலமே யாதலாலும், அதிற் புலமை பெறுவது இன்றியமையாத தாயிற்று. அஃதின்றி, தொலைவிலுணர்தல், மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி முதலிய நூல்களை இயற்றி யிருக்கவும் முடியாது; மேனாட்டாரின் மெய்ப்பொருள் நூல்களைக் கற்றிருக்கவும் முடியாது; தம் ஆங்கில முகவுரைகளாலும் ஆங்கில நூலாலும் மேலையர்க்குத் தமிழ் நாகரிகத்தின் மேம்பாட்டைத் தெரிவித்திருக்கவும் முடியாது. சமற்கிருதக் கல்வி ஆங்கிலக் கல்விபோல் அறிவடைய அத்துணை உதவா விடினும், தமிழ்ப் பகைவரின் போலிக் கூற்றுக்களை மறுக்கவும், ஆரிய நாகரிகத்தின் தாழ்நிலையை உள்ளவாறு தமிழர்க்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டவும், அதனையுங் கற்க வேண்டிய தாயிற்று. அடிகள் எழுதியுள்ள சிறியவும் பெரியவுமான (ஏறத்தாழ) அறுபான் நூல்களுள் எதை யெடுப்பினும், அது தமிழரினப் பொது நலத்திற்கன்றித் தந்நலத்திற்காக எழுதப்பட்டதன் றென்பது எவரும் மறுக்கொணா அங்கை நெல்லிக்கனி. ஒரு மொழியிற் புலமை பெறுவதே அரிதாயிருக்க, முப்பெரு மொழிகளில் தப்பரும் புலமை பெற்றுத் தமிழிலும் ஆங்கிலத்திலும், பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய் நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி ஐயிரு குற்றமும் அகற்றியம் மாட்சியோ டெண்ணான் குத்தியின் ஒத்துப் படலம் என்னும் உறுப்பினில் பல்வகை நூலியற்றி, ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் அறிவுறுத்திய திறம், இறைவன் திருவருள் நிரம்பப் பெற்றாரன்றி, ஏனையர் எவரும் எய்துதற்கு எட்டுணையும் இயலாததேயாம். அடிகள் மறைந்து கால்நூற்றாண்டு கடந்தும், அத்தகு பெரியோர் அண்மையில் தோன்றும் நிலைமை அணுவளவு மின்மை, எத்துணை ஏக்கமுறக் காட்டுகின்றது அவர்தம் மும்மொழிப் புலமையை! - மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் மறைமலையடிகள் நூற்றாண்டு நினைவு மலர் (பக். 11 - 14) மறைமலையடிகளின் தனித்தமிழ்த் தொண்டும் எழுத்தாளர் கடமையும் தமிமொழியில் இலக்கியம் படைக்கும் எழுத்துப் பெருமக்கள் தமிழ் ஒரு மொழி, அதற்கும் ஏனைய மொழிகட்குப் போல் ஒரு வரம்பு உண்டு என்றுணர்ந்து அந் நல்வரம்புக்கு உட்பட்டு எழுத வேண்டும். என்று பிறந்தவள் என்று உணரகில்லாத் தமிழுக்கு ஓர் ஆற்றலுண்டு. அந்த ஆற்றலை எழுத்தாளர்கள் பெற வேண்டும்; அதனை மெலிக்காது மேன்மேலும் காலந்தோறும் வலுவாக்க வேண்டும். தன்னேரில்லாத் தமிழ் தனித்தியங்கும் இயற்கையது என்பதனைத் தொல்காப்பியம் முதலான அவைய நூல்களும் பின்னர்த் தோன்றிய பெருங் காப்பியங்களும் எண்பிக்கின்றன. தமிழ் குமரி மொழி என்று போற்றப்படினும் அஃது ஒரு முதுமொழி; அதனை அது வளர்ந்து வந்த இயற்கைப்படி வளர்க்க வேண்டும். ஐம்பது அகவை கொண்ட ஒரு முதியவர்க்கு மாற்ற வாரா, மாற்றிக் கொள்ள இயலாச் சில வாழ்க்கை மரபுகள் இருப்பதுமான, தமிழுக்கும் பல வரம்புத்தடங்கள் ஏற்பட்டு விட்டன. அத் தடங்கள் அடிப்படையிற்றான் அதனைத் தழைப்பிக்க வேண்டும். தனித்தியங்கும் வன்மையினால் ஒரு மொழி பெருமை யுடையது என்றோ, அயன்மொழிச் சொற்களின் கலப்பினால் ஒரு மொழி சிறுமைத்து என்றோ புகழ் பழி கூறுவது வேண்டாத தொன்று. இம் மொழி தனித்து நடக்கும் இயற்கை சான்றது. அம் மொழி கலந்து செழிக்கும் இயற்கை வாய்ந்தது என இருபா லினையும் அவ்வம்மொழியியற்கையாகவே கருத வேண்டும்; கருதி அவ் வண்ணம் வளர்க்க வேண்டும். தமிழ் ஞாலத் தொன்மொழி யாதலானும் பல மொழிகள் ஞாலத்திடைத் தோன்றுவதற்குப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே தோன்றி வளர்ந்து இலக்கண இலக்கியம் கண்ட செம்மொழியாதலானும், ஒரு குடும்பத்துக்கு ஒரு மகவு போல் உடன் பயில்மொழி யாதுமின்றித் தனித்து ஓடி விளையடி உரம்பட்ட செல்வமொழியாதலானும் அதனைத் தன்னியற்கைப்படி வளர்ப்பதுவே நெறி. ஆங்கிலம், இந்தி முதலான பன்மொழிகள் ஏராளமான மொழிகள் வழங்கிய உலகக் காலத்துப் பிறந்தன; கலப்பிற் பிறந்தன; கலப்பிலே வளர்ந்தன; கலப்பிலே வளரும் பெற்றியன. ஆதலின் அன்ன மொழிகளை அவை பிறந்த சூழற்படி வளர்ப்பதுவே நெறி. இவை மொழியியற்கையாதலின் பெருமை சிறுமை என்ற ஏத்துக்கும் ஏச்சுக்கும் இடம் யாண்டுண்டு? ஒரு மொழி தனித்தியங்கும் இயல்பிற்று எனக் கிளக்குங்காலை அம்மொழியில் எந்த அயற் சொல்லும் நுழையாது, நுழையக்கூடாது என்பது கருத்தன்று. ஒருநாடு உரிமைநாடு, விடுதலைபெற்ற தனிநாடு என்றால் பொருள் என்னைகொல்? பிற நாடுகளொடு பொருளியல் தொடர்போ, தூதுத் தொடர்போ, போக்குவரத்துத் தொடர்போ, மக்கள் தொடர்போ இல்லை என்று பொருள் கோடல் உண்டா? இத்தொடர்பெலாம் இருப்பினும் அவற்றின் மேலாண்மை இல்லை, தன் குடிமக்கள் நலனுக்கு உகந்த கொள்கைகளைத் தீர்மானிக்கும் உரிமை தனக்குண்டு என்பதுவே ஒரு நாட்டின் உரிமைக்குச் சான்று. நம் இந்தியப் பெருநாடு பிற நாடுகளின்மேல் மேலாண்மை செலுத்த விரும்பவில்லை; அயல்நாடுகள் தன்மேல் மேலாண்மை செலுத்துவதை விரும்புவதும் இடங்கொடுப்பதும் இல்லை. இந் நிலையைத்தான் அரசியலில் தனித்தியங்கும் உரிமை என்று கொள்கின்றோம். தமிழ் இன்னொரு மொழியை மேலாண்மை செய்ய விரும்பியதில்லை. இராசராசன் கடல் கடந்து ஆட்சி செய்த காலையும் தமிழ்மொழியை மேலாண்மை மொழியாகப் பரப்பவில்லை என்பதை நினைவு கொள்ளுங்கள். இன்னொரு மொழி தன்னை மேலாண்மை செய்வதைத் தமிழ் என்றும் விரும்பியதில்லை; எஞ்ஞான்ம் விரும்பப்போவது மில்லை. இது தமிழ் வரலாறு காட்டும் பார்வை. கறந்த தனிப்பாலைக் காய்ச்சும்போது சிறுதுளி தண்ணீர் ஊற்றுவது கலப்பாகாது. அஃது இயற்கை முறையாகும். காய்ச்சும் அளவுக்கு நீர் ஊற்றாது, பாலைப் பெருக்கும் அளவுக்கு நீரைச் சாய்க்கும்போது, வேண்டாத, தண்டிக்கத்தக்க கலப்படம் என்ற பெயர் பெறுகின்றது. வானத்தில் இருந்தபோது காரென்று பேர் கொண்டாய், நிலத்தில் விழுந்தபின் நீர் என்ற பேர் கொண்டாய், விற்பனை செய்யும் இந்த இடைச்சியர் கைப்புகுந்தபின் மோர் என்ற பேர்பெற்றுவிட்டாயே என்று ஓர் இடைக்காலப் புலவன் கலப்பின் மிகையை நகையாடப் படிக்கின்றோம். தனித்தமிழில் எழுதுமின், பேசுமின் என எம்மனோர் வேண்டுங்காலை ஓ அயற்கிளவிகூடப் புகலாகாது என்று இராவணன் கோட்டை போல மொழித்தடை செய்வதாகக் கருத்துக் கொண்டால், உண்மையல்லாத அவ்வீம்புக்கு தெய்வச்சிலையார் உரைப்படி வாய் வாளாதிருப்போம். தனித்தமிழ்த் தந்தை மறைமலை யடிகாளர், `மொழிகள் ஒன்றோடொன்று கலக்கப் பெறுதற்கு அவற்றை வழங்கும் மக்களின் நாகரிகமே வழியாயிருத்தலால் நாகரிகம் வாய்ந்த எந்த மொழியும் பிறமொழிக் கலப்பில்லாமல் இருத்தல் இயலாது. இது மக்களியற்கை யினையும் அவரது வாழ்க்கையின் இயல்புகளையும் அமைதியாக ஆராய்ந்து பார்ப்பவர்க்கல்லாமல் மற்றவர்க்கு ஒரு சிறிதும் விளங்க மாட்டாது. தமிழ்மக்கள் பண்டு தொட்டே நாகரிகத்திற் சிறந்த வராய் இருந்ததனால் அவரொடு பல மொழிபேசும் பலநாட்ட வரும் கலந்து பழகவே மற்ற மொழிகளின் சொற்களிற் சில தமிழிலும் காணப்படுவன ஆயின. இங்ஙனம் காணப்படுதல் தமிழ்மொழியின் நாகரிகச் சிறப்பினையும் அதன் வளப்பத்தையும் காட்டுகின்றதே யல்லாமல் அதற்கு அது தாழ்வா தலைத் குறிக்கின்றதில்லை என்று தெளிவுபடுத்தியிருப்பதை உணர வேடும். கறிக்கு உப்புப்போல, கலவிக்குப் புலவிபோல, கண்ணுக்கு மைபோல, இதழுக்குச் செவ்வைபோல கருத்துக்கு வலுவூட்டும் சில அயன்மைகள் ஒரு மொழியிற் கலப்பதைத் தனித்தமிழ்க் கோளிகள் மறிக்காது என்றும் வரவேற்பர். பாத்தி வாய்க்காலிலும், வாய்க்கால் ஆற்றலும், ஆறுகடலிலும் கலப்பதுபோல இக் கலப்பை இயற்கை வரவாக ஏற்றுக்கொள்வர். தனித்தமிழ் என்னும்போது இச் சிறு பனிக் கலப்பை உட்கொண்டே சொல்லுகின்றோம் என்பதை மீண்டும் வற்புறுத்துகின்றேன். ஆதலின் தொல்காப்பியத்தில் சில வடசொல் இல்லையா! சங்கப் பனுவல்களில் சில வடசொற்கிளவிகள் இல்லையா? என்று காட்டித் தனித் தமிழியக்கத்தைச் சாடுவது பொருந்தாது. `பொய்யோ எனும் இடையாள் என்று கம்பர் பெருமான் பாடியாங்கு, இல்லையோ என்று சொல்லு மளவுக்குச் சில வடசொற்கள் உளவேயன்றி அவற்றின் மேலாண்மை பரப்பு யாதுமில்லை. தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் அயன்மொழி வரவை மறிக்கவில்லை என்பதும் அவ் விருந்தின் வருகைக்குச் செவ்விய நெறிமுறைகளை வகுத்துக் காத்தன என்பதும் நினையத்தகும். தமிழ் தனித்தியங்க வல்ல மொழியாண்மை உடையது; அதனைத் தன்னியற்கைப்படி வளர்க்க வேண்டும் என்பதுவே அன்பர்களின் குறிக்கோள். இவ்வெளிய இயல்பான மொழிக்கோளைச் சாதி சமய அரசியல்களோடு பின்னிப் பிறழவுணர்தலும் உணர்த்தலும் பண்பாகாது. `வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு என்ற பாரதியின் மும்மணிகளை இயல்பாங்குக் கொள்ளாது ஏனைய மொழிகள் ஆழிய, ஏனையினத்தார் ஆழ்க, ஏனைய நாடுகள் வீழிய என்று எதிர் குதிர்ப்பொருள் கொள்வார் உளரேல், அவரைக் காணின் விலகியோடுவதல்லது வேறென் செய்வோம்? தனித்தமிழ் வேண்டும் என்ற கோட்பாட்டை அவ்வளவில் ஆராய வேண்டுமேயன்றி ஓரினத்தொடும் வடமொழியொடும் நாட்டு அன்பொடும் பொதுநோக்கொடும் வைத்துத் திரிபு செய்யலாகாது. தனித்தமிழை ஓர் இயக்கமாக உருவாக்கிய அடிகளாரின் மொழிக் கொள்கையைத் தேர்வுக்குப் படிக்கும் மாணவன் நிலையில் ஆராய்ந்தால் அப்பெருந்தமிழனின் உள்ளம் புலப்படாது. எவ்வினத்துக்கும் எம் மொழிக்கும் இந்திய வொருமைக்கும் அடிகளார் முரண்பட்ட குறுகிய நெஞ்சினர் அல்லர். `இவ்வாறெல்லாம் இவர்கள் (சிற்றரசர்கள், மடத்தலைவர் கள்) கையில் முடங்கிக் கிடந்து அவியும் பெரும் பொருட் குவியல்கள் எல்லாம் இவர்களை விட்டு நீங்கிப் பொது மக்கட்குப் பயன்படும் நிலைமையை அடையுமானால் இவ்விந்திய நாட்டில் வறுமையும் நோயும் அறியாமையும் தலைகாட்டுமா? இப் பெரும்பொருள் கொண்டு நூறாயிரக் கணக்கான கல்விச் சாலைகளை நாடெங்கும் திறப்பிக்கலாம்... ஏழையெளிய பிள்ளைகட்கு உண்டியும் உடையும் நூல்களும் வாங்கிக் கொடுத்துச் சம்பளம் வாங்காமல் கல்வி கற்பிக்கலாம்... இந்தியர்கள் தாமே தமது பொருள் கொண்டு புகைவண்டித் தொடர்கள், மின்வண்டிகள், வானவூர்திகள் முதலியன வெல்லாம் அமைத்துக் கொள்ளலாம்... பொது மக்கட்குப் பயன்படுந் துறையில் இறங்கி முயலாமல், நம்நாட்டுப் பொருள் மேல்நாட்டுக்குப் போய்விடுகின்றதே என்று சொல்லி ஆராய்ச்சியறிவு சிறிதுமில்லாத, சாதி வேற்றுமை சமய வேற்றுமைப் படுகுழியினின்றும் ஏற விருப்பமில்லாத நம் இந்திய மக்களை வீணே கிளப்பிவிட்டு இந்நாட்டுக்குப் பலவாற்றாற் பெருந்தீமைகளை உண்டு பண்ணுதல் நன்றாகுமா? இந்த ஒரு பகுதியிலிருந்து அடிகளாரின் இந்திய நோக்கும், பொதுமக்கள்பால் அன்பும், எளியவர்கட்குச் சம்பளம் வாங்காமற் கல்வியளிக்க வேண்டும் என்ற எதிர்காலப் பார்வையும் இன்னபிறவும் தெளிவாகின்றன. ஆதலின் தனித்தமிழை நாட்டன்புக்கு மாறாகத் திரித்தல் என்னானும் ஒவ்வாது. மறைமலையடிகளார் தனித்தமிழில் வீரநெஞ்சினராயினும் வட மொழியில் ஈரநெஞ்சினர்; அதன் பெருமையை நன்கு கற்று அறிந்தவர்; சாகுந்தல நாடகத்தில் தனிப்பற்றுக் கொண்டவர்; அதனை மொழிபெயர்த்ததோடு தனி ஆய்வும் எழுதியவர். அதனாலன்றோ தவத்திரு காஞ்சி காமகோடிப் பெருமகனார் அடிகளின் மொழி பெயர்ப்புச் சாகுந்தலத்திற்குப் பரிசு தரும் அறக்கட்டளை வகுத்தருளினார். இவ் வொப்புதல் ஒன்றே அடிகளின் வடமொழியன்புக்குச் சாலுங்கரியாகும். சாகுந் தலத்தை மேனாட்டு முறையில் ஆயும் வேட்கை தமக்கு எங்ஙனம் எழுந்தது என்பதனை அடிகள் ஓர் ஆங்கில முகவுரையிற் பின்வருமாறு கூறுகின்றார்: “Years ago I happened to hear an English Lecture delivered by an able brahmin scholar on this drama of Kalidasa. After dwelling on some of the excellences of the play, when he came to speak of the Character study of the poet, he, instead of going right through the speeches, manners and action of each dramatic personage and trying to exhibit whether or not there were special features in each,, summarily dismissed it by saying that Kalidasa was sadly wanting in his delineation of character and is therefore no peer of Shakespeare the prince of the dramatists. That sweeping remark of the learned lecturer kindled in me a burning desire to make a comparative study of the dramatic art of the two poets” இந்திய நாடகப் பெரும் புலவரான காளிதாசனைக் குறை கூறியது பொறாத அடிகளார் கொதித்தெழுந்து செகப் பிரியரின் திறனாய்வுகளையெல்லாம் கற்று எங் காளிதாசனும் செகப்பிரியருக்கு இணையான நாடகப்புலவனே என்று நிலைநாட்டிய பெற்றியைக் கண்டு இறும்பூதெய்துகின்றோம். உரிய தமிழ்ச் சொற்கள் இருக்கவும் வடமொழிச் சொற்களை வேண்டுமென்றே திணித்தல், அதனால் இருமொழிப்புலமை பெற்றதுபோலக் காட்டல், பழகு தமிழ்ச் சொற்களை ஆளாது இறக்கச் செய்தல் என்றினைய காணங்களால் ஆசிரியர் அவ் வெழுத்தாளர்களைத் தாக்கு கின்றாரேயன்றி வடமொழியை அயன்மொழி என்றளவில் தாக்கவில்லை. வடமொழி வாழ்வுக்கு அப் பெருமகனார் பகைஞர் அல்லர். வாழும் நற்றமிழில் வடமொழியைக் கலக்காதீர்கள்; வடமொழியைத் தனியே முழுதும் உயிர்ப்பிக்க முயன்றாலும் அதனைச் சிறிது பயனுடையது என்று சொல்லலாம் என்பது அடிகள் கருத்து. அவர்தம் நெடுநோக்கின்படி, சில திங்களாக இந்திய வானொலியில் நாட்செய்திகள் வடமொழியிலும் சொல்லப் பெறுவதைக் கேட்கின்றோம். தனித்தமிழ்த் தளபதியாம் அடிகளார் வேறு அயன்மொழி களை எல்லாம் ஏற்றுக்கொண்டு வடமொழியொன்றை மட்டுமே மறுக்கின்றார் என்று மயங்க வேண்டா. ஆங்கில முதலான பிறமொழிச் சொற்களையும் கடிவதில் அவர் பின்னடைய வில்லை. பன்னூறாண்டு ஒன்றி வந்த வடமொழியளவில் கலப்பு நேர்ந்திருந்தால் தனித் தமிழியக்கம் என ஒன்று தோன்றி இவ்வளவு விரைவாக வளர்ந்திராது. அரசியலாலும் கல்வியில் மேலாண்மையாலும் ஆங்கில மொழிக் கலப்பு மண்டி வந்தமையின், தமிழுக்கு இருந்த கல்வியிடங்களும் சொல்வழக்குக் களும் குறைந்து ஒழிந்தமையின், இவ்வியக்கம் உயிர்ப்பும் உரமும் பெற்றது. இக் கலப்புச் செய்தவர் ஓரினத்தார் அல்லர். தமிழகத்தில் எல்லா இனத்தாரும் கலப்பே பெருமை என்று சூதாடிகள் போல வாய்க்கும் எழுத்துக்கும் வந்தவற்றை யெல்லாம் தமிழ் என்ற மொழியின் பேரால் சுமத்தலாயினர். தமிழின் உருவத்திற்கேற்பக் கூடத் திரித்துப் பிற சொற்களை வழங்காமல், வேற்றொலியும் வேற்றெழுத்தும்படக் கிடந்தாங்கு வழங்க லாயினர். `வடசொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தமிழுக்குப் பொருந்தாத் திரிபுபடுத்தாமல், இனிய மெல்லிய தமிழ்ச் சொற்களின் இடையே அவற்றை அங்ஙனமே எழுதினால் அவை தமிழின் இனிமையிலும் அருமையிலும் பழகினார்க்கு எவ்வளவு அருவருப்பாய்த் தோன்றுகின்றன என்று அடிகளார் பெருங் கவல்வுறுவதைப் பார்க்கின்றோம். மறைமலையடிகளின் தனித்தமிழியக்கம் தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறை போகாதும் காத்தது. தமிழின் `வயிற்றிலிருந்து முன்பு பல திராவிட மொழிகள் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியது போல, மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது. இன்று பாட நூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒரு சார் இளைஞர் கூட்டம் எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூயநீராகக் காத்தல்போலத் தமிழைத் தூய தமிழாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதியிருந்தாலும் பல செய்தித் தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. சொற்பொழிவுகள் நல்ல தமிழில் கேட்கப்படுகின்றன. வாழ்த் துக்கள் வரவேற்புக்கள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந் நன் மாற்றங்களையெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த்தாய் பெற்றாள் அத் தவமகன் அடிச்சுவட்டை அன்புச் சுவடாகப் போற்றிப் பாலின் தூய்மைபோலத் தமிழின் தூய்மையைக் கடைப்பிடித்து வாழும் இளைய மறைமலை யடிகள் இன்று பல்கிவருப. ஆதலின் தமிழ், தனித்தடத்திற் செல்லும் புகைவண்டி போலப் பழைய புதிய தன்சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி முன்னேறும் என்று உறுதி கொள்வோம். தனித் தமிழியக்கம் தோன்றிய இந்த அரை நூற்றாண்டுக்குப் பின்னும் கூடுதலான மொழிக் கலப்பே தமிழ் வளர்ச்சியென எண்ணி எழுதிக் கொண்டு வரும் எழுத்தாளர்கள் ஒருபாற் பெருகி வருவதையும் நாம் காணாமல் இல்லை. இவ்வெழுத்தாளர்கள் வடசொற் கலப்பினும் மிகுதியாக ஆங்கிலத்தைத் தொடர் தொடராக, ஏன் பக்கம் பக்கமாக மாயமான்போலத் தமிழ் எழுத்திற்குள் கலக்கின்றனர். முன்பெல்லாம் தமிழ்க் கட்டிடத்தில் அயற் செங்கற்கள் இடைமடுத்தன. இப்போது அக் கட்டிடத்தின் தளங்களும் சுவர்களும் முகடுகளும் அயல்மொழியுருவமாகவே உள்ளன. அக்கட்டிடத்தில் தமிழ் எதுவென்று அறியுமாறில்லை. எதில் எது கலப்பு என்று சொல்லுவதற்கில்லை. பாலில் நீரா? நீரில் பாலா? தமிழின் பேரால் எழுதும் இவ் வெழுத்துப் பெருமக்கட்கு மறைமலையடிகளின் வாழ்க்கை காட்டும் ஒரு துணிவுண்டு. அடிகளார் வேதாசலம் என்னும் பேரால் பல ஆண்டுகள் வடமொழி கலந்து கலந்து நூல் எழுதியவர். அறிவுரைக் கொத்து, சிந்தனைக் கட்டுரைகள், குமுதவல்லி நாகநாட்டரசி, மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை என்ற அவர்தம் நூல்களின் முதற் பதிப்பெல்லாம் கலப்புத் தமிழில் ஆகியவை. தம் நாற்பதாம் அகவையில் தமிழ் மொழிக்குத் தாம் செய்யும் கேட்டினை உணர்ந்தார்; சங்க காலமுதல் தமிழியங்கி வந்த தனித்தன்மையை உணர்ந்தார். `நாமமது தமிழரெனப் பெற்றிருந்தும், தம்மானை அறியாத சாதியாருளரோ என்றபடி தமிழின் தூய்மையை அறியாது தமிழ்ப்போலி நூல்களை இயற்றினேனே என்று அவலக் கவலை கையாறு அழுங்கினார். அடிகள், வேற்று மதத்திலிருந்து தம் மதத்திற்கு மீளுவதுபோல, மொழித் தூய்மை யின்மையிலிருந்து மொழித் தூய்மைக்கு மாறினார். மாறி என்ன செய்தார்? எழுத்தாளும் பெருமக்களே எண்ணுங்கள்! கழுவாய் செய்வார்போல, இரண்டாம் பதிப்புக்களில் தம் நூல்களைத் தூய்மைப் படுத்தினார். தமிழ் நூல்கள் என்னும் பெயருக்குத் தகத் தமிழ்மை யாக்கினார். இதுவன்றோ வீரம்; இதுவன்றோ புகழ்; இதுவன்றோ மொழிநெறி. சிந்தனைக் கட்டுரைகளின் மூன்றாம் பதிப்பின் முகவுரைக்கண் அடிகள் தாம் தமிழ்த் தூய்மைக்குத் திரும்பிய நற்றமிழ் மாற்றம் பற்றி ஏதுக் காட்டுகின்றார்; வேண்டுகோள் விடுக்கின்றார். இந் நூல் இயற்றப்பட்டு முப்பதாண்டுகள் ஆயின. முப்பஃதாண்டுகட்குமுன் இந் நாட்டில் தமிழ்ப் பயிற்சியிருந்த நிலைமையோடு இப்போதிருக்கும் அதன் நிலைமையினை ஒப்பிட்டு நோக்குங்கால், இனித் தமிழ்மொழிப் பயிற்சி எங்கும் பரவும் என்றெண்ணி மகிழ வேண்டுவதாகின்றது. இந் நூலின் முதற் பதிப்பிலும், அக் காலத்தில் இயற்றப்பட்ட எம்முடைய நூல்கள் பிறவற்றிலும் வடசொற்கள் கலந்திருந்தன. தமிழறிஞர் பலர் அக் காலத்தியற்றிய நூல்களிலும் கட்டுரைகளிலும் வடசொற்கள் ஏராளமாய்க் கலந்திருந்தன. அங்ஙனம் வடசொற்களும் பிறசொற்களும் தமிழிற் கலத்தலால், நாடோறும் வழக்கில் உள்ள நிலம் நீர் நெருப்பு சோறு ஒளி கோயில் குளம் முதலான எத்தனையோ பல தமிழ்ச் சொற்களும் வழங்காமற் போதலையுணர்ந்து, பிறமொழிக் கலப்பைத் தமிழினின்றும் அறவே ஒழித்தற்கு முயலத் துவங்கினோம். அதனால் இற்றைக்குப் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன் வெளிவந்த இந் நூலின் இரண்டாம் பதிப்பு முற்றுந் தனிச் செந்தமிழ் நடையினதாகச் செய்யப்பட்டது. அங்ஙனமே எம்முடைய மற்றைய நூல்களும் தனிச் செந்தமிழ் நடையின வாகச் செய்யப்பட்டன; செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்யவே இப்போது தனிச் செந்தமிழ்நடையே பெரும்பாலும் எங்கும் வழங்கி வருகின்றது. தமிழ் வல்லவர்கள் எல்லாரும் இனித் தனிச் செந்தமிழில் திருத்தமாக எழுதினாலன்றி அவர்களுடைய நூல்கள் மணம் பெறா என்பதனை உள்ளத்திற் பதித்து அவர்கள் தமிழன்னையை ஓம்பி நலம் பெறுவார் களாக. அடிகளாரின் திருந்திய மொழிவீறும் மறுபதிப்பிற் செய்த மொழி யாண்மையும் புதினம் சிறுகதை நாடகம் என்றினைய கால இலக்கியங்களைப் படைக்கும் தமிழ் எழுத்துப் பெருமக்களின் உள்ளத்திற் பிறக்குமாக. இப் பெருமக்கள் தம் நூல்களின் மறுபதிப்பை மறுவற்ற தமிழ்ப் பதிப்பாக ஆக்குவார்களாக. `போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்ற ஆண்டாள் திருமொழிக் கிணங்க, பழம் பதிப்பைப் பிழையின்றியும் புதிய நூல்களைப் பிழை புகுதாமலும் தனித்தமிழ் வளம்பெறச் செய்து தமிழ்த்தாயின், தமிழினத்தின் நல்லருளை இப் புது வெழுத்தாளர்கள் பெறுவார்களாக. பொருள் எத்துணைச் சிறப்புடையதாயினும் கொள்ளும் கலம் தூயதாக இருத்தல் வேண்டும். `நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று என்று விழிப்புறுத்துவர் வள்ளுவர். ஆதலின் புதிய படைப்புக்கள் வழிவழி நிலைபெற்றுச் செல்ல வேண்டுமேல் மொழித் தூய பதிப்புகளாக மாற்றுங்கள். அமையுங்கள், நிலை பெறுமாறு எழுதுங்கள் என்று ஆக்க எழுத்தாளர்களை வேண்டுகின்றேன். மறைமலையடிகளாரின் நூற்றாண்டு விழாவில் தமிழ் எழுத்தாளர் எனப்படுவார் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள் இது. - டாக்டர் வ.சுப. மாணிக்கம் மறைமலையடிகள் நூற்றாண்டு நினைவு மலர் (பக். 15 - 26)