தமிழ் இலக்கணப் பேரகராதி பொருள் யாப்பு - 1 ஆசிரியர் பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் தமிழ்மண் பதிக்கம் TamilÆ Ilakkan|ap Pe#rakara#ti (A Tamil Grammatical Encyclopaedia) Porul@ - Ya#ppu - 1 by T.V. Gopal Iyer Pandit of the Pondicherry Centre of the École Française d’Extrême-Orient (French School of Asian Studies) Published by the TamilÆ Man| Pathippakam, Chennai 2005. Pages: 32+304 = 336 Price: 315/- முன்னுரை 1979ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் தமிழ் இலக்கணப் பேரகராதி ஒன்றனைத் தொகுத்து உருவாக்கும் பணியில் புதுச் சேரியில் உள்ள தொலைக் கீழைப் பிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளியில் அமர்த்தப்பட்டேன். இடையிடையே பணிக்கப்பட்ட ஏனைய பணி களுக்கு இடையிலும் அகராதிப் பணியைத் தொடர்ந்து 1995இல் ஓரளவு அதனை நிறைவு செய்தேன். இப் பணியில் எனக்கு உதவி செய்ய அமர்த்தப்பட்ட நாராயணசாமி ஐயர், குமாரசாமிப் பிள்ளை, அப்பாசாமி முதலியோர் பணியிலிருந்து இடையிடையே விடுவிக்கப் பட இப்பணியில் எனக்கு இறுதிவரை என் இளவல் கங்காதரனே உதவும் நிலை ஏற்பட்டது. இப்பணிக்குத் தொல்காப்பியத்தின் பழைய உரைகள் முதல் அண்மையில் வெளிவந்த பாவலரேறு பாலசுந்தரனாரின் தென்மொழி இலக்கணம் முடிய உள்ள பல நூல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டினவாக வேங்கடராசுலு ரெட்டியாரின் எழுத்ததிகார ஆராய்ச்சி, இலக்கணக் கட்டுரைகள், சுப்பிரமணிய சாத்திரியாரின் எழுத்ததிகாரச் சொல் லதிகாரச் குறிப்புக்கள், பாலசுந்தரனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி காண்டிகையுரை போன்ற சில நூல்களே மேற்கோள்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டில் வெளிவந்த இலக்கணம் பற்றிய கட்டுரைகள் பல இருப்பினும் அவையெல்லாம் இவ்வகராதி யில் இடம் பெறவில்லை. இவ்வகராதி பல தொகுதிகளாகப் பல தலைப்புப் பற்றிப் பிரித்துக் கூறப்பட்டிருத்தலின், எல்லா இலக்கண வகைகளுக்கும் பொதுவான சொற்கள் எங்கு இடம் பெற்றுள்ளன என்பதனை அறிதலில் சிறு சிக்கல் ஏற்படும். எடுத்துக்காட்டாக ‘வழக்கு’ என்ற சொல் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் முதற்கண் வருவதால் அச்சொல் பாயிரம் பற்றிய பகுதியில் விளக்கப்பட்டிருக்கும். தலைப்புக் களின் அகராதி அமைக்கப்பட்டபின் அத்தகைய சொற்களின் இருப்பிடம் அறிதல் எளிதாகும். இவ்வகராதிப் பணியில் இறுதி மெய்ப்புத் திருத்துதல் முதலிய வற்றில் என் இளவல் கங்காதரனே முழுமையாக ஈடுபட்ட போதி லும், என் தம்பி திருத்துவதற்கு முன்னரே மெய்ப்புக்கள் திருத்தத்தில் ஈடுபட்டுச் செயற்பட்ட சான்றோர் அனைவரையும் நன்றியொடு நோக்குகின்றேன். 17 தொகுதிகளாக அமையும் இந்த நூலினை அமைப்பதற்கு எனக்கு என் தம்பி வலக்கையாக உதவுவது போலவே, இந்நூலைப் பதிப்பிக்கும் இளவழகனாருக்கு உதவிய பதிப்பக உதவியாளர்கள் செல்வன் செ. சரவணன், செல்வன் இ. இனியன், செல்வன் மு. கலையரசன், அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.நா. இராமசுப்பிரமணிய இராசா, நா. வெங்கடேசன், இல. தர்மராசு ஆகியோர் இந்நூல் செம்மையாக வெளிவரப் பெரிதும் முயன்றுள்ள செயலைப் போற்றுகிறேன். இவர்கள் நோய்நொடி இன்றிப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இந்நூலை வெளியிட உதவிய எங்கள் தொலைக் கீழைப் பிரஞ்சு ஆராய்ச்சிப்பள்ளி நிறுவனத்தாருக்கு நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன். தொகுதிகள் 17 : எழுத்து - 2, சொல் - 4 , பொருள் - 11 (அகம் - 4, புறம் - 1, அணி - 2, யாப்பு - 2, பாட்டியல், பாயிரம், மரபியல் - 1, மெய்ப்பாடு, நாடகம், அளவை, நியாயம் ஏனைய - 1) தி.வே. கோபாலையர் முகவுரை எழுத்ததிகார இலக்கணப் பேரகராதியில், தொல்காப்பியம் முதலாக இன்று நம்மிடையே வாழ்ந்து வரும் இலக்கண இலக்கிய மொழியியல் பேரறிஞராம் ச.பாலசுந்தரனார் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றிய ‘தென்னூல்’ முடிய, இன்று நமக்குக் கிட்டுவனவாக நிலவி வரும் சிறந்த இலக்கண நூல் வரிசையில் இடம்பெறும் நூல்களும் உரைகளும் இடம் பெறுகின்றன. இக்காலத்தில் தொல்காப்பியக் கடல் என்று போற்றப்படும் அந்நூல் இயற்றப்பட்ட காலத்தே அது சிறுநூலாகவே யாக்கப் பெற்றது. அதன் எழுத்துப் படலத்தில் உள்ள 9 இயல்களிலும் விதிக் கப்படுவன எல்லாம் கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவற்றுள் கருவி நூல்மரபு முதலிய நான்கு ஓத்தும், செய்கை தொகைமரபு முதலிய எஞ்சிய ஐந்து ஓத்தும் ஆம். கருவிதானும் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. முதல் மூன்று ஓத்தும் பொதுக்கருவி; செய்கை ஒன்றற்கேயுரிய புணரியல் சிறப்புக் கருவி. நூல்மரபு, நூலினது மரபு பற்றிய பெயர்களாகிய எழுத்து - குறில் - நெடில் - உயிர் - மெய் - மெய்யின் வகைகள் - எழுத்துக்களின் மாத்திரை - இன்ன மெய்க்கு இன்னமெய் நட்பெழுத்து, பகை யெழுத்து என்பதனைக் குறிக்கும் மெய்ம்மயக்கம் - மெய்யெழுத் துக்கள், எகர ஒகர உயிர்கள், குற்றியலிகரம், குற்றியலுகரம் என்னு மிவை புள்ளிபெறுதல் - மகரக் குறுக்கம் உட்பெறு புள்ளியும் கோடல் - சுட்டு - வினா - அளபெடை - என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. அடுத்து, மொழிமரபு கூறும் விதிகள் நூல்மரபின் ஒழிபாக அமைந்துள்ளன. இதன்கண் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், அளபெடை, மொழியாக்கம், ஈரொற்றுடனிலை, மகரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம், போலியெழுத்துக்கள், மொழி முதலில் வரும் எழுத்துக்கள், மொழியீற்றில் வரும் எழுத்துக்கள் - என்பன இடம் பெறுகின்றன. பிறப்பியல், உயிர் - மெய் - சார்பெழுத்துக்கள் என்பவற்றின் பிறப்பிடங்களும் முயற்சியும் பற்றி மொழிகிறது. புணரியலில், எல்லாமொழிகளின் இறுதியும் முதலும் மெய் உயிர் என்ற இரண்டனுள் அடங்கும்; பெயரும் தொழிலும் என்றோ தொழிலும் பெயரும் என்றோ பெரும்பான்மையும் சொற்கள் புணருமிடத்து இயல்பாகவும் திரிந்தும் புணரும்; புணர்வன நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் ஆகிய இரண்டுமே; சொற்கள் வேற்றுமைப்பொருள் பற்றியும் அல் வழிப்பொருள் பற்றியும் புணரும்; இடையே சாரியை வரப்பெறும்; சில சாரியைகள் உருத்திரிந்தும் புணரும்; எழுத்துச்சாரியைகள் இவை, உடம்படுமெய் இவை - என இச்செய்திகளைக் காணலாம். தொகைமரபு என்னும் ஐந்தாம் ஓத்தின்கண், உயிரீறும் புள்ளியீறும் உயிர்மயங்கியலுள்ளும் புள்ளி மயங்கியலுள்ளும் ஈறுகள்தோறும் விரித்து முடிப்பனவற்றை ஒரோவொரு சூத்திரத் தால் தொகுத்து முடிபு கூறப்படுவனவும், உயர்திணைப்பெயர்ப் புணர்ச்சியும் விரவுப்பெயர்ப் புணர்ச்சியும் இரண்டாம் மூன்றாம் வேற்றுமையுருபு ஏற்ற பெயர்ப்புணர்ச்சியும், சில இடைச்சொற் களது முடிபும், எண் நிறை அளவுப் பெயருள் சிலவற்றது புணர்ச்சி யும் கூறப்பட்டுள. உருபியல், உருபேற்ற பெயர் சாரியை பெற்றும் பெறாமலும் ஒரோவழி நெடுமுதல் குறுகியும் வருமொழியொடு புணருமாறு கூறுகிறது. உயிர்மயங்கியலிலும் புள்ளிமயங்கியலிலும் அல்வழிப் புணர்ச்சி பெரும்பாலும் எழுவாய்த்தொடர்க்கே கொள்ளப்படு கிறது. வேற்றுமைப்புணர்ச்சி வேற்றுமையுருபுகள் தொக்க வேற் றுமைப் புணர்ச்சிக்கே கொள்ளப்படுகிறது. இப்புணர்ச்சிகள் பொதுவாகக் கூறப்பட்டாலும், ஆசிரியர் உயர்திணைப்பெயர் - விரவுப்பெயர் - கிளைப்பெயர் - நாட்பெயர் - திங்கட் பெயர் - எண் நிறை அளவுப் பெயர் - என்பனவற்றை விதந்தோதியே முடிக்கும் கருத்தினராதலின், இப்புணர்ச்சிகள் அஃறிணையில், கிளை முதலாகச் சொல்லப்பட்ட அப்பெயர்கள் நீங்கலான ஏனையவற் றிற்கே கோடல் ஆசிரியர் கருத்தாம். ஆசிரியர் ஈரெழுத்தொருமொழி என்று கூறியமை ஈரெழுத்துக் குற்றுகரச் சொல்லைத் தம் மனத்துக் கொண்டமையாலாம். குற்றிய லுகரம் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுக்கும். உயிரள பெடை என்பது நெடிலை அடுத்து வரும் ஒத்த இனக்குற்றெழுத்தே. புணர்ச்சியில் தொல்காப்பியனார் குறிப்பிடும் எழுத்துப்பேறள பெடை பிற்காலத்தே வழக்கு இறந்தது என்று கோடல் தகும். தொல்காப்பியத்தை அடுத்து நாட்டில் சிறப்பாக வழங்கி வந்ததாகக் கருதப்படும் அவிநயம் இராசபவித்திரப் பல்லவதரையன் உரையொடு 13ஆம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்து வந்த செய்தி நன்னூல் மயிலைநாதர் உரையாலேயே பெறப்படுகிறது. அந்நூலும் அதனுரையும் வழக்கிறந்து விட்டன. தொல்காப்பியத்தை அடுத்து இன்று வழக்கில் இருக்கும் ஐந்திலக்கண நூல் பெருந்தேவனார் உரையொடு கூடிய வீர சோழியமே. பல்லவர் காலத்திலே “பாரததேயத்து வழக்கிலிருக்கும் எல்லா மொழிகளுக்கும் தாய் சமற்கிருதமே” என்ற கருத்து மக்க ளிடையே உருவாக, அது 18ஆம் நூற்றாண்டு முடிய உறுதியாகக் கொள்ளப்பட்டு வந்தது. 11 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய வீர சோழியம் இக்கருத்தையுட்கொண்டு இயற்றப்பட்ட இலக்கணமே. வீரசோழியத்தின்கண், உயிரெழுத்துக்களை அடுத்து மெய் யெழுத்துக்களின் முன்னர் நெடுங்கணக்கில் ஆய்தம் இடம் பெற்ற செய்தி கூறப்படுகிறது. மகரக் குறுக்கம் மேலே பெறும் புள்ளியோடு உள்ளேயும் ஒரு புள்ளி பெறும் என்ற நுட்பமான செய்தி இந்நூலின் உரையின்கண்ணேயே காணப்படுகிறது. வடமொழிப் புணர்ச்சியில் அல்வழி, வேற்றுமை என்ற பொருள் பற்றிய பாகுபாடு இல்லை. ஆகவே, வீரசோழியச் சந்திப் படலத்திலும் அல்வழி வேற்றுமைப் பாகுபாடு குறிப்பிடப்பட்டிலது. வருமொழி முதலில் உயிர்வரின் குற்றியலுகரம் கெடும் என்னும் செய்தி இந்நூலிலேயே முதற்கண் குறிப்பிடப்பட, அச்செய்தி நேமிநாதம் நன்னூல் முதலிய பின் னூல்கள் பலவற்றிலும் இடம்பெறலாயிற்று. வடமொழிச்சொற்கள் தமிழொலிக்கேற்பத் திரித்து வழங்கப்படுமாற்றிற்கு இந்நூல் கூறும் விதிகளே நன்னூல் முதலிய பின்னூல்களிலும் கொள்ளப்படலாயின. வடமொழியிலுள்ள ‘ந’ என்ற எதிர்மறை முன்ஒட்டு வருமொழி யோடு இணையுமிடத்து ஏற்படும் திரிபுகளை இந்நூல் இயம்பிட, அதனை நேமிநாதமும் ஏற்றுக்கொள்ள, நன்னூல் அதனை நெகிழ்த்து விட்டது, ளகரத்திற்குக் கூறும் புணர்ச்சிவிதி ழகரத்திற்கும், இந் நூலாசிரியர்க்கு முற்பட்ட இலக்கியங்களில் பின்பற்றப்படவே, இந் நூலாசிரியர் இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் வரைந்துள்ள செய்தி இந்நூலில் புதிதாக இடம் பெறுகிறது. இச்செய்தியை நேமிநாதம் நன்னூல் போன்ற பின்னூல்கள் குறிப்பிடவில்லை. உடம்படுமெய்யை இந்நூலாசிரியர் ‘இ ஈ ஐ வழி யவ்வும், ஏனை உயிர்வழி வவ்வும், ஏ முன் இவ்விருமையும், என்று முதன்முறையாக வரையறுத்துக் கூறியவராவர். “அளபெடை மூன்று மாத்திரை பெறும்; அது நெடிலும் குறிலும் இணைந் தொலிக்கும் ஓரொலியே” என்ற இவரது கொள்கையே, பெரும்பாலும் பின்னூலார் பலராலும் மேற்கொள்ளப்பட்டது. ஏ யா எ - என்பன சொல் முதலில் வினாவாகும் என்ற இவர் கருத்தைப் பிற்காலத்து நூலார் பலரும் ஏற்றுக்கொண்டவராவர். அடுத்து வந்த நேமிநாதமும், நெடுங்கணக்கு வரிசையை , உயிர் - அடுத்து ஆய்தம் - அடுத்து மெய் - என்றே குறிப்பிடுகிறது. இந் நூலுள் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம் என்னும் இவற்றோடு ஒளகாரக் குறுக்கமும் குறிக்கப்பட்டுள்ளது. “உயிரள பெடை நெடிலொடு கூடிய ஓரொலியாம் இனக் குற்றெழுத்து; அது மூன்று மாத்திரை பெறும்” என்று வீரசோழியத்தை ஒட்டி நேமிநாதம் நுவல்கிறது. வடமொழித் தத்திதாந்த நாமங்களும் எதிர் மறை யுணர்த்தும் நகர முன்னொட்டுப் புணர்ச்சியும் வீரசோழி யத்தைப் பின்பற்றியே கூறப்படுகின்றன. வீரசோழியம் விதிக்கும் வடமொழியாக்கம் நேமிநாதத்தில் இல்லை. தொல்காப்பியத்தை அடுத்து மக்கள் உள்ளத்தே சிறப்பாக இடம்பெறுவது பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலே. முத லெழுத்தும் சார்பெழுத்தும் என்ற பாகுபாடு - சார்பெழுத்துப் பத்து என்பது - அவை ஒவ்வொன்றும் பற்றிய செய்திகள் - மொழிக்கு முதலில், இடையில், ஈற்றில் வரும் எழுத்துக்கள் - போலியெழுத் துக்கள் - என்பன எழுத்தியலில் இடம்பெற்றுள. உயிரளபெடை நெட்டெழுத்தின் நீட்டமாகிய மூன்று மாத்திரை, குறில் அறிகுறி யாக வருவதே என்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. பதவியலில், பகுபதம் பகுதி - விகுதி முதலிய உறுப்புக் களாகப் பிரித்துக் காட்டப் பட்டுள்ளது. பகுபத உறுப்புக்கள் விளக்கப்பட்டுள்ளன. பதவியல் நன்னூல் குறிப்பிடும் ஒருமொழிப் புணர்ச்சியாகிய புதுச் செய்தியே. இதன் இறுதியில் வடமொழி ஆக்கம் வீரசோழியத்தைப் பின்பற்றி வரையப்பட்டுள்ளது. ‘ந’ என்ற எதிர்மறை முன்னொட்டுப் பற்றிய செய்தி பேசப்பட்டிலது. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் வரைந்த உரையையும் உட்கொண்டு இயற்றப்பெற்ற நன்னூலில் தொல்காப்பியச் செய்திகள் பலவற்றொடும் அவ்வுரையாசிரியர் குறிப்பிட்ட செய்திகளும் இடம்பெறுகின்றன. தொல்காப்பியம் குறிக்கும் புணரியல் - தொகை மரபு - உயிர்மயங்கியல் - குற்றியலுகரப் புணரியல் - பற்றிய செய்திகள் பலவும் உயிரீற்றுப் புணரியலுள் அடக்கப்பட்டுள்ளன. அல்வழி யாவன இவையென விளக்கப்படுகிறது. உடம்படுமெய், குற்றுகரம் உயிர்வரக் கெடுதல் - போன்றவை வீரசோழியத்தைப் பின்பற்றியனவாம். நன்னூலில் காணப்படும் மாற்றங்கள் ‘மரபு நிலை திரியாது’ அமைந்தன என்ப. தொல்காப்பியத்தினின்று நன்னூல் சற்றே வேறுபட்டுக் கூறுமிடங்கள் பொருள்நிலை திரியாமையால் ‘மரபு நிலை திரியா மாட்சிமை’ யுடையவாய் முதல்நூற்கு மலைவுபடாமல் செல்லும் இயற்கைய ஆதலைச் சிவஞானமுனிவர் தமது பாயிரவிருத்தியுள் விளங்கக் கூறுமாறு ஈண்டுக் கருதல் தகும். இலக்கணவிளக்கம், நன்னூல் தொல்காப்பியத்தொடு மாறு பட்டுக் கூறும் ஒரு சில இடங்களைச் சுட்டி விளக்குகிறது. தனக்கு முற்பட்ட நூல்களில் விளக்கப்படும் வடமொழியாக்கத்தை இவ் விலக்கணநூல் நெகிழ்த்துவிட்டது. இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம் என்பனவற்றில் சில அரிய புணர்ச்சிவிதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அ - அந் - ந - நி - கு - வி - புணரப் புணர்ப்பது வடமொழியில் எதிர்மறையாகும் என்ற செய்தி இலக்கணக்கொத்தில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சிறப் பெழுத்து ஐந்தானும் திரிந்து ஆரியச்சொல் வடசொல்லாகித் தமிழில் வழங்கும் செய்தி இவ்விரண்டு நூல்களிலும் விளக்கப்படு கிறது. இச்செய்தி நன்னூலில் இடம் பெற்றிலது. தொன்னூல் விளக்கம் நன்னூலைப் பெரிதும் பின்பற்றியது; வடமொழியாக்கத்திலும் நன்னூலைப் பின்பற்றியுள்ளது. முத்து வீரியத்தில் தீர்க்கசந்தி முதலியவற்றிற்கு விதிகள் தனித்தனியே கூறப் பட்டுள. கோ + இல் = கோயில், மா + இரு = மாயிரு - முதலிய வற்றிற்குத் தனியே விதிகள் வகுக்கப்பட்டுள. சுவாமிநாதத்தில் குறிப்பிடத்தகும் விசேடமாக ஏதும் இன்று. அதன் ஆசிரிய விருத்த யாப்பு நயனுறுமாறு இல்லை. தொல்காப்பிய எழுத்ததிகாரத்து இளம்பூரணர் உரை - நச்சினார்க்கினியர் உரை - சென்ற நூற்றாண்டு மொழியியல் வித்தகராம் வேங்கடராசுலு ரெட்டியார், பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் இவர்கள்தம் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் - சென்ற நூற்றாண்டிறுதியில் வெளிவந்த பாலசுந்தரனார்தம் தொல்காப்பியக் காண்டிகையுரை - சிவஞான முனிவர் அரசஞ்சண்முகனார் வரைந் துள்ள விருத்தியுரைக் குறிப்புக்கள் என்னுமிவையும், வீரசோழியம் பெருந்தேவனார் உரை - நேமிநாதம் வயிரமேகவிருத்தியுரை - நன்னூல் மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், இராமாநுசக் கவிராயர், சடகோபராமாநுசாச்சாரியார் ஆறுமுகநாவலர் என்றின்னோர்தம் உரைகள் - என்னும் இவையும் ஏனைய மூல நூல்களின் செய்தி களொடு தொகுக்கப்பட்டு இவ்வெழுத்ததிகார இலக்கணப் பேரகராதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்கண் காணப்படும் குற்றம் குறைகளை நல்லறிஞர் பெருமக்கள் உரிய காரணம் சுட்டிக் காட்டுவாராயின், அப்பிழை பாடுகள் அடுத்த பதிப்பில் களையப்படும். அன்ன திருத்தங்கள் நன்றி யறிதலோடு ஏற்கப்படும். தி.வே. கோபாலையர் Eva Wilden École Française d’Extrême-Orient 16&19 Dumas Street, Pondicherry centre Pondicherry. Aug. 2005 Introduction Tamil grammar and poetics are old and venerable disciplines interwoven into a complex system the beginnings of which are lost in legend. What is fact, however, is that we are looking back on a textual tradition representing the thought of almost two millennia: a continuous discourse on Tamil language and literature, but also a dispute with other systems of knowledge, most notably the Sanskrit grammatical and poetological traditions. To give a rough chronology, for the first millennium, we have one great treatise encompassing the whole field and developing the basic structure that is taken up, with some modifications and extensions, by the whole later tradition. This is the famous Tolka#ppiyam, consisting of three parts, two of them devoted to two different aspects of grammar, which has been ever since split into two sections, namely ElÈuttu (phonology) and Col (morphology and syntax), while the third part treats of Porul@ (poetics). It is followed by a small work specialising in a particular field of poetics, namely that of Akam (love poetry), called the IrÈaiyan_a#r Akapporul@. The second millennium, probably a time of socio-cultural upheaval, sets in with a voluminous commentary tradition not only for the treatises that had been written so far, but also for wide parts of the older literature. In fact our understanding of the meaning of the older texts is basically indebted to these commentaries. Nevertheless, there is a parallel development of new treatises in all sub-disciplines, mirroring the confrontation with the change of language, the arising of new literary forms and the massive impact of North-Indian, i.e. Sanskritic modes of thinking and writing in the Tamilian South. To mention just a few of the most important titles, among the inclusive texts – comprising, just as the Tolka#ppiyam, the whole range of the field – there are the heavily Sanskritised Vi#raco#lÈiyam of the 11th century, and the Tamil-conservative Ilakkan|a Vil@akkam of the 17th century. Both of them extend the original structure of three sections, dealing with ElÈuttu (phonology), Col (morphology and syntax), and Porul@ (poetics), by another two subsumed under Porul@, namely Ya#ppu (metrics) and An|i (figures of speech). Among the influential treatises devoted exclusively to grammar we may list the Nan_n_u#l (12th century), the standard book on Tamil grammar after the Tolka#ppiyam, and the Pirayo#ka Vive#kam (17th century), again very Sanskritic. Poetics, for its part, seems to have been an even more fruitful domain, creating a number of branches with various specia-lisations. The first independent text on metrics is the Ya#pparun)-kalakka#rikai (10th century); the most notable exponent of systematic Akam poetics is the Nampi Akapporul@ (12th century), while the Pur_am genre (heroic poetry) is represented by the Pur_apporul@ven|pa#-ma#lai (9th century). The encyclopaedia presented here is an attempt to render accessible this wealth of materials to specialists and also to non-specialists. The vast topology and terminology of Tamil grammar and poetics are represented by key terms which are explained with reference to the corresponding su#tras in the treatises and additional explication from the various commentaries. The whole work comprises 17 volumes, structured in the traditional way into the three sections ElÈuttu (phonology), Col (morphology and syntax) and Porul@ (poetics), where 2 volumes fall on ElÈuttu, 4 on Col, and 11 on the various sub-disciplines subsumed under poetics: 2 for Ya#ppu (metrics), 2 for An|i (figures of speech), 4 for Akam (love topics), 1 for Pur_am (heroic topics), 1 for Pa#t@t@iyal (literary genres), Pa#yiram (prefaces) and Marapiyal (word usage), and finally 1 for Meyppa#t@u (physical manifestation), Na#t@akam (drama), Al@avai (valid means of knowledge), A#nantakkur|r|am (collocations to be avoided), Niya#yam (logic) and ValÈuvamaiti (poetic licence). The last of these volumes contains a bibliography. This sort of work of synthesis has long been a desideratum of research: it gives erudite references to a vast range of technical Tamil texts which are, for the most part, not well understood today. Some of the texts are hard to come by – unless in the editions of the author of this encyclopaedia (on whom more below) – most of them are not translated into any other language, general introductions into the field are few, and even fewer are written in languages more easily accessible to the general reader (like English or French). There has been more than one project comparable in range in recent years, most prominently the Encyclopaedia of Tamil literature of the Institute of Asian Studies, Chennai (in English language), but sadly this opus has not yet seen more than 3 volumes, the last one already nine years old and reaching only the letter “ai”. All the more reason for scholars interested in Tamil language and literature to be grateful to the author of the present work, the venerable T.V. Gopal Iyer, with his 80 years one of the last living exponents of a great tradition of exegesis. Space permits here no more than a brief account of the highlights of a long and in many respects exemplary career of a Tamil savant in the 20th century. As well as following a traditional path of education, the worldly marks of which are his two titles Vidvan and Panditam conferred by the University of Madras and the Maturai Tamil Cankam respectively (in 1945 and 1953), Gopal Iyer also acquired the “modern” university degrees of Bachelor of Oriental Language and Bachelor of Oriental Language with Honours at the University of Madras (1951 and 1958). From 1965-1978 he taught in Rajah’s College, Thiruvaiyaru, in which period he already took up his activity of editing works of Classical Tamil, especially theoretical texts. The most important publications from that phase are the Ilakkan|a Vil@akkam in 8 volumes (published in Thanjavur by the Sarasvati Mahal from 1971-1974), the Ilakkan|ak Kottu (Sarasvati Mahal 1973) and the Pirayoka Vivekam (Sarasvati Mahal 1973). Ever since 1978, Mr. Gopal Iyer’s sphere of activity has shifted to Pondicherry, where he has been (and still is) employed as a research scholar by the École Française d’Extrême-Orient (EFEO) – i.e., the French School of Asian Studies –, a research institution financed by the French government which has 17 research centres spread across Asia, the westernmost of which is that in Pondicherry, and which has the mission of studying Asian (and notably Indian) languages, cultures and religions. In this environment, designed as a meeting place for international research, the enormous preparatory work for this encyclopedia has been accomplished. Part of the voluminous editorial output of Mr. Gopal Iyer during the last 27 years has appeared in a series co-published by the EFEO and the IFP (the French Institute of Pondicherry, another research Institution of the French government in whose premises T.V. Gopal Iyer worked for several years), such as a 3-volume edition of the Te#va#ram, his major contribution to devotional Tamil literature (1984f., 1991), and the Ma#ran_ Akapporul@ (2005). A number of further publications deserve mention, since they concern fundamental texts of the Tamil grammatical and poetological tradition upon which the encyclopaedia is based. Last year he published a 14-volume edition of the complete Tolka#ppiyam with all the commentaries (through Thiru. G. Ela-vazhagan of TamizhMann Pathippagam, Chennai - 17) and this year editions of the Vi#raco#l@iyam and the Ma#r_an_ Alan)ka#ram. The EFEO is extremely happy that it has been able to contribute its share to this publication of vital importance for the exploration of Tamil literary history, which will be a monument to a most extraordinary man, who has been teacher and adviser, nay, a living encyclopaedia, to so many students of Tamil language, Indian and Western. A final brief note of thanks to three individuals who were important in bringing this large work to the light of day. The first is Mr. T.V. Gopal Iyer’s younger brother, Mr. T.S. Gangadharan, then of the French Institute of Pondicherry and now of the Pondi-cherry Centre of the EFEO, who wrote the work out in a fair hand. The second is Dr. Jean-Luc Chevillard, who, years later, had the encyclopeadia digitally photographed when in its yet more voluminous hand-written state and so by his timely intervention prevented the loss of some of its parts. The third is the publisher, Mr. Ela-vazhagan, of the Thamizh Mann Pathippagam, who had the vision to see the value of this work and took on the task of setting it in type, a labour which took a year and a half and involved five sets of proofs. ஈவா வில்டன் பிரஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி 16&19 டுமாஸ் தெரு புதுச்சேரி மையம் பாண்டிச்சேரி, ஆகஸ்டு 2005. அறிமுகவுரை தமிழ் இலக்கணம் மிகு தொன்மை வாய்ந்தது; பெரு மதிப்பிற் குரியது; தன் கூறுபாடுகள் பிணைந்து நுட்பமான பேரமைப்பாக உருவாகியுள்ள இவற்றின் தொடக்கக் காலம் எளிதில் வரையறுக்க முடியாத பழங்காலமாகும். தமிழ் மொழி பற்றியும் இலக்கியம் பற்றியும் 2000 ஆண்டுகளாக இடையறாது தொடர்ந்து வந்துள்ள சிந்தனைகளை நாம் இன்று நமக்குக் கிட்டியுள்ள நூல்களிலிருந்து காண்கிறோம். அச்சிந்தனைகள் பிறமொழிகளின் (குறிப்பாக வட மொழியின்) இலக்கண இலக்கியங்களோடு உறழ்ந்து வந்துள்ளதை யும் காண்கிறோம். தோராயமாகச் சொன்னால் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழிலக்கியத்திற்கு முழுமையான அடிப்படையாக அமைந்துள்ள ஒரே பெரும் பேரிலக்கணம் தொல்காப்பியம் ஆகும். (அஃது அவ்வப்பொழுது சிற்சில மாற்றங்களுடனும் விரிவாக்கங் களுடனும் அவ்வாயிரம் ஆண்டுக்கால இலக்கியத்துக்குமே அடிப் படையாக அமைந்தது.) அந்த ஒரே இலக்கணம்தான் புகழ்மிகு தொல்காப்பியம். அஃது மூன்று அதிகாரங்கள் கொண்டது: எழுத்து (ஞாடிnடிடடிபல) சொல் (ஆடிசயீhடிடடிபல யனே ளுலவேயஒ) பொருள் (ஞடிநவiஉள). சில காலம் கழித்துப் பொருள்இலக்கணத்தின் ஒரு பகுதியான அகம் பற்றி இறையனார் அகப்பொருள் என்னும் சிறுநூல் ஒன்று தோன்றியது. கி.பி. 1000-க்குப் பின்னர் தமிழகத்தில் சமுதாய - கலாசார மாற்றங்கள் விரைவுபெற்றன. அக்காலகட்டத்தில் தோன்றியதே விரிவாக உரையெழுதும் முறையாகும். இலக்கண நூல்களுக்கு மட்டு மன்றி, பழைய தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலனவற்றுக்கும் இவ்வாறு உரைகள் தோன்றின. அப்பழநூல்களின் பொருளைத் தெரிந்துகொள்ளப் பெருமளவுக்கு அவ்வுரைகளையே நாம் சார்ந் துள்ளோம். எனினும் அக்காலகட்டத்தில் தமிழ் இலக்கணத்தின் உட்பிரிவுகள் பற்றிப் புது நூல்களும் தோன்றலாயின. மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிய செய்யுள் வடிவங்களின் தோற்றம், தமிழின்மீது வடநாட்டு அஃதாவது சமற்கிருதம் சார்ந்த சிந்தனை எழுத்து ஆகியவற்றின் தாக்கம் இவற்றைக் காட்டுவனவாக அப்புது நூல்கள் தோன்றின. முதன்மையான சிலவற்றைக் காண்போம். தொல் காப்பியம் போல் எழுத்து, சொல், பொருள் மூன்றையும் பற்றி எழுதப்பட்டவை வீரசோழியமும் (மிகுந்த சமற்கிருதச் சார்புடையது; 11ஆம் நூற்றாண்டு) இலக்கண விளக்கமும் (தமிழ் இலக்கணத் தொல் மரபுகளைக் கடைப்பிடித்தது; 17ஆம் நூற்றாண்டு) ஆகும். இந்நூல்கள் பொருளை யாப்பு (ஆநவசiஉள) அணி (குபைரசநள டிக ளுயீநநஉh) என்று மேலும் இரு பிரிவுகளாக ஆக்கியுள்ளன. எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்தனவற்றுள் மிகுதியும் பயிலப்பட்டவை 12ஆம் நூற்றாண்டு நன்னூலும் (தொல்காப்பியத்துக்குப் பின் தமிழுக்கு இலக்கணம் என்றாலே நன்னூல் தான் என்பதே நிலைமை) 17 ஆம் நூற்றாண்டுப் பிரயோக விவேகமும் (மிகுதியும் சமற்கிருதச் சார்புடையது) ஆகும். பொருளின் பிரிவுகள் பற்றியும் உட் பிரிவுகள் பற்றியும் எழுந்த புது இலக்கணங்கள் மிகப்பல. யாப்பு பற்றித் தனியாக எழுந்த முதல் இலக்கணம் யாப்பருங்கலக் காரிகை (10ஆம் நூற்றாண்டு); அகம் பற்றி விரிவாக எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க நூல் நம்பி அகப்பொருள் (12ஆம் நூற்றாண்டு); புறம் பற்றியது புறப்பொருள் வெண்பாமாலை (9ஆம் நூற்றாண்டு). இந்த தமிழ் இலக்கணப் பேரகராதி மேற்சொன்ன இலக்கணச் செல்வங்களைத் தமிழ் வல்லுநர்களுக்கும் பிறருக்கும் - ஒரு சேரத் தொகுத்துத் தரும் சிறந்த நூல். தமிழ் இலக் கணத்தின் (பொருளியல் உட்பட) மிக விரிந்த பரப்பில் கண்ட அனைத்து முக்கியமான தலைப்பு ஒவ்வொன்றும் அகர வரிசைப்படி, உரிய நூற்பாக்களும், பல்வேறு உரைகாரர்கள் கூற்றுக்களும் தரப்பட்டுத் தெளிவாக விளக்கப்படுகின்றது. எழுத்துக்கு 2, சொல்லுக்கு 4, பொருளுக்கு 11 ஆக 17 தொகுதிகள் கொண்டது இவ் வகராதி. (பொருள் பற்றிய 11 தொகுதிகளின் வகைப்பாடு: அகம் - 4, புறம் - 1, யாப்பு - 2; அணி - 2; பாட்டியல், பாயிரம், மரபியல் - 1; மெய்ப்பாடு, நாடகம், அளவை, ஆனந்தக் குற்றம், நியாயம், வழுவமைதி ஆகியவை - 1, என்பனவாகும்) இறுதித் தொகுதில் கருவி நூற்பட்டியலும் உள்ளது. பொருள்களைத் தெள்ளிதின் உணர்ந்து முறைப்படி விளக்கும் இத்தகைய பேரகராதியின் இன்றியமையாத் தேவை நெடுநாளாக ஆய்வுலகத்தால் உணரப்பட்டுவந்ததாகும். மிக விரிந்த இவ் விலக் கணநூல்களும் உரைகளும் திட்ப நுட்பமான நடையிலமைந்தவை யாகையால் இன்று எளிதில் படித்துணரத்தக்கவை அல்ல. அவற்றில் காணத்தகும் இலக்கணச் செல்வங்களுக் கெல்லாம் புலமை சான்ற விளக்கங்களை இங்குக் காணலாம். இவ்விலக்கண நூல்கள், உரைகளிற் சிலவற்றின் அச்சுப்படிகள் கூட எளிதில் கிட்டுவதில்லை (கிட்டினும் அவையும் இவ்வகராதி யாசிரியர் அச்சிட்டவையாகவே இருக்கும்; அவரைப் பற்றி மேலும் சில பின்னர்). அவ்வரிய இலக்கண நூல்கள் பிறமொழிகளில் பெயர்க்கப்படாதவை; இவற்றைப் பற்றிய பொதுவான விளக்க நூல்களும் சிலவே - அதுவும் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழி களில் வந்துள்ளவை ஒன்றிரண்டேயாகும். அண்மைக் காலங்களில் இவை போன்ற விரிவான நூல்கள் வெளியிடும் திட்டங்கள் சில வற்றுள் சென்னை ஆசியவியல் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிடத் தொடங்கிய “தமிழ் இலக்கியக் களஞ்சியமும்” ஒன்று. அக்களஞ்சி யத்தில் மூன்று மடலங்களே (ஐ முடிய) வெளிவந்த நிலையில், கடந்த ஒன்பதாண்டுகளாகப் பணி முட்டுப்பட்டு நிற்கிறது என்பது நினைக்கத்தக்கது. இந்நிலையில் தமிழ் இலக்கண நூல்களிலும் உரைகளிலும் ஊறிய பேரறிஞர்களில் இன்று நம்மோடு உள்ள மிகச் சிலரில் ஒருவரான, 80 வயது நிறைந்த வணக்கத்துக்குரிய தி.வே. கோபாலையரின் படைப்பான இப் பேரகராதி தமிழ் இலக்கண, இலக்கிய அறிஞர்கள் அவர்பால் நன்றி பாராட்டுதற்குரிய ஒன்றாகும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் பல்வகையிலும் போற்றத்தக்கவருள் ஒருவரான இவ்வாசிரியரின் நெடிய தமிழ்ப்பணி குறித்து மிகச் சிறிய அளவிலேயே ஈண்டுக் கூற இயலும். பாரம்-பரியமான தமிழ்ப் புலமை மரபில் அவர் பெற்ற தகுதிகள் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் (1945); மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதம் (1953) ஆகியவை; அத்தோடு “நவீன”ப் பல்கலைக் கழகப் பட்டங் களாகச் சென்னைப் பல்கலை கழகத்தில் 1951இல் பி.ஓ.எல் பட்டமும், 1958இல் பி.ஓ.எல் (ஆனர்சு) பட்டமும் பெற்றுள்ளார். 1965 - 1978இல் அவர் திருவையாறு அரசர் கல்லூரியில் ஆசிரியப்பணி ஆற்றினார். அப்பொழுதே பதிப்புப் பணியை, குறிப்பாக பழந்தமிழ் இலக்கண உரைநூல்களைப் பதிப்பிக்கும் பணியைத் தொடங்கினார். அக்கால கட்டத்தில் அவர் பதிப்பித்தவை இலக்கண விளக்கம் 8 தொகுதிகள் (தஞ்சை சரசுவதி மகால் 1971-74), இலக்கணக் கொத்து (தஞ்சை சரசுவதி மகால் 1973), பிரயோக விவேகம் (தஞ்சை சரசுவதி மகால் 1973) ஆகியவையாம். 1978இலிருந்து திரு கோபாலையர் அவர்களுடைய அறி வாற்றலைப் பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி (விஉடிடந குசயnளீயளைந ன’நுஒவசஷீஅந-டீசநைவே ) பயன்படுத்தி வருகிறது. அவர் இன்று ஆய்வுப் பணி செய்யும் அந்நிறுவனம் பிரான்சு நாட்டு அரசு நிதி உதவியுடன் நடைபெறுகிறது. அவ் வமைப்பிற்கு ஆசிய நாடுகளில் மொத்தம் 17 ஆய்வுமையங்கள் உள்ளன. பாண்டிச்சேரி மையம் உட்பட. இவை ஆசிய (குறிப்பாக) இந்திய மொழிகள், பண்பாடுகள், சமயங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்கின்றன. பன்னாட்டு ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து அறிவுப் பணி செய்யும் இச் சூழல் கொண்ட பாண்டிச்சேரி மையத்தில்தான் இவ்விலக்கணக் களஞ்சியம் தொகுக்கும் மாபெரும் பணி நடந்தது. கடந்த 27 ஆண்டுகளில் திரு கோபாலையர் படைத்த பற்பல நூல்களையும் பாண்டிச்சேரியி லுள்ள பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளியும், பிரான்சு நாட்டு அரசின் மற்றொரு கீழைக் கலை ஆய்வு நிறுவனமான பிரெஞ்சு நிறுவனமும் (குசநnஉh ஐளேவவைரவந) வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியான அவர் நூல்களில் குறிப்பிடத்தக்கவை தமிழ்ப் பக்தி இலக்கியம் சார்ந்த தேவாரம் (3 தொகுதிகள் 1984 முதல் 1991 வரை), மாறன் அகப் பொருள் (2005) ஆகியவை. இப்பேரகராதிக்கு அடிப்படையாக அமைந்தவையும் கோபாலையர் பதிப்பித்தவையுமான வேறு சில நூல்களையும் குறிப்பிட்டாகவேண்டும்; அவை (திரு. கோ. இளவழகன், தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17 மூலமாக) அவர் 2004இல் பதிப்பித்த தொல்காப்பியமும் (உரைகளுடன் 14 தொகுதிகள்) 2005இல் அவர் பதிப்பித்துள்ள வீரசோழியமும் மாறன் அலங்காரமும் ஆகும். தமிழ் இலக்கிய இலக்கண வரலாற்றை ஆய்வு செய்திட இன்றி யமையாத கருவி இப் பேரகராதி. இந்திய மற்றும் மேல்நாட்டுத் தமிழ் ஆய்வாளர்கள் பலருக்கு ஆசானாகவும் அறிவுரையாள ராகவும், ஏன் நடமாடும் கலைக்களஞ்சியமாகவும் அமைந்த அபூர்வ மான ஓர் அறிஞரின் மாபெருஞ் சாதனையாக அமைவதும் இது. எனவே இந்நூல் வெளியீட்டில் தானும் பங்கு பெற்று உதவிட வாய்ப்புப் பெற்றது குறித்துப் பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி மகிழ்கிறது. இறுதியாக இம்மாபெரும் பணி வெற்றிகரமாக நடைபெறப் பெரும்பங்கு ஆற்றிய மூவருக்கு நன்றி கூறியாக வேண்டும். முதலா மவர் திரு கோபாலையரின் இளவல் திரு கங்காதரன் அவர்கள். அவர் முன்னர்ப் பிரெஞ்சு நிறுவனத்தில் பணி செய்தவர். இப்பொழுது பி.இ.ஆ.ப. பாண்டிச்சேரி மையத்தில் அவர் ஆய்வறிஞர், பணியில் உள்ளார். நூல் முழுவதையும் தம் கைப்பட அழகாக எழுதியவர் அவர். இரண்டாமவர் டாக்டர் ழான்-லுக்-செவியர்; கையெழுத்துப் பிரதி முழுவதையும் டிஜிடல் நிழற்படமாக எடுத்து எப்பகுதியும் சிதிலமாகி அழிந்து விடாதபடி பார்த்துக் கொண்டவர். மூன்றாமவர் திரு கோ. இளவழகன். அவர் இந்நூலின் சிறப்பையும் பயனையும் உணர்ந்து அதை வெளியிட முன்வந்தவர். இப் பெருநூலைச் செம்மை யாகக் கணினியில் தட்டச்சு செய்து அச்சுக்கு அணியமாக்கவும், மெய்ப்புக்களை ஐந்து முறை கவனமாகத் திருத்தவும் ஆக ஒன்றரை ஆண்டுகள் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் உழைத்துள்ளனர். தமிழ் வாழ்க! தலைமாமணியெனத் தமிழிலக்கணப் பேரகராதியை வரைந்தருளிய கலைமாமணி, பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் அவர்களை வாழ்த்தி வழங்கும் “பாராட்டுரை” 1 அன்பும் அருளும் அறிவும் திருவும் இன்பமும் எழிலும் மன்னிய உருவாய்ச் சொல்லொடு பொருள்போல் எல்லும் ஒளியும் புல்லிய வடிவென அம்மை யப்பனாய்ச் 5 செந்தமிழ் மயமாய்த் திகழும் சீர்சால் பொன்மலை மேவிய புரிசடைக் கடவுள் நான்மறை நவிலும் நயன்மிகு நாவால் சிந்தை சிலிர்க்கத் தென்றல் உலாவச் சந்தனம் மணக்கும் தண்ணிய அருவிகூர் 10 பொதியத் தமர்ந்து புவியெலாம் போற்ற மதிநலம் வளர்க்கும் மாண்பமை முத்தமிழ் நிதிவளம் நல்கும் நிகரிலா மாதவன் அகத்தியற் கருளிய தகவமை இலக்கண மிகப்பெருங் கலையைச் சகத்தவர் உணர 15 பல்காப் பியந்தெளி தொல்காப் பியன்முதல் ஒல்காப் புலமை ஒண்டமிழ் நூலோர் இயம்பிய இலக்கணப் பனுவல் யாவையும் உளந்தெரிந் துரைசெய் இளம்பூ ரணர்முதல் சேனா வரையர், தெய்வச் சிலையார், 20 ஆனாப் புலமைப் பேரா சிரியர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியர் விச்சை மிக்கநக் கீர னாரொடு சிவஞான முனிவர், சுவாமி நாதனார் யாப்ப ருங்கல விருத்தி முதலாய 25 உரைவழி யாவையும் புரையறக் கற்றறிந்து, அரியவை யாவையும் சிந்தையிற் றெளிந்து கற்றதை மறவாப் பெற்றியொடு திகழும் அருந்திறற் புலவன், பெரும்பே ராசான், விருந்தென வடமொழி பயின்றறி திறலோன், 30 ஆங்கிலப் புலமைசீர் தாங்கிடும் ஆசான், சங்க இலக்கியச் சால்பொடு இரட்டைக் காப்பிய நுணுக்கமும் சிந்தா மணியினைத் தேர்ந்தறிந் துவந்துரை விரிக்கும் செம்மல், தேங்கமழ் அமிழ்தென மாணவர் செவிகொளப் 35 பாடம் பயிற்றும் பண்பமை ஆசான் திருமுறை, திவ்வியப் பிரபந்த அருள்வளம் நிறைமொழி யாவும் நெஞ்சம் இனிக்க உருச்செய் துவக்கும் ஒளிர்தமிழ்ப் பாவலன், புராண இதிகாசப் புலமையும் நுட்பம் 40 விராவிய கம்பன் கவிதையும் பிறபிற சிற்றிலக் கியக்கடல் திளைத்தநற் கல்விமான், ஆளுடைப் பிள்ளையும் அரசும் நம்பியும் தாளுறச் சூழ்ந்து தலையுறப் பணிந்து தெய்வத் தமிழாற் புனைந்ததே வாரம் 45 மெய்யணிந் துவக்கும் ஐயா றன்திகழ் காவிரித் தாயின் கரைமிசை யொளிசெய் திருவையா றதனிற் செந்தமிழ்த் தாயின் உள்ளம் உவப்ப உதித்த தனயன், அந்தணர் குலத்தில் வந்தநற் சான்றோன் 50 குணத்தால் உயர்ந்த கோபா லையன், அன்பும், அடக்கமும், நண்பமை செயலும், இன்சொலும், எளிமையும், இயல்போ டமைந்தொளிர் போதகா சிரியன், புதியன புனையும் ஆய்வறி வாளன், அரும்பெறற் கட்டுரை 55 தரும்எழுத் தாளன், மூவர்தே வாரச் சொல்வளம் இசைவளம் மல்கிடும் ஞானம், மலர்ந்திடும் கற்பனை, வண்ணனை உள்ளம் கலந்திடும் பக்திக் கவிநயம் யாவையும் உலகுணர்ந் துய்ய உரைவிரித் தியம்பிய 60 பலகலை யுணர்ந்த பண்டிதன் இலக்கணக் கடல்படிந் தெல்லை நிலைகண் டெழுந்த ஆசான், தன்பே ருழைப்பினால் இலக்கணக் கலைச்சொல் யாவையும் கவினுறத் தொகுத்துப் பொருள்நிலை விளங்க அகர நிரல்பட 65 இலக்கணப் பேரக ராதியை வரைந்து பேரா சிரியர்,ஆய் வாளர், மாணவர் யாவரும் பயன்பெறக் காவியம் போலத் தமிழ்த்தாய்க் கணியாத் தகவுற வழங்கும் பண்டித தி.வே. கோபா லையர் 70 வண்டமிழ் போல வளமெலாம் மேவி மண்டலம் புகழப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கெனப் போற்றி வாழ்த்துதும் உவந்தென். தஞ்சாவூர் 22.08.2005 பாவலரேறு ச. பாலசுந்தரனார் “கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரோ” முதுபெரும் புலவர் இலக்கணக் கடல் உயர்திருவாளர் தி.வே. கோபாலனார், தமிழ்வளக் கொடையாக, அரும்பதிப்புப் பெருந்தகை கோ. இளவழகனார் வழங்கும், ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ மடலங்கள் பதினேழனையும் ஒருங்கே கண்டதும், “காரே! நேரே தான், வாரியுண்டு; வாரிமொண்டு வாரியுண்டு, வானிருண்டு பேரி கொண்டு நீதிரண்டு பெய்” என்னும், வான்மழைப் பாட்டின் ‘தேன்பிழி’வென எனக்கு அவை இன்ப மூட்டின. கோபாலனார் மூளைக் கூர்ப்பும், இளவழகனார் பதிப்பு ஈர்ப்பும், ஒருங்கே வயப்படுத்திய இன்பத்தில், ‘அன்னை வாழ்க’, ‘அயராத் தொண்டர்களும் வாழ்க’ என என்னுள் வாழ்த்தினேன். கோபாலனார் நினைவின் ஏந்தல்; இலக்கணமா இலக்கியமா, நூலோடு உரையும் நெஞ்சக் களனில் வரப்படுத்தி வைப்பாக வைத்துக் காக்கும் கருவூல வாழ்வர். கற்றது ஒன்றையும் கைவிடாக் ‘கருமி’யெனக் கவர்ந்து கொண்ட தமிழ்வளத்தை, என்றும் எங்கும் எவர்க்கும் ‘தருமி’ என வாரி வழங்கும் வள்ளியர். அவர்தம் இவ்வகராதிக் கொடை, தமிழுலகு காலத்தால் பெற்ற கவின் பரிசிலாம்! என்னை யறியாதே எனக்கொரு பெருமிதம்; ஏக்கழுத்தம்; “இத்தகு பாரிய இலக்கணத் தொகுதிகளை இம்மொழி ஒன்றை யன்றி, எம்மொழிதான் பெறக்கூடும்?” என்னும் எண்ணத்தின் விளைவே அஃதாம்! அம்மம்ம! எழுத்து - இரண்டு மடலங்கள் சொல் - நான்கு மடலங்கள் இவ் ஆறு மடலங்களைத் தானே மற்றை மற்றை மொழிகள் பெறக்கூடும்! பொருளிலக்கணம் என்பதொன்று கொள்ளா மொழிகள், எப்படித் தமிழைப் போல் பொருள் இலக்கண மடலங்களைப் பெற வாய்க்கும்? பொருளிலக்கண மடலங்கள், எழுத்து, சொல் மடலங் களைப் போன்ற எண்ணிக்கையினவோ? அகப்பொருள் - நான்கு மடலங்கள். புறப்பொருள் - ஒரு மடலம் யாப்பு - இரண்டு மடலங்கள் அணி - இரண்டு மடலங்கள் மெய்ப்பாடு முதலன - ஒரு மடலம் பாட்டியல் முதலன - ஒரு மடலம் ஆகப் பதினொரு மடலங்கள். மொத்தமாகக் கூடுதல் 17 மடலங்கள். மொழி ஆர்வலர்க்குப் ‘பெருமிதம்’ உண்டாகுமா? உண்டாகாதா? இப்பெருமிதத்தூடேயே ஓர் ‘ஏக்கம்’: அரிய ஆய்வுக் குறிப்புகள் வழங்கித் தெளிவுறுத்த வல்ல ஆசிரியர், அவற்றை அரிதாக மேற்கொண்டதை அன்றிப் பெரிதாக அல்லது முற்றாக மேற்கொண்டிலரே என்பதே அவ்வேக்கம். எ-டு: ‘அகர முதல் னகர இறுவாய்’ என்பன இளம்பூரணருக்கு அன்மொழித் தொகை; நச்சினார்க்கினியருக்கு எழுவாய்த் தொடர்கள் - என்று காட்டும் தொகையாசிரியர், “அகரத்தை முதலாகவும் னகரத்தை இறுதியாகவும் உடைய என்று பொருள் செய்யின் அகரமுதல் - னகர இறுவாய் என்பன இரண்டாம் வேற்றுமைத் தொகை” என்று தம் தெளிவை இயைக்கிறார் (எழுத்து 1:22) நன்னூலார் அளபெடையைச் சார்பெழுத்தாக எண்ணினார். ஆசிரியர் தொல்காப்பியனார் அளபெடையை உயிரெழுத்துள் அடக்கிக் கொண்டார் என்பதைச் சிவஞான முனிவர் சூத்திர விருத்தி கொண்டு தெளிவிக்கிறார் தொகையாசிரியர். (எழுத்து 1:44) “மகரக் குறுக்கம் மேலால் பெறும் புள்ளியொடு உள்ளும் புள்ளி பெறும் என்ற உரையாசிரியர் கருத்து மிகத் தெள்ளிது. ‘உட்பெறு புள்ளி உருவாகும்மே’ (தொ.எ. 14) என்ற நூற்பாவிற்கு உண்மையுரை காண உதவுகிறது” என்று தெளிவிக்கிறார் தொகை யாசிரியர். (எழுத்து 2: 263) ‘வேண்டா கூறி வேண்டியது முடித்தல்’, என்னும் தலைப்பில், “தேவையற்றது போன்ற ஒரு செய்தியைக் கூறி அதனால், நூற்பாக்களில் கூறப்படாத மற்றோர் இன்றியமையாத செய்தியைப் பெறப்பட வைத்தல்” என்று விளக்கும் தொகையாசிரியர், நுண் மாண் நுழைபுலம் கற்பவர் தெளிவுக்கு நல்வழி காட்டுகின்றது. (எழுத்து 2:265) ஆனால், இத்தகையவை பெரிதும் இடம் பெறாமல் ‘தொகை யளவொடு’ நின்று விடுகின்றது என்பதே அவ்வேக்கம். தொகை யாவது, தொகுப்பு. ‘குற்றியலுகரம் ஒற்று ஈறே’ என்பதோர் ஆய்வு என்றால், ‘குற்றியலுகரம் உயிர் ஈறே’ என்பதோர் ஆய்வு ஆதல் காட்டப்படவேண்டும் அல்லவோ! எது செவ்விது என்பதைத் தெளிவித்தல் இன்றேனும், தெளிவிக்கக் கருவிதந்தது ஆகும் அன்றோ! இவ்வாறு, பின்னாய்வாளர் எண்ணற்றோர் ஆய்வுகள் கொள்ளப்படாமை மட்டுமன்று; தள்ளப்படுதல் மிகத் தெளி வாகின்றது. தொகையாசிரியரால் சுட்டப்படும் அரசஞ்சண்முகனார் (பாட்டியல் 15) ஆய்வு எத்தகையது எனின், ‘நடுநிலை பிறழாமல் ஆராய்ந்து எழுதுவதில் வல்லுநர்’ எனத் தொகையாசிரியராலேயே பாராட்டப்படும் தகையதாம். அச்சண்முகனார், ‘பிரமாணம் ஆகாத நூல்கள்’ என்பதையும் பதிவு செய்கிறார் தொகையாசிரியர். அது, “சின்னூல்(நேமிநாதம்), நன்னூல், வீரசோழியம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, இலக்கண விளக்கம் முதலாகப் பல, தொல்காப்பியத்தின் வழிப்படச் செய்யப்படினும் ஆசிரியனது கருத்துணராமல் மரபு நிலை திரியச் செய்யப்பட்டமையான் பிரமாணமாகாத நூல்கள் ஆம். (பிரமாணம் நூல்நெறிக்குச் சான்றாக - எடுத்துக் காட்டாகத் திகழும் வாய்மையாகிய தகுதி; நியாய அளவைகளால் உறுதிப்பாடு) இவ்வாறு குறிப்பர் அரசஞ்சண்முகனார் (பா.வி. பக். 104-105)” என்கிறார் (பாட். 142) என்பது. தொகையாசிரியர், இச் சான்றைப் பொன்னே போலப் போற்றியிருப்பின், அதன் பெருஞ்சிறப்பு எப்படி இருந்திருக்கும்? தன் பெயருக்கு ஏற்பத் ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ என்பதற்குத் தானே தன்னிகரிலாத் தலைமை கொண்டிருக்கும்! இப்பிரமாணமாகா நூல்களைத் தள்ளியிருப்பின் இப்பாரிய நிலை இருக்குமோ எனின், அவ்வெண்ணம் பிழைபட்ட எண்ண மாம்! ‘தொடர்நிலைச் செய்யுள்வகைப் பெயர்’ என்னும் தலைப்பில் கூறப்படும் அளவுகோல் தானா இன்றும் உள்ளது? சதுரகராதியும் பிரபந்த மரபியலும் கூறுவன 96 மட்டுமே. மற்றை நூல்களால் அறிவன அதற்கும் உட்பட்டனவே. ஆனால், சிற்றிலக்கிய விரிவாக்கப் பரப்பு எத்தனை? 381 வகையென்பதை எம், ‘இலக்கிய வகைமை அகராதி’யில் காணலாம். அவற்றின் மேலும் இதுகால் விரிந் துள்ளன. பொருளதிகார ஆய்வோ, வெள்ளப் பெருக்காகி உள்ளது. கால்டுவெலார், ஞானப் பிரகாச அடிகளார், பாவாணர் அன்னவர்கள் ஆய்வு தமிழிலக்கண ஆய்வுகள் அல்ல எனத் தள்ளப் பட்டுவிடாவே! அவற்றை நோக்கினால், வேண்டாச் சேர்ப்புகளை விலக்கி, வேண்டும் சேர்ப்புகளை இணைத்துக் கொண்டால் இன்னும் பதின் மடலங்கள் மிகும் என்பதை, நினைவின் ஏந்தல் - சோர்வறியாச் சுடர் - கோபாலனார் கொள்வாரே எனின், இத்தமிழ் இலக்கணப்பேரகராதி ஒத்ததோர் அகராதி இன்றாம் என மலைமேல் ஏறி முழக்கமிடலாம் அல்லவோ! இத்தொகையாசிரியப் பெருமகனாரை அல்லார் ஒருவர், இப்பெருங் கடப்பாட்டை மேற்கொண்டு இத்தகு பணி செய்தல் அரிது! அவர்தம் முழுதுறு ஒப்படைப்பின் பேறு அது. அன்றியும், தம்மைப் போலவே தம் உடன்பிறப்புகளையும் அழுந்திப் பயிலவும் ஆர்வக் கடனாற்றவும் பயிற்றி இருக்கும் பயிற்றுதற்பேறு; தமிழ் வாழ்வாகிய அவரைத் தாங்குதலே தம் பிறவிப் பேறு எனக்கொண்டு நயத்தகு துணையாயும் குடும்பமாகியும் நிற்பார் கெழுதகைப் பேறு; இன்னவெல்லாம், இத் தமிழ்ப் பெருங்கொடைக்கு ஊற்றுக் கண்கள் அன்னவாம். இங்குச் சுட்டப்பட்டவை, தமிழ்க் காதலால், தமிழர் பண் பாட்டுக் காதலால் சுட்டப்பட்டவை என்பதைக் கற்பார் உணரின், இத்தொகுதிகளைத் தத்தம் குடிமை வைப்பாகக் கொள்ளக் கடமைப்பட்டவராம். ஆய்வுக்கு இப்படியொரு கருவி எளிதில் வாய்க்குமா? ஆய்வுக்கு எல்லை உண்டா? ‘அறிதோ றறியாமை’ காணும் ஆய்வுக்கு, “மனிதர்காள் இங்கேவம்; கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரோ” என்று அப்பரடிகள் தமிழ்க்கோயில் வாயில் முன் நின்று அழைத்து வழிகாட்டுவது போல, அயராத் தொண் டர்கள் தி.வே. கோபாலனாரும், கோ. இளவழகனாரும் இத் தொகையைக் கைகோத்து நின்று கனிவொடு வழங்குகின்றனர்! நாம் பேறெனப் பெற்றுப் பயன் கொள்வோமாக! தமிழ்த்தொண்டன், இரா. இளங்குமரன் ‘குறுந்தட்டாக’ விளங்குபவர் பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் புதுவைக்கு வருகின்றவர்கள் இங்கே இரண்டு கடல்களைப் பார்க்கலாம். ஒன்று உவர்க்கடல்; மற்றொன்று தி.வே. கோபாலையர் என்னும் நூற்கடல். ‘தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முகடு தொடுத்துப் பொன்கொழித்து, மணிவரன்றி, மாணிக்கத்தொடு வயிரம் உந்தி வந்து, சல சலவென இழிதரும் அணிகிளர் அருவி’ போன்ற இவரது பொழிவினை ஒரு முறை கேட்கும் எவரும் வியந்து, இவர் ஒரு நூற்கடல்தாம்’ என்பதை எளிதினில் ஏற்றுக்கொள்வர். ‘அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும்’ கொண்ட மலையனைய மாண்பின் அறிவினராகிய தி.வே. கோபாலையர் கற்றோர்தமக்கு வரம்பாகிய தகைமையர். தண்டமிழின் மேலாந்தரமான இலக்கிய இலக்கணங்களையும், அவற்றுக்குப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் உரைகளையும் இளமையிலேயே பதிவு செய்துகொண்ட குறுந்தட்டாக விளங்கு பவர் இப் பெருந்தகை. எக்காரணத்தாலாவது இந்நூல்களில் ஒன்றை இழக்க நேரின் கவலைப்பட வேண்டியதில்லை; இவர்தம் உள்ளப் பதிவிலிருந்து அதனை மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம். ‘செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகர்க்குப்’ புகழ் சேர்த்த பாரதியார், பாவேந்தர் முதலிய புகழ்மணிகளின் வரிசையில் இன்று கோபாலையர் விண்ணுயர் தோற்றத்துடன் விளங்குகிறார். இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர், பரிமேலழகர், சிவஞான முனிவர், காரிரத்தினக் கவிராயர் முதலிய புலவர் மரபினோர் புகழை யெல்லாம் தம் புகழ் ஆக்கிக்கொண்ட இப்புலவர் பெருந்தகையைப் புதுவைப் புலவருலகம் போற்றி ‘நூற்கடல்’ என்ற சிறப்புப் பட்டமளித்துப் பொன்போற் பொதிந்து கொண்டது. இருபத்தாறாண்டுகளுக்கு மேலாக இவர் புதுவைப் பிரஞ்சுக் கலை நிறுவனத்தில் (விஉடிடந குசயnளீயளைந) தமிழாய்வுப் பிரிவின் தலைமைப் பொறுப்பினை மேற்கொண்டு அரிய நூல்கள் பலவற்றை ஆய்வுச் செம்பதிப்புகளாக வெளியிட்டு வருகிறார். பாரதியாரின் தலைசிறந்த படைப்புகளுக்கு வாய்ப்பாக இருந்த புதுவைமண், கோபாலையரின் புகழை என்றும் நின்று நிலவச் செய்யும் உயர் பதிப்புகள் பல உருவாவதற்கும் வாய்த்த இடமாக இலங்குகிறது. கடந்த பன்னீராண்டுகளாகப் புதுவையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘தெளிதமிழ்’ என்னும் தமிழ் வளர்ச்சித் திங்களி தழில், இவர்தம் படைப்பினை ஏந்தி வாராத இதழே இல்லை. அதில் ‘இலை மறை கனிகள்’ என்னும் தலைப்பில், தமிழிலக்கண இலக்கிய நூல்களிலும் உரைகளிலும் இலை மறை கனிகளாக மறைந் திருக்கும் அரிய செய்திகளைத் திரட்டிக் கட்டுரைகளாகத் தந்து வருகிறார். அலான் தனியேலு (ஹடயனே னுயnநைடடிர) என்னும் மேனாட்டறிஞரின் மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்புப் பணிக்குத் துணை செய்ததும், சேனாவரையத்தின் பிரஞ்சு மொழியாக்கத்திற்குத் துணை நின்றதும் இவர்தம் ஆங்கில அறிவுக்குச் சான்று பகரும். ‘தொல்காப்பியப் பழைய உரைகளின் செம்பதிப்பு’, ‘கல் வெட்டுக்களில் நாயன்மார்கள் பற்றிய அருஞ் செய்திகள்’ ஆகியன இனி வெளிவர இருக்கும் இவர்தம் நூல்களில் குறிப்பிடத்தக்கவை. இவர்தம் பணிகளில் மிகமிகப் பயன் விளைக்கும் அரிய பெரிய பணி இந்த ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’. தமிழிலக்கணம் கற்போருக்கும், இலக்கண ஆய்வாளர்களுக்கும் கை விளக்காகப் பயன்படக்கூடிய இவ் வகரவரிசை இருபத்தைந்து ஆண்டுக் கால பேருழைப்பால் எழுதி முடிக்கப்பெற்றது. எப்போது வெளிவருமோ என்று தமிழறிஞர் உலகம் எதிர்பார்த்திருந்தது. மற்றவர் அரியதென்று கருதும் நல்ல பதிப்புப் பணிகளை எளியதென்று ஏற்று, மடிதற்றுத் தாமே முன்வந்து செய்யும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர், ‘தமிழ்மொழிக் காவலர்’ கோ. இளவழகன் இதனை அழகுறப் பதிப்பித்து வழங்குகிறார். இவ்வரிய செயலால், இன்பத்தமிழ் இருக்குமளவும் இளவழகன் புகழும் இருக்கும் என்பது உறுதி. அன்பன், இரா. திருமுருகன். ‘ஈரத்தமிழில் ஆழங்கால் பட்டவர்’ பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் உலகப் பொதுமறையை அருளிய திருவள்ளுவப் பெருந் தகையார் பெரியார் யார் என்பதற்கு ஓர் இலக்கணம் வகுக்கின்றார். மனிதமேம்பாட்டுக்குரியதான, செய்வதற்கு அரியதான செயலை யார் புரிகின்றார்களோ அவர்களே பெரியவர் என்கின்றார். காலங்கள்தோறும் பல்வேறு துறைகளில் மனிதமேம்பாட்டுக் காகப் பலர் செயற்கரிய செயல்களைச் செய்துள்ளார்கள். அந்த வரிசையில் தமிழ் இலக்கணப் பேரகராதி என்னும் இந்நூலை தி.வே.கோபாலையரும், இந்த நூலை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் இளவழகனாரும் அடங்குவர். தமிழ் இலக்கிய இலக்கணங்கள் ஒருசமயம் இல்லாமற் போய் விட்டாலும் கோபாலையர் ஒருவர் இருந்தாலே போதும், அவற்றை மீட்டுக் கொண்டுவந்துவிடலாம். அந்த அளவிற்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் நினைவில் வைத்திருப்பவர். ஒரு தேன்கூட்டில் பல மலர்களின் தேன்கள் கலந்திருப்பது போல் இந்தப் பேரகராதியில் பல தமிழ்இலக்கண நூல்ஆசிரியர்களின் வரையறைகளும் பல உரையாசிரியர்களின் உரை வளங்களும் கலந்துள்ளன. அறிஞர் திலகம் கோபாலையர் எப்படி எளிமையானவ ராகவும், ஆழமான புலமை உடையவராகவும், பழக இனியவராகவும் இருக்கிறாரோ, அப்படியே ‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு’ என்னும் திருக்குறளின் கருத்துக்கேற்ப இந்நூலும் நம்மிடம் பழகுகின்றது. இந்த நூல் பேரகராதியாக உள்ளதால் இலக்கணம் கண்டு அஞ்சும் மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் அகராதிப் பொருளை அறிவது போல் எளிதாகத் தமிழ் இலக்கணத்தை அறிந்து கொள்ள முடியுமாறு உள்ளது. இந்நூல் தொல்காப்பியர் காலத்திலிருந்து இந்த நாள்வரை உள்ள தமிழ் உலகிற்குக் கிடைத்த புதுமையான முதன்மையான முழுமையான நூலாகும். பலர் முயன்று செய்ய வேண்டிய பணியை தி.வே.கோபா லையரே செய்து முடித்துள்ளார். ஒரு பல்கலைகழகமோ ஒரு பெரிய ஆய்வு நிறுவனமோ செய்ய வேண்டிய பணியைத் தமிழ்மண் பதிப்பகம் ஆர்வத்தால் எளிதாகச் செய்துள்ளது. தமிழர்களின் தவப்பயனே இப்படியாய்த் தமிழ் மண்ணில் முகிழ்த்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழ் வழங்கும் அனைத்து இடங்களிலும் திருக்குறளுக்கு அடுத்தபடியாக நூலகங்களில் இடம்பெற வேண்டிய தமிழ்நூல் இந்நூல் என்பதில் ஐயம் இல்லை. இந்த நூலை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக இளவழக னார்க்கு நமது வெற்றி வாழ்த்துக்கள். இந்த நூலை அளித்தருளிய அறிஞர்திலகம் நம்முடைய இலக்கண மாமணி கோபாலையருக்குத் தலையல்லால் கைம்மாறில்லை என்னும் படியான தமிழ் வணக்கங்கள். வாழ்க தமிழ். வளர்க தமிழ்ப்பண்பாடு. வெல்க மனிதநேயம். அடியேன். முனைவர் ‘வைணவம்’ பார்த்தசாரதி ‘மாந்தக் கணினி’ பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் நாம் சங்கப் புலவர்களைப் பார்த்திலோம்! இடைக் காலப் புலவர்களையும் உரை வல்லுநர்களையும் பார்த்திலோம்! ஆனால் அவர்களை யெல்லாம் நம் காலத்தில் பார்த்திட விரும்புவோமாயின் அவர்களின் உருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் நூற்கடல் தி. வே. கோபாலையர் அவர்களைக் காணலே சாலும். சாதி, மத, வயது வேறுபாடின்றித் தம்மை அணுகும் யாரே யாயினும் அயர்வுறாது மாற்றம் கொள்ளாது அவர்தம் ஐயங்கட்குத் தெளிவேற்படுத்தலும் வினாக்கட்கு விடையளித்தலுமான சீரிய தமிழ்ப்பணியைத் தொடர்ந்து ஆற்றிவருகிறார். எந்த நூலில், எந்தப் பக்கத்தில், எந்தப் பாகியில், எந்த வரியில் உள்ளது எனத் தெளிந்த உணர்வுடன் எந்தச் சொல்லையும் கருத்தையும் சுட்டிக் காட்டும் வியக்கத்தக்க மாந்தக் கணினியாக விளங்குகிறார். சங்கப் புலவரும் இடைக் காலப் புலவரும் உரை வல்லுநரும் கையாண்ட மொழி முதலெழுத்து, மொழியிறுதி எழுத்து, புணர்ச்சி நெறிகள், பிற மொழிச் சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கல் ஆகிய தமிழ் இலக்கண மரபுகளைப் பொன்னே போல் போற்றிப் பயன்படுத்தி வரும் பாங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கதாகும். அப்பெருமகனார் வாழுங்காலத்தில் வாழ்தலும், அவரிடத்து உரையாடி மகிழ்தலும், ஏற்படும் ஐயங்கட்கு அவரின் சொல்லரிய விளக்கங்களைக் கேட்டுத் தெளிதலுமாகிய அரிய பேற்றினை நான் எனது வாழ்நாளில் பெற்றுள்ளேன். அவரின் பரந்த இலக்கிய நூலறிவும் தெளிந்த இலக்கண அறிவும் தமிழர்க்கும் உலகுக்கும் மேலும் பயன்படுதல் வேண்டும். அவர் மேற்கொண்டுள்ள எளிய வாழ்வு, சம நோக்கு, இனிய பேச்சு, எல்லார்க்கும் பயன்படல் வேண்டும் என்னும் பெரும்பண்பு ஆகியவை கற்றாரை ஈர்க்கும் தன்மையன. நூற்கடலார் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிடல் வேண்டும் என எனது உள்ளம் நிறைந்த விழைவினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பன் இறைவிழியன் பதிப்புரை தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை வரையறுத்துக் கூறும் ஒல்காப்புகழ் தொல்காப்பியத்திற்குப் பழந்தமிழ்ச் சான்றோர்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அனைத்து உரைகளையும் தொகுத்து தொல்காப்பிய நூல் பதிப்பில் இதுவரை எவரும் கண்டிராத வகையில் ஒரேவீச்சில் எம் பதிப்பகம் வெளியிட்டதை தமிழுலகம் நன்கு அறியும். தொல்காப்பிய நூல்பதிப்புப் பணிக்கு அல்லும் பகலும் துணை யிருந்து உழைத்தவர் பண்டிதவித்துவான் தி.வே.கோபாலையர் ஆவார். இந்நூல் பதிப்புகளுக்கு இவரே பதிப்பாசிரியராக இருந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்தவர். கூரறிவும், பெரும் புலமையும், நினைவாற்றலும் மிக்க இப்பெருந்தகை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தம் பேருழைப்பால் தொகுத்த தமிழ் இலக் கணத்திற்கான சொல் மூலங்களை ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ எனும் பெரும்படைப்பாக 17 தொகுதிகளை உள்ளடக்கி ‘தமிழ் இலக்கண’க் கொடையாக தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். தமிழ் இலக்கண நூல் பதிப்பு வரலாற்றில் தமிழ் இலக்கணத் திற்கென ஒரே நேரத்தில் எழுத்து, சொல், பொருள் (அகம், புறம், அணி, யாப்பு, பாட்டியல், பாயிரம், மரபியல், மெய்ப்பாடு, நாடகம், அளவை நியாயம்) எனும் வரிசையில் பேரகராதி வெளிவருவது இதுவே முதல் முறையாகும். அகராதி என்பது ஒரு சொல்லுக்கு விளக்கம் தருவது. பேரகராதி என்பது ஒரு சொல்லுக்கு விளக்கமும், மேற்கோளும் சுட்டுவது. களஞ்சியம் என்பது ஒரு சொல்லுக்குப் பல்பொருள் விளக்கம் காட்டுவது. உங்கள் கைகளில் தவழும் இத் தமிழ் இலக்கணப் பேரகராதித் தொகுதிகள் தமிழுக்குக் கருவூலமாய் அமைவதாகும். தமிழிலக்கணப் பெரும் பரப்பை விரிவு செய்யும் இப் பெட்டகத்தை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். தமிழ் ஆய்வை மேற்கொள்வார்க்கு வைரச் சுரங்கமாகவும், தமிழ் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக் காகவும் இந்நூல் தொகுதிகள் வருகிறது. தொன்மையும், முன்மையும், தாய்மையும், தூய்மையும், மென்மையும், மேன்மையும், பழமையும், புதுமையும், இளமையும், முதுமையும் மிக்கமொழி நம் தமிழ்மொழி. திரவிடமொழிகளுக்குத் தாய்மொழி நம் தமிழ்மொழி. இந்தியப் பெருமொழிகளுக்கு மூலமொழி நம் தமிழ்மொழி. உலக மொழிகளுக்கு மூத்த மொழி நம் தமிழ்மொழி. இந்தியப் பேரரசால் செம்மொழி என அறிவிக்கப் பட்டுள்ள இந் நேரத்தில், ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’யை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் இலக்கணச் சுரங்கத்தைத் தந்துள்ள பண்டித வித்துவான் தி.வே. கோபாலையருடன் உடனிருந்து உழைத்தவர் அவர் இளவல் தி.வே. கங்காதரன் ஆவார். இப் பொற்குவியல் பொலிவோடு வெளி வருவதற்கு தம் முழுப் பொழுதையும் செலவிட்டவர் இவர். இரவென்றும், பகலென்றும் பாராது உழைத்த இப் பெருமக்க ளுக்கும், பேரகராதியின் அருமை பெருமைகளை மதிப்பீடு அளித்து பெருமை சேர்த்த புதுச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத் துக்கும், தமிழ்ச் சான்றோர்க்கும் எம் நன்றி. பதிப்பாளர் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் வடிவமைப்பு : செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சுக்கோர்ப்பு : கீர்த்தி கிராபிக்ஸ் பட்டு, கீதா, சங்கீதா, பிரியா, பத்மநாபன், சே. குப்புசாமி, மு. கலையரசன் மெய்ப்பு : தி.வே. கோபாலையர் தி.வே. கங்காதரனார் ——— உதவி : அ. மதிவாணன் கி. குணத்தொகையன் அரங்க. குமரேசன் வே. தனசேகரன் நா. வெங்கடேசன் மு.ந. இராமசுப்ரமணிய இராசா இல. தர்மராசு ——— அச்சு எதிர்மம் (சூநபயவiஎந) : பிராஸஸ் இந்தியா, சென்னை அச்சு மற்றும் கட்டமைப்பு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை ——— இவர்களுக்கு எம் நன்றி . பொருள் - புறம் யாப்பு 1 அ அஃது ஒழித்து ஒன்றுதல் எதுகையின் இலக்கணம், அடிதொறும் முதலெழுத்து ஒன்றாமல் இரண்டாமெழுத்து ஒன்றுவது. முதலெழுத்தினை ஒழித்து இரண்டடியினும் சீர் முழுதுமோ, இரண்டாம் எழுத்து ஒன்றுமோ ஒன்றுதல். முதல் எழுத்தின் மாத்திரை ஒத்தல் வேண்டும் என்பது. எ-டு : ‘மாயோன் மார்பி னாரம் போலும் சேயோன் சேர்ந்த வெற்பிற் றீநீர்’ ‘வானிடு வில்லின் வரவறியா வாய்மையால் கானிலம் தோயாக் கடவுளை - யாநிலம்’ (நாலடி. கடவுள்.) (தொ. செய். 93. நச்.) அகநிலை ஒத்தாழிசை உறுப்புக்கள் - அகப்பொருளைப் பற்றி வருதலின் அகநிலை ஒத்தாழிசைக் கலியாம். அகநிலை ஒத்தாழிசைக் கலியுள் இடைநிலைப் பாட்டு, தரவு, போக்கு, அடையென்னும் நான்கும் பயின்றுவரும். (அடை- தனிச்சொல்) இவை பயின்று வரும் எனவே, தாழம்பட்ட ஓசையினை உடையன அல்லாத இடைநிலைப்பாட்டும் ஒரோவழி வரும் என்பது. இவை பயின்று வரும் எனவே, இத்துணைப் பயிலாது அம்போதரங்கமும் அராகமும் சிறுபான்மை வரும் என்ப. ஆயின், கலித்தொகையிலுள்ள 150 கலியுள்ளும் ஒத்தாழிசைக் கலியுள் அம்போதரங்க உறுப்பும் அராக உறுப்பும் பயின்று வருவன இன்மையின், அங்ஙனம் கூறுதல் தொல்காப்பிய நூலுக்கு மாறுபட்ட செய்தியாம். இடைநிலைப்பாட்டு என்பது தாழம்பட்ட ஒசையுடையன, தாழம்பட்ட ஓசையில்லாதன என இரண்டனையும் குறிக்கும். தாழிசை என்பது தாழம்பட்ட ஓசையுடையனவற்றையே குறிக்கும். இவ்வொத்தாழிசைக் கலியில் தாழம்பட்ட ஓசையில்லாதன வாகிய இடைநிலை உறுப்பும் அருகி வருதலின், தாழிசை என்று கூறாது ‘இடைநிலைப்பாட்டு’ என்று கூறப்பட்டது. இடைநிலைப்பாட்டினை முற்கூறினார், அதனால் இக்கலி ஒத்தாழிசை எனப் பெயர் பெறுதலின். எனவே, தரவு முன்வைத்தலே முறை. இவ்வொத்தாழிசைக்கலி தரவு, தாழிசை, போக்கு (-சுரிதகம்) என்ற மூன்று உறுப்பானும் வந்து சிறுபான்மை தனிச்சொல்லாகிய அடையின்றியும் வருதலின் தனிச்சொல் இறுதியில் கூறப்பட்டது. படவே, அகநிலை ஒத்தாழிசையின் உறுப்புக்கள் முறையே தரவு, தாழிசை மூன்று, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கும் என்பது கொள்ளப்படும். இடைநிலைப்பாட்டு தரவுக்கும் தனிச்சொல்லுக்கும் இடையில் வருவது. (தொ. செய். 132. நச். உரை) அகநிலை ஒத்தாழிசைச் சுரிதகம் : அடி அளவும், பொருள் வைப்பும் - அகநிலை ஒத்தாழிசையின் இறுதிப் பகுதியாகிய சுரிதகம் சிறுபான்மை தரவுகளோடு ஒத்தும் சிறுபான்மை ஏறியும் வருமாயினும், பெரும்பான்மை தரவின் பாகம் (-பாதி) பெறும். சுரிதகம் பெரும்பான்மையும் இடைநிலைப் பாட்டின் பொருளை முடிவு காட்டியே நிற்கும்; சிறுபான்மை தரவின் பொருள் கொண்டும் முடியும்; தனக்கெனப் பொருள் முடிதலும் உண்டு. சுரிதகத்தின் சிற்றெல்லை ஆசிரியத்துக்குக் கூறிய மூன்றடிச் சிறுமையாம். தரவின் பாகம் ஆகிய ஆறடியே உயர்விற்கு எல்லை. 12 அடித் தரவிற்கும் 3 அடிச் சுரிதகம் வரலாம். சுரிதகம் வெண்பாவும் ஆசிரியமாகவும் வரும். எ-டு : ‘வலிமுன்பின்’ - (கலி. 4) என்பதன் தரவு 4 அடி; சுரிதகம் 4 அடி. ‘பாஅ லஞ்செவி’ (கலி. 5) என்பதன் தரவு 9 அடி; சுரிதகம் 3 அடி. ‘பாடின்றிப் பசந்தகண்’ (கலி. 16) என்பதன் தரவு 4 அடி; சுரிதகம் 5 அடி. (தொ. செய். 37. நச்.) துள்ளல் ஓசைத்தாய் நிரை முதலாகிய வெண்பா உரிச்சீர் மிக்குச் சுரிதகம் ஆசிரியத்தானாவது வெண்பாவானாவது வரும். (தொ. செய். 132. இள. ) சுரிதகம் தாழிசைப் பொருளேயன்றி. அவற்றொடு போக்கியற் பொருளும் கொண்டு புரைபடாது வருதலும் உண்டு. கலி 8 இன் சுரிதகம் 5 அடி உடையது. சுரிதகத்தின் முதல் இரண்டடி தாழிசையின் பொருள்; ஏனை மூன்றடியும் செய்யுளை முடிக்கும் பொருளாகும். (செய். 137 நச். ) அகநிலை ஒத்தாழிசைத் தரவு - அகநிலை ஒத்தாழிசைக் கலியின் முதற் கூறாகிய தரவு 4 அடிச் சிறுமையும், 12 அடிப் பெருமையும் உடையது; சிறுபான்மை 13 அடியாகவும் வரும். எ-டு : ‘நீரார் செறுவின்’ (கலி. 75) என்ற கலியின் தரவு (13 அடி) (செய். 133. நச்.) 12 அடியின் இகந்தன துள்ளல் ஓசையான் வாரா. (பேரா.) அகநிலை ஒத்தாழிசைத் தனிச்சொல் - அகநிலை ஒத்தாழிசைக் கலியுள் தாழிசைக்குப் பின்னும் சுரிதகத்துக்கு முன்னும் பெரும்பான்மையும் ‘ஆங்கு’ என்ற அசைச் சொல்லே தனிசொல்லாக வரும். (‘எனவாங்கு’ என்றாற் போன்ற தனிச்சொற்கள் பொருள் பெற்று வரும். எ-டு : கலி. 5 எனவாங்கு - என்று யாம் நினக்குச் சொல்லா நிற்க; (ஆங்கு - அசை - நச்.) ஆங்கு என்னும் அசைச்சொல் பயிலும் எனவே, அல்லாத வாகிய எனவாங்கு, என இவள், என நின், அதனால், என நீ, என நம், அவனை, என்று நின் - என்றாற் போல்வன பொருள் பெற வருதல் பெற்றாம். ஆங்கு என்பது ஆங்க எனவும் வரும். ஆங்கு என்பது ஏழனுருபாய்ப் பொருளுணர்த்திற்றேல், யாண்டும் பொருளுணர்த்துதல் வேண்டும்; அங்ஙனம் நில்லாமையின் அசைநிலை ஆயிற்று. (தொ. செய். 135. நச்.) இது தாழிசை முன்னரும் சிறுபான்மைவரும். (தொ. செய். 131. இள.) தாழிசைதோறும் தனிச்சொல் வரவும் பெறும். (தொ. செய். 128. இள.) தனிச்சொல் சில, கலியுள் வருமாறு : என வாங்கு - கலி. க.டவுள் வாழ்த்து 3, 4, 5, 8, 9, 10, 11, 15, 16, 17, 20, 22, 23, 25, 27,28, 39, 30 31, 33, 34, 35 முதலியன. என இவள் - கலி. 2. என நின் - கலி . 7 என நீ - கலி. 26 அதனால் - கலி. 14, 49, 50, 54, 122, 124, 127 என - கலி 105 அவனை - கலி. 47 என்று நின்- கலி. 71 ஆங்க - கலி. 75,77, 78, 86, 106, 140 என நாம் - கலி. 40, 131 என்றாங்கே - கலி. 141 ஆயின் - கலி. 61 ஆங்கு - கலி. 99, 100, 103, 104, 128, 136, 137, 149, 150 தாழிசை முன்னர்த் தனிச்சொல் - கலி. 101 தாழிசைதோறும் தனிச்சொல் - கலி. 130, 148. அகநிலை ஒத்தாழிசைத் தாழிசை - தரவைவிடத் தாழிசை சுருங்கி வருதல் பெரும்பான்மை. இதன் தாழிசைக்கு 2 அடி சிறுமை, 6 அடி பெருமை. சிறுபான்மை நான்கடித் தரவுக்கு நான்கடித்தாழிசை வருதலும் உண்டு. எ-டு : கலி 4. (தொ. செய். 134. நச். உரை) தாழிசை 4 அடியின் பெரும்பாலும் உயர வாரா; சிறு பான்மை ஐந்தடியானும் வரும். கலி. 137-இல் ஐந்தடித் தாழிசை வந்தது. கலி 68-இல் தரவு 5 அடி உடையது; முதல் தாழிசை 6 அடி உடையதாக வந்துள்ளது. தாழிசை தரவின் மிக்கு வருதலின் இது கொச்சகமாகும். (கலி. 68 நச்.) தாழிசையை இடைநிலைப்பாட்டு என்றலின், பாட்டு ஓரடியான் வருதல் கூடாதாதலின், தாழிசை ஈரடியிற் குறைந்து வருதல் கூடாது. (தொ. செய். 134. பேரா.) அகநிலைக் கொச்சகக்கலி அளவு - அம்போதரங்க ஒருபோகின் அளவே அகநிலைக் கொச்சகக் கலியின் அளவாம். (தொ. செய். 155. நச்.) அகநிலைக் கொச்சகம் : கொச்சகபேதம். (கலி. 119 உரை) அகப்படுதல் - தாழிசை தரவிற் சுருங்கின முறைமை யுடைத்து - என்பது நூற்பா. அகப்படுதலாவது, அகம் புறம் என்ற இருகூறு செய்தவிடத்தே முற்கூற்றினுள் படுதல். முன் காலமுன்னாம். ஆகவே, நான்கடி முதல் இரண்டடிகாறும் தாழிசை வரப்பெறும். (தொ. செய். 134. நச்.) ‘பொதுமொழி பிறர்க்கின்றி’ என்ற கலியுள் (68) ஆறடித் தாழிசையும் வருதலின், அது கொக்கக்கலியாம். (நச்) பதினோரடி முதல் இரண்டடிகாறும் தாழிசை இழிந்து வரப் பெறும் என்றவாறு. தாழிசை தரவு அகப்பட்டது எனின், தரவின் அடியை விடத் தாழிசை அடி குறைந்திருக்க வேண்டும் என்பது. இனி, ‘சுருங்கும்’ என்னாது ‘அகப்படும்’ என்றது, தரவோடு ஒத்து வரும் தாழிசையும் உள என்று கொள்ளுதற்கு. அகப்படுதல் - ஒத்தல் எனவும் பொருள்படும். கலி 124 இல், தரவு 4 அடி; தாழிசையும் 4 அடி (தொ. செய். 134 பேரா.) அகப்பாட்டு வண்ணம் - அஃதாவது பாட்டின் இறுதியடி இடையடி போன்று நிற்பது. அவையாவன முடித்துக் காட்டும் ஏகாரத்தான் அன்றி, ஒழிந்த உயிரீற்றானும் ஒற்றீற்றானும் வருவன. அவை ‘தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன’(தொ. பொ. 560. பேரா.) ‘உண்கண் சிவப்ப தெவன்கொ லன்னாய்’ (ஐங். 21) முதலாக வரும். இவை ஆசிரிய ஈற்றன. ‘போயினான் யாண்டையான் போன்ம்’ என, இவ்வெண் பாவின் இறுதியடி முடியாத் தன்மையின் முடிந்ததாகலின் அகப்பாட்டு வண்ணமாயிற்று. ‘கொடியுவணத் தவரரோ’ எனக் கலிப்பாவுள் ‘அரோ’ வந்து பின் முடியாத் தன்மையின் முடிந்ததாகலின், இவ்வடியும் அகப்பாட்டு வண்ணமாயிற்று. (தொ. செய். 224. பேரா.) அகப்பாட்டுறுப்பு - அகப்பாட்டுக்களின் உறுப்புக்கள் 12 (ந.அ. 211) அவை. 1. திணை : கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்ற ஏழுதிணைகள். (தொ.பொ. 1) 2. கைகோள் : களவு கற்பு ஆகிய ஈரொழுக்கம். காமப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற் புணர்வு என்ற நான்கு பகுதிகளை யுடையது களவு. மறை வெளிப்படுதல், தமரின் பெறுதல் என்னுமிரண்டும், இவற்றை அடுத்த மலிவு, புலவி, ஊடல், உணர்த்தல், பிரிவு என்ற ஐந்து பகுதிகளுமுடையது கற்பு. (தொ. பொ. 498, 499. பேரா.) 3. கூற்று : களவியல் கூற்றுக்குரிய அறுவரும், கற்பியல் கூற்றுக்குரிய பன்னிருவரும். (தொ. பொ. 501-507) 4. கேட்போர் : தலைவன் தலைவி முதலியோர் கூற்றைக் கேட்டற் குரியோர். (தொ. பொ. 508-512) 5. இடன் : ஒரு செய்யுள் கேட்டால், இஃது இன்ன இடத்து நிகழ்ந்தது எனச் சந்தருப்பத்தை உணர்த்துவது. (தொ. பொ. 513) 6. காலம் : மூன்று காலத்திலும் நிகழ்கின்ற நிகழ்ச்சி அச்செய்யுளுள் தோன்றச் செய்யும் காலம் என்ற உறுப்பு. (தொ. பொ. 514) 7. பயன் : இச்செயலான் இன்னது பெறப்படும் என்னும் பயன். (தொ. பொ. 515) 8. மெய்ப்பாடு : சொல்லப்படும் பொருள் உய்த்து வேறு கண்டாங்கு அறிதல் மெய்ப்பாடு. அது தேவர் உலகம் கூறினும் அதனைக் கண்டாற் போலவே அறியச் செய்யும் உறுப்பு. அது நகை முதலிய எண் வகைத்து. (தொ. பொ. 516-517) 9. எச்சம் : கூற்றினாலும், குறிப்பினாலும் முடிக் கப்படும் இலக்கணத்தொடு பொருந்திய சொற்களும் சொற்றொடர்களும் (கூற்று - வெளிப்படக் கூறுவது) எச்சம் என்னும் உறுப்பாம். (தொ. பொ. 518) 10. முன்னம் : ஒரு மொழியைக் கூறினோரும் கேட் டோரும் இன்னார் என்று அறியச் செய் யும் குறிப்பு நிலையில் உள்ள செய்யுள் உறுப்பு. (தொ. பொ. 519) 11. பொருள்வகை : எல்லாத் திணைகளுக்கும் பொதுவாகப் புலவனால் செய்யப்படுவது. (தொ. பொ. 620) 12. துறை : ஐவகை நிலத்து மாக்களும் மாவும் புள்ளும் போல்வன கூறப்பட்டமுறையை மாற்றிச் செய்யுள் அமைப்பினும் அவ்வத் திணைக்கு ஏற்ற இலக்கணமும் வர லாற்று முறைமையும் பிறழாமை செய் யும் உறுப்பு. (தொ.பொ. 521) இப்பன்னிரண்டும் செய்யுள் உறுப்பு 34இல் சிறப்புடைய 26இல் அமைந்தவை. (தொ. பொ. 313) அகப்பொருள் துறை - அகப்பாட்டுறுப்புப் பன்னிரண்டனுள் ஒன்று. தலைவனும் தலைவியும் களவினும் கற்பினும் இன்பம் நுகர்தலாகிய அகப்பொருள் பற்றிக் கவிஞர்களால் பல வகையாகப் பலர் கூற்றாகப் புனைந்துரைக்கப்பட்ட செய்திகள் அகப்பொருள் துறை எனப்படும். அகப்பாட்டு ஒவ்வொன்றும் நிகழும் சந்தருப்பம் ஒவ்வொரு துறையாம். அகப்பொருள் இலக்கணம் வழுவாதவாறு தன்னையன்றி உரைப்போரும் கேட்போரும் உண்டாகலின்றிக் கவிசொல் லும் புலவன் தானே கூறுவது ‘துறை’ என்னும் உறுப்பாம். (ந. அ. 234) எ-டு : ‘எறிதேன் அலம்பும் சிலம்பில்....’ (தஞ்சை.கோ.15) “இம்மலையில் எப்போதும் இவள்பின்னர் வாளா திரிந்து மெலிந்தோம்; இவள்நினைவு வேறு போலும்”என்று வருந்திய பெருந்தகை மனம் தெளியுமாறு தலைவி சிறிதே புன்முறுவல் செய்தாள் - என்ற கவிகூற்று இப்பாடல். அகவல் 1) அழைத்தல் (பிங். 1996)(2) எடுத்தலோசை (பிங். 2109) (3) அகவற்பாவிற்குரிய ஓசை (யா.கா.செய்.1) (4) ஆசிரியப்பா (தொ.பொ. 393. பேரா) (5) மயிற்குரல் (பிங். 2318) (6) கூத்தாடல் (பிங். 1464) அகவல் ஆறுவகை - நேரிசை, நிலைமண்டிலம், இணைக்குறள், அடிமறிமண்டிலம் எனப் பெரும்பான்மையும் கூறப்படும் அகவற்பாவின் வகைகள் நான்கனுடன், மருட்பா, நூற்பா என இரண்டையும் கூட்டி ஆறு எனக் கூறும் சாமிநாதம் (158) 1. அகப்பா அகவல், 2. புறப்பா அகவல், 3. நூற்பா அகவல், 4. சித்திர அகவல், 5. உறுப்பினகவல், 6. ஏந்திசை அகவல் என அகவல் ஓசையின் ஆறுவகைகளை ஒருசார் ஆசிரியர் குறிப்பதாகக் கூறும் யாப்பருங்கல விருத்தியுரை. ‘அகவல் ஓசை விகற்பம்’ காண்க. (யா. வி. பக். 284. 285) அகவல் உரிச்சீர் - நேர் நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை எனவரும் ஈரசைச்சீர் நான்கும் அகவல் உரிச்சீர் எனப்படும். (யா. கா. 6) அகவல்ஓசை - இஃது ஆசிரியப்பாவிற்குரிய ஓசை. அகவிக் கூறலின் அகவல் ஆயிற்று. அஃதாவது ஒருவன் வினாவ அவனுக்கு மற்றவன் விடையிறுப்பது போன்று அமையாது, தான் கருதியவற்றை யெல்லாம் ஒருவனை அழைத்துத் தானே நேராகக் கூறுவது. அங்ஙனம் கூறுமிடத்துத் தொடர்ந்து கிடந்த ஓசை அகவ லாம். அது களம்பாடு பொருநர்கண்ணும், கட்டும் கழங்கும் இட்டுரைப்பார்கண்ணும், தச்சுவினைமாக்கள்கண்ணும், தம்மின் உறழ்ந்து உரைப்பார்கண்ணும், பூசல் இழைப்பார்- கண்ணும் கேட்கப்படும். வழக்கின்கண் உள்ளதாய் அங்ஙனம் அழைத்துக் கூறும் ஓசை அகவல் ஓசையாம். (தொ. செய். 81. நச்., பேரா.) அகவல்ஒசையின் கூறுகள் - ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை என்பன. இவை முறையே நேரொன்றாசிரியத் தளையான் வருவனவும், நிரையொன் றாசிரியத் தளையான் வருவனவும், இவ்விருதளையும் தம்முள் ஒத்து இயலுதலால் வருவனவும் ஆகும். அவற்றை அவ்வத் தலைப்புள் காண்க. (யா. கா. 69. உரை) அகவல்ஓசை விகற்பம் - அகப்பா அகவல், புறப்பா அகவல், நூற்பா அகவல், சித்திர அகவல், உறுப்பின் அகவல், ஏந்திசை அகவல் என்பன. இவற்றுள் அகப்பா அகவல், அகப்பொருளைத் தழுவிப் பத்து உறுப்பிற்றாய் (‘அகப்பாட்டுறுப்புக்கள்’ காண்க), வஞ்சி விரவாது வந்து முடியும் ஆசிரியப்பா. புறப்பா அகவல், பாடாண்துறைமேல் பாடப்படும் ஆசிரியப்பா. நூற்பா அகவல், விழுமிய பொருளைத் தழுவிவரும் சூத்திரயாப் பாயிற்று. சித்திர அகவல், சீர்தோறும் அகவி வருவது. உறுப்பின் அகவல், ஒருபொருள்மேல் பரந்து இசைப்பது. ஏந்திசை அகவல் எழுத்து இறந்து இசைப்பது.(யா.க. 77. உரை) அகவல் சுரிதகம் - ஆசிரியச் சுரிதகம். கலிப்பாவின் உறுப்பு ஆகிய சுரிதகம் ஆசிரியப்பாவாலும் அமையும்; வெண்பாவாலும் அமையும்: பிறவிரிவு ‘சுரிதக அளவு’ என்பதன்கண் காண்க. அகவல் தாழிசை - ‘ஆசிரியத் தாழிசை’ காண்க. அகவல் துள்ளல் - கலித்தளையொடு வெண்சீர்வெண்டளையும் கலந்து அமையும் செய்யுளின் ஓசை அகவல் துள்ளல் ஆம். எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முறுக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே’ இப்பாடல் கலித்தளையும் வெண்சீர்வெண்டளையுமாய் விரவி அமைந்தமையால், அகவல்துள்ளல் ஓசைத்தாம். (யா. கா. 22. உரை) அகவல் துறை - ‘ஆசிரியத் துறை’ காண்க. அகவல்தூங்கல் - ஒன்றாத வஞ்சித்தளையான் வரும் ஓசை இது. எ-டு : ‘வானோர்தொழ வண்டாமரை தேனார்மலர் மேல்வந்தருள் ஆனாவருள் கூரறிவனை’ இவ்வஞ்சியடிகளுள் கனி முன் நேர் வருதலின் ஒன்றாத வஞ்சித்தளை வந்து, அகவல்தூங்கல் ஓசை நிகழுமாறு காண்க. (யா. கா. 22 உரை) அகவல் முதலிய ஓசையை ஒன்று மும்மூன்று ஆக்குதல் - அகவலோசையை ஏந்திசை, தூங்கிசை, மயங்கிசை என மூன்றாகப் பகுப்பர். செப்பல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசைகளையும் மும்மூன்றாகப் பகுப்பர். இயலசை மயங்கிய உரிச்சீரும், உரியசை மயங்கிய இயற்சீரும் வெண்சீரும் பற்றி ஓசை வேறுபடத் தோன்றலின், நான்கு ஓசைகளையும் மும்மூன்று என்று பகுதிப்படுத்திப் பன்னிரண்டு என்று கூறும் வரையறையுள் அவை அடங்கா ஆதலின், அகவல் முதலிய ஓசையை மும்மூன்றாகப் பகுத்தல் தொல்காப்பியனார் கருத்தன்று. (தொ. செய். 11 நச்.) அகவல்வண்ணமும் அமைப்பும் - குறில்அகவல் தூங்கிசைவண்ணம், நெடில்அகவல் தூங்கிசை வண்ணம், வலி அகவல் தூங்கிசைவண்ணம், மெலிஅகவல் தூங்கிசை வண்ணம், இடையகவல் தூங்கிசை வண்ணம் என அகவல்தூங்கிசை வண்ணம் ஐந்தாம். இது சூறைக்காற்றும் நீர்ச்சுழியும் போல வருவது. ஆசிரியங்களும் பாவைப் பாட்டும் போல்வன இவ்வண்ணத்துக்கு எடுத்துக்காட் டாவன. (யா. வி. பக். 411, 415) அகவல் விருத்தம் - கழிநெடிலடி நான்கு சமமாய் அமைவது. அறுசீர் விருத்தம் பெரும்பான்மைத்து. எழுசீர் எண்சீரான் வருவனவும் சிறப்புடை விருத்தங்களே. எண்சீரின் மிக்கு வருவன சிறப்பில. அடிமறியாய் வருவன ஆசிரிய மண்டில விருத்தம் எனவும், அடிமறி ஆகாது நிற்பன ஆசிரிய நிலை விருத்தம் எனவும் வழங்கப்பெறும். (யா. க. 77 உரை) அகவல் வெண்பா - அகவல்வெண்பாஆவது இன்னிசை வெண்பா ஆகும் என்பர் ஒருசாரார். எ-டு : ‘வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாணாள்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார்!’ (நாலடி. 39) இஃது அகவல்வெண்பா என்று அணியியல் உடையார் காட்டின பாட்டு. மனைக்குப்பாழ் வாணுதல் இன்மை; தான்செல்லும் திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை; இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை; தனக்குப்பாழ் கற்றறி வில்லா உடம்பு. (நான்மணி. 20) இஃது அகவல் வெண்பா என்று செய்யுளியல் உடையார் காட்டின பாட்டு. (யா. க. 57.உரை) அகவற்சீர் - ‘அகவல் உரிச்சீர்’ காண்க. அகவற்பா - இஃது ஆசிரியப்பா எனவும்படும். ‘ஆசிரியப்பா இலக்கணம்’ காண்க. அகைத்தல் - அகைத்தல் - அறுத்தல். இங்ஙனம் அறுத்தறுத்து அஃதாவது விட்டுவிட்டுச் சேறல், ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் செய்யுளடி வருவழி நிகழும் ஓசை வேறு பாடாம். எ-டு : ‘வாரார் ஆயினும் வரினு மவர்நமக்கு’ (குறுந். 110) இவ்வடியில் முதல் இருசீர் நெடில் பயின்றும் அடுத்த இருசீர் குறில் பயின்றும் விட்டுவிட்டு ஒலித்தல் அகைத்தலாம். (தொ. செய். 229 பேரா.) அகைப்பு வண்ணம் - அறுத்தறுத்துப் பயில்வது அகைப்பு வண்ணமாம். விட்டு விட்டுச் செல்லுதலின் இப்பெயர்த்தாயிற்று. எ-டு : ‘வாரா ராயினும் வரினு மவர்நமக்(கு)’ யாரா கியரோ தோழி நீர (குறுந். 110) இவ்வடிகளில் ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் அறுத்தறுத்து வண்ணம் ஒழுகியவாறு காண்க. (தொ. செய். 229. பேரா.) அங்கதச் செய்யுள் - வசைப்பாடல்கள் பொதுவாக அங்கதம் எனப்படும். (தொ. செய். 124. நச்.) அவை வசையொடும் நகையொடும் பொருந்திவரும். (தொ. செய். 125 இள.) அங்கதச்செய்யுள், அகத்திணை புறத்திணையுள் நிகழுமாறு - அங்கதச் செய்யுள், அகத்திணையுள் கைக்கிளை பெருந் திணை பற்றியும், பிரிவுக்காலத்தில் தோழி இயற்பழித்தலும் பரத்தையர் கூற்றும் ஆகியவை பற்றியும் வரும்; புறத்திணை யுள் காஞ்சித்திணைப்பொருள் பற்றியும், ‘கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்’, ‘வஞ்சினம் கூறல்’ முதலியவை பற்றியும் வரும். (தொ. செய். 129. ச. பால.) அங்கதச்செய்யுள் வருமாறு - அடிவரையின்றிக் குறிப்புமொழியாலாகி வரும் அங்கதத்தின் வேறானது அங்கதச் செய்யுள். இது வெண்பாயாப்பிற்று. (தொ. செய். 118 ச. பால) அங்கதத்தின் இருவகை - அங்கதம் எனப்படும் செய்யுள் செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும். அவை வசை போன்று புகழாதலும், புகழ் போன்று வசையாதலும் உரிய. எ-டு : ‘....... பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே.’ (புறநா. 142) எனக் கொடையிடத்து அறியாமை தோன்றப் பேகன் செயற் பட்டான் எனக் கூறுதல், வசைபோன்று புகழாய்ச் செம் பொருளின் பாற்படும். ‘நூற்றுவர் தலைவனைக், குறங்கறுத் திடுவான்போல்’ (கலி.52) என வீமன் கண்ணன் செய்த குறிப்பினை உட் கொண்டு துரியோதனனைத் தண்டினால் தொடையிலடித்து உயிர் போக்கியமை, புகழ்போன்று வசையாக் கரந்த அங்கதத்தின் பாற்படும். (என்னை? இடைக்குக் கீழ்ப்பகுதியில் தாக்கிச் செகுத்தல் மேம்பட்ட மறத்திற்கு இழுக்கு ஆதலின்.) (தொ. செய். 124. நச்.) அங்கதப்பாட்டின் அளவு - அங்கதப்பாட்டிற்கு ஈரடிச் சிறுமையும் பன்னீரடிப் பெருமை யும் கொள்ளப்படும். வசைப்பாட்டாகிய அங்கதப் பாட்டின் அளவு குறுவெண்பாட்டுப் போல ஈரடிச் சிறுமையும் நெடுவெண்பாட்டுப் போலப் பன்னீரடிப் பெருமையும் ஆம். (தொ. செய். 159 நச்., பேரா.) அங்கதப்பாட்டு - ‘அங்கதச் செய்யுள்’ காண்க. அங்கதம் ‘அங்கதச் செய்யுள்’ காண்க. அசை - செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. ஓரெழுத்தையும் பல எழுத்தையும் பொருத்தி ஓசை கொள்ளுதலின் அசை எனப்பட்டது. இது நேரசை நிரையசை என இருவகைத்தாய், சீருக்கு உறுப்பாக அமைவது. ஒரோவழி அசையே சீராதலும் உண்டு; அஃது அசைச் சீர் எனப்படும். அசை என்ற காரணக் குறியீடு - எழுத்துக்களின் மாத்திரையை முன்னும் பின்னுமாக மயக்கி ஓர் ஓசைத்தாக அசைத்து நிற்றலின் அசை என்பது காரணக் குறியீடாம். (தொ. செய். 3. ச. பால.) அசைக்கு உறுப்பாவனவும், அவ்வெழுத்துக்களின் வகையும் - குறிலும் நெடிலும் குற்றியலுகரமும் என்னும் மூன்றும் அசைக்கு உறுப்பாவன என்பர், பேராசிரியரும் நச்சினார்க் கினியரும். (தொ. செய். 2) உயிரெழுத்து மெய்யெழுத்து சார்பெழுத்து என எழுத்தி யலை மூவகையாக்கி, குற்றெழுத்து நெட்டெழுத்து அளபெடை என உயிர் மூவகைப்படும் எனவும், வல்லினம் மெல்லினம் இடையினம் என மெய்யெழுத்து மூவகைப்படும் எனவும், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் எனச் சார்பெழுத்து மூவகைப்படும் எனவும் பாகுபடுத்து, உயிரும் மெய்யும் கூடி உயிர்மெய்யெழுத்தாம் என அதனையும் சுட்டி, ஐகாரக்குறுக்கம் மகரக்குறுக்கம் என இரண்டனையும் கூட்டி இவை யெல்லாவற்றையும் குறித்துப்போந்தார் இளம்பூரணர். (செய். 2) உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், அளபெடை, வன்மை, மென்மை, இடைமை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், ஐகார ஒளகார மகரக் குறுக்கங்கள் ஆகிய பதினைந்தும் அசைக்கு உறுப்பாம். (யா. க. 1) அளபெடையை உயிரளபெடை ஒற்றளபெடை என இரண் டாகப் பகுத்து அசைக்கு உறுப்புப் பதினாறு என்பாரும், அவற்றோடு ஆய்தக் குறுக்கமும் சேரப் பதினேழு என்பாரும் உளர். பெருங்காக்கை பாடினியார், முற்கூறிய பதினைந்தில் ஒளகார மகரக் குறுக்கங்களை நீக்கி, ஏனைய பதின்மூன்றும் அசைக் குறுப்பென்றார். சிறுகாக்கைபாடினியாரும், அவிஙயனாரும் முறையே அப் பதின்மூன்றனுள் ஆய்தத்தை நீக்கி எஞ்சிய பன்னிரண்டும், ஆய்தத்தையும் மெய்யையும் நீக்கி எஞ்சிய பதினொன்றும் அசைக்கு உறுப்பு என்றனர். நாலடி நாற்பது என்னும் நூலுடையார், மேற்காணும் பதினைந்தனுள் உயிர் - ஆய்தம் - ஒளகாரக் குறுக்கம் - என்னும் மூன்றையும் நீக்கி எஞ்சிய 12-ஐயும் கூறினார். (யா.வி. பக். 30) பேராசிரியரும் நச்சினார்க்கினியரும், ஒற்றளபெடை மிகவும் அருகியே வருமாதலின் அதனை அசைக்கு உறுப்பாகக் கொள்ளாமல், தொடைக்கும் வண்ணத்திற்கும் உறுப்பாக்கி, மெய் அலகு பெறாதாகவே அதனை ஒத்த குற்றியலிகரம் ஆய்தம் என்பனவற்றையும் மெய்யின் குறுக்கமாகிய மகரக் குறுக்கத்தையும் நீக்கி, உயிர்அளபெடையைக் குறிலும் நெடிலுமாகவும் ஐகார ஒளகாரக்குறுக்கங்களைக் குறிலாக வும் அடக்கி, அசைக்கு உறுப்பாவன குறிலும் நெடிலும் குற்றுகரமும் ஆகிய மூன்றுமே என்று குறிப்பிட்டுள்ளமை உளங்கொளத்தக்கது. அசைகளின் வடிவு - நேர், நிரை, நேர்பு, நிரைபு - அசைகள் முறையே ர - ட - ரு - டு - வடிவாக இடப்படும். நேர்நிரைகளின் குறியீடு வடமொழி லகு குருக்களின் குறியீட்டை ஒருபுடை ஒத்துத்துள்ளது. (லகு- ஐ; குரு -ஃ) நேர்பசை நிரைபசைகளைக் குறிப்பிட, நேரசை நிரையசைகளைக் குறிக்கும் எழுத்துக்களாகிய ர ட என்பவற் றுடன் உகரம் சேர்ந்த ரு, டு என்பன குறியீடுகளாகியன. (யா. க. 5. உரை) அசைகளுக்கு அலகுகள் - நேரசை ஓரலகு; நிரையசை ஈரலகு; நேர்பு அசை மூவலகு; நிரைபு அசை நான்கு அலகு என்பர் அவிநயனார். அஃதாவது நேரசை முதலாவது அலகு, நிரையசை இரண்டாவது அலகு, நேர்புஅசை, மூன்றாவது அலகு, நிரைபுஅசை நான்காவது அலகு என அலகுகள் நான்கு வகையாம். (யா. க. 5. உரை) முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என்பனவற்றை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என வழங்குவது உண்டு. ‘ஒன்றென மொழிப’ (தொ. பொ. 261) ‘இரண்டென மொழிப’ (தொ. பொ. 262) ‘மூன்றென மொழிப’ (தொ. பொ. 263) ‘நான்கென மொழிப’ (தொ. பொ. 264 ‘ஐந்தென மொழிப’ (தொ. பொ. 265) ‘ஆறென மொழிப’ (தொ. பொ. 266) என்ற தொல்காப்பிய நூற்பாக்களும், ‘இரண்டென மூன்றென, நான்கென ஐந்தென- ஆறென ஏழென எட்டென தொண்டென’ (பரி. 3 : 78,79) “இரண்டு முதலாகிய எண்கள் நான்கும் ஈண்டுப் பூரணப் பொருள“, “ஈண்டும் ஏழு முதலாகிய எண்கள் பூரணப் பொருள”(பரிமேலழகர் உரை) என்ற செய்தியும் இங்ஙனம் பொருள் செய்வதற்கு எடுத்துக்காட்டான சான்றுகளாம். அசைகளுக்குப் புறனடை - ஐகாரக்குறுக்கம் பிறிதொன்றனோடு இயைந்தும், ஐகாரத்தி னோடு இயைந்தும் நிரையசையாம். ‘கெண்டையை வென்ற’ (யா.கா. 38 மேற்.)என்புழி, கெண்டையை எனச் சீர்க்கடைக்கண் ஐகாரம் இரண்டு இணைந்து நிரை யசையாயிற்று. ‘அன்னையையான் நோவ தவமால்’ (யா. கா. 38 மேற்.) என்புழி ‘அன்னையை’ எனச் சீர்நடு ஐகாரம் இரண் டிணைந்து நிரையசை ஆயிற்று. ‘படுமழைத் தண்மலை வெற்பன்’ (யா. வி. பக். 55) என்புழி, ‘படுமழை’ ‘தண்மலை’என்பவற்றில் சீர்க்கடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இயைந்து நிரையசையாயிற்று. ‘தன்னையரும் காணத் தளர்ந்து’ (யா. வி. பக். 55) என்புழி, ‘தன்னையரும்’ எனச் சீர்நடு ஐகாரம் குற்றெழுத்துடன் கூடி நிரையசையாயிற்று. ‘பையுள் மாலைப் பழுமரம் படரிய’ (தொ. கள. 23 மேற். நச்.) என்புழி, ‘பையுள்’ எனச்சீர் முதற்கண் நின்ற ஐகாரம், குறிலுடன் நிரையசையாகாது, தானே தனித்து நேரசை யாயிற்று. (யா. வி. பக். 55) ‘அடைப்பை யாய் கோல்தா எனலும்’(யா. கா. 38 மேற்.) என்புழி ‘அடைப்பையாய்’ எனச்சீர்நடு ஐகாரம் நெடிலோடு இயைந்து நிரையசை யாயிற்று. (யா. க. 9 உரை) அசைச்சீர், இயற்சீர் என்பன இருவகைப்படுதல் - அசைச்சீர் - 2 நேர்பு : வண்டு - ஓரெழுத்து; மின்னு - ஈரெழுத்து. நிரைபு : வரகு - ஈரெழுத்து; அரவு - மூவெழுத்து. இவற்றுள் குற்றுகரம் எழுத்தெண்ணப்பெறாது அலகு மாத்திரம் பெறுதலின், இருநிலைமை எய்தின. நேர் நேர் : நுந்தை - ஓரெழுத்துத் தேமா. நேர் நிரை : ஞாயிறு - ஈரெழுத்துப் பாதிரி நிரை நிரை : வலியது - மூவெழுத்துக் கணவிரி. இவற்றுள், குற்றுகரம் எழுத்தெண்ணப்பெறாது அலகு மாத்திரம் பெறுதலின், இரு நிலைமை எய்தியவாறு. இவை இயலசை மயங்கின இயற்சீர்கள். நேர்பு நேர் : போதுபூ - ஈரெழுத்து; மேவுசீர் - மூவெழுத்து. நிரைபு நேர் : விறகுதீ - மூவெழுத்து; உருமுத்தீ - நாலெழுத்து. நேர் நேர்பு : போரேறு - ஈரெழுத்து; நன்னாணு - மூவெழுத்து. நேர் நிரைபு : பூமருது - மூவெழுத்து; காருருமு - நாலெழுத்து. நிரை நிரைபு : மழகளிறு - நாலெழுத்து; நரையுருமு - ஐயெழுத்து. நிரை நேர்பு : கடியாறு - மூவெழுத்து; பெருநாணு - நாலெழுத்து. உரியசை மயங்கின இவ்வியற்சீர்கள் ஆறும் குற்றுகர முற்றுக ரங்களான் இருநிலைமை எய்தின. (தொ. செய். 43. நச்.) அசைச்சீர் இயற்சீர் போல்வது - ‘கழல்தொழா மன்னர்தம் கை’ (தண்டி 21-2) ‘புனல்நாடன் பேரே வரும்.’ (முத்.) ‘எய்போற் கிடந்தானென் னேறு.’ (பு. வெ. மா. 8 : 22) ‘மேவாரை யட்ட களத்து’ (களவழி. 25) வெண்பாவின் ஈற்றடியாக வரும் இவற்றுள், முறையே நேரசையும் நிரையசையும் நேர்புஅசையும் நிரைபுஅசையு மாகிய அசை(ச்சீர்) இயற்சீராக நின்றன. (தொல். செய். 27. பேரா.) அசைச்சீர்க்குத் தளை வழங்குதல் - அசை சீராய் நின்றவிடத்துத் தளை வழங்கும்போது நேரசைச் சீருக்கு ஓர் அலகு கொடுத்து நேர்நேர் ஆகவும், நிரையசைச் சீருக்கு மற்றும் ஓர் அலகு கொடுத்து நிரைநேர் ஆகவும், நேர்புஅசைச்சீருள் ஓர் அலகு களைந்து தேமாவாகவும், நிரைபு அசைச்சீருள் ஓர் அலகு களைந்து புளிமாவாகவும் வைப்பர். எ-டு : ‘கழிந்தோர்க் கிரங்கு நெஞ்சமொடு - நிரைபு ஒழிந்திவ ணுறைதல் ஆற்று வோர்க்கே’ - நேர்பு. இஃது ஆசிரியப்பா. ‘முலைவிலங்கிற் றென்று முனிவாள்’(தண்டி. 16)நேர்பு ‘நெய்த்தோர் நிறைத்துக் - கணம்புகல’(பு. வெ. மா. 3 : 5)நிரைபு இவை வெண்பாஅடி. இவற்றுள் இடைவரும் உரியசைகளும் (நேர்பு, நிரைபு) சீர் நிலைப்படுதல் கொள்ளப்பட்டவாறு. (தொ. செய். 28. நச்.) இவை அசைச்சீரென வேறாக எண்ணப்படினும், தளைவகை நோக்குங்கால் இயற்சீர்க்கண் அடங்கும். செய்யுளிடையே வந்த நேர்பசை நேர்நேராகவும், நிரைபசை நிரைநேராகவும் கொள்ளப்பட்டுத் தளைகொண்டவாறு காண்க. இனி, யாப்பருங்கல விருத்தி உரைப்பது - ஓரசைச்சீர் இயற்சீர் போலக் கொள்ளப்பட்டு வரும் சீர் முதலசையோடு ஒன்றியது ஆசிரியத் தளையாகவும் ஒன்றாதது இயற்சீர் வெண்டளையாகவும் கொள்ளப்படும் என்பது. (யா. க. 21. உரை) அசைச்சீர்த் தளைகள் - ஓரசைச்சீரை இயற்சீர் போலக் கொண்டு வருஞ்சீர் முதலசை யோடு ஒன்றியது ஆசிரியத் தளையாகவும், ஒன்றாதது இயற்சீர் வெண்டளையாகவும் கொள்ளப்படும். (சிறப்பில் லாத சீர்களாதலின் இவ்வோரசைச்சீரும் நாலசைச்சீரும் பொதுச்சீர் எனப்படும்.) ‘அசைச்சீர் இயற்சீர் ஒக்கும் ஒண்தளைக்கே’ (யா. கா. 8) (21 உரை) எ-டு : ‘அரிமதர் மழைக் கண்ணாள் செருமதி செய் தீமையால்’ ‘மழை’ நிரையீற்று இயற்சீராகக் கொள்ளப்பட்டுக் ‘கண்ணாள்’ என்பதனொடு தளை கொள்ளுமிடத்து இயற்சீர் வெண்டளை ஆயிற்று. ‘செய்’ நேரீற்று இயற்சீராகக் கொள்ளப்பட்டுத் ‘தீமையால்’ என்பதனொடு தளை கொள்ளுமிடத்து நேரொன்றாசிரியத்தளையாயிற்று. (யா. கா. 11. உரை) அசைச்சீர் நான்கும், இயற்சீர் பத்தும், ஆசிரிய உரிச்சீர் ஆறும் - அசைச்சீர் 4 : நேர்; நிரை; நேர்பு, நிரைபு என்பன. (தொ. செய். 3, 4) இயற்சீர் 10 : நேர்நேர் - நிரைநேர் - நிரைநிரை - நேர்நிரை - நேர்பு நேர் - நிரைபு நேர்- நேர் நேர்பு - நேர் நிரைபு - நிரை நேர்பு - நிரை நிரைபு என்பன. ஆசிரிய உரிச்சீர் 6 - நேர்பு நேர்பு - நேர்பு நிரைபு - நிரைபு நேர்பு - நிரைபு நிரைபு - நேர்பு நிரை - நிரைபு நிரை என்பன. (தொ. செய். 13 - 16) அசை சீர்நிலை ஆகலும் உரித்து ஆதல் - ஓசை நிலைமையால் சீர்த்தன்மைப்பட நிறைந்து நிற்பின், அசைநிலைமைப்பட்ட சொற்கள் சீர்நிலையையும் பெறும். முச்சீர்களையுடைய வெண்பாவின் ஈற்றுச் சீர்க்கண் இவை மிகுதியும் வரும். வெண்பா : ‘கழல்தொழா மன்னர்தம் கை’ (தண்டி. 21-2) நேர் (இயலசை) ‘புனல்நாடன் பேரே வரும்’ (முத்.) - நிரை (இயலசை) ‘எய்போல் கிடந்தானென் ஏறு’ (பு.வெ.மா. 8:22) நேர்பு (உரியசை) ‘மேவாரை அட்ட களத்து’ (களவழி 25) - நிரைபு (உரியசை) ஆசிரியம் : ‘கழிந்தோர்க் கிரங்கு நெஞ்சமொடு - நிரைபு ஒழிந்திவண் உறைதல் ஆற்று வோர்க்கே’ - நேர்பு வெண்பா : ‘முலைவிலங்கிற் றென்று முனிவாள்’ (தண்டி : 16) நேர்பு ‘நெய்த்தோர் நிறைத்துக் - கணம்புகல’ (பு. வெ. மா. 3 : 5) நிரைபு என இடை வரும் உரியசைகளும் சீர்நிலைப்படுதல் கொள்ளப்படல் வேண்டும். இவை அசைச்சீரென வேறாக எண்ணப்படினும், தளைவகை நோக்குங்கால் இயற்சீர்க்கண் அடங்கும். செய்யுளிடையே வந்த நேர்பசை நேர்நேராகவும், நிரைபசை நிரைநேராகவும் கொள்ளப்படும். (தொ. செய். 28. நச்.) அசைநிலை அளபெடை - ‘அளபெடை அசைநிலை யாதல்’ காண்க. சீர்நிலை எய்திநின்ற அளபெடைகள் அசைநிலையாதலும் உண்டு. இயற்கையளபெடை அசைநிலையாதல் செய்யுட்கே உரியது. புணர்ச்சிவகையான் எழுத்துப்பேறாகிய அள பெடையும் பொருள் புலப்பாட்டிற்குப் புலவர் செய்த செயற்கை அளபெடைகள் சிலவும் அசைநிலை ஆதலும் உரிய. எ-டு : ‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள்’ (யா.கா. 38 மேற்.) என்புழி, அளபெடை சீர்நிலை எய்தின் வெண்பாச் சிதையும் ஆதலின், பண்டமாற்றின்கண் இயற்கை அளபெடை அசைநிலை யாயிற்று. ‘பலாஅக்கோட்டுத் தீங்கனிமேற் பாய்ந்த கடுவன் என்புழி, ‘பலாஅ’ என்பதன்கண் எழுத்துப்பேறளபெடை சீராகாது அசையாயிற்று. ‘கலம்போஒய்ப்போஒய்க் கவ்வை செய’ என்புழி, வெண்பா ஈற்றடியில் அளபெடை செய்கைக் குறிப்புப் புலப்பட வந்தது. அளபெடை சீராயின் வெண்பாச் சிதையும். (செய்கைக்குறிப்பு - ஒரு செயல் பலகால் நிகழ்தல்). (தொ. செய். 17 நச்.) அசையடி - கலிப்பா உறுப்புக்களில் ஒன்றாகிய அம்போதரங்கத்திற்கு ஒரு பெயர். (வீ. சோ. 117 உரை, யா. கா. 32,) (யா. க. 83 உரை, இ. வி. 738) அசையின் தொகை - நேரசையும் நிரையசையும் என அசையின் தொகை இருவகைத்து. அவற்றுடன் நேர்புஅசை நிரைபுஅசைகளைச் சேர்க்க அசையின் தொகை நான்காம். (யா. க. 5. உரை) அசையின் வகை - எழுத்தின் ஒலியைக் கணக்கிட்டு வகைப்படுத்துவது அசை. அசையின் கூறுபாடுகள் அசைவகை எனப்படும். அவை இயலசையும் உரியசையும் என இரண்டாம். (தொ. செய். 1 பேரா.) அசைவகை என்றது, இயலசையும் உரியசையுமாம் அசைக் கூறுபாட்டினை. (செய். 1 நச்.) எண்ணப்படாத ஒற்றுக்கள் பயன்படாது அசைத்து (-ஒலித்து) நிற்றலின், அசையென்னும் பெயரும் தோன்றிற்று. (செய். 3 நச்.) நேரசை, நிரையசை, நேர்பசை, நிரைபசை என்பன நான்கும் அசைவகைகளாம். அசையின் விரி - சிறப்புடைய நேரசை, சிறப்பில் நேரசை, சிறப்புடைய நிரையசை, சிறப்பில் நிரையசை, சிறப்புடைய நேர்பசை, சிறப்பில் நேர்பசை, சிறப்புடைய நிரைபசை, சிறப்பில் நிரைபசை என்பன. (யா. க. சிறப். 1. உரை) பொருள் பயந்து நிற்பன சிறப்பசை என்றும், மொழிக்கு உறுப்பாய் நிற்பன சிறப்பில் அசை என்றும் வழங்கப்படும். (யா. க. 8 உரை) அசையும் சீரும் இசையொடு சேர்த்தல் - செய்யுட்கண் பயின்று வரும் எழுத்தானாம் அசைகளையும் அசையானாம் சீர்களையும், தூக்கும் பாவும் வண்ணமும் ஆகிய உறுப்புக்களுக்கு ஏற்ப, ஆசிரியம் வெண்பா முதலிய ஓசைகள் வழுவாமல் அவ்வவற்றிற்குரிய இசையொடு சேர்த்தி அவற்றின் வேறுபாடு தோன்ற வகுத்துணர்த்துதல் செய்யுளிலக்கணம் வல்லோர் முறை. என்றது, ஒருசெய்யுட்கண் அதற்குரிய ஓசையின்றி மாறினும், அவை இன்னா ஓசைய ஆயினும் வழுவாம் என்றவாறு. எ-டு : ‘வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு’ என்னும் குறள்வெண்பாவின் அடியை ‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு’ என ஓதின் வழுப்படுகிறது. ஆதலின், ‘வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு’ என அசையை இசையொடு சேர்த்து இசைக்கப் பிழையா தாயிற்று. (தொ. செய். 11. ச. பால.) அசையும் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உணர்த்தல் - மாத்திரை என்னும் செய்யுளுறுப்பின் ஓசையை அளந்து இன்னோசையும் இன்னா ஓசையும் அறிந்து உணரப்படும். ‘பொருப்புப் புடைத்துப் புடைத்து’ என்ற வெண்பா ஈற்றடி இன்னா ஓசை உடையது. அது ‘பொருப்புத் தழைந்து பொலிந்து’ என மெல்லின ஓசை சேர்க்க இன்னோசைத் தாயிற்று. ‘நிலமிசை நீடுவாழ் வார்’ என்னும் திருக்குறள் (3) ஈற்றடியில், ‘வாழ்வார்’ என்னும் ஓசையை வகுத்து ‘வார்’ என்னும் நேரசைச்சீர் ஆக்க, இன்னோசைத்தாயிற்று. இது வகையுளி எனவும் வழங்கப் பெறும். வெண்பாவிற்கு அடிதோறும் 7 எழுத்து முதல் 14 எழுத்து வரையில் வரலாம் என்னும் வரையறையை உட்கொண்டு, வெண்சீர் வெண்டளையினாலேயே ‘தேமாங்காய் தேமாங் காய் தேமாங்காய் தேமாங்காய்’ என 12 எழுத்தான் அமைக் கப்பட்ட வெண்பாஅடியில் துள்ளல்ஓசை பிறக்குமாதலின், அப் பன்னிரண்டு எழுத்துக்களையே கொண்டு ஈரசைச் சீர்களையும் இடைமிடைந்து, தேமாங்காய் கூவிளம் காருருமு (நேர் நிரைபு) காருருமு, என அமைப்பின் இன்னோ சையாகிய வெண்பா ஓசை பிறக்கும். ‘கூவிளம் கருவிளங்காய் கருவிளங்காய் தேமாங்காய்’ இதனுள், கூவிளம் - நேர் நிரை; கருவிளங்காய் - நிரை நிரை நேர். கூவிளம் என்ற இயற்சீர்ப்பின் நிரை ஒன்றி, நிரை ஒன்றிய ஆசிரியத்தளை ஆயிற்றேனும், கலித்தளை போல் ஓசை கொள்ளப்படும். ‘நுதல திமையா நாட்டம்; இகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே’ (அகநா.கடவுள்) ‘இகலட்டு’ என்னும் சீர் குறித்த பொருளை முடியநாட்டும் ‘யாப்பு’ என்னும் உறுப்பினுள் அடங்காது; ஏனெனின் ‘நுதல திமையா நாட்டம்’ என்னும் மூன்று சீர்களாலேயே குறித்த பொருள் முடிந்துவிட்டது; ‘இகலட்டு’ என்னும் சீர் அடுத்த அடியிலுள்ள கையது என்னும் சீரோடு இயைந்து பொருள் தருவது; எனினும் இசையொடு சேர்த்தி வகுக்கப் பட்டது ஆதலின், சிறப்புடைத்து. ‘சுஃஃ றென்னும் தண்தோட்டுப் பெண்ணை’ என்புழி, ‘சுஃஃறு’ என்பது எழுத்து அல்லாத ஓசை. அதுவும் அசை யொடும் சீரொடும் சேர்த்து உணரப்பட்டது. ‘வண்கொன்றையை மருட்டுங்காண்’ ‘புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே’ இப்பாடல் அடிகளில் ஐகாரம் கடை இடை முதல் என்னும் மூவிடங்களிலும் குறுகி ஒருமாத்திரையாய்க் குற்றெழுத்து நீர்மைத்தாய் ஓசை கொண்டது. இவ்வாறே பிறவும் வகுத்துணர்த்தல் அத்துறையினோர்க்கே தெரிவதாம். இவை எஃகு செவியும் நுண்ணுணர்வும் உடை யார்க்கன்றிப் பிறர்க்கு உணரலாகா. (தொ. செய். 11 நச். பேரா.) அசையுள் எழுத்து அடங்காமை - ‘உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ’ என்றதனான் (செய். 44) ஐயம் தோன்றுதலின், எழுத்து அசையுள் அடங்காது. பொரு ளுணர்ச்சிக்கு எல்லா எழுத்தும் காரணமாதலின் எழுத்தினை விதந்து கூறினார். (தொ. செய். 78. ச. பால.) அசை விரளச் செந்தொடை - ஓரடியிலுள்ள ஈரசைச்சீர்களிலோ மூவசைச்சீர்களிலோ ஒரேவகையான சீர் வாராமல் பலவகைச் சீர்களும் வருதல். எ-டு : ‘இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்’ (அகநா. 270) நிரைநிரை நிரைநேர் நேர்நிரை நேர்நேர் கருவிளம் புளிமா கூவிளம் தேமா இவ்வாறு ஈரசைச்சீர்களில் அசைகள் மாறி வருதல் அசை விரளச் செந்தொடையாம். (யா. க. 50. உரை) அடக்கியல் - ஒத்தாழிசைக் கலிப்பாவின் ஒருவகையாகிய தேவபாணியின் சுரிதகம் இது. முன்னர்ப் பலவகையான் புகழ்ந்த தெய்வத் தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கி நிற்றலின் அடக்கியல் ஆயிற்று. (தொ. செய். 144 நச். உரை) சுரிதகம், அடக்கியல், வாரம், வைப்பு, போக்கியல் என்பன ஒருபொருட் கிளவிகள். (வீ. சோ. 117. உரை) ‘அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்து ஒழுகல்’ - கொச்சக ஒருபோகின் ஒருவகை இது. சுரிதகம் என்னும் கலிப்பாஉறுப்புத் தனித்து வருதலின்றி, அச்சுரிதகச் செய்தி யையும் இணைத்துக் கூறும் அடிகளையுடைய ஒரே செய்யு ளாய் அடிமிகுந்து வருதல். இதனான் இவ்வகைக் கொச்சக ஒருபோகு ஆசிரியம், வெண்பா ஆகிய சுரிதகஅடி இறுதியில் கலத்தலின்றி ஒரே ஓசைத்தாகிய கலிப்பாவாய் வரும் என்பது. அது எ-டு : ‘மழைநுழைந்து புறப்பட்ட மதியமும் ஞாயிறும்போல் ............ ..................... ...................... .................... யாயென் றல்ல தியாந்துணி யலமே.’ எனவரும். அடக்கியலின்றி அடி நிமிர்ந்து வெண்பா இயலான் முச்சீரடி ஈற்றடியாக முடிந்த அடிநிமிர்ந் தொழுகிய கொச்சக ஒருபோகினைப் பிற்காலத்தார் வெண்கலிப்பா என்பர். (தொ. செய். 149. பேரா. நச்.) அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்து ஒழுகும் ஒருபோகின் அளவு - அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்து ஒழுகிய கொச்சக ஒருபோகின் சிற்றெல்லை 10 அடி, பேரெல்லை 20 அடி. எ-டு : ‘தடங்கடற் பூத்த தாமரை மலராகி அடங்காத முரற்சியான் அருமறை வண்டிசைப்ப ஆயிர வாராழி அவிரிதழின் வெளிப்பட்ட சேயிதழ் எனத்தோன்றும் செம்பகலின் இரவகற்றிப் படுமணிப் பகைநீங்கப் பருவத்து மழையானே நெடுநிலம் குளிர்கூர நீர்மைசால் நிழல்நாறி அண்டங்கள் பலபயந்த அயன்முதலாம் இமையோரைக் கொண்டங்கு வெளிப்படுத்த கொள்கையை யாதலின் ஓங்குயர் பருதியஞ் செல்வநின் நீங்கா உள்ளம் நீங்கன்மார் எமக்கே’ இது பத்தடியின் சுருங்காது அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகிய கொச்சக ஒருபோகு. (தொ. செய். 150 நச். ) அடக்கியல்வாரம் - ஒத்தாழிசைக் கலியின் ஒருவகையாகிய தேவபாணியின் சுரிதகம் அடக்கியல்; இவ்வடக்கியலின்கண் தெய்வத்தை யன்றி மக்களைப் புகழ்ந்த அடியும் வருதலின், ஒரு கூறு என்று பொருள்படும் வாரம் என்னும் பெயர்த்தாயிற்று. முன்னர்ப் பலவகையான் புகழ்ந்த தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கி நிற்றலின் அடக்கியல் ஆயிற்று; தெய்வத்தையன்றி மக்களைப் புகழ்ந்த அடியும் வருதலின் வாரமாயிற்று. (தொ. செய். 144 நச்.) அடி (1) - இரு சீரான் வந்த அடி குறளடி; முச்சீரான் வந்த அடி சிந்தடி; நாற்சீரான் வந்த அடி அளவடி அல்லது நேரடி; ஐஞ்சீரான் வந்த அடி நெடிலடி; அறுசீர் முதலாகப் பதினொரு சீர்காறும் வந்த அடி கழிநெடிலடி. (யா. கா. 12) இவ்வடிகளுக்கு முறையே ஆகாய அடி, காற்றடி, நெருப்படி, நீரடி, மண்ணடி எனப் பஞ்ச பூதங்களின் பேரே பெயராம். (வீ. சோ. 109) பதின்மூன்று சீர்காறும் கழிநெடிலடி நிகழும் என்னும் (யா.க. 25 உரை) நாற்சீர் அடியையே எழுத்து எண்ணிக்கையை ஒட்டிக் குறளடி, சிந்தடி, அளவடி அல்லது நேரடி, நெடிலடி, கழி நெடிலடி எனத் தொல்காப்பியனார் பகுப்பர். “நாலெழுத்து முதல் 6 எழுத்தின்காறும் உயர்ந்த 3 அடியும் குறளடி; ஏழெழுத்து முதல் 9 எழுத்தின்காறும் உயர்ந்த 3 அடியும் சிந்தடி; பத்தெழுத்து முதல் 14 எழுத்தின்காறும் உயர்ந்த 5 அடியும் அளவடி; பதினைந்தெழுத்து முதல் 17 எழுத்தின்காறும் உயர்ந்த 3 அடியும் நெடிலடி; பதினெட்டெழுத்து முதல் 20 எழுத்தின் காறும் உயர்ந்த 3 அடியும் கழிநெடிலடி; இருபது எழுத்தின் மிக்க நாற்சீர் அடிப்பா இல்லை”. (யா. கா. 43 உரை) (யா. க. 25 உரை) குறளடி முதலாகிய ஐந்தடியும் ஆசிரியப்பாவிற்கு உரிய. சிந்தடியும் அளவடியும் நெடிலடியின் முதற்கண் இரண்டடி யும் வெண்பாவிற்கு உரிய. அளவடியுள் கடைக்கண் இரண் டடியும் நெடிலடியும் கழிநெடிலடியும் இலக்கணக் கலிப்பா விற்கு உரிய. நான்கெழுத்து முதலாகப் பன்னிரண்டு எழுத்தின்காறும் இருசீரடி வஞ்சிப்பாவிற்குரிய. முச்சீரடி வஞ்சிப்பாவிற்கு 8 எழுத்து முதலாக நெடிலடிக்கு ஓதிய எழுத்தளவும் வரப் பெறும். வெண்பா ஆசிரியம் கலியுள் வருஞ்சீர் 5 எழுத்தின் மிகா. வஞ்சிப்பாவின் சீர் 6 எழுத்தின் மிகா. சிறுமை மூன் றெழுத்தாவது சிறப்புடைத்து; இரண்டு எழுத்தினானும் சீர் அருகி வரப்பெறும். (யா.க. 25 உரை) அடி (2) - பலவும் சிலவுமாகிய தளையொடு பொருந்திய சீர்களான் அடுத்து நடத்தலான், அடியென்பது காரணக்குறி. இது செய்யுள் உறுப்புக்களுள் ஒன்று. (யா. க. 23 உரை) அடி (3) - நான்கு சீர்களைக் கொண்டதொரு தொடரே அடி எனக் கூறப்படும். எனவே, நாற்சீரின் மிக்கும் குறைந்தும் வரின் அவை அச்சீர்களின் எண்ணலளவையான் இருசீரடி, முச்சீரடி, ஐஞ்சீரடி, அறுசீரடி, எழுசீரடி என விதந்து கூறப்படும் என்றவாறு. அடி என்று வாளா கூறின், நாற்சீரடியையே குறிக்கும் என்க. அதனான் நாற்சீரடிக்கு நேரடி, அளவடி என்ற பெயர்களும் உள. ‘பட்டாங்கு அமைந்த அடி’ (சொல் 407) என்றமையும் காண்க. இந்நாற்சீரடிகளை உயிர்ப்புடையவாய் நிற்கும் எழுத்துக் களின் அளவையான் குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகையாக வகுத்தோதுவர். குறியன், நெடியன் என்புழி உறுப்புக்களின் குறை நிறைகளைக் கருதாது அளவை கருதியே கொள்ளப்படுதல் போல, அடியி னது ஓசையை எழுத்தளவுகளைக் கருதியே குறளடி முத லாகப் பாகுபாடு செய்தார் என்பது. (தொ. செய். 32 ச. பால.) அடி அளபெடைத்தொடை அடிதோறும் முதற்சீர்க்கண் அளபெடுத்து ஒன்றிவரின் அஃது அளபெடைத் தொடை எனப்படும். எ-டு : ‘கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் படாஅ முலைமேல் துகில்’ (குறள். 1087) உயிரளபெடை ‘உரன்ன் அமைந்த உணர்வினா ராயின் அரண்ண் அவர்திறத் தில்’ - ஒற்றளபெடை (யா.க. 41 உரை) அடி அறிதலின் அருமை - நீண்டு உரைநடை போல எழுதப்பட்டிருக்கும் செய்யுளை இஃது இன்ன பா என்றோ, இன்ன பாவின் இனம் என்றோ வரையறுத்துக் கூறுதல் என்பது, எண்எழுத்தில் திண்ணி யராய், எஃகு செவியராய், நுண்ணுணர்விற் சேர்ந்த நுழை வினராய், மண்மேல் நடையறிந்து கட்டுரைக்கும் நாவி னோர்க்கே இயல்வது என்பதாம்.(யா. வி. பக். 135 உரை மேற்.) அடி அறுநூற்றிருபத்தைந்தாதல் பாகுபாடு - ஆசிரியத்திற்கு அடி 324, வெண்பாவிற்கு அடி 181, கலிப்பாவிற்கு அடி 120 என, அடி 625 ஆயிற்று. (தொ. செய். 50 நச்.) ஆசிரிய அடி 261, வெண்பா அடி 232, கலி அடி 132 என, அடி 625 ஆயிற்று என்பர் பேராசிரியர். (தொ. செய். 50) அடிஇயைபுத்தொடை - அடிதோறும் இறுதிக்கண் எழுத்தாவது சொல்லாவது ஒன்றி வருவது இத்தொடை. எ-டு : ‘அவரோ வாரார் கார்வந் தன்றே கொடிக்கு முல்லையும் கடிக்கரும் பின்றே’ ‘பரவை மாக்கடல் தொகுதிரை வரவும் பண்டைச் செய்தி இன்றிவன் வரவும்’ இவை கட்டளை ஆசிரிய அடிகள் இவற்றின்கண் அடிதோறும் இறுதிக்கண் எழுத்து ஒன்றிய வாறும், அடிதோறும் சீராகிய சொல் ஒன்றி வந்தவாறும் காண்க. (தொ. செய். 96. நச்.) அடிஎதுகைத்தொடை - அடிதோறும் முதலெழுத்து அளவு ஒத்திருப்ப, இரண்டாம் எழுத்தோ இரண்டாமெழுத்து முதலாக அச்சீரிலுள்ள ஏனைய எழுத்துக்களோ ஒன்றிவரத் தொடுக்கும் தொடை. எதுகை முதலிய தொடைகளில் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், ஒற்று முதலிய எழுத்துக்களும் சேர்த்துக் கணக்கிடப் படும். எதுகைக்கு இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றி வந்தாலும் மூன்றாம் எழுத்து ஒன்றிவந்தாலும் கூடக் கொள்வர். இரண்டாம் எழுத்தின் மேல் ஏறிய உயிர் ஒன்றி வருதலை உயிர் எதுகை எனவும், மூன்றாம் எழுத்து ஒன்றி வருதலை மூன்றா மெழுத்தொன்று எதுகை என்றும் கூறுப. இன்னும் பிறவகை எதுகை சிலவுமுள. எ-டு : வடியேர்கண் நீர்மல்க வான்பொருட்கண் சென்றார் கடியார் கனங்குழாய் காணார்கொல் காட்டில் இதன்கண் இரண்டாம் எழுத்து மாத்திரம் ஒன்றி வந்தவாறு. (யா. க. 36. உரை) அடிஎதுகைத்தொடைக்குரிய அசைஅமைப்பு - அடி எதுகைத் தொடைக்கண் முதலடி நேரசையில் தொடங் கின், அடுத்த அடியும் நேரசையாகவே தொடங்குதல் வேண்டும். முதலடி நிரையசையில் தொடங்கின், அடுத்த அடியும் நிரையசையாகவே தொடங்குதல் வேண்டும். இரண்டாம் எழுத்து ஒன்றுவது மாத்திரம் எதுகையாகாது. முதல் எழுத்து அளவொத் திருப்பதும் அதற்கு இன்றியமை யாதது ஆதலின் இம்மரபு கொள்ளப்பட்டது. (யா. க. 36. உரை) அடி எல்லை கடந்து விரியுமாறு - நாற்சீரடியில் 625 விகற்பங்கள் வந்துள்ளன. அறுநூற்றிரு பத்தைந்தோடும் ஐந்தாவது வரும் ஐஞ்சீரையும் உறழ 3125 அடியாகும். அதன்கண் ஆறாவது இவ்வகை ஐஞ்சீரையும் உறழ 15625 அடியாகும். அதன்கண் ஏழாவது இவ்வகை ஐஞ்சீரையும் உறழ 78125 அடியாகும். இவ்வகையான் உறழ அடிவரையறை கடந்தோடும். அன்றியும், இச்சொல்லப்பட்ட அடிகளை அசையானும் எழுத்தானும் விரிக்க வரம்பிலவாம். ஆதலின் நாற்சீரடிக்கே வரையறை கூறப்பட்டது. (தொ. செய். 49. இள.) அடி எழுத்து - பன்னீருயிரும் பதினெட்டுமெய்யும் ஆய்தமும் ஆகிய முத லெழுத்து; உயிர்மெய் முதலிய எல்லா எழுத்திற்கும் அடிப் படையான எழுத்து. இவை தலைஎழுத்து, தாளெழுத்து, ஆதி எழுத்து, முதலெழுத்து எனவும்படும். (பேரக 7, 8) அடி ஓத்துக் கூறும் செய்திகள் - தளைகளால் அடிகள் ஆமாறும், அடிகளின் பெயரும், அடிகளுக்கு உரிமையும், அடிமயக்கமும், அடிவரையறையும் யாப்பருங்கலத்துள் அடியோத்தில் கூறப்படுகின்றன. அடிகள் அளவிறந்தன ஆமாறு - புலவோர் பாக்களைப் பண்ணுங்கால் அவற்றைப் பதினேழ் நிலத்தும் உள்ள ஐவகை அடிக்கும் சீர்வகையால் அடிகளை உறழ்ந்து கண்டாற்போல, குறளடி முதலாக ஒவ்வோரடிக்கும் எழுத்தளவையான் உறழ்ந்து விரிப்பினும், பதினேழ் நிலங்களையும் மூவகைப்பாக்களுக்கும் உரிமை கூறியவாறு வைத்துத் தனித்தனியே விரிப்பினும் அவை அளவிறந்தன வாக விரியும். அஃதாவது பதினேழ் நிலமும் ஆசிரியம் பெறும் என்னும் முறைமையால் எழுத்தளவையான் வைத்து உறழுமிடத்து 4 எழுத்தால் ஒன்றும், 5 எழுத்தால் மூன்றும், 6 எழுத்தால் நான்கும், 7 எழுத்தால் பன்னிரண்டும் ஆக இங்ஙனம் அடிகள் அளவின்றிப் பெருகுகின்றன. ஆசிரிய அடி 17, வெண்பா அடி 8, கலி அடி 8, ஆக வைத்து அவற்றைச் சீர்களோடு உறழ, அளவின்றிப் பெருகுதல் மேலும் காணப்படும். (தொ. செய். 51 ச. பால.) அடிகளின் எண்ணிக்கை பற்றி இளம்பூரணர் கூறுவன - அசைச்சீர் 4 ; ஈரசைச்சீர் 10 + 6 = 16; மூவசைச்சீர் 4 + 60 = 64; ஆக, சீர்கள் 84. இந்த 84 சீர்களிலும், இயற்சீரான் வருவதனை இயற்சீரடி எனவும், ஆசிரிய உரிச்சீரான் வருவதனை ஆசிரிய உரிச்சீரடி எனவும், இயற்சீர் விகற்பித்து வருவதனை இயற்சீர் வெள்ளடி எனவும், வெண்சீரான் வருவதனை வெண்சீரடி எனவும், வெண்சீர் விகற்பித்து வருவதைக் கலியடி எனவும், நிரையீற்று வஞ்சிச்சீரான் வருவதனை நிரையீற்று வஞ்சியடி எனவும், ஓரசைச்சீரான் வருவதனை அசையடி எனவும் வழங்கவேண்டும். இயற்சீரடி நேரீற்றியற்சீரடி எனவும், நிரையீற்றியற்சீரடி எனவும் இருவகைப்படும். நேரீற்றியற் சீரடியாவது நேர் ஈறு நேர்முதல் ஆகிய இயற்சீர் வருதலும், நேர்பு முதலாகிய ஆசிரிய உரிச்சீர் வருதலும், நேர்முதல் வெண்பா உரிச்சீர் வருதலும், நேர்முதல் வஞ்சியுரிச்சீர் வருதலும் நேர் முதல் ஓரசைச்சீர் வருதலும் என ஐந்து வகைப்படும். இயற்சீர் வெள்ளடியும், நேர் ஈறும் நிரையீறும் என இரு வகைப்படும். அவற்றுள் நேர்ஈறு, நிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐவகையாம். அவ்வாறே நிரையீறும், நேர்பும் நேரும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ, ஐவகையாம். வெண்சீர் நேர்முதலோடு உறழ்தலும், நிரைமுதலோடு உறழ்தலும் என இருவகைப்படும். அவற்றுள் நேர்பும் நேரும் முதலாகிய சீர்களோடு உறழ்தல் ஐந்துவகைப்படும். நிரைபும் நிரையும் முதலாகிய சீர்களோடு உறழ்தல் ஐந்துவகைப்படும். நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோடு ஒன்றுவனவும் ஒன்றாதனவும் என இருவகைப்படும். அவற்றுள் ஒன்றி வருவது நிரையும் நிரைபும் முதலாகிய சீர்களோடு உறழ ஐவகைப்படும். ஒன்றாதது நேர்பும் நேரும் முதலாகிய சீர்களோடு உறழ ஐவகைப்படும். உரியசையீற்று வஞ்சி யடியும் அவ்வாறே உறழ 10 வகைப்படும். அசைச்சீரடியும் அவ்வாறே இருவகையாக்கி உறழ 10 வகைப்படும். இவ்வாறு தளை, நேரொன்றாசிரியத்தளை முதலாக ஏழ் வகைப்படும். அவ்வழி, ஓரசைச்சீர் இயற்சீரின் பாற்படும். ஆசிரிய உரிச்சீரும் அது. மூவசைச்சீருள் வெண்பா உரிச்சீர் ஒழிந்தன எல்லாம் வஞ்சியுரிச்சீராம். அசைச்சீர், இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வஞ்சியுரிச்சீர் என்னும் ஐந்தனையும் நிறுத்தி இவ்வைந்துசீரும் வருஞ்சீராய் உறழும்வழி 25 விகற்பமாம். அவ்விருபத்தைந் தின்கண்ணும் மூன்றாவது ஐந்து சீரையும் உறழ நூற்றிருபத் தைந்து விகற்பமாகும். அந்த நூற்றிருபத்தைந்தின்கண்ணும் நான்காவது ஐந்து சீரையும் உறழ 625. விகற்பமாகும். (தொ. செய். 48. இள.) நிரையீற்றியற்சீரடியும் இவ்வாறே நிரை முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். ஆசிரிய உரிச்சீரடி இருவகைப்படும், நேர்பு ஈறும் நிரைபு ஈறும் என. அவற்றுள் நேர்பு ஈற்றுச் சீரை நேர்பும் நேரும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். நிரைபு ஈற்றுச் சீரும் அவ்வாறே நிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். அடிகளின் பகுப்பு (எழுத்துக்களை ஒட்டி) - சீர்களைக் கொண்டு பின்னையோர் அடிகளுக்குப் பெயரிட் டமை போலாது, தொல்காப்பியனார் எழுத்துக்களைக் கணக்கிட்டு அடிகளுக்குப் பெயரிட்டுள்ளனர். 4 முதல் 6 எழுத்து முடிய உடைய அடி - குறளடி 7 முதல் 9 எழுத்து முடிய உடைய அடி - சிந்தடி 10 முதல் 14 எழுத்து முடிய உடைய அடி - அளவடி 15 முதல் 17 எழுத்து முடிய உடைய அடி - நெடிலடி 18 முதல் 20 எழுத்து முடிய உடைய அடி - கழிநெடிலடி (தொல். செய். 36-40 பேரா., நச்.) அடிதோறும் ஒருஉத்தொடை பெற்ற இன்னிசை வெண்பா - அடிதோறும் முதற்சீர் நான்காம் சீர்களில் மோனை எதுகை களாகிய தொடைபெற்று, நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட வந்த இன்னிசை வெண்பா இது. (முதற்சீர்ச் சொல்லே சிறிது வேறுபட்டு ஒரூஉத்தொடையாக நிகழும் என்க.) (யா.கா.25. உரை) எ-டு : `மழையின்றி மாநிலத்தார்க் கில்லை - மழையும் தவமிலார் இல்வழி இல்லை - தவமும் அரசிலார் இல்வழி இல்லை - அரசனும் இல்வாழ்வார் இல்வழி இல்' (நான்மணி. 46) அடிநிமிர்வு இன்மை - அடி நிமிர்வு இன்மையாவது ஆறடியின் ஏறாமை. அம்மை என்னும் வனப்பிலக்கணம் கூறுமிடத்து அடிநிமிர்வு இன்மை நிகழ்கிறது. (தொ. செய். 235. நச்.) அடிநிரல்நிறை - ஈரடிகளின் தொடக்கத்தில் நிரல்நிறைப் பொருள்கோள் அமைய வைப்பது அடிநிரல்நிறையாம். எ-டு : ‘முலைகலிங்கம் மூரி நிலமா மகட்கு மலைபரவை மாரிமென் கூந்தல்' இதன்கண், முலை மலை, கலிங்கம் பரவை என்பன அடி நிரல்நிறை. (யா. க. 95 உரை) அடிமயக்கு - 1. ஒருபாவிற்குரிய அடி பிற பாவில் வந்து கலத்தல். ஆசிரியப்பாவில் இயற்சீர்வெள்ளடி, வெண்பா உரிச்சீர் கலந்த இயற்சீர் வெள்ளடி, வஞ்சியடி - இவை மயங்குதல்; கலிப்பாவில் வெள்ளடியும் ஆசிரியஅடியும் மயங்குதல்; வஞ்சிப்பாவில் ஆசிரியஅடியொடு கலியடியும் ஒருசார் வெள்ளடியும் மயங்குதல் - போல்வன, அடி மயக்கமாம். எ-டு : ‘எறும்பி அளையின் குறும்பல் சுனைய ........................... நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே’ (குறுந். 12) இவ்வாசிரியப்பாவில், முதலடி இயற்சீர் விரவிய வெள்ளடி. 2. ‘ அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப் ........................... தெண்கடற் சேர்ப்பன் உண்டவென் நலக்கே’ இவ்வாசிரியப்பாவில், முதலடி காய்ச்சீர் விரவிய இயற்சீர் வெள்ளடி; வெண்பா அடியாக வந்து மயங்கிற்று. 3. ‘இருங்கடல் தானையொடு’ என்னும் புறநா. 363ஆம் பாடலில், ‘உப்பிலாஅ அவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோன் ஈயப்பெற்று’ என்பன வஞ்சியடிகள். 4. ‘காமர் கடும்புனல்’ என்னும் கலி. 39-இல், இடையே கொச்சகங்கள் வெண்பாவாக வந்தன. அறுசீர் ஐஞ்சீரடிகள் முடுகியலாய் வர, ஆசிரியச் சரிதகத்தால் பாடல் முடிந்த வாறு. 5. பட்டினப்பாலையுள், ‘நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்’ (22) என்றித் தொடக்கத்தன ஆசிரியஅடி. ‘வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மிலைந்தும்’ என்பது கலியடி ‘கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை’ (23) என்பது இயற்றளை வெள்ளடி (யா. க. 29-31) அடிமறிப்பொருள்கோள்- இப்பொருள்கோள் அமைந்த செய்யுளாவது, சீர் நின்ற விடத்தே நிற்ப அடிகள் தத்தம் நிலையில் திரிந்து ஒன்றனிடத் தில் ஒன்று சென்று நிற்பது. ஆதலின் எல்லா அடியும் யாண்டும் செல்லும் என்பதாம். எ-டு : மாறாக் காதலர் மலைமறந் தனரே; ஆறாக் கட்பனி வரலா னாவே; வேறா மென்தோள் வளைநெகி ழும்மே; கூறாய், தோழியான் வாழு மாறே’. இதனுள் சீர் நின்றாங்கு நிற்பப் பொருள் சிதையாமல் எல்லா வடியும் தடுமாறியவாறு கண்டுகொள்க. இப்பொருள்கோள் பெரும்பான்மையும் நாலடிச் செய்யுட் கண் அல்லது வாராது. (தொ. எச்ச. 11 சேனா.) பொருள்கோள், யாப்புப்பற்றிய நூல்களில் ஒழிபாகக் கூறப்படுகிறது. (யா. வி. பக். 389) அடிமறிஉவமம் கூடாமை - அடிமறிமாற்றுப் பொருள்கோள் உடையதாக அமைந்த பாடலில் ஓரடியுள் உவமம் கூறி ஓரடியுள் பொருள் வைத்தால் அப்பாடல் அடிகளை வேண்டியவாறு மாற்றிப் பொருள் கொள்ளுங்காலை, இன்ன உவமத்திற்கு இன்னது பொருள் (- உபமேயம்) என்பது நன்கு புலனாகாமல்போம் ஆதலின், அடிமறிப்பொருள்கோளுடைய பாடல்களில் உவமமும் பொருளும் அமைத்தல் மயக்கம் தரும்; ஆதலின் அடிமறி உவமம் கூடாது என்ப. (தொ. பொ. 312 பேரா.) அடிமறிமண்டில ஆசிரியப்பா - நான்கடிகளும் ஒரே விகற்பமாக அமைந்து, அடிதோறும் செய்தி முற்றுப்பெறப் பொருந்தி, நாற்சீரடியாய், எந்த அடியையும் முதல் நடு இறுதியாக மாற்றும்படிக்கு அமையும் ஆசிரியப்பாவாகிய இஃது ஆசிரியப்பாவின் நால்வகைகளுள் ஒன்று. எ-டு : ‘மாறாக் காதலர் மலைமறந் தனரே; ஆறாக் கட்பனி வரலா னாவே; வேறா மென்தோள் வளைநெகி ழும்மே; கூறாய் தோழியான் வாழு மாறே’ இந்நாலடி ஆசிரியப்பா எந்த அடியை யாண்டு வைத்து உச்சரிப்பினும் ஓசையும் பொருளும் மாறாதமைந்திருத்தலின், அடிமறிமண்டில ஆசிரியம் ஆம். (யா. க. 73, யா. கா. 29.) அடிமறிமண்டில ஆசிரியப்பா மூன்றடியான் வருதலும் உண்டு. எ-டு : ‘தீர்த்தம் என்பது சிவகங் கையே; ஏத்த ருந்தலம் எழிற்புலி யூரே; மூர்த்தி அம்பலக் கூத்தன துருவே’ (சி. செ.கோ. 45) அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இனம் - அடிதோறும் பொருள் முற்றி வந்த ஆசிரிய விருத்தம் அடிமறி மண்டில ஆசிரியப்பாவிற்கு இனம் ஆம். எ-டு : அன்றயனை உந்தியின் அளித்தபரன் மேவுவதும் அத்தி கிரியே; சென்றுகரி கவ்வுமுத லைக்கணற மேவுவதும் அத்தி கிரியே; வென்றவன் வணங்குவது மேலில கெயிற்றரிய தான வரையே; தன்றொழில் முருக்குவது தாளில கெயிற்றரிய தான வரையே; இவ்வறுசீர் ஆசிரிய விருத்தம் அடிதோறும் பொருள் முற்றியே வந்தவாறு காண்க. யாதோரடியை எடுத்து முதல் நடு இறுதியாக உச்சரிப்பினும் பொருளும் ஓசையும் மாறப் பெறாமையும் காண்க. (வீ. சோ. 122 உரை) அடிமறிமண்டிலம் - ஆசிரியப்பா வகையுள் ஒன்று; ‘அடிமறிமண்டில ஆசிரியப்பா’ காண்க. அடிமறிமண்டில வெளிவிருத்தம் - இது வெண்பா இனங்களுள் ஒன்றாகிய வெளிவிருத்தத்தின் இரு வகைகளுள் ஒன்று; பெரும்பாலும் மூன்றடியால் அமைவது; அடிதோறும் பொருள் முடியப்பெற்று, யாதோரடியை முதல் நடு இறுதியாக உச்சரிப்பினும் ஓசையும் பொருளும் மாறாதது; அடிதோறும் ஒரு சீரே ஐந்தாம் சீராக வரப் பெறும். (யா. க. 68, யா. கா. 28) எ-டு : ‘அங்கட் கமலத் தலர்க்கமல மேயீரும் - நீரே போலும் வெங்கட் சுடிகை விடஅரவின் மேயீரும் - நீரே போலும் திங்கட் சடையீரும் தில்லைவனத் துள்ளீரும் - நீரே போலும்’ (சி. செ. கோ. 39) இதன்கண், ‘நீரே போலும்’ எனும் சீர் ஐந்தாம் சீராக மூன்றடி யிலும் ஒப்ப நிகழ்ந்தவாறு காண்க. இது வெண்டளையான் அமைந்தமை காண்க. அடிமறிமாற்றுப் பொருள்கோள் - பொருளுக்கு ஏற்குமிடத்தில் எடுத்து நீங்காது கூட்டப்படும் அடியையுடையனவும், யாதானுமோர் அடியை யெடுத்து அச்செய்யுளுள் முதல் நடு இறுதியாகக் கூட்டினும் பொரு ளோடு ஓசையும் பொருள் மாத்திரமும் மாறாத அடியை யுடையனவும் ஆகிய செய்யுட்கண் அமைந்த பொருள்கோள் அடிமறிமாற்றுப் பொருள்கோளாம். எ-டு : ‘நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார் கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால்’ (நாலடி. 93) இதனுள், ‘கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்; விடுக்கும் வினையுலந்தக் கால், மிக்குற்றுப் பற்றினும் நீங்காது செல்வம்; (இஃதறியாதவர்) நடுக்குற்றுத் தற் சேர்ந்தார் துன்பம் துடையார்’ என அடிகள் ஏற்புழி எடுத்துக் கூட்டப்படும் அடிமறிமாற்று அமைந்தது. எ-டு : ‘மாறாக் காதலர் மலைமறந் தனரே; ஆறாக் கட்பனி வரலா னாவே; வேறா மென்தோள் வளைநெகி ழும்மே; கூறாய் தோழியான் வாழு மாறே’. இதனுள், யாதானுமோர் அடியை எடுத்து முதல் நடு இறுதி யாகக் கூட்டினும் பொருளும் ஒசையும் மாறாத அடிமறி மாற்று அமைந்தது. எ-டு : ‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்; விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்; கொலைப்பாலும் குற்றமே யாம்’ (நான்மணி. 100) இதனுள், ஈற்றடி யொழிந்த மூன்றடியுள் யாதானுமொன்றை யெடுத்து யாதானுமோர் இடத்துக் கூட்டி உச்சரிப்பின் பொருளும் ஓசையும் மாறாமல், ஈற்றடியை யெடுத்து யாதானுமோர் இடத்துக் கூட்டி உச்சரிப்பின் ஓசைவேறு பட்டுப் பொருள் வேறுபடாமல், வந்த அடிமறிமாற்று அமைந்தது. (நன். 419) ஒருசார் யாப்புநூலுள் பொருள்கோளும் ஒழிபாகத் தழுவப்பட்டது. அடிமுரண் தொடை - அடிதோறும் முதற்சீர்க்கண் சொல்லாலோ பொருளாலோ அவ்விரண்டாலோ மறுதலைப்படத் தொடுப்பது. எ-டு : 1) ‘செந்தொடைப் பகழி வாங்கிச் சினம்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின்’ செந்தொடை - செம்மைநிறம் இல்லை; செவ்விதாகத் தொடுக்கப்பட்ட என்பது பொருள். கருங்கை - கருமை நிறம் இல்லை; கொலைசெய்யும் கை என்பது பொருள். இதன்கண், சொல்பற்றிய அடிமுரண் அமைந்தவாறு. 2. ‘இருள்விரிந் தன்ன மாநீர் மருங்கில் நிலவுக்குவிந் தன்ன வெண்மணல் ஒருசிறை’ எனப் பொருள் பற்றிய அடிமுரண் அமைந்தவாறு. 3. நெடுநீர்ப் பொய்கை நாப்பண் சென்று குறுநர் தந்த அவிழ்மலர் நெடுநீர் - நெடுமை என்ற சொல்லும் உண்டு; நீரும் நெடிது. குறுநர் - பறிப்போர். குறிது என்ற சொல் உண்டு; பொருள் இல்லை. ஆகவே, இதன்கண் சொல்லும் பொருளும் சொல்லொடு முரணிய அடிமுரண் அமைந்தவாறு. 4. ‘செந்தீ அன்ன சினத்த யானை நீர்நசை பெறாஅக் கானல்’ செந்தீ என்புழிச் செம்மையும் உண்டு; தீக்கண் செய்யது என்ற சொல்லும் உண்டு. நீர் நசை என்புழிச் சொல்முரண் இல்லை; தீக்கு நீர் மாறுபட்டது ஆதலின் பொருள் முரண் உண்டு. ஆகவே, இதன்கண் சொல்லும் பொருளும் பொருளொடு முரணிய அடிமுரண் அமைந்தவாறு. 5. ‘செங்குரல் ஏனல் சிதையக் கவர்ந்த பைங்கிளி இரியச் சிறுகுடித் ததும்பும்.’ செங்குரல் என்புழிச் சொல்லும் உண்டு; செம்மை குரற் கண்ணும் உண்டு. பைங்கிளி என்புழிச் சொல்லும் உண்டு; பசுமை கிளிக்கண்ணும் உண்டு. ஆகவே, இதன்கண் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணிய அடிமுரண் அமைந்தவாறு. (தொ. செய். 95 நச்., யா.க. 38 உரை) அடிமொழிமாற்று - இஃது இரண்டடி மொழிமாற்று எனவும்படும். இரண்டடி களிலும் உள்ள சொற்களைப் பிரித்துப் பொருள் பொருத்த முறக் கூட்டிப் பொருள்செய்யும் பொருள்கோள் இது. எ-டு : ‘ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு’ இதன்கண், ‘ஆலத்துமேல வாலின் நெடிய குரங்கு’ எனவும், ‘குவளை குளத்துள’ எனவும் ஈரடிகளிலும் சொற்களைப் பொருள் பொருத்தமுறக் கூட்டியவாறு. (யா. வி. பக். 390) அடிமோனைத்தொடை - முதலடி முதற்கண் வந்த எழுத்தே பிற எல்லா அடி முதற் கண்ணும் வருவது. எ-டு : ‘மாவும் புள்ளும் வதிவயின் படர மாநீர் விரிந்த பூவும் கூம்ப ........................................................................................... மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே’ (யா. க.35 உரை) அடியந்தாதி - பாடலின் முதலும் ஈறும் மண்டலிப்பதன்றிப் பாடலின் ஓரடி அடுத்த அடியாய் அந்தாதித்து வருவது அடியந்தாதியாம். எ-டு : ‘ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கிய சேதியஞ் செல்வ! நின் திருவடி பரவுதும்’ இஃது இரண்டாம் அடியே மூன்றாமடியாக அந்தாதித்து வந்தமை காண்க. (யா. க. 52 உரை) அடியின் சிறப்பே பாட்டு - அடியின் பாட்டே சிறப்பு - நாற்சீரடியென்னும் உறுப்பான் வந்த பாட்டே சிறப்புடைய பாட்டு. எனவே, அடி என்று பொதுப்படக் கூறின், நாற்சீர் அடியினையே குறிக்கும். (தொ. செய். 35 நச்.) அடியின் தொகை - இயலடி, உரியடி, பொதுவடி என அடியின்தொகை மூன்று. (யா. க. சிறப்பு. உரை) அடியின் வகை - குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என அடியின் வகை ஐந்து. (யா. க. சிறப்புப். உரை) அடியின் விரி - இயல், உரி, பொது - என்பவற்றைக் குறளடி முதலிய ஐந்தடி களோடும் உறழ்ந்து கணக்கிட, இயற்குறளடி, உரிக்குறளடி பொதுக்குறளடி முதலாக அடியின் விரி பதினைந்தாம். (யா. க. சிறப்புப். உரை) அடியின்றி நடப்பன - நூல், உரை, மந்திரம், பிசி, முதுசொல் என்பன. (யா. வி. பக். 428, 429) நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்பன. (தொ. பொ. 477 பேரா.) அடி வகுத்தல் - வஞ்சி மண்டிலத்துறை எந்த அடியையும் மாற்றிக் கொள்ள லாம்; வஞ்சி மண்டில விருத்தமும் அவ்வாறே மாற்றிக் கொள்ளலாம். யானைத்தொழில் முதலாகிய செய்யுள்களை யெல்லாம் அடிவகுத்தற்கு இலக்கணம் சொன்னார் அடி வகுத்தும் பயனின்மையானும், அடிவகுத்தற்குக் கட்டளைப் பட்டு நிரம்பி யிருப்பதோர் இலக்கணம் இன்மை யானும் அதுவும் பிழை. இந்நூலார் எதுகையே கருவியாக அடி வகுத்தார். (வீ. சோ. 125 உரை) அடிவகைகள் ஐந்து - குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி, என அடி வகைகள் ஐந்தாம். (இவற்றைச் சீர்வகைகளைக் கொண்டு கணக்கிடுவர் ஒரு சார் ஆசிரியர். நாற்சீரடியிலேயே எழுத் தெண்ணிக்கையைக் கொண்டு கணக்கிடுவர் ஒருசார் ஆசிரியர்.) குறளடி இருசீர்களையுடையது; சிந்தடி முச்சீர்களையுடை யது; அளவடி நாற்சீர்களையுடையது; நெடிலடி ஐஞ்சீர்களை யுடையது; கழிநெடிலடி ஆறுமுதல் பத்துச் சீர்கள் வரை யுடையது; ஆறுமுதல் எட்டுச்சீர்காறும் கொண்ட அடி தலையாகு கழிநெடிலடி எனவும், ஒன்பது பத்துச் சீர்களைக் கொண்ட அடி இடையாகு கழிநெடிலடி எனவும், பத்துச் சீரின் மிக்குள்ள அடி கடையாகு கழிநெடிலடி எனவும், கூறப்படும். படவே, எண்சீரின் மிக்குவரும் கழிநெடிலடிகள் சிறப்பில. நாற்சீரடியே சிறப்புடைத்து ஆதலின், அதுவே நேரடி எனவும் அளவடி எனவும் வழங்கப்படும். (யா. க. 24, 25 உரை) இனி, குறளடி முதலிய ஐவகை அடிகளையும் நாற்சீரடி யிலேயே கொண்டு எழுத்தெண்ணிக்கையால் பெயரிட்டு 4 முதல் 6 எழுத்து முடியக் குறளடி எனவும், 7 முதல் 9 எழுத்து முடியச் சிந்தடி எனவும், 10 முதல் 14 எழுத்து முடிய அளவடி எனவும், 15 முதல் 17 எழுத்து முடிய நெடிலடி எனவும், 18 முதல் 20 எழுத்து முடியக் கழிநெடிலடி எனவும், 20 எழுத்தின் மிக்க நாற்சீரடி இல்லை எனவும், ஐவகை அடியும் ஆசிரியப் பாவிற்கு உரிய எனவும், சிந்தடியும் அளவடியும் நெடிலடி களின் முதற்கண் இரண்டடியும் வெண்பாவிற்குரியன எனவும், அளவடியின் கடைக்கண் இரண்டடியும் நெடிலடி யும் கழிநெடிலடியும் கலிப்பாவிற்குரியன எனவும், 4 முதல் 12 எழுத்து முடியக் குறளடி வஞ்சிப்பாவிற்குரியன எனவும், முச்சீரடி வஞ்சிப்பாவிற்கு 9 முதல் 17 எழுத்தளவும் உரியன எனவும், வெண்பா ஆசிரியம் கலி இவற்றில் வரும் சீர்கள் ஐந்தெழுத்தின் மிகா எனவும், சீரின் எழுத்தளவின் சிறுமை மூன்று, ஒரோவழி ஈரெழுத்தானும் சீர் வரும் எனவும் கூறும் இலக்கண மரபும் உண்டு. எழுத்தெண்ணும்வழிக் குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் ஒற்றும் என்னு மிவற்றை நீக்கிக் கணக்கிடல் வேண்டும். (தொல். செய். 36-44 பேரா.) அடிவகைத் தொடைகள் 16, சீர்வகைத் தொடைகள் 50 1. ஒத்த எழுத்தால் வரும் மோனைத்தொடை 2. கிளையெழுத்தால் வரும் மோனைத்தொடை 3. ஒத்த எழுத்தால் வரும் எதுகைத் தொடை 4. கிளையெழுத்தால் வரும் எதுகைத்தொடை 5. சொல்லொடு சொல் முரணும் முரண்தொடை 6. பொருளொடு பொருள் முரணும் முரண்தொடை 7. சொல்லொடு பொருள் முரணும் முரண்தொடை 8. எழுத்தியைபுத்தொடை 9. அசையியைபுத்தொடை 10. சீரியைபுத்தொடை 11. உயிரளபெடைத்தொடை 12. ஒற்றளபெடைத்தொடை 13. பெயரொடு பெயர் நிரனிறைத்தொடை 14. பெயரொடு வினை நிரனிறைத்தொடை 15. இரட்டைத் தொடை 16. செந்தொடை - என்பனவாம். தலைமையாய தொடை பத்தாம். அவையாவன : 1. ஒத்த எழுத்து மோனை 2. கிளையெழுத்து மோனை 3. ஒத்த எழுத்தெதுகை 4. கிளையெழுத்தெதுகை 5. சொல் முரண் தொடை 6. பொருள் முரண்தொடை 7. எழுத்தியைபுத் தொடை 8. அசையியைபுத்தொடை 9. அளபெடைத் தொடை 10. நிரனிறைத் தொடை என்பனவாம். இப்பத்துத் தலையாய தொடைகளையும் இணை, பொழிப்பு, கூழை, ஒரூஉ, முற்று என்னும் ஐந்தொடும் உறழ, 50 சீர்வகைத் தொடைகள் வரும். (தொ. செய். 101 ச. பால.) அடிவரையறை - 1. பாட்டின் முதற்குறிப்பு வரிசை (மீனாட். சரித். i. பக். 10) 2. இன்ன இன்ன பாடல் இன்ன இன்ன சிற்றளவு, இன்ன இன்ன பேரளவு உடையன என வரையறுத்தல். (டு) சிற்றெல்லை பேரெல்லை வெண்பா 2 அடி 12 அடி (தொ.செய்.158 பேரா.) ஆசிரியப்பா 3 அடி 1000 அடி (தொ.செய்.157 பேரா.) கலிப்பா 4 அடி பாடுவோர் விருப்பம் வஞ்சிப்பா 3 அடி 1000 அடி (யா.க. 32, உரை பக். 132) அடிவரையறை இல்லாத செய்யுள் நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்னும் ஆறும் அடிவரையறை இல்லாத செய்யுள்களாம். இவற்றுள் பிசியும் முதுமொழியும் மந்திரமும் குறிப்பும் என நான்கும் வழக்குமொழி யாகியும் செய்யுளாகியும் வருதலின், அவற்றுள் செய்யுளே ஈண்டுக் கொள்ளப்படும். (தொல். செய். 165 பேரா.) அடிவரையறை இல்லாப் பாடல்கள் - கலிவெண்பாட்டும், கைக்கிளைச் செய்யுள் - புறநிலை வாழ்த்து - வாயுறை வாழ்த்து - செவியறிவுறூஉ - என்னும் நால்வகை மருட்பாவும் என்னுமிவற்றிற்கு அடிவரையறை இல்லை. கலிவெண்பாட்டு: உலாச்செய்யுள், மடற்செய்யுள் போல்வன. கைக்கிளை: அகப்புறமும் புறப்புறமுமாகி வரும் கைக்கிளை. (தொ. செய். 160 நச்.) அடுக்கிசை - ‘அடுக்கியல்’ காண்க. அடுக்கிசைவண்ணம் இருபது - குறில் அகவல் அடுக்கிசைவண்ணம், நெடில் அகவல் அடுக்கிசை வண்ணம், வலி அகவல் அடுக்கிசை வண்ணம், மெலி அகவல் அடுக்கிசை வண்ணம், இடை அகவல் அடுக்கிசை வண்ணம் - என அகவல் அடுக்கிசை வண்ணம் ஐந்து. எ-டு : ‘கொடியிடை மாதர் மேனி குவளைமலர் உண்கண் என்றும் பிடிநடை மாதர் மாண்ட நடைதானெனப் பேது செய்தும் வடிவொடு வார்ந்த மென்றோள் வளைசேர்ந்தகை காந்தள் என்றும் இடையிடை நின்று நின்று பலகாலும் உவப்ப தென்னோ!’ (வளையாபதி) இன்ன பிறவும், எழுசீரடியால் வந்தனவும் எல்லாம் குறில் அகவல் அடுக்கிசை வண்ணத்தனவாம். குறில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம், நெடில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம், வலி ஒழுகல் அடுக்கிசை வண்ணம், மெலி ஒழுகல் அடுக்கிசை வண்ணம், இடை ஒழுகல் அடுக்கிசை வண்ணம் என ஒழுகல் அடுக்கிசை வண்ணம் ஐந்து. எ-டு : ‘மாலையால் வாடையால் அந்தியால் மதியால் மனமுனம் உணர்வது நோயுறச் செய்த சோலையால் தென்றலால் சுரும்பிவர் பொழிலால் சொரிதரு காரொடு விரிதரு பொழுதே கோலவால் வளையால் கொடுப்பறி யானேல் கொள்வதும் உயிரொடு பிறரொடும் அன்றோ காலையார் வரவே காதலும் ஆங்கோர் காலையென் னுங்கடல் நீந்திய வினையே’ இன்ன பிறவும், எண்சீரடி மிக்கு வருவனவும் ஒழுகல் அடுக்கிசை வண்ணத்தனவாம். குறில் வல்லிசை அடுக்கிசை வண்ணம், நெடில் வல்லிசை அடுக்கிசை வண்ணம், வலி வல்லிசை அடுக்கிசை வண்ணம், மெலி வல்லிசை அடுக்கிசை வண்ணம், இடை வல்லிசை அடுக்கிசை வண்ணம் - என வல்லிசை அடுக்கிசை வண்ணம் ஐந்து. எ-டு : கடியான் வெயிலெறிப்பக் கல்லளையுள் வெதும்பிய கலங்கற் சின்னீர் அடியால் உலகளந்த ஆழியான் ஆக்கிய அமிழ்தென் றென்ணிக் கொடியான் கொடுப்பக் கொடுங்கையால் கொண்டிருந்து குடிக்கல் தேற்றாள் வடியேர் தடங்கண்ணி வஞ்சிக்கொம் பீன்றாளிவ் வருவாளாமே.’ இவ்வாறு அறுசீரான் வருவன வெல்லாம் வல்லிசை அடுக்கிசை வண்ணமாம். குறில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம், நெடில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம், வலி மெல்லிசை அடுக்கிசைவண்ணம், மெலி மெல்லிசை அடுக்கிசை வண்ணம், இடை மெல்லிசை அடுக்கிசை வண்ணம் - என மெல்லிசை அடுக்கிசை வண்ணம் ஐந்து. எ-டு : ‘பிடியுடை நடையடு நடையினள் தெரியின் கடிபடும் இலமலர் அடிநனி தனதாம் துடியிடை அடுமிவள் நடுவொடி வதுபோல் வடுவடி அடுமிவள் நெடுமலர் புரைகண்’ இவை போல்வன மெல்லிசை அடுக்கிசை வண்ணமாம். இவை இருபதும் மேடு பள்ளமான நிலத்தில் வண்டிச்சக்கரம் செல்வதுபோலவும், நாரை இரைத்தாற் போலவும், தாரா என்னும் பறவையது ஒலிபோலவும், தார்மணி ஓசைபோல வும் வரும். (யா. வி. பக். 413, 418, 419) அடுக்கியல் - வண்ணகம் எனவும், அராகம் எனவும், முடுகியல் எனவும் அடுக்கியல் எனவும் கூறப்படும் கலிப்பாவின் உறுப்பு இது. தாழிசை அம்போதரங்கம் என்னும் உறுப்புக்களுக்கு இடையே இது நிகழும். (யா. கா. 32 உரை) தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு ஓதப்பட்ட தரவும் தாழிசையும் பெற்ற அடியளவு இவ் வுறுப்புப் பெறும்; தாழிசைப் பின்னர்த் தனிநிலை பெற்றும் அதன்பின் அராக அடி நான்கு முதலாக எட்டு ஈறாக, நான்கு சீர் முதலாக பதின்மூன்று சீர் ஈறாக வரப்பெறும்; இடையே அந்தாதித்தும் வரப்பெறும்; குறிலிணை பயின்ற அடியும் வரப்பெறும்; அடுக்கியல், முடுகியல், அராகம், என்று மூன்று பெயரும் பெறும்; தேவரது விழுப்பமும் வேந்தரது புகழும் வண்ணித்து வருதலின் வண்ணகம் எனப்படும் என்ப ஒருசார் ஆசிரியர். (யா. வி. பக். 321) இவ் அராக உறுப்பு அளவடி முதலாகிய எல்லா அடியானும் வரப்பெறும்; சிறுமை நான்கடி, பெருமை எட்டடி, இடை யிடை எத்துணையாயினும் வரப்பெறும்; ஒருசாரனவற்றுள் அகவலும் வெள்ளையும் விரவி அராகமாயும் அருகி வரப்பெறும். (யா. வி. பக். 313 ) அடைநிலை - கலிப்பா உறுப்புக்களுள் ஒன்று. முன் தரவு தாழிசை என்னும் உறுப்புக்களையும், பின்னே வரும் சுரிதகத்தையும் அடைய நிற்றலின் அடைநிலை எனப்பட்டது. அது தனி நின்றும் சீராகலின் தனிநிலை எனவும், தனிச்சொல் எனவும் கூறப் படும். (தொ. செய். 132 நச்.) அதனகப்படுதல் - அதன் பாகம் பெறுதல்; அஃதாவது அதன் அளவில் செம்பாதி பெறுதல். சுரிதகம் பெரும்பான்மை தரவின்பாகம் பெறுதல். (தொ. செய். 137 நச்.) பன்னீரடித் தரவிற்கு அதன்பாகமாகிய ஆறடியே சுரிதகத்தின் உயர்விற்கெல்லை. (பேரா.) அதிகண்டம் - செய்யுட் சீர் இவ்வாறு கூறப்படும். “அதிகண்டம் என்றும் இசையென்றும் சீரைப், பதச்சேதம் என்றும் பகர்வர்.“ எனவே அதிகண்டம் என்பது செய்யுட் சீரினைக் குறிக்கும் பரியாயப் பெயர்களுள் ஒன்று. (யா. வி. பக். 103) அந்தாதி - 1) அந்தாதித்தொடை; அடிதோறும் - இறுதிக்கண் நின்ற எழுத்தானும் அசையானும் சீரானும் அடியானும் மற்றை அடிக்கு ஆதியாகத் தொடுப்பது. (யா. கா.7) 2) ஒரு பிரபந்தம் ‘அந்தாதி மேலிட் டறிவித்தேன்’ (திவ். இயற். - நான். 1) இது பதிற்றந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, நூற்றந்தாதி என்றாற்போலத் தன்கண் அமைந்த பாடல் எண்ணிக்கை கொண்டு பெயரிடப்படும். அந்தாதிப் பிரபந் தத்துக்கு வெண்பாவும் கட்டளைக்கலித்துறையுமே சிறப்பாக உரிமையுடையன. (இ. வி. பாட். 82, வெண். பாட். செய். 9) அந்தாதித்தல் - அஃதாவது அந்தாதித்தொடைபட நிகழ்தல். ‘அந்தாதித் தொடை’ காண்க. அந்தாதித்தொடை (1) - மண்டல எழுத்தந்தாதி, செந்நடை எழுத்து அந்தாதி, மண்டல அசையந்தாதி, செந்நடை அசையந்தாதி, மண்டலச் சீரந்தாதி, செந்நடைச் சீரந்தாதி, மண்டல அடியந்தாதி, செந்நடை அடியந்தாதி, மண்டல மயக்கந்தாதி, செந்நடை மயக்கந்தாதி, மண்டல இடையிட்ட அடி அந்தாதி, செந்நடை யிடையிட்ட அடி அந்தாதி - எனப் பன்னிரண்டு அந்தாதித் தொடையாம். (யா. க. 52 உரை) அந்தாதித் தொடை (2) - அடிதோறும் இறுதிக்கண் நின்ற எழுத்தானும் அசையானும் சீரானும் அடியானும் மற்றை அடிக்கு ஆதியாகத் தொடுப்பது அந்தாதித் தொடையாம். எ-டு : ‘உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவிர்மதி மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை முக்குடை நீழல் பொற்புடை ஆசனம் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை அறிவுசேர் உள்ளமோ டருந்தவம் புரிந்து துன்னிய மாந்தர தென்ப பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே’ எழுத்து முதலிய நால்வகையானும் அந்தாதித்தொடை நிகழ்ந்த இச்செய்யுட்கண், முதலடி முதற்சீரும் இறுதியடி ஈற்றுச்சீரும் ஒன்றிவந்தமையால் இத்தொடை மண்டலித்து வந்தது எனப்படும். (யா. கா. 17) அநுப்பிராசம் - ‘வழிஎதுகை’ காண்க. அநுதாத்தம் - அனுதாத்தம் காண்க. அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா - அராக உறுப்பை நீக்கி, தரவு தாழிசை அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஐந்துறுப்பானும் வருவதொரு கலிப்பா (வீ. சோ. 117.) கரைசாரக் கரைசார ஒருகாலைக்கு ஒருகால் சுருங்கி வரு கின்ற கடலலை போல, நாற்சீரடியும் முச்சீரடியும் இருசீரடி யும் ஆகிய அசையடிகளைத் தாழிசைக்கும் தனிச்சொற்கும் நடுவே தொகுத்து, தரவு தாழிசை அம்போதரங்கம் தனிச் சொல் சுரிதகம் என்னும் ஐந்து உறுப்புடையதாய் வருவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. அசையடிதான் நாற்சீர் ஈரடியால் இரண்டும், நாற்சீர் ஓரடியால் நான்கும், முச்சீர் ஓரடியால் எட்டும், இருசீர் ஓரடியால் பதினாறுமாய் வருவது சிறப்புடைத்து; எட்டும், பதினாறும் எனப்பட்டவை நான்கும் எட்டுமாய்க் குறைந்து வரப்பெறினும் அமையும். (யா. கா. 31, உரை) அம்போதரங்க ஒத்தாழிசை பற்றிய ஒருசாரார் கருத்து - தரவும் சுரிதகமும் ஆறடியால் வந்து, நான்கடியாய்த் தாழிசை மூன்று வந்து, தாழிசையின் பின்னர்த் தனிச்சொல் முன்னர் இரண்டடியால் ஓர் அராகம் வந்து, அதன்பின் இரண்டடி யால் இரண்டு பேரெண்வந்து, ஓரடியால் நான்கு இடை யெண் வந்து, சிற்றெண் இருசீரால் எட்டாய், அவை இரண்டு கூடி ஓரடியே போன்று, இம் முறை இம்மூன்று அம்போ தரங்க உறுப்பும் பெற்று முடிவது தலையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனவும், தரவும் சுரிதகமும் ஐந்தடியால் வந்து, தாழிசை மூன்றும் மூன்றடியால் வந்து, தாழிசையின் பின்னர்த் தனிச்சொல் முன்னர் இரண்டடியால் ஓர் அராகம் வந்து, அதன்பின் இரண்டு ஓரடியால் பேரெண் அறுசீரால் வந்து, இடை யெண் நான்கு ஓரடியால் முச்சீராய் வந்து, எட்டுச் சிற்றெண் ஒரு சீரும் ஓரசையுமாய், இம்மூன்று அம்போதரங்க உறுப்பும் பெற்று முடிவது இடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனவும், தரவும் சுரிதகமும் நான்கடியால் வந்து, ஈரடியால் மூன்று தாழிசைவந்து, தாழிசையின் பின்னர்த் தனிச்சொல் முன்னர் இரண்டடியால் ஓர் அராகம் வந்து, ஓரடியால் இரண்டு பேரெண் வந்து, இரு சீரால் நான்கு இடையெண் வந்து, ஒரு சீரால் எட்டுச் சிற்றெண் வந்து இம்மூன்று அம்போதரங்க உறுப்பும் பெற்று முடிவது கடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனவும் வேண்டுவர். (ஓரடி நான்கு அளவெண் என்றலே ஏற்றது.) தலையளவு எ-டு : ‘அலைகடல் கதிர்முத்தம்’ யா. வி.பக். 308 இடையளவு எ-டு : பிறப்பென்னும்’ யா. வி.பக். 310 கடையளவு எ-டு : ‘கடையில்லா’ யா. வி. பக். 311 இவை தலை இடை கடையளவுப் பெருந்தேவபாணிகள் (யா. க. 83 உரை). இம்மூன்றும் அளவியல் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா; ஏனைய அளவழி அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. (யா. க. 83) அம்போதரங்க ஒத்தாழிசை : பெயர்க்காரணம் - அம்பு + தரங்கம் - நீர் அலை. அம்புதரங்கம் எனற்பாலது அம்போதரங்கம் என மருவிற்று. நீர்த்திரைபோல் ஒரு காலைக்கு ஒருகால் சுருங்கிவரும் அழகிற்றாய் ஒழுகும் அம்போதரங்க உறுப்பினை உடையதாய், தரவு தாழிசை அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஐந்து உறுப்புக்களொடு நிகழ்வது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலியாம். (யா. க. 80 உரை) அம்போதரங்க ஒருபோகின் உறுப்புக்கள் - எருத்து எனப்படும் தரவு, கொச்சகம் எனப்படும் இடையுறுப் புக்கள், அராகம், சிற்றெண், அடக்கியல் - வாரம் - எனப்படும் சுரிதகம் ஆக அம்போதரங்க ஒருபோகு ஐந்துஉறுப்புக்களை யுடையது. இதன் உறுப்புக்களில் தாழிசையும் பேரெண்ணும் இடம்பெறவில்லை. (தொ. செய். 152 நச்.) இனி யாப்பருங்கல விருத்தியின் எடுத்துக்காட்டால் பெறு மாறு : ஈரடித் தாழிசை 3 ; நாற்சீர் ஈரடி அராகம் 1; நாற்சீர் ஓரடியாகிய பேரெண் 2; இருசீர் ஓரடியாகிய இடையெண் 4; சீரும் அசையுமாக நின்ற இருசீர் ஓரடியாகிய அளவெண் 8 ; தனிச்சொல்; நேரிசை ஆசிரியச் சுரிதகம் - என இவ்வாறு வருவது அம்போதரங்க ஒருபோகு ஆகும். இதனுள் தரவு நீக்கப்பட்டவாறு உணரப்படும். (யா. வி. பக். 342, 343) அம்போதரங்க ஒருபோகு - அகநிலை ஒத்தாழிசை, ஏனை ஒத்தாழிசை என ஒத்தாழிசை இருவகைப்படும். அவற்றுள் ஏனை ஒத்தாழிசை வண்ணகம், ஒரு போகு என இருவகைப்படும். அவற்றுள் ஒரு போகு, கொச்சக ஒரு போகு எனவும் அம்போதரங்க ஒரு போகு எனவும் இருவகைப்படும். அம்போதரங்க ஒரு போகின் இடையளவு அறுபதடியும், தலையளவு அதன் இரட்டி யாகிய நூற்றிருபதடியும், கடையளவு பதினைந்தடியும் எனக் கொள்க. பிற செய்திகள் உரிய தலைப்பிற் காண்க. (தொ. செய். 147, 151 நச்.) மயேச்சுரரால் சொல்லப்பட்ட அம்போதரங்கமும் வண்ண கமும் என்றிரண்டு தேவபாணியும் திரிந்து, தரவு ஒழித்து அல்லா உறுப்புப் பெறினும், தாழிசை ஒழித்து அல்லா உறுப்புப் பெறினும், அம்போதரங்கத்துள் ஓதப்பட்ட மூவகை வண்ணகத்துக்கு ஓதப்பட்ட இருவகை எண்ணும் நீங்கினும், நீங்கிய உறுப்பொழியத் தனிச்சொல்லும் சுரிதக மும் பெற்று வருவன ‘ஒருபோகு’ எனப்படும். அவை அம்போதரங்க உறுப்புத் தழீஇயின அம்போதரங்க ஒருபோகு ஆம். (யா. வி. பக். 342) அம்போதரங்க ஒருபோகுக்கு அடியளவு - அம்போதரங்க ஒருபோகு எருத்து, கொச்சகம், அராகம், சிற்றெண், அடக்கியல் என்னும் தன் ஐந்து உறுப்புக்களும் கூடத் தலையளவு 120 அடி, இடையளவு 60 அடி, கடையளவு 15 அடி என்னும் எல்லையைப் பெறும். எனவே தலையளவு 61 முதல் 120 அடி, இடையளவு 31 முதல் 60 அடி, கடையளவு 15 முதல் 30 அடி அளவாம். 120 அடியுடைய அம்போதரங்க ஒரு போகிற்கு, தரவு 20 அடி; அடக்கியல் 20 அடி; சிற்றெண் 16 அடி, அராகம் 4 அடி, ஆக 60 அடி; பத்தடிக் கொச்சகம் ஆறு என 60 அடி; ஆக 120 அடியாம். 60 அடியுடைய அம்போதரங்க ஒருபோகிற்கு, தரவு 10 அடி; அடக்கியல் 10 அடி; சிற்றெண் 8, அராகம் 2 அடி ஆக 30 அடி; பத்தடிக் கொச்சகம் மூன்று என 30 அடி; ஆக 60 அடியாம். 15 அடியுடைய கடையளவு அம்போதரங்க ஒருபோகிற்கு தரவு 2 அடி; அடக்கியல் 2 அடி; இரண்டடிக் கொச்சகம் மூன்று என 6 அடி; சிற்றெண் 4 அடி, அராகம் ஓரடி, ஆக 15 அடியாம். இவை இக்காலத்து வீழ்ந்தன. (தொல்.செய். 151 நச்.) அம்போதரங்கம் (1) - நீர்த்திரை போல ஒருகாலைக் கொருகால் சுருங்கி வரும் அடிகளையுடைய அம்போதரங்க உறுப்பானது அசையடி, பிரிந்திசைக்குறள், சொற்சீரடி, எண் என்னும் பெயர்களை யுடைத்தாய், பேரெண் (இரண்டடி), சிற்றெண் (ஓரடி), இடையெண் (முக்காலடி), அளவெண் (அரையடி) என்னும் பகுப்பினை யுடைத்தாய், தாழிசை உறுப்பின் பின்னர் ஈரடியால் இரண்டும், அதன் பின்னர் நாற்சீரடியால் நான் கும், அதன் பின்னர் முச்சீரடியால் எட்டும், அதன் பின்னர் இரு சீரடியால் பதினாறுமாய் வரும். (யா. க. 83, உரை) நாற்சீர்ஈரடி இரண்டு - பேரெண்; நாற்சீர்ஓரடிநான்கு - அளவெண், முச்சீர்ஓரடி எட்டு - இடையெண்; இருசீர்ஓரடி பதினாறு - சிற்றெண். எட்டும் பதினாறுமாகச் சொல்லப் பட்டவை நான்கும் எட்டுமாகச் சுருங்கியும் வரப்பெறும். (யா. கா. 31 உரை) சிறுகாக்கைபாடினியார் ஓரடி, முக்காலடி, அரையடி என்ற மூவகை எண்களையே கொண்டார். (யா. வி. பக். 306) அம்போதரங்கம் (2) - கலிப்பா உறுப்புக்களுள் ஒன்று அம்போதரங்கம். பல உறுப்புக்களும் முறையே சுருங்கியும் ஒரோவழிப் பெருகியும் முடுகியும் கடைக்கண் விரிந்து நீர்த்தரங்கம் போறலின் அம்போதரங்கம் என்றார். (தொ.செய். 148 நச்.) அம்போ தரங்கம், பேரெண் அளவெண் இடையெண் சிற்றெண் என்னும் இவ்வுறுப்புக்களைக் குறிக்கும் என்பது பின்னூலார் கருத்து. அம்மை நூல்வனப்புக்கள் எட்டனுள் ஒன்று. சின்மையவாய் மெல்லிய வாகிய சொற்களாலும், இடையிட்டு வந்த பனுவல் இலக்கணத்தாலும் அடி பலவாய் வருதலின்றி நிகழ்வது அம்மை எனப்படும். அங்ஙனம் வந்தது பதினெண் கீழ்க் கணக்கு. அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணம் கூறுவன போன்றும், இடையிடையே அவ்வாறு அல்ல ஆகியும், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் நிகழுமாறு காண்க. ஆசாரக் கோவையுள் ‘ஆரெயில் மூன்றும்’ என்னும் தற்சிறப்புப் பாயிரம் ஆறுஅடியால் சிறுபான்மை வந்தது. ஆறடியளவிற் குறையப் பாடல் வருவதே பெரும்பான்மை. அம்மை - குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்பது அம்மை. (தொ. செய். 235 நச்.) அராகம் - கலிப்பா வகைகளின் உறுப்புக்களுள் ஒன்று. அராகம், வண்ணகம், முடுகு என்பன ஒருபொருட்கிளவிகள். அராகம் அளவடி முதல் பல அடியால் வந்து நான்கு முதல் எட்டு அடிவரை நடக்கும். (தொ. வி. 230) மாத்திரை நீண்டும் துணிந்தும் வாராது, குற்றெழுத்துப் பயின்ற நடைபெறுதலின் அறாது கடுகிச் செல்வது. பிறிதொன்று பெய்து ஆற்றவேண்டும்துணைச் செய்யதாகிய பொன்னை அராகித்தது (-பொடியிட்டு நகைசெய்யத் தக்கதாய் உருக்கியது) என்ப ஆதலின், அராகம் என்னும் பெயர் கலியுறுப்பிற்கு வந்தமை ஒப்பின் ஆகிய பெயராம். அராகம் தனித்து வருதலின்று. (தொ. பொ. 152 பேரா.) அராகம் : சொற்பொருள் - அராகம் இசையின்றித் தாளம் பட நடக்கும் நடை. இது வட சொல். நான்கு சீர்களான் முடுகி வருவனவற்றை அராகம் என்றும், ஐந்து முதல் ஏழு சீரளவும் வருவனவற்றை முடுகியல் என்றும் வழங்குதல் மரபு. (தொ. செய். 121 ச. பால.) அராகம்: மறுபெயர்கள் - அராகம் எனினும், வண்ணகம் எனினும், முடுகியல் எனினும், அடுக்கியல் எனினும் ஒக்கும். அராக அடி அளவடி முதலாக எல்லா அடியானும் வரப்பெறும். அடி வரையாது சிறுமை நான்கடி, பெருமை எட்டடி; இடையிடை எத்துணையாயி னும் வரப்பெறும். ஒரு சாரனவற்றுள் அகவலும் வெள்ளை யும் விரவி அராகமாயும் அருகி வரப்பெறும்.(யா. க. 84 உரை) அராகமும் முடுகியலும் - அராகம் முடுகியல் என்னும் இரண்டும் குற்றெழுத்துக்கள் தொடர்ந்து வருதலின் நிகழுமேனும், அராகமாவது பிறிதொன்றனொடு கூட்டி அற்றுவிடாமல் தானே தனித்து அற்று நிற்பதாம். அது பரிபாடல் செய்யுள் உறுப்பு என்பர். முடுகியல் வேறு அடிகளொடு கூடிச் செய்யுள் அமைத்தற்கு உதவுவதாய்த் தான் தனித்து நில்லாது பிற அடிகளொடு கூடிவருவதாம். ஆசிரியத் தளையொடு முடுகிய அடி கலிஅடி ஆகும். (தொ. செய். 67 நச்.) அலகிடுதல் - (1) அளவிடுதல் (2) செய்யுளசையைக் கணக்கிடுதல் (இ. வி. 752) (3) துடைப்பத்தாற் பெருக்குதல். “உள்ளங்குளிர அலகிட்டான்” (இறை. அ. 1 உரை) (டு) அலகிடும் முறைமை - செய்யுள்களில் ஒவ்வோர் அசையும் தனக்கெனச் சிறப்புப் பொருளுடையதாயிருத்தல் சிறப்பு. ஆதலின் அசைகளைப் பிரிக்கும் போது அவை பொருள் தருமாறு பிரித்தலே தகுதி. சீர்களின் முதலில் நிற்கும் தனிக்குற்றெழுத்தை மொழியி னின்றும் பிரித்து ஒரு நேரசையாகக் கூறுதல் ஆகாது. அஃதாவது ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ (முருகு. 1) என்னும் அடியில் முதற்சீராகிய உலகம் என்பதன் ‘உ’ என்பதனைத் தனியே பிரித்து நேரசையாகக் கொள்ளுதல் கூடாது. ஒரு சீரில் உள்ள சொற்களுள் முதற்சொல்லின் ஈற்று எழுத்தினையும் இரண்டாம் சொல்லின் முதல்எழுத்தினை யும் ஒருங்கு சேர்த்து ஓரசையாகக் கொள்ளுதல் தகாது. அஃதாவது “பெற்ற மாயின் முற்றவின் வேண்டும்” (தொ.உயிர். 77) என்னும் சூத்திரத்தில் ‘முற்றவின்’ என்னும் சீரை, முற்-றவின் - என்று பிரித்து ‘நேர் நிரை’ என்று கூறுதல் கூடாது. ஏனெனில் ‘முற்ற’ என்பது ஒருசொல். ‘இன்’ என்பது ஒருசொல் ஆகவே முற்றவின் என்பதனை ‘முற்-ற-இன்’ என்று மூவசைச் சீராகப் பிரித்தலே ஏற்றது. (தொ. செய். 7 நச்.) ‘பொன்னிறம் அருமைநற் கறிந்தும் அன்னோள்’ (அகநா. 258) என்ற அடியில் ‘அருமைநற்’ என்ற சீரை அரு-மை-நற் என்று மூவசைச் சீராகவே கோடல் வேண்டும். (தொ. செய். 30 நச்.) தொல்காப்பியம் சொல்லும் நேர்பு, நிரைபு அசைகளைப் பிற்காலத்தவர் கொள்ளாமல் விடுத்தலின், விசும்புதைவரு வளியும்(புறநா. 2) வசிந்துவாங்கு நிமிர்தோள்(முருகு. 106) என்பனவற்றில் ‘விசும்பு தை வரு’ என்பதனை விசும் - புதை - வரு : கருவிளங் கனி எனவும், ‘வசிந்து வாங்கு’ என்பதனை வசிந் - துவாங் - கு: கருவிளங்காய் எனவும், கொள்கின்றனர். தொல்காப்பிய முறைப்படி, விசும்புதைவரு: விசும்பு - தை - வரு: நிரைபு நேர் நிரை எனவும், வசிந்து வாங்கு; வசிந்து - வாங்கு; நிரைபு நேர்பு எனவும் பகுத்தே அலகிடல் வேண்டும். நேர்பு, நிரைபு அசைகளைக் கொள்ளாத ஆசிரியர்களுக்கும், ஒரு சீரில் உள்ள சொற்களின் எழுத்துக்களைப் பிரித்துக் கூட்டுதல் என்பதும் உடன்பாடன்று. ‘கொன்று கோடு நீடு’ என்பதனைக் கொன் - றுகோ - டுநீ - டு என்று நாலசைச்சீராகக் கொள்ளாது, கொன்-று-கோ-டு-நீ-டு என்று ஆறசைச் சீராகவே பழைய உரையாசிரியர் கொள்வர். (யா. கா. ஒழி1. உரை) ‘அங்கண்வானத் தமரரசரும்’ என்னும் வஞ்சிப்பாட்டில் ‘அநந்தசதுட்டயம்’ என்ற சீரினை அநந் - தச - துட் - டயம் என்று பிரிக்காமல், அநந் - த - சதுட் - டயம் எனப் புளிமாநறு நிழலாகவே கூறுவர். (யா. கா. 9. உரை) இவ்வாறே அப்பாடலில் ‘மந்தமாருதம்’ ‘இலங்குசாமரை’ என்பனவற்றை மந்-தமா-ருதம்; இலங்-குசா-மரை என நிரையீற்று மூவசைச் சீராகக் கொள்ளாமல், மந்-த-மா-ருதம்; இலங்-கு-சா-மரை என நாலசைச் சீராகவே கொள்வர். யாப்பருங்கல விருத்தியிலும் ‘அங்கணீலத்’ என்ற சீரினை (15 உரை) அங் - கணீ - லத் எனப் பகுக்காது, அங்-க-ணீ-லத் என நாலசைச்சீராகக் காட்டியதும், (பக். 72) ‘வாதுவிட்டால்’ ‘சூடுநெற்றி’ என்பனவற்றை வா - து - விட் -டால்; சூ - டு - நெற் - றி என நாலசைச் சீர்களாகவே காட்டியதும் (பக். 78), ‘மாரியொடு’ என்பதனை (16 உரை) மா - ரியொ - டு எனப் பகுக்காமல், மா-ரி-யொடு எனத் தேமாங்கனி என்று குறிப் பிட்டதும் (பக். 81) பண்டைய நேரிய அலகிடு மரபினை நினைவுறுத்தும் செய்திகளாம். ஒரு சீரினுள் அமைந்த இரண்டு சொற்களின் எழுத்துக்களை இணைத்து அசையாக்கும் வழக்கம் மிகுந்த காலத்தில், கனிச் சீர்களையுடைய வெண்பாக்கள் காய்ச்சீராகக் கருதப்பட்டு யாக்கப்பட்டன. ‘வருந்தித்தாம் கற்றன ஓம்பாது மற்றும் பரிந்துசில கற்பான் தொடங்கல்’ (நீதிநெறி. 9) ‘உடைந்துளா ருட்குவரு கல்வி’ (நீதிநெறி 8) ‘கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றவெலாம்’ (நீதிநெறி . 15) ‘சந்திசெயத் தாள்விளக்க’ (நள. கலிதொடர். 32) முதலியன எடுத்துக்காட்டுக்களாம். பரிந்து - சில - நிரைபு நிரை ; பரிந் - துசி - ல : நிரை நிரை நேர். உட்கு - வரு - நேர்பு நிரை ; உட்- குவ-ரு : நேர் நிரை நேர். கற் - ற - வெலாம் - நேர் நேர் நிரை ; கற் - றவெ லாம் - நேர் நிரை நேர். சந்-தி-செய - நேர் நேர் நிரை ; சந் - திசெ - ய: நேர் நிரை நேர் - என்று கொள்ளப்பட்டன. ‘சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு’ ‘புந்திமிகத் தான்களித்துப் போதல்மனத் தேகொண்டு’ ‘இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்தி இரவில்வந்த’ (யா. வி. பக். 78) ‘தாளின்மறு’ என்பதும் ‘போதல்மனத்’ என்பதும் போல்வன கனிச்சீர் ஆகாமைப் பொருட்டு மெய்யெழுத்தை நீக்கிக் கணக்கிட்டுத் ‘தா - ளிம - று’ எனவும் ‘போ - தம - னத்’ எனவும் பகுத்துச் சீராக்குதலும் ‘இரவில்வந்த’ என்பதன்கண் நாலசைச்சீர் ஆகாமைப் பொருட்டு லகர மெய்யை நீக்கி ‘இர - விவந் -த’ எனப் பகுத்துச் சீரமைத்தலும் பிற்கால வழுவமைதி முறைகளாயின. 14 எழுத்தின் மேற்பட்ட வெண்பாஅடி கலியோசை ஏற்கும் என்பது பண்டைய மரபு. இப்பொழுது சீர்வகைகளின் அடிகள் ஆதலின் எழுத்துக் கணக்கினை நோக்குவதில்லை. அலகு - அசைக்கு உறுப்பாகக் கணக்கிடுதல். அதற்கு வரிவடிவாக ஒருகுறி பண்டிருந்தது போலும். அவிநயம் - இஃது ஒரு காலத்தே எழுத்துச் சொற் பொருள் என்ற மூன்றனையும் விளக்கிய பெருநூலாக வழங்கியதுபோலும். அவிநயம் என்ற நூலின் யாப்புப் பகுதியினின்று 63 நூற் பாக்கள் யாப்பருங்கல விருத்தி முதலியவற்றுள் இடம் பெற்றன. இந்நூற்கு இராசபவித்திர பல்லவதரையன் உரை வரைந்த செய்தி நன்னூல் மயிலைநாதருரையால் (சூ. 359) புலப்படுகிறது. தளைச் செய்திகள் சில, தொடைச் செய்திகள் சில, ஆசிரியத்தாழிசை - வஞ்சிவிருத்தம்- போல்வன நீங்கலாக ,ஏனைய யாப்புப் பற்றிய செய்திகள் பலவும் மேற்கூறிய 63 நூற்பா வாயிலாகப் பெறப்படுகின்றன. இதன் ஆசிரியர் அவிநயனார். ஆசிரியனது இயற்பெயரால் பெயர்பெற்றது இந்நூல். (யா. வி. பக். 21, 25, 27 முதலியன) அவையடக்கியல் - இது வாழ்த்து வகையின்பாற்படும். அவை அடங்குமாற்றான் தன்னை இழித்துக் கூறி அவையைப் புகழ்தலாம். அவைக்கண் தான் அடங்குதலின் ‘அவையடங்கியல்’ என்பது பொருந்தாத பாடமாம். அவையோரிடம் தான் பொருந்தாதவற்றைக் கூறினும், அவற்றை அன்னோர் ஆராய்ந்து அமைத்துக் கொள்க என்று அவையிலுள்ளார் எல்லார்க்கும் வழிபடு கிளவி கூறுவது. இதற்கும் கலி, வஞ்சி, பரிபாடல் என்பன ஏற்பன அல்ல. ‘திரைத்த விரிக்கில் திரைப்பினா வாய்போல் உரைத்த உரைபோகக் கேட்டும் - உரைத்த பயின்றவர் செய்வார் சிலரேதம் நெஞ்சத்(து) இயன்றவா செய்வார் பலர்’ இது பூதத்தார் அவையடக்கு. ‘அவையடக்கியலே’ என்னும் நூற்பாவில், ‘அரில்தப’ என்றதனால் சிறுபான்மை யாப்பினும் பொருளினும் வேறுபட்ட கொச்சகத்தால் கூறும் தொடர் நிலைச் செய்யுட்கும் அவையடக்கியல் கொள்ளப்படும் என்பது. எ-டு : ‘கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்’ என்ற பாடல் (சீவக. பாயிரம்) (தொ. சொ. 113 நச்.). அழகு - நூல் வனப்புக்களுள் அழகு என்பதும் ஒன்று. வழக்குச் சொற் பயிலாமல் செய்யுளுள் பயின்றுவரும் சொற்களால் சீர்த்துப் பொலிவு பெறப் பாடின் அப்பகுதி அழகு எனப்படும். அஃது அகநானூறு முதலிய பாடல்களிற் காணப்படும் வனப்பாம். (தொ. செய். 236 பேரா.) அளபெடை - அசைக்கு உறுப்பாம் எழுத்துக்களுள் அளபெடையும் ஒன்று. மாத்திரை குறையின் சீர்குன்றித் தளைகெட நின்றவழி யாப்பு அழியாமைப்பொருட்டு நெட்டுயிர் ஏழும், மெய் ங் ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் என்னும் பத்தும், ஆய்தமும், தம் மாத்திரை யின் நீண்டு ஒலித்தல் அளபெடையாம். ஆகவே அளபெடை உயிரளபெடையும் ஒற்றளபெடையும் என இருவகைத்து. ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ என நெட்டுயிர் ஐந்தும் தம் இனக்குறிலொடு சேர்ந்து அளபெடுத்தன. ஐகாரம் இகரத் தொடும் (ஐஇ) ஓளகாரம் உகரத்தொடும் (ஒளஉ) சேர்ந்து அளபெடுத்தன. நெடிலும் குறிலும் சேர்ந்த உயிரளபெடை யின் மாத்திரை மூன்று. சிலவிடத்தே ஆஅஅ என ஈரளபெடுத்து நான்கு மாத்திரை பெறுதலுமுண்டு. உயிரள பெடை தனிநிலை, முதனிலை, இடைநிலை, இறுதிநிலை என நான்கு வகைப்படும். விளி முதலியவற்றில் மூன்று மாத்திரை யின் மிக்கொலித்தல் செய்யுட்குப் பெரிதும் உதவுவதின்மை யின் விடுக்கப்பட்டது. இலங்ங்கு, எஃஃகு - என அளபெடுக்கும் புள்ளி எழுத்தின் பின்னர் அவ்வெழுத்தே மீண்டும் ஒருமுறை வரிவடிவில் எழுதப்படும். ஒற்றளபெடை செய்யுளில் மிக அருகியே நிகழ்வது. இதன் மாத்திரை ஒன்றாம். (யா. கா. 4 உரை) நெடிலும் குறிலும் சேர்ந்து ஓரொலியாய் வரும் மூன்று மாத்திரை பெற்றவையே அளபெடை யென்பர் வடநூலார். அதனை ஒட்டிப் பிற்காலத் தமிழ்நூலாகும் அளபெடை யைக் கொண்டனர். மாத்திரை நீட்டத்திற்கு வரும் குற்றெழுத்தே அளபெடை யெழுத்து. மூன்று மாத்திரை கொண்டதோர் எழுத்துத் தமிழிற்கு இல்லை என்பது தொல்காப்பியரின் கருத்து. சீரும் தளையும் சிதையின் அளபெடை அலகுபெறாது என்ற யாப்பிலக்கண விதியும் (யா.கா. 38) இனக்குறிலையே அளபெடை எழுத்தாகக் கொள்ளும் கருத்துக்கு அரண் செய்கிறது. ‘அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே’ : விளக்கம் - செய்யுளிசை நிறைத்தற்கு வரும் உயிரளபெடையாகிய செயற்கையளபெடைக்கண் வரும் குற்றுயிர்களின் மாத்திரை யிசை சீர்களின் அசைஉறுப்பாய் அலகு நிலை பெறுதலும் உரியது; அசைநிலையாய் அலகு பெறாமையும் உரியது. எ-டு : ‘நற்றாள் தொழாஅர் எனின்’ (குறள். 2) எருதுகா லுறாஅ திளையர் கொன்ற’ (புற.) இவை தளைநிலை பெற்றுச் செய்யுட்கண் ஓசை நிரப்ப வந்த அளபெடை ஆதலின் அலகுபெற்று அசைநிலையாகியே நிற்கும். ‘சேரமாஅஅன் வருக! நம்பீஇஇ செல்க’ (சேய்மை விளி) ‘உப்போஒஒ எனவுரைத்து மீள்வாள்’ (பண்டமாற்று) ‘கலம்போஒய்ப்போஒய்க் கௌவை தரும்’ (இசை) ‘நாவலோஒஓ என்றிசைக்கும் நாளோதை’ (நாவலோசை) இவை அசைநிலையாகி அலகு பெறா. செய்யுட்கண் ஓசை நிரப்ப வரும் அளபெடை, சொல்லுக்கு உறுப்பாய்ப் பொருள் வேறுபாடு செய்யாமல், நெட்டெழுத் தின் விகாரமாய்க் கொள்ளப்படுவது. ஆதலின் அது பின் நிற்கும் எழுத்துக்களொடு கூடி நிரையசையாதல் இல்லை. மூன்று மாத்திரையேயன்றி நான்கு மரத்திரையாக அள பெடுப்பினும் அவை தனித்தனி நேரசையாய்க் கொள்ளப் படும். (தொ. செய். 17 ச. பால.) அளபெடை அசைநிலையாதல் - சீர்நிலை எய்திநின்ற அளபெடைகள் அசைநிலை ஆதலும் உண்டு. இயற்கை அளபெடை அசைநிலையாதல் செய்யுட்கே உரியது. புணர்ச்சி வகையான் எழுத்துப்பேறாகிய அளபெடை யும், பொருட்புலப்பாட்டிற்குப் புலவர் செய்த செயற்கை யளபெடைகள் சிலவும் அசைநிலை ஆதலும் உரிய. ‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள்’ இதன்கண், அளபெடை சீர்நிலை எய்தின் வெண்பாச்சிதையு மாதலின், பண்டமாற்றின்கண் இயற்கையளபெடை அசை நிலையாயிற்று. ‘பலாஅக்கோட்டுத் தீங்கனிமேல் பாய்ந்த கடுவன்’ இதன்கண், பலாஅ என்பதன்கண் எழுத்துப்பேறளபெடை சீராகாது அசையாயிற்று. ‘கலம்போஒய்போஒய்க் கவ்வை செய’ இதன்கண், வெண்பா ஈற்றடியில் அளபெடை செய்கைக் குறிப்புப் புலப்பட வந்தது. அளபெடை அலகுபெறின் வெண்பாச் சிதையும். செய்கைக்குறிப்பு - ஒரு செயல் பலகாலும் நிகழ்தல். (தொ. செய். 17 நச்.) அளபெடையை நீட்டம் வேண்டி வந்த இனக்குற்றெழுத் தாகவே கொண்டு, அந்த இனக்குறில் அசையாக வருதலும் உரித்து, அசையாக வாராமையும் உரித்து என்ற கருத்தும் உணரத்தக்கது. அளபெடை அசைநிலை ஆகாமை - அளபெடை அசைநிலை ஆகாமையும் உரித்து (அதனையும் கூட்டி அலகிட்டாலன்றிச் சீர்நிலை நிரம்பாது.) எ-டு : ‘கடாஅ உருவொடு’ குறள். 588 (தொ. செய். 16 இள.) அளபெடை சீர்நிலை ஆகலும் உரித்து. எ-டு : ‘தேஎந் தேரும் பூஉம் புறவில் .............................................................................. குராஅம் பிணைபல் விராஅங் குஞ்சி’ (தொ. 17 பேரா நச்.) அளபெடை அந்தாதி - முதலடியின் இறுதியில் அளபெடையாக வந்த சீர் அடுத்த அடிமுதலில் அந்தாதித்து வருவது. (யா.க. 52 உரை.) எ-டு : ‘மேஎய ஒற்றினை விழைவினன் கூஉய்க் கூஉயதும் வந்தோற் கொண்டுடன் போஒய்ப் போஒய கருமம் போற்றிநன் குரையென’ (புனையப்பட்டது) ‘கூஉய்’ என்ற முதலடி ஈற்றுச்சீர் அந்தாதித்து இரண்டாமடி முதற்சீராகி நிற்ப, அவ்வாறே இரண்டாமடி ஈற்றுச்சீரும் அந்தாதித்து மூன்றாமடி முதற்சீராகி நிற்ப, அடியளபெடைத் தொடையும் ஏற்ப வந்தமை காண்க. அளபெடை இயைபு - இயைபுத்தொடை அளபெடைத்தொடையுடன் இணைந்து வருவது அளபெடை இயைபுத்தொடையாம். எ-டு : ‘ஏஎ வழங்கும் சிலையாய் இரவரை மாஅ வழங்கும் வரை’ இதன்கண், ஏஎ, மாஅ - அளபெடை; வரை, வரை என இரண்டடி இறுதியிலும் வந்த சொற்கள் இயைபு. ஆதலின், இப்பாட்டடிகளில் அளபெடை இயைபுத்தொடை வந்தவாறு. (யா. க. 40 உரை) இரவரை - இரவில் வருதலை நீக்குவாயாக. அளபெடை இனக்குறள் வெண்பா - அளபெடைத் தொடை அமைய வரும் குறள் வெண்பா. எ-டு : ‘கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேற் றுகில்’ (குறள் 1087) இதன்கண் அடிஅளபெடை வந்தவாறு காண்க. (யா.க. 59 உரை) அளபெடை ஏனைய தொடைகளொடும் வருதல் - அளபெடைத் தொடை - மோனை எதுகை முரண் என்ற பிறதொடைகளொடும் விரவி வரும். அ) மோனை அளபெடைத்தொடை முதலெழுத்து ஒன்றி வந்து அளபெடுப்பது இத்தொடை யாம். ‘அறாஅ லின்றரி முன்கைக் கொட்கும்.... அறாஅ தணிகஇந் நோய்’ என வரும். (கலி. 147) ஆ) எதுகை அளபெடைத்தொடை முதல் எழுத்து அளவொத்து நிற்ப, இரண்டாமெழுத்து ஒன்றி வந்து அளபெடுப்பது. ‘கடாஅக் களிற்றின்மேல் கட்படா மாதர் படாஅ முலைமேற் றுகில்’ (குறள் 1087) ‘வண்ண்டு வாழும் மலர்நெடுங் கூந்தலாள் பண்ண்டை நீர்மை பரிது’ என வரும். இ) முரண் அளபெடைத்தொடை ஈரடிகளிலும் தொடக்கச்சீர்களில் முரணான சொற்கள் வந்து அளபெடுப்பது. ‘சீஇறடி மாதர் சினத்தினைக் காண்குவல் பேஎரெழில் கண்க ளிடை’ என வரும். ஈ) மயக்கு அளபெடைத் தொடை மோனை எதுகை முரண் முதலிய தொடைகள் தன்னிடைக் கலக்க அடிதோறும் முதற்சீர் அளபெடுத்து வருவது. எ-டு : வந்தவழிக் காண்க. உ) செவ்வளபெடைத் தொடை ஏனைய தொடைகள் வாராமல் அளபெடைத் தொடை மாத்திரம் வருவது. ‘பூஉந் தண்ண் புனமயில் அகவ மாஅங் குயில்கள் சாஅய்ந்து ஒளிப்ப’ (சி.செ.கோ. 42) என வரும் (யா. க. 41 உரை) அளபெடைகளின் எண்ணிக்கை - தனிநிலை, முதனிலை, இடைநிலை, இறுதிநிலை என்னும் நான்கு வகைகளுடன் ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என்னும் ஏழு அளபெடைகளையும் பொருத்த அளபெடை 4 ஒ 7 = 28 ஆகும். அவற்றை அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கது வாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் எட்டு வகையுடனும் உறழ 28 ஒ 8 = 224 உயிரளபெடைகளாம். ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆய்தம் என்னும் பதினொரு புள்ளி யெழுத்துக்களும் குறிற்கீழும், குறிலிணைக் கீழும் அளபு எடுப்ப 22 ஆகும். அவற்றை அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்னும் 8 விகற்பங்களோடும் உறழ 22 ஒ 8 = 176 ஒற்றளபெடைகளாம். இவற்றைச் சீரின் இடைவருவன இறுதி வருவன என இருபகுதிப்படுப்ப 176 ஒ 2 = 352 ஆம். இவ்வாற்றால், உயிரௌபெடை 224, ஒற்றளபெடை 352 ஆம். (யா. க. 41 உரை) அளபெடைச்சீர் - நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் அளபெடையானது நெடிலும் இனக்குறிலும் சேர்ந்து மூன்று மாத்திரை அளவிற்றாகிய ஈரெழுத்து எனக் கொண்டனர். சொல்லாந் தன்மை எய்தி நின்ற அளபெடை இரண்டாகப் பகுக்கப்பட்டு இயற்சீர் ஆகும். ஈரசைச் சீர்களுள் இயற்சீர் 10; உரிச்சீர் 6, இப்பதினாறனுள் உரிச்சீர் ஆறும், நேர்புநேர் நிரைபுநேர் ஆகிய இயற்சீர் இரண்டும் அளபெடைச் சீர் ஆகா. ஆகவே அளபெடைகள் நேர் நேர் - நிரை நேர் - நேர் நிரை - நிரை நிரை - நேர் நேர்பு - நிரை நேர்பு - நேர் நிரைபு - நிரை நிரைபு என்னும் எட்டு இயற்சீர்களாகவே அமைதல் கூடும். ஆஅ - நேர் நேர் - ஆஅங்கு - நேர் நேர்பு கடாஅ - நிரை நேர் - ஆஅவது - நேர் நிரைபு ஆஅழி - நேர் நிரை - புகாஅர்த்து - நிரை நேர்பு படாஅகை - நிரை நிரை - பராஅயது - நிரை நிரைபு இவ்விதி கட்டளை யடிக்கே உரியது. (தொ. செய். 17 நச்.) அளபெடைத் தொடை அளபெடை சீர்களில் ஒன்றி வருவது அளபெடைத் தொடையாம். அடிதோறும் முதற்சீர்களில் அளபெடுத்து ஒன்றுவது அடி அளபெடை. ஓரடியிலே சீர்களில் அளபெடுத்து ஒன்றுவது சீர்அளபெடைத்தொடையாம். அதன் விகற்பங்கள் பலவாம். எ-டு : ‘ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்’ (குறள். 653) இஃது அடி அளபெடைத்தொடை. ‘மாஅத் தாஅள் மோஒட்(டு) எருமை’ சீர் அளபெடைத் தொடை. (யா. க. 41 உரை) அளபெடை மிக்கு வருதல் - பாட்டடிகளில் அளபெடைத் தொடை மிகுதியாக வருதல். எ-டு : ‘ஏஎர் சிதைய அழாஅல், எலாஅநின் சேஎயரி சிந்திய கண்’ இக்குறள் வெண்பா அடிகளில் முதல்நிலை இடைநிலை இறுதிநிலை என்னும் மூன்றும், அடியளபெடையுமாக நான்கு அளபெடையும் வந்தவாறு காண்க. (யா. வி. பக். 32) அளபெடை வண்ணம் - அளபெடை பயின்று வரும் சந்தம் அளபெடை வண்ண மாகும்; இரண்டளபெடையும் பயிலச் செய்வது. எ-டு : ‘மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்’ ‘கண்ண் டண்ண்ணெனக் கண்டும் கேட்டும்’ என வரும். ‘தாஅம் படுநர்க்குத் தண்ணீ ருளகொல்லோ வாஅஅம் பல்விழி அன்பனை அறிவுறில் வாஅம் புரவி வழுதியொ டெம்மிடைத் தோஒ நுவலுமிவ் வூர்’ இஃது அளபெடைத் தொடையாம். (தொ. செய். 219 நச்.) அளபெடை வண்ணமாவது அளபெடையில் வருவது. (வீ. சோ. 142 உரை) அளபெடை விகற்பம் 8 - அளபெடைத் தொடை அடியளபெடையும், இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என விகற்பம் ஏழுமாக எட்டாம். ‘தாஅட்டாஅ மரைமலர் உழக்கிப் பூஉங் குவளைப் போஒ தருந்திக் காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய் மாஅத் தாஅள் மோஒட் டெருமை தேஎம் புனலிடைச் சோஒர் பாஅல் மீஇன்ஆஅர்ந் துகளும் சீஇர் ஆஅ னாஅ நீஇள் நீஇர் ஊரன் செய்த கேண்மை ஆய்வளைத் தோளிக் கலரா னாவே’ இப்பாடற்கண் முதல் ஏழு அடிகளிலும் அடி அளபெடை யுடன், இணை முதலியனவும் முறையே காண்க. (யா. கா. 20) அளவடி - நாற்சீர் கொண்ட அடி அளவடி எனப்படும்; நேரடி என்பதும் அது. ‘உலகெ லாமுணர்ந் தோதற்க ரீயவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்திவ ணங்குவாம்’ (பெரியபு. 1) இதன்கண் ஒவ்வோரடியும் அளவடியாம். அளவடியில் கூன் வருதல் - அளவடிப் பாடல்களாகிய ஆசிரியம், வெண்பா, கலி இவற்றின் அடித்தொடக்கத்தில் சீர் கூனாக வரும்; ஆசிரியப் பாவின் இடையிலும் வரும். எ-டு : ‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே; யானே, தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப் பாடமை சேக்கையுள் படர்கூர்ந் திசினே’ (குறுந். 216) இஃது ஆசிரியப்பா அடித் தொடக்கத்தே சீர் கூனாய் வந்தது. ‘உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்’: இது வெண்பாவின் அடித்தொடக்கத்தே சீர் கூனாய் வந்தது. ‘உலகினுள், பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்’: இது கலிப்பாவின் அடித்தொடக்கத்தே சீர் கூனாய் வந்தது. ‘யானோ தேறேன் அவர் பொய்வழங் கலரே’. (குறுந். 21): இஃது ஆசிரியப்பாவின் அடி இடையில் அசை கூனாய் வந்தவாறு. (தொ. செய். 49, 48 நச்.) தொல்காப்பியனார் காலத்தே வஞ்சிப்பாவின் முதலில் அசை கூனாய் வந்தது; வஞ்சிப்பாவின் இறுதியில் அசை கூனாய் வருதல் இடைப்பட்ட வழக்கு; வஞ்சிப்பாவின் இடையில் அசை கூனாய் வருதல் கடைப்பட்ட வழக்கு; வஞ்சிப்பாவில் சீர் கூனாய் வருதலும் கடைப்பட்ட வழக்கு. ஆசிரியம்வெண்பாக்கலிகளில் முதற்கண் சீர் கூனாய் வருதல் தொல்காப்பியர்கால வழக்கு. ஆசிரிய அடிகளின் இடையில் அசை கூனாய் வருதல் பிற்பட்ட வழக்கு. ‘குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’ (குறுந். 25) ‘சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே’ (குறுந். 102) ‘வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே’ (அகநா. 276) என ஆசிரியப்பாவின் ஈற்றடியின் இடையில் அசை கூனாக வந்தது. பிற்காலத்தே வஞ்சியடியிலும் சீர் கூனாய் வந்தமையாலும், ஆசிரிய அடியிலும் அசை கூனாய் வந்தமையாலும், இன்ன இடத்தே அசை கூனாய் வரும், இன்ன இடத்தில் சீர் கூனாய் வரும் என்று கூறாது, பொதுவாகக் கூன்களைத் தனிச்சொல் என வழங்குவராயினர். அவிநயனார், காக்கைபாடினியார், யாப்பருங்கல ஆசிரியர் முதலியோர் இக்கருத்தினர். (வேங். இலக்.பக். 83-85) அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா - அளவியல் வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆறடித்தரவு, நான்கடித் தாழிசை மூன்று, தனிச்சொல், நாற்சீர் முதலாகப் 13 சீர்வரையில் பத்து அராக அடிகள், இரு குறள் வெண் பாக்களாகிய பேரெண், இருசீர் அரையடியாம் சிற்றெண் எட்டு, தனிச்சொல், சுரிதகம் இவை பெற்ற பாடலாகும். இவ்விலக்கணத்திற் பிறழ்ந்து வருவன யாவும் அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவாம். (யா. வி. பக். 324) அளவியல் - பாவினது அடிவரையறை (தொ. பொ. 313 பேரா) அளவியல்வகை அனைவகைப் படுமாறு - எழுத்திற்கு மாத்திரை கூறுவது முதலாக, எழுத்து அசை சீர் அடி தொடை இவற்றுக்கு எண் பற்றிய அளவு கூறுதலும், உறுப்பினான் ஆகிய பாக்களுக்கு அவ்வவற்றின் உறுப்புக் களின் அளவு கூறுதலும், அவற்றைத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கூறுதலும், பெருக்கம் சுருக்கம் கூறுதலும், உடன் பாட்டாற் கூறுதலும், ‘வரையறை இன்று’ என எதிர் மறுத்துக் கூறுதலும், பிறவும் எல்லாம் விளங்க, எடுத்தோத் தானும் உத்திவகையானும் விதப்பானும் கூறுதல். (தொ. செய். 183 ச.பால.) அளவியல் வெண்பா - நான்கு அடிமுதல் ஆறடி முடிய வரும் வெண்பா அளவியல் வெண்பா. இதுவே வெண்பாக்களில் சிறப்புடையது. (தொ. செய். 158 நச்.) அளவு - 1) மாத்திரை என்ற ஓசை அளவு (தொ. எ. 102 நச்) 2) அளவியல் என்ற செய்யுள் உறுப்பு (தொ. செய். 1 நச்.) (அளபு - மாத்திரை - தொ. எ. 50 நச்.) அளவெண் - நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்பு வகை அளவெண் எனப்படும். (யா. கா. 31 உரை) இருசீர் ஓரடியாய்ப் பதினாறு வந்த அம்போதரங்க உறுப் பினை அளவெண் என்பர் வீ.சோ. உரையாசிரியர். (கா. 117) அளைமறி பாப்புப் பொருள்கோள் - வளையில் நுழையும் பாம்பு முதலில் தலையை நுழைத்துத் தலை உள்ளே செல்ல வாலை இறுதியில் உள்ளே இழுத்துக் கொள்ளும்; உள்ளே உடலை வளைத்துத் திரும்பித் தலையை வெளியிலும் வாலை உள்ளுமாகக் கொள்ளும். அதுபோல, பாடலில் அமைந்த முறையிலுள்ள முதலடி இரண்டாமடி மூன்றாமடி நான்காமடி இவற்றைப் பொருள் செய்யும்போது மாற்றி ஈற்றடியிலிருந்து பொருள் கொள்ள அமையும் பொருள்கோள், வளையில் நுழைந்து உடலைத் திருப்பிக் கொள்ளும் பாம்பின் செய்கையையுடையதாகிய அளைமறிபாப்புப் பொருள்கோளாம். (யா. வி. பக். 391) அம்பொன் நீடிய அம்ப லத்தினில் ஆடு வாரடி சூடுவார் தம்பி ரான் அடிமைத் திறத்துயர் சால்பின் மேன்மை தரித்துளார் நம்பு வாய்மை நீடு சூத்திர நற்குலம்செய் தவத்தினால் இம்பர் ஞாலம் விளக்கி னாரிளை யான்கு டிப்பதி மாறனார்’ (பெரியபு. இளையான். 1) இப்பாடலைப் பொருள் செய்யும்போது, இம்பர் ஞாலம் விளக்கினார் ஆகிய இளையான் குடிப்பதி மாறனார், நம்பு வாய்மை நீடு சூத்திர நற்குலம் செய் தவத்தினால், தம்பிரான் அடிமைத் திறத்துயர் சால்பின் மேன்மை தரித்துளார்; அவர் அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார் - என ஈற்றடியினின்று முறையே முதலடிவரை இணைத்துப் பொருள் செய்யப்படுவது அளைமறி பாப்புப் பொருள் கோளாம். அறுத்திசைப்பு - ஓசை இடையறவுபட ஒலித்தல் என்னும் ஓசைக்குற்றம் . இது ஓசைக்குற்றம் மூன்றனுள் ஒன்று. எ-டு : வீங்குமணிவிசித்த விளங்குபுனைநெடுந்தேர் காம்புநீடு மயங்குகாட்டுள் பாம்புபெரிது வழங்குதோறோங்கு வயங்குகரிமா நிரைபுநிரைபு என்ற இக்குறளடி வஞ்சிப்பா அடிகளில், நாலசைப் பொதுச் சீர் பலவும் வந்து தூங்கினமையின் அறுத்திசைப்பு என்னும் குற்றமாயிற்று. (யா. வி. பக். 424) அறுபது வஞ்சியுரிச்சீர்க்கும் வரும் வாய்பாடு 212 ஆதல் - நேரீற்று வஞ்சியுரிச்சீர் 12 அவை 32 வாய்பாடு பெறும் நிரையீற்று வஞ்சியுரிச்சீர் 16 அவை 36 வாய்பாடு பெறும் நேர்பீற்று வஞ்சியுரிச்சீர் 16 அவை 72 வாய்பாடு பெறும் நிரைபீற்று வஞ்சியுரிச்சீர் 16 அவை 72 வாய்பாடு பெறும் இந்நான்கு ஈற்று வகைகளும் முறையே 3 முதல் 7 எழுத்து வரையும், 4 முதல் 8 எழுத்து வரையும், 3 முதல் 8 எழுத்து வரையும், 4 முதல் 9 எழுத்து வரையும் நிகழும். ஆசிரியப் பாவினுள் ஓரோவழி வஞ்சியுரிச்சீர் வருமாறு: எ-டு : ‘விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே’ (குறுந். 210) ‘மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூ’ (பதிற். 60) ‘முழவிமிழ் மூதூர் விழவுக்காணூஉப் பெயரும்’ (பதிற்.109) ‘நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு’ (சிறுபாண் 125) (தொ.செய். 21 ச. பால.) அறுவகைச் செய்யுள் விகாரம் - வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத் தல் என்பன அறுவகைச் செய்யுள் விகாரங்களாம். 1) வலித்தல் விகாரம் செய்யுட்கண் தொடைநயம் கருதி மெல்லெழுத்து அதன் இனமான வல்லெழுத்தாகத் திரிதல். (மேலும் ல், ள் என்ற இடையெழுத்துக்கள் ற், ட் எனத் திரிதலும் வலித்தல் விகாரத்துள் அடங்கும்.) எ-டு : ‘குறுத்தாட் பூதம் சுமந்த அறக்கதி ராழியெம் அண்ணலைத் தொழினே’ ‘குறுந்தாள்’ எனற்பாலது ‘குறுத்தாள்’ எனத் தொடை நோக்கி வலித்தது. 2) மெலித்தல் விகாரம் செய்யுளில் தொடைநயம் கருதி வல்லெழுத்தை அதன் இனமாய மெல்லெழுத்தாகத் திரித்துக் கோடல் (ல், ள் - ன், ண் எனத் திரிதலும் இதன்கண் அடங்கும்.) எ-டு : ‘தண்டையின் இனக்கிளி கடிவோள் பண்டையள் அல்லள் மானோக் கினளே’ ‘தட்டை’ எனற்பாலது ‘தண்டை’ எனத் தொடை நோக்கி மெலித்தது. 3) நீட்டல் விகாரம் செய்யுளில் தொடை நயம் கருதிக் குறில் அதன் இனமான நெடிலாக நீட்டப்படுதல். எ-டு : ‘ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனைக் கானீயும் என்றுரைத்த கைகேயி’ (கம்பரா 1704) ‘ஞானியும்’ எனற்பாலது ‘ஞானீயும்’ எனத் தொடை நோக்கி நீட்டப்பட்டது. 4) குறுக்கல் விகாரம் செய்யுளில் ஓசையும் தளையும் கருதி நெடில் இனமான குறிலாகக் குறுக்கப்படுதல். எ-டு : ‘எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன்’ ‘தீயேன்’ என்பது தளைகருதித் ‘தியேன்’ எனக் குறுக்கப் பட்டது. 5) தொகுத்தல் விகாரம் செய்யுளில் ஓசையும் தளையும் கருதி விரிக்கப்பட வேண்டிய வேற்றுமையுருபு முதலியன தொகுக்கப்படுதல். எ-டு : ‘வேண்டார் வணக்கி விறல்மதில் தான்கோடல் வேண்டுமாம் வேண்டார் மகன்’ ‘வேண்டாரை வணக்கி’ என உயர்திணைக்கண் இரண் டனுருபு விரிந்தே வரற்பாலது, செய்யுள் அமைப்புக் கருதி ‘வேண்டார் வணக்கி’ என உருபு தொகுக்கப்பட்டது. 6) விரித்தல் விகாரம் செய்யுளில் அசையை மிகுத்தல் கருதிச் சாரியை முதலியன இரு சொற்களிடையே மிடைய அச்சொற்கள் விரிக்கப் படுதல். எ-டு : ‘தண்ணந் துறைவர் தகவிலரே தற்சேர்ந்தார் வண்ணம் கடைப்பிடியா தார்’ ‘தண்துறைவர்’ எனற்பாலது, சீரமைப்பு நோக்கித் ‘தண்ணந் துறைவர்’ என அம்முச் சாரியை விரிக்கப்பட்டது. யாப்பு நூல்கள் இவ்விகாரங்களை ஒழிபியலாகத் தழுவு கின்றன. அனு எழுத்து - மோனை எழுத்து. அ,ஆ, ஐ, ஒள; இ, ஈ, எ, ஏ; உ, ஊ, ஒ, ஓ; ஞ, ந; ம, வ; த, ச - இவை தம்முள் ஒத்த அனு. ‘அகரமோ(டு) ஆகாரம் ஐகாரம் ஒளவாம்; இகரமோ(டு) ஈகாரம் எஏ; - உகரமோ(டு) ஊகாரம் ஒஓ; ஞநமவ தச்சகரம் ஆகாத அல்ல அநு’ யா. கா. 43 உரை மேற். அனுகரணம் - வேறு ஒன்று செய்வது போலச் செய்யும் இசைக்குறிப்பு. எழுத்து அல்லாத முற்கும் வீளையும் இலதையும் அனுகரண மும் முதலாக உடையன செய்யுளகத்து வந்தால், அவற்றைச் செய்யுள்நடை அழியாமல், அசை முதலியன பிழையாமல் கொண்டு வழங்கப்பெறும். ‘மன்றலங் கொன்றை மலர்மலைந்(து) உஃகுவஃ(கு) என்று திரியும் இடைமகனே’ இதன்கண், இருமல் ஆகிய அனுகரணஒலி உஃகுவஃகு என அசையும் சீரும் வெண்டளை பிழையாமல் வெண்பாவில் பயின்றவாறு. (யா. வி. பக். 395, 396) அனுதாத்தம் - படுத்தல் ஒசை. இது நால்வகை ஓசைகளுள் ஒன்று. ஏனையன உதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம் என்பன. (தமிழ்நூலார் முறையே எடுத்தல், நலிதல், விலங்கல் என்ப.) அனுமோனை - இனஎழுத்தால் வரும் மோனைத்தொடை; ‘அனு எழுத்து’க் காண்க. அ ஆ ஐ, ஒள; - இவை தம்முள் ஒத்த அனுமோனை. இ, ஈ, எ, ஏ; - இவை தம்முள் ஒத்த அனுமோனை. உ, ஊ, ஒ, ஓ - இவை தம்முள் ஒத்த அனுமோனை. ஞ, ந; - இவை தம்முள் ஒத்த அனுமோனை. ம, வ; - இவை தம்முள் ஒத்த அனுமோனை. ச, த - இவை தம்முள் ஒத்த அனுமோனை.(யா. கா. 43 உரை) ஆ ஆகுபெயர் அந்தாதி - முதற்பாடலின் இறுதிச்சொல் நேராக அடுத்த பாடலின் முதலில் வாராது அச்சொல்லினது ஆகுபெயர்ப்பொருள் பற்றிய சொல் அடுத்த பாடல் முதற்கண் வருவது. எ-டு: 1. ‘பரிவதி லீசனைப் பாடி விரிவதின் மேவ லுறுவீர்! பிரிவகை யின்றிநன் னீர்தூஉய்ப் புரிவது வும்புகை பூவே’ (திருவாய். 1-6-1) 2. ‘மதுவார் தண்ணந் துழாயான் முது வேத முதல்வனுக் கெதுவே தென்பணி யென்னா ததுவே யாட்செயு மீடே’ (திருவாய். 1-6-2) முதற்பாடல் இறுதிச்சீர் ‘பூவே’ என முடிகிறது. பூ என்பது ஆகுபெயரால் அதன்கண் உள்ள மதுவைக் குறிக்க, அம்மது என்னும் சொல்லைத் தொடக்கமாகக் கொண்டு அடுத்த பாடல் ‘மதுவார்’ எனத் தொடங்குவது ஆகுபெயர் அந்தாதியாகும். (மா. அ. பாடல் 66, 67) ஆசிடுதல் - 1) பற்றாசு வைத்தல். 2) நேரிசை வெண்பா முதற்குறளின் இறுதிச் சீர்க்கும் தனிச்சொற்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும் சேர்த்தல். (யா. கா. செய். 3 உரை) 3) எதுகையில் ய், ர், ல், ழ் என்ற நான்கிலொன்றை ஆசாக இடுதல். (இ. வி. 748) (ஆசிடையிடுதல் காண்க.) ஆசிடை எதுகை (ஆசிடையிட்ட எதுகை) - ய், ர், ல், ழ் என்னும் நான்கு ஒற்றெழுத்துக்களும் வரல்முறை பிறழாமல் இடையே வந்து உயிர்ப்பின், அஃது ஆசிடை எதுகையாம் என்றார் காக்கைபாடினியார். இவ்வொற் றுக்கள் இரண்டாமெழுத்தாக வருதலால், மூன்றாமெழுத் தாகிய எதுகை ஒன்றற்கு யாதொன்றும் தடையுமில்லை என்றவாறு. (யா. கா. 43 உரை) எ-டு : ‘காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து’ (சீவக. 31) இஃது யகரமாகிய ஆசு இடையிட்ட எதுகை. ‘மாக்கொடி யானையு மௌவற் பந்தரும் கார்க்கொடி முல்லையும் கலந்து மல்லிகை’ (சூளா. 35) இது ரகரமாகிய ஆசு இடையிட்ட எதுகை. ‘ஆவே றுருவின ஆயினும் ஆபயந்த பால்வே றுருவின அல்லவாம்.’ (நாலடி. 118) இது லகரமாகிய ஆசு இடையிட்ட எதுகை. ‘வாழ்கின்றேம் என்று மகிழன்மின் வாழ்நாளும் போகின்ற பூளையே போன்று’ இது ழகரமாகிய ஆசு இடையிட்ட எதுகை. (யா. கா. 43 உரை., யா. வி. பக். 150, 151) ஆசிடை நேரிசை வெண்பா - இருகுறள் நேரிசை வெண்பாப் போலமையாது, முதற் குறட்பாவினொடு தனிச்சொல் இடை வேறுபட்டு விட் டிசைப்பின், ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப் படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல, முதற்குறட்பாவின் இறுதிக்கண் ஒன்றும் இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப் பட்டு இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவன ஆசிடை நேரிசை வெண்பா எனப்படும். எ-டு : ‘தாமரையின் தாதாடி தண்டுவலைச் சேறளைந்து தாமரையின் நாற்றமே தானாறும் - தாமரைபோல் கண்ணான் முகத்தான் கரதலத்தான் சேவடியென் கண்ணார்வம் செய்யும் கருத்து.’ ‘கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத் தருமமும் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப பட்டினம் பெற்ற கலம்.’ (நாலடி. 250) இவற்றுள் முதலாவது, முதற்குறட்பாவின் இறுதிக்கண், னா-றும் - என ஈரசையால் ஆசிடையிட்டு வந்தது; இரண்டாவது, முதற் குறட்பாவின் இறுதிக்கண் யா - என ஓரசையால் ஆசிடையிட்டு வந்தது. இவையிரண்டும் இரண்டு விகற்பத் தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பாக்கள். (யா. கா. 24 உரை) இவ்வெண்பா ‘ஆசிடை வெண்பா’ எனவும்படும் (பாப்பா. 7.) ஆசிடை வெண்பா - ‘ஆசிடை நேரிசை வெண்பா’ காண்க. ஆசிரிய அடிக்குச் சிறப்பு விதி - ஆசிரிய அடியில், ஆசிரிய உரிச்சீர் வந்து, தளை கொள்ளுங் காலும், 4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய வரையறுக்கப் பட்ட 17 நிலத்தைக் கடந்து வாராது, நேர்பு நிரை - நிரைபு நிரை - என்ற இருசீரும் தளைகொள்ளும். ஏனைய நேர்பு நேர்பு, நேர்பு நிரைபு - நிரைபு நிரைபு, நிரைபு நேர்பு என்ற நான்கும் தளை கொள்ளா. உரிச்சீரால் தளை கொள் ளுங்கால், ஓரடியின் இரண்டு உரிச்சீர் வரின் ஓசை உண்ணாது. ஆசிரிய உரிச்சீர் நான்கு நிரலே நிற்குமிடத்தே தூங்கல் ஓசை பிறத்தலின், இயற்சீர்கள் சீர்வகை அடிகளுக்கு ஒன்று இடையிட்டு வரல் வேண்டும். அப்படி வரினும் இன்னோசை மிகவும் இன்று. நிரையீற்றனவாகிய நேர்புநிரை நிரைபு - நிரை என்ற உரிச்சீர் இரண்டும் இடையில் வாராது அடி முதற்கண்ணே இவற்றுள் ஒன்றுவந்து இயற்சீரொடு தட்டு இன்னோசைத்தாம். அவை ஓரடிக்கு இரண்டு வந்து தட்டாலும் இன்னோசைத்தாம். ‘ஓங்குகோட்டுத் தொடுத்த பாம்புபுரை அருவி’ நேர்பு நேர்பு, நேர்பு நிரை. ‘நிவந்துதோன்று களிற்றின் இலங்குகோடு புரைய’ - நிரைபுநேர்பு, நிரைபு நேர்பு- என்று இயற்சீர்கள் ஒன்று இடையிட்ட உரிச்சீரான் ஆசிரியஅடிகள் வந்தன. ‘பாம்புமணி யுமிழும் பானாள் ஈங்குவரல்’ - நேர்புநிரை, நேர்பு நிரை - இஃது இரண்டு இயற்சீர் இடையிட்டது. ‘ஓங்குமலைப் பெருவில் பாம்புநாண் கொளீஇ’ (புறநா. 55) ‘உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை’ (புறநா. 3) எனக் கட்டளையடிகள் இன்னோசை பெற்றன. ‘ஓங்கு கோட்டுமீது பாய்ந்து பாய்ந்து’ - ஐந்தெழுத்தடி ‘ஆடுகொடி நுடங்கு காடு போந்து’ - ஏழெழுத்தடி (தொ. செய். 54 நச்.) ஆசிரிய அடியுள் தளைமயக்கம் - ஆசிரியஅடியுள் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், கலித்தளையும்ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வெண்டளையும் கலித்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வெண்டளையும் கலித்தளையும் விரவி நிற்றலும், வெண்டளையே வருதலும், கலித்தளையே வருதலும், வெண்டளையும் வஞ்சித்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித்தளையும் கலித்தளையும் விரவி நிற்றலும் வஞ்சித்தளையும் ஆசிரியத்தளையும் கலித்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித்தளையும் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும் உண்டு. எ-டு : ‘நெடுவரைச் சாரல் குறுங்கோட்டுப் பலவின் விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் கடுவன் உண்டுசிலம் பேறி ஓங்கிய இருங்கழைப் படிதம் பயிற்றும் என்ப மடியாக் கொலைவில் என்னையர் மலையே’ (யா. வி. பக். 199, 200) இவ்வாசிரியத்துள், இயற்சீர் வெண்டளையின் இருவகை யோடு, கலித்தளை, நேரொன்றாசிரியத்தளை, வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை, ஒன்றிய வஞ்சித்தளை, நேரொன் றாசிரியத்தளை, ஒன்றாத வஞ்சித்தளை, நேரொன் றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை என்பன முதல் மூன்று அடிகளிலும் முறையே வருதலின், வேற்றுத்தளைகள் யாவும் மயங்கியவாறு. (ஆயினும், முன்னடியில் வந்த வெண்டளை பற்றி, வெண்டளையால் வந்த ஆசிரியப்பா என்று வழங்கப்படும். (யா. க. 53 உரை) ஆசிரிய இணைக்குறள் துறை - நான்கடியாய் எனைத்துச்சீரானும் ஒரே விகற்பமாய் வரும் ஆசிரியத் துறையுள் ஈரடி குறைந்து வருவன ஆசிரிய இணைக்குறள் துறையாம். எ-டு : ‘பாடகஞ்சேர் காலொருபால் பைம்பொற் கனைகழற்கால் ஒருபால் தோன்றும்; நீடு குழலொருபால் நீண்ட சடையொருபால்; வீடிய மானின் அதள்ஒருபால் மேகலைசேர்ந் தாடும் துகில்ஒருபால்; அவ்வுருவம் ஆண்பெண்என் றறிவார் யாரோ? இது நடுவடிகள் இருசீர் குறைந்து ஏனைய அடிகள் இரண்டும் ஆறுசீரான் வந்த ஆசிரிய இணைக்குறட்டுறை. (யா.க. 76. உரை) ஆசிரியஇனத்தின் விரி - தாழிசை, துறை, விருத்தம் எனத் தொகை மூன்று. ஆசிரிய ஒத்தாழிசை, ஆசிரியத்தாழிசை, ஆசிரிய நேர்த்துறை, ஆசிரிய இணைக்குறள் துறை, ஆசிரிய நிலைவிருத்தம் ஆசிரிய மண்டில விருத்தம் என வகை ஆறு. இவற்றைச் சிறப்புடைய ஏழுதளை, சிறப்பில்லாத ஏழுதளை இவற்றால் உறழ 14 ஒ 6 = 84 ஆம். ஆகவே, ஆசிரியப்பா இனங்களின் விரி எண்பத்து நான்காம். (யா. க. 77 உரை) ஆசிரிய உரிச்சீர் ஆறு - நேர்பு நிரைபு என்ற உரியசைகள் இரண்டும் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்குவதனால் ஆகும் நேர்பு நேர்பு, நிரைபு நிரைபு, நேர்பு நிரைபு, நிரைபு நேர்பு என்ற நான்கு சீர்களும் ஆசிரிய உரிச்சீர்களாம். இவற்றின் வாய்பாடுகள் முறையே வீடுபேறு, தடவுமருது, பாறுகுருகு, வரகுசோறு என்பன. இவையன்றி நேர்பு நிரை, நிரைபு நிரை என்ற இரண்டும் ஆசிரிய உரிச்சீரின் பாற்படும். படவே, ஆசிரிய உரிச்சீர் ஆறு. நேர்பு நிரை : நீடு கொடி, நாணுத்தளை; நிரைபு நிரை : உரறு புலி (குளிறு புலி), விரவுகொடி என்பன. குற்றியலுகர வாய்பாடு ஒன்று, முற்றியலுகரவாய்பாடு ஒன்று, என வாய்பாடு முறையே கொள்க. எ-டு : ‘வீற்றுவீற்றுக் கிடப்ப’ (புறநா. 35) - நேர்பு நேர்பு ‘இறவுக்கலித்து’ (அகநா. 96) - நிரைபு நிரைபு பூண்டுகிடந்து - நேர்பு நிரைபு ‘வசிந்துவாங்கு’ (முருகு. 106) - நிரைபு நேர்பு ஓங்குமலை, நாணுத்தளை - நேர்பு நிரை களிற்றுக்கணம், (புறநா. 35) - நிரைபு நிரை உவவுமதி (புறநா. 3) - நிரைபு நிரை (தொல். செய். 13, 14 நச்.) ஆசிரிய உரிச்சீர் எட்டு - நேர்பும் நிரைபும் மயங்கிய நான்கும் (நேர்பு நேர்பு, நேர்பு நிரைபு, நிரைபு நேர்பு, நிரைபு நிரைபு), நேர்பும் நிரைபும் நிரை இறுதியாகிய இரண்டும் (நேர்பு நிரை, நிரைபு நிரை), தலைநிலை அளபெடைப் பின் நிரை வந்ததும் (நேஎர் நிரை), இறுதிநிலை அளபெடைப் பின் நிரை வந்ததும் (நிரைஇ நிரை) என ஆசிரிய உரிச்சீர் எட்டு வகைப்படும். அவற்றுக்கு எடுத்துக்காட்டு வீடுபேறு, பாறுகுருகு, வரகு சோறு, முருட்டு மருது; நீடுகொடி, குளிறுபுலி; தூஉமணி, கெழுஉமணி என முறையே காண்க. (யா.வி.பக். 447) ஆசிரிய உரிச்சீர் : பெயர்க்காரணம் - பெரும்பான்மையும் ஆசிரியத்துக்கு உரிமையுடைய சீர் ஆகலான் ஆசிரிய உரிச்சீர் எனப்பட்டன. (தொ. செய். 13 நச்.) ஆசிரிய உரிச்சீர் எனினும் அகவல் உரிச்சீர் எனினும் ஒக்கும். (யா. க. 6 உரை) ஆசிரிய ஒத்தாழிசை - எனைத்துச் சீரானும் எவ்வகைத் தளையானும் ஒருவிகற்ப மாய் வந்து, ஒருபொருள்மேல் மூன்றடுக்கினவாய்ச் சமமான மூன்றடிகளான் வரும் பாடல்கள் ஆசிரிய ஒத்தாழிசை எனப்படும். (யா. கா. 75 உரை) எ-டு : ‘கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி!’ ‘பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி!’ ‘கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன் எல்லிநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி!’ (சிலம்பு. 17:1-3) என இவை ஒருபொருண்மேல் மூன்றடுக்கி இயற்சீர்ச் சிறப்புடைய வெண்டளையான் வந்த ஆசிரிய ஒத்தாழிசை. இது நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம். (யா. க.77 உரை) ஆசிரியச் சீர் - அகவலுரிச்சீர்; அது காண்க. ஆசிரியச்சுரிதகம் - அகவற்பாவாலாகிய சுரிதகம். இச்சுரிதக உறுப்பால் பெரும் பான்மையும் கலிப்பா முடியும்; சிறுபான்மை வெண்பாச் சுரிதகத்தால் முடிவனவும் உள. வஞ்சிப்பா ஆசிரியச் சுரிதகத்தானன்றி முடிவுறாது. ‘சுரிதகம்’ காண்க. ஆசிரியத்தளை - இயற்சீர் நான்கனுள் நேர் ஈறு இரண்டும் வருமொழி இயற்சீரின் நேரசையோடு ஒன்றின் சிறப்புடைய நேரொன் றாசிரியத் தளை. நேர்ஈறு வருமொழி மூவசைச் சீரின் முதலில் உள்ள நேரசையோடு ஒன்றின் சிறப்பில்லாத நேரொன் றாசிரியத்தளை. நிரை ஈறு இரண்டும் வருமொழி இயற்சீரின் முதலில் உள்ள நிரையசையோடு ஒன்றின் சிறப்புடைய நிரையொன்றாசிரியத்தளை. நிரைஈறு இரண்டும் வருமொழி மூவசைச் சீரின் முதலில் உள்ள நிரையசையோடு ஒன்றின் சிறப்பில்லா நிரை ஒன்றாசிரியத்தளை. எ-டு : ‘உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை’ (ஐங். தனிப்.) ‘திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி’ (புறநா. 2) ‘திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்’ (மலைபடு. 1) ‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்’ (முதுமொழி. 1) என முறையே காண்க. (யா. க. 19 உரை) ஆசிரியத்தளையால் வந்த வெண்டாழிசை ஈரடிமுக்கால் என்னும் வெண்பாவின் இனமாகிய வெண் டாழிசை ஒருசாரன ஆசிரியத்தளை விரவி ஒருபொருள்மேல் மூன்றடுக்காது ஒன்றேயாய் வருவது. வெண்பாஇனம் வெண்டாழிசை. எ-டு : ‘நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவ செய்யார் அன்பு வேண்டு பவர்’ (யா. கா. 28 மேற்.) இதன்கண், ‘நின்று முனிவ’ ‘வேண்டு பவர்’ என்னும் ஈரிடத் தன்றி, ஏனைய எட்டு இடத்தும் நேரொன்றாசிரியத் தளையே பயின்று வந்தவாறு. அவ்வீரிடத்தும் இயற்சீர் வெண்டளை விரவியது. (யா. க. 62 உரை) ஆசிரியத்தாழிசை - எனைத்துச் சீரானும் எவ்வகைத் தளையானும், ஒரே விகற்பத் தினவாய மூன்று சமமான அடிகளால் வரும் ஆசிரியப்பா வினம். இவை ஒருபொருள்மேல் ஒன்றாயும் இரண்டாயும் மூன்றடுக்கிப் பொருள் வேறாயும் மூன்றின் மிக்கனவாயும் வரும். எ-டு : ‘நீடற்க வினையென்று நெஞ்சின் உள்ளி நிறைமலரஞ் சாந்தமொடு புகையும் நீவி வீடற்கும் தன்மையினான் விரைந்து சென்று விண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றி பாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்ப் பகவன்தன் அடியிணையைப் பயிறும் நாமே.’ இஃது ஒருபொருள்மேல் ஒன்றாய் எண்சீர்க் கழிநெடி லடியால் சிறப்புடைய கலித்தளையான் வந்த ஆசிரியத் தாழிசை. இது நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம். (யா. க. 75 உரை.) (யா. வி. பக். 279) ஆசிரியத்தாழிசை வகைகள் - ஆசிரியத்தாழிசை என்பது ஆசிரியப்பாவினத்துள் ஒன்று. அஃது ஆசிரிய ஒத்தாழிசை எனவும், ஆசிரியத் தாழிசை எனவும் இருவகைத்து என்பர் சிலர். ஆசிரியத்தாழிசை என்னும் ஒன்றே அமையும் என்பர் பலர். (யா. க. 75 உரை) ஆசிரியத்தில் கலியடி விரவி வருதலுண்மை - ‘ஆனாப் பெருமை அணங்குநனி யணங்கும் வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாது முருகவேள் உறையும் சாரல் அருகுநீ வருதல் அஞ்சுவல் யானே’ என்னும் இந்நேரிசை ஆசிரியப்பாவின்கண் இரண்டாமடி கலியடியாக விரவி வந்தவாறு. (யா. க. 29 உரை) ஆசிரியத்தில் சொற்சீரடியும் வருதலுண்மை - ‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே; யானே, தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப் பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே’ (குறுந். 216) இவ்வாசிரியப் பாவுள் ‘அவரே,’ ‘யானே’ எனச் சொற் சீரடிகள் கூனாக வந்தன. (யா. க. 94 உரை) சீர் கூனாகக் கூறியவை சொற்சீரடியுள் அடங்கும். (தொ. செய். 123 நச்.) ஆசிரியத்திற்கு அடியும் தளையும் - ஆசிரியப்பாவில் நாற்சீரடிக்கண் வகுக்கப்பட்ட குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்னும் ஐவகை அடிகளும் விரவப் பெறும். கட்டளை அடிக்கண் தளை வழுவின் அது சீர்வகை அடி ஆகும். ஆசிரியத்திற்கு இயற்சீர் 19; உரிச்சீர் 4; அசைச்சீர் 4. அசைச்சீர் இயற்சீரில் அடங்கும். ஆகவே, ஆசிரியத்துக்குச் சீர்கள் 23. இந்த இருபத்து மூன்றும் தளையில் சில வழுவினும் 4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய அமையும் ஓரடி என்ற வரையறை யைக் கடத்தல் இயலாது. ஆகவே சீர்வகை அடிகள் 5 எழுத்து முதல் 20 எழுத்து முடிய ஓரடிக்கண் கொண்டு வரலாம். (தொ. செய். 52, 53 நச்) ஆசிரியத்திற்கு உரிய அடித்தொகை - இயற்சீர் பத்தும், தன்சீர் ஆறும் என ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் பதினாறாம். அவற்றுள், தன்சீர் ஆறும் (ஆசிரிய உரிச்சீர்) தளை வகுக்கப்படாமையின் கொள்ளப்படா; ஒழிந்த இயற்சீர் பத்தும்கொண்டு தளை வழங்கப்படும். இயற்சீர் பத்துமே கொண்டு அடி வகுக்குமிடத்து, இரண் டெழுத்துச் சீரும் மூன்றெழுத்துச் சீரும் நான்கெழுத்துச் -சீரும் ஐந்தெழுத்துச் சீரும் என நான்கு நிலைமையவாம். அவற்றுள், ஈரெழுத்துச் சீர் போதுபூ, போரேறு, பாதி, தேமா என நான்காம். இவற்றுள், தேமாவும் பாதியும், சிறுமை ஐந்தெழுத்தடியினின்றும் பெருமை பதினேழெழுத்தடி காறும் உரிமையாய்ப் பதின்மூன்று அடியும் ஒரோஒரு சீர் பெற, இரண்டுமாக இருபத்தாறு அடி; போதுபூ போரேறு என்னும் இரண்டும் ஆறெழுத்து முதலாகப் பதினேழெழுத் தின்காறும் உயர்ந்து பன்னீரடியும் ஒரோஒரு சீர் பெற, இரண்டுமாக இருபத்து நான்கு அடியாம். ஆக, ஈரெழுத்து சீராமிடத்தே ஆசிரிய அடித்தொகை ஐம்பது. இனி, மூவெழுத்துச் சீராவன பாதிரி, புளிமா, விறகுதீ, பேணுபூ, போராணு, பூமருது, கடியாறு என ஏழாம். இவற்றுள் பேணுபூ, விறகுதீ, கடியாறு என்னும் மூன்றும் ஏழெழுத்தடி முதலாகப் பதினெட்டெழுத்தடிகாறும் உயர்ந்த பன்னிரண்டடியும் பெற மூன்றுமாக முப்பத்தாறு அடி. எஞ்சிய நான்கு சீரும் ஆறெழுத்தடி முதலாகப் பத்தொன்பதெழுத்தடிகாறும் பதின்மூன்றடியும் பெற, நான்குமாக ஐம்பத்திரண்டடியாம். ஆக மூவெழுத்துச் சீராம்வழி ஆசிரிய அடித்தொகை எண்பத்தெட்டு. இனி, நாலெழுத்துச்சீராவன ‘கணவிரி, பூமருவு, பெருநாணு, விரவுதீ, மழகளிறு’ என ஐந்தாம். இவற்றுள், ‘பூ மருவு’ ஏழெழுத்தடி முதலாகப் பத்தொன்பதெழுத்தடிகாறும் உயர்ந்த பதின்மூன்றடியும் பெற, பதின்மூன்றேயாம்; ஏனைய நான்கும் எட்டெழுத்தடி முதலாகப் பத்தொன்ப தெழுத்தடி காறும் உயர்ந்த பன்னிரண்டடியும் பெற நான்குமாக நாற்பத்தெட்டடியாம். ஆக, நான்கெழுத்துச் சீராம்வழி ஆசிரிய அடித்தொகை அறுபத்தொன்று. இனி ஐந்தெழுத்துச் சீராவது ‘கலனளவு’ என்பது. அதுதான் ஒன்பதெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த பன்னிரண்டடியும் பெற, பன்னிரண்டேயாம். இவ்வாற்றால் பத்து இயற்சீருள்ளும் ஆசிரிய அடித்தொகை ஈரெழுத்துச்சீர் முதலாக ஐந்தெழுத்துச்சீர் ஈறாக ஆயின 211 ஆம். (உரையுள் முற்றுகர வாய்பாட்டிற்குக் குற்றுகர வாய்பாடு பிழைபட வந்துள்ளவற்றை நீக்கி முறைப்பட எழுதப்பட்டுள் ளது.) (யா. வி. பக். 451 - 461) ஆசிரியத்தின் அடி அளவு - ஆசிரியப்பாவின் பெருக்கத்திற்கு எல்லை ஆயிரம் அடி; சுருக்கத்திற்கு எல்லை மூன்றடி. கூத்தராற்றுப்படை தலையள விற்கு எல்லை (583 அடி); பட்டினப்பாலை இடையளவிற்கு எல்லை (301 அடி) (தொ. செய். 157 நச்.) ஆசிரியத்தின் ஐ ஈறு - ஏ, ஓ, ஈ, ஆய் (என்,) ஐ. என்பன. (சாமி. 157) ஆசிரியத்துள் இயற்சீர் வெள்ளடி வருதல் - இயற்சீர் வெள்ளடியையுடைய அடி முழுஅடியாக ஆசிரியப் பாவின்கண் இடம் பெறும். எ-டு : ‘எறும்பி அளையிற் குறும்பல் சுனைய உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்’ (குறுந். 12) என இயற்சீரானாகிய வெள்ளடி இவ்வாசிரியத்துள் முதலடி யாக முழுமையின் வந்தது. ‘கொலைநவில் வேட்டுவன் கோள்வேட் டெழுந்த புகர்முக யானை நுதல்மீ தழுத்திய செங்கோற் கருங்கணை போலும் எனாஅது நெஞ்சம் கவர்ந்தோள் நிரையிதழ்க் கண்ணே’ என இவ்வாசிரியப்பா முழுதும் இயற்சீர் வெள்ளடி வந்ததெனக் கொண்டு இதன்கண் அகவலோசை பிறக்கும் எனக் கொள்ளின், இயற்சீர் வெண்டளையான் வரும் கட்டளை வெண்பா இலதாகிவிடும். (தொ.செய். 62 நச்.) ஆசிரியத்துள் இருசீரடி வருதல் - ஆசிரியத்துள் இருசீரடி பண்டைக்காலத்தே பெரும்பாலும் வருதலின்று. ‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே பெரியகட்பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே’ (புறநா. 235) என்ற ஆசிரியப்பாப் பகுதியில் இடைவந்த ‘பெரியகட் பெறினே’ என்பது இருசீரடியன்று; சொற்சீரடியாம். ‘உப்பிலாஅ அவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்காது இழிபிறப்பினோன் ஈயப்பெற்று நிலங்கல னாக விலங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே’ (புறநா. 363) என்ற பகுதியில் நிகழும் இரு சீரடிகள் யாவும் ஆசிரியப் பாவின் இடையே வந்த வஞ்சி அடிகள். ஆகவே, இருசீர் ஆசிரியஅடி ஆசிரியப்பாவுள் பண்டு வருதல் இன்று. (தொ. செய். 69 நச்.) இவற்றைக் குறளடியாக்கிப் பிற்காலத்தார் ‘இணைக்குறள் ஆசிரியப்பா’ என்று ஆசிரியப்பாவகை ஒன்றற்குப் பெயரிட்டு, அதன்கண் இருசீர் ஆசிரியஅடியும் வரும் என்ப. ஆசிரியத்துள் முச்சீரடி வருதல் - ஆசிரியப்பாவுள் ஈற்றயலடி யொன்றும் முச்சீரடியால் வருதல் பெரும்பான்மை. (பிற்காலத்தார் ஈற்றயலடி முச்சீராய் வரும் ஆசிரியத்தை நேரிசைஆசிரியம் எனப் பெயரிட்டு அதனுடன் இணைக்குறள், நிலைமண்டிலம், அடிமறிமண்டி லம் என்ற மூவகையினையும் ஆசிரியப்பாவுட் கொண்டனர்.) ‘கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ (குறுந். 3) என, ஆசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீர்த்தாய் வந்தது. ‘நீரின் தண்மையும் தீயின் வெம்மையும் சாரச் சார்ந்து தீரத் தீரும் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே’ என ஆசிரியப்பாவின் இடையே முச்சீரடிகள் இரண்டு இணைந்து வந்தன. ‘சிறியகட் பெறினே’ என்ற புறப்பாடலுள் (235) ‘நரந்தம் நாறும் தன்கையால்’ எனவும், ‘அருநிறத் தியங்கிய வேலே’ எனவும் முச்சீரடிகள் தனித்தும் வந்தன. இப்பாடற்கண் இரண்டாமடியாகிய ‘பெரியகட் பெறினே’ என்பது இருசீரடியன்று; சொற்சீரடியாம். (தொல். செய். 68, 60 நச், பேரா.) ஆசிரியத்துறை - ஆசிரியப்பாவின் இனம். ஈற்றயலடி குறைந்து நான்கடியாய் வருவனவும், ஈற்றயலடி குறைந்து இடையந்தரத்து அடி மடக்காய் நான்கடியாய் வருவனவும், இடையடி குறைந்து நான்கடியாய் வருவனவும் இடையிடை குறைந்து நான்கடி யாய் வருவனவும் ஆகிப் பெரும்பான்மையும் எண்சீர்காறும் எனைத்துச்சீரானும் ஒரே விகற்பமாய் அமைவன ஆசிரியத் துறையாம். முதலயலடி குறைந்தும், நடு ஈரடி குறைந்தும், மிக்கும், வருவனவும் உள. இவற்றுள் ஓரடி குறைந்து வருவன ஆசிரிய நேர்த்துறை எனவும், ஈரடி குறைந்து வருவன ஆசிரிய இணைக்குறள் துறை எனவும் கூறப்படும். மிக்க சீரான் வரும் ஆசிரியத் துறைகளும் உள. (யா. க. 76 உரை) ஆசிரியத்துறை நான்கு - சீர்வரையறையின்றி நான்கடியாய் வந்து ஈற்றயலடி குறைந்து வரலும், ஈற்றயல் குறைந்து இடைமடக்கலும், முதலும் ஈற்றயலும் இடையிடை குறைந்து வருவனவும், இடையிடை குறைந்து இடைமடக்காய் வருவனவும் என நால்வகைத்தாம் ஆசிரியத்துறை. எ-டு : ‘பனிக்காலம் எக்காலம் பட்டாற்றாய் என்றன்றோ இனிக்காதல் களித்துவப்ப இளவேனில் வாராதோ என்றனை நெஞ்சே இனிக்காதல் களித்துவப்ப இளவேனில் வந்தகன்று துனிக்கால முதிர்வேனில் சுடச்சுடவந் துற்றதினி என்செய்வாய் நெஞ்சே’ இஃது இடையடி இரண்டும் மடக்காய், முதலும் ஈற்றயலு மாகிய அடிகள் குறைந்துவந்த ஆசிரியத்துறை. (தொ. வி. 240) ஆசிரியத்துறையுள் இடைமடக்கின் மூவகை - ஆசிரியத் துறையின் இடைமடக்கு, அடிமடக்கு சீர்மடக்கு அசை மடக்கு - என மூவகைப்படும். எ-டு : ‘இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா அரங்கம் அணிபொழிலா ஆடும் போலும் இளவேனில் அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின் மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்செமென் செய்த திளவேனில்’ என்ற பாடல் அடி மடக்கு (இரண்டாமடி மூன்றாமடியாய் மடங்கிற்று.) ‘முத்தரும்பிப் பைம்பொன் மலர்ந்து முருகுயிர்த்துத் தொத்தலரும் கானல் துறையேம் துறைவழி வந்தெனது தொன்னலனும் நாணும் நிறைவளையும் வெளவி நினையானச் சேர்ப்பன்’ இப்பாடற்கண், ‘துறை’ என்ற அசை இடைமடக்கியது. இதன் மூன்றாமடி ‘துறையேம் வழிவந்தென் தொன்னலனும் நாணும்’ என வருமாயின், சீர் இடை மடக்காகும். (யா. க. 76 உரை) ஆசிரிய நிரைத்தளை - அஃதாவது நிரை ஒன்று ஆசிரியத்தளை; விளச்சீர் நின்றவழி, வரும் சீரின் முதலசை நிரையாக வந்து ஒன்றுவது. எ-டு : ‘அணிநிழ லசோகமர்ந் தருணெறி நடாத்திய மணிதிக ழவிரொளி வரதனைப் பணிபவர் பவநனி பரிசறுப் பவரே’ இதன்கண் முழுதும் ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நிரைத்தளை வந்தவாறு. ‘திருமழை தலைஇய இருள்நிற விசும்பின் விண்ணதிர் இமிழிசை முழங்கப் பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே’ இதன்கண், ஒவ்வோரடியிலும் அமைந்த சீர்கள் பெரும் பான்மையும் தம்முள் ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நிரைத்தளை வந்தவாறு. (விசும்பின் விண்ணதிர்; முழங்கப் பண்ணமைந்; தவர்தேர் சென்ற; சென்ற வாறே - இவற்றிடை ஆசிரிய நேர்த்தளையே வந்தன.) (யா. க. 19 உரை) ஆசிரிய நிலைவிருத்தம் - கழிநெடிலடி நான்காய்ப் பெரும்பான்மையும் ஒரே விகற்ப மாய் அளவொத்து வருவது ஆசிரிய நிலைவிருத்தமாம். ‘துனைவருநீர் துடைப்பவளாய்த் துவள்கின்றேன் துணைவிழிசேர் துயிலை நீக்கி இனவளைபோ லின்னலஞ்சோர்ந் திடருழப்பல் இகந்தவர்நாட் டில்லை போலும் தனியவர்கள் தளர்வெய்தத் தடங்கமலந் தளையவிழ்க்குந் தருண வேனிற் பனிமலரின் பசுந்தாது பைம்பொழிலிற் பரப்பி வரும் பருவத் தென்றல்.’ இஃது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இதனை நிலைமண்டில ஆசிரியப்பாவின் இனம் என்ப. (வீ. சோ. 122 உரை) அடிமறியாய் வருவனவற்றை ஆசிரிய மண்டிலவிருத்தம் எனவும், அடிமறியாகாது வருவனவற்றை ஆசிரிய நிலை விருத்தம் எனவும் வழங்குப ஒருசார் ஆசிரியர்.(யா.வி. 77 உரை) எ-டு : ‘விடஞ்சூ ழரவின் இடைநுடங்க விறல்வாள் வீசி விரையார்வேங் கடஞ்சூழ் நாடன் காளிங்கன் கதிர்வேல் பாடு மாதங்கி வடஞ்சேர் கொங்கை மலைதாந்தாம் வடிக்கண் நீல மலர்தாந்தாம் தடந்தோ ளிரண்டும் வேய்தாந்தாம் என்னும் தன்கைத் தண்ணுமையே’ இஃது அறுசீர்ச் சிறப்புடைக் கழிநெடிலடியான் வந்த ஆசிரிய நிலை விருத்தம். (யா. வி. பக். 286) ஆசிரிய நேர்த்தளை - அஃதாவது நேர் ஒன்று ஆசிரியத்தளை; நிற்கும் மாச்சீரின் முன்னர் வருஞ்சீரின் முதலசை நேராக ஒன்றுவது. எ-டு : ‘போது சாந்தம் பொற்ப ஏந்தி ஆதி நாதற் சார்வோர் சோதி வானம் துன்னு வாரே’ இதன்கண் முற்றும் ஒன்றிய சிறப்புடைய ஆசிரிய நேர்த்தளை பயின்றவாறு. ‘உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை’ (ஐங். தனிப். 2) என்ற அடியும் ஒன்றிய சிறப்புடை ஆசிரிய நேர்த்தளை. (யா. க. 19 உரை) ஆசிரிய நேர்த்துறை - நான்கடியாய் எனைத்துச்சீரானும் ஒரே விகற்பமாய் வரும் ஆசிரியத்துறையுள் ஓரடி மாத்திரம் குறைந்து வருவன ஆசிரிய நேர்த்துறையாம். எ-டு : ‘கரைபொரு கான்யாற்றங் கல்லதர் எம்முள்ளி வருதி ராயின் அரையிருள் யாமத் தடுபுலியே றும்மஞ்சி அகன்று போக நரையுரு மேறுநுங்கை வேலஞ்சும் நும்மை வரையர மங்கையர் வெளவுதல் அஞ்சுதும் வார லையோ’ (யா. கா. 30 மேற்.) இஃது ஈற்றயலடி குறைந்து இயற்சீர்ச் சிறப்புடை வெண்டளை யாலும் சிறப்பில் வெண்டளையாலும் வந்த ஆசிரிய நேர்த்துறை. (யா. க. 76 உரை) ஆசிரிய நேர்த்துறை நேரிசை யாசிரியப்பாவின் இனம். (யா. க. 77 உரை) ஆசிரிப்பா - சீரினானும் பொருளினானும் ஓசையினானும் ஆகிய நுண்மையைத் தன்கண் நிறுவிற்றாகலானும், புறநிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போல நின்று அறிவிக்கும் ஆகலானும் ஆசிரியம் என்பது காரணக் குறி. ஆசு எனினும், சிறிது எனினும், நுண்ணிது என்னும் ஒக்கும். இதனைப் பாடுதல் எளிமை நோக்கி ‘மென்பா’ என்பர். இஃது அரச வருணத்தது என்பர். இஃது அகவிக் கூறும் ஓசையுடையது. நால்வகைப்பாக்களில் ஆசிரியம் இரண்டாவது. (யா. க. 55 உரை) ஆசிரியப்பா இலக்கணம் - அகவலோசையோடு அளவடித்தாகியும், இயற்சீர் பயின்றும், அயற்சீர் விரவியும், தன்தளை தழுவியும், பிறதளை மயங்கி யும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் (கருவிளங்கனி, கூவிளங் கனி) வாராது, அயற்பா அடி மயங்கியும் மயங்காதும், ஐஞ்சீரடியால் அருகிவரும் என்றும் நாலெழுத்து முதலாக இருபது எழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ்நிலமும் பெற்ற நாற்சீரடியால் நடைபெறும் என்றும் வேண்டப்பட்டது ஆசிரியப்பா. இப்பா ஏ, ஓ, ஈ, ஆய் என்று முடியும். ஏகார அசையால் முடிவது சிறப்பு (யா. க. 69) (யா. க. 70 உரை) ஆசிரியப்பாட்டின் அளவு - ‘ஆசிரியத்தின் அடி அளவு’ காண்க. ஆசிரியப்பாவில் பிற பா அடிகள் - 1. ஈரசைச்சீராலாகிய வெண்பாஅடியும் வஞ்சியடியும் ஆசிரியஅடிகளொடு மயங்கி ஆசிரியப்பாவில் வரும். எ-டு : ‘எறும்பி அளையிற் குறும்பல் சுனைய உலைக்கல் அன்ன பாறை யேறி.... நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே’ குறுந். 12 என, முதலடியில் இயற்சீர் வெள்ளடி ஆசிரியப்பாவில் வந்தது. (தொல். செய். 62 நச்.) 2. வெண்பா உரிச்சீரொடு விரவிவந்த இயற்சீர் வெள்ளடியும் ஆசிரியத்துள் வரப்பெறும். எ-டு : ‘அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப் பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி.......... தெண்கடற் சேர்ப்பன் உண்டவென் நலக்கே’ (யா.கா.39 மேற்.) என முதலடியில் வெண்சீர் விரவிய இயற்சீர் வெள்ளடி ஆசிரியப்பாவில் வந்தது. (யா.க. 39 உரை) 3. ‘இருங்கடல் தானையொடு பெருநிலங் கவைஇ.......... உப்பிலாஅ அவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோ னீயப்பெற்று நிலங்கல னாக விலங்குபலி மிசையும்....... முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே’ (புறநா. 363) என ஆசிரியப்பாவின் இடையே வஞ்சியடிகள் விரவிவந்தன. (அகத்திணைப் பொருளில் வரும் ஆசிரியப்பாவினகத்து வஞ்சியடி விரவி வரப்பெறாது.) (தொல். செய். 69 நச்.) 4. ஆசிரியத்துள் கலியடி விரவி வருதலும் உண்டு. ‘ஆனாப் பெருமை அணங்குநனி யணங்கும் வானோங்கு சிமையத்து மனமகிழ்ந்து பிரியாது முருகவேள் உறையும் சாரல் அருகுநீ வருதல் அஞ்சுவல் யானே’ என, இரண்டாமடி ஆசிரியத்துள் கலியடி விரவி வந்தது. (யா. க. 29 உரை) 5. ஆசிரியத்துள் அருகிச் சொற்சீரடியும் வரும். ‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே; யானே, தோடா ரெல்வளை நெகிழ ஏங்கிப் பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே’ (குறுந். 216) என ஆசிரியப்பாவுள் ‘அவரே’, ‘யானே’ என்னும் சொற் சீரடிகள் கூனாக வந்தன. (தொ. சொ. 49 நச்.) சீர் கூனாகக் கூறியவை சொற்சீரடியுள் அடங்கும். (தொ. செய். 123 நச்.) ஆசிரியப்பாவின் அடி இயல் - மண்டிலம், குட்டம் என்ற இரண்டும் ஆசிரியப்பாவிற்குரிய அகவலோசை கெடாமல் அதன்கண் வரும். (ஈற்றயலடியும் நாற்சீராய் வருவது மண்டிலமாம். குறளடி வஞ்சியும் சிந்தடி வஞ்சியும் இடையே விரவி வருதல் குட்டமாம்.) (தொ. செய். 117 நச்.) ஆசிரியப்பாவின் இனங்கள் - ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரியவிருத்தம் என்பன ஆசிரியப்பா இனங்கள். (யா. க. 75- 77) ஆசிரியப்பாவின் ஈறுகள் - ஆசிரியப்பாவின் ஈறுகளாக ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ, (ஆ) முதலாகப் பலவாம். வருமாறு : ‘மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே’ - ஏ குறுந். 138 ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ - ஓ அகநா. 46 ‘செழுந்தே ரோட்டிய வென்றியொடு சென்றீ’ - ஈ ‘உண்கண் பசப்ப தெவன்கொல் அன்னாய்’ - ஆய் (ஐங். 21) ‘புலர்ந்தது மாதோ புரவலற் கிரவென்’ - என் (பெருங்- 1:54:145 ‘வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை’ - ஐ ‘என்திறம் இகழல் கேட்டி மன்னா’ - ஆ (யா.க. 69 உரை) ஆசிரியப்பாவின் ஈறுகள் ஐந்து என்றே கூறும் சாமி நாதம் (157). ஆசிரியப்பாவின் மறுபெயர் - அகவல் என்பது ஆசிரியப்பா ஆம். (யா. க. 69 உரை) ஆசிரியப்பாவின் வகைகள் - நேரிசை, இணைக்குறள், நிலைமண்டிலம், அடிமறிமண்டிலம் என ஆசிரியப்பா நால்வகைத்து. வேற்றடி விரவிய ஆசிரியப்பா விரவியல் ஆசிரியம் எனவும், வேற்றடி விரவாத ஆசிரியப்பா இன்னியல் ஆசிரியம் எனவும் கூறப்பெறும். (யா. க. 69, 70 உரை) ஆசிரியப்பாவுக்கு முந்நூற்றிருபத்து நான்கு அடிகள் உரியவாதல் - ஆசிரியப்பாவிற்கு இயற்சீர் 19, உரிச்சீர் 4, அசைச்சீர் 4. ஆகச்சீர்கள் 27. அடிதோறும் நாற்சீர் வரும். நான்கு சீரிலும் உறழ்கின்ற சீரினை அடிமுதற்கண் வைத்து அவ்வச்சீரின் அடியாக்கிப் பெயரும் கொடுத்து, நான்கெழுத்தடி முதல் பதினைந்தெழுத்தடி முடிய 12 அடியாக ஒவ்வொன்றனையும் ஆக்கின், 27 ஒ 12 = 324 ஆசிரிய அடிகள் உண்டாகும். ‘வண்டு வண்டு வண்டு வண்டு’ - 4 எழுத்தடி ‘வண்டு காருருமு நளிமுழவு நளிமுழவு’ - 15 எழுத்தடி 5 எழுத்து முதலியவற்றான் ஆகிய 10 அடிகளும் (4 எழுத் தடிக்கும் 15 எழுத்தடிக்கும்) இடையே அமைக்கப்படும். இவ்வாறே எஞ்சிய 26 சீர்களையும் முதற்சீராக வைத்து ஒவ்வொன்றற்கும் 12 அடிகள் வருமாறு காண்க. (தொல். செய். 50 நச்.) ஆசிரியப்பா, வெண்பா இவற்றில் முடுகியல் வருதல் - தனிப்பட்ட ஆசிரியப்பா வெண்பாக்களில் நாற்சீர் ஐஞ்சீர் அறுசீர் அடிகள் முடுகி வருதல் இல்லை. கலிக்கு உறுப்பாய் வரும் ஆசிரியம் வெண்பா இவற்றில் முடுகியல் அடி வருதல் உண்டு. ‘நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை அறியும் சான்றவ ரினமாக’ (கலி. 39) என, கலிக்கு உறுப்பாகிய ஆசிரியச் சுரிதகத்தில் அறுசீரடியும் ஐஞ்சீரடியும் முடுகித் தொடர்ந்து வந்தன. ‘தகைவகை மிசைமிசைப் பாயியர் ஆர்த்துடன் எதிரெதிர் சென்றார் பலர்’ (கலி. 102) எனவும், ‘இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர்நீங்க வரிபரி பிறுபிறுபு குடர்சோரக் குத்தித்தன் கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும் வாடில் வெகுளி எழிலேறு கண்டை இஃதொன்று வெருவரு தூம மெடுப்ப வெகுண்டு திரிதரும் கொல்களிறும் போன்ம்’ (கலி. 104) எனவும் இவை நாற்சீரடி முடுகியலொடு வந்த வெண்பா. இவ்வெண்பாவுள், ‘வாடில் வெகுளி எழிலேறு கண்டை இஃதொன்று’ என்பது ஐஞ்சீரடி. ‘மேனிலை மிடைகழி பிழிபுமேற் சென்று வேனுதி புரைவிறல் திறனுதி மருப்பின் மாறஞ்சான் பானிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தானை நோனாது குத்தும் இளங்காரித் தோற்றங்காண் பான்மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும் நீனிற வண்ணனும் போன்ம்’ (கலி. 104) என ஐஞ்சீரடி முடுகியலோடு ஒன்றாய் வந்த வெண்பா. ‘மலர்மலி புகலெழ அலர்மலி மணிபுரை நிமிர்தோள் பிணைஇ எருத்தோ டிமிலிடைத் தோன்றினன் தோன்றி வருத்தினான் மன்றஇவ் வேறு’ (கலி 102) இஃது அறுசீரடி முடுகியலோடு ஒன்றாய்வந்த வெண்பா. (தொ. செய். 67 நச்.) ஆசிரியம் அரசர்குலம் ஆதல் - 4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய 17 நிலங்களையுடைய குறள், சிந்து, அளவு, நெடில், கழிநெடில் என்ற எல்லா அடிகளும் ஆசிரியப்பாவிற்கு உரியவாதல் உண்டு. எல்லாப் பொருள்மேலும் ஆசிரியம் வரும். எல்லா நிலமும் அடிப் படுத்தலும் எல்லாப் பொருள்மேலும் நண்ணுதலும் அரசர்க் கும் உரியன. ஆதலின் ஆசிரியம் அரசர்பா ஆகும். (யா. க. 74 உரை மேற்) ஆசிரியம் ஆறுவகை - அகப்பா, புறப்பா, நூற்பா, உறுப்பினகவல், சித்திர அகவல், ஏந்திசை என ஆசிரியம் அறுவகைப்படும். (யா.க. 77 உரை) நேரிசை, நிலைமண்டிலம், இணைக்குறள், அடிமறி மண்டி லம், நூற்பா, மருட்பா என ஆசிரியம் ஆறுவகைப்படும். (சாமி. 158) ஆசிரியம் கலி இவற்றுள் புகும் பத்து வஞ்சியுரிச்சீர் - வஞ்சியுரிச்சீர் அறுபதனுள் மா செல் சுரம், புலி செல் சுரம், மாசெல் காடு, புலி செல் காடு, மா செல் கடறு, புலி செல் கடறு, பாம்பு செல் வாய், பாம்பு படு வாய், களிறு செல் வாய், களிறு படு வாய் என்ற பத்து வஞ்சியுரிச்சீர்களே ஆசிரியத் துள்ளும் கலியுள்ளும் புகப்பெறும். (யா.வி.பக். 452) ஆசிரியம் முதலிய பாக்களிடை அடி வேற்றுமை ஆதல் - நாற்சீரடியுடைய ஆசிரியப்பாவின் ஈற்றயலடியே யன்றி இடையேயும் குறளடிவஞ்சியும் சிந்தடிவஞ்சியும் பொருந்தி வரும். ஆசிரியப்பா ஈற்றலடி முச்சீரடியாதலே யன்றி, நாற் சீரும் நிரம்பிய அடியாய் வருதலுமுண்டு. இவை பெரும் பான்மை. வெண்பாவின் ஈற்றடியேயன்றி ஏனைய அடிகளுள் ஒன்று சிறுபான்மை முச்சீரடியாக வருதல் அருகிக் காணப்படும். அவ்வாறே ஈற்றடியும் அருகி நாற்சீரடியாய் வருதலுமுண்டு. கலிப்பா துள்ளிவரும் ஓசைத்தாதலே யன்றித் தாழம்பட்ட ஓசையையுடைய தாழிசைகள் ஒத்து மூன்றாய் வருதலும், தரவு ஈற்றடி ஒருசீர் குறைந்து வருதலும் உண்டு. ஈற்றயலடியும் நாற்சீர் பெற்ற ஆசிரியம் மண்டில ஆசிரியம் எனவும், ஈற்றடி நாற்சீர் பெற்ற வெண்பா மண்டில வெண்பா எனவும் கூறப்படும். ஈற்றயலடிகளில் ஒரு சீர் குறைந்த வெண்பா சவலை வெண்பா எனப்படும். ‘வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீருமென் றாஅங்கு’ (புறநா. 2) என ஆசிரியப்பா இடையே இருசீரடி முச்சீரடி வந்தன. ‘சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே’ (குறுந். 18) என, ஆசிரியப்பாவின் ஈற்றயலடி நாற்சீர்த்தாயிற்று; மண்டில ஆசிரியம். ‘அட்டாலும் பால் சுவையில் குன்று தளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ (மூதுரை. 4) என, வெண்பாவின் இரண்டாமடி. முச்சீர்த்தாயிற்று; சவலை வெண்பா. ‘அறையருவி ஆடாள் தினைப்புனமும் காவாள் பொறையுயர் தன்சிலம்பில் பூந்தழையும் கொய்யாள் உறைகவுள் வேழமொன் றுண்டென்றாள் அன்னை மறையறநீர் வாழிய மையிருங் குன்று’ என வெண்பாவின் ஈற்றடி நாற்சீர்த்தாயிற்று; மண்டில வெண்பா. ‘மெல்லிணர்க் கொன்றையும் மென்மலர்க் காயாவும் ............................................................................................. சொல்லர் சுடரும் கனங்குழைக் காதினர் நல்லவர் கொண்டார் மிடை.’ (கலி. 103) என கலிப்பாவின் தரவு ஈற்றடி முச்சீர்த்தாயிற்று. ‘கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின் புல்லென்ற களம்போலப் புலம்புகொண் டமைவாளோ’ (கலி.5) என, கலிப்பாவின் தாழிசை கலிக்குரிய துள்ளலோசையை விடுத்துத் தாழம்பட்ட ஓசையுடைத்தாய் வந்தது. இத் தாழிசை மூன்றடுக்கி வரும். (தொ. செய். 115-117 நச்.) ஆசிரியம் முந்நூற்று முப்பத்தாறு ஆதல் - நால்வகை ஆசிரியப்பாவினையும் ஏந்திசை தூங்கிசை, ஒழுகிசை என்ற மூவகை ஓசையோடும் உறழப் பன்னிரண் டாம். அவற்றை விரவியல், இன்னியல் என்ற இரண்டோடும் உறழ இருபத்துநான்காம். ஆசிரியப்பாவில் சிறப்புடைய ஏழு தளையும் சிறப்பில்லாத ஏழுதளையும் ஆகப் பதினான்கு தளையும் வருமாகவே, அவற்றால் அவ்விருபத்து நான்கு வகைகளையும் உறழ 24 ஒ 14 = 336 வகை ஆகும்.(யா.க. 70 உரை) ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பா என்ற முறை - பதினேழ் நிலத்தும் (நாலெழுத்து முதல் இருபதெழுத்து முடிய) வருதலானும், இனிய ஓசைத்தாகலானும், அடிப்பரப் பினானும் ஆசிரியப்பா முற்கூறினார். அதன்பின், ஆசிரிய நடைத்தாகி, ஆசிரியத்தின் இறுதலின், வஞ்சிப்பாக் கூறினார். இந்நிகர்த்தன்றி வேறுபட்ட ஓசைத்தாகலான் வெண்பா அதன்பின் கூறினார். அதன்பின், வெண்சீர் பயின்று வருத லானும் வெண்பா உறுப்பாகி வருதலானும் கலிப்பாக் கூறினார். (தொ. செய். 101 இள.) ஆசிரியம், வெண்பா இவற்றில் வரும் இயற்சீர்கள் - உரியசைகளாகிய நேர்பு நிரைபு என்ற இரண்டன் பின்னும் நேரசை நிற்பின் இயற்சீரின்பாற்படும். படவே நேர்பு நேர், நிரைபு நேர் என்பன இயற்சீரின் பாற்படுவனவாம். இவற்றின் வாய்பாடுகள் போதுபூ விறகுதீ என்பன. நேர் நிரை என்ற இயலசை இரண்டன் பின்னும் நேர்பு, நிரைபு என்ற உரியசை வரின் அவற்றானும் நேர் நேர்பு, நேர் நிரைபு, நிரை நேர்பு நிரை நிரைபு என்ற நான்கு சீர்கள் தோன்றும். இவற்றின் வாய்பாடுகள் முறையே போரேறு, பூமருது, கடியாறு, மழகளிறு என்பன. இவ்வாற்றான், உரியசையும் இயலசையும், இயலசையும் உரியசையும் என இவை மயங்கிய இயற்சீர் ஆறாம். நேர், நிரை என்ற இயலசை தம்மொடு தாமும், தம்மொடு பிறவும் மயங்குகையில் நேர்நேர், நிரை நிரை, நேர் நிரை, நிரை நேர் என மயங்கி, முறையே தேமா, கருவிளம், கூவிளம், புளிமா என்ற வாய்பாடுகளான் வழங்கப்பெறும். இவற்றுள் கருவிளமும் கூவிளமும் முறையே கணவிரி பாதிரி எனவும் வழங்கப்பெறும். (தொ. செய். 13, 15, 16 பேரா. நச்.) இவ்வாற்றான் இயலசையால் வரும் இயற்சீர் நான்காம். இப்பத்து இயற்சீர்களும், ஆசிரியம் வெண்பா இவற்றில் வருவன. ஆசிரிய மண்டில விருத்தத்திற்கும் வெளிவிருத்தத்திற்குமிடையே வேறுபாடு - ஆசிரிய மண்டில விருத்தம் (1) காண்க. ஆசிரிய மண்டில விருத்தம் (1) - கடிநெடிலடி நான்கு ஒத்துவரும் ஆசிரிய விருத்தத்துள், இறுதிச்சீர் வெளிவிருத்தமே போலத் தனிச்சீர் பெற்று வருவது. வெளிவிருத்தம் நெடிலடி நான்காய் இறுதிச்சீர் தனிச்சீராய் நிகழும்; இது கழிநெடிலடி நான்காய் இறுதிச்சீர் தனிச்சீராய் நிகழும். இவ்வளவே தம்முள் வேற்றுமை. எ-டு : ‘புரவுதரு குடியாகிப் புயல்வண்ணன் விரும்பியதூஉம் பொழில்சூழ் காஞ்சி கரியசுடர் வீதிதொறும் உலாப்போந்து கவர்வதூஉம் கலைசூழ் காஞ்சி நிரைவளையிவ் வுலகுய்ய நின்றுதவம் செய்வதூஉம் நிழல்சூழ் காஞ்சி சுரமகளிர் பாடுவதும் பயில்வதூஉம் சொன்மாலை தொடுத்த காஞ்சி’ இவ்வறுசீர் விருத்தம் அடிதோறும் இறுதிச்சீர் ‘காஞ்சி’ எனத் தனிச்சீராய் வந்தமையின், ஆசிரிய மண்டில விருத்தம் ஆம். (வீ. சோ. 122 உரை) இனி, அடிமறியாய் வருவனவற்றை ஆசிரிய மண்டில விருத்தம் என வழங்குப ஒருசார் ஆசிரியர். (யாதோர் அடியை எடுத்து முதல்நடு இறுதியாக உச்சரிப்பினும், ஓசையும் பொருளும் கெடாமல் வருவது.) எ-டு: ‘நிலங்கா ரணமாக நீர்க்கங்கை ஏற்றான்; நீண்டதா ளாலாங்கோர் நீர்க்கங்கை ஏற்றான்; தலங்கா ரணமாகச் சங்குவாய் வைத்தான்; தாயலாள் வீயநஞ் சங்குவாய் வைத்தான்; துலங்காச்சீர்த் தானவரைத் துன்னத்தா னட்டான்; துன்னுவார்க் கின்னமிர்தம் தின்னத்தா னட்டான்; இலங்கா புரத்தார்தம் கோமானை எய்தான்; ஏத்தாதார் நெஞ்சத்துள் எஞ்ஞான்றும் எய்தான்.’ இஃது எண்சீர்க் கழிநெடிலடியான் அடிமறியாய்க் கூறப் படுதலின், அடிமறிமண்டில ஆசிரிய விருத்தம் ஆம். (யா. க. 77 உரை) ஆசிரிய மண்டில விருத்தம் (2) - ஈற்றிலுள்ள சீர் மண்டலித்து ஏனைய அடிகளிலும் பொருந்தி வரும் ஆசிரியவிருத்தம். எ-டு : ‘செங்கயலும் கருவிளையும் செருவேலும் பொருகணையும் செயிர்க்கும் நாட்டம்; பங்கயமும் இலவலரும் பனிமுருக்கும் பவழமுமே பழிக்கும் செவ்வாய்; பொங்கரவின் இரும்படமும் புனைதேரும் பொலிவழிக்கும் புடைவீங் கல்குல்; கொங்கிவரும் கருங்கூந்தல் கொடியிடையாள் வனமுலையும் கூற்றம் கூற்றம். இப்பாடலுள், ‘கூற்றம்’ என்ற சொல் மண்டலித்து நாட்டம் கூற்றம், செவ்வாய் கூற்றம், அல்குல் கூற்றம் என வருதலின், இஃது ஆசிரிய மண்டில விருத்தம். இஃது அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இனம். (யா. க. 77 உரை) ஆசிரிய விருத்தத்துள் பிறதளை - ‘வம்பலைத்த வனமுலையாள் முகமாய் வந்து மறுநீக்கி மறைந்திருந்தேற் கறிந்து தானும்’ இவ் எண்சீர் ஆசிரியவிருத்த அடியுள், கலித்தளை 2, நேரொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, கலித்தளை 2, நேரொன்றாசிரியத்தளை என முறையே ஆசிரியத்தளை யொடு பிறதளைகள் மயங்கியவாறு. (யா. க. 22 உரை) ஆசிரிய விருத்தம் - ஆசிரியப்பா இனங்களுள் ஒன்று ஆசிரியவிருத்தம். கழி நெடிலடி நான்கு ஒத்துவருவது இது. இஃது ஆசிரிய நிலை விருத்தம் எனவும்படும். ஆசிரிய மண்டில விருத்தம் என ஒருசார் ஆசிரியவிருத்தம் பெயர் பெறும். அது தனித் தலைப்பிற் காண்க. ஆசிரியவிருத்தம் எனினும் அகவல் விருத் தம் எனினும் ஒக்கும். (வீ. சோ. 122 உரை) ஆசு - ஆபரணங்கள் இடையே இணைப்புக்காகப் பொற்கொல்லர் வைத்துத் தீப்பட ஊதும் பற்றாசு ஆகிய உலோகத்துகள். ஆசு இடையிடுதல் - ஆசு - பற்றாசு; பொற்கொல்லர் அணிகளிடை இணைப்புக்கு வைத்தூதும் உலோகத்துகள். இஃது ஒற்றுமைப்படாத உலோகங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு இடையே இடப் பெறுவது. அதுபோல, முதற்குறட்பாவின் இறுதிச்சீர் இரண் டாமடியின் தனிச்சீராம் நான்காம் சீரோடு இணையாத நிலையில், அதனை இணைப்பதற்கு, இடையே ஓரசையோ ஈரசையோ கூட்டி அம்மூன்றாம் சீரோடு இணைத்து நான்காம் சீரொடு தளை கொள்வர். மூன்றாம் சீரையும் நான்காம் சீரையும் இணைப்பதற்கு இடையே கூட்டப்படும் அசையோ, அசைகளோ ஆசு எனப்படும். (யா. கா. 24 உரை., யா.வி. பக். 243) இது போலவே, சீர் அமைப்புக்குப் பயன்பட்டு அடி எதுகை காணும்போது கணக்கிடப்படாது விடப்படும் மெய்யெழுத் துக்களாகிய ய் ர் ல் ழ் என்னும் நான்கும். ‘ஆசு’ எனப்படும். (யா. வி. பக். 150) ஆசு எழுத்துக்கள் - முதலெழுத்தை அடுத்து இரண்டாமெழுத்தாகிய எதுகை யின் முன் அடிகளில் ய் ர் ல் ழ் என்னும் மெய்யெழுத்துக்கள் நிற்கும். அவற்றை நீக்கிவிட்டு எதுகைத் தொடையை நோக்க வேண்டும். இடையே சொல்லிணைப்புக்காக வந்த அவ் வெழுத்துக்கள் ஆசெழுத்துக்கள் எனப்படும். ‘ஆசிடை எதுகை’ காண்க. (யா. க. 37 உரை) ஆசெதுகை - ய், ர், ல், ழ் என்ற மெய்யெழுத்துக்களுள் ஒன்று அடியெது கையிடையே ஆசாக வருவது. (யா. கா. 43 உரை) ‘ஆசிடை எதுகை’ காண்க. ஆய்தம் - செய்யுட்கு உறுப்பாகிய பதினைந்து திறத்து எழுத்துக்களுள் ஒன்றாகி, ‘முப்பாற்புள்ளி’ (தொ. எ. 1) எனப்படுவது. இது மொழிக்கண் இடையே வருவது. (யா. க. 2) வருமாறு : அஃகம், எஃகு. இது நெடுங்கணக்கினுள் உயிர்களை அடுத்து மெய்களின் முன்னர் இடையே அமையும் எழுத்து. (வீ. சோ. 1) ஆய்தம் அலகு பெறுதலும், பெறாமையும் - ஆய்தம் சில இடங்களில் உயிர்போல அலகு பெறும். ‘அற்றால் அளவறிந்து உண்க, அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு’ (குறள் 943) ‘அஃது’ என்பதன்கண் ஆய்தம் குற்றெழுத்துப் போல அகரத்தொடு கூடி நிரையசையாகியவழியே, தேமா முன் நிரையாய் இயற்சீர்வெண்டளை அமையும். இத்தகைய இடங்களில் ஆய்தம் அலகுபெறும். ‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ (குறள் 236) இக்குறட்பாவில் ஆய்தம் மெய்யெழுத்துப் போல அலகு பெறாது இயற்சீர்வெண்டளை அமைய உதவுகிறது. (நன். 60 சங்கர.) இங்ஙனம் ஆய்தம் அலகு பெறுதலும் பெறாமையும் உடை யதாய் அமைதலின், மெய்எழுத்தொடு சேர்த்து எண்ணப் படாததாயிற்று. வீரசோழியம் உயிரையடுத்து மெய் முன்னர் ஆய்தத்தை நெடுங்கணக்கில் நிறுத்திய திறமும் இக்கருத்துப் பற்றியே போலும். ஆய்தம் : மறுபெயர்கள் - அஃகேனம், தனிநிலை, (முப்பாற்) புள்ளி, ஒற்று என்பன. (யா. கா. 1) ஆய்தம் வருமாறு - ‘அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்’ (குறள் 175) அஃகி, வெஃகி என்பன குறியதன் முன்னர் ஆய்தப்புள்ளி உயிரொடு கூடிய வல்லெழுத்து மேலதாய் வருதற்கு எடுத்துக் காட்டாம். இவ்வாறு மொழியிடைக்கண் வருவதன்றி, இது முதற்கண்ணும் தனிமொழி இறுதிக்கண்ணும் இயல்பாக வாராது. (தொ. எ. 38 நச்.) ஆய்தமும் ஒற்றும் அலகுபெறல் - ஆய்தஎழுத்தும் ஒற்றும் அளபெடை அல்லாத விடத்துத் தனித்துவரின் அலகு பெறா; ஓர் ஒற்று ஏனைய ஒற்றுக் களொடு சேர்ந்து வரினும் அலகு பெறாது. எ-டு : ‘எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர் வெஃஃகு வார்க்கில்லை வீடு’ என ஆய்தம் அளபெடுத்தவழி அலகு பெற்றது. ‘கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு’ என ஒற்று அளபெடுத்தவழி அலகு பெற்றது. பாய்ந்து, பார்த்து, வாழ்ந்தனம்- என்பன ஈரொற்றடுத்த வழியும் அலகு பெறாமை காண்க. ஒற்றும் ஆய்தமும் அளபெழுந்தவழிக் குற்றெழுத்தின் பயத்த வாய் ஓரலகு பெறுவதல்லது, முன்னும் பின்னும் நின்ற எழுத்தினொடு புணர்ந்து நிரையசை ஆகா. ஞணநமன வயலள என்னும் பத்து மெய்யும் ஆய்தமும் குறிற்கீழும் குறிலிணைக் கீழும் அளபெழும். எ-டு : மண்ண்ணு, வரஃஃகு. மண், ண், ணு - நேர் நேர் நேர் வரஃ, ஃ, கு - நிரை நேர் நேர் இவ்வொற்றளபெடை செய்யுள்வழக்கினல்லது உலகு வழக்கில் வாராது. (யா. க. 3 உரை) ஆரிடச் செய்யுள் - இருடியால் செய்யப்படுவது ஆரிடம். ஆக்கவும் கெடுக்கவும் ஆற்றலுடையராய் முக்காலத்துப் பண்பும் உணரவல்ல இருடிகள் பாடும் பாடல்கள் ஆரிடம் எனப்படும். அவை உலகியல் செய்யுள்களுக்கு ஓதிய உறுப்புக்களின் மிக்கும் குறைந்தும் வரும். பொய்கையார் வாக்கும், குடமூக்கிற் பகவர் செய்த வாசு தேவனார் சிந்தம் முதலிய ஒருசார்ச் செய்யுளும் ஆரிடத்தின் பாற்படும். பெருஞ்சித்திரனார் செய்யுளும் ஒளவையார் செய்யுளும் பத்தினிச் செய்யுளும் போல்வனவும், இருடிகள் அல்லா ஏனையோராகிய மனத்தது பாடவும் சாவவும் கெடவும் பாடல் தரும் கபில பரண கல்லாட மாமூல பெருந்தலைச்சாத்தர் முதலியோர்தம் செய்யுளும் ஆரிடப் போலி எனவும் ஆரிட வாசகம் எனவும் கூறப்படும். எ-டு : ‘கிடங்கிற் கிடங்கிற் கிடந்த கயலைத் தடங்கட் டடங்கட் டளிரியலார் கொல்லார் - கிடங்கில் வளையாற் பொலிந்ததோள் வையெயிற்றுச் செவ்வாய் இளையாட்டி கண்ணொக்கு மென்று.’ இஃது ஆரிடச் செய்யுள்; பொய்கையார் வாக்கு. நேரிசை வெண்பாவின் இரண்டாமடி நெடிலடியாய்த் தனிச்சீர் பெற்று வந்தது. (யா. க. 93 உரை) ஆரிடப் போலி - இருடிகள் அல்லாத ஏனையோராகிய, மனத்தது பாடவும் சாவவும் கெடவும் பாடல் தரும் கபில பரண கல்லாட மாமூல பெருந்தலைச்சாத்தர் இத்தொடக்கத்தோராலும், பெருஞ் சித்திரனார் ஒளவையார் பத்தினி இத்தொடக்கத்தோராலும் ஆரிடச் செய்யுள் போலச் சீர் மிகவும் குறையவும் பாடப் படுவன ஆரிடப் போலிச் செய்யுளாம். எ-டு : ‘கண்டகம் பற்றிக் கடக மணிதுலங்க ஒண்செங் குருதியுள் ஓஒ கிடந்ததே - கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுதகண் ணீர்துடைத்த கை.’ இது பத்தினிச் செய்யுள். இந்நேரிசை வெண்பா, இரண்டா மடி நெடிலடியாய்த் தனிச்சீர் பெற்று வந்தது. அறிவுடை நம்பியார் செய்த ‘சிந்தம்’, தனிச்சொல் இல்லா வஞ்சிப்பாவாய், அதற்கு உரித்தல்லாத செவியறிவுறூஉப் பொருண்மைத்தாய் வருதலின் ‘உறுப்பழி செய்யுள்’ எனப்படும்; ஆரிடப் போலி ஆகாது. (யா. க. 93 உரை) ஆறுமெய் பெறுதல் - தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், சொற்சீரடி, முடுகிய லடி என்னும் ஆறு உறுப்பினையும் கொச்சகக்கலி பெறுதல். (தொ. செய். 148 இள.) இருசீர் அடுக்க, அடிக்கண் அறுசீர் பெறுதல். (தொ. பொ. 154 பேரா., நச்.) இ இசை விரளச் செந்தொடை - ஈரடிகளில் ஓரடி ஓரோசையாகவும், அடுத்த அடி பிறிதோர் ஓசையாகவும் வருவது. (யா. வி. 50 உரை) எ-டு : ‘பூத்த வேங்கை வியன்சினை ஏறி மயிலினம் அகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே! என முதலடி ஓரோசையாகவும், அடுத்த அடி பிறிதோர் ஓசையாகவும் வந்தவாறு. இடம் - ‘இடன்’ எனவும்படும். இடம் - வினைசெய் இடம். அஃதாவது சந்தருப்பம். ஒருவழிப் பலவும் தொக்கு அவற்றிற்கெல்லாம் இலக்கணம் ஒன்றாகும் செயல் நிகழ்ச்சி இடம் எனப்படும். களம் எனவும் கூறப்படும். ஒரு செய்யுள் கேட்டான் “இஃது இன்ன சந்தருப்பத்தில் நிகழ்ந்தது” என்று அறிதற்கு ஏதுவாகிய உறுப்பே இடம் என்பது. எடுத்துக்காட்டாக, காட்சி ஐயம் துணிவு புணர்ச்சிநயப்பு பிரிவச்சம் வன்புறை என்பன எல்லாம் ஒருவழிப் பலவும் கூடி ‘இயற்கைப் புணர்ச்சி’ என்ற இடத்தின்பாற்பட்டன. இது செய்யுள் உறுப்புக்கள் முப்பத்து நான்கனுள் ஒன்று. (தொ. பொ. 513 பேரா.) இடை எண் - அம்போதரங்கம் எனினும், அசையடி எனினும், பிரிந் திசைக்குறள் எனினும், சொற்சீரடி எனினும், எண் எனினும் ஒக்கும். முச்சீர் ஓரடி எட்டால் வரும் அம்போதரங்கம் இடையெண் எனப்படும். எட்டு நான்காகச் சுருங்கி வரினும் ஆம். (யா. கா. 31 உரை) (வீ. சோ. 117 உரை) யாப்பருங்கல விருத்தியில் அம்போதரங்க உறுப்பாகிய ஓரடி நான்கு இடையெண் என்று கூறப்பட்டிருப்பது ஏட்டிடை அமைந்த பிழையாம். அவற்றை அளவெண் என்று கூறலே ஏற்றது. (யா. வி. பக். 317, 318, 320) ‘காமரு கதிர்மதி முகத்தினை சாமரை இடையிடை மகிழ்ந்தனை தாமரை மலர்புரை அடியினை தாமரை மலர்மிசை ஒதுங்கினை....’ (யா. வி. பக். 311) இடைக்குறை - செய்யுட்கண் தொடைசீர் அமைப்புக் கருதி ஒரு பெயர்ப் பகாப்பதம் இடையெழுத்து நீங்க அமைக்கப்பட்டவழியும் தன் பொருளைத் தவறாது வெளிப்படுத்துவது. ‘வேதின வெரிநின் ஓதிமுது போத்து’ ( - குறுந். 140 - 1) என்புழி, ஓந்தி என்பது ஓதி என இடைக்குறைந்து வந்தது. (ஓதி என்பது ஓந்தியின் இயற்பெயர் என்பாரும் உளர்.) (யா. க. 95 உரை) வேண்டாதார் என்பதனை வேண்டார் எனக் கொள்ளும் பகுபதத்தில் ஓரெழுத்துத் தொக்கதனைத் தொகுத்தல் விகாரம் என்று மயிலைநாதர் (நன். 154) குறிப்பிடுவது கொண்டு, இடைக்குறை பெயர்ப் பகாப்பதத்தின்கண்ணது என்பதே பெரும்பாலோர் கருத்து. இடைக்குறையும் தொகுத்தல் விகாரமும் - இடைக்குறை பெயர்ப் பகாப்பதத்தின்கண்ணேயே வரும்; தொகுத்தல் விகாரம் பகுபதத்தின்கண்ணும் இருசொற்கள் இயையும் சந்தியின்கண்ணும் வரும். ஓந்தி என்பது ஓதி எனவருவது இடைக்குறையாம். உள்ளான் என்பது உளான் எனவும், ‘மழவரை யோட்டிய’ என்பது ‘மழவரோட்டிய’ (அகநா. 1) எனவும் வருவன தொகுத்தல் விகாரமாம். (தொ. சொ. 447 ; 398 இள.) இடைநிலை - நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவின் உறுப்பாகிய தனிச் சொல் இடைநிலை எனப்படும்; கூன் என்பதும் அது. தாழிசை மூன்றனை அடுத்து இடைநிலை நிகழ, அடுத்துச் சுரிதகம் என்னும் உறுப்பால் இக்கலிப்பா முற்றும். பிற கலிப்பா வகைகளிலும் வெவ்வேறிடத்தே தனிச்சொல்லாகிய இவ்விடைநிலை வரப்பெறும். (யா. க. 82 உரை) இடைநிலை அளபெடைத் தொடை - முதல் நின்ற சீரின் நடுஎழுத்து அளபெடுத்து ஒன்றிவரத் தொடுப்பது. எ-டு : ‘உராஅய தேவர்க் கொழிக்கலு மாமோ விராஅய கோதை விளர்ப்பு’ (யா.க. 41 உரை) இடைநிலை ஒற்றளபெடைத் தொடை - சீரின் இடையிலுள்ள ஒற்று அளபெடுத்து வருவது. ‘வண்ண்டு வாழும் மலர்நெடுங் கூந்தலாள் பண்ண்டை நீர்மை பரிது’ (யா. க. 41 உரை) இடைநிலைப்பாட்டு - இடைநிலைப்பாட்டு என்பது தாழிசையையும் குறிக்கும். செய்யுளிடையே நிற்பனவாய்த் தாழம்பட்ட ஓசை இன்றி வருவனவற்றையும் குறித்தற்கு ‘இடைநிலை’ எனப்பட்டது. அங்ஙனம் வருங்கால் பாட்டாய் வருதலும், ஒன்றாயும் பலவாயும் வருதலும் கோடற்குப் ‘பாட்டு’ எனப்பட்டது. (தொ. செய்.132 நச்.) இஃது இறுதிநிலை கொண்டு முடியும் எனவும் கூறப்படும். (தொ. செய். 137 பேரா., நச்.) (கலிப்) பாடலின் முகத்தே தரப்படுதலின் ‘தரவு’ எனப் பட்டது. உடம்பும் தலையும் தனித்தனிப் பிரித்து வழங்கு மிடத்து உடம்பிற்குக் கழுத்துப் போல இது முன் நிற்றலின் ‘எருத்து’ என்றும் கூறப்படும். இசைநூலார் இத்தரவினை ‘முகம்’ என்பர். இத்தரவினை அடுத்துக் கலிப்பாவின் இடை யாகப் பெரும்பான்மையும் தாழிசை பயிலுதலின் இடை நிலைப்பாட்டு எனப்பட்டது. (தொ. செய்.132 நச்.) இடைநிலைப்பாட்டு வருமாறு - இடைநிலைப்பாட்டாவது தாழிசை. அது தரவின் அளவிற் குட்பட்ட அடிகளான் வரும் இலக்கணமுடையது என்ப. நாலடித் தரவிற்கு நாலடித் தாழிசை வரினும் அமையும் என்க. (தொ. செய். 134 ச.பால) இடைப்புணர் தொடைகள் - ஓர் அளவடிக்கண் 2, 3ஆம் சீர்களில் வரும் தொடை இடைப் புணர் ஆம். இடைப்புணர் மோனை, இடைப்புணர் எதுகை, இடைப்புணர் முரண், இடைப்புணர் இயைபு, இடைப்புணர் அளபெடை என முறையே வருமாறு காண்க. (யா. க. 39 உரை) இடைமை மிக்கு வரல் - “வயலுழுவார் வாழ்வாருள் வாழ்வா ரயலுளோர் வாழ்வாருள் வாழா தவர்” என்னும் இப்பாடற்கண், இறுதிச்சீர்த் தகரம் நீங்கலாக இடையின எழுத்தே மிக்கு வந்தவாறு காண்க. (யா.க.2 உரை) இடையாகு இன்பா - எல்லாப் பாக்களும் தம்சீரும் தம்தளையும் பிறபாவின் சீரொடும் தளையொடும் மயங்கி வருவன இடையாகு இன்பா என்பார் மயேச்சுரர். (யா. க. 92 உரை) இடையாகு எதுகை - அடிதோறும் முதலெழுத்து அளவொத்திருப்ப இரண்டாம் எழுத்தொன்றுமே ஒன்றிவரத் தொடுப்பது. எ-டு : ‘அகர முதல எழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு’ (குறள். 1) (யா.வி. 37 உரை) அகர, பகவன் - இடையாகு எதுகை - அடி யெதுகை. இடையாகு மோனை - அடிதோறும் முதலெழுத்து மாத்திரம் ஒன்றிவரத் தொடுப் பது இடையாகு மோனையாம். எ-டு : ‘மாவும் புள்ளும் வதிவயின் படர மாநீர் விரிந்த பூவும் கூம்ப ....................................................... மாயோள் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே’ அடிதோறும் ‘மா’ என்னும் முதலெழுத்து மாத்திரம் ஒன்றி வரத் தொடுத்தமையால் இப்பாடல் இடையாகு மோனை (அடிமோனை) ஆம். (யா. க. 37 உரை) இடையிட்ட எதுகை - அடிதோறும் எதுகைத்தொடை அமையாமல் முதலடி 3 ஆம் அடி 5 ஆம் அடி என இடையிடையே ஓரடிவிடுத்து அமையும் எதுகை இடையிட்ட எதுகையாம். ‘தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல கலுழ வாடா அவ்வரி புதைஇப் பசலையும் வைகல் தோறும் பைப்பையப் பெருகலின் நீடார் இவணென நீ மனம் கொண்டோர்’ இப்பாடற் பகுதியில் தோடார், வாடா, நீடார் என ஓரோர் அடிவிட்டு எதுகைத்தொடை அமைந்துளது காண்க. (யா. க. 37 உரை) இடையிட் டெதுகை - ‘இடையிட்ட எதுகை’ காண்க. இடையின எதுகை - அடிதோறும் முதலெழுத்து அளவொத்திருப்ப இரண்டாம் எழுத்தாகிய மெய் இடையினமெய்யாக இருப்பின் அவ் வெதுகை இடையின எதுகையாம். எ-டு : ‘எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு’ இதில் எல்லா, பொய்யா இடையின எதுகை அடியெதுகை யாக வந்தது. (யா. க. 37 உரை) இடையின மோனை - அடிகளின் முதற்கண் வந்த உயிர்மெய்எழுத்துக்களில் மெய்கள் இடையின மெய்யாக இருப்ப, அவற்றின் மேலேறிய உயிர்கள் வெவ்வேறாக அளவு ஒத்திருப்பின் அம்மோனை இடையின மோனையாம். எ-டு : ‘வேனில் உழந்த வறிதுயங் குடலின் யானை செல்லும் அருஞ்சுர நெடுவழி’ இவ்வடிகளில் முதற்கண் வந்த எழுத்துக்கள் முறையே வகர யகர இடையினமெய்யாக, ஊரப்பட்ட நெட்டுயிர்களது இயைபால் இடையின மோனை வந்தவாறு. (யா.க. 37 உரை) இடையீட்டு எதுகை - ‘இடையிட்ட எதுகை’ காண்க. இணை அசை - நிரைஅசையினைக் குறிக்க ஒருசாரார் வழங்கும் பெயர் இது. (நேரசையினைத் தனியசை என்ப.) (யா. க. 5 உரை) இணை அடி - ஈரடி இணை அளபெடை - அளவடியின்கண் முதல் இருசீரிலும் அளபெடை வரத் தொடுக்கும் தொடைவிகற்பம். எ-டு : ‘உலாஅ அலாஅ தொருவழிப் பட்டே’ (யா. க. 42 உரை) இணை இயைபு - அளவடிக்கண் ஈற்றுச் சீர் இரண்டும் இறுதி எழுத்தாலோ அசையாலோ சொல்லாலோ ஒன்றிவரும் தொடை விகற்பம். எ-டு : ‘பிரிந்துறை வாழ்க்கையை யாமும் பிரிதும்’ இவ்வளவடிக்கண் கடைச்சீர் இரண்டும் ‘உம்’ என்னும் ஓசையான் ஒன்றி வந்தமை இணைஇயைபாம். (யா.க. 42 உரை) இணை எதுகை - அளவடிக்கண் முதல் இருசீர்களும் எதுகை ஒன்றிவரத் தொடுப்பது இணை எதுகையாம். (யா. வி. 42 உரை) எ-டு : ‘கல்லிவர் முல்லைக் கணவண்டு வாய்திறப்ப’ இனி, ‘கணையும் பிணையும் கடுவும் வடுவும் இணையொன் றியவிழியார் எய்தார்’ எனவரும் இவ்விணை எதுகை மாறனலங்காரத்தே ஓரணி யாகக் கூறப்பட்டுள்ளது. (மா. அ. 180) இணைக்குறள் ஆசிரியப்பா - இஃது ஆசிரியப்பாவின் நான்கு வகைகளுள் ஒன்று. முதலடி யும் ஈற்றடியும் அளவடியாய் நிற்ப, இடையே இரண்டும் பலவுமாகிய அடிகள் குறளடியாகவும் சிந்தடியாகவும் நெடிலடியாகவும் நிகழும் ஆசிரியப்பா இது. (யா. க. 72) எ-டு : ‘தண்ணென் கடுக்கை கண்ணீர் கலுழ்தா வெண்மதிக் கண்ணி சூடும் கண்ணுதற் கடவுள் புண்ணியப் பொதுவில் ஆடும் பூங்கழல் இறைஞ்சுதும் விண்மிசைப் போகிய வீடுபெறற் பொருட்டே’ (சி. செ. கோ. 43) இதன்கண், இடையடிகள் முறையே சிந்தடி குறளடி நெடிலடி யாய் நிகழ, முதலடியும் ஈற்றடியும் அளவடியாய் வந்தமை யால் இஃது இணைக்குறள் ஆசிரியப்பா ஆயிற்று. இணைக்குறள் ஆசிரியப்பா இனம் - இரண்டடி குறைந்து வந்த இணைக்குறள்துறை இணைக் குறள் ஆசிரியப்பாவிற்கு இனமாம். ‘கோவித்த மன்னர் குலங்க ணலங்கெட வேவித்த கைச்சிலை தொட்ட மாவித் தகனே மணிமுடி யாயெனைக் கூவித்த காரணம் கூறே’ ‘பாடகஞ்சேர் காலொருபாற் பைம்பொற் கழலொருபால் தேன்துளி நீடு குழலொருபால் நீண்ட சடையொருவன் வீடியமான் அதளொருபால் மேகலைசேர்ந்(து) ஆடுதுகி லொருபாலவ் வுருவாண்பெண் ணென்றறிவார் யாரே!’ இவை இடையிடையே குறைந்துவந்த ஆசிரியத்துறை; இரண்டடி குறைந்து வந்த இணைக்குறள்துறை. இவ்விரண் டும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் இனமாம். (வீ. சோ. 122 உரை) இணைத் தொடை - நாற்சீர்களையுடைய நேரடியாகிய அளவடிக்கண் முதற்சீரும் இரண்டாம் சீரும் மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்ற விகற்பத்தொடை பெற்று வருதலாகிய சீரிடை அமைந்த தொடை இணைத்தொடையாம். ‘இணை மோனை’ முதலியவற்றைத் தனித்தனியே காண்க. (யா. க. 42 உரை) இணை நிரல்நிறை - ஓர் அளவடியின் முதல் இருசீர்களிலும் நிரல்நிறை அமைதல் இணை நிரல்நிறையாம். ‘நண்ணினர் பகைவர்என் றிவர்க்கு நாடொறும் தண்ணியன் வெய்யன்நம் தானை வேந்தனே’ (சூளா. 52) இவ்வடிகளில், நண்ணினர்க்குத் தண்ணியன், பகைவர்க்கு வெய்யன் என முதலிரு சீர்களையும் கொண்டு நிரல்நிறை அமைந்தவாறு. (யா. வி. பக். 387) இணைமுரண் - நாற்சீரடியாகிய அளவடிக்கண் முதலிருசீரும் முரண்படல் ‘கருங்கால் வெண்குருகு கனைதுயில் மடியும்’ இதில் முதல் இருசீர்க்கண்ணும் முரண் அமைந்தவாறு காண்க. (யா. க. 42 உரை) இணைமோனை - ஓர் அளவடிக்கண் முதல் இருசீரிலும் முதல்எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. எ-டு : ‘தண்ணறுந் தகரம் நீவிய கூந்தல்’ (யா.க. 42 உரை) இணையெதுகை முதலிய விகற்பம் ஏழற்கும் மூவகைச் செய்யுளிலும் எடுத்துக்காட்டு - இணையெதுகை ‘புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ’ (பதிற். 16) - ஆசிரியம் ‘மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்’ (குறள். 204) - வெண்பா ‘அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின்’ (கலி.2) - கலிப்பா. பொழிப்பு எதுகை ‘பொன்னேர் மேனி நன்னிறம் சிதைத்தோன்’ - ஆசிரியம் ‘உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்’ (களவழி. 4) - வெண்பா ‘பெருவரை உறழ்மார்பன் திருவோங்கு கரியோனை’ - கலிப்பா ஒரூஉ எதுகை ‘உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை’ (ஐங். தனிப்.) - ஆசிரியம் ‘வாண்மாய் குருதி களிறுழக்கத் - தாண்மாய்ந்து’ (களவழி. 1) - வெண்பா ‘அணிவேங்கை செறிநீழல் கிளியோப்பு மணிநிறத்தாள்’ - கலிப்பா கூழை எதுகை ‘இன்னா ரென்னா தின்பம் வெஃகி’ - ஆசிரியம் ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை’ (குறள்.350) - வெண்பா ‘மணிவரை அணிமார்பிற் பணிமேவும் பெரியோனை’ - கலிப்பா. மேற்கதுவாய் எதுகை - ‘பொன்னார் மேனி துன்னினர் மன்னோ’ - ஆசிரியம் ‘கொண்டுபா ராட்டுவர் கண்டிலர்கொல் - மண்டி’ - வெண்பா ‘அலைகடல் துயிலுணரா மலையெடுத்த நிலையோனை’ கலிப்பா கீழ்க்கதுவாய் எதுகை - ‘உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது’ (குறுந். 102) - ஆசிரியம் ‘படியை மடியகத் திட்டான் - அடியாருள்...’ (நான்மணி. கடவுள்) - வெண்பா. ‘கதிபல விதியாற்சென் றழுந்தாமல் துதித்தேத்தி’ - கலிப்பா முற்றெதுகை - ‘கன்னிப் புன்னை அன்னம் துன்னும்’.... ஆசிரியம் ‘இன்று கொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது’ (நாலடி. 36) - வெண்பா ‘திரிபுரம் எரிசூழ வரிவாங்கு பெரியோனை’ - கலிப்பா (தொல். செய். 93 நச்.) இயல் சிஃறாழிசைக் கொச்சகம் - இடையிடையே தனிச்சொல் வந்து நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற் சிறிது வேறுபட்டு, தாழிசை மூன்றேயாய், தன்தளையான் வரும் கலிப்பாவகை இயற் சிஃறாழிசைக் கொச்சகம் ஆம். இது தாழிசை ஈற்றடி குறையப் பெறாதது. எ-டு : ‘பரூஉத்தடக்கை’ என்று தொடங்கும் கலிப்பா. இது தரவு நான் கடியாய், மூன்றடித் தாழிசை மூன்றேயாய், ஒவ்வொரு தாழிசை முன்னரும் தனிச்சொல் பெற்று, தனிச்சொல் எனத் தாழிசை மூன்றன் இறுதியிலும் வேறாகப் பெற்று, ஏழடி ஆசிரியச் சுரிதகத்தான் இற்றது. (யா. க. 86 உரை) இயல் தரவுஇணைக் கொச்சகம் - தரவு இரட்டித்துச் சுரிதகம் இல்லாதது இயல் தரவிணைக் கொச்சகமாம். எ-டு : ‘வார்பணியத் தாமத்தால் வளைக்கையோர் வண்டோச்ச ஊர்பணிய மதியம்போல் நெடுங்குடைக்கீழ் உலாப்போந்தான் கூர்பணிய வேற்றானைக் கொற்கையார் கோமானே! அவற்கண்டு, பூமலரு நறுங்கோதை புலம்பலைப்ப நறுங்கொண்டைத் துமலர்க்கண் மடவார்க்கு தொல்பகையே அன்றியும் காவலர்க்குப் பெரியதோர் கடனாகிக் கிடவாதே?’ இது வெண்டளையும் கலித்தளையும் விரவிவந்த இயல் தரவிணைச் கொச்சகம். தரவிணைக் கிடையே, ‘அவற்கண்டு’ எனத் தனிச்சொல் வந்தது. கலியின் ஏனைய உறுப்புக்கள் ஆகிய தாழிசை தனிச்சொல் சுரிதகம் எனுமிவை வாராமை கண்டுகொள்க. (யா.க. 86 உரை) இயல் தரவு கொச்சகம் - பிற கலி உறுப்புக்களைப் பெறாமல் தரவு மாத்திரமாய் வருவது இயல் தரவு கொச்சகமாம். எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி முல்லைத்தார் முடிமன்னர் முடித்தலையை முருக்கிப்போய் எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல் மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.’ இது வெண்சீர் வெண்டளையும் கலித்தளையும் விரவி வந்தமையால் அகவல் துள்ளலோசை பெற்ற இயல் தரவு கொச்சகம். (யா. க. 86 உரை) இயல் பஃறாழிசைக் கொச்சகம் - ஈற்றடி குறையாத பல தாழிசையால் வரும் கொச்சக்கலி. எ-டு : ‘தண்மதியேர்’ எனத் தொடங்கும் கலிப்பா. இப்பாடல் சிறப்புடைத் தன்தளையால் நாலடித்தரவும், அடுத்து இரண்டடித் தாழிசை ஆறும், அடுத்துத் தனிச் சொல்லும் பெற்று, நாலடி ஆசிரியச் சுரிதகத்தால் இற்றது. தாழிசை மூன்றின் மிக்குப் பலவாய் வந்தமையின் இயல் பஃறாழிசைக் கொச்சகம் ஆயிற்று. (யா. க. 86 உரை) இயல் மயங்கிசைக் கொச்சகம் - கலிக்கு ஓதப்பட்ட உறுப்புக்கள் மயங்கி வருவது இயல் மயங்கிசைக் கொச்சகமாம். எ-டு : ‘மணிகிளர் நெடுமுடி’ என்னும் கலிப்பா. இது தரவு இரட்டித்துத் தாழிசை ஆறும், தனிச்சொல்லும், அராகம் நான்கும், பெயர்த்தும் தாழிசை ஆறும், தனிச் சொல்லும், இருசீர் ஓரடி அம்போதரங்கம் எட்டும், தனிச் சொல்லும், நான்கடிச் சுரிதகமும் என இவ்வாறு கலிக்கு ஓதப்பட்ட ஆறு உறுப்பும் மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் மயங்கியும் வந்தது. (யா. க. 86. உரை; பக். 335- 337) இயலசை - குறிலும் நெடிலும் தம்முள் மாத்திரை ஒவ்வாவேனும் அவற்றின் மாத்திரை நோக்காது எழுத்தாம் தன்மை நோக்கி ஒரோவோர் அலகு பெறும் என்று கொண்டு, தனிக்குறில் தனிநெடில் ஒற்றடுத்த குறில் ஒற்றடுத்த நெடில் என்னும் நான்கும் நேரசை என்றும், குறிலிணை - குறிலிணைஒற்று - குறில்நெடில் - குறில்நெடில் ஒற்று என்னும் நான்கும் நிரை யசை என்றும், இயற்றிக் கொள்ளப்படாது நின்றாங்கு நின்று தளைத்தலின் இவை இயலசை என்று பெயர்பெற்றன என்றும் கொள்ளப்படும். (தொ. செய். 6 நச்.) எ-டு : உள் - ளார் - தோ - ழி - நேரசை நான்கும் வந்தன வரி - வரால் - கலா - வலின் - நிரையசை நான்கும் வந்தன. (தொ. செய் 3 நச்.) இயலசை என்பது ஆட்சியும் குணமும் காரணமாகப் பெற்ற பெயராம். (தொ. செய்.பேரா.) இயலசையும் உரியசையும் சீர்களாக வருதல் - இயலசை இரண்டும் வெண்பாவின் ஈற்றடி இறுதிச்சீராக வரும்; சிறுபான்மை கலிப்பாவின் அம்போதரங்க உறுப்பி னுள் சீராக வரும்; பெரும்பான்மையும் முதல் இறுதிக்கண் கூனாக அன்றி வாரா. உரியசைகள் அடி மூவிடத்தும் ஏற்ற பெற்றி சீராக வரும். எ-டு : ‘கழல்தொழா மன்னர்தம் கை’ ‘நற்றாள் தொழாஅ ரெனின்’ (குறள் - 2) ‘பகவன் முதற்றே யுலகு’ (குறள். 1) ‘தானமிழ்தம் என்றுணரற் பாற்று’ (குறள் - 11) ‘முழங்கு முந்நீர் முழுதும் வளைஇ’ ‘கறவை தந்து பகைவ ரோட்டிய’ (புறநா. 204) ‘வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து’ (புறநா. 260) (தொ. செய். 27 ச.பால.) இயலசை மயக்கம் - இயலசைகளாவன நேர், நிரை என்பன. இயலசை மயக்க மாவது இவ்வசைகள் தம்மொடு தாம் கூடுதலும், தம்மொடு பிற கூடுதலுமாம். நேர் நேர் - நிரை நிரை - தம்மொடு தாம் மயங்கின. நேர்நிரை - நிரை நேர் - தம்மொடு பிற மயங்கின. ஆகவே, இயலசை மயங்கிய இயற்சீர் நான்கேயாம். இவற்றின் வாய்பாடுகள் தேமா, கருவிளம், கூவிளம், புளிமா என்பன. கூவிளம், கருவிளம் இவற்றிற்குப் பாதிரி, கணவிரி என்ற வேறு வாய்பாடுகளும் உண்டு. (தொ. செய். 13 நச்.) இயலடி - இயற்சீர் நான்கான் வரும் அடி இயலடியாம். ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்’ - இவ்வடிக்கண் நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை, நேர் நேர் என இயற்சீர் நான்கும் ஒருங்கே வந்தவாறு. (யா. க. 25 உரை) இயற்சீர் - நேர் நிரை என்னும் இயலசை இரண்டும் தம்மொடு தாமும், தம்மொடு பிறவும் மயங்கும்போது நேர்நேர், நிரை நிரை, நேர்நிரை, நிரை நேர் என்று மயங்கித் தேமா கருவிளம் கூவிளம் புளிமா என்னும் வாய்பாடுகளால் வழங்கப்பெறும். இவற்றுள் கருவிளமும் கூவிளமும் முறையே கணவிரி பாதிரி எனவும் வழங்கப்பெறும். எ-டு : ‘கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை’ தேமா கருவிளம் புளிமா கூவிளம் (குறுந். 216) என ஓர் அகவல்அடியில் இயற்சீர் நான்கும் வந்தன. (தொ. செய். 13 நச்.) இயற்சீர் இருவகைப்படுதல் - தேமா : வந்தான் - 2 எழுத்து; நுந்தை - ஓர் எழுத்து. கருவிளம், கணவிரி - 4 எழுத்து; வலியது - 3 எழுத்து. கூவிளம், பாதிரி - 3 எழுத்து; ஞாயிறு - 2 எழுத்து. புளிமா ஒரே வகைத்து. இவ்வாறு தேமா, கருவிளம், கூவிளம் என்பன ஒருவகைய வாகவும், (நுந்தை - ஓரெழுத்துத் தேமா, ஞாயிறு - ஈரெழுத்துப் - பாதிரி; வலியது - மூவெழுத்துக் கணவிரி என்க.) புளிமா ஒருவகைத்தாகவும் நிகழ்தலின், இயற்சீர் இருவகைத் தாம். இவ்வெழுத்து வேறுபாடு குற்றியலுகரத்தைக் கணக் கிடாமையால் வந்தவாறு. (தொ. செய். 43 நச்.) இயற்சீர்பத்து - நேர் நேர் ; நிரை நிரை; நேர் நிரை; நிரை நேர்; நேர்பு நேர்; நிரைபு நேர்; நேர் நேர்பு; நேர் நிரைபு; நிரை நிரைபு; நிரை நேர்பு என இயற்சீர் பத்தாமாறு. (தொ. செய். 13, 15, 16 நச்.) இயற்சீர் : பெயர்க் காரணம் - ஆசிரியம், வெண்பா, கலி, வஞ்சி என்னும் நான்குபாவிற்கும் இயற்றலானும், இயல்புவகையான் ஒரே சொல்லாய் வருதல் பெரும்பான்மை ஆகலானும் இயற்சீர் எனப்பட்டன. (தொ. செய். 13 நச்.) இயற்சீர் விகற்பம் - இயற்சீர் வருஞ்சீரோடு ஒன்றாத நிலை. அஃது, இயற்சீர் நின்று இயற்சீரொடு விகற்பித்து வருதலும், இயற்சீர் நின்று வேற்றுச் சீருடன் விகற்பித்து வருதலுமாம். முன்னது சிறப் புடைத்து; பின்னது சிறப்பிலது. விகற்பம் - ஒன்றாமை எ-டு : ‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்’ (குறள் 121) விளமுன் நேரும், மாமுன் நிரையுமாக, இஃது இயற்சீர் நின்று இயற்சீருடன் விகற்பித்து வந்த சிறப்புடைய இயற்சீர் வெண்டளை. எ-டு : ‘இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.’ (குறள் 1091) இஃது இயற்சீர் நின்று வேற்றுச் சீருடன் விகற்பித்து வந்த சிறப்பில்லா இயற்சீர் வெண்டளை. (யா. க.18 உரை) இயற்சீர் வெண்டளை - மாமுன் நிரையும், விளமுன் நேரும் வரும் தளை. எ.டு : ‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி ’ (குறள் 1121) பாலொடு தேன்கலந் - விளமுன் நேர் தற்றே பணிமொழி - மாமுன் நிரை. (யா.க. 18 உரை) இயற்சீரின் திறம் - இரண்டு அசை இணைந்து நின்ற சீர் இயற்சீர். ஈரசைச்சீர் பிறிதாகாது எல்லாப் பொருள்மேலும் சொல்லப்படும் சிறப்புடைமையாலும், முதற்பா இரண்டனுள்ளும் (வெண்பா, ஆசிரியம்) பெரும்பான்மையும் இயன்று இனிது நடத்தலா னும், இயற்சீர் என்பது காரணக்குறி. இதனை ஆசிரிய உரிச்சீர் என்றும் வழங்குவர், காக்கைபாடினியார். எனவே, ஈரசைச்சீர்க்கு இயற்சீர், ஆசிரிய உரிச்சீர் என்ற பெயர்களும் உள. (யா. க. 11. உரை.) இயற்சீரின் தொகை - இயற்சீர் நேர் நேர், நிரை நேர், நிரை நிரை, நேர் நிரை என நான்காகும். இவற்றின் வாய்பாடுகள் பலராலும் பலவாகக் கூறப்படுகின்றன. நேர் நேர் -தேமா - பூமா - வாய்க்கால் - இம்மா - வேங்கை - காசு நிரைநேர் - புளிமா - மலர்பூ - தலைவாய் - எழினி - அரிமா - பிறப்பு. நிரைநிரை - கருவிளம் - கணவிரி - மலர்மழை - துலைமுகம் - இனிமொழி - வலம்புரி- வரிவளை நேர்நிரை - கூவிளம் - பாதிரி - பூமழை - வாய்த்தலை - இன்மொழி - சந்தனம் - நூபுரம் என்றாற்போல வாய்பாடு பலவாறு கூறுப. தேமா, புளிமா, கருவிளம்,கூவிளம் என்பனவே பெரிதும் வழக்காற்றில் உள்ளன. (யா. க. 11. உரை) (தொ. செய். 13 பேரா.) இயற்சீரின்பாற் படுவன - உரிஅசைகளாகிய நேர்பு நிரைபு என்ற இரண்டன் பின்னும் நேரசை நிற்பின் இயற்சீரின்பாற்படும். இவை நேர்புநேர் நிரைபு நேர் எனவரும். இவற்றின் வாய்பாடுகள் போதுபூ, விறகுதீ என்பன. சேற்றுக்கால் வேணுக்கோல் நேர்பு நேர் குளத்துநீர் முழவுத்தோள் நிரைபு நேர் நேர்பு நேர் கூவிளம் போலவும், நிரைபு நேர் கருவிளம் போலவும் கொள்ளப்படும். நேர் நிரை என்ற இயலசை இரண்டன்பின்னும், நேர்பு நிரைபு என்ற உரியசை வரின் அவற்றாலும் நேர் நேர்பு - போரேறு, நன்னாணு நேர் நிரைபு - பூமருது, காருருமு நிரை நிரைபு - மழகளிறு, நரையுருமு நிரை நேர்பு - கடியாறு, பெருநாணு என்ற நான்கு சீர்கள் தோன்றும். இவற்றுள் நேர் முதலாயின கூவிளம் போலவும், நிரை முதலாயின கருவிளம் போலவும் கொள்ளப்படும். போரேறு, நன்னாணு - நேர் நேர்பு பூ மருது, காருருமு - நேர் நிரைபு இவை கூவிளம் போல்வன கடியாறு, பெருநாணு - நிரைநேர்பு இவை கருவிளம் மழகளிறு, நரையுருமு - நிரை நிரைபு போல்வன (குற்றியலுகரமும் முற்றியலுகரமுமாக இவ்விரண்டு வாய்பாடு-கள் காட்டப்பட்டன.) (தொ.செய். 15, 16 நச், பேரா.) இயற்றமிழ்த் தேவபாணி - ஒத்தாழிசைக் கலியான் தேவரை முன்னிலைப்படுத்திப் பாடுவது இது. (தொ.செய். 138 ச. பால.) இயற்றளை வெள்ளடி - இயற்சீர் வெண்டளையான் வந்த வெண்பா அடி. எ-டு : ‘எறும்பி அளையுட் குறும்பல் சுனைய’ (குறுந். 12-1) (யா.கா. 41) இயைபு - நூல்வனப்பு எட்டனுள் ஒன்று. ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள் என்னும் 11 மெய்யெழுத்துள் ஒன்றனை ஈறாகக் கொண்டு செய்யுளைப் பொருள் தொடராகச் செய்வது இயைபு எனப்படும். னகர ஈற்றான் முடிந்து பொருள் தொடர்ந்தன மணிமேகலை யும் உதயணன் கதையும். மற்ற மெய்யெழுத்தான் முடிந்தவற்றுக்கு இலக்கியம் இக்காலத்து வீழ்ந்தன போலும். (தொ. செய். 240 நச்.) இயைபு அந்தாதி - முதல் அடியின் இறுதியில் இயைபுத் தொடை அமைந்த சீர் அடுத்த அடி முதலில் அந்தாதிப்பது இயைபு அந்தாதியாம். (யா. க. 52 உரை) எ-டு : ‘கல்லா மதியே கதிர்வாள் நிலவே நிலவே கழிய நிமிர்ந்துள இருளே’ நிலவே என்ற இயைபுத்தொடை அமைந்த சீர் அடுத்த அடி ஆதியாய் இயைபுத்தொடைக்குப் பயன்பட்டது. இயைபு இணைக்குறள் வெண்பா - அடி இயைபுத்தொடை அமைய வரும் குறள் வெண்பா இது. எ-டு : ‘சுடிகை நுதல்மடவாள் சொல்லும் கரும்பு கதிர்வளைத் தோளும் கரும்பு’ (யா. வி. பக். 236) இயைபு என்ற வனப்பின் இலக்கணம் - மொழியிறுதிக்கண் நிற்றற்குரிய ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள் என்னும் புள்ளி எழுத்துக்கள் நாற்கணத்தொடும் புணருங்கால் புணரியல்விதி தவறாமல் இயைபுபட்டு நிற்கும் வனப்பு இயைபு எனப்படும். பாட்டு முதலாகிய எழுவகைச் செய்யுள்களைச் சொற் பொருள் விளங்கவேண்டும் என்று கருதிப் புணர்ச்சியின்றிச் சொல்லுதலும் எழுதுதலும் சிலரது வழக்காதலின், ஆண்டுப் புணர்ச்சியின்றி விட்டிசைத்து ஓசையியைபு அழியுமன்றே? அங்ஙனம் ஓசை அழியாமற் செய்தல் இவ்வுறுப்பாம். எ-டு : ‘கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யாங்கண் டது’ (குறள். 1171) (தொ. செய். 239 ச.பால.) இயைபு என்ற வனப்பு - ஞகரம் முதல் னகரம் ஈறாகிய மெல்லெழுத்து ஐந்தும், வருமொழி வன்கணம் வருமிடத்தே மெய்பிறிதாதல் முத லான ஏற்ற திரிபுகளைப் பெற்று வருமொழியோடு ஒட்டியிசைக்கும் வனப்பு இயைபு எனப்படும்.(தென்.யாப். 96) எ-டு : உரிஞுக் கொண்டனன், முரணுத் தொலைத்த, பொருநக் கடுமையின், வீழ்மரங் கடுப்ப, செம்பொற் குடத்தர். (தென். யாப். 96) இயைபு என்றற்குப் பண்டையுரையாசிரியர் உரை பொருந்தாமை - ஞகாரம் முதலாக னகாரம் ஈறாகக் கிடந்த பதினொரு புள்ளியெழுத்துக்களை இறுதியாகக் கொண்டு முடியும் செய்யுள்கள் இயைபு என்னும் வனப்பென்பர் உரையா சிரியன்மார். இவற்றுள் ஞகாரம் முன்னிலை ஏவலாய் அன்றிப் பெயரீறாக வாராமையானும், அது சாரியை பெற்றே வருமென ஆசிரியர் ஓதுதலானும், வகரஈறு சுட்டுப்பெயராயும் உரிச்சொல் ஈறாயுமன்றி வாராமையானும், தெவ் என்னும் உரிச்சொல் உகரச்சாரியை பெற்றே வருமாகலானும் இவற்றை ஈறாகக் கொண்டு செய்யுள் முடிதற்கு இயையாமை அறிக. மற்று நகர ஈறு இருசொற்களின்கண் ஈறாகி வருதலின், அஃது ஈறாகி வருதல் அரிதென்க. அன்றியும், வனப்பு என்பது ஒரு செய்யுளின்கண் விரவி நிறைந்து நிற்பதோர் உறுப்பாம். ஈற்றெழுத்து ஒன்றனைக் கருதி வனப்புறுப்பு வகுக்கப்பட்டது என்றல் பொருந்தாது. (தொ. செய். 239 ச. பால.) இயைபுத்தொடை - அடிதோறும் இறுதிக்கண் எழுத்தாவது சொல்லாவது ஒன்றிவரின் அஃது (அடி) இயைபுத்தொடையாம். இனி, ஓரடியுள்ளே கடையிணை முதலாக இயைபுத்தொடை விகற்பம் கொள்ளப்படும் தொடைவிகற்பம் அளவடிக் கண்ணேயே கொள்ளப்படும். இயைபுத்தொடையின்கண் இறுதிச்சீர் முதலாகக் கொண்டு இணை, பொழிப்பு முதலான தொடைவிகற்பம் காண்டல் வேண்டும்; அடி யியைபும் காணப்படும். எ-டு : ‘மாயோள் கூந்தல் குரலும் நல்ல கூந்தலின் வேய்ந்த மலரும் நல்ல’ என அடி இயைபுத் தொடையும் ‘மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே’ என ஓரடிக்கண்ணேயே இணைஇயைபுத்தொடையும் வந்தவாறு. (யா. க. 40 உரை) இயைபுத்தொடை எழுத்தோ சொல்லோ ஒன்றி வரப் பெறும் (சாமி. 154) இயைபுத்தொடை எழுத்தோ அசையோ ஒன்றிவரப்பெறும் (மு. வீ. யாப்பு. 25) (யா. வி. 40 உரை) இயைபுத்தொடை ஏனைய தொடையுடன் இணைதல் - இயைபுத்தொடை தனித்தும், மோனை எதுகை முரண் அள பெடை இவற்றுள் ஒன்றுடனோ பலவற்றுடனோ இணைந் தும் வரும். தனித்துவரும் இயைபுத் தொடை செவ்வியைபுத் தொடை எனவும், மோனையுடன் கலந்து வருவது மோனை இயைபு எனவும், எதுகையுடன் கலந்துவருவது எதுகை இயைபு எனவும், அளபெடையுடன் கலந்துவருவது அளபெடை இயைபு எனவும், பலதொடைகளுடன் கலந்து வருவது மயக்கு இயைபு எனவும் கூறப்படும். எடுத்துக்காட்டு அவ்வத் தலைப்புள் காண்க. (யா. க. 40 உரை) இயைபுத்தொடையின் இலக்கணம் - இரண்டடியினும் பொருள்இயைபு இன்றி எழுத்தாவது அசையாவது சொல்லாவது ஈற்றிலே பொருந்தத் தொடுப் பது அடி இயைபுத்தொடைக்கு இலக்கணம். (தொ. செய். 96 பேரா., நச்.) சீர்களில் இந்நிலை காண்பது சீர் இயைபுத்தொடை. இயைபுத் தொடை அடியீற்றுச்சீரிலிருந்தே விகற்பங்களுக்குக் கணக்கிடப்படும். ஓரெழுத்து இறுதிக்கண் ஒப்பினும் இயைபாம். (தொ. செய். 92 இள.) ‘இயைபுத் தொடை’ காண்க. இயைபுத்தொடை விகற்பம் - இணை இயைபு, பொழிப்பு இயைபு, ஓரூஉ இயைபு, கூழை இயைபு, மேற்கதுவாய் இயைபு, கீழ்க்கதுவாய் இயைபு, முற்று இயைபு என்பன. அவற்றைத் தனித்தனித் தலைப்புள் காண்க. (யா.க. 40 உரை) இயைபு வண்ணம் - இடையெழுத்து மிகுந்து வருவதாகிய வண்ணமாம் எ-டு : ‘அரவி னதிர வுரீஇய வரகுகதிரின்’ இவ்வடியில் இடையெழுத்து மிக்கு வருமாறு காண்க. (தொ. செய். 218 பேரா.) இரட்டைத் தொடை - நாற்சீரடியால் ஓரடி முடியும் அளவும் ஒருசீரே நடப்பது. ஈற்றுச்சீர் ஒன்று ஓர் எழுத்துக் குறைந்து வரினும் ஒக்கும். எ-டு : ‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும் விளக்கினிற் சீறெரி ஒக்குமே ஒக்கும் குளக்கொட்டிப் பூவின் நிறம்’ பொருள் வேறுபடினும் சொல் வேறுபடுதல் கூடாது. எ-டு : ‘ஓடையே ஓடையே ஓடையே ஓடையே கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும் மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும் கோடலங் கொல்லைப் புனத்தும் கொடுங்குழாய் நாடி உணர்வார்ப் பெறின்.’ ஓடை - ஓடைக் கொடி, ஒருமரம், யானையின் நெற்றிப் பட்டம், நீரோடை என்ற வேறு பொருளில் வந்தது. (நிரனிறையாகப் பொருள் கொள்க.) ஓரடி ஒரு முற்றெதுகையாய் மற்றையடி மற்றொரு முற்றெ துகையாய் வரின், அத்தொடையினை, ‘இருமுற்றிரட்டை’ என்ப. ஒரு சாராரால் நிரல்நிறையும் இரட்டைத் தொடைப் பாற் படுத்து வழங்கப்படும். (யா. க. 51 உரை) இரட்டைத்தொடை வகைகள் - ஒருபொருள் இரட்டை, பலபொருள் இரட்டை, ஒருமுற்றி ரட்டை, இருமுற்றிரட்டை என்பன. (யா. க. 51 உரை) இரட்டை விருத்தம் - பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். (வீ. சோ. 109 உரை) இரண்டடி எதுகை - பல அடிகளையுடைய பாடலில் இவ்விரண்டடிகள் தனித் தனியே எதுகைத்தொடை அமைய வருமாயின், அவ் வெதுகை இரண்டடி எதுகையாம். எ-டு : ‘உலக மூன்றும் ஒருங்குடன் ஒத்துமாண் திலக மாய திறலறி வன்னடி வழுவில் நெஞ்சொடு வாலிதின் ஆற்றவும் தொழுவல் தொல்வினை நீங்குக என்றியான்’ (வளை.) உலகம், திலகம் வழுவில், தொழுவல் னூ இரண்டடி எதுகை (யா. க. 37 உரை) இரண்டடி மொழிமாற்று - ‘அடி மொழிமாற்று’க் காண்க. இரண்டடி மோனை - பல அடிகளையுடைய பாடலில் இவ்விரண்டடிகள் தனித் தனியே மோனைத்தொடைபட அமையுமாயின் அம் மோனை இரண்டடி மோனையாம். எ-டு : ‘ஆகங் கண்டகத் தாலற்ற ஆடவர் ஆகங் கண்டகத் தாலற்ற அன்பினர் பாகங் கொண்டு பயோதரம் சேர்த்தினார் பாகங் கொண்டு பயோதரம் நண்ணினார்.’ ஆகங், ஆகங் பாகங், பாகங் னூ இரண்டடி மோனை. (யா. க. 37 உரை) இரண்டாமடி அளபெடைத்தொடை பெற்ற நேரிசை வெண்பா - எ-டு : ‘தாஅய்த்தாஅய்ச் செல்லும் தளர்நடைப் புன்சிறார் போஒய்ப்போஒய்ப் பூசல் இடச்செய்து - போஒய்ப்போஒய் நிற்குமோ நீடு நெடும்புதவம், தானணைந்து பொற்குமோ என்னாது போந்து’ இப்பாடலின் (முதலடி முதற்சீரோடு) இரண்டாமடி முதற் சீரும் நான்காம் சீரும் ஒரூஉத் தொடையாய் அளபெடை பெற்று உள்ளமையால், அளபெடைத் தொடையால் வந்த நேரிசை வெண்பாவாம். (யா. க. 60 உரை) இரண்டாமடி ஒரூஉஎதுகை பெற்ற நேரிசை வெண்பா - ‘சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோ கார்மாலை கண்கூடும் போது’ இப்பாடலின் இரண்டாம் அடியில் முதற்சீர் ‘முலை விலங் கிற்று’ நான்காம்சீர் ‘மலைவிலங்கு’ ஆதலின், இவ்விரண் டாமடி ஒரூஉஎதுகைத்தொடை பெற்றதாம். இவ்வொரூஉ எதுகையே நேரிசைவெண்பாவின் இரண்டாமடியில் நிகழும். (யா. க. 60 உரை) இரண்டாமடி ஒரூஉ மோனைத்தொடை பெற்ற நேரிசை வெண்பா - எ-டு : ‘வஞ்சியேன் என்றவன்தன் ஊருரைத்தான்; யானுமவன் வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்; - வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்; வஞ்சியாய் வஞ்சியார் கோ.’ இப்பாடலின் இரண்டாமடியின் முதற்சீரும் நான்காம் சீரும் ‘வஞ்சியான்’ என்றே வந்தமை ஒரூஉ மோனைத் தொடை யாம். (யா. க. 60 உரை) இரண்டாமடி கீழ்க்கதுவாய்த்தொடை பெற்ற நேரிசை வெண்பா எ-டு : ‘எற்றே பலியிரக்கும் இட்டால் அதுஏலான் நெற்றிமேல் ஒற்றைக்கண் நீறாடி - முற்றத்துப் பொற்றொடிப்பந் தாடிப் பொடியாடித் தீயாடிக் கற்றாடும் நம்மேற் கழறு.’ இப்பாடலில் இரண்டாமடி 1, 2, 4ஆம் சீர்களில் எதுகை விகற்பம் பெற்றமையால் கீழ்க்கதுவாய்த் தொடை வந்தவாறு. (யா. க. 60 உரை) இரண்டாமடி முரண்தொடை பெற்ற நேரிசை வெண்பா - எ-டு : ‘கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை இடையாயார் தெங்கின் அனையர் - தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே; தொன்மை யுடையார் தொடர்பு.’ (நாலடி. 216) இரண்டாமடி இடையாயார் தலையாயார் என முதற்சீரும் நான்காம் சீரும் ஒரூஉ முரண்தொடை பெற்றன. (யா. க. 60 உரை) இரண்டாமடி முற்றுத்தொடை பெற்ற நேரிசை வெண்பா - எ-டு : ‘பல்வளையார் கூடிப் பகர்வதூஉம் பண்புணர்ந்த தொல்லவையார் எல்லாரும் சொல்வதூஉம் - மெல்லிணர்ப் பூந்தாம நீள்முடியான் பூழியர்கோன் தாழ்தடக்கைத் தேந்தாம வேலான் திறம்.’ இப்பாடல், இரண்டாமடி நான்கு சீர்களும் முற்றெதுகை யாய் வந்தமையின் முற்றுத்தொடை பெற்ற நேரிசை வெண்பாவாம். (தொடை - எதுகை) (யா. க. 60 உரை) இரண்டாமடி மேற்கதுவாய்த் தொடைபெற்ற நேரிசைவெண்பா - எ-டு : ‘எல்லைநீர் ஞாலம் முதலாய ஏழுலகும் வல்லனாய் முன்னளந்தான் அல்லனே - தொல்லமரை வேட்டானை வீய வியன்புலியை வெஞ்சமத்து வாட்டானைக் கூற்றிழந்த மால்’ இப்பாடலின் இரண்டாமடி 1, 3, 4ஆம் சீர்களில் எதுகை விகற்பம் பெற்றமையால் மேற்கதுவாய்த் தொடை வந்தவாறு. (யா. க. 60 உரை) இரணத்தொடை - முரண்தொடை அது காண்க. (யா. கா. 42) இருகுறள் நேரிசை வெண்பா - நேரிசை வெண்பா வகை. இரண்டு குறள் வெண்பாவாய், நடுவு முதல் தொடைக்கேற்ற தனிச்சீரால் அடி நிரம்பி, செப்ப லோசை வழுவாது, முதல் இரண்டடியும் ஒரு விகற்பமாய்க் கடையிரண்டடியும் மற்றொரு விகற்பமாய் வரினும், நான்கடியும் ஒரே விகற்பமாய் வரினும் இருகுறள் நேரிசை வெண்பா எனப்படும். எ-டு : ‘தடமண்டு தாமரையின் தாதா டலவன் இடமண்டிச் செல்வதனைக் கண்டு - பெடைஞெண்டு பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந்(து) ஊழி நடாயினான் ஊர்.’ இதன்கண், ‘பெடைஞெண்டு’ என்பது தனிச்சீராய் அடி நிரப்ப வந்தவாறு. (யா. கா. 24) இருதொடை - அடியிரண்டு இயைந்தவழித் தொடை அமைதலின், இரு தொடை அமைய மூவடி வேண்டுதலின், இருதொடை என்பது மூன்றடிப் பாவினைக் குறிக்கும். (யா. க. 59 உரை) இருபத்திரண்டுதொடை - மோனை 2. எதுகை 8. முரண் 5 இயைபு 1. பொழிப்பு முதலியன 5. குறிப்புத்தொடை 1. ஆக 22. மோனை 2 : அடிமோனை, கிளைமோனை எதுகை 8 : இரண்டாம் எழுத்து ஒன்றியது, மூன்றாம் எழுத்து ஒன்றியது, சீர் முழுதும் ஒன்றியது, கிளையெதுகை, வன்பால் எதுகை, மென்பால் எதுகை, இடைப்பால் எதுகை, உயிர்ப்பால் எதுகை. முரண் 5 : சொல்லும் சொல்லும் முரணுதலும், பொருளும் பொருளும் முரணுதலும், சொல்லும் பொரு ளும் சொல்லொடு முரணுதலும், சொல்லும் பொருளும் பொருளொடு முரணுதலும், சொல் லும் பொருளும் சொல்லொடும் பொருளொ டும் முரணுதலும். இயைபு 1 : உட்பிரிவில்லை பொழிப்பு முதலிய 5 : பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை, இரட் டைத் தொடை, நிரல்நிறை என்பன. குறிப்பு : 1. உட்பிரிவில்லை. ஆகத் தொடை 22 ஆம். (யா. க. 49 உரை) இருபுறவசை - இருபுறவசையாவது வாழ்த்துவது போல வைதல். எ-டு : ‘படையொடு போகாது நின்றெறிந்தான் என்றும் கொடையொடு நல்லார்கட் டாழ்ந்தான் - படையொடு பாடி வழங்கும் தெருவெல்லாம் தான் சென்று கோடி வழங்கு மகன்’ இதன்கண், பெண்டிர்க்குக் கொடையும் வீரர்க்குப் புத்தாடை யும் வழங்கும் கொடையாளன் என்று வாழ்த்துவது போல, போர்க்களத்தே போரிடச்செல்லும் ஆற்றலின்றிப் பாடி வீட்டில் தங்கி வீரர்க்கு ஆடை வழங்குவதிலும் மகளிருடன் வைகுவதிலும் காலங்கழிக்கும் வீரமிலி என்று குறிப்பாக வைதவாறு. (யா. வி.பக். 551) இருபுற வாழ்த்து - இருபுற வாழ்த்தாவது வைவது போல வாழ்த்தல். எ-டு : ‘பண்டும் ஒருகால்தன் பைந்தொடியைக் கோட்பட்டு வெங்கடம் வில்லேற்றிக் கொண்டுழந்தான் - தென்களந்தைப் பூமான் திருமகளுக் கின்னும் புலம்புமால் வாமான்தேர் வையையார் கோ’ இதன்கண், பண்டு இராமனாக அவதரித்து வில்வீரம் காட்டிய திருமாலே இன்று பாண்டியனாகத் தோன்றித் தென்களந்தைச் செல்வமாகிய திருமகளை அடைய முயல் கிறான் - என்பது குறிப்பாகப் பெறப்படுதலின், வைவது போன்ற வாழ்த்துப் புலப்பட்டது. முன்பு சீதைக்காகப் புலம்பியவன் இப்பொழுது தென்களந்தை மன்னனுடைய திருமகளுக்காகப் புலம்புகிறான் என்ற வெளிப்படை வசை யிலே மேல் குறித்த குறிப்பு வாழ்த்து அமைந்தமை காண்க. (யா. வி. பக். 551) இரு முதல் நிரல்நிறை - இரண்டு தொகுப்புக்களில் முற்பட்டவற்றையே கூறி ஏனையவற்றை உணரவைப்பது இது. எ-டு : ‘வெண்பா முதலா வேதியர் ஆதியா மண்பால் வகுத்த வருணமாம் - ஒண்பா இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல் மனந்தட்பக் கற்றார் மகிழ்ந்து’ வெண்பா முதலா, வேதியர் ஆதியா - என இருதொகுப் புக்களின் முதற்பெயரை மாத்திரம் சுட்டி ஏனையவற்றை மனம் கொள்ள வைத்தமை இருமுதல் நிரல்நிறையாம். வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனக் கொள்க. (யா.வி.பக். 385) இருமுற்று இரட்டை - எ-டு : ‘அடியியற் கொடியன மடிபுனம் விடியல் மந்தி தந்த முந்து செந்தினை உறுப்பார்ப் பருத்தும் நாடனொடு சிறிதால் அம்ம நம்மிடைத் தொடர்பே’ ஓரடி ஒரு முற்றெதுகையாய், மற்றையடி மற்றொரு முற்றெது கையாய்வரின், அவற்றின் தொடை இருமுற்றிரட்டை எனப்படும். இப்பாடற்கண் (முதல் இரண்டடிகளில்) இரு முற்றிரட்டை வந்தவாறு. (யா. க. 51 உரை) இருவகை அடியும் தொடுத்த அடிமோனை - ‘யாண்டும் காணேன் மாண்டக் கோனை யானுமோர் ஆடுகள மகளே என்கை’ (குறுந். 31) முதலடி கட்டளை அடி; ஏனைய அடி எழுத்தொவ்வா மையால் பிற அடி. இவ்விருவகையான (ஆசிரியப்பாவில் நிகழும்) அடிகளின் முதற்சீர்களில் முதல்எழுத்து ‘யா’ என ஓரெழுத்தே வந்தமை யால் அடிமோனை வந்தவாறு. (தொ.செய். 92 நச்.) இருவகை வெண்டளைக்கும் எடுத்துக்காட்டு - ‘முனிவாள் - மலைவிலங்கு தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோ கார்மாலை கண்கூடும் போது’ (தண்டி. 16 மேற்.) தார்மாலை மார்ப : காய்முன் நேர் - சிறப்பில்லா வெண்சீர் வெண்டளை. கார்மாலை கண்கூடும் : காய் முன் நேர் - சிறப்புடைய வெண்சீர் வெண்டளை. மார்ப தனிமை : மா முன் நிரை - சிறப்புடைய இயற்சீர் வெண்டளை. முனிவாள் மலைவிலங்கு : மாமுன் நிரை - இயற்சீர் முன் வெண்சீர் ஆதலின் சிறப்பில்லா இயற்சீர் வெண்டளை. (யா. க. 18 உரை) இருவிகற்ப இன்னிசை வெண்பா - எ-டு : ‘வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை அளந்தன போகம் அவரவர் ஆற்றான் விளங்காய் திரட்டினார் இல்லை - களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல்’ (நாலடி. 103) இஃது இரண்டாமடி இறுதியில் தனிச்சீரின்றி மூன்றாமடி இறுதிக்கண் தனிச்சீர் பெற்று, இருவிகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா. (யா. க. 61 உரை) இருவிகற்ப ஈராசிடை நேரிசை வெண்பா - முதல் ஈரடி ஓரெதுகையாய்ப் பின்னீரடி மற்றோர் எதுகை யாய், முதற் குறட்பாவின் ஈற்றசைச்சீர் இரண்டாமடியின் நான்காம் சீரொடு பொருந்துதல் பொருட்டு இடையே இரண்டு அசைகள் ஆசாக வருமாறு அமையும் நேரிசை வெண்பாவகை. எ-டு : ‘வண்மை மதம்பொழிந்து மாற்றார் திறம்வாடத் திண்மை பொழிந்து திகழும்போன்ம் - ஒண்மைசால் நற்சிறைவண் டார்க்கும் நளிநீர் வயற்பம்பைக் கற்சிறை என்னும் களிறு.’ இதன்கண், முதல் ஈரடி ஓரெதுகையும், பின் ஈரடி மற்றோர் எதுகையும் பெற்று வந்துள. இரண்டாமடியின் மூன்றாம் சீர் ‘திகழ்’ என்பதனோடு ‘உம், போன்ம்’ என்ற ஈரசைகள் ஆசாக வந்தமையத் ‘திகழும்போன்ம்’ என்றாயிற்று. (யா. க. 60 உரை) இருவிகற்ப ஓர் ஆசிடை நேரிசை வெண்பா - முன்னிரண்டடியும், பின்னிரண்டு அடியுமாக நான்கடியும் இரண்டு அடி யெதுகை பெற்று, இரண்டாமடியின் மூன்றாம் சீர் குறள்வெண்பாவின் ஈற்றுச்சீர் போல இராது அச்சீர் நான்காம் சீரோடு இணைக்கப்படுதற்கேற்ப ஓரசை இடையே இணைந்து வருவது இந்நேரிசை வெண்பா வகையாம். ‘சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு தார்மாலை மார்ப! தனிமை பொறுக்குமோ, கார்மாலை கண்கூடும் போழ்து?’ (தண்டி. 16 மேற்) இப்பாடல், இரண்டா மடிக்கண் மூன்றாம் சீர், அது குறள் வெண்பாவாயின், ‘முனி’ என்று ஓரசையான் முடிய வேண்டி யதனை ‘முனிவாள்’ என ஓரசை கூட்டி நீட்டப்பட்டது, ஓராசு இடையிட்ட நேரிசை வெண்பா ஆதற்கு ஏற்றது. இதன் நான்கடிகளும் ஈரடியெதுகையே பெற்றமையின் இரு விகற்பம். (யா. க. 60 உரை) இருவிகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா - முதல் இரண்டடிகள் ஓரெதுகையாய் இரண்டாமடியின் இறுதியில் தனிச்சீர் பெற்றுப் பின் மூன்றாமடி அமைய இயற்றப்படும் சிந்தியல் வெண்பா. எ-டு : ‘நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே - பொற்றேரான் பாலைநல் வாயின் மகள்’ முதல் ஈரடிகளும் ஓரெதுகை, மூன்றாமடி தனிவிகற்பம் ஆதலின், இருவிகற்பம் உடையது ஆயிற்று. (யா. க. 59 உரை) இரு விகற்ப நேரிசை வெண்பா - முதல் இரண்டடி ஓரெதுகையாகவும், கடை இரண்டடி மற்றோர் எதுகையாகவும் வரும் நான்கடி வெண்பா; இரண்டாமடியின் இறுதிச்சீர் முதற்சீருடன் ஒத்த எதுகை பெற்றுத் தனிச்சீராக வரப்பெறும். ‘சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோ கார்மாலை கண்கூடும் போது.’ (தண்டி. 16 மேற்.) இரண்டாமடி தனிச்சீர் பெற்று, முதலீரடி ஓரெதுகை யாகவும் பின்னீரடி மற்றோர் எதுகையாகவும் இருவிகற்பமாக இந்நேரிசை வெண்பா வந்தவாறு. (யா. வி. 60 உரை) இலக்கணக் கலிப்பா - 13 எழுத்தடிக் கலிப்பா - ‘அன்றுதான் குடையாக வின்றுநனி நீர்சோரக், குன்றெடுத்து மழைகாத்த கோலப்பூண் மார்பினோய்!’ 14 எழுத்தடிக் கலிப்பா - ‘மாசற்ற மதிபோல வனப்புற்ற முகங் கண்டு, தூசற்ற துகில்மருங்கிற் றுடிநடு வெனத் தோன்றி’ 15 எழுத்தடிக் கலிப்பா - ‘ஊனுடை உழுவையின் உதிரந்தோய் உகிர் போல, வேனிலை எதிர்கொண்டு முருக் கெல்லாம் அரும்பினவே’ 16 எழுத்தடிக் கலிப்பா - ‘வாயாநோய் மருந்தாகி வருந்தியநாள் இதுவன்றோ.’ 17 எழுத்தடிக் கலிப்பா - ‘மாவலிசேர் வரைமார்பின் இகல் வெய்யோன் மனமகிழ’ 18 எழுத்தடிக் கலிப்பா - ‘அறனின்றமிழ் கையொழியான் அவலங் கொண் டதுநினையான்.’ 19 எழுத்தடிக் கலிப்பா - ‘உகுபனிகண் உறைப்பவுநீ ஒழிவொல் -லாய் செலவலித்தல்’ 20 எழுத்தடிக் கலிப்பா - ‘நிலங்கிளையா நெடிதுயிரா நிறை தளரா நிரைவளையாள், கலந்திருந்தார் கதுப்புளரார் கயல்கடிந்த கருந் தடங்கண்.’ 13, 14 எழுத்தடி அளவடி. 15, 16, 17 எழுத்தடி நெடிலடி. 18, 19, 20 எழுத்தடி கழிநெடிலடி. இவையெல்லாம் குற்றிகர குற்றுகரங்களும் ஒற்றும் ஆய்தமும் நீக்கி எழுத்தெண்ண வேண்டும். எனவே எழுத்தெண்ணிப் பாடப்படும் கட்டளைக் கலிப்பா விற்கு அளவு 13 எழுத்துமுதல் 20 எழுத்தின்காறும் உள்ள எட்டு நிலங்களாம். இலக்கணக் கலிப்பா அல்லன மிக்கும் குறைந்தும் வரும். (யா. வி. பக். 499 - 500) இழுக்கா நடையது யாப்பு - குற்றமின்றி நடைபெறும் யாப்பெனவே, அதன் உறுப்புக்களா கிய எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா என்ப வற்றின்கண் குற்றம் எதுவுமின்றி யாப்பு நிகழின், அதன்கண் அம்மை அழகு முதலிய வனப்புக்கள் புலப்படும் என்பது. அரசன், படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஏழுறுப்புக்கள் அரசியற்கு வழுவற அமைதல் வேண்டும்; நல்லுடற்கு இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் என்னும் ஏழு தாதுக்களும் வழுவற அமைதல் வேண்டும்; அவ்வாறே யாப்பிற்கு எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா என்னும் ஏழுறுப்பும் வழுவற அமைதல் வேண்டும் என்பது. (யா. க. 1. உரை) இழைபு நூல் வனப்பு எட்டனுள் ஒன்று. வல்லொற்றடுத்த வல்லெழுத் துப் பயிலாமல் இருசீரடிமுதல் எழுசீர் அடி அளவும் அவ்வைந்து அடிகளையும் ஒப்பித்து, நெட்டெழுத்துப் போல ஓசை தரும் மெல்லெழுத்தும் லகார னகாரங்களு முடைய சொற்களானே தெரிந்த மொழியான் கிளந்து ஓதல் வேண்டாமல் பொருள் புலப்படச் செய்வது இதன் இலக்கணம். ஒற்றும் குற்றுகரமும் குற்றியலிகரமும் ஆய்தமும் எழுத்தெண்ணப்படா. எ-டு : கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறைமார்க்கத்தன. (தொ. செய். 242 நச்.) ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது, ஆசிரியப்பா விற்கு ஓதப்பட்ட நால்எழுத்து ஆதியாக இருபது எழுத்தின் காறும் உயர்ந்த பதினேழ் நிலத்தும் ஐந்தடியும் முறையானே வரத்தொடுப்பது இழைபு என்னும் செய்யுளாம். (தொ. செய். 230 இள. உரை) எ-டு : ‘பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து - 4 எழுத்து தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து - 5 எழுத்து வண்டு சூழ விண்டு வீங்கி - 6 எழுத்து நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம் - 7 எழுத்து மணியேர் நுண்தோடு ஓங்கி மாலை - 9 எழுத்து நன்மணம் கமழும் பன்னெல் ஊர - 10 எழுத்து அமையேர் மென்தோள் ஆயரி நெடுங்கண் - 11 எழுத்து இணையீர் ஓதி ஏந்திள வளமுலை - 12 எழுத்து இறும்பமர் மலரிடை எழுந்த மாவின் - 13 எழுத்து நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல் - 14 எழுத்து அணிநடை அசைஇய அரியமை சிலம்பின் -15 எழுத்து மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் - 16 எழுத்து ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு - 17 எழுத்து நனிமுழவு முழங்கிய அணிநிலவு நெடுநகர் - 18 எழுத்து இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை - 19 எழுத்து கலனளவு கலனளவு நலனளவு நலனளவு - 20 எழுத்து பெருமணம் புணர்ந்தனை என்பஅஃ. தொருநீ மறைப்பின் ஒழிகுவ தன்றே.’ 4-6 குறளடி; 7-9 சிந்தடி; 10-14 அளவடி; 15-17 நெடிலடி; 18-20 கழிநெடிலடி. (தொ. பொ. செய். 234 இள.) இழைபு என்ற வனப்பின் இலக்கணம் - வல்லொற்றொடு புணர்ந்த சொற்களைத் தொடர்ந்தமைக் காமல் ஏனையெழுத்துக்கள் பயிலும் சொற்களான், நாற் சீரடிக்கண், எழுத்தளவையான் வரும் குறளடி முதலாகக் கழிநெடிலடியீறாக உள்ள ஐந்தடிகள் தம்முள் ஒத்து, எடுத்த லோசை மிக்க மொழிகளான் நடைபெறின் இழைபு என்னும் இலக்கணம் ஆங்கு இயைந்ததாகும். ஐந்தடி ஒப்பித்தலாவது, ஒருசெய்யுளின்கண் வரும் நாற் சீரடிகள் குறளடியாயின் ஓரடிக்கண் 4 எழுத்து முதல் 6 எழுத்து வரையே வருதலும், கழிநெடிலாயின் 18 எழுத்து முதல் 20 எழுத்து வரையே வருதலும் ஆம். ஏனைய அடி களும் தமக்குரிய எழுத்தெல்லைக்கண் வரப்பெறும். (தொ. செய். 241 ச. பால.) இறுதி நில்லாமை - இறுதலொடு நில்லாமை என்பது பொருள். வஞ்சிப்பாவின் அடியில் சீர்கள் இரண்டே. முதற்சீர் வருஞ்சீரொடு தொட ருங்கால் இறுதற்றொழில் பெறுவது முதற்சீர் ஆதலின் நேரீற்றியற்சீர் கட்டளை வஞ்சியடியில் முதற்சீராக வாரா; வரின் தூங்கல் ஓசை நிகழாது. எ-டு : ‘கொற்றக் கொடியுயரிய’ என்ற நேரீற்றியற்சீர் முதற்கண் நின்று தூங்காதாயிற்று. ‘மேதக மிகப்பொலிந்த ஓங்குநிலை வயக்களிறு’ (மதுரைக் 14, 15) என்ற நிரையீற்றியற்சீர் முதற்கண் தூங்கின. ‘புன்காற் புணர்மருதின் தேன்தாட் டீங்கரும்பின்’ என்ற நேரீற்றியற்சீர்கள் நலிந்து கூறியவழியே முதற்கண் தூங்கின. (தொ. செய். 26 நச்.) அடியீற்றின்கண் வஞ்சிப்பாவில் நேரீற்று இயற்சீர் நில்லாது முதற்கண்ணேயே நிற்கும். (25 இள.) இறுதிநிலை அளபெடைத்தொடை - முதல் நின்ற சீரின் இறுதி எழுத்து அளபெடுத்து ஒன்றிவரத் தொடுப்பது. எ-டு : ‘கடாஅக் களிற்றின்மேல் கட்படா மாதர் படாஅ முலைமேற் றுகில்’ (குறள். 1087) (யா. க. 41 உரை) இறுதி நிலை உரைத்தல் - சுரிதகமானது இடைநிலைபாட்டின் பொருளை முடிவு கட்டி நிற்றல். இறுதிநிலை ‘நுனிவிரல்’ என்றாற்போல் ‘நிலையிறுதி’ என மாற்றிக் கொள்ளப்பட்டு, இடைநிலைப்பாட்டின் இறு தியைக் கூறும் எனவே, அவற்றின் பொருளினை முடித்து நிற்கும் என்பதாம். ‘நிலை இறுதி’ என்பது இடைநிலைப்பாட் டினை. (தொ. செய். 137 நச்.) இறுதிநிலை ஒற்றளபெடைத் தொடை - ஒற்றளபெடை முதல் நின்ற சீரின் இறுதியில் வருவது. எ-டு : உரன்ன் அமைந்த உணர்வினா ராயின் அரண்ண் அவர்திறத் தில். (யா. க. 41 உரை) இன்பா நேரடி - கட்டளை ஆசிரியப்பாவான் வரும் அளவடி. (தொ. செய். 23 நச்.) இன்பா நேரடிக்கு ஒருங்கு நிலையாதன - வெண்பாஉரிச்சீரும் ஆசிரியஉரிச்சீரும் ஆசிரியப்பாவின் ஓரடிக்கண் ஒருங்கு நிற்றலில்லை. இயலசைகளான் வரும் சீர்களை ‘இன்சீர்’ என்றாற் போல, இயற்சீர்களான்வரும் ஆசிரியத்தினை ‘இன்பா’ என்றல் தொல்லோர் மரபு. ‘ஒருங்கு நிற்றலில்லை’ எனவே, இயற்சீர்களிடையிடையே தனித்தனியே நிற்கப் பெறும் என்றவாறு. ஈண்டு ஆசிரிய அடியாகிய நேரடி என்பது 10 முதல் 14 எழுத்து வரையுள்ள அடிகளை. (தொ. செய். 23 ச. பால.) இன்னிசை - இன்னிசை வெண்பா. இஃது ஒருவிகற்பமாகித் தனிச்சீர் இன்றியும், இருவிகற்பமாகித் தனிச்சீர் இன்றியும், தனிச்சீர் பெற்றுப் பல விகற்பமாகியும், தனிச்சீர் இன்றிப் பல விகற்ப மாகியும், அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்றும், நேரிசை வெண்பாவின் சிறிது வேறுபட்டு நான்கடியாய் இவ்வாறு பல வகையான் நிகழும். 1. ஒருவிகற்ப இன்னிசை வெண்பா எ-டு : ‘துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்.’ (நாலடி. 2) இஃது இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சீர் இன்றி வந்தது. 2. இருவிகற்ப இன்னிசை வெண்பா எ-டு : ‘வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை அளந்தன போகம் அவரவர் ஆற்றான் விளங்காய் திரட்டினார் இல்லைக் - களங்கனியைக் காரெனச் செய்தாரு மில்.’ (நாலடி. 103) இஃது இரண்டாமடியின் இறுதியில் தனிச்சீர் இன்றி ஆனால் மூன்றாம் அடி இறுதியில் அது பெற்று வந்த இன்னிசை வெண்பா. 3. பல விகற்ப இன்னிசை வெண்பா எ-டு : ‘தலைக்கண் தலைஐந்தும் காணேன் கடைக்கணேல் என்னா இருவரும் ஈங்கில்லை - பொன்னோடை ஆழியாய்! நன்மை அறிந்தேன் அலைகடல்சூழ் ஏழியான் இக்கிடந்த ஏறு.’ இஃது இரண்டாமடி இறுதியில் ஒரூஉஎதுகை பெற்று மூன்று விகற்பத்தால் வந்தது. எ-டு : ‘தேனார் மலர்க்கூந்தல் தேமொழியாய்! - மேனாள் பொருளைப் பொருளென்று நம்மறந்து போனார் உருடேர் மணியோசை யோடும் - இருடூங்க வந்த திதுவோ மழை.’ இஃது இரண்டாமடி இறுதியில் தனிச்சீர் பெறாது முதலடி இறுதியில் ஒரூஉஎதுகை பெற்று மூன்றாம் அடி இறுதியிலும் அவ்வெதுகை பெற்று மூன்று விகற்பத்தான் வந்தது. எ-டு : ‘கடற்குட்டம் போழ்வர் கலவர் - படைக்குட்டம் பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோமில் தவக்குட்டம் தானுடையான் நீந்தும் - அவைக்குட்டம் கற்றான் கடந்து விடும்!’ (நான்மணி. 16) இஃது இரண்டாமடி இறுதியில் தனிச்சீர் பெறாது முதலாம் மூன்றாமடிக்கண் இறுதிச்சீர் ஒரூஉஎதுகை பெற்று நான்கு விகற்பத்தால் வந்தது; இரண்டாமடி இறுதிச்சீரும் ஒரூஉ எதுகை பெற்ற தெனினும் இழுக்காது. (யகர ஆசு இடை யிட்டது.) அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்ற இன்னிசை வெண்பா எ-டு : ‘மழையின்றி மாநிலத்தார்க் கில்லை; - மழையும் தவமிலார் இல்வழி இல்லை; - தவமும் அரசிலார் இல்வழி இல்லை; - அரசனும் இல்வாழ்வார் இல்வழி இல்.’ (நான்மணி. 46) இஃது அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்றுப் பல விகற்பத்தால் வந்தது. ‘அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார் தெருமருந்து தேய்வர் ஒருமா சுறின்’ (நாலடி 151) இஃது இரண்டாமடியின் இறுதியில் தனிச்சீர் பெற்று மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. ‘உறுபுனல் தந்துல கூட்டி - அறுமிடத்தும் கல்லுற் றுழியூறும் ஆறேபோல் - செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் - சிலர்க்காற்றிச் செய்வர் செயற்பா லவை.’ (நாலடி. 185) இஃது ஈற்றடி ஒழித்து ஏனையடிகள் ஒரூஉத்தொடை பெற்று வந்தது ஸஇவற்றைத் தனிச்சொல் என்னும் வீரசோழிய உரை கா. 114] (யா. க. 61 உரை, யா. கா. 25 உரை) இ இலதை - எழுத்து அல்லாத இசையுள் இலதை ஒன்று. அஃதாவது கோழையை வெளிப்படுத்தல். இவ்வோசை செய்யுளில் வந்தால் செய்யுள் நடை அழியாமல் அசைசீர் முதலியன பிழையாமை கொண்டு வழங்கப்படும்.(யா.க. 95 உரை பக். 396) இன்னிசைச் சிந்தியல் வெண்பா - மூன்றடியாய் இன்னிசை வெண்பாப் போலவே தனிச்சீர் இன்றி ஒருவிகற்ப மாகியும் இருவிகற்ப மாகியும் பல விகற்ப மாகியும் வரும் வெண்பா. ‘நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப் பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டிர் அடி’ (யா. கா. 25 மேற்.) ‘உம்பர் பெருமாற்(கு) ஒளிர்சடிலம் பொன்பூத்த தம்பொற் புயம்வேட்டேம் தார்முலையும் பொன்பூத்த பொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்து’ (சி.செ. கோ. 27) ‘முல்லை முறுவலித்துக் காட்டின; - மெல்லவே சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற; - போயினார் திண்டேர் வரவுரைக்கும் கார்’ (யா.கா. 25 மேற்.) இவை மூன்றும் முறையே ஒன்று இரண்டு பல எனும் விகற்பத் தால் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா. (இரண்டாம் சிந்தியல் வெண்பாவினை மெல்லின அடியெதுகை எனக் கொள்ளாது இருவிகற்பமாகக் கொள்க. மூன்றாவதன்கண், முதலடி இறுதிச் சீரும் இரண்டாமடி இறுதிச்சீரும் ஒரூஉ எதுகை பெற்றன.) இன்னிசை வெண்பா ஐவகை - ‘இன்னிசை’ காண்க. இன்னிசை வெண்பா : காரணக்குறி - இனிதாய் இயலும் ஓசையும் சொல்லும் உண்டாய்ப் போய்ப் பாடு (எங்கும் பரவிப் பொருத்தம்) உடைத்தாகலின் இன்னிசை வெண்பா என்பதும் காரணப் பெயராம். (யா. க. 58 உரை) இன்னிசை வெண்பாவின் இனம் - நான்கடியான் வரும் வெண்டுறை. (வீ. சோ. 121 உரை) இன்னிசை வெள்ளை - இன்னிசை வெண்பா; வெள்ளை - வெண்பா (யா. கா. 14) இன்னிய நடை - இது செய்யுள் நடை இரண்டனுள் ஒன்று. தண்டகம் நீங்க லான ஏனைச் செய்யுள்களின் நடை இன்னிய நடை எனப்படும். (வீ. சோ. 147 உரை) இன்னியல் ஆசிரியப்பா - வேற்றுப்பாவின் அடிகள் விரவாத ஆசிரியப்பா இன்னியல் ஆசிரியப்பா எனப்படும். எ-டு : ‘போது சாந்தம் பொற்ப ஏந்தி ஆதி நாதற் சார்வோர் சோதி வானம் துன்னு வாரே’ இதன்கண், நேரொன்றாசிரியத் தளையான் வரும் ஆசிரியச் சீர்களே ஆசிரியஅடி அமைய வந்தவாறு. நிரை ஒன்று ஆரியத்தளையான் வரினும் அது. (யா. க. 70 உரை) இன்னியல் வஞ்சிப்பா - வஞ்சியடியைத் தவிர ஏனைய பாக்களின் அடிகள் விரவாமல் அமையும் வஞ்சிப்பா. எ-டு : ‘பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை மீன்திரிதர வளவயலிடைக் களவயின்மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும் மகிழும் மகிழ்தூங் கூரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே’ இதன்கண், ஒன்றிய வஞ்சித்தளையான் வரும் வஞ்சியுரிச் சீர்களே குறளடி வஞ்சிப்பா அமைய வந்தவாறு; இது இன்னியல் குறளடி வஞ்சிப்பா. (யா. க. 90 உரை) (முன்னிரண்டடிகளில் ஒன்றாத வஞ்சித்தளை வந்தது.) இனஎதுகை - வல்லின எதுகை, மெல்லின எதுகை, இடையின எதுகை என இனஎதுகை மூவகைப்படும். இனவகையான் எதுகை ஒன்றுவது இனஎதுகையாம். இதனைக் கடையாகு எதுகை யாக வேண்டுவர் யா.க. விருத்தியுரையாசிரியர். விளக்கம் தனித்தனித் தலைப்பில் காண்க. (யா. க. 37 உரை) இனஎழுத்துக்கள் - ஆ அ, ஈ இ, ஊ உ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ - என நெடிலுக்கு இனம் ஒத்த குறில் இனம். அ, ஆ, ஐ ஒள - ஓர் இனம் இ, ஈ, எ, ஏ - ஓர் இனம் உ, ஊ, ஒ, ஓ - ஓர் இனம் ஞ, ந - ஓர் இனம் ம, வ - ஓர் இனம் ச, த - ஓர் இனம் (யா. க. 53 உரை) இவை அனு எழுத்துக்கள் எனவும் கூறப்பெறும். இனக்குறள் வெண்பா - மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, என்னும் ஐந்து தொடையானும் வரும் குறள் வெண்பாக்களை இனக்குறள் வெண்பா என்பர். ‘சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு’ (குறள். 267) - மோனை ‘தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல்’ (குறள். 318) - எதுகை ‘இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்’ (குறள். 615) - முரண் ‘சுடிகை நுதல்மடவாள் சொல்லும் கரும்பு கதிர்வளைத் தோளும் கரும்பு’ - இயைபு ‘கடாஅக் களிற்றின்மேல் கட்படா மாதர் படாஅ முலைமேல் துகில்’ (குறள். 1087) அளபெடை (யா. க. 59 உரை) இனம் - ‘இன எழுத்துக்’ காண்க இனமோனை - இன எழுத்தால் வரும் மோனை. அது வல்லின மோனை மெல்லின மோனை, இடையின மோனை என மூவகைப் படும். ‘கயலேர் உண்கண் கலுழ நாளும் சுடர்புரை திருநுதல் பசலை பாய’ ‘ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின் நேயம் உந்தத் தொடர்ந்தனள் போகி’ ‘வேனில் உழந்த வறிதுயங் குடலின் யானை செல்லும் அருஞ்சுர நெடுவழி’ என முறையே காண்க. அடி முதற்கண் உயிரால் ஊரப்பட்ட மெய்யெழுத்துக்கள் இனவகையால் ஒன்றி வந்தவாறு. (யா. க. 37 உரை) இனமோனை வகைகள் - ‘இனமோனை’ காண்க ஈ ஈரசைச்சீர் மூவகைச்சீர்கள் - நேரசை நிரையசையாயுள்ளன இரண்டாய் ஒன்றினபோது ஈரசைச் சீராம் (நேர் நேர், நேர் நிரை; நிரை நிரை, நிரை நேர்) அவற்றின் ஈற்றசை நேரசையாகவும் (நேர் நேர் நேர், நேர் நிரை நேர், நிரை நிரை நேர், நிரை நேர் நேர்), நிரையசை யாகவும் (நேர் நேர் நிரை, நேர் நிரை நிரை, நிரை நிரை நிரை, நிரை நேர் நிரை) வரின் மூவசைச்சீராம். (வீ. சோ. 107) ஈரசை மூவசைச் சீர்களுக்கு உதாரணம் - கருவிளம், கூவிளம், தேமா, புளிமா என்னுமிவை முறையே நிரை நிரை, நேர் நிரை, நேர் நேர், நிரை நேர் என்னும் ஈரசைச் சீர்க்கு உதாரணமாம். கருவிளங்காய், கூவிளங்காய், தேமாங்காய், புளிமாங்காய் என்னுமிவையும், கருவிளங்கனி, கூவிளங்கனி, தேமாங்கனி, புளிமாங்கனி என்னுமிவையும் முறையே நிரை நிரை நேர், நேர் நிரை நேர், நேர் நேர் நேர், நிரை நேர் நேர்; நிரை நிரை நிரை, நேர் நிரை நிரை, நேர் நேர் நிரை, நிரை நேர் நிரை என்னும் மூவசைச்சீர்க்கு உதாரணமாம். இவற்றுள் வெண்சீர் நான்கனையும் இடைச்சீர் எனவும், வஞ்சிச்சீர் நான்கனையும் கடைச்சீர் எனவும் வீரசோழியம் குறிக்கிறது; ஈரசைச்சீராகிய ஆசிரியச்சீர் நான்கனையும் முதற்சீர் எனக் குறிக்கிறது. (வீ. சோ. 108) ஈரடிப்பா - இரண்டடிகளால் இயன்ற பாட்டு; அவை குறள்வெண்பா, வெண் செந்துறை, குறட்டாழிசை போல்வன. ஈரடிவெண்பா - குறள்வெண்பா; இஃது ஓரடி முக்கால் எனவும்படும்; அடியெதுகை பெற்று ஒருவிகற்பமாகவும், அது பெறாது இருவிகற்பமாகவும் வரும். எ-டு : ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.’ (குறள். 1) இஃது ஒரு விகற்பம் ‘ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு’ (குறள். 21) இஃது இரு விகற்பம். (யா .கா. 24) ஈரளபெடைகளும் மயங்குதல் - எ-டு : ‘தேஎந் தாஅழ் பூஉங் காஅ வளங்ங் கனிந்த மணிமன்றுள் விளங்ங் கொளியை உளங்கொளல் தவமே’ (சி. சொ. கோ. 42) முதலடி நாற்சீரும் உயிரளபெடை; ஏனைய அடியுள் முதற்சீர்கள் ஒற்றளபெடை. இவ்வாறு ஈரளபெடைகளும் ஒரு செய்யுட்கண்ணேயே மயங்கிவந்தன. (யா.வி.யுள் காட்டிய எடுத்துக்காட்டு ஏற்ப இல்லை.) (யா. க. 41 உரை) ஈராசிடை வெண்பா - இருகுறள் நேரிசை வெண்பாவுள், முதற்குறட் பாவினொடு தனிச்சீர் இடைவேறுபட்டு விட்டிசைப்பின், ஒற்றுமைப் படாத உலோகங்களை ஒற்றுமைப்படப் பற்றாசு இடையிட்டு விளக்கினாற் போல முதற்குறட்பாவின் இறுதிக்கண் ஒன்றும் இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப்பட்டு வருவது ஒருசார் ஆசிடை நேரிசை வெண்பா. இரண்டு அசை கூட்டி உச்சரிக்கப்படுவது ஈராசிடை நேரிசை வெண்பாவாம். எ-டு : ‘வஞ்சியேன் என்றவன்தன் ஊருரைத்தான்; யானுமவன் வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்- வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான் வஞ்சியாய் வஞ்சியார் கோ’ இதன்கண், முதற்குறட்பா இறுதிக்கண் ‘வாய்’ என்பத னொடு, நேர்ந் தேன் - என ஈரசை கூட்டி உச்சரிக்கப்படுதலால் இஃது ஈராசிடை நேரிசை வெண்பாவாயிற்று. (யா. கா. 24 உரை) ஈரெழுத்துச்சீர் - தேமா, ஞாயிறு, போதுபூ, போரேறு, மின்னு, வரகு என்பன. இவை நேர்நேர், நேர்நிரை, நேர்புநேர், நேர்நேர்பு, நேர்பு, நிரைபு ஆவன. எழுத்தெண்ணுங்கால், குற்றியலுகரம் எண்ணப்படாது முற்றியலுகரம் எண்ணப்படும் என்று கொள்ளும் பேராசிரி யர் நச்சினார்க்கினியர் முதலியோர் கருத்து, “இருவகை உகரமும் கூடி நேர்பு நிரைபு அசையாகும்” (செய். 4) என்று குறிப்பிடும் தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்று. (தொ. செய். 41 நச்.) உ உயர்ந்தோர் கிளவி - உயர்ந்த மக்களாகிய அகத்தியர் முதலாயினோர் கூறும் கூற்று. அக்கூற்று வேதநெறியோடு ஒத்தது. அவ்வுயர்ந்தோர் சொற்கள்வழி அமைதலே செய்யுட்கு இலக்கணமாம். (தொ. பொ. 217 நச்.) உச்சாடணை - ஓர் எழுத்துவகை; உக்கிர எழுத்து என்ற எழுத்துவகையில் முதலாவது. (யா.வி.பக். 578) உயர்ந்தோராவார் - திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்று எறிந்த முருக வேளும், ஆசிரியர் அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், நாரதரும், நிதியின் கிழவனும் முதலாய தலைச்சங்கப் புலவர் உயர்ந்தோர் ஆவர். (பா. வி. பக். 166) உயிர்இல் எழுத்து - உயிரெழுத்துக்கள் அல்லாத ஒற்றும் ஆய்தமும் குற்றியலுகர மும்; கட்டளையடிகட்கு எழுத்தெண்ணுமிடத்து இவை எண்ணப்படா. (தொ. செய். 44 நச்.) உயிர்இல் எழுத்து - தத்தம் ஓசை இனிது விளங்கத் தத்தம் தன்மையான் ஒலித்தல் தொழிலில்லாத எழுத்துக்கள். இவை யாப்பில் எழுத்துக் களாக எண்ணப்படுதலும் அலகிடப்படுதலும் பொருந்தா. (தொ. செய். 44 பேரா.) உயிர்எதுகை - இரண்டாம் எழுத்து ஒன்றாது இரண்டாமெழுத்தின் மேல் ஏறிய உயிர் ஒன்றி வருவது உயிர்எதுகையாம். (எதுகை யெனவே, சீர்களின் முதலெழுத்து அளவொத்து நிற்றல் வேண்டும் என்பது.) எ-டு : ‘துளியொடு மயங்கிய தூங்கிருள் நடுநாள் அணிகிளர் தாரோய் அருஞ்சுரம் நீந்தி’ (யா. கா. 43 உரை) இவ்வடிகளில் இரண்டாமெழுத்து ஒன்றாது, அம் மெய் களின் மேல் ஏறிய இகர உயிர் ஒன்றி வந்தது. உயிர்மிக்கு வருதல் - உயிரோசை மிகுந்து வருதல். எ-டு : ‘ஐயாவோ ஐயாவோ எய்யாயோ எய்யாயோ கையாயோ ஐயா களிறு.’ இச்செய்யுளில் ஐ, ஆ, ஓ என்னும் நெட்டுயிர்கள் மிக்கு வரப்பெற்றன; எகரக் குற்றுயிர் இருமுறையே வந்தது. (யா. க. 2 உரை) உயிர்மெய் மிக்கு வருதல் - பிற மெய் உயிர் இவற்றினும் உயிர்மெய் மிகுதியாக வரப் பெறுதல். எ-டு : ‘படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு.’ (குறள். 381) இதன்கண், டகரமெய் ஒருமுறையே வந்தது; உயிர் வரப் பெற்றிலது; உயிர்மெய்யெழுத்துக்களே மிகுதியும் வந்தன. (யா. க. 2 உரை) உரிஅசை - இயற்றிக்கொள்ளப்பட்டு இயலசையின் தொழில் செய்தற்கு உரியவாதலின் ‘உரியசை’ எனப்பட்டன. உரியசை என்பதும் ஆட்சியும் குணமும் காரணமாகப் பெற்ற பெயராம். நேரசையும் நிரையசையும் குற்றியலுகரத்துடனாவது முற்றிய லுகரத்துடனாவது ஒருசொல் விழுக்காடுபட இயைந்து வரின், நேரசையோடு இயைந்த குற்றுகரமும் நேரசையோடு இயைந்த முற்றுகரமும் ‘நேர்பு’ அசை எனப்படும். நிரையசை யோடு இயைந்த குற்றுகரமும் நிரையசையோடு இயைந்த முற்றுகரமும் ‘நிரைபு’ அசை எனப்படும். நேரின்பின் உகரம் வருதலின் நேர்பு, நிரையின் பின் உகரம் வருதலின் நிரைபு என்பன ஆட்சியும் குணமும் காரணமாகப் பெற்ற பெயர்களாம். தனிக்குற்றெழுத்தை அடுத்த உகரம் நேர்பு அசை ஆகாது குறலிணையாகிய நிரையசையேயாம். எ-டு : அது, தபு. ஆகவே, நேர்பு என்ற வாய்ப்பாட்டிற்கு உரியன. 1. குற்றொற்றை அடுத்த உகரம் - வண்டு, மின்னு. 2. நெடிலை அடுத்த உகரம் - நாகு, நாணு 3. நெட்டொற்றை அடுத்த உகரம் - காம்பு, தீர்வு. குற்றொற்று, தனிநெடில், நெட்டொற்று என்ற மூன்றன் பின்னும் இருவகை உகரமும் வந்தவாறு. இனி, நால்வகை நிரையசைப்பின்னும் குற்றுகரமோ முற்றுகரமோ வந்து நிரைபு அசையாம். 1. குறிலிணை அடுத்த உகரம் - வரகு, இரவு 2. குறில் நெடில் அடுத்த உகரம் - மலாடு, உலாவு 3. குறிலிணை ஒற்றினை அடுத்த உகரம் - குரங்கு, புணர்வு 4. குறில்நெடில்ஒற்றினை அடுத்த உகரம் - மலாட்டு, உராய்வு குறிலிணை, குறில்நெடில், குறிலிணைஒற்று, குறில்நெடில்ஒற்று என்ற நான்கன் பின்னும் இருவகை உகரமும் வந்தவாறு. (தொ. செய். 45 நச்.) உரிஅசைக்கண் வரும் ஒற்றுக்கள் - இயலசைக்கண் நிற்கும் ஒற்று இயல்பீறாயும் விதியீறாயும் நிற்கும். உரியசைக்கண் வரும் ஒற்று விதியீறாக அன்றி இயல்பீறாக நில்லாது. எ-டு : ‘நாணுத் தளையாக வைகி’ ‘கனவுக்கொல் நீகண் டது’ ‘சேற்றுக் கால் நீலம்’ ‘நெருப்புச் சினம் தணிந்த’ (‘களிற்றுக் கணம் பொருத’) இனி, காணும் நோக்கும் புரக்கும் கடவுள் இயவுள் எனவரும் இயல்பீறுகள் நேர்நேர் - நிரைநேர் -ஆகிய இயலசைகளாம் என்றறிக. (தொ. செய். 10 ச. பால.) உரிஅசை மயக்கம் - உரியசைகளாவன குற்றியலுகர முற்றியலுகர ஈற்றவான நேர்பு நிரைபு என்பன. நேர்பு நேர்பு, நிரைபு நிரைபு - தம்மொடு தாம் மயங்கின நேர்பு நிரைபு, நிரைபு நேர்பு - தம்மொடு பிற மயங்கின இவ்வாறு உரியசைகள் நான்காயின. வீடுபேறு, தடவு மருது, பாறுகுருகு, வரகுசோறு என்பன முறையே இவற்றிற்குரிய வாய்பாடுகள். (தொ. செய். 13 நச்.) உரிஅசை மயங்கிய இயற்சீரின் இருவகை - நேர்பு நேர் - போதுபூ - 2 எழுத்து; மேவுசீர் - 3 எழுத்து. நிரைபுநேர் - விறகுதீ - 3 எழுத்து; உருமுத்தீ - 4 எழுத்து. நேர்நேர்பு - போரேறு - 2 எழுத்து; நன்னாணு - 3 எழுத்து நேர் நிரைபு - பூ மருது - 3 எழுத்து; காருருமு - 4 எழுத்து. நிரை நிரைபு - மழகளிறு - 4 எழுத்து; நரையுருமு - 5 எழுத்து நிரைநேர்பு - கடியாறு - 3 எழுத்து; பெருநாணு -4 எழுத்து முற்றியலுகரம் எழுத்தாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குற்றியலுகரமும் மெய்யும் எழுத்தெண்ணப்படா. (தொ. செய். 43 நச். உரை) உரிஅடி - உரிச்சீராகிய மூவசைச்சீர் எட்டானும் வரும் அடி. (யா. வி. பக். 113) உரிச்சீர் - மூன்று அசையான் ஆகிய சீர். இஃது எட்டு வகைப்படும். அவற்றுள் நேர் இறுதியாகிய நான்கும் வெண்பா உரிச்சீர்; ஏனைய நிரை இறுதியாகிய நான்கும் வஞ்சிஉரிச்சீர் எனப்படும். இவற்றுக்கு வாய்பாடு முறையே தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் எனவும், தேமாங்கனி, புளிமாங் கனி கருவிளங்கனி கூவிளங்கனி எனவும் வரும். (யா. க. 12 உரை) உரிச்சீர் வெண்டளை - வெண்பாஉரிச்சீர் நின்று வெண்பாஉரிச்சீரோடு ஒன்றுவது சிறப்புடைத்து; வேற்றுச்சீரோடு ஒன்றுவது சிறப்பின்று. இத்தளை வெண்சீர் வெண்டளை எனவும்படும். ‘குன்றேறி யானைப்போர்’ (குறள் 758) காய்முன் நேர் - சிறப்புடைய உரிச்சீர் வெண்டளை. ‘தார்மாலை மார்ப’ (தண்டி. 16-1) - காய் முன்நேர் - சிறப்பில்லா உரிச்சீர் வெண்டளை. (யா. க. 182 உரை) உரிச்சீரால் வரும் வெள்ளொத்தாழிசை - எ-டு : ‘வாராரே என்றென்று மாலைக்கண் நனிதுஞ்சாய் ஊராரே என்றென்றும் ஒன்றொவ்வா உரைசொல்லி யார்யாரே என்றாளே யாய்’ உரிச்சீரால் இவ்வெள்ளொத்தாழிசை வந்தது. ஈண்டு உரிச் சீராவது வெண்சீர். இயற்சீரும் உரிச்சீரும் மயங்கி வருதலும், இயற்சீரே வருதலும், உரிச்சீரே வருதலும் ஆகிய மூவகையுள் இஃது உரிச்சீரால் வந்த வெள்ளொத்தாழிசை எனப்படும். (யா. க. 15 உரை) உரிச்சீரின் திறம் - மூவசைச் சீர்களுள் நேர் இறுதியான நான்கும் பெரும் பான்மையும் வெண்பாவிற்கே உரிமை பூண்டு நிற்றலின் வெண்பா உரிச்சீர் எனவும், நிரை இறுதியான நான்கும் பெரும்பான்மையும் வஞ்சிப்பாவிற்கே உரிமை பூண்டு நிற்ற லின் வஞ்சி உரிச்சீர் எனவும் வழங்கப்படலின் இம்மூவசைச் சீர்கள் எட்டும் இருவகைப் பாக்களுக்குப் பெரும்பான்மையும் உரிமை பூண்டு நிற்றலின் உரிச்சீர் எனப்பட்டன. வஞ்சியுரிச்சீர் பிற பாவினுள் அருகி வரினும் வஞ்சிப்பாவி னுள் போல இனிது நடவா. (யா. க. 12 உரை) உரிச்சீரின் வகைகள் - நேர்நேர்நேர், நிரை நேர் நேர், நிரை நிரை நேர், நேர் நிரை நேர் என நேரீறு நான்கும் வெண்பாஉரிச்சீர். நேர்நேர் நிரை, நிரைநேர்நிரை, நிரை நிரை நிரை, நேர் நிரை நிரை என நிரையீறு நான்கும் வஞ்சிஉரிச்சீர். (யா. க. 12 உரை) உரு எழுத்து - வரி வடிவம் எழுதப்படுவது. காணப்படும் உருவத்தைப் பிறர்க்கு நன்கு காட்டும் முறைமை நாடி வழுவற்ற ஓவியனது கைவினை போல எழுதப்படுவது உருஎழுத்தாகும் என்ப. (யா. வி. பக். 577) உருட்டுவண்ணம் - அராகம் தொடுத்து வருவது; உருட்டிச் சொல்லப்படுவது அராகம் ஆதலின் இது ஞெகிழாது உருண்ட ஓசைத்து. (தொ. செய். 232 நச்.) எ-டு : ‘உருகெழு முருகிய முருமென வதிர்தொறு மருகெழு சிறகொடு மணவரு மணிமயில்’ (செய். 152 நச்.) உரைச்சூத்திரம் - உரையினிடையே உரைகாரர் இயற்றிய சூத்திரப்பா. (இ. கொ. 25) (டு) உரைநடை - செய்யுள்நடைக்கு மறுதலையாகிய வசனநடை. செய்யுளுக்கு உரிய அசைசீர் அடி தொடை முதலிய தேவைகள் உரை நடைக்கு இல்லை. (டு) உரைநடை இருபகுதித்து ஆதல் - உரைவகை நடை நான்கனுள், முதலன இரண்டும் ஒரு பகுதியாகவும், ஏனைய இரண்டும் ஒரு பகுதியாகவும் அவற்றால் பயன் கொள்ளுங்காலத்துக் கொள்ளப்படும். இறுதியில் நின்ற இரண்டன் தொகுதியாகிய ஒன்று செவிலிக்கே உரித்து; ஏனைய இரண்டன் தொகுதியாக ஒன்று வரைவின்றி எல்லார்க்கும் உரித்து. (வரும் தலைப்புக் காண்க.) (தொ. செய். 174, 175 பேரா.) உரைநடை வகைக்கு எடுத்துக்காட்டுக்கள் - அ) கதை தழுவி வரும் தொடர்நிலைச் செய்யுட்கண் கதை நிகழ்வினைத் தொடர்புபடுத்துவதற்குப் புலவர் இடை யிடையே அமைக்கும் குறிப்பு, ஆ) பாவாக நடைபெறாமல் செய்யுள் தொடர்களாக வருவன, இ) அஃறிணைப் பொருள் களை உயர்திணைக்குரிய பண்பும் செயலும் உடையன போல வைத்து, ஒரு பயன் கருதிக் கற்பனையாக உரைக்கப்படுவன, ஈ) கதை தழுவி வரும் கூத்தின்கண் முன்னும் பின்னும் இடையினும் விதூடகக் கூற்றாக வருவன - என்பன நான்கும் உரைநடை வகைகள். இவற்றிற்கு முறையே எடுத்துக்காட்டு வருமாறு : அ) சிலப்பதிகாரத்துள் இடையிடையே வரும் உரைகளும் கட்டுரைகளும் (இக்குறிப்பு ஒரு சொல்லானும் ஒரு தொட ரானும் பல தொடரானும் பொருள் விளக்கத்திற்கு ஏற்ப வரும்); ஆ) ஆத்திசூடியின் அறிவுரை போல - அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம் - பாட்டினமைப்பை ஒத்து வருவன; ஒருபாவிற்குரிய திணை துறை முதலியன கூறுவதும் இதன்கண் அடங்கும்; இ) விழாக்காலத்து நிகழும் பாரதக் கதை போல்வன; இக்காலத்துச் சிறுகதை தொடர்கதைகளை இவ்வகை ஒக்கும்; ஈ) எள்ளல் இளமை பேதைமை மடன் என்னும் அடிப்படையில், கேட்போர் வெண்ணகை கொள்ளுமாறு நிகழ்வன. (தொ. செய். 172 ச. பால.) உரைநூல் - 1. உரைபெற்ற நூல் (திருக்குறள் போல்வன) 2. உரையாகிய நூல் (அடிவரையறையின்றி வரும் இலக் கணத்தையுடையனவாகிய ஆறனுள் உரையும் ஒன்று. (தொ. செய். 165) (டு) உரைப்பகுதி - காண்டிகையும் அகலம் கூறலும் உரைப்பகுதியாவன. (இறை. அ. 1 உரை) கருத்து உரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டுதலாகிய முப்பகுதியும் காண்டிகை. காண்டிகைப் பொருளை விரித்துரைத்தல், காண்டிகைப் பொருளேயன்றி அப்பொருட்கு இன்றியமையாது இயைபவை எல்லாம் ஒன்ற உரைத்தல், மறுதலைக் கடா மாற்றம் உடைத்தாய்த் தன்னூ லானும் முடிந்த நூலானும் ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித் தெற்றென ஒருபொருள் ஒற்றுமைகொளீஇத்துணி வொடு நிற்ப உரைத்தல் என அகலங்கூறல் மூவகைப்படும். (பா. வி. பக். 162) உரைப்பாட்டு மடை - அடி சீர் வரையறையின்றி வரும் உரையாகிய செய்யுள் நடையவாகிய அடிகளை நடுவே மடுப்பது. சிலப்பதிகாரத்தில் இந்நடை பயிலக் காணலாம். உரைப்பாட்டுத் தொடக்கத்தில் மடுக்கப்படுவது உண்டு. எ-டு : ‘குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்று வைகி’ முதலாகிய 10 அடிகளில், பின் தொடரும் 12 அடி (சிலப். குன்றக்.): நேரிசையாசிரியப்பாவிற்கு முன்னர் இவ்வுரைப் பாட்டு மடை வந்தவாறு. இவ் வுரைப்பாட்டு மடை எதுகை மோனைத் தொடைகள் பயில நிகழ்கிறது. ‘குமரியொடு வடஇமயத் தொருமொழியைத் துலகாண்ட சேரலாதற்கு’ (சிலப். வாழ்த்துக்.) எனத் தொடங்கும் உரைப் பாட்டுமடையும் அவ்வாறே தொடக்கத்தில் அமைகிறது. எதுகைமோனைத் தொடை நயமும் பிற அடியமைப்பும் முற்பகுதியில் நிகழ்ந்தில. (அவை பிற்பகுதியில் அமைந்துள.) ‘குடத்துப்பால் உறையாமையும் குவியிமில் ஏற்றின் மடக்கணீர் சோருதலும்... வருவதொன் றுண்டு’ (சிலப். ஆய்ச்.) எனத் தொடங்கும் ஆறு அடிகளும் உரைப்பாட்டு இடையே மடுக்கப்பட்டமைந்தன. எதுகை மோனைத் தொடைகள் நயம் சிறப்ப அமைந்துள. இவ்வாற்றால், தொடை நயம் பெற்றோ பெறாமலோ அடிசீர் வரையறையின்றி, முன்னரோ இடையோ மடுக்கப்பெறுவது உரைப்பாட்டுமடை எனலாம். உரையாசிரியர் குறிப்பிடும் அறுநூற்றிருபத்தைந்து அடிகள் - அசைச்சீர் 4; ஈரசைச்சீர் 10 + 6 = 16; மூவசைச்சீர் 4 + 60 = 64; ஆகச்சீர்கள் 84. இந்த 84 சீர்களிலும் இயற்சீரான் வருவதனை இயற்சீரடி எனவும், ஆசிரிய உரிச்சீரான் வருவதனை ஆசிரிய உரிச்சீரடி எனவும், இயற்சீர் விகற்பித்து வருவதனை இயற்சீர் வெள்ளடி எனவும், வெண்சீரான் வருவதனை வெண்சீரடி எனவும், நிரையீற்று வஞ்சிச்சீரான் வருவதனை நிரையீற்று வஞ்சியடி எனவும், ஓரசைச் சீரான் வருவதனை அசையடி எனவும் வழங்கல் வேண்டும். இயற்சீரடி, நேரீற்றியற்சீரடி எனவும் நிரையீற்றியற் சீரடி எனவும் இருவகைப்படும். நேரீற்றியற்சீரடியாவது நேரீறு நேர்முதலாகிய இயற்சீர் வருதலும் நேர்பு முதலாகிய ஆசிரிய உரிச்சீர் வருதலும் நேர் முதலாகிய வெண்பா உரிச்சீர் வருதலும், நேர் முதலாகிய வஞ்சி உரிச்சீர் வருதலும், ஓரசைச் சீர் வருதலும் என ஐந்து வகைப்படும். நீரையீற்று இயற்சீரும் இவ்வாறே நிரை முதலாகிய ஐந்து சீரோடும் உறழ ஐந்து வகைப்படும். ஆசிரிய உரிச்சீரடி, நேர்புஈறும் நிரைபு ஈறும் என இரு வகைப்படும். அவற்றுள் நேர்புஈற்றுச்சீரினை நேர்பும் நேரும் முதலாகிய ஐந்து சீரோடும் உறழ ஐந்து வகைப்படும். நிரைபு ஈற்றுச் சீரும் அவ்வாறே நிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும். வெண்சீர், நேர் முதலொடு உறழ்தலும் நிரைமுதலொடு உறழ்தலும் என இருவகைப்படும். அவற்றுள் நேர்பும் நேரும் முதலாகிய சீர்களொடு உறழ்தல் ஐந்து வகைப்படும்; நிரைபும் நிரையும் முதலாகிய சீர்களொடு உறழ்தல் ஐந்து வகைப்படும். நிரையீற்று வஞ்சியுரிச்சீர், முதலசையோடு ஒன்றுவனவும், ஒன்றாதனவும் என இருவகைப்படும். அவற்றுள் ஒன்றி வருவது நிரைபும் நிரையும் முதலாகிய சீர்களொடு உறழ ஐந்து வகைப்படும்; ஒன்றாதது நேர்பும் நேரும் முதலாகிய சீர்களொடு உறழ ஐந்து வகைப்படும். உரியசையீற்று வஞ்சிச்சீரும் அவ்வாறே உறழப் பத்து வகைப்படும். அசைச்சீர் இரண்டும் அவ்வாறு இருவகையாக்கி உறழப் பத்து வகைப்படும். இவ்வாறு தளை நேரொன்றாசிரியத்தளை முதலிய எழு வகைப்படும். அவ்வழி ஓரசைச்சீர் இயற்சீர்ப் பாற்படும். ஆசிரிய உரிச்சீரும் அது. மூவசைச் சீருள் வெண்பா உரிச்சீர் ஒழிந்தன எல்லாம் வஞ்சியுரிச்சீராம். அசைச்சீர், இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வஞ்சி யுரிச்சீர் என்ற ஐந்தனையும் முதற்சீராக நிறுத்தி இவ்வைந்து சீரும் வரும் சீராய் உறழும்வழி 25 விகற்பமாம். அந்த இருபத் தைந்தன் கண்ணும் மூன்றாவது சீராக ஐந்து சீரையும் உறழ 125 விகற்பமாம். அந்த நூற்றிருபத்தைந்தன்கண்ணும் நான் காவது சீராக ஐந்து சீரையும் உறழ அளவடிக்கண் 625 விகற்பமாம். (தொ. செய். 48 இள.) உரைவகை நடை நான்கு ஆதல் - ஒரு பாட்டினை இடையிடையே கொண்டு நிற்கும் கருத்தி னான் வருவனவும், பாட்டின்றிச் சூத்திரத்திற்குப் பொருள் எழுதுவன போல்வனவும், பொருள் முறைமையின்றிப் பொய்யாகத் தொடர்ந்து கூறுவனவும், பொய்யெனப்படாது மெய்யெனப் பட்டும் நகுதற்கு ஏதுவாகும் தொடர்நிலையும் என்று உரைப்பகுதி வழக்கு இந்நான்காம்.(தொ. செய். 173 நச்.) உறழ்கலி - இது கலிப்பா நால்வகைகளுள் (தொ. செய். 130) ஒன்று. ஒருவன் ஒன்று கூற அதற்கு மற்றவன் மறுமாற்றம் கூறப் பின் அவற்றை அடுக்குவதொரு சுரிதகம் இன்றி முடிவது உறழ்கலியாம். இதன் அளவு அம்போதரங்க ஒருபோகின் அளவேயாம். இதன்கண் பா மயங்கி வரும். சுரிதகம் நீங்க லாகக் கலிவெண்பாட்டிற்கு ஓதிய ஏனைய உறுப்புக்களை யெல்லாம் இது பெறும். உறழ்கலியில் ஒரு சில அருகிச் சுரிதகம் பெற்று வருதலுமுண்டு. அச்சுரிதகம் ஆசிரியமாகவே இருக்கும். சில உறழ்கலிகள் தரவும் போக்கும் குன்றியும் வரும். போக்கு உடையன தரவு இன்றி வாரா. வெள்ளைக் கொச்ச கத்தைச் சுரிதகமாகக் கோடல் கூடாது. அதற்குச் சுரிதகத்தின் முடிக்கும் பொருள் உறழ்கலியில் அமையாது. ஆதலின் போக்கியல் வர வேண்டிய இடத்தே ஆசிரியமே போக்கிய லாகி வரும். ‘அரிநீர் அவிழ்நீலம்’ கலி. 91 இது தரவும் பாட்டும் உடைத்தாய் ஐஞ்சீரடுக்கியும் அறுசீர் அடுக்கியும் போக்கின்றி அமைந்த உறழ்கலி. ‘நலமிக நந்திய’ - கலி. 113 இது போக்கு வருதல் கூடாது என்ற விதியைக் கடந்து ஆசிரியச் சுரிதகம் பெற்ற உறழ்கலி. ‘ஒரூஉ நீ எம்கூந்தல் கொள்ளல்’ (கலி. 87) இது தரவும் போக்கும் இன்றி ஐஞ்சீரும் அறுசீரும் இடை யிடையே பெற்றுவந்த உறழ்கலி. (தொ. செய். 156 நச்.) உறழ்நிலை - பல நிலைமையவாகப் பொருந்திவரும் தன்மை. (தொ. செய். 57 நச்.) உறுப்பின் அகவல் - ‘அகவல் ஓசை விகற்பம்’ காண்க. உறுப்பெழுத்து - ஏனைய எழுத்துக்களுடன் கூடிச் சொற்கு உறுப்பாய்ப் பொருள் தருவது. ‘அது’ : இச்சொல்லில் அ, து - என்ற இரண்டும் உறுப் பெழுத்து. (யா. வி. 2 உரை) இது சினைஎழுத்து எனவும் பெயர் பெறும். ‘யா என் சினைமிசை’ (தொல். எ. 34 நச்.) ‘மியா’ என்பதன்கண் உள்ள ‘யா’ தொல்காப்பியனாரால் சினைஎழுத்து எனப்பட்டது. எ எச்சம் (1) - செய்யுட்கண் உணர்த்துதற்குச் சொல்லின்றிக் கேட்போர் உய்த்துணர்ந்து கொள்ளுமாறு கூற்றினானும் குறிப்பினா னும் முடிக்கப்படும் இலக்கணத்தொடு கூடிய சொல். இது செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. இது கூற்றெச்சம், குறிப் பெச்சம் என இரு வகைப்படும். கூற்றெச்சமாவது, செய்யுளில் கூறாது விடப்பட்ட செய்தியை வெளிப்படையாகக் கூறினாலும் தவறின்றாக அமைவது. குறிப்பெச்சமாவது, செய்யுளில் கூறாது விடப்பட வேண்டி யதாய் வெளிப்படையாய்க் கூறத் தகாதாய் அமைவது. எ-டு : ‘செங்களம் படக்கொன்(று) அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக் கழல்தொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே’ (குறுந். 2) தலைவன் காந்தட்பூக்களைக் கையுறையாகக் கொண்டுவர, தோழி தம் மலையில் காந்தட்பூ நிறையவுள்ளது என்று குறிப்பான் உணர்த்திக் கையுறை மறுத்தது இப்பாடல். “எம் குன்றில் காந்தட்பூ மிகுதி” என்று மாத்திரம் கூறி, “இவற்றால் யாம் குறையுடையேம் அல்லேம்” என்பதைக் கூறாது விடுத் தது கூற்றெச்சம். அதனைத் தலைவனிடம் கூறினும் தவறின்று. தோழி தலைவியைப் பகற்குறியிடத்து உய்த்து “முருகனது இக்குன்றத்தில் காந்தட்பூக்கள் நிறைய உள” என்று வெளிப் படையாகக் கூறி, “அவற்றைக் காண்பது உன் விருப்பமாயின் காண்” என்று கூறுவாள் போலத் தான் வெளிப்படையாகக் கூற முடியாத “குறிக்கண் தலைவன் இருக்குமிடம் இஃது” என்பதனைக் குறிப்பாற் கொள்ளவைத்தது குறிப்பெச்சம். எச்சம் என்னும் இவ்வுறுப்பின்றியும் செய்யுள் நிகழும். (தொ. பொ. 518 பேரா.) எச்சம் (2) - அகப்பொருள் உரை 27இல் இதுவும் ஒன்று (வி.சோ. 90) எச்சமாவது ஒழிந்தது. அஃதாவது தான் தன்பொருள் முற்றுப்பெறக் கொண்டு முடியவேண்டிய சொல்லை விடுத்துத் தனியே இருப்பது. அது வினையெச்சம் பெயரெச் சம் என இருவகைப்படும். வினையெச்சம் வினைஒழிந்து நிற்பது; பெயரெச்சம் பெயர் ஒழிந்து நிற்பது. (வீ. சோ. 96 உரை மேற்.) எச்சவுரை - எச்சத்தை விளக்கிக் கூறும் உரை. ‘எச்சம்’ காண்க. எட்டு ஆசிரிய உரிச்சீரும் வந்த பாடல் - ‘வீங்குபிணி 1 விசித்த விளங்குபுனை 2 நெடுந்தேர் காம்புநீடு 3 மயங்கு காட்டுப் 4 பாம்புபெரிது 5 வழங்குதொறோங்கு 6 வயங்குகலிமா நிரைபு நிரைபு வலவன், வாம்பரி கடவி வந்தோன் கெழூஉமணி 7 அகலம் தழுஉமதி 8 விரைந்தே.’ 1. நேர்பு நிரை 2) நிரைபு நிரை 3) நேர்பு நேர்பு 4) நிரைபு நேர்பு 5) நேர்பு நிரைபு 6) நிரைபு நிரைபு 7,8) இறுதிநிலை அள பெடைப்பின் நிரை வந்தவை. இவ்வஞ்சிப்பாவின் ஈற்றடி ‘தூஉமணி அகலம் தழூஉமதி விரைந்தே’ என்றிருப்பின், அளபெடைச்சீர் நேர் அள பெடைப் பின் நிரை, நிரை அளபெடைப்பின் நிரை என இரண்டாம்; ஆக, மேலை ஆறு சீர்களுடன் இவை யிரண்டனையும் கூட்ட ஆசிரிய உரிச்சீர் எட்டும் வந்தவாறு. (யா. க. 95 உரை. பக். 450) எட்டுவகை எதுகைகள் - எதுகைக்குத் தொடை என்பதும் ஒருபெயர். அதன் எட்டு வகையாவன : 1) மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை, 2) இரண்டடி எதுகை, 3) சீர்முழுதும் ஒன்றி வந்த எதுகை, 4) வல்லின எதுகை, 5) மெல்லின எதுகை, 6) இடையின எதுகை, 7) இரண்டாம் எழுத்து உயிரால் ஒத்தும் மெய்யால் ஒவ்வா தும் வரும் உயிர் எதுகை, 8) ஆசு இடையிட்ட எதுகை என்பன. (வீ. சோ. 111) எண் - கலிப்பாவினுள் அம்போதரங்க உறுப்பு ‘எண்’ எனப்படும். இது முற்படப் பெருகி வழிமுறையாற் சுருங்கி வரப்பெறும். ஈரடியிற் சுருங்கி ஓரடியாயும், ஓரடியிற் சுருங்கி இரு சீராயும், இரு சீரிற் சுருங்கி ஒரு சீராயும் ஒன்றற்கொன்று பாதியாகச் சுருங்கும் என்பது. ஈரடியும் ஓரடியும் இருசீரும் ஒருசீருமாய்ச் சுருங்கிவரவும், இரண்டற்கு நான்கும், நான்கற்கு எட்டும், எட்டற்குப் பதினாறுமாய் ஒன்றற் கொன்று உறுப்பு வகையில் இரட்டித்துவரவும் பெறும். ஈரடி இரண்டனைப் பேரெண் தலையெண் எனவும், ஓரடி அதனிற் குறைதலின் சிற்றெண் எனவும், இருசீரை இடை யெண் எனவும், முடிவிற்கு அளவாய் நிற்கும் ஒரு சீராகிய சின்னத்தை அளவெண் கடையெண் எனவும் கூறுவர். (தொ. செய். 145 நச்.) எண் இடை ஒழிதல் - எண்கள் இன்றி வருதல் (146 நச்., பேரா.); எண்கள் ஒரோ வொன்று இடை ஒழிந்து வருதல் (140 இள.). எண்ணாவது அம்போதரங்க உறுப்பு. எனவே, எண் இடை ஒழிதல் என்பது அம்போதரங்க உறுப்பு கலிப்பா இடையே வாராது நீங்குதல் எனவும், அம்போதரங்க உறுப்புக்களாகிய பேரெண் சிற்றெண் இடையெண் கடையெண் என்ற நான்கனுள் ஒன்றும் இரண்டும் இன்றி வருதல் எனவும் பொருள்படும். (தொல். செய். 146 நச்.) எண் இடையிட்டுச் சின்னம் குன்றுதல் - எண்ணாகிய உறுப்புக்கள் இடையிட்டுத் தனிச்சொல் மாத்திரம் வாராதிருத்தல். எண்ணுள் இரண்டடி இரண்டு, ஓரடி நான்கு என்பன மாத்திரம் வந்து, குறளடியும் ஓரசைச் சீரும் இன்றி வருதல் என இருவகைப் பொருள் செய்வர் இளம்பூரணர் (தொ.செய். 143 பேரா.) இதற்கு ‘மாமலர் முண்டகம்’ என்ற நெய்தற்கலிப்பாடலை (133) எடுத்துக் காட்டி, இப்பாடற்கண் தரவு (5 அடி), ஓரடி எண் (9), ஐந்தடிச் சுரிதகம் வந்ததைச் சுட்டுவர். எண்இடையிட்டுச் சின்னம் குன்றிய கொச்சக ஒருபோகு. வண்ணக ஒத்தாழிசைக்கு ஓதிய எண்ணும் சின்னமும் இன்றி ஒழிந்த தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற நான்கு உறுப்பும் பெற்றுத் தேவபாணியாய் வருவதும் கொச்சக ஒருபோகு. ‘ஆறறி அந்தணர்க்கு’ என்ற கலித்தொகைக் கடவுள் வாழ்த் துப் பாடல் தரவு, தாழிசை மூன்று, தனிச்சொல், சுரிதகம் என்ற நான்கு உறுப்பான் வந்ததேனும் தேவபாணியாய் வருதலின் அகநிலை ஒத்தாழிசை ஆகாது, எண்ணும் சின்ன மும் இழத்தலின் கொச்சக ஒருபோகு ஆயிற்று. (தொ. செய். 149 நச்.) எண்சீரின் மிக்க அடியது சிறப்பின்மை - குறளடி முதல் கழிநெடிலடி வரை அடி ஐந்து வகைப்படும். ஓரடியின்கண் இரண்டுசீர் முதல் எட்டுச்சீர் வரை வரலாம். எண்சீரின் மிக்க அடியெனின் அது சிறப்பின்று. (தொ. வி. 211) ‘எண்ணிடை ஒழிதல்............ காலையான’ பொருள் விளக்கம் - வண்ணக ஒத்தாழிசையுள் தனிச்சொல் என்னும் உறுப்பு வாராவிடத்து, அம்போதரங்க உறுப்பு இடையே வாரா தொழிதல் குற்றமின்று. எனவே, தனிச்சொல் வருமிடத்து அம்போதரங்கம் வரும் என்க. எண்முறையால் கண்ட அசை - நேரசை - 4 ; நிரையசை 4. தனிக்குறில் - க; ஒற்றடுத்த குறில் - கல்; தனிநெடில் - ஆ; ஒற்று அடுத்த நெடில் - ஆல் என நான்கும் நேரசை. குறிலிணை - பல; குறிலிணைஒற்று - பலம்; குறில் நெடில் - கலா; குறில் நெடில் ஒற்று - கலாம் என நான்கும் நிரையசை. (யா. க. 6, 8) எண்வகை வனப்பு - அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு - என்பன. இவற்றைப் பற்றிய விளக்கம் தனித்தனித் தலைப்பில் காண்க. (தொ. செய். 1) எதிர்நிரல்நிறை - சொல்லையும் பொருளையும் (முடிக்கப்படும் சொல்லையும் முடிக்கும் சொல்லையும்) மாறுபட நிறுத்திப் பொருள் கொள்ள வரும் பொருள்கோள் நெறி. எ-டு : `களிறும் கந்தும் போல நளிகடற் கூம்பும் கலனும் தோன்றும்.' இவ்வடிகளில் களிறு போலக் கலன், கந்து போலக் கூம்பு என இவ்விருவகைச் சொற்களும் மாறுபட நிறுத்திப் பொருள் கொள்ளப்பட்டவாறு. (யா. வி. பக். 382) எதுகை - ‘எதுகை இலக்கணம்’ காண்க. எதுகை அந்தாதி - முதலடியின் இறுதி அசையோ சீரோ அந்தாதியாக வரும் போது அடிஎதுகைத் தொடைபட அமைவது.(யா.க. 52 உரை) எ-டு : ‘மனமே தலைவர் பரிவதித் தினமே தினமேல் நமக்குக் கழிவ(து) உகமே’ தினமே என்பது அந்தாதித்தவழி, அடியெதுகைத்தொடை பட அமைதலின் இஃது எதுகை அந்தாதியாம். எதுகை அளபெடைத்தொடை - அடிதோறும் முதற்சீர்க்கண் அளபெடுத்து ஒன்றி வருவது. (யா. க. 41) “உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழியென் நெஞ்சு” (குறள். 1200) உயிரளபெடை “வளங்ங் கனிந்த மணிமன்றுள் விளங்ங் கொளியை உளங்கொளல் தவமே” (சி.செ.கோ. 42) ஒற்றளபெடை. எதுகை இயல்பு - சிங்கம், தங்கம், பொங்கம் - எனத் தலையாகு எதுகையாக வருவது சிதையாத்தொடை (இரண்டாவது முதலாகச் சில எழுத்து ஒன்றுவது.) கொற்றி, செற்றம், கற்றை - என இரண்டாம் எழுத்து ஒன்றி மூன்றாம் எழுத்து அவ்வெதுகையின் வருக்கமாகிய உயிர் மெய்யாக வருவது சிதையும் தொடை. பார்த்திபன், காய்த்த - என இரண்டாம் எழுத்து ஒன்றாவிடி னும் 3. 4 ஆம் எழுத்துக்கள் ஒன்றுவது ஓசைத்தொடை. பாலுக்கு, கூழுக்கு - என இரண்டாம் எழுத்து மெய்யாக ஒன்றாவிடினும் உயிராக ஒன்றிவருவது இனத்தொடை. சீருற்ற, நீருற்ற - என இரண்டாவது முதலாகச் சீர்இறுதி வரைப் பல எழுத்து ஒன்றிவரும் தலையாகு எதுகைத் தொடை அலங்காரத் தொடை. ஆடும் பரிவேல்........... பாடும் பணியே - என வண்ண வகையால் ஒன்றும் எதுகை. வண்ண எதுகைத் தொடை. ‘இவ்வகை எதுகையில் யாதும் இலதெனின், செவ்விய கவிகளும் சீர்அழி வுறுமே’ என்றார். (அறுவகை. யாப்பு, எதுகை இயல்பு 1 - 7) எதுகை இயைபு - இயைபுத்தொடை எதுகைத் தொடையோடு இயைந்து வருவது. எ-டு : அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம் விலைப்பாலின் கொண்டூன் மிசைதலும் குற்றம். (நான்மணிக். 100) என இவ்வடிகளில் அடியெதுகைத் தொடையோடு அடி யியைபுத் தொடை அமைந்திருத்தலின், இவ்வடிகளில் எதுகை யியைபு வந்துள்ளது என்பது. (யா. க. 40 உரை) எதுகை இலக்கணம் - அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்தின் மாத்திரை தம்முள் ஒத்து நிற்ப, இரண்டாம் எழுத்து அவ்வெழுத்தாகவே வருவது அடியெதுகையாம். இந்நிலை ஓரடிக்கண் சீர்களில் அமையின் சீர்எதுகை. முதலெழுத்தின் மாத்திரை தம்முள் ஒத்து நிற்ப, இரண்டாமடியிலும் முதற்சீர்களின் ஏனைய எழுத்துக்கள் ஒன்றிவரின் தலையாகு எதுகையாம் இனி நாற்சீர் அடிகளில் 1, 2 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது இணையெதுகை 1, 3 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது பொழிப்பு எதுகை 1, 4 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது ஒரூஉ எதுகை 1, 2, 3 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது கூழை எதுகை 1, 3, 4 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது மேற்கதுவாய் எதுகை 1, 2, 4 ஆம் சீர் எதுகை ஒன்றிவருவது கீழ்க்கதுவாய் எதுகை 1, 2, 3, 4 என நான்கு சீரிலும் எதுகை வருவது முற்றெதுகை (தொல். செய். 93 நச். உரை) ஆகவே ‘கட்டு’ என்பதற்குப் ‘பட்டு’ என்பது எதுகை ஆவதன்றிப் ‘பாட்டு’ என்பது எதுகையாகாது; ‘காட்டு’ என்பதற்குப் ‘பாட்டு’ எதுகையாவதன்றிப் ‘பட்டு’ என்பது எதுகையாகாது. (யா. கா. 16, 19 உரை) எதுகை இனக்குறள் வெண்பா - அடியெதுகைத் தொடை அமைய வரும் குறள் வெண்பா. எ-டு : ‘தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல்’ (குறள். 318) (யா. க. 59 உரை) எதுகை எட்டு - இரண்டாம் எழுத்து ஒன்றியது, மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை, சீர் முழுதும் ஒன்றியது, கிளை எதுகை, வல்லின எதுகை, மெல்லின எதுகை, இடையின எதுகை, உயிர் எதுகை என்பன. (யா. க. 49 உரை) எதுகை முதலிய அந்தாதிகள் அடங்குமாறு - எதுகை, மோனை, முரண், இயைபு, அளபெடை என்ற அந்தாதிகள் செந்நடை, எழுத்து, அசை, சீர் அந்தாதிக்கண் அடங்கும். (யா. க. 52 உரைக்கருத்து) எதுகை முரண் - எதுகையும் முரணும் கலந்து வரும் தொடை. ‘இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்’ (குறள் 615) அடியெதுகையே யன்றி அடிமுரணும் அமைந்துளது. (யா. க. 53 உரை) எதுகை மோனைகளின் சிறப்பு - முரண், இயைபு, அளபெடையென்ற ஏனைய தொடைகள் இருப்பினும் பாவினங்கள் எதுகைத்தொடையானும் தலை யாகு மோனைத்தொடையானும் வருதலின் தொடைகளுள் எதுகையும் மோனையும் சிறப்புடையன. (யா. க. 37 உரை) எதுகையில் எல்லா எழுத்தும் பயன்படல் - 1. உயிர் : ‘மனைக்குப்பாழ் வாணுதல் இன்மை, தான் செல்லும் திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை......’ (நான்மணிக். 20) 2. மெய் : ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்’ (குறள். 71) (யா.க. 362 உரை) 3. உயிர்மெய் : ‘வடியேர்கண் நீர்மல்க வான்பொருட்கண் சென்றார் கடியார் கனங்குழாய் காணார்கொல் காட்டில்’ 4. ஆய்தம் : ‘அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்’ (குறள். 175) 5. குற்றிய : ‘போதுசேர் கோதாய் பொருப்பன் தரக்குறித்தான் லுகரம் தாதுசேர் மார்பின் தழை.’ 5. குற்றிய : ‘ஆறியான் முன்புக் கழுந்து வதுதவிர்த்தான் லிகரம் கூறியாய் கொள்ளுமா நின்று’ (யா.க. 36 உரை) எதுகையில் ஐ, ஒள - அகரத்துடன் யகர ஒற்று வந்தும், இகரம் வந்தும் ஐகாரத்தின் பயத்தவாம்; அகரத்துடன் உகரம் வந்தும், வகரம் வந்தும் ஒளகாரத்தின் பயத்தவாம். வருமாறு : ‘அய்ய(ஐய) மிலை இன்பமற னோடவையும் ஆக்கும் பொய்யில்பொரு ளேபொருள் மற்றல்ல பிற பொருளே.’ (சீவக. 497) கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோன்- அவ்வேலே-(கௌவை - கவ்வை) (பு.வெ. காஞ்சி. 23) அவ் (ஒள) வை, கவ் (கௌ), கய் (கை); அஇ = ஐ; அஉ = ஒள. இவையிரண்டும் வரிவடிவிற் கொள்ளப்படா. (தொ. எ. 54, 55 நச்.) எதுகையே கருவியாக அடிவகுத்தல் - வீரசோழியம் இயற்றிய புத்தமித்திரனார் எதுகையே கருவி யாக அடிவகுத்தார் என்பார் உரையாசிரியராகிய பெருந் தேவனார். (வீ. சோ. 125 உரை) எதுகை வகை - முதலெழுத்து அளவொத்து (நிற்ப) இரண்டாம் எழுத்து ஒன்றி வருதல் எதுகை. மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை, ஆசு எதுகை, இனஎதுகை, தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை என ஆறு பிறவகைகளும் உள. (தொ. வி. 214) எதுகை விகற்பம் எடுத்துக்காட்டு - இணையெதுகை முதலிய விகற்பம் ஏழற்கும் எடுத்துக்காட்டு - நோக்குக. 1. இணையெதுகை ‘புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ’ (பதிற்.61) - ஆசிரியம் ‘மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்’ (குறள். 204) - வெண்பா ‘அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின்’ (கலி.2) கலிப்பா 2. பொழிப்பு எதுகை ‘பொன்னேர் மேனி நன்னிறம் சிதைத்தோர்’ ஆசிரியம் ‘உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்’ (களவழி. 4) வெண்பா ‘பெருவரை உறழ்மார்பின் திருவோங்கு கரியோனை’ கலிப்பா 3. ஒரூஉ எதுகை ‘உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை’ (ஐங்.) ஆசிரியம் ‘வாண்மாய் குருதி களிறுழக்கத் - தாண் மாய்ந்து’ (களவழி.1) வெண்பா ‘அணிவேங்கை செறிநீழல் கிளியோப்பு மணிநிறத்தாள்’ கலிப்பா 4. கூழை எதுகை ‘குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து’ (முருகு. 266) ஆசிரியம் ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை’ (குறள். 350) வெண்பா ‘மணிவரை அணிமார்பிற் பணிமேவும் பெரியோனை’ கலிப்பா 5. மேற்கதுவாய் எதுகை ‘பொன்னேர் மேனி துன்னினர் மன்னோ’ ஆசிரியம் ‘கொண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டி’ (நாலடி 48) வெண்பா ‘அலைகடல் துயிலுணரா மலையெடுத்த நிலையோனை’ - கலிப்பா 6. கீழ்க்கதுவாய் எதுகை ‘உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது’ - (குறுந். 102) ஆசிரியம் ‘படியை மடியகத் திட்டான் - அடியினான்’ (நான்.கடவுள்.) வெண்பா ‘கதிபல விதியாற்சென் றழுந்தாமல் துதித்தேத்தி’ கலிப்பா 7. முற்றெதுகை ‘கன்னிப் புன்னை அன்னம் துன்னும்’ ஆசிரியம் ‘இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது’ (நாலடி. 36) வெண்பா ‘திரிபுரம் எரிசூழ வரிவாங்கும் பெரியோனை’ கலிப்பா இவ்வாறு இணை முதலிய விகற்பம் ஏழும் நாற்சீரடியாகிய அளவடிக்கண்ணேயே கொள்ளப்படும்.(தொ.செய். 93 நச்.) இனி இவ்வேழு விகற்பமும் முறையே வந்த எடுத்துக்காட்டு வருமாறு : (யா. க. 36 உரை) ‘பொன்னி னன்ன பொறிசுணங் கேந்தி - இணை பன்னருங் கோங்கி னன்னலங் கவற்றி - பொழிப்பு மின்னிவ ரவிரொளி தாங்கி மன்னிய - ஒரூஉ நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி - கூழை என்னையு மிடுக்கண் துன்னுவித் தின்னடை - மேற்கதுவாய் அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் - கீழ்க்கதுவாய் கன்னியம் புன்னை யின்னிழற் றுன்னிய - முற்று மயிலேர் சாயலவ் வாணுதல் அயில்வேல் உண்கணெம் அறிவுதொலைத் தனவே’ எருத்தடி - தரவினுடைய ஈற்று அடி. (தொ.செய். 116 நச்.) ஈற்றயலடி என்பார் இளம்பூரணர் (112 இள.) எருத்தம் - ‘தரவு’ காண்க. எருத்து - இரண்டடி இழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதொரு கலியுறுப்பு. பாட்டிற்கு முகம் தரவு ஆகலானும், கால் சுரிதகம் ஆகலானும், ஏனைய உறுப்புக்கள் இடைநிலைப்பாட்டாகிய தாழிசையும் கொச்சகமும் அராகமுமாகக் கொள்ளக் கிடத்த லானும், எருத்து என்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாகலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டும். ‘தரவே எருத்தம் அராகம் கொச்சகம் அடக்கியல் வகையோடு ஐந்துறுப் புடைத்தே’ (அகத்தியம்) என்பதனை நோக்கத் தரவும் எருத்தமும் வெவ்வேறு உறுப்பெனவேபடுமேனும், தொல்காப்பியனா ருக்கு எருத்து என்பதும் தரவு என்பதும் ஒன்றேபோலும். (தொ. செய். 117 இள.) எருத்து: சொற்பொருள் - எருத்து - பிடர் ; முன்னுறுப்பு என்றவாறு இது பிற உறுப்புக் களைத் தருதற்கு முதலாகி நிற்றலின் தரவு எனவும் வழங்கப்படும். இது பரிபாட்டிற்குரிய சிறப்புறுப்பு.(தொ. செய். 121 ச. பால) எல்லோர்க்கும் பொதுவான உரைநடை வகை - உரைநடை வகை நான்கனுள்ளும், பாட்டிடை வைத்த குறிப்பினான் வரும் உரைநடையும் பாட்டின்றிச் சூத்திரத்திற் குப் பொருளுரைப்பன போல வரும் உரைநடையும் வரையறையின்றி எல்லார்க்கும் உரிய. (தொ. செய். 175 நச்.) எழுத்தந்தாதி - ஒரு செய்யுளின் ஓரடியின் ஈற்றெழுத்து அடுத்த அடியின் முதலெழுத்தாக வரத்தொடுப்பது. எ-டு : ‘வேங்கையஞ் சாரல் ஓங்கிய மாதவி விரிமலர்ப் பொதும்பர் மெல்லியல் முகமதி’ (யா. க. 52 உரை) எழுத்தல் இசை - எழுத்து ஓசையல்லாத ஏனைய ஓசைகளாகிய முற்கும் வீளையும் இலதையும் அநுகரணமும் முதலியன. அவை செய்யுட்கண் வந்தால் அவற்றையும் செய்யுள்நடை அழியா மல் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பிழையாமைக் கொண்டு வழங்கப்படும். முற்கு - முக்குதல்; வீளை - சீழ்க்கை அடித்தல்; இலதை - கோழையை வெளிப்படுத்தல் : அநுகரணம் - போலச் செய்வது; அஃதாவது வேறொன்று செய்வது போலச் செய்யும் ஒலிக்குறிப்பு; பறவை கத்துவது போலவும், விலங்கு ஒலிப்பது போலவும் ஒலித்தல் முதலியன. எ-டு : ‘மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ கென்று திரியும் இடைமகனே - சென்று மறியாட்டை உண்ணாமல் வண்கையால் வல்லே அறியாயோ அண்ணாக்கு மாறு’ என ‘உஃகுவஃகு’ என்று வருதல் போல்வன. இவை இடைக் காடர் பாடிய ஊசிமுறியுள் காணப்படும். ‘ஊசிமுறி’ எழுத்தாணியால் முறையாக எழுதமுடியாத எழுத்தல்லாத ஒலிகள் எழுதப்பட இயலாமல் ஓராற்றான் குறிப்பிடப்பட வேண்டுதலின் பெற்ற பெயர். ஊசி - எழுத்தாணி; முறி - தடுமாறச் செய்தல். (யா. வி. பக். 395, 396) எழுத்தளவு எஞ்சுதல் - எழுத்துக் குறைந்தும் மிக்கும் தம் அளவு இறந்து வருதல். செய்யுளுள் குற்றியலுகரம் எழுத்தெண்ணப்படாது; முற்றிய லுகரம் எண்ணப்படும். ஆனால், போது என்ற குற்றியலுகர ஈற்றுச் சொல்லும் மேவு என்ற முற்றியலுகர ஈற்றுச் சொல் லும் ‘நேர்பு’ வாய்பாடே; அவை போல மருது என்பதும் உருமு என்பதும் ‘நிரைபு’ வாய்பாட்டசையே; வந்து என்பதும் மின்னு என்பதும் ‘நேர்பு’ வாய்ப்பாட்டு அசையே. போதுபூ - 2 எழுத்து மேவு சீர் - 3 எழுத்து னூ இவை ‘நேர்பு நேர்’ பூ மருது - 3 எழுத்து காருருமு - 4 எழுத்து னூ இவை ‘நேர் நிரைபு’ இங்ஙனம் எழுத்துக்கள் மிகினும் குறையினும் சீர் ஆகும் நிலையில் வேறுபாடு இல்லை என்பது உணர்த்தப்படுகிறது. (தொ. செய். 43 பேரா.) எழுத்தியல் வகை - செய்யுள் உறுப்பு 26-இல் இஃது இரண்டாவது. எழுத்து, உயிரெழுத்து மெய்யெழுத்து சார்புஎழுத்து என மூவகைப் படும். உயிரெழுத்தானது குற்றெழுத்து நெட்டெழுத்து அளபெடை என மூவகைப்படும். மெய்யெழுத்தானது வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும். சார்பு எழுத்து குற்றியலுகரம் குற்றியலிகரம், ஆய்தம் என மூவகைப்படும். (தொ. செய். 2 இள.) செய்யுளியலில் கூறிய எழுத்தியல்வகை வேறு ஆயினும், எழுத்ததிகாரத்தில் கூறப்பட்ட செய்தியொடு வேறுபடாமை கொள்ளப்படும். எழுத்ததிகாரத்துள் 33 என்று கூறப்பட்ட எழுத்துக்கள் செய்யுளியலில் 15 ஆகக் கூறப்படினும், இவை அவற்றின் வேறல்ல. எழுத்ததிகாரத்தில், குறிலும் நெடிலும் உயிரும் மெய்யும் இனம் மூன்றும் சார்புஎழுத்து மூன்றும் எனப் பத்தும் இயல்பு வகையான் கூறப்பட்டன. உயிர்மெய்யும் உயிரளபெடையும் தத்தம் வகையான் கூடுமாறும், யாழ் நூலகத்து ஒற்றிசை நீளுமாறும் எழுத்ததிகாரத்தில் தோற் றுவாய் செய்யப்பட்டன. அவை ஈண்டுக் கூறும் எழுத்தியல் வகையோடு ஒக்கும் என உய்த்துணர்ந்துகொள்ள வைக்கப் பட்டன. பாட்டுடைத் தலைவனுக்குக் கேடு விளைவிக்கும் மகரக்குறுக்கத்தோடு கூட எழுத்தியல் வகை 16 என்பாரும் உளர். இரண்டெழுத்தின் கூட்டமாகிய உயிர்மெய்யும், மொழி யாகும் அளபெடையும், போலியாக வரும் ஐகார ஒளகாரங் களும் ஆகியவை ‘எழுத்தியல்வகை’ என்பதனான் எழுத்துக் களாக அடக்கப்பட்டன. இவை இயல்பான எழுத்துக்களைச் செய்யுட்கு ஏற்ப இயற்றிக் கொள்ளப்பட்ட முறைகள் என்பது. 33 எழுத்துக்களையும் குறில், நெடில், உயிர், மெய், வல்லினம், மெல்லினம், இடையினம், குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனப்பத்து வகைப்பட இயற்றி, கூட்ட வகையான் உயிர்மெய்யும் உயிரளபெடையும், போலிவகையான் ஐகார ஒளகாரங்களும், யாழ் வேண்டும் வகையான் வரும் ஒற்றள பெடையும் கூட்டச் செய்யுளியலில் 15 வகைப்படும் எனினும் அவை எழுத்தில் கூறப்பட்டனவே. இவற்றுள் மெய்யினமும் ஆய்தமும் அசைக்கு உறுப்பாகா. இவற்றுள், நெடிலும், அளபெடை இரண்டும், உயிரும், உயிர் மெய்யும், வல்லினமும், மெல்லினமும், இடையினமும், ஐகாரக் குறுக்கமும், ஒளகாரக் குறுக்கமும் எனப் பத்தும் தொடைக்கு உறுப்பாம். குறிலும் நெடிலும் அளபெடை இரண்டும் இனம்மூன்றும் ஆய்தமும் வண்ணத்திற்கு உறுப்பாம். இங்ஙனம் வேறுபட வந்த பயன் நோக்கி எழுத் தினை இயற்றிக்கோடலின் ‘எழுத்தியல் வகை’ எனப்பட்டது. ஒற்றளபெடை கோடற்கு ஒற்றும், ஒற்றுப்போல எழுத்து எண்ணப்படாமையும் உரித்து என்பதற்குக் குற்றியலுகரமும், உடன்கூறப்பட்டன. ஆதலின் நேரிடையாக அசைக்கு உறுப்பாவன குறிலும் நெடிலும் குற்றுகரமும் ஆம். அளபெடை நெடிலும் குறிலு மாக அடங்கும். ஐகார ஒளகாரக் குறுக்கங்கள் குற்றெழுத்தா யடங்கும். (செய். 2 பேரா.) எழுத்து 33இல் சில எழுத்துக்களை உயிர் என்னும் பெயர் கொடுத்து அவற்றைக் குறிலும் நெடிலும் அளபெடையும் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஐகாரக்குறுக்கமும் ஒளகாரக் குறுக்கமும் எனப் பெயர் வேறுபாடு கொடுத்து அதனோடு எட்டாக்கியும், சில எழுத்துக்களை மெய் என்னும் பெயர் கொடுத்து அவற்றை வல்லினமும் மெல்லின மும் இடையினமும் ஆய்தமும் ஒற்றளபெடையும் எனப் பெயர் வேறுபாடு கொடுத்து அதனோடு ஆறாக்கியும், இவை யிரண்டும் கூடியவற்றை உயிர்மெய் என வேறொரு பெயராக்கியும் 15 பெயரவாய்ச் செய்யுளில் நடக்கும் என்றற்கு ‘எழுத்து இயல்வகை’ எனப்பட்டது. ஒற்றடுத்த அசைகள் வேறுபடாமையின் ஒற்று அசைக்கு உறுப்பாகா; ஒற்றளபெடைக்கு உறுப்பாம். (செய். 2 நச்.) எழுத்தின் தொகை - சிறப்பெழுத்து, உறுப்பெழுத்து என்பன. (யா.க. பாயிர. உரை) எழுத்தின் வகை - ஒற்று, உயிர், உயிர்மெய் என்பன. (யா. க. பாயிர. உரை) எழுத்தின் விரி- உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், அளபெடை, வன்மை, மென்மை, இடைமை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் என்பன. (யா. க. பாயிர உரை) எழுத்து, அசை, சீர் முதலிய ஏழ் உறுப்புகளது முறைவைப்பு - எழுத்து எல்லா உறுப்புக்கும் முதற்காரணம் ஆதலின் சிறப்புடைத்து என முன்னும், அசை எழுத்தினான் ஆம் ஆதலின் அதனை அடுத்தும், சீர் அசையினான் ஆம் ஆதலின் அதன் பின்னும், தளை சீரினான் ஆம் ஆதலின் அதன் பின்னும், அடி தளையினான் ஆம் ஆதலின் அதன் பின்னும், தொடை அடிக்கண் காணப்படுதலின் அதன் பின்னும், பலதொடைகளும் சேர்ந்து தூக்கு (-பா) ஆகும் ஆதலின் அதன்பின்னும் முறையே வைக்கப்படும். (யா. க. 1 உரை.) எழுத்து, அசை முதலியவற்றின் பெயர்க்காரணம் - (வரிவடிவமாயின்) எழுதப்படுதலின் எழுத்து (ஒலிவடிவமா யின் எழுப்பப்படுவது எழுத்து) என்பது. அவ்வெழுத்து ஒன்றும் பலவும் ஓசை புடைபெயர்ந்து ஒலித்தலான் அசை யுண்டாகிறது. அசைகள் தம்முள் பொருந்திச் சீர்கொள்ள நிற்றலான் சீர் தோன்றுகிறது. சீரிரண்டு நின்ற சீரின் ஈற்றசை யும் வருஞ் சீரின் முதல் அசையுமாகத் தம்முள் பொருந்தி நிற்பது தளையாம். அத்தளைகள் ஒன்று இரண்டு மூன்று முதலாகத் தம்முள் அடுத்து நடத்தலான் அடியாம். அடிகள் இரண்டனைப் பொருட் பொருத்தமுறத் தொடுத்தல் தொடை யாம். அவ்வடிகள் ஓசைக்கேற்ப அறுக்கப்பட்டு நடக்க உதவுவதாகிய பாத் தூக்கு எனப்படும். (யா. க. 1 உரை) எழுத்து இயலும் வகையும் அது செய்யுளுக்கு உறுப்பு ஆமாறும் - எழுத்து இயலும் வகையாவது, உயிரும் உயிர்மெய்யும் ஒற்றும் சார்புமாய், உயிரளபெடையும் ஒற்றளபெடையுமாய், ஐகார ஒளகாரப் போலியுமாய் இயலுதல். எழுத்துச் செய்யுளுறுப்பு ஆமாறு - எழுத்து, அசையாயும் அசைக்கு உறுப்பாயும் நிற்றலொடு தொடைகளையும் வண்ணங்களையும் தோற்றுவித்தலான் செய்யுள் உறுப்பாயிற்று. (தொ. செய். 2 ச. பால) எழுத்து எண்ணி அமைந்த வெண்பா - வெண்பா 7 முதல் 16 எழுத்து வரை 10 நிலம் பெறும். ஏழ் எழுத்தடி வெண்பா - எ-டு : ‘மட்டுத்தான் உண்டு மதம்சேர்ந்து விட்டுக் களியானை கொண்டுவா என்றான் - களியானைக் கியாரே எதிர்நிற் பவர்!’ எட்டெழுத்தடி வெண்பா - எ-டு : ‘ஆர்த்தார்த்துக் கண்சேந்து வேர்த்து விரைந்துதன் பொன்னோடை யானையின் மேற்கொண்டான் - என்னாங்கொல் மன்னர் உறையும் மதில்.’ ஒன்பது எழுத்தடி வெண்பா - எ-டு : ‘சென்று முகந்து நுதலாட்டி மாறேற்று வென்று பெயர்ந்தானெங் கோ.’ இவை மூன்றும் சிந்தடி பத்தெழுத்தடி வெண்பா - எ-டு : ‘நின்று திரியும் சுடருளை நில்லாது வென்று திரிதருவேன் யானுளனாச் - சென்றோங்கி மண்ணக மார்பின் மறையலோ மற்றினியென் கண்ணகத்துப் பட்ட படி.’ பதினோர் எழுத்தடி வெண்பா - எ-டு : ‘இற்றேன் உடம்பின் எழில்நலம் என்றென்று பற்றுவிட் டேங்கும் உயிர்போல - மற்று நறுமென் கதுப்பினாள் தோள்தோயின் நண்ணும் மறுநோக் குடையவாம் கண்.’ பன்னிரண்டு எழுத்தடி வெண்பா - எ-டு : ‘புறத்தன நீருள பூவுள மாவின் திறத்தன கொற்சேரி யவ்வே - அறத்தின் மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி முகனை முறை செய்த கண்.’ (தண்டி. 40- 10 மேற்) பதின்மூன்று எழுத்தடி வெண்பா - எ-டு : ‘இரியன் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற அரியிளஞ் செங்காற் குழவி - அருகிருந் தூமன்பா ராட்ட உறங்கிற்றே செம்பியன்றன் நாமம்பா ராட்டாதார் நாடு.’ (முத்தொள். 77) பதினான்கு எழுத்தடி வெண்பா - எ-டு : ‘மணிமிடைந்த பைம்பூண் மலரணிதார் மார்பன் அணிமகர வெல்கொடியான் அன்னான் - தனிநின்று தன்னை வணங்காமைத் தானணங்க வல்லாளே என்னை அணங்குறியி னாள்’ இவை ஐந்தும் அளவடி பதினைந்து எழுத்தடி வெண்பா - எ-டு : ‘முகமறிந்தார் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார் காமம் அகமறையாத் தாம்வாழு மென்றோர்க் - ககமறையா மன்னை நீ வார்குழை வையெயிற்றாய் என்னோமற் றென்னையும் வாழும் எனல்.’ பதினாறு எழுத்தடி வெண்பா - எ-டு : ‘படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.’ (குறள் 606) வெண்பாவின் ஈற்றடி 5 எழுத்து முதல் 10 எழுத்து முடியப் பெறும் ஐந்தெழுத்து ஈற்றடி வெண்பா - எ-டு : ‘பிண்டி மலர்மேல் பிறங்கெரியுள் கந்துருள்போல் வண்டு சுழன்று வரும்.’ ஆறெழுத்து ஈற்றடி வெண்பா - எ-டு : ‘நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.’ (குறள் 234) ஏழெழுத்து ஈற்றடி வெண்பா - எ-டு : ‘உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்.’ (குறள் 232.) எட்டெழுத்தடி வெண்பா - எ-டு : ‘புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன்.’ (குறள் 237) ஒன்பதெழுத்தடி வெண்பா - எ-டு : ‘இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள.’ (குறள் 222) பத்தெழுத்தடி வெண்பா - எ-டு : ‘குணம்புரியா மாந்தரையும் கூடுமால் என்னே மணம்கமழும் தாமரைமேல் மாது’ (யா. வி. பக். 495 - 497) எழுத்துக்களை அசைகள் ஆக்குதல், அலகிடுமுறை - செய்யுள்களில் ஒவ்வோர் அசையும் தனக்கெனச் சிறப்புப் பொருள் உடையதாய் இருத்தலே சிறப்பு. ஆதலின் அசை களைப் பிரிக்கும்போது அவை பொருள் தருமாறு பிரித்தலே சிறப்பு. சீர்களின் முதலில் நிற்கும் தனிக்குறிலை மொழியினின்று பிரித்து ஒரு நேரசையாகக் கூறுதல் ஆகாது. அஃதாவது ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ - முருகு. 1 என்னும் அடியில் முதல்சீராகிய உலகம் என்பதன் ‘உ’ என்பதனைத் தனியே பிரித்து நேரசையாகக் கொள்ளல் ஆகாது. (தொ. பொ. செய். 7 நச்..) ஒரு சீரில் உள்ள சொற்களுள் முதற்சொல்லின் ஈற்றெழுத்தை யும் இரண்டாம் சொல்லின் முதல் எழுத்தையும் ஒருங்கு சேர்த்து அசை கொள்ளுதல் தகாது அஃதாவது. ‘பெற்ற மாயின் முற்றஇன் வேண்டும்’ தொ. எ. 279 என்னும் சூத்திரத்தில் ‘முற்றஇன்’ என்னும் சீரினை, முற்-றஇன் என்று பிரித்து ‘நேர் நிரை’ என்று கூறுதல் கூடாது. ஏனெனில் முற்ற என்பது ஒரு சொல்லாம். ஆகவே, ‘முற்றஇன்’ என்பதனை முற் - ற - இன் என மூவசைச் சீராகவே கோடல் வேண்டும். (செய். 30 பேரா.) தொல்காப்பியம் சொல்லும் நேர்பு நிரைபு அசைகளைப் பிற்காலத்தவர் கொள்ளாமல் விடுத்தலின் ‘விசும்புதைவரு வளியும்’ (புறநா. 2) ‘வசிந்துவாங்கு நிமிர்தோள்’ (முருகு. 106) என்பவற்றில் ‘விசும்புதைவரு’ என்பதனை விசும் - புதை - வரு = கருவிளங்கனி எனவும், வசிந்துவாங்கு என்பதனை வசிந் - துவாங் - கு = கருவிளங்காய் எனவும் கொள்கின்றனர். ஆனால் தொல்காப்பிய முறைப்படி ‘விசும்புதைவரு’ விசும்பு - தை - வரு = நிரைபு நேர் நிரை; வசிந்து - வாங்கு = நிரைபு நேர்பு என்றே பகுத்து அலகிடல் வேண்டும். நேர்பு நிரைபு அசைகளைக் கொள்ளாத ஆசிரியர்களுக்கும் ஒரு சீரிலுள்ள சொற்களின் எழுத்துக்களைப் பிரித்துக் கூட்டல் உடன்பாடன்று. ‘கொன்று கோடு நீடு’ என்பதனைக் கொன் - றுகோ - டுநீ - டு என நாலசைச் சீராகக் கொள்ளாது கொன்-று-கோ-டு-நீ-டு என ஆறசைச் சீராகவே பண்டை யுரையாசிரியர் கொள்வர். (யா. கா. ஒழி. 1 உரை) ‘அங்கண்வானத் தமரரசரும்’ என்ற வஞ்சிப்பாட்டில் ‘அனந்த சதுட்டயம்’ என்ற சீரினை அநந் - தச - துட் - டயம் என்று பிரிக்காமல், ‘அநந் - த - சதுட் - டயம் எனப் புளிமா நறுநிழலாகவே கூறுவர். (யா. கா. 9) இவ்வாறே அப்பாடலில் ‘மந்தமாருதம்’ ‘இலங்குசாமரை’ என்பவற்றை மந் - தமா - ருதம், இலங் - குசா - மரை என நிரை யீற்று மூவசைச் சீராகக் கொள்ளாமல், ‘மந் - த - மா - ருதம், இலங் - கு - சா - மரை’ என நாலசைச் சீராகவே கொள்வர். யாப்பருங்கல விருத்தியிலும் ‘அங்கணீலத்’ என்ற சீரினை (சீரோத்து. 6. உரை) அங் - கணீ - லத் எனப் பகுக்காது, அங் - க - ணீ - லத் என நாலசைச்சீராகவே காட்டியதும், ‘மாரி யொடு’ (சீரோத்து - 7. உரை) என்பதனை ‘மா - ரியொ- டு எனப்பகுக்காது’ ‘மா - ரி - யொடு’ எனத் தேமாங்கனி என்று குறித்தலும் பண்டை நேரிய மரபினை நினைவுறுத்தும் செய்திகளாம். ஒரு சீர்க்குள் உள்ள இரண்டு சொற்களின் எழுத்துக்களை இணைத்து அசையாக்கும் வழக்கம் மிகுந்த காலத்தே கனிச்சீர்களை யுடைய வெண்பாக்கள் காய்ச்சீராகவே கருதப்பட்டு யாக்கப்பட்டன. “வருந்தித்தாம் கற்றன ஓம்பாது மற்றும் பரிந்துசில கற்பான் தொடங்கல்” (நீதிநெறி . 9) “உடைந்துளா ருட்குவரு கல்வி” (நீதிநெறி. 8) “கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றவெலாம்” (நீதிநெறி 15) “சந்திசெயத் தாள்விளக்க” (நள. கலி. தொ. 32) முதலியன எடுத்துக்காட்டுக்களாம். பரிந்து , சில - நிரைபு நிரை; பரிந் - துசி - ல - நிரை நிரை நேர் உட்கு, வரு - நேர்பு நிரை; உட் - குவ - ரு - நேர் நிரை நேர் கற், ற, வெலாம் - நேர் நேர் நிரை; கற் - றவெ - லாம் - நேர்நிரைநேர் சந், தி, செய - நேர் நேர் நிரை - சந் - திசெ - ய - நேர் நிரை நேர் என்று கொள்ளப்பட்டன. ‘சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு, புந்திமிகத் தான்களித்துப் போதல்மனத் தேகொண்டு’ (நள.) ‘இருநெடுஞ் செஞ்சுடர் எஃகமொன் றேந்தி இரவின்வந்த’ இவற்றின்கண் ‘தாளின்மறு’ என்பதும் ‘போதல்மனத்’ தென்பதும் கனிச்சீர் வெண்பாவிற் புகலாமைப் பொருட்டு மெய்யெழுத்தை நீக்கிக் கணக்கிட்டுத் தா - ளிம - று எனவும், போ - தம - னத் எனவும் பகுத்துச் சீராக்குதலும்; ‘இரவின் வந்த’ என்பது கட்டளைக் கலித்துறையடியின் இறுதிச்சீர் விளங்காய் என வருதல் வேண்டுதலின், நாலசைச்சீர் ஆகாமைப் பொருட்டு னகரமெய்யை நீக்கிக் கணக்கிட்டு இர-விவந் - த எனப்பகுத்துச் சீராக்குதலும் பிற்கால வழுவமைதி முறைகளாயின. 12 எழுத்தின் மேற்பட்ட வெண்பா அடி கலியோசை யேற்கும் என்பது பண்டை மரபு. பிற்காலத்தே சீர்வகை அடிகளாத லின் எழுத்துக் கணக்கினை நோக்குவதில்லை. எழுத்து வகையடி - சீர்களைக் கொண்டு பின்னையோர் அடிகளுக்குப் பெயரிட் டமை போலாது தொல்காப்பியனார் எழுத்துக்களைக் கணக்கிட்டு அடிகளுக்குப் பெயரிட்டுள்ளார். 4 முதல் 6 எழுத்து முடிய உடைய அடி - குறளடி 7 முதல் 9 எழுத்து முடிய உடைய அடி - சிந்தடி 10 முதல் 14 எழுத்து முடிய உடைய அடி - அளவடி 15 முதல் 17 எழுத்து முடிய உடைய அடி - நெடிலடி 18 முதல் 20 எழுத்து முடிய உடைய அடி - கழிநெடிலடியாம். ஆகவே, நாற்சீரடி 4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய உள்ள 17 நிலங்களைக் கொண்டு ஐந்து கூறுகளாகப் பகுக்கப்பட்டுப் பெயர் பெற்று நிகழும் என்பது. எ-டு : போந்து போந்து சார்ந்து சார்ந்து (4 எழுத்தடி) கலனளவு கலனளவு நலனளவு நலனளவு (20 எழுத்தடி) இடையடிகளையும் அறிக. (தொ. செய். 36 - 40 நச்.) எழுத்தொலி உண்டாதல் - உந்தியில் தோன்றும் உதானவளி, மார்பு - கழுத்து - மூக்கு - தலை - பல் - இதழ் - நா - மேல்வாய்- என்னும் எட்டிடத்தும், எடுத்தல் படுத்தல் நலிதல் என்னும் ஒலியுடன், உயிர் மெய் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற ஐவகை எழுத்தா யும் அவற்றின் விகற்பமாயும் வெளிப்படுதலாம். (யா. க. 4 உரை மேற்.) எழுபது வகைத் தளைவழு : சீர்கள் தட்கும்வழி வருவன - ஆசிரியநிலம் 4 எழுத்து முதல் 20 எழுத்து முடிய 17 ஆவன. இப்பதினேழனுள்ளும் வெண்டளை தட்பப் பதினேழு வழுவும், கலித்தளை தட்பப் 17 வழுவும் ஆக ஆசிரியப்பா விற்குத் தளைவழு 34 ஆகும். வெண்பாநிலம் 7 எழுத்து முதல் 16 எழுத்துமுடிய 10 ஆவன. இப்பத்தனுள்ளும் ஆசிரியத்தளை தட்பப் பத்து வழுவும், கலித்தளை தட்பப் பத்து வழுவும் ஆக வெண்பாவிற்குத் தளைவழு 20 ஆம். கலிக்கு நிலம் 13 எழுத்து முதல் 20 எழுத்துமுடிய 8 ஆவன. இவ்வெட்டனுள்ளும் வெண்டளை தட்ப எட்டுவழுவும், ஆசிரியத்தளை தட்ப எட்டுவழுவும் ஆகக் கலிப்பாவிற்குத் தளைவழு 16 ஆம். ஆகவே, தளைவழுக்கள் 34, 20, 16 ஆக 70 ஆகும். (யா. வி. பக். 455, 456) ஒருசாரார்தம் இக்கருத்தினைப் பேராசிரியர் மறுப்பர். (தொ. செய். 50 பேரா) இனித் தொல்காப்பியம் செய்யுளியல் 50ஆம் சூத்திரத்துள் பேராசிரியர் உரையையே பின்பற்றி - நச்சினார்க்கினியர் உரைக் கருத்து வருமாறு : அகவற்கு இயற்சீர் 19, உரிச்சீர் 4, அசைச்சீர் 4 - ஆக 27 வெள்ளைக்கு இயற்சீர் 19, வெண்சீர் 4, அசைச்சீர் 4 - ஆக 27 கலிக்கு இயற்சீர் 16, உரிச்சீர் 4, வெண்சீர் 4 - ஆக 24 ஆக, கூடுதல் 78. (கலிக்கு நேர் ஈற்று இயற்சீர் 2, அசையானாகிய நேரீற்றியற்சீர் 1, ஆக 3 இயற்சீரும் வாரா.) அகவற்கும் வெள்ளைக்குமாக அசைச்சீர் எட்டும் இயற்சீர்ப் பாற்படுத்துத் தளைகோடலின் அவை எட்டும் இயற்சீருள் அடங்குதலின், அவை எட்டும் நீக்கப்படத் தக்கன ஆகவே, 78 சீர்களின் அவ்வெட்டனையும் நீக்கச் சீர்கள் 70 ஆகும். சீர்கள் ஒன்று ஒன்றனொடு தட்குங்கால் அவை ஓசையைக் கடந்தால் எழுபது வழுக்கள் உண்டாகும். அவ்வழுக்கள் நிகழாவகை ஓசை அமையுமாறு அடிகள் அமைதல் வேண்டும். எழுபது வகைமையின் வழு நேரா வண்ணம் 625 அடிகள் விரியுமாறு - ‘வழு நேரும் எழுபது வகைமையாவன’ காண்க. அங்குக் கூறிய உரியசைச்சீர், இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வஞ்சி யுரிச்சீர் ஆகிய ஐந்துசீர்களையும் நிறுத்தி, இரண்டாம் சீரை வேறுபடுத்திப் புணர்த்தி உறழ, 25 ஆகும். அவற்றொடு மூன்றாம் சீரை வேறுபடுத்திப் புணர்த்தியுறழ, 125 ஆகும். அவற்றொடு நான்காம் சீரை வேறுபடுத்திப் புணர்த்தியுறழ, 625 அடிகளாம். (ஆசிரியத்துள் ஒத்தசீர்கள் வரின் தளை வழுவின்றாம்; பிறசீர்கள் வரின் தளை வழுவின்றி அமைதல் வேண்டும். அசைச்சீரும் வெண்சீரும் தளைநிலைக்கு இயற் சீரோடு ஒக்கும் என்று கூறினாரேயன்றி, சீர்நிலைக்கண் அவை வேறாகவே நிற்கும் என்க.) 625 நாற்சீரடிகள் ஆமாறு - விளக்கம் : முதற்கண் 25 நாற்சீரடிகளுள் முதற்சீர்களை முதலைந்து சீர்கள் உரியசைச்சீராகவும், அடுத்த ஐந்து சீர்கள் இயற்சீராக வும், அடுத்த ஐந்து சீர்கள் ஆசிரியஉரிச்சீராகவும், அடுத்த ஐந்து சீர்கள் வெண்பாஉரிச்சீராகவும், இறுதி ஐந்து சீர்கள் வஞ்சி உரிச்சீராகவும் அமைக்க. இரண்டாம் சீர்களை உரியசைச்சீர், இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்பா உரிச்சீர், வஞ்சி உரிச்சீர் - என்ற முறையே அமைக்க. மூன்றாம் நான்காம் சீர்களை உரியசைச்சீர் உரியசைச்சீராக அமைக்க. இம்முறையால் 25 நாற்சீரடிகள் கிட்டின. இனி, இவற்றுள் மூன்றாம் சீர்களாகிய உரியசைச்சீரை மாத்திரம் முறையே இயற்சீராகவும் (25) ஆசிரியஉரிச்சீராக வும் (25) வெண்பாஉரிச்சீராகவும் (25), வஞ்சிஉரிச்சீராகவும் (25) மாற்றி உறழ்க. இவ்வாற்றால் 25 + (25 ஒ 4) = 125 நாற்சீரடிகள் எய்தின. இவையெல்லாம் உரியசைச்சீரால் முடிந்தவை. இவ் ஈற்று உரிச்சீர்களை முறையே இயற்சீராகவும் (125) ஆசிரிய உரிச்சீராகவும் (125) வெண்பா உரிச்சீராகவும் (125) வஞ்சி உரிச்சீராகவும் (125) மாற்றி உறழவே, இவ்வுறழ்ச்சியால் 125 + (125 ஒ 4) = 625 நாற்சீரடிகள் எய்தப்பெறும். (தொ. செய். 50 ச. பால.) ஏ ஏது நுதலிய முதுமொழி - நுண்ணிய பொருளுடைமையும், எழுத்தானும் சொல்லானும் பொருளுடைமையும், எல்லாச் சமயத்தாரானும் கூறும் பொருள்களில் தான் சென்று விளங்குதல் உடைமையும், அறிவோர்க்குப் பிரவேசிக்க எளிதாதல் உடைமையும் எனப்படும் இந்நான்கும் தோன்ற, எப்பொருளும் தன்னகத்து அடங்கத் தான் மேற்பட்டுப் பிரதிக்கினை மாத்திரத்தான் கருதிய பொருளை முற்றுவிக்க வேண்டுவனவற்றை உட் கொண்டு வாராநிற்கும் ஏதுப்பொருளைக் கருதியனவே முதுமொழிச் செய்யுளாம். பிரதிக்கினை - கருதுதல். இவற்றில் விகற்பம் அளவைநூல் முகத்தான் அறியப்படும். அளவையும் பொருட்கூறாகலான் அளவைநூல் பற்றிய இச்செய்தி தொல்காப்பியப் பொருட் படலத்தில் கூறப்பட்டுள்ளது. பிரதிக்கினை -கருதுதல் - இம்மலையில் நெருப்பு உண் டென்பது; ஏது - புகை உண்மையான், திட்டாந்தம் - அடுக்களை போல. உபநயம் - எங்குப் புகையுண்டோ அங்கு நெருப்புண்டு; நிகமனம் - இம்மலையிலும் புகையிருப்பதால் இதன்கண் நெருப்பு உண்மை உறுதி என முடிவு செய்வது. (இ. வி. பாட். 145 உரை) கூரியதாய்ச் சுருங்கி விழுமியதாய் எளிதாகி இயற்றப்பட்டுக் குறித்த பொருளை முடித்தற்கு வருமாயின், அங்ஙனம் வந்ததனைப் பொருள் முடித்தற்குக் காரணமாகிய பொரு ளினைக் கருதுவது (ஆகிய) முதுமொழி என்பர் புலவர். எ-டு : ‘உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவியரிந் தற்றால் - வழுதியைக் கண்டன கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு.’ (பழமொழி) கண்டகண் இருப்பத் தோள் பசந்தன என ஒன்றன் வினைப் பயனை ஒன்று நுகர்ந்தது என்புழிக் குறித்த பொருள் இயை பின்று எனினும், எடுத்துக்காட்டிய ‘உழுத.................. அற்றால்’ என்ற உவமை இயைபுடைமையினை விளக்கியவாறு காண்க. (தொ. பொ. 489 பேரா. உரை) ஏந்தல் - ஒரே சொல் மிகுதல். ஒரு சொல்லே மிகுதலின் “வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்” (நாலடி. 39) என்ற அடி ஏந்தல்வண்ணம் ஆயிற்று. (தொ. செய். 231 பேரா., நச்.) ஏந்தல் வண்ணம் - ஒரு முறை சொல்லிய சொல்லானே சொல்லப்படும் பொருள் சிறப்பச் செய்யும் சந்தம். ஏந்தல் - ஒரு சொல்லே மிகுதல். எ-டு : ‘கூடுவார் கூடல்கள் கூடல் எனப்படா கூடலுட் கூடலே கூடலும் - கூடல் அரும்பிய முல்லை அரும்பவிழ் மாலைப் பிரிவிற் பிரிவே பிரிவு.’ முன்னடிகளில் கூடல் என்ற சொல்லும், ஈற்றடியில் ‘பிரிவு’ என்ற சொல்லும் ஏந்தல் வண்ணம் உண்டாக்கியவாறு. (தொ. செய். 231 நச்.) ஏந்திசை அகவல் - நேர் ஒன்று ஆசிரியத் தளையான் வரும் அகவல் எ-டு : ‘போது சாந்தம் பொற்ப ஏந்தி ஆதி நாதற் சேர்வோர் சோதி வானந் துன்னு வாரே’ (யா. க. 69 உரை) ஏந்திசை இருபது - குறில் அகவல் ஏந்திசை வண்ணம், நெடில் அகவல் ஏந்திசை வண்ணம், வலி அகவல் ஏந்திசை வண்ணம், மெலி அகவல் ஏந்திசை வண்ணம், இடை அகவல் ஏந்திசை வண்ணம் - என அகவல் ஏந்திசை வண்ணம் ஆவன - 5. எ-டு : ‘களவினாற் கொணர்ந்தவெண் காணமும் விழுப்பொன்னும் உளவெனினும் யான்துய்ப்பல் உலவாது கிடந்தமையால் வளையினாற் பொலிந்தகை வாட்கண்ணாள் வழிப்படூஉம் களைவாரின் கனையிருட்கண் காணேன்மற் றிதுவல்லால்.’ என இது போன்ற தரவு கொச்சகங்களும், தும்பிப் பாட்டும் அகவல் ஏந்திசை வண்ணத்தன. குறில் ஒழுகல் ஏந்திசை வண்ணம், நெடில் ஒழுகல் ஏந்திசை வண்ணம், வலி ஒழுகல் ஏந்திசை வண்ணம், மெலி ஒழுகல் ஏந்திசை வண்ணம், இடை ஒழுகல் ஏந்திசை வண்ணம் - என ஒழுகல் ஏந்திசை வண்ணம் ஆவன - 5 எ-டு : ‘வரையென மாடங்கள் ஓங்குறு வீதியின் வஞ்சி மன்னவன் புரைபுரை நின்றலர் பூந்தொடை யற்பொறை யன்தான் அருளானேல் கரையெனக் காலையும் காண்பரிய கடல்போலும் கௌவையும் அரையின மேகலை ஓட ஓடுமிவள் ஆவிஆற்றாதே’ என இன்ன ஆசிரியத்துறை, விருத்தங்கள், வெண்பாக்கள், வெள்ளொத்தாழிசைகள் எல்லாம் ஒழுகல் ஏந்திசை வண்ணத்தன. குறில் வல்லிசை ஏந்திசை வண்ணம், நெடில் வல்லிசை ஏந்திசை வண்ணம், வலி வல்லிசை ஏந்திசை வண்ணம், மெலி வல்லிசை ஏந்திசை வண்ணம், இடை வல்லிசை ஏந்திசை வண்ணம் - என வல்லிசை ஏந்திசை வண்ணம் ஆவன - 5 எ-டு : ‘பறைபட் டனபட் டனசங் கினொலி முறைவிட் டனவிட் டனமுன் னுலவாத் திறைவிட் டனர்கொட் டினர்திண் கலிமா நிறைகொட் டினரொட் டினர்நீள் முழவால்’ இத்தகைய ஓசையுடையன வல்லிசை ஏந்திசை வண்ணத்தன. குறில் மெல்லிசை ஏந்திசை வண்ணம், நெடில் மெல்லிசை ஏந்திசை வண்ணம், வலி மெல்லிசை ஏந்திசை வண்ணம், மெலி மெல்லிசை ஏந்திசை வண்ணம், இடை மெல்லிசை ஏந்திசை வண்ணம் - என மெல்லிசை ஏந்திசை வண்ணம் ஆவன - 5 எ-டு : ‘மான்வீடு போழ்திற் பிணையின்னுயிர் போவ தேபோல் யான்வீடு போழ்தின் இதுவேகொனி னக்கும் என்னத் தேனூறும் இன்சொல் மடவாய்!அழு தாற்ற கில்லாய் வானூடு போய வரைகாணிய சென்ற காலை’ இத்தகைய (கலிநிலைத்துறை) ஓசையுடையன மெல்லிசை ஏந்திசை வண்ணத்தன. ‘உழவர்ஓதை மதகோதை’ (சிலப். 7-4) போல்வனவும் அன்ன. இவ்வண்ணங்கள்தாம் மதயானை நடந்தாற்போலவும், பாம்பு பணைத்தாற் போலவும், ஓங்கிப் பறக்கும் புள்போலவும் வருமெனக் கொள்க. (யா. வி. பக். 412, 413, 416 - 418) ஏந்திசைச் செப்பல் - வெண்சீர்வெண்டளையான் வரும் வெண்பாவின் ஓசை. எ-டு : ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு.’ (குறள் 397) வெண்சீரே வந்து வெண்டளை தட்ப ஏந்திசைச் செப்பல் பிறக்கும் என்ப. (யா. கா. 22 உரை) ஏந்திசைத் துள்ளல் - கலித்தளையான் அமையும் செய்யுளது ஓசை. எ-டு : ‘முருகவிழ்தா மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவே வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார் இருவினைபோய் விழமுறியா எதிரியகா தியைஎறியா நிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே’ (யா. க. 78 உரை) ஏந்திசைத் தூங்கல் - ஒன்றிய வஞ்சித்தளையான் வரும் ஒசை. எ-டு : ‘பார்பரவிய படுவரைத்தாய்க் கார்கவினிய கதழொளியாய் நீர்மல்கிய நீள்மலரவாய்.....................’ ‘வளவயலிடைக் களவயின்மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும்’ முதற்பாடற் பகுதியுள், முதலடிக்கண்ணும் இரண்டாமடிக் கண்ணும் சீர்களிடையே ஏந்திசைத் தூங்கல் வந்தது; இரண்டாம் பாடற் பகுதியுள் முழுதும் ஏந்திசைத் தூங்கல் வந்தது. (யா. க. 90 உரை) ஏந்திசை வண்ணம் இருபது - ‘ஏந்திசை இருபது’ காண்க. ஏழுசீரால் வந்த கழிநெடிலடி ஏழ்வகை - 1 எழுசீர் மத்த கோகில விருத்தம் (குறில்ஈற்றுத் தேமா கூவிளம் ஆகிய சீர்கள் மூன்று முறை வரப்பெற்று, இறுதியில் நெடிலீற்றுக் கூவிளம் அமையப் பெறுவது), 2. சுகந்தி விருத்தம் (நேரசையில் தொடங்குவது, நிரையசை யில் தொடங்குவது), 3. மானினி விருத்தம், 4. கவிராச விராசித விருத்தம், 5. சாத்துவி விருத்தம், 6. மணிமாலாவிருத்தம் (நேரசையில் தொடங்கு வது, நிரையசையில் தொடங்குவது), 7. புளிமாவும் கருவிள மும் மும்முறை அடுக்கி வர இறுதியில் நீண்ட கருவிளம் வரும் எழுசீரடிகள் நான்கான் ஆகியதும், இத்தகைய பாட லில் இறுதிச்சீர் தேமா ஆகியதும் எனப்படும் வகை என்பனவாம். (வி. பா. பக். 68 - 72) ஐ ஐ ஒளக் குறுக்கம் - அளபெடுத்தலும் தனியே சொல்லுதலும் என்ற இரண்டிட மும் அல்லாதவழி வரும் ஐ ஒள தம் அளவிற் சுருங்கி ஒன்றரை மாத்திரையாம். அவை மூவிடத்தும் குறுகும். ஐப்பசி : பௌவம் - முதற்கண், ஐயும் ஒளவும் ஒன்றரை மாத்திரை பெற்றன. இடையன், சிறுதலைநௌவி - இடையே ஒன்றரை மாத்திரை பெற்றன. குவளை : அன்னௌ - இறுதிக்கண் ஒன்றரை மாத்திரை பெற்றன. பை - கௌ - தனியே நின்றவழியும் ஒன்றரை மாத்திரை பெற்றன. (யா. க.2 உரை) ஐகாரக் குறுக்கம் - ‘படுமழைத் தண்மலை வெற்பன், உறையும் நெடுந்தகையைக் கண்டதாம் நாள்’ இஃது ஐகாரக் குறுக்கம் வந்த செய்யுள். (யா. வி.பக். 32) ஐஞ்சீரடி மூன்று பாவிற்கும் வருதல் - வெண்பா, ஆசிரியம், கலி என்பனவற்றின் கட்டளைப்பா, சீர்வகைப்பா என்ற இரண்டன்கண்ணும் ஐஞ்சீரடியும் வரும்; வெண்பாவினுள் மிக அருகியே வரும்; கலியுள் அதற்கு உறுப்பாய் வரும் பாக்களுள் பெரும்பான்மையும் வரும். கலிக் குக் கூறிய ஐஞ்சீரடி வெண்டளை விரவியும் ஆசிரியத்தளை விரவியும் வரும். ஆசிரியத்துள் இரண்டு ஐஞ்சீரடி அடுக்கியும் வரும். எ-டு : ‘கண்டகம் பற்றிக் கடக மணிதுலங்க ஒண்செங் குருதியுள் ஓஒ கிடப்பதே - கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுதகண் ணீர்துடைத்த கை.’ என வெண்பாவினுள் ஐஞ்சீரடி வந்தது. ‘சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!’ (புறநா. 235) என ஆசிரியப்பாவினுள் ஐஞ்சீரடி வந்தது. ‘தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக’ (குறிஞ்சி. 3) எனக் கலிக்கு உறுப்பாகிய ஆசிரியச் சுரிதகத்துள் ஐஞ்சீரடி வந்தது. ‘அணிகிளர் அவிர்பொறித் துத்திமா நாகத் தெருத்தேறித் துணியிரும் பனிமுந்நீர்த் தொட்டுழந்து மலைந்தனையே.’ இக்கலித்தாழிசையுள் முதலடி ஐஞ்சீரான் வந்தது. (தொ. செய். 63 நச்.) ஐம்பத்தொரு நிலம் - வெண்பாவின் நிலம் .... 10 (தொ. செய். 58) அகவற்பாவின் நிலம்... 17 (52), கலிப்பாவின் நிலம் .... 8 (59), வஞ்சிப்பாவின் நிலம்... 10 (57), 2,3,5, 6, 7, 8 சீர்கள் அடிகள் 6 (63, 64, 65, 69, 70) ஆக, நிலம் 51 (தொ. செய். 49 நச்.) ஐம்பான் ஒன்றுதொடை - மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஒ 8 விகற்பம் = 40, எழுத்து, அசை, சீர், அடி அந்தாதி 4, இரட்டை, செந் தொடை 2, நெடில், மூன்றெழுத்து, உயிர், விட்டிசை, வருக்கம் (எதுகை) 5 = 51 (சாமி. 155) ஐயெழுத்துச்சீர் மூன்று - நரையுருமு, புலிவருவாய், விரவுகொடி என்பன. இவற்றுள் முற்றுகரம் எழுத்தாகக் கணக்கிடப்பட்டுள்ளது. (தொ. செய். 41 நச்.) ஐவகை அடிகள் - குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்பன ஐவகை அடிகளாம். இவை 4 எழுத்துமுதல் 20 எழுத்து முடிய உடையன. ஆதலின் இவற்றிற்கு நிலைக்களம் ஆகிய நிலன் 17. இவை 70 வகைக் குற்றமும் நீங்கி வரின், 625 என்னும் எண்ணிக்கை பெறும். (தொல். செய். 50 நச்.) ஐவகைச் சீர்கள் - அசைச்சீர் , இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வஞ்சிச்சீர் எனச் சீர் ஐவகைப்படும். அவை முறையே 4, 10, 6, 4, 60 ஆக, ஐவகைச் சீர்களும் 84 ஆகி நிகழும். இது தொல்காப்பியத் துள் கண்ட நெறி. (தென். யாப். 19) ஒ ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா - பாடல் முழுதும் ஒரே அடிஎதுகை பெற்றுவரும் பஃறொடை. வெண்பா. ஒரு விகற்பப் பஃறொடை வெண்பா என்பதும் அது. எ-டு : ‘சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல் கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல் தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம் வேற்றுமை இன்றியே ஒத்தன மாஅடர் ஆற்றுக்கா லாட்டியர் கண்’ இப்பாடல் 5 அடியும் ஓரடி எதுகை பெற்று ஒரே விகற்பமாய் வந்தவாறு. (யா. க. 62 உரை) ஒத்தாழிசை ஆவது - ஒத்த தாழிசை ஒத்தாழிசை ஆயிற்று. ஒருபொருள்மேல் அடுக்கி மூன்றாக வரின் ஒத்தாழிசையாம். தழுவு இசை தாழிசையாயிற்று. முடுகுதலும் விட்டிசைத்தலுமின்றிச் சீரொடு சீர் தழுவிச் செல்லும் இசை தாழிசையாம். அஃது ஈண்டுக் கலியுறுப்பாகிய செய்யுட் பகுதியைக் குறித்தது. (தொ. செய். 115 ச. பால.) ஒத்தாழிசைக் கலிப்பா இருவகை - ஒத்தாழிசைக் கலிப்பா அகநிலை ஒத்தாழிசைக் கலிப்பா எனவும், தேவர்களை முன்னிலைப்படுத்திப் பரவும் செய்தி யது ஆகிய தேவபாணி எனவும் இருவகைப்படும். (தொ. செய். 131 நச்.) ஒத்தாழிசைக்கலியின் நேரிசை அமைப்பு - முதலில் எடுத்தல் ஓசையான் அமையும் தரவு என்ற உறுப் பினைப் பெற்று, அடுத்துத் தாழ்ந்த ஒசையவாய்த் தரவினை ஒத்தும் தரவினைவிடச் சுருங்கியும் வரும் அடிகளையுடைய தாழிசை மூன்று அடுக்கப் பெற்று, அடுத்துத் தனிச்சொல் பெற்று, இறுதியில் நலிதல் ஓசையையுடைத்தாய்த் தரவினை ஒத்தோ அதனிற் சுருங்கியோ, அருகிச் சிறிது மிக்கோ வரும் அடிகளையுடைய ஆசிரியச்சுரிதகத்தாலோ வெள்ளைச் சுரிதகத்தாலோ அகப்பொருள் பற்றியதாய் அமைவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. (யா. க. 82 உரை) ஒத்தாழிசைக் கலிப்பாவின் வகைகள் - நேரிசை ஒத்தாழிசைக்கலி, அம்போதரங்க ஒத்தாழிசைக்கலி, வண்ணக ஒத்தாழிசைக் கலி என்பன. (யா. க. 80) ஒத்தாழிசைக் கலியின் விரி - 1. வெள்ளைச்சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா 2. அகவல்சுரிதக நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. 3. அளவியல் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. 4. அளவழி அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா. 5. அளவியல் வண்ணக ஒத்தா ழிசைக் கலிப்பா. 6. அளவழி வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா என்பன. (யா. க. 82, 83, 84 உரை) ஒத்தாழிசை முதலிய முறை வைப்பு - ஒத்தாழிசை - ஒத்தாழிசை என்னும் உறுப்புடைய செய்யுள். (ஒத்து தாழ் இசை என்பது ஒத்தாழிசை ஆயிற்று.) தாழிசை என்பது தானுடைய துள்ளல் ஓசைத்து. தாழ்தல் துள்ளல் என்னும் பொருளது. தரவு ஓசை சிறிது வேறுபடினும் இத் தாழிசை ஓசை வேறுபடலாகாது. கொச்சகம் முதலியவற்றுள் இடைநிலைப்பாட்டுக்கள் தாழமுடைய அன்றியும் வரலாம். ஆயின், தாழிசைக்குப் பெரும்பாலும் ஓசை தவறுதல் கூடாது. தாழிசை மூன்று அடுக்கி வருதலானும், ஒழிந்த கலி உறுப்புக்களின் சிறத்தலானும் தாழிசை என்ற பெயர் தலைமையும் பன்மையும் பற்றி வந்த பெயராம். கட்டளைக் கலிப்பாவுக்குத் தரவு மிகத் துள்ளாது வரத் தாழிசை அதனின் தாழம்பட்டு மூன்றடுக்கி வருதலின் ஒத்தாழிசை எனப்பட் டது. சீர்வகைக் கலியுள் தரவு மிகத் துள்ளிவரத் தாழிசை ஓசை தாழம்பட்டே வருதலும், சிறுபான்மை நேரீற்றியற்சீர் வருதலும், கொச்சகத்தின் தாழிசை ‘நீயே வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் மரீஇய அம்பு தெரிதீயே’ (கலி. 7) எனத் தாழம்பட்ட ஓசையின்றி வருதலும் கொள்ளப்படும். தாழிசைகள் தம்மில் ஒத்து வருதலானும், சிறப்புடைமை யானும் ஒத்தாழிசைக்கலி முதலிற் கூறப்பட்டது. கலித் தொகை 150 கலியுள்ளும் ஒத்தாழிசைக்கலி 68 வந்துள்ளது என்ப. இதற்கும் கொச்சகத்திற்கும் இடையே கலிவெண் பாட்டுக் கூறியது, அதுவும் இவை போல உறுப்புக்களை யுடைத்தாகியும் வரும் என்றற்கு. தரவும் போக்கும் சிறுபான் மையின்றியும் வருதலின், கொச்சகம் அதன்பின் வைக்கப்பட் டது. அடக்கியல் இன்றியும் அடி நிமிர்ந்தும் ஒழுகிசை யின்றியும் வருதலே பெரும்பான்மை யாகலின், உறழ்கலி ஈற்றில் வைக்கப்பட்டது. (68 என்ற எண்ணிக்கை சில குறைந்தே காணப்படுகிறது.) (தொ. செய். 130 நச்., பேரா.) ஒத்து மூன்றாதல் - பொருளும் அளவும் தம்முள் ஒத்து மூன்றாய் வருதல். இது தேவபாணிக்கண் வரும் தாழிசையின் இலக்கணமாம். (தொ. செய். 142 நச்.) ஒரீஇத் தொடுத்தல் - பிறிதொன்றனை அவாவாமல் அறுத்துச் செய்வது. இஃது யாப்புப் போலப் பொருள் நோக்காது ஓசையைக் கோடலா னும் அடியிறந்து கோடலானும் யாப்பெனப்படாது. ஒரீஇத் தொடுத்தல் என்பது எல்லாத் தொடையும் ஒரீஇச் செந்தொடையால் தொடுத்தல் என்பாரும் உளர். செந் தொடையும் தொடையாகலான் அது பொருந்தாது. எ-டு : ‘சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே’ (புறநா. 235) இதன்கண், வேறொரு சொற்றொடரை எதிர்பாராமல் அந்த அடியிலேயே பொருள் நிரம்பியிருத்தல் காண்க. இஃது ஒரூஉ வண்ணத்தின் இலக்கணம். (தொ. செய். 227 நச்.) ஒருசாரார் கூறும் தொடை விகற்பங்கள் - கடை, கடையிணை, பின், கடைக்கூழை, இடைப்புணர் என்பன ஒருசாராரால் கொள்ளப்படுவன. இவர்கட்கும் இயைபுத் தொடை ஈற்றிலிருந்தே கணக்கிடப்படும். அடிதோறும் இறுதிச்சீர் (மோனை முதலியவற்றால்) ஒன்றி வருவது கடை; ஓரடியில், இறுதியிரண்டு சீர்கள் அவற்றால் ஒன்றிவருவது கடையிணை; இரண்டாம் நான்காம் சீர்கள் ஒன்றிவருவது பின்; முதற்சீர் நீங்கலாக ஏனைய மூன்றும் ஒன்றிவருவது கடைக்கூழை; 2, 3 ஆம் சீர்கள் ஒன்றிவருவது இடைப்புணர். இத்தொடை விகற்பம் அளவடிக்கண்ணேயே கொள்ளப்படும். (யா.க. 39) ஒருசிறை நிலை - ஒரு பாட்டின் பொருள் ஒருவழியாக நிற்பது; யாப்பருங்கல விருத்தியுரை (பக். 393) கூறும் பொருள்கோள். சிங்கநோக்குத் தாப்பிசைப் பொருள்கோளிலும், தேரைப்பாய்த்துச் சுண்ண மொழிமாற்றுப் பொருள்கோளினும், பாசிநீக்கமும் ஒருசிறை நிலையும் புனல்யாற்றுப் பொருள்கோளிலும் அடங்கும். ஒருசிறை நிலையாவது ஒருபாட்டினகத்துச் சொல்லப்பட்ட பொருள் ஒருவழி நிற்பது (இறை. அ. 56. உரை) எ-டு : ‘கோடல் மலர்ந்து குரு(கு)இலை தோன்றின; கொன்றைசெம்பொன் பாடல் மணிவண்டு பாண்செயப் பாரித்த; பாழிவென்ற ஆடல் நெடுங்கொடித் தேரரி கேசரி அந்தண்பொன்னி நாடன் பகைபோல் மெலிகின்ற தென்செய்ய நன்னுதலே!’ கோடல் மலர்தல், குருக்கத்தி தளிர் ஈனல், கொன்றை பூத்தல் என்பன தலைவன்தேர் மீண்டு வருதலுக்குரிய கார்காலத் தைச் சுட்டுதலாகிய ஒரேபொருள் பற்றி அமைந்தமையின், இப் பாட்டிலுள்ள பொருள்கோள் ஒருசிறைநிலையாம். (இறை. அ. 56 உரை; யா. வி. பக். 393) ஒருசெய்யுளகத்து நாலந்தாதியும் வருதல் - எழுத்து அசை சீர் அடி என்ற நான்கும் பற்றியும் அந்தாதி வருமாயின், அவை முறையே எழுத்தந்தாதி சீர்அந்தாதி அசையந்தாதி அடிஅந்தாதி எனப் பெயர் பெறும். (ஓரடியின் இறுதி எழுத்தோ இறுதி அசையோ இறுதிச்சீரோ அடி முழுதுமோ அடுத்த அடியின் முதலெழுத்தாகவோ முதலசை யாகவோ முதற்சீராகவோ அடுத்த அடியாகவோ வருவது அந்தாதியாம்.) எ-டு : ‘நாவே உரனுறு நலமிகு முதற்பொருள் பொருளுரை ஆய்தரின் புகலுமற் றுளதே உளதே வண்டிமிர் உறுமலர் ஓடை ஓடை மால்வரை மூலமென் றுரைசெய ஓடை மால்வரை மூலமென் றுரைசெய உரைவிசைத்(து) அடங்கா ஒல்லையில் குறுகுபு புனிற்றா எனஅருள் புரிந்திடர் செகுத்த அறைபுனல் அரங்கத்(து) அமுதினை அன்றியும் மதித்தொரு முதலையே மகிழ்ந்து துதிப்பதும் உளதோ சுரர்பெரு நாவே’ நாவே என முதலும் இறுதியும் மண்டலித்து வந்தவாறு. இப்பாடலுள் இரண்டாமடி அசைஅந்தாதி; மூன்றுநான்கா மடிகள் சீர்அந்தாதி; ஐந்தாமடி அடிஅந்தாதி; ஆறாமடி அசையந்தாதி; ஏழாம்அடி எழுத்தந்தாதி; பிறவும் அன்ன. நான்கு அந்தாதியும் இச்செய்யுளகத்தே வந்தன. (மா. அ. பாடல் 65) ஒரு தொடை - அடியிரண்டு இயைந்தவழித் தொடை அமைதலின் ஒரு தொடை என்பது ஈரடிப்பாவினைக் குறிக்கும்.(யா. க. 59 உரை.) ஒருபொருள் இரட்டை - நாற்சீரடி முழுதும் ஒருசீரே பொருள்வேறுபாடு இன்றி நான்குமுறை அடுக்கி வருவது. எ-டு : ‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும் விளக்கினிற் சீறெரி ஒக்குமே ஒக்கும் குளக்கொட்டிப் பூவின் நிறம்.’ இதன்கண், முதலடி நாற்சீரிலும் ஒக்குமே என்றற்கு ஒத்திருக் கும் என்பதே பொருள். (யா. க. 51 உரை) ஒருபொருள் நுதலுதல் - ஒரு பொருளையே கருதி வாராநிற்றல். கலிவெண்பாக்கள் பெரும்பாலும் ஒருதுறைப் பொருளை உட்கொண்டு பாடப் பெற்றனவாம். (தொ. செய். 153 நச்.) சூத்திரத்தில் ஒரு செய்தியே கூறப்படல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகள் ஒரே சூத்திரத்தில் கூறப்பெறின் வாக்கிய பேதம் என்ற குற்றம் நிகழும். ‘ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்’ (தொ. செய். 168 நச்.) என்றல் காண்க. ஒருபோகின் இருவகை - ஒரு போகு, கொச்சக ஒருபோகு அம்போதரங்க ஒருபோகு என இருவகைப்படும். இவற்றை ஒருபோகு என்ற பெயரின்றிக் கொச்சகம், அம்போதரங்கம் என்று வழங்குதலும் உண்டு. (தொல். செய். 147, 148 நச்.) ஒருபோகு - ஒத்தாழிசைக் கலியின் இரண்டு பெரிய பிரிவுகளாகிய அகநிலை ஒத்தாழிசை - தேவபாணி - என்ற இரண்டனுள், தேவபாணியின் இரு பிரிவுகளுள் (அவை வண்ணக ஒத் தாழிசையும், ஒருபோகும் ஆம்) ஒன்று. ஒன்றாகிய போக்கினையுடையது எனப் பண்புத்தொகை அன்மொழித்தொகையாயிற்று. நடுவே வரப்பு முதலிய தடங்கல் இல்லாத நிலத்தினை ஒருபோகு என்பது போல, நடுவே வண்ணக ஒத்தாழிசை போலத் தரவு தாழிசை பேரெண் அளவெண் சிற்றெண் சுரிதகம் எனப் பல உறுப்பு வேறுபாடுகளால் ஓசை வேறுபாடுகள் உறாமல், பெரும்பா லும் எடுத்தல் படுத்தல் நலிதல் அற்ற ஒரேவகை ஓசையொடு வருதலின் ‘ஒரு போகு’ எனப்பட்டது. ஒன்றாகிய போக்கினை உடைத்து என்பதற்கு ஓர் உறுப்பு நீங்கியது என்று பொருள் செய்தலும் உண்டு. கொச்சக ஒருபோகு என்பது கொச்சகம் என்ற உறுப்பு நீங்கியது; வண்ணக ஒருபோகு என்பது எண் உறுப்பு நீங்கியது. வண்ணக ஒத்தாழிசைக்கு ஓதிய உறுப்புக்களுள் யாதாயினும் ஒன்று இல்லாமல் வருவது ஒருபோகு ஆயிற்று. திரிகோட்ட வேணி என்பது கொம்புபோல முறுக்கிய மயிர் முடியைக் குறியாது அதனையுடையவளைக் குறிப்பது போல, ஒரு போகு என்பது போகிய ஓர் உறுப்பினைக் குறியாது அதனையுடைய பாவினைக் குறித்தது. ஆதலின் ஓர் உறுப்பினை இழந்து வரும் தேவபாணியின் பகுதி ஒருபோகு ஆகும். இஃது இழக்கப்பட்ட உறுப்பின் பெயரால் கொச்சக ஒரு போகு, அம்போதரங்க ஒரு போகு என இரு வகைப்படும். (தொ. செய். 147 நச்.) ஒரு போகு : பொருள் - ஒருபோகு என்பது காரணப் பெயர். போகு : ஒரு வகை நீட்சி எனப்பொருள்படும். (உரி. 19) ஒருபோகின் இருவகையான கொச்சக ஒரு போகும் அம்போதரங்க ஒரு போகும் என்ற இவை முறையே 20 அடிகளும் 60 அடிகளுமாய் நிறைந்து நீண்டு வருதலின் ‘ஒருபோகு’ எனப்பட்டன. (தொ. செய். 148 ச. பால) ஒருபோகு தேவபாணி - தேவபாணியின் இருவகையுள் ஒன்று. தேவபாணி முன் னிலைக் கண்ணதேயாம். தெய்வம் தானே மனித வடிவில் ஆவேசமுற்று "நின்னைப் புரப்பேன்" என்று கூறும் உலக வழக்கம் புலனெறிக்கு ஏலாது. இக்கலியின்கண் தாழிசை பெய்து பாடின் தேவபாணி ஆகாது. ‘ஆறறி அந்தணர்க்கு’ (கலி. 1) என்ற கடவுள்வாழ்த்து தேவபாணி அன்றாயினமை நச்சினார்க்கினியர் உரையால் அறியப்படும். ஒன்றாகிய போக்கினை யுடையது ‘ஒரு போகு’ எனப் பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாயிற்று. நடுவே வரப்பு முதலிய தடங்கல் இல்லாத நிலத்தினை ஒருபோகு என்பது போல, நடுவே வண்ணக ஒத்தாழிசை போலத் தரவு தாழிசை பேரெண் அளவெண் கடையெண் சிற்றெண் சுரிதகம் எனப் பல உறுப்பு வேறுபாடுகளால் ஓசை வேறுபாடுகள் உறாமல், பெரும்பாலும் எடுத்தல் படுத்தல் நலிதல் அற்ற ஒருவகை ஓசையொடு வருதலின் இப்பாட்டும் ஒரு போகு எனப்பட்டது. ஒன்றாகிய போக்கினையுடையது என்றற்கு ஓருறுப்பு நீங்கி யது என்று பொருள் செய்தலும் உண்டு. கொச்சக ஒருபோகு என்பது கொச்சகம் என்ற உறுப்பு நீங்கியது; அம்போதரங்க ஒருபோகு என்பது எண் என்ற உறுப்பு நீங்கியது. அம்போத ரங்க ஒத்தாழிசைக்கு ஓதிய உறுப்புக்களுள் யாதானும் ஒன்று இல்லாமல் வருவது ‘ஒருபோகு’ ஆயிற்று. இழக்கப்பட்ட உறுப்பின் பெயரால் கொச்சக ஒருபோகு, அம்போதரங்க ஒருபோகு எனப் பெயர் பெறும்.(தொ. செய். 138, 139, 147 நச்.) ஒருமுதல் நிரல்நிறை - நிறுத்த முறையே முழுதும் சொல்லாது முதலிலுள்ள ஒன்றனையே சொல்லி நிறுத்துவது; நிரல்நிறைப் பொருள் கோள் வகையுள் ஒன்று. எ-டு : ‘மீனாடு தண்டேறு வேதியர் ஆதியா ஆனாத ஐந்தொன்பான் ஆயினவும் - தேனார் விரைக்கமல வாள்முகத்தாய் வெள்ளை முதலா உரைத்தனவும் இவ்வாறே ஒட்டு’ ‘வெள்ளை முதலா’ என வெண்பா ஒன்றனையே சுட்டி, ஏனையவற்றை ‘முதலா’ என்பதனால் கொள்ள வைத்தமை ஒரு முதல் நிரல்நிறையாம். மீன் - வெண்பா ; ஆடு - ஆசிரியப்பா; தண்டு (- துலாம்) - கலிப்பா; ஏறு - வஞ்சிப்பா. வெண்பாவின் இராசிகள் - கடகம், விருச்சிகம், மீனம் ஆசிரியப்பா இராசிகள் - மேடம், சிங்கம், தனுசு கலிப்பாவின் இராசிகள் - மிதுனம், துலாம், கும்பம் வஞ்சிப்பாவின் இராசிகள் - இடபம், கன்னி, மகரம் (இ. வி. பாட். 122) வெண்பா முதலியவற்றிற்குரிய இராசிகள் அனைத்தையும் சொல்லாது, முறையே வெண்பா முதலிய நாற்பாவிற்கும் ஒவ்வொன்றே குறித்தமையின் ஒருமுதல் நிரல்நிறை எனினும் ஆம். (யா. வி. பக். 385) ஒரு முற்றிரட்டை - ஒரே முற்றெதுகையாக ஈரடிகள் அமையும் தொடை. (இரு முற்றிரட்டை என்ற உரையால் இவ்வாறு அனுமானம் செய்து கொள்ளப்பட்டது.) ‘அடியிற் கொடியன மடிபுனம் விடியல் துடியிற் கடியது கொடிச்சி மடியுளம்’ என ஈரடியும் ஒரு முற்றெதுகையாகவே வந்தவாறு. (யா. க. 51 உரை) ஒருவிகற்ப இன்னிசைச் சிந்தியல்வெண்பா - இரண்டாம் அடியின் ஈற்றில் தனிச்சொல் இன்றி மூன் றடித்தாய் ஓர்அடி எதுகை பெற்று வரும் இன்னிசை வெண்பா. எ-டு : ‘நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப் பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டிர் அடி.’ (யா. க. 59 உரை) இது மூன்றடியும் ஓர் எதுகையே பெறுதலின் ஒரு விகற்பம். ஒருவிகற்ப இன்னிசைவெண்பா - இரண்டாமடி இறுதியில் தனிச்சொல் பெறாது நான்கடியும் ஓர் எதுகை பெற்றுவரும் இன்னிசை வெண்பா. எ-டு : ‘துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க; அகடுற யார்மாட்டும் நில்லாது, செல்வம் சகடக்கால் போல வரும்.’ (நாலடி. 2) இது நான்கடியும் ஓர் எதுகை பெறுதலின் ஒரு விகற்பம்.` (யா. க. 61) ஒருவிகற்ப ஈராசிடை நேரிசைவெண்பா - நான்கடிகளும் ஓர்எதுகையாய் இரண்டாம் அடியின் மூன்றாம் சீர் அசைச்சீராம் தன்மை நீங்கி நான்காம் சீரொடு பொருந்து தற்கு ஏற்பப் பின்னும் ஈரசை பெற்று வரும் நேரிசை வெண்பா. எ-டு : ‘வஞ்சியேன் என்றவன்தன் ஊருரைத்தான்; யானுமவன் வஞ்சியான் என்றதனால் வாய்நேர்ந்தேன்; - வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்; வஞ்சியாய் வஞ்சியார் கோ.’ இப்பாடல் முழுதும் ஓர் அடிஎதுகை ஆதலின் ஒரு விகற்பம்; இரண்டாமடியின் மூன்றாம் சீர் ‘வாய்’ என அசைச்சீராக அமையாது நான்காம் சீரோடு இணைதற்கு ஏற்ப நேர்ந் தேன் என ஈரசை பின்னும் பெற்றமை ஈராசிடை பெற்றதாம். (யா. க. 60 உரை) ஒருவிகற்ப ஓராசிடை நேரிசைவெண்பா - நான்கடிகளும் ஓரடிஎதுகை பெற, இரண்டாம் அடியின் 3 ஆம் சீர் குறள்வெண்பாவின் ஈற்றசைச்சீர் போல இராது நாலாம் சீருடன் இணைக்கப்படுதற் கேற்ப ஓரசை இடையே இணையும் நேரிசைவெண்பா. எ-டு : ‘ஆர்த்த அறிவினர் ஆண்டிளைஞர் ஆயினும் காத்தோம்பித் தம்மை அடக்குப - மூத்தொறும் தீத்தொழிலே கன்றித் திரிதந்(து) எருவைபோல் போத்தறார் புல்லறிவி னார்.’ (நாலடி. 351) இப்பாடல் இரண்டாம் அடிக்கண் மூன்றாம்சீர், குறள் வெண்பாவாய் ‘அடக்கு’ என முடிய வேண்டுவதனை ஓரசை கூட்டி ‘அடக்குப’ என நான்காம் சீர்க்கு ஏற்ப நீட்டப்பட்டது ஓராசிடை நேரிசை வெண்பா ஆதற்கு ஏற்றது. இப்பாடல் நான்கடியிலும் ஓர் அடிஎதுகைத்தாகலின் ஒரு விகற்பம். (யா. க. 60 உரை) ஒருவிகற்பக் குறள்வெண்பா - ஈரடிகளிலும் அடியெதுகை அமைய வரும் குறள் வெண்பா. எ-டு : ‘உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் கடையரே கல்லா தவர்.’ (குறள். 395) (யா.க. 59 உரை) ஒரு விகற்ப நேரிசைச் சிந்தியல் வெண்பா - மூன்றடிகளும் ஒர் எதுகையைப் பெற்றும், இரண்டாம் அடியின் இறுதி தனிச்சீர் பெற்றும் வரும் சிந்தியல் வெண்பா. எ-டு : ‘அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து சிறந்தார்க்குச் செவ்வன் உரைக்கும் - சிறந்தார் சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.’ மூவடிகளும் ஓரெதுகையாய் அமைந்து இரண்டாமடி இறுதி தனிச்சொல் பெற்று வந்தவாறு. (யா. க. 59 உரை) ஒருவிகற்ப நேரிசைவெண்பா - நான்கடிகளும் ஓரெதுகையாய் இரண்டாமடி இறுதியில் தனிச்சொல் பெற்று வரும் வெண்பா. எ-டு : ‘ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும் காத்தோம்பித் தம்மை அடக்குப - மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந்(து) எருவைபோல் போத்தறார் புல்லறிவி னார்.’ (நாலடி. 351) (ஆர்த்த: ரகரஒற்று ஆசுஎதுகை) (யா. க. 60 உரை) ஒருவிகற்பப் பஃறொடைவெண்பா - எல்லா அடிகளும் ஓர் அடிஎதுகையாய் வரும் பஃறொடை வெண்பா. எ-டு : ‘சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல் கூற்றுறழ் மொய்ம்பின் பகழி, பொருகயல் தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம் வேற்றுமை இன்றியே ஒத்தன மாஅடர் ஆற்றுக்கால் ஆட்டியர் கண்.’ இஃது ஒத்த விகற்பப் பஃறொடை வெண்பா எனவும் பெறும் அது காண்க. ஒரூஉத் தொடை - நாற்சீரடிகளாகிய அளவடிகளில் முதற்சீரை அடுத்து இருசீர் இடைவிட்டு முதற்சீரும் நான்காம் சீரும் மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்ற விகற்பத்தொடை பெற்று வருதலாகிய சீரிடை அமைந்த தொடை ஒரூஉத் தொடை யாம். இயைபு ஈற்றுச்சீரையே முதற்சீராகக் கொண்டு கணக் கிடப்படும். நடு இருசீர்க்கண்ணும் இன்றி முதற்சீர் நான்காம் சீர்க்கண் அமையும் தொடை ஒரூஉத் தொடை என்பது. எ-டு : ‘புயல்வீற் றிருந்த காமர் புறவில்’ - ஒரூஉ மோனை ‘பரியல் யாவதும் பைந்தொடி அரிவை’ - ஒரூஉ எதுகை. ‘குறுங்கால் ஞாழல் கொங்குசேர் நெடுஞ்சினை’ - ஒரூஉ முரண் ‘பல்லே முத்தம் புருவம் வில்லே’ - ஒரூ இயைபு ‘வழாஅ நெஞ்சிற்றம் தெய்வம் தொழாஅ’ - ஒரூஉ அளபெடை. (யா. க. 44 உரை.) ஒரூஉ நிரல்நிறை - ஓர் அளவடியில் முதலாம் நான்காம் சீர்க்கண் நிரல்நிறை அமைவது. எ-டு : ‘புரிகுழலும் பூணார் முலையாள் திருமுகமும் கொன்றையும் குன்றா(து) ஒளிசிறக்கும் திங்களும்’ இவ்வடிகளில் குழல் - கொன்றை; திருமுகம் - திங்கள் என முதற்சீரின்கண்ணும் நான்காம் சீரின்கண்ணும் நிரல்நிறை அமைந்தவாறு. (யா. வி. பக். 387) ஒரூஉ வண்ணம் - யாற்றொழுக்குப் போலச் சொல்லிய பொருள் பிறிதொன் றனை அவாவி நிற்காதவாறு அறுத்துச் செய்வது; அவ்வாறு பொருள்கொண்டு செல்லும் சந்தம் இது. ‘யானே ஈண்டை யேனே; என்நலனே ஆனா நோயொடு கான லஃதே; துறைவன் தம்மூ ரானே; மறைஅலர் ஆகி மன்றத் தஃதே’ (குறுந். 97) எனவரும். (தொ. செய். 227 நச்.) ஒரூஉ வண்ணமாவது அடியடிதோறும். ஒன்றாய்த் தொடை யுடைத்தாவது. (வீ. சோ. 142 உரை) ஒரூஉ வாய் முற்று - ஒரூஉத் தொடையும், மேற்கதுவாய், கீழ்க்கதுவாய் என்னும் இரண்டு கதுவாய்த்தொடையும் முற்றுத்தொடையும் என்பன. கதுவாய் என்பது முதல் குறைந்து ‘வாய்’ என நின்றது, கண்ணாடி ‘ஆடி’ என நிற்பது போல. (யா.க. 60 உரை) ஒலி எழுத்து - நால்வகை எழுத்துக்களுள் ஒன்று; பறவை எழுப்பும். ஒலிபோலச் செவிக்குப் புலப்பட வருவது. (யா. வி. பக். 577) ஒலி ஐந்தெழுத்தாதல் - உயிர், மெய், சார்பெழுத்து (குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் ஆகிய) மூன்று, ஆக ஐந்தெழுத்தாம் (யா. வி. பக். 46) ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா - பல அடிகளையுடைய பல விகற்பப் பஃறொடை வெண்பா வின் பெயர். எ-டு : ‘வையகம் எல்லாம் கழனியாம் - வையகத்துச் செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் - செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு - வான்கரும்பின் சாறே அந்நாட்டுத் தலையூர்கள் - சாறட்ட கட்டியே கச்சிப் புறமெல்லாம் - கட்டியுள் தானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்றான் கச்சி யகம்.’ முன்னிரண்டடியும் பின்னிரண்டடியும் நீங்கலாக இடை யடிகள் அடி எதுகைப்பட நிகழாமையின், இஃது ஒவ்வா விகற்ப மாயிற்று. (யா. க. 62 உரை) ஒழியசை - இறுதிச்சீர் ஒன்றும் இரண்டும் அசை குறைதல் (தொ.செய். 119 இள.). தன்னை அசையென்று பகுத்துச் சொல்வதற்கேற்ற சீர்கள் வாராமையால் அசைத்தன்மை ஒழிந்து நிற்பது; இது சொற்சீரடிக்கண் வரும். எ-டு : ‘ஒருசார்’ என்பதனொடு வேறு சீர்கள் வந்து அடிநிரப்பினால் -தான் அஃது அசையென்று பிரிக்கப்படும். அவ்வாறின்மையின் ஒழியசை என்றாயிற்று. 123 பேரா. வேறோர் அசையொடு கூடாது ஒழிந்து நிற்பதோர் இயலசை யாதல். எ-டு : ‘ஒரூஉக், கொடியியல் நல்லார் குரனாற்றத் துற்ற’ கலி. 88 ‘ஒரூஉ’ என்று நிரையசை தானே ஒழியசையாயிற்று. (123 நச்.) ஒழுகல் வண்ண அமைப்பு - இது நீரொழுக்கும் காற்றொழுக்கும் போல் வருவது. (யா. வி. பக். 415) ஒழுகிசை அகவல் - நேர் ஒன்றாசிரியத் தளையும் நிரையொன்றாசிரியத் தளையும் சிறுபான்மை ஏனைய தளையும் விரவிவரும் அகவல் ஒசை. எ-டு : ‘குன்றக் குறவன் காதன் மடமகள் வரையர மகளிர் புரையும் சாயலள் ஐயள் அரும்பிய முலையள் செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே.’ இதன்கண் இருவகை ஆசிரியத்தளையும் இயற்சீர் வெண் டளையும் மயங்கி வந்தவாறு. (யா. க. 69 உரை.) ஒழுகிசைச் செப்பல் - வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் கலந்துவரும் வெண்பாவின் ஒசை. எ-டு : ‘கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு’ (கு. 984) இதன்கண், பிறர்தீமை என்ற வெண்சீர் சொல்லா என்ற சீருடன் ஒன்றுமிடத்து வெண்சீர் வெண்டளையும், ஏனைய சீர்கள் அடுத்த சீர்களுடன் ஒன்றுமிடத்து இயற்சீர் வெண் டளையும் வந்துள்ளன. ஆதலின் இப்பாடலின் ஓசை ஒழுகிசைச் செப்பல். (யா. க. 57 உரை) ஒழுகு வண்ணம் - ஒழுகிய ஓசையாற் செய்வது. அவ்வாறமைந்த சந்தம் இவ்வண்ணமாம். எ-டு : ‘அம்ம வாழி தோழி காதலர் இன்னே பனிக்கும் இன்னா வாடையொடு புன்கண் மாலை அன்பின்று நலிய ............. ....................... .................. ........................ பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே.’ (தொ. செய். 226 நச்.) ஒற்று அளபெடுக்குமாறு - ஒற்றெழுத்து அளபெடுத்து நிற்பினும் உயிரளபெடை போல அசைநிலை பெறுதலும் பெறாமையும் ஆம். எ-டு : ‘கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும்’ ‘அம்ம் பவள்ள் வரிநெடுங்கண்’ ‘விலஃஃகி வீங்கிருள் ஓட்டுமே’ கண்ண் அம்ம், பவள்ள்-என்பவை தேமாவாகவும் புளிமா வாகவும், விலஃஃகி - என்பது ‘புலி செல் வாய்’ ஆகவும் அசைநிலை எய்தின. தண்ண்ணென - என்பது இன்னோசைத்தாய் நின்றதன்றி அலகு பெற்றதன்று. அலகிடின் ‘மாசெல்சுரம் என்றாகி அகவல்ஓசை பிழைக்கும். (தொ. செய். 18 ச. பால.) ஒற்று அளபெடைச்சீர் - ங்ஞ்ண் ந்ம்ண் வ்ய்ல்ள் என்ற ஒற்றுக்களும் ஆய்தமும் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அளபெடுக்கும். எ-டு : ‘கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும்’ ‘கண்ண்’ என்பதன்கண் ஒற்றளபெடை சீர்நிலை யெய்த, அச்சீர் தேமா வாயிற்று ‘சுஃஃ றென்னும்’ என்புழி, ஆய்தம் அளபெடுத்துச் சீர்நிலை எய்திற்று. தண்மையின் மிகுதி கூறத் ‘தண்ண்ணென’ என்றமைத்த அளபெடை அலகுபெறின், அச்சீர் தேமாங்கனி ஆகிவிடும். அஃது ஆசிரிய அடிக்குச் சிறப்பின்று ஆதலின் ‘தண்ண் ணென’ என்புழி ஒற்றளபெடை அசைநிலையதாகவே, அச்சீர் கூவிளம் என்ற இயற்சீர் ஆயிற்று. வழக்கிற்கும் செய்யுட்கும் உறுப்பாய் நின்றன அளபெடுத் தலும், தோற்றிக்கொண்டன அளபெடுத்தலும் என ஒற்றள பெடை இருவகைத்து. சுள்ள்ளென்றது, புள்ள்ளென்றது, நள்ள்ளென்றது, கிண்ண் ணென்றது - இவை வழக்கிற்கும் செய்யுட்கும் உரிய. ‘கண்ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும்’ - இது போல்வன செய்யுட்கே உரிய. ‘பனாட்டு’ என்பதன்கண் அளபெடைஎழுத்து, வரும் எழுத் துடன் கூடி ‘பனாஅட்டு’ என நிரை நேர்பு ஆகும். ஆயின், ஒற்றளபெடையாகிய ‘குரங்ங்கு’ என்பதன்கண் சீர்நிலை எய்தின ஒற்றளபெடை எழுத்து நிரை நேர் நேர் என நிற்குமே யன்றி, வரும் எழுத்துடன் கூடி நிரை நேர்பு ஆகாது. சீர்நிலை பெறாதவழி, ‘குரங்ங்கு’ என்பது நிரைபு என்ற அசையின் நிலையிலேயே இருக்கும். செய்யுளில் ஓசை குறையுமிடத்து ஒற்றுக்களை விரித்துக் கொள்ளலாம் என்ற விதிப்படி, ‘அம்பொ ரைந்து டைய்ய காம னைய்ய னென்ன’ (சீவக. 1997) என ஒற்று விரிக்கப்பெறும். அதற்கும் வாய்ப்பில்லாத இடத்தே ஒற்றளபெடை கொள்ளப்படும். ஒற்றளபெடை அலகு பெறாது நிற்றல் சிறுபான்மை; அலகு பெறுதலே பெரும்பான்மை. (தொ. செய். 18 நச்.) ஒன்றாத வஞ்சித்தளை - வஞ்சியுரிச்சீரின் முன் நேரசை முதலாகிய சீர் வருமிடத்து நிகழும் தளை - நிரை முன் நேர் வருதலின் ஒன்றாதாயிற்று. எ-டு : `வான்பொய்ப்பினு தான்பொய்யா' (பட். 5) (யா. கா. 10 உரை.) ஒன்றிய வஞ்சித்தளை - வஞ்சியுரிச்சீரின் முன்பு நிரை முதலாகிய சீர் வருமிடத்து நிகழும் தளை; அஃதாவது கனிமுன் நிரை வரும் தளை. எ-டு : வசையில்புகழ் வயங்குவெண்மீன் (யா. கா. 10) ஓ ‘ஓங்கிய மொழியான் ஆங்கனம் ஒழுகுதல்’ - நெட்டெழுத்தும் அவை போல ஓசை தரும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்களும் உடைய சொல்லானே, ‘புலன்’ என்ற வனப்பினைப் போலத் தெரிந்த மொழியான் கிளந்தோதல் வேண்டாமல், பொருள் புலப்படச் செய்தல் இழைபு என்ற வனப்பின் இலக்கணம். ‘இழைபு’ காண்க. (தொ.செய். 242நச்.) ஓசை உண்ணுதல் - செய்யுள் ஓசை இயைதல்; வாய்பாட்டால் சீர் ஓசையை ஏற்றல். ‘வெண்பாவின் இறுதிச்சீர் நாள் மலர் காசு முதலாக ஓசை யுண்ணும் என்பது.’ (யா. க. 57 உரை) ஓசை ஊட்டுதல் - சீர்களுக்கு வாய்பாடு கூறி ஓசை ஏற்பித்தல்; ‘வெண்பாவின் இறுதி (நாள் மலர் என்ற வாய்பாட்டால்) ஓசையூட்டுதற் பொருட்டு.’ (யா. வி. பக். 67 உரை) ஓசைக் குற்றம் மூன்று - 1) அறுத்திசைப்பு - ஓசை இடையறவுபட ஒலித்தல் 2) வெறுத்திசைப்பு - செவிக்கு இன்னாதாக இசைத்தல்; 3) அகன்றிசைப்பு - ஒருபாடலின் முற்பகுதி செய்யுளாகவும் பிற்பகுதி கட்டுரையாகவும், முற்பகுதியும் பிற்பகுதியும் ஒலி யால் வேறுபடுமாறு அமைத்தல் என்பன. விளக்கம் தனித் தனியே காண்க. (யா. வி. பக். 424) ஓசை கெட்ட நேரிசை வெண்பா - நேரிசை வெண்பா ஓசைகெடில் வெண்டுறையாம். எ-டு : ‘குலாவணங்கு வில்லெயினர் கோன்கண்டன் கோழி நிலாவணங்கு நீர்மணல்மேல் நின்று - புலாலுணங்கல் கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மை யோநீபிறர் உள்ளம்புக் காப்ப துரை.’ இருவிகற்பத்தான் வந்த இந்நேரிசை வெண்பாவினுள் மூன்றாமடியிறுதிச்சீர் தேமாங்கனி எனக் கனிச்சீராய் வந்தமையால் ஓசை கெட்டு வெண்டுறைப்பாற்பட்டது. (வீ. சோ. 121 உரை) ஓசைத்தொகை - செப்பல் அகவல் துள்ளல் தூங்கல் என ஓசை நான்காம். இவற்றுடன் கொஞ்சல் என்பதனைச் சேர்த்து ஓசை ஐந்து என்பர். (யா. வி. பக். 10) ஓசைவகை - பா, தாஅ, வல்லிசை, மெல்லிசை, இயைபு, அளபெடை, நெடுஞ்சீர், குறுஞ்சீர், சித்திரம், நலிபு, அகப்பாட்டு, புறப் பாட்டு, ஒழுகு, ஒரூஉ, எண்ணு, அகைப்பு, தூங்கல், ஏந்தல், உருட்டு, முடுகு என வரும் வண்ணங்கள் இருபது. (யா. வி. பக். 10) ஓசைவிரி - தூங்கிசை, ஏந்திசை, அடுக்கிசை, பிரிந்திசை, மயங்கிசை என்ற ஐந்தனையும்; அகவல், ஒழுகல், வல்லிசை, மெல்லிசை என்ற நான்கனால் உறழ வரும் வண்ணங்கள் இருபதனையும், மீண்டும் குறில் நெடில் வலி மெலி இடை என்பவற்றால் உறழ வண்ணங்கள் நூறாக விரியும். யா. வி. பக். 10 (யா. கா. 43 உரை) ஓசைவேற்றுமையான் எழுத்தின் மாத்திரை திரியாமை - எடுத்தல் படுத்தல் நலிதல் ஓசைகள் ஒவ்வோரெழுத்தின் மாத்திரையும் திரிபு அடையுமாறு செய்யமாட்டா என்பது. ஓரசைச்சீர் - ஓரசையான் ஆகிய சீரும் பொதுச்சீர் (- சிறப்பு இல்லாத சீர்) ஆகும். அது நேர், நிரை என இருவகைத்து. வெண்பா இறுதி ஓரசைச்சீரான் முடிதலுமுண்டு. அப் பொழுது இறுதிச்சீர் போல வரும் நேரசையும் நிரையசையும் முறையே நாள் எனவும் மலர் எனவும் வாய்பாடு பெறும். எ-டு : ‘வாலெயி றூறிய நீர்’ (குறள். 1121) நாள், நெஞ்சத் தவல மிலர் (குறள். 1072) மலர். (யா. கா. 14 உரை) ஓரடியால் நடப்பன - பாட்டு, உரை, நூல், மந்திரம், பிசி, முதுசொல், அங்கதம், வாழ்த்து முதலியன என்பார் பல்காயனார். (யா. வி. பக். 429) ஓராசிடை வெண்பா - ‘ஒருவிகற்ப ஓராசிடை நேரிசை வெண்பா’. காண்க. (யா. க. 60 உரை) ஓரெழுத்துச்சீர் - நுந்தை, வண்டு - இவை நேர், நேர்பு என ஓரெழுத்து அசைச் சீராம். ஆகவே, ஓரெழுத்துச்சீர் இரண்டு. (முறையே மொழி முதற் குற்றுகரமும் மெய்யெழுத்தும், மொழியீற்றுக் குற்றுகரமும் எண்ணப்பட்டில.) (தொ. செய். 41 நச்.) ஓரொலி வெண்டுறை - எ-டு : ‘தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும் பீலிபோல் சாய்த்துவிடும் பிளிற்றி யாங்கே.’ இது முதலடி ஆறு சீரும், ஏனைய இரண்டடியும் நான்கு சீரும் பெற்று வந்த மூவடி ஓரொலி வெண்டுறை. (யா. க. 67 உரை) ஒள ஒளகாரக்குறுக்கம் வருதல் - ‘நௌவிமான் நோக்கினார் அவ்வாய் மணிமுறுவல் வெளவாதார் கௌவை யிலர்’ என ஒளகாரம் மொழிமுதல் நின்று ஒன்றரை மாத்திரை ஆயினவாறு. (யா. க. 2 உரை) க கட்டளை அடி (1) - கட்டளை - வரையறை; எழுத்துக் கணக்கில் அமைந்த செய்யுளடி கட்டளையடியாம். (தொ. செய். 25. பேரா) கட்டளை அடி (2) - கட்டளை - வரையறை; வரையறைப்பட்ட சீர்களான் அமைத லின், கட்டளையடி பிறக்கிறது. நால்வகைப் பாவிற்கும் கட்டளையடி வருமாறு. வெண்பாவின் கட்டளையடிக்கு மிக்க எல்லை 14 எழுத்தே ஆயினும் இரண்டு காய்ச்சீர் அடுத்தடுத்து வருதல் துள்ள லோசையைக் காட்டுதலின், கட்டளையடிக்கு அது கூடாது. எ-டு : ‘அறிவறிந்தார்த் தேற்றியக்கா லஞ்சுவ தில்லை’ என, இவ்வடி 14 எழுத்துடையதே யாயினும் காய்ச்சீர் இரண்டு இடையீடின்றி அடுத்தடுத்து நிகழ்தலின் கட்டளை யடி யாகாது. (தொ. செய். 58 நச்.) கட்டளையாசிரிய அடியில் வெண்சீரும் ஆசிரிய உரிச்சீரும் பொருந்த நிற்றல் இல்லை; நீடு கொடி, உரறு புலி என முன் நிரையீற்றனவாகிய ஆசிரிய உரிச்சீர் இரண்டும் வரலாம். எ-டு : ‘ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ’ (புறநா. 55) ‘களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை’ (புறநா. 64) (தொ. செய். 24 நச்.) நேர்நேர்பு, நேர்நிரைபு என்பன ‘பாதிரி’ போலக் கொள்ளப் பட்டு வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவதும். எ-டு. : ‘காரேறு பொருத கண்ணகன் செறுவின்’ ‘வானிரைத்து மணந்து .................’ நிரைநேர்பு ‘கணவிரி’ போலக் கொள்ளப்பட்டு வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவதும், நிரைநிரைபு வருஞ்சீர் முதலசையோடு (நிரையாக) ஒன்றுவதும். எ.டு. : ‘வெயிலாடு முசுவின் (குருளை யுருட்டும்) ’ (குறுந். 38) ‘செழும்பயறு கறிக்கும் புண்கண் மாலை’ (குறுந். 338) என இவையெல்லாம் நிரையொன்றிய ஆசிரியத்தளையாம்; (³ 56 நச்.) இயற்சீர் வெள்ளடி ஆசிரியப்பாவின் கட்டளையடியாகாது; சீர்வகையடியேயாம். எ-டு. : ‘எறும்பி யளையிற் குறும்பல் சுனைய’ (குறுந். 12) கட்டளைக் கலிப்பா அடியுள் தேமா புளிமாச் சீர்கள் வருதலில்லை. (³ 25. நச்.) கலியடியில் முதல் மூன்றுசீரும் நிரை முதலாகிய வெண்சீராக நிற்ப, ஈற்றுச்சீர் நேர் முதலாகிய வெண்சீராக வரினும், அது நிரை முதலாகவே கருதப்படும், துள்ளலோசை பிறத்தலான். எ-டு. ‘அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையால்’ (கலி. 11) (³ 29 நச். ) நேர்பு நிரை, நிரைபு நிரை என முதற்சீர் நின்று, பிற முச்சீர் களும் நிரை முதலாகிய வெண்சீராகவரினும், துள்ள லோசையே பிறத்தலின் கட்டளைக்கலியடியாம். எ-டு : ‘ஓங்குதிரை யடுக்கம்பாய்ந் துயிர்செகுக்கும் துறைவகேள்’ ‘விளங்குமணிப் பசும்பொன்னின் வியலறைமேல் விளையாடி’ (³ 24. நச்.) இனி, நிரையீற்று இயற்சீரும் நிரையீற்று ஆசிரிய உரிச்சீரும் நிற்ப, நிரை முதலாகிய வெண்சீர் வந்து நிரையாக ஒன்றினும் துள்ளல் ஓசை பிறத்தலின் கட்டளையடியேயாம். எ-டு : ‘மணிபுரை திருமார்பின் மறுத்தயங்கத் தோன்றுங்கால்’ ‘ஓங்குநிலை யகன்மார்பின் ஒளிதிகழு மாமேனி’ (³ 60. நச்.) இனி, கட்டளை வஞ்சியடி இருசீரான் நடக்கும் சமநிலை வஞ்சியடியே யன்றி முச்சீரான் நடக்கும் வியநிலை வஞ்சியடி யாகாது. வஞ்சிச்சீரின் மிக்க எழுத்து ஆறு. 1. வஞ்சிச்சீர், தன்முன்னர்தான் வந்தும், 2. நிரை நிரைபு என்ற இயற்சீர் நிற்பத் தன்சீர்வந்தும், 3. தன்முன்னர் வெண்சீர் வந்தும், 4 இரண்டு வெண்சீர் வந்தும். 5 ஆசிரிய உரிச்சீர் வந்தும் தூங்கலோசை பிறத்தலின், அவ்வடியெல்லாம் கட்டளையடியே. அவை முறையே வருமாறு : எ-டு : 1. ‘வசையில்புகழ் வயங்குவெண்மீன் 2. திசைதிரிந்து தெற்கேகினும் 3. தற்பாடிய தளியுணவின் 4. புட்டேம்பப் புயன்மாறி’ (பட். 1 - 4) 5. ‘புள்ளுதுயின்று புலம்புகூர்ந்து’ (செய். 22 நச்.) கட்டளையடியின் வேறுபட்டு வருவன சீர்வகை அடியாம். கட்டளை அடி இடையின எதுகை - எ.டு : ’எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு’ (குறள் 299) (தொ. செய். 94. நச்.) கட்டளைஅடி என்ற பாகுபாடு பொருந்தாமை - நாற்சீரடிகள் யாவும் எழுத்தெண்ணற்குரியவையே என்ப தனை மறந்த பேராசிரியரும் நச்சினார்க்கினியரும், வட மொழியை நோக்கிக் கட்டளை என்பதோர் இலக்கணம் கற்பித்துக் கூறுப. வடமொழியுள் ஓரடிக்கண் ஒன்று முதல் இருபத்தாறு எழுத்து வரை கொண்டு நான்கடிகளையும் ஒரே அளவை யாக அமைத்துக் கூறுதல் விருத்தம் என்னும் யாப்பு வகை யாம். சந்தம் தண்டகம் முதலிய யாப்புக்களிலும் எழுத் தெண்ணி அமைத்தலும் உண்டு. தொல்காப்பியம் எந்த வொரு பாவினையும் நான்கடியாக வரையறை செய்ய வில்லை. கொச்சகக் கலிவகையுள் நான்கடி பெற்று வருவன வும் உள. ஆண்டு இசைநயமும் வண்ணமும் கருதிப் புலவோர் ஓர் அளவையாகச் செய்தலும் உண்டெனினும் அவ்வாறே செய்தல் வேண்டும் என்னும் யாப்புறவு இல்லை. கட்டளை என்பது இசைத்தமிழுக்குரியதன்றி இயற்றமிழுக்கு உரிய தன்று. இருசீர் முச்சீர்களானும் ஐஞ்சீர் முதலாகப் பலசீர்களானும் அமைவனவற்றை இடைக்காலத்தார் அடியெனக் கூறி இலக்கணம் செய்தமை கருதி, நாற்சீரடிகளைக் கட்டளையடி எனப் பிறழ உணர்ந்தனர் உரையாசிரியன்மார்; தொல்காப் பியம் யாண்டும் கூறாத சீர்வகையடி கட்டளையடி என்னும் பெயர்களைத் தாமே இட்டு உரைவிளக்கம் செய்தனர். அது ‘தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்’ என்னும் குற்றமாம். (தொ. செய். 44 ச. பால) கட்டளை அடி, சீர்வகை அடி அளபெடைத்தொடை - எ-டு : ‘உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழியென் நெஞ்சு’ (கு. 1200) உறாஅர்க், செறாஅஅய் - கட்டளை அளபெடைத் தொடை. ‘பாஅல் அஞ்செவிப் பணைத்தாள் மாநிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கி’ (கலி.5) பாஅல், மாஅல் - இருவகையடியும் வந்த அளபெடைத் தொடை. (முதலடிக்கட்டளை; ஏனையது சீர்வகை) ‘எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர் வெஃஃகு வார்க்கில்லை வீடு’ எஃஃகு, வெஃஃகு - கட்டளை ஒற்றளபெடை ‘கஃஃ றென்னும் கல்லதர்க் கானிடைச் சுஃஃ றென்னும் தண்தோட்டுப் பெண்ணை’ கஃஃ, சுஃஃ - சீர்வகை ஒற்றளபெடை. (தொ. செய்.97. நச்.) கட்டளை அடி, சீர்வகை அடி வருக்கஎதுகை - எ-டு : ‘வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் சீருடை நன்மொழி நீரொடு சிதறி’ இஃது இருவகையும் தொடுத்து வந்த வருக்க எதுகை. (முதலடி கட்டளை; ஏனையது சீர்வகை) (தொ. செய். .94. நச்.) கட்டளை அடி, சீர்வகை அடி வருக்கமோனை - எ-டு : ‘வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி (அகநா. 24) (முதலடி கட்டளை ; ஏனையது சீர்வகை) (தொ. செய். 94 நச்.) கட்டளை அடி, சீர்வகை அடி வல்லினஎதுகை - எ-டு : ‘அத்தக் கள்வர் ஆதொழு அறுத்தென பிற்படு பூசலின் வழிவழி ஓடி’ (அகநா. 7). (தொ.செய். 94. நச்.) கட்டளை அடிமோனை - எ-டு : ‘கான மஞ்ஞை யீன்ற முட்டை காத லின்றி வீசு மந்தி’ இஃது ஈரடியும் எழுத்தொத்தலின், தன்னொடு தான்வந்து தொடுத்த கட்டளை அடிமோனை. ( தொ. செய். 92.நச்.) கட்டளை அடி வருக்கமோனை - எ-டு : ‘கல்லாதான் ஒட்பம் கழிய நன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார் ‘ (குறள் 404) (தொ. செய். 94. நச்.) கட்டளை அடி வல்லினஎதுகை - எ-டு: ‘தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும்.’ (குறள் 114) (தொ. செய். 94.நச்.) வஞ்சிச்சீர்கள் அறுபதும், வெண்சீர் நான்கும், நேர்புநிரை நிரைபு நிரை அல்லாத ஆசிரிய உரிச்சீர்கள் நான்கும் கட்டளை ஆசிரியப் பாவிற்கு உரியன அல்ல. (தொ. செய். 23. நச்.) கட்டளை ஆசிரியம் - எல்லா அடிகளும் ஒற்று நீங்க எழுத்து ஒத்துவரும் ஆசிரியம். (யா. க. பக். 502) கட்டளை இணை இயைபு - எ-டு : ‘ஓங்கிய சுரத்தை நீங்கி யேகி’ (தொ. செய். 96 நச்.) கட்டளை இணைமுரண் ‘பன்மை சின்மை பற்று விடுதலென்(று) (தொல். செய். 95 நச்.) கட்டளை இணைமோனை எ-டு : ‘செம்முது செவிலியர் பலபா ராட்ட (அகநா. 254) (தொ.செய்.92.நச்.) கட்டளை உயிரளபெடைத் தொடை - எ-டு : ‘உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅ அய் வாழியென் னெஞ்சு’ (குறள் 1200) (தொ.செய். 97. நச்.) கட்டளை எழுத்து அடியியைபு - எ-டு : ‘அவரோ வாரார் கார்வந் தன்றே கொடியேர் முல்லை கடிக்கரும் பின்றே’ (தொ. செய். 96. நச்.) கட்டளை ஒரூஉ முரண் - எ-டு :‘பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே’ (நாலடி. 5) (தொ. செய். 95 நச்.) கட்டளை ஒரூஉ மோனை - எ-டு : ‘வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்’ (புறநா.6) (தொ. செய். 32. நச்.) கட்டளை ஒற்றளபெடைத் தொடை - ‘எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர் வெஃஃகு வார்க்கில்லை வீடு’ (தொ. செய். 97. நச்.) கட்டளைக்கலி - எல்லா அடிகளும் எழுத்து ஒத்து வரும் கலிகளைக் ‘கட்டளைக் கலி’ என்று வழங்குபவர். (யா. வி. பக். 502) கட்டளைக் கலிக்கு உரிய சீர்கள் - தேமா புளிமா நீங்கலான இயலசை மயங்கிய இயற்சீர் இரண்டு, உரியசை மயங்கிய இயற்சீர் ஆறு - ஆக இயற்சீர்கள் எட்டும், முன் நிரை ஈற்ற ஆசிரிய உரிச்சீர் இரண்டு, வெண்சீர் நான்கு எனப் பதினான்கும் கலியடிக்கண் உறழும் சீராம். (தொ. செய். 28. நச். உரை) கட்டளைக் கலித்துறை - நெடிலடி நான்கான் ஒத்துவரும் பாவின வகை. அடிதோறும் முதற்சீர் நான்கும் வெண்டளை பிறழாமல் கடைச்சீர் ஒன்றும் விளங்காயாக நிகழும்; நேரசையில் தொடங்கும் அடிக்கு எழுத்துப் பதினாறு; நிரையசையில் தொடங்குவதற்குப் பதினேழு. நான்கடியும் ஒரு விகற்பமாகவே வரப்பெறும். இப்பாவினம் ஏகாரஅசையில் இறுதல் சிறப்பு. எ-டு : குமர சேனாசிரியர் கோவை, தமிழ் முத்தரையர் கோவை, யாப்பருங்கலக் காரிகை. அடிதோறும் எழுத்து எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழித்து, உயிரும் உயிர்மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகர மும் கொண்டு எண்ணப்படும். சீரும் தளையும் சிதைய வருமிடத்தே குற்றியலிகரமும் குற்றியலுகரமும் எண்ணப் பறடா. இப்பாவினத்தில் அடிதோறும் முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெற்று வருதல் சிறப்பு. வீரசோழியம் இவ்யாப்பினைத் ‘திலதம்’ என்னும். ஸசைவத் திருமுறையும் திவ்விய பிரபந்தமும் ‘விருத்தம்’ என்னும். நாலாம் திருமுறையுள் பதிகம் 80 முதல் 113 முடியக் காண்க. ‘நம்மாழ்வார் திருவிருத்தம்’ காண்க.] (வீ. சோ. 128; யா. கா. பாயிரம் உரை.) கட்டளைக் கலித்துறை, கலிநிலைத்துறை - இவ்விரண்டிலும் முதற்சீரும் இறுதிச்சீரும் அடிதோறும் மோனைத் தொடை பெற்று வருதல் பொருந்தும் என்ப. இரண்டும் அடிதோறும் ஐஞ்சீர் பெற்ற ஒரே விகற்பமுடைய நான்கடிப்பாடல். கட்டளைக் கலித்துறை எழுத்தெண்ணிப் பாடப்படுவது. (அறுவகை. யாப்பு 34, 36.) கட்டளைக் கலிப்பா - கலிப்பா இனத்துள் ஒன்று. முதல்சீர் மாச்சீரும் பின் மூன்று ஈரசைச் சீரும் கூடியது அரையடியும், அவ்வாறே பின்வரும் நான்கு சீர் அரையடியும் ஆக எண் சீரடி நான்குடையதாய், முதலசை நேரசையாயின் அரையடிக்கு எழுத்துப் பதினொன் றும். நிரையசையாயின் பன்னிரண்டும் பெற்று ஏகாரத்தால் முடிவது இவ்வினப்பா. இஃது எழுத்தெண்ணப் பெறுதலால் கட்டளைக் கலிப்பா எனப்பட்டது. முதற்சீர் மாச்சீரும், ஏனை மூன்றும் கூவிளச்சீருமாக வருவது பெரும்பான்மை. ‘மாஞ்சீர் கலியுட் புகா’ (யா.கா. 40) என்ற இலக்கணம் இதற்குப் பொருந்தாது. (தொ. வி. 236) எ-டு : ‘இல்லை என்ப திலையோர் மருங்கிலே எவ்வ றங்களு முண்டோர் மருங்கிலே’ (காசிக். 90) இது நேரசை முதலாகிய கட்டளைக் கலிப்பாவுள் முதலடி. எ-டு : ‘படுத்த பாயுட னேபிணி மூழ்கினும் பல்வி ழுந்து நரைத்தற மூப்பினும்’ (காசிக். 24) இது நிரையசை முதலாகிய கட்டளைக் கலிப்பாவுள் முதலடி. கட்டளைக் கலியடியில் ஆசிரிய உரிச்சீர் மயங்குதல் கலித்தளையானாய கட்டளைக் கலியடியில் நேர்பு நிரை, நிரைபு நிரை என்னும் ஆசிரியஉரிச்சீர் இரண்டுமே வரும்; ஏனைய நான்கு உரிச்சீர்களும் வாரா. எ-டு : ‘ஓங்குதிரை அடுக்கம்பாய்ந் துயிர்செகுக்குந் துறைவகேள்’ நேர்பு நிரை ‘விளங்குமணிப் பசும்பொன்னின் வியலறைமேல் விளையாடி’ நிரைபு நிரை. (தொ. செய். 24.நச்.) கட்டளைக் கலியடியில் இயற்சீர்கள் - தேமா புளிமா நீங்கலான, நிரைநிரை, நேர்நிரை; நேர்பு நேர், நிரைபுநேர்; நேர் நேர்பு, நேர் நிரைபு; நிரை நிரைபு, நிரை நேர்பு - என்பன எட்டும் கட்டளைக் கலியடிக்கண் வரும் இயற்சீர்கள். (தொ. செய். 25. நச்.) கட்டளைக் கீழ்க்கதுவாய் இயைபு - எ-டு :‘பொருவனர் விடுகணை தகைவனர் எதிர்வனர்’ (தொ. செய். 90. நச்.) கட்டளைக் கீழ்க்கதுவாய் எதுகை எ-டு : ‘உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா(து)’ (குறுந். 102) (தொ. செய். 96. நச்.) கட்டளைக் கீழ்க்கதுவாய் முரண் - எ-டு :‘கண்ணும்தோளும் தண்ணறுங் கதுப்பும்’ (நற். 84) (தொ. செய். 95. நச்.) கட்டளைக் கீழ்க்கதுவாய் மோனை - எ-டு : ‘எல்லை எம்மொடு கழிப்பி எல்லுற’ (தொ.செய்.92.நச்.) கட்டளைக் கூழை இயைபு எ-டு : ‘பொருசமத் தெழுவனர் பொருவனர் விரைவனர்’ (தொ. செய். 96.நச்.) கட்டளைக் கூழை முரண் - எ-டு : ‘நிறுத்தலி னளவி னெண்ணி னென்றா’ (தொ. சொ. 73. நச்.) (இன்) (தொ. செய். 95. நச்.) கட்டளைக் கூழை மோனை - எ-டு : ‘வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்’ (தொ. செய். 92.நச் ) கட்டளை, கலம்பகம் வகை - எல்லா அடிகளும் எழுத்து ஒத்து வரும் பாடல் கட்டளைப் பாடல் எனவும், எல்லா அடிகளும் எழுத்து ஒவ்வாது வரும் பாடல் கலம்பகப் பாடல் எனவும் ஒரு சாராரால் வழங்கப் படும். படவே, கட்டளை வெண்பா கலம்பக வெண்பா கட்டளை ஆசிரியம் கலம்பக ஆசிரியம் கட்டளைக் கலி கலம்பகக் கலி கட்டளை வஞ்சி கலம்பக வஞ்சி என நாற்பாக்களையும் இரு கூறுபடுத்து வழங்குதலும் உண்டு. (யா. வி. பக். 497. 502.) கட்டளைச் செந்தொடை - எ-டு : ‘நெடுவேள் மார்பின் ஆரம் போலச் செவ்வாய் வானம் தீண்டிமீன் அருந்தும் (அகநா. 180) (தொ. செய். 100 நச்.) கட்டளைச் சொல் அடி இயைபு - எ-டு : ‘பரவை மாக்கடல் தொகுதிரை வரவும் பண்டைச் செய்தி இன்றிவன் வரவும்’ (தொ. செய். 96. நச்.) கட்டளைப் பொழிப்பு இயைபு - எ-டு : ‘விரிந்தானா மலராயின் விளித்தாலும் குயிலாயின்’ (கலி. 28-8) கட்டளைப் பொழிப்பு எதுகை - எ-டு :‘பொன்னேர் மேனி நன்னிறம் சிதைத்தோர்’ (தொ. செய். 93.நச்.) கட்டளைப் பொழிப்பு முரண் - எ-டு :‘எழுநூறு நன்றிசெய்(து) ஒன்றுதீ தாயின்’ (நாலடி. 357) (தொ. செய். 95 நச்.) கட்டளைப் பொழிப்பு மோனை - எ-டு :‘கண்ணுடையார் என்பவர் கற்றோர் முகத்திரண்டு’ (குறள். 393) (தொ. செய். 92. நச்.) கட்டளை முற்று இயைபு - எ-டு : இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின்’ (தொ. செய். 96 நச்.) கட்டளை முற்று எதுகை - எ-டு : ‘ கன்னிப் புன்னை அன்னம் துன்னும்’ (தொ. செய். 93 நச்.) கட்டளை முற்று முரண் - எ-டு : ‘நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல்’ (தொ. செய். 95 நச்.) கட்டளை முற்று மோனை எ-டு : ‘அரிதாய அறனெய்தி அருளியோர்க்(கு) அளித்தலும்’ (கலி. 11) (தொ. செய். 92 நச்.) கட்டளை மெல்லின அடி எதுகை - எ-டு : ‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’ (குறள். 543) (தொ. செய். 94 நச்.) கட்டளை மேற்கதுவாய் இயைபு - எ-டு : ‘நீரும் தீயும் ஆகிய இறைவனும்’ (தொ. செய். 96. நச்.) கட்டளை மேற்கதுவாய் எதுகை - எ-டு : ‘கொண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டி’ (நாலடி 48) (தொ. செய். 95 நச்.) கட்டளை மேற்கதுவாய் முரண் - எ-டு : ‘கண்ணும் என்னுடைக் கதுப்பும் தோளும்’ (தொ. செய். 95 நச்.) கட்டளை மேற்கதுவாய் மோனை எ-டு : ‘அளியென உடையேன்யான் அவலம்கொண்(டு) அழிவலோ’ (கலி. 20) (தொ. செய். 92 நச்.) கட்டளை வஞ்சிஅடி - முதற்சீர் ‘மாசேர்காடு ‘ - நேர் நேர் நேர்பு - மூவெழுத்துச் சீராகக் கொண்டு ‘கால்காய்ந்தது காம்புநீடி’ 3 + 3 - ஆறெழுத்தடி ‘நல்கூர்ந்தது வில்லோர்சுரம்’ 3+4 - ஏழெத்தடி ‘வான்பெய்தது மண்குளிர்ப்புற’ 3+5 - எட்டெழுத்தடி ‘தேன்பெய்தது செழுநகர்தொறும்’ 3+6 - ஒன்பதெழுத்தடி என, ஆறெழுத்து முதல் ஒன்பதெழுத்து முடியக் கட்டளை வஞ்சியடி வந்தவாறு. முதற்சீர் ‘மாசேர்சுரம்’ நேர்நேர்நிரை - நாலெழுத்துச் சீராகக் கொண்டு, ‘மண்மாய்ந்தென உள்வீழ்ந்தது’ 4+3 - ஏழெழுத்தடி ‘விண்மாய்ந்தென மேல்தொடுத்தது’ 4 + 4 - எட்டெழுத்தடி ‘காடோங்கிய கல்கெழுசுரம்’ 4 + 5 - ஒன்பதெழுத்தடி ‘கோடோங்கிய குறும்பொறைமருங்கு’ 4+6 - பத்தெழுத்தடி என, ஏழெழுத்து முதல் பத்தெழுத்து முடியக் கட்டளை வஞ்சியடி வந்தவாறு. முதற்சீர் ‘புலி சேர் சுரம்’ நிரைநேர்நிரை - ஐயெழுத்துச் சீராகக் கொண்டு, ‘மழைபெய்தென வான்வெள்ளென்று’ 5+3 = எட்டெழுத்தடி. ‘தழைபச்செனத் தண்ணென் காவு’ 5+4 = ஒன்பதெழுத்தடி ‘கமழ்பூந்துணர் கள்ளவிழ்தொறும்’ 5+5 = பத்தெழுத்தடி ‘இமிழ்தூங்கிசை இனச்சுரும்புவர’ 5+6 = பதினோரெழுத்தடி என, எட்டெழுத்து முதல் பதினோரெழுத்து முடிய கட்டளை வஞ்சியடி வந்தவாறு. முதற்சீர் ‘புலிவருசுரம்’ நிரை நிரை நிரை - ஆறெழுத்துச் சீராகக் கொண்டு, ‘அமைவிடுநொடி அஞ்சியோர்த்து’ 6+3 - ஒன்பதெழுத்தடி ‘கனைகுரலன கானத்தளகு’ 6+4 - பத்தெழுத்தடி ‘தினைப்புனத்திதண் அயற்பிரியாது’ 6+5 = பதினோரெழுத்தடி ‘மனைக்குறமகள் கடைப்புறந்தரும்’ 6+6 = பன்னீரெழுத்தடி என ஒன்பதெழுத்து முதல் பன்னீரெழுத்து முடியக் கட்டளை வஞ்சியடி வந்தவாறு. இவ்வாறே ஒழிந்தனவும் உறழ்ந்து கொள்ளப்படும். இருசீர் வஞ்சியடிக்கே கட்டளை சொல்லப்படும். (தொ. செய். 57 நச்.) கட்டளை வல்லின அடி எதுகை - எ-டு : ‘தக்கார் தகவில் ரென்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும்’ (குறள் 114) (தொ. செய். 94 நச்.) கட்டளை வெண்பா - ஈற்றடி ஒழித்து ஏனைய அடிகள் எழுத்தொத்து வருவது. எ-டு : ‘வெறிகமழ் தன்புறவின் வீங்கி உகளும் (13) மறிமுலை உண்ணாமை வேண்டிப் - பறிமுன்கை (13) அஉ அறியா அறிவில் இடைமகனே! (13) நொஅலையல் நின்ஆட்டை நீ’ (யா. வி. பக் 497) கட்டளை வெண்பாவில் வெண்சீர் - வெண்சீர் முதற்சீராய் நிற்ப வெண்சீர் வந்து ஒன்றிய வெண்டளை கட்டளைவெண்பாவிற்கு வேண்டா. அது கட்டளைக்கலி ஓசைக்கே தக்கது. ஆகவே, வெண்சீர் நிற்ப இயற்சீர் வந்து ஒன்றிய வெண்டளையே கட்டளை வெண்பா விற்கு ஏற்றது. வெண்சீர் நிற்ப வெண்சீர் வந்து ஒன்றிய வெண்டளை செப்ப லோசைக்கும் துள்ளலோசைக்கும் ஒப்ப உரியதாகலின் அஃது ஏற்றதன்று. வெண்சீர் இயற்சீரொடு தட்ட வெண்டளையே செப்பலோசைக்கு ஏற்றது. (தொ. செய். 55 நச்.) கட்டுரை எழுத்து - “வல்லார்வாய் கேட்டுணர்க” என்ற யாப்பருங்கல விருத்தி யுரையாசிரியர் குறிக்கும் பலவகை எழுத்துக்களுள் ஒன்று. (யா. வி. பக். 578.) கட்டுரைப் போலி - கத்தியத்தின் வகை யிரண்டனுள் ஒன்று; ஏனையது செய்யுட் போலி. யானைத்தொழில் முதலாயின எல்லாம் கட்டுரைப் போலி என்பனவாம். (வீ. சோ. 112 உரை.) கட்டுரை வகை - 1. புனைந்துரை வகை. (தொ.செய்.123 நச்.) 2. பாட்டின்றிப் பேச்சுப் போலத் தொடுக்கப்படுவது (123 பேரா., 119 இள,) கடைஇணை ஐந்து தொடையும் ஆவன - ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம் சீர் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கடையிணை மோனை. எ-டு : ‘பூந்தார்ச் சிறுகிளி புலம்பொடு புலம்ப’ ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம் சீர்களில் (முத லெழுத்து அளவொத்து நிற்ப இரண்டாமெழுத்து ஒன்றி வருதலாகிய) எதுகை வரத் தொடுப்பது கடையிணை எதுகை. எ-டு : “வஞ்சியங் கொடியின் வணங்கிய நுணங்கிடை” ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம்சீர்கள் சொல்லானும் பொருளானும் மறுதலைப்படத் தொடுப்பது கடையிணை முரண். எ-டு : ‘மீன் தேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு’ ஓர் அளவடிக்கண் முதலாம் இரண்டாம் சீர்கள் இறுதி ஒத்து வரத் தொடுப்பது கடையிணை இயைபு. எ-டு : ‘புயலும் போலும் பூங்குழற் பிழம்பே’ ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம் சீர்கள் அளபெடுத்து வரத்தொடுப்பது கடையிணை அளபெடை. எ-டு : ‘மெல்லிணர் நறும்பூ விடாஅள் தொடாஅள்’ (யா. க. 39) கடைஇணைத் தொடை - அளவடிக்கண் ஈற்றிரண்டு சீர்களிலும் மோனை, எதுகை, முரண், அளபெடை என்னும் தொடை நான்கும் ஒன்றிவரத் தொடுப்பது; இயைபுத்தொடையொன்றும் இறுதிச்சீர் முதலாவதாகக் கொண்டு கணக்கிடப்படுதலின், முதலிரு சீர்க்கண்ணும் கடையிணை இயைபு கொள்ளப்படும். (யா. க. 39) கடை இரண்டடி மடக்கு - ‘மூன்றாமடி நான்காமடி மடக்கு’ நோக்குக. கடை ஐந்து தொடையும் ஆவன - அடிதோறும் கடைச்சீர்க்கண் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கடைமோனை (ஈண்டு அளவடியே கொள்க; பிற தொடை விகற்பத்திற்கும் அவ்வாறே கொள்க.) எ-டு : ‘வளரிளங் கொங்கை வான்கெழு மருப்பே பொறிவண் டோதியிற் பாடுமா மருளே’ அடிதோறும் கடைச்சீர்கண் (முதலெழுத்து அளவொத்து நிற்ப இரண்டாமெழுத்து ஒன்றி வருதலாகிய) எதுகை ஒன்றிவரத் தொடுப்பது கடைஎதுகை. எ-டு : ‘சுரிதரு மென்குழல் மாலைகள் சூட்டினீர் புரிமணி மேகலை ஆரமும் பூட்டினீர் அடிதோறும் கடைச்சீர்கள் சொல்லானும் பொருளானும் மறுதலைப்படத் தொடுப்பது கடைமுரண். எ-டு : ‘கயல்மலைப் பன்ன கண்ணிணை கரிதே தடமுலைத் திவளும் தனிவடம் வெளிதே’ அடிதோறும் முதற்சீர்கள் ஈற்றெழுத்து ஒத்துவரத் தொடுப்பது கடைஇயைபு. எ-டு : ‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்’ (குறள் 228) அடிதொறும் கடைச்சீர்கள் அளபெடுத்து வரத் தொடுப்பது கடை அளபெடை. எ-டு : ‘தொடுகடல் துறைதுறை திரிதரும் சுறாஅ கருங்கழி கலந்து கலிதரும் கராஅ’ (யா. க. 39) கடைக்குறை - செய்யுட்கண் சீரமைப்பு முதலியன கருதி ஒரு பகாப்பதம் தனது ஈறு நீங்கப் பயன்படுத்தப்பட்டவழியும், தன் பொருளைத் தவறாது வெளிப்படுப்பது. எ-டு : ‘நீலுண் துகிலிகை கடுப்ப’ நீலம் எனற்பாலது ‘நீல்’ எனக் கடைக் குறைந்தவாறு. (யா. வி. பக். 395) கடைக்கூழை - அளவடியுள் முதற்சீரொழிந்த மூன்று சீர்க்கண்ணும் பெறுந் தொடைவகை (காரிகை. ஒழி. 5) கடைக்கூழை ஐந்து தொடையும் ஆமாறு - ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கடைக்கூழை மோனை. எ-டு : ‘தன்னடிச் சிலம்பு சிலம்பொடு சிலம்ப’ ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் எதுகை ஒன்றிவரத் தொடுப்பது கடைக்கூழை எதுகை. எ-டு : ‘வான்கதிர் வடமலி தடமுலை மடவரல்’ ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் மறுதலைப் படத் தொடுப்பது கடைக் கூழை முரண். எ-டு : ‘காவியங் கருங்கண் செவ்வாய்ப் பைந்தொடி’ ஓர் அளவடிக்கண் முதலாம் இரண்டாம் மூன்றாம் சீர்கள் இறுதி ஒத்துவரத் தொடுப்பது கடைக்கூழை இயைபு. எ-டு. : ‘குயிலும் பாலும் ஆம்பலும் மொழியே’ ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் அளபெடுத்துவரத் தொடுப்பது கடைக்கூழை அளபெடை. எ-டு : ‘விரிமலர் மராஅம் கராஅம் விராஅம்’ (யா. க. 39.) கடைதலைப்பூட்டு - இது ‘பூட்டுவிற் பொருள்கோள்’ எனவும்படும். அது காண்க. கடைமோனை - கடை ஐந்து தொடையும் ஆவன காண்க. கடையாகு இன்பா - எல்லாப்பாக்களும் தம்சீரும் தளையும் இன்றி வருவன ‘கடையாகு இன்பா’ என்பர் மயேச்சுரர். (யா. க. 92 உரை) கடையாகு எதுகை - அடிதோறும் முதலெழுத்து அளவொத்திருப்ப, இரண்டா மெழுத்து வருக்கம், நெடில், இனம் ஆகியவற்றுள் ஒன்றான் ஒன்றி வருவது. எ-டு: ‘நீடிணர்க் கொம்பர் குயிலாலத் தாதூதிப் பாடுவண் டஞ்சி அகலும் பருவத்து’ இது வருக்க எதுகை; டகர வருக்கம் ‘ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் ஒருசாரார் கூகூ என்றே கூவிளி கொண்டார் ஒருசாரார்’ இதுநெடில் எதுகை. ‘தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்’ (குறள் 114) ‘அன்பீனும் ஆர்வம் உடைமை, அதுஈனும் நண்பெனும் நாடாச் சிறப்பு’ (குறள் 74) ‘எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கே.’ (குறள் 299) இவை முறையே வல்லினமும் மெல்லினமும் இடையினமும் ஆகிய இன எதுகை. இவை மூன்று திறமும் கடையாகு எதுகையாம். (யா. க. 37 உரை) கடையாகு எதுகை வகை - வருக்க எதுகை, நெடில் எதுகை, இன எதுகை என்பன. (யா. க. 37 உரை) கடையாகு மோனை - வருக்கமோனை, நெடில்மோனை, இனமோனை என்பன. எ-டு: ‘பகலே, பல்பூங்கானல் கிள்ளை ஓப்பியும், பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇ’ இது வருக்கமோனை ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை’ (முதுமொழிக்.) இது நெடில்மோனை ‘கயலேர் உண்கண் கலுழ நாளும் சுடர்புரை திருநுதல் பசலை பாய’ இது (வல்லினமாகிய) இனமோனை (யா. க. 37 உரை) கடையிணைத் தொடை - மோனை முதலியவை அளவடியின் ஈற்றிரண்டு சீர்களில் வரத்தொடுக்குந் தொடை. (யா. கா. ஒழி. 5 உரை) ‘கணவிரியுள்’ அடங்குவன - விறகு தீ - நிரைபு நேர்; கடியாறு - நிரை நேர்பு மழகளிறு - நிரை நிரைபு; இம்மூன்றும் நிரைநிரை யாகிய ‘கணவிரி’யுள் அடங்கும். (தொ. செய். 15, 16 நச்.) கத்தியம் - செய்யுளெல்லாம் இரண்டு திறமாய் அடங்குவனவற்றுள் ‘கத்தியம்’ ஒன்று; ஏனையது ‘ பத்தியம்’. கத்தியமாவது கட்டுரைப் போலியும் செய்யுட்போலியும் என இருவகைப் படும். ‘யானைத் தொழில்’ முதலாயின எல்லாம் கட்டுரைப் போலி எனப்படும்; ‘ஒருபோகு’ முதலாயின எல்லாம் செய்யுட்போலி எனப்படும். (வீ. சோ. 112) கதுவாய் - செய்யுளது அளவடிக்கண் வரும் தொடைவிகற்பம்; மேற்கது வாய் எனவும், கீழ்க்கதுவாய் எனவும் இஃது இருவகைப்படும். முதலயற்சீர்க்கண் மோனை முதலிய தொடை இல்லாத தனை மேற்கதுவாய் என்றும், கடைஅயற்சீர்க்கண் அவை இல்லாததனைக் கீழ்க்கதுவாய்’ என்றும் கூறுவர். கதுவாய் பற்றிய இரு கருத்து - நாற்சீரடியாகிய அளவடியில் முதலயற்சீர் ஒழித்து ஏனைய சீர்களில் மோனை முதலிய தொடை வருதல் ’மேற்கதுவாய்’ என்றும், கடையயற்சீர் ஒழித்து ஏனைய சீர்களில் மோனை முதலிய தொடை வருதல் ’கீழ்கதுவாய்’ என்றும் இலக்கண ஆசிரியர் பலரும் கொண்டனர். கையனார் முதலிய ஒருசார் ஆசிரியர் முதலயற்சீர் ஒழித்த ஏனைய சீர்களில் மோனை முதலிய தொடை வருதலைக் ‘கீழ்க்கதுவாய்’ என்றும், கடையயற்சீர் ஒழித்து ஏனைய சீர்களில் மோனை முதலிய தொடை வருதலை ‘மேற்கது வாய்’ என்றும் கொண்டனர். (யா. க. 47 உரை) கருவிளங்கனி - ‘நிரைநிரைநிரை’ எனவரும் மூவசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘வளவயலிடைக் களவயின்மகிழ்’ (யா. கா. 7 உரை) கருவிளங்காய் - ‘நிரை நிரை நேர்’ என வரும் மூவசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர்’ (யா. கா. 7 உரை) கருவிளந்தண்ணிழல் - ‘நிரை நிரை நேர் நிரை’ என வரும் நாலசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு :‘நலங்கிளர்பூமழை நனிசொரிதர’ (யா. கா. 8 உரை) கருவிளந்தண்பூ - ‘நிரை நிரை நேர் நேர்’ என வரும் நாலசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘கடிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்ச’ (யா. கா. 8 உரை) கருவிள நறுநிழல் - ‘நிரை நிரை நிரை நிரை’ என வரும் நாலசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘நனந்தலையுலகுட னவைநீங்க’ (யா. கா. 8 உரை) கருவிள நறும்பூ - ‘நிரை நிரை நிரை நேர்’ எனவரும் நாலசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு :‘முழுமதிபுரையு முக்குடைநிழல்’ (யா. கா. 8 உரை) கருவிளம் - ‘நிரை நிரை’ எனவரும் ஈரசைச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘அணிமல ரசோகமர்ந் தருணெறி நடாத்திய’ (யா. கா. 7 உரை.) கலம்பகக்கலி - அடிகள் எழுத்து ஒவ்வாது வரும் கலி. (யா. வி. பக். 502) கலம்பக வெண்பா - ஈற்றடி ஒழித்து ஏனைய அடிகள் எழுத்து ஒவ்வாது வரும் வெண்பா; கட்டளைவெண்பாவிற்கு மறுதலையாயது. எ-டு : ‘மந்தரமும் மாகடலும் மண்ணுலகும் விண்ணுலகும் அந்தரமும் எல்லாம் அளப்பரிதே - இந்திரர்கள் பொன்சகள ஆசனமாப் போர்த்து மணிகுயின்ற இன்சகள ஆசனத்தான் ஈடு’. இதன்கண், முதலடி எழுத்துப் பதினாறு, இரண்டாமடி எழுத்துப் பதினைந்து, மூன்றாமடி எழுத்துப் பதினான்கு - இவ்வாறு எழுத்து எண்ணுகின்றுழி, ஒற்றும் ஆய்தமும் குற்றுகரமும் தவிர்க்கப்படும். (யா. வி. பக். 498) அலகு பெற்றாலும் குற்றுகரம் எழுத்தெண்ணப்படாது என்பது விருத்திகாரர் கருத்துப் போலும். கலி அடியில் நேரீற்று இயற்சீர் - தேமா, புளிமா என்ற நேரீற்றியற்சீர் இரண்டும் துள்ளல் ஓசையை நீக்கும் ஆதலின், அவை இரண்டும் கட்டளைக் கலியடிக்கண் வாரா; சீர்வகைக் கலியடிக்கண் வரும். எ-டு : ‘ஐயிரு தலையின் அரக்கர் கோமான்’ (கலி. 38-3) கூவிளம் புளிமா புளிமா தேமா காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்’ (கலி. 39-1) தேமா (சீர்வகைக் கலியடி) (தொ.செய். 25 நச்.) கலி ஆசிரிய இணைப்பு - கலியடியும் ஆசிரியஅடியும் இணைந்து வந்த யாப்பு. எ-டு : ‘என்றுதன் மகளைநோக்கித் தொன்றுபடு முறையானிறுத்தி இடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள் குடமுத லிடைமுறை யாக்குரல் துத்தம் கைக்கிளை யுழையிளி விளரி தாரமென விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே’. (சிலப். ஆய்ச்.) இதன்கண், முதலீரடியும், கலியடி; ஏனையவை ஆசிரியஅடி. கலி, ஆசிரியம் - இவற்றில் வாராத சீர்கள் - தேமா, புளிமா - என்னும் நேரீற்றியற்சீர் இரண்டும் கலிப்பாவி னுள் புகப்பெறா; கருவிளங்கனி கூவிளங்கனி - என்னும் நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் இரண்டும் அதன்கண் வரப்பெறா. ஆசிரியப்பாவினுள்ளும் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் இரண்டும் புகப்பெறா. (யா. கா. 40) வஞ்சிச்சீர்கள் அறுபதும், வெண்சீர் நான்கும், நேர்பு நிரை - நிரைபு நிரை அல்லாத ஆசிரிய உரிச்சீர் நான்கும் கட்டளை ஆசிரியப் பாவிற்கு உரியன அல்ல. (தொ. செய். 23 நச்.) கலி ஒத்தாழிசை - ஏனைய அடிகள் ஒத்து ஈற்றடி மிக்கு ஒருபொருள் மேல் மூன்றடுக்கி வருவன. கலியொத்தாழிசை, கலித்தாழிசை. இவற்றை ஒன்றாகக் கூறுவாருமுளர். ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி ஈற்றடிமிக்கு ஏனையடிகள் ஒவ்வாது வரின் சிறப்பில்லாக் கலியொத்தாழிசையாம். இஃது ஒத்தாழிசைக் கலிப்பாவின் இனம். எ-டு : ‘கொய்தினை காத்தும்; குளவி யடுக்கத்தெம் பொய்தற் சிறுகுடி வாரல்நீ ஐய! நலம்வேண்டின்’; ‘ஆய்தினை காத்தும்; அருவி யடுக்கத்தெம் மாசில் சிறுகுடி வாரல் நீ ஐய! நலம் வேண்டின்’; ‘மென்தினை காத்தும்; மிகுபூங் கமழ்சோலைக் குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய! நலம்வேண்டின்’. (யா.க. 87 உரை). கலிக்குத் தளை விகற்பம் - கலிப்பாவிற்கு மூவசைச் சீருள் காய்ச்சீர் நின்று நிரை முதலாகிய மூவசைச் சீரொடு தட்டல் வேண்டும் என்ற வரையறையின்று. நிரையீற்று இயற்சீரும், நிரையீற்று ஆசிரிய உரிச்சீரும் (நிரை நிரை, நேர் நிரை, நேர்பு நிரை, நிரைபு நிரை) நிற்ப, நிரை முதல் வெண்சீர் வந்து நிரையாய் ஒன்றினும் கட்டளைக் கலியடிக்குக் கலித்தளையாம். எ-டு : ‘மணிபுரை திருமார்பின் மாமலராள் வீற்றிருப்ப’ கருவிளம் என்ற இயற்சீர்முன் புளிமாங்காய் என்ற மூவசை வெண்சீர் வந்து நிரை ஒன்றிக் கலித்தளை ஆயிற்று. ‘ஒங்குநிலை அகன்மார்பின் ஒளிதிகழு மாமேனி’ நேர்பு நிரை என்ற ஆசிரிய உரிச்சீர் முன் புளிமாங்காய் என்ற மூவசை வெண்சீர் வந்து நிரை ஒன்றிக் கலித்தளை ஆயிற்று. ஆகவே, நிரையீற்று இயற்சீர் முன்னும் ஆசிரிய உரிச்சீர் முன்னும் நிரை முதல் இயற்சீர் வந்து நிரை தட்பினும், அவற்றின் முன் நேர்முதல் வெண்சீர் வந்து ஒன்றாதொழி யினும் துள்ளலோசை பிறவாமையின், இவை கட்டளைக் கலியடிக்கு ஆகா; ஆயின் சீர்வகைக் கலியடிக்கு ஆம். எ-டு : ‘அணிமுகம் மதியேய்ப்ப அம்மதியை நனியேய்க்கும் மணிதிகழ் மாமழைநின் பின்னொப்பப் பின்னின்கண்’ (குறிஞ்சிக். 28) அணிமுகம் மதியேய்ப்ப நிரையீற்று இயற்சீர்முன் நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்டுக் கலித்தனை ஆயிற்று; அடுத்து, (அவ்வடிக்கண்ணேயே) நேர்முதல் நிரைமுதல் வெண்சீர்கள் வரச் சிறிது துள்ள லோசை பிறந்தது. ‘மணிதிகழ் மாமழை நின்’ - நிரையீற்று இயற்சீர் முன் நேர் முதல் வெண்சீர் வரினும், அடுத்து எல்லாச் சீர்களும் வெண் சீராக அடுக்கி வருதலின், சிறிது துள்ளலோசை பிறந்தது. (கட்டளைக் கலியடியில் முதற்சீரே இயற்சீராக வருதல் வேண்டும். இயற்சீரினை இடையிலும் வரும் எனக் கொள்ளின் கலியடி பதின்மூன்று எழுத்தினும் சுருங்கிவிடும். ஆதலின் இயற்சீரை அடுத்த மூன்று சீரும் நிரை முதல் மூவசைச் சீராதலே கலியோசைக்கு ஏற்றது. (செய். 60 பேரா.) இங்ஙனம் சிறிது துள்ளலோசை பிறக்க வருதல் சீர்வகைக் கலியடிக்கே ஏற்றது. ஆகவே, சீர் வகைக் கலியடிக்குப் பிறதளைகளும் விரவிவரலாம். எ-டு :‘மடியிலான் செல்வம்போல் மரனந்த அச்செல்வம்’ பாலைக். 34 இவ்வடியுள் சீர்கள் 1, 2 - இயற்சீர் வெண்டளை. ‘வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற’ பாலைக். 24 இவ்வடியுள் சீர்கள் 1, 2 - இயற்சீர் வெண்டளை; 2, 3 நிரையொன்றிய ஆசிரியத்தளை; 3-4 - நிரையொன்றிய ஆசிரியத்தளை. (தொ. செய். 59, 60, 61 நச்.) கலிக்கு முடுகியல் வருதல் - கலிப்பாவில் எழுசீரடி பெரும்பாலும் முடுகிவரும்; அஃதன்றி அறுசீரடியும் ஐஞ்சீரடியும் முடுகி வருதலுமுண்டு; சிறுபான்மை நாற்சீரடியும் முடுகிவரும். எ-டு : ‘கவிரிதழ் கதுவிய துவரிதழ் அரிவையர் கலிமயிற் கணத்தொடு விளையாட’ என எழுசீரடி முடுகி வந்தது. ’நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை யறியும் சான்றவ ரினமாக’ (குறிஞ்சிக். 3) ‘தகைவகை மிசைமிசைப் பாயியர் ஆர்த்துடன்’ (முல்லைக். 2) என முறையே அறுசீரடி ஐஞ்சீரடி நாற்சீரடி முடுகி வந்தவாறு. (தொ. செய். 65, 66, 67 நச்.) கலித்தளை - நேர் ஈறாகிய மூவசைச்சீர் முன்னர் நிரை முதல் வெண்சீர் வரின் சிறப்புடைய கலித்தளையாம்; நிரை முதல் வெண்சீர் அல்லாத சீர் வரின் சிறப்பில்லாக் கலித்தளையாம். ஆகவே காய்முன் நிரை வருவது கலித்தளை. எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி’ ‘முற்றொட்டு மறவினை (முறைமையான் முயலாதார்)’ என முறையே காண்க. (யா. க. 20 உரை) கலித்தாழிசை - அடிகள் சிலவாயும் பலவாயும் வந்து தத்தமில் ஒத்தும் ஒவ்வாதும் ஈற்றடி மிக்கு வருவன கலித்தாழிசையாம். இவற்றுள் ஈற்றடி மிக்கு ஏனையடி ஒத்து வருவன எல்லாம். ‘சிறப்புடைக் கலித்தாழிசை’ எனவும், ஈற்றடி மிக்கு ஏனைய அடி ஒவ்வாது வருவன எல்லாம் ‘சிறப்பில்லாக் கலித் தாழிசை’ எனவும் கூறப்படும். கலித்தாழிசை ஒரு பொருள் மேல் ஒன்றாயும் வரும்; ஒரு பொருள்மேல் மூன்றடுக்கியும் வரும். இது கொச்சகக் கலியின் இனம். ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவன கலியொத்தாழிசை எனப்படும்; ஒரோவழிக் கலித்தாழிசை எனவும் வழங்கப்படும். எ-டு : ‘வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம் கேள்வரும் போழ்தின் எழால்வாழி வெண்திங்காள்! கேள்வரும் போழ்தின் எழாதாய்க்(கு) உறாலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்! இஃது ஒரு பொருள் மேல் ஒன்றாய், ஈற்றடிமிக்கு, ஏனை யடிகள் தம்முள் ஒத்து வந்துள்ளமையால் சிறப்புடைக் கலித்தாழிசை. எ-டு : ‘பூண்ட பறையறையப் பூதம் மருள நீண்ட சடையான் ஆடுமே; நீண்ட சடையான் ஆடும் என்ப மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே’. இஃது ஒரு பொருள் மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, இரண் டாமடி குறைந்து, ஏனையடி இரண்டும் ஒத்து வந்துள்ளமை யால் சிறப்பில்லாத கலித்தாழிசை. எ-டு : ‘கொய்தினை காத்தும்; குளவி அடுக்கத்தெம் பொய்தற் சிறுகுடி வாரல் நீ; ஐய! நலம் வேண்டின்.’ ‘ஆய்தினை காத்தும்; அருவி அடுக்கத்தெம் ஆசில் சிறுகுடி வாரல் நீ; ஐய! நலம் வேண்டின்.’ ‘மென்தினை காத்தும்; மிகுபூங் கமழ்சோலைக் குன்றச் சிறுகுடி வாரல்நீ; ஐய! நலம் வேண்டின்’. இவை இரண்டடியாய், ஈற்றடிமிக்கு, ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வந்தமையால் கலியொத்தாழிசையாம். (யா.க. 87 உரை.) கலித்தாழிசை விரி ஐம்பத்தாறு - சிறப்புடைய கலியொத்தாழிசை, சிறப்பில்லாத கலியொத் தாழிசை, சிறப்புடைய கலித்தாழிசை, சிறப்பில்லாத கலித் தாழிசை என்னும் இவற்றைச் சிறப்புடைய தளை ஏழு - சிறப் பில்லாத தளை ஏழு - என்ற பதினான்கோடும் உறழக் கலித் தாழிசை (4 ஒ 14) ஐம்பத்தாறாம். (யா. க. 87 உரை.) கலித்துறை - ஐஞ்சீரடி நான்காய் ஒரு விகற்பமாய் நிகழ்வது கலித்துறை யாம். இவற்றுள் அடிமறியாய் ஐஞ்சீர் நான்கடியாய் வருவன கலி மண்டிலத்துறை; அடிமறியாகாதே ஐஞ்சீர் நான்கடியாய் வருவன கலிநிலைத்துறை எனப்படும். இவையிரண்டும் பதினான்கு தளையான் முரண இருபத்தெட்டு ஆகும். இது கொச்சகக் கலிப்பாவின் இனம். (யா. க. 88 உரை) கலித்துறை பன்னிரண்டு வகைகள் - 1. குற்றெழுத்தையோ ஒற்றெழுத்தையோ இறுதியாக உடைய மாச்சீரொடு கூவிளச்சீரும் அடுத்து இரண்டு விளச்சீரும் இறுதியில் ஒரு மாச்சீரும் புணர வரும் ஐஞ்சீரடி நான்காகி அமைவது. மாச்சீர் - தேமா, புளிமா; விளச்சீர் - கருவிளம், கூவிளம். எ-டு : ‘பூந டுங்கின மணிக்குலம் நடுங்கின புரைதீர் வான டுங்கின மாதிரம் நடுங்கின வரைகள் தாந டுங்கின புணரிகள் நடுங்கின தறுகண் தீந டுங்கின நிருதர்கோன் பெரும்படை செல்ல’ (கந்த. திக்கு. 29) ‘நிருதர் கோன்’ என்ற காய்ச்சீர் விளச்சீரின் தானத்தில் வந்துளது. 2. குற்றெழுத்தை இறுதியாகவுடைய மாச்சீர், கூவிளச்சீர், இரண்டு விளச்சீர், இறுதியில் காய்ச்சீர் - புணர வரும் ஐஞ்சீரடி நான்காகி வருவது. எ-டு : ‘இரதி இன்னணம் வருந்திடத் தொன்மைபோ லெங்கோமான் விரத மோனமோ டிருத்தலும் முன்னரே விறற்காமன் கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார் சுருதி நன்றுணர் திசைமுகன் முதலிய சுரரெல்லாம்’. (கந்த. மோன. 1) 3. மாச்சீர், புளிமாச்சீர், புளிமாங்கனி, தேமா, தேமா - என்றமையும் ஐஞ்சீரடி நான்காகி வருவது. எ-டு : ‘அன்னா ரமருங் களஞ்சென்றயி லேந்து நம்பி நன்னா யகமாந் திருநாமந வின்று போற்றிப் பொன்னா டிறைகூர் திருநீங்கிய புங்க வன்றன் முன்னா லணுகி இருந்தானடல் மொய்ம்பின் மேலான்’ (கந்த. வீரவாகு. 8) 4. காய்ச்சீர், தேமா, புளிமாங்கனி, தேமா, தேமா - என அமையும் ஐஞ்சீரடி நான்காகி வருவது. எ-டு : ‘செறிகின்ற ஞானத் தனிநாயகச் செம்மல் நாமம் எறிகின்ற வேலை அமுதிற்செவி யேக லோடும் மறிகின்ற துன்பிற் சயந்தன்மகிழ் வெய்தி முன்னர் அறிகின்றி லன்போல் தொழுதின்னவ னறைத லுற்றான்’ (கந்த. வீரவாகு. 9) 5. இரண்டு மாச்சீர், விளச்சீர், மாச்சீர், காய்ச்சீர் - என அமையும் ஐஞ்சீரடி நான்காகி வருவது. எ-டு : ‘கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேனென் உண்ணே ராவி வேண்டினும் இன்றே உனதன்றோ பெண்ணே வண்மைக் கேகயன் மாதே பெறுவாயேல் மண்ணே கொண்ணீ மற்றைய தொன்று மறவென்றான்’ (கம்பரா. 1522) 6. நான்கு விளச்சீர், ஒரு காய்ச்சீர் - இவை கொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது. எ-டு : ‘அஞ்சன வண்ணனென் னாருயிர் நாயக னாளாமே வஞ்சனை யாலர செய்திய மன்னரும் வந்தாரே செஞ்சர மென்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ உய்ஞ்சிவர் போய்விடின் நாய்க்குக னென்றனை யோதாரோ’ (கம்ப. குகப.) 7. மாங்கனிச்சீர், இரண்டு கூவிளம், இரண்டு தேமா - இவை. கொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது. எ-டு : ‘தாமந்தரு மொய்ம்புடை வீரன்ச யந்தன் விண்ணோர் ஏமந்தரு வன்சிறைச் சூழலு ளேக லோடும் தாமந்திகழ் மெய்யுடைக் காவலர் துப்பு நீங்கி மாமந்திர மாம்வலைப் பட்டும யங்க லுற்றார்.’ (கந்த. வீரவாகு. 4) 8. மாச்சீர், காய்ச்சீர் அல்லது விளச்சீர், இரண்டு விளச்சீர் இறுதியில் ஒரு மாச்சீர் - இவை கொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது. எ-டு : ‘வன்ம ருங்குல்வா ளரக்கியர் நெருக்கவங் கிருந்தாள் கன்ம ருங்கெழுந் தென்றுமோர் துளிவரக் காணா நன்ம ருந்துபோல் நலனற உணங்கிய நங்கை மென்ம ருங்குல்போல் வேறுள அங்கமு மெலிந்தாள்’ (கம்ப. காட்சிப்.) 9. மாச்சீர், விளச்சீர் நான்கு - இவைகொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது. எ-டு : ‘செஞ்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும் புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய் துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர் பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே’. (தே. ஐஐ 1-1) 10. இரண்டு காய்ச்சீர், இரண்டு மாச்சீர், ஒரு காய்ச்சீர் - இவை கொண்டமைந்த அடி நான்காகி வருவது. எ-டு : ‘உருவார்ந்த மெல்லியலோர் பாகம் உடையீர் அடைவோர்க்குக் கருவார்ந்த வானுலகம் காட்டிக் கொடுத்தல் கருத்தானீர் பொருவார்ந்த தெண்கடலொண் சங்கம் திளைக்கும் பூம்புகலி திருவார்ந்த கோஒயிலே கோயி லாகத் திகழ்ந்தீரே.’ (தே. ஐஐ 54-1) 11. முதலில் தேமா, பின் காய், அடுத்து இரண்டு மா அடுத்துக் காய்ச்சீர் - இவை கொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது. எ-டு : ‘துஞ்ச வருவாரும் தொழுவிப் பாரும் வழுவிப்போய் நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாரும் முனைநட்பாய் வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள் கொள்ளும் வகைகேட்டு அஞ்சும் பழையனூர் ஆலங் காட்டெம் மடிகளே.’ (தே. ஐ 45-1) 12. முதலில் விளம், பின் கூவிளம், அடுத்துக் குறிலீற்று இரண்டு தேமா, இறுதியில் தேமா - இவை கொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது. எ-டு : ‘நின்றுதொ டர்ந்தநெ டுங்கை தம்மை நீக்கி மின்றுவள் கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் ஒன்றுமி யம்பலள் நீடு யிர்க்க லுற்றாள் மன்றல ருந்தொடை மன்ன னாவி யன்னாள்’. (கம்பரா. 1498) (வி. பா. படலம் 28) கலித்துறை வகை இரண்டு - கோவைக் கலித்துறை, காப்பியக் கலித்துறை என்பன. விளக்கம் அவ்வத் தலைப்புள் காண்க. (வீ. சோ. 123 உரை.) கலிநிலைத்துறை - அடிமறியாகாமல், ஐஞ்சீரடி நான்காய் வருவது. எ-டு : ‘யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே’. (யா.க. 88 உரை) கலிப்பா (1) - கலி என்ற சொல்லுக்கு எழுச்சி, பொலிவு, விரைவு, ஓசை என்ற பொருள்கள் உள ஆதலின், சீர் பொருள் இசைகளால் எழுச்சியும் பொலிவும் விரைவும் உடைய பா கலிப்பா எனப்பட்டது. இது துள்ளலோசை பற்றி முரற்கை எனவும் வழங்கப்படும். இதனை வணிகர் வருணத்தது என்ப. இது துள்ளல் ஓசைத்து. (யா. க. 55 உரை) கலிப்பா (2) - நேரசை முதல் வரத் தொடுத்தலும், ‘ஏ’ என முடித்தலும் கலிப்பாவிற்கு அணியாம்; நிரைமுதல் வரத் தொடுத்தலும், ஆல் ஓ கொல் என்பன முதலாக முடித்தலும் பிறிதொரு தன்மைய. தளை பிறழ்ந்துள்ள கலிப்பாவானது கொச்சகச் கலிப்பா என்றும், சிலரால் கொச்சகம் என்றும் கூறப்படும். (அறுவகை. யாப்பு 26, 27) கலிப்பா பொது இலக்கணம் - துள்ளல் ஓசைத்தாய், நேரீற்று இயற்சீரும் நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பா உரிச்சீர் மிக்கு, நேரடித்தாய், தன்தளையும் அயல்தளையும் தட்டு வரும்; புறநிலை வாழ்த்து, வாயுறை, அவையடக்கு, செவியுறை என்னும் பொருள்மேல் வாராது, 13 எழுத்து முதலாக 20 எழுத்து முடிய உயர்ந்த எட்டு நிலமும் பெற்று, அளவடி மிகுத்து வரும் இயல்பிற்று. இக்கலிப்பா ஒத்தாழிசைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி என மூவகைத்து. அம்போதரங்க உறுப்புக்களிலும் ஒருசார் அராகத்திலும் நேரீற்றியற்சீர் வரப்பெறும். (யா. க. 78 உரை.) கலிப்பா முதலுறுப்பு, துணையுறுப்பு - தரவு தாழிசை என்பன கலிப்பா முதலுறுப்பு; கூன், சுரிதகம், வண்ணகம், அம்போதரங்கம் என்பன துணையுறுப்பு. (தொ. வி. 228.) கலிப்பா வகை நான்கு - ஒத்தாழிசைக் கவி, கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ்கலி எனக் கலிப்பா நால்வகைத்து. (தொ. செய். 130 நச்.) கலிப்பாவில் அறுசீரடி எழுசீரடி வருதல் - கலிப்பாவில் நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் அறுசீரடி தனக்குரிய வெண்டளையோடன்றி ஆசிரியத் தளையொடு வருதலும் உண்டு. எ-டு : ‘முன்னைத்தம் சிற்றில் முழங்கு கடலோதம் மூழ்கிப் போக அன்னைக் குரைப்பன் அறிவாய் கடலேயென் றலறிப் பேரும் தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தம் புன்னை அரும்பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே எம்மூர்’ இப்பாடற்கண், மூன்றாமடி நேரடியாக முன்னும் பின்னும் அறுசீரடிகள் வந்தன. இனி, ஒரு பாடல் முழுதுமே அறுசீரடியாய் வருதலும் உண்டு. எ-டு : ‘தொக்குத் துறைபடியும் தொண்டையஞ்செவ் வாய்மகளிர் தோள்மேல் பெய்வான் கைக்கொண்ட நீருள் கருங்கண் பிறழ்வ கயலென் றெண்ணி மெய்க்கண்ணும் பெய்கல்லார் மீண்டுங்கரைக் கேசொரிந்து மிளிர்வ காணார் எக்கர் மணற்கிளைக்கும் ஏழை மகளிர்க்கே எறிநீர்க் கொற்கை’ இவை கொச்சகக் கலி. ‘வரைபுரை திரைபோழ்ந்து மணநாறு நறுநுதற் பொருட்டு வந்தோய்’ என ஆசிரியத்தளையானும் அறுசீரடி வந்தது. அறுசீரடியை இருசீர் முச்சீர் அடிகளாகத் துணித்தல் கூடாது. கலிக்கு எழுசீரான் வரும் அடி முடுகியற்கண்ணே பயின்று வரும். எ-டு : ‘கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கலிமயிற் கணத்தொடு விளையாட’ என எழுசீரடி முடுகி வந்தது. இங்ஙனம் முடுகி வருதல் கலிக்கும் பரிபாடலுக்கும் நிகழும். (தொ. செய். 64, 65. நச்.) கலிப்பாவில் பிற பா அடிகள் மயங்குதல் - கலிப்பாவில் வெண்பா அடிகளும் ஆசிரிய அடிகளும் மயங்கி வரும். ‘காமர் கடும்புனல்’ (கலி-39) என்ற கலிப்பாவுள், வெண்பாக்க ளும் ஆசிரிய அடிகளும் பலவாக மயங்கிவர, அப்பாடல் ஆறடிச் சுரிதகத்தான் முடிந்தது. (யா.க.30) முல்லைக்கலி 3ஆம் பாடலில், முடுகியலடியாகிய முதலடி யும், ஏனைய மூன்றாமடியும் முச்சீரான் வந்தன. ‘நின்கண்ணாற் காண்பென் மன்யான்’ (குறிஞ்சிக். 3) இஃது இடையில் வந்தது. ‘செய்தானக் கள்வன் மகன்’ (குறிஞ்சிக் .15) இது கலிவெண்பாவின் ஈற்றடியாக வந்தது. (தொ. செய். 70 நச்.) சிந்தடி, ஏழு முதல் ஒன்பது எழுத்தின்காறும் பெற்று வருவது. (தொ. செய். 55 இள.) கலிப்பாவின் ஈற்றடியும் ஈற்றயலடியும் எழுசீர்களையுடை யவாய் வரும். அஃதாவது கலிப்பாவின் இறுதியில் வரும் சுரிதகம் ஆசிரியப் பாவாக அன்றி வெண்பாவாக இருக்கும். ஆசிரியப் பாவாயின், ஆசிரியஅடி பலவும் வந்து ஈற்றயலடி முச்சீராகவும் ஈற்றடி நாற்சீராகவும் அமையும். கட்டளை வெண்பாவோ, சீர்வகை வெண்பாவோ, சுரிதகமாக அமை யின் வெண்பாவிற்குரிய மரபின்படி ஈற்றயலடி நாற்சீராகவும் ஈற்றடி முச்சீராகவும் அமையும். ஆகவே, இவ்வாறு முடிதலே சிறப்பு; மூன்றடியில் குறைந்த வெள்ளைச் சுரிதகம் வருதல் சிறப்பின்று. இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீருமாகிய அடிகளால் முடியும் கலிப்பாக்கள் கொச்சகத் தின்பாற்படும். அவை இத்துணைச் சிறப்பில. கலிக்கு உறுப்பாய் வரும் வெண்பாவில் அருகி ஆசிரியத்தளை வருதலும் உண்டு. எ-டு : இனைநல முடைய கானகம் சென்றோர் புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின் பல்லியும் பாங்கொத் திசைத்தன நல்லெழி லுண்கணும் ஆடுமால் இடனே’ (கலி. 11) இஃது ஆசிரியச் சுரிதகம். ‘மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலைபோல் எல்லாம் துயிலோ எடுப்புக நின்பெண்டிர் இல்லின் எழீஇய யாழ்தழீஇக் கல்லாவாய்ப் பாணன் புகுதராக் கால்’ (கலி. 70) இது வெள்ளைச் சுரிதகம்; ‘மெல்லியான் செவிமுதல்’ என இதன்கண் ஆசிரியத் தளையும் வந்தது. (தொல். செய். 76, 77 நச்.) இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீரும் ஆகிய அடிகளான் முடியும் கலிப்பாக்களெல்லாம் கொச்சகமாம். அவை ஆசிரியம் அல்லது வெண்பாவான் முடியும் கலிப்பாப் போலச் சிறப்பில. வெள்ளைச் சுரிதகம் மூன்றடியில் குறைந்து வரின் கலிப்பா பண்புற முடியாது ஆதலின், சுரிதகம் மூன்றடியிற் குறையா திருப்பதே சிறப்பு. எ-டு : ‘இரவில் வாரலை ஐய விரவுவீ அகலறை வரிக்கும் சாரல் பகலும் பெறுவைஇவள் தடமென் தோளே! (கலி.49) (தொ.செய். 77 நச்., பேரா.) கலிப்பாவில் முச்சீரடி வரப்பெறுதல் - கலிப்பாவில் முச்சீரடி ஒரு செய்யுள் முழுதும் நிறைந்திருத்த லும் உண்டு. அஃதன்றி முதல் இடை கடை என்ற மூன்றிடத் தும் ஓரோ அடியாகவும் இரண்டும் பலவுமாகிய அடிகளாக வும் நிற்கும். எ-டு : நீர்வரக் கண்கலுழ்ந் தாங்குக் கார்வரக் கண்டநம் காதலர் தேர்வரக் கண்டில மன்னோ பீர்வரக் கண்டனம் தோளே! இது முச்சீரடி முழுதும் வந்தது. அரிபரி பறுப்பன சுற்றி எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண் உருவ மாலை போலக் குருதிக் கோட்டொடு குடர்வ லந்தன (முல்லைக்.3) 1,3 முச்சீரடி (தொல். செய். 70 நச்.) கலிப்பாவின் மோனை விகற்பங்கள் - இணைமோனை ‘இணையிரண் டியைந்தொத்த முகைநாப்பண் பிறிதியாதும்’ (கலி. 77) பொழிப்புமோனை ‘அரிமதர் மழைக்கண்ணீர் அலர்முலைமேல் தெறிப்பபோல்’ (கலி. 77) ஒரூஉமோனை ‘பெண்டெனப் பிறர்கூறும் பழிமாறப் பெறுகிற்பின்’ (கலி. 77) கூழைமோனை ‘களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட உருவின்மேல்’ (கலி. 72) மேற்கதுவாய்மோனை ‘அளியென உடையேன்யான் அவலங்கொண் டழிவலோ’ (கலி. 20) கீழ்க்கதுவாய்மோனை ‘மணிநிற மலர்ப்பொய்கை வளர்ந்தருளு மயிலோனை’ முற்றுமோனை ‘அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்’ (கலி. 11) (தொ. செய். 92 நச்.) கலிப்பாவிலும் ஆசிரியப்பாவிலும் வரும் கனிச்சீர்கள் - எ-டு : ‘புனற்படப்பைப் பூந்தாமரைப் போதுற்ற புதுநீருள் இனக்கெண்டை இரைதேரிய இருஞ்சிறைய மடநாரை’ இக்கலித் தரவுஅடிகளுள் தேமாங்கனி, புளிமாங்கனி என்ற நிரைநடு இயலா வஞ்சி உரிச்சீர்கள் வந்தன. எ-டு : ‘மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றை’ ‘குறிஞ்சியொடு கமழும் குன்ற நாட’ இவ்வாசிரிய அடிகளுள் தேமாங்கனி, புளிமாங்கனி என்ற வஞ்சி உரிச்சீர்கள் வந்தன. எ-டு : ‘வீங்குமணி விசித்த விளங்குபுனை நெடுந்தேர்’ இவ்வாசிரிய அடியுள் தேமாங்கனி புளிமாங்கனி என்ற வஞ்சிச் சீர்கள் வந்தவழி, இடையே ‘புளிமா’ என்ற இயற்சீர் வந்தது. எ-டு : ‘நிரைந்து நிரைந்து சிறுநுளைச்சியர் நெடுங்கானல் விளையாடவும்’ எனக் கொச்சகக் கலியுள் அருகி நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வந்தது. பாவினங்களில் கருவிளங்கனி, கூவிளங்கனி என்ற நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வரப்பெறும். எ-டு : ‘குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி’ (சூளா. தூது 4) எனக் கலிவிருத்த அடியுள் கருவிளங்கனிச்சீர்கள் வந்தன. எ-டு : ‘தனிவரலெனத் தலைவிலக்கலின் இறுவரைமிசை எறிகுறும்பிடை’ என ஆசிரியத் துறையுள் கருவிளங்கனிச்சீர்கள் வந்தன. (யா. க. 16 உரை.) கலிப்பாவிற்கு உரிய நிலம் - அளவடியின் மேல்நிலையான 13, 14 எழுத்துக்களும், நெடிலடி நிலமாகிய 15 முதல் 17 எழுத்து எல்லையும், கழிநெடிலடி நிலமாகிய 18 முதல் 20 எழுத்து எல்லையும் ஆகப் பதின்மூன் றெழுத்து முதல் இருபது எழுத்து முடியக் கலிப்பா அடிக்கு உரிய எழுத்து எல்லையாம். இது கட்டளைக் கலியடிக்கே வரையறை. சீர்வகைக் கலியடி 13 முதல் 20 என்ற எழுத்தெல்லையின் குறைந்து வரும். எ-டு : ‘ஐயிரு தலையின் அரக்கர் கோமான்’ (கலி. 38 - 11 எழுத்தடி.) ‘சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தையர்’ (கலி. 4 - 12 எழுத்தடி.) (தொ. செய். 59 நச்.) கலிப்பாவிற்கு நூற்றிருபது அடிகள் உரியவாதல் - கலிப்பாவிற்கு இயற்சீர்கள் 16. (தேமா புளிமா ஆகிய நேரீற் றியற்சீர் இரண்டும் வருதலில்லை. 1) ஞாயிறு, 2) பாதிரி (இவைமுறையே இரண்டெழுத்தும் மூன்றெழுத்தும் ஆம்); 3) வலியது, 4) கணவிரி (இவை முறையே மூன்றெழுத்தும் நான்கெழுத்துமாம்). இவை நிரையீற்றியற்சீர்கள் இவ்விரு வகையான் அமைந்தன. இனி, உரியசை மயங்கிய இயற்சீர் ஆறும் 5) போது பூ, 6) மேவு சீர், 7) விறகு தீ, 8) உருமுத்தீ, 9) போரேறு, 10) நன்னாணு, 11) பூமருது, 12) காருருமு, 13) மழகளிறு, 14) நரையுருமு, 15) கடியாறு, 16) பெருநாணு - எனக் குற்றுகர முற்றுகர வேறுபாட்டான் பன்னிரண்டாம். இவ் வாற்றான் இருவகை இயற்சீர்களும் 16 ஆமாறு காண்க.) கலிப்பாவிற்கு ஆசிரிய உரிச்சீர்கள் 4. 1) நீடு கொடி 2) நாணுத் தளை, 3) உரறுபுலி, 4) விரவு கொடி எனக் குற்றுகர முற்றுகர வேறுபாட்டான் நான்காயவாறு காண்க கலிப்பாவிற்கு வெண்சீர் 4. அவை மாசெல்வாய், புலிசெல் வாய், மாவருவாய், புலிவருவாய் என ஒருநிலையனவேயாம். இவ்வாற்றான் கலிப்பாவிற்குரிய சீர்கள் 16+4+4 = 24 ஆம். (தொ. செய். 43 நச். உரை) இவ்விருபத்து நான்கு சீர்களும் முறையே அளவடியில் முதற்சீராக நிற்ப, கலிப்பாவின் அளவடி பின் வருமாறு முறையே உயரும்தோறும் அடிகள் பலவாம். ஞாயிறு, போது பூ, போரேறு - என்னும் இவ்வீரெழுத்துச் சீர்கள் மூன்றும் முதற்சீராக நிற்ப, 13 முதல் 17 எழுத்து வரை முறையே உயரவே, வரும் அடிகள் 3 ஒ 5 = 15 ஆம். பாதிரி, வலியது, மேவுசீர், நன்னாணு, பூமருது, கடியாறு, விறகுதீ, மாசெல்வாய், நீடுகொடி - என்னும் இம்மூவெழுத் துச் சீர்கள் ஒன்பதும் முதற்சீராக நிற்ப, 14 முதல் 18 எழுத்து வரை முறையே உயரவே, வரும் அடிகள் 9 ஒ 5 = 45 ஆம். கணவிரி, உரறுபுலி, காருருமு, பெருநாணு, உருமுத்தீ, மழகளிறு, நாணுத்தளை, புலிசெல்வாய், மாவருவாய் - என்னும் இந்நான்கெழுத்துச் சீர்கள் ஒன்பதும் முதற்சீராக நிற்ப, 15 முதல் 19 எழுத்து வரை முறையே உயரவே, வரும் அடிகள் 9 ஒ 5 = 45 ஆம். இனி, விரவுகொடி, நரையுருமு, புலிவருவாய் - என்னும் இவ்வைந்தெழுத்துச் சீர்கள் மூன்றும் முதற்சீராக நிற்ப, 16 முதல் 20 எழுத்து வரை முறையே உயரவே, வரும் அடிகள் 3 ஒ 5 = 15 ஆம். ஆகவே கலிப்பாற்குரிய அடிகள் 15 + 45 + 45 + 15 = 120 ஆமாறு அறியப்படும். இவ்வரையறை கட்டளைக் கலிப்பாவிற்கே என்பது. (செய். 50 நச். உரை) கலிப்பாவின் இறுதி - கலிப்பாவின் ஈற்றடியும் ஈற்றயலடியும் சேர ஏழு சீர்களை உடையவாய் வரும். அஃதாவது கலிப்பாவின் இறுதியில் வரும் சுரிதகம் ஆசிரியப்பாவாக அல்லது வெண்பாவாக இருக்கும். ஆசிரியப்பாவாயின், ஆசிரிய அடி பலவும் வந்து ஈற்றயலடி முச்சீராகவும் ஈற்றடி நாற்சீராகவும் அமையும். கட்டளை வெண்பாவோ சீர்வகை வெண்பாவோ சுரிதகமாக அமையின் வெண்பாவிற்குரிய மரபு மாறாது ஈற்றயலடி நாற்சீராகவும் ஈற்றடி முச்சீராகவும் அமையும். இவ்வாறு முடிதலே சிறப்பு; மூன்றடியிற் குறைந்த வெள்ளைச் சுரிதகம் வருதல் சிறப்பன்று. இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீரு மாகிய அடிகளால் முடியும் கலிப்பாக்கள் கொச்சகத் தின்பாற்படும். அவை இத்துணைச் சிறப்பில. கலிக்கு உறுப் பாய்வரும் வெண்பாவில் அருகி ஆசிரியத்தளை வருதலு முண்டு. எ-டு : ‘இனைநல முடைய கானகம் சென்றோர் புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின் பல்லியும் பாங்கொத் திசைத்தன நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே’ (கலி. 11) இஃது ஆசிரியச் சுரிதகம். ‘மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலைபோல் எல்லாம் துயிலோ எடுப்புக நின்பெண்டிர் இல்லின் எழீஇய யாழ்தழீஇக் கல்லாவாய்ப் பாணன் புகுதராக் கால்.’ (கலி. 70) இது வெள்ளைச்சுரிதகம். ‘மெல்லியான் செவிமுதல்’ என ஆசிரியத்தளையும் வந்தது. இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீரும் ஆகிய அடிகளான் முடியும் கலிப்பாக்கள் எல்லாம் கொச்சகமாம். அவை ஆசிரியம் அல்லது வெண்பாவான் முடியும் கலிப்பாவைப் போலச் சிறப்பில. வெள்ளைச்சுரிதகம் மூன்றடியில் குறைந்துவரின் கலிப்பா பண்புற முடியாது. ஆதலின் சுரிதகம் மூன்றடியிற் குறையாத வெண்பாவாக இருத்தல் வேண்டும். ஆசிரியச் சுரிதகமும் மூன்றடியிற் குறையாதிருப்பதே சிறப்பு. எ-டு : ‘இரவின் வாரலை ஐய! விரவு வீ அகலறை வரிக்கும் சாரற் பகலும் பெறுவையிவள் தடமென் தோளே’ (குறிஞ்சிக். 13) (செய். 77 நச்., பேரா.) இது மூன்றடி ஆசிரியச் சுரிதகம். (தொ. செய். 76, 77 நச்.) கலிப்பாவின் உறுப்புக்கள் - தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்பன. (யா. க. 84 உரை.) கலிப்பாவின் பொதுவிலக்கணம் - துள்ளல் ஓசைத்தாய், நேரீற்றியற்சீரும் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பா உரிச்சீர்மிக்கு, நேரடித்தாய், தன்தளையோடு அயல்தளை தட்டும் வருவது; புறநிலை வாழ்த்து, வாயுறை, அவையடக்கு, செவியுறை என்னும் பொருள்மேல் வாராது, 13 எழுத்து முதல் 20 எழுத்து வரை உயர்ந்த எட்டு நிலமும் பெற்று அளவடி மிகுந்து வரும் இயல்பிற்று; ஒத்தாழிசைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி என மூவகைத்து. அம்போதரங்க உறுப்புக்களிலும் ஒருசார் அராகத்திலும் நேரீற்றியற்சீர் வரப்பெறும். கலிப்பா வெள்ளைச் சுரிதகத்தாலோ ஆசிரியச் சுரிதகத் தாலோ முற்றுப்பெறுவது. ஒருசார்க் கொச்சகக்கலிகள் கலியடியானே இறுவனவுமுள. ஆசிரியநேர்த்தளைகள் (நேரொன்றாசிரியத்தளை) கலிப்பாவின் மிக்கு வாரா. (யா. க. 79 உரை) கலிப்பாவின் வகை நான்கும் அவற்றின் முறைவைப்பும் - ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ்கலி எனக் கலிப்பா நால்வகைத்து. ஒத்தாழிசை என்னும் உறுப்புடைய செய்யுள் ஒத்தாழிசை யாம். ஒத்துஆழிசை - வினைத்தொகை. தாழிசை என்பது தானுடைய துள்ளல் ஓசைத்தாம். தாழ்தல் துள்ளலில் தாழம்படுதல் என்னும் பொருட்டு. தரவுஓசை சற்று வேறுபடினும் இத் தாழிசை ஓசை வேறுபடலாகாது. கொச்சகம் முதலியவற்றுள் இடைநிலைப்பாட்டுக்கள் தாழமுடையனவன்றியும் வரலாம். இதற்குப் பெரும்பாலும் ஓசை தவறுதல் கூடாது. தாழிசை மூன்றடுக்கி வருதலானும், ஒழிந்த கலி உறுப்புக்களின் சிறத்த லானும் தாழிசை என்ற பெயர் தலைமையும் பன்மையும் பற்றி வந்த பெயராம். கட்டளைக் கலிப்பாவுக்குத் தரவு மிகத் துள்ளாது வரத் தாழிசை அதனின் தாழம்பட்டு மூன்றடுக்கி வருதலின் ஒத்தாழிசை எனப் பெயர் பெற்றது. சீர்வகைக் கலியுள் தரவு மிகத் துள்ளி வரும். இதற்குத் தாழிசை ஓசை தாழம்பட்டே வருதலும், சிறுபான்மை நேரீற்றியற்சீர் வருத லும், கொச்சகத்தில் தாழிசை (ஒத்த தாழிசை ‘ஒத்தாழிசை’ என்பது நச். கருத்து.) ‘நீயே, வினைமாண் காழகம் வீங்கச் சுற்றிப் புனைமாண் மரீஇய அம்பு தெரிதியே’ (கலி. 7) எனத் தாழம்பட்ட ஓசையின்றி வருதலும் கொள்ளப்படும். தாழிசைகள் தம்மில் ஒத்து வருதலானும் சிறப்புடைமையா னும் ஒத்தாழிசைக் கலி முதலில் கூறப்பட்டது. கலித்தொகை 150 கலியுள்ளும் ஒத்தாழிசைக்கலி 68 வந்துள்ளது. (என்பர் பேரா.) இதற்கும் கொச்சகத்துக்கும் இடையே கலிவெண்பாட்டுக் கூறியது, அதுவும் இவைபோல உறுப்புக்களை உடைத்தாகி வரும் என்றற்கு. தரவும் போக்கும் சிறுபான்மை இன்றியும் வருதலின் கொச்சகம் அதன்பின் வைக்கப்பட்டது. தரவும் அடக்கியலும் இன்றி வருதலே பெரும்பான்மையாத லின், உறழ்கலி ஈற்றில் வைக்கப்பட்டது. (தொ. செய். 130 பேரா., நச்.) கலிப்பாவின் விரி எழுநூற்றிருபது - ஒத்தாழிசை, கலிவெண்பா, கொச்சகக்கலி எனக் கலிப்பாவின் தொகை மூன்று. நேரிசை ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசை, கலிவெண்பா, தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனக் கலிப்பாவின் வகை ஒன்பது. இவ்வொன்பது வகைகளையும் ஏந்திசைத்துள்ளல், அகவல் துள்ளல், பிரிந்திசைத்துள்ளல் என்ற மூன்றான் உறழ, 9 ஒ 3 = 27 ஆம். சிறப்புடைய ஆசிரிய நேர்த்தளை, சிறப்பில்லாத ஆசிரிய நேர்த்தளை என்ற இரண்டனையும் விடுத்து ஏனைய ஆறுதளைகளையும், சிறப்புடைய தளை சிறப்பில்லாத தளை என்ற இருவகையான் உறழ்ந்த பன்னிரண்டோடும், முற்கூறிய இருபத் தேழனையும் உறழ, 12 ஒ 27 = 324 ஆம். இனி, கலிவெண்பாவின்கண்ணும் கொச்சகக் கலியின்கண் ணும் ஆசிரிய நேர்த்தளை இரண்டும் அருகிவரப் பெறுத லின், கலிவெண்பா ஒன்று கொச்சகக் கலி வகை ஐந்து ஆக ஆறனையும், மூவகைத் துள்ளல் ஓசையோடும் இருவகை ஆசிரிய நேர்த்தளையோடும் உறழ, 6 ஒ 3 ஒ 2 = 36 ஆம். அவற்றையும் கூட்டக் கலிவிரி 324 + 36 = 360 ஆம். இவற்றை மீண்டும் சிறப்புடையன, இல்லன என விரிக்க, 360 ஒ 2 = 720 ஆம். (யா. க. 81 உரை) ஒத்தாழிசைக் கலி விரி சிறப்பு வகை மூன்று, சிறப்பில் வகை 3; ஓசை 3 ; சிறப்புடைய தளை ஆசிரிய நேர்த்தளை நீங்கலாக 6, சிறப்பில்லாத தளை ஆசிரிய நேர்த்தளை நீங்கலாக 6; இவற்றை முரண, 6 ஒ 3 ஒ 12 = 216 கலிவெண்பா விரி சிறப்பு, சிறப்பில்லது; ஓசை 3; தளை (7 + 7 =) 14; இவற்றை முரண, 2 ஒ 3 ஒ 14 = 84 கொச்சகக் கலிவிரி சிறப்புடைய வகை 5; சிறப்பில்வகை 5; ஓசை வகை 3; தளை 14; இவற்றை முரண, 10 ஒ 3 ஒ 14 = 420 இவற்றால், 216 + 84 + 420 = 720 என விரி இம்முத்திறமும் பற்றிக் கொள்ளப்படும். (யா. க. 81 உரை.) கலிப்பாவினம் கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம் - என்பன. விரிவு அவ்வத்தலைப்புள் காண்க. (யா. க. 87, 88, 89) கலிப்பாவும் வஞ்சிப்பாவும் ஒருங்குவைத்த இயைபு எடுத்துக்கொண்ட இனவெழுத்து இரண்டாமடி முதற்கண் பெற்றும் இடையிட்டு எதுகை பெற்றும் பெறாதும் வந்த ஒரு சார் இருசீரடி வஞ்சிப்பாவின் இரண்டடியை உடன் கூட்டி இசை அறாமை அசைத்து ஒலிப்ப எழுத்தும் எதுகையும் பெற்றும் பெறாதும் வந்த ஒலித்தொடர்ச்சியால் கலிப்பா அடியாய்க் கைகலத்தலும், அனுவும் அடியெதுகையும் பொழிப்பெதுகையும் பெற்றும் பெறாதும் வந்த கலிப்பா அடியினைக் கண்டித்து இரண்டாக்கிக் கால இடையீடும் கடைபற்றியது காகூவும் பட (-இசையெச்சம்) ஒலிப்பத் துள்ளலோசை வழுவித் தூங்கலோசைத்தாய் வஞ்சித்தலும் உடைத்து எனக் கலியும் வஞ்சியும் ஒருங்கு வைக்கப்பட்டன என்ப. ‘தாழிரும் பிணர்த்தடக்கைத் தண்கவுள் இழிகடாத்துக் காழ்வரக் கதம்பேணாக் கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின்’ என்ற வஞ்சியடிகளை, ’தாழிரும் பிணர்த்தடக்கைத் தண்கவுள் இழிகடாத்துக் காழ்வரக் கதம்பேணாக் கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின்’ எனக் கலியடிகளாகவும், ‘ஓங்குதிரை வியன்பரப்பின் ஒலிமுந்நீர் வரம்பாகத் தேன்தூங்கு முதிர்சிமைய மலைநாறிய வியன்ஞாலத்து’ (மதுரைக். 1-4) என்ற வஞ்சியடிகளை, ‘ஓங்குதிரை வியன்பரப்பின் ஒலிமுந்நீர் வரம்பாகத் தேன்தூங்கு முதிர்சிமைய மலைநாறிய வியன்ஞாலத்து’ எனக் கலியடிகளாகவும் உரைப்பின் துள்ளலோசை பெற்றவாறு. இனி, ‘பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றும் குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்’ (யா. வி. பக். 33 உரைமேற்.) என்னும் கலியடிகளைத் துணித்து இவ்விரண்டாக்கி, ‘பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றும் குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்’ எனக் குறளடியாக்கியுரைப்பின், வஞ்சிப்பாவாய்த் தூங்க லோசை பெற்றவாறு. (குறளடி இறுதியில் ஓசை அறுதலின் கால இடையீடு உண்டாம்; வஞ்சியடி யிறுதிக்கண் இசை யெச்சம் தோன்ற அடுத்துப் பிற உறுப்புக்கள் தொடரும்.) இவ்வியைபு பற்றிக் கலியும் வஞ்சியும் ஒருங்கு வைக்கப் பட்டன என்ப. (யா. க. 55 உரை.) கலிமண்டிலத்துறை - அடிமறியாய் ஐஞ்சீர் நான்கடியாய் வருவது. எ-டு : ’மிக்க மாதவம் வீட்டுல கடைதலை விளக்கும்; தக்க தானங்கள் தணப்பரும் போகத்தைப் பிணிக்கும்; தொக்க சீலங்கள் ஏக்கமில் துறக்கத்தைப் பயக்கும்; சிக்கென் பூசனை திகழொளிப் பிழம்பினைத் திருத்தும்.’ இதன் கண், யாதோர் அடியை எடுத்து முதல் நடு கடையாக உச்சரிப்பினும் ஓசையும் பொருளும் மாறுபடாது நெடிலடி நான்காய் நிகழ்தலின் இது கலி மண்டிலத்துறையாம். (யா. க. 88 உரை.) கலி முதலிய சங்கேத எழுத்து - கலி, மாகமடையம் முதலிய சங்கேத எழுத்து வகையெல்லாம் எழுத்துவல்லார்வாய்க் கேட்டுணரப்படும் என்பது யாப் பருங்கல விருத்தியுரை. அவ்வுரைகாரர் சுட்டும் எழுத்து விசேடங்கள் இன்று வழக்கு வீழ்ந்தன. (யா. வி. பக். 578) கலி முதலுறுப்பு - தரவும் தாழிசையும் கலிப்பா முதலுறுப்புக்கள்; ஏனையவை துணையுறுப்புக்கள். (தொ. வி. 228) கலியடியுள் தளைமயக்கம் - கலியடியுள், தன்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், தன்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், தன்தளையும் ஆசிரியத்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், வெண்டளையே வருதலும், ஆசிரியத்தளையே வருதலும், வஞ்சித்தளையும் தன்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், வஞ்சித்தளையும் தன்தளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித்தளையும் தன்தளையும் வெண்டளையும் விரவி நிற்றலும், வஞ்சித்தளையும் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி நிற்றலும், வஞ்சித்தளையே வருதலும் என்று இவ்வாற்றால் பலபட வரும். எ-டு : ‘குடநிலைத்1 தண்புறவில்2 கோவலர்3 எடுத்தார்ப்பத்4 தடநிலைப்5 பெருந்தொழுவில்6 தகையேறு7 மரம் பாய்ந்து8 வீங்குபிணிக்9 கயிறொரீஇத்10 தாங்குவனத்11 தேறப்போய்க்12 கலையினொடு13 முயலிரியக்14 கடிமுல்லை15 முறுவலிப்ப, எனவாங்கு ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும் கானுடைத் தவர்தேர் சென்ற வாறே’. இக்கலிப்பாவினுள் ‘இயற்சீர் வெண்டளை1, வெண்சீர் வெண்டளை2, நிரையொன்றாசிரியத்தளை3, கலித்தளை4, நிரையொன்றாசிரியத்தளை5, கலித்தளை6, கலித்தளை7, வெண்சீர் வெண்டளை8, ஒன்றிய வஞ்சித்தளை9, வெண்சீர் வெண்டளை10, ஒன்றாத வஞ்சித்தளை11, கலித்தளை12, கலித்தளை13, கலித்தளை14, கலித்தளை15 கலித்தளை16 என்பன நான்கடிகளினும் முறையே வருதலின், பிறதளைகள் யாவும் மயங்கியவாறு. (யா. க. 22 உரை) கலியொத்தாழிசை - ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும் கலித்தாழிசைகள். ‘கலித்தாழிசை’ காண்க. கலிவகை 9 - கலிப்பாவின் விரி - நோக்குக. கலிவிருத்தத்தில் பிற தளை - ‘மதுவிரிவன மலரணிவன மல்லிகையொடு மௌவல்’ (சூளா. தூதுவிடு.) ‘மஞ்சுசூழ் மணிவரை எடுத்த மாலமர்’ (சூளா. 7) என இக்கலிவிருத்த அடிகளுள், வஞ்சித்தளை இரண்டும் கலித்தளையும், நிரையொன்றாசிரியத்தளையும், நேரொன் றாசிரியத்தளையும் வந்தன. (யா. க. 22 உரை) கலிவிருத்தத்தின் பாற்படுவன - கலிவிருத்தம் சமமான நாற்சீரடி நான்காய் அமைவது என்பது இலக்கணமாயினும், கலிவிருத்தம் போன்று ஐந்தடி ஆறடி களான் வருவனவற்றையும் அவ்விருத்தத்துள் அடக்கிக் கொண்டு அவற்றைக் கொச்சகக் கலி என்று கூறுதலும் ஆம். எ-டு : ‘கோழியும் கூவின; குக்கில் அழைத்தன; தாழியுள் நீலத் தடங்கணீர்! போதுமினோ! ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக் கூழை நனையக் குடைதும் குளிர்புனல் ஊழியும் மன்னுவாம் என்றேலோ ரெம்பாவாய்!’ என ஐந்தடியான் வந்த பாடலை ஒப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின்பாற்படுத்துவர். இதனைத் தரவு கொச்சகம் எனினும் அமையும். (யா. க. 93 உரை) கலி விருத்தம் - நாற்சீரடி நான்குடையன கலி விருத்தம். அடிமறியாய் நாற்சீரடி நான்காய் வருவன கலிமண்டில விருத்தம்; அடிமறி ஆகாதே நாற்சீரடி நாலாய் வருவன கலிநிலை விருத்தம். கலி விருத்தம் கலிவெண்பாவின் இனமாம். கலிமண்டில விருத்தம் - அடிதோறும் பொருள் முடியும் கலி விருத்தம்; யாதோரடியையெடுத்து முதல் நடு இறுதியாக உச்சரிப்பினும் ஓசையும் பொருளும் மாறாது வருவது. எ-டு : ‘இந்திரர்கள் ஏத்துமடி ஈண்டுயிர்கள் ஓம்புமடி; வெந்திறல் ஞாயிற்றெழில் வீவிலொளி வெல்லுமடி; மந்திரத்தில் ஓதுமடி மாதுயரம் தீர்க்குமடி; அந்தரத்தின் ஆயவிதழ்த் தாமரையி னங்கணடி’ கலிநிலை விருத்தம் வருமாறு : ‘விரிகதிர் மதிமுக மடநடை கணவனொ டரியுறு கொழுநிழல் அசையின பொழுதினில் எரிதரு தளிர்சினை இதழ்மிசை உறைவோன் தரவிலன் எனின்மனம் உரைமினம் எனவே’ (யா.க. 89 உரை) நாற்சீர் ஓரடி நான்கு கொண்ட கவிகளிற் சில கலிவிருத்தம் எனப்படும். ஈரசைச் சொற்கள் ஐந்து ஓரடியாக நிகழும் கலிவிருத்தங்களும் உள. (அறுவகை யாப்பு. 38, 39.) கலிவிருத்தம் எட்டுவகை - நாற்சீரடி நான்கானாகிய கலிவிருத்தம் பெரும்பாலும் எட்டு வகையுள் அடங்கும். 1. ஒரு மா, மூன்று கூவிளம் கொண்ட அடி நான்கான் அமைவது. எ-டு : உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே! (கம்பரா. கடவுள். 1) 2. இரண்டு விளம், ஒரு மா, ஒரு கூவிளம் கொண்ட அடி நான்கான் அமைவது. எ-டு : ‘மஞ்சுசூழ் மணிவரை எடுத்த மாலமர் இஞ்சிசூழ் அணிவரை இருக்கை நாடது விஞ்சைநீள் உலகுடன் விழாக்கொண் டன்னது துஞ்சுநீள் நிதியது சுரமை என்பவே’. (சூளா. 7) 3. மூன்றுமா, ஒருகாய் அல்லது விளம் கொண்ட அடிநான்கான் அமைவது. எ-டு : ‘பரவக் கெடும்வல் வினைபா ரிடம்சூழ இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி அரவச் சடையந் தணன்மே யஅழகார் குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே’. (தே. ஐஐ 35-1) 4. முதற்சீர் மா, இரண்டாவது மா அல்லது விளம், மூன்றாவதும் மா அல்லது விளம், நான்காவது காய் - என்றமைந்த அடிநான்கான் அமைவது. எ-டு : ‘கண்ணார் கடல்சூழ் இலங்கைக் கிறைவன்தன் திண்ணா கம்பிளக் கச்சரம் செலவுற்றாய் விண்ணோர் தொழும்வேங் கடமா மலைமேய அண்ணா அடியேன் இடர்களை யாயே.’ (பெரியதி. ஐ 10-1) 5. மூன்று மா, ஒரு காய் கொண்ட அடி நான்கான் அமைவது. எ-டு : ‘வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலை திங்க ளோடு திளைக்கும் திருப்புத்தூர் கங்கை தங்கு முடியார் அவர்போலும் எங்கள் உச்சி உறையும் இறையாரே’ (தே.ஐ 26-1) 6. நாற்சீரும், மாச்சீராய் வரும் நான்கடியான் அமைவது. எ-டு : ‘தாந்தம் பெருமை அறியார் தூது வேந்தர்க் காய வேந்தர் ஊர்போல் காந்தள் விரல்மென் கலைநன் மடவார் கூந்தல் கமழும் கூட லூரே’ (பெரியதி. ஐஐ 2-1) 7. மூன்று கனிச்சீர், ஒரு மாச்சீரால் வரும் நான்கடியான் அமைவது. எ-டு : ‘வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோவெனும் இடையாளொடும் இளையானொடும் போனான் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோஇவன் வடிவென்பதொர் அழியாஅழ குடையான்’ (கம்பரா. 1296) 8. விளம். விளம் அல்லது காய், மா, விளம் அல்லது காய் என்றமைந்த நாற்சீரடி நான்கான் அமைவது. எ-டு : ‘முடிகெழு மன்னர்முன் இறைஞ்சு தம்மைத்தம் கடிகமழ் அகலத்துக் கொண்ட காதலெம் அடிகளும் அயலவர் போல ஆயினார் கொடிதிது பெரிதெனக் குழைந்து போயினார்’ (வி. பா. படலம்.5) கலிவிருத்தமும் தரவுகொச்சகமும் - இரண்டும் நாற்சீரடி நான்காய் ஒருவிகற்பமாய் அமைவன. கலியொலி வழுவாது பெரும்பாலும் மூவசைச்சீரான் அமைவது தரவு கொச்சகம்; கலியொலி வழுவி வருவது கலிவிருத்தம். (யா. க. 89 உரை) கலிவெண்பா (1) - தான் வெளிப்படையாக ஒரு பொருளைக் கூறவும், உள்ளார்ந்த பிறிதொரு பொருள் அமையுமாறு வெண்பா அடியால் திரிவு இன்றிப் பாடப்படுவது கலிவெண்பாவாம். இங்ஙனம் வரும் கலிவெண்பாக்கள் யாவும் உள்ளார்ந்த ஒரு பொருள் கருதி வரல் வேண்டும் என்ற வரைறை இல்லை. கட்டளை அடியாய் வருதலும், தனக்குரிய வெண்டளையான் வருதலும், பன்னீரடியான் வருதலும் பிறவுமாகிய இலக்க ணம் சிதையாதவற்றுக்கே ஒரு பொருள் நுதலி வரல் வேண்டும் என்பது விதி. அவ்விலக்கணத்தில் திரிந்தும், சீரும் தளையும் சிதைந்தும், அடியிகந்தும், பாவகை சிதைந்தும், ஒரு பொருள் நுதலியும் நுதலாதும் வெண்பா இயலான் வந்தன வும் கலியோசையாம் ஆதலின் கலிவெண்பாஆதற்கு இழுக் கில்லையாம். ஆகவே, ஒரு பொருள் நுதலியது கட்டளைக் கலியாய்த் திரி வின்றி வரும் என்பதும், ஒருபொருள் நுதலாதது சீர் வகைக் கலியாய்த் திரிவுடைத்தாய் வரும் என்பதும் பெறப்படும். ‘அரும்பொருள் வேட்கையின்’ (கலி. 18) என்பது பன்னீரடி யான் வந்து ஒருபொருள் நுதலிய கட்டளைக் கலிவெண்பா. இதனுள் தோழி, பெண்தன்மைக்கு ஏலாத நுண்பொரு ளினைத் தலைவன் எதிர்நின்று உணர்த்துவாள், தலைவன் பண்டு கூறின சிலவற்றை மனங்கொண்டு கூறுவாளாய்க் கூறிய கூற்றின்கண், “‘நீ மறந்தாய்’ என்பது யாம் உணருமாறு கூறுகின்றாள் இவள்” என்ற கருத்தமைய நிற்றலின், இஃது ஒருபொருள் நுதலியதாயிற்று. இஃது அகப்பொருட்கே உரித்து. இது வெண்டளை பிறழாமை யானும், பன்னீரடியின் இகவாமையானும் நெடுவெண்பாட்டு எனப்படாதோ எனின், இது வெண்பாவாயின், குறித்த பொருளை மறையக் கூறாது செப்பிக் கூறல் வேண்டும்; இஃது அன்னதன்றிப் பொருள் வேறுபடுதலானும் துள்ளிவருதலானும் கலி வெண்பா ஆயிற்று. ‘சுடர்த்தொடீஇ கேளாய்’ (கலி. 51) என்பது. பன்னீரடியின் இகந்து ஒரு பொருள் நுதலிவரும் கலிவெண்பா. கலித்தொகை நூற்றைம்பது கலியுள்ளும் கலிவெண்பாக்கள் எட்டாம். ‘கயமலர் உண்கணாய்’ (கலி.37) என்பது, ‘அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின், வழக்கென வழங்கலும் பழித்தன் றென்ப’ (தொ.பொ. 218 நச்.) என்பத னால், மெய்யினும் பொய்யினும் தன்வழிபாட்டு நிலை குறையாமல் தோழி தலைவிக்கு உள்ளார்ந்த பொருள் ஒன்றனை அவள் உணருமாற்றான் உட்கொண்டு கூறியது. (இவற்றை இக்காலத்தார் வெண்கலி என்பது சான்றோர் வழக்கொடு மாறுகொள்ளும்). ‘தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாம் (கலி.111) என்பது. தளைவிரவி ஐஞ்சீரடியும் வந்து, ஒரு பொருள் நுதலாது வருவது. ‘இடுமுள் நெடுவேலி’ (கலி. 12) என்பது தளை விரவி வந்தது. இனி இக்காலத்துப் பொருள்வகை சிதையக் கூறப்படும் உலாச் செய்யுளும் மடல் செய்யுளும் இக்கலிவெண்பாவின் பாற்படும். (தொ. செய். 153, 154 நச்.) கலிவெண்பாட்டெனினும் வெண்கலிப்பாட்டெனினும் ஒக்கும். வெண்டளையான் வந்து ஈற்றடி முச்சீரான் வருவன வும், பிறதளை யானும் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவும், கொள்ளப்படும். அகப்பொருளனவாம் பஃறொடை வெண்பா கலிவெண்பா; பிறபொருளனவாம் பஃறொடை வெண்பா பஃறொடை வெண்பாவேயாம்; பரிபாடல் உறுப்பாய் வரும் பஃறொடைவெண்பா பரிபாடல்; கொச்சகக்கலி உறுப்பாய் வரும் பஃறொடை வெண்பா கொச்சகக்கலிப்பா. (தொ. செய். 147 இள.) கலிவெண்பா (2) - கலித்தளை தட்டுக் கலியோசை தழுவி ஈற்றடி வெண்பாவே போல முச்சீரான் முடிவது. ஈற்றடி கலியோசை கொண்டு, வேற்றுத்தளை தட்டு முச்சீரான் இறுவனவும் வெண்கலிப்பா எனப்படும், பெரும்பாலும் ஈற்றடி வெள்ளோசை கொண்டும் கொள்ளாதும் முச்சீரடியான் இறுவதே கொள்ளப்படும். வெண்கலிப்பா எனினும், கலிவெண்பா எனினும் ஒக்கும். (யா. க. 85 உரை.) இது சிறப்புடைக் கலித்தளையானும், உரிச்சீர் வெண்டளை யானும், சிறப்பில்லாத ஆசிரிய நிரைத்தளையானும் சிறப்பில் லாத வஞ்சித்தளையானும் வரும். ஒருசாரார் செப்பல் ஓசையில் சிறிதும் வழுவாது வருவன கலிவெண்பா என்றும், சிறிது வழுவி வருவன வெண்கலிப்பா என்றும் கூறுப. (யா. கா. 32 உரை; யா. கா. 85 உரை) எ-டு : ‘பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானா விண்கொண்ட அசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக் கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள் விண்ணாளும் வேந்தரா வார்.’ இது சிறப்புடைய கலித்தளையான் வந்த கலிவெண்பா. ‘நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய் வானிறைஞ்ச மாகதஞ்சேர் வாய்மொழியான் மாதவர்க்கும் அல்லார்க்கும் தீதகல எடுத்துரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்கு மாதுயரம் தீர்ப்ப தெளிது.’ இஃது உரிச்சீர் வெண்டளையான் (பெரும்பாலும்) வந்த கலிவெண்பா. ‘ஏர்மலர் நறுங்கோதை எருத்தலைப்ப இறைஞ்சித்தண் வார்மலர்த் தடங்கண்ணாள் வலைப்பட்டு வருந்தியவென் தார்வரை அகன்மார்பன் தனிமையை அறியுங்கொல் சீர்நிறை கொடையிடை சிறந்து.’ இது சிறப்பில் ஆசிரிய நிரைத்தளையான் வந்த கலிவெண்பா. ‘முழங்குகுரல் முரசியம்ப முத்திலங்கு நெடுங்குடைக்கீழ்ப் பொழிந்தமதக் கடுஞ்சுவட்டுப் பொறிமுகத்த களிறூர்ந்து பெருநிலம் பொதுநீக்கிப் பெயராத பெருமையாற் பொருகழற்கால் வயமன்னர் போற்றிசைப்ப வீற்றிருப்பார் மருள்சேர்ந்த நெறிநீக்கி வாய்மைசால் குணந்தாங்கி அருள்சேர்ந்த அறம்புரிந்தார் அமர்ந்து’. இது சிறப்பில் வஞ்சித்தளையான் வந்த வெண்கலிப்பா. (யா. க. 85 உரை) கலிவெண்பாட்டு - ‘கலிவெண்பா’ - காண்க. கலிவெண்பா பெயர்க்காரணம் - கலியாய் வந்து ஈற்றடி வெண்பாவே போன்று முச்சீராய் இறுதலானும், வெண்பாவினிற் சிறிதே வேறுபட்ட கலி யோசைத்து ஆதலானும் கலிவெண்பா என்பது காரணக்குறி. (யா. க. 79 உரை) கலிவெண்பாவின் இருவகை - வெண்பா இயலான் தோன்றும் கலிவெண்பா, விரவு உறுப் புடைய கலிவெண்பா என்பன. (தொ. செய். 153 நச். உரை) கலிவெண்பா, வெண்கலிப்பா - இவ்விரண்டும் ஒரே பாவினுடைய இருபெயர்கள் என்பர் ஒரு சாரார். வெண்டளை தட்டு வருவன கலிவெண்பா எனவும், வெண்டளையொடு கலித்தளை தட்டு வருவன வெண் கலிப்பா எனவும் கூறுவர் வேறொரு சாரார். (யா. க. 85 உரை) கழிநெடில் - கழிநெடிலடி; ஐஞ்சீரின் மிக்க சீரான் வரும் அடி. (யா. கா. 12) யாப்பருங்கல விருத்தி அறுசீர் முதலாகப் பத்துச்சீர் இறுதி யாக வரும் அடியெல்லாவற்றையும், பத்துச்சீரின் மிக்கும் பதின்மூன்று சீரின்காறும் வருவனவற்றையும் கழிநெடிலடி யின் பாற்படுத்து வழங்குக என்னும். (25). எண்சீரின் மிக்க அடியான் வருவன சிறப்பில என்றார் காக்கை பாடினியார். ஒன்பதின்சீரடியும் பதின்சீரடியும் இடையாகு கழிநெடிலடி எனவும், பதின்சீரின் மிக்கு வருவன எல்லாம் கடையாகு கழிநெடிலடி எனவும் யா.வி. உரை யாசிரியர் கூறுவர். அறுசீர் முதலாகப் பதினொரு சீர் ஈறாகக் கழிநெடிலடி நிகழும் என்பர் வீரசோழிய உரைகாரர். (கா. 109) கனிச்சீர் - நிரையசை இறுதியாகவுடைய மூவசைச் சீர் நான்கும் கனிச்சீராம். அவை நேர்நேர் நிரை, நிரை நேர் நிரை, நேர் நிரை நிரை, நிரை நிரை நிரை என்பனவாகிய தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி என்பன. (யா. க. 12) காசு - வெண்பாவின் இறுதிச்சீர் உகர ஈற்று நேரீற்று இயற்சீராயின், நேர்நேரான் வரும் இச்சீர்க்கு வாய்பாடு காசு என்பது. எ-டு : ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு.’ (குறள் 397) (யா. கா. செய்.5) காப்பியக் கலித்துறை - கலித்துறையைக் கோவைக் கலித்துறை என்றும், காப்பியக் கலித்துறை என்றும் இரண்டாக்குவர். இவற்றுள், எழுத்து வரையறையப்படாது நெடிலடியான் வந்த செய்யுள் காப்பியக் கலித்துறையாம். எ-டு : ‘முன்றான் பெருமைக்க ணின்றான்முடி. வெய்து காறும் நன்றே நினைந்தான், குணமொழிந் தான்த னக்கென் றொன்றானு முள்ளான், பிறர்க்கே யுறுதி சூழ்ந்தான், அன்றே யிறைவ னவன்றாள் சரணாங்க ளன்றே’. இதன்கண், முதலடி ஈற்றடிகள் பதினான்கெழுத்தாயும், இடையடிகள் பதின்மூன்றெழுத்தாயும் வந்தவாறு; இருவகை வெண்டளையோடு, அருகி ஆசிரியத்தளையும் பயின்று வந்தமை காணப்படும். (வீ. சோ. 123 உரை) காம இன்னிசை - செந்துறைப்பாட்டின் வகை மூன்றனுள் ஒன்று; ஏனையன பரிபாடலும் மகிழிசையும் ஆம். (யா. வி. பக். 580) காய் - 1. மூவசைச் சீரின் இறுதியில் உள்ள நேரசைக்குரிய வாய்பாடு 2. காய்ச்சீர் (யா. கா.7) காலம் (1) - இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தும் நிகழும் நிகழ்ச்சி செய்யுளுள் தோன்ற உரைப்பது; இது செய்யுள் உறுப்புக்களுள் ஒன்றாம். (தொ. பொ. 514. பேரா.) கிளை எழுத்து - வருக்கமும் நெடிலும் அனுவும் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் உயிரும் என இவை. (தொ. செய்.94. பேரா.) வருக்கமோனையும் வருக்க எதுகையும் வல்லின எதுகையும் மெல்லின எதுகையும் இடையின எதுகையும் என ஐந்தாம். கிளை எழுத்துக்கள் இவை என ஆசிரியர் எடுத்துக் கூறிற்றி லர். ஒருக hல் கூறப்பெற்ற சூத்திரங்கள் விடப்பெற்றிருத்தலும் கூடும்; ஆயினும் ஆசிரியர் இந்நூலுள் அமைத்துள்ள சூத்திரங்களிற் காணப்படுவனவற்றை நோக்கிக் கிளையெழுத் துக்களை ஓராற்றான் உய்த்துணரலாம். அம்முறையால் கொள்ளப் பெறுவன வருமாறு : அ, ஆ, ஐ, ஒள - இவை தம்முள் கிளை எழுத்துக்களாம். இ, ஈ, எ, ஏ - இவை தம்முள் கிளை எழுத்துக்களாம். உ, ஊ, ஒ, ஓ - இவை தம்முள் கிளை எழுத்துக்களாம். இவை ஊர்ந்த மெய்களும் இம்முறையே கிளையாம். இனி மெய்யெழுத்துக்களுள் வல்லெழுத்தாறும் தம்முள் கிளையாம். மெல்லெழுத்தாறும் தம்முள் கிளையாம். இடையெழுத்து ஆறும் தம்முள் கிளையாம். ஞ், ந் - இவை யிரண்டும் தம்முள் கிளையாம். த், ச் - இவையிரண்டும் தம்முள் கிளையாம். ம், வ் - இவையிரண்டும் தம்முள் கிளையாம். இவை பிறப்பிட ஒற்றுமையால் கிளையாயின. (தொ. செய். 94 ச. பால.) கிளையெழுத்தும் வருக்கவெழுத்தும் - எதுகையும் மோனையும் ஆகிய தொடைகள் கிளையெழுத் துக்களைப் பெறும். அ ஆ ஐ ஒள, இ ஈ எ ஏ, உ ஊ ஒ ஓ என்னும் இவை தம்முள் கிளையெழுத்தாம். இனி மெய் யெழுத்துக்களுள், தகர சகரங்களும் - ஞகர நகரங்களும் - மகர வகரங்களும் - தம்முள் கிளையெழுத்தாம். இவை உயிர் மெய்க்கும் பொருந்தும். இனி, இனமாகிய உயிர்க்குறிலும் நெடிலும் - வல்லினப் புள்ளி ஆறும் மெல்லினப் புள்ளி ஆறும் இடையினப் புள்ளி ஆறும் - தம்முள் வருக்கம் பற்றிய எழுத்துக்களாம். (இனத்தை வருக்கத்துள் அடக்கினார் இவ்வாசிரியர்.) (தென். யாப். 51, 52) கீழ்க்கதுவாய் - நாற்சீரடிக்கண் ஈற்றயற்சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்கள் மோனை எதுகை முரண் அளபெடை என்ற தொடை விகற்பம்படத் தொடுத்தலாகிய கீழ்க்கதுவாய்த் தொடை. இயைபுத் தொடைக்கு ஈற்றுச் சீரையே முதற் சீராகக் கொண்டு கணக்கிடல் வேண்டும். (யா. க. 47) கீழ்க்கதுவாய் அளபெடை - நாற்சீரடியின் ஈற்றயற்சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்கள் அளபெடுத்துவரத் தொடுப்பது. எ-டு : ‘ஆஅம் பூஉ மணமலர் தொடாஅ’ (யா. க. 47 உரை) கீழ்க்கதுவாய் இயைபு - நாற்சீரடியின் முதலயற்சீராகிய இரண்டாம் சீரொழித்து ஏனைய சீர்கள் ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. எ-டு : ‘அன்னையும் என்னையும் தன்னில் கடியும்’ (யா.க. 47 உரை) கீழ்க்கதுவாய் எதுகை - நாற்சீரடியின் ஈற்றயற்சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்கள் முதலெழுத்து அளவொத்து நிற்ப இரண்டா மெழுத்து ஒன்றி வருதலாகிய எதுகை வருமாறு தொடுப்பது. எ-டு : ‘அடும்பின் நெடுங்கொடி ஆழி எடுப்ப.’ (யா. க. 47 உரை) கீழ்க்கதுவாய்த் தொடை - ‘கீழ்க்கதுவாய்’ காண்க. கீழ்க்கதுவாய் மோனை முதலிய தொடைகளைத் தனித்தனியே காண்க. கீழ்க்கதுவாய் நிரல்நிறை - நாற்சீரடியின் ஈற்றயற் சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்களில் நிரல்நிறை அமைவது. முடிக்கப்படும் சொற்களை யும் முடிக்கும் சொற்களையும் முறை பிறழாது வரிசைப்பட நிறுத்துவது. (முறை) நிரல் நிறையாம். எ-டு : “பொறையன் செழியன் பூந்தார் வளவன் கொல்லி கொற்கை நல்லிசைக் குடந்தை பாவை முத்தம் பல்லிதழ்க் குவளை மாயோள் முறுவல் மழைப்பெருங் கண்ணே.’ இதன்கண், மாயோள் பொறையன் கொல்லிப்பாவை, (அவள்) முறுவல் செழியன் கொற்கை முத்தம், (அவள்) கண்ணே வளவன் குடந்தைக் குவளை - என 1, 2, 4 ஆம் சீர்களில் முறைநிரல்நிறை அமைந்தவாறு (யா. க. .95 உரை) கீழ்க்கதுவாய் முரண் - நாற்சீரடியின்கண் ஈற்றயற்சீராகிய மூன்றாஞ்சீர் ஒழித்து ஏனைய சீர்கள் சொல்லானும் பொருளானும் மறுதலைப் படத் தொடுப்பது. எ-டு : ‘விரிந்தும் சுருங்கியும் வில்லென ஒசிந்தும்’ (யா. க. 47 உரை) கீழ்க்கதுவாய் மோனை - நாற்சீரடியின் ஈற்றயற் சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்கள் முதலெழுத்தொன்றிவரத் தொடுப்பது. எ-டு : ‘குழலிசைக் குரல தும்பி குறைத்த’ (யா. க. 47 உரை) குட்ட ஆசிரியம் - ஈற்றயலடி ஒருசீர் குறைந்தனவும், இடையிடையே ஒருசீர் இருசீர் குறைந்தனவும் குட்ட ஆசிரியம் எனப்படும். ஒருசீர் குறைந்தன ஆசிரிய அடியாய் வரும்; இருசீர் குறைந்தன வஞ்சியடியாய் வரும். ஈற்றயலடி ஒருசீர் குறைந்தவற்றை நேரிசை ஆசிரியப்பா எனவும், இடையிடையே அடிகுறைந்து வருவனவற்றை இணைக்குறள் ஆசிரியப்பா எனவும் பின்னுள் ளோர் பெயரிட்டு வழங்குதல் தேவையற்றது. (தொ. செய். 117 பேரா.) குட்டம் - தரவிற்கு ஒருபெயர். தரவு கொச்சகமாகிய கொச்சக ஒருபோகிற்கும் பெயர். (தொ. செய். 12.இள) குட்டம் - குறைந்து வருதல்; அஃதாவது நாற்சீரடி முச்சீரடி யும் இருசீரடியுமாகக் குறைந்து வருதல். (115 நச்.) இடையிடைக் குறைந்து வருவது குட்டம். (³ பேரா.) குட்டமாவது - குட்டம் - குறுக்கம். அளவாற்குறுகியது என்பது பொருள். ‘நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே’ என்றதனான் அதனிற் குறைந்து வரும் முச்சீரடி இருசீரடிகள் குட்டம் எனப்பட்டன. (தொ. செய். 115 ச. பால.) குற்றியலிகரம் - நிலைமொழி ஈறு குற்றியலுகரமாக விருக்க வருமொழி முதலில் யகரம் வரின் குற்றியலுகரம் குற்றியலிகரமாம். கேண்மியா, சென்மியா முதலிய முன்னிலை ஏவல் வினை களின் ஈற்றில் வரும் ‘மியா’ என்ற அசைச்சொல்லில் மகரத்தை ஊர்ந்து வரும் இகரமும் குற்றியலிகரமாம். குற்றியலிகரம் புள்ளிபெறும். நாகியாது, வரகியாது, வடாதியாது, பாக்கியாது, அரக்கி யாது, பனாட்டியாது, கட்டியாது, கேண்மியா என்றாற் போல வரும். சீரும் தளையும் சிதையுமிடத்துக் குற்றியலிகரம் அலகு பெறாது. எ-டு : குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் - குறள் 66 குற்றியலிகரம் அலகு பெறவில்லை; அலகு பெற்றால் தளை சிதைந்து நிரையொன்று ஆசிரியத்தளை ஆகிவிடும். (யா. க. 2 உரை) குற்றியலிகரம் (செய்யுளுள்) வருதல் - ‘குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்’ (குறள் 66) ‘சிலையன் செழுந்தலைவன் சென்மியா என்று மலையகலான் மாடே வரும்’ முதற்பாடலுள் குற்றியலுகரம் குற்றியலிகரமாகத் திரிந்தது; இரண்டாவதனுள் ‘மியா’ என மகரத்தின்மிசை நின்ற இகரம் குற்றியலிகரமாயிற்று. முதற்பாடலில் குற்றியலிகரம் அலகு பெறவில்லை; இரண்டாம் பாடலில் அலகு பெற்றது. (யா. க. 2 உரை) குற்றியலிகரம், குற்றியலுகரம், அளபெடை இவற்றுக்குச் சிறப்பு விதி தளையும் சீரும் வண்ணமும் கெடாத இடங்களில் குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் உயிரளபெடையும் அலகு பெறும்; அவை மூன்றும் கெடவரின் அலகு பெறா. எ-டு: ‘குழலினி தியாழினி தென்பதம் மக்கள்’ (குறள்-66) ‘அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்’ (குறள் - 254) இவ்வெண்பா அடிகளில், இரண்டாம் சீரின் முதற்கண் உள்ள குற்றியலிகரம் அலகு பெற்றால், முறையே நிரை யொன்றாசிரியத் தளையும் கலித்தளையும் தட்டு வெண்பா அடிசிதையும் ஆதலின், இன்னோரன்ன இடங்களில் குற்றியலிகரம் அலகுபெறாது. ‘குன்’று, கோ, டு, நீ, டுகுருதிபாயவும் - ஆறசைச்சீர் எனைப்பல எமக்,குத்,தண்,டா,து’ - ஐந்தசைச்சீர் இவ்வடிகளில் குற்றியலுகரம் அலகுபெறின், முறையே ஆறசைச்சீரும் ஐயசைச்சீரும் வந்து செய்யுளடி சிதையுமாத லின், குற்றியலுகரம் அலகுபெறாது என விலக்க, மூவசைச் சீராய் வரும். ‘உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற்(கு)’ ‘பிண்ணாக்கோஒ என்னும் பிணாவின் முகத்திரண்டு’ முதலடியில் அளபெடை அலகு பெற்றால் வெண்பாவில் கலித்தளை வந்து தட்டும். அடுத்த அடியில் அளபெடை அலகு பெற்றால் வெண்பாவில் நாலசைச்சீர் புகுந்துவிடும். ஆதலின் இன்ன இடங்களில் அளபெடை அலகு பெறாது. ‘வந்துநீ சேரின் உயிர்வாழும் வாராக்கால் முந்தியாய் பெய்த வளைகழலும்’ இவ்வடிகளில் முறையே குற்றியலுகரமும் குற்றியலிகரமும் வெண்பா யாப்புக் கெடாமையால் அலகுபெற்றன. கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் (குறள் 1087) என்னும் வெண்பா அடியில் அளபெடை அலகு பெற்றது. செறாஅஅய் வாழியென் நெஞ்சு (குறள் 1200) என்னும் வெண்பா அடியில் அளபெடை ஈரலகு பெறவே, செறா, அ, அய்- நிரைநேர்நேர் ஆயிற்று. அலகுபெறுமிடத்துக் குற்றிகர குற்றுகரங்களைக் குற் றெழுத்தே போலக் கொண்டு அலகிடல் வேண்டும். தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்று; ஆஅ-நேர்நேர் இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்று; படாஅ-நிரைநேர் பரவை (-உலகியல்) வழக்கினுள் பண்டமாற்றும், நாவல் கூறலும், அவலமும், அழுகையும், பூசலிடுதலும், முறையிடுத லும் முதலாக உடையவற்றுள் அளபெழுந்த மொழிகள் செய்யுளகத்து வந்து உச்சரிக்கும்பொழுது அளபெடா என்பது இலக்கணம் இன்மையின், அவை செய்யுளகத்து வருவழித் தளைசீர் வண்ணம் கெடநின்றால் அலகு பெறா எனவும், அவை கெடாவழி அலகுபெறும் எனவும் கொள்ளப் படும். ‘நறுமாலை தாராய் திரையவோஒ என்னும்’ என்புழித் திரை ய வோ ஒ - அளபெடையை நீக்கி, நிரைநேர் நேர் எனப் புளிமாங்காயாகக் கோடல் நேரிது; அளபெடையை நீக்கித் திரை யவோ - கருவிளம் என்று கோடலும் ஒன்று. ஒருவனது இயற்பெயரைச் சார்த்தி அளபெடை வருதல் எழுத்தானந்தம் என்னும் குற்றமாதலின், அளபெடையை நீக்கி விடுதலே முறையாகும். (யா. க. 4. உரை) குற்றியலுகரத்தை அசைக்கு உறுப்பாக்கியமை - செய்யுள் என்பது பலசொற்கள் இணைந்து அமைவது ஆகலானும், அல்வழி வேற்றுமைத் தொடர்களில் நிலை மொழியீற்றுக் குற்றியலுகரம் முற்றியலுகரமாக நிறைந்து ஒலிப்பதானும், குற்றுகரத்தையும் முற்றுகரத்தையும் கொண்ட இயற்கைச் சொற்களும் ஈறு மிகுந்த முதனிலைத் தொழிற் பெயர்களும் பலவாக இருத்தலானும், அவ்வுகரங் களின் ஒலி மொழியீற்றில் வரும்போது ஏனைய உயிர்மெய்க் குறிலொலியினின்று சிறிது வேறுபடுதலானும், தமிழில் அசைபிரித்துக் காண்டல் பெரும்பாலும் பொருளை அடிப் படையாகக் கொண்டே அமைதலானும் குற்றியலுகரம் அசைக்கு உறுப்பாக்கப்பட்டது. குற்றியலுகரம் தொடர்மொழிக்கண்ணும் ஒரு மொழிக் கண்ணும் முற்றியலுகரமாக நிறைந்து ஒலியாக்கால், ‘வேற்றார் அகலம் உழுமே ஒருகோடு மாற்றார் மதில்திறக்கு மால்’ (முத்தொள் 19.) ‘பாற்றினம் ஆர்ப்பப் பருந்து வழிப்படர’ (முத்தொள் 22) ‘முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாக’ (முத்தொள் 27) ‘கூந்தல்மாக் கொன்று குடமாடிக் கோவலனாய்’ (முத்தொள் 38) என்னுமிடங்களில் செப்பலோசை கெட்டுப் பாவும் அழியும். ‘இன்று நீர்விளை யாட்டினு ளேந்திழை தொன்று சுண்ணத்தின் தோன்றிய வேறுபாடு ஒன்றெ னாவிக்கொர் கூற்ற மெனநையா நின்று நீலக்கண் நித்திலம் சிந்தினாள்’ (சீவக. 903) என்ற செய்யுளில் இன்று, தொன்று, நின்று என்னும் சொற்க ளிலுள்ள ஈற்றுக் குற்றியலுகரம் ‘ஒன்றெ’ என்னும் சீரிலுள்ள எகர ஈறுபோல ஒரு மாத்திரை அளவினதாய் ஒலித்தல் வேண்டும். (இலக். கட். அசை. பக். 47) குற்றியலுகரம் - நெடில், குறிலிணை, குறில்நெடில், நெட்டொற்று, குறி லிணையொற்று, குறில்நெடிலொற்று, குற்றொற்று இவற்றை யடுத்து வரும் வல்லெழுத்தேறிய ஆறு உகரங்களும் குற்றிய லுகரமாம். குற்றியலுகரம் புள்ளி பெறும். எ-டு : நாடு, வரகு, வடாது, பாக்கு, அரக்கு, பனாட்டு, கட்டு. இவ்வாறு குற்றியலுகரத்தைக் கணக்கிடுவது ஒரு மரபு. (யா. க. 2 உரை) இதன்கண் பிண்ணாக்கு, சுண்ணாம்பு, பட்டாங்கு, விளை யாட்டு, போவது, வருவது, ஒன்பது முதலியன பல அடங்கா என்பது சூத்திரவிருத்தியில் விளக்கப்பட்டது. குற்றியலுகரம் செய்யுளான் வருதல் - ‘குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது கருப்புச் செருப்புப் பரப்பு’ இதன்கண், ஏழுசீரிலும் குற்றியலுகரம் இறுதிக்கண் வந்த வாறு. இவற்றில் குற்றியலுகரம் தனிஅசையாக வந்துள்ளமை உணரப்படும். (யா. க. 2 உரை) குற்றியலுகரமும் முற்றியலுகரமும் ஒற்றொடும் தோன்றி நிற்றல் - சேறு + கால் - சேற்றுக்கால் - நேர்பு நேர்; நாணு + தளை - நாணுத்தளை - நேர்புநிரை; நெருப்பு + சினம் - நெருப்புச்சினம் - நிரைபுநிரை; கனவு + கொல் - கனவுக்கொல் - நிரைபுநேர் இவை இருவகை உகரமும் சந்தியில் ஒற்றடுத்து வந்தன. தோன்றிநின்ற ஒற்றுக்களே அன்றி, நிலைமொழியில் ஒற்று மிக்கு உண்ணும் நடக்கும் என வருவனவும், விக்குள் கடவுள் என வருவனவும் போல்வன தேமா புளிமாவாகவே நிற்கும்; உரியசைகள் ஆகா. (தொ. செய். 10 நச்.) குறட்போலி - எழுசீரின் மிக்கும் குறைந்தும் இரண்டடியாய், அவ்வடியும் தம்முள் அளவொவ்வாது வருவது; ஓரடியாலே ஒரு செய்யுளாய் வருவதும் குறட்போலியாம். எ-டு : ‘உற்றவர்க்குறுப் பறுத்தெரியின்க ணுய்த்தலையன்ன தீமைசெய்தோர்க்கும் ஒத்த மனத்தராய் நற்றவர்க்கிட மாகிநின்றது நாகையே’ இஃது இரண்டடியாய் ஈறு குறைந்து வந்த குறட்போலி. ‘சிறியகுறள் மாணி செய்குணங்கள் ஓதுவன்காண்’ இஃது ஓரடியான் வந்த குறட்போலி (வீ. சோ. 127 உரை) குறள் - குறள்வெண்பா; எழுசீர் அடி இரண்டாய் வருவது. எ-டு : உளரென்னு மாத்திரைய ரல்லாற் பயவாக் களரனையர் கல்லா தவர் (குறள் 406) இது முதலடி நாற்சீராய்க் கடையடி முச்சீராய் வந்த குறள். (வீ. சோ. 127 உரை) குறள், சிந்து, திரிபாதி, வெண்பா இவை ஆமாறு 1. குறள் ஆமாறு - குறள் காண்க 2. அடியிரண்டாய்த் தம்முள் அளவொத்தது சிந்தாம். எ-டு. : ‘வீசின பம்பர மோய்வதன் முன்னான் ஆசை யறவிளை யாடித் திரிவனே’ எனவும், ‘எடுத்த மாட மிடிவதன் முன்னான் அடுத்த வண்ணம் விளையாடித் திரிவனே’ எனவும் வரும். 3. மூன்றடியாய்த் தம்மில் அளவொக்கில் திரிபாதியாம். எ-டு : ‘மடிந்து வாழ்நாட் போக்கன்மின், மாந்தர்காள்! இடிந்திவ் யாக்கை இழிவதன் முன்னநீர், தடிந்து தீவினை, தன்மம் செய்மினே’ (புனைந்தது) 4. நான்கடியாய்ப் பதினைந்து சீராய் நடுவு தனிச்சொல் வருவது வெண்பாவாம். முதற்சீரும் ஐந்தாம்சீரும் எட்டாம் சீரும் ஒத்த எதுகையாய், ஒன்பதாம் சீரும் பதின்மூன்றாம் சீரும் ஒத்த எதுகையாய்ப் பதினைந்து சீரால் வந்தது வெண்பாவாம். இதனை நேரிசை வெண்பா என்பாருமுளர். எ-டு : ‘ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய் நின்றபதின் மூன்றொன்பான் நேரொத்து - நன்றியலும் நீடுசீர் மூவைந்தான் நேரிசைவெண் பாஎன்பர் நாடுசீர் நாப்புலவர் நன்கு.’ இன்னிசை வெண்பாவினை இந்நூலுரையாசிரியர் வெண் பாப் போலியுள் அடக்குவர். (வீ. சோ. 127 உரை) குறள் தாழிசை - தாழிசைக் குறள் எனவும்படும்; குறள்வெண்பாவின் இனங் களுள் ஒன்று; இரண்டடிகளான் அமையும். இது மூவகைப் படும்: 1. விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையுமின்றி வெண் செந்துறை போலச் சமமான ஈரடிகளான் அமைவது. எ-டு : ‘திடுதிம் மெனாநின் றுமுழா அதிரப் படிதம் பயில்கூத் தருமார்த் தனரே’. 2. இரண்டடியாய் அமைந்து ஈற்றடி சிலசீர்கள் குறைந்து வருவது. எ-டு : ‘நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற் கண்ணினான் அடியே அடைவார்கள் கற்றவரே’. 3. தளை வழுவி வரும் குறள் வெண்பா. எ-டு : ‘வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள் பண்டையள் அல்லள் படி’ இக்குறள்வெண்பா மூன்றாம் நான்காம் சீர்களிடைக் கலித்தளை தட்டு வந்தது. (யா. க. 64, 65 உரை) குறள் வெண்செந்துறை - இது குறள்வெண்பாவின் இனம்; தம்முள் ஒத்த இரண் டடிகள் விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் உடையன வாய் வருவது. ஒவ்வோரடியும் நாற்சீர் முதல் பல சீர்களானும் வரும். எ-டு : ‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’. இது நாற்சீரடி இரண்டான் ஆகியது. ‘நன்றி யாங்கள் சொன்னக்கால் நாளும் நாளும் நல்லுயிர்கள் கொன்று தின்னு மாந்தர்கள் குடிலம் செய்து கொள்ளாரே’. இஃது அறுசீரடி இரண்டான் ஆகியது. (யா. க. 63) குறள்வெண்பா - வெண்பாவிற்குரிய பொதுவிலக்கணம் பெற்று இரண்டடி யான் வருவது; முதலடி அளவடி; ஈற்றடி சிந்தடி. ஒரு விகற்பமும் இரு விகற்பமும் பெறும். (யா. க. 59; யா. கா. 24) குறள்வெண்பாவின் நான்கு ஆறு அமைப்பு - இறுதிச்சீர் நேர், நிரை, நேர்பு, நிரைபு என முடியுமாற்றான் குறள்வெண்பா நான்காம். இனி, முற்றுகர ஈற்று நேர்நேர், முற்றுகர ஈற்று நிரைநேர் - எனும் இவற்றான் இறுதலைக் கூட்ட ஆறும் ஆம். எ-டு : ‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்’ (குறள் 1121) நன்றறி வாரின் கயவர் திருவுடையார் நெஞ்சத் தவல மிலர்’ (குறள் 1072) ‘கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு’ (குறள் 984) ‘அகர முதல எழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே உலகு’ (குறள் 1) எனவும், ‘இன்மலர்க் கோதாய் இலங்குசீர்ச் சேர்ப்பன் புனைமலர்த் தாரகலம் புல்லு’ (யா. கா. மேற்.) ‘மஞ்சுசூழ் சோலை மலைநாட! மூத்தாலும் அஞ்சொல் மடவார்க் கருளு’ (யா. கா. மேற்) எனவும் முறையே அவை வந்தவற்றால் குறள் வெண்பாவின் இறுதிச்சீர் அமைப்பு நான்காகவும் ஆறாகவும் கொள்ளப் படும். (இ. வி. 728 உரை) குறளடி - இருசீரான் வரும்அடி எ-டு : ‘திரைத்த சாலிகை நிரைத்த போனிரந் திரைப்ப தேன்களே விரைக்கொண் மாலையாய்’ (சூளா. 744) (யா.கா. 12, யா.க. 24 உரைமேற்.) குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்தல் - இருசீர் முதலா எழுசீரளவும் அவ்வைந் தடியினையும் இணைத்துக் கோடல். (தொ. செய். 242 நச்.) குறளடி வஞ்சி - நான்கு எழுத்து முதல் பன்னிரண்டு எழுத்து முடிய ஒன்பது நிலத்தினும் முறையான் ஓங்கி வரும் இருசீரடி. எ-டு : ‘கல்சேர்ந்து கல்தோன்று’ - 4 எழுத்தடி ‘தண்பால் வெண்கல்லின்’ - 5 எழுத்தடி ‘கண்டுதண்டாக் கட்கின்பத்(து)’ - 6 எழுத்தடி ‘காழ்வரக் கதம்பேணா’ - 7 எழுத்தடி ‘தாழிரும் பிணர்த்தடக்கை’ - 8 எழுத்தடி ‘நிலனெளியத் தொகுபீண்டி’ - 9 எழுத்தடி ‘அகன்ஞாலம் நிலைதுளங்கினும்’ - 10 எழுத்தடி ‘தாள்களங்கொளக் கழல்பறைந்தன’ (புறநா. 4) - 11 எழுத்தடி ‘குருகிரிதலின் கிளிகடியினர்’ - 12 எழுத்தடி எழுத்தெண்ணுமிடத்தே மெய்யெழுத்துக்களும் ஆய்தமும் குற்றியலுக ரமும் குற்றியலிகரமும் தள்ளுண்டு போம். (யா. வி. பக். 500) குறளடி வஞ்சிப்பா - குறளடியால் மூன்றுமுதற் பல அடிகொண்டு, அடுத்துத் தனிச்சொல் பெற்று அடுத்து ஆசிரியச்சுரிதகத்தான் இறுவது. எ-டு : பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை மீன்திரிதர வளவயலிடைக் களவயின்மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மணமுரசொலி வயற்கம்பலைக் கயலார்ப்பவும் நாளும், மகிழும் மகிழ்தூங் கூரன் புகழ்த லானாப் பெருவண் மையனே’ (யா. க. 90 உரை) குறித்த பொருளை முடிய நாட்டல் - தான் வைப்பக் கருதிய பொருளைப் பிறிதோர் அடியும் கொண்டு கூட்டாது அமைந்துமாறச் செய்தல். எ-டு : ‘நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்’ ஆசிரியம் ‘துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டு’ (நாலடி.2) (வெண்பா) ‘அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்’ (கலி.11) - (கலிப்பா) ‘வசையில்புகழ் வயங்குவெண்மீன்’ (பட்-1) - வஞ்சிப்பா இந்நால்வகைச் செய்யுட்கண் முடியும்துணையும் அடிதோறும் குறித்த பொருளை முடிய நாட்டியவாறு. (தொ. செய். 78 நச்.) குறிப்பிசை மாத்திரை ஆகாமை - செய்யுள் உறுப்பு இருபதாறனுள் முதலாவதாகிய மாத்திரை என்பது எழுத்தல்லாத ஓசையாகிய குறிப்பிசையைக் குறிக்கும் என்பர் ஒருசாரார். அக்குறிப்பிசை உறுப்பாக வரும் சான்றோர் செய்யுள் இன்மையின், மாத்திரை என்ற சொல் குறிப்பிசையைக் குறிப்பது ஆகாது. சிறுபான்மை பிற்காலச் செய்யுட்களில் குறிப்பிசை ஒரோவழி வரினும், அத்துணையானே அஃது இன்றியமையாத செய்யுள் உறுப்புக்களுள் தலையாயதாய் எண்ணப்படாதாகலின், மாத்திரை என்பதற்கு எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால அளவு என்பதே பொருள். (தொ. செய். 2 பேரா.) குறிப்புச் செய்யுள் - பலவகையாக நிகழும் முன்னம், உள்ளுறை, அங்கதம், பிசி, மந்திரம் முதலாக ஆராய்ந்துணரும் வகையானே வருவன குறிப்புச் செய்யுளாம். (தென். இயற். 43) குறிப்புத் தொடை - எழுத்தல்லாத மொழிக்குறிப்பு ஓசை. ‘கஃஃறென்னும்’, ‘சுஃஃறென்னும்’ என்றாற்போல் மாத்திரை குறித்து அலகு பெற வைக்கப்படுதல். (யா. க. 49 உரை) குறிப்புமொழி இலக்கணம் - எழுத்து முடிந்த வகையானும் சொல் தொடர்ந்த வகை யானும் சொற்கண் அமைந்துள்ள பொருளானும் செவ்வனே பொருள் அறிதற்கு அரிதாகிப் பொருட்புறத்த பொரு ளுடைத்தாய் நிற்பது. (தொல். செய். 179 நச்., பேரா.) எ-டு : ‘குடத்தலையர் செவ்வாயில் கொம்பெழுந்தார் கையின் அடக்கிய மூக்கினர் தாம்’. “குடம் போலும் தலையராய், செவ்வாயிடைக் கொம்புகள் தோன்றினராய், கையின்கண் அடக்கிய மூக்கினையுடை யார்” என்ற இஃது யானை என்பதனை உணர்த்தியமை குறிப்பு மொழியாம். குறிப்புமொழி அடிவரையறைப் படாமையின் பாட்டின்கண் வாராது என்பது. (தொ. செய். 179 நச்.) இனி, இலக்கண விளக்கம் கூறுமாறு : எழுத்தாலும் சொல்லாலும் தெரிவிக்காமல் பொருட்கண் அபிநயத்தில் கிடப்பனவே குறிப்புமொழி. ‘ஒருமுகம், எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே’ (முருகு. 97, 98) என்று கூறிய திருமுகத்துக்கு ஏற்ப, ‘ஒருகை மார்பொடு விளங்க’ (முருகு. 112) எனக் குறிப்புமொழி உட்கொண்டு கூறியவாறு. ‘குடத்தலையர் .... மூக்கினராம்’ என்பது பாட்டிடை வைத்த குறிப்பினுள் அடங்கும். (இ. வி. பாட். 147 உரை) குறிப்புமொழிச் செய்யுள் - அடிவரையறை இல்லாத செய்யுள் வகை ஆறனுள் குறிப்பு மொழிச்செய்யுளும் ஒன்று. எழுத்து முடிந்தவாற்றானும், சொல் தொடர்ந்தவாற்றானும், சொற்படுபொருளானும், செவ்வன் பொருள் அறியலாகாமையின், எழுத்தொடும் சொல்லொடும் புணராது பொருட்புறத்தே பொருளுடைய தாயிருப்பது குறிப்புமொழியாம். இது கவியை வாசித்த மாத்திரத்தில் பொருள் தோன்றாது, பின்னர் இன்னது இது என்று சொல்லி உணர்த்தப்படுவ தாம். எ-டு : ‘குடத்தலையர் செவ்வாயில் கொம்பெழுந்தார் கையில் அடக்கிய மூக்கின ராம்’. இதனைக் குறித்து உணர்ந்து யானை என்று பொருள் செய்க. இது பாட்டு வடிவில் அமைந்தமையின் விடுகதையாகிய பிசி எனப்படாது. நேரிதாகப் பொருள் உணர்த்தல் ஆற்றாமை யின் பாட்டெனப்படாது. இதற்கு அடிவரையறை இல்லை. ஓரடி முதலா எத்தனை அடி அளவினதாகவும் இக்குறிப்பு மொழிச் செய்யுள் அமையலாம். (தொ. பொ. 179 பேரா.) சொல்லால் பொருள் உணர்த்தலேயன்றிப் பொருளானும் சொல் பெறப்படச் செய்யும் எழுத்தினொடும் சொல்லி னொடும் புணராதாகிப் பொருட்கண் அபிநயத்தில் கிடப்பனவே குறிப்புச் சொல்லாம். அது எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே’ (முருகு. 97, 98) என்று கூறிய திருமுகத்தினுக்கு ஏற்ப, ‘ஒருகை மார்பொடு விளங்க’ (முருகு. 112) எனக் குறிப்புமொழி உட்கொண்டு கூறியவாற்றான் உணர்க. ‘குடத்தலையர்... மூக்கினராம்’ என்பது பாட்டிடை வைத்த குறிப்பினுள் அடங்கும். (இ.வி. பாட். 147 உரை) குறில் மிக்கு வருதல் - ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ (குறள்) இக்குறள் வெண்பாவில் (உயிர்மெய்க்) குறிலே பெரும். பான்மையும் வந்தவாறு. (யா. க. 2 உரை) குறிலிணை உகரம் - குற்றெழுத்தோடு இணைந்த குற்றியலுகரமும் முற்றியலுகர மும் என்பது இத்தொடர்ப்பொருள். தனிக்குறிலை அடுத்துக் குற்றியலுகரம் வாராதாகவே, சொல்லின் தொடக்கத்தே பிற எழுத்துக்கள் இருப்ப அடுத்து வந்த குற்றெழுத்தினை அடுத்த குற்றியலுகரம் என்றே பொருள் கோடல் வேண்டும். ‘குற்றெழுத்தோடு இணைந்த குற்றியலுகரம் - ஞாயிறு, வலியது 2. குற்றெழுத்தோடு இணைந்த முற்றியலுகரம் - கரு, மழு. ஞாயிறு, வலியது என்பன முறையே நெடிலையும் குறிலிணை யையும் அடுத்த குற்றெழுத்தைச் சார்ந்த குற்றியலுகரம். இவற்றை முறையே நேர் நேர்பு, நிரை நேர்பு என்று கோடல் கூடாது; நேர்நிரை, நிரைநிரை என்றே கோடல் வேண்டும். கரு, மழு - ஆகிய தனிக்குறிலை அடுத்த முற்றியலுகரங்களும், நேர்பு அசை ஆகாது, நிரையசையாகவே கொள்ளப்பெறும். (தொ. செய். 5 நச்.) குறுக்கல் விகாரம் - செய்யுளில் ஓசையும் தளையும் கருதி, நெடில் இனமான குறிலாகக் குறுக்கப்படுதல். எ-டு : ‘எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன் ‘தீயேன்’ எனற்பாலது வெண்டளை கருதி ‘தியேன்’ என நெட்டுயிர் குற்றுயிராயிற்று. (யா. க. 95 உரை) குறுகிய ஐ இணைந்த நிரையசை - சீர்க்கு இடையும் இறுதியும் நின்ற ஐகாரம் ஐகாரத்தோடு இணைந்தும் நிரையசையாம். ஆகவே முதற்கண் ஐகாரம் பிறிதோரெழுத்தோடு இணைந்து நிரையசையாகாது. ‘கெண்டையை வென்ற கிளரொளி உண்கண்ணாள்’ கெண்டையை - சீர்க்கடைக் கண் ஐகாரம் இரண்டிணைந்து நிரையசை ஆயிற்று. ‘அன்னையையான் நோவ தவமால் அணியிழாய்’ அன்னையையான் - சீரிடைக்கண் ஐகாரம் இரண்டிணைந்து நிரையசை ஆயிற்று. ‘படுமழைத் தண்மலை வெற்பன் உறையும்’ சீர்க்கடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இணைந்து நிரையசையாயிற்று. ‘தன்னையருங் காணத் தளர்ந்து’ சீர் இடைக்கண் ஐகாரம் குற்றெழுத்தோடு இணைந்து நிரையசை ஆயிற்று. (யா. க. 9 உரை) குறுகுதல் - எழுத்துத் தன்மாத்திரையின் குறுகியொலித்தல். ஐகாரஒளகாரங்கள் சொல்லின்கண் முதலில் நின்றவழி ஒன்றரை மாத்திரையாகவும், ஐகாரம் சொல்லின்கண் இடைகடைகளில் நின்றவழி ஒரு மாத்திரையாகவும், ஒரு மாத்திரை பெறும் இகர உகரங்கள் இடமும் பற்றுக் கோடும் காரணமாகச் சில விடங்களில் அரைமாத்திரையாக வும், அரை மாத்திரை பெறும் ஆய்தம் புணர்ச்சி வகையால் (சிலவிடத்தே லள மெய் திரிதலால் வரும் ஆய்தம்) கால் மாத்திரையாகவும், அரை மாத்திரை பெறும் மகரம் இட வகையால் சிலவிடத்தே கால் மாத்திரையாகவும் குறுகிவரும். (யா. கா. 4) குறுஞ்சீர் வண்ணம் - குற்றெழுத்து மிக்கு வரும் வண்ணம். எ-டு : ‘குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி’ (அகநா.4) (தொ. செய். 221. நச்.) குறுவெண்பாட்டு - அளவியல் வெண்பாவின் குறைந்த அடியினையுடைய வெண்பா; இதன் அடிவரையறை இரண்டும் மூன்றும். (தொ. செய். 118 நச்.) குறை ஈற்று ஒரு பொருள் இரட்டை - அடுக்கிவரும் நான்கு சீர்களுள் ஈற்றுச்சீர் ஓரெழுத்துக் குறைந்துவருவது. எ-டு : ‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்’ ஈற்றுச் சீர் ஏகாரம் குறைந்து வந்தது. நான்கிடத்தும் சொற் பொருள் ஒன்றே என்பது. (யா. வி. பக்.204) குறை ஈற்றுப் பலபொருள் இரட்டை - பலவாறு பொருள் பெற்று நான்காக அடுக்கிவரும் சொல் ஈற்றில் ஓரெழுத்துக் குறைந்து வருவது. எ-டு : ‘ஓடையே ஓடையே ஓடையே ஒடை’ இதன்கண், ஈற்றுச்சீர் இறுதியெழுத்தொன்று குறைந்து வந்தது. “ஓடையே! நீ ஐயே (-மெல்ல) ஓடு; என்னை விட்டு மெல்லப் பிரிந்து சென்று விட்ட என் தலைவனை நாடி நீயும் மெல்ல ஓடு” எனச் சொற்பொருள் பலவாக வந்தவாறு. (யா. வி. பக். 204, 191) குறை எண் நிரல்நிறை - முதற்கண் நிறுவிய பொருள்களைவிடக் குறைந்த எண் ணிக்கையுடைய பொருள்களைப் பின்னர் நிறுவுவது. எ-டு : ‘யானும் தோழியும் ஆயமும் ஆடும் துறைநண்ணித் தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே’ அடிதோறும் மூன்று பொருள்களை நிறுவுங்கால் ஓரடியில் இரண்டே பொருளை நிறுவியமை குறைஎண் நிரல் நிறை என்பர் ஒரு சாரார். (யா. வி. பக். 384) குறைச் சிஃறாழிசைக் கொச்சகம் - இடையிடையே தனிச்சொல் பெற்று ஈற்றடி குறைந்து வந்த மூன்று (சில) தாழிசை பெற்று வந்த குறைச் சிஃறாழிசைக் கொச்சகம் ஒன்று வருமாறு : (கொச்சகக் கலிப்பா வகை பத்தனுள் இதுவும் ஒன்று.) “மாயவனாய் முற்றோன்றி மணிநிரைகாத் தணிபெற்ற ஆயநீள் குடையினராய் அரசர்கள் பலர்கூடி மணிநின்ற மேனியான் மதநகையைப் பெறுகுவார் அணிநின்ற விடைகொண்டார் எனச்சொல்லி அறைந்தனரே (தரவு) தானவ்வழி, (தனிச்சொல்) எழுப்பற்றிச் சனந்துறுமி எவ்வழியும் இயமியம்ப விழுக்குற்று நின்றாரும் பலர்; (தாழிசை) ஆங்கே, (தனிச்சொல்) வாளுற்ற கண்ணாளை மகிழ்விப்போம் எனக்கருதிக் கோளுற்று நின்றாரும் பலர்; (தாழிசை) ஆண்டே, (தனிச்சொல்) இத்திறத்தாற் குறையென்னை இருங்கிளைக்கும் கேடென்னப் பற்றாது நின்றாரும் பலர்; (தாழிசை) அதுகண்டு, (தனிச்சொல்) மைவரை நிறுத்துத்தன் மாலை இயல்தாழக் கைவரை நில்லாது கடிதேற் றெருத்தொடிப்ப அழுங்கினர் ஆயம் அமர்ந்தது சுற்றம் எழுந்தது பல்சனம் ஏறுதொழு விட்டன கோல வரிவளை தானும் காலன் போலும் கடிமகிழ் வோர்க்கே” சுரிதகம் (யா.வி. பக்.332) குறைப் பஃறாழிசைக் கொச்சகம் - கொச்சகக் கலிப்பாவகை பத்தனுள் இதுவும் ஒன்று; தாழிசை ஆறுபெற்று, அவ்வாறும் ஈற்றடி ஈற்றுச்சீர் குறைந்து வரப்பெறுவது. (யா. க. 86 உரை) கூவிளங்கனி - ‘நேர்நிரைநிரை’ என வரும் மூவசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘தேம்புனலிடை மீன்திரிதரும்’ (யா. கா. 7 உரை) கூவிளங்காய் - ‘நேர்நிரைநேர்’ எனவரும் மூவசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ’ (யா. கா. 7 உரை) கூவிளந்தண்ணிழல் - நேர் நிரை நேர் நிரை எனவரும் நாலசைச் சீராகிய பொதுச் சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘அந்தரதுந்துபி நின்றியம்ப’ (யா. கா. 8 உரை) கூவிளந்தண்பூ - ‘நேர்நிரை நேர்நேர்’ எனவரும் நாலசைச் சீராகிய பொதுச் சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘வெங்களியானை வேல்வேந்தரும்’ (யா.கா. 8 உரை) கூவிளநறுநிழல் - ‘நேர் நிரை நிரை நிரை’ எனவரும் நாலசைச் சீராகிய பொதுச்சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப’ (யா. கா. 8 உரை) கூவிளநறும்பூ - ‘நேர் நிரை நிரை நேர்’ என வரும் நாலசைச்சீராகிய பொதுச் சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘கொங்கவிரசோகின் குளிர்நிழற்கீழ்’ (யா. கா. 8 உரை) கூவிளம் - ‘நேர்நிரை’ எனவரும் ஈரசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு. எ-டு : ‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்” (குறள் 1121) கூழை அளபெடை - நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் அளபெடை பெற்று வருதலாகிய தொடை விகற்பம். எ-டு : ‘விடாஅ விடாஅ வெரீஇப் பெயரும்’ (யா. க. 45 உரை) கூழை இயைபு - நாற்சீரடியின்கண் முதற்சீரொழிய ஏனைய மூன்றன்கண்ணும் ஈற்றெழுத்து ஒன்றிவரும் தொடைவிகற்பம். எ-டு : ‘பெருந்தோளி கண்ணும் இலங்கும் எயிறும்’ (யா. க. 45 உரை) கூழை எதுகை - நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் எதுகை பெற்று வரும் தொடை விகற்பம். எ-டு : ‘பொன்னின் அன்ன புன்னைநுண் தாது’ (யா. க. 45 உரை) கூழைத் தொடை - நாற்சீரடியின் முதல் மூன்று சீர்களும் மோனை எதுகை முரண் அளபெடை என்னும் தொடை பெற்று வருதலாகிய சீரிடை அமைந்த தொடை விகற்பம். இயைபுத் தொடை, ஈற்றுச் சீரையே முதற்சீராகக் கொண்டு கணக்கிடப் பெறு தலின், முதற் சீரொழித்து ஏனைய மூன்று சீரிலும் வருதலே கூழை இயைபுத்தொடை விகற்பமாகக் கொள்ளப் படும். கூழைமோனை முதலிய விகற்பங்களைத் தனித்தனித் தலைப்பிற் காண்க. (யா. க. 45) கூழை நிரல்நிறை - நாற்சீரடியின்கண், முதல்மூன்று சீர்களிலும் நிரல் நிறை அமைதல். எ-டு : ‘கண்ணும் புருவமும் மென்தோளும் இம்மூன்றும் வள்ளிதழும் வில்லும் விறல்வேயும் வெல்கிற்கும்’ இவ்வடிகளில், முதல் மூன்று சீர்களிலும், கண் இதழ் - புருவம் - வில் - தோள்வேய் - என நிரல்நிறை முறையே அமைந்தவாறு. (யா. க. 95 உரை) கூழை முரண் - நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்பத் தொடுத்தலாகிய தொடை விகற்பம். எ-டு : ‘கரிய வெளிய செய்ய கானவர்’ (யா. க. 45 உரை) கூழை மோனை - நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுத்தலாகிய மோனை விகற்பம். எ-டு : ‘அருவி அரற்றும் அணிதிகழ் சிலம்பின்’ (யா. க. 45 உரை) கூன் - செய்யுளடியின் அளவிற்கு உட்படாது வரும் அசையும் சீரும் ‘கூன்’ எனப்படும். வஞ்சியடியின்கண் நான்கு அசையும் கூனாக வரப்பெறும். முதல் இடை கடை என மூவிடத்தும் கூன் வரப்பெறும். எ-டு. : ‘வாள், வலந்தர மறுப்பட்டன’ (புறநா.4) - நேர் ‘அடி, அதர்சேறலின் அகஞ்சிவந்தன’ - நிரை ‘வண்டு, மலர்தேர்ந்து வரிபாடின - நேர்பு ‘களிறு, கதவெறியாச் சிவந்துரைஇ’ (புறநா.4) - களிறு - நிரைபு. இவை வஞ்சியடியில் முதற்கண் நான்கு அசையும் கூனாக வந்தவாறு. இனிச் சீர் கூனாதல் ஏனைய மூவகைப் பாவிற்கும் உரித்து. சீர் அடிமுதற்கண்ணேயே கூனாக வரப்பெறும். ‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பரிசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறுந்.216) ‘உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்’ ‘உலகினுள், பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்’ இவ்வாறு முறையே ஆசிரியம், வெண்பா, கலி என்னும் மூன்று பாவிலும் அடிமுதற்கண் சீர் கூனாயிற்று. (தொ. செய்.48, 49. நச்) கூன், சொற்சீரடி: இவற்றிடை வேறுபாடு - கூன் பொருளியைபு விட்டிசைக்கும்; சொற்சீரடி விட்டிசை யாது பொருள் தொடர்புற்று நிற்கும். (தொ. செய். 123. ச.பால) கைக்கிளையுள் அடங்குவன - ஒருபொருள் நுதலாது திரிந்து வரும் கலிவெண்பாட்டும் நெடுவெண்பாட்டோடு ஒருபுடை ஒப்புமையுடைமையின், அக்கலிவெண்பாட்டாக இக்காலத்தோர் கூறும் உலாச் செய்யுளும் மடற்செய்யுளும் புறப்புறக்கைக்கிளையுள் அடங்கும். (தொ. செய். 118. நச்.) கைக்கிளை மருட்பா - கைக்கிளையாகிய பொருள் பற்றி வரும் மருட்பா. எ-டு : ‘திருநுதல் வேர்அரும்பும்; தேங்கோதை வாடும்; இருநிலம் சேவடியும் தோயும்; - அரிபரந்த போகிதழ் உண்கணும் இமைக்கும் ஆகும் மற்றிவன் அகவிடத்து அணங்கே’ (பு.வெ. 14:3) (யா.கா.செய். 15) கைக்கிளை மருட்பா அல்லாத மருட்பா - கைக்கிளை மருட்பா அல்லாத மருட்பாப் புறநிலைவாழ்த்து, வாயுறை வாழ்த்து, செவியறிவுறுத்தல் ஆகிய பொருண்மை பற்றி அடிவரையறை இன்றி வரும்; முதலில் வெண்பா இயலிலும் இறுதியில் ஆசிரிய இயலிலும் வரும். இவை புறத்திணையிலேயே வரும். மருட்பாவில் உள்ள இரண்டு பாவும் இயற்சீரான் வருதல் சிறப்பு. இதன்கண் வரும் வெண்பாவின் குறைந்த அளவு ஏழுசீர்; வெண்பா நாலடி முதல் பன்னீரடி முடிய உயர்ந்து வருதல் சிறப்பு. வெண்பா பன்னீரடியின் இகந்து வரினும், மருட்பா வில் வரும் ஆசிரியம் மூன்றடியின் இகவாது; ஈற்றயலடி முச்சீர்த்தாகவே வரும். எ-டு : ‘தென்ற லிடைபோழ்ந்த’ என்ற பாடல் புறநிலை. ‘பலமுறையும் ஓம்பப் படுவன’ என்ற பாடல் வாயுறை. ‘பல்யானை மன்னர் முருங்க’ என்ற பாடல் செவியுறை. (தொ. செய். 161. நச்.) கொச்சக உறுப்பு - கொச்சகமாவது தாழிசையின் வேறுபட்டு வெண்பாவாகவும் வெண்பாவினை ஒத்த தழுவோசையின்றியும் வரும் இடை நிலைப் பாட்டு. இஃது அடுக்கியும் அடுக்காதும் வரும். (தொ. செய். 152 ச.பால) கொச்சக ஒருபோகின் அளவு - வண்ணக ஒத்தாழிசையின் அளவே இதற்கும் அளவாவது; சிறிது வேறுபட்டும் வரலாம். (தொ. செய். 155. நச்.) கொச்சக ஒருபோகின் இலக்கணம் - ‘தரவின்றாகித் தாழிசை பெற்றும், தாழிசை இன்றித் தரவுஉடைத் தாகியும், எண்இடை யிட்டுச் சின்னம் குன்றியும், அடக்கியல் இன்றி அடிநிமிர்ந் தொழுகியும்’ யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடைத்தாய்க் கொச்சக ஒருபோகு வரும். (தொ. செய். 149. நச்.) எனவே, ஒத்தாழிசை உறுப்புக்களுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவன கொச்சக ஒருபோகு எனப்பெயர்பெறும்; தனிச்சொல்லின்றி எண் இடையிட்டு வரினும் ஒருபோகு எனப்பெயர் பெறும். (143, 140 இள.) தரவின்றி தாழிசை முதலிய உறுப்புக்கள் பெற்றும், தாழிசை இன்றித் தரவு முதலிய உறுப்புக்கள் பெற்றும், தனித்தரவு தானே வரினும், தாழிசை தானே வரினும், எண்ணுறுப்புப் பெற்றுத் தனிச்சொல் வாராது போயினும், எண்ணுறுப்பி னுள் இடையெண் சிற்றெண் என்பன குறையினும் சுரிதகம் இன்றித் தரவுதானே நிமிர்ந்து ஒழுகி முடியினும், ஒத்தாழி சையின் யாக்கப்பட்ட யாப்பினும் அதற்கு உரித்தாக ஓதப் பட்ட கடவுள் வாழ்த்துப் பொருண்மையின்றிக் காமப் பொருளாக வரினும் கொச்சக ஒருபோகுஎனப் பெயர் பெறும். (143 இள.) கொச்சக ஒருபோகினைப் பாவினங்களுள் அடக்காமை கொச்சக ஒருபோகுகளை ஒரு வரையறைப்படுத்துப் பாத் தொறும் இனம் சேர்த்திப் பண்ணிற்குத் திறம்போலப் பாவிற்கு இனமாகப் பின்னுள்ள ஆசிரியர் அடக்குவர். அகத்தியமும் தொல்காப்பியமும் உணர்ந்த ஆசிரியர் அவ்வாறு அதனை அடக்காமைக்குக் காரணம் கூறுவர். அவர் கூறுமாறு : ‘கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே!’ இஃது ஈரடியான் வருதலின் குறட்பாவிற்கு இனமாகிய வெண்செந்துறை யெனின், ஈற்றடி ஒருசீர் குறைவின்றி வருதலின், வெண்பாவிற்கு இனமாகாது; கலிப்பாவின் ஒரு கூற்றுக்கே இனமாகும்; இது சீரானும் தளையானும் ஆசிரியத்துக்கே இனமாம். “அறுவர்க் கறுவரைப் பயந்தும் கவுந்தி மறுவறு பத்தினி போல்வை கினீரே” இது சந்தம் சிதைந்து புன்பொருளாய் வருதலின் குறட் டாழிசை எனின், தாழம்பட்ட ஓசையும் விழுமியபொருளும் இல்லனவற்றுக்குத் தாழிசை என்பது பெயராதல் வேண்டும். அங்ஙனம் கொள்ளின், சிறப்பாகக் கொள்ளப்படும் ஒத்தாழிசைக் கலியின் தாழிசைகளுக்கும் சந்தம் சிதைதலும் புன்பொருளாய் வருதலும் உரியவாகிவிடும். அதனால் குறட்டாழிசை என்ற பெயர் பொருந்தாது. ‘கன்று குணிலா’ (சிலப்.ஆய்ச்சியர் குரவை) என்ற தாழி சைகள் மூன்றும் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வெண்டளை யாக வருதலின், ஆசிரியத்திற்கு இனம் ஆகா; இவை அந்நிலத் தெய்வத்தைப் பரவுதலின் கைக்கிளை அல்ல. ‘நெருப்புக் கிழித்து விழித்ததோர் நெற்றி உருப்பிற் பொடிபட் டுருவிழந்த காமன் அருப்புக் கணையான் அடப்பட்டார் மாதர் விருப்புச் செயநின்னை வேண்டுகின் றாரே’ இதனை நான்கடியான் வருதலின் கலிவிருத்தம் என்பர். இது வெண்டளை தட்டலின் வெண்டாழிசை எனவும் கூறலாம். கலித்தளை இன்மையின் கலிக்கு இனம் என்றல் பொருந்தாது. குறளடி நான்கு ஒருபொருள்மேல் மூன்றடுக்கின் வஞ்சித் தாழிசை; தனித்துவரின் வஞ்சித்துறை; சிந்தடி நான்குவரின் வஞ்சி விருத்தம் என்ப. அவை நான்கடியான் வருதலானும் பா வேறுபடுதலானும் சீர் இயற்சீர் ஆகலானும் வஞ்சியொடு சிறிதும் தொடர்புடையன ஆகா. மேலும் தாழிசை துறை என்று வஞ்சியுட் படுத்துதற்கு எவ்விதக் காரணமும் இன்று. இங்ஙனம் இனம் சேர்த்துதற்கு அரியனவற்றைப் பெரும்பா லும் கலியோசை கொண்டமை நோக்கிக் கொச்சகம் என அடக்கினார் தொல்காப்பியனார். இக்கொச்சகம் வரையறுக்கப்படவே, ஆசிரியமும் வெண்பா வும் ஒருபொருள்மேல் பல மூன்றும் ஐந்தும் ஏழும் ஒன்பதும் பத்துமாகி வருதலும் பிறவாறு வருதலும் வரையறை இல. அவை ஐங்குறுநூறு, முத்தொள்ளாயிரம், கீழ்க்கணக்கு முதலியவற்றுள் அடங்கும். (தொ. செய். 149.நச்.) கொச்சகக் கலிப்பா (1) - தரவாகிய உறுப்பும் சுரிதமாகிய உறுப்பும் முதலும் முடிவும் வருதலின்றி இடையிடை வந்து தோன்றியும், ஐஞ்சீரடி பல வந்தும், தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் சொற்சீரடி முடுகியலடி என்னும் ஆறு உறுப்பினைப் பெற்றும் ஏனை உறுப்புக்களில் வெண்பா மிக்குப் பிற பா அடிகளும் வந்து வெண்பா இயலான் முடிவன கொச்சகக் கலிப்பாக்களாம். ‘காமர் கடும்புனல்’ (கலி.39) என்ற குறிஞ்சிக் கலிப்பாடல், ஐஞ்சீர் அடுக்கிய ஓர் அடியினையுடைய தரவு, அடுத்து ஐஞ்சீர் முதலடிக்கண் வந்த வெண்பா, அடுத்து முதலடி ஆசிரிய அடியாக வந்த வெண்பா, அடுத்து ஒரு வெண்பா, தனிச்சொல், பேரெண், இரண்டு தாழிசை, கொச்சகம், தனிச்சொல், முதலடி அறுசீர் முடுகியலும் அடுத்த அடி ஐஞ்சீர் முடுகியலும், ஏனைய அடிகள் அளவடியும் பெற்ற ஆறடி ஆசிரியச் சுரிதகம் - என்ற உறுப்புக்களையுடையது. ஒத்தாழிசைக்குத் தாழிசையாகிய உறுப்பு மிக்கு வந்தாற் போலக் கொச்சகக்கலிக்கு வெண்பா உறுப்பு மிக்கு வரும். (தொ. செய். 148. இள.) கொச்சகக்கலிப்பா (2) - தரவே வந்தும். தரவு இரண்டாய் வந்தும், தாழிசை சில வந்தும், தாழிசை பல வந்தும், தரவு முதலிய ஆறுறுப்பும் தம்முள் மயங்கியும், வெண்பாவினொடும் ஆசிரியத்தினொ டும் மயங்கியும், தனிச்சொல் இடையிடையே வந்தும், அம்போதரங்க உறுப்பும் சுரிதகமும் அருகி வந்தும், கலிக்கு ஓதப்பட்ட பொதுமுறையில் மாறிவருவன கொச்சகக் கலிப்பாக்களாம். (யா. க. 86. உரை) கொச்சகக் கலிப்பா பெயர்க்காரணம் - கொச்சகம் போல மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் கிடக்கும் உறுப்பிற்று ஆகலானும், கலியோசைக்குச் சிறப்பில்லாத நேரீற்று இயற்சீரை யுட்கொண்டு நிற்றலானும் கொச்சகக்கலி என்பதும் காரணக்குறி. சிறப்பில்லாததனை ஒருசாரார் கொச்சை எனவும் கொச்சகம் எனவும் வழங்குப. ஒத்தாழிசைக்கலி சிறப்புடைத்தாகலின் முன்னர் வைக்கப்பட் டது. வெண்கலி அளவிற்படாத அமைதித்தாய் ஈற்றடி முச்சீராதலின் இடைக்கண் வைக்கப்பட்டது. கொச்சகக்கலி சிறப்பின்மையின் இறுதிக்கண் வைக்கப்பட்டது. (யா. க. 79. உரை) கொச்சகக் கலிப்பா வகை (1) - தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என ஐந்து. (யா. க. 81. உரை) கொச்சகக்கலிப்பா வகை (2) - அகநிலைக் கொச்சகக் கலிப்பா, கொச்சக ஒருபோகின் இலக்கணங்களுள் ‘தரவின் றாகித் தாழிசை பெற்றும்’ என்ற ஒன்று நீங்கலாக ஏனைய எல்லா இலக்கணங்களையும் பெறும்; விரவுறுப்புடைய கலிவெண்பாவின் இலக்கணங் களையும் பெறும். ஆதலின் இவ்வகநிலைக் கொச்சகக் கலிப்பா தரவும் போக்கும் பாட்டும் இடைமிடைந்தும் பாட்டுக் கொச்சகமாகவும் இடையிடையே கொச்சகத்தில் ஐஞ்சீரடியும் அறுசீரடியும் பெற்றும் வருதலுண்டு. இதன்கண் இடையே வரும் பாட்டுக்கள் வெண்பாவிற் சிதைந்து ஓசையும் பொரு ளும் வேறாகலின் கொச்சகம் எனப்பட்டன. தரவு இணைந்து வாராது யாப்பின் வேறுபட்டு ஒருதரவே வருதலும், தரவு இணைந்து சுரிதகம் இன்றி வருதலும், தரவு இணைந்து தனிச்சொல்லும் சுரிதகமும் உடன்பெறுதலும், ஒத்தாழிசை மூன்றடுக்கினும் ஒவ்வொரு தாழிசை முன்னும் தனிச்சொல் வருதலும், தேவபாணி ஆகாதவழிக் காமப் பொருளைப் பற்றி வாராது அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருளும் பற்றி வருதலும், பாக்களின் அமைப்பில் வேறுபட்டு வருதலும் இவ்வகநிலைக் கொச்ச கத்துள் அடங்கும். எ-டு : “செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு’ (கலி.19) என்பது சுரிதகம் பெறாத தரவிணைக் கொச்சகம். கொச்சகம் வெண்பாவாயும் வருதலானும், தாழிசையொடு தொடராது வருதலானும் இவை கொச்சகம் ஆயின. ஒருபொருள் நுதலி இவ்வாறு வரினும் கொச்சகம் எனலாம். எ-டு : ‘மாமலர் முண்டகம்’ (கலி.3.) இது தனிச்சொல் இன்றி ஆசிரியச்சுரிதகம் பெற்ற தரவிணைக் கொச்சகம். எ-டு : “மின்னொளிர் அவிரறல்’ (கலி.55) இது தனிச்சொல்லும் ஆசிரியச் சுரிதகமும் பெற்ற தரவிணைக் கொச்சகம். எ-டு : ‘வெல்புகழ் மன்னவன்’ (கலி. 118) இது தாழிசைதோறும் முதற்கண் சொற்சீரடியாகத் தனிச் சொற்கள் பெற்று வருதலின் ஒத்தாழிசை இலக்கணம் இன்றி, எண்ணிடையிட்டுச் சின்னம் குன்றிய கொச்சகம். சீவகசிந்தாமணி முதலிய நூல்கள் கொச்சகம் பல அடுக்கிப் பொருள்தொடர்நிலையாய், அறம்பொருள் இன்பம் என்பன விராய்ப் பொருள்வேறுபட வரும் தரவுக் கொச்சகங்களாம். எ-டு : ‘கொடியவும் கோட்டவும்’ (கலி. 54) இஃது ‘அதனால்’ என்னும் தனிச்சொல் பெற்று அடக்கியல் இல்லாச் சுரிதகத்தோடு அடிநிமிர்ந்தது. எ-டு : ‘பால்மருள் மருப்பின்’ (கலி.21) இஃது ‘அவற்றுள்’ எனத் தொடங்கும் ஐஞ்சீரடி வந்து, தனிச் சொல்லும் அடக்கியலும் இன்றிச் சுரிதகம் பெற்று அடி நிமிர்ந்தோடிற்று. எ-டு : “அகன்ஞாலம் விளக்கும்’ (கலி.119) இது, தனிச்சொல்லும் அடக்கியலும் இன்றிச் சுரிதகம் பெற்று அடிநிமிர்ந்தோங்கியது. எ-டு : மன்று பார்த்து நின்ற தாயைக் கன்று பார்க்கும் இன்றும் வாரார்’ இஃது இருசீர் நான்கடித் தரவுகொச்சகம் எ-டு : ‘தஞ்சொல் வாய்மை தேறி அஞ்சல் ஓம்பென் றகன்ற வஞ்சர் வாரா ராயின் நெஞ்சம் நில்லா தேகாண்’ இது முச்சீர் நான்கடித் தரவு கொச்சகம். ‘நீரலர் தூற்றத் துயிலா நெடுங்கங்குல் வாரல ராகி யவரோ வலித்தமைந்தார் ஆரலார் நாரைகாள் அன்றில்காள் அன்னங்காள் ஊரலர் தூற்றயான் உள்ளம் உகுவேனோ? இது நாற்சீர் நான்கடித் தரவு கொச்சகம். ‘கன்னி ஞாழல் கமழ்பூங் கானல் யான்கண்ட பொன்னங் கொடியை ஈன்றோ ரில்லை போலுமால் மன்னன் காக்கும் மண்மேல் கூற்றம் வரஅஞ்சி அன்ன தொன்று படைத்தா யாயின் எவன்செய்கோ?’ இஃது ஐஞ்சீர் நான்கடித் தரவு கொச்சகம். ’திருவளர் தாமரை’ (கோவை1) ‘போதோ விசும்போ’ (கோவை2) இவை அடிதொறும் பதினேழ் எழுத்தும் பதினாறு எழுத்துமாக வந்த தரவுகொச்சகம். ‘குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெம் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்கும் கருங்கட்செவ்வாய் மயிலைச் சிலம்பகண் டியான்போய் வருவன்வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே’ (கோவை.30) என்பதன் மூன்றாமடியும், ‘காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணரொக்கல் சீரணி சிந்தா மணிஅணி தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொற்றையன் தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர் ஊரணி உற்றவர்க் கூரன்மற்றி யாவர்க்கு மூதியமே’ (கோவை-400) என்பதன் நான்காமடியும் ஒரோ எழுத்து மிக்க தரவு கொச்சகம். (மிக்க குற்றிய லிகரங்கள் எழுத்தெண்ணப் படாவாகும்) ‘காண்பான் அவாவினாற் காதலன் காதலிபின் நடவா நிற்ப நாண்பால ளாகுதலான் நன்னுதறன் கேள்வன்பின் நடவா நிற்ப ஆண்பான்மை குன்றா அயில்வே லவன்தனக்கு மஞ்சொ லாட்கும் பாண்பால் வரிவண்டு பாடு மருஞ்சுரமும் பதிபோன் றன்றே” இஃது அறுசீர் நான்கடிக் கொச்சகம். ‘இலங்கொளி வெண்மருப்பின் இட்டகை தூங்கவோ ரேந்தல் யானை கலங்கஞர் எய்திக் கதூஉம் கவளம் கடைவாய் சோரச் சிலம்பொழி குன்றென நின்றது செய்வ தெவன்கொ லன்னாய்’ இஃது அறுசீர் மூன்றடிக் கொச்சகம். ‘தண்ணந் துறைவன் தார்மேல் போன வண்ண வண்டு வாரா தன்றே வண்ண வண்டு வாரா தாயின் கண்ணியும் நில்லாதே காண்’ இது நான்கடி ஆசிரியத்துள் இறுதி முச்சீரான் வந்து யாப்பு வேறுபட்ட கொச்சகம். ‘நிணங்கொள் புலா லுணங்கு’ என்ற கானல் வரிப்பாடல் (சிலப்.) மூன்றாமடி நாற்சீர்த்தாய், ஏனைய மூன்றடிகளும் அறுசீர் பெற்று வந்தது. இஃது ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருதலுமுண்டு. இதுவும் கொச்சகம். ‘கோடல்விண்டு கோபமூர்ந்த கொல்லைவாய் மாடுநின்ற கொன்றையேறி மௌவல்பூத்த பாங்கெலாம் மாடுமஞ்ஞை அன்னசாய லாயவஞ்சொல் மாதராய் ஆடல்மைந்தர் தேரும்வந்து தோன்றுமே’. இது நடு ஈரடி மிக்கது. ‘இரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா அரங்கம் அணிபொழிலா ஆடும்போலும் இளவேனில் அரங்கம் அணிபொழிலா ஆடுமாயின் மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்’ இஃது இடைமடக்கி ஓரடி நீண்டும் ஒன்று குறைந்தும் வந்தது. ‘புன்னை நீழல் நின்றார் யார்கொல் அன்னை காணின் வாழாளே தோழி’. ‘மல்லல் ஊர! இவ்வில் அன்றால் பல்பூங் கோதை யில்’. இவை ஈரடியாய், ஈற்றடி குறையாதும் குறைந்தும் வந்தன. ‘கொய்தினை காத்தும் குளவி அடுக்கத் தெம் பொய்தல் சிறுகுடி வாரன் ஐய! நலம்வேண்டின்’. இஃது ஈரடியாய் ஈற்றடி மிக்கது. இதுவும் ஒருபொருள்மேல் மூன்றடுக்குதலும் உண்டு. ‘வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாம் கொடிபடு வரைமார்பின் கோழியார் கோமானே! துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம் தொடர்புண்டாங்(கு) இணைமலர்த்தார் அருளுமேல் இதுவிதற்கோர் மாறென்று துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரே. அதனால், செவ்வாய்ப் பேதை இவடிறத் (து) எவ்வா றாங்கொலி தெண்ணிய வாறே?’ இது தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்றுப் பொருள் வேறுபட்ட தரவிணை. ‘ஒன்று, இரப்பான்போல் எளிவந்தும் சொல்லும் உலகம்’ (கலி. 47) என்பது சொற்சீரும் தனிச்சொல்லும் வந்து, இடைநிலைப் பாட்டிலும் ஒன்று ஓரடிமிக்கு ஒருபொருள்மேல் மூன்று வருதலின் ஒத்தாழிசை ஆகாது கொச்சகமாய்க் கலிவெண் பாட்டின் வேறாயிற்று. ‘வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி. 7) இது கலிவெண்பாவிற்குரிய உறுப்புப் பெற்றதேனும் தரவு வெண்பாவாய், ஒழிந்தன வெண்பா அன்மையின் கொச்சக மாயிற்று. ‘காமர் கடும்புனல்’ (கலி. 39) இது கொச்சகங்கள் வெண்பாவாய்ச் சில உறுப்புக்கள் துள்ளல் ஓசை விராய்த் தளை ஒன்றிய கொச்சகமாய் ஒழிந்த பாவும் மயங்கிச் சுரிதகமும் முடுகிவருதலின் கொச்சக மாயிற்று. ‘காலவை, சுடுபொன் வளைஇய’ (கலி. 85) இஃது இடைநிலைப்பாட்டே முழுதும் வந்தது. இஃது உறழ் பொருட்டு அன்மையின் கொச்சகம். (தொ. செய். 155 நச்.) கொச்சகக் கலிப்பா விரி - 1. தரவு ஒன்றாகிச் சுரிதகம் பெற்று வருவது சுரிதகத் தரவு சொச்சகம். எ-டு : ‘குடநிலைத் தண்புறவில்’ 2. தரவு ஒன்றாகிச் சுரிதகம் இல்லாது வருவது இயல்தரவு கொச்சகம். எ-டு : “செல்வப்போர்க் கதக்கண்ணன்” 3. தரவு இரட்டித்துச் சுரிதகம் பெற்று வருவது சுரிதகத் தரவிணைக் கொச்சகம். எ-டு : ‘வடிவுடை நெடுமுடி’ 4. தரவு இரட்டித்துச் சுரிதகம் இல்லாது வருவது இயல் தரவிணைக் கொச்சகம். எ-டு : ‘வார்பணியத் தாமத்தால்’ 5. ஈற்றடி குறையாத சிலதாழிசையால் வருவது இயல் சிஃறாழிசைக் கொச்சகம். எ-டு. : ‘பரூஉத் தடக்கை’: இதன்கண், தாழிசை ஒவ்வொன்றன் முன்னரும் தனிச்சொல் வந்தது. 6. ஈற்றடி குறைந்த சில தாழிசையால் வருவது குறைச் சிஃறாழிசைக் கொச்சகம். எ-டு : ‘மாயவனாய்’: இதன்கண், தாழிசை ஒவ்வொன்றன் முன்னரும் தனிச்சொல் வருதலொடு, தாழிசையும் ஈற்றடி ஒருசீர் குறைந்து வந்தது. 7. ஈற்றடி குறையாத பல தாழிசையால் வருவது இயல் பஃறாழிசைக் கொச்சகம். எ-டு : ‘தண்மதியேர்’: தாழிசைகள் ஆறு வந்திருப்பதால் பஃறாழிசை. 8. ஈற்றடி குறைந்த பல தாழிசையால் வருவது குறைப் பஃறாழிசைக் கொச்சகம். இதன்கண், தாழிசை ஆறும் ஈற்றடி ஈற்றுச்சீர் குறைந்து வரல் வேண்டும். 9. கலிக்கு ஓதப்பட்ட உறுப்புக்கள் மயங்கி வருவது இயல் மயங்கிசைக் கொச்சகம். எ-டு : ‘மணிகிளர் நெடுமுடி’ - இது தரவு இரட்டித்து, தாழிசை ஆறும் தனிச்சொல்லும் அராகம் நான்கும், பெயர்த்தும் ஆறு தாழிசையும், தனிச்சொல்லும், எட்டு இருசீரோரடி அம்போதரங்கங்களும், தனிச் சொல்லும், சுரிதகமும் இவ்வாறு கலிக்கு ஓதப்பட்ட ஆறு உறுப்புக்கள் மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் மயங்கியும் வந்தது. 10. பிறபாவினொடு மயங்கி வருவது அயல் மயங்கிசைக் கொச்சகம். எ-டு.: ‘காமர் கடும்புனல்’ - இது வெண்பாப் பலவும் மயங்கி ஆசிரிய அடியும் விரவி வந்தமையால் அயல் மயங்கிசை யாயிற்று. (கலி. 39. நச். உரை காண்க.) எ-டு : ‘நறுவேங்கைத் துறுமலர்’ இஃது இருசீரடியும் முச்சீரடியுமாய் வரும் பிரிந்திசைக்குறள் எனப்படும் அம்போதரங்க அடிகளும், அந்தாதித் தொடை யாகிய அராக அடிகளும், தனிச்சொற்களும் விரவி மிக்கும் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் இடையிடை ஆசிரியங் களும் வெண்பாக்களும் மயங்கி வந்த அயல் மயங்கிசைக் கொச்சகம். (யா. க. 86 உரை) கொச்சகத்துள் இருசீரடி வருதல் - ‘மன்று பார்த்து நின்ற தாயைக் கன்று பார்க்கும் இன்னும் வாரார்’ என்பது இரு சீரடிக் கொச்சகம். இதனைப் பிற்காலத்தார் ‘இனம்’ என்ப. (தொ. செய். 63 நச்.) கொச்சத்துள் முச்சீரடி வருதல் - எ-டு : ‘தஞ்சொல் வாய்மை தேற்றி’ என்ற பாடல். இஃது அடிதோறும் முச்சீர் நிகழும் நாலடிப்பாடல். பிற்கால யாப்பிலக்கணநூலார் இதனை வஞ்சிப்பாவிற்கு இனமாகிய வஞ்சிவிருத்தம் என்ப. (தொ. செய். 155 நச். உரை) கொச்சகம் (1) - சிறப்பில்லதனைக் கொச்சை என்பது போலச் சிறப்பில்லாத செய்யுளுறுப்புக் கொச்சகம் எனப்பட்டது.(தொ.செய். 121 நச்.) கொச்சகம் என்பது ஒப்பின் ஆகிய பெயர். ஓராடையுள் ஒருவழி அடுக்கியது கொச்சகம் எனப்படும். அதுபோல ஒரு செய்யுளுள் பலகுறள் அடுக்கப்படுவது கொச்சகம் எனப் படும். (பேரா.) கொச்சகமாவது ஐஞ்சீர் அடுக்கி வருவனவும், நால்வகைப் பாக்களின் அடி, சொற்சீரடி, முடுகியலடி என்னும் அறுவகை யடியானும் அமைந்த பாக்களை உறுப்பாக உடைத்தாகி வருவனவுமாகு, வெண்பா இயலான் புலப்படத் தோன்றும். பரிபாடலுள் கொச்சகம் வருவழித் தரவும் சுரிதகமும் இடையிடையேயும் வரப்பெறும். (பேரா.) கொச்சகம் (2) - பல கோடுபட அடுக்கி உடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப ஆதலின், அது போலச் சிறியவும் பெரியவும் விராஅய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் வரும் செய்யுளைக் கொச்சகம் என்றார். இஃது ஒப்பினாகிய பெயர் இக்காலத்து இது மகளிர்க்கு உரியதாய்க் ‘கொய்சகம்’ என்று வழங்கிற்று. இது முறையே சுருங்கி வரும் எண்ணுப் போலாது அடியும் சீரும் தளையும் வேறுபட்டு வரும். (தொ. செய். 152 நச்.) கொச்சகம்: சொற்பொருள் - கொச்சகம் ‘கொய்சகம்’ என்பதன் மரூஉ. பின்னுமுன்னுமாக ஆடையை மடித்தமைக்கும் செயலினைக் கொய்சகம் என்பது வழக்கு. ஈண்டு அது சீர்களின் தொழில்மேலாய் இலக்கணக் குறியீடாக நின்றது. (தொ. செய். 121 ச. பால.) கொச்சகமும் உறழ்கலியும் - கொச்சகக்கலியின் ஒருவகை, சுரிதகம் இன்றி யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடைத்தாய் வரும். உறழ்கலியும் சுரிதகம் இன்றி யாப்பினும் பொருளினும் வேறுபட்டு வரும் எனவே, உறழ்கலி கொச்சகக்கலியுள் அடங்குமெனின், கொச்சகக்கலி சுரிதகம் இன்றி வரின் அடிநிமிர்ந்து ஒழுகும்; அங்ஙனம் அடிநிமிர்ந்து ஒழுகிசைத்தாய் வரும் கொச்சகக் கலி போலாது, உறழ்கலி அடி நிமிராதும் ஒழுகிசையின்றியும் வரும். ஆதலின் கொச்சகக் கலியுள் உறழ்கலி அடங்காது. (தொ. செய். 130 பேரா.) கொண்டுகூட்டு - ஒரு பாடலின் பல அடிகளிலும்உள்ள சொற்களைப் பொருள் பொருத்தமுற முன்னும் பின்னும் கொண்டுகூட்டிப் பொருள் செய்வது. எ-டு : ‘தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்றார் வரின்’ இப்பாடற்கண், “அஞ்சனத்தன்ன பைங்கூந்தலையுடையா ளின் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண்கோழி முட்டை உடைத்தன்ன மாமேனியின் பசலை வங்கத்துச் சென்றார் வரின் தணிவாம்” எனப் பல அடியிலும் நின்ற பல சொற்களையும் கொண்டுகூட்டிப் பொருள் செய்வது இப்பொருள்கோளாம். கொண்டுகூட்டின்கண், தன்னிடத்துள்ள சொல்லாவது பொருளாவது கொண்டுகூட்டிச் சொல்லப்படுவனவும், தன் னிடத்தில்லாத சொல்லாவது பொருளாவது கொணர்ந்து கூட்டிச் சொல்லப்படுவனவும் என்ற இருவகைகள் உள. (யா. வி. பக். 393) கொளு - கொளுவாவது கருத்து. பின்னர் எடுத்துக்காட்டாக வரும் பாடலின் கருத்தைக்கொண்டு நிற்பது இது. கொளு சூத்திரம் எனவும்படும். புறப்பொருள் வெண்பாமாலையுள் துறை யினை விளக்குவதாகப் புறப்பொருட்கு அமைந்தாற்போல, திருச்சிற்றம்பலக்கோவையாருள் கிளவிகள்தோறும் கூற்றினை விளக்குவதாக அகப்பொருட்கும் கொளுக்கள் அமைந்துள்ளமை காணலாம். திருவாரூர்க்கோவைக்கும் கொளுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவைக் கலித்துறை - கலித்துறை, கோவைக் கலித்துறை யெனவும் காப்பியக் கலித்துறை எனவும் இருவகைத்து என்பர். நெடிலடி நான்காய், நேரசையில் தொடங்கும் ஓரடிக்கு எழுத்து ஒற்றும் ஆய்தமும் ஒழித்துப் பதினாறும், நிரையசை யில் தொடங்கும் ஓரடிக்கு எழுத்துப் பதினேழும் என வர அமையும் யாப்புக் கலித்துறையாம். இவ்விலக்கணம் கூறும் வீரசோழியக் காரிகை (124) கோவைக் கலித்துறை ஆமா றுணர்த்துவதாக அவ்வுரையாசிரியர் குறித்தார்; அக் கட்டளைக் கலித்துறைச் சூத்திரத்தினையே அதற்கு இலக்கிய மாகவும் கொள்ளுமாறு சுட்டினார். ஆதலின் வீரசோழிய உரையாசிரியர் கருத்துப்படி கோவைக் கலித்துறை கட்டளைக் கலித்துறையேயாம். (வீ. சோ. 124) கோவைக் கலித்துறை, திலதக் கலித்துறை: வேறுபாடு - கட்டளைக் கலித்துறை, கோவைக் கலித்துறை யெனவும் திலதக் கலித்துறை எனவும் இருவகைத்து. கோவைக் கலித்துறை, ஈற்றடி மூன்றாம் சீர்ச்சொல் பக்கு விட்டு முற்சீரோடு ஒன்றி ஒழுகிய ஓசைத்தாய் வரும்; இரண் டாம் நான்காம் சீர்களும் அவ்வாறு ஓசை பிரிந்தொழுகின் மிக்க சிறப்புடையதாம். எ-டு : ‘மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே’ (கோவை. 2) ‘நீரணங் கோநெஞ்ச மேதனி யேயிங்கு நின்றவரே’ (தஞ்சை. கோ. 2) திலதக் கலித்துறை, ஈற்றடி ஐந்து சீரும் வகையுளி இன்றி நிகழ்வது. எ-டு : ‘உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்(று) ஒளிர்கின்றதே’ (கோவை. 1) வீரசோழியப் பழைய குறிப்புரையால் இவ்வாறு வேறுபாடு கொள்ளக் கிடக்கின்றது. (வீ.சோ. 128) கோள் - அகத்திணைச் செய்யுள் இலக்கணம் பத்தனுள் ஒன்று ‘கோள்’ ஆம். அஃதாவது செய்யுட்குப் பொருள்கொள்ளும் முறைமை. அஃது ஐந்து வகைப்படும். 1. விற்பூட்டு - செய்யுள் முதலும் கடையும் பொருள்கொண்டு நிற்பது. 2. விதலையாப்பு - தலையும் நடுவும் கடையும் பொருள் கொண்டு நிற்பது. 3. பாசிநீக்கு - சொல்தோறும் அடிதோறும் பொருள் முடிந்து நிற்பது. 4. கொண்டு கூட்டு - எவ்வடிச் சொற்களையும் ஏற்புழிச் சேர்த்துப் பொருள் செய்ய நிற்பது. 5. ஒருசிறைநிலை - பாட்டினகத்துச் சொல்லப்பட்ட பொருள் ஒருவழி நிற்பது; இன்றியமையாத கருத்து ஈற்றடியில் நிற்பது. எ-டு : ‘வருவர் வயங்கிழாய்! வாட்டாற் றெதிர்நின்று வாள்மலைந்த உருவ மணிநெடுந் தேர்மன்னர் வீய ஒளிதருமேல் புருவம் முரிவித்த தென்னவன் பொன்னங் கழலிறைஞ்சாச் செருவெம் படைமன்னர் போலவெங் கானகம் சென்றவரே’ இது விற்பூட்டுப் பொருள்கோள். ‘சென்றவரே வருவர்’ என இறுதியும் முதலும் எழுவாய்த் தொடராய்ப் பொருள் தந்தவாறு. பண்தான் அனையசொல் லாய்! பரி விட்டுப் பறந்தலைவாய் விண்டார் படச்செற்ற கோன்கொல்லிப் பாங்கர் விரைமணந்த வண்டார் கொடிநின் நுடங்கிடை போல வணங்குவன கண்டால், கடக்கிற்ப ரோ?கட வார்அன்பர் கானகமே.’ இது விதலையாப்புப் பொருள்கோள். சொல்லாய்! கொல்லிப் பாங்கர், கொடி நின் இடைபோல வணங்குவன கண்டால், அன்பர் கானகம் கடவார்’ எனத் தலை இடைகடை என எல்லா இடத்தும் பாடலில் பொருள் அமைந்தவாறு. ‘சென்றார் வருவது நன்கறிந் தேன்;செருச் செந்நிலத்தை வென்றான் பகைபோல் மெலியல் மடந்தை! உம் வெற்பெடுத்து நின்றான் அளந்த நிலமும் குளிர்ந்தது; நீள் புயலால் பொன்தான் மலர்ந்து பொலங்கொன்றை தாமும் பொலிந்தனவே’ இது பாசிநீக்குப் பொருள்கோள். (1) ‘நன்கு அறிந்தேன்; (2) மடந்தை! மெலியல்; (3) நிலமும் குளிர்ந்தது; (4) பொலங் கொன்றை தாமும் பொலிந்தன - என அடிதோறும் சொற்கள் பொருள் தொடர்பு பட இயைந்து (கொண்டு கூட்ட வேண்டாமல்) முடிந்தமை காணப்படும். ‘கோவைக் குளிர்முத்த வெண்குடைக் கோன்நெடு மாறன்முந்நீர் தூவைச் சுடர்வே லவர்சென்ற நாட்டினும் துன்னும்கொலாம் பூவைப் புதுமலர் வண்ணன் திரைபொரு நீர்க்குமரிப் பாவைக் கிணைஅனை யாய்! கொண்டு பண்டித்த பன்முகிலே!’ இது கொண்டு கூட்டுப் பொருள்கோள். ‘பாவைக்கு இணை அனையாய்! முந்நீர்க் கோவைக் குளிர்முத்த வெண்குடைக் கோன் நெடுமாறன் திரைபொரு நீர்க்குமரி கொண்டு பண்டித்த, பூவைப் புதுமலர் வண்ணன் (போன்ற) பன்முகில், தூவைச் சுடர் வேலவர் சென்ற நாட்டினுள் துன்னும்கொல்?’ என, பல அடிகளிலும் கிடந்த சொற்களை ஏற்றவாறு இயைத்துப் பொருள் கொள்ளப்பட்டவாறு. (பாவை - கொல்லிப்பாவை; முந்நீர் - கடல்; கடலிற் பிறந்த முத்துக்கள்; மாறனுடைய குமரித்துறை; குமரித்துறையிற் படிந்துண்ட பல மேகங்கள்; கண்ணன் போன்ற நிறத்தவாகிய மேகங்கள். பிரிந்து சென்றவர் நாட்டின்கண்ணும் அவை சென்றடை யுமோ? ‘கோடல் மலர்ந்து குருகிலை தோன்றின; கொன்றைசெம்பொன் பாடல் மணிவண்டு பாண்செயப் பாரித்த; பாழிவென்ற ஆடல் நெடுங்கொடித் தேர்அரி கேசரி அம்தண்பொன்னி நாடன் பகைபோல் மெலிகின்ற தென்செய்ய? நன்னுதலே!’ இஃது ஒரு சிறைநிலைப் பொருள்கோள். கோடல் மலர்தல். குருக்கத்தி தளிர் ஈனுதல் (1), கொன்றை செம்பொன் போன்று பூக்களைப் பாரித்தல் (2) என்னு மிவற்றால் தலைவி கார்கால வரவுணர்ந்து தலைவன் இன்னும் மீண்டிலாமை கருதி மெலிய லுற்றாள் என, பாடற்பொருளாம் தலைவியது மெலிவு ஈற்றடியாகிய ஓரிடத்தே நின்றவாறு. (இறை. அ. 56 உரை) ச சமநடை வெண்பா - ஈற்றடி எழுத்தும் ஏனைய அடி எழுத்தும் ஒத்து வருகிற வெண்பா சமநடை வெண்பாவாம். எ-டு : ‘சென்று புரிந்து திரிந்து செருவென்றான் மின்றிகழும் வெண்குடைக்கீழ் வேந்து’ ஒற்றும் குற்றுகரமும் நீங்க அடிதோறும் 9 எழுத்து வந்தவாறு. (யா. வி. பக். 499) சமநிலை மருட்பா - வெண்பாஅடியும் ஆசிரியஅடியும் ஒத்துவரும் மருட்பா வகை. எ-டு : ‘திருநுதல் வேர்அரும்பும் தேங்கோதை வாடும் இருநிலம் சேவடியும் தோயும் - அரிபரந்த போகிதழ் உண்கணும் இமைக்கும் ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே’ (பு.வெ.மா. 14-3) இதன்கண், வெண்பாஅடி இரண்டும் ஆசிரியஅடி இரண்டு மாக வந்தமையால் இது சமநிலை மருட்பா.(யா. கா. 36 உரை) சமநிலை வஞ்சி - வஞ்சியடியின் இருவகையுள் ஒன்று. இவ்வடி இருசீர்களை யுடையது. ஒவ்வொரு சீரும் மூன்றெழுத்து முதல் 6 எழுத்து முடியப் பெறும். எ-டு : ‘கொன்றுகொடுநீடு கொலைக்களிறுகடாய்’ இச்சமநிலை வஞ்சியடியுள் முதற்சீர் 3 எழுத்து; இரண்டாம் சீர் 6 எழுத்து (ஒற்றும் குற்றுகரமும் நீக்கிக் கணக்கிடப்படும்) (தொ. செய். 45, 46 நச்.) சமநிலை வெண்பா - ‘சவலை வெண்பா’ காண்க. (சங். அக.) சவலை - 1. அடியளவு குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு. முதலடி குறைந்து வரின் முதற்சவலை; கடையடி குறைந்துவரின் கடைச்சவலை; இடையடி குறைந்துவரின் இடைச்சவலை (வீ. சோ. 130) 2. இசைப்பாவகையுள் ஒன்று. (சிலப். 6-35 உரை) (டு) சவலைப் போலி - நான்கடியின் மிக்க அடிகளால் நடைபெற்று அவ்வடிகள் ஒத்தும் ஒவ்வாதும் வரும்பா. இனி நான்கடியான் வரும் சவலை அடியெதுகையின்றிப் பலவிகற்பம் படவரினும் சவலைப் போலியாம். (வீ. சோ. 130 உரை) சவலை வெண்பாட்டு - சவலை வெண்பா எனவும்படும். காசு நாள் மலர் பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடியாமல் மூவசைச்சீராய் இற்ற குறள் வெண்பாவை அடுத்துத் தனிச்சொல்லின்றி மேற்கூறிய வாய்பாட்டால் இற்ற குறள்வெண்பா இணைந்து வருவது. எ-டு : ‘அட்டாலும் பால்சுவையிற் குன்றா(து) அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ (மூதுரை. 4) இதன்கண் 7 ஆம் சீர் காய்ச்சீராய் நின்றது; 8 ஆம் சீர் வந்தி லது; மற்று 4 ஆம் அடியின் இறுதிச்சீர் மலர் வாய்பாட்டில் இற, மூன்றாம் 4ஆம் அடிகள் குறள் வெண்பாவாக அமைந்தன. (மா. அ. பாடல் 830 உரை) சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா - கொச்சகக் கலிப்பாவின் வகை ஐந்தனுள் ஒன்று. ஆறு முதலிய பல தாழிசையால் நிகழும் பஃறாழிசைக் கொச்சகத்தை நோக்க, தரவினை அடுத்து இடையிடையே தனிச்சொல் பெற்று, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவின் இலக்கணத்தின் வேறுபட்டு மூன்று தாழிசையே பெற்று வரும் கொச்சகம் சிஃறாழிசைக் கொச்சகம் எனப்பட்டது. ஆதலின் இதன் உறுப்புக்கள் (பெரும்பான்மையும் நாலடித் தரவு, இடை யிடையே தனிச்சொல் வர மும்மூன்றடியாக வரும் மூன்று தாழிசை, மீண்டும் ஒரு தனிச்சொல், (பெரும்பான்மையும்) தரவடியின் மிக்க அடியான் வரும் சுரிதகம் என்பன. (யா. க. 86 உரை) சித்திர அகவல் - ‘அகவல் ஓசை விகற்பம்’ காண்க. சித்திரவண்ணம் - நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்ப விராய்ச் செய்வது. பல வண்ணம் படுதலின் இதனை சித்திரவண்ணம் என்றார். எ-டு : ‘சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வாரல் வரினே யானஞ் சுவலே சாரல் நாட நீவர லாறே’. (தொ. செய். 22 நச்., வீ.சோ. 142 உரை) ‘சிதைத்துக் கொளாஅ(மை)’ - வருமொழியைச் சிதைத்துப் பிரித்து அவற்றினின்றும் வாங்கிக் கொடுக்கப்படா. ‘நாணுடை அரிவை’ என்னு மிடத்தே, வருமொழியின் (உடை) உகரம் வந்தேறி (நாணு) என நின்றது. முற்றுகரம் ஆகாது என்பது. (தொ. செய். 9 நச்.) சிந்தடி - முச்சீர்களைக் கொண்ட ஓரடி - (யா. கா. 12) 7 எழுத்து முதல் 9 எழுத்துக்காறும் பெற்றுவரும் அடி. (தொ. செய். 37 நச்.) சிந்தடி அளவடியால் வெண்பா வருவது - சிந்தடி 7 முதல் 9 முடிய எழுத்துப் பெறுவது. அளவடி 10 முதல் 14 முடிய எழுத்துப் பெறுவது. ‘மட்டுத்தா னுண்டு மணஞ்சேர்ந்து விட்டு’ - 7 எழுத்தடி ‘இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது’ - 8 எழுத்தடி ‘சென்று முகந்து நுதல்சுட்டி மானோர்த்து’ - 9 எழுத்தடி ‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு’ - 10 எழுத்தடி ‘ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்’ - 11 எழுத்தடி ‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்’ - 12 எழுத்தடி ‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’ - 13 எழுத்தடி ‘கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்’ - 14 எழுத்தடி இவையே அன்றிச் சீர்வகை வெண்பாவில், ‘முகமறியார் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார் காமம்’ - 15 எழுத்தடி ‘படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்’ - 16 எழுத்தடி என்னும் நெடிலடிகளும் சிறுபான்மை வரும். (எழுத்தெண்ணுகையில்) ஒற்றும் குற்றுகரமும் ஆய்தமும் எண்ணப்படா.) சிந்தடி வஞ்சிப்பா - முச்சீரடிகளையுடைய வஞ்சிப்பா; தனிச்சொல் பெற்று. நேரிசைஆசிரியச்சுரிதகத்தான் இறுவது. எ-டு : ‘பரலத்தம் செலஇவளொடு படுமாயின் இரவத்தை நடைவேண்டா இனிநனியென நஞ்சிறு குறும்பிடை மூதெயிற்றியர் சிறந்துரைப்பத் தெறுகதிர் சென்றுறும் ஆங்கண் தெவிட்டினர் கொல்லோ எனவாங்கு, நொதுமலர் வேண்டி நின்னொடு மதுகாமுற்ற ஆடவர் தாமே’. (யா. க. 90 உரை) சிந்தியல் வெண்பா - மூன்றடியால் அமைந்த வெண்பா. இரண்டாமடி தனிச் சொல் பெற்று ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் நிகழும் நேரிசைச் சிந்தியல் எனவும், தனிச்சீர் பெறாது ஒருவிகற்பத்தானும் பலவிகற்பத்தானும் நிகழும் இன்னிசைச் சிந்தியல் எனவும் இஃது இருவகைப்படும். (யா. கா. 26) சிந்தியல் வெண்பா ஓசை கெட்ட வெண்டாழிசை - சிந்தியல் வெண்பாச் சிதைந்து தனித்து வருவது வெண் டாழிசையின் ஒருவகை. எ-டு : ‘நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவு செய்யார் அன்பு வேண்டு பவர்’. இது வெண்பா இலக்கணம் பெரும்பான்மையும் சிதைந்து சிந்தியல்வெண்பாப் போலவே மூன்றடியான் நடந்து, ஈற்றடி முச்சீராய்த் தனித்து வந்த வெண்டாழிசை.(வீ. சோ. 121 உரை) சிந்தியல்வெண்பாவின் இனம் - மூன்றடியால் வரும் விருத்தமும் துறையும் தாழிசையும் சிந்தியல் வெண்பாவின் இனம் என்பாரும் உளர். (வீ. சோ. 121 உரை) சிந்துப்போலி - இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வரும் செய்யுளைச் சிந்து என்பார் வீரசோழிய ஆசிரியர். உரைகாரர் ஈரடி அளவு ஒவ்வாது வருவது ‘சிந்துப் போலி’ என்பர். எ-டு : ‘மீனாமை காரேனம் வென்றியரி என்றிவைமுன் னானா னினைப்பதற் கன்பர்கண் டீர்நம்மை யாள்பவரே.’ திருவள்ளுவப்பயனுள் குறளையும் சிந்துப்போலிக்கு எடுத்துக் காட்டாக்குவர் உரைகாரர். ‘கற்றதனால்... ரெனின்’ (குறள் 2) ‘கடாஅக்... துகில்’ (குறள் 1087) ‘கடாஅ.... ஒற்று’ (குறள் 585) (வீ. சோ. 127 உரை) சிற்றிசைச் சிற்றிசை - பண்ணும் திறனுமாகிய இசை செந்துறை எனப்படும். அது செந்துறை, செந்துறைச் செந்துறை, வெண்டுறைச் செந்துறை என மூவகைப்படும். அவற்றுள் வெண்டுறைச் செந்துறைப் பாட்டாவன கலியும் வரியும் சிற்றிசையும் சிற்றிசைச் சிற்றிசையும் முதலாயின. (யா. வி. பக். 580, 581) சிற்றெண் - அம்போதரங்க வகை. இரண்டடிகளை அளவடிகளாக உடைய பேரெண், அளவடி ஒன்றான் அமைந்த அளவெண், குறளடியான் அமைந்த இடையெண் என்னும் இவற்றை யடுத்து, ஒருசீரான் அமைந்த எண் சிற்றெண் எனப்படும். (தொ. செய். 149 இள.) சிறப்பு அசை - நேரசை, நிரையசைக்கு ஓதிய எழுத்துக்கள் மொழியாய் நிற்பின் சிறப்பசை எனப்படும். எ-டு : ஆ, பல, பலா, கல், கால், பலம், வரால். (யா. க. 8 உரை) சிறப்பு இல் அசை - நேரசை நிரையசைகட்கு ஓதிய தாமே மொழியாய் நில்லாமல் மொழிக்கு உறுப்பாய் நின்றன. எ-டு : வந்தது, இச்சொல்லில் வந் - நேர்; தது - நிரை. இவை (பூ வகை என்பது போலன்றி) தாம் மொழியாக நில்லாமல் மொழியகத்து உறுப்பாய் நின்றன. (யா. கா. 8 உரை) சிறப்பு இல் சீர் - வகையுளி சேர்ந்து நிற்கும் சீர். (யா. க. 10 உரை) எ-டு : ‘ஒட்டக்கூத் தன்கவியும் ஓங்குகம் பன்கவியும்’ ஒட்டக்கூத்தன் கம்பன் என்னும் பெயர்கள் பிரிந்து நின்று தளைகொள்ள வேண்டிச் சீராக அமைந்தன. சிறப்பு இல்லா ஆசிரிய நிரைத்தளை - விளச்சீர் நின்று பிறிதாகிவரும் சீர் முதலசையோடு ஒன்றுவது. எ-டு : ‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்’ (முதுமொழிக். 1) இவ்வடியுள் ஆர்கலி என்ற நிரையீற்று இயற்சீர் உலகத்து என்ற மூவசைச் சீரின் நிரையுடன் ஒன்றியது, சிறப்பில்லா ஆசிரிய நிரைத்தளையாம். (யா. க. 19 உரை) சிறப்பு இல்லா ஆசிரிய நேர்த்தளை - மாச்சீர் நின்று பிறிதாகிவரும் சீர் முதலசையுடன் ஒன்றுவது. எ-டு : ‘திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி’ (புறநா. 2) இவ்வடியுள் ‘திரியா’ என்ற இயற்சீரின் ஈற்று நேரசை ‘சுற்ற மொடு’ என்னும் மூவசைச்சீரின் முதலில் உள்ள நேர் அசை யுடன் ஒன்றியது, சிறப்பில்லா ஆசிரிய நேர்த்தளையாம். (யா. க. 19 உரை) சிறப்பு இல்லா ஆசு எழுத்துக்கள் - வல்லின மெய் ஆறும், மெல்லினத்துள் ங், ஞ், ந் என்னும் மூன்றும், இடையினத்துள் வ், ள் என்னும் இரண்டும் ஒழித்து ஏனைய ஏழு மெய்களும் ஆசு எழுத்துக்களாக வரும். இவற்றுள் ய், ர், ல், ழ் என்னும் நான்கும் சிறப்புடைய ஆசு எழுத்துக்களாய்ப் பயின்றுவரும். ஏனைய ண், ம், ன் என்னும் மூன்றும் வல்லினமோ மெல்லினத்து நகர மகரமோ இடையினத்து வகரமோ சார்ந்து ஆசு ஆகா. செய்யுளுள்ளும் மிக அருகியே வரும். (யா. க. 37 உரை) சிறப்பு இல்லா இயற்சீர் வெண்டளை - ‘இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு’ (கு. 1091) இவ்வடியுள் ‘இருநோக்’ என்ற இயற்சீர் நின்று வருஞ்சீர் வெண்சீராக ஒன்றாது வருதலின் சிறப்பில்லா இயற்சீர் வெண்டளை. இவ்வாறு இயற்சீர் நின்று பிறிதாகிவரும் சீர் முதலசையோடு ஒன்றாது வருவது சிறப்பில்லா இயற்சீர் வெண்டளையாம். (யா. க. 18 உர) சிறப்பு இல்லாக் கலித்தளை - காய்ச்சீர் நின்று பிறிதாகி வரும் சீர் முதல் அசையுடன் ஒன்றாது வருவது. ‘முற்றொட்டு மறவினை முறைமையான் முயலாதார்’ இவ்வடியுள் ‘முற்றொட்டு’ என்ற காய்ச்சீரின் இறுதி ‘மறவினை’ என்ற இயற்சீரின் முதலசை நிரையுடன் ஒன்றாது வருவது சிறப்பில்லாக் கலித்தளை. (யா. க. 20 உரை) சிறப்பு இல்லாக் கலித்தாழிசை - ஈற்றடி மிக்கு ஏனைய அடிகள் ஒவ்வாது வருவது. எ-டு : ‘பூண்ட பறையறையப் பூதம் மருள நீண்ட சடையான் ஆடுமே; நீண்ட சடையான் ஆடும் என்ப, மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே.’ இஃது ஈற்றடி மிக்கு இரண்டாமடி குறைந்து ஏனைய இரண்டும் ஒத்து வந்தமையால் சிறப்பு இல்லாக் கலித்தாழிசை. (யா. க. 87 உரை) சிறப்பு இல்லாத் தொடை விகற்பம் - நேரடிக்கண்ணே வரும் கடையிணை, கூழை, பின், இடைப் புணர்வு என்னுமிவை நான்கும் சிறப்பிலாத் தொடை விகற்பம் என்ப. (தென். யாப். 53) சிறப்பு இல்லா வஞ்சித்தளை - கனிச்சீர் நின்று பிறிதாகிவரும் சீரின் முதலசையுடன் ஒன்றுவது. எ-டு : ‘புனல்பொழிவன சுனையெல்லாம் வரைமூடுவ மஞ்செல்லாம்’ முதலடியுள் கனிச்சீர் முன்னர் வெண்சீரின் நிரையசைவர ஒன்றிய வஞ்சித்தளையும், இரண்டாமடியுள் கனிச்சீர் முன்னர் வெண்சீரின் நேரசைவர ஒன்றாத வஞ்சித்தளை வந்து சிறப்பு இல்லா வஞ்சித் தளைகளாயின.(யா. க. 21 உரை) சிறப்பு இல்லா வெண்சீர் வெண்டளை - காய்ச்சீர் நின்று பிறிதாகி வரும்சீர் முதலசையோடு ஒன்றுவது. “கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்” (கு. 402) இவ்வடியுள் ‘கல்லாதான்’ என்ற வெண்சீர் ‘சொற்கா’ என்ற இயற்சீரோடு ஒன்றுதலின் இது சிறப்பில்லா வெண்சீர் வெண்டளை. (யா. க. 18 உரை) சிறப்புச்சீர் - சீர்வயின் பொருள் பயந்து நிற்பது. (யா. க. 10 உரை) எ-டு : ‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’ (கு. 5) சிறப்புடைய ஆசிரிய நிரைத்தளை - விளச்சீர் நின்று தன் வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது. எ-டு : ‘அணிதிகழ் அசோகமர்ந் தருணெறி நடாத்திய’ இயற்சீர் இறுதி நிரையசை வருஞ்சீராகிய இயற்சீர் முதலசை யாகிய நிரையோடு ஒன்றுதலின் இது சிறப்புடைய ஆசிரிய நிரைத்தளை. (யா. க. 19 உரை) சிறப்புடைய ஆசிரிய நேர்த்தளை - மாச்சீர் நின்று தன்வரும் சீர் முதசையோடு ஒன்றுவது. எ-டு : ‘உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை’ இவ்வடியுள் இயற்சீர் நேரீறாய் நின்று வருஞ்சீராகிய இயற் சீரின் நேர் முதலசையோடு ஒன்றுதலின், இது சிறப்புடைய ஆசிரிய நேர்த்தளை. (யா. க. 19 உரை) சிறப்புடைய இயற்சீர் வெண்டளை - இயற்சீர் நின்று தன் வருஞ்சீர் முதலசையுடன் ஒன்றாது வருவது. எ-டு : ‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி’ (குறள் 1121) இவ்வடியுள், விளமுன் நேரும் மாமுன் நிரையுமாக, இயற்சீர் நின்று வருஞ்சீரும் இயற்சீராக ஒன்றாது வருதலின் சிறப் புடைய இயற்சீர் வெண்டளை. (யா. க. 18 உரை) சிறப்புடைய கலித்தளை - காய்ச்சீர் நின்று, தன் வருஞ்சீர் முதல் அசையோடு ஒன்றாது வருவது. எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி” இவ்வடியுள் காய்ச்சீர்முன் காய்ச்சீரின் முதல் அசை நிரை யாக நிற்ப, காய்முன் நிரை என்று ஒன்றாமையின் இது சிறப்புடைய கலித்தளை. (யா. க. 20 உரை) சிறப்புடைய கலித்தாழிசை - ஈற்றடி மிக்கு ஏனைய அடிகள் ஒத்து வருவது. எ-டு : ‘வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம் கேள்வரும் போழ்தின் எழால்வாழி வெண்டிங்காள்! கேள்வரும் போழ்தின் எழாதாய்க்கு உறாலியரோ நீள்வரி நாகத்து எயிறே வாழி. வெண்டிங்காள்!’. ஈற்றடி ஒருசீர் மிக்கு வந்தமையால் இது சிறப்புடைய கலித்தாழிசை. (யா. க. 87) சிறப்புடைய வஞ்சித்தளை - கனிச்சீர் நின்று தன் வருஞ்சீர் முதல் அசையுடன் ஒன்றுவதும் ஒன்றாததும் ஆம். எ-டு : ‘வெண்சாமரை புடைபெயர்தர செந்தாமரை நாண்மலர்மிசை’ முதலடியுள் கனிமுன்னர்க் கனிச்சீரின் முதலசையாகிய நிரைவர ஒன்றிய வஞ்சித்தளையும், இரண்டாமடியுள் கனி முன்னர்க் கனிச்சீரின் முதலசையாகிய நேர்வர ஒன்றாத வஞ்சித்தளையும் நிகழ, சிறப்புடைய வஞ்சித்தளைகள் ஆயின. (யா. க. 21 உரை) சிறப்புடைய வெண்சீர் வெண்டளை - வெண்சீர் நின்று, தன் வரும்சீர் முதல் அசையுடன் ஒன்றுவது. எ-டு : ‘குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்னகத்தொன்(று)’ (கு.758) இவ்வடியுள் நான்கு சீரும் வெண்சீராக, வெண்சீர் வெண் சீருடன் காய்முன் நேர் என ஒன்றுதலின் இது சிறப்புடைய வெண்சீர் வெண்டளை ஆயிற்று. (யா. க. 18 உரை) சிறப்பெழுத்து - ஓர் எழுத்துத் தானே மொழியாக நின்று பொருள் தந்து நிற்பது. எ-டு : ஆ. (-பசு) (யா. வி. பக். 30) சின்மென்மொழி - சில ஆதல் - சொல் எண்ணுச் சுருங்குதல்; மெல்லிய ஆதல் - அச்சிலவாகிய சொற்களும் எழுத்தினான் அகன்று காட் டாது சில எழுத்தான் வருதல். (தொ. செய். 235 நச்.) சீர் அசைகளான் ஆகி அடிக்கு உறுப்பாகி வருவது. ஓரசையும் வெண்பா இறுதியிலும் வஞ்சி விருத்தத்து இடையிலும் சீராதல் உண்டு. அஃது அசைச்சீராம். ஈரசைச்சீர், இயற்சீர் அகவற்சீர் ஆசிரிய உரிச்சீர் எனப்பெறும். மூவசைச்சீர், வெண்பாவுரிச்சீர் எனவும், வஞ்சியுரிச்சீர் எனவும் இரு வகைத்து. நாலசைச் சீர் பொதுச்சீர் எனவும் படும். அசைச்சீர் இரண்டு, ஈரசைச்சீர் நான்கு, மூவசைச்சீர் எட்டு, நாலசைச்சீர் பதினாறு ஆம். அசைகள் சீர் கொள நிற்பது ‘சீர்’ எனக் காரணக்குறி எய்திற்று. இனி, வீரசோழியம் சீர்பற்றிக் கூறுமாறு (கா. 107) : நேரசையும் நிரையசையுமாயுள்ளன இரண்டாய் ஒன்றின் ‘முதற்சீர்’ எனப்படும். மூன்று அசை ஒன்றி ஈற்றசை நேராய் வரின் இடைச்சீர்’ எனப்படும். மூன்று அசை ஒன்றி ஈற்றசை நிரையாய் வரின் ‘கடைச்சீர்’ எனப்படும். (இயற்சீர் முதற்சீர் எனவும், வெண்சீர் இடைச்சீர் எனவும், வஞ்சிச்சீர் கடைச்சீர் எனவும் வீரசோழியத்தால் வழங்கப்படுகின்றன) சீர் அந்தாதி - ‘செந்நடைச் சீரந்தாதி’ எனவும்படும்; பாடலின் முதலும் ஈறும் மண்டலிப்பதன்றி, முதலடியின் ஈற்றுச்சீர் அடுத்த அடியின் முதற்சீராக அந்தாதித்து வரும் தொடை. எ-டு : ‘இப்பி ஈன்ற இலங்குகதிர் நித்திலம் நித்திலம் பயந்த நேர்மணல் எக்கர்’ முதலடி இறுதிச்சீர் ‘நித்திலம்’ இரண்டாமடி முதற்சீராயி னமை சீரந்தாதியாம். (யா. க. 52 உரை) சீர் அளபெடை - ஓரடிக்கண்ணேயே சீர்கள் அளபெடுத்து ஒன்றுவது. ‘இணை அளபெடை’ முதலாய விகற்பம் தனித்தனியே காண்க. சீர் இயைபு - ஓரடிக்கண் சீர்கள் கடையெழுத்தோ அசையோ ஒன்றிவரத் தொடுப்பது. ‘இணை இயைபு’ முதலிய விகற்பம் தனித் தனியே காண்க. சீர் எதுகை - ஓரடிக்கண் சீர்கள் முதலெழுத்து அளவொத்து நிற்ப இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. ‘இணை யெதுகை’ முதலிய விகற்பம் தனித்தனியே காண்க. சீர் ஓத்து - யாப்பருங்கலத்துள் சீரினைப் பற்றி விளக்கும் பகுதி. முதலாவ தாகிய உறுப்பியலுள் மூன்றாவது. இதன்கண் மூவகைச் சீர்கள், இயற்சீரின் திறம், தொகை, உரிச்சீரின் திறம், வகை, பொதுச்சீராவன, ஓரசைச்சீர், நால்வகைச் சீரும் செய்யுளுள் நிற்கும் முறை, கலியிலும் ஆசிரியத்திலும் வரும் கனிச்சீர்கள் என்னும் செய்திகள் இடம் பெறுவன. இவ்வோத்தின்கண் ஏழு நூற்பாக்கள் உள்ளன. சீர்கட்குப் பொதுவிதி - இயற்சீரும் உரிச்சீரும் இருநிலைமைப்படுதலும் வஞ்சிச்சீர் பல நிலைமைப்படுதலும் உடையவேனும், அவ்வெழுத்திற்கு அல்லது சீர்கட்குச் சுருக்கம் பெருக்கம் இல்லை. அசைச்சீர் களுக்கு அசையாகி இருத்தல், ஈரசையாகிய சீராக இருத்தல் என்ற இரு நிலையுண்டு. (தொ. செய். 43 நச்.) சீர்களுக்கு எழுத்து வரையறை : ஓரெழுத்துச் சீர் முதல் ஐயெழுத்துச் சீர்வரை 31 ஆதல் - எந்த ஒரு சீரும் பெரும்பாலும் ஒற்றும் ஆய்தமும் குற்றுகரமும் நீங்கலாக 5 எழுத்து என்ற எல்லையைக் கடவாது. சமநிலை வஞ்சிப்பாவில் வரும் சீர் சிறுபான்மை 6 எழுத்துடையதாகும். ஓர் எழுத்துச்சீர் 2 - நுந்தை, வண்டு - இவை நேர், நேர்பு என்ற ஓரெழுத்து அசைச்சீர். (மொழி முதற் குற்றுகரமும் ஈற்றுக் குற்றுகரமும் மெய் யெழுத்தும் எண்ணப்படா.) ஈர் எழுத்துச்சீர் 6 தேமா, ஞாயிறு, போதுபூ, போரேறு, மின்னு, வரகு - இவை நேர் நேர் - நேர் நிரை - நேர்பு நேர் - நேர் நேர்பு - நேர்நேர் - நிரை நேர் ஆகும் நேர்பு நிரைபுகள். (எழுத்தெண்ணும்போது குற்றியலுகரம் எண்ணப்படாது, முற்றியலுகரம் எண்ணப்படும் என்று கொள்ளும் பேராசிரி யர் நச்சினார்க்கினியர் முதலியோர் கருத்து, இருவகை உகரமும் நேர்பு நிரைபு அசையாகும் என்ற குறிப்பிடும் தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்று.) மூவெழுத்துச் சீர் 11 - புளிமா, பாதிரி, வலியது, மேவுசீர், நன்னாணு, பூமருது, கடியாறு, விறகுதீ, மாசெல்வாய், நீடு கொடி - என்பன பத்தும் முறையே நிரை நேர் - நேர் நிரை - நிரை நிரை - நேர்பு நேர் - நேர் நேர்பு - நேர் நிரைபு - நிரை நேர்பு - நிரைபு நேர் - நேர் நேர் நேர் - நேர்பு நிரை என்பன. இவற்றுள் முற்றிய லுகரம் எழுத்தாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றொடு நிரைபு என்ற முற்றியலுகர அசைச்சீர் (அரவு) சேர, மூவெழுத்துச்சீர் 11 ஆகும். நாலெழுத்துச்சீர் 9 - கணவிரி, காருருமு, பெருநாணு, உருமுத்தீ, மழகளிறு, மாவருவாய், புலிசெல்வாய், நாணுத்தளை, உரறுபுலி என்ற ஒன்பதும் நிரைநிரை, நேர் நிரைபு, நிரை நேர்பு, நிரைபு நேர், நிரை நிரைபு, நேர் நிரை நேர், நிரை நேர் நேர், நேர்பு நிரை, நிரைபு நிரை என்பன. இவற்றுள் முற்றியலுகரம் எழுத் தெண்ணப்பட்டுள்ளது. ஐயெழுத்துச்சீர் 3 - நரையுருமு, புலிவருவாய், விரவுகொடி என்பன மூன்றும் நிரை நிரைபு, நிரை நிரை நேர், நிரைபு நிரை என்பன. இவற்றுள் முற்றியலுகரம் எண்ணப்பட்டது. (தொ. செய். 41, 42 நச்.) சீர்தளைகட்கான ஒருவகைப் புறனடை - நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர் இரண்டும் கலிப்பாவிலும் ஆசிரியப்பாவிலும் வாரா. நேர் நேர், நிரை நேர் என்னும் நேரீற்று இயற்சீர் இரண்டும் கலிப்பாவில் வாரா. வெண்பாவில் வஞ்சியுரிச்சீர் வாராது. வெண்பா தவிர மற்ற எல்லாப் பாவிலும் பாவினங்களிலும் தமக்குரிய சீருந் தளையுமே அன்றி, மற்ற சீர்களும் தளை களும் ஒன்றோடொன்று விரவி வருதலுமுண்டு. ‘குலா வணங்கு’ என்னும் வெண்பாவினுள் ‘கோவின் மையோ’ என வஞ்சியுரிச்சீர் வந்திருப்பது. சான்றோர் இலக் கியத்தொடு மாறுபடுதலின் நீக்கத் தக்கதேயாம். (இ. வி. 744) சீர்நிலை குன்றலும் மிகுதலும் இன்மை - சீர்கள் ஓரெழுத்து முதல் ஐந்தும் அதற்குமேற்பட்டும் அமைந்து வருதலான், இயற்சீர் முதலாகக் கூறப்பெற்ற சீர்நிலைகள் குறுகலும் நீடலும் இல்லை என்பார் புலவோர். அஃதாவது எழுத்தளவையான் சீர்கள் குறுஞ்சீர், நெடுஞ்சீர் என வழங்கப்படா என்பது. ‘ஒளிநிலவு பொலிந்துயிர் வெளவலு மோரார்’ இந்நேரடிக்கண் அமைந்துள்ள சீர்கள் முறையே ஐந்தும் நான்கும் மூன்றும் இரண்டும் ஆகிய எழுத்துக்கள் பெற்று வந்தன எனினும், யாவும் இயற்சீர் என்னும் பெயர்நிலையி னின்று வேறுபடா என்றவாறு. (தொ. செய். 43 ச.பால.) சீர்நிலை பற்றி வரும் தொடைகளில் சிறப்புடையன ஐந்து - நாற்சீரடிக்கண் ஒருசீர் இடையிட்டு எதுகை முதலிய தொடை நிகழ்வது பொழிப்பாம்; இடையிரு சீர்களில் இன்றி எதுகை முதலிய தொடை நிகழ்வது ஒரூஉவாம்; முதல் இரு சீர்க்கண் அவை நிகழ்வது இணையாம். முதல் மூன்று சீர்க்கண் அவை நிகழ்வது கூழையாம்; நான்கு சீரின்கண்ணும் அவை நிகழ்வது முற்றாம். சீர்நிலை பற்றி வரும் தொடைகளுள் இவ்வைந்தும் சிறப் புடையன. (தொ. செய். 99 ச. பால.) சீர்நிலை வஞ்சிப்பாவும் அதில் வரும் இயற்சீர்களும் - இருசீரடி வஞ்சிப்பாவில் தேமா புளிமா என்ற இயற்சீர் இரண்டும் அடியின் தொடக்கத்தில் தூங்கல்ஓசையை விளை விக்கமாட்டா ஆதலின் ஆண்டு அவ்வியற்சீர் இரண்டும் வாரா. ‘கொற்றக் கொடியுயரிய’ ‘களிறுங் கதமொழிந்தன’ - என்று நேரீற்றியற்சீர் அடிமுதற்கண் வரின் வஞ்சிக்குரிய தூங்கலோசை இல்லாது போம். ‘புன்ன்காற் புணர்மருதின்’ ‘தேஎன்தாட் டீங்கரும்பின்’ - என நலிந்து அளபெடுத்துக் கூறியவழியே தூங்கலோசை பிறக்கும் - இவை அளபெடை வெண்சீராகக் கொள்ளத் தக்கன. ‘அகல்வயல் மனைவேலி’ ‘நிலவுமணல் வியன்கானல்’ - என ஏனை இயற்சீர்கள் வஞ்சியடி முதற்கண் தூங்கின. ‘மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளிதலைஇய தீயும் தீமுரணிய நீரும்’ (புறநா.2) என நேரீற்று இயற்சீர் இரண்டும் அடியிறுதிக்கண் பெரும் பான்மையவாகி வந்தன. ஸபேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தேமா புளிமா இரண்டும் குறளடி வஞ்சிப்பாவின் ஈற்றுச் சீராகவே வரும் என்று கொண்டமை, ‘(நேரீற்றியற்சீர்) வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா’ (செய். 26) என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு மாறுபட்டது. ‘இறுதிநில்லா’ - என்ற தொடர்க்கு இறுத லொடு நில்லா - அஃதாவது இருசீரினுள் வருஞ்சீரொடு தொடருங்கால் இறுதல் தொழில் பெறுவது நின்ற சீர் ஆகலின், இறுதலொடு நில்லா என்பது தூங்கல் ஓசைப்பட முதற்கண் வாரா - என்று அவர்கள் கூறும் உரை அத் தொடர்க்குப் பொருந்துவது அன்று. ‘இறுதிக்கண் வாரா’ எனவே, ‘முதற்கண் அருகிவரும்’ என்ற இளம்பூரணர் உரையே நேரிது. (வஞ்சியடிகள் மிகவும் வந்துள்ள பட்டினப் பாலை, மதுரைக்காஞ்சி என்பவற்றில் நேர் ஈற்றியற்சீர்கள் இறுதியில் யாண்டும் வந்தில. புறநானூற்றுப் பாடல்களில் நேரீற்று இயற்சீர் வஞ்சியடி இறுதியில் வந்துள்ளமை தொல் காப்பியனார் கருத்துக்கு மாறுபட்டதாகும்.] (தொ. செய். 26 பேரா., நச்.; 24 இள.) ‘சீர் புனைந்து யாத்தல்’ - சீர் அறுத்துப் பொலிவுபெறப் பாடுதல். செய்யுளுட் பயின்று வரும் சொற்களான் இவ்வாறு பாடுதல் ‘அழகு’ என்னும் வனப்பாம். (தொ. செய். 236 நச்.) சீர்முரண் - ஓரடிக்கண் சீர்கள் சொல்லானும் பொருளானும் மறுதலைப் படத் தொடுப்பது. ‘இணைமுரண்’ முதலான விகற்பங் களைத் தனித்தனியே நோக்குக. சீர்மோனை - ஓரடிக்கண் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. ‘இணைமோனை’ முதலான விகற்பங்களைத் தனித்தனியே நோக்குக. சீர்வகை அடி - இருசீர் கொண்ட அடி குறளடி; முச்சீர் கொண்டது சிந்தடி; நாற்சீர் கொண்டது அளவடி அல்லது நேரடி; ஐஞ்சீர் கொண்டது நெடிலடி; அறுசீர் முதலாகக் கொண்டது கழிநெடிலடி (எண்சீரின் மிக்க அடிகள் சிறப்பில) எ-டு : ‘ஓங்குதிரை வியன்பரப்பின்’ - குறளடி ‘செய்தானக் கள்வன் மகன்’ ‘வலமா திரத்தான் வளிகொட்ப’ - சிந்தடி ‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே’ - அளவடி ‘சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே’ - நெடிலடி ‘நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇ - கழிநெடிலடி (கட்டளை அடியல்லாதவை ‘சீர்வகைஅடி’ என நச்சீனார்க் கினியரால் குறிக்கப்பெறும்.) (தொ. செய். 36 - 40 நச்.) சீர்வகை அடி இடையின எதுகை - எ-டு : ‘மள்ளர் மள்ள! மறவர் மறவ! செல்வர் செல்வ! செருமேம் படுந!’ (தொ. செய். 94 நச்.) சீர்வகை அடி உயிரளபெடை - எ-டு : ‘மகாஅ ரன்ன மந்தி மடவோர் நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்’ (சிறுபாண். 56, 57) (தொ. செய். 97. நச்.) சீர்வகை அடி ஒற்றளபெடை - எ-டு : ‘கஃஃ றென்னும் கல்லத ரத்தம் சுஃஃ றென்னும் தண்டோட்டுப் பெண்ணை’ (தொ. செய். 97 நச்.) சீர்வகை அடி கட்டளையொடு தொடுத்த அடியெதுகை - எ-டு : ‘அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி’ (பெரும்பாண். 1, 2) இவை ஆசிரிய அடிகள்; முதலடி கட்டளைஅடி; ஏனையது சீர்வகையடி. (தொ. செய். 93 நச்.) சீர்வகை அடி கட்டளையொடு தொடுத்த தலையாகு எதுகை - எ-டு : ‘சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று முனிவாள்’... இவை வெண்பா அடிகள். முதலடி சீர்வகை அடி; ஏனையது கட்டளை யடி. முதற்சீர்களில் இரண்டாவது முதலிய பல எழுத்துக்கள் ஒன்றி வந்தமையால் தலையாகு எதுகை யாயிற்று. (தொ. செய். 93 நச்.) சீர்வகை அடிகளுக்குத் தொடை - வரையறையில்லாச் சீர்வகை அடிகளில் உள்ள தொடை 625 என்று வரையறுக்கப்பட்ட கட்டளை வகை அடிகளின் தொடைகளுள் அடக்கிக் கணக்கிடப்படும். (தொ. செய். 103 நச்.) சீர்வகை அடியில் அடிமோனை - எ-டு : ‘கண்டற் கானல் குருகினம் ஒளிப்பக் கரையா டலவன் வளைவயிற் செறிய’ (தொ. செய். 92 நச்.) சீர்வகை ஆசிரியப்பாவில் உரிச்சீர்கள் - சீர்வகை ஆசிரியப்பாவில், கட்டளை ஆசிரியப்பாவிற்கு உரியவல்ல என்று நீக்கப்பட்ட நேர்பு நேர்பு, நிரைபு நிரைபு, நேர்பு நிரைபு, நிரைபு நேர்பு என்ற ஆசிரிய உரிச்சீர்கள் நான்கும், நேர்பு நிரை, நிரைபு நிரை என்ற இரண்டுடன் வருதற்கு உரியன. எ-டு : ‘வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்’ (முருகு. 101) என்ற ஆசிரிய அடியுள் ‘வசிந்துவாங்கு’ என நிரைபு நேர்பு என்ற ஆசிரிய உரிச்சீர் வந்தது. (தொ. செய். 23 நச்.) சீர்வகை ஆசிரியப்பாவில் வரும் சீர்கள் - சீர்வகை ஆசிரிய அடிகளில் இயற்சீர் 10, ஆசிரிய உரிச்சீர் 6, அசைச்சீர் 2, வெண்சீர் 4, வஞ்சிச் சீர் 10, ஆக 32 சீர்கள் மயங்கி வரும். இயற்சீர் 10 - நேர் நேர் - நிரை நிரை - நேர் நிரை - நிரை நேர் (43) நேர்பு நேர் - நிரைபு நேர் (15) - நேர் நேர்பு - நேர் நிரைபு - நிரை நேர்பு - நிரை, நிரைபு (16) என்பன. (பிறைவளைவுக் குறியுள் எண் தொ.செய். நச். நூற்பா எண்.) ஆசிரிய உரிச்சீர் 6 - நேர்பு நேர்பு - நிரைபு நிரைபு - நேர்பு நிரைபு - நிரைபு நேர்பு - நேர்பு நிரை - நிரைபு நிரை - என்பன (13, 14) அசைச்சீர் 2 - நேர்பு, நிரைபு என்பன (28) வெண்சீர் 4 - நேர் நேர் நேர் - நிரை நிரை நேர் - நேர் நிரை நேர் - நிரை நேர் நேர் - என்பன (19) வஞ்சிச்சீர் 10 - நேர் நேர் நிரை - நிரை நேர் நிரை - நேர் நேர் நேர்பு - நிரை நேர் நேர்பு - நேர் நேர் நிரைபு - நிரை நேர் நிரைபு - நேர்பு நேர் நேர் - நேர்பு நிரை நேர் - நிரைபு நேர் நேர் - நிரைபு நிரை நேர் - என்பன (இவையே பயின்று வருவன) (31) (நூற்பா எண்கள் தொ.செய். நச். எண்களாகக் கொள்க.) சீர்வகை இணைமுரண் - எ-டு : ‘நிலவும் இருளும் போல்வ நீர்வரை’ (தொ.செய். 95 நச்.) சீர்வகை இணைமோனை - எ-டு : ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ (முருகு. 1) (தொ. செய். 92 நச்.) சீர்வகை ஒரூஉமுரண் - எ-டு : ‘வரினும் நோய்மருந் தல்லர் வாராது’ (தொ.செய். 95 நச்.) சீர்வகை ஒரூஉமோனை - எ-டு : ‘கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்’ (குறள் 403) (தொ.செய். 92 நச்.) சீர்வகைக் கீழ்க்கதுவாய் மோனை - எ-டு : ‘ஒல்லா(து) ஒல்வ தென்றலும் ஒல்லுவது’ (புறநா. 196) (தொ. செய். 92 நச்.) சீர்வகைக் கூழைமோனை - எ-டு : ‘மடக்கண் மயிலினம் மறலி யாங்கு’ (தொ. செய். 92 நச்.) சீர்வகைச் செந்தொடை - எ-டு : ‘பூத்த வேங்கை வியன்சினை ஏறி மயிலினம் அகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே’ (தொ. செய். 100 நச்.) சீர்வகைப் பொழிப்புஇயைபு - எ-டு : ‘காம்பிவர் தோளும் கருமதர் மழைக்கணும்’ (தொ. செய். 96 நச்.) சீர்வகைப் பொழிப்புமுரண் - எ-டு : ‘வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானம்’ (தொ. செய். 95 நச்.) சீர்வகைப் பொழிப்புமோனை - எ-டு : ‘வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப’ (சிறுபாண். 8) (தொ. செய். 92 நச்.) சீர்வகை முற்றுமுரண் - எ-டு : ‘நிலனும் நீரும் தீயும் வளியும்’ (தொ. செய். 95 நச்.) சீர்வகை முற்றுமோனை - எ-டு : ‘அயில்வேல் அனுக்கி அம்பலைத்(து) அமர்ந்த’ (தொ. செய். 92 நச்.) சீர்வகை மெல்லின எதுகை - எ-டு : ‘நும்மில் புலம்பினும் உள்ளுதொறு நலியும் தண்வரல் அசைஇய பண்பில் வாடை’. (தொ. செய். 94 நச்.) இஃது அடி பற்றி வந்தது என்க.(அகநா. 58) சீர்வகை மேற்கதுவாய் இயைபு - எ-டு : ‘பகலும் கங்குலும் அகலா தொழுகும்’ (தொ.செய். 96 நச்.) சீர்வகை மேற்கதுவாய் மோனை - எ-டு : ‘முளிகழை யுயர்மலை முற்றிய முழங்கழல்’ கலி. 25 (தொ. செய். 92 நச்.) சீர் விரளச் செந்தொடை - ஒரே அடியில் உள்ள நான்கு சீர்களும் ஈரசைச்சீர் மூவசைச் சீர்களின் வெவ்வேறு வகையினவாக இருத்தல். எ-டு : ‘பராஅரைப் புன்னை வாங்குசினைத் தொடுத்த’ நிரைநிரை நேர்நேர் நேர்நேர்நிரை நிரைநேர்’ ஈரசைச் சீர்கள் வெவ்வேறாக இவ்வடிக்கண் வந்தவாறு; இடையே ஒரு மூவசைச்சீர் வந்தது. (யா. க. 50 உரை) சீரின் இலக்கணமும் வகையும் - ஈரசை தன்னில் இயைந்து பொருள் கொண்டும், மூவசை தன்னில் இயைந்து பொருள் கொண்டும் அற்று நிற்பது சீர் என்று சொல்லப்படும். அச்சீர்கள் ஒரு சீரோடு ஒரு சீர் தொடரப் பிற கூட்டப்பட்டு நின்றாலும் சீர் எனவே பெயர் பெறும். ஒரு சீரின்கண் பல சொற்கள் தொடர்ந்து வரினும், அவை ஒன்றுபட்டு நிற்றல் வேண்டும். ‘காதுசேர் தாழ்குழையாய்’ என்ற இருசீர்களில் கா, து, சேர் - தாழ், குழை, ஆய் - என மும்மூன்று சொற்கள் ஒன்றுபட்டு நிகழ்கின்றன. சொல்லெல்லாம் ஈரசையும் மூவசையுமாய் அல்லது வாரா. எ-டு : படுத், திருந்து - நிரை நிரைபு - ஈரசை எழுந், திருந், தார் - நிரை நிரை நேர் - மூவசை சீர்கள் பிறர் தொடர்புபடுத்தும்வழிப் புணர்ச்சி விகாரம் எய்தாமல் தம்முள் தொடர்ந்து நிற்றலும், புணர்ச்சி விகாரம் எய்தித் தொடர்ந்து நிற்றலும் உரிய. எ-டு : ‘போந்து போந்து சார்ந்து சார்ந்து’ ‘மம்மர் நெஞ்சமொடு நடுநா ளென்னாது’ - இவை புணர்ச்சி விகாரம் எய்தாமல் இசையற்றுத் தொடர்ந்தன. ‘கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி’ (நாலடி. 156) - இது வல்லெழுத்துப் புணர்ச்சி எய்திற்று. ஒரு சொல்லைப் பகுத்துச் சீர்க்கு வேண்டுமாற்றான் வேறு சீராக்கியவழி, அச்சீர்வகையால் வேறு சொல்லிலக்கணம் பெறும். எ-டு : ‘மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின் றதுவே’ - நின்றது என்னும் குற்றியலுகர ஈற்றுச் சொல்லினைப் பிரித்துத் ‘தொழுதுநின் றதுவே’ எனச் சீராக்க ‘றதுவே’ என்பது முற்றுகரமாய் வேறுபட்டவாறு. “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரும்’ (முருகு. 1) நிரைநேர் நிரைநேர் நிரைநேர்பு நிரைநிரை ‘யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்’ (கு. 397) நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நேர்நேர் நேர்நிரைநேர் ‘வசையில்புகழ் வயங்குவெண்மீன்’ (பட். 1) நிரைநேர்நிரை நிரைபுநேர்நேர் எனச் சீர்கள் எல்லாம் ஈரசைச்சீரும் மூவசைச்சீருமாக வந்தன. (தொ. செய். 12 நச்.) சீரின் தொகை - இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்பன. (யா. வி. பாயிர உரை.) சீரின் மறுபெயர்கள் - அதிகண்டம், இசை, பதச்சேதம் என்பன. (யா. வி. பக். 103) சீரின்வகை - நேரீற்றியற்சீர், நேரீற்றுரிச்சீர், நேரீற்றுப்பொதுச்சீர், நிரை யீற்றியற்சீர், நிரையீற்றுரிச்சீர், நிரையீற்றுப் பொதுச்சீர் என்பன. (யா. வி. பாயிர உரை) சீரின் விரி - சிறப்புடைய நேரீற்றியற்சீர், சிறப்பில்லா நேரீற்றியற்சீர், சிறப்புடைய நிரையீற்றியற்சீர், சிறப்பில்லா நிரையீற்றியற்சீர், சிறப்புடைய நேரீற்றுரிச்சீர், சிறப்பில்லா நேரீற்றுரிச்சீர், சிறப்புடைய நிரையீற்றுரிச்சீர், சிறப்பில்லா நிரையீற்றுரிச்சீர், சிறப்புடைய நேரீற்றுப் பொதுச்சீர், சிறப்பில்லா நேரீற்றுப் பொதுச்சீர், சிறப்புடைய நிரையீற்றுப் பொதுச்சீர், சிறப் பில்லா நிரையீற்றுப் பொதுச்சீர் - என்பனவாம். (யா. க. பாயிர உரை) சுண்ணம் - அளவடியாம் ஈரடிக்கண் வரும் எண்சீர்களைப் பொருள் முறையின்றி, ஏலாத முடிக்குஞ் சொற்களை இயைத்துச் செய்யுள் செய்யப்படின், அதற்குப் பொருள் கொள்ளு மிடத்தே முடிக்கப்படுவனவும் முடிப்பனவுமாகிய சொற் களை ஓரடிக்கண்ணே மாற்றிப் பொருள் கொள்ளப்படும். இவ்வாறு பொருள் கொள்ளுமாறு மொழிகள் புணர்க்கப் படும் நிலை சுண்ணம் எனப்படும். (தொ. சொ. 406; சேனா.) எ-டு : ‘சுரையாழ அம்மி மிதப்ப - வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை.’ இதனுள், சுரை - அம்மி - யானைக்கு - முயற்கு - என நின்றவை முறையே மிதப்ப - ஆழ - நிலை - நீத்து - என்பவற்றொடு பொருள் கொள்ள வந்தன. சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து என இயையும். (உரை) சொல்வகை நான்கனுள் நான்கடியான் வரும் இசைப் பாட்டுச் ‘சுண்ணம்’ எனப்படும். (சிலப். 3-13 அடியார்க்., யா. வி. பக். 388) சுண்ண மொழிமாற்று - ‘சுண்ணம்’ காண்க. சுரிதக அளவு - சுரிதகத்தின் சிறுமை இரண்டடி; பெருமை பொருள் முடிவின் அளவு. அஃது ஆசிரியத்தானும் வெண்பாவானும் வரும். வெண்டளைச் சுரிதகம் மூன்றடியிற் குறையாமல் வரும்; அகவற் சுரிதகம் இரண்டடியானும் வரும், பெரும்பான்மை யும் தரவினது அளவிற்றாகச் சுரிதகம் இருக்கும். அதுவே சிறப்பு. தரவின் அளவிற் குறைந்தும் மிக்கும் வருவன அத்துணைச் சிறப்பின அல்ல. (யா. க. 82, உரைமேற்) சுரிதகத் தரவுஇணைக் கொச்சகம் - கொச்சகக் கலிப்பா வகைகளுள் ஒன்று; தரவு இரட்டித்துத் தனிச்சொல் பெற்றுச் சுரிதகத்தான் முடிவது. தரவுகட்கு இடையே தனிச்சொல் வரப்பெறும். எ-டு : ‘வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாய்க் கொடிபடு வரைமாடக் கோழியார் கோமானே! எனவாங்கு, (தனிச்சொல்) துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம் துறப்புண்டாங் கிணைமலர்த்தாள் அருளுமேல் இதுவதற்கோர் மாறென்று துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ (தரவுஇணை) அதனால், (தனிச்சொல்) செவ்வாய்ப் பேதை இவள்திறத் தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே?’ (சுரிதகம்) (யா. க. 86 உரை) சுரிதகத் தரவு கொச்சகம் - கொச்சகக் கலிப்பா வகைகளுள் ஒன்று; தரவு ஒன்றாகித் தனிச்சொல் பெற்றுச் சுரிதகத்தால் முடிவது. எ-டு : ‘குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத் தடநிலைப் பெருந்தொழுவில் தகையேறு மரம்பாய்ந்து வீங்குபிணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தேறப்போய்க் கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப (தரவு) எனவாங்கு, (தனிச்சொல்) ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும் கானுடைத் தவர்தேர் சென்ற வாறே!’ (சுரிதகம்) சுரிதகத்தின் பெயர்க்காரணம் - ‘சுரிதகம்’ காண்க. சுரிதகத்தின் மறுபெயர்கள் - ‘சுரிதகம்’ காண்க. (யா. க. 86.உரை) சுரிதகத்தைப் போக்கியல் என்றும், வைப்பு என்றும் வழங்குதல் - சுரிதகம், வாரம், வைப்பு, போக்கியல், அடக்கியல் என்பவை ஒரு பொருட் கிளவிகள். எல்லாவற்றிற்கும் பின் இறுதியாக நிற்கும் உறுப்பாதலின் சுரிதகம் ‘போக்கு’ எனப்பட்டது. தரவு முதலிய உறுப்புக்களால் கூறப்பெறும் பொருள்களை அடக்கி முடித்து நிற்றலின் ‘வைப்பு’ எனப்பட்டது. (தொ. செய். 136 ச.பால.) சுரிதகம் - ஓரிடத்து ஓடாநின்ற நீர், குழியாகிலும் திடராகிலும் சார்ந்த விடத்துச் சுரிந்தோடும் அதனைச் ‘சுரிந்து’ எனவும் ‘சுழி’ எனவும் வழங்குவது போல, தான் கலியோசையாய் வாரா நின்றது வெண்பாவானும் ஆசிரியப்பாவானுமாய்த் தக்க தொரு பொருளை உட்கொண்டு நிற்றலால் சுரிதகம் எனப்பட்டது. (யா. க. 82 உரை) நலிதலை ஈறும் ஈற்றயலுமாக உடைய செய்யுள் உறுப்பைச் சுரிதகம் என்பர். உருவகம் தீவகம் என்பன போலச் ‘சுவரி தகம்’ என்பது சுரிதகம் என நின்றது. தமிழ்நூல் உரைகாரர் சுரிந்து இறுதலின் சுரிதகம் என்பது அறியாமையாம். ஆகவே, தரவு எடுத்தல் ஒலி, தாழிசை படுத்தல் ஒலி, சுரிதகம் நலிதல் ஒலியுடையன என்பது. (பி. வி. 40 உரை) இச்சுரிதகத்திற்கு அடக்கியல் போக்கு வைப்பு வாரம் என்ற மறுபெயர்களும் உண்டு. உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒருவகையான் அடக்கும் இயல்பிற்றாகலின் அடக்கியல் எனவும், குறித்த பொருளை முடித்துப் போக்குதலின் போக்கு எனவும், அவை எல்லாவற்றையும் போதந்து வைத்தலின் வைப்பு எனவும், கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுதலின் வாரம் எனவும் சுரிதகம் பெயர் பெற்றது. (தொ. செய். 132 பேரா.) செய்யுள் பிறிதொன்றனை அவாவாமல் கடைபோகச் செய்த லின் (-முழுதும் பொருளால் முடிவுறச் செய்தலின்) ‘போக்கு’ என்பது சுரிதகத்துக்கு ஒருபெயர். (தொ. செய். 136. நச்.) முற்கூறிய தரவு தாழிசைகளின் பொருள்களைக் கொண்டு தொகுத்து வைத்தலின் ‘வைப்பு’ என்பதும் சுரிதகத்துக்கு ஒரு பெயர். (நச்.) முன்னர்ப் பலவகையான் புகழ்ந்த தெய்வத்தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கி நிற்றலின், தேவர்ப் பராஅய ஒத்தாழிசை யின் சுரிதகம் ‘அடக்கியல்’ எனவும் பெயர் பெறும். (144. நச்.) தேவர்ப் பராஅய ஒத்தாழிசையின் சுரிதகத்தில் தெய்வத்தை அன்றி மக்களைப் புகழ்ந்த அடியும் வருதலின் ‘வாரம்’ என்பதும் அதன் சுரிதகத்துக்கு ஒரு பெயர். (144. நச்.) சுவரிதம் - நலிதலோசை; இச்சொல்லே சுரிதகம் எனத் தமிழில் திரிந்தது. (பி. வி. 40 உரை) சூத்திரம் யாப்பினுட் பட்டதே ஆதல் - சூத்திரத்தின் தொகுதியே நூலாதலானும், நூலினை அடி வரையறை இல்லாதனவற்றுள் ஒன்றாகக் கூறினமையானும்; சூத்திரம் யாப்பினுட்படாதுபோலும் என்று கருதற்க. அது பெரும்பான்மையும் அசை சீர் தொடை மரபு நோக்கு மாட்டு வண்ணம் முதலிய உறுப்புக்களான் அமைந்து பாவினது தன்மையை யுற்றுச் செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் படவரும் என்பது விளங்க உடம்பொடு புணர்த்துச் சூத்திரம் செய்து, ‘பாஅ வண்ணம் நூற்பாப் பயிலும்’ என ஓசையும் எடுத்துக் கூறினார் இவ்வாசிரியர். (தொ. மா. 99 ச. பால.) செந்துறைச் செந்துறை - செந்துறையாவது நாற்பெரும் பண்ணும் இருபத்தொரு திறனும் ஆகிய இசை. இச் செந்துறையினது விரி மூவகையுள் ஒன்று செந்துறைச் செந்துறை என்பது. (யா. வி. பக். 579) செந்துறைப்பாட்டு - மக்களை உயர்த்தித் தேவராக்கிப் பாடும் அறுமுறை வாழ்த்துப் போலாது, மக்களை மக்களாகவே இயல்பாகப் பாடுதல். (தொ. பொ. 82 நச்.) செந்துறை மார்க்கம் - நாற்பெரும் பண்ணிலும் 21 திறனிலும் பாடப்படும் இசை யெல்லாம் செந்துறை மார்க்கம் எனப்படும். (யா.வி. பக். 579) குறிஞ்சியாழ் முல்லையாழ் பாலையாழ் மருதயாழ் என நால்வகையாழும் நாற்பெரும்பண்ணாம். (திவா. பக். 236). 21 திறன்கள் (சிலப். 5 : 36) அடியார்க்குநல்லார் உரையுள் காணப்படும். செந்துறை வெண்பா - செந்துறை வெள்ளை எனவும்படும். அது காண்க. செந்துறை வெள்ளை பெயர்க் காரணம் - வெண்பாவிற்கு இனமாய்ச் செவ்விதாய் ஒழுகிய ஓசைத்தாய் விழுமிய பொருளை யுட்கொண்டு துறைபோகிய நெறிப்பாடு உடைத்தாய்க் கிடத்தலின், செந்துறை வெள்ளை எனவும் வெண் செந்துறை எனவும் பெயர் பெற்றது. இஃது ஏழு தளையானும் கூறுபடும். இவை சிறப்புடைய தளையும் சிறப் பில்லாத தளையும் எனப் பாகுபடுத்தப்படவே, தளைபற்றி வெண் செந்துறை 14 வகைப்படும் என்பது. இவை ஒத்த நாற்சீரடி இரண்டான் வரும். எ-டு : ‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ஓதலின் சிறந்தன்(று) ஒழுக்க முடைமை’ (முதுமொழிக். 1) செந்தூக்கு - (ஆசிரியப்பா அடி (தொ. செய். 71 பேரா.) பதிற்றுப்பத்தின் பாடல்கள் பலவும் செந்தூக்கான் வந்தன என்பது அவற்றின் அடிக்குறிப்பை நோக்கி உணரப்படும். அங்குச் செந்தூக்கு என்பது ஆசிரியப்பா ஓசை என்ற பொருளில் அமைந் துள்ளது. தூக்கு என்பது சீர்களான் நிறைந்து ஓசையறுதியாக முடியும் அடிகளின் முடிபாகும். ‘நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே’ என்றதனான், நாற்சீரடியினைச் செந்தூக்கு என்பர் இயல்நூலார். நால்வகைப் பாக்களுள் நாற்சீரான் நடை பெறுவன ஆசிரியம், வெண்பா, கலி ஆகிய மூன்றுமேயாம். அவற்றுள் திரிபின்றி நாற்சீரடியான் முடிவது ஆசிரியம் மாத்திரமே ஆதலின், செந்தூக்கு என்பர் இயல்நூலார். செந்தூக்கு என்பது ஆசிரியத்திற்கு உரிமையாய் ஆசிரியத் தூக்கு எனவும் பெயர்பெறும். (தொ. செய். 71 ச. பால.) செந்தொடை இலக்கணம் - மோனை எதுகை முரண் இயைபு அளபெடை என்னும் தொடைகளும், இணை பொழிப்பு ஒரூஉ கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று என்னும் தொடை விகற்பங்களும் இன்றி வேறுபடத் தொடுப்பது. அஃதாவது நேரசைக்கு நிரையசை வந்தும், நிரையசைக்கு நேரசை வந்தும், நேரசைக்கு நேரசையே வரினும் நான்கு நேரசையும் தம்முள் ஒவ்வாதே வந்தும், நிரையசைக்கு நிரையசையே வரினும் நான்கு நிரையசையும் தம்முள் ஒவ்வாதே வந்தும், இயற்சீருக்கு உரிச்சீரே வந்தும், உரிச் சீருக்கு இயற்சீரே வந்தும், இயற்சீருக்கு இயற்சீரே வரினும் தம்முள் ஒவ்வாது வந்தும், உரிச்சீருக்கு உரிச்சீரே வரினும் தம்முள் ஒவ்வாது வந்தும், ஓரடி ஒரு வண்ணத்தால் வந்து மற்றைஅடி மற்றை வண்ணத்தால் வந்தும், அசை சீர் இசை (-ஓசை) என்னும் மூன்றும் ஒவ்வாது வந்தும், அனுவும் இனமும் இன்றி முரணாகக் கிடப்பதாம். அ ஆ, இஈஐ, உஊஒள, எஏ, ஒஓ - தம்முள் இனமாம். அஆஐஒள, இஈஎஏ, உஊஒஓ, ஞந, மவ, சத - தம்முள் அனுவாம். இச்செந்தொடை அசைவிரளச் செந்தொடை, சீர்விரளச் செந்தொடை, இசைவிரளச் செந்தொடை, முழுவிரளச் செந்தொடை என நால்வகையாம். (யா. க. 50) செந்தொடையும் மருட் செந்தொடையும் - செம்மையாவது திரிபு படாதது. ஆதலின், மோனை முதலாய செயற்கைத் திரிபின்றி இயற்கையாக நின்ற செஞ்சொல் செந்தொடை எனப்பட்டது. எ-டு : ‘பூத்த வேங்கை வியன்சினை ஏறி’ ‘நெடுவேள் மார்பின் ஆரம் போல’ செய்யுள் முழுதும் செந்தொடையாலே வரின் அதனைச் செந்தொடைச் செய்யுள் என்ப. கிளையெழுத்து முதலாக ஏதேனும் ஒரு சார்பு தோன்றி நிற்குமாயின் அதனை மருட்செந்தொடை என்ப, இடைக் கால யாப்பு நூலார். எ-டு : ‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’ (குறள். 64) (தொ. செய். 100 (ச.பால.)) செந்தொடை மருள் - மருட் செந்தொடையின் மற்றொரு பெயர். (யா. வி. பக். 201) செந்நடை அசை அந்தாதி - பாடலின் முதலும் இறுதியும் மண்டலிப்பதின்றி முதலடியின் ஈற்றசை அடுத்த அடியின் முதலசையாக அந்தாதித்து வரத் தொடுப்பது. எ-டு : ‘கண்களை நிகர்ப்பன காமர்செந் தாமரை மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி’. (யா. க. 52 உரை) செந்நடை அடி அந்தாதி - பாடலின் முதலும் இறுதியும் மண்டலிப்பதின்றி, பாடலின் ஓரடி அடுத்த அடியாய் அந்தாதித்து வருவது. எ-டு : ‘ஆதியங் கடவுளை அருமறை பயந்தனை போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கிய சேதியஞ் செல்வ நின் திருவடி பரவுதும்.’ இஃது இரண்டாம் அடியே மூன்றாம் அடியாக அந்தாதித்து வந்தது. (யா. க. 52 உரை) செந்நடை அந்தாதி - இறுதியடியின் இறுதியும் முதலடியின் முதலும் மண்டலித்து வாராமல், அடிகளில் எழுத்து அசை சீர் அந்தாதித்து வருவது. எ-டு : உம்பர் பெருமாற்(கு) ஒளிர்சடிலம் பொன்பூத்த தம்பொற் புயம்வேட்டேம் தார்முலையும் பொன்பூத்த பொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்து. (சி. சே. கோ. 27) இதன்கண், எழுத்தும் சீரும் அந்தாதித்தன. (யா. க. 52 உரை) செந்நடை இடையிட்ட அந்தாதி - பாடலின் முதலும் ஈறும் மண்டலித்தலின்றி, முதலடிக்கண் ஈற்றுச் சீரோ எழுத்தோ அடுத்த அடிக்கண் ஒருசீர்விட்டு அந்தாதித்து வருவது. ‘மூவாத் தமிழ்பயந்த முன்னூல் முனிவாழி ஆவாழி வாழி அருமறையோர் இஃது இடையிட்ட சீர்அந்தாதி. (யா. க. 52 உரை) செந்நடை எழுத்தந்தாதி - பாட்டின் முதலும் ஈறும் மண்டலிப்பதின்றி, முதலடியின் ஈற்றெழுத்து இரண்டாமடியின் முதல் எழுத்தாக அமைதல் மாத்திரம் பொருந்திய அந்தாதித் தொடை. ‘உம்பர் பெருமாற்(கு) ஒளிர்சடிலம் பொன்பூத்த தம்பொற் புயம்வேட்டேம் தார்முலையும் பொன்பூத்த’. (சி. செ. கோ. 27) என்ற ஈரடிக்கண் இவ்வந்தாதி வந்தவாறு. (யா. க. 52 உரை) செந்நடைச் சீர் அந்தாதி - பாடலின் முதலும் ஈறும் மண்டலிப்பதின்றி, முதலடியின் ஈற்றுச்சீர் அடுத்த அடியின் முதற்சீராக அந்தாதித்து வரும் தொடை. எ-டு : ‘இப்பி ஈன்ற இருங்கதிர் நித்திலம் நித்திலம் பயந்த நேர்மணல் எக்கர்’ (யா. க. 521 உரை) செந்நடை மயக்க அந்தாதி - பாடலின் முதலும் ஈறும் மண்டலிப்பதின்றி, அசையும் சீரும் அடிகளில் அந்தாதித்து வரும் தொடை. எ-டு : ‘வேங்கை ஓங்கிய வியன்பெருங் குன்றம் குன்றத் தயலது கொடிச்சியர் கொய்புனம் புனத்தயற் சென்ற சிலம்பன் சிலம்படி மாதர்க்கு நிறைதோற் றனனே’. இதன்கண் குன்றம் சிலம்பு என்பன சீர்கள்; புனம் என்பது அசை. (யா. க. 52 உரை) செப்பல் ஓசை - அழைத்துக் கூறாது ஒருவற்கு ஒருவன் இயல்பு வகையான் ஒரு செய்தியைக் கூறுங்கால் எழும் ஓசை வெண்பாவிற்குரிய செப்பல் ஓசையாம். (தொ. செய். 82 நச்.) செப்பல் ஓசை மூன்றுவகை - ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும், ஒழுகிசைச் செப்பலும் எனச் செப்பலோசை மூவகைப்படும் எனச் சங்கயாப்புடையாரும் காரிகையாசிரியரும் (கா. 22 உரை) கூறியுள்ளனர். அ) வெண்சீர் வெண்டளையான் வரும் வெண்பாவின் ஓசை ஏந்திசைச் செப்பலாம். எ-டு : ‘யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு’ (குறள் 397) ஆ) இயற்சீர் வெண்டளையான் வரும் வெண்பாவின் ஓசை தூங்கிசைச் செப்பலாம். எ-டு : ‘பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்’. (குறள் 1121) இ) வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் கலந்து வரும் வெண்பாவின் ஓசை ஒழுகிசைச் செப்பலாம். எ-டு : ‘கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு’. (குறள் 984) (யா. க. 57 உரை) செப்பல் வெண்பா - ஏழு சீரான் நடக்கும் குறள்வெண்பாவே செப்பல் வெண்பா ஆகும் என்பார் ஒரு சாரார். எ-டு : ‘சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு?’ (குறள் 31) (யா. க. 57 உரை) செப்பிய நான்கு - முற்கூறிய ஆசிரியம் முதலிய நால்வகைப்பா. (தொ. செய். 121 நச்.) கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து எனக் கூறிய நான்குறுப்பு. (121 பேரா., 117 இள.) ஏறிய மடல் திறம், இளமை தீர்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் என்பன. (தொ. பொ. 51 நச்.) செம்பால் - சமபாதி என்னும் பொருளது. (தொ. செய். 151 நச்.) செம்பால் வாரம் - செம்பால் - நேர் பாதி; வாரம் - வருதல். அம்போதரங்க ஒருபோகுச் செய்யுட்குப் பெருமை 60 அடி, சிறுமைக்கு அளவு அதனில் செம்பாதியாக வரும் 30 அடி என்றார். (தொ. செய். 151 ச. பால.) செம்பால் வாரம் - நடுவாகிய நிலை; செம்பாதி எனவுமாம். (தொ. செய். 145 இள.) செம்பாலும் (-சமபாதியும்), அதன் வாரமாகிய பாதியும்; அஃதாவது பாதியும், காலும் (செய். 151 பேரா.). செம்பாதியில் பாகமாகிய கால். (செய். 151 நச்.) செம்பொருள் அங்கதம் - வாய் காவாது கூறப்படும் வசை இது. இவ்வசை வெண் பாவானன்றிச் சிறுபான்மை மற்றைய பாக்களானும் வரும். இது செம்பொருள் அங்கதம், செம்பொருட் செவியுறை அங்கதம் என இருவகைப்படும். எ-டு : ‘இருள்தீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுநின் குற்றம் - மருடேயும் பாட்டும் உரையும் பயிலா தனஇரண்(டு) ஓட்டைச் செவியும் உள.’ இஃது ஏழிற் கோவை ஒளவையார் பாடிய வெண்பா. ‘குருகினும் வெளியோய் தேஎத்துப் பருகு பா லன்னஎன் சொல்லுகுத் தேனே’ என்பது ஆசிரியம். ‘அறச்சுவையிலன் வையெயிற்றினன் மைகூர்ந்த மயலறிவினன் மேவருஞ் சிறப்பி னஞ்சி யாவரும் வெரூஉம் ஆவிக் கோவே’ - என்பது வஞ்சி கலிப்பாட்டான் வருவன வசைக்கூத்தினுள் காணப்படும். (தொ.செய். 125, 127 நச்.) இவ்வங்கதம் வசைப்பொருளொடும் அதனால் பிறந்த நகைப்பொருளொடும் வரும். (129 நச்.) செம்பொருள் செவியுறை அங்கதம் - அரசன் தனக்குரிய அரசியலில் தப்பிய நிலைமையைக் கூறும் கூற்றோடும், அவ்வறம் பொருள் இன்பம் பயக்கக் கூறும் கூற்றோடும், ஒரு செய்யுள் கூடி வந்ததாயின், அச்செய்திகள் வெளிப்படையாகக் கூறப்பெறின், அச்செய்யுள் இவ்வகை அங்கதமாம். எ-டு : ‘நளியிருள் முந்நீர் ஏணி யாக’ (புறநா. 35) அரசனுடைய ஏவலர் அநியாயமாக நிலவரி திரட்டும் திறத்தை விளக்க வெள்ளைக்குடி நாகனார் கிள்ளிவளவ னிடம் பாடிய பாடல் இது. பழஞ்செய்க்கடன் வீடு கொண்டமை உரைக்குறிப்பு. விளக்கம் ‘செவியுறை அங்கத’த்துள் காண்க. (தொ. செய். 128 நச்.) செம்முரண் - முரணன்றிப் பிறதொடை எதுவும் இல்லாதமைவது எ-டு : ‘வாழ்வது பொருந்து மாகின் சாவதும் இனிதவர் வீவதும் உறுமே’ (யா. வி. பக். 202) செம்மோனை - இன எழுத்தும் விகற்பமும் வரத் தொடுக்கப்படாத மோனை. ‘சிலம்படி மாதர் நன்னலம் குறித்துச் சிலம்பதர் நள்ளென் கங்குல் சிலம்பநீ வருதல் தருவதோ அன்றே’ இதன்கண், அடி மோனை தவிர ஏனைய தொடை விகற்பம் எதுவுமின்று; இனவெழுத்தும் இணை முதலிய விகற்பமும் வாராமையும் காண்க. (யா. வி. பக். 201) செய்யுட்கண் மூவகைக் குறைகள் - முதற் குறையும், இடைக்குறையும், கடைக் குறையுமாவன; செய்யுட்கண் ஒரு பகாப்பதம் தன் முதலெழுத்து, தொடை நலம் கருதிக் குறைக்கப்பட்டவழியும் தன் பொருளைத் தவறாமல் வெளிப்படுத்துவது முதற்குறையாம். எ-டு :‘மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி’ என்புழி, தாமரை எனற்பாலது முதல் குறைக்கப்பட்டது. செய்யுட்கண் ஒரு பகாப்பதம் தன் இடையெழுத்துத் தொடைசீர் அமைப்புக் கருதிக் குறைக்கப்பட்டவழியும் தன் பொருளைத் தவறாது வெளிப்படுத்துவது இடைக்குறையாம். எ-டு : ‘வேதின வெரிநின் ஓதிமுது போத்து’ என்புழி, ஓந்தி எனற்பாலது இடைக் குறைந்து வந்தது. ஓதி என்பது ஓந்தியின் இயற்கைப் பெயர் என்பாருமுளர். ஆரல் என்பது ‘அங்கண் விசும்பின் ஆஅல் போல’ என வருவது இடைக்குறையாம். (ஆரல் - கார்த்திகை) அவ்வாறே கடைக் குறைக்கப்பட்டவழியும் பகாப்பதம் தன் பொருளைத் தவறாது பயப்பது கடைக்குறையாம். எ-டு :‘நீலுண் துகிலிகை கடுப்ப’ என்புழி, நீலம் எனற்பாலது ‘நீல்’ எனக் கடைக்குறைந்து நின்றது. (யா. க. 95 உரை) செய்யுட்கு உறுப்பாவன - மாத்திரை, எழுத்தியல்வகை, அசைவகை, யாத்தசீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடைவகை, நோக்கு, பா, அளவியல், திணை, கைகோள், கூற்றுவகை, கேட்போர், களன், கால வகை, பயன், மெய்ப்பாடு, எச்சவகை, முன்னம், பொருள், துறைவகை, மாட்டு, வண்ணம் என்ற இருபத்தாறனொடு, அம்மை அழகு தொன்மை தோல் விருந்து இயைபு புலன் இழைபு என்ற வனப்பு எட்டனையும் கூட்ட நல்லிசைப் புலவர்தம் செய்யுள் உறுப்புக்கள் 34 ஆகும். மாத்திரை முதலிய இருபத்தாறும் ஒன்றனை ஒன்று இன்றி யமையாது வரும். இவை யாப்பிற்கு மிக இன்றியமையாதன. அம்மை முதலிய எட்டும் ஒவ்வொன்றாகவோ பலவாகவோ, பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர் நிலைச் செய்யுட்கண்ணேயே பெரும்பான்மையும் வரும்; சிறுபான்மை தனி வரும் செய்யுட்கண்ணும் கொள்ளப் பெறும். அம்மை முதலிய இவ்வெட்டும் பெரும்பான்மையும் பல வுறுப்பும் திரண்டவழிப் பெறுவதோர் அழகின் வகை களாம். இவ்வுறுப்புக்கள் யாவும் அடிவரையறையுடைய பாட்டுக்க ளுக்கே உரியன. அடிவரையறையில்லா நூல், உரை, பிசி, முதுமொழி, வாய்மொழி, குறிப்புமொழி என்னும் ஆறனுக் கும் திணை முதலிய உறுப்புக்கள் ஆகா. (தொ. செய். 1 பேரா.) செய்யுட் சொல் - செய்யுளில் மாத்திரம் வழங்கும் சொல் (கோவை.1 உரை). (டு) அவை என்மனார், என்றிசினோர், கேட்டிசின், மொழிமோ - முதலாக அகத்துறுப்பும் புறத்துறுப்பும் பெற்று வருவன போல்வன; பலாஅம், சிலாஅம் - போல்வனவும் அது. செய்யுட் போலி - செய்யுளின் திறம் இரண்டனுள் ஒன்றாகிய கத்தியத்தின் வகை இரண்டனுள் ஒன்று; ஒரு போகு முதலாயின வெல்லாம் செய்யுட் போலியாம். (வீ. சோ. 112 உரை) செய்யுள் - சொற்பொருள்உணர்வு வண்ணங்கள் தொடர்ந்து, குற்ற மின்றி அவை தத்தமுள் தழுவும் கோள் உடையவாய், இன்பம் பெருக்கி, அம்மை முதலாய வனப்பும் அலங்காரமும் செம்மையும் செறிவும் பெறுவழிப் பெற்று, இம்மை மறுமைக் கும் நன்மை பயந்து, எல்லார்க்கும் புலனுற நடைபெறும் பாவும் பாவினமுமே யாப்பு, பாட்டு, செய்யுள் என்று சிறப்பாகக் கொள்ளத்தக்கன. அவை இடத்தினாலும் தொழிலினானும் பொழுதினானும் பிறவாற்றானும் பெயர் பெற்று நடப்பன. அறம் பொருள் இன்பம் வீடு என்ற இவற்றைப் பாவி நடத்தலின் அவை பா எனவும் பட்டன. ஒருபுடையால் பாவினோடு ஒத்த இனத்தவாய் நடத்தலின் ‘பாவினம்’ எனப்பட்டன. இவையன்றி, உரை நூல் வசை மந்திரம் முதுசொல் பிசி என்பன செய்யுள் எனப் பெயர் பெற்றும் ஓசைப்பொலிவு முதலாய உறுப்பொடு புணர்ந்தும் ‘பா’வினுள் அடக்கப் படுவன அல்ல. (யா. க. 54 உரை) செய்யுள் இடம் - புலவர் யாத்த இலக்கணம் வழக்கிடமும் செய்யுளிடமும் ஆகிய இரண்டனையும் ஆராய்ந்து இயற்றப்பட்டன. வழக்கிடம் - உலக வழக்காகிய பேச்சுவழக்கு. செய்யுளிட மாவது புலவர்கள் இயற்றிய செய்யுள் வழக்கு. ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்’ (தொல். பாயிரம்) தொல்காப் பியம் செய்யப்பட்டது. செய்யுள் உறுப்பு - ‘செய்யுட்கு உறுப்பாவன’ காண்க. எழுத்து அசை சீர் தளை அடி தொடை என்பன ஆறும் செய்யுள் உறுப்பாவன. (யா. கா. பாயிரம்) செய்யுள் தாரணை - தாரணை விகற்பங்களாகக் கூறப்படும் ஒன்பதனுள் ஒன்று. (யா. வி. பக். 555) செய்யுள் தோன்றும் ஏழ் நிலைக்களன்கள் - பாட்டு, நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு என்பன. (தொ. செய். 164 நச்.) செய்யுள் நடையின் இருவகை - தளர் நடை, இன்னிய நடை என்பன. முன்னது தண்டகச் செய்யுள் நடை, பின்னது பிற செய்யுள் நடை. (வீ. சோ. 147 உரை) செய்யுள் போக்கு - 1) செய்யுளின் நடை அமையும் முறை. எடுத்துக்காட்டாகப் படர்க்கை வாய்பாட்டில் கருத்துச் சொல்லப்படுவது. 2) செய்யுட் குற்றம்.செய்யுள் வனப்பு எட்டு - அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பன. (தொ. செய். 1) செய்யுள் விகாரம் - வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத் தல் என்னும் அறுவகைச் செய்யுள் விகாரமும், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்னும் மூவகைக் குறைகளும் கூட்டச் செய்யுள் விகாரம் ஒன்பதாம். ‘அறுவகைச் செய்யுள் விகாரங்கள், ‘செய்யுட்கண் மூவகைக் குறைகள்’ காண்க. (யா. வி. பக். 393, 395) செய்யுளில் எண்ணப்படா எழுத்துக்கள் - தத்தம் ஓசை தனித்து இனிது விளங்கத் தத்தம் தன்மையான ஒலித்தல்தொழில் இல்லாத ஒற்றும் ஆய்தமும் குற்றுகரமும் குற்றிகரமும் சிறிது நாப்புடைபெயரும் துணையான் ஒலித்த லும் மொழியைச் சார்ந்து ஒலித்தலும் உடையவேனும், அவற் றின் ஒலி செய்யுட்கு உபகாரப்படும் அளவுக்கு இயங்காமை யின், அவை எழுத்தாக எண்ணிக் கணக்கிடப் படமாட்டா. எ-டு : ‘போந்து போந்து சார்ந்து சார்ந்து’ - 4 எழுத்தடி எழுத்தெண்ணிப் பாடப்படும் செய்யுளாகிய கட்டளைக் கலித்துறை, சந்தம், தாண்டகம், இவற்றில் ஒற்றும் ஆய்தமும் குற்றியலுகரமும் குற்றியலிகரமும் கணக்கிடப்படாமை காண்க. (தொ. செய். 44 பேரா., நச்.) செய்யுளில் ஒற்றெழுத்துக்கள் அலகு பெறுமாறு - செய்யுட்கண் ஒற்றெழுத்துத் தனித்து நிற்பினும் ஈரொற்றாய் நிற்பினும் அவை அலகு பெறமாட்டா. எ-டு : வாழ், வாழ்க்கை - இவை முறையே நேரசையும், நேர்நேர் என ஈரசையுமாக நிற்குமிடத்தே, இறுதிக்- கண்ணும் இடைக்கண்ணும், தனித்தும் ஈரொற்றாயும் நின்ற மெய்யெழுத்துக்கள் அலகு பெறாமை காண்க. இனி, ஒற்றெழுத்து அளபெடுப்பின் ஓரலகு பெறும்; இஃது ஆய்தத்திற்கும் ஒக்கும். எ-டு : ‘கரும்ம் பவள்வாயிற் சொல்’ ‘எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்’ இவற்றுள், கரும்ம் - நிரைநேர்; எஃஃ - நேர்நேர் என ஓரலகு பெற்றவாறு காண்க. செய்யுளில் கூறப்படுவன அறம் பொருள் இன்பம் வீடு என்பன. (அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்பனவும் இவற்றுள் அடங்கும்.) (யா. க. 55 உரை) செய்யுளின் பரியாயப் பெயர்கள் - யாப்பு, பாட்டு, தூக்கு, பா, தொடர்பு என்பன. (யா. க. 1 உரை) செய்யுளும் செய்யுள் உறுப்பும் - செய்யுள் உறுப்புக்களைக் கூறவே அவ்வுறுப்புகளையுடைய செய்யுளாகிய உறுப்பியின் இலக்கணமும் அவற்றால் பெறப் படுதலின் செய்யுளின் இலக்கணம் தனித்துக் கூறப்பட வேண்டுவதன்று. (தொ. செய். 1 பேரா.) செய்யுளுறுப்புக்களுள் கருவி, செய்கை, பொருள் பற்றியன - எழுத்து, அசை, சீர், அடி, தூக்கு, தொடை, அளவு, மாட்டு, மரபு ஆகியவை கருவி பற்றிய உறுப்புக்கள். மாத்திரை, நோக்கு, பா, மெய்ப்பாடு, வண்ணம், எச்சம், முன்னம், பொருள் வகை, துறை ஆகியவை செய்கை பற்றிய உறுப் புக்கள். திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன் ஆகியவை பொருள் பற்றிய உறுப்புக்கள். (தொ. செய். 1 ச. பால.) செயற்கை அளபெடை - செய்யுளில் ஓசை நிரம்பப் புலவர் செய்து கொள்ளும் அளபெடை. (தொ. செய். 17 பேரா.) செவ்வளபெடைத் தொடை - ஏனைய தொடைகள் வாராமல் அளபெடைத் தொடை மாத்திரம் வருவது. (யா. க. 41 உரை) எ-டு : ‘மாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பக் கோஒ டரங்கள் முசுவொடும் வெரீஇ...’ (சி. செ. கோ. 42) செவ்வியைபுத் தொடை - இயைபுத்தொடை ஏனைய தொடைகளொடு கலவாது தனித்து வருவது. எ-டு : ‘மாயோள் கூந்தற் குரலும் நல்ல கூந்தலில் வேய்ந்த மலரும் நல்ல’ (யா. க. 40 உரை) செவ்வெதுகை - இன எழுத்து வரத் தொடுக்கப்படாத எதுகைத்தொடை ஒன்றுமே வருவது. எ-டு : ‘கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும்’. (குறள் 109) இதன்கண் எதுகை ஒன்றுமே வந்தவாறு. (யா. க. 53 உரை) செவியறிவுறூஉ மருட்பா - செவியறிவுறூஉ என்னும் பொருள் பற்றி வரும் மருட்பா. ‘மருட்பா’ என்பதன்கண் அவ்வகைப்பாவின் இலக்கணம் காண்க. (யா. கா. செய். 15) செவியுறை அங்கதம் - வசைப் பாடல்கள், செம்பொருட் செவியுறை அங்கதம் எனவும் பழிகரப்புச் செவியுறை அங்கதம் எனவும் இருவகைப் படும். இவை அரசன் தனக்குரிய அரசியலில் தப்பிய நிலையினைக் கூறும் கூற்றொடும் அறம் பொருள் இன்பம் பயக்கக் கூறும் கூற்றொடும் வரும். எ-டு : ‘நளியிரு முந்நீர்’ (புறநா. 35) “இஞ்ஞாலம், இயற்கையல்லது செயற்கையில் தோன்றினும் காவலனைப் பழிக்கும். இதனை உணராது நீ கிட்டுதற்கரிய நாட்டைப் பெற்றும் அதனை வரிப்பொருள் நலிந்து வாங்கி அழிக்கின்றமை நினக்கு அரசியல் அன்று” என்று அவன் நாட்டை அழித்தமை கூறுதலினானும், “நின் குடிமக்களைப் பாதுகாப்பாயாயின் நினக்குச் செல்வம் முதலியன சிறக்கும்; அதனால் பகைவரும் வணங்குவர்” என்று கூறுதலினானும், அரசன் தனது அரசியல் தப்பிய நிலையும் அறம் முதலியன பயக்கக் கூறும் கூற்றும் பொருந்திச் செம்பொருட் செவியுறை அங்கதமாயிற்று. ‘வள்ளியோர்ப் படர்ந்து’ (புறநா. 47) இது சோழன் நலங்கிள்ளியிடத்திருந்து உறையூருக்கு வந்த இளந்தத்தன் என்னும் புலவனை நெடுங்கிள்ளி “ஒற்று வந்தான்” என்று கொல்லப் புக்குழி, அவ்வரசனுக்கு வருகின்ற துகளினைக் கோவூர்கிழார் புலப்படாமல் செய்யுள் செய்து தமது சொல்லை அரசன் கேட்டு(ப்பழியை) அஞ்சினான் என்னும் பொருளை நிறுத்தலின், பழி கரப்புச் செவியுறை அங்கதம் ஆயிற்று. (தொ. செய். 128 நச்.) செவியுறை அல்லாத அங்கதம் - செவியுறை அல்லாத அங்கதம் வசைப்பொருளொடும் அதனால் பிறக்கும் நகையைப் புலப்படுத்தும் நகைப்பொரு ளொடும் வரும். (தொ. செய். 129 நச்.) ஒரு செய்யுளை இயம்பும்போது வெளிப்படையாக வசையும் நகையும் கூறப்பெறின் செம்பொருள் அங்கதம், மறைவாக வசை கூறப்பெறின் பழிகரப்பு அங்கதம் எனப்படும். செவியுறைச் செய்யுள் புகழொடு புணர்தலும் பொருளொடு புணர்தலும் - புகழொடு புணர்தலாவது, கைக்கிளைப் பகுதியாயும் பாடாண் பகுதியாயும் வருவனவற்றைப் பரவலும் புகழ்ச்சியும் தோன்ற யாப்பது. பொருளொடு புணர்த்தலாவது குறிஞ்சி முதலாய ஏழும் அவற்றின் புறனாகிய ஏழுமாக வருவன வற்றை அறம் முதலாய மும்முதற்பொருள் தோன்ற யாப்பது. (தொ. செய். 128 ச.பால.) செவிலிக்கு, உரிய உரைநடை - பொருள்மரபு இல்லாப் பொய்ம்மொழி (-ஒரு பொருளின்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லுவன), பொருளொடு புணர்ந்த நகைமொழி (-பொய் எனப்படாது மெய் எனப்பட்டும் நகுதற்கு ஏதுவாம் தொடர்நிலை) என்னும் இருவகையும் செவிலிக்கு உரிய உரைநடையாம். தலைமகளை வற்புறுத்தும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரியர் என்பது கருத்து. (தொ. செய். 175 நச்.) சொல் சீர்த்து இறுதல் - ஓரெழுத்தொருமொழி முதலிய சொற்களெல்லாம் தாமே சீர்த்தன்மை பெற ஓசைபெற்று முடிந்து நிற்றல். (தொ. செய். 123 நச்.) சொல் தொடர் நிலை - ஒரு செய்யுளின் இறுதி எழுத்தோ அசையோ சீரோ அடியோ அடுத்த செய்யுளுக்குத் தொடக்கமாக வரத் தொடுக்கும் நூல் அமைப்பு முறை; இதனைக் கலம்பகம் அந்தாதி போன்ற பிரபந்தங்களில் கண்டுகொள்ளலாம். எ-டு : ‘நாவலன்பின் போந்த நறுநீர்த் திருவரங்கக் காவலன்பொற் றாளாம் கமலத்தே - பாவலர்தம் பாமாலை சூட்டா(து)அப் பாமாலை யைஎவனோ தா(ம்)மா னிடர்க்(கு) அளிக்கும் சால்பு. ‘புரந்தர னாதியர் ஆயபுத் தேளிர்பொற் போதுகள்தூய் நிரந்தரம் ஏத்தும் படியே துயின்றது, நெஞ்சத்தன்பு சுரந்(து) அரன் சாபம் துடைத்தோன் இருந்தது, தொண்டர்க்கெல்லாம் வரந்தர நின்றது அரங்கம் நன்காஞ்சி வடமலையே. ‘மலைமுழை வைகலும் வைகின ராகியும் கனிகிழங்(கு) அடகு கண்டன மாந்தியும் மூவர் ஆயு முதற்கடவுள் காவல! நீயே காத்தல் வேண்டுவனே.’ ‘வேண்டுவ(து) இங் கின்றெமக்கு மெய்க்கா விரிஅரங்கத்(து) ஆண்டகைதன் வெற்பில் அணங்கன்னார் - காண்டகுசீர்ப் பொன்று மலர்முகமும் பூண்முலையும் கண்டனம் யாம்; என்றால் இனிஇதன்மேல் யாது? ‘என்றால் இனிஇதன் மேல்யாது வேண்டும் எனக்குவெள்ளிக் குன்றான தன்பிடர் மீதே மரகதக் குன்றெனவே அன்(று)ஆ டரவில் துயில்அரங் கேசன் அருள்புரிந்து பொன்றாத செல்வத் திருமா துடன்உட் புகுந்தனனே’. என எழுத்து, அசை, சீர் (சொல்லாக அமைந்தது), அடி என்பன அந்தாதித்து வந்தவாறு. (மா. அ. பாடல் 60-64) சொல்முரண் - சொல்லானன்றிப் பொருளான் மாறுபடாமை. சொல்லும் சொல்லும் முரணிய கட்டளை அடியும் சீர்வகை அடியும் - எ-டு : ‘செந்தொடைப் பகழி வாங்கிச் சினம்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத்(து) அழுத்தலின்’ இவ்வடிகளில் செம்மை கருமை என்ற சொற்களே முரணின. இரண்டாமடி கட்டளை. (தொ. செய். 95 நச்.) சொல்லும் சொல்லும் முரணிய கட்டளை ஈரடி - செவ்வரை நிவந்த சேணிடை அருவீ வெண்மறி கறித்த முல்லை...’ இவ்வடிகளில் செம்மை வெண்மை என்ற சொற்கள் முர ணின. செம்மை வெண்மை நிறப்பண்பு குறியாது, முறையே நேராக நிற்றல் அறியாமை என்னும் பொருளவாதலின், சொல்லே முரணின. (தொ. செய். 95 நச்.) சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரண்தொடை - எ-டு : ‘செங்குரல் ஏனல் பைங்கிளி இரிய’ ‘செங்குரல்’ என்புழிச் சொல்லும் உண்டு, செம்மை குரற் கண்ணும் உண்டு. ‘பைங்கிளி’ என்புழிச் சொல்லும் உண்டு, பசுமை கிளிக்கண்ணும் உண்டு. ஆகவே செங்குரல் என்ற சொல்லும் பொருளும் ‘பைங்கிளி’ என்ற சொல்லொடும் பொருளொடும் முரணின (பண்பு ஆகிய சொல்லும் பண்பி யாகிய பொருளும் என இரண்டும் உடன் வந்தன என்றவாறு.) (யா. க. 38 உரை) சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணிய கட்டளை ஈரடி - எ-டு : ‘செங்குரல் பசுந்தினை விளைபுனம் குறுகிப் பைங்கிளி கடியும் பால்மொழி மகளிர்’ செங்குரல், பைங்கிளி - இச்சொற்கள் சொல்லும் பொருளும் தம்முள் முரணின. (தொ. செய். 95 நச்.) சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணிய சீர்வகை ஈரடி - எ-டு : ‘செவ்வேற் சேஎய் திருமணம் மறுத்த கருவிரல் கானவன் வரின்....’ செவ்வேல், கருவிரல் என்ற சொற்களும் பொருள்களும் தம்முள் முரணின. (செம்மை, கருமை - சொற்கள்; வேல், விரல் பொருள்கள்) (தொ. செய். 95 நச்.) சொல்லும் பொருளும் சொல்லொடு முரண்தொடை - எ-டு : ‘பெருமலைக் குறுமகள் பிறிதோர்த்து நடுங்கலின் சிறுமை கூர்ந்த செல்சுடர் மாலையொடு’ பெருமை என்ற சொல்லும் உண்டு, மலை என்ற பொருளும் உண்டு. சிறுமை என்னும் சொல்லே இரண்டாம் அடியில் உள்ளது. ஆகவே பெருமை என்ற சொல்லும் மலை என்னும் பொருளும், சிறுமை என்ற சொல்லுடன் முரணுதலின், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணின. (யா. க. 38 உரை) சொல்லும் பொருளும் சொல்லொடு முரணிய கட்டளை அடியும் சீர்வகை அடியும் - எ-டு : ‘சிறுநல் கூர்ந்த செவ்வான் மாலை பெருநீர்ப் பொய்கைக் குறுநர் தந்த’ சிறுநல்கூர்ந்த, பெருநீர் என்பவற்றில் சிறுமை பெருமை என்ற சொற்கள் முரணின. ‘சிறியதாய் வறுமையுற்ற’ என்புழிச் சொல்லே உண்டு; பொருளாகிய மாலை நான்காம் சீராத லின் உடன் தொடருமாறு இல்லை. பெருநீர் என்பதன்கண் பெருமை என்ற சொல்லும் நீர் என்ற பொருளும் உடன்உள. அவை யிரண்டும் ‘சிறுநல்கூர்ந்த’ என்ற சொல்லோடு மாத்திரம் முரணியவாறு. (தொல். செய். 95 நச்.) சொல்லும் பொருளும் சொல்லொடு முரணிய கட்டளை ஈரடி - எ-டு : ‘தண்சே(று) ஆடிய தயங்கிணர்க் கடத்து வெம்பொருட் பிரிவை வேண்டிச் சென்றார்’ தண்சேறு, வெம்பொருள் என்பவற்றில் தண்மை, வெம்மை என்ற சொற்கள் முரணின. (வெம்மை என்ற சொல் சூடு என்னும் பொருளதன்று) தண்சேறு என்ற சொல்லும் பொருளும் ‘வெம்பொருள்’ என்பதன்கண் வெம்மை என்ற சொல்லொடு மாத்திரமே முரணியவாறு. (தொ.செய். 95 நச்.) சொல்லும் பொருளும் பொருளொடு முரண்தொடை - எ-டு : ‘செந்தீ யன்ன சினத்த யானை நீர் நசை பெறாஅக் கானல் தேர்நசைஇ ஓடும் சுரனிறந் தோரே’. செந்தீ - செம்மையாகிய சொல்லும், செம்மையையுடைய தீயாகிய பொருளும் உள. நீர்நசை என்புழி, நீர் என்ற பொருளே தீ என்ற பொருளொடு முரணியது. ஆகவே ‘செந்தீ’ என்ற சொல்லும் பொருளும் ‘நீர்’ என்னும் பொருளொடு முரணின. (யா. க. 38 உரை) சொல்லும் பொருளும் பொருளொடு முரணிய கட்டளை ஈர் அடி - எ-டு : ‘செந்தீக் கானம் சென்ற மாதர் நீரின் மையின் நெஞ்சழிந் தயர’ செந்தீ என்புழி, செம்மையாகிய அடைமொழிச் சொல் உண்டு; தீ என்னும் பொருளும் உண்டு. இரண்டாமடியில், நீர் என்ற பொருளே யுண்டு. ஆகவே செந்தீயாகிய சொல்லும் பொருளும் நீராகிய பொருளொடு முரணின. (தொ. செய். 95 நச்.) சொல்லும் பொருளும் பொருளொடுமுரணிய கட்டளை அடியும் சீர்வகை அடியும் - எ-டு : ‘செந்தீப் போன்றவிர் சினத்த யானை நீர்நசை பெறாஅக் கற்பிற்றேர் நசைஇ’ செந்தீயாகிய சொல்லும் பொருளும், நீராகிய பொருளொடு முரணின. முதலடி கட்டளை. (தொ. செய். 95 நச்.) சொல்லொடு சொல் முரண்தொடை - எ-டு : ‘செந்தொடைப் பகழி வாங்கலின் சினம்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின்’ செந்தொடை - செம்மையாகிய நிறம் என்ற பொருட்டாகாது, நேரிது என்ற பொருளது. கருங்கை - கருமையாகிய நிறம் என்ற பொருட்டாகாது; கொன்றுவாழும் கை என்ற பொருளது. இங்குச் செம்மை கருமை என்ற நிறப்பண்புகளால் முரணா மல் செம்மை கருமை என்ற சொற்களே முரணுதலின், இத்தொடை சொல்லொடு சொல் முரணும் முரண்தொடை யாம். (யா. க. 38 உ ரை) சொற்சீரடி - ஓரெழுத்தொருமொழி முதலிய சொற்களெல்லாம் தாமே சீர்த்தன்மை பெற ஓசையுற்று முடிந்து நிற்பது. அது 1. புனைந்துரை வகையாற் கூறுமாறுபோல எண்ணொடு கூடி வரும். எ-டு : ‘அவற்றுள், அ இ உ ‘எஒ என்னும் அப்பா லைந்தும்’ (தொ. எ. 3) என்பது எண்ணொடு புணர்ந்தது. 2. தூக்குப்பட அறுக்கப்படும் முழுஅடி ஆகாமல் குறைவான சீர்களையுடைய அடியாக வரும். எ-டு : ‘கறையணி மிடற்றினவை கண்ணணி நுதலினவை பிறையணி சடையினவை’ என, இரு சீரடியாக வந்தவாறு. 3. வேறோர் அசையொடு கூடாது ஒழிந்து நிற்பதோர் இயலசையாகி வரும். (ஒழியசை) எ-டு : ‘ஒரூஉக் கொடியியல் நல்லார் குரல்நாற்றத் துற்ற’ (கலி. 88) ‘ஒரூஉ’ என்ற இயலசை சொற்சீரடியாக வந்தது. 4. இயலசை தனித்து வாராது அதனொடு பல அசை புணர்க்கப்பட்டு வரும். (வழியசை) எ-டு : எனவாங்கு, ஆங்கொருசார்; (இவை ஒரு சீரடி) ‘நொந்து, நகுவன போல நந்தின கொம்பு’ ‘இனைந்துள்ளி, உகுவது போலுமென் நெஞ்சு’ ‘தொகுபுடன், ஆடுவ போலும் மயில்’ (கலி. 33) இவை நாற்சீரடியான் வந்தனவும் முச்சீரடியான் வந்தனவும் ஆம். ஆகவே, முன் நின்ற நொந்து முதலிய சொற்களும், எனவாங்கு ஆங்கொருசார் என்ற சொற்களும் தனித்து வாராது அவற்றுடன் முன்னின்ற சொற்கள் வழியசையாகப் புணரச் சொற்சீரடி வந்தது. ஒத்தாழிசையிலும் உறழ்கலியிலும் சொற்சீரடி தனிச்சொல் லாய்அல்லது வாராது. சீர் கூனாக்கிக் கூறிய வழியசைகள் சொற்சீரடியுள் அடங்கும். இவை பெரும்பாலும் பரிபா டற்கே உரியன. (தொ. செய். 123. நச்.) த தண்டகம் - வடமொழியில் வரையறை பெற்ற உரைநடை போல அமையும் பாடல். இது நான்கு கட்டளை முதலாக வரும். (வீ. சோ. 141) தம்மொடு தாம் வந்த கட்டளை அடி எதுகை - எ-டு : வானிடு வில்லின் வரவறியா வாய்மையால் கானிலம் தோயாக் கடவுளை - யாநிலம் (நாலடி. கடவுள்.) இவ்வெண்பாயாப்பினுள் இவ்வெதுகை காண்க. (தொ. செய். 93 நச்.) தம்மொடு தாம் வந்த கட்டளைத் தலையாகு எதுகை- எ-டு : ‘மாயோன் மார்பின் ஆரம் போலும் சேயோன் சேர்ந்த வெற்பின் தீ நீர்’ இவ்வாசிரியத்துள் இவ் வெதுகை வந்தவாறு. (தொ. செய். 93 நச்.) தரவின் அளவு - நேரிசை ஒத்தாழிசைக் கலியின் தரவிற்குச் சிறுமை 4 அடி; பெருமை 12 அடி என்ப. மூன்றடியானும் இதன் தரவு வரப்பெறும். சிறுபான்மை தரவு 13 அடியாகவும் வரும். எ-டு : ‘நீரார் செறுவின்’ (கலி. 75) (தொ. செய். 133 நச்.) அம்போதரங்க ஒத்தாழிசைக்கும் வண்ணக ஒத்தாழிசைக்கும் தரவு 6 அடியாம். (யா. க. 82 உரைமேற்.) தரவின் மறு பெயர் - எருத்தம் என்பது. (யா. க. 82 உரை) தரவு அகப்பட்ட மரபினது - அகப்படுதலாவது அகம் புறம் என இரு கூறு செய்தவழி முற்கூற்றினுள் படுதல். முன் - காலமுன். தாழிசை தரவினும் சுருங்கிய முறைமைத்தாய். நாலடி முதல் இரண்டடிவரையில் வரப்பெறும் என்பதாம். (சிறுபான்மை ஐந்தடியான் வரப் பெறும்). (தொ. செய். 134 நச்.) தரவுஇணைக் கொச்சகக் கலிப்பா - தரவு இரண்டாகிச் சுரிதகமின்றி வருவது இயல் தரவிணைக் கொச்சகமாம்; தரவு இரண்டாகிச் சுரிதகம் பெற்று வருவது சுரிதகத் தரவிணைக் கொச்சகமாம். ‘வார்பணிய தாமத்தால்’ என்பது இயல் தரவிணைக் கொச்ச கம். ‘வடிவுடை நெடுமுடி’ என்பது சுரிதகத் தரவிணைக் கொச்சகம். (யா.வி. பக். 330, 331) குமரகுருபரர் அருளிய சிதம்பர செய்யுட் கோவையில், குழைதூங்கு கழைமென்றோள்’ (பாடல். 65) இடையே தனிச்சொல் பெறாமல் இரண்டு தரவு பெற்று, அடுத்துத் தனிச்சொல் பெற்று, இறுதியில் சுரிதகம் பெற்று வந்தமை யால் சுரிதகத் தரவிணைக் கொச்சகமாம். தரவு இன்றாகித் தாழிசை பெறுதல் - இது கொச்சக ஒருபோகின் இலக்கணம். தனக்கு இனமாகிய வண்ணகத்திற்கு ஓதிய தரவு இன்றித் தாழிசையே வருதல். எனவே கொச்சகத்தின் தாழிசைகள், தரவை அடுத்து வரும் தாழிசைகளுக்கு ஓதப்பட்ட இலக்கணத்தில் பிறழ்ந்தும் வரலாம். ஆக, இத்தாழிசைகள் ஒத்து மூன்றாதலும். தரவின் அளவிற் சுருங்கி நான்கும் மூன்றுமாகிய அடிபெறுதலும், ஒருபொருள்மேல் வருதலும், தாழம்பட்ட ஓசையளவாகவே இருத்தலும் என்ற வரையறையுடைய அல்ல. இவை பரணிப் பாட்டாகிய தாழிசை முதலாயின. இப் பரணியுள் வரும் தாழிசையெல்லாம் ஈரடியானே வருதலும், தாழம்பட்ட ஓசையல்லன விராஅய் வருதலும், முடுகி வருதலும் கொள்ளப்படும். இனித் தாழிசை மூன்றடுக்கித் தனியே வரும்வழி ஈரடி முதலிய பலவடியான் வருதலும், பத்தும் பதினொன்றும் பன்னிரண்டுமாகி ஒருபொருள்மேல் வரும் பதிகப்பாட்டு நான்கடியின் ஏறாது வருதலும், அங்ஙனம் வருங்கால் தாழ்ந்த ஓசை பெற்றும் பெறாதும் வருதலும், அவை இருசீர் முதல் எண்சீர் அளவும் வருதலும் கொள்ளப்படும். இவ்வேறுபா டெல்லாம் உடைய எனினும் தாழம்பட்ட ஓசை பெரும் பான்மையாகலின் தாழிசை எனப்பட்டது. தாழிசைப் பேறு விதந்து ஓதவே, ஏனைய உறுப்புக்கள் யாவும் விலக்குண்டன. சிற்றெண் இடையெண் இன்றிப் பேரெண் தனித்து வாராமையின் தாழிசைகளைப் பேரெண் என்று கூறுதல் கூடாது. பல தொடர்ந்து வரின் பஃறாழிசைக் கொச்சகம், சில தொடர்ந்து வரின் சிஃறாழிசைக் கொச்சகம். பரணி என்ற பிரபந்தம் காடு கெழு செல்விக்குப் பரணிநாளில் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவதொரு வழக்குப் பற்றியதாகலின், பாட்டுடைத் தலைவனைப் பற்றி இடையிடையே வரினும் தேவபாணியாம். எ-டு : ‘கன்று குணிலா’ ‘பாம்பு கயிறா’ ‘கொன்றையஞ் சாரல்’ (சிலப். 17) என்ற ஆய்ச்சியர் குரவைப்பாடல்கள் படர்க்கைப் பரவலாய் மூன்றடுக்கியவழி மூன்றடியான் வந்தன. எ-டு : ‘யானைத் தோல் போர்த்து’ ‘வரிவளைக்கை வாளேந்தி’ ‘சங்கமும் சக்கரமும்’ (சிலப். 12) என்ற வேட்டுவரிப்பாடல்கள் முன்னிலைப் பரவலாய் மூன்றடுக்கி நான்கடியான் வந்தன. பதிகப்பாட்டுக்கள் திருவாய்மொழி, திருப்பாட்டு (தேவாரம்), திருவாசகம் போல்வன. இத்தாழிசைகள் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வருதலும், தேவபாணியன்றி யாப்பினுள் வேறுபட்டு வருவனவற்றுள் அங்ஙனம் மூன்றடுக்கி வாராது தொடர்ந்த பொருளாய் நான்கு முதல் பலவும் அடுக்கி வருதலும், தனிச்சொல் பெற்று வருதலும் தாழம்பட்ட ஓசையின்றி மூன்றடுக்கி வருதலும், சுட்டி ஒருவர் பெயர் கொண்டு அவர்களையும் தெய்வம் என்றே பரவலும், அடுக்கிவந்த அடுக்கியலான் முடிதலும், பிறவும் கொள்ளப்படும். எ-டு : ‘சுடரொடு திரிதரும்’ ‘அணிமுடி அமரர்’ ‘துடியொடு சிறுபறை’ (சிலப். 12) என இவை மூன்றடுக்கி முடுகியலாய் வந்த தாழிசைக் கொச்சக ஒருபோகு. எ-டு : ‘என்றிவை சொல்லி அழுவாள்’ ‘அழுதேங்கி நிலத்தின் வீழ்ந் தாயிழையாள்’ ‘மாயங்கொல் மற்றென்கொல்’ ‘என்றாள் எழுந்தாள்’ (சிலப். 19 : 60 - 75) என இவை தொடர்ந்த பொருளாய் நாற்சீர் நான்கடியவாய் நான்கு அடுக்கி வந்தன. எ-டு : ‘சொன்னது, அரசுறை கோயில்’ ‘எனக் கேட்டுப், பொங்கி யெழுந்தாள்’ (சிலப். 18) என இவை தாழிசை இரண்டு தனிச்சொல் பெற்றுத் தனிவந்தன. எ-டு : ‘இளமா எயிற்றி’ ‘முருந்தேர் இளநகையாய்’ ‘கயமல ருண்கணாய்’ (சிலப். 12) இவை தாழிசை ஓசையின்றி அடுக்கி வந்தன. எ-டு : ‘கோவா மலையாரம்’ ‘பொன்னிமயக் கோட்டு’ ‘முந்நீரி னுட்புக்கு’ (சிலப். 17) இவை மூவேந்தரைத் தெய்வம் என்றே பரவின. எ-டு : இனிக் குன்றக் குரவையுள் ‘சீர்கெழு செந்திலும்’ ‘அணிமுகங்க ளோராறும்’ ‘சரவணப்பூம் பள்ளியறை’ ‘இறைவளை நல்லாய்’ ‘ஆய்வளை நல்லாய்’ ‘செறிவளைக்கை நல்லாய்’ ‘நேரிழை நல்லாய்’ ‘வேலனார் வந்து’ ‘கயிலைநன் மலையிறை’ ‘மலைமகள் மகனை’ ‘குறமக ளவளெம’ (சிலப். 24) எனத் தாழிசை பலவும் அடுக்கி வந்து, ‘என்றியாம் பாட’ என அடக்கியல் பொருள் பெற்று முடிந்தவாறு. (தொ. செய். 149 நச்.) சிலப்பதிகாரத்து வரும் தாழிசை வேறுபாடுகளெல்லாம் ‘தரவின்றாகித் தாழிசை பெற்றும்’ என்பதன்கண் அடங்கும். தரவு குட்டம் பெறுதல் - கலிப்பாவின் தரவு முச்சீரான் முடிதலும் அருகிக் காணப் படும். ‘மெல்லிணர்க் கொன்றையும்’ (முல்லைக். 3) ‘மலிதிரை ஊர்ந்து’ (முல்லை. 4) என்பவற்றில் காண்க. (தொல். செய். 116 நச்.) தரவுகொச்சகத்தைக் கலிவிருத்தம் என்றல் - நாற்சீர் நாலடியாக வருதலின், தரவு கொச்சகத்தைக் கலிவிருத்தம் என்றாலும் இழுக்காது என்பர் உரையாசிரியர் பெருந்தேவனார். (வீ. சோ. 118 உரை) தரவு கொச்சகம் - பிற உறுப்புப் பெறாது தரவு மாத்திரம் தனித்து வருவது. இதனை இயல் தரவுகொச்சகம் என்பர். இது தனிச்சொல் பெற்றுச் சுரிதகத்தால் முடிவது. சுரிதகத் தரவுகொச்சகமாம். எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன்’ ‘வெறிகொண் டலரும் பொழிலார் சிமையம்’ இவை இயல் தரவுகொச்சகக் கலிப்பா. ‘குடநிலைத் தண்புறவில்’ இது சுரிதகத் தரவுகொச்சகக் கலிப்பா. (யா. க. 86 உரை) (பக். 329, 330) தரவு தாழிசை - முதலுறுப்பு, துணையுறுப்பு எனப்பட்டவற்றுள் தரவு தாழிசை என்னும் இரண்டும் கலிப்பாவின் முதல் உறுப்புக்கள். (தொ. வி. 228) தரவு தாழிசை: சிறுமை பெருமை எல்லை - அகநிலை ஒத்தாழிசைக் கலியிற் முதற் கூறாகிய தரவு 4 அடிச் சிறுமையும் 12 அடிப் பெருமையும் உடையது; சிறுபான்மை 13 அடியாகவும் வரும். எ-டு : ‘நீரார் செறுவின்’ (கலி. 75) என்ற கலியின் தரவு. பன்னிரண்டு அடியின் இகந்தன துள்ளல் ஓசையான் வாரா. தரவைவிடத் தாழிசை சுருங்கி வருதல் பெரும்பான்மை. இதன் தாழிசைக்கு 2 அடி சிறுமை; 6 அடி பெருமை. சிறுபான்மை நான்கடித் தரவுக்கு நான்கடித் தாழிசை வருதலும் உண்டு (கலி. 124). தாழிசை நான்கடியின் பெரும்பாலும் உயர வாரா; சிறுபான்மை ஐந்து அடியானும் வரும். கலி. 137 - இல் 5 அடித் தாழிசை வந்தது. (கலி. 68இல் தரவு 5 அடி உடையது; முதல் தாழிசை 6 அடி உடையதாக வந்துள்ளது. தாழிசை தரவின் மிக்கு வருதலின் இப்பாட்டுக் கொச்சகக் கலி ஆகும்.) தாழிசையை இடை நிலைப்பாட்டு என்றலின், பாட்டு ஓரடியான் வருதல் கூடாது ஆதலின், தாழிசை ஈரடியிற் குறைந்து வருதல் கூடாது. (தொ. செய். 133, 134 பேரா., நச்.) தரவு : பெயர்க்காரணம் - எல்லா உறுப்பின் பொருளையும் தொகுத்துக்கொண்டு தந்து முன் நிற்றலின் தரவாம். (இஃது எடுத்தல் ஓசையாய், தொடர்ந்து வரும் தாழிசையின் ஓசை வேறுபட்டு வரும்.) (யா. க. 82 உரை) தரவும் போக்கும் பாட்டிடை மிடைதல் - தரவும் போக்கும் இடையே பாட்டு மிடைதல். தரவிற்கும் போக்கிற்கும் இடையிலுள்ளன பாட்டாகிப் பயின்று வருதல். தாழம்படாமையின் ‘இடைநிலைப் பாட்டு’ என்னாமலும், துள்ளலும் செப்பலும் என்னும் இருவகைக் கொச்சகமும் ஒருங்கு வாராமையின் ‘கொச்சகம்’ என்று பேர் கொடாம லும் ‘பாட்டு’ என்றார். (தொ. செய். 154 நச்.) தரு - 1. இசைப்பாட்டு வகை (இராமநா. பால. 3) 2. ஒருவகைச் சந்தம். (டு) தலைபோகு மண்டிலம் - இசைப்பாவகை. (சிலப். 6: 35 உரை) (டு) தலையாகு இன்பா - எல்லாப் பாக்களும் தம் சீரானும் தம் தளையானும் வரின், தலையாகு இன்பா எனப்படும் என்பார் மயேச்சுரர். (யா. க. 92 உரை) தலையாகு எதுகை - அடிதோறும் முதலெழுத்து அளவு ஒத்திருப்ப இரண் டாவது முதலிய பலவெழுத்துக்கள் முதற்சீர் முழுதும் ஒன்றி வரத் தொடுப்பது. எ-டு : ‘சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று முனிவாள்’ - சிலைவிலங்கு, முலைவிலங்கிற் - தலையாகு எதுகை. (யா. க. 37 உரை) தலையாகு மோனை - அடிதோறும் முதற்சீரின் முதல்எழுத்து முதல் அச்சீரின் பலஎழுத்துக்கள் ஒன்றிவரத் தொடுப்பது. ‘சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு’ (குறள் 267) (யா. க. 37 உரை) (தலையாகுமோனை தொல்காப்பியனார்க்கு உடன்பா டன்று. தொ. செய். 92 நச்.) தலையாடி - ஒரு செய்யுளில் பிற்பாதி. (டு) ‘தலையாடியிலே சகல விரோதி களையும் நானே போக்கி என்னைத் தருகிறேன் என்று சொன்னதை’ ‘ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி’ என்ற இத் தொடர் ‘ஸர்வ தர்மாந்’ என்ற கீதை சுலோகத்தின் பிற்பாதி எனவே தலையாடி பாட்டின் பிற்பாதி என்னும் பொருளில் ஈட்டு உரையில் வந்துள்ளது. (ஈடு : 7 - 5 - 10) தலையெழுத்து ஒப்பது - முதற்கண் ஓரெழுத்து ஒத்து வரத் தொடுப்பது. நச். முதற்கண் ஓரெழுத்தே வரத் தொடுப்பது. பேரா. இது மோனைத் தொடையின் இலக்கணம். (தொ. செய். 92) தளர் நடை - இது செய்யுள் நடை இரண்டனுள் ஒன்று. தண்டகம் என்ற செய்யுள்வகையின் நடை தளர்நடையாம். (வீ. சோ. 147 உரை) தளை - நின்ற சீரின் ஈற்றசை வருஞ்சீரின் முதலசையோடு ஒன்றியும் ஒன்றாதும் இணையும் இணைப்பே தளை எனப்படும். (யா. க. 17) தளைதட்டல் - வேற்றுத்தளை விரவியதனால், எடுத்துக் கொண்ட செய்யுள் தளை மாறுபடுதல். வெண்பாவுள் ஆசிரியத்தளை விரவுவது போல்வது. தளை தொடை கொள்ளுதற்கு ஒரு கருவி - அடியோடு அடிக்கூட்டத்தில் தளைகொள்ளும்போது வந்த அடியே வரல் வேண்டும்; தொடை கொள்ளுங்காலும் வந்த அடியே வரல் வேண்டும். தேமா தேமா தேமா தேமா - என்ற அடியொடு தொடை கோடற்கு. ‘வாமான் ஏறி வந்தோன் மன்ற’- என முதலடியின் அளவிற்றாகிய அடியே இரண்டாம் அடியாக வந்து தளையும் தொடையும் கொள்ளும். ‘சென்றே எறிப ஒருகால் சிறுபறை நின்றே எறிப பறையினை - நன்றேகாண்’ (நாலடி. 24) என வெண்பாவில் 12 எழுத்தடி அடுத்து 12 எழுத்தடியே வந்தது; தளைவகை சிதையாது தொடைப்பகுதியுட் பட்டது. எனவே, 625 அடியும் தம்முன்னர்த் தாமே வந்து தளையும் தொடையும் வழுப்படாமல் கொள்ளும் என்பது பெறப்படும். (தொ. செய். 34 நச்.) தளை பல விரவின் பெயர் வழங்குமாறு - ஒரு பாவினுள் அதற்குரிமை உடைய தளையொடு வேற்றுத் தளை விரவிவரின், முதற்கண் வந்த தளை பற்றியே அப்பாடல் சுட்டப்படும். எ-டு : ‘நெடுவரைச் சாரல் குறுங்கோட்டுப் பலவின் விண்டுவார் தீஞ்சுளை வீங்குகவுட் கடுவன் உண்டுசிலம் பேறி ஓங்கிய இருங்கழை படிதம் பயிற்றும் என்ப மடியாக் கொலைவில் என்னையர் மலையே’ இப்பாடற்கண், வெண்டளையும் கலித்தளையும் வஞ்சித் தளையும் விரவி வந்தபோதிலும், முதற்கண் வந்த வெண் டளையைச் சுட்டி இப்பாடல் வெண்டளையான் வந்த ஆசிரியப்பா என்றே வழங்கப்பெறும். (யா. க. 532 உரை) தளை மயக்கம் - வெண்பாவினுள், இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் அல்லாப் பிறதளைகள் விரவா. ஏனைய பாக்களிலும் பா இனங்களிலும் வேற்றுத் தளையும் மயங்கி வரப் பெறுதலும் உண்டு. ஏனைய தளைகள் விரவி வரினும் பாக்கள் தம் தளையான் வந்தபொழுதே இன்னியல்பாய் நடக்கும் என்பது. (யா. க. 22 உரை) தளையின் தொகை - வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை, வஞ்சித்தளை எனத் தளையின் தொகை நான்கு. (யா. க. சிறப்புப் பாயிரம் உரை) தளையின் வகை - இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, பொதுச்சீர் வெண்டளை, நேரொன்றாசிரியத்தளை, நிரையொன் றாசிரியத்தளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை எனத் தளைவகை எட்டாம். (யா. க. சிறப்புப். உரை) தளையின் விரி - வகையிற் கூறிய தளை ஒவ்வொன்றற்கும் சிறப்புடைமை சிறப்பின்மை என்றும் இரண்டனையும் இணைத்துக் கணக்கிடச் சிறப்புடைய இயற்சீர் வெண்டளை, சிறப்பில் லாத இயற்சீர் வெண்டளை என்பன முதலாகத் தளையின் விரி 16ஆகும். (யா. க. சிறப்புப். உரை) தளையைத் தொல்காப்பியர் கூறாமை - நின்ற சீரின் ஈற்றசை வருஞ்சீரின் முதலசையொடு தளைக் கப்படுவதே தளை. எழுத்தானாகியது அசை. அசையானா கியது சீர். சீரானாகியது அடி. இரண்டு சீர்களின் இணைப்பே தளை. தளை என்று தனியே ஒன்றனைக் கொண்டால் இரு சீரடியாகிய குறளடி என்பதனைக் கொள்ளாது விடுதல் வேண்டும். சீர் இரண்டு கூடியவழித் தளையெனின், ஈரசை கூடி ஒருசீர் ஆயினவாறு போல, இருசீர் கூடியவழி அவ் விரண்டனையும் ஒன்றென்று கோடல் வேண்டும். கொள் ளவே, நாற்சீரடி என நான்கு சீர்களை முன்னிருசீர்களும் ஒருதளை, பின்னிருசீர்களும் ஒருதளை என்று கொள்வதன்றி, சீர்தோறும் கண்டம்படத் துணித்துக் கொள்வது இயலா தாகிவிடும். ஆகவே, சீர்களான் அடி வகுக்கப்படுதலின், இடையே தளை என்ற உறுப்பு வேண்டப்படுவதன்று. தொல்காப்பியருக்கு இணைக்காலத்துக் காக்கைபாடினியா ரும் தளையைக் கொண்டிலர். (பேரா.) தளையாவது சீரினது தொழிலாய்ப் பாக்களின் ஓசையைத் தட்டு இருசீர் இணைந்ததாகும். அவ்வாறு இணைந்த இருசீரினையும் ஆசிரியர் எல்லாரும் இருசீர்க்குறளடி என அடியாகவே வகுத்துக் கொண்டார். ஆதலின் தளை என வேறோர் உறுப்பு இன்றாம். மேலும் தளையான் அடி வகுப்பது உண்டாயின், தளையை ஓர் உறுப்பாகக் கொள்ள லாம்; அங்ஙனம் யாரும் வகுத்துக் கொள்ளாமையின், சீரது தொழிலாய் ஓசையைத் தட்டு நிற்பது ஒன்றே தளை என்று கொண்டனர். அதனை உறுப்பு எனின், சீரான் அடிவகுத்தல் குற்றமாம். தொல்காப்பியனாரோடு ஒருசாலை மாணாக்க ராகிய காக்கைபாடினியாரும் அதனை உறுப்பு என்னார். எனவே, தளையைச் செய்யுளுறுப்பாகக் கோடல் தொல் காப்பியனார் கருத்து அன்று (நச்.) (தொ. செய். 1) தளைவகை ஏழு - நேரொன்றாசிரியத் தளை, நிரை ஒன்றாசிரியத்தளை, இயற் சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்பன. (யா. க. 17 உரை) தற்சுட்டு - தனிக்குறில் நேரசையாக வரும் ஐந்து இடங்களுள் ஒன்று தன்னையே கருதிக் கூறும் இடம் எ-டு: ‘அஉ அறியா அறிவில் இடைமகனே’ இவ்வெண்பா அடியுள், அ உ என்பன எழுத்துக்களைச் சுட்டியமையால் தற்சுட்டின்கண் வந்தவாறு. அ என்னும் எழுத்தையும் உ என்னும் எழுத்தையும் அறியாத என்றவாறு. இவ்வாறு தனிக்குறில் தற்சுட்டாக அமைந்தமையின் விட்டிசைத்தவழி. ‘அ உ’ என்பது நேர்நேர் எனச் சீராயிற்று. (யா. க. 72 உரை) அகரம் சிவபெருமானையும் உகரம் உமாதேவியையும் உணர்த்தும் எனவும், அகரமும் உகரமும் 8+2- பத்தாகிப் பக்தியை உணர்த்தும் எனவும் கூறினும் இவை எழுத்தாம் தன்மையின் நின்றே குறிப்பான் பொருள் கொள்ளப் பட்டமை அறிக. தன்னொடு தான் கட்டளை அடிமோனை - எ-டு : ‘கான மஞ்ஞை ஈன்ற முட்டை காத லின்றி வீசு மந்தி’ (தொ. செய். 92 நச்.) தன்னொடு பிற அடி தொடுத்த கட்டளை அடிமோனை- எ-டு : ‘கோதை மார்பிற் கோதை யானும் கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்” (புறநா. 48) முதலடி கட்டளையடி; ஏனையது சீர்வகை யடி. (தொ. செய். 92 நச்.) தனிஅசை - நேரசைக்கு ஒரு பெயர். (யா. வி. பக். 48) 