தமிழ் இலக்கணப் பேரகராதி பொருள் அணி = 1 ஆசிரியர் பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் தமிழ்மண் பதிக்கம் TamilÆ Ilakkan|ap Pe#rakara#ti (A Tamil Grammatical Encyclopaedia) Porul@ - An|i - 1 by T.V. Gopal Iyer Pandit of the Pondicherry Centre of the École Française d’Extrême-Orient (French School of Asian Studies) Published by the TamilÆ Man| Pathippakam, Chennai 2005. Pages: 32+320 = 352 Price: 330/- முன்னுரை 1979ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் தமிழ் இலக்கணப் பேரகராதி ஒன்றனைத் தொகுத்து உருவாக்கும் பணியில் புதுச் சேரியில் உள்ள தொலைக் கீழைப் பிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளியில் அமர்த்தப்பட்டேன். இடையிடையே பணிக்கப்பட்ட ஏனைய பணி களுக்கு இடையிலும் அகராதிப் பணியைத் தொடர்ந்து 1995இல் ஓரளவு அதனை நிறைவு செய்தேன். இப் பணியில் எனக்கு உதவி செய்ய அமர்த்தப்பட்ட நாராயணசாமி ஐயர், குமாரசாமிப் பிள்ளை, அப்பாசாமி முதலியோர் பணியிலிருந்து இடையிடையே விடுவிக்கப் பட இப்பணியில் எனக்கு இறுதிவரை என் இளவல் கங்காதரனே உதவும் நிலை ஏற்பட்டது. இப்பணிக்குத் தொல்காப்பியத்தின் பழைய உரைகள் முதல் அண்மையில் வெளிவந்த பாவலரேறு பாலசுந்தரனாரின் தென்மொழி இலக்கணம் முடிய உள்ள பல நூல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டினவாக வேங்கடராசுலு ரெட்டியாரின் எழுத்ததிகார ஆராய்ச்சி, இலக்கணக் கட்டுரைகள், சுப்பிரமணிய சாத்திரியாரின் எழுத்ததிகாரச் சொல் லதிகாரச் குறிப்புக்கள், பாலசுந்தரனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி காண்டிகையுரை போன்ற சில நூல்களே மேற்கோள்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டில் வெளிவந்த இலக்கணம் பற்றிய கட்டுரைகள் பல இருப்பினும் அவையெல்லாம் இவ்வகராதி யில் இடம் பெறவில்லை. இவ்வகராதி பல தொகுதிகளாகப் பல தலைப்புப் பற்றிப் பிரித்துக் கூறப்பட்டிருத்தலின், எல்லா இலக்கண வகைகளுக்கும் பொதுவான சொற்கள் எங்கு இடம் பெற்றுள்ளன என்பதனை அறிதலில் சிறு சிக்கல் ஏற்படும். எடுத்துக்காட்டாக ‘வழக்கு’ என்ற சொல் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் முதற்கண் வருவதால் அச்சொல் பாயிரம் பற்றிய பகுதியில் விளக்கப்பட்டிருக்கும். தலைப்புக் களின் அகராதி அமைக்கப்பட்டபின் அத்தகைய சொற்களின் இருப்பிடம் அறிதல் எளிதாகும். இவ்வகராதிப் பணியில் இறுதி மெய்ப்புத் திருத்துதல் முதலிய வற்றில் என் இளவல் கங்காதரனே முழுமையாக ஈடுபட்ட போதி லும், என் தம்பி திருத்துவதற்கு முன்னரே மெய்ப்புக்கள் திருத்தத்தில் ஈடுபட்டுச் செயற்பட்ட சான்றோர் அனைவரையும் நன்றியொடு நோக்குகின்றேன். 17 தொகுதிகளாக அமையும் இந்த நூலினை அமைப்பதற்கு எனக்கு என் தம்பி வலக்கையாக உதவுவது போலவே, இந்நூலைப் பதிப்பிக்கும் இளவழகனாருக்கு உதவிய பதிப்பக உதவியாளர்கள் செல்வன் செ. சரவணன், செல்வன் இ. இனியன், செல்வன் மு. கலையரசன், அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.நா. இராமசுப்பிரமணிய இராசா, நா. வெங்கடேசன், இல. தர்மராசு ஆகியோர் இந்நூல் செம்மையாக வெளிவரப் பெரிதும் முயன்றுள்ள செயலைப் போற்றுகிறேன். இவர்கள் நோய்நொடி இன்றிப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இந்நூலை வெளியிட உதவிய எங்கள் தொலைக் கீழைப் பிரஞ்சு ஆராய்ச்சிப்பள்ளி நிறுவனத்தாருக்கு நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன். தொகுதிகள் 17 : எழுத்து - 2, சொல் - 4 , பொருள் - 11 (அகம் - 4, புறம் - 1, அணி - 2, யாப்பு - 2, பாட்டியல், பாயிரம், மரபியல் - 1, மெய்ப்பாடு, நாடகம், அளவை, நியாயம் ஏனைய - 1) தி.வே. கோபாலையர் முகவுரை எழுத்ததிகார இலக்கணப் பேரகராதியில், தொல்காப்பியம் முதலாக இன்று நம்மிடையே வாழ்ந்து வரும் இலக்கண இலக்கிய மொழியியல் பேரறிஞராம் ச.பாலசுந்தரனார் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றிய ‘தென்னூல்’ முடிய, இன்று நமக்குக் கிட்டுவனவாக நிலவி வரும் சிறந்த இலக்கண நூல் வரிசையில் இடம்பெறும் நூல்களும் உரைகளும் இடம் பெறுகின்றன. இக்காலத்தில் தொல்காப்பியக் கடல் என்று போற்றப்படும் அந்நூல் இயற்றப்பட்ட காலத்தே அது சிறுநூலாகவே யாக்கப் பெற்றது. அதன் எழுத்துப் படலத்தில் உள்ள 9 இயல்களிலும் விதிக் கப்படுவன எல்லாம் கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவற்றுள் கருவி நூல்மரபு முதலிய நான்கு ஓத்தும், செய்கை தொகைமரபு முதலிய எஞ்சிய ஐந்து ஓத்தும் ஆம். கருவிதானும் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. முதல் மூன்று ஓத்தும் பொதுக்கருவி; செய்கை ஒன்றற்கேயுரிய புணரியல் சிறப்புக் கருவி. நூல்மரபு, நூலினது மரபு பற்றிய பெயர்களாகிய எழுத்து - குறில் - நெடில் - உயிர் - மெய் - மெய்யின் வகைகள் - எழுத்துக்களின் மாத்திரை - இன்ன மெய்க்கு இன்னமெய் நட்பெழுத்து, பகை யெழுத்து என்பதனைக் குறிக்கும் மெய்ம்மயக்கம் - மெய்யெழுத் துக்கள், எகர ஒகர உயிர்கள், குற்றியலிகரம், குற்றியலுகரம் என்னு மிவை புள்ளிபெறுதல் - மகரக் குறுக்கம் உட்பெறு புள்ளியும் கோடல் - சுட்டு - வினா - அளபெடை - என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. அடுத்து, மொழிமரபு கூறும் விதிகள் நூல்மரபின் ஒழிபாக அமைந்துள்ளன. இதன்கண் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், அளபெடை, மொழியாக்கம், ஈரொற்றுடனிலை, மகரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம், போலியெழுத்துக்கள், மொழி முதலில் வரும் எழுத்துக்கள், மொழியீற்றில் வரும் எழுத்துக்கள் - என்பன இடம் பெறுகின்றன. பிறப்பியல், உயிர் - மெய் - சார்பெழுத்துக்கள் என்பவற்றின் பிறப்பிடங்களும் முயற்சியும் பற்றி மொழிகிறது. புணரியலில், எல்லாமொழிகளின் இறுதியும் முதலும் மெய் உயிர் என்ற இரண்டனுள் அடங்கும்; பெயரும் தொழிலும் என்றோ தொழிலும் பெயரும் என்றோ பெரும்பான்மையும் சொற்கள் புணருமிடத்து இயல்பாகவும் திரிந்தும் புணரும்; புணர்வன நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் ஆகிய இரண்டுமே; சொற்கள் வேற்றுமைப்பொருள் பற்றியும் அல் வழிப்பொருள் பற்றியும் புணரும்; இடையே சாரியை வரப்பெறும்; சில சாரியைகள் உருத்திரிந்தும் புணரும்; எழுத்துச்சாரியைகள் இவை, உடம்படுமெய் இவை - என இச்செய்திகளைக் காணலாம். தொகைமரபு என்னும் ஐந்தாம் ஓத்தின்கண், உயிரீறும் புள்ளியீறும் உயிர்மயங்கியலுள்ளும் புள்ளி மயங்கியலுள்ளும் ஈறுகள்தோறும் விரித்து முடிப்பனவற்றை ஒரோவொரு சூத்திரத் தால் தொகுத்து முடிபு கூறப்படுவனவும், உயர்திணைப்பெயர்ப் புணர்ச்சியும் விரவுப்பெயர்ப் புணர்ச்சியும் இரண்டாம் மூன்றாம் வேற்றுமையுருபு ஏற்ற பெயர்ப்புணர்ச்சியும், சில இடைச்சொற் களது முடிபும், எண் நிறை அளவுப் பெயருள் சிலவற்றது புணர்ச்சி யும் கூறப்பட்டுள. உருபியல், உருபேற்ற பெயர் சாரியை பெற்றும் பெறாமலும் ஒரோவழி நெடுமுதல் குறுகியும் வருமொழியொடு புணருமாறு கூறுகிறது. உயிர்மயங்கியலிலும் புள்ளிமயங்கியலிலும் அல்வழிப் புணர்ச்சி பெரும்பாலும் எழுவாய்த்தொடர்க்கே கொள்ளப்படு கிறது. வேற்றுமைப்புணர்ச்சி வேற்றுமையுருபுகள் தொக்க வேற் றுமைப் புணர்ச்சிக்கே கொள்ளப்படுகிறது. இப்புணர்ச்சிகள் பொதுவாகக் கூறப்பட்டாலும், ஆசிரியர் உயர்திணைப்பெயர் - விரவுப்பெயர் - கிளைப்பெயர் - நாட்பெயர் - திங்கட் பெயர் - எண் நிறை அளவுப் பெயர் - என்பனவற்றை விதந்தோதியே முடிக்கும் கருத்தினராதலின், இப்புணர்ச்சிகள் அஃறிணையில், கிளை முதலாகச் சொல்லப்பட்ட அப்பெயர்கள் நீங்கலான ஏனையவற் றிற்கே கோடல் ஆசிரியர் கருத்தாம். ஆசிரியர் ஈரெழுத்தொருமொழி என்று கூறியமை ஈரெழுத்துக் குற்றுகரச் சொல்லைத் தம் மனத்துக் கொண்டமையாலாம். குற்றிய லுகரம் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுக்கும். உயிரள பெடை என்பது நெடிலை அடுத்து வரும் ஒத்த இனக்குற்றெழுத்தே. புணர்ச்சியில் தொல்காப்பியனார் குறிப்பிடும் எழுத்துப்பேறள பெடை பிற்காலத்தே வழக்கு இறந்தது என்று கோடல் தகும். தொல்காப்பியத்தை அடுத்து நாட்டில் சிறப்பாக வழங்கி வந்ததாகக் கருதப்படும் அவிநயம் இராசபவித்திரப் பல்லவதரையன் உரையொடு 13ஆம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்து வந்த செய்தி நன்னூல் மயிலைநாதர் உரையாலேயே பெறப்படுகிறது. அந்நூலும் அதனுரையும் வழக்கிறந்து விட்டன. தொல்காப்பியத்தை அடுத்து இன்று வழக்கில் இருக்கும் ஐந்திலக்கண நூல் பெருந்தேவனார் உரையொடு கூடிய வீர சோழியமே. பல்லவர் காலத்திலே “பாரததேயத்து வழக்கிலிருக்கும் எல்லா மொழிகளுக்கும் தாய் சமற்கிருதமே” என்ற கருத்து மக்க ளிடையே உருவாக, அது 18ஆம் நூற்றாண்டு முடிய உறுதியாகக் கொள்ளப்பட்டு வந்தது. 11 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய வீர சோழியம் இக்கருத்தையுட்கொண்டு இயற்றப்பட்ட இலக்கணமே. வீரசோழியத்தின்கண், உயிரெழுத்துக்களை அடுத்து மெய் யெழுத்துக்களின் முன்னர் நெடுங்கணக்கில் ஆய்தம் இடம் பெற்ற செய்தி கூறப்படுகிறது. மகரக் குறுக்கம் மேலே பெறும் புள்ளியோடு உள்ளேயும் ஒரு புள்ளி பெறும் என்ற நுட்பமான செய்தி இந்நூலின் உரையின்கண்ணேயே காணப்படுகிறது. வடமொழிப் புணர்ச்சியில் அல்வழி, வேற்றுமை என்ற பொருள் பற்றிய பாகுபாடு இல்லை. ஆகவே, வீரசோழியச் சந்திப் படலத்திலும் அல்வழி வேற்றுமைப் பாகுபாடு குறிப்பிடப்பட்டிலது. வருமொழி முதலில் உயிர்வரின் குற்றியலுகரம் கெடும் என்னும் செய்தி இந்நூலிலேயே முதற்கண் குறிப்பிடப்பட, அச்செய்தி நேமிநாதம் நன்னூல் முதலிய பின் னூல்கள் பலவற்றிலும் இடம்பெறலாயிற்று. வடமொழிச்சொற்கள் தமிழொலிக்கேற்பத் திரித்து வழங்கப்படுமாற்றிற்கு இந்நூல் கூறும் விதிகளே நன்னூல் முதலிய பின்னூல்களிலும் கொள்ளப்படலாயின. வடமொழியிலுள்ள ‘ந’ என்ற எதிர்மறை முன்ஒட்டு வருமொழி யோடு இணையுமிடத்து ஏற்படும் திரிபுகளை இந்நூல் இயம்பிட, அதனை நேமிநாதமும் ஏற்றுக்கொள்ள, நன்னூல் அதனை நெகிழ்த்து விட்டது, ளகரத்திற்குக் கூறும் புணர்ச்சிவிதி ழகரத்திற்கும், இந் நூலாசிரியர்க்கு முற்பட்ட இலக்கியங்களில் பின்பற்றப்படவே, இந் நூலாசிரியர் இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் வரைந்துள்ள செய்தி இந்நூலில் புதிதாக இடம் பெறுகிறது. இச்செய்தியை நேமிநாதம் நன்னூல் போன்ற பின்னூல்கள் குறிப்பிடவில்லை. உடம்படுமெய்யை இந்நூலாசிரியர் ‘இ ஈ ஐ வழி யவ்வும், ஏனை உயிர்வழி வவ்வும், ஏ முன் இவ்விருமையும், என்று முதன்முறையாக வரையறுத்துக் கூறியவராவர். “அளபெடை மூன்று மாத்திரை பெறும்; அது நெடிலும் குறிலும் இணைந் தொலிக்கும் ஓரொலியே” என்ற இவரது கொள்கையே, பெரும்பாலும் பின்னூலார் பலராலும் மேற்கொள்ளப்பட்டது. ஏ யா எ - என்பன சொல் முதலில் வினாவாகும் என்ற இவர் கருத்தைப் பிற்காலத்து நூலார் பலரும் ஏற்றுக்கொண்டவராவர். அடுத்து வந்த நேமிநாதமும், நெடுங்கணக்கு வரிசையை , உயிர் - அடுத்து ஆய்தம் - அடுத்து மெய் - என்றே குறிப்பிடுகிறது. இந் நூலுள் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம் என்னும் இவற்றோடு ஒளகாரக் குறுக்கமும் குறிக்கப்பட்டுள்ளது. “உயிரள பெடை நெடிலொடு கூடிய ஓரொலியாம் இனக் குற்றெழுத்து; அது மூன்று மாத்திரை பெறும்” என்று வீரசோழியத்தை ஒட்டி நேமிநாதம் நுவல்கிறது. வடமொழித் தத்திதாந்த நாமங்களும் எதிர் மறை யுணர்த்தும் நகர முன்னொட்டுப் புணர்ச்சியும் வீரசோழி யத்தைப் பின்பற்றியே கூறப்படுகின்றன. வீரசோழியம் விதிக்கும் வடமொழியாக்கம் நேமிநாதத்தில் இல்லை. தொல்காப்பியத்தை அடுத்து மக்கள் உள்ளத்தே சிறப்பாக இடம்பெறுவது பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலே. முத லெழுத்தும் சார்பெழுத்தும் என்ற பாகுபாடு - சார்பெழுத்துப் பத்து என்பது - அவை ஒவ்வொன்றும் பற்றிய செய்திகள் - மொழிக்கு முதலில், இடையில், ஈற்றில் வரும் எழுத்துக்கள் - போலியெழுத் துக்கள் - என்பன எழுத்தியலில் இடம்பெற்றுள. உயிரளபெடை நெட்டெழுத்தின் நீட்டமாகிய மூன்று மாத்திரை, குறில் அறிகுறி யாக வருவதே என்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. பதவியலில், பகுபதம் பகுதி - விகுதி முதலிய உறுப்புக் களாகப் பிரித்துக் காட்டப் பட்டுள்ளது. பகுபத உறுப்புக்கள் விளக்கப்பட்டுள்ளன. பதவியல் நன்னூல் குறிப்பிடும் ஒருமொழிப் புணர்ச்சியாகிய புதுச் செய்தியே. இதன் இறுதியில் வடமொழி ஆக்கம் வீரசோழியத்தைப் பின்பற்றி வரையப்பட்டுள்ளது. ‘ந’ என்ற எதிர்மறை முன்னொட்டுப் பற்றிய செய்தி பேசப்பட்டிலது. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் வரைந்த உரையையும் உட்கொண்டு இயற்றப்பெற்ற நன்னூலில் தொல்காப்பியச் செய்திகள் பலவற்றொடும் அவ்வுரையாசிரியர் குறிப்பிட்ட செய்திகளும் இடம்பெறுகின்றன. தொல்காப்பியம் குறிக்கும் புணரியல் - தொகை மரபு - உயிர்மயங்கியல் - குற்றியலுகரப் புணரியல் - பற்றிய செய்திகள் பலவும் உயிரீற்றுப் புணரியலுள் அடக்கப்பட்டுள்ளன. அல்வழி யாவன இவையென விளக்கப்படுகிறது. உடம்படுமெய், குற்றுகரம் உயிர்வரக் கெடுதல் - போன்றவை வீரசோழியத்தைப் பின்பற்றியனவாம். நன்னூலில் காணப்படும் மாற்றங்கள் ‘மரபு நிலை திரியாது’ அமைந்தன என்ப. தொல்காப்பியத்தினின்று நன்னூல் சற்றே வேறுபட்டுக் கூறுமிடங்கள் பொருள்நிலை திரியாமையால் ‘மரபு நிலை திரியா மாட்சிமை’ யுடையவாய் முதல்நூற்கு மலைவுபடாமல் செல்லும் இயற்கைய ஆதலைச் சிவஞானமுனிவர் தமது பாயிரவிருத்தியுள் விளங்கக் கூறுமாறு ஈண்டுக் கருதல் தகும். இலக்கணவிளக்கம், நன்னூல் தொல்காப்பியத்தொடு மாறு பட்டுக் கூறும் ஒரு சில இடங்களைச் சுட்டி விளக்குகிறது. தனக்கு முற்பட்ட நூல்களில் விளக்கப்படும் வடமொழியாக்கத்தை இவ் விலக்கணநூல் நெகிழ்த்துவிட்டது. இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம் என்பனவற்றில் சில அரிய புணர்ச்சிவிதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அ - அந் - ந - நி - கு - வி - புணரப் புணர்ப்பது வடமொழியில் எதிர்மறையாகும் என்ற செய்தி இலக்கணக்கொத்தில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சிறப் பெழுத்து ஐந்தானும் திரிந்து ஆரியச்சொல் வடசொல்லாகித் தமிழில் வழங்கும் செய்தி இவ்விரண்டு நூல்களிலும் விளக்கப்படு கிறது. இச்செய்தி நன்னூலில் இடம் பெற்றிலது. தொன்னூல் விளக்கம் நன்னூலைப் பெரிதும் பின்பற்றியது; வடமொழியாக்கத்திலும் நன்னூலைப் பின்பற்றியுள்ளது. முத்து வீரியத்தில் தீர்க்கசந்தி முதலியவற்றிற்கு விதிகள் தனித்தனியே கூறப் பட்டுள. கோ + இல் = கோயில், மா + இரு = மாயிரு - முதலிய வற்றிற்குத் தனியே விதிகள் வகுக்கப்பட்டுள. சுவாமிநாதத்தில் குறிப்பிடத்தகும் விசேடமாக ஏதும் இன்று. அதன் ஆசிரிய விருத்த யாப்பு நயனுறுமாறு இல்லை. தொல்காப்பிய எழுத்ததிகாரத்து இளம்பூரணர் உரை - நச்சினார்க்கினியர் உரை - சென்ற நூற்றாண்டு மொழியியல் வித்தகராம் வேங்கடராசுலு ரெட்டியார், பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் இவர்கள்தம் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் - சென்ற நூற்றாண்டிறுதியில் வெளிவந்த பாலசுந்தரனார்தம் தொல்காப்பியக் காண்டிகையுரை - சிவஞான முனிவர் அரசஞ்சண்முகனார் வரைந் துள்ள விருத்தியுரைக் குறிப்புக்கள் என்னுமிவையும், வீரசோழியம் பெருந்தேவனார் உரை - நேமிநாதம் வயிரமேகவிருத்தியுரை - நன்னூல் மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், இராமாநுசக் கவிராயர், சடகோபராமாநுசாச்சாரியார் ஆறுமுகநாவலர் என்றின்னோர்தம் உரைகள் - என்னும் இவையும் ஏனைய மூல நூல்களின் செய்தி களொடு தொகுக்கப்பட்டு இவ்வெழுத்ததிகார இலக்கணப் பேரகராதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்கண் காணப்படும் குற்றம் குறைகளை நல்லறிஞர் பெருமக்கள் உரிய காரணம் சுட்டிக் காட்டுவாராயின், அப்பிழை பாடுகள் அடுத்த பதிப்பில் களையப்படும். அன்ன திருத்தங்கள் நன்றி யறிதலோடு ஏற்கப்படும். தி.வே. கோபாலையர் Eva Wilden École Française d’Extrême-Orient 16&19 Dumas Street, Pondicherry centre Pondicherry. Aug. 2005 Introduction Tamil grammar and poetics are old and venerable disciplines interwoven into a complex system the beginnings of which are lost in legend. What is fact, however, is that we are looking back on a textual tradition representing the thought of almost two millennia: a continuous discourse on Tamil language and literature, but also a dispute with other systems of knowledge, most notably the Sanskrit grammatical and poetological traditions. To give a rough chronology, for the first millennium, we have one great treatise encompassing the whole field and developing the basic structure that is taken up, with some modifications and extensions, by the whole later tradition. This is the famous Tolka#ppiyam, consisting of three parts, two of them devoted to two different aspects of grammar, which has been ever since split into two sections, namely ElÈuttu (phonology) and Col (morphology and syntax), while the third part treats of Porul@ (poetics). It is followed by a small work specialising in a particular field of poetics, namely that of Akam (love poetry), called the IrÈaiyan_a#r Akapporul@. The second millennium, probably a time of socio-cultural upheaval, sets in with a voluminous commentary tradition not only for the treatises that had been written so far, but also for wide parts of the older literature. In fact our understanding of the meaning of the older texts is basically indebted to these commentaries. Nevertheless, there is a parallel development of new treatises in all sub-disciplines, mirroring the confrontation with the change of language, the arising of new literary forms and the massive impact of North-Indian, i.e. Sanskritic modes of thinking and writing in the Tamilian South. To mention just a few of the most important titles, among the inclusive texts – comprising, just as the Tolka#ppiyam, the whole range of the field – there are the heavily Sanskritised Vi#raco#lÈiyam of the 11th century, and the Tamil-conservative Ilakkan|a Vil@akkam of the 17th century. Both of them extend the original structure of three sections, dealing with ElÈuttu (phonology), Col (morphology and syntax), and Porul@ (poetics), by another two subsumed under Porul@, namely Ya#ppu (metrics) and An|i (figures of speech). Among the influential treatises devoted exclusively to grammar we may list the Nan_n_u#l (12th century), the standard book on Tamil grammar after the Tolka#ppiyam, and the Pirayo#ka Vive#kam (17th century), again very Sanskritic. Poetics, for its part, seems to have been an even more fruitful domain, creating a number of branches with various specia-lisations. The first independent text on metrics is the Ya#pparun)-kalakka#rikai (10th century); the most notable exponent of systematic Akam poetics is the Nampi Akapporul@ (12th century), while the Pur_am genre (heroic poetry) is represented by the Pur_apporul@ven|pa#-ma#lai (9th century). The encyclopaedia presented here is an attempt to render accessible this wealth of materials to specialists and also to non-specialists. The vast topology and terminology of Tamil grammar and poetics are represented by key terms which are explained with reference to the corresponding su#tras in the treatises and additional explication from the various commentaries. The whole work comprises 17 volumes, structured in the traditional way into the three sections ElÈuttu (phonology), Col (morphology and syntax) and Porul@ (poetics), where 2 volumes fall on ElÈuttu, 4 on Col, and 11 on the various sub-disciplines subsumed under poetics: 2 for Ya#ppu (metrics), 2 for An|i (figures of speech), 4 for Akam (love topics), 1 for Pur_am (heroic topics), 1 for Pa#t@t@iyal (literary genres), Pa#yiram (prefaces) and Marapiyal (word usage), and finally 1 for Meyppa#t@u (physical manifestation), Na#t@akam (drama), Al@avai (valid means of knowledge), A#nantakkur|r|am (collocations to be avoided), Niya#yam (logic) and ValÈuvamaiti (poetic licence). The last of these volumes contains a bibliography. This sort of work of synthesis has long been a desideratum of research: it gives erudite references to a vast range of technical Tamil texts which are, for the most part, not well understood today. Some of the texts are hard to come by – unless in the editions of the author of this encyclopaedia (on whom more below) – most of them are not translated into any other language, general introductions into the field are few, and even fewer are written in languages more easily accessible to the general reader (like English or French). There has been more than one project comparable in range in recent years, most prominently the Encyclopaedia of Tamil literature of the Institute of Asian Studies, Chennai (in English language), but sadly this opus has not yet seen more than 3 volumes, the last one already nine years old and reaching only the letter “ai”. All the more reason for scholars interested in Tamil language and literature to be grateful to the author of the present work, the venerable T.V. Gopal Iyer, with his 80 years one of the last living exponents of a great tradition of exegesis. Space permits here no more than a brief account of the highlights of a long and in many respects exemplary career of a Tamil savant in the 20th century. As well as following a traditional path of education, the worldly marks of which are his two titles Vidvan and Panditam conferred by the University of Madras and the Maturai Tamil Cankam respectively (in 1945 and 1953), Gopal Iyer also acquired the “modern” university degrees of Bachelor of Oriental Language and Bachelor of Oriental Language with Honours at the University of Madras (1951 and 1958). From 1965-1978 he taught in Rajah’s College, Thiruvaiyaru, in which period he already took up his activity of editing works of Classical Tamil, especially theoretical texts. The most important publications from that phase are the Ilakkan|a Vil@akkam in 8 volumes (published in Thanjavur by the Sarasvati Mahal from 1971-1974), the Ilakkan|ak Kottu (Sarasvati Mahal 1973) and the Pirayoka Vivekam (Sarasvati Mahal 1973). Ever since 1978, Mr. Gopal Iyer’s sphere of activity has shifted to Pondicherry, where he has been (and still is) employed as a research scholar by the École Française d’Extrême-Orient (EFEO) – i.e., the French School of Asian Studies –, a research institution financed by the French government which has 17 research centres spread across Asia, the westernmost of which is that in Pondicherry, and which has the mission of studying Asian (and notably Indian) languages, cultures and religions. In this environment, designed as a meeting place for international research, the enormous preparatory work for this encyclopedia has been accomplished. Part of the voluminous editorial output of Mr. Gopal Iyer during the last 27 years has appeared in a series co-published by the EFEO and the IFP (the French Institute of Pondicherry, another research Institution of the French government in whose premises T.V. Gopal Iyer worked for several years), such as a 3-volume edition of the Te#va#ram, his major contribution to devotional Tamil literature (1984f., 1991), and the Ma#ran_ Akapporul@ (2005). A number of further publications deserve mention, since they concern fundamental texts of the Tamil grammatical and poetological tradition upon which the encyclopaedia is based. Last year he published a 14-volume edition of the complete Tolka#ppiyam with all the commentaries (through Thiru. G. Ela-vazhagan of TamizhMann Pathippagam, Chennai - 17) and this year editions of the Vi#raco#l@iyam and the Ma#r_an_ Alan)ka#ram. The EFEO is extremely happy that it has been able to contribute its share to this publication of vital importance for the exploration of Tamil literary history, which will be a monument to a most extraordinary man, who has been teacher and adviser, nay, a living encyclopaedia, to so many students of Tamil language, Indian and Western. A final brief note of thanks to three individuals who were important in bringing this large work to the light of day. The first is Mr. T.V. Gopal Iyer’s younger brother, Mr. T.S. Gangadharan, then of the French Institute of Pondicherry and now of the Pondi-cherry Centre of the EFEO, who wrote the work out in a fair hand. The second is Dr. Jean-Luc Chevillard, who, years later, had the encyclopeadia digitally photographed when in its yet more voluminous hand-written state and so by his timely intervention prevented the loss of some of its parts. The third is the publisher, Mr. Ela-vazhagan, of the Thamizh Mann Pathippagam, who had the vision to see the value of this work and took on the task of setting it in type, a labour which took a year and a half and involved five sets of proofs. ஈவா வில்டன் பிரஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி 16&19 டுமாஸ் தெரு புதுச்சேரி மையம் பாண்டிச்சேரி, ஆகஸ்டு 2005. அறிமுகவுரை தமிழ் இலக்கணம் மிகு தொன்மை வாய்ந்தது; பெரு மதிப்பிற் குரியது; தன் கூறுபாடுகள் பிணைந்து நுட்பமான பேரமைப்பாக உருவாகியுள்ள இவற்றின் தொடக்கக் காலம் எளிதில் வரையறுக்க முடியாத பழங்காலமாகும். தமிழ் மொழி பற்றியும் இலக்கியம் பற்றியும் 2000 ஆண்டுகளாக இடையறாது தொடர்ந்து வந்துள்ள சிந்தனைகளை நாம் இன்று நமக்குக் கிட்டியுள்ள நூல்களிலிருந்து காண்கிறோம். அச்சிந்தனைகள் பிறமொழிகளின் (குறிப்பாக வட மொழியின்) இலக்கண இலக்கியங்களோடு உறழ்ந்து வந்துள்ளதை யும் காண்கிறோம். தோராயமாகச் சொன்னால் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழிலக்கியத்திற்கு முழுமையான அடிப்படையாக அமைந்துள்ள ஒரே பெரும் பேரிலக்கணம் தொல்காப்பியம் ஆகும். (அஃது அவ்வப்பொழுது சிற்சில மாற்றங்களுடனும் விரிவாக்கங் களுடனும் அவ்வாயிரம் ஆண்டுக்கால இலக்கியத்துக்குமே அடிப் படையாக அமைந்தது.) அந்த ஒரே இலக்கணம்தான் புகழ்மிகு தொல்காப்பியம். அஃது மூன்று அதிகாரங்கள் கொண்டது: எழுத்து (ஞாடிnடிடடிபல) சொல் (ஆடிசயீhடிடடிபல யனே ளுலவேயஒ) பொருள் (ஞடிநவiஉள). சில காலம் கழித்துப் பொருள்இலக்கணத்தின் ஒரு பகுதியான அகம் பற்றி இறையனார் அகப்பொருள் என்னும் சிறுநூல் ஒன்று தோன்றியது. கி.பி. 1000-க்குப் பின்னர் தமிழகத்தில் சமுதாய - கலாசார மாற்றங்கள் விரைவுபெற்றன. அக்காலகட்டத்தில் தோன்றியதே விரிவாக உரையெழுதும் முறையாகும். இலக்கண நூல்களுக்கு மட்டு மன்றி, பழைய தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலனவற்றுக்கும் இவ்வாறு உரைகள் தோன்றின. அப்பழநூல்களின் பொருளைத் தெரிந்துகொள்ளப் பெருமளவுக்கு அவ்வுரைகளையே நாம் சார்ந் துள்ளோம். எனினும் அக்காலகட்டத்தில் தமிழ் இலக்கணத்தின் உட்பிரிவுகள் பற்றிப் புது நூல்களும் தோன்றலாயின. மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிய செய்யுள் வடிவங்களின் தோற்றம், தமிழின்மீது வடநாட்டு அஃதாவது சமற்கிருதம் சார்ந்த சிந்தனை எழுத்து ஆகியவற்றின் தாக்கம் இவற்றைக் காட்டுவனவாக அப்புது நூல்கள் தோன்றின. முதன்மையான சிலவற்றைக் காண்போம். தொல் காப்பியம் போல் எழுத்து, சொல், பொருள் மூன்றையும் பற்றி எழுதப்பட்டவை வீரசோழியமும் (மிகுந்த சமற்கிருதச் சார்புடையது; 11ஆம் நூற்றாண்டு) இலக்கண விளக்கமும் (தமிழ் இலக்கணத் தொல் மரபுகளைக் கடைப்பிடித்தது; 17ஆம் நூற்றாண்டு) ஆகும். இந்நூல்கள் பொருளை யாப்பு (ஆநவசiஉள) அணி (குபைரசநள டிக ளுயீநநஉh) என்று மேலும் இரு பிரிவுகளாக ஆக்கியுள்ளன. எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்தனவற்றுள் மிகுதியும் பயிலப்பட்டவை 12ஆம் நூற்றாண்டு நன்னூலும் (தொல்காப்பியத்துக்குப் பின் தமிழுக்கு இலக்கணம் என்றாலே நன்னூல் தான் என்பதே நிலைமை) 17 ஆம் நூற்றாண்டுப் பிரயோக விவேகமும் (மிகுதியும் சமற்கிருதச் சார்புடையது) ஆகும். பொருளின் பிரிவுகள் பற்றியும் உட் பிரிவுகள் பற்றியும் எழுந்த புது இலக்கணங்கள் மிகப்பல. யாப்பு பற்றித் தனியாக எழுந்த முதல் இலக்கணம் யாப்பருங்கலக் காரிகை (10ஆம் நூற்றாண்டு); அகம் பற்றி விரிவாக எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க நூல் நம்பி அகப்பொருள் (12ஆம் நூற்றாண்டு); புறம் பற்றியது புறப்பொருள் வெண்பாமாலை (9ஆம் நூற்றாண்டு). இந்த தமிழ் இலக்கணப் பேரகராதி மேற்சொன்ன இலக்கணச் செல்வங்களைத் தமிழ் வல்லுநர்களுக்கும் பிறருக்கும் - ஒரு சேரத் தொகுத்துத் தரும் சிறந்த நூல். தமிழ் இலக் கணத்தின் (பொருளியல் உட்பட) மிக விரிந்த பரப்பில் கண்ட அனைத்து முக்கியமான தலைப்பு ஒவ்வொன்றும் அகர வரிசைப்படி, உரிய நூற்பாக்களும், பல்வேறு உரைகாரர்கள் கூற்றுக்களும் தரப்பட்டுத் தெளிவாக விளக்கப்படுகின்றது. எழுத்துக்கு 2, சொல்லுக்கு 4, பொருளுக்கு 11 ஆக 17 தொகுதிகள் கொண்டது இவ் வகராதி. (பொருள் பற்றிய 11 தொகுதிகளின் வகைப்பாடு: அகம் - 4, புறம் - 1, யாப்பு - 2; அணி - 2; பாட்டியல், பாயிரம், மரபியல் - 1; மெய்ப்பாடு, நாடகம், அளவை, ஆனந்தக் குற்றம், நியாயம், வழுவமைதி ஆகியவை - 1, என்பனவாகும்) இறுதித் தொகுதில் கருவி நூற்பட்டியலும் உள்ளது. பொருள்களைத் தெள்ளிதின் உணர்ந்து முறைப்படி விளக்கும் இத்தகைய பேரகராதியின் இன்றியமையாத் தேவை நெடுநாளாக ஆய்வுலகத்தால் உணரப்பட்டுவந்ததாகும். மிக விரிந்த இவ் விலக் கணநூல்களும் உரைகளும் திட்ப நுட்பமான நடையிலமைந்தவை யாகையால் இன்று எளிதில் படித்துணரத்தக்கவை அல்ல. அவற்றில் காணத்தகும் இலக்கணச் செல்வங்களுக் கெல்லாம் புலமை சான்ற விளக்கங்களை இங்குக் காணலாம். இவ்விலக்கண நூல்கள், உரைகளிற் சிலவற்றின் அச்சுப்படிகள் கூட எளிதில் கிட்டுவதில்லை (கிட்டினும் அவையும் இவ்வகராதி யாசிரியர் அச்சிட்டவையாகவே இருக்கும்; அவரைப் பற்றி மேலும் சில பின்னர்). அவ்வரிய இலக்கண நூல்கள் பிறமொழிகளில் பெயர்க்கப்படாதவை; இவற்றைப் பற்றிய பொதுவான விளக்க நூல்களும் சிலவே - அதுவும் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழி களில் வந்துள்ளவை ஒன்றிரண்டேயாகும். அண்மைக் காலங்களில் இவை போன்ற விரிவான நூல்கள் வெளியிடும் திட்டங்கள் சில வற்றுள் சென்னை ஆசியவியல் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிடத் தொடங்கிய “தமிழ் இலக்கியக் களஞ்சியமும்” ஒன்று. அக்களஞ்சி யத்தில் மூன்று மடலங்களே (ஐ முடிய) வெளிவந்த நிலையில், கடந்த ஒன்பதாண்டுகளாகப் பணி முட்டுப்பட்டு நிற்கிறது என்பது நினைக்கத்தக்கது. இந்நிலையில் தமிழ் இலக்கண நூல்களிலும் உரைகளிலும் ஊறிய பேரறிஞர்களில் இன்று நம்மோடு உள்ள மிகச் சிலரில் ஒருவரான, 80 வயது நிறைந்த வணக்கத்துக்குரிய தி.வே. கோபாலையரின் படைப்பான இப் பேரகராதி தமிழ் இலக்கண, இலக்கிய அறிஞர்கள் அவர்பால் நன்றி பாராட்டுதற்குரிய ஒன்றாகும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் பல்வகையிலும் போற்றத்தக்கவருள் ஒருவரான இவ்வாசிரியரின் நெடிய தமிழ்ப்பணி குறித்து மிகச் சிறிய அளவிலேயே ஈண்டுக் கூற இயலும். பாரம்-பரியமான தமிழ்ப் புலமை மரபில் அவர் பெற்ற தகுதிகள் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் (1945); மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதம் (1953) ஆகியவை; அத்தோடு “நவீன”ப் பல்கலைக் கழகப் பட்டங் களாகச் சென்னைப் பல்கலை கழகத்தில் 1951இல் பி.ஓ.எல் பட்டமும், 1958இல் பி.ஓ.எல் (ஆனர்சு) பட்டமும் பெற்றுள்ளார். 1965 - 1978இல் அவர் திருவையாறு அரசர் கல்லூரியில் ஆசிரியப்பணி ஆற்றினார். அப்பொழுதே பதிப்புப் பணியை, குறிப்பாக பழந்தமிழ் இலக்கண உரைநூல்களைப் பதிப்பிக்கும் பணியைத் தொடங்கினார். அக்கால கட்டத்தில் அவர் பதிப்பித்தவை இலக்கண விளக்கம் 8 தொகுதிகள் (தஞ்சை சரசுவதி மகால் 1971-74), இலக்கணக் கொத்து (தஞ்சை சரசுவதி மகால் 1973), பிரயோக விவேகம் (தஞ்சை சரசுவதி மகால் 1973) ஆகியவையாம். 1978இலிருந்து திரு கோபாலையர் அவர்களுடைய அறி வாற்றலைப் பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி (விஉடிடந குசயnளீயளைந ன’நுஒவசஷீஅந-டீசநைவே ) பயன்படுத்தி வருகிறது. அவர் இன்று ஆய்வுப் பணி செய்யும் அந்நிறுவனம் பிரான்சு நாட்டு அரசு நிதி உதவியுடன் நடைபெறுகிறது. அவ் வமைப்பிற்கு ஆசிய நாடுகளில் மொத்தம் 17 ஆய்வுமையங்கள் உள்ளன. பாண்டிச்சேரி மையம் உட்பட. இவை ஆசிய (குறிப்பாக) இந்திய மொழிகள், பண்பாடுகள், சமயங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்கின்றன. பன்னாட்டு ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து அறிவுப் பணி செய்யும் இச் சூழல் கொண்ட பாண்டிச்சேரி மையத்தில்தான் இவ்விலக்கணக் களஞ்சியம் தொகுக்கும் மாபெரும் பணி நடந்தது. கடந்த 27 ஆண்டுகளில் திரு கோபாலையர் படைத்த பற்பல நூல்களையும் பாண்டிச்சேரியி லுள்ள பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளியும், பிரான்சு நாட்டு அரசின் மற்றொரு கீழைக் கலை ஆய்வு நிறுவனமான பிரெஞ்சு நிறுவனமும் (குசநnஉh ஐளேவவைரவந) வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியான அவர் நூல்களில் குறிப்பிடத்தக்கவை தமிழ்ப் பக்தி இலக்கியம் சார்ந்த தேவாரம் (3 தொகுதிகள் 1984 முதல் 1991 வரை), மாறன் அகப் பொருள் (2005) ஆகியவை. இப்பேரகராதிக்கு அடிப்படையாக அமைந்தவையும் கோபாலையர் பதிப்பித்தவையுமான வேறு சில நூல்களையும் குறிப்பிட்டாகவேண்டும்; அவை (திரு. கோ. இளவழகன், தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17 மூலமாக) அவர் 2004இல் பதிப்பித்த தொல்காப்பியமும் (உரைகளுடன் 14 தொகுதிகள்) 2005இல் அவர் பதிப்பித்துள்ள வீரசோழியமும் மாறன் அலங்காரமும் ஆகும். தமிழ் இலக்கிய இலக்கண வரலாற்றை ஆய்வு செய்திட இன்றி யமையாத கருவி இப் பேரகராதி. இந்திய மற்றும் மேல்நாட்டுத் தமிழ் ஆய்வாளர்கள் பலருக்கு ஆசானாகவும் அறிவுரையாள ராகவும், ஏன் நடமாடும் கலைக்களஞ்சியமாகவும் அமைந்த அபூர்வ மான ஓர் அறிஞரின் மாபெருஞ் சாதனையாக அமைவதும் இது. எனவே இந்நூல் வெளியீட்டில் தானும் பங்கு பெற்று உதவிட வாய்ப்புப் பெற்றது குறித்துப் பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி மகிழ்கிறது. இறுதியாக இம்மாபெரும் பணி வெற்றிகரமாக நடைபெறப் பெரும்பங்கு ஆற்றிய மூவருக்கு நன்றி கூறியாக வேண்டும். முதலா மவர் திரு கோபாலையரின் இளவல் திரு கங்காதரன் அவர்கள். அவர் முன்னர்ப் பிரெஞ்சு நிறுவனத்தில் பணி செய்தவர். இப்பொழுது பி.இ.ஆ.ப. பாண்டிச்சேரி மையத்தில் அவர் ஆய்வறிஞர், பணியில் உள்ளார். நூல் முழுவதையும் தம் கைப்பட அழகாக எழுதியவர் அவர். இரண்டாமவர் டாக்டர் ழான்-லுக்-செவியர்; கையெழுத்துப் பிரதி முழுவதையும் டிஜிடல் நிழற்படமாக எடுத்து எப்பகுதியும் சிதிலமாகி அழிந்து விடாதபடி பார்த்துக் கொண்டவர். மூன்றாமவர் திரு கோ. இளவழகன். அவர் இந்நூலின் சிறப்பையும் பயனையும் உணர்ந்து அதை வெளியிட முன்வந்தவர். இப் பெருநூலைச் செம்மை யாகக் கணினியில் தட்டச்சு செய்து அச்சுக்கு அணியமாக்கவும், மெய்ப்புக்களை ஐந்து முறை கவனமாகத் திருத்தவும் ஆக ஒன்றரை ஆண்டுகள் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் உழைத்துள்ளனர். தமிழ் வாழ்க! தலைமாமணியெனத் தமிழிலக்கணப் பேரகராதியை வரைந்தருளிய கலைமாமணி, பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் அவர்களை வாழ்த்தி வழங்கும் “பாராட்டுரை” 1 அன்பும் அருளும் அறிவும் திருவும் இன்பமும் எழிலும் மன்னிய உருவாய்ச் சொல்லொடு பொருள்போல் எல்லும் ஒளியும் புல்லிய வடிவென அம்மை யப்பனாய்ச் 5 செந்தமிழ் மயமாய்த் திகழும் சீர்சால் பொன்மலை மேவிய புரிசடைக் கடவுள் நான்மறை நவிலும் நயன்மிகு நாவால் சிந்தை சிலிர்க்கத் தென்றல் உலாவச் சந்தனம் மணக்கும் தண்ணிய அருவிகூர் 10 பொதியத் தமர்ந்து புவியெலாம் போற்ற மதிநலம் வளர்க்கும் மாண்பமை முத்தமிழ் நிதிவளம் நல்கும் நிகரிலா மாதவன் அகத்தியற் கருளிய தகவமை இலக்கண மிகப்பெருங் கலையைச் சகத்தவர் உணர 15 பல்காப் பியந்தெளி தொல்காப் பியன்முதல் ஒல்காப் புலமை ஒண்டமிழ் நூலோர் இயம்பிய இலக்கணப் பனுவல் யாவையும் உளந்தெரிந் துரைசெய் இளம்பூ ரணர்முதல் சேனா வரையர், தெய்வச் சிலையார், 20 ஆனாப் புலமைப் பேரா சிரியர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியர் விச்சை மிக்கநக் கீர னாரொடு சிவஞான முனிவர், சுவாமி நாதனார் யாப்ப ருங்கல விருத்தி முதலாய 25 உரைவழி யாவையும் புரையறக் கற்றறிந்து, அரியவை யாவையும் சிந்தையிற் றெளிந்து கற்றதை மறவாப் பெற்றியொடு திகழும் அருந்திறற் புலவன், பெரும்பே ராசான், விருந்தென வடமொழி பயின்றறி திறலோன், 30 ஆங்கிலப் புலமைசீர் தாங்கிடும் ஆசான், சங்க இலக்கியச் சால்பொடு இரட்டைக் காப்பிய நுணுக்கமும் சிந்தா மணியினைத் தேர்ந்தறிந் துவந்துரை விரிக்கும் செம்மல், தேங்கமழ் அமிழ்தென மாணவர் செவிகொளப் 35 பாடம் பயிற்றும் பண்பமை ஆசான் திருமுறை, திவ்வியப் பிரபந்த அருள்வளம் நிறைமொழி யாவும் நெஞ்சம் இனிக்க உருச்செய் துவக்கும் ஒளிர்தமிழ்ப் பாவலன், புராண இதிகாசப் புலமையும் நுட்பம் 40 விராவிய கம்பன் கவிதையும் பிறபிற சிற்றிலக் கியக்கடல் திளைத்தநற் கல்விமான், ஆளுடைப் பிள்ளையும் அரசும் நம்பியும் தாளுறச் சூழ்ந்து தலையுறப் பணிந்து தெய்வத் தமிழாற் புனைந்ததே வாரம் 45 மெய்யணிந் துவக்கும் ஐயா றன்திகழ் காவிரித் தாயின் கரைமிசை யொளிசெய் திருவையா றதனிற் செந்தமிழ்த் தாயின் உள்ளம் உவப்ப உதித்த தனயன், அந்தணர் குலத்தில் வந்தநற் சான்றோன் 50 குணத்தால் உயர்ந்த கோபா லையன், அன்பும், அடக்கமும், நண்பமை செயலும், இன்சொலும், எளிமையும், இயல்போ டமைந்தொளிர் போதகா சிரியன், புதியன புனையும் ஆய்வறி வாளன், அரும்பெறற் கட்டுரை 55 தரும்எழுத் தாளன், மூவர்தே வாரச் சொல்வளம் இசைவளம் மல்கிடும் ஞானம், மலர்ந்திடும் கற்பனை, வண்ணனை உள்ளம் கலந்திடும் பக்திக் கவிநயம் யாவையும் உலகுணர்ந் துய்ய உரைவிரித் தியம்பிய 60 பலகலை யுணர்ந்த பண்டிதன் இலக்கணக் கடல்படிந் தெல்லை நிலைகண் டெழுந்த ஆசான், தன்பே ருழைப்பினால் இலக்கணக் கலைச்சொல் யாவையும் கவினுறத் தொகுத்துப் பொருள்நிலை விளங்க அகர நிரல்பட 65 இலக்கணப் பேரக ராதியை வரைந்து பேரா சிரியர்,ஆய் வாளர், மாணவர் யாவரும் பயன்பெறக் காவியம் போலத் தமிழ்த்தாய்க் கணியாத் தகவுற வழங்கும் பண்டித தி.வே. கோபா லையர் 70 வண்டமிழ் போல வளமெலாம் மேவி மண்டலம் புகழப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கெனப் போற்றி வாழ்த்துதும் உவந்தென். தஞ்சாவூர் 22.08.2005 பாவலரேறு ச. பாலசுந்தரனார் “கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரோ” முதுபெரும் புலவர் இலக்கணக் கடல் உயர்திருவாளர் தி.வே. கோபாலனார், தமிழ்வளக் கொடையாக, அரும்பதிப்புப் பெருந்தகை கோ. இளவழகனார் வழங்கும், ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ மடலங்கள் பதினேழனையும் ஒருங்கே கண்டதும், “காரே! நேரே தான், வாரியுண்டு; வாரிமொண்டு வாரியுண்டு, வானிருண்டு பேரி கொண்டு நீதிரண்டு பெய்” என்னும், வான்மழைப் பாட்டின் ‘தேன்பிழி’வென எனக்கு அவை இன்ப மூட்டின. கோபாலனார் மூளைக் கூர்ப்பும், இளவழகனார் பதிப்பு ஈர்ப்பும், ஒருங்கே வயப்படுத்திய இன்பத்தில், ‘அன்னை வாழ்க’, ‘அயராத் தொண்டர்களும் வாழ்க’ என என்னுள் வாழ்த்தினேன். கோபாலனார் நினைவின் ஏந்தல்; இலக்கணமா இலக்கியமா, நூலோடு உரையும் நெஞ்சக் களனில் வரப்படுத்தி வைப்பாக வைத்துக் காக்கும் கருவூல வாழ்வர். கற்றது ஒன்றையும் கைவிடாக் ‘கருமி’யெனக் கவர்ந்து கொண்ட தமிழ்வளத்தை, என்றும் எங்கும் எவர்க்கும் ‘தருமி’ என வாரி வழங்கும் வள்ளியர். அவர்தம் இவ்வகராதிக் கொடை, தமிழுலகு காலத்தால் பெற்ற கவின் பரிசிலாம்! என்னை யறியாதே எனக்கொரு பெருமிதம்; ஏக்கழுத்தம்; “இத்தகு பாரிய இலக்கணத் தொகுதிகளை இம்மொழி ஒன்றை யன்றி, எம்மொழிதான் பெறக்கூடும்?” என்னும் எண்ணத்தின் விளைவே அஃதாம்! அம்மம்ம! எழுத்து - இரண்டு மடலங்கள் சொல் - நான்கு மடலங்கள் இவ் ஆறு மடலங்களைத் தானே மற்றை மற்றை மொழிகள் பெறக்கூடும்! பொருளிலக்கணம் என்பதொன்று கொள்ளா மொழிகள், எப்படித் தமிழைப் போல் பொருள் இலக்கண மடலங்களைப் பெற வாய்க்கும்? பொருளிலக்கண மடலங்கள், எழுத்து, சொல் மடலங் களைப் போன்ற எண்ணிக்கையினவோ? அகப்பொருள் - நான்கு மடலங்கள். புறப்பொருள் - ஒரு மடலம் யாப்பு - இரண்டு மடலங்கள் அணி - இரண்டு மடலங்கள் மெய்ப்பாடு முதலன - ஒரு மடலம் பாட்டியல் முதலன - ஒரு மடலம் ஆகப் பதினொரு மடலங்கள். மொத்தமாகக் கூடுதல் 17 மடலங்கள். மொழி ஆர்வலர்க்குப் ‘பெருமிதம்’ உண்டாகுமா? உண்டாகாதா? இப்பெருமிதத்தூடேயே ஓர் ‘ஏக்கம்’: அரிய ஆய்வுக் குறிப்புகள் வழங்கித் தெளிவுறுத்த வல்ல ஆசிரியர், அவற்றை அரிதாக மேற்கொண்டதை அன்றிப் பெரிதாக அல்லது முற்றாக மேற்கொண்டிலரே என்பதே அவ்வேக்கம். எ-டு: ‘அகர முதல் னகர இறுவாய்’ என்பன இளம்பூரணருக்கு அன்மொழித் தொகை; நச்சினார்க்கினியருக்கு எழுவாய்த் தொடர்கள் - என்று காட்டும் தொகையாசிரியர், “அகரத்தை முதலாகவும் னகரத்தை இறுதியாகவும் உடைய என்று பொருள் செய்யின் அகரமுதல் - னகர இறுவாய் என்பன இரண்டாம் வேற்றுமைத் தொகை” என்று தம் தெளிவை இயைக்கிறார் (எழுத்து 1:22) நன்னூலார் அளபெடையைச் சார்பெழுத்தாக எண்ணினார். ஆசிரியர் தொல்காப்பியனார் அளபெடையை உயிரெழுத்துள் அடக்கிக் கொண்டார் என்பதைச் சிவஞான முனிவர் சூத்திர விருத்தி கொண்டு தெளிவிக்கிறார் தொகையாசிரியர். (எழுத்து 1:44) “மகரக் குறுக்கம் மேலால் பெறும் புள்ளியொடு உள்ளும் புள்ளி பெறும் என்ற உரையாசிரியர் கருத்து மிகத் தெள்ளிது. ‘உட்பெறு புள்ளி உருவாகும்மே’ (தொ.எ. 14) என்ற நூற்பாவிற்கு உண்மையுரை காண உதவுகிறது” என்று தெளிவிக்கிறார் தொகை யாசிரியர். (எழுத்து 2: 263) ‘வேண்டா கூறி வேண்டியது முடித்தல்’, என்னும் தலைப்பில், “தேவையற்றது போன்ற ஒரு செய்தியைக் கூறி அதனால், நூற்பாக்களில் கூறப்படாத மற்றோர் இன்றியமையாத செய்தியைப் பெறப்பட வைத்தல்” என்று விளக்கும் தொகையாசிரியர், நுண் மாண் நுழைபுலம் கற்பவர் தெளிவுக்கு நல்வழி காட்டுகின்றது. (எழுத்து 2:265) ஆனால், இத்தகையவை பெரிதும் இடம் பெறாமல் ‘தொகை யளவொடு’ நின்று விடுகின்றது என்பதே அவ்வேக்கம். தொகை யாவது, தொகுப்பு. ‘குற்றியலுகரம் ஒற்று ஈறே’ என்பதோர் ஆய்வு என்றால், ‘குற்றியலுகரம் உயிர் ஈறே’ என்பதோர் ஆய்வு ஆதல் காட்டப்படவேண்டும் அல்லவோ! எது செவ்விது என்பதைத் தெளிவித்தல் இன்றேனும், தெளிவிக்கக் கருவிதந்தது ஆகும் அன்றோ! இவ்வாறு, பின்னாய்வாளர் எண்ணற்றோர் ஆய்வுகள் கொள்ளப்படாமை மட்டுமன்று; தள்ளப்படுதல் மிகத் தெளி வாகின்றது. தொகையாசிரியரால் சுட்டப்படும் அரசஞ்சண்முகனார் (பாட்டியல் 15) ஆய்வு எத்தகையது எனின், ‘நடுநிலை பிறழாமல் ஆராய்ந்து எழுதுவதில் வல்லுநர்’ எனத் தொகையாசிரியராலேயே பாராட்டப்படும் தகையதாம். அச்சண்முகனார், ‘பிரமாணம் ஆகாத நூல்கள்’ என்பதையும் பதிவு செய்கிறார் தொகையாசிரியர். அது, “சின்னூல்(நேமிநாதம்), நன்னூல், வீரசோழியம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, இலக்கண விளக்கம் முதலாகப் பல, தொல்காப்பியத்தின் வழிப்படச் செய்யப்படினும் ஆசிரியனது கருத்துணராமல் மரபு நிலை திரியச் செய்யப்பட்டமையான் பிரமாணமாகாத நூல்கள் ஆம். (பிரமாணம் நூல்நெறிக்குச் சான்றாக - எடுத்துக் காட்டாகத் திகழும் வாய்மையாகிய தகுதி; நியாய அளவைகளால் உறுதிப்பாடு) இவ்வாறு குறிப்பர் அரசஞ்சண்முகனார் (பா.வி. பக். 104-105)” என்கிறார் (பாட். 142) என்பது. தொகையாசிரியர், இச் சான்றைப் பொன்னே போலப் போற்றியிருப்பின், அதன் பெருஞ்சிறப்பு எப்படி இருந்திருக்கும்? தன் பெயருக்கு ஏற்பத் ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ என்பதற்குத் தானே தன்னிகரிலாத் தலைமை கொண்டிருக்கும்! இப்பிரமாணமாகா நூல்களைத் தள்ளியிருப்பின் இப்பாரிய நிலை இருக்குமோ எனின், அவ்வெண்ணம் பிழைபட்ட எண்ண மாம்! ‘தொடர்நிலைச் செய்யுள்வகைப் பெயர்’ என்னும் தலைப்பில் கூறப்படும் அளவுகோல் தானா இன்றும் உள்ளது? சதுரகராதியும் பிரபந்த மரபியலும் கூறுவன 96 மட்டுமே. மற்றை நூல்களால் அறிவன அதற்கும் உட்பட்டனவே. ஆனால், சிற்றிலக்கிய விரிவாக்கப் பரப்பு எத்தனை? 381 வகையென்பதை எம், ‘இலக்கிய வகைமை அகராதி’யில் காணலாம். அவற்றின் மேலும் இதுகால் விரிந் துள்ளன. பொருளதிகார ஆய்வோ, வெள்ளப் பெருக்காகி உள்ளது. கால்டுவெலார், ஞானப் பிரகாச அடிகளார், பாவாணர் அன்னவர்கள் ஆய்வு தமிழிலக்கண ஆய்வுகள் அல்ல எனத் தள்ளப் பட்டுவிடாவே! அவற்றை நோக்கினால், வேண்டாச் சேர்ப்புகளை விலக்கி, வேண்டும் சேர்ப்புகளை இணைத்துக் கொண்டால் இன்னும் பதின் மடலங்கள் மிகும் என்பதை, நினைவின் ஏந்தல் - சோர்வறியாச் சுடர் - கோபாலனார் கொள்வாரே எனின், இத்தமிழ் இலக்கணப்பேரகராதி ஒத்ததோர் அகராதி இன்றாம் என மலைமேல் ஏறி முழக்கமிடலாம் அல்லவோ! இத்தொகையாசிரியப் பெருமகனாரை அல்லார் ஒருவர், இப்பெருங் கடப்பாட்டை மேற்கொண்டு இத்தகு பணி செய்தல் அரிது! அவர்தம் முழுதுறு ஒப்படைப்பின் பேறு அது. அன்றியும், தம்மைப் போலவே தம் உடன்பிறப்புகளையும் அழுந்திப் பயிலவும் ஆர்வக் கடனாற்றவும் பயிற்றி இருக்கும் பயிற்றுதற்பேறு; தமிழ் வாழ்வாகிய அவரைத் தாங்குதலே தம் பிறவிப் பேறு எனக்கொண்டு நயத்தகு துணையாயும் குடும்பமாகியும் நிற்பார் கெழுதகைப் பேறு; இன்னவெல்லாம், இத் தமிழ்ப் பெருங்கொடைக்கு ஊற்றுக் கண்கள் அன்னவாம். இங்குச் சுட்டப்பட்டவை, தமிழ்க் காதலால், தமிழர் பண் பாட்டுக் காதலால் சுட்டப்பட்டவை என்பதைக் கற்பார் உணரின், இத்தொகுதிகளைத் தத்தம் குடிமை வைப்பாகக் கொள்ளக் கடமைப்பட்டவராம். ஆய்வுக்கு இப்படியொரு கருவி எளிதில் வாய்க்குமா? ஆய்வுக்கு எல்லை உண்டா? ‘அறிதோ றறியாமை’ காணும் ஆய்வுக்கு, “மனிதர்காள் இங்கேவம்; கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரோ” என்று அப்பரடிகள் தமிழ்க்கோயில் வாயில் முன் நின்று அழைத்து வழிகாட்டுவது போல, அயராத் தொண் டர்கள் தி.வே. கோபாலனாரும், கோ. இளவழகனாரும் இத் தொகையைக் கைகோத்து நின்று கனிவொடு வழங்குகின்றனர்! நாம் பேறெனப் பெற்றுப் பயன் கொள்வோமாக! தமிழ்த்தொண்டன், இரா. இளங்குமரன் ‘குறுந்தட்டாக’ விளங்குபவர் பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் புதுவைக்கு வருகின்றவர்கள் இங்கே இரண்டு கடல்களைப் பார்க்கலாம். ஒன்று உவர்க்கடல்; மற்றொன்று தி.வே. கோபாலையர் என்னும் நூற்கடல். ‘தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முகடு தொடுத்துப் பொன்கொழித்து, மணிவரன்றி, மாணிக்கத்தொடு வயிரம் உந்தி வந்து, சல சலவென இழிதரும் அணிகிளர் அருவி’ போன்ற இவரது பொழிவினை ஒரு முறை கேட்கும் எவரும் வியந்து, இவர் ஒரு நூற்கடல்தாம்’ என்பதை எளிதினில் ஏற்றுக்கொள்வர். ‘அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும்’ கொண்ட மலையனைய மாண்பின் அறிவினராகிய தி.வே. கோபாலையர் கற்றோர்தமக்கு வரம்பாகிய தகைமையர். தண்டமிழின் மேலாந்தரமான இலக்கிய இலக்கணங்களையும், அவற்றுக்குப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் உரைகளையும் இளமையிலேயே பதிவு செய்துகொண்ட குறுந்தட்டாக விளங்கு பவர் இப் பெருந்தகை. எக்காரணத்தாலாவது இந்நூல்களில் ஒன்றை இழக்க நேரின் கவலைப்பட வேண்டியதில்லை; இவர்தம் உள்ளப் பதிவிலிருந்து அதனை மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம். ‘செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகர்க்குப்’ புகழ் சேர்த்த பாரதியார், பாவேந்தர் முதலிய புகழ்மணிகளின் வரிசையில் இன்று கோபாலையர் விண்ணுயர் தோற்றத்துடன் விளங்குகிறார். இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர், பரிமேலழகர், சிவஞான முனிவர், காரிரத்தினக் கவிராயர் முதலிய புலவர் மரபினோர் புகழை யெல்லாம் தம் புகழ் ஆக்கிக்கொண்ட இப்புலவர் பெருந்தகையைப் புதுவைப் புலவருலகம் போற்றி ‘நூற்கடல்’ என்ற சிறப்புப் பட்டமளித்துப் பொன்போற் பொதிந்து கொண்டது. இருபத்தாறாண்டுகளுக்கு மேலாக இவர் புதுவைப் பிரஞ்சுக் கலை நிறுவனத்தில் (விஉடிடந குசயnளீயளைந) தமிழாய்வுப் பிரிவின் தலைமைப் பொறுப்பினை மேற்கொண்டு அரிய நூல்கள் பலவற்றை ஆய்வுச் செம்பதிப்புகளாக வெளியிட்டு வருகிறார். பாரதியாரின் தலைசிறந்த படைப்புகளுக்கு வாய்ப்பாக இருந்த புதுவைமண், கோபாலையரின் புகழை என்றும் நின்று நிலவச் செய்யும் உயர் பதிப்புகள் பல உருவாவதற்கும் வாய்த்த இடமாக இலங்குகிறது. கடந்த பன்னீராண்டுகளாகப் புதுவையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘தெளிதமிழ்’ என்னும் தமிழ் வளர்ச்சித் திங்களி தழில், இவர்தம் படைப்பினை ஏந்தி வாராத இதழே இல்லை. அதில் ‘இலை மறை கனிகள்’ என்னும் தலைப்பில், தமிழிலக்கண இலக்கிய நூல்களிலும் உரைகளிலும் இலை மறை கனிகளாக மறைந் திருக்கும் அரிய செய்திகளைத் திரட்டிக் கட்டுரைகளாகத் தந்து வருகிறார். அலான் தனியேலு (ஹடயனே னுயnநைடடிர) என்னும் மேனாட்டறிஞரின் மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்புப் பணிக்குத் துணை செய்ததும், சேனாவரையத்தின் பிரஞ்சு மொழியாக்கத்திற்குத் துணை நின்றதும் இவர்தம் ஆங்கில அறிவுக்குச் சான்று பகரும். ‘தொல்காப்பியப் பழைய உரைகளின் செம்பதிப்பு’, ‘கல் வெட்டுக்களில் நாயன்மார்கள் பற்றிய அருஞ் செய்திகள்’ ஆகியன இனி வெளிவர இருக்கும் இவர்தம் நூல்களில் குறிப்பிடத்தக்கவை. இவர்தம் பணிகளில் மிகமிகப் பயன் விளைக்கும் அரிய பெரிய பணி இந்த ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’. தமிழிலக்கணம் கற்போருக்கும், இலக்கண ஆய்வாளர்களுக்கும் கை விளக்காகப் பயன்படக்கூடிய இவ் வகரவரிசை இருபத்தைந்து ஆண்டுக் கால பேருழைப்பால் எழுதி முடிக்கப்பெற்றது. எப்போது வெளிவருமோ என்று தமிழறிஞர் உலகம் எதிர்பார்த்திருந்தது. மற்றவர் அரியதென்று கருதும் நல்ல பதிப்புப் பணிகளை எளியதென்று ஏற்று, மடிதற்றுத் தாமே முன்வந்து செய்யும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர், ‘தமிழ்மொழிக் காவலர்’ கோ. இளவழகன் இதனை அழகுறப் பதிப்பித்து வழங்குகிறார். இவ்வரிய செயலால், இன்பத்தமிழ் இருக்குமளவும் இளவழகன் புகழும் இருக்கும் என்பது உறுதி. அன்பன், இரா. திருமுருகன். ‘ஈரத்தமிழில் ஆழங்கால் பட்டவர்’ பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் உலகப் பொதுமறையை அருளிய திருவள்ளுவப் பெருந் தகையார் பெரியார் யார் என்பதற்கு ஓர் இலக்கணம் வகுக்கின்றார். மனிதமேம்பாட்டுக்குரியதான, செய்வதற்கு அரியதான செயலை யார் புரிகின்றார்களோ அவர்களே பெரியவர் என்கின்றார். காலங்கள்தோறும் பல்வேறு துறைகளில் மனிதமேம்பாட்டுக் காகப் பலர் செயற்கரிய செயல்களைச் செய்துள்ளார்கள். அந்த வரிசையில் தமிழ் இலக்கணப் பேரகராதி என்னும் இந்நூலை தி.வே.கோபாலையரும், இந்த நூலை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் இளவழகனாரும் அடங்குவர். தமிழ் இலக்கிய இலக்கணங்கள் ஒருசமயம் இல்லாமற் போய் விட்டாலும் கோபாலையர் ஒருவர் இருந்தாலே போதும், அவற்றை மீட்டுக் கொண்டுவந்துவிடலாம். அந்த அளவிற்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் நினைவில் வைத்திருப்பவர். ஒரு தேன்கூட்டில் பல மலர்களின் தேன்கள் கலந்திருப்பது போல் இந்தப் பேரகராதியில் பல தமிழ்இலக்கண நூல்ஆசிரியர்களின் வரையறைகளும் பல உரையாசிரியர்களின் உரை வளங்களும் கலந்துள்ளன. அறிஞர் திலகம் கோபாலையர் எப்படி எளிமையானவ ராகவும், ஆழமான புலமை உடையவராகவும், பழக இனியவராகவும் இருக்கிறாரோ, அப்படியே ‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு’ என்னும் திருக்குறளின் கருத்துக்கேற்ப இந்நூலும் நம்மிடம் பழகுகின்றது. இந்த நூல் பேரகராதியாக உள்ளதால் இலக்கணம் கண்டு அஞ்சும் மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் அகராதிப் பொருளை அறிவது போல் எளிதாகத் தமிழ் இலக்கணத்தை அறிந்து கொள்ள முடியுமாறு உள்ளது. இந்நூல் தொல்காப்பியர் காலத்திலிருந்து இந்த நாள்வரை உள்ள தமிழ் உலகிற்குக் கிடைத்த புதுமையான முதன்மையான முழுமையான நூலாகும். பலர் முயன்று செய்ய வேண்டிய பணியை தி.வே.கோபா லையரே செய்து முடித்துள்ளார். ஒரு பல்கலைகழகமோ ஒரு பெரிய ஆய்வு நிறுவனமோ செய்ய வேண்டிய பணியைத் தமிழ்மண் பதிப்பகம் ஆர்வத்தால் எளிதாகச் செய்துள்ளது. தமிழர்களின் தவப்பயனே இப்படியாய்த் தமிழ் மண்ணில் முகிழ்த்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழ் வழங்கும் அனைத்து இடங்களிலும் திருக்குறளுக்கு அடுத்தபடியாக நூலகங்களில் இடம்பெற வேண்டிய தமிழ்நூல் இந்நூல் என்பதில் ஐயம் இல்லை. இந்த நூலை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக இளவழக னார்க்கு நமது வெற்றி வாழ்த்துக்கள். இந்த நூலை அளித்தருளிய அறிஞர்திலகம் நம்முடைய இலக்கண மாமணி கோபாலையருக்குத் தலையல்லால் கைம்மாறில்லை என்னும் படியான தமிழ் வணக்கங்கள். வாழ்க தமிழ். வளர்க தமிழ்ப்பண்பாடு. வெல்க மனிதநேயம். அடியேன். முனைவர் ‘வைணவம்’ பார்த்தசாரதி ‘மாந்தக் கணினி’ பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் நாம் சங்கப் புலவர்களைப் பார்த்திலோம்! இடைக் காலப் புலவர்களையும் உரை வல்லுநர்களையும் பார்த்திலோம்! ஆனால் அவர்களை யெல்லாம் நம் காலத்தில் பார்த்திட விரும்புவோமாயின் அவர்களின் உருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் நூற்கடல் தி. வே. கோபாலையர் அவர்களைக் காணலே சாலும். சாதி, மத, வயது வேறுபாடின்றித் தம்மை அணுகும் யாரே யாயினும் அயர்வுறாது மாற்றம் கொள்ளாது அவர்தம் ஐயங்கட்குத் தெளிவேற்படுத்தலும் வினாக்கட்கு விடையளித்தலுமான சீரிய தமிழ்ப்பணியைத் தொடர்ந்து ஆற்றிவருகிறார். எந்த நூலில், எந்தப் பக்கத்தில், எந்தப் பாகியில், எந்த வரியில் உள்ளது எனத் தெளிந்த உணர்வுடன் எந்தச் சொல்லையும் கருத்தையும் சுட்டிக் காட்டும் வியக்கத்தக்க மாந்தக் கணினியாக விளங்குகிறார். சங்கப் புலவரும் இடைக் காலப் புலவரும் உரை வல்லுநரும் கையாண்ட மொழி முதலெழுத்து, மொழியிறுதி எழுத்து, புணர்ச்சி நெறிகள், பிற மொழிச் சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கல் ஆகிய தமிழ் இலக்கண மரபுகளைப் பொன்னே போல் போற்றிப் பயன்படுத்தி வரும் பாங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கதாகும். அப்பெருமகனார் வாழுங்காலத்தில் வாழ்தலும், அவரிடத்து உரையாடி மகிழ்தலும், ஏற்படும் ஐயங்கட்கு அவரின் சொல்லரிய விளக்கங்களைக் கேட்டுத் தெளிதலுமாகிய அரிய பேற்றினை நான் எனது வாழ்நாளில் பெற்றுள்ளேன். அவரின் பரந்த இலக்கிய நூலறிவும் தெளிந்த இலக்கண அறிவும் தமிழர்க்கும் உலகுக்கும் மேலும் பயன்படுதல் வேண்டும். அவர் மேற்கொண்டுள்ள எளிய வாழ்வு, சம நோக்கு, இனிய பேச்சு, எல்லார்க்கும் பயன்படல் வேண்டும் என்னும் பெரும்பண்பு ஆகியவை கற்றாரை ஈர்க்கும் தன்மையன. நூற்கடலார் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிடல் வேண்டும் என எனது உள்ளம் நிறைந்த விழைவினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பன் இறைவிழியன் பதிப்புரை தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை வரையறுத்துக் கூறும் ஒல்காப்புகழ் தொல்காப்பியத்திற்குப் பழந்தமிழ்ச் சான்றோர்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அனைத்து உரைகளையும் தொகுத்து தொல்காப்பிய நூல் பதிப்பில் இதுவரை எவரும் கண்டிராத வகையில் ஒரேவீச்சில் எம் பதிப்பகம் வெளியிட்டதை தமிழுலகம் நன்கு அறியும். தொல்காப்பிய நூல்பதிப்புப் பணிக்கு அல்லும் பகலும் துணை யிருந்து உழைத்தவர் பண்டிதவித்துவான் தி.வே.கோபாலையர் ஆவார். இந்நூல் பதிப்புகளுக்கு இவரே பதிப்பாசிரியராக இருந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்தவர். கூரறிவும், பெரும் புலமையும், நினைவாற்றலும் மிக்க இப்பெருந்தகை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தம் பேருழைப்பால் தொகுத்த தமிழ் இலக் கணத்திற்கான சொல் மூலங்களை ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ எனும் பெரும்படைப்பாக 17 தொகுதிகளை உள்ளடக்கி ‘தமிழ் இலக்கண’க் கொடையாக தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். தமிழ் இலக்கண நூல் பதிப்பு வரலாற்றில் தமிழ் இலக்கணத் திற்கென ஒரே நேரத்தில் எழுத்து, சொல், பொருள் (அகம், புறம், அணி, யாப்பு, பாட்டியல், பாயிரம், மரபியல், மெய்ப்பாடு, நாடகம், அளவை நியாயம்) எனும் வரிசையில் பேரகராதி வெளிவருவது இதுவே முதல் முறையாகும். அகராதி என்பது ஒரு சொல்லுக்கு விளக்கம் தருவது. பேரகராதி என்பது ஒரு சொல்லுக்கு விளக்கமும், மேற்கோளும் சுட்டுவது. களஞ்சியம் என்பது ஒரு சொல்லுக்குப் பல்பொருள் விளக்கம் காட்டுவது. உங்கள் கைகளில் தவழும் இத் தமிழ் இலக்கணப் பேரகராதித் தொகுதிகள் தமிழுக்குக் கருவூலமாய் அமைவதாகும். தமிழிலக்கணப் பெரும் பரப்பை விரிவு செய்யும் இப் பெட்டகத்தை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். தமிழ் ஆய்வை மேற்கொள்வார்க்கு வைரச் சுரங்கமாகவும், தமிழ் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக் காகவும் இந்நூல் தொகுதிகள் வருகிறது. தொன்மையும், முன்மையும், தாய்மையும், தூய்மையும், மென்மையும், மேன்மையும், பழமையும், புதுமையும், இளமையும், முதுமையும் மிக்கமொழி நம் தமிழ்மொழி. திரவிடமொழிகளுக்குத் தாய்மொழி நம் தமிழ்மொழி. இந்தியப் பெருமொழிகளுக்கு மூலமொழி நம் தமிழ்மொழி. உலக மொழிகளுக்கு மூத்த மொழி நம் தமிழ்மொழி. இந்தியப் பேரரசால் செம்மொழி என அறிவிக்கப் பட்டுள்ள இந் நேரத்தில், ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’யை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் இலக்கணச் சுரங்கத்தைத் தந்துள்ள பண்டித வித்துவான் தி.வே. கோபாலையருடன் உடனிருந்து உழைத்தவர் அவர் இளவல் தி.வே. கங்காதரன் ஆவார். இப் பொற்குவியல் பொலிவோடு வெளி வருவதற்கு தம் முழுப் பொழுதையும் செலவிட்டவர் இவர். இரவென்றும், பகலென்றும் பாராது உழைத்த இப் பெருமக்க ளுக்கும், பேரகராதியின் அருமை பெருமைகளை மதிப்பீடு அளித்து பெருமை சேர்த்த புதுச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத் துக்கும், தமிழ்ச் சான்றோர்க்கும் எம் நன்றி. பதிப்பாளர் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் வடிவமைப்பு : செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சுக்கோர்ப்பு : கீர்த்தி கிராபிக்ஸ் பட்டு, கீதா, சங்கீதா, பிரியா, பத்மநாபன், சே. குப்புசாமி, மு. கலையரசன் மெய்ப்பு : தி.வே. கோபாலையர் தி.வே. கங்காதரனார் ——— உதவி : அ. மதிவாணன் கி. குணத்தொகையன் அரங்க. குமரேசன் வே. தனசேகரன் நா. வெங்கடேசன் மு.ந. இராமசுப்ரமணிய இராசா இல. தர்மராசு ——— அச்சு எதிர்மம் (சூநபயவiஎந) : பிராஸஸ் இந்தியா, சென்னை அச்சு மற்றும் கட்டமைப்பு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை ——— இவர்களுக்கு எம் நன்றி . அணி 1 அ அகடன கடம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (120) வருவதோர் அணி. அறிஞர் உரைத்த செய்யுளில் குற்றங்கள் காட்டிப் பின் அவை இல்லை என உரைப்பது இது. எ-டு : ‘கம்பராமாயண முதற்பாடல் சங்கோத்தர விருத்தி’ போல்வன . அகமலர்ச்சியணி - ஒரு பொருளினுடைய குணத்தாலும் குற்றத்தாலும் மற்றொரு பொருளுக்கும் அவை ஏற்பட்டனவாகச் சொல்லுதல் அக மலர்ச்சியணியாம். இஃது உல்லாஸாலங்காரம் என வட நூலுள் கூறப்படும். இவ்வணி நான்கு வகையாகப் பிரித்து உணரப்படும். அவையாவன: 1. குணத்தினால் குணத்தைச் சொல்லும் அகமலர்ச்சியணி 2. குணத்தினால் குற்றத்தைச் சொல்லும் அகமலர்ச்சியணி 3. குற்றத்தினால் குணத்தைச் சொல்லும் அகமலர்ச்சியணி 4. குற்றத்தினால் குற்றத்தைச் சொல்லும் அகமலர்ச்சியணி என்பன (ச. 9, குவ. 69, மு.வீ. பொருள் அணி 53) 1. குணத்தினால் குணத்தைச் சொல்லும் அகமலர்ச்சியணி ஒரு பொருளினுடைய குணத்தால் மற்றொரு பொருளுக்கும் அக்குணம் ஏற்படுவதாகச் சொல்லும் அகமலர்ச்சி அணி வகை இது. எ-டு : இக்கற் பினள்மூழ்கித் தூய்மை செயுமோஎன்று அக்கங்கை கொள்ளும் அவா’ பலரும் கங்கையில் மூழ்கித் தம்பாவத்தைப் போக்கிக் கொள்வதால், கங்கை பலருடைய பாவங்களையும் சுமந்து தன் தூய்மை குறைந்துவிட்டது போன்ற எண்ணம் கொள்வ தாயிற்று. தூய்மையுடைய இக்கற்புடைய பெண் தன்னிடம் வந்து மூழ்குதலால் தான் சுமந்திருக்கும் பாவங்களெல்லாம் தொலையத் தானும் தூய்மை பெறலாம் என்று கங்கை ஆறு ஆசைப்படுகிறது என்னும் தொடரில், கற்பினளது தூய்மைப் பண்பு கங்கைக்கும் ஏற்படும் என்று கருதுதல் இவ்வணி வகை யாகும். இராமன் கங்கையாற்றில் சீதையுடன் முழ்கிய செய்தியைக் கம்பர், “கன்னி நீக்க(அ)ருங் கங்கையும் கைதொழா, பன்னி நீக்க (அ) ரும் பாதகம், பாருளோர் என்னின் நீக்குவர்; யானும்இன்று எற்றந்த உன்னின் நீக்கினேன், உய்ந்தனென் யான்” என்றாள். என்று குறிப்பிட்ட பாடலுள்ளும் இவ்வணியைக் காணலாம். (கம்பரா. 1942.) 2. குணத்தினால் குற்றத்தைச் சொல்லும் அகமலர்ச்சியணி ஒரு பொருளிடத்துள்ள குணத்தைக் கொண்டு மற்றொரு பொருளுக்கு ஒரு குற்றத்தை ஏற்றிக்கூறும் அகமலர்ச்சி அணிவகை இது. எ-டு : “நன்மக்களை வறுமையில் ஆழ்த்தித் தீயோரைச் செல்வராக ஆக்கும் பொற்றாமரையில் வீற்றிருக்கும் திருமகள் அழிந்து சாம்புக“ என்று குறிப்பிடும் ‘நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்! நீறாய் நிலத்து விளியரோ! - வேறாய புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ; பொன்போலும் நன்மக்கள் பக்கம் துறந்து’ என்ற பாடலில், நன்மக்கள் வறுமையிலும் செம்மையுடைய ராய் வாழும் குணத்தைக் கண்டு, அவர்களை அடைந்து அவர்களுடைய வறுமையைப் போக்காத திருமகளுடைய குற்றம் குறிப்பிடப் பட்டிருப்பது இவ்வணியாம். 3. குற்றத்தினால் குணத்தைச் சொல்லும் அகமலர்ச்சியணி - ஒரு பொருளினுடைய குற்றத்தைக் குறிப்பிட்டு அப்பொருளி னுடைய குற்றத்தினால் மற்றொரு பொருளுக்குக் குணம் தோன்றுவதாகச் சொல்லும் அகமலர்ச்சி அணி வகை இது. எ-டு : வெற்றிபெறும் மன்னன் பகைமன்னரைக் கொல்லா மல் விடுத்ததே அவர்களுக்குச் சிறந்த பேறாகும் என்ற கருத்தமைந்த ‘கோஅடுவேல் கொற்றவ!நீ கொல்லாமை விட்டதுவே சேவகர்க்குப் பேரூ தியம்’ என்னும் பாடலில், பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடினர் என்ற குற்றத்தின்கண், புறமுதுகிட்டு ஓடுபவரைத் துரத்திச்சென்று கொல்லாமையாகிய அரசனுடைய நற்பண்பு புலனாகிறது என்று கூறுதல் இவ்வணிவகையாகும். 4. குற்றத்தினால் குற்றத்தைச் சொல்லும் அகமலர்ச்சியணி ஒரு பொருளினுடைய குற்றத்தால் மற்றொரு பொருளுக்கும் அக்குற்றம் உண்டாவதாகச் சொல்லும் அகமலர்ச்சியணி வகை இது. எ-டு : “அரசனுடைய பகைவர்களின் மனைவிமார் தம் ஊரிலிருந்து உயிர்தப்பிக் காட்டுவழியே ஓடும் போது தம் மெல்லிய பாதங்கள் நடத்தல் ஆற்றாது வருந்தித் தம் நகில்களுக்கு வகுத்த அழுத்தத்தைத் தம் பாதங் களுக்கு வகுக்காத பிரமனைப் பழித்துக் கண்ணீர் விடுவர்”என்ற கருத்து அமைந்த ‘சினக்கதிர்வேல் வேந்தே!நின் தெவ்வர் மடவார் வனத்திலடைந் தோடுங்கால், மாழ்கித் - தனத்திலுற வைத்தபெருந் திட்பமடி வையாத நான்முகனை மைத்தவிழி நீருகவை வார்’ என்னும் பாடலில், பாதங்கள் மென்மையவாக அமைந்த குற்றத்தால், அவற்றைப் படைத்த நான்முகனுக்கும் அறிவு மெலிந்த குற்றம் ஏற்பட்டது என்று கூறுதல் இவ்வணி வகையாகும். அகாரணமிகைமொழி - மிகைமொழி - அதிசய அணி. காரணம் காட்டாது பயன் படுத்தப்படும் அதிசய அணி. இது ‘அகாரண மிகைமொழி அணி’ என்று ஒரு சாராரால் கொள்ளப்படும். (வீ. சோ. 177) எ-டு : ‘துருமம் சந்திரற் றோய்திருக் காளத்தி’ (சீகா.பு.கடவுள்) காளத்தி மலையில் சோலையிலுள்ள மரங்கள் சந்திரனைத் தோய்வன போல உயர்ந்துள்ளன என்ற கருத்தமைந்த இவ்வடியில், ஒரு காரணமுமின்றி மரங்களது உயர்ச்சி அதிசயஅணிபற்றி மிகுத்துக் கூறப்பட்டவாறு. அச்சச்சுவை - இது சுவையணியின் எண்வகைகளுள் ஒன்று; உள்ளத்தில் அச்சம் தோன்றுவதால் விளையும் மெய்ப்பாடுகளைக் கூறுவது. எ-டு : ‘கைநெரித்து வெய்துயிர்ப்பக் கால்தளர்ந்து மெய் பனிப்ப மையரிக்கண் நீர்ததும்ப வாய்புலர்ந்தாள் - தையல் சினவேல் விடலையால் கையிழந்த செங்கண் புனவேழம் மேல்வந்த போது’ சினமிக்க வேற்படையை ஏந்திய வீரனால் கைவெட்டுண்ட காட்டுயானை தன்முன்னே துடுமென வந்துற்றதாக, அது போது ஒரு மாது தன்கைகளை நெரித்துக்கொண்டு, பெரு மூச்சுண்டாக, கால்நடை தளரப்பெற்று, உடல் நடுங்காநிற்ப, தன்னுடைய கண்களில் நீர் துளும்ப வாயுலர்ந்து போனாள் - என்று பொருள்படும் இப்பாடற்கண், யானையைக் கண்ட தால் உள்ளத்தில் உண்டான அச்சம் பற்றிய மெய்ப்பாடுகள் சொல்லப்பட்டவாறு காண்க. (தண்டி. 70-2) அச்சச்சுவை உவமம் - உவமம் கூறும்போது எண்வகைச் சுவைகளும் உடன்இயைய, உவமம் கூறுதல் சிறப்புடைத்து. எண்வகைச் சுவைகளில் அச்சச்சுவை ஒன்றாம். அச்சுவை தோன்ற வரும் உவமம் இது. எ-டு : ஒருவரைச் சான்றோர் என மதித்து உறவு கொண் டாடும்போது அவரிடம் சான்றாண்மை இல்லாத நிலை, ஒரு செப்பினுள் சந்தனம் இருக்கும் என்று கருதிச் செப்பினைத் திறந்தஅளவில் அதனுள் பாம்பு காணப்பட்டது போல்வதாம். ‘சாந்தகத்(து) உண் டென்று செப்புத் திறந்தொருவன் பாம்பகத்துக் கண்ட துடைத்து.’ (நாலடி. 126) இக்கருத்தமைந்த பாடலில் பாம்பை உவமம் கூறியது, அச்சச் சுவை பயப்பதாம். (தொ. பொ. 294 பேரா.) அசங்கதி அணி - ஓரிடத்துக் காரணம் இருப்ப, மற்றோரிடத்துக் காரியம் நிகழ்ந்ததாகக் கூறுவது. இது சந்திராலோகத்தில் தொடர் பின்மையணி என்னும் பெயருடன் மூவகைப்படும் என்று விளக்கப்படுகிறது. தண்டியலங்காரத்தில் சித்திர ஏதுவின் வகையான தூரகாரியஏது என்னும் பெயரால் சுட்டப்பட் டுள்ளது. ‘தூர காரிய ஏது’ காண்க. (மா. அ. 203.) அசங்கதி சிலேடையுடன் வருதல் - காரணம் ஓரிடத்திருப்பக் காரியம் வேறோர் இடத்து நிகழ்தலைக் கூறும் அசங்கதி அணி சிலேடையணியொடும் கலந்து வரும். எ-டு : மன்இளவல் விண்மேல் மறைந்த இராவணிவன் சென்னியின்மேல் வாளி சினத்(து) ஏவ - நன்னுதலாய்! ஞாலத்(து) அசங்கதியே நாடில் இராவணனார் கால்அற்ற(து) என்னும் கதை. இலக்குவன் இந்திரசித்தன் தலையை நோக்கி அம்பு எய்ய, இராவணன் கால் (சந்ததி) அற்றுவிட்டது என்ற கருத்தமைந்த இப் பாடலுள், கால் என்பது உறுப்பினைக் குறிக்கும்போது அசங்கதி அணியாகவும் வந்துள்ளது. இராவணன் தன் புதல்வர் மூவருள் அட்சகுமாரன் அதிகாயன் என்ற இருவரை யும் முன்னே இழந்தமையால், இந்திரசித்து இறந்ததனோடு அவனது சந்ததி அழிந்து விட்டது என்பது. (மா. அ. 204) அசம்பவம் (1) - சேரக்கூடாமை. ஒவ்வாமை கூறும் இலக்கணம். இஃது இலக்கியம் ஒன்றினும் இல்லையாகும் குற்றம். (தருக்க சங்) எ-டு : “பசு ஒற்றைக் குளம்புடையது”என்றல் அசம்பவம் (2) - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (69) வருவதோர் அணி. நிகழ இயலாத பயன் வரும் கருத்தை நிகழ இயலாத நிகழ்ச்சி யாகக் கூறுவது. இது கூடாமை அணியாம். எ-டு : குருடு காண்டல் பகலும் இல்லை. அசம்பவாலங்காரம் - கூடாமையணி (அணி. 36) அது காண்க. அசாதாரண உபமா - பொதுநீங்கு உவமை; அது காண்க. அடுத்து வரலுவமை - ‘உவமத்திற்கு உவமம் கூறுதல் கூடாமை’ - காண்க. உவமைக் குவமை (சீவக. 107 உரை) அடைபொதுவாய்ப் பொருள் வேறுபட வரும் ஒட்டணி - ஒட்டணிவகை நான்கனுள் ஒன்று. கவி தான் கூறக்கருதிய பொருளை (- உபமேயத்தை) மறைத்துப் பிறிதொன்றனை (உபமானத்தை)க் கூறி அப்பொருளைக் குறிப்பால் உணர்த்தும்வகை. இரண்டற்கும் பொதுவான அடைமொழி களை அமைப்பது இதன் இலக்கணம். ‘உள்நிலவு நீர்மைத்தாய், ஓவாப் பயன்சுரந்து, தண்ணளி தாங்கு மலர்முகத்துக் - கண்ணெகிழ்ந்து நீங்கல் அரிய நிழல்உடைத்தாய் நின்றெமக்கே ஓங்கியதோர் சோலை உளது’ இப்பாடற்கண், வள்ளல் ஒருவன் சோலையாகக் காட்டப் படுகிறான். சோலையாகிய உவமையின் ஆற்றலால் வள்ளல் ஆகிய கருதிய பொருள் குறிப்பால் உணர்த்தப்படுகிறது. 1) சோலை நடுவே நீர்நிலையைப் பெற்றுளது; 2) மாறாத பயன் களைத் தருவது; 3) வண்டுகள் மொய்க்கும் பூக்கள் மலரப் பெற்றது; 4) அப்பூக்களிடை மது நெகிழப்பெற்றது; 5) தன்பால் தருக்களின் நிழல் நீங்கப்பெறாதது. சோலையின் அவ்வடைமொழி அனைத்தும் குறிப்பால் உணர்த்தப்பெறும் வள்ளலிடத்தும் அமைவன. 1) வள்ளல் தன்னுளத்தே இனிமைப் பண்புடையான்; 2) அனைவர்க்கும் நீங்காத பயன் பலவும் சுரக்கிறான்; 3) கருணை கூர்ந்த மலர்ந்த முகமுடையான்; 4) அம்முகத்தே கண்ணோட்டம் காட்டுகிறான்; 5) தன்னை பிரிதற்கரிய பாதுகாப்பாம் நிழல் தந்து புரக்கிறான். இவ்வாறு வெளிப்படையான உவமையின் அடைமொழி யெல்லாம், குறிப்பால் உணர்த்தப்படும் பொருளுக்கும் பொதுவாக அமைந்தன. (தண்டி. 53-2) அடைமானம் - உவமை (யாழ். அக.) (டு) அடையடுத்துவந்த உவமை உருவகம் - அடையடுத்து வந்த உபமானத்தை உபமேயத்திற்குப் பொருத்திப் பின் உபமேயத்தை உருவகப்படுத்தும் உருவக வகை. எ-டு : ‘மையேர் குவளைக்கண் வண்டினம் வாழும்’ குவளையைப் போன்ற கண் - உவமை குவளை - உபமானம்; கண் - உபமேயம் கண்ணாகிய வண்டினம் - உருவகம். குவளைக்கு ‘மையேர் குவளை’ என்று அடை கொடுக்கப் பட்டுள்ளது. படவே, ‘மையேர் குவளைக்கண்’ என்பது அடையடுத்து வந்த உவமை. ‘மையேர் குவளைக்கண் வண்டினம்’ என்பது அடையடுத்து வந்த உவமை உருவகம். (மா. அ. பா. 259 உரை) அடையும் பொருளும் அயல்பட வந்த ஒட்டணி - தண்டியலங்காரம் குறிப்பிடும் ஒட்டணிவகை நான்கனுள் ஒன்று. அஃதாவது பாடலிலுள்ள அடைமொழிகளும் அவ்வடைமொழிகளையுடைய உபமானமும், அவற்றின் வேறுபட்ட அடைமொழிகளை யுடைய உபமேயத்தைக் குறிப்பால் உணர்த்த வருவது. எ-டு : ‘வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுதேன் வேட்டும் குறுகும் - நிறைமதுசேர்ந் (து) உண்டாடும் தண்முகத்தே செவ்வி யுடையதோர் வண்டா மரைபிரிந்த வண்டு.’ இதன்கண், தேன் நிரம்பி அழகிய செவ்வியை யுடைய வளவிய தாமரையைப் பிரிந்த வண்டு, பலவண்டுகளும் தோய்ந்து தேன் உண்டதால் தேன் வற்றிய குவளையை நாடிச் சென்று அதன் தேனைப் பருகுகிறது என்ற உபமானம், குறிப்பினால், காமச்செவ்வி நுகரும் பருவத்தாளாகிய அழகிய தலைவியைப் பிரிந்து, தலைவன், பலரும் நுகர்ந்த காமச் செவ்வி குலைந்த பரத்தையின் இன்பம் நாடிச் சென்றதாகிய உபமேயத்தை அறிவுறுக்கிறது. இப்பாடலிலுள்ள அடையும் பொருளும் உபமானத்திற்கே உரியனவாய் உபமேயத்திற்கு உரியன அல்ல ஆதலின், இஃது அடையும் பொருளும் அயல்படவந்த ஒட்டணி வகைப்படும். (தண்டி. 53 - 1) அடையை விபரீதப்படுத்துப் பொருள் வேறுபட மொழியும் ஒட்டணி - வெளிப்படையாகக் கூறப்படும் உபமானத்திற்கும் குறிப்பால் பெறப்படும் உபமேயத்திற்கும் அடைமொழிகளை மாறுபட அமைத்துச் செய்யும் இஃது ஒட்டணிவகை நான்கனுள் ஒன்று. எ-டு : ‘கடைகொல் உலகியற்கை! காலத்தின் தீங்கால்; அடைய வறிதாயிற்(று). அன்றே - அடைவோர்க்(கு) அருமை யுடைத்தன்றி அந்தேன் சுவைத்தாய்க் கருமை விரவாக் கடல்’ “தன்னை வந்தடைவோர்க்கு எய்துதற்கு அரியது ஆகாமல் (எளிதே கிடைப்பதாய்), இன்சொற்களையுடையதாய், கருமை என்பதே இல்லாத கடலானது, காலத்தின் தீமையால், யாம் சென்றடைந்தபோது வற்றிவிட்டதே!” என்ற கருத் துடைய இப்பாடல், கொடையால் வறுமை எய்திவிட்ட வள்ளல் ஒருவனைச் சென்றடைந்த இரவலன் கூற்றாக அமைந்துள்ளது. கடல் - உபமானம்; வள்ளல் - உபமேயம். கடலுக்கு அடை யாவன அருமையுடையதாதல், சுவையில்லாமை, கருமை யுடைத்தாதல் என இவை. இவற்றை விபரீதப்படுத்தி, உபமேய மான வள்ளலுக்கு எளிதான செவ்வி, இன்சொல்லுடைமை, கருமை விரவாமை என ஆக்கியுள்ளமை இவ்வணிவகையாம். (தண்டி. 53-4) அடை விரவிப் பொருள் வேறுபட வரும் ஒட்டணி - ஒட்டணிவகை நான்கனுள் ஒன்று. கவி தான் கூறக் கருதிய பொருளை (-உபமேயத்தை) மறைத்துப் பிறிதொன்றாகிய உவமையைக் கூறிக் குறிப்பால் அப்பொருளை உணர்த்தும் வகையில், இரண்டற்கும் விரவிவரும் அடைமொழிகளை அமைப்பது இதன் இலக்கணம். எ-டு : தண்ணளிசேர்ந்(து) இன்சொல் மருவும் தகைமைத்தாய், எண்ணிய எப்பொருளும் எந்நாளும் - மண்ணுலகில் வந்து, நமக்களித்து வாழும் முகிலொன்று தந்ததால் முன்னைத் தவம்! இப்பாடற்கண், வள்ளல் ஒருவன் முகில் எனக் காட்டப் பெறுகிறான். முகில் - உபமானம்; வள்ளல் உபமேயமாகிய கருதிய பொருள். அது குறிப்பால் ஈண்டு உணர்த்தப்படுகிறது. முகில் தண்ணளி யுடையது; வள்ளலும் கருணை மிக்கவன். ஆகவே ‘தண்ணளி சேர்ந்து’ என்னும் அடைமொழி உவமை பொருள் இரண்டற்கும் பொதுவாய் விரவிவந்தது. இன்சொல் மருவுதல், எண்ணிய எப்பொருளும் எந்நாளும் மண்ணுலகில் வந்து அளித்தல் என்னும் பின் வந்த இரண்டு அடைமொழிகளும் வள்ளலாகிய உபமேயத்திற்கு மாத் திரமே சேர்வன. இவ்வாறு வெளிப்படையான உபமானத்திற்கும், குறிப்பால் போதரும் உபமேயத்திற்கும் அடைமொழிகள் கலந்து வந்தன. (தண்டி. 53-3) அடைவு அணி இது நிரல்நிறை அணி எனவும்படும். எ-டு : ‘செவ்வாய் புகர்புந்தி திங்கட் கதிர்புந்தி செவ்வாய்பொன் காரிசனி மந்த்ரி செவ்வாய் - எவ்வாயும் மேடமுதல் ஈராறு வீட்டுக்(கு) இறையென்று நீடாய்ந்து சொன்னார் நிலத்து.’ இது செவ்வாய் முதலிய கோள்களைப் பன்னிரண்டு இராசிக்கும் நாயகராக அடைவே வைத்துச் சொன்னமை யான், அடைவு அணி ஆயிற்று. (கதிர் - சூரியன்; புந்தி - புதன்; புகர் - சுக்கிரன்; பொன் - வியாழன்; மந்த்ரி - குரு; காரி - சனி.) மேடம் - செவ்வாய் இடபம் - சுக்கிரன் மிதுனம் - புதன் கடகம் - சந்திரன் சிம்மம் - சூரியன் கன்னி - புதன் துலாம் - சுக்கிரன் விருச்சிகம் - செவ்வாய் தனுசு - குரு மகரம் - சனி கும்பம் - சனி மீனம் - குரு மேற்கண்ட பாடலுள் இரண்டாமடி சிதைந்துள்ளது. ‘வெள்ளிசெவ்வாய் பொன்சனி காரிபொன்’ என்று பாடம் கொண்டால்தான் பொருள் அமையும். (வீ. சோ. 154 உரை) ‘உய்த்துணர் நிரல்நிறை’ இதனின் வேறுபடுதல் காண்க. அணி என்னும் பெயர்க்காரணம் - புலவரால் தொடுக்கப்பட்ட கவிகளுக்குப் பொருளானும் சொல்லானும் அழகு எய்தப் புணர்க்கப்படும் பொருள் உறுப்பு அணி என்று பெயர் பெற்றது. (மா. அ. 86) ஒருத்தி எல்லா ஆபரணங்களும் பூண்டு நின்றாளேனும், அவற்றுள் சிறப்புடையது ஒன்றனால் ‘ஆரம் பூண்டு நின்றாள்’ என்பது போல, ஒரு செய்யுட்கண் பல அணிகள் இருப்பினும் அவ்வணிகளுள் மிக்கதொன்றே சிறப்பாகக் கொள்ளப்படும். (வீ. சோ. 143 உரை) அணி செய்யுளை விளக்குதல் - அகமும் புறமும் ஆகிய பொருள் இரண்டனுக்கும் இடம் செய்யுள் ஆதலின், செய்யுளை அழகுறுத்தி அதன் பொருளைத் தெளிவுறத் தோற்றுவிக்கவே அணிகள் தோன்றின என்ப. எனவே, அணிகளாவன செய்யுட் கருத்தை வனப்புற விளக்கி நிற்பன. (இ. வி. 621) அணிந்த என்ற உவமஉருபு - ‘முலையணிந்த முறுவலாள்’ (கலி. கடவுள்.) முல்லைமுகை போன்ற பற்களையுடையவள் என்ற பொருளுடைய இத்தொடரில், முல்லை பற்களுக்கு வடிவ உவமமும் நிற உவமமும் பற்றி வருகிறது. அணிந்த என்னும் உவம உருபு மெய், உரு உவமம் பற்றி வந்தது. (மெய் - வடிவம்; உரு - நிறம்) (நச். உரை) அணியியல் தோன்றிய முறை - தொல்காப்பியனார் உவமம் ஒன்றனையே அணியாகக் கூறியொழிந்தார். ஏனைய குணஅணிகளும், உவமை ஒழிந்த பொருள் அணிகளும், சொல்லணிகளும் பெரும்பான்மையும் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களுள்ளும், சிறு பான்மை அலங்காரம் முதலிய வடநூல்களுள்ளும் சொல் வேறுபாடன்றிப் பொருள் வேறுபாடு இன்மையானும், சான்றோர் வழங்கும் வடமொழிச் செய்திகளைப் பொது மக்கள் வழங்கும் அவ்வந்நாட்டு மொழிகளில் பெயர்த்து வழங்குதல் முறையாகலானும், வட நூற்செய்திகளையும் கொண்டு அணியியல் அமைத்தற்கண் இழுக்கு ஒன்றும் இல்லை. (இ. வி. 635 உரை) (இ. வி. பொருளதிகாரத்துள் அமைந்த ஓரியல் அணியியல்) அணியியலில் கூறப்பட்ட செய்திகள் - முத்தகம் குளகம் தொகைநிலை தொடர்நிலை என்ற செய்யுள் திறனும், வைதருப்பம் கௌடம் பாஞ்சாலம் என்ற நெறிகளும், பத்துக் குணஅணிகளும், பொருளணிகள் பலவும், அடிமடக்கு சொல்மடக்கு எழுத்துமடக்கு என்ற மூவகைமடக்கும், சித்திரகவிகளும், ஒன்பதுவகை வழுக்களும், ஆறுவகை மலைவுகளும் அணியியலில் கூறப்பட்டுள. (இ. வி. 709) அணியியலுள் செய்யுளைப் பற்றிக் கூறும் இயைபு - அணி என்னும் வனப்பினைக் காண்பதற்குரிய சட்டகம் செய்யுள் ஆதலின், செய்யுள் வகைகளாகிய பா இனங்கள் பற்றிய பொதுப்படையான செய்திகள் அணியியலுள் கூறப் படல் வேண்டும். அவையன்றி, யாப்பிலக்கணத்திற் கூறப்படும் எழுத்து அசை சீர் அடி தொடை முதலியன அணியியலுள் கூறப்பெறுவன அல்ல. (மா. அ. 66 உரை) அணியியலுள் வழுவும் மலைவும் கூறவேண்டிய இன்றியமையாமை - செய்யுள் என்பன சட்டகம், அலங்காரம் என இரண்டாம். அவற்றுள் அலங்காரம் என்பன அச்சட்டகத்தைப் பொலிவு செய்வன ஆகலான், செய்யுளுக்குப் பொலிவுசெய்யும் அலங் காரங்களைக் கூறும்போதே, பொலிவு அழிவு செய்வன வற்றையும் கூறி, அவை வாராத வகையால் செய்யுளை அமைத்தல் வேண்டும் என்பதனையும் கூறல் வேண்டுமாத லின், செய்யுளுள் வருதல் கூடாது என்று விலக்கப்பட்ட வழுக்களும் மலைவுகளும் அணியியலுள் கூறப்பட்டுள்ளன. (மா. அ. 306 உரை) (இ. வி. 691 உரை) அணியின் இலக்கணம் - பொருளியலிற் கூறிய அகப்பொருள் புறப்பொருள் என்னும் இரண்டனையும் குணம் அலங்காரம் என்னும் இருவகை யானும் சுவைபட விளக்கி நிகழ்வது அணியின் இலக்கண மாம். (இ. வி. அணியியல் 2) புலவரால் தொடுக்கப்பட்ட கவிகட்குப் பொருளானும் சொல்லானும் அழகு எய்தப் புணர்ப்பது அணியாகும். பொருளால் தொடுக்கப்படும் அணி அழகாகும்; சொல்லால் தொடுக்கப்படும் அணி பூணாகும். (மா. அ. 86 உரை) அணிவகை - குணவணியும் பொருளணியும் சொல்லணியும் என அணி முத்திறப்படும். இனிமையும் எளிமையும் மென்மையும் ஒழுகிசையும் தெளிவும் கவர்ச்சியும் உய்த்தலில் பொருண் மையும் இலக்கணக் குறிப்பும் செறிவும் முதலான சொற் பொருள் நடையினைக் குணவணி என்பர். பாட்டினுள் அமையும் இக்குணவணி தொல்காப்பியம் சுட்டும் எட்டு வகை வனப்பின்பாற்படும். தன்மைநவிற்சி முதலாக பாவிகம் ஈறாகக் கிடந்த முப்பதும் பொருள்நயத்தை புலப்படுத்தும் சிறப்புடைமையால் பொருளணி எனப்படும். அந்தாதி இரட்டை அளபெடை முரண் என்னும் தொடைகளும் நிரல்நிறையும் தீபகமும் பின்வருநிலையும் சொற்றொடர் பற்றிய பொருளணியாம். மடக்கணியும் சித்திரகவியும் பிறவும் சொல்லணியாம். (தென். அணி.2,3,47) அத்தச் சிலேடை உவமை - பொருள் பற்றிய சிலேடை வாய்பாடு கொண்டு உவமிக்கும் உவமை வகை இது. எ-டு : ‘பெற்றாள் இகழ வளர்த்தாள் இடர்செயப் பேர்த்துறவொன்(று) அற்(று)ஆகம் எங்கும் கருகியும் வாய்விட்(டு) அரற்றுமந்தோ பொற்றா மரைக்கண்ணன் விண்ணோர் பிரான்புட் குழியில் வஞ்சம் கற்றார் பொருட்பிரி(வு) உற்றிடை வேனிற் கருங்குயிலே.’ களவு நீக்கி மணம்செய்துகோடற்குத் தலைவன் பொருள் தேடிவரப் பிரிய முற்பட்டபோது, தோழி அவன் பிரிவிடைத் தலைவி படுந் துயரை ஒரு குயிலை விளித்து அதன் துயரைக் கூறுவாள் போல, “பெற்ற தாய் இகழ, வளர்த்த தாய் துன்புறுத்த, உறவினர் ஒருவரும் ஆதரிப்பார் இலராக, உடல் முழுதும் கருகி, வாய்விட்டுக் கதறி வருந்தும் குயில் போல, களவொழுக்கம் அறிந்து நற்றாய் இகழ, இற்செறித்துச் செவிலித்தாய் துன்புறுத்த, உறவினர்கள் ஏச, பிரிவுத் துயரால் செம்மேனி கறுத்துப் போய்த் துயரம் தாங்காமல் தலைவி வாய்விட்டுக் கதறுவாள்” என்று குறிப்பிட்டது இவ்வணி ஆமாறு காண்க. குயில் தன் முட்டையைக் காக்கையின் கூட்டில் வைத்துச் செல்லும். முட்டையிலிருந்து பார்ப்புத் தோன்றிக் குயில் குரலில் ஒலித்ததும், காக்கை அதனைத் தன் கூட்டினின்று விரட்டிவிடும். இதுவே ‘பெற்றாள் இகழ, வளர்த்தாள் இடர்செய’ என்பது. (மா. அ. பாடல் 214) அத்தியந்தாபாவம் - அத்தியந்த + அபாவம்; முழுது மின்மை. (பிரபோத. 42-4) (டு) அத்புதரஸம் - அற்புதச்சுவை. இது சுவையணி வகைகளுள் ஒன்று. இது மருட்கைச் சுவை எனவும் படும். ‘வியப்புச்சுவை அணி’ காண்க. அத்புதரூபகம் - தமிழ் நூலார் இதனை ‘வியப்பு உருவகம்’ என்ப. அது காண்க. அத்புதோபமா - தமிழ் நூலார் இதனை ‘வியப்பு உவமை’ என்ப. அது காண்க. அத்யுக்தி அலங்காரம் - இதனை ‘மிகுதி நவிற்சி அணி’ என்ப தமிழ் நூலார். அது காண்க. அதத்குணாலங்காரம் - இதனைத் தமிழ்நூலார் ‘பிறிதின்குணம் பெறாமைஅணி’ என்பர். அதனுள் காண்க. அதிக அணி - தாங்கும் பொருளைவிடத் தாங்கப்படும் பொருள் உருவம் பெருத்து, இனி வளர்தல் கூடாது என்று அடங்கியது எனக் கூறுவது இவ்வணி. எ-டு : ‘வசையிலா இரசதத்தினால் வயின்வயின் அமைத்த அசைவிலா பனிவரைக்குலம் அளவிடற்(கு) அரிதாம் திசைகள் எங்கணும்சென்(று) இடம்பெறாதவாம் அதன(து) இசைகள் நின்(று) அவண்செறிந்(து) அடங்கிய தெனலாமே’ வெள்ளியாலமைத்த செய்குன்றுகள் திசைகளெங்கும் பரவிக் காணப்பட்டன. அவற்றின் புகழ் பூவுலகம் வானவுலகம் எங்கணும் பரவி இனிப் பரவுதற்கு இடமில்லை என்று மேலும் பரவாமல் நின்றுவிட்டது என்ற இப்பாடற் கருத்தில் அதிக அணி அமைந்துள்ளது. (மா. அ. 178) அதிகம் (1) - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (73) வருவதோர் அணி. உபமானத்தைவிட உபமேயத்திற்கு உயர்வு கொள்வது. எ-டு : ‘குட்டநீர்க் குவளை யெல்லாம் கூடிமுன் நிற்க மாட்டாக் கட்டழ(கு) அமைந்த கண்ணாள்’ (சீவக. 710) அதிகம் (2) - இது மாணிக்க வாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (77) வருவதோர் அணி. ஆதாரத்தினும் ஆதேயம் பெரிதாக வளர்ந்து இடமின்மை யின் அதனோடு நின்றது என்று கூறுவது. ‘அதிக அணி காண்க.’ அதிகாலங்காரம் - ‘அதிக அணி’ காண்க. அதிசய அணி - அதிசயமாவது மிகுதி. கவி தான் கருதிய பொருளினது வனப்பினை உயர்த்திச் சொல்லுங்கால், உலகநடை வரம்பு கடவாமல், உயர்ந்தோர் வியக்கும் வகையில் சொல்லுவது. (தண்டி. 54) இஃது உயர்வு நவிற்சி, மிகைமொழி, பெருக்கு என்னும் பெயர் களையும் பெறும். உரிய பொருளை உயர்த்திச் சொல்லும் உதாத்த அணியாகிய வீறுகோளணியின் இது வேறாம். இது பொருள்அதிசயம், குணஅதிசயம், தொழில்அதிசயம், ஐயஅதிசயம், துணிவுஅதிசயம், திரிபுஅதிசயம் என ஆறு வகைப்படும். (தண்டி. 55) இடம், சினை, காலம் இவற்றையும் மா. அ. (145) குறிக்கும். காரண மிகைமொழி, அகாரண மிகைமொழி என்னும் பகுப்புக்களை வீ.சோ. (177) குறிக்கும். இப்பாகுபாடுகளை அவ்வத்தலைப்புக்களில் காண்க. அதிசய அணியின் மறுபெயர்கள் - 1. பெருக்கு அணி (வீ. சோ. 153), 2. மிகைமொழி அணி (வீ. சோ. 153 உரை), 3. உயர்வு நவிற்சி அணி (ச. 28, குவ. 13) என்பன. அதிசய உருவகம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (30) வருவதோர் அணி. உபமானத்தில் உபமேயத்தின் செய்தியைக் குறிப்பிடுவது. எ-டு : ‘குழைஅருகு தாழக் குனிபுருவம் தாங்கி உழையர் உயிர்பருகி நீண்ட - விழியுடைத்தாய் வண்(டு)ஏ(று) இருள் அளகம் சூழ்ந்த முகமதியாள் கொண்டாள்என் உள்ளம் குறித்து’. (தண்டி. 33-1) இப்பாடலில், உபமேயமான முகத்தின் செய்தி உபமானமான மதிக்கு ஏற்றி உரைக்கப்பட்டவாறு. அதிசய உவமை - உவமை வகைகளுள் அதிசய உவமை ஒன்று. உயர்வு நவிற்சி யாக உபமானத்தை உபமேயத்துடன் இணைத்துக் கூறும் உவமை வகை இது. எ-டு : ‘நின்னுழையே நின்முகம் காண்டும், நெடுந்தடம் தன்னுழையே தன்னையும் காண்குவம் - என்னும் இதுஒன்று மேயன்றி வேற்றுமைமற் றுண்டோ, மதுஒன்று செந்தா மரைக்கு?’ இதன்கண், “உன்னிடத்தில் உன்முகம் உள்ளது; தாமரை தடாகத்தில் உள்ளது. இந்த வேறுபாடன்றி, இவற்றிடையே பிற வேறுபாடு இல்லையே!” எனத் தலைவன் தலைவியது முகத்தைச் செந்தாமரையே என உயர்த்திக் கூறுதலான், அதிசயஅணி உவமையில் பயின்றவாறு காண்க.(தண்டி. 33-3) அதிசய பலம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (33) வருவதோர் அணி. காரணமும் காரியமும் தோன்றிய பின்னரே வர வேண்டிய பயன், அவை தோன்றுதற்கு முன்னர் வருதல். எ-டு : தலைவன் பொருள்வயின் பிரிதலாகிய காரணமும், தலைவி துயர் மிக்கு வருந்தும் காரியமும் ஆகிய இவை நிகழும் முன்பே, அவள் தன் மார்பில் தழுவி வந்த புதல்வன் தலையிலணிந்த பூக்களைத் தன் பெருமூச்சினால் கருகச் செய்தல் போல்வன. (அகநா. 5) தலைவன்பிரிவாகிய காரணமும் தலைவிதுயராகிய காரிய மும் தோன்று முன்னரே, அவளுக்கு வெப்பமான பெருமூச்சு வந்தது என்பதாம். அதிசய பேதகம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (109) வருவதோர் அணி. ஒரு பொருளை உவமையின்றி உயர்ச்சியுடையதாகக் கூறுவது. எ-டு : கோபுரம் வானளாவி நிற்கிறது என்றல் போல்வன. அதிசயம் - இது மாணிக்க வாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (31) வருவதோர் அணி. ஒரு பொருளின்கண் உள்ள சிறப்பினை மற்றொரு பொருளில் உள்ளதாக ஏற்றித் தலைதடுமாற்றமாகக் கூறுவது. எ-டு : ‘மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி’ (குறள். 1118) இப்பாடலில் சந்திரனுடைய ஒளி மாதர் முகத்துக்கு ஏற்றி மிகுத்து உரைக்கப்பட்டவாறு. அதிசய யோகம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (32) வருவதோர் அணி. கூடாத பொருளைக் கூட்டியுரைப்பது. எ-டு : ‘சந்தனத்தில் செந்தழலும் தண்மதியில் வெவ்விடமும் வந்தனவே போலுமால் நும்மாற்றம்’ (தண்டி. 32-22) சந்தனத்தில் வெப்பமும், அமுதமயமான சந்திரனில் விடமும் கூட்டியுரைத்தல் கூடாத பொருள்களைக் கூட்டி யுரைத்த வாறாம். இது கூடா உவமைக்கண் அடங்கும். அதிசயாலங்காரம் - அதிசயவலங்காரம் என்னும் மாறன் அலங்காரம். (மா.அ. 143,144) அதிசய அணி காண்க. அதிசயோக்தி - இவ்வணி உயர்வுநவிற்சி எனவும், அதிசயஅணி எனவும்படும். ‘அதிசயஅணி’ காண்க. அதிசயோபமா - இது மிகை உவமை எனவும், அதிசய உவமை எனவும்படும். ‘அதிசய உவமை’ காண்க. அந்த தீபகாலங்காரம் - தீவக அணிவகைகளுள் ஒன்று. கடைநிலை விளக்கணி எனவும் படும். குணம் தொழில் சாதி பொருள் இவை குறித்துச் செய்யுளில் ஓரிடத்து நின்ற சொல் பிற இடங்களிலும் சென்று இயைந்து பொருள் தருவது தீவக அணி. செய்யுளின் இறுதியில் நின்ற சொல் ஏனைய முதல் இடைகளிலும் சென்று பொருள்பயப்பது கடைநிலைத் தீவகம் ஆகிய அந்ததீபகாலங்காரம். எ-டு : ‘துறவுளவாச் சான்றோர் இளிவரவும், தூய பிறவுளவா ஊன்துறவா ஊணும் - பறைகறங்கக் கொண்டான் இருப்பக் கொடுங்குழையாள் தெய்வமும் உண்டாக வைக்கற்பாற் றன்று’ இதன்கண், ‘உண்டாக வைக்கற்பாற்றன்று’ என்னும் இறுதிக் கண் நின்ற தொடர் இளிவரவு, ஊண், தெய்வம் எனப் பிற இடத்தும் சென்று பொருள் பயந்தவாறு. தொழில் குறித்து வந்த அந்த தீபகாலங்காரம் இது. (தண்டி. 40- 10) அந்தாதி உவமை - ஒரு செய்யுளகத்துப் பல பொருளுக்குப் பல உவமை வந்தால், முதலில் உவமம் செய்த உபமேயப் பொருட்பெயரினை ஆகுபெயராகவாவது அன்மொழித்தொகையாகவாவது பிரித்து நிறுத்திப் பின் அவ்வுபமேயப் பெயரினை அந்தாதித்து உபமானமாக்கி உவமஉருபு கொடுத்துப் பின் உபமேயத் தோடு இணைப்பது அந்தாதி உவமையாம். ஈர்ந்துநிலம் தோயும் இரும்பிடித் தடக்கையின் சேர்ந்துடன் செறிந்த குறங்கின், குறங்கென மால்வரை ஒழுகிய வாழை, வாழைப் பூவெனப் பொலிந்த ஓதி (சிறுபாண். 19-22) பெண்யானையின் துதிக்கையினைப் போலக் கால்களொடு தொடர்புபட்டு முறையாகப் பருத்து ஒன்றோடொன்று நெருங்கி யிருக்கும் தொடையினையுடையாள்; தொடையைப் போல மலைகளில் வாழைகள் வழுவழுப்புடையவாய் அமைந்துள; அவ்வாழையின் பூவைப் போன்ற வடிவத்தில் முடியப்பட்ட மயிர் முடியினை யுடையாள் - என்பதன்கண், ‘சேர்ந்துடன் செறிந்த குறங்கின்’ என்பதனைக் குறங்கினை யுடையாள் என அன்மொழித் தொகையாக்கிப் பிரித்துப் பின் குறங்கு என்பதனை வாழைக்கு உவமையாகக் கொள்ளு தலும் அவ்வாழையின் பூவினை, மயிர்முடிக்கு உவமையாகக் கொள்ளுதலும் பொருந்துமாறு, ‘குறங்கின் குறங்கென’ எனவும், ‘வாழை வாழைப்பூவென’ எனவும் அந்தாதியாக வருதலின் அந்தாதி உவமையாம். (நூலுள் வேறுதாரணம் காட்டப்பெறும்.) (மா. அ. 101 - 24) அந்திய குளகம் - ஐந்து பாடல்களும் ஐந்தற்கு மேற்பட்ட பாடல்களும் தொடர்ந்து, வினை வினைக்குறிப்பு பெயர் தொழிற்பெயர் இவற்றுள் ஒன்றனை இறுதிப்பாடற்கண் முடிக்கும் சொல் லாகக் கொண்டு பொருள் முற்றுப்பெறுமாயின் அந்திய குளகம் எனப்படும். எ-டு : ‘செம்பினை உருக்கி வாக்கித் திண்ணிதின் அகழி தூர்த்திட்(டு) உம்பரின் முதலே வெண்பொன் உவானம தமைந்த பின்றைப் பைம்பொனார் செகதி கண்டம் பட்டிகை வகுத்திட் டோர்சார் இம்பர்நின் றேற யாளிச் சுருட்படி யியற்றி மன்னோ, ‘பாங்கர்வே திகைக்குத் தானம் பகுத்தரங் கினுக்கு நாப்பண் ஓங்குபொற் சுவர்நி றீஇவித் துருமசா ளரம்செய் தோவா வீங்கிருள் துணிக்கும் செய்ய விழுமணி அதனால் மேல்வாய்த் தாங்குமுத் தரம்வைத் துள்வச் சிரத்துலாம் தகவின் வைத்தே, ‘பச்சைநன் மணியை ஈர்ந்த பலகைமேற் பரப்பி நீலத் தச்சுறு கொடுங்கை மூட்டி யதன்புழை அகத்த வாக வச்சிர வளைக ளோடி மணிசெய்வே திகைமாண் தூணத்(து) உச்சிமேற் பலகை சிற்றுத் தரத்தினோ டொன்றச் சேர்த்தே’ ‘வெள்ளிவெண் பலகை நான்கு விரல்வியன் நீப்பின் றாக அள்ளுற நிரைத்து வன்பொன் ஆணிகள் அழுத்திக் கையால் அள்ளுபு திரளும் ஒண்பொன் அரதனம் ஞாங்கர் மேய்ந்து தெள்ளிதின் ஏழதாகத் திகழ்நிலம் புணர்த்து மாதோ, ‘வாரிநீள் நிலையும் மேல்கீழ் மரீஇயநோன் படியும் தாளும் கூர்கபா டமுமொன் றாகக் கொளீயமாண் மணிகள் தம்மால் சீர்கெழு தசும்பு சூட்டும் சிமையமோ டுயர்ந்து வானுள் ஆர்தமக் கமைந்த தச்சர்க் கணங்குசெய் வனபொன் மாடம்.’ (மா.அ. பாடல்கள் 49- 53.) இவை ஐந்துபாடல்களும் பொருள்தொடர்புற அமைந்து, ஐந்தாம் பாடல் ஈற்றடியின் இறுதியிலுள்ள ‘பொன்மாடம்’ என்ற பெயரைக் கொண்டு முடிந்தன. (மா. அ. 68 உரை) அந்திய தீபகம் - இது கடைநிலைத் தீவக அணி எனவும், கடைநிலை விளக் கணி எனவும் தமிழில் வழங்கப்பெறும். அந்த தீபகாலங் காரமும் அது. ‘கடைநிலைத் தீவக அணி’ காண்க. அந்நிய உவமை - உவமையாகக் கூறப்படும் பொருள்களிடத்துள்ள குறைபாடு களைச் சுட்டி, உபமேயத்திற்கு உபமானம் யாது என்று அறிய இயலாத நிலையைக் குறிப்பது அந்நிய உவமை. இஃது, ‘இவ் வியலதனால் இதுவன்று இது எனச், செவ்விதின் தெளிந்த தேற்ற உவமை’யின் சிறிது வேறுபட்டது. தேற்ற உவமை உபமேயத்திற்கு உபமானம் இன்று என முடிவு செய்வது. இஃது அக்கருத்தை வெளிப்படையாகக் கூறாது விடுப்பது. இஃது இரண்டற்குமிடை வேற்றுமை. ‘கற்பகம்போல் ஒக்கும் கணுஇல்லை; காவேரி மற்புனல்போ லாமொருகால் வற்றாது - நற்புகழ்சேர் நந்திகை மன்னு புலவோர் நவைதீரக் கந்தகோன் வந்துதவும் கை’ புகழ்மிக்க அமராவதி நகரையொத்த தன்னூர் அடையும் புலவர்தம் வறுமைதீரக் கந்தன் என்ற வள்ளல் அள்ளி வழங்கும் கைகளைக் கற்பகம் என்று கூறலாமெனின், கற்பக மரத்தில் உள்ள கணுக்கள் கைகளில் இல்லை; காவேரியை உவமை கூறலாம் எனில், காவேரி ஒருகால் வற்றிவிடும், கையின் கொடை வற்றாது. யாதனை உவமை கூறுவது என இதன்கண் அந்நிய உவமை வந்தவாறு. அந்யோந்யாலங்காரம் - தமிழ் அணியிலக்கண நூலார் ‘ஒன்றற்கு ஒன்று உதவி அணி’ என்பர். ஒன்று ஒன்றற்கு உபகரித்தலைச் சொல்லும் அலங்காரம் இது. எ-டு : ‘திங்கள் இர வால்விளங்கும்; செப்புகதிர்த் திங்களால் கங்குல் விளங்குமே காண்.’ (குவ. 43) இதன்கண், திங்கள் இரவிற்கு உபகார மாயிருத்தலும் அவ்வாறே இரவும் திங்கட்கு உபகாரமாயிருத்தலும் கூறப் பட்டவாறு. அந்யோந்யோபமா - இதனைத் தமிழ்நூலார் தடுமாறுவமை என்பர். இஃது ஒரேபாடலில் அடுத்தடுத்து உபமேயத்தை உபமானமாகவும், உபமானத்தை உபமேயமாகவும் மாற்றிக் கூறுவது. இதனைத் தண்டி அலங்காரம் இதரவிதரஉவமை என்றும், மாறன லங்காரம் தடுமாறுவமம் என்றும், வீரசோழியம் உறழ்ந்து வரலுவமை என்றும் கூறும். எ-டு : ‘களிக்கும் கயல்போலும் நின்கண்; நின் கண்போல் களிக்கும் கயலும்; கனிவாய்த் - தளிர்க்கொடியே! தாமரை போல்மலரும் நின்முகம்; நின்முகம்போல் தாமரையும் செவ்வி தரும்.’ கயல் உபமானம், கண் உபமேயம்; கண் உபமானம்; கயல் உபமேயம்; தாமரை உபமானம்; முகம் உபமேயம்; முகம் உபமானம், தாமரை உபமேயம் - என்று இப்பாடலில் உபமானமும் உபமேயமும் தடுமாறி வந்துள்ளன. அந்யோந்யம், இதரேதரம், தடுமாற்றம்.... ஒரு பொருளன. (தண்டி 32-3) அநந்யபாவோபமா - இதனைத் தண்டியாசிரியர் பொது நீங்கு உவமை என்பர். அஃதாவது உவமையைக் கூறி மறுத்துப் பொருள்தன்னையே (உபமேயத்தை) உவமையாகக் கூறுவது. எ-டு : ‘திருமருவு தண்மதிக்கும் செந்தா மரையின் விரைமலர்க்கும் மேலாம் தகைத்தால்; - கருநெடுங்கண் மானே! இருள்அளகம் சூழ்ந்தநின் வாண்முகம் தானே உவமை தனக்கு’ இதன்கண், தலைவியது முகம், உவமையாகிய தண்மதி செந்தாமரை இவையிரண்டினும் மேலாம் தகையது ஆதலின், தனக்கு உவமையாவது தானேயாம் எனக் கூறப்பட்டமை காண்க. (அணியிலக்கண நூலார் இயைபின்மை அணி என இதனைச் சுட்டுவர்.) (தண்டி 32- 23) அநந்வயாலங்காரம் - இதனைத் தமிழ் அணியிலக்கண நூலார் இயைபின்மை அணி என்ப. அநந்யபாவோபமா என்பதும் இவ்வணி. அத் தலைப்புக் காண்க. (குவ. 2) அநாதராnக்ஷபம் - இது விருப்பின்மை கூறும் இகழ்ச்சி விலக்கு அணி. முன்ன விலக்கணி வகையுள் ஒன்று. ‘இகழ்ச்சி விலக்கு’ காண்க. அநியம உவமை - அநியமமாவது வரையறையின்மை. வரையறை செய்து கூறிய உவமை ஒன்றே ஆவதன்றி, மற்று ஒன்றும் உவமையாம் என்பது இது. எ-டு : ‘கௌவை விரிதிரைநீர்க் காவிரிசூழ் நன்னாட்டு மௌவல் கமழும் குழல்மடவாய் - செவ்வி மதுவார் கவிரேநின் வாய்போல்வ தன்றி அதுபோல்வ துண்டெனினும் ஆம்.’ இதன்கண், “பெண்ணே! உனது வாய்க்கு முண்முருங்கைப் பூவே உவமையாம் என்பதில்லை; அதுபோல்வது வேறு ஏதேனும் உண்டெனினும் உவமையாதல் தகும்” என்றற்கண் அநியம உவமை வந்தவாறு. (தண்டி. 32-10, மா.அ. 101-15) அநியமச் சிலேடை - நியம விலக்குச் சிலேடை (தண்டி. 78); அது காண்க. (மா. அ. 154) அநியமோபமா - இதனை அநியம உவமை என மாறனலங்காரம், தண்டி இவை கூறும். ‘அநியம உவமை’ காண்க. அநுக்ஞாலங்காரம் - இதனைத் தமிழ் அணியிலக்கண நூலார் ‘வேண்டல் அணி’ யென்ப. அஃதாவது குற்றத்தால் குணம் உண்டாவது கண்டு அக்குற்றத்தை வேண்டுதல். எ-டு : ‘வெண்டிரு நீறு புனையுமா தவர்க்கு விருந்துசெய் துறுபெரு மிடியும் கொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையும்நீ கொடியனேற் கருளுநாள் உளதோ?’ இதன்கண், சிவனடியார்க்கு விருந்தூட்டுவதால் வரும் வறுமை, விரதம் பூணுவதால் உடம்பு தளர்தல் ஆகிய குற்றங்கள் மறுமையின்பம் பயக்கும் குணம்பற்றித் தனக்கு வேண்டும் எனக் கவிஞனால் வேண்டப்பட்டவாறு காண்க. (குவ. 71) அநுக்ஞாnக்ஷபம் - இதனைத் தண்டியாசிரியர் முன்னவிலக்கணியுள் ஒன்றாகிய ‘உடன்படல் விலக்கு’ என்ப. அது காண்க. அநுக்ரோசாnக்ஷபம் - முன்ன விலக்கணி வகைகளுள் ஒன்றாகிய ‘இரங்கல் விலக்கு’ என்று தண்டியாசிரியர் இதனைக் குறிப்பிடுவர். அது காண்க. அநுகுணாலங்காரம் - இதனைத் தமிழ் அணிநூலார் தன்குணமிகையணி என்பர். அஃதாவது மற்றொன்றின் சார்பினால் தனது குணம் மிகுதலைச் சொல்வது. எ-டு : ‘வார்செவிசேர் காவிமலர் மானனையாய்! நின்கடைக்கட் பார்வையினால் மிக்ககரும் பண்பு.’ இதன்கண், தலைவியது கடைக்கட் பார்வையது சார்பினால் குவளைமலர்க்குக் கருமைமிகுதல் சொல்லப்பட்டது. (குவ. 78) அநுசயத் தடைமொழி - இதனை விலக்கணி வகைகளுள் ஒன்றாகிய ‘கையறல் விலக்கு’ எனத் தண்டியலங்காரம் குறிக்கும். அது காண்க. (வீ.சோ. 163) அநுபலத்தி அணி - இது தமிழில் நுகர்ச்சியின்மை அணி என்று வழங்கப்பெறும். அது நோக்குக. (குவ. 113) அநுமானப் பிரமாணஅணி - அநுமானம் - ஒரு காரணம்கொண்டு காரியத்தை உய்த் துணர்தல். ‘அனுமானம்’ என்பது காண்க. நிறுவ வேண்டிய பொருளையும் அதன் ஏதுவையும் அழகு தோன்றக் கூறுவது இவ்வணி. இஃது உருவகம், உயர்வுநவிற்சி என்பன போன்ற அணிகள் கலந்தும் வரப்பெறும். 1) சீதையைப் பிரிந்து துயருறுகின்ற இராமன் நிலவை வெயிலென மயங்கி “இலக்குவ! மரநிழலுக்குச் செல்வோம்; கதிரவன் மிகவும் காய்கிறான்” என்று கூற, இலக்குவன், “அண்ணால்! இது நிலவு, சந்திரன்நிலவன்றோ ஈது!” என்றான். “உனக்கு எப்படித் தெரியும், முழுநிலவுதான் என்று?” என்று இராமன் வினவவே, இலக்குவன், “சந்திரன் நடுவே மான் இருக்கிறது” என்றான். மான் என்ற சொற் கேட்டதும், இராமனுக்கு மான் போன்ற கண்ணியாம் சீதையது நினைவு மிக்குத் துயரமும் மிக்கது. “மான் போலும் விழியும் மதிபோலும் முகமும் படைத்த என் உயிரனையாய்! சீதையே! நீ யாண்டுளாய்” என்று அவன் புலம்பலுற்றான். இதன்கண், உயர்வு நவிற்சியும் மயக்க அணியும் நினைவணியும் கலந்து, “கதிரவன் அல்லன், சந்திரனே” என்று நிறுவுதற்கான ஏதுக்களாய், இரவாய் இருத்தலும் மதி நடுவே மானுருவம் தெரிதலும் கூறப்பட்டமை காண்க. 2) பிற அணி ஒன்றும் கலவாமல், ஏதுவும் காரியமுமாய்க் கூறப்படும் தூய அநுமானப்பிரமாணஅணியும் உண்டு. “தத்தம் கூடுகளிற் சென்று ஒடுங்கும் பறவைகளைக் கொண்டும், கூம்பி மூடுகின்ற தாமரைகளைக் கொண்டும், மல்லிகை மலர்வதைக்கொண்டும், சூரியன் மறைந்தனன் என்பது புலனாம்” என்று கூறுவது தூய அநுமானப் பிரமாணமாகும். (குவ. 109) அநேகாங்க உருவகம் - அநேக அங்கம் - பலஉறுப்பு. ஒரு பொருளின் உறுப்புக்களில் பலவற்றையும் உருவகம் செய்வது அநேகாங்க உருவக அணியாம். எ-டு : ‘கைத்தளிரால் கொங்கை முகிழ்தாங்கிக் கண்என்னும் மைத்தடஞ்சேல் மைந்தர் மனம் கலங்க - வைத்ததோர் மின்உளதால் மேக மிசையுளதால் மற்றதுவும் என்உளதாம் நண்பா! இனி!’ தலைவன் பாங்கற்கு உற்றதுரைக்கும் இக்கிளவிப்பாடற்கண் “கை ஆகிய தளிரால் கொங்கையாகிய மொட்டினைத் தாங்கிக் கண்ணாகிய மீன் காரணமாக இளைஞர் மனம் கலங்க, மேலே மேகத்தைத் தாங்கியுள்ள மின்னல் ஒன்று எனது உளத்தே உள்ளது” என, கையைத் தளிராகவும், கொங்கையை முகிழாகவும், கண்ணினை மீனாகவும், கூந்தலை மேகமாகவும், இவ்வாறு உறுப்புக்களை உருவகம் செய்து உறுப்பியாகிய தலைவியையும் மின்னலாக உருவகித்தமை காண்க. அவயவம், அவயவி என இரண்டையும் உருவகிப்பது இவ்வணி. அவயவங்களை மாத்திரம் உருவகம் செய்து அவயவியை உருவகியாது விடுவது அவயவ உருவகமாம். (தண்டி. 37 - 12) அப்ரஸ்துத ப்ரசம்ஸாலங்காரம் - இதனை தமிழ் நூலார் ‘புனைவிலிப் புகழ்ச்சியணி’ என்பர். ‘மாறுபடு புகழ்நிலையணி’யும் அது. விரிவினை அவற்றுள் காண்க. அபஹநுதி - இதனைத் தமிழ் அணிநூலார் அவநுதி எனவும், ஒழிப்பணி எனவும் (அணி -11) கூறுவர். விரிவு அவற்றுள் காண்க. (தண்டி. 23) அபாவ ஏது - அபாவம் -இன்மை; ஏது - காரணம். இன்மை என்னும் அபாவத்தையும் ஏது அணியின்பாற்படுத்துக் கூறுப. ஒன்றின் இன்மையைக் காரணம்காட்டிக் கூறல் இதன் இலக்கணம். இஃது ஐவகைப்படும். ‘யாண்டு மொழிதிறம்பார் சான்றவர்; எம்மருங்கும் ஈண்டு முகில்கள் இனமினமாய் - மூண்டெழுந்த காலையே கார்முழங்கும் என்றயரேல்; காதலர்தேர் மாலையே நம்பால் வரும்.’ “‘எல்லா மருங்கினின்றும் மேகங்கள் நெருங்கிக் கூட்டம் கூட்டமாய் வந்தவுடனேயே முழங்கிக் கார்காலத்தை அறிவிக்கின்றனவே’ என்ற நீ வருந்தற்க. சான்றோர் சொன்ன சொல் தவறுதல் எஞ்ஞான்றும் இல்லை. தலைவன் சான் றோன் ஆகலின், குறித்த பருவத்தே வந்துவிடுவான். அவன் தேர் இன்றுமாலையே நம்மிடம் வரும்” என்று பருவங்கண்டு வருந்திய தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுகிறாள். சான்றோர் சொல் தவறார் என்னும் காரணம், தலைவன் தேர் தவறாது வரும் என்பதற்கு ஏதுவாயினமையின் அபாவ ஏதுவாம். (தண்டி. 61, 62-1) அபாவஏது வகை - என்றும் அபாவம், இன்மையது அபாவம், ஒன்றின் ஒன்று அபாவம், உள்ளதன் அபாவம், அழிவுபாட்டபாவம் என அபாவ ஏதுஅணி ஐவகைப்படும். (தண்டி. 62) அபூத உவமை - அபூதம் - உலகில் இல்லாத பொருள். உலகில் இல்லாத பொருளை உபமானம் ஆக்கி உரைக்கும் இவ்வணி உவமை வகைகளுள் ஒன்று. இல்பொருள் உவமை எனவும் இது வழங்கப்பெறும். எ-டு : ‘எல்லாக் கமலத் தெழிலும் திரண்டொன்றின் வில்லேர் புருவத்து வேல்நெடுங்கண் - நல்லீர்! முகம்போலும் என்ன, முறுவலித்தார் வாழும் அகம்போலும் எங்கள் அகம்.’ உலகத்தே யுள்ள தாமரைப்பூக்கள் எல்லாவற்றின் அழகையும் ஒருசேரத் தொகுத்தால், அவ்வழகு தலைவியது முகத்தழகு போலாம் என்ற கருத்தின்கண், அவ்வாறு தொகுத்தலாகிய இல்லாத நிகழ்ச்சியைத் தலைவி முகத்தழகிற்கு உவமை யாக்கியமையால் அபூத உவமை நிகழ்ந்தவாறு.(தண்டி. 32- 19) அபூதோபமா - அஃதாவது அபூத உவமை; இல்பொருள் உவமை எனவும் படும். ‘அபூத உவமை’ காண்க. அபேதத்தைப் பேதமாக்கிய அற்புத உவமை வேறுபடாத தொன்றனை வேறுபடுத்தி அற்புத வாய் - பாட்டால் கூறும் உவமைவகை இது. ‘மேலிருந்த விண்ணோர் வியத்தக்க செம்மையதாய்ப் பாலிகையுள் தெள்ளமுதம் பாலிக்கும் - சால்புடைய திங்களைக்கண் டால்மாறன் செம்பொன் துடரியுள்யார் தங்களுளங் கோடா தவர்’ சந்திரன் ஒன்றன்றி வேறொன்று இல்லையாகவும், ‘செம் மையை யுடையதாய்ப் பாலிகையுள் தெளிந்த அமுதத்தை வெளிப்படுத்தும் சந்திரன்’ எனத் தலைவிமுகமாகிய சந்திரனை இயற்கையான சந்திரனிடத்தினின்று வேறு படுத்தி, வியப்புமிக்க வாய்பாட்டால் இது கூறப்பட்டமை காண்க. பாலிகை - பாத்திரம், உதடுகள்; இவ்வாறு இதன்கண் சிலேடையும் பயின்றுள்ளது. (பாடல் 262 மா. அ.) அமர என்னும் உவமஉருபு - ‘வேய் அமர் தோளி’ (மூங்கில் போன்ற தோள்களை யுடையவள்) என்ற தொடரில் அமர என்னும் உவமஉருபு மெய் உவமம் பற்றி வந்தது; நூற்பாவில் எடுத்தோதப் பெறாத உருபுகளுள் ஒன்று இது. (தொ. பொ. 286 பேரா.) அமைவணி - பொதுவாக உலகத்தாரால் கூறப்படும் குறை சிறப்பாக நோக்க நிறைவாகவே அமைவதாகக் கூறும் அணி. எ-டு : ‘மதியின் களங்கம் வனப்புறுத்தும் மாதர் வதனத் திலக வகை’ சந்திரனிடத்துள்ள களங்கம் என்று பொதுவாகப் பழிக்கப் படும் குறை, மதியம் போன்ற மாதர்வதனத்திற்குத் திலகம் அழகு செய்வது போல மதிக்கு அழகு செய்கிறது என்று கூறும் இப்பாடற்கண், அமைவணி அமைந்துள்ளது. (தொ. வி. 366) அமைவு - குறைவையும் குணமாக ஆக்கிக் கொள்ளுதல். அயம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (105). வருவதோர் அணி. ஒருபொருளின் தொகுதி அப்பொருளைக் குறித்த அளவில் அதன் தொகுதியின் எண்ணைத் தெரிவிப்பது. எ-டு : ‘தண்டமிழ்ச் செழியன் நகரின் நதியில் ஆட்டயர் மகளிர் ஆதித்தன் அளவினர்’ என்ற விடத்தே, ஆதித்தர் பன்னிருவர் ஆதலின் நதியில் நீராடிய மகளிரும் பன்னிருவர் என்பது போந்தவாறு போல்வன. அயுக்தகாரி - கூடா இயற்கை. இது வேற்றுப்பொருள்வைப்பணியின் வகைகளுள் ஒன்று. ‘கூடா இயற்கை’ காண்க. அயுக்தரூபகம் - இயைபில் உருவகம்; அது காண்க. அயுத்த ஏது அணி - அயுத்தம் - பொருத்தமற்றது. ஏதுஅணிக்கு ஒழிபாக வந்த ‘சித்திர ஏது’ வகையுள் இதுவும் ஒன்று. பொருத்தமற்ற காரணம் ஒன்றால் காரியம் நிகழ்வதைக் கூறுவது. (யுக்தத் திற்கு மறுதலை அயுக்தம்) எ-டு : ‘இகல்மதமால் யானை அநபாயன் எங்கோன் முகமதியின் மூரல் நிலவால் - அகமலர்ந்த செங்கயற்கண் நல்லார் திருமருவு வாள்வதனப் பங்கயங்கள் சாலப் பல’ அநபாயனது முகமதியில் தோன்றும் புன்முறுவல் ஆகிய நிலவினால், மகளிருடைய அழகிய முகத்தாமரைகள் மலர் கின்றன என்னும் இப்பாடலில், உலகியலுக்குப் பொருத்தம் இல்லாத வகை, தாமரை மலர நிலவு காரணமாகச் சொல்லப் பட்டமையால் இஃது அயுத்த ஏது அணி ஆயிற்று. (தண்டி. 63 - 5) அர்த்த வியக்தி - அஃதாவது உய்த்தலில் பொருண்மை. இது பொது அணி வகை பத்தனுள் ஒன்றாய், வைதருப்பநெறி கெண்டநெறி பாஞ்சாலநெறி என்னும் மூன்று நெறியார்க்கும் சிலசில வேறுபாட்டொடு வரும். ‘உய்த்தலில் பொருண்மை’ காண்க. அர்த்தாந்தரந்யாஸம் - வேற்றுப்பொருள்வைப்பணி அர்த்தாந்தரந்யாஸாnக்ஷபம் - வேற்றுப்பொருள்விலக்கு. இது முன்னவிலக்கு அணி வகைகளுள் ஒன்று; அது காண்க. அர்த்தாலங்காரம் - தமிழ்நூலார் இதனைப் பொருளணி என்பர். அது காண்க. அர்த்தாவ்ருத்தி - தமிழ்நூலார் இதனைப் பொருள் பின்வருநிலை என்பர். இது பின்வருநிலை அணி வகைகளுள் ஒன்று. அது காண்க. அரதனமாலை அணி - கவி, தான் சொல்லக் கருதிய பொருளை, வரிசையாக மாணிக்கக் கற்கள் மாலையில் பதிக்கப்படுவது போல, முறை தவறாமல் கூறும் அணி. இது ரத்நாவளி அலங்காரம் என வடநூல்களில் கூறப்படும். எ-டு : ‘உனது பிரதாபம், உயிரிழந்த தெவ்வர் மனைவியரா னோர்உறுப்பின் மண்ணும் - சினவிழியின் ஆரமும்நெஞ் சில்தீயும் நாசியில்கா லும்அறிவின் ஆரும் வெளியுருவும் ஆம்!’ உன்னால் உயிர்துறந்த பகைவருடைய மனைவிமார் தரையில் விழுந்து அழுவதனால் அவருடலில் மண்ணும், அழுது சிவந்த விழிகளில் நீரும், நெஞ்சில் துயரக் கனலும், மூக்கில் பெரு மூச்சுக்காற்றும், அறிவில் செய்வதறியாது திகைத்த சூனியமும், பெறுமாறு செய்வதே உனது புகழாகும்” என்ற கருத்தமைந்த இப்பாடலில், நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் முறைபிறழாமல் அமைந்தமை காண்க. (ச. 100 - குவ. 74) அருங்கல உயர்வு - வீரசோழிய உரையுள் சுட்டப்பட்டுள்ள அணிவகைகளுள் ஒன்று. அணிகளின் சிறப்பை உயர்த்திக் கூறுவது. இது பொருள்அதிசயத்துள் அடங்கும். எ-டு : ‘மன்னர் ஒளிமுடிமேல் மாணிக்கம் கால்சாய்த்து மின்னி விரிந்த வெயிற்கதிர்கள் - துன்னி அடிமலர்மேல் சென்றெறிப்ப நின்றான் அவிர்ஒண் கொடிமலர்வேய் நீள்முடிஎங் கோ’ மலர்மாலைகளால் அணி செய்யப்பட்ட நீள்முடியினை அணிந்த மன்னன் ஏனைய மன்னர்களின் முடியிலுள்ள மாணிக்க மணிகளின் ஒளி தன் பாததாமரைகளில் படியு மாறு நின்றான் என்னும் கருத்தமைந்த இப்பாடற்கண், தலைசாய்த்து வணங்கிய மன்னர் முடிமணியின் ஒளி பெருமன்னன் அடிக்கண் வீசியமை கூறல் அருங்கல உயர்வு ஆகும். (வீ. சோ. 159) அருத்தாபத்தி பிரமாணாலங்காரம் - இது தமிழில் ‘பொருட்பேற்றுப் பிரமாண அணி’ (குவ. 112) என வழங்கப்பெறும். அது காண்க. அரூபகம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (119) வருவதோர் அணி. ஒருபொருளின் இடுகுறியாகிய பெயரைக் காரணம் காட்டி மறுத்திடச் செய்வது. எ-டு : “பெண்களை மெல்லியலார் என்று கூறுவர். ஆயின், இம்மாதரது துவர் இதழ்வாய் என் உயிரைக் கவர்கிறது; முறுவல் என்அறிவை அழிக்கிறது; நீண்ட விழிகள் என் நெஞ்சினைக் கிழித்து உலவுகின்றன. இவளை ‘மெல்லியல்’ எனல் சாலாது” (தண்டி. 44-2) என்ற தலைவன் கூற்றுப் போல்வன. அல்பாலங்காரம் - தமிழ் நூலார் இதனைச் ‘சிறுமையணி’ என்பர். அது காண்க. அலங்காரம் - செய்யுட்கு அழகு செய்யும் இதனைத் தமிழ்நூலார் அணி என்பர். தொல்காப்பியர் உவம இயல் எனச் சுருங்க வகுத்ததைப் பிற்கால அணிநூலார் பாரித்துப் பாடினர். அலங்காரம் இருவகை - செய்யுட்கு அழகு கூட்டும் அலங்காரம் ஆகிய அணி, பொரு ளால் தோன்றுவதும் சொல்லால் தோன்றுவதும் எனப் பொருளணியும் சொல்லணியும் என்று இருவகைப்படும். இவற்றை வடநூலார் முறையே அர்த்தாலங்காரம், சப்தா லங்காரம் என்ப. பொருளை அடிப்படையாகக் கொண்டு வரும் பொருளணி களே இன்பம் பெரிதூட்டி மேம்படுவன என்றும், சொற் களின் அமைப்புக்கே முதலிடம் தந்து பொருள்பற்றிப் பெரிதும் கருதாது வரும் சொல்லணிகள் அத்துணை மேம்படுவன ஆகா என்று கருதுவோரும் உளர். அலங்கார முறை வைப்பு - தன்மை என்பது இயல்பு ஆதலானும் ஏனைய அணிகள் யாவும் செயற்கை ஆதலானும் இயற்கைபற்றிய தன்மையணி முதலிற் கூறப்பட்டது. உவமை, அணிகளுள் தலைமை யானதும் இன்றியமையாததும் பிற அணிகளுக்குத் தாய் போல்வதும் ஆதலின், தொல்காப்பியனார் அஃது ஒன்றனையே விரித்துக் கூறிய சிறப்பு நோக்கித் தன்மையினை அடுத்துக் கூறப்பட்டது. உருவகமும் உள்ளுறை உவமமும் உவமையிலிருந்து தோன்றியவை ஆதலின் உவமையின் பின் வைக்கப்பட்டன. ஒழிந்த ஒட்டு, உல்லேகம் முதலியனவும் உவமையை அடிப்படையாகக் கொண்டு தோன்றுதலின் அவையும் உள்ளுறை உவமத்தை அடுத்து வைக்கப்பட்டுள் ளன. ஏனைய அணிகளின் முறைவைப்பும் உய்த்துணர்ந்து கொள்ளத்தக்கது. (மா. அ. 87 உரை) அவ்விய உருவகம் - உருவகம் செய்யப்பட்ட பொருட்கண் உலகியலில் பொருத்த மில்லாத செயலைப் பொருத்திச் சொல்வது. அவ்வியமாவது பொருத்தம் இன்மை. ‘சீலமலி நின்முகம் என்னும் திங்களால் நாலுலகும் காமன் நலியக் கெடுக்கலுற்றான்’ “அழகிய நின் முகமாகிய சந்திரனைக் கொண்டு மன்மதன் முல்லை முதலிய நால்வகைப்பட்ட நிலப்பகுதிகளும் வருந்து மாறு துன்புறுத்துகின்றான்” என்ற கருத்தமைந்த இப்பாடற் பகுதிக்கண், முகம் என்னும் திங்கள் - உருவகம்; உலகிற்கு இன்பம் நல்கும் சந்திரனைத் துன்பம் நல்குதற்கு மன்மதன் பயன்படுத்தியதாகக் கூறுதலின் அவ்விய உருவகம் வந்தவாறு. (வீ. சோ. 160) அவஞ்ஞாலங்காரம் - தமிழ் நூலார் இதனை ‘இகழ்ச்சி அணி’ என்ப. அது காண்க. அவநுதிஅணி - அவநுதி - மறுத்துரைத்தல். சிறப்பு, பொருள், குணம் - இவற்றால் ஆகிய உண்மையை மறுத்து, அதற்கு மாறான வேறொன்றனை உரைப்பது இவ்வணி. இஃது ஒழிப்பணி எனவும் படும். இது சிறப்பு அவநுதி, பொருள் அவநுதி, குண அவநுதி என மூன்றனொடு, வேற்றணியொடு விரவிவரும் வகையால் சிலேடை அவநுதி ஒன்றும் கூடி நால்வகைத்தாம். (தண்டி. 75) அவநுதி அணியின் மறுபெயர் - ஒழிப்பணி - ச. 19; குவ.11 அவநுதி உருவகம் - இது தத்துவாபன உருவகம் (வீ.சோ. 160) எனவும்படும். உண்மைப் பொருளை மறுத்து ஒப்புமைப் பொருளை உடன் பட்டுக் கூறுவது இதன் இலக்கணமாம். எ-டு : ‘பொங்களகம் அல்ல, புயலே இவை; இவையும் கொங்கை இணையல்ல, கோங்கரும்பே; - மங்கை! நின் மையரிக்கண் அல்ல, மதர்வண் டிவை; இவையும் கையல்ல, காந்தள் மலர்.’ மங்கையின் மயிர்முடி, கொங்கைகள், கண்கள், கைகள் ஆகிய உண்மைப் பொருள்களை மறுத்து, அவற்றை உவமைப் பொருள்களாகிய கார்மேகம், கோங்கரும்பு, செருக்கிய வண்டுகள், காந்தட் பூக்கள் என்ற பொருள்களாகவே இதன்கண் கூறியவாறு காண்க. (தண்டி 38 - 5) அவநுதி சிலேடையினும் விரவிவருதல் - அஃதாவது சிலேடையுடன் வந்த அவநுதியணி. எ-டு : ‘நறவேந்து கோதை நலம்கவர்ந்து நல்கா மறவேந்தன் வஞ்சியான் அல்லன்; - துறையின் விலங்காமை நின்ற வியன்தமிழ்நா(டு) ஐந்தின் குலங்காவல் பூண்டொழுகுங் கோ.’ இப்பெண்ணின் அழகைக் கவர்ந்து (-இவளைத் தன்பால் காதல் கொள்வித்து) மீண்டும் அதனை இவளுக்குக் கொடா மல் இருக்கும் (- இவளொடு கூடி இவளை இன்புறுத்தாதிருக் கும்) கொடுமையுடைய மன்னவன் வஞ்சியான் அல்லன் - வஞ்சி மாநகரம் மாத்திரமே ஆளும் சேரன் அல்லன் (சிலேடை யாக வஞ்சனை செய்யாதவன் அல்லன் என்பது); தமிழ்நாட்டின் பகுதிகளாகிய சேர சோழ பாண்டிய கொங்கு தொண்டை மண்டிலங்களாகிய ஐந்து நாடுகளையும் காப்பவன். ‘வஞ்சியான் அல்லன்’ என்னும் தொடர் சிலேடையாக விரவித் தலைவன் குணத்தை அவநுதி (-மறுத்தமை) செய்தமை காண்க. (தண்டி. 75 - 4) இதுவே வினை பற்றிய சிலேடை அவநுதி எனவும்படும். (இ. வி. 670 உரை) அவயவ உருவகம் - இஃது உருவக அணிவகைகளுள் ஒன்று. ஒரு பொருளின் உறுப்புக்களையெல்லாம் உருவகித்து, அப்பொருளை மாத்திரம் உருவகம் செய்யாமல் வாளாவிடுப்பது இதன் இலக்கணம். ‘புருவச் சிலைகுனித்துக் கண்ணம்பென் உள்ளத்(து) உருவத் துரந்தார் ஒருவர் - அருவி பொருங்கல் சிலம்பில் புனைஅல்குல் தேர்மேல் மருங்குல் கொடிநுடங்க வந்து.’ “தலைவி, அல்குல் என்னும் தேர்மீது இடையென்னும் கொடி அசைய வந்து, புருவம் என்னும் வில்லை வளைத்துக் கண் என்னும் அம்பினை என் உள்ளத்தில் ஊடுருவுமாறு எய்தாள்” என்று தலைவன் பாங்கற்குத் தான் உற்றதுரைத் தான். இக்கருத்தமைந்த இப்பாடற்கண் தலைவியாகிய அவயவியை உருவகம் செய்யாமல், புருவம் கண் அல்குல் இடையென்னும் அவயவங்களை மாத்திரம் உருவகம் செய் திருப்பது அவயவ உருவகமாம். (தண்டி. 37-14) அவயவ உவமை - ஒருபொருளின் உறுப்புக்களை உவமித்து உறுப்பியாகிய அப்பொருளை உவமிக்காது உள்ளவாறே கூறுவது அவயவ உவமையாம். எ-டு : ‘மாதர் இலவிதழ்போல் மாண்பிற்றே மாதவனால் வானோர் அருந்தும் மருந்து’ திருமாலின் உதவியினால் தேவர் உண்ட அமிர்தம் இப் பெண்ணின் இலவமலரை ஒக்கும் செவ்விதழைப் போல் சுவை பயப்பதாகும் என்ற கருத்தமைந்த இப்பாடலில், உறுப் பாகிய இதழை இலவிதழ் என உவமித்து உறுப்பியாகிய மாதரை உவமிக்காது கூறியமையின் அவயவ உவமையாம். (மா. அ. 101-19) அவயவி உருவகம் - உறுப்பு எதனையும் உருவகம் செய்யாமல் உறுப்பியை மாத்திரம் உருவகம் செய்தல் இதன் இலக்கணமாம். இஃது உருவக அணி வகைகளுள் ஒன்று. எ-டு : ‘வார்புருவம் கூத்தாட, வாய்மழலை சோர்ந்தசைய, வேர்அரும்பச் சேந்து விழிமதர்ப்ப - மூரல் அளிக்கும் தெரிவை வதனாம் புயத்தால் களிக்கும் தவமுடையேன் கண்’ வாயில் நேர்விக்கப்பட்டுத் தலைவியை அணுகிய தலைவன் தனது நிலை கூறும் கிளவியாக அமைந்த இப்பாடற்கண், அவயவியாகிய முகம் ‘வதனாம்புயம்’ எனத் தாமரையாக உருவகிக்கப்பட்டுள்ளது. ஆயின், புருவம், வாய், விழி என்னும் உறுப்புக்கள் உருவகம் செய்யப்படவில்லை. ஆதலின் இஃது அவயவி உருவகமாயிற்று. (தண்டி. 37 - 15) அவயவி உவமை - உறுப்புக்களையுடைய பொருளை உவமித்து அப்பொருளின் உறுப்புக்களை உவமிக்காமல் விட்டுவிடுவது. எ-டு : ‘பொன்னங் கொடியனைய பொற்றொடிதன் தாட்சுவடும் என்அன் புறத்தோன்றும் இங்கு.’ மகட்போக்கிய செவிலி சுரத்திடைத் தலைவியின் காற்சுவடு கண்டு, “பொற்கொடியை ஒத்த என்மகளின் பாதச்சுவடுகள் இங்குத் தோன்றுகின்றன” என்று கூறுதற்கண், மகளைப் பொன்னங் கொடி அனைய பொற்றொடி என உவமித்து, அவள் உறுப்பாகிய பாதத்தை உவமிக்காமல் கூறப்பட்டதில் அவயவி உவமை காணப்படுகிறது. (மா. அ. 101- 20) அவர்ணியம் - புனைவிலி; அஃதாவது உபமானம். (அணி. 3 உரை) அவலம் பற்றிய சுவையணி - சுவையணிவகை எட்டனுள் ஒன்று. சோகம் என்னும் உள்ளத் துணர்வு புறத்துப் புலனாகி விளங்கும் வகை உரைக்கப்படுதல் இதன் இலக்கணம். ‘கழல்சேர்ந்த தாள்விடலை காதலிமெய் தீண்டும் அழல்சேர்ந்து தன்நெஞ்(சு) அயர்ந்தான் - குழல்சேர்ந்த தாமம் தரியா(து) அசையும் தளிர்மேனி ஈமம் தரிக்குமோ என்று’ இறந்த தன் மனைவியின் உடலை ஈமத்தீயிலிட்ட தலைவனது அவலவுணர்வைக் கூறும் இப்பாடற்கண், “தலையில் சூடிய மாலையது பாரம் தாங்காமல் வருந்தும் இவள் உடம்பு ஈமத்தைத் தாங்குமோ?” என்று தலைவன் அவலித்து மனம் தளர்தல் காண்க. அவலத்தின் நிலைக்களன்களான இளிவு, இழவு, அசைவு, வறுமை என்ற நான்கனுள் இஃது இழவு பற்றி வந்தது. (தண்டி. 70-6) அவிருத்த உருவகம் - ஒரு பொருளுக்குக் கூடுவனவாம் தன்மைகள் பலவற்றையும் கூட்டி உருவகம் செய்வது. ‘ஒர்பொழுதும் துஞ்சா(து) அலமந்(து) உறுதுளித்தாம் போர்புனைவேல் அண்ணல் பொருட்கேகின் - சீர்பெருகும் தண்ணார் பசுந்துளவத் தார்மார்பன் தஞ்சைமான் கண்ணா கியகார்க் கடல்’ தலைவன் தலைவியை விட்டுப் பொருள் தேடிவர நாடிடை யிட்டும் காடிடையிட்டும் பிரியும் சேயிடைப் பிரிவை மேற் கொண்டால், தலைவியின் கண்களாகிய கரிய கடல், ஒரு பொழுதும் உறங்காது சுழன்று நீர்பெருக்கும் என்ற கருத் தமைந்த இப்பாடலில், கண்களைக் கடலாக உருவகம் செய்தமைக்கு ஏற்பக் கடலின் தன்மைகளாகிய உறங்காமையும் அலமருதலும் நீர்நிரம்புதலும் ஆகிய பண்புகள் பலவற்றை யும் கூட்டி உரைத்தமை அவிருத்த உருவகமாம். (மா. அ. பாடல். 242) அவிரோதச்சிலேடை - முன்னர்ச் சிலேடை செய்தவற்றைப் பின்னர் மாறுபாடின்றிச் சிலேடிக்கும் மாறுபாடில்லாச் சிலேடை இது. (அவிரோதம் - மாறின்மை) ‘சோதி இரவி கரத்தான் இர(வு) ஒழிக்கும் மாதிடத்தான் மன்மதனை மாறழிக்கும் - மீதாம் அநகமதி தோற்றிக் குமுதம் அளிக்கும் தந்தன் இருநிதிக்கோன் தான.’ சோதி - ஒளி, புகழ்; இரவி - சூரியன், சோழன்; கரம் - கதிர், கை; இரவு - இருள், யாசித்தல்; மாதிடத்தான் - மாதினை இடம் கொண்ட சிவபெருமான், மா திடத்தான் - மிக்க திடம் கொண்ட சோழன்; மன்மதன் - காமன், மன்னர்களது வலிமை; மதி - சந்திரன், அறிவு; குமுதம் - ஆம்பல், உலகுக்கு மகிழ்ச்சி; தநதன் - குபேரன், தனமுடைய சோழன்; இருநிதி - சங்கநிதி பதுமநிதி, மிக்க பொருள். இப்பாடல் சூரியன் முதலிய நால்வர்க்கும் சோழனுடன் சிலேடை. 1) சூரியன் தன் கதிர்களால் இரவினை ஒழிப்பான்; புக ழுடைய சோழனும் தன் கைகளால் வாரி வழங்கி இரத்தலை ஒழிப்பான். 2) சிவபெருமான் காமனை அழிப்பான்; சோழனும் பகைவரது வலியை அழிப்பான். 3) சந்திரன் தோன்றி ஆம்பலை அலர்த்துவான்; சோழனும் தன் மதியால் உலகிற்கு மகிழ்வு செய்வான். 4) குபேரன் சங்கநிதி பதுமநிதி இரண்டும் உடையவன்; சோழனும் பெருஞ்செல்வம் உடையவன். இவ்வாறு மாறுபாடின்றி அமைவதால் அவிரோதச் சிலேடையாயிற்று. (தண்டி. 78 - 7) அழிவு பற்றி வந்த பொருட் காரக ஏது அணி - ஒரு பொருளால் நிகழ்ந்த செயலால் அழிவு தோன்றுதலை உரைக்கும் ஏது அணிவகை. ‘கனிகொள் பொழிலருவி கைகலந்து சந்தின் பனிவிரவிப் பாற்கதிர்கள் தோய்ந்து - தனியிருந்தோர் சிந்தை யுடனே உயிர்உணக்கும் தென்மலையம் தந்த தமிழ்மா ருதம்’ தென்றலானது அருவிநீரைச் சேர்ந்து, சந்தனத்தின் தண்மை யையும் கலந்து, சந்திரனுடைய கதிர்களிலும் தோய்ந்து, பிரிவால் வாடும் ஆடவரையும் மகளிரையும் மனமும் உயிரும் வாட வருத்தும் - என்ற பொருளுடைய இப்பாடற்கண், தென்றல் என்னும் பொருள் இத்தகைய அழிவுச்செயலை, அருவி நீரைச் சேர்தல் - சந்தனத்தின் தண்மையைக் கலத்தல், சந்திரகிரணங்களில் தோய்தல் - ஆகிய காரகங்களால் செயற்படுத்தியவாறு காண்க. காரகம் - தொழிற்படுவது (தண்டி. 59 - 2) அழிவுபாட்டபாவ ஏது அணி - அழிவினால் ஏற்பட்ட இன்மையைக் காரணமாகச் சொல்லுதல் இவ்வணி. ‘கழிந்த(து) இளமை; களிமயக்கம் தீர்ந்த (து); ஒழிந்தது காதல்மேல் ஊக்கம்; - சுழிந்து கருநெறிசேர் கூந்தலார் காதல்நோய் தீர்ந்த(து); ஒருநெறியே சேர்ந்த(து) உளம்’ இளமை கழிந்ததாலும், காமக்களிமயக்கம் நீங்கியதாலும், காதல்மீது ஊக்கம் ஒழிந்துவிட்டதாலும், மங்கையர்மீதுள்ள ஆசை தீர்ந்ததாலும், உள்ளம் ஒப்பற்ற நன்னெறியைச் சேர்ந்துவிட்டது என்னும் கருத்துடைய இப்பாடற்கண், “முன்பிருந்த இளமை முதலியன அழிந்துபட்டு இலவாயின; அவற்றினது இன்மையே நன்னெறி சேரக் காரணமாயிற்று” என அழிவுபாட்டபாவம் ஏதுவாய் அமைந்தமை இவ்வணி யின்பாற்படும். (தண்டி. 62-5) அழிவுபாட்டின்மை - இஃது அழிவுபாட்டபாவ ஏது எனவும் கூறப்பெறும். அது காண்க. (மா. அ. 194) அழுகை உவமம் - கற்புக் காலத்தில் தலைவன் தன்னைப் பிரிந்து போகப் போகின்றான் என்பதனைக் குறிப்பால் அறிந்த தலைவி, “சரக்கு ஏற்றிச் சென்ற மரக்கலம் கடலில் கவிழத் தான் மட்டும் உயிர் பிழைத்துக் கரையில் வருந்தியிருக்கும் வணிகன் தன் துயரத்தைப் போக்குவார் அங்கு ஒருவரும் இன்மையால் தனித்து வருந்துவது போல, உன் பிரிவான் யான் தனித்து வருந்தும் நிலை ஏற்படும் என்பதனை அறிந்துவைத்தும், பிரிவைத் தவிர்த்துவிட்டேன் என்று கூறாமலிருக்கின் றாயே!” (யா.வி. பக். 335 உரைமேற்.) என்று தலைவனிடம் வேண்டுகிறாள். மரக்கலம் கடலில் கவிழக் தான்மாத்திரம் உயிர் பிழைத்துக் கரையில் வந்துநிற்கும் வணிகனது நிலை அவலம் பிறப்பிக் கின்றது ஆதலின், ‘கலம் கவிழ்த்த நாய்கன் போல்’ என்ற உவமம் அழுகைச் சுவைபற்றி வந்தது. (தொ. பொ. 294 பேரா.) அற்ப மகிட்சி - இது மாணிக்கவாசகர் குவலயனாந்தத்துள் அணியியலில் (103) வருவதோர் அணி. ஒரு காலத்தில் விரும்பிய பொருளை மற்றொரு காலத்தில் கிட்டப்பெறுவது. எ-டு : அரிந்தமனுக்குப் பின் அரசனாக வேண்டிய மதுராந்தகன் உத்தமசோழன் என்பான் சுந்தரசோழனும் கரிகால ஆதித்தனும் என இவர்கட்குப் பின்னரே தான் அரசனாயினமை போல்வன. அற்புத அணி - ஒரு நிகழ்ச்சியைப் பற்றி, “நிகழ்தற்கரியது ஒன்று இவ்வாறாக நிகழ்ந்தது!” என்று விருப்ப மேலிட்டு உரைப்பது அற்புத அணியாம். (தென். அணி. 36) அற்புத அலங்காரம் - அஃதாவது வியப்பணி. கேட்டார்க்கு வியப்புத் தோன்று மாறு ஓர் உண்மைச் செய்தியைச் சொல்லுதல். ‘உண்ணீர்மை அற்றவர்க் கண்டால் அவர்மன் னுயிர்க்கிரங்கிக் கண்ணீர் பனிற்றும் புயல்மனு ராமன்கைக் கொள்வதொன்றோ வெண்ணீர்மை யுற்ற நிருதரைச் சால வெறுத்(து)அவர்மேல், புண்ணீர் பனிற்றச் சரமாரி அன்று பொழிந்ததுவே’ “மனத்தினால் இனிய பண்பு அற்றவர்களைக் கண்டால் அவர்கள் வாழ்நாள் வீணாவது குறித்து இரங்கிக் கண்ணீர் வடிக்கும், கார்மேகம் போன்ற வண்ணனாகிய இராமன், அறிவற்ற அரக்கர்களை மிகவும் வெறுத்து, அவர்கள்மேல் குருதி பரக்குமாறு அம்புமழையை இராவணனொடு போரிட்ட காலத்தே பொழிந்த செய்தி வியப்பினை அளிக்கிறது!” எனக் கருணைக்கடலிடத்தில் கொடிய செயல் அற்புதம் பயப்ப தாகக் கூறுவது அற்புத அணியாம். (மா. அ. 138) அற்புத உவமை அணி - அற்புதமாவது பெருவியப்பு. இஃது உவமை யணியின் வகைகளுள் ஒன்று. உலகிலுள்ள பொருள் எதற்கும் இல்லாத இயல்புகளை இணைத்துக் கூறி வியப்புத் தோன்ற உவமித்தல் இதன் இலக்கணம். ‘குழையருகு தாழக் குனிபுருவம் தாங்கி உழையர் உயிர்பருகி நீண்ட - விழியுடைத்தாய் வண்(டு)ஏ (று) இருள்அளகம் சூழ வருமதிஒன்(று) உண்டேல் இவள்முகத்துக்(கு) ஒப்பு.’ காதணிகள் அணிந்தும், வளைந்த புருவங்களைப் பெற்றும், அருகில் உள்ளோரது உயிரைப் பருகி, நீண்ட கரு விழிகளைக் கொண்டும், வண்டு மொய்க்கும் கருங்கூந்தலைத் தாங்கிச் சந்திரன் ஒன்று நடந்து வருமாயின், அஃது இவள் முகத்திற்கு ஒப்பாகும் - என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், உலகில் காணப்படும் சந்திரனுக்கு இல்லாத பல இயல்பு களைப் பெற்ற சந்திரனைக் கற்பனை செய்து உவமை கூறியது பெருவியப்பினைத் தருதலால் அற்புத உவமையாம். (தண்டி. 33-1.) அற்புதம் அடுத்த உருவக அணி - அற்புதம் - பெருவியப்பு. உவமை அற்புத உவமையாய் வருமாறு போல, உருவகமும் அற்புதம் அடுத்து வருவது இவ்வணி. ‘மன்றல் குழலார் உயிர்மேல் மதன்கடவும் தென்றல் கரிதடுக்கும் திண்கணையம் - மன்றலரைக் கங்குல் கடலின் கரையேற்றும் நீள்புணையாம் பொங்குநீர் நாடன் புயம்.’ சோழமன்னனுடைய புயங்கள், அவனுடைய உரிமை மகளிர் மீது மன்மதன் செலுத்தும் தென்றல் என்னும் யானையைத் தடுத்து நிறுத்தும் திண்ணிய தடைமரங்கள்; இரவாகிய கடலினின்றும் அவர்களைப் பகலாகிய கரையில் ஏற்றும் தெப்பம் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், அற்புதம் தோன்ற வரும் தென்றல்யானை, புயத்தடைமரங்கள், கங்குற்கடல், புயத்தெப்பம் என்பவற்றைக் குறிப்பிட்டமை அற்புதம் அடுத்த உருவக அணியாம். (தண்டி. 39-5) அற்று என்ற உவம உருபு - ‘பல்லோர் உவந்த உவகை யெல்லாம் என்னுள் பெய்தந் தற்றே........ வெற்பன் வந்த மாறே’ (அகநா. 42) தலைவன் வருகை, குளம் நீர் நிறைதல்தரும் உவகையைப் போன்ற உவகை தந்தது என்ற தொடரில் ‘அற்று’ என்பது பயன்உவமைக்கண் வந்தது. (தொல். பொ. 289. பேரா.) `அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டல்' (2) - இஃது இறைச்சி அணி வகைகளுள் ஒன்று. தலைவனுடைய கற்புக்காலப் பிரிவின்கண் ஆற்றாள் ஆகிய தலைவியை ஆற்றவித்தற் பொருட்டுத் தோழி, தலைவன் பொருள் தேடப் பிரிந்து சென்றபோது இடைவழியில் அவன் தலைவி யிடத்துத் தான் கொண்ட அன்பினை மிகுத்துணரும் வகை யில் கருப்பொருள்களின் செயல்கள் காணப்படும் ஆதலின், காலத்தாழ்ப்பின்றி மீள்வான் என்று அவளை வற்புறுத்தி ஆற்றுவிக்கப் பயன்படும் செய்தி கூறுவது இறைச்சியணியின் இவ்வகை. `நசைபெரி துடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழிஅவர் சென்ற ஆறே' (குறுந். 37) இயற்கையாகவே தலைவியிடத்துப் பேரன்புடையராய் அவட்கு அருள் செய்யும் தலைவர் தாம் பிரிந்து சென்ற வழியில், பெண்யானையது பசியைப் போக்க ஆண்யானை ஆச்சாமரத்தைப் பொளித்து ஊட்டும் செயலையும் காண்பார் ஆதலின், அன்பு மீதூர்ந்து விரைவில் செயல்முற்றி மீள்வர் என்ற கருத்தை உட்கிடையாகக் கொண்டது இவ் விறைச்சியணிவகை. (மா. அ. 176) ‘அன்ன’ அடுத்த தற்குறிப்பேற்ற அணி - அன்ன என்னும் உவம உருபுடன் வந்த தற்குறிப்பேற்ற அணி. எ-டு : ‘சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது வான்தோய் வன்ன குடிமையும் நோக்கி’ (நற். பின்னிணைப்பு) இப்பாடற் பகுதியில் ‘வானத்தை அளாவியதன்ன உயர்ந்த நுமது குடிப்பிறப்பையும் நோக்கி’ என்று ‘அன்ன’ என்னும் உவமஉருபு தற்குறிப்பேற்றமாய் வந்தமை காணப்படும். தலைவனது குடிப்பிறப்பினது உயர்ச்சியை நோக்குங்கால் அது வானளாவ உயர்ந்துள்ளது போலும் என்பதே தற்குறிப் பேற்றமாம். (இ. வி. 656) அன்ன என்ற உவமஉருபின் சிறப்பு - அன்ன என்ற உவமஉருபு வினை உவமத்திற்கே சிறந்த தாயினும் ஏனைய பயனுவமம் மெய்யுவமம் உருவுவமம் இவற்றின்கண்ணும் பயின்று வரும். ‘மாரி அன்ன வண்கை’ - (புறம் 153) - பயன் உவமம் ‘இலங்குபிறை அன்ன விலங்குவால்வை எயிற்று’ - (அகநா. கடவுள்) மெய் உவமம் ‘செவ்வான் அன்ன மேனி’ - (அகநா. கடவுள்) - உரு உவமம் ஒன்ற, போல என்பனவும் ‘அன்ன’ போல எல்லா உவமத்தின் கண்ணும் வரும். (தொ. பொ. 288 பேரா.) அன்ன என்ற உவமஉருபு - ‘எரி அகைந்தன்ன தாமரை’ - நெருப்புக் கப்புவிட்டு எழுந் தாற்போல இதழ்விரித்து மலர்ந்த தாமரை என்ற தொடரில், ‘அன்ன’ என்பது வினையுவமத்தின்கண் வந்தது. ‘அன்ன’ என்ற உருபு வினையுவமத்திற்கே சிறந்தது. (தொ.பொ. 287 பேரா.) அன்ன, ஒன்று, போல என்ற உவமஉருபுகள் - அன்ன என்பது வினைஉவமத்திற்கே சிறந்த உருபு எனினும், அது பயன், மெய், உரு என்ற ஏனை உவமங்களுக்கும் வரும். ஒன்று என்பதும் வினை பயன் மெய் உரு என்னும் நான்கு உவமங்களுக்கும் பயின்று வரும். போல என்பது உருஉவமத் திற்கே சிறந்த உருபு எனினும் அது வினை பயன் மெய் என்னும் ஏனை உவமங்களுக்கும் வரும். (தொ. பொ. 288, 286, 289, 290 பேரா.) ‘மாரி அன்ன வண்கை’ (புறநா. 153) - பயன் ‘இலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற்று’(அகநா.கடவுள்) - மெய் ‘செவ்வான் அன்ன மேனி’ (அகநா. கடவுள்) - உரு ‘வேல்ஒன்று கண்ணார்மேல் வேட்கைநோய் தீராமோ’ - வினை ‘மழைஒன்று வண்தடக்கை வள்ளியோற் பாடி’ - பயன் ‘வேய்ஒன்று தோள்ஒருபால் வெற்பொன்று தோள்ஒருபால்’ - மெய். ‘குன்றியும் கோபமும் ஒன்றிய உடுக்கை’ - உரு ‘ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல’ (அகநா. 22) - வினை ‘அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின்’ - பயன் ‘கடல்போல் தோன்றல காடிறந் தோரே’ (அகநா.1) - மெய் ‘பொன்போற் பீரமொடு பூத்த புதல்மலர்’ (நெடுநல். 14) உரு அன்னியோன்னியம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (79) வருவதோர் அணி. இதரவிதரம் எனவும்படும். ‘ஒன்றற் கொன்று உதவி அணி’ காண்க. அன்னியோன்னியாலங்காரம் - ஒன்றற் கொன்று உதவியணி (அணி. 43); அது காண்க. அனன்னுவயம் (2) - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (9) வருவதோர் அணி. உபமானத்துக்குரிய உபமேயமே உபமானத்தை விலக்கித் தனக்குத் தானே உவமையாக வருவது. எ-டு : இன்னோ ரனையை இனையை யாலென அன்னோர் யாம்இவண் காணா மையின்..... நின்னோ ரனையை நின் புகழொடும் பொலிந்தே’ (பரிபா.1) அனன்னுவயாலங்காரம் - இயைபின்மையணி; அது காண்க. அனாதரத் தடைமொழி - இது வீரசோழியம் குறிப்பிடும் சிறப்பான முன்னவிலக்கு வகை ஏழனுள் ஒன்று. விருப்பமின்மையை வெளியிட்டு ஒரு செயல் செய்வதைத் தடுத்தலின், இஃது இப்பெயர் பெற்றது. எ-டு : ‘ஆசை பொருட்(கு)இல்லை அன்பர்க்கின்(று); என்பக்கல் ஏகுக நிற்க இனி’ “தலைவர்க்கு இன்று ஆசை பொருளிடமே உள்ளதன்றி என் பக்கல் இல்லை; ஆதலின் அவர் பொருள் தேடப் புறப்பட வேண்டுமாயின் புறப்படுக; இன்றேல் இங்குத் தங்கியிருக்க விரும்பின் தங்குக. அது பற்றி யான் கூறுவதொன்றும் இல்லை” என்ற இத்தலைவி கூற்றில், அவளுக்குப் பொருள் தேடத் தலைவன் சேறற்கண் விருப்பமின்மை குறிப்பாக அறிவிக்கப்பட்டு அவன் போக்குக் குறிப்பாக விலக்கப்பட் டமை அனாதரத் தடைமொழியாம். (வீ.சோ. 163) அனுகுணாலங்காரம் - தன்குண மிகையணி (அணி. 78); அது காண்க. அனுஞ்ஞாலங்காரம் - வேண்டலணி (அணி. 71); அது காண்க.¬ அனைய என்ற உவம உருபு ‘குன்றின் அனையாரும் குன்றுவர்’ (குறள் 965) மலையினை ஒத்தவர்களும் மதிப்பு இழப்பர் என்று பொருள் படும் இத்தொடரில், அனைய என்¬¬¬¬¬¬ற உவம உருபு உயர்ந்து நிற்ற லாகிய வினைப்பண்பு பற்றி வந்தது. (தொ. பொ. 286 பேரா.) (கண்கள்) ‘நறவின் சேயிதழ் அனைய வாகி’ (அகநா. 9) என ‘அனைய’ என்பது மெய்உவமம் பற்றி வந்தது. (தொ. பொ. 290 பேரா.) அஸம்வாலங்காரம் - கூடாமை அணி; அது காண்க. அஸம்பாவிதோபமா - கூடாவுவமை என்ப தமிழ்நூலார்; அது காண்க. அஸாதாரணோபமா - இதனைத் தமிழ்நூலார் பொதுநீங்குவமை என்ப; அது காண்க. ஆ ஆக்கம் பற்றிவந்த கருத்தாக் காரக ஏது - ஒருசெயலை நிகழ்த்தும் எழுவாயின் காரியத்தால் நன்மை புலப்பட வருதலை விளக்கும் ஏது அணிவகை. எ-டு : ‘எல்லைநீர் வையகத் தெண்ணிறந்த எவ்வுயிர்க்கும் சொல்லரிய பேரின்பம் தோற்றியதால் - முல்லைசேர் தாதலைத்து வண்கொன்றைத் தாரலைத்து வண்டார்க்கப் பூதலத்து வந்த புயல்.’ முல்லைத் தாதினையும் கொன்றை மலர்களையும் அசைத்து நிலத்தில் மழையாக விழுந்த மேகம் உலக உயிர்களுக்குப் பேரின்பத்தை உண்டாக்கியது என்ற கருத்தமைந்த இப் பாடற்கண், புயலாகிய கருத்தா பேரின்பம் தோற்றுதலாகிய ஆக்கத்தைத் தரையில் வீழ்தலாகிய காரக ஏதுவினால் வெளிப்படுத்தியவாறு. (தண்டி. 59-1, இ.வி. 657-1) ஆங்கு என்ற உவமஉருபு - ‘அருளில்லார்க்(கு) அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்(கு) இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ (குறள் 247) பொருளற்றவர்க்கு இவ்வுலக இன்ப நுகர்ச்சி இல்லை ஆதல் போல என்று பொருள்படும் இத்தொடரில், ‘ஆங்கு’ என்பது வினை உவமத்தின்கண் வந்தது. ‘ஆங்கு’ என்பது வினை உவமத்திற்கு வருதலே சிறப்பு. (தொ. பொ. 287 பேரா.) ‘பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு’ (முருகு. 2) என ‘ஆங்கு’ என்பது உருஉவமம் பற்றி வந்தது. (291 பேரா.) ஆசி அலங்காரம் - இது வாழ்த்தணி எனவும்படும். அது காண்க. (வீ.சோ. 175) ஆசிக்யாஸோபமா - ஆசிக்யாஸா - சொல்லல் வேண்டும் என்னும் விருப்பம். இவ்வணி இயம்புதல் வேட்கை உவமை எனவும், கருத்துவமை எனவும் படும். ‘இயம்புதல் வேட்கை உவமை’ காண்க. ஆசித்தடைமொழி - இது வீரசோழியம் குறிப்பிடும் சிறப்பான முன்னவிலக்கு வகை ஏழனுள் ஒன்று. வெளிப்படையாக ஆசி கூறுவார் போலக் குறிப்பாகச் செயலை விலக்கியமை ஆசித்தடை மொழியாம். எ-டு : ‘ஏகுக அன்பர் எளிதாகச் சென்னெறிக்கண் யானும் இனிதிருக்க ஈண்டு.’ “அன்பர் பொருள் தேடப் புறப்படுக. அவர் செல்லும் வழியும் நடந்துபோக எளிதாக இருப்பதாகுக! யானும் அவரைப் பிரிந்து இல்லத்தில் தனித்து இன்பமாக இருக்க!” என்னும் இப்பாடலுள், தலைவன்பிரிவுக்கு ஆசி கூறுவாள் போலத் தனக்கு வரும் துயரைக் குறிப்பாகக் கூறிப் பிரிவை விலக்குதல் ஆசித்தடை மொழியாம். (வீ.சோ. 163) ஆசிமொழி - வாழ்த்தணி. (வீ.சோ. 173 உரை) ‘வாழ்த்தணி’ காண்க. ஆசீர்வசநாnக்ஷபம் - இதனைத் தமிழணி நூலார் ‘வாழ்த்து விலக்கு’ என்ப. இது முன்னவிலக்கணி வகைகளுள் ஒன்று. ‘வாழ்த்து விலக்கு’ காண்க. ஆடூஉப் பொருட்டன்மை - ஆண்மகனாகிய பொருள்ஒன்றன் தன்மையை உள்ளவாறு எடுத்துக் கூறும் தன்மையணி வகையுள் ஒன்று. (மா.அ. 91) எ-டு : ‘நீல மணிமிடற்றன்; நீண்ட சடைமுடியன்; நூலணிந்த மார்பன்; நுதல் விழியன்; - தோலுடையன்; கைம்மான் மறியன்; கனல்மழுவன்; கச்சாலை எம்மான் இமையோர்க் கிறை’ (தண்டி. 30-1) என, சிவபெருமானாகிய ஆடூஉப்பொருளின் தன்மையை, நீலகண்டம், சடைமுடி, பூணூலணிந்த மார்பு, நெற்றிக்கண், புலித்தோலாடை, கையில் மான்குட்டி, மழு இவற்றையுடை யவன் என்று கூறுதல் ஆடூஉப்பொருட்டன்மையணியாம். ஆடூஉ மக்கட்டன்மை - மக்களுள் ஆண்பால் தன்மையை உள்ளவாறு கூறுதல் என்னும் தன்மையணிவகை. எ-டு : ‘முப்புரிநூல் மார்பினான், முக்கோல்கைக் கொண்டுள்ளான், பொய்ப்புலனை வென்ற பொறையுடையான், - மெய்ப்பொருளைச் சேவிக்கும் நுண்ணுணர்வான், சீநிவா தன்தமியேன் ஆவிக்(கு) அருள்புரிந்தாள் வான்’ “சீநிவாசன் என்ற துறவி, முந்நூல் அணிந்த மார்பினனாய்க் கையில் முக்கோல் கொண்டு, புலன்களை வென்று, பொறு மையாக யோகத்தில் அமர்ந்து மெய்ப்பொருளை வழிபட்டு, என்போன்றோர் தம் ஆன்மா ஈடேற உபதேசிப்பவன்” என, மக்களுள் ஆண்பால் ஒருவருடைய தன்மைகள் உள்ளபடி விளக்கப்பட்டவாறு. (மா. அ. 91) ஆண்பால் பெண்பால் மாறுபட உவமித்தல் - தலைவியின் மகனைத் தலைவனுடைய சாயல் அவன்பால் கண்டு தெருவில் தூக்கி வைத்துக்கொண்டு பாராட்டிய பரத்தையைத் தலைவி கண்டு, “நீயும் இவனுக்குத் தாயே காண்” என்று கூறியவழி, அவள் களவுசெய்த பொருள் கையகத்ததாக அகப்பட்ட கள்வரைப் போல நாணி நிலம் கிளைத்து நின்றாள் என்ற கருத்துடைய ‘களவுடன் படுநரின் கவிழ்ந்துநிலம் கிளையா நாணி நின்றோள்’ (அகநா. 16) என்ற அடிகளில், கள்வர் என்ற ஆண்பாற்பன்மை பரத்தை என்ற பெண்பாற்கு உவமம் ஆயிற்று. (இ. வி. பொ. 269) தலைவன் கற்புக் காலத்தில் பொருள்வயின் பிரிவு முதலியன கருதித் தன்னைப் பிரிந்தால் தன் நிலைமை, சரக்கேற்றிய மரக்கலம் கடலில் மூழ்கவே தான் மாத்திரம் உயிர் பிழைத்துக் கரையேறித் தேற்றுவார் இன்றித் தவிக்கும் வணிகன் நிலைக்கு ஒப்பாகும் என்று தலைவி கூறும் கருத்துடைய ‘கலம்கவிழ்த்த நாய்கன்போல் களைதுணை பிறிதின்றிப் புலம்புமென் நிலைகண்டும் போகலனே என்றியால்’ (யா. வி. பக். 335 மேற்.) என்ற தாழிசைக்கண், வணிகன் என்ற ஆண்பால், தலைவி யாகிய பெண்பாற்கு உவமம் ஆயிற்று. ஆதி தீபகம் - தமிழ்நூலார் இதனை முதல்நிலைத் தீவகம் எனவும் முதல் நிலை விளக்கணி எனவும் கூறுப; தீவகஅணிவகைகளுள் ஒன்று. அத்தலைப்பிற் காண்க. ஆதிவிளக்கு - முதல்நிலைத் தீவகம்; குணம், தொழில், சாதி, பொருள் இந்நான்கும் பற்றி இது வருதலின் நான்கு வகைப்படும். (தண்டி. 40) ‘தீவக அணி’ காண்க. ஆர்வமொழி அணி - உள்ளத்து வாழும் ஆர்வத்தினை வெளியிட்டு மொழிதல் என்னும் அணி. எ-டு : ‘சொல்ல மொழிதளர்ந்து சோரும்; துணைமலர்த்தோள் புல்ல இருதோள் புடைபெயரா; - மெல்ல நினைவோம் எனில்நெஞ்(சு) இடம்போதா(து) எம்பால் வனைதாராய் வந்ததற்கு மாறு.’ "மன்னவ! நீ எமது இருப்பிடம் நாடி வந்ததற்குக் கைம்மாறு செய்ய எம்மால் இயலவில்லை; என் செய்வோம்? எம் நன்றியறிதலைச் சொற்களாலாவது வெளியிடுவோம் என முயலும் போது, நின்னிடத்து எமக்குள்ள பெருமதிப்பாலும் அன்பாலும் பேச இயலாமல் சொற்கள் குழறுகின்றன; நின்னைத் தழுவிக் கொள்ள நினைத்தாலோ, தோள்கள் தம் வச மிழந்து அசைய மறுக்கின்றன; உன் அருமைபெருமை களை நினைத்து மகிழலாம் எனிலோ, எம் நெஞ்சு அவற்றைக் கொள்ளு மளவு இடப்பரப்பை யுடையதாய் இல்லை" என்ற கருத்துடைய இந்தப் பாடலில், மன்னனைத் தம்பால் வரக்கண்டவர்தம் மனத்திலுள்ள ஆர்வம் அனைத்தும் சொல்லால் வெளிப்படுதலைக் காணலாம். (தண்டி. 68) இது மகிழ்ச்சி அணி எனவும் படும். ஆர்வமொழி அணியின் மறுபெயர் - மகிழ்ச்சி அணி. (வீ.சோ. 154) வடநூலார் ‘ப்ரேயோலங்காரம்’ என்ப. ஆரோபித்தல் - ஒன்றன்மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல். முகமதியம் என்ற உருவகத்தில், சந்திரனின் தன்மை முகத்தின் மேல் ஆரோபிக்கப்பட்டமை காண்க. ஆலேசம் - வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை, அன்மொழி என்னும் ஆறுதொகைகளுள் பல பயின்று வருமாறு அமை யும் செய்யுளில் காணப்படும் பொதுவணி. (மு. வீ. பொருளணி 12.) இது வலி எனவும், ஓசம் எனவும் வழங்கப்பெறும். ஆவ்ருத்தி தீபகாலங்காரம் - தமிழணிநூலார் இதனைப் பின்வருவிளக்கணி என்ப. ஆவ்ருத்தி - பின்வருநிலை. அவ்வணி காண்க. ஆவிருத்தி அலங்காரம் - தமிழணிநூலார் இதனைப் ‘பின்வரு நிலையணி’ என்ப. அது காண்க. ஆnக்ஷபரூபகம் - தமிழணிநூலார் இதனை ‘விலக்குருவகம்’ என்ப; அது காண்க. ஆnக்ஷபாலங்காரம் - தமிழணிநூலார் இதனை ‘எதிர்மறை அணி’ என்ப; அது காண்க. இ இகழ்ச்சி அணி - ஒரு பொருளின் குணமோ குற்றமோ அதனொடு தொடர்பு கொள்ளும் மற்றொரு பொருளுக்கு உண்டாகாமை சொல் வது இகழ்ச்சியணியாம். இஃது அவக்ஙியாலங்காரம் என்று வடநூலுள் கூறப்படும். இஃது இருவகைப்படும். அவை (1) குணத்தினால் குணம் உண்டாகாத இகழ்ச்சியணி (2) குற்றத்தினால் குற்றம் உண்டாகாத இகழ்ச்சியணி என்பன. (மு. வீ. பொருளணி 54; ச. 96; குவ. 70.) குணத்தினால் குணமுண்டாகாத இகழ்ச்சியணி - ஒன்றனுடைய குணம் அதனொடு தொடர்பு கொள்ளும் மற்றொரு பொருளுக்கு உண்டாகவில்லை என்று சொல்லும் இகழ்ச்சி அணிவகை. எ-டு : ‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி’ (மூதுரை 19) எவ்வளவுதான் நாழியளவுடையதொரு கலத்தைக் கடலில் அமுக்கி முகந்தாலும் நாழி அளவுடைய அக்கலம் அவ்வளவு நீரைத் தான் முகக்குமேயன்றி, எல்லையற்ற நீரையுடைய கடலைச் சார்ந்தபோதும் தன் கொள்ளளவிற்கு மிகுதியான நீரை முகத்தல் இயலாது என்ற கருத்துடைய இப்பாடற்கண், மிகப் பெருமையுடைய கடலைச் சார்ந்தபோதும் சிறிய அளவுடைய நாழிக்குத் தன் கொள்ளளவை மிகுத்துக் கொள்ளும் பெருமை கிட்டாது என்று கூறுவது இவ்வணி. குற்றத்தால் குற்றமுண்டாகாத இகழ்ச்சியணி - ஒன்றனுடைய குற்றம் அதனுடன் தொடர்பு கொள்ளும் மற்றொரு பொருளுக்கு உண்டாகாமையைச் சொல்லும் இகழ்ச்சி அணிவகை. எ-டு : ‘கமலமலர் தற்கண்டு கூம்புதலால் காமர் அமுதகிர ணற்கென் குறைவு?’ என்ற பாடலில் அமுதமயமான சந்திரகிரணங்கள் தாமரை மலர்மீது பாய்ந்த அளவில் அது மூடிக்கொள்வதனால் சந்திரனுக்குக் குறைவு ஒன்றுமில்லை என்றமைந்த கருத்தில், சந்திரனைக் கண்டு தாமரை மூடிக்கொள்வதாகிய குற்றத் தால் சந்திரன் பெருமைக்குக் குறைவொன்றும் வாராது என்று கூறுதல் இவ்வணியாகும். இகழ்ச்சி உவமை - பிறரால் இகழப்படும் கருத்தொன்றனை உபமானமாகக் கொண்டு அதனோடு உபமேயத்தைப் பொருத்தி அமைப்பது இகழ்ச்சியுவமை என்று வீரசோழியம் கூறும். எ-டு : சந்திரன் எல்லாராலும் விரும்பப்படுவது; ஆனால் அதன்கண் நஞ்சு தோன்றுமாயின், அஃது எல்லா ராலும் இகழப்படும். தன்னுடைய விருப்பினை நிறை வேற்றாது மாறாகப் பேசிவந்த தோழியிடம் தலைவன் ‘திங்களில் தோன்றிய நஞ்சேநின் சீர்முகத்து நின்றெழுந்த வெவ்வுரைக்கு நேர்’ என, “சந்திரனிடம் இருந்து நஞ்சு வெளிப்படுதல் கூடுமாயின், அந்நஞ்சே உன் அழகிய முகத்தினின்று வெளிப்படும் கொடிய சொற்களுக்கு நிகர் ஆகும்” என்னும் பொருள்படக் கூறியதன்கண், சந்திரனில் தோன்றிய நஞ்சினை உபமான மாகக் கூறுவது இகழ்ச்சியணி ஆகும். (சந்திரனில் நஞ்சு தோன்றுவதின்று ஆதலின், சந்திரனில் தோன்றிய நஞ்சு என்பதனை ‘இல்பொருள் உவமை’ என்றலே பெரும் பான்மை) (வீ.சோ. 156) இகழ்ச்சி விலக்கு - இது முன்னவிலக்கணி வகைகளுள் ஒன்று. ஒன்றனை இகழ்ச்சி காரணமாக விலக்கி உரைத்தல் இதன் இலக்கணம். எ-டு : ‘ஆசை பெரிதுடையேம் ஆருயிர்மேல்; ஆள்பொருள்மேல் ஆசை சிறிதும் அடைவிலமால் - தேசு வழுவா நெறியின் வளர்பொருள்மேல் அண்ணல் எழுவாய், ஒழிவாய், இனி!’ இது தலைவன் பொருள்வயின் பிரிதலைத் தோழி விலக்கும் துறை; பொருளை இகழ்ந்து தமது உயிரைப் பெரிதும் விழைகிறாள் தோழி. “அண்ணலே! நல்லாற்றின் பொருள் தேடச் செல்ல நினைக் கின்றாய்; எமக்கு எம் ஆருயிரின்மீதே ஆசை இருக்கிறது. நீ தேடும் பொருளால் ஆகும் பயன்களில் எங்களுக்குச் சிறிதும் ஆசையில்லை. (நீ பிரியின் நாங்கள் உயிர் தரியோம்) ஆதலின் இதைக் கூறினோம். இனிச் செல்வதோ, இல்லத்திலேயே தங்கி இருப்பதோ நின் விருப்பம்!” இதில் பொருட்பயனை இகழ்ந்து தலைவன் செல்வதை விலக்குதல் காண்க. (தண்டி. 45 - 4) இகழா இகழ்ச்சி - புகழ்வது போலப் பழித்துக் கூறும் அணி. ‘ஆண்டவனைக் கூட வணங்காத தலை’ எனப் பெருமிதம் கூறுவது போல அறியாத் தன்மையை வெளிப்படுத்துவது இவ்வணி. தண்டிலங்காரம் இதனை இலேசத்துள் அடக்கும் (பொருளணி. 39) இசை உவமை - இஃது இன்சொல் உவமை எனவும்படும் (தண்டி. 32:13) உபமானத்திற்கு ஒரு சிறப்பினை எடுத்துக் கூறி, அத்தகைய சிறப்புடையதாயினும் அஃது உபமேயத்தை ஒக்குமேயன்றி உபமேயத்தை விஞ்சியதன்று என்றல் இசையுவமை. எ-டு : ‘மான்விழி நின்முகத்த வாள்மதியின் கண்ணதுமான் ஆகிலும் ஒக்கும் அமர்ந்து’ ‘தலைவியே! உன் முகத்தில் மானின் விழிகளே உள்ளன; சந்திரனிடத்தே மானே முழுமையாக இருக்கிறது. ஆயினும் சந்திரன் அழகால் உன்முகத்தை ஒக்குமேயன்றி முகத்தினை விஞ்சியது ஆகாது’ என்ற கருத்துடைய இப்பாடலில், உபமா னத்துக்குச் சிறப்புக் கொடுத்தும் அஃது உபமேயத்தை விஞ்சியது அன்று என்று கூறுதல் இசையுவமையாம். (வீ. சோ. 156) இட அதிசய அணி - ஓரிடத்தினை எல்லை மீறிக் கற்பனை செய்து கூறுவதாகிய அதிசய அணிவகை. எ-டு : ‘சிகர பந்திமேற் குடமதி அகடுரிஞ் சியவாய்ப் பகரும் வானம துரகனுச் சியிற்பதி படித்தாய் அகல நாவலந் தீவொருங் குறினுமுய்த் தடக்கும் புகலி டத்ததால்; அதனையா ரளவிடும் பொற்பார்?’ கோயிலின் சிகரவரிசைகளின்மேற் பதித்த தூபிகள், சந்திரனின் நடுவிடத்தில் தம்மைத் தேய்த்துக்கொள்ளுவன; அக்கோயி லின் அடிப்படைத்தளம். உலகினைத் தாங்கும் ஆதிசேடனின் முடிவரை சென்று பொருந்தியுள்ளது; இப் பாரத தேசத்தார் எல்லாரும் வழிபடுதற்கு வந்தாலும் அக் கோயில் எல்லைக்குள் அடங்கிவிடுவர் - எனக் கோயிலின் சிகரம், அடிப்படை, பரப்பு இவற்றை எல்லைகடந்து புகழ்வது இட அதிசய அணியாம். (மா. அ. 145) இடக் காரக ஏது - ஓரிடத்தை அடிப்படையாகக் கொண்டு அங்கு நிகழ்த்திய செயலால் ஒருவர் ஒரு பயன் கொண்டதனை விளக்கும் ஏது அணி. எ-டு : சங்கன் அழியாத் தமனியநா(டு) எய்தியதும் பொங்குபுகழ்த் தாந்தன் புலவீர்காள் - எங்கோனாம் சோதிபதம் எய்தியதும் சொற்றமிழ்மா றன்குருகூர் ஆதிநகர்த் தெய்விகத் தால் (பாடல் 434) திருக்குருகூராகிய திருப்பதியில் தங்கிவாழ்ந்த காரணத்தால் சங்கன் என்பவன் சுவர்க்கம் எய்தினான் எனவும், தாந்தன் என்பவன் வீடுபேறுற்றான் எனவும் கூறும் கருத்துடைய இப் பாடற்கண், குருகூராகிய இடத்தில் வாழ்தலாகிய செயலால் சுவர்க்கம் வீடு என்ற பயன்களைப் பெற்றமைக்கண் இடக் காரகஏது அமைந்துள்ளது. (மா. அ. 189) இடக்குறை விசேடம் - விசேட அணிவகை ஆறனுள் ஒன்று. இடக்குறைவு காரணமாக ஒரு பொருளுக்கு மேம்பாடு கூறுவது இதன் இலக்கணம். எ-டு : ‘ஆலந் தளிருள் அடங்கும் ஒருபுனிதப் பாலன் பசித்தசிறு பண்டிக்கே - மேலைநாள் பல்லா யிரமாகப் பாரித்த பேரண்டம் எல்லாம் அடங்கும் எனும்.’ “ஊழி இறுதியில் பெருவெள்ளத்தே ஓர் ஆலந்தளிரில் சிறுகுழந்தை உருவில் படுத்திருக்கும் பெருமானுடைய சிறு வயிற்றுள் உலகுகள் பலவும் அடங்கியுள்ளன” என்ற செய்தி, இடக்குறைவு காட்டி அதனால் தெய்வத்தின் சிறப்பினை உணர்த்தியவாறு, சிறுவயிற்றிடத்தே பல உலகுகளையும் அடக்கி யிருத்தல் தெய்வத்தன்மை ஆதலால். (மா.அ.பா. 424) இடஞாபக ஏது - ஓரிடத்தினை அடிப்படையாகக் கொண்டு அங்கு நிகழும் செயலை அறிவான் அறியுமாறு காரணம் காட்டி விளக்கும் ஏது அணிவகை. எ-டு : ‘ஓங்கொலிநீர் ஞாலத்தை உண்ணா(து) உயக்கோடல் பூங்கமல உந்தியுடைப் புண்ணியன்தன் - நீங்காத ஆக்கினைகாண் என்றே அறிவித்தான் ஆரியனாம் கோச்சரிதை நீங்காக் குணன்.’ “உலகினைச் சூழ்ந்துள்ள பெருங்கடல் உலகினைத் தான் விழுங்காமல் பாதுகாத்தல் திருமாலுடைய ஆணையால் தான் நிகழ்கிறது” என்பதனை நற்குணங்கட்கு இருப்பிடமான குருநாதன் தெரிவித்தான் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், நிலவுலகம் நீருள் மூழ்காது நிலைத்திருத்தல் இறைவன் ஆணையால் என்னும் செய்தி அறிவான் அறியப்படுதலின், இட ஞாபகஏது ஆயிற்று. (மா. அ. பா. 441) இடத்திற் கேற்ற உவமம் - பாலை நிலத்தில் முதிர்வேனிலின் வெப்பத்திடையே நடந்து செல்லும் மெல்லடியையுடைய பாடினியின் உள்ளடியில் தோன்றிய கொப்புளங்களுக்கு உவமையாக மரல் என்னும் பாலைநிலச் செடியின் பழங்களைக் கூறும் ‘பரற்பகை உழந்த நோயொடு சிவணி மரல்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்’ (பொருந. 44, 45) என்ற அடிகளில் இடத்திற்கேற்ற உவமம் வந்தவாறு. (இ. வி. 639.) இடமிகுதி உதாத்தம் - இடவகை புகழும் உதாத்தம்; அது காண்க. இடவகை புகழும் உதாத்தம் - மிக மேம்பட்ட இடத்தினை உயர்த்திப் புகழும் உதாத்த அணிவகை இது. எ-டு : ‘ஆங்கதற்கு அணியாம் ஆதி ஆவரணம் ஒன்றினுக்(கு) அளவில் பேரண்டம் வாங்குபு கவவு புரிநெடுந் திகிரி வரைகளோர் மருங்கினுக்(கு)’ஆற்றா’. “பரமபதமாகும் மிக மேம்பட்ட இடமாகிய வைகுந்தத்திற்கு அழகுக்காக நாற்புறமும் மதில்கள் அமைந்துள்ளன. ஏனைய உலகங்களைச் சூழ்ந்து நிற்கும் சக்கிரவாள மலைகள் எல்லா வற்றையும் இணைத்துத் தொடுத்து அமைத்தாலும் வைகுந் தத்தின் நாற்புறமதில்களுள் ஒருமதிலுக்கும் அவை நிகராக மாட்டா” என்று உயர்த்திக் கூறுதற்கண் இடவகையைப் புகழ்ந்த உதாத்த அணிவகை அமைந்துள்ளது. இஃது உயர்வற உயர்ந்ததை வியந்துரைத்தலின் சாதாரண மான பொருளை உயர்த்துக் கூறும் அதிசய அணியுள் அடங்காது. (மா. அ. பா. 576) இடவார்த்தை - ஓரிடத்தைச் சுவைபடப் புகழ்ந்து உரைப்பதை இடவார்த்தை என்னும் அணியாக வீரசோழியம் கூறும். எ-டு : ‘மழலைக் கனிவாய் மணிவண்டு வருடி மருங்கு பாராட்ட அழல்நக்(கு) அலர்ந்த அரவிந்தத்(து) அமளி சேர்ந்த இளவன்னம் கழனிச் செந்நெல் கதிரென்னும் கவரி வீசக் கண்படுக்கும் பழனக் குவளை நீர்நாடன் பாவை வார்த்தை பகருற்றேன்’ (சூளா.1749) ‘வண்டு இன்னிசையால் நாற்புறமும் சுற்றிவந்து தாலாட்ட, நெருப்பைப் போன்று செந்நிறத்ததாய் மலர்ந்த தாமரை மலராகிய படுக்கைக்கண், இளஅன்னம், நெற்கதிர் கவரி போல வீசிக் காற்றெழுப்ப உறங்கும் நீர்நிலைகளை யுடைய நாடு’ என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், அந்நாட்டின் நீர்நிலை யாகிய இடம் சுவைபட வருணிக்கப் பட்டவாறு இடவார்த்தை அணியாம். (வீ. சோ. 159) இடன் நிலைக்களனாகிய ஒட்டு - இடத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படையாகக் கூறப்பட்ட செய்தி ஓர் உட்கருத்தை வெளியிடுதல் இடை நிலைக்களன் ஆகிய ஒட்டாகும். எ-டு : ‘உழவுபயன் கொள்வார் உவர்நிலத்தி னுள்ளாய் விழைவுபெற வித்திய வித்தல்லால் - அழகமையா வன்பாரில் வித்தியதூஉம் மால்பொருட்டால் போர்நிலத்தாம் என்பார் புலவீர் எவர்’ உழவர் நன்னிலத்தில் விதைத்த நல்வித்து இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்காக விளைந்து களம் புகும் என உலகம் கூறுவதல்லால், வலிய பாறையில் விதைத்த வித்து விளைந்து களம் புகும் எனக் கூறுவார் இலர் - என்ற வெளிப்படைப் பொருள் உடைய இப்பாடற்கண், தவமாகிய தொழிலால் தம்முயிர்க்கு முத்தியாகிய ஊதியம் எய்தும் சான்றோர்கள், இவ்வுலகமாகிய வயலிலே தெய்வஈடுபாடுடைய உயிர் களைப் பக்தி ஓங்குமாறு வளர்த்துப் பரமபதம் எய்தும் பக்குவமாகிய விளைவினை யுண்டாக்கிப் பரமபதத்தில் சேர்த்தலும், மனநலமில்லாத தறுகண்மையோர் பயனற்று அழிவதும் ஆகிய செய்திகள், வயல் என்னும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பாகப் பெறப்பட வைத்தற் கண் இடம் நிலைக்களனாகிய ஒட்டணி அமைந்துள்ளது. (மா. அ. பாடல் 284) இடைநிலைத் தீவகம் - தீவக அணி வகை (தண்டி. 38) ; இதனை இடைநிலை விளக்கு என்றும் கூறுப. இவ்விடைநிலைத் தீவகம் குணம், தொழில், சாதி, பொருள் என நால்வகைப்படும். 1) இடைநிலைக் குணத்தீவகம் - செய்யுள் நடுவே நின்ற பண்பு குறித்த சொல், ஏனைய இடங்களிலும் சென்றியைந்து பொருள் தருவது. எ-டு : ‘எடுத்த நிரைகொணா என்றலுமே, வென்றி வடித்திலங்கு வைவாளை வாங்கத் - துடித்தனவே தண்ஆர மார்பும் தடந்தோளும் வேல்விழியும் எண்ணாத மன்னர்க்(கு) இடம்,’ மாற்றார்தம் பசுக்கூட்டங்களைக் கொணர்க என்று தம் மன்னன் கூறவே, வீரன் வடித்து விளங்கும் கூரிய வாளினைத் தன் கையில் ஏந்தினானாக, அப்பகைவேந்தர்க்குக் குளிர்ந்த முத்துமாலையை அணிந்த மார்பும், பெரிய தோளும், கூர்விழியும் இடமாகத் துடித்தன - என்று பொருள்படும் இப்பாடற்கண், ‘துடித்தன’ என நடுவே நின்ற தொழிற்பண்பு குறித்த சொல், மார்பு தோள் விழி என்பவற்றொடு சென் றியைந்து மார்பு இடமாகத் துடித்தது முதலாகப் பொருள் தந்தவாறு காண்க. 2) இடைநிலைத் தொழில் தீவகம் - செய்யுள் நடுவே நின்ற செயலைக் குறித்த சொல், ஏனைய இடங்களிலும் சென்றியைந்து பொருள் தருவது. எ-டு : ‘எடுக்கும் சிலைநின்(று) எதிர்ந்தவரும் கேளும் வடுக்கொண்(டு) உரம்துணிய வாளி, - தொடுக்கும் கொடையும் திருவருளும் கோடாத செங்கோல் நடையும் பெரும்புலவர் நா.’ வேந்தன் எடுத்த வில்லின் அம்புகள் தொடுக்கப்படவே, அவனை எதிர்த்தவர்களும் அவர்தம் உறவினரும் விழுப்புண் மார்பிற் பட்டு உடல் வெட்டுப்பட்டாராக, புலவர்கள்தம் நா, அப்பெரு வேந்தனுடைய கொடை, கருணை, செங்கோன் முறை என இவற்றைப் பாக்களில் தொடுப்பனவாயின - என்று பொருள்படும் இப்பாடற்கண், ‘தொடுக்கும்’ என்ற வினை பற்றிய சொல், நடுவே நின்று கொடை திருவருள் செங் கோல்நடை என்பவற்றோடு இயைந்து பொருள் தந்தவாறு காண்க. 3) இடைநிலைச் சாதித் தீவகம் - செய்யுள் நடுவே நின்ற சாதியைக் குறிக்கும் சொல், ஏனைய இடங்களிலும் சென்றியைந்து பொருள் தருவது. எ-டு : ‘கரமருவு பொற்றொடியாம், காலில் கழலாம், பொருவில் புயவலயம் ஆகும், - அர(வு)அரைமேல் நாணாம், அரற்கு நகைமணிசேர் தாழ்குழையாம், பூணாம், புனைமாலை ஆம்.’ அரனாம் சிவபெருமானுக்குப் பாம்பு கைகளில் அணியும் பொற்றொடியாகவும், காலிற் பூணும் கழலாகவும், ஒப்பற்ற தோள்வலயமாகவும், இடைமேல் அரைநாணாகவும், செவியில் ஒளிமணிகளையுடைய தொங்கும் குழையாகிய ஆபரண மாகவும், மார்பில் புனையும் மாலையாகவும் அமை கிறது - என்று பொருள்படும். இப்பாடற்கண், ‘அரவு’ என்னும் பாம்புகளது சாதிப்பெயர், நடுவே நின்று பொற் றொடி கழல் புயவலயம் நாண் பூண் மாலை என்பவற்றொடு சென்றியைந்து பொருள்தந்தவாறு காண்க. 4) இடைநிலைப் பொருள் தீவகம் - செய்யுள் நடுவே நின்ற பொருளைக் குறிக்கும் சொல், ஏனைய இடங்களிலும் சென்றியைந்து பொருள் தருவது. எ-டு : ‘மான்அமரும் கண்ணாள் மணிவயிற்றில் வந்துதித்தான்; தானவரை என்றும் தலைஅழித்தான்; - யானைமுகன் ஓட்டினான் வெங்கலியை; உள்ளத்(து) இனிதமர்ந்து வீட்டினான் நம்மேல் வினை.’ யானை முகனாம் பெருமான், மான்போன்ற கண்ணியாகிய உமாதேவியின் அழகிய வயிற்றில் தோன்றினான்; அசுரர் களை என்றும் பொருது அவர்களது தலைமையை அழித் தான்; கொடிய வறுமையை நம்மினின்று போக்கினான்; நம் மனத்தில் இனிதாக மேவி நமது வெவ்வினைகளை இல்லை யாக்கினான் - என்று பொருள்படும் இப்பாடற்கண், ‘யானை முகன்’ என்ற பொருட்பெயர் நடுவே நின்று உதித்தான், அழித் தான், ஓட்டினான், வீட்டினான் என்பவற்றொடு சென்றியைந்து பொருள் தந்தவாறு காண்க. (தண்டி. 40 : 5 - 8) இடையிணை நிரல்நிறை - இடையிலுள்ள சொல் இரண்டாகப் பிரிந்து முன்னும் பின்னும் முறையாக இணைந்து பொருள் தருவதைச் சுட்டும் நிரல்நிறையணி வகை இது. ‘அருள்மனையா ளாய்உவந்த(து) ஆழியான் கோடு பொருதிரைப்பாற் றெள்ளமுதின் போந்த - திருவரங்கம் பூம்பதுமக் கண்முகிழ்த்துப் புத்தேளிர் கைதொழமால் பாம்பணைமேல் வைகும் பதி’ இடைநின்ற ‘திருவரங்கம்’ என்ற தனிச்சொல்லாய் அமையும் இருமொழி திரு என்றும் அரங்கம் என்றும் பிரிந்து, ‘திரு மனையாளாய் உவந்தது’, ‘அரங்கம் மால் வைகும் பதி’ என்று இணைந்து பொருள் முடிந்தமை இடையிணை நிரல்நிறை யாம். (மாஅ. 173) இணைமுரண் முதலிய விரோத அணி - ‘அறிவிலர் உணர்வுளர் எனுமவர் அளவினில் அருவமொ(டு) ஒளிர்திரு உருவம(து) உடையனை எளியனை அடியவர்க்கு ஏனையோர்க்(கு) அரியனை கனவிலும் நனவிலும் அறிதுயிற் கண்ணும் வெண்சங்கு ஆழி செம்மணிப் பொன்முடி காலையும் மாலையும் கண்டுநன் பகலிலும் இன்புறத் துன்பமற்(று) இம்பரொ(டு) உம்பர் நறவார் மலர்மகள் நாதனை மறவா தவர்பதம் வழுத்தும்எம் நாவே.’ இப்பாடற்கண், இலர், உளர் - இணை முரண் அருவம், உருவம் - பொழிப்பு முரண் எளியன், அரியன் - ஒரூஉ முரண் கனவு, நனவு, அறிதுயில் - கூழை முரண் வெண், செம், பொன் - மேற்கதுவாய் முரண் காலை, மாலை, பகல் - கீழ்க்கதுவாய் முரண் இன்பு, துன்பு, இம்பர், உம்பர் - முற்று முரண் என, இணைமுரண் முதலிய ஏழ் முரண் விகற்பங்களும் முறையே வந்தன. (மா. அ. பா. 417) இணையெதுகை அணி - இணையெதுகையால் ஓசையின்பம் நிகழுமாறு அமைவது. ‘கணையும் பிணையும் கடுவும் வடுவும் இணைஒன் றியவிழியார் எய்தார்’ அம்பினையும் பெண்மான்விழியினையும், விடத்தையும், மாவடுவையும் ஒத்த கண்ணினார் என்று பொருள்படும் இவ்வடிகளில், ‘கணையும் பிணையும் கடுவும் வடுவும்’ என எதுகைகள் இணைந்து செவிக்கு இன்பம் பயத்தலை ஓரணியாகக் குறிப்பிடுகிறது மாறன்அலங்காரம். இறுதிச் சீர்களில் கடையிணை எதுகை எனக் கொள்க. (மா. அ. 180) இதரவிதர உவமை - இதர + இதர = இதரவிதர; ஒன்றுக் கொன்று தம்மிடை உவமம் ஆதல்; இஃது உவமையணிகளின் வகைகளுள் ஒன்று. ஒரு பாடலில், முதலில் பொருளை முறையாக உவமித்த பின்னர் உபமேயத்தை உபமானமாகவும், உபமானத்தை உபமேயமாகவும் மாற்றிக் கூறுதல் இதன் இலக்கணம். எ-டு : ‘களிக்கும் கயல்போலும் நின்கண்; நின் கண்போல் களிக்கும் கயலும்; கனிவாய்த் - தளிர்க்கொடியே! தாமரை போல்மலரும் நின்முகம்; நின்முகம்போல் தாமரையும் செவ்வி தரும்’ “பெண்ணே! உன்கண்கள் கயல் போலக் களிக்கின்றன; கயலும் உன்கண் போல் களிக்கிறது. உன்முகம் தாமரை போல மலர்கிறது. உன்முகம் போல் தாமரையும் மலர்கிறது” என உலகறிந்த உவமைகளான கயலையும் தாமரையையும், அத்தன்மையுடைய பொருள்களான கண்ணையும் முகத்தை யும் மீண்டும் மாற்றி உவமை கூறியுள்ளமை காண்க. முதலில் உள்ளவாறே கூறிப் பின்னர் மாற்றிக் கூறியமை இதன் சிறப்பு. இவ்வாறின்றி உபமேயமாகிய பொருளை உவமையாக மாத்திரம் மாற்றிக் கூறுவது ‘விபரீதஉவமை’ என வேறோர் உவம அணியாம். இதரவிதர உவமை ‘தடுமாறுவமை’ எனத் தொல்காப்பி யத்திலும், (பொ. 310 பேரா.) மாறன் அலங்காரத்திலும் (101-11), ‘உபமேயோபமா’ என வடமொழி நூல்களிலும், புகழ் பொருள் உவமை எனத் தமிழ்ச் சந்திராலோகத்திலும் குறிப்பிடப்படும். வீரசோழியம் இதனை இதரேதர உவமை (கா. 156) என்று சுட்டும். இதரவிதரம், அந்நியோன்னியம், தடுமாற்றம் ஒரு பொருளன. இதர + இதரம் = இதரேதரம் : வடமொழிக் குணசந்தி. (தண்டி 32:3) இதரேதர உவமை - இஃது இதர விதர உவமை எனவும் தடுமாறுவமை எனவும் கூறப்பெறும். இதனைப் புகழ்பொருள் உவமை என்று சந்திரா லோகம் கூறும். ‘இதரவிதர உவமை’ காண்க. (வீ. சோ. 156) இதற்கு இதுதானே உவமம் என்பது - இஃது உவமப்போலி ஐந்து வகைகளுள் ஒன்று என்பர் இளம்பூரணர். ‘மன்னிய முதல்வனை ஆதலின் நின்னோ ரனையைநின் புகழொடு பொலிந்தே’ (பரி. 1:56, 57) என்ற அடிகளில், ‘திருமாலுக்கு உவமமாதற்கு உரியார் வேறு இலர்; திருமாலுக்குத் திருமாலே உவமம்’ என்று கூறுவது உவமப்போலிவகை ஐந்தனுள் ஒன்று. (தொ.பொ. 295 இள.) இயங்குதிணைத் தற்குறிப்பேற்ற அணி - இது தற்குறிப் பேற்ற அணிவகையுள் ஒன்று. எ-டு : ‘மண்படுதோள் கிள்ளி மதயானை மாற்றரசர் வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம் தேயும் தெளிவிசும்பின் நின்று’ சோழனுடைய போர்யானை பகைவேந்தர்தம் வெண் கொற்றக் குடைகளை அழித்தும் சினம் தீராமல் விண்ணில் பாய்ந்து தன்னையும் அழிக்க முற்படுமோ என்று அஞ்சியே போலும், சந்திரன் வானத்தே தேய்ந்து தன் உருவைப் பிறையாக, தான் குடையன்று என்பது தோன்றக் காட்டும் என்னும் பொருளமைந்த இப்பாடற்கண், சந்திரன் தேய்த லாகிய இயற்கை நிகழ்ச்சியின்கண் கவி தனது கற்பனையால் அதற்கொரு காரணத்தை ஏற்றியுரைத்தமை காண்க. சந்திரன் இயங்கு திணையாதலின், இஃது இயங்குதிணைத் தற்குறிப் பேற்ற அணியாம். (தண்டி. 56-1) இயங்குபொருள் நோக்கு - இயங்குதிணைத் தற்குறிப்பேற்றஅணி வீரசோழியத்துள் ‘இயங்குபொருள் நோக்கு’ எனப்படும். ‘இயங்குதிணைத் தற்குறிப் பேற்ற அணி’ காண்க. (வீ. சோ. 167) இயல்பு விபாவனை - இது விபாவனை அணியின் ஒருவகை. ஒரு வினைக்குப் பலரும் அறிய வரும் காரணத்தை ஒழித்து இயல்பாக அது நிகழ்ந்ததாகச் சொல்வது. எ-டு : ‘கடையாமே கூர்த்த கருநெடுங்கண்; தேடிப் படையாமே ஏய்ந்ததனம்; பாவாய் - கடைஞெமிரக் கோட்டாமே கோடும் புருவம்; குலிகச்சே(று) ஆட்டாமே சேந்த அடி.’ “பாவாய்! உன் கருநெடுங்கண் சாணையிற் கடையாமலேயே கூர்மை பெற்றுள; தேடிச் சேர்க்கும் முயற்சியின்றியே உனக்குத் தனங்கள் குவிந்துள; உன் புருவங்கள், யாரும் பிடித்து வளைக்காமலேயே வளைந்துள்ளன; சாதிலிங்கக் குழம்பு பூசாமலேயே உன் அடிகள் சிவந்துள்ளன” எனத் தலைவன் தலைவியை நலம்பாராட்டல் என்னும் துறைப்பட அமைந்த இப்பாடற்கண், கூர்மையும் தனமும் வளைவும் சிவப்பும் காரணமின்றியே இயல்பாக நிகழ்ந்திருத்தல் இயல்பு விபாவனை அணியாம். (தண்டி. 51-2.) இயைபில் உருவகம் - உருவகஅணி வகைகளுள் ஒன்று. உருவகம் செய்யப்படும் ஒன்றுடன் ஒன்று பொருள் இயைபு இல்லாமல் அமைப்பது இதன் இலக்கணம். எ-டு : ‘தேன்நக்(கு) அலர்கொன்றை பொன்னாகச் செஞ்சடையே கூனல் பவளக் கொடியாகத் - தானம் மழையாகக் கோடு மதியாகத் தோன்றும் புழையார் தடக்கைப் பொருப்பு’ இப்பாடல் விநாயகனைப் பற்றியது. துதிக்கையினையுடைய யானையாகிய மலை - (-விநாயகன்) கொன்றைப்பூப் பொன் னாக, செஞ்சடையே பவளக் கொடியாக, மதநீர்ப் பெருக்கே மழையாக, கொம்பே பிறைமதியாகக் காட்சி தரும் - என்ற கருத்துடைய இதன்கண், உருவகம் செய்யப்பட்ட கொன்றை, சடை, தானம், கோடு என்னும் இவற்றிடையே பொருள் இயைபு இல்லை ஆதலின் இஃது இயைபு இல் உருவக அணியாயிற்று. (தண்டி. 37 - 5) இயைபிலி உருவகம் - ‘இயைபில் உருவகம்’ காண்க. இயைபின்மை அணி - இது பொது நீங்கு உவமை எனவும், ஒப்பில் உவமை எனவும் கூறப்பெறும். ஒருவாக்கியத்துள் ஒருபொருளையே உபமானமாகவும் உபமேயமாகவும் கூறும் அணி இது. இதற்கு உபமானமாகக் கூறுதற்குரிய வேறுபொருள் ஒன்றும் இன்று எனக் குறிப்பிடுவதால் இஃது இப்பெயர்த்தாயிற்று. இஃது அநந்வயாலங்காரம் என வடநூல்களில் கூறப்பெறும். எ-டு : ‘தேனே அனையமொழிச் சேயிழையாள் செவ்வியினால் தானே உவமை தனக்கு’ இத்தேன்மொழியாள், தன் பண்புகளாலும் வனப்பாலும் தனக்கு ஒப்பாவார் பிறர் இன்மையின் தனக்குத் தானே உவமமாகிறாள் என்று கூறுவது இவ்வணி. (மு. வீ. பொருளணி. 21 குவ. 2) இயைபுஉருவகத்தின் பாற்படுவது - உவமை, உருவகம் என்னும் இரண்டு அணிகளுக்கும் கூறிய புறனடையால் வந்த உருவக அணி. எ-டு : ‘ஏரி இரண்டும் சிறகா எயில்வயிறாக் காருடைய பீலி கடிகாவா - நீர் வண்ணன் அத்தியூர் வாயா அணிமயிலே போன்றதே பொற்றேரான் கக்சிப் பொலிவு’ காஞ்சிமா நகரின் பொலிவினை நோக்கின், அஃது ஓர் அழகிய மயில் போன்றது. எவ்வாறெனில், ஊர்ப்புறத்தே இருபுறமும் அமைந்த ஏரி இரண்டுமே அம்மயிலின் சிறகுகள்; ஊர் நடுவே அமைந்த கோட்டை அதன் வயிறு; சோலை களே அதன் தோகை; திருமால் உவந்து எழுந்தருளியுள்ள அத்தியூரே அதன் வாய் - என்னும் பொருளுடைய இப் பாடற்கண், காஞ்சி மாநகர் மயிலோடு ஒப்பிடப்பட்ட உவமையுள்ளது. அவ்வுவமைக்கேற்ப ஏரி முதலியவை முறையே சிறகு முதலிய வாக உருவகிக்கப்பட்டுள. இவற்றிடைப் பொருள்இயைபு இருத்தலின், இதுவும் இயைபு உருவகத்தின்பாற்படும். (தண்டி. 39-2, இ.வி. 645-1) இயைபு உருவகம் - உருவக அணிவகைகளுள் ஒன்று. உருவகம் செய்யப்படும் பொருள்கள் தம்முள் ஒன்றோடொன்று பொருள் இயைபு பெற அமைத்தல். எ-டு : ‘செவ்வாய்த் தளிரும், நகைமுகிழும், கண்மலரும், மைவார் அளக மதுகரமும் - செவ்வி உடைத்தாம் திருமுகம் என் உள்ளத்தே வைத்தார்; துடைத்தாரே அன்றோ துயர்!’ “வாய் என்னும் தளிரும், புன்முறுவல் என்னும் மொட்டும், கண்கள் என்னும் மலரும், கூந்தல் என்னும் வண்டும் கொண்ட அழகிய தன் முகத்தை என் உள்ளத்தே வைத்த தலைவி என்துயர் அனைத்தையும் துடைத்தாள்” என்னும் கருத்தமைந்த இப்பாடற்கண், உருவகம் செய்யப்பட்ட தளிர், மொட்டு, மலர், வண்டு என்னும் பொருள்கள் தம்முள் இயைபு பெற்றமை காண்க. (தண்டி. 37-4) இரங்கல் விலக்கு - இது முன்னவிலக்கு அணி வகைகளுள் ஒன்று. எ-டு : ‘ஊசல் தொழில்இழக்கும்; ஒப்பு மயிலிழக்கும், வாசம் சுனையிழக்கும்; வள்ளலே - தேசு பொழில் இழக்கும்; நாளைஇப் பூங்குழலி நீங்க, எழில்இழக்கும் அந்தோ இதண்’ “தலைவ! நீ இவளைப் பிரிந்து சென்றால், (அதனை ஆற்ற மாட்டாது இவள் இறந்துபடின்,) ஊசல் ஆடும் தொழிலை இழக்கும்; மயில் தன்னுடைய சாயலுக்கு ஒப்பு ஆவாளை இழக்கும்; இவள் நீராடாததால் சுனை தன் மணத்தை இழக்கும்; இவள் வாராமையால் பொழிலும் தன் ஒளியை இழக்கும். அந்தோ! நாளை இப்பரணும் தன் அழகினை இழந்துவிடும்” என்ற பொருளுடைய தோழி கூற்றாம் இப் பாடற்கண், ஊசல் முதலியவற்றின் நிலைக்கு இரங்குவாள் போலக் கூறி அவள் தலைவனது பிரிவினை விலக்கியது இரங்கல் விலக்காம். (தண்டி. 45 - 12) இரட்டுறல் - சிலேடை (மா.அ. 299 உரை) இரட்டை உவமை - அடையடுத்த உபமேயத்திற்கு அடையடுத்த உபமானத்தை அமைத்துச் செய்யும் உவமை. எ-டு : ‘நறைமல் கியகொழுங் காவியைப் போல்நள் ளிரவிலும்நீடு உறைமல் கியகண் துயிலாமை அன்பர்க்கு உரைக்கிலவால்’ “தேன் நிரம்பியுள்ள செழித்த குவளைமலர்போல் இராக் காலத்தும் மிக்க கண்ணீர்த்துளி நிரம்பியிருக்கும் என்கண்கள் உறங்காத செய்தியைத் தலைவர்க்கு அன்னங்கள் உணர்த்த வில்லை” என்னும் பொருள் அமைந்த இப்பாடல் அடிகளில், நறை மல்கிய கொழுங்காவி - உபமானம் நீடு உறை மல்கிய கண் - உபமேயம் அடையடுத்த உபமானம் அடையடுத்த உபமேயத்திற்குப் புணர்த்தப்பட்டமை இரட்டை உவமை. (மா. அ. 103) ‘இரட்டைக்கிளவி இரட்டை வழித்’தாதல் - அடையும் அடையடுத்த பொருளும் என இரண்டாக வரும் உபமேயத்திற்கு அடையும் அடை அடுத்த பொருளும் என இரண்டாக வரும் உவமம் அமைதல் வேண்டும் என்பது. பொன்னை உரைத்த உரைகல்லைப் போல, கண்பு என்னும் கோரையின் புல்லிய காயில் தோன்றிய பூந்தாது தடவப் பட்ட மார்பு என்ற கருத்தமைந்த ‘பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்’ (பெரும்பாண். 220, 221) என்ற அடிகளில் ‘சுண்ணம் புடைத்த மார்பு’ என்ற அடை யடுத்த உபமேயத்திற்குப் ‘பொன்காண் கட்டளை’ என்ற அடையடுத்த உபமானம் கூறப்பட்டவாறு. (தொ. பொ. 297 பேரா.) அடையும் அடையடுத்த சொல்லும் ஒருசொல் நீர்மைப் பட்டு வருதல் வேண்டும் என்பது. (தொ. பொ. 293 இள.) இரட்டையாக வரும் உவமம் உவமிக்கப்படும் பொருள் இரட்டையாக வருமிடத்தே ஆம். என்றது, இரண்டு பொருளை இணைத்து விளக்க நேர்ந்தவிடத்து உவமமும் இரட்டையாக வருதல் வேண்டும் என்றவாறு. எ-டு : ‘விலங்கொடு மக்கள்’ எனத் தொடங்கும் (குறள். 410) இதன்கண், கற்றாரையும் கல்லாரையும் ஒருங்கு எடுத்து ஓருவமத்தான் விளக்க விலங்கொடு மக்களை இணைத்து உவமித்தவாறு காண்க. இதன்கண் நிரல்நிறை மாறிவந்தது. ‘பொன்னொடு இரும்பனையர் நின்னொடு பிறரே’ என்பதும் அது. (நிரல்நிறை மாறுபடாது வந்தது.) (தொ. உவம. 22 ச.பால.) இரண்டாம் சமுச்சயம் - இன்பமோ துன்பமோ ஒருவர்க்கு இரண்டு இடங்களில் நிகழ்வனவாகக் கூறுதல் சமுச்சயத்தின் இரண்டாம் வகை யாகும். எ-டு : ‘உத்தமப்பேர் இன்பம் உணர்த்தும் தமிழ்மறைப்பா வித்தகத்தால் தந்த விதநினைந்து - முத்தி அளிக்குமகிழ் மாறன் அருள்முகத்தைக் கண்டு களிக்குமனம் போலவுமென் கண்.’ “திருவாய்மொழியை உலகுக்கருளிய சடகோபருடைய அருள்பொழியும் முகத்தைக்கண்டு எம்மனம் போலக் கண்களும் களிக்கும்” என, அடியவர்களிடத்தே இன்பம் மனமும் கண்ணுமாகிய இரண்டிடங்களில் தோன்றுவதாகக் கூறும் இப்பாடற்கண், இச்சமுச்சய அணிவகை அமைந் துள்ளது. சமுச்சயம் - எச்ச உம்மை. (மா.அ. 237) இரண்டு ஒத்த குறைவுவமை - வினை, பயன், வடிவு, நிறம் என்னும் நான்கும் பற்றி ஒரு பொருளை மற்றொரு பொருளுக்கு உவமை ஆக்குவது நிறை உவமை எனவும், இந்நான்கனுள் ஒன்றுமுதல் மூன்று ஒப்பது குறைவு உவமை எனவும் கூறப்படும், எ-டு : ‘வெள்ளைப் பிறைக்கோட்டு வெங்கரியை வென்றவிறல் பிள்ளைப் பெருமான்தென் பேரை’ வெண்ணிறத்த பிறை போன்ற நிறமும் வடிவுமுடைய தந்தங் களையுடைய குவலயாபீடம் என்ற யானையைக் கண்ண னாகத் திருவவதாரம் செய்த காலத்து வென்றவன் தென் திருப் பேரையிலுள்ள பெருமான் - என்ற கருத்தமைந்த இப் பாடலில், பிறை தந்தங்களுக்கு வண்ணம் வடிவு என்னும் இரண்டு பற்றி அமைந்த குறைவு உவமையாம். இக்குறைவு உவமையை ‘உலுத்த உவமை’ என வடநூல் கூறும். (மா. அ. 95) இரண்டு பொருளானே வெவ்வேறு கூறியவழி ஒன்று ஒன்றற்கு உவமம் என்று கொள்ள வைத்தல் ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ (குறள். 1) இப்பாடலில் அகர..... எழுத்தெல்லாம் ‘ஆதி....... உலகு’ என்னும் இரு செய்திகள் கூறப்பட்டுள்ளன. இரண்டனுள் எதுவும் உவமையாகவும் அமையும்; பொருளாகவும் அமையும். இவ்வாறு சமமான இரண்டு பொருள்களைத் தனித்தனித் தொடர்களில் கூறி, இடையே உவம உருபு கொடாது எதனை வேண்டினும் உவமையாகவோ பொரு ளாகவோ கொள்ளு மாறு அமைப்பது வேறுபட வந்த உவமத் தோற்றத்துள் ஒன்றாகும். இதனைப் பிற்காலத்தார் எடுத்துக்காட்டுவமை என்பர். மறுபொருள் உவமை என்பதும் அது. (தொ. பொ. 307 பேரா.) இத்தினாவளி அணி - இஃது அரதனமாலை அணி எனவும் வழங்கப்படும். அது காண்க. இரத அணி - இது ‘சுவையணி எனவும்படும். அது காண்க. இருபொருள் சமமாகக் குறிப்பினால் வேற்றுமை செய்தது - இது வேற்றுமையணி வகையுள் ஒன்று. இரு பொருள்களும் சமமாய் நிற்கும் நிலை காட்டிக் குறிப்பினால் வேறுபாடு புலப்படுத்துவது இதன் இலக்கணம். எ-டு : ‘கார்க்குலமும் பாய்திரையும் காட்டும் கடல்; படையும் போர்க்களிறும் பாய்மாவும் பொங்குமால்; - ஏற்ற கலமுடைத்து முந்நீர்; கதிராழித் திண்டேர் பலவுடைத்து வேந்தன் படை.’ கடலில் மேகங்களும் பாயும் அலைகளும் உள்ளன; படை யிலும் பெரிய யானைகளும் பாய்ந்தோடும் குதிரைகளும் உள்ளன. கடலில் பலமரக் கலங்கள் ஓடும்; படையிலும் திண்ணிய தேர்கள் பல ஓடும். இவ்வாற்றால் கடலும் படையும் சமம் என இரண்டனையும் ஒப்பிட்டு, பின் அவை கடலும் படையும் எனக் குறிப்பால் வேறுபடுத்திக் காட்டியமை யால் இது வேற்றுமையணி வகையாம். (பெயரளவிலேயே வேற்றுமையாம்) (தண்டி. 49 -4) இருபொருள் வேற்றுமைச் சமம் (கூற்று) கூற்றினால் இருபொருள் வேற்றுமை செய்யும் இது வேற்றுமை அணி வகைகளில் ஒன்று. இருபொருளும் சம மாகக் கூறிப் பின் வெளிப்படையாகிய கூற்றினால் அவற் றிடை வேற்றுமை செய்து காட்டுதல் இதன் இலக்கணம். எ-டு : ‘சென்று செவிஅளக்கும் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே நின்றுஅளவில் இன்பம் நிறைப்பவற்றுள் - ஒன்று மலர்இவரும் கூந்தலார் மாதர்நோக்கு; ஒன்று மலரிவரும் கூத்தன்தன் வாக்கு.’ செவிவரை நீண்டு என்னுள்ளத்தே எல்லையற்ற இன்பத்தை நிறைக்கும் பொருள்கள் இரண்டு : ஒன்று மாதர்தம் நோக்கு; மற்றொன்று மலரி என்ற ஊரில் பிறந்த கூத்தன் என்ற புலவனுடைய வாக்கு (இவ்வாக்குச் சீரிய கூரிய தீந்தமிழ்ச் சொற்களாகக் காது நிறையப் புகுந்து உள்ளத்தே இன்பம் நிறைத்து நிலவுகின்றது) - என அவ்விரண்டனையும் வெளிப் படையாக எடுத்து விதந்தமையின், இஃது இருபொருள் கூற்றினால் வேற்றுமை செய்ததாம். (தண்டி. 49-2) இருமை இயற்கை வேற்றுபொருள்வைப்பணி - கூடும் இயற்கை கூடா இயற்கை என்னும் இரண்டனையும் இணைத்துக் கூறும் வேற்றுப்பொருள் வைப்பணியின் வகை எட்டனுள் ஒன்று. எ-டு : ‘கோவலர்வாய் வேய்ங்குழலே அன்றிக் குரைகடலும் கூவித் தமியோரைக் கொல்லுமால் - பாவாய்! பெரியோரும் பேணாது செய்வாரே போலும், சிறியோர் பிறர்க்கியற்றும் தீங்கு.’ இது பிரிவாற்றாத தலைவி கூற்று. “தோழி! இடையர்கள் ஊதும் குழலோசையேயன்றிக் கடலும் மிக ஒலித்துப் பிரிவால் வாடுவாரைக் கொல்கிறதே! சிறியோர் பிறர்க்குத் தீங்கு செய்வது போலவே பெரியோரும் ஆராயாது செய்வர்போலும்!” என்று பொருள்படும் இதன்கண், பின் இரண்டடிகளிலுள்ள பொதுப்பொருள் முன் இரண்டடி களிலுள்ள சிறப்புப் பொருளை விளக்கிற்று. சிறியோர் பிறர்க்குத் தீங்கு செய்தலும், கோவலர் ஊதும் குழல் தனித்திருப்போரைத் துன்புறுத்தலும் கூடும் இயற்கை. பெரியோர் பிறர்க்குத் தீங்கு செய்தலும் கடல் தனித்திருப் போரைத் துன்புறுத்தலும் கூடா இயற்கை. (தண்டி. 48 -7) இதனை ‘இருமையின் விளம்பல்’ (மா.அ. 208) எனவும், விரவியற் பிறபொருள் வைப்பு (வீ.சோ. 162) எனவும் கூறுப. இருவகைக் காப்பியமும் இயலுமாறு - பெருங்காப்பியமும் சிறுகாப்பியமுமான இருவகைக் காப்பியங்களும் ஒருவகைச் செய்யுளாலோ பல வகைச் செய்யுளாலோ உரையும் பிறமொழியும் விரவியோ விரவுதல் இன்றியோ இயலும். (தண்டி. 11) ஒருவகைச் செய்யுள் - நளவெண்பா முதலியன. பலவகைச் செய்யுள் - பல வகை விருத்தங்களான் இயன்ற சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் போல்வன. பாட்டும் உரைநடையும் கலந்தமைந்த தமிழ் நூல்கள் இக்காலத்து வழக்கில் இல்லை; தகடூர் யாத்திரை, பாரத வெண்பா என்பன உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யு ளாக அமைந்தன என்ப. வேற்றுமொழி விரவிய காவியங்கள் தமிழில் இயற்றப்பட்ட னவா என்பது ஆய்வுக்குரியது; நாடகங்களில் பிறமொழி மக்கள் கூற்று வருங்கால் அவரவர் மொழியில் கூறியவாக அமைத்திருத்தல் கூடும். (தண்டி. 11) இருவகை மீட்சி அணி - இது சொற்பொருள் பின் வருநிலை அணியாம் அது காண்க. ‘இருகை மீட்சி’ என்றிருப்பின் அது பிழையாம். (வீ.சோ. 152) இல்பொருளுவமை - அபூத உவமை (தண்டி. 32-19) எனவும்படும். அது காண்க. (மா. அ. 101-5) இல்லதன் அபாவம் - ஒரு பொருள் இல்லாமையினாலான அபாவம். (சி. சி. அள. 1 மறைஞா.) இன்மையது அபாவம் - காண்க. இல்லாத வினையை வருவித்து உவமமாக்கல் - வானத்திற்குத் தோல் உரிக்கும் செயல் இல்லை. கண்ணில் உள்ள பாவை நடந்து வருவது இல்லை. இருண்ட மேகம் வானத்தில் வடபுறத்தினின்று தென்புறம் நோக்கிப் பெயர்ந்து செல்வதனை வானம் தோலை உரிப்பது போலக் குறிப்பிடும் ‘விசும்(பு)உரி வதுபோல் வியலிடத்(து) ஒழுகி மங்குல் மாமழை தென்புலம் படரும்’ (அகநா. 24) ‘விசும்பு உரிவது போல’ என்ற தொடரிலும், தலைவி, கண்ணிலுள்ள பாவையே நடத்தல் கற்று நடந்து வருவது போல வந்தாள் என்று குறிப்பிடும் ‘உண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்ன ஒதுக்கினள் வந்து’ (நற். 184) என்ற தொடரிலும் உவமங்களாகிய விசும்பு, கண்மணிவாழ் பாவை இவற்றிற்கு இல்லாத வினைகளாகிய உரிதல், நடத்தல் என்பன வருவித்து உவமமாக்கப்பட்டன. (தொ. பொ. 276 பேரா.) இலக்கணவிளக்கம் கூறும் பொருளணிகள் - தண்டியலங்காரம் கூறும் 35 பொருளணிகளையே இலக்கண விளக்கமும் கூறும். இலலிதாலங்காரம் - ‘லலிதாலங்காரம்’ நோக்குக. இலேச அணி (1) - உள்ளத்து உணர்ச்சியை வெளிப்படுத்தும் சத்துவமாகிய குணத்தை அது நிகழ்ந்ததற்கான உண்மைக் காரணத்தை மறைத்துப் பிறிதொன்றனால் நிகழ்ந்ததாகக் கூறுதல் இவ் வணியது இலக்கணம். உணர்ச்சி - சுவை. வெண்பளிங்கில் சிவப்புநூலைக் கோத்தால் அதன் செம்மை புறத்தே தெரிவதுபோல, தன் மனத்துக்கண் நிகழும் உணர்ச்சியைப் புறத்தே வெளிப்படக் காட்டும் சொல்தளர்வு, மெய்விதிர்ப்பு, கண்ணீர் அரும்புதல், மெய் வெதும்பல், மயிர்க் கூச்செறிதல் முதலியன சத்துவம் எனப்படும். இவ் வணி வஞ்ச நவிற்சி எனவும் படும். எ-டு : ‘கல்லுயர்தோள் கிள்ளி பரிதொழுது கண்பனிசோர் மெல்லியலார் தோழியர்முன் வேறொன்று - சொல்லுவரால்; “பொங்கும் படைபரப்ப மீதெழுந்த பூந்துகள் சேர்ந்(து) எம்கண் கலுழ்ந்தனவால்” என்று.’ சோழ மன்னனை அவன் இவர்ந்துவந்த குதிரையொடு கண்டு தொழுது அவன்பால் வேட்கை கொண்டு அது நிறை வேறுதலின்றிப் போக அதனால் கண்ணீர் மல்கி நிற்கும் மகளிர், அரசனது படை அவனைத் தொடர்ந்து சென்றதால் எழுந்த புழுதி படவே தம் கண்கள் கலங்கி நீர் உகுத்தன என்று தம் தோழியரிடம் கூறுகின்றனர் என்று பொருள்படும் இப் பாடற்கண், மகளிர் தம் கண்ணீர்க்குக் காரணத்தை மாற்றிக் கூறியமை காண்க. எ-டு : ‘மதுப்பொழிதார் மன்னவனை மால்கரிமேல் கண்ட விதிர்ப்பும் மயிர்அரும்பும் மெய்யும் - புதைத்தாள் வளவா ரணநெடுங்கை வண்துவலை தோய்ந்த இளவாடை கூர்ந்த தென.’ தலைவி, மன்னனை அவன் யானைமீதேறி வரும்போது கண்டமையால் தனக்கு விளைந்த காமத்தால் வந்தமெய் நடுக்கத்தையும் மெய்ம்மயிர் பொடித்தலையும் மறைத்து, யானையின் துதிக்கையினின்று வீசிய நீர்த்துளிகளோடே வாடைக்காற்றும் சேர்ந்து வீசியமையால், தனக்கு அவை நிகழ்ந்தனவாகக் கூறியது இப்பாடல். இதன்கண்ணும் தலைவி தன் சத்துவங்கள் ஏற்படக் காரணமானதை மறைத்துப் பிறிதொன்றனைக் காரணம் காட்டிச் சொல்லுதல் காண்க. இவ்வாறு கூறுதல் இலேச அணியாம். (தண்டி. 65 - 1,2) இலேச அணி (2) - தான் உள்ளத்திற் கருதியது காரணத்தால் வெளிப்படத் தோன் றும் மெய்ப்பாட்டிற்குக் காரணமாக உரிய காரணத்தை மறைத்து வேறொன்று கூறுதலும், ஒன்றனையோ ஒருவரையோ புகழ்வதுபோலப் பழித்தலும், பழிப்பது போலப் புகழ்தலும் ஆகிய இம் முத்திறமும் இலேச அணியின்பாற்படும். (தென். அணி. 28) இலேசஅணி பற்றிப் பிறர்மதம் - ஒன்றனைப் புகழ்ந்தாற் போலப் பழித்துரைத்தலும், பழித் தாற் போலப் புகழ்ந்துரைத்தலும் இலேசஅணியின்பாற்படும் எனக் கூறுவோரும் உளர். (தண்டி. 66) இலேச அணியின் மறு பெயர்கள் - 1. இலேசு - வீ.சோ. 153 2. இலேயம் - 153 - உரை 3. வஞ்சநவிற்சி - சாமி., குவ. 86 இலேச அணி வகைகள் - 1. சத்துவங்களை மறைத்துக் கூறும் வஞ்சநவிற்சி, 2. புகழ்வது போலப் பழித்திறம் புனைதல், 3. பழிப்பது போலப் புகழ் புலப்படுத்தல் - என்பனவாம். (தண்டி. 65, 66) இலேசு அணி - இஃது இலேச அணி எனவும்; இலேய அணி எனவும் கூறப் பெறும். ‘இலேச அணி’ காண்க. (வீ. சோ. 153) இலேயம் - இஃது இலேசம் எனவும் கூறப்பெறும். (வீ. சோ. 153 உரை.) இழிப்புப் பற்றிய சுவையணி - இது சுவையணிவகை எட்டனுள் ஒன்று. அருவருப்பூட்டும் இழிப்புச்சுவை புலப்படக் கூறுதல் இதன் இலக்கணம். எ-டு : ‘உடைதலையும் மூளையும் ஊன்தடியும் என்பும் குடரும் கொழுங்குருதி ஈர்ப்ப - மிடைபேய் பெருநடஞ்செய் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி கருநடரைக் கொன்ற களம்.’ சோழன் கருநட மன்னரை அட்ட போர்க்களத்தே பெருகிய குருதி வெள்ளம், உடைந்த தலைகளையும் மூளைகளையும் புலால் துண்டங்களையும் என்புகளையும் குடர்களையும் இழுத்து வந்தது. அங்கே கூடிய பேய்கள் அவற்றைக் கண்டு பெரிதும் மகிழ்ந்து கூத்தாடின என்று பொருள்படும் இப் பாடற்கண், உடைதலை புலால் குடர் போன்ற அருவருப் பூட்டும் பொருள்களால் இழிப்புச்சுவை புலப்படுதல் இழிப்புச் சுவையணியாம். (தண்டி. 70-3) இழிவு உயர்வு புகழ்ச்சி உவமை இழிந்த உவமைகளுக்குள் உயர்வான ஒன்றனை உவமான மாக்கி அமைத்தல் இவ்வகை உவமை அணியாம். எ-டு : ‘உருவுகண் டெள்ளாமை வேண்டும்; உருள்பெருந்தேர்க்(கு) அச்சாணி அன்னார் உடைத்து’ (குறள். 667) வடிவில் சிறியவராய்ச் செயலுக்கு இன்றியமையாது வேண்டப் படுபவருக்குத் தேர்உருள் கழலாமல், உருள் கோக்கப்பட்ட அச்சின் கடைக்கண் செருகப்படும் ஆணியை உவமை கூறியது, உருவில் சிறியதாய்ச் செயலில் இன்றியமையாததாய் உள்ளதனை உவமானமாகக் கூறும் இழிவு உயர்வு புகழ்ச்சி உவமையாயிற்று. (அச்சு - உருள் கோக்குமது; ஆணி - உருள் கழலாமல் அச்சின் கடைக்கண் செருகுமது.) (வீ. சோ. 159) இழை என்ற குணவணி - வீரசோழியம் (கா. 151 உரை) கூறும் இக்குணவணி தண்டி யலங்காரத்தே ஒழுகிசை எனவும், மாறன் அலங்காரத்தே இன்னிசை எனவும் கூறப்பெறுகிறது. ‘சுகுமாரதை’ என்பதும் அது. ‘ஒழுகிசை’ காண்க. இளிவரல் உவமம் - உவமம் சுவைபற்றி வருதல் சிறந்தது. தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையரொடு இன்ப விளையாட்டின் பொழுது கழிக்க, அவனைக் காணச் சென்ற தலைவியது நெஞ்சு பட்ட இளிவந்த நிலைக்குப் பெரிய செல்வர் இல்லத்தை நோக்கித் தம் வறுமையைப் போக்கிக் கொள்ளச் சென்ற வறியவர்கள் அச்செல்வர் மனையுள் புகுதற்கு மனம் கூசியும், புகாமல் மீண்டு வருதற்கு வறுமை நிலையான் தடுப்புண்டும், உள்ளே செல்லலும் இயலாது வெளியே விடுத்து வருதலும் இயலாது நிற்கும் இளிவந்த நிலையை உவமம் கூறும் ‘பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு’ (முத். 88) என்ற அடிகளில் இளிவரல் உவமம் காணப்படுகிறது. (தொ. பொ. 294 பேரா.) இறந்த காலத்தடைமொழி - இஃது ‘இறந்தவினை விலக்கு’ எனப்படும்; முன்னவிலக்கு அணிவகைகளுள் ஒன்று. ‘இறந்தவினை விலக்கு’க் காண்க. இறந்தது விலக்கல் (2) - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (58) வருவதோர் அணி. தான் உணர்ந்து கூறிய கருத்திற்குத் தானே தடை கூறிப் பின் அத்தடையை விலக்குவது. எ-டு : ‘ஈசன் பசுவாய் இயமனிளங் கன்றாகி வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் அம்மானை : வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் ஆமாகில் காசளவு பாலும் கறக்குமோ, அம்மானை? கன்றை உதைத்தபசு கறக்குமோ அம்மானை!’ (திருவாரூர்க் கலம்பகம்) இப்பாடலில், சிவபெருமான் பசுவாகவும் இயமன் கன்றாகவும் வந்த செய்தி கூறி, அப்பசு கறக்குமோ என்று வினா எழுப்பி, “மார்க்கண்டேயனுக்காகக் கன்றாகிய இயமனை உதைத்த சிவபெருமானாகிய பசு கறக்காது” என்று விளக்கம் தந்த வாறு. இறந்த வினை விலக்கு முன்னவிலக்கு என்னும் அணிவகைகளுள் ஒன்று. இறந்த காலத்துச் செயலை (ஆராயாது) விலக்கி உரைத்தல். எ-டு : ‘பாலன் தனதுருவாய் ஏழுலகுண்(டு) ஆலிலையின் மேலன்று நீதுயின்றாய் மெய்என்பர் - ஆல்அன்று வேலைசூழ் நீரதோ, விண்ணதோ, மண்ணதோ, சோலைசூழ் குன்றெடுத்தாய் சொல்.’ இது திருமாலின் எல்லாம் வல்ல இறைமையினை வியக்கும் பாடல். “கண்ணா! நீ ஊழிக்காலத்தே ஏழுலகங்களையும் உன் வயிற்றுட் கொண்டு குழந்தை வடிவுடன் ஆலிலைமேல் துயின்றாய் என்பது உண்மையே எனச் சான்றோர் கூறுவர். அங்ஙனம் அன்று நீ துயின்ற ஆலிலை கடலில் இருந்ததா? விண்ணில் இருந்ததா? மண்ணுலகில் இருந்தா? நீயே சொல்” என்னும் பொருளமைந்த இப்பாடற்கண், இறைவனது எல்லாம் வல்ல தன்மை நம் போன்றவர் அறிவுக்கு அகப்படா தது ஆதலின் என்றோ நடந்த இந்தச் செயல் நம்மால் ஆராயத் தக்கதன்று என்று விலக்கியவாறு இறந்தவினை விலக்காம். (தண்டி. 43 - 1) இறப்ப இழிந்த உவமம் - ஓர் உபமேயத்திற்கு மிக இழிந்த பொருளினை உபமானமாகக் கூறுவது இறப்ப இழிந்த உவமையாய் வழுவாகும். எ-டு : ‘மன்னவர்க்கு நாய்போல் வனப்புடையர் வாள்வயவர் ..................... ........................ ..................................... .................................. ..................... பைந்தடங்கள் போலும் மிடைமா(சு) ஒன் றில்லா விசும்பு’ (தண்டி. 34 - 3) இதற்கண், வாட்டொழிலில் வல்ல வீரர்க்கு நன்றியறிதல் என்னும் பண்பு ஒன்றனையே கருதி நாயை உபமானமாகக் கூறுவதும், மாசற்றிருத்தல் என்னும் பண்பு ஒன்றனையே பற்றிச் சிறந்த வானத்திற்குக் குளங்களை உவமமாகக் கூறுவதும் இறப்ப இழிந்த உவமமாய் வழுவாகும். (இ. வி. 641 உரை) இறப்ப உயர்ந்த உவமம் - மிக எளியதோர் உபமேயத்திற்கு மிக உயர்ந்த உபமானத்தைக் கூறுவது இறப்ப உயர்ந்த உவமமாய் வழுவாம். எ-டு : மின்மினியும் வெஞ்சுடரோன் போல்விளங்கும்; - அன்னப் பெடைபோலும் சந்திரன்................. மின்மினிப் பூச்சிகள் சூரியனைப் போல ஒளி வீசும்; சந்திரன் போல் பெடையன்னம் காட்சி வழங்கும் என்ற பொருளமைந்த இவ்வடிகளில், மின்மினிக்குச் சூரியனையும் பெடை அன்னத் திற்குச் சந்திரனையும் ஒப்பாகக் கூறுதல், மிக மேம்பட்ட பொருளைக் கீழ்ப்பட்ட பொருட்கு உவமமாகக் கூறுதல் என்னும் வழுவாம். (தண்டி. 34-3 இ. வி. 641 உரை) இறுதி விளக்கணி - ‘கடைநிலைத் தீவக’ அணி காண்க. இறைஅணி - ஒருவர் வினாவியதற்கு விடையளிக்கும்வழி வனப்புத் தோன்றச் சொல்லும் அணி இது. இஃது இருவகைப்படும். அவையாவன 1. வியப்பு இறை, 2. மறைப்பு இறை என்பன. இஃது உத்தராலங்காரம் என வடநூலுட் கூறப்படும். (ச. 109, குவ. 83) 1. வியப்பு இறை அணி ஒரு வினாவிற்கு அவ்வினாவிய தொடரையே விடையாகவும், பல வினாக்களுக்கு ஒரு தொடரையே விடையாகவும் சொல்லும் சிலேடை அமைப்புப் பொருந்திய இறையணி வகை இது. அ) ஒரு வினாவிற்கு அதனையே விடையாகக் கூறல். ‘என் பணி பூண்டான் இறைவன்? - வினா (இறைவன் என்ன அணியைப் பூண்டுள்ளான் என்று வினவுவது) ‘என்பணி பூண்டான் இறைவன்’ என்பதே விடை. ஸஇறைவன் எலும்பு அணியை (என்பு + அணி) பூண்டுள்ளான் என்பது பொருள்.] ஆ) பல வினாக்களுக்கு ஒரு தொடராகவே விடையளித்தல் : மாதவன் கைக் கொள்வது எது? மந்திரம் ஈசற்கு எது? என்பன வினா. ‘காதலுறும் அஞ்சக் கரம்’ என்பது விடை. மாதவன் கைக் கொள்வது, காதலுறும் அம் சக்கரம்; மந்திரம், ஈசற்குக் காதலுறும் அஞ்சு அக்கரம் - எனச் சிலேடை வகையால் இரு வினாவிற்கும் விடை அமைந்தவாறு. (சக்கராயுதம், பஞ்சாட் சரம் என்பன முறையே பொருள்.) 2. மறைப்பு இறை அணி ஒரு வினாவிற்கு விடை சொல்லுங்கால், தன் மனத்தில் மற்றொரு கருத்தை மறைத்துவைத்துக்கொண்டு வெளிப் படையாக ஒரு கருத்தைக் கூறுவது. இவ்வுலகில் உடல் உறுப்புக்கள், இருப்பிடம், நுகர் பொருள்கள் யாவும் மாயா மலத்தினால் உண்டானவை. மாயையின் தன்மை பற்றி அல்லமன் என்பான் கூறுமிடத்து, ‘மாயையை அகன்றால் நடக்கக் கால்எழுமோ வாயிடை மாற்றமொன் றுண்டோ? பேயொடு விடயம் உணமனம் வருமோ? பொருந்துறு பகலிர வுளவோ?’ (பிரபு. 5 : 89) என்றாற்போலக் கூறும் கூற்றில், உலக மாயை நீங்கினால் உடல் உறுப்புக்கள் முதலியன வழக்கமாகிய செயல்களில் ஈடுபடமாட்டா என்ற கருத்து வெளிப்படையாகக் கூறப்படு கிறது. “மாயை என்ற பெண் அல்லமனிடம் காதல் கொண்ட வள்; அவளைப் பிரிந்தால் வாய் பேசாது; கால் நடவாது; மனம் உணராது” என்னும் கருத்து மறைவாகப் புலப்படுத் தப்பட்டமை இவ்வணியாம். இறைச்சி அணி - இறைச்சிப் பொருள் அலங்காரம்; முல்லை குறிஞ்சி, மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்து நிலங்களிலும் அவ்வந் நிலங்களின் கருப்பொருள்களையே தனக்கு நிலைக்களனாகக் கொண்டு அவற்றின் புறத்துக் கொள்ளப்படும் அணி இறைச்சியணியாம். எ-டு : ‘இலங்கும் அருவித்தே! இலங்கும் அருவித்தே! வானின் இலங்கும் அருவித்தே! - தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை’. (கலி. 41 - 18-21) தலைவன் தான் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றாமல் பொய் சொல்லிவிட்டான்; அத்தகைய தவறு செய்தவன் மலையில் பருவமழை பொய்த்தல் வேண்டும்; ஆயின் அவன் மலையில் பருவ மழை தவறாது பொழிதலான் அருவி ஓடி வருகிறது!” என்பது பாடற் செய்தி. இங்ஙனம் வளம் குறையாது. அவன் மலை காணப்படுவதால் அவன் உண்மை யில் வாக்குறுதி தவறாத சான்றவனே என்ற கருத்து இச் செய்தியின் புறத்தே இறைச்சியணியாகத் தோன்றியது. (மா. அ. 176) இறைச்சிப்பொருள் அலங்காரம் - மாறன் அலங்காரத்தில் காணப்படும் அணிவகை (சூ. 176) இறைச்சி அணி காண்க. இன்சொல் உவமை - உவமை அணிவகைகளில் இதுவும் ஒன்று. உபமானம் மேம்பட்டதாயினும் உபமேயத்தைவிட மேம்பட்டதன்று என நாட்டுதல் இதன் இலக்கணம். எ-டு : ‘மான்விழி தாங்கு மடக்கொடியே! நின்வதனம் மான்முழுதும் தாங்கி வருமதியம் - ஆனாலும் முற்றிழை நல்லாய்! முகம்ஒப்ப தன்றியே மற்றுயர்ச்சி யுண்டோ மதிக்கு?’ “பெண்ணே! உன் முகத்தில் மான்விழி மாத்திரமே உண்டு; மதியமோ முழுமானையே பெற்றுள்ளது. ஆயினும் அம்மதி நின் முகத்தை ஒக்கும் என்று கூறுவதே ஏற்குமேயன்றி, நின் முகத்தினும் அஃது உயர்ச்சியுடையது என்று கூறல் இயலாதே.“ இது தலைவனது நயப்புரை. இதன்கண், “மான்விழி கொண்டது நின்முகம்; முழுமானையே பெற்றது சந்திரன். ஆயினும் அது நின் முகத்தினும் மேம்பட்டதன்று” என்று சுட்டிக் கூறியமை இன்சொல் உவமையாம். (தண்டி. 32-13) இன்ப அணி - எடுத்த செயல் மனத்திற்கு மகிழ்ச்சி தரும் வகையால் நிறைவேறியதைச் சுவைபடக் கூறும் அணி. இது 1. முயற்சிக்கு மேல் பயன்கிட்டும் இன்ப அணி, 2. முயற்சியின்றிப் பயன்கிட்டும் இன்ப அணி, 3. முயலும் போதே பயன்கிட்டும் இன்ப அணி என மூவகையாம். இது பிரஹர்ஷணாலங்காரம் என வடநூலுட் கூறப்படும். 1. முயற்சிக்கு மேல் பயன்கிட்டும் இன்ப அணி ஒருவன் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஏற்பப் பயன் கிட்டுவது உலகியல். அங்ஙனமின்றி, எடுத்த முயற்சிக்குமேல் மிகுதியாகப் பயன் கிடைப்பதாகக் கூறும் இன்பஅணி வகை இது. எ-டு : ‘மழுங்குவிளக் கைத்தூண்ட மங்கைஎழும் போது செழுங்கதிர்தோன் றிற்றிருள்கால் சீத்து!’ படுத்திருந்த அறையில் ஒளி குறைவாக இருந்தமையின், ஒளிமிக வேண்டி, மங்கையொருத்தி மழுங்கியிருந்த விளக்கைத் தூண்ட முயன்ற நேரத்தே, சூரியன் தோன்றி அறைமுழுதும் தன் கதிர்களால் ஒளிவீசியது என்னும் கருத்துடைய இப் பாடற்கண், விளக்கொளி பெற முயன்ற போதே கதிரவன் ஒளியே கிட்டியது என முயற்சிக்குமேல் பயன்கிட்டும் இன்ப அணி அமைந்துள்ளது. 2) முயற்சியின்றிப் பயன்கிட்டும் இன்ப அணி ஒருவன் நினைத்த காரியம் முயற்சி இல்லாமலேயே நிறைவேறுவதைக் குறிக்கும் இன்பஅணி வகை. எ-டு : ‘தன்நா யகன்விழைந்த தையலையே தூதாக அன்னான்கண் உய்த்தாள் அணங்கு’ தலைவன் நுகரக் கருதிய பெண் ஒருத்தியையே தலைவி தலை வனிடம் தூதாக அனுப்பினாள் என்னும் இப்பாடற்கண், தலைவன் தான் நுகர்தற்கு நினைத்த பெண்ஒருத்தியை எவ்வாறு எய்தலாம் என்று சூழ்ந்துகொண்டிருந்த நேரத்தே, அவனது முயற்சி எதுவும் இன்றியே தலைவியே அவனிடம் அப்பெண்ணைத் தூதாக விடுத்த செயல் முயற்சியின்றிப் பயன்கிட்டும் இன்ப அணியாம். 3) முயலும் போதே பயன்கிட்டும் இன்பஅணி - முயற்சி செய்து முடித்த பின்னரே பயனை எதிர்பார்ப்பது உலக இயற்கை; முயற்சி செய்யும் போதே அப்பயன் கிட்டுதலாகிய செய்தியைக் கூறும் இன்ப அணிவகை. எ-டு : ‘தங்கு நிதிஅஞ் சனமூ லிகைஅகழ்ந்தோன் அங்குநிதி யேகண்டான் அங்கு.’ புதையல் இருக்குமிடத்தைக் காட்டும் அஞ்சனம் அமைக்கப் பச்சிலையை அகழ்ந்தபோது புதையலையே ஒருவன் அங்குக் கண்டான் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், புதையல் கண்டெடுப்பதற்குரிய முதன்முயற்சியாகிய அஞ்சனம் அமைக்கும் பச்சிலை நாட முயன்றபோதே புதையலாகிய பயன் கிட்டியமை இவ்வணியாம். (மு. வீ.அ. 51, ச. 93, குவ. 67.) இன்பம் என்ற உயிர் - இது சிலிட்டம் முதலாக வீரசோழியம் குறிப்பிடும் உயிர் அலங்காரம் பத்தனுள் ஒன்று. இவற்றை ஏனைய அணி நூல்கள் ‘பொது அணி’ என்னும். இவ்வின்பம் சொல் லின்பம் பொருளின்பம் என இருவகைப்படும். (வீ. சோ. 151 உரை) சொல்லின்பம் வைதருப்பர், கவுடர், பாஞ்சாலர் என்ற முந் நெறியார்க்கும் வேறுபடும். பொருளின்பம் அம்முத்திறத் தார்க்கும் பொதுவாம். இதனை வடநூலார் மாதுர்யம் என்பர். இவற்றைத் தனித் தனித் தலைப்புட் காண்க. சொல்லின்பத்துள் ஈரடை முதலொடும் சினையொடும் புணர்ந்தன வைதருப்பம்; இரண்டிறந்த மூஅடைகள் புணர்ந்தன பாஞ்சாலம். மூன்றிறந்த பல அடை புணர்ந்தன கவுடம் என்பர். மேலும், பொழிப்பு மோனை முதலிய மோனை விகற்பம் பெற்றன வைதருப்பம், முற்றுமோனை அடிதோறும் பெற்றன பாஞ்சாலம், பல அடிகளும் வருக்க மோனையில் தொடங்கிச் சீர்கள் முற்று மோனையாய் அமைதல் கவுடம் என்ப. (மா. அ. பாடல் 7 உரை 8) இன்பமாதல், துன்பமாதல் தோற்றும் சமுச்சயம் - இது சமுச்சய அணியின் இரண்டாம் வகையாகும் ‘இரண் டாம் சமுச்சயம்’ காண்க. (மா. அ. 237) இன்மை நவிற்சி அணி - ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு அதன்கண் யாதேனும் ஒருசெய்தி இல்லாத காரணத்தால் அஃது உயர்வடைந்தது எனவோ, தாழ்வடைந்தது எனவோ கூறும் அணி. வடநூலார் இதனை ‘விநோத்தியலங்காரம்’ என்பர். எ-டு : ‘மறங்கொள் கொடியோரி லாமையினெம் மன்னா சிறந்துளதுன் பேரவைசீர் சேர்ந்து’ என்னும் பாடற்கண், தீச்செயல் புரியும் கொடியோர் அரச னுடைய அவையில் இல்லாமையால் அரசவை மேம்பட் டுள்ளதென, ஒன்றன் இன்மைபற்றி உயர்வு கூறப்பட்டது. எ-டு : ‘புகழ்க்குரியன் கற்றோன் எனினும் புவியில் இகழ்க்குரியன் சாந்தமில னேல்’ என்னும் பாடற்கண், கற்றவன் புகழ்பெறுதற்குத் தக்கோனே ஆயினும், அவன்பால் சாந்தம் இல்லையேல் அவன் இகழ்ச் சிக்கு இருப்பிடமாவான் என, சாந்தத்தின் இன்மை பற்றிக் கற்றோனுக்குத் தாழ்வு கூறப்பட்டது. (மா. அ. 236, ச.47, குவ. 22.) இன்மையது அபாவம் என்ற ஏதுஅணி - அபாவஏதுஅணி வகைகளுள் ஒன்று. இன்மையது அபா வத்தை ஏதுவாக்கி ஒன்றனைக் கூறுதல் இதன் இலக்கணம். இன்மையது அபாவமாவது - உண்மை (-உள்ளதாயிருக்கும் தன்மை.) எ-டு : ‘காரார் கொடிமுல்லை நின்குழல்மேல் கைபுனைய வாராமை இல்லை வயவேந்தர் - போர்கடந்த வாளையேய் கண்ணி! நுதல்மேல் வரும்பசலை நாளையே தீரும் நமக்கு.’ இது பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி ஆற்றுவித்தது. “தலைவி! நின் குழல்மேல் தன்கையால் முல்லைப்பூச் சூட்டும் வகையில் தலைவன் வாராமை என்பதில்லை (-வருவான்) ஆதலின் நின் நுதல்மேல் தோன் றிய பசலை நாளையே நீங்கிவிடும் என்பது உறுதி” என்று பொருள்படும் இதன்கண், ‘வாராமை இல்லை’ என்னும் இரண்டு எதிர்மறைச் சொற்கள் ‘வருவார்’ எனப் பொருள் பயக்கின்றமை இன்மையது அபாவம். அது காரணமாகக் கூறப்பட்டவாறு. (தண்டி. 62-2) இன்மையின் இன்மை - இஃது இன்மையது அபாவம் என்ற ஏது அணிவகை. அது காண்க. (மா. அ. 194) இன்னா இசை - வெறுத்திசை; செவிக்கு இன்னாத வெறுக்கத் தக்க இசை. அஃதாவது மென்னடை ஒழுக்கத்து வல்லொற்று அடுத்து மிக்கது போலவும், அந்நடை ஒழுக்கத்து உயிரெழுத்தடுத்துப் பொய்ந் நிலப்பட்டு அறுத்திசைப்பது போலவும் வரும். எ-டு : ‘ஆக்கம் புகழ்பெற்ற தாவி யிவள்பெற்றாள் பூக்கட் குழற்கார் பொறைபெற்ற - மாக்கடல்சூழ் மண்பெற்ற ஒற்றைக் குடையாய் வரப்பெற்றெம் கண்பெற்ற இன்று களி.’ இதன்கண், ‘பூக்கட்குழற்கார்’ என்பது இன்னா இசை. இவ்வின்னா இசையின்றி வரத் தொடுப்பது ‘ஒழுகிசை’ என் னும் செய்யுட் கு™ம். இன்னா இசையாகிய இக்குற்றத்தை வைதருப்ப கௌட நெறியார் இருவரும் வேண்டார்; பாஞ்சாலநெறியாரும் வேண்டார். (தண்டி. 20 உரை) ‘இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்’ - இனிதுறுதலாகிய பொருளும் துனியுறுதலாகிய பொருளும் உவமப்போலியான் புலனாகும் உள்ளுறை உவமத்தின்பால் தோன்றும். இனிதுறு கிளவியாவது இன்புறுத்தற்குரிய வாகிய வரைதலும் கூடுதலுதலுமாம். துனியுறுகிளவியாவது துன்புறுதற்குரியவாகிய பிரிவும் ஊடுதற்குக் காரணமாகிய பரத்தைமையுமாம். அகத்திணை ஒழுகலாறு கூடலும் ஊடலுமாகிய இருவகையே பற்றி நிகழ்தலின், இருவகைக் கிளவியாக வகுத்தோதினார். (தொ. உவம. 30 ச.பால.) இன்னிசை என்னும் பொதுவணி - ஒழுகிசை (தண்டி. 20) எனவும் கூறப்பெறும். அது காண்க. (மா. அ. 83) இனஎழுத்துப் பாட்டு - ஓர் இனத்து எழுத்தாலேயே பாடப்படும் பாடல். ‘கௌடச் செறிவு’ நோக்குக. அதன் எடுத்துக்காட்டான ‘விரவலராய் வாழ்வாரை’ என்ற பாடல் முழுதும் இடையின எழுத்தால் அமைந்தமை காண்க. (தண்டி. 97 உரை) ஈ ஈரைங்குண அணிகள் - செய்யுள்நெறி மூன்றனுள் முன்னதான வைதருப்ப நெறிக்கு உயிராகக் கூறப்பட்டன பத்துக் குணங்களே. அவையாவன. 1. செறிவு - இறுகுதல், நெருங்குதல்; சொற்செறிவு உடைத் தாதல். 2. தெளிவு - வெளிப்படையாயிருத்தல்; பொருள் எளிதின் விளங்குதல். 3. சமநிலை - நான்கடியும் எழுத்து ஒத்து வருதல்; வல்லினம் முதலிய மூவகை இனவெழுத்தும் சமமாக நிற்கத் தொடுத்தல். 4. இன்பம் - இனிமையுடைமை; முற்றுமோனை முதலிய தொடை அமைத்துப் பாடுதல் சொல்லின்பம்; பொருள் நயம் தோன்றப் பாடுதல் பொருளின்பம். 5. ஒழுகிசை - மெல்லியதாய் இனிதாய் நடக்கும் சொல்நடை; வல்லெழுத்தின்றிப் பாடுதல். வடநூலார் ‘சுகுமாரதை’ என்பர். 6. உதாரம் - சொற்பொருள் மாத்திரத்தாலன்றிக் குறிப்பினா லும் பொருளைப் புலப்படுவித்தல்; கொடையைப் புகழ்தல் போல்வன. 7. உய்த்தலில் பொருண்மை (புலன்) - சொற்களை வருவித்து இணைத்துப் பொருள்செய்யும் இடர்ப்பாடின்றியிருத்தல்; பொருள் வெளிப்படத் தோன்றுதல். 8. காந்தம் - உலக இயற்கையுடன் மாறின்றி ஒத்தல்; பொருளின் சிறப்பால், மனமகிழ்வூட்டும் தன்மையால், அதனை மிகப் புகழ்ந்துரைத்தல். 9. வலி - வன்மையுடைமை; தொகைகள் மிகுதியாக வருதல் (ஆலேசம், ஓசம்). 10. சமாதி - உபமானப் பெயர்வினைகளை உபமேயத்துக்குப் பொருந்தப் புணர்த்தல்; ஒரு பொருளின் குணத்தைப் பிறிதொரு பொருள்மேல் ஏற்றல் என்பனவாம். (தண்டி.16-25) உ உகளக அந்திய குளகம் - இரண்டு பாடல்கள் வினை, வினைக்குறிப்பு, பெயர், வினைப் பெயர் இவற்றுள் ஒன்றனை இரண்டாம் பாடல் இறுதிக்கண் கொண்டு பொருள் முற்றின் உகளக அந்திய குளகம் எனப்படும். எ-டு : ‘காலிருக்கக் கையிருக்கக் கண்ணிருக்கச் சென்னியதன் மேலிருக்க நாநடுவே வீற்றிருக்க - நாலிருக்கும் பொய்யா திருக்கப் புகழ்மா றனைவலம்செய்(து) உய்யாதும் அஞ்சலியா தும்,’ (மா.அ. பாடல் 11) ‘பூவிற் சிறந்தஅவன் பொன்னடியைக் கண்டுமலர் தூவி வணங்கித் துதியாத - பாவிகளோ(டு) ஒன்றா கியஉளமே! போனவைபோட் டூதியமாம் இன்றா கிலுமுற்(று) இறைஞ்சு’ (மா. அ. பாடல் 12) இவை இருபாடல்களும் ‘இறைஞ்சு’ என்ற இறுதிச்சீரைக் கொண்டு முற்றுதலின் உகளகாந்திய குளகமாம். (மா. அ. 68 உரை) உகளக ஆதி குளகம் - இரண்டு பாடல்கள் வினை, வினைக்குறிப்பு, பெயர், வினைப் பெயர் இவற்றுள் ஒன்றனைக் கொண்டு முற்றுவது உகளக குளகமாம். முடிக்கும் சொல் முதற்செய்யுள் தொடக்கத்தின் அமையின் அஃது உகளக ஆதி குளகம் எனப்படும். எ-டு : ‘நினைமருவொன் றில்லாத ஞானா திகனைப் புனைவகுளத் தாமப் புயனை - வினையினையே வென்றானைக் காரிதரும் வித்தகனைப் பாவலன்பின் சென்றானே நாதனெனத் தேர்ந்து’ (மா. அ. பாடல் 7) ‘வேத மதனை விளங்குதமிழ்ப் பாப்படுத்திப் போதம் தழைந்துபுகழ் புண்ணியனை - நாதமுனி போற்றும் புனிதனைஅந் தாமம் புகமனனே! தேற்றம் பயின்றே தினம்.’ (பாடல் 8) இவ்விரண்டு பாடலும் பொருளால் தொடர்புகொண்டு ‘நினை’ என்ற முதற்சீரின் முதலசையான் பொருள் முற்றுப் பெறுதலின், இப்பாடல்கள் உகளக ஆதிகுளகம் ஆயின. (மா. அ. 68 உரை) உகளக மத்திய குளகம் - இரண்டு பாடல்கள் வினை, வினைக்குறிப்பு, பெயர், வினைப் பெயர் இவற்றுள் ஒன்றனைத் தம் இடையே கொண்டு பொருள் முற்றுப்பெறுமாயின் அவை உகளக மத்திய குளகம் ஆகும். எ-டு : ‘குன்றம் அதனைக் குடைகொண்ட நீலமணிக் குன்றம் அதனைக் குணக்கடலைக் - குன்றமதே மத்தாகக் கொண்டமிர்தம் வானோர்க் களித்ததரு மத்தானைத் தேவாய் மதித்து’ (மா.அ. பாடல் 9) ‘வாழ்த்து, பரசமய வாதியர்தம் வாய்மதத்தைச் சாய்த்த தமிழ்மறைப்பாத் தந்தானைக் - கீர்த்திபுனை பாவேசர் போற்றும் பராங்குசனை முத்திபெற நாவே மனத்தான் நயந்து.’ (பாடல் 10) இவ்விரு பாடற் செய்திகளும் இரண்டாம் பாடலின் தொடக் கத்தேயுள்ள ‘வாழ்த்து’ என்ற சொல்லைக்கொண்டு முடிவ தால் இப்பாடல்கள் உகளக மத்திய குளகமாம். (மா. அ. 68 உரை) உட்கோள் - உள்ளத்தில் கொள்ளப்பட்ட செய்தி. ஓர் அலங்காரம். (பிங். 1370) (டு) உள்ளத்தேயுள்ள செய்தியாய், காட்டலாகாப் பொருளாய், முகவேறுபாடு முதலியன கொண்டு குறிப்பால் அறியக் கிடப்பது. உடம்பின் அறியும் ஒப்பு - உடம்பு என்பது தோல்; தோலால் உணரப்படும் ஊற் றுணர்ச்சியாகிய பரிச உணர்ச்சி. தண்மை, வெம்மை, இடைப்பட்ட நிலைமை, வழுவழுப்பு, சுரசுரப்பு, மென்மை, வன்மை, நொய்மை, கனம் என்பன ஒன்பதும் ஊற்றினால் அறியப்படும் ஒப்பாகும். (வீ. சோ. 96 உரை மேற்.) உடன்நவிற்சி அணி - இஃது உடன்நிகழ்ச்சி எனவும், புணர்நிலை அணி எனவும் கூறப்படும். ‘உடன்நிகழ்ச்சி அணி’ காண்க. உடன்நிகழ்ச்சி அணி - இஃது உடன்நவிற்சியணி எனவும், புணர்நிலையணி எனவும் படும். ஒருகாலத்தேயே நிகழும் செய்திகளைக் குறிப்பிட்டு அவை ஒரு வினையையே கொண்டு முடியுமாறு சுவைபடச் சொல்லும் அணி. இது ஸஹோத்தியலங்காரம் என வட நூலுள் கூறப்படும். எ-டு : ‘இகந்த பகைவர் இனத்தொடுவேல் வேந்தே! திகந்தம் அடைந்ததுன் சீர்.’ “அரசே! உன்னிடம் தோற்றோடிய மன்னவர் இனத்தோடு உன் புகழ் திக்குகளின் எல்லையைக் கிட்டிற்று” என்ற பொருளமைந்த இப்பாடலில், அரசனிடம் தோற்ற பகைவர் உயிர் பிழைக்கத் திசை எல்லை வரை ஓடினர் எனவும், அரச னது புகழ் திசை எல்லை வரை பரவிற்று எனவும் இரு செய்திகள் கூறப்பட்டன. பகைவர் இனத்திற்கும் அரசன் புகழிற்கும் திக்கெல்லையை அடைதலாகிய ஒருவினையே முடிக்கும் சொல்லாக அமைக்கப் பட்டமை இவ்வணியாகும். இதன் விரிவுகள் ‘புணர் நிலை அணி’யுட் காண்க. (ச. 46 ; குவ. 21) உடன்படல் விலக்கு இது முன்ன விலக்கு அணிவகைகளுள் ஒன்று. உடன்படலும் பின் விலக்குதலும் அமையக் கூறுதல் இதன் இலக்கணம். எ-டு : ‘அப்போ(து) அடுப்ப(து) அறியேன்; அருள்செய்த இப்போ(து) இவளும் இசைகின்றாள்; - தப்பில் பொருளோ புகழோ தரப்போதீர்; மாலை இருளோ நிலவோ எழும்.’ இது தோழி தலைவன் பிரிவதை உடன்பட்டும் விலக்கியும் கூறியது. “தலைவ! நீ பொருளும் புகழும் தேடப் பிரிவதற்குத் தலைவி இப்போது உடன்படுகிறாள்; ஆயின் நீ பிரிந்து செல்லும் இன்று மாலையிலேயே, இருளும் நிலவும் தோன்றும்போது, இவள் என்ன ஆவாளோ? அறியேன்; அப்போது இவளை ஆற்றுவிக்கும் ஆற்றல் எனக்கு இல்லை” என்று கூறும் தோழி, உடன்பட்டு விலக்கியது உடன்படல் விலக்காகும். (தண்டி. 45 - 10) உடன்படு விலக்கு - இஃது ‘உடன்படல் விலக்கு’ என்பதன் மறுபெயர்களுள் ஒன்று. அது காண்க. உடன்பாட்டுத் தடைமொழி - ‘உடன்படல் விலக்கு’ வீரசோழியத்துள் உடன்பாட்டுத் தடைமொழி என வழங்கப்படுகிறது. (வீ. சோ. 164) ‘உடன் படல் விலக்கு’க் காண்க. உடனிலைக் கூட்டம் - ஒப்புமைக்கூட்டஅணி; அது காண்க. (வீ. சோ. 173) உடனிலைச்சிலேடை - ஒருபாட்டு நேரே குறிப்பிடும் பொருளையன்றி வேறுமொரு பொருள் கொண்டு நிற்கும் அணி. ‘திருவளர் தாமரை’ என்ற திருக்கோவையாரின் முதற்பாடல் ‘காட்சி’ என்ற துறை பற்றித் தலைவனால் காணப்படும் தலைவியை வருணிக்கும் நிலையிலேயே, தாமரை, காவி, குமிழ், கோங்கு, காந்தள் என்னும் ஐந்திணைப் பூக்களையும் குறிப்பிடு முகத்தான் ஐந்திணை வரலாறும் கூறப்படும் அகப்பொருள் நூல் என்பதனைக் குறிப்பாற் புலப்படுத்தல் உடனிலைச் சிலேடையணியாம். தாமரை - மருதப்பூ; காவி - நெய்தல் பூ; குமிழ் - முல்லை நிலப் பூ ; கோங்கு - பாலைநிலப்பூ; காந்தள் - குறிஞ்சி நிலப்பூ என அறிக. (கோவை. 1 பேரா உரை) உடனிலைச் சொல்லணி - இஃது ஒப்புமைக்குழு அணி எனவும், ஒப்புமைக் கூட்ட அணி எனவும் கூறப்படும். வீ.சோ. 173 உரை. ‘ஒப்புமைக்கூட்ட அணி’ காண்க. உண்மை உவமை - இஃது உவமையணி வகைகளில் ஒன்று. உபமானத்தை உபமேயத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துப் பின், அஃது ஒப்புமை யுடையதாகாமையால், அதனை நீக்கி உபமேயத்தையே குறிப்பிடுவது இதன் இலக்கணம். எ-டு : ‘தாமரை அன்று, முகமே;ஈ(து) ஈங்கிவையும் காமரு வண்டல்ல, கருநெடுங்கண்; - தேமருவு வல்லியெனின் அல்லள், இவள்என் மனம்கவரும் அல்லி மலர்க்கோதை யாள்.’ இதன்கண், உபமானங்களாகிய தாமரை, வண்டு, கொடி ஆகியவற்றை நீக்கி, உபமேயங்களாகிய முகம், கண், பெண் என்பவைகளையே உரைத்தது உண்மை உவமையாம். (தண்டி. 32-5) உத்தராலங்காரம் - தமிழ்நூலார் இதனை ‘இறை அணி’ என்ப. அது காண்க. உத்ப்ரேiக்ஷ - இது தற்குறிப்பேற்ற அணியின் வடமொழிப் பெயர்; ‘உற்பிரேட்சை’ எனவும் வழங்கும். (ட) உத்ப்ரேnக்ஷhபமா - இதனைத் தற்குறிப்பேற்ற உவமை என்ப தமிழணிநூலார் அது காண்க. உதாத்த அணி - உதாத்தம் - மிக உயர்ந்தது. வியக்கத்தக்க செல்வத்தையோ, மிக மேம்பட்ட உள்ளப்பான்மையையோ, கொடை காந்தி கற்பு ஞானம் முதலியவற்றையோ மேலும் உயர்த்திக் கூறுவது இவ்வணி. அ) செல்வ மிகுதி கூறும் உதாத்தம் : எ-டு : ‘கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும் என்றும் வறியோர் இனம்கவர்ந்தும் - ஒன்றும் அறிவரிதாய் நிற்கும் அளவினதால் அம்ம செறிகதிர்வேல் சென்னி திரு.’ சோழ மன்னனது செல்வம், அவன் பகைமன்னர்தம் செல்வங்கள் பல்வற்றையும் கவர்ந்து வருவதால் பெருகியும், இரவலர்க்கு வாரி வழங்குவதால் குறைந்தும் வரவு செலவுகள் இத்தகைய என்று அறிய இயலாததாய் இருக்கிறது என்ற கருத்தமைந்த இப்பாடற்கண் செல்வமிகுதி கூறப்பட்டவாறு. ஆ) உள்ள மிகுதி கூறும் உதாத்தம் : எ-டு : ‘மண் அகன்று தன்கிளையின் நீங்கி வனம்புகுந்து பண்ணும் தவத்தியைந்த பார்த்தன்தான் - எண்ணிறந்த மீதுஅண்டர் கோன்குலையும் வெய்யோர் குலம்தொலைத்தான் கோதண்ட மேதுணையாகக் கொண்டு’ அருச்சுனன் நாட்டையும் உறவினரையும் விட்டுச் சென்று கடுமையான தவம் செய்த நிலையிலும், தான் ஒருவனாகவே இருந்துவைத்தும், தன் வில்லொன்றே துணையாகக் கொடிய அசுரரை அழித்தான் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், வீரப்பெருமிதம் உயர்த்திக் கூறப்பட்டவாறு உணரப்படும். (தண்டி. 74 - 1,2) உதாத்த அணியின் மறுபெயர் - 1. உதாரதை - வீ.சோ. 17-1 2. வீறுகோள் அணி - ச. 121, குவ. 95 உதாத்தஅணி வகைகள் - செல்வத்தைப் புகழ்ந்த உதாத்தம், உள்ளத்தைப் புகழ்ந்த உதாத்தம் என்பன. (தண்டி. 74) கொடை உதாத்தம், காந்தி உதாத்தம், கற்பு உதாத்தம், ஞான உதாத்தம், வீரிய உதாத்தம், கல்வி உதாத்தம், பொருட்செல்வ உதாத்தம் என்பன. (மா.அ. 238 - 245) உதாத்தம், அதிசயம் இவற்றின் வேறுபாடு - மிக உயர்ந்த பொருளை வியந்துரைப்பது உதாத்த அணி; அங்ஙன மன்றி மிக உயராததை வியந்துரைப்பது அதிசய அணி. (மா. அ. 238 உரை) உதாரதை அணி - இஃது உதாத்த அணி எனவும், வீறுகோள் அணி எனவும் கூறப்பெறும். ‘உதாத்த அணி’ காண்க. (வீ. சோ. 171) உதாரதை என்னும் பொதுவணி - தலையாகு வள்ளலது கொடையினைப் புகழ்ந்து செய்வது. (வீ. சோ. 151 உரை) உதாரம் என்ற பொதுவணி பிற அணிநூல்களில் வேறாக விளக்கப்படுதல் காண்க. உதாரம் என்ற குணவணி - குறிப்பால் விரிவான பொருள் பயத்தல் இது. செய்யுளுக்குக் கூறிய குணஅணிகள் பத்தனுள் ஒன்று. குறிப்பால் உயர்ந்த பொருள் தோற்றும் வகையில் செய்யுள் அமைதலே இதன் இலக்கணம். இது வைதருப்பம், கௌடம், பாஞ்சாலம் என்ற மூன்று நெறியார்க்கும் ஒக்கும் என்ப. எ-டு : ‘செருமான வேற்சென்னி தென்உறந்தை யார்தாம் பெருமான் முகம்பார்த்த பின்னர்- ஒரு நாளும் பூதலத்தோர் தம்மைப் பொருள்நசையால் பாராவாம் காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்.’ இரவலர்கண்கள், சோழன் முகத்தை ஒருமுறை பார்க்கும் வாய்ப்பு நேர்ந்து விடுமாயின், பிறகு தம் வறுமை தீரப் பொருள் பெறும் விருப்பத்தொடு வேறு யாருடைய முகத்தை யும் பாரா என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், ” சோழன் இரவலரைக் கண்ட அளவிலேயே அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் வறுமையின்றி வாழும் வகை பொருள் கொடுப் பான்” என்று குறிப்பால் தோன்றும் கொடைப்பெருமை யைப் புலப்படுவித்தல் இக்குண அணியாகும். (தண்டி. 21-1) உதாரம் கொடையைப் புகழ்தல் என்னும் முத்து வீரியம். (செய்யுளணி. 18) மாறனலங்காரம் சிறிது குறிப்பு, மிகுந்த குறிப்பு, இடைப்பட்ட குறிப்புப் பற்றி மூன்று நெறியார்க்கும் இதனைக் கொள்ளும். கௌடம் மிகுந்த குறிப்பினை உட்கொண்டது என்பதற்கு எடுத்துக்காட்டு : (மா. அ. பக். 97, 98) ‘காழில் கனிஉண் கடுவன் களங்கனியை ஊழின் பருகி உருகுதிரு - மூழிக் களத்(து)ஆதி யைமதங்கா காமக் குழவி வளத்தார் இடம்தேடு வாய்.’ மூழிக்களத்து முதல்வனைக் காமம் என்னும் குழவிச் செல்வத்தையுடைய பரத்தையரிடத்தே தேடிக் காண்பாயாக; எம்மிடத்துக் காண்டல் அரிது என்னும் பொருளுடைய இப்பாடற்கண், மூழிக்களத்திற்கு அடையாக வந்த மொழிகள் உள்ளுறைஉவமம் குறிப்பினாற் கொள்ளக் கிடந்தன. என்னை? பரல் இல்லாமல் முழுதும் மென்மையும் இனிமையு முடைய கதலிக்கனியை அச்சமின்றி யுண்கின்ற கடுவன், உள்ளே முழுதும் பரலாய்ச் சிறிதே புறமென்மையும் சுவையுமுடைய களங்கனியையும் முறையே போலப் பருகி அச்சுவைக்கு உள்ளம் உருகும் மூழிக்களத்தின் முதல்வன் எனவே, உத்தம மகளாகிய தலைவியோடு உள்ளும்புறமும் ஒருதன்மைத்தாக மென்மையோடு உவர்த்த லில்லாத பேரின்பத்தைத் துய்த்த தலைவன், இழிந்த இயற்கையராய்ப் புறத்தே பொருள்நசைக்காகச் சிறிது நெகிழ்ந்தாற் போலக் காட்டி உள்ளத்தே நெகிழ்ச்சியற்ற பரத்தையரிடத்தே உவர்த்த சிற்றின்பத்தைப் பெற்று அவ்வின்பம் மீட்டும் துய்க்க வேண்டி அவரது சேரியை விட்டு நீங்கானாயினன் என்பது குறிப்பால் பெறப்பட்டவாறு. அவர்கள் இல்லம் காமமாகிய குழவியையுடையது எனவே, தலைவியது இல்லம் காதற் புதல்வனாம் செல்வத்தையுடையது என்பதும், புதல் வனைப் பயந்த மூப்புடையாள் தலைவி என்பதும் பிற குறிப்புக்கள். உதாரம் என்ற குணவணியின் மறுபெயர் - உதாரதை (வீ.சோ. 148); ஆயின் இதற்கு வேறு பொருள் உரைக்கப்படும். (151 உரை) உந்மீலிதாலங்காரம் - இதனைத் தமிழணிநூலார் ‘மறையாமை அணி’ என்ப. அது காண்க. உபமா ரூபகம் - உவமை உருவகம்; அது காண்க. உபமா வாசகம் - உவமை உருபு. ‘உவம உருபுகள்’ காண்க. உபமானத்தினை உபமேய மாக்கியும் அதனை விலக்கியும் கூறுதல் சோழனுடைய மதவேழம் பகை மன்னருடைய வெண் கொற்றக்குடையினை அழித்த கோபத்தோடு வான்மீது பாய்ந்து தன்னையும் தேய்த்துவிடும் என்று அஞ்சி, முழுமதியம் தான் குடைக்கு ஒப்பாகும் நிலையைத் தவிர்த்துக் குறைந்து பிறைமதியாக உள்ளது என்ற கருத்தமைந்த ‘மண்படுதோள் கிள்ளி மதவேழம் மாற்றரசர் வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து பாயுங்கொல் என்று பணிமதியம் போல்வதூஉம் தேயும் தெளிவிசும்பின் நின்று’ என்ற பாடற்கண், உபமானமாகிய முழுமதியைக் குடைக்கு உபமேயமாக்கிப் பின் அம்முழுமதி தேய்ந்து பிறைமதி ஆயினமையின் குடைக்கு ஒப்பாகாது என விலக்கியவாறு. இது ‘வேறுபட உவமத் தோற்றத்’துள் ஒன்று. (தொ. பொ. 307 பேரா.) இது தற்குறிப்பேற்ற அணியின்பாற்படும். (தண்டி.56-1) உபமானப் பிரமாண அணி - இதனைத் தமிழ்நூலார் ‘ஒப்புப் பிரமாண அணி’ என்ப. அது நோக்குக. (குவ. 110) உபமானப்பொருள் தீவகஅணி - உபமேயம் ஒருபாடலிலுள்ள உபமானங்கள் பலவற்றொடும் தனித்தனி இணைந்து பொருள் தருவது இது. இதனைத் தண்டியாசிரியர் உவமைத் தீவகம் எனவும் உபமான தீவகம் எனவும் கூறுவர். (உரை) எ-டு : ‘முன்னம் குடைபோல் முடிநா யகமணிபோல் மன்னும் திலகம்போல் வாள்இரவி - பொன்அகலம் தங்கு கவுத்துவம்போல் உந்தித் தடமலர்போல் அங்கண் உலகளந்தாற்(கு) ஆம்.’ சூரியன், தான் நீண்டு உயர்ந்த வடிவெடுத்த திருமாலுக்கு முதற்கண் குடைபோல ஆகும்; பின் தலையிலுள்ள முடியின் சிறந்த மணி போல ஆகும்; பின் நெற்றியில் அணியும் திலகம் போல ஆகும்; பின்மார்பில் அணிந்த மணிபோல ஆகும். இறுதியில் கொப்பூழினின்று தோன்றிய தாமரைப்பூப் போல ஆகும் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், ‘வாள் இரவி’ என்னும் தொடர் குடை, மணி, திலகம், கவுத்துவம், உந்தித் தடமலர் என்ற பல உபமானங்களொடும் தனித்தனியே இயைந்து பொருள் தந்தமை உபமானப் பொருள் தீவக அணியாம். (தண்டி. 41-5) உபமானப் பொருள் பின்வருநிலை அணி - உபமானமாகக் கூறப்படும் ஒன்றனையே பொருளாகக் கொண்ட பரியாயச் சொற்கள் செய்யுளில் மூன்று முதலிய பல இடத்தும் வருவது. ‘உவமைப் பொருள் பின்வரு நிலை’யும் அது. எ-டு : ‘செங்கமலம் நாட்டம், செழுந்தா மரைவதனம், பங்கயம் செவ்வாய், பதுமம்போல் - செங்கரங்கள், அம்போ ருகம்தாள், அரவிந்தம் மாரனார் தம்போர் உகந்தாள் தனம்.’ இன்பம் தரும் இவளுடைய கண், முகம், வாய், கை, பாதம், தனம், யாவுமே தாமரையே ஒப்பன என்னும் கருத்தமைந்த இப்பாடற்கண், பெண்ணின் உறுப்புக்கட்கு உபமானமாகக் கூறப்படும் தாமரை என்ற சொல்லின் பல பரியாயச் சொற்க ளாகிய கமலம், பங்கயம், பதுமம், அம்போருகம், அரவிந்தம் என்ற பெயர்கள் செய்யுளின் பலவிடத்தும் வந்துள்ளமை உபமானப்பொருட் பின்வருநிலையாம். (தண்டி. 42-4) உபமானம் - உவமை : உவமம் என்பதும் அது. எ-டு : ஆப் போன்றது ஆமா (- காட்டுப்பசு) என்றல். காட்டில் செல்லுவோன் ஆமாவைக் கண்டவிடத்தே இப் பிரமாணத்தால் அதனை அறிந்துகொள்வான். உபமேயஅடைக்கு உபமானஅடை மிகுதலும் குறைதலும் - எ-டு : ‘நீலப் புருவம் குனிப்ப விழி மதர்ப்ப மாலைக் குழல்சூழ்ந்த நின்வதனம் - போலுமால் கயல்பாய வாசம் கவரும் களிவண்(டு) அயல்பாய அம்போ ருகம்.’ புருவம் வளைய, விழிகள் செருக்குற, மாலையை அணிந்த மயிர் முடி சூழ்ந்த முகம் என, உபமானத்திற்கு அமைந்தன மூன்று அடைகள். கயல்பாய, வண்டுகள் அயலில் பரவியுள்ள தாமரை என உபமேயத்திற்கு அமைந்தன இரண்டே அடைகள். உபமானத்திற்கு மூன்று அடைகள் புணர்த்த தனால் இரண்டே அடைகளுடைய உபமேயத்திற்குச் சிறப் புண்டாகுமாயின் இஃது ஏற்கத்தக்கது; அங்ஙனம் இன்மை யின் (‘புருவம் வளைய’ என்ற அடை நின்று வற்றுதலின்) இவ்வாறு புணர்ப்பது வழுவாம். எ-டு : ‘நாட்டம் தடுமாறச் செவ்வாய் நலம்திகழத் தீட்டரிய பாவை திருமுகம் - காட்டுமால் கெண்டைமீ(து) ஆட நறுஞ்சே யிதழ்மிளிர வண்டுசூழ் செந்தா மரை.’ பாவையின் முகமாகிய உபமானத்திற்குக் கண்கள் தடுமாறு தலும் உதடுகளின் செம்மை வெளிப்படுத்தலும் என இரண்டு அடைகள். உபமேயமாகிய தாமரைக்குக் கெண்டை உலாவு தல், சிவந்த இதழ்கள் வெளிப்படுதல், வண்டுகள் சூழ்தல் என, மூன்று அடைகள். உபமேய அடைக்கு உபமான அடை குறைவாய், ‘வண்டு சூழ்தல்’ என்ற அடை நின்று வற்றுதலின், இங்ஙனம் புணர்ப்பது வழுவாம். (தண்டி. 34- 1, 2; இ.வி. 641 உரை.) உபமேய உவமை - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (10) வருவதோர் அணி. உபமேயம் முன்னும், அடுத்து உவமையுருபும், அடுத்து உபமானமும் வருவது. எ-டு : ‘திருமுகம் போல் மலரும் செய்ய கமலம்’ (தண்டி. 32-14) இது விபரீத உவமை எனப்படுவது. உபமேயத்திற்கு உபமேயம் உவமையாதல் - உபமேயத்திற்கு மற்றோர் உபமேயத்தையே உவமையாக்கிக் கூறுதலும் உவமை வகையாம். எ-டு : ‘இழிவறிந்(து) உண்பான்கண் இன்பம்போன்(று) எய்தும் கழிபேர் இரையான்கண் நோய்’ (குறள் 946) உண்ட உணவு செரித்தமையை அறிந்து பின்னர் உண் பவனிடத்தே இன்பம் மிகுவது போல, அளவின் மீறி மிக உண்பவனிடத்தே நோய்கள் உண்டாகும். இழிவறிந்துண்பான் இன்பம் எய்துதல், கழிபேரிரையான் நோய் எய்துதல் என்ற இரண்டு உபமேயப் பொருள்களுள் முதலாவதை உபமானமாகவும் இரண்டாவதை உபமேய மாகவும் கூறுவது இவ்வுவமை வகையாம். (மா. அ. 1090 உபமேயம் - உவமிக்கப்பட்ட பொருள்; ‘பொருள்’ எனவே வழங்கப்படும். (தொ. பொ. 284 பேரா.) உபமேயோபமா - தமிழ்நூலார் இதனைத் ‘தடுமாறுவமை’ என்ப. அது காண்க. உபய வ்யதிரேகம் - தமிழ்நூலார் இதனை ‘இருபொருள் வேற்றுமை’ என்ப. இது வேற்றுமைஅணி வகைகளுள் ஒன்று. ‘இருபொருள் வேற்றுமை’ காண்க. உபயாவ்ருத்தி அலங்காரம் - தமிழ்நூலார் இதனைச் சொற்பொருட்பின்வருநிலையணி என்ப. அது காண்க. உபாயஅணி - யாதானுமொரு பயனை எய்துவதற்குச் சிறந்த காரணம் என்று கூறப்படுவதாகும் முக்கியமானதொரு சூழ்ச்சியை உணர்த்தும் அணி. (மா. அ. 183) எ-டு : ‘சூடிக் கழித்த துளபச் சருகெனினும் நாடித் தருகதிரு நாகையாய்! - ஊடிப் புலவா ததற்கும் நினதருட்கும் பொற்றோள் கலவாத எற்குநலன் காண்.’ “பெருமானே! நீ சூடிக் கழித்த துளசிச்சருகினையேனும் எனக்கு அருளின், அதுவே எனக்கு ஆறுதல் தரும். அதைக் கொடுத்ததுபற்றி நின் தேவியாகிய திருமகள் புலவிகொள் ளாள். நீயும் எனக்கு அருள்செய்த நிறைவுறலாம்” என்று தலைவி இறைவனை நோக்கி வேண்டிய வேண்டுகோள் உபாய அணி அமைய வந்துள்ளது. உபாய விலக்கு அணி - இது முன்னவிலக்கு அணியின் பதினாறு வகைகளுள் ஒன்று. உபாயம் - தந்திரம், வித்தை, வழி. எ-டு : ’இன்னுயிர் காத்தளிப்பாய் நீயே; இளவேனில் மன்னவனும் கூற்றுவனும் வந்தணைந்தால் - அன்னோர் தமக்கெம்மைத் தோன்றாத் தகையதோர் விஞ்சை எமக்கின்(று) அருள்புரிந்(து) ஏகு.’ இது தோழி தலைவன் பிரிவிற்கு உபாயம் கூறுவாள் போலப் பிரிவை விலக்கும் பொருள்பட வந்த பாடல். “தலைவனே! எங்கள் உயிரைக் காக்கும் பொறுப்பு உனக்கே உண்டு. நீ பிரிந்து சென்றதும், மன்மதனும் கூற்றுவனும் எம் உயிரைக் கவர வந்து சேர்ந்தால், அவர்கட்கு நாங்கள் புலப் படாதவாறு மறைத்துக்கொள்ளும் ஒரு வித்தையைக் கற்றுக் கொடுத்த பின் நீ பிரிந்து செல்க” என்னும் பொருளுடைய இப்பாடற்கண், உபாயம் கூறி விலக்கியமை காணப்படும். (தண்டி 45 - 8) உம்மை உவமை - இது சமுச்சய உவமை எனவும் கூறப்படும். அது காண்க. (வீ. சோ. 157) உய்த்தல் இல் பொருண்மை என்னும் குணவணி - சொற்களை வருவித்துச் சேர்த்தல் இல்லாத பொருள் அமைதல். அஃதாவது கவி தான் கருதிய பொருளை விளக்கமாக விரித்துரைக்கும் வகையில் வேறு சொற்களைக் கூட்டிப் பொருள் கூறும் வகையின்றிச் செய்யுள் இயற்றுதல். வடநூலார் இதனை அர்த்தவ்யக்தி என்ப. எ-டு : ’இன்(று)உமையாள் மாசிலா வாள்முகம் கண்(டு) ஏக்கற்றோ அன்றி விடஅரவை அஞ்சியோ - கொன்றை உளரா ஆறோடு ஒளிர்சடையீர்! சென்னி வளராவா(று) என்னோ மதி?’ “கொன்றைப்பூக் கலந்து கங்கை ஓடும் செஞ்சடையுடைய சிவபெருமானே! உமது தலையிலுள்ள பிறைமதி வளராமல் (பிறையாகவே) இருப்பதற்குக் காரணம் தான் யாது? பார்வதி தேவியின் மாசற்ற அழகிய முகத்தைப் பார்த்துத் தனக் கில்லாத அதன் அழகைக் கண்டு ஆசைப்பட்டதாலோ? அன்றி, வளர்ந்து நிறைமதியானால் தலையிலுள்ள பாம்பு பற்றுமே என்று அச்சப்பட்டதாலோ?” என்ற பொரு ளுடைய இப்பாடற்கண், கவி நினைத்த பொருளை விளக்கும் சொற்கள் குறைவற, வேறு சொற்களைக் கூட்டியுரைக்க வேண்டும் இன்றியமையாமை யின்றி அமைந்திருத்தல் இக்குணவணியாம். (தண்டி. 22-1) வைதர்ப்பம், கௌடம், பாஞ்சாலம் என்னும் மூன்று நெறியார்க்கும் இஃது ஒக்கும் என்னும் தண்டியலங்காரமும், மாறனலங்காரமும். இலக்கண விளக்கம் இங்ஙனம் வெளிப்படையாகக் கூறுதலை விரும்பாது சொல்லெச்சமும் குறிப்பெச்சமுமாக வருவித்துக் கொள்ளவேண்டிய செய்திகளை உள்ளடக்கிப் பாடுதலே கௌட நெறி என்று கூறி, ‘ஒல்லேம் குவளைப் புலாஅல் மகன்மார்பில் புல்லெருக்கங் கண்ணி நறிது’ என்ற எடுத்துக்காட்டினைத் தந்து விளக்கும். (இ. வி.அணி.பக். 68) குவளை புலால் நாறுதற்கும் எருக்கங்கண்ணி நறிதாதற்கும் காரணம் வெளிப்படையாகக் கூறப்பட்டில வெனினும், புதல்வனைப் பயந்த பூங்குழை மடந்தை பரத்தையிற் பிரிந்து வந்த கிழவனொடு புலந்துரைக்கின்றாளாதலின், குவளை புலால் நாறுதற்குக் காரணம் அவனது தவற்றொடு புணர்ந்த அவள் காதலே என்பதும், எருக்கங்கண்ணி நறுமணம் கமழ்தற்குக் காரணம் அவன் செய்த துனி கூர் வெப்பத்தைத் தன் முகிழ்நகை முகத்தால் தணிக்கும் புதல்வன்மேல் ஒருகாலைக் கொருகால் பெருகும் அன்பே என்பதும் குறிப்பால் பெறப்பட்டன (தொ. சொல். 55 சேனா.) உய்த்தலில் பொருண்மை என்பதன் மறுபெயர் - இது ‘புலன்’ எனவும்படும். (வீ. சோ. 148) உய்த்துணர் நிரல்நிறை - வரிசையாகக் கூறப்பட்ட பொருளை நேராகக் கூறாமல் உய்த்துணருமாறு பரியாயப்பெயர் முதலியவற்றால் கூறல் போல்வன. எ-டு : ‘செய்யோன் செழும்புகரோன் தெள்ளியோன் தேய்கதிரோன் வெய்யோன் புதன்வெளியோன் வென்றிசெய் - பொய்யாப்பொன் செல்லாச் சனிகாரி தேவர்கோன் மந்திரியே வில்கால் இறைவரா வார்.’ வெய்யோன் (- சூரியன்) நிறம் செய்யோன்; செவ்வாயும் தன் பெயரால் செய்யோனேயாம். செழும்புகரோன் (- சுக்கிரன்) வெள்ளி போன்று வெண்ணிறத்தோன்; தேய் கதிரோன் (- சந்திரன்) முத்துப் போன்று தெளிந்த வெண்ணிறத்தோன். புதனும், வெற்றியை விளைக்கவல்ல இந்திரனுடைய மந்திரி யாம் குருவும் நிறம் மாறாத பொன்னிறத்தவர். நீங்காத சனி கரிய நிறத்தவன். ஒளியை உமிழ வல்ல தேவர்கள் இவர்கள். இவ்வாறு மிகவும் நலிந்தன்றிப் பொருள் கூறாக்கால், கருத்துப் பிழை விளைதல் ஒருதலை. பாட வேறுபாட்டோடு கூடிய பிறிதொரு பாடல் எடுத்துக்காட்டாக அமைந்திருப்பின் நிரல்நிறை நிறம் பற்றிய உய்த்துணர்வொடு பரியாயப் பெயர் களால் சுட்டப்பெற்றமை விளக்க வாய்த்திருக்கும். (பாடல் ஈற்றடி சற்றே மாற்றப்பட்டது.) (யா. வி. பக். 385) உய்த்துணர்வு அணி - ஒரு செயல் சிறப்புற நிறைவேறுதற்கு இன்னார் இதனை இவ்வாறு செய்தல் வேண்டும் என்று கற்பனையால் கருதி முடிவு செய்தல் இவ்வணியாகும். இது சம்பாவநாலங்காரம் என வடநூலுள் கூறப்படும். (பேருய்த்துணர்வு அணி எனவும்படும்.) எ-டு : ‘சேடுறுநம் கோன்புகழைச் சேடன்நவி லத்தொடங்கின் பீடுறவே முற்றுப் பெறும்.’ “பெருமை மிக்க நம் அரசன்புகழை எடுத்துப் பேசுவதென் றால், ஆயிரம் நாக்களைப் படைத்த ஆதிசேடன் அவற்றை முற்றப் பயன்படுத்தினால் சிறப்பாகக் கூறி முடிக்கலாம்” என அரசன்புகழ் கூறுதலாகிய செயல் சிறப்பாக நிறைவேற இன்னார் இவ்வாறு செயற்பட வேண்டும் என்று கருதிக் கூறல் இவ்வணி யாகும். (ச. 90, குவ. 94) உயர்ச்சி வேற்றுமை அணி - இது வேற்றுமைஅணிவகைகளுள் ஒன்று. உபமானத்தை விட உபமேத்திற்கு உயர்ச்சியாகிய வேற் றுமையை வெளிப்படையாக எடுத்துரைப்பது கூற்றால் வந்த உயர்ச்சி வேற்றுமை அணியாம். எ-டு : ‘மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள் ஒலியும் பெருமையும் ஒக்கும் - மலிதேரான் கச்சிப் படுவ கடல் படா; கச்சி கடல்படுவ எல்லாம் படும்’ காஞ்சிமாநகரமும் கடலும் ஒலியாலும் பெருமையாலும் தம்முள் ஒப்புமை யுடையனவே. ஆயினும், காஞ்சி மாநகரில் உண்டாகும் பொருள்கள் கடலில் தோன்றமாட்டா; ஆயின், கடலின்கண் உண்டாகும் பொருள் யாவுமே காஞ்சியில் உண்டாம் என்னும் இப்பாடற்கண், ஒலியாலும் பெருமை யாலும் காஞ்சிக்கும் கடலுக்கும் ஒப்புமை கூறிப் பின், வெளிப்படையாகவே காஞ்சிக்கு உயர்ச்சியைக் காட்டி யுள்ளமை கூற்றால் வந்த உயர்ச்சி வேற்றுமை. இதனை இலக்கணவிளக்கம், சமன் அன்றி மிகுதி குறைவான் கூற்றினான் வந்த வேற்றுமை எனக் கூறும். (652-3) இனி, குறிப்பினால் வந்த உயர்ச்சி வேற்றுமை : எ-டு : ‘பதுமம் களிக்கும் அளியுடைத்து; பாவை வதனம் மதர்நோக்(கு) உடைத்து; - புதையிருள்சூழ் அப்போ(து) இயல்பழியும் அம்போ ருகம்; வதனம் எப்போதும் நீங்கா (து) இயல்பு.’ தாமரையில் வண்டு உண்டு; பெண்முகத்தில் கண் உண்டு. தாமரை இரவில் இயல்பு அழிந்து கூம்பும்; ஆயின், பெண் வதனம் எப்போதும் அழகாகவே இருக்கும் என்னும் இப் பாடற்கண், தாமரைக்கும் முகத்திற்கும் குறிப்பால் ஒப்புமை கூறியும், வேற்றுமை கூறி உயர்ச்சிகாட்டியும் இருப்பது காண்க. (தண்டி. 49-5) இதனை இலக்கணவிளக்கம், சமன் அன்றி மிகுதி குறைவான குறிப்பினான் வந்த வேற்றுமை எனக் கூறும். (652-6) உயர்ந்ததல்லா உவமம் - எ-டு : ‘நாயகர்க்கு நாய்கள்போல் நட்பின் பிறழாது கூஉய்க் குழாஅம் உடன்கொட்கும் - ஆய்படைப் பன்றி அனையர் பகைவேந்தர் ஆங்கவர் சென்(று)எவன் செய்வர் செரு?’ இப்பாடற்கண், அரசனுடைய படையாளர் நாய்போலும் நட்புடையர் என்பது வினைஉவமம்; நாய்க்குப் பகை பன்றி ஆதலின் பகைவேந்தர் பன்றி அனையர் என்று கூறுவதும் பொருத்தமானதே. ஆயினும், உவமம் உயர்ந்தது அன்மையின் அஃது அணியெனப்படாது என்பது பேராசிரியர் கருத்து. (தொ. பொ. 312 பேரா.) உயர்ந்த பொருளோடு இழிந்த பொருளை உவமித்தல் - ‘யானை அனையவர் நண்(பு) ஒ ரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும்’ (நாலடி. 213) நண்பர்களாகிய உபமேயத்திற்கு இழிந்த பொருளாகிய நாயினை உவமையாகக் கூறியவழியும், நன்றியறிதல் பண்பி னால் அது மேம்படுதலின் சிறப்பில் தீராது உயர்ந்த நண்பர் கட்கு உவமம் ஆயிற்று. (285 பேரா.) உயர்வு இழிவுப் புகழ்ச்சி உவமை - உயர்ந்த உபமானத்தை இழிந்த உபமேயத்தோடு ஒப்பிட்டுக் கூறுதல். எ-டு : ’மலையை ஒக்கும் யானை’ யானைக்கு மிக உயர்ந்த மலையை உவமையாகக் கூறுவது உயர்வுஇழிவுப் புகழ்ச்சி உவமையாம். (வீ. சோ. 159உரை) உயர்வு உவமை - மேம்பட்ட உவமானத்தைவிட உபமேயமே சிறந்தது என்ற கருத்துப்பட அமைக்கும் உண்மை உவமையை ’உயர்வு உவமை’ என்று வீரசோழியம் கூறும். எ-டு : ’நின்முகம் திங்களையும் தாமரையை யும்கடந்து தன்னையே ஒத்தது தான்.’ உபமேயமாகிய முகம் உபமானங்களாகிய சந்திரனையும் தாமரையையும் வென்று தன்னைத் தான் ஒத்துள்ளது என்று கூறுதற்கண் உயர்வுவமை வந்துள்ளது. (வீ. சோ. 156உரை) உயர்வுநவிற்சி அணி - இஃது அதிசய அணி எனவும், பெருக்கு அணி எனவும், மிகைமொழி அணி எனவும் கூறப்பெறும். ஒருபொருளை அதற்குரிய சொல்லால் விளக்காது, கேட் பவர்க்குச் சுவை பயப்பதற்காக, அப்பொருள் தான் கூறும் பொருளன்று என்று தெரிந்திருந்தும், தன்விருப்பத்தினால் அப்பொருளாக மேம்படுத்துக் கூறுதல் உயர்வுநவிற்சி அணியாம். இஃது 1. உருவக உயர்வுநவிற்சி, 2. ஒழிப்பு உயர்வுநவிற்சி, 3. பிரிநிலை உயர்வுநவிற்சி, 4. தொடர்பு உயர்வுநவிற்சி, 5. முறையில் உயர்வுநவிற்சி, 6. விரைவு உயர்வுநவிற்சி, 7. மிகை உயர்வுநவிற்சி, என ஏழ்வகைப்படும். இதனை வடநூலார் ’அதிசயோக்தி அலங்காரம்’ என்ப. (ச. 28, குவ. 13) 1. உருவக உயர்வு நவிற்சி - உபமேயத்தை அதற்கமைந்த சொல்லாற் சொல்லாமல் உபமானச் சொல்லினால் இலக்கணையாகச் சொல்லுவது. எ-டு : ‘புயலே சுமந்து, பிறையே அணிந்து, பொருவிலுடன் கயலே மணந்த கமலம் மலர்ந்தொரு கற்பகத்தின் அயலே பசும்பொற் கொடிநின்ற தால்;வெள்ளை அன்னம்செந்நெல் வயலேய் தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலயத்திலே’ (தஞ்சை. கோ.1) இதன்கண், புயல் பிறை பொருவில் கயல் கமலம் பசும்பொற் கொடி என்னும் உபமானச் சொற்கள் முறையே கூந்தல் நுதல் புருவம் கண் வதனம் நங்கை என்னும் உபமேயங்களை இலக்கணையாற் சுட்டியமையால், இஃது உருவக உயர்வு நவிற்சியாம். (ச. 29, குவ. 13.) 2. ஒழிப்பு உயர்வுநவிற்சி - கேட்போர்க்குச் சுவை பயக்குமாறு ஒரு பொருளிடத்து ஓர் உயர்வினை எடுத்துக் கூறி அவ்வுயர்வு மற்ற பொருளிடத்து இல்லையென்று மற்ற பொருளினை விலக்குவது. எ-டு : ‘பைந்தொடி! நின் சொல்லில் அமுதுளதால்; பாமரர்கள் இந்துவிடத் துண்டென்ப ரே.’ “பெண்ணே! உன் பேச்சிலேயே அமுதம் உளது. இதனை அறியாதவர் அமுதம் சந்திரனிடத் திருக்கிறது என்று கூறுகின்றனர்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், பெண் ணின் பேச்சினை அமுதமாக உயர்த்துக் கூறி, இயல்பாக அமுதமுடைய சந்திரனிடத்து அமுதம் இல்லை என்று கூறிச் சந்திரனை விலக்கியமையால், இஃது ஒழிப்பு உயர்வு நவிற்சியாம். (ச. 30, குவ. 13) 3. பிரிநிலை உயர்வுநவிற்சி - ஒருபொருளிடத்து உள்ள ஆற்றல், செல்வம், அழகு முதலியவற்றை மிக உயர்த்துக் கூறும்போது, அதனை ஒத்த ஆற்றல் முதலியவற்றை யுடைய ஏனைய பொருள்களினின்று அதனைப் பிரித்து வேறாகச் சிறப்பித்து உயர்த்துவது. எ-டு : ‘பாந்தள் முடியில் பரிக்கும் குவலயத்தில் வேந்தனது தீரமொன்றும் வேறு.’ ஆதிசேடன் தன் தலையால் சுமக்கும் இவ்வுலகத்தில் தோன்றியுள்ள ஏனைய மக்களின் ஆற்றலைவிட இம்மன் னனது ஆற்றல் வேறு பிரித்து எண்ணத்தக்க உயர்வுடையது எனவும், எ-டு : ‘போதார் மலர்க்கூந்தல் பூவை இவள்படைப்புச் சாதா ரணமான தன்று.’ பூங்குழற் பூவையாகிய இப்பெண்ணினது தோற்றம் ஏனைய பெண்களது அழகோடு ஒப்பிடத் தக்க பொதுவகைத்தாய் இல்லாமல் அவர்களது அழகினும் மிக மேம்பட்டுள்ளது எனவும், இப்பாடல்களில், மற்ற பொருள்களினின்றும் பிரித்து எண்ணப்படும் உயர்வு நவிற்சி வந்துள்ளது. (ச. 31, குவ. 13) 4. தொடர்பு உயர்வுநவிற்சி - ஒரு பொருளைப் பற்றிக் கேட்போர்க்குச் சுவை மிகுமாறு அப்பொருளை உயர்த்துக் கூறும்போது, அப்பொருளொடு தொடர்பில்லாதிருக்கும் பொருள்களையும் தொடர்பு படுத்திக் கூறுவது. இஃது இருவகைத்து. 1. தொடர்பு இல்லாதவற்றைத் தொடர்புபடுத்தும் உயர்வு நவிற்சி 2. தொடர்பு உடையவற்றைத் தொடர்பு நீக்கும் உயர்வு நவிற்சி என்பன அவை. எ-டு : ‘இம்மா நகர் மாடத்து உறுசிரம் ஒள்ளிய விதுமண்ட லத்தைத் தொடும்.’ அஃதாவது மாடங்கள் மிக உயர்ந்திருப்பதனால் அவற்றின் முகடுகள் சந்திர மண்டிலத்தைத் தொடுகின்றன என்பது. மாடங்களின் உச்சி தமக்கு மிக உயரத்திலிருக்கும் சந்திரமண்டி லத்தை ஒருகாலும் எட்ட முடியாது எனினும், உயர்வு நவிற்சிச் சுவை பற்றி, மாடங்களின் உச்சியையும் சந்திரமண்டிலத்தையும் இணைத்துக் கூறுவது தொடர்பு உயர்வுநவிற்சியாம். எ-டு : ‘அற்பகத்தின் மன்னவனே! நீ அருள்செ யாநிற்பக் கற்பகத்தை யாம்விரும்போம் காண்.’ வறியவர்கள் செல்வம் பெறக் கற்பகத்தை விரும்ப வேண்டி யிருக்க, மன்னனுடைய பெருங்கொடையால் கற்பகத்தை விரும்பும் தேவையற்றுள்ளனர் எனத் தொடர்புடையதனை நீக்கிப் பொருளை உயர்த்துக் கூறுவதும் இவ்வணியாகும். (ச. 32, குவ. 130) 5. முறைஇல் உயர்வுநவிற்சி - காரணம் முன்னும் காரியம் பின்னும் நிகழ்தல் உலக இயற்கை. அதனை விடுத்துக் காரணமாகிய ஒன்றை உயர்த்துக் கூறும் வகையில் காரணமும் காரியமும் ஒருங்கு நிகழ்ந்தன என்று கூறுவது. எ-டு : ‘மன்ன! நின் கணையும் ஒன்னலர் கூட்டமும் ஏககா லத்தில் இகந்தோ டினவால்.’ அரசன் அம்பு விட்ட பின்னரே அதன் தாக்குதலுக்கு அஞ்சிப் பகைமன்னர் ஓடினர் என்று கூறும் முறையை நீக்கி, அம்பின் வேகத்தை உயர்த்துக் கூறுமுகத்தான் அம்புகளும் பகைவர் கூட்டங்களும் ஒருசேர ஓடின என்று கூறுதற்கண், முன்பின் நிகழ்தலாகிய முறை உயர்வுநவிற்சிக்கண் நீக்கப் பட்டமை உணரப்படும். (ச. 33, குவ. 13) (‘ஒருங்குடன் தோற்றம்’ என்ற சித்திர ஏது அணியின் இயைபு ஈண்டுக் காணப்படும். தண்டி. 63-2) 6. விரைவு உயர்வுநவிற்சி - காரணம் பற்றிய உணர்ச்சி தோன்றிய அளவிலேயே காரியம் நிகழ்ந்ததாகக் கூறுவது. எ-டு : ‘- பொருளாக்கற் (கு) ஏழையான் செல்வல் எனப்புகலா நிற்பவிரல் ஆழிவளை ஆயிற்(று) அவட்கு’ “தலைவி! யான் பொருள் தேடற்கு நின்னைப் பிரியக் கருதுகின்றேன்” என்று தலைவன் கூறத் தலைவன் தன்னைப் பிரியப்போகின்றான் என்ற உணர்வு தோன்றிய அளவிலேயே தலைவியது உடல்மெலிய, அவள் தன் விரல்களில் அணிந்த மோதிரங்களைக் கைகளுக்கு வளையாக அணியும் வகை கைகள் மெலிந்தன எனக் காரியம் நிகழ்ந்தமை கூறுதற்கண், விரைவு உயர்வுநவிற்சி வந்துள்ளவாறு. (ச. 34, குவ. 13) 7. மிகை உயர்வுநவிற்சி - ஒரு பொருளைக் கேட்போர்க்குச் சுவை யுண்டாகுமாறு உயர்த்துக் கூறுங்கால், அதன்கண் காரணம் தோன்றுவதற்கு முன்பே காரியம் நிகழ்ந்தது என்று கூறுவது. எ-டு : ‘வணங்கிஇறை இன்சொல் வழங்குமுனம் பேதைக்(கு) உணங்(கு)ஊடல் நீங்கிற்(று) உளத்து.’ தலைவி தலைவனிடம் ஊடல் கொண்டிருந்தாள். அவ் வூடலைத் தீர்ப்பதற்குத் தலைவன் தன்னிடத்துக் குறையெது வும் இல்லை என்பதை அவள் மனம் கொள்ளுமாறு எடுத்துக்கூறி, தன்னையும் அறியாது ஏதேனும் குறை நிகழ்ந்திருப்பினும் அதனைப் பொறுக்குமாறு அவளைப் பணிந்த பின்னர் அவள் ஊடல் தீர்தல் இயல்பு. ஆயினும், தலைவன் தலைவியைப் பணிந்து இன்சொற்கள் கூறுமுன்னர் அவளது ஊடல் நீங்கிற்று எனக் காரணம் நிகழ்வதன்முன் காரியம் நிகழ்ந்ததாக விரைவுபற்றி உயர்த்துக் கூறுதற்கண் இவ்வணி வந்துள்ளமை உணரப்படும். (இது ‘காரியம் முந்துறூஉம் காரணநிலை’ என்ற சித்திரஏது அணியை ஒத்தது. தண்டி. 63-3) (ச. 35, குவ. 13) உயர்வெதிரேகம் - ‘உயர்ச்சி வேற்றுமை’, அது காண்க. உயிர் அலங்காரம் - செறிவு, தெளிவு முதலிய பத்துக்குணஅணிகளையும் வீர சோழியம் உயிரலங்காரம் என்று கூறும். (வீ.சோ. 148, 149) உயிரில் அஃறிணைத் தன்மையணி - அஃறிணைப் பொருள்களுள் உயிரில்லாத பொருளை உள்ளவாறு சுவைபட வருணிப்பது. (மா.அ. 89) எ-டு : ‘நூனெறி மரபின் அரங்கம் அளக்கும் கோலள(வு) இருபத்து நால்விர லாக எழுகோல் அகலத்(து) எண்கோல் நீளத்(து) ஒருகோல் உயரத்(து) உறுப்பின தாகி உத்தரப் பலகையோ(டு) அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற்கோ லாக ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் தோற்றிய அரங்கத்து’ (சிலப். 3 : 99-106) உத்தம புருடன் கைப் பெருவிரல் அளவு 24 கொண்டது ஒரு கோலளவாகக் கொண்டு, அரங்கினை ஏழுகோல் அகலம் எட்டுக் கோல் நீளம் ஒரு கோல் உயரம் அமைத்து, தூணுக்கு மேல் வைத்த உத்தரப் பலகைக்கும் அரங்கினிடத்து அகலத்துக் கிட்ட பலகைக்கும் இடைநின்ற நிலம் 4 கோலாக உயரம் கொண்டு, இரண்டு வாயில்களையுடையதாகச் செய்யப்படுவது ஆடல் அரங்கு என்பது உயிரில் அஃறிணைத் தன்மையணியாம். உயிருடைய இயங்கா அஃறிணைத் தன்மையணி - உயிருடைய பொருள்களுள் இயங்கா அஃறிணைத்தன்மைய தாவரமாகும். அத்தாவரத்தை உள்ளவாறு வருணிப்பது இது. எ-டு : ‘பரிஅரைத்தாய்த் திணிவயிரம் பயின்றுநிலம் கிளைமுதற்றாய் விரிசினைத்தாய்ப் பசுந்தழைத்தாய் விரைமலர்த்தாய் விழைகனித்தாய் பெரியகதி ரவன்மறைந்த பிழப்பிருட்கும் உறங்காது வரிவளையூர் புனற்குருகூர் மகிழ்மாறர் திருப்புளியே.’ சடகோபர் உகந்தருளி அமர்ந்திருக்கும் புளியமரம் பருத்த அடியுடையது; வயிரம் பாய்ந்தது; நிலத்தில் தொலைவாகப் பரவியது; விரிந்த கிளைகளையுடையது; பசிய தழைகளை யுடையது; நறுமண மலர்களையுடையது; இனிய கனிகளை யுடையது; இரவிலும் உறங்காதது. இவ்வாறு புளியமரத்தை உள்ளவாறு வருணித்தமை இவ்வணியாம். (மா. அ. பா. 124) உயிருடைய இயங்கும் அஃறிணைத் தன்மையணி - அஃறிணைப் பொருளில் உயிருடையதாய் இயங்கும் ஆற்றலுடைய தாவரம் அல்லாத ஏனைய பொருள் பற்றிய இயற்கை வருணனையைக் கூறுவது. எ-டு : ‘வள்ளுகிரும் தோலடியும் செவ்வாயும் வார்சிறைகூர் புள்ளியுமென் சூட்டுமுறு பொற்பினதாம் - ஒள்ளியரை மாறிவரு வாதியரை வென்றமகிழ் மாறனார் ஏறிவரு வெள்ளோ திமம்.’ பரசமய வாதியரை வென்ற சடகோபருடைய வாகனமாகிய அன்னப்பறவை கூரிய நகங்களும், தோலிணைந்த விரல் களையுடைய அடிகளும், சிவந்த வாயும், நீண்ட சிறகுகளில் புள்ளியும், மெல்லிய கொண்டையும் கொண்டு அழகுற விளங்குவதாம் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், உயி ருடைய இயங்கும் அஃறிணைப் பொருளாகிய அன்னத்தின் வருணனை தன்மையணியாக அமைந்துள்ளது. (மா. அ. பாடல் 123) உயுத்த அணி - உயுத்தம் - யுக்தம் - பொருத்தமுடையது; சித்திர ஏது வகை களுள் ஒன்று. பொருத்தமுடைய காரணம் கூறிக் காரியத்தை வருணிப்பது. எ-டு : ‘பொன்னி வளநாடன் கைவேல் பொழிநிலவான் முன்னர் அசைந்து முகுளிக்கும் - தன்னேர் பொரவந்த வேந்தர் புனைகடகச் செங்கை அரவிந்தம் நூறா யிரம்’ போர்க்களத்தே சோழன் கையிலேந்திய வேலினது நிலவால் பகை மன்னர்கள்தம் கடகம் அணிந்த கைகளாகிய தாமரைகள் பலவும் குவிந்துவிடும் (- சோழனைக் கும்பிட்டுப் பணிவர்) என்னும் பொருளுடைய இப்பாடற்கண், நிலவின் ஒளியால் தாமரைகள் குவிதலாகிய பொருத்தமான காரணம் கூறிச் சோழன் பெருமையைக் கூறியுள்ளமை உயுத்த ஏதுவாம். (தண்டி. 63-4) உருஉவம உருபுகள் - போல, மறுப்ப, ஒப்ப, காய்த்த, நேர, வியப்ப, நளிய, நந்த என்ற எட்டும் உருஉவம உருபுகளாம். நளிய, நந்த என்பன இக்காலத்து வழக்கொழிந்தன. இவையேயன்றி ஏர, என, ஏய்ப்ப, புரைய, மருள, உறழ, கடுப்ப, அன்ன, ஆங்க என்பனவும் சிறுவரவினவாகி உருஉவமத் தின்கண் வரும். (தொ. பொ. 291 பேரா.) உருஉவம உருபுகளில் இருவகை - உருஉவம உருபுகளுள் போல, ஒப்ப, நேர, நளிய என்ற நான்கும் ‘எவ்வகை வேறுபாடு மின்றிச் சேர்ந்தன’ என்னும் பொருளன. மறுப்ப, காய்த்த, வியப்ப, நந்த என்ற நான்கும் ‘வேறுபாடு தோற்றி நிற்கும் பொருளவாய்ச் சேர்ந்தன’ என்னும் பொருளன. இவ்வாறு சொற்பொருள் நோக்கி உருஉவமஉருபுகளை இருவகைப்படுத்தலாம். (தொ. பொ. 293 பேரா.) உருஉவமப்போலி - நிறம் முதலிய பண்பு பற்றிய உள்ளுறை உவமம். எ-டு : ‘வண்ண ஒண்தழை நுடங்க வாலிழை ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக் கண்ணறுங் குவளை நாறித் தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே’ (ஐங். 73) தலைவன் பரத்தையொடு புனலாடினானாக, அவள் புனலா டியதால் நீர்த்துறையில் குவளைப்பூக்கள் மணம் கமழப் புனலெல்லாம் தண்ணென்றது என்ற இத்தோழி கூற்றில், தலைவன் பரத்தையொடு புனலாடிய இன்பச்சிறப்புக் கேட்டு நிலையாற்றாது அக்குளத்தைப் போல உறக் கலங்கித் தெளிந்து தண்ணென்றாள் தலைவி என்ற உள்ளுறை உவமம் அமைந்திருப்பது உருஉவமப்போலியாம். குளம் முதலில் கலங்கிப் பின் தெளிந்து தன் இயற்கை நிலைபெற்றது போலத் தலைவியும் முதலில் கலங்கிப் பின் மனம் தேறிப் பண்டைய நிலையுற்றாள் எனப் பண்பு பற்றிய உள்ளுறை யாதலின் உருஉவமப் போலி ஆயிற்று. (ஈண்டு, பண்பாவது நிறமல்லாத பண்பு.) (தொ. பொ. 300 பேரா.) உருஉவமம் - நிறம் முதலிய பண்பு பற்றி வந்த உவமம். இது பண்பியாகிய மெய்உவமத்தின் வேறுபட்டது. பண்பியாகிய மெய்யினைக் காண்டல் இருளில் இயலாவிடினும் இருளினும் தொட்டு அறியலாம். பண்பாகிய நிறம் முதலியவற்றை இருளில் காண்டலும் இயலாது; தொட்டறிதலும் இயலாது. எ-டு : ‘பொன்மேனி’ பொன்னின்கண்ணும் மேனியின்கண்ணும் கிடந்த நிறமே ஒத்தன; பிற ஒத்தில என்பது. (தொ. பொ. 276 பேரா.) மெய், நிறம் இரண்டனையும் பிற்காலத்தார் பலர் பண்பினுள் அடக்குவர். (தண்டி. 31; இ.வி. 639; தொ.வி. 328; மு.வீ. பொருளணி3.) உருத்திர உவமை - உவமையணி வெகுளிச்சுவைபட வருவது. ‘நீயே................ கூற்றுவெகுண் டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்நோக் கினையே’ (புறநா. 42) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இடைக் காடனார் பாடிய இப்புறப்பாட்டடிகளில், அவன் கூற்றுவன் கோபங்கொண்டாற் போன்ற வலிமையுடனே தனக்கு மாறாகிய சேரபாண்டியர்தம் நாட்டினைக் கைக்கொள்ளக் கருதுகிறான் என்ற பொருளமைதலின், முதலடியில் உவமம் வெகுளி என்னும் மெய்ப்பாட்டொடுங் கூடி வந்தவாறு. (தொ. பொ. 294 பேரா.) உருத்திரச்சுவை அணி - வீரம், அச்சம், வியப்பு, இழிப்பு, காமம், அவலம், நகை, வெகுளி, நடுவுநிலை என்பன ஒன்பான் சுவைகளாம். இச் சுவை வெளிப் படுமாறு அமையும் பாடலில் உள்ள அணி சுவையணியாம். அச்சுவையணியுள், வெகுளியைத் தோற்று விக்கும் உருத்திரச் சுவையணி ஒருவகையாம். எ-டு : ‘கைபிசையா வாய்மடியாக் கண்சிவவா வெய்துயிரா மெய்பனியா வேரா, வெகுண்டெழுந்தான் - வெய்யபோர்த் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . போர்வேந்தன் தூதிசைத்த போது.’ தனக்கு மகள் வேண்டி அரசன் மறக்குடித்தலைவனிடம் தூதுவன் ஒருவனை அனுப்ப, அரசகுடும்பத்திற்குத் தாம் பெண் கொடுக்கும் வழக்கம் இன்மையால், அரசனுடைய தூதினைக் கண்டதும், மறக்குடித் தலைவன் கைகளைப் பிசைந்து கொண்டு, வாயுதடுகளை மடித்துக்கொண்டு, கண்கள் சிவப்ப, பெருமூச்செறிந்து உடல் வியர்க்கக் கோபத்தோடு எழுந்து புறப்பட்டான் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், வெகுளிச்சுவை மெய்ப்பாடுகள் விளங்கக் கூறப்பட்டுள. (தண்டி. 70-7) உருவக அணி - உவமைஅணியில் உபமானம் உபமேயம் உவமஉருபு பொதுத் தன்மை என்னும் நான்கு கூறுகள் உள. உபமானம் முன்னும், உவமஉருபும் பொதுத்தன்மையும் இடையிலும், உபமேயம் ஈற்றிலும் வரும். உவம உருபும் பொதுத்தன்மையும் மறைந்து வருதலும் உண்டு. உருவகஅணியில் உபமேயம் முன்னும் உபமானம் பின்னும் உருவக உருபு (- ஆகிய முதலியன) இடையிலும் வரும். உருவக உருபு மறைதலும் உண்டு. உருவகத்தில் உபமேயம் உபமானம் என்னுமிரண்டும் வேறுபாடு நீங்கி ஒன்றெனும் தன்மை தோன்றச் சொல்லப்படும். வாய் என்ற பவளம், வாய்ப் பவளம் - உருவகம். இவ்வுருவகத்தின் வகைகள் சந்திராலோகத்தில் ஆறு எனக் கொள்ளப்பட்டுள; குவலயானந்தத்திலும் அவ்வாறே உள. தண்டியலங்காரம், மாறன் அலங்காரம் இவற்றில் பலவாக உள்ளன. 1. மிகை ஒற்றுமை உருவகம், 2. குறை ஒற்றுமை உருவகம், 3. மிகை குறை இல் ஒற்றுமை உருவகம், 4. மிகையதன் செய்கை உருவகம், 5. குறையதன் செய்கை உருவகம், 6. மிகைகுறை இல் செய்கை உருவகம் என்ற ஆறு வகைகள் சந்திராலோகம், குவலயானந்தம் என்னும் அணிநூல்களில் உள்ளன. உபமேயத்தையும் உபமானத்தையும் இருபெயரொட்டாக ஒற்றுமை கொளுவி உரைப்பது உருவகம்; இருபொருளையும் ஒற்றுமை கொளுவாது, உபமானம் உபமேயம் இரண்டனுள் ஒன்று உருவகச் சொல்லொடு தொக்கு மாட்டேறில்லாது வருவதும் உருவகம். உபமேயத்தை முதலில் வைத்து உபமானத்தை அதன் பின்னர் வைத்து ஒற்றுமை கொளு வுவதே உருவகத்திற்கு மிக்கதோர் அறிகுறி. (தாமரை - உபமானம்; முகம் - உபமேயம், முகத்தாமரை - உருவகம்) (மா.அ. 114 உரை) 1. மிகைஒற்றுமை உருவகஅணி ஒரு பொருளை மற்றொரு பொருளாக உருவகம் செய்யும் போது அப்பொருளிடத்து இல்லாத செய்தியை உருவகம் செய்யும் பொருளுக்கு அடையாகக் கூறுவது. எ-டு : ‘உயர்புகழ்நம் கோனாம் உருவுடைய மாரன் வடிவழகை நாடும்என் கண்.’ மேம்பட்ட புகழையுடைய நம்மன்னனாகிய உருவத்தை யுடைய மன்மதனது வடிவழகைக் காண்பதற்கு என் கண்கள் விரும்புகின்றன என்னும் பொருளுடைய இப்பாடற்கண், ‘நம் கோனாம் உருவுடைய மாரன்’ என்பது உருவகம். மாரன் ஆகிய மன்மதனுக்கு உருவம் இல்லை; ஆயின் கோனுக்கு உருவமுண்டு. கோனை மன்மதனாக உருவகிக்கையில், மன்மதனுக்கு இல்லாத உருவத்தை அடையாகப் புணர்த்து உருவுடைய மாரன்’ என்று கூறுதற்கண், மிகை ஒற்றுமை உருவகம் வந்துள்ளது. ஒற்றுமை பற்றி உருவகிக்கும்போது, மிகையாக ஒன்றனை இணைத்து உருவகம் செய்வதால் இப்பெயர்த்தாயிற்று. 2. குறை ஒற்றுமை உருவகஅணி - ஒருபொருளை மற்றொரு பொருளாக உருவகம் செய்யும் போது, அம்மற்றைய பொருளிடத்து உள்ள செய்தியை உருவகம் செய்யும் பொருளுக்குக் குறைத்து உருவகம் செய்வது. எ-டு : ‘எல்லாரும் ஏத்துபுகழ் ஏந்தலிவன் நெற்றிவிழி இல்லாத சங்கரனே யாம்.’ எல்லாராலும் புகழப்படும் சிறப்புடைய இவன் நெற்றி யின்கண் விழி இல்லாத சிவபெருமான் ஆவன் என்னும் பொருளமைந்த இப்பாடற்கண், ‘இவன் நெற்றிவிழி இல்லாத சங்கரன்’ என்பது உருவகம். தலைவன் ஒருவனைச் சிவபெரு மானாக உருவகித்துச் சிவபெருமானுக்குரிய நெற்றிவிழியை அவனுக்கு நீக்கியதன்கண் இவ்வணி அமைந்துள்ளது. 3. மிகை குறை இல் ஒற்றுமை உருவக அணி - ஒரு பொருளை மற்றொரு பொருளாக உருவகம் செய்யும் போது மிகுதியோ குறைவோ கொள்ளாது உள்ளவாறே உருவகம் செய்வது. எ-டு : ‘பவக்கடல் கடந்து முத்தியங் கரையில் படர்பவர் திகைப்பற நோக்கித் தவக்கலன் நடத்த வளர்ந்தெழுஞ் சோண சயிலனே! கயிலைநா யகனே!’ (சோண. 2) பிறவியாகிய கடலைக் கடந்து முத்தியாகிய கரையை நோக்கிச் செல்பவர்கள் தடுமாற்ற மில்லாமல் தவமாகிய கப்பலைச் செலுத்தக் கலங்கரை விளக்கமாக உள்ளான் சிவபெருமான் என்னும் பொருளமைந்த இப்பாட்டடிகளில், பவக்கடல், முத்திக்கரை, தவக்கலன் என்பன உருவகங்கள். இவை மிகுதியோ குறைவோ இல்லாது சமமாக அமைந் திருப்பதன்கண் இவ்வணி வந்துள்ளது. 4. மிகையதன் செய்கை உருவக அணி - ஒரு பொருளை மற்றொரு பொருளாக உருவகம் செய்யும் போது, அம்மற்றைய பொருளிடத்து இல்லாத செய்கையை உருவகம் செய்யப்படும் பொருளுக்கு ஏற்றி உரைப்பது. எ-டு : ‘மங்கை வதன மதியம் களங்கமுடைத் திங்களைஇங்கு எள்ளல் செயும்.’ இப்பெண்ணின் முகமாகிய சந்திரன் களங்கமுடைய சந்தி ரனைப் பரிகசிக்கிறது என்னும் இப்பாடற்கண், ‘வதனமதியம்’ உருவகம். வதனமாகிய மதியம் தன்னிடத்துக் களங்கமின் மையால் களங்கமுடைய மதியத்தைப் பரிகசித்தலாகிய செயலொன்று வதனமதியத்துக்குக் கூறப்பட்டிருத்தலால், இது மிகையதன் செய்கை உருவக மாயிற்று. 5. குறையதன் செய்கை உருவக அணி - ஒருபொருளை மற்றொரு பொருளாக உருவகம் செய்கையில், அம்மற்றைய பொருளிடத்துள்ள செயல் உருவகம் செய்யப் படும் பொருட்கு இன்மையால் அச்செயல் அப்பொருட்கண் இல்லை யென்றுரைப்பது. எ-டு : ‘பொருதிரைசேர் தண்பாற் புணரி பிறவா ஒருதிருஇம் மாதென்(று) உணர்.’ “அலைகளையுடைய குளிர்ந்த பாற்கடலினின்று தோன்றாத வேறொரு திருமகள் இப்பெண் என்று உணர்வாயாக” என்னும் பொருளுடைய இப்பாடற்கண், ‘திரு இம்மாது’ - உருவகம். இம்மாதாகிய திருமகள் என்பது இதன் கருத்து. திருமகளுக்குரிய பாற்கடலினின்று பிறத்தலாகிய செயலை உருவகிக்கப்பட்ட மாதாகிய திருவுக்கு நீக்கியமையால், இப்பாடற்கண் குறையதன் செய்கை உருவகம் வந்துள்ளது. 6. மிகை குறை இல் தன் செய்கை உருவக அணி - ஒருபொருளை மற்றொரு பொருளாக உருவகிக்குமிடத்தே, இருபொருளின் செயற்கண்ணும் மிகையோ குறைவோ காணாமல் இரண்டனையும் சமமாகக் கொள்வது. எ-டு : ‘இம்மான் முகமதியே இன்பு செயுமதனால் அம்மா மதிப்பயனென் ஆம்?’ இப்பெண்ணின் முகமாகிய சந்திரனே எனக்கு இன்பத்தைத் தருதலால், வானத்திலுள்ள அந்தச் சந்திரனுடைய இன்பம் தரு செயலால் எனக்குப் பயனொன்றுமில்லை என்ற பொருளுடைய இப்பாடற்கண், ‘முகமதி’ உருவகம். இன்பம் செய்தலாகிய செய்கையால் முகத்தைச் சந்திரனாக ‘முகமதி’ என மிகை குறையின்றிச் சமமாக உருவகித்தலால் இவ்வணி வந்துள்ளது. (சந். 13, குவ. 10) உருவக உயர்வு நவிற்சி அணி உவமேயத்தை அறிதற்குரிய சொல்லால் அறிவிக்காமல், உபமேயத்தைவிட எப்பொழுதும் உயர்ந்ததாகவுள்ள உபமானச் சொல்லினால் சொல்லுவதோடு, உபமேயத்தின் செயல்களை இலக்கணையாக இவ்வுவமானச் சொல்லுக்கு ஏற்றி யுரைப்பது இவ்வணி. எ-டு : ‘புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன் கயலே மணந்த கமலம் மலர்ந்தொரு கற்பகத்தின் அயலே பசும்பொற் கொடிநின்ற தால்’ (தஞ்சை. கோ. 1) என்ற அடிகளில், ” மேகம் போன்ற கூந்தலையும், பிறை போன்ற நெற்றியையும், பொருதிடற்கு வளைத்த விற்போன்ற புருவங்களையும், கயல்மீன் போன்ற கண்களையும் கொண்ட தாமரை போன்ற முகத்தையுடையாள் ஆகிய பொற்கொடி போன்ற தலைவி நின்றாள்” என உபமான உபமேயங்களை விளக்கிக் கூறாது, கூந்தல் - நெற்றி - புருவம் - கண் - முகம் - மேனி - இவற்றை முறையே புயல் - பிறை - வில் - கயல் - கமலம் - பொற்கொடி - என உருவகித்து, கூந்தல் முதலியவற்றுக்குரிய வினைகளைப் புயல் முதலியவற்றொடு சேர்த்துக் கேட் டார்க்குச் சுவை பயப்பக் கூறும் இப்பாடல் உருவக உயர்வு நவிற்சி அணியாம். (ச. 29, குவ. 13) உருவக உருவக அணி - உருவகஅணிவகைகளுள் ஒன்று; உருவகம் செய்த பொருளையே மீண்டும் உருவகம் செய்வது. எ-டு : ‘கன்னிதன் கொங்கைக் குவடாம் கடாக்களிற்றைப் பொன்னெடுந்தோட் குன்றே புனைகந்தா - மன்னவ! நின் ஆகத் தடம்சே வகமாக நான் அணைப்பல்; சோகித் தருளேல் துவண்டு’ இஃது உற்ற துரைத்த தலைவற்குப் பாங்கன் கூறியது. “தலைவியின் கொங்கைமலையாகிய மதயானையை நின் தோள்களாகிய குன்றுகளே கட்டுத்தறியாக, நின்மார்பாகிய இடப்பரப்பே யானை கட்டும் கூடமாக, அவளை நின்னுடன் கூட்டுவேன்; ஆதலின் உடல் துவள மனம் வருந்தற்க” என்ற இப்பாடற்கண், குவடு என உருவகித்த கொங்கையை மீண்டும் மதயானையாகவும், குன்றாக உருவகித்த தோள்களை மீண்டும் கட்டுத்தறியாகவும், அகன்ற நிலப்பரப்பாக உருவ கித்த மார்பினை மீண்டும் யானைகட்டுமிடமாகவும் உருவகம் செய்தமையால், இஃது உருவக உருவகம் ஆயிற்று. (தண்டி. 37-10) உருவக உவமை - முதலில் உருவகம் செய்த ஒன்றனையே பிறிதொரு கருத்துப் பற்றி மீண்டும் உவமை வாய்பாடுபடச் செய்வது. எ-டு : ‘மதுமகிழ்ந்த மாதர் வதன மதியம் உதய மதியமே ஒக்கும்’ கள்ளினை நுகர்ந்த இப்பெண்ணின் முகமாகிய சந்திரன் மதுவினால் விளைந்த மதர்ப்பும் செம்மையும் கொண்டு உதயமதியத்தினை ஒக்கும் என்ற கருத்தமைந்த இப்பாட லடிகளில், ‘வதனமதியம்’ என்ற உருவகம் மீண்டும் ‘உதய மதியமே ஒக்கும்’ என உவமிக்கப்பட்டது உருவக உவமை யாம். முதலில் உருவகம் செய்ததனை மீண்டும் உவமை வாய்பாடுபடக் கூறுதலின் ‘உருவக உவமை’ என்றலே ஏற்புடைத்து. இதனை ‘உவம உருவகம் என்று தண்டி(யுரை) யாசிரியரும் இலக்கண விளக்க நூலாரும் கூறுவது ஆய்விற்கு உரியது.’ (தண்டி. 38-1, 90; இ.வி. 644 - 16) உருவகத்திற்குச் சிறப்பு - உருவகத்தை ‘ஆகிய’ முதலிய உருவக உருபு இன்றியும், உபமானத்திற்கோ உபமேயத்திற்கோ அடைச்சொல் இணைக்காமலும் உபமேயம் உபமானம் இரண்டனையும் முலைக்களிறு, நாட்டக்கணை (- கண்களாகிய அம்பு) என்றாற் போல வாளா இணைப்பதே உருவகத்திற்குச் சிறப்பாம். ‘பருமணி வடத்திற் சேர்ந்த படாமுலைக் களிறு’ - உப மேயத்திற்குப் ‘படா’ என்ற அடை வந்துள்ளது. ‘புருவவிற் குனித்து நாட்டப் பொருகணை உடக்கி’ - உபமானத்திற்குப் ‘பொரு’ என்ற அடை வந்துள்ளது. இவை சிறப்பின அல்ல. (மா. அ. 117 உரை) உருவகத் தீவக அணி - தீவக அணிக்குக் கூறிய ஒழிபால் வந்த அணிவகை இது; ஒரு சொல் உருவகிக்கப்படும் பல சொற்களுடனும் தனித்தனியே இயைந்து பொருள்படும் வகையில் அமைவது. எ-டு : ‘கானல் கயலாம்; வயலில் கமலமாம்; ஏனல் கருவிளையாம்; இன்புறவில் - மானாம்; கடத்துமேல் வேடர் கடுஞ்சரமாம்; நீங்கிக் கடத்துமேல் மெல்லியலாள் கண்.’ இது தலைவன் செலவழுங்கல் கிளவிப்பட வந்த பாடல். “நான் இவளை விட்டுப் பிரிந்து செல்லின், இவளுடைய கண்கள் நான் போமிடமெல்லாம் காட்சி தந்து வருத்தும்; எவ்வாறெனில், நெய்தல் நிலத்தில் கயலாகவும், மருதத்தில் தாமரையாகவும், குறிஞ்சிச்சுனையில் கருவிளையாகவும், முல்லை நிலத்தே மானாகவும், பாலையில் வேடர் கை அம்பாகவும் தோன்றி என்னை வருத்தும். ஆதலின் இவளைப் பிரிந்து செல்லுதல் இயலாது” என்ற இப்பாடற்கண், ‘கண்’ என்னுமொருசொல் கயல் முதலியவற்றொடு தனித்தனியே இயைந்து உருவகப் பொருள்படுவதால் இஃது உருவக தீவகம் ஆயிற்று. (தண்டி. 41-6) உருவகம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (15-17) வருவதோர் அணி. பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்ற காரணம் ஆறனில் உபமேயத்தையும் உபமானத்தையும் ஒன்று படுத்துவது இது. இஃது உயர்ச்சி, தாழ்ச்சி, சமம், காரணம், பேதகம், தற்குறி என ஆறு திறப்படும். உருவகம், உவமை இவற்றது புறனடை - உருவகம் உவமை என்னும் இருதிறத்து அணிகட்கும் எச்ச மின்றி யாவற்றையும் இலக்கணம் கூறி வரையறை செய்தல் இயலாது. ஆதலின், உரைக்கப்பட்ட வகைகளினும் வேறுபட வருவனவற்றையும் அறிந்து உருவகம் உவமை என்னும் அணிகளுள் அடக்கிப் பொருத்திக்கொள்ளுதல் வேண்டும். (தண்டி. 39) உருவகஅணி உவமையின் பகுதியாகவே பண்டைப் பெரியோ ரால் கொள்ளப்பட்டது. ‘குருகுலமாம் ஆழ்கடல்’ என்னும் சிந்தாமணிச் செய்யுட் பகுதியில் (290) நச்சினார்க்கினியர் அதனைக் ‘குறிப்புவமம்’ என்றே குறிப்பிட்டுள்ளார். உவமையும் உருவகமும் வரையறைக்கண் அகப்படா என்று இலக்கணவிளக்கம் புறனடை நூற்பாவால் (645) கூறும். உருவகம் பிற அணிகளொடு வருதல் - உவமை, ஏது, வேற்றுமை, விலக்கு, அவநுதி, சிலேடை என்னும் பிறஅணிகள் ஆறனுடன் உருவகம் விரவி வருதலு முடைத்து. (தண்டி. 38) உருவக மயக்கம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (108) வருவதோர் அணி. உருவகமும் மயக்கமும் இணைந்து வருவது. ‘மயக்க உருவகம்’ காண்க. உருவக மாற்றம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (106) வருவதோர் அணி. உறுதியாகக் கூறப்பட்ட பொருளை அஃது அன்று என்பது. எ-டு : ‘பொங்(கு)அளகம் அல்ல, புயலே இது;இவையும் கொங்கை இணைஅல்ல, கோங்(கு)அரும்பே’ (தண்டி. 38-5) என்றாற் போல்வன. ‘அவநுதி உருவகம்’ காண்க. உருவக வழுவமைதி - உபமானம் உபமேயம் என்னும் இரண்டு பொருளையும் ஒன்றாக்கி உருவகம் அமைக்கும்போது, உபமேயத்திற்கு அடைகூறினும் உபமானத்திற்கு அடை கூறினும் உருவகத் தன்மை நீங்காது கொள்ளப்படும். படவே, உபமேய உபமா னங்கள் இரண்டும் அடையின்றி வருதலே சிறப்பு எனவும், அவை அடையொடு வருதல் ஓராற்றான் ஏற்றுக் கொள்ளத் தக்கது ஆதலின் வழுவமைதியாம் எனவும் கொள்ளப்படும். ‘பருமணி வடத்திற் சேர்த்த படாமுலைக் களிறு’ ‘புருவவிற் குனித்து நாட்டப் பொருகணை உடக்கி’ முலைக்களிறு என்று உருவகம் செய்யாது, உபமேயமாகிய முலைக்குப் ‘படாமுலை’ என அடை கூறுவதும், நாட்டக்கணை என்று உருவகம் செய்யாது, உபமானமாகிய கணைக்குப் ‘பொருகணை’ என அடை கூறுவதும் உருவகத் தின்கண் வழுவமைதியாம். (மா. அ. 117) உருவக வாய்பாட்டான் வந்த அற்புத அணி - வியப்புத் தோன்ற உண்மைச் செய்தியை உரைக்கும் அற்புத அணி உருவக வாய்பாடு அமைய வருவது. எ-டு : ‘சங்கத் தமிழ்ச்சொற் கவிப்புல வீர்சல ராசிமண்மேல் உங்கட்(கு) அற்புத மாவதொன் றே; சிங்க ஓங்கலின்வாய்த் துங்கப் படைக்கை இரணியன் ஆகம் சுகிர்ந்தநர சிங்கத்தின் மார்பில் மலர்மக ளாம்பிணை சேர்ந்ததுவே.’ “சங்காலத் தமிழ்ச்சொற்களைக் கொண்டு கவிபாடும் புலவர்களே! சிங்கவேள் குன்றத்தில் ஆயுதங்களைக் கையி லேந்திப் போரிட்ட இரணியனது மார்பை நகத்தால் கிழித்த நரசிங்கத்தின் மார்பில் திருமகளாகிய பெண்மான் பொருந்தி யிருப்பது கடல் சூழ்ந்த உலகில் வாழும் உங்களுக்கு வியப்பைத் தரும்” என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், பெரு வீரனாகிய இரணியனையே பிளந்து அவன் உதிரத்தைக் குடித்த நரசிங்கத்தின் மார்பில் அகலாது வீற்றிருக்கும் திருமகளைப் பெண்மானாக உருவகம் செய்து, சிங்கத்தின் மார்பில் பெண்மான் அச்சமின்றி மகிழ்வொடு தங்கியிருக் கும் செய்தியில் அற்புதம் தோன்றச் சொல்லியது உருவக வாய்பாட்டான் வந்த அற்புதஅணியாம். (மா. அ. 138) உல்லாஸாலங்காரம் - அகமலர்ச்சி அணி எனத் தமிழ்நூலார் கூறுப. அது காண்க. உல்லேக அணி - இதனைத் தமிழில் ‘பலபடப் புனைவணி’ என்ப. (மா. அ. 126, 127) ஓர் உபமேயப் பொருளுக்கு உவமஉருபு தொகப் பல உபமானப் பொருள்களை ஒருவரேயோ பலரேயோ கூறுவது இவ்வணியாம். எ-டு : சடகோபனை ‘என் ஆருயிர், என் இரு கண்மணி, என் இதயத்துள்ளாய் மன் ஆரமிர்தம், என்மெய்க்கு அணியாரம், வகுளப்பிரான்’ என்று, உயிர் கண்மணி அமிர்தம் ஆரம் என ஒருவர் பலவகை யாகப் புனைத்துரைத்தல் முதல்வகையாம்; எ-டு : ‘முத்திக்கு வித்தென்பர் முத்திபெற்றார், முத்தியை விளைக்கும் பத்திக்கு வித்தென்பர் பத்தியுற்றார், பனுவல் தொகைதேர் புத்திக்கு வித்தென்பர் முத்தமிழ் வாய்மைப் புலவர்’ என்று பலரும் சடகோபனைப் பலவகையாகப் புனைந் துரைத்தல் இரண்டாம் வகையாம். ஆகவே, உல்லேக அணி ஒருவர் பல கவர்ப்பாய் உரைத்தது எனவும், பலர் பல கவர்ப்பாய் உரைத்தது எனவும் இரு வகைப்படும். (மா. அ. 126, 127) உலக வழக்கு நவிற்சி அணி - உலக வழக்கத்திலுள்ள சொற்றொடர்களைப் பொருள்நிலை கருதி வேற்றுச்சொற்களாக மாற்றிச் சொல்லாமல் வழக்கில் உள்ளவாறே பயன்படுத்துதலைக் கூறுவது. எ-டு : ‘அண்ணல்நீ பேசா(து) ஐந்(து) ஆறுமா சம்வரையில் கண்ணைமூ டிக்கொண் டிரு.’ “தலைவ! நீ பேசாமல் ஐந்தாறு மாதம் வரையில் கண்ணை மூடிக் கொண்டு இரு” என உலக வழக்கத்திலுள்ள சொற் றொடர்களை அப்படியே மாற்றாமல் பயன்படுத்துதல் இப்பாடற்கன் வந்துள்ளது. “தலைவ! சிலகாலம் வாளா இரு” என்று செய்யுள்வழக்கில் கூறு மரபினை விடுத்து, இவ்வாறு உலகவழக்கு மரபைப் பின்பற்றுதலையும் சான்றோர் அணியாகக் கொண்டனர். இது ‘லோகோத்தி அலங்காரம்’ என வடநூலுள் கொள்ளப் படும். (ச. 116, குவ. 90, மு.வீ. பொருளணி. 59) உலுத்த உவமை - உவமை தோன்றுதற்குரிய வினை பயன் மெய் உரு என்னும் நான்கானும் உபமானத்தோடு உபமேயம் ஒவ்வாது அவற்றுள் ஒன்று இரண்டு அல்லது மூன்று மாத்திரமே ஒத்திருப்பது. இதனைத் தமிழ்நூலார் குறைஉவமை என்ப. எ-டு : ‘வாவித் திருக்குருகூர் மாறா! நின் வண்தமிழ்என் நாவிற்கு இனிமை நயப்பதால் - தேவர் மருந்து நிகரென்றே மதித்துரைப்பன்.’ மாறன்தமிழ் உபமேயம்; தேவர்மருந்து உபமானம். சுவை (பயன்) ஒன்றே ஒத்து ஏனைய குறைந்த குறை உவமம்; வினை, மெய், உரு என்னும் மூன்றும் பற்றிய பொதுத்தன்மை ஈண்டில்லை. ‘வெள்ளைப் பிறைக்கோட்டு வெங்கரி’ பிறை யானையின் தந்தத்திற்கு மெய், உரு, (- வடிவும் நிறமும்) பற்றிய உவமம்; வினை, பயன் என்பன இரண்டும் பற்றிப் பொதுமை இல்லை. ‘பாயும் கருங்கயல்போல் பாங்கியிவள் தன்கண்கள்’ பாயுங் கருங்கயல் பாங்கியின் கண்களுக்குத் தொழில் பண்பு வடிவு இம்மூன்று பற்றிய உவமம். பயன் பற்றியது ஒன்றும் இல்லை. (மா. அ. 95 : 1 - 3) உவகை பற்றிய உவமம் - உவமம் உவகைச்சுவையொடு கூடிவருவது. எ-டு : தலைவன் தலைவியை மணத்தற்கண் உள்ள இடையூறு களை நோக்கி அவளை உடன்போக்கில் தனதூர்க்கு அழைத்துச் செல்ல முடிவு செய்ததைத் தலைவியிடம் கூறும் தோழி தலைவனுடைய இச்செயலால் ‘நீயே, நாடுகண் அகற்றிய உதியஞ் சேரல் பாடிச் சென்ற பரிசிலர் போல உவ, இனி! வாழி, தோழி’ (அகநா. 65) “உதியஞ்சேரலைப் பாடிய பரிசிலர் பரிசில் பெற்று மகிழ்வது போல இனி மகிழ்வாயாக!” என்று கூறியதன்கண், ‘பரிசிலர் போல’ என்ற உவமம் உவகைச்சுவை பற்றி வந்தது. (தொ. பொ. 294 பேரா.) உவகையைத் தோற்றுவிப்பன - ஒத்த காமத்தையுடைய ஒருவனும் ஒருத்தியுமோ, ஒருவனொடு மகளிர் பலரோ, ஆடலும் பாடலும் கள்ளுண்ணலும் களித்தலும் ஊடலும் ஊடலைப் போக்குதலும் கூடலும் பொருந்திக் குளங்களிலும் ஆறுகளிலும் புதுப்புனலாடி மகிழ்தலும், மலை வளங் காண்டலும், கடலாடுதலும், இல்லத்தில் மகிழ்வோடிருத்தலும், பலவகையாக அலங்கரித் துக் கொள்ளுதலும், உறக்கமின்றி இன்பம் துய்த்தலும், ஆடல்அழகிகளுடைய ஆடல் கண்டு மகிழ்தலும், நிலவின் பயன் கொள்ளுதலும், வேற்றிடங்களிற் சென்று மகிழ்வொடு தங்குதலும், நறுமலர் அணிதலும், சந்தனம் பூசிக்கோடலும் போல்வன துன்பங்கள் நீங்க மாசற்ற இன்பத்தை நுகர்ந்த மனஎழுச்சியைத் தரும் ‘சிருங்காரம்’ எனப்படும் புணர்வு பற்றிய உவகையைத் தோற்றுவிப்பனவாம். (செயிற்றியம்) (தொ. பொ. 255 இள.) உவமஅணி - காதல் சிறப்பு நலன் வலி இழிவு என்னும் இவ்வைந்தனொடு மெய்ப்பாட்டுணர்வுகளை நிலைக்களனாகக் கொண்டு, வினை பயன் மெய் உரு என்னும் நால்வகைத்தாய், அவை தனித்தோ தம்முள் விரவியோ வரப்பெற்று, உவமவுருபும் பொதுத்தன்மையும் விரிந்தும் தொக்கும், மரபுநிலை திரியாத மாட்சியோடு, இருதிணை ஐம்பால் முதல் சினை என்னும் இவை (உவமமும் பொருளுமாகிய) தம்மிடை மயங்கி வர, பொருளாகிய உபமேயத்தை நன்கு விளங்கச் செய்ய வல்லதாய், உள்ளுறையுவமமும் ஏனையுவமமுமென உள்ளம் கொள்ளுமாறு வருவது உவமம் என்பர் நூலோர். (தென். அணி. 8) உவம இயல், மெய்ப்பாட்டியல் செய்யுளியல்கட்கிடையே வைக்கப்பட்டமை - உவமமானது செய்யுளோடு ஒருங்கிணைந்து, சிறப்பு நலன் முதலாகியவையேயன்றி மெய்ப்பாடுகளையும் நிலைக்கள னாகக் கொண்டு தோன்றுதலான், உவமவியலை மெய்ப் பாட்டியலின் பின்னும் செய்யுளியலின் முன்னும் கூறுகிறார் ஆசிரியர். (தொ. உவ. பாயிரம். ச.பால.) உவம உருபுகள் - அணிய, அமர, அற்று, அன்ன, அனைய, ஆங்க, ஆங்கு, ஆண்டு, ஆர, இகல, இணைய, இயைய, இயைப்ப, இருள, இழைய, (ஐந்தன் உருபாகிய) இன், இன்ன, உணர்ப்ப, உரப்ப, உறழ, உன்ன, எதிர, எள்ள, என்ற, என்ன, ஏய்ப்ப, ஏய, ஏர்ப்ப, ஏர, ஏற்ப, ஒட்ட, ஒடுங்க, ஒப்ப, ஒன்ற, ஓட, ஓராங்கு, கடுப்ப, கதழ, கருத, கள்ள, காட்ட, காய்ப்ப, குரைய, கூட, கெழுவ, கேழ், கொண்ட, சிவண, செத்து, தகைய, துணிப்ப, துணைப்ப, துணை, தூக்கு, தேர, தேய்ப்ப, தொடிய, தெழிப்ப, நக, நடுங்க, நந்த, நளிய, நாட, நிகர, நிகர்ப்ப, நீக்க, நீர, நுணங்க, நேர, நோக்க, படிய, புரைய, புல்ல, பொருந்த, பொருவ, பொற்ப, போல, மதிப்ப, மருள, மலைய, மறல, மறுப்ப, மாற, மான, மிளிர, மிக, மெத்த, மெய்த்த, மேவ, வணங்க, வாவ, விட்ட, வியப்ப, விழைய, விளக்க, விறப்ப, வீழ, வெப்ப, வெல்ல, வென்ற முதலியன உவம உருபுகளாம். (சீர், துலை முதலாகச் சிலவும் உரையிற் கொள்ளப்பட்டன.) (தொ.பொ. 286 பேரா; வீ.சோ. 96 உரை; நன். 367) (மா.அ. 113; தண்டி. 35; இ.வி. 642) உவம உருபுகள் எண்பகுதிய ஆதல் - தொல்காப்பியனார் உவமஉருபுகளை வினைஉவம உருபுகள், பயன்உவம உருபுகள், மெய்உவம உருபுகள், உருஉவம உருபுகள் என நான்கு வகையாகக் குறிப்பிட்டு, மீண்டும் வினை முதலிய பற்றிய உவமஉருபுகள் தனித்தனி இருவகைப் படும் என்றார். வினைஉவம உருபுகள் - அன்ன, ஆங்க, மான, விறப்ப, என்ன, உறழ, தகைய, நோக்க - என்பன. இவற்றுள் அன்ன, ஆங்க, மான, என்ன - என்ற நான்கும் உவமப்பொருளன்றி வேறு பொருள் உணர்த்தாமையின் ஓரினமாயின. விறப்ப, உறழ, தகைய, நோக்க - என்ற நான்கும் உவமப்பொருளேயன்றி உரியும் வினையுமாகித் தமக்குச் சிறப்பாகிய வேறொரு பொருளையும் உடையன ஆதலின் ஓரினமாயின. பயன் உவம உருபுகள் - எள்ள, விழைய, புல்ல, பொருவ, கள்ள, மதிப்ப, வெல்ல, வீழ - என்பன. இவற்றுள் எள்ள, பொருவ, கள்ள வெல்ல - என்ற நான்கும் உவமத்தை இழித்துக் கூறுவன. விழைய, புல்ல, மதிப்ப, வீழ - என்ற நான்கும் உவமத்தை இழித்துக் கூறாது உயர்த்துக் கூறுவன. மெய்யுவம உருபுகள் - கடுப்ப, ஏய்ப்ப, மருள, புரைய, ஒட்ட, ஒடுங்க, ஓட நிகர்ப்ப - என்பன. இவற்றுள் கடுப்ப, மருள, புரைய, ஓட என்ற நான்கும் ஐயப்பொருளாக வரும். ஏய்ப்ப, ஒட்ட, ஒடுங்க, நிகர்ப்ப - என்ற நான்கும் ஐயமின்றி உவமமும் பொருளும் ஒன்று என்னும் உணர்வு தோன்ற வரும். உருஉவம உருபுகள் - போல, மறுப்ப, ஒப்ப, காய்த்த, நேர, வியப்ப, நளிய, நந்த - என்பன. இவற்றுள் போல, ஒப்ப, நேர, நளிய என்ற நான்கும் மறுதலையின்றிச் சேர்ந்தன என்ற பொருளில் வரும். மறுப்ப, காய்த்த, வியப்ப, நந்த - என்ற நான்கும் மறுதலைப் பொருள் தோன்ற உவமமாக வரும். இவ்வாறு நால்வகை உருபுகளும் எண்பகுதிய ஆயின. இனி, வினை பயன் மெய் உரு என்ற உவமத்தொகை நான்கு, உவமவிரி நான்கு என எட்டாகப் பகுத்தலும் உண்டு. (தொ. பொ. 293 பேரா.) உவம உருபுகள் சொல்லாக வழங்கும் திறன் - இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொல் போல நிற்கும் ஆதலின், இடைச்சொல்லாகிய உவம உருபுகளைச் செய, செய்தவென் எச்சவாய்பாட்டான் ஓதியபோதும் அவை வினையெச்சமாகவும் பெயரெச்சமாகவும் வினை முற்றாகவும் வினையாலணையும் பெயராகவும் வரும் என்பது வழக்கு நோக்கி உணரப்படும். எ-டு : புலிபோலப் பாய்ந்தான் - போல : வினையெச்சம் வேய் போன்ற தோள் - போன்ற : பெயரெச்சம். (வேய்-மூங்கில்) ‘மக்களே போல்வர் கயவர்’ (கு. 671) போல்வர் : வினைமுற்று ‘குன்றின் அனையாரும் குன்றுவர்’ (குறள். 965) அனையார்: குறிப்பு வினையாலணையும் பெயர். (தொ. பொ. 293 பேரா.) உவம உருபுகள் பண்டைய வரையறை கடந்தமை - தொல்காப்பியனார் காலத்தில் வினைஉவம உருபுகள், பயன் உவம உருபுகள், மெய்உவம உருபுகள், உருஉவம உருபுகள் ஆகியவை எவ்வெட்டாக வரையறை செய்யப்பட்டன. ஆயின் சங்ககாலப் பாடல்களிலேயே இவ்வரையறை கடக்கப் பட்டமையான், பின் வந்த வீரசோழிய உரையாசிரியர், நன்னூலார், தண்டியலங்கார ஆசிரியர், மாறனலங்கார ஆசிரியர் முதலியோர் உவமஉருபுகளைப் பொதுவாகவே குறிப்பிட்டுள்ளனர். உவம உருபுகள் பல் குறிப்பின ஆதல் - பல வினைச்சொற்கள் தமக்குரிய இயற்கைப் பொருளை விடுத்து உவமஉருபுகளின் பொருளை உடையனவாய்ச் செய்யுள்களில் பயில வழங்குகின்றன. ஆதலின் உவம உருபுக ளாக வரும் சொற்கள், போன்ற - போல - என்ற பொருள்களை யுடையனவாகத்தான் இருத்தல் வேண்டும் என்ற வரையறை இல்லை. ஆதலின் அவை பல குறிப்புக்களை உடையன எனப்பட்டன. பொற்ப - அழகு செய்ய; நாட - ஆராய; கடுப்ப - ஐயுற; மருள - வியக்க; ஒடுங்க - மனம் குன்ற; கள்ள - திருடிச்செல்ல; புல்ல - தழுவிக்கொள்ள; எள்ள - இகழ்தல் செய்ய; காய்த்த - கோபித்த - முதலிய சொற்கள் தம் இயற்கைப் பொருளை விடுத்து உவமஉருபாய் வருதலின், உவமஉருபுகள் பலகுறிப்பின எனப்பட்டன. (தொ. பொ. 286 பேரா.) உவமஉருபு பற்றிய மரபு - இன்ன இன்ன உவமத்திற்கு இன்ன இன்ன உருபுகள் சிறந்தன என்பது மரபு பற்றியே வரையறுக்கப்பட்டுள்ளது. புலி பாய்ந்தாங்கு பாய்ந்தான் என வினைஉவமத்திற்கு வரும் ஆங்கு என்ற உருபு, தளிராங்குச் சிவந்த மேனி என உரு - உவமத்திற்குக் கூறின் பொருந்தாது. மழை எள்ளும் வண்கை எனப் பயனுவமத்திற்குக் கூறும் எள்ளும் என்ற உருபு, புலி எள்ளும் பாய்த்துள் என வினை உவமத்திற்குக் கூறின் பொருந்தாது. மலர் கடுத்த கண்கள் என மெய்யுவமத்திற்குக் கூறும் கடுத்த என்ற உருபு, புலி கடுத்த பாய்த்துள், மழை கடுத்த வண்கை, பொன் கடுத்த மேனி என வினைஉவமம், பயன்உவமம், உருஉவமம் இவற்றிற்குக் கூறின் பொருந்தாது. இவ்வாறு வரையறுத்தற்கு அடிப்படை சான்றோர் செய்யு ளுள் அவ்வுருபுகள் பயின்றுவந்த மரபே என்பது. தொல் காப்பியம் வரையறுத்த மரபு கடந்து சான்றோர் செய்யுள் கண் வந்தனவும் கொள்ளப்படும். (தொ. பொ. 292 பேரா.) உவம உருபு புணர்ந்த தற்குறிப்பேற்றம் - ஒரு பொருளின் இயல்பான தன்மையை விலக்கிப் புலவன் தான் ஒரு தன்மையைக் கற்பனை செய்து கூறும் தற்குறிப் பேற்ற அணி உவமஉருபொடு கூடிவருதலுமுண்டு. எ-டு : ‘மாயன் குருகூர் வளர்மறையோர் விண்புரப்பான் தூய அழல்வளர்ப்பத் தோன்றுபுகை - நேய வகைத்தோட்டு வார்குழலாய்! வாசவனை விண்போய்ப் புகைத்தோட்டு கின்றது போன்ம்.’ குருகூரிலே தேவர்கள் மகிழ அந்தணர் வளர்க்கும் ஓமத் தீயினின்று எழும் புகை தேவருலகம் வரை சென்று பரவி அங்குள்ள தேவேந்திரனைச் சூழ்ந்துகொண்டு ஓட்டுவது போலக் காணப்படும் என்ற பொருளமைந்து தற்குறிப்பேற்ற மாக அமைந்த இப்பாடலில், ‘போன்ம்’ என்ற உவமச்சொல் வந்துள்ளது. (மா. அ. 142) உவமஉருபும் பண்பும் தொக்க தொகைஉவமை - உபமானம் உபமேயம் உவமஉருபு பொதுத்தன்மை என்ற உவமையணிக்குரிய செய்தி நான்கனுள் உவமஉருபும்பண்பும் தொக்கு உவமையணி வருதலு முண்டு. எ-டு : ‘பவளவாய் முத்தநகைப் பைந்தொடியீர்’ இப்பாடலடியில், பவளம் போலும் செவ்வாய், முத்துப் போலும் வெள்ளிய பற்கள் என்று குறிப்பிடாமல், உவம உருபும் பொதுத்தன்மையாகிய பண்பும் தொகுக்கப்பட்டுத் தொகை உவமையாகத் தொடர்கள் வந்துள்ளமை காணப்படும். (மா. அ. பா. 156) உவமஏது தொக்க தொகைஉவமை - உபமானத்திற்கும் உபமேயத்திற்கும் உரிய பொதுத்தன்மை மறைந்திருக்க, ஏனைய உபமானம் உவமையுருபு உபமேயம் என்னும் மூன்றும் அமைய வருவது. எ-டு : ‘நீலம்போல் கண்ணும் நிறைமதியம் போல்முகமும் வாலமதி போல்நுதலும்’ நீலம் போன்ற கரிய கண்ணும் நிறைமதியம் போன்ற சிவந்த முகமும் பிறை போன்ற வளைந்த நெற்றியும் என்று கூற வேண்டிய இவ்வுவமைகளில் உபமானத்தை உபமேயத் தொடு பொருத்துதற்கு ஏதுவாகிய பொதுத்தன்மைகளாகிய கருமை செம்மை, வளைவு என்பன மறைந்திருத்தல் இத் தொகை உவமை வகையாம். (மா. அ. பா. 155) உவமச் சொல் - ‘உவம உருபு’ (சீவக. 2490. உரை); அது காண்க. உவமத்தன்மை - செயற்கையாக ஒரு பொருளுக்குப் பெருமையோ சிறுமையோ கற்பிக்காமல் இயல்பாக உவமம் கூறுதல். ‘பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்(டு)ஈண்(டு) உலகுபுரப் பதுவே’ புறநா. 107 இப்பாடலடிகளில், உலகைக் காக்கப் பாரியைப் போல மாரியும் உண்டு என்று எவ்வகைச் செயற்கைக் கற்பனையு மின்றிப் பாரிக்கு மாரியை உவமம் கூறியது உவமைத் தன்மையாம். உவமிக்கப்படும் பொருளோடு உவமத்தைப் பொருத்திக் கூறாமல் உவமத்தின் தன்மையைப் பொருத்திக் கூறுதல். பாரியோடு மாரியைப் பொருத்திக் கூறாமல் மாரியினது உலகு புரக்கும் தன்மையைப் பொருத்திக் கூறுதல் என்று இத்தொடருக்குப் பொருள் கூறுவார் இளம்பூரணர். (தொ. பொ. 307 இள.) உவமத்தில் இனிதுறு கிளவி - உள்ளுறை உவமத்தில் இன்பம் தோன்றக் கூறுதல். எ-டு : ‘கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன்’ (குறுந். 8) கரையிலுள்ள மாமரத்தை அடைந்து, தாம் மாம்பழங்களைப் பெற முடியாதபோதும் வாளைமீன்கள் தண்ணீரில் பழுத்து விழும் மாம்பழங்களைப் பற்றி உண்டு மகிழும் ஊரன் எனவே, அவன் நாட்டில் வாழ்வார் எவ்வகை முயற்சியும் இன்றிப் பலவகை இன்பங்களையும் பெறுவர் என்ற உள்ளுறை அமைந்திருத்தல் இனிதுறு கிளவியாம். இனி, உவமத்தின்கண்ணும் இனிதுறு கிளவி வரும். எ-டு : ‘கல்கெழு கானவன் நல்குறு மகளே மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே’ (குறுந். 71) தலைவன் தனக்குத் தலைவி அமுதம் போலவும் சேமநிதி போலவும் உள்ளாள் என்று கூறுவது இனிதுறு கிளவி. (தொ. பொ. 303 பேரா.) உவமத்தில் துனியுறுகிளவி - உள்ளுறை உவமத்தில் துன்பம் தரும் செய்தி வருதல். ‘தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்ளை தின்னும் முதலைத்(து) அவனூர்’ (ஐங். 24) தன்தாய் வயிறு வெடிக்கத் தான் பிறக்கும் நண்டினையும், தன்குட்டியையே உண்ணும் முதலையையும் உடையது தலைவனூர் என்பதன்கண், தன் உற்றார் உறவினருக்குக் கொடுமை செய்வதில் கூசாதவன் தலைவன் என்று துனியுறு பொருளில் உள்ளுறை உவமம் கொள்ளப்பட்டது. வெளிப்படை உவமத்திலும் இது வரும். பரத்தையரது தொடர்பு கொண்ட தலைவனைப் பற்றித் தலைவி, ‘ஊரற்கு - மேலெல்லாம் சார்தற்குச் சந்தனச்சாந் தாயினேம்; இப்பருவம் காரத்தின் வெய்யஎம் தோள்’ (ஐந்.ஐம். 24) “களவுக் காலத்திலும் திருமணம் நிகழ்ந்த அணிமையிலும் தலைவற்குச் சந்தனக்குழம்பு போல இனியளாயிருந்தேன்; இப்பொழுது என் தோள்கள் தலைவன் தழுவுதலுக்குக் காரமருந்துபோல அவற்கு எரிச்சலைத் தருகின்றன” என்று கூறுவதன்கண், காரமருந்தினை உவமம் கூறுவது துனியுறு கிளவி ஆகும். (தொ. பொ. 303 பேரா.) உவமத்திற்கன்றி உவமத்திற்கு ஏதுவாய பொருட்குச் சில அடைகூறி, அவ்வடையானே உவமிக்கப்படும் பொருளைச் சிறப்பித்தல் - ‘நெடுந்தோட்(டு) இரும்பனை நீர்நிழல் புரையக் குறும்பல முரிந்த குன்றுசேர் சிறுநெறி’ நெடிய மட்டைகளையுடைய கரிய பனையின் நிழல் நீரில் காணப்படுவதை ஒப்பக் குறுகிப் பலவாய் வளைந்த மலைப் பக்கத்துச் சிறுவழி என்னும் பொருளுடைய இவ்வடிகளில், நெடுந்தோட்டு இரும்பனை நீர் நிழல் - உவமம் குன்றுசேர் சிறு நெறி - உபமேயம் உவமத்திற்கு நெடுந்தோடு இருமை என்ற அடைகள் கூறப் பட்டுள்ளன. உபமேயத்திற்கு அடைகள் கூறப்படவில்லை. ஆயினும், உவமத்தைக்கொண்டு, பனையின் நிழலை ஒத்த (குன்றுசேர்) சிறுநெறி முடியுமிடத்தில் சிற்றூர் காணப்படும் என்பதனை ‘நெடுந்தோடு’ என்னும் உவம அடையால் கொள்ள வைத்தல் ‘வேறுபட வந்த உவமத் தோற்றம்’ ஆகும். (தொ. பொ 307 பேரா.) இதனைப் பிற்காலத்தார் மறுபொருளுவமையுள் அடக்குப. உவமத்திற்கு இருகுணம் கொடுத்துப் பொருளை வாளாது கூறி உவமத்தை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடை ஒன்றற்குக் கூறாது கூறல் - ‘ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும! எமக்கே; மற்றதன் துன்னருங் கடாஅம் போல இன்னாய் பெரும் ! நின் ஒன்னா தோர்க்கே! (புறநா. 94) “ஊரிலுள்ள சிறுவர் தன் தந்தங்களைக் கழுவுமாறு இனிமையாகக் குளத்தில் குளிக்கும் களிறு போல, நீ புலவர்க ளாகிய எம்மிடம் இனிமையாகப் பழகுகிறாய்; அக்களிற்றின் மதம்பிடித்த நிலையைப் போல நின்பகைவரிடம் கொடுமை யாக நடக்கிறாய்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், இனிய குணத்தோடிருக்கும் யானைக்குச் சிறுவர் தன் கோடுகளைக் கழுவுமாறு இருத்தலை அடையாகக் கூறி, மதம்பிடித்த யானைக்கு அத்தகைய அடைமொழி எதுவும் கொடாது விடுத்தல் ‘வேறுபட வந்த உவமத் தோற்ற’த்துள் ஒன்று. இதனைப் பிற்காலத்தார் மறுபொருள்உவமையுள் அடக்குப. (தொ. பொ. 307 பேரா.) உவமத்திற்கு உவமம் கூறுதல் கூடாமை - ‘மதியத் தன்ன வாண்முகம் போலும் பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை’ சந்திரனைப் போன்ற முகத்தைப் போன்ற தாமரையையுடைய பொய்கை என்ற இத்தொடரில், முகம் முதலில் மதியத்திற்கு உபமேயமாகவும், பிறகு தாமரைக்கு உபமானமாகவும் வந்து மயக்கம் தருவதான் உவமத்திற்கு உவமம் கூறுதல் கூடாது என்பது. (தொ. பொ. 311 பேரா.) உவமத்திற்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதல் - ஒடுங்கா உள்ளத்(து) ஓம்பா ஈகைக் கடந்தடு தானைச் சேர லாதனை யாங்கனம் ஒத்தியோவிலங்கு செலல் மண்டிலம்? ........................................................................................... அகலிரு விசும்பி னானும் பகல்விளங் கலையால் பல்கதிர் விரித்தே.’ (புறநா. 8) “மதியமே! நீ சேரலாதனை எம்முறையிலும் ஒப்பாயல்லை” என உவமமாகிய மதியத்தையும் உபமேயமாகிய சேரலாத னையும் ஒப்புமைப்படுத்திக் கூறுவது இப்பாடல். சேரலாதன் தேய்ந்து ஒடுங்காத உள்ளம் உடையவன். மதியமோ நாள்தோறும் தேய்ந்து ஒடுங்கும். சேரலாதன் தனக்கென ஒன்றும் கொள்ளாமல் யாவும் ஈபவன்; மதியமோ நாள்தோறும் ஓரோர் கலையாகப் பல்லுயிர்க்கும் இன்பம் பயக்குமாறு தருவதல்லது, தன்கலை களையெல்லாம் ஒவ்வொரு நாளும் முழுமையாகத் தாராதது. சேரலாதன் பகைவரைக் கடந்து வெல்லும் தானையை உடையவன்; மதியினுடைய தானையாகிய விண்மீன்கள் பகைக்கதிராகிய சூரியனுக்குத் தோற்று ஒளி மங்குவன. சேரலாதன் இவ்வுலகிலும் பகலிரவு இருநேரமும் விளங்கு வான்; மதியம் வானத்திலும் பகலில் விளங்காது. இவ்வாறு உவமத்திற்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதல் ‘வேறுபட வந்த உவமத் தோற்ற’ங்களுள் ஒன்று. (தொ. பொ. 307 பேரா.) உவமத்தின் திறப்பாடு நோக்கிப் பொருளுணர்ந்து கொள்ளுமாறு - உவமம் செய்யும் பொருளான் உவமிக்கப்படும் பொருளின் தன்மையை அறிதலேயன்றி, உணரும் திறப்பாட்டானே பொருளுக்குற்ற பிறநிலையெல்லாம் தெளிந்துகொள்ளும் இடமும் உளவாம். என்றது, உவமத்தின் திறலான் பொருளின் பல்வேறு நிலைகளையும் அறிந்து கொள்ளலாம் என்றவாறு. எ-டு : ‘தொட்டனைத் தூறும்’ என்று தொடங்கும் திருக்குறள் (396) மணற்கேணி ஊறிப் பெருகுதலாகிய தொழில்தன்மையை விளக்குதலோடு, மணற்கேணி தோண்டுவதற்கு எளிதாதல் போலக் கல்வி அறிவுபெறுதற்கு எளிய வழி என்பதும், மணற்கேணியின் ஊற்றுப் பரந்துபட்டு ஒரு சீராக ஊறிப் பெருகுதல் போல அறிவு பல கோணங்களில் பரந்து பெருகி நிரம்பும் என்பதும், மணற்கேணியின் ஊற்று நீர் தெளிவும் தூய்மையும் உடையதாதல் போலக் கல்வியான் வரும் அறிவு தெளிவும் தூய்மையும் உடையதாக விளங்கும் என்பதும், மணற்கேணியின் ஊறிய நீரைப் பயன் கொள்ளாவழி ஊற்றுக்கண் தடையுற்று மேலே பெருகாதவாறு போலக் கல்வியைப் பயிலப் பயிலப் பெருகிய அறிவினைச் சிந்தையி லேற்றுத் தனதாக்கிப் பயன் கொள்ளாதவழி மேலும் மேலும் கருத்துக்கள் தோன்றா என்பதும், பிறவும் அவ்வுவமத்தான் தெரிந்து கோடலாம். எ-டு : ‘உருள்பெருந்தேர்க்(கு) அச்சாணி அன்னா ருடைத்து’ (குறள். 667) அச்சாணி என்னும் உவமத்தான், பொருளாகிய அரசன் நாடாளும் பாரத்தைச் சுமத்தலும், வடிவாற் சிறியனாயினும் வலியாற் பெரியனாதலும், உருள் தன்னிடமாக அமைந்து இயங்குதல் போல ஆட்சி தன்னிடமாக அமைந்து நடை பெறுதலும் பிறவும் தெளியப்படும். (தொ. உவம. 20 ச. பால.) உவமத்தின் பயன் - உவமத்தின் பயன் பொருளைப் புலப்படுப்பதாம். “காட்டுப்பசு(-ஆமா) நாட்டுப்பசுவை(-ஆ)ப் போன்றிருக்கும்” என்று உவமம் கூறக்கேட்ட ஒருவன், முன்பு காட்டுப்பசுவைக் கண்டிலனாயினும், காட்டில் செல்லும்போது தான் முன்பு கேட்ட உவமத்தைக் கொண்டு இன்ன விலங்கு காட்டுப் பசுவாம் என்று காட்டுப்பசுவைக் கண்ட அளவில் உணர்தல் இயலும். இவ்வாறு பொருளை நன்கு விளங்கச் செய்வதே உவமத்தின் பயனாகும். (தொ. பொ. 276 பேரா.) உவமத்தொகை - உவமத்திற்கும் பொருட்கும் இடையே உவம உருபு மறைந்து வருவது. எ-டு : புலிப்பாய்ச்சல் - வினைஉவமைத்தொகை மழைவண்கை - பயனுவமத்தொகை வேய்த்தோள் - மெய்உவமத்தொகை பவளவாய் - உருஉவமத்தொகை (தொ. பொ. 293 பேரா.) உவமத் தோற்றம் - உவமத்தால் பொருள் தோன்றும் தோற்றம். எனவே, பொருளைப் புலப்படுத்துதலே உவமத்தின் பயன் என்பது. எங்ஙனமோ எனின், பசுவைப் போன்றது காட்டுப்பசு என்று கூறின், காட்டுப்பசுவை முன்பு கண்டறியாதவன், காட்டகத்துச் சென்றவழி அதனைக் கண்டால் பசுவைப் போன்றது என்ற உவமத்தைக் கொண்டு அது காட்டுப்பசு என்று அறிவான். இதனால் உவமத்தின் பொதுஇலக்கணம் பொருளைப் புலப்படுத்தலே என்பது புலனாம். (தொ. பொ. 276 பேரா.) உவமத்தோற்றத்திற்கு உரியதோர் இலக்கணம் - உவமத் தோற்றமானது வினை பயன் மெய் உரு என்பன பற்றி நிகழ்தலின், திணையும் பாலும் மயங்கி வருதல் இலக்கணமே என்பதும், அங்ஙனம் வருதல் வழுவமைதி ஆகாது என்பதும் ‘விரவியும் வரூஉம் மரபின என்ப’ (உவம - 2) என்பதனான் பெறப்படும். மரபுபற்றி அது வேண்டியவாறு வரும். (தொ. உவம. 6 ச. பால.) உவம நிலைக்களன் ஐந்து - உவமம் தோன்றுதற்கு நிலைக்களன்கள் சிறப்பு, நலன், காதல், வலி, கிழக்கிடு பொருள் என்ற ஐந்தாம். சிறப்பு - உலகில் இயல்பாக அமைந்த பெருமை அன்றித் தத்தம் செயல்களான் தேடிக் கொண்ட பெருமை நலன் - அழகு காதல் - சிறப்பும் நலனும் இல்லாதவிடத்தும், தம் அன்பினான் அவை உள்ளன போலக் கொண்டுரைப்பது. வலி - தன் தன்மையான் உள்ளதோர் ஆற்றல். கிழக்கிடு பொருள் - கீழ்ப்படுக்கப்பட்ட பொருளாகிய இழிந்த பொருளை (உயர்ந்ததல்லாத பொருளை) உவமமாகக் கூறுவது என்பர் இளம் பூரணர்) (276). (தொ. பொ. 279, 280 பேரா.) உவமப் பொரு - பொரு என்பது ஒப்பிடுதல். உயர்த்தியோ தாழ்த்தியோ ஒப்பிடுவது உறழ்பொரு எனவும், சமமாகக் கூறி ஒப்பிடுவது உவமப்பொரு எனவும் கூறப்படும். இவள்கண்களை ஒக்கும் அவள்கண்கள் என்பது உவமப் பொரு. உறழ்தல் - ஒன்றனின் ஒன்றை மிகுத்தல். (தொ. சொல். 78 நச்.) உவமப் பொருள் வழக்கொடு வருதல் - உவமத்தைக்கொண்டு பொருளை (உபமேயத்தை) நன்குணர வேண்டுமாதலின் உவமம் தொன்றுதொட்டு வழக்கில் பயின்று பலராலும் நன்கு உணரப்பட்டதாக இருத்தல் வேண்டும். “பரத்தை கைப்பொருளோடு அகப்பட்ட கள்வரைப் போல நாணி நின்றாள்” (அகநா. 16) என்றவழி, கைப்பொருளோடு அகப்பட்ட கள்வரது மனநிலை எவ்வாறிருக்கும் என்பதனை உலகமக்கள் நன்குணர்வர் ஆதலின், அந்த உவமத்தான் உவமேயமாகிய பரத்தையின் மனநிலையும் விளக்கிக் கூறாமலேயே நன்கு உணரப்படும் என்பது. (தொ. பொ. 296 பேரா.) ‘உவமப்பொருளின் உற்றது உணர்தல்’ - உவமத்தைக்கொண்டு உபமேயத்துக்கு உரிய செயலனைத் தும் வெளிப்படக் கூறப்படாமலேயே உணருமாறு உவமம் அமைந்திருக்கும். தலைவி தன் சிறுவனிடம், ‘வேனில் புனலன்ன நுந்தையை நோவார்யார்?’ (கலி. 84) என்று கூறுகிறாள். வேனில் புனல் - உவமம்; நுந்தை - உப மேயம். வேனிற் காலத்தில் ஆற்றில் வரும்புனலில், இன்னார் இனியார் என்ற வரையறையின்றி எல்லோரும் குளித்து விளையாடி இன்புறுவர். இந்த உவமத்தான், தலைவன் இன்னார் இனியார் என்ற வரையறையின்றிப் பரத்தையர் எல்லாரானும் மகிழ்ந்து திளைத்து விளையாடு தற்கு உரியனாகத் தன்னைச் செய்துகொண்டான் என்ற உவமேயச் செய்தி புலப்படுகிறது. (தொ. பொ. 295 பேரா.) உவமப்போலி - உவமஅணியில், உவமச்சொல் உபமேயம் உவமஉருபு பொதுப்பண்பு என்ற நான்கும் இருத்தல் வேண்டும். சில விடத்தே உவமஉருபும், சிலவிடத்தே பொதுத்தன்மையும், சிலவிடத்தே அவ்விரண்டும் தொக்கும் வரும். பவளம் போலும் சிவந்த வாய், பவளச் செவ்வாய், பவளவாய் - என் றாற் போல உவமஅணிகள் வருதல் இயல்பு. உபமேயத்தைக் கூறாமல் உபமானம் மாத்திரம் கூறி அவ்வுபமானத்திற்குக் கூறப்பட்ட செய்திகளைக்கொண்டு உபமேயத்திற்கு உரிய செய்திகள் அனைத்தும் உய்த்துணருமாறு கூறுவது உவமப் போலி எனப்படும் உள்ளுறை உவமமாகும் என்பது பேராசிரியர் கருத்து; நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவே. எ-டு : ‘கரும்புநடு பாத்தி கலித்த தாமரை சுரும்புபசி களையும் பெரும்புன லூர’ (ஐங். 65) இவ்வடிகளில் கூறப்பட்ட பொருள்: கரும்பை நடுவதற் கென்றே அமைந்த பாத்தியில் தவறித் தோன்றிய தாமரைக் கொடியின் மலர் வண்டுகளது பசியைத் தனது தேனால் போக்குகிறது என்பது. இந்த உபமானம் மாத்திரமே இங்குக் கூறப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு உபமேயத்தை உய்த்துணர்தல் வேண்டும். அஃதாவது பரத்தையர்க்கென்றே அமைக்கப்பட்ட தலைவன் இல்லத்தில் தலைவியும் இருந்து இல்லறம் பூண்டு விருந்தோம்புகின்றாள் என்பது. (தொ. பொ. 300 பேரா.) உவமப்போலி என்பன உவமையைப் போன்று வருவன எனவும், அவை ஐவகைப்படும் எனவும் இளம்பூரணர் கூறுவர். (295) உவமப்போலி கலந்தும் வருதல் - ஒரு பாடற்கண்ணேயே பல உவமப்போலிகளும் கலந்து வருதலுமுண்டு. எ-டு : ‘மழைதவழ் பலவின் வான்சினை நீழல் தழைதரும் அரம்பை தான்பொறை உயிர்ப்ப விசும்புமிழ் திவலையின் விழுமிதின் முற்றிய பசுங்காய் மதுரப் பயன்படு காலை நிறத்த பாசடை நீள்சினை வாட இறப்பளித்(து) உலகில் பிறர்க்குறு பயனாம்.’ பலவின் நீழலில் வாழை தாறு ஈன்றது - நற்றாயால் வளர்க் கப்பட்ட தலைவி பருவமடைந்து மணம் முடிந்த பிறகு ஒருபெண்மகவைப் பெற்றாள். வினைஉவமப்போலி இது. மழைநீரினால் வாழைத்தாறு முற்றியது - செவிலியராலும் ஆயத்தாராலும் பேணப்பட்ட அம்மகள் பருவம் அடைந் தாள். மெய்உவமப் போலி இது. பசிய காய் நன்கு முற்றிப் பழுக்கத் தொடங்கியது - மகள் நன்கு பருவம் எய்தி இன்பநுகர்ச்சிக்குப் பக்குவமான உடலை யுடையளாயினாள். மெய், உரு உவமப்போலி இது. தாய்வாழை வாடுமாறு அதனைச் சாகவிட்டு வாழைத்தாறு பிறர் கைவசப்பட்டது - தாய் உடல் வாட மனம் நொந்து சாம்ப, அம்மகள் அவளுக்கு ஒருபயனுமின்றித் தன்னை உடன்போக்கில் அழைத்துச் சென்ற ஆடவனுக்கே ஊதிய மானாள். பயன் உவமப் போலி இது. இவ்வாறு வினை, பயன், மெய், உரு என்ற நால்வகை உவமப் போலிகளும் ஒரு பாடலிலேயே கலந்து வந்தவாறு. (மா. அ. பாடல். 282) உவமப்போலியின் ஐவகை - வினைஉவமப்போலி, பயன்உவமப்போலி, மெய்உவமப் போலி, உருஉவமப்போலி, பிறப்புஉவமப்போலி என உவமப் போலி ஐவகைப்படும். (தொ. பொ. 299 பேரா.) உவமையைப் போன்று வருவன ஐந்து. அவையாவன : 1. இதற்கு உவமை இல்லை; 2. இதற்கு இது தானே உவமை; 3. பலபொருளிலும் உளவாகிய உறுப்புக்களைத் தெரிந்து எடுத்துக்கொண்டு சேர்த்தின் இதற்கு உவமையாம்; 4. பலபொருளினும் உளதாகிய கவின் ஓரிடத்து வரின் இதற்கு உவமையாம்; 5. கூடாப் பொருளோடு உவமித்து வருவன - என்பனவாம். (தொ. பொ. 295 இள.) உவமம் - இஃது உவமை எனவும்படும். (‘உவமன்’ என்று கடைப் போலியாக வழங்குவதுமுண்டு.) ஒருபொருளை விளக்க உலக மறிந்த ஒன்றனைக் கூறுவது உவமமாம். அவ்வுவமம்தான் வினை, பயன், மெய், உரு என நான்கு வகைப்படும். உவமத்தை உபமானம் எனவும், உவமம் செய்யப்படும் பொருளை உபமேயம் எனவும் கூறுதல் வழக்கு. புலி போலப் பாய்ந்தான் - வினைபற்றி வந்த உவமம் மழை போலக் கொடுத்தான் - பயன்பற்றி வந்த உவமம் முழவு போன்ற தோள் - மெய் (-வடிவு) பற்றி வந்த உவமம் பொன் போன்ற மேனி - உரு (-நிறம்) பற்றி வந்த உவமம் உவமம் அடுக்கி வருதல் - ‘மதியத் தன்ன வாள்முகம் போலும் பொதியவிழ் தாமரைப் புதுப்பூம் பொய்கை’ எனச் சந்திரனைப் போன்ற ஒளியையுடைய முகத்தைப் போன்ற தாமரையையுடைய பொய்கை என்று உவமங்களை அடுக்கிக் கூறின், முதலில் சந்திரன் - உவமை, முகம் - உபமேயம்; அடுத்து, முகம் - உவமை, தாமரை உபமேயம்; இவ்வாறு ஒரு தொடரிலேயே ஒருபொருளே உபமேயமாக வும் உபமானமாகவும் வரும்நிலை ஏற்படுவதால் உவமம் அடுக்கி வருதல் கூடாது. (தொ. பொ. 311 பேரா.) ஆயின் ஓர் உபமேயத்திற்கே பல உவமங்கள் அடுக்கி வரலாம். எ-டு : ‘குன்றி கோபம் கொடிவிடு பவளம் ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்நிறம்’ என்றவிடத்து நிறத்திற்குக் குன்றி கோபம் பவளம் செங் காந்தள் எனப் பலவும் உவமமாகி வருதல் ஏற்புடைத்து. உவமம் அணி என்றல் - ‘தாமரைபோல் வாள்முகத்துத் தையலீர்’ என்றவழி அலங் காரமாகிக் கேட்டார்க்கு இன்பம் பயத்தலின் உவமம் செய்யுளுக்கு அணியாகும் என்பர் இளம்பூரணர் (272) உவமம் செய்யுளுக்கு அழகு செய்யும் பொருளுறுப்பு என்ப தல்லது, அதனை அணி எனல் கூடாது. சாத்தனையும் சாத்த னான் அணியப்பட்ட முடியும் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற் போல, அவ்வணியும் செய்யுளின் வேறாகல் வேண்டும். உவமம் செய்யுளினின்று பிரிந்து வேறாகல் இன்மையின் உவமம் அணி ஆகாது என்பர் பேராசிரியர். (பொ. 312) உவமம், உவமை : வேறுபாடு - உவமம் என்பது உவமிக்கும் பொருளையும், உவமை என்பது அதன் தன்மையையும் குறிப்பன. அவற்றான் விளக்கம் பெறுவது பொருளாகும். உவமத்தை உபமானம் என்றும், பொருளை உபமேயம் என்றும் கூறுப வடநூலார். உவமம் என்பது சொல்லப்படும் பொருளை விளக்கம் செய்யக் காட்டாக வருவது; அதனான் விளக்கம் பெறுவது பொருள். இவ்விரண்டற்கும் உரிய பொதுத்தன்மையே உவமை எனப்படும். உவமப்பொருள், உவமத்தன்மை, உவமச்சொல், (உருபு) இம்மூன்றும் உபமேயத்தை விளக்கி நிற்கும் காரணத்தான் இம்மூன்றையும் உவமம் என்ற குறியீட்டான் வழங்குதல் நூலாசிரியர் மதம். (தொ.உவம. பாயிரம் ச.பால.) உவமம் நாலிரண்டாகும் பாலாதலும் உண்மை - உவமத்திற்கு நிலைக்களம் எட்டாகும் பக்கமும் உண்டு. பக்கமும்: உம்மை உவமத்திற்கு நிலைக்களம் சிறப்பு நலன் காதல் வலி கிழக்கிடுபொருள் எனப்பட்டவையே அன்றி என இறந்தது தழுவிய எச்சவும்மை. நாடகத்திற்குரிய சுவையெட்டும் இயற்றமிழின்கண் செய்யு ளுறுப்பாக அமைந்து பொருள் புலப்பாடு செய்யுமிடத்தே மெய்ப்பாடாம். நாடகக் காட்சியாகக் காண்போரின் உணர் வளவே நிகழுமிடத்து அவை சுவையாம் என்பது மெய்ப் பாட்டியலுள் சுட்டப்பட்டது. உவமம் தோன்றுவதற்கு அடிப்படை உள்ளத்துணர்வே ஆகலான் சுவைப்போரின் எண்வகைச் சுவையும் நிலைக் களனாக அமையும் என்று உவம இயலுள் குறிப்பிட்டார். (தொ. உவம. 18 ச. பால.) உவமம் ஒஇக் கூறல் - உவமம் உவமேயத்தை ஒக்கும் என்று கூறாது ஒவ்வாது என்று கூறுதலும் உவம வழக்காம்; ஒப்பிட்டுப் பார்த்தபின்னரே ஒவ்வாது என்று கூறுதலின், ஒப்பிடுதற்கண் உவமம் பயன் பட்டவாறு. எ-டு : ‘சேரலாதனை, யாங்கனம் ஒத்தியோ விலங்குசெலல் மண்டிலம்’ (புறநா. 8) ‘சேரலாதனைச் சந்திரன் ஒவ்வாது’ என்று கூறுதலும் உவமத்தின் ஒரு வகையாம். (தொ. பொ. 308 பேரா.) உவமம் கூறும் திறன் - வினை, பயன், குலன், குணன், அளவு, நிறம், எண், முதல், சினை, பண்பு என்ற பத்தனோடு, மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறி உணர்வுகளாகிய ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை என்பவற்றையும் சேர்த்துப் பதினைந்து வகையினுள் பொருந்துவன வற்றைப் பொருந்துவனவற்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பது உவமமாம். இல்லாத பொருள்களையும் நூல் வாயிலாகக் கேட்டறிந்த பொருள்களையும் ஒருதலையாகத் துணிந்த பொருள்களை யும் முழுப்பொருள்களையும் உறுப்புக்களையும் பற்றி உவமம் கூறுங்கால், கேட்போர், உவமத்தான் விளக்கப்படும் பொருளை நன்கு அறிந்துகொள்ளுமாறு உவமத்தை அமைத்துக் காட்டுதல் வேண்டும். (வீ. சோ. 96 உரை மேற்.) உவமம் இயற்கையாகவும் புனைந்துரையாகவும் அமையும். இரண்டுமூன்று குணங்களான் ஒப்புமை கூறுவது சிறப்புடை யது. உபமானத்துக்கு இரண்டுபண்புகளும் உபமேயத்துக்கு இரண்டு பண்புகளும் ஒப்புமை கொள்வது தலையாகு ஒப்பாகும். உவமம் கூறிய அளவில் உபமேயம் தெளிவாக விளங்குமாறு உவமம் கூறுதலே சிறந்தது. அங்ஙனம் அல்லாது போயின், குருடனும் பித்தனும் யானையைப் பற்றிக் கூறிய செய்தி போலாகிவிடும். ஒப்புமை செய்யும் பொருள்களில் ஓரோஒரு சிறந்த பண்பைப் பெரிதும் விளக்கி உரைப்பது அதிசய ஒப்பு. ஒப்புமை ஐயமாகவும் துணிவாகவும் இருக்கலாம். (வீ. சோ. 96 உரை மேற்.) அகம், அகப்புறம், புறம், புறப்புறம் எனுமிவை பெறும் உரைகள் இருபத்தேழனுள் உவமம் என்பதும் ஒன்று. (வீ. சோ. கா. 91) உவமம் மெய்ப்பாடு பற்றி வருதல் - மெய்ப்பாடும் பொருளைப் புலப்படுத்துவது. உவமமும் பொருளைப் புலப்படுத்துவது. ஆதலின் பொருளைப் புலப்படுத்தும் உவமம் மெய்ப்பாடும் பற்றி வருமாயின் பொருளை நன்கு புலப்படுத்துமாதலின், உவமமானது நகை, அழுகை, இளிவரல், மருட்கை அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை - என்ற எண்மெய்ப்பாடும் பற்றி வரும். “தலைவியின் குழந்தையைக் கையிலேந்திய பரத்தை தலைவி யால் காணப்பட்டவழித் திருடிய பொருளோடு அகப்பட்ட கள்வரைப் போல நாணி நின்றாள்” (அகநா. 16) என்றவழி, கண்டவர்க்கெல்லாம் பெருநகை உண்டாகுமாறு நின்ற செய்தி அவ்வுவமத்தான் பெறப்படுதலின், பரத்தையைக் கண்டவர்களுக்கு எள்ளற்பொருட்டாகிய நகை பிறந்தமை யும் போதந்து செய்யுட் பொருளை இனிது விளக்கியவாறு. (தொ. பொ. பேரா. 294.) உவமமும் பொருளும் ஒத்தல் - உபமானம் உபமேயத்திற்குப் பொருத்தமானது என்று நன்மக்கள் மனத்தில் கொள்ள வேண்டும். ‘மயில் தோகை போலும் கூந்தல்’ என்பதன்றிக் கருமை பற்றிய ஒப்புமையான் ‘காக்கைச் சிறகன்ன கருமயிர்’ என்று கூறுதலையும், ‘புலி போலப் பாய்ந்தான்’ என்பதன்றிப் பிழையாமல் பாயும் என்பதே பற்றிப் ‘பூனை போலப் பாய்ந்தான்’ என்று கூறுதலையும் நன்மக்கள் ஏலார் ஆதலின் அவர்கள் உடன்பட்ட உவமங்களையே கூறுதல் வேண்டும். (தொ. பொ. 283 பேரா.) உவமத்தைப் பொருள் ஒத்தது எனவும், வென்றது எனவும் கூறும் மரபுண்டு. தலைவியின் கண்கள் கூற்றுவன்வேல் போன்று முருகன் வேலை வென்றன எனவும், அவள்மொழி தெள்ளிய தேனை வென்று தெள்ளமுதை ஒத்தது எனவும் கூறுதல் காண்க. (மா. அ. 106) ‘உவமமும் பொருளும் ஒத்து’ வருமாறு - ஒரு பொருளைப் பற்றி உவமம் கூறுமிடத்து உவமத் தன்மையும், உவமஉருபும் உவமிக்கப்படும் பொருளோடு ஒத்தனவாதல் வேண்டும். ஒன்றனை உவமமாக்கிக் கூறுங்கால், அப்பொருளின் உவமத் தன்மையை உலகத்தார் ‘இஃது ஒத்தது’ என உள்ளங் கொள் ளுமாறு தேர்ந்து கூறல் வேண்டும் என்பது இதன் கருத்தாம். இனி, ‘ஒத்தல் வேண்டும்’ என்பதற்கு வினை பயன் மெய் உரு ஆகிய வகையேயன்றித் தகவான் ஒத்தல் வேண்டும் என்பதும் பொருளாகக் கொள்க. ‘வேந்தற்கு வீரர் வேங்கை போல்வார்’ என்பதே தகவு; ‘மன்னவற்கு நாய்போல் வயவர் பலர்’ என்பது தகவு ஆகாமை அறிக. (தொ. உவம. 8 ச. பால.) உவமமும் பொருளும் முற்கூறி நிறீஇப் பின் மற்றவை ஒவ்வா என்றல் - மன்மதனையும் சோழனையும் முன்னர் வடிவு பற்றி ஒப்பிட்டுப் பார்த்துப் பின் நிறம்பற்றி மன்மதன் கரியனாதலையும் சோழன் செய்யனாதலையும் கொண்டு உவமமும் பொருளும் ஒவ்வா என்ற கருத்தில் அமைந்த ‘சுற்றுவில் காமனும் சோழர் பெருமகனாம் கொற்றப்போர்க் கிள்ளியும் கேழ்ஒவ்வார் - பொற்றொடி! ஆழி யுடையான் மகன்மாயன்; சேயனே கோழி யுடையான் மகன்.’ என்ற பாடல் ‘வேறுபட வந்த உவமத் தோற்ற’த்துள் ஒன்றாகும். (தொ. பொ. 307 பேரா.) உவமவாசகம் - உவமஉருபு; அது காண்க உவமவியலுக்கு மெய்ப்பாட்டியலோடு இயைபுடைமை - உவமம் என்பது பொருளைப் புலப்படுக்கும் கருவிகளுள் ஒன்று. ‘ஆபோலும் ஆமா’ என்றக்கால், ஆமாவை முன்பு கண்டறியாதவன் காட்டுள் சென்றவழி ‘ஆபோலும்’ என்ற உவமத்தைக் கொண்டே ஆமாவை அறிதல் இயலும். ஆதலின் உவமத்தின் செயல் பொருளைப் புலப்படுத்துவ தாம். (ஆமா - காட்டுப்பசு) மெய்ப்பாடாவது உலகத்து மக்களின் உள்ளத்திலுள்ள செய்திகளை அங்கு நிகழ்ந்தபடியே வெளியிலுள்ளவர் களுக்கு, உடம்பில் வெளிப்படையாக நிகழும் நிலையற்ற மாற்றங்களைக் கொண்டு அறிவிப்பதாம். ஆகவே, பொருள்களைப் புலப்படுத்த உதவும் மெய்ப்பாட் டியலின் பின்னர், வேறொரு வகையான் பொருள்களைப் புலப்படுத்தும் உவம இயல் வைக்கப்பட்டது. (தொ. பொ. 295 பேரா.) உவமன் - உவமம் என்ற சொல்லின் கடைப்போலி வடிவம் உவமன் என்பது. உவமம், உவமன், உவமை என்பன ஒரு பொருளன. வினை பயன் உறுப்பு நிறம் என்னும் நான்கும் பற்றித் தோன்று வனவாகியும், அங்ஙனம் தோன்றுவன ஒரு பொருளோடு ஒருபொருள் உவமம் செய்யும்வழி ஒன்றேயன்றி இரண்டும் மூன்றும் விரவுவனவாகியும், சிறப்பு நலன் காதல் வலிமை கிழக்கிடுபொருள் என்பனவற்றை நிலைக்களனாகக் கொண்டு, முதல்சினை திணைபால் மாறாமலும் மாறியும், இறப்ப உயர்வும் இழிவும் கேட்பார்க்கு இன்னா செய்யாத வகையில், உபமானம் உபமேயத்தைவிட உயர்ந்துநிற்ப, எட்டு மெய்ப்பாட்டொடு கூடி அழகு பெறும் நிலைத்தாகியும், அகப்பொருள் புறப்பொருள் என்ற இரண்டன்கண்ணும் மரபு திரியாது பொருள் புலப்படுக்க வருவது உவமன் ஆகும். (மா. அ. 92) உவமா(ன) தீவக அணி - தீவகஅணியின் ஒழிபாக வந்த ஆறுவகையுள் ஒன்று. செய்யுளில் ஓரிடத்து நிற்கும் உபமேயச் சொல் பல விடங் களில் உள்ள உபமானத்தைப் பெறும் வகை அமைந்திருப்பது இது. எ-டு : ‘முன்னம் குடைபோல், முடிநா யகமணிபோல், மன்னும் திலகம்போல், வாள்இரவி - பொன்அகலம் தங்கு கவுத்துவம்போல், உந்தித் தடமலர்போல், அங்கண் உலகளந்தார்க்(கு) ஆம்.’ சூரியன், உலகளந்த நெடுமால் வளர்ந்துகொண்டேபோக முன்னம் குடைபோலாம்; பின்னர், கிரீடத்திலுள்ள நடுநாயக மான சிறந்த இரத்தினம் போலாம்; அடுத்து, அவர் நெற்றித் திலதம் போலாம்; பின்னர் மார்பில் திகழும் கவுத்துவ மணிபோலாம்; இறுதியில், அவரது உந்தித்தாமரை போல வும் ஆம் - என்னும் பொருளமைந்த இப்பாடற்கண், உவமை அமைந்துள்ளமையாலும், இரவி என்னும் உபமேயம் குடை முதலிய உவமைகளொடு தனித்தனியே இயைந்து பொருள் பயப்பதாலும் இஃது உவமான தீவகம் ஆயிற்று. (தண்டி. 41-5) உவமானம் - உபமானம்; ‘மருவுநேர் உவமானம் வகுத்திட’ (சேதுபு. இராமதீ. 36). ஒரு பொருளுக்கு உவமையாகச் சொல்லப்படும் உயர்ந்த பொருள் இது. ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளங்காலை’ (தொ. பொ.) (டு) உவமானித்தல் - உவமித்தல்; அஃதாவது ஒப்புக் கூறுதல். உவமேயப்பொருள் - உபமேயம் (சி. போ. பாயிர. சிற்) உபமானத்தைக் கொண்டு விளக்கப்படும் பொருள். (டு) உவமேயம் - உபமேயம்; அது காண்க. உவமேயமும் உவம உருபும் தொக்க தொகைஉவமை - இது தொகைஉவமை வகைகளுள் ஒன்று. ‘அன்னநடை மானோக்கு அணியிழாய்’ அன்ன நடை போன்ற மென்னடையினையும், மான் நோக்குப் போன்ற மருண்ட நோக்கினையும் அழகிய அணிகலன்களை யும் உடையாய் என்ற பொருளமைந்த இவ்வடியில், ‘போன்ற’ என்னும் உவமை உருபும், மென்னடை - மருண்ட நோக்கு - என்னும் உபமேயப் பொதுப்பண்புகளும் தொக்கு வந்தமை யால், தொகைஉவம வகையுள் ஒன்று வந்துள்ளது. (மா. அ. 97; பாடல் 159.) உவமை - அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்றாகிய உவமம். புகழ், பழி, நன்மை இவைபற்றி ஒன்றனொடு மற்றொன்றனை ஒப்பிடுவது. ஐம்பொறியும் மனமும் என்னும் ஆறும் பற்றி அது நிகழும். பிற விளக்கங்களை ‘உவமம் கூறும் திறன்’ என்பதனுள் காண்க. (வீ. சோ. 96 உரை மேற்.) உவமை அணி இயல்பு - பண்பு தொழில் பயன் என்பன காரணமாக, ஒரு பொரு ளோடு ஒரு பொருளும் பல பொருளும், பல பொருளொடு பல பொருளும் ஒரு பொருளும் இயையுமாறு அமைத்து, அவற்றுள் ஒப்புமை புலப்படப் பாடல் அமைப்பது இது. (தண்டி. 31) 1. உவமைகள் வினை பயன் மெய் உரு என்னும் நான்கும் காரணமாகத் தோன்றும். 2. ஒருபொருளோடு ஒருபொருள் உவமம் செய்யும்வழி, ஒன்றேயன்றி இரண்டு மூன்று காரணங்களும் விரவும். 3. உவமைகள் சிறப்பு, நலன், காதல், வலி, கிழக்கிடுபொருள் ஆகிய ஐந்தும் தமக்கு நிலைக்களனாகத் தோன்றும். 4. உவமைகள், உயர்திணை அஃறிணை, ஆண்பால் பெண்பால் ஒருமைப்பால் பன்மைப்பால் - என இவை மயங்காதும் மயங்கியும் வரும். 5. முதலுக்கு முதலும் முதலுக்குச் சினையும், சினைக்குச் சினையும் சினைக்கு முதலுமாகப் பிறழாதும் பிறழ்ந்தும் உவமம் வரும். 6. முதலும் சினையும் வினையும் குணமும் இன்றி உவமை கூறுதலுமுண்டு. 7. பொருளினும் உவமை உயர்ந்ததாதல் வேண்டும். 8. இறப்ப உயர்வும் இறப்ப இழிவும் உவமிக்குங்கால் இன்னாவாகச் செய்யாது, கேட்போர் மனங்கொள்ளு மாறு சிறப்பின் தீராவாகச் செய்யப்படல் வேண்டும். 9. உவமை எட்டுமெய்ப்பாடுகளொடும் கூடி அழகு பயத்தலு முண்டு. 10. உவமை அகப்பொருளிலும் புறப்பொருளிலும் வரும். 11. கற்றோர் அறிவுக்குப் பொருந்த வரலாற்று முறைமையின் மாறாது உவமை வரும். 12. சொற்பொருள் காரணமாகப் பிறக்கும் சிலேடை உவமையு முண்டு. (மா. அ. 92 உரை) உவமை உயர்தலும் தாழ்தலும் - உவமை அணிக்குக் கூறப்படும் வழுவமைதிகளில் ஒன்று. மிக இழிந்தவை மிக உயர்ந்தவற்றுக்கும், மிக உயர்ந்தவை மிக இழிந்தவற்றுக்கும் உவமையாய் வருதல். இஃது உபமேயம் சிறக்க வருமாயின் குற்றமாகாது ஏற்கப்படும். எ-டு : ‘அவாப்போல் அகன்றதன் அல்குல்மேல் சான்றோர் உசாப்போல உண்டே மருங்குல் - உசாவினைப் பேதைக்(கு) உரைப்பான் பிழைப்பின் பெருகினவே கோதைக்கொம்(பு) அன்னாள் குயம்.’ ஆசையைப் போல் அகன்ற அல்குலின்மேல், சான்றோ ருடைய உரையாடலைப்போல் குறுகிய இடை உளது. இரகசியத்தைக் கயவரிடம் சொல்பவனுடைய பிழையைப் போல இவள் தனங்கள் பெருகியுள்ளன என்னும் பொரு ளுடைய இப்பாடற்கண், இழிந்த பொருள்களான அவா, மறையைக் கயவரிடம் கூறுவோன் பிழை என்பன முறையே அகன்ற அல்குற்கும் பெரிய தனங்கட்கும் உவமையாகக் கூறப்பட்டன. உயர்ந்த பொருளாகிய சான்றோர் உரை யாடல், இடைக்கு உவமையாகக் கூறப்பட்டது. இவை யிரண்டு திறமும் குறித்த பொருளை இனிது விளக்குதலால் வழுவில்லையென ஏற்கப்பட்டன. (இ. வி. 641) உவமை உருபு அமையுமாறு - உவமையுருபுகள் வினையெச்ச நீர்மையவாயும் பெயரெச்ச நீர்மையவாயும் முற்று நீர்மையவாயும் இடைச்சொல் நீர்மைய வாயும் வரும். வருமாறு : புலி போலப் பாய்ந்தான் - போல : வினையெச்ச நீர்மைத்து. புலி போன்ற சாத்தன் - போன்ற : பெயரெச்ச நீர்மைத்து. சாத்தன் புலி போலும் - போலும் : வினைமுற்று நீர்மைத்து. கண் போல் நெய்தல் பூக்கும் - போல் : இடைச்சொல் நீர்மைத்து. (இ. வி. 642) உவமை உருவகம் (1) - உருவகஅணி வகைகளுள் ஒன்று. முதற்கண் உருவகம் செய்த ஒன்றனையே மறுபடியும் பிறிதொரு திறம் கருதி உவமை செய்வது இது. எ-டு : மதுமகிழ்ந்த மாதர் வதன மதியம் உதய மதியமே ஒக்கும் - மதிதளர்வேன் வெம்மை தணிய மதராக மேமிகுக்கும் செம்மை ஒளியால் திகழ்ந்து. “என் ஆற்றல் குலையுமாறு விளங்கும் இப்பெண்ணின் முகமாகிய சந்திரன், மது உண்ட களிப்பால் தன் இயல்பு சற்றே மாறுபட்டு உதய காலத்துச் சந்திரனை நிகர்க்கும்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், ‘வதனமதியம்’ என்று உருவகம் செய்த தலைவி முகத்தை, கள்ளுண்ட செம்மை மிகுந்த திறத்தான், மீண்டும் ‘உதய மதியமே ஒக்கும்’ என உவமித்தமையால் இஃது உவமை உருவக அணி ஆயிற்று. (தண்டி. 38-1) உருவகம் முன்னமைந்து உவமை பின் வருதலின், இஃது ‘உருவக உவமை’ என்று மாறனலங்காரம் கூறும். (பா. 207 உரை) உவமை உருவகம் (2) - உபமேயத்தின் தன்மையை உபமானப்பொருள்களுக்கு ஏற்றி அவற்றை உபமேயமாகவே கூறுதல் (தண்டியார் கூறும் உவமைஉருவகம் உண்மையில் உருவகஉவமையேயாம் என்பது மாறனலங்கார உரையால் பா. 207 பெறப்படும்.) எ-டு : ‘செந்தா மரையாள் அமர்ந்தாடும் செய்குன்றம் மந்தாரப் பூஞ்சோலை மங்கையர்க்குக் - கொந்தார் இலையாரம் தாதுறைக்கும் இன்பொதியிற் கோமான் மலையாரம் தான்மலைந்த மார்பு.’ பாண்டியனது சந்தனம் பூசிய மார்பு திருமகள் அமர்ந்தாடும் செய்குன்றமாகவும் மகளிர் விளையாடும் பூஞ்சோலை யாகவும் உள்ளது என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், மார்பின் தன்மையை அதற்கு உபமானங்களாகிய செய் குன்றினிடத்தும் சோலையினிடத்தும் ஏற்றி உபமான உபமேயங்களை வேற்றுமையறச் சொன்னமையின், இஃது உவமை உருவகம். (வீ. சோ. 159 உரை) உவமை உருவகம் (3) - முதலில் உவமையணியை அமைத்து, அடுத்து அதன்கண் அமைந்த உபமேயத்தை உருவகம் செய்வதும் உவமை உருவகம் ஆம். எ-டு : ‘விடமனைய கட்காவி மெல்லியலாள் மையேர் குவளைக்கண் வண்டினம் வாழும்’ ‘விடம் அனைய கண்’ என்று முதற்கண் கண்களை உவமை படக்கூறி, பின்னர்க் ‘கண்காவி’ என்று கண்ணாகிய காவி என உருவகம் செய்தமையும், குவளை போன்ற கண் என்று முதற்கண் கண்களை உவமைபடக்கூறி, பின்னர்க் ‘கண்வண் டினம்’ என்று கண்களாகிய வண்டுக் கூட்டம் என உருவகம் செய்தமையும் உவமை உருவகங்களாம். (மா. அ. பாடல் 259 உரை) உவமை, உருவகம் : வேறுபாடு - வாய்ப்பவளம், குழற்கொன்றை, கொங்கைக்குரும்பை என இவை வாயாகிய பவளம், குழலாகிய கொன்றை, கொங்கை யாகிய குரும்பை என விரிதலின் உருவகம். வாய்பவளம், குழல்கொன்றை, கொங்கை குரும்பை என்னும் இவை பவளம் போன்ற வாய், கொன்றை போன்ற குழல், குரும்பை போன்ற கொங்கை என வருதலின் உவமை. வதனசந்திரன், கரகமலம் போன்றவை வடமொழிச் சந்தி யாகலின் இடையே ஒற்றுமிகா. இவற்றிற்கு வதனம் போன்ற சந்திரன், கரம் போன்ற கமலம் என விபரீத உவமையாயும், வதனமாகிய சந்திரன், கரமாகிய கமலம் என உருவகமாயும், வரும் இடம் நோக்கிப் பொருள் செய்தல் வேண்டும். (மா. அ. 115 உரை) உவமை குறைதல் - உபமான அடை உபமேய அடையைவிடக் குறைவாக அமைதல். எ-டு : ‘தேனருவி நீரருவி யோடே சிறந்துளநல் தானவட மேருவெனும் சால்பிற்றே - மானனையார் சித்திரப்பொற் கச்சணிந்து செய்ய மணிவடமும் முத்தவட மும்பூண் முலை.’ இப்பாடலில், மானனையார் முலை உபமேயம்; அதற்கு அடை பொற்கச்சணிதல், மாணிக்கவடம் பூணுதல், முத்த வடம் பூணுதல் என மூன்று. உபமானம் வடமேரு; அதற்கு அடை தேனருவி, நீரருவி என இரண்டு. தேனருவி மாணிக்க மாலைக்கும், நீரருவி முத்து மாலைக்கும், மேரு முலைக்கும் உவமை. முலை சித்திரக்கச்சு அணிந்தது; அவ்வடைக்கு ஏற்ற தொன்று உபமானத்தில் இடம் பெற்றிலது. இவ்வாறு உபமேய அடை மூன்றாகவும், உபமான அடை இரண்டாகப் புணர்த்தல் உவமை குறைதல் என்ற வழுவின்பாற் படும். (மா. அ. பாடல். 225) உவமை தாழ்தல் - ‘இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முதுப் பெண்டின் காதல்அம் சிறாஅன் குடப்பால் சில்உறை போலப் படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே.’ (புறநா. 276) இரமரத்தின் பரல்போல் வற்றிய கண்களையுடைய முலை யுடையாளான இம்மறக்குடிமகளுடைய அன்பிற்குரிய மகன், குடப்பாலையும் சில உறை திரியச் செய்வது போலப் பகை வரது பெரும்படையினையும் சிதறி ஓடச் செய்து விட்டான் என்ற பொருளமைந்த இவ்வடிகளில், குடத்துப்பால் முழுதும் சில (-சிறிய) உறையால் திரிந்துபோம் செயலான் இழிந்த உவமம், வீரன் அருஞ்செயற்கு உபமானமாக வந்து அதன் பெருமையை நன்கு விளக்கும் திறத்தால், உயர்ந்ததெனவே ஏற்றுக் கொள்ளப்படும். (இ. வி. 641 உரை) இவ்வாறன்றி, ‘ஆனை எருத்தம் அகழ்வான் வெரிந் ஏய்க்கும்’ (மா.அ. பாடல் 223) என மண் வெட்டுபவன் முதுகினை யானையது புறக்கழுத்திற்கு உவமையாகக் கூறுதல், உவமை சிறப்பின்றித் தாழ்தலின் வழுவாகும். உவமை திணை மாறுபடுதல் - உவமை அணிக்குக் கூறப்பட்ட வழுவமைதிகளுள் ஒன்று. உயர்திணையோடு அஃறிணையும் அஃறிணையோடு உயர் திணையும் மயங்க உவமை செயினும், அஃது உவமேயத்தைச் சிறப்பித்து நிற்குமாயின் வழுவன்று; ஏற்றுக்கொள்ளத் தக்கதேயாம். எ-டு : ‘சொல்............... கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே’ (சீவக. 53) நெற்பயிர், கல்வி மிக்க சான்றோரைப் போலத் தலைசாய்ந்து விளைந்தது என்னும் இப்பாடலுள், சான்றோர் (உயர்திணை) உபமானமாக, நெற்பயிர் (அஃறிணை) உபமேயமாக வந்துள் ளமை காண்க. நெற்பயிரின் விளைவினைச் சிறப்பித்து வருதலின், இத்திணை மயக்கம் ஏற்றுக்கொள்ளப்படும். ‘மல்லல் மலையனைய மாதவரை வைதுரைக்கும்’ (சீவக. 2789) வளமிகுந்த மலையைப் போன்ற மாதவர் (- மிக்க தவமுடைய பெரியோர்) என, அளக்கலாகா அளவும் பெருமையும் துளக்கலாகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளம் தரும் வண்மையும் உடைய அஃறிணை மலை உயர்திணையாம் மாதவர்க்கு உபமானமாக வந்தது. மாதவத்தோரது சலியாத நிலையினைச் சிறப்பித்து வருதலின், இத்திணை மயக்கமும் ஏற்றுக்கொள்ளப்படும். (இ. வி. 641 உரை) உவமை பால் மாறுபடுதல் - உவமைஅணிக்குக் கூறப்பட்ட வழுவமைதிகளுள் ஒன்று. ஆண் பெண் பலர் ஒன்று பல என்னும் ஐம்பாலும் மயங்க உவமிப்பதும் உபமேயத்திற்குச் சிறப்பளிக்குமிடத்து வழுவாகாமல் ஏற்றுக்கொள்ளப்படும். எ-டு : ‘கலம்கவிழ்ந்த நாய்கன்போல் களைதுணை பிறிதின்றிப் புலம்பும்என் நிலைகண்டும் போகலனே என்றியால்’ “தான் வாணிகப் பொருள் கொண்டு சென்ற மரக்கலம் கவிழ்ந்துபோனதால் தான் மாத்திரம் உயிர் பிழைத்த வணிகனைப் போல, என் துயரத்தினைக் களைவார் யாரு மின்றித் துயர் உறும் எனது நிலை கண்டும், ‘நின்னைப் பிரியேன்’ என்று கூறாமல் இருக்கிறாயே!” என்ற இத்தலைவி கூற்றில், தனக்கு (பெண்பாலுக்கு) வணிகனை (ஆண்பாலை) உவமையாக்கிக் கூறுகின்றமை காணப்படும். ‘களவுடம் படுநரின் கவிழ்ந்துநிலம் கிளையா நாணி நின்றோள் நிலைகண்டு.......’ (அகநா. 16) கையும் களவுமாகப் பிடிபட்டவரைப் போலத் தலை குனிந்து நிலத்தைக் கால்விரலால் கீறிக்கொண்டு நின்ற பரத்தை எனப் பலர்பாலொடு பெண்பால் உவமிக்கப்பட்டுள்ளது. இவை உபமேயத்தைப் பொருளாற் சிறப்புறுத்தலின் தழுவிக் கொள்ளப்பட்டன. (இ. வி. 641 உரை) உவமை மிகுதல் (1) - உவமைஅணியுள் தோன்றும் வழுக்களில் ஒன்று; உபமேயத் திற்குக் கூறும் அடைகளைவிட உபமானத்திற்குக் கூறும் அடைகள் மிகுதல். எ-டு : ‘நீலப் புருவம் குனிய விழிமதர்ப்ப மாலைக் குழல்சூழ்ந்த நின்வதனம் - போலும் கயல்பாய வாசம் கவரும் களிவண்(டு) அயல்பாய அம்போ ருகம்.’ நீலப்புருவம் வளையவும் கண்கள் மதர்த்து நோக்கவும் மாலைகள் அணிந்த குழல் சூழ்ந்த நின் முகத்தை, மீன்கள் துள்ள வாசனையைக் கவரும் வண்டுகள் பாயும் தாமரை நிகர்க்கும் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், உபமேய மாகிய தாமரைக்கு மீன்துள்ளல், மணம் கவர் வண்டு பாய்தல் என இரண்டே அடை அமைய, உபமானமாகிய முகத்துக்கு நீலப் புருவம் குனித்தல், விழி மதர்த்தல், மாலைக்குழல் சூழ்தல் என மூன்று அடைகள் புணர்க்கப்பட்டுள. ஆயினும் அவ்வடை மிகுதியால் (தாமரைக்கு எத்தகு சிறப்பும் தோன்ற வில்லை ஆதலின்) இதுவழுவாம். (புருவ வளைவு என்ற உவமை அடைக்கு ஏற்ற தொன்று உபமேயத்தில் புணராமை காண்க.) (தண்டி. 34-1) உவமை மிகுதல் (2) - உவமை அணிக்குக் கூறப்பட்ட ஒரு வழுவமைதி. உபமேயத் திற்குப் புணர்த்த அடைமொழிகளைவிட உபமானத் திற்குப் புணர்த்த அடைமொழி மிகுதியாக வருதல். அம்மிகையால் உபமேயத்திற்குச் சிறப்பு விளையுமாயின் அஃது ஏற்றுக் கொள்ளப்படும். ஊரில் திருவிழா நிகழ்கிறது. அச்செலவிற்குப் பொருள் வேண்டும். மனைவி குழந்தை ஈன்றிருக்கிறாள்; அந்தச் செல விற்கும் பொருள் வேண்டும். மழை நின்றுள்ளது; கதிரவன் மறையும் நேரம் அது; மீண்டும் மழை வருதற்குள் இருள் சூழு முன்னர்ச் சென்று பொருள் தேட வேண்டும். அதற்குரிய வழி அவன் செய்தொழிலான கட்டில்பின்னுதல் ஒன்றே. இந் நிலையில் அத்தொழில் செய்வானுடைய ஊசி (-கட்டில் பின்னும் கருவி) எத்துணை விரைவில் செயற் படுமோ, அத்துணை விரைவில் கிள்ளி ஆமூர் மல்லனொடு செய்த போர் நிகழ்ந்தது. (புறநா. 82) உபமானம் - ஊசி; உபமேயம் - போர். ஊசிக்குக் கூறிய அடை மொழிகள் மிகுதியானவை. போருக்கு அடைமொழியே இல்லை. ஆயினும், போரின் விரைவைக் கூறும் பயன் உள்ளமையின், இது வழுவமைதியென ஏற்கப்பட்டது. (இ. வி. 641 உரை) உவமை முதல் சினை மாறுதல் - உவமைஅணிக்குக் கூறப்பட்ட வழுவமைதிகளுள் ஒன்று. முதலொடு சினையும் சினையொடு முதலும் மயங்க உவமை செய்தாலும் அவை தத்தம் உபமேயங்களுக்குச் சிறப்புத் தரின் வழுவாகாது அமையும். எ-டு : ‘நெருப்பின் அன்ன சிறுகண் பன்றி’ (அகநா. 84) நெருப்பை ஒத்த சிறுகண்களையுடைய பன்றி என்னும் இதன்கண், நெருப்பு - முதல்; கண் - சினை. உபமானம் - முதல்; உபமேயம் - சினை. இது கண்ணைச் சிறப்பித்து நிற்றலின் வழுவமைதியாயிற்று. எ-டு : ‘அடைமறை ஆய்இதழ்ப் போதுபோல் கொண்ட குடைநிழல் தோன்றும்நின் செம்மலைக் காணூஉ’ (கலி. 84) இலையால் மறைக்கப்பட்ட அழகிய இதழ்களைக் கொண்ட தாமரை மலர் போலக் குடை நிழலில் காணப்பட்ட நின் மகனைக்கண்டு என்ற பொருளுடைய இவ் வடிகளில், இலை மலர் என்ற சினைகள் முறையே குடை செம்மல் என்ற முதற்பொருள்களுக்கு உபமானங்களாகி வந்துள்ளமை உவமைச்சிறப்பால் ஏற்றுக் கொள்ளப்படும். (இ.வி. 641 உரை) உவமையது உயர்ச்சியால் பொருள் உயர்தல் எ-டு : ‘கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பு’ ‘மாரி அன்ன வண்மைத், தேர்வேள் ஆயை’ (புறநா. 133) ‘தெள்ளமிர்(து) என்னத் திருந்திய தேமொழி’ ‘ஏறுபோல் பீடு நடை’ (கு. 59) கடலை ஒத்த இடமகன்ற நிலப்பகுதி, மழையை ஒத்த கொடைத்தொழிலையுடைய ஆய்வள்ளலை, தெளிந்த அமுதத்தைப் போன்ற தெளிவான இனிய மொழி, சிங்க ஏறு போன்ற பெருமிதமுடைய நடை - என்று பொருள்படும் இத் தொடர்களில், கடல் மழை அமிர்து ஏறு என்ற உபமானங் களது உயர்வினால், நிலப்பகுதி ஆய்வள்ளல் இன்மொழி பெருமிதநடையுடையவன் - ஆகிய உபமேயங்கட்கு உயர்வு உண்டாக்கப்படுகிறது. இவ்வாறு உபமேயத்திற்கு உயர்ச்சி தரும் வகை உபமானம் புணர்த்தலே சிறப்பு.(மா. அ. 92 உரை) உவமையின் ஒரு சிறப்பு வகை - முதலில் உபமேயத்தை உயர்த்திக் கூறிப் பின்னர் உபமானத் தின் தன்மையை உயர்த்திக் கூறி உபமேயத்திற்குக் குறிப்பி னால் உயர்ச்சி தரும் உவமையுமுண்டு. (மா.அ. 100) எ-டு : ‘பாரி பாரி என்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டீண்(டு) உலகுபுரப் பதுவே.’ (புறநா. 107) உபமேயமாகிய பாரியை முதற்கண் உயர்த்துக் கூறி அடுத்து உபமானமான மாரியை உயர்த்திக் கூறுதல், பாரியாகிய உபமேயத்திற்குச் சிறப்புத் தருதலின், இவ்வுவமை வகையும் சிறப்புடைத்து என்பது. உவமையும் உருவகஉருபும் மாட்டேறு இல்லாது வந்த உருவகம் - உருவகத்துக்குரிய உறுப்புக்களாகிய உவமை, உருவகஉருபு, உபமேயம் என்பனவற்றுள் உவமையும் உருவகஉருபும் இணைக்கப் பெறாமல் அவை பின்வரும் வினைகளால் குறிப்பாக உணரப் படுமாறு அமையும் உருவக வகை. (உருவக உருபு ‘ஆகிய’ என்பது.) எ-டு : ‘மிக்க அரிதாளின் மெய்யன் பினைவித்தித் தக்க தவம்தினமும் தான்பொழிந்துட் - புக்கதோர் ஞானம் உருவியபின் நன்முத்தி யைவிளைக்கும் மானபரன் காரிதரு மன்.’ திருமாலின் திருவடிகளாகிய வயலில் அன்பாகிய வித்தினை விதைத்துத் தவமாகிய நீரைப் பொழிந்து ஞானமாகிய முளை தோன்றியபின் முத்தியாகிய போகத்தை விளைவித்தல் என்ற கருத்துடைய இப்பாடலடிகளில், மெய்யன்பு, தவம், ஞானம், முத்தி என்ற உபமேயங்களே வித்தி, பொழிந்து, உருவியபின், விளைக்கும் என்ற வினைகளால் தொகுக்கப்பட்ட உவமையும் உருவக உருபும் உணருமாறு அமைந்துள்ளமை இவ்வுருவக வகையாம். (மா. அ. பா. 236) உவமையுள் ஒரு பேதம் - ‘மாயன் குருகாபுரி அனைய மாதராள்’ குருகாபுரி என்ற ஊர் செயற்கையான் அன்றி இயற்கையானும் அழகு உடையது போன்று இவளும் இயற்கையான் அழ குடையாள் என்னும் கருத்தமைய ஒரு பெண்ணுக்குச் சிறந்த ஊர் ஒன்றனை உவமை கூறுதலும் உவமையுள் ஒருவகையாம். ‘வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை’ (குறள். 872) ‘நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கட் பட்ட திரு’ (குறள். 408) என்பவற்றில், வில்லேருழவர் பகையினும் சொல்லேருழவர் பகை கொடிது எனவும், நல்லார் வறுமையினும் கல்லாதவர் செல்வம் கொடிது எனவும் ஒப்புமை கூறாமல் விஞ்சியதாகக் கூறுதலும் உவமையுள் ஒருவகையாம். (மா. அ.பா. 265 உரை) உபமானமும் உவமஉருபும் கூறிப் பின்னும் ஓர் உவமம் புணர்த்து உபமேயத்தை அமைத்தலும் உண்டு. ‘அம்பனைய வேற்கண்’ என்பது; அம்பு - முதல் உபமானம், வேல் - இரண்டாம் உபமானம். ‘துப்புறழ் தொண்டைச் செவ்வாய்’ (சீவக. 107) என்பதும் அது. (மா. அ.. பா. 200 உரை) உவமை வழு - ஒன்றனை உவமிக்குங்கால் இறப்ப உயர்ந்த உபமேயத்திற்கு, சிறப்பினை நீங்கிய செய்கையையுடையனவாய் இறப்ப இழிந்த உபமானத்தை உவமித்தலும், இறப்ப இழிந்த உபமேயத்திற்கு இறப்ப உயர்ந்த உபமானத்தை உவமித்தலும், உபமேய அடைக்கு உபமான அடையைப் பயன் எதுவுமின்றி மிகுதியாகப் புணர்த்தலும், உபமேய அடைக்கு உபமான அடையைப் பயன் எதுவுமின்றிக் குறைவாகப் புணர்த்தலும், பொருத்தமின்றிக் “கூற்றுவன் மனைவியைப் போல்வான் இத்தலைவன்; கூற்றுவனை ஒப்பாள் இவன்மனைவி” என்றாற் போல ஆண்பாற்குப் பெண்பாலும் பெண்பாற்கு ஆண்பாலும் உவமையாக்குதலும், வழக்கிற்கு மாறாக ஒருமைப்பாற்குப் பன்மைப்பாலும் பன்மைப்பாற்கு ஒருமைப் பாலும் உவமித்தலும் உவமை வழுவாம். இங்ஙனம் தாழ்தலும் உயர்தலும் மிகுதலும் குறைதலும் பால் மாறுபடுதலும் சான்றோர் செய்யுட்கண் வருமிடத்தே, அவை ஒருபயனைக் கருதிக் கூறப்பட்டனவாதலின் வழுவாகா என்க. (மா. அ. 112 உரை) உவமை விரவி வருதல் - உவமை விரவிவருதலாவது உவமையணி ஏனைய அணிக ளொடு கலந்து வருதலாம். அவ்வணிகளாவன உருவகம், நிரல்நிறை, அதிசயம், சிலேடை, தற்குணம், தற்குறிப்பு, அற்புதம், விரோதம், ஒப்புமைக் கூட்டம், ஏது, விலக்கு முதலியனவாம். இவ்வணிகள் தத்தமக்கு விதிக்கப்பட்ட இலக்கணங்களில் குன்றாது உவமையுருபுடனே கூடி உவமை யாம் தன்மை பெற முடியுமாயின் அவற்றை அவ்வப் பெயரானே உருவக உவமை, நிரல்நிறை உவமை, அதிசய உவமை என்றாற் போலப் பெயர்கொடுத்து வழங்கப்படும். (மா. அ. 110) இனி, வினை பயன் மெய் உரு என்னும் நால்வகை யுவமங் களுள் ஓருவமைக்கண் ஒன்றும் பலவும் கலந்து வருதலும் ‘உவமை விரவிவருதல்’ எனத்தகும் என்றலும் ஒரு கருத்து. ‘செவ்வான் அன்ன மேனி’ (அகநா. கடவுள்) - உருமாத்திரம் பற்றி வந்த உவமை; ‘பிறை அன்ன எயிறு’ (அகநா. கடவுள்.) - மெய்யும் உருவும் பற்றி வந்தது; காந்தளை ஊதும் தும்பி கைகளால் ஆடும் வட்டுப் போலத் தோன்றுதல் (அகநா. 108) - வினை, மெய், உரு இம் மூன்றும் பற்றி வந்தது. (தொ. பொ. 277 பேரா.) உள்ளதன் அபாவ ஏது அணி - ஏது அணிக்கு ஒழிபாக வந்த வகைகளுள் ஒன்று; ஓரிடத்தே ஒருகாலத்து உள்ளது மற்றோரிடத்தே மற்றொருகாலத்து இல்லாமை. அபாவம் - இன்மை. எ-டு : ‘கரவொடு நின்றார் கடிமனையில் கையேற்(று) இரவொடு நிற்பித்த(து) எம்மை - அரவொடு மோட்டாமை பூண்ட முதல்வனை முன்வணங்க மாட்டாமை பூண்ட மனம்.’ “முற்பிறப்பில் சிவபெருமானை வணங்கமாட்டாமற்போன எம் உள்ளமே இப்பிறப்பில் எம்மை உலோபிகளது மனை வாசலில் பிச்சையெடுக்க வைத்திருக்கிறது” என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், முற்பிறப்பில் சிவபெருமானை வணங்குதல் என்பதன் அபாவம் (-இன்மை) இப் பிறப்பில் பிச்சையெடுக்கும் செயற்குக் காரணமாகக் கூறப்பட்டமை உள்ளதன் அபாவ ஏது அணியாம். (உள்ளது: இம்மையில் உள்ளதாகிய சிவவழிபாடு) (தண்டி. 62-4, வீ.சோ. 168) உள்ளதன் இன்மை ஏது அணி - மாறன் அலங்காரம் (194) கூறும் இவ்வணி உள்ளதன் அபாவ ஏது அணியாம்; அது காண்க. உள்ளமிகுதி பற்றிய உதாத்த அணி - ‘உதாத்த அணி’ காண்க. உள்ளுறுத்தல் - உள்ளத்தே கருதுதல். உபமேயத்தை மனத்தில் கொண்டு உபமானத்தை மாத்திரம் வெளிப்படையாகச் சொல்லி, அங்ஙனம் உபமானத்தைச் சொல்லிய அளவில் உபமேயம் புலப்பட்டு விடும் என்று புலவன் தன் உள்ளத்தே கருதுதல். (தொ. பொ. 48 நச்.) உள்ளுறைஉவமத்திற்கும் ஒட்டணிக்கும் இடையே வேற்றுமை - உள்ளுறைஉவமம் அகத்திணைக் கைகோள் இரண்டற்குமே உரித்தாய், அகத்திணை ஐந்தினும் அவ்வந் நிலங்களில் தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களனாகப் பிறக்கும். இது கூறுதற்குரியார் தலைவன், தலைவி, தோழி, செவிலி, பாங்கன், பாணன் என்னும் அறுவர்; உரியர் அல்லாதார் நற்றாய், தந்தை, தன்னையன்மார், ஆயத்தார் என நால்வர். அங்ஙனம் கூறுதற்குரியோர் கூறுமிடத்து மருதம், நெய்தல் என்ற ஈரிடத்து மிகுந்தும், குறிஞ்சிக்கண் அவ்வளவு இன்றியும், ஒழிந்த நிலத்துக்கண் அருகியும் இது வரும்; அங்ஙனம் கூறு மிடத்தும், வெளிப்படக் கூறும் உவமையினிடத்து உபமேயம் போலக் கேட்போர் மனத்தின் கண்ணும்புலவன் குறித்தவாறே நிகழ்த்துதலின் உள்ளுறை உவமம் என்னுமாறு, கருப்பொருள் களனாகப் பிறக்கும் இறைச்சிப் பொரு(ளாகிய தொனிப் பொரு)ளோடு கூடாதனவாகி வரும். ஒட்டு, கருப்பொருளிற் பிறக்கவேண்டும் என்னும் யாப்புற வின்றிப் புறத்தினும் சென்று செய்யுள் செய்யும் புலவன் முதலாயினோர் கூறும் கூற்றாய், ‘சுட்டு’ என்னும் உள்ளுறை யாய் நடக்கும். (மா. அ. 125 உரை) தண்டியார் ஒட்டணியுள் உள்ளுறைஉவமத்தையும் அடக்கி னார். (மா.அ.125 உரை) ஆயின், மாறனலங்கார ஆசிரியர் அவற்றை தனித்தனி அணியாகக் கொண்டார். உள்ளுறைஉவமத்து அமைப்பு - உள்ளுறைஉவமம் தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு வரும்; அகப்பொருளிலேயே வரும்; வினை, பயன், மெய், உரு, பிறப்பு என்ற ஐவகை பற்றி வரும். உள்ளுறைஉவமத்தில் உபமானம் மாத்திரமே இடம் பெறும். அவ்வுபமானத்தின் அமைப்புக்கொண்டு உபமே யத்தை உய்த்துணர்ந்து அறிதல் வேண்டும். இஃது இன்பமும் துன்பமும் பற்றியும் வரும். தலைவன், தலைவி, தோழி, செவிலி, பாங்கன், பாணன் என்னும் அறுவரே இது கூறற்குரியர். தலைவி கூறும் உள்ளுறைஉவமம் மருதத்திலும் நெய்தலிலும் பயின்றும், குறிஞ்சியில் பயிலாதும் வரும். தலைவி தான் அறிந்த சுற்றுச் சூழலிலுள்ள பொருள் கொண்டே உள்ளுறைஉவமம் கூறுவாள். தோழி அந்நிலத் துள்ள எல்லாப் பொருளையும் கொண்டு உள்ளுறை உவமம் கூறுவாள். தலைவன் தனது பெருமை தோன்ற உள்ளுறை உவமம் கூறுவான். ஏனையோர்க்கு இன்ன கருப்பொருள் கொண்டுதான் இது கூறவேண்டும் என்ற வரையறை இன்று. (தொ. பொ. 298 - 306 பேரா., மா.அ. 123.) உள்ளுறைஉவமை அணி - இவ்வணி உவமைப்போலி எனவும்படும். இவ்வணியில் தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்களான் அமைக்கப் பட்ட உபமானமே இருக்கும். உபமேயம் கூரிய மதித்திறனான் குறித்துணருமாறு உபமான வருணனைக்குள்ளே பொதிந்து கிடக்கும். இவ்வுள்ளுறைஉவமை அகத்திணையியற்கண் ணேயே நிகழும். இது வினை, பயன், மெய், உரு, பிறப்பு என ஐவகைப்படும்; இன்பம் பற்றியும் துன்பம் பற்றியும் நிகழும். தலைவன், தலைவி, தோழி, செவிலி, பாங்கன், பாணன் இவ்வறுவர்களே உள்ளுறைஉவமம் கூறுதற்குரியர். தலைவி தான் கண்டறிந்த பொருள்களையே இதன்கண் பயன்படுத்து வாள். தோழி தான் வாழும் நிலத்துள்ள எல்லாப் பொருள் களையும் இது கூறப் பயன்படுத்துவாள். தலைவன் தன் அறிவுடைமை தோன்ற இவ்வுமமம் கூறுவான். ஏனை யோர்க்கு இன்ன இடத்துத்தான் உள்ளுறைஉவமம் கூற வேண்டும் என்ற வரையறை இன்று. (மா. அ. 123) உள்ளுறைஉவமம், ஏனை உவமம் இவற்றின் அடிப்படைகள் - உள்ளுறைஉவமம் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வரும்; ஏனை உவமம் முதல் கரு உரிப்பொருள் மூன்றையும் அடிப்படையாகக்கொண்டு வரும். (தொ. அகத். 49 ச.பால.) உள்ளுறைஉவமம் கூறத் தோழிக்கும் செவிலிக்கும் பொருந்துமிடங்கள் - தோழிக்குப் பொருந்துமிடங்கள் பொதுவாகத் தலைவன் தலைவி செவிலி ஆகியோரும், கற்பின்கண் வாயில்களும் ஆம். செவிலிக்குப் பொருந்துமிடங்கள் தலைவி தோழி நற்றாய் ஆகியோரும், உடன்போக்கின்கண் ஆற்றிடைப் பகவர் முதலானோரும் ஆம். (தொ. உவம. 33 ச. பால.) உற்றது உணரும் தெளிமருங்கு’ - உவமம் கூறும்போது உபமானஅடைக்கு உபமேயஅடை குறைந்து வந்தாலும், உபமானம் அடையொடு வந்து உபமேயம் அடையின்றி வந்தாலும், பொதுத்தன்மைகூடச் சுட்டாமல் உபமானம் உபமேயம் இவற்றை மாத்திரம் குறிப்பிட்டாலும், உபமானத்தையும் அதற்கு அடைகள் வழங் கப்பட்டிருந்தால் அவற்றையும் கொண்டே உபமேயத்திற்கு உரிய செய்திகள் யாவும் உணரப்படும். பரத்தை தலைவியினுடைய மகனைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த நிலையில் தலைவியால் அவள் காணப்படவே அந்நிலைக்கண் அவள். ‘களவுடம் படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா, நாணி நின்றோள்’ (அகநா. 16) என்று கூறியவழி, உபமேயமாகிய பரத்தைக்கு அடை குறைவாகப் புணர்க்கப்பட்டது எனினும், கண்டவர்க்கெல்லாம் எள்ளல் பொருட்டாகிய சிரிப்புண்டாகுமாறு நின்றாள் என்பதைக் ‘களவுடம் படுநர்’ என்ற உவமத்தால் உணர்கிறோம். ‘உழுத நோன்பக(டு) அழிதின் றாஅங்கு நல்லமிழ் தாகநீ நயந்துண்ணும் நறவே’ (புறநா. 125) ‘உழுத நோன்பகடு அழி தின்னுதல்’ என உபமானமாகிய பகட்டுக்கு, ‘உழுத நோன்பகடு’ என்ற அடை உள்ளது. உபமேயமாகிய வள்ளலுக்கு அடையில்லை எனினும் உபமானத்தால், உழுத பகடு தான் விளைத்த நெல்லை உண்ணாது வைக்கோலை உண்ணுவது போல, வள்ளலும் தான் முயற்சியால் தேடிய அரிய பொருள்களை நுகராது கள்ளையே குடிக்கிறான் என்பது. (தொ. பொ. 295 பேரா.) உறழ்ச்சி அணி - ஒத்த தகுதியுடைய இரண்டு செய்திகளை விளக்கிச் சுட்டுதல்; இதனை விகல்பாலங்காரம் என வடநூல்கள் குறிக்கும். எ-டு : ‘தலையையே னும்விரைந்(து)எம் தார்வேந்தற்(கு) ஓர்நின் சிலையையே னும்வளைத்தல் செய்.’ பகைமன்னனிடம் தூது சென்றவன் கூறும் இக்கூற்றில், “எம் அரசனைத் தலையாரக் கும்பிட்டு வாழ்வைப் பெறுவாய்; இன்றேல், வில்லை வளைத்துப் போரில் எதிர்ஊன்றற்கு வருவாய்” என்ற கருத்தில் தலையை வளைத்தலும் சிலையை வளைத்தலும் ஆகிய இருசெயல்கள் ஒத்த தகுதியுடைமை பற்றி இணைத்துக் கூறப்பட்டதன்கண் இவ்வணி வந்துள்ளது. (ச. 80, குவ. 54) உறழ்ந்து வரல் உவமை - இஃது இதரவிதர உவமை எனப்படும் தடுமாறுவுவமையின் மற்றொரு பெயராம். உபமானம் உபமேயமாகவும் உபமேயம் உபமானமாகவும் மாறி மாறி வருதல் இதன் இலக்கணமாம். (வீ. சோ. 179) இதரவிதர உவமை காண்க. உறழ்பொரு - ஒன்றினும் ஒன்றனை மிகுத்துக் கூறும் ஒப்பு (தொல்.சொல். 78 நச்.); ஒப்புமை கூறாது மாறுபடக் கூறுவது. (தொ. சொல் 16 சேனா.) உறழ என்ற உவமஉருபு - ‘திருமணி, மின்னுறழ் இமைப்பின் சென்னி பொற்ப’ (முருகு. 85) மின்னலை ஒத்த ஒளியையுடையவாய் மணிகள் தலைக்கு அணி செய்ய என்னும் பொருளுடைய இத்தொடரில், ‘உறழ்’ என்ற சொல் வினைஉவமத்தின் கண் வந்தது. இது வினையுவமத்திற்கு வருதலே சிறப்பு. (தொ. பொ. 287 பேரா.) ‘செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை’ (முருகு. 5) என ‘உறழ’ என்பது பயனுவமம் பற்றி வந்தது. ‘முழவு உறழ் தடக்கை’ (முருகு. 215) என ‘உறழ’ என்பது மெய்யுவமம் பற்றி வந்தது. ‘எரிஉரு உறழ இலவம் மலர’ (கலி. 33) என ‘உறழ’ என்பது உருஉவமம் பற்றி வந்தது. உறுசுவை அணி - இது மேன்மேலுயர்ச்சி யணியின் ஒரு கூறாகும். உலகத்துள் மிகுந்த சுவையுடைய பொருள்களை ஒன்றற்கு ஒன்று உயர்வுடையதாக அடைவே எண்ணிய யாவையினும் மிக்க சுவையுடையது இது என்று கூறுவது இவ்வணி. வட நூலார் இதனைச் சாராலங்காரம் என்ப. உயர்ந்த பொருள் களையே அன்றி இழிந்த சுவைப்பொருள்களை அடைவே எண்ணி முடித்தலும் சாராலங்காரம் ஆகும். மேன்மே லுயர்ச்சி அணியும் இப்பண்பினதே. ஆயின் உறுசுவையணி மேம்பட்ட சுவைகளையே குறிப்பிடுவதாம். எ-டு : “தேன் இனிது; அதனினும் முக்கனியின் சுவை இனிது; அதனினும் ஆன்பாலின் சுவை இனிது; அதனினும் பஞ்சாமிர்தச் சுவை இனிது; அதனினும் தேவாமிர்தம் இனிது; அதனினும் நம்மாழ்வார் அருளிய பாசுரங் களது சுவை இனிது” என்று குறிப்பிடுவதன்கண் (பாடல் 561) உறுசுவை அணி வந்துள்ளது. (மா. அ. 235) உறுப்பு உருவகம் - இஃது அவயவ உருவகம் எனத் தண்டியலங்காரத்துள் கூறப்பெறும். அது காண்க. (வீ. சோ. 160) உறுப்பு உவமை - இஃது அவயவ உவமை எனவும் வழங்கப்பெறும். (மா.அ. 101) ஒரு பொருளின் உறுப்புக்களை உவமித்து அப்பொருளை உவமியாது வாளாதே கூறுவது. எ-டு : ‘மாதர் இலவிதழ்போல் மாண்பிற்றே மாதவனால் வானோர் அருந்தும் மருந்து.’ திருமால் பகிர்ந்தளிக்கத் தேவர்கள் உண்ட தேவாமிர்தம் இப்பெண்ணின் இலவம் பூப்போன்ற உதடுகளின் சுவையை ஒப்பது என, உதடுகளாகிய உறுப்பிற்கு உவமை கூறி உறுப்பியாகிய பெண்ணுக்கு உவமை கூறாது விடுத்தது உறுப்புவமையணியாம். (மா. அ. பாடல். 187) உறுப்புக்குறை விசேட அணி - இது விசேட அணியின் ஐந்து வகைகளுள் ஒன்று. உறுப்புக் களின் குறைவு காரணமாக ஒருபொருளுக்குச் சிறப்பும் மேம்பாடும் தோன்றக் கூறுதல். எ-டு : ‘யானை இரதம் பரிஆள் இவைஇல்லை; தானும் அனங்கன்; தனுக்கரும்பு; - தேனார் மலர்ஐந்தி னால்வென்(று) அடிப்படுத்தான் மாரன் உலகங்கள் மூன்றும் ஒருங்கு.’ மன்மதனுக்கு யானை முதலிய நால்வகைப் படைகளில் ஒன்றும் இல்லை; அவனுக்கு வடிவே இல்லை; அவனுக்கு வில் கரும்பு; அம்புகளோ மெல்லிய மலர்கள். இவற்றைக் கொண்டே அவன் மூன்றுலகங்களையும் வென்று தன்னடி பணியவைத்தான் என்ற - பொருளமைந்த இப்பாடலில், போருக்கு வேண்டிய உறுப்புக்களான படைகளும், உறுதி யான வில்லும், திண்மை கூர்மை இவையிரண்டு முடைய அம்புகளும், போராளியாம் தனக்கு வடிவமும் இல்லாத மன்மதன் மூவுலகையும் வென்ற செய்தி உறுப்புக்குறை விசேடமாம். உறுப்புக்கள் குறைந்தும் பொருளுக்குச் சிறப்புக் குறையவில்லை என்பதே விசேடம். (தண்டி. 79.-5) ஊ ஊக்க அணி - வீரசோழியம் கூறும் (கா. 154) இது ‘தன்மேம்பாட்டுரை’ என்ற அணிவகை. அது காண்க. (வீ. சோ. 154) ஊகாஞ்சிதம் - இது தற்குறிப்பேற்ற அணியின் பெயர்களுள் ஒன்று. இப் பெயர் தொன்னூல் விளக்கத்திலேயே காணப்படுகிறது. (தொ. வி. 346) ஊர்ஜஸ்வி அலங்காரம் - இதனைத் தமிழ் அணிநூலார் ‘தன் மேம்பாட்டுரை’ என்னும் அணி என்ப. அது காண்க. எ எடுத்துக்காட்டு அணி - எடுத்துக்காட்டுவமை எனவும்படும். திட்டாந்தம் என்பதும் அது. உபமானமும் உபமேயமும் தனித்தனி வாக்கியமாக அமைய, இடையே உவமஉருபு வாராமலிருப்பது இவ்வணி. (மா. அ. 133) எ-டு : ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ (குறள். 1) இதன்கண், அகர........ எழுத்தெல்லாம் - உபமானம்; ஆதி....... உலகு - உபமேயம் அல்லது ஆதி.......... உலகு - உபமானம்; அகர .......... எழுத்தெல்லாம் - உபமேயம் இப்பாடற்கண், உவமஉருபு இல்லை. ஆதலின் இஃது எடுத்துக் காட்டணியாம். கூறப்பட்ட பொருள் இரண்டனுள் ஒன்றற்கு ஒன்று எடுத்துக்காட்டாக அமைதலின் இப்பெயர்த் தாயிற்று. எடுத்துக்காட்டுப் பிரமாண அணி - ‘ஐதிஹ்யாலங்காரம்’ என வடநூலார் இவ்வணியைச் சுட்டுவர். உலகத்தே வழங்கி வரும் பழமையான செய்தியை எடுத்துக்கூறுவது. ஒரு மனிதன் சாகாமல் துயருற்ற வண்ணமாகவே வாழ் நாளைக் கழித்துவருவானாயின் என்றாவது ஒரு நாள் அவனுக்கு மகிழ்ச்சிக்குரிய வாய்ப்பு வந்து சேரும் என்பத னால், “பல துயரங்கட்கு இடையே மக்கள் உயிர்வாழ் கின்றனர்” என்ற கருத்தின்கண், சாகாது இருப்பவன் என்றா வது ஒருநாள் மகிழ்ச்சி அடைதல் கூடும் என்ற பண்டு தொட்டு வரும் உலகவழக்குச் செய்தியைக் கூறுதல் இவ் வணியாம். (குவ. 115) எடுத்துக்காட்டுவமை அணி - எதிர்பொருள் உவமை எனவும், மறுபொருள் உவமை எனவும் இது கூறப்பெறும். ஒரு பொருளுக்கு மற்றொருபொருள் உவமையாகுமாறு இரண்டு சமமான செய்திகளை இரண்டு தனித்தனி வாக்கி யத்தில் கூறி உவமைஉருபு ஒன்றும் இணைக்காமல் விட்டு விடுவதால், அவ்விரு பொருள்களுள் எதுவும் மற்றதற்கு உப மானமாகவோ உபமேயமாகவோ வரும் நிலையில் அமைக்கப் பட்ட உவமையணிவகை இது. இதனைத் ‘திருஷ்டாந்தாலங் காரம்’ என வடநூல் கூறும். இவ்வணி (1) நிகர் எடுத்துக்காட்டுவமை எனவும், 2) முரண் எடுத்துக் காட்டுவமை எனவும் இருவகைப்படும். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” (குறள். 1) இப்பாடலிலுள்ள இரண்டு செய்திகளில் எதனையும் உபமானமாகவோ உபமேயமாகவோ கொள்ளும் நிலையில் இவ்வணி அமைந்துள்ளது. இதனை இளம்பூரணர் ‘சுட்டிக் கூறா உவமம்’ என்பர் (தொ. பொ. 278 இள.) ; பேராசிரியர் ‘வேறுபட வந்த உவமத்துள்’ அடக்குவர் (தொ. பொ. 307 பேரா.) 1. நிகர் எடுத்துக்காட்டுவமையணி - இயல்பில் வெவ்வேறாயிருக்கின்ற இரண்டு செய்திகளை அவற்றிடையே உள்ள ஒப்புமையினால் உபமான உபமேயங் களாக்கி இரண்டு தனித்தனி வாக்கியத்தில் அவற்றின் செய்திகளைச் சமமாகக் குறிப்பிடும் வகை. எ-டு : அகர............ உலகு (குறள். 1) அகர............ எழுத்தெல்லாம், ஆதி ........... உலகு என்பன இரு வேறுபட்ட செய்திகள். எழுத்தெல்லாம் அகரத்தை அடிப் படையாக உடையன; உலகு இறைவனை அடிப்படையாக உடையது என்ற இக்குறளில் அடிப்படையாதல் என்ற ஒப்புமைபற்றி அவை தனித்தனி வாக்கியமாக ஒரேபாடலில் சமமாகக் குறிக்கப்பட்டுள. அகர.......... எழுத்தெல்லாம் உபமானம்; ஆதி..... உலகு - உபமேயம். அல்லது, ஆதி..... உலகு - உபமானம்; அகர..... எழுத்தெல்லாம் - உபமேயம். இவ்வாறு இரு செய்திகளும் ஒன்றற் கொன்று உபமானமாகவும் உபமேயமாகவும் கூறப்படும் ஒப்புமைச் செய்தியுடைமை இவ்வணி வகையிற் காணப்படும். 2. முரண் எடுத்துக்காட்டுவமைஅணி - தனித்தனி வாக்கியத்தில் இடையே உவமஉருபின்றி இரு செய்திகளை உபமான உபமேயங்களாகக் கூறுமிடத்து, ஒரு செய்தியை ஒரு வகை வாய்பாட்டானும் மற்றொரு செய்தியை மற்றும் ஒரு வாய்பாட்டானும் கூறி, ஒன்றற் கொன்று உவமையாக அமைக்கும் வகை. எ-டு : ‘மன்னவநின் நெஞ்சில் சினம்தோன்ற மாநிலத்தில் ஒன்னலர்தம் கூட்டம் ஒழிந்ததால் - பன்னின் எதனளவும் வெய்யோன் உதயவெற் பெய்தானோ அதனளவும் மேவுமே அல்’ “அரசே! உன் நெஞ்சில் சினம் தோன்றிய அளவில் உலகில் பகைவர்கூட்டம் ஒழிந்தது; சூரியன் உதயவெற்பில் தோன்றும் வரை இருள் இருந்துகொண்டே இருக்கும்” என்ற இருகருத்துக்கள் ஒன்றற்கொன்று உபமானமாக உள்ளன. சூரியன் உதயவெற்பில் தோன்றிய அளவில் இருள் ஒழிந்தது என்று முதல் வாக்கியத்துடன் ஒத்த வாய்பாட்டால் கூறப் படாது; வேறொரு வாய்பாட்டால் இரண்டாம் வாக்கியம் கூறப்பட்ட செய்தி சொல்லளவில் மாறுபட்ட செய்தி ஆதலின், இவ்வணிவகை இப்பெயர்த்தாயிற்று. (மா. அ. 133, குவ. 18, ச. 40,) (மு. வீ. பொருளணி. 36) எண்ணலங்காரம் - எண்கள் முறையே வரும் ஓர் அணி. எ-டு : ‘ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங்கரத்தன்’ (சி. சி. விநாயக. காப்பு) என்னும் பாடலடியில் ஒன்று முதல் ஐந்து எண்கள் முறையே வருமாறு அமைத்திருத்தல் இவ்வணியாம். எண்வகைச் சுவைகள் பற்றிய அணி - சுவையணி வீரம் முதலிய எட்டு மெய்ப்பாடுகளாலும் இயலு தலின் எட்டுவகைப்படும். உள்ளத்தே நிகழும் உணர்ச்சி புறத்தே புலனாம்வகை வீரம் அச்சம் இளிவரல் வியப்பு காமம் அவலம் உருத்திரம் நகை என்னும் இவ்வெட்டானும் நிகழ்வது சுவையணி. மெய்ப்பாடு எனினும் சுவையெனினும் ஒக்கும். இஃது இரத அணி, ரஸாலங்காரம் என்னும் பெயர் பெறும். இவ்வெட்டனொடு நடுவுநிலையைச் சேர்த்துச் சுவையணிவகை ஒன்பது என்பர். (தண்டி. 69) எதிர்காலத் தடைமொழி - இஃது எதிர்வினை விலக்கு எனவும்படும். அது காண்க. (வீ. சோ. 164) எதிர்நிரல்நிறையணி - முடிக்கும் சொல்லையும் முடிக்கப்படும் சொல்லையும் வரிசையாக அமைக்காமல் மாற்றி அமைப்பது இவ்வணி; மயக்க நிரல்நிறை அணி எனவும் இது கூறப்படும். (மா.அ. 166 - 168, 170) எ-டு : ‘விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்’ (கு. 410) இலங்கு நூல் கற்றார் மக்கள் அனையர், ஏனையவர் விலங்கு அனையர் என வரிசை மாற்றி, முடிக்கப்படும் சொல்லை முடிக்கும் சொல்லுடன் புணர்க்கும் அணி இவ்வணியாம். யாப்பருங்கல விருத்தியுரையில் எதிர்நிரல்நிறைக்கும் மயக்க நிரல்நிறைக்கும் இடையே வேறுபாடு கூறப்பட்டுள்ளது. (பக். 382) எதிர்நிலை அணி - இது தெற்றுவமை எனவும், விபரீத உவமை எனவும் கூறப்பெறும். உபமானம் எப்பொழுதும் உபமேயத்தைவிட மேம்பட்டதாக இருத்தல் உவமையணிக்கு உரியது. அதற்கு மாறாக உபமானத்திற்கு உபமேயத்தை நோக்கத் தாழ்வினைக் குறிப்பிடும் இவ்வணி உவமையணிக்கு மறுதலைப்பட எதிர்நிலையணி எனப்பட்டது. இதனைப் பிரதீபாலங்காரம் என வடநூல்கள் கூறும்; மாறன்அலங்காரமும் அப்பெய ராலேயே குறிப்பிடும் (217) இவ்வணி ஐவகைத்து; அவை : 1. உபமானத்தை உபமேயமாக்கிக் கூறும் எதிர்நிலைஅணி, 2. உபமேயத்தை இகழும் எதிர்நிலையணி, 3. உபமேயத்தை உபமேயமாகவே கொண்டு உபமானத்தை இகழும் எதிர்நிலையணி, 4. உபமேயத்தோடு உபமானத்திற்கு ஒப்புமை இன்று என்று கூறும் எதிர்நிலையணி, 5. உபமானம் வீண் என்று கூறும் எதிர்நிலையணி - என்பன. இவ்வாறு சந்திராலோகமும் குவலயானந்தமும் கூறும். மாறனலங்காரம் இதன் வகைகளைக் குறிப்பிட்டிலது. இதனை உவமையணியின் வகையாகவே தொல்காப்பியம் (பொ. 284 பேரா.), தண்டி (32-14), மாறனலங்காரம், வீரசோழியம் (156 உரை), தொன்னூல் விளக்கம் (332) முத்து வீரியம் (பொருளணி. 15) என்பன குறிப்பிடும். (ச. 10, 11 குவ. 4) 1. உபமானத்தை உபமேயமாக்கிக் கூறும் எதிர்நிலையணி எ-டு : ‘அதிர்கடல்ஆழ் வையத்து அணங்குமுகம் போல மதியும் செயுமோ மகிழ்?’ ‘இவ்வுலகில் இத்தலைவியது முகத்தைப் போல எனக்குச் சந்திரன் மகிழ்ச்சி தாராது’ என்ற பொருளமைந்த இப் பாடற்கண் உலகில் பொதுவாக உபமானமாகக் கூறப்படும் சந்திரன் உபமேயமாகவும், உபமேயமாகக் கூறப்படும் தலைவிமுகம் உபமானமாகவும் மாறிவந்துள்ளமை காண்க. 2. உபமானத்தை உபமேயமாக்கி, உபமேயத்தை இகழும் எதிர்நிலையணி எ-டு : ‘பொன்செருக்கை மாற்றுமெழில் பூவைத் திருமுகமே! உன்செருக்குப் போதும் ஒழிகஇனி - கொன்செருக்கு மிக்கமக ரக்கடற்பூ மிக்கண் மகிழ்செயலால் ஒக்கும் மதியும் உனை.’ “திருமகளது கருவத்தைப் போக்கும் அழகுடைய என் தலைவியது திருமுகமே! நீ கருவம் கொண்டதனை இனி யேனும் விட்டுவிடு. கடல் சூழ் இப்புவியில் உள்ளார் அனைவர்க்கும் மகிழ்ச்சியைத் தருதலால் சந்திரனும் நினக்கு நிகராவான்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், உலகம் அறிந்த உவமையாகிய சந்திரனை உபமேயம் ஆக்கித் தலைவி முகத்தை உபமானமாக்கியதோடு அமையாமல், அத்தலைவி முகம் தான் கருவம் கொள்ளுதற்குத் தனித்தகுதியொன்றும் பெற்றிலது என அதனை இகழ்வதன்கண் இவ்வணி அமைந் துளது. உலகறிந்த உபமானம் - சந்திரன் உலகறிந்த உபமேயம் - தலைவிமுகம் அவ்வுபமேயத்தை இகழ்தல் - செருக்கடைய அதற்குத் தனித்தகுதி இன்று என்பது 3. உபமேயத்தை உபமேயமாகவே கொண்டு உவமானத்தை இகழும் எதிர்நிலையணி எ-டு : ‘ஆற்றல் உறுகொலையில் ஆரெனக்கொப்(பு) என்றந்தோ கூற்றுவநீ வீண்செருக்குக் கொள்கின்றாய் - சாற்றுவல்கேள் : வெண்திரைசூழ் ஞால மிசையுனக்கொப் பாகவே ஒண்தொடிதன் நீள்விழியும் உண்டு.’ “கொடிய கொலைத்தொழிலில் உனக்கு ஒப்பாரில்லை என்று வீண் கருவம் கொள்ளும் கூற்றுவனே! இவ்வுலகில் உனக்கு ஒப்பாகக் கொடிய கொலைத்தொழில் செய்ய இப் பெண்ணின் நீண்ட கண்களும் உள” என்றும் பொருளமைந்த இப்பாடற்கண், கூற்றுவன் - உபமானம், பெண்ணின் கண்கள் - உபமேயம். உபமேயத்திற்கு உபமானத்தை ஒத்த தகுதி குறைவில்லாமல் உள்ளது ஆதலின், உபமானம் கருவம் கொள்வதற்குத் தனித் தகுதியுடையதன்று என்று குறிப் பிடுதற்கண் இவ்வணி அமைந்துளது. 4. உபமேயத்தோடு உபமானத்திற்கு ஒப்புமை இன்று எனக் கூறும் எதிர்நிலையணி எ-டு : ‘இறைவி மதுரமொழிக்(கு) இன்னமு(து)ஒப் பாம்என்(று) அறைவ(து) அபவாத மாம்.’ “இத்தலைவியின் இனிய சொற்களுக்கு இனிய அமுதம் ஒப்பாகும் என்று கூறுவது அச்சொற்களைப் பழிப்பதற்கு நிகராகும்” என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், உபமேய மாகிய தலைவியின் சொற்களுக்கு உபமானமாகிய இனிய அமுதம் ஒப்பாகும் என்று கூறுவது உபமேயத்திற்குத் குறைவுதரும் செயலாகும் என்று குறிப்பிடுதற்கண் இவ்வணி அமைந்துளது. 5. உபமானம் வீண் என்று கூறும் எதிர்நிலை அணி எ-டு : ‘செங்கயற்க ணாய்! உன் திருமுகத்தைப் பார்ப்பவர்க்குப் பங்கயத்தால் உண்டோ பயன்?’ “சிவந்த கயல்மீன் போன்ற கண்களையுடைய தலைவியே! நின் அழகிய முகத்தைக் காண்பவர்க்குத் தாமரையைக் காண்பதால் மகிழ்ச்சியாகிய பயன் கிட்டுமோ?” என்ற பொருள் அமைந்த இப்பாடற்கண், உபமேயமாகிய தலைவி யின் முகத்தைப் போல மகிழ்ச்சி அளிக்கும் பண்பு இன்மை யின் தாமரை இருப்பதனால் பயன் ஒன்றும் இல்லை என்று கூறுதற்கண், உபமானத்தை வீண்மை எனச் சுட்டும் இவ்வணிவகை அமைந்துளது. எதிர்நிலை உவமை - ‘விபரீத உவமை’ காண்க. சந்திராலோகம் இதனை எதிர்நிலை உவமை என்னும். வடநூலார் பிரதீபாலங்காரம் என்பர். உவமையினை மதியாது உபமேயத்தை மேம்பட்டது என்று கூறுவது பிரதீபவலங்காரம் என்று மாறனலங்காரம் கூறும். (மா. அ. 217) எதிர்ப்பொருள் உவமை - இது ‘மறுபொருள் உவமை’ எனவும்படும். அது காண்க. (வீ. சோ. 156) எதிர்மறை அணி - ஒழிப்பு அணியின் மாறுபட்டதாய்க் கேட்போரை மகிழ் விப்பதாகிய மறுப்பினைத் தெரிவிக்கும் அணி. இதனை வடநூலார் ஆnக்ஷபாலங்காரம் என்பர். இது மூவகைத்து : 1. பொருளைக் காரணத்தால் மறுக்கும் எதிர்மறையணி, 2. மறுப்பினை நீக்கி மற்றொருபொருள் தோன்றச் செய்யும் எதிர்மறையணி, 3. உடன்பாட்டுச் சொல்லால் மறுப்பினை உணர்விக்கும் எதிர்மறையணி என. 1) பொருளைக் காரணம் காட்டி மறுக்கும் எதிர்மறையணி - எ-டு : ‘விளைபொருள்மேல் அண்ணல்! விரும்பினையேல் ஈண்டெம் கிளையழுகை கேட்பதற்கு முன்னம் - விளைதேன் புடைஊறு பூந்தார்ப் புனைகழலோய்! போக்கிற்(கு) இடையூறு வாராமல் ஏகு!’ (தண்டி.) “தலைவ! நீ இக்கற்புக் காலத்தே தலைவியை விடுத்துப் பொருள் தேடற்கு நெடுந்தொலைவு செல்லும் பிரிவை மேற்கொள்வை யாயின், எம் உறவினரது அழுகைக்குரல் கேட்பதற்குமுன் புறப்படு” என்ற இத்தோழி கூற்றில், “நீ பிரியப்போவதனை அறிந்த தலைவி நீ புறப்படுமுன் இறந்து போதலும் கூடும்; அவள் இறப்புக் குறித்து உறவினர் அழுத லும் கூடும்; அழுகைக்குரல் நின் செலவிற்குத் தீயநிமித்தம் ஆதலும் கூடும்; ஆதலின் அழுகைக் குரல் கேட்பதன் முன் புறப்படு” என்றமைந்த இப்பாடற்கண், தலைவன் பிரிவாகிய பொருள் தலைவி அவன்பிரிவால் இறந்துவிடுவாள் என்ற காரணத்தால் மறுக்கப்படும் இடத்தே இவ்வணி அமைந் துள்ளது. இதனை முன்ன விலக்கு அணியின் வகையாகத் ‘துணை செயல் விலக்கு’ எனத் தண்டி முதலிய நூல்கள் கூறும். (தண்டி. 45 -5, வீ.சோ. 164 உரை, மா.அ. 224 -7) 2. மறுப்பினை நீக்கி மற்றொருபொருள் தோன்றச் செய்யும் எதிர்மறையணி - எ-டு : ‘தண்நறா வண்(டு)அளிசூழ் தாமம்அணி திண்திரள்தோள் அண்ணலே! யான்தூதி அல்லேன்காண் - வண்ணமிகு வேயெனும்தோ ளாள்மெய் விரகதா பம்வடவைத் தீயெனவே தோன்றும் செறிந்து.’ “திண்ணிய திரள் தோள்களை வண்டுகள் சூழும் மாலைகள் தழுவக் கொடுத்த அண்ணலே! நான் உன்னிடம் தலைவியின் தூதாக வரவில்லை. வேய்த்தோளாள் ஆகிய தலைவிக்குப் பிரிதல்துன்பம் வடவைத்தீப் போல வாட்டம் தருகின்றது” என்று தலைவனிடம் தோழி ஒருத்தி கூறும் இக்கூற்றில், தலைவி அனுப்பவும் தான் அவள்தூதாக வரவில்லை என்று முதற்கண் தலைவன் கருதியதனை மறுத்துக் கூறிப் பின் தூது வருவோர் செய்யும் செயலாகிய தலைவியது விரக தாபத்தைப் பற்றிக் கூறிய மாற்றத்தில், தூதரது செயல் புரிந்த தோழி தான் தூதியாக வரவில்லை என்று கூறிய முதற்செய்தி நீங்கி அவள் தூதாகத்தான் வந்துள்ளாள் என்ற கருத்துப் புலப்பட அமைந்தமை இவ் வணியாம். 3. உடன்பாட்டுச் சொல்லால் மறுப்பினை உணர்விக்கும் எதிர்மறையணி - எ-டு : ‘ஒண்கதிர்த் திங்காள்! நீ உன்வடிவை இங்கெமக்குக் கண்களிகூ ரக்கடிது காட்டுவாய் - வண்கவின்கூர் பூண்தாங்கு கொங்கையுடைப் பூவைமுகம் உண்(டு) அதனால் வேண்டாபோ வெற்றுக்கு வீண்.’ “சந்திரனே! உன் வடிவை எங்கள் கண்கள் கண்டு களிக்குமாறு விரைவில் காட்ட வாராய்” என்று முதலில் கூறிப் பின், “இத் தலைவியின் முகம் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டிவிட்டது. ஆதலின் நீ வருதல் வேண்டா, போவாயாக” என்று பொருள் படும் இப்பாடற்கண், முதலில் சந்திரனைக் கண்களுக்குக் களிப்புத் தருமாறு வருக என்று அழைத்துப் பின் அதனினும் களிப்புத் தரும் தலைவிமுகம் காணும் வாய்ப்புக் கிட்டியதால் அதன் வருகை வேண்டா என நீக்கியதன்கண் இவ்வணி அமைந்துள்ளது. (ச. 57, 58, குவ. 32) எதிர்வினை விலக்கு - எதிர்கால வினையால் ஒன்றை விலக்கிக் கூறல் - எ-டு : ‘முல்லைக் கொடிநடுங்க மொய்காந்தள் கைகுலைப்ப எல்லை இனவண்(டு) எழுந்திரங்க - மெல்லியல்மேல் தீவாய் நெடுவாடை வந்தால் செயல்அறியேன் போவாய் ஒழிவாய் பொருட்கு’ “தலைவ! முல்லைக்கொடி அசைய, காந்தள் கைகளைப் போலப் பூக்கள் மலர, வண்டுகள் ஒலிசெய்ய, இவள்மீது தீயை வீசி வருத்தும் வகையில் கொடிய வாடைக்காற்று வந்தால் இவளை எப்படி ஆற்றுவிப்பது என்பது எனக்குத் தெரியாது. இதனைக் கேட்டபின்னும் பொருள்தேட நீ போவதோ, இவளைப் பிரியாமல் இருப்பதோ உன் விருப்பம்” என்று பொருள்வயின் பிரிய இருக்கும் தலைவற்குத் தோழி கூறிய இப்பாடற்கண், எதிர்காலத்தே நிகழக் கூடிய செயல் களைக் கூறி அவள் அவன் செல்வதை விலக்கியவாறு. (தண்டி. 43- 2) எல்லா நெறியார்க்கும் ஒக்கும் குணவணிகள் - பொருளின்பம், ஒழுகிசை, உதாரம், சமாதி என்பன வைதருப்பர், கௌடர் என்ற இருநெறியார்க்கும் ஒக்கும் (இ. வி. 635 உரை) ஒழுகிசை இருநெறியார்க்கும் ஒத்தலைத் தண்டியும் (20) வலியுறுத்தும். பொருளின்பம், பொருட்செறிவு, இன்னிசை (-ஒழுகிசை), உதாரம், உய்த்தலில் பொருண்மை, சமாதி என்பன வைதருப்பர், கௌடர், பாஞ்சாலர் என்ற மூன்று நெறியார்க் கும் ஒக்கும். (மா. அ. 82 - 84 உரை) எழில்பொருள் உவமை - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (110) வருவதோர் அணி. அழகான பொருளைப் பண்பு பற்றியோ தொழில் பற்றியோ உவமித்தல். எ-டு : ‘இறையோன் சடைமுடிமேல் எந்நாளும் தங்கும் பிறைஏர் திருநுதலும் பெற்றது’ (தண்டி. 32-7) என்றாற் போல வருவது. ‘புகழுவமை’ காண்க. எழுத்து நிரல்நிறை - செய்யுளில் இரண்டு பெயர்க்கு நிரம்பின நாலெழுத்தை மாறாடி ஒரோவொன்று இடையிட்டுப் பிரித்துக் கூட்டி வரிசைப்படுத்தும் வகையினை எழுத்து நிரல் நிறை என்பர். எ-டு : ‘மேவா ருளிமுலைகண் ணன்பா மிளிர் விபதுண் பூவார் வதனமொழிப் பொன்.’ இப் பொன் போல்வாளாகிய தலைவிக்கு முலை மேரு, கண் வாளி (-அம்பு), வதனம் விது (- சந்திரன்) பண் மொழி என்று எழுத்துக்களைப் பிரித்து வரிசைப்படக் கூட்டுவதன்கண் இவ்வணி வந்துள்ளது காண்க. (மா. அ. 171) எழுத்து மாறு நிரல்நிறை - எழுத்துக்களை முறையே மாற்றி நிரல்நிறை யாக்கிப் பொருள் கொள்வது; மாறனலங்காரம் குறிக்கும் எழுத்து நிரல்நிறையும் இதுவும் ஒன்றே. ‘காமவிதி கண்முகம் மென்மருங்குல் செய்யவாய் தோமில் துகடினி’ ................ இதன்கண் காவி கண் என்றும், மதி முகமென்றும், துடி மருங்குல் என்றும், கனி வாய் என்றும், எழுத்துக்களை முறையே மாற்றி வரிசைப்படப் பொருள் கொள்ளப்பட்டது. (யா. வி. பக். 379) எழுத்து வழிநிலை - ஓர் எழுத்தே ஓரடியில் பலஇடங்களில் பயின்று வரும் வனப்பினை ஒருசார் ஆசிரியர் ‘எழுத்துவழிநிலை’ எனக் கூறுவர் என்று வீரசோழிய உரை குறிப்பிடுகிறது. (வீ.சோ.159 உரை) எ-டு : ‘கடுவே கயலெனக் கரந்தடும் கண்ணிணை காமனும் காமுறும் காட்சிய காண்முகம்’ (மா.அ. பாடல். 80) இவ்வடிகளில் முதலடியில் ககரமும் இரண்டாமடியில் ககர ஆகாரமும் (முற்று மோனையாகப்) பயின்று வந்துள்ளமை எழுத்து வழிநிலையாகும். எள்ள என்னும் உவம உருபு - ‘எழிலி வானம் எள்ளினன் தரூஉம்....... தோன்றல்’ கார்மேகத்தையுடைய வானத்தை ஒப்ப வழங்கும் வள்ளல் என்று பொருள்படும் இத்தொடரில், வானத்தின் பயனாகிய மழையாற் பெறும் விளையுளும் வள்ளலது கொடையாற் பெறும் செல்வமும் பயனான் ஒத்தலின் எள்ள என்பது பயன்உவமத்தின் கண் வந்தது. இது பயன் உவமத்திற்கே சிறந்த உருபாகும். (தொ. பொ. 289 பேரா.) எளிதின் முடிவு அணி - இது சமாயித அணி எனவும், துணைப்பேறுஅணி எனவும் கூறப்படும். வடநூலார் சமாஹித அலங்காரம் என்பர். ஒருவன் செய்யத் தொடங்கிய செயல் மற்றொரு காரணம் எதிர்பாராது வந்து உதவியதனால் எளிதின் முடிவதாகக் கூறுவது. எ-டு : ‘மதிநுதலாட்(கு) யான்ஊடல் மாற்றத் தொழும்போ(து) உதவிமுகில் செய்தன்(று) ஒலித்து.’ தலைவியின் ஊடலை நீக்கி அவளைத் தழுவுதற்குத் தலைவன் முயன்று கொண்டிருக்கும்போது வானத்தில் இடி முழங்க, இடி முழக்கத்திற்கு அஞ்சித் தலைவனைத் தலைவி தழுவிக் கொண்ட காரணத்தால் அவள் ஊடல் தீர்ந்தது - என்ற பொருள் அமைந்த இப்பாடற்கண், இடிமுழக்கின் உதவியால் தலைவியின் ஊடலைத் தலைவன் எளிதில் தீர்த்தான் என்பதன்கண் இவ்வணி அமைந்துள்ளது (குவ. 57 மா.அ. 185, ச. 83) (தண்டி. 73, வீ.சோ. 171) என்ற என்னும் உவம உருபு - “வாய் என்ற பவளம்” - வாய் போன்ற பவளம் என்று பொருள்படும் இத்தொடரில் என்ற என்னும் உவம உருபு உரு உவமத்தின்கண் வந்தது. (தொ. பொ. 286 பேரா.) என்றும் அபாவ ஏது - ஏது அணியினைச் சார்ந்த அபாவ ஏதுவின் ஐவகைகளில் ஒன்று. எக்காலத்தும் இயலா நிகழ்ச்சியைக் காரணமாகச் சுட்டி ஒரு செய்தியை வலியுறுத்துவது. எ-டு : ‘யாண்டும் மொழிதிறம்பார் சான்றவர்; எம்மருங்கும் ஈண்டும் மயில்கள் இனமினமாய் - மூண்டெழுந்த காலையே கார்முழங்கும் என்றயரேல்; காதலர்தேர் மாலையே நம்பால் வரும்.’ “சான்றோர் என்றும் சொன்ன சொல் தவறார் ஆதலின், சான்றோராகிய நம் தலைவர் சொன்னசொல் தவறாமல் நாளையே மீண்டு வருவார்” என்று பொருளமைந்த இதன்கண், ‘யாண்டும் மொழிதிறம்பார் சான்றவர்’ என்பது என்றும் அபாவ ஏது அணியாம். (தண்டி. 62 -1) என்றும் அபாவம் - எக்காலத்தும் நிகழாதது. என்றும் இன்மை அணி - இஃது ‘என்றும் அபாவ ஏது’ எனவும் கூறப்பெறும். அதுகாண்க. (மா. அ. 194) என்ன என்ற உவம உருபு - ‘புலிஎன்னக் கலிசிறந்து உராஅய்’ புலியைப் போல ஆர வாரம் மிக்கு உலாவி என்று பொருள்படும் இத்தொடரில், என்ன என்ற உவம உருபு வினைஉவமத்தின்கண் வந்தது. இது வினை உவமத்திற்கு வருதலே சிறப்பு. (தொ. பொ. 287 பேரா.) என என்ற உவம உருபு - ‘வேய்எனத் திரண்ட தோள்’ மூங்கிலை ஒத்துத் திரண்ட தோள்கள் என்று பொருள்படும் இத்தொடரில், என என்பது மெய் உவமப் பொருட்கண் வந்தது. இஃது ‘ஆய்தூவி அனம்என அணிமயிற் பெடையெனத், தூதுணம் புறவெனத் துதைந்த நின் எழில்நலம்’ (கலி. 56) என, ஏனை உவமங் களிலும் வரும். ‘உரும்எனச் சிலைக்கும் ஊக்கமொடு’ - பயன்உவமம் பற்றி வந்தது. ‘நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம் - (அகநா. 31) உரு உவமம் பற்றி வந்தது. (தொ.பொ. 286, 289, 291 பேரா. உரை) ஏ ஏக உவமை - உபமானமும் உபமேயமும் திணை பால் முதல் சினை பெயர் வினை - யென்பன மயங்காது ஒன்றாயிருத்தல். இதுவும் பூரண உவமையின் பாற்படும். எ-டு : ‘முற்ற உணர்த்தும் முதுகாப் பியம்புணர்ப்பான் உற்றவர்தம் கண்போன்(று) உறங்காவாம் - இற்பிரிந்தால் நல்லியலார் வந்தனைசெய் நாவீறன் மால்வரைமேல் மெல்லியலார் இன்ப விழி.’ சிறந்த காப்பியம் அமைக்கத் தொடங்கி அதன்கண் முயலும் புலவர்களின் கண்களைப் போலக் கணவனைக் கற்புக் காலத்துப் பிரிவு குறித்துப் பிரிந்திருக்கும் மகளிர்கண்கள் உறங்கமாட்டா என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், உபமானம் - காப்பியம் எழுதுவோர் கண்கள் உபமேயம் - கணவரைப் பிரிந்த மகளிர் கண்கள் இவ்விரண்டும் அஃறிணைப்பன்மைச் சினைப்பெயர்களாய் ‘உறங்கா’ என்ற ஒருவினைகொண்டே முடிந்தமையின், ஏக உவமை எனப்பட்டன. (மா. அ. பாடல் 191) ஏகதேச உருவக அணி - தொடர்புடைய பொருள்களில் ஒன்றை உருவகம் செய்து மற்றையதை (அன்றி மற்றவற்றை) உருவகம் செய்யாது விடுதல். (மா.அ. 120 -3) எ-டு : ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.’ (குறள். 10) இதன்கண், பிறவியைப் பெருங்கடலாக உருவகம் செய்ததற்கு ஏற்ப, அதனை நீந்துதற்குத் துணையாகும் இறைவன் அடியைப் புணையாக உருவகியாமையால், ஏகதேச உருவகஅணி வந்தது. ஏகதேசம் - ஒருபகுதி. ஏகவ்யதிரேகம் - வேற்றுமையணி வகைகளுள், ஒன்றாகிய ‘ஒரு பொருள் வேற்றுமையின்’ வடமொழிப் பெயர்; அது காண்க. ஏகவல்லி - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (81) வருவதோர் அணி. ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகப் பலவற்றைக் கூறுவது. ‘ஒற்றை மணிமாலை அணி’ காண்க. ஏகாங்க உருவக அணி - ஏக அங்கம் - ஓர் உறுப்பு. ஒரு பொருளின் உறுப்புக்கள் பலவற்றுள்ளும் ஒன்றனை மாத்திரம் உருவகம் செய்து ஏனையவற்றை வாளா கூறுதல். எ-டு : ‘காதலனைத் தாஎன்(று) உலவும் கருநெடுங்கண்; ஏதிலனால் என்என்னும் இன்மொழித்தேன்; - மாதர் மருண்ட மனமகிழ்ச்சி வாண்முகத்து வந்த இருண்டினுக்கும் என்செய்கோ யான்.’ தலைவியும் தோழியும் ஒருங்கிருந்தவழி மறுக்கப்பட்ட தலைவன் தன்னுட் கூறிக் கொள்வது இது. “இவளுடைய கண்கள் காதலனைக் கொண்டு வா கொண்டு வா’ என்று காமமயக்கத்துடன் உலவுகின்றன. மொழியாகிய தேனோ ‘அயலானுடன் யாது பேச்சு வேண்டிக்கிடக்கிறது?’ என்று மறுக்கிறது. இவள் முகத்தே இணைந்த இந்த இரண்டு உறுப்புக்களின் மாறுபட்ட செயலைப் பார்த்து எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையே!” என்ற இதன்கண், மொழி தேனாக உருவகிக்கப்பட்டதும், ஏனைய உறுப்பாகிய கண்ணும் முகமும் உருவகிக்கப்படாமையும் ஏகாங்க உருவகமாகும். (தண்டி. 37 - 11) ஏகார்த்த தீபகம் - தீவக அணி வகைகளுள் ‘ஒருபொருள் தீவக’த்தை வடநூலார் ஏகார்த்த தீபகம் என்பர். அது காண்க. ஏகாவளி அலங்காரம் - ஒரு சிறப்பான பொருளை முதலில் வைத்து, அதற்கு உயர் வினையே தருவதாய்ப் பிறிதொரு கூட்டத்தினுள் ஒரு சிறப்பான பொருளை அதன்மேல் வைத்து, அப்படிப் பலவாகச் சிறப்பான பொருள்களை ஒன்றோடொன்று பொருந்தத் தொடர்புபடுத்தி மிகச் சிறந்த பொருளை இறுதியில் வைத்து, பலவளையத்தை ஒன்றாகப் பிணிக்கும் சங்கிலி போலத் தொடர்புறுத்தும் அணி. இதனைத் தமிழ் நூலார் ‘ஒற்றை மணிமாலை’ அணியாம் என்ப. அது காண்க. (மா. அ. 216) ஏது அணி - ஒரு செயலின் நிகழ்ச்சிக்குக் காரணமான ஒரு செய்தியை எடுத்துரைக்கும் அணி. இவ்வணி எல்லா அணிநூல்களிலும் காணப்படும். தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலிய நூல்களில் இவ்வணி பலவகைத்தாக விளக்கப்பட்டுள்ளது. அவ்வகைகளுள் பல வெவ்வேறு பெயர்களையுடைய வெவ் வேறு அணிகளாகச் சந்திராலோகத்துள்ளும் குவலயானந் தத்துள்ளும் கூறப்படுகின்றமையின், இந்நூல்கள் ஏது அணியை இருவகையாகவே விரித்து ஓதுகின்றன. அவை. 1. காரணத்தைக் காரியத்துடன் சேர்த்துச் சொல்லும் ஏதுவணி, 2. காரணத்தையும் காரியத்தையும் ஒன்றாக்கிச் சொல்லும் ஏதுவணி என்பனவாம். 1. காரணத்தைக் காரியத்துடன் சேர்த்துச் சொல்லும் ஏதுவணி எ-டு : ‘பெருந்திங்கள் தோன்றுமே பெய்வளையார் நெஞ்சில் பொருந்(து)ஊடல் தீர்தற் பொருட்டு.’ சந்திரன் வானத்தில் தோன்றுதலாகிய காரணத்தால் மகளிர் நெஞ்சிலுள்ள ஊடல் தீர்தலாகிய காரியம் நிகழ்கிறது என்ற பொருளமைந்த இப்பாடற்கண், காரணகாரியங்கள் சேர்த்துச் சொல்லப்படும் இவ்வணிவகை வந்துள்ளது. 2. காரணத்தையும் காரியத்தையும் ஒன்றாக்கிச் சொல்லும் ஏதுவணி எ-டு : ‘கூர்கொள்நெடு வேலுடைநம் கோன்கடைக்கண் பார்வையே சீர்கொள்கவி வாணர் திரு.’ வேலுடைய நம் மன்னனுடைய கடைக்கண் பார்வையே கவிபாடுவதில் வல்ல புலவர்கட்குச் செல்வமாகும் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், அரசனுடைய கடைக்கண் பார்வைக்கு உரியராதல் என்ற காரணத்தால் புலவர்கட்குப் பெருஞ்செல்வம் பெறுதலாகிய காரியம் வாய்க்கும் என்று கூறாமல், அக்காரணத்தையே செல்வப் பேறு ஆகிய காரிய மாகக் கூறினமையால் இவ்வணிவகை வந்துள்ளது. (ச. 126, குவ. 100) ஏதுஅணி வகைகள் - காரக ஏதுவும் ஞாபக ஏதுவும் என ஏது இருவகைப்படும். அவற்றுள் காரகஏது அணிவகைகளாவன : ஏவுதல்கருத்தாக் காரகஏது, இயற்றுதல்கருத்தாக் காரகஏது, பொருட் கருத்தாக் காரகஏது, கருமக்கருத்தாக் காரகஏது; கருவிக் கருத்தாக் கார்கஏது, நிலக்கருத்தாக் காரக ஏது, காலக் கருத்தாக் காரக ஏது, ஆக்கம் தரும் காரகஏது, அழிவு தரும் காரகஏது என்பன. இனி, ஞாபகஏது அணிவகைகளாவன - காரணம் கண்டு காரியம் புலப்பட்ட ஞாபகஏது, பொருள் ஞாபகஏது, இட ஞாபகஏது, வினை ஞாபகஏது, பண்பு ஞாபக ஏது, காரியம் கண்டு காரணம் புலப்பட்ட ஞாபகஏது என்பன. இனி அபாவம்பற்றி வரும் ஏது, என்றும் அபாவ ஏது- இன்மையின் அபாவ ஏது - ஒன்றின் ஒன்று அபாவஏது - உள்ளதன் அபாவ ஏது - அழிவுபாட்டு அபாவ ஏது என ஐவகைப்படும். இன்னும் தூரகாரிய ஏது, ஒருங்குடன் தோற்ற ஏது, காரியம் முந்துறு காரண ஏது, உயுத்த ஏது, அயுத்த ஏது, ஐய ஏது- என வருவனவும் உள. (மா. அ. 186-196) ஏது அனுமானம் - காரிய நிகழ்ச்சி கண்டு அதற்குக் காரணமுண்டு என்று கருதி உரைக்கும் அளவை. எ-டு: ஆற்றில் பெருகிய வெள்ளத்தைக் கண்டு ஆறு தோன்றுமிடத்தே மழை மிகப் பெய்துள்ளமையை எண்ணியுரைப்பது. ஏது உருவகத்தின்பாற் படுவது - எ-டு : ‘வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை.’ (குறள். 872) இதன்கண், உழவர் என்னும் உருவகத்திற்கு ஏற்பக் கருவியை ஏதுவில் அடக்கும் மரபு பற்றி, வில்லையே ஏராகக் கொண்டு பகைவர்உடலை உழும் வீரர்களின் பகைமையைத் தேடிக் கொள்வதைவிடச் சொல்லையே ஏராகக் கொண்டு உள்ளமாகிய வயலை உழும் புலவர்களின் பகையைத் தேடிக் கொள்ளுதல் கொடியதாகும் என்ற, வில்ஏர் - சொல்ஏர் - என உழவிற்குப் பயன்படும் கருவிகளைக் காரணங்களாக்கி, வீரரையும் புலவரையும் ‘வில்லேர் உழவர்’, ‘சொல்லேர் உழவர்’ என உருவகித்துள்ளமை ஏதுஉருவகத்தின்பாற்படும். இதனை உருவகம் பற்றிய புறனடைச் சூத்திரத்தால் கொள்ளுப. (தண்டி, 39-1; இ.வி. 645) ஏது உருவகம் - இஃது உருவக அணிவகைகளுள் ஒன்று. ஒரு பொருளைக் காரணத்துடன் பொருத்தி உருவகித்தல். எ-டு : ‘மாற்றத்தால் கிள்ளை, நடையால் மட அன்னம், தோற்றத்தால் தண்ணென் சுடர்விளக்கம், - போற்றும் இயலால் மயில், எம்மை இந்நீர்மை ஆக்கும் மயல்ஆர் மதர்நெடுங்கண் மான்.’ “மதர்த்த நீண்ட கண்களால் மானாகிய இவள் என்னை நோயுறச் செய்துள்ளாள். இவள் மொழியால் கிளி, நடையால் அன்னம், தோற்றத்தால் சந்திரன், சாயலால் மயில்” என்ற இப்பாடற்கண், பெண்ணொருத்தி கண் மொழி நடை தோற்றம் சாயல் ஆகிய காரணங்களால் மான் கிளி அன்னம் மதியம் மயில் என்பனவாக உருவகிக்கப்பட்டமை ஏது உருவகமாம். (தண்டி. 38-2) ஏது உவமை - உவமை அணிவகைகளுள் ஒன்று. உபமேயத்திற்கு உபமானம் ஆகத் தகும் பொருளுக்குக் காரணம் காட்டுதல். எ-டு : ‘வாள்அரவின் செம்மணியும் வன்னிஇளம் பாசிலையும் நாள்இளைய திங்கள் நகைநிலவும் - நீள்ஒளியால் தேன்உலவு பூங்கொன்றைத் தேவர்கோன் செஞ்சடைமேல் வான்உலவு வில்போல் வரும்.’ சிவபெருமானின் சிவந்த சடைமேல் இருக்கும் பாம்பின் மணியினது செம்மையும், அவன் சிரத்தில் சூடியுள்ள வன்னி இலையின் பசுமையும் திங்கட் பிறையினது வெண்மையும், கொன்றைப் பூவினது பொன்நிறமும் ஒருங்கே தோன்றுவ தால் அக்காட்சி, பலநிறத் தொகுப்புக் காரணமான வான வில்லைப் போல இருக்கிறது என்ற பொருளமைந்த இப் பாடற்கண், சிவபெருமானின் சடை வானவில் போலக் காண்பதற்குக் காரணம் காட்டி உவமை அமைந்திருத்தல் ஏது உவமையாம். (தண்டி. 33-8) ஏதுத் தடைமொழி - ஏதுவிலக்கு அணியை வீரசோழியம் ஏதுத் தடைமொழி எனச் சுட்டும். ‘ஏதுவிலக்கு’ நோக்குக. (வீ. சோ. 163.) ஏதுத் துதி - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (100) வருவதோர் அணி. ஒரு பொருளைக் காரணம் காட்டிப் பாராட்டுதல் இது. ‘உறுதோ (று) உயிர்தளிர்ப்பத் தீண்டலான் பேதைக்(கு) அமிழ்தின் இயன்றன தோள்’ (குறள். 1106) என்று தோள்களைக் காரணம் காட்டிப் புகழ்தல் போல்வன. ஏது நுதலிய முதுமொழி உவமை - உவமை காரணப்பொருள் ஆதலை விளக்குதற்காகப் பழமொழிகளை அடுத்து வருவது. ‘உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக் கழுதை செவியரிந் தற்றால் - வழுதியைக் கண்டன கண்கள் இருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு’ (தொ. பொ. 489 பேரா. உரை) பாண்டியனைக் கண்ட கண்கள் யாதொரு வேறுபாடுமின்றி இருப்பவும், கண்களொடு தொடர்பற்ற தோள்கள் பசலை பாய்ந்துவிட்ட செயல், உழுத்தங் கொல்லையில் பசுங்கன்று மேய அதற்காக அதனை ஒறுக்காமல் அதனொடு சிறிதும் தொடர்பற்ற கழுதையினைப் பற்றி அதன் செவியை அறுத்தலுக்கு நிகராகும் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், ‘உழுத....... அற்று’ என்ற பழமொழி உவமமாக எடுத்தாளப் பட்டுள்ளமை அவ்வுவமையின் பாற்படும். (மா. அ. 107) ஏதுவிலக்கு - முன்னவிலக்கு அணிவகைகளுள் ஒன்று. ஒரு செயல் நிகழ்ச்சியைக் காரணம் காட்டி, அச்செயல் நிகழ்வதில்லை என விலக்கல். எ-டு : ‘பூதலத்துள் எல்லாப் பொருளும் வறியராய்க் காதலித்தார் தாமே கவர்தலான் - நீதி அடுத்துயர்ந்த சீர்த்தி அநபாயா! யார்க்கும் கொடுத்திஎனக் கொள்கின் றிலேம்.’ “சோழ! தம் வறுமை தீர விரும்பி நின்னைக் காண வரும் அனைவரும் தாம் விரும்பிய பொருளைத் தாமே எடுத்துச் செல்லுமாறு வைத்துள்ளாய். ஆதலின் நீ யார்க்கும் கொடை புரிவதாக நாங்கள் கருதேம்” என்ற இப்பாடற்கண், “சோழன் தன்கையால் கொடுப்பதில்லை, வறியவர்கள் தாமே எடுத்துக் கொள்கின்றனர்; ஆதலின் அது கொடை ஆகாது” எனக் காரணம் காட்டி விலக்கியமை ஏதுவிலக்காம். இது காரணவிலக்கு (தண்டி. 44-3) அணியினின்று வேறு பட்டது. அது காரியம் நிகழ்தற்குரிய காரணம் எதுவும் நிகழ்தலில்லை என்று கூறி விலக்குவது; இஃது அன்னதன்று. (தண்டி. 46-3) ஏய்ப்ப என்ற உவம உருபு - ‘நெல்லி, மோட்டிரும் பாறை ஈட்டுவட்(டு) ஏய்ப்ப, உதிர்வன’ (அகநா. 5) நெல்லிக்காய் பாறைகளின் மேல் வட்டாடு காய்களைப் போல உதிரும் என்று பொருள்படும் இத் தொடரில், ‘ஏய்ப்ப’ என்பது மெய்உவமப் பொருட்கண் வந்தது. இது மெய் உவமத்திற்கே சிறந்த உருபாம். (தொ. பொ. 290 பேரா.) “குறுந்தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவு” (பெரும். 14) என ஏய்க்கும் என்பது வினைஉவமம் பற்றி வந்தது. (தொ. பொ. 287 பேரா.) “ஊறுநீர் அமிழ்(து) ஏய்க்கும் எயிற்றாய்” (கலி. 20) என ஏய்க்கும் பயன்உவமம் பற்றி வந்தது. (தொ. பொ. 289 பேரா.) “செயலைஅம் தளிர்ஏய்க்கும் எழில்நலம்” (கலி. 15) என ஏய்க்கும் உருஉவமம் பற்றி வந்தது. (தொ. பொ. 291 பேரா.) ஏர் என்ற உவம உருபு - ‘மழை ஏர் ஐம்பால்’ (அகநா. 8) கார் மேகம் போன்ற கூந்தல் என்று பொருள்படும் இத்தொடரில் ‘ஏர்’ என்ற உவம உருபு உருஉவமப் பொருளில் வந்தது. (தொ. பொ. 286 பேரா.) ஏனை உவமம் - உள்ளுறை உவமம் அல்லாத வெளிப்படை உவமமாய், உபமானம் உபமேயம் என்ற இரண்டனோடு உவம உருபும் பொதுத்தன்மையும் விரிந்தும் மறைந்தும் வருவனவற்றை ஏனைய உவமம் என்பர் சிலர். (தொ. பொ. 49 நச்.) உள்ளுறை உவமம் அமைந்துள்ள அடிகளிலேயே அவ்வுள் ளுறை உவமத்தை விளக்குவதற்காக வந்த வெளிப்படை உவமத்தை ஏனை உவமம் என்பர் சிலர். எ-டு : ‘முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திடுவான்போல் கூர்நுதி மடுத்(து)அதன் நிறஞ்சாடி முரண்தீர்த்த நீள்மருப்(பு) எழில்யானை மல்லரை மறஞ்சாய்த்த மால்போல்தன் கிளைநாப்பண் கல்லுயர் நனஞ்சாரல் கலந்தியலும் நாட! கேள்’ (கலி. 52) இவ்வடிகள் ஆறும் உள்ளுறை உவமம். இவ்வடிகளிடை ‘மறந்தலைக்........... போல்’, ‘மள்ளரை................ மால் போல்’ என்பன ஏனை உவமம். இவை உள்ளுறை உவமத்திற்குச் சிறப்புக் கொடுத்து அதனைப் போல் திணையுணர்தலைத் தள்ளா வாய் நின்றன. (கலி. 52 நச். உரை) இதனைச் ‘சிறப்பு’ என்னும் உள்ளுறை என்பர். (தொ. பொ. 242 நச்.) ஐ ஐஞ்சிறு காப்பியம் - பெருங்காப்பியத்திற்குரிய தலைமையான உறுப்புக்கள் எனப்படும் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றுள் சில குறைந்து வருவது காப்பியம் என வாளா கூறப்படும். (தண்டி. 10) உறுப்பொன்றும் குறையாது அனைத்தும் பெற்று வருவ தனைப் பெருங்காப்பியம் என அடைகொடுத்துப் பெயர் ஓதியமையால் சில உறுப்புக் குறைந்து வரப்பெறும் இது காப்பியம் என அடையின்றிப் பெயர் கூறப்பெறும்; சிறுகாப் பியம் என்று ஒரோவழி அடைகொடுத்தும் கூறப்படும். சூளாமணி, உதயணகுமார காவியம், யசோதரகாவியம், நாககுமார காவியம், நீலகேசி என்னும் ஐந்து தொடர்நிலைச் செய்யுள்களையும் ஐஞ்சிறுகாப்பியம் என்று தொகுத்துக் கூறும் வழக்குப் பிற்காலத்ததாதல் வேண்டும். ஐதிஹ் யாலங்காரம் - எடுத்துக்காட்டுப் பிரமாண அணியின் வடமொழிப் பெயர். அது காண்க. (குவ. 115) ஐம்பெருங்காப்பியம் - தமிழில் ஐம்பெருங்காப்பியம் என்று பிற்காலத்தே வரை யறுக்கப்பட்டவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி என இவை. இறுதிக்கண் வைக்கப்பட்ட இரண்டும் இக்காலத்து இல்லை. சிலப்பதிகாரத்திலும் சீவகசிந்தாமணியிலும் தண்டி ஆசிரியர் கூறும் பெருங்காப்பிய உறுப்புக்களுள் சில நீங்கலாகப் பிற பலவும் அமைந்துள்ளன. அறமும் வீடுபேறும் தவிரப் பொருளும் இன்பமும் பற்றி யாதுமே கூறாத மணிமேகலை பெருங்காப்பியத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளமை விந்தையே. சிறுகாப்பியம் என்று கூறப்படும் சூளாமணி அறம் முதலிய உறுதிப் பொருள் நான்கனையுமே உணர்த்தும். காப்பியத் தலைவன் தந்தை வீடுபேறுற்றாலும் காப்பியத்தலைவன் வீடு பேறுற்றதாகக் கூறாமையால் அது சிறுகாப்பியமாயிற்று. பெருங்காப்பியத்திற்குரிய பிறஉறுப்புக்கள் யாவும் அது பெற்று விளங்குகிறது. இஃது ஆய்விற்குரியது. ஐம்பொறி, மனம் ஆகியவற்றான் அறியும் உவமம் - கட்புலனாகிய உவமம் : புலி போலப் பாய்ந்தான் - என்பது வினை. மழை போலக் கொடுத்தான் - என்பது பயன். துடி போலும் இடை - என்பது மெய். தளிர் போலும் மேனி - என்பது நிறம். செவியால் அறியப்பட்ட உவமம் : குயில் போன்ற மொழி. நாவால் அறியப்பட்ட உவமம் : வேம்பு போலக் கைப்பது. மெய்யால் அறியப்பட்ட உவமம் : தீப் போலச் சுடுவது. மூக்கால் அறியப்பட்ட உவமம் : ‘ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்’ (குறுந். 300) ‘தம்மில் இருந்து தமதுபாத்(து) உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு’ (குறள். 1107) (தாம் ஈட்டிய பொருளால், தம் இல்லத்திலிருந்து விருந்தோம்பி வாழும் இல்லற இன்பத்தை ஒத்து மகிழ்ச்சி தருவது இத்தலைவியைத் தழுவும் செயல்) என்பது மனத்தால் உணரும் உவமம். (தொ. பொ. 272 இள.) ஐயஅணி (1) - இதனைச் ‘சந்தய அலங்காரம்’ என்னும் மாறன்அலங்காரம். ஒருபொருள் மற்றொரு பொருளை ஒத்திருப்பதனை முன்பு கண்டவன், பின்பு அப்பொருளைக்கண்டவழி அப்பொருள் தானோ அல்லது அதனை ஒத்ததாகவுள்ள மற்றொரு பொருளோ என்று ஐயுறுவது. இது முழு ஐயஅணி, தெளிவு அகப்படுத்திய ஐயஅணி, தெளிவு வெளிப்படுத்திய ஐயஅணி என மூவகைப்படும் என்று மாறனலங்காரம் குறிக்கும். அவை சுத்த சந்தயம், நிச்சய கெர்ப்பம், நிச்சயாந்தம் என்று அந்நூலுள் பெயரிடப்பட்டுள்ளன. (மா.அ. 136, 137) எ-டு : ‘தாதளவி வண்டு தடுமாறும் தாமரைகொல் மாதர் விழியுலவும் வாண்முகங்கொல்’ (தண்டி. 32-11) இவ்வடிகளில் வண்டுகள் சுழலும் தாமரையோ, விழிகள் உலவும் தலைவிமுகமோ என்று தலைவன் தான் கண்ட வடிவத்தை ஐயுற்றவாறு. இவ்வணியினை வடநூலார் ‘சந்தேகாலங்காரம்’ என்ப. முழுதும் ஐயுற்ற அணி - இன்னது என்ற முடிவு செய்ய இயலாது முழுதும் ஐயுற்ற நிலையினைக் குறிப்பிடும் ஐய அணிவகை. எ-டு : ‘திருமகளோ பார்மகளோ தென்அரங்கன் வெற்பில் வருமகளோ யாரோஇம் மாது?’ ‘அரங்கனது வெற்பில் காணப்படும் இம்மாது, திருமகளோ, நில மகளோ, அம்மலையில் வாழ்ந்துவரும் மானுடமகளோ? இவள் யாராக இருத்தல் கூடும்?’ என்று தலைவன் தலைவியைக் கண்டு ஐயுறும் இப்பாடற்கண் இவ்வணிவகை வந்தவாறு. இது ‘சுத்த சந்தயம்’ எனவும்படும். தெளிவு அகப்படுத்திய ஐய அணி - எ-டு : ‘முண்டகத்தான் என்னின் முகம்ஒன்றே நான்குமுகம் கண்டமைமற் றில்லையால்; கண்ணனெனின் - தண்துளபத் தாமத்தான் அன்று; மகிழ்த் தாமத்தா னைத்துதித்தெந் நாமத்தான் என்றுரைப்போம் நாம்.’ தாமரையில் தோன்றிய பிரமனைப் போல நான்குமுகம் இன்மையால் இவன் பிரமன் அல்லன்; திருத்துழாய் மாலை இன்மையால் திருமால் அல்லன்; மகிழம்பூ மாலையை அணிந்த இவனை வேறுயார் என்று கருதி அழைப்போம்?" என்ற பொருளமைந்த இப்பாடற்கண், ஐயம் நீங்கியவழியும் விடையினை இன்னதென்று முடிவு செய்ய இயலாதபடி தெளிவு உள்ளடங்கிக் கிடத்தற்கண், இவ் ஐயவணிவகை வந்தவாறு. இது நிச்சய கெர்ப்பம் எனப்படும். தெளிவு வெளிப்படுத்திய ஐய அணி - எ-டு : பாடல் சுரும்பெனிலோ பண்மிழற்றும்; காவியெனில் ஓடைக்குள் அன்றி உதியாதாம்; - ஏடவிழ்த்தார் வள்ளல் அருள்மாறன் மால்வரைமான் கண்ணேஎன் உள்ளம் திறைகொண் டது. “என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட இவை, பண் மிழற்றாமையின் வண்டுகள் அல்ல; நீரோடையில் தோன்றா மையின் காவிமலர்களும் அல்ல. ஆதலின் இவை தலைவியின் கண்களே” என்ற பொருள் அமைந்த இப்பாடற்கண், தலைவன் கண்ட பொருள்கள் வண்டுகளும் அல்ல, காவி மலர்களும் அல்ல என்று ஐயம் நீக்கப்பட்டு, அவை தலைவி யின் கண்களே என்று தெளிவு வெளிப்படுத்தப்பட்டதன்கண் இவ்வைய அணிவகை வந்தவாறு. இது நிச்சயாந்தம் எனவும்படும். (மு. வீ. பொருளணி 35, ச. 18, குவ. 10) ஐய அணி (2) - ஒப்புமையினாலே ஒரு பொருளைக் கண்டு, ‘இதுவோ, அதுவோ,’ என்று ஐயுற்றுரைப்பதும், பின்னர் அவ்வொப் புமையை மனத்தால் ஆய்ந்து தெரிந்து இதுவே எனத் துணிந்துரைப்பதும் ஆகிய இருதிறமும் ஐய அணியின் பாற்படும். (தென். அணி. 37) ஐய அதிசய அணி - இஃது அதிசய அணிவகைகளுள் ஒன்று. எ-டு : ‘உள்ளம் புகுந்தே உலாவும், ஒருகால்என் உள்ளம் முழுதும் உடன்பருகும் - ஒள்ளிழை! நின் கள்ளம் பெருகும் விழிபெரிய வோ? கவல்வேன் உள்ளம் பெரிதோ உரை.’ “நங்காய்! உன் கள்ளம் மிகுந்த கண்கள் ஒருகால் என் உள்ளத்தில் புகுந்து உலவுகின்றன. ஒருகால் என் உள்ளம் முழுமையும் ஒருசேர விழுங்கிவிடுகின்றன. உன் விழிகள் பெரியனவா, அன்றித் துயருற்றுக் கவலும் என் உள்ளம் பெரிதா? நீயே சொல்” என்ற இப்பாடற்கண், கற்பனையால், கண்கள் பெரியனவா உள்ளம் பெரிதா என்று ஐயம் கலந்த அதிசய அணி அமைந்துள்ளது. (தண்டி. 55- 4) ஐய உவமை, பொது நீங்குவமை, உவமைஉருவகம் - இவற்றின் விளக்கம் - உவமைக்கு இன்றியமையா இலக்கணம், பொருளுடன் பொருளை இயைய அமைத்தல் என்பதே; ஆயின் ஐய உவமையிலும் பொது நீங்கு உவமையிலும் பண்பு முதலியன பற்றிப் பொருளுடன் பொருளை இயைய அமைத்தல் காணப் பட்டிலது என்ற காரணத்தால் அவற்றை உவமை எனக் கூறுதல் வழுவேயாம்; ஆயினும் ஒரு விளக்கத்தால் வழுவமைதியாகக் கோடலாம். “இது தாமரையோ தலைவி முகமோ?” என்ற ஐயஉவமையில் தாமரைக்கும் முகத்திற்கும் ஒப்புமை கருதா நிலையில், ஐயம் தோன்றவே இடமிராது. ஆகவே, அதுவும் பொருளுடன் பொருள் இயைய அமைத்ததேயாம். ‘உன் ஒளியுடைய முகம் தானே தனக்கு உவமையாம்’ என்ற பொது நீங்கு உவமையில், முகத்தைத் தண்மதிக்கும் தாமரைக் கும் மேலானதாகக் கூறிய பின்னரே, அது தனக்குத் தானே உவமையாதல் கூறப்படுகிறது. ஆதலின் இதன்கண்ணும் பொருளுடன் பொருள் இயைய அமைத்தமை காணப்படும். உருவக அணி வகைகளில் ஒன்றான உவமஉருவகத்தில் ‘வதனமதியம் உதயமதியமே ஒக்கும்’ - முகமென்னும் சந்திரன் உதயகாலச் சந்திரனை ஒக்கும் - என்னும் எடுத்துக் காட்டின்கண் முகம் என்னும் சந்திரன் என உருவகம் செய்து, மறுபடியும் சந்திரனுடன் உவமித்தல், கூறியது கூறல் (புனருத்தி) என்ற வழுவாமாயினும், முதற்கண் முகத்தின் ஒளியும் குளிர்ச்சியும் காரணமாக உருவகித்துப் பின்னர்க் கள்ளுண்ட மதர்ப்பும் நிறமும் நோக்கி மீண்டும் உவமித்த தால் வழுவாகாது அமைதி பெறும். (இ. வி. 641) ஐயஏது அணி - ஏது இன்னது என்று வரையறுக்கப்படாமல் ஐயப்படும் நிலையிலேயே கூறப்படும் ஏது அணிவகைகளுள் ஒன்று. எ-டு : ‘மாதர் உமைவாய் மழலை மொழியானோ, ஓது மறையின் ஒலியானோ; - யாதானோ, கோலம் இருதிறனாக் கொண்டான் திருமிடற்றின் ஆலம் அமிர்தான வாறு?’ “மாதொருபாகன் திருக்கோலத்தில் இருக்கும் சிவபெருமான் மிடற்றுள் சென்ற விடம் (-ஆலகாலம்) அமுதமாக மாறி யதற்குக் காரணம், உமாதேவி மிழற்றும் இனிய மழலைச் சொற்களா? அன்றி அவன் ஓதும் வேத ஒலியின் பெருமையா? எதுவாக இருக்கலாம்?” - என்ற பொருளமைந்த இப் பாடற்கண், விடம் அமுதானதற்கான காரணம் இன்னதென உறுதி செய்யப்படாமல் ஐயநிலையிலேயே கூறப்பட்டமை யால் இஃது ஐய ஏதுவணி ஆயினவாறு. இச்சூத்திரத்துள் ‘இயலும்’ என்றதனால் இவ்வணிவகை தழுவிக்கொள்ளப்பட்டது. (தண்டி. 63-6) ஐயத்தடைமொழி - ஐய விலக்கு வீரசோழியத்தில் ‘ஐயத் தடைமொழி’ என்று விளக்கப்படுகிறது. ‘ஐயவிலக்கு’ நோக்குக. (வீ.சோ. 163, 164) ஐயநிலை உவமை - உவமைஅணி வகைகளுள் ஒன்று; ஐய உவமை எனவும் பெறும். உபமானம் உபமேயம் இவ்விரண்டையும் இன்னதென வரையறுக்க இயலாமல் மனம் ஐயுறுவதாக அமைவது. எ-டு : ‘தாதளவி வண்டு தடுமாறும் தாமரைகொல்? மாதர் விழிஉலவும் வாண்முகங்கொல்? - யாதென்(று) இருபால் கவர்வுற்(று) இடைஊசல் ஆடி ஒருபால் படாதென் உளம்.’ “வண்டு தேனுண்டு தடுமாறிச் சுழலும் தாமரையோ? அன்றிக் கருவிழிகள் சுழன்றுலவும் காரிகைதன் முகமோ? இஃது உண்மையாகவே யாதென்று அறிய இயலாமல் என்மனம் ஐயுறுகிறது” என்ற பொருளமைந்த இப்பாடற்கண் இவ்வணி அமைந்துள்ளது. சந்திராலோகம் இதனை ‘ஐயஅணி’ எனத் தனிஅணியாகக் கொள்ளும். வடநூலார் சந்தேகாலங்காரம் என்பர். (தண்டி. 32-11) ஐயவிலக்கு அணி - முன்னவிலக்கு அணியின் வகைகளில் ஒன்று; ஐயுற்றதனை விலக்குவது. எ-டு : ‘மின்னோ பொழிலின் விளையாடும் இவ்வுருவம் பொன்னோ எனும் சுணங்கின் பொற்கொடியோ - என்னோ! திசைஉலவும் கண்ணும் திரள்முலையும் தோளும் மிசைஇருளும் தாங்குமோ மின்?’ “சோலையில் விளையாடும் இந்த உருவம் மின்னலோ? அல்லது திருமகள் போன்ற அழகிய நிறம் கொண்ட பொற்கொடியோ? யாதோ தெரிந்திலது. நாற்புறமும் ஓடி உலவும் கண்களையும் திரண்ட தனங்களையும் தோள்களை யும் தன்மேல் இருட்சியை (-கூந்தலை)யும், மின்னல் தாங்கி வருவதுண்டோ? (இல்லை; ஆதலின் இவள் பெண்ணே)" என்று, தலைவன் கூறியஇடத்துச் சென்ற பாங்கன் தலைவியை வியந்துரைக்கும் கிளவிக்கண் அமைந்த இப்பாடலில், ‘மின்னலோ பொற்கொடியோ’ எனத் தோன் றிய ஐயம் கண் முதலியன உடைமையால் விலக்கப்பட்டது ஆதலின் இஃது ஐய விலக்கு அணியாயிற்று. (தண்டி. 45 - 13) ஒ ஒட்ட என்ற உவமஉருபு - ‘முத்துடை வான்கோடு ஒட்டிய முலை’ - யானையின் தந்தத்தை ஒத்து அண்ணாந்த முலை என்று பொருள்படும் இத்தொடரில், ஒட்ட என்பது மெய்உவமத்தின்கண் வந்தது. இது மெய் உவமத்திற்கே சிறந்த உருபு.(தொ.பொ. 290 பேரா.) ஒட்டணியின் பிறபெயர்கள் - பிறிது மொழிதல், நுவலா நுவற்சி, சுருக்கு (வீ.சோ. 166), குறிப்பு நவிற்சி யணி (ச- 119, குவ. 87), தொகைமொழி (வீ. சோ. 153 உரை) என்பன. வடமொழித் தண்டியார் ‘சமாசம்’ என்றதும் அது. ஒட்டு அணி - கவி தான் கூறக் கருதிய பொருளை மறைத்து அதனைப் புலப்படுத்தற்காக அதனோடு ஒத்த பிறிதொன்றனை, அஃதாவது உவமை மாத்திரமே கூறி அதனாற்றலால் உபமேயத்தைக் குறிப்பாற் பெறப்பட வைப்பது. இது நான்கு வகைப்படும் என்னும் தண்டியலங்காரம். அவையாவன, 1. அடையும் பொருளும் அயல்பட மொழிதல், 2. அடை பொதுவாய்ப் பொருள் வேறுபட மொழிதல், 3. அடை விரவிப் பொருள் வேறுபட வருதல், 4. அடை விபரீதப்பட்டுப் பொருள் வேறுபட வருதல் என்பன. இவ்வகைகளைத் தனித்தனித் தலைப்பிற் காண்க. (தண்டி. 52, 53) பொருள் ஒட்டு, இடஒட்டு, சாதிஒட்டு, வினைஒட்டு, குணஒட்டு, பொழுதுஒட்டு, சினைஒட்டு என ஒட்டணியை ஏழ்வகைப் படுத்தும் மாறனலங்காரம். (மா. அ. 125) ஒடுங்க என்ற உவம உருபு - ‘பாம்புஉரு ஒடுங்க வாங்கிய நுசுப்பு’ - பாம்பின் வடிவினை ஒப்ப வளைந்த இடையென்று பொருள்படும் இத்தொடரில், ஒடுங்க என்ற உவம உருபு மெய்உவமத்தில் வந்தது. இது மெய் உவமத்திற்கே சிறந்த உருபு. (தொ. பொ. 290 பேரா.) ஒத்தது வென்றது என்ற உவமை - உபமானங்களுள் ஒன்றனை ஒத்து ஒன்றனை வென்றது உபமேயம் என்று கூறுதல் இவ்வுவமை வகையாம். எ-டு : ‘கூற்றுவன்வேல் போன்று குகன்வேலை வென்றுகொலை ஆற்றும் இவள்கண்கள் தாம்.’ “இயமனது வேலை ஒத்து முருகனது வேலை வென்று இத்தலைவிகண்கள் துன்புறுத்துகின்றன” என்ற இப் பாடற்கண், ‘ஒத்தது வென்றது’ என்னும் உவமை வகை வந்தவாறு. (மா. அ. பா. 202) ஒப்ப என்ற உவமஉருபு - ‘ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்னிறம்’ உன்நிறம் செங்காந்தட் பூவினை ஒத்திருக்கிறது எனப் பொருள்படும் இத்தொடரில் ஒப்ப என்பது உருஉவமத் தின்கண் வந்தது. இஃது உருஉவமத்திற்கே சிறந்த உருபு. (தொ. பொ. 291 பேரா.) ‘ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழீஇ’ (அகநா. 30) என ஒப்ப என்பது வினைஉவமத்தின்கண் வந்தது. (தொ. பொ. 287) ‘நறுமுல்லை நேர்முகை ஒப்ப நிரைத்தபல்’ (கலி. 22) என ஒப்ப என்பது மெய்உவமத்தின்கண்ணும் வந்தது. (290 பேரா.) ஒப்பில் உவமை அணி - வீரசோழியத்துள் (கா. 159) ஒப்பில் உவமை என்று கூறப்படும் இவ்வுவமைவகை தண்டியலங்காரத்துள் பொதுநீங்கு உவமை எனப்படும். அது காண்க. ஒப்புப்பிரமாண அணி - வட நூலார் இதனை உபமானப் பிரமாணாலங்காரம் என்பர். ஒரு பொருளை அதற்கு ஒப்பான பிறிதொன்றைக் கூறி விளக்குதல். வானில் விளங்கும் நனிமிக்க விண்மீன்களிடையே உரோ கிணியை விதந்து காட்டும் வகையில், மகடூஉ முன்னிலை பெற்ற ஓர் எடுத்துக்காட்டு : "பெண்ணே! இந்த விண்மீன் கூட்டத்துள் வண்டிச் சக்கரம் போன்ற வடிவ அமைப்பினைப் பெற்றுள்ளதை (- 12 மீன் களின் கூட்டத்தை) உரோகிணி என்று அறிவாயாக." ‘எது வண்டிச் சக்கரம் போன்ற அமைப்புடையதோ அஃது உரோகிணி’ என்ற வாக்கியத்தின் பொருள் விளக்கமான ஒப்புமை பற்றி வந்தமையால் இஃது ஒப்புப்பிரமாண அணி ஆயிற்று. (குவ. 110) ஒப்புமறை உவமை - முதலில் ஒப்பாகக் கூறிய உபமானத்தை மீண்டும் ஒவ்வாது என்று மறுத்தலும் ஒப்புமை கண்டு செய்யப்பட்டதாதலின் உவமையுள் ‘ஒப்பு மறை உவமை’ என்னும் பெயரால் கொள்ளப்படும். ‘மலரன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி’ (குறள். 1119) “என் தலைவியின் முகத்தை ஒத்திருத்தற்கு, மதியமே! நீ விரும்பினால், யான்மாத்திரம் காணுமாறு காட்சி வழங்கும் அவளைப் போல நீயும் யான்மாத்திரம் காணுமாறு காட்சி வழங்கிப் பலரும் காணுமாறு தோன்றலை விடுத்துவிடு” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், முதலில் மதியினைத் தலைவி முகத்துடன் ஒப்பிட்டுப் பின் அது பலரும் காணுமாறு தோன்றுதலாகிய குறைகருதி அதனை விடுத்தது ஒப்புமறை உவமையாம். முதலில் உபமானமாகக் கொண்ட ஒன்றைக் காரணம் காட்டி மறுத்தல் இதன் இலக்கணமாம். (வீ. சோ. 159) ஒப்புமை ஏற்றம் - நற்குணத்தாலும் தீக்குணத்தாலும் ஒன்றற்கு ஒன்று மிக்கதாய் பலவற்றைக் கூறி எல்லாவற்றினும் மேல், தான் எடுத்த பொருளே நிற்பதாகக் கூறுவது. இது மாறனலங்காரத்தில் உறுசுவை அணியை ஒருபுடை ஒத்து, சந்திராலோகத்தில் மேன்மேல் உயர்ச்சி அணி என்னும் பெயரால் வழங்குவது. ‘மேன் மேல் உயர்ச்சியணி’ காண்க. (தொ. வி. 357) ஒப்புமைக் குழு அணி - இஃது உடனிலைச் சொல் அணி(வீ.சோ. 173 உரை) எனவும், ஒப்புமைக் கூட்ட அணி எனவும் கூறப்பெறும். (குவ. 14) ‘ஒப்புமைக் கூட்ட அணி’ காண்க. ஒப்புமைக் கூட்ட அணி (1) - இஃது உடனிலைச் சொல்லணி எனவும் ஒப்புமைக் குழு அணி எனவும் கூறப்படும். ஒரு பொருளைச் சொல்லும் போது அப் பொருளின் குணம்செயல்கள் ஆகிய இவற்றை ஒத்த பொருத்தமான குணம்செயல்களையுடைய மற்ற சிறந்த பொருள்களையும் சேர்த்துச் சொல்லுதல் இவ்வணியாம். இது தண்டியலங்காரம் முதலிய நூல்களில் புகழ் ஒப்புமைக் கூட்டம், பழிப்பு ஒப்புமைக்கூட்டம் என இருவகைத்தாகக் கூறப்பட்டுள்ளது. (தண்டி. 80; மா.அ. 128, 129; மு. வீ. பொருளணி 96, 97) சந்திராலோகத்தில் அது புனைவுளி ஒப்புமைக் கூட்டம், புனைவிலி ஒப்புமைக் கூட்டம், செய்கை ஒப்புமைக்கூட்டம் என முப்பிரிவுகளாயுள்ளது. இதனைத் துல்ய யோகிதாலங்காரம் என வட நூல் கூறும். புனைவுளி ஒப்புமைக்கூட்ட அணி - உபமேயப்பொருளை உபமானப்பொருளோடு இணைத்து ஒரு செயலுக்கு உரிமையாக்கும் ஒப்புமைக் கூட்ட அணிவகை. புனைவுளி - உபமேயம். ‘மாமதிதோன் றக்கணவர்த் தீர்ந்தமட வார்முகமும் தாமரைப்பூ வும் சோர்ந் தன.’ சந்திரன் தோன்றிய அளவில் கணவன்மாரைப் பிரிந்த மகளிருடைய முகங்களும் தாமரைப்பூக்களும் வாடின என்ற பொருளமைந்த இப்பாடற்கண், வாடுதலாகிய தொழில் உபமேயமாகிய முகத்திற்கும் அதற்கு உபமானமாகும் தாமரைப் பூவிற்கும் ஒப்ப நிகழ்ந்த கருத்துக் கூறப்படற்கண் இவ்வணி வகை வந்துள்ளது. புனைவிலி ஒப்புமைக் கூட்ட அணி - உபமானப்பொருளை உபமேயப்பொருளோடு இணைத்து ஒரு செயலுக்கு உரிமையாக்கும் ஒப்புமைக் கூட்ட அணி வகை. புனைவிலி - உபமானம். எ-டு : ‘தீதில் கழைச்சாறும் தெள்ளமுத மும்கசக்கும் கோதைஇவள் சொல்லுணர்ந் தார்க்கு’ “குற்றமற்ற கருப்பஞ்சாறும் தெளிந்த அமுதமும் இத் தலைவியது மொழி இனிமை கேட்டவர்க்குக் கசப்பினைத் தரும்" என்ற இப்பாடற்கண், கருப்பஞ்சாறு அமுதம் என்ற உபமானப் பொருள்கள் தலைவியது இனிய மொழியாகிய உபமேயத்துடன் இணைக்கப்பட்டுத் தலைவற்கு இன்பம் செய்தல் என்ற செயற்கு உரியனவாகக் கூறப்படுதற்கண் இவ்வொப்புமைக் கூட்ட அணிவகை வந்துள்ளது. செய்கை ஒப்புமைக் கூட்ட அணி - உறவினரிடத்தும் பகைவரிடத்தும் ஒருவன் சமமாக நடந்து கொண்டதாகக் குறிப்பிடும் ஒப்புமைக்கூட்ட அணிவகை. இது சிலேடை பற்றியும் வரும். எ-டு : (அ) ‘விரும்பி வளர்ப்போர்க்கும் வெட்டுதல்செய் வோர்க்கும் தரும்வேம்பு வெங்கசப்பைத் தான்’ வேம்பு, தன்னை விரும்பி வளர்ப்பவர்க்கும் வெறுத்து வெட்டி வீழ்த்துபவர்க்கும் கசப்பையே தரும் என்ற பொரு ளுடைய இப்பாடற்கண், வேண்டியவரிடத்தும் வேண்டாத வரிடத்தும் ஒப்ப நடந்து கொள்ளும் செயல் கூறப்பட் டுள்ளது. எ-டு : (ஆ) ‘வீரம்மிகு மன்னனிவன் விட்டார்க்கும் நட்டார்க்கும் தாரணியில் ஆக்கினன்நந் தல்’ “இம்மன்னன் தன்பகைவர்க்கும் நண்பர்க்கும் உலகில் நந்துதல் செய்தான்” என்று பொருள்படுவது இப்பாடல். நந்துதல் - ஆக்கம், கேடு. பகைவர்க்குக் கேடும், நட்டார்க்கு ஆக்கமும் தருதலாகிய செயல்கள் இரண்டும் இருபொருட் கும் உரித்தாகிய ‘நந்தல்’ என்ற சொல்லால் உணர்த்தப்பட் டுள்ளன. இங்ஙனம் பகைவர்க்கும் நட்டார்க்கும் அரசன் செய்த செயல்கள் ‘நந்தல்’ என்ற சொல்லால் ஒன்றாக இணைக்கப்பட்டதும் இவ்வணி. (ச. 36, குவ. 14) ஒப்புமைக் கூட்ட அணி (2) - ஒப்புமையுடைய பொருள்களைக் கூடவைத்துக் கூறல். கவி ஒரு பொருளைக் கூறும்போது அதனுடன் குணம் முதலிய வற்றால் மிக்க பொருள்களைக் கூட்டி உரைப்பது. இது புகழ்ச்சி இகழ்ச்சி இவை பற்றித் தனித்தனியே வரும். 1. புகழ் ஒப்புமைக்கூட்ட அணி - எ-டு : ‘பூண்தாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும் தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும் - நாண்தாங்கும் வண்மைசால் சான்றவரும் காஞ்சி வளம்பதியின் உண்மையால் உண்டிவ் வுலகு’ காஞ்சிமாநகரில் மலைபோன்ற சிவபெருமானும், தெய்விகச் சுடர்விளக்கான திருமாலும், நாணும் வள்ளன்மையுமுடைய சான்றோர்களும் இருப்பதனால் இந்த உலகம் நிலைபெற்று வாழ்கிறது என்ற இப்பாடற்கண், புகழ்பற்றிச் சிவபெருமா னும் திருமாலும், சான்றோரும் உடன்வைத்துக் கூறப் பட்டமை காண்க. 2. பழிப்பு ஒப்புமைக்கூட்ட அணி - எ-டு : ‘கொள்பொருள் வெஃகிக் குடிஅலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்இருந்(து) எல்லை இறப்பாளும், இம்மூவர் வல்லே மழையறுக்கும் கோள்.’ (திரி. 50) தான் மக்களிடமிருந்து மிகுந்த பொருளை இறையாகப் பெற விரும்பி மக்களைக் கொடுமைப்படுத்தும் அரசனும், உண்மையை விட்டு வஞ்சமும் பொய்யும் கலந்தவற்றையே பேசும் கீழ்மக்களும், இல்லறத்தில் கணவனுடன் இருப்பவ ளாக வாழ்ந்தும் வரையறை கடந்து தீயொழுக்கம் பூண் டொழுகுபவளும் ஆகிய இம்மூவர் மழை பெய்யாமல் கெடுக்கும் தீய கோள் ஆவர். இதில் பழிபற்றிக் கொடுங்கோல் அரசன், பொய் பேசுவோர், அயலானை நாடும் தீயொழுக்கம் உடையவள் - ஆகிய மூவரையும் உடன்வைத்துக் கூட்டி உரைத்தமை உணரப் படும். (தண்டி. 80,81) ஒப்புமைக் கூட்ட அணியின் மறுபெயர்கள் - ஒப்புமைக்குழு அணி (குவ. 14), உடனிலைக் கூட்ட அணி, உடனிலைச் சொல் அணி (வீ. சோ. 173) என்பன. ஒப்புமைக் கூட்ட அணிவகைகள் - புகழ் ஒப்புமைக் கூட்டம், பழிப்பு ஒப்புமைக் கூட்டம் என்பன. (தண்டி. 80) ஒப்புமைக் கூட்ட உவமையணி - உவமையணி ஏனைய அணிகளொடும் கலந்து வரும் ஆதலின் ஒப்புமைக்கூட்ட அணியொடு கலந்து வரும் உவமையணி இப்பெயர்த்து ஆயிற்று. உபமானம் உபமேயம் இரண்டற்கும் ஒப்புமையான செயல்களை இணைத்துக் கூறுதல் இவ்வணி. எ-டு : ‘விண்ணின்மேல் காவல் புரிந்துறங்கான் விண்ணவர்கோன்; மண்ணின்மேல் அன்னை, வயவேந்தே! - தண்ணளியின் சேரா அவுணர் குலம்களையும் தேவர்கோன்; நேரார்மேல் அத்தகையை நீ!’ ஒப்புமையுடைய தேவேந்திரன் நிலவுலகமன்னன் ஆகிய இருவர்க்கும் அவரவர் நாட்டைக் காவல்புரிந்து அளித்தலும், பகைவரை அழித்தலும் ஆகிய ஒப்புமையுடைய செயல்கள் இணைத்துக் கூறப்பட்டிருப்பதால், இப்பாடற்கண் ஒப்புமைக் கூட்ட உவமையணி வந்துள்ளது. (தண்டி. 33-5) ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொருகுணம் கொடுத்து நிரப்புதல் - ‘முதிர்கோங்கின் முகையென முகம்செய்த குரும்பைஎனப் பெயல்துளி முகிழெனப் பெருத்தநின் இளமுலை’ (கலி. 56) முதிர்கோங்கின் மொட்டும், முகம்செய்த குரும்பையும் பெரியவாகலின் முலைக்கு உவமம் ஆதற்கு ஒத்தன. பெயல் துளி முகுளம் ஆகிய நீரிற்குமிழி உருவில் சிறியது. அந்நீரிற் குமிழிக்கு இல்லாத பெருமையை உபமேயமாகிய முலைக்கு அடுத்துப் ‘பெருத்த நின் இளமுலை’ என்று விதந்து கூறுவது இது. இது ‘வேறுபடவந்த உவமத் தோற்றத்’துள் ஒன்று. (தொ. பொ. 307 பேரா.) ஒப்புமை கூறாது பெயர் போல்வனவற்று மாத்திரையானே மறுத்துக் கூறல் - திருமாலொடு பாண்டியனை உவமிக்கக் கருதி, திருமாலின் பெயர் கண்ணன், இவன் பெயர் மாறன்; திருமாலின் மாலை துழாய், இவன் மாலை வேம்பு; திருமாலின் நிறம் கருமை, இவன் நிறம் செம்மை; திருமால் ஆயர்குலத் தலைவன், இவன் அரசர்குலத் தலைவன்- என்று ஒப்புமை மறுத்துப் பெயர் மாலை நிறம் பிறப்பு இவற்றான் வேறுபடுத்துக் கூறும் எ-டு : ‘கண்ணன் அவன்இவன் மாறன்; கமழ்துழாய்க் கண்ணி அவற்(கு) இவற்கு வேப்பந்தார்; - வண்ணமும் மாயன் அவன்இவன் சேயன் ; மரபொன்றே ஆயன் அவன்இவன் கோ.’ என்ற பாடல் ‘வேறுபடவந்த உவமத்தின்’ பாற்பட்டது. (தொ. பொ. 307 பேரா.) ஒப்புமை மறுத்தவழிப் பிறிதோர் உவமம் நாட்டல் - சேரனுக்கு இந்திரனையும் சிவபெருமானையும் முருகனையும் உவமம் கூறி ஓரோர் காரணம் பற்றி உவமத்தை மறுத்து அவனைத் திருமாலாக்கிக் கூறும் எ-டு : இந்திரன் என்னின் இரண்டேகண்; ஏறூர்ந்த அந்தரத்தான் என்னின் பிறையில்லை; - அந்தரத்துக் கோழியான் என்னின் முகம் ஒன்றே; கோதையை ஆழியான் என்றுணரற் பாற்று‘ என்னும் பாடலில், இரண்டே கண் உடையன் சேரன் ஆதலின் ஆயிரம் கண்ணனாகிய இந்திரன் அல்லன்; பிறையின்மையின் சேரன் சிவபெருமானும் அல்லன்; முகம் ஒன்றே ஆதலின் அவன் ஆறு முகங்களையுடைய முருகனும் அல்லன் என்று மறுத்துச் சக்கரம் ஏந்திய திருமாலாகச் சேரனைக் கூறுதல் ‘வேறுபட வந்த உவமத் தோற்றத்’துள் ஒன்றாம். (தொ. பொ. 307. பேரா.) ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக் கூறல் - “சோழனுடைய அடியை நோக்கி அவனைத் திருமால் எனவும் அவன் உடல்நிறத்தை நோக்கிச் சிவபெருமான் எனவும் கொண்டு, அவன் முடியின்மீது ஆத்திப்பூமாலையைக் கண்டு அவன் திருமாலும் அல்லன் சிவபெருமானும் அல்லன் எனத் தெளிந்தேன்” என்று உபமானங்களை விடுத்து உபமேயத் தையே நாட்டிக் கூறும் எ-டு : அடிநோக்கின் ஆழ்கடல் வண்ணன்; தன் மேனிப் படிநோக்கில் பைங்கொன்றைத் தாரான்; - முடிநோக்கித் தேர்வளவன் ஆதல் தெளிந்தேன், தன் சென்னிமேல் ஆர்அலங்கல் தோன்றிற்றுக் கண்டு’ என்ற பாடல் ‘வேறுபட வந்த உவமத் தோற்றத்’துள் ஒன்றாகும். (தொ. பொ. 307. பேரா.) ஒப்பு வியதிரேகம் - இருபொருள் வேற்றுமைச் சமம் என்னும் வேற்றுமை அணிவகை. ‘இருபொருள் வேற்றுமைச் சமம்’ காண்க. (வீ. சோ. 165) ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் சார்பினானும் வந்த பிசி உவமை - பிசி, உபமேயத்தை உபமானப் பொருளால் குறிப்பிட்டுக் கூறுவது. இக்காலத்து விடுகதை என வழங்கப்படும். எ-டு : ‘வருங்குன் றினைக்கடந்(து)எம் மன்னுயிரைத் தந்தான் இருங்கங் கணக்குன் றிவன்’ “யானை எங்களை எதிர்த்துத் தீங்கு செய்யாதவாறு அதனை ஓட்டிய தலைவன் இவன்” என்ற இப்பாடற்கண், ‘வருங் குன்று’ என்பது ஒப்பொடு கூடிய உவமத்தான், குன்றத்திற் கில்லாத வருதல் என்ற அடைமொழி கொண்டு யானையைக் குறித்தமை பிசிச் செய்தியாம். பெரிய கங்கணத்தை அணிந்த குன்று போன்ற தோள்களை யுடைய தலைவன் என்புழி, கங்கணம் என்ற சார்பினால் ‘குன்று’ என்பது குன்று போன்ற தோள்களைக் குறித்தது; ‘இருங்கங்கணக் குன்று’ என்பது அன்மொழித்தொகை யாய்த் தோளை யுணர்த்திற்று. இதுவும் பிசிச் செய்தி. இவ்வாறு உவமம் பிசியினை அடுத்து இருவகையால் வரும். (மா. அ. 108) ஒருங்கியல் அணி - இது புணர்நிலை அணி எனவும், உடன்நிகழ்ச்சி அணி எனவும், கூறப்படும். ‘உடன்நிகழ்ச்சி அணி’ காண்க. (வீ. சோ. 175) ஒருங்குடன் தோற்ற ஏது அணி - ஏதுஅணிக்கு ஒழிபாய்க் கூறப்பட்ட ஐந்து வகைகளுள் ஒன்று. காரணமும் காரியமும் ஒருசேர நிகழ்வனவாகக் கூறுவது. எ-டு : ‘விரிந்த மதி நிலவின் மேம்பாடும், வேட்கை புரிந்த சிலைமதவேள் போரும், - பிரிந்தார் நிறைதளர்வும் ஒக்க நிகழ்ந்தனவால், ஆவி பொறைதளரும் புன்மாலைப் போது.’ விரிந்த நிலவு எழுந்து மேம்படுவதும், காமம் விளைவிக்கும் மன்மதனுடைய போர்ச்செயலும், பிரிந்துள்ள தலைவன் தலைவியரது நிறை சோர்வதும் உயிர் தடுமாறும் கொடிய மாலைப்போதில் ஒருங்கு நிகழ்ந்தன என்ற பொருளமைந்த இப்பாடற்கண், நிலாவும் மன்மதன் போருமாகிய காரணங் களும் பிரிந்தோர் நிறைதளர்தலாகிய காரியமும் ஒருங்கு நிகழ்ந்தமை அமைந்துள்ளது. (தண்டி. 63 - 2) ஒருபுடை உவமை - முழுவதும் ஒப்பாகாமல் சில தன்மையால் மட்டும் ஒத் திருக்கும் உவமை; ‘ஒருபுடை உவமையாதல் அன்றி முற்று வமையாதல் சொல்லாமையானும்’ (சி.போ. சிற். 1,2,3). (டு) ‘ஒருபுடையொப்புமை’ காண்க. ஒருபுடை ஒப்புமை - ஒருபுடை யுவமை. பவளம் போன்ற வாய் என்புழி, செம் மையே கருதி உவமை கூறப்பட்டது ஒருபுடை யொப்புமை. கடலில் தோன்றலும் வல்லென்றிருத்தலும் துளையிடப் பெறுதலும் முதலியன எல்லாம் கருதி உவமை கூறாது, செந்நிறம் ஒன்றே கருதி ஒருபுடை யொப்புமையால் இதழிற் குப் பவளம் உவமையாயிற்று என்பது. ஒருபுடை - பல கூறுகளினுள்ளும் ஏதோ ஒரு கூறு. ஒருபொருட்கு ஒன்று பல குழீஇய பலபொருள் உவமை - ஓர் உபமேயத்திற்கு ஒருபொருளின் தொகுதியை உபமான மாகக் கூறுவது. இது பலபொருளுவமை இரண்டனுள் ஒன்று. (மா. அ. 101-1) எ-டு : ‘குட்டநீர்க் குவளை எல்லாம் கூடிமுன் நிற்க லாற்றாக் கட்டழ(கு) அமைந்த கண்ணாள்’ (சீவக. 710) கண்ணுக்குக் குவளைப் பூக்களின் தொகுதியை உவமையாகக் கூறுவது, ஒன்று பல குழீஇய பலபொருளுவமை என்ற உவமையாம். ஒரு பொருள் உயர்ச்சி - சமமான இருபொருள்களைத் தொடக்கத்தில் ஒப்பிட் டுரைத்துப் பின்னர் அவற்றுள் ஒருபொருளை மற்றதைவிட உயர்வாகக் கூறுதல் எனப்படும் வேற்றுமை அணியினது வகை. (மா. அ. 131) எ-டு : ‘மலிதேரான் கச்சியுள் மாகடலும் தம்முள் ஒலியும் பெருமையும் ஒக்கும் ; - மலிதேரான் கச்சி படுவ கடல்படா ; கச்சி கடல்படுவ எல்லாம் படும்.’ (தண்டி. 49-3) காஞ்சி நகரத்தையும் கடலையும் முதற்கண் சமமாக ஒப்பிட்டுப் பின் கடலில் கிட்டாத பொருள்களும் கச்சியில் அகப்படும் எனக் கச்சியை உயர்த்துக் கூறும் வேற்றுமை அணிவகை இதன்கண் வந்தவாறு. ‘உயர்வு வியதிரேகம்’ என்னும் வீரசோழியம். (கா. 165 உரை) ஒருபொருள் உருவகம் - உயர்திணை அஃறிணை என்று சொல்லப்பட்ட காட்சிப் பொருளும் கருத்துப்பொருளும் ஒரு செய்யுளில் வந்தால் அவற்றுள் ஒரு பொருளை மாத்திரம் உருவகம் செய்தல். எ-டு : ‘பிறப்பார் இறப்பார் பிறப்பாய வேலை துறப்பான் ஒருபோதும் தூவார் - சிறப்பாகும் செய்படைத்த தென்னரங்கர் சேவடிமேல் மானிடராய்க் கைபடைத்தும் வாழ்ந்த கதை.’ இப்பாடற்கண், அரங்கம் மானிடர் கை சேவடி என்னும் உயர்திணை அஃறிணைகளை உருவகம் செய்யாது, கருத்துப் பொருளாகிய பிறப்பு என்னும் அஃறிணையை மாத்திரம் ‘பிறப்பாய வேலை’ என்று குறிப்பிட்டது உருவக அணி வகைகளுள் ஒன்று. (மா. அ. 120 - 4) ஒரு பொருள் உவமை - பல பொருள்களுக்கு ஒரு பொருளையே உவமமாகக் கூறுவது. எ-டு : ‘வலஞ்செய் சுவண வடவரைபோல் மாடம் பொலஞ்செய் மதிள்கோ புரம்சிகர பந்தி’ என்னும் அடிகளில் மாடம் மதிள் கோபுரம் சிகரங்களின் தொகுதி ஆகிய பலவற்றுக்கும் மேருமலையே உவமையாகக் கூறியது ஒருபொருள் உவமையாம். (மா. அ. பாடல். 167) ஒரு பொருள் கடைநிலை இடத்தீவகம் - இது தீபக அணியின் வகையாகிய ஒருபொருள் தீபகம் என்பதன் கூறுபாடுகளுள் ஒன்று. எ-டு : ‘வெங்கதிரோன் மெய்வருடும் வெண்மதியின் மெய்தடவும் அங்கண் உயர்வான் அகடணவும் - எங்கள் அனகன் அபிராமன் ஆழியான் மூழிக் கனக மணிமாளி கை’ ‘கனகமணிமாளிகை’ என்ற இறுதித்தொடர் இடப் பொருளைக் குறிப்பதாய், ஒரே பொருளையுடையனவாகிய வருடும் தடவும் அணவும் என்ற முதல் இரண்டடிக்கண் உள்ள சொற்களைக் கொண்டு முடிந்தமை இவ்வணியாம். (மா. அ. 161) ஒரு பொருள் குறிப்பினான் உயர்ச்சி வேற்றுமை செய்வது - இரண்டு பொருள்களை ஒப்புமையுடையனவாக இணைத்துக் கூறியபின் ஒருபொருளை அதன் சிறப்புக் கூறிக் குறிப்பினால் வேறுபடுத்திக் கூறும் வேற்றுமை அணிவகை. குறிப்பாவது வெளிப்படையாகக் கூறாமை. எ-டு : ‘மாதராள் வெய்யமுலை மாணிக்க முத்துவடம் மீதுலா வும்தகைத்தாம் வேரிமகிழ்ச் - சோதி துடரிவரை தேனருவி தூநீர் அருவி படரியல நல்காதின் பம்.’ இப்பாடற்கண், தலைவியின் தனங்களும் துடரிமலையும் சமமாக ஒப்பிடப்பட்டன. தலைவியின் தனங்களில் மாணிக்க மாலையும் முத்துமாலையும் உள்ளன. துடரி மலையில் தேனருவியும் நன்னீரருவியும் உள்ளன. ஆதலின் இவை வடிவால் ஒப்புமையுடையன. ஆயின் தலைவியின் மாணிக்க மாலை முத்து மாலைகளைப் போலத் துடரிமலைத் தேனருவி நன்னீரருவி இன்பம் நல்கமாட்டா எனக் குறிப்பிடு முகத்தான், துடரி மலையைவிடத் தலைவி தனங்களுக்கு உயர்வு குறிப்பால் பெறப்படுத்தப்பட்டது.(மா.அ.பாடல் 304) ஒரு பொருள் கூற்றினான் வேற்றுமை செய்வது - வேற்றுமை அணி வகைகளுள் ஒன்று; இருபொருள்களைச் சமமாகக் கூறிப் பின் ஒன்றனை வெளிப்படையாக வேற்றுமை செய்து கூறுவது. எ-டு : ‘அனைத்துலகும் சூழ்போய் அரும்பொருள் கைக்கொண்டு இனைத்தளவை என்றற்கு அரிதாம் - பனிக்கடல் மன்னவ! நின் சேனைபோல்; மற்றது நீர்வடிவிற்று என்னுமிது ஒன்றே வேறு.’ “மன்னவ! கடலும் உன்சேனையும் குணம் தொழில்கள் ஒரே தன்மையன. கடல் உலகம் முழுவதையும் சூழ்ந்து அரிய பொருள் பலவற்றையும் தன்னகத்தடக்கி, இத்துணை அள வுடையது என்று அளக்க முடியாததாய் இருக்கின்றது. நின் சேனையும் உலகின் பல நாடுகளையும் கைப்பற்றச் சூழ்ந்து, பகைவர் நாட்டின் அரிய பொருள் பலவும் கவர்ந்து வந்து இத்துணைத்து என அளக்க முடியாததாக இருக்கிறது. ஆயின், அக்கடல் நீர்வடிமுடையது என்ற இஃதொன்றே சேனைக்கும் அதற்கும் இடையே வேறுபாடு” என்ற பொரு ளுடைய இப்பாடற்கண், கடல் சேனை ஆகிய இரு பொருள் களையும் சமமாகக் கூறிப் பின் சேனையாகிய ஒருபொருளை வெளிப்படையாக வேற்றுமை செய்துள்ளமை கூற்றினான் வந்தவாறு. கூற்று - வெளிப்படை. (தண்டி. 49-1) ஒருபொருள்தீவகம் - தீவக அணியின் ஒழிபாக வந்த ஆறுவகைகளுள் ஒன்று. எ-டு : ‘வியன்ஞாலம் சூழ்திசைகள் எல்லாம் விழுங்கும்; அயலாம் துணைநீத்(து) அகன்றார் - உயிர்பருகும்; விண்கவரும்; வேரிப் பொழில்புதைக்கும்; மென்மயில்கள் கண்கவரும், மீதெழுந்த கார்.’ வானத்தில் எழுந்த மேகம் உலகையே கவித்துத் தன்னுள் அடக்கிக் கொள்ளும்; பிரிவால் வருந்தும் தலைவியரின் உயிரைப் பருகும்; வானத்தை மறைக்கும்; சோலைகளை மூடும்; மயில்களின் கண்களைக் கவரும் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், இறுதியிலுள்ள மீதெழுந்த கார் என்னும் தொடரிலுள்ள ‘கார்’ என்னும் சொல் பாடலின் பலவிடத் தும் இயைந்து பொருள் தந்தது. விழுங்கும் பருகும் கவரும் புதைக்கும் என்ற சொற்கள் யாவும் கார் என்ற ஒரு பொருளின் செயலாகிய மூடுதலைக் குறிக்கும் ஒரு பொருட்பன் மொழிகளாம். ஆகவே, இப்பாடல் ஒரு பொருள் தீவக அணியாம். (தண்டி. 41-3) ஒருபொருளோடு ஒருபொருள் உவமை - உவமை அணி இயல்புகளுள் ஒன்று; ஒரு பொருளோடு ஒரு பொருளையே உவமித்தல். எ-டு : “செவ்வான் அன்ன மேனி” (அகநா. கடவுள்) சிவந்த வானம் போன்ற மேனி என, வானம் என்ற ஒரு பொருளையே மேனி என்ற ஒரு பொருட்கு உவமை கூறிற்று. (இ. வி. 639.) ஒருபொருளோடு பல பொருள் உவமை - உவமை அணி இயல்புகளுள் ஒன்று; உபமானம் ஒரு பொருள், உபமேயம் பலபொருள்களென அமையுமாறு உவமை செய்தலாம். ‘இலங்கு பிறை அன்ன விலங்குவால் வைஎயிறு’ (அகநா. கடவுள்.) வானத்தில் விளங்கும் பிறை போன்ற வெண்மை யான கூரிய பற்கள் எனப் பிறை என்ற ஒருபொருளையே பற்களாகிய பல பொருட்கு உவமை செய்தவாறு. (இ. வி. 639 உரை) ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் தம்முள் மாறுபட உவமித்தல் - சிவபெருமானுடைய பற்கள் பிறையை ஒத்து வெண்ணிறத் தனவாய் வளைந்திருப்பன என்று பொருள்படும் ‘இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிறு’ (அகநா. கடவுள்.) என்ற அடியில் பிறை என்ற ஒருமை உவமை, பற்கள் என்ற பன்மைப் பொருளுக்கு வந்தது. ‘களவுடன் படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா, நாணி நின்றோள்’ (அகநா. 16) என, களவு செய்த பொருள்களோடு அகப்பட்டவர் என்ற பன்மையுவமை பரத்தை என்ற ஒருமைப்பொருட்கு வந்தது. (தொ. பொ. 281 பேரா.) ஒருமை வியதிரேகம் - வீரசோழியம் ஒருபொருள் வேற்றுமையை இவ்வாறு குறிக்கும். (கா. 165) ‘ஒரு பொருள் வேற்றுமையணி’ காண்க. ஒருவயின் போலி - இஃது உவமையணி வகைகளுள் ஒன்று. உபமானம்தோறும் உவமஉருபினை இயைக்காமல், ஓரிடத்தேயே அதனை இயைத்து, ஒவ்வோர் உபமானத்திலும் அதனைக் கொள்ள வைப்பது. எ-டு : ‘நிழற்கோபம் மல்க நிறைமலர்ப்பூங் காயாச் சுழற்கலவம் மேல்விரித்த தோகை - தழற்குலவும் தீம்புகை ஊட்டும் செறிகுழலார் போலும்கார் யாம்பிரிந்தார்க் கென்னாம் இனி.’ “ஒளி பரவிய இந்திரகோபப் பூச்சிகள் தழல் போலும்; பூ நிறைந்த காயாமரம் புகைபோலும்; அதன்மீது அமர்ந்துள்ள கலாபம் விரித்த மயில், தம் கூந்தற்குப் புகையூட்டும் மகளிர் போலும்; எம்மைப் பிரிந்துள்ள தலைவியது நிலையாதாமோ?” என்று வினைவயிற் பிரிந்த தலைவன் தான் மீண்டு வருவ தாகக் கூறிய பருவம் வந்தது கண்டு தலைவியை நினைந்து வருந்தும் கிளவி அமைந்த இப்பாடற்கண், மயில் மகளிரைப் போல உள்ளது என்று ஒரே இடத்துவந்த உவமையுருபினை, தழல் போலும் புகைபோலும் என மற்ற இடங்களிலும் இயைத்துப் பொருள்கொள்ள வைத்தமையின் இஃது ஒருவயின் போலி உவமை ஆயிற்று. (தண்டி. 32-21) ஒருவழி ஒப்பின் ஒருபொருள் மொழிதல் உவமை - எல்லா இடத்தும் எல்லாக் காலத்தும் ஒப்புமை கூற முடியாத பொருளை ஓரிடமாயினும் ஒருகாலமாயினும் பற்றிச் சொல்லும் உவமை வகை. எ-டு : ‘எழில்தரு ஞாயிற்(று) எழில்போல் நிறைந்து பொழிதருவான் திங்களே போல - முழுவுலகும் தன்புகழி னான்நிறைந்த தார்வேந்தன் சேந்தன்மாட்(டு) என்புகழ்தல் ஆவ(து) இனி?’ சேந்தனது எழிலுக்குச் சூரியனது எழிலும், அவனது புகழ் நிறைவுக்குச் சந்திரனது நிறைவும், உபமானங்கள். சூரியன் எல்லா நிலையிலும் சேந்தனுக்கு ஒப்பாகான். காலையில் வெப்பமின்றிச் செந்நிறத்து வனப்போடிருக்கும் நிலையி லேயே அவன் ஒப்பாவதும், சந்திரன் எல்லா நிலையிலும் ஒப்பாகாது முழுமதியாக இருக்கும் நிலையிலேயே ஒப்பா வதும் ஒருவழி ஒப்பின் ஒருபொருள் மொழிதல் உவமையாம். (வீ. சோ. 159) ஒருவழிச் சேறல் என்னும் வேற்றுப்பொருள் வைப்பணி - இதனை ‘ஒருவகை அடைதல்’ (மா.அ. 208) எனவும், சிறப்பு நிலைப் பிறபொருள்வைப்பு (வீ.சோ. 162) எனவும் பிற அணி நூலார் கூறுப. அஃதாவது உலகத்துப் பொருள் அனைத் திற்கும் உரியதாகாது ஒரு பகுதிக்கே உரித்தாய பொதுச் செய்தி ஒன்றனை, முன்னர்க் கூறிய சிறப்புச் செய்தியை வலியுறுத்தி முடித்தற்கு, உலகம் அறிந்த பெற்றியாக ஏற்றி வைத்துரைப்பது. எ-டு : ‘எண்ணும் பயன்தூக்காது யார்க்கும் வரையாது மண்ணுலகில் வாமன் அருள் வளர்க்கும் - தண்ணறுந்தேன் பூத்தளிக்கும் தாரோய்! புகழாளர்க்கு எவ்வுயிரும் காத்தளிக்கை அன்றோ கடன்?’ “தலைவ! கைம்மாறு கருதாமல், இன்னார் இனியார் என வரையறுத்தல் இன்றி, இவ்வுலகில் திருமால் அருள் செய் கிறான்; புகழுடைய பெரியோர்க்கு எல்லா உயிர்களையும் பாதுகாத்துக் கருணைசெய்வதன்றோ கடமையாகும்?” என்று பொருள்படும் இப்பாடற்கண், ‘புகழாளர்க்கு எவ் வுயிரும் காத்து அளித்தலே கடன், என்பது பொதுச்செய்தி; திருமால் கருணைசெய்யும் வகை சிறப்புச் செய்தி. சிறப்புச் செய்தி பொதுச் செய்தியால் விளக்கப்படுகிறது. அந்தப் பொதுச் செய்தி உலகம் அனைத்திற்கும் உரியதன்று; புகழாளர் என்ற ஒரு பகுதிக்கே யுரியது. ஆதலின் ஒருவழிச் சேறல் ஆயிற்று. (தண்டி. 48 - 2) ஒருவினைச் சிலேடை - சிலேடை அணியின் வகைகளுள் ஒன்று. சிலேடையால் அமைந்த எழுவாய்கள் ஒருவினையையே கொண்டு முடிவது. எ-டு : ‘அம்பொற் பணைமுகத்துத் திண்கோட்டு அணிநாகம் வம்புற்ற ஓடை மலர்ந்திலங்க - உம்பர் நவம்புரியும் வான்நதியும் நாள்மதியும் நண்ணத் தவம்புரிவார்க்கு இன்பம் தரும்.’ இது விநாயகக் கடவுட்கும் மலைக்கும் அமைந்த சிலேடை. விநாயகன் - அழகிய பொலிவுடைய பருத்த முகத்தில் திண்ணிய கொம் பினைக் கொண்ட விநாயகன், கச்சுடன் கட்டிய பட்டம் விளங்க, முடிமீது அழகுசெய்யும் ஆகாயகங்கையும், பிறை மதியும் விளங்கத் தன்னைக் குறித்துத் தவம் செய்வார்க்கு இன்பம் தருவான். மலை - தன் மீது அழகிய பொன்னையும் மூங்கிலையும் சிகரத்தையும் கொண்ட அழகிய மலை, மணம் கமழும் நீரோடைகள் பூத்து விளங்க, கங்கை முதலிய நதிகளும் சந்திரனும் தோன்ற, தன்னிடத்திருந்து தவம் செய்வார்க்கு இன்பம் தரும். இவ்வாறு சிலேடையால் அமைந்த விநாயகன் மலை என்னும் எழுவாய் இரண்டும் ‘இன்பம் தரும்’ என்னும் ஒருவினையே கொண்டு முடிந்தவாறு. சிலேடைச் சொல் விநாயகனுக்கு மலைக்கு உரைக்குமிடத்து உரைக்குமிடத்து பொன் பொலிவு கனகம் பணை பருத்தல் மூங்கில் முகம் வதனம் பக்கம் கோடு கொம்பு சிகரம் நாகம் யானை மலை வம்பு கச்சு மணம் உறுதல் கட்டுதல் உண்டாதல் ஓடை பட்டம் நீரோடை என்று சிலேடைப் பொருள் கொள்ளப்படும். (தண்டி. 78-1) ஒவ்வாக் கருத்தினான் ஒப்புமை கோடல் - ‘மக்களே போல்வர் கயவர்’ (கு. 1071) உலகப் படைப்பில் கயவர் என்ற படைப்புண்டு. அப்படைப்பில் உள்ளோர் மனித உருவில், மனிதப் பண்பல்லாத பண்புகளுக்கு உறைவிடமாக வாழ்பவர் ஆதலின் அவர்களை மக்களொடு சேர்த்துக் கணக்கிடல் கூடாது. அவர்கள் மக்களை உண்மையால் ஒவ்வார் என்ற கருத்தினால் ‘மக்களே போல்வர் கயவர்’ என்று கூறியது ஒவ்வாக் கருத்தினான் ஒப்புமை கோடல். ‘வேறுபடவந்த உவமத் தோற்றத்துள்’ இஃது ஒன்று. (தொ. பொ. 307 பேரா.) ஒழித்துக் காட்டு அணி - ஒருபொருளை ஓரிடத்து இல்லை என்று ஒழித்துப் பின் மற்றோரிடத்து உண்டு என்று சுட்டும் அணி. இதனை வட நூலார் பரிசங்கியாலங்காரம் என்ப. இவ்வணிக்கு மாற னலங்காரத்தில் தந்துள்ள இலக்கணம் சற்று வேறாக உள்ளது. அந்நூல் இதனைப் பரிசங்கை அணி என்று குறிக் கிறது. எ-டு : ‘சிறைபடுவ புட்குலமே அன்றிநின் தேயத்(து) இறைவநின் மக்களுக்(கு) இல்லை.’ “அரசே! உன் நாட்டில் சிறை(ப்)படுதல் மக்களுக்குள் யார்க்கும் நிகழவில்லை” எனச் சிறைப்படுதல் மக்களினத்தில் இல்லை என்று ஒழித்துப் பிறகு ‘சிறைப்படுதல் பறவைகளுக்கே யுண்டு’ என்று காட்டுதற்கண் இவ்வணி வந்துள்ளது. மக்களுக்குச் சிறைப்படுதல் என்பது தவறு செய்தலான் தண்டனை நுகர்தற்காகச் சிறைச்சாலையில் அடைக்கப் படுதல் எனவும் பறவைகளுக்குச் சிறைப்படுதல் என்பது சிற குகள் உண்டாதல் எனவும் பொருள் செய்க. இவ்வொழித்துக் காட்டணி சிலேடையை உட்கொண்டே தோன்றுவதாம். (ச. 79, குவ. 53) ஒழிப்பு அணி - இஃது அவநுதி எனவும்படும். ஒரு பொருளினுடைய சிறப்பு பண்பு ஆகிய உண்மை நிலைகளை மறுத்து மற்றொன்றினை அப்பொருள்மேல் குறிப்பாக ஏற்றி உரைக்கும் அணி இது. ஏனைய அணிநூல்களிலும் இது விளக்கிக் கூறப்பட்டுள்ளது. சந்திராலோகத்தும் குவலயானந்தத்தும் இவ்வணி ஆறு வகையாகக் குறிக்கப்பட்டுள்ளது. அவையாவன. 1. வெற்றொழிப்பு அணி, 2) காரண ஒழிப்பு அணி, 3) வேறு பாட்டு ஒழிப்பு அணி, 4) மயக்க ஒழிப்பு அணி, 5) வல்லோர் ஒழிப்பு அணி, 6) வஞ்சக ஒழிப்பு அணி என்பன. 1. வெற்றொழிப்பு அணி - தான் உயர்த்துக் கூற விரும்பிய பொருளில் ஒப்பான வேறொரு பொருளின் தன்மையை ஏற்றி உரைத்தலுக்காக, அதன் இயற்கையான தன்மையையும் கவிகளால் குறித்து ஏற்றப்படும் தன்மையையும் மறுத்தல் வெற்றொழிப்பாம். (மறைத்தல் வெற்றொழிப்பு அணியாம்.) எ-டு : ‘மதியன்(று) இதுபுகலின் வான்நதியில் தோன்றும் புதியதொரு வெண்கமலப் பூ.’ இது சந்திரனன்று; வானமாகிய நதியில் தோன்றும் புதிய வெண்டாமரைப் பூவாகும் என்ற இப்பாடற்கண், மதியின் பெயரையே மறுத்து, அதனை ஆகாயநதியில் தோன்றும் வெண்டாமரைப் பூ என அதற்கு ஒப்பான வெண்டாமரை யின் தன்மை பெயர் இவற்றை ஏற்றி யுரைத்தற்கண், இவ் வொழிப்பணி வந்துள்ளது. 2. காரண ஒழிப்பு அணி - ஒரு பொருளினுடைய சிறப்பு பண்பு ஆகிய உண்மை நிலைகளை மறுத்து மற்றொன்றனை அப்பொருளின்மேல் குறிப்பாக ஏற்றியுரைக்கும் ஒழிப்பு, காரணத்தொடு கூடிவரும் வகை. எ-டு : பொங்கு வெம்மை பொழிதலி னால்இது திங்கள் அன்று; தினகரன் தான் அன்று கங்குல் ஆதலி னால்;கடல் நின்(று) எழீஇத் தங்கு றும்வட வைத்தழல் ஆகுமே! என்ற பாடற்கண் சந்திரனுடைய தண்மையாகிய பண்பினை மறுத்ததோடு, அது கணவனைப் பிரிந்த மனைவிக்கு வெம்மை பொழிதலால் சந்திரன் அன்று; இரவில் தோன்றுதலால் சூரியன் அன்று; எனவே அது கடலினின்று வெளிப் புறப் பட்ட வடவைத்தீ ஆகும் என ஒன்றனைக் காரணம் காட்டி இன்ன பொருள்களாதல் அன்று என்று மறுத்தற்கண் இவ் வணி அமைந்துளது. 3. வேறுபாட் டொழிப்பு அணி - கவி தான் சிறப்பித்துக் கூறக் கருதும் பொருளின்மேல் ஏற்றி உரைப்பதற்கு அப்பொருளுக்கு உபமானமாகக் கூறத்தக்க பொருளிடத்துள்ள பண்பினை நீக்கும் ஒழிப்பணி வகை. எ-டு : ‘தெரியும் இதுதிங்கள் அன்று செழும்பூண் அரிவைமுக மேதிங்கள் ஆம்.’ “யான் வானத்தில் பார்க்கும் சந்திரன் உண்மையான சந்திரன் அன்று; என் தலைவியின் முகமே உண்மையான சந்திரனாம்” என்று பொருள்படும் இப்பாடற்கண், சந்திரனிடமிருந்து அதன் தன்மை நீக்கப்பட்டுத் தலைவியின் முகத்திற்கு அஃது ஏற்றியுரைக்கப்பட்டமை வேறுபாட்டொழிப் பணியாம். சந்திரனது தன்மை முகத்திற்கு ஏற்றப்படுதற்காகச் சந்திர னிடம் அதன்தன்மை நீக்கப்பட்டு அதனை வேறு பொரு ளாகக் கூறலின் இப்பெயர் பெற்றது. 4. மயக்க ஒழிப்பு அணி - ஒரு பொருளை மற்றொரு பொருளாகக் கருதி உணரும் மயக்கஉணர்வினை உண்மை கூறி ஐயம் அறுத்து ஒழித்திடும் ஒழிப்பு அணிவகை. எ-டு : ‘மனக்கினிய தோழி மடந்தைமுகம் நோக்கி உனக்குடலின் ஒன்றியெழு வெப்பம் - தனக்குச் சுரநோயோ காரணம் நீ சொல்லென, அதன்று பொருமாரன் என்றனளப் பொன்’ தலைவியின் உடலானது வெப்பத்தால் வாடுவதாக உணர்ந்த தோழி, உடலில் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதா என்று வினவ, தலைவி இது காய்ச்சலால் ஏற்பட்ட வெப்பம் அன்று, மன்மதன் இவ்வாறு செய்கிறான் என்று கூறுவதாக அமைந்த இப்பாடற்கண், தலைவியது உடல் வெப்பக் காரணம் காய்ச்சல் நோயாகலாம் என்று தோழி கொண்ட மயக்க உணர்வைத் தலைவி இது மன்மதனால் ஏற்பட்ட வெப்பம் என்று உண்மை கூறி ஒழித்தமையால் மயக்க ஒழிப்பாயிற்று. 5. வல்லோர் ஒழிப்பு அணி - ஒருவர் கூறிய கூற்றில் மற்றவர் ஐயுற்று வினவிய செய்திக்கு அவர்தம் கூற்றின் உண்மைப் பொருளை மற்றும் ஒரு கருத் தினைத் தெரிவித்து ஒழிக்கும் அணிவகை. இங்ஙனம் மறுத் தல் ஆற்றல் உடையார்க்கே இயலுமாதலின் இது வல்லோர் ஒழிப்பு ஆயிற்று. எ-டு : ‘இலங்(கு) அயிற்கணாள் இகுளைக்(கு) என்காலைப் பற்றிப் புலம்பியதுண்(டு) என்று புலம்ப, - விலங்கிஅயல் நின்றுவரு மற்றொருத்தி நின்கணவ னோஎன்ன, அன்றுசிலம்(பு) என்றாள் அவள்.’ தலைவி தன் தோழியிடம் உரையாடிக்கொண்டு இருக்கை யில் “என்காலைப் பற்றிக்கொண்டு புலம்பியது (வருந்தி உரைத்தது, ஒலித்தது) உண்டு” என்று கூறியதைக் கேட்ட மற்றொருத்தி உரையாடலில் கலந்துகொண்டு, “அங்ஙனம் புலம்பியது நின் கணவனா?” என்று வினவ, தலைவி தன் அறி வாற்றலால் “அன்று, புலம்பியது என் காலில் அணிந்த சிலம்பே” என்று, வினவிய செய்தியை ஒழித்து வேறு ஒன்றும் வகை கூறுதற்கண் இவ்வணி வந்துள்ளது. 6. வஞ்சக ஒழிப்பு அணி - இது குவலயானந்தத்தில் ‘கைதவ ஒழிப்பு அணி’ என வழங்கப்படும். வஞ்சனை, கபடம் முதலிய சொற்களைக் கூறி உபமேயப் பொருளின் தன்மையினை ஒழித்தல். எ-டு : ‘இம்மடந்தை கட்கடைநோக்(கு) என்னும் பெயரினைக்கொண்(டு) அம்மதவேள் வாளி அடும்.’ “தலைவியின் கட்பார்வை என்ற பெயரினை வைத்துக் கொண்டு மன்மதனுடைய அம்புகள் என்னை வருத்துகின் றன” என்று தலைவன் கூற்றாக அமைந்த இப்பாடற்கண், “மன்மதனுடைய அம்புகள் உண்மையை மறைத்து வஞ்சனை யினால் தலைவியினுடைய கண்கள் என்ற புனைபெயரை வைத்துக்கொண்டு என்னை வருத்துகின்றன” என்ற செய்தி யில் தலைவியின் கண்களில் அவற்றின் பண்பு ஒழிக்கப்பட்டு மன்மதனுடைய அம்புகளின் பண்பு மறைமுகமாக ஏற்றப்பட் டிருத்தற்கண் இவ்வணிவகை அமைந்துள்ளது. (ச. 19-25, குவ. 11) ஒழிபு அணி - ஒரு பொருளைச் சிறப்பித்தற்கு அதன்கண் பலபண்புகள் இருந்தும் அவற்றையெல்லாம் குறைவற உரைக்க முற்படாது ஒன்றை விளக்கிக் கூறிப் பலவற்றைச் சுருங்க உரைப்பது. இஃது ஒழிப்பணியின் வேறாயது. எ-டு : ‘நூல்நலமும் சீர்நலமும் நொந்(து)ஒன்னார் ஏத்தியதன் வேல்நலமும் ஆற்ற விளம்பேனால் - தேன்நலம்முன்(பு) ஈன்ற அருள்முகிற்கை எங்கோன் கொடைஒன்றே தோன்ற உரைப்பேன் தொழுது.’ “தேன் போன்று இனிய என்தலைவனுடைய நூலறிவு, சிறப்பு, பகைவரும் போற்றிய வீரம் இவற்றை விரித்து வருணி யாது, அவனுடைய கார்மேகம் போன்ற கொடைப்பண்பு ஒன் றனையே விளக்கி யுரைப்பேன்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண் ஒழிபு அணி அமைந்தவாறு. (தொ. வி. 365) ஒழுகிசை - வெறுத்திசையில்லாமல் செவிக்கினிய மெல்லிசை உடைமை யாகிய குணம். (தண்டி. 20) ஒழுகிசை என்னும் குணஅணி - இஃது இன்னிசை எனவும் சுகுமாரதை எனவும் வழங்கப்படும்; வெறுத்திசை எனப்படும் வல்லினச் சந்திப் புணர்ப்புச் சொற்கள் அமையாத செய்யுளின் இனிய ஓசை இது. எ-டு : ‘இமையவர்கள் மௌலி இணைமலர்த்தாள் சூடச் சமையம் தொறும்நின்ற தையல் - சிமைய மலைமடந்தை வாச மலர்மடந்தை எண்ணெண் கலைமடந்தை நாவலோர் கண்.’ தேவர்கள் தன் திருவடிகளை வணங்கும் வகையில் எல்லாச் சமயத்தவரும் வழிபடும் மலைமகளாகவும் மலர்மகளாகவும் அறுபத்து நான்குகலைக்கும் தெய்வமாம் கலைமகளாகவும் இருக்கும் தேவியே புலவர்களுக்குப் பற்றுக்கோடு ஆவாள் என்ற பொருளமைந்த இப்பாடற்கண் ஒழுகிசை வந்தவாறு. வல்லெழுத்தின்றிப் பாடுதல் ஒழுகிசை என்னும் முத்து வீரியம் (செய்யுளணி. 20). தூங்கிசைச் செப்பல் வைதருப்ப நெறியார்க்கும், ஏந்திசைச் செப்பல் கௌட நெறியார்க்கும், ஒழுகிசைச் செப்பல் பாஞ்சாலநெறியார்க்கும் உரியன என்பர் சிலர். (மா.பா. அ. 97-99 உரை) இதுமூன்று நெறியார்க்கும் ஒக்கும் என்பர் சிலர். எ-டு : ‘ஆக்கம் புகழ்பெற்ற(து) ஆவி இவள்பெற்றாள் பூக்கட் குழல்கார் புகழ்பெற்ற - மாக்கடல்சூழ் மண்பெற்ற ஒற்றைக் குடையாய் வரப்பெற்றுஎங் கண்பெற்ற இன்று களி.’ ‘பூக்கட் குழற்கார்’, ‘மாக்கடல்சூழ்’, ‘ஒற்றைக்குடையாய்’, ‘வரப் பெற்றெங்’ என வல்லெழுத்துத் திரிபாகியும் தோன் றியும் மிக்கு வந்தவாறு காண்க. இவ்வின்னாஇசையை வேண்டார் இரண்டு நெறியாரும். (தண்டி. 20 உரை) ஒழுகிசை என்னும் குணவணியின் மறுபெயர்கள் - இன்னிசை (மா.அ. 83); இழை (வீ.சோ. 151 உரை): சுகுமாரதை (வீ. சோ. 148) ஒற்றுமை மொழிதல் - சிறப்பான அணிகள் ஆசனம் இருப்பிடம் இவற்றை நோக்கி, தன்னால் முன்பு அறியப்படாதானை இன்னானாக இருத்தல் வேண்டும் என்று முடிவு செய்து கூறுவதும் ஓரணி என்று வீரசோழிய உரையுள் கூறப்பட்டுள்ளது. எ-டு : ‘அருங்கலம் உலகின் மிக்க அரசற்கே உரிய அன்றிப் பெருங்கலம் உடைய ரேனும் பிறர்க்கவை செய்ய லாகா; இருங்கலி முழவுத் தோளோய்! எரிமணிப் பலகை மேலோர் நெருங்கொளி உருவம் கண்டு நின்னையான் நினைந்து வந்தேன்’ (சூளா. கல். 189) “கிரீடத்தை அரசரே புனைதல் வேண்டுமன்றி ஏனைய பெருஞ்செல்வரும் புனைதல் கூடாது, பலகையில் கிரீடம் அணிந்ததாகத் தீட்டப்பட்ட ஓவியத்தைக் கண்டதும் அஃது அரசனது ஓவியம் என்று முடிவு செய்து நின்னிடம் வந்தேன்” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், ‘கிரீடம் அணிதல், என்ற ஒற்றுமையால் அரசனே என முடிவு செய்தல், ஒற்றுமை மொழிதல் ஆகும். (வீ. சோ. 159 உரை) ஒற்றைக் கிளவி இரட்டை வழித்து ஆதல் - அடை அடாது தனித்து வந்த உபமேயத்திற்கு அடை அடுத்து இரண்டாக அமையும் உபமானம் கூறுவது. எ-டு : ‘கருங்கால் வேங்கை வீஉகு துறுகலின் இரும்புலிக் குருளை தோன்றும்’ (குறுந். 47) என்ற அடிகளில் ‘இரும்புலிக்குருளை’ என்ற உபமேயத்திற்கு வேங்கைப்பூக்கள் தன்மீது வீழ்ந்து கிடக்கும் பாறையினை உவமை கூறுதல். (தொ. பொ. 297 பேரா.) ஒற்றை மணிமாலை அணி - ஏகாவளி அணி எனவும் கூறப்படும். சிறப்பான ஒரு பொருளை முன்வைத்து, அதற்கு உயர்வு தரும் பொருளை அடுத்துக் கூறி இவ்வாறே தொடர்புபடுத்திக் கூறுவது இவ்வணி. பலவளையங்கள் ஒன்றாக்கப்பட்ட சங்கிலி, ஒற்றை மணிமாலை. அச்சங்கிலி போலச் செய்திகள் தொடர அமைக்கும் இவ்வணி அப்பெயர்த்தாயிற்று. எ-டு : ‘அவையாதல் சான்றோருண் டாயதே; சான்றோர் நவையறுநன் னூலுணர்ந்தோர்; நன்னூல் - எவையுமாம் ஒன்றாம் அதனை உணர்தல்; அது வும்திருவைக் குன்றாதே கூடியதா கும்.’ “சான்றோரைக் கொண்டதே அவை; சான்றோர் நன்னூல் உணர்ந்தோரே ஆவர்; நன்னூல்கள் கடவுள் தத்துவத்தை விளக்குவனவே; கடவுள் திருவொடு கூடிய மாலே” எனப் பல வளையத்தை ஒன்றாக்கிய சங்கிலிபோல, சான்றோர் நன்னூல் கடவுள்தத்துவம் என்ற பலசெய்திகள் ஒன்றை ஒன்று தொடர அமைத்த அணியே ஏகாவளி என்னும் ஒற்றைமணி மலையாம். (மா. அ. 216) இவ்வணியினைச் சந்திராலோகம், குவலயானந்தம் என்பன பின்வருமாறு விளக்கும். பின் பின்னாக வரும் செய்திகளுக்கு முன் முன்னாக வரும் செய்திகள் அடைகொளிகளாகவோ அடைமொழிகளாக வோ அமைப்பதே ஒற்றை மணிமாலை அணியாம். எ-டு : ‘மன்இவள்கண் காதளவும், காதுதோள் மட்டியையும், துன்னுறுதோள் சானுத் தொடும்.’ தலைவியின் கண்கள் காது வரையிலும், காதுகள் தோள் வரையிலும், தோள்கள் முழந்தாள் வரையிலும், நீண்டுள்ளன என்று இப்பாடற்கண், கண் காது தோள் என்பன அடை கொளிகளாகத் தொடர்ந்துள்ளமை இவ்வணியாம். (ச. 73; கு.வ. 47) ஒன்றற்கு ஒன்று உதவி அணி - இது தடுமாறுத்தியணி எனவும் வழங்கப்படும். ஒரு காரணத்தினால் ஒரு காரியம் தோன்றியது எனக் கூறிப் பின் அக்காரியத்தினாலேயே அக்காரணம் தோன்றியது எனக் கூறுவது இவ்வணி. இஃது இருபொருள்களுள் ஒன்றற் கொன்று உதவி செய்தலைக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. எ-டு : ‘திங்கள்இர வால்விளங்கும்; செப்புகதிர்த் திங்களால் கங்குல் விளங்குமே காண்.’ சந்திரன் இரவுப்பொழுதினால் விளக்கமுறும், இரவுப் பொழுதும் சந்திரனால் விளக்கமுறும் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், இரவு - காரணம், திங்கள் விளக்கம் - காரியம்; மீண்டும் திங்கள் ஒளி - காரணம், இரவின் விளக்கம் - காரியம். இவ்வாறு காரணகாரியங்கள் ஒன்றற் கொன்று உதவியாக இருத்தல் கூறப்பட்டமை இவ்வணியாம். இதனை அந்யோந்யாலங்காரம் என வடநூல் கூறும். (ச. 69 குவ. 43) ஒன்றின் ஒன்று அபாவஏது அணி - ஏது அணிக்கு ஒழிபாகக் கூறப்பட்ட அபாவ ஏதுவின் ஐந்து வகைகளுள் ஒன்று. ஒரு பொருளில் ஒன்றன் இன்மை காரணமாக ஒன்றைக் கூறுதல். அபாவம் - இன்மை. எ-டு : ‘பொய்ம்மை யுடன்புணரார் மேலவர்; பொய்ம்மையும் மெய்ம்மைசூழ் மேலாரை மேவாவாம்; - இம்முறையால் பூஅலரும் தாரார் பிரிந்தால், பொலங்குழையார் காவலர்சொல் போற்றல் கடன்.’ “மேன்மக்கள் பொய் கூறார்; பொய்ம்மையும் மேன்மக்களை அணுகாது; ஆகவே, தலைவர் பிரிந்து சென்றால், அவர் தாம் விரைவில் மீண்டு வருவதாகச் சொன்னதை நம்பித் தெளி வுடன் ஆற்றியிருத்தலே பெண்களின் கடமையாகும்” என்று தோழி தலைவியை ஆற்றுவிக்கும் இக் கூற்றில், ‘மேன் மக்களிடம் பொய் இராது; சான்றோரும் பொய்யுடன் இரார்’ என்று ஒரு பொருளில் ஒரு பொருள் இல்லாமை யைக் காரணமாகக் கூறியமையால் இவ்வணி பயின்றவாறு. (தண்டி. 62 - 3) ஒன்றின் ஒன்று இன்மை - இஃது ஒன்றின் ஒன்று அபாவ ஏது எனவும்படும். அது காண்க. (மா. அ. 194) ஒன்றினொன்று அபாவம் - அந்யோன்யாபாவம். ‘ஒன்றின் ஒன்று அபாவ ஏது அணி’ காண்க. ஒன்று என்ற உவமஉருபின் சிறப்பு - ஒன்று என்ற உவம உருபு அன்ன, போல என்பன போல வினை முதலிய நான்கு உவமம் பற்றியும் வரும். வேல் ஒன்று கண்ணார் - வினை உவமம் மழை ஒன்று தடக்கை - பயன் உவமம் வேய் ஒன்று தோள் - மெய் உவமம் குன்றியும் கோபமும் ஒன்றிய உடுக்கை - உரு உவமம். (தொ. பொ. 286 பேரா.) ஒன்று ஒத்த குறை உவமை - குறை உவமையாவது உபமானம் உபமேயம் என்ற இரண்டன் கண்ணும் வினை, பயன், மெய், உரு என்ற நான்கும் ஒவ்வாது சில ஒத்து வருவதாம்; இவற்றுள் ஒன்று ஒத்துவருவது ஒன்று ஒத்த குறை உவமையாம். எ-டு : பவளம் போன்ற வாய் - பவளம் வாய் என்ற உபமான உபமேயங்களில் செம்மை நிறமாகிய உரு ஒன்றுமே ஒத்து, ஏனைய மூன்றும் ஒவ்வாமையின் இஃது ஒன்று ஒத்த குறை உவமை. (மா. அ. 95) ஒன்று கருமம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (83) வருவதோர் அணி. கருவியை ஒருபுறமும், கருமத்தை மறுபுறமாகவும் வைத்து அவற்றால் ஒன்றைச் செய்வது. எ-டு : தலைவன் உள்ளம் சேய்மையிலிருக்கும் தலைவியை நினைத்து மகிழ்தல் போல்வன. ஓ ஓசம் என்னும் பொதுவணி - இது வலி எனவும் கூறப்பெறும் (தண்டி. 24); அது காண்க. ‘ஓகம்’ என்ற பாடம் தவறானது. ‘ஓஜஸ்’ என்பதன் திரிபு ‘ஓசம்’ என்பதே. (வீ. சோ. 148) ஓட என்ற உவம உருபு - ‘செந்தீ ஓட்டிய வெஞ்சுடர்ப் பருதி’ செந்தீயை ஒப்ப வெப்பமாக ஒளிவீசும் கதிரவன் என்று பொருள்படும் இவ்வடியில் ஓட என்ற உவமஉருபு மெய்உவமத்தின்கண் வந்தது. இது மெய்உவமத்திற்கே சிறந்த உருபாகும். (தொ. பொ. 290 பேரா.) ஓர்பால் தோற்ற ஏது - ‘ஒருங்குடன் தோற்ற’ ஏது; அது காண்க. (சாமி. 188) க ¬கட்புலனாகிய வினை பயன் மெய் உரு கட்புலனாகிய வினை - நீட்டல், மடக்கல், விரித்தல், குவித்தல் முதலியன. கட்புலனாகிய பயன் - நன்மையாகவும் தீமை யாகவும் பயப்பன. கட்புலனாகியவடிவு - வட்டம், சதுரம், கோணம் முதலியன. கட்புலனாகிய உரு - வெண்மை, பொன்மை முதலியன. (தொ. பொ.272. இள) கடுப்ப என்னும் உவம உருபு - “நீர்வார் நிகர்மலர் கடுப்ப....(அழுதல் மேவும் கண்)(அகநா. 11) நீர் நிறைந்த ஒளியுடைய மலர்களை ஒப்பக் கண்ணீர் நிரம்பிய கண்கள் என்று பொருள்படும் இத்தொடரில், ‘கடுப்ப’ என்பது மெய்உவமத்தின்கண் வந்தது. இதுமெய் உவமத்திற்கே சிறந்த உருபு. ‘கார்மழை முழக்கிசை கடுக்கும்.... தேர்’ எனக் ‘கடுக்கும்’ என்பது வினைஉவமத்தின்கண்ணும் வந்தது. ‘விண்அதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்து’ (மலைபடு.2) எனக் ‘ கடுப்ப’ என்பது பயன்உவமம் பற்றியும் வந்தது. ‘பொன்னுரை கடுக்கும் திதலையர்’ (முருகு. 145) எனக் ‘கடுக்கும்’ என்பது உருஉவமம் பற்றியும் வந்தது. (தொ. பொ. 287, 289, 290, 291 பேரா.) கண்ணின் நோக்கிய ஒப்பு - வடிவும் நிறமும் கண்ணினால் நோக்கி ஒப்புமை கொள்ளப் படுவன. (வீ. சோ. 96 உரை) கரவு வெளிப்படுப்பு அணி - ஒருவன் மறைவாகச் செய்த செயலை அறிந்த மற்றவன், தான் அம் மறையை அறிந்த செய்தியைத் தான் செய்யும் செயலால் குறிப்பாக வெளிப்படுத்துவது, கரவு வெளிப்படுப்பு அணி. இதனைப் ‘பிஹிதாலங்காரம்’ என வடநூல்கள் கூறும். எ-டு : ‘கடிமனைக்குக் காலைவரு காவலற்குத் துஞ்சும் படிவிரித்தாள் ஓரணங்கு பாய்.’ காலையில் இல்லம் நோக்கி வந்த கணவனுக்கு உறங்கு வதற்காகத் தலைவி பாயை விரித்தாள் என்று பொருள்படும் இப்பாடற்கண், இரவெல்லாம் தலைவன் பரத்தையர் இல்லத்துத் துயிலின்றி இருந்த செய்தியைத் தான் அறிந்த மையை அவனுக்குக் காலையில் உறங்குவதற்கு ஏற்பாடு செய்த தன்செயலால் தலைவி குறிப்பாக வெளிப்படுத் தியதன்கண் இவ்வணி வந்துள்ளது. (ச. 11; குவ. அ. 85) கருணைத்தடைமொழி - வீரசோழியம் குறிப்பிடும் சிறப்பான முன்னவிலக்கு வகை ஏழனுள் ஒன்று; இரங்கல் விலக்கினை ஒத்தது. ஒருசெயல் செய்யாதவர் படும் துயரத்தை எடுத்துக் கூறி, ஏனையோர் அச்செயல் செய்யாது துன்புறல்கூடாது என்ற கருணையால் அச்செயல் செய்யாதிருத்தலை விலக்குதல் கருணைத்தடைமொழி. எ-டு : ‘இரியல் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற வரிவிரிவு செங்காற் குழவி - அருகிருந்தங்(கு) ஊமன்பா ராட்ட உறங்குமே செம்பியன்தன் நாமம்பா ராட்டாதார் நாடு.’ சோழன் புகழ் பாராட்டாத பகைவர் தோற்றோட, நிறை சூலிகளான அவர்தம் மனைவிமார் இடம்பெயர்ந்தோடிய வழி இலைக்குவியல்களிடையே பெற்றுவிட்டுச் சென்ற குழந்தைகள், கோட்டான் தாலாட்ட உறங்கும் நிலையைப் பெறும் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், சோழன் புகழைப் பாராட்டாத செயலைக் குறிப்பாக விலக்குதல் கருணைத் தடைமொழியாம். (வீ. சோ. 163) கருத்தணி - இதனை வடநூலார் ‘ப்ரேயோலங்காரம்’ என்ப. செய்யுளில் தலைமையாக வெளிப்படக் கூறும் கருத்துக்குத் துணையாக எண்வகை மெய்ப்பாடுகளும் ஏனைய நிலை யில்லா மெய்ப்பாடுகளும் அமைந்து அணிசெய்வது இது. (உருத்திரம் நீங்கலாக மெய்ப்பாடு எட்டு ஆம்.) எ-டு : “காசியில் கங்கைக் கரையில் உறைந்து, உலகப்பற் றற்றுக் கோவணம் ஒன்றே அணிந்து, கைகளைத் தலை மேல் குவித்து இறைவன் திருநாமங்களை உச்சரித்து, அவனருளையே வேட்டுக் கதறியவாறே நாள்களை நிமிடங்களாகக் கழிப்பது எஞ் ஞான்றோ?” என்ற கருத்தின்கண், சாந்த (நடுவுநிலைமை)ச் சுவைக்குத் துணையாகக் கவலை என்ற மெய்ப்பாடு தோன்றி அழகு செய்கின்றமை கருத்தணியாம். (குவ. 102) கருத்து உவமை - இது ‘வேட்கை உவமை’ எனவும் படும். அது காண்க. (வீ. சோ. 156) கருத்துடை அணி - இது கருத்துடை அடைமொழி அணி எனவும்படும். ஒரு பொருளின் பெயருக்கு அடையாய் அமைந்த சொல்லோ சொற்றொடரோ கவி தான் கூறக்கருதும் செய்திக்கு வேண்டும் கருத்தினை உள்ளடக்கி அமைந்திருப்பது. இதனைப் ‘பரிகராலங்காரம்’ என வடநூல்கள் கூறும். மாறனலங்காரம் பரிகராலங்காரத்திற்கு வேறொரு வகை யான இலக்கணம் கூறுகிறது. (233, 234) எ-டு: “திங்கள் முடிசேர் சிவன்உமது தாபத்தை இங்(கு)அகற்றி ஆள்க இனிது’ “சிவபெருமான் நும் துன்பங்களைப் போக்கி நும்மை இனிதின் ஆட்கொள்வானாக” என்ற இப்பாடற்கண், சிவபெருமானுக்குக் கூறப்பட்ட ‘திங்கள் முடிசேர்’ என்ற அடைமொழி, சிவபெருமான் சந்திரனது துயரத்தைப் போக்கி அவனுக்கு நிலையான சிறப்பு நல்கியதை நினை வுறுத்தித் திங்களுக்கு அருளியது போலவே நுமக்கும் அருளுவான் என்ற கருத்தைத் தருதற்கண் கருத்துடை அடைஅணி காணப்படுகிறது. (ச - 49; கு. 24.) கருத்துடை அடைகொளி அணி - அடைகொளியாய் இருக்கும் பெயர் அதன் சொற்பொருளை நோக்குமிடத்துத் தேவைப்பட்டதொரு கருத்தைக் குறிக்கும் ஆற்றலுடையதாய் அமைவது. இதனை வடநூலார் ‘பரிக ராங்குராலங்காரம்’ என்ப. எ-டு : “முக்கணனே அன்புடையார் மும்மலம்நீங் கப்பார்க்கத் தக்கவனென்(று) என்நெஞ்சே! சார்" “மனமே! சிவபெருமானே நம்முடைய மும்மலங்களையும் போக்குபவன் என்று அவனைச்சார்க” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், அடைகொளியாவது முக்கணன் என்ற சொற்றொடர் அறிவிக்கும் சிவபெருமான். முக்கணன் - பருதி மதி தீ என்னும் முக்கண்களை யுடையவன். இம்முக்கண்களும் ஆன்மாக்களுடைய ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங் களையும் நீக்கிவிடும் என்ற கருத்து அத்தொடரில் குறிப்பாக இருப்பதால் முக்கணன் என்ற பண்புத்தொகைநிலைத் தொடர் கருத்துடை அடைகொளியாய் அமைந்தவாறு. (ச. 50, குவ. 25) கருத்துடை அடைமொழி அணி - கருத்துடை அடைஅணி எனவும் படும். கருத்துடை அணி என்பதும் அது. அது காண்க. விசேடணமாகிய அடைமொழி வருணிக்கின்ற தாற்பரியத் துக்கு உதவியான கருத்தைக் கொண்டுள்ள அணி இது. இனி, இவ்விசேடணங்கள் நெடுந்தொடர் வடிவில் வருவன வும் உள. எ-டு : ‘நெடுங்கோலச் சென்னிமிசை நீர்கொள்அர னேநம் கொடுங்காமத் தீயைஅவிக் கும்.’ ‘நெடிய அழகிய தலைமீது கங்கையாற்றைக் கொண்டுள்ள அரன்’ என அடைமொழி சிறுதொடராக அன்றி நெடுந் தொடராக அமைந்து, தீயை அணைக்க நீர் உதவுதலின், சென்னியில் கங்கைதாங்கிய அரன், நுமது காமத்தீயைப் போக்க வல்லவனாவான் எனக் கருத்துடை அடைமொழி யாக விளக்கியவாறு. (ச. 24; குவ. 24) கருப்பொருள் நிலனாகப் புலப்பட்டு அடையும் பொருளும் அயல்பட வரல் - ‘அடையும் பொருளும் அயல்பட மொழியும் ஒட்டணி’ காண்க. (தண்டி. 53 - 1) கருப்பொருளால் உள்ளுறை உவமம் அமைதல் - ‘கரும்புநடு பாத்தியிற் கலித்த தாமரை சுரும்புபசி களையும் பெரும்புன லூர’ (ஐங். 65) இவ்வடிகள் உவமப்போலி ஆயினமை (இச்செய்யுளின்கண், ‘புதல்வனை ஈன்ற எம்மை முயங்கேல் என்று தலைவி கூறுதலின், அவள் இல்லறக்கிழமை பூண்டுள்ளாள், அவள் புலவியுற்றுள்ளாள் என்பது புலனா கிறது. ஆயின் அவள் புலத்தற்குக் காரணம் வெளிப்படையாக இல்லை. அது பாடலின் முன்னிரண்டடிக்கண் அமைந்த விளியில் குறிப்பாகப் புலப்படும்) இவ்வடிகளில் காணப்படும் கருப்பொருள்களால் அது மருதத் திணை என்பதும், அத்திணைக்குச் சிறந்துரிமை பெற்று வரும் உரிப்பொருள் ஊடல் என்பதும் விளங்கும். “கரும்பு நடுதற்குரிய பாத்தியுள் தேவையற்ற தாமரை விரிந்து உண்ண வரும் சுரும்பினது பசியைக் களையும்” என்ற வருணனை, கரும்பு போன்ற காமக்கிழத்தியர்க்கு உரித்தாக அமைத்த இப்பேரில்லத்தில் (தாமரை போன்ற) யான் இல்லறக்கிழமை பூண்டு (தாமரை கலித்தலைப் போன்று) மகனைப் பெற்று, (சுரும்பு போன்று) விருந்தாக வரும் விருந்தினரை ஓம்புகிறேன்” என்ற கருத்தினை உள்ளுறுத்து நிற்றலை உணரலாம். இவ்வாறு அவ்வுள்ளுறையைத் தோற்றுவிக்கும் கருப் பொருள் புனைவு, நேரே உவமமாகாமல் உவமம் போல் அமைந்து பொருளை விளக்கி நிற்றலின் உவமப்போலி ஆயிற்று. (தொ. உவம. பக். 374 ச. பால) கருமகாரக ஏது - கருமம் என்னும் காரகம் வெளிப்பட்டு ஏது ஆதல். எ-டு : ‘மலையின் அலைகடலின் வாள்அரவின் வெய்ய தலையில் பயின்ற தவத்தால் - தலைமைசேர் அம்மாதர் புல்லும் அபயன் புயம்புணர்தற்(கு) எம்மா தவம்புரிந்தேம் யாம்!” “விந்திய மலையிலும் கடலிலும் ஆதிசேடனுடைய வெப்ப மிக்க தலைமீதும் முறையே சயமடந்தை திருமகள் நிலமகள் என்னும் அம்மாதர் மூவரும் தவத்தைச் செய்து சோழ னுடைய தோள்களைத் தழுவினர்; நாம் அத்தகைய தவம் செய்திலேம்” என, சோழன் உலாப்போதரக் கண்ட தலைவி ஒருத்தியது கைக்கிளைக் கூற்றாக வரும் இப்பாடற்கண், அம்மாதர் மூவர் அருந்தவம் செய்து சோழன்புயம் புல்லினர் எனக் கருமகாரகம் புல்லுதல் என்ற செயலோடு சார்ந்தமை காண்க. தவம் செய்தல் - செயப்படு பொருளாகிய காரணம். கருமம் - செயப்படுபொருள். காரகம் - காரணம். (தண்டி. 59 - 3) கருமத்தடை மொழி - வீரசோழியம் சிறப்பாகக் குறிப்பிடும் முன்னவிலக்கு வகை ஏழனுள் ஒன்று; ஒருவன் செய்யும் செயல் விலக்கப்படுதல். எ-டு : ‘குடைநின்றதுசெம்மை, கோலொடு சென்றது கோமனுவின் நடை, நின் றதுகலி, ஞாலம் கடந்தது நன்மை அன்றி; இடைநின் றது ஒன்றுண்(டு); யாதெனின் ராசகண் டீரவ! நின் தொடைநின்ற தார்புனை வார்மட வார்படும் துன்பங்களே’ “குடையினால் மக்கட்கு நன்மையும் செங்கோலினால் நீதியும் செய்வதால், கலி தன் இருப்பிடம் விட்டுப் பரவமுடியாமல் நின்றுவிட்டது; நன்மை இவ்வுலகில் மாத்திரம் அன்றித் தேவருலகத்தும் பரந்தது; எனினும், நின் மாலையை வாங்கிப் புனைய வேண்டும் என்று கருதும் இளமகளிர் விருப்பம் மாத்திரம் நிறைவேறவில்லை” என்று அரசன் செய்யும் செயல்களில், மடவார் விருப்பம் நிறைவேற்றப்படும் கருமத்தை விலக்கிச் சுட்டுதல் கருமத் தடைமொழியாம். (வீ. சோ. 163) கருமமும் கருவியும் உருவகம் செய்தல் - முற்றுருவகத்தில் உறுப்புக்களும் உறுப்பியுமேயன்றிக் கருமமும் கருவியுமுட்பட உருவகம் செய்யப்படும். எ-டு : ‘பவளவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக் குழவிநா(று) எழுத்து காளைக் கொழுங்கதிர் ஈன்று பின்னாக் கிழவுதான் விளைக்கும் பைங்கூழ்; கேட்டிரேல் பிணிசெய் பன்மா, உழவிர்காள்! மேயும் சீல வேலிஉய்த் திடுமின் என்றான்’. (சீவக. 379) பவளவாயாகிய வயலிலே நித்திலமாகிய விதையை விதைத்த லான், குழவியாகிய நாறு தோன்றக் காளையாகிய கதிர் வெளிப்பட, இறுதியில் கிழத்தன்மையாகிய விளைவு தரும் வாழ்க்கையாகிய பயிரைப் பிணியாகிய விலங்குகள் மேயா மல் சீலமாகிய வேலியிட்டுப் பாதுகாத்தல்வேண்டும் என்ற இப்பாடற்கண், வாழ்க்கையைப் பயிராக உருவகம் செய்த தற்கு ஏற்ப, அதனொடு தொடர்புடையன யாவும் உருவகம் செய்யப்பட்டன. ‘பிணிசெய் பன்மா மேயாமல் பொருட்டு’ எனக் கருமத்தினையும், ‘சீலவேலி’ எனக் கருவி யினையும் உருவகம் செய்தவாறு. (இ.வி. 644 உரை) கருவிக்காரக ஏது அணி - கருவிகள் காரகங்களாக வேற்றுமையுருபினை ஏற்று ஏதுவாகக் கூறப்படுதல். எ-டு : ‘கரடத்தால் மாரியும் கண்ணால் வெயிலும் நிரைவயிரக் கோட்டால் நிலவும் - சொரியுமால் நீள்ஆர்த் தொடைஅதுலன் நேரார் கலிங்கத்து வாளால் கவர்ந்த வளம்.’ சோழமன்னன் பகைவர்நாடாகிய கலிங்கத்தினின்று தன் வலிமையால் கவர்ந்து வந்த யானைகள் தம் கன்னங்கள் பொழியும் மதநீர்ப் பெருக்கால் மழையையும், கண்களால் வெயிலையும், திண்ணிய பருத்த கொம்புகளால் நிலவையும் சொரியும் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், கன்னங்கள் கண்கள் கோடுகள் என்ற கருவிகள் ‘ஆல்’ உருப்பேற்று ஏதுவாக நின்றன; சொரியும் என்ற வினைகொண்டு முடிந்தன. (தண்டி. 59 - 4) கல்விச் செல்வ மிகுதி உதாத்தம் - கல்வியின் மிகுதியை உயர்த்துக் கூறும் உதாத்த அணிவகை. எ-டு : ‘பல்வித் தகமறை யின்துறை போய்அவற் றுள்பரன்சீர் சொல்வித் தகமறை தோய்ந்(து)எதி ராசன் துணிந்துகொண்ட கல்விப் பொருள்அன்பர்க் கெல்லாம் அளிக்கவும் கண்ணகன்ற நல்வித் தகம்இறை யும்குறை யா(து)உள் நயந்தனவே.” “வேதத்தின் துறைகளை அறிவினால் கடந்து திருமாலே பரம்பொருள் என்பதனை ஐயமற ஞானத்தால் அறிந்து, இராமாநுசர், தாம் உட்கொண்ட ஞானமாகிய கல்விப் பொருளை அன்பொடு தம்பால் கற்ற சீடருக்குக் கொடுத்தும், அவர் கற்ற கல்வி சிறிதும் குறையாது அவரிடம் தங்கி யிருந்தது” எனக் கல்விச் செல்வத்தை உயர்த்துக் கூறிய உதாத்த அணிவகை இப்பாடற்கண் அமைந்தவாறு. (மா. அ. பாடல் 574) கலவை அணி - இது சங்கர அணி எனவும் கூறப்படும். பாலொடு கலந்த நீர் போல் எளிதில் பகுத்துணர முடியா நிலையில் அணிகள் ஒரு பாடற்கண் சேர்ந்திருக்கும் வனப்புக் கலவை அணி எனப் படும். இக்கலவையணி, சங்கீரண அணியும் சேர்வையணியும் ஆகிய இவற்றின் வேறாகக் கொள்ளப்படுகிறது. இதன் வகைகள் 1. உறுப்பு உறுப்பிக் கலவை 2. நிகர் தலைமைக் கலவை 3. ஐயக் கலவை 4. ஒரு தொடர்ப் பொருட்கலவை என்பன. பாலும் நீரும் சேர்ந்தாற்போல ஓரணி வெளிப்படையாகவும், பிறிதோரணி குறிப்பாகவும் அமைவது இக்கலவையணி என்பது மாறனலங்காரம். (சங்கர அலங்காரம்) (மா. அ.249. குவ. 117-120) 1. உறுப்பு உறுப்பிக் கலவை அணி இரண்டு இன்றியமையாத அணிகள் ஒன்று உறுப்பியைப் போலத் தலைமையுடையதாயும், மற்றது உறுப்பைப் போல அத்துணைச் சிறப்பில்லாததாயும் அமைவது. எ-டு : ‘காற்றினசை தாருநிழற் கண்மதியம் என்னுமரி ஏற்றிற் றுமிப்புண் டிடுகருமை - தோற்றுருவின் அல்லெனுமால் யானை அவயவத்துண் டோவென்று சொல்லுறவே தோன்றும் துடித்து’. காற்றில் அசையும் மரங்களின் நிழல் சந்திரன் என்னும் சிங்கத் தால் தாக்கப்பட்டுத் துண்டம்துண்டமாகக் கருநிறத்தொடு காணப்படும் காட்சி, இருள் என்னும் யானையின் உடல் பல துண்டுகளாகக் சிதறிக் கிடப்பது போலத் தோன்றுகிறது என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், சந்திரனாகிய சிங்கம், இருளாகிய யானை என்ற இரண்டு உருவகங்கள் தலைமை யாகிய தற்குறிப்பேற்ற அணியைச் சார்ந்து தோன்றுவதன்கண் இக்கலவையணி வகையைக் காணலாம். (குவ. 117) 2. நிகர் தலைமைக் கலவை அணி பாடலில் உள்ள அணிகள் ஒன்றற்கொன்று இணையான சிறப்புடையனவாக அமைவது. எ-டு : ‘அங்குலி யால்கா ரோதிக் கற்றைநீக் குதல்போல் அல்லைத் திங்கள்தன் கதிரால் நீக்கல் செய்து மூடுறுகண் போலும் பங்கய மலர்ப டைத்துப் பாருல கதனில் மேய கங்குல்மான் முகம்சு வைக்கின் றனனெனக் கருதத் தோன்றும்.’ விரலினால் முகத்தை மறைக்கும் மயிர்த் தொகுதியை ஒதுக்குதல் போலச் சந்திரன் இருளினைத் தன் கதிர்களாகிய விரலாலே நீக்கித் தாமரையாகிய கண்களை மூடிக் கொண் டிருக்கும் மாலை யாகிய பெண்ணின் முகத்தினைச் சுவைக் கின்றவன் போலக் காட்சி வழங்குகிறான் என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண். சந்திரன் இருளினைத் தன் கிரணங்களால் நீங்குதற்கு விரலால் தலைமயிரை ஒதுக்குதலாகிய உவமமும், தாமரைக்குக் கண் களாகிய உவமமும் சமமான தகுதியொடு, தற்குறிப் பேற்ற அணிக்கு உதவியாக வந்துள்ளமை இக்கலவையணி வகை யாம். (கு. வ. 118) 3. ஐயக் கலவை அணி - இதுவோ அதுவோ என்று ஐயுறுமாறு அணிகள் கலந்து வருவது. எ-டு : ‘அழற்கடுவாய் நாகம் அடியிலுள தேல், பல் பழத்தருவால் உண்டோ பயன்?’ “கொடிய நாகம் மரத்தடியில் இருப்பின், பல பழங்கள் தூங்கும் மரத்தால், நமக்குப் பயன் கிட்டுமோ?” என்ற பொருளமைந்தது இது. இஃது ஒட்டு அணியாய்க் கொடி யோனை வாயிற்காவலனாகக் கொண்ட வள்ளலாகிய மன்னனையும் குறிக்கும். உபமேயமாகிய கொடியோனுடைய செய்தி புலப்படுத்தற்காக உபமானமாகிய பாம்பினை ‘அழற்கடுவாய் நாகம்’ என்று வருணித்தலின், புனைவிலி புகழ்ச்சியாம். இவ்வாறு ஒட்டணியோ புனைவிலி புகழ்ச்சியோ என்று ஐயுறுமாறு அணி அமைந்திருப்பது இக்கலவையணி வகையாம். (குவ. 119) 4. ஒரு தொடர்ப் பொருட் கலவை அணி - ஒரு பாட்டின் சொற்கள் அனைத்தும் ஒரு பொருளையே தெரிவிக்கவும், அப்பொருளில் இரண்டுஅணிகளின் இலக் கணம் உண்மையால் அவ்விரண்டும் கலந்து தோன்றுவது. எ-டு : ‘சோலை வாயிற் சுடரும் நிலாமணி ஆல வாலத் தவிர்மதி யாற்புனல் கால வாய்ந்த கதிர்மணி முல்லையின் கோல நாண்மலர் கொய்வதற் கெய்தினான்’ சோலையில் சந்திரனைக் கண்டு சந்திரகாந்தக் கல் உமிழும் அந்நீர் அருவியாக ஓடிவர, அவ்வருவிநீரே முல்லைக் கொடியில் பாய அம்முல்லை மொட்டுவிட, அப்பூவைப் பறிக்கச் சென்றான் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், செல்வமிகுதியைச் சொல்லும் வீறுகோள் அணியும் அதிகக் கற்பனை செய்தலின் அதிசய அணியும் ஆகிய ஈரணிகள் ஒருவகைச் சிறப்புடனே ஒருபாடலின்கண்ணேயே வந்துள் ளமை இக்கலவையணி வகையாம். (குவ. 120.) கலாப குளகம் - நான்கு பாடல்கள் தொடர்ந்து, முடிக்கும் சொல்லாகிய வினை வினைக்குறிப்பு பெயர் தொழிற்பெயர் என இவற்றுள் ஒன்றனை முதற்பாடற்கண் கொண்டு பொருள் முற்றுப் பெறுமாயின், அவை ‘கலாபாதி குளகம்’ எனப்படும். இரண்டாம் பாடல் மூன்றாம் பாடற்கண் முடிக்கும் சொல் அமையுமாயின் அவை ‘கலாப மத்திய குளகம்’ எனப்படும். இறுதிப் பாடற்கண் முடிக்கும் சொல் அமைந்திருப்பின் அவை ‘கலாபாந்திய குளகம்’ எனப்படும். கலாபாதி மத்திய குளகங்களுக்கு எடுத்துக்காட்டுக்கள் வந்தவழிக் காணப்படும். கலாபாந்திய குளகத்திற்கு எடுத்துக்காட்டு : ‘மாயோ னெடியோன் மதுசூ தனன்புவனம் தாயோன் முகுந்தன் சராசரங்கள் - ஆயோன் நராரி அரிஅச் சுதன்நா(க) அணையான் முராரி அழியா முதல், மாதவன் கேசவன் வாமனன் கோவிந்தன் சீதரன் பூமகள்கோன் தேவேசன் - பூதலத்தை உண்டோன் விரிசிறைப்புள் ஊர்ந்தோன் பகிரண்டம் கண்டோன் நிருதாந் தகன்’. ‘மந்தா கினிபிறந்த வார்கழலோன் நேமியோன் தந்தா வளமுரைத்த சால்பினோன் - எந்தை திருமால் வரன்உந்தி பூத்தோன் அமரர் பெருமான் பிரமன் பிதா,’ ‘கண்ணன் கருணா கரன்அமலன் காயாம்பூ வண்ணன் கடல்வண்ணன் மைவண்ணன் - விண்ணவர்கோன் தம்பிரான் ஆரணன்அந் தாமத்தான் வேதாந்தன் எம்பிரான் முத்தன் இறை.’ (மா.அ. பாடல் 45-48) இவை நான்கும் ஈற்றுச் சீராகிய ‘இறை’ என்ற பெயரைக் கொண்டு முற்றின. மாறனலங்காரத்துள் கலாபம் என்பது காபாலிகம் எனப் படுகிறது. (மா.அ. 68) கவுட நெறி - வண்ணம், வகுப்பு, மிறைக்கவி, செறிவெழுத்து, சொற்செறிவு, வழிமோனை, வழியெதுகை, திரிவு, மடக்கு முதலியனவும் செம்மையாகச் சொல்லாமல் சொல்லுவதற்கு அரியதாய் அமைவது. (செம்மை - அறிதற்கு எளிமை) (சாமி. 178) கள்ள என்னும் உவம உருபு - ‘கார்கள்ள உற்ற பேரிசை’ கார்கால மேகத்தை ஒத்த பெரிய கொடைப்புகழ் என்று பொருள்படும் இத்தொடரில், ‘கள்ள’ என்பது பயனுவமம் பற்றி வந்தது. இது பயனுவமத்திற்கே சிறந்த உருபாகும். (தொ. பொ. 289 பேரா.) கற்பம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (78) வருவதோர் அணி. சிறிய பொருளிடம் பெரிய பொருளைச் சேர்த்து மறைப்பது. எ-டு : சிறுவெள் அரவின் குட்டிக்குக் கானயானையைக் கொல்லும் ஆற்றலை மறைத்து வைத்திருப்பது (குறுந். 119-1,2) போல்வன. கற்பிசைப் புனைவு - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (116) வருவதோர் அணி. பொதுவாக ஒப்புமை கூறப்படும் உபமானத்தில் வேற்றுமை ஒன்றினைக் கற்பித்துப் புனைவது. எ-டு : ‘கறையிலா மதி முகத்தான்’ - மதியினது இயல்பைக் ‘களங்க மில்லாத மதி’ என வேற்றுமை செய்து முகத் திற்கு உவமித்தல் போல்வன. கற்பு மிகுதி உதாத்தம் - மிக மேம்பட்ட கற்பினை உயர்த்திக் கூறும் உதாத்த அணி வகை. எ-டு : ‘பொற்பிற் குரிய புகழ்ச்சா னகிபுனிதக் கற்பிற்(கு) இணைஉளதோ, காணுங்கால்? - சிற்றிளவல் இட்டதழல் தண்ணென்(று) எதிர்சுமந்த(து) அன்றதனைச் சுட்டதவள் கற்பாம் சுடர்’. இலக்குவன் மூட்டிய தீயில் சீதை தீக்குளிக்க, அவள் கற்புத்தீ எரியும் தீயினைச் சுடத் தீக்கடவுள் அவளைச் சுமந்து இராகவன் முன் நிறுத்தி அவளது மாசற்ற தன்மையை உணர்த்தினான் என்பதனை நோக்கப் பிராட்டியின் கற்புக்கு இணையில்லை என்பது தேற்றம் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், கற்புமிகுதி புகழப்பட்ட உதாத்த வகை வந்துள்ளது. (மா. அ. பாடல் 570) கற்றோர் நவிற்சி அணி - ஒரு பொருளின் சிறப்பை மிகுத்தற்குக் காரணமாகாத தொன்றைச் சிறப்பு மிகுதிக்குக் காரணம் போலச் சொல்லு வது. இதனை வடநூலார் ‘ப்ரௌடோக்தி அலங்காரம்’ என்ப. எ-டு : ‘தக்க இவள் கண்யமுனை தன்னில் அலர்குவளை ஒக்கும் கருமை உள’. இவள் கண்கள் குவளையை ஒத்த கருமையுடையன என்று கூறலே போதுமானது. குவளை தோன்றும் இடத்தால் அதன்கண் நிறத்தில் வேறுபாடு தோன்றாது. அவ்வா றிருப்பவும், கரிய நீரையுடைய யமுனையில் தோன்றுவதால் குவளையின் கருநிறம் சிறக்கும் என்று கருதிக் கூறுவதால், ‘யமுனை தன்னில் அலர்குவளை’ என்ற தொடரில் கற்போர். நவிற்சியணி வந்துள்ளவாறு. (ச. 89, குவ. 63) காட்சி - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (29) வருவதோர் அணி. உபமேயம் கூறப்படாமல் உபமானம் கூறப்படுவது. இஃது உள்ளுறை உவமை ஆகும். அது காண்க. காட்சி அணி - இது சுட்டணி எனவும், நிதர்சன அணி எனவும் கூறப்பெறும். உலகில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வரும் ஒரு செய்தி, மற்றொரு பொருட்கு நன்மையோ தீமையோ எடுத்துக்காட்டி விளக்குவதற்குப் பயன்படச் செய்வது இவ்வணியாம். இவ் வணி வீரசோழியம், தண்டியலங்காரம், மாறனலங்காரம், முத்து வீரியம் என்னும் நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. இது சந்திராலோகத்திலும், குவலயானந்தத்திலும் வாக்கியப் பொருட் காட்சி, பதப்பொருட் காட்சி, பொருட்காட்சி என மூவகையாகப் பாகுபட்டுள்ளது; ஏனைய நூல்களில் நன்மைதோன்றும் நிதரிசனம் - தீமை தோன்றும் நிதரிசனம் - என்று பாகுபட்டுள்ளது. எ-டு : “சந்திரனிடத்தில் களங்கம் இயல்பாக உள்ளது; அது சான்றவர்களிடத்தில் பிழை சிறிதிருப்பினும் உலகறிய வெளிப்படும் என்ற கருத்தை வெளிப் படுத்துகிறது” என்று கூறுவது காட்சி அணி. (ச. 41, 44; கு.அ. 19; தண்டி 85; வீ.சோ. 174; மா.அ.139; மு.வீ. பெருளணி 101) 1. வாக்கியப் பொருட்காட்சி அணி. உபமானமாகவும் உபமேயமாகவும் இருக்கின்ற இரண்டு வாக்கியங்களுடைய பொருள்களை ஒன்றாக இணைத்துக் கூறுவது இக்காட்சியணி வகையாம். எ-டு : ‘முறைகெழுவள் ளற்கு முனிவின்மை திங்கட் (கு) அறைகளங்கம் இல்லாமை ஆம்.’ சிறந்த வள்ளலுக்குக் கோபமில்லாதிருக்கும் சிறப்புச் சந்திர னுக்குக் களங்கமில்லாதிருப்பின் இருக்கும் சிறப்பாகும் என முதலிலுள்ள உபமேயவாக்கியத்தையும் அடுத்துள்ள உபமான வாக்கியத்தையும் இணைத்து ஒன்றாகக் கூறியவாறு இவ்வணிவகையாம். (ச. 42; குவ. 19) 2. பதப்பொருட் காட்சி அணி உபமேயத்தில் உபமானத்தின் பண்பும், உபமானத்தில் உப மேயத்தின் பண்பும் ஏற்றி உரைக்கப்படும் காட்சி அணிவகை. எ-டு : ‘குவளை மலரழகைக் கொண்டனசீர் ஆர்ந்து கவினுமிளந் தோகாய்! நின் கண்’. தலைவியின் கண்கள் குவளைமலரின் அழகினைத் தாம் கொண்டு சிறப்புற்று விளங்குகின்றன என்னும் இப் பாடற் கண், உபமானமாகிய குவளைமலரினது பண்பு உபமேய மாகிய கண்கள்மேல் ஏற்றப்பட்டது. எ-டு : ‘மருத்தகு கோ தாய்! நின் வதனத் தொளியைத் தரித்துளதால் ஒண்சீர்ச் சசி’ தலைவியது முகத்தழகைச் சந்திரன் பெற்று அழகாகக் காணப்படுகிறது என்ற இப்பாடற்கண், உபமேயமாகிய முகத்தினது அழகு உபமானமாகிய சந்திரன்மேல் ஏற்றப் பட்டது. (ச. 43; குவ. 19) 3. பொருட்காட்சி அணி ஒருபொருள் தன் இயல்பான செய்கையால் உலகிற்கு நற்பொருளையாயினும் தீப்பொருளையாயினும் தெரிவிக்கும் காட்சி அணிவகை. இதுவே தண்டியலங்காரம் (85), வீரசோழியம் (174; ‘சுட்டு’ எனக்குறிக்கப்படுவது) முதலிய நூல்களில் நிதரிசனஅணியின் இலக்கணமாகக் கூறப்பட் டுள்ளது. ‘நன்மை புலப்படவரும் நிதரிசன அணி’, ‘தீமை புலப்படவரும் நிதரிசன அணி’ - இவற்றைக் காண்க. காட்சிப் பிரமாண அணி - வடநூலார் இதனை பிரத்யக்ஷப் பிரமாணாலங்காரம் என்ப. மெய்வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளானும் உணர்ந்து அறிவதனைக் கூறுதல். எ-டு : “களிப்புத் தரும் தேனில், காதலன் வடிவினது பிரதி பிம்பம் படிந்துள்ளமையானும், மாந்தளிரது மணம் கமழ்தலானும், இன்சுவை இருப்பதானும் வண்டுகள் மொய்த்து ஒலிப்பதானும் குளிர்மையோடு தோன்று வதானும் அதன்கண் ஐம்புலனும் மகிழ்ச்சியுற்றன.” இதனுள், வடிவம் படிந்தமையான் கண்ணும், மாந்தளிர் மணத்தான் மூக்கும், சுவையான் நாவும், வண்டுகளது ஒலியான் செவியும், குளிர்ச்சியான் (உடலாகிய) தோலும் இன்புற்றன என்று ஐம்பொறிகளானும் உளவாகும் காட்சி அளவை கூறப்பட்டமையால் இஃது இவ்வணி ஆயிற்று. (குவ. 108) காதல் நிலைக்களன் பற்றிய உவமம் - காதல் என்பது, உண்மையால் தாம் தம் செயல்களால் தேடிக் கொண்ட பெருமையோ, மற்றவரைவிட உயர்த்துக் கூறு தற்குக் காரணமான அழகோ இல்லாவிடினும் தம் அன்பி னால் அவற்றை ஒருவர்மீது ஏற்றி உரைப்பது. ‘என் மகள், பாவை அன்ன பலர்ஆய் மாண்கவின்’ (அகநா. 98) என் மகளுடைய, கொல்லிப் பாவையைப் போன்ற பலரும் புகழும் மேம்பட்ட அழகு என்று பொருள்படும் இத் தொடரின்கண், பாவை என்பது காதல் நிலைக்களனாக இட்டுரைத்த உவமமாம். (தொ. பொ. 279 பேரா.) காந்தம் என்ற குண அணி - ஒரு பொருளை உயர்த்திப் புகழும்பொழுது உலகநடை முறை கடவாமல் ஆராய்ந்து உயர்த்துதல். எ-டு : ‘ஒருபேர் உணர்வுடையேன் உள்நிறையும் தேய வருமே துற(வு)என்பால் வைத்த - ஒருபேதை போதளவு வாசப் புரிகுழல்சூழ், வாள்முகத்துக் காதளவு நீண்டுலவும் கண்.’ “ஒரு பெண்ணினது முகத்தில் இருக்கும் காதுவரை நீண்டு பிறழும் கண்கள், நல்லறிவு படைத்த என் நெஞ்சின் உணர்வு அழிய என் உள்ளத்தே நிறைநீக்கத்தைத் தந்தன” எனப் பாங்கற்குத் தலைவன் உற்றது கூறும் இப்பாடற்கண், “காதளவு நீண்டு உலவும் கண்கள், என் உணர்வும் நிறையும் தேய என் உள்ளத்தே துயரத்தை (-ஏதம் உறுதலை) வைத்தன” என்னு மிதன்கண், உலகியல் மரபு கடவாத நிலை அமைந்திருப்பது காந்தமாகும். இது வைதருப்பக் காந்தம். (தண்டி. 23) எல்லையொடு புகழ்வது வைதருப்ப நெறி; எல்லையை மிக மீறிப் புகழ்வது கௌடம்; இடைப்பட்டது பாஞ்சாலம். இது ‘காந்தி’ எனவும்படும் (வீ. சோ. 148) பொருளது சிறப்பால் அதனை மிகப் புகழ்ந்துரைத்தல் காந்தி என்னும் முத்து வீரியம் (செய்யுள்அணியியல் 21) காந்தம் என்ற குணவணியின் மறுபெயர் - இது வீரசோழியத்துள்ளும் (கா. 148) முத்துவீரியத்துள்ளும் (செய்யுளணியியல் 21) ‘காந்தி’ எனப் பெறும். காந்தி - காந்தம்; பொதுவணிவகை பத்தனுள் ஒன்று. அது காண்க. (வீ. சோ. 151) காந்தி மிகுதி - மிக மேம்பட்ட பொருளை வியந்துரைக்கும் அணி உதாத்த அணி எனப்படும் வீறுகோளணி. அதனுள் காந்தியை மிகுத் துரைப்பது ‘காந்தி மிகுதி உதாத்தம்’ ஆம். எ-டு : ‘வேணுக் குழலிசைத்த வேங்கடமா லைப்புலவீர்! ஆணுத் தமனென்ப (து) ஆரறியார்? - நாண்மலருள் பெண்ணுத் தமிஇறையும் பேர்கிலாள் பேரழகைக் கண்ணுற் றவன்மார் பகம்.’ மலரில் வாழும் திரு, திருமாலின் மார்பழகைக் கண்டு அதனைச் சிறிதுபோதும் நீங்காது அதன்கண்ணேயே வீற்றிருக்கிறாள். ஆதலின், கண்ணனாய் அவதரித்த வேங் கடத்துத் திருமாலை ஆண்களுள் உத்தமன் என்பதனை ஆர் அறியார்?” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், திருமா லின் புருஷோத்தமனாம் ஒளியினை மிகுத்துக் கூறியது காந்தி மிகுதி என்னும் உதாத்த வகையாம். (மா. அ. 242) காப்பியம் - பெருங்காப்பியம் எனவும் படும் காப்பியத்தினது இலக்கணம் கூறுமிடத்து, வாழ்த்து வணக்கம் வருபொருள் என்னும் மூன்றனுள் பொருந்துவதாக ஒன்று முன் வர நடந்து, அறம் முதலிய நான்கனையும் பயக்கும் ஒழுகலாறு உடைத்தாய், தனக்கு நிகர் இல்லாத நாயகனை உடைத்தாய், மலை கடல் நாடு வளநகர் பருவம் சூரியசந்திரர்தம் தோற்றம் என்றின் னோரன்ன வருணனைகளை யுடைத்தாய், நன்மணம் புணர்தல் - பொன்முடி கவித்தல் - பூம்பொழில் நுகர்தல் - புனல்விளையாடல் - புதல்வரைப் பெறுதல் - புலவிகலவி களில் திளைத்தல் - என்றின்னோரன்ன செய்கைச் சிறப்புப் புகழ்ந்து தொடுக்கப்பட்ட நல்லொழுக்கம் உடைத்தாய், மந்திரம் தூது பகைமேற்செலவு போர்வெற்றி என்பன சந்தி போலத் தொடர்புபட்டு, சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் முதலிய கூற்றின் ஒரு திறத்தால் பகுக்கப்பட்டு, இடைவிடாத எண்வகைச் சுவையும் மெய்ப்பாடும் கேட்போர் மதிக்கப் புலவரால் புனையப்படும் தன்மையினை உடைத்து என்ப இலக்கண நூலோர். (மா. அ. பொதுவியல். 72-76) (தண்டி. 8, இ. வி. பாட். 94) காப்பியம் என்ற பெயர்க்காரணம் - கவியால் பாடப்படுவன எல்லாம் காப்பியமே ஆயினும் தொடர்நிலைச் செய்யுளையே காப்பியம் என்றது, சேற்றுள் தோன்றுவன எல்லாம் பங்கயமேனும் தாமரையினையே பங்கயம் என்றாற் போல்வது. (இ. வி. 627 உரை) காபாலிக குளகம் - பலபாடல்கள் ஒரு முடிக்குஞ் சொல்லால் முடியும் குளகம் என்னும் செய்யுள்வகை. உகளக குளகம் (இரண்டு பாடல்), சாந்தானிக குளகம் (மூன்று பாடல்), காபாலிக (கலாப) குளகம் (நான்கு பாடல்), அந்திய குளகம் (நான்கன் மேற்பட்ட பாடல்) எனக் குளகம் நான்கு வகைப்படும். நான்கு பாடல்கள் பொருள் தொடர்பு பட இணைந்து, பெயரையோ தெரிநிலைவினை முற்றையோ குறிப்புவினைமுற்றையோ வினையாலணையும் பெயரையோ நான்காம் பாடலில் பயனிலையாகக் கொண்டு எழுவாய் முடியுமாறு அமையப் பெறின் அவை காபாலிக குளகச் செய்யுள் என்று பெயர் பெறும். இவை வடநூலுள், ‘கலாபகுளகம்’ எனப்படும். (மா. அ. 68) ‘கலாபம்’ என்பது ‘காபாலிகம்’ எனத் தவறாகக் குறிக்கப் பட்டது போலும். காமம் பற்றிய சுவையணி - காமச்சுவைக்குரிய மெய்ப்பாடுகள் சுவை தோன்ற அமைக்கப் படுதலாகிய அணி. இது சுவையணி வகையுள் ஒன்று. எ-டு : ‘திங்கள் நுதல் வியர்க்கும்; வாய் துடிக்கும்; கண் சிவக்கும்; அங்கைத் தளிர் நடுங்கும்; சொல் அசையும் - கொங்கை பொருகாலும் ஊடிப் புடைபெயருங் காலும் இருகாலும் ஒக்கும் இவட்கு’. “இவளுடன் யான் கூடும்போதும், இவள் என்னிடம் ஊடும் போதும், இவளுக்கு நெற்றி வியர்க்கிறது; வாய் துடிக்கிறது; கண்கள் சிவக்கின்றன; தளிர் போன்ற கைகளும் நடுங்கு கின்றன; சொல் தடுமாறுகிறது. இவளுக்குக் கூடல் ஊடல் என்னும் இரு நிலைகளும் தம்முள் ஒத்துள்ளன” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், காமச்சுவைக்குரிய இனிய மெய்ப்பாடுகள் அழகுற அமைந்து இன்பம் பயத்தலின், இதுகாமம் பற்றிய சுவையணியாம். (தண்டி. 70-5) காய்ப்ப என்னும் உவமஉருபு - ‘வெயிலொளி காய்த்த விளங்குமணி அழுத்தின’ கதிரவன் ஒளியை ஒத்த ஒளிவீசும் மணிகள் பதிக்கப்பட்டன என்று பொருள்படும் இத்தொடரில், ‘காய்ப்ப’ என்பது உருஉவமப் பொருட்கண் வந்தது. இஃது உரு உவமத்திற்கே சிறந்த உருபு. உரு - நிறம். (தொ. பொ. 291 பேரா). காரக ஏது - ஏது அணியில் கூறப்படும் ஏதுக்கள் இருவகைய. ஒன்று காரக ஏது; ஏனையது ஞாபகஏது. செய்கை நிகழக் காரணமாவது ஏது. காரகஏது என்பது செய்கையை நிகழ்விப்பது; ஞாபக ஏது என்பது, வேறுகாரணத்தால் நிகழ்ந்ததை அறிவிப்பது. எடுத்துக்காட்டாக, நெருப்பானது புகைக்குக் காரகஏது; புகை நெருப்புக்கு ஞாபகஏது. மண்ணால் குடம் வனைந்தான் என்பது காரக ஏது; நூல்களால் உண்மை அறிந்தான் என்பது ஞாபக ஏது. அறிவால் அறிதலின் ஞாபகஏதுவாயிற்று. ஆறாம் வேற்றுமையும் விளிவேற்றுமையும் தவிரப் பிற வேற்றுமைகள் காரக ஏதுப் பொருளில் வரும். 1. முதல்வன், கருத்தா, எழுவாய் : முதல்வேற்றுமை 2. பொருள், கருமம் - செயப்படுபொருள், செயப்பட்ட செயல் ; இரண்டாம் வேற்றுமை 3. கருவி ; கரணம், காரணம் : மூன்றாம் வேற்றுமை 4. ஏற்பது ; இன்னதற்கு இது : நான்காம் வேற்றுமை 5. நீக்கம் : ஐந்தாம் வேற்றுமை 6. நிலன், பொழுது : ஏழாம் வேற்றுமை (தண்டி. 59) காரக ஏது வியதிரேகம் - வேற்றுமையணி காரகஏதுவொடு கூடிவரின் இவ்வணியாம். எ-டு : ‘வண்மை உயர்வு நிரைப்பேறு வான்புகழ் என்னும் இயைபிலுண் டாகிலும் - மன்னவரைக் காசினியைச் சூழ்ந்தும் கடல்நேர மாட்டாது மாசொன்ற லால்அலையின் வாய்.’ வண்மை, உயர்வு, நிரைப்பேறு, புகழ் என்பன உடைமையால் கடல் அரசரை ஒக்கும் என்று ஒற்றுமை கூறிப் பின் அலை களிலே (இறந்த உயிரினம் போன்ற) குற்றங்கள் தங்கியிருத் தலின் மாசற்ற மன்னவனைக் கடல் ஒவ்வாது என்று வேற்றுமைப்படுத்தப்பட்ட செய்தியைக் கூறும் இப்பாடற்- கண், அலைகளில் மாசுகளைச் சுமந்துவருதல் என்ற செயல் காரணமாதல் காரக ஏதுவாக, காரகஏது வியதிரேகமாயிற்று. வியதிரேகம் - வேற்றுமையணி. (வீ. சோ. 165) காரக ஏதுவிற்கு வினை கூடாதே ஏது கூடாமை - ஒருவினையொடு தொடர்புடைய ஏதுவே காரகஏது எனப் படும். (வினையொடு தொடர்புபடுத்தப்படும்.) அறிவான் அறியப்படும் ஞாபகஏது வினையொடு தொடர்புபடாது நிகழ்தலும் கூடும். ஆயின் காரகஏதுவில் வினை கூடாமல் ஏதுப்பொருண்மை புலனாகாது. மாலையால் என்மனம் மருளும் - என்ற காலக் காரக ஏதுவையும் ‘மாலை வருதலால்’ என வினையைக் கூட்டியே பொருள் செயல் வேண்டும். (மா. அ. பாடல் 442 உரை.) காரகஏதுவின் பிறிதொரு வகை - காரியம் முந்துறு காரகம், காரணம் காரியம் ஒருங்கு நிகழ்தல், யுத்தம், அயுத்தம் என்ற நான்கனோடு ஐயஏதுவும் சேரக் காரகஏது ஐவகைப்படும் (மா. அ. 195, 196). தனியணியாக மாற னலங்காரம் ‘அசங்கதி’ என்ற பெயரால் குறிப்பிடும் ‘தூர காரிய ஏது’ என்பதனையும் அந்நான்கனொடு கூட்டி, இவ்வைந்தனையும் சித்திர ஏது என்று தண்டியலங்காரம் குறிப்பிடும். தூர காரியம், ஒருங்குடன் தோற்றம், காரணம் முந்துறூஉம் காரியநிலை, யுத்தம், அயுத்தம் என்னும் ஐந்தும் சித்திர ஏது வெனப்படும்; நூற்பாவினுள் இலேசினான் ஐயஏதுவும் உடன்கொள்ளப்படும். (தண்டி. 63) காரக ஏதுவின் விரி - ஒரு செயலை அடிப்படையாகக் கொள்ளும் காரக ஏது என்ற ஏதுவின் வகையானது ஏவுதல்கருத்தா - இயற்றுதல்கருத்தா - என்ற இருவகை வினைமுதலும், கருமமும், கருவியும், காலமும், இடமும், பொருளும் என ஆறாம். இவ்வேதுக்கள் ஆறும் ஆக்கம் பற்றியும் அழிவு பற்றியும் வரும். (மா. அ. 188, 189 உரை) காரக ஞாபக ஏதுக்களது புறனடை - காரகஏதுவும் ஞாபகஏதுவும் இன்பத்தை விளைக்கும்போது ஆக்கஏது எனவும், துன்பத்தை விளைக்கும்போது அழிவுஏது எனவும் கூறப்படும். எ-டு :- கல்வியால் உயர்ந்தான் - ஆக்கஏது வறுமையால் கெட்டான் - அழிவுஏது (மா.அ.191) காரகதீபகம் - ஓர் எழுவாய் நிகழ்த்தும் முறையான பலசெயல்களை முறை பிறழாமல் கூறுவது காரகதீபகம் எனவும், வினைநுதல் விளக்கணி எனவும் கூறப்படும். ‘வினைநுதல் விளக்கணி’ காண்க. (குவ.56) காரண ஆராய்ச்சி அணி - காரணம் குறைவில்லாது இருந்தும் காரியம் நிகழாததைச் சொல்லுவது. எ-டு. : ‘இறைமதனாம் தீபம் எரிவுறா நின்றும் குறைவிலது நேயமென்னோ கூறு.’ நேயம் என்ற சொல் விருப்பம், நெய் என்னும் இருபொருளது. விளக்கு எரிந்துகொண்டிருந்தும் நெய்குறையாத காரணம் என்னோ எனவும், மன்மதனாம் விளக்கு எரிந்துபோன பின்னும் காதல் குறையாதிருக்கும் காரணம் என்னோ எனவும் இருபொருள் இப்பாடற்கண் அமைந்துள்ளன. காதற்குரிய தெய்வமே எரிந்துவிட்டது, இனிக்காதல் தோன்றவே காரணம் இல்லை. ஆயின், உயிரினங்களிடையே, காரணமாகிய மன்மதன் இல்லாதிருப்பவும் காரியமாகிய காதல் குறைவின்றி உள்ளது என்ற பொருளின்கண், காரண ஆராய்ச்சி அணி அமைந்துள்ளது. ஸகாரணம்: மன்மதன் இன்மை; காரியம்: காமம் இன்மை] காரண இலக்கணை - இதனை வடநூலார் விசேஷோக்தி அலங்காரம் என்ப. அது காண்க. (ச. 61 : குவ. 35) காரண உவமை - இஃது ஏது உவமை எனவும் படும். அது காண்க. (வீ. சோ. 157) காரண காரியம் ஒருங்கு நிகழ் ஏது - காரணம் முன்னரும் காரியம் பின்னரும் நிகழ்வது உலகியல். காரணமும் காரியமும் ஒருங்கே நிகழ்வதாகக் கூறுதல், காரணம் நிகழ்ந்தவுடன் இடையீடின்றிக் காரியமும் நிகழ்வ தனைக் குறிக்கும் ஏதுவாய், வியப்பான ஏதுக்களைக் குறிப்பிடும் சித்திர ஏது வகையுள் ஒன்றாகிய ‘ஒருங்குடன் தோற்ற ஏது’ எனப்படும். இது விளக்குப் புகுதலும் இருள் நீங்குதலும் ஒருங்கு நிகழ்வன என்று கூறுவது போல்வது. விளக்குப் புகுதல் - காரணம்; இருள் நீங்குதல் - காரியம். காரணம் நிகழ்ந்தவுடன் கணநேரமும் இடையீடு படாமல் காரியம் நிகழ்தலின், இரண்டும் ஒருங்கு நிகழ்ந்தன என்று கூறுதல் வழக்காறாகி விட்டது. ‘ஒருங்குடன் தோற்ற ஏது’ காண்க. (தண்டி. 63-2; மா.அ. 195-2) காரணகாரிய மயக்கம் - காரணத்தின் செயலைக் காரியத்துக்கு ஏற்றியுரைப்பது காரணகாரிய மயக்கமாம். எ-டு : ‘மிறைபுரிவேல்’ கொலையை விரும்புவார் செயலை அவர்கள் அத்தொழில் நிகழ்த்தப் பயன்படுத்தும் வேல்மேல் ஏற்றிக் கொலையை விரும்பும் வேலென்று கூறியது காரண காரிய மயக்கமாம். (மா. அ. பாடல். 185 உரை.) எ-டு : “பரன்சீர் ஆய்ந்த தமிழ்’ இறைவன் சிறப்பை ஆய்ந்து கூறுவாருடைய செயலை அச்செயலின் பயனாகிய தமிழ்ப்பாசுரத்தின்மேல் ஏற்றி இறைவன் சிறப்பினை ஆய்ந்த தமிழென்று கூறுவதும் காரி யத்தைக் காரணம் போல் கூறிய காரணகாரிய மயக்கமாம். (மா. அ. பாடல் 213 உரை) காரணத்தடைமொழி - காரண விலக்கணி வீரசோழியத்தில் காரணத்தடைமொழி என்று வழங்கப்பெறுகிறது. ‘காரணவிலக்கு அணி’ காண்க. (வீ. சோ. 163) காரணம் - இஃது அகப்பொருள் உரை இருபத்தேழனுள் ஒன்று (வீ. சோ. 90); இன்ன காரணம் பற்றி வந்தது இப்பாட்டு என்று அறிவது. இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தும் இன்ன நேரிய செயலால் இன்ன செய்தி நிகழ்ந்தது எனவும், இன்ன செயல் இன்ன முன்னோர் காலம்தொட்டு நடைமுறையில் வருகிறது எனவும், தொன்றுதொட்டு மரபாக நிகழும் காரியங்களுக்கு மரபு பற்றி வரும் காரணங்களைக் கூறுதல். (வீ. சோ. 90, 96 உரைமேற்.) காரணம் கண்டு காரியம் புலப்பட்ட ஞாபக ஏது - எ-டு. “அணியார்மென் தோளும் அயில்விழியும் சற்றும் தணியா(து) இடம்துடிக்கும் சால்பால் - மணிமாடக் கோயிலார் வெற்பில் கொடியிடையாய்! வைகறைநம் வாயிலாம் காவலன்தேர் வந்து.’ கற்பிடைப் பிரிந்த தலைவன் குறித்த பருவத்து மீளாமை குறித்து வருந்திய தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, “ நம் தோள்களும் விழிகளும் நன்னிமித்தம் காட்டி இடப்பக்க மாகத் துடித்துக்கொண்டேயிருப்பதனால், நாளைக் காலையே நம் தலைவன் தேர் மனைக்கண் மீண்டு வந்து விடும்” என்ற இப்பாடற்கண், தோள் முதலியவை இடம் துடிப்பதாகிய காரணம் கண்டு விரைவில் தலைவன் மீண்டு வருவான் என்ற காரியம் புலப்பட்டவாறு. தோள் முதலியன இடப்புறம் துடித்தல் நன்னிமித்தம் என்று அறிவான் அறியும் காரணமே காரியத்தைப் புலப்படச் செய்தலால் இது ஞாபக ஏதுவகையும் ஆம். இது வினை ஞாபக ஏது. (மா. அ. 191) காரண மறிநிலை அணி - இது தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கண நூலொன் றுமே குறிப்பிடும் நால்வகை மறிநிலை அணிவகைகளுள் ஒன்று. ‘மறிநிலைஅணி’ காண்க. காரணமாலை அணி - காரணங்களைக் காரியங்களோடு இயைபுபடுத்தித் தொடர் பாகக் கூறும் வனப்பு இது. எ-டு. : நன்மா னிடப்பிறவி நல்லறிவிற்(கு) ஏது; அது சொல்மாண் பொருளைத் துணிவுறூஉம் - தன்மை வருவதற்கே ஏது; அது மாசறும்அந் தாமம் தருவதற்கே ஏதுஎனும் தான். இப்பாடலுள், மானிடப்பிறவி நல்லறிவு தோன்றற்குக் காரணம், நல்லறிவு சிறந்த மெய்ப்பொருளை அறிந்து துணிவதற்குக் காரணம், அது வீடுபேற்றினை எய்துதற்குக் காரணம் எனக் காரணங்கள் ஒன்றோடொன்று தொடர்பாக (ஒருபாடற்கண்ணேயே) இணைந்து வருதலால் காரண மாலை அணி அமைந்தவாறு. (மா. அ. 214) காரணமிகைமொழி - மிகைமொழி - அதிசய அணி. காரணம் காட்டிப் பயன் படுத்தப்படும் அதிசய அணி காரண மிகை மொழி அணி என்று ஒருசாராரால் கொள்ளப்படும். எ-டு : அற்(பு) அகத்தின் மன்னவனே! நீ அருள்செ யாநிற்பக் கற்பகத்தை யாம்விரும்பேம் காண்.’ (அணி. 13-4) மனத்தில் அன்புடைய வள்ளல் வறியவனுக்குத் தன் கொடை யால் அருள் செய்வதால், அவன், வேண்டியார்க்கு வேண் டியன நல்கும் கற்பகத்தையும் விரும்பவில்லை என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், “அரசன் கொடை கற்பகத்தினும் விஞ்சியது” என்று அதிசய அணியாகக் கூறப்படுவதோடு, அவ்வரசனது அருள் தன்பால் இருத்தலின் வறியவன் கற்பகத்தையும் தான் விரும்பவில்லை என்று காரணம் காட்டிக் கூறுதலின், இதன்கண் காரணமிகைமொழி அணி வந்தவாறு. (வீ. சோ. 177) காரணவிலக்கு அணி - காரணத்தை விலக்கிக் கூறுவது. எ-டு. : ‘மதர்அரிக் கண்சிவப்ப, வார்புருவம் கோட, அதரம் துடிப்ப, அணிசேர் - நுதல்வியர்ப்ப நின்பால் நிகழ்வனகண்(டு) அஞ்சாதால் என்நெஞ்சம் என்பால் தவறின்மை யால்.’ “ஊடலால் நின் கண் சிவப்பவும், புருவங்கள் வளையவும், உதடுகள் துடிப்பவும், நெற்றி வியர்ப்பவும் காண்கிறேன். ஆயினும், என்பால் நீ ஊடுதற்குக் காரணமான தவறு எதுவும் இல்லாமையால் என் மனம் நின்கோபம் கண்டு அஞ்சிற் றிலது” என்று தலைவன் தலைவியது ஊடல் தீரக் கூறுவ தாகிய இதன்கண், அவள் தன்பால் ஊடல் கொண்டு கோபப்பட வேண்டியதற்கான காரணமாகத் தன்னிடம் பிழையேதும் இல்லை என்று கூறி, கோபத்திற்கான கார ணத்தை விலக்குதல் காரணவிலக்காம். (தண்டி. 44-3) காரணவொழிப்பு - ஒழிப்பணியின் ஒருவகையாகக் குவலயானந்தம், சந்திரா லோகம் என்றுமிவை இதனைக் குறிக்கின்றன. ‘ஒழிப்பணி’காண்க. காரிய ஏது - ஒரு காரியத்தைப் பார்த்து அதன் காரணமான பொருளை அறிவது. ஓரிடத்தே புகைகண்டவழி, அக்காரியத்தைப் பார்த்து அதன் காரணமாகிய நெருப்பு அவ்விடத்தில் உண்டு என்றறிவது காரிய ஏது அணியாம். (இஃது அனுமானமாகிய கருதல ளவையும் ஆம்.) காரியத் தடைமொழி அணி - முன்னவிலக்கு அணிவகைகளுள் ஒன்றாகிய காரிய விலக்கு வீரசோழியத்துள் காரியத்தடைமொழி அணி எனப்படும். ‘காரிய விலக்கு அணி’ காண்க. (வீ. சோ. 163) காரியம் கண்டு காரணம் புலப்பட்ட ஞாபக ஏது - ‘காவிநெடுங் கண்சிவப்பக் காமருசெவ் வாய்விளர்ப்ப ஆவி தளிர்ப்பதுவும் அன்றியே - ஓவியமே! வண்ணந் தனில்வெயர்ப்பு, மாறனார் பூஞ்சிலம்பில் தண்ணஞ் சுனையே தரும்?’ “தலைவி! கருங்கண் சிவத்தல், செவ்வாய் விளர்த்தல், உடம்பில் தோற்றப்பொலிவு உண்டாதல், நிறமுடைய நெற்றியில் வியர்வை துளித்தல் ஆகிய செயல்களை நீ ஆடிய சுனை நினக்குத் தரும் ஆற்றலுடையதோ?” என்று தோழி வினவுவ தாக அமைந்த இப்பாடற்கண், கண்சிவப்பு உதட்டு வெளுப்பு உடல்வனப்பு நுதல் வியர்ப்பொறித்தல் ஆகிய காரியங் களால் புணர்ச்சி நிகழ்ந்தமையாகிய காரணம் புலப்பட்ட ஞாபக ஏது வந்துள்ளவாறு. (மா. அ. 191) காரியம் கொளல் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (97) வருவதோர் அணி. யாராயிருப்பினும் அவரைக்கொண்டு தன் செயலை முற்றுவிக்க நினைப்பது. காரியம் தெரி காரண ஏது - ‘காரியம் முந்துறும் காரணநிலை’ ஏது; அது காண்க. (சாமி. 188) காரியம் முந்துறும் காரண நிலை ஏது அணி - ஏதுஅணிக்குக் கூறப்பட்ட ஒழிபால் வந்த வகைகளுள் ஒன்று; காரணங்கள் நேர்வதற்கு முன்னரேயே காரியங்கள் நிகழ்ந்து விட்டனவாகக் கூறுதல். எ-டு. : “தம்புரவு பூண்டோர் பிரியத் தனிஇருந்த வம்புலவு கோதையர்க்கு மாரவேள் - அம்பு பொரும்என்று மெல்ஆகம் புண்கூர்ந்த; மாலை வரும் என்(று) இருண்ட மனம்’ “தலைவர்தம் பிரிவால் தனித்திருந்து வாழும் தலைவியர்க்கு, இனித் தம்மைத் தாக்க வரவிருக்கும் மன்மதனுடைய அம் புகள் தம்மீது பாய்ந்து தைக்குமே என்று அவர்தம் அழகிய மார்புகள் புண்பட்டன; மாலைப்போது வந்துவிடுமே என்று அவர்தம் உள்ளங்களும் இருண்டன’ என்ற இப்பாடற்கண், மன்மதன் அம்பு பாய்தலும் மாலை வருதலும் ஆகிய காரணங்கள் நேர்வதற்கு முன்னரேயே தலைவியர்தம் மார்பகம் புண்படலும் உள்ளம் கவலையால் இருள்சூழ்தலும் ஆகிய காரியங்கள் நிகழ்ந்துவிட்டனவாகக் கூறுதல். இவ்வேது அணிவகையாம். (தண்டி. 63-3) காரியமாலை அணி - காரியங்களை வரிசை தவறாமல் ஒருபாடற்கண்ணேயே அமைக்கும் வனப்பு இவ்வணி. எ-டு. : ‘பார்புனலின் காரியம்; நீர் பாவகன்தன் காரியம்; தீக் கூர்பவனன் காரியம்; கால், கொம்பனையாய்! - பேர்விசும்பின் காரியமாம்; ஏனையவும் காரணமா யோன் அருளால் ஆரிடம்கூ றும்தொடர்பிற் றாம்.’ இப்பாடற்கண், “பார் புனலின் காரியம், புனல் தீயின் காரியம், தீயானது காற்றின் காரியம், காற்று ஆகாயத்தின் காரியம், பூதங்களின் அடிப்படை மகான் மூலப்பிரகிருதி ஆகியவை இறைவனாகிய மாயோனின் காரியம் ஆம் என்று சுருதி °மிருதி புராணங்கள் கூறும்” என்ற பொருளில், ஒன்றற்கு மற்றது காரியமாதல் வரிசையாகக் கூறப்பட்டமை காரிய மாலை அணியாம். (மா. அ. 215) காரியவிலக்கு அணி - காரியம் நிகழவில்லை என்று விலக்குதல் எ-டு. : “மன்னவர் சேயர் மயில்அகவி ஆடலும் பொன்மலரும் கொன்றையும் பூந்தளவின் - பன்மலரும் மின்உயிரா நீள்முகிலும் மெய்யென்று கொள்வதே? என்உயிரோ இன்னம் உளது!” வினைவயின் பிரிந்த தலைவன் பருவம் வந்தும் வாராத நிலையில் தலைவி புலம்பியது இப்பாடல். “தலைவரோ நெடுஞ்சேய்மையர். கார்காலத்தில் தாம் மீண்டு வருவதாக அவர்கூறியதனை மெய்யெனக் கொண்டு உயிர் வாழ்கின்றேன். ஆயின், மயில் அகவி ஆடுதலையும், கொன்றை பொன் போல் மலர்தலையும், முல்லை பலவாகப் பூத்தலையும், மேகம் மின்எறித்தலையும் உண்மையில் நிகழும் கார்காலத்துச் செயல்களாக எவ்வாறு நினைத்துக் கொள்வது? என்னுயிர் இன்னும் இருக்கின்றதே!” என்ற பொருளமைந்த இதன்கண், “தலைவர்தாம் சொன்னவாறே கார்காலத்தே வந்திலர் எனில், என்னுயிர் நீங்குதலாகிய காரியம் நிகழ்ந்திருத்தல் ஒருதலை; அவ்வாறு நிகழ்ந்தி லாமையின் இது கார்காலம் அன்று” என்று தலைவி குறிப்பாற் புலப்படுத்தினாள். கார்காலம் வாராமையின் உயிர்நீங்குதலாகிய காரியமும் நிகழவில்லை என்று, இப்பாடலுள் காரியம் விலக்கப் பட்டுள்ளமை இவ்வணியாகும். (தண்டி. 44-4) கால அதிசய அணி - தான் இன்பமோ துன்பமோ நுகரும் நேரத்தைக் கற்பனை நலன் தோன்ற நீட்டித்தோ சுருக்கியோ கூறுதல். இஃது அதிசய அணிவகைகளுள் ஒன்று. எ-டு. : மாலையாய் யாமமாய் வைகறையாய் வைகுறுநன் காலையாய்க் கங்குல் கழிந்(து) உகமாம் - வேலை எழுபார் புகழ்மாறன் ஏந்துபுகழ் மார்பம் தழுவாத் தமியேன் தனக்கு.’ மாறன் திருவருளைப் பெறாத தலைவிக்கு இராக்காலம், மாலை யாமம் வைகுறு என்ற நிலையில் இருள்கழியும் செயல் ஓர் யுகம்போல நீட்டமுடையதாய் வருத்துகிறது என்ற கருத் தமைந்த இப்பாடலில், கால அதிசய அணி வந்துள்ளமை காணப்படும். (மா. அ. 145) காலக்காரக ஏது அணி - காலத்தின் செயலை அடிப்படையாகக் கொண்டு அக் காரணத்தால் நிகழ்வதனைக் குறிப்பிடும் ஏது அணிவகை. எ-டு. “இமிழ்திரைநீர் ஞாலம் இருள்விழுங்கச் சோதி உமிழ்கதிரும் புள்ளும் ஒடுங்க - அமிழ்தொத்(து) அருள்மாலை எய்தா தவர்மனம்போல் மாலும் மருள்மாலை வந்தென் மனம்.’ ‘மயக்கத்தைத் தரும் மாலைக்காலம் வருதலால், உலகம் முழுதும் இருள் கவிந்துகொள்ளக் கதிரவன் மறையப் பறவைகள் தம் கூடுகளைச் சேர, அமிழ்தத்தைப் போலப் புத்துணர்ச்சி தந்து அருள்பொழியும் திருமாலை அடையா தவர் மனம்போல என்மனம் மயங்குகிறது” என்று தலை வனைப் பிரிந்த தலைவியது கூற்றாய் அமைந்த இப்பாடற்- கண், மருள்மாலை வருதல் காலக்காரக ஏது அணியாம். (மா. அ. பாடல். 433) காலத்தன்மை அணி - இது தன்மையணியின் வகைகளுள் ஒன்று; காலத்தின் தன்மையை உள்ளவாறு கூறுவது. எ-டு. : ‘நித்தமாய் மூன்று நெறித்தாய் இலவமுதல் வைத்தபான் மைக்குரித்தாம் மாண்பிற்றே - அத்திகிரிச் செங்கண்மால் உந்தியின்மேல் செங்கமலத் தோன்முதலா அங்கண்ஞா லம்புகழ்கா லம்.’ உலகத்தவர் புகழும் காலம் என்றும் அழிவற்றதாய், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூவகைத்தாய், எட்டுக்கண அளவிற் றாய இலவம் முதல் பிரமகற்பம் முடிய எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்ளும் இயல்பிற்றாம் எனக் காலத் தின் தன்மை கூறப்பட்டவாறு. (மா. அ. பாடல் 132) காலத்திற்கேற்ற உவமை அணி - உவமை கூறுங்கால், காலத்திற்குப் பொருத்தமாகக் கூறுதல் என்னும் மரபு. எ-டு. : ‘நிழற்கோபம் மல்க நிறைமலர்ப்பூங் காயா சுழற்கலவம் மேல்விரித்த தோகை - தழற்குலவு தீம்புகை ஊட்டும் செறிகுழலார் போலும்கார் யாம்பிரிந்தோர்க்(கு) என்னாம் இனி?” இப்பாடற்கண், கார்காலத்தில் காயாமலரின் நிழலின்கண் பரவிய இந்திரகோபப் பூச்சிகளை நெருப்பிற்கு உவமை கூறியது, அக்கார்காலத்திற்கு ஏற்ற உவமையாம். (இப்பாடல் ஒருவயின்போலி உவமைக்கு எடுத்துக்காட்டு) (இ. வி. 639.) காலம் நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டுஅணி - காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொதுவான செய்தியைச் சொல்லி அதன் வாயிலாகக் கவிதான் கூறக் கருதிய காலம் அடிப்படையான மற்றொரு செய்தியைப் பெறப்பட வைக்கும் ஒட்டணிவகை இது. எ-டு. “நன்புலவீர்! கங்குற்(கு) இசைந்தவெலாம் நாரணனால் இன்புற ஆ ராய்ந்தியற்றும் எஃகன்றே - புன்புலன்பெற்(று) ஈட்டா தவர்எவனோ எண்ணியது தாமுடிக்க மாட்டா தழுங்கும் மதி.” “இரவிற்கு வேண்டியவற்றைப் பகற்பொழுதிலேயே தேடிக் கொள்ளுதல் அறிவுடைமை. அதனை விடுத்து இரவு வந்த தும் அதற்குத் தேவையானவை தம்மிடம் இன்மையால் வருந்துவது பயனற்றது” என்ற கருத்தைக் கூறி, “நிலையாமை யுடைய இவ்வுடம்பில் உயிர் நிலைத்திருக்கும் காலத்தேயே வீடுபேற்றுக்கு வேண்டுவ செய்து முடித்திலமே!” என்று வருந்துதல் வீண்மை எனக் காலம் நிலைக்களனாக ஒன்று கூறி மற்றொன்று உணர வைத்த ஒட்டணிவகை இப் பாடற்கண் அமைந்துள்ளது. (மா. அ. பாடல் 288) காலவார்த்தை - காலம் பற்றிய வருணனை கூறுவது இவ்வணி. சூரியோதயத்தை, கடற்கரையில் தாழை மடலில் இரவிடை உறங்கிய வண்டு காலையில் மலரும் மலர்களின் தேனையும் மகரந்தத்தையும் நாடிச் செல்லுமாறு விரும்பத்தக்க தெளிந்த செந்நிறமுடைய கதிரவனது தேர் வெளிப்பட்டது என்ற பொருளமைத்துப் பாடிய ‘வேலை மடல்தாழை வெண்தோட் டிடைக்கிடந்து மாலை துயின்ற மணிவண்டு - காலைத் துளிநறவம் தா(து) எதிரத் தோன்றிற்றே காமர் தெளிநிற வெங்கதிரோன் தேர்’ என்ற பாடற்கண், இவ்வருணனை ‘காலவார்த்தை’ என்ற அணிவகையாம். (வீ. சோ. 159 உரை) காவ்யார்த்தாபத்தி அலங்காரம் - தொடர்நிலைச் செய்யுட் பொருட்பேறு அணி; அது காண்க. காவியப்பொருள் ஒழிபு - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (86) வருவதோர் அணி. பெரிய பொருள் ஒன்றன்கண் நிகழும் நிகழ்ச்சியைக் கூறி, அதனால் சிறிய பொருள்களில் நிகழ்வனவற்றைப் பெறப்பட வைப்பது. எ-டு : காற்றில் மலையே பறக்கும் போது மரங்கள் வேர் பறிந்து வீழ்வதில் வியப்பு என்? என்றாற் போல்வன. காவியலிங்க அணி - இத் தொடர்நிலைச் செய்யுட்குறியணி என்று கூறப்பெறுவது. இது சந்திராலோகம் குவலயானந்தம் என்ற நூல்களில் வாக்கியப் பொருள் செய்யுட்குறி, பதப்பொருள் செய்யுட் குறி, இருமைப் பொருள் செய்யுட்குறி என்ற மூவகையாகப் பகுக்கப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. ஒரு செயல் வெளிப் படையாகக் குறிப்பிடப்பட, அதன் விளைவுகளால் ஏற்படும் நிகழ்ச்சிகளை மறைத்து, காரியங்களின் விளைவுகளைக் கேட்டோர் உணருமாற்றான் செய்வது இவ்வணியின் இலக் கணம் என மாறனலங்காரம் கூறும். எ-டு : ‘சேதாம்பல் மலர்த்தடஞ்சூழ் சேறை மாயோன் சிறைக்கருடன் துணைப்புயத்தில் செகத்தைத் தாய பாதார விந்தமலர் பதித்த காலைப் பணைத்தெழலும், மனுவெருவிப் பனுவல் ஆர்ந்த வேதாவை நோக்கினன்; தன் குருவைப் பார்த்தான், விண்ணவர்கோன்; புகரினைவீ டணனும் பார்த்தான்; மூதாதை யொடுமுணர்த்த உணர்ந்த பின்னர் முத்தரொடும் திருவடிக்கீழ் முன்னி னாரே. திருமால் கருடன் மீதேற, அக்கருடன் சிறகை அசைத்ததால் சூறைக்காற்று எழ, அது வடவைமுக அங்கியை எழுப்ப, அதனால் கடல் கொந்தளிப்ப, “இஃது ஊழி வெள்ளமோ!” என்றஞ்சி மனு பிரமனையும் இந்திரன் தன் குருவினையும் வீடணன் சுக்கிரனையும் பார்க்க, பின் திருமால் கருடன் மீதேறிய செயலால் அவை விளைந்தன என்று அவர்களால் உணர்த்தப்பட்டுத் திருவடிகளைத் தொழுதனர் என்பது. இதன்கண், திருமால் கருடன்மீது ஏறியமை வெளிப்படை யாகக் கூறப்பட்ட செயல். அதன்விளைவு சூறைக்காற்றும், வடவைமுக அங்கி எழுதலும், கடல் பொங்குதலும் ஆம். அவை பாடலில் குறிப்பிடப்படாமல் மறைக்கப்பட்டுள. மனு பிரமனையும் இந்திரன் பிரகற்பதியையும் வீடணன் சுக்கிர னையும் வினவி, விளைவின் காரணத்தை உணர்ந்தனர் என்பது. இங்ஙனம் வெளிப்படையாகக் கூறப்பட்ட வினை யின் விளைவுகளால் ஏற்படும் நிகழ்ச்சிகளை மறைத்து, அவை குறித்து உறும் தொழிலைக் குறிப்பால் அறியச்செய்தல் இவ்வணியாம். இது மாறனலங்காரக் கருத்து. சந்திராலோகம் வேறாகக் கூறும். (மா. அ. 232; ச.86, குவ. 60) காவியலிங்கம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (87) வருவதோர் அணி; சலுகையும் காட்டி வலிமையும் காரணம் காட்டி உரைப்பது. ‘காவியலிங்க அணி’ காண்க. காவியலிங்கம், பரிகரம் இவற்றிடை வேறுபாடு - காவியலிங்க அணியில் காரணம் காரியம் என்ற இரண்டும் மறைந்திருக்க, அவற்றான் ஆகிய தொழில்கள் அவற்றை அறிவிக்கும். பரிகர அணியில் காரணம் காரியம் என்ற இரண் டும் வெளிப்படையாக இருந்தும், அவற்றான் ஆகிய தொழில்கள் பிறவற்றை அறிவிக்கும். இது தம்முள் வேற்றுமையாம். ஆகவே, காவியலிங்கம் அரிய குறிப்பினை உட்கொண்டு வல்லோர்களே குறித்துணருமாறு வருவதாம். காவியலிங்கத்தைத் தொடர்நிலைச் செய்யுட்குறி எனவும், பரிகரத்தைக் கருத்துடை அடையணி எனவும் வழங்குவர். அவை காண்க. (மா. அ. 233 உரை) கிரியைக்குக் கிரியையொடு விரோதச் சிலேடை - சிலேடைப் பொருளால் ஒன்றற்கு ஒன்று மாறுபட்ட இரண்டு செயல்களை அமைத்துப் பாடும் சிலேடை அணிவகை. எ-டு : “பரவாதி யையே பணித்தருள் பாமாறன் உரவா வருமருகர்க்(கு) உண்மை - கரவாது கோட்டுமத மால்யானை கூறியமால் வீட்டின்பம் காட்டுவன்மன் னோபுலவீர் காள்!” பரசமயத்தாரைப் பணியச் செய்யும் திருவாய்மொழியை அருளிச்செய்த மாறன் உரவா வரு மருகர்க்கு உண்மை கரவாது காட்டுவான் - என்ற இப்பாடலில், உரவா - ஞானத்திண்ணியராய், வரும் அருகர்க்கு - தன்னிடத்தில் வந்தடைந்தவர்க்கு எனவும்; உரவா வரும் - தன்னொடு வாது செய்ததற்குத் திண்ணியராக வரும், அருகர்க்கு - அருகனை வழிபடும் சமணர்க்கு எனவும்; இத்தொடர்க்குப் பொருள் கொண்டு, ‘பொய்யின்றித் திருமால்பதமாகிய வைகுந்தத்தை நல்கும்’ என்று முடிக்கும்போது, ஒன்றற்கொன்று விரோதமான இரண்டு செயல்கள் சிலேடையால் கொள்ளப்பட்டு ஒரு வினையையே கொண்டு முடிந்தவாறு. (மா. அ. பாடல். 352) கிரியைக்குக் குணத்தொடு விரோதச் சிலேடை - ஒரு பொருளின் செயலுக்கு அதன் பண்பொடு மாறுபட்ட நிலை உண்டாகுமாறு சிலேடைப் பொருள் அமைத்துப் பாடும் சிலேடை வகை. எ-டு : ‘இங்கும் உளனோ எனச்சொன்ன தானவனைப் பொங்கி அடலரியாய்ப் போர்வென்றான் - சிங்கவரைக்(கு) அன்புற் றிருப்பான் எதிர்கொண் டசுரரிடத்(து) இன்புற் றிருந்தவளன் என்?” “திருமால், தூணிலும் உளானோ?” என்று சொன்ன இரணியனை நரசிம்மமாகத் தோன்றி வென்று சிங்கவேள் குன்றத்தில் உகந்தருளியிருக்கும் திருமால் எதிர்கொண்ட சுரரிடத்து இன்பமாய்ப் பழகியிருக்கும் வளமான பண்பினை யுடையவன் என்று கூறுவாயாக” என்ற இப்பாடலில், எதிர்கொண்ட சுரரிடத்து இன்புற்று (-தன்னை எதிர் கொண்ட தேவரிடத்து இன்பமாகப் பழகி) எதிர்கொண்ட(அ) சுரரிடத்து இன்புற்று (-மாறுகொண்ட அசுரரிடத்து இன்ப மாகப் பழகி) என்ற தொடரை நோக்க, இரணியனாகிய அசுரனைக் கொன்றவன் அசுரரிடத்து இன்புற்றுப் பழகும் இயல்பினன் என்று சிலேடையாய்ப் பொருள் கொள்வது, முன் கூறிய செயலோடு பின்கூறிய பண்பு ஒவ்வாது அமையும் கிரியைக்குக் குணத்தொடு விரோதச் சிலேடையாகும். (மா. அ. பாடல். 353) கிழக்கிடுபொருள் நிலைக்களன் பற்றிய உவமம் - கிழக்கிடு பொருளாவது தாழ்வாக மதிக்கப்படும் பொருள் (உபமேயம்). எ-டு : ‘மண்டிலத்து உள் ஊ(து) ஆவியின் பைப்பய நுணுகி மதுகை மாய்தல் வேண்டும்’ (அகநா.71) “கண்ணாடியில் ஊதப்பட்ட நீராவிப் படலத்தின் உருவம் சிறிது சிறிதாகக் குறைந்து அழிவதுபோல், எனதுயிரும் சிறிது சிறிதாகத் தேய்ந்து அழிந்து வருகிறது” என்று பொருள்படும். இத்தொடரில், போய்க்கொண்டிருக்கும் தன்னுயிருக்குத் தலைவி மறைந்துகொண்டிருக்கும் நீராவிப் படலத்தை உவமம் கூறியது, தாழ்வாக மதிக்கப்படும் பொருளாகிய நிலைக்களம் பற்றியதாம். (தொ. பொ. 280. பேரா.) உவமேயத்தை உபமானமாக்கி ‘முகம் போன்ற தாமரை’ என்று கூறுவது கிழக்கிடுபொருள் என்பர் இளம்பூரணர் (276) கிழவோட்கு உவமம் ஈரிடத்து ஆதல் - தலைவி மகிழ்ச்சி பயக்கும் கூற்றின்கண்ணும் புலவி பயக்கும் கூற்றின்கண்ணும் உவமம் கூறுவாள். (தொ. பொ. 302. இள.) தலைவி மருதம் நெய்தம் ஆகிய இருநிலத்துச் சேர்ந்த பொருள் பற்றியே பெரும்பாலும் உள்ளுறை உவமம் கூறுவாள். (304 பேரா.) அ) ‘காரான் தாமரை, வண்டூது பனிமலர் ஆரும் ஊர!’ (அகநா. 46.) இதன்கண், காரான், தாமரை, ஊரன் - மருதநிலக் கருப் பொருள். பிறரால் முன்பே நுகரப்பட்ட பரத்தையரைத் தலைவன் நுகர்பவன் என்பது உள்ளுறைப் பொருள். இது மருதம். ஆ) ‘கழிய, முண்டகம் மலரும் தண்கடற் சேர்ப்ப’ (ஐங். 108) இதன்கண், கழி, முண்டகம், சேர்ப்பன் - நெய்தல் நிலக்கருப் பொருள். முள்ளுடைய முண்டகப்பூ மலரும் சேர்ப்பன் எனவே, இன்னாத முள்ளும் இனிய அழகும் உடைய முண் டகப் பூப் போலத் தலைவன் இன்னாமையும் இனிமையும் ஆகிய இருமையும் ஒருங்கே தருபவன் என்பது உள்ளுறைப் பொருள். இது நெய்தல். மருதம் நெய்தல் என்ற ஈரிடத்தும் தலைவி பெரும்பாலும் உள்ளுறை கூறுவாள். எனவே குறிஞ்சிக்கண் சிறுபான்மை கூறுவாள் என்பது. (பேரா.) இ) ‘குன்றக் குறவன் புல்வேய் குரம்பை மன்றா(டு) இளமழை மறைக்கும் நாடன்’ (ஐங். 252) இதன்கண், குன்றம் - குறிஞ்சி முதற்பொருள்; குறவன் கருப் பொருள். “வறுமை கூர்ந்த புல்வேய்ந்த குடிசையை மழை வெளியே சொரிந்து பிறர் காணாதபடி மறைத்தாற்போல, வாடை தனித்திருக்கும் எனக்குச் செய்யும் நோயினைப் பிறர் அறியாதவாறு தலைவன் வந்து போக்கினான்” என்று தலைவி உள்ளுறை உவமம் கூறியவாறு. உள்ளுறை உவமம் தலைவிக்கு இரண்டிடங்களிற் கூறுவதற்கு உரியதாகி வரும். அவ்வீரிடங்களாவன தோழியிடமும் தலைவனிடமும். பிறரிடமாகத் தலைவி உள்ளுறை கூறப் பெறாள். (தொ. உவம. 31 ச. பால) கிழவோள் நீங்கிய ஏனையோர் உள்ளுறை உவமம் கூறும் திறன் - தலைவன் எல்லாத் திணைக்கண்ணும் காலத்திற்கும் இடத் திற்கும் பொருந்தத் தன் அறிவுடைமை தோன்ற உள்ளுறை உவமம் கூறும் உரிமை உடையவன். தோழியும் செவிலியும் தாம் எத்திணையைச் சேர்ந்தவரோ, அத்திணையின் கருப்பொருள்களைக் கொண்டு காலத்திற் கும் இடத்திற்கும் பொருந்துமாற்றான் உள்ளுறை உவமம் கூறுப. நற்றாயும் ஆயத்தாரும் தந்தையும் தன்னையரும் உள்ளுறை உவமம் கூறப்பெறார் என்பது. (தொ. பொ. 301, 302, 305, 306 பேரா. உரை) குணஅணிவகை - செய்யுளுக்கு அழகு செய்யும் இயல்புகளைக் குணஅணி என்ப. இஃது அலங்காரம் எனக் கூறப்படும் பொருள்அணி சொல்லணி ஆகியவற்றின் இவ்வணி வகை வேறானது. இது வைதருப்பம், கௌடம் என இருவகைப்படும். இவ் விரண்டற்கும் இடைப்பட்ட பாஞ்சாலம் என்பதொன்று. மாறனலங்காரத்தில் கூறப்படுகிறது. (தண்டி. 4,15 ; மா. அ. 77) குணஅதிசய அணி - அதிசய அணிவகைகளுள் ஒன்று; குணத்தை மிகுதிப்படுத்திக் கூறல். எ-டு : “மாலை நிலவொளிப்ப, மாதர் இழைபுனைந்த நீல மணிகள் நிலவுமிழ - மேல்விரும்பிச் செல்லும் இவள்குறித்த செல்வன்பால் சேர்தற்கு வல்லிருள்ஆ கின்றே மறுகு.’ நிலவு மறையும்படி இவள் பூண்டுள்ள அணிகளின் நீல மணிகள் நீலநிற ஒளியை வெளிப்படுத்தி வீசுவதால், இவள் தன் தலைவன் இருப்பிடம் குறித்துச் செல்வதைப் பிறர் காணாதவாறு தெருவெல்லாம் இருண்டுவிட்டது என்ற பொருளமைந்த இப்பாடற்கண், நீலமணிகளின் ஒளிவீசும் பண்பு மிகுத்துக் கூறப்பட்டமையின், இது குண அதிசய அணி ஆயிற்று. (தண்டி. 55-2) குண அதிசயம் என்ற அணிக்கும், தற்குணம் என்ற அணிக்கும் இடையே வேறுபாடு - அதிசய அணி சிறுமையை மிகுத்துக் கூறுவது. தற்குண அணி மிகுந்ததை மிகுந்ததாய்க் கூறுவது. ஆதலின், சிறிய பண் பினை உயர்த்துக் கூறுவது குண அதிசய அணி எனவும், மிக மேம்பட்ட பண்பினை உயர்த்துக் கூறுவது தற்குண அணி எனவும் கூறப்படும். (மா. அ. 134 உரை) எ-டு : பாற்கடல் திருமால் தங்குதலால் அவர்மேனி நிறத்தைக் கொண்டு கருங்கடல் ஆயிற்று. (என்பது தற்குணம்) நீலமணிகள் இரவு வெளிச்சத்தை விழுங்கி இருட்டாக்கின (என்பது குண அதிசயம்) குண அலங்காரங்கள் பற்றிய (மாறனலங்காரப்)புறனடை செறிவு என்று சொல்லப்படுவதும் எழுத்துச்செறிவும் சொற் செறிவும் பொருட்செறிவும் கொண்டு வேறுவேறு ஒலித்து நடக்கும் என்று கூறியவற்றுள், எழுத்துச் செறிவும் வண்ண மும் மூன்று நெறியாருக்கும் வேறுவேறாக்கி, ஒருவகைச் சொற் செறிவும் பொருட்செறிவும் மூன்று நெறியாருக்கும் பொதுவாகக் கூறினாரெனினும், வண்ணமும் பொதுவாவன வும் உள என்பது கொள்ளப்படும். (மா. அ. 85, உரை) அராகம் தொடர்ந்த அடியொடு பிறிது அடியும் படத் தொடர்ந்து ஓடின முடுகுவண்ணம் மூன்று நெறியாருக்கும் ஒக்கும் என்பது. எ-டு : ‘மயர்வற மதிநலம் அருளிய நறைகமழ் மலர்மகள் புணர்பவன் மேல் உயர்வற உயர்நல னெனமுதிர் தமிழ்மறை உரைமகிழ் முனிவரைவாழ் புயல்புரை குழல்மதி புரைநுதல் வடவரை புரைபுண ரிளமுலைசேர் கயல்புரை விழிஎன துயிரெவண் நினதுயிர் கவல்வகை எவன்மயிலே’ இஃது அராகம் தொடுத்த அடியொடும் பிறிதடியும்படத் தொடர்ந்து ஓடினமையால் முடுகுவண்ணம். இவ்வண்ணம் மூன்று நெறியார்க்கும் ஒக்கும். (மா. அ. பாடல். 117 உரை) குணஅவநுதி - ஒருபொருளின் இயல்பை மறுத்து மறைத்தலாகிய அவநுதி அணிவகை. எ-டு. : “மனுப்புவிமேல் வாழ மறைவளர்க்கும் ஆரப் பனித்தொடையல் பார்த்திபர்கோன் எங்கோன் - தனிக்கவிகை தண்மை நிழற்றன்று; தற்றொழுத பேதையர்க்கு வெம்மை நிழற்றாய் விடும்.’ சோழ மன்னனுடைய வெண்கொற்றக்குடை குளிர்ந்த நிழல் தருவ தொன்றன்று; அவன் வீதியில் உலாவரும்போது அவனைத் தொழுத மகளிருக்கெல்லாம் அவன்வடிவம் காமவேட்கை தருதலின் வெம்மை தரும் நிழலையுடைய குடையாகிவிடும் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், சோழ னுடைய குடையினது தண்மையாம் தன்மையை மறுத்து மறைத்து வெம்மையைக் கூறியமையால் இது குணஅவநுதி அணியாம். (தண்டி. 75 - 3) குண இடைநிலைத் தீவகம் - குணத்தைக் குறிக்கும் சொல் செய்யுளின் இடையில் நின்று, முதல் கடை என்னும் ஏனை இடத்திலும் சென்றிணைந்து பொருள் தரும் தீவக அணிவகை. எ-டு : “எடுத்த நிரைகொணா என்றலுமே, வென்றி வடித்திலங்கு வைவாளை வாங்கத் - துடித்தனவே தண்ஆர மார்பும் தடந்தோளும் வேல்விழியும் எண்ணாத மன்னர்க்(கு) இடம்’ “ ‘பகைவர்தம் ஆநிரையைக் கவர்ந்து வருக’ எனத் தன் வெட்சி வீரர்க்கு மன்னன் ஆணை பிறப்பித்தவுடன், வீரர்- தலைவன் வாளைக் கையில் எடுத்தான். அவன் அவ்வாறு செய்தவுடனேயே பகைமன்னர்தம் முத்துமாலை அணிந்த மார்பும் இடப்புறத்தே துடித்தது; தோளும் இடப்புறத்தே துடித்தது; கண்ணும் இடப்புறத்தே துடித்தது” என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், இடையே வந்த துடித்தலாகிய பண்பு, மார்பு தோள் கண் என்ற மூன்றொடும் தனித்தனியே இணைந்து பொருள் தந்தமை குணஇடைநிலைத் தீவகமாம். (பொருள்கோள் வகையில் இது தாப்பிசை எனப்படும்.) துடித்தல் உயிர்களுக்கு இயல்பாமாதலின், பண்பென்றே கொள்ளப்படும். (தண்டி. 40-5) குணஉவமை - பண்புவமை என்பதும் இதுவே; நிறம் வடிவு எனும் பண்புகள் காரணமாக வரும் உவமை இது. உபமேயமாகிய பொருளுக் கும் உபமானத்திற்கும் குணம் (-பண்பு) காரணமாக வந்த ஒப்புமை. எ-டு. : பவளத்தன்ன மேனி - பவளம் போன்ற மேனி - நிறம். வேய்புரை பணைத்தோள் - மூங்கில் போன்ற பருத்த தோள் - வடிவு. (தொல்காப்பியனார் மெய், உரு என்ற பெயரால் முறையே வழங்கும் வடிவு, நிறம் இரண்டனையும் தண்டியார் ‘பண்பு’ என ஒன்றாக அடக்கினார். இ. வி. 639) குணக் கடைநிலைத் தீவகம் - தீவக அணிவகைகளுள் ஒன்றாகிய பண்புக் கடைநிலைத் தீவகம்; குணத்தைக் குறிக்கும் சொல் செய்யுளின் கடையில் நின்று எல்லா இடத்தும் இணைந்து பொருள் பயக்குமாறு அமைவது. எ-டு : ‘மைம்மாண் புயல்கிழிக்கும்; வண்சுடர்மீ (து) ஆம்; இமையோர் தம்மா நகர்அணவும் சால்பிற்றே - பெம்மான் முருகவிழ்பூந் தார்வகுள முன்னோன் குருகூர் உருவளர்பொன் மாட உயர்பு.” குருகூரில் உள்ள பொன்மாடங்களின் உயரம், மேகத்தைக் கிழிக்கும்; சூரியசந்திரர்மீது இடிக்கும்; தேவர்களின் நக ரத்தை எட்டும் என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், கடையில் நின்ற ‘உயர்பு’ என்னும் பண்புச்சொல் பல இடத்தும் சென்று இணைந்து பொருள் பயந்தமையால் இது குணக் கடை நிலைத் தீவகம் ஆயிற்று. (மா. அ. 160) குணக்குறை விசேட அணி - விசேட அணிவகை ஐந்தனுள் ஒன்று; குணம் குறைதலின் காரணத்தால் ஒருபொருளுக்குச் சிறப்பைக் கூறி மேம் படுத்துதல். எ-டு: ‘கோட்டம் திருப்புருவம் கொள்ளா; அவர்செங்கோல் கோட்டம் புரிந்த; கொடைச்சென்னி - நாட்டம் சிவந்தன இல்லை; திருந்தார் கலிங்கம் சிவந்தன செந்தீத் தெற.’ சோழமன்னனுடைய புருவங்கள் சினத்தால் வளையத் தொடங்கவில்லை; அதற்குள் அவன் பகைவருடைய செங் கோல் வளைந்து விட்டது (நிலைகுலைந்தது). அவனுடைய கண்கள் சினத்தால் சிவக்கவில்லை; அதற்குள் பகைவரது கலிங்கநாடு சோழனுடைய போர் மறவர் எரியிட்டுக் கொளுத்திக் கைக்கொண்டதால் எரிந்து சிவந்தது என்ற பொருளமைந்த இப்பாடற்கண், புருவம் வளைதலும் கண்கள் சிவத்தலுமாகிய இரண்டு பண்புகளும் நிகழ்வதற்குள்ளேயே, அவை செய்ய வேண்டிய செயல் நடந்தேறி விட்டது என்று கூறிச் சிறப்புறுத்தலால், இது குணக்குறை விசேடஅணி ஆயிற்று. (தண்டி. 79-1) குணத் தடைமொழி - இதுகுண விலக்குஅணியின் மறுபெயர்; அது காண்க. (வீ. சோ. 164) குணத்தன்மை அணி - தன்மை அணிவகைகளுள் ஒன்று; ஒருபொருளின் குணங்களைப் புனைந்துரையின்றிக் கிடந்தவாறே நயம்படக் கூறுவது. எ-டு : ‘உள்ளம் குளிர உரோமம் சிலிர்த்(து)உரையும் தள்ளவிழி நீர்அரும்பத் தன்மறந்தாள் - புள் அலைக்கும் தேன்தா மரைவயல்சூழ் தில்லைத் திருநடம்செய் பூந்தா மரைதொழுத பொன்.’ தில்லையில் திருநடனம் புரியும் சிவபெருமானுடைய திரு வடித் தாமரைகளைத் தொழுத இப்பெண், உள்ளம் குளிரவும் மயிர்க்கூச்செறியவும் சொற்கள் தடுமாறவும் கண்களில் நீர் துளிக்கவும் பரவசமடைந்து தன்னை மறந்து விட்டாள் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், காதலாகிக் கசியும் பக்திச்செயற்பண்புகள் பலவும் உள்ளவை உள்ளவாறே நயம்படக் கூறப்பட்டமையால், இது குணத்தன்மை அணி ஆயிற்று. (தண்டி.30-2) குணத்திற்குக் குணத்தொடு விரோதச் சிலேடை அணி - சிலேடைப் பொருளால் ஒரு குணத்துக்கு மாறான மற்றொரு குணம் அமையுமாறு பாடும் சிலேடை வகை. எ-டு. : ‘என்னென் றறியேன் இயற்றமிழ்தேர் காரிதரு மன்னன் தனைஉலகம் மாறனென - முன்னுரைத்தோர் வன்புலனை ஒன்றா மதியா முனிவரிடத்(து) அன்புடையான் என்னும் அது.’ “சான்றோர்கள் காரியார் புதல்வனை மாறன் என்ற பெயரால் அழைத்தனர். அதன் காரணம், வன்புலனை ஒன்றா மதியா முனிவரிடத்து அன்புடையான் என்பதோ? அதனை யான் அறியேன்” என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், ‘வன்புலனை ஒன்றா மதியா முனிவர்’ என்பது சிலேடை. வலிய புலன்களை ஒருபொருளாக மதியாத இருடியர் என வும், வலிய அறிவினையுடையோரையும் ஒரு பொருளாக மதிக்காது பிறரால் கோபிக்கப்படுபவர் எனவும் இரு பொருள்படும். பிறரால் கோபிக்கப்படுபவரிடத்தும் அன்புசெலுத்துலால் ‘மாறன்’ என்ற பெயர் பெற்றார்போலும் என்பது. சிலேடைப் பொருளால் ஒன்றற்கு மாறான மற்றொரு குணம் பெறப்படுதலின், இது குணத்திற்குக் குணத்தொடு விரோதச் சிலேடை ஆயிற்று. (மா. அ. பாடல் 355) குணத்திற்குப் பொருளொடு விரோதச் சிலேடை அணி - ஒரே பொருளுக்கு இருவேறு நிலையில் இரண்டு மாறுபட்ட குணங்கள் அமைதல் குணத்திற்குப் பொருளொடு விரோத மாம். அது சிலேடையின் அமைவது இவ்வணியாம். எ-டு. : ‘புனமலிதே மாவின் புணர்சினையின் தண்மை தினம்அகலின் சேர்ந்தாரைக் கொல்லி - எனலாகும்; நாடிப் பரனையுணர் நாவீறன் தண்சிலம்பில் கூடிப் பிரிந்தார் குணம்.’ “சடகோபனுடைய மலையில் தினைப்புனத்தில் தேமாவின் புணர்சினையின் தண்மை தினம் அகலின் சேர்ந்தாரைக் கொல்லி எனலாகும்.” தேமாவின் புணர்சினையின் தண்மை - தெய்வத்தன்மை பொருந்திய இலக்குமி போன்ற தலைவியின் கொங்கைகள் தரும் குளிர்ச்சி. தேமா மரக்கிளைகளிலுள்ள சிவந்த தளிர்களின் குளிர்ச்சி; தினம் அகலின் சேர்ந்தாரைக் கொல்லி எனலாகும் - பிரிந்தால் நாடொறும் நெருப்புப் போல நினைவையும் சுடும், சேய்மையில் நீங்கி நினைவொடும் பார்த்த கண்களுக்கு மாந்தளிர் நெருப்புப்போல் தோன்றி உள்ளத்தைச்சுடும். இவ்வாறு ஒரே பொருளுக்குச் சிலேடையால் தண்மையும் வெம்மையும் ஆகிய இருமாறுபட்ட குணங்கள் பொருந்திய வாறு. (மா. அ. பாடல். 356) குண முதல்நிலைத் தீவக அணி - குணத்தைக் குறிக்கும் சொல் செய்யுளின் முதலில் நின்று எல்லா இடங்களிலும் இணைந்து பொருள்தரும் தீவக அணி வகையுள் ஒன்று. எ-டு. : “சேந்தன வேந்தன் திருநெடுங்கண் தெவ்வேந்தர் ஏந்து தடந்தோள் இழிகுருதி - பாய்ந்த திசையனைத்தும் வீரச் சிலைபொழிந்த அம்பும் மிசையனைத்தும் புட்குலமும் வீழ்ந்து.” அரசனுடைய கண்கள் சிவந்தன; பகை மன்னரின் தோள்கள் சிவந்தன; போரில் சொரிந்த இரத்தம் பாய்ந்த திசைக ளெல்லாம் சிவந்தன; வீரவிற்கள் பொழிந்த அம்புகளும் சிவந்தன. அவ் விரத்தத்தின்மேல் வீழ்ந்த பறவைகளும் சிவந்தன என்ற பொருளமைந்த இப்பாடற்கண், முதற்கண் வந்த ‘சேந்தன’ என்ற பண்புசார்ந்த சொல் பல இடங்களிலும் இணைந்து பொருள் பயந்தமையின், இது குண முதல்நிலைத் தீவகம் ஆயிற்று. (தண்டி. 40-1) குண விலக்குஅணி - விலக்கு அணி வகைகளுள் ஒன்று; குணத்தை விலக்கிக் கூறுவது. எ-டு. : ‘மாதர் துவர்இதழ்வாய் வந்தென் உயிர்கவரும்; சீத முறுவல் செயல்அழிக்கும்; - மீதுலவி நீண்ட மதர்விழிகள் நெஞ்சம் கிழித்துலவும்; யாண்டையதோ மென்மை இவட்கு?’ “பெண்ணினை மெல்லியலாள் என்பார்களே! இப் பெண் ணிடத்தே மென்மை யாண்டுளது? சிறிதுமில்லையே! இவளுடைய செவ்விதழ்வாய் என் உயிரைக் கவர்கிறது; இவளது குளிர்ந்த புன்முறுவல் என் ஆற்றலையே அழிக் கிறது; இவளுடைய மதர்த்த கண்கள் என் உள்ளத்தைக் கிழித்துக் கொண்டு உலவுகின்றன. இவளா மெல்லியலாள்?” என்ற இப்பாடற்கண், தலைவியால் தனக்கு நேரும் துன்பங் களைக் கூறும் தலைவன், அவளுக்கு மென்மைக் குணமே இல்லை என்று விலக்குதல் குணவிலக்காம். (தண்டி. 44 - 2) குண வேற்றுமைஅணி - நிறம் முதலிய குணத்தால் ஒருபொருளொடு பிறிதொரு பொருளிடை வேற்றுமை கூறுவது. எ-டு. : ‘சுற்றுவில் காமனும் சோழர் பெருமானாம் கொற்றப்போர்க் கிள்ளியும் கேழ்ஒவ்வார் - பொற்றொடியாய்! ஆழி யுடையான் மகன்மாயன்; சேயனே கோழி யுடையான் மகன்’ மன்மதனும் சோழமன்னனும் அழகால் ஒப்புமையுடையரே ஆயினும், நிறத்தால் ஒவ்வார். மன்மதன் கருநிறமுடையவன்; சோழனோ செந்நிறமுடையவன் என, இப்பாடற்கண் இருவர்க்கும் இடையே நிறத்தால் வேற்றுமை கூறியது குணவேற்றுமையணியாம். (தண்டி. 50-1) குவலயானந்தம் குறிப்பிடும் பொருளணிகள் - சந்திரா லோகம் குறிப்பிடும் அணிவகைகளொடு சிலவற்றின் விளக்கங்களாக அமையும் இருபதும் சேர 120 அணிவகைகள் குவலயானந்தத்தில் இடம்பெறுகின்றன. குளகச்செய்யுளின் கூறுபாடு - குளகமாவது ஒன்றற்கு மேற்பட்ட செய்யுள்கள் ஒரே வினையைக் கொண்டு முடிவது. இரண்டு செய்யுள்கள் தொடர்ந்து ஒரே வினையைக் கொண்டு முடியுமாயின் உகளக குளகம் எனவும், மூன்று செய்யுள்கள் தொடர்ந்து ஒரே வினையைக் கொண்டு முடியுமாயின் சாந்தானிக குளகம் எனவும், நான்கு செய்யுள்கள் தொடர்ந்து ஒரே வினையைக் கொண்டு முடியுமாயின் காபாலிக குளகம் (கலாபம்) எனவும், நான்கின்மேல் ஐந்து ஆறு முதலிய செய்யுள்கள் தொடர்ந்து ஒரே வினையைக் கொண்டு முடியு மாயின் அந்திய குளகம் எனவும் குளகச் செய்யுள் நான்கு வகைப்படும். வினை என்பது, முடிக்கும்சொல். அது பெயராக அன்றி வினையாக இருக்கலாம். இம்முடிக்குஞ்சொல் செய்யுளகத்து முதல் இடை கடையென மூவிடத்தும் வரலாம். ஆகவே, குளகத்தின் நால்வகையை முடிக்குஞ்சொல் அமையுமிட மாகிய முதல் இடை கடை என்ற மூன்றனோடும் உறழ. குளகம் பன்னிரு வகைத்தாயிற்று. (மா. அ. 68 உரை) குளகச் செய்யுளின் வகைகளும் உட்பிரிவுகளும் - உகளகம், சாந்தானிகம், கலாபம், அந்தியம் என்று குளகம் நால்வகைப்படும். ஒவ்வொன்றும் ஆதி (முதல்) மத்தியம் (-நடு), அந்தியம் (-இறுதி) என முடிக்கும்சொல் நிற்கும் இடத்தை ஒட்டி மூவகைப்படும். படவே, குளக வகைகளின் உட் பிரிவுகள் உகளகாதி குளகம், உகளகமத்திய குளகம், உகள காந்திய குளகம் என்பன முதலாகப் பன்னிருவகைப்படும். (மா. அ. 68 உரை). குளகம் - குற்றெழுத்துத் தொடர்ந்த செய்யுள். (பிங். 3409) குளகம் என்ற செய்யுள் வகை - ஒன்றுக்கு மேற்பட்ட செய்யுள்கள் ஒரே சொல்லைக் கொண்டு முடியும் வகையில் அமைத்தல். இதற்கு எல்லை ஐந்து பாடல்கள். இரண்டு வருவது உகளகம். (யுகளம் என்பது வட மொழிப் பெயர்); மூன்று வருவது சந்தானிகம். (ஸந்தாநிதம் என்பது வடமொழிப் பெயர்); நான்கு வருவது காபாலிகம் (கலாபம் என்பது வடமொழிப் பெயர்) ஐந்து முதலாக வருவது அந்தியம். இரண்டு பாட்டுக்கள் ஒரே முடிபு பெற்ற எடுத்துக்காட்டு : ‘முன்புலகம் ஏழினையும் தாயதுவும் மூதுணர்வோர் இன்புறக்கங் காநதியை ஈன்றதுவும் - நன்பரதன் கண்டிருப்ப வைகியதும் கான்போ யதும்அமிர்தம் உண்டிருப்பார் உட்கொண் டதும்’ ‘வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும் அந்தச் சிலையினைப்பெண் ஆக்கியதும் - செந்தமிழ்தேர் நாவலன்பின் போந்ததுவும் நன்னீர்த் திருவரங்கக் காவலவன் மாவலவன் கால்’ உலகு அளந்ததும், கங்கையைத் தந்ததும், பரதனுக்கு ஆறுதல் அளித்ததும், காட்டிற் சென்று உலவியதும், தேவர்கள் மனத் தில் நினைப்பதும், உத்தரை பெற்ற கரிப்பிண்டத்தைப் பரீட் சித்து என்ற குழந்தையாக ஆக்கியதும், கல்லை அகலிகை யாகச் செய்ததும், திருமழிசைப்பிரானைப் பின்தொடர்ந்து சென்றதும் அரங்கப் பெருமான் திருவடியே என்று பொருள் படும் இவ்விரு பாடல்களும், ‘கால்’ என்ற ஒரே சொல்லைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தவாறு. (தண்டி. 4) குற்றத்தன்மை அணி ஆகாமை - தன்மையணியாவது இருதிணையுள் குற்றமில்லாத எவ் வகைப்பட்ட பொருளையும் உவமை முதலிய செயற்கை அணிகள் கூடாது இயல்பாக உள்ளவாறு கூறுவதாகும். குற்றமுடைய பொருள்களின் இயல்பைக் கூறுவதும் தன்மை யாம் எனினும், அஃது அணியாகக் கொள்ளப்பட மாட்டாது. (மா. அ. 88 உரை) குற்றமற்ற உறுப்பு - சான்றோருடைய வழக்கினை உட்கொண்ட தமிழ்மரபினொ டும் கூடி வடஎழுத்துக்களைத் தவிர்ந்து சொல்லுவார்க்கும் பெரிதும் இன்பம் தந்து சான்றோர்கள் இயற்றிய செய்யுள் களினும் வந்து, பொருள் செய்வதில் திரிபு ஏற்படாமல் முறையாகப் பொருளை விளக்கும் சொற்கள். (வீ. சோ. 144) குறிநிலை அணி - ஒருபொருளைப் புகழ்ந்து கூறும் சொற்றொடர்களின் அமைப்பில் குறித்தறிதற்குத் தகுதியான மற்றொரு பொருளும் அமைந்திருப்பது. தலைவியைப் பெறுதற்கு மடலேறத் துணிந்த தலைவனிடம் தோழி தலைவியின் இடையையும் பேச்சையும் துணியில் ஓவியமாக எழுதுதல் இயலாதாதலின், தலைவன் மடலேறல் இயையாது என்று கூறுவதாக அமையும் ‘மந்தா கினிஅணி வேணிப் பிரான்வெங்கை மன்னவ! நீ கொந்தார் குழல்மணி மேகலை நூல்நுட்பம் கொள்வதெங்ஙன்? சிந்தா மணியும் திருக்கோவை யும்மெழு திக்கொளினும் நந்தா உரையை எழுதலெவ் வாறு? நவின்றருளே’ என்ற பாடலில், மணிமேகலை சிந்தாமணி, திருக்கோவையார் என்னும் நூல்களின் பெயர் சொல்லமைப்பில் வந்துள்ளது இவ்வணியாகும். இதனை ‘முத்திராலங்காரம்’ என வடநூல்கள் கூறும். (ச. 99; குவ. அ. 73) குறிப்பால் வந்த பொதுநீங்குவமை - உபமானத்தைக் குறிப்பினால் மறுத்து உபமேயத்தையே அதற்கு உபமானமாக்கி உரைக்கும் அணி. எ-டு : ‘முற்குணத்தால் மாதர் முலைப்பால் அருந்தாத நற்குணத்தால் வேதமொரு நான்கினையும் - சிற்குணத்தால் ஓதா(து) உணர்ந்துணர்த்தும் உத்தமமா றற்(கு) இணையார்? மீ(து)ஆர்? மனமே! விளம்பு.’ “மனமே! சத்துவகுணத்தால், தாய்ப்பாலும் அருந்தாது நற்குணத்தொடு நான்கு வேதங்களையும் ஓதாது உணர்ந்து தமிழ்ப் பாசுரங்களாகப் பாடி உபகரித்த மாறனுக்கு இவ் வுலகில் இணை யார் என்று கூறு” என்ற பொருளமைந்த இப்பாடற்கண். ‘மாறற்கு இவ்வுலகில் இணை யார்?’ என்ற தொடர் மாறற்கு இவ்வுலகில் அவனைத் தவிர வேறு ஒருவரும் இல்லை என்ற கருத்தைக் குறிப்பாக விளக்குதலின், இது குறிப்பால் வந்த பொது நீங்குவமையாம். (மா. அ. பாடல் 195) குறிப்பினால் வரும் நுட்ப அணி - நேரிடையாகத் தெரிந்துகொள்ளுமாறு கூறாமல், தோற்றமும் செயலும் நுட்பமாய் ஆராய்ந்து அறியும் வகையில் செயற் படுவனவாகக் கூறும் அணி. எ-டு : ‘காதலன் மெல்லுயிர்க்குக் காவல் புரிந்ததால் பேதையர் ஆயம் பிரியாத - மாதர் படர்இருள்கால் சீக்கும் பகலவனை நோக்கிக் குடதிசையை நோக்கும் குறிப்பு’ தன் தோழியரது கூட்டத்தை விட்டு நீங்காத தலைவி சூரியனைப் பார்த்துவிட்டுப் பின் மேற்குத் திசையைப் பார்த்த குறிப்பு, தலைவனது மென்மையான உயிர்க்குப் பாதுகாப்புத் தந்து அளிசெய்தது என்ற பொருளமைந்த இப்பாடற்கண், தலைவியின் குறிப்பால் நுட்பமாய் அறியக்கிடந்த செய்தி யாவது தலைவனை இரவுக்குறியில் அவள் கூடி மகிழ விரும்புவதாகிய செய்தியாம். ஆகவே, இது குறிப்பால் வந்த நுட்ப அணி ஆயிற்று. (தண்டி. 64-1) குறிப்பு உருவகம் - ‘குறிப்புருவகம்’ காண்க. (தொ. பொ. 249 பேரா.) குறிப்பு உவமை (1) - உபமானத்தை மாத்திரம் கூறிப் பொதுத்தன்மை உபமேயம் இவற்றை இடம் நோக்கிக் கொள்ளவைப்பது. எ-டு : ‘உண்ணத் தெவிட்டா உருசியும் அஃகா வண்மையும் தண்மையும் பயப்பது மருந்தே’. தேவாமிர்தம் கற்கப்படும் ஆசிரியர்க்கு உவமை. அமுதம் உண்ணத் தெவிட்டா இனிமையும் வற்றா வளனும் குளிர்ச்சியும் பயப்பது. அதுபோல, கற்பிக்கும் ஆசிரியனுடைய கல்வியும் கவியும் கேட்போர்க்குத் தெவிட்டாது எப்பொழுதும் இன்பம்செய்து கொள்ளுவார் கொள்ளும்தோறும் குறை வின்றி நிறைவெய்தும் தன்மையவாயிருக்கும் என்ப வற்றை உவமையால் உய்த்துணருமாறு செய்து, வெளிப்படக் கூறாம லிருப்பது குறிப்புவமையாம். (மா. அ. 32 உரை) குறிப்பு உவமை (2) - ‘பவளம் போன்ற வாய்’ பவளம் - உபமானம்; வாய் - உபமேயம்; போன்ற - உவமை உருபு. இங்கு உபமானத்திற்கும் உபமேயத்திற்கும் உரிய பொதுத்தன்மையாகிய செம்மை குறிப்பால் அறியப்பட வேண்டியுள்ளது. ஆதலின் இதனை ‘குறிப்புவமை’ என்று மாறனலங்காரம் கூறும். (99 உரை) இதனைக் ‘சுட்டிக் கூறா உவமம்’ என்று தொல்காப்பியம் கூறும். (தொ. பொ. 282 பேரா.) குறிப்பு நவிற்சி அணி - இஃது ஒட்டணி எனவும், சுருக்கணி எனவும், நுவலா - நுவற்சி அணி எ னவும், பிறிது மொழிதல் அணி எனவும் கூறப்பெறும். இதனைக் ‘கூடோக்தி அலங்காரம்’ என வடநூல்கள் கூறும். கவி தான் கூறக்கருதிய செய்தியை மறைத்து அதனை ஒத்த வேறொரு செய்தியைச் சொல்லித் தன் கருத்தைப் புலப்பட வைப்பது இவ்வணி. எ-டு : ‘பிறன்புலத்தில் வாய்நயச்சொல் பெட்புடன்கொள் காளாய்! இறைவனடை கின்றனன்விட் டேகு’. “பிறன் வயலிலுள்ள நல்லநெல்லை விரும்பி உண்ணச் செல் லும் காளையே! வயலுக்கு உடைமையாளன் வருகின்றான் ஆதலின் வயலை விடுத்து அப்பாற்செல்” எனக் காளையை நோக்கிக் கூறுவது போலப் பிறன்மனையாளை விரும்பிச் சென்றவனை நோக்கி அவன் நண்பன் அவள்கணவனுடைய வருகையைப் புலப்படுத்தி உய்ந்து போமாறு குறிப்பால் எச்சரித்ததன்கண் குறிப்பு நவிற்சியணி வந்துள்ளது. இதற்கும் வெளிப்படை நவிற்சியணிக்குமிடையேயுள்ள வேறுபாட்டினை நோக்குக. (ச.113; குவ. 87) குறிப்பு நுணுக்கம் - இது குறிப்பினால் உணரப்படும் நுட்பஅணிக்கு வீரசோழி யத்துள் வழங்கப்படும் பெயராகும். ‘குறிப்பினால் வரும் நுட்ப அணி’ காண்க. (வீ.சோ. 169) குறிப்புருவகம் - குறிப்பினாற் பெறப்படும் உருவகஅணி. எ-டு : இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி’ (குறள். 1030) துன்பங்கள் (ஆகிய கோடரி) புகுந்து தன்முதலை வெட்டிச் சாய்க்கவே. ஒரு பற்றுமின்றி வீழும், அக்காலத்தில் பற்றாவன கொடுத்துத் தாங்கவல்ல நல்ல ஆண்மகனைப் பெறாத குடி(யாகிய மரம்) என்று பொருள்படும். இதன்கண், துன்பங் களைக் கோடரியாகவும் குடியை மரமாகவும் குறிப்பால் கொள்ள வைத்தமையால். இது குறிப்புருவகம் ஆயிற்று. (பரிமே.) குறிப்பு விபாவனை அணி - குறிப்பால் காரணம் கொள்ள வைப்பது. எ-டு : ‘பாயாத வேங்கை மலரப் படுமதமா பூவாத புண்டரிகம் என்றஞ்சி - மேவிப் பிடிதழுவி நின்றதிரும் கானில் பிழையால் வடிதழுவு வேலோய்! வரவு.’ “தலைவ! வேங்கை மரம் மலர் குலுங்க, அதனைக் கண்ட யானை புலி என்றஞ்சித் தன்னை வந்தடைந்த பெண் யானையைத் தழுவிக்கொண்டு, புலியை அச்சுறுத்த வேண் டிப் பெரிதாகப் பிளிறும் காட்டு வழியில் நீ இரவுக்குறிக்கு வருதல் பெருந்தவறான செயலாகும்” என்று தோழி தலை வனை இரவுக்குறி விலக்கிய பொருளமைந்த இப்பாடற்கண், பாயாத வேங்கை - வேங்கைமரம் (பாயும் வேங்கையாவது புலி). பூவாத புண்டரிகம் - புலி (பூக்கும் புண்டரிகமாவது தாமரை) என்பன குறிப்பு விபாவனையாம். (தண்டி. 51-5) குறைஉவமை - உவமை தோன்றுவதற்குரிய வினை பயன் மெய் உரு என்னும் நான்கானும் உபமானத்தோடு உபமேயம் ஒவ்வாது, அவற்றுள் ஒன்று இரண்டு அல்லது மூன்றான் மாத்திரமே ஒத்திருத்தல். இதனை ‘உலுத்த உவமை’ என்று வடநூல்கள் கூறும். (மா. அ. 95) எ-டு : பவழம் போன்ற வாய் - நிறம் மாத்திரத்தான் ஒத்தது. பிறைபோன்ற பற்கள் - நிறம், வடிவம் இவ்விரண்டானும் ஒத்தன. காந்தளை ஊதும் தும்பி, நிறம் - வடிவம் - தொழில் - இம் மூன்றானும் கையாடு வட்டினைப் போலத் தோன்றும். (அகநா. 108) புலிபோலப் பாயும் மறவன் - வினை மாத்திரத்தான் ஒத்தது. மாரி அன்ன வண்கை ஆய் - பயன் மாத்திரத்தான் ஒத்தது. துடி போன்ற இடை - வடிவு மாத்திரத்தான் ஒத்தது. குறைவுப் புனைதல் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (114) வருவதோர் அணி. ஆகாயத்தை ஒப்புமை கூறுவது. எ-டு : ‘சாரல் நாடன் நட்பு வானினும் உயர்ந்தன்று’ (குறுந். 3) என்றல் போல்வன. கூட்ட அணி - மாறுபாடில்லாத பல பொருள்களின் கூட்டத்தையோ, ஒரு காரியம் நிகழ உதவும் பல காரணங்களின் கூட்டத்தையோ அழகுறச் சொல்லும் அணி. இதனைச் ‘சமுச்சயாலங்காரம்’ என்ப வடநூலார். சமுச்சய அலங்காரத்தின் இலக்கணம் மாறனலங்காரத்தில் வேறாகக் கூறப்பட்டுள்ளது. ஒரு பொருளுக்கு இன்பமோ துன்பமோ ஏற்படுவதை ஒவ்வொன்றாகக் கூறாது பலவாக அடுக்கிக் கூறுவது சமுச்சய அணி; இன்பமும் துன்பமும் ஒரு பொருளிடத் தேயே பிறந்தனவாகக் கூறாமல் வெவ்வேறு பொருள்க ளிடத்தே ஒரு காலத்தில் பிறந்தனவாகக் கூறுவதும் சமுச்சய அணி; இன்பமோ துன்பமோ ஒருவரிடம் இரண்டு இடங் களில் தோன்றுவனவாகக் கூறுவதும் இவ்வணி. (மா. அ. 237) 1. மாறுபாடு இன்மையான் கூடத்தக்க பொருள்களின் கூட்டத்தைச் சொல்லும் கூட்டஅணி இது கூட்ட அணியின் இருவகைகளுள் ஒன்று. எ-டு : ‘விழுதல் விம்முதல் மெய்யுற வெதும்புதல் வெருவல் எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணித் தொழுதல் சோருதல் துளங்குதல் துயர்உழந் துயிர்த்தல் அழுதல் அன்றிமற் றயலொன்றும் செய்குவ தறியாள்’ (கம்பரா. 5073) இராமனைப் பிரிந்த காலத்துச் சீதைக்கு நிகழ்ந்தவற்றைத் தொகுத்துரைத்த இப்பாடற்கண் இக்கூட்ட அணி வகை யினைக் காணலாம். 2. பல காரணங்கள் கூடுதலால் ஒரு காரியம் பிறக்கும் கூட்ட அணி இது கூட்ட அணியின் இருவகைகளுள் ஏனையது. எ-டு : ‘குலமும் உருவும் குணமும் திருவும் நலமுமுயர் கல்வி நயமும் - வலமும் செருக்கைவிளைக் கின்றனஇச் செம்மற்கு நாளும் திருக்கறுநன் மாண்பிற் சேர்ந்து’. இத்தலைவனிடம் குலம் உரு குணம் திரு நலம் கல்வி வலம் யாவும் பொருத்தமாக வந்து சேர்ந்து பெருமிதத்தை அளிக்கின்றன என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், குலன் முதலிய காரணங்களால் தலைவன் பெருமிதம் உறுதலாகிய காரியம் விளைந்தமை கூறுதல் இக்கூட்ட அணிவகையாம். (மு. வீ. பொரு. அ. 49; ச. 81; குவ. 58) கூட்டம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (80) வருவதோர் அணி. ஒரு பொருளிடம் பலவகைச் சிறப்புக்களை அடுக்கிப் பாராட்டுவது. ‘கூட்டவணி’ காண்க. கூடா இயற்கை வேற்றுப்பொருள்வைப்பணி - கூடா இயற்கை - ஒரு பொருளின் இயல்பிற்கு மாறுபட்ட நிலை. அந்நிலை காட்டி, ஒரு பொதுப்பொருளால் ஒரு சிறப்புப் பொருளை விளக்கும் (வேற்றுப் பொருள் வைப்பு) அணிவகை இது. எ-டு : ‘ஆர வடமும் அதிசீத சந்தனமும் ஈர நிலவும் எரிவிரியும் - பாரில் துதிவகையான் மேம்பட்ட துப்புரவும் தத்தம் விதிவகையான் வேறு படும்’. குளிர்ந்த முத்துமாலையும் சந்தனமும் நிலவும் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்குக் கொடிய வெப்பத்தை விளைவிக் கின்றன; இவ்வுலகில் மிக மேம்பட்ட நுகர்ச்சிப் பொருளும் தத்தம் ஊழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்று பொருள்படும் இப்பாடற்கண், பிற்கூறிய பொதுப்பொருளால் முற்கூறிய சிறப்புச் செய்தி விளக்கப்பட்டவாறு. முத்துமாலைக்கும் சந்தனத்திற்கும் நிலவிற்கும் வெப்பம் விளைவித்தல் என்னும் இயல்பு கூடா இயற்கை ஆயினமையும் ஈண்டுக் காணத்தகும். (தண்டி. 48-5) ‘கூடாவகையிற் கூறுதல்’ என்னும் மாறனலங்காரம் (207) கூடா உவமை அணி - உவமையணி வகைகளுள் ஒன்று; கூடாத ஒன்றைக் கூடுவதாக்கி உவமித்தல். எ-டு : ‘சந்தனத்தில் செந்தழலும், தண்மதியில் வெவ்விடமும் வந்தனவே போலும் மறுமாற்றம் - பைந்தொடியீர்! வாவிக் கமல மலர்முகம்கண்(டு) ஏக்கறுவார் ஆவிக்(கு) இவையோ அரண்?’ “பெண்களே! உங்கள் உரை, குளிர்ந்த சந்தனத்தில் செந் தழலும், குளிர்ந்த சந்திரனிடத்தில் கொடியவிடமும் தோன்றியவை போல் இருக்கின்றதே! உங்கள் கமலம் போன்ற முகத்தைப் பார்த்துக் காதலால் தாழ்ந்து வருந்துபவருடைய உயிரை இது காத்தளிக்குமோ?” என்று பாங்கிமதியுடன் பாட்டின்கண் தலைவன் கூறும் இப்பாடற்கண், பாங்கியின் சொல்லுக்குச் சந்தனத்தில் தோன்றும் தழலையும், சந்திரனில் தோன்றும் விடத்தையும் உவமை கூறியுள்ளமை கூடா உவமையணியாம். (தண்டி. 32 - 22) கூடாப் பொருளோடு உவமித்து வருதல் - தலைவன் வாராமை குறித்துத் தலைவி வருந்தியவழித் தோழி அவள்துயர் நீங்கக் கூறும் ஆறுதல் மொழிகளில், “தலைவன் நின்னைக் காண வாராதுஒழியான்; அவனுடைய அன்பில் கொடுமை தோன்றும் என்பது, நிழலையுடைய குளத்து நீரில் இருக்கும் குவளை வெப்பம் தாங்காமல் வெந்து போவதற்கு ஒப்பாகும்” என நீருள் ஒரு காலத்தும் வெந்துபோம் இயல் பிற்று அல்லாத குவளைக்கு நீருள் வேகும் தன்மையைக் கற்பித்து அதனைத் தலைவனுடைய அன்பிடத்துக் கொடுமை தோன்றற்கு உவமையாகக் கூறும். ‘ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழற்கயத்து நீருள் குவளைவெந் தற்று.’ (கலி. 41) என்ற அடிகளில் கூடாப் பொருளோடு உவமித்து வருத லாகிய உவமப்போலி வந்துள்ளது. இஃது உவமப் போலி வகை ஐந்தனுள் ஒன்று. (தொ. பொ. 295 இள.) கூடாமை அணி - ஒரு செயல் நிகழ்ந்ததனைப் பொதுஅறிவால் நோக்குவார்க்கு மிகவும் அருமையுடையதாகக் கூறி, அச்செயல் பொதுமக்கள் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எனப் பெறப்படவைக்கும் அணி கூடாமை அணி. எ-டு : ‘அடுக்கலைஓர் கையினால் ஆயச் சிறுவன் எடுக்குமென யாரறிவார் இங்கு?” கண்ணன் சிறுவனாக இருந்தபோதே கோவர்த்தனகிரியைத் தூக்கிய அருஞ்செயலைப் பொதுஅறிவினால் நோக்கி அது பற்றி முழுமையாக அறிவது விசேட அறிவில்லாத பொது மக்கள் அறிவுக்கு அப்பாற்பட்டது என்று கூறுதற்கண் கூடாமை அணி வந்துள்ளது. இதனை ‘அசம்பவாலங்காரம்’ என்ப வடநூலார். (ச. 62; குவ. 36; மு. வீ. பொரு. அ. 37) கூடும் இயற்கை வேற்றுப்பொருள்வைப்புஅணி - கூடும் இயற்கையாவது ஒரு பொருளின் இயல்புக்குப் பொருந் துதல். இத்தகைய ஒரு பொதுப்பொருளால் வேறொரு சிறப்புச் செய்தியை விளக்குவது இவ்வணிவகை. எ-டு : ‘பொய்யுரையா நண்பர் புனைதேர் நெறிநோக்கிக் கைவளைசோர்ந்(து) ஆவி கரைந்துகுவார் - மெய்வெதும்பத் பூத்தகையும் செங்காந்தள்; பொங்கொலிநீர் ஞாலத்துத் தீத்தகையார்க்(கு) ஈதே செயல்’. பொய் சொல்லும் இயல்பில்லாத தன் தலைவனது தேர்வரும் வழியைப் பார்த்துக்கொண்டே கைவளைகள் சோர இளைத்து உயிரே கரையும் வகை நைந்து வருந்தும் தலைவி யின் உடல் வெதும்பி வாடும்படியாகச் செங்காந்தள் பூக்கள் மலர்ந்து வருத்துகின்றன என்னும் செங்காந்தளது செய லானது சிறப்புப் பொருள். இவ்வுலகில் தீயவர்களுடைய செயல், முன்பே நலிந்துள் ளாரை மீண்டும் தம் செயலால் வருத்துவது என்னும் பொதுப் பொருளால், மேலைச் சிறப்புப்பொருள் விளக்கப் பட்டவாறு. தீத்தகையார் நெருப்புப் போன்ற செந்நிறத்தவர், கொடியவர் என்னும் இரு பொருளது. தீயவர் பிறரை நலிதல் இயல்பேயாதலின், இது கூடும் இயற்கையாயிற்று. (தண்டி. 48-6) கூடோக்தி அலங்காரம் - தமிழ்நூலார் இதனைக் ‘குறிப்பு நவிற்சியணி’ என்ப; அது காண்க. கூற்றினால் வேற்றுமை செய்யும் வேற்றுமை அணி - இரு பொருள்களிடையேயுள்ள ஒப்புமைகளைக் காட்டிப் பின் அவற்றுள் வேறுபாடு ஒன்றை வெளிப்படையாகக் காட்டும் வேற்றுமை அணிவகை. இதனை ஒரு பொருளான் வேற்றுமை செய்தல், இரு பொருள் வேற்றுமைச் சமம், சமன் அன்றி மிகுதி குறைவான் கூற்றினான் வேற்றுமை செய்தல் என்ற வேற்றுமை அணி வகைகளிற் காண்க. (தண்டி. 49) கூற்றும் குறிப்பும் விரவிய பரிகரம் - காரண காரியம் இரண்டும் வெளிப்படையாக வரினும் அவற்றால் ஆய தொழில்கள் பிறவற்றை வெளிப்படை யாகவும் குறிப்பாகவும் அறிவிக்கும் அணி. எ-டு : ‘காலையில் எழுகதி ரவன்குட கடல்புகு மாலையில் கடைநா ளினைவழிப் படுத்தி இடைநாள் இன்றா ஏமுற வருதலும் முதல்நாள் எதிர்கொளும் முழுநிலா முன்றில்... அறங்கா வலனை அகற்றுபு புறங்கா வலனாக் குதல்புன் மைத்தே’ “சந்திரன் கடைநாளாகிய இரேவதியை விடுத்துத் துன்புறும் நாள் இல்லாதபடி தன்னிடத்து வரவே அசுவனி நாள் ஊடாது எதிர்கொள்வது போல, பரத்தையரிடையும் இற் பரத்தையரிடையும் தங்கி நம் இல்லம் நோக்கி வந்த தலைவனை வாயில் நேராது துன்புறுத்துதல் நின்கற்பிற்கு ஏற்றதன்று” என்று தோழி கூறித் தன் உள்ளக் கருத்தும் வாயில் நேர்தலே என்பதைக் குறிப்பால் பெறவைத்தல் கூற்றும் குறிப்பும் விரவிய பரிகரமாம். (மா. அ. பாடல் 557) கூற்றுவமை - இது ‘விரிஉவமை’ எனவும்படும்; அது காண்க. (வீ. சோ. 159) கெழுவ என்ற உவம உருபு - ‘யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்’ (அகநா.கடவுள்.) யாழை ஒத்த வேதஒலி வெளிப்படுத்தும் கழுத்தினையுடைய சிவபெருமான் என்ற பொருள்படும் இவ்வடியில், ‘கெழுவ’ என்பது வினை உவமத்தின்கண் வந்தது. யாழ் ஒலியை ஒத்தது மிடற்றொலி என்பது. (தொ. பொ. 286. பேரா.) கைதவம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (25) வருவதோர் அணி. ஓரிடத்தில் வளரும் பொருள் மற்றொரு பொருளிடத்தில் பொருந்திய பெயரைப் புனைந்து வருவது. எ-டு. : ‘இருநில மன்னற்குப் பெருவளம் காட்டத் திருமகள் புகுந்ததிச் செழும்பதியாம் என எரிநிறத்(து) இலவமும் முல்லையும் அன்றியும் கருநெடுங் குவளையும் குமிழும் பூத்தாங்(கு) உள்வரிக் கோலத்(து) உறுதுணை தேடிக் கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்’ (சிலப். 5:212-217) வாய், பற்கள், கண்கள், மூக்கு, முகம் என்பன உடலிலுள்ள உறுப்புக்கள். அவை முறையே இலவம்பூ, முல்லை முகை, குவளைப்பூ, குமிழம்பூ, தாமரைப்பூ என நிலத்திலும் நீரிலும் காணப்படும் பூக்களின் பெயர்களைப் புனைந்தமை இவ்வணி. இது குறிப்பு உருவகத்தின் பாற்படும். கையறல் விலக்கு அணி - கையறல் - செயலற்ற நிலை; அதனைக் கூறி ஒன்றனை விலக்கு தல். இது முன்னவிலக்கு அணியின் வகைகளுள் ஒன்று. எ-டு. : ‘வாய்த்த பொருள்விளைத்த(து) ஒன்றில்லை; மாதவமே ஆர்த்த அறிவில்லை; அம்பலத்துக் - கூத்துடையான் சீலம் சிறிதேயும் சிந்தியேன் சென்றொழிந்தேன் காலம் வறிதே கழித்து.” “பொருளை உண்டாக்குவதற்கான நன்முயற்சி ஏதும் செய்தேனில்லை; மேலான தவத்தில் பொருந்தியிருக்கும் அறிவும் பெற்றேனில் லை; சிவபெருமானுடைய பெருமையை யும் கூடச் சிறிதும் உணர்ந்து தியானம் செய்தேனில்லை. இவ்வாறே என் வாழ்நாள்களை வீணே கழித்து மூப்பெய்தி இதுபோது செயலற்று நிற்கிறேன். வீணான காலத்தை மீட்டுப் பயன் பெறுதல் இயலாதே!” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், தான் செயலற்றுப் போனதால் இனி யாதும் பெற இயலாது என்று விலக்கியுள்ளமை கையறல் விலக் கணியாம். (தண்டி. 45-9) கொண்ட என்ற உவம உருபு - ‘யாழ்கொண்ட இமிழிசை இயன்மாலை அலைத்தரூஉம்’ (கலி. 29) யாழ்ஒலியை ஒத்து வண்டு முதலிய பறவைகள் ஒலிக்கும் மாலைக்காலம் என்று பொருள்படும் இத்தொடரில், ‘கொண்ட’ என்பது பயன்உவமத்தின்கண் வந்தது. (தொ. பொ. 289 பேரா.) கோவை உவமை - இது ‘பலவயின் போலி உவமை’ எனவும்படும். அது காண்க. (வீ. சோ. 157) கௌட உதாரம் என்னும் குணவணி - குறிப்புப் பொருள் மிகுதியும் அமைந்து வருவது கௌட உதாரம். எ-டு : ‘காழில் கனியுண் கடுவன் களங்கனியை ஊழிற் பருகி உருகுதிரு - மூழிக் களத்தாதி யைமதங்கா! காமக் குழவி வளர்த்தா ரிடம்தேடு வாய்.’ என்பது தலைவனுக்காக வாயிலாக வந்த பாணனிடம் தோழி வாயில் மறுத்துரைத்தது. ‘காலை மங்கலம் பாட வந்த யாழ்ப்பாணனே! பரல் இல்லாத முழுதும் மென்மையும் இனிமையும் உடைய வாழைக்கனியை அச்சமின்றி உண்ணும் ஆண்குரங்கு, உள்ளே முழுதும் பரலாய்ச் சிறிது புறமென்மையும் அற்பச் சுவையுமுடைய களங்கனியையும் முறைபோல உண்டு. அதன் சுவைக்கு உள்ளம் உருகும் திருமூழிக்களத்துத் தலைவனைக் காமம் என்னும் குழவிச் செல்வத்தையுடைய பரத்தையரிடத்தே தேடிக் காண்பாயாக; அஃதன்றி எம்மிடத்துக் காண்டல் அரிது” என்றவாறு. ‘காழில் ... ........ மூழிக்களம்’ எனவே, அக் குரங்கு போல, உத்தமமான இவளொடும் உள்ளும் புறமும் ஒரு நீர்மைத்தாய் மென்மையொடும் உவர்ப்பில்லாத பேரின்பத்தைத் துய்த்த தலைவன், இழிந்த இயற்கையை உடையராய்ப் புறத்தே பொருள் நசைக்காய்ச் சிறிது நெகிழ்ந்து உள்நெகிழ்ச்சியற்ற பரத்தையரிடத்தே உவர்த்த சிற்றின்-பத்தைத் துய்த்து, அவ்வின்பம் மீண்டும் துய்ப்பான்வேண்டி அவரது சேரிவிட்டு நீங்கானாயினான் - என்ற உள்ளுறை உவமம் குறிப்பிற் கொள்ளக் கிடத்தலானும், ‘காமக்குழவி வளர்த்தாரிடம்’ எனவே, இஃது எம் காதற் புதல்வன் என்ற செல்வத்தையுடைய மனை என்பதும், யாம் புதல்வற் பயந்த மூப்புடையேம் என்பதும், எம்மிடத்து அவர் பெறும் இன்பம் எமக்கு அவர்கொளுத்தக்கொண்டு யாம் கொடுக்கும் இயற்கை யின்பமே என்பதும், செயற்கையின்பம் எம்மிடத்து இல்லை என்பதும் ஆகிய பல அருஞ்செய்திகளைக் குறிப் பாற் கொள்ளக் கிடந்தமை கௌட உதாரமாம். (மா. அ. பாடல் 103 உரை) கௌட உய்த்தலில் பொருண்மை என்னும் குணஅணி - கருதிய பொருளைத் தெளிவுற உணர்த்தும் சொற்களைப் பெற்று, வேறு சொல் வருவித்துக் கூட்டிப் பொருள் காணும் தன்மை இல்லாதிருப்பது. இஃது எல்லா நெறியார்க்கும் உடன்பாடு என்றே தண்டியாசிரியரும் மாறனலங்கார ஆசிரியரும் கருதுவர். ஆயின் இலக்கண விளக்கமுடையார், “கற்பனைச் சுவையைப் பெரிதும் விரும்பும் கௌடநெறிப் புலவர், இங்ஙனம் மிகத் தெளிவாய் உரைத்தலை விரும்பார்” எனக் கருதி, அவர்தம் மறுதலைக் கருத்துடைய ‘உய்த்தலில் பொருண்மை’ என்னும் குணத்திற்குப் பின்வரும் எடுத்துக் காட்டினை வழங்குகிறார்: எ-டு : ‘ஒல்லேம் குவளைப் புலாஅல் மகன்மார்பின் புல்லெருக்கங் கண்ணி நறிது.’ பரத்தையிற் பிரிவிற் சென்ற தலைவன் மீண்டபோது அவன்பால் ஊடிய தலைவியின் கூற்று இது. “உன் மார்பிலுள்ள குவளைமாலையின் புலால் இழிநாற் றத்தை யான் விரும்பேன்; இதனினும், மகன் மார்பில் (அறியாது விளையாட்டால் அவன் அணிந்துள்ள) எருக்க மாலையே எனக்கு நறுமணமுடையது!” என்னும் இப் பாடற் கண் பின்வருமாறு உய்த்துணரவைப்புப் புலப்படுகிறது: தன் காதல் முழுதிற்குமுரிய கணவன் பரத்தையரைப் புணர்ந்து வந்துள்ள ஊடலால் தோன்றிய துயரமும் சினமும் மிக்குப் பேசுவதால், அவன் அணிந்துள்ள குவளைப் பூமாலை புலாலின் தீ மணம் நாறுவதாகவும், அத்துயர் தீரத் தான் பலகால் பார்த்து மகிழும் தன்மகன் அணிந்துள்ள இழிந்த எருக்கமாலை நறுமணம் கமழ்வதாகவும் தலைவி கூறுகிறாள். இவ்வளவும் பாட்டிடைக் கிடந்த சொற்களா லன்றி குறிப்பினாயே உய்த்துணரக் கிடந்தது. இதனையே கௌட நெறிப் புலவர் கருதுவர் என்பது இலக்கணவிளக்க முடையார் கொள்கை. (இ. வி. அணியியல் பக். 68) கௌட ஒழுகிசை என்னும் குணவணி - வல்லினமெய்யும் வல்லினச்சந்தியும் இல்லாமையாகிற ஒழுகிசை என்பது வைதருப்ப நெறியார் கொள்வது; அக் குணவணிக்கு மறுதலையாகக் கௌட நெறியார் கொள்ளும் இயல்பு இது. எ-டு : ஆக்கம் புகழ்பெற்ற(து); ஆவி இவள்பெற்றாள்; பூக்கட் குழற்கார் பொறைபெற்ற; - மாக்கடல்சூழ் மண்பெற்ற ஒற்றைக் குடையாய்! வரப்பெற்றெம் கண்பெற்ற இன்று களி’. “தலைவ! நீ வினைமுற்றி மீண்டு வந்தமையால் உன்புகழ் ஆக்கம் பெற்றது; தலைவி தன் உயிரையே பெற்றாள்; அவளுடைய கூந்தலும் மிகுந்த பூமாலைகளாகிய சுமை பெற்றது. உன்னை மீண்டும் காணப்பெற்ற எம் கண்கள் களி பெற்றன” என்ற பொருளமைந்த இப்பாடல், வல்லின மெய் யும் வல்லெழுத்துச் சந்தியும் பெற்ற வன்னடையால் இன்னா ஓசையுடையதாகலின் கௌட ஒழுகிசையாம். இத்தகைய இன்னா ஓசையைக் கௌட நெறியாரும் விரும்பார் என்பது தண்டியாசிரியர் கருத்து; மாறனலங்கார முடையார் கருத்தும் அதுவே. இலக்கண விளக்கம் ஒன்றுமே வேறுபட உரைக்கும். (இ.வி. அணியியல் பக். 65) கௌடக் காந்தம் என்னும் குணவணி - ஒரு பொருளை உயர்த்திப் புகழும்போது உலகநடை கடவாமல் ஆராய்ந்துரைத்தல் என்னும் வைதருப்ப நெறிக்கு மாறுபட்ட கௌட நெறி. எ-டு : ‘ஐயோ இவள்அல்குல் சூழ்வருதற்(கு) ஆழித்தேர் வெய்யோற் (கு) அநேகநாள் வேண்டுமால் - கைபரந்து வண்டிசைக்கும் கூந்தல் மதர்விழிகள் சென்றுலவ எண்டிசைக்கும் போதா(து) இடம்.’ “ஐயோ! இவளது அகன்ற அல்குலைச் சுற்றிவரச் சூரிய னுக்குப் பலநாள்கள் ஆகும்! இவளுடைய கண்கள் உலவி வருதற்கு எட்டுத்திசைகளும் இடம் போதா!” என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், உலக நடைமுறை கடந்த மிகையான வருணனை அமைந்துள்ளமை கௌடக் காந்தமாம். (தண்டி. 23) கௌடச் சமநிலை என்னும் குணவணி - செய்யுளில் வல்லெழுத்து மெல்லெழுத்து இடையெழுத் துக்கள் சமமாக விரவிவரத் தொடுத்தல் ‘சமநிலை’ எனக் கொண்ட வைதருப்ப நெறிக்கு மறுதலையாக வரும் கௌட நெறி. எ-டு : ‘இடர்த்திறத் தைத்துற பொற்றொடி நீஇடித் துத்தடித்துச் சுடர்க்கொடித் திக்கனைத் திற்றடு மாறத் துளிக்குமைக்கார் மடக்குயிற் கொத்தொளிக் கக்களிக் கப்புக்க தோகைவெற்றிக் கடற்படைக் கொற்றவன் பொற்கொடித் தேரினிக் கண்ணுற்றதே ‘. ‘இடர்த் திறத்தைத் துற; பொற்கொடி! நீ; இடித்துத் தடித்துச் சுடர்க்கொடி திக்குஅனைத்தில் தடுமாறத் துளிக்கும் மைக்கார், மடக்குயில் கொத்து ஒளிக்க, களிக்கப் புக்க தோகை; வெற்றிக் கடற்படைக் கொற்றவன் பொற்கொடித் தேர் இனிக் கண்ணுற்றது.’ “பெண்ணே! நீ வருந்தும் திறத்தை நீங்குக. கார்மேகம் வானம் எங்கும் கொடிபோல் ஒளிர மின்னி, இடித்து மழை பொழி கிறது. குயில்கூட்டம் வருந்தி ஒளிய, மயில்கள் மகிழ்ந்து ஆடத் தொடங்கியுள்ளன. கடல்போலும் பரந்த படைமிக்க உன் தலைவன் வரும் அழகிய கொடி பறக்கும் தேர் இப்பொ ழுது தெரிகிறதே!” என்ற பொருளமைந்த இப்பாடல், தலைவியை ஆற்றுவிக்கும் தோழி கூற்று. இதன்கண் வல் லெழுத்து மிகுதியாக வரத் தொடுக்கப்பட்டுள்ளமை கௌட நெறிச் சமநிலையாம். (தண்டி. 18) கௌடச் செறிவு என்னும் குணவணி (1) - நெகிழிசையின்மை என்று வைதருப்பர் கொண்ட செறிவுக்கு மறுதலையான கௌடநெறி. எ-டு : ‘விரவலராய் வாழ்வாரை வெல்வா யொழிவா யிரவுலவா வேலை யொலியே - வரவொழிவா யாயர்வா யேயரிவை யாருயி ரீராவோ வாயர்வாய் வேயோ வழல்’. ‘விரவலராய் வாழ்வாரை வெல்வாய் ஒழிவாய்; இரவு உலவா வேலை ஒலியே! வரவு ஒழிவாய். ஆயர் வாயே, அரிவை ஆருயிர் ஈராவோ? ஆயர்வாய் வேயோ அழல்?’ “இரவில் உலவும் கடலொலியே! தாய்மார் கூறும் சொற்களே போதுமே, இவளுயிரை வாங்க! இடையர் ஊதும் குழ லோசையும் இவளைத் தழல்போலச் சுடுகின்றது. நீ வேறு வரவேண்டுமா? கூடாமல் பிரிந்து வாழ்கின்றவர்களின் நெஞ்சை வருத்தி வெல்ல நினைக்கும் உன் எண்ணத்தை விட்டுவிடு; இவளை வருத்துவதற்காக வருவதை ஒழிக” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், இடையின எழுத்தே செறிந்துவர நெகிழிசைப்பட்டு வந்த செறிவைக் காணலாம். (தண்டி. 16) கௌடச் செறிவு என்னும் குணவணி (2) - மெல்லினமாகிய எழுத்துச் செறிய மெல்லின வண்ணமுற்று அவ்வெழுத்தானாகிய சொற்கள் செறியச் செய்யும் வைதருப்பச் செறிவையும், இடையினமாகிய எழுத்து மிகவும் செறிய இயைபு வண்ணமுற்று அவ்வெழுத்தானாகிய சொல் செறியவரும் பாஞ்சாலச் செறிவையும் போலாது, வல்லின வண்ணத்தால் வல்லெழுத்துச் செறிந்த சொல்லொடும் வற்கெனத் தொடுப்பதே கௌடச் செறிவாம். எ-டு : ‘புட்குழி உத்தமர் புட்கொடி அத்தர் பொருப்பின் மடக்குயிலே! கட்டழல் கக்கு குழிச்சிறு கட்கரட த்ரிகடத் தொருமா விட்புல முற்ற விருப்ப மிகுத்ததொர் வெற்றி யனைக்குறுகா உட்குற எற்றினன் அற்ற துதிக்கையொ டுற்ற மருப்பிணையே’. “புட்குழி என்ற திருத்தலத்துக் கருடக்கொடியினையுடைய திருமாலி ன் மலைக்கண்ணேயுள்ள இளங்குயில் போல்வாய்! அழலைக் கக்கும் ஆழ்ந்த சிறுகண்களையுடையதும் மதநீரை யுடையதுமான யானை விண்ணவரும் விரும்பும் வெற்றி யுடைய தலைவன்மீது பாய, குறுகிய காலத்தே, அதன் உள்ளம் அஞ்சுமாறு அதனைத் தலைவன் வாளால் எறிய, அதன் துதிக்கையோடு இரட்டைத் தந்தங்களும் அறுபட் டன” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், வல்லினமே மெய்யாயும் உயிர்மெய்யாயும் பெரும்பான்மையும் சொல் லாகச் செறிய வந்துள்ளமை கௌடச் செறிவாம். தண்டியலங்காரம் ‘விரவலராய் வாழ்வாரை’ என்று கௌ டத்திற்குக் கூறிய எடுத்துக்காட்டுப் பாஞ்சால நெறியார்க்குக் கொள்ளப்படும். (மா. அ. பாடல். 89) கௌடச் சொல்லின்பம் என்னும் குணவணி - சீர்கள் இடையிட்டுவரும் வழிமோனை அன்றி முற்று மோனை கொண்டு அழுத்தமான சொற்கள் மிகப் பெற்று வரும் கௌட நெறி. எ-டு : ‘துனைவருநீர் துடைப்பவனாய்த் துவள்கின்றேன் துணைவிழிசேர் துயிலை நீக்கி இனவளை போன்(று) இன்னலம் சோர்ந்(து) இடரு ழப்பல் இகந்தவர்நாட்(டு) இல்லை போலும் தனியவர்கள் தளர்வெய்தத் தடங்கமலம் தளைஅவிழ்க்கும் தருண வேனில் பனிமதுவின் பசுந்தாது பைம்பொழிலில் பரப்பிவரும் பருவத் தென்றல்’. “தோழி! என் கைவளைகள் கழன்றுவிட்டன; அதுபோல, என் வனப்பும் நீங்கிவிட்டது. துயரத்தால் கண்ணீர் விட்டுக் கொண்டும் அதைத் துடைத்துக்கொண்டும் இளைத்து வாடு கிறேன். பிரிவால் வருந்துவோர் மேலும் தளருமாறு தாமரைகள் அரும்பும் இவ்விளவேனிற் காலத்தே சோலை களில் மகரந்தத்தைப் பரப்பிக்கொண்டு வீசும் இத்தென் றற்காற்று, நம்மைப் பிரிந்து தலைவர் சென்றுள்ள வேற்று நாட்டில் வீசாதோ?” என்று, வேனில் வரவு கண்டு ஆற்றா ளாகிய தலைவி தோழிக்குக் கூறுவதாகிய இப்பாடற்கண், ஒவ்வோரடியிலும் முதலைந்து சீர்களிலும் மோனைத் தொடை அமைந்துள்ளமையும், சொற்கள் அழுத்தமாகச் சுருக்கமின்றி அமைந்துள்ளமையும் கௌடச் சொல்லின்ப மாம். (தண்டி. 19) இதனைப் பஞ்சாலச் சொல்லின்பத்துக்கு எடுத்துக் காட்டாக்கிக் கௌடச் சொல்லின்பத்திற்கு அடிதோறும் வருக்க மோனையும் சீர்களில் முற்றுமோனையும் அமைந்த ‘கடுவே கயலெனக் கரந்தடும் கண்ணிணை’ என்னும் நேரிசை யாசிரியப்பாவினை மாறனலங்காரம் குறிப்பிடும். (பாடல். 80) கௌடத் தெளிவு என்னும் குணவணி (1) - வைதருப்பத்திற்கு மறுதலையாகக் கௌடர் எளிதில் பொருள் புலப்படாததாக விரும்பும் நெறி. எ-டு : பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. (கு. 297) பொய் கூறாமை என்னும் ஒழுக்கத்தை ஒருவன் பொய்க்காமல் மேற்கொள்ளின், அவன் வேறு அறத்தைச் செய்யாதிருத் தலும் நன்மை பயக்கும் என்றும்; பொய் கூறாமையுடன் பிற அறங்களைச் செய்வதே பயனுடையது; பொய் கூறும் குற்றத்துடன் அறம் செய்தல் நற்பயன் விளைக்காது என்றும்; ஒருவன் பொய்யாமையை இடைவிடாது செய்யின், அவன் பிற அறங்களைச் செய்யாமை துணிவாக நன்று என்றும் இக்குறள் பொருள்படும். இக்குறட்பாவில், ‘பொய்யாமை’ என்னும் சொல் பொய் கூறாமை எனவும், தவறாது எனவும் இருபொருள்பட வந்தது. ‘பொய்யாமை பொய்யாமை’ என இடைவிடாமை பற்றிய அடுக்காகவும் அத்தொடர் நின்றது. பொருள் எளிதிற் புலனாகாமையே கௌட நெறியின் நோக்கமாய் அமையும் என்பது. (தண்டி. 17) கௌடத் தெளிவு என்னும் குணவணி (2) - தண்டி முதலிய நூல்கள் கூறும் கௌடத் தெளிவைப் பாஞ் சாலத்துக்குக் கொண்டு, அதனினும் விஞ்சிய கவியருமையும் நோக்குடைப் பொருள்கோளும் தோன்றத் தொடுப்பத னையே ‘கௌடத் தெளிவு’ என மாறனலங்காரம் கூறும். எ-டு : ‘தேனே! முளைமதியஞ் செந்தழல்பா ரிப்பவிருந் தேனே யயலார் சிரிப்பவே - தேனே யிறைவகுளத் தாமரையோ, எய்தார்வே ளெய்து குறைவகுளத் தாமரையோ, கூறு.’ ‘தேனே! முளைமதியம் செந்தழல் பாரிப்ப இருந்தேனே அயலார் சிரிப்பவே; தேன்ஏய் இறை வகுளத் தாமர் ஐயோ எய்தார், வேள் எய்து குறைவ குளத்தாமரையோ? கூறு.’ “தேன் போன்றினிய தோழி! பிறை தழலைப் பரப்ப, அயலவர் ஏசுமாறுள்ளேன்; என் துயர் மிகுதியும் நாண்துறவும் கண்டு வைத்தும், வண்டுகள் தங்குதலையுடைய மகிழம்பூமாலையை அணிந்த சடகோபர், ஐயோ! என்னைக் காண வருகிலர். மன்மதன் என்மீது தாமரைகளை அம்பாகத் தொடுத்ததால் குளத்துள்ள தாமரைகள் குறைந்துவிட்டன! இனி ஏனைய மலரம்புகளைத் தொடுப்பான் போலும்!” என்று தலைவி தன் துன்ப மிகுதி தோழிக் குரைத்த இப்பாடல் கவியருமையுடைய கௌடத் தெளிவாம். (மா. அ. பாடல். 86) கௌடநெறி - கௌடநாட்டார் பின்பற்றும் மரபு; ‘கௌடம்’ எனவும் படும். குணஅணிவகைகள் எனப்பட்டன, வைதருப்பம் கௌடம் என்ற இரண்டாய வடநூல் மரபு பற்றி, வைதருப்ப நெறி கௌட நெறி எனப் பகுக்கப்படும். வருணனை, கற்பனை, நடை, செய்தி - யாவற்றிலும் அளவுடன் அமைவது வைதருப்ப நெறி. அதற்கு மாறானது கௌட நெறி; முற்கூறிய வருணனை, கற்பனை, நடை, செய்தி யாவற்றிலும் உயர்வுநவிற்சியும் கடுமையும் பெருமிதமும் கொண்டிருப்பது. வைதருப்ப நெறியின் குணங்களாகக் கூறப்படும் செறிவு முதல் சமாதி ஈறான பத்தனுள், பொருளின்பம் ஒழுகிசை உதாரம் சமாதி என்னும் நான்கும் ஏற்ற பெற்றி இருநெறிக்கும் ஒத்து வரும். மற்ற ஆறும் கௌட நெறிக்கண் வைதருப்ப நெறிக்கு மறுதலையாகவே அமையும். இவ்விரு நடைக்கும் இடைப்பட்ட இயல்புடைய பாஞ்சாலம் என்னும் ஒரு நெறி மாறனலங்காரத்தில் காட்டப்படுகிறது. (79) (தண்டி. 15; மா.அ. 78) கௌட பாஞ்சால பாகங்கள் குணஅலங்காரம் ஏற்கும் கூறுபாடு - வைதருப்ப நெறி என்பது செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்ற பத்துக் குணஅணிகளையும் கடுமையின்றி எளிய நிலையில் பின்பற்றுமுறை. கடுமையையே பின்பற்று முறை கௌடநெறி. இவ்விரண்டற்கும் இடைப்பட்ட நடைத்தாகிய நெறி பாஞ்சாலம். சமாதி, பொருளின்பம், ஒழுகிசை என்பன வைதருப்பர் கூறியவாறே, கௌடரும் பாஞ்சாலரும் (ஓராற்றான்) ஏற்பர் என்பது. (மா. அ. 82-84) கௌட வலி என்னும் குணவணி - தண்டியலங்காரம், ‘வலி’ என்னும் குணவணிக்கு முதற்கண் காட்டிய ‘செங்கலசக் கொங்கை’ என்ற பாடலை அதன்கண் தொகை மிக வருதலால் ‘கௌட வலி’க்கு உதாரணமாகக் காட்டும். இலக்கண விளக்கம் அதனையே ‘வைதருப்ப வலி’க்கு. எடுத்துக்காட்டாக்கும். இனி, இலக்கண விளக்கம் கௌட வலிக்குக் காட்டும் எடுத்துக்காட்டு : ‘கால் நிமிர்த்தால் காண்பரிய வல்லியோ? புல்லாதார் மான் அனையார் மங்கல நாண் அல்லவோ! - தான மழைத்தடக்கை வார்கழற்கால் மானவேல் கிள்ளி புழைத்தடக்கை நால்வாய்ப் பொருப்பு’. சோழனது யானை தன்கால்களை உயர்த்தினால் அதன் கால்களைப் பிணித்திருக்கும் சங்கிலியின் கணுக்கள் மாத் திரமா அறுபடுகின்றன? பகைமன்னர்தம் மனைவியரின் மங்கல நாண்களும் அல்லவா அறுபடுகின்றன! - என்று பொருள்படும் இப்பாடற்கண், கால் நிமிர்த்தால் - இரண்டாம் வேற்றுமைத்தொகை; புல்லாதார் மானனையார் - புல்லாதார்க்கு மனைவியர் என, நான்கன் தொகை; மான் அனையார் - இரண்டன் தொகை; அனையார் மங்கல நாண் - ஆறன் தொகை; மங்கல நாண் - பண்புத் தொகை; தானக்கை - இரண்டன் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; மழைக்கை - உவமைத் தொகை; கழற்கால் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை; வேற்கிள்ளி - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; புழைக்கை - இதுவும் அது; கைப்பொருப்பு - இதுவும் அது; வாய்ப்பொருப்பு - இதுவும் அது; நால்வாய் - வினைத் தொகை. உருபு தொகுத லொடு பொருளும் உடன்தொகுதல் கௌட நெறியார்க்கு ‘வலி’ ஆகும். (இ. வி. அணியியல் பக். 70, 71) இதனைப் பாஞ்சால நெறியாகக்கொண்டு, ஆறுதொகையும் தொகுதலே கௌடவலி என்பர் மாறனலங்கார ஆசிரியர். எ-டு : ‘வன்கேழற் பன்றியாய் வான்பிறைக்கோட் டாழ்புனல்ஆழ் கொன்கேழ் கிளர்தாழ் குழல்களிப்ப - முன்கொணர்ந்த எம்பிரான் சங்காழி ஏந்தினான் எவ்வுளார் தம்பிரான் தாளே சரண்.’ வலிய கேழலாகிய பன்றியாய், வானின்கண் தோன்றும் பிறை போன்ற கோட்டாலே, ஆழ்ந்த புனலின்கண் அழுந்திய நிறம் கிளரும் தாழ்ந்த கூந்தலையுடையாளாகிய பூமிதேவியான வள் உள்ளம் களிப்ப, அவளை முன்னாள் புறத்தே கொண்டு வந்த எம்முடைய பிரான், சங்கினையும் ஆழியினையும் ஏந்தியான், எவ்வுயிர்க்கும் தலைவனாம்; அவனுடைய திருவடிகளே சரணமாம் - என்ற பொருளமைந்த இப்பாடற்- கண், பின் வருமாறு ஆறு தொகையும் காணப்படுவன. வான்பிறை - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; ஆழ்புனல் - வினைத்தொகை; வன்கேழல் - பண்புத்தொகை; கேழற்பன்றி - இருபெயரொட்டுப் பண்புத் தொகை; பிறைக் கோடு - உவமைத் தொகை; சங்காழி - உம்மைத் தொகை; தாழ்குழல் - வினைத்தொகை அன்மொழி; இவ்வாறு அறுவகைத் தொகைகளும் ஒருங்கே அமைந்த பாடலே கௌடவலியாம். (மா. அ. பா. 107) ச ச்ருங்கார ரஸம் - சுவைஅணி வகைகளுள் ஒன்றாகிய ‘உவகைச் சுவை’ அது காண்க. ச்லேஷாலங்காரம் - சிலேடையணி; அது காண்க. ச்லேஷோபமா - சிலேடை உவமை; அது காண்க. சகல உருவகம் - இது ‘சிறப்பு உருவகம்’ எனப்படும். ஒரு பொருளை உருவகம் செய்யும்வழி அதற்குப் பொருத்தமாக அதனொடு தொடர் புடைய பிற பொருள்களையும் உருவகம் செய்யும் சிறப்பு உருவத்திற்கு வீரசோழியம் தரும் பெயர் சகல உருவகம் என்பது. (வீ. சோ. 160) ‘சிறப்புருவகம்’ காண்க. சகோத்தி - ஸஹோத்தி. ‘புணர்நிலையணி’ காண்க. சங்கரம் - பாலுடன் கலந்த நீர்போல ஓரணி வெளிப்படையாய்த் தோன்ற மற்றை அணி குறிப்பினால் உணரப்படுமாறு ஒரு பாடலுள் இரண்டணியாய் நிற்பன சங்கரஅணியாம் என்று மாறனலங்காரம் கூறும். பாலும் நீரும் சேர்ந்தாற் போல விளங்காத பேதத்தை உடைய பல அணிகளின் கலப்புச் சங்கரஅணி எனப்படும் கலவை யணி. அது நான்கு வகைப்படும் என்று குவலயானந்தம் கூறும். அந்நூலும் சிறப்பாக இரண்டணிகளின் கலவையே கொள் கிறது. (மா. அ. 249, குவ. 117-120) ‘கலவையணி’ காண்க. சங்கீர்ணம் - ஸங்கீர்ணம் - ‘சங்கீரண அணி’ காண்க. சங்கீரணஅணி - அணியியலுள் கூறப்பட்ட அணிகள் பலவும் கலந்துவிடும் வகையில் செய்யுள் அமைப்பது. இது பலபொருள்கள் ஒன்று சேர எதற்கும் மிகுதி குறைவு இன்றாகக் கலந்த கலவை போன்றது. அணிகள் இரண்டே தம்முள் கூடிவரும் அமைப்புச் சங்கீரணம் எனப்படுதல் இல்லை. எ-டு : ‘தண்துறைநீர் நின்ற தவத்தால் அளிமருவு புண்டரிகம் நின்வதனம் போன்றதால் - உண்டோ, பயின்றார் உயிர்பருகும் பால்மொழியாய்! பார்மேல் முயன்றால் முடியாப் பொருள்?’ “நட்புக் கொண்டாருடைய உயிரைப் பருகும் இனிய பால் போலும் மொழியுடைய பெண்ணே! வண்டுகள் மொய்க்கும் தாமரை, தண்ணீரில் நின்று செய்த தவத்தால் கருணை மிக்க உனது முகத்தை நிகர்த்தது. உலகில் முயன்றால் அடைய முடியாத பொருளே இல்லை” என்ற பொருளமைந்த இப் பாடற்கண் பல அணிகளும் வந்துள்ளன. 1. தண்துறை நீர்நின்ற தவம் - தற்குறிப்பேற்றம் 2. தவத்தால் - கரும காரகரது. 4. அளி - வண்டு, கருணை எனப் பொருள்படுவதால் சிலேடை 5. புண்டரிகம் நின்வதனம் போன்றது - உவமையணி 6. உண்டோ முயன்றால் முடியாப் பொருள் - வேற்றுப் பொருள் வைப்பு. 7. உயிர் பருகும் பால் மொழியாய் - வியப்புச் சுவை. இவ்வாறு பலவணியும் கலந்து வந்தமையால் சங்கீரண அணியாம். (தண்டி. 89) சாமிநாதம் உவமை முதலிய அணிகளொடு பிற அணிகள் கலந்துவருவதைச் சங்கீரணம் என்னும். (192) சங்கீரண அணியின் மறுபெயர்கள் விரவியல் அணி. (வீ. சோ. 176) சேர்வை அணி, கலவை அணி (குவ. 116, 117) என்பன. சங்கீரண அணிவகை - ஏது உருவகம், விலக்கு உருவகம், தற்குறிப்பு விரோதச் சிலேடை, தற்குறிப்பு விரோத அதிசயம், வேற்றுப் பொருள் உவமை, விளக்கு ஏது, அவநுதிச் சிலேடை, உவமையுருவகம், சிலேடை யுருவகம், உவமைத் தீபகம், உவமைப் பின்வருநிலை, வேற்றுமை யுவமை, வேற்றுமையுருவகம், வேற்றுமைப் பொருள் சிலேடை, ஏதுவிலக்கு முதலியன. (சாமி. 193) சந்தயம் - ஐயவணி (மா. அ. 137) சந்தயமும் அதன் கூறுபாடுகளும் புலன் வாயிலாக நுகரும் பொறிகளாலாவது மனத்தினா லாவது ஒரு பொருளினை ஐயமுறுதலும் தெளிதலும் சந்தயம் என்னும் அணியாம். இது சுத்த சந்தயம், நிச்சய கர்ப்பம், நிச்சயாந்தம் என்று மூவகைப்படும். அஃதாவது ஐயம் தெளிவுறாதிருத்தல், தெளிவு அகப்படுத்தியிருத்தல், ஐயுற்றுத் தெளிவுறுதல் என்ற மூவகைத்து இவ்வைய அணி. இவற்றைத் தனித்தனித் தலைப்புள் காண்க. (மா. அ. 137) சந்தான உவமையணி - ஒன்றோடொன்று தொடர்புடைய பல பொருள்களை வெவ்வேறு பொருளுக்கு உவமையாகக் கூறுவதாம். எ-டு : ‘ஈர்ந்துநிலம் தோயும் இரும்பிடித் தடக்கையின் சேர்ந்துடன் செறிந்த குறங்கின், குறங்கென மால்வரை ஒழுகிய வாழை, வாழைப் பூவெனப் பொலிந்த ஓதி, ஓதி...’ (சிறுபாண். 19-28) பெண்யானையின் துதிக்கையைப் போன்ற குறங்கு, அக்குறங்குகளைப் போன்ற வாழை, வாழைப்பூவைப் போன்ற மயிர்முடி, அம்மயிர்முடி போன்ற கரிய செறிந்த கிளை களையுடைய வேங்கையின் பூக்கள், அவ்வேங்கை மலர்கள் என்று கருதி வண்டுகள் மொய்த்தற்கு வரும் சுணங்குகள், அச்சுணங்கினை ஒத்த கோங்கின் முகை, அம் முகையை ஒத்த முலைகள், அம்முலைகளை ஒத்த பனங்காய், அப்பனங்கா யின் நுங்கு போலச் சுவை தரும் எயிறுகள் - என்று ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல உவமைகள் பலபொருளுக்கு உவமையாய் வருதல் சந்தான உவமையாம். இவையாவும் ஒரு பெண்ணின் உறுப்புக்களுக்கே உவமையாக வரும் ஒப்புமை கருதி ‘மாலை உவமை’யின்பால் கொள்ளப்படுதலும் உண்டு. மாலைஉவமையாவது ஒன்றோடொன்று தொடர்புடைய பல பொருள்களை ஒரு பொருளுக்கு உவமையாகக் கூறுவதாம். (இ. வி. 645 உரை; தண்டி. 39 உரை) இச்சந்தான உவமையை வீரசோழியம் வேறாகக் கூறும் (கா. 157); உபமானத்தையும் உபமேயத்தையும் சிலேடை நயம் அமைய ஒரே வகையான சொற்றொடர்கள் இரண்டால் அமைப்பது ‘சந்தான உவமை’ என்று கூறும். சந்திராலோகம் குறிப்பிடும் பொருளணிகள் - அகமலர்ச்சி அணி, அரதனமாலை அணி, இகழ்ச்சி அணி, இயைபின்மை அணி, இலேச அணி, இறை அணி, இன்ப அணி, இன்மை நவிற்சி அணி, உடன் நிகழ்ச்சி அணி, உயர்வு நவிற்சி அணி, உய்த்துணர்வு அணி, உருவக அணி, உலகு வழக்கு நவிற்சி அணி, உவமை அணி, உறழ்ச்சி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, எதிர்நிலை அணி, எதிர்மறை அணி, எளிதின்முடிபு அணி, ஏது அணி, ஐய அணி, ஒப்புமைக் கூட்ட அணி, ஒழித்துக் காட்டணி, ஒழிப்பணி, ஒற்றை மணிமாலை அணி, ஒன்றற்கு ஒன்று உதவி அணி, கரவு வெளிப்படுப்பு அணி, கருத்துடை அடை அணி, கருத்துடை அடைகொளி அணி, கற்றோர் நவிற்சி அணி, காட்சி அணி, காரணமாலை அணி, காரண ஆராய்ச்சி அணி, குறிநிலை அணி, குறிப்புநவிற் அணி, கூடாமை அணி, கூட்ட அணி, சிறப்பு அணி, சிறப்புநிலை அணி, சிறுமை அணி, சுருங்கச் சொல்லல் அணி, தகுதி அணி, தகுதி யின்மை அணி, தற்குறிப்பு அணி, தன்குணம் மிகை அணி, தன்மை நவிற்சி அணி, திரிபு அணி, துன்ப அணி, தொடர்நிலை செய்யுட்குறி அணி, தொடர்நிலை செய்யுட் பொருட் பேறு அணி, தொடர்பின்மை அணி, தொடர்முழுது உவமை அணி, தொல்உருப்பெறல் அணி, நிகழ்வின் நவிற்சி அணி, நிரல் நிறை அணி, நினைப்பு அணி, நுட்ப அணி, பலபடப்புனைவு அணி, பல்பொருள் சொற்றொடர் அணி, பிரிநிலை நவிற்சி அணி, பிறிது ஆராய்ச்சி அணி, பிறிதின் குணம் பெறல் அணி, பிறிதின் குணம் பெறாமை அணி, பிறிதின் நவிற்சி அணி, பின்வரு விளக்கு அணி, புகழ்பொருள் உவமை அணி, புனைவிலி புகழ்ச்சி அணி, புனைவுளி விளைவு அணி, பெருமை அணி, பொதுமை அணி, பொய்த்தற்குறிப்பு அணி, மடங்குதல் நவிற்சி அணி, மயக்க அணி, மலர்ச்சி அணி, மறையாமை அணி, மறைவு அணி, மற்றதற்கு ஆக்கல் அணி, மேன்மேல் உயர்ச்சி அணி, யுக்தி அணி, வஞ்சநவிற்சி அணி, வஞ்சப்பழிப்பு அணி, வஞ்சப்புகழ்ச்சி அணி, வல்லோர் நவிற்சி அணி, வனப்புநிலை அணி, விதி அணி, வியப்பு அணி, விலக்கு அணி, விளக்கு அணி, விறல்கோள் அணி, வினைமுதல் விளக்கு அணி, வீறுகோள் அணி, வெளிப்படை நவிற்சி அணி, வேண்டல் அணி, வேற்றுப் பொருள் வைப்பு அணி, வேற்றுமை அணி - என்ற நூறும், கலப்பு அணிகளாகிய கலவை அணி, சேர்வை அணி என்பனவும் ஆம். சதேகாலங்காரம் - ஸந்தேஹாலங்காரம்; ‘சந்தயமும் அதன் கூறுபாடுகளும்’ காண்க. சப்தப் பிரமாணாலங்காரம் - இது தமிழில் சொற்பிரமாண அணி என வழங்கப்பெறு கிறது. ‘சொற்பிரமாண அணி’ காண்க. இது வேதப்பிரமாணம், °மிருதிப் பிரமாணம், சிஷ்டானுஷ் டானப் பிரமாணம், ஆகமப் பிரமாணம், புராணப் பிரமா ணம், லிங்கப் பிரமாணம் என அறுவகைப்படும். (கு.வ. 111) சப்தா விருத்தி - ‘சொல் பின் வருநிலை யணி’ - காண்க. சம்சயாட்சேபம் - ஸம்சயாnக்ஷபம் ‘ஐயவிலக்கு’க் காண்க. சம்சயோபமா - ஸம்சயோபமா ‘ஐயநிலை உவமை’ காண்க. சம்சிருட்டி அலங்காரம் - சம்ச்ருஷ்டி; ‘பொருள்அணிச் சேர்வை அணி’ காண்க சம்பந்தம் இல்லாததைச் சம்பந்தமாகக் கூறிய மோக உவமை - எ-டு : ‘கோதிலாப் பொன்னைக் குழைத்துமதன் தூரியக்கோல் காதலால் கைப்பற்றிக் காட்கரைமால் - போதம் குழைத்தருள்பொற் கொம்பின் குறித்ததென்கோ இன்பம் தழைத்தருள்இக் கொம்பினையே தான்’. தலைவன் தலைவியிடம் நலம்புனைந்துரைத்தல் என்னும் துறைக்கண், “பொன்னைக் கரைத்துச் சித்திரம் வரையும் கோலை எடுத்து அப்பொன் கரைசலைக் கொண்டு திருக் காட்கரைத் திருமாலின் ஞானஅருளையே குழைத்து அமைத் தாற் போன்ற இப்பெண்ணின் உருவத்தை மன்மதன் அமைத் தானோ” என்ற கருத்தமைந்த இப்பாடற்கண், சித்திரம் வரை தற்குரிய வண்ணச் சுண்ணங்களை விடுத்துப் பொன்னைக் கரைத்து ஓவியம் வரைதல் என்பது சம்பந்தம் இல்லாத தனைச் சம்பந்தமாகக் கூறிய மோக உவமை. மோகம் - மயக்கம். இது காதல் மயக்கத்தால் கூறியது. இதனை விகார உவமை, அதிசய உவமை இவற்றுள் அடக்கலாம். (மா. அ. பாடல் 264) சம்பந்தம் உடையதனைச் சம்பந்தம் இல்லையாக்கி வந்த உருவகம் - எ-டு : ‘காவில் பிறவாக் கனகக் கொடிகமல வாவிக்கு, அடங்கா மடஅன்னம் - பூவின் பிறவா நறுந்தேறல் பேர்நகர்மால் வெற்பில் உறவாய் நிறைஉண் உரு.’ தலைவியின் உருவம் சோலையில் பிறவாத பொற்கொடி; ஓடையில் பயிலாத அன்னம்; பூவில் பிறவாத தேன் - எனக் கொடிக்கு இடமாகிய சோலையையும், அன்னத்திற்கு இட மாகிய ஓடையையும், தேனுக்குப் பிறப்பிடமாகிய பூக்களை யும் விலக்கி உருவகம் செய்த இதன்கண், சம்பந்தமுடை யதைச் சம்பந்தம் இல்லையாக்கி வந்த உருவகம் வந்துள்ளது. இது விலக்கு உருவகத்தின்பாற்படும். (மா. அ. பாடல் 263; தண்டி. 39-3) சம்பாவனாலங்காரம் - ‘உய்த்துணர் அணி’ காண்க. சம்பவாலங்காரம் - தமிழில் பிறப்புப் பிரமாண அணி எனப்படும்; அது காண்க. (குவ. 114.) சமஉவமை - இழிவு உயர்வுப் புகழ்ச்சி உவமையும், உயர்வு இழிவுப் புகழ்ச்சி உவமையும் போல உபமான உபமேயங்களை ஒன்றற்கு ஒன்று மிகவும் உயர்த்தியோ தாழ்த்தியோ கூறாமல் இரண்டனை யும் ஒரே தகுதியுடையவாகக் கூறும் அணி. எ-டு : ‘தந்தையை ஒக்கும் மகன்’ ‘தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான்’ (தொ.பொ. 147 நச்.) தந்தை என்ற உபமானமும், மகன் என்ற உபமேயமும் சமமான தகுதியுடையன ஆதலின், இது சமஉவமையாம். (வீ. சோ. 159 உரை) சமத்த ரூபகம் - ஸம°த ரூபகம்; ‘தொகை உருவகம்’ காண்க. சமத்த வியத்த ரூபகம் - ‘ஸம°த வ்ய°த ரூபகம்; ‘தொகைவிரி உருவகம்’ காண்க. சமநிலை - (1) வன்மை மென்மை இடைமை இம்மூன்றும் சமமாகக் கலந்துவரத் தொடுக்கும் செய்யுட்குணம் . (தண்டி. 18) (டு) (2) சாந்தம் என்னும் சுவை - ‘மற்றிவ் வெட்டனோடும் சமநிலை கூட்டி’ (தொ. பொ. 251 பேரா) சமநிலை உவமை - சம உவமை ‘சமநிலை உவமை’ எனவும் வழங்கப்பெறும். அது காண்க. சமநிலை என்னும் குணஅணி நான்கடியும் எழுத்து ஒத்து வருதலும், வல்லினம் முதலிய மூவகை மெய்யும் சமமாக இருக்குமாறு செய்யுள் அமைப்ப தும் இதன் இலக்கணமாம். அவற்றுள் மெல்லினம் மிகுதல் வைதருப்பச் சமநிலை. வல்லினம் மிகுதல் கௌடச் சமநிலை. இடையினம் மிகுதல் பாஞ்சாலச் சமநிலை என்ப. ‘சமனிலை’ என்றும் ஓதுப. (மா. அ. பா. 96 உரை) சமநிலை என்னும் குணஅணியின் மறுபெயர் - சமதை (வீ. சோ. 148) சமர் வீரிய மிகுதி உதாத்தம் - போரில் ஆற்றலைக் காட்டும் திறத்தை உயர்த்துக் கூறுவது. எ-டு : ‘குன்(று)ஆ யிரம்சிர மும்கையு மாய்உருக் கொண்டதெனத் துன்(று)ஆடல் மூல பெலப்படை தான்முற்றும் சுற்றியநாள் ஒன்றாம் உருவம் அலகில்பல் கோடி உருவெனலாய்ச் சென்றுஆடல் கொண்டவன் வின்மைஇங்கு ஏதென்று செப்புவனே’ இராமன் பலராகத் தோற்றம் அளித்து ஆயிரக்கணக்கானவர் கூடிய மூலபலச் சேனையை ஒருவனாகவே நின்று வென்ற சமர்வீரிய மிகுதி கூறிய உதாத்த அணி இப்பாடற்கண் அமைந்துள்ளது. (மா. அ. 244; பாடல் 573) சமாகிதம் - ஸமாஹிதம்; ‘சமாயித அணி’ காண்க. சமாசாலங்காரம் - ஸமாஸாலங்காரம்; ‘ஒட்டணி’ காண்க. சமாசோத்தி அலங்காரம் - ஸமாஸோக்தி; ‘சுருங்கச்சொல்லல்’ என்னும் அணி காண்க. சமாசோக்தி - அடைமொழி ஒப்புமை ஆற்றல்களால் அப்பொருட் செய்தி தோன்றப் புகழ்பொருட் செய்தியைச் சொல்லும் அணி. (‘சுருங்கச் சொல்லல் அணி’ என்பதும் அது.) (அணியியல். 23) (டு) சமாதான உருவக அணி - ஒன்றை நன்மை செய்வதாக உருவகம் செய்து, பின் அதனையே தீமை தருவதாகக் கூறி, அதற்கும் சமாதானமாக வேறு காரணம் உண்டு எனக் கூறுவது. எ-டு : ‘கைகாந்தள், வாய்குமுதம், கண்நெய்தல், காரிகையீர்! மெய்வார் தளிர்கொங்கை மென்கோங்கம், - இவ்வனைத்தும் வன்மைசேர்ந்(து) ஆவி வருத்துவது மாதவமொன்(று) இன்மையே அன்றோ எமக்கு!’ “கை காந்தள்பூ; வாய் குமுதப்பூ; கண் நெய்தற்பூ; உடலோ தளிர்; கொங்கை கோங்கமொட்டு; இவ்வாறு அனைத்துமே மெல்லிய பூக்களும் தளிரும் மொட்டும் ஆகிய காரிகையீர்! இவை வலிமைபெற்று என் உயிரை வருத்துதற்குக் காரணம் எனக்கு நற்றவம் யாதும் இல்லாமையே” என்று தலைவன் தோழியைக் குறை வேண்டுவதாக வரும் இப்பாடற்கண், நலம்தரும் பொருள்களாக உருவகித்துச் சொன்னவற்றைத் துன்பம் தருவனவாகக் கூறி அதற்கும் சமாதானம் கூறியுள் ளமை சமாதான உருவகமாம். (தண்டி. 37 - 9) சமாதான ரூபகம் - நட்பு உருவகம் (மா. அ. 120); ‘சமாதான உருவகம்’ காண்க. சமாதி என்னும் குண அணி - ஒரு பொருளுக்குரிய இயல்பினை மற்றொரு பொருளின் மேல் ஏற்றி அதற்குப் பொருந்த வினைச்சொற்களைப் புணர்த்தல். இது மூன்று நெறியார்க்கும் ஒக்கும். ‘அகல்இரு விசும்பின் பாயிருள் பருகிப் பகல்சான்று எழுதரு பல்கதிர்ப் பகுதி’ (பெரும்பாண். 1, 2) ஆகாயத்தில் பரவியுள்ள இருளை விழுங்கிப் பகலைக் கக்கிக் கொண்டு உதித்தெழும் பலகதிர்களைக் கொண்ட சூரியன் என்று பொருள்படும் இவ்வடிகளில், இருளை அகற்றுவதும் பகலை வெளிப்படுத்துவதுமாகிய செயல்களை மனிதர் களின் விழுங்குதல் கக்குதல் என்னும் செயல்கள் ஆக்கி உணர்த்தியமை இக்குண அணியாம். இனி, ‘கன்னிமதில்’ எனப் பகைவரால் அதுவரையில் வெல் லப்படாத மதில்அரணைக் குறிப்பதும், ‘குமரிஞாழல்’ என அதுவரைப் பூக்கள் மலராத சுரபுன்னை மரத்தைக் கூறுவ தும், ‘கன்னிப்போர்’ என முதன்முதலாகச் செய்யும் போரினைச் சொல்வதும் சமாதி என்னும் இக்குணஅணி பற்றியே என்பதும் அறியப்படும். (தண்டி. 25) சமாயித அணி - ஸமாஹிதம் - சமாயிதம்; நன்கு கூடுதல். அஃதாவது தாம் முயன்ற ஒருசெயல் அம்முயற்சியை முழுதும் செய்யாத முன்னரே பிறிதொரு காரணத்தால் பயன் நிறைவுற்றதாகச் சொல்வது. எ-டு : ‘அருவியங் குன்றம் அரக்கன் பெயர்ப்ப, வெருவிய வெற்பரையன் பாவை - பெருமான் அணிஆகம் ஆரத் தழுவினாள், தான்முன் தணியாத ஊடல் தணிந்து’ பார்வதிதேவிக்குக் கங்கை காரணமாகச் சிவபெருமான்பால் நிகழ்ந்த ஊடல் அவர் முயன்று உணர்த்தவும் தணியாம லிருந்தது; அந்நேரத்தில் இராவணன் வந்து கயிலைமலையைப் பெயர்க்க முயலவே, அம்மலை அசைவதைக் கண்டு அஞ்சிய பார்வதி, தான் முன்பு தணியப்பெறாத ஊடல் தணித்து பெருமானைத் தழுவிக்கொண்டாள் - என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், சிவபெருமான் முயன்றும் தணியாத ஊடல் இராவணன்செயல் காரணமாக எளிதில் தணிந்தது எனக் கூறியமையால் இது சமாயித அணியாயிற்று. (தண்டி. 73) இஃது எளிதில் முடிவு அணி, துணைப் பேறணி (சந்.83; குவ. 57 வீ.சோ. 154) எனவும் வேறு பெயர்கள் பெறும். சமாயித அணியின் மறு பெயர்கள் - துணைப் பேறணி (வீ. சோ. 154); எளிதில் முடிவணி (ச. 83. குவ. 87) என்பன. சமாலங்காரம் - ஸமாலங்காரம்; தகுதி அணி காண்க. சமுச்சய அணி - ஒரு பொருளுக்கு இன்பமோ துன்பமோ உண்டாகிய செய்தியை ஒன்றாகக் கூறாது பலவாக அடுக்கிக் கூறலும், இன்பமும் துன்பமும் ஒருவருக்கு மாத்திரமன்றி இருவரிடத் துப் பிறந்தனவாகக் கூறலும், இன்பமோ துன்பமோ ஒருவருக்கே இரண்டிடங்களிற் பிறந்தனவாகக் கூறலும், என மூவகைத் தாகச் சமுச்சய அணி உணரப்படும். இதனைக் ‘கூட்ட அணி’ என்று சந்திராலோகம் கூறும். (ச. 81, குவ. 55) அ) இன்ப துன்பங்களைப் பலவாக அடுக்கிக் கூறும் சமுச்சய அணி எ-டு : ‘கடிதுமலர்ப் பாணம்; கடிதுஅதனில் தென்றல்; கொடிதுமதி, வேயும் கொடிதால்; - படிதழைக்கத் தோற்றியபா மாறன் துடரியின்மான் இன்னுயிரைப் போற்றுவ(து)ஆர்? மன்னா! புகல்-’ தலைவியைத் தலைவன் பிரியக் கருதியவழித் தலைவிக்கு மன்மதனுடைய மலரம்புகளும், தென்றலும், மதியமும், வேய்ங் குழலும் ஆகிய பலவும் துன்பம் தரும் எனத் துன்பம். தருவன பலவற்றையும் அடுக்கிக் கூறுதல் சமுச்சய அணி வகை. (மா. அ. பாடல் 563) ஆ) இன்பதுன்பங்கள் இருவயின் பிறந்தனவாகக் கூறும் சமுச்சய அணி எ-டு : ‘காரி தருமாறன் காசினிமீ தேஉதிப்ப ஆரியர்மெய் பூரித்(து) அகமகிழ்ந்து - பேரின்பம் உள்ளத் துடிக்கும் உறுவலத்தோள்; வாதியர்மெய் துள்ளத் துடித்ததிடத் தோள்’. நம்மாழ்வார் திருவவதாரம் செய்ததால் வைதிக சமயத்தவர் மெய்பூரிக்க மனம்மகிழ நன்னிமித்தமாக வலத்தோள்கள் துடித்தன. வாதம் செய்வார்க்குத் தீநிமித்தமாக இடத் தோள்கள் துடித்தன. என ஒரு நேரத்தின்கண்ணேயே இன்ப மும் துன்பமும் ஈரிடங்களில் பிறந்தனவாகக் கூறுதல் இவ்வணி. (மா. அ. பாடல் 564) இ) இன்பமோ துன்பமோ ஒருவர்பால் இருவயின் தோன்றும் சமுச்சய அணி எ-டு : ‘உத்தமப்பேர் இன்பம் உணர்த்தும் தமிழ்மறைப்பா வித்தகத்தால் தந்த விதிநினைந்து - முத்தி அளிக்குமகிழ் மாறன் அருள்முகத்தைக் கண்டு களிக்குமனம் போலவும்என் கண்.’ “பேரின்பம் அளிக்கும் திருவாய்மொழியை அருளிச்செய்த நம்மாழ்வாரின் அருள் சுரக்கும் முகத்தைக் கண்டு களிக்கும் என் மனம் போல், என் கண்களும் களிக்கின்றன” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், இன்பம் மனத்தின்கண் மாத்திரம் அன்றிக் கண்களிடத்தும் உண்டான செய்தியைக் கூறுதற்கண் இவ்வணிவகை அமைந்தவாறு. (மா.அ. பாடல் 566) சமுச்சய உவமையணி - உபமானத்தை உபமேயம் ஒரு காரணத்தால் ஒத்தது ஆவதன்றி வேறு ஒரு காரணத்தாலும் ஒக்கின்றது எனக் காட்டுவது. சமுச்சயம் - எச்சஉம்மை. எ-டு : ‘அளவே வடிவுஒப்ப தன்றியே, பச்சை இளவேய் நிறத்தானும் ஏய்க்கும்; - துளவுஏய் கலைக்குமரி போர்துளக்கும் கார்அவுணர் வீரம் தொலைக்கும்அரி ஏறுஉகைப்பாள் தோள்’. போரிடும் கொடிய அரக்கருடைய வீரத்தை அழிக்கும் சிங்கத்தை வாகனமாகக் கொண்டவளும், திருத்துழாய் மாலையை அணிந்திருப்பவளும், ஆகிய கொற்றவையின் தோள்கள் இளைய மூங்கிலை அளவினாலும் வடிவினாலும் ஒத்திருப்பதன்றி நிறத்தினானும் ஒத்து இருக்கின்றன என்ற பொருள் அமைந்த இப்பாடற்கண், முன் வடிவால் ஒப்பிட்டு ‘அன்றி’ எனப்பிரித்து, பின்னும் ஒரு பொதுஇயல்பான ‘நிறத் தானும்’ என எச்சவும்மை கொடுத்து ஒப்புமை கூறியமை இவ்வணியாம். (தண்டி. 32-4) சமுச்சயம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (85) வருவதோர் அணி. பலவிதமாக இருக்கின்ற ஒருபொருளில் பலவிதமாகிய தொழில்கள் செய்யப்படுவது. எ-டு : ‘..... சங்கரற்கு அரவு அரைக்கு பூணாம் புனைமாலை யாம்’ (தண்டி. 40-7) என்றாற் போல்வன. சமுச்சயோபமா - சமுச்சய உவமை எனவும், உம்மை உவமை எனவும் தமிழ் நூலார் கூறுவர். ‘சமுச்சய உவமை’ காண்க. சாசிவ்யாட்சேபம் - ஸாசிவ்யாnக்ஷபம்; ‘துணைசெயல் தடைமொழி அணி’ காண்க. சாடூபமோ - ‘இன்சொல் உவமையணி’ காண்க. சாதி இடைநிலைத் தீவக அணி - தீவக அணிவகைகளுள் ஒன்று. பலவற்றிற்கும் பொதுத் தன்மையாக வரும் சாதி பற்றி வந்த ஒருபெயர், பாடலின் இடையேநின்று பல இடங்களிலும் சென்று இணைந்து பொருள் பயக்க வருவது. எ-டு : ‘கர(ம்)மருவு பொற்றொடியாம், காலில் கழலாம், பொருவில், புயவலயம் ஆகும், - அர(வு)அரைமேல். நாண்ஆம், அரற்கு நகைமணிசேர் தாழ்குழையாம், பூண்ஆம், புனைமாலை ஆம்’. அரவு, அரனுக்குக் கையில் அணியும் வளையாகும்; காலில் வீரக்கழல் ஆகும்; தோள்வளை ஆகும்; இடையில் அரை ஞாண் ஆகும்; காதில் குழை ஆகும்; பிற அணியும் ஆகும்; மாலையும் ஆகும் என்ற பொருள் அமைந்த இப்பாடற்கண், இடையே நிற்கும் ‘அரவு’ என்ற சொல் சாதிப்பெயர் (பாம்புத் தன்மை யுடைய அனைத்திற்கும் பொதுவாய் வருவது). அது பாடலின் முதல் கடையிலும் சென்று இணைந்து பொருள் பயந்தமையால் இது சாதி இடைநிலைத் தீவக அணியாம். இடைநிலைச் சாதித் தீவகம் எனவும் பெயர் அமையும். (தண்டி. 40-7) சாதிக் கடைநிலைத் தீவக அணி - இது கடைநிலை (-இறுதிநிலை)ச் சாதித் தீவகம் எனவும்படும்; ஓர் இனமாகிய சாதியைக் குறிக்கும் சொல் பாடலின் கடைக்கண் அமைந்து முதல் இடைச் செய்திகளொடும் சேர அமையும் தீவக அணிவகை. எ-டு : தன்எவ்வம் நோக்காது தாயர் வெறுத்துளதாம் என்எவ்வம் நோக்கும் இகல்விளைப்பான் - மன்அருள்கூர் மோகூர னைத்தொழுதேன் மோகமிகக் காமாகூ கூகூ எனும்கோ கிலம்.’ “தான் கூவினால் தன்னை அடைகாத்த காக்கை கூட்டை விட்டுத் தன்னை ஓட்டிவிடும் என்பதனையும் கருதாது, தன் குரலால் தன்னை வளர்த்த தாய்க்கு வெறுப்பு ஏற்படும் என்பதனையும் நோக்காது, கூவும் குயில் யான் படும் துயரத்தை நினைத்து மீண்டும் துயரத்தை மிகுத்தற்கு, மோகூரில் உள்ள திருமாலைத் தொழுது மயக்கமுற்றிருக்கும் எனக்கு அம்மயக்கம் மேலும் மிகுமாறு இடைவிடாது கூவுகிறது” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், கோகிலம் தன்எவ்வம் நோக்காது கூகூகூ எனும் கோகிலம் இகல் விளைப்பான் கூகூகூ எனும் கோகிலம் தொழுதேன் மோகம்மிகக் கூகூகூ எனும் - என கடையிலுள்ள கோகிலம் என்னும் சாதிப்பெயர் ஏனை இடங்களிலும் சென்று இணைந்து பொருள் தந்தவாறு. (மா. அ. 160; பாடல் 380) சாதிக்கு ஏற்ற உவமை அணி - சாதியாவது பலபொருள்களுக்கும் பொதுப்பட வரும் தன்மை. மக்கள் விலங்கு மரம் பசு போல்வன சாதிப்பெயராம். உவமை கூறும் போது உபமானத்திற்கும் உபமேயத்திற்கும் சாதிபற்றிய பொதுத்தன்மை அமையக் கூறலே ஏற்புடைத்து. எ-டு : ‘விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்’ (குறள். 410) கற்றவர்களுக்கு மக்களையும் கல்லாதவர்களுக்கு விலங்கை யும் உவமை கூறுதல் உயர்வு இழிவு பற்றிச் சாதிக்கேற்ற உவமை புணர்த்தவாறு. (இ. வி. 639) சாதிக்குக் கிரியையொடு விரோதச் சிலேடை - ஓரினம் தனக்கு ஒவ்வாத செயல் செய்ததாகச் சிலேடைக் கருத்தான் பெறப்பட வைத்தல் இச்சிலேடை வகையாம். எ-டு : ‘மாக ருடனடுங்க மம்மர் தருவ, தன யோக மயிலினுரத் தோங்கி - ஆகம் நுடங்கும் உடன்பிறப்பை நோக்கா(து) ஒறுக்கத் தொடங்குமெமை என்செயா தோ?’ “தேவர்களும் உடல்நடுங்குமாறு காமப்பிணி தருவனவாகிய இரண்டு நகில்களும் இத்தலைவியின் மார்பகத்தே பருத்துத் தம்மோடு உடன்பிறந்த மெல்லிய இடையையே வருத்தும் போது நம்மை இவை துன்பம் செய்யாது விடுமோ?” என்ற பொருளமைந்த இப்பாடற்கண். ‘மா கருடன் நடுங்க மம்மர் தருவதுஅன யோகம் மயிலின் உரத்து ஓங்கி’ - என்னும் தொடர், பெரிய கருடன் நடுங்குமாறு அன்னத்தின் கூட்டம் மயிலின் துணைவலியோடும் மிகுந்து மயக்கத்தைத் தருகிறது என்ற சிலேடைக் கருத்தில், அன்னமும் மயிலும் வலிய கருடனை நடுங்கவைத்தல் என்ற செயல், அன்னம் மயில் என்ற சாதிகளின் செயலுக்கு ஒவ்வாத செயலாம். (மா. அ. 155; பா. 349) சாதிக்குக் குணத்தொடு விரோதச் சிலேடை - ஓரினத்திற்கு அதன் பண்புகளொடு மாறுபாட்டைச் சிலேடை அணிகொண்டு அமைக்கும் வகை. எ-டு : ‘கோபம் பயின்றவிடம் கூர்தாப ரம்குறுகத் தாபம் தவிர்ந்(து)உயிரும் தண்ணென்ற’ இச்சோலையில் இந்திரகோபப் பூச்சிகள் நிறையக் காணப் படும் மரங்களை நெருங்கிய அளவில், வெயிலின் வெப்பம் நீங்க உடல் உறுப்புக்கள் குளிர்ச்சியுற்றன என்பது நேரிய பொருள். பயின்ற + இடம் = பயின்றவிடம். கோபம் பயின்ற விடம் கூர் தாபரம் குறுக - மக்களது - இனத்திடம் சினம் நீங்காத விடம் மிகுந்த மரங்களை அணு கிய அளவில்; தாபம்... தண்ணென்ற - உடலில் கோடையின் வெப்பம் நீங்க உறுப்புக்களும் உயிரும் தண்ணென்றன என்ற சிலேடைப் பொருளில், விடமரமாகிய சாதி தாபத்தை நீக்குதல் அவற்றின் சாதிக்கு அவற்றின் பண்பொடு மாறு பட்ட செயல் ஆதலின், சாதிக்குக் குணத்தொடு விரோதச் சிலேடை ஆயிற்று. (மா. அ. 155; பாடல் 350) சாதிக்குச் சாதியொடு விரோதச் சிலேடை - ஓரினத்தை அதனுடன் மாறுபட்ட மற்றோர் இனமாகச் சிலேடைப் பொருளால் உணர்த்தும் அணி. எ-டு : ‘எத்திரம்என் றேஅறியேன் என்னளவில் காரிதரும் புத்திரனார் பொன்அம் புயப்போது - முத்தநகை மின் குமுதப் போ(து)அகல வேனிலான் எய்வதற்கு மன்குமுதப் போதாய வாறு.’ “காரியார் புதல்வராகிய மாறனாருடைய பொலிவுடைய அழகிய புயத்தில் சூட்டிய மாலையைக் கண்டு யான் மகிழும் போது, (அதனை எனக்கு அளிக்காமல்) அவர் நீங்கிய அளவில், மன்மதன் என்மேல் அம்பு எய்யுமாறு நிலைபெற்ற கலகத்தைச் செய்யும் நேரம் வந்ததன் காரணம் எனக்குப் போதரவில்லை” என்ற தலைவியின் கூற்று இதற்கு நேரான பொருள். மாறனுடைய பொன் அம்புயப்போது குமுதப்போதாயவாறு அறிகிலேன். மாறனாருடைய தாமரைமலர் குமுதமலராய காரணம் போதரவில்லை என்ற சிலேடைப் பொருளில், தாமரை என்ற சாதி குமுதம் என்ற சாதி ஆயினமை, சாதிக்கு சாதியுடன் விரோதச் சிலேடையாம்.(மா. அ. 155; பாடல் 347) சாதிக்குப் பொருளோடு விரோதச் சிலேடை - ஓரினத்துக்குப் பொருத்தமில்லாப் பொருளொடு சிலேடைப் பொருள் அமையப் பாடும் அணிவகை. எ-டு : ‘கார்க்கடற்பார் வாழ்வுபெறக் காரிதரும் கண்ணனுளத்(து) ஏர்க்கருணைக் கேசரியாய் எய்துருவைப் - போர்க்கழியா மெய்யன்நன்கு பேரன்என்ப மெய்யுணர்ந்த ஆரணங்கள் ஐயமின்றி யேதெளிந்து ளார்’. இவ்வுலகில் வாழக் காரியாருக்கு மகனாராக உதித்த கண்ணன் உள்ளத்து ஏர்க் கருணைக்கே சரி-(இணை) யாய் எய்திய உருவத்தைப் போர்க்கழியார் ஆகிய சத்தியவிரத ருடைய பேரன் என்று சான்றோர் கூறுவர் என்பது பொருள். கண்ணன் உளத்து ஏர்க்கருணைக் கேசரியாய் எய்து உருவை நன் குபேரன் என்ப - கண்ணனுடைய உள்ளக் கருணையால் பரசமய வாதிகளாகிய யானைகளை வெருட்டும் சிங்க ஏறாகிய வடிவினை நல்ல குபேரன் வடிவு என்பர் என்ற சிலேடைப் பொருளில், சிங்கத்தின் வடிவை இயக்கர் தலைவனான குபேரன்வடிவு என்று கூறுதற்கண், சிங்கச் சாதி வடிவு இயக்கர் வடிவு என்ற பொருளொடு மாறுபடுதலின், இது சாதிக்குப் பொருளொடு, விரோதச் சிலேடை அமைந்துள்ளது. (மா. அ. 155; பா. 351) சாதிக்குறை விசேட அணி - சாதியில் குறைவுடைய காரணம் காட்டிச் சிறப்புரைக்கும் அணி. எ-டு : ‘மேய நிரைபுரந்து வெண்ணெய் தொடுஉண்ட மாயனார் மா(று)ஏற்(று) அமர்புரிந்தார் - தூய பெருந்தருவும் பின்னும் கொடுத்துடைந்தார், விண்மேல் புரந்தரனும் வானோரும் போல்’. பசுக்களை மேய்த்து வெண்ணெய் எடுத்துண்ட கண்ணன் ஆயர் குலத்தவனே ஆயினும், அவன் போரிட்டபோது, இந்திரனும் அவனுக்குத் துணையாக வந்த பிறதேவர்களும், கண்ணன் விரும்பிய தேவ தருவான பாரிசாத மரத்தைத் தந்துவிட்டுப் புறங்காட்டி ஓடினர் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், மானிடருள் ஆயரினத்தில் தோன்றிய கண்ணன் தேவசாதி யையும் புறங்கண்ட சிறப்புக் கூறப்பட்டமை சாதிக்குறை விசேட அணியாம். (தண்ட. 79-3) சாதித் தன்மை யணி - ஓர் இனப்பொருளின் தன்மையினை உள்ளவாறு கூறுதல். எ-டு : பத்தித்த (அ)கட்ட கறைமிடற்ற பைவிரியும் துத்திக் கவைநாத் துளைஎயிற்ற - மெய்த்தவத்தோர் ஆகத்தான் அம்பலத்தான் ஆரா அமுதணங்கின் பாகத்தான் சூடும் பணி.’ சிவபெருமான் சூடும் பாம்புகள் கோடுகள் பொருந்திய வயிற்றையுடையன; கரிய கழுத்தையுடையன; படத்தின்கண் புள்ளிகளையுடையன; பிளப்பான நாவினை யுடையன; உள் துளையுடைய பற்களை யுடையன - எனப் பாம்பு என்னும் சாதியின் (-இனத்தின்) தன்மைகளை மிகைப்படுத்தாமல் உள்ளபடியே விளக்கிக் கூறியுள்ளமை சாதித்தன்மை யணியாம். (தண்டி. 30-3) சாதி நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டணி - சில சாதிப் பொருள்களைக் கூறி அவற்றைக் கொண்டு வேறு ஒரு கருத்தைப் பெறப்படவைக்கும் ஒட்டணிவகை. எ-டு : ‘வாய்ந்ததமிழ் மாறன் அருட்புலவீர்! மத்திமநோய்க்(கு) ஏய்ந்தமருந்(து) ஆவின்பால் என்றக்கால் - ஆய்ந்ததைஅக் கற்றாவின் பாலுணர்ந்து கைக்கொளார் மேதியின்பால் பெற்றார்க்குப் போமோ, பிணி?’ பித்த நோய் தீர ஆவின்பாலே மருந்து என்று கூறவும், அதனை விடுத்து எருமையின் பால் உண்டார்க்குப் பிணி தீராது என்பது வெளிப்படைப் பொருள். இதனால் பின்வரும் கருத்துப் பெறப்பட்டது : பதி, பசு, பாசம் என்ற மூன்றனுள் நடுவணதாகிய பசு என்னும் ஆன்மாவைப் பற்றிய நோய் நீங்குதற்குத் திருவாய்மொழி யாகிய பசுவின் பாலை விடுத்து, ஏனைய வேதநெறி அல்லாத நூல்களாகிய எருமைப்பாலைப் பருகுவதால் பயனில்லை என்பது. இப்பாடல் ஒட்டணி பசு எருமை என்னும் சாதிகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது. (மா. அ. 125; பா. 285) சாதி முதல்நிலைத் தீவக அணி - சாதியைக் காட்டும் சொல் பாடலின் முதற்கண் நின்று பல இடங்களிலும் இணைந்து பொருள் பயப்பது. எ-டு : ‘தென்றல் அநங்கன் துணையாம், சிலகொம்பர் மன்றல் தலைமகனாம், வான்பொருள்மேல் - சென்றவர்க்குச் சாற்றவிடும் தூதாகும், தங்கும் பெரும்புலவி மாற்ற வருவிருந்தும் ஆம்.’ தென்றல் காற்று மன்மதனுக்குத் துணை ஆகும்; சில பூங் கொம்புகளுக்கு அவை தளிர்க்கக் காரணமாதலின் மணமகன் ஆகும்; பொருள்வயின் பிரிந்து சென்றுள்ள தலைவர்க்குத் தலைவியர் தமது துன்பத்தை எடுத்துக்கூற விடுக்கும் தூது ஆகும்; தலைவன் தலைவியரிடையே நேர்ந்த ஊடலைத் தணிவிக்க வரும் வாயிலும் ஆகும் - என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், காற்று என்னும் சாதித் தன்மை கொண்ட தென்றல் என்ற சொல், பாட்டின் முதற்கண் நின்று இறுதி வரை எல்லா இடங்களிலும் சென்று இணைந்து பொருள் பயந்தமையால், இது சாதி முதல்நிலைத் தீவக அணியாம். (தண்டி. 40-3) சாதி வியதிரேகம் - சாதி வேற்றுமை அணி காண்க. சாதி வேற்றுமை அணி - ஒரே சாதியைச் சார்ந்த இரு பொருள்களிடையே வேற்றுமை செய்வது. எ-டு : ‘வெங்கதிர்க்கும் செந்தீ விரிசுடர்க்கும் நீங்காது பொங்கு மதிஒளிக்கும் போகாது - தங்கும் வளமையான் வந்த மனமயக்கம் மாந்தர்க்(கு) இளமையான் வந்த இருள்.’ மனிதர்க்கு இளமைப்பருவத்தில் செல்வச்செருக்கால் மனத்தில் வளரும் அறியாமையாகிய அகஇருள், மற்ற புற இருளைப் போலச் சூரியசந்திரர் ஒளியாலும் தீயினது சுடரொளியாலும் நீங்காது என்னும் இப்பாடற்கண், இருள் என்ற ஒரே சாதியைச் சார்ந்த அகவிருளுக்கும் புறவிருளுக்கும் இடையே வேற்றுமை செய்துள்ளமையால் இதுசாதி வேற்றுமை அணி ஆயிற்று. (தண்டி. 50-3) சாதுரிய அணி - தான் கூறுவது கேட்டுப் பிறர் வெகுளாதவாறு கலைநலம் தோன்றக் கூறுவது. எ-டு: ‘செல்லாமை யுண்டேல் எனக்குஉரை; மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்(கு) உரை’. (குறள். 1151) பிரியக் கருதும் தலைவனிடம் தலைவி, “நீ செல்லாமை யுண்டாயின் அதனையே எனக்குச் சொல்; மற்று ‘விரைந்து வந்துவிடுவேன்’ என்று நீ உரைப்பாயேல், அச்சொல்லைப் பின்னர் உயிர்வாழ்வாரிடம் சொல்” என்று கூறுவதன்கண், தலைவன் பிரியின் தான் இறந்துபடுதல் ஒருதலை என்ற கருத்தினைக் கலைநலம் தோன்றச் சுட்டியுள்ளமை சாதுரிய அணியாம். இது விலக்குதலை உட்கொண்டு சொன்னமையால் தடை மொழி ஆயிற்று. தண்டியார் இதனை ‘ஆக்கேபம்’ என்பார். (தமிழ்த் தண்டியில் இதனை முன்னவிலக்கு அணி வகையுள் ஒன்றாகக் கொள்வர்) (வீ. சோ. 153 உரை) சாந்தானிக குளகம் - மூன்று பாடல்கள் தொடர்ந்து பொருள் தொடர்பு பெற இணைந்து அவற்றின் தொடக்கத்திலோ இடையிலே இறுதி யிலோ முடிக்கும் சொல்லாகிய தெரிநிலைமுற்றோ குறிப்பு முற்றோ வினையாலணையும்பெயரோ பெயர்ப் பெயரோ அமையுமாறு பாடப்படின் அவை சாந்தானிக குளகம் எனப்படும். வடநூலார் இவற்றைச் ‘சாந்தாநித குளகம்’ என்பர். (மா. அ. 68) சாந்தானிக அந்திய குளகம் - மூன்று பாடல்கள் தொடர்ந்து, முடிக்குஞ் சொல்லாகிய வினை, வினைக்குறிப்பு, பெயர், வினைப்பெயர் என்னும் இவற்றுள் ஒன்றனை இறுதிப்பாடற்கண் கொண்டு பொருள் முற்றுப்பெறுமாயின் அவை சாந்தானிகாந்திய குளகம் ஆகும். எ-டு : ‘தெள்ளு நான்மறைப் பனுவலும் அயனைஆ தியரும் வெள்ளி வெண்மதிக் கடவுளும் கதிருமீன் கணமும் தள்ள ரும்பொறை மன்னுயிர்க் கணங்களும் தழங்கு கொள்ளை வெண்திரைப் புணரிமொண் டெழநிலை குலையா, ‘வாக்கும் பாதமும் பாணியும் கரணமும் மற்று நீக்க முற்றமன் னுயிர்கடா மாயையுள் நெடுங்கல் தாக்கு மாடகத் துகள்மெழு கடைந்தபோல் தயங்கக் காக்கும் வாய்மையீங் கெனதெனத் திருவருள் கலந்தே,’ ‘காலம் யாவையும் கழிந்தபின் கழிந்தபே ருருவின் ஞால முற்றவுண் டுறுபுனல் நடுவண நயந்தோர் ஆல நுண்தளிர் எனுமனந் தனில்உல கனைத்தும் பால னாகியுள் ளடக்குபு துயின்றனன் பரிப்பான்’. (மா.அ. பாடல். 27, 28, 29) இவை மூன்று பாடல்களும் ‘பரிப்பான்’ என்ற வினையா லணையும் பெயர் மூன்றாம் பாடல் ஈற்றிலுள்ளதனைக் கொண்டு பொருள் முற்றுதலின் சாந்தானிகஅந்திய குளக மாம். (மா. அ. 68) சாந்தானிக ஆதி குளகம் - மூன்று பாடல்கள் தொடர்ந்து வினை வினைக்குறிப்பு பெயர் வினைப்பெயர் என்னும் இவற்றுள் ஒன்றனை முதற் பாடற்கண் கொண்டு பொருள் முற்றுப் பெறுமாயின் அவை சாந்தானிக ஆதிகுளகம் எனப்படும். எ-டு : ‘தொடுத்து முத்தலைச் சூலவன் படையினைத் துண்டப் படுத்து வெஞ்சினத் தாடகை உயிர்நமன் பகுவாய் மடுத்து வேள்விகாத் தெதிர்ந்தபோர் நிருதர்க்கு மரணம் கொடுத்த டும்தொழிற் சரன்முத லவர்க்குவிண் கொடுத்தே, ‘கிளைத்து நாகவன் பிடர்மிசைக் கிளர்மரா மரமேழ் துளைத்து வாலிமார் பமும்துளைத் தடற்கருஞ் சுடுதீ விளைத்து வேலையுள் உருகெழு கோதண்ட மேனாள் வளைத்து வாய்மையோர் வடிவெடுத் தனையதோர் வாளி, ‘கும்பனைப் பொருநி கும்பனைக் கும்பகன் னனைநீ டம்பு ராசியிற் குரைத்தெழு பலப்படை அதனைச் செம்பொ னாலயம் விருப்புறத் தெசக்கிரீ வனைக்கொன் றெம்பி ரான்சன கியைமணந் தாடலெய் தியதும்’. இவை முதற்பாடலின் ஈற்றடிக்கண் உள்ள ‘அடும்’ என்ற வினைமுற்றைக் கொண்டு பொருள்முற்றிய சாந்தானிகாதி குளகமாம். சாந்தானிக மத்திய குளகம் - மூன்று பாடல்கள் தொடர்ந்து முடிக்கும் சொல்லாகிய வினை வினைக்குறிப்பு பெயர் வினைப்பெயர் இவற்றுள் ஒன்றனை இரண்டாம் பாடற்கண் கொண்டு பொருள் முற்றுமாயின் அவை சாந்தானிக மத்திய குளகம் எனப்படும். ‘அருமறையாய்..... எளிதின் அன்பால்’, ‘கொடுத்தவனும்..... உண்மை கூறின்’, ‘காண்டகுபொன்.... மன்னே’ - இவை மூன்று பாடல்களும் இரண்டாம் பாடலிலுள்ள ‘தேவகி ஈன்றருள் புதல்வன்’ என்ற பெயர்ப்பெயர் கொண்டு முற்றுதலின், சாந்தானிக மத்திய குளகம் ஆயின. (மா. அ. பாடல் 24-26) சாமான்யாலங்காரம் - ஸாமாந்யாலங்காரம்; ‘பொதுமை அணி’ காண்க. சாமிநாதம் குறிப்பிடும் பொருளணிகள் - தண்டியலங்காரம் கூறும் 35 பொருளணிகளில் ஒப்புமைக் கூட்டம், புகழாப் புகழ்ச்சி, ஆர்வமொழி, பாவிகம் நீங்கலான 31 அணிகளும் சாமிநாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. சாமி. 179. சாரம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (82) வருவதோர் அணி. ஒன்றைவிட ஒன்று மேம்பட்டது எனப் பலவற்றைக் கூறும் மேன்மேலுயர்ச்சி அணியாம். அது காண்க. சாராலங்காரம் - ஸாராலங்காரம்; ‘மேல் மேல் உயர்ச்சியணி’ காண்க. சித்திர ஏது அணி - விசித்திரமான காரணங்களைக் காட்டி விளக்கும் ஏதுவணி. இது தூரகாரிய ஏது, ஒருங்குடன் தோற்ற ஏது, காரணம் முந்துறும் காரியஏது, யுத்த ஏது, அயுத்த ஏது, ஐயஏது என அறுவகைத்து. வகைகளைத் தனித்தனித் தலைப்பிற் காண்க. (தண்டி. 63) சித்திரகவி பற்றிப் பேராசிரியர் கருத்து - நிறைமொழி மாந்தர் மறைமொழி போல்வன சில மிறைக்கவி பாடினார் உளர் என்பதே பற்றி, அல்லாதாரும் அவ்வாறு செய்தல் மரபு அன்று. அவை சக்கரம் சுழிகுளம், கோமூத் திரிகை, ஏகபாதம், எழு கூற்றிருக்கை, மாலைமாற்று, என்றாற் போல்வன. இவை மந்திரவகையானன்றி வாளாது மக்களைச் செய்யுள் செய்வார்க்கு. அகனைந்திணைக்கும் மரபன்று என்பது கருத்து. அல்லாதார் இவற்றை எல்லார்க்கும் செய்தற் குரிய என இழியக் கருதி அன்னவகையான் வேறுசில பெய்து கொண்டு அவற்றிற்கும் இலக்கணம் சொல்லுப. அவை இத்துணைய என வரையறுக்கலாகா; என்னை? ஒற்றை, இரட்டை, புத்தி, வித்தாரம் என்றாற் போல்வன பலவும் கட்டிக் கொண்டு அவற்றானே செய்யுள் செய்யினும் கடியலாகாமையின் அவற்றிற்கு வரையறை வகையான் இலக்கணம் கூறலாகாது. (தொ. பொ. 645 பேரா.) சிருங்கார ரஸம் - சுவையணி வகைகளுள் ஒன்றாகிய உவகைச் சுவை; ‘காமச் சுவை’ (தண்டி. 70-5) எனவும்படும். அதுகாண்க. சிலீட்டம் - ‘செறிவு’ காண்க. (தண்டி. 16 உரை) சிலேடை - 1) செம்மொழி பிரிமொழி என இருபிரிவுடையதாய், ஒருவடிவாக நின்ற சொற்றொடர் பலபொருளுடையதாக வரும் அணி. (தண்டி. 76, 77) 2) இனிய சொற்றொடர் - ‘அயன் சிருஷ்டி சிலேடையாய் உனக்குரைத்தேன்’ (ஞானவா. தா. சூர. 53) (டு) சிலேடை அசங்கதி அணி - செயல் ஓரிடத்து நிகழப் பயன் பிறிதோரிடத்தே நிகழ்வதைக் கூறும் ‘தூரகாரிய ஏது’ எனப்படும் அசங்கதி அணி சிலேடை யுடன் கூடிவருவது. ‘அசங்கதி சிலேடையுடன் வருதல்’ காண்க. (மா. அ. 204) சிலேடை அணி - ஒரு வகையாக நின்ற சொல் பலபொருள்களது தன்மை தெரிய வருவது சிலேடை அணியாம். சொல் பிரியாது இருபொருள்படுவது செம்மொழிச்சிலேடை; பிரிந்து இருபொருள்படுவது பிரிமொழிச்சிலேடை. (சிறுபான்மை மூன்று நான்கு பொருள்படுதலும் கொள்க.) (தண்டி. 50,51) சிலேடைஅணி வகை - பொதுவகையால் சிலேடை செம்மொழிச் சிலேடை பிரிமொழிச் சிலேடை என இருதிறப்படும். சிறப்பு வகையால் ஒருவினைச் சிலேடை, பலவினைச் சிலேடை, முரண்வினைச் சிலேடை நியமச்சிலேடை, நியமவிலக்குச்சிலேடை, விரோதச் சிலேடை அவிரோதச் சிலேடை - என ஏழ் வகைப்படும். (தண்டி. 77, 78) விரோதச் சிலேடை ஒன்றனையே மாறனலங்கார உரை ஆசிரியர் (155) 10 வகைப்படுத்துவர். அவை : சாதிக்குச் சாதி யொடு விரோதச் சிலேடை; சாதிக்கு வினையினொடு விரோதச் சிலேடை, சாதிக்குக் குணத்தொடு விரோதச் சிலேடை, சாதிக்குப் பொருளொடு விரோதச் சிலேடை, கிரியைக்கு கிரியையொடு விரோதச் சிலேடை, கிரியைக்குக் குணத்தொடு விரோதச் சிலேடை, கிரியைக்குப் பொரு ளொடு விரோதச் சிலேடை, குணத்திற்குக் குணத்தொடு விரோதச் சிலேடை, குணத்திற்குப் பொருளொடு விரோதச் சிலேடை, பொருட்குப் பொருளொடு விரோதச் சிலேடை என்பன. (மா. அ. 155 உரை) சிலேடை உருவக அணி - உருவகஅணி வகைகளுள் ஒன்று; சிலேடையுடன் உருவகம் வருதல். எ-டு : ‘உள்நெகிழ்ந்த செவ்வித்தாய்ப் பொன்தோட்டு ஒளிவளரத் தண்அளிசூழ்ந்(து) இன்பம் தரமலர்ந்து - கண்ணெகிழ்ந்து காதல் கரைஇறப்ப வாவி கடவா(து) அரிவை வதனாம் புயம்’ தாமரை (-அம்புயம்) உள்ளே இதழ் விரிந்த பொலி வுடைத்தாய், பொலிவுடைய இதழ்கள் ஒளிவீச, குளிர்ந்த வண்டுகள் சூழ அவற்றுக்கு இன்பம் தரும்வகை மலர்ந்து, கள் (-தேன்) நெகிழவிட்டு, காண்பவர்தம் ஆசை மிகும்படியாக வாவி (-குளத்தை) விட்டு நீங்காமல் இருந்து அழகு செய்யும். தலைவியின் முகமாகிய தாமரையும் (-வதனாம்புயம்) மனம் நெகிழ்ந்ததால் வந்த புதுமை அழகுடைத்தாய், காதில் அணிந்துள்ள பொன்னால் இயன்ற தோடுகள் ஒளிவீச, என்னிடம் கருணை கொண்டு எனக்கு இன்பம் தரும்வகையில் மலர்ச்சி பெற்று, என்னை நோக்கும் கண்களும் நெகிழ்ச்சி யுற்று, ஆசை அளவு கடந்தபோதும் உள்ளத்தை (-ஆவி) கடப்பதில்லை. அரிவையின் முகத்தைத் தாமரை (வதனாம்புயம்) என உருவகம் செய்ததுடன், சிலேடையாகவும் தாமரைக்கும் தலைவி முகத்துக்கும் பொது இயல்புகளைக் காட்டியமை யால் இது சிலேடை உருவகம் ஆயிற்று. (தண்டி. 38-6) சிலேடை உவமை அணி - உவமை அணி வகைகளுள் ஒன்று. சிலேடை நயத்துடன் உவமை கூறுவது. இது செம்மொழிச் சிலேடையுவமையும், பிரிமொழிச் சிலேடையுவமையும் என இருவகைத்து. செம்மொழிச்சிலேடை உவமை - எ-டு : ‘செந்திருவும் திங்களும் பூவும் தலைசிறப்பச் சந்தத் தொடையோ(டு) அணிவிரவிச் - செந்தமிழ்நூல் கற்றார் புனையும் கவிபோல் மனம்கவரும் முற்றா முலையாள் முகம்.’ திரு - திங்கள் - பூ - முதலிய மங்கலச் சொற்களால் தொடங்கப் பட்டும், சந்தஅழகு மிக்க எதுகை மோனை முதலிய தொடை களுடன், உவமை முதலிய பல அணிகளைப் பெற்றும், விளங்கும் செந்தமிழ் நூல் கற்றுவல்ல புலவர் புனையும் பாட்டுப் போல, இவ்விள நங்கையின் முகம் திரு திங்கள் என்னும் தலையணிகளும் பூவும் தலைமிசை விளங்க, அழகிய மாலைகளும் பிற அணிகளும் அணிந்து, தன்னைக் காண் போர் மனத்தைக் கவர்ச்சி செய்யும் என்னும் பொருளமைந்த இப்பாடற்கண், உபமானமும் உபமேயமும் சிலேடை அமைப்பாக வந்த பொது இயல்புகளைப் பெற்று உவமை அமைந்துள்ளவாறு. திரு-திங்கள்-பூ-தலை-சந்தம்-தொடை-அணி-இச்சொற்கள் பிரியாமலேயே நின்று இருபொருள் தந்தமையால் செம்மொழிச் சிலேடை. இச்செம்மொழிச் சிலேடையால், கற்றார் புனையும் கவியை நங்கை முகத்துக்கு உவமை கூறியமையால் இது செம்மொழிச் சிலேடை உவமை. பிரிமொழிச்சிலேடை உவமை - எ-டு : ‘நளிதடத்த வல்லியின் கண்ணெகிழ ஞாலத்(து) அளவில் நிறைகடாம் சிந்திக் - களி(று)இகலும் கந்த(ம்) மலையா நிலவும் கவ(டு)அசையா வந்த மலையா நிலம்’. இது தென்றலுக்கும் யானைக்கும் பிரிமொழிச்சிலேடை வகையால் உவமை சொல்வது. செறிந்த பெரிய (-தடத்த) கால்விலங்கின் (-வல்லியின்) கணுக்கள் (-கண்) தெறிக்குமாறும், தரையில் மிகுதியான தனது மதநீர்ப் பெருக்கை (-கடாம்) வார்ந்துகொண்டும், கட்டுத் தறியை (-கந்து, கந்தம்) அலைத்துக்கொண்டும், புரசைக்கயிறு (-கவடு) அசையவும் வரும் யானையை, பெரிய குளத்திலுள்ள (-தடத்த) அல்லிப்பூ தேன் (-கள்) சொரியவும், உலகமாந்தர்தம் உள்ளத்து நிறைகளை (-நிறைகள் தாம்) அழித்துக்கொண்டும், வாசனை (-கந்தம்) வீசிக்கொண்டும், மரக்கிளைகளை (-கவடு) மெல்ல அசைத்துக் கொண்டும் வந்த தென்றற் காற்று ஒக்கும் என்று பொரு ளமைந்த இப்பாடற்கண், உபமானம் களிறு; உபமேயம் - மலயாநிலம் ஆகிய தென்றல். சொற்றொடர்கள் பிரிந்து நின்று வேறுபொருள் பயத்தலின் பிரிமொழிச் சிலேடை ஆயிற்று. தடத்த வல்லி, தடத்த அல்லி; கண்நெகிழ, கள்நெகிழ; நிறை கடாம், நிறைகள் தாம் என்பன பிரிமொழிச் சிலேடை; கந்தம், கவடு என்பன செம்மொழிச் சிலேடை. மிகுதியான பிரி மொழிச் சிலேடையால், தென்றலுக்கு யானையை உவமை கூறியதால், இது பிரிமொழிச் சிலேடை உவமை ஆயிற்று. (தண்டி. 33-2) சிலேடைத் தடைமொழி - முன்ன விலக்கு வகைகளுள் ஒன்று. விலக்கணியைத் ‘தடை மொழி’ என்று வீரசோழியம் கூறும். ‘சிலேடை விலக்கு’ எனவும்படும் இவ்வணி. அதுகாண்க. (வீ. சோ. 163) சிலேடைத் தீவகஅணி - தீவகஅணியின் ஒழிபாக வந்த வகைகளில் ஒன்று. சிலேடை யுடன் கூடித் தீவகஅணி நிகழ்வது. எ-டு : ‘மான்மருவி வாள்அரிகள் சேர்ந்து மருண்(டு)உள்ளம் தான்மறுக நீண்ட தகையவாய்க் - கானின் வழியும் ஒருதனிநாம் வைத்தகன்ற மாதர் விழியும் தருமால் மெலிவு’. “காட்டுவழியானவை மான்கள் இருத்தலாலும் கொடிய சிங்கங்கள் தங்குதலாலும் மனம் மயங்கி வருந்தத் தொலை யாத நெடுமையுடையவாய் மெலிவு தரும்; நாம் மனைக்கண் விட்டுப் பிரிந்து வந்துள்ள தலைவியின் கண்களும் (காட்டு வழியில் நம் நினைவில் தோன்றி) மானின் மருட்சியைப் பெற்றும், ஒளி வீசும் செவ்வரி கருவரிகள் பரந்தும், நம் மனம் மயங்கி மறுகும்படி நீண்டும், நமக்கு மனத்தே வருத்தம் கொடுக்கின்றன” என்று பொருள்படும் இப்பாடற்கண், முதல் இரண்டு அடிகளிலும் சிலேடையணி வந்துள்ளதோடு, ஈற்றடியிலுள்ள ‘மெலிவு தரும்’ என்ற தொடர் வழி விழி என்னும் இரண்டுடனும் இயைந்து பொருள்பயப்பதால் இது சிலேடைத் தீவகஅணி. (தண்டி.41-4) சிலேடை மாற்றம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலில் (107) வருவதோர் அணி. ஒரே புணர்ப்பாகிய ஒரு மொழியில் அமைந்த பொருளை வேறொரு பொருளால் விளங்கச் செய்வது. ‘தள்ளா விடத்தேர்’ என்ற தண்டியலங்காரப் பாடலில் எ-டு : ‘நந்தும் தொழிலைப் புரிந்தார்’ (தண்டி. 77-2) விரும்பும் தொழிலைச் செய்தவர், கெடுந்தொழிலைச் செய்தவர் என்று ‘நந்துதல்’ விரும்புதலும் கெடுதலு மாகிய மாறுபட்ட இருபொருளில் வந்தவாறு. (புரை - உயர்வு, தாழ்வு; அகல் - பெருகு, நீங்கு; போதல் நெடிதாதல், நீங்குதல்; வரைதல் - கொள்ளுதல், நீக்குதல்; எல்-பகல், இரவு; பரிவு - விருப்பம், வருத்தம்; புகர் - ஒளி, குற்றம் என்றிவ்வாறு மறுதலைப்பட - இவ்விரண்டு பொருள்பட வரும் சொற்கள் காண்க.) சிலேடை முரண் - ‘சிலேடை விரோத அணி’ காண்க. (வீ.சோ. 173 உரை) சிலேடையின் நான்குவகை - 1. அயல்பட இரண்டு பொருளை ஒன்று உபமானமாகவும் ஒன்று உபமேயமாகவும் குறித்து அவற்றைப் பாடு மிடத்துச் செம்மொழியினும் பிரிமொழியினும் இரட்டுற மொழியுமிடத்து உவமைப்பாற் படுத்திக் கூறுதல். 2. இரண்டு பொருளைக் கவிநாயகனுக்கு உவமையாகக் குறித்து அவற்றைப் பாடுமிடத்து, ஒரு மொழியினாலா வது தொடர்மொழியினாலாவது புலவனால் தொடுக்கப் படும் சொல் கவிநாயகன் செய்கையொடு மூன்று பொருள் பயப்பதாகப் புணர்த்து ‘அவனும் அவைபோல இருந்தான்’ எனக் கூறுதல். 3. இரண்டு பொருளை ஒரு மொழியினாலாவது தொடர் மொழியினாலாவது இரட்டுற மொழிந்து கவிநாயகன் மேல் சிலேடையின்றிக் கூறுதல். 4. ஒரு சொல் இயல்பு பெயரானும் ஆகுபெயரானும் நான்கு பொருள் பயப்பதாக உருவக வாய்பாட்டால் கூறும் உடனிலைச் சிலேடை என்பன. (மா. அ. 148 உரை) இவற்றிற்கு எடுத்துக்காட்டுக்கள் பின்வருமாறு. 1) ‘வார்செறிந்து கல்லாரம் மன்னிஅக லத்தவாய்த் தார்செறிந்த வல்லிஎழு தற்குஇடமாம் - சீர்செறிந்த நற்றிருமால் வைகியதென் நாகைத் தட(ம்)மானும் முற்றிழையாள் முற்றா முலை’ (மா.அ.பா. 211) ‘நல்ல திருமால் வைகும் அழகிய தென் திருநாகையிலுள்ள தடத்தை ஒத்துள்ளன இவள் இளநகில்கள். எவ்வாறெனில், தண்ணீர் மிக்கு, செங்கழுநீர்ப் பூக்களொடு கூடி, இடம் அகன்றதாய், பூ நெருங்கிய வல்லிக் கொடிகள் தோன்றுதற்கு இருப்பிடமாகியது தடாகம்; கச்சினதுள்ளே அடங்கி, மாணிக்க ஆபரணம் நிலைபெற்று, மார்பிடத்தனவாய் ஒழுங்காகச் சேர்ந்த தொய்யில் எழுதுதற்கு இடம் பெற்றன இவள் நகில்கள்” என்று பொருள்படும் இப்பாடல், இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் நலம் புனைந்துரைத்தல் என்ற கிளவிப்பட நிகழ்கிறது. இது நகில்களைத் தடாகத்தொடு சிலேடைவகையால் உவமித்த செம்மொழிச் சிலேடை. வார் - கச்சு, தண்ணீர்; கல்லாரம் மாணிக்கப்பூண், செங்கழுநீர்; தார் - ஒழுங்கு, பூ; வல்லி - தொய்யில், வல்லிக்கொடி; எழுதல் - வரைதல், தோன்றுதல் என முறையே நகில்கட்கும் தடாகத்திற்கும் சிலேடைப் பொருள் கொள்ளப்படும். கல்லாரம் - ஒரு சொல்லாய்ச் செங்கழு நீரையும், கல் + ஆரம் எனப்பிரிந்து மாணிக்கப் பூணையும் குறித்தலின் பிரிமொழிச் சிலேடை. ஏனைய பலவும் செம்மொழிச் சிலேடையாதலின் மிகுதி பற்றி இப்பாடல் செம்மொழிச் சிலேடை எனவே பெயர் பெற்றது. 2) ‘நடுக்கற் றறைவளத்தின் நன்பொருள்கள் எல்லாம் இடுக்கற் றுதவும் இயல்சான்(று) - ஒடுக்கம் அற ஏய்ந்த மலையம் எனவளர்கின் றான்பரன்சீர் ஆய்ந்த தமிழ்மகிழ்மா றன்’. (மா. அ. 213) பரனாம் திருமாலின் பொலிவினை ஆராய்ந்த திருவாய் மொழியாம் தமிழினை உலகினுக்கு உபகரித்த தமிழ் மகிழ்மாறன், அசைவற்று, பக்கப் பாறைகளின் வளத்தொடும் கூடி, நல்ல பொருள்களையெல்லாம் குறைவற அளிக்கும் இயல்பு அமைந்து, அழிவின்றி, தகுதியடைந்த பொதியமலை ஒப்பு என்னுமாறு தழைகின்றான்; தனது நடுவிடத்தில் பாராகிய தரைவளத்துடன் கூடி, நல்ல பொருள்களை யெல்லாம் குறைவற அளிக்கும் இயல்பமைந்து, அழிவின்றித் தகவு அடைந்து, அழகிய அலைகளையுடைய கடல் ஒப்பு எனவும் தழைகின்றான். அம்மகிழ்மாறன் யாரென்றால், உண்மை நூல்களை ஓதாதுணர்ந்து பிறர்க்கு உணர்த்தும் வளத்துடன் கூடி நல்ல பொருள்களை யெல்லாம் குறைவற அளிக்கும் தகுதியினை அடைந்தவன் என்று பொருள்படும் இப்பாடற்கண், கவிநாயகனாம் காரிமாறப்பிரானுக்கு மலையமலை கடல் ஆகிய இருபொருள்களை உவமையாக்கி இரட்டுற மொழிந்து, மூன்றாவது கவிநாயகன் மேலும் சிலேடை செல்வதாக ‘அவனும் இவைபோல் இருந்தான்’ என்று மூன்றுபொருள் பயந்த சிலேடையுவமை வந்தவாறு. மலையம், கடல், மாறன் என முப்பொருட்கும் சிலேடை சொல்லுங்கால், நடுக்கு - அற்று - அறை; (நடுக்கு - அசைவு) நடு(க்) - கல் - தரை; நடு - கற்று- அறை ; பிரிமொழிச் சிலேடை வளத்தின், நன்பொருள்கள், இடுக்கு, உதவும் - இவை செம்மொழியாக நின்று ஏற்றவாறு பொருள் தந்தன. 3) ‘தேசுபெறும் செவ்வித் திருமகிழ்மா றன்சரணம் காசினிமேல் எஞ்ஞான்றும் காத்தருள்க - மாசிலா வாய்ந்தபுகழ்ப் பூதூர் மகீபதியை நான்மறைநூல் ஆய்ந்த எதிராச னை.’ (340) இப்பாடற்கண், ‘திருமகிழ் மாறன் சரணம்’ - திருமகளால் விரும்பப்பட்ட மாயோன் (மால் + தன்) திருவடிகள், அழகிய மகிழ்மாறன் திருவடிகள் என, அயல்பட இருபொருள்களை ஒரு தொடர்மொழியால் இரட்டுற மொழிந்தார். “அத் திருவடிகள் எதிராசனைக் காக்க” எனக் கவிநாயகன்மேல் சிலேடையின்றி முடித்தார். 4) ‘தேங்கமலம் மாசிலாச் செங்காந்தள் பைங்குமிழ்பொற் கோங்கரும்பு காவியுடன் கொண்டதோர் - பூங்கொடியை வண்டுகளிக் கின்றமகிழ் மாறனார் மால்வரைமேல் கண்டுகளிக் கின்றனஎன் கண்.’ (மா. அ. 341) இப்பாடற்கண், கமலம், செங்காந்தள், பைங்குமிழ், கோங்கு அரும்பு, நீலம் என உவமப்பொருள் ஐந்து; கோங்கரும்பு ஒன்றும் இயல்பு பெயர்; ஏனைய நான்கும் ஆகுபெயரால் பொருள் தந்தன. தாமரை என்னும் கொடியின் பெயர் தாமரைப் பூவினையும், அப்பூவினை ஒத்த முகத்தையும், அத்தாமரைப் பூவினைக் கருப்பொருளாக உடைய மருத நிலத்தையும், அந்நிலத்து மக்களின் ஒழுக்கமாம் ஊடலையும் முறையே ஆகுபெயரால் உணர்த்தும். காந்தள், குமிழ், காவி என்பனவும் இம்முறையே காந்தட்பூ, கைகள், குறிஞ்சி, கூடல் - குமிழம்பூ, மூக்கு, முல்லை, இருத்தல் - நீலப்பூ, கண்கள், நெய்தல் இரங்கல் - கோங்கரும்பு என்பதும் நகில்கள், பாலை, பிரிதல் என எஞ்சிய மூன்றையும் உணர்த்தும். உணர்த்தவே, “இம்முகம் முதலியவற்றையுடைய தலைவியாகிய பூங்கொடி ஊடிக் கூடி இருந்து பிரிந்திரங்குதற்கு உரித்தாம் என உட் கொண்டு என் கண்கள் களிக்கின்றன” என்றான் தலைவன். இவ்வாறு பொருள் கொள்க. எனவே, அவை ஐந்தும் நாலு பொருள் பயப்பதாகப் பாடிய மையால். இஃது உருவகவாய்பாட்டில் வந்த உடனிலைச் சிலேடை ஆயிற்று. (மா. அ. 148 உரை) சிலேடையின் முடித்தல் வேற்றுப்பொருள்வைப்பணி - சிலேடை நயத்துடன் பொதுப்பொருளையும் சிறப்புப் பொருளையும் விளக்கி, பொதுப்பொருளால் சிறப்புப் பொருளை வலியுறுத்துவது. எ-டு : ‘எற்றே கொடிமுல்லை தன்னை வளர்த்தெடுத்த முற்றிழையாள் வாட முறுவலிக்கும் - முற்றும் முடியாப் பரவை முழங்(கு)லகத்(து) என்றும் கொடியார்க்கும் உண்டோ குணம்?’ கொடியார் என்ற சொல் சிலேடையாக ஆரைக்கிளவி புணர்ந்த கொடி என்னும் சிறப்புப் பொருளையும், கொடுமை யுடையார் என்னும் பொதுப்பொருளையும் உணர்த்தும். “இக்கொடி முல்லைதான் எத்தகையது! தன்னைத் தண்ணீர் ஊற்றி வளர்த்துக் கொழுகொம்புடன் இணைத்த தலைவி பிரிவுத்துயரால் வாடியிருக்கும் இந்நேரத்தில் பூத்துச் சிரிக் கின்றதே! கடல் முழங்கும் இவ்வுலகத்தே கொடியார்க்கு குணம் உண்டோ?” என்ற பொருள் அமைந்த இப்பாடற்கண், முல்லை முறுவலித்துப் பூத்துப் பிரிவுத்துயருடைய தலைவியை வருத்துதலாகிய சிறப்புப்பொருள், ‘கொடியார்க்குக் குணம் இல்லை’ என்ற பொதுப்பொருளால் விளக்கப்பட்டமையின், இது வேற்றுப் பொருள் வைப்பணியாம். சிலேடை நயத்தால் இது கூறப்பட்டமையின் ‘சிலேடையின் முடித்தல்’ என்ற வேற்றுப் பொருள்வைப்பணிவகை ஆயிற்று. (தண்டி. 48-4) இரட்டுற மொழிதல் (-சிலேடை) வேற்றுப்பொருள்வைப்பு (மா. அ. 207; பாடல் 497) சிலேடைப் பிறபொருள்வைப்பு (வீ. சோ. 162) சிலேடை வாய்பாட்டுச் சமாதி - உபமானத்தின் செயலை உபமேயத்துக்கு ஏற்றிச் சொல்லும் குணவணியாகிய சமாதி சிலேடையொடும் வரும் வகை இது. எ-டு : ‘ஆரப் பொழிற்கோங்(கு) அரும்பு தினமாக வாரைப் பொருதெழுந்த வன்மைசேர் - பேரைக் குழைக்காதர் என்றொருகால் கூறாதோ வென்றிக் கழைக்கார் முகன்கா களம்’. ஆரப் பொழில் கோங்கரும்பு தினம் மாக வாரைப் பொருது எழுந்த - சந்தனச் சோலையிலுள்ள கோங்க மரத்தின் அரும்புகள் நாடோறும் மேகத்திடத்துள்ள தண்ணீரைத் துழாவி ஓங்கும். ஆரப் பொழில் கோங்கரும்பு தினம்ஆக வாரைப் பொருது எழுந்த - சந்தனமரச் சோலையில் காணப்படும் தலைவியின் கோங்கரும்பு போன்ற தனங்கள் நாடோறும் மார்பிலணிந்த கச்சினை மோதிப் பருத்தன. “கரும்பு வில்லோனாகிய மன்மதனுடைய ஊதுகொம்பாகிய குயில் தென்திருப் பேரையிலுள்ள மகர நெடுங்குழைக்காதர் ஆகிய திருமால் பெயரைக் கூறாதோ?” என்புழி ஊது கொம்பின் செயலைக் குயிலின்மேல் ஏற்றிக் கூறியது சமாதி அணி. இப்பாடலின் முற்பகுதி சிலேடையணி, பிற்பகுதி சமாதி அணியாம். (மா. அ. பாடல் 116) சிலேடை வியதிரேகம் - இது சிலேடை வேற்றுமை எனவும் வழங்கப்பெறும். அது காண்க. (வீ. சோ. 165) சிலேடை விரோத அணி - விரோத அணி சிலேடையுடன் கூடி வருவது; சிலேடையால் மாறுபட்ட சொல்லும் பொருளும் அமைத்துச் செய்வது. விரோதம் - முரண். எ-டு : ‘இனமான் இகல வெளிய எனினும் வனமேவு புண்டரிகம் வாட்டும் - வனம் ஆர் கரிஉரு வம் கொண்(டு) அரிசிதறக் காயும் விரிமலர்மென் கூந்தல் விழி.’ விரிந்த மலர்கள் சூடிய கூந்தலையுடைய இவளுடைய கண்கள், (இகல வெளிய வேனும், வனம் மேவு புண்டரிகம் வாட்டும், வனம் ஆர் கரி உருவம் கொண்டு அரி சிதறக் காயும்) நிகர்த்தற்கு வெண்மையுடையன ஆயினும், நீரில் உள்ள தாமரைப் பூக்களைத் தம் வனப்பினால் தோற்கச் செய்யும்; மதர்த்த கரிய நிறத்துடனும் செவ்வரி படர்ந்தும், காதல் கொள்ளும் எம் போன்றாரைச் சினந்து வருத்தமுறச் செய்யும். இனிச் சிலேடைவகையால் முரண்பட்ட பொருள் தோன்று மாறு: இவளுடைய கண்களாகிய இனமான், பகைக்கும் அளவு எளிய தன்மையுடையன எனினும், காட்டில் வாழும் புலிகளை வருத்தும்; காட்டில் நிறைந்த யானையின் உருவம் கொண்டு, சிங்கங்கள் இரியுமாறு சினம் கொள்ளும் (இப் பொருளில், மான் புலிகளை வாட்டுவதும், சிங்கங்களைச் சினப்பதும் விரோதமான செய்திகள்) சொல்லும் பொருளும் முரண்பட அமைந்து சிலேடையும் உடன் பயின்றதால் இப்பாடல் சிலேடை விரோத அணி யாயிற்று. (தண்டி. 82 - 3) சிலேடை விலக்கு அணி - விலக்கு அணி சிலேடையுடன் வருவது; சிலேடைகொண்டு விலக்கிக் கூறும் அணி. எ-டு : ‘அம்போ ருகம்செற்(று) அமுத மயமாகி வம்பார் முறுவல் ஒளிவளர்க்க - இம்பர் முகைமதுவார் கோதை முகம்உண்(டு); உலகில் மிகைமதியும் வேண்டுமோ வேறு?’ இது பெண்ணின் முகத்திற்கும் சந்திரனுக்கும் சிலேடை. இவள் முகம் தன் வனப்பால் தாமரையை வென்று, தன் கணவற்கு மிக்க இன்பம் தருவதால் அமுதவடிவாகி, புத்தழகு தோன்றும் புன்முறுவலால் ஒளிவீசுகிறது. இஃது இருக்கை யில், வேறு சந்திரன் உலகில் எதற்கு? (சந்திரனும் இப் பண்புகளை உடையதுதான்) சந்திரன் தன் கதிர்களால் தாமரையைக் கூம்பச் செய்து, அமுத கிரணங்களைப் பொழிவதாய், புதிய நிலவின் ஒளி வீசுகிறது. ஒத்த இயல்புடைய பெண்ணின் முகம் இருப்ப வேறு ஒருமதி உலகிற்கு வேண்டுவதன்று என்று சிலேடையால் விலக்கி யமையால், இது சிலேடை விலக்கணியாயிற்று. (தண்டி. 46-2) சிலேடை வேற்றுமையணி - வேற்றுமையணி சிலேடையுடன் பயின்று வருவது. எ-டு : ‘ஏறுஅடர்த்து வில்முருக்கி எவ்வுலகும் கைக்கொண்டு மாறுஅடர்த்த ஆழி வலவனைக் - கால்தொழற்கு எஞ்சினார் இல்லெனினும் மாயன் இகல்நெடுமால்; வஞ்சியான் நீர்நாட்டார் மன்.’ இது திருமாலுக்கும் சோழனுக்கும் சிலேடை செய்து வேற்றுமையும் கூறியது. திருமால் கண்ணனாய் வந்தபோது நப்பின்னைப் பிராட்டி யின் பொருட்டு ஏழு காளைகளை அடக்கினான்; இராம னாய் வந்த போது சீதைக்காக வில்லை ஒடித்தான்; வாமனனாய் அவதரித்து எல்லாவுலகத்தையும் பேருருவால் கைக்கொண்டான். அடியார்க்குப் பகைவரானவர்களை அடக்கிச் சக்கராயுதத்தைத் தாங்கினான். சோழனும், பாண்டியனின் சுறவேற்றுக் கொடியினையும் சேரனுடைய விற்கொடியினையும் வென்றான்; எவ்வுலகை யும் தன்னடிப் படுத்தினான்; பகைவரை அடக்கும் ஆணைத் திகிரியினை உருட்டினான். இவ்விருவரையும் வணங்காதார் யாரும் இலர். ஆயின் திருமால் மாயன் (கருநிறமுடையவன், வஞ்சனையுடையவன்); சோழன் வஞ்சியான் (வஞ்சி யென்னும் கருவூரையுடையவன், யாரையும் வஞ்சனை செய்து வருத்தமாட்டான்.) இருவர்க்கும் சிலேடை வகையால் ஒப்புமை கூறிப் பின் சிலேடையால் வேற்றுமை செய்து காட்டியமையால் இது சிலேடை வேற்றுமை அணி ஆயிற்று. (தண்டி. 50-6) சிறப்பணி - இது சிறப்புநிலை அணி எனவும், விசேட அணி எனவும் கூறப் பெறும். சந்திராலோகம் சிறப்பணி வேறு, சிறப்புநிலை அணி வேறு எனக் கூறும். இதனை விசேடாலங்காரம் என வடநூல்கள் கூறும். ஒப்புமையால் ஒரே தகுதியுடைய இரண்டு பொருள்களுள் ஒன்றனை ஒரு காரணத்தால் மற்றொன்றின் உயர்ந்ததாகக் கூறுவது இவ்வணி. எ-டு : ‘விதுஎழலும் சோர்வுறலால் மின்னார் முகத்தின் பதுமமலர் வேறு படும்.’ மகளிர் முகமும் தாமரையும் வடிவழகான் ஒரு தன்மைய வேனும், மதியம் தோன்றிய அளவில் மகளிர்முகம் பழைய அழகுடனே இருக்கத் தாமரை சோர்ந்துவிடலால் முகம் தாமரையினும் சிறந்தது என்று கூறுதலின் இது சிறப்பணி யாம். இது வேற்றுமையணியின் வகைகளுள் ஒன்று. (ச. 108; குவ. 82) சிறப்பின் தீரா உவமம் - உவமத்தைக் கூறுங்கால் இறப்ப உயர்வும் இறப்ப இழிவும் வழக்கின்கண் பயின்று வாராத வகையில் கூறாது, கேட்டார் மனம் கொள்ளுமாற்றான் கூறுதலே சிறப்பு என்னும் நிலைக் களம் பற்றிய உவமம் ஆகும். எ-டு : ‘அவாப்போல் அகன்றதன் அல்குல்மேல் சான்றோர் உசாப்போல் உண்டே நுசுப்பு’. “அல்குல் பெரிது” என்பதனை ஆசையுடன் உவமித்தலை உலக மக்கள் மனம் கொள்வர் ஆதலின், அது சிறப்பில் தீராஉவமம். “இடைசிறிது” என்பதனை நுண்ணுணர்வின் ஆராய்ச்சி எளிதில் மற்றவர்க்குப் புலனாகாததோடு உவமித்தலை உலக மக்கள் மனம் கொள்ப ஆதலின், அதுவும் சிறப்பின் தீரா உவமம். (தொ. பொ. 285. பேரா.) சிறப்பின் வரும் உவமை - ஒரு பொருளைப் பிறிதொரு பொருளாகச் சிறப்பித்துச் சொல்லுமிடத்து வரும் உவமையும் உண்டு. சிறப்பு என்பது ஒரு பொருளை எடுத்து அதற்குச் சிறந்த பல அடைகளையும் உவமித்து, அவற்றானே உவமை ஆக்கி உரைப்பது. “கொடிகள் அசையும் வெண்ணிற மாடங்கள் பாற்கடல் போன்றன. பல வரிகளைக் கொண்ட மதில்மேல் விளங்கும் கோபுரம், மண்டலமிட்டுப் பலமடிப்பாகக் கிடக்கும் ஆதி சேடனுடைய தலைகள் நிமிர்ந்தன போல் உள்ளது. கார் மேகம் மதில் உச்சியில் படிந்த காட்சி, ஆதிசேடன் மேல் அறிதுயில் அமர்ந்த திருமாலை ஒத்தது. மதில் மேல் நடப்பட்ட பொற் கம்பத்தின் உச்சியில் காணப்படும் காலை ஞாயிறு திருமாலின் உந்தியில் தோன்றிய பிரமனை நிகர்த்தது. இத்தகைய மதில், கோபுரம், கம்பம் ஆகியவற்றால் சிறப் புடையது குருகூர்நகர்” என ஆலயத்தின் பல அடைகளாகிய கோபுரம், மதில், கம்பம் முதலியன உவமிக்கப்பட்டிருத்தல் ‘சிறப்பின் வரும் உவமை’யாம். (மா.அ. பாடல் 197) சிறப்பு அவநுதி - அவநுதி அணிவகைகளுள் ஒன்று; ஒன்றன் சிறப்பினை மறைத்து மறுத்துக் கூறல். எ-டு : ‘நறைகமழ்தார் வேட்டார் நலன் அணியும் நாணும் நிறையும் நிலைதளரா நீர்மை - அறநெறிசூழ் செங்கோலன் அல்லன்; கொடுங்கோலன், தெவ் அடுபோர் வெங்கோப மால்யானை வேந்து’. அரசன் தன் மாலையை விரும்பிய பெண்களின் அழகும் அணிகலன்களும் நாணமும் நிறையும் நிலைகுலைந்து தளரா வகையில் அவர்களிடம் கருணை காட்டித் தண்ணளி செய்யும் செங்கோலன் அல்லன்; கொடுங்கோலனாகவே யுள்ளான் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், தன் உரிமைமாதரைத் தவிரப் பிறமாதரை விரும்பாத மன்னனது சிறப்புணர்த்த வேண்டி அவனுடைய செங்கோலானாம் சிறப்பினை மறுத்தும் மறைத்தும் கொடுங்கோலன் என்று கூறியதால் இது சிறப்பு அவநுதியாயிற்று. ( தண்டி. 75-1) சிறப்பு இல்லா அணிகள் - வீறுகோள், ஆர்வம், உபாயம், வாழ்த்து, பலபடப் புனைதல், நினைப்பு, மயக்கம், உறழ்ச்சி, மாலை, திரிவு நவிற்சி, மலர்ச்சி, எதிர்நிலை, பிறிதாராய்ச்சி, தகுதி, வனப்பு, இன்பம், துன்பம், வேண்டல், ஒழித்துக்காட்டல், தற்குணம், அளவை, சிறுமை, பெருமை, மிகுதி, பிரிநிலை, உத்தரம், விதி - என்பனவும் அன்னபிறவும் ஆகிய அணிகள் சிறப்பில்லாதன என்பர் அறிஞர். (தென். அணி. 44) சிறப்பு உருவகத்தின்பாற் படுவது - உருவகத்தின் புறனடை. ஒரு பொருளைப் பலவாறு உருவகம் செய்து உபமானத்திற்கு இல்லாத சிறப்புக்களை அடை களால் கூறிப் பொருளைச் சிறப்பித்தல் என்ற வகையும் சிறப்புருவகத்தின் பாற்படும். எ-டு : ‘மழலைவாய் நவ்வி, மதர்நெடுங்கண் மஞ்ஞை, குழலின் பொறைசுமந்த கொம்பர், - சுழல்கலவம் தாங்கிய அன்னம், தடங்கொங்கை ஆரமுதம், தேங்கொள் கமலத் திரு.’ இவள் மழலை பேசும் மான்; அழகிய கண்களையுடைய மயில்; கூந்தலாகிய பாரத்தைச் சுமக்கும் கொடி; தோகை விரிக்கும் அன்னம்; கொங்கைகளையுடைய அமுதம் என்ற பொரு ளமைந்த இப்பாடற்கண், பெண்ணினை மான், மயில், கொடி அன்னம் அமுதம் என உருவகித்து, அவற்றிற்கெல்லாம் இல்லாத பெண்ணுக்கே சிறந்த அடைகளைப் புணர்த்து அவற்றால் பெண்ணுக்குச் சிறப்பு மிகுத்துக் கூறப்பட்டமை யின், இது சிறப்பு உருவகத்தின்பாற்பட்டது. (தண்டி. 39-4; இ. வி. 645-2) சிறப்பு உருவகம் - உருவகஅணி வகைகளுள் ஒன்று. ஒரு பொருளுக்குரிய அடைகளைத் தந்து அவற்றை உருவகம் செய்வதால் அப் பொருளுக்குச் சிறப்புத் தோன்றச் செய்வது. எ-டு : ‘விரிகடல்சூழ் மேதினி நான்முகன்மீ கானாச் சுரநதிபாய் உச்சித் தொடுத்த - அரிதிருத்தாள் கூம்பாக எப்பொருளும் கொண்டு பெருநாவாய் ஆம் பொலிவிற்(று) ஆயினதால் அன்று’. (திருமால் உளகளந்த போது) பூமியானது பிரமன் மீகாமன் ஆகவும், ஆகாயகங்கை பாய் ஆகவும், நிலம் கடந்த திருமாலின் திருவடியே பாய்மரம் ஆகவும், உலகம், உலகத்துப் பொரு ளாகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டு தான் ஒரு நாவாயாக ஆகும் பொலிவினைப் பெற்றது என்ற பொரு ளுடைய இப் பாடற்கண், பூமியைச் சாரும் அடைகளான பிரமன், ஆகாய கங்கை, அரியின் திருவடி என்பவற்றை முறையே நாவாயைச் செலுத்துவோனாகவும், நாவாயின் பாயாகவும், பாய்மரக் கூம்பாகவும் உருவகம் செய்து அதற் கேற்பப் பூமியையும் நாவாயாக உருவகம் செய்து அதற்குச் சிறப்புக் கூறப்பட்டதால் இது சிறப்புருவகம் ஆயிற்று. (தண்டி. 37-7) சிறப்பு என்ற உள்ளுறை - ஏனையுவமம், உள்ளுறைஉவமத்திடையே வந்து அதற்குச் சிறப்புக் கொடுத்து நிற்றல். இஃது உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என்று தொல்காப்பியம் கூறும் ஐவகை உள்ளுறைகளில் ஒன்று. எ-டு : ‘முறஞ்செவி மறைப்பாய்பு முரண்செய்த புலிசெற்று மறந்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திடுவான்போல், கூர்நுதி மடுத்துஅதன் நிறம்சாடி முரண்தீர்த்த நீள்மருப்பு எழில்யானை மல்லரை மறஞ்சாய்த்த மால்போல்தன் கிளைநாப்பண் கல்லுயர் நனஞ்சாரல் கலந்தியலும் நாட! கேள்’. (கலி. 52) தன்னை எதிர்த்த புலியைத் தன் தந்தத்தால் தாக்கிக் கொன்று அதன் மாறுபாட்டைப் போக்கிய யானை தன் இனத்தைக் கூடி மகிழ்ந்தது. என்பது உள்ளுறை உவமம்; களவொழுக் கத்தில் அலர் கூறிய அயலாரைக் கோபித்துத் தலைவன் தலைவியை வரைந்து கொண்டதால் அயலாரை அவர் பழிதூற்ற முடியாதவாறு வென்று, தன் சுற்றத்தொடு கலந்து தலைவியோடு இல்லறம் நடத்துகிறான் என்பது உள்ளுறை உவமப் பொருள். ‘மறந்தலை.....அறுத்திடுவான் போல்’, ‘மல்லரை... மால்போல்’ என்னும் இவ்வேனை உவமங்கள் இரண்டும் உள்ளுறைக்குச் சிறப்புத் தருவதால் ‘சிறப்பு’ எனப்பட்டன. (தொ. பொ. 242. நச். 51 கலி. 52 நச்.) சிறப்புடைய உயிர் - சிறப்பில்லாஉயிர் - கேட்டவர்க்கு இன்பம் தருதல், அவரவர் கருதிய செய்தி களைத் தெளிவாகத் தெரிவித்தல், பண்டையோர் கடிந்த சொற்குற்றம் (பாட்டுடைத் தலைவன் உடலுக்கு ஊனம் தருவது) பொருட் குற்றம் (அவனுயிர்க்கு ஊனம் தருவது) என்பன இல்லாதிருத்தல் என்ற தன்மைகள் அமைந்த பொருளே சிறப்புடைய உயிராம். பாடலைப் பயின்றவன் பொருள் புலனாகாது அதனை விடுத்தல், குற்றமான உரை சொல்லவும் பாடல் இடம் தருதல், இப்பாடற் செய்தி தவறு என்று ஒருவர் எதிர்த்தால் அவரை மறுத்துரைக்கும் ஆற்றலுடைய செய்திகள் அதன்கண் இல்லா திருத்தல் முதலிய குறைபாடுகளையுடைய செய்யுளின் பொருள் சிறப்பில்லாத உயிராம். செய்யுட்குப் பொருளே உயிராதலின் அப்பொருள் ஐயம் திரிபற்ற நற்பொருளாதல் வேண்டும். (வீ. சோ. 146, 147) சிறப்பு நிலையணி - இது சிறப்பணி எனவும் விசேட அணி எனவும் கூறப்படும். சந்திராலோகம் முதலியன சிறப்பணி வேறு, சிறப்புநிலை அணிவேறு என்று கூறும். இதனை விசேஷாலங்காரம் என வடநூல்கள் கூறும். ஓர் அடிப்படை இல்லாமலேயே செயல் நிகழ்ச்சியைக் கூறுவதும், ஒரு பொருளைப் பலஇடங்களில் இருப்பதாகச் சொல்வதும், சிறு செயல் செய்யத் தொடங்கிப் பெருஞ் செயல் ஒன்றனைச் செய்து முடிப்பதும் சிறப்பு நிலை அணியாம். (ச. 70; குவ. 44) குணமும் தொழிலும் பொருளும் சாதியும் உறுப்பும் முதலியன குறைபடுதல் காரணமாக, ஒரு பொருட்கு மேம்பாடு தோன்ற உரைப்பது விசேடம் என்னும் அலங்காரமாம் என்ற இலக் கணம் தண்டியலங்காரம் (79) முதலிய நூல்களில் கூறப் படுகிறது. 1) ஆதாரம் இன்றி ஆதேயம் இருப்பது சுட்டும் சிறப்பு நிலை அணி. இஃது இவ்வணிநூல்கள் குறிப்பிடும் சிறப்புநிலை அணி வகைகளுள் ஒன்று. முத்து வீரியமும் இவ்வகையைக் குறிக்கிறது. (பொருளணி. 45) எ-டு : ‘தினகரன்இல் லாமல்அவன் செய்ய கதிர்கள் இனிதுஇலங்கும் தீபத்து இருந்து’. இஃது ஒளிக்கு அடிப்படையாகிய சூரியன் இல்லாமலேயே அவனுடைய சிவந்த கிரணங்கள் விளக்கொளியில் காணப் படுகின்றன என்று கூறுகிறது. இதன்கண் ஆதாரமாகிய சூரியன் இல்லாமலேயே ஆதேயமாகிய ஒளி இருப்பதனைக் குறிப்பிடுவது சிறப்பு நிலை அணிவகையாம். ஆதாரம் - அடிப்படை ஆதேயம் - அடிப்படையைச் சார்ந்திருப்பது. 2) ஒரு பொருள் பல இடங்களில் இருப்பதாகக் கூறும் சிறப்புநிலை அணி இது சந்திராலோகம், அணியிலக்கணம் என்றும் இவ்விரு நூல்களும் கூறும் சிறப்பு நிலை அணிவகைகளில் ஒன்று. எ-டு : ‘ஆயிழை நல்லாள் அகம்புறம்முன் பின்எங்கும் மேயஎனக் குத்தோன்று மே’. தலைவியாகிய ஒரு பொருளைத் தலைவன் உருவெளித் தோற்றத்தில் அகம்புறம் பின்முன் என்ற பல இடங்களிலும் காண்பதாகக் கூறுதற்கண் இச்சிறப்புநிலை அணி வந்துள்ளது. 3) சிறுதொழில் தொடங்கி அரிய பெருந்தொழில் செய்யும் சிறப்பு நிலை அணி இஃது இவ்விரு நூல்களும் கூறும் சிறப்புநிலை அணிவகை களுள் ஒன்று. எ-டு : ‘மாட்சியினில் காண்பேற்கு வள்ளலோடு கற்பகநற் காட்சியும்கிட் டிற்றுஎளிது காண்.’ மன்னனைத் தரிசித்துவிட்டுத் திரும்பலாம் என்று கருதிவந்த புலவனுக்குப் பரிசிலும் கிட்டிற்று என்ற கருத்தமைந்த இப்பாடற்கண் இச்சிறப்பு நிலை அணி வகை வந்துள்ளது. சிறப்பு நிலைக்களன் பற்றிய உவமம் சிறப்பாவது உலகத்தில் ஒருவர்க்கு இயல்பாக இருக்கும் பெருமை அல்லாது தம் செய்கைகளால் தேடிக்கொள்ளும் பெருமை. எ-டு : ‘முரசு முழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடைய எழாஅல்’ (பொருந. 54-56) சேரபாண்டியசோழர் என்ற மூவேந்தரும் ஒன்றுகூடி அரச வையில் இருக்கும் காட்சி போல, நிருத்தம் கீதம் வாத்தியம் இம்மூன்றும் நன்கு பொருந்தியுள்ளன என்று பொருள்படும் இவ்வடிகளில் முடிமன்னர் மூவர் அரசவை இருந்த தோற்றத்தை உவமமாகக் கூறுவது சிறப்பு நிலைக்களன் பற்றியதாம். (தொ. பொ. 279 பேரா.) சிறப்புநிலைப் பிறபொருள் வைப்பு - இது வேற்றுப் பொருள் வைப்பணியின் ‘ஒரு வழிச் சேறல்’ என்ற வகையாம். பொதுவாக உலகத்தார் ‘எல்லாரையும் சுட்டாது சிறப்பாக ஒரு சாராரையே சுட்டுதலின் இது சிறப்பு நிலைப் பிறபொருள்வைப்பு எனப்பட்டது. (வீ. சோ. 162) ‘ஒருவழிச் சேறல்’ காண்க. சிறப்புப் பிறபொருள் வைப்பு - சிறப்புநிலைப் பிறபொருள் வைப்பு - இது வேற்றுப்பொருள் வைப்பணியின் ஒருவழிச் சேறல் என்ற வகையாகும். ‘ஒரு வழிச் சேறல்’ காண்க. பொதுவாக உலகத்தவர் எல்லோரையும் சுட்டாமல் சிறப்பாக ஒரு சாராரையே சுட்டுதலின் இது சிறப்புப் பிறபொருள் வைப்பு எனப்பட்டது. (வீ. சோ. 162) சிறியதனைப் பெருக்கிச் சொல்லல் - இது புனைந்துரை வகை இரண்டனுள் ஒன்று. இங்ஙனம் பெருக்கிச் சொல்வதால் சுவை மிகுதிப்படல் வேண்டும். (யா. வி. பக். 429) எ-டு : ‘வண்டுலவு கோதை மதர்விழிகள் சென்றுலவ எண்திசைக்கும் போதாது இடம்’. கண்பார்வையின் கூர்மையினை இங்ஙனம் கூறுதல் சுவை பயத்தலின் இது சிறியதனைப் பெருக்குதல் என்னும் புனைந் துரையாம். சிறுகாப்பிய இலக்கணம் - ஐஞ்சிறு காப்பியங்களில் காணப்படுவது. பெருங்காப்பிய வருணனைகள் முற்றப் பயின்றும் பயிலாதும் வரும். அறம் முதலிய நான்கனுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருதலி னால் தான் சிறுகாப்பியம் எனப் பெயர் நிகழ்வதாயிற்று. உறுதிப் பொருள் நான்கனையும் கூறும் சிறப்பில் சிறிது குன்றின், அத்தொடர்நிலைச் செய்யுள் சிறுகாப்பியம் என்றும் காப்பியம் என்றும் கூறப்படும். (தண்டி. 10) சிறுமை அணி - இது சந்திராலோகம் முத்துவீரியம் குவலயானந்தம் ஆகிய நூல்களில் காணப்படும் அணி. ஓரிடத்தில் வந்து தங்கும் பொருளாகிய ஆதேயத்தை விட அவ்விடமாகிய ஆதாரம் சிறியது என்று கூறுவது இவ்வணி. இதனை வடநூலார் ‘அல்பாலங்காரம்’ என்ப. எ-டு : ‘விரல்ஆழி கைவளையாய் விட்டதினி ஆர்த்து வரல்ஆழிக் கென்செய்யும் மாது?’ “தலைவன் பிரிவால் மெலிந்த தலைவிக்கு விரலில் இடும் மோதிரமே இப்போது கைக்கு இடும் வளையாகி விட்டது. இங்ஙனம் மெலிவுற்றிருக்கும் இவள் கடல்அலையின் ஒலியைக் கேட்குங்கால் அடையப்போகும் துன்பம் தாங்கு தற்கு அரிது” என்னும் பொருளமைந்த இப்பாடற்கண், மோதிரம் கைவளையாயிற்று என்றற்கண், மோதிரமாகிய சிறிய பொருளாம் ஆதேயம் தன்மீது செருகத் தக்க அளவில் கையாம் ஆதாரம் அதனினும் மெலிவுற்றுள்ளது என்னு மிடத்தே சிறுமையணி வந்துள்ளது. (ச. 68; மு. வீ. பொருளணி. 43; குவ. 42) சிறுமை பற்றிய உவமம் - ‘கொடியிடை’ என்புழி, இடையானது மேலுள்ள ஆகமும் கீழுள்ள அல்குலும் அகன்று காட்ட அவற்றை நோக்கச் சிறியதே அன்றிக் கொடிபோன்று அத்துணைச் சிறியது அன்று எனினும், கொடியிடை என்று கேட்போர் உள்ளங் களில் இடை நுண்ணிது என்ற கருத்தே போதருதலின், ‘கொடியிடை’ என்பது சிறுமை பற்றி வந்த உவமம் ஆயிற்று. ‘சான்றோர், உசாப் போல உண்டே நுசுப்பு’ என நுண் ணுணர்வின் ஆராய்ச்சி பலர்க்கும் புலனாகாத் தன்மையை இடையின் நொசிவுக்கு உவமம் கூறியமையின், அதுவும் சிறுமை பற்றி வந்த உவமமாம். (தொ. பொ. 285 பேரா.) சினை அதிசயம் - ஒரு பொருளின் உறுப்பைக் கற்பனைச் சுவைபட உயர்த்துக் கூறுவது. எ-டு : ‘கறுத்தவன் அறுத்து வீழ்வன் கரிமருப்பு அகில பாரம் பொறுத்ததிக் கயம்ஓர் எட்டும் பொறுக்குமேல் அவற்றின் ஆற்றல் ஒறுத்ததென்று இமையோர் உட்க யமனும்நின்று உட்கும் எல்லை நிறுத்தது புழைக்கை பற்றி நிறைமதி அகடு போழ்வான்’. கண்ணன் அறுத்து வீழ்த்திய குவலயாபீடத்தின் தந்தங்களின் கனத்தைத் திக்கயங்களே தாங்க மாட்டாவே என்று தேவர் அஞ்ச, அதன் உருவுகண்டு இயமனும் அஞ்ச, அது தன் துதிக்கையைச் சந்திரனின் வயிற்றைப் பிளப்பதற்காக உயர்த்தியது என்ற பொருளமைந்த இப்பாடலில், தந்தங்கள் துதிக்கை என்ற சினைகளை எல்லைமீறி உயர்த்திப் பேசுவது சினை அதிசய அணியாம். (மா. அ. பாடல் 336) சினைக்குச் சினை உவமம் - ‘தாமரை புரையும் காமர் சேவடி’ (குறுந். கடவுள்.) தாமரைப் பூவினை ஒத்த விருப்பம் மருவும் சிவந்த பாதங்கள் என்று பொருள்படும் இத்தொடரில், தாமரைப் பூவாகிய தாமரைக் கொடியின் சினை உடம்பின் சினையாகிய அடிக்கு உவமம் ஆயிற்று. (தொ. பொ. 281 பேரா.) சினைக்கு முதல் உவமம் - ‘நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி’ (குறுந். 160) நெருப்பினை ஒத்த சிறிய கண்களையுடைய பன்றி என்று பொருள்படும் இத்தொடரில், கண்களாகிய சினைப்பொரு ளுக்கு நெருப்பாகிய முதற்பொருள் உவமமாக வந்தது. (தொ. பொ. 281 பேரா.) சினைத்தன்மை அணி - எவ்வகைப் பொருளையும் மெய்பெற உள்ளது உள்ளவாறு எடுத்து விளக்கும் தன்மையணி வகைகளுள் ஒன்று. எ-டு : ‘நீண்ட செவியுறவில் நீள்புருவத்து இம்பரொளி கூண்(டு)உபய நோக்கமும்கைக் கொண்டதாம் - பாண்டவர்தம் தேர்ப்பாக னான சிறுபுலியூ ரான்உலகம் காப்பான்தன் மால்வரையாள் கண்’. கண்கள் வில்போன்ற புருவங்களின் கீழ்ச் செவியளவும் நீண்டனவாகிப் பொதுநோக்கமும் சிறப்புநோக்கமும் உடையனவாய்க் காட்சி அளிக்கின்றன எனக் கண் என்னும் சினைப்பொருளின் தன்மையை உள்ளவாறு எடுத்தியம்புவது சினைத் தன்மை யணியாம். (மா. அ. பாடல் 126) சினை நிலைக்களனாகிய ஒட்டணி - உறுப்புக்களைப் பற்றிக் கூறும் செய்தியைக் கொண்டு பிறிதொரு செய்தியை உய்த்துணருமாறு அமைவது. எ-டு : ‘எம்பெருமான் இன்னருள்சேர் இன்புலவீர்! வான்பொருட்குச் செம்பொனுள தீவில் செலவுற்றால் - பம்புதிரைச் சங்கம் தவழ்கடலைத் தாம்பொடுபாய் கூம்பின்றி வங்கம் கடந்துறுமோ மற்று?’ பெரும்பொருள் தேடப் பொன் விளை தீவிற்குச் செல்லல் உறுவோர், கப்பல் கயிற்றால் கட்டப்பட்ட பாயொடும் கூடிய பாய்மரம் இன்றி அத்தீவினை அடைதல் இயலாது என்பது வெளிப்படையாகக் கூறிய பொருள்; பொன்மய மான பரமபதத்திற்குச் செல்லக் குறித்தவர்கள் மனம்மொழி மெய்களால் நினைத்தும் துதித்தும் தொழுதும் வழிபடுத லாகிய செயலின்றிப் பரமபதத்தை அடையமுடியாது. என்பது குறித்த பொருள். இப்பொருட்குத் தாம்பு, பாய், கூம்பு என்ற கப்பலின் உறுப்புக்கள் பயன்பட்டமையின் இது சினை நிலைக்களனாகத் தோன்றிய ஒட்டணி வகையாம். (மா. அ. பாடல் 289) சீர்பெறச் சமைத்தல் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணியியலுள் வருவதோர் அணி (102) இலக்கியப் பொருளைச் சிறப்பாக எடுத்துக் கூறுவது. ‘ஊருண் கேணி உண்துறை தொக்க பாசி அற்றே பசலை; காதலர் தொடுவழி தொடுவழி நீங்கி விடுவழி விடுவழி பரத்த லானே.’ (குறுந். 399) என்றாற் போலப் புனைந்துரைவகையாற் கூறுவன. சுகுணம் - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணி இயலுள் (93) வருவதோர் அணி. தன் இயல்பான குணங்களைக் கொண்டே வாழ்த்துவது. எ-டு : ‘வழங்குவ(து) உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல் இன்று’ (குறள் 955) என்றாற் போல் வன. சுகுமாரதை என்னும் பொதுவணி - இஃது ‘ஒழுகிசை’ எனவும் கூறப்படும். அது காண்க. (வீ. சோ. 148) சுட்டிக் கூறா உவமம் - உவமிக்கப்படும் பொருட்கு உபமானம் இது என்று சுட்டிக் கூறாதுவிட்டாலும் உவமவாய்பாட்டினைச் சேர்த்து உவமம் கொள்வது சுட்டிக்கூறா உவமம். எ-டு : ‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ (குறள். 90) மோப்பக் குழையும் அனிச்சம் - உபமானம்; முகம்..............விருந்து உபமேயம். உபமானத்தை அடுத்து ‘அதுபோல’ என்ற உவம வாய்பாட்டைச் சேர்த்து உவமம் கொள்ள வேண்டும். உவமான உபமேய வாக்கியங்கட்கு இடையே உவமஉருபு பொருத்தப் படாமல் வருவது சுட்டிக்கூறா உவமமாம். (தொ. பொ. 278 இள.) உபமானத்திற்கும் உபமேயத்திற்கும் பொதுவாகிய ஒப்புமைக் குணம் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் இருப்பது சுட்டிக்கூறா உவமம் எ-டு : பவளம் போலும் வாய் - செம்மைப்பண்பு சுட்டிக் கூறாத உவமம்; பவளம் போலும் செந்துவர்வாய் - சுட்டிக் கூறும் உவமம். (282 பேரா.) ‘சுட்டிக் கூறா’ என்றது. உவமத்தன்மையையும் உவம உருபுச் சொல்லையும் சுட்டிக்கூறாத என்றவாறு. ‘பவளம் போற் செந்துவர்வாய்’ என்பது உவமையும் உருபும் விளங்க எடுத்துக்கூறிய உவமத்தொடர். இனி அத்தொடர் தன் மொழிப்பொருள் சிதையாமல் ‘பவளவாய்’ என வருதல் சுட்டிக் கூறா உவமத்தொகைமொழி. இனி, ‘பவளம் போலும் வாய்’ என்பதும். ‘பவளச் செவ்வாய்’ என்பதும் முறையே உவமைத்தன்மையும் உவம உருபும் விரியாமையின் சுட்டிக்கூறா உவமத்தின் பாற்படுவன. (தொ. உபம. 7 ச. பால.) சுட்டு அணி - இது நிதர்சன அணி எனவும் காட்சி அணி எனவும் கூறப் பெறும். ‘காட்சி அணி’ காண்க. (வீ. சோ. 154) சுண்ண உவமம் - சுண்ணம் என்பது உவமையையும் பொருளையும் வரிசையாக நிறுத்தாமல் துணித்து ஒட்டுவது. ‘களிறும் கந்தும் போல நளிகடல் கூம்பும் கலனும் தோன்றும்’ என்னும் தொடரில் களிறு போலக் கலனும் கந்து போலக் கூம்பும் தோன்றும் என வரிசையாகக் கொள்ளாமல், மாற்றிப் பொருத்தமுற இணைத்துக் காணும் உவமம் சுண்ண உவமாம். (தொ. பொ. 309 இள.) ‘களிறும்... தோன்றும்’ என்பது முறை நிரல்நிறை அல்லாத மயக்க நிரல்நிறை அல்லது எதிர் நிரல்நிறையாகும். ஓரடியுள் உவமம் கூறி மற்றோரடியில் உபமேயம் கூறி மொழிமாற்றிக் கொள்ள வைப்பின், உவமத்தால் பொருள் தோன்றாது தடுமாற்றம் தரும் ஆதலின், சுண்ண உவமம் கூடாது என்பார் பேராசிரியர். (312 பேரா.) சுத்த சந்தயம் - சந்தய அணியின் மூவகைகளுள் இது முதலாவது; ஐயம் நிலைபெற்றிருத்தல் இதன் இயல்பாம். எ-டு : ‘திருமகளோ பார்மகளோ தென்அரங்கன் வெற்பில் வருமகளோ யாரோஇம் மாது?’ இதன்கண், தலைவியைத் தலைவன் திருமகளோ பார் மகளோ அரங்கன் மலையில் வந்த மானுட மகளோ எனக் கூறி ஐயம் அறுபடாத நிலை சுத்த சந்தயமாகும். (மா. அ. 136). சுபாவக்கரு - இது மாணிக்கவாசகர் குவலயானந்தத்துள் அணி இயலுள் (95) வருவதோர் அணி; ஒரு பொருளை உள்ளவாறு அதன் தன்மை தோன்ற வருணிப்பது. ‘தன்மை அணி’ காண்க. சுபாவோத்தி - °வபாவோக்தி; ‘தன்மையணி’ காண்க. சுருக்கு அணி - இஃது ஒட்டணி எனவும், குறிப்பு நவிற்சி அணி எனவும் நுவலா நுவற்சி அணி எனவும், பிறிது மொழிதல் அணி எனவும் கூறப்பெறும். ‘ஒட்டணி’ காண்க. (வீ. சோ. 166.) சுருக்கு - தொகைமொழி (வீ. சோ. 153 உரை) சுருங்கச் சொல்லல் அணி - ஒரு பொருளுக்கு வழங்கப்பட்ட அடைமொழிகள், ஒப்புமை ஆகும் ஆற்றலால், பிறிதொரு பொருளையும் சிலேடை யாலாவது பொதுவாயிருக்கும் தன்மையாலாவது குறிப் பிடும் அணி; வடநூலார் ‘சமாசோக்தி அலங்காரம்’ என்பர். எ-டு : ‘இந்தக் கன்னி மதிமுழுநோக் கெய்திச் செவ்வாய் வலியடைந்து சந்தச் சிங்கம் தனையடுத்த தக்க அரவின் வலிசார்ந்து முந்தைக் கொடிமீ னத்தலைவன் முனிவ ராகும் பகைவெல்லக் கந்தப் பகழி பலவேழக் கருப்புச் சிலையில் தொடுத்தனனால்’ (பிரபு, மாயையின், 58) மாயை என்ற பெண் பருவம் எய்திய அளவில், பார்வையில் கள்ளமும், மொழியில் கவர்ச்சியும், இடை நொசிவும், அல்குல் வளர்ச்சியும், நிரம்பப் பெறவே, இவளைக்கொண்டு மன்மதன் முனிவர்களை வெல்வதற்கு அம்பு தொடுத்தான் என்ற நேரிதான கருத்தமைந்த இப்பாடற்கண், (சிங்கம் இடைக்கும், அரவு அல்குற்கும் உவமை), கன்னி மதி செவ்வாய் சிங்கம் அரவு என்ற இராசிகள் கோள்கள் விண்மீன் இவற்றின் கோசாரப்பலன் பார்த்து நாட்கொண்டு போருக்குச் செல்லும் செய்தியும் சுட்டப்பட்டுள்ளமை சுருங்கச்சொல்லல் அணி யாகும். கன்னி, சிங்கம் - இராசிகள்; மதி, செவ்வாய் - கோள்கள்; அரவு (-ஆயில்யம்) - விண்மீன். (ச. 48; குவ. 23) சுவை அணி (1) - உள்ளத்தே நிகழும் தன்மை புறத்தே புலனாகி விளங்கும் வகையில் எண்வகைச் சுவைகளையும் பற்றி வருவது. (தண்டி. 69) சுவை அணி (2) - காமம் நகை போன்ற மெய்ப்பாடுகளின் தோற்றம், தலைமை யான வெளிப்படையாகக் கூறப்படும் பொருளுக்குத் துணை யாய் நிற்பது சுவையணி எனப்படும். இச்சுவையணி தண்டி யலங்காரத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனை வடநூலார், ‘ரஸவத் அலங்காரம்’ என்பர். பொருட்கு மாத்திரமன்றி ஒரு சுவைக்கு வேறொரு சுவை அங்கமாவதும் இதுவே. காமச் சுவை யணிக்கு எ.டு : போர்க்களத்தே தனியே வெட்டுண்டு கிடக்கும் தலைவனது கையைக் கண்ட தலைவி துயருற்றுக் கூறுவது. “இதோ இந்தக்கை தான் என் மேகலையை ஈர்த்ததும், பருத்த நகில் களைத் தழுவியதும், அல்குலைத் தீண்டி ஆடையினை நெகிழ் வித்ததுமான கை” என்றதன்கண், தலைவியின் அவலத்திற்குக் காமச்சுவை அங்கம் ஆயினவாறு. இனி, பிறிதொன்று: “வாழிய, யோக ஆற்றல் மிக்க அகத்திய முனிவன்! அவன் தனது உள்ளங்கை குழித்தெடுத்த கடல்நீரில் அத்தெய்வத் தன்மை மிக்க மீனையும் ஆமையையும் (திருமாலின் அவதார வடிவமான அவற்றை) கண்டவன் அல்லனோ!” - என்ற தன்கண், அம்முனிவன் பெருமை நினைத்து ஒருவன் கொண்ட பெருவிருப்பம் எனும் பொருட்குத் துணையாக வியப்புச்சுவை தோன்றி அணி செய்தவாறு. (குவ. 101) சுவை அணிவகைகள் - வீரம், அச்சம், வியப்பு, இழிப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, சாந்தம் என்பன ஒன்பதும். (நூற்பா. 70) நகை ஈறாக எட்டனையே கூறிற்று. சாந்தம் உரையிற் கோடலால் தழுவப்பட்டது. (தண்டி. 70) சுவை உவமம் - உவமம் கூறுங்கால் நகை முதலிய எண்வகை மெய்ப்பாடு களுள் ஒன்று தோன்றச் சொல்வது. தலைவியின் மகனைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்த நிலையில் அவளால் பார்க்கப்பட்ட பரத்தை, களவாடிய பொருள் கையகத்ததாக அகப்பட்ட கள்வரைப் போல நாணி நின்றாள் என்ற கருத்தமைந்த ‘களவுடன் படுநரின் கவிழ்ந்து நிலங்கிளையா நாணி நின்றோள்’ (அகநா. 16) என்ற அடிகளில், பார்ப்பவர்க்கெல்லாம் பெருநகையை யுண்டாக்கும் எள்ளற் சுவை அமைந்துள்ளது. பிறவும் அன்ன. (தொ. பொ. 294 பேரா.) சுவை உவமை - ‘பால்போலும் இன்சொல்’ நாவிற்குச் சுவைதரும் பால் போலச் செவிக்குச் சுவைதரும் இன்சொல் என்று பொருள்படும். இத்தொடரில் இவ்வுவமை பயின்றவாறு. (வீ. சோ. 158 உரை) (சுவை பண்பில் அடங்குத லின், சுவையுவமை பண்புவமைவகைகளுள் ஒன்றாம்.) சூட்சுமாலங்காரம் - ஸுக்ஷ்மாலங்காரம்; ‘நுட்ப அணி’ காண்க. செஞ்சொற் சிலேடை - ‘செம்மொழிச் சிலேடை’ காண்க. (சாமி. 190) செத்து என்ற உவம உருபு - ‘வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் புலிசெத்து வெரீஇய புகர்முக வேழம்’ (அகநா. 12) வேங்கை மரத்தைப் புலிபோல நினைத்து அஞ்சிய யானை என்று பொருள்படும் இத்தொடரில் ‘செத்து’ மெய் உவமத்தின்கண் வந்தது. (தொ. பொ. 290 பேரா.) ஸ‘வண்டொலியை) யாழ்செத்து, இருங்கல் வியலறை அசுணம் ஓர்க்கும்’ (அகம். 88) எனச் ‘செத்து’ என்பது பயன்உவமம் பற்றி வந்தது. (289. பேரா.) ‘தீயின் அன்ன ஒண்செங் காந்தள் தூவற் கலித்த புதுமுகை ஊன்செத்து.’ (மலைபடு. 145, 146) எனச் ‘செத்து’ என்பது உருஉவமம் பற்றி வந்தது.] (தொ. பொ. 291 பேரா.) செம்மொழிச் சிலேடை அணி - சொற்களைப் பிரிக்க வேண்டாமல் கிடந்தவாறே இருபொருள் கொள்ளும் சிலேடை அணி. எ-டு : ‘செங்கரங்க ளான்இரவு நீக்கும் திறம்பயின்று பங்கய மாதர் நலம்பயிலப் - பொங்(கு)உதயத்(து) ஓர்ஆழி வெய்யோன் உயர்ந்த நெறிஒழுகும் நீர்ஆழி சூழ்ந்த நிலத்து’. சூரியனுக்கு உரைக்குமிடத்தே, ஒரே சக்கரமுடைய தேரிற் செல்லும் சூரியன், தன் சிவந்த கதிர்களால் இருளை அகற்றும் திறமை கொண்டு, தாமரையின் காதலும் அழகும் தோன்ற, மேல் நோக்கி வளரும் தோற்றத்தில் (உதயத்தில்) கடல் சூழ்ந்த உலகத்தே வான்வழியில் திரிவான் எனவும், சோழனுக்கு உரைக்குமிடத்தே, தனது ஒரே ஆணைத் திகிரியுடைய சோழமன்னன், கொடுத்துச் சிவந்த தன் கைகளால் மக்கள் யாசிக்கும் தொழிலை நீக்கும் செயல் மிகுந்து, தாமரைமடந்தையான திருமகளது அருளால் செல்வம் பெருக, மேன்மேலும் வளரும் ஆக்கம் உடையவ னாய், கடல் சூழ்ந்த உலகத்தே மிகமேம்பட்ட நன்னெறிக்கண் நடந்து வருகின்றான் எனவும் பொருள் கொள்ளப்படும். கரங்கள், இரவு, பங்கயம், மாதர், உதயம், ஓர் ஆழி, வெய்யோன் - என்னும் சொற்கள் பிரியாமல் நின்றே இருபொருள் தந்தன. வெய்யோன் - வெப்பமிக்க சூரியன், விரும்பத்தக்க சோழன் எனக் கொள்க. (தண்டி 77-1) செம்மொழிச் சிலேடை உருவக அணி - உருவகஅணி செம்மொழிச்சிலேடை அடுத்து வருவது. எ-டு : ‘விற்புடைக்கீழ் மன்னி மிகுநாண் இடைதழீஇச் சுற்றுடைமாண் கோதைத் தொடைசெறியும் - பொற்புடைத்தாம்........... மாணிழையார் சேயரிக்கண் வண்டு’. கண், வில்போன்ற புருவத்தின் கீழ்ப் பொருந்தி நாணத்தை வெளிப்படுத்திக் கூந்தலில் அணிந்த மாலையை மேல் நோக்கத்தால் பொருந்தும். அம்பு, வில்லிடத்துப் பொருந்தி நாணுக்கு நடுவே எய்தி விற் சரடுறத் தொடுத்து எய்யப்படும். கண்ணினைச் ‘சேயரிக்கண் வண்டு’ என உருவகம் செய்து அதனை அம்பினொடும் செம்மொழிச் சிலேடைபட அமைத்தமை செம்மொழிச் சிலேடை உருவகம். வில் - புருவம், தனுசு, நாண் - வெட்கம், விற்சரடு கோதை - மாலை, விற்சரடு (மா. அ. பாடல். 253) செம்மொழிச் சிலேடை உவமையணி - உவமையணியுடன் செம்மொழிச் சிலேடை விரவிவரும் உவமை வகை. எ-டு : ‘வார்செறிந்து கல்லார மன்னியக லத்தவாய்த் தார்செறிந்த வல்லியெழு தற்கிடமாம் - சீர்செறிந்த நற்றிருமால் வைகியதென் னாகைத் தடமானும் முற்றிழையாள் முற்றா முலை’. இது குளத்திற்கும் நகிலிற்கும் சிலேடை வகையால் உவமை. குளம் : வார் - (-தண்ணீர்) செறிந்து கல்லாரம் (-கழுநீர்) மன்னி அகலத்ததாய்த் தார் செறிந்த (-பூக்கள் நெருங்கிய) வல்லி (-கொடி) எழுதற்கு (-தோன்றுதற்கு) இருப்பிடம். நகில் : வார் (-கச்சு) செறிந்து (-அடங்கி) கல்ஆரம் (-மாணிக்க மாலை) மன்னி, அகலத்ததாய் (-மார்பிடை அமைந்ததாய்), தார் செறிந்த வல்லி (-ஒழுங்காக அமைந்த தொய்யில் கொடி) எழுதற்கு (-எழுதப்படுதற்கு) இடமாகும். இதனால் குளம் நகிற்கு உவமையாக, இது செம்மொழிச் சிலேடை உவமையாயிற்று. (மா. அ. பாடல் 211) செய்யுட்கு அணிசெய்யும் பொருட்படை - (1) தலைவன் கற்புக் காலத்தில் பொருள் முதலியன கருதிப் பிரியும். தலைவி பிரிவைத் தடுத்தற்குத் தன்மகனைத் தூக்கிக் கொண்டிருக்கும் மகவுநிலை, (2) தலைவன் பொருள் முதலியன கருதிப் பிரியும் பிரிவைத் தலைவி தன் சொற்களால் தடைசெய்யாது தன்குறிப்புக் களான் தடை செய்கிற குறிப்புநிலை, (3) தலைவனுடன் தலைவி கொள்ளும் புலவிக்கண் தலைவி அழுது தனது அன்பினை வெளிப்படுத்தும் ‘புலவியுள் அழுத மங்கலம்’, (4) தலைவன் பிரியக் கருதியவழித் தலைவி கண்ணீரைப் பெருக்காது தன் கண்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ளும் ‘போக்கின்கண் அழாத மங்கலம்’, (5) தலைவன் பிரியப்போவதை அறிந்தவழிப் பிரிதல் துன்பத்தை நினைத்து அறிவுடன் பொருந்தாத செயல்களை மனக் கலக்கத்தால் செய்யும் ‘புலம்பு கொளவந்த செய்வினை’ (அகநா. 5) என்னும் இவை போல்வனவாம். (தொ. பொ. 312 பேரா.) செய்யுட்குக் குற்றமில்லா உறுப்பாகும் சொற்கள் - வழக்கு அதிகாரத்தொடும் பொருந்தி, தமிழொடும் கூடி, வட வெழுத்தைத் தவிர்ந்து, பெரிதும் இன்பம் தந்து, பெரியோ ரால் செய்யப்பட்ட செய்யுள்களிலும் வந்து, திரிதற் பொருள் கோள் இன்றியே நிரலே பொருள் விளங்க இருக்கும் சொற்கள் இவை. (வீ. சோ. 144) செய்யுட்குப் பழிக்கப்பட்ட உறுப்பாகும் சொற்கள் - கொச்சை வழக்கொடு கூடி, உணர்வார்க்கு இன்பம் தாராது, வடநூல் எழுத்துக்கள் மிகப் பயிலப்பெற்று, இல்லாத பொருளெல்லாம் உரையால் கொள்ளப்பெற்று, பொருள் மயக்கம் தரும் சொற்கள் இவை. (வீ. சோ. 145) செய்யுள், சட்டகம் அலங்காரம் என்னும் இரண்டாலும் பொலிவுறல் - செய்யுளுக்குச் சொற்களே உடல், பொருளே உயிர் ஆதலின் வெண்பா ஆசிரியம் தாழிசை துறை முதலிய செய்யுள் அமைப்புக்களைச் சட்டகம் எனவும், அச்சட்டகத்தைப் பொலிவு செய்யும் அணிகளை அலங்காரம் எனவும், இவ் விரண்டும் கூடிய வழியே செய்யுள் பொலிவு பெறும் எனவும் கூறப்படும். (மா. அ. 306 உரை) செய்யுள் திறம் - அகம் புறம் என்னும் பொருட் கூறுபாடுகள் இரண்டும் பலவகைப்பட்ட அணிநலன்களொடு செய்யுளகத்துக் கூறப்படும் ஆதலின், அச்செய்யுட்களை முத்தகம் குளகம் தொகைநிலை தொடர்நிலை என வகைப்படுத்திக் கூறுதல் அணியியலுக்குரிய செய்தி என்பது. (இ. வி. 621) செய்யுள் வகை - அணியியல் மரபிற்கேற்ப, முத்தகம், குளகம், தொகைநிலைச் செய்யுள், தொடர்நிலைச் செய்யுள் என்பன நான்கும் ஆம். (தண்டி. 2) செய்யுள்வகை இரண்டு - பத்தியம், கத்தியம் என்பன. (வீ. சோ. 112) செய்வதன் தொழிற் கருத்தாக் காரக ஏது - எழுவாயின் தொழிலைக் காரணமாகக் கொண்டு நிகழும் அழிவு ஆக்கங்களைக் குறிப்பிடும் ஏது வகை. எ-டு : ‘தற்பொதிவாள் துறந்தகெழு தகைத்தாய புனலூரன் இற்புகலால் வெஞ்சினநஞ் செனக்கூர்த்த மருள்நோக்கம் உற்பலம்தெள் ளமிர்துயிர்த்தற்(று) ஒளிதிகழ்சீர் பயின்றனவே’ தலைவன் பரத்தையிற் பிரிந்ததனால் தலைவியின் கண்கள் மயக்கம் உற்றன; அவன் மீண்டும் தலைவியின் இல்லத்துக்கு, பரத்தையரை விடுத்து வந்தமையால், நீர் தெளிக்கப்பட்ட மலர்ந்த நீலமலர் போலப் பேரழகு படைத்தன - என்ற கருத்தமைந்த இவ்வடிகளில், தலைவனது பிரிதற் செயலால் தலைவிக்கு அழிவும், அவனது வருகையால் தலைவிக்கு ஆக்கமும் வந்தமை கூறல், செய்வதன் தொழில் கருத்தாக் காரக ஏதுவாம். (மா. அ. பாடல் 436) செல்வமிகுதி உதாரதை - இது செல்வமிகுதி பற்றிய உதாத்தம் எனவும் வழங்கப் பெறும். (வீ. சோ. 171) செல்வமிகுதி பற்றிய உதாத்த அணி - செல்வத்தின் மிகுதியை மிக உயர்த்திக் கூறிச் சிறப்புச் செய்யும் உதாத்த அணிவகை. ‘உதாத்த அணி’ காண்க. (தண்டி. 74) செவி, நா, மெய், மூக்கு இவற்றால் அறியப்படும் உவமம் - செவியான் அறியப்படுவது ஓசையாம். ஆகவே ‘குயில் போன்ற மொழி’ என்ற உவமம் செவியான் அறியப்படும். நாவினான் அறியப்படுவன கைப்பு கார்ப்பு முதலிய சுவையாம். ஆகவே, ‘வேம்பு போலக் கைக்கும் மருந்து’ என்ற உவமம் நாவினான் அறியப்படும். மெய்யினான் அறியப்படுவன வெம்மை தண்மை முதலியன வாம். ஆகவே ‘தீப்போலச் சுடும்’ என்ற உவமம் மெய்யினான் அறியப்படும். மூக்கினான் அறியப்படுவன நறுநாற்றம், தீநாற்றம் என்பவாம். ஆகவே ‘ஆம்பல் நாறும் துவர்வாய்’ என்ற உவமம் மூக்கி னான் அறியப்படும். (தொ.பொ. 272 இள.) செவிலி கூறும் உள்ளுறை உவமம் - செவிலி தோழியைப் போலவே உள்ளுறை உவமம் கூறுவாள். ‘தோழி கூறும் உள்ளுறை உவமம்’ காண்க. வெளிப்படக் கிளவாது குறிப்பினான் தன் கருத்தை உணர்த்த வேண்டிய இடத்து உள்ளுறை உவமம் கூறுவாள் என்பது. (தொ. பொ. 306 பேரா.) செற்றத்தடைமொழி - வெகுளி விலக்கணி; அது காண்க. (வீ. சோ. 163) செறிவு - சிலீட்டம். (வீ. சோ. 148) செறிவு என்னும் குணவணி - செறிவாவது நெகிழும் இசையினை விடுத்து ஓசை இடை யறவு படாத வகையில் சொற்கள் நெருங்கியிருத்தல். (இது சிலீட்டம் எனவும்படும்) (தண்டி. 16) மெல்லினம் செறிதல் வைதருப்பச் செறிவு, வல்லினம் செறிதல் கௌடச் செறிவு, இடையினம் செறிதல் பாஞ்சாலச் செறிவு - என்று கூறும் மாறன்அலங்காரம். (பாடல். 88-90) பல பொருள்கோளும் செறியும் பொருட்செறிவும், வந்த சொல்லே இடையிட்டு மீண்டுவரும் சொற்செறிவும் எல்லா நெறியார்க்கும் ஒக்கும். (மா. அ. பா. 93 உரை) செறிவு என்னும் குணவணியது மறுபெயர் - சிலீட்டம். (வீ. சோ. 148) சேகோத்தி அலங்காரம் - வல்லோர் நவிற்சியணி; அது காண்க. சேர்க்கை அணி - (ஸமாஹிதாலங்காரம்) கோபமும் காமமும் போன்ற மெய்ப்பாடுகள் சேர்ந்து புலப்பட்டுப் பின் ஒன்று அடங்க மற்றது மீதூர்ந்து சுவைபயத்தல் இவ்வணி. வடநூலார் இதனை ஸமாஹிதாலங்காரம் என்பர். ஸமாஹிதம் - அடங்கி இசைந்து இணங்குதல். தலைவியது ஊடல் தீர்ந்ததால் மகிழ்வுற்ற தலைவன் கூற்றாக வரும் “ ‘இவள் என்னதான் செய்வாள் என்று பார்ப்போமே!’ என்று நான் பிடிவாதமாகப் பேசாமல் இருந்தேன். ‘இந்த வஞ்சகன் என்னுடன் பேசவில்லை; ஆதலின் யானும் இவ னுடன் உரையாடேன்’ என்று, அவளும் சினத்துடன் நீங்கி நின்றாள். இவ்வாறு நாங்கள் ஒருவருக்கொருவர். உற்றுப் பார்த்துக் கொண்ட அந்நிலையினிடையே நான் கபடமாகச் சிரித்தேன். அவளும், என்பிடிவாதமும் துணிவும் தளரும் வகையில் கண்ணீர் அரும்பினாள்” என்னும் பொருளமைந்த பாடற்கண், கோபமும் காமமும் சேர்ந்து புலப்பட்டுப் பின் கோபம் அடங்க, இசைவும் இணைப்பும் மலரக் காமச்சுவை மேலிட்டுச் சுவை பயக்கின்றமையால் இது சேர்க்கை அணி ஆயிற்று. (குவ. 104) சேர்வை அணி - தனித்தனி ஒவ்வோர் அணியை அணிவதைவிட ஒரே நேரத்தில் பல அணிகளையும் அணிவதில் அழகு மிகத் தோன்றுவது போலத் தனித்தனியாக ஒவ்வோரணி இருக்குமிடம் உண்டா கின்ற மனமகிழ்வைவிடப் பல அணிகள் ஓரிடத்தே கூடு மாயின் மிக்க மனமகிழ்ச்சி உண்டாகும் ஆகலின் அவ்வணி களின் கூடுதல் தனி அணியாயிற்று. எள்ளும் அரிசியும் கலந்தாற்போல பல அணிகள் தம் வேறுபாடு புலப்பட அமையுமாயின் சேர்வை அணி எனவும், தண்ணீரும் பாலும் கூடினாற்போலக் கூடியும் பிரிவு புலப்படாமலும் அமையுமாயின், கலவை அணி எனவும் இவை பெயர் பெற்றன. இவற்றை வடநூலார் சம்°ருட்டி எனவும் சங்கரம் எனவும் முறையே கூறுவர். பொதுவாகப் பல அணிகள் ஒருபாடலில் சேர்ந்திருப்பதைச் சங்கீரண அணி என்று வீரசோழியமும் தண்டியலங்காரமும் மாறனலங்காரம் தொன்னூல் விளக்கமும் குறிப்பிடும். விராவலங்காரம் எனினும் சங்கீரணம் எனினும் ஒக்கும். சங்கர அணியில் இரண்டே அணிகள்தாம் இருத்தல் வேண்டும் என்பது மாறனலங்காரக் கருத்தாகும். (வீ. சோ. 176; தண்டி. 89; மா.அ. 250; தொ.வி. 368; மா.அ. 249) இச் சேர்வை அணி பொருளணிச் சேர்வை; சொல் அணிச் சேர்வை, சொற்பொருளணிச் சேர்வை என மூவகைத்து. 1. பொருளணிச் சேர்வை தன்மை முதலிய பொருளணிகள் சேர்ந்து ஒரு பாடலில் வருவது. எ-டு : ‘தண்துறைநீர் நின்ற தவத்தால் அளிமருவு புண்டரிகம் நின்வதனம் போன்ம்.’ (தண்டி. 89) “தண்ணிய துறையில் நீரில் நின்று செய்த தவத்தினால் வண்டுகள் மொய்க்கும் தாமரை கருணை பொருந்திய நின் முகம் போன்றது” என்ற பொருளமைந்த இப்பாடற்கண், துறையில் நின்று தவம் செய்தல் என்பது தற்குறிப்பேற்றம்; ‘தவத்தால்’ என்பது காரணம் கூறுதலின் காரக ஏது : ‘அளிமருவு’ என்பது வண்டுகள் மொய்க்கும் எனவும், கருணை பொருந்தும் எனவும் இருபொருள் படுதலின் சிலேடை : தாமரை முகம் போன்றது என்பது உவமை. இவ்வாறு பல அணிகளும் வந்துள்ளமையின், இப்பாடற்கண் பொருளணிச் சேர்வை பயின்றவாறு. 2. சொல்லணிச் சேர்வை மடக்கு, சித்திரகவி முதலிய சொல்லணிகள் ஒருபாடற் கண்ணேயே அமைவது. எ-டு : ‘கந்தரங் கானந் தனிற்சென் றடங்கிலென் காசிக்கநே கந்தரங் கானந்த நண்ணிலென் கன்னியர் கட்டளக கந்தரங் கானந்த நின்றா டெழிற்செந்தில் கண்டிறைஞ்சிக் கந்தரங் கானந்த நல்கச் சனனம் கடந்திலரே.’ ‘கந்தரம் கானம் தன்னில் சென்று அடங்கில் என்? காசிக்கு அநேகம் தரம் கால் நந்த நண்ணில் என்? கன்னியர் கட்டு அளகம் கந்தரம் கால் நந்த நின்று ஆடு எழில் செந்தில் கண்டு இறைஞ்சிக் கந்தர் அங்கு ஆனந்தம் நல்கச் சனனம் கடந் திலரே’ என்று பிரித்துப் பொருள் செய்க. காடுகளுக்குச் சென்று ஐம்பொறிகளையும் அடக்கியிருப்ப தால் பயனில்லை; காசிக்குப் பலமுறை கால்நோவச் செல்வதால் பயனில்லை; மகளிரின் மயிர்த் தொகுதி போன்ற பாசிகள் காற்று வீசுவதால் கடல் நீரில் அசையும் அழகிய செந்தில் நகரைக் கண்டு வணங்கி முருகப்பெருமானார் தமது காட்சியால் நல்கும் ஆனந்தத்தை நுகர்ந்து பிறவிக்கடலைக் கடக்க முயலுதலே தக்கது என்ற பொருளமைந்த இப் பாடற்கண், ‘கந்தரங் கானந்த’ என்ற சீர்கள் நான்கடியிலும் மடங்கி வந்தமையால் மடக்கணியும், உ ஊ ஒ ஓ ஒள ப ம வ என்னும் எழுத்துக்களது இயைபு இன்மையால் உதடுகள் செயற்பட வேண்டா நீரோட்டகம் என்னும் மிறைக்கவியும், வந்த சொல்லணிச் சேர்வை காணப்படுகிறது. 3. சொற்பொருள் அணிச் சேர்வை சொல்லணியும் பொருளணியும் ஒருபாடற்கண்ணே சேர அமைவது. எ-டு : ‘தெரிவரு காதலின் சேர்ந்தோர் விழையும் பரிசுகொண்டு வரிஅளி பாட மருவரு வல்லி இடையுடைத்தாய்த் திரிதரு காமர் மயிலியல் ஆயம்நண் ணாத்தேமொழி அரிவைதன் நேரென லாம்இயற்று ஐய!யாம் ஆடிடமே’ (தண்டி.98-20) “தலைவியிடத்து ஆசையால் இங்கு வந்துள்ள யான் விரும்பும் தன்மைகளைக் கொண்டு, வண்டுபாட, இடை போன்ற கொடிகள் அசைய, ஆயத்தாரொடு கூட இன்று வாராத தலைவிக்கு ஒப்பாக, அவளோடு யான் விளையாடும் இடம் காட்சியளிக்கிறது” எனத் தலைவன் தன்நெஞ்சிடம் கூறிய தாக அமைந்த இப்பாடல், கட்டளைக் கலித்துறை யாப்பிற் றாய், உவமையணி பயில்கிறது. மேலும் இப்பாடல், ‘தெரிவரு காதலின் சேர்ந்தோர் விழையும் பரிசு கொண்டு வரிஅளி பாட மருவரு வல்லியிடை உடைத்தாய்த் திரிதரு காமர் மயிலியல் ஆயம் நண்ணாத் தேமொழி அரிவைதன் நேரெனல் ஆமியற் றைய! யாம்ஆடு இடமே.’ என நேரிசை ஆசிரியப்பாவாகவும் ஆக்கலாம். இங்ஙனம் ஒருவகைச் செய்யுள், பிறிதொரு வகைச் செய்யுளாக மாறுவது பிறிதுபடுபாட்டு என்னும் சொல்லணியாம். ஆகவே இப் பாடலில் பொருளணி சொல்லணி இரண்டும் சேர்ந்த கலவை அணி வந்தவாறு. (குவ. 116) சொல் இன்பம் என்னும் குணஅணி இது மாதுர்யம் எனவும்படும். செவிக்கு இன்பம் பயக்குமாறு செய்யுள் அமைத்தல் இதன் இலக்கணம். முற்றுமோனை அமைத்துப் பாடுதல் சொல்லின்பம் என்பாரும் உளர். எ-டு : ‘முன்னைத்தம் சிற்றில் முழங்கு கடலோதம் மூழ்கிப் போக அன்னைக் குரைப்பன் அறிவாய் கடலேயென் றலறிப் பேரும் தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தம் தயங்கு கானல் புன்னையரும் பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே எம்மூர்.’ இதன்கண் சீர்இடையிட்ட வழிமோனை வந்தவாறு; வைதருப்ப நெறி இது. ‘துனைவருநீர் துடைப்பவளாய்த் துவள்கின்றேன் துணைவிழிசேர் துயிலை நீக்கி இனவளைபோல் இன்னலம்சோர்ந் திடருழப்ப இனியவர்நாட் டில்லை போலும் தனியவர்கள் தளர்வெய்தத் தடங்கமலம் தளையவிழ்க்கும் தருண வேனில் பனிமதுவின் பசுந்தாது பைம்பொழிலில் பரப்பிவரும் பருவத் தென்றல்.’ இதன்கண் அடிதோறும் இறுதிச்சீர் நீங்கலாக முற்றும் மோனைவந்தது. இது கௌட நெறியாம். (தண்டி. 19) சொல்லின்பமாவது அடை சினை முதல் எனமுறை மூன்றும் மயங்காமை வரும் வண்ணச் சினைச் சொற்களும், முதலொடு குணமிரண்டு அடுக்கிவரும் அடைச்சொற்களும், வழக்கிட மும் செய்யுளிடமுமாக இரண்டிறந்தனவாய் அடைபல வேண்டினவழியே புணர்ந்த சொற்களுடன், வழிமோனை முதலியன வரத் தொடுப்பனவாம். அவற்றால் கேட்டோர் பெறும் இன்பம் சொல்லின்பமாம். (மா.அ. பக். 85) ‘துனைவருநீர்’ போன்றவற்றைப் பாஞ்சாலச் சொல்லின்ப மாகக் கொண்டு, கௌடச் சொல்லின்பத்துக்கு மாறன் அலங்காரம் காட்டும் எடுத்துக்காட்டுப் பின்வருமாறு : ‘கடுவே கயலெனக் கரந்தடும் கண்ணிணை காமனும் காமுறும் காட்சிய காண்முகம் கிள்ளையின் கிளையும் கிளைத்தகைக் கிளையுடைக் கீரமும் கீர்த்திக் கீரமும் கீரே குவடுடைக் குளிர்பொற் குன்றே குவிமுலை கூர்புதற் கூன்சினை கூற்றுயிர் கூட்டுணும் கெடலருங் கெழுதகை கெழுமுபு கெழீஇய கேகயம் கேளொடும் கேடுறும் கேழியல் கைபுனை கைக்கிசை கைக்கிணை கைத்துணை கொண்டலுட் கொண்டன்ன கொண்டையும் கொடியிடை கோடாக் கோவலர் கோற்றொடி கோமான் கௌரவ கௌசிகன் கௌசிகம் கௌத்துவ மணியெனக் கொண்டு மனவீ டளித்தோன் கண்ணன் குறுங்குடிக் கனவரை மண்ணகத் துறையுளாய் வளர்நில மகட்கே’. (மா.அ. பாடல் 80) இது ககர வருக்க முற்றுமோனை. சொல் எஞ்சு அணி - உணர்தற்கு எளிதாயவிடத்து பெயர் வினை முதலிய சொற்களை விடுத்து உரைப்பது சொல் எஞ்சு அணி என்று தொன்னூல் விளக்கம் கூறும். பொருளில் திரிபு ஏற்படக் கூடுமாயின் சொற்களை விடுத்துரைத்தல் தவறு என்பது. சொல்லதிகாரத்துக் கூறப்பட்ட பெயரெச்சம், வினை யெச்சம், உம்மையெச்சம், சொல்லெச்சம், பிரிப்பெச்சம், என என்னும் எச்சம், ஒழியிசை யெச்சம், எதிர்மறையெச்சம், இசையெச்சம், குறிப்பெச்சம் என்பன பத்தும் உணர்தற்கு எளிதாய இடத்து எஞ்சக் கூடியன என்பது தொன்னூல் விளக்கக் கருத்து. (தொ.வி. 318, 319) செய்யுளியலில் கூறப்படும் கூற்றெச்சம் குறிப்பெச்சம் என்பனவும் இவற்றுள் அடங்கும். இவ்வெச்சங்கள் பற்றித் தனித்தனித் தலைப்புக்களில் காண்க. சிலவருமாறு: சொல்நலன் - சொல்லின்கண் தோன்றும் நயம் ஆகிய நன்மை. செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கு மீயப் படும். (குறள். 412) இதன்கண், இல்லாத போழ்து, சிறிது, ஈயப்படும் எனநின்ற சொற்கள் நயம்பயக்குமாறு பரிமேலழகர் உரையால் போதரும். மிக்கசுவையும் பின்வந்து உதவுதலும் உடையது கேள்வி யாகிய உணவு; அஃது உள்ளபோது வயிற்றுணவு வெறுக்கப் படுவதால் ‘இல்லாத போழ்து’ என்றார்; உணவு பெரிதா னால் அதனைத் தேடும் துன்பத்தொடு நோயும் காமமும் பெருகும் ஆதலின் ‘சிறிது’ என்றார்; அச்சிறிதுணவும் பின்னரும் வாழ்ந்து கேள்விச்செல்வம் பெறவேண்டியே ஆதலின் ‘ஈயப்படும்’ என்றார். வயிற்றினது இழிவினைக் காட்ட ‘ஈதல்’ என்ற இரவின் கிளவியைச் சுட்டியது மிக்கதொரு சொல் நயம். சொல் பின்வருநிலை அணி - ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லே பின்னரும் பல இடங்களில் வெவ்வேறு பொருளில் வருதல். எ-டு : ‘மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ் மால்வரைத்தோள் ஆதரித்த மாலையார் - மால் இருள்சூழ் மாலையில் மால்கடல் ஆர்ப்ப மதன்தொடுக்கும் மாலையின் வாளி மலர்.’ மதங்கொண்ட யானையான கசேந்திரனைக் காத்து அருள் செய்த திருமாலின் மாலை சூழ்ந்த பெரிய மலை போன்ற தோள்களை விரும்பிக் காதல் செய்தார்மீது, கரிய இருள் சூழ்ந்த மாலை நேரத்தில் பெரிய கடல் ஆரவாரம் செய்ய, மன்மதன், பூமாலையில் உள்ள மலர்களைத் தொடுப்பான் என்ற பொருளமைந்த இப்பாடற்கண், மால் மாலை என்னும் சொற்கள் பலவிடத்தும் வெவ்வேறு பொருள்பட வந்தமை யால் இஃது இவ்வணி ஆயிற்று. (இரண்டிடத்து மாத்திரம் நிகழின் அணி ஆகாது; மூன்று முதலான பலஇடம் என்க.) (தண்டி. 42-1) சொல் மிக்கணி - வந்த சொல்லே மீண்டுமீண்டும் வருவது சொல்மிக்கணி என்று தொன்னூல் விளக்கம் கூறும். இவ்வணி மடக்கு, இசைஅந்தாதி, அடுக்கு என மூவகைப்படும். 1. மடக்கணி தனித் தலைப்பிற் காண்க. 2. இசை அந்தாதி உரைநடையில் ஒருவசனத்துக்கு ஈறாக நின்ற மொழி மற்றொரு வசனத்துக்கு ஆதியாக வருவது. உருபு ஒன்றே ஆயினும் வேறே ஆயினும் ஏற்புடைத்தாம். எ-டு : அக்காலத்துப் பாண்டியனாடு பன்னீரியாண்டு வற்கடம் சென்றது; செல்லப் பசிகடுகுதலும்...’ ‘மாந்தர்க்கெல்லாம் கேள்வியால் அறிவும், அறிவினால் கல்வியும் கல்வியால் புகழும், புகழால் பெருமையும் விளையு மன்றே?’ இது மாறனலங்காரம் முதலியவற்றுள் காரணமாலை அணியாகக் கொள்ளப்படும் (செய்யுட்கண்ணேயே என்பது). இங்குச் சொல்அமைப்பு நோக்கிச் சொல்மிக்கணி ஆயிற்று. 3. அடுக்கணி சிறப்பினைக் காட்டவும், அன்பு துயர் களிப்பு முதலிய வற்றைத் தோற்றவும் ஒருபொருள் தரும் பலதிரிசொற்கள் அடுக்கி வருவது. எ-டு : ‘என்னுயிர் காத்துப் புரந்(து)ஆண்ட என்னிறைவன் தன்னுயிர் பட்(டு)இறந்து சாய்ந்தொழிந்தான் - பின்னுயிராய் மீண்டென்னைக் காத்(து)ஓம்பி மேவிப் புரந்(து)அளிப்ப யாண்டையும் யார்யார் எனக்கு?’ காத்துப் புரந்து, பட்டு இறந்து, காத்து ஓம்ப, புரந்து அளிப்ப என ஒரு பொருள் தரும் பலதிரிசொற்களும் அடுக்கி வந்தமை இவ்வணியாம். (தொ. வி. 314 - 317) சொல்லணிகளையும் பொருளணித் தொகுப்பில் அடக்கும் இயைபு - மாறனலங்காரத்துள் பொருளணிகள் 64 என்று குறிப்பிடப் பட்டுள்ளன. அவற்றுள் சில சொல்லணிகளாம். ஆயினும் அவ்வியல் மிகுதிபற்றிப் பொருளணியியல் என்ற பெயர்த் தாயிற்று. அங்கராகமாகிய சந்தனத்துடன் குங்குமம் கற்பூரம் கத்தூரி முதலியன கூடினும் அங்கராகம் அவற்றால் பெயர் பெறாது சந்தனம் என்றே பெயர் பெறுவது போலப் பொரு ளணியியலுள் சொல்லணி சில இருப்பினும் அவ்வியல் அவற்றால் பெயர் பெறாது சிறப்புடைய பொருளணி பற்றியே பெயரிடப் பெற்றது. (மா. அ. 87 உரை) சொல்லும் சொல்லும் முரணிய விரோத அணி - எ-டு : ‘மெய்யுரைப்பார் என்பதுபொய் மெல்லியலாள் இன்றெமையும் பொய்யுரைப்பார் என்று புகலுமே...’ (மா.அ. பா. 412) இவ்வடி முரண், பொருளின்றிச் சொல்லும் சொல்லுமே முரணிற்று. சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணிய விரோத அணி - ‘கருவிடமும் வெண்மருந்தும் கைக்கொண்ட கண்அம்பு’ தலைவியின் கண்களாகிய அம்புகள் கரியவிடத்தையும் வெள்ளிய அமுதையும் தம் பொதுப்பார்வையிலும் சிறப்புப் பார்வையிலும் கொண்டுள. ‘கருவிடமும் வெண்மருந்தும்’ கருமை, வெண்மை - சொல்முரண் விடம், மருந்து - பொருள் முரண் ஆகவே இவ்வடியில் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணிய விரோத அணி வந்துள்ளது. (மா. அ. பாடல். 416) சொல்லும் பொருளும் சொற்களொடு முரணிய விரோத அணி - எ-டு : ‘வெந்தழலைத் தண்ணீர்மை மேதகுவெண் சாந்தென்றே சந்ததமும் பூசுவதென்? சாற்று’ தலைவனைப் பிரிந்த தலைவி பிரிதலை ஆற்றாது தோழி யிடம், “கொடிய நெருப்பைக் குளிர்ச்சியைத் தன் இயல்பாக வுடைய சந்தனம் என்று எப்பொழுதும் பூசுவது எப்பயன் கருதி?” என்று வினவுகின்ற பொருளையுடைய இப்பாடற் கண். வெம்மை - சொல்; தழல் - பொருள்; தண்மை, நீர்மை - சொல் ‘வெந்தழலைத் தண்ணீர்மை’ என்ற தொடரில், வெம்மை யாகிய சொல்லும் தழலாகிய பொருளும் தண்மையும் நீர்மையுமாகிய சொற்களொடு முரணின; இணை முரண். தண்மை - குளிர்மை; நீர்மை - நன்மை எனச் சொல்லளவில் அமைவதால் வெந்தழலுக்குத் ‘தண்ணீர்மை’ சொல்லளவில் முரண். (மா.அ. பாடல். 414) சொல்விரோத அணி - சொற்களில் தோன்றும் முரண் அமைத்தல் இதன் இலக்கணம். எ-டு : ‘காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால் மேலை வினையெல்லாம் கீழவாம் - கோலக் கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப் பெருமானைச் சிற்றம் பலத்து.’ அழகிய கரிய யானைத்தோலையும் வெளிய திருநீற்றையும், சிவந்த திருமேனியையும், பசிய கொன்றைப்பூ மாலையையும் உடைய பெருமானாகிய சிவனைத் தில்லைத் திருப்பதிக்கண் சிற்றம்பலத்தில், காலைமாலை யிருபோதும் கைகளைக் கூப்பித் திருவடிகளைத் தொழுதால் முற்பிறப்பிலே செய்த தீவினையெல்லாம் கீழ்ப்பட்டழியும் என்ற பொருளுடைய இப்பாடற்கண், காலை-மாலை, கை-கால், மேல்-கீழ், கருமை-வெண்மை-செம்மை-பசுமை-பெருமை-சிறுமை என்பன சொல்லளவில் ஒன்றோடொன்று முரணி வந்தமையால், சொல் முரணாகிய சொல் விரோத அணி வந்தவாறு. (தண்டி. 82-2) சொல் விலக்கு அணி - புகழ்ச்சி பற்றியும் இகழ்ச்சி பற்றியும் கவி தான் முன் சொல்லிய சொல்லை மறுத்துப் பிறிதொன்று உரைப்பதாகிய இவ்வணி தொன்னூல் விளக்கத்திலேயே கூறப்பட்ட அணியாம். ஆகவே, வெளிப்படையாகக் கூறுவதனைக் குறிப்பாக மறுத்தல் இவ்வணி. (தொ. வி. 352) எ-டு : ‘இரவின் வாரலை ஐய! விரவு வீ அகலறை வரிக்கும் சாரல் பகலும் பெறுவைஇவள் தடமென் தோளே’ (கலி. 49) “பகற்குறி வருக” என்று தோழி தலைவனுக்குக் குறிப்பிடு வாள் போலக் குறியிடம் பூக்கள் செறிந்த இடமாதலின் ஆண்டுப் பூப்பறிக்க வருவாருடைய நடமாட்டத்தால் பகற்குறிக்கும் வாய்ப்பில்லை என்று கூறித் தலைவனை வரைவு கடாவுதற்கண் இவ்வணி அமைந்துள்ளது. இஃது இறைச்சியணியின் பாற்படும். கொடுங்கோல் மன்னன் குடிகளுக்கு ஒன்றும் ஈயான் என்று கூறியபின் அதனை மறுத்து மக்களுக்குத் தீமையும் நோயும் ஈவான் என்று கூறுதலும் இவ்வணியாம். (தொ.வி. 352 உரை) சொற்செறிவு கலந்த பொருட் செறிவு - எ-டு : ‘மறந்தாங்கித் தெவ்வடுவைந் நுதிதாங்கி இருட்பிழம்பு மடியச் செந்தீ நிறந்தாங்கி இடங்கரின்வெண் ணிணந்தாங்கி அனைத்துலகும் நியதி காக்கும் திறந்தாங்கி ஒளிர்திகிரிப் படைதாங்கித் திருவடிபொற் சென்னி தாங்கி அறந்தாங்கி வளர்புகழ்வார் அறந்தாங்கி யவரெனுமிவ் அங்கண் ஞாலம்’. இப்பாடற்கண் ‘தாங்கி’ என்ற சொல் பல இடங்களில் வந்த சொற்செறிவும், இறைவனுடைய அருஞ்செயல்கள் பற்றிய பொருட்செறிவும் கலந்து வந்துள்ளன. இவ்விருவகைச் செறிவும் வைதருப்பம். கௌடம் பாஞ்சாலம் என்ற மூன்று நெறியார்க்கும் ஒக்கும் என்பது மாறனலங்காரக் கருத்து. (மா. அ. பாடல் 93 உரை) 