தமிழ் இலக்கணப் பேரகராதி சொல் - 3 ஆசிரியர் பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் தமிழ்மண் பதிக்கம் TamilÆ Ilakkan|ap Pe#rakara#ti (A Tamil Grammatical Encyclopaedia) Col - 3 by T.V. Gopal Iyer Pandit of the Pondicherry Centre of the École Française d’Extrême-Orient (French School of Asian Studies) Published by the TamilÆ Man| Pathippakam, Chennai 2005. Pages: 32+256 = 288 Price: 270/- முன்னுரை 1979ஆம் ஆண்டு நவம்பர்த் திங்களில் தமிழ் இலக்கணப் பேரகராதி ஒன்றனைத் தொகுத்து உருவாக்கும் பணியில் புதுச் சேரியில் உள்ள தொலைக் கீழைப் பிரஞ்சு ஆராய்ச்சிப் பள்ளியில் அமர்த்தப்பட்டேன். இடையிடையே பணிக்கப்பட்ட ஏனைய பணி களுக்கு இடையிலும் அகராதிப் பணியைத் தொடர்ந்து 1995இல் ஓரளவு அதனை நிறைவு செய்தேன். இப் பணியில் எனக்கு உதவி செய்ய அமர்த்தப்பட்ட நாராயணசாமி ஐயர், குமாரசாமிப் பிள்ளை, அப்பாசாமி முதலியோர் பணியிலிருந்து இடையிடையே விடுவிக்கப் பட இப்பணியில் எனக்கு இறுதிவரை என் இளவல் கங்காதரனே உதவும் நிலை ஏற்பட்டது. இப்பணிக்குத் தொல்காப்பியத்தின் பழைய உரைகள் முதல் அண்மையில் வெளிவந்த பாவலரேறு பாலசுந்தரனாரின் தென்மொழி இலக்கணம் முடிய உள்ள பல நூல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டினவாக வேங்கடராசுலு ரெட்டியாரின் எழுத்ததிகார ஆராய்ச்சி, இலக்கணக் கட்டுரைகள், சுப்பிரமணிய சாத்திரியாரின் எழுத்ததிகாரச் சொல் லதிகாரச் குறிப்புக்கள், பாலசுந்தரனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி காண்டிகையுரை போன்ற சில நூல்களே மேற்கோள்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டில் வெளிவந்த இலக்கணம் பற்றிய கட்டுரைகள் பல இருப்பினும் அவையெல்லாம் இவ்வகராதி யில் இடம் பெறவில்லை. இவ்வகராதி பல தொகுதிகளாகப் பல தலைப்புப் பற்றிப் பிரித்துக் கூறப்பட்டிருத்தலின், எல்லா இலக்கண வகைகளுக்கும் பொதுவான சொற்கள் எங்கு இடம் பெற்றுள்ளன என்பதனை அறிதலில் சிறு சிக்கல் ஏற்படும். எடுத்துக்காட்டாக ‘வழக்கு’ என்ற சொல் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் முதற்கண் வருவதால் அச்சொல் பாயிரம் பற்றிய பகுதியில் விளக்கப்பட்டிருக்கும். தலைப்புக் களின் அகராதி அமைக்கப்பட்டபின் அத்தகைய சொற்களின் இருப்பிடம் அறிதல் எளிதாகும். இவ்வகராதிப் பணியில் இறுதி மெய்ப்புத் திருத்துதல் முதலிய வற்றில் என் இளவல் கங்காதரனே முழுமையாக ஈடுபட்ட போதி லும், என் தம்பி திருத்துவதற்கு முன்னரே மெய்ப்புக்கள் திருத்தத்தில் ஈடுபட்டுச் செயற்பட்ட சான்றோர் அனைவரையும் நன்றியொடு நோக்குகின்றேன். 17 தொகுதிகளாக அமையும் இந்த நூலினை அமைப்பதற்கு எனக்கு என் தம்பி வலக்கையாக உதவுவது போலவே, இந்நூலைப் பதிப்பிக்கும் இளவழகனாருக்கு உதவிய பதிப்பக உதவியாளர்கள் செல்வன் செ. சரவணன், செல்வன் இ. இனியன், செல்வன் மு. கலையரசன், அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.நா. இராமசுப்பிரமணிய இராசா, நா. வெங்கடேசன், இல. தர்மராசு ஆகியோர் இந்நூல் செம்மையாக வெளிவரப் பெரிதும் முயன்றுள்ள செயலைப் போற்றுகிறேன். இவர்கள் நோய்நொடி இன்றிப் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இந்நூலை வெளியிட உதவிய எங்கள் தொலைக் கீழைப் பிரஞ்சு ஆராய்ச்சிப்பள்ளி நிறுவனத்தாருக்கு நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன். தொகுதிகள் 17 : எழுத்து - 2, சொல் - 4 , பொருள் - 11 (அகம் - 4, புறம் - 1, அணி - 2, யாப்பு - 2, பாட்டியல், பாயிரம், மரபியல் - 1, மெய்ப்பாடு, நாடகம், அளவை, நியாயம் ஏனைய - 1) தி.வே. கோபாலையர் முகவுரை எழுத்ததிகார இலக்கணப் பேரகராதியில், தொல்காப்பியம் முதலாக இன்று நம்மிடையே வாழ்ந்து வரும் இலக்கண இலக்கிய மொழியியல் பேரறிஞராம் ச.பாலசுந்தரனார் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றிய ‘தென்னூல்’ முடிய, இன்று நமக்குக் கிட்டுவனவாக நிலவி வரும் சிறந்த இலக்கண நூல் வரிசையில் இடம்பெறும் நூல்களும் உரைகளும் இடம் பெறுகின்றன. இக்காலத்தில் தொல்காப்பியக் கடல் என்று போற்றப்படும் அந்நூல் இயற்றப்பட்ட காலத்தே அது சிறுநூலாகவே யாக்கப் பெற்றது. அதன் எழுத்துப் படலத்தில் உள்ள 9 இயல்களிலும் விதிக் கப்படுவன எல்லாம் கருவியும் செய்கையும் என இருவகைப்படும். அவற்றுள் கருவி நூல்மரபு முதலிய நான்கு ஓத்தும், செய்கை தொகைமரபு முதலிய எஞ்சிய ஐந்து ஓத்தும் ஆம். கருவிதானும் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. முதல் மூன்று ஓத்தும் பொதுக்கருவி; செய்கை ஒன்றற்கேயுரிய புணரியல் சிறப்புக் கருவி. நூல்மரபு, நூலினது மரபு பற்றிய பெயர்களாகிய எழுத்து - குறில் - நெடில் - உயிர் - மெய் - மெய்யின் வகைகள் - எழுத்துக்களின் மாத்திரை - இன்ன மெய்க்கு இன்னமெய் நட்பெழுத்து, பகை யெழுத்து என்பதனைக் குறிக்கும் மெய்ம்மயக்கம் - மெய்யெழுத் துக்கள், எகர ஒகர உயிர்கள், குற்றியலிகரம், குற்றியலுகரம் என்னு மிவை புள்ளிபெறுதல் - மகரக் குறுக்கம் உட்பெறு புள்ளியும் கோடல் - சுட்டு - வினா - அளபெடை - என்பன பற்றிக் குறிப்பிடுகிறது. அடுத்து, மொழிமரபு கூறும் விதிகள் நூல்மரபின் ஒழிபாக அமைந்துள்ளன. இதன்கண் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், அளபெடை, மொழியாக்கம், ஈரொற்றுடனிலை, மகரக் குறுக்கம், ஐகாரக் குறுக்கம், போலியெழுத்துக்கள், மொழி முதலில் வரும் எழுத்துக்கள், மொழியீற்றில் வரும் எழுத்துக்கள் - என்பன இடம் பெறுகின்றன. பிறப்பியல், உயிர் - மெய் - சார்பெழுத்துக்கள் என்பவற்றின் பிறப்பிடங்களும் முயற்சியும் பற்றி மொழிகிறது. புணரியலில், எல்லாமொழிகளின் இறுதியும் முதலும் மெய் உயிர் என்ற இரண்டனுள் அடங்கும்; பெயரும் தொழிலும் என்றோ தொழிலும் பெயரும் என்றோ பெரும்பான்மையும் சொற்கள் புணருமிடத்து இயல்பாகவும் திரிந்தும் புணரும்; புணர்வன நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் ஆகிய இரண்டுமே; சொற்கள் வேற்றுமைப்பொருள் பற்றியும் அல் வழிப்பொருள் பற்றியும் புணரும்; இடையே சாரியை வரப்பெறும்; சில சாரியைகள் உருத்திரிந்தும் புணரும்; எழுத்துச்சாரியைகள் இவை, உடம்படுமெய் இவை - என இச்செய்திகளைக் காணலாம். தொகைமரபு என்னும் ஐந்தாம் ஓத்தின்கண், உயிரீறும் புள்ளியீறும் உயிர்மயங்கியலுள்ளும் புள்ளி மயங்கியலுள்ளும் ஈறுகள்தோறும் விரித்து முடிப்பனவற்றை ஒரோவொரு சூத்திரத் தால் தொகுத்து முடிபு கூறப்படுவனவும், உயர்திணைப்பெயர்ப் புணர்ச்சியும் விரவுப்பெயர்ப் புணர்ச்சியும் இரண்டாம் மூன்றாம் வேற்றுமையுருபு ஏற்ற பெயர்ப்புணர்ச்சியும், சில இடைச்சொற் களது முடிபும், எண் நிறை அளவுப் பெயருள் சிலவற்றது புணர்ச்சி யும் கூறப்பட்டுள. உருபியல், உருபேற்ற பெயர் சாரியை பெற்றும் பெறாமலும் ஒரோவழி நெடுமுதல் குறுகியும் வருமொழியொடு புணருமாறு கூறுகிறது. உயிர்மயங்கியலிலும் புள்ளிமயங்கியலிலும் அல்வழிப் புணர்ச்சி பெரும்பாலும் எழுவாய்த்தொடர்க்கே கொள்ளப்படு கிறது. வேற்றுமைப்புணர்ச்சி வேற்றுமையுருபுகள் தொக்க வேற் றுமைப் புணர்ச்சிக்கே கொள்ளப்படுகிறது. இப்புணர்ச்சிகள் பொதுவாகக் கூறப்பட்டாலும், ஆசிரியர் உயர்திணைப்பெயர் - விரவுப்பெயர் - கிளைப்பெயர் - நாட்பெயர் - திங்கட் பெயர் - எண் நிறை அளவுப் பெயர் - என்பனவற்றை விதந்தோதியே முடிக்கும் கருத்தினராதலின், இப்புணர்ச்சிகள் அஃறிணையில், கிளை முதலாகச் சொல்லப்பட்ட அப்பெயர்கள் நீங்கலான ஏனையவற் றிற்கே கோடல் ஆசிரியர் கருத்தாம். ஆசிரியர் ஈரெழுத்தொருமொழி என்று கூறியமை ஈரெழுத்துக் குற்றுகரச் சொல்லைத் தம் மனத்துக் கொண்டமையாலாம். குற்றிய லுகரம் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுக்கும். உயிரள பெடை என்பது நெடிலை அடுத்து வரும் ஒத்த இனக்குற்றெழுத்தே. புணர்ச்சியில் தொல்காப்பியனார் குறிப்பிடும் எழுத்துப்பேறள பெடை பிற்காலத்தே வழக்கு இறந்தது என்று கோடல் தகும். தொல்காப்பியத்தை அடுத்து நாட்டில் சிறப்பாக வழங்கி வந்ததாகக் கருதப்படும் அவிநயம் இராசபவித்திரப் பல்லவதரையன் உரையொடு 13ஆம் நூற்றாண்டுவரை வழக்கிலிருந்து வந்த செய்தி நன்னூல் மயிலைநாதர் உரையாலேயே பெறப்படுகிறது. அந்நூலும் அதனுரையும் வழக்கிறந்து விட்டன. தொல்காப்பியத்தை அடுத்து இன்று வழக்கில் இருக்கும் ஐந்திலக்கண நூல் பெருந்தேவனார் உரையொடு கூடிய வீர சோழியமே. பல்லவர் காலத்திலே “பாரததேயத்து வழக்கிலிருக்கும் எல்லா மொழிகளுக்கும் தாய் சமற்கிருதமே” என்ற கருத்து மக்க ளிடையே உருவாக, அது 18ஆம் நூற்றாண்டு முடிய உறுதியாகக் கொள்ளப்பட்டு வந்தது. 11 ஆம் நூற்றாண்டளவில் தோன்றிய வீர சோழியம் இக்கருத்தையுட்கொண்டு இயற்றப்பட்ட இலக்கணமே. வீரசோழியத்தின்கண், உயிரெழுத்துக்களை அடுத்து மெய் யெழுத்துக்களின் முன்னர் நெடுங்கணக்கில் ஆய்தம் இடம் பெற்ற செய்தி கூறப்படுகிறது. மகரக் குறுக்கம் மேலே பெறும் புள்ளியோடு உள்ளேயும் ஒரு புள்ளி பெறும் என்ற நுட்பமான செய்தி இந்நூலின் உரையின்கண்ணேயே காணப்படுகிறது. வடமொழிப் புணர்ச்சியில் அல்வழி, வேற்றுமை என்ற பொருள் பற்றிய பாகுபாடு இல்லை. ஆகவே, வீரசோழியச் சந்திப் படலத்திலும் அல்வழி வேற்றுமைப் பாகுபாடு குறிப்பிடப்பட்டிலது. வருமொழி முதலில் உயிர்வரின் குற்றியலுகரம் கெடும் என்னும் செய்தி இந்நூலிலேயே முதற்கண் குறிப்பிடப்பட, அச்செய்தி நேமிநாதம் நன்னூல் முதலிய பின் னூல்கள் பலவற்றிலும் இடம்பெறலாயிற்று. வடமொழிச்சொற்கள் தமிழொலிக்கேற்பத் திரித்து வழங்கப்படுமாற்றிற்கு இந்நூல் கூறும் விதிகளே நன்னூல் முதலிய பின்னூல்களிலும் கொள்ளப்படலாயின. வடமொழியிலுள்ள ‘ந’ என்ற எதிர்மறை முன்ஒட்டு வருமொழி யோடு இணையுமிடத்து ஏற்படும் திரிபுகளை இந்நூல் இயம்பிட, அதனை நேமிநாதமும் ஏற்றுக்கொள்ள, நன்னூல் அதனை நெகிழ்த்து விட்டது, ளகரத்திற்குக் கூறும் புணர்ச்சிவிதி ழகரத்திற்கும், இந் நூலாசிரியர்க்கு முற்பட்ட இலக்கியங்களில் பின்பற்றப்படவே, இந் நூலாசிரியர் இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் வரைந்துள்ள செய்தி இந்நூலில் புதிதாக இடம் பெறுகிறது. இச்செய்தியை நேமிநாதம் நன்னூல் போன்ற பின்னூல்கள் குறிப்பிடவில்லை. உடம்படுமெய்யை இந்நூலாசிரியர் ‘இ ஈ ஐ வழி யவ்வும், ஏனை உயிர்வழி வவ்வும், ஏ முன் இவ்விருமையும், என்று முதன்முறையாக வரையறுத்துக் கூறியவராவர். “அளபெடை மூன்று மாத்திரை பெறும்; அது நெடிலும் குறிலும் இணைந் தொலிக்கும் ஓரொலியே” என்ற இவரது கொள்கையே, பெரும்பாலும் பின்னூலார் பலராலும் மேற்கொள்ளப்பட்டது. ஏ யா எ - என்பன சொல் முதலில் வினாவாகும் என்ற இவர் கருத்தைப் பிற்காலத்து நூலார் பலரும் ஏற்றுக்கொண்டவராவர். அடுத்து வந்த நேமிநாதமும், நெடுங்கணக்கு வரிசையை , உயிர் - அடுத்து ஆய்தம் - அடுத்து மெய் - என்றே குறிப்பிடுகிறது. இந் நூலுள் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக் குறுக்கம் என்னும் இவற்றோடு ஒளகாரக் குறுக்கமும் குறிக்கப்பட்டுள்ளது. “உயிரள பெடை நெடிலொடு கூடிய ஓரொலியாம் இனக் குற்றெழுத்து; அது மூன்று மாத்திரை பெறும்” என்று வீரசோழியத்தை ஒட்டி நேமிநாதம் நுவல்கிறது. வடமொழித் தத்திதாந்த நாமங்களும் எதிர் மறை யுணர்த்தும் நகர முன்னொட்டுப் புணர்ச்சியும் வீரசோழி யத்தைப் பின்பற்றியே கூறப்படுகின்றன. வீரசோழியம் விதிக்கும் வடமொழியாக்கம் நேமிநாதத்தில் இல்லை. தொல்காப்பியத்தை அடுத்து மக்கள் உள்ளத்தே சிறப்பாக இடம்பெறுவது பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலே. முத லெழுத்தும் சார்பெழுத்தும் என்ற பாகுபாடு - சார்பெழுத்துப் பத்து என்பது - அவை ஒவ்வொன்றும் பற்றிய செய்திகள் - மொழிக்கு முதலில், இடையில், ஈற்றில் வரும் எழுத்துக்கள் - போலியெழுத் துக்கள் - என்பன எழுத்தியலில் இடம்பெற்றுள. உயிரளபெடை நெட்டெழுத்தின் நீட்டமாகிய மூன்று மாத்திரை, குறில் அறிகுறி யாக வருவதே என்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. பதவியலில், பகுபதம் பகுதி - விகுதி முதலிய உறுப்புக் களாகப் பிரித்துக் காட்டப் பட்டுள்ளது. பகுபத உறுப்புக்கள் விளக்கப்பட்டுள்ளன. பதவியல் நன்னூல் குறிப்பிடும் ஒருமொழிப் புணர்ச்சியாகிய புதுச் செய்தியே. இதன் இறுதியில் வடமொழி ஆக்கம் வீரசோழியத்தைப் பின்பற்றி வரையப்பட்டுள்ளது. ‘ந’ என்ற எதிர்மறை முன்னொட்டுப் பற்றிய செய்தி பேசப்பட்டிலது. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் வரைந்த உரையையும் உட்கொண்டு இயற்றப்பெற்ற நன்னூலில் தொல்காப்பியச் செய்திகள் பலவற்றொடும் அவ்வுரையாசிரியர் குறிப்பிட்ட செய்திகளும் இடம்பெறுகின்றன. தொல்காப்பியம் குறிக்கும் புணரியல் - தொகை மரபு - உயிர்மயங்கியல் - குற்றியலுகரப் புணரியல் - பற்றிய செய்திகள் பலவும் உயிரீற்றுப் புணரியலுள் அடக்கப்பட்டுள்ளன. அல்வழி யாவன இவையென விளக்கப்படுகிறது. உடம்படுமெய், குற்றுகரம் உயிர்வரக் கெடுதல் - போன்றவை வீரசோழியத்தைப் பின்பற்றியனவாம். நன்னூலில் காணப்படும் மாற்றங்கள் ‘மரபு நிலை திரியாது’ அமைந்தன என்ப. தொல்காப்பியத்தினின்று நன்னூல் சற்றே வேறுபட்டுக் கூறுமிடங்கள் பொருள்நிலை திரியாமையால் ‘மரபு நிலை திரியா மாட்சிமை’ யுடையவாய் முதல்நூற்கு மலைவுபடாமல் செல்லும் இயற்கைய ஆதலைச் சிவஞானமுனிவர் தமது பாயிரவிருத்தியுள் விளங்கக் கூறுமாறு ஈண்டுக் கருதல் தகும். இலக்கணவிளக்கம், நன்னூல் தொல்காப்பியத்தொடு மாறு பட்டுக் கூறும் ஒரு சில இடங்களைச் சுட்டி விளக்குகிறது. தனக்கு முற்பட்ட நூல்களில் விளக்கப்படும் வடமொழியாக்கத்தை இவ் விலக்கணநூல் நெகிழ்த்துவிட்டது. இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம் என்பனவற்றில் சில அரிய புணர்ச்சிவிதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அ - அந் - ந - நி - கு - வி - புணரப் புணர்ப்பது வடமொழியில் எதிர்மறையாகும் என்ற செய்தி இலக்கணக்கொத்தில் விளக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சிறப் பெழுத்து ஐந்தானும் திரிந்து ஆரியச்சொல் வடசொல்லாகித் தமிழில் வழங்கும் செய்தி இவ்விரண்டு நூல்களிலும் விளக்கப்படு கிறது. இச்செய்தி நன்னூலில் இடம் பெற்றிலது. தொன்னூல் விளக்கம் நன்னூலைப் பெரிதும் பின்பற்றியது; வடமொழியாக்கத்திலும் நன்னூலைப் பின்பற்றியுள்ளது. முத்து வீரியத்தில் தீர்க்கசந்தி முதலியவற்றிற்கு விதிகள் தனித்தனியே கூறப் பட்டுள. கோ + இல் = கோயில், மா + இரு = மாயிரு - முதலிய வற்றிற்குத் தனியே விதிகள் வகுக்கப்பட்டுள. சுவாமிநாதத்தில் குறிப்பிடத்தகும் விசேடமாக ஏதும் இன்று. அதன் ஆசிரிய விருத்த யாப்பு நயனுறுமாறு இல்லை. தொல்காப்பிய எழுத்ததிகாரத்து இளம்பூரணர் உரை - நச்சினார்க்கினியர் உரை - சென்ற நூற்றாண்டு மொழியியல் வித்தகராம் வேங்கடராசுலு ரெட்டியார், பி.சா. சுப்பிரமணிய சாத்திரியார் இவர்கள்தம் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் - சென்ற நூற்றாண்டிறுதியில் வெளிவந்த பாலசுந்தரனார்தம் தொல்காப்பியக் காண்டிகையுரை - சிவஞான முனிவர் அரசஞ்சண்முகனார் வரைந் துள்ள விருத்தியுரைக் குறிப்புக்கள் என்னுமிவையும், வீரசோழியம் பெருந்தேவனார் உரை - நேமிநாதம் வயிரமேகவிருத்தியுரை - நன்னூல் மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், இராமாநுசக் கவிராயர், சடகோபராமாநுசாச்சாரியார் ஆறுமுகநாவலர் என்றின்னோர்தம் உரைகள் - என்னும் இவையும் ஏனைய மூல நூல்களின் செய்தி களொடு தொகுக்கப்பட்டு இவ்வெழுத்ததிகார இலக்கணப் பேரகராதி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்கண் காணப்படும் குற்றம் குறைகளை நல்லறிஞர் பெருமக்கள் உரிய காரணம் சுட்டிக் காட்டுவாராயின், அப்பிழை பாடுகள் அடுத்த பதிப்பில் களையப்படும். அன்ன திருத்தங்கள் நன்றி யறிதலோடு ஏற்கப்படும். தி.வே. கோபாலையர் Eva Wilden École Française d’Extrême-Orient 16&19 Dumas Street, Pondicherry centre Pondicherry. Aug. 2005 Introduction Tamil grammar and poetics are old and venerable disciplines interwoven into a complex system the beginnings of which are lost in legend. What is fact, however, is that we are looking back on a textual tradition representing the thought of almost two millennia: a continuous discourse on Tamil language and literature, but also a dispute with other systems of knowledge, most notably the Sanskrit grammatical and poetological traditions. To give a rough chronology, for the first millennium, we have one great treatise encompassing the whole field and developing the basic structure that is taken up, with some modifications and extensions, by the whole later tradition. This is the famous Tolka#ppiyam, consisting of three parts, two of them devoted to two different aspects of grammar, which has been ever since split into two sections, namely ElÈuttu (phonology) and Col (morphology and syntax), while the third part treats of Porul@ (poetics). It is followed by a small work specialising in a particular field of poetics, namely that of Akam (love poetry), called the IrÈaiyan_a#r Akapporul@. The second millennium, probably a time of socio-cultural upheaval, sets in with a voluminous commentary tradition not only for the treatises that had been written so far, but also for wide parts of the older literature. In fact our understanding of the meaning of the older texts is basically indebted to these commentaries. Nevertheless, there is a parallel development of new treatises in all sub-disciplines, mirroring the confrontation with the change of language, the arising of new literary forms and the massive impact of North-Indian, i.e. Sanskritic modes of thinking and writing in the Tamilian South. To mention just a few of the most important titles, among the inclusive texts – comprising, just as the Tolka#ppiyam, the whole range of the field – there are the heavily Sanskritised Vi#raco#lÈiyam of the 11th century, and the Tamil-conservative Ilakkan|a Vil@akkam of the 17th century. Both of them extend the original structure of three sections, dealing with ElÈuttu (phonology), Col (morphology and syntax), and Porul@ (poetics), by another two subsumed under Porul@, namely Ya#ppu (metrics) and An|i (figures of speech). Among the influential treatises devoted exclusively to grammar we may list the Nan_n_u#l (12th century), the standard book on Tamil grammar after the Tolka#ppiyam, and the Pirayo#ka Vive#kam (17th century), again very Sanskritic. Poetics, for its part, seems to have been an even more fruitful domain, creating a number of branches with various specia-lisations. The first independent text on metrics is the Ya#pparun)-kalakka#rikai (10th century); the most notable exponent of systematic Akam poetics is the Nampi Akapporul@ (12th century), while the Pur_am genre (heroic poetry) is represented by the Pur_apporul@ven|pa#-ma#lai (9th century). The encyclopaedia presented here is an attempt to render accessible this wealth of materials to specialists and also to non-specialists. The vast topology and terminology of Tamil grammar and poetics are represented by key terms which are explained with reference to the corresponding su#tras in the treatises and additional explication from the various commentaries. The whole work comprises 17 volumes, structured in the traditional way into the three sections ElÈuttu (phonology), Col (morphology and syntax) and Porul@ (poetics), where 2 volumes fall on ElÈuttu, 4 on Col, and 11 on the various sub-disciplines subsumed under poetics: 2 for Ya#ppu (metrics), 2 for An|i (figures of speech), 4 for Akam (love topics), 1 for Pur_am (heroic topics), 1 for Pa#t@t@iyal (literary genres), Pa#yiram (prefaces) and Marapiyal (word usage), and finally 1 for Meyppa#t@u (physical manifestation), Na#t@akam (drama), Al@avai (valid means of knowledge), A#nantakkur|r|am (collocations to be avoided), Niya#yam (logic) and ValÈuvamaiti (poetic licence). The last of these volumes contains a bibliography. This sort of work of synthesis has long been a desideratum of research: it gives erudite references to a vast range of technical Tamil texts which are, for the most part, not well understood today. Some of the texts are hard to come by – unless in the editions of the author of this encyclopaedia (on whom more below) – most of them are not translated into any other language, general introductions into the field are few, and even fewer are written in languages more easily accessible to the general reader (like English or French). There has been more than one project comparable in range in recent years, most prominently the Encyclopaedia of Tamil literature of the Institute of Asian Studies, Chennai (in English language), but sadly this opus has not yet seen more than 3 volumes, the last one already nine years old and reaching only the letter “ai”. All the more reason for scholars interested in Tamil language and literature to be grateful to the author of the present work, the venerable T.V. Gopal Iyer, with his 80 years one of the last living exponents of a great tradition of exegesis. Space permits here no more than a brief account of the highlights of a long and in many respects exemplary career of a Tamil savant in the 20th century. As well as following a traditional path of education, the worldly marks of which are his two titles Vidvan and Panditam conferred by the University of Madras and the Maturai Tamil Cankam respectively (in 1945 and 1953), Gopal Iyer also acquired the “modern” university degrees of Bachelor of Oriental Language and Bachelor of Oriental Language with Honours at the University of Madras (1951 and 1958). From 1965-1978 he taught in Rajah’s College, Thiruvaiyaru, in which period he already took up his activity of editing works of Classical Tamil, especially theoretical texts. The most important publications from that phase are the Ilakkan|a Vil@akkam in 8 volumes (published in Thanjavur by the Sarasvati Mahal from 1971-1974), the Ilakkan|ak Kottu (Sarasvati Mahal 1973) and the Pirayoka Vivekam (Sarasvati Mahal 1973). Ever since 1978, Mr. Gopal Iyer’s sphere of activity has shifted to Pondicherry, where he has been (and still is) employed as a research scholar by the École Française d’Extrême-Orient (EFEO) – i.e., the French School of Asian Studies –, a research institution financed by the French government which has 17 research centres spread across Asia, the westernmost of which is that in Pondicherry, and which has the mission of studying Asian (and notably Indian) languages, cultures and religions. In this environment, designed as a meeting place for international research, the enormous preparatory work for this encyclopedia has been accomplished. Part of the voluminous editorial output of Mr. Gopal Iyer during the last 27 years has appeared in a series co-published by the EFEO and the IFP (the French Institute of Pondicherry, another research Institution of the French government in whose premises T.V. Gopal Iyer worked for several years), such as a 3-volume edition of the Te#va#ram, his major contribution to devotional Tamil literature (1984f., 1991), and the Ma#ran_ Akapporul@ (2005). A number of further publications deserve mention, since they concern fundamental texts of the Tamil grammatical and poetological tradition upon which the encyclopaedia is based. Last year he published a 14-volume edition of the complete Tolka#ppiyam with all the commentaries (through Thiru. G. Ela-vazhagan of TamizhMann Pathippagam, Chennai - 17) and this year editions of the Vi#raco#l@iyam and the Ma#r_an_ Alan)ka#ram. The EFEO is extremely happy that it has been able to contribute its share to this publication of vital importance for the exploration of Tamil literary history, which will be a monument to a most extraordinary man, who has been teacher and adviser, nay, a living encyclopaedia, to so many students of Tamil language, Indian and Western. A final brief note of thanks to three individuals who were important in bringing this large work to the light of day. The first is Mr. T.V. Gopal Iyer’s younger brother, Mr. T.S. Gangadharan, then of the French Institute of Pondicherry and now of the Pondi-cherry Centre of the EFEO, who wrote the work out in a fair hand. The second is Dr. Jean-Luc Chevillard, who, years later, had the encyclopeadia digitally photographed when in its yet more voluminous hand-written state and so by his timely intervention prevented the loss of some of its parts. The third is the publisher, Mr. Ela-vazhagan, of the Thamizh Mann Pathippagam, who had the vision to see the value of this work and took on the task of setting it in type, a labour which took a year and a half and involved five sets of proofs. ஈவா வில்டன் பிரஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி 16&19 டுமாஸ் தெரு புதுச்சேரி மையம் பாண்டிச்சேரி, ஆகஸ்டு 2005. அறிமுகவுரை தமிழ் இலக்கணம் மிகு தொன்மை வாய்ந்தது; பெரு மதிப்பிற் குரியது; தன் கூறுபாடுகள் பிணைந்து நுட்பமான பேரமைப்பாக உருவாகியுள்ள இவற்றின் தொடக்கக் காலம் எளிதில் வரையறுக்க முடியாத பழங்காலமாகும். தமிழ் மொழி பற்றியும் இலக்கியம் பற்றியும் 2000 ஆண்டுகளாக இடையறாது தொடர்ந்து வந்துள்ள சிந்தனைகளை நாம் இன்று நமக்குக் கிட்டியுள்ள நூல்களிலிருந்து காண்கிறோம். அச்சிந்தனைகள் பிறமொழிகளின் (குறிப்பாக வட மொழியின்) இலக்கண இலக்கியங்களோடு உறழ்ந்து வந்துள்ளதை யும் காண்கிறோம். தோராயமாகச் சொன்னால் முதல் ஆயிரம் ஆண்டுகளில் தமிழிலக்கியத்திற்கு முழுமையான அடிப்படையாக அமைந்துள்ள ஒரே பெரும் பேரிலக்கணம் தொல்காப்பியம் ஆகும். (அஃது அவ்வப்பொழுது சிற்சில மாற்றங்களுடனும் விரிவாக்கங் களுடனும் அவ்வாயிரம் ஆண்டுக்கால இலக்கியத்துக்குமே அடிப் படையாக அமைந்தது.) அந்த ஒரே இலக்கணம்தான் புகழ்மிகு தொல்காப்பியம். அஃது மூன்று அதிகாரங்கள் கொண்டது: எழுத்து (ஞாடிnடிடடிபல) சொல் (ஆடிசயீhடிடடிபல யனே ளுலவேயஒ) பொருள் (ஞடிநவiஉள). சில காலம் கழித்துப் பொருள்இலக்கணத்தின் ஒரு பகுதியான அகம் பற்றி இறையனார் அகப்பொருள் என்னும் சிறுநூல் ஒன்று தோன்றியது. கி.பி. 1000-க்குப் பின்னர் தமிழகத்தில் சமுதாய - கலாசார மாற்றங்கள் விரைவுபெற்றன. அக்காலகட்டத்தில் தோன்றியதே விரிவாக உரையெழுதும் முறையாகும். இலக்கண நூல்களுக்கு மட்டு மன்றி, பழைய தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலனவற்றுக்கும் இவ்வாறு உரைகள் தோன்றின. அப்பழநூல்களின் பொருளைத் தெரிந்துகொள்ளப் பெருமளவுக்கு அவ்வுரைகளையே நாம் சார்ந் துள்ளோம். எனினும் அக்காலகட்டத்தில் தமிழ் இலக்கணத்தின் உட்பிரிவுகள் பற்றிப் புது நூல்களும் தோன்றலாயின. மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிய செய்யுள் வடிவங்களின் தோற்றம், தமிழின்மீது வடநாட்டு அஃதாவது சமற்கிருதம் சார்ந்த சிந்தனை எழுத்து ஆகியவற்றின் தாக்கம் இவற்றைக் காட்டுவனவாக அப்புது நூல்கள் தோன்றின. முதன்மையான சிலவற்றைக் காண்போம். தொல் காப்பியம் போல் எழுத்து, சொல், பொருள் மூன்றையும் பற்றி எழுதப்பட்டவை வீரசோழியமும் (மிகுந்த சமற்கிருதச் சார்புடையது; 11ஆம் நூற்றாண்டு) இலக்கண விளக்கமும் (தமிழ் இலக்கணத் தொல் மரபுகளைக் கடைப்பிடித்தது; 17ஆம் நூற்றாண்டு) ஆகும். இந்நூல்கள் பொருளை யாப்பு (ஆநவசiஉள) அணி (குபைரசநள டிக ளுயீநநஉh) என்று மேலும் இரு பிரிவுகளாக ஆக்கியுள்ளன. எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்தனவற்றுள் மிகுதியும் பயிலப்பட்டவை 12ஆம் நூற்றாண்டு நன்னூலும் (தொல்காப்பியத்துக்குப் பின் தமிழுக்கு இலக்கணம் என்றாலே நன்னூல் தான் என்பதே நிலைமை) 17 ஆம் நூற்றாண்டுப் பிரயோக விவேகமும் (மிகுதியும் சமற்கிருதச் சார்புடையது) ஆகும். பொருளின் பிரிவுகள் பற்றியும் உட் பிரிவுகள் பற்றியும் எழுந்த புது இலக்கணங்கள் மிகப்பல. யாப்பு பற்றித் தனியாக எழுந்த முதல் இலக்கணம் யாப்பருங்கலக் காரிகை (10ஆம் நூற்றாண்டு); அகம் பற்றி விரிவாக எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க நூல் நம்பி அகப்பொருள் (12ஆம் நூற்றாண்டு); புறம் பற்றியது புறப்பொருள் வெண்பாமாலை (9ஆம் நூற்றாண்டு). இந்த தமிழ் இலக்கணப் பேரகராதி மேற்சொன்ன இலக்கணச் செல்வங்களைத் தமிழ் வல்லுநர்களுக்கும் பிறருக்கும் - ஒரு சேரத் தொகுத்துத் தரும் சிறந்த நூல். தமிழ் இலக் கணத்தின் (பொருளியல் உட்பட) மிக விரிந்த பரப்பில் கண்ட அனைத்து முக்கியமான தலைப்பு ஒவ்வொன்றும் அகர வரிசைப்படி, உரிய நூற்பாக்களும், பல்வேறு உரைகாரர்கள் கூற்றுக்களும் தரப்பட்டுத் தெளிவாக விளக்கப்படுகின்றது. எழுத்துக்கு 2, சொல்லுக்கு 4, பொருளுக்கு 11 ஆக 17 தொகுதிகள் கொண்டது இவ் வகராதி. (பொருள் பற்றிய 11 தொகுதிகளின் வகைப்பாடு: அகம் - 4, புறம் - 1, யாப்பு - 2; அணி - 2; பாட்டியல், பாயிரம், மரபியல் - 1; மெய்ப்பாடு, நாடகம், அளவை, ஆனந்தக் குற்றம், நியாயம், வழுவமைதி ஆகியவை - 1, என்பனவாகும்) இறுதித் தொகுதில் கருவி நூற்பட்டியலும் உள்ளது. பொருள்களைத் தெள்ளிதின் உணர்ந்து முறைப்படி விளக்கும் இத்தகைய பேரகராதியின் இன்றியமையாத் தேவை நெடுநாளாக ஆய்வுலகத்தால் உணரப்பட்டுவந்ததாகும். மிக விரிந்த இவ் விலக் கணநூல்களும் உரைகளும் திட்ப நுட்பமான நடையிலமைந்தவை யாகையால் இன்று எளிதில் படித்துணரத்தக்கவை அல்ல. அவற்றில் காணத்தகும் இலக்கணச் செல்வங்களுக் கெல்லாம் புலமை சான்ற விளக்கங்களை இங்குக் காணலாம். இவ்விலக்கண நூல்கள், உரைகளிற் சிலவற்றின் அச்சுப்படிகள் கூட எளிதில் கிட்டுவதில்லை (கிட்டினும் அவையும் இவ்வகராதி யாசிரியர் அச்சிட்டவையாகவே இருக்கும்; அவரைப் பற்றி மேலும் சில பின்னர்). அவ்வரிய இலக்கண நூல்கள் பிறமொழிகளில் பெயர்க்கப்படாதவை; இவற்றைப் பற்றிய பொதுவான விளக்க நூல்களும் சிலவே - அதுவும் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழி களில் வந்துள்ளவை ஒன்றிரண்டேயாகும். அண்மைக் காலங்களில் இவை போன்ற விரிவான நூல்கள் வெளியிடும் திட்டங்கள் சில வற்றுள் சென்னை ஆசியவியல் நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிடத் தொடங்கிய “தமிழ் இலக்கியக் களஞ்சியமும்” ஒன்று. அக்களஞ்சி யத்தில் மூன்று மடலங்களே (ஐ முடிய) வெளிவந்த நிலையில், கடந்த ஒன்பதாண்டுகளாகப் பணி முட்டுப்பட்டு நிற்கிறது என்பது நினைக்கத்தக்கது. இந்நிலையில் தமிழ் இலக்கண நூல்களிலும் உரைகளிலும் ஊறிய பேரறிஞர்களில் இன்று நம்மோடு உள்ள மிகச் சிலரில் ஒருவரான, 80 வயது நிறைந்த வணக்கத்துக்குரிய தி.வே. கோபாலையரின் படைப்பான இப் பேரகராதி தமிழ் இலக்கண, இலக்கிய அறிஞர்கள் அவர்பால் நன்றி பாராட்டுதற்குரிய ஒன்றாகும். இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் பல்வகையிலும் போற்றத்தக்கவருள் ஒருவரான இவ்வாசிரியரின் நெடிய தமிழ்ப்பணி குறித்து மிகச் சிறிய அளவிலேயே ஈண்டுக் கூற இயலும். பாரம்-பரியமான தமிழ்ப் புலமை மரபில் அவர் பெற்ற தகுதிகள் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் (1945); மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதம் (1953) ஆகியவை; அத்தோடு “நவீன”ப் பல்கலைக் கழகப் பட்டங் களாகச் சென்னைப் பல்கலை கழகத்தில் 1951இல் பி.ஓ.எல் பட்டமும், 1958இல் பி.ஓ.எல் (ஆனர்சு) பட்டமும் பெற்றுள்ளார். 1965 - 1978இல் அவர் திருவையாறு அரசர் கல்லூரியில் ஆசிரியப்பணி ஆற்றினார். அப்பொழுதே பதிப்புப் பணியை, குறிப்பாக பழந்தமிழ் இலக்கண உரைநூல்களைப் பதிப்பிக்கும் பணியைத் தொடங்கினார். அக்கால கட்டத்தில் அவர் பதிப்பித்தவை இலக்கண விளக்கம் 8 தொகுதிகள் (தஞ்சை சரசுவதி மகால் 1971-74), இலக்கணக் கொத்து (தஞ்சை சரசுவதி மகால் 1973), பிரயோக விவேகம் (தஞ்சை சரசுவதி மகால் 1973) ஆகியவையாம். 1978இலிருந்து திரு கோபாலையர் அவர்களுடைய அறி வாற்றலைப் பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி (விஉடிடந குசயnளீயளைந ன’நுஒவசஷீஅந-டீசநைவே ) பயன்படுத்தி வருகிறது. அவர் இன்று ஆய்வுப் பணி செய்யும் அந்நிறுவனம் பிரான்சு நாட்டு அரசு நிதி உதவியுடன் நடைபெறுகிறது. அவ் வமைப்பிற்கு ஆசிய நாடுகளில் மொத்தம் 17 ஆய்வுமையங்கள் உள்ளன. பாண்டிச்சேரி மையம் உட்பட. இவை ஆசிய (குறிப்பாக) இந்திய மொழிகள், பண்பாடுகள், சமயங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்கின்றன. பன்னாட்டு ஆய்வாளர்கள் ஒருங்கிணைந்து அறிவுப் பணி செய்யும் இச் சூழல் கொண்ட பாண்டிச்சேரி மையத்தில்தான் இவ்விலக்கணக் களஞ்சியம் தொகுக்கும் மாபெரும் பணி நடந்தது. கடந்த 27 ஆண்டுகளில் திரு கோபாலையர் படைத்த பற்பல நூல்களையும் பாண்டிச்சேரியி லுள்ள பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளியும், பிரான்சு நாட்டு அரசின் மற்றொரு கீழைக் கலை ஆய்வு நிறுவனமான பிரெஞ்சு நிறுவனமும் (குசநnஉh ஐளேவவைரவந) வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியான அவர் நூல்களில் குறிப்பிடத்தக்கவை தமிழ்ப் பக்தி இலக்கியம் சார்ந்த தேவாரம் (3 தொகுதிகள் 1984 முதல் 1991 வரை), மாறன் அகப் பொருள் (2005) ஆகியவை. இப்பேரகராதிக்கு அடிப்படையாக அமைந்தவையும் கோபாலையர் பதிப்பித்தவையுமான வேறு சில நூல்களையும் குறிப்பிட்டாகவேண்டும்; அவை (திரு. கோ. இளவழகன், தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17 மூலமாக) அவர் 2004இல் பதிப்பித்த தொல்காப்பியமும் (உரைகளுடன் 14 தொகுதிகள்) 2005இல் அவர் பதிப்பித்துள்ள வீரசோழியமும் மாறன் அலங்காரமும் ஆகும். தமிழ் இலக்கிய இலக்கண வரலாற்றை ஆய்வு செய்திட இன்றி யமையாத கருவி இப் பேரகராதி. இந்திய மற்றும் மேல்நாட்டுத் தமிழ் ஆய்வாளர்கள் பலருக்கு ஆசானாகவும் அறிவுரையாள ராகவும், ஏன் நடமாடும் கலைக்களஞ்சியமாகவும் அமைந்த அபூர்வ மான ஓர் அறிஞரின் மாபெருஞ் சாதனையாக அமைவதும் இது. எனவே இந்நூல் வெளியீட்டில் தானும் பங்கு பெற்று உதவிட வாய்ப்புப் பெற்றது குறித்துப் பிரெஞ்சு இந்திய ஆய்வுப் பள்ளி மகிழ்கிறது. இறுதியாக இம்மாபெரும் பணி வெற்றிகரமாக நடைபெறப் பெரும்பங்கு ஆற்றிய மூவருக்கு நன்றி கூறியாக வேண்டும். முதலா மவர் திரு கோபாலையரின் இளவல் திரு கங்காதரன் அவர்கள். அவர் முன்னர்ப் பிரெஞ்சு நிறுவனத்தில் பணி செய்தவர். இப்பொழுது பி.இ.ஆ.ப. பாண்டிச்சேரி மையத்தில் அவர் ஆய்வறிஞர், பணியில் உள்ளார். நூல் முழுவதையும் தம் கைப்பட அழகாக எழுதியவர் அவர். இரண்டாமவர் டாக்டர் ழான்-லுக்-செவியர்; கையெழுத்துப் பிரதி முழுவதையும் டிஜிடல் நிழற்படமாக எடுத்து எப்பகுதியும் சிதிலமாகி அழிந்து விடாதபடி பார்த்துக் கொண்டவர். மூன்றாமவர் திரு கோ. இளவழகன். அவர் இந்நூலின் சிறப்பையும் பயனையும் உணர்ந்து அதை வெளியிட முன்வந்தவர். இப் பெருநூலைச் செம்மை யாகக் கணினியில் தட்டச்சு செய்து அச்சுக்கு அணியமாக்கவும், மெய்ப்புக்களை ஐந்து முறை கவனமாகத் திருத்தவும் ஆக ஒன்றரை ஆண்டுகள் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் உழைத்துள்ளனர். தமிழ் வாழ்க! தலைமாமணியெனத் தமிழிலக்கணப் பேரகராதியை வரைந்தருளிய கலைமாமணி, பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் அவர்களை வாழ்த்தி வழங்கும் “பாராட்டுரை” 1 அன்பும் அருளும் அறிவும் திருவும் இன்பமும் எழிலும் மன்னிய உருவாய்ச் சொல்லொடு பொருள்போல் எல்லும் ஒளியும் புல்லிய வடிவென அம்மை யப்பனாய்ச் 5 செந்தமிழ் மயமாய்த் திகழும் சீர்சால் பொன்மலை மேவிய புரிசடைக் கடவுள் நான்மறை நவிலும் நயன்மிகு நாவால் சிந்தை சிலிர்க்கத் தென்றல் உலாவச் சந்தனம் மணக்கும் தண்ணிய அருவிகூர் 10 பொதியத் தமர்ந்து புவியெலாம் போற்ற மதிநலம் வளர்க்கும் மாண்பமை முத்தமிழ் நிதிவளம் நல்கும் நிகரிலா மாதவன் அகத்தியற் கருளிய தகவமை இலக்கண மிகப்பெருங் கலையைச் சகத்தவர் உணர 15 பல்காப் பியந்தெளி தொல்காப் பியன்முதல் ஒல்காப் புலமை ஒண்டமிழ் நூலோர் இயம்பிய இலக்கணப் பனுவல் யாவையும் உளந்தெரிந் துரைசெய் இளம்பூ ரணர்முதல் சேனா வரையர், தெய்வச் சிலையார், 20 ஆனாப் புலமைப் பேரா சிரியர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியர் விச்சை மிக்கநக் கீர னாரொடு சிவஞான முனிவர், சுவாமி நாதனார் யாப்ப ருங்கல விருத்தி முதலாய 25 உரைவழி யாவையும் புரையறக் கற்றறிந்து, அரியவை யாவையும் சிந்தையிற் றெளிந்து கற்றதை மறவாப் பெற்றியொடு திகழும் அருந்திறற் புலவன், பெரும்பே ராசான், விருந்தென வடமொழி பயின்றறி திறலோன், 30 ஆங்கிலப் புலமைசீர் தாங்கிடும் ஆசான், சங்க இலக்கியச் சால்பொடு இரட்டைக் காப்பிய நுணுக்கமும் சிந்தா மணியினைத் தேர்ந்தறிந் துவந்துரை விரிக்கும் செம்மல், தேங்கமழ் அமிழ்தென மாணவர் செவிகொளப் 35 பாடம் பயிற்றும் பண்பமை ஆசான் திருமுறை, திவ்வியப் பிரபந்த அருள்வளம் நிறைமொழி யாவும் நெஞ்சம் இனிக்க உருச்செய் துவக்கும் ஒளிர்தமிழ்ப் பாவலன், புராண இதிகாசப் புலமையும் நுட்பம் 40 விராவிய கம்பன் கவிதையும் பிறபிற சிற்றிலக் கியக்கடல் திளைத்தநற் கல்விமான், ஆளுடைப் பிள்ளையும் அரசும் நம்பியும் தாளுறச் சூழ்ந்து தலையுறப் பணிந்து தெய்வத் தமிழாற் புனைந்ததே வாரம் 45 மெய்யணிந் துவக்கும் ஐயா றன்திகழ் காவிரித் தாயின் கரைமிசை யொளிசெய் திருவையா றதனிற் செந்தமிழ்த் தாயின் உள்ளம் உவப்ப உதித்த தனயன், அந்தணர் குலத்தில் வந்தநற் சான்றோன் 50 குணத்தால் உயர்ந்த கோபா லையன், அன்பும், அடக்கமும், நண்பமை செயலும், இன்சொலும், எளிமையும், இயல்போ டமைந்தொளிர் போதகா சிரியன், புதியன புனையும் ஆய்வறி வாளன், அரும்பெறற் கட்டுரை 55 தரும்எழுத் தாளன், மூவர்தே வாரச் சொல்வளம் இசைவளம் மல்கிடும் ஞானம், மலர்ந்திடும் கற்பனை, வண்ணனை உள்ளம் கலந்திடும் பக்திக் கவிநயம் யாவையும் உலகுணர்ந் துய்ய உரைவிரித் தியம்பிய 60 பலகலை யுணர்ந்த பண்டிதன் இலக்கணக் கடல்படிந் தெல்லை நிலைகண் டெழுந்த ஆசான், தன்பே ருழைப்பினால் இலக்கணக் கலைச்சொல் யாவையும் கவினுறத் தொகுத்துப் பொருள்நிலை விளங்க அகர நிரல்பட 65 இலக்கணப் பேரக ராதியை வரைந்து பேரா சிரியர்,ஆய் வாளர், மாணவர் யாவரும் பயன்பெறக் காவியம் போலத் தமிழ்த்தாய்க் கணியாத் தகவுற வழங்கும் பண்டித தி.வே. கோபா லையர் 70 வண்டமிழ் போல வளமெலாம் மேவி மண்டலம் புகழப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கெனப் போற்றி வாழ்த்துதும் உவந்தென். தஞ்சாவூர் 22.08.2005 பாவலரேறு ச. பாலசுந்தரனார் “கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரோ” முதுபெரும் புலவர் இலக்கணக் கடல் உயர்திருவாளர் தி.வே. கோபாலனார், தமிழ்வளக் கொடையாக, அரும்பதிப்புப் பெருந்தகை கோ. இளவழகனார் வழங்கும், ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ மடலங்கள் பதினேழனையும் ஒருங்கே கண்டதும், “காரே! நேரே தான், வாரியுண்டு; வாரிமொண்டு வாரியுண்டு, வானிருண்டு பேரி கொண்டு நீதிரண்டு பெய்” என்னும், வான்மழைப் பாட்டின் ‘தேன்பிழி’வென எனக்கு அவை இன்ப மூட்டின. கோபாலனார் மூளைக் கூர்ப்பும், இளவழகனார் பதிப்பு ஈர்ப்பும், ஒருங்கே வயப்படுத்திய இன்பத்தில், ‘அன்னை வாழ்க’, ‘அயராத் தொண்டர்களும் வாழ்க’ என என்னுள் வாழ்த்தினேன். கோபாலனார் நினைவின் ஏந்தல்; இலக்கணமா இலக்கியமா, நூலோடு உரையும் நெஞ்சக் களனில் வரப்படுத்தி வைப்பாக வைத்துக் காக்கும் கருவூல வாழ்வர். கற்றது ஒன்றையும் கைவிடாக் ‘கருமி’யெனக் கவர்ந்து கொண்ட தமிழ்வளத்தை, என்றும் எங்கும் எவர்க்கும் ‘தருமி’ என வாரி வழங்கும் வள்ளியர். அவர்தம் இவ்வகராதிக் கொடை, தமிழுலகு காலத்தால் பெற்ற கவின் பரிசிலாம்! என்னை யறியாதே எனக்கொரு பெருமிதம்; ஏக்கழுத்தம்; “இத்தகு பாரிய இலக்கணத் தொகுதிகளை இம்மொழி ஒன்றை யன்றி, எம்மொழிதான் பெறக்கூடும்?” என்னும் எண்ணத்தின் விளைவே அஃதாம்! அம்மம்ம! எழுத்து - இரண்டு மடலங்கள் சொல் - நான்கு மடலங்கள் இவ் ஆறு மடலங்களைத் தானே மற்றை மற்றை மொழிகள் பெறக்கூடும்! பொருளிலக்கணம் என்பதொன்று கொள்ளா மொழிகள், எப்படித் தமிழைப் போல் பொருள் இலக்கண மடலங்களைப் பெற வாய்க்கும்? பொருளிலக்கண மடலங்கள், எழுத்து, சொல் மடலங் களைப் போன்ற எண்ணிக்கையினவோ? அகப்பொருள் - நான்கு மடலங்கள். புறப்பொருள் - ஒரு மடலம் யாப்பு - இரண்டு மடலங்கள் அணி - இரண்டு மடலங்கள் மெய்ப்பாடு முதலன - ஒரு மடலம் பாட்டியல் முதலன - ஒரு மடலம் ஆகப் பதினொரு மடலங்கள். மொத்தமாகக் கூடுதல் 17 மடலங்கள். மொழி ஆர்வலர்க்குப் ‘பெருமிதம்’ உண்டாகுமா? உண்டாகாதா? இப்பெருமிதத்தூடேயே ஓர் ‘ஏக்கம்’: அரிய ஆய்வுக் குறிப்புகள் வழங்கித் தெளிவுறுத்த வல்ல ஆசிரியர், அவற்றை அரிதாக மேற்கொண்டதை அன்றிப் பெரிதாக அல்லது முற்றாக மேற்கொண்டிலரே என்பதே அவ்வேக்கம். எ-டு: ‘அகர முதல் னகர இறுவாய்’ என்பன இளம்பூரணருக்கு அன்மொழித் தொகை; நச்சினார்க்கினியருக்கு எழுவாய்த் தொடர்கள் - என்று காட்டும் தொகையாசிரியர், “அகரத்தை முதலாகவும் னகரத்தை இறுதியாகவும் உடைய என்று பொருள் செய்யின் அகரமுதல் - னகர இறுவாய் என்பன இரண்டாம் வேற்றுமைத் தொகை” என்று தம் தெளிவை இயைக்கிறார் (எழுத்து 1:22) நன்னூலார் அளபெடையைச் சார்பெழுத்தாக எண்ணினார். ஆசிரியர் தொல்காப்பியனார் அளபெடையை உயிரெழுத்துள் அடக்கிக் கொண்டார் என்பதைச் சிவஞான முனிவர் சூத்திர விருத்தி கொண்டு தெளிவிக்கிறார் தொகையாசிரியர். (எழுத்து 1:44) “மகரக் குறுக்கம் மேலால் பெறும் புள்ளியொடு உள்ளும் புள்ளி பெறும் என்ற உரையாசிரியர் கருத்து மிகத் தெள்ளிது. ‘உட்பெறு புள்ளி உருவாகும்மே’ (தொ.எ. 14) என்ற நூற்பாவிற்கு உண்மையுரை காண உதவுகிறது” என்று தெளிவிக்கிறார் தொகை யாசிரியர். (எழுத்து 2: 263) ‘வேண்டா கூறி வேண்டியது முடித்தல்’, என்னும் தலைப்பில், “தேவையற்றது போன்ற ஒரு செய்தியைக் கூறி அதனால், நூற்பாக்களில் கூறப்படாத மற்றோர் இன்றியமையாத செய்தியைப் பெறப்பட வைத்தல்” என்று விளக்கும் தொகையாசிரியர், நுண் மாண் நுழைபுலம் கற்பவர் தெளிவுக்கு நல்வழி காட்டுகின்றது. (எழுத்து 2:265) ஆனால், இத்தகையவை பெரிதும் இடம் பெறாமல் ‘தொகை யளவொடு’ நின்று விடுகின்றது என்பதே அவ்வேக்கம். தொகை யாவது, தொகுப்பு. ‘குற்றியலுகரம் ஒற்று ஈறே’ என்பதோர் ஆய்வு என்றால், ‘குற்றியலுகரம் உயிர் ஈறே’ என்பதோர் ஆய்வு ஆதல் காட்டப்படவேண்டும் அல்லவோ! எது செவ்விது என்பதைத் தெளிவித்தல் இன்றேனும், தெளிவிக்கக் கருவிதந்தது ஆகும் அன்றோ! இவ்வாறு, பின்னாய்வாளர் எண்ணற்றோர் ஆய்வுகள் கொள்ளப்படாமை மட்டுமன்று; தள்ளப்படுதல் மிகத் தெளி வாகின்றது. தொகையாசிரியரால் சுட்டப்படும் அரசஞ்சண்முகனார் (பாட்டியல் 15) ஆய்வு எத்தகையது எனின், ‘நடுநிலை பிறழாமல் ஆராய்ந்து எழுதுவதில் வல்லுநர்’ எனத் தொகையாசிரியராலேயே பாராட்டப்படும் தகையதாம். அச்சண்முகனார், ‘பிரமாணம் ஆகாத நூல்கள்’ என்பதையும் பதிவு செய்கிறார் தொகையாசிரியர். அது, “சின்னூல்(நேமிநாதம்), நன்னூல், வீரசோழியம், இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம், சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, இலக்கண விளக்கம் முதலாகப் பல, தொல்காப்பியத்தின் வழிப்படச் செய்யப்படினும் ஆசிரியனது கருத்துணராமல் மரபு நிலை திரியச் செய்யப்பட்டமையான் பிரமாணமாகாத நூல்கள் ஆம். (பிரமாணம் நூல்நெறிக்குச் சான்றாக - எடுத்துக் காட்டாகத் திகழும் வாய்மையாகிய தகுதி; நியாய அளவைகளால் உறுதிப்பாடு) இவ்வாறு குறிப்பர் அரசஞ்சண்முகனார் (பா.வி. பக். 104-105)” என்கிறார் (பாட். 142) என்பது. தொகையாசிரியர், இச் சான்றைப் பொன்னே போலப் போற்றியிருப்பின், அதன் பெருஞ்சிறப்பு எப்படி இருந்திருக்கும்? தன் பெயருக்கு ஏற்பத் ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ என்பதற்குத் தானே தன்னிகரிலாத் தலைமை கொண்டிருக்கும்! இப்பிரமாணமாகா நூல்களைத் தள்ளியிருப்பின் இப்பாரிய நிலை இருக்குமோ எனின், அவ்வெண்ணம் பிழைபட்ட எண்ண மாம்! ‘தொடர்நிலைச் செய்யுள்வகைப் பெயர்’ என்னும் தலைப்பில் கூறப்படும் அளவுகோல் தானா இன்றும் உள்ளது? சதுரகராதியும் பிரபந்த மரபியலும் கூறுவன 96 மட்டுமே. மற்றை நூல்களால் அறிவன அதற்கும் உட்பட்டனவே. ஆனால், சிற்றிலக்கிய விரிவாக்கப் பரப்பு எத்தனை? 381 வகையென்பதை எம், ‘இலக்கிய வகைமை அகராதி’யில் காணலாம். அவற்றின் மேலும் இதுகால் விரிந் துள்ளன. பொருளதிகார ஆய்வோ, வெள்ளப் பெருக்காகி உள்ளது. கால்டுவெலார், ஞானப் பிரகாச அடிகளார், பாவாணர் அன்னவர்கள் ஆய்வு தமிழிலக்கண ஆய்வுகள் அல்ல எனத் தள்ளப் பட்டுவிடாவே! அவற்றை நோக்கினால், வேண்டாச் சேர்ப்புகளை விலக்கி, வேண்டும் சேர்ப்புகளை இணைத்துக் கொண்டால் இன்னும் பதின் மடலங்கள் மிகும் என்பதை, நினைவின் ஏந்தல் - சோர்வறியாச் சுடர் - கோபாலனார் கொள்வாரே எனின், இத்தமிழ் இலக்கணப்பேரகராதி ஒத்ததோர் அகராதி இன்றாம் என மலைமேல் ஏறி முழக்கமிடலாம் அல்லவோ! இத்தொகையாசிரியப் பெருமகனாரை அல்லார் ஒருவர், இப்பெருங் கடப்பாட்டை மேற்கொண்டு இத்தகு பணி செய்தல் அரிது! அவர்தம் முழுதுறு ஒப்படைப்பின் பேறு அது. அன்றியும், தம்மைப் போலவே தம் உடன்பிறப்புகளையும் அழுந்திப் பயிலவும் ஆர்வக் கடனாற்றவும் பயிற்றி இருக்கும் பயிற்றுதற்பேறு; தமிழ் வாழ்வாகிய அவரைத் தாங்குதலே தம் பிறவிப் பேறு எனக்கொண்டு நயத்தகு துணையாயும் குடும்பமாகியும் நிற்பார் கெழுதகைப் பேறு; இன்னவெல்லாம், இத் தமிழ்ப் பெருங்கொடைக்கு ஊற்றுக் கண்கள் அன்னவாம். இங்குச் சுட்டப்பட்டவை, தமிழ்க் காதலால், தமிழர் பண் பாட்டுக் காதலால் சுட்டப்பட்டவை என்பதைக் கற்பார் உணரின், இத்தொகுதிகளைத் தத்தம் குடிமை வைப்பாகக் கொள்ளக் கடமைப்பட்டவராம். ஆய்வுக்கு இப்படியொரு கருவி எளிதில் வாய்க்குமா? ஆய்வுக்கு எல்லை உண்டா? ‘அறிதோ றறியாமை’ காணும் ஆய்வுக்கு, “மனிதர்காள் இங்கேவம்; கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரோ” என்று அப்பரடிகள் தமிழ்க்கோயில் வாயில் முன் நின்று அழைத்து வழிகாட்டுவது போல, அயராத் தொண் டர்கள் தி.வே. கோபாலனாரும், கோ. இளவழகனாரும் இத் தொகையைக் கைகோத்து நின்று கனிவொடு வழங்குகின்றனர்! நாம் பேறெனப் பெற்றுப் பயன் கொள்வோமாக! தமிழ்த்தொண்டன், இரா. இளங்குமரன் ‘குறுந்தட்டாக’ விளங்குபவர் பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் புதுவைக்கு வருகின்றவர்கள் இங்கே இரண்டு கடல்களைப் பார்க்கலாம். ஒன்று உவர்க்கடல்; மற்றொன்று தி.வே. கோபாலையர் என்னும் நூற்கடல். ‘தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முகடு தொடுத்துப் பொன்கொழித்து, மணிவரன்றி, மாணிக்கத்தொடு வயிரம் உந்தி வந்து, சல சலவென இழிதரும் அணிகிளர் அருவி’ போன்ற இவரது பொழிவினை ஒரு முறை கேட்கும் எவரும் வியந்து, இவர் ஒரு நூற்கடல்தாம்’ என்பதை எளிதினில் ஏற்றுக்கொள்வர். ‘அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும்’ கொண்ட மலையனைய மாண்பின் அறிவினராகிய தி.வே. கோபாலையர் கற்றோர்தமக்கு வரம்பாகிய தகைமையர். தண்டமிழின் மேலாந்தரமான இலக்கிய இலக்கணங்களையும், அவற்றுக்குப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் உரைகளையும் இளமையிலேயே பதிவு செய்துகொண்ட குறுந்தட்டாக விளங்கு பவர் இப் பெருந்தகை. எக்காரணத்தாலாவது இந்நூல்களில் ஒன்றை இழக்க நேரின் கவலைப்பட வேண்டியதில்லை; இவர்தம் உள்ளப் பதிவிலிருந்து அதனை மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம். ‘செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகர்க்குப்’ புகழ் சேர்த்த பாரதியார், பாவேந்தர் முதலிய புகழ்மணிகளின் வரிசையில் இன்று கோபாலையர் விண்ணுயர் தோற்றத்துடன் விளங்குகிறார். இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடர், பரிமேலழகர், சிவஞான முனிவர், காரிரத்தினக் கவிராயர் முதலிய புலவர் மரபினோர் புகழை யெல்லாம் தம் புகழ் ஆக்கிக்கொண்ட இப்புலவர் பெருந்தகையைப் புதுவைப் புலவருலகம் போற்றி ‘நூற்கடல்’ என்ற சிறப்புப் பட்டமளித்துப் பொன்போற் பொதிந்து கொண்டது. இருபத்தாறாண்டுகளுக்கு மேலாக இவர் புதுவைப் பிரஞ்சுக் கலை நிறுவனத்தில் (விஉடிடந குசயnளீயளைந) தமிழாய்வுப் பிரிவின் தலைமைப் பொறுப்பினை மேற்கொண்டு அரிய நூல்கள் பலவற்றை ஆய்வுச் செம்பதிப்புகளாக வெளியிட்டு வருகிறார். பாரதியாரின் தலைசிறந்த படைப்புகளுக்கு வாய்ப்பாக இருந்த புதுவைமண், கோபாலையரின் புகழை என்றும் நின்று நிலவச் செய்யும் உயர் பதிப்புகள் பல உருவாவதற்கும் வாய்த்த இடமாக இலங்குகிறது. கடந்த பன்னீராண்டுகளாகப் புதுவையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘தெளிதமிழ்’ என்னும் தமிழ் வளர்ச்சித் திங்களி தழில், இவர்தம் படைப்பினை ஏந்தி வாராத இதழே இல்லை. அதில் ‘இலை மறை கனிகள்’ என்னும் தலைப்பில், தமிழிலக்கண இலக்கிய நூல்களிலும் உரைகளிலும் இலை மறை கனிகளாக மறைந் திருக்கும் அரிய செய்திகளைத் திரட்டிக் கட்டுரைகளாகத் தந்து வருகிறார். அலான் தனியேலு (ஹடயனே னுயnநைடடிர) என்னும் மேனாட்டறிஞரின் மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்புப் பணிக்குத் துணை செய்ததும், சேனாவரையத்தின் பிரஞ்சு மொழியாக்கத்திற்குத் துணை நின்றதும் இவர்தம் ஆங்கில அறிவுக்குச் சான்று பகரும். ‘தொல்காப்பியப் பழைய உரைகளின் செம்பதிப்பு’, ‘கல் வெட்டுக்களில் நாயன்மார்கள் பற்றிய அருஞ் செய்திகள்’ ஆகியன இனி வெளிவர இருக்கும் இவர்தம் நூல்களில் குறிப்பிடத்தக்கவை. இவர்தம் பணிகளில் மிகமிகப் பயன் விளைக்கும் அரிய பெரிய பணி இந்த ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’. தமிழிலக்கணம் கற்போருக்கும், இலக்கண ஆய்வாளர்களுக்கும் கை விளக்காகப் பயன்படக்கூடிய இவ் வகரவரிசை இருபத்தைந்து ஆண்டுக் கால பேருழைப்பால் எழுதி முடிக்கப்பெற்றது. எப்போது வெளிவருமோ என்று தமிழறிஞர் உலகம் எதிர்பார்த்திருந்தது. மற்றவர் அரியதென்று கருதும் நல்ல பதிப்புப் பணிகளை எளியதென்று ஏற்று, மடிதற்றுத் தாமே முன்வந்து செய்யும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர், ‘தமிழ்மொழிக் காவலர்’ கோ. இளவழகன் இதனை அழகுறப் பதிப்பித்து வழங்குகிறார். இவ்வரிய செயலால், இன்பத்தமிழ் இருக்குமளவும் இளவழகன் புகழும் இருக்கும் என்பது உறுதி. அன்பன், இரா. திருமுருகன். ‘ஈரத்தமிழில் ஆழங்கால் பட்டவர்’ பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் உலகப் பொதுமறையை அருளிய திருவள்ளுவப் பெருந் தகையார் பெரியார் யார் என்பதற்கு ஓர் இலக்கணம் வகுக்கின்றார். மனிதமேம்பாட்டுக்குரியதான, செய்வதற்கு அரியதான செயலை யார் புரிகின்றார்களோ அவர்களே பெரியவர் என்கின்றார். காலங்கள்தோறும் பல்வேறு துறைகளில் மனிதமேம்பாட்டுக் காகப் பலர் செயற்கரிய செயல்களைச் செய்துள்ளார்கள். அந்த வரிசையில் தமிழ் இலக்கணப் பேரகராதி என்னும் இந்நூலை தி.வே.கோபாலையரும், இந்த நூலை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் இளவழகனாரும் அடங்குவர். தமிழ் இலக்கிய இலக்கணங்கள் ஒருசமயம் இல்லாமற் போய் விட்டாலும் கோபாலையர் ஒருவர் இருந்தாலே போதும், அவற்றை மீட்டுக் கொண்டுவந்துவிடலாம். அந்த அளவிற்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் நினைவில் வைத்திருப்பவர். ஒரு தேன்கூட்டில் பல மலர்களின் தேன்கள் கலந்திருப்பது போல் இந்தப் பேரகராதியில் பல தமிழ்இலக்கண நூல்ஆசிரியர்களின் வரையறைகளும் பல உரையாசிரியர்களின் உரை வளங்களும் கலந்துள்ளன. அறிஞர் திலகம் கோபாலையர் எப்படி எளிமையானவ ராகவும், ஆழமான புலமை உடையவராகவும், பழக இனியவராகவும் இருக்கிறாரோ, அப்படியே ‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு’ என்னும் திருக்குறளின் கருத்துக்கேற்ப இந்நூலும் நம்மிடம் பழகுகின்றது. இந்த நூல் பேரகராதியாக உள்ளதால் இலக்கணம் கண்டு அஞ்சும் மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் அகராதிப் பொருளை அறிவது போல் எளிதாகத் தமிழ் இலக்கணத்தை அறிந்து கொள்ள முடியுமாறு உள்ளது. இந்நூல் தொல்காப்பியர் காலத்திலிருந்து இந்த நாள்வரை உள்ள தமிழ் உலகிற்குக் கிடைத்த புதுமையான முதன்மையான முழுமையான நூலாகும். பலர் முயன்று செய்ய வேண்டிய பணியை தி.வே.கோபா லையரே செய்து முடித்துள்ளார். ஒரு பல்கலைகழகமோ ஒரு பெரிய ஆய்வு நிறுவனமோ செய்ய வேண்டிய பணியைத் தமிழ்மண் பதிப்பகம் ஆர்வத்தால் எளிதாகச் செய்துள்ளது. தமிழர்களின் தவப்பயனே இப்படியாய்த் தமிழ் மண்ணில் முகிழ்த்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் தமிழ் வழங்கும் அனைத்து இடங்களிலும் திருக்குறளுக்கு அடுத்தபடியாக நூலகங்களில் இடம்பெற வேண்டிய தமிழ்நூல் இந்நூல் என்பதில் ஐயம் இல்லை. இந்த நூலை வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக இளவழக னார்க்கு நமது வெற்றி வாழ்த்துக்கள். இந்த நூலை அளித்தருளிய அறிஞர்திலகம் நம்முடைய இலக்கண மாமணி கோபாலையருக்குத் தலையல்லால் கைம்மாறில்லை என்னும் படியான தமிழ் வணக்கங்கள். வாழ்க தமிழ். வளர்க தமிழ்ப்பண்பாடு. வெல்க மனிதநேயம். அடியேன். முனைவர் ‘வைணவம்’ பார்த்தசாரதி ‘மாந்தக் கணினி’ பண்டிதவித்துவான் தி.வே. கோபாலையர் நாம் சங்கப் புலவர்களைப் பார்த்திலோம்! இடைக் காலப் புலவர்களையும் உரை வல்லுநர்களையும் பார்த்திலோம்! ஆனால் அவர்களை யெல்லாம் நம் காலத்தில் பார்த்திட விரும்புவோமாயின் அவர்களின் உருவாக வாழ்ந்துகொண்டிருக்கும் நூற்கடல் தி. வே. கோபாலையர் அவர்களைக் காணலே சாலும். சாதி, மத, வயது வேறுபாடின்றித் தம்மை அணுகும் யாரே யாயினும் அயர்வுறாது மாற்றம் கொள்ளாது அவர்தம் ஐயங்கட்குத் தெளிவேற்படுத்தலும் வினாக்கட்கு விடையளித்தலுமான சீரிய தமிழ்ப்பணியைத் தொடர்ந்து ஆற்றிவருகிறார். எந்த நூலில், எந்தப் பக்கத்தில், எந்தப் பாகியில், எந்த வரியில் உள்ளது எனத் தெளிந்த உணர்வுடன் எந்தச் சொல்லையும் கருத்தையும் சுட்டிக் காட்டும் வியக்கத்தக்க மாந்தக் கணினியாக விளங்குகிறார். சங்கப் புலவரும் இடைக் காலப் புலவரும் உரை வல்லுநரும் கையாண்ட மொழி முதலெழுத்து, மொழியிறுதி எழுத்து, புணர்ச்சி நெறிகள், பிற மொழிச் சொற்களையும் எழுத்துக்களையும் நீக்கல் ஆகிய தமிழ் இலக்கண மரபுகளைப் பொன்னே போல் போற்றிப் பயன்படுத்தி வரும் பாங்கு எண்ணி எண்ணி மகிழத்தக்கதாகும். அப்பெருமகனார் வாழுங்காலத்தில் வாழ்தலும், அவரிடத்து உரையாடி மகிழ்தலும், ஏற்படும் ஐயங்கட்கு அவரின் சொல்லரிய விளக்கங்களைக் கேட்டுத் தெளிதலுமாகிய அரிய பேற்றினை நான் எனது வாழ்நாளில் பெற்றுள்ளேன். அவரின் பரந்த இலக்கிய நூலறிவும் தெளிந்த இலக்கண அறிவும் தமிழர்க்கும் உலகுக்கும் மேலும் பயன்படுதல் வேண்டும். அவர் மேற்கொண்டுள்ள எளிய வாழ்வு, சம நோக்கு, இனிய பேச்சு, எல்லார்க்கும் பயன்படல் வேண்டும் என்னும் பெரும்பண்பு ஆகியவை கற்றாரை ஈர்க்கும் தன்மையன. நூற்கடலார் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றிடல் வேண்டும் என எனது உள்ளம் நிறைந்த விழைவினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்பன் இறைவிழியன் பதிப்புரை தமிழர் வாழ்வியல் இலக்கணத்தை வரையறுத்துக் கூறும் ஒல்காப்புகழ் தொல்காப்பியத்திற்குப் பழந்தமிழ்ச் சான்றோர்கள் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அனைத்து உரைகளையும் தொகுத்து தொல்காப்பிய நூல் பதிப்பில் இதுவரை எவரும் கண்டிராத வகையில் ஒரேவீச்சில் எம் பதிப்பகம் வெளியிட்டதை தமிழுலகம் நன்கு அறியும். தொல்காப்பிய நூல்பதிப்புப் பணிக்கு அல்லும் பகலும் துணை யிருந்து உழைத்தவர் பண்டிதவித்துவான் தி.வே.கோபாலையர் ஆவார். இந்நூல் பதிப்புகளுக்கு இவரே பதிப்பாசிரியராக இருந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்தவர். கூரறிவும், பெரும் புலமையும், நினைவாற்றலும் மிக்க இப்பெருந்தகை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தம் பேருழைப்பால் தொகுத்த தமிழ் இலக் கணத்திற்கான சொல் மூலங்களை ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’ எனும் பெரும்படைப்பாக 17 தொகுதிகளை உள்ளடக்கி ‘தமிழ் இலக்கண’க் கொடையாக தமிழ் உலகிற்கு வழங்கியுள்ளார். தமிழ் இலக்கண நூல் பதிப்பு வரலாற்றில் தமிழ் இலக்கணத் திற்கென ஒரே நேரத்தில் எழுத்து, சொல், பொருள் (அகம், புறம், அணி, யாப்பு, பாட்டியல், பாயிரம், மரபியல், மெய்ப்பாடு, நாடகம், அளவை நியாயம்) எனும் வரிசையில் பேரகராதி வெளிவருவது இதுவே முதல் முறையாகும். அகராதி என்பது ஒரு சொல்லுக்கு விளக்கம் தருவது. பேரகராதி என்பது ஒரு சொல்லுக்கு விளக்கமும், மேற்கோளும் சுட்டுவது. களஞ்சியம் என்பது ஒரு சொல்லுக்குப் பல்பொருள் விளக்கம் காட்டுவது. உங்கள் கைகளில் தவழும் இத் தமிழ் இலக்கணப் பேரகராதித் தொகுதிகள் தமிழுக்குக் கருவூலமாய் அமைவதாகும். தமிழிலக்கணப் பெரும் பரப்பை விரிவு செய்யும் இப் பெட்டகத்தை வெளியிடுவதில் பெருமைப் படுகிறோம். தமிழ் ஆய்வை மேற்கொள்வார்க்கு வைரச் சுரங்கமாகவும், தமிழ் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக் காகவும் இந்நூல் தொகுதிகள் வருகிறது. தொன்மையும், முன்மையும், தாய்மையும், தூய்மையும், மென்மையும், மேன்மையும், பழமையும், புதுமையும், இளமையும், முதுமையும் மிக்கமொழி நம் தமிழ்மொழி. திரவிடமொழிகளுக்குத் தாய்மொழி நம் தமிழ்மொழி. இந்தியப் பெருமொழிகளுக்கு மூலமொழி நம் தமிழ்மொழி. உலக மொழிகளுக்கு மூத்த மொழி நம் தமிழ்மொழி. இந்தியப் பேரரசால் செம்மொழி என அறிவிக்கப் பட்டுள்ள இந் நேரத்தில், ‘தமிழ் இலக்கணப் பேரகராதி’யை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ் இலக்கணச் சுரங்கத்தைத் தந்துள்ள பண்டித வித்துவான் தி.வே. கோபாலையருடன் உடனிருந்து உழைத்தவர் அவர் இளவல் தி.வே. கங்காதரன் ஆவார். இப் பொற்குவியல் பொலிவோடு வெளி வருவதற்கு தம் முழுப் பொழுதையும் செலவிட்டவர் இவர். இரவென்றும், பகலென்றும் பாராது உழைத்த இப் பெருமக்க ளுக்கும், பேரகராதியின் அருமை பெருமைகளை மதிப்பீடு அளித்து பெருமை சேர்த்த புதுச்சேரி பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத் துக்கும், தமிழ்ச் சான்றோர்க்கும் எம் நன்றி. பதிப்பாளர் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் வடிவமைப்பு : செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சுக்கோர்ப்பு : கீர்த்தி கிராபிக்ஸ் பட்டு, கீதா, சங்கீதா, பிரியா, பத்மநாபன், சே. குப்புசாமி, மு. கலையரசன் மெய்ப்பு : தி.வே. கோபாலையர் தி.வே. கங்காதரனார் ——— உதவி : அ. மதிவாணன் கி. குணத்தொகையன் அரங்க. குமரேசன் வே. தனசேகரன் நா. வெங்கடேசன் மு.ந. இராமசுப்ரமணிய இராசா இல. தர்மராசு ——— அச்சு எதிர்மம் (சூநபயவiஎந) : பிராஸஸ் இந்தியா, சென்னை அச்சு மற்றும் கட்டமைப்பு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை ——— இவர்களுக்கு எம் நன்றி . செயற்கு என்னும் வினையெச்சம் - செயற்கு என்னும் வாய்பாட்டு வினையெச்சம் தன் வினை - முதல் வினையையும் பிற வினைமுதல் வினையையும் கொண்டு முடிந்து எதிர்காலத்து வரும். எ-டு : மழை பெய்தற்கு முழங்கும், மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும். செயல் என்னும் தொழிற்பெயர் குவ்வுருபு ஏற்றுச் செயற்கு என வரும். இவ்வுருபேற்ற தொழிற்பெயரினின்று இவ்வுருபினைப் பிரித்துக் கூறலாம். ஆயின் செயற்கு என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தைப் பகுத்துக் காண்டல் இயலாது. (தொ. சொ. 40 சேனா உரை) உண்டான், உண்டவன் - என்னும் தொழிற்பெயர்கள் உண்டாற்கு உண்டவற்கு - என நான்கனுருபு ஏற்றுழிச் செயற்கு என்னும் எச்சப்பொருள் தாரா. உணல் என்னும் வினைப் பெயர் குகரம் அடுத்துழி, உண்டலைச் செய்தற்கு என்னும் பொருள் தந்து எச்சப்பொருட்டாயே நிற்கும். செயல் என்னும் வினைப்பெயர் நான்கனுருபு அடுத்துழி உகரச்சாரியை பெற்றுச் செயலுக்கு என்று வரின் ஆண்டு வினையெச்சமாகல் இன்று. எற்றுக்கு வந்தான் என்பது என்ன காரியம் செய்தற்கு வந்தான் என்னும் பொருட்டாய்ச் செயற்கு என்னும் எச்சக்குறிப்பாய் வரும். ‘எவற்றுக்கு’ என்பதும் அது. (தொ. சொ. 230 நச். உரை) செயற்கு என்னும் வாய்பாட்டு வினையெச்சம் ‘உணற்கு வந்தான்’ என்றாற் போல ‘அதற்பொருட்டு’ என்னும் பொருள் பற்றி வரும். இஃது உணல் என்னும் தொழிற்பெயர் நான்காமுருபு ஏற்றவாறன்றோ எனின், அதுவும் ஒரு வழக்குண்டு. பெயர்ப் பொருண்மை நோக்கியவழி அதுவாக வும், காலம் நோக்கியவழி வினையெச்சமாகவும் கொள்க. ‘எற்றுக்கு’ என்பது இதன் குறிப்பு வாய்பாடாகக் கொள்க. (தொ. சொ. 230 கல். உரை) செயற்கு என்பது இன்னதற்கு என்னும் பொருள்பட எதிர்காலம் பற்றி, உணற்கு வந்தான் - தினற்கு வந்தான் - என வரும். உணற்கு தினற்கு - என்பனவற்றை நான்கனுருபேற்ற தொழிற் பெயராக் கொள்ளல் பொருந்தாது. என்னையெனின், தொழிற் பெயர் நான்கனுருபேற்று வந்த சொல்லாயின் அது கோடற் பொருட்டாய் நிற்கும். அஃதாவது தன்னைப் பிறிதொரு பொருள் உண்ணுதற்குத் தான் உணவாக வந்தான் - என்பது பொருள். வினையெச்சமாயின் காரணப்பொருட்டாய் வரும். அஃதாவது தான் உணவை உண்ணுதற்காக வந்தான் என்பது பொருள். ஆதலின் நான்கனுருபு ஏற்ற தொழிற்பெயரும், இவ்வாய்பாட்டு வினையெச்சமும் வேறுவேறு என அறியப்படும். (தொ.சொ. 229 ச.பால.) செயற்கைப் பொருள் - முதல் துணை நிமித்தங்களால் செய்யும் பொருளாகிய செயற்கைப்பொருளைக் கூறுங்கால், காரணச்சொல் முன்வர ஆக்கச்சொல் பின் வரப்பெற்றும், காரணச்சொல் தொக்கு நிற்ப ஆக்கச் சொல் வரப்பெற்றும், ஆக்கச்சொல் தொக்கு நிற்பக் காரணச்சொல் வரப்பெற்றும், காரணமும் ஆக்கமும் ஆகிய இவ்விருவகைச் சொல்லும் தொக்குநிற்கவும் - நடக்கும். எ-டு : கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையால் மயிர் நல்லவாயின; மயிர் நல்லவாயின; கடுவும்......... பெற்ற மையால் மயிர் நல்ல; மயிர் நல்ல - என முறையே காண்க. இவற்றுள் காரணமும் ஆக்கமும் பெறுதல் ஒன்றும் வழா நிலை; ஏனைய எல்லாம் வழுவமைதி, (நன். 405 சங்.) ஒரு காரணத்தான் தன்மை திரிந்த பொருள் செயற்கைப் பொருளாம். செயற்கைப்பொருளுக்கு உரிய வினை ஆக்கம் பெற்றோ, ஆக்கமும் காரணமும் பெற்றோ வருதல் மரபு. காரணம் ஆக்கத்திற்குரியது; ஆக்கம் செயற்கைப் பொருளுக் குரியது. காரணம் முற்கூறி ஆக்கம் பிற்கூறுக. எ-டு : மண் குடமாயிற்று; எருப்பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்தமையான் பைங்கூழ் நல்லவாயின. (தொ. சொ. 20, 21 சேனா. உரை) செயற்கைப் பொருளைக் கிளக்கு முறை - செயற்கைப்பொருளை ஆக்கம் கொடுத்து அஃது இயற்கைப் பொருளின் வேறுபட்டது என்று கிளந்து கூறவேண்டும். அவ்வாக்கமும் காரணத்தை வெளிப்படையாகவோ குறிப் பாகவோ கொண்டமையும். எ-டு : பயிர் நல்லவாயின - காரணமின்றி ஆக்கம் வந்தது. எருப்பெய்தமையான் பயிர் நல்ல வாயின - காரணத்தோடு ஆக்கம் வந்தது. இயல்பாகப் பயிர் நன்கு வளர்ந்தால், பயிர் நல்ல என்றே கூறல் வேண்டும். (தொ. சொ. 20,21 சேனா. உரை) செயற்கைப்பொருளைக் கிளக்குமுறை, காரணமும் ஆக்கமும் கொடுத்தலும் - காரணம் ஒழிய ஆக்கம் கொடுத்தலும் - ஆக்கம் ஒழியக் காரணம் கொடுத்தலும், காரணமும் ஆக்கமும் இரண்டும் கொடாதே சொல்லுதலும் - என நால்வகைத்து. முன்னையது ஒன்றும் மரபிலக்கணம்; பின்னைய மூன்றும் மரபு வழுவமைதி. எ-டு : கடுவும் கைபிழி எண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்லவாயின; மயிர் நல்லவாயின; கடுவும்......... மயிர் நல்ல; மயிர் நல்ல - என முறையே காண்க. (தொ. சொ. 22 கல். உரை) செயற்படுபொருளே ‘செயப்படுபொருள்’ எனத் திரிந்தமை - உண்டான் என்றவழி, உணவு என்னும் பொருள் இன்றேல் அத்தொழில் நிகழாது ஆதலின் உணவு அத்தொழில் நிகழ்தற்கு அடிப்படை ஆயிற்று. ஆகவே, வினைமுதல் நிகழ்த்தும் செயல் சென்று பொருந்தும் பொருள் எய்திய வேறுபாடு இரண்டாம் வேற்றுமை என்பது பெற்றாம். செயற்படுபொருள் என்பது செயப்படுபொருள் எனத் திரிந்து இலக்கணக் குறியீடு பெற்றது. இதனைச் செயப்படுபொருள் என்றே கொள்ளின், அஃது எல்லா வினைகட்கும் எய்தாமை யான் குன்றக் கூறலாய் முடியும் என்க. (தொ. சொ. 71 ச. பால.) ‘செயின்’ என்பது போல எதிர்காலம் காட்டும் வினையெச்சங்கள் - ‘அற்றால் அளவறிந் துண்க’ கு. 943 ‘ஒலித்தக்கால் என்னாம் உவரி’ கு. 763 ‘காண்டலும் இதுவே சொல்லும்’ எனச் செயின் என்னும் வாய்பாடு போல, ஆல் கால் உம் - என்னும் ஈற்று வினையெச்சங்களும் எதிர்காலம் காட்டும். (நன். 343 சங்.) செலவு என்னும் வினைக்கண் பொருள்மயக்கம் - ‘கன்றல் என்னும்............. மயக்கம்’ காண்க. செலவு, வரவு, தரவு, கொடை - என்ற சொற்கள் - இந்நான்கு சொற்களுள், தம் பகுதியினாலேயே தரவு வரவு எனும் இரண்டும் தன்மை முன்னிலை இடங்களையும், செலவு கொடை என்னும் இரண்டும் படர்க்கையிடத்தையும் உணர்த்தும். வருமாறு : எனக்குத் தந்தான், நினக்குத் தந்தான் என்னுழை வந்தான், ஈங்கு வந்தான், நின்னுழை வந்தான்; அவன்கண் சென்றான், ஆங்குச் சென்றான்; அவற்குக் கொடுத்தான்- என ஈற்றானன்றித் தரவு வரவு உணர்த்தும் தொழில்கள் தன்மை முன்னிலையிடங்களையும், செலவுத்தொழிலும் கொடைப் பொருளும் படர்க்கையிடத்தையும் சென்று உற்றன. (தொ. சொ. 29, 30 சேனா. நச். உரை) செவ்வெண் - எண்ணப்படும் பெயர்களினிடையே எண்ணிடைச்சொல் தொக்கு நிற்ப வருவது செவ்வெண்ணாம். பெயரெண் என்னாது செவ்வெண் என்றதனால், அஃது எண்ணிடைச் சொல் தொக்க தொகைநிலை என்பது பெற்றாம். பெயர்ச் செவ்வெண் யாண்டும் தொகை பெற்றே வரும். எ-டு : சாத்தன் கொற்றன் தேவன் பூதன் நால்வரும் வந்தார் செவ்வெண் தொகை பெற்றிலதேல் அஃது இசையெச்சமாக வருவித்துரைக்கப்படும். (நன். 428 சங்.) செவ்வெண் தொகை பெறுதல் - செவ்வெண், பெயர்ச்செவ்வெண் - வினைச்செவ்வெண் - என இரு திறத்தது. எ-டு : கபிலன் பரணன் மாமூலன் மூவரும் பாடினர் - பெயர்ச்செவ்வெண் தொகை பெற்றது. நல்கூர்ந்த இளைய மிக்க சுற்றம் - பெயரெச்சச் செவ்வெண் தொகையின்றி வந்தது. உண்டு தின்று ஓடி வந்தான் - வினையெச்சச் செவ்வெண் தொகையின்றி வந்தது. சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான், வேடன் வந்தான், மூவரும் வந்தமையால் கலியாணம் பொலிந்தது - முற்றுச் செவ்வெண் தொகை பெற்று வந்தது. முற்றுச்செவ்வெண் எழுவாயும் பயனிலையுமாய் நிற்றலின் எண்ணப்படா எனின், ஒரு பொருள் வேறுபாட்டான், இதனை ‘இம்மூவரும் வரின் கலியாணம் பொலியும்’ என்று இருக்கின்றான் கூற்றாகக் கொள்க; "முன்னர்ச் சாத்தன் வந்தான், பின்னர்க் கொற்றன் வந்தான், பின் வேடன் வந்தான்; இவர்கள் ஒருங்கு வந்திலரேனும் முடிவில் வந்து நிற்றலின் இது முடிவு போயிற்று" என்று கூறினான் ஆதலின், ‘இம்மூவர்’ என்றதனான் பெயர் தொகை பெற்றதேனும், ‘வந்தமையால்’ என்றமையான் (வருகை) வினையும் தொகை பெற்று அவ்வினையான் கலியாணம் முடிந்தவாறும் காண்க. இம்முற்று அடுத்து வந்தனவும் செவ்வெண்ணாம். (தொ. சொ. 295 நச். உரை) ஸ‘அறம்பொருள் கண்டார்கண் இல்’ கு. 141 - செய்யுட்கண் செவ்வெண்ணின் தொகை விகாரத்தால் தொக்கது (பரிமே.)] முற்றும் பெயரெச்சமும் பற்றிச் செவ்வெண் வாராது; வினை யெச்சம் பற்றியும் ஏற்புழியன்றி வாராது. ஆண்டுத் தொகை பெறுதல் சிறுபான்மை. (தொ. சொ. 293 சேனா. உரை) செழுமை என்ற உரிச்சொல் - இவ்வுரிச்சொல் வளனும் கொழுப்பும் ஆகிய குறிப்புணர்த்தும். எ-டு : ‘செழுஞ்செய் நெல்லின்......... கதிர்’ - வளன். ‘செந்தடி தின்ற செந்நாய் ஏற்றை’ - கொழுப்பு. வளத்தொடு கொழுப்பிடை வேற்றுமை என்னையெனின், வளம் என்பது ஆக்கம்; கொழுப்பு என்பது ஊன் தொடக்கத்- தனவற்றது நிணம் கோடல் (அஃதாவது இழுது இருப்பு.) (தொ. சொ. 352 நச். உரை) செறல், உவத்தல் : பொருள் - செறலாவது வெகுளியது காரியம்; உவத்தலாவது காதலது காரியம். (தொ. சொ. 73 நச். உரை) செறிவுப்பொருள் தரும் உரிச்சொற்கள் - விறப்பு, உறப்பு, வெறுப்பு - என்பன செறிவு என்னும் குறிப்புணர்த்தும். எ-டு : ‘விறந்த காப்போடு உள்நின்று வலியுறுத்தும்’ ‘உறந்த இஞ்சி உயர்நிலை மாடத்து’ ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க்கபிலன்’ (புற. 53) (தொ. சொ. 347 சேனா. உரை) சேய்மைவிளி - சேய்மைக்கண் உள்ளவரை விளிக்குமிடத்து இயற்பெயர்கள் அளபெடை அடுத்து விளிக்கப்படும். இஃது உயர்திணை - அஃறிணை - விரவு - என்னும் முத்திறப் பெயர்க்கும் ஒக்கும். எ-டு : நம்பி - நம்பீஇ , சாத்தன் - சாத்தாஅ, கோமான் - கோமாஅன். ஈற்றுக்குறில் நீண்டு அளபெடுத்தலும், ஈற்றுமெய் கெட்டு ஈற்றயல்நெடில் அளபெடுத்தலும், அது கெடாமல் ஈற்றயல் நெடில் அளபெடுத்தலும் எனச் சேய்மைவிளிக்கண் அள பெடுத்தல் மூவகைப்படும். (தொ. சொ. 154 நச். உரை) சேரி, தோட்டம் : விளக்கம் - பலகுடி சேர்ந்தது சேரி; பலபொருள் தொக்கது தோட்டம், இவற்றைத் தலைமைபற்றியோ பன்மைபற்றியோ பார்ப்பனச் சேரி - கமுகந்தோட்டம் - என்றாற் போலப் பெயரிடல் வேண்டும் (இரண்டும் பற்றி வந்தனவாகக் கொள்ளலாம்.) (தொ. சொ. 49 நச். உரை) சைவன் முதலாய பெயர்கள் தமிழில் பகுபதமாதற்கு இயலாமை - ‘தமிழ்விதிக்கு அகப்படா வடமொழிவிதி சில சாற்றினேன்’ எனப் பாயிரத்தில் கூறுகிறார், இலக்கணக்கொத்துடையார். அவை சைவன் முதலியன. இவை முதற்சொல் தன்னைச் சார்ந்த - தான் பொருள் பயப்பிக்கத் தனக்கு இன்றியமையாத - பிற சொற்கள் எல்லாம் நீங்கத் தான் அவற்றின் பொருளைக் கொண்டு சிறிது திரிந்து நிற்கும் தத்திதாந்தச் சொற்களாம். இவற்றைப் பகுதி விகுதி செய்தல் இயலாது. எ-டு : சிவனை வழிபடுபவன், சைவன்; சிவனை வழிபடும் சமயம் - சைவம்; பர்வதராசன் மகள் - பார்வதி; கிருத்திகை என்னும் விண்மீன்கள் ஆறன் மகன் - கார்த்திகேயன்; கங்கையின் மகன் - காங்கேயன் (முருகனும் வீடுமனும்) இவை போல்வன பலவும் வடமொழிவிதி பற்றி வருபவை. (இ. கொ. 7, 117) சொல் : இலக்கணம் - சொல்லாவது ஓரெழுத்தானும் ஈரெழுத்தானும் இரண்டிறந்து இசைக்கும் பல எழுத்தானும் ஆக்கப்பட்டுப் பொருளையும் தன்னையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசையாகலின், எழுத்ததிகாரத்தோடு இவ்வதிகாரம் இயைபுடையதாயிற்று. இவ்வதிகாரத்துள் ஐவகை ஒத்தினால் சொல்லிலக்கணம் உணர்த்துகிறார். (இ.வி. 159 உரை) சொல் எட்டுவகை - பெயரியற்சொல் பெயர்த்திரிசொல், வினையியற்சொல் வினைத் திரிசொல், இடையியற்சொல் இடைத்திரிசொல், உரியியற்சொல் உரித்திரிசொல் என எண்வகைத்தாம், தமிழ் நாட்டிற்குரிய சொல் என்றவாறு. (இ.வி. 17 உரை) சொல் இன்னது என்பது - சொல் என்பது எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருள்தன்மையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசையை. ஆக்கப்படுதல் என்பது, ஒருசொல் கூறுமிடத்து ஓரெழுத்துப் போக ஓரெழுத்துக் கூறுவதல்லது, ஒரு சொல்லாக முடியும் எழுத்தெல்லாம் சேரக் கூறல் ஆகாமை யின், அவ்வெழுத்துக்கள் கூறிய அடைவே போயினவேனும், கேட்போர் கருத்தின்கண் ஒரு தொடராய் நிலைபெற்று நின்று பொருளை அறிவுறுத்தலை ஆகும். ஆயின் ஓரெழுத் தொரு மொழிக்கு ஆக்குதல் இன்றால் எனின், ஓரெழுத் தொரு மொழியைக் கூறியக்கால், அதுவும் செவிப்புலனாய்க் கருத்தின்கண் நிகழ்ந்து பின்னர்ப் பொருளை ஆக்குதலின், அதுவும் ஆக்கும் தன்மை உடையதாயிற்று. இருதிணைப்பொருளும்ஆவன ஐம்பாற் பொருளின் பகுதி யாகிய காட்சிப்பொருளும், கருத்துப்பொருளும், அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும்பூதமும், அவற்றின் பகுதியாகிய இயங்குதிணையும் நிலத்திணையும் ஆம். இவையெல்லாம் ஐம்பாலாய் அடங்கின. இனி, பொருள்தன்மையாவது மக்கள்தன்மையும், இயங்கு - திணைத்தன்மையும், நிலைத்திணைத்தன்மையும் ஆம். இத் தன்மை, ஒருபொருட்குக் கேடு வந்தாலும், தனக்குக் கேடின்றித் தான் ஒன்றேயாய்ப் பலவகைப்பட்ட பொருள்தோறும் நிற்கும். கருவியாவது அப்பொருள்தன்மையை ஒருவன் உணர்தற்கு அவ்வோசை கருவியாக நிற்றல். இதனை, ஐம்பொறிகள் ஒருவன் பொருளை உணர்தற்குக் கருவியாய் நின்றாற்போலக் கருவியாய் நிற்கும் என்று கொள்க. (தொ.சொ. 1 நச். உரை) சொல் எழுவகை, ஒன்பதுவகை ஆமாறு - சொல்லானது பெயர்இயற்சொல், பெயர்த்திரிசொல் - வினையற் சொல், வினைத்திரிசொல் - இடையியற்சொல், இடைத்திரிசொல் - உரித்திரிசொல் - என ஏழ்வகைப்படும் என்பதும், திசைச்சொல்லும் வடசொல்லும் அணுகிய விடத்து ஒன்பது வகைப்படும் என்பதும் பெறப்படும். உரியி யற்சொல்லையும் கூட்டிப் பத்துவகைப்படும் என்பாருமுளர். (நன். 270 இராமா.) சொல் என்னும் பொருள்பட வரும் உரிச்சொற்கள் - மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை கூற்று புகறல் மொழி கிளவி விளம்பு அறை பாட்டு பகர்ச்சி இயம்பல் - என்பன சொல் என்னும் பொருள்பட வரும் உரிச்சொற் களாம். எ-டு : ‘கோவலர்வாய் மாற்றம் உணர்ந்து’ (சீவக. 432) ‘இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல’ (முருகு. 182) ‘தெருண்டாரவை செப்பலுற்றேன்’ (சீவக. 6) ‘உரைப்பார் உரைப்பவை எல்லாம்’ (கு. 232) ‘அறம்கரை நாவின் நான்மறை முற்றிய’ (தொ.பாயி.) ‘அஞ்சொல் பெரும்பணைத்தோள் ஆயிழையாள் தான் நொடியும்’ (பு.வெ. 335) ‘நன்பெரு வாயில் இசையேன் புக்கு’ (பொரு. 67) ‘உற்றது நாங்கள் கூற உணர்ந்தனை’ ‘புகன்ற அன்றியும் புறமிக வருமே’ ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’ (குறுந். 2) ‘கிளக்கும் கிளவி பாண கேள்இனி’ ‘மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர்’ (நன். 63) ‘அறிவனது அடிதொழுது அறைகுவன் எண்ணே’ ‘அறம் பாடின்று’ (புற.34,) ‘வார்த்தை பகர்குற்றேன்’ (சீவக. 453) ‘இடிபோல இயம்பினானே’ (நன். 458 சங்.) சொல் ஓரனைய - (இருதிணைப் பன்மையையும்) சொல்லுதலை ஒரு தன்மையாக உடையன (இர், ஈர், மின் ஈற்று வினைமுற்றுக்கள்). எ-டு : உண்டனிர், உண்டீர், உண்மின். (தொ. சொ. 226 நச். உரை) சொல் குறிப்பால் பால் காட்டல் - நீ வந்தாய் - நீவிர் வந்தீர் - யான் வந்தேன் - யாம் வந்தேம் - என்றக்கால், இருதிணைக்கும் ஆண்பால் பெண்பால்களுக்கும் பொதுவாய் நிற்கும். ‘நீ வருதலால் அறிவு பெற்றேன்’ ‘நீ வருதலால் ஆசாரம் பெற்றேன்’ என்றக்கால், உயர்திணை என்பதும் ஆண்பால் என்பதும் குறிப்பால் விளங்கும். ‘நீ வருதலான் முல்லை அரும்பின’ ‘நீயிர் தொக்கு நிற்றலான் உடம்பாயிற்று’ என்றக்கால், மழையும் ஐம்பூதமும் என்பன குறிப்பான் விளங்கும். ஒருவர் என்பதும் இருபாற்கும் பொது. ‘ஒருவரான் அரிய தவம் பெற்றேன்’ என்றக்கால் ஆண்பால் என்பதும், ‘ஒருவரான் அரிய மடல் பெற்றேன்’ என்றக்கால் பெண்பால் என்பதும் குறிப்பான் விளங்கும். (நன். 264 மயிலை.) சொல் குறிப்பால் பொருள் தெரிவித்தல் - சோறுண்கின்றவன் கற்கறித்து ‘நன்கு அட்டாய்!’ என்புழித் ‘தீங்கு அட்டாய்’ என்பது சொல்லுவானது குறிப்பான் பொருளைத் தெரிவித்தலாம். (தொ. சொ. 157 சேனா. உரை) சொல் தன்னைத் தெரிவித்தல் - ‘தஞ்சக் கிளவி’ (266), ‘கடியென் கிளவி’ (383) - முதலிய இடங் களில் தஞ்சம், கடி - முதலிய சொற்கள் தம்மையே உணர்த்தி நின்றன. (தொ. சொ. 156 சேனா. உரை) சொல் தன்னையும் பொருளையும் தெரிவித்தல் - ‘(வேற்றுமை) ஈறுபெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப’ - என்புழி, ‘பெயர்’ என்னும் பெயர்க்கு இறுதியில் வேற்றுமை வரும் என்பது பெயர் தன்னைத் தெரிவித்தல்; மற்ற பெயர்க ளுக்கு இறுதியில் வேற்றுமை வரும் என்பது பொருளைத் தெரிவித்தல். சொல் தன்னைத் தெரிவித்தலாவது ‘சொல்’ என்னும் சொல்லை யுணர்த்துதல்; சொல் பொருளைத் தெரிவித்தலாவது மற்ற சொற்களை உணர்த்துதல். (தொ. சொ. 156 சேனா. உரை) எல்லாச் சொல்லும் பொருளும் ஒருமொழி - தொடர்மொழி பொதுமொழி - என்னும் மூன்றாயும், இருதிணை ஐம்பா லாயும் அடங்கும். இருதிணை முதலிய காரணத்தால், சொல்லானது, உயர்திணைச்சொல் - அஃறிணைச்சொல் - ஆண்பாற்சொல் - பெண்பாற்சொல் - பலர்பாற்சொல் - ஒன்றறிசொல் - பலவறி சொல் - தன்மைச்சொல் - முன்னிலைச் சொல் - படர்க்கைச் சொல் - வழக்குச்சொல் - செய்யுட்சொல் - வெளிப்படைச்சொல் - குறிப்புச்சொல் - எனவும், பொருளா னது, உயர்திணைப் பொருள் - அஃறிணைப்பொருள் - ஆண்பாற்பொருள் பெண்பாற் பொருள் - பலர்பாற்பொருள் - ஒன்றறிபொருள் - பலவறி பொருள் - தன்மைப்பொருள் - முன்னிலைப்பொருள் - படர்க்கைப் பொருள் - வழக்குப் பொருள் - செய்யுட்பொருள் - வெளிப்படைப் பொருள் - குறிப்புப்பொருள் - எனவும் வழங்கப்படும். உயிர்க்கு அறிவு கருவியாய் நின்று தன்னையும் பொருளையும் உணர்த்துமாறு போல, ஒருவற்குச் சொல் கருவியாய் நின்று தன்னையும், உள்பொருள் - இல்பொருள் - மெய்ப்பொருள் - பொய்ப்பொருள் - சித்துப்பொருள் - சடப்பொருள் - நித்தியப் பொருள் - அநித்தியப்பொருள் - உருவப்பொருள் - அருவப் பொருள் - காட்சிப்பொருள் - கருத்துப்பொருள் - இயற்கைப் பொருள் - செயற்கைப்பொருள் - முதற்பொருள் - சினைப் பொருள் - இயங்கியற்பொருள் - நிலையியற்பொருள் - எனப் பல்லாற்றானும் பகுத்துக் கூறப்படும் இருதிணை ஐம்பாற் பொருளையும் உணர்த்தும் என்பது பெற்றாம். (நன். 259 சங்.) (‘கடியென் கிளவி’: சொல் தன்னை உணர்த்திற்று; சாத்தன்: சொல் உள்பொருளை உணர்த்திற்று; முயற்கோடு: சொல் இல்- பொருளை உணர்த்திற்று.) சொல் தொகுத்து இறுத்தல் - இது விடைவகை எட்டனுள் ஒன்று. சொல்லைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் விடைவகை இது. ‘பயறு உளவோ, வணிகீரே?’ என்றாற்கு, ‘இல்லை’ என்று விடை கூறி மேல் அவர் வினவ வாய்ப்பு அளியாது, ‘உழுந்தல்லது இல்லை’ என ‘அல்லது இல்’ என்னும் வாய்பாட்டான் பிறிது பொருள் உள்ளமை கூறி விடைபகர்தல் இவ்விடைவகையாம். (தொ. சொ. 13, 35 நச். உரை) சொல் பற்றிப் பலரும் கூறுவன - 1. சொல் நித்தியம்; தோற்றமும் கேடும் இல்லாதது; என்றும் இருப்பது. 2. சொல் அநித்தியம்; தோன்றி அழிவது - நிலையற்றது. 3. எங்கும் பரந்த வியாபகம் - விபு. 4. ஏகதேசம் - ஒரோவிடத்தே இருப்பது. 5. சொல்லும் ஒரு பொருளே. 6. சொல் பொருளன்று. 7. சொல் கடவுள் கட்டினது (ஆக்கியது). 8. அறிவுடையோரும் அறிவற்றோரும் அவ்வச் சாதியாரும் சமயத்தாரும் தேசத்தாரும் அவ்வக்காலத்தாரும் தத்தமக்கு வேண்டியவாறே கட்டினது. 9. ஒருவராலும் ஆக்கப்படாது, தானே அநாதியாய் உள்ளது. 10. சொல்லும் பொருளும் சாத்தனது ஆடை போல் வேற்றுமை யுடையன. 11. அவை கோட்டது நூறு போல ஒற்றுமையுடையன. 12. அவை அர்த்தநாரீசுவரன் (ஒரு பாதி பெண்ணான இறை வன் அம்மையப்பன்) போல இருப்பது. ஆசிரியர் தொல்காப்பியனார் வேற்றுமையும் ஒற்றுமையும் தோன்றப் பல நூற்பாக்களில் கூறுவர். (இ. கொ. 6) சொல் பற்றிய பால் - தமிழினும் சிறுபான்மை சொல் பற்றிய பால் - சாத்திரலிங்கம் - கொள்ளப்படும். பெரும்பாலும் இவை சொல் தன்னைத் தானே விசேடித்து நிற்பதாய் அமையும். ‘நாண் என்னும் நல்லாள்.......... குற்றத் தார்க்கு’ (கு. 924) - நாண் என்னும் பொருளுடைய வடமொழிச்சொல்லான ‘லஜ்ஜா’ என்பது பெண்பால். இதனைத் தழுவித் திருவள்ளுவரும் நாணைப் பெண்ணாக்கினார். இது தன்னைத் தானே விசேடித்தது. சிலப்பதிகாரத்தில் ‘திங்களஞ்செல்வன் யாண்டுளன் கொல்லோ’ (4 :4) எனவும், ‘இன்னிள வேனில் வந்தன னாக’ (8 : 7) எனவும் பெயராகவும் வினையாகவும் திங்களையும் வேனிலையும் சந்திரன் வசந்தன் என்னும் வடமொழிச்சொற்க ளோடு ஒப்ப ஆண்பாலாகக் கூறியிருப்பதும் அது. ‘பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக் கொண்டு பகலிழந்த மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை’ (திருவி. 35) வேனில்அஞ் செல்வன் (திவ். பிர. 2503) என்பனவும் இவ்வாறு வந்தன. இன்னும் பிற்காலத்துக் கவிஞர் ‘சூழும் மலர்முகத்துச் சொல்மா மகள்’’ ‘பொலம்புரி காஞ்சிப் புகழ்மகள்’ ‘தணிப்பில் பெருஞ்சீர்த்தித் தையல்’ (சோழன் உலா) என்பன போலச் சொல் தன்னைத் தானே விசேடித்து நிற்கு மிடத்துக் கூறியன பல உள. (பி. வி. 49) சொல் பற்றிய பொதுச்செய்தி - சொல்லாயின் பொருள் குறித்து வரும். அது பொருண்மை நிலை சொன்மைநிலை என இருவகைப்படும். அவற்றுள் பொருண்மை நிலை, வெளிப்படுநிலையும் குறிப்புநிலையும் என இரண்டு வகைப்படும். சொன்மைநிலை, பெயரும் வினை யும் எனச் சிறப்புடைய சொல் இரண்டும், இடையும் உரியும் எனச் சிறப்பு இல் சொல் இரண்டும் என நால்வகைப்படும். (தொ. சொ. 155 தெய். உரை) சொல் பொருளைக் குறித்தல் - எல்லாச் சொல்லும் பொருள் குறித்தே வரும். பொருள் குறியாச் சொல்லே இல்லை. முயற்கோடு - யாமைமயிர்க் கம்பலம் - போல்வன பொய்ப்பொருளைக் குறிப்பனவாம். அவையும் இடம் முதலாகிய பொருள் குறித்து வந்தனவாம். சில அசைச்சொற்கள் மூன்றிடத்துக்கும் உரியவாய்க் கட்டுரைச்சுவைபட வந்தனவாம். ஆகவே பொருள் குறித்து வாராச் சொல்லே இல்லை என்பது. (தொ. சொ. 155 சேனா. உரை) ‘சொல் முறையான மானம் இல்லை’ - வழக்குமுறையான் நோக்குமிடத்து (ப் பொருள் சிதையாமல் உருபுகள் மயங்குதற்கண்) குற்றமில்லை. மானம் - குற்றம். எ-டு : நூலைக் குற்றம் கூறினான், நூலது குற்றம் கூறினான் - என்புழி, இரண்டாவதும் ஆறாவதும் மயங்கின. (தொ. சொ. 112 நச். உரை) சொல்லதிகார அமைப்பு - சொற்களைப் பொருள்நிலை நோக்கித் தொடர்மொழி தனிமொழி என இருவகைப்படுத்து, அத்தொடர்மொழியை அல்வழித்தொடர் வேற்றுமைத் தொடர் - என இருவகைப் படுத்து, அவ்விருவகைத் தொடரும் செப்பும் வினாவுமாக நிகழ்தலின் அவற்றை வழுவாமல் கூறுதற்காக முற்படச் சொல்நிலையான் பொருளை உயர்திணை அஃறிணை என இருவகைப்படுத்து, அவ்வுயர்திணை உணர்த்தும் சொற் களை ஒருவனை அறியும் சொல் - ஒருத்தியை அறியும் சொல் - பலரை அறியும் சொல் - என மூவகைப்படுத்து, அஃறிணை உணர்த்தும் சொற்களை ஒன்றனை அறியும் சொல் - பல வற்றை அறியும் சொல் - என இருவகைப்படுத்து, இவ்வாறு பால் அறியும் சொற்களை வினைக்கண்ணும் பெயர்க் கண்ணும் வருதலின் ‘மயங்கல் கூடா’ என்று கூறி, அமைக்க வேண்டும் சொற்களை எடுத்துக் கூறி, அதன் பின்னர் வேற்றுமைத் தொடர் கூறுவார், மயங்கா மரபினவாகி வருவன எழுவகை வேற்றுமை யுணர்த்தி, அதன்பின் அவ்வேற்றுமைகள் மயங்குமாறு உணர்த்தி, அதன்பின் எட்டாவதாகிய விளி வேற்றுமை உணர்த்தி, அதன்பின் தனிமொழிப் பகுதியாகிய பெயர்ச்சொல் பாகுபாடும் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் பாகுபாடும் உணர்த்தி, அதன்பின் சொற்கள் விகாரப்படுமாறும் ஒட்டுமாறும் எஞ்சுமாறும் பிறவும் உணர்த்தினார் என்க. அவற்றுள் அல்வழித் தொடர் கிளவியாக்கத்துள்ளும், வேற்றுமைத்தொடர் அடுத்த மூன்று இயலுள்ளும், தனிமொழி நான்கும் அடுத்த நான்கு இயலுள்ளும், எஞ்சிய எல்லாம் எச்சவியலுள்ளும் உணர்த்தப் பட்டன. இவ்வகையால் ஓத்தும் ஒன்பது ஆயின. (தொ. சொ. 1 தெய். உரை) சொல்லதிகாரத்தில் சொல்லப்பட்டன - இவ்வதிகாரத்துள் சொன்னவை : ஒருமொழியே - தொடர் மொழியே - பொதுமொழியே - திணையே - பாலே - இடனே - வழக்கே - செய்யுளே - வெளிப்படைநிலையே - குறிப்பு நிலையே - பெயரே - வேற்றுமையே - வினையே - தொகை நிலையே - பொருள்மயக்கே - தொகாநிலையே - வழுவே - வழுவமைப்பே - காலமே - வினாவே - செப்பே - மரபே - இயற்கையே - செயற்கையே - பொருள்கோளே - இடைச் சொல்லே - உயிர்ப்பொருளே - உயிரில் பொருளே - அவற்றின் பண்பே - உரிச்சொல்லே - என்னுமிவை. (சொல்லா தொழிந் தன உளவாகிலும் அவற்றிற் கெல்லாம் இதுவே ஓத்தாகக் கொண்டு செலுத்துக என்று குற்றம் வாராமல் நூலைப் பாதுகாத்தவாறு.) (நன். 460 மயிலை.) சொல்லதிகாரப் புறனடைச் செய்தி - செய்யுளுக்கு உரியன எனவும் வழக்கிற்கு உரியன எனவும் தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக் கூறப்பட்ட சொற்களை யெல்லாம் அகத்தியம் முதலிய தொன்னூல்களில் சொற் களை வேறுபடுத்து உணருமாற்றான் பிரித்துக்காட்டுக. நிலப்பெயர் குடிப்பெயர் முதலிய தலைப்புக்களில் அடங்கும் அருவாளன் சோழியன் முதலியவற்றையும், அம் ஆம் எம் ஏம் முதலிய இறுதிநிலை பற்றி வரும் முக்கால முற்றுக்களையும், அவை போல்வனவற்றையும் விரிந்த நூல்களில் கூறும் மரபினை ஒட்டிப் பிரித்துக் காட்டுக. இந்நூலுள் கூறப் படாது தொன்னூல்களில் கூறப்பட்ட செய்திகளையும் அந்நூல்கள் நோக்கி அறிக. தன்மையோடு இயைந்த ஏனைய இடச்சொற்கள் தன்மைப் பன்மை வினைமுற்றையும், முன்னிலையோடு இயைந்த படர்க்கைச் சொற்கள் முன்னிலைப்பன்மை வினைமுற்றையும் கொண்டு முடிதலும், ‘பல்லேம்’ என்ற தன்மைப் பன்மைப் பெயரைப் பல்லோர் படர்க்கைப்பெய ராகவும் ‘மூவிர்’ என்ற முன்னிலைப் பன்மைப்பெயரை மூவர் என்ற படர்க்கைப் பெயராகவும் கூறுதலும், கூர்ங்கோட்டது என ஒருமை யாகற்பாலதனைக் ‘கூர்ங்கோட்ட’ எனப் பன்மையாற் கூறும் பன்மையொருமை மயக்கம் கூறலும் போல்வன அதிகாரப் புறனடையான் அமையும். (தொ. சொ. 463 சேனா. உரை) பன்மையொருமை மயக்கம், இடவழுவமைதி சில, சம்பு - சள்ளை - சத்தி- முதலாய சொற்கள் இப்புறனடையான் கொள்ளப்படும். (தொ. சொ. 457 இள. உரை) இச்சொல்லதிகாரத்தில் சிலவற்றிற்கு ஞாபகமாய்ப் பொருள் பெறச் சொல்லப்பட்ட சொற்கள் எல்லாவற்றையும், செம் பொருளவாய்ப் பலவாக வேறுபடுத்திய விரிவுகளையுடைய அகத்தியத்தில் கூறிய நெறியில் தப்பாமல், சொல்லை வேறு படுத்து மாணாக்கன் உணருமாறு நுண்ணுணர்வுடையோர் உரையானும் காண்டிகையானும் பிரித்துக் காட்டுக. வினைக்குக் காரணங்கள் எட்டனுள் செயப்படுபொருட் கண்ணே இரண்டாவது தோன்றும் என்றும், அச்செயப்படு -பொருள்கள்தாம் மூவகைய என்றும், மூன்றாவதற்கு ஓதிய வினைமுதல் இயற்றும் வினைமுதலும் ஏவும் வினைமுதலும் என இருவகைத்து என்றும், கருவி முதற்காரணமும் துணைக் காரணமும் என இருவகைத்து என்றும், நான்காவதற்கு ஓதிய கொடைப்பொருள் இருவகைத்து என்றும், ஐந்தாவதற்குப் பொருள் நால்வகைத்து என்றும், அதன்கண் பொரு உறழ்பொருவும் உவமப்பொருவும் ஆம் என்றும், ஏது காரகஏது ஞாபகஏது என இருவகைத்தாம் என்னும், ஆறா வதற்குத் தற்கிழமை ஐந்து பிறிதின் கிழமை மூவகைத்து என் றும், பிறவும் வேற்றுமையியலில் பிரித்துக் காட்டப்பட்டன. வினையியலுள் வினைப்படுபகுதி, விகுதியும் காலஇடைநிலை யும் பெற்று முக்காலத்துக்கும் உரிய வடிவங்கள் பெறும் என்பதும், வினைப்பகுதி எடுத்தலோசையான் முன்னிலை ஏவல் ஒருமை முற்றாய் நிற்கும் என்பதும், வினைக்குறிப்புக்கள் பண்பாம் காலத்தும் வினைக்குறிப்பாம் காலத்தும் வேறு வேறு பொருள் உணர்த்தும் என்பதும், விரவுவினைகள் தம்முள்ளேயும் பாலும் இடமும் குறித்துக்கொள்ளும் தன்மையுடைய என்பதும், வினையெச்சங்கள் காலம் காட்டும் எழுத்துக்கள் பெறும் என்பதும், வினையெச்சம் பெயரெச்சம் என்பன முறையே காரணம் காரியம் பெறும், காரணப் பொருளவாய் வருவன கருவிக்கண் அடங்கும் என்பதும், பிறவும் பிரித்துக் காட்டப்பட்டன. அறுவகைத் தொகையும் தொகுங்கால் இன்ன சொற்கண்ணே இன்ன தொகை தொகும் என்பதும், வினைச்சொற்கள்தாமும் சில முக்காலமும் சில ஓரோர் காலமும் உணர்த்தும் என்ப தும், அவை பெயர் பெறுங்கால் இன்னவாறு பெயர்பெறும் என்பதும், பிறவும் எச்சவியலுள் கூறப்பட்டன. திரையனூர் - திரையனால் செய்யப்பட்ட ஊர், திரையனது ஊர் - என மூன்றாவதும் ஆறாவதும் விரியும். கடிப்பகை - நான்கும் ஆறும் விரியும்; பண்புத்தொகையும் ஆம். ஏழேகால் - ஏழும் காலும் - என உம்மையும் ஏழேகால் நிலமான ஊர் என அன்மொழியும் விரியும். சொல்லிலக்கணம் - ஆறாவதும் ஏழாவதும் விரியும்; சொல்லிலக்கணம் கூறிய நூல் என ஆகுபெயருமாம். பொன்மணி - மூன்றாவதும் ஐந்தாவதும் ஏழாவதும் விரியும்; பொன்னும் மணியும் என உம்மையும் விரியும். கரும்பு வேலி - நான்காவதும் ஆறாவதும் ஏழாவதும் மூன்றாவதும் ஐந்தாவதும் விரியும். இயலிசை - ஆறாவதும் ஏழாவதும் உம்மையும் வினையும் பண்பும் விரியும். உரைவிரி - ஆறாவதும் ஏழாவதும் நான்காவதும் இரண்டாவ தும் ‘உரைக்கும் விரி’ என வினையும் உரைவிரியையுடையது என அன்மொழியும் விரியும். கருத்துப் பொருள் - இரண்டாவதும் மூன்றாவதும் ஐந்தா வதும் நான்காவதும் ஆறாவதும் ஏழாவதும் ‘கருத்தும் பொருளும்’ என உம்மையும் விரியும். சொற்பொருள் - மூன்றாவதும் நான்காவதும் ஐந்தாவதும் ஆறாவதும் ‘சொல்லும் பொருளும்’ என உம்மையும் ‘சொல்லாகிய பொருள்’ எனப் பண்பும் விரிந்தன. ‘இவன்யார் என்குவையாயின்’ (புறநா. 13) என்புழி, இவன் என்பது முன்னிலைப்படர்க்கை. கொல் - செல் - வெல் - என்பன கொன்றான் - சென்றான் - வென்றான் - என ஆயின. கோறு கோறும் - சேறு சேறும் - வேறு வேறும் - எனத் தன்மைஒருமைக்கண்ணும் பன்மைக் கண்ணும் முறையே வந்தன. வா - வந்தான் என முதல் குறுகிற்று. கொள் - கொண்டான், கோடு, கோடும் - என ளகரம் ணகர மாகியும், கெட்டும், முதனிலை நீண்டும் வந்தன. கைவாரம் கொள்வான் - கை வாரி; திரு இல்லாதவன் - திருவிலி; அறிவு இல்லாதவன் - அறிவிலி; நூல் ஓதினான் - நூலோதி என ஈறு திரிந்து வந்தன. வில்லி, வாளி : வினைக்குறிப்புமுற்று (வில்லினன், வாளினன்) ஈறு திரிந்த பெயர். வலைச்சி, பனத்தி, வெள்ளாட்டி - சகர தகர டகர இடை நிலை பெற்றன. செட்டிச்சி, கணக்கிச்சி - ‘இச்’ சென்னும் இடைநிலை பெற்றன. கணவாட்டி - இவ்வினைப்பெயர் டகரம் பெற்றது. கிள்ளிகுடி - கிள்ளியுடைய குடிமக்கள் இருக்கும் ஊர்; கீழ் வயிற்றுக் கழலை - கீழ்வயிற்றின்கண் எழுந்த கழலை போல்வான் - இவையிரண்டும் அன்மொழித்தொகை. வடுகக்கண்ணன் - வடுகநாட்டிற் பிறந்த கண்ணன் (ஏழன் தொகை) வடுகங் கண்ணன் - வடுகனுக்கு மகனாகிய கண்ணன் (நான்கன் தொகை) ‘நனிநீடு உழந்தன்று மன்னே இனியே’ (குறுந். 149): ‘இனி’ என்பது பின்வரும் காலம் உணர்த்திற்று. இனி எம் எல்லை : பின் - என்னும் இடம் உணர்த்திற்று. ஏனோன் - ஒழிபொருள் உணர்த்திற்று. ஏதிலன் - அயலான் என்னும் பொருள் உணர்த்திற்று. உண்ணாநின்றான் - ‘ஆ’ இடைநிலை எழுத்து. வா, தா - என்றாற் போல்வன மறையுணர்த்துங்கால், வாராதான் - தாராதான் - வாராத - தாராத - வாராது - தாராது - என்றாற் போல முதனிலை குறுகாது நிற்கும். நன் தீ சிறு பெரு வன் மென் கடு முது இள புது பழ இன் உடை அன் - என்பன மகரஐகாரம் பெற்று நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை முதுமை இளமை புதுமை பழமை இன்மை உடைமை அன்மை - என வினைக்குறிப்புப்பெயராய் நிற்குமாறும், நல்லன் தீயன் முதலாக உயர்திணை வினைக் குறிப்பாய் நிற்குமாறும், இவைதாம் ஆன் ஈறு பெற்று எடுத்த லோசை யான் நல்லான் தீயான் - முதலாக முற்றாயும் படுத்தலோசை யான் வினைக் குறிப்புப்பெயராய் உருபேற்றும் பயனிலை கொண்டும் நிற்குமாறும் பிரித்துணரப்படும். இவைதாம் நன்றாய் வளர்ந்தான் - தீதாய்ப் போயினான், நல்ல சாத்தன் - தீய சாத்தன் - என வினையெச்சக்குறிப் பாகவும் பெயரெச்சக் குறிப்பாகவும் வரும். சிற இழி தீர் - என்னும் முதனிலைகள் அது - அன் - ஆன் - ஈறுகள் பெற்றுச் சிறந்தது - சிறந்தவன் - சிறந்தான் - முதலாக வும், சிறந்து சிறந்த - முதலான எச்சங்களாகவும், காலம் காட்டும் இடைநிலை பெற்று முற்று வினையெச்சம் பெயரெச்சங்களாகவும் நிற்குமாறு உணரப்படும். ‘பிரிதல் வல்லியார் ஈதும் துறந்தோர்’ - வல்லியார் என்ற வினைப்பெயர் வல்லாராய் என வினையெச்சமாய் நின்றது. ‘கால்பொர நுடங்கல கறங்கிசை அருவி’ (கலி. 45) - நுடங்கு தலையுடைய அருவி என ஓசைவேற்றுமையான் பொருள் வேறுபாடு தந்தது. ‘பல்லோ ருள்ளும்’ (அக. 110): ‘பல்லே முள்ளும்’ என்று உளப்பாட்டுத் தன்மைப்பன்மையான் கூறாது ‘பல்லோருள் ளும்’ எனப் படர்க்கை வாய்பாட்டான் தோழி கூறினாள், அருளின்றிப் பெயர்ந்த தலைவியையும் ஆயத்தாரையும் மாத்திரம் சுட்டலின். ‘முரசுமுழங்கு தானை மூவருள்ளும்’ (புற. 35) - ‘மூவிர்’ என முன்னிலையுளப்பாட்டால் கூறாது, மூவர் எனப் படர்க்கை யான் கூறியதும், இச்சோழனை நீக்கிக் கூறிய நயம் கருதிற்று. இச் சொற்படலத்துப் பிரித்துக் கூறாது நுண்ணுணர்வுடை யோர் உணருமாறு கூறிய இலக்கணங்களை முதனூலானும் விரித்துரையானும் காண்டிகையானும் உணர்த்துக என்பது இவ்வதிகாரப் புறனடை குறிப்பிடுவதாம். (தொ. சொ. 463 நச். உரை) சொற்களெல்லாம் ஈண்டு ஓதிய இலக்கணத்தான் முற்றுப் பெற்றிலவாயினும், பலவகைப்பட்ட ஆசிரிய மதவிகற்பத்தான் வரும் இலக்கணத்தில் பிறழாமல் யாதானும் ஒரு சொல்லா யினும் பாகுபடுத்து உணருமாறு வகுத்துக் காட்டி உணர்த்துக. ‘கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர, இன்னே வருகுவர் தாயர்’ (முல். 15, 16) என்றவழித் தாயர் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியின் அடங்காமையின் இதற்கு இலக்கணம் வேறு வேண்டிற்று. ‘வளியிடை வழங்கா வானம் சூடிய, மண்திணி கிடக்கை’, (புற. 35) ‘நெடிய வலிய ஆள்’ - எனப் பெயரெச்சம் அடுக் கிற்று. ‘நெல்லரியும் இருந்தொழுவர்’ என்னும் புறப்பாட்டு (24) முற்றுப் பெற்று அடுக்கி வந்தது. (‘உம்’ உந்து ஆகிய முற்றுக்கள் அடுக்கி வந்தவாறு.) ‘ஒன்னாதார்க் கடந்துஅடூஉம், உரவுநீர் மாகொன்ற வென் வேலான்’ (கலி. 27) பெயரெச்சம் இருவேறு வாய்பாட்டான் அடுக்கி வந்தது. வினைத்தொகையும் உவமத்தொகையும் ஆகிய இவ்விரண்டு தொகைப்புறத்தும் பிறந்த அன்மொழித்தொகையை இப்புற னடை யாற் கொள்க. நின்ன கண்ணியும் (புற. 45) : அகரம் ஆறனுருபாக வந்தது; நின்னுடைய என்னும் பொருண்மைக்கண் ஒட்டி அவ்வாய்பாடு குறித்து நின்றது. (தொ.சொ. 453 தெய். உரை) சொல்லதிகாரம் - சொல்லை உணர்த்தும் பலஓத்துக்களின் தொகுதி. இதன்கண் தொடர்மொழியுள் அல்வழி பற்றி ஓதும் கிளவியாக்கம், வேற்றுமை பற்றி ஓதும் வேற்றுமையியல் - வேற்றுமை மயங்கியல் - விளிமரபு - என்ற மூன்று இயல்கள், தனி மொழிகள் பற்றி ஓதும் பெயரியல் - வினையியல் - இடையியல் - உரியியல் - என்னும் நான்கு இயல்கள், சொல் பற்றிய எஞ்சிய செய்திகளை உணர்த்தும் எச்சவியல் - என ஒன்பது இயல்கள் உள்ளன. சேனாவரையர் நச்சினார்க்கினியர் இருவரும் இவ்வதிகாரத்தில் 463 நூற்பாக்கள் கொள்வர்; இளம்பூரணர் 457 நூற்பாக்களும், தெய்வச்சிலையார் 452 நூற்பாக்களும் கொள்வர். கல்லாடனார் உரை இடையியல் 10 ஆம் நூற்பா முடிய, 260 நூற்பாக்களுக்கு உள்ளது. உரையாசிரியர் பெயர் தெரியாத பழைய உரை வேற்றுமை மயங்கியல் 33 ஆம் நூற்பா முடிய, 117 நூற்பாக்களுக்கு உளது. பாலசுந்தரனார் உரை முழுமையாக உள்ளது. சொல்லதிகாரம் கூறும் விதி - சொல்லதிகாரம், இன்ன பொருளை இன்னவாறு கூறுக என அதன் இலக்கணம் கூறலும் (வழாநிலை), ‘அதனை அவ்வாறு ஒழியவும் கூறுதலுமாம்’ என்று கருதினும் கருதற்க என அதனை வழுவற்க எனக் காத்தலும், அவ்வாறு வழுப்படக் கூறிய வழக்கினுள் அதனகத்து அவ்வாறு கூறுதற்கு ஓர் பொருட்காரணம் கண்டு அதன் அமைதி கூறுதலும் - என மூவகையாக விதி கூறுகிறது. (தொ.சொ. 11 கல். உரை) சொல்லதிகாரம் : தொடரிலக்கணம் - சொல்லதிகாரம் என்பது சொல்லும் அதிகாரமும் ஆகிய நிலைமொழி வருமொழி இரண்டனையும் விட்டு, அவ்விரண் டும் தொக்க தொகைநிலைத் தொடர்மொழியின்பின் ‘உடையது’ என்னும் அல்லாத மொழியை உணர்த்துதலின் அன்மொழித் தொகை ஆயிற்று; சொல்லினது அதிகாரத்தை யுடையது - என அன்மொழித்தொகையாய், அப்படலத்திற்குக் காரணக்குறி ஆயிற்று. சொல் என்றது, எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருள்தன்மையும் ஒருவன் உணர்வதற்குக் கருவியாம் ஓசையாகிய பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைச் சொல்லும் பிறவுமாம். அதிகாரம் - அதிகரித்தல். ஆதலின் சொல்லை உணர்த்தி வரும் பலஓத்தினது தொகுதி சொல்லதி காரம் என்றாராயிற்று. (நன். சொல். பாயிரம். சிவஞா.) சொல்லாற்றலால் சிறப்புப்பொருள்படும் பகுபதம் - சொல்லாற்றல் : ‘எழுத்தாற்றல் முதலியன’ காண்க. ஒரு பொருட் பலசொற்களும், ஒருசொற் பலபொருள்களும் தம் ஆற்றலால் பொருள் தருவன. இவையன்றி, சொற்களில் தமக்குரிய ஆற்றலால் சிறப்பான பொருளைப் பயப்பனவும் உள. வயிறன் - பல்லன் - தோளன் - பொய்யன் - அறிவன் - போல்வன சொல் கிடந்தபடி பொருள்படாமல், எல்லார் வயிற்றைக் காட்டிலும் பெருவயிறுடையவன் - எல்லார் பல்லைக் காட்டிலும் பருத்து நீண்டு உயர்ந்திருக்கும் பல்லை யுடையவன் - எல்லார் தோளினும் பலமுடைய தோளன் - யாரும் பொய்யும் மெய்யும் கலந்து சொல்வர், இவனோ மிகவும் பொய்யன் - உலகோர் அறிவுபோலன்றி மயக்கம் தீர்ந்த அறிவையுடையவன் - என்று சிறப்புப்பொருள் தருவன ஆயின. (இ. கொ. 117) சொல்லின் இயல் - பதினெட்டுத் தேசிகச்சொல் எனப்படும் திசைச்சொல்லும் வடசொல்லும் என வழக்கொடு நிகழ்த்தும் உரிச்சொல் எனப்படும் தனிமொழிகள், பலபொருள் ஒருசொல்லான நானார்த்த பதங்களாகவும், ஒருபொருட்கே பல சொல்லாக வரும் சமானார்த்த பதங்களாகவும், சத்தி எனப்படும் தமக்குரிய ஆற்றலொடு வரும். சொற்கள் ‘மொழிப்பொருட் காரணம்’ எனத் தொல்காப்பியம் கூறும் ‘பிரவிருத்தி நிமித்தம்’ கொண்டும் பொருளுணர்த்தும். பிரவிருத்தி நிமித்தமாவது, பொருளை உணர்த்தும் செயலில் சொல் ஈடுபடுவதற்கான - செயற்படுவதற்கான - காரணம். இதனை வடமொழியில் ‘வியுற்பத்தி’ (வ்யுத்பத்தி) அஃதாவது சொல்லைப் பகுத்துப்பார்த்துப் பொருள் உணர்தல் என்றும் கூறுவர். இந்தச் சத்தியைச் சங்கேதம் என்றும், போடம் (ஸ்போடம்) என்றும் கூறுவர். அஃதாவது எழுத்தாற்றல் (வர்ணஸ் போடம்), சொல்லாற்றல் (பதஸ்போடம்), சொற்றொடர் ஆற்றல் (வாக்யஸ் போடம்) என மூன்றாகக் கூறுவர், வடமொழிச் சொல்லிலக்கணக்காரர்களான வையாகரணர். ‘(ஸ்)போடம்’ காண்க. சக்தி - ஆற்றல்; அது ‘விரல்’ என்றால் அஃது உகிரைக் குறிக் காமல் விரலையே குறிப்பது போன்றது. இது சொல்லுக் குள்ள இயற்கை. இது ‘சங்கேதம்’ எனவும் வழங்கும். அது காண்க. சத்தி, சங்கேதம், போடம் : ஒருபொருட்கிளவி. (பி. வி. 18) சொல்லின் இலக்கணம் - சொல் என்பது எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசை (இள.); சொல்லாவது எழுத்தொடு ஒருபுடையான் ஒற்றுமையுடையதாய்ப் பொருள் குறித்து வருவது (சேனா.); எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருள்தன்மையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசை (நச்.). உயர்திணைச்சொல் அஃறிணைச்சொல் எனச் சொல் இரண்டு (சொ. 1 சேனா.); பெயர், வினை - எனச் சொல் இரண்டு (158 இள.) ; பெயர்- வினை - இடை - உரி - எனச் சொல் நான்கு (158, 159 சேனா.); இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் - எனச் சொல் நான்கு. (397 நச்.). சொல்லின் பொதுஇலக்கணம் - ஒருமொழியும் தொடர்மொழியும் பொதுமொழியும் ஆகிய மூன்று கூற்றினதாய், இருதிணையாகிய ஐம்பாற் பொருளி னையும் அப்பொருளினையே யன்றித் தன்னையும், மூன்றிடத் தினும், வழக்கின்கண்ணும் செய்யுட்கண்ணும், வெளிப்படை யானும் குறிப்பினானும் விளக்குவது சொல்லாம். (நன். 259) சொல்லின் பொதுத்தகுதி - சொல்லின் பொதுத்தகுதியாவன பன்னிரண்டாம். அவை இயற்சொல், திரிசொல், ஒருமொழி, தொடர்மொழி, பொது மொழி, பகாப்பதம், பகுபதம், ஆகுபெயர், இருதிணை, ஐம்பால், மூவிடம், சாரியை - என்பன. (தொ. வி. 42) சொல்லுதல் தொழிற்பண்புமேல் வரும் உரிச்சொற்கள் - மாற்றம் நுவற்சி செப்பு கரை நொடி இசை கூற்று புகறல் மொழி கிளவி விளம்பு அறை பாட்டு பகர்ச்சி இயம்பல் - என்பன சொல்லுதல் தொழிற்பண்பின்மேலவாம் உரிச் சொற்கள். (நன். 458) சொல்லும் பொருளும் : சேனாவரையர் கருத்து - ‘ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே’: ஆயிரு திணை யின்கண் - என ஏழாவது விரித்துரைப்பார் சேனா; சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடம் என்றும் கூறுவார்; ‘ஆண்மை திரிந்த பெயர்’ (சொ. 4): “சொல்லொடு பொருட்கு ஒற்றுமை யுண்மையின் ‘ஆண்மை திரிந்த பெயர்’ என்றார்” என விளக்குவார்; ஆறாம்வேற்றுமைப் பொருள் விளக்கத்தில் (சொ. 80) ‘திரிந்து வேறுபடூஉம்’ என்பதற்கு உதாரணமாக எள்ளது சாந்து - கோட்டது நூறு - சொல்லது பொருள் - என்று காட்டி முழுவதூஉம் திரிந்தன என்று விளக்குவார். இவற்றான் சேனாவரையர்க்குச் சொல்லும் பொருளும் வேறானவை அல்ல என்பது கருத்தாம். சொல்லும் பொருளும் : நச்சினார்க்கினியர் கருத்து - “சொல்லாவது எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருள்தன்மையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசை” என்பார் நச்சினார்க்கினியர். இது சத்தநூலார் கருத்துக்கு மாறானது. தர்க்கநூலார் கருத்தாவது : “ஏதேனும் ஒருவகைத் தொடர்- பால் சொல் பொருளை உணர்த்துதலான், இது சொரூப சம்பந்தம்” என்பது. (பி. வி. 18) சொல்லெச்சம் - பத்துவகை எச்சங்களுள் சொல்லெச்சம் என்பது ஒன்று. சொல் என்னும் எச்சம், முன்னாயினும் பின்னாயினும் சொல் என்னும் சொல்கொண்டு முடிவது. வருமாறு : ‘பசித்தேன் பழஞ்சோறு தாஎன நின்றாள்’ - என என்பது எனச்சொல்லி என்று பொருள்படச் ‘சொல்லி’ என்ற சொல் வந்து சேர்வது சொல்லெச்சமாம். (தொ. சொ. 436 இள. உரை) என என் எச்சம் ‘சொல்’ என்னும் முதனிலை மாத்திரை தன் னுள்ளே எஞ்சிநிற்பதே சொல்லெச்சம் என்பார் நச்சினார்க் கினியர். வருமாறு : ‘என நின்றாள்’ - எனச் சொல்லி நின்றாள். எழுத்தெனப் படுப, சொல்லெனப் படுப, பெயரெனப் படுபவை, இடையெனப் படுப, இலமென் கிளவி, முழுதென் கிளவி, கடியென் கிளவி - முதலாக வருவன எல்லாம் சொல்லெச்சம். (தொ. சொ. 441 நச். உரை) ஒருசொல்லே எஞ்சிநிற்பது சொல்லெச்சம். ‘உயர்திணை என்மனார்’ என்னும் தொடரில் ‘புலவர்’ என்ற (எழுவா யாகிய) ஒரு சொல்லே எஞ்சி நின்றது. (தொ. சொ. 441 சேனா. உரை) சொல்லெச்சம் அச்சொல்லாவதற்கு முன்னும் பின்னும் மற்றொரு சொல் எஞ்சிநிற்றல் இலது. எனவே, அச்சொல்லி னாலேயே உய்த்துணர்ந்துகொள்ளப் பிறிதொரு பொருள் வரும் என்றவாறாம். ‘காலாழ் களரின்....... களிறு’ (கு. 580) என்றவழித் தம் நிலத்தில் எளியவரும் வலியராவர்; பிறர் நிலத்தில் வலியாரும் எளியர் ஆவர் என்னும் பொருண்மை இச்சொல்தானே உணர்த்தி நிற்றலின் சொல்லெச்சமாயிற்று. (சேனா. குறிப்பிடும் குறிப்பெச்சம் தெய்வச்சிலையார்க்கு இசையெச்சமாகும்.) (தொ. சொ. 434 தெய். உரை) சொல் என்னும் சொல் எஞ்சிநிற்பது சொல்லெச்சமாகும். வருமாறு: ‘கடி என்றார் கற்றறிந் தார்’ (திரி. 44) - கடி என்று சொன்னார்; ‘இல் என்றல் யார்க்கும் வசையன்று’ (நாலடி. 56) - இல் என்று சொல்லுதல் - எனச் ‘சொல்’ என்னும் எச்சம் கொண்டன. பெயரெச்சம் வினையெச்சம் போலச் சொல் என்னும் எச்சத்தையுடைய இடைச்சொல்லை ஆகுபெயரால் சொல்லெச்சம் என்றார். (நன். 360 சங்.) சொல்லை உணர்த்திய திறம் - “போகபூமியான காலத்து எழுத்து இன்றிக் கன்மபூமியான காலத்து எழுத்துத் தோன்றின. இத்துணையல்லது, சொற் போல எக்காலத்திலும் தொடர்ந்து வாராத எழுத்தினை முன்வைத்தல் பிழை; சொல்லையே முன்வைக்கற்பாலது” எனின், அற்றன்று; எழுத்தாலே வந்தது சொல்லாதலால் ஆக்குவதனை முன்உணர்த்தி அதனாலாயதனைப் பின் உணர்த்தினால் பிழையன்று; மரபு என்க. (நேமி. மொழி. 1 உரை) இரண்டுதிணை வகுத்தும், அத்திணைக்கண் ஐந்துபால் வகுத்தும், ஏழ்வழு வகுத்தும், எட்டுவகைப்பட்ட வேற்றுமை வகுத்தும், ஆறு தொகை வகுத்தும்; மூன்று இடம் வகுத்தும், மூன்று காலம், வகுத்தும், இரண்டிடத்தான் ஆராயப்பட்டது சொல். (நேமி. மொழி. 2 உரை) சொல்லை எட்டு இறந்த பலவகையான் உணர்த்தல் - சொல் நான்குவகைய என்றலும், அவற்றையே பலவாகப் பகுத்தலும், விகாரவகையும், பொருள்கோள்வகையும், செய்யுட் குரிய சொல் நான்கு என்றலும், பிறவுமாம். (தொ. சொ. 1 இள. நச். உரை) சொல்லை எட்டுவகையான் உணர்த்தல் - இரண்டு திணையும், ஐந்து பாலும், எழுவகை வழுவும், எட்டு வேற்றுமையும், ஆறு ஒட்டும், மூன்று இடமும், மூன்று காலமும், வழக்கும் செய்யுளுமாகிய இரண்டு இடமும் - எனச் சொல்லை எட்டுவகையான் உணர்த்துப. (தொ. சொ. 1 நச். உரை) சொல்வகை - சொல்லும் சொல், ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி - எனவும், உயர்திணைச்சொல் அஃறிணைச்சொல் ஆண்பாற் சொல் பெண்பாற்சொல் பலர்பாற்சொல் ஒன்றறிசொல் பலவறிசொல் தன்மைச்சொல் முன்னிலைச்சொல் படர்க்கைச் சொல் வழக்குச்சொல் செய்யுட்சொல் வெளிப்படைச்சொல் குறிப்புச் சொல் எனவும் வரும் கூறுபாட்டது ஆம். (நன். 258 மயிலை.) சொல்வகை, பொருள்வகை - எல்லாச் சொல்லும் பொருளும், ஒருமொழி - தொடர் மொழி - பொதுமொழி - எனும் மூன்றாயும் இருதிணை ஐம்பாலாயும் அடங்கும் என்பதும், இருதிணை முதலிய காரணத்தான் உயர்திணைச்சொல்....... (‘சொல் வகை’ காண்க.) குறிப்புச் சொல் - என்றும், உயர்திணைப்பொருள் அஃறிணைப் பொருள் ஆண்பாற்பொருள் பெண்பாற் பொருள் பலர்பாற் பொருள் ஒன்றறிபொருள் பலவறி பொருள் தன்மைப் பொருள் முன்னிலைப்பொருள் படர்க்கைப் பொருள் வழக்குப்பொருள் செய்யுட்பொருள் வெளிப்படைப் பொருள் குறிப்புப்பொருள் - என்றும் வழங்கப்படும் என்பதும், உயிர்க்கு அறிவு கருவியாய் நின்று சித்துப்பொருள் சடப் பொருள் நித்தியப்பொருள் அநித்தியப் பொருள் உருவப் பொருள் அருவப்பொருள் காட்சிப் பொருள் கருத்துப் பொருள் இயற்கைப்பொருள் செயற்கைப் பொருள் முதற் பொருள் சினைப்பொருள் இயங்கியற் பொருள் நிலையியற் பொருள் - எனப் பலவாற் றானும் பகுத்துக் கூறப்படும் இருதிணை ஐம்பாற்பொருளையும் உணர்த்தும் என்பதும் பெற்றாம். (நன். 259 சங்.) ‘சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்’ - சொல்லை வேறுபடுத்து மாணாக்கன் உணருமாறு நுண்ணுணர்வுடையோர் உரையானும் காண்டிகையானும் பிரித்துக் காட்டுக. (தொ. சொ. 463 நச். உரை) சொற்கள் இவை என்று தெரிந்து அவற்றை உத்திவகை இலக்கணத்தொடு காட்டுக. சொல்லை வேறுபடுத்து உணரு மாற்றால் பிரித்துக் காட்டுக. (தொ.சொ. 463 சேனா. உரை) (தொ. சொ. 457 இள. உரை) யாதானும்ஒரு சொல்லாயினும் பாகுபடுத்துணருமாறு வகுத்துக் காட்டி உணர்த்துக நூலுணர்ந்தோர். (தொ. சொ. 453 தெய். உரை) சொல்விகாரம் - காரணம் இன்றியே வரும் என எழுத்துக்கு கூறிய புணர்ச்சி இல் விகாரம் நான்கும் சொல்லினும் வரும். அவை தோன்றல் - திரிதல் - கெடுதல் - நிலைமாறுதல் - என்பன. 1. செல் - சென்றீ, யாது - யாவது : தோன்றல்; 2. குருவி - குரீஇ : திரிதல்; 3. பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் - என்பன பெயர் வினை இடை உரி - என வழங்கப்படுதல் : கெடுதல். 4. நுனிக்கொம்பர் (கொம்பர்நுனி), கடைக்கண் (கட்கடை), அடி நா (நாவடி) - முதலியன : (முன்பின்) நிலைமாறுதல். இவ்வாறு சொற்கள் தமிழ்மொழி விதியால் நிலைமாறுத லன்றி வடமொழிவிதியால் நிலைமாறுதலும் உண்டு : வடமொழி நடை தமிழ்நடை ‘செய்த வேள்வியர்’ திவ். பிர. 3187 வேள்வி செய்தவர்; ‘அருங்கேடன்’ கு. 210 கேடரியன் ; ‘கூப்பிய கையினர்’ முருகு. 187 கை கூப்பியவர்; ‘வெறுத்த ஆசையர்’ ஆசையை வெறுத்தவர்; இவைபோலப் பலவும் வரும். இனி, தமிழ்விதியால் நிலை மாறும்போது, நிலைமொழியும் வருமொழியும் திரியாது நிற்கும்; வடமொழியில் அவை திரிந்து நிலைமாறும். பெயர் என்பது பேர் என்றும், நீயிர் என்பது நீவிர் நீர் - என்றும், எவன் என்பது என்னை என் - என்றும், பொழுது என்பது போழ்து போது என்றும், ஞெண்டர் என்பது ஞெண்டு ஞண்டர் நண்டு நெண்டு - என்றும், தெங்கின்காய் என்பது தேங்காய் என்றும் - இவை போன்ற இன்னும் பலவும் ஒருகாரணமும் இன்றியே பெறும் விகாரமெல்லாம் இவ்விதியுள் அடக்கிக்கொள்க. (இ.கொ. 113, 114 உரை) (தொல்காப்பியனார் கூறிய விதிப்படி, நீஇர் என்பதே சொல்; அதனுள் இகரக்குறிலை அளபெடை என மயங்கி நீர் என்பதைச் சொல்லாக்கினர்.) ஸமேலே எடுத்துக் காட்டிய எவன் என்பது ஈண்டு அஃறிணைப் பொதுக்குறிப்புமுற்று; உயர்திணை ஆண்பால் (வினாப்) பெயரன்று.] சொல் வேறுபடாது பொருள் வேறுபடுதல் - நட வா - முதலிய முதனிலைத் தனிவினைகளை முற்றாக்க வேண்டின் எடுத்துக்கூறுக; முதனிலைத்தொழிற்பெயராக்க வேண்டின் படுத்துக்கூறுக. கட்டு என்பதனை முற்றுகர முற்றாக வேண்டின் எடுத்துக் கூறுக; குற்றுகரத் தொழிற் பெயராக்க வேண்டின் படுத்துக் கூறுக. ‘நெறிநின்றார் நீடுவாழ் வார்’ (கு. 6) என்பதனை முறையே பெயராக்க வேண்டின் எடுக்க; முற்றாக்க வேண்டின் படுக்க. செய்யும் என்பதனை எச்சமாக்க வேண்டின் எடுக்க; முற்றாக்க வேண்டின் படுக்க. ‘அம்பலத்தாடி’ என்பதனை எச்சமாக்க வேண்டின் படுக்க; பெயராக்க வேண்டின் எடுக்க. இவை போல்வன பலபொருட்கு ஒருவடிவாகிய தனிமொழி. இனி, சொல் வேறுபடாது பொருள் வேறுபடுதல் செய்யுளுள் வருமாறு: ‘குழல்வளர் முல்லையில் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத்து ஊத’ (சிலப். 4 : 15, 16) வேய்ங்குழலினின்று வெளிப்படும் முல்லைப்பண் - கூந்தலில் சூட்டப்பட்டுள்ள முல்லைமலர் - எனவும், குழலில் வாய் வைத்துக் கோவலர் ஊத - முல்லைமலரில் வண்டு வாய் வைத்து ஊத - எனவும், சொல் வேறுபடாது இருபொருள்பட வந்தவாறு. இனிப் பொருள்வேறுபடாது சொல் வேறுபடுவனவும் உள. எ-டு : அஃதழகிது (அஃது + அழகிது, அது + அழகிது); அதனை (அது + ஐ, அஃது + ஐ); அவற்றை (அவ் + வற்று + ஐ, அவை + வற்று + ஐ); நிறுவென்றான், கூவென்றான், ஏயென்றான் (நிறு, கூ, ஏ : ஒரு பொருளன) சொல்லென்றான், விள்ளென்றான் (சொல், விள் : ஒரு பொருளன) (இ. கொ. 126) சொற்களின் 16 வகை - பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் - என்னும் நான்கனையும் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் - என்னும் நான்கனோடும் உறழவே, சொற்கள் பதினாறாம். (நேமி. பெயர். 1 உரை) சொற்பொருண்மை - சொல் என்பதற்குப் பொருண்மை ஓசையாம். ஆனால் கடல் ஒலியும் கார்ஒலியும் விண்ஒலியும் சொல்லாம் பிற எனின், அற்றன்று, ஓசை அரவம் இசை ஒலி - என்பன எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்து அல் ஓசைக்கும் பொது. கிளவி, மாற்றம், மொழி - என்பன எழுத்தொடுபுணர்ந்து பொருள் அறிவுறுக் கும் ஓசைமேல் நிற்கும். எழுத்தொடு புணராது பொருள் அறிவிக்கும் ஓசை முற்கு வீளை இலதை அனுகரணம் - என்றித் தொடக்கத்தன. அவை சொல் எனப்படா. பொரு ளொடு புணரா ஓசை மேலதன்று இவ்வாராய்ச்சி; எழுத் தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசையே சொல் எனப்படும். (தொ. சொ. 1 கல். உரை) சொற்பொருள் உரைக்க ஏதுக்கள் ஆவன - பொருள் அதிகாரம் முன்னம் உத்தி வெளிப்படை குறிப்பு மெய்ப்பாடு அன்மொழி ஒட்டு ஆகுபெயர் இறைச்சி உபசாரம் ஆசை உள்மயங்கு - முதலாயின ஏதுவாக இடனறிந்து சொற்குப் பொருளுரைப்போர் அறிந்தோர். (‘ஆதி’ என்றமை யால், ஞாபகம் - உடம்பொடு புணர்த்தல் - இலேசு - குறை - முதலியன கொள்க.) பொருள் காரணமாகச் சொற்பொருள் உணர்த்தலாவது, முன்பே தனக்கு வேண்டிய பொருளைக் கருதிக்கொண்டு பின்பு அப்பொருளுக்கு ஏற்கச் சொற்பிரித்துச் சந்தி கூட்டல். எ-டு : ‘தவரடி புனைந்த தலைமையோன்’ (சி.போ. பாயி. 11) : இத்தொடருக்குத் தவருடைய அடியைப் புனைந்த அன்பிற் பெரியோன் என்றும், தவத்தோராலே தன்னுடைய அடியைப் புனையப்பட்ட அறிவிற் பெரியோன் என்றும் கூறுக. அதிகாரம் காரணமாகச் சொற்பொருள் உணர்த்தல் - தனித் தலைப்பிற் காண்க. முன்னம் காரணமாகச் சொற்பொருள் உணர்த்தலை ‘முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே’ (408) எனத் தொகுத்தார் தொல் காப்பியனார்; ‘இவ்விடத்து இம்மொழி’ (பொ. 519) என்னும் சூத்திரத்தால் விரித்தார். உத்தி காரணமாகச் சொற்பொருள் உணர்த்தலைத் தொல் -காப்பியனார் 64 கூறாக விரித்தார். மெய்ப்பாட்டியலுள் மெய்ப்பாடு காணப்படும். ‘இறைச்சி தானே பொருட்புறத் ததுவே’ என்பது தொல்காப்பியம். (பொ. 229) ‘உணர்ந்ததை மறத்தல் உள்மயக்கு என்ப’ இஃது உரைச் சூத்திரம். வெளிப்படை குறிப்பு என்பன ‘ஒன்றொழி பொதுச்சொல்’ (நன். 269) என்னும் சூத்திரத்தால் பெறப்படும். அன்மொழி ‘பண்புதொக வரூஉம் கிளவி யானும்’ (சொ. 418) என்பதனால் கொள்ளப்படும். ஆகுபெயர் ‘பொருள்முதல் ஆறோடு’ (நன். 290) என்பதனால் கொள்ளப்படும். இறைச்சி ‘உடனுறை உவமம்’, ‘இறைச்சி தானே’, ‘அன்புறு தகுந’, ‘இறைச்சியிற் பிறக்கும்’ (பொ. 242, 229, 230 231 நச்.) என்னும் சூத்திரங்களால் கொள்ளப்படும். உபசாரம் - ஒன்றனை மற்றொன்றாகக் கூறும் மரபு; காரணத்தைக் காரியமாகக் கூறுதல் போல்வன. ஆசை - விருப்பினால் மிகுத்தும் குறைத்தும் திரியக்கோடல். உள்மயக்கு - உணர்ந்ததை மறத்தல். ஞாபகம் - கூறாததனை அறிவுறுத்தல். உடம்பொடு புணர்த்தல் - நூற்பாவிலேயே ஒரு செய்தியை யாப்பில் அமைத்துப் பின்னோர் பின்பற்ற வாய்ப்பளித்தல். இலேசு - சூத்திரத்தில் காணப்படும் மிகைச்சொல். குறை - கூறாது விடுக்கப்பட்ட சொல். வேண்டா கூறல் - பின் வேண்டியதை விளக்கத் தேவையற்ற ஒன்றைக் கூறல். எ-டு : தொ. சொ. 124, 129 சேனா. என்னும் விளிபுமரபுச் சூத்திரங்கள். தாற்பரியம் - போந்த பொருள். செய்யுள் விகாரம் - வலித்தல் முதலிய ஆறும், மூவகைக் குறையும். இருவகை வழக்கு - உலகவழக்கும் செய்யுள்வழக்கும்; இயல்பு -வழக்கும் தகுதிவழக்கும் ஆம். (நன். 267) திசை வழக்கு - ‘திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும்’ (சொ. 449) போல்வன. மரூஉமொழி - ‘மருவின் தொகுதி’, ‘மீ என மரீஇய’, ‘முன் என் கிளவி’ ‘வழங்கியல் மருங்கின்’ (தொ. எ. 111, 250, 355, 483 நச். ) என்னும் சூத்திரங்களால் சுட்டப்பட்டவை. பொதுவிதி, சிறப்புவிதி, தன்மதம் : வெளிப்படை வினை சார்பு இனம் இடம் : நன். 390 ஆம் நூற்பாக் காண்க. நித்தியம் - நாடோறும் செய்தி நைமித்திகம் - நித்தியத்தில் தாழ்வுதீரச் சிறப்பாகச் செய்வது. காமியம் - ஒருபயன் கருதிச் செய்வது. முன்னம் - அகச்செய்யுள் உறுப்புப் பன்னிரண்டனுள் ஒன்றாகிய குறிப்பு. (இ.கொ. 129) சொற்பொருள் விளக்க மொழி வருவித்து முடித்தல் - ஊழ் என்னும் சொல்லுக்கு விதி பொறி வினை - முதலிய சொற்களுள் ஒன்றனைக் கூறுதலே பொருள்படலாயிருக்க, “ஊழ்: அஃதாவது இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைவதற்கு ஏதுவாகிய நியதி” என வாக்கியமாகப் பொருள் உணர்த்துதல் போன்றவை. (இதனை ‘நிருவசனம்’ அல்லது ‘நிருத்தி’ என்னும் பிரயோக விவேகம். காரிகை 50 உரை) ‘மொழி வருவித்து முடித்தல்’ காண்க. (இ.கொ. 89) சொன்மை தெரிதல் - தனிப்பட்ட சொல்லின் தன்மை அறியப்படுதல். எ-டு : செய்து என் எச்சம் (241), தஞ்சக் கிளவி, (268) வேறு என் கிளவி (224) - என்னுமிவை செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம், தஞ்சம் என்னும் உரிச்சொல், வேறு என்னும் சொல் - ஆகிய சொற்களின் தன்மையையே குறிப்பன; பொருள் தன்மையைக் குறிப்பன அல்ல. (தொ.சொ. 158 நச். உரை) பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் பெயரெச்சம் வினையெச்சம் முற்றுச்சொல் - என இவை அவ்வச் சொற்களையே பொருளாக உணர்த்தின. ஒருசொல் தன்னின் வேறாய சொல்லைப் பொருண்மையாக உணர்த்தாது, ‘வேறு என் கிளவி’ என்றாற் போல அச்சொல் தன்னையே உணர நிற்றலும் உண்டாம். அது சொன்மை தெரிதல். (தொ.சொ. 159 கல். உரை) சொன்மையும் பொருண்மையும் தெரிதல் - ஒரு சொல்லைக் கூறியவழி, அச்சொல்லின் தன்மையோடு அது குறிப்பிடும் பொருளின் தன்மையும் அறியப்படுதல். ‘உருபுநிலை திரியாது, ஈறு பெயர்க்கு ஆகும் இயற்கைய என்ப’ (சொ. 69): இத்தொடரில் பெயர் என்ற சொல் பெயர்ச்சொல் ஆகும். ஆடு மாடு மனிதன் - முதலிய பல பொருள்களையும் உணர்த்தும் நிலையில் அது பொருண்மை தெரிதலாம்; பெயர் என்னும் பெயரை மாத்திரம் குறிப்பிட்டு அஃது உருபேற்கப் பெயர்ப்பொருள் வேறுபடும் என்று குறிப்பிடும் நிலையில் சொன்மைதெரிதலாம். ஆடு மாடு முதலிய சொற்கள் ஆட்டை ஆட்டொடு, மாட்டை மாட்டொடு - முதலாக உருபேற்றலைக் குறிப்பிடுவது பொருண்மை தெரிதலாம். பெயர் என்னும் பெயரே அவ்வாறு பெயரை பெயரொடு என்றாற் போல உருபேற்றலைக் குறிப்பது சொன்மைதெரிதல். ஆதலின் ‘ஈறு பெயர்க்கு ஆகும்’ என்ற தொடரில் சொல்லை- யும் பொருளையும் ‘பெயர்’ உணர்த்திற்று. பெயர் என்னும் பெயர் அறியப்படுதற்கண் ‘சொன்மை தெரிதலாம்; ஏனைய பெயர்கள் அறியப்படுதற்கண் பொருண்மை தெரிதலாம். (தொ. சொ. 156 சேனா. உரை) ‘ஈறுபெயர்க் காகும் இயற்கைய’ என்பது பெயர்ச்சொல்லை உணர்த்தலின் சொன்மைதெரிதலும், உருபு ஏற்றுழிச் செயப்படுபொருள் முதலிய பொருள்களை உணர்த்தலின் பொருண்மை தெரிதலும் உடன்நின்றன. (தொ. சொ. 158 நச். உரை) நிலம்என்பது பொருளின்தன்மை ஆராய்வார்க்கு மண்ணினான் இயன்றதொரு பூதம் என்று அறியப்படும் நிலைமைக்கண் பொருண்மைதெரிதலாம்; சொல்லின் தன்மை ஆராய்வார்க்குப் பெயர்ச்சொல் ஆயிற்று. அதனால் சொல்லின் நிலைமை இருபகுதியது ஆகும். (தொ. சொ. 151 தெய். உரை) ஞ ஞாபக ஏது - ஏது என்பது மூன்றாம்வேற்றுமையானும் ஐந்தாம் வேற்றுமை யானும் உணர்த்தப்படும் காரணம். இக்காரணம் அறிதல் கருவியாய் அமையின் ஞாபகஏதுவாம். எ-டு : முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது. பிறந்த பொருள் எதுவும் அழியும் என்று அறியும் காரணத்தான் ஒலி நிலையாது என்றமையின், இஃது அறிதற் காரணமாகிய ஞாபகஏது. (தொ.சொ. 75 நச். உரை) முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது - ஈண்டுப் ‘பிறத்த லான்’ என்பது ஞாபக ஏது. பிறந்த பொருள் எதுவும் நிலை பெறாது என்பதனை அறிவான் அறிதலின் இது ஞாபக ஏது வாயிற்று. (இ. கொ. 34) ஞாபகக் கருவி - உணர்வினான் உணர்ந்தான்; புகையினான் எரியுள்ளமை உணர்ந்தான் என்னுமிடத்து, உணர்தற்கு அறிவு கருவியாக அமைதலின் இஃது அறிதற்கருவியாகிய ஞாபகக்கருவியாம். (தொ. சொ. 74 நச். உரை) ஞாபகம் - ஞாபகமாவது அறிவிப்பது. ஞாபகக்கருவி, ஞாபகஏது - முதலாயினவும் அன்ன. முன்னர் அறிவியாது பின்னர் இன்றியமையாமை வந்துற்றபோது அறிவிப்பது ஞாபகம். னஃகான் ஒற்று, ளஃகான் ஒற்று - எனப் பொதுவாகக் கூறிப் பின் அவற்றை ‘ஈற்று நின்று இசைக்கும் எழுத்து’ என்று கூறுவது ஞாபகம். (தொ.சொ. 10 நச். உரை) ஞாபக முதற்கருவியும் ஞாபகத் துணைக்கருவியும் - அறிவால் ஆக்கிய, ஆகிய காட்சி எனின், ஆல்உருபு பெயர்ப் பொருளை ஞாபகமுதற்கருவியாக வேற்றுமை செய்தது. கண்ணால் ஆக்கிய, ஆகிய காட்சி எனின், ஆல் உருபு பெயர்ப் பொருளை ஞாபகத் துணைக்கருவியாக வேற்றுமை செய்தது. காட்சி - உணர்வு. (நன். 297 இராமா.) ‘காரக முதற்கருவி, காரகத் துணைக்கருவி’ முன்னர்க் காண்க. த தகுதி - இப்பொருளை இச்சொல்லான் சொல்லுதல் தகுதியன்று, இன்ன சொல்லான் சொல்லுதலே தகுதி என்று கொள்ளப் படும் மங்கலமரபு போல்வன. எ-டு : செத்தாரைத் துஞ்சினார் என்றலும், சுடுகாட்டை நன்காடு என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும் போல்வன. (தொ.சொ. 17 சேனா. உரை) தகுதி அவாய்நிலை அண்மைநிலைகள் - சொற்கள் தொகையாகவோ தொகாநிலையாகவோ தொடருங்கால், நிலைமொழியும் வருமொழியும் பெறும் பொருத்தம் தகுதியாகிய ‘யோக்கியதை’ எனப்படும். இதனைத் தொல்காப்பியனார் ‘நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும்’ (எ. 107 நச்.) என்பர். எ-டு : மழையீரம், கோடைக்காய்ச்சல், நீரால் நனை, தீயால் எரி. ஒரு சொல் தன்பொருள் முடிய வேறொரு சொல்லை அவாவி நிற்றல் அவாய்நிலையாகிய ஆகாங்கிசை (ஆகாங்iக்ஷ) எனப்படும். எ-டு : ‘உயர்திணை என்மனார்.........’ என்மனார் என்னும் வினை ‘புலவர்’ என்ற தோன்றா எழுவாயை அவாவி நின்றது. முடிக்கப்படும் சொல்லும் முடிக்கும் சொல்லும் இடையே பொருளை மாற்றுதற்குரிய பிறசொற்கள் வாராது இணைந்து வருவது அண்மை நிலையாகிய ஆசத்தி - சந்நிதி - எனப்படும். எ-டு : சாத்தன் உணவை உண்டான் - இதன்கண், உணவை என்னும் சொல் தன்னை முடிக்கும் சொல்லான உண்டான் என்னும் சொல்லை அண்மையில் கொண்டிருத்தல் காண்க. (பி.வி. 19) தகுதி என்னும் தொடர்நிலை - தீச்சுடும் தன்மைத்து, நீர் குளிரும் தன்மைத்து - என்றாற் போல்வன சொற்கள் தகுதியால் தொடர்ந்து நின்றன. தகுதியால் தொடர்தலாவது, தக்க குணத்தினாலே தொடர்ந்து நிற்பது. (சூடும் குளிர்ச்சியும் முறையே தீயும் நீரும் ஆகிய இவற்றது குணப் பண்புகள்) (நன். 260 இராமா.) தகுதி தழீஇ ஒழுகும் பகுதிச்சொல் - தகுதி பற்றி வழங்கப்படும் இலக்கணத்தின் பக்கச் சொற்கள் கடியப்படா. தகுதி என்பது மூவகைப்படும். மங்கல மரபினாற் கூறுதலும், இடக்கர் அடக்கிக் கூறுதலும், குழுவின் வந்த குறிநிலை வழக்கும் என்பன அவை. எ-டு : செத்தாரைத் துஞ்சினார் என்றலும், சுடுகாட்டை நன்காடு என்றலும் மங்கல மரபு. கண்கழீஇ வருதும், கை குறியராய் இருந்தார், பொறை உயிர்த்தார், நீர் அல் ஈரம் - என்னுமிவை இடக்கரடக்கு. பொற் கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்றலும் வண்ணக்கர் காணத்தை ‘நீலம்’ என்றலும். யானைப் பாகர் ஆடையைக் காரை என்றலும் குழுவின் வந்த குறிநிலை வழக்கு. (தொ. சொ. 17 இள. உரை) தகுதி என்பது அப்பொருட்குரிய சொல்லால் சொல்லுதல் நீர்மையன்று என்று அது களைந்து தக்கதொரு வாய்பாட் டால் கூறுதல். அது செத்தாரைத் துஞ்சினார் என்றலும், சுடுகாட்டை நன்காடு என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும், கெட்டதனைப் பெருகிற்று என்றலும் என இத்தொடக் கத்தன. குழூஉக்குறி சான்றோர் வழக்கிலோ செய்யுளிலோ இல்லை. இடக்கரடக்கும் பின் எச்சவியலில் வழுவமைக்கப்படும். ஆதலின் மங்கலம் ஒன்றே தகுதி வழக்கின்பாற்படும். (தொ. சொ. 17 சேனா., நச். உரை) தகுதி என்பது பொருள் பற்றி வழுவமைத்துக் கொள்ளப் பட்டது. தகுதியாவது இதற்கு இது தகுமோ என்று பண்பினா லாவது தொழிலினாலாவது உறழ நிற்பது. எ-டு : இந்நங்கை கண் நல்லவோ, கயல் நல்லவோ? இம்முகிலோ, இவன்கையோ கொடுக்கவல்லது? இவை முறையே பண்பும் தொழிலும் பற்றிய தகுதி வினா. (தொ. சொ. 17 தெய். உரை) தகுதி முதலிய மூன்று - தொடர்மொழிகளாகச் சொற்கள் புணருங்கால், பொருட் பேறு தடைபடாமல் நிகழ மூவகையாக அவை புணர்தல் வேண்டும். அவை தகுதி - அவாய் நிலை - அண்மைநிலை - என்பன. அவை முறையே நிகழுமாறு: தகுதி : சோற்றை உண்டான் என்புழி, சோறு உண்ணப்படுவது என்னும் பொருளுடன், தன் பொருள் முடிதற்கேற்ற வினைக்குச் செயப்படுபொருளாய் வருதல் தகுதி. இது வடமொழியில் யோக்கியதை என்று கூறப்படும். (பி. வி. 19) அவாய்நிலை : ஒருசொல் தன்பொருள் நிரம்புதற்கு வேறொரு சொல்லையோ சொற்களையோ அவாவி நிற்பது. சோற்றை உண்டான் என்புழி, சோறு என்னும் அத்தனிச் சொல் தனக்குரிய ஐயுருபை அவாவுதலன்றி ஒரு வினைச் சொல்லையும் அவாவுதல். இது வடமொழியில் ஆகாங்கிசை எனப்படும். (பி. வி. 19). அண்மைநிலை : ‘சோறு கடல் முழங்கிற்று உண்டான்’ என இடையில் வேறு சொற்கள் பொருந்துதற்கு இடம் கொடாமல், சோறு உண்டான் எனத் தம்முள் அணுகிநிற்றல். இது வட மொழியில் ஆசத்தி - சந்நிதி - எனப்படும். (பி.வி. 19) (இ. கொ. 105) தகுதியும் வழக்கும் ஆவன - தகுதி என்பது மூவகைப்படும். மங்கலமரபினால் கூறுதலும், இடக்கரடக்கிக் கூறுதலும், குழுவின் வந்த குறிநிலை வழக்கும் என்பன அவை. செத்தாரைத் துஞ்சினார் என்றலும், சுடுகாட்டை நன்காடு என்றலும் மங்கலமரபினால் கூறுதல். கண் கழீஇ வருதும், கை குறியராய் இருந்தார், பொறை யுயிர்த்தார் - முதலியன இடக்கரடக்கிக் கூறுதல். பொற்கொல் லர் பொன்னைப் ‘பறி’ என்றலும், வண்ணக்கர் காணத்தை ‘நீலம்’ என்றலும் குழுவின் வந்த குறிநிலை வழக்காம். வழக்காறு இருவகைப்படும், இலக்கணவழக்கும் இலக்கணத் தொடு பொருந்திய மரூஉவழக்கும் என. இல்முன் என்பதனை முன்றில் என்று தலைதடுமாறச் சொல்லுதல் இலக்கணத் தொடு பொருந்திய மரூஉவழக்கு. இனி, சோழனாடு என்பதனைச் சோணாடு என்பது மரூஉவழக்கு. வழக்காறு இத்துணை என்பதில்லை. சிதைந்தும் சிதையாதும் நடப்பன எல்லாம் அவை என்றலும் ஒன்று. (தொ. சொ. 17 இள. உரை) மங்கலம் இடக்கரடக்கு குழூஉக்குறி - எனத் தகுதி மூன்று கூறுபடும். வழக்கு இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கு, மரூஉவழக்கு - என இருவகைப்படும். எ-டு : செத்தாரைத் துஞ்சினார் என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும் மங்கலமரபு. கண் கழீஇ வருதும், கால்மேல் நீர்பெய்து வருதும், கை குறியராயிருந்தார், பொறை யுயிர்த்தார், ‘கருமுக மந்தி, செம்பின் ஏற்றை’ - என்பன இடக்கர் அடக்கிக் கூறல். ‘பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்ற லும், வண்ணக்கர் காணத்தை ‘நீலம்’ என்றலும், யானைப்பாகர் ஆடையைக் ‘காரை’ என்றலும் குழுவின் வந்த குறிநிலை வழக்கு. முன்றில், மீகண் - என்பன இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ. அருமருந்துஅன்னானை ‘அருமருந்தன்’ என்றலும், நட்டு வியந்தானை ‘நட்டுயந்தான்’ என்றலும், பொதுவில் என்பதனைப் ‘பொதியில்’ என்றலும், மலையமான் நாட்டை ‘மலாடு’ என்றலும், சோழன்நாட்டைச் ‘சோணாடு’ என்றலும் - என இவை மரூஉ வழக்கு. இவ்வாறு சொற் சிதையச் செய்வன அன்றிப் படுபொருள் சிதையச் சொல்லுவனவும் மரூஉவழக்கு எனக் கொள்ளப்படும். கரிய மயிரினைச் ‘சிறுவெள்வாய்’ என்றும், களமருள் கரியாரை ‘வெண்களமர்’ என்றும், புலைக்களமருள் செய்யாரைக் ‘கருங்களமர்’ என்றும், நீரினையும் பாலினையும் ஒரோவழிச் சில பல - என்றும், அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப்பு என்றும் கூறுவன போல்வன இலக்கணவாய்பாடு இன்றி மருவிய வாய்பாடாம். தாமே இலக்கணமாகக் கூறுவன இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ. இலக்கணவாய்பாடு உள்வழிச் சொல் சிதையவும் வருவன மரூஉவழக்கு எனப்படும். தகுதி என்பது பொருள்பற்றி அமைந்தது. வழக்காறு வழங்குதல் பற்றி அமைந்தது. (ஆனை ஆடு ஆறு - என்பன புதியன புகுந்த வழக்காறாம்; முறையே யானை யாடு யாறு - என்பன பண்டை வழக்கு.) (தொ. சொ. 17 கல். உரை) தகுதியும் வழக்கும் பற்றிய பகுதிச்சொல் - தகுதியாவது இதற்கு இது தகுமோ எனப் பண்புபற்றியோ தொழில்பற்றியோ மாறுபட்டு வினவுவது. எ-டு : இந்நங்கை கண் நல்லவோ, கயல் நல்லவோ? - பண்பு இம் முகிலோ, இவன் கையோ கொடுக்க வல்லது? - தொழில் இவை வினா. இந்நங்கை கண்கள் கயலின் நல்ல - இது செப்பு. இரண்டும் ஒக்கும் எனினும் செப்பாம். வழக்காவது ஒப்புமையின்றி உலகத்தாரான் பயில வழங்கப் படுவது. எ-டு : கரிதோ வெளிதோ - இருப்பேனோ போவேனோ - காடோ ஊரோ - பகலோ இரவோ - ‘நரகத்துள் உறைதல் நன்றோ தேவராய் வாழ்தல் நன்றோ’ - இவை வினா. (சீவக. 1235) கரிதன்று வெளிது, வெளிதன்று கரிது - இவை செப்பு. (தொ. சொ. 17 தெய். உரை) தகுதி வழக்கு - தகுதி மூன்று வகைப்படும், குழுவின் வந்த குறிநிலை வழக்கும் இடக்கர் அடக்கிக் கூறுதலும் மங்கல மரபினால் கூறுதலும் என. வருமாறு : யானைப்பாகர் ஆடையைக் ‘காரை’ என்றல், வண்ணக்கர் காணத்தை ‘நீலம்’ என்றல், பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்றல் - இவை குழுவின் வந்த குறிநிலை வழக்காம். கால்மேல் நீர்பெய்து வருதும், கைகுறியராய் இருந்தார், பொறையுயிர்த்தார் - என இவை இடக்கரடக்கிக் கூறுதலாம். ஓலையைத் ‘திருமுகம்’ என்றலும், செத்தாரைத் ‘துஞ்சினார்’ என்றலும், விளக்குப் பெருகிற்று என்றலும் மங்கலமரபினால் சொல்லுதலாம். (நேமி. மொழி. 11 உரை) இப்பொருளை அறிதற்கு அமைந்து கிடந்த இச்சொல்லால் கூறுதல் தகுதி அன்று, வேறொரு சொல்லால் கூறுதல் தகுதி என்று கருதிக் கூறும் வழக்குத் தகுதிவழக்காம். இடக்கரடக்கு மங்கலம் குழூஉக்குறி என்பன மூன்றும் இதனுள் அடங்கும். மலத்தைப் ‘பவ்வீ’ என்றலும், இடுகாட்டை ‘நன்காடு’ என்றலும், பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்றலும் முறையே எடுத்துக்காட்டாவன. (நன். 267 சங்.) தங்கிளை, எங்கிளை : பொருள் - தம் + கிளை, எம் + கிளை - என்றே பகுக்க வேண்டுதலின், இவை தம்முடைய உறவு, எம்முடைய உறவு - எனப் பன்மைச் சொற்களேயாம் என்பர் நச்சினார்க்கினியர். தன்கிளை தம்கிளை, என்கிளை எம்கிளை, என்கிளை நம்கிளை, நின்கிளை நும்கிளை என (த் தங்கிளை - எங்கிளை - நங்கிளை - நுங்கிளை - என்பன) ஒருமைக்கும் பன்மைக்கும் பொது என்பர் சேனாவரையர். (தொ. சொ. 410 நச். சேனா. உரை) தஞ்சம் என்னும் இடைச்சொல் - இச்சொல் எளிது என்னும் பொருண்மையுடையது. எ-டு : ‘முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்’ (புற. 73) (அரசு கொடுத்தல் எளிது என்னும் பொருளது) (தொ. சொ. 266 சேனா. உரை) தட என்னும் உரிச்சொல் - தட என்னும் உரிச்சொல் பெருமையாகிய பண்பினையும் வளைவு என்னும் பண்பினையும் உணர்த்தும். எ-டு : ‘வலி துஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்’ (புற. 394) - பெருமை; ‘தடமருப்பு எருமை’ (நற். 137) - வளைவு. (தொ. சொ. 320, 321 சேனா. உரை) தடுமாற்றக் கருத்தா - வினைமுதல் தோன்றும் ஏழ்இடங்களில் ஒன்று. அத்தலைப்புக் காண்க. தடுமாறு உருபுகள் - வேற்றுமையுருபுகள் இடமாறி வருதலுமுண்டு. எ-டு : ‘அவ்வித்து அழுக்காறு......... தவ்வையைக் காட்டி விடும்’ (கு. 167) இக்குறட்பாவில் ஐயும் குவ்வும் ஒவ்வொரு நிலைக்களத்தும் பொருந்தும். ‘உடை யானைத் தவ்வைக்குக் காட்டி விடும்’ ‘உடையா னுக்குத் தவ்வையைக் காட்டி விடும்’ எனக் குவ்வும் ஐயும் தடுமாறி வருமாறு காண்க. (இ. கொ. 61) தடுமாறு தொழில் தரும் தொகை - ஒருசொல்லே ஒருகால் எழுவாயாகவும், ஒருகால் செயப்படு பொருளாகவும் தடுமாறி வருதல். எ-டு : புலி கொல் வீரன் : எழுவாய் (புலியைக் கொன்ற வீரன்); செயப்படு பொருள் (புலியால் கொல்லப்பட்ட வீரன்). பகைவர் வணங்கும் அரசன் ; எழுவாய் (பகைவரால் வணங்கப் படும் அரசன்) ; செயப்படுபொருள் (பகைவரை வணங்கும் அரசன்) (‘தொழும்’ என்ற சொல் புரைபடத் தோன்றுதலின் ‘வணங்கும்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது.) ‘வாளைமீன் உள்ளல் தலைப்படல்’ (திரி. 7) : எழுவாய் (வாளை மீனால் உள்ளல்மீன் தலைப்படல்) ; செயப்படுபொருள் (வாளைமீனை உள்ளல்பறவை தலைப்படல்); (இ.கொ. 94) தடுமாறு தொழிற்பெயர்க்கண் பொருளைத் துணியுமாறு - ‘புலி கொல் யானை’ என்பது தடுமாறு தொழில் தொகை. அது புலியைக் கொன்ற யானை, புலியான் கொல்லப்பட்ட யானை - என இரண்டாவதும் மூன்றாவதும் விரியும். பின்னர் வரும் சொற்களைக் கொண்டே, இவ்விரு பொருள்களுள் எது அவ்விடத்திற்கு ஏற்றது என முடிவு செய்தல் வேண்டும். ‘புலிகொல் யானை ஓடாநின்றது என்றவழிப் புலியைக் கொன்ற யானை எனவும், ‘புலிகொல் யானைக்கோடு வந்தன’ என்றவழிப் புலியால் கொல்லப்பட்ட யானை எனவும் இடம் நோக்கிப் பொருள்செய்தல் வேண்டும். (தொ. சொ. 95, 96 சேனா. உரை) ‘தத்தம் குறிப்பின் எச்சம் செப்பும்’ எச்சங்கள் - தம்மைக் கூறுவோர்தம் குறிப்புக்களானே தம்முடைய எஞ்சு பொருளைத் தாமே கூறி நிற்கும் எச்சங்கள் இசையெச்சமும் குறிப்பெச்சமும் என்பர் நச்சினார்க்கினியர். சொல்லெச்சமும் இசையெச்சமும் குறிப்பெச்சமும் என்பர் சேனாவரையர். (தொ. சொ. 440) ‘தத்தம்’ குறிப்பின் பொருள் செய்குந - இடைச்சொல் வகை ஏழனுள் இவ்வகையும் ஒன்று. இவ் வகையைச் சேர்ந்த இடைச்சொற்களே பெரும்பான்மை. இவை இடம் நோக்கிப் பொருள் செய்குநவாம். மன் தில் கொன் உம் ஓ ஏ என என்று மற்று எற்று மற்றையது மன்ற தஞ்சம் கொல் எல் மா அம்ம நன்றே அன்றே அந்தோ அன்னோ எனா என்றா ஓடு - முதலியனவும், தொறு ஐ பொள்ளென பொம்மென கதுமென கொம்மென ஆனம் ஏனம் ஓனம் அங்கு இங்கு உங்கு எங்கு - முதலியனவாக உரையிற் கொண்டனவும் தத்தம் குறிப்பின் பொருள் செய்யும் இடைச்சொற்களாம். (தொ. சொ. இடையியல்) ‘தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணும்’ ஆகுபெயர் - ஆகுபெயர் இருவகைத்து. அவற்றுள் ஒன்று, ஆகுபெயர்கள் தத்தம் பொருள்வயின் நீங்காது நின்று தம் பொருளின் வேறல்லாத பொருளொடு புணர்வன. அவையாவன இயற் பெயர்ப் பொருளொடு பிரிக்க முடியாத தொடர்புடைய பொருளை ஆகுபெயர்ப் பொருளாகக் கொள்வன. அவை முதலிற் கூறும் சினையறி கிளவி, சினையிற் கூறும் முதலறி கிளவி, பண்புகொள் பெயர், இயன்றது மொழிதல் போல்வன. எ-டு : கடுத் தின்றான் - கடுமரம் கடுக்காயைக் குறித்தது. இலை நட்டு வாழும் - இலை இலையையுடைய கொடியை உணர்த்திற்று. இம்மணி நீலம் - நீலம் நிலநிறமுடைய மணியின் பெயராயிற்று. பொன் அணிந்தான் - பொன் பொன்னலாகிய அணிகலனை உணர்த்திற்று. (தொ. சொ. 115 சேனா. உரை) தத்தம் மரபின் பொருள் தோன்றுதல் - உரிச்சொற்கள் தத்தம் பொருளை இடம் நோக்கித் தெரிவித் தற்கு வரலாற்று முறையே காண்க, ஒருவனுடைய ஆணை காரண மன்று என்பதாம். (தொ. சொ. 389 நச். உரை) ‘தத்தமுள் மயங்கும் உடனிலை இல’ ஆவன - எச்சவும்மையும் எதிர்மறையும்மையும் தம்முள் கூடித் தொடர்ந்து வரும் தொடர்பு இல்லனவாம். எ-டு : சாத்தனும் வந்தான்; கொற்றனும் வரலும் உரியன் - எனின் இயையாது. (தொ. சொ. 283 சேனா. உரை) இவை தம்முள் மயங்கி உடன்நிற்கும் தன்மை இல. (தொ. சொ. 279 இள. உரை) சாத்தனும் வந்தான் என்றவழிக் கொற்றனும் வரும் என்றாவது வந்தான் என்றாவது கூற வேண்டுமேயன்றி, வாரான் என்று கூறற்க; ஒரு தொழிலே கூறல் வேண்டும். (தொ. சொ. 278 தெய். உரை) எச்சவும்மையும் எதிர்மறையும்மையும் தொடராய் வந்து தம்முள் மயங்கும். அங்ஙனம் மயங்கினவேனும், ஒரே பகுதி யும் காலம் காட்டும் இடைநிலையும் விகுதியும் கொண்ட ஒரு வினையை முடிபாகக் கொள்ளா; ஒரே பகுதியையுடைத்தாய் இறப்பும் எதிர்வும் பற்றிய வேறுவினை கொள்ளும். எ-டு : சாத்தனும் வந்தான்; கொற்றனும் வரினும் வரும், - என இறப்பும் எதிர்வும் பற்றிய வேறுவினை கொண்டு ‘சாத்தனும்’ ‘கொற்றனும்’ என்ற எச்ச வும்மையும் ‘வரினும்’ என்ற எதிர்மறையும்மையும் தம்முள் மயங்கியவாறு. எச்சவும்மையொடு முற்றும்மை தொடர்ந்து வேறுவினை கோடலுமுண்டு. எ-டு : வடுகஅரசரும் வந்தார்; தமிழ்நாட்டு மூவேந்தரும் வரினும் வருவர் - அரசரும் : எச்சவும்மை; மூவேந்த ரும்; முற்றும்மை; வரினும்: எதிர்மறையும்மை. (தொ.சொ. 285 நச். உரை) தத்திதன் - விகுதி ஏற்ற பெயர் - குறிப்புவினைமுற்றுப்பெயர். தனிச்சொல்லோ, தொகைநிலையாய் ஒருசொல் நீர்மைப்பட்டு வந்த தொடரோ, ஈற்றில் விகுதி பெற்று வரும் பகுபதக் குறிப்புப் பெயர் (குறிப்பு வினைமுற்றுப்பெயர்) தத்திதாந்தம் (தத்திதம் என்னும் பிரத்தியத்தை ஈற்றில் கொண்ட சொல்) எனப்படும். பிரத்தியயம் - விகுதி. சேனாவரையர் ‘செய்யுள் மருங்கினும்’ (463) என்ற நூற் பாவுரையில் காட்டும் அருவாள நிலத்தான் - அருவாளன், சோழ நிலத்தான் - சோழியன் என்பனவும் தத்திதாந்தம் என்பர் பி.வி. நூலார். இனித் தொகைநிலைச் சொற்களில், 1. தெலுங்கன் சொல்லுத் தெலுங்கு எனப் பின்மொழி கெட முன்மொழி தத்திதப் பிரத்தியயம் பெற்று வருவதும், கனங்குழையுடையாள் கனங் குழையாள் - என முன்மொழியும் பின்மொழியும் கெடாது பின்மொழி பிரத்தியயம் பெற்று வருவதும் தத்தித வகையாம். தமிழில் காலம் காட்டாது திணை பால் எண் இடங்கட்குரிய விகுதிகளை ஏற்று வரும் பெயர்ப்பகாப்பதங்களை முதனிலை யாகக் கொண்ட பகுபதங்களான குறிப்புவினைச் சொற் களையே தத்திதம் என்று குறிப்பிடுகிறது பிரயோக விவேகம். (பி. வி. 29, 30) 2. வடமொழியில் தொகைநிலைப் பெயர் முழுதும் விகாரப்பட்டு வரும்: ‘பாரஸ்த்ரைணேயன்’ - (பாரத்திரை ணேயன்) பிறன்மனைவிக்குப் பிறந்த மகன். பரஸ்த்ரீ - (பரத்திரி) பிறன்மனைவி; அவள் பெற்ற மகன் பாரத்திரை ணேயன். இப்படிச் சொல் முழுதும் விகாரப்பட்டு விகுதி யேற்றல் தமிழில் இல்லை. (பி. வி. 30) தத்திதன் வகைகள் - தத்திதன் மூன்று வகைப்படும், அவையாவன : 1. சாமானிய தத்திதன் - பொதுவானது; எ-டு : குழையன்; 2. அவ்விய தத்திதன் - இடைச்சொல் ; எ-டு : அவ்வயின்; 3. பாவ தத்திதன் - பண்பும் தொழிலும் ஒத்தல்; எ-டு : தச்சனது தொழில் தச்சு. (பி. வி 30, 34) தம் பொருள் வழாமை இசைத்தல் - இயற்சொல், செந்தமிழ்நிலத்தும் கொடுந்தமிழ்நிலத்தும் கேட்டார்க்குத் தத்தம் பொருளைத் தவறாமல் ஒலிக்கும் சொற்கள். எ-டு : நிலம் நீர் தீ சோறு (தொ. சொ. 398 நச். உரை) தம் மரபின - எப்பொருளை எச்சொல்லினான் எவ்வாறு உயர்ந்தோர் குறிப்பிட்டனர், அப்பொருளை அச்சொல்லான் அவ்வாறு குறிப்பிடுதலே மரபு. இம்மரபினை வழுவுதல் கூடாது. அவ்வழு சான்றோர்வழக்கில் அமையுமாயின் மரபுவழு வமைதியாகக் கொள்ளப்படும். யானைமேய்ப்பானைப் பாகன் என்றும், யாடுமேய்ப்பானை இடையன் என்றும் கூறுதலே மரபு. தகுதி பற்றியும் வழக்குப் பற்றியும் வரும் மரபு வழுவமைதி. (தொ. சொ. 17 நச். உரை) இனச்சுட்டில்லாப் பண்புகொள்பெயர் செய்யுட்கண் வருதல். (தொ. சொ. 18 நச். உரை) சுட்டுப்பெயர் பொருளொடு புணராமல் நிகழ்தல். (தொ. சொ. 37 நச். உரை) திணை விரவி எண்ணப்படும் பெயர் செய்யுட்கண் அஃறிணை முடிபாதல் (தொ. சொ. 51 நச். உரை) செயப்படுபொருளைச் செய்தது போல வழக்கினுள் கிளத்தல். (தொ. சொ. 248 நச். உரை) பெயர்நிலைக் கிளவியின் ஆகுந முதலியன வழங்கியவாறே கொள்ளப்படுவன அன்றி இலக்கணத்தான் யாப்புறவுடையன அல்ல ஆதல். (தொ. சொ. 449 நச். உரை) இவையே பண்டைய மரபு வழுவமைதிகளாம். ‘தம்மின் ஆகிய தொழிற்சொல்’ - எழுவாயிலும் மூன்றாம் வேற்றுமையிலும் கருத்தா உள ஆதலால், தம் தொழிலையே இங்குத் ‘தம்மினாகிய தொழில்’ என்றார் எனின், பேய்பிடித்தது என்னும் எழுவாயிலே பேயாற் பிடித்தது என மூன்றாம் வேற்றுமையுருபு விரிந்து நிற்கக் கூடாமையால், தம் தொழிலும் தம்மினாகிய தொழிலும் எழுவாய்க்கருத்தாவின் தொழிலும் மூன்றாம் வேற்றுமைக் கருத்தாவின் தொழிலும் ஆம் எனத் தம்முள் வேறுபாடு அறியப்படும். (நன். 256 இராமா.) ஆக்கல் போக்கல் - என்றாற் போல்வன எழுவாயிலே வரும் வினைமுதற்குத் தம் தொழில்; ஆக்கப்படுதல் போக்கப்படுதல் என்றாற் போல்வன மூன்றாம்வேற்றுமையிலே வரும் வினைமுதற்குரிய தம்மினாகிய தொழில். (நன். 297 இராமா.) ‘தம்வயின் தொகுதி கடப்பாடு இல’ ஆவன - எண்ணும்மையும், எண்ணுப்பொருளில் வரும் எனவும், தத்தம் இறுதிக்கண் தொகைபெற்று வருதலை முறைமையாக உடையன அல்ல; தொகைபெற்றும் பெறாதும் வரும். எ-டு : ‘உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூ உருபின’ (160) - உம்மை தொகைபெற்று வந்தது. ‘இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி’ (267) - உம்மை தொகை பெறாது வந்தது. ‘நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும்’ - என எண் தொகை பெற்றது. ‘உடலென உயிரென இன்றி யமையா’ - என எண் தொகை பெறாது வந்தது. (தொ. சொ. 287 சேனா. உரை) தமன் நமன் எமன் நுமன் : பொருள்படுமாறு - இவை தம் + அன், நம் + அன், எம் + அன், நும் + அன் - என்றே பகுக்கப்பட வேண்டுதலின், தம்முடையவன் நம்முடையவன் எம்முடையவன் நும்முடையவன் என்றே பொருள்படும். (தொ. சொ. 410 நச். உரை) தன்னுடையவன் தம்முடையவன் - என்றாற்போல இவை ஒருமைக்கும் பன்மைக்கும் பொது என்பர் சேனாவரையர். (சிவன்தமர், மணிவண்ணன் தமர், கல்லாமா வன்னார் தமர் (கு. 814) - என்று சேனாவரையர் கொள்கையை நிலைநாட்டு வர் பி.வி. நூலார். கா. 32) தமிழ் ஒழி பதினேழ் நிலங்கள் - ‘சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளு குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கவுடம் கடாரம் (கடுங்) குசலம்’ என்னுமிவை தமிழ்நிலத்தைச் சூழ்ந்த பதினேழ் நிலங்களாம். அருணம் காம்போசம் ஈழம் பல்லவம் அங்கம் - என்றல் தொடக்கத்தன- வும் இவற்றின் பரியாயமும் இவற்றின் பகுதியுமாய் இவற் றுள்ளே அடங்கும் என்க. (இ. வி. 174 உரை) தமிழ்ச் சிறப்பெழுத்து - முதலும் சார்புமான நாற்பது எழுத்துள்ளும், றகார னகார ழகார எகார ஒகாரமான முதலெழுத்து ஐந்தும், உயிர்மெய் யும் உயிரளபெடையும் ஒழிந்த சார்பெழுத்து எட்டும் ஆகப் பதின்மூன்றும் தமிழுக்கே உரியவை. ஒழிந்த இருபத்தேழ் எழுத்தும் தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவாம். (நன். 149 மயிலை.) தமிழ்ச் சிறப்பெழுத்துக்களாகத் திரிந்த தற்பவச் சொற்கள் - எந்திர ஊர்தி (சீவக. 234) யந்திரம் : ய - எ ஆயிற்று; தெய்வம் தைவம் : ஐ - எ ஆயிற்று; கொங்கணம் கோங்கணம் : ஓ - ஒ ஆயிற்று; அமிழ்து அமிர்தம் : ர் - ழ் ஆயிற்று; சோழ சோள : ள - ழ ஆயிற்று; அற்புதம் அத்புதம் : த் - ற் ஆயிற்று; கற்பகம் கல்பகம் : ல் - ற் ஆயிற்று; ஈசன் ஈச : அகரஈறு னகரம் ஆயிற்று; நாராயணன் நாராயண: அகர ஈறு னகரம் ஆயிற்று (பி.வி. 2) தமிழ்மொழி, பொது - சிறப்பு - பொதுவும் சிறப்பும் - ஆகிய எழுத்துக்களான் இயறல் - பொதுவெழுத்தாவன தமிழுக்கும் ஆரியத்துக்கும் பொது- வான எழுத்துக்கள்; சிறப்பெழுத்தாவன தமிழிற்குச் சிறப்பாக வுள்ள ற ன ழ எ ஒ - என்பன; இப்பொதுவும் சிறப்பும் சேர்ந்து வருவது மூன்றாவது. எ-டு : நிலம் நீர் எனவும், ஒன்று எறி எனவும், பழம் வாழை எனவும் முறையே வருமாறு காண்க. (இ.கொ. 88) தமிழில் எழுவாயும் காரகமும் - வினைத் தொடர்புடையன, வினையை நிறைவேற்றுவன, வினைக்குத் துணையாவன காரகங்கள் எனப்படும். பெயர்ச்சொற்கள் வேற்றுமைகளை ஏற்றுக் காரகங்கள் ஆகும். அவை ஆறு அவையாவன : எழுவாயாகும் கருத்தா - முதல்வேற்றுமை; செயப்படுபொருள் - கருமம் - இரண்டாம்வேற்றுமை; உருபு : ஐ; கருவி - காரணம் - கரணம் - மூன்றாம்வேற்றுமை; உருபு; ஆன், ஆல்; கொள்வோன் - சம்பிரதானம் - நான்காம்வேற்றுமை; உருபு : கு எல்லை முதலியன - அவதி - ஐந்தாம்வேற்றுமை; உருபு : இன் இடம் - அதிகரணம் - ஏழாம்வேற்றுமை; உருபு : இல், கண். ஆறாம்வேற்றுமை வினையொடு நேரே தொடர்பு கொள் ளாமையான் அது காரகங்களுள் சேர்க்கப்பட்டிலது. காரகங்கள் ஆறும் தோன்றப் பெயர்ச்சொற்கள் ரூபபேதம் (வடிவுவேற்றுமை) பெறும். வேற்றுமை செய்வன ஐ முதலிய உருபுகள். தமிழில் கருத்தா என்னும் காரகமாகும் எழுவாய்க்கு வடிவுவேற்றுமை காட்டும் உருபில்லை. தொல்காப்பியனார் கூறும் தொழில்முதனிலை என்பதனைச் சேனாவரையர் காரகம் என்பர் (சொ. 112). காரகங்களுக்கு எடுத்துக்காட்டு வருமாறு : ‘இந்திரன் தாமரையைக் கரத்தான் கொய்து இறைவற்குத் தந்து குற்றத்தின் நீங்கி விண்மேல் இருந்தான்’ என்பது (பி.வி. 8 - 10) தமிழில் ஒடுச்சொல் இயல்பு - மூன்றாவதன் ஒடுஉருபு ஏற்ற பெயரொடு பிறிதொரு பெயர் வர, இரண்டும் ஒரேவினையைக்கொண்டு முடியும் நிலையில், உயர்ந்த பொருளோடு ஒடுஉருபை இணைத்துக் கூறுதல் தமிழ்மரபு; இழிந்த பொருளோடு அதனை இணைத்துக் கூறல் வடமொழி மரபு. எ-டு : ஆசிரியனொடு மாணாக்கர் வந்தார் - தமிழ் மரபு (தொ. சொ. 91 சேனா. உரை) அமைச்சரோடு இருந்தான் அரசன் - வடமொழி மரபு (தொ. சொ. 88 தெய். உரை) (ஒடு, உயிர் வருவழி, ‘ஓடு’ எனத் திரியும்) தமிழில் கொண்ட வடமொழிச்சொற்களும் கருத்துக்களும் - இலக்கணம் இலக்கியம் ஏது நிமித்தம் சாத்திரம் சூத்திரம் தந்திரஉத்தி பகுதி விகுதி பதம் பதார்த்தம் ஆதி அந்தம் அகாரம் மகாரம் உதாரணம் மாத்திரை உவமை உருவகம் விகற்பம் சந்தி விதி அலங்காரம் காலம் இலேசம் காரகம் ஞாபகம் விசேடணம் விசேடியம் விகாரம் அதிகாரம் குணம் குணி - போன்ற பல சொற்கள் தமிழிலக்கண இலக்கிய நூல்களில் கொள்ளப்பட்டுள்ளன. பிறிதின்இயைபுஇன்மை நீக்குதல், பிறிதின்இயைபு நீக்குதல் - என்னும் தொடர்களும் முறையே வடமொழியில் அயோக வியவச்சேதம், அந்நிய யோக வியவச்சேதம் - என்பவற்றை மொழிபெயர்த்துக்கொண்டவை. (இ. கொ. 7) தமிழில் சொல் பற்றிய பால் வருமாறு - சொல் பற்றிய லிங்கம் தமிழில் இல்லை எனினும், ஒரோவழி அதுவும் கொள்ளப்படுகிறது என்பர் பி.வி. நூலார். தன்னைத் தானே சொல் விசேடித்து நிற்பதாகிய - தனக்குத் தானே அடைமொழியாகும் - இடம் அன்ன தன்மையுடையது. எ-டு : ‘நாண் என்னும் நல்லாள்’ கு. 924 - நாண் என்னும் பொருளுடைய வடமொழிச்சொல் ‘லஜ்ஜா’ என்பது பெண்பால் - சொல் பற்றிய பால். ‘திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல்லோ’ சிலப். 4 : 4 ‘இன்னிள வேனில் வந்தன னாக’ சிலப். 8 : 7 எனப் பெயராகவும் வினையாகவும் திங்களையும் வேனிலையும் சந்திரன் - வசந்தன் - என்ற வடமொழிச் சொற்களோடு ஒப்ப ஆண்பாலாக்கிக் கூறியிருப்ப தும் சொல் பற்றிய பால். ‘சொல் மா மகள்’ (மூவருலா), காஞ்சிப் புகழ் மகள், ‘சீர்த்தித் தையல் ‘(மூவருலா) என்பனவும் அது. ‘வருந்தி ஈன்றாள் மறந்தொழிந்தாள் வளர்த்தாள் சொற்கேட்டு இற்கடிந்தாள்’ (சீவக. 1661) என்புழிக் குயில் காக்கை எனும் பறவைகளின் செயலைப் பெண்பால் வினைச் சொற்களால் அழகுறக் கூறியுள்ளமையும் அது. தமிழிலும் விசேடணம் விசேடியத்தின் பாலைப் பெறும் என்ற வடமொழிமரபிற்கு ஏற்பப் பண்புத்தொகை விரிக்கப் படும். கருஞ்சாத்தன், கருஞ்சாத்தி என்பனவற்றைக் கரியன் சாத்தன் - கரியள் சாத்தி - என விரிப்பதே தொல் காப்பிய விதி. ‘கரிய’ எனப் பொதுப்பாற்பட விரித்தலுமாம். பிற பால் எண் இடங்களும் இவ்வாறே விரித்துக்கொள்க. வாமனன் - சினேந்திரன் - கொள்கைப்படி நன்னூலார் கருமை ஆகிய சாத்தன் என விதி கூறுவார். கரியன் சாத்தன் என விரிப்பின் பயனிலையும் எழுவாயுமாம். (பி.வி. 49) தமிழில் வடமொழி வழங்கும் முறைகள் - 1. பொதுவெழுத்தால் வழங்குவன : மணி போல்வன 2. சிறப்பெழுத்தால் வழங்குவன : சுகி போல்வன (‘நதி’ என்ற பாடம் பொருத்தமின்று) 3. பொதுவும் சிறப்புமான எழுத்தால் வழங்குவன : ஆதி போல்வன. 4. மொழிபெயர்த்து வழங்குவன : பிறிதின்இயைபு நீக்கம், பிறிதின்இயைபின்மை நீக்கம் போல்வன. (அந்நிய யோக வியவச் சேதம், அயோக வியவச்சேதம் - என்பனவற்றின் மொழி பெயர்ப்பு) 5. பொது வெழுத்துள்ளும் பொதுவாய்த் திரிந்தன : மாலை, நாரி (மாலா, நாரீ) 6. தமிழ்ச் சிறப்பெழுத்து ஐந்தானும் திரிந்தன: அ) அற்புதம் விகற்பம் (அத்புதம், விகல்பம்) - ற; ஆ) சிவன் நாராயணன் (சிவ: நாராயண:) - ன; இ) தமிழ் அமிழ்தம் (திரமிடம், அம்ருதம்) - ழ; ஈ) தெய்வம் எந்திரம் (தைவம், யந்த்ர) - எ; உ) கொங்கணம் (கோங்கணம்) - ஒ; 7. முதல் இடை கடை களில் தோன்றல் திரிதல் கெடுதல் விகாரத்தால் அமைந்தவை: உலகம் - லோக : மொழிமுதற்கண் தோன்றல்; தத்துவம் - தத்வம் மொழிஇடைக்கண் தோன்றல்; வாக்கு - வாக் மொழிக்கடைக்கண் தோன்றல்; இடபம் - ருஷபம் மொழிமுதற்கண் திரிதல்; விடம் - விஷம் மொழிஇடைக்கண் திரிதல்; இராமன் - ராம : மொழிக்கடைக்கண் திரிதல்; பரிசம் - ஸ்பரிசம் மொழிமுதற்கண் கெடுதல்; முத்தி - முக் (த்) தி மொழிஇடைக்கண் கெடுதல்; தநு - தநுஸ் மொழிக்கடைக்கண் கெடுதல்; ஆக்கினை - ஆணை, விஞ்ஞானம் - விண்ணானம், விருத்தம் - வட்டம், நிருத்தம் - நட்டம், திடம் - திட்டம், விபு - விம்மு - போல இங்ஙனம் பரந்துவருவன எல்லாம் இவ்விதியான் அடக்கிக் கொள்க. (இ.கொ. 87) தமிழில் வழங்கும் சொற்கள் : அறுவகையும் எண்வகையும் - இயற்சொல் திரிசொல் - என்னும் கூறுபாட்டான் வருவன வாகிய பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் எனத் தமிழில் வழங்கும் சொற்கள் இரண்டாம் ; இடைச்சொல்லும் உரிச் சொல்லும் என்னும் இவ்விரண்டும் கூட அவை நான்குமாம்; திசைச்சொல்லும் வடசொல்லும் கூடியவழி ஆறாம். பெயரியற்சொல் பெயர்த்திரிசொல் வினையியற்சொல் வினைத்திரிசொல் இடையியற்சொல் இடைத்திரிசொல் உரியியற்சொல் உரித்திரிசொல் என எண் வகைத்தாம், தமிழ் நாட்டிற்குரிய சொல். (நன். 269 மயிலை.) தமிழில் வியங்கோள் முற்றாய் வருவன - லிங் லோட் - என்பன வடமொழியில் வியங்கோளாகிய விதி - வாழ்த்து - சபித்தல் - என்ற பொருளில் வருவன. இனித் தமிழில் வரும் வியங்கோள்களாகப் பிரயோக விவேகம் காட்டுவன : இவை உயிரீறும் ஒற்றீறுமாக வரும் தொழிற்பெயர் போல, உ - அல் - து - போன்ற விகுதிகள் பெற்றும் வரும். வாழியர், வாழிய, வாழி, வாழ்க - ஆசீர்வாதம் என்னும் வாழ்த்துப் பொருளில் வந்தன - வினைமுற்றுக்கள். ‘பரந்து கெடுக உலகியற்றியான்’ கு. 1062 ‘பொற்பாவாய், நீறாய் நிலத்து விளியரோ’ நாலடி. 266 - இவை சாபத்தின்கண் வந்தன. ‘தேமலர் அங்கண் திருவே புகுதக’ சீவக. 2121 - ‘எந்தை வருக எம்மான் வருக’ நேமி. சொ. 13 மேற். இவை வேண்டிக் கோடலாகிய பிரார்த்தனைக்கண் வந்தன - வினை முற்றுக்கள். ‘கங்கையான் நீள்கழலான் காப்பு’ திவ்.பிர. 2155 ‘குறித் தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி’ சொ. .55 இவை காக்க, கிளக்க - என விதிப்பொருளில் வந்தன - தொழிற்பெயர். ‘மறப்பது அறிவில் என் கூற்றுக்களே’ கோவை. 87 இது மறக்க என விதிப் பொருட்டாய் வந்தது - தொழிற்பெயர். ‘நலத்தின்கண் நாரின்மை ...... ஐயப்படல்’ கு. 958 இஃது ஐயப்படுக என விதிப்பொருளில் வந்த அல்ஈற்றுத் தொழிற்பெயர். ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்’ சொ. 19. இது கிளக்க என விதிப்பொருட்டாய் வந்த தொழிற்பெயர். (பி. வி. 41) தமிழில் வேற்றுமை ஆறு ஏழு என்ற கருத்து - வடமொழியுள் வேற்றுமை எட்டு என்றும், தமிழில் ஏழ் ஆறு வேற்றுமைகளே என்ற கருத்துக்களும் உள என்றும் இ. கொத்துக் கூறுகிறது. ‘எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே’ ஆதலின், அதனை விடுத்துப் பெயர்ப்பொருளை வேறுபடுக்கும் ஏனைய ஏழுமே வேற்றுமை என்பாரும், எழுவாயும் விளியும் - பெயரும் பெயரது விகாரமுமே - ஆதலின் அவை தம் முடிக்கும் சொல்லொடு முடியும்வழி அல்வழித்தொடர் ஆகின்றமை யின் அவற்றை விடுத்து மற்றை ஆறுமே வேற்றுமை என்பா ரும் உளர். வடமொழியிலும் வியாழன்மரபு கூறுவதுண்டு என்பது ‘ஏழியன் முறையது......... இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்ற அகத்தியத்தின் நூற்பாவால் அறியக் கிடக் கிறது. புலவன் - வியாழன். (இ. கொ. 13) தமிழின் நியாயம் பற்றி வருவன - தொல்காப்பியம் திருக்குறள் முதலிய நூல்களில் வடமொழி முறைப்படி வந்தன பலவும் உள்ளன என்று அறிதல் வேண்டும் என்பதனை இலக்கணக்கொத்துடையார் குறிப்பிடுகிறார். ‘எழுத்தெனப் படுப, அகரமுதல் னகரஇறுவாய், முப்பஃது என்ப’ (எ. 1) எழுத்தெனப்படுப : முக்காலத்தினும் ஒத்தியல் பொருளை எதிர்காலத்தால் குறிப்பிடுதல் தமிழ்மரபு (சூ. வி.) ‘அன’ எனப் பிரத்தியாகாரம் செய்வது வடமொழிமரபு; அவ்வாறின்றி ‘அகர முதல னகர இறுவாய்’ என விளக்கிக் கூறுவது தமிழ்மரபு. ‘கற்றதனால் ஆய....... எனின்’ (கு. 2) - இச்சொற்றொடர் அமைப்புத் தமிழுக்குரியது. (இ. கொ. 7) தரல் வரல் கொடை செலவு - பற்றிய கருத்து - செல்லும் என்ற சொல்லான் சொல்லப்படுவதனை வரும் என்ற சொல்லானும் சொல்லுப. கொடுக்கும் என்ற சொல்லான் சொல்லப்படுவதனைத் தரும் என்ற சொல்லானும் சொல்லுப. எ-டு : ‘தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது’ (அக. 36) ‘புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு’ (குறுந். 292) (தொ. சொ. 30 இள. உரை) தலைமைப்பொருளும் தலைமை இல் பொருளும் - காரகங்கள் வினைகொண்டு முடியும்போது, தலைமைஇல் பொருள்களைக் காட்டும் பெயர்களும் தலைமையுடைய பொருள்களைக் காட்டும் பெயர்களின் முடிவையே பெறு வனவாம். எ-டு : ‘தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்’ எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க’ (சிலப். 7 : 32) அளி, மான்தேர் - என்பன தலைமை யில்லாத பொருள்கள். இவை ‘தாம்’ என்பதன் முற்றான ‘விட்டார்’ ‘விட்டகல்க’ என்பவற்றைக் கொண்டன. ‘தானும் தன்புரவியும் தோன்றினான்’ என்பதும் அது. ‘திங்களும் சான்றோரும் ஒப்பர்’ (நாலடி. 151) : இதுவும் அது. (பி. வி. 16) தலைமையும் பன்மையும் பெயரிடுதற்கு உதவும் இடம் - எ-டு : பிறரும் வாழ்வாருளரேனும், ‘பார்ப்பனச் சேரி’ என்பது உயர்திணைக்கண் தலைமை பற்றிய வழக்கு. பிறரும் வாழ்வாருளரேனும், ‘எயினர் நாடு’ என்பது உயர் திணைக்கண் பன்மை பற்றிய வழக்கு. பிற புல்லும் மரனும் உளவேனும் ‘கமுகந் தோட்டம்’ என்பது அஃறிணைக்கண் தலைமை பற்றிய வழக்கு; பிற புல்லும் மரனும் உளவேனும் ஒடுவங்காடு காரைக்காடு - என்பன அஃறிணைக்கண் பன்மை பற்றிய வழக்கு. சேரி நாடு தோட்டம் காடு - முதலியன பலபொருளுக்குப் பொதுவான பெயர்கள். இவையே யன்றித் தெரு குற்றி கடகம் - முதலிய சிறப்புப்பெயர்களும் தலைமைபற்றி அரசர் பெருந் தெரு - ஆதீண்டு குற்றி - வயிரக் கடகம் - முதலாகப் பெயர் பெறுதலுமுண்டு. பல குடி சேர்ந்தது சேரி. பல ஊர்கள் சேர்ந்தது நாடு. பல பொருள் தொக்கது தோட்டம். பல மரம் தொக்கது காடு. (தொ. சொ. 49 நச். உரை) தவிர்வழிச் சாரியை ‘அன்’ - எழுவாய் வேற்றுமையாவது பெயர்மாத்திரமாய்த் தோன்றி நிற்கும் நிலை என்ப ஆகலின், அவ்வெழுவாயாய் நின்ற உருபே ஐம்முதலிய ஆறுவேற்றுமைகளின் உருபும் ஏற்கும் என்றவாறு. சூத்திரத்துள் ‘ஆறன் உருபும்’ என வந்த அன்சாரியை தவிர்வழி வந்தமையால் செய்யுள்விகாரமாம். (நன். 293 சிவஞா.) தற்கிழமை வகை - ஆறாம்வேற்றுமை, ஒருபொருள் ஒன்றற்கு உரிமை பாராட்டும் கிழமைப்பொருட்கண் வருவது. அது தன்னின் பிரித்தல் இல்லாத தற்கிழமை, தன்னின் பிரிக்கப்படும் தொடர்புடைய பிறிதின் கிழமை என இருவகைத்து. தற்கிழமையாவது ஒன்றுபல குழீஇய தற்கிழமை (நெல்லது குவியல்), வேறு பல குழீஇய தற்கிழமை (படையது குழாம்), ஒன்றியல் கிழமையாகிய பண்புக்கிழமை (சாத்தனது நிலை), உறுப்பின்கிழமை (புலியது உகிர்), மெய் திரிந்தாய தற்கிழமை (கோட்டது நூறு) - என ஐவகைப்படும். சாத்தனது வினை, சாத்தனது செலவு - என்பனவும் மெய் திரிந்தாய தற்கிழமை. (தொ.சொ. 80, 81, நச். உரை) தற்கிழமை ஐந்து வகைப்படும். அவை வருமாறு : ஒன்று பல குழீஇய தற்கிழமை - எள்ளது குப்பை; வேறு பல குழீஇய தற்கிழமை - படையது குழாம்; ஒன்றியல் தற்கிழமை - நிலத்தது அகலம்; உறுப்பின் தற்கிழமை - யானையது கோடு; மெய் திரிந்தாய தற்கிழமை - எள்ளது சாந்து (நேமி. வேற். 5 உரை) தற்புருட சமாசன் என்னும் வேற்றுமைத்தொகை - பிரதமா தற்புருடன் - முதல்வேற்றுமைத்தொகை. துவதீயா தற்புருடன் - இரண்டாம்வேற்றுமைத்தொகை. திருதீயா தற்புருடன் - மூன்றாம்வேற்றுமைத்தொகை. சதுர்த்தீ தற்புருடன் - நான்காம்வேற்றுமைத்தொகை. பஞ்சமீ தற்புருடன் - ஐந்தாம்வேற்றுமைத்தொகை. சட்டீ தற்புருடன் - ஆறாம்வேற்றுமைத்தொகை. சத்தமீ தற்புருடன் - ஏழாம்வேற்றுமைத்தொகை. நஞ்ஞுத் தற்புருடன் என்பது இன்மை அன்மை எதிர்மறைப் பொருளில் வரும் தொகை. இவ்வாறு தற்புருட சமாசன் எட்டாம். முதல்வேற்றுமைத் தொகை : தமிழில், நுனிநா - கடைக்கண் - அரைக்காசு - முற்பகல் - என்பனவற்றை நாவினது நுனி - கண்ணினது கடை- காசினது அரை - பகலினது முன் - எனப் பின்முன் தொக்க ஆறாம்வேற்றுமைத்தொகை எனக் கொள்வது தமிழ்மரபு. வடமொழியில், அர்த்த பிப்பலி - அரிசித் திப்பலியினது பாதி, பூர்வகாயம் - உடம்பினது முற்பகுதி, பிராத்த ஜீவிகன் - சீவனத்திற்குரிய வழியைப் பெற்றவன், ஆபன்ன ஜீவிகன் - சீவனத்திற்குரிய வழியை இழந்தவன் - போன்றவை உதாரணங் களாம். இவற்றையும் தமிழ்மரபால் கொள்வதும் பொருந்தும். இரண்டாம் வேற்றுமைத் தொகை முதல் ஏழாம்வேற்றுமைத் தொகை வரை வடமொழியிற் போலவே தமிழிலும் உண்டு. இரண்டாம்வேற்றுமைத் தொகை : காந்தாராதீதன் - காட்டைக் கடந்தவன். நிலங்கடந்தான் - நிலத்தைக் கடந்தான். மூன்றாம்வேற்றுமைத் தொகை : நாய்க்கோட்பட்டான் - நாயால் கோட்பட்டான்; திருநீக்கப்பட்டார் (கு.920) - திரு மகளால் நீக்கப்பட்டார்; அடி அளந்தான் - அடியால் அளந் தான்; ஈதல் ..... வாழ்தல் (கு. 221) - ஈதலால் புகழ்பெற வாழ்தல்; இது வடமொழியில் தம்மினாகிய தொழிற்சொல்லி னும் வரும். சங்குலாகண்டன் - கத்திரிகையால் துண்டுபோடும் தொழிலுடை யோன் எனவும் வேறுசில வகையிலும் வரும். நான்காம்வேற்றுமைத் தொகை : மனைப்பலி - மனைக்குப் பூசை; குண்டலப்பொன் - குண்டலத்திற்குப் பொன் (குண்டலத்தின் பொருட்டுப் பொன்) பூதபலி - பூதங்களுக்குப் பலி; யூபதாரு - வேள்விக்கம்பத்திற்கான மரம். ஐந்தாம் வேற்றுமைத் தொகை : கருவூர்க் கீழ்த்திசை - கருவூரின் கீழ்த்திசை; சோரபயம் - கள்ளரின் தோன்றும் அச்சம். ஆறாம்வேற்றுமைத் தொகை : நாநுனி - நாவினது நுனி. ஏழாம்வேற்றுமைத் தொகை : எண்ணெய் - எள்ளின்கண் நெய்; பர்வதசிகரம் - மலையின்கண் உச்சி. (பி. வி 21.) தன் பிற பொது வினைச்சொற்கள் - தன்வினைச்சொற்களும் பிறவினைச்சொற்களும் இவற்றுக்குப் பொதுவாய் நிற்கும் சொற்களும் - என்னும் இம்முத்திறச் சொற்களும் சொல்லானும் பொருளானும் தெரிய நிற்கும். 1. தீர்தல், ஆடின சாத்தன் - இவை சொல்லால் தெரிந்த தன்வினை; 2. தீர்த்தல், ஆட்டின சாத்தன் - இவை சொல்லால் தெரிந்த பிறவினை; 3. நடத்தல், பிரி அமைச்சன், கெடு புத்தி, தேய் கட்டை, மீள் சினம், உரைகல் - அவன் நடத்தல், பிரியும் அமைச்சன், கெடும் புத்தி, தேயும் கட்டை, மீளும் சினம், உரைக்கும் கல் - என இவை ஒருகால் சொல்லால் தன்வினை யாகப் பொருள்பட்டன; அவனை நடத்தல், பிரிக்கும் அமைச்சன், கெடுக்கும் புத்தி, தேய்க்கும் கட்டை, மீட்கும் சினம், உரைப்பிக்கும் கல் - என இவை ஒருகால் பிறவினையாக வும் பொருள்பட்டன. இம்முறையால் இவை தன்வினை பிறவினை என இரண்டற்கும் பொதுவாயின. இனிப் பொருளான் அன்ன ஆவன : 1. விண்ட தாமரை (மலர்ந்த) - பொருளால் தெரிந்த தன் வினை 2. விண்ட பனை (விள்வித்த) - பொருளால் தெரிந்த பிறவினை 3. விண்ட நிலம் (பிளந்த., பிளப்பித்த) - பொருளால், தன் வினை பிறவினைகளுக்கும் பொதுவான வினை. (இ. கொ. 73) தன்மை இருதிணைக்கும் உரித்தாதல் - தன்மை உயர்திணைக்கேயன்றி, அஃறிணைக்கும் உரித்தாமோ எனின், ‘பேய்பூதம் மந்தி கிளிபூவை பேசுதலால், ஆகுமே தன்மை பொது’ என்பதனால் அறிக. (நன். 284 மயிலை.) ‘நுமரெங்கும் தீதின்றி நும்மையான் காப்பேன் அமரெங்கும் நாட்டி அரும்பிணம் தின்பேன் புணரங்கி என்பதென் புல்லிய மெய்ப்பேர் நமரங்காள் பேணுமின் நன்குஎன் றதுவே’ (இ. வி. சூ. 187 உரை) ‘மூன்றைந்தின் மூன்றிட்ட மெய்கொள் கணங்களுள் தோன்றல் பூதம்என் தோற்றம் தெரியல்’ (இ. வி. சூ. 187 உரை) ‘ஈங்கினி என்னை நோக்கி என்செய்தி எனக்கு வாழ்நாள் நீங்கிற்றுச் சிறிது நிற்பின் காண்டியால் நீயும் என்னத் தூங்கித்தான் துளங்கி மந்தி தொழுத்தையேன் செய்தது என்று தாங்குபு தழுவிக் கொண்டு தன்னைத் தான் பழித்த தன்றே.’(சீவக. 2723) ‘பூவையும் கிளியும் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கிக் காவலன் மடந்தை உள்ளம் கற்கொலோ இரும்பு கொல்லோ சாவம்யாம் உருகி ஒன்றும் தவறிலான் அருளு நங்கை பாவை என்று இரத்தும் என்ற பறவைகள் தம்முள் தாமே.’(சீவக. 2510) தன்மை ஒருமை வினைமுற்று - என் ஏன் அல் கு டு து று - என்பன ஈற்றவாய்த் தன்மை ஒருமை வினைமுற்று வரும். இவற்றுள், என் ஏன் - என்னும் இரண்டும் முக்காலத்திற்கும் எதிர்மறைக்கும் பொதுவாக வரும். அல் - எதிர்காலம் பற்றி வரும். குடுதுறு - என்பனவும் எதிர்காலம் பற்றி வரும். என்ஈறு காலவெழுத்துப் பெற்று, உண்டனென் -உண்ணா நின்றனென் - உண்கின்றனென் - உண்பென் - உண்கு வென் - எனவும், உண்டிலென் - உண்டனெனல்லேன் - உண்ணா நின்றிலென் - உண்ணாநின்றனெனல்லேன் - உண்கின்றிலென் - உண்கின்றனெனல்லேன் - உண்ணலென் - எனவும், ஏன் ஈறு காலவெழுத்துப் பெற்று, உண்டனேன் - உண்டேன் - உண்ணாநின்றனேன் - எனவும், உண்டிலேன் - உண்டேனல் லேன் - உண்ணாநின்றிலேன் - உண்ணாநின்றேனல்லேன் - உண்கின்றிலேன் - உண்கின்றேனல்லேன் - உண்ணேன் - எனவும் சாரியை பெற்றும் பெறாதும் முக்காலத்துக்கும் உரியவாய் வந்தன. உண்பேற்கு நோக்குவேற்கு - என்ற வினையாலணையும் பெயர் நிகழ்காலம் குறித்து வருதலின், அவற்றிற்கு அடிப் படையான உண்பேன் நோக்குவேன் - எனப் பகர வகர இடை நிலை பெற்ற ஏன்ஈற்று முற்று நிகழ்காலம் காட்டுதலும் உண்டு எனப் புலனாகிறது. அல்ஈறு பகரமும் வகரமும் பெற்று உண்பல் - வருவல் - என்றாற் போல எதிர்காலத்து வரும்; உண்ணாநிற்பல் - எனச் சிறுபான்மை நிகழ்காலமும் பெறும். ஒழிவல் - தவிர்வல் - என்பன மறைப் பொருளன. கு டு து று என்ற நான்கு ஈறும் பெரும்பான்மை எதிர்காலமும் சிறுபான்மை நிகழ்காலமும் பற்றி வரும்; சிறுபான்மை உகரச் சாரியை பெறும். எ-டு : உண்கு உண்டு வருது சேறு, உரிஞுகு திருமுகு - என இவை உம்ஈறு போல எதிர்காலம் காட்டின. ‘கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும் தொல்லது விளைந்தென நிலவளம் கரப்பினும்’ (புற. 203) என்புழிப் பொழிந்து எனவும் விளைந்து எனவும் இறந்தகாலம் உணர்த்தின. அழுகு என்னும் உடன்பாட்டிற்கு ‘அழாஅற்கு’ என எதிர்மறை வரும். (அழுகு - அழுவேன்) ஓசைவேற்றுமையான் கு று - ஈறுகள் வியங்கோள் முற்றாகவும் நிற்கும். ‘தாங்குமதி வலவ’ (அக. 66) ‘தாங்குநின் அவலம்’ ‘யார்மேல் விளியுமோ கூறு’ (கலி. 88) என்புழித் தாங்கு - கூறு - என்பன வியங்கோள்; இவை தன்மை ஒருமை வினைமுற்றுக்கள் அல்ல. செய்கு என்னும் வினைமுற்று ‘காண்கு வந்திசின்’ (புற. 17) என்றாற் போல வினைகொண்டு முடியும். வினைமுற்றுக்கள் (பெரும்பான்மையும்) பெயர்கொண்டு முடியும். இம்மரபிற்கு மாறாகச் செய்கு என் முற்று வினையைக்கொண்டு முடியினும் அது வினையெச்சமாகாது வினைமுற்றேயாம். செய்கும் என்னும் தன்மைப் பன்மை வினைமுற்றிற்கும் இஃது ஒக்கும். எ-டு : காண்கும் வந்தேம் அன்ஈறு தன்மை ஒருமைக்கண் வருதல் பிற்காலத்தது. (தொ.சொ. 205,206 நச். உரை) தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் கு டு து று என் ஏன் அல் அன் - என்பன. இவற்றுள், என் ஏன் அன் - என்பன மூன்றும் மூன்றுகாலமும் வினைக்குறிப்பும் பற்றி வரும். அல்லன பெரும்பான்மையும் எதிர்காலம் பற்றி வரும். வருமாறு : உண்டனென், உண்ணாநின்றனென், உண்குவென் - என் விகுதி உண்டேன், உண்ணாநின்றேன், உண்பேன் - ஏன் விகுதி உண்டனன், உண்ணாநின்றனன், உண்பன் - அன் விகுதி உண்கு - எதிர்காலம் ; உண்டு - இறந்த காலம்; வந்து - இறந்தகாலம் ; வருது - எதிர்காலம்; சென்று - இறந்தகாலம் ; சேறு - எதிர்காலம்; உண்பல் - அல் - எதிர்காலம் (நன். 331 சங்.) தன்மை குறித்த னளர - என் இறுதி - ஒருவனது கிழமைப்பொருண்மையைக் குறித்துநின்ற ஆண் பால் பெண்பால் பலர்பால் - இவற்றைக் காட்டும் ன ள ர என்னும் ஈற்றுப் பெயர்கள். அவை த ந நு எ - என்னும் உயிர்மெய்யும் உயிரும் முதலாயின. இவை வழங்கியவாறே கொள்ளப்படு மன்றிப் பகுதி விகுதி செய்து பிரிக்கப்படா. வருமாறு : தமன் தமள் தமர், நமன் நமள் நமர், நுமன் நுமள் நுமர், எமன் எமள் எமர். (தொ. சொ. 154 சேனா. உரை) தன்மை சுட்டல் - 1. சொல் முடியும் தன்மையைக் கருதுதல். ஒருவர் என்னும் பெயர் ஒருபொருளையே குறிக்குமாயினும், அச்சொல் கொண்டு முடியும் சொல்லின் தன்மையைக் கருதின் அது பன்மையாகவே இருக்கும். எ-டு : ஒருவர் வந்தார் (தொ. சொ. 194 நச். உரை) 2. பொருள்களின் உண்மைத்தன்மையைக் கருதுதல். ஒருவர்க்குப் பால்ஐயமும் திணைஐயமும் நிகழ்ந்துழி, அங்ஙனம் ஐயுறலேயன்றி, அவர்க்கு அப்பொருளின் உண்மைத் தன்மையைக் கருதுதலுமுண்டு. ஆண்டு, ஒருபொருள் அன்றாம் தன்மையை உணர்த்தும் சொல் ஐயத்துக்கு வேறாய்த் துணிந்து தழீஇக் கொள்ளப்பட்ட பொருளின் கண்ணது. வருமாறு : ஆணோ பெண்ணோ என ஐயம் நிகழ்ந்து ஆண்மகன் என்று துணிந்தவழி, இவன் பெண்டாட்டி அல்லன், ஆண்மகன் - என்று கூறுக. குற்றியோ மகனோ என ஐயம் நிகழ்ந்து மகன் என்று துணிந்த வழி, இவன் குற்றி அல்லன், மகன் - என்று கூறுக. குற்றி என்று துணிந்தவழி, இவ்வுரு மகனன்று, குற்றி - என்று கூறுக. ஒன்றோ பலவோ என ஐயம் நிகழ்ந்து ஒன்று என்று துணிந்த வழி, இப்பெற்றம் பல அன்று, ஒன்று - என்று கூறுக. பெண்டாட்டி என்று துணிந்தவழி, இவள் ஆண்மகன் அல்லள், பெண்டாட்டி - என்று கூறுக. (தொ. சொ. 25 நச். இள. தெய். கல். உரை) துணியப்பட்ட பொருளின் வேறான துணியப்படாத பொரு ளிடத்து அன்மையை ஏற்றி இவ்வுருபு பெண்டாட்டி அல்லள், ஆண்மகன்; இவ்வுருபு குற்றி அன்று. மகன் - என்று கூறும் பொருளையும் கொள்வர் சேனாவரையரும் பழைய உரைகாரரும். (தொ. சொ. 25) தன்மைச்சொல்லும் அஃறிணைச்சொல்லும் விரவுதல் - தன்மை என்பது யான் - என்னும் ஒருமையேயாம். ஆகவே தன்மைப்பன்மை என்பது முன்னிலையையோ படர்க்கையோ இரண்டனையுமோ உளப்படுத்துக் கொள்வதாலேயே அமைவது. ஆசிரியர் தொல்காப்பியனார்க்குத் தன்மை உயர்திணையாகலான் அஃது உயர்திணையையே உளப்படுக் கற்பாலது. ஆயின் தொடர்புடைமை பற்றி உயர்திணை யோடு அஃறிணையும் சேர்ந்து தன்மைப்பன்மைவினை கோடலும் உண்டு. எ-டு : யானும் என் எஃகமும் சாறும் - இதன்கண் வினை முதலும் கருவியுமாம் தொடர்பு உள்ளது. யானும் என்பெற்றமும் சேறும் - இதன்கண் மேய்ப்பானும் மேய்க்கப்படுவதுமாகிய தொடர்பு உள்ளது. (தொ. சொ. 211 நச். உரை) தன்மை திரி பெயர் - ஆண்தன்மையோ பெண்தன்மையோ திரிந்த பொருளாகிய அலி - பேடி - அழிதூ - மகண்மா - முதலியன. பண்பு பற்றி அலி வந்தது - பேடி வந்தது - அழிதூ வந்தது - மகண்மா வந்தது - என்று கூறினும், பண்புகொள்பெயரைச் சுட்டுதலால் இவை ஆகுபெயரானன்றி உயர்திணைப்பொருளைச் சுட்டியவாறு. (தொ. சொ. 56 சேனா. உரை) தன்மைப்பன்மைமுற்று எதிர்கால இடைநிலை கெடுதல் - ‘ஏவல்முற்று இடையெழுத்துக் கெடுதல்’ காண்க. தன்மைப்பன்மை வினை அஃறிணையையும் உளப்படுத்துதல் - தன்மைப்பன்மை வினைமுற்று உயர்திணையின் முன்னிலை -யையும் படர்க்கையையும் உளப்படுத்தலேயன்றி, அஃறிணை யையும் உளப்படுத்தி அவற்றிற்கு முடிக்கும் சொல்லாகும். எ-டு : யானும் என் எஃகமும் சாறும் (சாறும் - சாலுதும் அமைவேம்) (தொ. சொ. 43 சேனா. உரை) தன்மைப்பன்மை வினைதிரிதல் - அம் ஆம் என்பன இரண்டும் தன்னொடு முன்னின்றானை உளப்படுக்கும்; எம் ஏம் என்பன இரண்டும் தன்னொடு படர்க்கையானை உளப்படுக்கும்; உம்மொடு வரூஉம் க ட த ற - க்கள் தன்னொடு முன்னின்றானையும் படர்க்கையானை யும் உளப்படுக்கும். இவ்வுளப்படுத்ததற்குத் திரியும் திரிபு அவை யுடையன; வழூஉத்திரிபு அன்று. இவை பன்மைத் தன்மை வினைமுற்றுச்சொற்களது இயல்பாம். (தொ. சொ. 206 இள. உரை) தன்மைப்பன்மை வினைமுற்று - தன்மைப்பன்மை வினைமுற்று விகுதிகள் அம் ஆம் எம் ஏம் ஓம் கும் டும் தும் றும் - என்பன. இவற்றுள், அம் ஆம் - என்பன முன்னின்றாரையும், எம் ஏம் ஓம் - என்பன படர்க்கையாரையும், கும் டும் தும் றும் - என்பன முன்னிலை படர்க்கை எனும் இருபாலாரையும் உளப்படுக்கும். வருமாறு : யாம் உண்டனம் - உண்டாம் - உண்டனெம்- உண்டேம் - உண்டோம் - உண்கும் - உண்டும் - வருதும் - சேறும் இவை தனித்தன்மைப்பன்மை வினைமுற்றாம். யானும் நீயும் உண்டனம் - உண்டாம்; யானும் அவனும் உண்டனெம் - உண்டேம் - உண்டோம்; யானும் நீயும் அவனும் உண்கும் - உண்டும் - வருதும் - சேறும் இவை உளப்பாட்டுத்தன்மைப்பன்மை வினைமுற்றாம். முன்னர் ஐந்தனையும் ஏனைய நிகழ்காலம் எதிர்காலங்களோடு ஒட்டுக. இம்முறை அருகி மாறி வருதலுமுண்டு. இவ்வினைமுற்றுக்களுள் முன்னர் ஐந்தும் முக்காலமும் வினைக்குறிப்பும் பற்றி வரும். அல்லன காலம்காட்டலின் வினைக்குறிப்பாக வாரா. (தாரினம் தாரினாம் முதலாக வினைக்குறிப்பு முற்று வருதல் காண்க.) ஓம்விகுதி புதியன புகுதல். (நன். 332 சங்.) தன்மைப்பன்மைவினைமுற்று விகுதிகள் - அம் ஆம் எம் ஏம் கும் டும் தும் றும் - என்னும் எட்டும் தன்மைப் பன்மைவினைமுற்று விகுதிகளாம். தன்மைக்கு ஒருமையே யன்றித் தனிப்பன்மை இன்று எனவே, முன்னிலை யையோ படர்க்கையையோ இரண்டனையுமோ உளப்படுத் தியே தன்மைப்பன்மை யுண்டாம். ஓம்ஈறு ஏம்ஈற்றின் சிதைவாய்ப் பிற்காலத்துப் பயின்று வந்தது. அம் ஆம் - என்பன முன்னிலையாரையும், எம் ஏம் - என்பன படர்க்கையாரையும், கும் டும் தும் றும் - என்பன இருபாலா ரையும் உளப்படுக்கும். அம் ஆம் எம் ஏம் - என்பன முக்காலமும் பற்றி வரும். கும் டும் தும் றும் என்பன எதிர்காலம் பற்றியே வரும். இறந்த காலம் பற்றி வருங்கால், க ட த ற - என்னும் நான்கு எழுத்தின் முன் ‘அம்’ அன்சாரியை பெற்றும், ‘ஏம்’ அன்சாரியை பெற்றும் பெறாதும் வரும். அம்விகுதி க ட த ற - என்பவற்றின் முன் வருமாறு : எ-டு : யானும் நீயும் நக்கனம் - நக்காம்; உண்டனம் - உண்டாம்; உரைத்தனம் - உரைத்தாம்; தின்றனம் - தின்றாம். இவை நான்கும் உடன்பாடு. யானும் நீயும் நக்கிலம் - நக்கனமல்லம்; உண்டிலம் - உண்டனமல்லம்; உரைத்திலம் - உரைத்தனமல்லம்; தின்றிலம் - தின்றனமல்லம். இவை நான்கும் எதிர்மறை. எம்விகுதி கடதற - என்பவற்றின் முன்வருமாறு : யானும் அவனும் நக்கனெம் - நக்கிலெம் - நக்கனெமல்லெம்; உண்டனெம் - உண்டிலெம் - உண்டனெமல்லெம்; உரைத்த னெம் - உரைத்திலெம் - உரைத்தனெமல்லெம்; தின்றனெம் - தின்றிலெம் - தின்றனெமல்லெம். ஏம் விகுதி க ட த ற - என்பவற்றின்முன் வருமாறு : யானும் அவனும் நக்கனேம் - நக்கேம் - நக்கிலேம் - நக்கே மல்லேம்; உண்டனேம் - உண்டேம் - உண்டிலேம் - உண்டே மல்லேம்; உரைத்தனேம் - உரைத்தேம் - உரைத்திலேம் - உரைத்தேமல்லேம்; தின்றனேம் - தின்றேம் - தின்றிலேம் - தின்றேமல்லேம் - .. .. .. என வரும். அம் ஆம் எம் ஏம் - என்னும் நான்குஈறும் ஏனையெழுத்தின் முன் ஙகாரமும் ழகாரமும் ஒழித்து இன் பெற்று வரும். அவை வருமாறு : அஞ்சினம் - தப்பினம் - உரிஞினம் - எண்ணினம் - பொருநினம் - திருமினம் - பன்னினம் - போயினம் - வாரினம் - சொல்லினம் - மேவினம் - எண்ணினம் - எனவும், அஞ்சினாம் - தப்பினாம் - உரிஞினாம் ....... மேவினாம் - எண்ணினாம் எனவும், அஞ்சி னெம் - தப்பினெம் - உரிஞினெம் ......... மேவினெம் - எண்ணி னெம் -எனவும், அஞ்சினேம் - தப்பினேம் - உரிஞினேம்....... மேவினேம் - எண்ணினேம் - எனவும் வரும். இனி, எதிர்மறைக்கண் அஞ்சிலம் - அஞ்சிலாம் - அஞ்சிலெம் - அஞ்சிலேம் - அஞ்சின மல்லம் - அஞ்சினாமல்லாம் - அஞ்சினெமல்லெம் - அஞ்சினேமல்லேம் என வரும். கலக்கு தெருட்டு அருத்து அரற்று - எனக் க ட த ற ஈறுகள் கலக்கினம் - தெருட்டினம் - அருத்தினம் - அரற்றினம் - என ‘இன்’ பெற்று இறந்தகாலம் காட்டின. அம் ஆம் எம் ஏம் - ஈறுகள் நிகழ்காலம் பற்றி வருங்கால், நில் - நின்று - கிறு - கின்று - என்பவற்றொடு வந்து முற்கூறியவாறு நிற்கும்; நின் கின் - என நிற்கும் என்றுமாம். அவை வருமாறு : உண்ணாநின்றனம் - உண்கின்றனம் - உண்ணாநின்றிலம் - உண்கின்றிலம் - எனவும், உண்ணாநின்றாம் - உண்கின்றாம் - உண்ணாநின்றிலாம் - உண்கின்றிலாம் எனவும், உண்ணாநின்ற னெம் - உண்கின்றனெம் - உண்ணாநின்றிலெம் - உண்கின்றி லெம் எனவும், உண்ணாநின்றேம் - உண்கின்றேம் - உண்ணா நின்றிலேம் - உண்கின்றிலேம் எனவும் வரும். உண்ணாகிடந்தாம் - உண்ணாவிருந்தாம் - எனக் கிட இரு - என்பனவும் நிகழ்காலத்து வரும். உண்கிறேம் எனக் ‘கிறு’ நிகழ்காலம் உணர்த்துதல் சற்றே பிற்பட்ட காலவழக்கு. அம் - ஆம் - எம் - ஏம் - என்பன எதிர்காலம் பற்றி வருங்கால், பகரமும் வகரமும் பெற்று வரும். வகரம் ஏற்புழிக் குகரமும் உகரமும் அடுத்து நிற்கும். வருமாறு : உண்பம் உண்குவம் உரிஞுவம் திருமுவம் உண்ணலம் - எனவும், உண்பாம் உண்குவாம் உண்ணாம் எனவும், உண்பெம் உண்குவெம் உண்ணலெம் - எனவும், உண்பேம் உண்குவேம் உண்ணேம் - எனவும் வரும். இனி, அம்ஈறு வருங்கால், ‘அங்க ணாளனை நகுகம் யாமே’ (அக. 32) ‘பாடுகம் வம்மின் போதுகம்’ (கலி. 104) ‘பாடுகம் வாவாழி தோழி’ (கலி. 41) எனக் ககரம் எதிர்காலமும் உணர்த்தி வரும். கூறுவன் - சொல்லுவன் - போதுவன் - என வரும் வகரமும் எதிர்காலம் உணர்த்தும். கும் டும் தும் றும் - என்பன உண்கும் - உண்டும் - வருதும் - சேறும் - என வரும். யானும் நீயும் உண்கும், யானும் அவனும் நீயும் உண்கும் - என எல்லாவற்றொடும் வரும். இவை எதிர்காலம் உணர்த்துவன. உரிஞுதும் - திருமுதும் என உகரம் பெற்று வரும். ‘யாம் அவணின்றும் வருதும்’ சிறுபாண் 143 எனச் சிறுபான்மை தும் விகுதி நிகழ்காலம் காட்டும். (தொ. சொ. 204 நச். உரை) உடன்பாட்டு வாய்பாடு பற்றி ஓதாமல், உடன்பாடு எதிர்மறை என்னும் இரண்டற்கும் பொதுவான ஈறுபற்றி ஓதினமை யான், அம் ஆம் எம் ஏம் - என்பன உடன்பாடு எதிர்மறை இரண்டற்கும் உரியவாம் என்பது உணரப்படும். தொல்காப்பியனார் கருத்துப்படி, தன்மை உயர்திணை யாயினும் அது பன்மையில் அஃறிணையையும் உளப்படுத்து ‘யானும் என் எஃகமும் சாறும்’ என்றாற் போல வருதலு முண்டு. (தொ. சொ. 211 நச். உரை) செய்கும் என்னும் வாய்பாட்டு முற்று மாத்திரம் ‘காண்கும் வந்தேம்’ என்றாற் போல வினைகொண்டு முடியும். (தொ. சொ. 205 நச். உரை) தன்மை மாத்திரம் தானாய் நிற்கும் பகுபதம் - தன்மையாவது குணமும் தொழிலுமாம் பாவம். வெண்மை வெளுப்பு வெள்ளை, கருமை கறுப்பு, ஆண்மை, பெண்மை, செங்கோன்மை; ஆடுதல் ஆடல் ஆட்டம் - எனத் தன்மை மாத்திரம் தானாய் நின்றன. இவை பகுபதமாயினும் தன்மை மாத்திரமே காட்டி நிற்கும் பதங்களாம். (இ. கொ. 117) (ஆண்மை, பெண்மை, தாளாண்மை, குடிமை, செங்கோன்மை, வள்ளன்மை, காதன்மை, இவறன்மை....... புகழ்மை சமழ்மை - இவையெல்லாம் ஆண் - பெண் - முதலிய நாமத்தின்கண் வந்த பாவதத்திதனாம். (பி.வி. 34) தன்மை முதலிய மூவிடப்பெயர்கள் - தன்மைப் பெயர்கள்: யான் நான் யாம் நாம் - என்பன நான்கு. முன்னிலைப் பெயர்கள் : எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ - என்பன ஐந்து. ஏனைய பெயர்களெல்லாம் படர்க்கையிடத்தன. எல்லாம் என்பது மூவிடத்துக்கும் பொதுவான பெயர். (நன். 285) தன்மை முன்னிலைப்பெயர்கள் பொதுப்பெயர் ஆதல் - சொற்களை உணர்த்தலும் கேட்டலும் இல்லா அஃறிணைக் கண், யான் நான் யாம் நாம் எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ - என்னும் இவ்வொன்பது பெயரும் விரவிப் பொதுப் பெயர் ஆமாறு என்னையெனின், ‘கேட்குந போலவும் கிளக்குந போலவும், இயங்குந போலவும் இயற்றுந போலவும், அஃறிணை மருங்கின் அறையப் படுமே’ (நன். 409) என்பது பொதுவிதி ஆகலானும், பேய் பூதங்கள் இவற்றை உரைத்தலும் கேட்ட லும் உளவாகக் கூறுதலானும், தன்மை முன்னிலை இருகூற்றுப் பெயரும் பொதுப்பெயர் எனப்பட்டன. (நன். 285 சங்.) தன்மை முன்னிலை பால் சுட்டுதல் - தன்மையும் முன்னிலையும் ஒருமைப்பால் பன்மைப்பாலே காட்டுவன. அவை ஆண்பால் என்பதோ, பெண்பால் என்பதோ, ஆண்பன்மை என்பதோ, பெண்பன்மை என்பதோ, இருபாலும் கலந்த பன்மை என்பதோ சொல்லுவான் குறிப் பினானேயே உணரப்படுவனவாம். முன்னிலை உயர்திணை என்பதோ அஃறிணை என்பதோ குறிப்பினானேயே உணரப் படும். (தொ. சொ. 195 நச். உரை) தன்வசக் கருத்தா - கருத்தா தோன்றும் நிலைக்களன் ஏழனுள் ஒன்று. ‘வினைமுதல் தோன்றும் இடங்கள்’ காண்க. வேறு சிலரால் இயற்றப்படுத லின்றித் தானே கருத்தா ஆதல் தன்வசக் கருத்தாவாம். சாத்தன் உண்டான் என்புழி, உண்டலுக்குச் சாத்தன் தன்வசக் கருத்தா. (இ. கொ. 26) தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவானவை - தீர்தல் தீர்த்தல் - என்பன தீர் என்னும் பகுதியடியாகப் பிறப்பன. இவையிரண்டும் விடல் என்னும் உரிச்சொல்லது குறிப்புப் பொருண்மை யுடையன. விடல் என்னும் உரிச் சொல் அடியாகப் பிறக்கும் பெயரும் வினையும் தன்வினை யும் பிறவினையும் பற்றிப் பிறக்கும். விட்டான் - விட்டு - விட்ட - எனக் காண்க. பிளத்தல் அணங்கல் என்றாற்போலத் தன்வினை பிற வினைக்குப் பொதுவாய் வருவன ஒன்றென முடித்தலான் கொள்ளப் படும். (தொ.சொ. 318 நச். உரை) (தன்நெஞ்சம் பிளந்தான், தன்னுள்ளம் அணங்கினாள்; தன் வினை; மரத்தைப் பிளந்தான், தலைவனை அணங்கினாள்; பிறவினை) தன்வினை, பிறவினை : பொதுவினைகள் - தொடர்வினை, தன்வினையும் பிறவினையும் இவ்விரண் டிற்கும் பொதுவாம் வினையும் ஆதல் உடையன. பிரிவர், ஆடுவர் - பிரி, ஆடு : தன்வினை பிரிப்பர், ஆட்டுவர் - பிரி, ஆட்டு : பிறவினை ‘தேற்றா ஒழுக்கம்’ (நாலடி. 75) ‘நட்பாடல் தேற்றாதவர்’ (கு. 187) என்றும், அவளைத் தேற்றிப் பிரிந்தான், அவனைத் தேற்றிக் கொடுத்தான் - என்றும் இவை சொல் ஒன்றே தன்வினையும் பிறவினையும் ஆயின. (இவை முறையே தேறாத, அறியாத வர், தேறுதல் செய்வித்து, தெளிவித்து - எனப் பொருள் பட்டன.) ‘தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றி’ (பாயி.) (தோற்று வித்து) : பிறவினை; ‘பொருள்முத லாறினும் தோற்றி’ நன். 321 (தோன்றி) : தன்வினை; ‘தொழில்அல காலம் தோற்றா’ நன். 275 (தோற்றுவிக்கமாட்டா) : பிறவினை; இவன் வெளுத்தான் : தன்வினை ; துணியை வெளுத்தான் : பிறவினை. (இ.கொ. 67) தனி இடவழு - தனி இடவழுவாவது திணையும் பாலுமின்றி இடமே மயங்குவது. அது, வந்தான் யான் - வந்தார் யாம் - எனவும், வந்தான் நீ - வந்தார் நீயிர் - எனவும், வந்தாய் யான் - வந்தீர் யாம் - எனவும்; வந்தாய் அவன் - வந்தீர் அவர் - எனவும், வந்தேன் நீ - வந்தோம் அவர் எனவும், வந்தேன் அவன் - வந்தேம் அவர் - எனவும் மூவிடவினைமேலும் மூவிடப்பெயர் மயங்கிய மயக்கம் பன்னிரண்டும்; யான் வந்தான் - யாம் வந்தார் - எனவும், நீ வந்தான் - நீயிர் வந்தார் எனவும், யான் வந்தாய் - யாம் வந்தீர் - எனவும், அவன் வந்தாய் - அவர் வந்தீர் - எனவும், நீ வந்தேன் - நீயிர் வந்தேம் - எனவும், அவன் வந்தேன் - அவர் வந்தேம் - எனவும் - மூவிடப் பெயர்மேலும் மூவிடவினை மயங்கிய மயக்கம் பன்னிரண்டும் ஆகத் தனி இடமயக்கம் இருபத்து நான்காம். (நன். 374 மயிலை.) தனித் திணைவழு - பாலும் இடனும் இன்றித் திணை தனியே மயங்குவது தனித்திணை வழுவாம். வந்தான் அது - வந்தாள் அது - வந்தார் அவை - எனவும், வந்தது அவன் - வந்தது அவள் - வந்தன அவர் - எனவும் இருதிணைவினை மேலும் இருதிணைப் பெயர் வந்து மயங்கிய ஆறும்; அவன் வந்தது - அவள் வந்தது - அவர் வந்தன - எனவும், அது வந்தான் - அது வந்தாள் - அவை வந்தார் - எனவும் இருதிணைப்பெயர்மேலும் இருதிணைவினை வந்து மயங்கிய ஆறும் ஆகத் தனித்திணை வழு 12 ஆம். (நன். 374 மயிலை.) தனிமொழி இயல்பு - தனிமொழி எல்லாம் பொருள் குறிப்பனவாய்த் தம்மையும் பொருளையும் உணர்த்துவனவாம்; பொருளை வெளிப் படையாகவும் குறிப்பாகவும் உணர்த்துவனவாய்ப் பெயர் வினை இடை உரி - என்ற நான்கு பகுப்பினவாய் வரும். (தொ.சொ. 155 - 159 சேனா.) தனிமொழி இலக்கணம் கூறும் இயல்கள் - பெயரியல் வினையியல் இடையியல் உரியியல் - என்னும் நான்கும் தொல்காப்பியத்துள் தனிமொழி இலக்கணம் கூறும் இயல்கள். தனிமொழி, தொடர்மொழி - தனிமொழி சங்கேதவலியால் தனித்து நின்றும், தொடர் மொழி அவாய்நிலை - தகுதி - அண்மை - தொகைநிலைவகை தொகாநிலைவகை - என்னும் இவற்றால் தொடர்ந்துநின்றும் பொருளை விளக்குவன. எ-டு : மரம் உண்டான் மற்று நனி - தனிமொழி; ஆவைக் கொணா - அவாய்நிலையால் தொடர்தல் நீரால் நனை - தகுதியால் தொடர்தல்; ஆற்றங்கரைக்கண் ஐந்துகனிகள் உளவாகின்றன - அண்மையால் தொடர்தல். (இவி. 161 உரை) தாதர்த்தியே சதுர்த்தி - பொருட்டு என்னும் பொருளில் வரும் நான்காம் வேற்றுமை. இது கொள்வோனை விட்டு, ஆதிகாரண காரியம் - நிமித்த காரண காரியம் - என்னும் இரண்டன் பின்னரும் வரப் பெறும் குவ்வுருபு. 1. ஆதிகாரணகாரியம் என்பது காரியத்துடன் நேரே தொடர்புடையது. எ-டு : குண்டலத்திற்குப் பொன். பொன், குண்டலத்தொடு நீக்கமில்லாத தொடர்புடையது. தொல் காப்பியனார் இதனை ‘அதுவாகு கிளவி’ என்பர். 2. நிமித்தகாரண காரியம் என்பது காரியத்திற்கு ஏதேனும் ஒருவகையால் தொடர்புடையது. எ-டு : கூழுக்குக் குற்றேவல் செய்தான். கூழ் கிடைத்தற்கு வேண்டும் பொருள் குற்றேவல் செய்தலால் பெறப்படும்; அல்லது கூழே பயனாக - காரிய மாக - அமைதலும் கூடும். தொல்காப்பியனார் இதனை ‘அதற் பொருட்டு ஆதல்’ என்பர். (பி. வி. 6) தாம் தான் - என்ற விரவுப்பெயர்கள் - தாம் என்ற விரவுப்பெயர் படர்க்கை இருதிணைப் பன்மைக் கண்ணும், தான் என்ற விரவுப்பெயர் படர்க்கை இருதிணை ஒருமைக்கண்ணும் வரும். வருமாறு : தாம் வந்தார், தாம் வந்தன; தான் வந்தான், தான் வந்தாள், தான் வந்தது. (தொ.சொ. 184, 185 சேனா. உரை) திகந்தராள லக்ஷண வெகுவிரீகி - திக் அந்தராளம் - திசைகளுக்கு இடைப்பட்டது. வடகிழக்கு என்பது, வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடைப்பட்ட கோணத் திசை. இது தமிழில் உம்மைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாம். (பி. வி. 24) ‘திங்’ என்னும் பதினெட்டு விகுதிகள் - வடமொழியில் லாதேசங்கள் பதினெட்டு. அவை பிரத்தியா கார முறைப்படி ‘திங்’ எனப்படும். (இவற்றுள் ஈற்று மெய்கள் கெட்டே சொற்களில் புணர்வது வடமொழி முறை) 1) திப் தஸ் ஜி ஸப் தஸ் த மிப் வஸ் மஸ் 2) த ஆதாம் ஜ தஸ் ஆதாம் த்வம் இட் வஹி மஹிங் ‘தி’ முதல் ‘ங்’ வரையுள்ள விகுதிகள் பதினெட்டும் ‘திங்’ எனப்படும். முதல் ஒன்பதும் பரப்பைபதமாகிய செய்வினையில் கர்த்தரிப் பிரயோகத்தில் மாத்திரம் வருவன. பின் ஒன்பதும் தனி ‘தங்’ எனப்படும்; அவை செயப்பாட்டுவினையாகிய கர்மணிப் பிரயோகத்திலும் அதனோடு ஒத்த பாவப் பிரயோகத்தில் வருவதுடன் கர்த்தரிப் பிரயோகத்திலும் வரும் ஆற்பனேபத மாம். (பி. வி. 36) திசைக்கூறு - இதனைத் தொல்காப்பியம் ‘தேவகை’ என்னும். திசைக்கூறு பொருள் வரையறைப்படாது சொல்லுவானது குறிப்பினான் ஒன்றற்குக் கிழக்கு மற்றொன்றற்கு மேற்காகவும், ஒன்றற்கு மேற்கு மற்றென்றற்குக் கிழக்காகவும், ஒன்றற்குத் தெற்கு மற்றொன்றற்கு வடக்காகவும், ஒன்றற்கு வடக்கு மற்றொன் றற்குத் தெற்காகவும் ஆதல் கூடும் ஆதலின், இதனை இட வகையில் அடக்கினாரல்லர். எ-டு : வடக்கண் வேங்கடம், தெற்கண் குமரி. (தொ. சொ. 83 நச். உரை) திசைச்சொல் - செந்தமிழ்நாட்டை அடையும் புடையும் கிடந்த திசை - நாட்டார் வழங்கும் சொல். குடநாட்டார் தாயைத் தள்ளை எனவும், பூழிநாட்டார் நாயை ஞமலி எனவும் வழங்குதல் போல்வன. செந்தமிழ்நாட்டைச் சேர்ந்த பன்னிருநிலம், பொதுங்கர்நாடு - தென்பாண்டி - ஒளி - குட்டம் - பன்றி - கற்கா - சீதம் - பூழி - மலை - அருவா - அருவாவடதலை - குடம் - என்பன. அவ்வவர் தத்தம் நாட்டில் எவ்வாறு குறித்து வழங்கினரோ, அவ்வாறே தமிழில் திசைச்சொல்லாக வழங்க வேண்டும். (ஞமலி என நாயைக் குறிப்பிடும் சொல்லை எல்லா நாட்டாரும் பட்டாங்கு உணரார்; தமிழிலக்கியம் பயின்றவர் உணர்வார் என்பது.) (தொ. சொ. 395 இள. உரை) செய்யுளை அமைத்தற்குப் பயன்படும் சொற்களுள் திசைச் சொல்லும் ஒன்று. செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்த பன்னிரு நிலத்தும், பன்னிரண்டையும் புறம் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும் திசைச்சொல் தாம் தாம் குறித்த பொருளையே விளக்கும் தன்மையுடையன. செந்தமிழ் நிலமாவது, வையையாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம். (398 நச்.) பன்னிரு நிலமாவன பொங்கர்நாடு - ஒளிநாடு - தென் பாண்டிநாடு - குட்டநாடு - குடநாடு - பன்றிநாடு - கற்காநாடு - சீதநாடு - பூழி நாடு - மலையமானாடு - அருவாநாடு - அருவா வடதலைநாடு - எனத் தென்கீழ்ப்பால் முதல் வடகீழ்ப்பால் ஈறாக எண்ணப்படும். பொங்கர்நாடு ஒளிநாடு - என்னும் இவற்றினிடத்தில் வேணாடு புனல்நாடுகளைக் கூறுவர் பிற்காலத்தார். பன்னிரண்டையும் சூழ்ந்த பன்னிரு நிலமாவன : சிங்களமும் பழந்தீவும் கொல்லமும் கூபமும் கொங்கணமும் துளுவும் குடகமும் கருநடமும் கூடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் ஆம். தென்பாண்டிநாட்டார் ஆ, எருமை - என்பனவற்றைப் பெற்றம் என்பர். குட்ட நாட்டார் தாய், நாய் என்பவற்றைத் தள்ளை, ஞெள்ளை - என்பர். குட நாட்டார் தந்தையை அச்சன் என்பர். கற்கா நாட்டார் வஞ்சகரைக் கையர் என்பர். சீத நாட்டார் ஏடா, தோழி, தம்மாமி என்பவற்றை எலுவன், இகுளை தந்துவை என்பர். பூழி நாட்டார் நாய், சிறுகுளம் என்பவற்றை ஞமலி, பாழி- என்பர். அருவா நாட்டார் செய்யைச் செறு என்பர். சிறுகுளத்தைக் கேணி என்பர். அருவாவடதலைநாட்டார் குறுணியைக் குட்டை என்பர். சிங்களம் : அந்தோ என்பது; கருநடம்: கரை, சிக்க, குளிர - என்பன. வடுகு : செப்பு என்பது; தெலுங்கு : எருத்தைப் பாண்டில் என்பது ; துளு : மாமரத்தைக் கொக்கு என்பது. (தொ. சொ. 400 நச். உரை) தாயைத் தள்ளை என்ப குடநாட்டார். (தொ. சொ. 395 இள. உரை) தென்பாண்டிநாட்டார் தம்மாமி என்பதனைத் தந்துவை என்பர். (தொ. சொ. 400 சேனா. உரை) தமிழ் கூறும் நல்லுலகம் வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்டதாகவே, செந்தமிழ்நாடு வேங்கடம் குமரிக்கு இடைப்பட்ட பகுதியாம். செந்தமிழ்நிலத்தைச் சேர்ந்த பன்னிரு கொடுந்தமிழ்நிலம் குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும் சையத்தின் மேற்குப்பட்ட கொங்கண மும் துளுவமும் குடகமும் குன்றகமும் கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப் படும். இவற்றுள் கூபகமும் கொல்லமும் கடல்கொள்ளப் படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லம் எனக் குடியேறினர் போலும். பஞ்சத்திராவிடம் எனவும் வடநாட் டார் உரைப்ப ஆகலான் அவை ஐந்தும் வேங்கடத்தின் தெற்கு ஆதலும் கூடாமை அறிக. ‘குடாவடி உளியம்’ என்றவழி, குடா என்பது குடகத்தார் பிள்ளைகளுக்கு இட்ட பெயர். ‘அந்தோ’ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கு இட்ட பெயர். ‘யான் தற்கரைய வந்து’ என்ற- வழிக் கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருள் உணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வருவது. பாண்டில் என்பது தெலிங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாமரத்திற்குப் பெயராக வழங்குவது. (தொ. சொ. 396 தெய். உரை) தென்பாண்டி நாட்டார் ஆவினைப் பெற்றம் என்றும், சோற்றினைச் சொன்றி என்றும், குட்ட நாட்டார் தாயைத் தள்ளை என்றும், குட நாட்டார் தந்தையை அச்சன் என்றும், கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்றும், வேணாட்டார் தோட்டத்தைக் கிழார் என்றும், பூழி நாட்டார் சிறுகுளத்தைப் பாழி என்றும், பன்றி நாட்டார் செறுவைச் செய் என்றும், அருவாள நாட்டார் சிறுகுளத்தைக் கேணி என்றும், அருவாள வடதலையார் புளியை எகினம் என்றும், சீத நாட்டார் தோழனை எலுவன் என்றும், மலாட்டார் தோழியை இகுளை என்றும், புனல்நாட்டார் தாயை ஆய் என்றும் வழங்குவர். (நன். 272 மயிலை.) செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு கொடுந்தமிழ் நிலத்தின் கண்ணும், பதினெட்டுமொழியுள் தமிழும் வடசொற்குக் காரணமான ஆரியமும் ஒழிந்த பதினாறு மொழிகள் வழங்கும் பதினாறு நிலத்தின்கண்ணும் உள்ளோர்தம் குறிப்பினவாய்ச் செந்தமிழோர் குறிப்பின அன்றி அத்திசை களினின்றும் செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவன திசைச் சொல்லாம். கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டாவன: தென் பாண்டி - குட்டம் - குடம் - கற்கா - வேண் - பூழி - பன்றி - அருவா - அருவா வடதலை - சீதநாடு - மலாடு - புனல்நாடு - என்பன. வருமாறு : ஆவினைப் பெற்றம் என்றலும், சோற்றைச் சொன்றி என்றலும் தென்பாண்டி நாட்டார் வழக்கு . தாயைத் தள்ளை என்றலும், தந்தையை அச்சன் என்றலும் - முறையே குட்டநாட்டார் வழக்கும் குடநாட்டார் வழக்கும் ஆம். வஞ்சரைக் கையர் என்றல் - கற்கா நாட்டார் வழக்கு. தோட்டத்தைக் கிழார் என்றல் - வேணாட்டார் வழக்கு. சிறுகுளத்தைக் கிழார் என்றல் - பூழி நாட்டார் வழக்கு. செறுவைச் செய் என்றலும் சிறுகுளத்தைக் கேணி என்றலும் - முறையே பன்றி - அருவா - நாட்டார் வழக்கு. புளியை எகின் என்றல் - அருவா வடதலை நாட்டார் வழக்கு. தோழனை எலுவன் என்றலும், தோழியை இருளை என்றலும் - சீதநாட்டார் வழக்கு. (நன். 273 சங்.) திசைச்சொற்களாகத் தமிழில் வழங்குவன - குடா - குடகத்தார் பிள்ளைகளுக்கு இட்ட பெயர். அந்தோ - சிங்களவர் ‘ஐயோ’ என்பதற்கு இட்ட பெயர். கரைதல் - கருநாடர் விளிப்பொருள் உணரக் கூறுவது. செப்பு - வடுகர் சொல்லுக்குப் பெயராக வழங்குவது. பாண்டில் - தெலுங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு - துளுவர் மாமரத்திற்குப் பெயராக வழங்குவது. பெரும்பான்மை பெயராகவும் சிறுபான்மை வினையுமாகத் திசைச்சொல் தமிழில் நிகழும். (தொ. சொ. 396 தெய். உரை) ‘திசைநிலைக் கிளவியின் ஆகுந’ - திசைச்சொல்லிடத்து வாய்பாடு திரிந்து வருவன வழங்கிய வாறே கொள்வதல்லது இலக்கணத்தான் யாப்புற வுடையன அல்ல. அவை புலியான், பூசையான் முதலாயின. (தொ. சொ. 449 சேனா. உரை) தென்னன், வடமன் குடக்கோ, தென்பாண்டி என இவை திசைநிலைக்கிளவி. (சொ. 449 நச்.) செந்தமிழ்நாட்டு வழங்கும் சொல் திசைச்சொல் ஆகியவழிப் பொருள் வேறுபடுதல். கரை என்பது வரப்பிற்குப் பெயராயினும், கருநாடர் விளித்தற்கண் அதனை வழங்குப. (தொ. சொ. 439 தெய். உரை) இளம்பூரணர் ‘சினைநிலைக் கிளவியின் ஆகுந’ என்று பாடம் கொண்டு, இயற்பெயர் முன்னரும் சிறப்புப்பெயர் பின்னரும் வெண்கொற்றப் படைத்தலைவன் - வெள்ளேறக் காவிதி - என்றாற்போல வருவனவற்றைக் குறிப்பிடுகிறார். (தொ. சொ. 444 உரை) திட்பம் எய்துதற்கு வரும் வினாவுடை வினைச்சொல் - கதத்தானாக களியானாக ஒருவன் ஒருவனை வைதான், பின் தெருண்டக்கால் ‘வைதேனே?’ என்னும். ‘வைதேனே?’ என்பது, தான் வையவில்லை என்பதை, வைததாகக் கூறியவன் மனத்தில் திட்பமுறுத்தற்கு வரும் வினாவுடை வினைச்சொல் ஆகும். இவ் ‘வைதேனே’ என்னும் வினாவுடைவினைச் சொல், “அப்பொழுது வைதேன்; நோகாதே!” என நேர்ந்தமைபடவும் வரும். (தொ. சொ. 246 நச். உரை) திண்ணை மெழுகிற்று, அரிசி தானே அட்டது : மரபுவழுமைதி ஆதல் - செயப்படுபொருளை வினைமுதல் போலக் கூறுதலும் வழக்கில் உண்டு. செயப்படுபொருளை வினைமுதலாகவே கூறுதலும் வழக்கில் உண்டு. இவை கருமக் கருத்தா எனப்படும். எ-டு : இல்லம் (திண்ணை) மெழுகிற்று, அரிசி தானே அட்டது - என முறையே காண்க. (தொ. சொ. 246 சேனா. உரை) (தொ. சொ. 248 நச். உரை) திணைகட்கு உரிய இடங்கள் - நாடகவழக்குப் பற்றிய கற்பனை வகையான் புலவர்கள் கொண்டெடுத்துக் கூறுவதல்லது, அஃறிணைப் பொருள்கள் பேசும் திறனுடையன அல்ல ஆதலின், பேசிப் பொருளுணர்த் தும் ஆற்றலுடைய உயர்திணைக்கே தன்மையிடம் உரித்தாகத் தொல்காப்பியனார் வரையறுத்துக் கூறுகிறார். இவ்வறிவியல் நுண்மையை இகந்து இடைக்காலத்து இலக்கணநூலார் தன்மையிடத்தை விரவுத்திணையாக - இருதிணைக்கும் உரித்தாகக் கொண்டனர். முன்னிலையிடம் இருதிணைக்கும் பொதுவாக நிற்கும். படர்க்கை, இருதிணையுள் ஒன்றை வரை யறுத்து உணர்த்துமாறு நிற்கும். அஃறிணைப் பொருளுக்குக் கேட்கும் ஆற்றல் உண்டாதலின், முன்னிலை இருதிணைக்கும் பொதுவாயிற்று. (தொ. சொ. பக். 7 ச. பால.) திணைநிலைப்பெயர் - பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயர் உயர்திணைப் பெயர் வகைகளுள் ஒன்று. எ-டு : பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர். இவற்றின் ஒருமைப் பெயர் இருதிணைக்கும் பொதுவாம். (தொ.சொ. 162 இள. உரை) திணைப் பொதுப்பெயர் பாற்பொதுப்பெயர் ஆதல் - ஆண்மைப் பொதுப்பெயர், உயர்திணை அஃறிணை ஆண் பாலினைக் காட்டும். பெண்மைப் பொதுப்பெயர், உயர் திணை அஃறிணைப் பெண்பாலினைக் காட்டும். ஒருமைப் பொதுப்பெயர், உயர்திணை ஆணொருமை பெண்ணொரு மைகளையும் அஃறிணை ஆணொருமை பெண்ணொருமை களையும் காட்டும். பன்மைப் பொதுப்பெயர் - உயர்திணைப் பலர்பாலையும் அஃறிணைப் பலவின்பாலையும் காட்டும். எ-டு : சாத்தன் இவன், சாத்தன் இவ்வெருது; சாத்தி இவள், சாத்தி இப்பசு; கோதை இவன், கோதை இவள், கோதை இது; கோதைகள் இவர், கோதைகள் இவை - என முறையே வருமாறு காண்க. (நன். 284 சங்.) திணை பால் இடம் எல்லாம் செல்லும் பத்து வினைகள் - தெரிநிலை வினையும் குறிப்புவினையுமாய் உள்ள அப்பத்து ஆவன : வேறு - இல்லை - உண்டு - யார் - வேண்டும் - தகும் - படும் - பெயரெச்சம் - வினையெச்சம் - வியங்கோள் - என்பன. இவை பத்தும் இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொருந்தும் பொதுவினைகளாம். இவற்றுள், வேண்டும் - தகும்- படும் - ஆகிய மூன்றும் ஒரு பொருட் கிளவியாய்த் தொழிற்பெயராய்த் தேற்றப் பொருள் பட்டே நிற்கும். தேற்றப் பொருளாவது இக்காரியம் செய்தலே தக்கது - தகுதி - பொருத்தம் - துணிவு - தெளிவு - நன்மை - அமைதி - முடிபு - வேண்டுவது - எனவும், இக்காரியம் செய் யாமை - வழுவே - இழிவே - தீமையே - சிறுமையே - குற்றமே - எனவும் பொருள்படுதல். ‘இனைத்தென அறிந்த ......... வேண்டும்’ (தொ. சொ. 33) ‘நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும்’ (கு. 960) எனவும். இக்கூழ் அருந்தத் தகும், இந்நீர்குடிக்கத் தகும், இவரால் இக்காரியம் செய்யத்தகும், இச்சோறு உண்ணத் தகும் - எனவும், ‘வஞ்சரை அஞ்சப் படும்’ (கு. 824,) ‘ஒளியோ(டு) ஒழுகப்படும்’ (கு. 698) ‘செய்தொழிலால் காணப்படும்’ (நாலடி. 350) ‘தலைநிலத்து வைக்கப் படும்’ (நாலடி 133) ‘கொள்ளப் படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே’ (கோவை. 87) எனவும் வந்தன. (இ.கொ. 85) (தொல்காப்பியனார் ‘முன்னிலை வியங்கோள்.........’ (சொ. 224) என்னும் நூற்பாவில், இன்மை செப்பல் - வேறு - என்பனவற்றைப் பொதுவினையாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் காலத்தில் ‘உண்டு’ என்பது ஒன்றன்பால் நிகழ்கால வினை; பிற்காலத்தில்தான் அது பொதுவினை ஆயிற்று. அவ்வாறே யார் என்னும் உயர்திணைப்பொதுக் குறிப்பு வினையும், தொல்காப்பியர் காலத்துப் படர்க்கைக்கே வந்த வியங்கோளும் பிற்காலத்தில் பொதுவினை ஆயின. வினையெச்சமும் பெயரெச்சமும் பொதுவினை என்பதை அந்நூற்பாவிலேயே ஆசிரியர் சுட்டியுள்ளார்.) திணைபால் வழுவமைதி - திணைஐயத்தை அவற்றின் பொதுச்சொல்லானும், பால் ஐயத்தை அவற்றின் பொதுச்சொல்லானும் கூறுக. துணிந்த பொருள்மேல் அல்லாத தன்மையினை வைத்துக் கூறுக. வருமாறு : குற்றியோ மகனோ எனத் திணைஐயம் தோன்றிய வழி, ‘குற்றியோ மகனோ அங்ஙனம் தோன்றநின்ற உருவு’ - எனத் திணைப் பொதுச்சொல்லால் கூறுக. ஆண்மகனோ பெண்மகளோ - என உயர்திணைப் பால் ஐயம் தோன்றியவழி, ‘ஆண்மகனோ பெண்மகளோ அங்ஙனம் தோன்றாநின்ற உருவு?’ - எனத் திணைப் பொதுச்சொல்லால் கூறுக. ஒன்றோ பலவோ - என அஃறிணைப் பால்ஐயம் தோன்றிய வழி, ‘ஒன்றோ பலவோ செய்புக்க பெற்றம்?’ என அஃறிணைப் பாற் பொதுச் சொல்லால் (பால் பகா அஃறிணைப் பெயரால்) கூறுக. துணிந்த பொருள் குற்றி எனின் மகன் அன்று எனக் கூறுக. துணிந்த பொருள் மகன் எனின் குற்றி அல்லன் எனக் கூறுக. துணிந்த பொருள் ஆண் எனின் பெண் அல்லன் எனக் கூறுக. துணிந்த பொருள் பெண் எனின் ஆண் அல்லள் எனக் கூறுக. துணிந்த பொருள் ஒன்று எனின் பல அன்று எனக் கூறுக. துணிந்த பொருள் பல எனின் ஒன்று அல்ல எனக் கூறுக. துணிந்த பொருள் குற்றி எனின், மெய் தெரியாத பொருள் மேல் அல்லாத தன்மையை வைத்து ‘மகன் அல்லன் குற்றி’ எனின், குற்றி என்னும் பயனிலைக்கு எழுவாய் தந்து, ‘மகன் அல்லன்; இவ்வுருக் குற்றி’ எனக் கூறல் வேண்டும். அங்ஙனம் கூறவே, ‘சொற் பல்குதல்’ என்னும் விடைவழுவாம். அவ்வழு வாராது ‘மெய் தெரி பொருள்மேல் அன்மை’ வைத்துக் கூறல் வேண்டும் என்பதாம். (நன். 376 சங்.) திணைமயக்கம் - ஒரு பொருளை உயர்த்தும் இழித்தும் உவந்தும் சிறப்பித்தும் சொல்லும்போது திணையும் பாலும் மயங்கி வரப்பெறும். அவை வருமாறு : குரிசில் வந்தது, பெருவிறல் வந்தது - உயர்வு பற்றி வந்தன. பொறியறை வந்தது, குருடு வந்தது - இழிவு பற்றி வந்தன. ‘என் யானை வந்தது’ என்ப ஒருவனை; ‘என் பாவை வந்தது’ என்ப ஒருத்தியை; ‘எந்தை வந்தான்’ என்ப ஓர் எருத்தினை; என் அன்னை வந்தாள்’ என்ப ஓர் பசுவினை. இவை நான்கும் உவப்புப் பற்றி வந்தன. பெருவிறல் வந்தது, கூற்று வந்தது - இவையும் உவப்பு. சாத்தனார் வந்தார், நரியார் வந்தார் -சிறப்புப் பற்றியன. இவை திணையும் பாலும் மயங்கியவாறு கண்டுகொள்க. (நேமி. மொழி. 11 உரை) ‘திணையொடு பழகிய பெயர்’ - ஒவ்வொரு திணைக்கும் உரிமைபூண்டுள்ள தலைமக்கள் பெயர் அவை. குறிஞ்சி : பொருப்பன் - வெற்பன் - சிலம்பன்; பாலை : காளை - மீளி; முல்லை : குறும்பொறை நாடன் - தோன்றல்; மருதம் : ஊரன் - மகிழ்நன்; நெய்தல் : சேர்ப்பன் - புலம்பன் - போல்வன. ஓர்எருத்தைக் காளை மீளி என்றாற் போல வழங்குப. இத் திணையொடு பழகிய பெயர்கள் விரவுத்திணைப் பெயர்களே யாம். ஆயின் கருப்பொருள்கள் கடுவன் - மூலன் - என அன்ஈற்றுச் சொற்களாய் வரினும் அஃறிணையேயாம். (தொ. சொ. 198, 199 நச். உரை) திணைவழு நால்வகையான் நிகழ்தல் - தனித்திணைவழுப் பன்னிரண்டும், பால்திணைவழுப் பன்னி ரண்டும், இடத்திணை வழு இருபத்து நான்கும், பால் இடத் திணை வழு இருபத்துநான்கும் எனத் திணை வழு 72 ஆம். (நன். 374 மயிலை.) திணை வழுவமைதி - உயர்திணையைத் தொடர்ந்த அஃறிணையாகிய பொருட் பெயர் முதலாகிய அறுவகைப் பெயரும் உயர்திணையொடு சார்த்தி உரைப்பின் உயர்திணை முடிபினவாம். வருமாறு : நம்பி பொன் பெரியன் - பொருள் நம்பி நாடு பெரியன் - இடம் நம்பி வாணாள் பெரியன் - காலம் நம்பி மூக்குக் கூரியன் - சினை நம்பி குடிமை நல்லன் - குணம் நம்பி நடை கடியன் - தொழில் அஃறிணைச்சொல் உயர்திணை வினைக்குறிப்பைக் கொண்டு முடிதல் திணைவழுவாயினும், தொடர்புண்மை கருதிச் சார்த்தி முடித்தலின் வழுவமைதியாயிற்று. சார்த்தி முடியாவிடின், பொன் பெரிது - நாடு பெரிது - முதலாகத் தம் முடிபினைவே ஆகும் என்பது. (நன். 377 சங்.) திணைவிரவி எண்ணி அஃறிணை முடிபு கோடலின் காரணம் - திணை விரவி எண்ணி அஃறிணையானும் உயர்திணையா னும் முடிந்தது, தலைமைபற்றியோ பன்மைபற்றியோ இழிவு பற்றியோ கொண்ட கருத்து வகையான் என்க. உயர்திணையும் ‘பொருள்’ என்னும் பொதுமையான் அஃறிணைக்கண் அடங்குதலானும், உயர்திணைக்கண் அஃறிணை அவ்வாறு அடங்காமையானும் ஆசிரியர் ‘அஃறிணை முடிபின’ என்றார், அது பெரும்பான்மை பற்றி; சிறுபான்மை உயர்திணை முடிபு கோடலும் ஆம். ‘வடுகர் அருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேய் எருமை என்றிவை ஆறும் குறுகார் அறிவுடை யார்’ - பெரும்பான்மை பற்றி அஃறிணை முடிபு. ‘பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தார் குழவி எனுமிவரைக் கைவிட்டு’ (சிலப். 21 : 53 , 54) - சிறுபான்மை உயர்திணைமுடிபு. ‘பாணன் பறையன் துடியன் கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை’ (புற. 335) உயர்திணையே எண்ணிச் சிறுபான்மை அஃறிணை முடிபு கொண்டது. (தொ. சொ. 51 நச். உரை) திணைவிரவும் பெயர்கள் முடிபு கொள்ளுமாறு - உயர்திணைப் பெயர்களும் அஃறிணைப் பெயர்களும் எண்ணப் பட்டுச் செய்யுளுள் பெரும்பான்மையும் அஃறிணை முடிபும், வழக்கினுள் உயர்திணைமுடிபும் பெறும். ‘வடுகர் அருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை என்றிவை ஆறும்’ ‘களிறும் கலிமாவும் தேரும் மறவரும் என நான்கு’ (புற. 55) செய்யுளுள் திணை விரவி எண்ணப்பட்டு அஃறிணை முடிபு கொண்டன. ‘பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்கு’ திணை விராய் எண்ணி உயர்திணைமுடிபு கொண்டன. ‘பாணன் பறையன் துடியன் கடம்பனென்று இந்நான் கல்லது குடியும் இல்லை’ (புற. 335) செய்யுளுள் உயர்திணைப்பொருள் நின்று அஃறிணைமுடிபு கொண்டன. ‘பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தார் குழவி எனுமிவரைக் கைவிட்டு’ (சிலப். 21 : 53 : 54) செய்யுளுள் திணை விராய் எண்ணி உயர்திணைமுடிபு கொண்டன. உயர்திணையும் பொருள் என்னும் பொதுமையான் அஃறிணைக் கண் அடங்குதலானும், உயர்திணைக்கண் அஃறிணை அவ் வாறு அடங்காமையானும் திணைவிராய் அஃறிணை முடிபு ஏற்றலே பெரும்பான்மை. திணை விராய் எண்ணி அஃறிணை யானும் உயர்திணையானும் முடிவது தலைமைபற்றியும் பன்மைபற்றியும் இழிவுபற்றியும் என உணரப்படும். ‘தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்’ என்றாற் போல்வன, தலைமைப்பொருளையும் தலைமை இல் பொருள்களையும் உடன்எண்ணித் தலைமைப்பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் உடன் முடிந்ததொரு முறைமை பற்றி வந்தனவாம். (தொ.சொ. 51 நச்.உரை) ‘நல்லார் தீயார் பசு என்னும் இவர்கட்கு’ என உயர்திணை முடிபு கோடல் வழக்கினுள் பெரும்பான்மையும் வரும். திணை விராய் அஃறிணை முடிபுகோடல் - ‘கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைப் புகல்மறவருமென நான்குடன் மாண்ட தாயினும்’ (புறநா. 55) ‘வடுகர் அருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேய் எருமை என்றிவை ஆறும்’ என இருதிணையும் விரவி அஃறிணைமுடிபு கொண்டன. (தொ. சொ. 51 சேனா., நச். உரை) திணை விராய் முன்னிலைமுடிபு கோடல் - ‘ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாதீரும்............ ........... நும் அரண் சேர்மின்’ (புறநா. 9) எனத் திணை விராய் எண்ணி முன்னிலைமுடிபு கொண்டன. இச் செய்யுள்முடிவு அதிகாரப் புறனடையான் கொள்ளப் படும். (தொ. சொ. 51 நச்.உரை) திரவியம் - பொருள். சத்தநூலார் ஆகிய இலக்கணநூலாசிரியர்கள் சொல்லை ஒருபொருள் என்றே கூறுவர். மேலும் சொல் லானது நித்தம் (அழியாதது) என்றும், விபு (எங்கும் வியாபித் திருப்பது) என்றும் கூறுவர். (பி. வி. 18) திரவிய விசிட்டம் - ஏதேனும் ஒருபொருளை யுடையவன். இந்தப் பொருளில் வரும் சாமானியதத்திதன் என்னும் பெயர்விகுதிகளைக் கூறு மிடத்தே, அதனால் உண்ணலையுடையவன் : வலையன் - வலையால் மீன்பிடித்து விற்று உண்ணலையுடையவன் என்பது போன்றவற்றை இத்தொடர் விளக்க வந்தது. இங்கு ‘வலை’ அடையாகும். ஆகவே ‘வலையன்’ அடையை ஏற்ற விசேடியம் ஆகும். (பி. வி. 31) திரிசொல் - திரிசொல்லாவது செய்யுளின்பம் நோக்கி இயற்சொற்களை அவ்வாய்பாடு திரித்து வேறு வாய்பாட்டின ஆக்கும் செய்யு ளுடைய சொல். இவை ஒருபொருள் குறித்த வேறுசொல் எனவும், வேறுபொருள் குறித்த ஒருசொல் எனவும் இரு வகைய. மலை என்ற ஒரு பொருளைக் குறிக்க அடுக்கல் - பிறங்கல் - ஓங்கல் - விண்டு - முதலிய சொற்கள் வரும். உந்தி என்ற சொல் ஆற்றிடைக்குறை, கொப்பூழ், தேர்த்தட்டு, யாழ் அகத்ததோர் உறுப்பு - ஆகிய பல பொருள்களில் வரும். கிளி ‘கிள்ளை’ எனவும், மயில் ‘மஞ்ஞை’ எனவும் ஒரு கூறு திரிந்தன. மலை என்பது அடுக்கல் - பிறங்கல் - விலங்கல் - என முழுவ தும் திரிந்தது. (தொ. சொ. 392, 394 இள. உரை) இயற்சொல் திரிந்து அமையும் சொல்லே திரிசொல்லாம். இது செய்யுள் அமைத்தற்குரிய நால்வகைச் சொற்களுள் ஒன்று; எளிதில் பொருள் புலனாகாதது. ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்களாகவும், பலபொருள்களைக் குறிக்கும் ஒருசொல் லாகவும் இஃது அமையும். இயற்சொல்லைத் திரித்துத் திரிசொல் அமைக்குங்கால், தம் எழுத்துச் சிறிது நிற்பத் திரிப்பனவும் - அவ்வியற்சொல் தம்மையே பிறசொல் கொணர்ந்து முழுதும் திரிப்பனவும் - என இருவகைப்படும். கிளி, மயில் - என்பனவற்றைக் கிள்ளை - மஞ்ஞை - எனச் சிறிது நிற்பத் திரித்துக் கூறலும், அவற்றைத் தத்தை - பிணி முகம் - எனப் பிறசொல் கொணர்ந்து முழுதும் திரித்துக் கூறலும் எனக் காண்க. மலைக்கு வெற்பு - பிறங்கல் - விலங்கல் - விண்டு - என்பன முழுதும் திரிந்தன. இவை பெயர்த்திரி சொல். கேட்டீவாயாயின் - செப்பீமன் - (ஈங்கு) வந்தீத்தாய் - புகழ்ந்திகும் (அல்லரோ) - என்மனார் - என்றிசினோர் - பெறலருங்குரைத்து - என்பன போல்வன வினைத்திரிசொல். இவை சிறிது நிற்பத் திரிந்தன. ஆசிரியர் முடிபு கூறியவற்றை யெல்லாம் ‘செய்யுள் முடிபு’ என்று கூறுதலும், வழக்குச்சொல் இவ்வாறு திரிந்து வந்தன வற்றை ‘வினைத்திரிசொல்’ என்று பெயர் கூறுதலும் உரை யாசிரியர் நச்சினார்க்கினியர்தம் கருத்தாம். இடையும் உரியும் திரிசொல்லாய் வருமேனும் கொள்க. (தொ. சொ. 399 நச் உரை) இயற்சொல்லான் உணர்த்தப்படும் பொருள்மேல் வேறுபட்ட வாய்பாட்டான் வருவன திரிசொல்லாம். உரிச்சொல் குறைச் சொல்லாகி வரும். திரிசொல் முழுச்சொல்லாகி வரும். (தொ. சொ. 395 தெய். உரை) வானரத்தின் முகம் தன் இயல்பாய் இருந்ததேனும் நரர்முகச் செவ்விக்கு மறுதலைப்பட்டமையான் ‘வலிமுகம்’ எனப் பட்டது போல, கல்விஏதுவானன்றி இயல்பாகத் தம் பொருள் உணர நிற்கும் இயற்சொற்கு மறுதலைப்பட்டுக் கல்விஏதுவால் தம் பொருளை உணர்த்தி நிற்கும் சொற்கள் திரிசொற்கள் எனப்பட்டன. ஒரு பொருளைக் குறித்த பலசொல்லாயும், பல பொருளைக் குறித்த ஒருசொல்லாயும் அரிதாக உணரப்படும் பொருளவாய்த் திரிசொல் நிகழும். எ-டு : கிள்ளை, சுகம், தத்தை - என்பன கிளி என்னும் ஒரு பொருளைக் குறித்த பல பெயர்த்திரிசொல். படர்ந்தான், ஏகினான் - என்பன சென்றான் என்னும் ஒரு பொருளைக் குறித்த பல வினைத்திரிசொல். சேறும், வருதும் - என்னும் விகுதிகள் தன்மைப் பன்மை எதிர்காலம் என்னும் ஒரு பொருளைக் குறித்த பல இடைத்திரிசொல். சால, உறு, தவ, நனி, கூர், கழி - என்பன மிகுதி என்னும் ஒரு பொருளைக் குறித்த பல உரித்திரிசொல். வாரணம் என்பது யானை - கோழி - சங்கு - என்னும் பலபொருளைக் குறித்த ஒரு பெயர்த்திரிசொல். வரைந்தான் என்பது எழுதினான் - நீக்கினான் - மணந்தான் - முதலிய பல பொருளைக் குறித்த ஒரு வினைத்திரிசொல். கொல் என்பது ஐயம் - அசைநிலை - என்னும் பல பொருளைக் குறித்த ஓர் இடைத்திரிசொல். கடி என்பது காப்பு - கூர்மை - விரை - முதலிய பல பொருளைக் குறித்த ஓர் உரித்திரி சொல். (நன். 272 சங்.) பல சொல்லாகி ஒருபொருளை விளக்குவனவும், ஒரு சொல்லாகிப் பலபொருளை விளக்குவனவும் திரிசொல் எனப்படும். வெற்பு - விலங்கல் - விண்டு - அடுக்கல் - வரை - குன்று - என்பனவும் பிறவும் பல சொல்லாகி மலை என்னும் ஒரு பொருளை விளக்கும் திரிசொல். ஓடை என்பது ஒரு சொல்லாகி யானைப்பட்டம் - ஒரு மரம் - ஒரு கொடி - நீர்நிலை - எனப் பல பொருளை விளக்கும் திரிசொல். அன்றியும் திரிசொல் நால்வகை என்பர். கிள்ளை, சுகம், தத்தை: இவை கிளி என்கிற ஒரு பொருளைக் குறித்த பல பெயர்த்திரிசொல்; வாரணம் : இது கோழியும் சங்கும் முதலாகிய பலபொருள் குறித்த பெயர்த் திரிசொல். படர்ந்தான், சென்றான்: இவை போயினான் என்கிற ஒருபொருள் குறித்த பல வினைத்திரி சொல். வரைந்தான் : இது மணந்தான், எழுதினான், நீக்கி னான் - முதலாகிய பலபொருள் குறித்த ஒரு வினைத்திரி சொல். சேறும், வருதும் ; இவற்றினுடையறும் - தும் - விகுதிகள் தன்மைப் பன்மை எதிர் காலம் - என்கிற ஒருபொருள் குறித்த பல இடைத்திரிசொல். கொல் : இஃது ஐயம் - அசைநிலை - என்கிற பல பொருள் குறித்த ஓர் இடைத் திரிசொல். சால - உறு - தவ - நனி - கூர் - கழி : இவை மிகல் என்கிற ஒரு பொருள் குறித்த பல உரித்திரி சொல். கடி என்கிறது காப்பு - கூர்மை - அச்சம் - கரிப்பு - விளக்கம் - சிறப்பு - மணம் - முதலிய பல பொருள் குறித்த ஓர் உரித்திரிசொல். (தொ. வி. 44 உரை) திரிசொல் நான்கு - இயற்சொல் திரிந்த திரிசொல்லினது திரிபாவது, உறுப்புத் திரிதலும் - முழுவதும் திரிதலும் - என இருவகைத்து. கிள்ளை - மஞ்ஞை - என்பன உறுப்புத் திரிந்தன. தத்தை - பிணிமுகம் - என்பன முழுவதும் திரிந்தன. எ-டு : வெற்பு, விலங்கல், விண்டு - என்பன ஒருபொருள் குறித்த வேறு பெயர்த்திரிசொல். இயங்கினான், ஏகினான் - என்பன ஒருபொருள் குறித்த வேறு வினைத்திரிசொல். உண்கே, உண்கோ - என்பன வினாஒருமை குறித்த வேறு இடைத் திரிசொல். சால, உறு, தவ - என்பன மிகுதி ஒருமை குறித்த வேறு உரித் திரிசொல். உந்தி என்பது, அச்சம் கொப்பூழும் தேர்த்தட்டும் யாழ்ப்பத்- தலுறுப்பும் கான்யாறும் உணர்த்தலின், வேறு பொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல். துஞ்சினார் என்பது, உறங்கினாரையும் நிலையற்றாரையும் உணர்த்தலின் வேறுபொருள் குறித்த ஒரு வினைத்திரிசொல். கொன் என்பது, அச்சம் - பயனின்மை - காலம் - பெருமை - என்பனவற்றை உணர்த்தலின் வேறுபொருள் குறித்த ஓர் இடைத் திரிசொல். கடி என்பது, காப்பு - கூர்மை - முதலியவற்றை உணர்த்தலின் வேறுபொருள் குறித்த ஓர் உரித்திரிசொல். (இ. வி. 173 உரை) திரிந்து வேறுபடுவன - இஃது ஆறாம்வேற்றுமைப் பொருள்களுள் ஒன்று. இது முழுதும் திரிந்தன, சிறிது திரிந்தன - என இருவகைப்படும். எட்சாந்து, கோட்டுநூறு - முழுவதும் திரிந்தன. சாத்தனது ஒப்பு, தொகையது விரி, பொருளது கேடு, சொல்லது பொருள் - இவை சிறிது திரிந்தன. (தொ.சொ. 81 நச். உரை) திரிந்து வேறுபட்டது: எண்ணினது சாந்து என்பது. எண்ணது (78 தெய். உரை) சாத்தனது சொல் என்பதும் அது. (76 இள. உரை) திரிபில் பெயர் (எழுவாயுருபு ஆதல்) - ‘திரிபில் பெயர்’ என்றமையான், ஐ முதலாக விளியீறாகக் கிடந்த ஏழுருபும் ஏற்குமிடத்துத் திரியும் சொல் திரிபில்லன என்பதும், ‘பெயரே’ என்றமையான் இதற்கென வேறுருபு இன்று என்பதும், ‘வினை’ யெனப் பொதுப்படக் கூறினமை யின் வினையும் வினைக்குறிப்புமாகிய விகற்பம் எல்லாம் கொள்ளும் என்பதும், வினையினை முற்கூறினமையின் பெயர்வேற்றுமைக்கு வினைப்பயனிலை சிறந்தது என்பதும் பெற்றாம். (நன். 295 சங்.) எழுவாயுருபாவது திரிபு இல்லாத பெயரே ஆம் என்றார். திரிபில்லாமையாவது உருபும் விளியும் ஏலாது, முடிக்கும் சொல்லும் நோக்காது, ‘ஆ’ என்றாற்போலத் தன்னிலையில் நிற்றலாம். (நன். 295 சிவஞா.) திரிபின் ஆக்கம் - ஆறாவதன் பொருளாகிய திரிபின் ஆக்கம் ‘மெய்திரிந்தாயது’ எனவும்படும். அதுதான் சிறிது திரிவதும் முழுவதும் திரிவதும் என இருவகைத்து. ‘சிறிது திரிவதும் முழுவதும் திரிவதும்’ காண்க. (இ.வி. 203 உரை) தில்லைச் சொல் - தத்தம் குறிப்பின் பொருள் செய்யும் இடைச்சொற்களுள் ஒன்று ‘தில்’ என்பது. அது விழைவு காலம் ஒழியிசை - என்ற பொருள்களில் வரும். எ-டு : ‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப் பெறுகதில் அம்ம யானே’ (குறுந். 14) - விழைவு. ‘வருகதில் வல்லே வருகதில் வல்லென’ (புற. 284) - காலம். ‘வருகதில் அம்மஎம் சேரி சேர’ (அக. 276) ‘வந்தக்கால் ‘இன்னது செய்வல்’ என ஒழியிசை குறித்தது. விழைவுப்பொருளில் வரும் ‘தில்’ தன்மைக்கண்ணேயே வரும். (தொ. சொ. 255, 262 நச். உரை) தீர்க்க சந்தி - நெடிலாகும் புணர்ச்சி 1) அ ஆ என்னும் எழுத்துக்கள் நிலைமொழியீறாக நிற்க, வருமொழிமுதலில் அ ஆ வரின், நிலைமொழிஈறும் வரு மொழி முதலும் கெட, ஆ வந்து புணரும் இதனைச் ‘சவன்ன தீர்க்கசந்தி’ என்பர். இடத்தாலும் முயற்சியாலும் ஒத்த எழுத்துக்கள் ‘சவன்னம்’ எனப்படும். சவன்னம் - இனஎழுத்து. எ-டு : பத + அம்புயம் = பதாம்புயம், சேனா + அதிபதி = சேனாதிபதி. கலா + அதிபதி = கலாதிபதி, மட + ஆதிபத்தியம் = மடாதிபத்தியம் 2) இ ஈ என்னும் ஈற்றின் முன் இ ஈ வரின், நிலைமொழிஈறும் வருமொழிமுதலும் கெட ஈ வந்து புணரும். எ-டு : முனி + இந்திரன் = முனீந்திரன், கரீ + இந்திரன் = கரீந்திரன், கவி + ஈசன் = கவீசன் , கௌரீ + ஈசன் = கௌரீசன் 3) உ ஊ என்னும் ஈற்றின்முன் உ ஊ வரின், நிலைமொழிஈறும் வருமொழிமுதலும் கெட ஊ வந்து புணரும். எ-டு : குரு + உபதேசம் = குரூபதேசம், வதூ + உத்துவாகம் = வதூத்துவாகம் (மணப்பெண்ணின் திருமணம்) தேனு + ஊதம் = தேனூதம் (பசுவின் மடி), வதூ + ஊர்ச்சிதம் = வதூர்ச்சிதம். (மூ. வீ. பி. வி. 28) தீர்ந்துமொழிக் கிளவி - தீர்ந்துமொழிக் கிளவி ஐந்தாம்வேற்றுமையில் நீக்கப்பொருள் பற்றி முடிக்கும்சொல்லாய் வரும். பற்றுவிடு கிளவி என்பதும் அது. எ-டு : ஊரின் தீர்ந்தான், மனைவாழ்க்கையின் பற்று விட்டான் இவை ஊர்க்குத் தீர்ந்தான் - மனைவாழ்க்கைக்குப் பற்று விட்டான் - என நான்காம் வேற்றுமைத் தொடராகவும் வரும். (தொ. சொ. 111 நச். உரை) தீவினை முறை திறம்பி நல்வினையாதல் - இலக்கணக்கொத்துக் கூறும் வினைவகைகளில் இதுவும் ஒன்று. முறை திறம்பல் - மாறுபட்டு நிற்றல், விபரீதம். வினையின் பயன் நன்மையாதலின் தீவினையும் நல் வினையாயிற்று. எ-டு : சம்பந்தர் எண்ணாயிரவரைக் கழுவில் ஏற்றினார். சுந்தரர் ஆண்டவனைத் தூதாக அஞ்சாது நடத்தினார். அப்பர் தாம் கொண்ட (சமண) விரதம் அழித்தனர். சாக்கியர் கடவுளை நாள்தொறும் கல்லால் எறிந்தார். திண்ணனார் ஆண்டவன் தலையில் அடியால் மிதித்தனர். (இ. கொ. 81) துணியப்பட்டவழி அன்மைச்சொல்லை அமைக்கும் திறம் - குற்றியோ மகனோ எனவும், ஆணோ பெண்ணோ எனவும், ஒன்றோ பலவோ எனவும் ஐயமுற்றவழி ஐயம் தீர்ந்து துணிதலு முண்டு. அவ்வழி அன்மைச்சொல்லை மறுக்கப்பட்ட சொல்மே லேற்றிச் கூறுதலுமுண்டு; துணியப்பட்ட சொல் மேலேற்றிக் கூறுதலுமுண்டு. மகன் என்று துணிந்தவழி, குற்றி அன்று, மகன் - எனவும், குற்றி என்று துணிந்தவழி, மகன் அல்லன், குற்றி - எனவும், ஆண் என்று துணிந்தவழி, பெண் அல்லள், ஆண் - எனவும், பெண் என்று துணிந்தவழி, ஆண் அல்லன், பெண் - எனவும், ஒன்று என்று துணிந்தவழி, பல அல்ல, ஒன்று - எனவும், பல என்று துணிந்தவழி, ஒன்று அன்று, பல - எனவும், மறுக்கப்பட்ட பொருள்மேல் அன்மைச்சொல் ஏற்றி உரைக்கப்பட்டது. (தொ. சொ. 25 சேனா. உரை) மகன் என்று துணிந்தவழி, இவன் குற்றி அல்லன், மகன் - எனவும், குற்றி என்று துணிந்தவழி, இவ்வுரு மகன் அன்று, குற்றி - எனவும், ஆண் என்று துணிந்தவழி, இவன் பெண் அல்லன், ஆண் - எனவும், பெண் என்று துணிந்தவழி, இவள் ஆண் அல்லள், பெண் - எனவும், ஒன்று என்று துணிந்தவழி, இப்பெற்றம் பல அன்று, ஒன்று - எனவும், பல என்று துணிந்தவழி, இப்பெற்றம் ஒன்று அல்ல, பல - எனவும், துணியப்பட்ட பொருள்மேல் அன்மைச்சொல் ஏற்றி யுரைக்கப்படுதலும் காண்க. (தொ. சொ. 25. இள. உரை) துணைக்காரணம் - துணைக்காரணமாவது காரியத்தொடு தொடர்புடைய முதற்காரணத்திற்குத் துணையாகிய, வினை - வினைமுதல் - செயப்படுபொருள் - நிலம் - காலம் - கருவி - இன்னதற்கு - இதுபயன் - என்னும் எட்டுமாம். (தொ. சொ. 74 நச். உரை) துமர்த்தம் - வடமொழியில் ‘கர்த்தும்’ என்பது. இது தமிழில் செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இப்பொருளில் வரும் ‘செயற்கு’ என்னும் சொல்லும் வினையெச்சப் பொருளில் கொள்ளப் படும். இதன் ஈற்றிலுள்ள கு என்னும் நான்காம் வேற்றுமை யுருபு துமர்த்தத்தில் வந்தது என்னும் பிரயோக விவேகம். பூவிற்குச் சென்றான், துன்பத்திற்குத் துணை, மறத்திற்குத் துணை, பிணிக்கு மருந்து - போன்றவை துமர்த்தமாய் வந்த நான்கனுருபேற்ற சொற்கள் இவற்றை விரிக்குங்கால், இடையே வினைச்சொல் பெய்து கூறுவதால், குவ்வுருபின் பொருள் விளங்கும். அவை பூப்பறித்தற்குச் சென்றான் - துன்பம் நீக்குதற்குத் துணை - மறம் நீக்கற்குத் துணை - பிணி போக்கற்கு மருந்து - என்பன. (பி.வி. 6, 16) துமுந் - வடமொழியில் வினையெச்சம் தோன்றும் பிரத்தியயம் (விகுதி). வடமொழியில் செய்ய என்னும் வாய்பாடு கர்த்துமுந் என துமுந் பிரத்தியயம் ஆகும். செய்து எனும் வாய்பாடு கிருத்துவா என துவா பிரத்தியயம் ஆகும். வட நூலார் வாய்பாடு கூறாது - கிருத்துவா, கர்த்துமுந் என்னாது - துவா துமுந் - என்றே பெயரிட்டு வழங்குவர். அவர்மதம் பற்றி ஆசிரியர் தொல்காப்பியனாரும் சிறுபான்மை ‘பின் முன் கால் கடை வழி இடத்து’ (சொ. 229.சேனா) எனவும் ஈற்று வினையெச்சம் ஆக்குவர். (பி. வி. 38) துவந்துவ சமாசம் (உம்மைத்தொகை) - ச என்னும் ஓரெழுத்தொருமொழி வடமொழியில் உம்மைப் பொருளுடையது. ச என்பதன் பொருளாக வடநூலார் நான்கு கூறுப. அவை 1. சமுச்சயம், 2. அந்வாசயம், 3. இதரேதரம், 4. சமாகாரம் - என்பன. அவை தமிழில் முறையே 1. எச்ச வும்மை 2. எதிர்மறை யும்மை 3, 4. எண்ணும்மை - என ஆகும். இவற்றுள் முதல் இரண்டு - உம்மைகளும் விரிந்தன்றித் தொக்கு வாரா, தொக்கவிடத்துப் பொருள் தாராமையின். ஆதலின் தொகுவது எண்ணும்மையே. இதனையே வடமொழியார் 1. சமாகாரத் துவந்துவம், 2. இதரேதரயோகத் துவந்துவம் - என இரு வகையாகக் கூறுவர். 1. சமாகாரத் துவந்துவம் - இஃது ஒருமையீறாய் வந்த அஃறிணை உம்மைத்தொகை. எ-டு : அறம்பொருள், புலிவிற்கெண்டை (தமிழ்) சங்கபடகம் (வடமொழி) 2. இதரேதரயோகத் துவந்துவம் - இஃது உயர்திணைப் பன்மையீறாய் வந்த உம்மைத்தொகை. எ-டு : கபிலபரணர், சேரசோழபாண்டியர் (தமிழ்); இராம லட்சுணர் (வடமொழி) உம்மைத்தொகையுள், இருமொழி பன்மொழியாவன தனித் தனிப் பெயர்ச்சொற்களேயன்றி ஒன்றுக்கொன்று அடை மொழி ஆவதில்லை. (பி. வி. 23) துவன்று என்னும் உரிச்சொல் - இவ்வுரிச்சொல் நிறைவு என்னும் குறிப்புணர்த்தும். எ-டு : ‘ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்’ (நற். 170) (தொ. சொ. 332. சேனா. உரை) துவிகு சமாசம் - எண்ணுடன் பொருள் புணர்ந்த எண்ணுத்தொகை. எ-டு : பன்னிரு படலம் - பன்னிரு படலத்தால் செய்த நூல்: தத்திதார்த்தமாய் மகரஈறு பெற்றது. இது முன் மொழி எண். பஞ்ச கபாலம், ஏகாதச கபாலம் - ஐந்து ஓடுகளில் வறுத் தெடுத்த புரோடாசம், பதினோர் ஓடுகளில் வறுத்தெடுத்த புரோடாசம் - என, முன்மொழி எண்ணும் பின்மொழி தத்தி தார்த்தமுமாகி வந்தன. (புரோடாசம் என்பது மாவினாலான ஓமப் பொருள்) எண்தொகை, ஏகவற்பாவி - அநேகவற்பாவி - என இருவகை யிலும் வரும். ஏகவற்பாவியாவது ஒருமைஒப்பு; அநேகவற் பாவியாவது பன்மை ஒப்பு. எ-டு : இருகண், முச்சுடர் - ஒருமை போலான ஏகவற்பாவி எண்தொகை; பஞ்சபாண்டவர், மூவேந்தர் - பன்மையாகவேயான அநேகவற்பாவி எண்தொகை. எண்தொகையில் பின்மொழி, பொருள் - அளவு - நிறை - ஆகியவற்றுடன் வருவனவும் உள. எ-டு : இருகண், முசசுடர் - பின்மொழி பொருள்; இருகலம், முந்நாழி - பின்மொழி அளவு; இருபலம், முத்தொடி - பின்மொழி நிறை. (பின் : காலப்பின்) இனி, எண்தொகையான துவிகு சமாசத்தின்மேல் அன் மொழி என்னும் வெகுவிரீகி வரும் என்று உதாரணம் காட்டுவார் பி.வி. நூலுடையார். ஆயின் வடமொழி உதாரணங் கள் பால் காட்டுவன; தமிழில் அன்மொழித்தொகை பால் காட்டா தாகலின் ஓராற்றான் இவற்றைக் கொள்க. எ-டு : அறுகால் எனப்பொருள்படும் சட்பதம் (வண்டு) - ஆறுகால்களையுடையது. துவிரேபம் - பிரமரம் - வண்டு; இச்சொல்லில் இரண்டு ரகரங்கள் இருப்ப- தால், இது பரியாயச் சொல்; இரண்டு ரகரங்களை யுடையது. சதுர்ப்புசம் - நான்குதோள்களைக் கொண்ட தெய்வம். சண்முகம் - ஆறுமுகங்களையுடைய முருகன். இனி, எண்தொகைமேல் வந்த தத்திதன் (விகுதிபெற்ற பெயர்கள்) வருமாறு : முக்காலி, நாற்காலி, அட்டாதி (எட்டுச் சரணங்களைக் கொண்ட இசைப்பாட்டு) இவை துவிகு ஆகா. இருமொழியும் எண்ணுப்பெயர்களாக நிறை அளவுப் பெயர் களாக வருவன : இவை தொல்காப்பியனாரால் உம்மைத் தொகை என்றும், பதஞ்சலியாரால் துவந்துவ சமாசன் என்றும், காத்தியாயனாரால் உருபும் பொருளும் உடன் தொக்க தொகை என்றும் கொள்ளப்படுகின்றன. எ-டு : பதினொன்று - பத்தும் ஒன்றும்; பன்னிரண்டு - பத்தும் இரண்டும்; தூணிப்பதக்கு - தூணியும் பதக்கும்; நாடுரி - நாழியும் உரியும்; தொடியே கஃசு - தொடியும் கஃசும். காத்தியாயனார் கருத்துப்படி, இவை, ஒன்றை அதிகமாகக் கொண்ட பத்து - என்பது முதலாக விரித்துப் பொருள் கொள்ளப் படும். (தொடியே கஃசு - கஃசை அதிகமாகக் கொண்ட தொடி) காத்தியாயனார் கருத்துத் தொல்காப்பியனார்க்கும் உடன் பாடே. ‘மூன்று தலையிட்ட முப்பதிற் றெழுத்தின்’ (எ. 103) என முப்பத்து மூன்றையும், ‘இ.ரண்டு தலையிட்ட முதலாகு இருபஃது’ (எ. 103) என இருபத்திரண்டையும் விரித்துரைத்து நூற்பா இயற்றியுள்ளமை காண்க. இம்முறையிலேயே, இருபது - இரண்டால் உறழ (பெருக்க)ப் பட்ட பத்து - என மூன்றாம்வேற்றுமை யுருபும் பொருளும் உடன் தொக்க தொகை. முப்பது - இருநூறு - முந்நூறு - முதலியனவும் அன்ன. தமிழில் இது பண்புத்தொகையாகக் கொள்ளப்படும். அறுநான்கு இரட்டி - ஆறால் உறழ்ந்த நான்கு இரட்டி - என அன்மொழித்தொகை வகையால் நாற்பத்தெட்டு எனப் பொருள்படும். பதிற்றுப் பத்து (என்னும் நூல்) - பத்தால் உறழ்ந்த பத்து - நூறு - என்பதும் அன்மொழி. நூற்றுப்பத்து : அன்மொழித்தொகை எனக் கொள்ளின், ஆயிரம்; உம்மைத்தொகையெனின் நூறும் பத்தும் ஆம். வடமொழியில் முன்மொழி பின்மொழி இரண்டும் எண்ணுப் பெயரானவழி, இவ்வாறே உம்மைத்தொகையானும் அன் மொழித் தொகையானும் தொகைகள் வரும். அறுகால் முதலியன துவிகு என்னும் எண்ணுத் தொகை அல்ல. ஈண்டு அவற்றைக் காட்டியது குற்றம் நேராது பாதுகாக்க வேண்டியே என்க. (பி.வி. 21) துவிபதம் - இருமொழி. வடமொழியில் அன்மொழியாம் வெகுவிரீகி போன்ற தொகைகளில் பலமொழித் தொகைகளையும் கொள்வர். தமிழில் உம்மைத்தொகை தவிரப் பிற தொகைகள் இருமொழித் தொகையே. (பி.வி. 24) துவிவசனம் - இருமை. வடமொழியில் பெயர்ச்சொற்கள் வேற்றுமை யேற்று வரும்போது, எல்லா வேற்றுமைகளிலும் ஒருமை - இருமை - பன்மை - என மூன்று வசனங்களை (ஏக துவி பகு வசனங்கள்) ஏற்று வரும். தமிழில் ஒருமை பன்மை என இரண்டே உள. இருமையும் பன்மையுள் அடங்கும். (பி.வி. 7) ‘து று டு ’ - என்ற முறை - துப்விகுதி முக்கால வினைக்கண்ணும் குறிப்புவினைக் கண்ணும் பயின்று வருதலானும், றுவ்விகுதி முக்கால வினைக் கண்ணும் பயின்று வாராமை யானும், துவ்விகுதி தன்முன் நின்ற எழுத்து நோக்கி றுவ்விகுதி யாய்த் திரிந்தது எனினும் அமையும் ஆதலானும், டுவ்விகுதி குறிப்பு ஒன்றற்கே வருத லானும், இதுவும் துவ்விகுதி திரிந்தது எனினும் அமையும் ஆதலானும் றுவ்வும் டுவ்வும் துவ்விகுதி யின் பின்னர்க் கூறப்பட்டன. (வந்தது, கூவிற்று, குண்டுகட்டு) (நன். 328 சங்.) தூரான்வயம் - அண்மைநிலை மாறிச் சேய்மையில் உள்ள சொற்களைக் கொண்டு பொருத்தமுறச் சேர்த்துப் பொருள் கொள்ளுதல். அன்வயம் - சொற்களை இடம் பெயர்த்துச் சேர்த்து முடித் தல். பொருள்கோள் ஒன்பதனுள், ஆற்றொழுக்கும் அடிமாற்றும் அல்லாத ஏனைய ஏழும் தூரான்வயமே ஆகும். எ-டு : ‘சுரைஆழ அம்மி மிதப்ப’ என்பதன்கண், கரை மிதப்ப - அம்மி ஆழ - எனவும், ‘நல்ல படாஅ பறை’ (கு. 115) என்பதன்கண், நல்ல பறை படாஅ எனவும் ஓரடிக் கண்ணேயே சொற்களை மாற்றிப் பொருள் கொண் டவாறு. தூரான்வயத்துள், பதத்தைப் பிரித்துக் கூட்டலன்றி, 1. விகுதி 2. உம்மை 3. வேற்றுமை 4. பண்பு - ஆகியவற்றையும் பிரித்துக் கூட்டுதல் உண்டு. இஃது அநுஷங்கம் என்னும் அதிகார முறைமையாகும். அவை வருமாறு: 1) ‘அறம் சொல்லும் நெஞ்சத்தான்’ (கு. 185) என்பதனை ‘நெஞ்சொடு அறம் சொல்லுவான்’ என்றும், ‘செய்த வேள்வியர்’ (திவ். 3187) என்பதனை ‘வேள்வி செய்தவர்’ என்றும் விகுதி பிரித்துக் கூட்டப்பட்டது. 2) ‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே’ (எ. 35) என்ற நூற்பாவில் ‘நிலையிடையும் குறுகல்’ என உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. 3) ‘கீழ்நீர்’ (கு. 929) என்பதனை ‘நீர்க்கீழ்’ என்றும், ‘செல்வத்துள் எல்லாம் தலை’ (கு. 411) என்பதனைச் ‘செல்வம் எல்லா வற்றுள்ளும் தலை’ என்றும் வேற்றுமையுருபு பிரித்துக் கூட்டப்பட்டது. 4) ‘இனிய உளவாக.... கவர்ந்தற்று’ (கு. 100) என்பதனுள், இனிய கனி - இன்னாத காய் - என்ப பண்பு பிரித்துக் கூறப்பட்டது. (பி. வி. 19) தெய்வம் என்னும் சொல் வினை கொள்ளுமாறு - தெய்வம் என்பது உயர்திணைப் பொருளது ஆயினும், சொல்லளவில் அஃது அஃறிணையாய் நிற்றலின் அஃறிணை வினை கொள்ளும். ஈறு திரிந்து, தேவன் - தேவி - தேவர் - தேவியர் - என வாய்பாடு வேறுபட்டவழி உயர்திணைவினை கொண்டு முடியும். எ-டு : தெய்வம் சினந்தது; தேவன் வந்தான்; தேவி வந்தாள், தேவர் வந்தார், தேவியர் வந்தார். (தொ. சொ. 57 - 59 சேனா. உரை) தெய்வம் சுட்டிய பெயர் - தெய்வத் தன்மையைக் கருதின தெய்வம் என்னும் பொருள். தெய்வம் சுட்டிய பெயர்கள் தத்தம் பொருளுக்கு ஏற்ப உயர்திணை முப்பாலும் பெறும். எ-டு : வாசுதேவன் வந்தான், திருவினாள் வந்தாள், முப்பத்து மூவ (ர் தேவ) ரும் வந்தார் சந்திராதித்தர் வந்தார். (தொ. சொ. 4 கல். உரை) ‘தெரித்துமொழி கிளவி’ - ‘இன்னது எனத் தெரிவிக்கும் மொழியொடு கூறுக’ என்னும் பொருட்டு. சில பொருட்குப் பொதுவாகிய சொல்லினை, ஒரு பொருளைக் குறித்துக் கூறுவோன், அக்கூற்றினை இன்னது எனத் தெரிவிக்கும் சொல்லால் கிளக்க. எ-டு: கன்று என்பது யானை ஆன் மரம் புல் - முதலிய வற்றின் இளமைப் பெயர் ஆதலின், கன்றினைப் போற்றுக- கன்றிற்கு நீர் ஊற்றுக - எனப் பொது வாகக் கூறாமல் ஆன்கன்று - பூங்கன்று எனவும், ஏறு என்பது பெற்றம், சிங்கம் முதலியவற்றின் ஆண்பாற் பெயர் ஆதலின் ஏறு வந்தது எனப் பொதுவாகக் கூறாமல் ஆனேறு வந்தது- அரியேறு வந்தது எனவும், சேவலைக் கொணா எனப் பொதுவாகக் கூறாமல் கோழிச்சேவல் - குயிற்சேவல் - அன்னச் சேவல் எனவும், இவ்வாறே கோழிப் பெடை - மயிற் பெடை எனவும் தெரித்துமொழியால் கிளக்க என்றவாறு . கேட்போர்க்குப் பொருள் திரிபின்றி விளங்கி நிற்குமாயின், கிளந்து கூறாமல் வாளா கூறினும் அமையும். எ-டு: ‘கன்று குணிலாக் கனிஉதிர்த்த மாயவன்’ (சிலப். 17:19) ‘கன்றுஆற்றுப் படுத்த புன்தலைச் சிறாஅர்’ (குறுந். 24) ‘சேவலம் கொடியோன் காப்ப’ (குறுந். 1) ‘நிவந்தோங்கு உயர்கொடிச் சேவலோய்’ (பரிபா.3) (தொ. சொ. 55 ச. பால.) தெரித்து மொழிதலும், தெரித்து மொழியாமையும் - ஒருபொருள் வேறுபடக் குறித்தோன் கூற்று, ஆற்றல் முதலிய வற்றால் அது விளங்காதாயின் அப்பொருளைத் தெரிவித்துச் சொல்லும் சொல்லாகச் சொல்லுதல் தெரித்துமொழித லாம். அவ்வாறு தெளிவாக விளக்கிக் கூறாமை தெரித்து மொழியாமையாம். எ-டு: ‘பல்லார்தோள் தோய்ந்து வருதலால் பாய்புனல் நல்வயல் ஊர!நின் தார்புலால் - புல்லெருக்கம் மாசில் மணிப்பூண்எம் மைந்தன் மலைந்தமையால் காதற்றாய் நாறும் எமக்கு’ ஊரனது தார் புலால் நாறுதற்கும்,மைந்தனது எருக்கமாலை விரும்பத் தக்கதாய் மணத்தற்கும் காரணம் தெரித்து மொழியப்பட்டவாறு. ‘ஒல்லேன் குவளைப் புலாஅல் மகன்மார்பின் புல்லெருக்கங் கண்ணி நறிது’ இதன்கண் குவளை புலால் நாறுதற்கும் மகன்மார்பில் அணிந்த எருக்கமாலை நறிதாதற்கும் காரணம் தெரித்து மொழியப்படாமை காண்க. ஆயினும் குறிப்பான் புலப்பட வைத்தமையால் அமையும் என்றலும் ஒன்று. (தொ. சொ. 56 நச். உரை) ‘தெரிந்துமொழிச் செய்தி - நன்கு ஆராய்ந்து எடுத்துத் தக்க சொற்களான் செய்யப்படுத லான் செய்யுள் ‘தெரிந்துமொழிச் செய்தி’ எனப்பட்டது. இஃது ஆறாம் வேற்றுமைப் பொருள்களுள் ஒன்று. எ-டு: கபிலரது பாட்டு, பாரியது பாட்டு (தொ. சொ. 81 நச்.உரை) தெரிநிலைமுற்று 28 ஆமாறு - அம் ஆம் எம் ஏம் கும் டும் தும் றும் -என்னும் ஈற்றுத் தன்மைப் பன்மை முற்று - 8 கு டு து று என் ஏன் அல் -என்னும் ஈற்றுத் தன்மை ஒருமை முற்று - 7. அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார் - என்னும் ஈற்றுப் படர்க்கை உயர் முப்பால் முற்று -8 து று அ ஆ வ - என்னும் ஈற்றுப் படர்க்கை இழி இருபால் முற்று - 5. ஆக 28 ஆமாறு. றுகரஈற்று வினைமுற்று இறந்தகாலம் காட்டும். (1) கும் டும் தும் றும் - கு டு து று அல் - ப மார் ஆ வ - ஈற்று வினை முற்றுக்கள் எதிர்காலத்தால் சிறந்தனவாம்.(13) அம் ஆம் எம் ஏம் என் ஏன் அன் ஆன் அள் ஆள் அர் ஆர் அ து - ஈற்று வினைமுற்றுக்கள் முக்காலத் தானும் சிறந்தனவாம். (14) ஆகவே, காலம் காட்டும் தெரிநிலை வினைமுற்றுக்கள் 28 ஆதல் காண்க. (தொ. சொ. 427 நச். உரை) தெரிநிலையும் குறிப்பும் ஆகிய வினைப்பகுதி இடைச்சொல் ஆதல் - தெரிநிலை வினைப்பகுதிக்கண் காலம் இன்மையின் வினை யின்றாய்த் தனித்து நடத்தலின்றி அவ்வினைக்கு அகத்துறுப் பாய் அதனிடமாக நடத்தலின், தெரிநிலை வினைப்பகுதி இடைச்சொல்லேயாம் என்க. குறிப்புவினையின்கண் பகுதி பெயரன்றோ? இடைச்சொல் என்றது என்னையெனின், வினையுருபு எனப் பொதுப்படச் கூறினமையானும், பொருளாதி ஆறு பெயரும் விகுதிக்குப் பகுதியாகிய காலத்துத் தனித்து நடக்கும் தன்மையின்றி அவ்வினைக் குறிப்பிற்கு அகத்துறுப்பாய் அதனிடமாக நடத்தலானும், தனித்து நடக்கும் தன்மை உளதேல் பகுபதங் களை ஒருமொழி என்னாது தொடர்மொழி எனல் வேண்டும் ஆதலானும், அதுவும் இடைச்சொல்லேயாம் என்க. (நன். 420 சங்.) தெரிநிலை வினை, தெரியாநிலை வினை - தொடர்வினைப் பகுப்புக்களில் இவை சில. தெரிநிலைவினை என்பது, ‘வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது, நினையுங் காலைக் காலமொடு தோன்றும்’ (சொ. 198 சேனா.), ‘செய்பவன் கருவி நிலம் செயல் காலம், செய்பொருள் ஆறும் தருவது வினையே’ (நன். 320) என்னும் இரண்டு நூற்பாக்க ளானும் கொண்டது. தெரியாநிலைவினை என்பது, வேறு இல் இல்லை இன்மை உள் உண்மை உண்டு அல் அன்மை - இவை போல்வன. இதுவே வினைக்குறிப்பு அல்லது குறிப்புவினை என்பது. ‘பொருள்முதல் ஆறினும் தோற்றிமுன் ஆறனுள், வினைமுதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே’ (நன். 321) என்னும் நூற்பா வால் கொண்டது. இதன்கண்ணும் காலம் குறிப்பினா லாவது புலப்படும் என்பதனால் இதுவும் வினையுள் அடங்கும். தெரிநிலை, தெரியாநிலை என்பன வடமொழி வழக்குப் பற்றி உரைக்கப்பட்டன. தமிழ்வழக்கில் தெரியாநிலைவினை என்பது குறிப்புவினையாம். குழையன் : குறிப்பு வினைமுற்று (அன்று குழையன், இன்று குழையன் - என்பனவற்றால் காலம் தோன்றும்.) நல்ல சாத்தன், வல்ல வீரன் : குறிப்புப் பெய ரெச்சம். அன்றி வாரான், இன்றிச் செய்யான் : குறிப்பு வினையெச்சம். (இ. கொ. 67) தெரிநிலை வினைமுற்றுத் தெரிவிக்கும் செய்திகள் - செய்பவன் - கருவி - நிலம் - செயல் - காலம் - செயப்படு பொருள் - என்னும் சிறப்புடைய ஆறனையும், இன்னதற்கு - இதுபயன் - என்னும் சிறப்பில்லாத இரண்டனையும் தெரி நிலை வினைமுற்றுத் தெரிவிக்கும். வனைந்தான் என்புழி, குலாலன் ஆகிய இயற்றுதல் கருத்தா வும், மண்ணாகிய முதற்காரணமும் தண்டசக்கரம் முதலிய துணைக்காரணமும் (கருவி), வனையும் இடமும், வனைதற் செயலும், இறந்தகாலமும், குடம் முதலிய செயப்படு பொருளும் தோன்றின. குடத்தைத் தனக்கு வனைந்தான் - பிறர்க்கு வனைந்தான் - என்னும் ‘இன்னதற்கு’ என்பதும், அறம் முதலிய பயன் கருதி வனைந்தான் என்னும் ‘இது பயன்’ என்பதும் தோன்றின. இவ்விரண்டும் ஏதுவின் பாற்பட்டுக் கருவியுள் அடங்குதலின் சிறப்பில்லாதன ஆயின. அரசன் ஆலயம் செய்தான் என்புழி, அரசன் ஏவுதல் கருத்தா, இஃது இயற்றினான் தொழிற்கு ஏவினானைக் கருத்தா ஆக்கிக் கூறுதல் காண்க. (நன். 320 சங்.) தெரிநிலை வினைமுற்று விகற்பம் - ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல - எனப் படர்க்கைப் பகுப்பு - 5; தன்மைஒருமை தன்மைப்பன்மை - எனத் தன்மைப் பகுப்பு - 2; முன்னிலை ஒருமை முன்னிலைப்பன்மை - என முன்னிலைப் பகுப்பு 2. இந்த ஒன்பதனையும் முக்காலத்தொடும் கூட்டிக் காண, படர்க்கை வினைமுற்று 15 - தன்மை வினைமுற்று 6 - முன்னிலை வினைமுற்று 6 - ஆகத் தெரிநிலை முற்று 27 பகுதிப்படும். (நன். 324) தெரிபு வேறு நிலையல் - சொன்மை மாத்திரத்தான் விளங்கி வேறு நிற்றல்;அஃதாவது வெளிப்படையாகப் பொருளை அறிவுறுத்தல். சொல்லான் குறிக்கப்படும் பொருள் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் தெரிவிக்கப்படும். அவற்றுள் பெரும்பான்மையாயது வெளிப் படையாகப் பொருளை அறிவிக்கும் ‘தெரிபு வேறு நிலையல்’ ஆம். எ-டு:- அவன், இவன், வந்தான், சென்றான். (தொ. சொ. 159. நச். உரை) தெவு, தெவ்வு - என்னும் உரிச்சொற்கள் - தெவு என்னும் உரிச்சொல் கொள்ளுதலாகிய குறிப்புணர்த் தும்; தெவ்வு என்னும் உரிச்சொல் பகையாகிய குறிப்புணர்த் தும். எ-டு : ‘நீர்த்தெவு நிரைத்தொழுவர்’ (மது. 89), ‘தெவ்வுப் புலம் சிதைய’ (தொ. சொ. 345, 346 சேனா. உரை) தெவு என்னும் சொல்லின் உண்மை வடிவம் தேவு என்பது வேங்கடராஜுலு ரெட்டியார் கருத்து. (நுண். பக். 132) தெளிவின் ஏகார இடைச்சொல் - தெளிவுப்பொருளில் வரும் ஏகார இடைச்சொல், சிறப்புப் பொருளில் வரும் ஓகார இடைச்சொல் போல, அளபெடுக்கும். வருமாறு : ‘உண்டேஎ மறுமை’ (தொ. சொ. 263 நச். உரை) தெளிவு கிளத்தல் - நூல்நெறியான் தெளியப்படும் செய்தி சொல்லப்படுதல். தெளிவு என்பது ஒரு நூல்நெறியான் இது நிகழும் எனக் கண்டு வைத்துத் துணிதல். அவ்வாறு தெளிவு கூறுமிடத்து, எதிர்காலத்துச் செய்தியை ஏனைய காலங்களால் கூறுதலாம். அது காலவழு வமைதி. எ-டு : எறும்பு முட்டை கொண்டு தெற்றி ஏறியது கண்ட விடத்து, ‘மழை பெய்யும்’ என எதிர்காலத்தான் கூறாது, மழை பெய்தது - மழை பெய்கிறது - என ஏனைக் காலத்தான் கூறுவது தெளிவு பற்றி வந்த காலவழுவமைதி. (தொ. சொ. 247 நச். உரை) தெளிவு பற்றிய காலமயக்கம் - ‘வாழ்நாள் செல்லாநின்றது’ எனற்பாலது ‘சென்றது’ என நிகழ்காலம் இறந்தகாலத்தொடு மயங்கிற்று. ‘கூற்று வரும்’ எனற்பாலது ‘வந்தது’ என நிகழ்காலம் இறந்தகாலத்தொடு மயங்கிற்று. (நாலடி 4) இவை தெளிவுபற்றி வந்த காலவழுவமைதி. (தொ. சொ. 239 தெய். உரை) தேவகை - திசைக்கூற்றுப் பொருண்மை, ஏழாம் வேற்றுமைப் பொருள் களில் ஒன்று. திசை என்பது இன்னதென வரையறுத்து உணர்த்தப்படாது ஒன்றனொடு சார்த்தி உணர்த்தப்படுதலின் சொல்லுவான் குறிப்பிற்றாய் நடத்தலின் இடத்துள் அடங்காது. (தொ. சொ. 83 நச். உரை) தேற்ற ஏகாரம் - ‘தெளிவின் ஏ’ எனவும்படும். தத்தம் குறிப்பான் பொருள் தெரிவிக்கும் இடைச்சொற்களுள் ஏகாரம் ஒன்று. அது குறிப்பிடும் ஆறு பொருள்களுள் தேற்றம் என்பது ஒன்று. இத் தெளிவுப் பொருளில் வரும் ஏகாரம் அளபெடுத்து வரும். எ-டு : ‘உண்டேஎ மறுமை’ - மறுமை ஒருதலையாக உண்டு என்பது பொருள். (தொ. சொ. 259, 263 நச். உரை) தேற்றமும் பிரிநிலையும் - ‘அவனே கொண்டான்’ என்பது ஒரு குழுவினின்று ஒரு வனைப் பிரித்து நிற்றலின் பிரிநிலை ஏகாரம்; அவனே கொண்டான் என்பது துணிதல்பொருள் தரின் தேற்றமாம். தேற்றப்பொருள் பிரிநிலைக்கண்ணே உளதாதலின் வேறு எடுத்து ஓதல் சிறப்பின்று ஆதலின் சிறப்பில்லா ஈற்றசைக்கும் இசைநிறைக்கும் இடையே கூறினார். (நன். 422 சங்.) தொக்குழி அப்பொருள் தோன்றல், வேறுபொருள் தோன்றல், பலபொருள் தோன்றல் - அறுவகைத் தொகைநிலைத்தொடர்களும் உரிய வகையில் விரித்துக் காண அவற்றிற்குரிய பொருள் தோன்ற அமையு மாகவே, தொகாநிலைத்தொடர்களால் யாதும் பயனில்லை எனத் தோன்றும் ஐயம் ஒன்றைத் தானே கூறி, அது போக்கும் வகையில், தொகாநிலையின் இன்றியமையாமையை இலக்கணக் கொத்து விளக்குகிறது. தொகைகளில் 1. அப் பொருள் தோன்றுதலே யன்றி 2. வேறொரு பொருள் தோன்ற இட முண்டாம்; 3. பலபொருள் தோன்றவும் இடமுண்டாம். முதலாவதாகிய அப்பொருள் தோன்றல் இருவழக்கிலும் பொருந்தும், பின் இரண்டும் மயக்கம் தரும் இயல்பின வாகவே, இருவழக்கிற்கும் பொருந்தா. கருதிய பொருள் செவ்வனே விளங்கக் கருவியாம் வகையில் உருபு முதலியன விரித்து வருதலும் இன்றியமையாததே. 1. வேற்றுமைத் தொகை : மரத்தை வெட்டினான் என்பது மரம் வெட்டினான் எனத் தொகின் அப்பொருள்பட்டது பொருந்தும். சாத்தனை வெட்டினான், சாத்தனொடு வந்தான், சாத்தற் குக் கொடுத்தான் - என்பவற்றைச் சாத்தன் வெட்டினான் - சாத்தன் வந்தான் - சாத்தன் கொடுத்தான் - எனத் தொகுப்பின் வேறு பொருள்படும். அது பொருந்தாது. கரும்புக்கு வேலி : இதனைக் கருப்பு வேலி எனத் தொகுப்பின் பல பொருள்படும். அது பொருந்தாது. 2. வினைத் தொகை : விரி நிலம் - குளிர் நீர் - சுடுதீ - பெய்மழை - இவை பொருந்தும். பார் நீர் (பார்த்த நீர்) என்னும் தொகை பாரும் நீரும் - நீரைப் பார் - எனப்பல பொருள்படுதலால் பொருந்தாது. ‘ஆகுவாகனம்’ என்னும் இத்தொகை ஆகும் வாகனம் எனப் பொருள்படலேயன்றி, பெருச்சாளி வாகனம் என்றும் வேறு பொருள்படுதலால் பொருந்தாது. ‘காமலர்’ என்னும் இத்தொகை காத்த மலர் எனப் பொருள் படலேயன்றி, சோலைமலர் என்னும் வேறு பொருள்படுத லால் பொருந்தாது. ‘பூவரசு’ என்னும் இத்தொகை பூத்த அரசு எனப் பொருள் படலேயன்றி, பூவரசு என்னும் மரவகையையும் குறித்தலால் பொருந்தாது. 3. பண்புத்தொகை : ஆருயிர் - ஆரணங்கு - ஆரமிர்தம் - என்னும் இவை உரிய பொருளே படுதலின் பொருந்தும். ஆர் அடிசில் - ஆர் நீர் - ஆர்வயிறு - ஆர்வாய் - போல்வன வினைத் தொகை யாகவும் பொருள்படும்; யார் என்பதன் மரூஉவாய் வேறு பொருளும்படும். ஆதலால் பொருந்தாது. 4. உவமைத் தொகை : மதிமுகம் - பவளவாய் - என்பன பொருந்தும். கடல் போல முழங்கிற்று - மழை போலப் பொழிந்தது - புலி போலப் பாய்ந்தது - என்பனவற்றைக் கடல் முழங்கிற்று - மழை பொழிந்தது - புலி பாய்ந்தது - என்று தொகை செய்யின் பொருந்தா. அவை எழுவாய்த்தொடர்களே ஆம். 5. உம்மைத் தொகை : கபிலபரணர் - உவாஅப் பதினான்கு - என்பன பொருந்தும். எட்டும் நூறும் - பொன்னும் மணியும் - வருவதற்கும் உரியன் - சாத்தனும் வந்தான் - என்பவற்றை எட்டு நூறு - பொன்மணி - வருதற்குரியன் - சாத்தன் வந்தான் - எனத் தொகைசெய்யின் உம்மைப்பொருள் தாரா. ஆதலின் பொருந்தாது. 6. அன்மொழித்தொகை : பொற்றாலி என்பது பொருந்தும், பொற்றாலியை அணிந்த பெண்ணைக் குறித்தலின். பொற் குடம் என்றல் பொருந்தாது. அது வேற்றுமைத்தொகையாயே நிற்கும். யாப்புப்பிழை தவிர்க்கும் கருத்துடன் பொருந்தாதனவற்றை யும் செய்யுள்விகாரம் என்னும் பெயரால் இடர்ப்பட்டு ஒரோவழிச் சான்றோர் தொகுப்பதுண்டு. அன்னார், அத்தகைய இடங்களில் விரிந்து நின்று பொருள்பட்டாற் போல மயக்க மின்றிப் பொருள்படும் கருவியாக, அத் தொகைக்கு முன்னும் பின்னும் தொடர்பு செய்வர். ஆதலின் தொகுத்த சான்றோர்க் கும் அத்தொகை ஆகாது என்பது கருத்தாயிற்று. ஆகவே, உருபு முதலாயின விரியாவிடத்து வேறு பொருள்பட்டும், இதுவோ அதுவோ என்னும் ஐயம் தோன்றப் பல பொருள் பட்டும் வருதலின், விரி வேண்டும் என்பது தெளிவு. தொகுக்கி னும் வல்லுநர் தொகுக்கின் பொருந்தும்; வல்லார் தொகுக்கில் பொருந்தாது. ஆதலின், வழு - வழுவியமைந்தது - வழுவற்றது - எனத் தொகைநிலை மூன்று எனத் தெளிக. (இ. கொ. 92) ‘தொக்குழி மயக்குந’ : உதாரணம் - தெய்வ வணக்கம் - தற்சேர்ந்தார் - எனவும், பொற்குடம் - திரையனூர் - எனவும், நாகர்பலி - போர் நேர்ந்தார் - எனவும், வையை வடக்கு - நோய் நீங்கினான் - எனவும், யானைக் கூடம் - கடல்திரை - எனவும், ஊர்ப்புக்கான் - ஊர்மனை - எனவும், அலர் முல்லை - தாழ்குழல் - எனவும், கோண்துலாம் - முந் நான்கு - எனவும், தளிரடி - தளவநகை - எனவும், பதினைந்து - தகர ஞாழல் - எனவும் வருமிவை இரண்டு தொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒருதொடர்த் தொகைமொழி. இவை விரியுமாறு : தெய்வத்தை வணங்கும் வணக்கம், தெய்வத்துக்கு வணக்கம்; தன்னைச் சேர்ந்தார், தன்பால் சேர்ந்தார் - எனவும், பொன்னால் செய்த குடம், பொன்னின் ஆகிய குடம்; திரையனால் செய்யப்பட்ட ஊர், திரையனது ஊர் - எனவும், நாகர்க்குப்பலி, நாகரது பலி; போர்க்கு நேர்ந்தான், போரை நேர்ந்தான் - எனவும், வையையின் வடக்கு, வையைக்கு வடக்கு; நோயின் நீங்கி னான், நோயை நீங்கினான் எனவும், யானையது கூடம், யானைக்குக் கூடம்; கடலினது திரை, கடலின்கண் திரை - எனவும், ஊரின்கண் புக்கான், ஊரைப் புக்கான்; ஊரின்கண் மனை, ஊரினுடைய மனை - எனவும், வேற்றுமையுருபுகள் முறையே மயங்கினவாறு. இனி, அலர்ந்த முல்லை - அலரையுடைய முல்லை; தாழ்ந்த குழல் - தாழ்ந்த குழலினையுடையாள் - என வினையுருபு மயங்கியவாறு. கோணாகிய துலாம் - கோணையுடைய துலாம்; மூன்றாகிய நான்கு - மூன்றனால் பெருக்கப்பட்ட நான்கு - என்றும், தளிரன்ன அடி- தளிரை ஒக்கும் அடி; தளவம் அன்ன நகை - தளவத்தை ஒக்கும் நகை என்றும், பத்தும் ஐந்தும் - பத்தின்மேல் ஐந்து; தகரமும் ஞாழலும் - தகரமும் ஞாழலுமுடைய சாந்து - என்றும் முறையே விரியுமாறும் காண்க. (நன். 372 மயிலை.) ‘தொக்குழி மயங்குந’ இரண்டு முதல் ஏழ்வரை பொருளால் மயங்குதல் - தெய்வ வணக்கம் - தெய்வத்தை வணங்கும் வணக்கம், தெய்வத்துக்கு வணக்கம் - என இருபொருளான் மயங்கிய ஒரு தொடர்த் தொகைச்சொல். தற்சேர்ந்தார் - தன்னைச் சேர்ந்தார், தன்னொடு சேர்ந்தார், தன்கண் சேர்ந்தார் - என மூன்று பொருளான் மயங்கியது. சொல்லிலக்கணம் - சொல்லினது இலக்கணம், சொற்கு இலக்கணம், சொல்லின்கண் இலக்கணம், சொற்கு இலக்கணம் சொன்ன நூல் - என நான்கு பொருளான் மயங்கியது. பொன்மணி - பொன்னின் ஆகிய மணி, பொன்னாகிய மணி, பொன்னின்கண் மணி, பொன்னொடு சேர்ந்த மணி, பொன்னும் மணியும் - என ஐந்து பொருளான் மயங்கியது. மரவேலி - மரத்தைக் காக்கும் வேலி, மரத்துக்கு வேலி, மரத்தினது வேலி, மரத்தின் புறத்து வேலி, மரத்தினாகிய வேலி, மரமாகிய வேலி - என ஆறு பொருளான் மயங்கியது. சொற்பொருள் - சொல்லான் அறியப்படும் பொருள், சொல்லினது பொருள், சொற்குப் பொருள், சொல்லின்கண் பொருள் , சொல்லும் பொருளும், சொல்லாகிய பொருள் சொல்லானது பொருள் - என ஏழ் பொருளான் மயங்கியது. வாளைமீன் உள்ளல் தலைப்படல் - வாளை மீனானது உள்ளலைத் தலைப்படுதல், வாளைமீனை உள்ளல் தலைப் படுதல் - என இருபொருளான் மயங்கிய பல தொடர்த் தொகைச்சொல் புலிகொல்யானை - புலியைக் கொன்ற, புலியானது கொன்ற, புலியாற் கொல்லப்பட்ட - என மூன்று பொருளான் மயங்கிய பல தொடர்த் தொகைச்சொல். (நன். 373 சங்.) தொகாநிலைத் தொடர்மொழி - முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் எழுவாயும் விளியுமாகிய ஐவகைப் பொருளின்கண் பெயர்வினைகள் புணரும் புணர்ச்சியும், வேற்றுமைப்பொருளின்கண் அவற்றின் உருபாகிய இரண்டாவது முதலிய ஆறும் இடையே விரிந்து நிற்பப் பெயர் வினைகள் புணரும் புணர்ச்சியும், ஏனைய இடைச்சொற் புணர்ச்சியும், உரிச்சொற் புணர்ச்சியும், ஒரு சொல் அடுக்கி வரும் புணர்ச்சியும் ஆகிய ஒன்பதும் (5 + 9) தொகா நிலைத் தொடர்களாம். அவை வருமாறு: உண்டான் சாத்தன், குழையன் கொற்றன் - முற்றுத்தொடர்; உண்ட சாத்தன், நல்ல சாத்தன் - பெயரெச்சத் தொடர்; உண்டு வந்தான், உழுதன்றி உண்ணான் - வினையெச்சத் தொடர்; சாத்தன் வந்தான் - எழுவாய்த் தொடர்; கொற்றா கொள் - விளித்தொடர்; குடத்தை வனைந்தான், வாளால் எறிந்தான், சாத்தற்குக் கொடுத்தான், மலையின் இழிந்தான், சாத்தனது தலை, மணியின்கண் ஒளி - இவை ஆறும் வேற்றுமைத் தொடர். ‘அதுகொல் தோழி காம நோயே’ குறுந். 5 - இடைச்சொற் றொடர்; ‘நனிபேதையே நயனில் கூற்றம்’ புற. 227 - உரிச்சொற் றொடர்; பாம்புபாம்பு - அடுக்குத் தொடர். ஆகவே பதினான்கு ஆமாறு காண்க. வேற்றுமைத்தொகையும் வினைத்தொகையும் விரிந்தவழி முறையே வேற்றுமைத் தொகாநிலையும் பெயரெச்சத் தொகா நிலையுமாம். பண்புத்தொகையும் உவமைத்தொகை யும் உம்மைத் தொகையும் விரிந்தவழி இடைச்சொற் புணர்ச்சி யாம். அன்மொழித்தொகை விரிந்தவழி வேற்றுமைத் தொகா நிலை முதல் ஏற்பன ஆம். (நன். 374 சங்.) தொகின் ஒன்றுமுதல் ஏழ்வரை பொருள் தருதல் - தொகைநிலைச் சொற்றொடர்கள் இரண்டு முதல் ஏழ் பொருள் வரை தரும். ‘தொக்குழி மயங்குந இரண்டுமுதல் ஏழ்வரை பொருளால் மயங்குதல்’ காண்க. அதன்கண் ‘தற் சேர்ந்தார்’ என்பதனிடத்தில் ‘கடிப்பகை’ எனக் கொள்க. கடிப்பகை - கடிக்குப் பகை, கடியினது பகை, கடியாகிய பகை - என மூன்று பொருளான் மயங்கியது - என இவ்விளக்கம் கொள்க. (இ. கொ. 93) தொகுக்கும்வழித் தொடுத்தல் - செய்யுள் அமைப்பிற்காகப் பெரும்பாலும் சந்தம் கருதி ஒரு சொல்லைத் தொகுக்க வேண்டியவழித் தொகுத்தல். எ-டு : இடைச்சொல் என்பதனை ‘இடை’ (251) என்றல். (தொ. சொ. 403 நச். உரை) தொகுத்தல் விகாரம் - ‘வேண்டார் வணக்கி விறல்மதில் தான்கோடல்’ (இடம் தெரிந்திலது) என்புழி, வேண்டாதாரை என்பது ‘வேண்டார்’ என இரண்டா வது தொக்கு நின்றது. தொகுத்தல் என்பது சுருக்குதல். அஃதேல், ‘தா’ என்ற எழுத்துத் தொக்கது எனலாம்; ஐயுருபு தொக வருதல் எதனுள் அடங்கும் எனின், ஐயுருபு உயர் திணையில் விரிந்தே வரல் வேண்டும் என்பது இலக்கணம் (தொ.எச். 157) ஆதலின், செய்யுளின்பம் வேண்டித் தொகப் பெறுதல் தொகுத்தல் விகாரம் என்று இவ்விலக்கணத்தான் கொள்ளப்படும். இவ்விகாரம் ஒருமொழிக்கண்ணது. (தொ. சொ. 399 தெய். உரை) தொகை - வேற்றுமையுருபு, வினைச்சொல் ஈறு, பண்புச்சொல் ஈறு, உவம உருபு, உம் என்னும் இடைச்சொல், தொக்க இரு மொழியும் அல்லாத வேறுசொற்கள் - இவை மறைந்திருப்பது தொகை என்ப ஒருசாரார். வேற்றுமை முதலிய பொருள்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகை ஆயின என்ப ஒருசாரார். இளம்பூரணர் நச்சினார்க்கினியர் என்னும் இருவரும், வேற்றுமையுருபு - உவமவுருபு - வினைச்சொல் ஈறு -பண்புணர்த்தும் ஈறு - எண்ணும்மை - இத்தொகைச் சொற் கள் அல்லாததொரு சொல் - ஆகியவை தொக்குநிற்றலே தொகை என்னும் கருத்தினர். வேழக்கரும்பு - கேழற்பன்றி - என்பனவற்றிலும் ஒன்றனை ஒன்று விசேடித்து நிற்கின்ற தன்மையை உணர்த்தும் ‘ஆகிய’ என்ற சொல் தொக்கு நின்றது என்பதே பொருந்தும். செய்தான் பொருள் - இருந்தான் குன்றத்து - ‘முயங்கினென் அல்லனோ யானே, கழூஉவிளங்கு ஆரம் கவைஇய மார்பே’ (புற. 19) - ‘போற்றாய்....... மாற்றுமைக் கொண்ட வழி’ (கலி. 12) - என இரண்டனுருபும் ஏழனுருபும் தொக்குநின்றவழியும் தம் முடிக்கும் சொல்லோடு ஒட்டி ஒருசொல் நீர்மைப்படச் சொற்கள் இயைந்தில. ‘தோன்றும்............. தோன்றல் மறந்தோர் துறைகெழு நாட்டே’ எனவும், ‘சேந்தனை செலினே.......... சிறுகுரல் நெய்தல்எம் பெருங்கழி நாட்டே’ (அக. 120) எனவும், ஏழனுருபு தொக்கு விட்டிசைத்தே பொருந்தியுள்ளது. ஆதலின் ஒட்டி ஒருசொல் நீர்மைப் படுதல் தொகையிலக்கணம் ஆகாது, உருபு முதலியன தொகு தலே தொகை எனப்படும். வினைத்தொகையும் பண்பின் தொகையும் சிறிது தொக்குத் தொகையாகும்; ஏனைய முழுதும் தொக்குத் தொகையாம். ‘ஐம்பால் அறியும் பண்புதொகு மொழியும்’ (எ. 482) ‘செய்யும் செய்த என்னும் கிளவியின் மெய்யொருங்கு இயலும் தொழில்தொகு மொழியும்’ (எ. 482) ‘உருபு தொக வருதலும்’ (சொ. 105) ‘மெய்யுருபு தொகாஅ இறுதியான’ (சொ. 106) ‘பண்புதொக வரூஉம் கிளவி யானும் உம்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பொருள்வயி னானும்’ (சொ. 418) முதலிய தொல்காப்பிய நூற்பாக்கள் ‘உருபு முதலியன தொகுதலே தொகை’ என்று குறிப்பிடும். (தொ. சொ. 412 நச். உரை) செய்தான் பொருள், இருந்தான் குன்றத்து - போன்ற தொடர் களில் உருபு மறைந்துள; ஆயின் விட்டிசைத்தலின் இவை தொகை அல்ல. வேழக்கரும்பு - கேழற்பன்றி - போன்ற தொடர்களில் எதுவும் தொகவில்லை; ஆயின் இவை ஒன்று பட்டு இசைத்தலான் தொகையாகும். ஆகவே, உருபு மறைந் திருத்தல் எல்லாத் தொகையின்கண்ணும் காணப்படவில்லை. ஒட்டி ஒருசொல் நீர்மைப்படுதலே எல்லாத் தொகை யின்கண்ணும் காணப்படுதலின் ‘ஒட்டி ஒருசொல் நீர்மைப் படுதலே’ தொகை யிலக்கணமாம் என்பர் சேனாவரையர்.(தொ. சொ. 412) நிலங்கடந்தான், வாள்வெட்டினான், கொலைஉடன்பட்டான், வரைபாய்ந்தான், குன்றத்திருந்தான் - என இறுதி வினை முற்றுப் படுத்தலோசையான் பெயராயவழி, இரண்டு பெய ரும் ஒட்டி ஒரு சொல்லாகியே வரும். தொழிற்பெயர்களும் கள்ளுண்டல் - வாள்வெட்டல் - கொலையுடம்படுதல் - வரை பாய்தல் - குன்றத்திருத்தல் - என ஒட்டி ஒரு சொல்லாகத் தொகும். அற்றேல், அவ்வாறு வருவன உருபுதொகை என அடங் காவோ எனின், ஆண்டு அவ்வேற்றுமைகட்கு ஓதிய வாய் பாட்டான் தொழிலொடும் பெயரொடும் முடிவுழி உருபு மாத்திரம் தொக்கு இரண்டு சொல்லாய் நிற்கும். ஈண்டு ஒரு சொல்லாய் வரும். மரக்கோடு என்றவழி ஒட்டுப்பட்டுப் பொருள் தொகையாகி நின்றது. மரத்தின்கோடு என்றவழி உருபு தொகையாகி இரண்டு சொல்லாகி நின்றது. வேற்றுமை மொழிமாறி நிற்கும் ஆதலின், அத்தொகைச் சொல் மொழி மாறி நின்று ஒட்டுப்படுதலும் கொள்க. மலையதிடை மலையதகம் - என்பன இடைமலை - அகமலை - எனவும் வரும். தொகைக்கண் பலசொற்கள் ஒட்டிவரினும் அவை இரண் டிரண்டாகவே முதற்கண் ஒட்டிப் பின் பலசொற் களாக ஒட்டி வரும். வாள்நுதல், கற்பின் வாணுதல், வாணுதல் கணவன், கற்பின் வாணுதல் கணவன் - என ஒட்டிக் காண்க. (முருகு. 6) எனவே, ஒட்டி ஒருசொல் நீர்மைப்படுதலே தொகை என்பது தெய்வச்சிலையாரது கருத்தாம். (தொ. சொ. 408 தெய். உரை) வேற்றுமையும் உம்மையும் வினையும் பண்பும் உவமையும் அன்மொழியும் தொக்கவிடத்து ஒருசொற்போலத் தொகை நடக்கும்; பலசொல் உடன் தொக்கவிடத்தும் ஒருசொற் போல நடக்கும். (வேற்றுமையுருபும் - உம்மையுருபும் - கால இடை நிலையும் விகுதியும் - பண்பை விளக்கும் ஆகிய என்னும் சொல்லும் - உவமவுருபும் - தொக்க மொழிகளல்லாத வேறு சொல்லும் - என்னுமிவை இடையே தொகுவன.) அவை வருமாறு : நிலங்கடந்தான் - பொற்பூண் - கருப்புவேலி - வரைவீழருவி யானைக்கோடு - குன்றத்துக் கூகை : வேற்றுமைத் தொகை; உவாப்பதினான்கு : உம்மைத் தொகை ; தாழ்குழல் : வினைத் தொகை. வட்டத்தடுக்கு : பண்புத்தொகை; வேய்த்தோள்: உவமத் தொகை; பொற்றொடி (வந்தாள்): அன்மொழித் தொகை. (நேமி. எச்ச. 1 உரை) தொகை அல்லாத தொடர் ஒருசொல்நடைத்து ஆதல் - எ-டு : யானை கோடுகூரிது, இரும்பு பொன்னாயிற்று, மன்று பாடவிந்தது, மக்களை உயர்திணைஎன்ப - எனத் தொடர்களும் ஒட்டி ஒருசொல் நீர்மையவாய் முடிக்கும் சொல்லாக வரும். (தொ. சொ. 420 சேனா. நச். உரை) ‘சூரனை வென்றான்’ என்னும் தொடர் ஒட்டி ஒருசொல் நீர்மையதாய் ‘வந்தான்’ என்ற வினையான் முடிக்கப்பட்ட வாறு காண்க. இவ்வாறு தொகை அல்லவாகிய தொடர்மொழி ஒட்டி ஒருசொல் நீர்மையவாய் எழுவாய்க்கும் இரண்டாவதற்கும் முடிக்கும் சொல்லாகவும், எழுவாயாகவும் நின்றன. தொகை ஒருசொல்நடைத்து ஆதல் - திருமால் நிலங்கடந்தான், முருகன் மாத்தடிந்தான் - என முன்மொழி வினையாயவழி தொகை ஒருவினைச்சொல் நீர்மைத்து; நிலங்கடந்தான் திருமால், மாத்தடிந்தான் முருகன் - என முன்மொழி பெயராயவழி, தொகை ஒரு பெயர்ச்சொல் நீர்மைத்து. (முன் : இடமுன்) ‘பெயரினாகிய தொகையும் உள’ என்றதனான், பெயரொடு பெயர் தொக்க தொகையும் பெயரொடு வினை தொக்க தொகையும் உள என்பதும், அவை இருசொற்கள் தொகுத லான் அமைவனவேனும் ஒருசொல் நீர்மையவாய்ப் பெயரா யின் உருபேற்றும் பயனிலைகொண்டும், வினையா- யின் பெயர்க்கு முடிக்கும் சொல்லாகவும் அமையும் என்பதும் கொள்ளப்படும். (தொ.சொ,67 சேனா. உரை) தொகை ஒருசொல்நீர்மைப்படுதலின், கபிலன் பரணன் என்பன உம்மைத்தொகையாயவழிக் கபிலபரணர் என அர் விகுதி பெற்று ஒரு சொல் நீர்மையவாய் ‘வந்தார்’ எனப் பலர்பால் வினை கொண்டு முடியும். (421 சேனா, உரை) ‘துடியிடை நெடுங்கண் துணைமுலைப் பொற்றொடி - இஃது அறுவகைத் தொகையும் ஒருங்கே தொக்கது.’ (420, 421 நச். உ ரை) தொகைக்குறிப்புச்சொல் - ‘அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ’ (புற. 2) - ஐவர் என்ற தொகைக்குறிப்புச்சொல் பாண்டவரைக் குறிப்பான் உணர்த் திற்று. ‘ஒன்றின் இரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினான் வென்று களங்கொண்ட வேல்வேந்தே - சென்றுலாம் ஆழ்கடல்சூழ் வையகத்துள் ஐந்துவென்று ஆறடக்கி ஏழ்கடிந்து இன்புற் றிரு’ (பு. வெ. 225) இதன்கண், ஒன்று - ஞானம்; இரண்டு - நல்வினை தீவினை; மூன்று - நட்புப் பகை நொதுமல்; நான்கு - யானை தேர் குதிரை காலாள், சாமபேததானதண்டம்; ஐந்து - மெய் வாய் கண் மூக்குச் செவி; ஆறு - படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண்; ஏழ் - வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருளீட்டம் கள் காமம் என இவை. இவற்றுள் இரண்டு முதலியன தொகைக்குறிப்பாம். (நன். 269 சங்.) தொகைகள் விரியுமிடத்து வரும் தொகாநிலைகள் - வேற்றுமைத்தொகை விரிந்தபோது வேற்றுமைத் தொகா -நிலையாம். வினைத்தொகை விரிந்தபோது பெயரெச்சத் தொகாநிலையாம். பண்புத்தொகையும் உவமைத்தொகையும் உம்மைத்தொகையும் விரிந்தபோது இடைச்சொற்புணர்ச்சி யாம். அன்மொழித்தொகை விரிந்தபோது வேற்றுமைத் தொகாநிலை முதல் ஏற்பனவுமாம். (நிலத்தைக் கடந்தான், அட்ட களிறு, கருமையாகிய குவளை, குருவி போலக் கூப்பிட்டான், கபிலனும் பரணனும், பொன்னாலாகிய தொடியை அணிந்தவள் - என விரிகளை முறையே காண்க.) (நன். 415 இராமா.) தொகைகளுள் பொருள் சிறக்கும் இடம் - தொகையில் முன்மொழி - பின்மொழி - இருமொழி - புற மொழி - என்னும் நான்கிடத்தும் பொருள் சிறக்கும். வருமாறு: (முன், பின்: இடம் பற்றியன.) வேங்கைப்பூ - நறிது என்னும் வினைக்கு ஏற்றது பூ ஆதலின், பூ என்ற முன்மொழிக்கண் பொருள் சிறந்தது. முல்லைமலர் சூடினாள் - முல்லை என்ற சிறப்புப்பெயரே ஆகு பெயரால் பூவை உணர்த்தச் சூடினாள் என்ற வினைக்குச் சிறப்பாக அப்பின்மொழிக்கண் பொருள் சிறந்தது. வேற்கண் சிவந்தாள் - கண் என்ற முன்மொழிக்கண் பொருள் சிறந்தது. பெண்ணங்கு வந்தாள் - அணங்கு போலும் பெண் - எனப் பெண் என்ற பெயரே சிறத்தலின், பின்மொழிக்கண் பொருள் சிறந்தது. கொல்யானை வந்தது - யானை என்னும் முன்மொழிக்கண் பொருள் சிறந்தது. தீந்தேன் பருகினான் - தேன் என்னும் முன்மொழிக்கண் பொருள் சிறந்தது. உவாஅப்பதினான்கு - உம்மைத்தொகை தொக்க இரு மொழிக் கண்ணும் பொருள் சிறந்தன. வெள்ளாடை வந்தாள் - அன்மொழித்தொகை தொக்க இருமொழியும் அல்லாத புறமொழியான (வெள்ளாடையை) உடுத்தாள் என்பதன்கண் பொருள் சிறந்தது. இவ்வாறு வினைத்தொகை முன்மொழியிலும், உம்மைத் தொகை இருமொழியிலும், அன்மொழித்தொகை புறமொழி யிலும், ஏனைய வேற்றுமை - பண்பு - உவமத் தொகைகள் இடம் நோக்கி முன்மொழி அன்றிப் பின்மொழியிலும் பொருள் சிறக்குமாறு காண்க. (ஈண்டுப் பின் முன் இடம் பற்றி வந்தன.) பண்புத்தொகையே யன்றி, வேற்றுமை வினை உவமத் தொகைகளுக்கும் விசேடித்தல் சிறுபான்மை வருதலின் தொக்க இருமொழியுள் ஒன்றன்கண்ணது பொருட்சிறப்பு எனப்பட்டது. (தொ. சொ. 419 நச். உரை) 1-3 பொருள் சிறக்கும் சொல் பிரதான பதம் எனப்படுகிறது. தற்புருடன் (வேற்றுமைத்தொகை), துவிகு (எண்தொகை), கருமதாரயன் (பண்புத்தொகை) - என்னும் இம்மூன்றும் உத்தரபதம் என்னும் பின்மொழியில் பொருள் சிறப்பன. 4. பிரதமா தற்புருடன் (தமிழில் முன்பின்னாகத் தொக்க ஆறாம்வேற்றுமைத்தொகை) பூர்வபதம் என்னும் முன்மொழியில் பொருள் சிறப்பது. 5,6. அவ்வியயீ பாவம் என்னும் இடைச்சொல்தொடரும், உபமித சமாசனும் ஒருகால் முன்மொழியிலும் ஒருகால் பின்மொழியிலும் பொருள் சிறக்கும். (உபமிதசமாசம் தமிழில் உவமத்தொகையாகவும், ஆகிய என்னும் சொல்லால் விரியும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை யாகவும் அடங்கும். வட மொழியில் இது பிரதமாதற்புருடன் - முதல்வேற்றுமைத் தொகை - என்று கொள்ளப்படும்.) 7. துவந்துவ சமாசம் என்னும் உம்மைத்தொகையுள் எல்லாச் சொற்களிலும் பொருள் சிறக்கும். 1. யானைக்கோடு, பலாக்காய் - பின்மொழியில் பொருள் சிறந்தது. 2. இருதேவர் பார்ப்பார் - பின்மொழியில் பொருள் சிறந்தது. 3. நீலக்குவளை, சாரைப் பாம்பு - பின்மொழியில் பொருள் சிறந்தது 4. நுனிநா (நாநுனி) - முன்மொழியில் பொருள் சிறந்தது. 5. யதாக்கிரமம் (முறைப்படி) உபகும்பம் (குடத்தருகே) சாகப் பிரதி (கறிக்குப் பிரதியாக) ஒருகால் பின்மொழியிலும் ஒருகால் முன்மொழியிலும் பொருள் சிறந்தது. 6. மதிமுகம், பெண்ணணங்கு - ஒருகால் முன்மொழியிலும் ஒரு கால் பின்மொழியிலும் பொருள் சிறந்தது. 7. உவாஅப் பதினான்கு (உவாவும் பதினான்கும்) இராப்பகல் (இரவும் பகலும்) கபிலபரணர் (கபிலனும் பரணனும்) ‘எழுத்தசை சீர்பாதம்அடிதொடை’ இவை எல்லாச் சொற்களிலும் பொருள் சிறந்தன. (ஈண்டு முன், பின் : இடம் பற்றி என்க). (பி. வி. 25) தொகைகளை விரித்துப் பொருள் கோடல் - திரையனூர் : திரையனான செய்யப்பட்ட ஊர், திரையனது ஊர் - என மூன்றாவதும் ஆறாவதும் விரிந்தன. கடிப்பகை : கடிக்குப் பகை, கடியது பகை, கடியாகிய பகை - என நான்காவதும் ஆறாவதும் பண்பும் விரிந்தன. ஏழேகால் : ஏழும் காலும் என உம்மையும், ஏழேகால் நிலமான ஊர் - என அன்மொழியும் விரிந்தன. சொல்லிலக்கணம் : சொல்லது இலக்கணம், சொல்லுக்கு இலக் கணம், சொல்லின்கண் இலக்கணம் - என ஆறாவதும் நான்காவதும் ஏழாவதும் விரிந் தன. சொல்லிலக்கணம் கூறிய நூல் - என ஆகுபெயருமாய் நின்றது. பொன்மணி : பொன்னானாகிய மணி, பொன்னின் (வேறான) மணி, பொன்னின்கண் மணி, பொன்னும் மணியும் - என மூன்றாவதும் ஐந்தாவதும் ஏழாவதும் உம்மையும் விரிந்தன. கரும்புவேலி : கரும்புக்கு வேலி, கரும்பினது வேலி, கரும்பின்- கண் வேலி, கரும்பினான் இயன்ற வேலி, கரும்பினின் நீங்கிய வேலி - என நான்கும் ஆறும் ஏழும் மூன்றும் ஐந்தும் விரியும். இயலிசை : இயலது இசை, இயலின்கண் இசை, இயலும் இசையும், இயல்கின்ற இசை, இயலாகிய இசை - என ஆறும் ஏழும் உம்மையும் வினையும் பண்பும் விரிந்தன. உரைவிரி : உரையது விரி, உரையின்கண் விரி, உரைக்கு விரி, உரையை விரிக்கும் விரி, உரைவிரியை உடையது - என ஆறும் ஏழும் நான்கும் இரண்டும் அன்மொழியும் விரிந்தன. கருத்துப்பொருள்: கருத்தையுடைய பொருள், கருத்தான் ஆகிய பொருள், கருத்தின் (ஒன்றிய) பொருள், கருத்துக்குப் பொருள், கருத்தது பொருள், கருத்தின்கண் பொருள், கருத்தும் பொருளும் - என இரண்டு மூன்று ஐந்து நான்கு ஆறு ஏழு என்னும் உருபுகளும் உம்மையும் விரிந்தன. சொற்பொருள் : சொல்லான் ஆகிய பொருள், சொல்லுக்குப் பொருள், சொல்லின் (வேறான) பொருள், சொல்லது பொருள், சொல்லும் பொருளும், சொல்லாகிய பொருள் - என மூன்றும் நான்கும் ஐந்தும் ஆறும் உம்மையும் பண்பும் விரிந்தன. இவ்வாறு தொகைகள் பல்லாற்றானும் இடம் நோக்கி விரித்துப் பொருள் கொள்ளப்படும். (தொ. சொ. 463 நச். உரை) தொகைச்சொல் இன்றியமையாத எண்ணிடைச்சொற்கள் - எனா என்றா ஏ - என்னும் எண்ணிடைச்சொற்கள் தொகை பெறுதல் வேண்டும். இடைச்சொல்லானன்றிப் பெயரான் எண்ணப்படும் செவ்வெண் இறுதியும் தொகைபெற்று இயலும். வருமாறு : ‘நிலன்எனா நீர்எனா இரண்டும்’, ‘நிலன் என்றா இரண்டும்’, ‘நிலனே நீரே என இரண்டும்’ என முறையே காண்க. நிலன் நீர் இரண்டும் : செவ்வெண் தொகை பெற்று வந்தது. (தொ. சொ. 289, 290 சேனா. உரை) தொகைச்சொல் என்பதன் பொருள் - ‘பண்பு தொகு மொழியும்’ (எ. 482) ‘தொழில் தொகு மொழியும்’ (எ. 482) - தொக வருதலும் (சொ. 105) ‘தொக வரூஉங் கிளவி’ (சொ. 418) ‘உம்மை தொக்க பெயர்’ (சொ. 418) ‘வேற்றுமை தொக்க பெயர்’ என ஆசிரியர் ‘தொக்கே நிற்கும்’ எனச் சூத்திரம் செய்தலின், வேற்றுமை யுருபும் உவமவுருபும் உம்மும் வினைச்சொல் ஈறும் பண்புணர்த்தும் ஈறும் இத்தொகைச் சொற்கள் அல்லாததொரு சொல்லும் தொக்கு நிற்றலின் தொகைச் சொல் என்பதே ஆசிரியர் கருத்தாம். (தொ. சொ. 412 நச். உரை) தொகைச்சொல்லும் தொகைமொழியும் - இரண்டு முதலாய சொற்கள் தம்முள் இணைந்து நின்று ஒரு பொருளைக் குறித்து நிற்பவை தொகைச்சொல்லாம். தொகைச் சொற்கள் தம்முள் ஒன்றை ஒன்று விசேடிக்காமல், யாவும் நோக்குடைய ஒருபொருளையே சிறப்பித்து வரும். தொகைச்சொல்லுள் தனிச்சொற்களேயன்றித் தொகை மொழிகளும் இணைந்து வரும். வரையறை இல்லை. தனிப் பெயராகவும் பெயரொடு வினைச்சொல் கலந்ததாகவும் வரும். எ-டு : ஏர்உழவன், நிலங்கடந்தான் இனித் தொகைமொழி இரண்டு முதலாய சொற்கள் இணைந்து ஒருமொழி போல வரும். இதற்கு வரையறை உண்டு. உம்மைத்தொகையுள் சொற்கள் இரண்டும் இரண் டற்கு மேலும் அமைந்து வரும். ஏனையவை இரண்டே சொற் களான் வரும்; இரண்டற்கு மேற்படின் ஒன்றனோடு ஒன்றைத் தொகுத்து இரண்டாகவே கொள்ளப்படும். தொகை மொழிகள் பெயராகவே தொக்கு வரும். உம்மைத் தொகை நீங்கலான ஏனைய தொகைகள் ஒருபொருளையே உணர்த்தும். எ-டு : பால்மொழி, பொற்றொடி (வந்தாள்) (தொ. சொ. பக். 19 ச. பால.) தொகைநிலைத் தொடர்ச்சொல் - இரண்டும் பலவுமாகிய சொற்கள் உருபும் உம்மும் தம் மிடையே தொக்குநிற்பத் தம்மில் தாம் தொக்கு ஒருசொல் நடையவாய் முடிவனவும், இடையே தொக்கு நிற்பன பிறிது ஒன்றின்றித் தம்மில் தாமே தொக்கு ஒருசொல் நடையவாய் முடிவனவும் எனத் தொகைநிலைத் தொடர் இருவகைப் படும். (உருபு - வேற்றுமை, உவமையுருபுகள்) எ-டு : சாத்தன் கை, பவளவாய், இராப்பகல்; வேழக் கரும்பு - என முறையே காண்க. (இ.வி. 334 உரை) தொகைநிலைத் தொடர்மொழி - பெயர்ச்சொல்லொடு பெயர்ச்சொல்லும் பெயர்ச் சொல் லொடு வினைச்சொல்லும் வேற்றுமை - வினை - பண்பு - உவமை - உம்மை - அன்மொழி - என வகுக்கப்படும் அறு வகைப் பொருட் புணர்ச்சிக்கண் அவற்றின் உருபுகள் இடையே தொக்கு நிற்ப, இரண்டு முதலிய பல சொற்கள் தொடர்ந்து ஒரு மொழிபோல் நடப்பன தொகைநிலைத் தொடர்மொழி களாம். தொகை என்னும் பலபொருள் ஒரு சொல் ஈண்டு உருபு மறைதலை உணர்த்தி நின்றது. வினையொடு வினை தொகைநிலைத்தொடர் ஆகாது; வேற்றுமையில் உருபு விரிந்ததேல் ‘நிலத்தைக் கடந்தான்’ எனப் பிளவுபட்டும், உருபு தொக்கதேல் ‘நிலங்கடந்தான்’ என ஒரு சொல் நீர்மைப்பட்டும் வரும். நிலங்கடந்தான், கொல்யானை, கருங்குதிரை, மதிமுகம், கபிலபரணர், பொற்றொடி (வந்தாள்) - என ஆறுதொகை களும் ஒரு சொல் நீர்மையவாய் வந்தன. (நன். 361, 362 சங்.) தொகைநிலைத் தொடர்மொழிகள் மயங்குதல் - தொகைநிலைத் தொடர்மொழிகளை விரிக்குமிடத்துத் தமக்கு இயல்பாயுள்ள ஒருபொருளே யன்றி இரண்டு முதல் ஏழ் எல்லைகாறும் பொருள் விரிப்பதற்கு வாய்ப்புண்டு. தெய்வ வணக்கம் - தெய்வத்தை வணங்கும் வணக்கம், தெய்வத்துக்கு வணக்கம் (2) தற்சேர்ந்தார் - தன்னைச் சேர்ந்தார், தன்னொடு சேர்ந்தார், தன்கண் சேர்ந்தார் (3) சொல்லிலக்கணம் - சொல்லது இலக்கணம், சொற்கு இலக் கணம், சொல்லின்கண் இலக்கணம், சொல்லிலக்கணம் சொன்ன நூல். (4) பொன்மணி - பொன்னாலாகிய மணி, பொன்னாகிய மணி, பொன்னின்கண் மணி, பொன் னொடு சேர்ந்த மணி, பொன்னும் மணியும். (5) மரவேலி - மரத்தைக் காக்கும் வேலி, மரத்தான் ஆய வேலி, மரத்துக்கு வேலி, மரத்தி னது வேலி, மரத்தின்புறத்து வேலி, மரமாகிய வேலி. (6) சொற்பொருள் - சொல்லால் அறியப்படும் பொருள், சொல்லினது பொருள், சொற்குப் பொருள், சொல்லின்கண் பொருள், சொல்லும் பொருளும், சொல்லாகிய பொருள், சொல்லானது பொருள். (7) இனித் தடுமாறுமொழிக்கண் பலதொடர்த் தொகைச் சொற் களாய் வருமாறு : ‘வாளைமீன் உள்ளல் தலைப்படல்’ (திரி.7) - வாளைமீனை உள்ளல் தலைப்படல் எனவும், வாளைமீன் உள்ளலைத் தலைப்படல் - எனவும், இரண்டாவதும் எழுவாயும் ஆகிய இருபொருளான் மயங்கிற்று. புலிகொல் யானை, குரங்கெறி விளங்காய் என்பன, புலியைக் கொன்ற யானை - புலியானது கொன்ற யானை - புலியால் கொல்லப்பட்ட யானை எனவும், குரங்கை எறிந்த விளங்காய் - குரங்கானது எறிந்த விளங்காய் - குரங்கால் எறியப்பட்ட விளங்காய் - எனவும், முறையே இரண்டாவதும் எழுவாயும் மூன்றாவதும் ஆகிய மூன்று பொருளான் மயங்கின. இவை யெல்லாம் பலதொடர்த் தொகைச்சொல். (நன். 373 சங்.) தொகைநிலை, தொகாநிலை என்பவற்றின் மூவகை விளக்கம் - 1. வேற்றுமையுருபு முதலிய இடைநிலை தொக்கு நிற்றலின் தொகைநிலை; (இடையில் நிற்பனவாகிய உருபு முதலியன) எ-டு : நூல் கற்றான். நூலைக் கற்றான் என்பது விரியாம் தொகாநிலை; 2. நிலைமொழி வருமொழி நீக்கமின்றி, ஈறும் முதலும் இசைந்து நின்று விட்டிசைக்காமல் (உருபு விரிந்திருந்தும்) ஒரு சொல் நீர்மைப்பட்டு அதன் விதியைப் பெறுவது. எ-டு : சூரனைவென்றான் வந்தான் : இதன்கண், ‘சூரனை வென்றான்’ என்னும் பதம் மேற்கூறிய இலக்கணம் பெற்று ஒருசொல் நீர்மைப்பட்டு ‘வந்தான்’ என்ற வினைமுடிபு கொண்டது. இதுவே தொகை என்பது. ‘முருகன் சூரனை வென்றான்’ என்புழி மூன்று சொற்களும் விட்டிசைத்தலால் ஒருசொல் நீர்மை இல்லை. இது தொகாநிலை. (இ. கொ. 96) 3. பலசொல் கூடி ஒருசொல்லேயாகிப் பிளவுபட் டிசைக்கா மலும், பிரிக்கப்படாமலும், ஈறு முதல் இவையெனப் படாமலும் தொகுவதே தொகைநிலையாம். எ-டு : ‘ஒரு கோட்டிரு செவிமுக்கண் நால்வாயன்’, ‘உல்லாச நிராகுலயோகஇத(ச்)சல்லாபவிநோதன்’, ‘துடியிடை நெடுங்கண் துணை முலைப் பொற்றொடி’, மன்னகுமரன், சங்கபடகம், வட்டவள்ளம், பவள வாய், கமலபாதம் - இவை மேற்கூறிய இலக்கணங்களைப் பெற்றுத் தொக்கு ஒருசொல்லாகவே நின்றவை. ‘ஒருகோட்டன் இருசெவியன் முக்கண்ணன் நால்வாயன்’ எனவும், ‘உல்லாசன் நிராகுலன் யோகவிதன் சல்லாபன் விநோதன்’ எனவும், ‘துடியிடையாள் நெடுங்கண்ணாள் துணைமுலையாள் பொற்றொடியாள்’ எனவும், மன்னன் குமரன் - சங்கம் படகம் - வட்டம் வள்ளம் - பவளம் வாயள் - கமலம் பாதம் - எனவும் வெவ்வேறாய்ப் பிரிந்தும் பிளந் திசைத்தும் ஈறும் முதலும் இவையெனத் தெரிந்தும் இவை பல பெயராகவே நின்றன. இவை தொகாநிலை. (இ. கொ. 96) 1. உருபு முதலாயின தொகுதலின் தொகை, 2. உருபு முதலிய விரிந்தும் இரண்டு முதலாயின பல சொற்கள் ஒட்டி ஒரு சொல் நீர்மைப்படுதலின் தொகை, 3. உருபு விரியாது பலசொற்கள் ஒட்டி ஒருசொல் நீர்மைப்படுதலின் தொகை - என்ற முத்திறக் கருத்துக்கள் கூறப்பட்டன. இவை மூன்றுமே மாறுபடாதவை என்பது இ. கொ. உடையார் கருத்து. நச்சினார்க்கினியர் முதலாயினோர் முதற் கருத்தினர். சேனா வரையர், பி.வி. நூலார் முதலாயினோர் மூன்றாம் கருத்தினர். தொகைநிலை : பொருள் - தொகை என்னும் பலபொருள் ஒருசொல் ஈண்டு உருபு மறைதலை உணர்த்தி நின்றது, ‘ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின், மெய்யுருபு தொகாஅ இறுதி யான’ (தொ. சொ. 106 நச்.) என்ப ஆகலின். (நன். 361 சங்.) தொகைநிலை பொருள் சிறக்கும் இடம் - குடம் வனைந்தான் - வேங்கைப் பூ - முள்மரம் - விரிபூ - செந்தாமரை - கயற்கண் - என்பனவற்றுள், முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலின் முன்மொழிக்கண் பொருள் சிறந்தும் பின்மொழிக்கண் சிறப்பின்றியும் நின்றன. (முன் : காலமுன்) நிலம் உழுதான் - நீர்க்குவளை - சுடுதீ - செஞ்ஞாயிறு - என்பன வற்றுள் முன்மொழிகள் இனமும் இனத்தை விலக்கு தலும் இன்றி நின்றமையின் முன்மொழிக்கண் பொருள் சிறப்பின்றியும் பின்மொழிக்கண் பொருள் சிறந்தும் நின்றன. கபிலபரணர் - புலிவிற்கெண்டை - முதலிய உம்மைத் தொகைகள் அனைத்து மொழிக்கண்ணும் பொருள்சிறந்தன. பூங்குழல் - தாழ்குழல் - என்றற்றொடக்கத்து அன்மொழிக் கண் அனைத்து மொழிக்கண்ணும் பொருள் சிறப்பின்றிப் புற மொழிக்கண் பொருள் சிறந்தன.(நன். 370 சங்.) தொகைப்பெயரும் பயனிலை கோடல் - தனிப்பெயர்களே யன்றிப் பெயரொடு பெயர் தொக்க தொகைகளும் எழுவாயாய்ப் பயனிலைகொண்டு முடியும். எ-டு : யானைக்கோடு கிடந்தது, கொல்யானை வந்தது, உவாஅப்பதினான்கு கழிந்தன, மதிமுகம் வியர்த்தது, கருங்குதிரை ஓடிற்று, பொற்றொடி வந்தாள். (தொ. சொ. 67 சேனா, உரை) தொகைபற்றித் தொகலும், விகாரத்தால் தொகலும் - கடந்தான் நிலம் - இருந்தான் குன்றத்து - ‘தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே’ (குறுந். 35) - ‘புள்ளினிர் மன்ற எற்றாக் குறுதலின்’ (மலை.66) என்பன நிலத்தை - குன்றத் துக்கண் - அழலான் - எற்றாக்குறுதலினால் - என வேற்றுமை யுருபுகள் இறுதிக்கண் தொகும் என்பதும் கொள்க. தொகைப் பாடு இல்லாவிடத்து உருபு முதலியன தொகுதல் விகார வகையால் என்பது கொள்க. (நன். 362 மயிலை.) தொகைபெற்றே வரும் இடைச்சொற்கள் - ‘தொகைச்சொல் இன்றியமையாத எண்ணிடைச் சொற்கள்’ காண்க. தொகையில் இரண்டுசொல் ஒருதொகை ஆதல் - ‘உலகம் உவப்ப.......... கணவன்’ (முருகு. 1-6) - என்பதன்கண், பல சொற்கள் தொடர்ந்து வரினும், பூத்தொடை போலக் கொள்ளல் வேண்டும். முற்பட இரண்டு பூவை எடுத்து ஒன்றாகக் கட்டும்; பின் அவ்விரண்டும் ஒன்றாகி நின்ற தொடையொடு கூடப் பின்னும் ஒரு பூவை எடுத்துக்கட்டும்; அதன்பின் அம்மூன்று பூவும் ஒன்றாகி நின்ற தொடையொடு கூடப் பின்னும் ஒரு பூவை எடுத்துக்கட்டும். இவ்வாறு எல்லாப் பூவும் இரண்டு ஒன்றாக இணையும். சொல் தொடையும் ஒட்டுப்படுங்கால் அவ்வாறு வரும். (தொ. சொ. 408 தெய். உரை) தொகையின் மூவகை - ஒருமொழி போல் தொகை நடத்தலாவது, பல சொல்லே எனினும் தொடர்ந்து ஒற்றுமைப்பட்டு ஒரு பெயராய் எட்டு வேற்றுமைகளையும் வினைகளையும் ஏற்றலும், நிலைமொழி வருமொழிகளாய்ப் புணர்ச்சி வகை ஏற்றலும், ஒரு வினைச் சொல்லேயாய்ப் பெயரேற்றல் முதலான வினையிலக்கணம் எல்லாம் ஏற்றலும் - என மூவகையாகக் கொள்க. நன். 360 மயிலை. எ-டு : யானைக்கோடு - யானைக்கோட்டை - யானைக் கோட்டால்........ (உருபேற்றல்) ; யானைக்கோடு வந்தது (வினையேற்றல்) யானைக்கோடு + நுனி = யானைக் கோட்டு நுனி (வருமொழி யொடு புணர்தல்) நிலங்கடந்தான் நெடுமால் (பெயர்ப் பயனிலை கோடல்) தொகையின்றி இயலாத எண்ணிடைச் சொற்கள் - ‘தொகைச்சொல் இன்றியமையாத எண்ணிடைச் சொற்கள்’ காண்க. தொகையும் தொகாநிலையும் - (ஸமஸ்தம், வியஸ்தம்) தொகை என்பது வடமொழியில் சமாசம் எனப்படும். தனிநிலைச் சொற்கள், தகுதி - அவாய் நிலை - அண்மைநிலை - என்னும் மூன்றும் தோன்ற, வேற்றுமை வழியும் அல்வழியுமாக, அவ்வப்பொருள்மேல், பிளவுபட் டிசையாது தம்முள் கூடுவது தொகைநிலையாம்; பிளவுபட்டு விரிந்தது தொகாநிலையாம். சொற்றொடராகிய வாக்கியமும் தகுதி முதலிய மூன்றும் தோன்ற வரும். தூரான்வயம் - மரூஉத் தொகை - கட்டிய வழக்கு - இடைப்பிற வரல் - ஆகிய நான்கும் அண்மைநிலையோடல்லது வாரா. (பி.வி. 19) தகுதி முதலியவற்றைத் தனித்தலைப்பில் காண்க. தொகையுள் ஒட்டி ஒருசொல் ஆகாதன செய்தான் பொருள் - இருந்தான் குன்றத்து - என நிலைமொழி வினையாயவழி உருபேற்ற சொல் இறுதியில் வருவதால் இரண்டு சொற்களும் ஒட்டி ஒருசொல் ஆகா. இந்நிலை செய்யுட்கும் ஒக்கும். ‘முயங்கினன் அல்லனோ............ மார்பே’ (புற. 19) ‘போற்றாய் மாற்றுமைக் கொண்ட வழி’ (கலி. 12) என இறுதிக்கண் இரண்டனுருபு தொக்கன. மார்பு - வழி - என்பன தம் முடிக்கும் சொற்களாகிய முயங்கினன் - போற்றாய் - என்பவற்றோடு ஒட்டி ஒருசொல் ஆகாமை காண்க. ‘தோன்றும், தோன்றல் மறந்தோர் துறைகெழு நாட்டே’ ‘சேந்தனை செலினே,................ பெருங்கழி நாட்டே’ (அக. 120) என இறுதிக்கண் ஏழனுருபு தொக்கன. துறைகெழு நாட்டே - பெருங்கழி நாட்டே - என்பன தம் முடிக்கும் சொற்களாகிய தோன்றும் - சேந்தனை - எனபவற்றோடு ஒட்டி ஒரு சொல் ஆகாமையும் காண்க. (தொ. சொ. 412 நச். உரை) பெயரும் தொழிலும் பிரிந்திசைத்தவழியும் பெயரும் பெயரும் ஒருங்கிசைத்தவழியும் வேற்றுமை தொக்கு நிற்கும் என்றலின், நிலங்கடந்தான் - குன்றத்திருந்தான் - எனப் பெயரும் தொழி லும் பிரிந்திசைத்தவழியும் தொகையாதல் ஆசிரியர் கருத் தாயிற்று. (தொ. சொ. 420 நச். உரை) தொகையுள் ஒன்றே தொகுதல் முதலிய பத்தும் பிறவும் - அறுவகைத் தொகைகளிலும் ஒன்றே தொகுதல் முதலிய பத்து வகை: 1. மரம் வெட்டினான் : ஐயுருபு ஒன்றே தொக்கது - ஒன்றே தொகுதல். 2. ‘குன்றி கோபம் கொடிவிடு பவளம் ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்னிறம்’ - குன்றியையும் கோபத்தையும் முதலாக ஐஉருபும் உம்மையும் தொக்கன - பலவே தொகுதல். 3. ‘துடியிடை நெடுங்கண் துணைமுலைப் பொற்றொடி’ - இத் தொடரில், துடியிடை : உவமத் தொகை ; நெடுங்கண் : பண்புத் தொகை; துணைமுலை : வினைத்தொகை; பொற்றொடி : (நிலைக்களத்தில்) வேற்றுமைத்தொகை; பொற்றொடியை அணிந்தவள் என்னும் பொருளால் அன்மொழித்தொகை; நெடுங்கண் துணைமுலை : உம்மைத் தொகை; துணைமுலைப் பொற்றொடி : வேற்றுமைத் தொகை. இவ்வாறு ஆறு தொகைகளும் வந்தன - அறுவகையும் அடங்கத் தொகுதல். 4. மதிமுகம் : உவமஉருபு தொக்கது - உருபே தொகுதல். 5. பொருபடை : பொருத - பொருகின்ற - பொரும் - எனக் காலம் என்னும் பொருள் தொக்கது - பொருளே தொகுதல். 6. படைக்கை : படையை ஏந்திய கை - என உருபும் பொருளும் ஒருங்கே தொகுதல். (உருபை முடிக்கும் சொல் பொருள் என்றும் பயன் என்றும் கூறப்படும்.) 7. பாண்டிக்கரை, பொன்னரசன், குழல்வாய் - என்பன பாண்டியனது நாட்டுக் கடலினது கரைக்கண் இருக்கும் ஊர், பொன்னின்கண் விருப்பத்தையுடைய அரசன், குழலினது இசைபோலும் இனிமையைக் கொடுக்கும் சொல்லினை யுடைய வாய் - என உருபும் பொருளும் ஒருங்கே பல தொகுதல். 8. அ) வடுகக்கண்ணன் - என்புழி வடுகநாட்டின்கண் பிறந்த கண்ணன் என்றும், ஆ) செந்தாமரை - என்பதில் சிவந்த பூவையுடைய தாமரை என்றும் பொருளும், உருபும் பொருளும் தொக்கன. (அ) நாடு, பிறந்த : பொருள்; கண் : உருபு (ஆ) பூ, உடைய : பொருள்; ஐ : உருபு. 9. மலர்முகம் : தாமரைமலர் முகம் - முதல் தொக்கது. தாமரை முகம் : தாமரைமலர் முகம் - இடை தொக்கது. பொற்றாலி : பொற்றாலி யுடையாள் - கடைத் தொக்கது. இவ்வாறு முதல் இடை கடை என மூன்றிலும் (தனித்தனியே) தொகுதல். 10. செய்தான் மாடம் : (மாடத்தை) கடைத் தொக்கது இருந்தான் குன்றம் : (குன்றத்துக்கண்) கடைத் தொக்கது ‘அன்பருள் இருக்கும் அறவோ ரிடத்தே’ : ‘அன்பும் அருளும் இருக்கும்’ எனச் சொல்லின் கடையிலும் தொடரின் இடையிலும் உம்மையுருபு தொக்கது. (அருளும் : சொல்லின் கடை; அன்பும் : தொடரின் இடை எனக் கொள்க.) இனி ‘ஆதி’ என்றமையால் கொண்ட பிறவாவன : வடுகங் கண்ணன் : வடுகனுக்கு மகனாகிய கண்ணன் எனப் பெயர்த் தொகை. கவிழ்தும்பை : கவிழ்ந்த பூவையுடைய தும்பை. ஆந்தை : ஆதனுக்குத் தந்தை; பூந்தை: பூதனுக்குத் தந்தை. இவை போல்வனவும் கொள்ளப்படும். (இ. கொ. 97) தொடர்மொழி - தொடர்மொழி, இருமொழித்தொடரும் பன்மொழித் தொடரும் என இருவகைப்படும். அவை தொடருங்கால், பயனிலை வகையானும் தொகைநிலை வகையானும் எண்ணு நிலை வகையானும் தொடரும். இனி வடநூலார் கூறியவாறு அவாய்நிலையானும் தகுதியானும் அண்மைநிலையானும் தொடரும் என்றலும் ஆம். எ-டு : சாத்தன் வந்தான் - பயனிலை வகையான் தொடர்தல் யானைக்கோடு - தொகைநிலை வகையான் தொடர்தல் நிலம் நீர் - எண்ணுநிலை வகையான் தொடர்தல் இவை இருமொழித்தொடர் அறம்வேண்டி அரசன் உலகம்புரக்கும் - பன்மொழித் தொடர். சாத்தன் வந்தான்: அவாய் நிலை; நீரால் நனைத்தான் : தகுதி (தொ. சொ. 1 நச். உரை) பொருளுணர்த்துதற்குச் சிறப்புடையனவாகி இரண்டும் பலவுமாய் அமையும் தனிமொழிகள் தொடர்மொழி ஆகும். என்னை சிறந்தவாறு எனின், சாத்தன் என்றவழிப் பொருண்மை மாத்திரம் உணர்த்துதல்அல்லது, கேட்டார்க்கு ஒரு பயன்பட நில்லாமையின், ‘சாத்தன் உண்டான்’ எனப் பயன்பட வரும் தொடர்மொழியே பொருள் இனிது விளங்குவதாம். (தொ. சொ. 1 தெய். உரை) தொடர்மொழியாவது பல தனிமொழி இணைந்த தொடர். ஆ - நீ ஆவாய், முன்னேறுவாய்; ஆறு - நீ ஆறுவாய் (சினம் தணிவாய்) - இவை எழுவாய் மறைந்த ஏவல்வினை கொண்ட தொடர் மொழி. ஆற்றினன் (ஆறு இன்னன்) - வழியில் இ.த்தன்மையன். ஆறிரண்டு (ஆறு இரண்டு) - பன்னிரண்டு ஆறிரண்டு தோளான் - முருகன் வாழை (வாழ் + ஐ) - வாழும் தலைவன் (இ. கொ. 6) பலமொழி தொடர்ந்து நின்று பொருளை உணர்த்துவன தொடர்மொழிகள் எனப்படும். இவையே தொகைநிலைத் தொடர்மொழி, தொகாநிலைத் தொடர்நிலை என இருவகைப் படும். எ-டு : நிலங்கடந்தான், கொல்யானை, கருங்குதிரை, மலரடி, சேரசோழபாண்டியர், பொற்றொடி (வந்தாள்) - இவை தொலைநிலைத் தொடர்மொழிகள்.) சாத்தன் வந்தான், சாத்தா வா, வந்த சாத்தன், வந்து போனான், வந்தான் சாத்தன், மற்றொன்று, நனி பேதை, பாம்புபாம்பு - இவை தொகாநிலைத் தொடர்மொழிகள். (தொ. வி. 45 உரை) அவாய்நிலையானும் தகுதியானும் அண்மைநிலையானும் இயைந்து பொருள் விளக்கும் தனிமொழி ஈட்டம் தொடர் மொழியாம். எ-டு : ஆ நடக்கிறது என்புழி, ஆ என்ற பெயர் நடக்கிறது என்ற பயனிலையை அவாவி நிற்கிறது. தகுதியாவது பொருள்விளக்கற்கு ஏற்ற சொற்கள் சேர்ந்து நிற்றல். எ-டு : நீரால் நனை - என்புழி நனைத்தற்கு நீர் ஏற்றதாதல் காண்க. அண்மைநிலையாவது தொடராயிருக்கும் மொழிகளை இடையீடின்றிச் சொல்லுதல்; அஃதாவது காலத்தாழ்ப் பின்றிச் சொல்லுதல். அங்ஙனம் சொல்லுதலான் அத் தொடரின் பொருள் இனிது விளங்கும். எழுவாயும் பயனிலையும் தொடரில் மிகச் சேயவாதலின்றி அண்மையில் இருத்தலும் அண்மைநிலைப் பாற்படும். அவாய்நிலை - ஆகாங்iக்ஷ; அண்மைநிலை - சந்நிதி. (பி.வி. 19) தொடர்மொழி இலக்கணம் கூறும் தொல்காப்பியச் சொற்படல இயல்கள் - தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் அல்வழித்தொடர் பற்றிய செய்தி கிளவியாக்கத்துள்ளும், வேற்றுமைத்தொடர் பற்றிய செய்தி வேற்றுமையியல் - வேற்றுமை மயங்கியல் - விளிமரபு - என்ற அடுத்த மூன்று இயல்களிலும், தொடர் மொழியில் எஞ்சிய செய்திகள் இறுதிஇயலாகிய எச்சவியலி லும் கூறப்பட்டுள்ளன. (தொ. சொ. 1 தெய். உரை) தொடர்மொழிகளில் எதிர்மறை - தொடர்மொழிகளில் எதிர்மறை மூன்று வகையாக வரும். அவை வருமாறு : 1. நிலைமொழி மறை - உண்ணாது வந்தான் 2. வருமொழி மறை - உண்டு வாரான் 3. இருமொழி மறை - ‘பள்ளியும், ஈரம் புலராமை ஏறற்க’ (ஆசா.19)(இ. கொ.76) தொடர்மொழியின் இருவகை - இருமொழித்தொடரும் பன்மொழித்தொடரும் எனத் தொடர்மொழி இருவகைத்தாம். ‘தொடர்மொழி’ முதற்பத்தி காண்க. தொடர்மொழியின் புணர்நிலை வகை - தகுதி - அவாய் நிலை - அண்மைநிலை - என்பன மூன்றும் தொடர்மொழியின் புணர்நிலை வகைகளாம். சோற்றை உண்டான் - என்புழி, சோறு என்னும் பதம் உண்ணப் படுவது என்னும் பொருளதாய்த் தன்பொருள் முடிதற்கேற்ற வினைக்குச் செயப்படுபொருளாய் வருவதாகிய தகுதியொடு கூடியது. இது தகுதி பற்றிய புணர்நிலை. சோற்றை உண்டான் - என்புழி, சோறு என்னும் அத்தனிப் பதம் தனக்குரிய ஐயுருபையே விரும்புதலும்அன்றி முடிக்கும் சொல்லாகிய ஒருவினைச் சொல்லையும் விரும்புதல் ஆகிய அவாவோடு கூடி நிற்றல் அவாய்நிலை பற்றிய புணர்நிலை. அண்மைநிலையாவது சோறு கடல் முழங்கிற்று உண்டான் - என இடையில் பிறசொற்கள் வந்து பொருந்துதற்கு இடம் கொடாமல் தம்முள் அணுகிச் சோற்றையுண்டான் என நிற்றல். (இ. கொ. 105) தொடர்வினை - முதல்நிலை (பகுதி)யைத் தனிவினை என்றும், விகுதி முதலிய உறுப்புக்களுடன் கூடிய வினைச்சொற்களைத் தொடர்வினை என்றும் பகுத்து விளக்கும் இலக்கணக்கொத்து முதனிலைத் தனிவினைப் பாகுபாடுகள் என்றும், தொடர்வினைப் பகுப் புக்கள் என்றும் விரிவாக உரைக்கும். அவற்றுள் தொடர் வினைப் பகுப்புக்கள் வருமாறு : 1. அ) வினைப்பகுதி, விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆகிய ஐந்தனுள் ஒன்றுடன் அல்லது பலவற்றுடன் கூடி வருதல். எ-டு : ஆடுதல் ஆடல் சொல்லு அருளு வாரு செய்து செய்பு - இவை போல்வன, தல் அல் உ து பு - இவை போன்ற விகுதி யுடன் மாத்திரமே வந்தன. ஆ) உண்டான், தின்றான் - போல்வன, விகுதியும் இடை நிலையும் பெற்றன. இ) நடக்கின்றனன் - போல்வன, விகுதி இடைநிலை சாரியை சந்தி பெற்றன. ஈ) நடந்தனன் - போல்வன, விகாரமும் கூடி ஐந்தும் பெற்றன. நடந்து - நட + ந் + த் + உ ; போனான் - போ + (இ) ன் + ஆன் - என முறையின்றிப் பொருந்துவனவும் ‘வேண்டுவ’ என்பத னால் கொள்க. 2) விகுதி முதலிய ஐந்தனுள் ஒன்றும் பெறாமலே திரிந்த தொடர்வினைகள் கேடு - பாடு - வீடு - போல்வன. இவை கெடு - படு - விடு - என்னும் முதனிலைகள் திரிந்த தொழிற் பெயர். 3) அ) திணை பால் இடம் காலம் காட்டும் வினைமுற்றுக்கள் சிறப்பு வினையாம். எ-டு : வந்தான், செய்தான். ஆ) திணைபால் இடங்களுக்குப் பொதுவாய் அமையும் நடத்தல் போன்ற தொழிற்பெயர்களும், நடந்த - நடந்து - போன்ற பெயரெச்ச வினையெச்சங்களும் பொதுவினையாம். 4) தன்வினை பிறவினைகட்குப் பொதுவாதல் ‘தன்வினை பிறவினை பொதுவினை’ என்ற தலைப்பிற் காண்க. 5) விதிவினையும் மறைவினையும் ஆகும் பொதுவினை. செய்யாய் - செய் எனவும், செய்யாதே எனவும் விதியாகவும் மறையாகவும் பொருள்படும். ‘மகன்எனல் மக்கட் பதடி எனல்’ (கு. 196) - என்று சொல்லற்க, என்று சொல்லுக என இருபொருள் தந்தது. வல்லார் - ஆற்றலுடையார், மாட்டாதார் - என இருபொருள் தந்தது. எ-டு : அருச்சிக்க வல்லார், வல்லார் திறைகொடுப்பர் - என முறையே காண்க. ‘அகல் விசும்பிலார்’ - விசும்பில் இருப்பார், விசும்பில் இல்லாதவர் அருளான் - அருளுடையான், அருள்செய்யான் வெகுளான் - கோபம் கொள்வான், கோபம் கொள்ளான் இவை சொல்லொன்றே விதிப்பொருளிலும் மறைப் -பொரு ளிலும் வந்தன. ஸ‘மறம்திருந்தார் என்னாய்நீ மலையிடை வந்தக்கால்’ (கலி. 38) என்ற விடத்தே மறம் திருந்தார் என்ற தொடர்க்கு நச். ‘மறத்தால் திருந்தியவர்’ என்று பொருள்கோடலின், வெகுளான் என்பது கோபிப்பான் என்ற பொருளிலும் வரும் என்பது உணரப் படும். சுந்தரர் தேவாரத்தில், (7: 73 : 5), ‘நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன். வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க் குத்துணை ஆகேன்’ என்ற பாடல் தொடரில், வழுவேன் - வழுவுடையேன், வெகுளேன் - வெகுளியையுடை யேன், ஆகேன் - ஆகுவேன் என்று பொருள்படும் சொல் லமைப்பும் காண்க.] 6. செய்வினை செயப்பாட்டுவினை இவற்றிற்குப் பொது வாதல் - ‘செய்வினை செயப்பாட்டுவினை இவற்றின் பொது வாகும் தொடர்வினை’ காண்க. 7. முதல்வினை சினைவினை இவற்றிற்குப் பொதுவாதல் - சாத்தன் நடந்தான் : முதல்வினை; கால்நடந்தது ; சினைவினை. இனிப் பொதுவாய் வருவன : வனம் பொலிந்தது - படை பொருதிற்று - அவன் பருத்தான் - அருக்கன் உருக்கினான் - என்பன போல்வன. பொலிதல் வனத்தின் தொழிலாகும் போது முதல்வினை; வனத்துமரங்களின் தொழிலாகும் போது சினை வினை. பொருதல் படையின்தொழிலாகும் போது முதல் வினை; படைவீரர்களின் தொழிலாகும்போது சினைவினை. பருத்தல் அவன் தொழிலாகும்போது முதல் வினை; அவன் உறுப்புக்களின் தொழிலாகும்போது சினை வினை, உருக்குதல் அருக்கன் தொகுலாகும்போது முதல்வினை; கதிர்களின் தொழிலாகையில் சினைவினை. 8. இருவகை எச்சத்திற்கும் பொதுவினை - ‘இருவகை எச்சத் திற்கும் பொதுவான தொடர்வினை’ காண்க. 9. தெரிநிலை வினை தெரியாநிலை வினையாதல் - ‘தெரி நிலை தெரியாநிலை வினை’ காண்க. 10. வினை வினையாலணையும் பெயர்களுக்குப் பொதுவாதல் அ) அந்தணனைக் கொன்றானை அரசன் கொன்றான் - முற்று வினையாலணையும் பெயர் ஆனது. ஆ) ஓதுவான் உண்பான் - என்னும் வான் பான் ஈற்று வினை யெச்சங்கள் ஓதுவான் வந்தான் - உண்பான் போனான் (ஓதுபவன், உண்பவன்) என வினையாலணையும்பெயர் ஆயின. இ) பிறந்த இறந்தன, கண்ட அழிந்தன, தின்ற அற்றன, வந்த போயின - என முறையே பிறந்தவை கண்டவை தின்றவை வந்தவை - என அஃறிணைப் பலவின்பால் வினையாலணையும் பெயர்கள் ஆயின. ஈ) ‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க, செய்யாமை யானும் கெடும்.’ - (கு. 466) செய்தக்க (செய்யத்தக்க) : செய்ய என்னும் வினையெச்சம் முதனிலைத் தொழிற்பெயர் ஆனது. (வினைமுற்றுக்களே வினையாலணையும் பெயராயின என்பது இலக்கண ஆசிரியர் பலர்க்கும் உடன்பாடு. வினையா லணையும் பெயர்க்கு ‘வினைமுற்றுப் பெயர்’ என்ற பெயர் அமைந்திருப்பதும் இக்கருத்துப் பற்றியே ஆம்.) 11. செய்யா என்னும் வாய்பாட்டுத் தொடர்வினை பலவாறு நிற்றல்- அ) ‘ஒன்றனையும் செய்யா, ஓரறிவும் அற்ற பொருள்’ : எதிர்மறை முற்று. ஆ) செய்யாச் சாத்தன் : செய்யாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சம் திரிந்து (ஈறுகெட்டு) நிற்கும் பெயரெச்சம். இ) செய்யா வந்தான் : செய்யாது என்னும் எதிர்மறை வினை யெச்சம் திரிந்து நிற்கும் வினையெச்சம். ஈ) ‘மாறாக் காதலர்’, ‘ஏறா மென்றோள்’ : எதிர்மறைப் பெயரெச்சங்கள் உ) ‘தொழில்அல காலம் தோற்றா’ (நன். 275) : எதிர்மறை முற்றெச்சமான வினையெச்சம் ஊ) செய்யா என்னும் வினையெச்சம் - விதி (உடன்பாடு) எ) செய்யா என்னும் பெயரெச்சம் - எதிர்மறை. ஏ) செய்யா என்பதனைச் செய் + ஆ, செய் + யா - எனப் பிரித்து, வயலில் உள்ள பசு எனவும், வயலில் உள்ள யாமரம் எனவும் பொருள் செய்வது, பலமொழி. ஐ) ‘செய்யாத’ என்பது இயல்பு ; ‘செய்யா’ என்பது திரிபு. (‘செய்யா’ என்னும் எதிர்மறைப் பெயரெச்சமே இயல்பாகிய சொல், ‘செய்யாத’ என்பதே திரிபு என்பது தொல்காப்பியம் சங்கச் செய்யுள்கள் ஆகியவற்றை நோக்கின் நன்கு புலப்படும்.) (இ. கொ. 67) ஒ) செய்யும் என்னும் வாய்பாட்டின் பல்வேறு நிலைகளையும் சூத்திரத்தில் ‘ஆதியாப் பலவே’ என்பதனால் கொள்ளல் ‘செய்யும் என்னும் வினை விளக்கம்’ எனும் தலைப்பிற் காண்க. தொடரில் பொருள் சிறக்கும் இடம் - சொற்கள் நிலைமொழி வருமொழி செய்தால் முன் மொழி யிலே பொருள் நிற்பனவும், பின்மொழியிலே பொருள் நிற்பன வும், இரு மொழியிலே பொருள் நிற்பனவும், இருமொழியும் ஒழிய வேறொரு மொழியிலே பொருள் நிற்பனவும் - என நான்கு வகைப்படும். வருமாறு : அரைக்கழஞ்சு : முன்மொழியில் பொருள் நின்றது வேங்கைப்பூ : பின் மொழியில் பொருள் நின்றது. தூணிப்பதக்கு : இருமொழியிலும் பொருள் நின்றது பொற்றொடி வந்தாள் : ‘இவற்றையுடையாள்’ என்னும் வேறொரு மொழியில் பொருள் நின்றது. (நேமி. எழுத். 12 உரை) தொல்காப்பிய நூற்கடல் - அகப்பொருள்விளக்கம் யாப்பருங்கலக்காரிகை தண்டியலங் காரம் - என்னும் இவை முறையே அகப்பொருளும் யாப்பும் அணியுமாகிய ஒவ்வொன்றையே விளக்கும். நன்னூல் சின்னூல் - என்பன எழுத்தும் சொல்லுமாகிய இரண்டனையே உணர்த்தும். அவை போலன்றித் தொல்காப்பியம் எழுத்து - சொல் - பொருள் - யாப்பு - அணி - என்னும் ஐந்திலக்கணத் தையும் உணர்த்தலின் ‘கடல்’ எனப்பட்டது. தொல்காப்பிய னார் காலத்தில் யாப்பும் அணியும் பொருளதிகாரப் பகுதிக ளாகவே இருந்தன. பிற்காலத்தேயே அவை தனித்தனியே விரிந்தனவாகும். (இ. கொ. 6) தொல்காப்பியம் : சொல் முடிபு - தொல்காப்பியன் என்பது ஈறு திரிந்து தொல்காப்பியம் என நின்றதனான், அத்திரிபால் ‘அவனால் செய்யப்பட்டது’ என்னும் பொருளை விளக்குதலின், ஆகுபெயர் ஆகாது, காரணப் பெயராம். (தொ. சொ. 111 தெய். உரை) தொல்காப்பியம் உடையான் என்னும் பொருட்கண் அம்முக் கெட்டு ‘அன்’ புணர்ந்து, பின் அவனான் செய்யப்பட்டது என்னும் பொருட்கண் ‘அன்’ கெட்டு அம்முப்புணர்ந்தது. கபிலம் என்பதும் அது. (சிவ. பா. வி. பக். 16) தொல்காப்பியன் கபிலன் என்னும் பெயரிறுதி ‘இவனாற் செய்யப்பட்டது’ என்னும் பொருள் தோன்ற அம் என்பதோர் இடைச்சொல் வந்து ‘அன்’ கெடத் தொல்காப்பியம் கபிலம் என நின்றன என்பது ஆசிரியர் கருத்தாம். (தொ. சொ. 114 சேனா. உரை) தொல்காப்பியனாலும் கபிலனாலும் செய்யப்பட்ட நூலைத் தொல்காப்பியம் கபிலம் என்றல் வினைமுதல் உரைக்கும் கிளவியாகிய ஆகுபெயர். (தொ. சொ. 110 இள. உரை) தொல்காப்பியம், கபிலம், வில்லி, வாளி - என ஈறு திரிதலும் கொள்க. (தொ. சொ. 119 நச். உரை) வினைமுதல் உரைக்கும் கிளவியாவது வினைசெய்தான் - பெயர் சொல்ல அவன் செய்பொருளை அறிய நிற்றல். அது தொல்காப்பியம், கபிலம் என்பன. (தொ. சொ. 110 இள. உரை) வினைமுதல் உரைக்கும் கிளவி : தொல்காப்பியம், கபிலம் (தொ. சொ. 116 கல். உரை) வினைமுதல் உரைக்கும் கிளவி : தொல்காப்பியம், கபிலம், இவ்வாடை சேணிகன், இவ்வாடை கோலிகன். (தொ. சொ. 115 ப. உரை) அகத்தியம் தொல்காப்பியம் என்பன கருத்தாவோ காரியமோ என ஐயுற்று ஒன்றனைக் குறிப்பான் உணரவேண்டாது காரியமாகிய நூல்களை வெளிப்படையான் உணர்த்தலானும், கருத்தாவின்மேல் செல்லாமையானும், விகுதிச் சூத்திரத்துப் ‘பிற’ (40) என்பதனால் வரும் அம் விகுதியொடு பதம் புணர்ந்து இந்திரனால் செய்யப்பட்ட நூலுக்கு ‘ஐந்திரம்’ என வந்த ஆரியச்சொல் போல வந்தனவன்றி, ஆகுபெயர் ஈறு திரிந்தன அல்ல எனவும் உணர்க. (நன். 290 சங்.) அம் விகுதி எச்சம் - தேட்டம் - நாட்டம் - முதலியவற்றுள் எஞ்சு - தேடு - நாடு - முதலாகிய வினைமுதல்நிலையொடு கூடியே வினைமுதற்பொருள் முதலாய அறுவகையுள் ஒரு பொருளை உணர்த்தலன்றிப் பெயர்முதல்நிலையொடு கூடி விகுதிப்பொருள் உணர்த்தல் யாண்டும் இன்மையானும், பெயர் முதனிலையொடு கூடின் பகுதிப்பொருளையே உணர்த்தல் குன்று - சங்கு - முதலாகிய பெயரொடு கூடிக் குன்றம் எனவும் சங்கம் எனவும் நின்றுழி விகுதிப்பொருள் களுள் ஒன்றும் உணர்த்தாமையான் அறியப்படும் ஆகலானும், அம்விகுதி பிற பெயரொடு கூடி விகுதிப் பொருள் உணர்த்தா விடினும், அகத்தியன் தொல்காப்பியன் - முதலாய உயர் திணைப்பெயரொடு கூடியவழி உணர்த்துமெனின், அகத்தியன் முதலாயவரால் செய்யப்படுவன எல்லாம் அகத்தியம் எனவும் தொல்காப்பியம் எனவும் கபிலம் எனவும் பெயர் பெறல் வேண்டும்; அவ்வாறு அவர் செய்த தவம் முதலியவற் றுக்கு எல்லாம் பெயராகாமல் அவர் செய்த நூல்களையே உணர்த்தலான் அதுவும் பொருந்தாமையானும், செய் என்பது எல்லாத் தொழிற்கும் பொதுவாதலன்றி நூல் செய்தற்கு மாத்திரம் பெயராகாமையானும் - என்பது. (பா.வி. பக். 233, 234) தொல்காப்பியம் சுட்டும் பண்புத்தொகை - வண்ணம் வடிவு அளவு சுவை - என்னும் பண்புகள் அடை மொழியாகப் பெயர்ச்சொல் அடைகொளியாக, ‘இன்னது இது’ என்ற வாய்பாட்டான் வருவது பண்புத் தொகையாம் எ-டு : கரும்பார்ப்பான் - கரியனாகிய பார்ப்பான் கரும்பார்ப்பனி - கரியளாகிய பார்ப்பனி கரும்பார்ப்பார் - கரியராகிய பார்ப்பார் கருங்குதிரை - கரியதாகிய குதிரை, கரியவாகிய குதிரை(கள்) பண்புப்பகுதி இருதிணை ஐம்பாலுக்கும் பொதுவாகலான் அதனை ஒருபாலுக்கு உரிய சொல்லால் மாத்திரம் விரித்துக் கூறுதல் குன்றக்கூறலாம் ஆதலின், பண்புத்தொகையைப் பிரிக்காது கொள்ள வேண்டும். (தொ. சொ. 416 நச். உரை) (எ. 482 நச்.) தொல்காப்பியமும் ஐந்திரமும் - அகத்தியனார் தென்திசைக்குப் போந்த பின்னர்த் தென் - திசையினும் ஆரியம் வழங்கத் தலைப்பட்டது. தமிழேயன்றி வடமொழியும் தொல்காப்பியனார் நிறைந்தார் என்பது விளக்க ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனார்’ எனப்பட் டார். அகத்தியனார்க்கு ஐந்திர இலக்கணமே உடன்பாடு. தொல்காப்பியனார்க்கு வடநூல் அறிவுறுத்திய ஆசிரியரும் அகத்தியனாரே. தொல்காப்பியனார் அகத்தியம் நிறைந்தமை எல்லாரானும் அறியப்படுதலின் வடமொழியினும் வல்லவ ராயினார் என்பது விளக்கிய ‘ஐந்திரம் நிறைந்த தொல் காப்பியன்’ எனப்பட்டார். தொல்காப்பியனார் ஐந்திரம் நோக்கி நூல் செய்தாரெனின், தமிழ்மொழிப் புணர்ச்சிக்கண் படும் செய்கைகளும் குறியீடு களும், வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல் லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற் பாகுபாடுகளும், அகம் புறம் முதலிய பொருட்பாகு பாடு களும், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியில் பெறப்படாமையானும், தாமே படைத்துச் செய்தாரெனின் ‘முந்து நூல் கண்டு’ என்பத னொடு முரணுதலானும், எல்லாரும் தொல்காப்பியனாரை அகத்திய னாருடைய முதல்மாணாக்கன் என்றே சிறப்பித்த லானும், ஐந்திரம் தொல்காப்பியனார் செய்த நூலுக்கு முதல்நூல் ஆகாது. (சிவ. பா. வி. பக் : 12, 6) தொல்காப்பியனார் நரககதிப் பொருண்மை கூறாமை - தொல்காப்பியனார் நரககதிமேல் நிகழ்வதொரு வழக்கு இன்மையின் கூறாராயினார். நரகன் வந்தான் - நரகி வந்தாள் - நரகர் வந்தார் - என வழங்குபவால் எனின், அக்கதியுள் தோன்றுவார் ஆணும் பெண்ணுமாகிப் போகம் நுகர்வார் என்னும் இலக்கணம் இன்மையான், மக்களில் தூய்மை யில்லாதாரை உலகத்தார் வழங்குமாறு அவை என்க. நரகர் துயருறுவார் - என அக்கதிமேல் தோன்றுவார்மேலும் வருமால் எனின், அவ்வாறு வருவன பால் கூறப்படுதலின்றி ஆணும் பெண்ணும் வரையறுக்கப்படாத பொருளை, உயிர்த் தன்மையைக் குறித்து உயர்திணைப்பன்மையால் வழங்கினார். (தொ. சொ. 4 தெய். உரை) தொழில் நிகழாதவழி நிலமும் காலமும் ஏழாம்வேற்றுமை ஆகாமை - போரின்கண் வந்தான் - என்றவழி, இடம் குறித்தானாயின், போரிடநின்றவிடத்து வந்தான் எனவும், காலம் குறித்தா னாயின் பொராநின்ற காலத்து வந்தான் எனவும் முறையே நிலமும் காலமும் குறித்துக் கொள்ளக் கிடந்தது. ஈண்டுத் தொழில் நிகழவில்லை என்க. தொழில் நிகழும்வழி, அரங் கின்கண் வனைந்தான் - என்பது நிலம்; காலைக்கண் வனைந்தான் என்பது காலம். (தொ. சொ. 79 தெய். உரை) தொழில் கிளத்தல் வகை - பெயர்தோறும் ஒருதொழில் கிளத்தலும், பெயர்தோறும் வேறுதொழில் கிளத்தலும் எனத் ‘தொழில் கிளத்தல்’ இருவகைப்படும். எ-டு : ‘எந்தை வருக எம்பெருமான் வருக, மைந்தன் வருக மணாளன் வருக’ ஒரு பொருளையே பல பெயரான் விளித்து விளிதோறும் ஒரேவினை கொடுத்தவழி, அப்பலபெயர்களும் ஒரு பொரு ளையே சுட்டும். ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்து உண்டு இருந்து மகிழ்ந்து சென்றான் என்பதனை ஆசிரியன் வந்தான் - பேரூர்கிழான் உண்டான், செயிற்றியன் இருந்தான், இளங்கண்ணன் மகிழ்ந்தான், சாத்தன் சென்றான் - என ஒரே ஒரு தொடர்ப்பெயரைத் தனித்தனியாகப் பிரித்துத் தொடர் வினைகளைத் தனித்தனி வினைகளாகப் புணர்ப்பின், வந்தானும் உண்டானும் இருந்தானும் மகிழ்ந்தானும் சென் றானும் வேறுவேறு ஆவர் என்பது. (தொ. சொ. 42 இள., சேனா. உரை.) தொழில்நிலை ஒட்டும் ஒன்று - ஒரு பொருளினது புடைபெயர்ச்சியாய்க் காலம் தோன்று தற்குப் பொருந்தும் ஒரு கூற்றுத் தொழிற்பெயர். தொழில் நிலை : காலத்தைக் குறித்தலின் ஆகுபெயர். திணையும் பாலும் காலமும் இடனும் தோன்றும் தொழிற்சொல் படுத்தலோசைப் பட்டு நின்றால் தொழிற்பெயராய் நின்று, பயனிலை கொண்டும் உருபேற்றும் காலத்தைத் தோற்றுவிக்கும். எ-டு : உண்டான், தின்றான் (உண்டவன், தின்றவன் - என்னும் பொருள) (தொ. சொ. 71 நச். உரை) தொழில்நிலைப் பெயர் - தொழில்நிலைப் பெயர்ச்சொல்லாவது வினைப்பகுதியொடு தொழிற்பெயர் விகுதி சேர்ந்து காலம் காட்டாது வரும் உண்டல் - தின்றல் - முதலிய தொழிற்பெயர்கள். ஏனைய காலம் ஒட்டும் தொழிற்பெயர் உண்டான் - தின்றான் - என அத்தொழில் செய்வான்மேல் நின்ற பெயராம். (தொ. சொ. 71 இள. உரை) தொழில்நிலைப் பெயர், விகுதி பெற்ற தொழிற்பெயர் - முதனிலைத் தொழிற்பெயர் - முதனிலை திரிந்த தொழிற் பெயர் - என மூவகைப்படும். எ-டு : வருதல் - வாழ்த்து - கோள் - என முறையே காண்க. (தொழில்செய்வான்மேல் நின்ற பெயர் வினையாலணையும் பெயர் எனவும்படும்.) தொழில்படு தொகை, தொழில்படாத் தொகை - முடிக்கும் சொல்லான் முடிக்கப்படும் தொகைச்சொல் தொழில்படு தொகையாம். அவ்வாறு முடிக்கப்படாத தொகைச் - சொல் தொழில்படாத் தொகையாம். (தொழில் படாத் தொகைச்சொல்லின்கண், முடிக்கும் சொல் - முடிக்கப்படும் சொல் - என இரண்டும் அமையும்.) தொழில்படு தொகைச் சொல்லின்கண் இத்துணை என வரையறுக்கப்பட்ட சினைக் கிளவியும் முதற்கிளவியும் முற்றும்மை பெற்றுவரும். ஏனைய தொழில்படாத் தொகைக்கண் அவை பெறா. எ-டு : தேவர் முப்பத்துமூவரும் வந்தார் - முதல்; நங்கை முலையிரண்டும் நல்ல - சினை இவை தொழில்படு தொகை. தேவர் முப்பத்துமூவர் - முதல்; ஆவிற்கு முலை நான்கு - சினை தொழில் படாத் தொகை (தொ. சொ. 31 தெய். உரை) தொழில் முதனிலை எட்டாவன - ஒரு பொருளின் புடைபெயர்ச்சியாகிய தொழிலுக்கு உரிய காரணங்கள். முதனிலை - காரணம்; காரியத்தின் முன் நிற்றலால் காரணம் ‘முதல்’ எனப்பட்டது. வினை - செய்வது - செயப்படுபொருள் - நிலன் - காலம் - கருவி - இன்னதற்கு - இது பயன் - என்னும் எட்டும் தொழில் முதனிலையாம். (தொ. சொ. 112 சேனா. உரை) வினை - எழுவாய் - செயப்படுபொருள் - நிலன் - காலம் - கருவி - இன்னதற்கு - இது பயன் - என்னும் எட்டும் ஒரு தொழில் நிகழ்வதற்குரிய காரணங்களாம். காரணம், காரியத்தின் முன் நிற்றலின் ‘முதல்நிலை’ எனப்பட்டது. தொழில் என்பது புடைபெயர்ச்சி; அதற்குக் காரணமான செயல் ஈண்டு ‘வினை’ எனப்பட்டது. உறங்கினான் என்பதன்கண், உறங்குதல்: வினை; (உறங்குதலைச் செய்தான் எனச்) செய்தல் : தொழில். ‘குடத்தை (க்குயவன்) வனைந்தான்’ என்புழி, வனைந்தான் என்பது வனைதலைச் செய்தான் - என்னும் பொருட்டாத லின், வனைதல் - வினை; குயவன் - எழுவாய்; குடம் - செயப்படு பொருள்; குடம் வனையும் இடம் - நிலன்; வனைந்தான் எனவே காலம் - இறந்தகாலம்; திகிரி முதலியன கருவி; விற்றற்கு என்பது - இன்னதற்கு; பொருள் பெறுதல் - இதுபயன் - என எட்டுக் காரணங்களும் தொழில் நிகழ்வதற்கு வந்தவாறு. இவற்றுள் செயப்படுபொருள் - இன்னதற்கு - இதுபயன் - என்ற காரணங்கள் இன்றியும் தொழில் நிகழும். எ-டு : கொடி ஆடிற்று; வளி வழங்கிற்று : இவற்றின்கண், ஆடுதல் - வழங்குதல் - என்பன வினை; கொடி, வளி : எழுவாய்; இடம் -ஆடுமிடம், வழங்குமிடம்; காலம்: இறந்தகாலம் : காற்றும் சலனமும் : கருவி; செயப்படு பொருளும், இன்னதற்கு - இதுபயன் - என்பனவும் ஈண்டுத் தோன்றில. எழுவாய் : முதல் வேற்றுமை; செயப்படுபொருள்: இரண் டாம் வேற்றுமை; கருவி : மூன்றாம் வேற்றுமை; ஒருவன் ஏற்றுக் கொண்டவழி, இன்னதற்கு - இது பயன் - என்பன : நான்காம் வேற்றுமை; நிலமும் காலமும்: ஏழாம் வேற்றுமை; வனைந்தவன் கொடுத்த குடம் அவன் கையினின்றும் நீங்குதல்: ஐந்தாம் வேற்றுமை; அதனை ஒருவன் ஏற்றுக் கொண்டவழி அஃது அவன் உடைமையாதல்: ஆறாம் வேற்றுமை; கருவிக் கண் அடங்கும் ஏது ஐந்தாம் வேற்றுமையும் ஆம். (தொ. சொ. 113 நச். உரை) தொழில் முதல்நிலை - முற்றி நிற்கும் தொழிற்கு அடிப்படைக் காரணங்கள். அவை புடைபெயர்ச்சியை உணர்த்தும் உண் - தின் - செல் - முதலிய வினையடிகள் ஆகிய வினையும், தொழிலை நிகழ்த்தும் வினைமுதலும், வினைமுதலின் தொழில் சென்றுபடும் பொருளும், அத்தொழில் நிகழ்தற்கு ஆதாரமாகிய இடமும், அத்தொழில் நிகழும் காலமும், தொழில் நிகழ்த்தும் வினைமுதற்குத் துணையாக இருக்கும் கருவியும் - ஆகிய ஆறும், அத்தொழில் நிகழ்தற்குரிய நோக்க மாகிய ‘இன்னதற்கு’ எனவும், அத்தொழிலின் விளைவாகிய ‘இது பயனாக’ எனவும் வரும் இரண்டும் ஆகிய எட்டுமாம். வரலாறு : உண்டான் என்புழித் தொழில் பலவற்றுள்ளும் ஒரு தொழிலை வரைந்துணர்த்தும் ‘உண்’ என்னும் வினை யடியாகிய முதல்நிலை : வினை; உயர்திணை ஆடூஉ ஒருமை: செய்வது; உண்ணுதல் தொழிற்குரிய உணவு : செயப்படு பொருள்; அத்தொழில் நிகழ்தற்குரிய இடம்: நிலன்; அத் தொழிலின் காலம்: இறந்தகாலம்; வினைமுதற்குத் துணை புரியும் கையும் வாயும் கருவி; பசிக்கு அல்லது வயிற்றுக்கு - என்னும் கோடற்பொருள் : இன்னதற்கு; சுவைத்தல் அல்லது உடலோம்பல் : இது பயனாக. அவ்வாறே ‘குழையையுடையான்’ என்புழி, உடைமை யுணர்ச்சி: உள்ளத்து நிகழ் வினை ; உடையான் ; வினைமுதல்; குழை : செயப்படுபொருள்; செவியுறுப்பு : இடம் ; நேற்றுடை யான் -இன்றுடையான் - நாளையுடையானாவான் : காலக் குறிப்பு; செல்வச் செருக்கினைப் புலப்படுத்தும் நோக்கு : கருவி; செவிக்குப் பூட்டுதல் : இன்னதற்கு ; பிறர்மதிப்புக் கோடல் : இது பயனாக - என முறையே இவை எட்டும் புலப்பட்டவாறு காண்க. (தொ. சொ. 112 ச. பால.) தொழில் முதல்நிலைகளுக்கு வேற்றுமையொடு தொடர்பு - மேலைத் தலைப்புள் நச். உரைப் பகுதி காண்க. தொழில் வேறு கிளத்தலும், கிளவாமையும் - ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் - என்னாது, ஆசிரியன் வந்தான் - பேரூர் கிழான் வந்தான் - செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் - எனின், ஒரு பொருள் ஆதல்; தோன்றாதாம். ஒருவனையே குறித்தபல பெயர்தோறும் ஒரே வினை வரின் ஒக்கும், வேறுவினை வரின் ஒவ்வாது என்பது பெற்றாம். காவலன் வாழி - வேந்தன் வாழி - பொறையன் வாழி - மன்னவன் வாழி (சிலப். 25:80-84) என ஒருவனுடைய பல பெயரையும் கூறி ஒரேவினை கூறின் அப்பல பெயர்களும் அவனையே சுட்டும்; ‘விறலோன் வாழ்க காவலன் கெடுக’ என்று வேறுவினை கொடுப்பின், ஒருவனையே சுட்டாது வழுவாம் என்க. (தொ. சொ. 40 தெய். உரை) ‘தொழிலிற் கூறும் ஆன் என் இறுதி’ - தொழிலினான் ஒரு பொருளை அறியச் சொல்லும் ஆன் ஈற்றுப் பெயர் (ஆன் ஈற்று வினையாலணையும் பெயர்) எ-டு : வந்தான், சென்றான். (தொ. சொ. 135 நச். உரை) தொழிற்படக் கிளத்தல் - தொழிலினைச் செய்த வினைமுதல் போல, அத்தொழில் செயப்படுபொருளின்மேற்படக் கூறுதல். செயப்படு பொருளை வினைமுதலாகவே கூறுதலுமாம். எ-டு : திண்ணை மெழுகிற்று; அரிசி தானே அட்டது. (தொ. சொ. 248 நச். உரை) தொழிற்பண்பு உணர்த்தும் ஒருசார்ச் சொற்களும் செய்யும் என்னும் முற்றினை ஏற்று வருதல் - செயல் குறியாமல் அச்செயற்பண்பினைக் குறித்து நிற்கும் வினைமுதலாகிய சொல், செய்யும் பிறகருத்தா இல்லாத விடத்து, நிகழ்காலத்துக்குரிய செய்யும் என்னும் சொல்லொடு தோன்றி வரும். அஃதாவது ஈதல் ஓதல் கற்றல் ஆற்றுதல் ஒழுகுதல் - முதலிய தொழிற்சொற்கள் வினைநிகழ்வை உணர்த்தாமல் ஈகை முதலிய பண்புகளை உணர்த்தி வருங்கால், அவை ஒரு கருத்தாவைப் பற்றி வாராமல், தாமே எழுவாயாய் நின்று பயனிலை கோடற்கண் செய்யும் என் முற்றினை ஏற்று வரும். எ-டு : ‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்னும் இடும்பை தரும்’ (கு. 138) என்புழி, ஒழுக்கம் என்னும் பண்பு குறித்து நிற்கும் ஒழுகுதல் என்னும் தொழிற்பெயர் எழுவாயாக நின்று, ஆகும் - தரும் - என்னும் முற்றுவினையை ஏற்று முக்காலத்துக்கு ஒப்ப நின்ற வாறு. ஈதல் இசைபரப்பும், கற்றல் அறிவு நல்கும், ஆற்றல் இன்பம் தரும் - என வருவனவும் அன்ன. (தொ. சொ. 243 ச. பால) தொழிற்பெயர் - தொழிற்பெயர் படர்க்கைக்கே உரியது. அது காலம் காட்டாது. (நன். 286) நட வா மடி சீ - முதலியவற்றை முதனிலைத் தொழிற் பெய ராகக் கொள்வர் ஆசிரியர் தொல்காப்பியனார். உண்ணுதல் - உண்டல் - ஆக்கம் - ஆகுகை - கோட்பாடு - வரவு - முதலியன (தல் - அல் - அம் - கை - பாடு - உ - முதலிய) விகுதி பெற்ற தொழிற்பெயர். ஊண் - தீன் - கோள் - பாடு - முதலியன (உண் - தின் - கொள் - படு - முதலிய) முதனிலை திரிந்து வந்தமையான் முதனிலை திரிந்த தொழிற்பெயராம். வாழ்த்து - குத்து - அடி - முதலியன முதனிலை அளவாய் நின்று விகுதியொடு கூடியவை போலப் பொருள்படுதலின், முதனிலைத் தொழிற் பெயராம். தொழிலின்மேல் நின்ற தொழிற்பெயர் காலம் தோன்றாது; பொருளது புடைபெயர்ச்சியே அறிவித்து நிற்கும். எ-டு : உண்டல், தின்றல். இனிப் பூசல், வேட்டை என்றாற் போல்வன வினை சொற்கு அடியாய்ப் புடைபெயர்ச் சியை விளக்காது பெயர்ப்பெயரே போல நிற்பனவும் உள. (தொ. சொ. 71. கல் உரை.) இனி, பொருள்மேல் நின்ற தொழிற்பெயர் வினைமுதலாகவும் செயப்படுபொருளாகவும் வந்து காலம் தோன்றி நிற்கும். எ-டு : உண்டவன், தின்றவன்; உண்ணுமது, தின்னுமது - என ஓசை வேற்றுமையானன்றித் தாமே பெயராய்க் காலம் காட்டி நின்றன. (தொ. சொ. 71. கல். உரை) ‘கொலைவர் கொடுமரம் தேய்த்தார்’ (கலி. 12) அவன் ஏறிற்று இக்குதிரை - என்றாற் போல்வன வினைப்பெயரே செயப்படு- பொருட்கண் காலம் காட்டி நின்றன. ‘உண்பவை நாழி உடுப்பவை இரண்டே’ (புறநா. 189) என்றாற் போல்வன தாமே செயப்படுபொருள்மேல் பெயராய்க் காலம் தோன்றி நின்றன. (தொ. சொ. 71. கல். உரை) தொழிற்பெயர், வினைமுதல் செயப்படுபொருள் கருவி இடம் பெயரெச்சம் முற்று ஆதல் 1. அன்பரிடத்துக் கொடை தோன்றிற்று, ‘கொல்லாமை அறவினை எல்லாம் தரும், கோறல் பிறவினை எல்லாம் தரும்’ (கு. 321) - தொழிற்பெயர் வினைமுதல் ஆனது. 2. உடுக்கை கிழிந்தது, நடக்கை வந்தது, புழுக்கல் உண்டான் - தொழிற்பெயர் செயப்படுபொருள் ஆனது. (நடக்கை - செலுத்தப்படும் ஊர்தி) 3. விளக்குக் காட்டிற்று, நோன்பிற்குக் காப்புக் கட்டினான், மகற்குப் பொற்காப்பு அணிந்தான், எனக்கு இவ்வேல் காப்பு, உனக்கு இவ்வரண் காப்பு, அவற்கு இவ்வாள் காப்பு - தொழிற்பெயர் கருவி ஆயிற்று. 4. கிடக்கை உயர்ந்தது, படுக்கை தாழ்ந்தது - தொழிற்பெயர் இடம் ஆயிற்று. 5. பொருள்செயல் வகை, வினைசெயல் வகை - செய்யும் வகை இவை தொழிற்பெயர் பெயரெச்சம் ஆயிற்று. தோன்றல் ஆறே - தோன்றும் ஆறே; உயிர்த்தல் ஆறே - உயிர்க்கும் ஆறே; இவற்றுள்ளும் அது. 6. ‘ஆய்தம் கெடுதல் ஆவயி னான’ (கெடுக) - தொழிற்பெயர் வினைமுற்றாயிற்று. ‘மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்’ - இதுவும் அது. (நிலைபெறுக) ‘ஏற்றான்........... காப்பு’ (திவ். பிர. 2155) (காப்பு ஆவான்) - இதுவும் அது. (இ. கொ. 82) தொழீஇ : விளியேற்றல் - தொழீஇ என்னும் அளபெடைச் சொல் விளியேற்குமிடத்து இ ‘ஈ’ ஆகாமல் மீண்டும் ஓர் இகரம் அளபெடுத்துத் ‘தொழீஇஇ’ எனவும், இரண்டு இகரம் அளபெடுத்துத் ‘தொழீஇஇஇ’ எனவும் வரும். தொழீஇ - தொழுத்தை - தொழிலையுடையவள். (தொ. சொ. 127 நச். உரை) தொறு என்னும் இடைச்சொல் - தொறு என்னும் இடைச்சொல், தான் சார்ந்த மொழிக்குப் பன்மையும் இடமும் உணர்த்தும். ‘குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே’ (முருகு. 217) என வரும். இது தோறு என நீண்டு ‘நாள்தோறும் நாடி’ (கு. 355) எனவும் வரும். (தொ. சொ. 298 நச். உரை) ‘தொன்னெறி மொழிவயின் ஆகுந’ - வழங்கற்பாடே பற்றிக் கொள்ளப்படுவனவும், இலக்கண வரையறை இல்லனவும் ஆகிய ஐந்தனுள் இதுவும் ஒன்று. முதுசொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் தம்முள் இயைபு இல்லன இயைபு உடையனவாய் வருவன. அவை யாற்றுட் செத்த எருமை ஈர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன் என்பது முதலாயின. (தொ. சொ. 449 சேனா. உரை) சொல்லிடத்துப் பழைய நெறியான்ஆய் வரும் சொற்கள்; முதுமொழி, பொருளுடையனவும் பொருளில்லனவும் என இருவகைப்படும். அவை ‘யாட்டுளான் இன்னுரை தாரான்’ என்றது, இடையன் எழுத்தொடு புணராது பொருள் அறி வுறுக்கும் மொழியைக் கூறுதலன்றி, எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறான் என்னும் பொருள் தந்து நின்றது. ‘யாற்றுள் செத்த எருமையை ஈர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன்’ என்பது, குயவன் சுள்ளையான் எழுந்த புகையானாகிய மேகம் தந்த நீரான் எருமை சாதலின், அதனை இழுத்தல் குயவர்க்குக் கடனாயிற்று - என ஒரு காரணம் உள்ளது போலக் கூறுகின்றது; உண்மைப்பொருளன்றி ஒருவன் இயைபின்றிக் கூறிய சொற்கு எடுத்துக்காட்டாகக் கூறப் படுதலின் பொருளுணர்த்தாதாயிற்று. (நச். உரை) இயைபு இல்லனவற்றை இயைந்தவாறு கூறும் பழைய தொடர். ‘குன்றேறாமா’ என்றவழிக் குன்று ஏறு ஆமா எனவும்படும் (குன்றின்கண் ஏறாநின்ற ஆமா); குன்று ஏறா மா எனவும்படும் (-குன்றின்கண் ஏறாத விலங்கு). இது சிலேடையைக் குறிப்பது போலும். இதன்கண் இசை வேறு பட்டுப் பொருள் வேறு உணர்த்துதல் ‘தொன்னெறி மொழி வயின் ஆகு’தலாம். (தொ. சொ. 439 தெய். உரை) தொனி - குறிப்பால் பொருள் தோன்றுதல். பெயர்ச்சொல் தனது நேர்ப் பொருள் வாயிலாகக் குறிப்பாக ஒரு பொருளை உணர்த்துவது ‘அபிதா மூலத்தொனி’ எனப்படும். எ-டு : ‘குடம்பை தனித்தொழியப்.......... நட்பு’ கு. 338. இதன்கண், நட்பில்லாத உயிர்உடம்புகட்கு இடையேயுள்ள உறவினை ‘நட்பு’ என்றது இத்தொனியாம், அரக்கரை மங்கலவழக்காகப் ‘புண்ணிய சனம்’ என்பது போல. இதனை விருத்த லக்ஷணை - விபரீத இலக்கணை - என்றும் கூறுவர். (பி.வி. 50) ‘இலக்கணா மூலத் தொனி’ முன்னர்க் காண்க. ‘தோற்றம் தாமே வினையொடு வரு’தல் - தோற்றம் தாமே - தோற்றமாக. தோற்றமாக என்பது பெரிதாக என்பது குறித்து நின்றது. எனவே, ன ள ர ப மார் து று டு அ ஆ வ - என்னும் பதினொரு விகுதியும் பெயரொடு வருகை சிறுவரவிற்று; வினைமுற்றொடு வருதலே பெருவரவிற்று என்பது பெறப்பட்டது. பெயரீறு இவ்விகுதிகளான் அன்றிப் பிறவாற்றானும் வரும். எ-டு : ஆடூஉ - மகடூஉ - மக்கள் - மரம் - அவை. (தொ. சொ. 10 தெய். உரை) ந நசைப்பொருட்கு உரிய உரிச்சொற்கள் - நம்பு என்பதும், மேவு என்பதும் விருப்பம் என்னும் குறிப்பினை உணர்த்தும் உரிச்சொற்கள். எ-டு : ‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அக. 198) ‘பேரிசை நவிரம் மேஎய் உறையும், காரி உண்டிக் கடவுள்’ (மலை. 82, 83) (தொ. சொ. 329 சேனா. உரை) நஞ்ஞு தற்புருடன் - இன்மை - அன்மை - எதிர்மறை - என்னும் பொருளில் வரும் மறைத்தொகை. ந என்ற எழுத்தே மறைப்பொருள் சுட்டுவது. வருமாறு : இன்மை - அகளங்கன் - களங்கம் இல்லாதவன் அன்மை - அஞ்ஞானம் - ஞானம் அல்லாதது எதிர்மறை - அதன்மம் - தன்மத்திற்கு மாறுபட்டது இவற்றுள் ந என்னும் எதிர்மறை காட்டும் எழுத்து, வருமொழி மெய்ம்முதல் ஆனமையின் நகரஒற்று நீங்கி அகர மாத்திரையாய் நின்று புணர்ந்தமை காண்க. அநபாயன் - அபாயம் இல்லாதவன்; அநேகம் - (ஒன்றல்லாத) பல - இவற்றுள் வருமொழி உயிர்முதல் ஆதலின், ந என்னும் உயிர்மெய் ந் அ - எனப் பிரிந்து முன் பின்னாக மாறி ‘அந்’ என்றாகிப் புணர்ந்தவாறு. (நேமி. எழுத். 11) தமிழில் எதிர்மறை உணர்த்துவன அல் - இல் - ஆ - என்பன. இவற்றுள் ஆகாரம் இடைநிலையாகவும் விகுதியாகவும் நிற்கும். அல் - இல் - என்பன அன்மை இன்மை - என்னும் பண்புச் சொற்கள் அடியானவை; குறிப்பு வினையாய் வருவன. இவை முறையே எதிர்மறை (ஆ), அன்மை (அல்), இன்மை (இல்) - என்ற பொருளை உணர்த்தும். இல்பொருள் உவமை, மன்னாப் பொருள் - இன்மை ‘வேற்றுமை அல்வழி’, அஃறிணை - அன்மை ‘பயனில் சொல்’, ‘கோளில் பொறி’, ‘புகழும் இல’ - மறை ‘கருமம் அல்லாச் சார்பு’ (தொ. சொ. 84) - அன்மை ஈண்டு. ‘இன்மை’ப் பொருளில் வந்தது. இல்பொருள், இல்லாப் பொருள், இல்லாத ஞாலம், இல் தோணி - போன்றன இன்மை அடையாகப் பெயரை அடுத்துத் தொகையாய் நிற்றலின் இன்மைத்தொகையாம். ‘நஞ்’ எனப்படும் ந என்ற இடைச்சொல் (அவ்வியயம்) மூன்று பொருளுடையது. 1) தத்அபாவம் (ஒன்றன் இன்மை) எ-டு : அபயம் (அச்சமின்மை), அநகன் (பாவமில்லாதவன்) 2) தத் அன்யம் (ஒன்றின் மாறுபட்ட பிறிது) எ-டு : அதர்மம் (தர்மம் அல்லாதது), அசுத்தம் (சுத்தம் அல்லாதது) 3) தத் விருத்தம் (ஒன்றின் முரண்பட்டது) எ-டு : அவைதிகம் (வேதநெறிக்கு முரண்பட்டது), அலௌகிகம் - உலகியற்கு முரண்பட்டது. (பி.வி. 21) நடுக்கம் என்ற பொருள்தரும் உரிச்சொற்கள் - அதிர்வு என்னும் உரிச்சொல்லும், விதிர்ப்பு என்னும் உரிச் சொல்லும் நடுக்கம் ஆகிய குறிப்புணர்த்தும். எ-டு : ‘அதிர வருவதோர் நோய்’ (கு. 429), ‘விதிர்ப்புறல் அறியா ஏமக் காப்பினை’ (புறநா. 20) (தொ. சொ. 316 சேனா. உரை) ‘நம்ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரம்’ - நம் என்னும் முதனிலையை ஊர்ந்து நமக்கு இன்னார் என வரும் நம்பி என்ற உயர்திணை ஆண்பாற்பெயரும், ஐகார ஈற்று நங்கை என்ற உயர்திணைப் பெண்பாற்பெயரும். (தொ. சொ. 165 நச். உரை) நம்மால் பெரிதும் மதிக்கப்படும் தக்கவனையே நம்பி என்றல் பண்டைய வழக்கு ; இதன் பெண்பாற்பெயர் நங்கை என்பது. நம்மால் பெரிதும் மதிக்கப்படும் தக்கவளையே நங்கை என்றல் பண்டைய வழக்கு; இதன் ஆண்பாற்பெயர் நம்பி என்பது. ‘நம்பி பொன் பெரியன்’ : தொடர்இலக்கணம் - நம்பி பொன் பெரியன் என்பதனை நம்பி பொன்னினது பெருமை யுடையன் என விரித்து வழாநிலை என்றால் என்னையெனின், ‘பொற் பெரியன்’ என்னும் வேற்றுமைப் புணர்ச்சிக்குரிய எழுத்துச்சந்தி இல்லாததினாலே பொருந் தாது என்க. நம்பி என்ற உயர்திணை ஆண்பாற்பெயரைத் தொடர்ந்த பொன் என்னும் பொருட்பெயர் கிழமைப் பொருள்பட உயர்திணையொடு சார்த்திச் சொல்லப்படுத லின், உயர்திணை முடிபையே பெற்றுப் ‘பெரியன்’ என வந்தது; சார்த்தாவிடின் ‘பொன் பெரிது’ எனத் தன்முடிபே கொள்ளும் என்றவாறு. (நன். 377 சங்.) நம்பி மகன் - உயர்திணைக்கண், நான்காம்வேற்றுமையுருபும் ஆறாம் வேற்றுமையுருபும் ஒருதன்மையவாம். எ-டு : நம்பிமகன் என்னும் தொகையை விரிப்பின், நம்பிக்கு மகன், நம்பியது மகன் - என நான்காவதும் ஆறாவது மாகிய உருபுகள் இரண்டும் விரியும். (மு.வீ. பெய. 76) நமன் நமள் நமர் : சொல்லிலக்கணம் - நமன் நமள் நமர்- என்பனவற்றுள் அன் அள் அர் - என்பன உயர்திணை உருபு அன்றோ எனின், பிற உருபுபோலத் தொகுத்தலும் விரித்தலும் இன்மையானும், தற்கிழமையும் பிறிதின்கிழமையும் என இரண்டிடத்தும் வாராமையானும், மற்றைப் பெயரும் உருபுமாகக் கொள்ளாத ஆறாம் வேற்றுமைத் தொகைச்சொல் போல இருபொருள் நிலைமைத் தொரு சொல்லாம் இவை, உயர்திணைக் கிளைப்பெயராய்ப் பகுதி யான் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாம். (தொ. சொ. 81 கல். உரை) நமன் - நம்முடைய உறவினன், என்னுடைய உறவினன் - எனப் பகுதி முறையே பன்மைக்கும் ஒருமைக்கும் பொதுவாய் நின்றவாறு காண்க. சிவன்தமர், மணிவண்ணன் தமர்: ஒருமை; ‘கல்லாமாவன்னார் தமர்’ (கு. 814 ) : பன்மை நயக்கு - யக் அல்லாதது நயக். வடமொழியில் செயப்பாட்டுவினையில் ய என்பது வரும், தமிழில் படு - பெறு - என்னும் துணை வினைகள் வருமாறு போல. செய்வினையில் அவ்வாறு வருதல் இன்று. செய்வினை - கர்த்தரிப் பிரயோகம். ‘யாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம்’ (கு. 1123) என்னும் குறட்பகுதி யில் எம்மால் வீழப்பட்ட திருநுதல்’ எனப் பொருள் விரிவது நயக்காய் நின்று யக்கு ஆவதனாலாம். (பி.வி. 37) நல்வினை முறை திறம்பித் தீவினை ஆதல் - வினைவகை விளக்கத்துள் இடம் பெறுவது இது. நல்வினை தீவினையாவன சில வருமாறு : அநங்கன் அலரை அரனிடத்து இட்டான்; இல்வலன் வாதாபி - இருவரும் வந்த பெரியோர்க்கெல்லாம் வழிபடுமுறையே வழிபட்டிருந்தார்; வேங்கை வரிப்புலிக்கு விடத்தைத் தீர்ந்தான்; பாம்புக்குப் பால் வார்த்தான்; வலையனுக்குத் தூண்டில் வழங்கினான்; கள்ளனுக்குச் சோறிட்டான். (இ. கொ. 81) நளி என்னும் உரிச் சொல் - நளி என்னும் உரிச்சொல் பெருமையாகிய பண்பும், செறி வாகிய குறிப்பும் உணர்த்தும். எ-டு : ‘நளிமலை நாடன் நள்ளி’ (புறநா. 150) - பெருமை ‘நளியிருள்’ - செறிவு (தொ. சொ. 320, 323 சேனா. உரை) நன்று என்னும் உரிச்சொல் - நன்று என்னும் உரிச்சொல் பெரிது என்னும் குறிப்புணர்த்தும். எ-டு : ‘நன்றும் அரிதுற் றனையால் பெரும.’ (அக. 10) பெருமை என்னாது பெரிது என்றதனால் ‘நன்று’ வினை யெச்சமாயிற்று. (தொ. சொ. 343 சேனா. உரை) நன்றே அன்றே அந்தோ அன்னோ - என்னும் இடைச்சொற்கள் - ‘நன்றே’ மேவாமைக் குறிப்பும் தீது என்ற குறிப்பும் உணர்த்தும். ‘அன்றே’ அது செயற்படாதொழியுமோ என்ற குறிப்புணர்த்தும். அந்தோ, அன்னோ - இரண்டும் இரக்கக் குறிப்புணர்த்தும். இவ் ஏகார ஓகாரங்கள் பல சொல்லோடு அடுத்து வாராது இச்சொற்களையே அடுத்துப் பொருள் வேறுபட்டு நிற்றலின், அவற்றைப் பெயர்தந்து வேறு கூறினார். (தொ. சொ. 284 நச். உரை) நன்றே என்ற இடைச்சொல் ‘நன்று ஈற்று ஏ’ எனப்படும்; நன்று என்னும் குறிப்புவினை முற்றின் இறுதியில் ஏகாரம் அடுத்து ஒரு சொல் நீர்மைத்தாய் நன்றே என்றாயவழி, அஃது இடைச்சொல்லாய் மேவாமைக்குறிப்பும் தீது என்ற குறிப்பும் உணர்த்தும். ஒருவன், “கொலை களவு கள் காமம் பொய் - என்பனவற்றை விரும்புக” என்றவழி, அதனைச் செவியுற்றோன் "அவற்றை விரும்புதல் நன்றே" என்னும். அது மேவாமைக் குறிப்புணர்த் திற்று. (தொ. சொ. 284 நச். உரை) இது குறிப்போசையால் மேவாமை - தீது - என்ற பொருளு ணர்த்தும்; நன்றே நன்றே - என்று அடுக்கியும் வரும். (தொ. சொ. 282 சேனா. உரை) ‘நின்றே எறிக பறையினை - நன்றேகாண்’ (நாலடி 24) என்றது தீது என்னும் குறிப்புணர்த்தும். (தொ. சொ. 277. தெய். உரை) நன்னூல் சொல்லதிகார ஓத்து முறை - ‘இருதிணை மூவிடம் நான்மொழி ஐம்பால் அறுதொகை ஏழ் வழு உருபு எட்டு ஒன்பது ஆகும் தொகாநிலை வாய்ந்த எச்சம்ஒருபது கோள்எட்டு முப்பொழுது ஈரிடம் ஓரியல்பான் வருமொழி மூன்றும் உணரச்சொல் வண்ணம் வரும் திருவே’ இவ்வதிகாரம், பெயரியல் வினையியல் இடையியல் உரியியல் பொதுவியல் என்னும் ஐந்துறுப்புக்களொடு கூடி நின்றது. இதனுள் பெயர்ச்சொல் பொருளை விளக்குதலால் பெயரியல் எனப் பெயர்தந்து முதலிலும், வினைச்சொல் பொருளின் புடைபெயர்ச்சியை விளக்குதலால் வினையியல் எனப் பெயர் தந்து அதன் பின்னும், இடைச்சொல் இப்பெயர்வினை இரண்டற்கும் உறுப்பாகி அவற்றைச் சார்ந்து வருதலால் இடையியல் எனப் பெயர்தந்து அவற்றின் பின்னும், உரிச் சொல் முற்கூறிய பொருளினது குணப்பண்பு தொழிற் பண்புகளை விளக்கி நிற்றலால் உரியியல் எனப் பெயர்தந்து அவற்றின் பின்னும், இப்பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைச் சொற்களின் ஒழிபையும் பொதுமையின் விளக்கி நிற்றலால் பொதுவியல் எனப் பெயர்தந்து ஈற்றின்கண்ணும் ‘ஒத்துமுறை வைப்பு’ என்னும் உத்தியால் வைக்கப்பட்டன. இனிச் சிங்கநோக்கம் என்று பெயர் வினை இடை உரி என்னும் நான்கிற்கும் இடையிலே பொதுவியலை வைத்து இம்முறை பிறழக் கூறுவாருமுளர். அது பெயர் வினை இரண்டற்கும் பொதுமை எனப் பொருள்படுமன்றிப் பின் நிற்பனவற்றிற்கும் பொதுமை எனப் பொருள்படாமை யானும், படினும் பெயர்வினை இரண்டற்கும் ஒரு கூறு பொதுமை - மற்றொரு கூறு இடை உரி இரண்டற்கும் பொதுமை எனப் பொருள் பட்டு இடர்ப்பட நிற்கும் ஆதலானும், அவ்வாறு கூறுதல் ‘முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்’ (சி.பா.) என்றதற்கு மாறுகொளக் கூறுதல் ஆதலானும், நூலாசிரியர் முதலியோர் கருத்தன்று ஆதலானும், நூல்முறை யன்று ஆதலானும் அது பொருந் தாது என மறுக்க. இன்னும் இஃது இந்நூலுடையார்க்குக் கருத்தன்று என்பது அவர் ‘பெயர் வினை இடை உரி’ எனச் செவ்வெண்ணாக இடமிடந் தோறும் எண்ணி இலக்கணம் கூறுதலால் காண்க. (நன். சொல். பாயிரம் இராமா.) நனவு என்னும் உரிச்சொல் - நனவு என்னும் உரிச்சொல் களனும் அகலமும் ஆகிய குறிப்புப் பொருள் உணர்த்தும். எ-டு : ‘நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்’ (அக. 82) - களன்; ‘நனந்தலை உலகம் வளைஇ’ (முல்லை) – அகலம் (தொ. சொ. 376 சேனா. உரை) நனி என்னும் உரிச்சொல் - நனி என்னும் உரிச்சொல் மிகுதி என்னும் குறிப்புப்பொருள் உணர்த்தும். எ-டு : ‘வந்துநனி வருந்தினை வாழிஎன் நெஞ்சே’ (அகநா. 19) (தொ. சொ. 299 சேனா. உரை) நாத்தி - இல்லை என்னும் பொருட்டு (நாஸ்தி). திணைபால் அனைத் திற்கும் பொதுவாய் வரும் யார் - உண்டு - இல்லை - வேறு - என்பவற்றைப் பிரயோகவிவேகம் அவ்வியயம் எனக் கூறும். இவை வடமொழியில் கிம் - அத்தி - நாத்தி - பிருதக்கு - என வரும். பிரச்சினம் - சற்பாவம் - அபாவம் - விபாவம் - என்பன முறையே இவற்றின் வடமொழிப் பெயர்களாம். (பி.வி. 42) நாமதாது - பெயர்அடியாகப் பிறந்த வினைப்பகுதி. இதனை வடமொழி யில் சுப்புத்தாது எனவும் கூறுப. அழுக்கறுப்பான் : அழுக்காறு என்னும் பெயரடியாகப் பிறந்தது. நல்கூர்ந்தான் (கு. 219) : நல்குரவு என்னும் பெயரடியாகப் பிறந்தது. வடமொழியில் கடம் கரோதி (-குடத்தை வனை கிறான்) என்பது கடயதி எனவரும். (பி.வி. 35) நாம பூர்வபதம் - அவ்வியயீபாவம் என்னும் இடைச்சொல் தொகையின் வகைகளுள் ஒன்று; தொகையுள் முன்மொழி பெயராய் இருத்தல். (பின்மொழி இடைச்சொல் என்க.) முன் : காலமுன் எ-டு : அதுமன் தமிழ்மரபிற்கு ஏற்ப ஈண்டு ஏதும் தொக்கது இல்லை எனி னும், பெயர்ச்சொல் முன்னாக இடைச்சொல் பின்னாக வந்த சேர்க்கை நிலையே துவிமொழி சமாசன் ஆகும். (பி.வி. 23) நால்வகைச் சொல்லும் இனம்கொள வருதல் - பெயர் வினை இடை உரி என்னும் நால்வகைச் சொற்களுள் ஒவ்வொன்றும் எஞ்சிநின்ற தன்தன் இனங்கொள்ளுதற்கு உரித்தாம். சோற்றை நனி உண்டான் - என்றவழிக் கறியை நனி தின்றான் என்றல் தொடக்கத்தனவும், பாக்கை நனிதின்றான் என்றவழி வெற்றிலையை நனி தின்றான் - சுண்ணாம்பை நனி தின்றான் - என்பனவும் இனங்களாய் எஞ்சி நின்றன. இவற்றுள், சோற்றை என்னும் பெயர்ச்சொல்லும் உருபிடைச் சொல்லும் கறியை என்னும் பெயர்ச்சொல்லையும் உருபிடைச் சொல்லை யும், நனி உண்டான் என்னும் உரிச்சொல்லும் வினைச் சொல்லும் நனி தின்றான் என்னும் உரிச்சொல்லையும் வினைச்சொல்லையும் கொள்ளுதற்கு உரியவாய் நிற்றல் காண்க. (நன். 358 சங்.) நால்வகைச் சொற்கள் - பொருளை உணர்த்தும் பெயர்ச்சொல்லும், பொருளது புடைபெயர்ச்சியை உணர்த்தும் வினைச்சொல்லும் பொரு ளையும் பொருளது புடைபெயர்ச்சியையும் தம்மானன்றித் தத்தம் குறிப்பான் உணர்த்தும் இடைச்சொல்லும், குறிப்பும் பண்பும் இசையும் பற்றி வருவனவாகிய உரிச்சொல்லும் எனச் சொற்கள் நான்கு வகைப்படும். இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் - எனச் சொற்கள் நால்வகைப்படும் என்பதும் ஒன்று. (தொ. சொ. 160, 161, 397 நச். உரை) குறிப்பும் இசையும் பண்பும், குணப்பண்பும் தொழிற்பண்பும் என இரண்டாய் அடங்கும். பொருள் இடம் காலம் சினை - என்னும் நான்கும் பொருள் என ஒன்றாய் அடங்கும். தொழிற் பண்பு வினை முதலிய காரகங்களால் புடைபெயருங்கால் வினை எனப்படும். இங்ஙனம் ஆதலின், பொருளை உணர்த்தும் சொல் பெயர்ச்சொல் எனவும், குணப்பண்பும் தொழிற் பண்பும் ஆகிய பொருட் பண்பை உணர்த்தும் சொல் உரிச் சொல் எனவும், பொருளின் புடைபெயர்ச்சியாகிய தொழிற் பண்பின் காரியத்தை உணர்த்தும் சொல் வினைச்சொல் எனவும், பொருளையும் புடைபெயர்ச்சியையும் தம்மானன்றிக் குறிப்பால் உணர்த்தும் சொல் இடைச்சொல் எனவும் பகுக்கப்பட்டன. எல்லாம் பொருள் என்றற்கு ஒரோவழி உரிமையுடைமையின், அது பற்றிப் பண்பும் தொழிலும் பொருள் எனவும்படும் ஆதலின், அவற்றை உணர்த்தும் உரிச் சொல்லும் ஒரோவழிப் பெயர்ச்சொல்லாம். இடைச் சொல்லும் ஒருவாற்றான் பெயரேயாம். அதனால் பெயர் - வினை - எனச் சொல் இரண்டே. இடையும் உரியும் அவற்றைச் சார்ந்தே வரும். பெயர்ச்சொல் பொருளை உணர்த்துவது. பொருட்குப் பண்பு உரிமை பூண்டு நிற்றலின் அதனை உணர்த்தும் சொல் உரிச்சொல்லாம். தொழிற் பண்பினையும் அதற்குக் காரணமான வினைநிகழ்ச்சியினையும் உணர்த்தும் சொல்வினைச்சொல்லாம். பொருளையும் பொருளது புடை- பெயர்ச்சியையும் தம்மானன்றித் தத்தம் குறிப்பான் உணர்த்தும் சொற்கள், பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகாது அவற்றின் வேறும் ஆகாது, இடை நிகரனவாய் நிற்றலின் இடைச்சொல் எனப்படும். (சூ. வி. பக். 35) நால்வகைச் சொற்களும் தொடுக்குங்காலை நிகழ்வன - வலிக்கும்வழி வலித்தல் : குறுந்தாட் கோழி ‘குறுத்தாட்கோழி’ என்றாதல். மெலிக்கும்வழி மெலித்தல் : தட்டை ‘தண்டை’ என எதுகை நோக்கி ஆதல். விரிக்கும்வழி விரித்தல் : தண்துறைவன் ‘தண்ணந் துறைவன்’ எனச் சாரியை பெற்று விரிதல். தொகுக்கும்வழித் தொகுத்தல் : மழவரை ஓட்டிய ‘மழவ ரோட்டிய’ என (அக.1) இரண்டனுருபு தொகுதல். நீட்டும்வழி நீட்டல் : பச்சிலை ‘பாசிலை’ என முதலெழுத்து நீடல். குறுக்கும்வழிக் குறுக்கல் : உண்டார்ந்து ‘உண்டருந்து’ (அக. 3) எனக் குறுகுதல். பத்துவகை விகாரத்துள் ஏனையன: இனமில்லாததனை இனமுள்ளது போலச் சொல்லுதல் (எ-டு : செஞ்ஞாயிறு, வெண்டிங்கள்), இனமுள்ளதனை இனமில்லது போலச் சொல்லுதல், இடைச்சொல் போக்கல், புடைச்சொல் புகுத்தல் - என்பன. பெருங்கொற்றன், பெருஞ்சாத்தன் - என்னுமிவை சிறு கொற்றன் - சிறுசாத்தன் - என்ற இனமுளவேனும், அவ் வினத்தினின்று பிரித்துக் கொற்றனுக்கும் சாத்தனுக்கும் பெருமையை அடையாகக் கொள்வன. இவை இனமுள்ள தனை இனமில்லது போலக் கூறுவன. ஏனைய இரண்டும் முறையே நடுவிலுள்ள சொல்லை எடுத்துப் பின்னர்க் கூட்டிப் பொருள்செய்தலும், ஏனைய அடியிலுள்ள தொரு சொல்லை நடுவிற்பெய்து பொருள் செய்தலுமாகிய பொருள் கொள்ளுமுறை. (தொ. சொ. 397 இள. உரை) குறுங்கை - ‘குறுக்கை’ (ஐங். 266) எனவும், முந்தை - ‘முத்தை’ - (தொ.எ. 194) எனவும் வலித்தல். சுடுமட்பாவை - ‘கடுமண் பாவை’ எனவும், குற்றியலுகரம் ‘குன்றியலுகரம்’ (சொ. 8) எனவும் மெலித்தல். ‘குன்றி கோபம் பவளம் ஒக்கும் நின் நிறம்’ செவ்வெண்தொகை பெறாமை தொகுத்தல். விடுமின் - ‘வீடுமின்’ எனல் நீட்டல். ஆழ்ந்து படு - ‘அழுந்துபடு’ எனல் குறுக்கல்; இடைச்சொல் எனப்படுப - ‘இடையெனப் படுப’ எனத் தொகுத்தல். (தொ. சொ. 403 சேனா., நச். உரை) ‘வேண்டார் வணக்கி’ : வேண்டா(தா)ரை எனற்பாலது வேண்டார் எனத் தொக்கு நின்றது, தொகுத்து விகாரமாம். தொகுத்தல் என்பது சுருக்குதல். வேண்டாதார் என்பதன் கணுள்ள தா என்பது தொகுக்கும்வழித் தொகுத்தல். ஐ என்பது ‘உருபு தொக வருதல்’ (சொ. 100) என்பதன்கண் அடங்காது, ‘உயர்திணை மருங்கின் ஒழியாது வருதல்’ (எ. நச். 157) வேண்டும் என்பது விதியாதலின், செய்யுளின்பம் வேண்டி உயர்திணைக்கண் தொகப்பெறுதல் தொகுக்கும்வழித் தொகுத்தலாம். (தொ. சொ. 399 தெய். உரை) நால்வகைத் தமிழ்ச்சொல் விரி - பெயரியற்சொல் பெயர்த்திரிசொல் என்னும் இரண்டையும் ஒருமொழி - தொடர்மொழி - பொதுமொழி - என்னும் மூன்றினானும் உறழ ஆறாம். அவற்றை உயர்திணை - அஃறிணை - இருதிணைப் பொது - என்னும் மூனறினானும் முரணப் பதினெட்டாம். அவற்றை ஐம்பாலும் பொதுவுமான ஆறானும் மாற 108 ஆம். அவற்றைத் தன்மை முதலிய மூவிடத்தானும் பெருக்க 324 ஆம். அவற்றை இடுகுறி மரபு - இடுகுறி ஆக்கம் - காரணமரபு - காரண ஆக்கம் - என்னும் நான்கினானும் தாக்க 1296 ஆம். அவற்றைப் பொருளாதி ஆறினானும் பொர 7776 ஆம். வினைச்சொல்லையும் இவ்வாறே 324 அளவும் பெருக்கி, அவற்றை இருமுற்று ஈரெச்சங்களான நான்கானும் பெருக்க 1296 ஆம். இடைச்சொல் இரண்டையும் (இயற்சொல் திரிசொல் என்பன), இடைச்சொல் பெயரிடைச்சொல் - வினையிடைச் சொல் என்னும் மூன்றானும் உறழ ஆறாம். உரிச்சொல் இரண்டையும், வினைச்சொல் - இயற்குணப் பெயர் - தொழிற்குணப்பெயர் - என்னும் மூன்றானும் உறழ ஆறாம். ஆக நால்வகைத் தமிழ்ச்சொல்லின் உறுவிரி எண் 9084 ஆம். (நன். 269 மயிலை.) நான்கன் பொருட்கண் ஏனைய வேற்றுமைகள் மயங்குதல் - ‘இதனது இது இற்று’ என்னும் ஆறாவது, யானைக்குக் கோடு கூரிது - யானையது கோடு கூரிது -எனவும், ஒன்றனை ஒன்று கொள்ளும் என்னும் இரண்டாவது, இவட்குக் கொள்ளும் இவ்வணி - இவளைக் கொள்ளும் இவ்வணி - எனவும், ஒன்றனான் ஒன்று தொழிற்படற்கு ஏற்கும் மூன்றாவது, அவற்குச் செய்யத் தகும் அக்கருமம் - அவனால் செய்யத் தகும் அக்கருமம் - எனவும், முறைப்பொருளைச் கொண்டு நின்ற பெயர்ச்சொல்லின் ஆறாவது, ஆவிற்குக் கன்று - ஆவினது கன்று - எனவும், நிலத்தை வரைந்து கூறும் பொருண்மையாம் ஐந்தாவது, கருவூருக்குக் கிழக்கு - கருவூரின் கிழக்கு - எனவும், பண்பின்கண் ஆம் ஒப்பாகிய ஐந்தாவது, சாத்தற்கு நெடியன் - சாத்தனின் நெடியன் - எனவும், காலத்தின்கண் அறியப்படும் ஏழாவது, காலைக்கு வரும் - காலைக்கண் வரும் - எனவும், ஐந்தாவதன் நீக்கப் பொருண்மை, ஊர்க்குத் தீர்ந்தான் - ஊரின் தீர்ந்தான் - எனவும் மயங்கும். இவ்வாறு நான்கனுருபு தொகாது, ஆறாவதன் உடைமைப் பொருண்மை, இரண்டாவதன் ஒன்றனை ஒன்று கொள்ளும் தன்மை, மூன்றாவதன் ஒன்றனான் ஒன்று தொழிற்படற்கு ஏற்கும் பொருண்மை, முறைப்பொருளில் வரும் ஆறாவதன் பொருண்மை, நிலத்தை வரைந்து கூறுதல் - ஒப்புப் பொருளில் கூறுதல் - நீக்கப் பொருளில் வரும் தீர்தல் பற்றுவிடுதல் - என்னும் ஐந்தாவதன் ஒப்பு எல்லை நீக்கற் பொருண்மைகள், காலத்தின் அறியப்படும் ஏழாவதன் பொருண்மை - என்ற பொருள்களோடு மயங்கும்; ‘அன்ன பிறவும்’ என்றதனான் ஏழாவ தன் ஊர்க்கண் சென்றான் - ஊர்க்கண் உற்றது செய்வான் - ஊரிற் சேயன் - என்ற இடப்பொருண்மை யொடும் நான்கனுருபு மயங்குதலுடைத்து. (தொ. சொ. 111 நச். உரை) நான்கனுருபு பிறபொருளும் தருதல் - கு என்னும் நான்கனுருபு கொள்வோன் என்னும் தனக்குரிய பொருளைவிட்டு வேறு பல பொருளும் தரும். 1. சோற்றிற்கு அரிசி - ஆதிகாரண காரியம் என்னும் பொருள். அஃதாவது காரியத்தொடு தொடர்புடைய முதற்காரணம். அரிசியே சோறாவது. 2. கூழிற்குக் குற்றேவல் - நிமித்தகாரண காரியம் என்னும் பொருள். அஃதாவது காரியத்திற்கு நேரிடையாகக் காரண மாகாது ஏதோ ஒருவகையால் காரணமாவது. இங்குக் குற்றேவலே கூழாகாது; அரிசியே சோறாவது போலன்று இது. குற்றேவலால் கூலியைக் கொண்டு கூழிற்கு வேண்டிய பண்டம் வாங்கப்பட வேண்டுதலின், கூழிற்குக் குற்றேவல் நிமித்தகாரண காரியம். 3. பூவிற்குப் போனான் - பூ வாங்குதற்கு என்று பொருள் பட்டுப் பொருட் பெயரின்பின் வினையெச்சப் பொருள் உடையதாயிற்று. பூ + இன் + கு (‘இன்’ சாரியை) : பூ என்னும் பொருட்பெயர் பூ வாங்குதற்கு என வினை யெச்சப் பொருளை உடையதாயிற்று. போனான் என்பது வினை முடிபு. 4. உணற்கு வந்தான் - தொழிற்பெயரின்பின் வினையெச்சப் பொருட்டாய் வந்தது. 5. பிணிக்கு மருந்து - பொருட்பெயரின்பின் பெயரெச்சப் பொருட்டு; ‘பிணிக்குக் கொடுக்கும் மருந்து’ என்க. 6. உணற்குக் கருவி - தொழிற்பெயரின் பின் பெயரெச்சப் பொருட்டு; ‘உணற்கு உதவும் கருவி’ என்க. (வினையெச்சப்பொருளும் பெயரெச்சப்பொருளும் உடை யனவே இவை; பெயராம் தன்மை மாறி எச்சங்கள் ஆனவை அல்ல.) (இ. கொ. 55) நான்காம் வேற்றுமை நான்காம் வேற்றுமை உருபு கு. அதன் பொருளாவது, கொடை - பகை - நேர்ச்சி - தகுதி - அதுவாதல் - பொருட்டு - முறை - முதலான பொருள் தோன்றப் புணரும் பொருட் புணர்ச்சிக்- கண், ‘இதற்கு இது’ என அங்ஙனம் வருதற்குரிய எப்பொருளினையும் ஏற்றுக்கொள்ளும் பொருளாகத் தன்னை ஏற்ற பெயர்ப்பொருளை வேற்றுமை செய்தலாம். எ-டு : ‘இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்’ (கு. 232) ஒருவன் ஒரு காரியத்தை ஒரு கருவியால் செய்தல் அக்காரியம் தனக்கேனும் பிறர்க்கேனும் உதவுதற்பொருட்டன்றி வீண் காரியம் செய்யானாதலின், இது நான்காம் வேற்றுமை எனப்பட்டது. (நன். 298 சங்.) நான்காம் வேற்றுமை : ‘ஆதி’ என்பதன் விளக்கம் - ‘ஆதி’ என்றதினாலே, கைக்கு யாப்புடையது கடகம் : யாப்பு; அவனுக்கும் அவளுக்கும் பொருத்தம் என்பதும் அது. (யாப்பு - பொருத்தம்) ; இச்சொற்குப் பொருள் இது: சுட்டு; அதற்கு முன், இதற்குப் பின், ‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதி’ (கு. 543), இன்றைக்கு வரும், அவ்வூர்க்கு இவ்வூர் காதம் - என்பன : எல்லை; அவனுக்குச் சிறந்தவன் இவன் : சிறப்பு ; போர்க்குப் புலி இவன் : வீரம்; அரசனுக்குக் கண் அமைச்சன், மனைக்கு விளக்கம் மனையாட்டி : உவமை; மழைக்கு மின்னல் : ஏதுக்குறிப்பு; ‘உண்டு என்பதற்கு அடையாளம், இல்லை என்பதற்கு அடையாளம்’ - என்பதும் அது. இவ்வாறு ‘இதற்கு இது’ என்பதுபட வருவனஎல்லாம் கொள்க. (நன். 298 இராமா.) நான்காம் வேற்றுமைப் பொருள் - நான்காவதன் சிறப்பான பொருள் கொடைப்பொருள். அந்தணர்க்கு ஆவைக் கொடுத்தான் - எனவரும். ‘மாணாக் கர்க்கு நூற்பொருள் உரைத்தான்’ எனக் கொடைப்பொருள வாகிய சொல்லானன்றிப் பிறவாய்பாட்டாற் கூறுவனவும், ‘மாணாக்கர்க்கு அறிவு கொடுத்தான்’ எனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான்கண் செல்லாது ஆண்டுத் தோன்றும் பொருளும் கொடைப்பொருளில் அடங்கும். அதன் பொருள்கள் மேலும் வருமாறு : (தொ. சொ. 75 சேனா. உரை) 1. ஒன்றற்கு ஒன்று பயன்படுதல் (அதற்கு வினையுடைமை) : கரும்பிற்கு வேலி, ‘நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்’ (நான். 9) பயன்படுதல் - உபகாரம். 2. ஒன்றற்கு ஒரு பொருளை மேல் கொடுப்பதாக உடன் படுதல் (அதற்கு உடம்படுதல்) : சாத்தற்கு மகள் உடம் பட்டார், சான்றோர் கொலைக்கு உடம்பட்டார். 3. ஒன்றற்கு உரிமை யுடையதாகப் பொதுவாகிய பொருள் கூறிடப்படுதல் (அதற்குப் படு பொருள்) : சாத்தற்குக் கூறு கொற்றன் (சாத்தனது உடைமையில் பாதி கொற்றற்கு உரியது என்பது பொருள்) 4. உருபேற்கும் பொருள்தானே வாய்த்திடுவதொரு பொருண்மை (அதுவாகு கிளவி) : கடிசூத்திரத்திற்குப் பொன்; பொன் கடிசூத்திரமாய்த் திரியுமாதலின் ‘அது ஆகு கிளவி’ ஆயிற்று. கிளவி - பொருள். 5. ஒன்றற்கு ஒன்று பொருத்தம் உடைத்தாதல் (அதற்கு யாப் புடைமை) : கைக்கு யாப்புடையது கடகம், ‘உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது’ (முது. 77) 6. ஒரு பொருளினை மேல்பெறுதல் காரணமாக ஒரு தொழில் நிகழ்தல் (அதற் பொருட்டாதல்) : கூழிற்குக் குற்றேவல், கூலிக்கு வேலை. 7. ஒன்றற்கு ஒன்று நட்பாதல் : அவற்கு நட்டான், அவற்குத் தமன் 8. ஒன்றற்கு ஒன்று பகையாதல் : அவற்குப் பகை, ‘கள்வார்க் குத் தள்ளும் உயிர்நிலை’ (கு. 290) 9. ஒன்றற்கு ஒன்று காதலுடைத்து ஆதல் : நட்டார்க்குக் காதலன், புதல்வர்க்கு அன்புறும். 10. ஒன்றற்கு ஒன்று சிறத்தல் : வடுக அரசர்க்குச் சிறந்தார் சோழிய அரசர், கற்பார்க்குச் சிறந்தது செவி. இனி, ‘அப்பொருளும்’ (அன்ன பொருளும்) என்றதனால், இச்சொற்குப் பொருள் இது, அவற்குச் சோறுண்டு, நினக்கு வலி வாள், அவ்வூர்க்கு இவ்வூர் காதம், ‘மனைக்குப் பாழ் வாணுதல் இன்மை’ (நான். 20), ‘போர்க்குப் புணை’ (பு.வெ. 80) அவற்குத் தக்காள் இவள், ‘தன் சீரியல் நல்லாள் தான் அவற்கு ஈன்ற மைந்தன்’ ‘உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர்’ - என்றாற் போல்வன கொள்ளப்படும். (தொ. சொ. 76, 77 நச். உரை) ‘பிற’ என்றதனான், பண்ணுக்குத் தக்கது பாடல், பூவிற்குத் தக்கது வண்டு - போல்வன கொள்க. (தொ. சொ. 74 இள. 77 கல். உரை) 1. அதற்கு வினையுடைமை - கொடைப்பொருளேயன்றி உருபேற்கும் பொருட்கு வினையாதல் உடைமை கூறும் வழியும் நான்காம் வேற்றுமைப்பாலது. எ-டு : அவற்குப் போக்குண்டு, அவற்கு வரவுண்டு, கரும்பிற்கு உழுதான். 2. அதற்குப் படுபொருள் - உருபேற்கும் பொருட்கு இயல் கூறும்வழியும் நான்காவதாம். எ-டு : இதற்கு நிறம் கருமை, இதற்கு வடிவு வட்டம், இதற்கு அளவு நெடுமை, இதற்குச் சுவை கார்ப்பு, இச் சொற்குப் பொருள் இது, இவ்வாடைக்கு விலை இது. இன்னும் ‘அதற்குப் படுபொருள்’ என்றதனான், உடைப் பொருளும், அவ்விடத்திற்கு ஆம் பொருளும், காலத்திற்கு ஆம் பொருளுமாகி வருவன எல்லாம் கொள்க. எ-டு : அவற்குச் சோறுண்டு, ஈழத்திற்கு ஏற்றின பண்டம், காலத்திற்கு வைத்த விதை. 3. அதுவாகு கிளவி. எ-டு : கும்மாயத்திற்குப் பயறு. 4. அதற்கு யாப்புடைமை - உருபேற்ற பொருட்கு வலியாதலுடைமை; யாப்பு - வலிமை. எ-டு : போர்க்கு வலி குதிரை, நினக்கு வலி வாள். 5. சிறப்பு - இன்றியமையாமை பற்றி வரும். எ-டு : ‘நிலத்திற்கு அணிஎன்ப நெல்லும் கரும்பும்’ (நான். 9) ‘யாம் உமக்குச் சிறந்தனம் ஆதல் அறிந்தனிராயின்’ (கலி. 5) பிறவாவன : இவ்வூர்க்கு அவ்வூர் காதம் - நாளைக்கு வரும் - இவற்குத் தகும் இது - இவற்கு நன்மை பயக்கும் - அவற்குப் பிறந்த மகன் அதற்கு வினையுடைமை - ஒன்றற்கு ஒன்று பயன்படுதல். எ-டு : சாத்தற்குச் சோறு கொடுத்தான், கரும்பிற்கு வேலி, மயிர்க்கு எண்ணெய். அதற்கு உடம்படுதல், அதற்குப் படுபொருள் - இரண்டும் கொடைநீர்மையும் சிறிதுடைய. ஏனைய கொடைப் பொரு ளின் பாகுபாடல்ல; பிற பொருள் என அறிக. (தொ. சொ. 77 கல். உரை) நான்காம்வேற்றுமையில் பிறவேற்றுமை வந்து மயங்கல் - ஏழு வேற்றுமையுருபுகளும் நான்காவதன் பொருளில் மயங்கும். வருமாறு : முதல் வேற்றுமை - ‘இரப்பவர் என்பெறினும் கொள்வர்’ இரண்டாவது - ‘செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும்’ கு. 167 - தவ்வைக்கு மூன்றாவது - நாகரால் பலி - நாகர்க்கு நான்காவது - நாகர்க்குப் பலி ஐந்தாவது - ‘நாகரின்’ அன்புசெய்து - நாகர்க்கு ஆறாவது - நாகரது பலி - நாகர்க்கு ஏழாவது - நாகர்க்கண் அன்பு - நாகர்க்கு (இ. கொ. 47) நான்காம்வேற்றுமையுருபு சில உருபுகளொடு கூடிநின்றொழுகுதல் - நான்கனுருபு, ‘இதனது இஃது இத்தன்மைத்து’ என்னும் ஆறாவதன் பொருண்மையொடும், ‘ஒன்றனை ஒன்று கொள்ளும்’ என்னும் இரண்டாவதன் பொருண்மையொடும், ‘ஒன்றனால் ஒன்று தொழிற்படற்கு ஒக்கும்’ என்னும் மூன்றாவதன் பொருண்மையொடும், நிலத்தை வரைந்துகூறும் பொருண்மை - பண்பின் உறழ்பொரு - பற்றுவிடு பொருண்மைப் பெயர் - ஆகிய ஐந்தாவதன் பொருண்மையொடும், முறைக்கிழமைப் பட வரும் ஆறாவதன் பொருண்மையொடும் காலத்தின்கண் அறியப்படும் ஏழாவதன் பொருண்மை யொடும் வரும். எ-டு : யானைக்குக் கோடு கூரிது - யானையது கோடு கூரிது. இவட்குக் கொள்ளும் இவ்வணி - இவளைக் கொள்ளும் இவ்வணி. அவற்குச் செய்யத்தகும் அக்காரியம் - அவனான் செய்யத் தகும் அக்காரியம் கருவூர்க்குக் கிழக்கு - கருவூரின் கிழக்கு. சாத்தற்கு நெடியன் - சாத்தனின் நெடியன். மனைவாழ்க்கைக்குப் பற்றுவிட்டான் - மனைவாழ்க்கையின் பற்றுவிட்டான். சாத்தற்கு மகன் - சாத்தனது மகன். காலைக்கு வரும் - காலைக்கண் வரும். (மு.வீ. பெய. 88 - 96 உரை) நான்காவதன்கண் ஆறாவது மயங்கல் - நான்காம்வேற்றுமைத் தொடரொடு, முறைப்பொருண்மை கொண்டு நின்ற பெயர்ச்சொல்லினது ஆறாம்வேற்றுமைப் பொருண்மை மயங்கும். எ-டு : ஆவிற்குக் கன்று - ஆவினது கன்று. (தொ. சொ. 110 சேனா. உரை) நான்காவதன்கண் இரண்டாவது மயங்கல் - நான்காம்வேற்றுமைத் தொடரோடு ஒன்றனை ஒன்று கொள்ளும் என்னும் இரண்டாவதன் பொருண்மை மயங்கும். எ-டு : இவட்குக் கொள்ளும் இவ்வணி - இவளைக் கொள்ளும் இவ்வணி. (தொ. சொ. 110 சேனா. உரை) நான்காவதன்கண் ஏழாவதன் காலப்பொருள் மயங்கல் - நான்காம்வேற்றுமைத்தொடரோடு ஏழாவதன் காலத்தின் கண் அறியப்படும் பொருண்மை மயங்கும். எ-டு : காலைக்கு வரும் - காலைக்கண் வரும். (தொ. சொ. 110 சேனா. உரை) நான்காவதன்கண் ஐந்தாவதன் ஒப்பு எல்லைப் பொருள் மயங்கல் - நான்காம்வேற்றுமைத்தொடரோடு ஐந்தாவதன் நிலத்தை வரைந்து கூறும் எல்லைப்பொருண்மையும், பண்பின்கண் ஆகும் உறழ்பொரு ஆகிய பொருண்மையும் மயங்கும். எ-டு : கருவூர்க்குக் கிழக்கு - கருவூரின் கிழக்கு; சாத்தற்கு நெடியன் - சாத்தனின் நெடியன். (தொ. சொ. 110 சேனா. உரை) நான்காவதன்கண் ஐந்தாவதன் நீக்கப்பொருள் மயங்கல் - நான்காம் வேற்றுமைத் தொடரோடு ஐந்தாவதன் பற்றுவிடு பொருண்மையும் தீர்ந்துமொழிப் பொருண்மையும் ஆகிய நீக்கப் பொருண்மை மயங்கும். எ-டு : ஊர்க்குத் தீர்ந்தான் - ஊரின் தீர்ந்தான்; மனைவாழ்க் கைக்குப் பற்றுவிட்டான் - மனைவாழ்க்கையின் பற்றுவிட்டான். (தொ. சொ. 110 சேனா. உரை) நான்காவதன்கண் மூன்றாவது மயங்கல் - நான்காம்வேற்றுமைத்தொடரோடு ஒன்றனான் ஒன்று தொழிற்படற்கு ஏற்கும் மூன்றாவதன் பொருண்மை மயங்கும். எ-டு : அவற்குச் செய்யத்தகும் அக்காரியம் - அவனான் செய்யத் தகும் அக்காரியம். (தொ. சொ. 110 சேனா. உரை) நான்காவதன் சிறப்பு என்னும் பொருளும் பிறபொருளும் - சிறப்பாவது இன்றியமையாமை எ-டு : யாம் உமக்குச் சிறந்தனம், ‘நிலத்திற்கு அணியென்ப நெல்லும் கரும்பும்’ (நான். 9) இனி, நான்காவதன் பிற பொருளாவன : இவ்வூர்க்கு அவ்வூர் காதம், நாளைக்கு வரும், இவர்க்குத் தகும் இது, இவர்க்கு நன்மை பயக்கும், அவற்குப் பிறந்த மகன் - என்பனவும் பிறவு மாம். (இவை முறையே தொலைவு, காலம். தகுதி, பயன், பிறப்பு முதலாயின.) (தொ. சொ. 73 தெய். உரை) நான்காவதனோடு ஏழாம்வேற்றுமை நிலப்பொருண்மை மயங்கல் - எ-டு : ஊர்க்குச் சென்றான் - ஊர்க்கண் சென்றான்; ஊர்க்கு உற்றது செய்வான் - ஊர்க்கண் உற்றது செய்வான். (தொ. சொ. 110 சேனா. உரை) நான்காவது அளவுபட்ட பொருண்மைத்து அன்றி வருதல் - ஏனை வேற்றுமைகள் போல அளவுபட்ட பொருண்மைத் தன்றி, நான்காம்வேற்றுமை வரும். அவையும் ‘இதற்கு இஃது’ என்பதே பட உரைத்துக் கொள்க. அவை வருமாறு : அரசர்க்கு அமைச்சன், அவர்க்குத் தமர், நமக்கு நல்லன் ‘நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்’ (நான்மணி. 9) ‘மனைக்குப் பாழ் வாணுதல் இன்மை’ (நான்மணி 20) ‘போர்க்குப் புணைமன்’ (பு.வெ.மா. 4 : 20) ‘கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை’ (கு. 290) ‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்’ (கு. 543) ‘உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது’ (முதுமொழி. 77) ‘பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை’ ‘ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்தும் அன்று சிறுகான் யாறே’ (குறுந். 113) ‘தனக்குக் கரியென்ப’; ‘நல்லாள்தான் அவற்கீன்ற மைந்தன்’ ‘மைந்தற்கும் மடவாட்கும் நிகழ்ந்த கேட்டு’, ‘அஞ்சுமின் கொலை அஞ்சுமின் தீயன’ என்பன முதலாயின கொள்க. (நன். 297 மயிலை.) நிகழ்கால இடைநிலை - நில் கின்று - என்பன நிகழ்கால இடைநிலை. நில் என்பது லகரம் னகரமாகத் திரிந்து தனக்கேற்ற றகரம் பெற்று நிற்கும். இனி, ‘நின்’ ‘கின்’ என நிற்கும் என்றுமாம். கிட இரு - என்பன வும் நிகழ்கால இடைநிலையாய் வரும். கிறு என்பது பிற் காலத்து நிகழ்கால இடைநிலை. எ-டு : உண்ணாநின்றான், உண்கின்றனன் : நில், கின்று; உண்ணாகிடந்தான், உண்ணாவிருந்தனன் : கிட, இரு; உண்கிறேன் : கிறு. (தொ. சொ. 204 நச். உரை) ‘நிகழ்காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல்’ - நிகழ்காலத்துக்கு உரித்தாய் நின்றும் ஏனைய காலங்களையும் உள்ளடக்கி நிற்கும் பொருள்நிலைமையினையுடைய செய்யும் என்னும் முற்று, முக்காலத்திற்கும் பொதுவாய் முற்றும் எச்சமும் ஆம் நிலைமை நோக்கிப் ‘பொதுச்சொல்’ எனப் பட்டது. ‘மெய்ந்நிலை’ என்றது, ஏனைய நிகழ்காலச் சொல்லோடு ஒவ்வாமை உணர்த்துதற்கு. எ-டு : தீச்சுடும் என்றால், பண்டும் சுட்டது, இன்றும் சுடுகிறது, மேலும் சுடும் என்பதனை விளக்கியவாறு. (தொ. சொ. 242 நச். உரை) நிகழ்கால வினையெச்சம் - செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் நிகழ்காலம் காட்டும். ஈண்டு நிகழ்காலமாவது, முடிக்கும் சொல்லால் உணர்த்தப்படும் காலத்திற்குத் தன் தொழில் இடையீடு படாமல் (தொடர்ந்து) நடத்தல். (நன். 343) எ-டு : கோழி கூவப் பொழுது புலர்ந்தது - ‘கூவ’ என்னும் செயவென் எச்சத்திற்குப் ‘புலர்ந்தது’ என்ற வினை முற்று முடிக்கும் சொல். பொழுது புலர்தலும் கோழி கூவுதலும் இடையீடின்றி ஒரே காலத்தே நிகழுமாறு காண்க. செயவென் எச்சம் காரணப்பொருட்டாயும் காரியப் பொருட் டாயும் வரும். காரணப்பொருட்டாக வருவழி அஃது இறந்தகாலத்தையும், காரியப்பொருட்டாக வருவழி எதிர் காலத்தையும் காட்டும். எ-டு : மழை பெய்ய நெல் விளைந்தது - காரணப் பொருட்டு. நெல் விளைய மழை பெய்தது - காரியப் பொருட்டு. (நன். 344 சங்.) உண்ண வந்தான் என்னுமிடத்துச் செயவென் எச்சம் காரண காரியம் என்னும் இருபொருட்டாயும், ‘கடிக்கமலம் முகம் காட்ட.......... கருநெய்தல் கண்காட்டும்’ (ஞான.தே) என்னுமிடத்துக் காரண காரியம் இரண்டும் இன்றியும் வரும் என்பர் சங்கர நமச்சிவாயர். நிகழா நிகழ்வுடையனவற்றை நிகழ்வனவாகக் காட்டல் - உலகவழக்கில் இயங்காதனவற்றை இயங்குவனவாகக் கூறுத லும், சொல்லாதனவற்றைச் சொல்லுவனவாகக் கூறுதலும் முதலியன ‘இத்தன்மையன’ என்று சொல்லும் குறிப்பு மொழியாம். எ-டு : அந்நெறி ஈண்டு வந்து கிடந்தது; அம்மலை வந்து இதனொடு பொருந்திற்று; ‘அவல் அவல்’ என்கின்-றன நெல்; ‘மழை மழை’ என்கின்றன பைங்கூழ். ஆயிரம் காணம் வந்தது - என ஒருவனால் இயக்கப்படுவ தனைத் தானே இயங்கிற்றாகக் கூறுதல், நீலம் பற்றிய ஆடையை ‘நீலம் உண்ட ஆடை’ எனக் கூறுதல் போல்வன குறிப்புமொழியாம். (தொ. சொ. 422 சேனா., நச் உரை) ‘நிகழும் காலத்துச் செய்யும் என் கிளவி’ செய்யும் என்னும் பெயரெச்சம் நிகழ்வும் எதிர்வும் உணர்த்து மாயினும், செய்யும் என்னும் முற்றுப் பண்டைக் காலத்து நிகழ்காலமே உணர்த்தி நின்றது.(தொ. சொ. 227 சேனா. உரை) ‘நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச் சொல்’ நிகழ்காலத்துக்கு உரித்தாய் நின்றும் ஏனைய காலங்களையும் உள்ளடக்கி நிற்கும் பொருண்மையுடைய செய்யும் என்னும் முற்றுச் சொல். எ-டு : மலை நிற்கும். ‘மெய்ந்நிலை’ என்றதனான், ஏனைய நிகழ்காலச் சொற்கள் மூன்றுகாலங்களையும் உள் ளடக்கி நில்லா என்றவாறு. (தொ. சொ. 242 நச். உரை) ‘நிகழும்காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல்’ இயல்பு - இப்பொதுச்சொல்லாவது செய்யும் என்னும் வாய்பாட்டு முற்று. அது தன்மை முன்னிலை இரண்டிடத்தும் வாராது; படர்க்கைப் பலர்பாலிலும் வாராது; படர்க்கையிடத்து ஆண் - பெண் - ஒன்று - பல - என்ற நான்கு பால்களிலேயே வந்து நிகழ்காலம் காட்டும். முக்காலத்துக்கும் பொதுவான வினை நிகழ்ச்சியுடைய பொருளைச் செய்யும் என்னும் நிகழ்கால வாய்பாட்டான் கூறுதல் மரபு. எ-டு : அவன் வரும், அவள் வரும், அது வரும் , அவை வரும்; மலை நிற்கும், தீச் சுடும், ஞாயிறு இயங்கும், உயிர் உணரும். முக்காலத்துக்கும் பொதுவாகவும் முற்றும் பெயரெச்சமு மாய்ச் செய்யுமென்னும் நிகழ்காலவினை இருத்தலை நோக்கி அதனைப் பொதுச்சொல் என்பர். இஃது ஏனைய நிகழ்காலச் சொல்லோடு ஒவ்வாது, ஏனைக் காலங்களையும் உள்ளடக்கி நிற்கும் பொருளுடைமை நோக்கி ‘மெய்ந்நிலை’ எனப் பட்டது. (தொ. சொ. 242 நச். உரை) ‘நிகழூஉநின்ற பலர் வரை கிளவி’ - நிகழ்காலமே பற்றி வரும், படர்க்கைப் பலர்பாலுக்கு இயையாத செய்யும் என்னும் முற்று. இது படர்க்கைக்கண் ஆண் பெண் ஒன்று பல - என்ற இருதிணைக்கண்ணும் வரும் பொதுமுற்று. ஆயின், செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றுள் சில இரு திணைக்கும் பொதுவாகாது உயர்திணை ஒருமை உணர்த்தலுமுரிய. எ-டு : சாத்தன் யாழ்எழூஉம், சாத்தி சாந்தரைக்கும் சாத்தன் சாத்தி - என்ற பொதுப்பெயர்கள், யாழ் எழூஉதல் - சாந்து அரைத்தல் - என்ற வினைகளான் உயர்திணைஒருமை உணர்த்தின. (தொ. சொ. 173 சேனா., 175 நச். உரை) ‘நிகழூ நின்ற பால் வரை கிளவி’ என்பது இளம்பூரணர் நச்சினார்க்கினியர் இவர்களது பாடம். சாத்தன் புல் மேயும், சாத்தி புல் மேயும் - என மேயும் என்ற செய்யுமென் வினையான் அஃறிணைஒருமை பெறப்பட்டது. (சாத்தன் குரைக்கும், சாத்தி கறக்கும் என்புழிக் குரைத்தல் கறத்தல் என்ற வினைகளான் சிறுபான்மை அஃறிணை ஒருமையும் செய்யும் என்னும் வினைமுற்று ஒரோவழிச் சுட்டி வரும்.) (தொ. சொ. 169 தெய். உரை) நித்தம் - நித்திய சமாசம் ஒருகலம், ஒருபொருள் என்பன எண்தொகையில் நித்தியம்; தொக்கன்றி வாராதவை. ‘ஒன்று தேரினான்’ (சீவக. 417) என்புழி, எதுகை நோக்கி விகாரப்பட்டது; இது ‘தேர் ஒன்றினான்’ எனின் அமையும். ‘ஒன்று நன்று உள்ளக் கெடும்’ (கு. 109) - இதனை ‘நன்று ஒன்றும்’ என மாற்றிக் கொள்ளுதல் தக்கது; ஆகவே விகாரமன்று. ‘தன்தோள் நான்கின் ஒன்றுகைம் மிகூஉம்’ - இங்கு ‘ஒன்றுகை’ என்னாது ‘நான்கின் ஒன்று’ எனக் கொள்ளுதலால் இதுவும் விகாரமன்று. (கைம்மிகல் - மிகுதல்; கை : உபசருக்கம்) கிழக்கே மேற்கு என்பதே விதிப்படி ஆவது; கீழ்மேற்கு என்பது வழு. (பி.வி. 27) நிபாதம் - உடம்பொடு புணர்த்தல் என்னும் உத்தி; சான்றோர் அமைத்த சொற்களை அவ்வாறே கொள்ளுதல். எ-டு : ‘பழமுதிர் சோலை மலைகிழ வோனே’ (முருகு. 317) என்ற பெயரால் அது முருகனுக்குரிய இருப்பிடங்களில் ஒன்று என்று அறிதல். (பி.வி. 50) நிமித்த காரணம் - மூன்றாம்வேற்றுமைப் பொருளான கருவியுள் அடங்கும் காரணங்களில் ஒன்று. ‘நாணால் உயிரைத் துறப்பர்’ (கு. 1017) - உயிரைத் துறத்தல் நாணைக் காத்தல்பொருட்டு ஆதலின் உயிர்துறத்தலுக்கு நாண் நிமித்த காரணம் ஆயிற்று. (நிமித்த காரணம் என்பது காரியத்திற்கு நேரிடையாகக் காரணம் ஆகாது ஏதோ ஒரு வகையால் காரணம் ஆவது. ‘மூன்றாம்வேற்றுமைக் கருவிக்கண் அடங்குவன’ காண்க.) (இ. கொ. 34) நிர்த்தாரணே சட்டி - கூட்டத்தினின்று பிரித்து ஒன்றைச் சிறப்பித்துரைத்தல். நிர்த்தாரணம் - நிலையிட்டுரைத்தல். அப்பொருளில் ஏழாம் வேற்றுமை நிர்த்தாரணே சத்தமி என்று வருவதைப் போல, ஆறாம் வேற்றுமையும் வருவது. பிரயோகவிவேக நூலார் சிலவிடத்துக் குவ்வுருபும் ஆறாம்வேற்றுமையே என்னும் கருத்துடையார். எ-டு : ‘முறை செய்து......... மக்கட்கு, இறையென்று வைக்கப் படும்’ (கு. 388) என்ற குறட்பாவில் மக்கட்கு என்பது மக்களுள் என ஏழாம் வேற்றுமை வருமிடத்து ஆறாம்வேற்றுமை வந்தது என்று காட்டி அதனை ‘நிர்த்தாரணே சட்டி’ என்பார். (பி.வி. 13) நிர்த்தாரணே சத்தமி - இடப்பொருளில் அன்றி வேறுபொருளில் வருவதோர் ஏழாம் வேற்றுமை; உள் - இல் - என்பன போன்ற உருபுகளைக் கொண்டு வரும். இதனை வடநூலார் கூட்டிப் பிரித்தல் என்னும் யோகவிபாவம் என்ற பொருளிலும், பிரித்துக் கூட்டல் என்னும் விபாகயோகம் என்ற பொருளிலும், ஆதாரமின்றி - இடப்பொருள் இல்லாமல் - வரும் சத்தமி என்பர். எ-டு : ‘படைகுடி.............. அரசருள் ஏறு’ (கு. 381) அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை, நின்றாரின் பேதையார் இல்’ (கு. 142) இவற்றுள் ஒருவனை அரசருள் கூட்டிப் பின் ‘ஏறு’ எனப் பிரித்தலும், ஒருவனை அறன்கடை நின்றாருள் கூட்டிப் பின் ‘பிறன்கடை நின்றான்’ எனப் பிரித்தலும் கூட்டிப் பிரித்தல். ‘வையத்துள்.......... தெய்வத்துள் வைக்கப் படும்’ கு. 50 ‘ஒத்தது.............. செத்தாருள் வைக்கப்படும்’ கு. 214 இவற்றுள் வாழ்வாங்கு வாழ்பவனை வையத்தாரிடமிருந்து பிரித்துத் தெய்வத்தொடு கூட்டலும், ஒத்தது அறியானை உயிருடையாரிடமிருந்து பிரித்துச் செத்தாருள் கூட்டலும் பிரித்துக் கூட்டல். (பி.வி. 13) நிருத்தி - ஒரு சொல்லின் பொருளைத் தொடரால் விளக்கியுரைத்தல். ஊழ் - அஃதாவது இருவினைப்பயன் செய்தவனையே சென்று அடைதற்கு ஏதுவாகிய நியதி - என்பது போல விளக்கி யுரைப்பது. இது நிருவசனம் எனவும்படும். (பி.வி. 50) நிலங்கடந்தான், கடந்தான் நிலம் : தொடர்ப் பெயர் - இடையே தொக்கதனைத் தொகைநிலைத்தொடர் என்றமை யால், கடந்தான் நிலம் என இறுதிக்கண் தொக்குப் பிளவு பட்டு நின்றது தொகைநிலைத் தொடர் ஆகாதோ எனின், ‘நிலங்கடந்தான்’ என்பது ஒரோவழி மாறிக் கூறுதலின் பிளவு பட்டு நின்றதன்றி அதுவும் இடைக்கண் தொக்க தொகை நிலைத் தொடரேயாம் என்க. (நன். 363 சங்.) ‘நிலத்துவழி மருங்கின் தோன்றலான’ - நால்வகை ஒழுக்கங்களின் இடமாகிய இடத்தே அவற்றிற்கு உறுப்பாய்த் தோன்றலின் (கருப்பொருள்களின் பெயர்கள் விரவுப்பெயராயினும் உயர்திணையைச் சுட்டா) எ-டு : ‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு வதுவை அயர்ந்த வன்பறழ்க் குமரி’ ஈண்டுக் கடுவன், மூலன் - என்பன உயர்திணை ஆண்பாற் குரிய அன் விகுதியுடையவேனும் (இறைச்சிப்பொருட்கு உபகாரப் படுதலின்) அஃறிணையையே சுட்டின. (தொ. சொ 198 நச். உரை) நிலத்தை வரைந்து கூறும் ஐந்தாவதன் எல்லைப்பொருண்மை - இவ்வெல்லைப்பொருண்மைக்கண் நான்கன்உருபு மயங்கி வரும். எ-டு : கருவூரின் கிழக்கு - கருவூர்க்குக் கிழக்கு (தொ. சொ. 111 நச். உரை) நிலப்பெயர் - உயர்திணைப் பெயர்களுள் ஒருவன் தான் பிறந்த நிலத் தினான் பெற்ற பெயரும் ஒரு வகைத்தாம். எ-டு : அருவாநாட்டில் பிறந்தவன் அருவாளன் சோழ நாட்டில் பிறந்தவன் சோழியன் (தொ. சொ. 167 நச். உரை) நிலம் வலிதாயிற்று : விளக்கம் - கல்லும் இட்டிகையும் பெய்து குற்றுச்செய்யப்பட்டுச் செயற்கை வலிமை பெற்ற நிலத்தை ‘நிலம் வலிதாயிற்று’ எனலாம். முன் சேற்றுநிலம் மிதித்துப் பின் வன்னிலம் மிதிப்பவன் ‘நிலம் வலிதாயிற்று’ என்று கூறின், ஆண்டு வலிமை, மெலிதாயது வலிதாய் வேறுபட்டது என ஆக்க வேறுபாடு குறித்து நிற்றலின், இயற்கைப் பொருள் ஆக்க மொடு வந்ததன்றாம். நிலத்துக்கு வன்மை இயல்பன்று என்று கருதி ‘நிலம் வலிதாயிற்று’ என்று கூறுவது பிறழ உணர்ந்தார் கூற்றாம். (தொ. சொ. 19 சேனா. உரை.) நிலைமை இல் உடைமைகள் பற்றிய பிறிதின்கிழமை - குறை என்ற ஆறாம்வேற்றுமைப் பொருளான பிறிதின் கிழமை எனப்படும் ‘வேறாய்த் தோன்றல்’ என்னும் பொருள். சாத்தனது பசு, சாத்தனது செறு, சாத்தனது பொன் - என்றாற் போல்வன. இவை முன் ஒருவர்க்கு உடைமையாயும் பின் வேறொருவர்க்கு உடைமையாயும் வருதலின் ‘நிலைமை இல் உடைமை’ ஆயின. (‘குறை என்பதன் வகைகள்’ காண்க.) (இ. கொ. 40) நிறப்பண்பு உணர்த்தும் உரிச்சொற்கள் - குரு, கெழு - என்பன நிறம் என்னும் உரிச்சொல்லது பண்புப் பொருளன. எ-டு : ‘குருமணித் தாலி’, ‘செங்கேழ் மென்கொடி’ (அக. 80) (கெழு ‘கேழ்’ எனத் திரிந்தது) (தொ. சொ. 301 சேனா. உரை) நிறவேறுபாடு உணர்த்தும் உரிச்சொற்கள் - கறுப்பு, சிவப்பு - என்ற உரிச்சொற்கள் நிறவேறுபாடு ஆகிய பண்பு உணர்த்துவதற்க உரியன. எ-டு : கறுத்த காயா, ‘சிவந்த காந்தள்’ (பதிற். 15) (தொ. சொ. 373 சேனா. உரை) ‘நின்றாங்கு இசைத்தல்’ - காலம் உலகம் முதலிய உணர்திணைச்சொற்கள் நின்றாங்கு நின்று உயர்திணைமுடிபு கோடல். காலம் உலகம் முதலியன உயர்திணைச்சொல்லாயினும், இருந்த நிலையில் அஃறிணை -முடிபே கொள்ளும்; ஈறு திரிந்து காலன் - உலகர் - என்றாற் போல வாய்பாடு வேறுபட்டால்தான் உயர்திணைமுடிபு கொள்ளும். எ-டு : காலன் கொண்டான், உலகர் பசித்தார். (தொ. சொ. 59, 60 நச். உரை) நின்றாங்கு இசைப்பன - குடிமை ஆண்மை இளமை மூப்பு அடிமை வன்மை விருந்து குழு பெண்மை அரசு மக குழவி ‘தன்மை திரி பெயர்’ ‘உறுப்பின் கிளவி’ காதற்சொல் சிறப்புச்சொல் செறற்சொல் விறற்சொல் - என்ற பதினெட்டும் ஈறு திரிதல் இன்றி நின்றாங்கு நின்று அஃறிணைக்கண் இசைத்தலேயன்றி, உயர்திணையானும் இசைக்கும். அவை வருமாறு: குடிமை நல்லன் - ஆண்மை நல்லன் - இளமை நல்லன் - மூப்புத் தீயன் - விருந்து வந்தான் - அடிமை வெய்யன் - வன்மை மிக்கான் - குழு வெய்யன் - பெண்மை மிக்காள் - அரசு செங்கோலன் - மக வெய்யன் - குழவி நல்லள் - அலி நல்லன் - குருடு தீயன் - பாவை செய்யோள் - கண் காதலன் - பொறியறை தீயன் - அருந்திறல் பிரிந்தான் - என்பனவும், வேந்து செங் கோலன் - வேள் தீயன் - குரிசில் நல்லன் - அமைச்சு ஆற்றலன் - புரோசு பேராற்றலன் - என்பனவும் ஈறு திரியாது நின்று உயர்திணைவினை கொண்டன. (தொ. சொ. 59 நச். உரை) நின்றாங்கு இசையாதன - காலம் உலகம் உயிர் உடம்பு தெய்வம் வினை பூதம் ஞாயிறு திங்கள் சொல் - என்ற பத்தும், கனலி மதி வெள்ளி வியாழம் - போல்வனவும் உயர்திணைச்சொல்லாயினும் தாம் நின்ற வாறே இருந்து அஃறிணைமுடிபினை ஏற்கும். உயர்திணை முடிபு ஏற்க வேண்டுமாயின் ஈறுதிரிந்து உயர்திணைப் பெயர்க்குரிய அன் அள் அர்- முதலிய விகுதி பெற்றன ஆதல் வேண்டும். வருமாறு: காலம் தீது - உலகம் பசித்தது - உயிர் போயிற்று - உடம்பு கிடந்தது - தெய்வம் செய்தது - வினை விளைந்தது - பூதம் புடைத்தது - ஞாயிறு மறைந்தது - திங்கள் எழுந்தது - சொல் நன்று - கனலி எழுந்தது - மதி குறைந்தது - வெள்ளி எழுந்தது - வியாழம் மறைந்தது. இவை ஈறு திரிந்து உயர்திணைக்குரிய வினை பெறின், காலன் கொண்டான் - உலகர் பசித்தார் - பரிதியஞ்செல்வன் மறைந்தான் - திங்களஞ்செல்வன் எழுந்தான் - முதலாக வருதல் காண்க. (தொ. சொ. 58, 60 நச். உரை) நீஇர், நீ, ஒருவர் - என்பன குறிப்பினால் பால் உணர்த்துதல் - ‘நீயும் தவறிலை’ (கலி. 56) என்ற தலைவன் கூற்றில் ‘நீ’ பெண் பாலை உணர்த்திற்று. ‘நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை’ (புறநா. 57) என்னும் புலவர் கூற்றில் ‘நீ’ ஆண்பாலை உணர்த்திற்று. ‘என்போல் இன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ’ (கலி. 129) என்று தலைவி கடலை நோக்கிக் கூறும் கூற்றில் ‘நீ’ அஃறிணையை உணர்த்திற்று. நீ அரசன், நீ குயத்தி, நீ கடல், நீ வான் - என முறை வந்த சொல்லினான் பால் விளங்கின. ‘ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றின், வழிபடுதல் வல்லுதல் அல்லால்’ (நாலடி. 309) என்றவழி, ஒருவர் ஆண்பாலை உணர்த்திற்று. ‘ஆயிழையார் ஒருவர் அயில்வேலார் ஒருவர்’ - இவை சார்ந்த சொல்லான் பால் (முறையே பெண்பாலும் ஆண்பாலும்) உணர்த்தின. (நீஇர் - என்பதற்கும். ஏற்றபெற்றி முடிக்கும் சொல் பாலுணர்த்துமாறு கண்டுகொள்க.) (தொ. சொ. 187 தெய். உரை) நீக்கத்தின்கண் மயக்கம் - நீக்கம் என்னும் ஐந்தாம்வேற்றுமைக்கண் இரண்டாவதும் நான்காவதும் வந்து மயங்கும். எ-டு : மதுரையின் நீங்கினான் - மதுரையின் வடக்கு - என ஐந்தாவதன் பொருண்மைக்கண், மதுரையை நீங்கி னான் - என இரண்டாவதும், மதுரைக்கு வடக்கு - என நான்காவதும் முறையே வந்து மயங்கியவாறு. (இ. கொ. 48) நீக்கம் பற்றிய ஐந்தன் பொருள் - தீர்தல், பற்றுவிடுதல் - என்பன ஐந்தாவதன் நீக்கப்பொருளன. ஊரின் தீர்ந்தான் - மனைவாழ்க்கையின் பற்றுவிட்டான் - என ஐந்தாம்வேற்றுமையுருபு ‘இன்’ நீக்கப்பொருளில் வரும். (தொ. சொ. 78 நச். உரை) ‘நீயிர்’ உருபு ஏலாததன் காரணம் - தொல்காப்பியனார் கருத்துப்படி, நும் என்பது வேர்ச்சொல்; நீயிர் என்பது அதன் முதல்வேற்றுமை வடிவம். நும் என்பதன் திரிபே நீயிர் என்பது. முதல் வேற்றுமைக்கு என்று திரித்துக் கொண்ட ‘நீயிர்’ பயனிலை கொள்ளுமேயன்றி உருபு ஏலாது; நும் என்பதே உருபேற்கும். இனி, நீயிர் என்பதை அடிப்படைச் சொல்லாகக் கொண்டு அது நும் எனத் திரிந்து உருபேற்கும் என்பதும் ஒன்று. யான் யாம் நாம் - என்பன முறையே என் எம் நம் - எனத் திரிந்து உருபேற்றல் போல, நீயிர் என்பதும் நும் எனத் திரிந்து உருபேற்றவாறு. (தொ. சொ. 68 சேனா. உரை) நீயிர் நீ என்பன பால் திணை திரிதல் - நீயிர் நீ என்னும் முன்னிலைச்சொற்களுள், நீயிர் என்பது பன்மை; நீ என்பது ஒருமை. இவை ஆண் பெண் பலர் பால்களை உணர்த்தா, திணையையும் சுட்டா. சொல்லுவான் குறிப்பினாலேயே இவை உயர்திணை அஃறிணை என்னும் இரண்டனுள் எத்திணையைச் சார்ந்தவை, முப்பால்களுள் எப்பாலை உணர்த்துபவை என்பதனை உணர முடியும். நீ இருதிணை ஒருமைக்கும் நீயிர் இருதிணைப் பன்மைக்கும் பொதுச்சொல்லாதலின், இவற்றைத் தனித்துக் கூறியவழித் திணையோ பாலோ புலப்படா. (தொ. சொ. 190,192, 195 நச். உரை) முன்னிலையிடம் விரவுத்திணைக்கு உரியது. நீயிர் நீ - என்பன விரவுத்திணையின் பன்மை ஒருமைச் சொற்கள். அவை திணை யையும் ஆண்பெண் பால்களையும் உணர்த்தமாட் டாமல் ஒருமை பன்மைப் பால்களையே குறிப்பனவாம். (நச். உரை) நுண்மைப் பண்பினவாகிய உரிச்சொற்கள் - நொசிவு நுழைவு நுணங்கு - என்பன நுண்மையாகிய பண்பினை உணர்த்தும் உரிச்சொற்கள். எ-டு : ‘நொசிமட மருங்கு’ (கலி. 60), ‘நுழைநூல் கலிங்கம்’ (மலை. 561) ‘நுணங்குதுகில் நுடக்கம் போல’ (நற். 15) (தொ. சொ. 374 சேனா. உரை) நுணுக்கக் குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் - ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாய்தல் - என்ற நான்கும் பண்டுள்ளது ஒன்றனது நுணுகுதலாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற் களாம். எ-டு : ‘ஓய்களிறு’ (கலி. 7) - உடல் தளர்ந்த யானை ‘பாய்ந்து ஆய்ந்த தானை’ (கலி. 96) பொங்குதல் அவிதலான் நொசிந்த துகில் ‘நிழத்த யானை’ (மது. 303) - அயர்ந்த யானை ‘கடும்புனல் சாஅய்’ (நெடு. 18) - விரைந்து செல்லும் புனல் வேகம் குறைந்து. (தொ. சொ. 330 சேனா. உரை) நும்மின் திரிபெயர் - நும் என்பதனை முன்னிலைப்பன்மை வேர்ச்சொல்லாகக் கொள்ளின், அஃது எழுவாய்வேற்றுமையாதற்கண் திரித்துக் கொள்ளப்பட்ட ‘நீஇர்’ என்னும் முன்னிலைப்பன்மைச் சொல். (தொ. சொ. 143 சேனா. உரை) நும் என்ற பெயர்வேர்ச்சொல்லின் திரிபாகிய நீயிர் என்பது எழுவாய் வேற்றுமை. இச்சொல் விளிகொள்ளாது. (தொ. சொ. 145 நச். உரை) நூற்றுலாம் மண்டபம் - நூறு என்னும் வரையறைப் பண்புப்பெயர் அவ்வெண்ணுப் பெயரை அறிகுறியாகக் கொண்ட அளவினைக் கொண்ட மண்டபத்தை உணர்த்தும். இரவில் உண்டபின் நூறு அடி உலாவ வேண்டும் ஆதலின் அங்ஙனம் (சிலமுறை நடந்து) உலாவுதற்குரிய மண்டபம் - என்றவாறு. (தொ. சொ. 119 நச். உரை) (நச். உரையில், “ ‘நூற்றுலாம் மண்டபம்’ என்புழி” என்னும் தொடர் விடுபட்டுள்ளது. இவ்வடி சீவக. 2734 ஆம் பாடலில் நிகழ்கிறது. அதற்கு நச். உரையும் காண்க.) நெல்லது குப்பை, குப்பையது நெல் - நெல்லினது குப்பை : இஃது ஒன்று பல குழீஇய ஒன்றன் கூட்டத் தற்கிழமை; மக்களது தொகுதி என்பதும் அது. ஒன்றன் கூட்டம் மாறிக் குப்பையது நெல் என வரின், உறுப்புத் தற்கிழமையாம். (தொகுதியது மக்கள் என்பதும் அது.) பலவின் ஈட்டம் மாறினும் அதுவாம். எ-டு : தொகுதியது படை, கூட்டத்தினது விலங்கு) (நன். 300 இராமா) நேமிநாதச் சொல்லதிகாரம்: இயல்கள் உணர்த்தும் செய்திகள் - நேமிநாதச் சொல்லதிகாரம் தொல்காப்பியச் சொல்லதிகாரம் போல ஒன்பது இயல்களைக் கொண்டது. இவ்வியல்கள் முறையே வருமாறு : மொழியாக்க மரபு தொல்காப்பியக் கிளவியாக்கத்தின் சுருக்கம் இது; 14 வெண்பாக்களால் ஆகியது. கிளவியாக்கச் செய்திகள் பெரும்பாலும் சூத்திரங்களாலும் உரையாலும் உணர்த்தப் படுகின்றன. வேற்றுமை மரபு ஐந்து வெண்பாக்களால் இயன்ற இவ்வியலுள், முதல் ஏழு வேற்றுமைகள் தொல்காப்பிய வேற்றுமையியலை ஒட்டி விளக்கப்பட்டுள. தொல்காப்பியம் குறிப்பிடுவது போல வேற்றுமையுருபுகள் கொண்டு முடியும் சொற்கள் இதன்கண் குறிப்பிடப்படவில்லை. உருபு மயங்கியல் தொல்காப்பிய வேற்றுமைமயங்கியலின் சுருக்கம் இது. இதன்கண் மூன்று நூற்பாக்களில் பொருள்மயக்கம், உருபு மயக்கம், ஆகுபெயர் - வகைகள் என்பன சொல்லப்பட்டுள. விளிமரபு தொல்காப்பிய விளிமரபின் சுருக்கம் இது. இதன்கண் ஆறு நூற்பாக்கள் உள. தொல்காப்பிய விளிமரபின் செய்திகள் பலவும் பெரும்பாலும் எஞ்சாமல் சூத்திரங்களாலும் உரை யாலும் உணர்த்தப்பட்டுள்ளன. பெயர்மரபு ஐந்தாம் இயலாகிய இது தன்னகத்து ஒன்பது நூற்பாக் களாலும் அவற்றின் உரையாலும் தொல்காப்பியம் பெயரியற் செய்திகள் பெரும்பாலனவற்றைக் குறிப்பிடுகிறது. வினைமரபு தொல்காப்பிய வினையியலை ஒட்டி அமைந்த பன்னிரண்டு நூற்பாக்களைக் கொண்ட இயல். இதன்கண் நூற்பாவானும் உரையானும் தொல்காப்பிய வினையியற் செய்திகள் பலவும் அறிவிக்கப்பட்டுள. இடைச்சொல் மரபு இவ்வியல் தொல்காப்பிய இடையியலை உட்கொண்டு ஐந்து நூற்பாக்களில் பல இடைச்சொல் இலக்கணங்களை அறி விக்கிறது. உரிச்சொல் மரபு இதன்கண் தொல்காப்பியம் கூறும் உரிச்சொற்கள் பலவற்றின் பொருள் ஐந்து சூத்திரங்களில் உணர்த்தப்படுகிறது. நொடை முதலிய புதிய உரிச்சொற்களும் குறிக்கப்பட்டுள. தொல் காப்பியம் ‘எல்’ என்பதனை இடைச்சொல்லாகக் கூறியிருப்ப, இந்நூல் அதனை உரிச்சொல்லாகவே குறிப்பிடுகிறது. (நொடை-விலை) எச்சமரபு சொல்லதிகார இறுதியியலாம் இதன்கண், பதினொரு சூத்திரங்களில், தொல்காப்பிய எச்சவியலது சுருக்கமாகச் சொல்லதிகாரத்து எஞ்சிய செய்திகள் ஆகிய தொகைகள் - எச்சங்கள் பொருள்கோள் - முதலிய பலவும் இடம்பெற்றுள. நேர்பும் நெடுமையும் குறிப்பிடும் உரிச்சொற்கள் - வார்தல் போகல் ஒழுகல் - என்ற மூன்று உரிச்சொற்களும் நேர்மையும் நெடுமையும் ஆகிய பண்புகள் உணர்த்தும். எ-டு : ‘வார்ந்திலங்கு வையெயிறு’ (குறு. 14) ‘வார்மணல் அடைகரை’; ‘போகுகொடி மருங்குல்’ ‘கார் உடை போகி’(பதிற். 13); ‘ஒழுகு கொடி மருங்குல்’ ‘மால் வரை ஒழுகிய வாழை’ (சிறு. 21) என முறையே அப் பொருள்படுமாறு காண்க. (தொ. சொ. 317 சேனா. உரை) நொறில் என்னும் உரிச்சொல் - இவ்வுரிச்சொல், நுடக்கம் - விரைவு - என்னும் குறிப்புக்களை உணர்த்தும். எ-டு : ‘நொறில் இயல் புரவி அதியர் கோமான்’ - நுடக்கம். ‘நொறில் இயல் புரவிக் கழற்கால் இளையோர்’ - விரைவு. (தொ. சொ. 396 நச். உரை) நோக்கல் நோக்கம் - நோக்கம் இருவகைத்து, கண்ணான் நோக்கும் நோக்கிய நோக்கமும் மனத்தான் நோக்கும் நோக்கு அல் நோக்கமும் என. எனவே, மனத்தான் உணரும் உணர்வு ‘நோக்கு அல் நோக்கம்’ எனப்பட்டது. எ-டு : ‘மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி’ கு. 542 - நோக்கல் நோக்கம் (‘முகம்நோக்கி நிற்க அமையும்’ கு. 708 - நோக்கிய நோக்கம்) (தொ. சொ. 94 நச். உரை) நோக்கல் நோக்கம் : ‘ஆன்’ இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆதல் - மனத்தான் உணரும் உணர்வு மூன்றாம்வேற்றுமை ஏதுப் பொருண்மையொடும் ஐந்தாம்வேற்றுமை ஏதுப்பொருண்மை யொடும் மயங்கும். வானோக்கி வாழ்தல் - வானின் பயனாகிய மழையைக் கருதி வாழ்தல் (கு. 542). அது ‘வானை நோக்கி வாழும்’ என இரண்டாவது விரிதலொடு, ‘வானான் நோக்கி வாழும்’ ‘வானின் நோக்கி வாழும்’ - அஃதாவது வானான் ஆகிய பயனைக் கருதி உயிர்வாழும், வானின் ஆகிய பயனைக் கருதி உயிர்வாழும் - என மூன்றாவதும் ஐந்தாவதும் விரிந்து அவற்றின் ஏது பொருண்மைக்கண்ணும் வரும். ஆகவே, நோக்கல் நோக்கத்தில் செயப்படுபொருளும் ஏதுவும் ஒப்ப மயங்கும் என்பது பெற்றாம் (தொ. சொ. 94 நச். உரை) நோக்கிய நோக்கம் - கண்களாகிய பொறியான் நோக்குதல். எ-டு : பூணை நோக்கினான் (தொ. சொ. 89 இள. உரை) நோக்கு ஓரனைய - (மூன்றாம் வேற்றுமையும் ஐந்தாம் வேற்றுமையும் காரக ஏதுப் பொருண்மையை) நோக்கும் நோக்கு ஒரு தன்மைய. அஃதாவது இவ்விரண்டுருபும் காரகஏதுப்பொருண்மைக்கண் ஒன்றன் நிலைக்களத்து மற்றது வருதலும் ஒக்கும் என்றவாறு. வாணிகத்தான் ஆயினான், வாணிகத்தின் ஆயினான் - என வரும். (தொ. சொ. 92 சேனா. உரை) நோயாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் - பையுள், சிறுமை - என்னும் இரண்டும் நோயாகிய குறிப் பினை உணர்த்தும் உரிச்சொற்களாம். எ-டு : ‘பையுள் மாலை’ (குறு. 195) ‘சிறுமை உறுபவோ செய்புஅறி யலரே’ (நற். 1) (தொ. சொ. 341 சேனா. உரை) ப பகர இறுதி - அகரம் உயர்திணைப் பன்மையை உணர்த்துங்கால், தானே நின்று உணர்த்தாது பகரஒற்றின்மேல் ஏறி அதன் பின் நின்று உணர்த்தும். அகரம் பகரஒற்றொடு புணர்ந்து நிற்றலான் பகரம் எனவும் பட்டது. அவ்வாறு நிற்குமிடத்து அதன் இறுதி நிற்றலின் இறுதி எனப்பட்டது. பகர இறுதி: இருபெய ரொட்டுப் பண்புத் தொகை. பகரஇறுதியே எதிர்காலம் காட்ட வல்லது. (பகரம் உயர்திணைப் பன்மையினையும், வகரம் அஃறிணைப் பன்மையினையும் பண்டு உணர்த்தின என்பார் பாலசுந்தரனார்.) எ-டு : உண்ப (தொ. சொ. 7 கல். உரை) பகரவகரங்கள் நிகழ்காலத்தும் வருதல் - ‘அவனொடும் கலந்து உண்பேற்கு’ என்புழிப் பகரம் உண்கின் றேனுக்கு என்று நிகழ்காலத்தில் வந்தது. ‘கூடநீர் நின்ற பெற்றி கண்டிப்பால் நோக்கு வேற்கு’ (சீவக. 1751) என்புழி வகரம் பார்க்கின்றேனுக்கு என்று நிகழ்காலத்தில் வந்தது. (தொ. சொ. 205 நச். உரை) பகவின்றி நின்றிசைத்தல் - எளிதில் சொல்லிலிருந்து பிரிக்கமுடியாத நிலையில் சொல்லின் உறுப்பாக அமைந்து ஒலிப்பது. இஃது இடைச் சொற்கு உரியது. உண்டான் : ஆன்விகுதி இடைச்சொல் சொல்லின் உறுப்பாக எளிதில் பிரிக்கமுடியாத நிலையில் அமைந்தவாறு. சாத்தனை : ஐ என்னும் வேற்றுமையுருபாகிய இடைச்சொல் சொல்லின் புறத்துறப்பாய் எளிதின் பிரிக்கும் நிலையில் அமைந்தது. ஆகவே, இடைச்சொல் பகவின்றி நின்றிசைத்தலும் பகுக்குமாறு இணைந்திசைத்தலும் உடைய என்றவாறு. (தொ. சொ. 245 இள. உரை) பகுதிக் கிளவி - இலக்கணத்தின் பக்கச்சொல்; உண்மையாகவே இலக்கணத் தொடு பொருந்திய சொல்லன்று ஆயினும் ஒரு காரணம் பற்றி இலக்கணத்தொடு பொருந்தியது போலக் கொள்ளப் படும் சொல். செத்தாரைத் துஞ்சினார் என்றல் போன்ற மங்கலச் சொற்களும், வழக்காறு பற்றி வரும் வெள்ளாடு, வெண் களமர், கருங்களமர் - முதலிய சொற்களும், சிறிதள வுள்ள நீரைச் சிறிது நீர் என்னாது சில நீர் என்றலும், அடுப்பின் கீழ்ப்புடையடுப்பை மேல் என்னும் பொருளுடைய ‘மீ’ அடுத்து மீயடுப்பு என்றலும் போல்வன இலக்கணத்தின் பக்கச்சொல் எனப்படும் பகுதிக்கிளவிகளாம். கரிய தலைமயிரினைச் சிறுவெள்வாய் என்றும், களமருள் கரியாரை வெண்களமர் என்றும், புலைக்களமருள் செய் யாரைக் கருங்களமர் என்றும், யானை யாடு யாறு என்பன வற்றை ஆனை ஆடு ஆறு - என்றும் வருவன வழங்கற்பாடே பற்றிக் கொள்ளப் படும் பகுதிக் கிளவிகளாம். இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ, இலக்கணத்தொடு பொருந்தா மரூஉ என்பனவும் பகுதிக்கிளவிகளாம். (தொ. சொ. 17 நச்., தெய். உரை) பகுதி பற்றி இடம் சுட்டுவன - தருதல், வருதல் - என்னும் இரண்டு பகுதிகளும் தாமே தன்மை முன்னிலை என்ற இடங்களைச் சுட்டும். எனக்குத் தந்தான் - என்கண் வந்தான், நினக்குத் தந்தான் - நின்கண் வந்தான் - எனப் பகுதி பற்றியே தன்மை முன்னிலை இடம் சுட்டியவாறு. கொடுத்தல், செல்லுதல் - என்னும் இரண்டு பகுதிகளும் தாமே படர்க்கையிடத்தைக் காட்டும். அவற்குக் கொடுத் தான் - அவன்கண் சென்றான் - எனப் பகுதியே படர்க்கை யிடம் சுட்டியவாறு. இவ்வரையறை சங்க காலத்தேயே நெகிழ்ந்து விட்டது. ‘பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த, கறைமிடற் றண்ணல்’ (புற. 55) என்புழித் தருதல் படர்க்கைச்சொற்கு முடிக்கும் சொல் லாயிற்று. ‘வரால் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, மதமிக்குக் கயம் உழக்கும்’ (அக. 36) என்புழி ‘வருதல்’ வரால் என்னும் படர்க்கைச் சொற்கு முடிக்கும் சொல்லாயிற்று. (தொ. சொ. 29, 30 நச். உரை) (இல்வாழ்வானுழை) ‘வருவிருந்து’ என்புழிப் படர்க்கைக்கண் வருதல் முடிக்கும் சொல்லாய் வருவதனை இடவழுவமைதி என்றார் பரிமேலழகர். (கு. 86) ‘தேரான் பிறனைத் ............ தீரா இடும்பை தரும்’ (கு. 508) என் புழி, தரும் என்பது படர்க்கைக்கண் வருதல் பொருந்தாது என்பது நோக்கி ‘வழிமுறையினும் இடும்பை கொடுக்கும்’ எனக் (கொடைச் சொல்லை வழங்கி) வழாநிலையாகப் பொருள் கூறினார் பரிமேலழகர். ‘தேரான் தெளிவும் ....... தரும்’ (கு. 510) என்புழி, ‘தெளிவும் ஐயுறவும் அவனுக்கு இடும்பை கொடுக்கும்’ என்று அவர் உரை வரைந்ததும் வழாநிலை கருதியே. ‘காதலர் இல்வழி மாலை சொலைக்களத்து - ஏதிலர் போல வரும்’ (க. 1224) என்புழி, ‘என்னுழை வரும்’ என்றது வழாநிலை. ‘மாலை துனிஅரும்பித், துன்பம் வளர வரும்’ (கு. 1223) என்புழி, ‘என்னுழை வரும்’ என்றதும் வழாநிலை. ‘பிரிந்தவர்பின் செல்வாய் என் நெஞ்சு’ (கு. 1248) என்புழி, செலவு ‘பிரிந்தவர் பின்’ எனப் படர்க்கைக்கு முடிபாயிற்று. ‘குறிப்பிற் குறிப்புணர் வாரை.......... யாது கொடுத்தும் கொளல்’ என்றலின் கொடைச்சொல் படர்க்கைக்கு முடிபாயிற்று. ‘கொடுத்தும் கொளல் வேண்டும்’ (867) என்புழியும் - கொடைச் சொல் ‘அவனுக்குக் கொடுத்தல்’ என இயைதலின், இதுவும் வழாநிலை. ‘இன்மை என ஒரு பாவி ..... வரும்’ (1044) என்புழியும் ‘இன்மை ஒருவனுழை வரும்’ எனப் படர்க்கையோடு இயைதல் வழுவமைதி. ‘இற்பிறந்தார் கண்ணேயும் ........... தரும்’ (1044) என்புழியும் ‘இன்மை ஒருவனுழை தரும்’ எனப் படர்க்கையோடு இயைதல் வழுவமைதி. இந்நான்கு சொல்லும் மூன்றிடத்தும் வரும் என்ற செய்தியைத் தெய்வச்சிலையார் (தொ. சொ. 28) பிறர் கூற்றாகச் சொல்லி அவை வழுவமைதியின்பாற்படுவனவே என்று வலியுறுத்துகிறார். தொல்காப்பியத்தில் வரூஉம் என்ற சொல் படர்க்கையில் பலவிடத்தும் வந்துள்ளது. பகுபதத்தின் வகைகள் - குதிரை என்பது போன்ற பகாப்பதமும், கருங்குதிரைக்கால் என்பது போன்ற தொடர்மொழியும் அல்லாத எல்லாமே பகுபதமாம். இப்பகுபதம் ஒருமொழியீற்றிலும் தொடர் மொழியீற்றிலும் பின்மொழி கெட முன்மொழியீற்றிலும் முன்மொழி கெட்ட பின்மொழி யீற்றிலும் அளவில்லாமல் வரும் விகுதிகளில் ஏற்புடைய விகுதியுடன் பொருந்தி நடக்கும். 1. வேலன் - ஒருமொழியீற்றில் விகுதி. 2. சேவற்கொடியோன், தொடியணிதோளன், செந்நிறக் குடுமி வெண்சேவற் பதாகையன் - இவை தொடர்மொழி யீற்றில் வந்த விகுதிகள். 3. தெலுங்கு - தெலுங்கன் சொல்லுதல் தொழிலையுடைய பாடை; ‘தெலுங்கன் சொல்லு’ எனற்பாலது பின்மொழி கெட்ட முன்மொழியீற்றில் உகரவிகுதி பெற்றது. 4. இலக்கணத்தான் - கவிஞன் - போன்ற சொற்கள்; பஞ்ச இலக்கணத்தான் - எழுத்திலக்கணத்தான் - நாற்கவிஞன் - ஆசுகவிஞன் - முதலாக வரற்பாலன, இலக்கணத்தான் - கவிஞன் - முதலாக, முன்மொழி கெட்ட பின்மொழி யீற்றில் வந்த ஆன் அன் விகுதிகள். 5. வேற்றுமையுருபுகளும் உவமவுருபும் இடைநிலையும் சாரி யையும் ஆகிய நான்கும் தனித்துப் பொருந்திய பகுபதம் : அருளை, அருட்கண் - வேற்றுமையுருபு தனித்துப் பொருந் தியது. அருள்போல - உவம வுருபு தனித்துச் சேர்ந்தது. அருளாநின்று, அருள்கின்று - இடைநிலை தனித்துச் சேர்ந்தது. கோன், காமத்து - ன் , அத்து என்னும் சாரியைகள் தனித்துச் சேர்ந்தது. 6. மேற்கூறிய நான்கும் கலந்து பொருந்திய பகுபதங்கள் அருளினை, அருளின்கண் - ஐயுருபும் கண்ணுருபும் இன் சாரியையும் கலந்து சேர்ந்தது. வானம் போல - அம் சாரியையும் உவமவுருபும் கலந்து சேர்ந்தது. உண்ணாநின்றனம் - ‘ஆநின்று’ இடைநிலையும் அன்சாரியையும் கலந்து சேர்ந்தது. கோன்மை - ‘ன்’ சாரியையும் மை விகுதியும் சேர்ந்தது. காமத்தின் - அத்தும் இன்னும் சாரியைகள். 7. வேற்றுமைப்பொருளை ஏற்று நிற்றல் - அஃதாவது உருபை ஏற்ற பெயர், அவ்வுருபும் அதனை முடிக்கும் சொல்லும் கெட, தான் ஒருவிகுதியைப் பெற்று பகுபதமாகித் தனது தொடர்ப் பொருள் முழுதையும் குறிப்பினால் அறிவித்தல். பொன்னன் : பொன்னை யுடையான் என்ற தொடரில் ஐயுருபும் உடையான் என்ற முடிக்கும் சொல்லும் கெட, அன்விகுதி சேர்ந்து பொன்னன் என்றாகித் தன் தொடர்ப் பொருளை உணர்த்தியது. 8. ஒவ்வொரு வேற்றுமை தனியே ஆகும் பகுபதம் - தனித் தலைப்பு காண்க. 9,10 இதனையுடையது இது, இதனது உடைமை இது - தனித் தலைப்புள் காண்க. 11. இடப்பொருளுணர்த்தும் வினா சுட்டு எண்பெற இடைச் சொல்லாகவே நிற்கும் பகுபதம் - தனித்தலைப்புள் காண்க 12. தன்மை மாத்திரம் தானாய் நிற்கும் பகுபதம் - தனித் தலைப்புள் காண்க. 13. பெயர்ச்சொல் முதலா நான்கினும் பிறந்த பகுபதம் - தனித்தலைப்புள் காண்க. குழையன் - குழை என்ற பெயரின் வந்தது. உண்டான் - உண் என்ற வினையின் வந்தது. மற்றது, மற்றையான் - மற்று என்ற இடைச்சொல்லின் வந்தது. குழவி, மழவன், மகவு - உரிச்சொல்லின் வந்தது. 14. பெயர்ப் பகுபதங்கள் பொருள் முதலிய அறுவகையாகப் பிரிதல்: பொன்னன் - பொருட்பெயர் அடியாக வந்தது மதுரையான் - இடப்பெயர் அடியாக வந்தது. ஆதிரையான் - காலப்பெயர் அடியாக வந்தது. கண்ணன் - சினைப்பெயர் அடியாக வந்தது. நல்லன் (நன்மை) - குணப்பெயர் அடியாக வந்தது. தச்சன் (தச்சு ) - தொழிற்பெயர் அடியாக வந்தது. 15. பகுபதமாயினும் பகாப்பதமாகவே கொள்ளப்படுவன - ‘த ந நு எ என்னும் அவைமுத லாகிய கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா’ (சொ. 410 நச்.) என்ற நூற்பாவில் கூறப்பட்ட கிளைப்பெயர்கள். தமன் தமள் தமர் தமது தம்ம(வை); நமன் நமள் நமர் நமது நம்ம (வை); நுமன் நுமள் நுமர் நுமது நும்ம(வை); எமன் எமள் எமர் எமது எம்ம(வை) இவை தனக்கும் தமக்கும் சொந்தமானவன் முதலாய் இரு திணை ஐம்பாலிலும் வரும் கிளைப் பெயர்களாம் . ஆதலின் இவற்றைப் பகுக்காமல் பகாப்பதமாகவே கொள்க. பகுபதமாகக் கொள்ளின் ‘அறுவகைப் பெயரினும்’ என்பதனுள் அடங்கும். 16. பகுபதம், குறிப்பு வினைமுற்று - குறிப்பு வினையாலணை யும் பெயர் - பெயரெச்சம் - வினையெச்சம் - என்ற பகுப்புக் களையும் பெறும். அவன் நல்லன் - குறிப்புவினைமுற்று; நல்ல வந்தன - குறிப்பு வினையாலணையும் பெயர்; வந்த சாத்தன் - பெயரெச்சம் ; வந்து போனான் - வினை யெச்சம் 17. பகுபதம் பகாப்பதப் பொருள்படுதல்: ‘குறியெதிர்ப்பை நீரது உடைத்து’ (கு. 221) : நீரது - நீர். (நீர்மை) மாதர் மனைமாட்சி : மாதர் - மாது. ‘வண்ண வண்டின் குரல் பண்ணை போன்றவே’ (பரிபா. 14 : 4) பண்ணை - பண். ‘நுனிக்கொம்பர்’ (கு. 476) : கொம்பர் - கொம்பு. ‘நத்தம் போல் கேடும்’ (கு. 235) : நத்தம் - நத்து. ‘சோதி வாயவும் கண்ணவும் சிவந்தன’ (திவ். பி. 2578) ; வாய - வாய்; கண்ண - கண். ‘வானம் துளங்கில் என்’ (தேவா. ஐஏ : 112 : 8) வானம் - வான். ‘இருவயின் பெயரொடும்’ (நன். 89) இரு - இரண்டு ‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்’ (தொ. சொ. நச். 158) பொருண்மை - பொருள்; சொன்மை சொல். இவற்றுள் சாரியை முதலியவற்றுடன் வந்த பகுபதங்கள் பகாப்பதப் பொருளே தருவன ஆயின. இவை பகுதிப் பொருள் விகுதி போல்வன. 18. பகுபதங்கள் பகாப்பதமாகவே நின்று பகுபதப் பொருள் படுதல் - ‘இல்லது என் இல்லவள் மாண்புஆனால்’ (கு. 53) : மாண்பு - மாண்பினாள். ஆயிரம் பாய்மா வந்தன: பாய்மா - பாய்மா (குதிரை) உடையார். ‘களி மடி மானி’ (நன். 39) : களி மடி - களியன், மடியன் அவனினும் இவன் குணம் : குணம் - குணவான். கவி வந்தான் : கவி - கவிஞன். இறை காக்கும் (கு. 547) : இறை - இறைவன். கோ உண்மை : கோ - கோன். ஆயிரத் தச்சுச் செய்த தேர் : தச்சு - தச்சர். பத்துக் கொல்லுச் செய்த இருப்புலக்கை : கொல்லு - கொல்லர். மூவேந்து : மூவேந்தர் ஸஅரசு, அமைச்சு, ஒற்று, தூது - முதலாயினவும் கொள்க] பேதை தொழுதாள் : பேதை - பேதையாள். (பெதும்பை முதலாயினவும் கொள்க) (இவற்றைத் தமிழ்நூலார் ஆகுபெயருள் அடக்குப) 19. பகுபதங்கள் 1. பகுப்பை ஏற்பனவும், 2. ஏலாதனவும், 3. ஏற்றல் ஏலாமை என்னும் இருநிலையுடையனவும் ஆதல்- 1. குழையன் (குழை + அன்), ஊரன் (ஊர் + அன்) : பகுப்பை ஏற்றன. 2. ஆன, ஈன (ஆன் - அவ்விடம்; ஈன் - இவ்விடம்) : இவை பகுப்பை ஏலா. 3. அங்ஙனம், இங்ஙனம் : அ+ ஙனம், இ + ஙனம் - என இவை பகுபதம் போலச் சேர்ந்தும் (பகுப்பை ஏற்றும்) ஏலாதும் பகாப்பதம் போலவே கொள்ளப்படும். 20. ஒரேபொருள் காட்டும் பல சொல்லாக வருவன - கள்ளன், திருடன், சோரன் : இவை ஒருபொருட் பல சொற்கள் 21. பலபொருள்படும் ஒருசொல்லாக வருவன - அரசன் - இச்சொற்கு, அரசகுலத்தில் பிறந்தவன் - அரசனுக்குப் பிறந்த வேறொரு சாதியான், அரசனது தொழிலை ஏற்ற வேறொரு சாதியான், அரசகுலத்தில் பிறந்து வேறொரு சாதியாய் வழுவியவன் - என்று பல பொருள் கொள்ளப்படும். மாண்டான் - பஞ்சத்தில் படையில் மாண்டான் (இறந்தான்) என்றும், குணத்தில் பொறுமையில் கல்வியில் ஒழுக்கத்தில் மாண்டான் (மாண்புடையவன்) என்றும் ஒருசொல் பல பொருள்பட்டது. 22. ‘இன்னும் பலவாய் இயலும்’ என்றதால் வருவன சில : அ) சொல்லாற்றலால் சிறப்பாகப் பொருள் பெறும் பதம் - தனித்தலைப்புள் காண்க. ஆ) ‘கண்டனையது’ (கோவை 84), ‘விழுங்கியற்று’ (கு. 931), ‘கண்டற்று’ (கு. 249), மயிலன்னாள், புலிபோல்வான் - என்பவற்றுள் அனைய - அற்று - அன்ன - போல் - என்னும் உவமவுருபுகள் அனையது - அற்று - அன்னாள் - போல் வான் - என முதற்கண் உவமவுருபு வந்த பகுபதங்கள். (வட மொழித் தத்திதமான) முதற்கண் விகுதி திரிதல் வந்த சைவன், கார்த்திகேயன், பார்வதி - முதலிய பகுபதங்கள். (இ. கொ. 117) தொல்காப்பியமும் நன்னூலும் எடுத்தோதிய வேறு பல விகுதிகளும், எடுத்தோதாத வேறு பல விகுதிகளும், இடை நிலைத் தன்மைப்பட்டு விகுதியின் செயலைச் செய்யும் சிலவு மாக விகுதிகள் அளவிலாமல் வரும் என்று காட்டும் இலக்கணக்கொத்து அத்தகைய எடுத்துக்காட்டுக்கள் பல தந்து, விகுதிகள், உயிரெழுத்து - மெய்யெழுத்து - உயிர்மெய் யெழுத்து - இடைச்சொல் போன்ற சொல் - என நால்வகை யாக வரும் என விளக்கும். (இ. கொ. 117) பகுபதம் முதலியவற்றுள் எட்டு வேற்றுமையுருபுகளும் தோன்றுதல் - வேற்றுமையுருபுகள் எட்டும், பகுபதம் - பகாப்பதம் - இரு மொழித்தொடர் - பன்மொழித்தொடர் - தெரிநிலை வினை யாலணையும்பெயர் - குறிப்பு வினையாலணையும்பெயர் - தொழிற்பெயர் - என்ற ஏழனையும் அடுத்து வரும். இந்நூலா- சிரியர்க்கு வேற்றுமை எட்டு என்பதே கருத்து. (கூனன், மாலை, குன்றக்குறவன், தெண்ணீர்க் கங்கை, நடந்த வன், குழையன், உண்டல் - என நின்ற இவற்றொடு வேற்றுமை யுருபுகளை ஏற்றி உதாரணம் காட்டுக.) (இ. கொ. 24) பசப்பு என்னும் உரிச்சொல் - இவ்வுரிச்சொல் நிறன் என்ற பண்புணர்த்தும். எ-டு : ‘மையில் வாண்முகம் பசப்பு ஊ ரும்மே’ (கலி. 7) (தொ. சொ. 307 சேனா. உரை) ‘பட்டாங்கு அமைந்த ஈரடி எண்சீர்’ - நாற்சீர் கொண்ட அடியே இயல்பாக அமைந்த அடி. அங்ஙனம் இயல்பாக அமைந்த ஈரடிகளில் எட்டுச்சீர்கள் இருக்கும் என்றவாறு. அளவடி இரண்டன்கண் அல்லது சுண்ணம் என்னும் பொருள்கோள் அமையாது. (தொ. சொ. 406 சேனா. உரை) படர் என்ற உரிச்சொல் - இவ்வுரிச்சொல் உள்ளுதல் என்னும் குறிப்பையும் செல்லுதல் என்னும் குறிப்பையும் உணர்த்தும். உள்ளுதல் வருத்தக்குறிப்பான் உள்ளுதலும், வருத்தக் குறிப்பின்றி உள்ளுதலும் என இருவகைத்து. செலவுப் பொருட்டாகிய படரும் வருத்தக் குறிப்பால்செல்லுதலும் அக்குறிப்பின்றிச் செல்லுதலும் என இருவகைத்து. (தொ. சொ. 340 நச். உரை) எ-டு : ‘வள்ளியோர்ப் படர்ந்து’ (புறநா. 47), ‘கறவை கன்றுவயின் படர’ (குறு. 108) என முறையே காண்க. (தொ. சொ. சேனா. உரை) படர்க்கை ஆண்பால் பெண்பால் பலர்பால் முற்றுவிகுதிகள் - அன் ஆன் - என்பனவும், அள் ஆள் - என்பனவும், அர் ஆர் ப மார் - என்பனவும், முறையே படர்க்கை ஆண்பால் பெண் பால் பலர்பால் வினைமுற்றுவிகுதிகள். எ-டு : வந்தனன் வந்தான்; வந்தனள் வந்தாள்; வந்தனர் வந்தார் வருப உண்மார். (வந்தார்) (தொ. சொ. 205 207 சேனா உரை) படர்க்கை : சொற்பொருள் - சொல்வானும் கேட்பானுமாகிய இருவர் கூட்டத்துப் பிறந்த சொல் அவ்விருவரிடத்தும் நில்லாது அயலானிடத்துப் படர்தலின் படர்க்கை எனப்பட்டது. (நன். 266 சங்.) படுத்தல் ஓசை - (இயைபு பற்றி எடுத்தல் ஓசையும் கொள்ளப்படுகிறது) பெயர்ச்சொற்கள் விகுதியிலும் வினைச்சொற்கள் பகுதியி லும் பொருள் சிறத்தலின், வினையை எடுத்தல்ஓசையானும் பெயரைப் படுத்தல் ஓசையானும் கூறுக என்பது பொதுவிதி. ‘எவன்’ என்பது படுத்தல் ஓசையான் பெயராகும் என்பார் நச்சினார்க்கினியர். (தொ. எ. 122; தொ. சொல். 31 நச்.) வினையாலணையும் பெயரையும் பெயரெச்சத்தையும் எடுத்தும், அவ்வினைமுற்றையும் வினையெச்சத்தையும் படுத்தும் ஒலித்தல் வேண்டும் என்பார் இ.கொ. ஆசிரியர் (126) உண்டான், தின்றான் என்னும் தொடக்கத்துப் படுத்துச் சொல்லப்படும் தொழிற்பெயர். (-வினையாலணையும் பெயர்) - (தொ. சொல். 70 சேனா) “வந்தனன் எனத் தெரிநிலைவினை தொழில் மேற்படத் தொழிலுடைப் பொருள் கீழ்ப்பட முற்றாய் நின்று உணர்த் தியவாறு போல, உடையான் எனக் குறிப்பு வினையும் உடைமை மேற்பட உடையான் கீழ்ப்பட முற்றாய் நின்று உணர்த்தலும் கொள்க. வந்தான், உடையான் எனப் பெய ராயவழி தொழிலுடைப் பொருளும் உடையானும் மேற்பட்டுத் தோன்றுமாறு அறிக” (தொ. சொல். 215 சேனா.) (உண்பாய், உரைப்பாய், தின்பாய் என்ற) முன்னிலை வினைகள், எடுத்தல் ஓசையான் முன்னிலை ஏவல் ஒருமை முற்றாய் நிற்கும்; படுத்தல் ஓசையான் அச்செய்கைமேல் பெயர்த் தன்மைப்பட முன்னிலையாயும் நிற்கும். நடத்துவித் தான் என வருங்கால், இடைநிலையாகிய எழுத்துக்களும் பெற்று முன்னர் எடுத்தல் ஓசையாய், இடைநின்ற ஈறாகிய இகரம் படுத்தல்ஓசைப்பட்டு இடைநிலையாய் நிற்கும். (தொ. சொல். 226 நச்.) செய்யும் என்ற சொல் எடுத்தல் ஓசையால் கூறப்படின் வினைமுற்றாம். (சொ. 237 நச்.) இவற்றை நேர் மாறாகக் கூறும் இ.கொ. (சூ. 126) திணையும் பாலும் காலமும் இடனும் தோற்றும் தொழிற் சொல் படுத்தலோசைப்பட்டு நின்றால் தொழிற்பெயராய் (வினையாலணையும் பெயராய்) நின்று பயனிலை கொண்டும் உருபு ஏற்றும் காலத்தைத் தோற்றுவிக்கும். (சொல். 71 நச்) கட்டு என்பதை முற்றுகர முற்றாக்க வேண்டில் எடுக்க; குற்றுகரத் தொழிற்பெயராக்க வேண்டில் படுக்க. ‘நெறி நின்றார் நீடு வாழ்வார்’ (கு. 6) என்பதனை முறையே பெய ராக்க வேண்டில் எடுக்க: முற்றாக்க வேண்டில் படுக்க ‘அம்பலத்தாடி’ என்பதனைப் பெயராக்க வேண்டில் எடுக்க; எச்சமாக்க வேண்டில் படுக்க. (இ. கொ. 126) எனவே, எடுத்தல் படுத்தல் பற்றிய செய்தியில் இலக்கணக் கொத்துடையாரும் பிற தொல்காப்பிய உரையாசிரியன்மா ரும் ஒரு புடை ஒத்தும் ஒவ்வாமையும் கருத்துக்கொண்டுள் ளமை காணலாம். (இ. கொ. 126 விசேட உரை) படுதொகையுடன் சேர்ந்து தொகை ஏழ் - வேற்றுமைத்தொகை முதலிய ஆறு தொகைகளுடன் ‘படு தொகை’ என ஒன்று சேரத் தொகை ஏழ் என்பர் சிலர். இஃது அறுதொகையைப் போல்வதன்று. செயப்பாட்டுவினைப் பொருள் தரும் ‘படு’ என்பது தொக்கு வரும் தொடர்களை வினைத்தொகையின்பாற்படுத்தி இதற்கு உதாரணங்கள் தந்தது இலக்கணக் கொத்து. இந்நூல் வினையை, முதனிலை - தொழிற்பெயர் - முற்று - பெயரெச்சம் - வினையெச்சம் - என ஐவகையாகக் கொண்டதற்கு ஏற்ப வந்த உதாரணங்கள் : 1. போக்கப்படு சாத்தா, செய்யப்பட்டதாகிய குன்று - என்பன படுசொல் தொக்க போ சாத்தா - செய்குன்று - என முதனிலையாய் நின்றன. 2. சொல்லப்படுதலால் சொல் என்பது, படுசொல் தொக்குச் ‘சொல்லுதலால் சொல்’ எனத் தொழிற்பெயராய் நின்றது. 3. பால் கறக்கப்பட்டது என்பது படுசொல் தொக்குப் ‘பால் கறந்தது’ என முற்றாய் நின்றது. 4. உண்ணப்பட்ட சோறு என்பது படுசொல் தொக்கு ‘உண்டசோறு’ எனப் பெயரெச்சமாய் நின்றது. 5. வணிகனால் அறியப்பட்டு வந்த பொன் என்பது படுசொல் தொக்கு வணிகன் அறிந்து வந்த பொன் என வினையெச்ச மாய் நின்றது. (இ. கொ. 79) பண்பின் ஆக்கக் கிளவி - பண்பின்கண் ஆம் உறழ்பொருவாகிய ஐந்தாவதன் பொருண்மை. இவ்வைந்தாவதன் பொருண்மைக்கண் நான்காவதும் மயங்கும். எ-டு : சாத்தனின் நெடியன் என ஐந்தாம் வேற்றுமையுருபு வருமிடத்துச் சாத்தற்கு நெடியன் என நான்க னுருபும் வந்தவாறு. (தொ. சொ. 111 நச். உரை) ‘பண்பின் ஆகிய சினைமுதற்கிளவி’ - வெண்கோட்டது, வெண்கோட்டன, நெடுஞ்செவித்து, நெடுஞ்செவிய - என, அஃறிணைக் குறிப்புவினைமுற்றுப் பண்பை அடையாகக் கொண்ட சினையொடு முதலையுணர்த் தும் சொல்லாக வரும். ஈண்டுப் பண்பு நிறப்பண்பு ஆதலும் குணப் பண்பு ஆதலும் கூடும். (தொ. சொ. 222 நச். உரை) பண்பினாகிய சினைமுதற்கிளவி அஃறிணைக் குறிப்பு வினைகளுள் ஒன்று; நிறப்பண்பாலும் குணப்பண்பாலும் உளதாகிய சினையொடு முதலை உணர்த்தும் சொல். எ-டு : வெண்கோட்டது வெண்கோட்டன; நெடுஞ் செவித்து நெடுஞ்செவியன. (தொ. சொ. 220 சேனா. உரை) பண்பு இஃது என்பது - உயிருடைய பொருளும் உயிரில்லாத பொருளுமாகிய இரு வகையுள் அடங்கும் உலகத்துப் பொருள்களின் குணங்கள் பண்பாம். கடவுட்கு ஒருகுணம் இன்மையானும், உண்டாயின் சுட்டப் பட்டு உலகப்பொருளாம் ஆதலானும் கடவுட்பொருளை ஒழித்து ஏனைய பொருள்களே கூறப்பட்டன. (நன். 443 சங்.) பண்பு, குறிப்பு : வேறுபாடு - பண்பாவது ஒருபொருள் தோன்றும் காலத்துத் தோன்றி, அது கெடுந்துணையும் நிற்பது. குறிப்பாவது பொருட்குப் பின்னர்த் தோன்றிச் சிறிதுபொழுது நிகழ்வது. அன்மை - உண்மை - இன்மை - வன்மை - என்பன பண்பாகவும் குறிப்பாகவும் நிகழும். அன்மையாவது : ‘எப்பொருளும் அல்லன் இறைவன்’ என்றால் பண்பை உணர்த்தியும், ‘அவன்தான் இவன் அல்லன்’ என்றால் குறிப்பை உணர்த்தியும் நிற்கும். இதற்கு உடன்பாடு ‘ஆவன்’ என்பது. உண்மைக்கு மறுதலை இன்மை ஆகும். உண்மை மூவகைப் படும். அவை ‘ஆ உண்டு’ என - உண்மை உணர்த்தியும், ‘எவ் வுயிர்க்கண்ணும் இறைவன் உளன்’ எனப் பண்பு உணர்த்தி யும், ‘மாற்றோர் பாசறை மன்னன் உளன்’ எனக் குறிப்பு உணர்த்தியும் நிற்கும். இன்மையாவது ‘பொய்யர் நெஞ்சில் புனிதன் இலன்’ எனப் பண்பு உணர்த்தியும், உண்மைக்கு மறுதலையாய்க் குழையிலன் கச்சிலன் எனக் குறிப்பு உணர்த்தியும் நிற்கும். இவற்றிற்குப் பொருள் உணருங்கால், குழையை உடையன் அல்லன், கச்சினை உடையன் அல்லன் - என அன்மைச்சொல் கொண்டு பொருள் விரிக்கப்படும். (இன்மை, பொருளுக்கு மறுதலை யாகலின் பொருளின்கண் கிடக்கும் பண்பு எனப்படாது என்பர் சேனாவரையர்.) வன்மையாவது வலியுடைமையும் ஒன்றனை வல்லுதலுமாம். அது ‘மெய் வலியன்’ எனப் பண்புணர்த்தியும், ‘சொலல் வல்லன்’ எனக் குறிப்புணர்த்தியும் வரும். இதற்கு எதிர்மறை வல்லன் அல்லன் என்பதாம். (தொ. சொ. 216 நச். உரை) அன்மை உண்மை இன்மை வன்மை - என்ற பொருண்மை களால் அல்லன் உளன் இலன் வல்லன் - என்ற குறிப்பு வினை முற்றுக்கள் தோன்றும்; ‘அவன் வல்லான்’ என எதிர்மறை யாகவும் வரும். குழையையுடையன் எனற்பாலது குழையன் எனக் குறிப்புமுற்றாயிற்று; உருபு தொக வரின் குழையுடையன் என வரும்; பொருள் தொக வரின் குழைச்சாத்தன் எனவரும்; வினைக்குறிப்பாக வரின் குழையன் என வரும். ‘பண்பினாகிய சினைமுதற் கிளவியும்’ பைங்கண்ணன் புன்மயிரன் - என வினைக்குறிப்பாகி வரும். (தொ. சொ. 216 நச். உரை) பண்பு, ஒப்புமைப்பண்பு - நிறப்பண்பு - குணப்பண்பு - எனப் பிரிக்கப்படுதல், நிறப்பண்பு கட்புலம், மற்றைய (பண்பு) பிறபுலம் என்பது கருதிப்போலும். (தொ. சொ. 216 கல். உரை) பண்புகொள் பெயர் - உயர்திணைப்பெயர் வகைகளில் ஒன்று இது. பண்பு பற்றிப் பெயரிடப்படும் கரியன் கரியான் செய்யன் செய்யான் - முதலி யன. இஃது அஃறிணைப் பெயர் வகைகளுள்ளும் ஒன்று; பண்பினைக் கொண்டுள்ள கரியது கரியன, செய்யது செய்யன - என்றாற் போல்வது. (தொ. சொ. 165, 168 சேனா. உரை) உயர்திணைப் பெயர் வகைகளுள் பண்பு கொள் பெயரும் ஒன்றாம். ஒவ்வொருவரும் தம் பண்பினான் பெற்ற பெயர் இது. எ-டு : கரியான் , கரியாள், செய்யான், செய்யாள் அஃறிணைப்பெயர் வகைளுள்ளும் இஃது ஒன்றாம். கரியது கரியன - என்றாற் போல்வன பண்பினைக் கொண்ட அஃறிணைப் பெயர்களாம். இவை வினைமுற்றுப் படுத்த லோசையான் பெயராயின என்ப. (தொ. சொ. 167, 170 நச். உரை) பண்புகொள்பெயராகும் ஆகுபெயர் - பண்புப்பெயர் அப்பண்புடையதனை உணர்த்தி வரும் ஆகுபெயர்; ஆகுபெயர் வகைகளுள் ஒன்று. எ-டு : நீலம் சூடினாள் என்புழி, நீலம் நீலநிற மலர்களையும் நீலநிற மணிகளையும் குறிப்பது பண்புப்பெயர் ஆகுபெயர் ஆவதாம். (தொ. சொ. 115 நச். உரை) பண்புகொள்பெயர் விளியேற்றல் - பண்பு கொள்பெயர் உயர்திணைக்கண் ரகர ஈறு (142 நச்.), ளகர ஈறு (148 நச்.) னகர ஈறு (136 நச்.) என்னும் மூன்று ஈறு பற்றி வரும். அன்ஈறு கரியான் - கரியாய்; தீயான் - தீயாய் - என னகாரம் யகாரமாய்த் திரிந்து விளியேற்கும். (தொ. சொ. 136 நச். உரை) ஆர்ஈறு இளையார் - இளையீர், இளையீரே; கரியார் - கரீயீர், கரியீரே - என ஈற்றயல் ஆகாரம் ஈகாரமாய்த் திரிந்தும், அதனோடு ஈற்றில் ஏகாரம் மிக்கும் விளியேற்கும். (தொ. சொ. 142 நச். உரை) ஆள்ஈறு தீயாள் - தீயாய்; கரியாள் - கரியாய் - என ளகரம் யகரமாய்த் திரிந்து விளியேற்கும். (தொ. சொ. 148 நச். உரை) ஆதலின் கரியாய் - தீயாய் - முதலிய விளியேற்ற பெயர்கள் னகர ஈற்றனவா ளகர ஈற்றனவா எனபதனைக் குறிப்பாலேயே உணர்தல் வேண்டும். பண்புகொள் பெயர்க்கொடை - பண்பு அடுத்து வழங்கப்படும் பெயரை ஒருபொருட்குக் கொடுத்தல். எ-டு : செஞ்ஞாயிறு. (தொ. சொ. 18 நச். உரை) பண்புத்தொகை - ஒரு பொருட்குப் பொதுமை உள்வழி ‘இப்படி யிருப்பது இப்பொருள்’ என்ற அதனை விசேடித்துக் கூறும்படியாக, பின் வருகின்ற அப்பொருளின் குணத்தைத் தான் கருதி, அப்பொருட்குணமாகிய வண்ணத்தின்கண்ணும் வடிவின்- கண்ணும் அளவின்கண்ணும் சுவையின்கண்ணும் வரும் இயல்பாகிய கிளவியும், அவை போல்வன பிறவும் என்று சொல்லப்பட்டு வரும் கிளவியும் இருபெயரொட்டுக்களும் பண்புத்தொகையாம். பண்பு என்பது பண்புச்சொல். பண்புத்தொகை ஐந்து பாலையும் ஒருவன் அறிதற்குக் காரண மாகிய பண்புச்சொல் தொக்க தொகைச்சொல் லாகும். பண்புத்தொகை ஐந்துபாலையும் உணரநிற்றலின் அங்ஙனம் நின்றன பிரித்துப் புணர்த்தற்கு இயையா. பண்பு உணர்த்து கின்ற ஐம்பால் ஈறுகள் தொக்குநின்றே விரியும் என்பது. வண்ணம் : கரும்பார்ப்பான் - கரியனாகிய பார்ப்பான் கரும்பார்ப்பனி - கரியளாகிய பார்ப்பனி கரும்பார்ப்பார் - கரியராகிய பார்ப்பார் கருங்குதிரை - கரியதாகிய குதிரை கருங்குதிரைகள் - கரியவாகிய குதிரைகள் வடிவு : வட்டப் பலகை - வட்டமாகிய பலகை அளவு : குறுமுனி - குறியனாகிய முனி குறுங்கோட்டன - குறியனவாகியகோட்டன சுவை : தீங்கரும்பு - தீவிதாகிய கரும்பு பிற : நுண்ணூல் - நுண்ணிதாகிய நூல் நல்லாடை - நல்லதாகிய ஆடை இருபெய சாரைப்பாம்பு - சாரையாகிய பாம்பு ரொட்டு : கேழற்பன்றி - கேழலாகிய பன்றி ஆதலின், பண்புத் தொகை ‘இன்னது இது’ என விரியும். இரு - பெயரொட்டுப் பண்புத்தொகை ‘ஆகிய’ என விரியும். (தொ. சொ. 416 நச். உரை) கருங்குதிரை, நெடுங்கோல் - இவை கரிய குதிரை - நெடிய கோல் - எனப் பெயரெச்சவாய்பாட்டானும் பண்பு பற்றி வரும் சொல். வினைக்குறிப்பாகியும் முடிதலான் வினைத்தொகை யுள் அடங்கு மெனின், பண்புத்தொகை ஒரு வாய்பாட்டான் விரிக்கப்படாது; வினைத்தொகையும் ஒருவாய்பட்டான் விரிக்கப்படாது. கருமையையுடைய குதிரை என வேற்றுமைத் தொகையாயும் அடங்குமால் எனின், பண்புத்தொகை ‘இன்னது இது’ என ஒன்றை ஒன்று விசேடித்து வருதல் வேண்டும்; அவ்வாறு வருங்கால் வேற்றுமைத்தொகை ஆகாது. வேற்றுமைத்தொகை வினைத்தொகை உவமத் தொகை பண்புத்தொகை - என்பன தம்மில் ஒருபுடை ஒற்றுமை யுடைய ஆகலின், பாணினியார் ‘தற்புருட சமாசம்’ என்று குறிப்பிட்டார். பண்பினான் அன்றிப் பெயரினான் விசேடித்து வரும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையும் கொள்க. வாணிகச் சாத்தன், சாரைப்பாம்பு - என வரும். ஆயன் சாத்தன், ஆசிரியன் நல்லந்துவன் - என எழுவாயும் பயனிலையுமாய் வருதலின்றி ஒட்டுப்படாத நிலைமைய வாயினும், முதற்பெயர் விசேடணமாகிவரின் அதுவும் பண்புத்தொகையாம் என்று கொள்க.(தொ. சொ. 411 தெய். உரை) முதற்சொல் பண்பாகி விசேடணமாக நிற்க அதனோடு ஒரு பெயர்ச்சொல் பொருந்த வர, அக்குணிக்கும் குணத்துக்கும் இடையேயுள்ள ஒற்றுமை நலத்தை விளக்குதற்கு ஆண்டு வரும் ஆகிய என்னும் மொழியாகிய பண்புருபு தொக்கு நிற்பனவும், அப்பண்புருபு தொக்கு நிற்பப் பொதுப்பெயரும் சிறப்புப் பெயருமாய் ஒருபொருட்கு இருபெயர் வந்தனவும் ஆகிய இவ்விரண்டும் பண்புத்தொகையாம். செந்தாமரை வட்டக்கடல் ஒருபொருள் துவர்க்காய் - எனவும், ஆயன்சாத்தன் வேழக்கரும்பு - எனவும், செந்நிறக் குவளை கரும்புருவச்சிலை - எனவும் வரும். இவை விரியு மிடத்துச் செம்மையாகிய தாமரை - வட்டமாகிய கடல் - ஒன்றாகிய பொருள் - துவராகிய காய் - ஆயனாகிய சாத்தன் - வேழமாகிய கரும்பு - செம்மையாகிய நிறமாகிய குவளை - கருமையாகிய புருவமாகிய சிலை - என விரியும். ஆயன் என்னும் பொதுப் பெயர் சாத்தன் என்னும் சிறப்புப்பெயரை விசேடித்தும், வேழம் என்னும் சிறப்புப் பெயர் கரும்பு என்னும் பொதுப் பெயரை விசேடித்தும் வந்தன. முற்று எச்சமாகிய காலத்து முற்றுப் பொருளை ஒழித்து எச்சப் பொருளை உணர்த்தி நின்றாற்போல, ஆயன் வேழம் - என்றல் தொடக்கத்து நிலைமொழிகள் பண்பிச்சொல்லா யினும் அப்பண்பியாம் தன்மையை ஒழித்துப் பொதுப் பண்பினையும் சிறப்புப்பண்பினையும் உணர்த்தி வருமொழிக்கு அடையாய் நிற்றலின் அவையும் பண்புத்தொகை ஆயின. "பண்பை விளக்கும் மொழி ‘ஆகிய’ என்பதன்று; மை விகுதி" என்றால் என்னையெனின், ஒருமொழிக்கு உறுப்பாகிய விகுதியை மொழி என்றல் கூடாமையானும், வட்டம் சதுரம் முதலிய வடிவப் பண்பிற்கு அவ்விகுதி இன்மையானும், வட்டக்கடல் என்புழி மகர ஈறு கெட்டுப் புணர்ந்தாற்போல மையீறு கெட்டுப் புணர்ந்தது என்பது ‘ஈறு போதல்’ (136) என்னும் சூத்திரத்து முன்னரே பெறப்பட்டமையானும், மைவிகுதி பண்பை விளக்கும் மொழி ஆகாது என்பது. செய்ய தாமரை என்னும் எச்சஇறுதி தொக்கது பண்புத் தொகை என்பாரும், செய்யது தாமரை என்னும் முற்றிறுதி தொக்கது இத்தொகை என்பாரும் உளர். இவையும் மொழி யல்ல; வட்டக்கடல் முதலிய பண்புத்தொகை அவ்வெச்ச இறுதி விரித்தல் இயலாது; அவ்வெச்சஇறுதி தொக்கதேல் அதனை வினைத்தொகைக் குறிப்பு என்றல் கூடுமன்றிப் பண்புத்தொகை என்றல் கூடாது; அம்முற்றுஇறுதி தொக்க தேல் பண்புத்தொகை என்றல் கூடாமையே யன்றி, செந் தாமரை இது - செந்தாமரை விரிந்தது - என மேல் பெயரை யும் வினையையும் ஏற்றல் அமையாது. ஆதலின் அவருரை பொருந்தாது. (நன். 365 சங்.) இலக்கணக்கொத்துப் பண்புத்தொகையைப் பதினாறு வகைப் படுத்தி விளக்கும் ; இன்னும் விரித்தல் வேண்டும் என்று கருதிச் சில விதிகளையும் கூறும். ஒரு பண்பே பலவாய் விரிதலை விளக்க ‘வெண்மை’ என்னும் பண்பை எடுத்துக்காட்டி மிக விரிவாய் இலக்கணக்கொத்து விளக்கமும் தருகிறது. வெண்கரும்பு - இனம் பற்றி வந்த பண்புத்தொகை வெண்திங்கள் - இனம் பற்றாது வந்த பண்புத்தொகை வெண்தாமரை - தனக்குரிய சினையை (பூவை) விட்டு உரிமையில்லாத முதலைப் பற்றி வந்தது. (வெண்பூத் தாமரை) வெள்ளாடு - எதிர்வு பற்றி வந்தது. (வெள்ளாடு - எதிர்காலத்தில் வேள்விக்குப் பயன்படுதலால் வேள்வி + ஆடு = வெள்ளாடு - என வந்தது.) வெள்ளறிவினார் - இழிவு பற்றி வந்தது. வெண்களமர், வெள்ளாளர் - சாதி பற்றி வந்தது வெள்ளோட்டம் - புதுமை பற்றி வந்தது வெளிற்றுப் பனை - உள்ளீடின்மை பற்றி வந்தது. ‘வெளியார்’ கு. 714) - அறிவின்மையாம் இயல்பு பற்றி வந்தது. இச்சோறு வெண்படி - கலப்பின்மை பற்றி வந்தது. இவ்வுரு வெண்கலம் - ஒரு பெயரே பற்றி வந்தது. வெள்ளிடை - தனிமை பற்றி வந்தது இவ்வணி வெள்ளைப்பொன் - நிறமின்மை பற்றி வந்தது இவனுக்கு வெள்ளைப் புத்தி - மந்தத்தன்மை பற்றி வந்தது. இவ்வூரின் வெள்ளைப் பிள்ளையார் - பண்புப்போலி பற்றி வந்தது. (நிறமில்லாத இறைவற்கு நிறம்புணர்த்துக் கூறுவது பண்புப் போலியாம்.) (இ. கொ. 98) குணத்தொடு குணிக்கு உண்டாகிய ஒருமைப்பாட்டை விளக்க வரும் ‘ஆகிய’ என்னும் பண்புருபு தொக்கு நிற்பனவும், அப்பண்புருபு தொக்கு நிற்பப் பொதுப்பெயரும் சிறப்புப் பெயருமாய் ஒரு பொருளுக்கு இருபெயர் வந்தனவும் பண்புத் தொகைகளாம். எ-டு : செந்தாமரை, கருங்குவளை - வண்ணப் பண்புத் தொகை வட்டக்கல், சதுரப்பலகை - வடிவுப் பண்புத்தொகை ஒரு பொருள், இருபொருள் - அளவுப் பண்புத் தொகை தீங்கனி, துவர்க்காய் - சுவைப் பண்புத்தொகை நல்வினை, தீவினை, தண்ணீர், வெந்நீர் - பல்வகைப் பண்புத்தொகை சாரைப்பாம்பு, பெயர்ச்சொல், வினைச்சொல் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. செந்நிறக்குவளை, சிறுபசுந்தூவி, கரும் புருவச்சிலை - பன்மொழித்தொடர்ப் பண்புத்தொகை ஆகிய என்னும் உருபின்கண் ஆக்கவினை இல்லாததனாலே அஃது இலக்கணவகையால் செய்த என்னும் பெயரெச்ச வாய்பாட்டின்பாற்படுவதொரு வினையிடைச்சொல். முற்று வினை எச்சவினையாகிய காலத்து முற்றுப்பொருளை ஒழித்து எச்சப்பொருளை உணர்த்திநின்றாற் போல, ஆயன் - ஆடி - என்றாற் போலும் நிலைமொழிகள் பண்பிச்சொல்லா யினும் அத்தன்மையின் நீங்கிச் சாத்தன் - திங்கள் - என்றாற் போலும் வருமொழிகளை விசேடித்து (சிறப்புப்பெயரையும் பொதுப் பெயரையும் விசேடித்து) அடையாய் நிற்றலால் இவையும் பண்புத்தொகை ஆயின. இவ்விருபெயரொட்டும் வடிவும் அளவும் அல்லாத பண்புத் தொகைகள் குணமும் குணியுமாய்த் தொடர்ந்து நின்றுழி, அக்குணம் குணியின்கண் முழுமையுமாய காலத்துக் கருங்கோழி - வெண்கோழி - என்பன கருமையாகிய கோழி - வெண்மையாகிய கோழி - என விரிந்து பண்புத்தொகையாம் எனவும், குணியின்கண் அக்குணம் ஏகதேசமாய காலத்துக் கருமையை யுடைய கோழி - வெண்மையை யுடைய கோழி - என இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் உடன் தொக்க தொகையாம் எனவும் கொள்க. இன்னும், வண்ணம் வடிவு அளவு சுவை - என்பன பற்றி வரும் தொகைச்சொல் நான்கினுள், வடிவு ஒழிந்தன ஐம்பாலறியும் பண்புத்தொகை எனவும், மற்றது ஐம்பால் அறியாப் பண்புத் தொகை எனவும் கொள்க. செந்தாமரை என்புழிச் செம்மைக்கு™ம் தாமரை என்னும் குணியுடன் ஒன்றுபட்டு நிற்பதல்லது வேறுபட்டு நில்லாமை யின், செம்மையாகிய தாமரை எனக் குணம் வேறு குணி வேறாகப் பிளவுபடப் பொருள் கூறுவது கூடாது என்று கருதி னார் தொல்காப்பியனார். இப் பல்வேறுபட்ட பண்புகளில் அவ்வக் குணங்களைக் குறித்து ‘இன்ன குணத்தை யுடையது இது’ எனவரும் எவ்வகைப்பட்ட சொற்களும் இவை போல்வன பிறவும் பண்புத்தொகைச் சொற்களாம் என்பது. ஆதலால் செந்தாமரை என்புழிச் ‘செய்யது - இன்னது; தாமரை - இது’ என்பதாயிற்று. ஆகவே செய்யதாகிய தாமரை என்பதே செந்தாமரை - எனப் பால் காட்டும் விகுதி குன்றி முன் நின்ற மெய் திரிந்து முடிந்தது என்பது பொருத்த முடையதாயிற்று என்க. (நன். 406 இராமா.) பண்புத்தொகை அமைப்பு - பண்புத்தொகை ஒருபொருட்குப் பொதுமை உள்வழி ‘இப்படி யிருப்பது இப்பொருள்’ என அதனை விசேடித்துக கூறும்படியாகப் பின்வருகின்ற அப்பொருளின் குணத்தைக் கருதி அப்பொருட்குணமாகிய வண்ணத்தின்கண்ணும் வடிவின்கண்ணும் அளவின்கண்ணும் சுவையின்கண்ணும் வரும் இயல்பாகிய கிளவியும், அவை போல்வன என்று சொல்லப்படும் கிளவியும் ஆகிய எத்தன்மையவாகிய சொற்களும் பண்புச்சொல் தொக்க தொகையாம். பண்பு என்பது ஆகுபெயராய்ப் பண்புச் சொல்லை உணர்த்திற்று. எ-டு : கரும்பார்ப்பான், வட்டப்பலகை, குறுமுனி, இன் புதல்வன் அவை போல்வன பிறவாவன : நுண்ணூல் பராரை நல்லாடை வெந்தீ தண்ணீர் நறும்பூ - முதலாயின (தொ. சொ. 416 நச். உரை) பண்புத்தொகை இருவகை - பண்பு தொக்க தொகையும் பெயர் தொக்க தொகையும் எனப் பண்புத்தொகை இருவகைப்படும். கருங்குவளை என்பது பண்பு தொக்க தொகையாம். ஆயன்சாத்தன் என்பது பெயர் தொக்க தொகையாம். (பண்புத்தொகையில் முன்மொழி பண்பும், பின்மொழி பண்பியும் ஆம். பெயர் தொக்க தொகையுள் அவை பொதுவும் சிறப்புமாகிய பெயர்களாம். பின்மொழி முன்மொழியுள் ஒன்று விசேடித்தலும், பண்புரு பாகிய ‘ஆகிய’ என்பது இடையே தொக்கு நிற்றலும் இவ் விருவகைக்கண்ணும் பொதுவுறக் காண்பன. (ஈண்டு ‘முன்’ காலமுன் என்க.) (நன். 152, 406 இராமா) பண்புத்தொகை ‘பண்பை விளக்கும் மொழி’ தொக்கது ஆகாமை - ‘பண்பை விளக்கும் மொழிதொக்கநவும், ஒருபொருட்கு இரு பெயர் வந்தவும் குணத்தொகை’ (நன். 365) எனக் கூறுவாரும் உளராலோ எனின், அற்றன்று; கருமைக் குதிரை என்பது மகர ஐகாரம் தொக்குக் கருங்குதிரை என நின்றதேல், அது கருமைக்குதிரை என விரியவேண்டும். அங்ஙனம் விரிந்தவழி வேற்றுமைத் தொகையாவதல்லது பண்புத்தொகை விரி ஆகாமையின், வேற்றுமைத்தொகை நின்று பண்புத் தொகையாய்த் தொகு மாறு யாண்டும் இன்றாகலான், கரு என்னும் முதனிலைப் பண்பு குதிரை முதலிய பெயரொடு தொக்க தொகைமை ஆற்றலான் ‘இருதிணை மருங்கின் ஐம்பாற்’ பொருளையும் சுட்டி, ‘இன்னது இது’ என ஒன்றனை ஒன்று சிறப்பித்து இருசொல்லும் ஒரு பொருள்மேல் வரும் இயல்புடையனவே பண்புத்தொகை என்பது பொருத்த முடைத்து என்க. (இ. வி. 339 உரை) பண்புத்தொகை பற்றிய பிறர் கருத்து - ‘பண்புத்தொகை’ என்னும் தலைப்புள் நன். 365 சங். உரை பற்றிய பத்தி காண்க. பண்புத்தொகையை விரிக்கும் இயல்பு - பண்புத்தொகையின் பண்புப்பகுதி இருதிணை ஐம்பால் களுக்கும் பொதுவானது. பண்புத்தொகையை ‘இன்னது இது’ என விரிக்க வேண்டும். உயர்திணைக்கண், கரியனாகிய - கரியளாகிய - கரியராகிய - என்றாற் போலவும், அஃறிணைக் கண் கரியதாகிய - கரியனவாகிய - என்றாற் போலவும் விரிக்க வேண்டும். இருதிணை ஐம்பாலும் விரிதற்குரிய ஆற்றல் பண்புத்தொகைக்கண் உள்ளது. (தொ. சொ. 416 நச். உரை) பண்புத்தொகை வகைகள் - 1. கருங்குதிரை : பண்பு முன்வருதல் (பண்புச்சொல் முன்மொழி ஆதல்) 2. வெண்ணிறம் : இருபண்பு அடுத்தல் (இரண்டும் பண்பு ஆதல்) 3. சிறுபைந்தூவி : இரு பண்பொடு பொருள் 4. சிறுவெள்ளை, பெருவெள்ளை : இவ்விரு பண்புகள் தாமே பொருள் விளைத்தல். (இவை ஆகுபெயருமன்றி அன் மொழித் தொகையுமன்றி ‘நெல்’ என்னும் பொருள் தந்தன.) 5. திருவள்ளுவன் தெய்வப்புலவன், அகத்தியமுனிவன், தண்டியாசிரியன் : இயற்பெயர் முன்னும் சிறப்புப்பெயர் பின்னுமாக மாறியது. 6. தெய்வப்புலவன் திருவள்ளுவன், முனிவன்அகத்தியன், ஆசிரியன் தண்டி : சிறப்புப்பெயர் முன்னும் இயற்பெயர் பின்னுமாக மாறியது. 7. பலாமரம் (பலா : சிறப்பு ; மரம் : பொது) சிறப்புப்- பரணி மீன் (பரணி : சிறப்பு ; மீன் : பொது) னூ பெயர் மேட ராசி (மேடம் : சிறப்பு ; ராசி : பொது) சிறத்தல் 8. அரசன் சோழன், பார்ப்பான் இராமன் - பொதுப்பெயர் சிறத்தல். 9. மக்கட் சுட்டு (சுட்டு என்பது ஆகுபெயராய்ச் சுட்டப்படும் பொருளை உணர்த்தியது) பழங்கறி (கறி என்பது ஆகுபெய ராய்க் கறி செய்யப்பட்ட காயை உணர்த்தியது) பழம்புளி (புளி ஆகுபெயரால் புளியம்பழம்) இவற்றுள் பின்மொழி ஆகுபெயரானது. (பின் : காலப்பின்) 10. குழற்பண், யாழ்ப்பண்; குழல் யாழ் ‘குழலினிது, யாழினிது’ (கு. 66) இவை ஆகுபெயரால் அவற்றின் எழும் ஒலியைக் குறித்தன. 11. புளிச்சுமை, கறிச்சுமை - புளியம்பழமாகிய சுமக்கப்படும் பொருள், கறியாக்கப்படுதற்கு ஆகும் காயின் கனம் - என ஆகுபெயர் ஆயின. இவை இருமொழி ஆகுபெயர் ஆதல். 12. அராஅப்பாம்பு, கன்னியாகுமரி : (அரா ஆகிய பாம்பு, கன்னியை ஆகிய குமரி - என (ஒருபொருட்கு இருபெயர் ஆதல்) - இருபெயரொட்டுப் பண்புத்தொகை இது. 13. மன்னன்குமாரன் : முன்மொழி தமிழாகிய பண்புத் தொகை 14. ‘அதிநுட்பம்’ : பின்மொழி தமிழாகிய பண்புத்தொகை 15. அழகப்பிரான் : இருமொழியும் தமிழானது. 16. ‘ஆதிபகவன்’ : இருமொழியும் வடமொழியானது. (முன் - காலமுன்) 17. ‘ஆதி’ என்றதனால் பெறப்பட்டவை - கருங்குழல் : வண்ணப் பண்பு ; வட்டப்பலகை : வடிவப் பண்பு; முழத்துணி: அளவுப் பண்பு; தீம்பழம்: சுவைப்பண்பு; அலைக்கை (அலையாகிய கை, அலையென்னும் கை): உருவகம்; இவை முதலியன. (இ. கொ. 98) பண்புப்புணர்ச்சி பற்றிய குறிப்பு - நன் தீ சிறு பெரு வன் - முதலிய முதல்நிலைகள் மகரஐகாரம் பெற்று நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை - முதலிய வினைக்குறிப்புப் பெயராய் நிற்கும். இவைதாம், நன்று தீது சிறிது பெரிது வலிது - முதலாக அஃறிணை வினைக்குறிப்பு முற்றாய் நிற்கும்; நல்லன் தீயன் சிறியன் பெரியன் வலியன் முதலாக அன்னீறு பெற்று உயர்திணை வினைக்குறிப்பு முற்றாய் நிற்கும். இவைதாம் ஆன்ஈறு பெற்று முற்றாயும், படுத்தலோசையான் வினைக்குறிப்புப்பெயராய் வேற்றுமை யுருபு ஏற்றும் பயனிலை கொண்டும் நிற்குமாறும் உண்டு. (இவ்வாறே ஏனைப் பால்களோடும் ஒட்டுக.) இவைதாமே நன்றாய் தீதாய் - முதலாக வினையெச்சக்குறிப்பு ஆமாறும், நல்ல தீய - முதலாகப் பெயரெச்சக்குறிப்பு ஆமாறும் காண்க. (தொ. சொ. 463 நச். உரை) பண்புப்பெயரும் பண்புகொள்பெயரும் - கரியது கரியன - என்பன பண்பினைப் பிரியாது வரும் பண்புப் பெயர் (இவை குறிப்பு வினைமுற்றாகவும் நிற்றலுரிய.) பண்பினைக் கொண்டு வரும் செஞ்ஞாயிறு வெண்டிங்கள் போல்வன பண்புகொள் பெயர். (இப்பண்புத்தொகைப் பெயர்களில், பண்பு (ஐம்பால் அறியத் தொகும் மொழியாய்) விசேடித்து வரும் சொல்லாக முன் வரும். (தொ. சொ. 18 கல். உரை) பண்பு பயன் வினை மெய் - உவமைத்தொகை - பண்பு பயன் வினை மெய் - என்பன பற்றி வரும் உவமையுருபு தோன்றாதது உவமைத் தொகையாம். பான்மொழி - மாரி வண்கை - புலிப்பாய்த்துள் - துடியிடை - என முறையே காண்க. இவை விரிவுழிப் பால் போலும் மொழி - மாரி போலும் வண்கை - புலி போலும் பாய்த்துள் - துடி போலும் இடை - என விரியும். (நன். 365 மயிலை.) ‘பண்பை விளக்கும் மொழி’ - பண்பை விளக்கும் மொழி என்பது ‘ஆகிய’ என்பது. "ஆகிய என்பதன்று, மை விகுதியே பண்பை விளக்கும் மொழி" என்றால் என்னையெனின், ஒரு மொழிக்கு உறுப்பாகிய விகுதியை மொழி என்றல் கூடாமையானும், வட்டம் சதுரம் முதலிய பண்பிற்கு அவ்விகுதி இன்மையானும், வட்டக்கல் என்புழி மகரஈறு கெட்டுப் புணர்ந்தாற்போல மையீறு கெட்டுப் புணர்ந்தது என்பது ‘ஈறு போதல்’ என்னும் சூத்திரத்தால் (136) பெறப்படுதலானும் அஃது அன்று என்பது. (நன். 365 சங்.) பணை என்னும் உரிச்சொல் - பணை என்னும் உரிச்சொல் பிழைத்தல் ஆகிய குறிப்பினை யும், பெருத்தல் ஆகிய குறிப்பினையும் உணர்த்தும். (பணை என்பது மூங்கிலை உணர்த்தும்வழி உரிச்சொல் அன்று.) எ-டு : ‘பணைத்துவீழ் பகழி’ (நற். 165) ‘வேய்மருள் பணைத்தோள்’ (அக. 1) (தொ. சொ. 339 சேனா உரை) பத்துவகை எச்சங்கள் - பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசை யெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம், எனஎன் எச்சம், சொல்லெச்சம், இசையெச்சம், குறிப்பெச்சம் - என்பன பத்துவகை எச்சங்களாம். இவற்றுள் முதல் ஏழும் தத்தம் முடிக்கும் சொற்களைக் கொண்டு முடியும். ஏனைய மூன்றும் வெளிப்படையாக முடிக்கும் சொல்லைக்கொண்டு முடியாது, முடிக்கும் சொல் சொல்லுவோர் குறிப்பாலேயே புலப்பட நிற்கும்; தாமே அவற்றைக் கூறி நிற்குமாயின. (தொ. சொ. 430, 439 நச். உரை) பத்துவகை விகாரம் - வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் விரித்தல் தொகுத்தல் - இவை செய்யுள் விகாரம். இனம் இல்லதனை இனமுள்ளது போலச் சொல்லுதலும் (செஞ்ஞாயிறு), இனமுள்ளதனை இனமில்லது போலக் கிளத்தலும் (‘தாமரை’ புரையும்), இடைச்சொல் போக்கலும் (சுண்ணம், அடிமறி, நிரனிறைப் பொருள்கோள்) புடைச்சொல் புகுத்தலும் (மொழிமாற்றுப் பொருள்கோள்) கூட்ட விகாரம் பத்தாம். (தொ. சொ. 398 இள. உரை) பயப்பு என்னும் உரிச்சொல் - இவ்வுரிச்சொல் பயன் என்னும் குறிப்புணர்த்தும். எ-டு : ‘பயவாக் களர்அனையர் கல்லா தவர்’ (கு. 406) (தொ. சொ. 306 சேனா. உரை) பயனிலை என்பதன் பொருள் - தன்னை முடித்தற்குப் பின்வரும் சொல்லின் பொருண்-மையைத் தான் அவாவி நிற்கும் நிலைவேறுபாடு பயனிலை யாம். எழுவாய் பயனிலை ஏற்று வருமாறு : ஆ உண்டு, ஆ செல்க, ஆ கிடந்தது, ஆ யாது - ஆ எவன், ஆகரிது, ஆ பல; ஆ இல்லை, ஆ அல்ல. இனி, தொடர்மொழியின் மூன்று வகைகளுள் பயனிலை வகையும் உளது. எ-டு : சாத்தன் வந்தான் - பயனிலைத்தொடர். (தொ. சொ. 671, நச். உரை) ‘பயிர் நல்ல’ என்பது வழாநிலை ஆகும் இடம் - இயல்பாகவே பயிர் நன்கு விளையுமாயின் ‘பயிர் நல்ல’ என்று கூறுதல் வழாநிலையாம். ‘எருப்பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்தமையான் பயிர் நல்ல’ என்று கூறின் அது பொருந்தாது. ஆண்டு, ‘பயிர் நல்லவாயின’ என்றே கூறல் வேண்டும். (தொ. சொ. 21 சேனா. உரை, நச். உரை) செயற்கைப் பொருள் என்பதனைக் குறிக்காமலேயே குறிப்பு வினைமுற்றுக்கு ஆக்கம் கொடுத்துச் சொல்லும் மரபும் உண்டு. எ-டு : ‘நின்ற சொல்முன் இயல்பா கும்மே’ (தொ.எ. 144 நச்.) பரத்தல் பொருளில் வரும் உரிச்சொற்கள் - ஞெமிர்தல், பாய்தல் - என்ற உரிச்சொற்கள் பரத்தலாகிய குறிப்புப் பொருள் உணர்த்தும். எ-டு : ‘தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து’ (நெடு. 90) ‘புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதர’ (குறி. 172) (தொ. சொ. 361 சேனா. நச். உரை) பரவு என்னும் உரிச்சொல் - இது முன்னின்று வழிபட்டு வாழ்த்துதல் என்ற குறிப்புப் பொருளில் வரும். எ-டு : ‘நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே’ (புறநா. 335) (தொ. சொ. 382 சேனா. உரை) பரிசாக்கரம் - ஸ்பர்சாக்ஷரம். வடமொழி ஐவருக்கத்து இருபத்தைந்து எழுத்துக்களும் இப்பெயர் பெறும். தமிழில் வல்லினமும் மெல்லினமும் பரிசாக்கரம் எனப்படும். ஸஇச்சொல்லையே (பரிசம் - தொடுதல்) விளக்குவார் போல நேமிநாத உரை யாசிரியர் வல்லினம் கல்மேல் விரல் வைத்தாற்போலவும், மெல்லினம் மணல்மேல் விரல் வைத்தாற்போலவும் இருக்கும்’ (எ. 2) என்பர்.] (பி. வி. 5) பரியாயப் பெயர்கள் சில - கருவி எனினும், காரணம் எனினும், ஏது எனினும், நிமித்தம் எனினும் ஒக்கும். (நன். 296 மயிலை.) பதம் எனினும், மொழி எனினும், சொல் எனினும் ஒக்கும். (நன். 127 மயிலை.) கிழமை, உரிமை, சம்பந்தம், சொந்தம் - என்பன எல்லாம் ஒன்று. (நன். 300 இராமா.) ஏற்கும் பொருள், ஏற்றுக்கொள்ளும் பொருள், கோடற் பொருள் கொள்ளுதற்பொருள், கொள்பொருள் என்பன எல்லாம் ஒன்று. (நன். 298 இராமா.) நியமம், நியதி, நிச்சயம் - என்பன ஒரு பொருள. (நன். 318 இராமா.) பகுதி, முதனிலை, வினையடி, அடிப்பாடு, தாது - என்பன எல்லாம் ஒரு பொருள் (நன். 321 இராமா.) உபமேயம் எனவும், புகழ்பொருள் எனவும், பொருள் எனவும் சொல்லப்படும். (நன். 299 இராமா.) வினா கடா எனவும், வினவுதல் வினாவல் வினாதல் கடாவுதல் கடாவல் எனவும் வருவன ஒரு பொருள. (நன். 427 இராமா.) வினைமுதல், கருத்தா, செய்பவன், தொழில்முதல், செய்வது என்பன ஒரு பொருள. (நன். 306 இராமா.) கருவி காரணம் ஏது நிமித்தம் - இவை ஒரு பொருட் கிளவி யாயும் வரும். (நன்.297 சங்.) ‘பல்லோர் அறியும் சொல்’ - பலர்பாலைத் தெரிவிக்கும் சொல். பலர்பாலைத் தெரிவிக்கும் வினைமுற்று அர் ஆர் ப மார் - என்ற ஈறுகளை யுடையதாய் வரும். அர் ஆர் - ஈறுகள் முக்காலத்தும் எதிர்மறைக்கண்ணும் குறிப்பிலும் வரும். பகரஈறு எதிர்காலம் பற்றியே வரும். மார் எதிர்காலம் காட்டினும் ஏனை வினைமுற்றுப் போலாது வினை கொண்டு முடியும். அவை வருமாறு : உண்டனர் உண்டார், உண்ணாநின்றனர் உண்ணாநின்றார், உண்பர், உண்பார், உண்டிலர் உண்ணார் உண்ணாநின்றிலர், கரியர் கரியார், உண்ப, உண்மார் வந்தார். ‘காணன்மார் எமரே’ (நற். 4) எனப் பெயர்கொண்டு முடிவுழி, அச்சொல் காண்பார் என்ற சொற்கு மறையாய்க் ‘காண் பாரல்லராக’ என வியங்கோட் பொருளில் வரும் வேறு சொல் லாய் மகர எழுத்துப்பேறு வந்த ஆர்ஈறாம்; பெயர் கொண்டு முடிந்த மார்ஈறு அன்று. மார் உகரம் அடுத்தும் அடாதும் வந்து வினைகொண்டு முடியும். எ-டு : ‘எள்ளுமார் வந்தார் ஈங்கு’ (கலி. 81) ‘ஆர்த்தாக் கொண்மார் வந்தார்’. பல்லோர் அறியும் சொல் பெயராயின் அர் ஆர்- ஈற்றனவாய் வரும். (தொ. சொ. 208, 209 நச். உரை) (தொ. சொ. 207 சேனா. உரை) ‘பல்லோர்க் குறித்த சினைநிலைப்பெயர்’ - பல்லோரைக் கருதின சினைநிலைமையான் பெற்ற பெயர்கள் உயர்திணைப் பெயர்களுள் ஒருவகையாம். எ-டு : பெருங்காலர், பெருந்தோளர், அலைகாதர் (தொ. சொ. 162 இள., 167 நச். உரை) சினைநிலைப்பெயரின் ஒருமை இருதிணைக்கும் உரியது என்பர் சேனாவரையர். (தொ. சொ. 165 உரை) பல்லோர்க் குறித்த சினைநிலைப்பெயர் கூனர் குருடர் முடவர் என்பன. (தொ. சொ. 161 தெய். உரை) பன்மைப்பாலாய்ச் சினைகாரணமாக முதலுக்கு எய்திய பெயர்கள். அவை குருடர் செவிடர் தலையர் வாயர் - என வரும். (சினையினது விகாரம் பற்றி வருதலின் குருடர் செவிடர் போல்வன ‘பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயர்’ ஆயின.) (தொ. சொ. 166 ச. பால.) ‘பல்லோர்க் குறித்த திணைநிலைப்பெயர்’ - பல்லோரைக் கருதின குறிஞ்சி முதலிய ஐந்திணை நிலைமை யாற் பெற்ற பெயர்கள் உயர்திணைப் பெயர்களுள் ஒருவகை யாம். எ-டு : குறவர் இறவுளர் வேட்டுவர் ஆயர் பொதுவர் நுளையர் திமிலர் பரதவர் களமர் உழவர் எயினர் மறவர் - என்பன. (தொ. சொ. 167 நச். உரை) பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளர் ஆயர் வேட்டுவர் - என்பன. குறவர் ஆயர் வேட்டுவர் என்றாற் போல்வன. (தொ. சொ. 168 கல். உரை, 162 இள., 165 சேனா. உரை) வெற்பன் வெட்சியான் கரந்தையான் என்று தலைவனைக் குறிக்கும் ஒருமைப்பெயர் உடைப்பெயராம்; பன்மைப் பெயரே திணைநிலைப் பெயராம். (வெற்பர் முதலாகக் கொள்க) (தொ. சொ. 161 தெய். உரை) ‘பல்லோர்க் குறித்த முறைநிலைப்பெயர்’ - பல்லோரைக் கருதின தமது முறைமையான் பெற்ற பெயர் களாகிய தந்தையர் - தாயர் - என்பன. இவை உயர்திணைப் பெயர்களுள் ஒருவகையாம். (தொ. சொ. 167 நச். உரை) தாயர் தாய்மார் தந்தையர் தந்தைமார் - இவை இரு திணைக்கும் பொதுவாய் வருவன.(தொ. சொ. 161 தெய். உரை) பல்வகை வடிவு - சதுரம் ஆய்தம் வட்டம் முக்கோணம் சிலை துடி தோரை முழா எலும்பு கூன் குறள் - முதலான வடிவங்கள். (நன். 453 மயிலை.) ‘பல்வழி நுதலிய நெறித்து’ ஆதல் - (எல்லாம் என்பது) இருதிணைக்கண்ணும் பன்மையிடத்தைக் கருதின நிலைமைத்தாய் வரும். பன்மை என்னாது ‘பல்வழி’ என்றதனான், ஒருபொருளில் பலவிடத்தையும் குறித்து நிற்றலு முண்டு இச்சொல் என்பது. எ-டு : எல்லாம் வந்தேம், எல்லாம் வந்தன; மேனியெல்லாம் பசலையாயிற்று. (தொ. சொ. 186 சேனா. உரை) ‘பல்வேறு செய்தியின் நூல்’ - செம்பொருளவாய்ப் பலவாக வேறுபடுத்திய விரிவுகளை யுடைய அகத்தியம். (தொ. சொ. 463 நச். உரை) பல்வேறு செய்திகளையுடைய (எல்லா இலக்கணமும் கூறும் அகத்தியம் முதலிய) பல்வேறு உத்திவகை இலக்கணம். (தொ. சொ. 457 இள. உரை) பல்வகைப்பட்ட ஆசிரிய மத விகற்பத்தான் வரும் இலக்கணம். (தொ. சொ. 453 தெய். உரை) பல சிறப்புச் சொற்கள் எண்ணப்பட்டுப் பொதுவினை கோடல் - தத்தமக்குரிய சிறப்புவினைகளைக் கொண்டு முடியும் சிறப்புப் பெயர்ச்சொற்கள் பலவாக எண்ணப்பட்ட காலத்துப் பொதுவினையையே கொண்டு முடியும். எ-டு : யாழ் எழுவினார், குழல் ஊதினார், முரசம் கொட்டி னார் - என்னுமிடத்து எழுவுதலும் ஊதுதலும் கொட்டுதலும் சிறப்பு வினைகள். இவற்றுக்குப் பொதுவினை இயம்புதல் என்பது. எனவே, யாழும் குழலும் முரசும் இயம்பினார் - எனச் சிறப்புப் பெயர்ச்சொற்கள் எண்ணப்பட்டுப் பொதுவினை கொண்டு முடிந்தன. (தொ. சொ. 47 சேனா. உரை) பல சொல் ஒருபொருளாகி வரும் வேற்றுமை - ஆன், ஒடு - இரண்டுருபும் மூன்றாவதற்குரிய வினைமுதல் கருவி என்னும் பொருள்களில் வரும். அது, அ - இரண்டுருபும் ஆறாவதற்குரிய கிழமைப்பொருளில் வரும். (இதனது இற்று இது, இதன இன்ன இவை.) கண், கால் - முதலான உருபுகள் ஏழாவதன் (வினைசெய்யிடம், நிலம், காலம், எனமூவகைப் பட்ட) இடப்பொருளில் வரும். வேற்றுமை செய்யும்வழிப் பலசொல் ஒருபொருளாகியும் பலபொருள் ஒருசொல்லாகி யும் வரும் என்பது கல்லாடர் உரைப்பகுதி. (தொ. சொ. 63.) பலதொழில் குறித்த ஒருதொழில் திரிசொல் - துஞ்சினார் ஒதுங்கினார் மாண்டது - என்ற தொடக்கத்தன பலதொழில் குறித்த ஒருதொழில் திரிசொல். இவற்றுள், துஞ்சினார் என்பது உறங்கினார் இறந்தார் - என்பனவற்றை உணர்த்தும். ஒதுங்கினார் என்பது நடந்தார் என்பதனையும் ஒடுங்கினார் என்பதனையும் உணர்த்தும். மாண்டது என்பது மாட்சிமைப் பட்டது என்பதனையும் மாய்ந்தது என்பதனை யும் உணர்த்தும். (நன். 271 மயிலை.) பலபொருட்குப் பொதுவாகிய சொற்களுக்கு ஒன்றனான் பெயரிடுதல் - பல குடிகள் சேர்ந்தது சேரி. பல மரங்கள் தொக்கது தோட்டம். சேரியின்கண் வாழ்வார் பலரேனும், பன்மை பற்றியோ தலைமை பற்றியோ, ‘பார்ப்பனச்சேரி’ என்றாற்போலப் பெயரிடல் வேண்டும். தோட்டத்தின்கண் மரங்கள் பலவாயின வேனும் பன்மை பற்றியோ தலைமைபற்றியோ ‘கமுகந் தோட்டம்’ என்றாற் போலப் பெயரிடல் வேண்டும். பொதுச் சொல் அல்லனவும் சிறுபான்மை தலைமையும் பன்மையும் பற்றி அரசர் பெருந்தெரு, ஆ தீண்டு குற்றி, வயிரக்கடகம், ஆனதர், எருத்தில் - எனப் பெயரிடப்பெறும். (தொ. சொ. 49 சேனா. உரை) பலபொருள் ஒருசொல் - மா வாள் கோல் கன்று - என்னும் தொடக்கத்தன பல பொருள் ஒருசொல். "இவற்றுள் மா என்பதே பல சாதியும் உணர்த்திப் பொதுவாய் நின்றது. அல்லன ஒருசாதியை உணர நிற்றலின் பொதுமை இலவால்" எனின், அவ்வாறு பொதுமைப்படா ஆயினும் விகற்பித்து நோக்கத் தம்முள் சாதி மாறுபாடு உடையன என உணர்க. இவ்வாற்றான், உலகத்துப் பெயர்களெல்லாம் ஒரு பொரு ளோடும் ஓரிடத்தோடும் ஒரு காலத்தொடும் பண்பொடும் தொழிலோடும் உறுப்பொடும் படுத்து நோக்கப் பலபொருள் ஒரு சொல் எனப்படும்போலும். (தொ. சொ. 52 கல். உரை) பலபொருள் ஒருசொல் வேறுபடு வினையான் உணரப்பட்டு நிற்றலும், வேறுபடு வினையின்றிப் பொதுவினையான் உணரப்பட்டு நிற்றலும், பொதுவினையான் கருமச்சிதைவுள் வழிக் கிளந்து சொல்லப்பட்டு நிற்றலும், கருமச்சிதைவு இல்வழிப் பொதுவினையான் கிளவாது சொல்லப்பட்டு நிற்றலும் என நான்கு பகுதித்து. எ-டு : மா பூத்தது - மா வீழ்ந்தது (இடமும் காலமும் நோக்கி ‘மா’ பொருளுணரப்படும்) - ஆன்கன்று நீரூட்டுக - கன்றினை ஓட விடு (‘கன்றாற்றுப் படுத்த புன்தலைச் சிறாஅர்’ குறுந். 241) - என முறையே காண்க. (தொ. சொ. 55 கல். உரை) பலபொருள் ஒருசொல் பொருள் அறிவிக்கும் திறன் - பலபொருள்களுக்கும் பொதுவான சொற்கள், வினை - சார்பு - இனம் - இடம் - இவற்றால் ஏனைய பொருள்களை விடுத்துச் சிறப்பான ஒருபொருளை விளக்கும். அங்ஙனம் விளக்க இயலாத நிலையில், தெளிவு கருதி விதந்தே கூறப்படும். எ-டு : மா என்பது ஒருவகைமரம், வண்டு, விலங்கு - முதலிய பொருள்கள் தரும் பலபொருள் ஒருசொல். மா பூத்தது - வினையான் மரம் என்பதை உணர்த்திற்று. கவசம் அணிந்து நின்று ‘மாக்கொணா’ என்னுமிடத்து, சார்பால் குதிரையை உணர்த்திற்று. மாவும் மருதும் ஓங்கின - மாமரம் என்பது இனத்தான் உணர்த்தப்பட்டது. மாவீழ்ந்தது என்றவிடத்து மா என்பது இன்னது என்று புலப்படா நிலையில், மாமரம் வீழ்ந்தது - விலங்குமா வீழ்ந்தது - என விதந்து கூறப்பட்டது. (மாவீழ் நொச்சி - நொச்சிப் பூவாகிய சார்பால் வண்டினை உணர்த்திற்று; இடத்தான் எனினும் ஆம்.) (தொ. சொ. 53 சேனா. உரை) பலபொருள் ஒருசொல்லாகி வரும் வேற்றுமை - வேற்றுமை செய்யும்வழிப் பலபொருள் ஒருசொல்லாகியும் பலசொல் ஒருபொருளாகியும் வரும் என்பது கல்லாடனாரது உரைப்பகுதி. (தொ. சொ. 63) கருவி கருத்தா உடனிகழ்ச்சி ஆகிய மூன்று பொருளும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய. (‘ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்’, ‘கொடியொடு துவக்குண்டான்’, நாயொடு நம்பி வந்தான் - என மூன்று பொருளினும் ஒடு முறையே வந்தது.) நீங்கல் ஒப்பு எல்லை ஏது - ஆகிய நான்கு பொருளும் ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய. (காமத்தின் பற்று விட்டான், காக்கை யின் கரிது களம்பழம், கருவூரின் கிழக்கு மருவூர், கல்வியின் பெரியன் கம்பன் - என நான்கு பொருளினும் இன் உருபு வந்தது) (தொ. சொ. 63 கல். உரை) பலபொருள் ஒருசொல்லின் இருவகை - வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல், வினை வேறு படாப் பலபொருள் ஒருசொல் என்பன அவ்விரு வகைகள். எ-டு : மா பூத்தது - வினைவேறுபடும் பலபொருள் ஒரு சொல். மா வீழ்ந்தது - வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல். (பூத்தது என்ற வினையான் மாமரம் என்பது புலனாயிற்று. வீழ்ந்தது என்ற வினை வண்டினுக்கும் விலங்குமாவிற்கும் மாமரத்தினுக்கும் பொதுவாக நின்றது. முன்னது சிறப்பு வினை; ஏனையது பொதுவினை.) (தொ. சொ. 52 சேனா. உரை) பலபொருள் ஒரு சொல்லினுள் அடைகொடுத்துப் பொருள் அறிவித்தல் - மா என்பது பல பொருள் ஒரு சொல். வீழ்ந்தது என்பது பொதுவினை. மாவீழ்ந்தது என்னுமிடத்து, வீழ்ந்தது விலங்கா மரமா என்பது புலப்படாது. அந்நிலையில் மாமரம் வீழ்ந்தது - விலங்குமா வீழ்ந்தது - என முன்னோ பின்னோ அடை கொடுப்பினே பொருள் புலப்பாடு உண்டாம். (தொ. சொ. 54 சேனா. உரை) சிறப்புவினையான் வேறுபடும் பலபொருள் ஒருசொற்கள், பொதுவினையான் வேறுபடாத பலபொருள் ஒருசொற்கள் எனப் பலபொருள் ஒருசொற்கள் இருவகையவாம். கொடி என்பது நிலத்து முளைத்து வரும் தாவரத்துக்கும், அடையாளமிட்டு எழுதப்பெற்ற சீலைக்கும் பிறவற்றிற்கும் பொதுச்சொல். கொடி படர்ந்தது - எனின் முல்லை முதலிய பூங்கொடிகளையும், கொடி பறந்தது எனின் புலி கயல் முதலியன எழுதப்பட்ட அரச அடையாளக் கொடிகளையும் அச்சிறப்பு வினைகள் உணர்த்தின. இவை சிறப்பு வினையாம். கொடி அசைந்தது என்புழி அசைதல் இரண்டு திறக் கொடி கட்கும் ஒக்கும் ஆதலின் அது வேறுபடுத்தாத பொதுவினை யாயிற்று. திரை பரவிற்று (நீரலை); திரை அவிழ்ந்தது (திரைச்சீலை) - இவை வேறுபடு வினை. திரை எழுந்தது - இது வேறுபடா வினை. மா பூத்தது (மரம்); மா ஓடிற்று (விலங்கு) - இவை வேறு படுவினை. மா வீழ்ந்தது - இது வேறுபடா வினை (தொ. சொ. 52 ச. பால) பலபொருள் கருதிய இடைத்திரிசொல்லும் உரித்திரிசொல்லும் - தில் மன் மற்று கொல் - என்றல் தொடக்கத்தன பல பொருள் கருதிய ஓரிடைத் திரிசொல். ‘கடிஎன் கிளவி’ முதலாயின பலகுணம் தழுவிய ஓர் உரித்திரிசொல். (நன். 271 மயிலை.) பலபொருள் கருதிய ஒரு பெயர்த்திரிசொல் - உந்தி ஓடை நறவம் வாரணம். என்றல் தொடக்கத்தன. இவற்றுள் உந்தி என்பது கொப்பூழினையும் ஆற்றிடைக்குறை யினையும் தேர்த்தட்டினையும் யாழ்ப்பத்தல் துளையினையும் உணர்த்தும். ஓடை என்பது யானைப்பட்டத் தினையும் ஒரு மரத்தினையும் ஒரு கொடியினையும் நீர்நிலையினையும் உணர்த்தும். நறவம் என்பது கள்ளினையும் ஒரு கொடியினை யும் உணர்த்தும். வாரணம் என்பது கோழியினையும் பன்றி யினையும் யானையினையும் சங்கினையும் உணர்த்தும். (நன். 271 மயிலை.) பலபொருளான் இயைந்த ஒருபொருள் - அடிசில் புத்தகம் சேனை கதவு மாலை கம்பலம் - போன்ற பொருள்கள் பலபொருள்களாகிய உறுப்புக்கள் தம்முள் இயைந்த ஒரு பொருளாம். ‘பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே, அடிசில் பொத்தகம் சேனை அமைந்த, கதவம் மாலை கம்பலம் அனைய’ என்பது அகத்தியம். (நன். 260 சங்.) பலர்பால் படர்க்கை - அர் ஆர் ப மார் - என்னும் விகுதி பெற்ற வினைகள் பலர்பால் படர்க்கை முற்றுவினைகள். இவற்றுள் அர் ஆர் ப - என்னும் ஈற்று முற்றுக்கள் படுத்தலோசையான் வினையாலணையும் பெயருமாம். எ-டு : நடந்தனர் நடந்தார் - நடக்கின்றனர் நடக்கின்றார் - நடப்பர் நடப்பார் - குழையினர் குழையார் என்றும், நடப்ப எய்துப சொல்லுப புல்லுப - என்றும், பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே’ (புற. 375) - என்றும் இவ்விகுதிகள் முறையே வந்தன. இவற்றுள், பாடன்மார் என்பது மாரீற்று எதிர்மறை வினைமுற்றாதலின் எதிர்கால வினையொன்றனையும் மறுத்துப் ‘பாடுவாரல்லர்’ என்ற பொருட்டாய் நின்று எமர் என்னும் பெயர் கொண்டது. ‘ஆர்த்தாக் கொண்மார் வந்தார்’ ‘விழுக்கோட் பலவின் பழூஉப்பயன் கொண்மார் குறவர் ஊன்றிய குரம்பை புதைஇ’ (அக. 12) என மாரீற்று வினைமுற்று வினைகொண்டு முடிந்தது. அர் ஆர் மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றி வரும். பகரம் எதிர்காலம் ஒன்றற்கே உரியது. ஏனைய மார் எதிர்காலம் காட்டி வினைகொண்டும் முடியும். (நன். 327 சங்.) பலர்பால்பெயர் - பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் - அடியாக வரும் ரகரஈற்றுப் பெயர்களும், கள் என்னும் விகுதியை ஈறாகவுடைய பெயர்களுள் பொருந்துவனவும், இவை போல்வன பிறவும் பலர்பால் பெயர்களாம். அவை வருமாறு : தமர் நமர் நுமர் இருவர் மூவர் அவையத்தார் - பொருள் வெற்பர் மறவர் மகிழ்நர் துறைவர் கோழியூரார் கருவூரார் வானத்தார் அகத்தார் புறத்தார் - இடம் மூவாட்டையார், வேனிலார், தையார் - காலம் திணிதோளார் செங்குஞ்சியார் வரைமார்பர் செங்கண்ணர் குழைக்காதர் - சினை பெரியர் புலவர் பொன்னொப்பார் கூனர் கரியர் மானிடர் சேரர் ஆசிரியர் - குணம் ஓதுவார் ஈவார் - தொழில் கோக்கள் மனுக்கள் - கள் என் ஈறு தமர்கள் நமர்கள் அரசர்கள் அரசிகள் மறவர்கள் மறத்திகள் - விகுதிமேல் விகுதிஈற்றுப் பெயர்கள் இவை. ‘பிறவும்’ என்றமையால், மாந்தர் மக்கள் என்றல் தொக்கத்- தனவும் கொள்க. (நன். 278 சங்.) பலர்பால் வினைமுற்று ஈறுகள் - அர் ஆர் ப மார் - என்னும் பலர்பால் வினைமுற்று விகுதி களுள் அர் ஆர் என்னும் இரண்டும் முக்காலமும் எதிர்மறை யும் பற்றி வரும்; வினைக்குறிப்பிற்கும் இவை உரிய. பகரம் எதிர்காலம் பற்றியே வரும். மார்விகுதி உகரச்சாரியை பெற்றும் பெறாதும் எதிர்காலத்து வந்து வினையைக் கொண்டு முடியும். ப மார் - இரண்டும் எதிர்காலம் காட்டுதலின் தெரி நிலை முற்றுக்கே விகுதியாக வரும். பகரவிகுதி நிகழ்காலமும் காட்டும். ‘பல்லோர் அறியும் சொல்’ காண்க. (தொ. சொ. 206, 207 சேனா. உரை; தொ. சொ. 208, 209 நச். உரை) பலரறி சொல்லும் பலவறி சொல்லும் - அர் ஆர் ப மார் - என்னும் ஈற்றினையுடைய வினைமுற்றுக்கள் பலர்பாலை அறிவிப்பன. எ-டு : உண்டனர், உண்டார், உண்ப, உண்மார் வந்தார். அ ஆ வ - என்னும் ஈற்றினையுடைய வினைமுற்றுக்கள் பலவின்பாலை அறிவிப்பன. எ-டு : உண்ட உண்ணாநின்ற உண்ப கரிய உண்ணா - உண்குவ. அன்சாரியை பெறாது முடிந்த பலவின்பால்வினைமுற்றுக்கள் இவை. கரிய - குறிப்பு வினைமுற்று. (தொ. சொ. 7, 9 சேனா. உரை) பலவகை ஈற்று வினையெச்சம் - ‘நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே’ (கலி. 39) - உம் ஈறு ‘அற்றால் அளவறிந் துண்க’ (கு. 943) - ஆல் ‘அவா உண்டேல் உண்டாம்’ (கு. 1075) - ஏல் ‘அவன் எள்ளுமேனும் வரும்’ - ஏனும் ‘ஒன்றானும் தீச்சொல்.......... உண்டாயின்’ (கு. 128) - ஆனும் (ஆயினும் என்பது குறைந்து நின்றது.) ‘நுணங்கிய கேள்வியர் அல்லால்’ (கு. 419) அல்லால் - அன்றி என்னும் வினையெச்சக்குறிப்பு உணர்த்துவதொரு வாய்பாடு. ‘பெரிய ஓதினும் சிறிய உணரா’ (புற. 375) - வினையெச்சக் குறிப்பான அகர ஈறு ‘கூறாமல் குறித்ததன்மேல்’ (கலி. 1) - மல் ஈறு ‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்’ (கு. 701) - மை ஈறு ‘செவ்வன் தெரிகிற்பான்’ ‘புதுவதின் இயன்ற அணியன்’ அகம். 66 ‘புதுவது புனைந்த, வெண்கை யாப்பு’ மலை. 28 ‘பெருங்கை யற்றஎன் புலம்பு முந்துறுத்து’ புற. 210 ‘சிறுநனி நீ துஞ்சி ஏற்பினும்’ கலி. 12 ஒல்லைக் கொண்டான் (அகர ஈறு அன்றிப்) பிற ஈறுகளான் முடிக்கும் சொல்லை விசேடித்துவரும் குறிப்பு வினையெச்சங்கள் இவை. (தொ. சொ. 230 நச். உரை) பலவற்றுப் படர்க்கை விகுதிகள் - அ ஆ வ என்பன அஃறிணைப் பலவின்பால் விகுதிகளாம். அகரம் முக்காலமும் வினைக்குறிப்பும் பற்றி வரும். எ-டு : உண்டன உண்ணாநின்றன உண்பன; கரியன. ஆகாரம் எதிர்மறைக்கண்ணேயே வரும். எ-டு : உண்ணா. வகரம் குகரம் அடுத்து எதிர்காலம் பற்றி வரும். எ-டு : உண்குவ, தின்குவ. அகரம் இறந்தகாலம் பற்றி வருங்கால், க ட த ற என்ற இந்நான்கின் முன் அன்சாரியை பெற்றும் பெறாதும், ஏனை எழுத்தின்முன் ஙகார ழகாரம் ஒழித்து இன் பெற்றும், யகரத்தின் முன் சிறுபான்மை இன்னே அன்றி அன் பெற்றும் பெறாதும் வரும். அவை வருமாறு : எதிர்மறை தொக்கன தொக்க தொக்கில உண்டன உண்ட உண்டில வந்தன வந்த வந்தில சென்றன சென்ற சென்றில - எனவும், அஞ்சின தப்பின- எனவும் உரிஞின நண்ணின பொருநின செருமின துன்னின - எனவும், போயின சேரின சொல்லின மேவின துள்ளின - எனவும், போயன போய - எனவும் வரும். அகரம் நிகழ்காலம் பற்றி வருங்கால், நில் நின்று - என்பவற் றோடு அன்பெற்றும் பெறாதும் வரும். எ-டு : உண்ணாநின்றன உண்ணாநின்ற; உண்ணாநின்றில (எதிர்மறை); உண்கின்றன உண்கின்ற; உண்கின்றில (எதிர்மறை). இனி, அகரம் எதிர்காலம் பற்றி வருங்கால் பகர வகரத்தோடு அன் பெற்றும் பெறாதும் வரும். எ-டு : உண்பன உண்ப; உண்ணல (எதிர்மறை); வருவன வருவ. உரிஞுவன உரிஞுவ - என உகரம் பெற்று ஏனை எழுத்தின்கண் வரும். இனி, ஆகாரம் காலஎழுத்துப் பெறாது எதிர்காலத்துப் பயின்று எதிர்மறையாக வரும். எ-டு : உண்ணா தின்னா வகரம் எதிர்காலத்திற்கு உரித்தாய்க் குகரம் பெற்றும் பெறாதும் ஏற்றவழி உகரம் பெற்றும் வரும். எ-டு : உண்குவ தின்குவ; உண்ணல (எதிர்மறை); ஓடுவ தாவுவ; உரிஞுவ செருமுவ. உண்டனஅல்ல - உண்டனஇல்லை - எனப் பிறவாய்பாட்டு மறையும் அறிக. (தொ. சொ. 218 நச். உரை) பலவறிசொல் - ‘பலவின்பால் படர்க்கை வினைமுற்று’, ‘பலவற்றுப் படர்க்கை விகுதிகள்’ காண்க. பலவின்பால் படர்க்கை - அகர ஆகார ஈற்று வினைமுற்றுக்கள் பலவின்பால் படர்க்கை யாம். ஆகாரஈறு எதிர்மறைவினைக்கண்ணதேயன்றி உடன் பாட்டில் வாராது. (அகரஈறு உடன்பாடு எதிர்மறை என இரண்டன்கண்ணும் வரும்.) அவை வருமாறு : நடந்தன நடந்த - நடவாநின்றன நடவாநின்ற - நடப்பன நடப்ப; கரியன கரிய - நடந்தில நடவாநின்றில நடவா - (எதிர்மறை) எனவரும். ஆகார மறைவிகுதி தெரிநிலைவினைக்கே வரும். இல்லன இல்ல - அல்லன அல்ல - என்ற எதிர்மறைக் குறிப்பு வினைமுற்றின்கண் பகுதியே மறைப்பொருளைத் தந்து நிற்றலின் எதிர்மறை ஆகாரம் வேண்டாவாயிற்று. (நன். 329 சங்.) பலவின்பால் பெயர் - வினாவுடனும் சுட்டுடனும், பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறும் பற்றியும் வரும் வகரஐகார ஈற்றுப் பெயர்களும், அகரஈற்றுப் பெயர்களும், வகரஒற்று ஈற்றுச் சுட்டுப்பெயர்களும், கள் என்னும் பகுதிப்பொருள் விகுதி இறுதியாகிய பெயர்களும், ஒன்று அல்லாத இரண்டு முதலிய எண்ணுப் பெயர்களும், உள்ள இல்ல பல்ல சில்ல உள இல பல சில - என்னும் குறிப்பு வினையாலணையும் பெயர் களும் இவை போல்வன பிறவும் அஃறிணைப் பலவின்பாற் பெயர்களாம். அவை வருமாறு : எவை யாவை - அவை இவை உவை - நெடியவை கரியவை நல்லவை தீயவை உள்ளவை இல்லவை - பொருள பொருளன, அகத்த அகத்தன, மூலத்த மூலத்தன, கோட்ட கோட்டன, கரிய கரியன, உள்ள உள்ளன, இல்ல இல்லன, ஓதுவ ஓதுவன, ஈவ ஈவன - அவ் இவ் உவ் - யானைகள் குதிரைகள் - இரண்டு மூன்று பத்து நூறு ஆயிரம் - எனவரும். ‘உள்ள’ முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் - யா பிற மற்றைய - முதலாயினவும் கொள்க. (நன். 280 சங்.) பழிச்சு என்னும் உரிச்சொல் - இவ்வுரிச்சொல் வழிபட்டுப் புகழ்தல் என்னும் குறிப்புப் பொருளில் வருவது. எ-டு : ‘கைதொழூஉப் பழிச்சி’ (மது. 694) (தொ. சொ. 382 சேனா. உரை) பழுது என்னும் உரிச்சொல் - இவ்வுரிச்சொல் பயமின்மையாகிய குறிப்புணர்த்தும். எ-டு : ‘பழுதுகழி வாழ்நாள்’ (தொ. சொ. 324 சேனா. உரை) பழையன கழிதல் - ‘கேட்டை என்றா நின்றை என்றா, காத்தை என்றா கண்டை என்றா’ என்னும் தொடக்கத்தன அக்காலத்து உண்மையின் அவற் றிற்குத் தொல்லாசிரியர் இலக்கணம் கூறினாராயினும் இக் காலத்து இன்மையின் விடுக்கப்பட்டன. சரி சமழ்ப்பு சட்டி சழக்கு - என்னும் தொடக்கத்தன அக்காலத்து இன்மையின் அவற்றிற்குத் தொல்லாசிரியர் இலக்கணம் கூறாராயினும் அவை இக்காலத்து உண்மையான் இலக்கணம் கூறப்பட்டன. (இ.வி. 371 உரை) பழையன கழிதல், புதியன புகுதல் - அழன், புழன், ‘கேட்டை என்றா நின்றை என்றா, கண்டை என்றா காத்தை என்றா’ - என்றல் தொடக்கத்தன அக்காலத்துள்ளன இக்காலத்து வழங்கா. அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் எங்ஙனம் - என்புழி, ஙவ்வும், சம்பு சனி சரடு சரி சமழ்ப்பு சள்ளை - என்புழிச் சகரமும், இக் காலத்து ஈண்டு மொழிக்கு முதலாயின என்க. பிறவும் அன்ன. (நன். 461 மயிலை.) மொழிமுதற் குற்றியலுகரம், அதோளி இதோளி உதோளி எதோளி என்ற சொற்கள், தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியாகிய உண்கா (உண்பேனோ) முதலியன, கோஒன் என்றாற் போன்ற ஒன்சாரியை, எழுத்துப்பேறள பெடை, இறைச்சியைக் குறிக்கும் ஊ என்ற இயற்கைச்சொல், சுட்டு முதலாகிய ஆன் (அம்மாட்டான் இம்மாட்டான் உம்மாட்டான்), பெண்மகன் என்ற பெண்பாற்பெயர், குதிரை ஆணினைச் சேவல் எனவும் ஆண் எருமையைக் கண்டி எனவும் வழங்கும் மரபுப்பெயர்கள், பாட்டி என்ற பெண்பாற் பெயர் - முதலியன பழையன கழிதலாம். தன்மை ஒருமை முற்றின்கண் அன்விகுதி, தன்மைப்பன்மை முற்றின்கண் ஓம் விகுதி, தன்மை இருதிணைக்கும் பொது வாதல், வியங்கோள் தன்மை முன்னிலைகளில் வருதல், ஈதா கொடு என்ற சொற்கள் பழைய மரபை விடுத்து எல்லாவிடத் தும் பொதுவாகக் கொடுத்தல் பொருளில் வருதல், ஓகாரம் எதிர்மறைப் பொருட்டாதல், உண்டு என்னும் குறிப்புமுற்று இருதிணை ஐம்பால் மூவிடத்துக்கும் பொதுவாதல், உளப் பாட்டுத் தன்மைப்பன்மை வினை முற்றின்கண் வரையறை யின்றி விகுதிகள் மயங்கல் - முதலியன புதியன புகுதலாம். (நன். 462) பற்றுவிடு கிளவி - ஐந்தாம் வேற்றுமை நீக்கப்பொருள் சொற்களில் பற்றுவிடு கிளவியும் ஒன்று. இப்பற்றுவிடுபொருண்மை நான்காம் உருபிடத்தும் கொள்ளப்படும். எ-டு : மனைவாழ்க்கையின் பற்றுவிட்டான் - இவ் வைந்த னுருபு ஏற்ற தொடர் மனைவாழ்க்கைக்குப் பற்று விட்டான் என நான்கனுருபு ஏற்று வருதலுமுண்டு. (தொ. சொ. 111 நச். உரை) பன்மை, ஒருமை - பல்லோர்க்கும் பலவற்றுக்கும் பொதுவாகியது பன்மை. பல்லோர், ஆண்பாற் பல்லோரையும் பெண்பாற் பல்லோரை யும் ஆணும் பெண்ணுமாகிய இருபாற் பல்லோரையும் குறிக்கும். ஒருமையாவது ஒருவன் ஒருத்தி ஒன்று - என்பனவற்றிற்கு எல்லாம் பொதுவாகிய சொல். (தொ. சொ. 187, 186 இள. உரை) பன்மைச்சினைகள் ஒருமைவினை கொள்ளும் இடம் - முதல் ஒருமையாயிருப்பின் பன்மைச்சினைகள் முதல் -வினையைக் கொண்டு முடியுமிடத்து அதன் ஒருமையையே கொள்ளும். எ-டு : கண் நொந்தாள், தோள் நொந்தாள். (தொ. சொ. 62 நச். உரை) பன்மை சுட்டிய சினைநிலைக்கிளவி - கண் தோள் முலை காது புருவம் கை கால் - போல்வன பன்மையாக அமைந்துள்ள உறுப்புக்களைக் குறிப்பிடும் சொற்களாம். (தொ. சொ. 62 நச். உ ரை) பன்மை சுட்டிய சினைநிலைக்கிளவி வினைகோடல் - கண் தோள் முதலிய சினைகளைக் குறிப்பிடும் சொற்கள் தம் சினைவினையானும் முடியும்; தம் முதல்வினை கொண்டும் முடியும். தம் முதல்வினையைக் கொண்டு முடியுமிடத்து பன்மைவினை கொள்ள வேண்டும் என்ற வரையறையின்று; முதல் ஒருமையாயின் ஒருமைவினைகொண்டு முடியும்; முதல் பன்மையாயின் பன்மைவினைகொண்டு முடியும். எ-டு : கண் நொந்தன; (அவள்) கண் நொந்தாள், (அவர்) கண் நொந்தார்; கோடு கூரிது களிறு, குளம்பு கூரிது குதிரை; (கோடு கூரிய களிறுகள், குளம்பு கூரிய குதிரைகள்) (தொ. சொ. 61 சேனா., 62 நச். உரை) பன்மை சுட்டிய பெயர் - இருதிணைக்கும் பொதுவாகிய இயற்பெயர்வகை நான்கனுள், இயற்பெயர் - சினைப்பெயர் - சினைமுதற்பெயர் - வகைகளுள் ‘பன்மை சுட்டிய பெயர்’ என்பதும் ஒன்றாம். ஆகவே, பன்மை சுட்டிய பெயர், பன்மை இயற்பெயர் - பன்மைச் சினைப்பெயர் - பன்மைச் சினைமுதற்பெயர் - என முத்திறத்தது. அப்பன்மை சுட்டிய பெயர், ஆண்பால் - பெண்பால் - ஒன்றன்பால் - பலவின்பால் - என்னும் நான்கு பாற்கண்ணும் வரும். ஏனைய ஆண்மை பெண்மை ஒருமை இயற்பெயர்கள் உணர்த்த இயலாத அஃறிணைப்பன்மையை இப்பெயர் உணர்த்தலின் ‘பன்மை சுட்டிய பெயர்’ எனப்பட்டது. எ-டு : யானை வந்தான் - யானை வந்தாள் - யானை வந்தது - யானை வந்தன: இயற்பெயர். நெடுங்கழுத்தல் வந்தான் - வந்தாள் - வந்தது - வந்தன : சினைப்பெயர். பெருங்கால் யானை வந்தான் - வந்தாள் - வந்தது - வந்தன : சினைமுதற்பெயர் ‘வெண்குடைப் பெருவிறல் வழுதி’ என்பான் ஏனைய கருங்குடை முதலிய உடையனேனும், பிறரிடத்து இல்லாத சிறப்புடைய வெண்குடையுடையனாதலின் அப்பெயரான் அழைக்கப்பட்டவாறு போல,’ ‘பன்மை சுட்டிய பெயர்’ ஏனை ஆண்மை பெண்மை ஒருமை - என்ற ஒருமைப்பெயர் களை உணர்த்தினும் பிறவற்றான் உணர்த்தப்படாத அஃறிணைப் பன்மையினை உணர்த்துதலின் ‘பன்மை சுட்டிய பெயர்’ என்ற பெயருடையதாயிற்று. ஐம்பால்களுள் நான்கு பால்களைச் சுட்டுதலின் பலபால்களையும் சுட்டுதல் பற்றிப் பன்மை சுட்டிய பெயராயிற்று எனினுமாம். (தொ. சொ. 182 சேனா., 184 நச்., 185 கல். உரை) ‘பன்மை சுட்டிய பெயர்’ என்றது, ஒருமை சுட்டுதலோடு இயைபு நீக்காது தன்னோடு இயைபின்மை மாத்திரம் நீக்கித் தலைமை பற்றி வந்தடுத்த ‘பன்மை சுட்டுதல்’ என்னும் சிறப்பான் சிறப்பிக்கப்பட்டுத் தலைமை பற்றிய வழக்காய் நின்றது; ஆ தீண்டு குற்றி என்றது, மேதி முதலியன தீண்டுத லோடு இயைபு நீக்காது தன்னோடு இயைபின்மை மாத்திரம் நீக்கித் தலைமை பற்றி வந்தடுத்த ஆதீண்டுதல் என்னும் சிறப்பான் சிறப்பிக்கப்பட்டுத் தலைமை பற்றிய வழக்காய் நின்றாற் போல. (இ. வி. 186 உரை) பன்மை சுட்டிய பெயர் இருதிணைக்கும் பொதுவாதல் - பன்மை சுட்டிய பெயர், உயர்திணை ஆண்பால் பெண்பால் - அஃறிணை ஒன்றன்பால் - பலவின்பால் என்ற நான்கு பால்களிலும் வருவதால் இருதிணைப் பொதுவாம். எ-டு : யானை வந்தான், வந்தாள், வந்தது, வந்தன - இயற்பெயர்; நெடுங்கழுத்தல் வந்தான், வந்தாள், வந்தது, வந்தன - சினைப்பெயர்; பெருங்கால்யானை வந்தான், வந்தாள், வந்தது, வந்தன - சினைமுதற் பெயர். (தொ. சொ. 182 சேனா. உரை) பன்மைத்தன்மை எண்ணியல் மருங்கின் திரிதல் - தன்மைப்பன்மை வினைமுற்று எண்ணுதல் நடக்குமிடத்து அஃறிணையை உளப்படுத்தித் திரிவன. அஃதாவது உயர் திணையையும் அஃறிணையையும் இயைபு பற்றி உடன் எண்ணி உயர்திணைக்குரிய உளப்பாட்டுத் தன்மைப்பன்மை வினைமுற்றான் முடித்தலுண்டு. எ-டு : யானும் என் எஃகமும் சாறும் (சாறும் - சாலுதும் - சாலுவேம்) (தொ. சொ. 211 நச். உரை) ‘நாம் இருவேம்’ எனத் தன்மைப்பன்மைவிகுதியான் முடியற் பாலது ‘நாம் இருவர்’ எனவும் வரும். உளப்பாட்டுத் தன்மைக்கு ஓதிய எட்டு ஈறுகளினும் திரிபவை உள்ளன என்றுரைத்த லும் ஆம். வருவேம் உண்பேம் - என்னும் ஏகாரம், வருவோம் உண்போம் - என ஓகாரமாகத் திரிந்து வந்தவாறு காண்க. (தொ. சொ. 203 தெய். உரை) பன்மை பற்றிப் பொதுச்சொற்குப் பெயரிடல் - பல குடிகள் சேர்ந்து வாழ்வது சேரி. பல மரங்கள் வளர்வது தோட்டம். பார்ப்பார் மிகுதியாக இருப்பின் பன்மை பற்றிப் பார்ப்பனச் சேரி எனப்படும். கமுகு மிகுதியாக இருப்பின் பன்மை பற்றிக் கமுகந்தோட்டம் என்று பெயரிடப்படும். இவ்வாறு முறையே இருதிணைக்கண்ணும் பன்மை பற்றிய வழக்காறு காணப்படும். (தொ. சொ. 49 சேனா. உரை) பன்மையாகவே வழங்கும் சினைபெயர் வினைகோடல் - ‘பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி வினை கோடல்’ காண்க. பாகதம் - பாகதம் என்பது அவ்வந்நாட்டு மக்களில் பண்பட்டவர் பேச்சுவழக்கிற்குப் பயன்படுத்தும் அவ்வந்நாட்டுத் தாய் மொழி. அது தற்சமம், தற்பவம், தேசியம் எனப் பகுக்கப்படும். தற்பவமாவது சமஸ்கிருதச்சொல் அவ்வந் நாட்டுத் தாய்மொழி ஒலிக்கு ஏற்பத் திரித்துக் கொள்ளப்பட்டது. எ-டு : பக்ஷம்-பக்கம். தற்சமமாவது சமஸ்கிருதச் சொல் அவ்வந்நாட்டுமொழியின் வரிவடிவில் எழுதப்படும். அவை சமஸ்கிருதத்துக்கும் அவ்வந் நாட்டு மொழிகளுக்கும் பொதுவான எழுத்துக்களால் அமைவது. எ-டு : குங்குமம், மேரு, வாரி தேசியம் என்பது அவ்வந்நாட்டு மொழியின் இயற்கையான சொற்கள். எ-டு : நிலம், நீர், தீ, காற்று (இ.வி. 635 உரை) பாச பந்தம் - தாப்பிசை. நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் தாப்பிசை - பாசபந்தம் - போலப் புணர்வ தன்றி, விரலும் விரலும் சேர நிற்றல் போலப் புணரா என்பர் பிரயோகவிவேகநூலுடையார். (பி.வி. 26) பாடன்மார் : பொருள் முடிபு - ‘பீடின்று பெருகிய திருவின், பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே’ (புறநா. 375) ‘படரட வருந்திய, நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே’ (நற். 64) - என மாரீற்று வினைமுற்றுப் பெயரொடு முடிந்ததால் எனின், இவை பாடுக காண்க என்னும் வியங் கோட்கு எதிர்மறையாய்ப் பாடாதொழிக - காணாதொழிக - என ஏவற்பொருளவாய் நின்றன; அவை மாரீறு அல்ல என்க. அல்லதூஉம், பாடுவார் காண்பார் - என்பன சில வியங்கோள் வினைமுற்று என்று கொண்டு, அவற்றிற்கு எதிர்மறையாய்ப் பாடாதொழிவார் காணா தொழிவார் - என ஏவற்பொருளவாய் நின்றன என்றலும் ஒன்று. மார்ஈறாம் ஆயின், இவை ஏவற்பொருளை உணர்த்து மாறில்லை என்க. (இ.வி. 232 உரை) பாத்தம் - உபசார வழக்கு; சினைக்குள் சினையாகக் கூறுவது போன்றவை. எ-டு : நாநுனி, நாவிளிம்பு - நாவினுடைய நுனியும் விளிம்பும் நாவன்றி வேறல்ல. (பி.வி. 27) பால் அறி மரபின் அம் மூஈறு - உயர்திணைமருங்கின் முப்பாலுக்கும் உரிய ஈறுகள். அவை யாவன ஆண்பால் காட்டும் ஆன்ஈறு, பெண்பால் காட்டும் ஆள்ஈறு, பலர்பால் காட்டும் ஆர்ஈறு - என்பன. பால் விளங்கவரும் இயல்புடைய அம்மூன்று ஈற்றின்கண்ணும் செய்யுளில் ஆகாரம் ஓகாரம் ஆகும். அவை வருமாறு : ‘வினவிநிற் றந்தோனே’ (அக. 48) ‘நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே’ (அக. 248) ‘பாசிலை, வாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறு. 216) (தொ. சொ. 211 சேனா. உரை) பால் இடத்திணை வழு - வந்தாள் பேடையேம், வந்தாள் சேவலேம், வந்தார் கடுவனேன் - எனவும், வந்தது மாந்தரேம், வந்தது மாதரேம், வந்தன பாணனேன் - எனவும் இருதிணைப் படர்க்கை ஒருமை பன்மை வினைமேல் தன்மை இருதிணை ஒருமை பன்மைப் பெயர் மயங்கிய மயக்கம். வந்தான் பேடையீர், வந்தான் சேவலீர், வந்தார் மஞ்ஞையை - எனவும், வந்தது ஊரீர், வந்தது கிழத்தியீர், வந்தன பாணனை - எனவும் படர்க்கை இருதிணை ஒருமை பன்மை வினைமேல் இருதிணை முன்னிலை ஒருமை பன்மைப் பெயர் மயங்கிய மயக்கம். பேடையேம் வந்தான், சேவலேம் வந்தாள், கடுவனேன் வந்தார் - எனவும், ஊரேம் வந்தது, கிழத்தியேம் வந்தது, மல்லனேன் வந்தன - எனவும் இருதிணைத் தன்மை ஒருமை பன்மைப் பெயர்மேல் இருதிணைப் படர்க்கை ஒருமை பன்மை வினை மயங்கிய மயக்கம். பேடையீர் வந்தான், சேவலீர் வந்தாள், கடுவனை வந்தார் - எனவும், ஊரீர் வந்தது, கிழத்தியீர் வந்தது, மல்லனை வந்தான் - எனவும் இருதிணை முன்னிலை ஒருமை பன்மைப் பெயர் மேல் படர்க்கை இருதிணை ஒருமை பன்மை வினை மயங்கிய மயக்கம். ஆக, பால் இடத்திணை வழு இருபத்து நான்காம். (நன். 374 மயிலை.) பால் இடவழு - திணையின்றிப் பாலும் இடமும் மயங்கி வருவது. வந்தான் யாம், வந்தார் யான் - எனவும்; வந்தான் நீயிர், வந்தார் நீ - எனவும்; வந்தாய் யாம், வந்தீர் யான் - எனவும்; வந்தாய் அவர், வந்தீர் அவன் - எனவும்; வந்தேன் நீயிர், வந்தேம் நீ - எனவும்; வந்தேன் அவர், வந்தேம் அவன் - எனவும் மூவிட வினைமேல் மூவிடப்பெயரும் பாலுமான மயக்கம் 12. யான் வந்தார், யாம் வந்தான் - எனவும்; நீ வந்தார், நீயிர் வந்தான் எனவும்; யாம் வந்தாய், யான் வந்தீர் - எனவும்; அவர் வந்தாய், அவன் வந்தீர் - எனவும்; நீயிர் வந்தேன், நீ வந்தேம் - எனவும்; அவர் வந்தேன், அவன் வந்தேம் எனவும் மூவிடப் பெயர் மேலும் மூவிடவினையும் பாலுமான மயக்கம் 12. ஆக, பால் இடவழுக்கள் இருபத்து நான்காம். (நன். 374 மயிலை.) பால்இட வழுவமைதி - ஒருமைப்பாலின்கண் பன்மைச்சொல்லையும் பன்மைப் பாலின்கண் ஒருமைச்சொல்லையும் தழுவிக் கூறலும், ஓரிடத்தின்கண் பிற இடச்சொல்லைத் தழுவிக் கூறலும் உளவாம். இவை முறையே பால்வழுவமைதியும் இடவழு வமைதியும் ஆம். எ-டு : வெயில்எல்லாம் மறைத்தது மேகம், இரண்டு கண்ணும் சிவந்தது; ‘இருநோக்கு இவள் உண்கண் உள்ளது, (கு. 1091) அஃறிணைக்கண் ஒருமையில் பன்மையும், பன்மையில் ஒருமையும் வந்தன. ‘அகுதை தந்தை, அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்’ ‘புலையன் எறிந்த பூசல் தண்ணுமை, ஏவல் இளையர். தாய் வயிறு கரிப்ப’ உயர்திணைக்கண் ஒருமையில் பன்மையும் பன்மையில் ஒருமையும் வந்தன. ‘சாத்தன்தாய் இவை செய்வலோ’ - தன்மையின்கண் படர்க்கை வந்தது. ‘எம்பியை இங்குப் பெற்றேன் என் எனக்கு அரியது என்றான்’ (சீவக. 1760) - முன்னிலைக்கண் படர்க்கை வந்தது. நீயோ அவனோ யார் இது செய்தார்? யானோ அவனோ யார் இது செய்தார்? நீயோ யானோ யார் இது செய்தார்? நீயோ அவனோ யானோ யாரிது செய்தார்? விரவி ஓரிடத்தின்கண் பிறவிடம் வந்தது (நன். 380 சங்.) பால் இட வழுவமைப்பு - நீர் இருந்தன - பால் இருந்தன - எனவும், நாடெல்லாம் வாழ்ந்தது - ஊரெல்லாம் உவந்தது - படை வந்தது - சாத்து வந்தது - கண் சிவந்தது - முலை வீங்கிற்று - ‘இருநோக்கு இவள்உண்கண் உள்ளது’ (கு. 1091) - ‘உள்ளிய தெல்லாம் உடன் எய்தும்’ (கு. 309) எனவும், இவை அஃறிணை ஒருமையுடன் பன்மையும் பன்மையுடன் ஒருமையும் மயங்கின. ‘அகுதை தந்தை, அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்’ (அக. 96) ‘வழிபடுதெய்வம் நிற்புறங் காப்ப .......... பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே’, (செய். 110.), ‘கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ......... பதமிகப் பெறுகுவிர்’ (மலைபடு. 50), யான் எம்மூர் புகுவல்’ எனவும், ‘புலையன் எறிந்த பூசல் தண்ணுமை, ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப’ எனவும் உயர்திணை ஒருமையிற் பன்மையும் பன்மையின் ஒருமையும் மயங்கின. தனி இட மயக்கம் : ‘சாத்தன்தாய் இவை செய்வலோ,’ ‘கல்வி என்னும் வல்லாண் சிறாஅன் ஒல்வேன் அல்லன் அதுவாய் ஆகுதல்’ (புற. 346), ‘நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும், என்னே குறித்த நோக்கமொடு’ (அகநா. 110) என வருமிவை தன்மை படர்க்கை தழீஇயின. ‘திண்பொருள் எய்தலாகும் தெய்வரைச் செகுக்க லாகும்...... எம்பியை இங்குப் பெற்றேன் என் எனக்கு அரியது என்றான்’ (சீவக. 1760) என்பது முன்னிலை படர்க்கை தழீஇயிற்று. நீயோ அவனோ யாரிது செய்தார், யானோ அவனோ யாரிது செய்தார், அவனோ நீயோ யானோ யாரிது செய்தார் - என விரவியும் ஓரிடம் தழுவின. பிறவும் அன்ன. (நன். 379 மயிலை.) பால்திணைவழு - இடமயக்கம் இன்றிப் பாலும் திணையும் மயங்குவது. வந்தான் அவை, வந்தாள் அவை, வந்தார் அது எனவும் - வந்தது அவர், வந்தன அவன், வந்தன அவள் எனவும் - இருதிணை வினைப்பால்மேல் இருதிணைப் பெயர்ப்பால் மயங்கிய ஆறும்; அவன் வந்தன, அவள் வந்தன, அவர் வந்தது எனவும் - அது வந்தார், அவை வந்தான், அவை வந்தாள் எனவும் - இருதிணைப் பெயர்ப்பால்மேல் இருதிணை வினைப் பால் மயக்கம் ஆறும் ஆகப் பால்திணை வழு பன்னி ரண்டாம். (நன். 374 மயிலை.) பால்பகா அஃறிணைப்பெயர் - அஃறிணைப்பெயர்களுள் ஒருமை பன்மைப்பால் பகுத்தலை ஒழிந்து நின்ற பெயர்கள். இவை அத்திணை இருபாற்குமுரிய பொதுப்பெயராம். (இதனை ‘அஃறிணை இயற்பெயர்’ என்பர் தொல்காப்பியர்.) எ-டு : யானை வந்தது, வந்தன; குதிரை வந்தது, வந்தன; மரம் வளர்ந்தது, வளர்ந்தன; கண் சிவந்தது, சிவந்தன. (நன். 281 சங்.) ‘பால் பிரிந்து இசையா உயர்திணை மேன’ - காலம் உலகம் உயிர் உடம்பு தெய்வம் வினை பூதம் ஞாயிறு திங்கள் சொல் என்பன உயர்திணைச் சொல்லாயினும் உயர்திணைக்கண் பால்பிரிந்து சொல்லப்படா; அஃறிணைப் பாலாய் இசைக்கும். இவற்றுள், உலகம் உயிர் உடம்பு - நீங்கலான ஏனைய எல்லாம் தெய்வத்தையே உணர்த்தின ஆதலின் உயர்திணை யாம். உலகம் உலகத்தாரைக் குறிக்கும். உயிரும் உடம்பும் மக்கள் உயிர் உடம்புகளைக் குறித்தலான், உயிரும் உடம்பும் வேறின்றி அவராகவே உணரப்படுதலின் உயர்திணை ஆயின. காலம் - காலக்கடவுள்; வினை - இருவினைத் தெய்வம்; சொல் - நாமகள் ஆகிய தெய்வம்; பூதம் ஞாயிறு திங்கள் என்னும் இவையும் தெய்வங்களே. இவைபோல்வன மதி வெள்ளி வியாழம் - என்ற கோள்கள். இவையும் தெய்வங்களே. இவை கூறுகின்றபோதே தத்தம் உயர்திணைப்பாற்பொருளே தோற்றுதலின் ஆகுபெயர் அல்ல. இவையெல்லாம் தெய்வம் மானிடம் என்ற உயர்திணைப் பொருளை உணர்த்தின வேனும், தெய்வம் மானிடம் என்பன அஃறிணைச்சொல்லே ஆதலின் அவை அஃறிணைமுடிபு கொள்வன. (தொ. சொ. 58 நச். உரை) பால் மயக்குற்ற ஐயக்கிளவி - உயர்திணை துணிந்து பால் துணியப்படாத ஐயப்பொருள்; இதனை உயர்திணைப் பன்மைச்சொல்கொண்டு முடித்தல் வேண்டும். ஐயப்பொருளாவது சிறப்பியல்பான் தோன்றாது பொது- வியல்பான் தோன்றிய பொருள். எ-டு : ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டிகொல்லோ தோன்றுகின்றவர்? இனி, திணையோடு ஆண்மை பெண்மை துணிந்த, பன்மை ஒருமைப் பாலையமும் கொள்ளப்படும். எ-டு : ஒருத்திகொல்லோ பலர்கொல்லோ இக்குருக்கத்தி நீழல் வண்டல் அயர்ந்தார்? ஒரு பொருளுக்கு இருபாலுமாய் நிற்றலின்மையின் தான் ஒன்றாகிய பொருளைப் பன்மையாகக் கூறினும் அமைக என்று வழு அமைத்தவாறு. (தொ. சொ. 23 நச். உரை) பால் வரை கிளவி - படர்க்கையில் பலர்பாலை வரைந்து ஏனைய ஆண்பால் பெண்பால் ஒன்றன்பால் பலவின்பால் என்ற இந்நான்கு பால்களையே உணர்த்தும் செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று (‘பால் வரை கிளவி’ என்பது நச். இள. இவர் களது பாடம். சேனாவரையர் ‘பலர்வரை கிளவி’ என்று கொண்டார்.) (தொ. சொ. 175 நச். உரை) படர்க்கையிடத்தில் பலர்பாலை நீக்கி ஏனை நாற்பாற்கண்ணும் முடிக்கும் சொல்லாய் செய்யும் என்னும் முற்று வருமாறு : சாத்தன் வரும், சாத்தி வரும், குதிரை உண்ணும், குதிரைகள் உண்ணும். இச்செய்யுமென் முற்று தன்மை முன்னிலை இடங்களில் வாராது. உயர்திணை ஒருமைப்பால் தோன்றுதற்கேற்ற இவ்வினை முற்றிடத்து அது தோன்றலும் உரித்து. எ-டு : சாத்தன் யாழ் எழூஉம், சாத்தி பூத் தொடுக்கும். (நச். உரை) பால்வரை தெய்வம் - எல்லோருக்கும் இன்பதுன்பத்திற்குக் காரணமாகிய இரு வினையும் வகுப்பது. (தொ. சொ. 57 சேனா., 58 நச். உரை) ஆணும் பெண்ணும் அலியுமாகிய நிலையை வரைந்து நிற்கும் பரம்பொருள். (வரைந்து - நீக்கி) (தொ. சொ. 56 தெய். உரை) இருவினையையும் யாவர்க்கும் வரைந்தூட்டும் தெய்வம். (தொ. சொ. 58 கல். உரை) எல்லார்க்கும் இன்பதுன்பங்களை அவரவர் விதிவழியிற் பயப்பதொரு தெய்வம். (தொ. சொ. 58 ப. உரை) தெய்வம் என்பது பொருளான் உயர்திணையாயினும் சொல் லான் அஃறிணையாதலின் அஃறிணைவினையே கொள்ளும். (நச். உரை) இருவினையையும் யாவர்க்கும் வரைந்தூட்டும் தெய்வத்தின்- மேல் பால் என வரும் சொல். உயர்திணைப் பொருள்மேல் வரும் சொற்கள் சில அஃறிணைப்பாலான் சொல்லப்படும் என்று எண்ணியவற்றுள் இதுவும் ஒன்று. ‘இவர்க்குப் பாலாயிற்று’ எனவரும். (கல். உரை) பாவ கருத்தா - பண்புப்பெயரோ தொழிற்பெயரோ எழுவாயாதல். பாவம் என்பது பண்பு தொழில் இரண்டையும் குறிக்கும். ‘தேரான் தெளிவும்........ தரும்’ (கு. 510) என்ற குறட்பாவில் தெளிவு ஐயுறவு என்ற தொழிற்பெயர்கள் எழுவாயாயின. (பி.வி. 11) பாவ தத்திதன் - பண்புச்சொல் அடியாகத் தோன்றி விகுதி பெற்று வரும் பெயர்ப்பகுபதங்கள். பாவம் தன்மை என்ற இரு சொற்களும் பண்பு என்னும் பொருளுடையன. பலவகைப் பண்புகளையும் குறிக்கும் முதனிலைச்சொற்களும், ஆண் பெண் போன்ற பல்வேறு பண்பு காட்டும் பெயர்ச்சொற்களும், மைவிகுதியும், உகரவிகுதியும் பெற்றுப் பாவதத்திதாந்தச் சொற்கள் உண்டாகும். எ-டு : வெளுப்பு, சிவப்பு, கறுப்பு - என அவற்றுள் சில உகரம் பெற்று வந்தன. வள்ளல் - வள்ளன்மை, காதல் - காதன்மை, இவறல் - இவறன்மை, ஒன்று (ஒரு) - ஒருமை, இரண்டு (இரு) - இருமை, ஏழ் (எழு) - எழுமை, பகை - பகைமை, கேள் - கேண்மை, புகழ் - புகழ்மை, சமழ் - சமழ்மை - போன்றவை அவ்வப் பண்பு காட்டும் பெயர்கள் மைவிகுதி பெற்று வந்தன. வேந்து அரசு அமைச்சு - என்பன, வேந்தனது தன்மை - அரச னது தன்மை - அமைச்சனது தன்மை - எனப் பொருள்பட்ட உகர விகுதி பெற்ற தத்திதங்கள். இவை விகுதியால் பொருள் வேறுபடாமல் பகுதிப்பொருளையே உணர்த்தி, வேந்தன் அரசன் அமைச்சன் எனவே பொருள் தந்து பகுதிப்பொருள் விகுதியாவதும் உண்டு. இதனை வடமொழியில் ஸ்வார்த்தப் பிரத்தியயம் என்பர். இது வடமொழியில், பும்ஸ்த்வம் - ஆண்மை, ஸ்த்ரீத்வம் - பெண்மை, வஸ்துத்துவம் (பொருண்மை) என வரும். இவை தன்மை என்னும் பொருளன. இவ்வாறின்றி, மை விகுதி பெற்ற பண்புப்பெயரின் மை விகுதி தனிப்பொருள் சுட்டாது விகுதி ஏற்ற சொல்லின் பொருளையே உணர்த்துமிடத்துப் பகுதிப்பொருள் விகுதியாம். எ-டு : சொன்மை தெரிதல், பொருண்மை தெரிதல் - சொல் தெரிதல், பொருள் தெரிதல்; (தொ. சொ. 156 சேனா.) இளமைத் தன்மைக்கு (ந.அ. 186) இளந்தன்மைக்கு; இருமை வகை (கு. 23) - இருவகை; இம்மைப் பிறப்பு (கு. 1310) - இப்பிறப்பு. வடமொழியிலும், திரிலோகி (மூவுலகு) என்பதைத் தத்தித மாகத் ‘திரைலோக்கியம்’ என்றும், சதுர்வர்ணம் (நான்கு வருணங்கள்) என்பதைத் தத்திதமாகச் ‘சாதுர்வர்ணியம்’ என்றும் கூறுப. அருளுடைமை பொறையுடைமை - என்பன அருளையுடைய வனாயிருத்தல் பொறையையுடையவனாயிருத்தல் - எனப் பொருள்பட்டுப் பாவ தத்திதன்மேல் வந்த தத்திதனாக வந்தவையாம். சாத்தன் உடைமை - சாத்தனது உடைப்பொருள் - பாவ தத்திதன் வடமொழியில், கிருபாவிசிட்டத்துவம் (கிருபாவத்துவம்) அருளுடையோனாய் இருத்தல் என்பது உண்டு. இஃது உடையோனது தன்மையை உணர்த்தும். தேவதத்த விசிட்டத்துவம் - தேவதத்தனையுடையோனாய் இருத்தல்; இது தேவதத்தனை உடைமைப் பொருளாக்கும். தச்சனது தொழில் தச்சு எனில் பாவ தத்திதம். தச்சு வந்தது (தச்சன் வந்தான், தச்சர்கள் வந்தனர்) என்னும்போது சுவார்த்த (ஸ்வார்த்த)ப் பிரத்தியயம் என்னும் பகுதிப்பொருள்விகுதி. (பி.வி. 34) பாவ தத்திதன்மேல் வந்த தத்திதன் - பாவதத்திதன் ஆகும் சொல்லுக்கு மேலும் ஒரு தத்திதப் பிரத்தியயம் (விகுதி) சேர்தல். அருளுடைமை - அருளுடையனா யிருத்தல். உடைமை என்ற பாவ தத்திதன்மேலே இருத்தல் என்னும் தொழிற்பெயரைக் குறித்தலின் இது பாவதத்திதன் மேல் வந்த தத்திதன் ஆகும். பாவ தத்திதமும் இது. பாவ பதம் - பண்புச்சொல், தொழிற்சொல். (பி. வி. 34, 7) பாவப் பிரயோகம் - பாவம் என்பது செயல் என்னும் பொருட்டு. கருத்தாவையோ கருமத்தையோ கருதாது செயலை மாத்திரமே கருதி, (கரு மணிப் பிரயோகம் போன்றே) யக் (‘படு’ துணைவினை) சேர்த்து வழங்கப்படும் முற்று. கருமணிப் பிரயோகம் செயப்படு பொருள் குன்றாத சகன்மக தாதுக்களுக்கே உண்டு. பாவப் பிரயோகம் அகன்மக தாதுக்களுடன் வரும்; சிறுபான்மை சககன்மங்களில் கருமத்தைக் கருதும் குறிப்பும் நோக்கும் இல்லாமலும் வரும். சாத்தன் வரும் என்பதனைச் சாத்தனால் வரப்படும் எனவும், கொடுக்கப்படட்டும் (யாரால், எது என்ற குறிப்பின்றிக் ‘கொடை செய்யப்படல் தக்கது’ என்ற பொருளில் வருவது) எனவும் வரும். இதுவும் தமிழில் பெருவழக்கு இல்லை. வடமொழியில் வருக என்பதை வரப்படட்டும் ‘ஆகம் யதாம்’ என்றல் பெருவழக்கு. தமிழில் பாவப் பிரயோகம் வருமாறு : ‘இளையர் இனமுறையர் ........... ஒழுகப்படும்’ (கு. 698) : ‘ஒளி யோடு ஒழுகப்படும்’ - ஒளியோடு பொருந்த ஒழுகுதல் செய்யப் படும் - எனப் பொருள் கொண்டமை காண்க. ‘ஒழுகப்படும்’ என்பதினின்று முதனிலைப் பிரித்துத் தொழிற்பெயராக்கிச் செயப்படுபொருள் கொள்ளப்பட்டது. ‘வஞ்சரை அஞ்சப் படும்’ (கு. 824) : அஞ்சுதல் செய்யப்படும் என்று கொண்டதும் காண்க. ‘கொள்ளப் படாது மறப்பது அறிவிலென் கூற்றுக்களே’ (கோவை. 87) : அறிவில்லாத யான் கூறிய சொற்களை உள்ளத்துக் கொள்ளத்தகாது - எனப் பொருள்செய்தார் பேராசிரியர். அவ்விடத்து அவர் கூறும் சொல்லாய்வு : "‘கொள்ளப்படாது’ என்பது வினைமுதல்மேலும் செயப்படு பொருள்மேலும் அன்றி, வினைமேல் நின்ற முற்றுச் சொல், ‘வஞ்சரை அஞ்சப்படும்’ என்பது போல". ஈண்டுப் பேரா சிரியர் குறித்த வினைமேல் நின்ற முற்றுச்சொல்லாவது ‘பாவப் பிரயோகம்’ என்று அறிதல் தகும். (பி. வி. 36) பாவபதம் ஆகிய தொழிற்பெயர் - புடைபரந்த - புடைபெயர்ச்சி காட்டி - விகுதி ஏற்றும் எழுத்துத் திரிந்தும் வந்த தொழிற்பெயர் வருமாறு : பறவை - பறப்பது - பறக்கும் உயிர் - கருத்தாப் பொருள் உடுக்கை - உடுக்கப்படுவது - கருமம் (செயப்படுபொருள்) துடைப்பம் - துடைப்ப (தூய்மை செய்ய)ப் பயன்படும் கருவி - கரணம் கிடக்கை - கிடக்குமிடம் - அதிகரணம் என்னும் இடப்பொருள் ‘கெடுவாக வையாது’ கு. 117 : கெடு - கெடுதல்; ‘அறிகொன்று’ கு. 638 : அறி - அறிவு. இவை பொருள் விரிந்து சொல் விரியாத முதனிலைத் தொழிற் பெயர்கள் யார் என்ற பிரச்சின பதமாகிய வினைச்சொல்லும், உண்டு இல்லை வேறு - என்ற குறிப்பு வினைச்சொற்களும், திணை பால் எண்இடங்கட்குப் பொதுவாய் வருதலால் ‘அவ்வியயம்’ எனப்பட்டன. வடமொழியில் கிம் (யார்) அஸ்தி (உண்டு) நாஸ்தி (இல்லை) பிருதக்கு (வேறு) - என்பன அவ்வியயமாம். இவை முறையே பிரச்சினம் (வினா), சற்பாவம் (பொருண்மை), அபாவம் (இன்மை), விபாவம் (பிரிநிலை) என்று வழங்கப்படும். ‘ஓஒ இனிதே............... தாஅம் இதற்பட் டது’ கு. 1176 - ஓசையால் நின்று குறிப்பால் பொருளுணர்த்தும் இடைச்சொல்; வடமொழி யில் இது ‘சூசகாவ்வியயம்’ எனப்படும். ‘உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய்...... வாழிய நெஞ்சு’ கு. 1200 - வாழிய என்பது சொல்லாகவே நின்று வெளிப்படையாய்ப் பொருளுணர்த்தியது. இது சொல்லாகவே நின்ற இடைச் சொல்லாம். வடநூலார் ‘வாசகாவ்வியயம்’ என்ப. (பி.வி. 42) பாவமான கிருதந்தம் - தொழிற்பெயரான வினையாலணையும் பெயர். ‘உறங்குவது போலும்...... பிறப்பு’ (கு. 339) என்ற குறட்பாவில் உறங்குவது விழிப்பது என்பன தொழிற்பெயரான வினையாலணையும் பெயர்கள். ஆயினும் அவை உறங்குதல் விழித்தல் - எனத் தொழிற்பெயர்ப் பொருளிலேயே வந்தன. (பி. வி. 37) பிண்டப்பெயர் - பிண்டப்பெயராவது பல பொருள் தொகுதியை உணர்த்தும் பெயர். முதல்சினைப்பெயர்களில் பலவகைச் சினையான் இயன்ற முதலுக்குத் தனிப்பட்ட பெயர் உண்டு. பலவகைப் பொருளின் தொகுதியாகிய பிண்டத்துக்குத் தனிப்பட்ட பெயர் இல்லை. இதுவே இவற்றிடை வேற்றுமை. பிண்டப்பெயரும் முதல்சினைப்பெயர் இயல்பிலே, தொகுதியை ‘ஐ’ உறின் அதன் சினையைக் ‘கண்’ உற்றும், தொகுதியை ‘அது’ உறின் அதன் சினையை ‘ஐ’ உற்றும், சிறுபான்மை இரண் டனையும் ‘ஐ’ உற்றும் அமையும். எ-டு : குப்பையைத் தலைக்கண் சிதறினான், குப்பையது தலையைச் சிதறினான், குப்பையைத் தலையைச் சிதறினான். (தொ. சொ. 91 நச். உரை) திரட்சியான் ஆகிய பெயர். திரட்சியும் திரண்ட பொருளும் பொருளான் வேறுபடாவாம். எ-டு : குப்பையைத் தலைக்கண் சிதறினான், குப்பையைத் தலையைச் சிதறினான்; படையது குழாத்தைக் கெடுத்தான்; நெல்லது குப்பையைச் சிதறினான் -குப்பை: பிண்டம்; தலை : அதன் (பகுதியாகிய) சினை. குழாம் : பிண்டம்; படை, நெல் : பிண்டித்த பொருள். (தொ. சொ. 87 தெய். உரை) பிண்டப் பொருள் முடிவு - முதற்பொருள்கள் இவை, சினைப்பொருள்கள் இவை என இரண்டாக வேறுள்ளன இலவாம். ஒருபொருளையே இரண்டாகப் பகுத்துக் கூறுவார் குறிப்பின் மாத்திரையவே ஆம். பிண்டப்பொருளும் அத்தன்மைத்தாம். எ-டு : நெல்லைப் பொலியின்கண் வாரினான், குவியலைத் தலையின்கண் சிதறினான், நெல்லினது பொலியை வாரினான், குவியலது தலையைச் சிதறினான் பிண்டித்த பொருள் நெல்; பிண்டப் பொருள் பொலிக்குப்பை. இவை முதலும் சினையும் போல்வனவாய்த் தம்மில் வேறானவை அல்ல என்றவாறு, முதல்சினைப் பொருள்களில், பலசினைகளால் ஆகிய முதல் என்பது உண்டு. பிண்டித்த பொருள் பிண்டப்பொருள்களில் பலபொருள் தொகுதியாயதற்குத் தனிப்பெயரில்லை. இது தம்முள் வேற்றுமை. நெல்லைப் பொலியை வாரினான் என இரண்டன்பாலும் ஐயுருபு வாராது, நெல்லும் பொலியும் வேறு வேறில ஆதலின். (நன். 316 சங்.) பிண்டப்பொருள் முதல்சினை இயல்பின் திரியாமை - பிண்டம் என்பது பலபொருள் தொகுதியை உணர்த்தும் சொல். கைகால் முதலிய சினைகளையுடையது உடம்பு என முதற்பொருளுக்குத் தனிப்பெயர் வழங்கப்படும். ஆனால் பிண்டமாய்ப் பலபொருள் தொக்கு அவற்றான் இயன்ற தனிப் பெயருடைய முதற்பொருள் இன்மையின், பிண்டப் பெயர் முதல் சினையுள் அடங்காது. பிண்டப் பெயரும், முதல்சினைப் பெயர்கள் முதல்முன் ஐ வரின் சினைமுன் கண்ணும், முதல்முன் அது வரின் சினைமுன் ஐயும், சிறு பான்மை இரண்டன்கண்ணும் ஐயும் பெறுமாறு போல, உருபு பெறும். எ-டு : குப்பையைத் தலைக்கண் சிதறினான், குப்பையது தலையைச் சிதறினான், குப்பையைத் தலையைச் சிதறினான் - எனவரும். (தொ. சொ. 91 நச். உரை) பிரகிருதி பாவம் - புணர்ச்சியில் விகாரம் பெறவேண்டிய இடத்துப் பெறாது வருதலைப் பிரகிருதிபாவம் என்பர் வடநூலார். இயல்பு புணர்ச்சியாக நிற்பது அது. ‘பிரம்மர்ருஷி’ என விகாரப் படாமல், இயல்பாக வந்ததை உதாரணம் காட்டுவர். ‘ஹரீஏதௌ’ என்பது என்றும் விகாரப்படாமல் இயல் பாகவே நிற்பது. அதுவும் உதாரணமாம். தமிழில் ‘காவிரி புரக்கும் நாடுகிழ வோனே’, ‘காடகம் இறந் தார்க்கே ஓடுமென் மனனேகாண்’ என, நாட்டுக்கிழவோன் - காட்டகம் - என்று விகாரப்படாமல் நிற்பன எடுத்துக் காட்டாம். (பி. வி. 26) பிரத்தியாகாரம் - ‘அ இ உண்’ என்பது முதலான பதினான்கு மாகேசுவர சூத்திரங்களின் ஆதி எழுத்தையும் அந்த (இறுதி) எழுத்தை யும் இணைத்து ‘அச்’ என்றும் ‘ஹல்’ என்றும் முறையே உயிரெழுத்துக்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் பெயரிடு முறை. ‘அச்சு’ க் காண்க. பிரத்தியேக பந்தாந்நுவயம் - செய்யுளில் ஒரு சொல்லைத் தனித்தனியே ஒன்றுக்கு மேற் பட்ட இடத்தில் கூட்டிப் பொருள்கொள்ளுதல்; வாக்கிய பேதம் செய்தல். இதனைப் பிரயோகவிவேக நூலார் தேர்வடம் (இரண்டு) இழுப்பது போல எனக் கூறுவார். எ-டு : ‘கடுமொழியும்...... அரம்’ கு. 567 இதனுள், கடுமொழியும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம், கையிகந்த தண்டமும் வேந்தன் அடு முரண் தேய்க்கும் அரம் - எனத் தனித்தனியே கூட்டிப் பொருள் செய்வர். இதுவும் பொருள்கோள் வகையே. பி.வி. இதனையும் ‘தூராந் நுவய’த்துள் அடக்கும். (இ. கொ. இதனைத் தீவகவகையில் இணைக்கும்.) (பி.வி. 50) பிரயோக விவேகம் - சொற்களைப் பயன்படுத்துதல் பற்றிய அறிவைத் தரும் நூல் - எனக் காரணப்பெயராக நூற்பெயர் அமைந்தது. இது 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய சொல்லிலக்கண நூல். ஆசிரியர் சுப்பிரமணிய தீக்கிதர்; உரையாசிரியரும் அவரே, முன்னோராகிய தொல்காப்பியனாரும் நன்னூலாசிரிய ராகிய பவணந்தி முனிவரும் சிறுபான்மையாக எழுத்து சொல் பற்றிய சிற்சில செய்திகளைத் தற்சமம் தற்பவமாகக் கூறிய வடமொழி இலக்கணங்களைப் பெரும்பான்மையாகத் தாம் மேற் கொள்ளுவதாகக் கூறுகிறார் இவ்வாசிரியர். அவர்கள் சிறுபான்மையாகக் கூறியதைத் தாம் பெரும் பான்மையாகக் கூறியதற்கு இவர் கூறும் காரணம், வட மொழிக்கும் தமிழ்மொழிக்கும் இலக்கணம் ஒன்று என்பதை அறியாமல், குறியீடுகள் மாறுபடுவதாலும் மொழி வேறான மையாலும் வடமொழி தமிழ்மொழி இலக்கணம் வெவ்வேறு என்று கூறுபவர்க்கு அற்றன்று என்று அறிவுறுத்தலேயாம். (பி. வி. 2) இதன்கண் உள்ள காரிகை 51. பிரவிருத்தி நிமித்தம் - பொருளை உணர்த்துவதில் தன் ஆற்றலால் சொல் ஈடுபடு வதற்கான - செயற்படுவதற்கான - காரணம். இதனைத் தொல் காப்பியம் ‘மொழிப்பொருட் காரணம்’ (சொ. 394 சேனா.) என்னும். வடமொழியில் இது வியுற்பத்தி (வ்யுத்பத்தி) எனவும் கூறப்படும். ‘ஏகநாளா..... துவந்துவம்’ காண்க. (பி. வி. 18) பிராகபாவம் - முன் உள்ளதன் அபாவம் (இன்மை). ‘ஆறு உருபும் வெளிப் படல் இல்லது’ (நன். 363) என்றல் போன்ற இடங்களில் உள்ள ‘இலது’ என்பதனை ‘இருந்து கெட்டது’ எனப் பொருள் செய்யாமல் ‘இருக்க வேண்டியது இல்லாதிருப்பது’ என்று பொருள் செய்க. பிரத்துவஞ்சாபாவமாக (அழிவு பாட்ட பாவமாக)க் கொள்ளாது பிராகபாவமாகக் கொள்ள வேண் டும் என்பது பிரயோகவிவேக நூலார் கருத்து. (பி. வி. 19) பிராகிருதமொழிச் சொற்கள் தற்பவமாகத் திரிந்தவை - வடமொழி பிராகிருதம் தமிழ் ஆக்ஞை ஆணை ஆக்கினை வ்ருத்தம் விருத்தம் வட்டம் ஆக்ஞாபயதி ஆணவேதி ஆணை(யிடுகிறான்) ந்ருத்தம் நிருத்தம் நட்டம் விக்ஞானம் விண்ணாணம் விஞ்ஞானம் விக்ஞாபதி விண்ணவேதி விண்ணப்பம் (செய்கிறான்) விக்ஞாபனம் விண்ணாவநம் விண்ணப்பம் (பி. வி. 2) பிராதிபதிகம் - உருபு ஏலாத பெயர்ப்பகாப்பதம்; பெயர் முதல்நிலை (சூ. வி). ‘அகண்டபதம்’ காண்க. பொருளுடையதும், வினைமுதனிலை ஆகாததும், விகுதி இடைநிலை உருபுகளாகிய பிரத்தியயம் ஆகாததும், பிரத்தியயம் கொண்டது ஆகாததும் ஆகிய பெயர்ப் பகாப்பதமே பிராதிபதிகம் ஆம். (பி. வி. 7) பிராதிபதிகமும் முதல்வேற்றுமையுருபும் - வடமொழியில் பிராதிபதிகம் என்பது வேற்றுமையுருபுகளை ஏற்கும் அடிப்படைச் சொல்வடிவத்தின் பெயர். இதன் இலக்கணம்: பொருளுடையதும், வினைமுதல் ஆகாததும், விகுதி இடைநிலை உருபுகளாகிய பிராத்தியயங்கள் ஆகாததும், அவற்றால் முடிந்துள்ளது அல்லாததும் ஆகிய பெயர்ப் பகாபதம் என்பது. அகண்டபதம் (பிரிக்கப்படாத சொல்) என்பதும் அது; வேர்ப் பெயர்ச்சொல், பெயர் முதனிலை என்றும் கொள்க. வடமொழியில் பிராதிபதிகங்கள் பால்காட்டி ஒருமை பன்மையாம் விகுதி சேர்ந்து எழுவாய் ஆகும். வடமொழியில், சொல்லின் குணத்தைக் கொண்டு கூறும் குறி - பால் - ‘சாத்திரலிங்கம்’ எனப்படும். வேற்றுமையுருபு, பிரதமாவிபத்தி என்னும் எழுவாய்முதல் சத்தமி என்னும் ஏழாம்வேற்றுமை வரை ஒருமை இருமை பன்மை (ஏக துவி பகு வசனங்கள்) என 3 ஒ 7 = 21 வகைப்படும். இவை சகண்ட பதம் (பகுபதம்) எனப்படும். தமிழில் ஒருமை பன்மை என இரண்டே எண் உள. இரண்டு இருவர் - எனக் காட்டும் இருமை (துவிவசனம்) தமிழில் இல்லை. சில பல என்று பன்மையில் சுருக்கமும் பெருக்கமும் இருப்பது போல, இருமை கூறப்பட்டது என்பர் நச்சினார்க்கினியர். பிரதமாவிபத்தி தமிழில் எழுவாய் - கருத்தா - முதல் வேற்றுமை - எனப்படும். ‘இறைகடியன்’ (கு. 564) என்பதன் கண் இறைவன் என இருத்தற்குரிய முதல்வேற்றுமை ஆண்பால் ஒருமைக் குரிய விகுதி புணர்ந்து கெட்டது என்பர். இங்ஙனம் கூறாவிடின் இறை என்பது பிராதிபதிகம் ஆகுமேயன்றி எழுவாய் ஆகாது என்பது கருத்து. தொல்காப்பியனார் நும் என்பதை இயற்கைச்சொல்லாக (பிராதிபதிகமாக) நிறுத்தி, அதனை நீயிர் என எழுவாய் வேற்றுமை ஆக்கினாற்போல, மற்ற இடப்பெயர்களில் செய் திலர். நீயிர் என்பதனையே பெயர்ப்பகாப்பதமாக (பிராதி பதிகமாக) நூற்பாக்களில் எடுத்தாள்கிறார். இங்ஙனம் நும் என்ற சொல்லையே அடிப்படைச் சொல்லாகக் கொண்டு, நீயிர் என்பதை எழுவாய்வேற்றுமை ஆக்கியது, வடமொழி மரபினைத் தமிழ்நூலார் அறிதற்பொருட்டே என்பர் பிரயோக விவேக நூலார். எழுவாய்வேற்றுமையான திரிபில் பெயரே, ஈற்றில் எழுத்து மிகுந்தும் திரிந்தும் கெட்டும் ஈற்றயல் விகாரப்பட்டும் எட்டாம் வேற்றுமையாம் விளி ஆயினாற்போல, நும் என்னும் நிலைமொழியின் விகாரமாகிய நீயிர் என்பது முதல் வேற்றுமை யாயிற்று. சமத்தபதம் என்னும் தொகைச்சொற்களும், தத்திதன் என்ற விகுதி ஏற்ற பெயர்களும், கிருதந்தம் என்னும் வினையால ணையும் பெயர்களும், பாவபதம் என்னும் தொழிற்பெயர் களும், பண்புப்பெயர்களும் பிராதிபதிகம் போலவே நின்று (பகுபதம் போல நின்று) வேற்றுமையுருபுகளை ஏற்கும். தமிழில் திரிபில் பெயரே வேற்றுமையுருபுகளை ஏற்கும்; வடமொழியில் பிராதிபதிகமே வேற்றுமை ஏற்கும். வடமொழியில் முதல்வேற்றுமை முதல் ஏழாம்வேற்றுமை வரையானவற்றிற்குரிய ஒருமை இருமை பன்மை யுருபுகள் (7ஒ3) இருபத்தொன்றும் பிரத்தியாகார முறையில் ‘சுப்’ எனப்படும். (சு முதல் சுப் வரை.) (பி. வி. 7) பிரிநிலை எச்சம் - ஏகாரமும் ஓகாரமும் ஏற்ற சொற்கள் பிரிநிலை எச்சமாக வந்து பிரிக்கப்பட்ட பொருள்மேல் வரும் சொல்லையே தமக்கு முடிபாகப் பெறும். எ-டு : அவனே கொண்டான் என்றவழி, ஏனையவருள் அவனைப் பிரித்தலின், அவனே என்ற சொல் பிரிநிலை எச்சம். அது ‘கொண்டான்’ எனத் தனக் குரிய வினையைக் கொண்டு முடிந்தது. ‘(நமருள்) யானோ தேறேன்’ (குறுந். 21) என்றவழி, ஏனை யாரினின்று பிரிக்கப்பட்ட யானோ என்ற சொல் தேறேன் என்ற தனக்குரிய வினையைக் கொண்டு முடிந்தது. ‘அவனே கொண்டான்’ என்பதனுள் அவனே என்பது ‘பிறர் கொண்டிலர்’ என்ற பிரிக்கப்பட்ட பொருளை உணர்த்தும் கொல்லான் முடிந்தது என்பர் சேனா. (தொ. சொ. 431 உரை) அவன் என்பது கொண்டான் என்பதனைக் கொண்டு முடிய, ஏகாரம் ‘பிறர் கொண்டிலர்’ என்பதனோடு முடிந்தது என்பது பொருத்தமன்று. அவனே என்பது கொண்டான் என்னும் வினையைக் கொண்டு முடிந்தால்தான், ‘பிறர் கொண்டிலர்’ என்னும் கருத்து வெளிப்படும். ஆதலின் அவனே என்பது கொண்டான் என்ற வினையைக் கொண்டு முடியவே, ‘பிறர் கொண்டிலர்’ என்னும் பொருண்மை முடிபு அத்தொடரான் தோன்றும். ‘அவனே கொண்டான்’ என்ற தொடரிலுள்ள பிரிநிலை எச்சம் அத்தொடரில் இல்லாத வேற்றுச்சொல்லைக் கொண்டு முடிந்தது என்றல் பொருந்தாது என்பர் நச்சினார்க்கினியர். (தொ. சொ. 431 நச். உரை) (ஓகாரப் பிரிநிலை எச்சத்திற்கும் இவ்வாறே கொள்க.) ‘இவன் கல்வியுடையான்’ என்றவழி, சொல்லுவான் ‘இவ் வவையத்தாருள்’ என்று கருதினானாயின் ‘இவ்வவையத் தாருள்’ என்பது எஞ்சி நின்று பிரிநிலை எச்சமாயிற்று. ‘கண் அழகிது’ என்றவழி ‘மற்றைய உறுப்புக்களின்’ என்பது எஞ்சி நின்று பிரிநிலை எச்சமாயிற்று. (தொ. சொ. 424 தெய். உரை) பிரிநிலை எச்ச முடிபு - பத்துவகை எச்சங்களுள் பிரிநிலை எச்சமும் ஒன்று. அஃது ஏகாரப் பிரிநிலையும் ஓகாரப் பிரிநிலையும் என இருவகைத்து. அவ் வெச்சம் பிரிக்கப்பட்ட பொருளைக் கொண்டு முடியும். எ-டு : அவனே கொண்டான், அவனோ கொண்டான். அவனே அவனோ - என்புழி, பிரிநிலை ஏகாரமும் ஓகாரமும் பிரிக்கப்பட்டானையே கொண்டு முடிகின்றன. (தொ. சொ. 426 இள. உரை) தானே கொண்டான், தானோ கொண்டான் - என்னும் பிரிநிலை எச்சங்கள் ‘பிறர் கொண்டிலர்’ எனப் பிரிக்கப்பட்ட பொருளை உணர்த்தும் சொல்லான் முடிந்தவாறு. தான் எனப்பட்டானன்றே பிரிக்கப்பட்டான்? ‘பிறர் கொண்டிலர்’ என்பது அவனை யுணர்த்தும் சொற்கள் அல்லவே? அவை பிரிநிலை கொண்டு முடியவில்லைஎனின், தான் பிறரிட மிருந்து பிரிக்கப்பட்டவழி பிறரும் தன்னிடமிருந்து பிரிக்கப் படுதலின், அவை பிரிநிலை கொண்டனவேயாம் என்பர் சேனா. இளம்பூரணர் கூறுவதை நோக்க, ‘அவனே கொண்டான்’ என்ற தொடரில், அவன் : எழுவாய்; கொண்டான் : பயனிலை; ஏகாரம் பிரிநிலை உணர்த்திற்று. ஆண்டு எச்சமோ எச்சத்தை முடிக்கும் சொல்லோ இல்லை ஆதலின், ‘பிறர் கொண்டிலர்’ என்ற தொடர் எச்சமே என்பர் சேனாவரையர். (தொ. சொ. 431. உரை) அவனே கொண்டான் என்ற தொடரில், அவன் என்பது கொண்டான் என்ற வினையைக் கொண்டு முடியவும், ஏகாரம் ‘பிறர் கொண்டிலர்’ என்பதனொடு முடிந்தது என்பது பொருந்தாது. கொண்டான் என்ற சொல் வந்து அவ்வெச் சங்களை முடித்தாலல்லது ‘பிறர் கொண்டிலர்’ என்னும் பொருண்மை முடிபு தோன்றாது என்பதே பொருத்த முடைத்து. (தொ. சொ. நச். உரை) பிரிநிலையாகிய எச்சம் அதன்கண் நின்றும் பிரிக்கப்பட்ட பொருளொடு தொடர்ந்து முடிவு பெறும். ‘இவன் கல்வியுடை யான்’ என்றவழி, சொல்லுவான் ‘இவ் அவையத்தாருள்’ எனக் கருதினானாயின், ‘இவ்வவையத்தாருள்’ என்பது எஞ்சிநின்று பிரிநிலையெச்சம் ஆயிற்று. ‘இவட்குக் கண் அழகிது’ என்றவழி, ‘மற்றுள்ள உறுப்புக்களின்’ என்பது எஞ்சி நின்றது. இவை பிரிக்கப்பட்ட பொருளொடு தொடர்புபட்டு முற்றுப் பெற்றன எனக் கொள்க. (தொ. சொ. 424 தெய் உரை) ‘அவனே கொண்டான்’ என்ற தொடரில், பிரிநிலை யேகாரம் ‘அவன்’ என்பதனைக் கொண்டு முடிகிறது என்று இளம் பூரணரும், ‘பிறர் கொண்டிலர்’ என்பதனைக் கொண்டு முடி கிறது என்று சேனாவரையரும், ‘கொண்டான்’ என்பதைக் கொண்டு முடிகிறது என்று நச்சினார்க்கினியரும் கூறுவர். பிரிப்பப் பிரியாக் கிளைப்பெயர்கள் - கிளைப்பெயர்களாவன உறவுமுறையைக் குறிக்கும் ஆண் பெண் பலர்பாற் பெயர்களாகிய தமன் தமள் தமர், நமன், நமள் நமர், நுமன் நுமள் நுமர், எமன் எமள் எமர், தம்மான் தம்மாள் தம்மார், நம்மான் நம்மாள் நம்மார், நும்மான் நும்மாள் நும்மார், எம்மான் எம்மாள் எம்மார் - என்பன. வடமொழியில் என்னைச் சேர்ந்தவர் என்பதற்கு அஸ்மதீயர் என்பதும், எங்களைச் சேர்ந்தவர் என்பதற்கு மதீயர் என்பதும், உன்னைச் சேர்ந்தவர் என்பதற்கு யுஷ்மதீயர் என்பதும், உங்களைச் சேர்ந்தவர் என்பதற்கு துவதீயர் என்பதும், பெயராக அமை கின்றன. ஆனால் தமிழில், என்னைச் சேர்ந்தவர் - எங்களைச் சேர்ந்தவர் - இரண்டற்கும் எமர் நமர் என்பனவே பெயர்; உன்னைச் சேர்ந்தவர் - உங்களைச் சேர்ந்தவர் இரண்டற்கும் நுமர் என்பதே பெயர்; தன்னைச் சேர்ந்தவர் தங்களைச் சேர்ந்தவர் இரண்டற்கும் தமர் என்பதே பெயர். சிவன்தமர் - மணிவண்ணன் தமர் - என்பன படர்க்கை ஒருமைப் பெயர் அடிப்படையாக அமைந்தன. ‘கல்லாமா வன்னார் தமர்’ (கு. 814) என்பது படர்க்கைப் பன்மைப்பெயர் அடிப்படையாக அமைந்தது. (பி.வி. 32 உரை) ஒருமைக்குத் தனர் - நனர் - நினர் - எனர் - என்றாற் போலத் தனிச் சொற்கள் இல்லை. பகுதிகள் ஒருமை பன்மை இரண்டற்கும் பொதுவாக உள்ளன. ஆதலின் இவற்றை ஒருமைப்பகுதி கொண்டோ, பன்மைப்பகுதி கொண்டோ பிரித்தல் பொருந்தாமையின், இவை பகாச்சொல் போலவே கொள்ளப்படுகின்றன. (தொ. சொ. 410 சேனா. உரை) தமன் முதலாயின பன்மைப் பகுதியுடைய சொற்களே. அவை தம் நம் நும் எம் - என்று பொருளுணர்த்தவும், பின் வருகின்ற அன் அள் அர் - என்பன பொருளுணர்த்தாது இடைச் சொல்லாகவே நிற்றலின் இவை ‘பிரிப்பப் பிரியா’ எனப் பட்டன. ‘வந்தது கண்டு வாராதது முடித்தல்’ என்பதனான், காரணப்பெயராகி வரும் தொழிற்பெயரும் உடைப்பெயரும் பண்புப்பெயர் முதலாயினவும் பிரிப்பப் பிரியா என்று கொள்க. (தொ. சொ. 406 தெய். உரை) பிரிப்பப் பிரியாப் பெயர்கள் - த ந நு எ - என்னும் அவை முதலாகிய கிளைப்பெயர்கள் பிரிப்பப் பிரியாதனவாம். அவைதாம், தான் தாம் நாம் யாம் யான் நீ நீர் நீஇர் - என மூன்றிடத்துப் பெயர்களும், ஆறாம்வேற்றுமைக் கிழமைப்பொருள் குறித்து முதனிலை குறுகியும் திரிந்தும் வந்து கிழமைப்பொருள் உணர்த்தும் சொல்லின் ஈற்றெழுத்தோடு ஒட்டி நின்று, தமன் தமள் தமர் தமது தம - எனப் படர்க்கையிலும் நுமன் நுமள் நுமர் நுமது நும - என முன்னிலையிலும் எமன் எமள் எமர் எமது எம - எனத் தன்மையிலும் வரும். கிளைநுதற் பெயராவன இம்மூன்றிடத்தும் ஒட்டுப்பட்ட பெயர்கள் ஆறாம்வேற்றுமை முறைமையைக் குறித்து மேற் சொல்லியவாறு வருவன. தந்தை நுந்தை எந்தை - தாய் ஞாய் யாய் - தம்முன் நும்முன் எம்முன் - தம்பி நும்பி எம்பி - தவ்வை நுவ்வை எவ்வை - தங்கை நுங்கை எங்கை - எனவும், முதல்வனையும் ஈன்றாளை யும் முற்பிறந்தானையும் பிற்பிறந்தானையும் முற்பிறந்தாளை யும் பிற்பிறந்தாளையும் உணர்த்தும் பன்மைச் சொற்கள் எல்லாம் பொருள்முகத்தால் தம்மையும் பிறரையும் உணர்த்தினும் ஏனைய போலப் பிரிக்கப்படா; ஒட்டி நின்றே பொருள்படும். (தொ. சொ. 406 தெய். உரை) பிரிப்பப் பிரியாப் பெயர்கள் ஏனைய சில - கிளைப்பெயரே யன்றி, காரணப் பெயராகி வரும் தொழிற் பெயரும், உடைப்பெயரும், பண்புப் பெயர் முதலாயினவும் பிரிப்பப் பிரியா. பிறன் - பிறள் - பிறர் - என்பன ஒட்டுப் பெயர் அல்ல. (தச்சன் - பொன்னன் - நல்லன் - போல்வன காண்க.) (தொ. சொ. 406 தெய். உரை) பிரிபு வேறுபடூஉம் செய்தி - உயர்திணைக்கண் வரின் உயர்திணைக்கே உரிய எனவும், அஃறிணைக்கண் வரின் அஃறிணைக்கே உரிய எனவும் பிரித்துச் செய்யப்படும் விரவுவினையின் இயல்பு. (தொ. சொ. 218 இள. உரை) பிரேரக சம்பிரதானம் - இரப்புக் கோளி; கேட்டே ஏற்றல் என்ற பொருளில் வரும் நான்காம் வேற்றுமை. எ-டு : வறியார்க்கு ஈந்தான். (பி. வி. 13) பிரேரனை - ஏவல்; வியங்கோட் பொருள் வகை. ‘பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்’ - உம்மையில்லாத சொல்லைக் கொண்டுள்ள தொடரும், உம்மையைக் கொண்டுள்ள தொடரும் இணைந்து வரு மிடத்து, உம்மையில்லாத தொடரை முடிக்கப்படும் தொட ராகவும், உம்மையையுடைய தொடரை முடிக்கும் தொடராக வும் கொள்ளல் வேண்டும். எ-டு : சாத்தன் வந்தான்; கொற்றனும் வரும். (தொ. சொ. 284 சேனா. உரை) பிற உவமை உருபுகள் - ‘பிற’ என்றமையால், போல் - புரை - என்னும் தொடக்கத்து வினையடியால் பிறத்தற்குரிய மற்ற வினையெச்ச விகற்பங் களும் பெயரெச்ச விகற்பங்களும் (போல - போலும், போன்ற புரையும் - புரைய - முதலாயின), பொருவ ஏற்ப அனைய இகல எதிர சிவண மலைய துணை தூக்கு கேழ் அற்று செத்து - என்னும் தொடக்கத்தனவும் கொள்க.(நன். 367 சங்., 408 இராமா.) பிறந்தவழிக் கூறல் - பிறந்தவழிக் கூறல் என்பது ஆகுபெயர் வகைகளுள் ஒன்று. ஓர் இடம் அவ்விடத்தில் உண்டாக்கப்படும் பொருளைக் குறிக்கும் ஆகுபெயர் இது. எ-டு : குழிப்பாடி நேரிது - குழிப்பாடி என்பது அவ்வூரில் நெய்யப்படும் ஆடையைக் குறிப்பதாய், நிலத்துப் பிறந்த பொருள்மேல் அந்நிலத்துப் பெயர் கூறுதல், பிறந்தவழிக் கூறலாம். (தொ. சொ. 115 நச். உரை) வேளாகாணி நேரிது - வேளாகாணியிற் பிறந்த ஆடையை அப்பெயரான் வழங்குதலின், பிறந்த வழிக் கூறும் ஆகுபெயராயிற்று. ‘யாழ் கேட்டான்’ என்பதும் அது, யாழிற் பிறந்த ஓசையையும் யாழ் என்றமையின். (யாழினை ஓசை யெழூஉம் கருவி என்னாது, ஓசை யெழும் இடமாகக் கொண்டார்.) (தொ. சொ. 111 தெய். உரை) பிற வினைமுதல் வினையையும் கொள்ளும் வினையெச்சம் - செய்து செய்யூ செய்பு செய்யா - என்பன நீங்கலான ஏனைய செய்தென செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு - என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களும், பின் முன் கால் கடை வழி இடத்து வான் பான் பாக்கு வாக்கு - என்னும் ஈற்று வினையெச்சங்களும் (தம் வினைமுதல் வினையையே அன்றிப்) பிற வினைமுதல் வினையையும் கொண்டு முடியும். எ-டு : மழை பெய்தென மரம் குழைத்தது, மழை பெய்யியர் பலி கொடுத்தார், மழை பெய்யிய வான் பழிச்சுதும், மழை பெய்யின் குளம் நிரம்பும், மழை பெய்ய மரம் குழைத்தது, மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும்; கணவன் உண்டபின் காதலிமுகம் மலர்ந்தது, மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது, நாம் விடுத்தக்கால் அவர் ‘விரைவில் வருதும்’ என்றார், நல்வினை உற்றக்கடை தீவினை வாராது, பிறர் கற்பான் நூல் செய்தான், அவர் செல்வம் தருபாக்கு யாம் விரும்புதும், நான் நலன் கொள்வாக்கு அவர் வந்தார் - எனக் காண்க. இனி, உண்டாலல்லது பசி தீராது - உண்ணின் அல்லால் பசி தீராது - என அல்லது - அல்லால் - என்ற குறிப்பெச்சமும் பிற வினைமுதல்வினைகொண்டு முடியும். (தொ. சொ. 234 நச். உரை) பிறவினையின் எண்வகை - 1. முதனிலை திரிந்தன, 2. முதனிலை திரியாதன 3, 4 இருவகை வினையீற்றின் வி- பி இணைந்தன, 5, 6 இருவகை வினையீற்றின் வி வேறு வந்தன, 7, 8 இருவகை வினையீற்றின் பி வேறு வந்தன - என்பன பிறவினையின் எண்வகை. 1. ஆட்டினான், ஊட்டினான் - (ஆடு, உண் - என்னும்) முதனிலை திரிந்தன. 2. அரசன் கட்டின கோட்டை (கட்டுவித்த) அரசன் செய்த தேர் (செய்வித்த) ‘குடி பொன்றி..... தரும்’ (கு. 171) (பொன்றுவித்து) குடி மடிந்து...... தரும் (கு. 604) (மடிவித்து) ‘உரற்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய (எஞ்சுவித்த) யாஅவிரி நீழல்’ குறுந். 232 இவை திரியாதன : பிறவினை வாய்பாடாகத் திரியா மலேயே பிறவினைப் பொருள் தந்தன. 3, 4. நடத்துவிப்பி, நடப்பிப்பி - வி. பி. இணைந்தன. 5, 6. நடத்துவித்தான், விடுவித்தான் - ‘வி’ வேறு வந்தன. 7, 8 ஊட்டுப்பித்தான், உண்பித்தான் - ‘பி’ வேறு வந்தன. இருவகைவினையாவன : செய்வி என் வினையும், செய் என் வினையும். (இ. கொ. 71) பிறிதின்கிழமை வகை - ஆறாவதன் கிழமைப்பொருள், தற்கிழமை - பிறிதின் கிழமை - என இருவகைத்து. பிறிதின் கிழமையாவது எளிதின் பிரிக்கப்படும் வகையில் தொடர்புகொண்டு உடைமையாய் இருப்பது. இது பொருள் இடம் காலம் என மூவகைத்து. பொருட்பிறிதின்கிழமை - தெரிந்து மொழிச் செய்தி - சிறந்த மொழியான் தேர்ந்து செய்யப்படுதலின், பாடல் ‘தெரிந்து மொழிச் செய்தி’ எனப் பட்டது. கபிலரது பாட்டு - கபிலரால் பாடப்பட்ட பாட்டு; பாரியது பாட்டு - பாரியைப் பற்றிப் பாடப்பட்ட கபிலரது பாட்டு முதலியன. கபிலரது பாட்டு, கபிலரொடு பிரிக்க முடியாதபடி இணைதல் இன்றிப் பிரித்துக் கொள்ளப்பட்டும், பாரியது பாட்டு, பாரியிடமிருந்து பிரித்துக் கொள்ளப்பட்டும் அவர்கட்குப் பின்னரும் நிலவுதலின் ‘தெரிந்துமொழிச் செய்தி’ பிறிதின் கிழமை ஆயிற்று. வாழ்ச்சிக் கிழமை - காட்டது யானை : காட்டினின்றும் பிரித்துக் கொள்ளப்படுதலின், யானை பிறிதின் கிழமையாம்; வாழ்ச்சியை (காட்டினின்றும் நீங்காது வாழ்தலை) உணர்த் துங்கால் தற்கிழமையும் ஆம். இடப் பிறிதின்கிழமை - வாழ்ச்சிக் கிழமை - யானையது காடு, முருகனது குறிஞ்சிநிலம்: காடு யானையை விடுத்து ஏனைய விலங்குகளுக்கும் உறை விடம் ஆதலானும், குறிஞ்சிநிலம் முருகனை விடுத்து ஏனைய தேவர்க்கும் இடமாகக் கொள்ளப்படுதலானும் இவை நிலப்பிறிதின்கிழமை ஆயின. காலப் பிறிதின்கிழமை - கிழமைக்கிழமை - வெள்ளியது ஆட்சி : காலம் மாற வெள்ளி யது ஆட்சி மாறுமாகலின், இது காலப் பிறிதின்கிழமை ஆயிற்று. (தொ. சொ. 81 நச். உரை) பிறிது அவண் நிலையல் - ஓர் இடைச்சொல்லை யடுத்துப் பிறிதோர் இடைச்சொல் வருதல் எ-டு : ‘வருகதில் அம்ம’ (தில்லை யடுத்து ‘அம்ம’ வந்தவாறு) (தொ. சொ. 251 சேனா. உரை) பிறிது பிறிது ஏற்றல் - ஆறன்உருபு தன்னையொழிந்த உருபினை ஏற்றல். பெயர்க்குப் பிறிதாய் நிற்றலின் ‘பிறிது’ என்றார். எ-டு : சாத்தனதனை, சாத்தனதனொடு (தொ. சொ. 104 சேனா., 100 இள. உரை) (105 நச்., பொ. 659 பேரா. உரை) இறுதியும் இடையும் நின்ற எல்லாஉருபும் முடிக்கும்வினை ஒன்றனொடு முடிதலையன்றி வேறு வினை ஏற்று ஒரு வினையொடு முடிதல். எ-டு : ‘காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி மாதரிக்குக் காட்டி மனையின் அகன்றுபோய்க் கோதில் இறைவனது கூடற்கண் கோவலன்சென்று ஏதம் உறுதல் வினை’ இதன்கண், ஐ முதலிய பல உருபுகள் பல வினையான் வந்து ஒருவினையான் முற்றுப்பெற்றன. சாத்தனதனை - சாத்தனதனொடு - என ஆறனுருபு ஏனை யுருபேற்றலைச் சுட்டுபவால் எனின், அவ்வாறு வரும் ‘அது’ உருபுநிலை ஒழிந்து பொருளாய் நிற்றலானும், சாத்தன தனைக் கொணர்ந்தான் - என்றவழி அது என்பது உருபாயின், சாத்தனைக் கொணர்ந்தான் என்னும் பொருள்பட வேண்டும்; அவ்வாறு பொருள்படாது உடைப்பொருளையே சுட்டுத லானும், அஃறிணை ஒருமை அது என்னும் பெயர்த்து ஆத லானும் சாத்தன்பொத்தகத்தைக் கொணர்ந்தான் என்றாற் போல வந்ததல்லது, உருபு உருபேற்றல் என்றல் அமையாது. (இவ்விளக்கம் பொருந்துவதாயில்லை.) (தொ. சொ. 101 தெய். உரை) சிவஞான முனிவர் ‘பிறிது பிறிது ஏற்றல்’ என்பதற்கு உருபேற்கும் பெயர்ச்சொற்களைத் தொடர்ந்து அடுக்கும்வழி, ‘அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும், தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம்’ என ஒவ்வொரு பெயரும் தனித்தனியே உருபேற்று வரும் மரபு என்பதனைக் குறிப்பிடுகிறார். (சூ. வி. பக். 50) ‘காதலியைக் கொண்டு’ என்னும் பாட்டுள், பலவுருபுகள் பல வினையான் வந்தன இறுதியில் ஒரு வினையான் முற்றுப் பெற்றன. கொண்டு - கூடி - காட்டி - அகன்றுபோய் - சென்று - என்னும் வினையெச்சங்கள் ‘உறுதல்’ என்னும் தொழிற் பெயருள் வினைகொண்டு முடிந்து ‘வினை’ என்னும் பெய ராகிய முடிக்கும் சொற்கொண்டு முடிந்தன. (தெய். உரை) வேற்றுமையுருபு ஏற்கும் பெயர்கள் பொருள் நோக்கிற்கு இயைய வேறுவேறு உருபுகளை ஏற்று வருதல். இரண்டாம்வேற்றுமைக்குரிய சார்புபொருள் கருமம் அல்லாச் சார்பாகியவழி, ஒரு பெயரே அரசனைச் சார்ந்தான் எனவும் அரசன்கட் சார்ந்தான் எனவும், இரண்டாவதற்குரிய நோக்கு என்னும் பொருள் நோக்கல்நோக்கம் ஆகியவழி, ஒரு பெயரே வானை நோக்கி வாழும் - வானான் நோக்கி வாழும் - வானின் நோக்கி வாழும் எனவும், இரண்டாவதற்குரிய கன்றல் என்னும் பொருள் செயப்படுபொருளைக் கருதியவழிச் சூதினைக் கன்றினான் எனவும் இடப்பொருளைக் கருதிய வழிச் சூதின் கண் கன்றினான் எனவும், யானைக்கோடு குறைத்தான் என்னும் தொடர்க்கண், யானை செயப்படுபொருள் ஆகியவழி யானையைக் கோட்டின்கண் குறைத்தான் எனவும், கோடு செயப்படுபொருள் ஆகியவழி யானையது கோட்டைக் குறைத்தான் எனவும், நாகர்பலி என்னும் தொகைமொழிக்கண், கொடுப்போரைக் கருதியவழி நாகர்க்குப்பலி கொடுத்தார் எனவும், கொள் வோரைக் கருதியவழி நாகரது பலியைக் கொடுத்தார் எனவும், புலி கொல் யானை என்னும் தொகைநிலைத்தொடர் மொழிக்கண், புலி செயப்படுபொருள் ஆகியவழிப் புலியைக் கொன்ற யானை எனவும், கருவிப்பொருள் ஆகிய வழிப் புலியால் கொல்லப்பட்ட யானை எனவும், பழி அஞ்சினான் என்னும் தொகைச்சொல்லின்கண், அஞ்சுதல் செயப்படுபொருள் வினையாயின் பழியை அஞ்சினான் எனவும், எல்லையாகிய அளவைப்பொருளாயின் பழியின் அஞ்சினான் எனவும், காட்டுயானை என்னும் தொகைமொழிக்கண் யானை உடைமைப்பொருளாயின் காட்டது யானை எனவும், வாழ்ச்சிப் பொருளாயின் காட்டின்கண் (உறையும்) யானை எனவும் ஒரு பெயரே வேறுவேறு உருபுகளை ஏற்று வந்த வாறு கண்டு கொள்க. (தொ. சொ. 104 ச. பால.) பின்னக் கிரியை - தனக்கு உரியதல்லாத வேறு வினை. எ-டு : ‘காவொடு அறக்குளம் தொட்டான்’ (திரி. 70) என்ற பாட்டில் தொடப்படுதலாகிய குளத்தின் வினையை வளர்க்கப்படும் என்று கூறவேண்டிய காவும் பெற்றது. (பி.வி. 16) பின்ன கர்த்திருகம் - தனித்தனி வினைகொண்டு முடியும் எழுவாய்த் தன்மை. செய்து என் எச்சம் (சிலவிடத்தே) இங்ஙனம் வரும். எ-டு : கோழிக் கூவிப் போது புலர்ந்தது - செய்து (கூவி) என்பது செய (கூவ) எனத் திரிந்து பொருள் தரும். (பி.வி. 39) பின்ன கருத்தா - தனித்தனி வினைகொண்டு முடியும் எழுவாய். எ-டு : சாத்தன் உண்ணக் கொற்றன் சோறு கொடுத்தான் - ’சாத்தன்’ உண்ணுதலையும், ’கொற்றன்’ கொடுத்தலை யும் தனித்தனியே கொண்டு முடிந்தன. (பி.வி. 39) பின்ன வாக்கியம் - தனித்தனி வாக்கியம், ‘அவிழ்ந்தன தோன்றி....... காந்தள் குலை’, ‘சோலை பயிலும்........ மெய்’ என்ற தண்டியலங்கார மேற்கோட் பாடல்களில் வந்துள்ள வினைமுற்றுக்களை அவிழ - அலர - நெகிழ - விள்ள - விரியக் - காந்தள் - குலைகொண்டன என்னும், அசைய - எழ - குளிர - கறுக்க - சிவப்ப - மெய் விளர்த்த - என்றும் செய என் எச்சமாகத் திரித்துப் பொருள் கொண்டால் தான் ஏகவாக்கியம் - அஃதாவது ஒரே முற்றுச் சொற்றொடர் - அமையும். அல்லாக்கால் அவை பின்ன வாக்கியமாகக் குறித்த பொருளை விளக்காது போம். (பி. வி. 39) புகரஈற்று வினையெச்சம் - செய்பு என்னும் புகரஈற்று வினையெச்சம். இவ்வாய்பாடு தன் வினைமுதல் வினையையே கொண்டு முடியும். எ-டு : ‘வாக்குபு தரத்தர...... உண்டு’ (பொரு. 87, 88) ‘பச்சிலை இடையிடுபு தொடுத்த ....... மாலை’ (புற. 33) என இவ்வாய்பாடு இறந்தகாலத்துப் பெரும்பாலும் வரும். ‘நகுபு வந்தான்’ என்புழி நகாநின்று வந்தான் - என முடிக்கும் சொல்லான் உணரப்படும் தொழிலோடு உடன்நிகழ்ந்து நிகழ்காலத்து வரும். ‘வாடுபு வனப்பு ஓடி’ (கலி. 16) என்பதும் அது. உரிஞுபு என உகரமும், கற்குபு எனக் குகரமும் (சாரியையாக) ஏற்புழி வரும். (தொ. சொ. 230 நச். உரை) புணர்ச்சி என்பதொன்று உண்மை - "சொற்கள் புணருங்கால், நிலைமொழியினது ஈற்றெழுத்து முன்னர்ப் பிறந்து கெடும்; பின்னர் வருமொழியினது முத லெழுத்துப் பிறந்து கெடும். பிறந்து கெடும் இவ்விரண்டும் ஒருங்கே நின்று புணர்வது என்பது இல்லை; ஆகவே புணர்ச்சி என்பதொன்று இல்லை" என்பார் கூற்றுப் பொருந்தாது. அச்சொற்களைக் கூறுகின்றாரும் கேட்கின்றாரும் அவ் வோசையை இடையறவுபடாமல் தொடர்ச்சியாய் உள்ளத் தின்கண்ணே உணர்வர் ஆதலின், அவ்வோசை அழியாது (தம்முள் புணர்ந்து) வரிவடிவில் கண்கூடாகப் புணர்க்கின்ற புணர்ச்சி போலவே மனம் கொள்ளப்படும்; ஆதலின் புணர்ச்சி என்பதொன்று உண்டு. (தொ. எ. 108 நச்.) முன்மொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் பாசபந்தம் போல - கயிற்றொடு கயிற்றைப் பிணைப்பது போல - ஒற்றுமைப்பட்டே புணரும்; விரலொடு விரல் சேர்ந்தது போல ஒற்றுமையும் வேற்றுமையும் பட்டு நில்லா. பிறக்கும் எதுவும் அழியும் என்னும் கொள்கையுடைய தருக்க நூலார் எழுத்தும் கெடும் (அழியும்) என்பர். சத்தநூலார் எழுத்து நித்தியமானது என்பர். (பி. வி. 26) ‘புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக்கு உதவுவன’ - இஃது இடைச்சொல் வகைகளுள் ஒன்று. இவ்வகையாவது இருமொழி தம்மில் புணர்தல் இயன்ற நிலைமைக்கண் அவற்றின் பொருள்நிலைக்கு உதவி செய்து வருவன. எல்லாம் என்பது இருதிணைக்கும் பொது. எல்லாவற்றையும் என வற்றுச்சாரியை கொடுப்பின் அஃறிணைப் பொருளை யும், எல்லாநம்மையும் என நம்முச்சாரியை கொடுப்பின் உயர் திணைப் பொருளையும் குறிக்கும். ‘வற்று’ அஃறிணைப் பொருளையும், ‘நம்’ உயர்திணைப் பொருளை யும் எல்லாம் என்னும் பொதுப்பெயர்க்கு வழங்குவதால் இச்சாரியைகள் தாம் புணர்ந்து பொருள் புலப்பாடு தந்தன. (தொ. சொ. 252 நச். உரை) சே என்ற சொல் ஒருமரத்திற்கும் காளைமாட்டிற்கும் பொது வான பெயர். சேங்கோடு - என வருமொழி வல்லெழுத்திற்கு இனமான மெல்லெழுத்து மிகின், சே என்ற பெயர் மரத்தைக் குறிக்கும் எனவும், சேவின் கோடு என இன்சாரியை கொடுப்பின், அச்சாரியை சே என்ற பெயர் காளைமாட்டைக் குறிக்கும் எனவும் பொருள்புலப்பாடு தரும். (எ. 279 நச்.) சித்திரை என்பது ஒருவிண்மீனுக்கும் ஒரு திங்களுக்கும் பெயர். சித்திரையாற் கொண்டான் - என ஆன்சாரியை கொடுப்பின் விண்மீனையும், சித்திரைக்குக் கொண்டான் - என இக்குச் சாரியை கொடுப்பின் திங்களையும் குறிப்பதால், ஆன் இக்கு என்பனவும் புணரியல் நிலைமைக்கண் பொருள் நிலைக்கு உதவும் சாரியை இடைச்சொற்களாம். (எ. 286, 247, 248 நச். ) ஒருசொல் புணர்ந்து இயலும்வழி அப்பொருள்நிலைக்கு உதவியாகி வரும் இடைச்சொற்கள். பொருள்நிலைக்கு உதவ லாவது, அல்வழிப்பொருட்கு உரியன இவை, வேற்றுமைப் பொருட்கு உரியன இவை என வருதல். அவையாவன இன்னே வற்றே - முதலாயின. அவை சாரியை யன்றோ எனின், அவை இடைச்சொல் எனவும் குறிபெறும். (தொ. சொ. 246 தெய். உரை) எ-டு : கலனே தூணி (கலனும் தூணியும்) : அல்வழிப் புணர்ச்சி; ஏ சாரியை. ஆடிக்குக் கொண்டான் (ஆடிக்கண் கொண்டான்) : வேற்றுமைப் புணர்ச்சி; இக்குச் சாரியை. புருடத்திரயம் - வினைமுற்றுக்களில் வரும் மூவிடம். தமிழில் தன்மை - முன்னிலை - படர்க்கை - என்ற வரிசைக்கு மாறாக, வட மொழியில் பிரதம புருடன் (படர்க்கை) - மத்திம புருடன் (முன்னிலை) - உத்தம புருடன் (தன்மை) - என வரும். (பி.வி. 44) புரோவாதமும் அநுவாதமும் - ஒருபொருளை முன்னர் எடுத்துக் கூறுவது புரோவாதம்; அதனையே வலியுறுத்தி வழிமொழிவது அநுவாதம் (ஆகிய பெயர்த்துரை). ‘அறத்தினூங்கு, ஆக்கம் எவனோ உயிர்க்கு’ (கு. 31) என்பது முன்னர் எடுத்துக் கூறப்பட்டமையின் புரோவாதம். பின்னர் அதனையே ‘அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை’ (32) என்று கூறுவது அநுவாதம். (பி.வி. 50) புலம்பு என்னும் உரிச்சொல் - புலம்பு என்னும் உரிச்சொல் தனிமை என்னும் குறிப் புணர்த்தும். எ-டு : ‘புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி’ (அக. 7) ‘தமி’ என்ற சொல்லும் தனிமைக் குறிப்பினை உணர்த்தும். (தொ. சொ. 331 நச். உரை) புலுதம் - அளபெடை. வடநூலார் குறில் தனியே ஒருமாத்திரையாய்ப் பிறப்பதோர் எழுத்தும் நெடில் தனியே இரண்டு மாத்திரை யாய்ப் பிறக்கும் எழுத்தும் ஆனாற்போல, புலுதமும் தனியே மூன்று மாத்திரையாய்ப் பிறப்பதோர் எழுத்து என்று கூறுவர். வேதத்துள் யாப்புப் பற்றிய ஓசைக்குறை வாராமல் குறில் நின்ற இடத்தும் நெடில் நின்ற இடத்தும் புலுதம் ஆதேசமாக வருவதல்லது, பொருள் வேறுபடுக்க வாராது. (ஆதேசம் -தோன்றல்.) உலகவழக்கில் ஒருமை பன்மை விளிகளில் புலுதம் வரும். செய்யுளில் வரும் விளிச்சொற்களில் புலுதம் வாராது; ஆண்டு இயல்பாகவே இருக்கும். சேய்மையொலியில் நீண்டொலிக் கும் ஒலி, தாளவோசை மணியோசை என்கின்ற அநுகரணத் தொனி (தொடர்ந்து ஒலித்தல்) போலும் என்பர் வடநூலார். குற்றெழுத்து நின்ற இடத்தும் சிறுபான்மை அசைநிலையாக அளபெடுப்பதும் (ஈரசை ஆவதும்), குரீஇ - உடீஇ - என இறுதி நிலை அளபெடுப்பதும் தமிழிலுண்டு. இசை விளி பண்டமாற்று ஆகியவற்றில் வரும் அளபெடை இயற்கை யளபெடையாம். (இயற்கையாவது பொருட்குப்பின் நிகழாது உடன்நிகழும் தன்மை) அசையாகும் (இசைநிறைக்கும்) காரியத்தால் வருவது செயற்கையளபெடையாம். (செயற்கையாவது ஒரு கார ணத்தான் தன்மை திரிதல்.) இரண்டு மாத்திரையுடைய எழுத்துக்கள் நீண்டொலிப்பதும் செயற்கையே. ஆகவே சிலவற்றை இயற்கை யளபெடை என்பது உபசார வழக்கே. தொல்காப்பியனார் கூறும் எழுத்துப்பேறு அளபெடை களான ‘உவாஅப்பதினான்கு’, ‘இராஅப்பகல்’ என்பன புலுதச் சந்தியாம் (எ. 223 நச்.) (பி. வி. 5) புறநடையான் கொண்ட உயர்திணைப் பெயர் - பெண்டிர் பெண்டுகள் - என்பனவும், அத்தன்மையர் அத் தன்மையார் - என்பனவும், ஏனாதி அமைச்சன் படைத் தலைவன் - எனச் சிறப்புப் பற்றி வரும் பெயரும், நாயன் நாய்ச்சி - எனத் தலைமை பற்றி வரும் பெயரும், அடியான் அடியாள் - என இழிபு பற்றி வரும் பெயரும், புலவன் ஆசிரியன் - எனக் கல்வி பற்றி வரும் பெயரும், குழலன் குழலாள் இடையன் இடையாள் - என உறுப்புப் பற்றி வரும் பெயரும், ஆதிரையான் ஓணத்தான் வேனிலான் - எனக் காலம் பற்றி வரும் பெயரும், பிறன் பிறள் பிறர் - நுமன் நுமள் நுமர் - தமன் தமள் தமர் - என்பனவும் பிறவும் புறநடையாற் கொண்ட உயர்திணைப்பெயர்களாம். (தொ. சொ. 162 தெய். உரை) புறநடையான் வரும் ஆகுபெயர் - பாவை திரு - என வடிவு பற்றியும், பசு கழுதை - எனக் குணம் பற்றியும், புலி சிங்கம் - எனத் தொழில் பற்றியும் - ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆகி வருவன ஆகுபெயரே. ‘எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின், தோட்டி தந்த தொடிமருப்பு யானை’ (பதிற். 38) என்றவழித் தோட்டியுடையானைத் ‘தோட்டி’ எனல் ஆகுபெயர். இவை ஆகுபெயர் ஆங்கால், பாவை வந்தாள் - சிங்கம் வந்தான் - எனத் தத்தம் பொருண்மை வாய்பாட்டின் முடியும். ‘தொடிகை இடைமுத்தம் தொக்கு’ என்புழி, வளைவுப் பொருட்டாய தொடி என்பது தொடி என்னும் வளையலைக் குறித்தது. (தொ. சொ. 113 தெய். உரை) யாழ் குழல் - என்னும் கருவிப்பெயர் யாழ் கேட்டான், குழல் கேட்டான் - என அவற்றான் ஆகிய ஓசை மேலும் ஆகு பெயராய் நின்றன. யானை பாவை என்னும் உவமப்பெயர் யானை வந்தான், பாவை வந்தாள் - என உவமிக்கப்படும் பொருள்மேலும், ஏறு குத்து - என்னும் தொழிற்பெயர் இஃதோர் ஏறு, இஃதொரு குத்து என அத்தொழிலானாம் வடுவின்மேலும் வருவன எல்லாம் கொள்க. (117 சேனா. உரை) நெல்லாதல் காணமாதல் பெற்றான் ஒருவன் ‘சோறு பெற்றேன்’ என்றவழிக் காரணப் பொருட்பெயர் காரியத்தின் மேல் ஆகுபெயராய் வந்தது. ‘ஆறறி அந்தணர்’ (கலி. 1) என்புழி, ஆறு என்னும் வரையறைப் பண்புப்பெயர் அப்பண்பினை யுடைய அங்கத்தினை உணர்த்திற்று. ‘நூற்றுலா மண்டபம்’ (சீவக. 2734) என்புழி, அவ்வெண்ணுப்பெயரினை அறிகுறி யாகக் கொண்ட அளவினையுடையதாகிய மண்டபத்தை உணர்த்தும். அகரம் முதலிய எழுத்துக்களை உணர்த்துதற்குக் கருவியாகிய வரிவடிவங்களும் அப்பெயர்களே பெற்று நின்றன. ஆகுபெயரான், கடிசூத்திரம் செய்ய இருந்த பொன்னைக் ‘கடி சூத்திரம்’ என்றும், தண்டூண் ஆதற்குக் கிடந்த மரத்தைத் ‘தண்டூண்’ என்றும் காரியத்தின் பெயரைக் காரணத்திற்கு இட்டு வழங்குவன கொள்க. எழுத்து சொல் பொருள் - என்பனவற்றிற்கு இலக்கணம் கூறிய அதிகாரங் களை எழுத்து சொல் பொருள் - என்பன உணர்த்தி நின்றன. தொல்காப்பியம் கபிலம் வில்லி வாளி - என ஈறு திரிதலும் கொள்க. (தொ. சொ. 119 நச். உரை) புனிறு என்னும் உரிச்சொல் - இவ்வுரிச்சொல் ஈன்று அணிமையாகிய குறிப்புப்பொருளை உணர்த்தும். எ-டு : ‘புளிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போல’ (புறநா. 68) - உயர்திணை; ‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ (அக. 56) - அஃறிணை. (தொ. சொ. 375 நச். உரை) பூர்வபதப் பிரதானம் - தொகையில் முன்மொழியில் பொருள் சிறத்தல். எ-டு : நுனிநா, இடைநா, முதல்நா - எனப் பிரதமா தற் புருடன் - எழுவாய்வேற்றுமைத்தொகை - பூர்வ பதப் பிரதானம் பெற்று வந்தது. (முன் : காலமுன்) (பி.வி. 25) பூர்வபத லோபன் - தொகைநிலைத் தொடரில் முன்மொழி கெடுதல் விகாரம் பெறுதல். எ-டு : மரம் + அடி = மராஅடி என்புழி, முன்மொழியின் ஈறு கெட்டு ஈற்றயல் அகரம் நீண்டது. (பி.வி. 26) பூவிரட்டை - பூ இரட்டை என்பது இரண்டு பூக்கள் இணைந்திருப்பது. இதன்கண் உள்ள இருபூக்களையும் தனித்தனிப் பிரித்தால் இரண்டும் உருச்சிதைந்து விடும்; தனித்தனிப்பூவாக அமையா. அதுபோல இரட்டைக்கிளவியில் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் இருசொற்களையும் பிரிக்கலுற்றால் இரண்டும் உரிய பொருள் தாராது சிதையும். (ஒரோவழிப் பின்மொழி பொருள்படுதலும் உரித்து. (எ-டு : கறுகறுத்தது.) குறுகுறுத்தது என்பது குறுமைமிகுதியை உணர்த்திற்றேல், குறு என்பது மிகுதியை உணர்த்த வேண்டும். குறு என்பது யாண்டும் மிகுதியை உணர்த்தாது. ஆதலின் இரட்டைக் கிளவியைப் பிரிப்பின் பொருள் சிதையும். ‘குறுத்தது குறுத்தது’ என ஒருசொல்லே இருமுறை வாராமையின் அடுக்கு ஆகாது. (தொ. சொ. 48 நச். உரை) ‘சளசள எனமழைத் தாரை கான்றன’ (கம்ப. 1 : 5 : 43) ‘சளசள’ என்ற இரட்டைக்கிளவியைப் பிரித்தால் பொருள் புலப்பாடின்மை காண்க. பெட்பு என்பதன் பொருள் - பெட்பு என்பது புறந்தருதலும் விரும்புதலும் ஆகிய குறிப்பும் பண்பும் உணர்த்தும்; சிறுபான்மை ‘பெட்ப நகுகின்ற’ (சீவக. 1662) எனப் பெருமையும் உணர்த்தும். எ-டு : ‘யானும் பேணினென் அல்லனோ மகிழ்ந’ (அகநா. 16) ‘பெட்ட வாயில் பெற்று’ (பொ. 102) என முறையே காண்க. பெட்டு என்னும் உரிச்சொல்லடி யாகப் பெட்புப் பிறந்தது. (தொ. சொ. 338 நச். உரை) பெண் ஒழி மிகுசொல் - அரசன் நூறு மக்களொடு வந்தான் என்றல், உயர்திணை யிடத்துப் பெயரில் தோன்றும் பெண்ணொழி மிகு சொல். கீழைச்சேரியாரும் மேலைச்சேரியாரும் பொருவர் என்றல், அத்திணையிடத்து வினையின் தோன்றும் பெண்ணொழி மிகுசொல். அரசன் நூறுயானை உடையன் என்றல், அஃறிணையிடத்துப் பெயரில் தோன்றும் பெண்ணொழி மிகுசொல். இன்று இவ்வூர்ப் பெற்றம் எல்லாம் உழவொழிந்தன என்றல், அத்திணையிடத்துத் தொழிலின் தோன்றும் பெண்ணொழி மிகுசொல். (நேமி. மொழி. 12 உரை) பெண்பால் படர்க்கை முற்று - அள் ஆள் என்னும் விகுதியுடையன பெண்பால் படர்க்கை வினைமுற்றாம். இவை முக்காலமும் வினைக்குறிப்பும் எதிர் மறையும் பற்றி வரும். எ-டு : நடந்தனள் நடக்கின்றனள் நடப்பள்; குழையள் உண்டனள்அல்லள்; நடந்தாள் நடக்கின்றாள் நடப்பாள்; குழையாள்; உண்ணாள். (நன். 326 சங்.) பெண்பால்பெயர் - கிளை முதலாகப் பகுத்துச் சொல்லப்பட்ட பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் - என்னும் அறுவகைப் பொருள்களுள் ளகரஒற்றும் இகரஉயிரும் பொருந்துதற்கு ஏற்ற அவ்விரண்டு ஈற்றனவாய் வரும் பெயர்களும், தோழி செவிலி மகடூஉ நங்கை தையல் என்பனவும், இவை போல்வன பிறவும் உயர்திணைப் பெண்பாற்பெயர்களாம். தமள் நமள் நுமள் எமள் அவையத்தாள் அத்திகோசத்தாள் பொருளாள் பொன்னாள் - எனவும், அவையத்தி அத்தி கோசத்தி பொன்னி - எனவும் பொருள் ஆதி ஆறனுள்ளும் ளகரஒற்றுக்கும் இகரஉயிர்க்கும் ஏற்பன அறிந்து ஒட்டுக. தோழி முதலிய ஐந்தும் மேற்கூறியன. ‘பிறவும்’ என்றமையால், இகுளை மாது அங்கனை - என்றல் தொடக்கத்துப் பெண்பாற் பெயரும் கொள்க. (நன். 277 சங்.) பெண்பால்வினைமுற்று விகுதிகள் - அள் ஆள் என்பன பெண்பால்வினைமுற்று விகுதிகளாம். இவை முக்காலமும் எதிர்மறையும் குறிப்பும் பற்றி வரும். அள்ஈறு இறந்தகாலம் உணர்த்துங்கால் க ட த ற - என்னும் கால எழுத்தின் முன் அன்சாரியை பெற்றும் பெறாதும் வரும்; ஆள் ஈறு அவ்வெழுத்துக்களின் முன் அன் சாரியை பெறாது வரும். எ-டு : நக்கனள் உண்டனள் உரைத்தனள் தின்றனள்; நக்காள் உண்டாள் உரைத்தாள் தின்றாள்; நக்கிலள் உண்டிலள் உரைத்திலள் தின்றிலள்; நக்கனள் அல்லள் உண்டனள்அல்லள் உரைத்தனள்அல்லள் தின்றனள்அல்லள்; நக்கிலாள் உண்டிலாள் உரைத்தி- லாள் தின்றிலாள்; நக்காள்அல்லள் உண்டாள்- அல்லள் உரைத்தாள்அல்லள் தின்றாள்அல்லள் - என எதிர்மறை வாய்பாடும் கொள்ளப்படும். இந்த அள் ஆள் என்பன இறந்தகாலத்துக் கடதற - ஒழிந்த ஏனை எழுத்துக்களுள் ஙகரமும் ழகரமும் ஒழித்து இன் பெற்று வரும். எ-டு : உரிஞினள் எண்ணினள் பொருநினள் திருமினள் பன்னினள் போயினள் வாரினள் சொல்லினள் மேவினள் எள்ளினள் - எனவரும். கலக்கினள் தெருட்டினள் அருத்தினள் அரற்றினள் - என்புழிக் க ட த ற முதனிலைச்சொல் ஈறாய் நின்று இன் பெற்றன. உரிஞினாள் எண்ணினாள் .... எள்ளினாள்; கலக்கினாள்.... அரற்றினாள் - என ஆள் ஈற்றொடும் ஒட்டுக. இவற்றோடு ‘அல்லள்’ என்பதனைச் சேர்த்து எதிர்மறைச்சொல்லாக்குக. கலக்கினள்அல்லள் - கலக்கினாள்அல்லள் - போல்வன அவை. அள் ஆள் - ஈறுகள் நிகழ்காலம் பற்றி வருங்கால் நில் நின்று (நில் - நின்) கிட இரு - என்பவற்றொடு வந்து முற்கூறியவாறே நிற்கும். ‘கிறு’ ஆள் ஈற்றொடு வரும்; கின்று ஆள்ஈற்றொடும், அன் சாரியை பெற்று அள்ஈற்றொடும் வரும். எ-டு : உண்ணாநின்றனள், உண்ணாநின்றாள்; உண்ணா- நின்றிலள் உண்ணாநின்றிலாள் - எதிர்மறை. உண்ணாகிடந்தனள், உண்ணாகிடந்தாள்; உண்ணா கிடந்திலள் உண்ணாகிடந்திலாள் - எதிர்மறை. உண்கிறாள்; உண்கிலாள் உண்கிறாள்அல்லள் - எதிர்மறை; உண்கின்றனள் உண்கின்றாள் ; உண்-கின்றிலள் உண்கின்றனள்அல்லள் உண்கின்றிலாள் உண்கின்றாள்அல்லள் - இவை எதிர்மறை. இவை எதிர்காலம் பற்றி வருங்கால், பகரமும் வகரமும் அடுத்து வரும். வகரம் ஏற்குமிடத்துக் குகரமும் உகரமும் அடுத்து வரும். எ-டு : உண்பள் உண்குவள் உரிஞுவள் திருமுவள்; உண்ணலள் - எதிர்மறை; உண்பாள் உண்குவாள் உரிஞுவாள் திருமுவாள்; உண்ணாள் - எதிர்மறை. சொல்லுவள் சொல்லுவாள், போதுவள் போது வாள்; கூறுவள்அல்லள் - கூறுவாள்அல்லள் - கூறாள் - போல்வன எதிர்மறை. (204) (தொ. சொ. (204) 207 நச். உரை பெண்மகன் - புறத்துப் போய் விளையாடும் பேதைப்பருவத்துப் பெண் பாலரைப் ‘பெண்மகன்’ என்று வழங்குப. (தொ. சொ. 161 இள. உரை) நாணுவரை இறந்த தன்மையளாகிப் புறத்துப்போய் விளை யாடும் பெண்மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்பொழுதும் மாறோக்கத்தார் வழங்கு வர். மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு. பாலறிய வந்த உயர்திணைப் பெயர்களை நான்கு சூத்திரங்களான் ஆசிரியர் ஓதியவற்றுள் இப்பெயரும் ஒன்று. (இது பெண் மகன் வந்தாள் - எனப் பொருள் பற்றிப் பெண்பால் முடிபு ஏற்கும் சொ. 197). (தொ. சொ. 167 கல் உரை) ‘பெண்மை அடுத்த மகன் என் கிளவி’ - ‘பெண்மகன்’ என்னும் உயர்திணைச்சொல். இதன் முதல் நிலை பெண்பாற்சொல்; இறுதிநிலை ஆண்பாற்சொல். இது சொல் நிலையான் ஆண்பால் போன்றிருப்பினும், பொருள் நிலை பற்றிப் பெண்பால்வினையே கொண்டு முடியும். எ-டு : பெண்மகன் வந்தாள். கட்புலனாயதோர் அமைதிதன்மை அடுத்து நாணுவரை இறந்து புறத்து விளையாடும் பருவத்தால் பால் திரிந்த பெண் மகன் என்பது. அத்தன்மையாரை அக்காலம் அவ்வாறே வழங்கினார் ஆயிற்று. (தொ. சொ. 166. நச். உரை) புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்து மகளிரை மாறோக்கத்தார் பெண்மகன் என்று வழங்குப. (தொ. சொ. 164 சேனா. உரை) விளையாடும் பருவத்துப் பெண்மகளைப் ‘பெண்மகன்’ என்றல் பண்டையார் வழக்கு. (தொ. சொ. 160 தெய். உரை) ‘சிறுமுத் தனைப்பேணிச் சிறுசோறு மடுத்து’ (கலி. 59 : 20) என்னும் தொடர்க்கு பொருள் வரைந்த நச்சினார்க்கினியர் "சிறிய குழமகனைப் பேணி வளர்த்து வேறொருத்தியுடைய பெண் மகனைக் கோடற்குச் சிறுசோற்றைச் சமைத்து" என்று குறிப் பிட்டுள்ளார். புறத்துப்போய் விளையாடும் பேதைப்பருவத்துச் சிறுமியை மாறோக்கத்தார் பெண்மகன் என்றனர். இஃது இறுதிச்சொல் பற்றி ஆடூஉ வினை கொள்ளாது, முதற்சொல் பற்றி மகடூஉ வினை கொள்ளும் உயர்திணைச்சொல். பொருள்பற்றி மகடூஉ கொண்டது. எ-டு : பெண்மகன் வந்தாள். (தொ. சொ. 196 நச். ) ‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி’ - உயர்திணையிடத்துப் பெண்பாற்குரிய அமைதித் தன்மையைக் கருதுதற்குக் காரணமான, ஆண்பாற்குரிய ஆளும் தன்மையை முற்பிறப்பில் தான் செய்த தீவினையான் தன்னிடத்து இல்லை யான பெயர்ப்பொருள்; என்றது, நல்வினை செய்யாத பொருளாகிய பேடி என்றவாறு. இதற்குப் பெண்மை திரிதல் உண்டேனும், ஆண்மை திரிதல் பெரும்பான்மை. பேடி வந்தாள் - என முடிக்கப்படும். (தொ. சொ. 4 நச். உரை) உயர்திணை மருங்கின் பெண்மை சுட்டிய பொருள்மேல் நிலைபெற்ற சொல். (இள. உரை) உயர்திணையிடத்துப் பெண்மைத்தன்மை குறித்த ஆண்மை திரிந்த பெயர். (சேனா. உரை) அலி அன்று என்பதற்குப் ‘பெண்மை சுட்டிய’ எனவும், பெண் அன்று என்பதற்கு ‘ஆண்மை திரிந்த’ எனவும் கூறப்பட்டது. இத்தொடரான் பேடி பேடியர் பேடிகள் பேடிமார் - என்ற சொற்கள் கருதப்பட்டன. (நச். உரை) பெண்மையைக் குறித்த உயர்திணைப் பெண்பிறப்பினுள் ஆண்மைத் தன்மையின் திரிந்த பெயர்க்கண் நிற்கும் சொல். ஆண்மை திரிந்த பெயராவது பேடி, அச்சத்தின் ஆண்மை திரிந்தாரைப் பேடி என்ப ஆகலின். ஈண்டு அப்பெயர் பெற்றது அலி எனக் கொள்க. அலி மூவகைப்படும்; ஆண் உறுப்பிற் குறைவின்றி ஆண்தன்மை யிழந்ததும், பெண் உறுப்பிற் குறைவின்றிப் பெண்தன்மை இழந்ததும், பெண் பிறப்பில் தோன்றிப் பெண்ணுறுப் பின்றித் தாடி தோற்றி ஆண் போலத் திரிவதும் என. அவற்றுள் பிற்கூறியது ஈண்டுப் பேடி எனப்பட்டது. எ-டு : பேடி வந்தாள், பேடி வந்தான். (தெய். உரை) உயர்திணையிடத்துப் பெண்மைத்தன்மையை எய்தவேண்டி ஆண்மைத்தன்மையின் நீங்கிய பேடி என்னும் பொருள். ‘சுட்டிய’ என்பது செய்யிய என்னும் வினையெச்சம். (தொ. சொ. கல். உரை) பேடிக்கு ஆண்மை திரிதல் இயல்பேயன்றிப் பெண்மையைச் சுட்டுவதற்காக ஆண்மை திரிதலில்லை ஆகலின் கல்லாடர் உரை பொருந்தாமை சேனாவரையர் உரையில் காணப்படும். பெண்மைத் தன்மை எய்திய உயர்திணையிடத்து ஆண்மை நீங்கிய பெயர்ப்பொருள். எ-டு : பேடி வந்தான், பேடி வந்தாள். (தொ. சொ. ப. உ.) பெண்மை சுட்டிய பெயர் - பெண்மை சுட்டிய பெயர் விரவுப்பெயர் வகைகளுள் ஒன்று. இதன்கண் பெண்மை இயற்பெயர், பெண்மைச் சினைப் பெயர், பெண்மைச் சினைமுதற் பெயர், பெண்மை முறைப் பெயர் - என்னும் நான்கும் அடங்கும், இப்பெயர் அஃறிணைப் பெண் ஒன்றற்கும் உயர்திணைப் பெண்பாற்கும் பொருந்துவ தாகும். எ-டு : இயற்பெயர் - சாத்தி வந்தது, சாத்தி வந்தாள்; சினைப் பெயர் - முடத்தி வந்தது, முடத்தி வந்தாள்; சினைமுதற்பெயர் - முடக்கொற்றி வந்தது, முடக் கொற்றி வந்தாள்; முறைப்பெயர் - தாய் வந்தது, தாய் வந்தாள்; ஆய் வந்தது ஆய் வந்தாள் யாய் என்பது தன்மையோடு ஒட்டுதலின் உயர்திணைப் பெயராம் (ஆதலின் விரவுப்பெயர் ஆகாமை காண்க.) முடம் என்பது சினையாகிய காலை உணர்த்திற்று. (தொ. சொ. 182 நச். உரை) பெயர் அடியான வினை - வினைப்பகுதிகள், பெயர் இடை உரி என்னும் சொற்கள் அடியாகவும் தோன்றி, முதனிலை - முற்று - தொழிற்பெயர் - பெயரெச்சம் - வினையெச்சம் - என்னும் ஐவகை வினைகளாக விரியும். (சுப்புத்தாது பி.வி. 35) 1. முதல் ஈறு ஒற்று அழுக்காறு : முதனிலை 2. முதலும் இறும் ஒற்றும் அழுக்கறுப்பான் : முற்று 3. முதலுதல் இறுதல் ஒற்றுதல் அழுக்கறுத்தல் : தொழிற் பெயர் 4. ‘நாவலொடு பெயரிய பொலம்’ (முருகு . 18) ‘ஐ யெனப் பெயரிய வேற்றுமை (சொ. 72 நச்), முதலிய எழுத்து, இற்ற பதம், ‘ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர், (எ. 296 நச்), அழகிய சொக்கர், அழுக்கற்ற பாவி: இவை போல்வன எல்லாம் பெயரெச்சம்.’ (அழுக்கற்ற - அழுக்கறுத்த) 5. அகரம் முதலி நிற்கும், னகரம் இற்று நிற்கும், மெய்க ளெல்லாம் ஒற்றி நடக்கும், ‘அழுக்கற்று அகன்றாரும் இல்லை’ (கு. 170): இவை போல்வன எல்லாம் வினை யெச்சம். (இ. கொ. 68) பெயர் இடைநிலைகள் - வலைச்சி, பனத்தி, வெள்ளாட்டி - என்பன சகரமும் தகரமும் டகரமும் ஆகிய இடைநிலை பெற்றன. செட்டிச்சி, கணக்கிச்சி - முதலியன ‘இச்’ இடைநிலை பெற்றன. கணவாட்டி என்னும் வினைப்பெயர் டகர இடைநிலை பெற்றது. (தொ. சொ. 463 நச். உரை) பெயரிடைநிலை காலம் காட்டாது. பகுதிக்கும் விகுதிக்கும் இடையே வருதலின் இவ்வுறுப்பு இடைநிலை எனப்பட்டது. ஞ் வ் ச் த் - என்பன இடைநிலைகளாக அறிஞன் (ஞ்) ஓதுவான் (வ்) புலைச்சி (ச்) வண்ணாத்தி (த்) என்று வருமாறு காண்க. பாணத்தி மலையாட்டி வெள்ளாட்டி தந்தை எந்தை நுந்தை - என்பனவும் தகர இடைநிலை பெற்று வந்தன. (நகரமும் பெயரிடைநிலையாகக் கொள்ளப்படும். பொருநன், வல்லுநன் - என வருமாறு காண்க. (நன். 141 சங்.) பெயர் இருதிணை ஐம்பாலை ஈற்றான் அறிவித்தல் கூடாமை - வினைமுற்றுப் போலப் பெயர் இருதிணை ஐம்பாலை ஈற்றான் அறிவித்தல் இயலாது. பெயர்ஈறுகள் பாற்பொதுமை யாகவும் திணைப்பொதுமையாகவும் நிகழ்வன. வருமாறு : அவன்: ஆண்பால்; பெண்மகன்: பெண்பால்; சாத்தன் : இருதிணைப் பொது. - இவை னகரஈற்றன. பெண்டாட்டி: பெண்பால்; நம்பி: ஆண்பால் - இவை இகர ஈற்றன. ஆடூ : ஆண்பால்; மகடூ : பெண்பால் - இவை ஊகார ஈற்றன. நீ : இஃது ஆண்பால் பெண்பால் அஃறிணைஒருமை - இவற்றிற்குப் பொது. ஒருவர் : ஆண்பால் பெண்பால் இரண்டற்கும் பொது. நீயிர் : இருதிணைப் பன்மைப் பொது. தான் : ஆண்பால், பெண்பால், அஃறிணை ஒருமை - இவற்றிற்குப் பொது. தாம் : இருதிணைப் பன்மைப் பொது. (தொ. சொ. 158 இள. உரை) (தொ. சொ. 161 சேனா.உரை) இன்ன ஈறு இன்ன பாற்கு உரித்து எனப் பெயர்ச்சொல் ஈறு பற்றி உணர்த்தப்படாது. (சேனா. உரை) பெயர்ச்சொற்கு ஈறு வரையறுக்கப்படாது. பெருமான் - னகரஈறு பெண்பாலுக்கும் ஆண்பாலுக்கும் வந்தது பெருமாள் - ளகரஈறு பெண்பாலுக்கும் ஆண்பாலுக்கும் வந்தது ஆழ்வார் - ரகரஈறு பெண்பாலுக்கும் ஆண்பாலுக்கும் வந்தது (பலர்பாலுக்கு இவ்வீறு உரித்தாதல் வெளிப்படை) ஆதலின் பெயர் ஈறு பற்றித் திரிபில்லாது பால் காட்டாது என்பது பெற்றாம். எ-டு : ‘தம் பெருமான் பாதம் முடி தீட்டி’ சீவக. 2608 ‘பெண் பெருமாள் அந்தப்புரப்பெருமாள்’ சோழன் உலா ‘ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார்’ பெயர்ச் செவ்வெண் - எண்ணிடைச் சொல்லால் இணைக்கப்படாத பெயர்கள் எண்ணின்கண் வரின் பெயர்ச்செவ்வெண்ணாம். இஃது யாண்டும் தொகை பெறும். தொகையின்றி வருமிடத்து அத்தொகை இசையெச்சமாக வருவித்து உரைக்கப்படும். எ-டு : கபிலன் பரணன் இருவரும் வந்தார் (நன். 428 சங்.) ‘அறம்பொருள் கண்டார்கண் இல்’ (கு. 141) என்புழி, ‘அறம் பொருள் இரண்டும்’ எனத் தொகை வருவித்து உரைக்கப் பட்டவாறு. பெயர்ச்செவ்வெண் தொகை பெறுதல் - எண்ணுப்பொருளவாய் எண்ணப்படும் பெயர்கள் உம்மை ஏலாது நின்றாங்கு நின்று எண்ணப்படுமிடத்து இறுதியில் தவறாது தொகை கொடுக்கப்படுதல் வேண்டும். இவ்வாறு எண்ணப்படும் பெயர்கள் பல இயைந்து நிற்பினும், உம்மைத் தொகை போல ஒரு சொல் நீர்மைப்படாது தனித்தனிச் சொற் களாவே கொள்ளப்படும். இவை வழக்கில் தொகை பெற்றே வரும்; செய்யுளில் தொகை பெறாதவழிச் செவ்வெண்ணின் தொகை விகாரத்தான் தொக்கது என்றே கொள்ளப்படும். (தொ. சொ. 292 நச். உரை) எ-டு : சேரசோழபாண்டியர் : உம்மைத்தொகை சேரன் சோழன் பாண்டியன் மூவரும் : செவ்வெண் தொகை பெற்றது. சேரசோழபாண்டியர் வந்தனர் எனின், மூவரும் ஒரே காலத்தே சேர்ந்து வந்தனர் என்பது பொருள். மூவரையும் ஒருங் கிணைத்துச் சேரசோழபாண்டியர் எனப் பலர்ஈற்றான் அத் தொகையை அமைத்ததன் கருத்து அதுவே. இனி, சேரன் சோழன் பாண்டியன் மூவரும் வந்தார் என்றவழி, அவர் வெவ்வேறு காலத்தில் தனித்தனியாகவும் வந்திருக்கலாம், ஒரே காலத்தில் சேர்ந்தும் வந்திருக்கலாம் என்று பொருள் படும். ‘பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்’ கு. 141 இக்குறளுரையில் பரிமேலழகர் “அறம் பொருள் என்பன ஆகுபெயரான் அறநூலையும் பொருள்நூலையும் உணர்த்தின. செவ்வெண்ணின் தொகை விகாரத்தான் தொக்கது” என்றார். இதனை உம்மைத்தொகை என்னின், அறம் பொருள் இரண் டனையும் கண்டவரே பிறன்மனையாளை விரும்பார்; தனியே அறம் கண்டாரும் தனியே பொருள் கண்டாரும் விரும்புவர்" எனப் பொருள்பட்டுவிடும். செவ்வெண்ணாகக் கொள்வதால் "அறம் கண்டவரும் விரும்பார்; பொருள் கண்டவரும் விரும்பார்; இரண்டும் கண்டவரும் விரும்பார்; இன்பம் ஒன்றனையே கற்றவர்தாம் விரும்புவர்" என்று உரிய பொருள் தரும். செவ்வெண்ணாயின் தொகை பெறுதல் வேண்டும். ஆதலின் அத்தொகை விகாரத்தான் தொக்கு நின்றதாகப் பரிமேலழகர் உரைத்தார். பெயர்ச்சொல் - இடுகுறியும் காரணக்குறியும் மரபினையும் ஆக்கப்பாட் டினையும் தொடர்ந்து, வினையாலணையும்பெயர் அல்லாதன காலம் தோன்றாதனவாய், எட்டு வேற்றுமையும் சார்தற்கு இடமாய், இருதிணை ஐம்பால் மூவிடத்து ஒன்றனை ஏற்பன வும் பலவற்றை ஏற்பனவுமாய் வருவன பெயர்களாம். அவை வருமாறு : ஆண், பெண், மரம் - இடுகுறி மரபு விலங்கு, பறவை - காரணக்குறி மரபு. இவை தொன்றுதொட்டு வரும் பெயர்கள். முருகனைப் பொய்யாமொழிப்புலவர் ‘பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும்’ என்ற பாட்டில் ‘முட்டை’ என்று குறித்தமை இடுகுறி ஆக்கம். பொன்னன், பூணன், ‘மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே’ (முருகு. 257) இவை காரணக்குறி ஆக்கம். இப்பெயர்கள் இடையே ஒருவரால் ஆக்கப்பட்ட பெயர்கள். நடந்தவனை, நடந்தானை - என்றல் தொடக்கத்து வினையா லணையும் காரணக்குறிப் பெயர்கள் காலம் காட்டின. ஆடு மாடு - முதலியன மரபுப்பெயர்; தெங்கு கடு - என்பன அவற்றின் காய்களைக் குறித்தல் போல்வன ஆகுபெயர் - என்று கொண்டு, பெயர்களை இடுகுறி - காரணம் - மரபு - ஆகுபெயர் - எனப் பகுப்பாருமுளர். எல்லாப் பெயரும் இடுகுறி காரணம் என்னும் இரண்டனுள் அடங்கிவிடும். (நன். 275 சங்.) பெயர்ச்சொல்லின் மூவகை - உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், இருதிணைப் பொதுப்பெயர் (விரவுப்பெயர்) எனப் பெயர்ச்சொல் மூவகைப்படும். (தொ. சொ. 162 நச். உரை) பெயர்ச்சொல்லை ஈறு பற்றி ஓதாமை - இகரஈறு நம்பி என்னும் ஆண்பாற்பெயர்க்கும் அவ்வாட்டி என்னும் பெண்பாற்பெயர்க்கும் உரியது. ஐகாரஈறு முறையே தந்தை நங்கை - என அவ் விருபாற்பெயர்க்கும், ஊகாரஈறு முறையே ஆடூ மகடூ - என அவ்விருபாற் பெயர்க்கும், னகரஈறு முறையே அவன் பெண்மகன் - என அவ்விருபாற் பெயர்க்கும், ளகர ஈறு மக்கள் என்னும் பலர்பாற்பெயர்க்கும் மகள் என்னும் பெண்பாற் பெயர்க்கும் உரியன. இவ்வாறு மயங்கி வருதலின் பெயர்ச்சொல்லை ஆசிரியர் ஈறுபற்றி வரையறுத்து ஓதா ராயினார். (தொ. சொ. 211 கல். உரை) ‘பெயர் இருதிணை ஐம்பாலை ஈற்றான் அறிவித்தல் கூடாமை’ காண்க. பெயர் தோன்று நிலை - பெயர் கண்டுழி எல்லாம் வேற்றுமை என்று கொள்ளற்க. ‘ஆயன் சாத்தன் வந்தான்’ என்றவழி, ‘ஆயன்’ சாத்தற்கு அடை. இருபெயரும் ஒருபொருட்கண் வருதலின் இரண் டனையும் எழுவாய்வேற்றுமை என்னாது சாத்தன் என்ப தனையே எழுவாய்வேற்றுமை எனல் வேண்டும். ‘தோன்று நிலை’ என்பதன் பயன் இது. (தொ. சொ. 63 தெய். உரை) பெயர் நான்குவகை - மரபுப்பெயரும் காரணப்பெயரும் ஆகுபெயரும் இடுகுறிப் பெயரும் - எனப் பெயர் நால்வகைப்படும். இவையே பொருட்பெயரும் வினையாலணையும்பெயரும் தொழிற் பெயரும் பண்புப்பெயரும் - என இந்நால்வகையுள் அடங்கும். பொன்னன்: பொருட்பெயர்: உண்டவன்: வினையாலணை யும் பெயர்; நடத்தல்: தொழிற்பெயர்: சண்டை கூத்து வேட்டை: முதனிலை இல்லாத தொழிற்பெயர்கள்: கருமை: பண்புப்பெயர். இவற்றுள், காரணமின்றிப் பொருளின் இயல்பினைக் குறித்து வருவன மரபுப்பெயர் எனப்படும். மகன் மகள் கரி பரி பொன் மணி; வான் நிலம் அகம் புறம்; இரா பகல் வருடம் மாதம்; கால் தலை தளிர் பூ காய் கனி; வட்டம் நீளம் வெம்மை தண்மை; ஊண் தீன் ஆடல் பாடல் - என்பன மரபுப்பெயர். அன்றியும், பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் கருத்தா மிகுதி - என எண்காரணங்களால் வந்து அவற்றின் பயன்கொள்வன காரணப்பெயர் எனப்படும். தமன் நமன் நுமன் எமன் - எனச் சுற்றத்தால் வருபெயரும், அத்தி கோசத் தான் - எனக் குழுவால் வரு பெயரும், வில்லினன் பூணினன் - முதலிய பெயரும் பொருட் காரணப் பெயர்களாம். வெற்பன் பொருப்பன் - எனக் குறிஞ்சித்திணையால் வருபெயரும், மறவன் எயினன் - எனப் பாலைத்திணையால் வருபெயரும், ஆயன் அண்டன் என - முல்லைத்திணையால் வருபெயரும், ஊரன் உழவன் - என மருதத்திணையால் வருபெயரும், சேர்ப்பன் பரதவன் - என நெய்தல்திணையால் வருபெயரும், காவலூரான் கருவூரான் - என ஊரால் வருபெயரும், அருவாளன் சோழியன் - எனத் தேயத்தால் வருபெயரும், வானத்தான் விசும்பான் - என வானால் வருபெயரும், மண்ணகத்தான் பாதலத்தான் முதலிய பெயரும் இடக்காரணப் பெயர்களாம். பிரபவன் விபவன் என வருடத்தால் வரும் பெயரும், வேனிலான் காரான் எனப் பருவத்தால் வரு பெயரும், தையான் மாசியான் என மாதத்தால் வருபெயரும், ஆதிரையான் ஓணத்தான் என நாளால் வரு பெயரும் காலக்காரணப் பெயர்களாம். அலைகாதான் சுரிகுழலாள் - என உறுப்பால் வருபெயரும், நெடுங்கையன் செங்கண்ணன் - முதலிய பெயரும் சினைக் காரணப் பெயர்களாம். பெரியன் சிறியன் - என அளவால் வருபெயரும், அறிஞன் புலவன் -என அறிவால் வருபெயரும், அமுதனையான் விடமனையான் -என ஒப்பால் வருபெயரும், குறளன் கூனன் என வடிவால் வரு பெயரும், கரியன் சிவப்பன் என நிறத்தால் வருபெயரும், தேவன் மானுடன் எனக் கதியால் வருபெயரும், அந்தணன் அரசன் - எனச் சாதியால் வருபெயரும், சேரன் சோழன் எனக் குடியால் வரு பெயரும், ஆசிரியன் படைத்தலைவன் எனச் சிறப்பால் வரு பெயரும், நல்லன் தீயன் முதலிய பெயரும் குணக்காரணப் பெயர்களாம். ஓதுவான் ஈவான் - என ஓதல் ஈதலால் வரும் பெயரும், வாணிகன் தூதன் முதலிய பெயரும் தொழிற்காரணப் பெயர்களாம். வள்ளுவப்பயன் குயக்கலம் தொல்காப்பியம் - முதலியன கருத்தாகாரணப் பெயர். கமுகந்தோட்டம் காரைக்காடு - முதலியன மிகுதி காரணப் பெயர். எண்வகைக் காரணங்களால் காரணப்பெயர் வந்தவாறு காண்க. அன்றியும், பல காரணங்கள் வரினும், வரும் அக்காரணம் காட்டாது ஒன்றன் பெயரை ஒன்றற்கு ஆக்கி வருவன ஆகுபெயர் எனப்படும். புழுக்கப்பட்ட சோற்றைப் புழுக்கல் என்பது தொழிலாகு பெயர். புளியையுடைய மரத்தினைப் புளி என்பது சினையாகு பெயர். கார் நிறத்தையுடைய மேகத்தைக் கார் என்பது கு™வாகுபெயர். அன்றியும், பலகாரணங்களால் வந்தனவாகக் காட்டினும் அவற்றின் பயனைக் கொள்ளாது, இடுகுறியால் அக்காரணங் களைக் குறியாது, இதற்கு இது பெயர் எனக் குறித்து ஒருபொருளைத் தருவன இடுகுறிப்பெயர் எனப்படும். கறுப்பன் என்பது குணக்காரணப் பெயரும், அறுமுகன் என்பது சினைக்காரணப் பெயரும், கூத்தன் என்பது தொழிற் காரணப் பெயரும் ஆயினும், இவை முதலாயின இதற்கு இது பெயர் எனக் குறித்து மக்கட்காயினும் விலங்குகட்காயினும் சொல்லின் இடுகுறிப்பெயராம். இவை தனித்தும் தொகுத் தும் வழங்கும். கறுப்பன் கூத்தன் முதலியன தனித்தியல் இடுகுறிப் பெயராம். படை சேனை நாடு ஊர் முதலியன தொகுத்தியல் இடுகுறிப் பெயராம். இவ்விரு வகையாகும் இடுகுறிப்பெயர். அன்றியும் மலை கடல் நிலம் யாறு சோறு - என்பன இடுகுறிப் பெயர்; விள பல பனை - என்பன இடுகுறிச் சிறப்புப்பெயர்; பறவை அணி - என்பன காரணப் பொதுப்பெயர்; முள்ளி கறுப்பன் அந்தணன்- என்பன காரண இடுகுறிப்பெயர். (தொ.வி. 53, 54 உரை) பெயர்நிலைக் கிளவி - தத்தம் பொருள் உணர்த்தாது பெயர்ந்த நிலைமையை யுடைய சொல். எ-டு : ‘ஒள்வாள், உறைகழிப்பு அறியா வேலோன் ஊரே’ (புறநா. 323) என்புழி, வேலோன் என்பது வேலை யுடையோன் என்னும் பொருள் பெயர்ந்து ஒரு பெயர்த்தன்மை யாய் நின்றது. ‘செழுந்தா மரைஅன்ன வாட்கண்’ (சீவக. 8) என்புழி, வாட்கண் வாள்போன்ற கண் என்னும் பொருள் பெயர்ந்து, கண் என ஒரு பெயர்த்தன்மையாய் நிற்றலின் இதுவும் அது. (தொ. சொ. 449 நச். உரை) பெயராவன தனிப்பெயர் ஒட்டுப்பெயர் என இருவகைப் படும். அவற்றுள் தனிப்பெயர், பொருள்மேல் வருவனவும் தொழில்மேல் வருவனவும், என இருவகைப்படும். அவற்றுள் பொருள்மேல் வரும் தனிப்பெயர் சாத்தன் - தெங்கு - யானை - முதலியன. தெரிநிலைவினை ஒட்டுப்பெயராவன தொழிற் பெயரோடு ஒட்டி ஒருபொருட்குப் பெயராகி வருவன. அவை உண்டான் - தின்றான் - முதலியன. இவை வினைக் கருத்து உள்வழி வினைச்சொல்லாம்; பெயர்க்கருத்து உள்வழிப் பெயராம். குறிப்புவினை ஒட்டுப்பெயர்களாவன குழலன் - கோட்டன் - முதலியன. இவையும் வினைக்கருத்துள் வழி வினைச்சொல்லாம்; பெயர்க் கருத்துள்வழிப் பெயராம். இவற்றுள் தெரிநிலை வினைப்பெயர் அல்லாதன காலம் தோற்றா. (தொ. சொ. 68 தெய். உரை) ‘பெயர்நிலைக் கிளவியின் ஆகுந’ - வழங்கியவாறே கொள்வதல்லது இலக்கணத்தான் யாப்புறவு உடையவல்ல என்று கூறப்படும் ஐந்தனுள் ‘பெயர்நிலைக் கிளவியின் ஆகுந’ வும் ஒரு பகுதியாம். உயர்திணைப்பெயர், உயர்திணைமேல் வழங்கப்படுதல் இன்றியும் அமையும். நம்பி என்னும் உயர்திணைப்பெயர் ஓர்யானைமேலானும் ஒரு கோழிமேலானும் பிறவற்றின் மேலானும் நிற்கும். நங்கை என்பது ஒரு கிளியையும் உணர்த்தும். (தொ. சொ. 444 இள. உரை) ஒரு திணைப் பெயர் ஒரு திணைக்காய் வருவன; அவையாவன ஓர் எருத்தை நம்பி என்றலும் ஒரு கிளியை நங்கை என்றலும் ஆம். .பிறவுமன்ன. (தொ. சொ. 449 சேனா. உரை) தத்தம் பொருள் உணர்த்தாது பெயர்ந்த நிலைமையை யுடைய சொல்லான் வரும் செய்யுள். எ-டு : ‘ஒள்வாள், கறையடி யானைக் கல்லது உறைகழிப்பு அறியா வேலோன் ஊரே’ (புறநா. 323) என்புழி, வேலோன் என்பது வேலையுடையோன் என்னும் பொருள் பெயர்ந்து ஒருபெயர்த்தன்மையாய் நின்றது. ‘செழுந்தா மரையன்ன வாட்கண்’ (சீவக. 8) என்பதும் அது. (தொ. சொ. 449 நச். உரை) பெயர்ச்சொல் தன் பொருளொழியப் பிறிது பொருள்படும் என்றவாறு. ஒருசொல் இரண்டு பொருள்பட நின்றவழி, ஒரு பொருளை உணர்த்தும் இசை எஞ்சிநிற்குமன்றே? அஃது இசையெச்சமாகும். இசையெச்சத்தின் ஐந்துவகைகளுள் ‘பெயர்நிலைக் கிளவியின் ஆகுந’ ஒன்று. வேங்கை என்பது ஒரு மரத்திற்கும் புலிக்கும் பெயர்; அதுவுமன்றிக் ‘கை வேம்’ என்னும் பொருளும் பட்டது. இவ்வாறு ஒரு சொல்லினானே பிறிது பொருள் உணரின் அதனை உணர்த்தும் ஓசை எஞ்சி நின்றது. (தொ. சொ. 439 தெய். உரை) பெயர்ப் பயனிலை - பெயர் உருபும் விளியும் ஏலாது பிறிதொன்றனொடு தொடராது தனித்து நின்ற நிலையில் எழுவாய்வேற்றுமை யாய் அறுவகைப் பயனிலைகளைக் கொண்டு முடியும். பொருண்மை சுட்டல், வியங்கொள வருதல், வினைநிலை யுரைத்தல், வினாவிற்கு ஏற்றல், பண்பு கொள வருதல், பெயர் கொள வருதல் - என்பன அவை. பொருண்மை சுட்டல் : ஆ உண்டு என்பது. பொருண்மை யாவது பொருளின் தன்மை, அஃதாவது அப்பொருளின் சாதித்தன்மை. ஆ என்னும் பொருள் கெட்டதேனும் அவ்வா வினது சாதித்தன்மை எக்காலமும் கெடாது நிற்கும் என்ப தனை ஆஉண்டு என்ற தொடர் உணர்த்துகிறது. கட்புல னாகிய ஆ கெடவும், அச்சாதித்தன்மை கெடாது என்பது தோன்றப் ‘பொருண்மை சுட்டல்’ எனப்பட்டது. வியங்கொள வருதல் : ஆ செல்க என்பது. வினைநிலை உரைத்தல் : ஆ கிடந்தது என்பது. வினைநிலை யுரைத்தல் என்பது தன் தொழில்; வியம் கொள வருதல் என்பது மேல் தன்கண் தொழில் நிகழ்வதாக ஒருவன் அல்லது ஒன்று ஏவப்படுதல். ஆ செல்க - என வருக. வினாவிற்கு ஏற்றல் : ஆ யாது என்பது. பண்பு கொள வருதல்: ஆ கரிது என்பது. பெயர் கொள வருதல் : ஆ பல என்பது. வினைநிலை உரைத்தலும் பண்புகொள வருதலும் பெயர் கொள வருதலும் முடிக்கும் சொல்லாதலேயன்றி முடிக்கப் படும் சொல்லாதலும் உரிய. வியங்கோளும் வினாவும் வினைக் குறிப்பும் முடிக்கும் சொல்லாயன்றி வாரா. ஆ கிடந்தது, கிடந்தது ஆ : வினைநிலை உரைத்தல் ஆ கரிது, கரிது ஆ : பண்பு கொள வருதல் ஆ பல, பல ஆ : பெயர் கொள வருதல் ஆ செல்க, ஆ யாது, ஆ நன்று - இவை முடிக்கும் சொல்லா யல்லது முடிக்கப்படும் சொல்லாக வாரா. (தொ. சொ. 67 நச். உரை) பெயர்ப் பயனிலை ஆறனை மூன்றனுள் அடக்குதல் கூடாமை - பெயர்ப் பயனிலைகளாவன பொருண்மை சுட்டல், வியங் கொள வருதல், வினைநிலை உரைத்தல், வினாவிற்கு ஏற்றல், பண்புகொள வருதல், பெயர்கொள வருதல் - என்பன. இவற்றை வினை - வினா - பெயர் - என்னு மூன்றனுள் அடக்குவர். பொருண்மை சுட்டல் ஒரு பொருளின் உண்மைத் தன்மை நிலையை உணர்த்தலின் அது வினையுள் அடங்காது. வினைநிலை உரைத்தலும் பண்புகொள வருதலும் பெயர் கொள வருதலும் முடிக்கும் சொல்லாதலே யன்றி முடிக்கப் படும் சொல்லாதலும் உடைய. ஆதலின் மூன்றனுள் அடங்காது ஆறாக, முதல் வேற்றுமையின் முடிக்கும் சொற்கள் பிரித்துக் கூறப்பட்டன. (தொ. சொ. 66 சேனா. உரை) பெயர்ப்பயனிலை ஆறு ஆதல் - பொருண்மை சுட்டல் அப்பொருள்இயல்பு மாத்திரம் குறித்தலானும், வியம்கொள வருதல் அப்பொருண்மை புடை பெயர்தற்கு நிமித்தமாகி வருதலானும், வினைநிலை உரைத்தல் அப்பொருளின் புடைபெயர்ச்சி ஆகலானும், வினாவிற்கு ஏற்றல் அவ்வாறன்றி வினாவப்படும் நிலைமைய தாய் நிற்றலானும், பண்பு கொள வருதல் அப்பொருட்கண் உள்ளதொரு குணத்தைக் குறித்து நிற்றலானும், பெயர்கொள வருதல் அப்பொருண்மை முழுதும் உணரப் பிறிதொரு வாய்பாடாகி வருதலானும், வேறுவேறு வகுத்துக் கூறப் பட்டன. சாத்தன் தலைவனாயினான் - இரும்பு பொன்னாயிற்று - என்பன பொருளின் புடைபெயர்ச்சி ஆகலானும், ஒன்று ஒன்றாய்த் திரிதலாகிய வினையான் வருதலானும், வினைநிலை யுரைத்தலுள் அடங்கும். தலைவன் - பொன் - என்னும் பெயர்கள் எழுவாயும் அல்ல, பயனிலையும் அல்ல; தலைவ னாதல் பொன்னாதல் எனத் திரிபு குறித்து நின்றன; பெயர் குறித்து நின்றன எனப்படா. (தொ. சொ. 64 தெய். உரை) பெயர்ப்பயனிலைக்கும் குறிப்புவினைமுற்றிற்கும் வேறுபாடு - பெயர்ப்பயனிலை மூன்றிடத்தும் ஒப்ப வரும்; இடவேறுபாடு பற்றித் திரியாது. எ-டு : யான் பொன்னன், நீ பொன்னன், அவன் பொன்னன் - இப்பெயர்ப் பயனிலையின் பொருள் பொன்னன் என்று சொல்லப்படுபவன் - என்பது. யான் பொன்னினேன், நீ பொன்னினை - அவன் பொன்னினன் - எனச் சாரியை பெற்றும், பொன்னேன் பொன்னை பொன்னன் எனச் சாரியை பெறாதும் வருபவை குறிப்புவினை முற்றாம். இவற்றின் பொருள் பொன்னுடையே னாயினேன் - பொன் னுடையை ஆயினை - பொன்னுடைய னாயினான் - என்பன வாம். யான் கரியேன் - நீ கரியை - அவன் கரியன் - இவை சாரியை பெறாது வந்தன. (தொ. சொ. 214 ச. பால.) பெயர்ப்பெயர் - பெயர்ப்பெயரும் தொழிற்பெயரும் எனப் பெயர் இருவகைப் படும். அவற்றுள் பெயர்ப்பெயராவன ஒரு தொழிலான் பெயரன்றி, சாத்தன் - கொற்றன் - என அவ்வப்பொருட்கு இடுகுறியாய் வருவன. இவை காலம் தோன்றா. (சாத்தினை யுடையவன் சாத்தன், கொற்றத்தை யுடையவன் கொற்றன் - என முறையே இவை காரணம் கருதாது இடுகுறியளவாய் இடப்பட்ட இயற்பெயர் என்க.) (தொ. சொ. 71 கல். உரை) பெயர் பொருள் ஆதி ஆறும் தொடர்தல் - ‘பொருள் இடம் காலம்....... தொடர்ந்த பெயர்’ காண்க. பெயர் பொருளொடு புணராது வருதல் - சில பொருட்பெயர் சுட்டுப்பொருளை உணர்த்தா ஆயினும், தாம் சுட்டுவதொரு பொருளிடத்து வேறுபட நில்லாமல் அப் பொருளையே உணர்த்தி நிற்றல். எ-டு : ‘பொற்பூண் சுமந்த புணர்மன்முலைக் கோடு போழ நற்பூங் கழலான் இருதிங்கள் நயந்த வாறும் கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான் வெற்பூ டறுத்து விரைவின்னெறிக் கொண்ட வாறும்’ (சீவக. 19) இதன்கண், நற்பூங்கழலான் - சீவகன், ‘கற்பாடு........... தோளான்’ என்ற தொடர் வேறு பொருள் தாராது ‘அவன்’ எனச் சுட்டுப் பொருட்டாகவே நின்றவாறு. (தொ. சொ. 37 நச். உரை) ‘................... கூத்தப் பெருஞ்சேந்தன் வைகலும் ஏறும் வயக்களிறே - கைதொழுவல் காலேக வண்ணனைக் கண்ணாரக் காணஎம் சாலேகம் சார நட’ இதன்கண், ‘காலேக வண்ணன்’ என்ற தொடர் கலவைச் சந்தனம் பூசியவன் என்று பொருள்படும்; இப்பாடலில் அப்பொருள் தாராது கூத்தப் பெருஞ்சேந்தனையே குறித்து அவன் என்னும் சுட்டுப்பொருளதாகவே நின்றது. (நச். உரை) பெயர் வினை இடை உரி : முறைவைப்பு - ‘இடையுரி அடுத்து நான்குமாம்’ என்னாது ஒன்றாக ஓத அமையும் பிற எனின், பெயர்சொல் பொருளை விளக்குத லானும், வினைச்சொல் பொருளது புடைபெயர்ச்சியை விளக்குதலானும் அவற்றை முன் ஓதி, இடைச்சொல் அவ் விரண்டற்கும் விகுதி - வேற்றுமை - உவமை - சாரியை - யாகிய உருபுகள் ஆகியும் சில பெயர்வினைகள் ஆகியும் வருதலானும் தெரிநிலை - தேற்றம் - முதலிய பொருண்மை விளக்குதலானும், உரிச்சொல்லும் ஒருவாற்றான் பெயரே எனினும் பொருளை விளக்கலும் பெரும்பான்மையும் உரு பேற்றலும் இன்றிச் சில வினைபோல வரலானும் இவற்றை அவற்றின் பின் ஓதினார் என்க. அன்றியும், இடையும் உரியும் பெயர்வினை போல இலக்கணம் முற்றும் ஏற்றுத் திணைபால்இடங்களை விளக்கித் தனி நடவா ஆகலானும் அவற்றை வேறு ஓத வேண்டும் என்பது. (இ.வி. 171. உரை) பெயர் வினை என்ற சொல் வரையறை - ஒருவன் ஒருத்தி என்ற அளவிலே அவர் கைகால் முதலிய அகத்துறுப்பும் ஆடை ஆபரணம் முதலிய புறத்துறுப்பும் அடங்குதல் போலப் பெயர்வினை என்ற அளவிலே அவற்றின் அகத்துறுப்பாகிய விகுதி முதலிய இடைச்சொற்களும் புறத் துறுப்பாகிய வேற்றுமையுருபு முதலிய இடைச்சொற்களும், அடங்குதலானும், உரிச்சொல் ‘பல்வகைப் பண்பும் பகர் பெயராகி’ எனச் சொல்லுதலால் பெயருள் அடங்குதலானும், திசைச்சொல்லும் வடசொல்லும் இவற்றுள்ளே யாதாயினும் ஒன்றாய் அடங்குதலானும் இவற்றை அடக்கி நின்ற தலைமை யும் சிறப்பும் தோன்றப் ‘பெயர் வினை என இரண்டாகும்’ என வரையறுத்து ஓதினார். (நன். 270 இராமா.) ‘பெயர்வினை யிடத்து னளரய ஈற்றயல்’ ஆகாரம் ஓகாரம் ஆதல் - பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் னகார ளகார ரகார யகார ஈற்றயல் நின்ற விகுதி முதல் ஆகாரம் ஓகாரம் ஆதலும் செய்யுளிடத்து உரித்து. எ-டு : ‘வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர் யார்கொல் அளியர் தாமே’ (குறுந். 7) ‘பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்’ (புறநா. 2) னகார ஈற்றுள், செக்கான் - வண்ணான் - என்புழி ஆகாரம் ஓகாரம் ஆகா. ஆகாரமேயன்றிக் கிழவன் - கிழவோன் என அகரம் ஓகாரம் ஆதலும் கொள்க. ‘பழமுதிர் சோலை மலைகிழ வோனே’ (முருகு 317) என வரும். (நன். 353 சங்.) பெயர்வினையெச்சங்கள் எதிர்மறையில் பொருள்நிலை திரியாமை - எதிர்மறையில் வினைக்குரிய நிகழ்ச்சி இல்லையெனினும், பெயரெச்சமும் வினையெச்சமும் தத்தம் எச்சமாகிய பெயரை யும் வினையையும் கொண்டு முடியும் நிலையின் வேறுபடா. மறைவினையும் விதிவினையோடு ஒக்கும் என்பதே கருத்து. (பொருள் நிலையாவது தத்தம் எச்சமாகிய பெயரையும் வினையையும் கொண்டு முடியும் நிலை.) எ-டு : உண்ணாச் சோறு; உண்ணாது வந்தான். (தொ. சொ. 236 சேனா. உரை) பெயர் வெளிப்படத் தோன்றி நிலையல் - பெயர் எழுவாயாக வெளிப்படையாக இருந்து பொருண்மை சுட்டல் முதலிய அறுவகைப் பயனிலையையும் கொண்டு முடிதல் செவ்விது என்ப. எனவே, பெயராகிய எழுவாய்- வேற்றுமை வெளிப்படாது நின்று பயனிலை கோடலும் செவ்விதன்று ஆயினும் உரித்து என்றவாறு. எ-டு : ‘கருவூர்க்குச் செல்வையோ, சாத்தா?’ என்றவழி, யான் செல்வல் - செல்வல் - என்றும்; ‘யான் எவன் செய்வல்?’ என்றவழி, நீ இது செய் - இது செய் - என்றும்; ‘இவன் யார்?’ என்றவழி, இவன் படைத் தலைவன் - படைத்தலைவன் - என்றும் முறையே யான் - நீ - இவன் - என்னும் எழுவாய்வேற்றுமை வெளிப்படையாகவும் வெளிப்படாதும் நின்று பயனிலை கொண்டவாறு. (தொ. சொ. 69 நச். உரை) பெயர்வேற்றுமை ஏனைய உருபுகளை ஏலாமை - பெயர்வேற்றுமையும் ஏனை யுருபுகளையும் ஏற்குமால், அஃதொழித்தது என்னையோ எனின், பெயர் எழுவாயுருபு ஆவது தன் பயனிலை தோன்றி நின்ற காலையன்றே? ஆண்டுப் பிற உருபுகளை ஏலாது; ஏற்பின் தன் பொருண்மை யும் ஏற்கும் உருபின் பொருண்மையும் ஒருங்குடைத்தாதல் வேண்டும். அதனால் பயனிலை கொள்ளாது நின்ற பெயரே உருபுகளை ஏற்கும் எனக் கொள்க. (நன். 292 மயிலை.) பெயரிடத்து விகுதி ஆ ஓஆதல் - ஆன் ஆள் ஆர் ஆய் - ஈற்றுக் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் தம் விகுதியிலுள்ள ஆகாரம் ஓகாரமாகப் பெறுதலு முண்டு. எ-டு : வில்லான் - வில்லோன், தொடியாள், தொடியோள், நல்லார் - நல்லோர் (குறுந். 7); செப்பாதாய் - செப்பாதோய். (நற். 70) சிறுபான்மை கிழவன் ‘கிழவோன்’ எனவும், கிழவி ‘கிழ வோள்’ எனவும் அகரமும் இகரமும் ஓகாரமாகத் திரிதலு முண்டு. (தொ. சொ. 189 தெய். உரை) (197 சேனா. உரை) சேரமான் மலையமான் - முதலியன ஈறு திரியாதன. (தொ. சொ. 195 சேனா. உரை) உழவன் கிழவன் - என்பன உழவோன் கிழவோன் என்றாம். அழாஅன் புழாஅன் - என்பன ஆகாரம் ஓகாரமாகத் திரிவன அல்ல. (தொ. சொ. சேனா. உரை) பெயரியல் - இது தொல்காப்பியச் சொற்படலத்து ஐந்தாம் இயல். தொடர் மொழியுள் அல்வழி பற்றியன கிளவியாக்கத்துள்ளும், வேற்றுமை பற்றியன அடுத்த மூன்று இயல்களுள்ளும் கூறப் பட்டபின், தனிமொழி இலக்கணத்துள் பெயர் பற்றிய செய்தி கூறும் இயல் பெயரியலாம். இவ்வியலுள் முதல் 5 சூத்திரங்கள் சொற்களின் பொதுவிலக்கணம்; 6, 7 பெயர்ச் சொல் வகையும் பெயர் இயல்பும்; 8 - 12 உயர்திணைப் பெயர்கள்; 13 - 17 அஃறிணைப் பெயர்கள்; 18- 39 விரவுப் பெயர்கள்; 40 - 43 புறநடைச் செய்திகள். இவ்வாறு பெயரியல் 43 நூற்பாக்களான் அமைந்துள்ளது. பெயரின் தோன்றும் பாலறி கிளவி - படர்க்கைப் பெயர்களில் ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் - எனத் திணைபால் பாகுபாடுகள் தோன்றும். தன்மைப்பெயர் உயர்திணைக்கே உரித்து. அதன்கண் ஆண் பெண் பாகுபாடு காணப்படமாட்டாது; பன்மை ஒருமைப் பாடுபாடே காணலாம். முன்னிலைப்பெயர் இருதிணைக்கும் பொதுவானது. அதன்கண் திணைப் பாகுபாடோ பால்பாகுபாடோ காண்டல் இயலாது; பன்மை ஒருமைப் பாகுபாடே காணலாம். எ-டு : அவன் வந்தான், அவள் வந்தாள், அவர் வந்தார், அது வந்தது, அவை வந்தன; யான் வந்தேன், யாம் வந்தேம்; நீ வந்தாய், நியிர் வந்தீர். (தொ. சொ. 11 நச். உரை) பெயரின் ஆகிய தொகை - தொகைகள் இருவகையின. பெயரொடு பெயர் தொக்க தொகை: யானைக்கோடு; பெயரொடு வினைதொக்க தொகை: நிலங்கடந்தான். பெயரொடு பெயர் தொக்க தொகை ஒரு பெயர்ச்சொல் நீர்மைத்தாய், ஐ முதலிய உருபேற்றும் பயனிலைகொண்டு முடிந்தும் வரும். எ-டு : யானைக்கோட்டை, யானைக்கோட்டால், யானைக் கோட்டுக்கு, யானைக்கோட்டின், யானைக் கோட்டது, யானைக்கோட்டின்கண்; யானைக்கோடு கிடந்தது. பெயரொடு வினை தொக்க தொகை முடிக்கும் சொல்லாய், மற்ற பெயர்க்குப் பயனிலையாகி வரும். எ-டு : திருமால் நிலங்கடந்தான், முருகன் குன்றெறிந்தான். பெயரொடு பெயர் தொக்க தொகை ஒரு பெயர்ச்சொல் நீர்மைத்தாவது போலவே, பெயரொடு வினை தொக்க தொகை ஒரு வினைச்சொல் நீர்மைத்து. (தொ. சொ. 68 நச். உரை) பலபொருள் குறித்த பெயர்களாகிய யானை குதிரை போல்வன யானைகுதிரை உள, செல்க, வந்தன, கரிய, யாண்டைய, பல - என ஆறு பெயர்ப்பயனிலைகளையும் கொண்டு வரும். ஒரு பொருட்கண் வரும் பலபெயர்களில் இறுதிப்பெயரே ‘ஆயன் சாத்தன் வந்தான்’ என வினை கொள்ளும். ‘யானை குதிரை உள’ என்புழி இரண்டு பெயர்கள் மேலும் பயனிலை ஒத்து வரும். (தொ. சொ. 65 தெய். உரை) பெயரின் இரு பொதுவகை - ஆக்க ஆகும் பெயர் ஆகுபெயர் என்பதாயிற்று. ஆகவே இயற்பெயரும் ஆகுபெயரும் என எல்லாப் பெயரும் இரு கூற்றவாம் என்பதும் ஆயிற்று. (நன். 289 மயிலை.) ‘பெயரினும் தொழிலினும் பிரிபவை’ - இரு பால்களுக்கும் பொதுவான சொல்லாய் உயர்திணைக் -கண்ணும் அஃறிணைக்கண்ணும் பெயரினானும் தொழிலி னானும் பொதுமையிற் பிரிந்து ஆண்பாற்கும் பெண்பாற்கும் உரியனவாக வருவன பெயரினும் தொழிலினும் பிரிபவை யாம். எ-டு : பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்கள் உளர் - பெயரிற் பிரிந்த ஆண் ஒழி மிகுசொல். வடுக அரசர் ஆயிரவர் மக்களை உடையர் - பெயரிற் பிரிந்த பெண் ஒழி மிகுசொல். இவர் வாழ்க்கைப்பட்டார் - தொழிலிற் பிரிந்த ஆண் ஒழி மிகுசொல். இவர் கட்டில் ஏறினார் - தொழிலிற் பிரிந்த பெண் ஒழி மிகுசொல். இவை உயர்திணைக்கண் பெயரானும் தொழிலானும் பொதுமையினின்று பிரிந்தன. நம்பி நூறு எருமை யுடையன் - பெயரிற் பிரிந்த ஆண்ஒழி மிகுசொல். நம் அரசன் நூறு யானை யுடையன் - பெயரிற் பிரிந்த பெண் ஒழி மிகுசொல் யானை ஓடிற்று - தொழிலிற் பிரிந்த பெண் ஒழி மிகுசொல். யானை நடந்தது - தொழிலிற் பிரிந்த ஆண் ஒழி மிகு சொல் இவை அஃறிணைக்கண் பெயரானும் தொழிலானும் பொதுமையிற் பிரிந்தன. (தொ. சொ. 50 நச். உரை) இப்பெற்றம் அறம் கறக்கும் - அஃறிணைக்கண் தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். இப்பெற்றம் உழவொழிந்தன - அஃறிணைக்கண் தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். (தொ. சொ. 50 இள., கல். உரை; ப. உ) இவ்வூர்ப்பெற்றம் அறம் கறக்கும் என்புழிப் பெற்றம் என்னும் பொதுப்பெயர் கறக்கும் என்ற சிறப்புவினையான் பெண் பாலைச் சுட்டியது; இப்பெற்றம் உழவொழிந்தன என்புழி, அப்பொதுப்பெயர் உழவு என்னும் சிறப்புவினையான் ஆண்பாலைச் சுட்டியது. ஆதலின், இவை சிறப்புவினையானன்றித் தாமாகவே ஆண்மை பெண்மை சுட்டியன அல்ல என்று உரையாசிரியரை மறுப்பார் சேனாவரையர். (தொ. சொ. 50 சேனா. உரை) பொதுமையில் பிரியும் பொருள்களை எண்ணுங்காலும் தம்முள் மயங்குதல் கூடாத வகையில் பொருளானும் தொழி லானும் எண்ணுக. எ-டு : முனிவரும் அந்தணரும் சான்றோரும்; பாணரும் கூத்தரும் பொருநரும் விறலியும்; முத்தும் மணியும் பவளமும் பொன்னும்; மருதும் புன்னையும் ஞாழலும் - இவை பெயர் எண்ணப்பட்டன. ஆடுவாரும் பாடு வாரும் நகுவாரும்; எய்வாரும் எறிவாரும் வெட்டு வாரும் குத்துவாரும் - இவை வினை எண்ணப் பட்டன. (தொ. சொ. 49 தெய். உரை) பெயரின்கண்ணும் தொழிலின்கண்ணும் ஒன்றற்கு உரியவாய்ப் பிரிந்துவரும் ஒருசார்ச்சொற்கள். அவையெல்லாம் வழக்கு வழிபட்டன ஆதலின் மயங்கல் கூடா. அணி என்பது இருபாற்கும் பொதுவாயினும், தொடி - மேகலை - சிலம்பு - முதலாயவை மகளிர்க்கே உரியன; கழல் - முடி - தோள்வளை - முதலாயவை ஆடவர்க்கே உரியன. இவ்வாறு அவை வருதல் வழக்குவழிப் பட்டன. தொழிலின்கண் அவை வருமாறு : மணந்துகோடல் வினை இருபாற்கும் பொதுவாயினும் வரைதல் ஆடவர்க்குரிய செயலாகவும், வாழ்க்கைப்படுதல் மகளிர்க்குரிய செயலாகவும் கூறுதல் வழக்குவழிப் பட்டன. ஆதலின், இம்மகளிர் தொடி செறித்தார், இவ்வீரர் கழல் யாத்தனர் என்க. (தொ. சொ. 50 ச. பால) பெயருக்குச் செவ்விய நிலை - எவ்விடத்துப் பெயரும் பயனிலை கொள்ளும் இயல்பின்கண் நிற்றல் செவ்விது. பயனிலை ஏற்றல் செவ்விது எனவே, உருபேற்றலாகிய மற்றோர் இலக்கணத்தின்கண் செவ்விய ஆகாதன சில பெயர்களும் உள. நீயிர் என்னும் முன்னிலைப் பன்மைப்பெயர் நீயிரை என உருபேலாது. இது நும் என்னும் பெயர் அல்வழிப்புணர்ச்சித் திரிபால் உண்டாய பெயர். நீயிர் என்னும் பெயர் நும்மை என உருபேற்குமால் எனின், பிற சந்தித்திரிபு போல நிலைமொழி தன்நிலை தோன்ற நில்லாமல் திரிபினொடு பிறிதோர் பெயராகி (நிலைமொழியாக) நிற்றலின் நீயிர் என்பது வேறொரு பெயர் எனக் கொள்ளவேண்டியது போலும். இந்நிகரன ஓருருபும் ஏலாதன. அவ்வாய்க் கொண்டான் என்பது அவ்வாய்க்கட் கொண்டான் என உருபு ஏலாதது. (தொ. சொ. 69 கல். உரை) பெயரெச்ச இலக்கணம் - செய்த செய்கின்ற செய்யும் - என்னும் மூவகைப்பட்ட சொல்லின்கண் முறையே இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலமும் செயலும் தோற்றி, வினைமுற்றுக்கு வேண்டும் பால் ஒன்றும் தோன்றாது, அப்பாலுடனே செய்பவன் - கருவி - நிலம் - செயல் - காலம் - செய்பொருள் - என்னும் அறு வகைப் பொருட் பெயரும் ஒழிய நிற்பன பெயரெச்ச வினையும் பெயரெச்சக் குறிப்பு வினையுமாம். எ-டு : உண்ட - உண்ணாநின்ற - உண்ணும் - என்னும் வாய் பாட்டுப் பெயரெச்சங்களைச் சாத்தன் - கலம் - இடம் - ஊண் - நாள் - சோறு - என்னும் அறுவகைப் பெயரொடும் முடிக்க. ‘வேலாண் முகத்த களிறு’ (குறள். 500), மூவிலைய வேல், உள்ள பொருள்; உண்ணாத சோறு, இல்லாத பொருள் - இவை குறிப்பும் எதிர்மறையுமாகிய பெயரெச்சம். (நன். 340 சங்.) பெயரெச்சம் என்றது வினைமுற்றாத குறைச்சொல்லாய்த் திணைபால்இடங்களுக்குப் பொதுவாகிப் பெயர் எஞ்ச நிற்பதாம். வனைந்த குடம் என்புழிக் குடம் காரியமாயும் நிமித்தமாயும் நிற்றலின் இவ்வெச்சம் காரணப் பொருட்டா யும் காரியப் பொருட்டாயும் நின்றது. (நன். 340 சங்.) செய்த செய்கின்ற செய்யும் - என்னும் முறையே முக்காலமும் காட்டும் வாய்பாட்டான் புலப்பட்டுத் தொழில் முதனிலை எட்டனுள் இன்னதற்காக - இது பயனாக - என்னும் இரண் டும் ஒழித்து வினைமுதல் முதலாயின ஏனை அறுவகைப் பொருள்களையும் உணர்த்தும் பெயர்களொடு முடியும் இயல்பினையுடையது பெயரெச்ச வினைச்சொல்லாம். எ-டு : ஆடிய சாத்தன் - வென்ற வேல் - புக்க இல் - போயின போக்கு - வந்த நாள் - உண்ட சோறு - என முறையே வினைமுதற்பொருளும் கருவிப்பொருளும் நிலப் பொருளும் வினைப்பொருளும் காலப்பொருளும் செயப்படுபொருளும் ஆகிய பொருட்பகுதி ஆறனையும் பற்றி வரும் பெயர்ச் சொற்களொடு முடிந்தவாறு காண்க. செய்கின்ற செய்யும் - என்னும் இரு வாய்பாட்டையும் ஒட்டிக் கொள்க. அரசன் ஆ கொடுத்த பார்ப்பான் - ஆடை ஒலித்த கூலி - என இன்னதற்காக - இது பயனாக - என இரண்டும் பற்றி வரும் பெயரும் கொள்க. இவற்றுக்கும் ஏனை இருவாய்பாடு களையும் ஒட்டுக. (இ.வி. 243 உரை) பெயரெச்சத்தை இடத்திற்கும் பொருட்கும் ஏற்ப விரித்துரைக்குமாறு - நோய் தீரும் மருந்து - நோயைத் தீர்த்தற்கு ஆகும் மருந்து என விரியின்,‘நோயைத் தீர்க்கும் மருந்து’ என்பதன் விகாரமாய்த் ‘தீரும் மருந்து’ கருவி என்று நின்றதெனின், இம்மருந்து நோயைத் தீர்க்கும் என விரிதலின், வினைமுதற்கிளவி. ‘நின்முகம் காணும் மருந்தினேன்’ - நின்முகம் காணுதலை மருந்தாக உடையேன் என விரியின், காட்சியை மருந்தாக உருவகம் செய்தமையின், ‘காணும் காட்சி’ என வினைப் பெயர் கொண்டது. நிலப்பொருளும் வினைப்பொருளும் காலப்பொருளும் செயப்படுபொருளும் ஆகிய பொருட்பகுதி. ஆறு சென்ற வியர் என்பது ஆற்றின்கண் சென்றமையான் தோன்றிய வியர் என விரியின், காரண காரியப் பொருட்டாய்க் கருவியின்கண் அடங்கும். ‘உண்ட இளைப்பு’ என்பதும் அது. ‘பொச்சாவாக் கருவி’ (குறள். 537) என்பது பொச்சா வாமையை யுடைய மனம் என விரியின் செயப்படுபொருள் ஆம். நிலம் பூத்த மலர் என்பது நிலம் பொலிவுறுதலைச் செய்த மலர் - என விரியின் செயப்படுபொருள் ஆம்: நிலத்தின்கண் பொலிவு பெற்ற மலர் என விரியின் வினை முதற்கிளவி. ‘குண்டுகனை பூத்த வண்டுபடு கண்ணி’ (முருகு. 199) என்பது பூத்த பூக்களையுடைய கண்ணி என விரியின் கருவியாம். (தொ. சொ. 235 ச. பால.) பெயரெச்சப் பொருள்கள் - பெயரெச்சம், நிலன் - செயப்படுபொருள் - காலம் - கருவி - வினைமுதல் - வினை - என்ற அறுபொருட்கும் உரித்தாய் வரும். எ-டு : வாழும் இல், கற்கும் நூல், துயிலும் காலம், வனையும் கோல், ஓதும் பார்ப்பான், உண்ணும் ஊண் என முறையே காண்க. காரணத்தைக் கருவிக்கண்ணும், காரியத்தை ஒன்றென முடித்தற்கண்ணும் அடக்கலாம். (தொ. சொ. 234 சேனா.) (தொ. சொ. 236 நச். உரை) பெயரெச்சம் - பெயரெச்சம் வினைச்சொல் வகைகளுள் ஒன்று. ஒரு பெயரைக் கொண்டு முடிந்தாலன்றித் தன்பொருள் நிறைவு எய்தாத, இருதிணை ஐம்பாற் பொதுவினை பெயரெச்சமாம். பெயரெச்சம் நிலம் - பொருள் - காலம் - கருவி - எழுவாய் - தொழில் - என்னும் அறுவகைப் பெயரையும் கொண்டு முடியும். பெயரெச்சம் இறந்தகாலத்துச் செய்த என்னும் வாய்பாட்டானும், நிகழ்காலத்தும் எதிர்காலத்தும் செய்யும் என்னும் வாய்பாட்டானும் அமையும். நிகழ்காலத்துச் செய்யாநின்ற செய்கின்ற - செய்கிற - என்ற வாய்பாடுகளும், எதிர்காலத்துச் செய்யாநிற்கும் என்ற வாய்பாடும் உள. அவை வருமாறு. நிலப்பெயர் கொண்டு முடிதல் - புக்க இல், வாழும் இல். பொருட்பெயர் கொண்டு முடிதல் - கற்ற நூல், கற்கும் நூல். காலப்பெயர் கொண்டு முடிதல் - வந்த நாள், துயிலும் காலம். கருவிப்பெயர் கொண்டு முடிதல் - வென்ற வேல், வனையும் கோல். வினைமுதற்பெயர் கொண்டு முடிதல் - ஆடிய கூத்தன், ஓதும் பார்ப்பான். வினைப்பெயர் கொண்டு முடிதல் - போயின போக்கு உண்ணும் ஊண். இவற்றுள் வினைமுதற்பெயரைக் கொண்டு முடிதல் ஒழித்து ஏனைய ஐவகைக்கும் அவன் புக்க இல் - அவன் கற்ற நூல் - அவன் வந்த நாள் - அவன் வென்ற வேல் - அவன் போயின போக்கு - அவன் வாழும் இல் - என்றாற்போல வினைமுதற் பொருள் முன் வந்தே பின்வரும் வினையொடு முடிந்து, ‘அவன் புக்க இல் சேயது’ என்றாற் போலச் சொற்றொடர் அமைதல் வேண்டும். வினைமுதற்பெயரைக் கொண்டு முடிந்தது பெயரெச்சமாயின், பெயரை அடுத்து வினைமுற்று வந்து ‘ஆடிய கூத்தன் போயினான்’ என்றாற்போலச் சொற்றொடர் அமையும். புக்க இல் எனவும், புகாநின்ற இல் - புகுகிற இல் - புகுகின்ற இல் - எனவும், புகும் இல் - புகாநிற்கும் இல் - எனவும் இவ்வாறு வரும் பெயரெச்ச வாய்பாட்டு வேற்றுமைகளும் கொள்ளப் படும். ‘நோய் தீர்க்கும் மருந்து’ - நோய் தீர்தற்குக் காரணமாகிய மருந்து என வரும் காரணம் கருவிக்கண் அடங்கும். ‘நின்முகம் காணும் மருந்தினேன்’ (கலி. 60) - நின் முகத்தைக் காண்டல் காரணமாக அதன் காரியமாகப் பிறந்த அருளை மருந்தாதல் தன்மையாக உடையேன் - என வரும் காரியம் ஒன்றென முடித்தலான் கொள்ளப்படும். சிறந்த இவள் - யான் சிறத்தற்குக் காரணமாகிய இவள்; (புறம் 71) ‘நிலம் பூத்த மரம்’ (கலி. 27) - நிலம் பொலிவு பெறுதற்குக் காரணமாகிய மரம் - என இவை காரணத்தின்கண் அடங்கும். ஆறு சென்ற வியர் - ஆறு சேர்தலான் (வழி நடத்தலான்) வரும் காரியமாகிய வியர்வை - எனக் காரியத்தின்கண் அடங்கும். களிறு மிதித்த நீர் (குறு. 52) - களிறு அழுந்த அடிவைத்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் தங்கிய நீர்; எள் ஆட்டின எண்ணெய் - எள் ஆட்டியதன் காரியமாகக் கிட்டிய எண்ணெய்; உண்ட எச்சில் - உண்டதன் காரியமாக எஞ்சி நிற்பது - என்பன காரியத்தின்கண் அடங்கும். ‘சுனைப் பூத்த வண்டு படு கண்ணி’ (முருகு. 199) - சுனைப் பூத்த பூவான் இயன்ற வண்டுபடு கண்ணி; நூலாக் கலிங்கம் - நூலாத பட்டினால் இயன்ற ஆடை; பூவுக்கும் கண்ணிக்கும், நூலுக்கும் ஆடைக்கும் இடையே உள்ள ஒற்றுமைநயம் பற்றிய இவை செயப்படுபொருட்கண் அடங்கும். ‘பொச்சவாக் கருவி’ (கு. 537) - மறவாமையாகிய கருவி; இது கருவிக்கண் அடங்கும். அரசன் ஆ கொடுத்த பார்ப்பான் - அரசன் ஆ கொடுக்கும் பார்ப்பான் - கொடுத்தற்காக வரவழைக்கப்பட்ட பார்ப்பான்; ஆடை ஒலித்த கூலி, ஆடை ஒலிக்கும் கூலி ; ஒலித்தற்காகக் கொடுக்கப்பட்ட பயனாகிய கூலி ; இவை இரண்டு திறமும் முறையே இன்னதற்கு - இதுபயனாக - என்னும் பொருட்கண் சிறுபான்மை வந்த பெயரெச்சங்கள். பழம் உதிர்ந்த கோடு, பழம் உதிரும் கோடு - சிறுபான்மை தீர்தல் பொருண்மைக்கண் பெயரெச்சங்கள் வந்தன. செய்த என்னும் பெயரெச்சக் குறிப்பாக இன்ன - அன்ன - என்ன - கரிய - செய்ய - முதலாயினவும் கொள்ளப்படும். எ-டு : ‘இன்ன தன்மையின் அருமையின்’ (சீவக. 2754) ‘அன்ன தன்மையும் அறிந்தீயார்’ (புற. 136) ‘என்ன கிளவியும் பண்பின் தொகையே’ (சொ. 416) ‘கரிய மலர் நெடுங்கண்’, ‘செய்ய கோல்’. (தொ. சொ. 236 நச். உரை) உண்ணும் - உண்ட - என்ற இரண்டற்கும் மறை உண்ணா; உண்ட என்பதன் மறை உண்ணாத. இவ்வாறு வரும் செய்யா - செய்யாத - என்ற மறைவாய்பாடுகளும், நிலன் - பொருள் - காலம் - கருவி - வினைமுதற்கிளவி - வினை - என்ற அறு வகைப் பெயரையும் கொண்டு முடியும். (தொ. சொ. 238 நச். உரை) கரிய சாத்தன், செய்ய சாத்தன் - நல்ல சாத்தன், பொல்லாச் சாத்தன் - என வரும் பெயரெச்சக் குறிப்பும் மறை விகற்பமும் கொள்ளப்படும். (கரிய : மறைவிகற்பம் செய்ய; நல்ல : எதிர்மறை பொல்லா) ( நச். உரை) உண்ணா - உண்ணாத - என்பன உண்ட - உண்ணும் - என்ற இரண்டற்கும் எதிர்மறை என்பர் சேனாவரையர். (236 உரை) ஆ கொடுக்கும் பார்ப்பான் : ஆ கொடுப்பக் கொள்ளும் பார்ப்பான் - எனக் கொள்ளும் என்பதன் வினைமுதல் பார்ப்பான் என்பது. (தொ. சொ. 229 தெய். உரை) உண்ணா என்பதே உண்ட, உண்ணும் என்பவற்றின் மறை. (தொ. சொ. 238 கல். உரை) செய்த செய்கின்ற செய்யும் - என்னும் மூவகைப்பட்ட சொல்லின்கண் முறையே இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலமும் செயலும் தோற்றி, வினைமுற்றுதற்கு வேண்டும் பால் ஒன்றும் தோன்றாது, அப்பாலுடனே செய்பவன் - கருவி - நிலம் - செயல் - காலம் - செய்பொருள் - என்னும் அறுவகைப் பொருட் பெயரும் ஒழிய நிற்பன பெயரெச்ச வினை வினைக் குறிப்புகளாம். அவை வருமாறு : உண்ட, உண்ணாநின்ற, உண்ணும் சாத்தன் - கலம் - இடம் - ஊண் - நாள் - சோறு எனவும், ‘வேலாண் முகத்த களிறு’ (கு. 500), ‘மூவிலைய வேல்’ உள்ள பொருள் - எனவும், உண்ணாத சோறு, இல்லாத பொருள் - எனவும் வரும். இவை முறையே தெரிநிலையும் குறிப்பும் ஆகிய உடன்பாடும் எதிர்மறையும் ஆவன. செய்வது ஆதி அறுபொருட் பெயரில் சில குறைந்தும், இன்னதற்கு - இது பயன் - என்னும் இரு பொருட்பெயரும் பிறபெயரும் கூடியும், பெயரெச்சம் எஞ்சநிற்பதும் கொள்ளப் படும். வருமாறு : ஆடின கொடி, துஞ்சின கொடி - இவை செயப்படுபொருள் குன்றி நின்றன. களை கட்ட பயிர், களை கட்ட கூலி - இவை இன்னதற்கு - இதுபயன் - என்னும் இருபெயரும் எஞ்சிநின்றன. உண்ட இளைப்பு, குடிபோன ஊர், பொன் பெரிய நம்பி - இவை பிற பெயர்கள் எஞ்சநின்றன. வினைத்தொகையினைப் பெயரெச்சவினையுள் அடக்கி, அடுகளிறு - கோடு - களம் - போர் - நாள் - கந்து - எனச் செய்வது ஆதி அறுபொருட் பெயரும் முடிக்கும் சொல்லாகக் கொள்க. (நன். 340 சங்.) செய்யும் என்னும் பெயரெச்சம் ஈற்றயல் உயிர்மெய் கெட்டு வாவும் புரவி ‘வாம்புரவி’ என வருதலும் காண்க. செய்யுளுள் செய்யும் என்பது செய்யுந்து எனத் திரிதலும் காண்க. எ-டு : ‘நீர்க்கோழி கூப்பெயர்க்கும்’ என்னும் செய்யுமென் எச்சம் ‘கூப்பெயர்க்குந்து’ என உம் ஈறு ‘உந்து’ ஆதல் காண்க. (புறநா. 395) (நன்.341 சங்.) பெயரெச்சம் கொண்டு முடியும் பெயர்கள் - பெயரெச்சம், நிலப்பெயர் - பொருட்பெயர் - காலப்பெயர் - கருவிப்பெயர் - வினைமுதற் பெயர் - வினைப்பெயர் - இவற்றைக் கொண்டு முடியும். முறையே வாழ்ந்த இல், வாழும் இல்; கற்ற நூல், கற்கும் நூல்; ஓதிய காலம், ஓதும் காலம்; வனைந்த கோல், வனையும் கோல்; ஓதிய பார்ப்பான், ஓதும் பார்ப்பான்; உண்ட ஊண், உண்ணும் ஊண் - எனக் காண்க. (தொ. சொ. 236 நச். உரை) வந்த தன்மை ‘வந்தமை’ என்றும் முடிந்த தன்மை ‘முடிந்தமை’ என்றும் விகாரப்பட்டு வருதலும், நின்றவுழி என்பது நின்றுழி என்றும் வந்தவுழி என்பது வந்துழி என்றும் சென்றவுழி என்பது சென்றுழி என்றும் விகாரப்பட்டு வருதலும் பிறவும் கொள்க. ‘காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை’ என்று கூறுதலால், வினைத்தொகையை யும் பெயரெச்சத்துள் அடக்கி இதுவே விதியாகவும் கொள்க. இப்பெயரெச்ச விகுதிகள் அ, உம் என்பன. செய்வதாதி பொருட்பெயரொடு முடியும் என்றவற்றுள் வந்தமை - முடிந்தமை - நின்றுழி - வந்துழி, எவற்றைக் கொண்டு முடிந்தன எனின், இங்கே தன்மை என்றது தொழில் தன்மை யாதலால் செயல்கொண்டு முடிந்தது எனவும், உழி என்பது இடமாதலால் நிலத்தைக் கொண்டு முடிந்தது எனவும் காண்க. செல்வுழி சார்வுழி - என்பன வினைத்தொகை ஆதலால், விரிந்துழி இவை போலும் என்க. (நன். 340 இராமா.) பெயரெச்ச முடிபு - ‘துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன், தொடர்வரை வெற்பன் துறக்குவன் அல்லன், தொடர்புள் இனையவை தோன்றின்’ (கலி. 41) என்றவழி, ‘அவன் தொடர்பு’ என வேண்டுதலின் ‘அவன்’ எனப் பெயர் எஞ்சி நின்றது. ‘உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே’ என்பதனுள் ‘என்மனார் ஆசிரியர்’ என வேண்டுதலின் ‘ஆசிரியர்’ என்னும் பெயர் எஞ்சி நின்றது. ‘மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே’; இதனுள் ‘எனக்கு’ என வேண்டுதலின் உருபேற்றபெயராகிய அஃது எஞ்சி நின்றது. (தொ. சொ. 246 தெய். உரை) பாட்டினுள் ஒரு பெயர் எஞ்சநிற்பது தெய்வச்சிலையார்க்குப் பெயரெச்சமாம். பெயரெச்ச வாய்பாடுகள் - செய்த என்னும் வாய்பாடு இறந்தகாலத்தின்கண்ணும், செய்யும் என்னும் வாய்பாடு நிகழ்காலம் எதிர்காலம் என்ற இரண்டன்கண்ணும் வரும் பெயரெச்ச வாய்பாடுகளாம். (சொ. 235 நச்.)