16 பாம்பு வணக்கம் முன்னுரை இவ்வுலகில் மக்கள், தமக்கு மேலான வல்லமை யாதோ உண்டு என்று அறியத் தொடங்கிய காலம் முதல், அது யாது, அது எவ்வகையினது என்று அறிந்துகொள்ள முடியாதவர்களாய் இன்று நமக்குப் பைத்தியகாரத்தனம் எனத் தோன்றும்படியான பல செயல்களைச் சமயம் என்னும் பெயரால் செய்து வந்திருக்கின்றனர். 1இச் செயல்கள் உலகம் முழுமையிலும் காணப் பட்டன. இவ்வகைச் செயலைக் குறித்து வரலாற்று முறையில் நாம் ஆராய்ந்து பார்ப்பதனால் காரணம் விளங்காமல் பயனுடையனவென்று நாம் புரிந்துவரும் பயனற்ற செயல்களின் இயல்புகளை அறிந்து அவை களை எளிதில் கைவிடுதற்கு இயலுவதாகும். முற்கால மனிதன் தான் வாழ வேண்டுமாயின், தம்மைச் சூழ்ந்துள்ளவைகளைக் கொன்றே வாழ வேண்டி யிருந்தது. மனிதன் தூங்கிவிட்டால் கொடிய விலங்குகள் அவனைக் கொன்று விடும். விலங்குகள் தூங்கிவிட்டால் மனிதன் அவைகளைக் கொன்றுவிடு வான். இவ்வகையான காலத்தே மக்கள் தொடங்கிய வழிபாட்டு முறைகள் கொலை மலிந்ததாகவே உள்ளது. அவ் வழிபாடுகளின் நிழல்கள் இன்றும் காணப்படுகின்றன. இவைபோன்ற உண்மைகளை அறிதல், அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனக் கருதிப் பாம்பு வணக்கம் என்னும் இச் சிறிய நூலை எழுதலானேன். சென்னை 10.4.1947 ந.சி. கந்தையா பாம்பு வணக்கம் தோற்றுவாய் நாம் வாழும் பூமி மிக அகன்ற இடம். அதில் இந்தியா ஒரு சிறு பகுதி. இங்கு பற்பல மொழிகளை வழங்கும் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் குடிகளும் குலங்களுமாக (Castes and tribes) பிரிந்து வாழ்கின்ற னர். இக் கூட்டத்தினர், குலத்தினர்களிடையே பல பழக்க வழக்கங்களும் ஒழுக்கங்களும் காணப் படுகின்றன. அவைகளுட் பல எல்லாக் கூட்டத் தினருக்கும் பொதுவாக உள்ளன; சில மாறுபட் டன. இந்திய மக்கள் எல்லோருக்கும் பொது வாகிய சில பழக்கங் களும் ஒழுக்கங்களும் காணப்படுதல் போலவே, உலக மக்களுக்குப் பொது வான சில கொள்கை களும் பழக்க வழக்கங் களும் காணப்படுகின்றன. இவ் வடிப்படையைக் கொண்டு உலக மக்களின் உற்பத்தியும் வளர்ச்சியும் ஒரே மையத்தினின்றும் தொடங்கின என்று மனித வரலாற்று நூலார் முடிவு செய்திருக்கின்றார்கள். இந்திய நாட்டில் காணப்படும் சமயக் கொள்கைகளும் பிறவும், இவ் விந்திய நாட்டுக்கே உரியன என்று நம்மவர் பலர் நம்பி வருகின்றார்கள். உலக மக்களின் வரலாற்றை ஆராயுமிடத்து அவை மற்றைய நாட்டு மக்களுக்கும் உரியனவாகக் காணப்படுகின்றன. மேல்நாட்டறிஞர் இவ்வுலக மக்களுக்கே பொதுவாயுள்ள பல கருத்துகளையும் பழக்க வழக்கங்களையும் நாட்டுக் கதைகளையும் திரட்டி அவைகளின் ஒற்றுமையை ஒப்பிட்டுக் காட்டி நூல்கள் பல செய்துள் ளார்கள். அவை கற்பனைக் கதைகளிலும் பார்க்கச் சுவை அளிப்பதோடு, மக்கள் தமது வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் உதவிபுரிகின்றன. வரலாறு, மக்களிடையே தலைமுறை தலைமுறையாகப் பழங்கதைகள் மூலம் தொடர்ந்து வரும் மூடக் கொள்கைகளுக்குத் தொடக்கத்தை அறிந்து கொள்ளவும், பகுத்தறிவுக்கு ஏலாதவைகளை ஒழிக்கவும் உதவி புரிகின்றது. மேல்நாட்டவர்கள் வரலாற்றின் இன்றியமையாமையை உணர்ந்து, அதனை ஓர் கலையாக வளர்த்து வருகின்றனர். அக் கலையில் தேறுவோருக்குப் பட்டங்களும் வழங்குகின்றனர், நமது நாட்டிலோ, நாகரிகம் ஊர்ந்து செல்கின்றது; மற்றைய நாடுகளில் பறந்து செல்கின்றது. இதற்குக் காரணம் நம்மவர்கள் பழங்கதைகள் மூலம் தொடர்ந்துவரும் மூடக் கொள்கைகளை ஒழிக்க விரும்பாது, பழைய போக்கிலேயே செல்ல முயல்வதாகும். மேல்நாட்டு ஆசிரியர்கள், சீனா இந்தியா என்னும் நாடுகளில் நாகரிகம் விரைவில் மேலோங்காததற்குக் காரணம், அவர்கள் பழம் பிடிகளைக் கைவிட மனமில்லாது அப் பாழுங் கொள்கைகளை வைத்துக் கட்டி யழுவது போன்றவைகளாகும் எனக் கூறியுள்ளார்கள். இச் சிறிய நூல், பாம்பு வணக்கத்தைப் பற்றிக் கூறுகின்றது. உலக மக்களுக்குப் பொதுவாகிய பல கொள்கைகள் உண்டு எனக் கூறினோம். அவைகளுள் பாம்பு வணக்கம் ஒன்றாகும். பாம்பு வணக்கம் இந்திய மக்களுக்கே உரியது எனப் பலர் கருதுகின்றார்கள். அது இப் பூமியில் கிழக்கிலும் மேற்கிலும் வடதுருவம் தென் துருவங்களுக்கு உட்பட்ட நாடுகளிலெல்லாம் காணப்பட்டது. அந் நாடுகளில் மக்கள் பாம்பை வழிபட்ட முறை பெரும்பாலும் இன்றைய இந்திய மக்களின் நாக வழிபாட்டு முறையை ஒத்திருக்கின்றது. இதனால் பாம்பு வழிபாடு மக்களுக்கு வேண்டியதெனக் கூறுவது எமது கருத்தன்று. பாம்பு வழிபாட்டின் பழமை கிறித்துவ மறையின் பழைய ஏற்பாடு, படைப்பு வரலாறு, பெரிய வெள்ளப்பெருக்கு முதலியவைகளைப்பற்றிக் கூறுகின்றது. இவ் வரலாறுகள் சால்திய மக்கள் மூலம் கிடைத்தன என்று வரலாற்று அறிஞர் கூறியுள் ளார்கள். சால்தியாவில் மிகப் பண்டு தொட்டே பாம்பு வணக்கம் இருந்து வந்தது. அவ் வணக்கத்தின் எதிரொலியே பழைய ஏற்பாட்டில் காணப்படும் பாம்பு வரலாறு என்று கருதப்படுகின்றது. கிறித்துவ மறையில் பாம்பு, ஆதாமையும் ஏவாளையும் விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும்படி தூண்டியதெனக் கூறப்பட்டபோதும், பாம்பு இஸ்ரவேலரால் நீண்டகாலம் வணங்கப்பட்டது. மோசே என்பவர் யேகோவாக் கடவுளின் அடையாள மாக வெண்கலத்தினால் பாம்பு செய்து வழிபட்டார். அப் பாம்பு எசாக்கி யேல் காலம்வரை (700 ஆண்டுகள் வரை) இஸ்ரவேலரால் வழிபடப் பட்டது.1 மொகஞ்சதரோ நாகரிகம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அங்குக் காணப்பட்ட பட்டையங்களில் பாம்பு வழிபாட்டைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.1 ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் பல இடப் பெயர்கள் பாம்பு தொடர்புடையன. சூடிய நாகபுரி, நாகப்பட்டினம், நாகர்கோயில் போன்ற பழைய இடப் பெயர்கள் இன்றும் இந்திய நாட்டிற் காணப்படுகின்றன. இலங்கையில் வாழ்ந்த பழங் குடிகளில் ஒரு பகுதியினர் நாகர் எனப்பட்டார்கள். நாக அரசர் இருவரிடையே ஒரு மணி ஆசனத்தின் பொருட்டு நேர்ந்த போரை விலக்கப் புத்தர் இலங்கைக்குச் சென்றிருந்தாரென்று மகாவமிசம் என்னும் நூல் கூறுகின்றது. சாஞ்சி, அமராபதி, இலங்கை முதலிய விடங் களிலுள்ள பண்டைய சிற்பங்களில் நாக வழிபாட்டைப் பற்றிய அடையாளங்கள் காணப்படுகின்றன. பின்னால் ஆராய்ந்து கூறப் படுவன கொண்டு பாம்பு வணக்கம் சரித்திர ஆராய்ச்சிக்கு எட்டாத பழமையுடையது எனத் தோன்றும். பாம்பு வணக்கத்தின் தொடக்கம் பாம்பு நஞ்சுள்ள உயிர். அது கடித்தால் மனிதர் மாண்டு விடுவார்கள். பாம்பின் தோற்றம் மக்களுக்கு அச்சத்தை உண்டாக்குகின்றது. “பாம்பென் றால் படையும் நடுங்கும்” என்பது பழமொழி. இவ் வியல்புகளுடைய பாம்பை மக்கள் வணங்கி வந்தார்கள். பாம்பு வணங்கப்படுகின்றதென்றால், அது வியப்பைத் தருகின்றது. வரலாற்று ஆசிரியர்கள் அதன் தொடக் கத்தைப்பற்றி அறியப் பெரிதும் முயன்று வந்தார்கள். சிலர் சில காரணங்கள் காட்டுவாராயினர். அவர்கள் கூறியவைகளில் ஒன்று மிக ஏற்புடைத்தாகக் காணப்படுகின்றது. இவ்வுலகில் இறந்தவர்கள் வழிபாடு மிகப் பழமை யுடையது. இறந்தவர் வழிபாடு என்பது தமிழ்நாட்டில் தென்புலத்தார் வழிபாடு என்னும் பெயர் பெற்றுள்ளது. திவசம், திதி, குருபூசை என்பன தென்புலத்தார் வழிபாடுகளே. தொடக்கத்தில் மக்கள் இறந்தவர்களின் ஆவிகளையே வணங்கினார்கள். இவ் வடிப்படையிலிருந்தே உலகில் சமயம் தோன்றி வளர்ச்சியடைந்தது. இதனைப் பிறிதோரிடத்தில் விரித்து விளக்கியுள்ளோம்.2 அக்கால மக்கள் இறந்தவரை அடக்கம் செய்த சமாதி யின்மேல் ஊர்ந்து செல்லும் பாம்பை, இறந்தவர்களாகவே (இறந்தவர்களின் பிறப்பு) கருதினார்கள். ஆகவே, அவர்கள் பாம்புகளைத் தமது இறந்த முன்னோராகக் கருதி வழிபட்டனர். தென்புலத்தார் வழிபாடு, பாம்பு வழிபாடு என்பன ஒரே தொடக்கமுடையன. இன்று இந்திய மக்களுட் பலர் தமது வீட்டுக்கு வரும் பாம்புகளைத் தம் முன்னோர் எவரோ எனவே கருது கின்றார்கள். ஆப்பிரிக்காவில் சூலு மக்கள், தமது வீட்டை நோக்கி வரும் தீங்கற்ற பாம்புகளைத் தம் முன்னோராகக் கருதுகின்றார்கள். அவைகளின் உடலில் காணப்படும் ஏதேனும் ஒரு அடையாளத்தைக் கொண்டு, அவை இறந்தவர்களுள் யார் எனவும் நிச்சயம் செய்கிறார்கள்.1 இவ் வணக்கம் எங்குத் தொடங்கிற்று என ஆராய்வோம். அதனை ஒருவாறு ஆராய்ந்து அறியலாம். பாம்பு வழிபாடு சாலடியாவில் மிகவும் பழமை பெற்றுள்ளது. சாலடிய நாட்டினின்றுமே இவ் வழிபாடு மற்றைய நாடுகளுக்குச் சென்றதென வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். வேத கால இந்தியா (Vedic India) என்னும் நூல் எழுதிய ரெகோசின் (Regozin) என்பார் சாலடிய மக்களுக்கும் திராவிட மக்களுக்கும் பொதுவாயுள்ள பல கொள்கைகளை எடுத்து விளக்கிச் சாலடியரும் திராவிடரும் ஒரே கொடி வழியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ளார். பல காரணங்களால் இந்திய மக்களே மேற்கு ஆசியாவில் குடியேறிச் சாலடியர் எனப் பெயர் பெற் றார்கள் என்றும் அவர் கருதினார். இருக்கு வேத இந்தியா என்னும் நூல் எழுதிய அபினஸ் சந்திரதாஸ் என்பவர், சோழ தேசத்தினின்றும் மேற்கு ஆசியாவிற் குடியேறிய மக்களே சாலடியர் எனக் கூறிய அளவில் அமை யாது, சோழ தேசம் என்னும் பெயரே மருவிச் சால்தியா ஆயிற்று என்றும் கூறியுள்ளார். பர்லாங் (Forlong) என்னும் ஆசிரியர், சால்தியரின் முன்னோர் திராவிட இனத்தினர் என ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். எகிப்தியர் வழி பட்ட பாம்புகள் இந்திய நாட்டினின்றும் கொண்டு வரப்பட்டன என்றும், அவர்களுடைய இசிஸ் என்னும் தெய்வம் ஈசுவரனின் தேவியாகிய ஈசுவரியே யாகும் என்றும் 2டீன் என்பவர் தமது பாம்பு வணக்கம் என்னும் நூலிற் கூறியுள்ளார். மேற்கு ஆசிய நாடுகளில் துர்க்கை, சிவன் வடிவங்கள் இந்திய நாட்டில் இன்று காணப்படுவன போலவே, இருந்தனவாதலாலும், அவை இந்திய நாட்டினின்றுமே அந் நாடுகளுக்குச் சென்றன என்று அறியப்படுதலினாலும், பாம்பு வணக்கம் இந்திய நாட்டினின்றும் சென்ற தெனத் துணிதல் பிழையாகாது. பாம்பு வழிபாட்டின் வியாபகம் ஒபியலாட்றியா (Ophiolatreia) என்னும் நூலில் பின்வருமாறு கூறப் பட்டுள்ளது. ‘பாம்பு வணக்கம் இவ்வுலகம் முழுமையிலும் பரவியிருந்தது. பண்டைக் காலத்தில் இவ் வழிபாடு காணப்படாத ஒரு நாடும் இருக்க வில்லை. இவ் வழிபாடு நிலவியதற்கு அறிகுறி யாகப் பல செய்குன்றுகளும் கோயில்களும், மண் மேடுகளும் பிற சின்னங்களும் புதிய, பழைய உலகங்களிற் காணப்படுகினறன. பாரசீகம், இந்தியா, இலங்கை, சீனா, ஜப்பான், பர்மா, ஜாவா, அராபியா, சிரியா, சின்ன ஆசியா, எகிப்து, எதியோப்பியா, கிரீசு, இத்தாலி, வடமேற்கு ஐரோப்பா, மெக்சிக்கோ, பெரு, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாட்டின் அடையாளங்கள் காணப் படுகின்றன. இவ் வழிபாடு ஒரு நடு இடத்தில் தோன்றிப் பரவியிருத்தல் கூடும். சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாக வும், சில நாடுகளில் தீய தெய்வமாகவும் கொள்ளப்பட்டது. உயிர்ப் பாம்புகளை வழிபடுதல் பெரும்பாலும் இந்திய நாட்டில் மக்கள் பாம்புச் சிலைகளையே வழிபடுகின்றார்கள். ஆகவே இந்திய மக்கள் பாம்பு வழிபாடு என்றால், பாம்புச் சிலை வழிபாடு எனக் கருதியிருக்கின்றார்கள். இன்னும் பாம்புகளை உணவு கொடுத்து வளர்த்து அவைகளை வழிபடும் மக்கள் காணப்படுகின்றார்கள். லப்பக் என்பவர் கூறுவது வருமாறு: “பழைய எகிப்து, இந்தியா, பினீசிய, பாபிலோன், கிரீஸ், இத்தாலி, அபிசீனிய நாடுகளில் பாம்பு வணக்கம் முதன்மை அடைந்திருந்தது. லிதுவேனியர் உயிர்ப் பாம்புகளையே தெய்வமாக வழிபட்டனர். தென்னாபிரிக்கக் கபீர் மக்கள் இறந்த முன்னோர் பாம்பாகப் பிறக்கிறார்கள் என நம்பினார்கள். பெரு(Peru) நாட்டில் கடவுட் சிலைகளுக்குப் பதில் பாம்புகளே கோயில்களில் இருந்தன. ஆப்பிரிக்காவில் மழையின்மை, பஞ்சம், பிணி முதலிய காலங்களில் மக்கள் பாம்புகளைச் சிறப்பாக வழிபட்டனர். இவ்வாறு உரோமரும் ஒரு காலத்தில் செய்தனர். நீக்ரோ, ஒருவனாவது பாம்புக்கு வேண்டுமென்று தீங்கு இழைக்கமாட்டான். தற்செயலாக ஒருவன் பாம்பு ஒன்றைக் காயப்படுத்தினானாயினும் அவன் கொல்லப்படுவான். ஒருமுறை ஆங்கிலக் கப்பற்காரர் சிலர், தாங்கள் தங்கிய வீட்டினுள் வந்த பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றார்கள். அதன் பொருட்டு அவர்கள் அங்குள்ள மக்களால் இரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். பாம்புகள் உறைவதற்கெனக் கட்டப்பட்ட குடிசைகள், நாடு எங்கும் காணப் படுகின்றன. இவைகளுக்கு முதிய பெண்கள் தினமும் உணவு கொடுக் கிறார்கள். பாம்புகளுக்கு அழகிய பெரிய கோயில்களும் இருக்கின்றன. ஒவ்வொரு வகைப் பாம்புகளையும், கவனிப்பதற்கு வெவ்வேறு வேலை யாட்கள் இருக்கின்றார்கள்.” “நியுகினியில் சோலைகளில் பாம்புகளின் கோயில்கள் இருக்கின் றன. இவைகளுக்குப் பருவ காலங்களுக் கேற்றவாறு பன்றி, ஆடு, கோழி முதலியன உணவாக அளிக்கப்படுகின்றன. சிலாவோனிய (Slavonic) ஆலயங்களில் பாம்புக்குப் பால் கொடுத்து, மக்கள் அதனை வழிபட்டார்கள். பாம்பும் ஞாயிறும் ஆல்ட் ஹாம் என்பார் எழுதியுள்ள “சூரியனும் பாம்பும்” என்னும் நூலில், பாம்பு வணக்கத்தைப் பற்றிய அரிய செய்திகள் காணப்படுகின்றன. அதன் சுருக்கத்தை இங்குத் தருகின்றோம். 1மோசேயாற் செய்யப்பட்ட வெண்கலப் பாம்பு யெகோவாக் கடவுளின் அடையாளமாக நீண்ட காலம் வழிபடப்பட்டது. இந்திய நாட்டில் படமுள்ள பாம்பு ஞாயிற்று வணக்கத்தோடு தொடர்பு பெற்றிருக்கின்றது. அது பெரும்பாலும் ஞாயிற்றினின்றும் தோன்றியவர்கள் எனக் கூறிக் கொள்ளும் மக்களின் குலக்குறியாகும். நாக குலத் தினர் மரணத்துக்குப்பின் பகற் கடவுளாகவோ, பிற கடவுளாகவோ வணங்கப்படுகின்றனர். அவர் களின் உருவச் சிலைகளைப் பாம்புகளின் விரிந்த படங்கள் கவிந்து தாங்குகின்றன. எங்கெங்கு ஞாயிறு வணங்கப்பட்டதோ, அங்கெல்லாம் படமுடைய பாம்பு புனிதமுடையதாகக் கருதப் பட்டது. இந்திய நாட்டிற் போலவே, ஞாயிற்றை வழிபடும் நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபடப் பட்டது. சீனா, பெரு, ஆப்பிரிக்கா முதலிய நாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று அதிக தொலைவில் உள்ளன. அந் நாட்டு வழிபாடுகள் மற்றைய நாடுகளின் தொடர்பின்றித் தனித்துத் தோன்றின என்று கூறுதல் முடியாது. இவ் வணக்க முறை ஒரு நாட்டில் காணப்படுதல் போலவே மற்றைத் தேசங்களிலும், காணப்படுகின்றது. ஆகவே சூரிய குலத்தவர் என்று சொல்லிக்கொண்ட ஒரு குலத்தவர்களுடைய மத்தியிலிருந்தே இவ் வழிபாடு பரந்து நாலா திசைகளிலும் சென்றிருத்தல் வேண்டும். உலகம் முழுமையிலும் நாகம் புனிதமுடையதாகக் காணப்பட்டது. சரித்திர காலத் தொடக்கத்தில் பாம்பு, பகல் வழிபாடுகள் நன்றாக வளர்ச்சி யடைந்திருந்தன. மிகப் பழங்காலத்தில் யூபிரட்டிஸ், சிந்து ஆறு களுக்கிடையில் இவ் வழிபாடுகள் ஓங்கியிருந்தன. அகிக்கும் ஆரியருக்கு மிடையில் போர்கள் நிகழ்ந்தனவென்று வேதங்களிற் சொல்லப்படும் வரலாறு, நாக சாதியினருக்கும் பாரசீகருக்குமிடையில் நேர்ந்த போர்களே. பழைய மீதியாவிலுள்ள எசிதியர் (Yezidis) இன்னும் உதயகாலச் சூரியனை வணங்குகின்றனர்; ஆலயங்கள் மீது பாம்பு வடிவங்களை அமைக்கின்றனர். பாபிலோனிலும் அதனை அடுத்த நாடுகளிலும் பண்டை நாட் களில், ஞாயிறு, பாம்பு வழிபாடுகளே இருந்தன. பாபிலோன் மக்களின் ஆதிக் கடவுளர்களில் ஒருவர் ஈஆ (Ea). அவர் ஏழுதலைப் பாம்பு வடிவுடையர். சாலதிய மக்கள் ஈஆவையும் அவருடைய புதல்வன் மார்துக்கையும் (Mar-duk) காத்தற் கடவுளாக வழிபட்டனர். சாலதியரின் மனுவுக்குப் பின் நிகழ விருக்கும் பெரிய வெள்ளப் பெருக்கைப்பற்றி எச்சரிக்கை கொடுத்தவர் ஈஆக் கடவுளே. ஈஆ பெரிய வெள்ளப்பெருக்கைப் பற்றிய செய்தியைத் தனது மந்திரிக்குக் கூற, அவன் அதைச் சூரிபாக் என்னும் சாலதிய மனுவுக்கு நவின்றான். ஈஆ என்னும் தெய்வ வணக்கம் மிகப் பரந்திருந்தது. மித்தினி (சின்ன ஆசிய) மன்னன் துஷரதன் மூன்றாம் அமனோபிசு என்னும் எகிப்திய அரசனுக்கு அனுப்பிய திருமுகத்தில் பல தெய்வங்களுக்குத் துதி கூறியுள்ளான். அத் துதியில் ஈஆக் கடவுள், எல்லா மக்களுடைய கடவுள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. பாம்பு செமித்திய மக்களின் குலக்குறியாகத் தெரியவில்லை. அக்கேடிய சுமேரிய வணக்கங்களோடு அவர்கள் இதனைப் பெற்றார்கள் எனத் தெரிகிறது. நியுக்சம்பர் என்னும் பாபிலோனிய அரசன், மர்துக் என்னும் பகற் கடவுளின் கோயில் வாயில்களில் தான், நச்சுப் பாம்பு களின் சிலைகளை வைத்தமையைப்பற்றிக் கூறியுள்ளான். காஸ்பியன் கடலுக்குத் தெற்கிலும், மேற்கிலும் உள்ள நாடுகளிலும் துரானிய மக்க ளிடையும் பாம்பு வழிபாடு காணப்பட்டது. சாலடியப் பாடல்களில் கூறப் படும் கோயில் யாத்திரைகள், சோலைகளின் நடுவே அமைக்கப்பட்ட ஆலயங்கள். வேட்டையாடிக் கொன்ற மிருகங்களின் கொம்பினால் கோயில்களை அலங்கரித்தல் போல்வன, இமயமலைச் சாரல்களில் வாழும் பாம்பு, ஞாயிற்று வழிபாட்டினராகிய மக்களிடையே இன்றும் காணப்படு கின்றன. ஞாயிறும் பாம்பும் பினீசியரால் வணங்கப்பட்டன; அவர்கள் அவ் வணக்கத்தைப் பாபிலோனியரிடமிருந்து பெற்று, அதனை மற்றைய இடங்களுக்குக் கொண்டு சென்று மிருக்கலாம். இவ்விரு வணக்கங்களும் சிரியாவிலும் மேற்கு ஆசியாவின் பல பாகங்களிலும் காணப்பட்டன. கிரேக்கர் ஞாயிற்றையும் பாம்பையும் வணங்கினார்கள். கிகுரோப்ஸ் (Cecrops) என்னும் அதேனிய முதல்அரசன் எகிப்திலிருந்து வந்தான் என்பதும், அவன் பாதி பாம்பும், பாதி மனிதனுமா யிருந்தான் என்பதும், அவர்களது பழங் கதைகளிற் காணப்படுகின்றன. சரித்திர காலத்தில் கிரேக்கரின் ஞாயிற்றுப் பாம்பு வழிபாடுகள், வேறு வழிபாடுகளுடன் கலந் திருந்தன. ஹெரதோதசு (Herodotus) காலத்தில் அதேன்சின் சுற்றாடல்களைக் காக்கும் கடவுள் ஒரு பெரிய பாம்பாக விருந்தது. ஐரோப்பாவின் எல்லா இடங்களிலும் ஞாயிறு, பாம்பு வழிபாடுகள் இருந்தமைக்கு அடை யாளங்கள் காணப்படுகின்றன. எகிப்தில் ஆதிகாலம் முதல், பகலும் படமுள்ள பாம்பும் வணங்கப் பட்டு வந்தன. எகிப்திய அரசர் ஞாயிற்றினின்று தமது பரம்பரையைக் கூறினர். ஞாயிறே அரசனாகப் பிறக்கின்றது என மக்கள் நம்பினார்கள். அவனுக்குக் கடவுளுக்குச் செய்யப்படும் எல்லா மரியாதைகளும் செய்யப் பட்டன. மரணத்துக்குப் பின் எல்லா அரசரும் ஞாயிற்றுக் கடவுளாக வழி படப்பட்டார்கள். அவனுடைய முடியின் முன்புறத்தில் படம் எடுக்கும் பாம்பின் வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. எதியோப்பியர் கிறித்துவ மதத்தைத் தழுவுமுன், ஞாயிற்றையும் பாம்பையும் வணங்கினார்கள். எதியோப்பிய அரசன், ஹெலியோ பொலிஸ் எனப்படும் சூரியக் கடவுளின் நகருக்குச் சென்று அக் கடவுளின் ஆலயத் தில் குருவாகச் சேவித்தான். எகிப்திய வேந்தரைப்போலவே, எதியோப்பிய அரசரும் கடவுளுக்குரிய மதிப்பைப் பெற்றனர். எதியோப்பியர் சின்ன ஆசியாவிற் குடியேறி காசைட்ஸ் (Kassites) எனப்பட்டார்கள். இவர்கள் எல்லம் மக்களுக்கு இனமுடையவர்கள் எனக் கருதப்படுவர். எதியோபிய அரசனின் நகுஸ் என்னும் பட்டப் பெயர், இமயமலைப் பக்கங்களில் பாம்பு களை வணங்கும் கூட்டத்தினர் தலைவர்களுக்கு வழங்கும் நெகி (Negi) என்னும் பெயரை ஒத்திருக்கின்றது. பண்டு (Punt) நாடு பாம்புகளுக்கு உறைவிடம் என்று எகிப்தியரால் கொள்ளப்பட்டது. பைபிரஸ் புத்தகங்களிலுள்ள சில பகுதிகளில் பண்டு நாட்டின் அரசன், பெரிய பாம்பு என்று கூறப்பட்டுள்ளான். கப்பல் உடைந்து தட்டுக்கெட்டு நின்ற ஒருவனுக்குப் பெரிய பாம்பு ஒன்று வெளிப்பட்டு நாலு திங்களுள் ஒரு நாவாய் அவ் விடத்தை அடையுமென்றும், இரண்டு திங்கள் பயணஞ் செய்தபின் அவன் தனது இடத்தைச் சேருவான் எனக் கூறிற் றென்றும் சொல்லப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவின் மேற்கு மத்திய பாகங் களில் பாம்பு வழிபாடு இருந்தது. அந்நாட்டு மக்களின் தெய்வமேறியாடும் கூத்து முதலியன அவ் வணக்கத்துக்குரியனவே. மெக்சிகோவில் பாம்பு வழிபாடுகளில் நரபலிகள் கொடுக்கப் பட்டன. சூரியகுல அரசரால் பாம்பும் ஆமையும் தெய்வத்தன்மை யுடையனவாக மதிக்கப்பட்டன. அவர்கள் பாம்புக்குப் பலியிட்ட பின்பே, எக் கருமத்தை யும் தொடங்குவர். அவர்கள் மந்திர வித்தை தொடர்பாகப் பயன்படுத்தும் யந்திரங்கள் இந்தியாவிலும் மற்றும் சூரிய வணக்கமுடைய நாடுகளிலும் காணப்படுவன போன்றன. இந்நாடுகளில் இவ் வணக்கங்கள் எப்படி வந்தனவென்று அறிய முடியவில்லை. அறிய முடியாத பழைய காலந் தொட்டே, சீனாவிலும் அதன் அயல் நாடுகளிலும் சூரிய, பாம்பு வணக்கங் கள் இருந்து வந்தன. இந்தியாவிலும் மற்றைய இடங்களிலும் காணப்படுதல் போலவே, அது தெய்வமாக்கப்பட்ட முன்னோர் வழிபாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. சீன அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனப்பட்டான். அவன் உயிரோடு இருக்கும்போது கடவுளுக்குரிய மதிப்பைப் பெற்றான். பாம்பும் ஆமையும் தீட்டிய கொடியால் சீன தளபதி அறியப்பட்டான். சீனரின் பழங் கதைகளில், பழைய அரசரிற் சிலர் பாதி பாம்பு வடிவும், பாதி மனித வடிவுமுடையர். சீனரின் நாகரிகம் காஸ்பியனுக்கும், பாரசீக வளை குடாவுக்கு மிடையிலிருந்து வந்திருக்கலாம் என் லெக்கோபெரி என்பவர் கருதியுள்ளார். மஞ்சூரிய மக்கள் சூரிய வம்சத்தினர். அவர்களுடைய பாம்புத் தெய்வங்கள் இன்றும் ஆறுகளுக்கும் மழைக்கும் அதிபதிகள். கொரியா நாட்டு அரசரும் சூரிய மரபினர். அவர்களைப் பாம்புக் கடவுள் காக்கின்றது. மக்கள் பாம்புகளைக் குலதெய்வங்களாக வணங்குகின்றனர். ஜப்பானியரின் சூரியக் கடவுள் பெண் தெய்வமாகும். ஜப்பானிய அரசர் சூரியக் கடவுளின் புதல்வர் என மக்கள் நம்பி வருகின்றனர். ஜப்பானியர் ஐதீகத்தின்படி அவர் களுடைய மலைக் கடவுளர் பாம்பு வடிவை எடுத்துள்ளனர். இந் நாடுகளின் சூரிய பாம்பு வழிபாடுகள் இந்தியாவிற் காணப்படுவதை ஒத்தன. இந்தியாவில் சேர நாடு, பாம்பு வழிபாட்டுக்குப் பேர்போனது. சாரை என்பதே சேர என மாறிற்று. இன்றும் ஒவ்வொரு நாயர் சாதியினரின் கொல்லையிலும் நாக தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. கிறித்துவ ஆண்டின் முற்பகுதியில் சீன யாத்திரிகர்கள் இந்தியா வுக்குச் செல்லும் வழியில், பாம்புக் கடவுளர் எல்லா ஆறுகளையும் குளங் களையும் ஆள்வதைக் கண்டனர். திபேத்தில் இன்றும் ஆறுகளும் நீரூற்று களும் பாம்புத் தெய்வங்களால் ஆளப்படுகின்றன. ஸ்பானியர் அமெரிக்கா வுக்குச் சென்றபோது, எங்கும் சூரிய பாம்பு வணக்கங்களே காணப்பட்டன. அமெரிக்காவில் படமுள்ள பாம்புகள் காணப்படாமையால் சலசலக்கும் பாம்புகள் (Rattle snakes) அவைகளுக்குப் பதில் வணங்கப்பட்டன. பெருவில் கசமார்க்கா என்னும் இடத்தில் பாம்பு வடிவக் கல் இருந்தது. அமெரிக்கரால் ஆமையும் தெய்வத்தன்மை யுள்ளதாகக் கருதப்பட்டது. மனிதத் தலையுடைய பாம்பு, ஆமைச் சிலைகள் காணப்படுகின்றன.1 பாம்பு வணக்கம் சீனாவும் ஜப்பானும் சீனரின் கொடியில் பாம்பு எழுதப்பட்டிருந்தது. பாம்பின் வடிவம் கோயிற் சிற்பங்களில் அமைக்கப்பட்டது. வீட்டுத் தளவாடங்களிலும் அவ் வடிவம் வெட்டப்பட்டது. அரசனின் செங்கோலிலும் பாம்பின் வடிவம் எழுதப்பட்டிருந்தது. அரண்மனையிலுள்ள எல்லாப் பாத்திரங்களிலும் அவ் வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது. கான்பூசியஸ் ஞானியார் பிறந்தபோது அவரின் உடலைக் கழுவும் போது, இரண்டு பாம்புகள்கூட இருந்தன என்னும் பழங்கதை உள்ளது. சீனரின் கடவுளாகிய போகி(Fohi)யின் வடிவம், மேலே மனித வடிவமும் கீழே பாம்பு வடிவமுமாக வுள்ளது. ஜப்பானியரும் சீனரும் பாம்பை வணங்கினார்கள். ஜப்பானியரின் பழங்கதைகளில் பாம்பைப் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன. ஜப்பானிய அரசர் சிலரின் உடை, ஆயுதங்கள், கத்தி, வீட்டுத் தளவாடங்கள், மேலே அழகுக்காகத் தூக்கும் தோரணங்கள் முதலியவைகளில் பாம்பின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தொடக்கத்தில் ஜப்பானியர், கோயில்களில் பாம்பை வழிபட்டார்கள் எனத் தெரிகின்றது. ஜாவா ஜாவா நாட்டில் பழைய இடிபாடுகள் காணப்படுகின்றன. அங்கு அழிந்து கிடக்கும் கோயில்களிலுள்ள திருவுருவங்கள் பாம்பு ஆபரணம் அணிந்திருக்கின்றன. சில திருவடிவங்களின் கைவளை சுருண்டு வளைந்த பாம்பாக அமைந்துள்ளது. அவைகளின் அரைக்கச்சும் பாம்பே. அராபியா அராபிய மொழியில் அராபியரின் பழைய சமயத்தை விளக்கும் சொற்கள் காணப்படுகின்றன. அராபிய மொழியில் பாம்பையும் வணக்கத் தையும் குறிக்க ஒரே சொல் ஆளப்படுகின்றது. இதனால் அராபியர் பாம்பை வணங்கினார்கள் எனத் தெரிகின்றது. சிரியா தாதஸ் (Taautus) என்பவன் பினீசியாவில் பாம்பு வணக்கத்தைத் தொடங்கினான் என்று சொல்லப்படுகின்றது. இவன் சலப் பிரளயத்துக்கு முன் வாழ்ந்தவனாவன். கானான் தேச மக்கள் வழிபட்ட ‘ஒப்’ பாம்புக் கடவுளே யாவர். கிரேக்க நாட்டில் தெல்பி (Delphi) ஆலயத்தின் பெண் பூசாரி வழி பட்ட கடவுள் பாதியா எனப்பட்டது. பாதியா என்பது பிதோன் (Phython) என்பதன் திரிபு. இப் பெயர் பாம்புக் கடவுளைக் குறிக்கும். குருமாரும் அரசரும் அவர்களின் வழிபாட்டுக்குரிய அக் கடவுளின் பிள்ளைகள் எனப் பட்டனர். மோசே செய்து வைத்து வழிபட்ட வெண்கலப் பாம்பை ஹெசாக்கியேல் உடைத்தெறிந்தான். தையர் நாட்டில் பாம்பு உருவங்கள் பல காணப்பட்டன. பினீசியர் ஆலயங்களில் பாம்பின் வடிவங்களை வைத் திருந்தார்கள். பினீசியர் ஜானஸ் (Janus) என்னும் கடவுளைப் பாம்பு வடிவில் வழிபட்டார்கள். ஆலயங்களில் உயிர்ப் பாம்புகள் வளர்க்கப்பட்டன. சிடோன் பட்டினத்துக்கு அருகிலுள்ள சோலையில் பாம்புகள் வணங்கப் பட்டன. எல்காபலுஸ் என்னும் நாட்டின் தலைமைக் குருவின் கோயில் எமாசா என்னுமிடத்திலிருந்தது. அவன் உரோமுக்கு எகிப்திய இனப் பாம்பு களை அனுப்பினான். அப் பாம்புகள் இவனால் வழிபடப்பட்டவை. சின்ன ஆசியா பிரிகியா (Phrygia) என்னும் இடத்தில் பெரிய உயிர்ப் பாம்பு வணங்கப் பட்டது. அக்காலத்திலேயே பிலிப்பு என்னும் அப்போஸ்தலர் அந்நாட்டு மக்களைக் கிறித்துவ மதத்துக்குத் திருப்பினார். அவர் தனது செபத்தினால் பாம்பைக் கொன்றார் என்றும், அம் மகிமையைக் கண்ட மக்கள் கிறித்துவ மதத்தைத் தழுவினார்கள் என்றும் பழங் கதை உள்ளது. ஹெக்டரின் கேடகத்தில் பாம்பு எழுதப்பட்டிருந்தது. சின்ன ஆசியாவில் அடிக்கப்பட்ட பழைய காசுகளில் பாம்பு அடையாளம் காணப்படுகின்றது. அங்குள்ள இடப் பெயர்கள் பல பாம்புக் கடவுள் தொடர்பானவை. கோயில்களின் கருவில்(மூலத்தானத்தில்) பெரும்பாலும் உயிர்ப் பாம்புகள் வைக்கப் பட்டிருந்தன. சைபிரஸ் தீவுக்கு ஒபியாசா (Ophiasa) என்பது பழைய பெயர். ஒபியூசா என்பதற்குப் பாம்பு என்பது பொருள். ஆப்பிரிக்கா எகிப்தில் பாம்பு உயர்ந்த கடவுளாகக் கொள்ளப்பட்டது. பழைய எகிப்தியரின் ஹார்ப்போகிற்றேசு என்னும் கடவுள் பாம்பு வடிவில் வழிபடப்பட்டார். இசிஸ் என்னும் கடவுளும் அவ் வடிவில் வழிபடப் பட்டது. இசிஸ் கடவுளுக்குப் பூசை செய்யும் பூசாரியின் உடைகளில் பாம்புகளின் அடையாளங்கள் இடப்பட்டிருந்தன. எகிப்திய அரசனின் உடையிலும் மடியிலும் பாம்பு அடையாளங்கள் இருந்தன. இசிஸ் ஆலயங்களில் உயிர்ப் பாம்புகள் இருந்தன. எகிப்தியர் வணங்கிய பாம்பு அந்நாட்டுக் குரியதன்று. அது ஒருபோது படமுடைய இந்தியப் பாம்பா யிருக்கலாம். தீப்சு நகரிலே யூபிதர் கோயிலிலுள்ள பாம்புக்கு இரண்டு கொம்புகள் உண்டு. எகிப்தியரின் இசிஸ் வழிபாடு இந்தியரின் ஈசுவரி (Isi) வழிபாட்டினின்றும் வந்ததாகலாம். எகிப்திய தெய்வங்கள் பலவற்றுக்குப் பாம்பு உடலுண்டு. சில பாம்புக் கடவுளருக்கு மாட்டுத் தலை, சிங்கத் தலை யுண்டு. சமாதிக் கட்டடங்களில் பாம்பு வடிவங்கள் காணப்படுகின்றன. எகிப்தியக் கோயில்களில் ஒரு வட்ட வடிவத்துக்கு இரண்டு சிறகுகள் இருப்பது போலப் பாம்புகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எகிப்தியர் நாணயங்களில் பாம்பு வடிவங்களைப் பொறித்தனர். நீரோ என்னும் உரோமன் சக்கரவர்த்தியும் அவ்வாறு செய்தான். எகிப்திய குருமார் கோயில்களின் மூலைகளில் குழிகள் தோண்டி அவைகளுள் பாம்புகளை விட்டு வளர்த்தார்கள். பக்குவஞ் செய்யப்பட்ட பிரேதங்கள் சிலவற்றின் மார்பில் பாம்பு அடையாளங்கள் பொறிக்கப்பட்டன. பெண்கள் பாம்பின் வடிவாகச் செய்த அணிகலன்களைப் பூண்டார்கள். சிறுவர்களும் அவ்வகை அணிகளை அணிந்தனர். எகிப்திய பூசாரி, மூன்று பாம்புகளுக்கு முன்னால் நின்று வணங்கும் வெட்டப்பட்ட சலவைக் கல் ஒன்று உரோமில் 1709இல் கண்டு எடுக்கப்பட்டது. அபிசீனியாவின் முதல் அரசன் பாம்பு. அபிசீனிய மொழியில் பாம்பைக் குறிக்கும் நாகாஷ் என்னும் சொல் நாகம் என்பதன் திரிபு. அபிசீனியர் கிறித்துவ மதத்தைத் தழுவுவதன்முன் அங்கு நாக வணக்கம் இருந்தது. அபி சீனியாவில் சங்கலா என்னும் இடத்தில் வாழும் நீகிரோவர் இன்னும் பாம்பை வணங்குகின்றனர். ஆப்பிரிக்காவில் விடா (Whidah) என்னும் இடத்தில் பாம்புக் கோயில் இருக்கின்றது. அங்குப் பலவகைக் காணிக்கைகள் கொடுக்கப்படுகின்றன. பாம்புக் கோயில்களுள் முதன்மையுடையது பாம்பு வீடு எனப்படும். இவ் விடத்துக்குப் பலர் யாத்திரை செய்கின்றனர். இங்கு ஆண் பூசாரிகளும், பெண் பூசாரிகளும் உண்டு. அவர்கள் உடலில் பாம்பின் அடையாளங்களை எழுதி யிருப்பர். இங்கு 1726ஆம் ஆண்டு வரையில் பாம்பு வணக்கம் இருந்தது. தகோமியர்(Dahomeys) இவர்களை வென்றபோது பாம்புகளைக் கொன்றுவிட்டனர். ஆப்பிரிக் காவில் வாழும் நீகிரோவர் பாம்புகளுக்கு நல்லுணவு கொடுத்து அவைகளை வழிபட்டார்கள். ஐரோப்பா கிரீசில் பாம்பு வணக்கம் சாதாரணமாக இருந்து வந்தது. பக்கஸ் கடவுளின் விழாவில் எல்லோரும் பாம்பின் வடிவங்களைத் தலையிலும் உடையிலும் அணிந்தார்கள். அதேன்ஸ் பட்டினத்தின் அயலில் ஒரு பாம்பு இருந்ததென்றும், அது அந் நகரின் காவற்றெய்வம் என்றும் ஹெரதோதசு கூறியுள்ளார். அதற்குத், தேன்கலந்த அல்லது தேனில் பக்குவஞ் செய்யப் பட்ட ரொட்டி கொடுக்கப்பட்டது. மினர்வா என்னும் தெய்வம் சில வேளை பாம்பு வடிவில் வழிபடப்பட்டது. பிடியாஸ்(Phidias) என்னும் தெய்வத்தின் சிலை, பாம்பு வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டது. அடியன்(Aordian) என்னும் அரசன் அதேன்சில் யூபிதர், ஒலிம்பியஸ் கடவுளுக்கு ஆலயம் அமைத்து அதில் இந்திய நாட்டினின்றும் கொண்டுவரப்பட்டதெனக் கருதப்பட்ட பாம்பை அங்கு வைத்தான். உரோமரின் கொடி பாம்புக் கொடியாக விருந்தது. அங்குக் கிடைத்த பட்டையங்களில் பெரிய பாம்பின் வடிவங் காணப்படுகின்றது. சமாதிற்றா என்னும் இடத்தில் பாம்பு வழிபடப் பட்டது. வீடுகளிற் பாம்புகள் வளர்க்கப்பட்டன. வட ஐரோப்பாவில் ஒவ் வொரு வீட்டிலும் குடும்பத் தெய்வமாகக் கருதிப் பாம்பு வளர்க்கப்பட்டது. வீட்டுத் தலைவன் பாம்பை வைக்கோலில் கிடக்கும்படி வைத்து அதற்கு உணவு கொடுத்துப் பலி செலுத்தினான். ஜெரோமி (Jerome) என்னும் அரசன் அவைகளைக் கொன்று அழிக்கும்படி கட்டளை யிட்டான். ஸ்காண்டினேவியாவில் பாம்புகளுக்குப், பசுப்பால், ஆடு, சில வேளைகளில் குழந்தைகளின் இறைச்சி உணவாகக் கொடுக்கப்பட்டன. அவைகளுக்குத் தீங்கிழைப்பது பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. டேனியர்(Danes)களின் கொடி பாம்பு. டானியரிடமும் நார்மானியரிடமும் இருந்து பிரான்சியர் பாம்புக் கொடியைப்பெற்றனர். இது நார்மாண்டியின் சிற்றரசனுடையதாக நெடுநாள் இருந்து வந்தது. டென்மார்க்கில் பாம்பு வழிபாட்டைக் காட்டும் பல சின்னங்கள் கண்டு எடுக்கப்பட்டன. பிரித்தானியாவில் துரூயித்தியர் (Druids) பாம்பை வழிபட்டனர். துரூயித்தியரின் வணக்கத்தில் பாம்பு முதன்மையுடையது. பாபிலோனிய மக்கள் உயிர்ப் பாம்பை வணங்கினார்கள். துரூயித்தியரின் கோயில்களில் உயிர்ப் பாம்புகள் உறைந்தன. பழைய பிரித்தானியர் பாம்பின் வடிவம் வெட்டப்பட்ட கற்களைக் கழுத்தில் அணிந்தார்கள். பிரித்தனில் பாம்பை ஞாயிறும் திங்களும் சுற்றி வருவது போன்ற வடிவங்கள் காணப்படுகின்றன. பிரித்தன் மக்களின் கொடி பாம்பாக விருந்தது. பிற்காலத்தில் பாம்புக்குப் பதில் ஒரு கொம்புடைய குதிரை அமைக்கப்பட்டது. அயர்லாந்தில் நியூகிரேஞ்ச் (New Grange) என்னுமிடத்தில் பாம்புச் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. பாட்ரிக் ஞானியார் (St. Patrick) செபத்தினால் அயர் லாந்தினின்றும் எல்லாப் பாம்புகளையும் ஓட்டினார் என்னும் பழங்கதை யுள்ளது. அக்கதை பாட்ரிக் ஞானியார் பாம்பு வணக்கத்தை ஒழித்த வரலாற்றை உணர்த்தலாம். கிரேக்கரின் தானியக் கடவுளின் தேரை இழுத்துச் செல்வன பாம்புகள். கிரீசில் பெண்கள் பாம்பு போன்ற அணிகளைச் செய்து, கையிலும் மார்பிலும் அணிந்தார்கள். குழந்தைகளுக்கும் அவ்வகை அணிகள் இடப்பட்டன. யூரப் (Aur-ab) என்னும் ஐரோப்பாவைக் குறிக்கும் பெயருக்குச் சூரியப் பாம்பு என்பது பொருள். ஐரோப்பாவின் ஆதி மக்கள் பாம்பின் பிள்ளைகள் எனப்பட்டார்கள். எகிப்து, பினீசியா முதலிய நாடுகளிலிருந்து வந்த பாம்பு வணக்கக்காரரால் கிரீசு குடியேறப்பட்டது. அமெரிக்கா அமெரிக்காவில் விற்சிலி புற்சிலிக் கடவுளின் கோயில், ஒரு பாம்பின் மீது இன்னொரு பாம்பை வைத்துக் கட்டியது போல வட்டமாகக் கட்டப்பட்டுள்ளது. அக் கோயில் பாம்பு வளையம் எனப்படுகின்றது. அக் கடவுளின் கைத்தடி, பாம்பு. அக் கடவுள் நிற்கும் மேட்டின் நான்கு மூலை களிலும் நான்கு பாம்புத் தலைகள் காணப்படுகின்றன. மெக்சிக்கரின் மாதத்தில் இருபது நாட்கள் உண்டு. இரண்டு நாட்களின் பெயர்கள் பாம்பின் பெயர்களாக அமைந்துள்ளன. காற்றுக் கடவுளின் கோயிற் கதவுகள் பாம்பின் அங்காந்த வாய்போல் அமைக்கப்பட்டுள்ளன. மெக்சிகர் பாம்புச் சிலைகளை வணங்குவதோடு நிற்கவில்லை. அவர்கள் வீடுகளிலும் பாம்பு களை வளர்த்தார்கள். அவர்கள் சலசலக்கும் பாம்பைக் கடவுள் தன்மை யுடையதெனக் கொண்டார்கள். கோட்டிஸ் என்னும் ஸ்பானிய தளபதி வெற்றியாளனாக மெக்சிக்க ஆலயம் ஒன்றுக்குச் சென்றபோது அவன் கண்ட காட்சி பின்வருமாறு: “கோயிலின் உச்சிக்கு ஏறிச் சென்றபோது விலங்குகள் பலவற்றை வெட்டிக் கொல்லும் இடமாகிய மேடை ஒன்று காணப்பட்டது. அவ் விடத்தில் பெரிய மலைப் பாம்பின் வடிவங்கள் கிடந்தன. அவைகள் மீது இரத்தக் கறை படிந்திருந்தது. அதைத் தாண்டிச் சென்றபோது ஒரு மண்டபங் காணப்பட்டது. அங்குக் கொடிய பார்வையும் கொழுத்த உடலு முடைய போர்க் கடவுளின் வடிவம் இருந்தது. அது பொன் ஆபரணங் களை அணிந்திருந்தது. அதன் உடம்பில் பொன் பாம்புகள் கிடந்தன. முன்னால் தூபச்சட்டி கிடந்தது. அதில் பலி விலங்குகளின் ஈரல் சாம்பிராணி யோடு கலந்து எரிக்கப்பட்டது. அதற்கு இடப்புறத்தில் கரடித் தலையுடைய வடிவங்கள் காணப்பட்டன. அவற்றிற்குப் பாம்பின் வால்கள் உண்டு. அந்தப் பாம்பின் தோலால் கட்டப்பட்ட பெரிய மேளமிருந்தது. அவற்றிற் குச் சிறிது தூரத்தில் பயங்கரமான வடிவங்கள் காணப்பட்டன. அவை பாம்புகள் போலவும் பேய்கள் போலவும் இருந்தன.” மெக்சிகர் பாம்புக் கடவுளுக்கு மக்களைப் பலியிட்டுத், தலைகளை ஒரு பாத்திரத்தில் வைத்தார்கள். மெக்சிக்கரின் பழைய வரலாற்றை ஆராயு மிடத்துப் பாம்பின் தொடர்பில்லாத கடவுள் இருக்கவில்லை. பல தெய் வங்கள், பாம்பைக் கையில் வைத்திருக்கின்றன. குருமாரின் சிலைகள்மீது பாம்பு வடிவங்கள் காணப்படுகின்றன. மெக்சிக்கன் ஒருவனுக்கு நோய் வந்தால் பூசாரி அழைக்கப்படுகின்றான். அவன் நோயாளியின் தலையைச் சிரைத்துவிட்டு அவன் கழுத்தில் பாம்பின் என்புகளைத் தொங்கவிடுவான். பெரு(Peru) மக்கள் மெக்சிக்கரைப் போலவே பாம்புகளை வணங்கினர். தொபிரா(Topera) என்னும் இடத்தில் உலோகத்தால் செய்த பெரிய பாம்பு ஒன்று இருந்தது. அதற்கு ஆண்டுதோறும் நரபலி இடப் பட்டது. வீடுகளிலும், கோயில்களிலும் பாம்புகளின் ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன.  ஆதி மனிதன் (PRE - HISTORIC MAN) முன்னுரை ஆதி மனிதன் என்னும் இச் சிறிய நூல் மிக மிகப் பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் எவ்வாறு கீழ் நிலையிலிருந்து படிப்படியே மேல் நிலையை அடைந்தார்கள் என்பவை போன்ற பழைய செய்திகளை சிறுவரும் எளிதில் கற்றறியும் வகையில் கூறுகின்றது. மனிதனுடைய வரலாறே மக்கள் தொடர்பான வரலாறுகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை. மனிதனைப் பற்றிய வரலாறுகளை ஆதி முதல் அறிந்து கொள்ளாது பிற வரலாறுகளைக் கற்பது தளமிடாது கட்டிடம் அமைக்கத் தொடங்குவது போன்றதாகும். இந் நூல் ஆங்கிலத்தில் எழுதப் பட்டுள்ள பெருநூல்கள் சிவற்றின் கருத்துக்களை சுருங்கக் கூறி விளங்க வைப்பது. சென்னை 15.3.48 ந.சி. கந்தையா ஆதிமனிதன் தோற்றுவாய் மனிதனுடைய வரலாறு மிக வியப்பானது. பிற வரலாறுகளைப் பயில்வதன்முன் நாம் மனிதனைப்பற்றிய வரலாற்றையே அறிதல் வேண்டும். மனித வரலாறே மற்றைய வரலாற்றுக் கல்விகளுக்குத் துணை புரிவது. அவனுடைய வடிவமும் இன்றைய மனிதனைவிட வேறுபட் டிருந்தது. இப் பூமியில் வாழத் தொடங்கிய பல்லாயிரம் ஆண்டுகளில் அவனுடைய வடிவம் சிறிது சிறிதாகப் பண்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. அவனுடைய வாழ்க்கை முறைகளும் அவ்வாறே பண்பா டடைந்துள்ளன. இன்றைய மக்கட் கூட்டத்தினரின் முன்னோனான ஆதி மனிதனின் வியப்பான வரலாற்றை இச் சிறிய நூல் கூறுகின்றது. மனிதத் தோற்றம் இவ்வுலகில் மக்கள் எக்காலத்தில் தோன்றினார்கள் எனக் கூறமுடி யாது. இக்கால விஞ்ஞானிகள் தமது யூகையினால் மக்கள் இவ்வுலகில் தோன்றி வாழத் தொடங்கிய காலத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வுலகில் மக்கள் தோன்றி வாழத்தொடங்கிப் பத்து இலட்சம் அல்லது இருபது இலட்சம் ஆண்டுகள் ஆகலாம் என அவர்கள் கூறுகின்றனர். இவ்வுலகின் பல வேறு இடங்களில் மிக மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் மண்டை ஓடுகளும் எலும்புகளும் கண்டு எடுக்கப்பட்டன. அவைகளை வைத்து அம் மக்களின் வடிவங்களை விஞ்ஞானிகள் அமைத்துள்ளார்கள். கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகளுக்கும் எலும்புகளுக்கும் அருகில் கல்லாயுதங்களும், விலங்குகளின் எலும்புகளும் கிடந்தன. இவைகளை ஆதாரமாகக் கொண்டு ஆராய்ச்சியாளர் ஆதிகால மக்களின் வரலாறுகளை எழுதியுள்ளார்கள். மக்கள் நாகரிகமடைந்து எழுதப் பயின்று வரலாறுகளை எழுதிவைக்கத் தொடங்குவதற்கு முற்பட்ட மனித வரலாறு இவ்வகையி லேயே எழுதப்பட்டுள்ளது. மேல் நாட்டார் மனித வரலாற்றை ஓர் கலை யாகக்கொண்டு அதனை ஊக்கத்தோடு கற்கின்றனர்; பற்பல புதிய நூல்களை வெளியிடுகின்றனர். மனித வரலாறு மனிதனின் பகுத்தறிவைத் தூண்டி வளர்க்கத்தக்கது; தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கைகள், பழக்கங்கள், வழக்கங்கள், பழங்கதைகள் போன்ற பலவற்றைத் தக்கவாறு விளக்கத்தக்கது. ஆதிமனிதன் துர்போயிஸ் (Durbois) என்னும் டச்சுக்காரர் 1891இல் ஜாவாவிலே மிகப் பழங்கால மனிதனின் மண்டை ஓட்டையும் எலும்புகளையும் கண்டு எடுத்தார். இவை ஆறு வாரிக்கொண்டு வந்து குவித்த மணற்படைகளுள் கிடந்தன . இவை கிடந்த இடத்தின் அருகில் விலங்குகளின் எலும்புகளும் காணப்பட்டன. துர்போயிஸ் கண்டு எடுத்த மண்டை ஓட்டுக்கும் எலும்பு களுக்கும் உரிய மனிதனுக்கு விஞ்ஞானிகள் ஜாவா மனிதன் எனப் பெய ரிட்டுள்ளார்கள். இவனுடைய வடிவு குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப் பட்டது. ஆகவே நிமிர்ந்து நிற்கும் வாலில்லாக் குரங்கு மனிதன் எனவும் அவன் அறியப்படுவான். அம் மனிதனின் மூளை இன்றைய மனிதனின் மூளையில் மூன்றில் இரண்டு பங்கு அளவினது. மந்திரவாதி ஒருவன் ஜாவா மனிதன் எனப்பட்ட பழங்கால மனிதனுக்கும், வேறு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளுக்குரிய பழங்கால மனிதனுக்கும் உயிர் கொடுத்து அவர்களை எழுப்பினான் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அம் மனிதர் தம்முடைய வரலாற்றைப் பின்வருமாறு கூறுவர். ஜhவா மனிதன் எழுந்து தனது வரலாற்றைச் சொல்லுகின்றான்: இன்றைய மக்கள் என்னை வாலில்லாக் குரங்கு மனிதன் என்று அழைக்கிறார்கள் என நான் அறிவேன். இதை அன்றி அவர்களுக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியாது. எனது மயிர் மூடிய உடலையும், தொங்கும் தோள்களையும், பெரிய உறுப்புகளையும், முன்புறம் தள்ளிய தாடையையும் நோக்குகின்றவர்களுக்கு நான் வாலில்லாக் குரங்குபோல் தோன்றலாம் ; ஆனால் நான் மனிதனே. குரங்குகள் தவழ்ந்து செல்லும். நடக்கத் தொடங்கியபின் நான் ஒரு போதும் நாலு கால்களில் சென்றதில்லை. இன்று காணப்படுவது போன்ற தல்லாத அழகிய ஓர் இடத்தில் நான் பிறந்தேன்; மரத்தில் கட்டப்பட்ட ஒரு கூட்டில் இருந்து வளர்ந்தேன்; பால்குடி மறந்தபின் தோற்றத்தில் கிட்டத் தட்ட எங்களைப் போன்ற ‘ஓராங் ஊத்தாங்’ என்னும் குரங்குக்குட்டி களோடு விளையாடினேன். நான் மனிதக் குரங்கு அல்லன் என்று நான் அறிவேன். மனிதக் குரங்குகள் செய்யும் ஒலிக் குறிகளின் பொருளை நான் அறிந்திருந்தேன். நானும் அவைகளைப் போலவே சத்தமிட்டேன். நான் சிறிது வளர்ந்தவனானேன். அப்பொழுது எனது தந்தை தனது கையினால் என்னைப் பலமுறை அடித்து “குடும்பத்தவர்களுக்கு உணவு தேடிவா” என்று கூறியதை நான் அறிந்துகொண்டேன். உண்ணக் கூடிய பழம், நத்தை, பூச்சிகள் போன்றவைகளை நான் தேடிக்கொண்டு வந்தேன். சில சமயங் களில் பறவைகளையும் பிடித்து அவைகளின் இறைச்சியையும் உண்டேன். குரங்குகளிடம் காணப்படாத சில குணங்கள் எங்களுக்கு உண்டு. நானும் பெற்றோரும் ஆகிய மூவரும் தேடிய உணவை நாம் இருக்கும் மரத்தடிக்குக் கொண்டு வந்தோம்; அதனைத் தந்தை சமமாகப் பிரித்துத் தந்தார். வாலில்லாக் குரங்குகளோ தமக்கு வேண்டிய உணவைத் தாமே தேடி உண்டன. காட்டிலே தாயோடு இருக்கும் குட்டியின் தந்தைக் குரங்கு மாத்திரம் தாய்க்கும் குட்டிக்கும் உணவு கொண்டு வந்தது. எங்கள் இனத்தில் பத்து அல்லது பன்னி ரண்டு குடும்பங்கள் வரையில்தான் இருந்தன. நாங்கள் வாலில்லாக் குரங்குகளுள் திருமணம் செய்து கொள்ளவில்லை. எங்களுள் வயது வந்த ஓர் ஆண், பெண்ணைத் தேடும் பொருட்டு நூற்றுக்கணக்காண மைல்கள் திரிந்தான். என்னைப் போல் உடம்பு முழுவதும் மயிருள்ள ஒரு இளம் பெண் எனக்குக் கிடைத்தாள். நாங்கள் உறுமிச் சத்தமிட்டு ஒருவர் கன்னத்தோடு ஒருவர் கன்னத்தை உரைஞ்சினோம். உடனே இருவரும் திருமணம் செய்துகொள்வதென நிச்சயம் செய்துகொண்டோம். இருவரும் உயர்ந்த மரம் ஒன்றின் மீது கூடுகட்டத் தீர்மானித்தோம். அவ்வாறே கூடுகட்டி இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தோம். மரம் ஆற்றங்கரையில் நின்றது. அதன் கிளைகள் ஆற்றுக்கு மேலே தொங்கின. ஒருநாள் பூமி வெடித்தது போலப் பெரிய சத்தம் கேட்டது. நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஆற்றில் ஐம்பதடி உயரமுள்ள ஒரு அலை எழுந்தது. அது என்னையும் எனது மனைவியையும் ஆற்றில் அடித்து விழுத்தி வாரிக்கொண்டுபோய் விட்டது. அவ்வலை எரிமலைக் குழப்பத் தினால் உண்டாயிற்று. ஹெய்டில்பர்க் 2மனிதன் ஜாவா மனிதன் தனது வரலாற்றைச் சொல்லி முடித்ததும் ஹெய்டில்பர்க் மனிதன் தனது வரலாற்றைக் கூறுகின்றான் : எனக்கு ஒரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் இருந்தார்கள். நாங்கள் நான்கு பேரும் ஒரு மரத்தில் கூடுகட்டி வாழ்ந்தோம். நீண்டு வளைந்த பற்களையுடைய கொடிய புலி இரை தேடுவதற்கு இரவில் உலாவித் திரிந்தது. நாங்கள் அக்கொடிய விலங்குக்குப் பயந்து வாழ்ந்தோம். அப் புலி இராக்காலத்தில் மரங்களை முன்னங்கால்களால் உதைத்து ஆட்டும். மரக்கிளைகளில் இருக்கும் குரங்குகள் பழங்களைப் போலப் பொத்தென்று கீழே விழும். எங்கள் கூடு மரத்தின் உச்சிக் கிளையில் இருந்தது. ஆகவே நாங்கள் கீழே விழாமல் பிழைத்தோம். ஒருநாட் காலையில் நாங்கள் கீழே இறங்கினோம். உடனே பெரிய புலி ஒன்று பக்கத்தேயிருந்த புதரிலிருந்து அம்பு போல் பாய்ந்தது. மறு நொடியில் அது எனது சகோதரனைச் சதை சதையாகக் கிழித்தது. அதைக் கண்டு நான் பதைபதைத்தேன். ஒருமுறை சிம்பன்சி என்னும் மனிதக் குரங்கின் மனைவியைப் புலி பிடித்தது. அப்போது அம் மனிதக் குரங்கு ஆத்திரங்கொண்டு பெரிய கல்லை எடுத்துப் புலியின் மண்டையில் அடித்தது. புலி அக் குரங்கைத் தனது முன்னங்கால்களால் வாரி எடுத்துக் கிழித்தெறிந்துவிட்டது. பின்பு அம் மனிதக் குரங்கின் சகோதரனைப் புலி சதை சதையாகக் கிழிப்பதைக் கண்டு எனது மனம் வேலை செய்து கொண்டிருந்தது. நான் உடனே எனது சகோதரிமாரோடு ஓடி மறைந்துவிட்டேன். எனது உயிர் போக நேர்ந் தாலும் அப் புலியைக் கொன்று விட வேண்டுமென நான் எண்ணினேன். தொலை வில் நின்றபடியே புலியைக் கொல்லலாம் என எனது மூளையில் தோன்றிற்று. எனது தந்தை ஒரு தண் டாயுதத்தைச் செய்து வைத்திருந் தார். அதுமுதல் நாங்கள் பறவை களைக் கல்லால் எறிவதை நிறுத்தி விட்டோம். கற்கள் நிச்சயமாகப் பறவைகள் மீது படமாட்டா. பறவைகளுக்குக் கிட்டச் சென்று அவைகளை எறிவதும் கடினம், எறிவதில் தடிகள் பயனளிக்கத்தக்கன. ஆனால் அவை புலியைக் கொல்வதற்குப் பயன்படமாட்டா. பல நாட்களாக நான் தனியே யிருந்து இதைக் குறித்து ஆலோசனை செய்தேன். எனது சகோதரிமார் தினமும் வெளியே சென்று உணவு கொண்டுவந்தார்கள். பழங்கள், குருவி களின் முட்டைகள், தவளைகள், முயல், இலைகள் என்பவை அவர்கள் கொண்டுவரும் உணவு வகைகள். நான் உணவு தேடும் பொருட்டு ஒரு விரலைத்தானும் அசைக்கவில்லை. கடைசியில் ஒரு எண்ணம் தட்டிற்று; உடனே மகிழ்ச்சியினால் ஆரவாரஞ் செய்து எழுந்து கூத்தாடினேன். உடனே சிம்பன்சி என்னும் மனிதக்குரங்குகளும் ஓடிவந்து நான் ஆடுவது போலக் கூத்தாடின. நான் தோலைப் பிளந்து அதனால் ஒரு கவண் செய்தேன். நான் ஆற்றங்கரைக்குச் சென்று அங்குக் கிடக்கும் அழுத்தமான கூழாங்கற் களைக் கவணில் வைத்துச் கழற்றி எறிந்து பழகினேன்; நாளடைவில் கல் இலக்கில் படும்படி எறியும் பழக்கம் உண்டாயிற்று. பின்பு, பறக்கும் பறவை களின் இறக்கைகள் மீது கல் படும்படி எறியப் பழக்கம் அடைந்தேன். ஒரு நாள் மத்தியான நேரம் ; வெய்யில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. நான் புதர்களைப் பார்த்துக் கற்களை எறிந்தேன். சடுதியாகப் புதர் அசைந்தது. உடனே புலியொன்று வெளியே வந்தது. அதன் வால் நிலத்தை அடித்துக் கொண்டிருந்தது. வெய்யில் படுதலால் அதன் கண்கள் வெளிச்சமாகத் தோன்றின. உடனே நான் இரண்டு கற்களை அக் கண்கள் மீது விரைவாக வீசி எறிந்தேன். ஒரு கல் அதன் மூளையின் ஆழத்தில் புதைந்து சென்றது. புலி உடனே விழுந்து இறந்து போயிற்று. நான் இருந்த தீவிலே எனது இனத்தவர்கள் பலர் வாழ்ந்தார்கள். அவர்கள் கவண் செய்யும் வகையைத் தமக்கு அறிவிக்கும்படி என்னைக் கேட்டார்கள். அவர்கள் வரும்போது முயல்களையும் பிறஉணவுப் பொருள்களையும் கொண்டு வந்தார்கள். கவணின் துணையைக்கொண்டு நன்றாக வேட்டையாடலாம். நான் புலியைக் கொல்லும் போது சிம்பன்சிக் குரங்குகள் பார்த்துக் கொண்டிருந்தன. அதன்பின் அவை எனக்குக் கிட்ட வருவதில்லை. உணவு சமித்து உடல் செழுமையுறுவதற்கு மனிதன் பலவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும். எறிதடி, கவண் என்பவைகளின் உதவியாலும் அவைகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களின் வாய்ப்பினாலும் எங்களுக்கு ஊன் உணவு எப்பொழுதும் கிடைத்தது. நான் முதலாவது உறை பனிக் காலத்துக்குப் பின் தோன்றி இரண்டாவது வெப்பக் காலத்தில் ஐரோப்பிய சமவெளிகளில் வாழ்ந்தேன். எல்லா வகை உணவு களையும் உண்ண அறியாமலிருந்தால் நாங்கள் விலங்குகள் சென்ற வழியே போயிருப்போம். நானும் எனது இனத்தவர்களும் மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தோம். விலங்குகள் மலைக் குகைகளில் வசிப்பதையும், குகைகள் மழைக்கும் வெய்யிலுக்கும் அவைகளுக்குப் பாதுகாப்பு அளிக் கின்றன என்பதையும் நான் கவனித்தேன். எனக்குக் கீழ்ப்பட்ட விலங்குகள் குகையில் சேமமாக வாழ நாங்கள் மரக்கிளைகளில் கூடுகட்டி வாழ வேண்டுமோ என்று எண்ணினேன். பெரிய மலைக் குகை ஒன்றுக்குக் சென் றேன். அங்கு கழுதைப்புலி ஒன்று தனது குடும்பத்தோடு வாழ்ந்து கொண் டிருந்தது. தந்தை, தாய், குட்டிகள் என்னும் அப் புலிக் குடும்பத்தை நான் அக் குகையினின்றும் துரத்தினேன். அவை பற்களைக் காட்டிக் கொண்டு வெளியேறின. இதற்குப் பிறகு நாங்களும் எங்களினத்தவர்களும் மரத்திற் கூடிகட்டி ஒருபோதும் வாழவில்லை; குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்தோம். நிண்டேர்தல்1 மனிதன் நிண்டேர்தல் மனிதன் இப்பொழுது எழுந்து நின்று தனது வரலாற்றைச் சொல்லு கிறான்: ஹெய்டில்பர்க் மனிதனுக்கும் எனக்கு மிடையில் இரண்டு இலட்சம் ஆண்டுகள் கழிந்தன. இக்காலத்தில் உறைபனி மூன்று முறை மனிதரையும் விலங்குகளையும் தனக்கு முன்னால் துரத்திக் கொண்டு பூமியைச் சுற்றிவந்தது. நான் நாலாவது குளிர்காலத்தில் வாழ்ந்தேன். எனக்கு முன்னமே நமது இனத்தவர் முன்னேற்ற வழிகளில் செல்ல ஆரம்பத் திருந்தார்கள். மனித இறைச்சியை உண்ணும் 2மக்களும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு நாடி(chin) எலும்பு இருக்கவில்லை. ஆகவே அவர்கள் அதிகம் பேசமாட்டாதவர்களா யிருந்தனர். அவர்கள் தமது கைகளால் காட்டும் சைகைகளோடு இருபது ஒலிக் குறிகளையும் பேச்சாகப் பயன் படுத்தினர். மனித இறைச்சியை உண்ணும் குணம் பசிக்கொடுமையால் உண்டாக வில்லை. எலும்புகளை உடைக்கும்போது அவைகளினுள் உள்ள ஊன் மிகச் சுவையுடையதாயிருந்தது. சுவை காரணமாக மனித எலும்பையும் உடைத்து ஊனை உண்ட மக்கள் மனித இறைச்சியையும் உண்ணத் தொடங்கினார்கள். இன்றும் தென் கடல் தீவுகளில் வாழும் மக்கள் நீளப்பன்றியைச் சிறந்த உணவாகக் கொள்கிறார்கள். நீளப்பன்றி என்பது மனிதனைக் குறிக்கும். வீரமுள்ளவனைக் கொன்று தின்பதால் அவனுடைய வீரம் உண்பவனைச் சேர்கின்றதென்னும் நம்பிக்கையும் இருந்து வந்தது. எனக்கு முன்பு மக்கள் நெருப்பைப் பற்றி அறிந்திருக்கவில்லை. நாங்கள் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் நடுங்கிக்கொண்டிருந்து உணவைப் பச்சையாகப் புசித்தோம். எங்களை ஓநாய்களிடமிருந்தும் புலி களிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள எங்களிடம் மிகக் கீழ்த்தரமான ஆயுதங்கள் மாத்திர மிருந்தன. நாட்கள் கழிந்தன. எங்களின் உடல்கள் வயிரமடைந்தன. இளைஞர், இருபது பேர் அல்லது முப்பது பேர் சேர்ந்து கூட்டங்களாகத் திரிந்தார்கள். வயது முதிர்ந்த நாங்கள் அவர்களோடு செல்ல முடியாமலிருந்தது. தம்மைப் பின் தொடர்ந்து செல்லமுடியாதவர்களை வலி யுள்ள ஒருவன் தனது தண்டாயுதத்தால் மண்டையிலடித்துக் கொன்றான். நெருப்புக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது முன்னேற்றம் விரைந்து சென்றது. ஒருநாள், குகைக்கு வெளியே இரவு முழுதும் புயல் அடித்தது. மின்னல் இடைவிடாமல் நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்தது. காலையில் காட்டுமரங்கள் புகைந்து கொண்டிருந்தன. எரிந்து சிந்திக் கிடக்கும் சாம்பலில் நெருப்பில் வெந்து கிடக்கும் விலங்குகளையும் பறவைகளையும் பார்த்தேன். அவைகளுள் ஒன்றை எடுத்துக் கரியைத் துடைத்துவிட்டுப் பல்லாற் கடித்துப் பார்த்தேன். இவ்வகை உருசியான உணவை நான் முன் ஒருபோதும் உண்டதில்லை. நெருப்புத் தணலைக் கல் ஒன்றின்மீது வைத்து அதனை விலங்கின் குடல் ஒன்றால் தூக்கிக்கொண்டு எனது குகைக்குச் சென்றேன். நான் எனது மனைவியர் பலருள் ஒருத்தியைச் சுள்ளிகள் பொறுக்கி வரும்படி சொன்னேன்; சுள்ளிகள் மீது தணலை வைத்து நெருப்பை மூட்டி எரித்தேன். என்னினத்தவர்கள் என்னிடமிருந்து நெருப்பைப் பெற்றுச் சென் றார்கள். நெருப்பு இராப்பகல் எரியும்படி விறகிட்டு எரிக்கப்பட்டது. நெருப்பு அவிந்துபோகுமாயின் மறுபடி மின்னலும் புயலும் உண்டாகும் காலத்தைப் பார்த்திருக்க வேண்டும். நெருப்பு இல்லாவிடில் குளிர் காயவும், சமைக்கவும் முடியாது. குகையிலுள்ள பெண்களுக்கும் வளர்ந்த பிள்ளைகளுக்கும் இப்பொழுது புதுக் கடமை ஒன்று உண்டாயிற்று. அக் கடமை விறகுகளை இட்டு நெருப்பை அணைந்து போகாதபடி பார்த்துக் கொள்வதாகும். நெருப்பு எப்பொழுதாவது அணைந்து விடுமோ என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். ஒருமுறை நாங்கள் வேட்டையாடச் சென் றோம். இன்னொரு வேட்டையாடும் கூட்டத் தினர் எங்களைச் சந்தித்தார்கள். இரு கூட்டத் தாரும் எதிர்த்துக் கடுமையாகச் சண்டை செய்தோம். எங்களை எதிர்த்தவர்கள் எங்களினும் பலராயிருந்தனர். அவர்கள் எங்களைத் துரத்தி விட்டு எங்கள் நெருப்பைப் பிடித்துக் கொண்டார்கள். நாங்கள் ஓடிச் சென்று தங்கிய குகைகளில் நெருப்பு இல்லை; ஆகவே நாம் குளிரால் வருந்திக் கொண்டிருந்தோம். உணவைச் சமைக்க முடியாமலும் துயரப்பட்டோம். எனக்குப் புதல்வர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் சோம்பேறியும் பலங் குறைந்தவனுமாயிருந்தான். அவன் வேண்டும்போது நெருப்பை உண்டாக்கக் கண்டுபிடித்தான். அவன் தீத்தட்டிக்கல் ஆயுதத் தால் வேலை செய்வதில் கெட்டிக்காரன். அவன் முரடான கல்லாயுதத்தால் மரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது மரம் சூடேறுவதை அவன் கண்டான். அவன் பின்பு ஒருநாள் இரண்டு மரத்துண்டுகளை எடுத்து நீண்ட நேரம் உரைஞ்சினான். சடுதியில் புகை யுண்டாயிற்று. பின்பு மரத்தின் துளையில் நெருப்புத் தோன்றிற்று. அவன் உடனே பெருங்கூச்சசலிட்டான். நான் ஓடிச் சென்று என்ன நடந்தது என்று அறிந்தேன். இதன் பின்பு நாங்கள் ஒரு போதும் எங்களோடு நெருப்பைக்கொண்டு திரியவில்லை. நெருப்பைச் சுற்றிச் சிறு குடிசைகள் எழுந்தன. நாங்கள் நெருப்பின் உதவியால் ஆயுதங் களை நன்றாகக் கூராக்கவும் வயிரப்படுத்தவும் அறிந்தோம். நெருப்பைக் கண்டுபிடித்தபின் குடும்ப உணர்ச்சியும் நெருங்கி வளர்ந்தது. நெருப்பு எங்களையும் விலங்குகளையும் பிரித்து வைத்தது. குளிர் மிகுந்த இராக் காலத்தில் சிம்பன்சி என்னும் மனிதக் குரங்குகள் நமது குகைமுன் எரியும் நெருப்பண்டை வந்தன; தமது கைகளை நெருப்பில் காய்ச்சிக் குளிர் காய்ந்து மகிழ்ச்சியினால் சத்தமிட்டன. ஒரு மனிதக் குரங்குக் காவது நெருப்பின்மேல் விறகை இட்டு எரிக்கத் தெரியாது. நெருப்பு அணைந்தவுடன் அவை மறுபடியும் குளிரால் நடுங்கின. வாழத் தகுதியுள்ளது நிலைபெறுதல், தகுதியற்றது மறைந்துபோதல் என்பதே அன்று முதல் இன்று வரையும் உள்ள இயற்கை விதி. இவ் விதிக்கமைய இன்னொரு மயிரதிகமில்லாதவரும், உயரமுடையவருமாகிய ஒரு சாதியினர் எங்களை வேட்டையாடி அழித்தார்கள். விரிவளர்ச்சி (evolution) விதி தகுதியுள்ளதற்கு அல்லது வலியதற்கு இடங்கொடு என்பதே. நாங்கள் இவ்விதிக்கு மாறாக நிற்க முடியவில்லை. பெண்கள் விலங்குகள் போன்ற மக்களிடையே பெண்களின் நிலை எவ்வா றிருந்ததது? பெண்கள் மிகவும் கவனிக்கப்படாதவர்களாகவும் அடிமை போன்றவர்களாகவு மிருந்தனர்; பெண் புனிதமானவள், இரக்கமுள்ளவள், மனிதனின் இனிய பாதியாயுள்ளவள் என்னும் கருத்துகள் தோன்ற வில்லை. அக்காலத்தில் மனிதன் அரை விலங்காகவே இருந்தான். பெண்கள் அடர்ந்த மயிருள்ளவர்களாகவும், முகம் அதிக விறைப்பு ஏறாதவர்களாகவும், சாந்தமான தோற்ற முடையவர்களாகயும் இருந்தனர். அவர்களிற் பலர் வட்டமாகக் குந்தியிருப்பார்கள். அவர்களுட் சிலர் கல்லாயுதங்களால் கிழங்குகளைச் சுரண்டிச் சுத்தஞ் செய்வர்; சிலர் விதைகளைக் கல்லின்மேல் வைத்துக் கல்லால் அடித்து உடைத்துக் கொண்டிருப்பர். சிலர் மான் முதலிய விலங்குகளின் தோல்களை பல்லினால் சப்பி மிருதுவாக்கிக் கொண் டிருப்பர். சிலர் தமது குழந்தைகளுக்கும், பன்றி, நாய்க் குட்டிகளுக்கும் பால் கொடுத்துக் கொண்டிருப்பர். நெருப்பைச் சுற்றியிருந்து அவர்கள் பல வகைக் கதைகளைப் பேசுவார்கள். இருபதாம் நூற்றாண்டாகிய இன்று நன்கு வளர்க்கப்படும் பெண்கள், பெண்ணினத்தினர் ஆண்களை விலங்கு நிலையினின்றும் எப்படி மேலே வரச்செய்தார்கள் என்பதை அறியமாட்டார்கள். சமீப காலத்திலேயே பெண்கள் ஆண்களை ஒத்த உரிமைகளைப் பெற்று அவர்களோடு சம வாழ்க்கை நடத்துகின்றனர். இன்று ஆண்களைப் போலவே பெண்களும் வேலை செய்து கூலி பெறுகிறார்கள்; அவர்கள் தங்கள் உழைப்பைக் கொண்டே வாழ்கின்றனர். ஆடவனின் சம்பந்தமில்லாமலே பெண் சுதந்தர மாக வாழ்கின்றாள். குரோமக்நன் மனிதன் நிண்டேர்தல் மனிதருக்குப் பின் குரோ மக்நன் மனிதர் தோன்றினார்கள். இவர்கள் துருவமான் மனிதர் (Reindeer-men) எனவும் அறியப்படுவர். இவர்கள் நிண்டேர்தல் மக்களை ஈவு இரக்கமின்றி வேட்டையாடிக் கொன்றனர். இவர்கள் ஆசிய நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரையில் பரவி வாழ்ந்தார்கள். இவர்கள் நெட்டையான வர்களாயும் குறைந்த மயிர் அடர்த்தி உடையவர்களாயுமிருந்தனர். இவர்கள் சிறு குடிசைகளில் வாழ்ந்தனர். ஒரு பெரிய குடிசையைச் சுற்றிப் பல சிறிய குடிசைகள் இருந்தன. குரோமக்நன் மக்கள் குடும்பம் என்னும் சமூக நிலையை அடைந்தனர். இவர்களிலிருந்தே சமூக வாழ்க்கை தோன்றிற்று. குடும்ப நெருப்பைச் சுற்றிக் குடும்பம் வளர்கின்றது. குடும்பத்திலிருந்தே சமூகம் வளர்ந்ததென்று விரிவளர்ச்சிக் கொள்கை (Evolution Theory) கூறுகின்றது. மற்றவர்களின் மனத்தோடு பழகுவதால் இவர் மனம் வளர்ச்சியடைகின்றது. இவர்கள் பிரிந்து சென்று வெவ்வேறு கூட்டங்களாக வாழ்ந்தபோதும், தாம் எல்லோரும் ஒரு பெரிய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று துருவ மான்களை வேட்டை யாடினர். துரத்தப்படும் விலங்குகள் எங்குச் சென்றனவோ அங்கெல்லாம் இவர்களும் சென்றார்கள். துருவ மான், காட்டுக் குதிரை, கஸ்தூரி மாடுகள் மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் சென்றபோது இவர்களும் அவைகளை வேட்டையாடும் பொருட்டு அவைகளைப் பின்தொடர்ந்து சென்றனர். வரலாறு ஆரம்பிப்பதன் முன் மத்திய ஐரோப்பிய புல்வெளிகளில் புல் முழங்கால் உயரமாயிருந்தது. அங்கு மேயும் துருவ மான்களும் காட்டுக் குதிரைகளும் வேட்டைக்காரரை மோப்பம் பிடித்தற்கு அடிக்கடி தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தன. வேட்டைக்காரர் தவழ்ந்து அம்பு பாயக்கூடிய அண்மையில் சென்றனர். காட்டின் தொலைவில் ஒரு பக்கத்தில் பெண்கள் நின்றார்கள். மூன்று மான்களும் ஒரு குதிரையும் மேலே துள்ளிக் கீழே விழுந்தன. உடனே மற்றைய விலங்குகள் காட்டுக்கு ஊடாகப் பாய்ந்து வேகமா யோடி மறைந்தன. பெண்கள் ஓடி வந்தனர். வேட்டையாடப்பட்ட விலங்குகளைத் தோள்களிலிட்டுச் சுமந்துசென்றனர். இறைச்சி பொரிக்கவோ, சமைக்கவோ அல்லது அவிக்கவோ படவில்லை. அக்காலப் பெண்கள் பானை செய்ய அறிந்திருக்கவில்லை. இப் புல்வெளியில் வேட்டையாடு வோர் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். பின்பு இன்னொரு கூட்டம் விலங்குகள் அவ்விடம் வந்தன. அங்கு மம்மத்து என்னும் யானை வந்து கொண்டிருக்கும் செய்தியை இளைஞன் ஒருவன் வந்து சொன்னான். பின்பு எல்லோரும் சேர்ந்து பொறிக் கிடங்கு ஒன்று தோண்டினார்கள். மம்மத்தின் முன்நின்று அதனை வேட்டையாட அவர்கள் அஞ்சினார்கள். மம்மத்து யானைக் கூட்டம் வந்தது. அக் கூட்டத்திலுள்ள யானையொன்று கிடங்கின் மேலே பரப்பியிருந்த தடிகள் மீது காலை வைத்தது. அது உடனே குழியில் விழுந்து அகப்பட்டுக் கொண்டது. அது எக்காளமிட்டுச் சத்தஞ் செய்தது. மற்ற யானைகள் அதனை மீட்பதற்குக் குழி அண்டை வந்தன. அவை களால் அதற்கு உதவி அளிக்க முடியவில்லை. அவைகள் அதனைக் குழி யிடத்திலேயே விட்டுச் சென்றன. வேட்டைக்காரர் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் குழியைச் சுற்றி நின்று கூத்தாடினார்கள். விலங்கு இறந்து போகும் வரையில் தமது ஈட்டிகளை அதன் மீது பாய்ச்சினார்கள். ஈட்டிகளை நக்கி இரத்தத்தைச் சுவைத்தார்கள். மக்கள் வேட்டை விலங்குகளோடு வெளியிலேயே வாழ்ந்தார்கள். அங்கும் இங்கும் குகைகள் இருந்தன. இவை நிலையானவும் உறுதியான வும் குடிசைகளாகப் பயன்பட்டன. வேட்டை விலங்குகள் கிடைப்பது அருமையான காலங்களில் வேட்டை யாடுவோர் அவைகளில் தங்கியிருந் தார்கள். ஆண்டில் ஒரு முறை அல்லது இரண்டு முறை எல்லோரும் ஓரிடத் தில் கூடினார்கள். இவ்வழக்கம் 40,000 ஆண்டுகளின் முன் தொடங்கியது. இது எங்கள் காலம் வரையில் இருந்து வருகின்றது. நிண்டேர்தல் மனிதனிடத்தில் காணப்படாத பொருள்கள் குரோமக்நன் மனிதனிடத்தில் இருந்தன. குரோமக்நன் மனிதரிடத்தில் குகைகளில் வாழும் கரடி, வாள் போன்ற பல்லுடைய புலி களை எதிர்த்துப் போராடத்தக்க ஆயு தங்கள் இருந்தன. வில்லையும் அம்பை யும் அவர்கள் பயன்படுத்தினார்கள். இவர்கள் ஆடை உடுக்கவில்லை. தம்மை அழகுபடுத்தும் பொருட்டுத் தோல் அணிந்திருந்தார்கள். இவர்கள் புல்வெளிகளில் வாழ்ந்தார்கள். சிறிது சிறிதாக இவர்களின் எண் குறையத் தொடங்கிற்று. பேச்சு பேச்சு என்றால் என்ன? “மன நிறைவினால் வாய் பேசுகிறது” என விவிலிய வேதத்தில் ஓர் இடத்தில் கூறப்பட்டுள்ளது. முற்கால மனிதனுக்குத் தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளியிட வேண்டும் என எழுந்த தூண்டுதலால் அல்லது மன நிறைவால் அவனது நா பேசப் பழகிற்று. பேச்சு சடுதியில் தோன்றவில்லை. மற்றவைகளைப் போலவே, பேசும் பேச்சும் பேச்சு எனப்படும் நிலையை அடையப் பல நூற்றாண்டுகளாயின. மனிதன் பேசுவதற்கு நெடுங்காலத்தின் முன்னரே விலங்களும் பறவைகளும் பேசின. எல்லா உயிர்களுக்கும் சொந்தமாகிய பேச்சு உண்டு. பழைய கால மம்மத்து என்னும் சடை யானை எக்காளஞ் செய்தும், தும்பிக் கையால் சைகை செய்தும் தனது கருத்துக்களை உணர்த்தும் பேச்சை அறிந்திருந்தது. நம்மைச் சுற்றி வாழும் உயிர்களைக் கூர்ந்து நோக்கினால் நாம் அவை பேசுவதைக் காணலாம். நாய் வாலினால் பேசுகின்றது. அது கோபம் முதல் அன்பு வரையிலுள்ள எல்லா வகையான உணர்ச்சிகளையும் உணர்த்த முடியும். எறும்புகள் தமது மீசைகளால் பேசுகின்றன. குருவிகள் பல வகையான ஒலிகள் செய்கின்றன; சில ஒலிகள் மகிழ்ச்சியையும், சில அபாயத்தையும், சில வெவ்வேறு கருத்துகளையும் தெரிவிக்கின்றன. குதிரைகளும் மாடுகளும் மூக்குகளை உரைஞ்சியும், அழுதும், கனைத்தும் பேசுகின்றன. அவை இருபத்திரண்டு வெவ்வேறு ஒலிக் குறிகளையும் சைகைகளையும் பயன்படுத்துகின்றன. கோழிகளும் புறாக்களும் தனித்தனி பன்னிரண்டு வெவ்வேறு ஒலி களால் பேசுகின்றன. நாய்கள் வாலைக்கொண்டு கருத்துகளை உணர்த்துவ துடன் பதினைந்து வெவ்வேறு ஒலிகளால் பேசுகின்றன. மிகத் தாழ்ந்த காட்டு மக்கள் முந்நூற்றுக்குக் குறையாத சொற்களைப் பயன்படுத்து கின்றனர். கொரிலா, சிம்பன்சி என்னும் மேலினக் குரங்குகள் இருபது ஒலிக் குறிகளைப் பேசப் பயன்படுத்துகின்றன. அவை இவைகளோடு சைகை களையும் உபயோகிக்கின்றன. குரங்குகளுள் பாடக்கூடியது கிபன் ஒன்று தான். இவ்வாறு பாடும் குரலே பேசும் குரலாக மனிதனிடத்தில் மாறுபட்ட தென ஆராய்ச்சி அறிஞர் கருதுகின்றனர். பாட்டிலிருந்து பேச்சு வளர்ச்சியடைந்தது எனக் கூறுவது நியாய மற்றதாகத் தோன்றமாட்டாது. ஆரம்பத்தில் மனிதன் உரத்தும் தனித்தும் பாடுவது போன்று எழுப்பிய ஒலிகளே சொற்களாகத் துணிக்கப்பட்டுச் சொல் மூலங்களாயினவாகலாம். உடற்குறிகளும் சைகைகளும் ஒலி முறையான பேச்சுக்கு முற்பட்டவை. பேசும் மொழி நீண்ட காலமாக வளர்ந்தது. அது மக்கட் குலம் அல்லது கூட்டத்தின் வாழ்க்கையிலிருந்து மிக மிக மெதுவாக வளர்ந்தது. பழைய மனிதன் கருத்துகளைச் சொற்களிலும் பார்க்கச் சைகைகளால் அறிவித்தமையின் பேசப்படும் மொழி மெதுவாக வளர்ந்தது. அவனுடைய வாழ்க்கைச் செயல்கள் குலம் அல்லது கூட்டத்துக்குரிய கூத்தாக ஆடப் பட்டது. வேட்டைக் கூத்தில், அவன் மொழியால் சொல்வதிலும் பார்க்க நடிப்பினால் தான் வேட்டையாடி விலங்குகளைக் கொன்றதை விளக்கி னான். கலியாணக் கூத்துகள், இழவுக் கூத்துகள், சமயக் கூத்துகள் எனப் பல வகைக் கூத்துகள் இருந்தன. முன் உள்ள சொற்களோடு மேலும் மேலும் சொற்கள் சேர்க்கப் பட்டன. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருளையோ செயலையோ குறித்தது. மொழி, அறிவினால் அல்லது நினைக்கும் வகையினால் உண்டாவது. ஒரே இரத்தத்துக்குரிய சாதியினரின் மொழி ஒரே வகையா யிருப்பதற்குக் காரணம் அவர்கள் ஒரே வகையாக நினைத்து ஒரே வகை யாக எண்ணங்களை உணர்த்தினமையினாலாகும். இதிலிருந்து இலக்கணம் தோன்றுகின்றது. எழுத்துகளின் ஒலி, எண்ணங்களை ஒழுங்குபடுத்திக் கூறும் வகை, எண்ணங்களைக் குறிக்கும் சொற்களை வைக்கும் ஒழுங்கு, சொல்லின் வகைகளை ஒன்றோடு ஒன்று சேர்க்கும் வகை போல்வன பெரிய மொழிக் கூட்டங்களில் ஒரே வகையா யிருக்கக் காணலாம். இது பற்றியே ஆரிய மொழிகளின் இலக்கணம் ஒரு வகையாகவும், திராவிட மொழிகளின் இலக்கணம் மற்றொரு வகையாகவும், இவையல்லாத பிறமொழிகளின் இலக்கணம் வேறுவகையாகவும் காணப்படுகின்றன. சைகைகளால் பேசும் பேச்சு முற்றுப் பெறாதது. சொற்களால் எவற்றையும் உணர்த்தலாம். உலகில் எல்லாம் எங்கிருந்தோ வருவதுபோல மொழிகளுக்கும் ஒரு வேர் வேண்டுமென்பது நியாயமானதே. அவை ஒரு மக்கட் குலம் அல்லது குழுவின் மொழியாகிய வேரினின்றே வளர்ந்திருக்க வேண்டும். எக் கூட்டத்தாரிடையே அது தொடங்கிப் பின் பிரிந்து பலவாறு சென்றதென எவராலும் கூறமுடியாது. மாயமான பாஸ்க்குக் 1குலத்தினர் ஸ்பெயின் நாட்டில் காணப்படு கின்றனர். இவர்கள் காக்கேசிய மலைகளில் வாழ்ந்தார்கள் என்று கருதப் பட்டார்கள். இவர்கள் பழைய இந்திய மக்களுக்கு இனமானவர்கள் ஆகலாம். பழைய எகிப்தியரும் மற்றைய ஹமித்தியச் சாதியினரும் தமது போக்கான மொழிகளை அமைப்பதன்முன், இவர்களே புதிய கற்காலத்தின் ஆரம்பத்தில் மொழியைத் தோற்றுவித்தவர்களாகலாம். அவர்களின் மொழி அமெரிக்கப் பழங்குடி மக்களின் மொழிக்கு இனமுடையதாகலாம். குலத்தைப் போலவே மொழியின் அடையாளங்களும் பின்னிக் கிடக் கின்றன. மனிதனுடைய எண்ணங்களின் நிறைவால் மொழி உண்டாயிற்று. பின்பு விரிவளர்ச்சிச் சட்டத்தின்படி (Law of Evolution) அது வளர்ச்சியடைந் தது. ஊர்வனவிலிருந்து குட்டிக்குப் பாலூட்டி வளர்க்கும் விலங்குகள் தோன்றியமை போல சாதாரண ஒலிக்குறிகளான பேச்சிலிருந்து ஒலிமுறை யான சொற்கள் தோன்றின. பின்பு மனிதன் நாலு ஐந்து குலங்களாகப் பிரிந்த போது மொழியும் அவ்வாறு பிரிந்தது. பின்பு ஒவ்வொரு குலத்தினரும் சிறு சிறு கூட்டத்தினராகப் பிரிந்தபோது மொழிகளும் அவ்வக் கூட்டத்துக்குரிய கிளைமொழிகளாகப் பிரிந்தன; பின்பு ஒவ்வொரு பேசும் மொழியும் மற்றவருக்குப் பயன்படாதபடியும் விளங்கிக்கொள்ள முடியாதபடியும் மாறுதலடைந்தன. சாதிகளுக்கிடையில் கலப்பு மணங்கள் உண்டாவது போல மொழிகளும் கலப்பு அடைகின்றன. பின்பு இருவகைப் பெற்றோரி லிருந்தும் புது மொழிகள் பிறக்கின்றன. சில விலங்கினங்கள் மக்களினங்கள் மறைந்து போதல் போல மொழிகள் மறைந்து விடவும் படுகின்றன. இறந்துபோன மொழிகளின் வேர்கள் சில உயிர்மொழிகளில் காணப்படுகின்றன. கிரேக்க, உரோமன் மொழிகளின் மூலங்கள் இன்றைய பிரெஞ்சிய, உருமேனிய, இத்தாலிய மொழிகளில் காணப்படுகின்றன. உயிரோடு உலவும் மொழிகளைப் பயில்வதால் இக்கால மனித னுக்குப் பல வாய்ப்புகள் உண்டு. அம் மொழிகள் வழங்கும் நாடுகளுக்குச் செல்லுமிடத்து அவனுக்கு நன்மைகள் உண்டாகின்றன. அம் மொழிகளை வழங்கும் அறிஞர் எழுதிய நூல்களைக் கற்று அறியவும் கூடும். இன் னொரு சாதியாரின் உள்ளம் எவ்வாறு செல்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ஒருவன் எத்தனை மொழிகளை அறிகிறானோ அவன் அத்தனை அதிக அறிவைப் பெறுகின்றான். பழைய மொழிகளின் கலப்பு, இன்று வழங்கத் தகுதியுள்ள அழகிய மொழிகளாக மாறியுள்ளன. எண்ணங்கள் வளர வளர அவைகளை உணர்த்தும் புதிய சொற்களும் தோன்றுகின்றன. எழுத்து முற்கால மனிதன் எவ்வாறு எழுதினானென்று உங்களுக்குத் தெரியுமா? அவன் இக்கால முறையான எழுத்துகளை அறிந்திருக்கவில்லை. தான் எழுத விரும்பியவைகளைப் படமாக எழுதினான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் வெட்டினான் என்பதை எழுதிக்காட்ட விரும்பினால் அவன் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் வெட்டுவது போன்ற படத்தை எழுதிக் காட்டினான். விலங்குகள், பறவைகள், ஆறுகள், மலைகள் போன்றவைகளைக் குறிக்கவும் அவைகளின் வடிவங்கள் எழுதப்பட்டன. ஆதி மனிதன் இவ்வாறு எழுதிய படங்கள் நாளடைவில் சுருங்கிக் கோடுகள் கீறுகள் ஆயின. கீறுகளும் கோடுகளும் தனித்தனி எழுத்து ஒலிகளைக் குறி யாமல் ஒரு முழுச் சொல்லையே குறிப்பனவாயிருந்தன. பின்பு ஒரு முழுச் சொல்லையே குறிக்கும் அடையாளத்தின் ஒலி முறையான உச்சரிப்பைத் தனித்தனி ஒலிக்குறிகளால் எழுதக்கூடிய முறையில் எழுத்துகள் கண்டு பிடிக்கப்பட்டன. இன்று இவ் வுலகின் எல்லா மொழிகளில் வழங்கும் எழுத்து களும் இவ் வகையினவே. சீன தேச மக்கள் வழங்கும் எழுத்துகள் பழங்கால எழுத்துகள் போன்றவை. சீன மொழியில் ஒரு சொல்லைக் குறிக்க ஒரு எழுத்து வழங்குகின்றது . சீன மொழியில் எத்தனை சொற்கள் இருக்கின்றனவோ அத்தனை எழுத்துகள் உண்டு. இது நமக்கு வியப்பாகத் தோன்றுகின்றது. புதிய கற்கால மக்கள் குரோமக்நன் மக்கள் மறைந்து ஐயாயிரம் ஆண்டுகளின் பின் புதிய கற்கால மக்கள் தோன்றினார்கள். மக்கள் எழுத்துகளைப்பற்றி அறியுமுன் வரலாறு தோன்றவில்லை. கற்காலமக்கள் பயன்படுத்திய பொருள்கள் எல்லாவற்றையும் ஓரிடத்தில் வைத்து நோக்கும்போது அவர்களின் வரலாறு புலப்படுகின்றது. இம் மக்கள் இருள் அல்லது கபில நிறமுடைய வர்களாயிருந்தனர். இவர்கள் உலகம் முழுமையிலும் சென்று பரந்து தங்கி வாழ்ந்தார்கள். வெப்பநிலை, உணவு, பழக்க வழக்கங்கள், சமய வழக்கம் போன்றவை காலின் வளர்ச்சி, தாடை எலும்புகளின் நீளம், உடலின் உயரம் அல்லது குறுக்கம், மண்டையின் பருமை, பாதத்தின் அளவு போன்ற மாற்றங் களை உண்டுபண்ணின. வாழத் தகுதியுடையவர்கள் நிலை பெற்றார்கள்; தகுதியற்றவர் மறைந்து போயினர். தகுதியுடைய ஒரு சாதியார் தோன்றும் போது தகுதியற்றவர் மறைந்து போகின்றனர். வரலாறு தொடங்கும்போது மங்கிய நிறமுள்ள மக்கள் வட ஆப்பிரிக்கா மத்திய தரைக் கடல் ஓரங்கள் முதல் இந்தியாவரையில் வாழ்ந்தார்கள். புதிய கற்கால மக்கள் குடிசை கட்டி வாழ்ந்தார்கள். மரங்கள் தோப்புகள் போல் வளர்ந்திருந்தன. சோலைக்கு வெளிப் புறத்தில் நாற்புறத்தும் பயிர் செய்யும் நிலங்கள் இருந்தன. பெண்கள் உணவு தேடும் பொருட்டுக் காட்டுக்குள் வெகுதூரம் சென்று அலைய வில்லை. அவர்கள் தானியத்தை நிலத்தில் விதைத்தார்கள். ஆண்டுதோறும் அவை விளைவு அளித்தன. அவர்களின் கணவர் ஓரிடத்தில் தங்கியிருந்தார்கள். வீடு இன்றி அலைந்து திரிந்த அவர்கள் இப்பொழுது வீட்டில் இருந்தார்கள். வீடுகளில் நாய்கள் நின்று குரைத்தன. நாய் அவர்களுக்கு உதவியாக விருந்தது. மாலை நேரத்தில் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலத்தில் நின்றும் ஓட்டிக்கொண்டு வர அது உதவி புரிந்தது. காட்டில் வாழும் துருவ மான், பன்றி, குதிரை, மாடு, ஆடுகளை அவர்கள் பிடித்துப் பழக்கி அவை உணவின் பொருட்டுத் தம்மிடம் தங்கி வாழும்படி செய்தார்கள். அவர்கள் வேட்டை நாய்களுடன் வேட்டையாடவும் சென்றார்கள். இப்பொழுது வேட்டையாடாமலே உணவு கிடைத்தது. ஆகவே அவர்கள் வேட்டை யாடுவதைப் பொழுதுபோக்காக மாத்திரம் கொண்டனர். கொல்லன் செம்பை நெருப்பில் காய்ச்சி அடித்து வேட்டையாடப் பயன்படும் ஈட்டிகளைச் செய்தான். புதிய கற்கால மனிதனே முதன் முதல் செம்பில் வேலை செய்தான். பின்பு பொன்னிலும், அதன்பின் வெண்கலத் திலும் வேலை செய்தான். நாள் ஏற ஏற வேலை திறமையடைந்தது. வயலில் நிற்பவள் பெண்ணே. அவள் மண்வெட்டியோடு நின்று வயலில் வேலை செய்தாள். முதல் முதல் மண்வெட்டியினால் வேலை செய்தவள் அவளே யாவள். நிலத்தை மண்வெட்டியால் கொத்திப் பயிரிடுவது பெண்ணுக்குரிய வேலையாகக் கொள்ளப்பட்டது. பெண் மண்வெட்டியினால் வேலை செய்யும் வலு உடையவளாயிருந்தாள். ஆடவன் அவள் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மாடுகள் பழக்கி வளர்க்கப்பட்டபோது மாற்ற முண்டாயிற்று. பெண்கள் மண்வெட்டியால் கொத்திப் பயிரிட்ட நிலத்தில் மாடுகள் கலப்பையை இழுத்துச் சென்றன. புதிய கற்கால மனிதன் கலப்பையைச் செய்ய அறிந்து, மாடுகள் அதனை இழுத்து உழும்படி பழக்கி னான். பெண்கள் கலப்பையில் மாட்டைப் பூட்டி உழும் வலு இல்லாதிருந் தனர். ஆகவே உழுவது ஆடவனின் வேலையாக மாறிற்று. மனிதன் உழ அறிந்ததும் பெண்ணின் நிலை உயரத் தொடங்கிற்று. அங்குமிங்குமாகக் கிடந்த குடிசைகளிலிருந்து ஆடவர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் மட்பாண்டங்களைச் செய்தனர். அவர்கள் பானை சட்டி செய்யும் சக்கரத்தை யறிந்திருந்தனர். சிலர் கல்லாயுதங்களால் பானை சட்டிகள் மீது ஓவியங்களை வெட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் இவர்களின் முன்னோர் பயன்படுத்தியவை களைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவை; அழுத்தமும் அழகும் வாய்ந்தவை. கிராமத்திலிருந்து சிறு தொலைவில் இறந்தவர்களைப் புதைக்கும் திடர்கள் காணப்பட்டன. அவர்களின் தலைவன் பெரிய குடிசையில் வாழ்ந் தான். அவன் அடுத்து வரும் ஞாயிற்றுக் கடவுளின் விழாவைக் குறித்துத் சிந்தித்துக் கொண்டிருந்தான். ஞாயிற்றுக் கடவுளுக்குப் பையன்களைப் பலியிடுவது வழக்கம். ஞாயிற்றுக் கடவுள் மனித பலியை விரும்புகின்றா ரென நினைப்பது மூடத்தனம் என அவன் உணர்ந்தான். அடுத்த நாள் அவன் சூழ உள்ளவர்களை அழைத்து இரவில் ஞாயிற்றுக் கடவுள் தோன்றித் தனக்கு மனிதபலி வேண்டாமென்று மூன்றுமுறை கூறியதாகச் சொன்னான். பின்பு மனித பலிகள் நின்று போயின. புதிய கற்காலத் தலைவனின் மகள் கழுத்தில் ஓடுகள் கோத்த மாலையை அணிந்திருந்தாள். முற்காலப் பெண்களைவிட இவள் வாழ்க்கை பத்திர மாயிருந்தது. முற்கால இளம் பெண்களை வாலிபர் மண்டையில் அடித்து விழுத்தி மயிரைப் பிடித்து இழுத்துக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. இப்பொழுது அவ்வாறு நிகழவில்லை. அவர்கள் பெண்ணின் தந்தையிடம் வந்து அவளை விலை கொடுத்து வாங்கிச் சென்றார்கள். தந்தை, தனது பெண்ணைத் தான் எவ்வளவு மேலாக மதிக்கிறான் எனக் காட்டுவதற்கும், அதிகப் பொருளைப் பெறும் பொருட்டும் அதிக விலை கூறினான். அடுத்த கூட்டத்திலுள்ள ஒருவன் மற்று எவரும் இதுவரை கொடாத அளவு ஆடு மாடுகளைப் பெண்ணின் தந்தைக்கு அவளின் விலையாகக் கொடுத்தான். பெண் மிகவும் மனப் பூரிப்பு அடைந்தாள். கணவனின் வேறு இரண்டு அல்லது மூன்று மனைவியர்களோடு வாழவேண்டுமென்பதைப் பற்றி அவள் கவலை கொள்ளமாட்டாள். அவ்வாறு வாழ்தல் பொதுவான வழக்கம்; இது நேரான முறை எனக் கொள்ளப்பட்டது. பலர் நீர்நிலைகளில் கிராமங்களைக் கட்டி வாழ்ந்தார்கள். சுவிட்சர் லாந்து, ஸ்காட்லாந்து முதலிய இடங்களில் நீர்நிலைகளில் மரத் தூண்களை இறுக்கி அவைமீது கட்டப்பட்ட பழைய கிராமங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இக் குடியிருப்புக்களிலிருந்து கரைவரையும் ஒடுங்கிய பாலம் இடப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடிசைக்கும் சொந்தமான படகொன்று மரத்தூணில் கட்டப்பட்டிருந்தது. புதிய கற்கால மனிதனின் குடிசைகளில் பன்றிகளும் மக்களோடு இருந்து வளர்ந்தன. இப்பொழுது அவர்கள் ஆடையை அலங்காரத்தின் பொருட்டு அணியவில்லை. உடையின் பொருட்டே அணிந்தனர். கிறித்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளின் முன் கோழிகள் ஐரோப்பாவில் காணப்படவில்லை. பிற்பாடே கோழிகள் அந் நாடுகளிற் பெருகின. ஆடு மாடுகளின் பால் உணவாகக் கொள்ளப்பட்டது. மந்தைகளை வளர்ப்போர் அவைகளைக் கொல்லவில்லை. அவை கொடுக்கும் பால் அளவில் திருப்தி அடைந்திருந்தார்கள். குயவர் பானை சட்டிகள் செய்தார்கள். மக்கள் செம்பையும் தகரத்தை யும் கலந்து வெண்கலம் செய்ய அறிந்தார்கள். அக்காலத்தில் பொன், வெண்கலம், பளிங்கு முதலியவைகளால் செய்த ஏனங்கள் பயன்படுத்தப் பட்டன. மதுச் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் தேனைப் புளிக்கவிட்டு மதுவைச் செய்தார்கள். சிலர் கோதுமையிலிருந்து அதனைச் செய்தார்கள். பின்பு திராட்சைச் சாற்றிலிருந்து மதுச் செய்யும் முறை கண்டு பிடிக்கப்பட்டது. கம்பளியிலிருந்து நூல் முறுக்கலாமென மனிதன் அறிந் தான். அப்பொழுது நூல் நூற்கும் கதிர் கண்டுபிடிக்கப்பட்டது. பெண்கள் நூல் நூற்றார்கள். சணலுடை தோலுடைகளுக்குப் பதில் புதுவகையான உடைகள் பயன்படுத்தப்பட்டன. தாவரங்களிலிருந்து கிடைக்கும் சாயங்கள் உடைகளுக்கு ஊட்டப்பட்டன. கற்கோடாரிகளுக்குப் பதில் வெண்கலக் கோடாரிகள் பயன்படுத்தப்பட்டன. வெண்கல ஈட்டி வெண்கல ஆபரணங் களைத் தலைவர்களே தொடக்கத்தில் பயன்படுத்தினார்கள். பழைய மக்களின் ஓவியக்கலை குகைகளில் வாழ்ந்த மக்கள் ஓவியக்கலையில் திறமையடைந் திருந்தார்கள். உண்பது, குடிப்பது, திருமணஞ் செய்வது என்பவைகளை ஒழிந்த சிலவற்றைக் குகைகளில் வாழ்ந்த மக்கள் கண்டுபிடித்திருந்தார்கள். அழகை வெளியிடும் விருப்பு உண்டாயிருந்தது. இதனாலேயே ஓவியக் கலை உலகில் தோன்றிற்று. தான் கண்ட அழகுகளை வெளியிடுவது மனிதனின் முதல் கடமையாக விருந்தது. மனிதன் குகைகளில் வாழ்ந்த காலமே ஓவியக் கலை யின் பொற்காலமாகும். உலகில் முதல் தோன்றிய ஓவியரிடம் தூரிகைகளும், மசியும், துணி யும், பலகைகளும் இல்லை. அவர்கள் வாழ்ந்த குகைகளின் சுவர்கள் அழுத்தமாக விருந்தன அவர்களிடம் அழுத்தமான சுண்ணாம்புக் கற்களும், எலும்பு களும், தந்தங்களும் இருந்தன. அவர்கள் தீட்டிய படங்களைப் பாருங்கள். அவை அவர்கள் வாழ்ந்த இருண்ட குகைகளுள் 20,000 ஆண்டுகளின் முன் எழுதப்பட்டவை. அக் காலப் படங்கள் இன்றைய படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கன. இவ் வகையான படங்களை வரையக் கூடியவர்கள் ஒரு கூட்டத்தில் ஒருவர் இருவர் மாத்திரம் இருந்தனர். அவர்கள் மனித உருவை வரைதலிலும் பார்க்க விலங்குகளை எழுதுவதில் அதிக திறமை பெற்றிருந்தார்கள். அவர்கள் வரைந்துள்ள மனித ஓவியங்கள் ஒன்றுக்கும் உடை காணப்படவில்லை. சில மனித ஓவியங்கள் உடம்பில் மயிரின்றியும், சில மயிருள்ளனவாகவும் காணப்படு கின்றன. இதனால் அக் காலத்தில் மனிதனின் உடம்பில் மயிர் உதிரத் தொடங்கிவிட்டதென்றும், சிலருக்கு இன்னும் மயிர் இருந்ததென்றும் தெரிகின்றன. பெண்களின் வடிவங்கள் மிகவும் கொழுப்பு ஏறினவையாகக் காணப்படுகின்றன. அக் காலத்தில் மிகவும் கொழுத்துப் பருத்த பெண்ணே அழகுடையவளாகக் கருதப்பட்டாள். இன்றும் கிழக்குத் தேசங்கள் சிலவற்றில் பெண்களின் அழகு அவளின் கனத்தைக் கொண்டு கணிக்கப்படுகின்றது. சுவர்களில் மக்கள் விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்படவில்லை; வெட்டப்பட்டுள்ளன. மக்கள் அலங்காரத்தில் பிரியமுடையவர்களாயிருந் தார்கள். அவர்கள் ஆயுதங்களை அழகாகச் செய்தார்கள். கத்திகள், ஈட்டிகள், ஆயுதங்களின் பிடிகளை வட்டம், விலங்கு முதலிய ஓவியங்களால் அழகுபடுத்தினார்கள். மக்கள் குகைகளில் வாழ்ந்த காலத்தில் உணவு பாத்திரங்களில் இட்டுச் சமைக்கப்படவில்லை. குகை மனிதருக்குப் பின் வாழ்ந்த புதிய கற்கால மக்களே பானை சட்டிகளைச் செய்ய அறிந்திருந்தார்கள். அக் காலத்தில் வழங்கிய பானை சட்டி போன்ற மட்பாண்டங்களின் வடிவங்கள் அவர்கள் பயன்படுத்திய கத்தி, ஈட்டிப் பிடிகளிலும் பிற பொருள்களிலும் தீட்டப்பட்டுள்ளன. அவர் தாம் வரைந்த விலங்குகள் பறவைகளை உயிருள்ளன போல் தோன்றும்படியாக வரைந்தார்கள். பிற்காலத்து வாழ்ந்த புதிய கற்கால மக்கள் குகை மனிதரைப்போல் ஓவியந் தீட்டுவதில் திறனை யடைந்திருக்கவில்லை. புதிய கற்காலம், வரலாற்றுக் காலத்தை அணுக அணுக ஓவிய, சிற்பக் கலைகள் வாணிக சம்பந்தமாக மாறின. மட்பாண்டங்கள், செம்பு வெண்கல ஏனங்கள், ஆயுதங்கள், அணிகலங்கள், தையல் வேலைப்பாடுடைய தோல்கள், உடைகள் என்பன ஒரு சாதியாரிடமிருந்து இன்னொரு சாதியாருக்குக் கை மாறின. ஓடுகள் அல்லது தீத்தட்டிக் கற்களைக் கட்டிச் செய்த மாலைகளை, அல்லது விலங்குகளின் மயிருள்ள பாதத்தை அழுக்கு நிறைந்த கழுத்தில் தொங்கவிடுதல் போன்ற முற்காலக் காட்டுமனிதனின் சிறிய அலங்கரிக்கும் தொடக்கத்திலிருந்தே சிற்பக்கலை வளர்ச்சியடைவதாயிற்று. மக்கட் குலங்கள் ஆதியில் மக்கள் அலைந்து திரிபவர்களாக விருந்தனர். ஆகவே அவர்கள் உலகின் பல பகுதிகளிற் சென்று பரவினர். உலகின் பல பாகங்கள் வெப்பநிலையால் மாறுபட்டுள்ளன. ஒவ்வொரு வெப்பநிலையிலுள்ள நாட்டிலும் வெவ்வேறு வகையான உணவுப்பொருள்கள் கிடைக்கின்றன. ஆகவே மக்கள் உணவுகளில் வேறுபாடுகள் உண்டாயின. அவர்கள் வெவ் வேறு வகையான பகைகளாலும் தாக்கப்பட்டார்கள். ஆகவே ஒவ்வொரு இடங்களிலும் வாழ்வோர் இடங்களுக்கேற்ப மாற்றமடைந்தனர். ஒவ்வொரு உயிர்களிலும் பற்பல இனங்கள் தோன்றுதல் போலவே மக்களுள்ளும் பல இனங்கள் உண்டாயின. ஒரு மக்கட் கூட்டத்தினர் மற்றவர்களிலிருந்து கடல், மலை, வனாந்தரங்கள் போன்றவைகளாற் பிரிக்கப்பட்டிருந்தால் அவர்களின் வாழ்க்கை முறைகள் இடங்களுக்கேற்றவாறு மாற்றமடை கின்றன. மனிதன் எப்பொழுதும் அலைந்து திரிபவனாயிருந்தமையால் தடைகளால் அவன் பெரிதும் தடுக்கப்படமாட்டான். மனிதர் மனிதரைப் பார்த்து நடக்கின்றனர்; ஒருவரோடு ஒருவர் போர் செய்து வெற்றி கொள் கின்றனர். ஒரு கூட்டத்தினர் இன்னொரு கூட்டத்தினருடன் கலக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரண்டு பெரிய ஆற்றல்கள் தொழிற் பட்டு வருகின்றன. ஒரு ஆற்றல் மக்களைச் சிறு சிறு கூட்டங்களாகப் பிரிப்பது; மற்றது பிரிந்து வேறுபட்ட மக்களைக் கலக்கச் செய்து புதிய இனங்களைத் தோற்றுவிப்பது. குகைகளில் வாழ்ந்த பழைய கற்கால மக்கள் உலகின் விசாலமான பரப்புகளில் உலாவித் திரிந்தார்கள். புதிய கற்கால மனிதனிடத்தில் சில பொருள்கள் இருந்தன. அதனால் அவன் பழைய கற்கால மக்களைவிடக் குறுகிய இடங்களில் அலைந்து திரிந்தான். வேட்டையாடுவோனா யிருந் தமையின் அவன் விலங்குகள் செல்லும் இடங்களுக்கு அவைகளைப் பின் தொடர்ந்து சென்றான். பருவகாலம் வாய்ப்பா யில்லாதபோது அவன் பல நூறு மைல்கள் கடந்தும் சென்றிருக்கலாம். பயிர்ச் செய்கை உண்டான போதே மக்கள் ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்கினார்கள். மக்கள் இனங்களாக வளர்ச்சியடைய இவ் வாழ்க்கை வாய்ப்பளித்தது. நாகரிகத்தின் மிகக் கீழ்நிலையிலும், மிக உயர்நிலையிலும் கட்டுப்பாடின்றி மக்கள் அலைந்து திரிகிறார்கள். பழைய கற்கால மக்கள் உலகம் முழுமையிலும் அலைந்து திரிந்து நெருக்கமின்றி வாழ்ந்தார்கள். உலகம் முழுமையிலும் காணப்பட்ட பழைய கற்கால ஆயுதங்கள் எல்லாம் ஒரே வகையின. ஒருகாலத்தில் கடல், மலைகளால் பிரிக்கப்பட்டிருந்த மக்கள், கடல் மலைகள் மறைந்து போதல் போன்ற இயற்கை மாறுபாடுகளால் மறுபடியும் மற்றைய மக்களோடு கலக் கிறார்கள். இவ் வகையான கலப்புகள் உண்டானபோது ஒரு இனத்தவரை இன்னொரு இனத்தவரிலிருந்து பார்த்த மாத்திரத்தில் அறியக்கூடிய பெரிய மக்கட்கூட்டங்கள் காணப்படுகின்றன. சிலர் மஞ்சள் நிறத்தினராகவும், சிலர் வெண்ணிறத்தினராகவும், சிலர் கரிய நிறத்தினராகவும் சிலர் மங்கிய நிறத்தினராகவும் உளர். ஆப்பிரிக்காவிலே வனாந்தரத்துக்குத் தெற்கிலுள்ள மக்கள் கறுப்பு நிறமும், தடித்த உதடுகளும், சுருண்ட மயிரும் உடையராவர். வட, வடமேற்கு ஐரோப்பாவிலுள்ள மக்கள் நீலமான கண்ணும், சிவந்த நிறமும், வெளுத்த மயிருமுடையர். மத்திய தரையைச் சூழ்ந்து வெண் ணிறமும், கறுத்த விழியும், கறுத்த மயிருமுடைய மக்கள் காணப்படு கின்றனர். மங்கிய வெண்ணிறமுள்ள மக்களின் மயிர் நேரானது; வளைவில் லாதது; மஞ்சட் சாதியினரின் மயிர் போன்று வயிரமில்லாதது. தென்னிந்தியா வில் மங்கிய கபில நிறமுள்ளவர்களும் நேரிய மயிருள்ளவருமாகிய மக்கள் காணப்படுகின்றனர். நியூகினி, பாப்புவா முதலிய தீவுகளில் சுருண்ட மயிருடைய கறுப்பு, மங்கிய நிறம், கபில நிறமுடைய மக்கள் காணப்படு கிறார்கள். இற்றைக்குப் பத்தாயிரம் அல்லது பன்னீராயிரம் ஆண்டுகளின் முன் இவ்வாறு வேறுபடுத்தி அறியக்கூடிய மக்கள் வாழ்ந்தார்கள். இற்றைக்கு அறுபது அல்லது எழுபது ஆண்டுகளின் முன்னிலிருந்தே 1இன்றைய முறையான மக்களின் குலப்பிரிவுகளைக் குறிப்பிடும் வழக்கு உண்டா யிற்று. அதற்குமுன் கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டில் சொல்லப் படும் பழங்கதைகளை ஆதாரமாகக் கொண்டே மக்கட் குலங்கள் குறிப் பிடப்பட்டன. நோவாவையும், பேழையையும் பற்றிய வரலாற்றில் நோவா வுக்கு சம்(Sham), ஹாம்(Ham), யபெத்(Japhet) என்னும் மூன்று மக்கள் இருந்தனர் எனச் சொல்லப்பட்டுள்ளது. சமின் சந்ததியினர் என்று கருதப் படும் அராபிய மக்கள் செமித்தியர் எனவும், ஹாமின் சந்ததியினர் எனக் கருதப்பட்ட ஆப்பிரிக்கர் ஹாமித்தியரென்றும், ஐரோப்பாவிற் குடியேறிய வராகக் கருதப்படும் யபெத்தின் சந்ததியினர் ஆரியர் என்றும் கொள்ளப் பட்டார்கள். இப் பிரிவு, மக்கள் இன ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதன்று. மனிதன் முன்னேறிய வகை ஆதியில் மனிதன் விலங்குகளை ஒப்ப உணவு ஒன்றை மாத்திரம் தேடி அலைந்து திரிந்தான். அக் காலத்தில் ஒருவகை முன்னேற்றமும் உண்டாகவில்லை. மனிதனைச் சூழ்ந்து நாற்புறத்தும் பகைகள் இருந்தன. அவன் சிறிது அயர்ந்துவிடுவானாயின் சூழவிருந்த விலங்குகள் அவனைக் கொன்று தின்றுவிடும். அவன் உணவின் பொருட்டுப் போராடுவதோடு தனது பகைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. வேட்டை யாடுவதிலும் பார்க்கத் தனது பகைகளை எதிர்த்துப் போராடுவதற்கே அவனுக்கு ஆயுதங்கள் அவசியம் வேண்டியிருந்தன. முரடான கற்களும் மரக்கிளைகளுமே அவனுடைய ஆயுதங்களாக விருந்தன. நாள் ஏற ஏற அவன் ஆயுதங்களை அழகாகச் செய்ய அறிந்தான். ஆதிகால மனிதன் கல்லில் செய்து பயன்படுத்திய கத்தி, வாள், உளி, கோடாரி போன்ற வைகளின் வடிவைப் பின்பற்றியே இன்றைய ஆயுதங்களும் உலோகங் களாற் செய்யப்படுகின்றன. முரடான கல்லாயுதங்களை மனிதன் பயன்படுத்திய காலம் பழைய கற்காலம் எனப்படும். பழைய கற்காலத்துக்குப்பின் வந்த மனிதன் ஆயுதங்களைப் பாறைகளில் தீட்டி அழுத்தமாகவும் அழகாகவும் செய்ய அறிந்தான். அழுத்தமான கல்லாயுதங்களை மனிதன் பயன்படுத்திய காலம் புதிய கற்காலம் எனப்படும். புதிய கற்காலத்திய மனிதன் விலங்குகளைப் பழக்கி வளர்க்க அறிந்திருந்தான். ஆடு, மாடு முதலியவை பால், தயிர் முதலிய உணவுகளைக் கொடுத்தன. ஆகவே புதிய கற்கால மனிதன் உணவின் பொருட்டு ஓய்வின்றி அலைந்து திரியவில்லை. தனது மந்தைகளுடன் சில காலம் ஓரிடத்தில் தங்கியிருந்தான். பின்பு மேய்ச்சல் நிலத்தைத் தேடி வேறோரிடத்துக்குத் தனது மந்தைகளுடன் சென்றான். இப்பொழுது நாகரிகம் தோன்றி வளர ஆரம்பித்தது. மக்கள் ஆற்றோரங்களில் தங்கிப் பயிரிடத் தொடங்கினார்கள். ஒரு முறையில் கிடைக்கும் விளைவு பலருக்கு நீண்டகால உணவுக்குப் போதியதாக இருந்தது. இப்பொழுது அவர்கள் உணவின் பொருட்டு அலைந்து திரியவில்லை; ஓர் இடத்திலேயே தங்கி யிருந்தார்கள்; போதிய ஓய்வு இருந்தது. இக் காலத்திலேயே பலவகைக் கலைகள் தோன்றி வளர்ந்தன. நாகரிகம் என்பது ஒழுங்கான உணவு பெறுதலேயாகும். எகிப்து, மேற்கு ஆசியா, சீனா, இந்தியா முதலிய நாடுகள் பழமையே நாகரிகம் பெற்று விளங்கின. இந் நாகரிகங்கள் எல்லாம் ஆற்றோரங்களிலேயே தோன்றி வளர்ச்சியடைந்தன. எங்கு மக்களுக்கு அதிக உணவு கிடைக்கின்றதோ அங்கு நாகரிகமும் செல்வமும் ஓங்கி வளர்கின்றன.  ஆதி உயிர்கள் முன்னுரை இவ்வுலகில் உயிர்கள் எல்லாம் இன்று காணப்படுவன போல் திடீர் எனத் தோன்றவில்லை. அவை கோடிக்கணக் கான ஆண்டுகளின் முன் தோன்றி வாழ்ந்த கண்ணுக்குப் புலப்படாத அணுப் போன்ற சிற்றுயிர்களிலிருந்து படிப் படியே வளர்ச்சியடைந்துள்ளன என மேல்நாட்டு அறிஞர் ஆராய்ந்து சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார்கள். உயிர்கள் கீழ்நிலையிலிருந்து அறிவு வளர்ச்சித் தரங்களுக்கேற்பப் படிப்படி மேலான பிறவிகளை அடைகின்றன என்பதே தமிழ் மக்கள் மிகப் பழங்காலம் முதல் கொண்டிருந்த கொள்கையாகும். தமிழர் கொண்டது உயிர்களின் தகுதிக் கேற்பக் கடவுள் அவைக்கு ஏற்ற உடலை அளிக்கின்றார் என்பது. அவை வாழ முயலும் வகைகளால் அவைக்கு உருவ மாற்றம் உண்டாகின்ற தென்பது மேல் நாட்டறிஞர் கருத்து. இவ் விரண்டு கொள்கைகளில் எது ஏற்றது என்பதை இந் நூலைப் படிப்பவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டியது. உயிர்களின் கிரம வளர்ச்சி(Evolution)யைப் பற்றிய வரலாறு கற்பதற்கு மிக இன்பம் பயப்பதாயும், அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாயும் உள்ளது. இக் கருத்துகள் ஆங்கில நூல்களிற் கூறப்பட்டவற்றைத் தழுவி எழுதப்பட்டவை. சென்னை 10.1.1949 ந.சி. கந்தையா ஆதி உயிர்கள் தோற்றுவாய் இவ்வுலகு ஞாயிற்றினின்றும் தெறித்து விழுந்த ஒரு துண்டு. இதன் வெப்பம் ஆறுதற்கு எண்ணில்லாத ஆண்டுகள் கழிந்தன. இப் பூமி குளிர்ந்து கடலும் நிலமுமாக மாறியபோதே பூமியில் உயிர்கள் தோன்றி வாழலாயின. ஆதியில் இன்று நாம் காண்பவை போன்ற உயிர்கள் தோன்றி வாழவில்லை. கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணிய உயிர்களி லிருந்தே இன்று நீரிலும் நிலத்திலும் வாழும் எல்லா உயிர்களும் வளர்ச்சி யடைந்துள்ளன. இக் கூற்றுக் கேட்பதற்கு மிக வியப்பைத் தரலாம். தொல் லுயிர்களைப் பற்றி ஆராய்ச்சி நடத்திய பேரறிஞர் ஆதியில் இவ் வுலகில் தோன்றி வாழ்ந்த சிற்றுயிர்கள் எவ்வாறு படிப்படி வளர்ச்சி அடைந்துள்ளன வென்பதை நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். இவ் வுலகில் காணும் ஒவ்வோர் உயிரும் கீழ் உயிரிலிருந்து தோன்றிற்று என்று கூறுதற்கு ஏற்ற பல ஆதாரங்கள் உள்ளன. பல்வேறு காலத்தில் தோன்றிய பூமியின் பாறை அடுக்குகளில் ஒன்றின் தொடரில் மற்றொன்று தோன்றியது என்று கூறுதற் கேற்பத் தொல்லுயிர்களின் கற்படி உருவங்கள் (Fossils) காணப்படுகின்றன. உலகில் எவ்வாறு உயிர்கள் தோன்றி வளர்ச்சியுற்றன என்பதைப்பற்றி இந் நூலிற் சிறிது படிப்போம். ஆதி உயிர்கள் ஆதியில் உயிர்கள் நிலத்தில் தோன்றவில்லை; கடலிலே தோன்றின. இவை கண்ணுக்குத் தெரியாத அணுத்தன்மை யுடையவை; தாவர இனத்தைச் சேர்ந்தவை. இவைக்கு ஒரு கண்ணறை உடலுண்டு. கண்ணறை என்பது நடுவே ஒரு கருவும் கருவைச் சூழ்ந்து வழுவழுப்பான பொருளும், வழுவழுப்பான பகுதியைச் சுற்றிச் சவ்வு போன்ற அல்லது ஆடை போன்ற போர்வையு முள்ளது. இச் சிற்றுயிர்கள், காற்றிலும் நீரிலுமுள்ள மிருதுவான பொருள்களி லிருந்து தமது ஒரு கண்ணறை உடலை மூடியிருந்த தோலினால் உணவை உறிஞ்சிக் கொண்டன. வெளித்தோலே அவற்றின் வாயாக விருந்தது; பின்பு உணவை உள்ளே யிழுப்பதற்கு அவை ஒரு குழாயை வளர்த்துக் கொண்டன. உறிஞ்சி உணவை ஓரிடத்திற் சேர்த்து வைத்துச் சீரணிப்பதற்காக அவை ஒரு பிரிக்கும் உறுப்பையும் உண்டாக்கிக் கொண்டன. அல்கே (algae) என்னும் இத் தாவர உயிர்கள் தண்ணீரில் வளர்ந்து பெருகின. அவை நீந்திக் கொண்டு வாழும்போது புதிய கண்ணறைகள் வளர்ந்தன. சில அவைகளின் சொந்தத் தேவைக்குப் பயன்பட்டன; சில தம்மைப் போன்ற உயிர்களைத் தோற்றுவிப்பதற்குப் பயன்பட்டன. அவையிடத்துப் புதிய கண்ணறைகள் வளர்ந்து பிரிந்து புதிய தாவர உயிர்களாகப் பெருகின. இவ்வாறு தோன்றிய புதிய தாவர உயிர்களும் அவ்வாறே சந்ததியைப் பெருக்கின. இவ்வாறு கடல்நீரில் தோன்றிய தாவர உயிர்கள் பெருகின. உணவின் பொருட்டுப் போராட நேர்ந்தமையின் அவை பலவகைத் தாவ ரங்களாக வளர்ச்சியடைந் தன. இச் சிறிய தாவர உயிர்களே கடற் சாதாழை முதல் பெரிய நிழல் மரங் களுக்கெல்லாம் தாய் களும் தந்தைகளும் ஆகும். ஒரு சிறிய தாவர உயிருக்கு 1,000,000 பிள்ளைகள் வரையில் இருந்தன. ஒவ்வொரு தாவர உயிரும் கிட்ட உள்ள மற்றத் தாவர உயிரிலும் பார்க்க முன்னேற முயன்றது. காற்றிலுள்ள கரி வாயுவை அல்லது சூரிய ஒளியிலிருந்து கரிவாயுவைப் பெறும் பொருட்டு உடலின் அல்லது கண்ணறையின் வடிவை மாற்றிக்கொள்ள மாட்டாத உயிர்கள் சந்ததிகள் பலவற்றைத் தோற்றுவிக்கும்படி நீண்டநாள் வாழ வில்லை. ஒன்றின் பக்கத்தே ஒன்றாக நின்று வளரும் இரண்டு தாவரங்கள் வளர்ந்து ஒன்றை ஒன்று மறைத்துச் சூரிய ஒளியைப் பெறமுயன்றன. இதனாலேயே இலைகள் வளர்ச்சியடைந்தன. இலைகள் தாவரங்களின் வாய்கள். சூரியஒளி படாவிடில் இலையின் மேற்கண்ணறைகள் காற்றிலிருந்து உறிஞ்சிய வாயுவை, கீழே உள்ள பச்சை நிறக் கண்ணறைகள் இழுத்துப் பயன்படுத்த முடியாது. தாவரங்கள் வாழ்க்கையின் பொருட்டுப் போராடிக் கொண்டிருந்தன. அதிக உணவைப் பெறக்கூடிய நிலத்தையும், சூரிய ஒளியையும் அடையக் கூடிய கெட்டித்தனமுள்ள வலிய தாவரங்களே பிழைத்தன. வலியற்ற வைக்குக் கருணை காட்டப்படவில்லை. வலிய தாவரம் அயலே நின்ற வலி குறைந்த தாவரத்தின் உணவைத் தனது வேர் வழியாகக் கவர்ந்தது. வலிவுடையது நிலைபெறுதல் என்னும் இயற்கைவிதி மிகக் கொடியதாகத் தோன்றிற்று. அல்கே என்னும் தாவர உயிரிலிருந்து கடற்சாதாழை, கடற்பாசி, ஓலை போன்ற இலையுடைய தாவரங்கள் (Ferns) முதலியவை தோன்றின. இவை விதையில்லாத தாவரங்கள். எரிமலைக் குழப்பங்களால் பலமுறை கடல் நிலமாகவும் நிலம் கடலாகவும் மாறின. அப்பொழுது கடலாழத்தில் சென்று பல்லாயிர ஆண்டுகளாகக் கல், மண் முதலியவைகளாற் புதை யுண்டு கிடந்த அக்காலக் காடுகளின் தாவரங்களே இன்று நிலக்கரியாக நமக்குக் கிடைக்கின்றன. அசையும் உயிர்கள் (Animals) நீரில் நீந்திக்கொண்டிருந்த ‘அல்கே’ நீரில் மிதந்த உயிரில்லாப் பொருள்களிலிருந்து உணவை இழுத்தது. ஒரு நாள் அவ்வகையான ஓர் உயிர் உயிருள்ள ஒன்றிலிருந்து தனது உணவை இழுத்தது. இவ்வகை உயிர் அமீபா (amoeba) எனப்படும். இச் சிற்றுயிரிலிருந்து தாவரமல்லாத உயிர்கள் பெருகின. இவைகளும் தாவர உயிர்களாகிய அல் கேயைப் போலவே வளர்ந்து இரண்டாகப் பிரிந்து சந்ததியைப் பெருக்கின. இவற்றின் உடல் சளி போன்று வழுவழுப்புடையதா யிருந்தது. காலங் கடந்தது. இவை மாற்றமடையத் தொடங்கின. சில கடற்பஞ்சாக மாறின. கடற் பஞ்சு அன்று முதல் இன்றுவரை கடற் பஞ்சா கவே இருக்கின்றது. அது வேறு மாற்றம் அடைய வில்லை. சில சொறி மீன்களாக வளர்ந்தன; அவை பின் பல குடும்பங்களாகப் பிரிந்தன. சில பவளப் பூச்சிக ளாக மாறின. இவை நிலத்தில் ஊர்ந்து திரிவதற்குப் பதில் அளவில்லாத தலைமுறைகளாகச் சுண்ணாம்புப் படைகளைக் கட்டி எழுப்பிக் கொண்டு இறந்துபோன தம் முன்னதுகளின் உடல்களில் வாழ்கின்றன. அவ் வுடல்கள் நாளடைவில் சுண்ணாம்புப் பாறைகளாக மாறுகின்றன. இவ்வா றமைந்த சுண்ணாம்புப் பாறைகள் ஒரு நாள் கடல் அலைகளுக்கு மேலே தோன்றுகின்றன. பறவைகள் பறந்து செல்லும் போது விதைகளை அங்கே போடுகின்றன; கடல் நீரோட்டம் தேங்காய்களைக் கொண்டுவந்து மணலில் புதையும்படி விடுகின்றது. சில காலத்தே அங்கு ஒரு பசுந்தரை காணப்படு கின்றது. பவளப்பூச்சிகளுக்கு முதுகெலும் பில்லை. ஆகவே அவை அன்றுமுதல் இன்று வரையும் நீரில் வாழும் பூச்சிகளாகவே இருக்கின்றன. நத்தை, சிப்பி முதலிய ஓடுள்ள கடல் உயிர்கள் இரையைத் தேடி மணலில் ஊர்ந்து திரிவதைக் காண்கிறோம். எல்லா உயிர்களின் ஓடுகளும் சுண்ணாம்பினால் கட்டப்பட்டவை. முதுகெலும்பில்லாத இவ்வுயிர்கள் ஊர்ந்தும் மிதந்தும் செல்கின்றன. இவை களின் வளர்ச்சி இவ்வளவோடு நின்று விடுகின்றது. இப் பொழுது முதுகெலும்பில்லாத எல்லா உயிர்களின் உடலும் மென்மையுடையது. கடல் முட்பந்துகள்(sea-urchins) என்பவை உயி ருள்ள முட்பந்துகளே. இவ்வுயிர் தோலில் முள் வளர்ந்த சிறுபை போன்றது. கடல் முட்பந்துகள், நட்சத்திர மீன், கல் அல்லி (stone lilies) என்பவை பவளப்பூச்சிக்கு மேற்பட்டவை. இவைக்கு ஒருவகையான வயிறு உண்டு. இவற்றின் விருப்பமான உணவு ‘அல்கே’. இவைக்கு அடுத்தபடியில் ‘வுட் லைஸ்’ (Wood-Lice) என்னும் நண்டுபோன்ற ஓர் உயிர் தோன்றிற்று. இது நிலஉயிர் நீர்உயிர் என்னும் இரண்டுக்கும் இடைப்பட்டது. அதற்கு அடுத்தபடியில் நண்டு தோன்றிற்று. இது கடலி னின்றும் வெளியேறி நிலத்தில் வாழப் பழக்கமடைந்தது. இதன் உறுப்புகள் பொருத்துகளுடையவை. பொருத்து களில் உறுப்புகளை வளரச் செய்கின்ற எல்லா உயிர்களும் பூச்சி வகையில் அடங்கும். இவ்வகையில் பல உயிர்கள் தோன்றின. இவைகளுக்கு முதுகெலும்பில்லை. இந்திய பசிபிக் கடற்கரைகளில் வாழும் திருடன் நண்டு (Robber-crab) உணவைத் தேடி பனை மரங்களில் ஏறுகின்றது. இப் பூச்சி இனங்களிலிருந்து வேறு இனங்கள் தோன்றவில்லை. கடற் பூச்சிகளிலிருந்து தரைப் பூச்சிகள் உண்டாயின. அவைகளின் உடல் அமைப்பும் அதே வகையாக விருந்தது. அவற்றுக்கு முதுகெலும்பில்லை; பொருத்துகள் இருந்தன; அவைக்கு ஒருவகை இருதய மும், மூளைபோல் ஒரு பகுதியும் உண்டு. சொறிமீன்கள்(Jelly fish) போன்ற சில பூச்சிகள் தமது அறைகளை நீண்ட நூல் போல் வளர்த்தன. இவைகளிலிருந்து முதுகெலும்பு உடையது போன்ற தோற்றமுடைய புழுக்கள் தோன்றின. இவ்வாறு தோன்றிய உயிர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒன்றை ஒன்று பிடித்து உண்டு வாழும் போது அவைகளுக்கு, நகங்கள், இறக்கைகள், அலகுகள், மீசைகள் வளர்ந்தன. மேலும் இலட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்தன. அப்பொழுது முதுகெலும்புள்ள உயிர்கள் கடலுள் தோன்றலாயின. புழுவாக வளர்ந்த பூச்சி மீனாக மாறுதலடைந்தது. முதல் முதல் தோன்றிய மீனுக்கு துவாரம் போன்ற வாயுண்டு; அலகுகள் தோன்றவில்லை. இதற்கு அடுத்தபடியில் விலாங்கு(Eel) என்னும் மீன் தோன்றிற்று. இதற்கு அலகுகள் உண்டு. ஆனால் அதன் முதுகெலும்பு வலியுடையதன்று. முதுகெலும்பு பெற்ற உயிர்கள் சில மிக மிகப் பெரியனவாய் வளர்ந்தன. அவைகளுக்கு முள் நிறைந்த கரகரப்பான தோலும் சுறாமீனுக் கிருப்பவை போன்ற பற்களு மிருந்தன. விலாங்கு மீனுக்கு மேற்படியிலுள்ளதே உண்மை யான மீன். அதன் முட்கள் வயிரமடைந்துள்ளன. மிதக்கும் வாய்ப்பின் பொருட்டு அதன் உடலுள் காற்றுப்பை உண்டாயிருந்தது. அதன் உதவியைக் கொண்டு அது கடலில் நீந்தவும் கடலின் வெவ்வேறு அளவுள்ள நீரில் மிதந்து திரியவும் இயன்றது. உணவின் பொருட்டு மீன் கரைக்கு வந்தது. கடலுள் மீன்கள் பெருகின. வாழ்க்கைப் போராட்டம் கடுமை ஆயிற்று. இதனால் பல மாறுதல்கள் உண்டாயின. கடலுயிர்கள் தரைவாழ் உயிர்களாயின நிலத்தில் உயிர்கள் தோன்றிப் பெருகின. அப்பொழுது தரையில் வாழும் உயிர், நீரில் வாழும் உயிர்கள் என உயிர்கள் இரண்டாகப் பிரிந்தன. நிலத்தில் வாழும் உயிர்களிற் சில கடற்கரைகளில் உலாவின; பின்பு அவை கடலிற் சென்று வாழ விரும்பின; தரையில் வாழ்தற்கு வாய்ப்பான உறுப்புக் களைப் போக்கிக் கொண்டு நீரில் வாழ்ந்தன. இவ்வாறு இலட்சக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தபின் அவை மறுபடியும் தரையில் வாழ விரும்பின. தரையில் வாழ்ந்தபின் கடலிற் சென்ற உயிர்களிற் சில திமிங்கிலம் போல வாழ்ந்தன. திமிங்கிலத்தின் இரத்தம் வெப்பமானது. மீன் குளிர்ந்த இரத்த முடையது. முன் தரையில் வாழ்ந்த உயிர்களினின்றும் பிரிந்து கடலுக்குச் சென்றமையால் திமிங்கிலத்திற்கு வெப்பமான இரத்தமுண்டு. கடற்பசு என்னும் கடல் விலங்கு காணப்படு கின்றது. இதன் எலும்புக் கோவை, முதுகெலும்பு, சந்ததியைப் பெருக்கு வது, கன்றை ஈன்பது முதலியன வெல்லாம் தரையில் வாழும் பசுவுக் குடையவை போன்றன. எல்லா உயிர்களையும் போல மீன்களும் மூச்சுவிட்டு வாழவேண்டும். அவை செவுள் வழியாக மூச்சு விட்டன. அவை நீரிலிருந்து காற்றைப் பிரித்து எடுத்துக்கொண்டன. முது கெலும்பிலிருந்து துடுப்புகள் வளர்ந்தன. முன்புறம் வளர்ந்திருந்த துடுப்புகள் முன்னங்கால்கள் போலவும், பின்னேயிருந்த துடுப்புகள் பின்னங்கால்கள் அல்லது பாதங்கள் போலவும் இருந்தன. இவைகளின் துடுப்புகள் பூச்சிகளின் கால்கள் போலப் பொருத்துடையனவல்ல. இத் துடுப்புகள் அல்லது செட்டைகளே உறுப்புகள் வளர்வதற்கு முதற்படியிலுள்ளவை. கரையிலே வளர்ந்த நாணல்களிலும் புதர்களிலும் பலவகைப் பூச்சிகள் இருந்தன. கரைக்கு வந்த மீன் களால் மூச்சுவிட முடியவில்லை. செவுள்கள் நீருள் மூச்சு விடுதற்கேற்ற அமைப்புடையன. தரையிலுள்ள காற்றுச் செவிள் வழியாக உள்ளே செல்லமுடியாமல் இருந்தது. ஆகவே அவை செவிள்களை அப்படியே இருக்கவிட்டுத் தொண்டையில் காற்றுப் பையை வளர்த்துக் கொண்டன. இம் மூச்சுப் பையின் உதவி யைக்கொண்டு அவை தரையில் மூச்சு விடவும் நீரில் மிதக்கவும் முடிந்தது. இப்பொழுது அவை தரையில் சிறிதுநேரம் தங்கிப் பூச்சிகளை உணவாகப் பிடித்து உண்ண முடிந்தது. கடலில் நீந்தும் மீன்கள் இவை ஒன்றையும் கருத்திற் கொள்ள வில்லை. அவைகளின் சிறிய துடுப்புகள் அல்லது சிறகுகள் பெரிதாக வளர்ந்தன. மூச்சுப் பையுடைய மீன்களால் கடற்கரையில் நீந்திச்செல்ல முடியாது. அவை தவழ்ந்து சென்றன. மீன்கள் தவழப் பழகாவிட்டால் மனிதன் நடக்கப் பழகியிருக்கமாட்டான். அவைகளின் முன் துடுப்புக் களும் பின் துடுப்புகளும் வயிரமேறி நுனியில் மடிப்பு உண்டாயிற்று. அது சப்பையான கையிணைப்புடைய மணிக்கட்டுப் போன்றது. ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக அவை துடுப்புகளைக் கரையிலுள்ள சேற்றிலும் மணலிலும் ஊன்றித் திரிந்தமையால் அவை அவ்வாறு ஆயின. அவை, துடுப்புகளின் முனையை அழுத்தி விரித்துப் பயன்படுத்தினமையால் அது பிரிந்து விரல்கள் போலாயிற்று. ஒவ்வொரு துடுப்பிலும் ஐந்து விரல்களுக்கு மேல் தோன்றவில்லை. தரையில் வாழ்ந்த மீன்கள் மூச்சுப்பையில் திருத்தம் செய்து கொண்டன. அவை நிலத்தில் வாழவேண்டுமென்னும் விருப்பங்கொண்ட போதே பெரிய மாற்றம் உண்டாயிற்று. அவை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மேலும் திருத்தமுடைய சந்ததிகளைத் தோற்றுவித்தமை யால் தரையில் வாழும் நாற்காலுடைய உயிர்கள் தோன்றின. நாற்காலுடைய உயிர்களின் முதுகெலும்பு உறுதி உடையது. அவைக்கு மூச்சுப்பையும் கைகளும் கால்களும் உண்டு. அவற்றின் உறுதி யான மண்டையில் பற்கள் அமைந்திருந்தன. மீனுடைய பல் தொடக்கத்தில் செதிலாக விருந்தது. பின்பு செதில்கள் எலும்புத் தன்மை அடைந்து வாய் அலகுகளில் வலிபெற்றிருந்தன. பயன்படுத்தப்படாத செதிற் பற்கள் மறைப்புப் போன்றிருந்தன. இவற்றின் வாலிலிருந்த சிறகுகள் மறைந்து போயின. அவற்றின் பின்புறம் ஒழுங்கான வாலாக மாறிற்று. இதன்பின் பாதி நீரிலும் பாதி நிலத்திலும் வாழும் உயிர்கள் தோன்றின. இவ் வுயிர்கள் வாலினாலும் முன்கைகளாலும் நீந்திச்சென்று சிறிய மீன்களையும் பூச்சிகளையும் உண்டன; தரைக்கு வந்தபோது அவை மண்புழுக்களையும் பூச்சிகளையும் தின்றன. இவை செவுள்களையும் மூச்சுப் பையையும் பயன்படுத்தக்கூடியனவாயிருந்தன. பின்பு அவை தவளைகளைப் போலத் தமது வாலைப் போக்கிக்கொண்டன. அவற்றின் முன்கால்கள் நீளமாக வளர்ந்திருந்தன. இவ் வுயிர்கள் நிலத்தில் வாழவேண்டியிருந்த போதும் நீரிலேயே பிறந்தன. முட்டைகளை நீரிலேயே இட்டன. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்தபோது அவை செவுள்களைப் பயன்படுத்தின; மூச்சுப்பையைப் பயன்படுத்தவில்லை. அவை வாலோடு இருந்து வாலில்லாத தவளையாக வரும்போது செவுள்கள் மறைந்துபோகின்றன. வால் உள்ளே நுழைந்து மறைந்து போகின்றது. பின்னங்கால்கள் வெளியே வருகின்றன. அது உடனே தனது மூச்சுப் பையைப் பயன்படுத்து கின்றது. குறிக்கப்பட்ட ஓர் அளவு நேரத்துக்குமேல் அவைகளால் நீருள் இருக்கமுடியாது. தவளையின் கைகளில் விரல்கள் இருந்தன. தொண்டை யால் சத்தமிடும் நரம்புகள் தவளைக்கே முதல்முதல் தோன்றியிருந்தன. சில விஞ்ஞானிகள் தொண்டையால் சத்தமிடும் நரம்புகள் முதலைக்கே முதலில் தோன்றியிருந்தனவென்று கூறுவர். முதலை முட்டைக்குள் இருக்கும் குஞ்சு விநோதமான சத்தமிடும். அச் சத்தத்தைக் கேட்ட முதலை, முட்டைகள் புதைக்கப்பட்டிருக்குமிடத்திற்குச் சென்று முட்டைகளை வெளியே கிளறி எடுக்கும். ஓட்டோடு கூடிய முட்டை வழுவழுப்பான சொறி மீன்களிலி ருந்து பூச்சி இனங்கள் உண்டான வகையைப்பற்றி அறிந்தோம். பூச்சி வகைகளுள் நூல் போன்ற முதுகெலும்பு வளர்ச்சியடைந்தது. உடம்பின் முடிவு போன்ற தலையுடையதே புழு. மிருதுவான உடம்பின் முடிவு அல்லது முனை நாளடைவில் மண்டை ஓடாக வளர்ந்தது. துவாரம் போன்ற வாய் திறக்கவும் மூடவும் கூடிய அலகுகளைப் பெற்றது. அலகுகளின் ஓரங் களிலுள்ள தோலில் வளர்ந்த பற்கள் அலகுகளில் ஊன்றின. முதுகெலும்பி லிருந்து விலாவெலும்புகள் வளர்ந்தன. முன் துடுப்புகள் போன்றிருந்த செட்டைகள் புயங்களாகவும், விரல்களோடு கூடிய பகுதிகளாகவும் மாறின. கைகளின் இறுதியான வளர்ச்சி விரல்களைப் பெற்றிருப்பது. ஆரம்ப உயிர்களுக்குப் புதிதாக நினைக்கும் ஆற்றல் இல்லை. அவை இயற்கை அல்லது பரம்பரை அறிவையே (instinct) பயன்படுத்தின. ஒவ்வொரு உயிரும் தனது செயல்களில் முன்னேற முயன்று வந்தது. இதனால் அவை பற்பல இனங்களாகப் பிரிந்தன. தாவர வகையில் சிறிய ‘அல்கே’ எப்படிப் பெரிய நிழல் மரங்களாக வளர்ந்ததோ அப்படியே ஊர்ந் தும் தவழ்ந்தும் திரிந்த உயிர்களே பல்வகைத் தோற்றங்களாக வளர்ச்சி யடைந்தன. ‘தகுதியுடையது நிலைபெறுதல்’ என்னும் இயற்கை, விதிக் கிணங்க, அவை உணவு தேடுவதற்குப் போராடியபோது, நீந்தும், தவழும், ஊரும் உயிர்கள் வளர்ச்சிப் பாதைகளில் விடுபட்டன. ‘தாழ்ந்துபோ அல்லது நீந்து’, ‘உயிர்வாழ் அல்லது இறந்துபோ’ என்னும் விதிகள் எல்லாம் உணவின் பொருட்டே யன்றி விடுதலையின் பொருட்டன்று. உணவு பெற முடியாத உயிர்கள் அழவேண்டியதில்லை; ‘எனக்கு மரணத்தைத் தா’ எனக் கேட்பதே இயற்கை விதி. இயற்கை இவ் வேண்டுதலைக் கவனித்தது. உயிர்கள் நிலைபெறுவதற்கு ஒரே வழி உணவு. பதினாயிரக்கணக்கான உயிர் இனங்கள் இவ் வுலகில் அடியழிந்துபோயின. இவைகளுக்குப்பின் பல தோன்றின; அவைகளும் மறைந்தன. இவ்வாறு பல தோற்றங்களும் மறைவுகளும் உண்டாயின. இப்பொழுது பூச்சியினத்தைப் பற்றிச் சிறிது கவனிப்போம். பூச்சிகள் மிகமிகப் பெரிய கூட்டங்களாகப் பெருகின. அவை நீரில் வாழ்தல் அளவில் நில்லாமல் நிலத்திற்கு வந்தன. கடல் தேள் நிலத் தேளாகவும், கடல் தெள்ளு(lice) மரத் தெள்ளாக வும் மாறின. நண்டுகள் பல குடும்பங் களாகப் பிரிந்தன. நீர்ச்சிலந்தி தரைச் சிலந்தியாக மாறிற்று. அது வலை பின்ன இன்னும் அறிந்து கொள்ள வில்லை. உயரப் பறப்பவைகளுள் தும்பி அரசனாக விருந்தது. அது சிறகுகளை விரித்தால் ஒரு முனையிலிருந்து மற்ற முனைக்குள்ள நீளம் முப்பது அடி அளவிலிருந்தது. பச்சை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு நிறமுடைய பறக்கும் உயிர்களால் வானம் நிறைந்திருந்தது. அவை நீரில் மிதக்கும் மீன்களின் முட்டைகள், புழுக்கள், நீர்ப்பூச்சிகள் முதலியவைகளை உண்டு வாழ்ந்தன. அவற்றிற்கு நீரில் வாழும் விருப்பும் உண்டு. சிறியனவாயிருக்கும் போது அவற்றிற்குச் செவுள்கள் உண்டு. தவளை முட்டைகளைப் போலத் தும்பிகளின் முட்டை தண்ணீரில் பொரிக்கும். சிறிய தும்பிகளுக்குச் செவுள்கள் உண்டு. அவை செவுள்களால் மூச்சுவிடும். மூர்க்கமுள்ள இவை ஒன்றை ஒன்று பிடித்து உண்டன. தும்பியின் செட்டைகள் உறுதியானவை யல்ல. வாலுள்ள தவளைக் குஞ்சுகள் வாலை நீக்கிவிட்டுத் தவளையாக மாறும்போது செவிள் மறைந்துவிடுகின்றது; அது போலச் செட்டை முளைக்கும்போது சிறு தும்பிகளுக்குச் செவுள்கள் மறைந்துபோகின்றன. தும்பிகளின் செட்டைகளை உண்மையான செட்டைகள் என்று சொல்ல முடியாது. நண்டு காலத்துக்குக் காலம் தனது ஓட்டை மாற்றிக்கொள்வது போல இவையும் காலத்துக்குக் காலம் தமது தோலை மாற்றிக்கொண்டு புதிய தோலுடன் வெளிவருகின்றன. பார்வைக்கு வெறுப்புத் தரும் இன்னொரு பூச்சியும் அங்குக் காணப்பட்டது. அதற்குப் பெரிய செட்டைகள் உண்டு; ஆனால் அவை பறப்பதற்காக அமைந்தவையல்ல. அது இரைந்து கொண்டு புதர்களில் இருந்தது. அது நிலத்திற் குதித்த போது விரை வாக ஓடிற்று. அது கரப்பான் பூச்சி (cockroach) எனப்படும். அது தும்பியிலும் பார்க்கப் பெரியது; வான்கோழிச் சேவலளவு பருமையுடையது. அதன் சந்ததியில் வந்தவை களே பத்திலட்சக்கணக்கான ஆண்டுகளின் பின் நமது அடுக்களைகளிற் காணப்படுகின்றன. பூச்சிகளின் உள்ளுடல் மிருதுவானது. அவைகட்கு எலும்புகள் இல்லை. அவற்றின் பகுதி பகுதியான உடலமைப்பின் பொருத்துகளுக்கு வெளியே உறுப்புகள் வளர்ந்தன. அவற்றின்மேல் உடலை வயிரமான கவசம் மூடியிருந்தது. பூச்சிகள் தம் வாழ்க்கையின் பொருட்டு மற்ற உயிர் களோடு போராடிய தன்மைகளால் அவற்றின் வடிவம் நிறம் முதலியன மாறுதலடைந்தன. அவற்றிற்கு அடுத்தபடியில் ஊரும் பிராணிகள் தோன்றின. நீரிலிருந்து வெளியே வந்த மீன்கள் பாதி மீனும் பாதி மீனல்லாதவுமாகிய மூச்சுப் பையினால் மூச்சுவிடும் உயிர்களாக மாறின; இவையே முதல் தோன்றிய நாற்கால் உயிர்கள். இவ்வாறு, பகுதி நீரிலும் பகுதி நிலத்திலும் வாழும் உயிர்களே ஓடுள்ள முட்டைகளை இட்டன. வெளியிலே குஞ்சு பொரிக்கும் முட்டை போன்றவைகளை எல்லாம் நாம் முட்டைகள் என்று நினைக்கிறோம். நீரில் வாழும் உயிர்களின் முட்டைக்கும் தரையில் வாழும் உயிர்களின் முட்டைக்கும் வேறுபாடு உண்டு. பல்லிகள் அல்லது ஊர்வன முட்டையிடத் தொடங்கியபின் பல ஊரும் உயிர்க் குடும்பங்கள் தோன்றின. தவளையிலிருந்து சலமான்டர் போன்றவை தோன்றின. பலவகைப் பல்லிகள், பாம்புகள், முதலைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமைகள் இன்று காணப்படாத இன்னும் மிகப் பல உயிர்கள் வாழ்ந்தன. சலமான்டர்1 அல்லது தவளைதான் ஓட்டோடு கூடிய முதல் முட்டையை இட்டிருத்தல் வேண்டும். நீரில் இடப்படும் முட்டைக்கு மெல்லிய வெளிச்சவ்வு மாத்திரமுண்டு. நீரில் இடப்பட்ட முட்டைகளில் தோன்றிய உயிர்கள் முன்னேற்றமடையவில்லை. ஓட்டோடு கூடிய முட்டை என்பது காய்ந்த தரையில் குஞ்சு பொரிக்கக்கூடியதே. முட்டைகளிலிருந்து பொரித்த குஞ்சுகள் மூச்சு விடுவதற்குச் செவிள்கள் வேண்டியதில்லை. ஓடுள்ள முட்டையில் தோன்றிய உயிர்கள் பல்லி இனங்களிற் சில தமது கால்களைச் சிறிது சிறிதாக உள்ளுக்கு இழுத்துக்கொண்டன. இறுதியில் அவை வெளியே தெரியாதபடி மறைந்து போயின. பின்பு கால் இல்லாத பல்லிகள் தாம் விரும்பிய அளவுக்கு உடலை வளர்த்துக் கொண்டன. அவை பாம்புகளாயின. பெரிய உயிர் களுக்கு அகப்படாதபடி புதர்களில் வளைந்து சென்று மறைந்து கொள்வ தற்கு இவ்வகை உடல் ஏற்றதாக விருந்தது. இன்றும் சில பாம்புகளுக்குக் கால்களின் அடையாளங்கள் காணப்படுகின்றன. பாம்பாக மாறிய பல்லிகள் எல்லாம் உயிர் பிழைக்கவில்லை; சுறுசுறுப்பும் வலிமையும் உள்ளவையே பிழைத்தன. கடலில் மிகப் பெரிய மீன் பல்லிகள் வாழ்ந்தன. இவை நாளடைவில் மறைந்துபோயின. கடற் பல்லிகள் வயிற்றினுள்ளே முட்டை யைப் பொரித்துக் குட்டியை வெளியே ஈன்றன. குட்டிக்குப் பால் கொடுக்கும் விலங்குகள் பல்லிகள் போன்ற ஊரும் உயிர்களிலிருந்து பிறந்தன. ஊரும் உயிர்கள் முட்டைகளை இட்டுக் குஞ்சு பொரிக் கும்படி அவைகளை வெய்யில் வெப்பத்தில் விட்டன. குட்டிக்குப் பால்கொடுக்கும் விலங்கோடு ஊர்வதை ஒப்பிட்டால் பின்னது குட்டிகளுக்கு வளர்ப்புத்தாய் போன்றது. குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்கே உயிர்களுக் கெல்லாம் உண்மையான தாய். ஊரும் உயிர் சிலவற்றுக்கு நல்ல இரத்தத்தைக் கெட்ட இரத்தத்திலிருந்து பிரிக்கக்கூடிய இருதயம் வளர்ந்தது. குட்டிக்குப் பால் கொடுக்கும் ஆதி உயிர்கள் சிறியனவாயிருந்தன. பெரிய ஊரும் உயிர்கள் இவைகளை வேட்டையாடி உண்டன. தகுதி உடையது நிலைபெறுதல் என்னும் இயற்கை விதிக்கேற்ப அவை வாழ்தற்கு மிக முயன்றன. வெய்யிற் சூட்டினால் முட்டையிலிருந்த குஞ்சு பொரிக்கும் ஊர்வனவுக்கு ஞாபக சக்தி குறைவு. தாய்ப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்குகளுக்கு தம் மினத்துக்குரிய ஞாபகம் அதிகம் உண்டு. ஒரு பல்லியை அல்லது ஒரு பாம்பைக் காணும்போது நமக்கு வெறுப்புணர்ச்சி உண்டாகின்றது. ஊர்வனவெல்லாம் பாலூட்டி வளர்க்கப்படும் உயிர்களுக்கு ஒரு காலத்தில் பகையாயிருந்தன என்னும் பழைய ஞாபகம் நமக்கு இருப்பதுதான் இதற்குக் காரணம். முற்காலத்தில் மிகமிகப் பெரிய ஊர்வன குளங் குட்டைகளில் உலாவித் திரிந்தன. நாங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத அவ்வளவு பயங்கரமாக அவைகளின் வடிவு இருந்தது. எல்லாவற்றிலும் மேற்படியிலுள்ள உயிர்களைத் தவிர மற்றவை எல்லாம் ஒவ்வொரு வகை உணவை உண்டு வாழத் தொடங்கின. கண்ட வற்றை எல்லாம் உண்டு வாழ்ந்த ஆதி உயிர்களின் வாழ்க்கை இலகுவாக விருந்தது. ஒவ்வொரு வகை என்றது பூச்சிகள், நத்தைகள், இறைச்சி முதலிய வைகளைக் குறிக்கும். முற்காலக் கடற்பல்லி அக்காலத்தில் தோன்றியிருந்த பெரிய கணவாய் மீன்களை மாத்திரம் உண்டு வாழ்ந்தது. ஒவ்வொரு வகை உணவையே உண்டு வாழ்ந்த உயிர்கள் அவ்வகை உணவு கிடையாதபோது மறைந்து போயின. பெரிய உயிரினங்கள் தாவரம் ஊன் என்பவைகளில் ஒன்றை உண் கின்றன. பாம்பு பூச்சிகளை உண்கின் றது; புல்லை உண்பதில்லை. முற் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய உயிர்கள் தாவரங்களையே உண்டன. முற்காலத்தில் இடியேற்றுப்பல்லி (Thunder lizard) என்னும் ஒருவகை உயிர் வாழ்ந்தது. அதன் வாலின் நீளம் முப்பதடி; உடலின் நீளம் எண்பதடி. இன்று இடியேற்றுப்பல்லிகள் காணப்படவில்லை. அவை குளங்களுக்குக் கீழே வளர்ந்த நீர் அல்லிகளை உண்டு வாழ்ந்தன. இகுவானோடன்(Igunanodon) என்னும் ஒருவகைப் பல்லியும் தோன்றி வாழ்ந்தது. இதன் கழுத்துக் குறுகியது. இதன் மூளையும் அற்பமானது. இடியேற்றுப் பல்லிக்கும் இகுவானோடன் என்னும் பல்லிக்கும் மூளை வாலில் வளர்ந்திருந்தது. இடியேற்றுப்பல்லி பின்னங்காலில் நின்று மரங்களின் இலைகளை உண்டது. முதுகிலே வாள் போன்ற சதை வளர்ந்த பல்லிகளும் வாழ்ந்தன. மேல் வாயில் கொம்புகளுடைய பல்லிகளும் வாழ்ந்தன. சில பல்லிகளுக்குத் தோல் அழுத்தமாக விருந்தது. மீன்களை உண்டு வாழும் பல்லிகளுக்கு நன்கமைந்த பற்களிருந்தன. தாவரங்களை உண்டு வாழ்ந்த பல்லிகளுக்குப் பாரமான எலும்புகள் அமைந்திருந்தன. அவைகளின் பல ‘டன்’ பாரமுள்ள உடலைத் தாங்கு தற்கு அவ்வகை எலும்புகளே தேவை. ஊனுணவை உண்ணும் பல்லிகளின் எலும்புகள் பாரங் குறைந்தனவா யிருந்தன. பாம்புபோல் நீண்டு வளர்ந்த பல்லிகள் தமது கால்களைத் துடுப்புகள் போல ஆக்கிக்கொண்டன. இவை களிலிருந்து முதலைகள் தோன்றின. மரங்கள்மீது பறக்கும் முதலை கள் காணப்பட்டன. இவை சிறிய பல்லி இனங்களிலிருந்து வளர்ச்சி யடைந்தவை. பூச்சிகள் மரநுனிகளில் பறந்து திரிந்தன. ஆமைகளைப் போன்று கவசம் பெற்ற பல்லிகள் சில மரத்தின் அடிமீது உடலைச் சார்த்தி மரத்தின்மீது ஏறிப் பழங்களை உண்டன. இப் பல்லிகள் மரத்தினின்றும் குதித்து அபாயத்துக் குள்ளாதல், பகைகளுக்கு இரையாதல் போன்ற ஆபத்தினின்றும் தப்பிக் கொள்வதற்காக விரல்களின் இடைகளில் சவ்வை வளரச்செய்தன. முன்னங்காலில் வளர்ந்த சவ்வு பின்னங்காலோடு இணைக்கப்பட்டிருந்தது. மரத்தில் வாழும் பல்லிகள் இச் சவ்வைச் சிறகு போல் விரித்துக்கொண்டு மரத்திலிருந்து நிலத்திற்கு இறங்கிப் பகைகளி னின்றும் தப்பக் கூடியதாக இருந்தது. மரத்தினின்றும் குதிப்பதாலுண்டாகும் அபாயம் அதற்கு நீங்கிற்று. இவ்வாறு தப்பிப் பிழைத்தவைகளுள் வலியுடை யவை பெரியவைகளாக வளர்ந்தன. இவை வெப்ப மண்டலங்களில் வாழ்ந் தமையால் பறக்கும் முதலைகளாக மாறின. பெரிய உடம்பை மேலே ஆகா யத்தில் மிதக்கச் செய்வதற்குப் பெரிய செட்டைகள் தேவையாயிருந்தன. பறக்கும் முதலைகள் வெளவாலின் செட்டைகள் போன்ற செட்டைகளுடன் இருபது அடி நீள முடையனவாயிருந்தன. இவை மேலே பறந்து திரியும் பூச்சி களைப் பிடித்து உண்டன. அவைகட்குப் பற்கள் இல்லை. பறக்கும் முதலை தனது வாலைப் போக்கிக்கொண்டது; பின்னங் கால்களையும் உடலுக்குள் இழுத்துக் கொண்டது. அதற்குப் பின்னங்கால்கள் தேவைப்படவில்லை. அதன் எலும்புகள் உள் துளை உடையனவாய் பாரம் குறைந்தவை. தடித்த தோலுக்குப் பதில் பட்டுப் போன்ற மெல்லிய தோல் உண்டாயிற்று. இப் பறக்கும் முதலை செட்டைகளை விரித்தபோது இருபதடி நீளமுள்ளதாயிருந்தது. இப் பறக்கும் முதலை விரைவில் மறைந்துபோயிற்று. சவ்வு போன்ற செட்டையை வளர்த்துக் கொண்ட எல்லாப் பல்லி களும் முற்காலப் பறக்கும் முதலை போலிருக்கவில்லை. இவைகளில் மிகவும் வெறுப்புத் தருவது பல்லி வெளவாலே. இது தனது பல்லைப் போக்கிக் கொள்ளவில்லை. கடலாழத்தில் முதன்முதல் மூச்சுப்பை யுள்ள மீன்கள் கரைக்கு வந்தன. இயற்கை அவற்றின் உடலை வயிர மடையச் செய்தது. புகைமயமான அலைகள் மறைந்தன. பவளப் பாறைகளில் பச்சை, கருஞ்சிவப்பு, சிவப்பு முதலிய நிறங்களுடைய கடற்சாதாழைகள் வளர்ந்தன. கடற்பூ(Sea anemones), கடற் சிவப்பு(Sea pinks) என்பவை பாறை அடிகளிற் செழித்து வளர்ந்தன. இவை பாதி தாவரமும் பாதி அசையு முயிராகவும் இருந்தன. இவை ஊர்வது போன்ற அசைவுடன், பாம்பு ஆயிரந் தலைகளை நீட்டுவது போலத் தமது விரல்களை உணவின் பொருட்டு நீட்டிக்கொண்டிருந்தன. வியப்பான கடல் அல்லிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கூட்டமாகக் கடலின் கீழ் வாழ்ந்தன. ஞாயிற்றின் ஒளி அப் பூக்கள் மீது பட்டவுடன் அவை அசைந்தன. பாறைகளின் வெடிப்புகளில் பல சிறிய உயிர்கள் தங்கி வாழ்ந்தன. சிறிய கணவாய் மீன்கள் வில்லிலிருந்து விடுபட்ட அம்பைப் போலப் பின்னோக்கி நீந்திச் சென்றன. சுருள் வடிவான ஓடுடைய நத்தை இனங்களும் வாழ்ந்தன. இவை நான்கு அல்லது ஐந்து அடிச் சுற்றள வுடையன. இவை, வானவில், வெள்ளி, பொன் நிறங்களுள்ள மீன்கள் வருவதை வட்டமான கண்களால் பார்த்துக்கொண்டு திறந்த வாய்களுடன் மறைவிற்கிடந்தன. அங்குமிங்கும் கூட்டமாகக் கடற் சாதாழைகள் கிடந்தன. ஒரு கடற்சாதாழைக் கூட்டத்திலிருந்து இன்னொரு கடற் சாதாழைக் கூட்டத்துக்குக் கடற் பாம்புகள் விரைவாக நீந்திச் சென்றன. சிறிது விறைப்பான முதுகெலும்புடைய புழுக்களிலிருந்து சுறா, திருக்கை முதலிய மீன்கள் தோன்றின. முற்காலத்தில் மிகமிகப் பெரிய சுறா மீன்கள் வாழ்ந்தன. அவைகளுட் பெரியது நாற்பத்தைந்தடி நீளமுள்ளது. அதன் பருமைக்கு ஏற்றதாக வாயுமிருந்தது. இவ் வகைச் சுறா மீனிலிருந்து பல்லில்லாத மீன்களும் பல்லிகளும் தப்பிப் பிழைப்பது கடினமாயிருந்தது. சுறா மீன்களுக்குப் பின் வாள்மீன்கள் தோன்றின. தமது மூக்கை நீண்ட குத்தும் ஆயுத மாக வளர்த்துக்கொண்ட சுறாமீன் களே வாள்மீன்களாகும். அவற் றின் வாள் ஐந்தடி நீளமுள்ளதாக விருந்தது. அவை திமிங்கிலம் போன்ற பெரிய மீன்களைத் தாக்கி அவற்றின் குடலை உண்டன. கடலுள் பெரிய திருக்கை மீன்களும் உலாவித் திரிந்தன. இவைகளின் உடல் வட்டமாகவும் அழுத்தமாகவும் இருந்தது. மின்சாரஅலை வீசும் மீன்கள் பல வாழ்ந்தன. இம் மீன்களின் நரம்புகளில் மின்சக்தி இருந்தது. அவை மின்சக்தியைச் செலுத்திக் கிட்ட வரும் சிறிய மீன்களைக் கொல்லத்தக்க ஆற்றல் பெற்றிருந்தன. திருக்கை மீன்களின் வாலில் முட்கள் இருந்தன. அது வாலை வீசி மீன்களை வெட்டிற்று. பசாசு மீன்(Devil Fish) எனப்பட்ட பெரிய திருக்கை மீன்கள் வாழ்ந்தன. இவை இருபது அடிக்குமேல் நீள முடையன. இவைகளின் வால் வீச்சு ஆழமாக வெட்டக்கூடியது இவை கடல் ஆழத்தில் சுழி ஓடிச்சென்றன; மறுபடியும் தமது 1,500 அல்லது 2,000 இராத்தல் சுமையுள்ள பாரமான உடலோடு கடலுக்கு மேலே சில அடிகள் எழும்பிக் கீழே விழுந்தன. இதனால் பக்கங்களில் பெரிய அலைகள் உண்டாயின. இவ்வாறே திருக்கை மீன்கள் இந்தியக் கடல்களிலும் ப்ளாரிடா(Florida) கடற்கரைகளிலும் விளையாடுகின்றன. இதன்பின் கணவாய்மீன் குடும்பங்கள் வருகின்றன. கணவாய் மீனுக்கு உறிஞ்சும் வழுவழுப்பான பத்துக் குழாய்கள் உண்டு. அது இவை களால் தான் உண்ணக்கூடிய இரையைப் பிடித்து வாய்க்குக் கொண்டுவரு கின்றது. அது கடலாழத்திலே மணல் பரந்த தரையின் கிட்டச் செல்லும் போது அங்கு உலாவும் சிறிய கணவாய் மீன்களையும் பிற சிறிய மீன்களை யும் பிடிக்கின்றது. தனக்கு ஆபத்து நேரும்போது அது ஒரு வகை மையைக் கக்குகின்றது. இம் மை அதனைத் துரத்திவரும் மீனுக்கும் அதற்கும் திரை மறைப்புப் போலப் பயன்படுகின்றது. அதனைத் தொடர்ந்து வந்த மீன் அதனைப் பார்க்கமுடியாமையால் திரும்பிச் செல்கின்றது. குளிர்காலம் வந்தபோது இன்று இவ்வுலகில் வாழ்கின்ற உயிர்களெல்லாம் உலகில் தோன்றிய பெரிய குளிர் காலத்திற்குப் பிழைத்து வந்தவையே. வெப்ப காலம் பத்திலட்சக்கணக்கான ஆண்டுகள் இருந்தது. வெப்பமான கடலுள் உயிர்கள் நிறைந்திருந்தன. அவை சுறா, திருக்கை, திமிங்கிலம், பாம்பு, பல்லி போல்வன. கடலில் மிதக்கும் முட்டைகளை நீரோட்டங்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் கொண்டு சென்றன. கடற்கரைகளில் அவை குஞ்சு பொரிப்பதற்கு ஆயத்தமாக இருந்தன. கோடிக்கணக்கான அம் முட்டைகளுள் சிலவே குஞ்சு பொரித்தன. நீரிலும் தரையிலுமுள்ள பூச்சிகள் அம் முட்டைகளிற் பெரும்பகுதியை உண்டன. பூச்சிகள் பூச்சிகளையும் ஊரும் உயிர்களையும் உண்டன. முடிவில்லாத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. நாணல், பாசி, செடிகள் முதலியவை கீழே வேரைச் செலுத்தி ஒன்றை ஒன்று அமுக்கிக் கொன்றன. இறக்கை உள்ள பூச்சிகள் வானத்தில் தமது இரையைத் துரத்திச் சென்றன. ஊர்வன ஒன்றை ஒன்று பிடித்துத் தின்றன. இவ்வாறு முடிவில்லாத கொலை நடைபெற்றது; நடைபெறுகின்றது. தாவரங்கள் இறந்தவைகளின் என்பு சதைகளிலிருந்து உணவை இழுத்து வளர்கின்றன; தாவரங்களை உண்டு வாழும் உயிர்கள் மறுபடியும் அவற்றை உண்டு வாழ்கின்றன. பத்து லட்ச ஆண்டுக்கணக்கான கோடை காலத்தில் உயிர்கள் எல்லாம் உண்ணக்கூடிய அளவு உணவு நிறைந்திருந்தது. உயிர்கள் நெருக்கமடைந்தன. இப் பூமி ஒரே கொலைக் களம்போல் மாறுதலடைந்தது. பற்களும் நகங் களும் ஒன்றை ஒன்று கிழிப்பதில் ஓயவில்லை. இரத்தந் தோய்ந்த நிலத்திலிருந்து புதிய உயிர்கள் தோன்றின. மாரி வந்தது. பல்லாயிர ஆண்டுகளாக குளிர் அலை அலையாக வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு அலையும் முன்னதிலும் பார்க்கக் குளிராக விருந்தது. பல ஆயிரம் அடி உயர முள்ள மலைத்தொடர்கள் தோன்றியிருந்தன. பூமியைச் சுற்றியிருந்த நீராவிமயமான போர்வை மறைந்தது. நிலத்திலிருந்தும் பயிர் பச்சை களிலிருந்தும் நீராவியாக மாறிய நீர் முகிலாக மிதந்தது. முகில் மறுபடியும் நீரை மழையாகப் பொழிந்தது. நீர் வற்றியிருந்த நீர்நிலைகள் நீரால் நிறைந் தன. மலைகளினின்றும் வடிந்து ஓடும் நீர் பெரிய ஆறுகளை உண்டு பண்ணின. தேங்கிக் கிடக்கும் நீருக்குப் பதில் நீர் ஓட்டங்கள் இருந்தன. பெரிய காடுகள் நடுங்கின; குளிர் அலைகளால் எண்ணில்லாத உயிர்கள் மடிந்தன. குளிரைத் தாங்கும் வன்மையுடைய உயிர்கள் நிலை பெற்றன. முதற்குளிர் அலையைத் தொடர்ந்து இன்னொரு குளிர் அலை வந்தது. உணவு சுருங்கிற்று. வாழ்க்கை கடுமையாயிற்று. அங்கும் இங்கும் சில முரடான உயிர்கள் குளிரைத் தாங்கும் பழக்கம் அடைந்தன. அவை குளிர் காலத்தை இயற்கை நிகழ்ச்சியாக வரவேற்றன. சில உயிர்கள் வெப்ப மான இடங்களை நாடி நீண்ட பயணஞ் செய்தன. இறுதியில் அவை வெப்ப முள்ள இடங்களை அடைந்தன. இவ் வுலகின் எல்லா இடங்களிலும் ஒரே காலத்திற் குளிர்காலம் இருக்கவில்லை. மலைகளிலிருந்து உறைபனி கீழே வந்தது. அது கீழே நிலத்தில் பரவிச் சென்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகள் ஒருகாலத்தில் உறைபனியால் மூடுண் டிருந்தன. உறைபனி மூடாத இடங்களில் கோடைகாலம் இருந்தது. வெப்ப இடங்களுக்குச் சென்ற மீன்கள், ஊர்வன, நத்தைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர்கள் பிழைத்தன. அசையும் உயிர்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதே தாவர உயிர் களுக்கும் ஆசியாவில் நிகழ்ந்தது. ஆஸ்திரல் ஆசியாவில் பழங்கால உயிர்கள் சில இன்றும் காணப்படுகின்றன. நியுசிலாந்தில் இன்று பாசி, பூண்டுக் (fern) காடுகள் காணப்படுகின்றன. முதற் குளிர்காலம் உண்டானபோது தாவரங்கள் அசைய முடியாமல் இருந்தன. ஒரு குளிர்காலத்திற்குப்பின் மறு குளிர்காலம் வந்தது. அப்பொழுது அவை வயிரமடைந்து உரம் பெற்றன. பத்து இலட்சம் ஆண்டுகளாக ‘வேண்’(fern) என்னும் பூண்டுகள் மட்டம் விட்டுக் கிளைத்தன. விதை தோன்றாத காலத்தின் பின் பல்லாயிரக்கணக் கான தாவரங்களில் விதைகள் தோன்றின. நியுசிலாந்தில் பழங்காலத்து வேண்(fern) பூண்டுகளும் ஊர்வனவும் பிழைத்திருத்தல் தகுதியுடையது நிலைபெறும் என்பதற்கு எடுத்துக்காட்டாகின்றது. தாயன்பு முதற் குளிர் காலத்திற்குப் பிழைத்திருந்த பூச்சிகளும் மீன்களும் மற்றும் உயிர்களும் தமது இனங்களைப் பெருக்கின. நீரிலிருந்து வெளியே வந்த பல்லிகள் இப்போது முட்டையிடாது குட்டி யீனும் உயிர்களாக மாறின. ஊர்வனவுக்கு மூன்று அறைகளுள்ள இருதயமுண்டு. குட்டியீனும் உயிர்களுக்கு நான்கு அறையுள்ள இருதயமுண்டு. மூன்று அறை இருதய முள்ள ஊர்வன குளிர்ந்த இரத்தமுடையன. ஊர்வன வாழ்ந்து பெருகுவதற்கு வெளியில் வெப்பம் வேண்டும். குளிர்காலம் மறைந்ததும் வெப்பகாலம் வந்தது. குளிரினால் வாடிக் கொண்டிருந்த தாவரங்கள் உயிர்பெற்றன. குளிருக்குப் பிழைத்திருந்த பூண்டுகள் வளர்ந்தன. பூமியின் பெரும் பகுதி நீருள் மறைந்தது. அங்கு மிங்கும் வெளியே தெரிந்த பகுதிகளில் வளர்ந்த பச்சை நிறச் செடிகளில் பூக்கள் உண்டாயின. வெப்ப காலத்தில் ஊரும் உயிர்கள் நன்றாக வாழ்ந்து பெருகின. மறுபடி குளிர்காலம் வந்தபோது வாழத் தகுதியுடையவை சில இருக்க மற்றவை மறைந்துபோயின. பனிக்காலம் மறைதலும் இன்னும் ஒருமுறை ஊரும் உயிர்கள் பெருகின. குளிருள்ள இடங்களில் வாழ்ந்த உயிர்களிற் சில சுறுசுறுப்புடையனவாய் நிலத்தைத் துளைத்துச் சென்றும், மரங்கள் மீதேறியும் வாழ்ந்தன. இவை வெப்ப இரத்தமுள்ள உயிர்களாக மாறின. தோலில் மயிர் வளர்ந்தது. மயிர் அவைகளுக்கு வெப்பமளித்தது. மயிர்களைச் சுற்றி மயிர்த் துவாரங்கள் தோன்றின. மயிர்த்துவாரங்களி லிருந்து தாய், குட்டிக்கு பால் கொடுக்கும் உறுப்புகள் வளர்ந்தன. உடம்பில் மயிருள்ள உயிர்களிலிருந்து உண்மையான தாய்மை உண்டாயிற்று. இன்றும் மனிதக் குழந்தை பிறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்தொட்டு அதன் உடம்பில் மயிர்கள் தோன்றுகின்றன. மயிர்த் துவாரங்கள் எப்படிப் பால் கொடுக்கும் உறுப்புகளாக வளர்ந்தன? படிப்படியே மேல்நிலை அடைந்த உயிர்களிற் பல இவ்வுலகிற் காணப்படுகின்றன. குட்டிக்குப் பால் கொடுக்கும் உயிர்களில் மிகக்கீழ் நிலையிலுள்ளவை தாராச் சொண்டுடைய நீர் அகழான் (Duck-billed water mole.), முள் மயிருள்ள எறும்பு தின்னி (Porcupine ant-eater) என்பவை. இவ்விரண்டு வகை உயிர்களும் ஆஸ்திரேலியாவிற் காணப்படுகின்றன. இவைகளின் கழிவுப் பொருள்கள் வெளியே செல்வதற்கு ஒரு வாயில் மாத்திரம் உண்டு. இவ்வுயிர்களில் ஒன்றுக்கு மயிருண்டு; மற்றதுக்கு முள் உண்டு. இவை முட்டை இடுகின்றன. அம் முட்டைகள் ஊரும் பிராணிகளின் முட்டைகளைப் போலவே வெய்யில் வெப்பத்தால் பொரிக்கின்றன. குஞ்சுகள் முட்டைக்குள் இருந்து வெளியே வந்தபின் தாய் முதுகைக் கீழே திருப்பிக்கொண்டு கிடக்கின்றது. குட்டிகள் தோலிலுள்ள பெரிய சில துவாரங்கள் வழியாக உணவை உறிஞ்சுகின்றன. அத் துவாரங்களின் கீழ் உணவுச் சத்துப்பொருள் உள்ளது. இத் துவாரங்களிலிருந்தே குட்டிகள் பால் உறிஞ்சும் முலைக்காம்புகள் தோன்றின. வேறு உயிர்கள் இதற்கு அடுத்த படியிலுள்ள வளர்ச்சியைக் காட்டுகின்றன. தென்னமெரிக்காவில் ஒப்பாசும் (Opossum) என்னும் அணில் போன்ற உயிரும் எறும்பு தின்னிகளும் வாழ் கின்றன. சிறிய எலி, முயல், அணில், தாஸ்மேனிய ஓநாய், கங்காரு முதலியவை குளிர்கால முடிவில் பிழைத்திருந்த குட்டிக்குப் பால் கொடுக் கும் விலங்குச் சந்ததியிலுள்ளவை. அவைகளுட் சில மரத்திலும், சில நிலத்திலும் வளை தோண்டியும் வாழ்ந்தன. இவைகட்குக் குட்டிக்குப் பால் கொடுக்கும் உறுப்புகள் வளர்ந்தன. அவை அதற்குப்பின் முட்டையிட வில்லை. தாயின் வயிற்றினின்றும் வெளியே வந்தவுடன் தாமாக உணவு தேடி உண்டு வாழக்கூடிய நிலையில் அவை குட்டிகளை ஈனவில்லை. குட்டிகள் தாய் வயிற்றினின்றும் உதவியற்ற நிலையில் வெளியே வந்தன. ஒரு வெள்ளாட்டின் பருமையுள்ள கங்காருவின் குட்டி ஒரு அங்குலப் பருமையுடையது. குட்டி தாயின் வயிற்றிலுள்ள பைக்குள் விழுந்தது. வெளியே பாயக்கூடிய பலம் அடையும் வரையும் அது இருந்தது. ஒரு அங்குலப் பருமையுடைய கங்காருக் குட்டி தாயின் பைக்குள் இருந்து பால் குடித்து வளர்கின்றது. இவ் வகை விலங்குகளின் முலைக் காம்பு பெரிதாய் வளர வளர விலங்குகளும் மேல் நோக்கி வளர்ந்தன. விலங்குகளின் குட்டிகள் தாய்ப்பாலோடு தமது குலமுன்னோர் பயின்றிருந்தவைகளை எல்லாம் இயற்கை உணர்ச்சி(instinct) ஞாபகமாக உறிஞ்சுகின்றன. தாயினாலேயே மூளை வளர்ச்சியடைந்தது. அவ் வளர்ச்சி அவைகளின் இனத்திடத்துப் பற்றை உண்டாக்கிற்று. தாயன்பு காரணத்தி லிருந்தே விலங்குகள் பொதுப் பாதுகாப்பின் பொருட்டுக் கூட்டமாகத் திரிகின்றன. பாதையில் பிரிவு கடலிலும் குட்டிக்குப் பால் கொடுக்கும் விலங்குகள் வாழ்கின்றன. அவை கடல் நாய்(seals), திமிங்கிலம், வால்ரஸ்(walrus) என்பன. வால்ரஸ் நீர்நாய் இனத்தைச் சேர்ந்தது. இதற்கு யானையின் தந்தங்கள் போல வளர்ந்த பற்களுண்டு. இவைகளால் அது புற்றுகளை நன்றாகத் தோண்டி நண்டு களையும், நத்தைகளையும் பிடித்துத் தின்னவும், பனிக்கட்டிமேல் ஏறவும் தன் இனத்தவைகளோடு எதிர்த்துச் சண்டையிடவும் முடியும். கடற்பசு சூடான நாடுகளிலுள்ள ஆழமற்ற பரந்த வாவிகளிலும், குடாக்கடலிலும் ஆறுகளிலும் வாழும். பசுமாடுகள் புல்வெளிகளில் புல் மேய்வதுபோல இவை கடலின் கீழுள்ள தாவரங்களை உண்கின்றன. வட பசிபிக் கடலில் வாழ்ந்த கடற் பசுக்கள் அவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெயின் பொருட்டுக் கொல்லப்பட்டன. தண்ணீரில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது திமிங்கிலம். இது மீனினத்தைச் சேர்ந்தது என்று சிலர் நினைக்கின்றனர். மாடு அல்லது குதிரை எப்படி மீன்களல்லவோ அப்படியே திமிங்கிலமும் மீனன்று. ஊர்வன முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் மேல்காற்றை அடைய விரும்புகின்றன. அவை விரும்பியவாறே ஒரு வகையில் அடைந் தன. பறக்கும் பல்லிகளும் பறக்கும் முதலைகளும் சவ்வு சம்பந்தமான செட்டைகள் உடையனவாயிருந்தன. அவை வளைந்து வளைந்து பறப்பதும் செட்டையை அடித்துக் கொள்வதும் உண்மையான பறத்தல் ஆகமாட்டாது. விலங்குத் தன்மையுள்ள உயிர்களிற் பல முட்டைகள் இட்டுக் கொண்டிருந்தன. அவை உண்மையான விலங்குகளாக மாறுவதற்கு உடம்பில் மயிர்த்துவாரங்களை உண்டாக்க முயன்று கொண்டிருந்தன. ஒப்பாசம், எலி, அகழான், முயல் என்பவை குளிர்கால முடிவிலிருந்து வாழ்வதற்கு மிக முயன்றுகொண்டிருந்தன. உண்மையான பல்லிகள் மிகச் சுறுசுறுப் படைந்தன. ஊர்வனவிற் சில பறக்கும் பல்லியைப் போல ஆகாயத்துக்குத் துரத்தப்பட்டிருக்கலாம். அவை பறக்கும் பூச்சிகளை அல்லது பறக்கும் மீன்களைப் பிடித்து உண்ண அல்லது தமது பகைகளிலிருந்து தப்பிக்கொள்ள அவ்வாறு செய்திருக்கலாம். வானத்திற் பறந்த பல்லிகளிலிருந்து முதன்முதற் பறவைகள் தோன்றின. முதல்முதல் தோன்றிய பறவை பல்லிக்கும் விலங்குக்கும் இடைப்பட்டதாயிருந்தது. பறக்கும் பல்லிகள் விரல்களிடையே சவ்வை வளர்த்திருந்தன. பறவைக ளாக மாறிய ஊர்வன முன்னங்கால்களைச் செட்டைகளாக மாற்றிக் கொண்டன. விலங்குகள் உடலில் மயிரை எவ்வாறு வளரச் செய்தனவோ அவ்வாறே பறவைகளும் இறக்கைகளை வளரச் செய்தன. பல்லிகளின் உடலிற் கிடந்த செதில்கள் பிரிந்து மெதுவடைந்து மிருதுவான தூவிகள் அல்லது இறகுகளாயின. மிகப் பழங்காலப் பறவைக்கு ஊர்வனவுக்குப் போல கீழ்மேல் வாய்களிற் பற்களுண்டு. பல்லியாயிருக்கும் போது இருந்த அதன் கால்கள் செட்டைகளின் வெளியே தெரிந்தன; அது பறவையிலும் பார்க்கப் பல்லி போன்ற தோற்றமுடையது. இத் தோற்றம் அது பறவையை யும் பல்லியையும் பிரிக்கும் தோற்றத்தைக் கடந்தமையைத் தெளிவாகக் காட்டுகின்றது. பறவைகளின் இருதயம் பல்லிகளின் இருதயத்திலும் பார்க்கத் திருத்தமுடையது. பல்லிக்கு மூன்று அறைகளுடைய இருதயமுண்டு. ஆனால் அது நன்றாக இரத்த ஓட்டஞ் செய்வதில்லை. பறவையின் இருதயம் இரண்டறையுள்ளது. அவ்வாறிருந்தபோதும் அது நன்றாக இரத்த ஓட்டஞ் செய்கின்றது. இருதயத்தின் இரண்டு பகுதிகளும் வெவ்வேறாக இருக்கின்றன. நரம்புகளின் இரத்தமும் நரம்புக் குழாய்களின் இரத்தமும் கலக்கமாட்டா. பறவை விலங்கைப்போல விவேகத்தை வளர்த்துக்கொள்ள முடியாது; குட்டியீனாது முட்டையிடுவதே அதற்குக் காரணம். அதற்குப் பால் கொடுக்கும் உறுப்புகள் இல்லையாயினும் அது பல்லிகளிலும் பார்க்க அதிகம் தாயன்பை வளர்த்துள்ளது. பறவை தன் குஞ்சுகளுக்கு இரைதேடிக் கொடுத்தல், அவைகளுக்காக எதிரிகளுடன் போராடுதல் போன்றவை பறவைகளின் தாயன்புக்கு எடுத்துக்காட்டுகளாகும். பறவைக்கு ஊரும் உயிர்களுக்குடையவை போன்ற கண்களுண்டு. பாம்பு தனது பார்வை யினால் பறவைகளை மயக்கும்(hypnotize). பறவையின் கண்கள் விலங்கு களின் கண்களிலும் பார்க்க விரைவும் கூர்மையும் உடையன. குட்டிக்குப் பால் கொடுக்கும் உயிர்களுக்கு அண்மையிலுள்ளது மாடப்புறா. குஞ்சு பொரித்ததும் தாய் தந்தை என்னும் இரண்டும் குஞ்சு களுக்குத் தமது தொண்டையிலுள்ள பையிலிருந்து வரும் ஒருவகைப் பால்போன்ற இரையை ஊட்டுகின்றன. உணவு கொடுக்கப்படும் பருவத்தில் புறாக் குஞ்சு இறந்துவிட்டால் அவை அவ் வுணவுப் பொருளை வெளியே உகுத்துவிடுகின்றன. கன்றுக்குட்டி இறந்துவிட்டால் தாய்ப் பசுவின் மடி விம்மி எப்படி வேதனை உண்டாகின்றது? இத் தன்மையினாலேயே பறவைகள், பல்லிகளும், விலங்குகளுமல்லாத புதுவகை உயிர்கள் என்று கூறுகின்றோம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் காற்று, பறவை, விலங் குகள் மூலம் விதைகளைப் பரப்பக்கூடிய அளவுக்குத் தாவரங்கள் வளர்ந் தன. கடல்களுக்கு அப்பாலுள்ள இடங்களுக்குப் பறவைகள் விதைகளைக் கொண்டு சென்று பரப்பின. ஆனால் தாவரங்கள் இடம்விட்டுப் பெயர வில்லை. தாவரங்களின் விரி வளர்ச்சி(evolution) ஒரே இடத்தில் நின்று உண்டானது. பறவைகளின் விரிவளர்ச்சி தாவர வளர்ச்சி முறைக்கு மாறு பட்டது. இதனை ‘அசைவு விரி வளர்ச்சி’ எனக் கூறலாம். ஆதி கால ‘அல்கே’ பாதி அசையும் உயிர்(animal) ஆகிப் பின் முழு அசையும் உயிராக மாறிற்று. தாவரம் தாவரமாகவே வளர்ச்சி யடைந்தது. பகுதி தாவரமும் பகுதி அசையும் உயிருமாக மாறிய உயிர் அசையும் உயிர்ப் படியைப்பற்றி வளர்ந்தது. பல்லிகள் வால்களுடன் செட்டைகளைப் பரப்பி ஆகாயத்தில் பறந்த போது பறவைகள் விலங்கு களின் தொடர்பை விட்டுப் பிரிந்தன. பறவையும் விலங்கும் ஒரே ஊர்வனவிலிருந்து, தோன் றியபோதும் விலங்குகள் பறவை களிலிருந்து தோன்றவில்லை. பழங்காலப் பறவைகளுக்குப்பின் செட்டைகளில்லாத பறவைகள் தோன்றின. அவை தீப் பறவையைப்போலக் குறுகிய செட்டைகளும் வால்களு முடையவனவாய்ப் பறப்பதற்குப் பதில் ஓடின. இப் பறவைகள் சிலவற்றுக்கு ஆமைகளுக்கிருப்பன போன்ற பற்களிருந்தன. முற்காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய பறவைகள் பறப்பதற்குப் பதில் ஓடின. இக்காலத் தீக் கோழியை முற்காலப் பறவையோடு ஒப்பிட்டால் முற்காலப் பறவை கோழியும், தீப்பறவை அதன் குஞ்சும் போன்றதாகும். ஓடும் பறவை களுக்குக் கால்கள் வளர்ச்சியடைந்தன. பின்பு இன்று காணப்படுவன போன்ற சிறிய பறவைகள் தோன்றின. நகமும் பல்லுமுள்ள உயிர்கள் குளிர்காலத்திற்குப்பின் தோன்றிய கோடைகாலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்பின் மறைந்தது. கோடைகாலத்தில் கடலிலிருந்த உயிர்கள் பல வெளியே வந்து வாழ்ந்தன. முன் காணப்பட்ட ஊர்வனவுக்குப் பதில் இப்போது விலங்குகள் தோன்றியிருந்தன. தாவரங்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து அழகிய பூக்களைப் பூத்தன. பூக்கள் தோன்றுதலும் வண்ணாத்திப் பூச்சிகளும் தேனீக்களும் தோன்றின. தாவரம் மீன் ஊர்வன பறவை என்பவற்றைப் போல ஒன்றுக்குப்பின் ஒன்றாகப் படிமுறையான விரிவளர்ச்சி விலங்குகளிடையும் தோன்றின. இவ்வாறு தோன்றிய புதிய இனங்கள் குளம்பும் நகமும் பெற்றிருந்தன. விலங்குகளைப்போன்ற உயிர்கள் வெப்பகாலத்தில் நன்றாக உண்டு கொழுத்து வளரும். இவைகளுள் மிகக் கீழ்ப்பட்ட இனங்கள் ஆஸ்தி ரேலியாவிலேயே பரவின. ஒருகாலத்தில் ஆஸ்திரேலியாவும் ஆப்பிரிக்காவும் பிரிக்கப்படாத கண்டமாயிருந்தன. சடுதியாக எரிமலைகள் குமுறி நிலம் நடுங்கிற்று. அப்பொழுது ஆஸ்திரேலியாவும் ஆப்பிரிக்காவும் இரண்டு கண்டங்களாகப் பிரிந்துபோயின. முட்டையிட்டவும், முற்றாத குட்டிகளை ஈன்றவும் விலங்குகளும் ஆஸ்திரேலியாவில் தனித்து விடப்பட்டன. ஆப்பிரிக்காவிலும் ஆசியா விலும் தனித்து விடப்பட்ட விலங்குகள் ஆஸ்திரேலியாவுக்குப் போக முடியவில்லை. பல்லிகள் எப்படி விலங்குகளாக மாறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலிய விலங்குகள் இன்று உள்ளன. பல்லிகள் விலங்குகளாக மாறியபோது அவை மரங்களில் வாழும் சிறிய உயிர்களாக விருந்தன. கோடைகாலம் வந்தபோது பூச்சிகள் அதிகம் பெருகின.1 மிகப் பெரிய சிலந்திகளும் தோன்றி வாழ்ந்தன; அட்டை, மயிர்ப் புழு, புழு முதலிய எண்ணிறந்த உயிர்கள் இருந்தன. பூச்சிகளை உண்ணும் விலங்குகள் பெரியனவாய் வளரத் தொடங்கின. பெரியனவாக வளர்ந்த விலங்குகளுட் சில மரத்தைவிட்டு இறங்கி நிலத்தில் வாழ்ந்தன. சில விலங்குகள் ஆரம்ப முதல் தாவர உணவு கொள்வனவாயிருந்தன; சில புல் மேய்ந்தன; சில பழங்களையும் விதைகளையும் உண்டன. அக் காலத்தில் ஈரப்பலா, தெங்கு, வெப்ப மண்டலங்களில் வளரும் பழ மரங்கள் முதலியன சிலவற்றுக்கு உணவளித்தன. ஒருநாள் விலங்கு ஒன்று பூச்சிபோற் காணப்பட்ட ஒன்றைப் பிடித்தது. அது பூச்சியன்று; ஒரு அகழான். அது அவ் வகழானை வாய்க்குள் வைத்து மென்றது. அது உருசியாக விருந்தது. அது முதல் சில விலங்குகள் ஊனுணவை விரும்பின. இப்பொழுது தாவரமுண்ணும் விலங்குகள் ஊன் உண்ணும் விலங்குகள் என்னும் பிரிவுகள் உண்டாயின. பல்லிகள் தோன்றி யிருந்த காலத்தைய வரலாறு இன்னுமொரு முறை நிகழ்வதாயிற்று. ஊனுண்ணும் விலங்குகள் தாவரம் உண்ணும் விலங்கு களை வேட்டையாடின. சிலவற்றின் உடம்பு பெரிதாக வளர்ந்தது. அவைகளுக்குக் காண்டாமிருகத்துக்குக் கொம்பும், யானைக்குத் தந்தமும் இருப்பது போல ஆயுதங்கள் இருந்தன. விலங்குகளுக்குக் கால்கள் ஓடவும், நடக்கவும், நிற்கவும் பயன்பட்டன. விரிவளர்ச்சி முறையில் கால்கள் விரைவாக ஓடக்கூடியனவாக வளர்ந்தன. பல்லும் நகமுமுள்ளவைகளுக்கு அவை பலமடைந்தன. அவைகளின் தேவையில்லாத விரல்கள் மறைந்து போயின. ஊனுண்ணும் விலங்குகளை விட்டு மற்றைய விலங்குகள் தூரத்தே ஓடிச் சென்றன. ஆகவே ஊனுண்ணும் விலங்குகள் தமது உணவை அதிக பிரயாசையுடன் பெறவேண்டு மென்றுணர்ந்தன. முற்காலத்தில் சடுதியாகப் பெரிய மலைகள் தோன்றின; கண்டங்கள் மறைந்தன; புதிய நிலங்கள் தோன்றின. அக் காலத்தில் இவ் விலங்குகள் கண்டங்கள்தோறும் அலைந்து எங்கும் பரவி வாழ்ந்தன. ஊர்வன தோன்றி வாழ்ந்த செழிப்பான காலத்தில் முதலை இனங்களும், மலைப்பாம்புகளும், பெரிய பாம்புகளும் தோன்றின. ஊன் உண்ணும் விலங்குகளுக்குத் தப்பி ஓடும் தாவரமுண்ணும் விலங்குகள் தாம் இலகுவில் ஒடக்கூடியதாகத் தமது ஐந்து விரலுள்ள பாதங்களின் வடிவை மாற்றிக் கொண்டன. தாவரம் உண்ணும் விலங்குகள் நாலு கால்களில் உலாவுவன; அவை விரல்களை உள்ளுக்கு இழுத்துக் கொண்டன. தற்காப்பின் பொருட்டுத் தோலை அல்லது கொம்பை வளர்த்துக் கொள்ளாத விலங்குகள் மோப்பம் பிடிக்கும் உணர்ச்சியை வளர்த்துக் கொண்டன. மான், ஒட்டகம், காட்டுக்குதிரை, ஆடு, மாடு, பன்றி முதலியவை தமது விரல்களைப் போக்கிக்கொண்டன. புல் மேயாத விலங்குகளுக்கு நான்கு விரல்களும், ஐந்து விரல்களுமிருந்தன. புல் மேயும் விலங்குகளின் பாதங்கள் வட்டவடிவும் கொம்புத் தன்மையும் வேகமா யோடக் கூடியனவு மாயின. இவ் விலங்குகள் பெரியன பெரியனவாய் வளர்ந்தன. மிக முற்காலத் தில் பன்றி போன்றிருந்த விலங்கு யானை. தொடக்கத்தில் இதற்குத் தும்பிக்கை இல்லை; நீண்ட மூக்கு மாத்திரம் இருந்தது. இவ் விலங்கு விரைவிற் பெரிதாக வளர்ந்தது. பின்பு அதற்கு அச்சம் விளைக்கக்கூடிய தந்தங்கள் வளர்ந்தன; அது விலங்குகளுக்குப் பயந்து ஓடவில்லை; அது தனது ஐந்து விரல்களையும் போக்கிக் கொள்ளவில்லை. காண்டாமிருகம் போன்ற விலங்குகள் உடம்பில் கேடகம் போன்ற தோலை வளர்த்துக் கொண்டன; அவைகட்கு மண்டையில் மூன்று கூரிய கொம்புகளும் வளர்ந்திருந்தன. அவை தமது விரல்களைக் குளம்பாக மாற்றிக் கொண்டன. காண்டாமிருகம் எதிரிக்குப் பயந்தோடுவதற்குப் பதில் அதனை எதிர்த்துத் தாக்கும். சீல் (seal) என்னும் கடல் நாய் கரடிக்கு இன முடையது. இது கடலில் இறங்கி மீன்களை உண்ண விரும்பிற்று. இது கடலில் நீந்திச் செல்லும் பொருட்டு முன்னங் கால்களைத துடுப்புகள் போல மாற்றிக் கொண்டது. பன்றியிலிருந்து ஹிப்படமஸ் என்னும் நீர் யானை, தபிர்(Tapir) முதலிய மற்றைய இனங்கள் தோன்றின. இவைகட்குத் தடித்த தோல் உண்டு. நீர் யானை நீரில் தங்கி ஊனுண்ணும் விலங்குகளுக்குத் தப்பிக் கொண்டது. ஊனுண்ணும் விலங்குகள் மிகக் கொடியவை. அவைகளுக்குத் திருந்திய பற்களும் நகங்களும் வளர்ந்தன. அவைகளின் எலும்புகள் இலேசாக விருந்தன. ஆகவே அவை இரைமீது பாய்ந்து அதனைப் பிடிக்கக் கூடியதாக விருந்தன. கோடைகாலத்தில் தும்பிக்கை இல்லாத யானைகள் வெப்ப மண்டலக் காடுகளில் தங்கி நிலைத்தன. மூன்று கொம்புடைய காண்டா மிருகங்கள் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்தன. ஊன் உண்ணும் விலங்குகள் பயங்கர மான வடிவை அடைந்தன. ஒட்டகம், குதிரை, பன்றி முதலியன இவை களின்றும் பிரிந்து வாழ்ந்தன. முற்காலத்தில் பாதி நாயும் பாதி கழுதைப் புலியும் போன்ற ஒரு வகை மிகப் பெரிய விலங்கு வாழ்ந்தது. இதிலிருந்து நாய் தோன்றியிருக்கலாம். பூனையின் முன்னதுகளான பெரிய விலங்கினங்கள் பல இன்றும் வாழ்கின்றன. இன்றைய விலங்குகளின் முன்னதுகளான வேறு பல விலங்கு களும் வாழ்ந்தன. ஊனுண்ணும் விலங்குகள் மிகப் பலவாகப் பெருகின. இவைகளிலிருந்து பிழைப்பதற்குத் தமது ஓட்டத்தை நம்பியிருந்த விலங்குகள் அதனைக் கைவிட்டன. அகழான், முயல், எலி இனங்கள் போன்றவை நிலத்துள் மறைந்து வாழ்ந்தன. ஒப்போசும்(opossum), சிலாத் (Sloth) என்னும் கரடி போன்றவை மரங்களில் வாழ்ந்தன. வெளவால் தனது பாதுகாப்பை விரும்பி இராக்காலத்தில் சஞ்சரித்தது. கடல்நாய் இனங்கள் நீருள் மறைந்தன. நீர் யானை, பீவர்(beaver) முதலியவை ஆறுகளில் புகுந்தன. விரல் பெற்றிருந்த விலங்குகளால் நின்று போரிட முடியவில்லை. ஆகவே அவை விரல்களைக் குளம்புகளாக மாற்றிக் கொண்டு ஓடின. வாழ்க்கை முன்போல் போராட்டமுடையதாக மாறிற்று. விலங்குகள் பல்லி இனங்களினும் பார்க்க விவேகமுடையன. அவை நூறு வகையாக வேட்டை யாடவும், வேட்டையாடுவனவினின்றும் தப்பி ஓடவும் தமது விவே கத்தைப் பயன்படுத்தின. விலங்குகளின் உலகம் இவ்வாறு இரத்தக்கறை படிந்ததாகவிருந்தது. வேட்டையாடும் விலங்குகளுள் நாயும் பூனையும் வெவ்வேறு குடும்பங்களாகப் பிரிந்தன. நாய்க் குடும்பத்திலிருந்து கரடி, ஓநாய், நரி, கழுதைப்புலி, நீர்நாய் முதலியவை தோன்றின. சிங்கம், புலி, சிறுத்தை, கீரி முதலியவை பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. விலங்குகள் ஒன்றை ஒன்று கொன்று வாழும் காலத்தில் அவை மோப்பம் பிடிக்கும் உணர்ச்சியை வளர்த்துக் கொண்டன. அப்பொழுது சில விலங்குகள் கஸ்தூரி புனுகு போன்ற மணமுள்ள பொருள்களைத் தமது உறுப்புகளினின்றும் வெளிப் படுத்தின. இம் மணப்பொருள்கள் தொலைவிலிருக்கும் தமது கூட்டத் துக்குத் தாமிருப்பதை அறிவித்தற்குப் பயன்பட்டன. உலகில் பற்பல நிறங் களுள்ள தாவரங்கள் வளர்ந்தன. இப்பொழுது தேவாங்கு, குரங்கு முதலிய சிறிய விலங்குகள் தோன்றலாயின. பல்லாயிரக்கணக்கான விலங்கு களும், ஊர்வனவும் பூச்சிகளும் பெரு கின. பூனைக் குடும்பத்திலிருந்து சிங்கம், புலி என்னும் இருவகை விலங் குகள் தோன்றி வாழ்ந்தன. சிங்கத்தின் வாலும், சிவந்த மயிரும், மிகப் பெரிய உடலுமுடைய ஒருவகைப் புலிகள் தோன்றியிருந்தன. இவை தாவர முண்ணும் விலங்குகளைப் பெரிதும் கொன்று தொலைத்தன. இறுதியில் எல்லாத் தாவரமுண்ணும் விலங்குகளும் விரல்களை உள்ளுக்கிழுத்துக் குளம்பை வளர்த்துக் கொண்டன. அவை இப்பொழுது நன்றாக ஓடின. சிங்கப் புலிக்கு உண்ண உணவு கிடைக்க வில்லை. ஆகவே அது இறந்து மறைந்துபோயிற்று. அவ் விலங்கின் வாடை தூரத்தில் வீசிற்று. அதனைத் தூரத்தே நின்று மேய்ந்துகொண்டு நின்ற விலங்குகள் மோப்பம் பிடித்து ஓடி மறைந்தன. தகுதியுடையது நிலைபெறும் வழிகளில் இதுவும் ஒன்று. விலங்குகள் நான்கு கண்டங்களிலும் அலைந்து திரியும்போது யானைக்குத் தும்பிக்கையுண்டாயிற்று. முன்பு இதற்கு நீண்ட மூக்கு மாத்திரம் இருந்தது. யானை பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அது மூக்கை நீட்ட முயன்று வந்தபோது மூக்கு தும்பிக்கையாக வளர்ந்தது. யானைக்கு உணவு காடுகளிற் கிடைத்தது. விலங்குகள் எல்லாவற்றுள்ளும் யானை புத்திக் கூர்மையுடையது. அது கூட்டமாக வாழும் அறிவை வளர்த்தது. அதற்குத் தந்தங்களும் வளர்ந்தன. பின்பு வாலில்லாக் குரங்கு போன்ற ஒரு விலங்கு தோன்றிற்று. இதன் ஒரு சந்ததி வாலில்லாக் குரங்கு; மற்றது மனிதன். கருப்பத்திலிருக்கும் குழந்தைகளுக்கு உடலில் மயிரும் வாலும் தோன்றுகின்றன. குழந்தை பிறப்பதற்கு முன் வால் மறைந்து போகின்றது. இவ்வாறு அணுவிலிருந்து அல்கேயும், அல்கேயிலிருந்து மீனும், மீனிலிருந்து நீரிலும் நிலத்திலும் வாழ்வனவும் பல்லிகளும், பல்லி களிலிருந்து விலங்குகள் பறவைகளும் தோன்றின; பின்பு விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான். மனிதன் தோன்றி வளர்ச்சியடைந்து இன்றைய மனிதன் ஆனான் என்பதை விளக்கும் வரலாறு ஆதிமனிதன் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. உயிர்களின் வாழ்க்கைப் போராட்டமும் அதற்கேற்ற வாய்ப்புகளும் உயிர்களின் வாழ்க்கை இடைவிடாத போராட்டம் மலிந்த தாயிருக்கின்றது. போராட்ட மென்பது ஈண்டு வருந்தி உழைத் தலைக் குறிக்கும். உயிர்கள் போதிய உணவைப் பெறும் பொருட்டு இடைவிடாது முயல்வ தோடு தம்மைப் பிற உயிர்கள் கொன்று தின்றுவிடாதபடியும் காப்பாற்றிக்கொள்ள வேண்டி யிருக்கின்றது. அவை, தம்மை வாழுமிடங்களின் வெப்ப தட்ப நிலைகளுக்கேற்பவும் சூழல்களுக் கேற்பவும் தகுதிப்படுத்திக் கொள்ள வும் வேண்டும். இவ்வகைப் போராட்டங்களுக்கு உதவும் பாதுகாப்புகளை இயற்கையாகிய அன்னை தனது குழந்தைகளாகிய உயிர்களுக்கு அளித்திருக்கின்றது. இயற்கை இடைவிடாது உயிர்களிடையே மாற்றங்களை உண்டாக்கி வருகின்றது. அம் மாற்றங்கள் மிகத் தாமதப்பட்டு நிகழ்வதால் அவைகளை அறிந்து கொள்வதற்கு மனிதனின் வாழ்நாள் போதாமல் இருக்கின்றது. இன்று வாழும் சில உயிர்களின் முற்சந்ததிகளை நோக்குவோமாயின் இக் காலத்தன எவ்வெம் மாற்றங்களை அடைந்திருக்கின்றனவென்று நாம் எளிதில் அறிந்துகொள் வோம். முற்கால உயிர்கள் தமது வரலாறுகளைக் கற்பாறைகள் மீது விட்டுச் சென்றிருக்கின்றன. ஒவ்வொரு இன உயிர்களும் வாழ்க்கைக்குத் தகுதியு டையனவா யிருக்கும்படி ஒவ்வொரு சந்ததியின் தந்தை தாய்களை எவ்வாறு இயற்கை தெரிவு செய்கின்றது? ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் நிலைத்திருப்பதற்கு முயன்று வருதலினாலேயே இத் தெரிவு செய்யப்படு கின்றது. பெருந்தொகை உயிர்கள் பிறக்கின்றன; ஆனால் அவைகளுட் சந்ததியைப் பெருக்கக்கூடிய பருவம் எய்தும்வரை பிழைத்திருப்பன சிலவே. வலிமையும், கெட்டித்தனமும், சாக்கிரதையும் உள்ள உயிர்கள் வாழ்தற்குத் தகுதியும், உணவைப் பெறுவதில் அனுகூலமும், அபாயத்தைத் தடுக்கும் வல்லமையும் உடையனவாகின்றன. ஆகவே இவ்வுயர்ந்த பண்புக ளுடைய உயிர்கள் நீண்டகாலம் வாழ்ந்து தமது மேலான தன்மைகளைத் தமது சந்ததிகளுக்கும் அளிக்கின்றன. அவைகளே தங் குழந்தைகளுக்கு நல்லுணவு கொடுத்து வளர்க்கக்கூடியன. ஆகவே அக் குழந்தைகள் நல்வாழ்க்கையைத் தொடங்கும். இது எப்பொழுதும் உண்மையானதன்று. மிகப் பலமும், போர்க்குண மும் உடைய விலங்குகள் இன்னொரு இன விலங்குகளாற் கொல்லப்பட லாம். சுற்றிடங்களிலே சடுதியில் உண்டான வெப்பதட்பநிலை மாற்றம் தகுதியுடையவைகளையும் தகுதியற்றவைகளையும் ஒரு சேர அழித்தும் விடலாம். ஆனால் பெரும்பாலும் வாழ்க்கைக்குத் தகுதி யுடையது எது? அதுவே நிலைபெறுகின்றது. ஒவ்வொரு இன உயிர்களும் நீண்டகாலம் ஊறு இன்றி வாழ்தற்கேற்ற வழியில் முயன்று, வாழ்தற் பொருட்டு மேலும் மேலும் தகுதியுடையனவாய் வந்திருக்கின்றன. வாழ்க்கைப் போராட்டமென்பது துன்பமின்றி இன்பமாய் வாழ்தற்குச் செய்யப்படும் எத்தனமாகும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இரை யாகும் உயிர்கள் தமக்கு நேரவிருக்கும் ஆபத்தை உணர்வதில்லை. ஆபத்து அணுகும் வரையில் அவை பயம் அடைவதும் இல்லை. மரணம் அவைகளை விரைவாகவும், சடுதியாகவும், அணுகி நோவின்றிக் கொன்று விடுகின்றது. பயப்படும் இயல்புடைய முயல்கள் ஆபத்துக்கள் பலவற்றின் இடையே மாலை நேரங்களில் கொல்லைப்புறங் களிலிருந்து விளையாடி மகிழ்வதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஒரு சோடிப் பறவைகள் அதிக நேரம் தேடிப் பூச்சி புழுக்களை எடுத்துக்கொண்டு தமது பசியுள்ள குஞ்சுகளிடம் வருதலைப் பார்க்கின்றோம். அவை தமது கடிய உழைப்பிலும் பார்க்க மகிழ்ச்சியையே பெரிதாகக் கொள்கின்றன என்று தெரிகின்றது. இன்னும் வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருக்கின்றன. இவை களை விளங்கிக் கொள்வதற்கு, இயற்கை, உயிர்களுக்கு அளித்திருக்கும் எதிர்ப்புத், தற்காப்பு ஆயுதங்களைப்பற்றி நாம் சிறிது சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். அவை ஊன் உண்ணும் உயிர்களின் பயங்கரமான பற்களும், நகங்களும், இரைகளைப் பிடிக்கும் பறவைகளின் வளைந்த அலகும் கூரிய நகங்களும், பாம்புகளின் நச்சுப் பற்களும், சிலந்தியின் வாயும், பூச்சிகளின் கொடுக்குகளும், இன்னும் இவைபோன்ற ஆயிரக்கணக்கானவைகளு மாகும். எதிர்ப்புக்குரிய பல ஆயுதங்கள் இருப்பன போலவே தற்காப்புக் குரிய பல ஆயுதங்களும் இருக்கின்றன. இயற்கை, பாரபட்சமின்றி எல்லா உயிர்களுக்கும் தாயாக விருக்கின்றது. அழுங்குக்கு எலும்புபோன்ற வயிரமான கவசமிருக்கினறது. முட்பன்றிக்கு வயிரிய ஈட்டிபோன்ற முட்கள் இருக்கின்றன. வட அமெரிக்காவில் பூனையின் பருமையுடைய இஸ்கங்கு (Skunk) என்னும் ஒருவகை விலங்கு உண்டு. அதனை எதிரிகள் துரத்திச் சென்றால், அல்லது அணுகினால் அது எவரும் அணுகமுடியாத மிக்க கொடிய நாற்றமுடைய ஒருவகை நீரை வெளியே கொப்பளிக்கின்றது. இலாமா என்னும் இன்னொரு தென்னமெரிக்க விலங்கு தனக்குத் தொந்தரவு கொடுப்பவர்மீது அதிக எச்சிலை உமிழ்கின்றது. தேரை போன்றவைகளின் மாமிசம் கசப்பாயிருப்பதால் அவற்றை மற்றைய உயிர்கள் அதிகம் உண்பதில்லை. நண்டுகளின் குறடு போன்ற கால்கள் மற்ற உயிர்களுக்கு அச்சம் விளைக்கத் தக்கன. அவைகளை வயிரமான கவசம் மூடியிருக்கின்றது. அவைகளின் ஓடு வளரத்தக்கதன்று. நண்டு, வளரும் போது ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வருகின்றது. அப்பொழுது அதன் மேற்புறம் மென்மையாகவும், பாதுகாப்பில்லாமலும் இருக்கின்றது. தபதி நண்டு(Hermit Crab) என ஒரு வகை நண்டு உண்டு. அதன் பின்பாகம் வயிரமான ஓட்டினால் மறைக்கப்பட்டிருக்கவில்லை. இன்னொரு கடலூரி யின் ஓட்டுக்குள் நுழைந்து கொள்ளாவிடின் அது மற்ற உயிர்களுக்கு எளிதில் இரையாகிவிடும். அது தான் நுழைந்து வாழும் ஓட்டையும் செல்லும் இடங்களுக்கெல்லாம் கொண்டு செல்கின்றது. ஆபத்துக் காலங் களில் தனது சொந்த ஓட்டுக்குள் நுழைவதுபோல் அது அவ் வோட்டினுள் புகுந்து மறைந்து கொள்கின்றது. வாழ்க்கைப் போராட்டத்தில் வேட்டையாடுவனவும், வேட்டை யாடப்படுவனவுமாகிய உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பன சூழல்களின் நிறத்தை ஒப்ப உள்ள அவைகளின் நிறங்களேயாகும். இவ்வாறு அவற்றின் நிறம் அமைவதால் அவை இலகுவில் எதிரியாற் காணக்கூடாதனவாய் பல ஆபத்துக்களினின்றும் பிழைக்கின்றன. எப்பொழுதும் பனிக்கட்டியுள்ள துருவ நாடுகளில் வாழும் உயிர் களின் நிறம் பெரும்பாலும் வெண்மையாயிருக்கும். துருவக் கரடியின் நிறம் வெண்மை அல்லது மங்கிய வெண்மை. மற்றைய இடங்களில் வாழும் கரடிகள் கறுப்பு அல்லது கபில நிறமுடையன. எல்லாக் காலங்களிலும் மழையில்லாதனவும், சிறிய தொலைவி லுள்ளனவுமாகிய இடங்களில், பருவ காலங்களுக்கு ஏற்றவாறு உயிர்களின் நிறங்கள் மாறுகின்றன. துருவநரி, மலை முயல் முதலியவைகளின் கோடை கால நிறம் நரை அல்லது கபிலம். இந் நிறங்கள் மாரிக்காலத்தில் வெண்மை அடைகின்றன. அவ் விடங்களிற் காணப்படும் சில உயிர்களுக்கு ஆண்டு முழுமையும் கோடைகால நிறம் மாத்திரம் உண்டு. ஆனால் அவை வேறு வகையில் நன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன. ‘சேபிள்’ என்னும் ஒருவகை விலங்கு மரக்கொம்புகளில் இருந்து வாழ்கின்றது. அதன் கபில நிற மயிரி லும் பார்க்க வெண்ணிறம் எதிரிகளுக்குச் சடுதியில் தோன்றத்தக்கதாக விருக்கும். வனாந்தரங்களில் வாழும் உயிர்கள் மண் நிறமுடையன; மண் நிறம் மாத்திரமல்லாமல் இடையிடையே வேறு நிறங்களும் காணப்படும். சிறிது தொலைவில் நின்று அவ்வுயிர்களைப் பார்த்தல் முடியாது. பிறெம்(Brehm) என்பவர் புறாவின் பருமையுள்ள ஒருவகைப் பறவைகள் வனாந்தரங்களில் மனிதனின் வருகையைப் பொருட்படுத்தாது நின்று மேய்தலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அது பின்வருமாறு: “பறவைகள் மேய்ந்துகொண்டு நிற்பதைக் காணும் அனுபவம் இல்லாத பிரயாணி துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவைகளை நோக்கிச் செல்கின்றான். அவை அவனுடைய கண்ணெதிரில் மறைந்து விடுகின்றன. நிலம் அவைகளை விழுங்கிவிட்டது போற் றோன்றுகிறது. தங்களுடைய இறக்கைகளுக்கும் நிலத்துக்குமுள்ள நிற ஒற்றுமையை நம்பி அப் பறவைகள் பதுங்கி இருக்கின்றன. ஒரு கணத்தில் அவை கற்குவியல்களாகவும் கற்களாகவும் மாறிவிட்டன.” மணல் நிறம் பொருந்திய மேற்பாகம் சில சமயங்களில் நரை நிறமாக வும், சில வேளை ஒளி பொருந்திய மஞ்சள் நிறமாகவும், வரிசையாகப் பிரிந்து ஒடுங்கிய வரைகளும் மெல்லிய கீறும் புள்ளியும் உடையதாகவும் இருக்கும். இவ்வகை நிறம் தொலைப் பார்வைக்குப் புலப்படக் கூடுமென்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் அந்நிறம் நிலத்தின் நிறமேயாகும். நிலம் பறவையைத் தனது பகுதியாக்கி அதனைப் பாதுகாத்தல் வியப்பன்று. இவ் வகைப் பாதுகாப்பு நிறமுடைய பூச்சிகள் பலவுண்டு. பல புழுக்கள் தாம் உணவைப் பெறும் மரங்களின் நிறங்களைப் பெற்றிருக் கின்றன. சில பூச்சிகள் உலர்ந்த இலை அல்லது பாசித்துண்டு போல் இருத்தலும் ஆச்சரியப்படத்தக்கது. ஒருவகை வண்ணாத்திப் பூச்சியின் இறக்கைகளின் மேற்புறம் பிரகாசமான நிறமுடையது. பறக்கும்போது அது நன்றாகக் கண்ணுக்குப் படும். இறக்கைகளை நிமிர்த்திக்கொண்டு மரப்பட்டையில் இருக்கும்போது அதன் கீழ்ப்புறம் வாடிய இலையின் நிறமுடையதாயிருக்கும். வண்ணாத்திப் பூச்சிகளிலும் பல வகைகளுண்டு. சில வண்ணாத்திப் பூச்சிகள் உண்பதற்கு விரும்பத்தகா சுவை உடையனவாயிருத்தலின் அவைகளைப் பறவைகள் உண்பதில்லை. ஆகவே அவைகளுக்குப் பாது காப்பு நிறம் வேண்டியதில்லை. ஆகவே அவை கண்ணுக்குப் புலப்படக் கூடிய நிறமுடையனவாயிருக்கின்றன. அவை காணக்கூடியனவாயிருத்த லின், பறவைகள், அவை உண்ணத்தகாதன என்று விரைவில் அறிந்துகொள் கின்றன. பறவைகளால் உண்ணப்படாத வண்ணாத்திப் பூச்சிகள் உள்ள இடங்களில் இன்னொரு இனம் காணப்படுகின்றது. சில சமயங்களில் பல இனங்களும் காணப்படுகின்றன. இவை முன்கூறப்பட்ட வண்ணாத்திப் பூச்சிகளின் நிறத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இவை முன் இனத்தைச் சேர்ந்தவைகளல்ல. இவ்வகை வண்ணாத்திப் பூச்சிகள் பறவைகள் உண்ப தற்கு நல்லன; ஆனால் பறவைகள் இவைகளை முன்னைய இனத்தினின்றும் பிரித்தறிய மாட்டாமையால் உண்ணாது விடுகின்றன. ஒவ்வொரு உயிரும் உணவுக்காக ஆடும் போராட்டம் மிகக் கடுமை யானது. சில வண்ணாத்திப் பூச்சிகளின் புழுக்கள் மரங்களில் நெருங்கி யிருந்து இலைகளை உண்கின்றன. இலைகளைத் தின்று ஒழித்தபின் இன்னொரு மரத்தில் ஏறுதற்கு அவை பந்துபோலச் சுருண்டுகொண்டு நிலத்தில் விழுகின்றன. பல நெருங்கியிருந்து உண்கின்றமையின் மிகச் சுறுசுறுப்பும் வலிமையுமுள்ள புழுவே அதிக உணவைப் பெறுகின்றது. பல புழுக்களுக்கு அற்ப உணவு மாத்திரம் கிடைக்கின்றது. அதனால் அவை வண்ணாத்திப் பூச்சிகளாக வளரமாட்டா. இவ்வகைப் போட்டியைத் தடுப்பதற்கு இயற்கை பலவகை வழிகளை அறிந்திருக்கிறது. ஒன்றோடு ஒன்று இனமுடைய உயிர்கள் வெவ்வேறு வகை உணவை உண்பதால் அவை, ஒரேவகை உணவை உண்ணும் உயிர்களைவிடப் பெருங்கூட்டமாக ஒரே இடத்தில் வாழ்தல் கூடும். இவ் வகை வெவ்வேறு உணவு கொள்ளும் இனங்கள் எலிகளிலும் பறவைகளி லும் அதிகம் காணப்படுகின்றன. பல உயிர்களுக்கு வாழ்க்கைப் போராட்டம் மிகவும் இலகுவாக்கப் பட்டிருக்கின்றது. குளிர்காலம் தொடங்குதலும் உணவு அருமை ஆகின்றது. அப்பொழுது பல உயிர்கள் உறக்கத்துக்குச் செல்கின்றன. இவை களின் உறக்கம் பல அளவாக உண்டு. நித்திரை போகாதவை சுறுசுறுப்பை இழந்து அடங்கிக்கிடக்கின்றன. அதனால் அவைகளுக்கு முன்னையிலும் குறைவான உணவு போதுமானதாயிருக்கும். நித்திரை கொள்ளும் பிராணிகள் வெப்பமான நாளொன்றில் விழித் தெழுந்து சிறிது உணவை உண்டபின் மறுபடியும் தூங்கும். சில பிராணிகள் மாரிகாலத்துக்கென்று உணவைச் சேமித்து வைக்கின்றன. அற்ப நித்திரை கொள்ளும் உயிர்களுள் அணில் ஒன்று. அது, தான் சேமித்து வைத்த விதை களை உண்பதற்கு இடையிடையே விழித்தெழுகின்றது. மர எலி மாரிகாலம் முழுவதும் பசியுடன் உறங்குகின்றது. எலிகள் தானியம் விளைந்திருக்கும் காலங்களில் தானியக் கதிர்களைச் சேகரித்து வைக்கின்றன. அதிக நித்திரை செய்யும் உயிர்கள் உணவைச் சேகரித்து வைப்ப தில்லை. கோடைகால இறுதியில் அவை அதிக உணவை உண்கின்றன. அதனால் குளிர்காலம் வரும்போது அவை மிகக் கொழுப்படைகின்றன. பின்பு அவை உறங்குவதற்கு மறைவிடங்களைத் தேடிச்செல்லும். துருவக் கரடி பனிக்கட்டியில் குழிதோண்டி அதில் உறங்குகின்றது. முட்பன்றி இலைகளாற் செய்த கூடுகளுள் மறைந்து கிடந்து உறக்கம் கொள்ளும். வெளவால் இருண்ட குகைகளுக்குள் தலைகீழாகத் தொங்கும். தவளை சேற்றுள் மறைந்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு தோல்வழியாக மூச்சுவிடும். அதிக நித்திரை கொள்ளும் இவ்வகை உயிர்களின் வாழ்க்கை இப்பொழுது அமைதி அடைகின்றது. அவை ஆறுதலாக மூச்சுவிடுகின் றன. இருதயம் மெல்லென அடிக்கின்றது. அம் மிருகங்களின் ஆற்றல் அற்பமாகச் செலவழிகின்றது. கழிவுப்பொருள் உடம்பினுள் திரளுகின்றது. உறக்கத்தில் இருக்கும் விலங்குகள், வெளிச்சமும் சூடும் கெடாதிருந்து, காற்றுப்பட்டதும் மூண்டெரியக்கூடிய சாம்பல் பூத்த நெருப்புப் போன்றன. இலை துளிர்காலங் கிட்டுதலும் இவை முன் சேமித்துள்ள கொழுப்புச் செலவழிந்துபோகின்றது. நித்திரை கொள்ளும் உயிர்கள் இலைதுளிர்காலத் தில் விழித்துத் தங்கள் மறைவிடங்களினின்றும் வெளியே வருகின்றன. தமக்கு விருப்பமான பழங்களும் கிழங்குகளும் அதிகம் இருக்கும்போதே அவை விழிக்கின்றன. பசியின் கொடுமையால் அவை எதிர்ப்படும் எதை யும் எவரையும் எதிர்க்கும். உணவு அருமையான காலத்தில் வாழ்வதற்கேற்ற வழியைப் பறவைகள் கண்டுபிடித்துள்ளன. உணவு சுருங்கும்போது அவை கூட்ட மாகத் திரளுகின்றன; வட்டமிட்டுப் பறந்து தமது பலத்தைச் சோதிக்கின் றன. இறுதியில் அவை எப்பொழுதும் வெய்யிலுள்ள தென் தேசங்களுக்குப் பறந்து செல்கின்றன. அங்கே உணவு பெரிதும் கிடைக்கின்றது. இளம் பறவைகள் முன்னே பறக்க முதிய பறவைகள் பின்னாற் பறந்து செல்லும் உணவின் பொருட்டு அவை வழியில் பல முறை தங்கும். பழக்காலம் முடி வதன்முன் அவை தமது இடங்களை மாற்றிக் கொள்ளும். இவ்வாறு உயிர் களின் வாழ்க்கைப் போராட்டம் நிகழ்ந்து வருகின்றது. இவ்வாறு உயிர்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் முயலும் முயல்வினாலேயே ஒவ்வொரு உயிரினங்களிலும் பற்பல கிளை இனங்கள் தோன்றுகின்றன. ஆடு, மாடு, நாய், புறா போன்றவைகளிலும் மரஞ் செடி முதலியவைகளிலும் சிறிது சிறு தோற்றத்தில் மாறுபட்ட வெவ் வேறு கிளை இனங்களைக் காண்கின்றோம்.  மரணத்தின் பின் WHAT HAPPENS AFTER DEATH முன்னுரை மரணம் என்று நினைக்கும்போதே மனக்கண்ணின் எதிரே ஒருவகை இருளும் அச்சமுந்தோன்றுகின்றன. மரணத்துக்குப்பின் செல்லும் இருண்ட வழியில் என்ன ஆகுமோ என்று மனிதன் ஏங்குகின்றான். அப்பொழுது இறந்தார் பொருட்டுக் கிரியைகள் செய்தால், அவர்கள் நல்லுலகை அடைவார்கள் எனச் சமய குருமார் கூறிப் பல கிரியைகளை வகுத்தும், கருடபுராணம் போன்ற நூல்களை எழுதியும் மக்களை அச்சுறுத்தியும், அவற்றின் மூலம் வருவாய் பெற்று வருகின்றனர். இது குருடனுக்குக் குருடன் வழி காட்டியது போலாகும். ஆவிகள் மறு உலக வாழ்க் கையைப் பற்றிக் கூறிய பல செய்திகளைப் படிக்கும்போது, குருமாரின் சடங்குகளினால் யாதும் பயன் இல்லை என்றும், இவ்வுலக வாழ்வில் மக்கள் பிறர்க்கு நன்மை புரியும் உயரிய உள்ளமுடையவர்களாய் வாழின், அதனால் நன்மை அடைதல் கூடுமென்றும் தெரிகின்றன. இன்று இறந்தவர்மேல் பற்று வைத்துள்ள அவரது சுற்றத்தவர், அவர்கள் நல்வழிப்பட வேண்டு மென்னும் விருப்பினால் தாம் அரிதில் முயன்று தொகுத்து வைத்திருக்கும் பொருளைக் கிரியைகள் மூலம் பிறருக்கு இறைத்து வருகின்றனர். இவைபோன்ற பயனற்ற செயல்களில் பொருளையும் அரிய காலத்தையும் செலவழி யாது, மக்களை நல்வழியில் ஊக்கும் பொருட்டு இந் நூல் எழுவதாயிற்று. ந.சி. கந்தையா மரணத்தின்பின் தோற்றுவாய் “உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” (குறள். 339) மரணத்துக்குப் பின் என்ன நிகழ்கின்றது என்னும் கேள்வி மனிதன் தோன்றிய காலம் முதல் எழுந்துள்ளது. அன்று முதல் இன்று வரையும் இக் கேள்விக்கு விடை அறிய மக்கள் முயன்று வருகின்றார்கள். இம்முயற்சி யினாலேயே உலகில் சமயங்களும் தத்துவக் கொள்கைகளும் தோன்றி வளர்ச்சி எய்தன. ஆதிகாலம் முதல் மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பின் உயிர் நிலை பெறுகின்றதா? அல்லது அழிந்து போகின்றதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகள் அறியப்பட்டிருந்தன. மரணத்துக்குப் பின் உயிர் அழிந்து போகின்றது என்னும் கொள்கையுடைய மக்கள் இவ் வுலகில் எங்கும் காணப்படவில்லை. மரண காலத்தில் உயிர் இவ்வுடலை விட்டு ஆவி வடிவான இன்னொரு உடலோடு வெளியேறி விடுகின்றது என்னும் உண்மை எல்லா மக்களாலும் மிகப் பழங்காலம் முதல் அறியப் பட்டிருந்தது. பலர், இவ் வாவி வடிவங்களைப் பார்த்தார்கள். இன்றும் சிற்சிலர் கண்களுக்கு அவை தோன்றுகின்றன. இவ்வுலகில் இறந்தவர்களின் ஆவிகள் நிறைந்துள்ளன என நம்பும் மக்கள் காணப்படுகின்றார்கள். ஆவிகளில் தீயவை பேய்கள் என்றும், நல்லவை தேவர்(angels) என்றும் அறியப் பட்டன இவைகளைப்பற்றிய விளக்கம் மிகவும் அற்பமாகவே இருந்து வந்தது. சென்ற நூற்றாண்டு முதல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆவிகளோடு பேசும் இயக்கம் ஒன்று தோன்றி வளர்ச்சியடைவதாயிற்று. இவ் வாராய்ச்சியில் பலர் ஈடுபட்டுள்ளார்கள்; நூற்றுக்கணக்கான சங்கங்கள் தோன்றின. இக் கருத்துகளையும், நிகழ்ச்சிகளையும் பத்திரிகைகளும் புத்தகங்களும் வெளியிட்டன; வெளியிடுகின்றன. ஆவிகள் சம்பந்தமான நூல்களின் எண்ணிக்கை மொழி இலக்கியங்களுக்கு இரண்டாவதாக இடம் பெறுகின்றதெனக் கூறப்படுகின்றது. நமது நாட்டிலோ இவ்வகை நூல்கள் ஒன்றேனும் காணப்படவில்லை. மேல் நாட்டு அறிஞர் சிறு உண்மை ஒன்றைக் கண்டுபிடித்தால் அவ்வளவோடு நின்றுவிடமாட்டார்கள்; மேலும் மேலும் ஆராய்ச்சியினாலேயே அவர்கள் நீராவி, மின்சக்தி, பொறிகள் (machines) என்பவைகளின் பயன்களைக் கொண்டு உயர்ந்த வாழ்க்கை நடத்துகின்றனர். ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சி மிக இன்பந் தருவது. அது மனிதனை மரணத்துக்கு அஞ்சாது இருக்கும்படியும் செய்கின்றது. மரணத்தைப்பற்றிய மனிதனின் ஆராய்ச்சியே சமயத்தின் தொடக்கம். மனிதன் மரணத்தின் பின் உயிர்களின் நிலையைப்பற்றி எவ்வாறு எண்ணி னானோ அக் கொள்கைகளே சமயத்தின் தத்துவக் கொள்கைகளாகவும் இருந்தன. மரணத்தின் ஆராய்ச்சியிலிருந்தே பௌத்தம், சைனம், வேதாந்தம், சித்தாந்தம் போன்ற உயர்ந்த தத்துவக் கொள்கையுடைய மதங்கள் எழுந்தன. மதங்கள் ஒழுக்கத்துக்கு அடிப்படை. மனிதன் விலங்குகளைப் போல் வாழாது நன்மை தீமை பாவ புண்ணியம் என்பவைகளைப் பகுத் துணர்ந்து ஒழுக்கமுடையவனாய் இவ்வுலகில் வாழ்வதற்கு அடிப்படையா யுள்ளதும் மரணத்தைப் பற்றிய ஆராய்ச்சியே. ஆகவே மரணத்தைப்பற்றி ஆராயும் இந்நூல் சிறந்த சமய நூலாகவும் ஒழுக்க நூலாகவும் பயனளிக்கும். மேல்நாடுகளில் ஆவிகளைப்பற்றிய ஆராய்ச்சி எவ்வாறு தொடங்கிற்று என்னும் வரலாற்றை முதற்கண் கூறுகின்றோம். ஆவியைப்பற்றிய ஆராய்ச்சி மனித வரலாற்றில் தலைசிறந்து விளங்கியவர் டெய்லர்(E. B. Tylor). அவர் மக்களிடையே ஆவிகளைப்பற்றிய கருத்து எவ்வாறு இருந்து வந்ததெனக் கூறியுள்ளார். அது இக்கால ஆவி ஆராய்ச்சியாளர் கூறும் உண்மைகளைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. அவ் வாசிரியர் கூறியுள்ளதை இங்குத் தருகின்றோம். “ஆதிகாலம் முதல் மக்கள் மரணத்துக்குப்பின் உயிர்கள் ஆவி வடிவில் நிலைபெறுகின்றன என்று நம்பி வந்தார்கள். பலர் இறந்தவர்களின் வடிவில் அவைகளைக் கனவிலும் நனவிலும் பார்த்திருக் கிறார்கள். முற்கால மக்கள், தூக்கத்தில் உயிர் வெளியே சென்றிருக்கின்ற தென நம்பினார்கள். தூக்கம் உயிர் மீண்டு வருவதாகிய நித்திரை; மரணம் உயிர் மீண்டு வராததாகிய நித்திரை என்று அவர்கள் கருதினார்கள். உயிர் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் உடலைக் குழப்புதல் கூடாதென்னும் கருத்துப்பற்றியே தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்புதல் கூடாது என்னும் கொள்கை உண்டாயிற்று. ஹோமர் என்னும் மாகவி தனது இலியட் என்னும் நூலில் பரக்லொஸ்(Paroklos) என்பவன், நித்திரையாயிருக்கும் அச்சில்லிஸ் என்பவனிடம் தனது ஆவி உடலில் வந்தானென்றும், அச்சில்லிஸ் அவனுடைய புகைபோன்ற கையைப் பிடிக்க முயன்றபோது. அது கைக்கு அகப்படவில்லையென்றும், அவன் நிலத்தின்கீழ் மறைந்து விட்டா னென்றும் கூறியுள்ளார். ஹெர்மோற்றிமஸ் (Hermotimos) என்பவர் தனது உடலைவிட்டு ஆவியுலகங்களுக்குச் செல்வது வழக்கம் என்றும், ஒரு முறை உயிர் ஆவி உலகைவிட்டுத் திரும்பி வருவதன் முன் அவன் மனைவி உடலை எரித்துவிட்டாளென்றும், அதனால் உயிர் ஆவி வடிவில் நின்றதென்றும் கூறப்பட்டுள்ளன. ஆதி மக்கள், உயிர், உடல்களைப்பற்றி எவ்வகைக் கருத்துக் கொண்டிருந்தார்களோ அக் கருத்தே இன்றுவரையும் நிலைபெறுகின்றது. நாய், குதிரை போன்ற அஃறிணைப் பொருள்களுக்கும் உயிருண்டு என ஆதிகால மக்கள் நம்பி வந்தார்கள். பியூசி(Fiji) தீவிலுள்ள மக்கள் வில், அம்பு, ஓடம் போன்ற பொருள்களுக்கும் உயிர் இருக்கின்ற தென நம்புகிறார்கள். உலகின் பல பாகங்களில் இறந்தவர்கள் பொருட்டுப் பலிகள் இடப்படுகின்றன. பெரு நாட்டில் ஒரு அரசன் இறந்தால் அவனுடன் கூடத் துணை செல்லும் பொருட்டு அவன் மனைவியர் தூங்கிச் சாக வேண்டும்; பரிவாரங்களிற் பலர் அவனுடன் கூடப் புதைக்கப்படுவார்கள். மடகாசுகரில் இராடமா(Radama) என்னும் அரசன், அவனுடன் புதைக்கப் பட்ட குதிரைகள் ஒன்றின்மீது ஏறி ஆவி வடிவில் தோன்றினான் என்று சொல்லப்பட்டது. அதிகாரிகள் புதைக்கப்பட்ட பழைய சமாதிகளைச் சூழப் பலரது என்புகள் காணப்படுகின்றன. அவ் வென்புகள் அவர்களின் பரிவாரங்களுடையவையாகும். பாட்ரொகொலொஸ்(Patrokolos) என்பவ னின் உடலை எரித்தபோது சிறை பிடிக்கப்பட்ட ட்ரோசன்(Trojan) மக்களும், குதிரைகளும், நாய்களும் எரிக்கப்பட்டனர். சித்திய நாட்டில் (Scythia) இறந்தவர்களை அடக்கஞ் செய்யும்போது இவ்வாறு செய்யப் பட்டதென ஹெரதோதசு கூறியுள்ளார்; மெலீகா என்பவளுடன் அவள் ஆடைகளும் எரிக்கப்படாமையால் அவளது ஆவி குளிரால் நடுங்கிக் கொண்டிருந்ததெனஅவரே குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கணவருடன் மனைவியர் கொளுத்தப்பட்டார்கள். ஐரோப்பாவில் மனைவியரையும் அடிமைகளையும் உடன் புதைக்கும் அல்லது உடன் கொளுத்தும் வழக் கங்கள் நின்றுபோயின; இன்னும் குதிரைகள் கொல்லப்பட்டு இறந்தவர்க ளுடன் எரிக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வது, குதிரை மறுஉலகப் பயணத்துக்குப் பயன்படும் என்பது கருதியே யாகும். சில இடங்களில் இறந்தவர்கள் வழிப்பயணத்தில் கிழிந்த துணிகளைத் தைப்பதற்காகப் பிணத்துடன் ஊசியையும் நூலையும் வைத்துப் புதைப்பர். சிலர் பிணத்தின் கையில் சிறு பணத்தை வைத்துப் புதைத்தனர். இது மரண ஆற்றைக் கடப்பதற்கு ஓடக்கூலி கொடுப்பதற்காகும். இவ்வாறு மரணத்துக்குப் பின்னும் மக்கள் ஆவி வடிவில் உறைகிறார்கள் என்னும் கருத்து அநாகரிக காலம் முதல் இருந்து வருகின்றது. ஆவிகள் பெரும்பாலும் இராக்காலங் களிலேயே மக்கள் கண்களுக்குத் தோன்றுகின்றன. இரவில் மக்களைக் காண வருமுன் அவை, யாதோ ஓர் இடத்தில் தங்கியிருத்தல் வேண்டும் எனக் கருதப்பட்டது. மரணமடைந்த குடிசைகளிலேயே அவை தங்கு கின்றன எனச் சிலர் கருதினார்கள். ஆகவே ஒருவர் இறந்தால் அக் குடிசையை விட்டு எல்லோரும் வெளியேறினார்கள். சிலர் அவை இடுகாட் டில் தங்குகின்றன என்று நம்பினார்கள். மறு உலகிலோ, மலை உச்சிகளிலோ தங்கி இராக்காலத்தில் அவை இறங்கி வருகின்றன என்று சிலர் நம்பினார்கள். அவை மறுபடியும் குடும்பங்களில் வந்து பிறக்கின்றன என்னும் கொள்கை யும் மக்களிடையே பரவியிருந்தது. “மரணத்தின்பின் ஆவிகளாக மாறியவர்கள் தமது குடும்பத்தினர் மீது இரக்கமுள்ளவர்களாயிருக்கிறார்கள் என்னும் நம்பிக்கை உண்டாயிற்று. இறந்தவர்களுக்கு ஆண்டில் ஒருமுறை விருந்து இடும் வழக்கம் ஆசியா, ஐரோப்பா என்னும் நாடுகளில் இருந்து வருகின்றது. இவ் வாவிகள் தம் முன்னோராவர் என்னும் கொள்கை மாத்திரமன்று, அவை மக்களுக்கு நன்மையும் தீமையும் செய்ய வல்லன என்றும் கருதப்பட்டது. ஒரு தலைவன் இறந்தால் அவன் ஒரு கடவுள் போல ஆகிறான் என நினைக்கப்பட்டது.” ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கிறித்துவ மதம் பரவியுள்ளமை யாலும், ஆவிகளின் செயல்கள் பேய்கள் தொடர்பான செயலெனக் கொள்ளப் பட்டமையாலும், பேய்கள் சுவர்க்கத்தினின்றும் வழுக்கி விழுந்த ஒருவகைக் கெட்ட ஆவிகள் எனக் கருதப்பட்டமையாலும், கிறித்துவ குருமார் ஆவிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மதத்துக்கு மாறானவை என்று கொண்டமையாலும், ஆவிகள் சம்பந்தமான ஆராய்ச்சி அமெரிக்கா ஐரோப்பா முதலிய நாடுகளில் தலைஎடுப்பது கடினமாக இருந்துவந்தது. மத்திய காலங்களில் மந்திரவித்தைக்காரரென்று ஐயுறப்பட்டவர்கள், தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டார்கள்; அல்லது ஆற்றில் எறியப்பட்டார்கள். மெஸ்மர் என்பவர் “மெஸ்மெரிசம்” என்னும் வித்தையைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து வெளியிட்டபோது அவர் மந்திரவித்தைக்காரர் என்று கருதி ஆஸ்திரிய அரசாங்கம் அவர் அந்நாட்டில் இருப்பதை அனுமதிக்கவில்லை. அவர் பிரான்சிலே சென்றிருந்து தனது ஆராய்ச்சி களை நடத்திப் புகழ் அடைந்து பலரால் போற்றத்தக்கவரானார். கலிலியோ கலிலி என்பவர் தொலைநோக்கியைச்(Telescope) செய்து அதன்மூலம், சூரியனைக் கிரகங்கள் சுற்றுகின்றன என்னும் கொள்கையை வெளியிட்டார். இதற்காக இவர்மீது குற்றஞ்சாட்டி விசாரணை செய்த கத்தோலிக்க மதகுரு அவரைச் சிறையிலடைக்கக் கட்டளையிட்டார். கலிலியோ தனது தொலை நோக்கி மூலம் கிரகங்களை நோக்கித் தான் கூறுவதன் உண்மையை அறிந்து கொள்ளும்படி அவர்களைக் கேட்டபோது அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்தனர். அவ்வாறு செய்யின் ஒருபோது தாங்கள் கொண்டுள்ள கருத்துப் பொய்யாய்விடுதல் கூடுமென அவர்கள் அஞ்சினார்கள். 1இவ்வாறு முற்காலங்களில் புதிய உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்குச் சமயம் பெருந் தடையாக இருந்து வந்திருக்கின்றது. ஆவி ஆராய்ச்சியைப்பற்றிய வரலாற்றுச் சுருக்கம் தத்துவ மனோதத்துவ அகராதி2 என்னும் நூலில் ஆவி ஆராய்ச்சி (Spiritualism) என்னும் பொருள்பற்றிக் கூறப்பட்டிருப்பது வருமாறு: மரணத்துக்குப் பின் ஆவிகள் இவ்வுலகை விட்டு மறு உலகிற் சென்று வாழும் வரலாற்றை ஆராயும் ஆராய்வு ஆவி ஆராய்ச்சி எனப்படும். ஆவி களைப்பற்றிய ஆராய்ச்சி 1848ஆம் ஆண்டு தொடங் கிற்று. நியூயார்க்கிலே ஹைடிவெல்லா என்னும் இடத்தில் நிகழ்ந்ததை ஒத்த நிகழ்ச்சிகள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளன. 1649இல் வூட்ஸ்டக் (Wood stock) அரண்மனைகளில் நிகழ்ந்த குழப்பங்களும் இவ் வகையினவே. அமெரிக்கா ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் ஆவி ஆராய்ச்சியைப் பற்றி மாத வெளியீடுகள் பல நடத்தப்படுகின்றன. கதவைத் தட்டிய பேய் நியூயார்க்கிலே ஹைடிவெல்லா என்னும் இடத்தில் பாக்ஸ் (Fox) குடும்பத்தினர் குடியிருந்தார்கள். 1848இல், அவர்கள் குடியிருந்த வீட்டில் அடிக்கடி தட்டும் சத்தம் கேட்டது. தட்டுகிறவர்களைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. அதனால் அவர்கள் தொந்தரவு அடைந்து வந்தார்கள். தட்டும் சத்தத்தினால் நிலம் அதிர்ந்தது. அவர்கள் அயலவர்களைத் தமக்கு உதவி புரியும்படி அழைத்தார்கள். ஒவ்வொரு அறையிலும ஐந்து அல்லது ஆறு பேர் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். சிலர் வெளியே நின்றார்கள். சத்தம் வழக்கம் போற் கேட்டது. ஒருநாள் பாக்ஸ் வெளியே போயிருந்தார். நித்திரை கொள்ள முடியாதிருந்த அவரது சிறுமிகள் வெளியே தட்டும் சத்தத்தை போலத் தாமும் தட்டினார்கள். இவர்கள் எத்தனை தரம் தட்டினார்களோ அத்தனை தரம் தட்டும் சத்தம் வெளியே கேட்டது. பின்பு பாக்ஸின் மனைவி சிறிய பெண்ணைப் பத்துவரையும் எண்ணும்படி சொன்னாள் உடனே பத்துச் சத்தங்கள் வெளியினின்று வந்தன. பின்பு பாக்ஸின் மனைவி தட்டுவது மனிதரா என்று கேட்டாள். மறுமொழி யில்லை. நீ ஆவியாயிருந் தால் இருமுறை தட்டு என்றாள். இரண்டு தட்டும் சத்தங்கள் வந்தன. இவ் வகையான தட்டும் சத்தங்களால் ஆவியுடன் பேசப்பட்டது. அங்குத் தட்டியது முப்பது வயதுள்ள ஒரு சில்லறை வியாபாரியின் ஆவியென்றும் அவன் பணத்தின் பொருட்டு நடு இரவில் கொல்லப்பட்டானென்றும், அவனுடைய உடல் அவ்விடத்தில் புதைக்கப்பட்டதென்றும் தெரிய வந்தது. அயலவர்களை அழைத்தால் தட்டி மறுமொழி கூறமுடியுமோ என்று கேட்கப் பட்டது; முடியும் என்னும் மறுமொழி தட்டுதல்மூலம் வந்தது. அயலவர்கள் கூடினார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்ட விடைகள் சரியாக விருந்தன. தட்டும் சத்தம் கேட்கும்போது, பாக்சையும் அவர் மனைவியையும் சிறுமிகளையும் பலர் கவனித்தார்கள். அவர்களின் கால்களும் கைகளும் பைகளுக்குள் விட்டுக் கட்டப்பட்டன. அவர்கள் பஞ்சு மெத்தையின்மீது நிற்கும்படி விடப்பட்டார்கள். இச் சத்தம் உண்டா வதில் ஒருவகையான சூழ்ச்சியும் இல்லையென முடிவு செய்யப்பட்டது. இச் செய்தி பரவியது. உடனே குருமார், நீதிபதிகள், சட்ட வல்லுநர் முதலிய பலர் அவ்விடம் சென்றார்கள். பின்பு இத் தட்டுதல் பல வீடுகளிற் கேட்கத் தொடங்கின. பின்பு பாக்ஸ் குடும்பத்தினர் றோசெஸ்ரர் என்னும் இடத்தில் ஒரு வீட்டில் சென்று குடியிருந்தார்கள். அங்கு ஆயிரக்கணக்கானோர் அவர்களிடம் இவ் வியப்பைக் கேட்டறிய வந்தார்கள். இதுவே மேற்குத் தேசங்களில் ஆவியைப்பற்றி ஆராய்வதற்கு ஆரம்பமாக விருந்தது. பாக்ஸ் குடும்பத்தினர் குடியிருந்த ஹைடிவெல்லாவில் கரியுடனும் சுண்ணாம்புடனும் மனித எலும்பு தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. விரிவுரைகள் நிகழ்த்திய வேலையாள் 1845இல் நியூயார்க்கில் ஆண்ட்ரு ஜாக்சன்(Andrew Jackson) என்னும் ஒருவன் இருந்தான். அவன் வறிய நெசவுக்காரனின் மகன். அவன் சப்பாத்துக் கட்டுபவன் ஒருவனிடம் வேலை செய்து வந்தான். அவனிடத் தில் சில ஆற்றல்கள் காணப்பட்டன. அவன் சில சமயங்களில் ஒருவகை மயக்க நிலையை அடைந்தான். அவனுக்குப் பல தெளிவுக் காட்சிகள் தோன்றின. அவன் பல நோயாளரைக் குணப்படுத்தினான். மயக்க நிலை யில் இருக்கும்போது அவனுடைய அறிவு ஆற்றல் அளவு கடந்திருந்தது. அந்நிலையில் நியுயார்க் நகரில் உள்ள அறிஞரின் சார்பில் அவன் 157 விரிவுரைகள் செய்தான். அவை 800 பக்கங்கள் கொண்ட புத்தக வடிவில் அச்சிடப்பட்டன. இவ்வகை ஆற்றல் அவன் வாழ்நாளில் நீண்டகாலம் இருந்து வந்தது. அவனுடைய மாணவனாகிய தாமஸ் லேக் ஹாரிஸ் (Thomas Lake Harris) என்பவன் 384 பக்கங்கள் அடங்கிய பாடல்களை (Lyric of the golden age) தொண்ணூற்றுநான்கு மணி நேரத்தில் சொன்னான். அப் பாடல்கள் மில்டனின் பாடல்களுக்கு இணையானவை என்று வில்லியம் ஹேவிட் புகழ்ந்துள்ளார். பையனின் ஆவி 1846இல் முந்நூறு மைல் தூரத்துக்கு அப்பால் வாழ்ந்த பையன் ஒருவனின் தோற்றம் ஹோப்(Hope) என்பவருக்கு முன்னால் தோன்றிக் குறித்த நேரத்துக்கு மூன்று நாட்களின்முன் தான் இறந்துபோனதாகக் கூறிற்று. ஆராய்ச்சியில் அது உண்மையாகக் காணப்பட்டது. சடப்பொருள்கள் தாமே அசைதல் சில சமயங்களில் யார் செய்வதென்று அறிய முடியாத சத்தங்களும் வாத்திய ஒலிகளும் கேட்கின்றன; சில சடப்பொருள்கள் தாமே அசைகின்றன. சில வேளைகளில் அறைகள் நடுங்குகின்றன. பூ, பழம் முதலிய பொருள்கள் மூடப்பட்ட அறைக்குள் கொண்டுவரப்படுகின்றன. சில சமயங்களில் அவிழ்க்கமுடியாத முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. சில வியப்புகள் மயக்க நிலைமை அடைந்திருக்கும் ஆவியுடன் பேசுகின்றவர் பிடித்திருக்கும் வாத்தியப் பெட்டி தானே ஒலிக்கின்றது. அவரின் பக்கத்தே இருப்பவர்கள் வைத்திருக்கும் வாத்தியப் பெட்டிகளும் சில சமயங்களில் ஒலிக்கின்றன. பூட்டப்பட்டிருக்கும் “பியானோ” பெட்டிகளில் ஒலி உண்டாகின்றது. சில வேளைகளில் எழுத்துகளும் ஓவியங்களும் மனிதர் வரையாமலே எழுதப்படுகின்றன. மேசைகளின் கீழ் எறியப்பட்ட கடுதாசி களிலும், அல்லது மேசை அறைகளில் வைத்துப் பூட்டப்பட்ட கடுதாசிகளி லும், இரண்டு சங்குப்புரி ஆணியாற் பூட்டப்பட்ட இரண்டு கற்பலகைகளி னிடையே வைத்த கடுதாசிகளிலும் எழுத்துகள் காணப்படுகின்றன. இவ்வாறு எழுதப்பட்டவை ஆவியோடு பேசுகின்றவர் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடைகளாகக் காணப்படுகின்றன. ஓவியங்கள் பல வகையின. சில கற்பலகைகளில் கற்குச்சிகளால் அல்லது வெண்கட்டிகளால் எழுதப்பட்டிருக்கின்றன; சில, கடுதாசியில் எழுதப்பட்டுள்ளன. மனிதர் எழுத முடியாத விரைவில், நிறக்கட்டிகளாலும், நிற மைகளாலும், நிற எண்ணெய் மைகளாலும் எழுதப்படுகின்றது. தெளிவுக்காட்சியுள்ள ஒரு ஸ்கொத்தியர் இருட்டில் அழகிய ஓவியங்களைத் தீட்டியுள்ளார். மேசையி லிருந்து கீழே தொங்கும்படி விடப்பட்டுள்ள துணிக்குக் கீழ் எறியப்பட்ட அட்டைகளின் மீது பதினைந்து அல்லது இருபது நொடிகளுக்குள் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவ்வகை ஓவியங்களிற் பல இறந்துபோன பெஞ்சமின் கோல்மன் என்பவரிடம் இருந்தன. கோல்மன் ஒருமுறை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக ஒரு அட்டையில் இரண்டு இடங்களில் குண்டூசியால் குத்திவிட்டு அதனை மேசையின் கீழ் எறிந்தார். இரண்டு பறவைகள் இரண்டு பூமாலையைப் பிடித்து நிற்பதாக அதன்மீது ஓவியம் வரையப்பட்டிருந்தது. குண்டூசி குத்தப்பட்ட அடையாளங்களில் பறவைகளின் கண்கள் அமைந்திருந்தன. சில சமயங்களில் மேசைகள் அந்தரத்தில் எழுந்தன. ஹோம் என்பவர் தமது கையில் நெருப்புத் தணலை எடுத்து வைத்திருந்தார். பிறர் கையிலும் வைத்தார். அது அவரைச் சுட வில்லை. யான் எட்டு முறை நெருப்புத் தணலை கையில் வைத்திருந்தேன். யான் கையை முகத்துக் கருகில் கொண்டுபோனபோது வெப்பம் முகத்தில் வீசிற்று. சில சமயங்களில் கண்ணுக்குப் புலப்படக்கூடிய கைகள் வந்து எழுதுகின்றன. கண்ணுக்குத் தெரியும்படியும், தெரியாமலும் வந்த ஆவிகள் நிழற்படம் பிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆவிகளைப் பார்த்து அவைகள் மூலம் தூரத்திலுள்ள செய்திகளை அறிந்திருக்கிறார்கள். அவை கூறிய வருங்காரியங்கள் உள்ளவாறு நிகழ்ந்தன. ஆவிகளுடன் பேசக்கூடிய வர்கள் பெரிய விரிவுரைகளையும் கட்டுரைகளையும் வரைந்திருக்கிறார்கள். நீதிபதி எட்மொண்ட்(Judge Edmond) என்னும் அமெரிக்கர் இவ் வாராய்ச்சி யில் பெரிய ஊக்கம் கொண்டிருந்தார். அவரது மகள் கலாசாலைக் கல்வி அதிகம் பயிலவில்லை. ஆயினும் மயக்க நிலையை அடையும்போது அவள் தான் அறியாத பல மொழிகளில் பேசினாள். அவள் கிரேக்க மொழியையும் திருத்தமாகப் பேசியிருக்கிறாள். நீ யார் இவ்வுடலை விட்ட பின் நீ வாழ்வதை நம்பினால் இவ் வுடலோடு சம்பந்தப்பட்டிருக்கும்போது உண்டாகும் துயரங்களை நினைந்து நீ பரிகாசம் செய்வாய். அழிவில்லாத நீ இவைகளுக்கு எல்லாம் மேற்பட்டவன். இவ் வுலகில் நிகழும் சுக துக்கங்களெல்லாம் உனது அனுபவங்கள் அல்லது பரீட்சைகள். மரணத்துக்குப் பின் நாம் வாழ்வதை ஆராய விரும்பினால் நாம் பின்வரும் கேள்விகளைக் கேட்கவேண்டும். நாங்கள் ஏன் வாழ்கின் றோம்? எங்கிருந்து வந்தோம்? எங்கு செல்கின்றோம்? நாங்கள் என்றால் என்ன? இவ் வுடல் மனிதனா? அல்லது அவனுக்கு மனமும் ஆவியும் இருக்கின்றனவா? இவ் வுலகில் தோன்றிய பெரிய அறிவாளிகளாகிய புத்தர், சொராஸ்ரர், பிளாட்டோ, சென்போல், யேசு போன்றவர்கள் எல்லாம் மனிதன் உடல் உயிர் ஆவிகளோடு கூடியவன் என்று கூறியிருக்கிறார்கள். இக்காலத்திலும் வெளிப்படையான இவ் வுண்மையை அறிஞர் மறுக்கவில்லை. உடலில் இம் மூன்றும் வெளிப்படையாக விருக்கின்றன. உடலென்றா லென்ன? அது உயிரும் ஆவியும் உறையும் வீடு. இவ் வீட்டைவிட்டு அவை பிரிந்து செல்வதை மரணம் என்கிறோம். அது நாங்கள் களைந்து எறிந்துவிடும் உடை போன்றது. உயிரென்பது என்ன? பெண் அல்லது ஆண் என்பதே உயிர். இது இறந்த பின் வாழ்வது; ஒழுக்க சம்பந்தமாக அடைந்த வளர்ச்சி களை இவ் வுடலோடு சம்பந்தப்பட்டிருக்கும்போது தன்னைப்போன்ற பிறருக்குக் காட்டுவது. இவ் வுயிரை உடம்பு செய்வது போல் உணர்த்துவதும் பிடித்திருப் பதுமே ஆவி. அது எல்லா உயிர்களுக்கும் பின்னால் இருப்பதும் அழிக்க முடியாததுமாகிய ஆற்றல். ஆவி என்பது சடத்தை உயிருடன் இருக்கச் செய்யும் ஆற்றல் அல்லது விசையாகும். ஆவியின் சத்தி உடல் மனங்களி லிருந்து உள்ளுக்கிழுக்கப்படும்போது மனிதன் இறந்துபோகின்றான். அப்பொழுது அவன் உயிர்ப்புள்ள ஆவியோடு அடுத்த உலகை அடை கின்றான். இப்பொழுது மனிதன் அழியாதவன் என்று நாம் சான்றுப்படுத்த முடியாது. அவ் வுலகிலுள்ள ஆவித் தலைவர்கள் அவ்வுலகிலிருந்து வேறு மேல் ஆவி உலகங்களுக்குச் செல்வோர் இறக்கின்றனர் என்று கூறுவதை நாம் அறிவோம். இதனால் நாம் அனுமானிப்பது மந்தமான இயக்கத்தி லிருந்து படிப்படியே மேலான இயக்கமுள்ள உலகங்களை நாம் இறந்து அடைகின்றோம் என்பதே. எங்களுக்கு இருக்கின்ற இவ் வுடல் ஒன்று மாத்திரம் உள்ளதா? இல்லை. சதையும் இரத்தமுமல்லாத வேறு நுண்ணிய சடப்பொருளால் ஆன காற்றுப் போன்ற ஒரு உடலுமுண்டென்று ஆராய்ச்சியாளர் கூறுகின் றனர். இவ்வுடலையே நாங்கள் ஆவி என்கின்றோம். மரண காலத்தில் அது பருஉடலைவிட்டு வெளியேறுகின்றது. அப்பொழுது பருஉடல் அழிந்து போகின்றது. உயிர் இக் காற்றுமயமான உடலுள் உறைந்து, மரணத்துக்குப் பின் செல்லும் உலகை அடைகின்றது. மரணத்துக்குப் பின் உயிர்கள் செல்லும் உலகங்கள் பல. இறந்தபின் உயிர் வெளியேறும் காற்றுமயமான உடலே சிலருக்குத் தோற்றப்படுகின்றது. உயிரைத் தாங்கி நிற்கின்ற காற்றுமயமான உடலை பல காலங்களில் கோடிக்கணக்கானோர் பார்த்திருக்கின்றனர். தற் காலத்தில் அவை நிழற்படம் பிடிக்கவும் பட்டிருக்கின்றன. அவை உடலை விட்டுப் பிரிந்துபோகும் நிலைமையிலும் புகைப்படங்கள் பிடிக்கப் பட்டிருக்கின்றன. இருவகை உடல் உயிருக்கு இருவகை உடல்கள் உண்டு என்னும் உண்மையை மக்கள் வெகுகாலத்துக்கு முன்னரேயே அறிந்திருந்தார்கள். மரணத்துக்குப் பின் உயிர் நுண் உடலுடன் இறந்த இடத்திலோ உடல் புதைக்கப்பட்ட இடத்திலே தங்கி நிற்கின்றதென்னும் நம்பிக்கை பற்றியே இறந்தவர்கள் பொருட்டுப் பல சடங்குகள் செய்யப்படுகின்றன. பருமனாகிய இவ் வுடலில் உயிர் தங்குவதற்குத் தகுதியில்லாமல் போகும்போது, அது அவ் வுடலை விட்டுத் தனது நுண்ணிய உடலுடன் பிரிகின்றது. அவ் வுடலுடன் அது நினைத்த இடங்களுக்கோ, பிற உலகங்களுக்கோ செல்லக் கூடிய நிலையை யடைகின்றது. இவ்வகை உடலைச் “சூக்கும” உடல் என்று நம்மவர் வழங்குவர். இறந்தவர்களின் ஆவி வடிவங்களை நாய்கள், குதிரைகள், மாடுகள் என்பன எளிதிற் காணத்தக்கன என்று நம்பப்படுகின்றது. இது உண்மையென்று கொள்வதற்குரிய பல சான்றுகளும் உள்ளன. இந் நுண் ணுடல் நுண்ணிய காற்றுப் போன்ற சடப்பொருளினால் ஆனது. அவ் வுடலை ஊறுபடுத்த முடியாது. நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறிந்திருந்த இவ் வுண்மையையே இன்றைய மேற்புல அறிஞரும் வெளியிட்டுள்ளார்கள்.1 ஆதர்கானன்டாயல் என்பார் தனது பரு உடலை விட்டு நுண் உடலோடு வெளியே சென்று மீண்ட ஒரு டாக்டரின் வரலாற்றைக் கூறியுள்ளார். அது வருமாறு: “அமெரிக்க அகராதியைத் தொகுத்தவரும், ஆவி ஆராய்ச்சி யாளருமாகிய வங்க்(Mr. Funk) என்பவர் அமெரிக்க மருத்துவர் ஒருவரின் அனுபவத்தைப் பற்றிக் கூறியுள்ளார். மருத்துவர் புளோரிடா(Florida) என்னும் இடத்தில் இருந்தார். ஒரு நாள், அவருக்கு ஒருவகை மயக்கம் உண்டாயிற்று. அப்பொழுது அவர் தான் தனது உடலை விட்டு வெளியேறு வதாக உணர்ந்தார். அவர் தான் தனது உடலின் பக்கத்தே நிற்பதைக்கண்டர். அவர் தனது உடலையும் அதன் தோற்றத்தையும் பார்த்து, அது தனது உடல் என்று அறியக்கூடியதாக விருந்தது. அப்பொழுது அவருக்குத் தொலை விடத்தே வாழும் நண்பர் ஒருவரின் நினைவு வந்தது. சிறிது நேரத்தில் அவர் அந் நண்பரின் அறைக்குள் இருப்பதை அறிந்தார். நண்பரின் இடம், அமெரிக்காக் கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ளது. அவர் தனது நண்பரைப் பார்த்தார். நண்பர் தன்னைப் பார்த்ததையும் அவர் கண்டார். சிறிது நேரத்தில் அவர் தனது உடலுக்குப் பக்கத்தே மீண்டு வந்து நின்றார். அவ் வுடலுள் நுழையலாமா அல்லது விடலாமா என்னும் எண்ணம் அவருக்குத் தோன்றிப் போராடியது. அவர் அதைப் பற்றிச் சிறிதுநேரம் தனக்குள்ளேயே நினைத்துப் பார்த்தார். அவர் அசைவற்றுக் கிடந்த தனது உடலின் உட்புகுந்து உயிர் பெற்று எழுந்தார். அவர் நிகழ்ந்தவற்றைப்பற்றித் தனது தண்பருக்குக் கடிதம் எழுதியிருந்தார். நண்பர், குறித்த நாளில் தான் அவரைத் தனது அறையுள் பார்த்ததைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.” இவ் வரலாறு, திருமூல நாயனார் இடையனுடைய உடலில் புகுந்தார்; விக்கிரமாதித்தன் பட்டி என்போர் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை அறிந்திருந்தார்கள் என வழங்கும் பழங்கதைகளை மிக இது ஒத்திருக் கின்றது. உடலைவிட்டு உயிர் தனது ஆவி உடலோடு பயணஞ்செய்து, மறு படியும் மீண்டு வந்ததைக் குறிக்கும் வரலாறுகள் உள்ளன. இதற்கு எடுத்துக் காட்டாக இன்னொரு நிகழ்ச்சியை இங்குத் தருகின்றோம். “யோசேப் கொவ்வி என்பவரின் மனைவிக்கு நோய் கண்டது. அவள் தந்தை வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டாள். அவ் வீடு கணவன் வீட்டிலிருந்து ஒன்பது மைலுக்கு அப்பால் உள்ளது. அவள் 1691ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4வது நாள் மரணமானாள். இறப்பதற்கு முன் அவர் தனது இரண்டு பிள்ளைகளைக் காண ஆவல் கொண்டிருந்தாள். அவள் தனது விருப்பத்தைக் கணவனுக்குத் தெரிவித்தாள். பயணம் செய்வதற்கு ஏற்ற உடல் நிலையில் அவள் இல்லை என அவன் கூறினான். அன்று இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இடையில் அவள் ஒரு வகை மயக்கம் அடைந்தாள். அவளுடன் அந் நேரம் இருந்த ரேணர் என்பவள் பின் வருமாறு கூறினாள். ‘அவளுடைய விழிகள் ஒரே பார்வையாக விருந்தன; வாய் மூடி யிருந்தது. ‘நர்ஸ்’ தனது கையை அவள் வாய்மீதும் மூக்கின்மீதும் வைத்துப் பார்த்தாள்; மூச்சு வரவில்லை. நோயாளி மயக்கத்தில் இருக்கின் றாளோ, இறந்துவிட்டாளோ என்று கூறமுடியவில்லை என்று சொன்னாள். நோயாளி மயக்கம் தெளிந்து எழுந்தவுடன், தான் தனது பிள்ளைகளைப் பார்த்து வந்ததாகக் கூறினாள். அப்படியிருக்க முடியாது; நீ படுக்கையில் இருக்கிறாய் என்றேன். நித்திரை யாயிருந்தபோது நான் பிள்ளைகளைப் பார்த்து வந்தேன் என்றாள்.’ “பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அலக்சாத்ரின் விதவை யாகிய ‘ஆயாள்’ கூறியது வருமாறு; ‘இரவு இரண்டு மணிக்கு முன்பு மேரி என்பவள், பிள்ளைகளில் ஒன்று கிடத்தப்பட்டிருந்த அடுத்த அறையி னின்றும் நான் இருந்த அறைக்குள் வந்தாள். அங்கு அவளது இளைய பிள்ளை கிடத்தப்பட்டிருந்தது. அவளுடைய உதடுகள் பேசுவது போல அசைந்தன. ஆனால் சத்தம் எதுவும் வரவில்லை. அவ் வடிவம் இங்குப் பதினைந்து நிமிடம் வரையில் தங்கிற்று’ இவ் வுண்மையை அவள் அதிகாரிகள் முன்னிலையில் சத்தியம் செய்து கூறினாள். அடுத்த நாள் மேரி இறந்து விட்டாள்.1” இறந்தவரின் ஆவி அவர் இறந்து சிறிது நேரத்துள் தொலைவிலுள்ள நண்பர் அல்லது உறவினருக்குத் தோற்றப்படுவதைப்பற்றிய செய்திகள் பல வுள்ளன. இங்குச் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகின்றோம்: (1) “சிறுமியாயிருக்கும்போது நான் எனது சகோதரியோடு படுத்து நித்திரை கொள்வது வழக்கம். ஒரு நாள் இரவு நாங்கள் படுத்தபின், விளக்கை அணைத்தோம். அடுப்பில் மெதுவாக எரிந்துகொண்டிருந்த நெருப்பின் வெளிச்சம் அறைக்குள் தெரியக்கூடியதாக இருந்தது. நான் அடுப்பைப் பார்த்தபோது ஒருவர் இருந்து குளிர் காய்ந்துகொண்டிருந்தார். அடுத்த கிராமத்தில் பெரிய குருவாயிருந்த எனது மாமனாரின் தோற்றத்தை அவ் வடிவம் ஒத்திருந்தது. உடனே நான் என்னுடைய சகோதரியை எழுப்பி அவ் வடிவத்தைக் காட்டினேன். அவளும் அவ் வடிவம் எங்கள் மாமனாரைப் போல் இருப்பதைக் கவனித்தாள். நாங்கள் பயந்து ‘உதவி! உதவி! என்று சத்தம் இட்டோம். அடுத்த அறையில் நித்திரை கொள்ளும் எங்கள் தந்தை படுக்கையினின்றும் குதித்து, மெழுகு திரியுடன் ஓடிவந்தார். உடனே அவ் வுருவம் மறைந்தது. எங்கள் மாமனார், கடந்த மாலையில் இறந்து விட்டார் என்னும் செய்தியைக் கொண்ட கடிதம் அடுத்த நாள் காலை எங்களுக்குக் கிடைத்தது.” (2) n.j.s. என்பவரும் F.L. என்பவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்தார்கள். இவர்கள் எட்டு ஆண்டுகளாக நண்பர்களாயிருந்து வந்தனர். 1883ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி திங்கட்கிழமை F.L. என்பவர், உடல் நலம் இல்லாதிருந்தார். மார்ச் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை N.J.S. என்பவர் தலைவலியால் வருந்தினார். அவர் சாய்வு நாற்காலியிற் சாய்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தனது நண்பர் F.L. தனக்கு முன்னால் நிற்கக் கண்டார். அவர் தொப்பியில் கறுப்பு நாடாக் கட்டியிருந் தார். கையில் தடி வைத்திருந்தார். அவர் N.J.S. என்பவரைக் கூர்ந்து பார்த்துவிட்டு மறைந்து விட்டார். அப்பொழுது N.J.S. ஒரு ஆவி வந்து சென்றதாகத் தனக்குள் எண்ணினார். அவர் உடல் சில் என்று குளிர்ந்தது. மயிர்கள் கூச்செறிந்தன. அவர் மனைவியை அழைத்து நேரம் என்ன என்று கேட்டார். அவள் ஒன்பது மணிக்குப் பன்னிரண்டு நிமிடங்கள் இருப் பதாகக் கூறினாள். அப்பொழுது அவர் F.L. இறந்துவிட்டார் என்று அவளுக்குத் தெரிவித்தார். அப்படி இருக்கமுடியாது என்று அவள் அவருக்குத் தைரியங் கூறினாள். அவர் தான் சொல்வது உண்மை எனக் கூறினார். அடுத்த நாள் F.L. என்பவரின் சகோதரன் சனிக்கிழமை 9 மணிக்குப் பதினைந்து நிமிடம் இருக்கும்போது இறந்துவிட்டார் எனக் கூறினார்.1” ஆவி உடல் 2மரணகாலத்தில் உயிரைத் தாங்கி ஒருவனை அல்லது ஒருத்தியை மறு உலகத்துக்குக் கொண்டு செல்வது காற்றுமயமான இவ் வுடலாகும். நான் பகல் நேரத்திலும் இரவிலும் ஆவிகளைப் பார்த்திருக்கிறேன். நான் அவை களுடன் பேசியுமுள்ளேன். நான் அவைகளின் கையைப் பிடித்துப் பரிசித் திருக்கிறேன். எனக்கும் வேறு பலருக்கும் முன்னிலையில் அவை பரு உடல்போல் வயிரமடைந்து தோற்றமளிப்பதையும் பார்த்திருக்கிறேன். பின்பு அவை படிப்படியே உருவம் கலைந்து மறைந்துவிட்டன. பல முறைகளில் இறந்தவர் ஆவி வடிவில் நின்று சொற்பொழிவுகள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அப் பேச்சுகளில் இவ் வுலக மறு உலக அறிவுக்குரிய செய்திகள் அடங்கியுள்ளன. இவ் வுடலோடு கூடிய உயிர்கள் செய்யமுடியாத பல செயல்களை அவை புரிவதையும் நான் பார்த்திருக் கிறேன். நான் ஒரு எகிப்திய ஆவியோடு பழகியிருந்தேன். அதன் மூலம் நான் பல ஆராய்ச்சிகளை நிகழ்த்தினேன். சிவப்பு வெளிச்சமுள்ள அறை யில் நிகழ்ந்தது வருமாறு. அறையிலிருந்த ஒரு பெண் கையில் வைத் திருந்த மின்சாரச் சூளை(Electric torch) ஆவி தனது கையால் எடுத்துத் தனது முகத்துக் கெதிரே பிடித்தது. எங்கள் காலுக்கு இரண்டு அல்லது மூன்றடி தூரத்தில் வெள்ளை முகில்போன்ற தோற்றம் அறையிலிருந்த ஒன்பது பேருக்கும் தெரிந்தது. இம் மேகம் 18 அங்குலச் சதுரமுடையதா யிருந்தது. அம் மேகத்திலிருந்து நான் பழகியிருந்த ஆவியின் முகம் சிறிது சிறிதாக வெளிப்பட்டுத் தெரிந்தது. கண் மூடப்பட்டிருந்தது. வெள்ளைச் சலவைக் கல்போல் முகம் வெண்மையாயிருந்தது. மூக்கும் கண்களும் உயிருள்ளவர் களின் கண்கள் போன்றிருந்தன. அது மூன்று முறை வெளிச்சத்தைத் தனது முகத்துக்கு நேரே பிடித்தது. நாம் மூன்று முறையும் அதன் முகத்தைத் தெளிவாகப் பார்த்தோம். சிறிது நேரத்தில் ஒருகை எனது இடது கையையும் இடது முழங்காலையும் தொடுவதாக உணர்ந்தேன். முதலில் அது குளிராக விருந்தது. விரைவில் அது வெப்பமாகவும் மனிதக் கை போலவும் மாற்ற மடைந்தது. அதன் விரல்கள் வெப்பமாக விருந்தன. அவை உயிருடைய வர்களின் விரல்போல் அழுத்தமும் வளையக்கூடியனவுமாயிருந்தன. எங்களிற் சிலருக்கு ஆவியின் கைகளிலிருந்து அரிய வயிரக் கற்கள் கிடைத்தன. எனக்கு அழகிய வயிரம் ஒன்று கிடைத்தது. இன்னொருவருக் குக் கறுப்புக் கல் கிடைத்தது. இன்னொருவருக்குச் சிவப்புக் கல் கிடைத்தது. 1934ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் திகதி சிவப்பு முகில் என்னும் என்னோடு வாலாயப்பட்ட எகிப்திய ஆவி வந்தது. அறையில் பதினான்கு பேரிருந்தோம். அறையில் எவராவது எப்பொருளாவது நுழைய முடியாதபடி எல்லாப் புறங்களும் மூடப்பட்டிருந்தன. ஆவிகள் தடித்த வடிவங் கொள்ளவும் நுண்ணிய வடிவங் கொள்ளவும் முடியுமென்பதை அத்தாட்சிப்படுத்த விரும்பினேன். அடுத்த தோட்டத்தில் கூட்டுக்குள் இருக்கும் பறவைகளுள் ஒன்றைப் பூட்டப்பட்டுள்ள எங்கள் அறைக்குள் கொண்டு வரும்படி சொன்னேன். உடனே ஆவி அச் சிறிய பறவைகளி லொன்றை உலோகத் தகடு ஒன்றின் எதிரில் எங்களுக்குக் காட்டி எங்கள் எல்லோரையும் அதைப் பிடித்து அதன் இறக்கைகளைத் தட்டும்படி விட்டது. அப்பறவை மயக்க நிலையில் வெப்பமாக விருந்தது. அதன் வாலிலிருந்து சில இறக்கைகள் பிடுங்கப்பட்டன. இப் பரிசோதனையின் போது ஒருவரும் வெளியே செல்லவில்லை. அறைக்கு ஒரு கதவு மாத்திர மிருந்தது. பின்பு பறவை கூட்டில் விடப்பட்டது. ஆவி உலகில் ஆவிகள் மனிதரைப்போலக் கேட்கவும் கூடுமென்ப தற்கு எனது பரிசோதனைகளில் ஒன்று போதிய சான்றாகும். ஒரு நாள் சாயங்காலம் நான் மாடியில் நின்று எனது மனைவியோடு சில அந்தரங்க கருமங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அதனைக் கேட்பதற்கு அவ்விடத்தில் வேறு யாரும் இல்லை. சிலமணிநேரம் கழித்து நான் சில மைல்களுக்கு அப்பால் இருந்தபோது எனது வாலாயமான ஆவி நண்பன் நான் கூறியவற்றைச் சொல்லி எனக்கு ஆறுதல் அளிக்க வந்தான். நாங்கள் பேசிக்கொண்டிருந்த கருமத்தை எவரும் அறியமாட்டார்கள். அது ஒருவரின் சிக்கலான கருமத்தைப் பற்றியதாகும். இவ்வகையான நிகழ்ச்சிகளைத் தொலைவிலுணர்தல் என இக் கால ஆராய்ச்சியாளர் கூறுவதை நிறுத்தி விட்டனர். நானும் வேறு பலரும் அப்பொழுது மனதில் நினையாத பல கருமங்களைப் பற்றிய செய்திகள் புலப்படாத உலகினின்றும் வந்தன. இவற்றை தெலிபதி என்று கூறமுடியாது. ஆவிகள் காற்றுமயமான தமது உடலை மனித உடல்போல ஆக்கிக் கொண்டு தோன்றவும் முடியுமென்று சொல்லப்படுகிறது. ஆவிகளின் வடிவம் ஆவிகள் இறந்தவரின் வடிவிற் காணப்படுகின்றன. அவைகளின் தலைகளும் மேற் பக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றன. கீழ்ப்பாகங்கள் சிறிது சிறிதாகத் தேய்ந்து நீராவிபோலக் கண்ணுக்குத் தெரியாதவா றிருக் கின்றன. அவைகளின் கால் ஒருபோதும் கண்ணுக்குத் தெரிவதில்லை. 1தெய்வங்களின் கால் நிலத்திற் படிவதில்லை. அவை கண்இமை கொட்டுவ தில்லை எனத் தமிழ் நூல்களில் கூறப்படுவது, மேல் நாட்டறிஞர் ஆராய்ந்து கூறுபவைகளை நன்கு ஒத்துள்ளன. விலங்குகளின் ஆவிகள் விலங்கு களைப் போலவே உள்ளன. இதனை விளக்க ஒரு எடுத்துக்காட்டுத் தருகின் றோம். பின்வருவது ஆவிகள் தொடர்பான பொருளுரைகள் அடங்கிய ஒரு நூலிற் காணப்படுகின்றது. “ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் இரவில் சிறிது நேரம் கழித்து வந்துகொண்டிருந்தார். அவருக்குக் கிராமத்தில் ஒரு வயல் நிலம் இருந்தது. அவர் தனது வீட்டுக்குச் சிறிது தூரத்திலுள்ள ஒரு வயலில் கழுதை பயிரை மேய்ந்துகொண்டு நிற்பதைக் கண்டார். அவர், அதைப் பிடித்துக் கொண்டு வந்து வீட்டில் கட்டிவைத்து, அதன் சொந்தக்காரன் வந்து கேட்கும்போது அதனைக் கொடுக்கலாம் என்று நினைத்தார். அவர் கழுதையைக்கொண்டு வந்து தொழுவத்தில் கட்டப்போகும்போது அது மாயமாக மறைந்து போயிற்று. அவர் உடனே பயமடைந்து தனது தமையன் வீட்டுக்குச் சென்று அவரை நித்திரையினின்றும் எழுப்பி நிகழ்ந்தவற்றைக் கூறினார். காலையில் வயலிற் சென்று பார்த்தபோது பயிர் மேயப்படாமல் அப்படியே இருந்தது. பேய்கள் இறந்தவர்களின் ஆவிகள் சில காலம் இவ்வுலகத்தோடு சம்பந்தப் பட்டு நிற்கின்றன. தற்கொலை புரிந்தவர், அபாயத்தினாற் கொல்லப்பட்டவர், அல்லது மற்றவர்களாற் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள், மரணம் அடைந்த இடத்தில் சிறிது காலங்களுக்குத் தங்கி நிற்கின்றன. இவைகள் இறந்த இடத்தில் ஆவி வடிவில் தோன்றுதலையும் பலருக்குத் தீமை விளைத் தலையும், வீடுகளில் தட்டுதலையும் பொருள்களை எடுத்து எறிதலையும் போன்ற செயல்களைப் புரிகின்றன. இவை போன்ற ஆவிகளையே, மக்கள் முனிகள் பேய்கள் எனக் கூறுவர். இவை பேய்கள் எனவும் படும். கெட்ட ஆவிகள் இவ்வுலகில் சில காலம் தங்கி நிற்கின்றன. அவை மக்களைப் பிடித்தால், அவர் தனது சொந்த அறிவோடு இருப்பதில்லை. பேயாற் பிடிக்கப்பட்டவரின் கையில் நெருப்புக் கொளுத்தி வைத்தால் அது அவரைச் சுடாது. 1“சீனர் ஆவிகளுக்கு மிக அஞ்சுவர். அவர்கள், கெட்ட ஆவிகள் நல்ல ஆவிகள் என, ஆவிகளை இரண்டு வகையாகப் பிரிப்பர். நல்ல ஆவி களைக் குறித்து அவர்கள் சிறிதும் அஞ்சுவதில்லை. கெட்ட ஆவிகளுக்கு அவர்கள் பெரிதும் அஞ்சுவர். இவை இருண்ட இடங்களில் தங்கியிருந்து காரணமின்றி வழிப்போக்கருக்குத் துன்பஞ் செய்கின்றன. ஒருவரால் துன்புறுத்தப்பட்டவரின் ஆவி மிகவும் அஞ்சத்தக்கது. வாங்கிய கடனைக் கொடுக்காது ஏய்க்கும் ஒருவனைப் பழிவாங்குவதற்குக் கடன் கொடுத்தவன் அவன் வீட்டு வாயிலில் நஞ்சு தின்று இறப்பான். கொடுமையாக நடத்திய மாமியாரைப் பழிவாங்குவதற்கு மருமகள் தூங்கி இறப்பாள்”. இங்குக் கூறியவை இறந்த ஆவிகளே பேயாக மாறுகின்றன என்பதற்குப் போதிய சான்றுகளாகும். ஆவிகளைப் பற்றிய சில செய்திகள் இங்குக் கூறப்படும் செய்திகள், ஆவிகளைப் பற்றிய நூல்களி லிருந்து எடுக்கப்பட்டவை. எடுத்தாளப்பட்ட நூற் பெயர்கள் அடிக்குறிப் பில் காட்டப்பட்டுள்ளன. 1. “1885ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் ஒருநாள் யான் மடேரியா (Madeiria) என்னும் இடத்திலே ஒரு விடுதியில் படுத்து உறங்கினேன். நிலவு வெளிச்சம் இருந்தது . சன்னலுக்கு வலை போடப்பட்டிருந்தது. யாரோ ஒருவர் அவ் வறைக்குள் இருப்பதை நான் உணர்ந்தேன். 25 வயதுள்ள வாலிபன் நிற்பதைக் கண்டேன். அவன் நான் படுத்திருப்பதற்கு நேராகத் தனது வலது கை விரலை நீட்டிக் காண்பித்தான். நான் உடனே எழுந்து என்ன வேண்டுமென்று கேட்டேன். யாதும் விடை வரவில்லை. மறுமொழி சொல்லாமையால் நான் அவனைக் கையால் அடித்தேன். ஆனால், கை எட்ட வில்லை. யான் படுக்கையை விட்டுக் குதிக்க முயன்றபோது, அவ் வுருவம் சன்னல் வழியாக மறைந்துவிட்டது. அவ் வறையினுள் மரணமடைந்த ஒருவனின் ஆவி வருகின்றதென்று பின்பு விசாரணையால் அறிந்தேன்.”2 2. “எனது நண்பர் ஒருவர், ஒரு முறை பெரிய சத்தம் ஒன்று, சுவரிலிருந்து வருவதைக் கேட்டுப் பயம் அடைந்தார். வெளிச்சுவருக்குப் பக்கத்தில் வேறு கட்டடம் எதுவும் இல்லை. இந் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் ஒருநாள் மாலை 9 மணியளவில் உண்டாயிற்று, வெளியே ஒருவரும் காணப்படவில்லை; வெளியே நல்ல வெளிச்சம் இருந்தது. உள்ளேயிருந்து சத்தம் வருவதற்குரிய காரணம் ஒன்றும் இருக்கவில்லை அச் சத்தத்தைக் கேட்ட நண்பருக்குப் பயத்தினால் காய்ச்சல் உண்டாகிவிட்டது. இச் சத்தம் உண்டாவதற்கு இருபது நிமிடத்துக்கு முன், நண்பருடைய சகோதரர் அபாயத்துக்குட்பட்டு மரணமானார் எனத்தெரிந்தது.1” 3. நாற்பத்தெட்டு ஆண்டுகளின்முன் செந்தனாக்(Sentanac) என்னும் இடத்தில் பீற்றோ என்னும் உபதேசியார் மரணமானார். அதன்பின்பு, தேவாலயத்தில் யாரோ நாற்காலிகளைத் தூக்குவது போலவும், நடப்பது போலவும், மூக்குத்தூள் சிமிழைத் திறப்பது போலவும், மூக்குத்தூளை மூக்கி லிட்டு உறிவது போலவும் இராக்காலங்களில் சத்தங்கள் கேட்டன. இவ்வாறு நீண்டகாலம் நடைபெற்றது. உபதேசியாரின் ஆவியே அவ்வாறு செய் கின்றதெனச் சிலர் கூறினார்கள் அதனைக் கேட்டுக் கிராமத்திலுள்ளவர்கள் பரிகாசம் செய்தார்கள். தேவாலயத்தின் அயலே குடியிருந்த அந்தோனி, கெல்லி என்னும் இருவர் இச் சத்தங்கள் உண்டாவதன் காரணத்தை நேரில் அறிய விரும்பினார்கள். ஒரு நாள் இருவரும் துப்பாக்கியையும் கோடாரியை யும் கொண்டு இராப்பொழுதைத் தேவாலயத்திற் கழிக்கச் சென்றார்கள். அவர்கள் சமையலறையில் தீமூட்டி எரித்துக் குளிர்காய்ந்தபின், கிராமத்த வர்களின் அறியாமையைக் குறித்துப் பேசிவிட்டுப் படுத்து நித்திரை யானார்கள். அப்பொழுது அவர்களுக்கு எதிரேயுள்ள அறையில் சத்தம் கேட்டது; நாற்காலிகள் அசைந்தன. யாரோ அங்கும் இங்கும் நடந்து செல்லும் ஓசைகேட்டது. பின்பு ஒருவர் படிக்கட்டில் இறங்கிச் சமைய லறைக்குச் சென்றார். யார் வந்தாலும் வெட்டுவதற்கு ஆயத்தமாக அந்தோனி கோடாரியை மறைத்து வைத்துக்கொண்டு சமையலறைக் கதவுப் பக்கத்தே நின்றான். கெல்லி துப்பாக்கியைத் தோளோடு அணைத்து வைத்துக் கொண்டு சுட ஆயத்தனாக நின்றான். சமையலறைக்குச் சென்றவர் மூக்குத் தூளில் ஒரு சிட்டிகை எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினார். சமைய லறைக்குச் செல்வதற்குப் பதிலாக ஆவி கூடத்துக்குச் சென்றது. அங்கே அது உலாவிக்கொண்டு நின்றது. இருவரும் தமது ஆயுதங்களுடன் கூடத்துக்குச் சென்றார்கள். அங்கு ஒன்றும் காணப்படவில்லை. அவர்கள் மாடிக்குச் சென்று எங்கும் தேடிப்பார்த்தார்கள். நாற்காலிகள் எல்லாம் அப்படியே இருந்தன. அப்பொழுது அவர்கள் இறந்தவரின் ஆவியே சத்தம் செய்கின்றதென்னும் முடிவுக்கு வந்தார்கள். பீற்றோவுக்குப் பின் மொன்சூர்பெரி என்பவர் உபதேசியாராக வந்தார். மேரி கல்வெற் என்பவள் அவரது வேலைக்காரி. ஒருநாள் அவள் சமையல் ஏனங்களைச் சுத்தஞ் செய்து கொண்டிருந்தாள். எசமானர் அடுத்த கிராமத்துக்குப் போயிருந்தார். அப்பொழுது ஒருவர் பேசாது அவளுக்கு முன்னே செல்வதைக் கண்டாள். அப்பொழுது அவள் அவரைத் தனது எசமானர் என்று கருதி, “என்னைப் பயப்படுத்த நினைக்கவேண்டாம். இறந்துபோன பீற்றோ திரும்பி வந்து விட்டாரென நான் ஒரு போதும் நினைக்கமாட்டேன்” என்று சொன்னாள். தனது எசமானர் என்று கருதியவர் பேசாததினால் அவள் உருவம் சென்ற திசையை நோக்கினாள். ஒன்றையும் காணவில்லை. அவள் பயம் அடைந்து உடனே அந் நிகழ்ச்சியை அயலவர்களுக்குச் சொன்னாள்.”* 4. “கீழ்வரும் நிகழ்ச்சி 1812ஆம் ஆண்டு எனது தந்தையின் வீட்டில் நிகழ்ந்தது. ஒருநாள் இராப் பத்து மணியளவில் எனது தாய் சமையலறை யில் யாதோ வழக்கமல்லாத சத்தத்தைக் கேட்டு விழித்தெழுந்தாள். அவள் உடனே எனது தந்தையை எழுப்பிச் சமையலறைக் கதவை மூடிவிட்டு வரும்படி சொன்னாள். சமையலறையில் நாய் புகுந்து சத்தம் செய்கின்றதென அவள் நினைத்தாள். கதவைத் தாழிட்டதைப்பற்றித் திடமாயிருந்த தந்தை அவள் கேட்ட சத்தம் கனவாயிருக்கலாம் என நினைத்தார். பத்து நிமிங் கட்குப்பின் மறுபடியும் சத்தம் கேட்டது. அப்பொழுதும் எனது தாய், தந்தையை எழுப்பினாள். அப்பொழுதும் அவர் இதனைக் கருத்திற்கொள்ள வில்லை. ஆனால் நித்திரை கொள்ளாது அவர் எழுந்திருந்தார். அப்பொழுது சமையற் பாத்திரங்களை நாய் தட்டி விழுத்துவது போன்ற சத்தம் கேட்டது. உடனே அவர் வெளிச்சத்தை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றார். எல்லாம் இருந்தபடியே இருந்தன. அவர் படுத்துச் சிறிது நேரத்துக் கெல்லாம் சமையலறையில் இருந்து பெரிய இரைச்சல் கேட்டது. உடனே அவர் வீட்டு அறைகள் எல்லாவற்றிலும் சென்று பார்த்தார். சத்தம் ஓயாது வந்து கொண்டிருந்தது. பின்பு அவர் வெளியே படுத்திருந்த வேலை யாட்கள் எல்லாரையும் எழுப்பி வீடு முழுவதையும் ஆராய்ந்து பார்த்தார். எவரையும் காண முடியவில்லை. ஆனால் சத்தம் மாத்திரம் ஓயவில்லை. இப்பொழுது சத்தம் சாப்பிடும் அறைக்குள் கேட்டது. மேலே இருந்து இருபது அல்லது முப்பது இராத்தல் பாரமுள்ள கல் விழுவதுபோற் சத்தம் கேட்டது. இச் சத்தத்தைக் கேட்ட அயலார் பலர் வந்து சேர்ந்தார்கள். சத்தம் காலை நாலு மணியளவில் ஓய்ந்தது. பகல் ஏழு மணிக்கு ஒருவர் வீட்டுக்கு வந்தார். எங்கள் உறவினரில் ஒருவர், இரவு பத்துமணிக்கும் பதினொரு மணிக்கும் இடையில் இறந்தார் என்றும் இறப்பதன் முன் தனது சிறுவனின் பாதுகாப்புப் பொறுப்பை எனது தந்தை ஏற்கவேண்டுமென விரும்பினா ரென்றும் அவர் கூறினார். எனது தந்தை அதற்கு மறுத்துவிட்டார். எனது தாய் இக் காரணத்தினால் இச் சத்தம் உண்டாயிருக்கலாம் என நினைத்து எனது தந்தையை இறந்தவரின் விருப்பத்துக்கு இணங்கும்படி வேண்டி னாள். அவர் அதற்கு இணங்கவில்லை. சத்தம் மறுபடியும் கேட்டால் தான் அதற்கு இசைவதாகக் கூறினார். அவர் அச் சத்தம் யாரோ தனது எதிரிகளால் செய்யப்பட்டதென எண்ணியிருந்தார். அவர் இரண்டு தடியர்களை வீட்டில் படுத்து உறங்கும்படி செய்தார். அடுத்த இரவின் நடுச்சாமத்தில் முந்திய இரவிலும் பார்க்கப் பலத்த சத்தம் உண்டாயிற்று. எனது தந்தை எழுந்து இருவருக்கும் இதனை அறிவித்தார். சத்தத்தைக் கேட்ட இருவரும் பயத்தி னால் எழும்ப மறுத்தார்கள். அவர்களின் உடல் முழுமையும் வியர்வையால் நனைந்தது. எனது தந்தை வேலையாட்களுடன் அறைகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்தார். ஒருவரும் காணப்படவில்லை. பின்பு அவர் எனது தாயின் எண்ணத்துக்கு இசைந்து இறந்தவரின் எண்ணத்தை நிறைவேற்றினார்.1 5. 1855ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆலுஸ்(Aulus) என்னும் வெந்நீர் ஊற்றுக்களின் சொந்தக்காரன் மரணமானான். உடனே அங்கிருந்த வீட்டில் வழக்கமல்லாத சத்தங்கள் கேட்டன. அறையிலுள்ள கணக்குப் புத்தகங்களைப் புரட்டும் சத்தம் கேட்டது. மெழுகுதிரியைக் கொளுத்திப் பார்த்தபோது அங்கு யாரும் காணப்படவில்லை. சில சமயங்களில் ஆள் நடப்பது போலவும், மாடிப்படியில் ஏறுவது போலவும், கட்டிலைத் தூக்குவது போலவும், நிலத்தில் சுத்தியால் அடிப்பது போலவும் சத்தங்கள் கேட்டன. பகல் நேரங்களிலும் இவ் வகைச் சத்தங்கள் உண்டாயின. ஒரு நாள் சுங்க அதிகாரி ஒருவர், மலையிலிருந்து வரும்போது கட்டடம் விழப்போவது போன்ற பயங்கரமான சத்தம் ஒன்றைக் கேட்டார். காவற்காரனின் அறைக்குப் பக்கத்தில் பெண் ஒருத்தி ஒரு நாள் படுத்திருந்தாள். கண்ணுக்குப் புலப் படாத ஒரு கை அவளின் படுக்கைத் துணியை இழுத்தது. உடனே அவள் அறையைவிட்டு வெளியே ஓடிச் சென்றாள். 1872 வரை இவ்வாறு நடந்து பின்னர் இக் குழப்பங்கள் குறைய ஆரம்பித்தன.2 இயக்கம் (Vibration) நீ தூரத்திலுள்ள நண்பனொருவனோடு பேச விரும்பும்போது நீ தெலிபோன் கருவியைத் துணைக்கொண்டு பேசுகிறாய். அவ்வியந்திரம் ஒலியைக்கொண்டு செல்வதால் நீ அவ்வாறு செய்கிறாய். கம்பி மூலம் ஓசையைக்கொண்டு செல்லாத ரேடியோ மூலமும் நீ பேசலாம். நீ மறு உலகி லுள்ள நண்பனொருவனொடு பேசவிரும்பினால் நீ ஒரு மனித இயந் திரத்தைப் பயன்படுத்துகிறாய். அது மீடியம்(medium) எனப்படும். இவ்வாறு பயன்படுத்தப்படும் ஆண் அல்லது பெண் இவ்வகையான ஆற்றலைப் பெற்றிருக்கின்றார். அவர்கள் சாதாரண மக்களைவிடச் சிறப்பான ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள் கண்ணுக்குப் புலப்படாத உலகங்களைப் பார்க்க வும் அங்குள்ளவர்கள் பேசுவதைக் கேட்கவும்கூடிய ஆற்றலுடையவர்கள். இவ்வகையான ஆற்றல்கள் உண்டு எனபதைப் பருப்பொருள் விஞ் ஞானிகள் ஒருபோது மறுத்தார்கள். இவ்வகை ஆற்றல்கள் உண்டென்பது பலகாலங்களாகக் கிடைத்துள்ள உண்மைச் செய்திகளால் நிலை நாட்டப் பட்டுள்ளது. ஒரு மீடியமாய் இருப்பதற்கேற்ற ஆற்றலை என்ன அளிக்கின்றது. அவர்களின் மனக்கண்ணும் காதும் அளவுகடந்த உணர்ச்சியுடையனவாய் மற்றவர்கள் அறிய முடியாத இயக்கங்களை அறிகின்றன. சுருங்கக் கூறின் அவை மனித பூதக்கண்ணாடிகளும் மனிதத் தொலைநோக்கிகளுமாகும். அவைகளை உயர்ந்த சத்திவாய்ந்த மனித ரேடியோக்கள் என்றும் கூறலாம். நீ அடுத்த உலகிலுள்ள நண்பரொருவரோடு பேச விரும்பும்போது நீ மீடியத்தின் நுட்பமான கண்ணையும் காதையும் பயன்படுத்துகின்றாய். இது தெளிவான அறிவு. இதில் மயக்கந் தருவதோ துயரம் தருவதோ எதுவும் இல்லை, தொடுதலால் உண்டாகும் உணர்ச்சியும் பேச்சினால் உண் டாகும் ஒலியும் இயக்கத்தினால் பரவுகின்றன என விஞ்ஞானிகள் கூறுகின் றனர். சுருங்கச் சொல்லின் உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் இயக்கத் துக்குட்பட்டிருக்கின்றன. சில மெதுவாக இயங்குகின்றன; சில வேகமாக இயங்குகின்றன. மனிதராகிய நாம் சுருங்கிய இடத்திலுள்ள இயக்கங்களை மாத்திரம் அறியவல்லோம். ஒலிபெருக்கி தெலிபோன் கருவிகளால் நாங்கள் இயக்கங்களை அறியும் அறிவு விசாலிக்கிறது. எங்களின் அறிவுக் கெட்டாதனவும் மரணத்துக்கு அப்பாலுள்ளவுமாகிய உலகங்களின் செய்தி களை நாம் மீடியங்களைப் பயன்படுத்தி அறியலாம். எல்லா மீடியங்களின் தொழிலும் கண்ணுக்குப் புலப்படும் உலகினதும் புலப்படா உலகங்களினதும் இயக்க சம்பந்தமான தடையைத் திறந்துவிடுதலாகும். நாம் இறந்தவர்களின் ஆவிஉடலைப் பார்க்க முடியாமலிருப்ப தற்குக் காரணம் அவை சடப்பொருள்களாலான எங்கள் உடலிலும் பார்க்க வேகமாக இயங்குவதாலாகும். நாங்கள் பார்க்க முடியாவிட்டாலும் இவ் வாவிகள் நாம் நித்திரை கொள்ளும்போதும் விழித்திருக்கும்போதும் நமக்குப் பக்கத்தே இருக்கின்றன. அவை விஞ்ஞானிகளாலும் பொதுமக்க ளாலும் நிழற்படம் பிடிக்கப்பட்டுள்ளன. அவை எப்பொழுதும் நம்மோடு பேச எதிர்பார்த்திருக்கின்றன. பேச அதிகம் விரும்புகிறவர்கள் நாங்களல்லர்; அவையே எங்களோடு பேச விரும்புகின்றன. எங்களுக்கு உதவி புரிய அவற்றிற்கு நாம் சமயம் அளிப்பதால் அவை ஆவி வளர்ச்சி சம்பந்தமான மேல் நிலையை அடைகின்றன. ஒருவருக்கு ஒருவர் உதவி அளிக்கும் இயல்பினாலேயே எல்லா உயிர்களும் நிலைபெறுகின்றன. ஆவி ஆராய்ச்சியாளர் அவை செய்யும் சாதாரணமல்லாத நிகழ்ச்சி களைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாத உலகங்களைப்பற்றி அறிகி றார்கள். இறந்த ஆண்களும் பெண்களும் பேசுவதையும் அவர்கள் கேட் கிறார்கள். இவ் வாராய்ச்சிக்காரருள் ஒருவர் மீடியமாயிருப்பின் அவ்வுலகங் களில் என்ன நடக்கின்றன என்று அறிகின்றார். “நான் இவ்வுலகத்தவ ரிடையே இருப்பதிலும் பார்க்க ஆவி உலக மக்களிடையே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என்று ஒரு மீடியம் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். தாம் ஆவிகளைக் காணாமையினால் ஆவி உலகம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். மிக வேகமாகச் சுழலும் வாள் கண்ணுக்குத் தோன்ற மாட்டாது. கண்ணுக்குத் தோன்றாவிட்டாலும் கைவிரலை நீட்டினால் அது வெட்டிவிடும். சுழலும் விசை குறைந்தவுடன் அது கண்ணுக்குப் புலப்படு கின்றது. சில சமயங்களில் சாதாரண மக்கள் ஆவியைக் காண்கிறார்கள். இறந்தவரின் ஆவி மனிதரின் கண்களுக்குப் புலப்படும்படி தனது இயக்கத் தின் வேகத்தைக் குறைப்பதினாலேயே இது உண்டாகின்றது. இவ்வாறு தோன்றுவதற்கு மீடியத்திடமும், கூட இருப்பவர்களிடமு மிருந்து ஒருவகை உயிர்ச் சத்தை(ectoplasm) ஆவிகள் இரவல் பெறுவது வழக்கம். எங்கள் எல்லாரிடமும் வெள்ளிய புகைபோன்ற இவ் வகைச் சத்து உண்டு. இது பலமுறைகளில் நிழற்படம் பிடிக்கப்பட்டுள்ளது. நீ உனது இறந்துபோன தாய் அல்லது தந்தையோடு பேச விரும்பி னால் அவர்களோடு பேசவிடும்படி நீ மீடியத்தைக் கேட்கிறாய். இது ஒரு தெலிபோன் இணைப்பிலுள்ள பெண்ணை இவ்வாறு செய்வதற்குக் கேட்பது போன்றது. மீடியம் மயக்க நிலையில் அல்லது விழிப்பு நிலையி லிருந்து தனது மனத்தையும் உடலையும் நீ விரும்பியவரோடு பேசுவதற்கு இணைத்துவிடுகிறது. ஆவிகளுடன் பேசுதல் 1 ஆவிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்வோர் ஆவிகளோடு பேசியிருக் கிறார்கள். ஆவிகளுக்கு நேரில் பேசும் ஆற்றல் இல்லை. இவை சிலர் மூலம் பேசுகின்றன. ஆவியுடன் பேசுவோர் ஒருவகை மயக்க நிலை அடைகின் றனர். அப்பொழுது கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் மறுமொழி சொல்லு கிறார்கள். எவரது ஆவி பேசுகின்றதோ அவ்வாவிக்குரியவரின் குரல் போல் பேச்சு இருக்கின்றது. சில சமயங்களில் கேட்கும் கேள்விகளுக்கு விடைகள் எழுதப்படுகின்றன. இவ்வாறு ஆவிகளுடன் பேசிய விவரங்கள் பல, புத்தகங்களாக வெளிவந்துள்ளன. எங்கள் நாட்டிலும் இது அறியப் பட்டிருந்தது. இது பல பொய்ச் செயல்களோடு கலந்திருப்பதால் உண்மை அறியமுடியாமல் இருக்கிறது. உலகில் எல்லா நாடுகளிலும் வெளிப்பாடு கூறுதலில்(oracle) நம்பிக்கை இருந்துவந்தது. வெளிப்பாடு கூறுகின்ற வனின் வாக்கு அவன்மீது தெய்வமேறிக் கூறுவதாகக் கருதப்பட்டது. “சோதிடம் சொல்லுதல்” என வாய்ப்புக் கூறுவோர் அனுமானோ, மலை யாள பகவதியோ, தொட்டியத்துச் சின்னானோ, வேறு ஒரு தெய்வமோ, தமது நாவிலிருந்து கூறுவதாகக் கூறுகின்றனர். இவையெல்லாம் ஆவி பேசுதல் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டனவே. பேய்பிடித்தவனின் பேச்சுக்கள் பேயின் கூற்றாகவே கருதப்படு கின்றன. ஆவி பேசுதலுக்கு உதாரணமாக ஒரு யோகியின் செயலை இங்குத் தருகின்றோம். “1 நான் இராமானுச யோகியுடன் சிலகாலம் தங்கியிருந்தேன். எனக்கு ஒரு வயதுள்ள ஒரு மருமகன் குழந்தை இருந்தான். அவர் அக் குழந்தை யைத் தனக்கு எதிரே கொண்டுவந்து இருத்தும்படி கூறினார். நான் அப்படியே செய்தேன். அவர் அக் குழந்தையைத் தனது போர்வையால் மூடினார். அவர் வைத்திருந்த பிரம்பினால் குழந்தையைத் தட்டினார். உடனே குழந்தை வீர ஆசனம் என்னும் யோக இருக்கையில் இருந்து கொண்டு தமிழ்ப்பாடல்கள் மூலம் இராசயோகத்தைப் பற்றிப் பேசிற்று. இது நடக்கும் போது நான் யோகியைக் கவனித்தேன். அவர் உடல் அசைவற் றிருந்தது. மயக்கத்தில் இருக்கிறார் என நினைந்து அவரை எழுப்ப முயன்றேன். முதலில் அவர் உடல் கட்டை போல இருந்தது. பின்பு விழித் தெழுந்தார். உடனே குழந்தை அழத் தொடங்கிற்று. அவர் குழந்தைக்குப் பால் கொடுக்கும்படி சொன்னார்.” ஆவிகளுடன் பேசுகின்றவர் “மீடியம்”(medium) எனப்படுவர். இராக்காலத்தில்தான் ஆவியுடன் பேசுவார்கள். ஒரு அறையில் மேசை இடப்பட்டிருக்கும். மேசையின் பக்கத்தில் திரைச் சீலை தொங்கவிடப்பட் டிருக்கும். ஆவியோடு பேசுபவரின் பக்கத்தே சிலர் இருப்பார்கள். அறையின் சன்னல்கள் எல்லாம் நன்றாக அடைக்கப்படும். அப்பொழுது ஆவியுடன் பேசுகின்றவர் மயக்க நிலையை அடைவார். அவர் மூலம் ஆவி பேசும். பக்கத்தே இருப்போர் கேள்விகளைக் கேட்பார்கள். அவை களுக்கு ஆவி “மீடியம்” மூலம் விடை அளிக்கும். இவ்வாறு, ஆவி களுடன் பேசிய பேச்சுக்கள் புத்தக வடிவில் வெளிவந்துள்ளன. ஆவிகள் தாம் குறிக்கப்பட்டவர்களின் ஆவிகள்தான் என்று உறுதிப்படுத்தும் பொருட்டுத் தமது வாழ்நாளில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளைக் கூறும். கீழ் வருவது ஒரு ஆவி பேசியதைப் பற்றிய நிகழ்ச்சியாகும். “2நான் ஒரு முறை ஆவியுடன் பேசும் ஒருவருடன் அறையில் இருந்தேன். அப்பொழுது எனது நண்பர்களும் இருந்தார்கள். கதவுகளும் சன்னல்களும் அடைக்கப்பட்டன. நான் தரையையும் பலகை அமைக்கப் பட்ட உட்கூரையையும் நன்றாகப் பரிசோதித்தேன். பின்பு விளக்கு அணைக்கப்பட்டது. ஆவியோடு பேசுபவர் நாற்காலியோடு நன்றாகக் கட்டப்பட்டார். நான் அவருக்குப் பக்கத்தில் இருந்தேன். ஒருவர் மெல்லிய குரலில் சமயத் தொடர்பில்லாத ஒரு பாட்டுப் பாடினார். சிறிது நேரத்தில் ஆவியோடு பேசுகின்றவர் மயக்கநிலை அடைந்தார். அதற்கு அடையாள மாக அவர் பேசத் தொடங்கினார். முதலில் அவர் பேச்சுத் தடைப்பட்டு வந்தது. பின்பு அவர் ஆவியின் குரலில் மிகவும் உணர்ச்சி ததும்பப் பேசினார். அவ்வகையான உணர்ச்சியுடைய பேச்சை நான் இதற்கு முன் ஒருபோதும் கேட்கவில்லை. ஆவியுடன் பேசியவர் சாதாரண நாட்களில் மிக அமைதியாக விருப்பார். அவர் இவ்வகையாக ஒருபோதும் பேசின தில்லை. அவ்வாறு பேசவும் அவருக்குத் தெரியாது. பேச்சு நல்ல தொனி யுடையதாயும், வாக்கியங்கள் அழகாகவும் அமைந்திருந்தன. அவருடைய பேச்சைக் கேட்ட சில பெண்களின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. நான் உபதேசியாரின் ஆவி, மனிதன் மூலம் பேசுகின்றதோ? என்று சொல்லி, அப்படியானால் சில அடையாளங்கள் செய்யும்படி கேட்டேன். உடனே ஆம் என்னும் விடை வந்தது. பின்பு சிறிது நேரம் அமைதி நிலவிற்று. சிறிது நேரத்தில் எனது முகத்தில் குளிர் காற்று வீசிற்று. கதவுகளும் சன்னல் களும் அடைக்கப்பட்டிருந்தமையால் அவ்வகைக் காற்று வருவதற்குக் காரணம் அறியமுடியாமல் இருந்தது. உடனே ஒரு கை எனது கையைத் தடவ ஆரம்பித்தது. நான் உடனே மடித்திருந்த கைவிரல்களில் இரண்டை நீட்டி ஆவியின் கையைத் தடவிப்பார்த்தேன். அது காற்றுப்போல இருக்கும் என நான் நினைத்திருந்தேன். ஆவிகளுக்கு நாம் தடவிப் பார்த்து உணரக்கூடிய உடல் இல்லை என்று நான் பிறர் சொல்லக் கேட் டிருக்கின்றேன். அக் கையை நான் நன்றாகப் பிடிக்கக் கூடியதாயிருந் ததைக் கண்டு மிக வியப்படைந்தேன். அது பொதுவான கையைவிடப் பெரியதுபோல எனக்கு இருட்டில் தோன்றிற்று. ஆவியின் கை எனது கையைத் தடவும்போது நான் எல்லாப் பக்கங்களிலும் காலை நீட்டி உதைத்துப் பார்த்தேன். ஆவியோடு பேசும் “மீடியத்தின்” கையாயின், கைக்குப் பக்கத்தில் அவர் உடல் இருக்கும் என நான் நினைத்தேன். இப்பொழுது எனது கையைத் தடவிய கை நொய்வுடையதாகத் தோன்றிற்று. தெரிந்து கொண்டாயா என்று ஆவி கேட்டது. நான் உடனே மயக்கமாக இருக்கின்றதென விடைகூறினேன். ஆராய்ந்து பார்; உண்மை வெளிப்படும் என ஆவி கூறிற்று.” இன்னொரு வியக்கத்தக்க நிகழ்ச்சியை இங்குத் தருகின்றோம். அது வருமாறு: “1சிறிய மேசை ஒன்றின் மீது ஒரு வாத்தியப் பெட்டி வைக்கப்பட் டிருந்தது. அறையில் கம்பளம் விரித்திருக்கவில்லை. வேறு ஒருவகையான அலங்காரங்களும் அங்கு இருக்கவில்லை; ஆறு நாற்காலிகள் மாத்திரம் அறையில் இருந்தன. அவை ஒன்றில் ஆவியுடன் பேசுகின்றவர் இருந்தார். இன்னொன்றில் நானும், மற்றவைகளில் எனது நண்பர்களும் இருந்தார்கள். இரண்டு மெழுகு திரிகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தன. பின்பு அறை யின் மத்தியிலுளள ஒரு வட்டத்துள் எக்காளம்(Trumpet) ஒன்று வைக்கப் பட்டது. மெழுகு திரிகள் அணைக்கப்பட்டன. சிறிது நேரத்தில் வாத்தியப் பெட்டியினின்று ஓசை எழுந்தது. பின்பு எக்காளம் அசையத் தொடங்கிற்று. அது அந்தரந்தில் எழுந்து மிதந்தது. எக்காளத்தின் மினுக்கான பகுதி வந்து மூன்று முறை எனது முழங்காலில் முட்டிற்று. அது மிதந்து வந்து எல்லா ரிடமும் சென்றது. மனிதரின் சூழ்ச்சி எதனாலும் இவ்வாறு செய்யமுடியாது. அதனைக் கண்டு எனக்கு மிக வியப்பு உண்டாயிற்று. பின்பு அவ் வெக்காளத்தின் உள்ளேயிருந்து நண்பர்களே மாலை வணக்கம் என்னும் ஒரு ஓசை எழுந்தது. “முன் இவ்வுலகத்தில் வாழ்ந்த எவரின் ஆவி நீ” என்று நான் கேட்டேன். அது தனது முழுப் பெயரையும் கொடுக்க விரும்பவில்லை. பின்பு அது மெல்லிய குரலில் வில் குரூக்ஸ்(Will Crooks) என்று கூறிற்று. அவரது மரணத்துக்கு முன் அரசாங்க சபையில் சந்தித்த போது, அவர் பேசிய குரல்போல அத் தொனி இருந்தது. “நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன். நான் அரசியல் தொடர்பான உதவிகளைச் செய்ய விரும்புகிறேன். போனர்லோ(Bonar Low) என்பவர் இங்குத்தான் இருக்கின்றார். நான் எனது பழைய கருத்துகளை மாற்றிக் கொண்டேன். நான் கருமங்களை நன்றாக அறிகின்றேன். குடியேற்ற நாடு களுக்கு முழுப் பாதுகாப்பையும் அளிக்கவேண்டும்” என்னும் வார்த்தைகள் வந்தன. குரூக்ஸ் பிற்போக்காளரில் ஒருவர். அவர் இவ்வாறு பேசியது எனக்கு வியப்பை அளித்தது. போனர்லாவோடு பழகியதால் இக்கருத்து உண்டாயிற்றோ என்று என்னாற் கேளாமல் இருக்க முடியவில்லை. குரூக்ஸ் பேசும்போது தனக்கு எதிரில் கிளாஸ்டனின் வடிவம் தோன்றிற்று என்று “மீடியம்” கூறினார். ஆவிகள் உண்டு என்பதற்குரிய சான்றுகள் “ஆவிகளின் ஒளிகள் காணப்பட்டன. மனித ஓசை போன்ற சத்தங்கள் கேட்டன; மனிதனுடைய முயற்சியில்லாமல் எழுத்துகள் தோன்றின; தமது உறவினருக்குப் பக்கத்தே நிற்கும் ஆவிகளின் நிழற்படங்கள் பிடிக்கப் பட்டன; ஆவிகளுடன் பேசும் அறைகளில் ஆவிகள் கண்ணுக்குத் தெரியக் கூடிய வடிவில் தோன்றின; ஆவிகளோடு பேசும் சிலர் அந்தரத்தே தூக்கப் பட்டார்கள்; சுவர் போன்ற வயிரமான பொருள்களுக்கூடாக பிற வயிரமான பொருள்கள் கொண்டுவரப்பட்டன; கயிற்று முடிச்சுகள் கண்ணுக்குப் புலப் படாத கைகளால் அவிழ்க்கப்பட்டன; சேர்த்துக் கட்டப்பட்ட கற்பலகை களின் இடையே செய்திகள் எழுதப்பட்டன; மேசைகள் அந்தரத்தே உயர்த் தப்பட்டன. பிளஞ்சட் என்னும் கருவிமூலம் அறியமுடியாத செய்திகள் எழுதப்பட்டன. ஒருவரது இரகசியமான செய்திகள் வெளியிடப்பட்டன. இவ்வகையான நிகழ்ச்சிகள் ஆவிகள் உண்டு என்னும் உண்மையை நிலைநிறுத்துகின்றன.1 மரணம் அஞ்சத்தக்கதன்று மரணம் மக்கள் எல்லோராலும் பெரிதும் அஞ்சத்தக்க தொன்றா யிருக்கின்றது. அதற்குக் காரணம், மரணமென்றால் என்ன? அதற்குப்பின் நிகழ்வது என்ன? என்பவைகளைப்பற்றி அறிந்து கொள்ளாமையேயாகும். மரணம் என்பது ஒரு நிலையின் முடிவு; ஆனால் உயிர் செல்லும் பயணத்தின் முடிவன்று; இன்னும் செல்லவேண்டிய பாதையின் தொலைவு எமது நினைவினால் அறியமுடியாதது. மரணமென்பது, தான் வாழும் உடலாகிய சடப்பொருளைத் தொழிற்படுத்தும் வல்லமையை இழந்து உயிர் வெளியேறுதலாகும். நாங்கள் பிறக்கும்பொழுது எங்கள் முன் நிலை மையை மாற்றிக் காற்றுள்ள இவ்வுலகுக்கு வருகின்றோம். மரணத்தின் போது இந்நிலையை மாற்றி இன்னொரு பிறப்பே யாகும். ஆகவே அதற்கு நாம் அஞ்சவேண்டியதில்லை. இறந்தவர்களின் ஆவிகள் கூறியுள்ள செய்திகளால் மரணம் வருத்தம் விளைப்பதன்று என்றும், மரணத்துக்குப் பிற்பட்ட வாழ்வு, மிக மகிழ்ச்சிக்கிடனாயுள்ள தென்றும் தெரிகின்றன. அவைகளைப் பின் கூறப்படுபவைகளைக் கொண்டு அறிக. உயிர் உடலை விட்டு நுண்ணிய உடலோடு வெளியேறும்போது வாழ்நாளில் நிகழ்ந்தவற்றின் காட்சிகள் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக நினைவில் வருகின்றன. மனிதன் இறந்தவன் போலத் தோன்றலாம். நாடித் துடிப்பு இருதயத் துடிப்பு நின்றதற்கும், உடம்பில் வெப்பம் அகன்று போவ தற்கு மிடையிலுள்ள சில விநாடிகளில் மூளை நினைக்கின்றது. அப்பொழுது உயிர் தனது வாழ்க்கையில் நிகழ்ந்தவைகளை எல்லாம் தெளிவாக அறிகின்றது. மரணப் படுக்கைக்குப் பக்கத்தே உதவிக்கு இருப்பவர்கள் மெதுவாகப் பேசவேண்டும். மரணமானவுடன் அமைதியாக இருத்தல் வேண்டும். உரத்துப் பேசினால் அதன் நினைவுகளைக் குழப்புதல் கூடும்.1 மரண காலத்தில் நிகழ்வது 1மரண காலத்தில் நிகழ்வது என்ன என்பதைத் தெளிவுக்காட்சியாளர் (Clairvoyants) கூறியுள்ளார்கள். தெளிவுக்காட்சி என்றால் என்ன என்பதைப் பிறிதோர் இடத்தில் விளக்குவோம். தெளிவுக்காட்சியாளர் கூறியவை களைப் போலவே ஆவிகளும் தமது பேச்சுகள் மூலம் அறிவித்துள்ளன. மரண காலத்தில் மனிதனின் நுண்ணிய உடல் ஆவிவடிவில் உடலை விட்டுச் சிறிது சிறிதாகக் கழன்று வெளியே வருகின்றது. மரணப் படுக்கைக் குப் பக்கத்தில் அது முன்னைய உணர்ச்சி, முன்னைய நினைவுகளோடும் முன்னைய வடிவோடும் நிற்கின்றது. பக்கத்தே உள்ளவர்களை அது அறி கின்றது. ஆனால் அதற்குத் தான் அங்கு நிற்பதைப்பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்க முடியாமல் இருக்கின்றது. அது கண்ணில்லாமல் பார்க்க முடியுமோ எனச் சிலர் கேட்கலாம். புளோரிடா டாக்டர் எப்படித் தனது உடலைப் பார்த்தார்? ஆவி மயமான உடலில் பார்க்கும் சக்தி இருக்கின்றது. அதன் உதவியைக் கொண்டு அது பார்க்கின்றது. இதற்கு அதிகமாக எம்மால் ஒன்றும் கூறமுடியாது. தெளிவுக் காட்சியாளருக்கு அது நிழல் போலத் தோன்றுகின்றது. பொதுவான ஒருவருக்கு அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோல, அது இன்னொரு ஆவிக்குப் புலப்படலாம். காலம் போகப் போக அது தூய்மை அடைகிறதென்றும், மரணமான உடனும் அதன்பின் சில காலத்தும் அது சடப் பொருள்களுக்கு அண்மையிலுள்ளதென்றும் தெரிகிறது. ஆனமையி னாலேயே இறந்தவர்களுடைய ஆவிகளின் தோற்றங்கள் இறந்த உடனும் அதன்பின் சில காலத்தும் தெளிவாகத் தோன்றுகின்றன. பரு உடலை விட்டுப் பிரிந்த அண்மையில் அவ் வாவியுடலில் பாரமான சடப்பொருள் அணுக்கள் செறிந்திருக்கலாம். 2மரணத் தறுவாயை அல்லது இரண்டு உலகங்களுக்கும் இடையி லுள்ள நிலையை அடைந்தவர்கள் மறு உலகைக் காண்கிறார்கள். ரோஸ் மெரி என்னும் “மீடியம்” பழைய எகிப்திய மொழியில் ஆவிகள் கூறிய செய்திகளைச் சொன்னாள். அவள் கூறியவை பழைய எகிப்திய மொழியை ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருவியப்பளித்தது. மீடியம் மயக்க நிலையி லிருந்து மீண்டபோது ஆவி உலகத்திலிருந்து இவ்வுலகத்துக்கு வருவது எவ்வளவு பயங்கரமானது என்று கூறினாள். இவள் ஒருத்தி மாத்திரம் பழைய எகிப்திய மொழியைப் பேசுவதைக் கேட்டவள் அல்லது அதன் உச்சரிப்புகளை அறிந்தவளாவள். 1934ஆம் ஆண்டு சூன் மாதம் 27ஆம் தேதி லேடி நோனா என்பவள் (மீடியம் மூலம்) எனக்கும் வேறு பன்னிரண்டு பேருக்கும் எதிரில் பழைய எகிப்திய மொழியில் ஓட்டமாகப் பேசினாள். எகிப்திய இளவரசியாகிய லேடி நோனா என்பவள் பழம் பொருளா ராய்ச்சியாளர் மொழியாராய்ச்சியாளர்களின் வியப்புக்கும் விருப்பத்துக்கும் ஏதுவாக ரோஸ்மேரி என்னும் மீடியம் வாயிலாக 1936ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் நாள் பழைய எகிப்திய மொழியில் சில செய்திகளைப் பேசினாள். இப் பேச்சு கிராமபோன் தட்டில் பதிக்கப்பட்டது. 3400 ஆண்டுகளின் முன் இறந்த ஒரு பெண் இக்கால இசைத்தட்டில் பதிக்கும் பொருட்டுப் பழைய எகிப்திய மொழியிற் பேசினாளென்பது மிக வியக்கத்தக்கதே. இதனாற் பெறப்படும் உண்மை இத்துணை காலத்தின் முன் இறந்தவர் இன்றும் உயிரோடிருக்கின்றா ரென்பதேயாகும். இறந்துபோவதைப் பற்றிய பல செய்திகள் அவ்வுலகத்தினின்றும் சேகரிப்பட்டுள்ளன. அவ்விடத்தினின்று கிடைக்கும் செய்திகள் பெரும் பாலும் அடிப்படையில் ஒத்திருக்கின்றன. இறந்துபோவதைப்பற்றிப் பல வகையான மனோகற்பனைகள் இருந்துவருகின்றன. மரணம் இலகுவானது. அது ஒவ்வொரு இரவும் நித்திரை கொள்வதை ஒத்தது. நீ விழிக்கும்போது என்றும் வாயில் திறந்திருக்கும் ஒரு உலகைக் காண்கிறாய். அக் கதவுதான் மரணம். கவலைத் தழும்புகள் ஏறப் பெற்றிருப்பது கடவுள் நிந்தையாகும். மரணம் இக் கவலைத் தழும்புகளைப் போக்குவதாகும். அழுகையும் இழவுக் கொண்டாட்டங்களும் அநாகரிக மக்களுக்குக்குரியன. மரணம் மகிழ்ச்சிக்குரியதொன்று. கிரேக்கர் மரணக் கொண்டாட்டத்தில் விளை யாட்டுகள் வைத்தார்கள். ஐரிஸ் மக்களின் ‘வேக்’ என்பது மகிழ்ச்சிக்குரிய இவ்வகைக் கொண்டாட்டத்தின் நிழலே. துக்கங் கொண்டாடுதலும் அழுது புலம்புதலும் மரணமானவருக்கு இடையூறு விளைப்பன. இறந்துபோன அரசருக்கும் அதிகாரிகளுக்குமாக நாட்டுமக்கள் கொண்டாடும் துக்கக் கொண்டாட்டங்கள் இறந்த உயிர்களுக்கு விடுதலையளிக்க முயலும் ஆவிகளுக்கு மிக்க தொந்தரவளிக்கின்றன என்று அவை கூறியுள்ளன. மோர்மன்(Mormons) என்னும் மக்களிடையே நான் வாழ்ந்தபோது அவர்கள் மரணக்கொண்டாட்ட காலத்தில் வெள்ளைப் பூக்களை அணி வதையும் பிணப்பெட்டியை வெள்ளைப் பூக்களால் அலங்கரிப்பதையும் கண்டேன். நல்லவர்களின் மரணத்தைத் துக்கமயமான பாடல்களால் கொண் டாடுதல் கூடாது; நல்ல பாடல்களைப் பாடிக் கொண்டாடுதல் வேண்டும். மரணத்தின் பின் அவர்கள் அமரரோடு உறைகிறார் எனப் புலுற்றா என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் கூறியிருக்கின்றனர். பிறப்பின் போது நாம் மகிழ்கின்றோம்; மரணகாலத்தில் அழுகின்றோம். இவ்விரண் டின் உண்மை களை நாம் அறிந்திருந்தால் துன்பகரமான இவ்வுலகத்துக்கு வந்ததைப் பற்றி நாம் துக்கப்படுவோம்; இன்ப மயமான ஆவி உலகத்திற் செல்வதைப் பற்றி நாம் மகிழ்ச்சி கூறுவோம். மரணத்தைப்பற்றி அறியப்பட்ட உண்மைகள் வருமாறு: மரணமென்பது நாம் இயங்கும் வேகத்தில் உண்டாகும் மாறுதல். இது மனித உயிர் உடலை மாற்றுவதால் உண்டாகின்றது. அது மெதுவான இயக்க முள்ளதும் வேகமாக இயங்கக்கூடிய காற்றுப் போன்ற உடலைத் தொழிற் படுத்துகின்றது. எவ்வுலகிலாயினும் இறக்கின்ற உயிருக்கும் இதுவே நிகழ் கின்றது. இவ்வுயிர் ஆயத்தமில்லாது உடலைவிட்டு உயர்ந்த இயக்கமுள்ள இன்னொரு உலகிற் பாய்ந்தால் ஒருவன் பனிக்கட்டிபோல் குளிர்ந்த நீருள் குதிப்பதுபோன்ற அதிர்ச்சி உண்டாகும். இவ்வாறு ஆயத்தஞ் செய்வதற்குச் சிறிது காலம் வேண்டும். இடைப்பட்ட இந் நிலையை மரண நித்திரை எனக் கூறலாம். மரண நித்திரை என்பது மரணத்துக்குப்பின் உண்டாகும் தூக்க நிலை. ஆவி உடலோடு ஒரு உலகிலிருந்து இன்னொரு உலகுக்குச் செல்லும் போதும் மரணம் உண்டாகிறது. வாழும் பொருட்டு ஒருவன் நெடுகிலும் இறக்கின்றான். நாங்கள் உடல் உயிர் ஆவி என்னும் முப்பொருளாலானவர்கள். உயிர் உடலை விடும்போது உள்ளே இருக்கின்ற காற்றுமயமான உடலுடன் வெளியேறுகின்றது. காற்றுமயமான உடலை இன்னொரு உறை மூடியிருக் கின்றது. இது, உயிர் 1மூன்றாவது உலகில் சென்று பிறப்பதற்கு உதவியாக விருக்கின்றது. மரணத்துக்குப்பின் நித்திரை கொள்ளும் உலகிலிருந்து பிறப்பு உண்டானதும் வெளியே உள்ள உறை கழன்று விடுகிறது. இது நாம் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றிவிடுதல் போன்றது. இவ்வாறு கழன்ற உறை காற்றுமயமான உடலின் வடிவினதாயிருக்கும். இவ்வுறையின் தொழிற்பாடு பூமியிலுள்ள பெண் அல்லது ஆணுக்கு மிக இன்றியமை யாதது. இது உள்மனத்துக்கும், மூளைக்கும் இடையில் மின்சக்தியைத் தொழிற்படுத்தும் யந்திரம் போல் வேலைசெய்கினறது. இவ்வாறு இது மனிதருக்கு இடைவிடாது உணர்ச்சி ஊட்டுகின்றது. நித்திரைக் காலத்தில் உயிர் கூட்டுள் உறைவதுபோல் உறைக்குள் தங்கிவிடுகின்றது. அப்பொழுது உயிர் வெளியுடலோடுள்ள தொடர்பை இழந்துவிடுகின்றது. காந்தசத்தியைப் பரப்பும் “டைனமோ” செய்வதுபோல உடல், உயிரின் ஒளியைப் பெற்று இருக்கின்றது. மரண காலத்தில் என்ன நிகழ்கின்றதென்று தெளிவுக்காட்சியாளர் கவனித்திருக்கிறார்கள். மரணகாலத்தில் நொய்யஉடலை மூடியிருக்கும் உறை தலைவழியாகக் கழல்கின்றது. அப்பொழுது நாபி மூளை என்னும் இரண்டு கயிறுகளால் பிணிக்கப்பட்ட நிலையில் அது உடலுக்கு அண்மை யில் நிற்கின்றது. பின்பு கயிறுகள் அறுந்துபோக உயிர் உறைக்குள் இருக்கும் நுண்ணுடலோடு மறு உலகுக்குப் பயணமாகின்றது. புது உலகுக்குச் செல்வதாகிய புதிய பிறப்பு வருத்தம் விளைப்பதா யுள்ளதோ என்று கேட்கிறார்கள். அது வருத்தம் விளைப்பதன்று. மரணத் துக்குப்பின் செல்லும் நித்திரை உலகில் அரைவிழிப்பு நிலை உண்டா கின்றது. அங்கு நின்றும் மறு உலகுக்குச் செல்லும் பிறப்பு உண்டாகின்றது. மரணத்துக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் இவ்வுடலை விட்டுக் காற்றுமயமான உடல் பிரிந்து சென்றுவிடும். சில நாட்களுக்கு அவ்வாறு நிகழாமல் இருப்பதும் உண்டு. இரண்டு வகையிலும் இறப்பு நோவற்றது. மனிதன் இறக்கும்போது காந்த சத்திபோன்ற உடலின் இயக்கம் தானாக நோவின்றி நிகழும். இவ்வியக்கங்கள் காற்றுமயமான உடலை இவ்வுலக உடலினின்றும் பிரிப்பதால் உண்டாகின்றது. இறக்கும் மனிதனை அவ்வுலக நண்பர் சந்திக்கிறார்கள். அவர் களுட் சிலர் உண்மையில் பிள்ளை பெறுவிக்கும் வைத்தியராவர். அவர்கள் இவ்வுலக உடல் காற்றுமயமான உடலைப் பிணிக்கின்ற பற்றுகளை ஒவ்வொன்றாக விடுவித்து விடுகிறார்கள். புதிய பிறப்பு நிலை பலருக்குப் பிள்ளைப்பேற்று விடுதியில் எவ்வாறு நிகழ்கின்றதோ அவ்வாறு பலவாறாக விருக்கும். மூன்றாவது உலகில் பிறப்பது இவ்வுலகில் பிறப்பதை ஒத்தது. இவ்வுலகில் இறந்தவுடன் நாம் காற்றுமயமான உடலுடன் அடுத்த உலகுக்குச் செல்கின்றோம். காற்றுமயமான உடலை ஒரு உறை மூடியிருக் கின்றதெனக் கூறினோம், இவ்வுறை பிள்ளையைச் சூழ்ந்து கிடந்து பிள்ளை பிறந்தபின் விழுந்து போகின்ற நஞ்சுக்கொடியை ஒத்தது. நஞ்சுக்கொடி போன்றுள்ள உறை மூன்றாவது உலகில் பிறப்பதற்குத் துணையாயிருப்பது மாத்திரமல்லாமல் காற்றுமயமான உடல் உயர்ந்த இயக்கத்தில் பழக்கமடை யுங் காலம் வரையில் பாதுகாக்கும் உறையாகவும் இருக்கின்றது. நீ வெளிப் படுத்தும் இயக்கங்களை, உறை உள்ளே அடக்கி வைத்திருக்கின்றது. ஆவி உலகில் சஞ்சரிக்கப் பழகுமுன் பூமி சம்பந்தமான அலைகள் கழுவப்படுதல் வேண்டும். காற்றுமயமான உடலினின்றும் கழன்றுபோன உறை சில சமயங்க ளில் காற்றுமயமான உடலின் வடிவோடு இவ்வுலகுக்கு வந்து மிதந்து திரி கின்றது. அது ஆவிமயமான உடலில் நின்றும் பெற்ற சிறிது உயிர்ப்புச் சக்தி யோடு சிறிது நேரம் மனிதனைப் போலக் காட்சியளித்து விரைவில் மறைந்து போகின்றது. சில சமயங்களில் நாம் கல்லறைகளிற் காணும் ஆவிகள் இவ்வகையினவே; சில, இறந்தவர்களின் ஆவிகளாகவும் இருக்கலாம். நீ இறக்கும்போது உனது இவ்வுலகப் பற்றுகள் படிப்படியாகத் தீர்ந்துபோகின்றன. உனது படுக்கைக்குப் பக்கத்திலுள்ள நண்பர்களைப் பார்க்கவும் அவர்கள் செய்யும் ஓசைகளைக் கேட்கவும் உன்னால் முடியும். ஆனால் சிறிது சிறிதாக அவை கனவு போல மறைந்துபோகின்றன. பின்பு நீ கனவு போன்ற மயக்கமான ஒரு நிலையை அடைகின்றாய். இறக்கும்போது மனிதர், தாம் செய்த பாவங்களைப் பற்றிய நினை வால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையாகலாம். மரணப்படுக்கை நன்மை தீமைகளை ஆராய்கின்ற இடமன்று. வாழ்க்கை யில் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிக் காணும் இயல்பு மரணத்துக்கு முன் உண்டு. தெரியாத கடலிலுள்ள துறைமுகத்தைப் பிடிப்பதற்குப் பாயெடுத்துச் செல்கின்ற கப்பலைப் போல மனத்தில் ஓர் உணர்ச்சியும் தோன்றுகின்றது. இருதயத் துடிப்பு இருக்கும்போதும் இறக்கும் மனிதர் இவ்வுலகை விடடுச் செல்கின்றார்கள் என்பது உண்மை. இருதயம் அடிக்கும்போதும் அவர்களின் ஒரு கால் அவ்வுலகிலும் மறு கால் இவ்வுலகிலும் இருக்கின் றன. இன்னொரு உலகில் பிறப்பதாகிய மரணம் தொடங்கி விட்டது. பிள்ளையையும் தாயையும் இணைக்கின்ற கொப்பூழ்க் கொடியைப் போன்ற தொன்று காற்றுமயமான உடலையும் பரு உடலையும் பிணிக்கிறது. அது அறுவதற்கு முன் மரணம் நிகழமாட்டாது. இருதயம் நின்று மனிதன் இறந்து போனதாகக் கருதப்பட்டபின் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரையிலும் மனிதன் உயிரோடிருத்தல் கூடும். காற்றுமயமான உடலோடு அதன் உறையைப் பிணைக்கும் வலைபோன்ற நூல்களும் உண்டு. இக் கட்டுகளை ஆவி உலக மருத்துவர் அறுக்குமுன் ஆவிமயமான உயிர் ஆவியுலகில் வாழமுடியாது. இது மூன்றாம் உலகச் செய்தியைக் குறிக்கும். இம் மூன்றாவது உலகுக்கே பெரும்பாலோர் செல்கின்றனர். குறுகிய காலம் அல்லது நீண்டகாலம் மயக்க நிலையிலிருந்த பின்பு விழிக்கும்போது அறையில் வெள்ளை உடுப்பு அணிந்த மருத்துவரும் தாதிமாரும் நிற்பதை நீ காண்பாய். இது நீ அபாயத்துக்குள்ளான பின்பு மருத்துவசாலை அறையில் விழிப்பது போலாகும். நீ இறந்துவிட்டாய் என்று ஒருவர் உனக்குச் சொல்லும்வரையில் நீ நினைப்பாய். இறந்து விட்டாயென்று உன்னை நம்பச் செய்தல்தான் மிக வில்லங்கமான காரியம். உனது படுக்கைக்கு முன்னால் உயிருள்ளவர்களைக் காணும்போது நீ எப்படி இறந்திருக்கிறாயென்று நம்பமுடியும். நீ சன்னல் வழியாகத் திறந்த உலகைப் பார்க்கவும், தொலைவிலிருந்து வரும் இசையையும், பறவைகள் பாடும் ஓசையையும் கேட்கவும் முடியும். உனக்கு அதிக பசியிருக்கும் போது இறந்துவிட்டாயென்று நீ எப்படி நம்ப முடியும். நீ உணவு வேண்டு மென்று கேட்கிறாய். உடனே உணவு கிடைக்கிறது. உனக்குத் தாகம் உண்டாகிறது. உனக்கு விருப்பமான தேநீரையோ தண்ணீரையோ நீ குடிக்கலாம். பின்பு உனக்கு நித்திரை உண்டாகின்றது. பின்பு தாதி ஒருத்தி உனது படுக்கைக் கெதிரேயுள்ள திரைச் சீலையை இழுத்துவிடுகின்றாள். நீ நித்திரை கொள்கிறாய். விழிக்கும்போது இப்பூமியை ஒத்த ஒரு உலகில் இருப்பதை நீ காண்கிறாய். மறுபடியும் பூமியில் இருப்பதாக நீ எண்ணு கிறாய். நீ நீலவானத்தையும் மரங்களையும் கடல்களையும் பார்க்கிறாய். இரண்டு பதினொரு பேர் கிறிக்கட் பந்தாடுவதையும் நீ காணமுடியும். தாதி உன்னைப் பார்க்க வரும்போது நீ விழிப்பாயிருந்தால் அவளுடைய கை மனிதக்கை போலக் சூடாகவும் அழுத்தமாகவும் இருப் பதைப் பார்த்து நீ ஆச்சரியப்படமாட்டாய். உன்னுடைய ஆவிமயமான உடல் மேலான இயக்கத்தில் பழகும்போது நீ இறந்துவிட்டாயென்றும் ஆனால் உயிரோடிருக்கிறாயென்றும் நீ அறிவாய். பூமியிலிருந்ததிலும் பார்க்க நீ அதிகம் உயிர்ப்பாயிருக்கிறாய். இந்தப் புதிய உலகில் மயக்க நிலையிலிருந்து விழித்தெழுவதைப் பற்றிக் கூறியுள்ளேன். இம் மயக்கம் அல்லது நித்திரை என்பது என்ன? இது பூமிக்கும் மூன்றாவது உலகத்துக்கும் இடையிலுள்ள நிலைமை. பூமியில் இறப்பவர்கள் எல்லாம் இந் நிலைமையைக் கடந்து செல்ல வேண்டும். ஆவி உடலோடு விரைவான இயக்கமுடைய ஆவி உலகத்துக்குச் செல்வதற்கு இந் நித்திரை உயிரை ஆயத்தஞ் செய்வதாகும். அந் நித்திரை யில் ஒரு சிறப்புண்டு. இது ஒரு நிமிடம் ஒரு மாதம் அல்லது ஒரு ஆண்டு நீடிக்கலாம்; சில சமயங்களில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளும் ஆகலாம். இங்கு உண்டாகும் நித்திரையின் அளவு உயிர் பூமியில் நடத்திய வாழ்க்கை யின் தன்மையையும் அதற்கு எவ்வளவு இளைப்பாறுதல் வேண்டுமென் பதையும் பொறுத்தது. அதனை மத்திய உலகம் என்பதற்கு மேல் அதிகம் கூறமுடியாது, ஆவி உலகத்தில் உண்டாகும் மாறுதல்கள் அதிசயப்படத்தக்கவை. ஆவி உலகில் நேரம் என ஒன்று இல்லை. இறந்தவர் ஆவி உடலோடு வாழும் மூன்றாவது உலகில் இறப்பு, நிகழ்வு, வருங்காலங்கள் ஒன்றோடு ஒன்று பின்னியுள்ளன. நாம் இவ்வுடலோடு இருக்கும்போது இதைப்பற்றி அறிந்து கொள்ள முடியாது. 1ஆவியுலகம் மூன்றாவது உலகம் ஆவிஉலகங்களில் முதலாவதாகும் பூமி அமைப்புக்குள்ள சடப்பொருளிலும் பார்க்க ஆவி உலக அமைப்பிலுள்ள சடப்பொருள்களும், அவ்வுலகங்களில் இயங்கும் வேகங்களும் வேறானவை. உறையினால் மூடப்பட்ட காற்றுமயமான உடல் சதைமயமான உடலை விட்டுப் பிரியு முன்பும் வெள்ளிய கயிறு அறுபடுமுன்னமும் இறக்கின்ற மனிதன் இவ் வியல்பை உணர்கின்றான். இவ்வுலகத்துக்கும் ஆவி உலகத் துக்கும் இடையில் கனவுபோன்ற நிலையில் இருக்கும்போது நீ உனது மரணப் படுக்கையின் பக்கத்தில் நின்று உனது உடலைப் பார்ப்பதை அறிந்து நீ ஆச்சரியப்படுவாய். இதன் பின் மூடப்பட்ட சன்னலுக்கு அல்லது கதவு களுக்கு ஊடாக அவைகளால் தடைபடுத்தப்படாமல் செல்வதை நீ காண்பாய். ஆவியுலகத்தை அடைந்ததும் அங்கு இரவோ பகலோ சூரியனோ இல்லாதிருப்பதை நீ காண்பாய். அங்கு பரந்த மெதுவான வெளிச்சம் எப்பொழுதுமுண்டு. அதனை அங்குள்ளவர்கள் ஆவிமயமான சூரியன் என்கிறார்கள். அங்கு நிழல் இல்லை என்று சொல்லமுடியாது. ஆவி உலகம் சூரியனைச் சுற்றி வருவதில்லை. ஆகவே அவர்கள் காலத்தைப்பற்றி அறியார். அவர்களுக்குத் தூரமும் இல்லை என அறிய வருகின்றது. ஆவி உலகிலுள்ளவர்கள் வருங்காலச் செய்திகளைச் சொல்லும்போது காலத்தைக் குறிப்பிட வில்லங்கமடைகின்றனர். காலஞ் செல்ல செல்ல ஆவி உலகிலுள்ளவர்க்கு நித்திரையோ, பசியோ தோன்றுவதில்லை. பசியும் நித்திரையும் பூமியிலுள்ள பழக்கங்கள். அவர்கள் உடல் சம்பந்தமானவைகளைக் கடந்து விடுகிறார்கள். உணவின்பொருட்டு நாங்கள் ஆவிமயமான உடலிலுள்ள துவாரங்கள் வழியாகப் போஷணையை இழுத்துக் கொள்ளுகின்றோம். பசி கொள்ளும் பழக்கம் விரைவில் மறைந்துபோகின்றது. அவ்வுலகில் பொருளாதாரம் சம்பந்தமான தொடர்புகள் இல்லை. அங்கு இலாபம் வாடகை வட்டி போன்றவைகள் இல்லை. மண்ணுலகத்திலுள்ளவர்கள் இவைகளுக்குத் தலைவணங்கித் தமது திறையை இறுத்து வருகிறார்கள். அங்குச் சென்றதும் அவ்விடத்தில் வாணிபம் இல்லாதிருத்தல் அவ்விடத்து நூதனங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. அங்கு நினைவினால் எல்லாவற்றையும் உண்டாக்கிக் கொள்ளலாம். ஒரு பொருளைப்பற்றி நினைத்ததும் அது கிடைக்கின்றது. மரணத்துக்கு அப்பாலுள்ள உலகம் அங்கு வாழும் கோடிக்கணக் கானவரின் நினைவினால் உண்டானது. அதைப்பற்றி நாம் தெளிவாக ஒன்றும் கூறுதற்கில்லை. அவ்வுலகத்தினின்றும் ஆயிரக்கணக்கான ஆவிகள் அவ் வுலகத்தைப்பற்றிக் கூறியிருக்கின்றன. பூமியிலுள்ளவர்கள் தமது ஆச்சரியத்தைக் குறிப்பிடும்போது, இவ்வுலகிலுள்ள வீடு, தோணி போன்றவை முதலில் நினைக்காமற் செய்யப் படுகின்றனவோ என்று அவர்கள் கேட்கிறார்கள். சில சமயங்களில் இப்பக்கத்திலுள்ள நாங்கள் எண்ணங்களினால் படைத்தல் செய்கின்றோம். நித்திரையில் காணும் கனாக்கள் சில சமயங் களில் உண்மையாக நிகழ்கின்றன. உடல் சம்பந்தமான போராட்டங்கள் இல்லாத இவ்வுலக அரசியல் போராட்டங்கள் போன்றவை அவ்வுலகில் இல்லை. எல்லாருக்கும் விடுதலையுள்ளதும் எவருக்கும் சம உரிமை மறுக்கப்படாததுமாகிய ஒரு உலகில் பழம்போக்கு புதியபோக்கு என்னும் பேச்சுகள் பொருளற்றன வாகும். எங்களுலக அரசியல் கொள்கைகள் அதிகாரத்தையும் பொருளை யும் குறிக்கோளாகக் கொண்டவை. இவ்வகையான சொற்களே இல்லாத அவ்வுலகங்களில் இவ்வகைப் போராட்டங்கள் இல்லை. நாம் விரும்பிய வற்றை எண்ணங்களாற் படைத்துக்கொள்ள முடியுமானால் நாம் வாங்கவோ விற்கவோ வேண்டியவை எவையும் இல்லை. அங்குப் போக்குவரத்து மிகப் புரட்சிகரமானது. நாம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தை அடைகின்றோம். இப் பூமியில் இது முடியாத காரியம். நாம் விரும்புகிறபடி நாம் இருக்கிறோம். அப்படியாயின் அவ்விடத்தில் போராட்டங்கள் இல்லையா? அங்கு நன்மை தீமைகளுக் கிடையில் எதிர்ப்பில்லையா? அவ்விடத்திற் சென்றதும் நாம் நிறைவுடைய வர்களாக மாறிவிடுகின்றோமா? என்று நீவிர் கேட்கக்கூடும். இவ்வாறில்லை. எங்கள் குணம் சம்பந்தப்பட்ட மட்டில் நாம் இங்கிருப்பதுபோலவே இருக்கிறோம். அங்கு நன்மைக்கும் தீமைக்கும், சரிக்கும் பிழைக்குமிடையில் போராட்டங்கள் நிகழ்கின்றன. பாரமான உடலை விட்டுப்போன அவ் வுலகத்தில் இப் போராட்டங்கள் மிகக் கூர்மை யாகவும் உணர்ச்சியுடையனவாகவும் இருக்கின்றன. இங்கு காம இச்சை உள்ளவன் அங்கும் அப்படியே இருக்கின்றான். இங்கு சோம்பலாயிருப்பவள் அங்கும் அப்படியே இருக்கிறாள். இங்கு அதிகாரத்துக்கு ஆசைப்படுகின்றவர்கள் அங்கும் அப்படியே இருக்கி றார்கள். அவ்விடத்தில் இதனைப் பெறும் வாய்ப்பு மிகக் குறைவாயிருக் கின்றது. ஆவி உலகில் உள்ள ஒரு துயரம். அங்குள்ளவர்கள் தமது கீழான இவ் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு அடிக்கடி இவ்வுலகுக்கு வரமுடியாமலிருப்பதாகும். ஏன் இதற்கு மாறாக இருக்க முடியாது? இவ் வுடலைவிட்டு ஆவி உடலுடன் இருப்பது அளவில் மாத்திரம் மாற்றமுள்ளது. ஆவியுலகை அடையும்போது மனநிலை பூமியிலிருந்தது போலவே இருக்கின்றது. இவ்வுலகில் தீமைகளையே செய்வோர் பெரும்பாலும் மூன்றாவது உலகத்திலேயே வாழ்கிறார்கள். இவர்கள் இங்கு பெண்போகம் ஆண் போகம் போன்ற நுகர்ச்சிகளில் மூழ்கலாம். காற்றுமயமான உடல் அவர்கள் இவ்வாறு இன்பங்களை நுகர்வதற்கு இடம் அளிக்கின்றது. இவ்வாறு இன்பங் களை நுகர்ந்தபின் அவர்களின் ஆசைகள் தணிந்துபோகின்றன. பின்பு அவர்கள் மேலான உலகங்களில் வாழ நினைக்கிறார்கள். மறு உலகில் கல்வி, தொலைவிலுணர்தல் (தெலிபதி) முறையானது. அவர்கள் புத்தகங்களைப் பயன்படுத்துவதில்லை. அவர்களால் எங்கள் புத்தகங்களை வாசிக்கவும் முடியும். வாய்பாடஞ் செய்தலும் பரீட்சைகளும் இல்லாத ஆவி உலகில் படிப்பு முறை மனத்தை ஒன்றில் நிறுத்தும் அடிப் படையுடையது. அங்கு உள்ளவர்கள் எல்லாரும் ஒரே சமயத்தவரா? இவ் வுலகில் எவ்வாறு நம்பிக்கையுள்ளவர்களா யிருந்தார்களோ அவ்வாறே அவ்வுலகிலும் இருக்கிறார்கள். ஆவி உலகிலுள்ளவர்களின் சமயமும் வாழ்க்கையும் இணைந்து செல்கின்றன. எங்கள் சமயமும் வாழ்கையும் வெவ்வேறானவை. 1ஆர்தர் கொனான்டேல், ஆவி உலகத்தைப் பற்றித் தமது நூல் ஒன்றில் கூறியிருப்பது வருமாறு: “இறந்தவர் பலரிடமிருந்து செய்திகள் பல நாடுகளிற் பலகாலங்களிற் கிடைத்துள்ளன. அவற்றில் இவ் வுலகத்தைப்பற்றிய உண்மையான செய்திகள் அடங்கியுள்ளன. அச்செய்தி களுள் நாம் ஆராய்ந்து பார்த்து அறியக்கூடியன, மெய்யாகக் காணப் பட்டால் நாம் ஆராய முடியாமலிருப்பனவும் மெய்யாயிருக்குமெனக் கொள்ளுதல் தவறாகாது. பல இடங்களில் பலவேறு காலங்களிற் கிடைத்த செய்திகள் ஒத்திருத்தலால் அவை உண்மை என்று கொள்ளுதல் வலி யுடையதெனத் தோன்றுகின்றது. நான் நேரில் இருந்து எழுதி வைத்திருக் கின்ற பதினைந்து அல்லது இருபது ஆவிகளுடைய பேச்சுகளின் குறிப்புகள் பிழையாக இருக்கும் என்று கூறமுடியாது. ஆவிகள் இவ்வுலக நிகழ்ச்சிகளைக் கூறுதல் போலவே மறு உலக நிகழ்ச்சிகளையும் கூறுதல் கூடும். அவை கூறும் இவ்வுலக நிகழ்ச்சிகள் மெய் என்றும் மறு உலக நிகழ்ச்சிகள் பொய் என்றும் கூறமுடியாது. அண்மையில் ஒரே வாரத்தில் மறு உலகத்தைப்பற்றி இரண்டு செய்திகள் எனக்குக் கிடைத்தன. ஒன்று ஒரு தேவ ஆலயத்தின் உயர்ந்த பதவியிலுள்ள ஒருவருடைய உறவினரின் கைவாயிலாக ஆவி எழுதியது. இன்னொன்று ஸ்காத்துலாந்திலுள்ள ஒரு தொழிலாளனின் மனைவி மூலம் வெளிவந்தது. இவ்விருவருக்கும் ஒருவரைப்பற்றி ஒருவருக்குத் தெரியாது. ஆனால் இருவர் மூலம் வெளிவந்த செய்திகள் ஒரேவகையாக உள்ளன. இருவர் மூலமும் ஆவிகள் வெளியிட்ட செய்திகளால் நாம் அறியக் கிடப்பன வருமாறு. மரண காலத்தில் உயிர் நோவின்றியும், இலகுவாகவும் உடலைவிட்டு வெளியேறுகின்றது. அப்பொழுது சமாதானமும் சுகமும் தோன்றுகின்றன. மரணம் அடைந்தவர், ஆவியுடலில் நிற்கும்போது தனது பலவீனம், நோய், உறுப்புக் குறைவு தன்னைவிட்டு நீங்கிவிட்டனவாக உணருகின்றார். இவ்வுயிர் மரணப்படுக்கையிலுள்ள உடலுக்குப் பக்கத்தே மிதக்கின்றது; அல்லது நிற்கின்றது. அப்பொழுது அது தனது உடலையும் அதற்குப் பக்கத்திலுள்ளவர்களையும் பார்க்கின்றது. இப்பொழுது அவ் வாவி உடல் சடப்பொருள்களுக்கு அண்மையிலுள்ளது. ஆகையினா லேயே அப்பொழுது, இறந்தவர், அவர் நினைக்கும் ஒருவரின் முன் ஆவி வடிவில் தோன்றுகின்றார். இவ்வாறு பரீட்சித்துப் பார்த்த 250 ஆவித் தோற்றங்களில் 134 தோற்றங்கள் மரணம் நிகழ்ந்தவுடன் தோன்றியவை. மரணப் படுக்கையின் பக்கத்தே நிற்கும் ஆவி, பக்கத்தேயுள்ள தனது நண்பர்களைப்பற்றி நினைக்கின்றது. அது தனது எண்ணங்களை வெளியிட முயல்கின்றது. ஆனால் அவ்வாறு செய்ய அதற்கு முடிவதில்லை. அதனை அவர்கள் உணர முடிவதில்லை. அங்கு உயிரோடு இருப்பவர்களைவிட இன்னும் வேறு சிலர் இருப்பதை அது உணர்கின்றது. அவர்களின் முகங்கள் அதற்குப் பழகியனவாகக் காணப்படுகின்றன. அவர், முன்னே இவ்வுலகில் இருந்து இறந்து போனவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் அதன் கையைப் பிடித்து முத்தமிடுகின்றனர். அவர்களுடனும் இன்னும் அங்கு இப் புதிய ஆவியை எதிர்பார்த்திருந்த சில ஆவிகளுடனும் பருப்பொருள் களாகிய தடைகளைக் கடந்து மிதந்து செல்கின்றது. இது உண்மையான வரலாறு. இதனையே பல ஆவிகள் திரும்பத் திரும்பக் கூறியுள்ளன. ஆவி பேய் அல்லது தேவதையன்று. அது இறந்தவரின் ஆற்றல், அறிவு, வடிவம் முதலியவைகளைக் கொண்ட தோற்றம். புதிய வாழ்க்கைக்குச் செல்வதன் முன் புதிய ஆவி சிலகாலம் நித்திரைக்குச் செல்கின்றது. இக்கால எல்லை பலவாறு மாறுதல் உடையது. சில ஆவிகளுக்கு நித்திரை உண்டாவதில்லை. சில ஆவிகளுக்கு வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு நித்திரை உண்டா கின்றது. ரேமாண்ட் என்பார் தனக்கு ஆறு நாட்களுக்கு நித்திரை இருந்த தெனக் கூறினார். மேயேர்ஸ்(Myers) என்பவர் தனக்கு நீடித்த நித்திரை இருந்ததெனக் கூறினார். வாழ்க்கையில் எவ்வளவு மனக் குழப்பம் இருந் ததோ, அவ்வளவுக்கே நித்திரையும் உண்டு எனத் தெரிகிறது. அக் குழப்பங் களை ஒழிப்பதற்காகவே, நித்திரை உண்டாகிறதெனத் தெரிகின்றது. சிறு குழந்தைக்கு அவ்வகை நித்திரை வேண்டியிராது. மரணப் படுக்கையில் படுத்திருப்பவர்கள், இறந்தவர்கள் வந்திருப்ப தாக கூறுவதைக் கேட்டிருக்கின்றோம் நாங்கள் அவர்களைப் பார்ப்ப தில்லை. அவர்கள், வந்து நிற்பவரைச் சுட்டிக் காண்பிக்கின்றார்கள். நாங்கள், நோயின் கூற்றினால் அவர்கள் பிதற்றுகிறார்கள் எனக் கருதுகின்றோம், அவர்கள் கூறுவன உண்மை நிகழ்ச்சிகளே என்று இப்பொழுது எமக்குத் தெரிகிறது. நித்திரையைவிட்டு எழுந்தவுடன் ஆவி மிகவும் பலவீனமாக இருக் கிறது. அது, பூமியில் பிறந்த குழந்தைக்கு உடல் எப்படி இருக்கின்றதோ அது போன்றது. உடனே மறுபடியும் பலம் உண்டாகின்றது. மறுபடியும் வாழ்க்கை ஆரம்பமாகின்றது. மறு உலக வாழ்க்கை மகிழ்ச்சிக் குரியதாக உள்ளதென்று எல்லா ஆவிகளும் கூறுகின்றன. ஒரே வகையான கருத் துடையவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்கிறார்கள். அவர்கள் மறுபடியும் இவ்வுலகுக்குத் திரும்பிவர விரும்புவதில்லை. இது வெறும் கதையன்று. இது உண்மை என்று காட்டுவதற்குப் பல சான்றுகள் உள்ளன. இறந்து அதிக நாளாகாதவர்களின் ஆவிகளே பெரும்பாலும் வந்து பேசுகின்றன. நாட்செல்லச் செல்ல அவை தோன்றுவதில்லை. டௌசன் ரொசர்(Dawson Roger) என்பவர் மூலம் மான்தான்(Manton) என்பவரின் ஆவி பேசிற்று. அது, தான் லோஹன்ஸ் லிதியாட் என்னும் இடத்திற் பிறந்த தென்றும், தனது உடல் 1677இல் ஸ்ரோக்நியுக்டன் என்னும் இடத்தில் புதைக்கப்பட்டதென்றும் கூறிற்று. ஆராய்ச்சியில் அவ்வகையானவர் இருந்தார் என்றும், அவர் கிராம்வெல் காலத்தில் தேவாலயத்தில் ஊழியம் செய்தவர் என்றும் நன்றாக அறியவந்தது. இது வரையும் பேசிய ஆவிகளுள் இது பழங்காலத்தது. மறு உலகத்தில் குறித்த, சிலகால எல்லைக்குப்பின் அவை வெவ்வேறு மண்டலங்களுக்குச் செல் கின்றன. இம் மண்டலங்களுக்குள்ள தொடர்பு எங்களுக்கும் ஆவி உலகத் துக்குமுள்ள தொடர்பு போன்றது. கீழ் உள்ளது மேலே போகமுடியாது; மேல் உள்ளது விரும்பியபோது கீழே வரமுடியும். வாழ்க்கை இவ்வுலகின் சிறந்த பகுதிகளை ஒத்தது. இவ்வுலக வாழ்க்கை உடலோடு தொடர்புடையது. அவ் வுலக வாழ்க்கை மனத்தோடு சம்பந்தமுடையது. உணவு, பொருள், பண்டம், ஆசை, நோய் போன்றவை இவ்வுடம்போடு அகன்றுவிடுகின்றன. அறிவு சம்பந்தமானவை வளர்ச்சியடைகின்றன. இவ்வுலக வாழ்க்கையில் எப்படி உடை அணிந்திருந்தார்களோ, அவ்வாறே அவ்வுலகிலும் உடை அணிந் திருக்கிறார்கள். சிறியவர்கள் பெரியவர்களாக வளர்கிறார்கள். அங்கு அவர்கள் கூட்டங் கூட்டமாக வாழ்கிறார்கள். ஆவி உலகிலுள்ள ஆண், உண்மையான பெண் துணையைத் தேடிக்கொள்கிறது. ஆனால் ஆண் பெண் தொடர்பான சேர்க்கையும் பிள்ளைப் பேறுகளும் இல்லை. அங்கு மொழிகள் இல்லை. எண்ணங்களே மொழியாக வழங்குகின்றன. ஆவி களுக்கு எல்லாம் அறிவது போன்ற ஒருவகை உணர்ச்சியுண்டு. இவ்வுலகி லுள்ள சமயக் கொள்கைகளில் ஒன்று மற்றதிலும் பார்க்கச் சிறந்தது அன்று என்றும், எல்லாம் முன்னேற்றத்துக்குரியனவே என்றும் எல்லா ஆவிகளும் கூறியுள்ளன. கடவுளைத் துதிப்பதினால் நன்மை உண்டாகிறது என்றும் அவை அறிவித்துள்ளன. புதிதாக மற்ற உலகத்துக்குச் சென்ற ஆவிகள், தாம் மரணமடைந்து விட்டதாக உணர்வதில்லை. கொனண்டேல் “புதிய வெளிச்சப்பாடுகள்”1 என்னும் நூலில் கூறி யிருப்பது வருமாறு. எனக்கு கிடைத்துள்ள செய்திகளைக்கொண்டு அறியக் கிடப்பன வருமாறு: இறந்தவர்களின் ஆவிகளுக்கு வடிவுண்டு. அவை நமது கண்களுக்குப் புலப்படுவதில்லை. அவ் வடிவங்கள் இவ்வுலகில் நடமாடிய உடலின் வடிவைப்போன்றன. ஆனால் அதிலும் பார்க்க அழகிய தோற்றமுடையன; அவற்றுக்கு முதுமை, நோய், வறுமை செல்வம் என்பன இல்லை. அவை உடை தரிக்கின்றன. அவை நித்திரை கொள்வ தில்லை; ஆனால் ஒருவகைப் பாதி விழிப்பும், பாதி உறக்கமுமாகிய நிலையை அடைகின்றன. அதனையே அவை நித்திரை எனக் கூறுகின்றன. இவ்வுலக வாழ்க்கைக் காலத்தினும் பார்க்கச் சுருக்கமான ஒரு காலத்தில் அவை வேறு மண்டலங்களுக்குச் செல்கின்றன. ஒரேவகை எண்ணமும் உணர்ச்சியும் உடையவை ஒன்றாகச் சேர்ந்து வாழ்கின்றன. கணவன் மனைவியராய் இம்மையில் வாழ்ந்தோர் மறுபடியும் கட்டாயமாக இணைக் கப்படவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள அன்பு இருக்கின்றது. மரணத்துக்குப்பின் ஆவிகள் பாதி உணர்ச்சியும், பாதி உணர்ச்சி இல்லாதது மாகிய ஒருவகை நிலையை அடைகின்றன. அவ்வாறு இருக்கும் கால எல்லை பலவகையினது. அவற்றுக்கு உடம்பில் நோய் அல்லது வருத்தம் உண்டாவதில்லை. மரண காலத்தில் நோய் உண்டாவதில்லை. மரணத்துக் குப் பின் பலவகைச் சமய நம்பிக்கைகளில் வேறுபாடு காணப்படுவதில்லை. மறு உலக வாழ்க்கையில் இருப்பவர்கள் திரும்பிவர விரும்புவதில்லை. அவர்களின் வாழ்க்கை இன்பமானது. ஆவிகளுடன் பேசுதல் 2 (பிராட்லி கூறும் விவரம்) யான் திவிக்கொவ் என்பவரின் விருந்தாளியாக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தேன். அவர், “ஆவி பேசுவதைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று என்னைக் கேட்டார். “பொழுதுபோக்காக அவ்வாறு செய்யலாம்” என நான் கூறினேன். அவர் ஜாட்ஸ் வலியண்டன் என்னும் ஆவியோடு பேசுகின்றவருக்கு (Medium) உடனே ‘தந்தி’ கொடுத்தார். 6-6-1923இல் இரவு உணவுக்கு முன் சிறிது நேரம் வலியண்டினோடு பேசிக்கொண்டிருந்தேன். நான் முன் ஒருபோதும் ஆவியோடு பேசுகின்றவர்களைச் சந்தித்ததில்லை. இரா உணவு கொண்டபின் சிறிது நேரம் நாங்கள் பொழுதுபோக்காகப் பேசிக்கொண்டிருந்தோம். ஆவியுடன் பேசுவதற்கு ஒரு அறை ஆயத்தஞ் செய்யப்பட்டது. அறையில் நான்கு பேர் இருந்தோம். திவிக்கோவ் ‘மீடியத் தின்’ கையில் இரு மினுக்கமான வளையங்களை மாட்டினார். இது அவர் கையை அசைத்தால் மற்றவர்கள் இருட்டில் பார்ப்பதற்காக ஆகும். நாங்கள் நாற்காலிகளில் வட்டமாக இருந்தோம். ஒவ்வொருவருக்கு இடையிலும் ஐந்தடி வெளி இருந்தது. நடுவில் இரண்டு எக்காளங்கள் வைக்கப்பட்டன. அவை அலுமினியத்தால் செய்யப்பட்டவை. அவைகளின் ஓரங்கள் பளபளப்பாக இருந்தன. உடனே விளக்குகள் அணைக்கப்பட்டன. இச் செயல் வீணானவை என்று எனக்குத் தோன்றின. அறிவாளிகள் இவ்வகை யான சிறு பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்களே என் நான் எண்ணினேன். நாங்கள் சிறிது நேரம் மனத்தில் தோன்றியவைகளை எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். ஒன்றும் நிகழவில்லை. பொழுது போக்குவதற்குச் சிறுவர் பாடுவது போல நாங்கள் சிறிதுநேரம் பாடினோம். எங்கள் எல்லோருடைய குரல்களும் மிக மோசமானவை. அவைகளுள் என் குரல் மிக மோசமானது. பாட்டை நிறுத்தவிட்டு மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்பு சிறிது நேரம் பாடினோம் இவ்வாறு செய்வது எனக்கு மிக வெறுப்பாக விருந்தது. சடுதியில் ஒரு நிகழ்ச்சி உண்டாயிற்று; அமைதி நிலவிற்று. ஐந்தாவது ஒரு ஆள் அறையில் இருப்பது போல் நான் உணர்ந்தேன். ஒரு பெண்ணின் மெல்லிய குரல் அமைதியைக் கலைத்தது. அக் குரல் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது. அவ்வோசை எனக்கு மூன்று அடி தூரத்தில் இருந்து வருவதாகத் தெரிந்தது. அதைக் கேட்டு நான் குழப்பம் அடையவில்லை. நான், ‘ஆம்’ என்று வழக்கமான குரலில் விடை அளித்தேன். இருமுறை எனது குறித்த பெயர் சொல்லி அழைக்கப்பட்டது. பிராட்லி : நான் இங்கு இருக்கிறேன்; எனக்கு என்ன சொல்ல விரும்புகிறாய்? ஆவி : நான் உன்னை நேசிக்கிறேன்! நான் உன்னை நேசிக்கிறேன்!! பிரா : நீ யார் என்று தயவுசெய்து எனக்குச் சொல்லுவாயா? ஆவி : அன்னி பிரா : உனது முழுப்பெயரையும் கூற முடியுமா? ஆவி : உனது சகோதரியாகிய அன்னி. பின்னே நாங்கள், எல்லோரும் கேட்கும்படி பலவற்றைப் பேசினோம். அவள் இறக்குமுன் நாங்கள் இருவரும் மிக அன்போடு இருந்தோம். அவள் எனக்கு வயதாற் சிறிது மூத்தவள். நாங்கள் பதினைந்து நிமிடங்கள் வரையில் பேசினோம். தான் பல ஆண்டுகளாக என்னோடு பேச முயன்று வந்ததாகவும், நான் செல்லும் இடங்களுக்கும் கூடவே சென்றதாக வும், நான் எழுதிய புத்தகங்களைப் பற்றித் தான் அறிந்ததாகவும், நான் தனிமையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும்போது எனக்கு எண்ணங் களைத் தோற்றுவிப்பதில் உதவியாயிருந்ததாகவும் கூறினாள். அவள் பிரிந்து செல்வதன் முன் அடுத்த இரவில் வந்து பேச முடியுமோ எனக் கேட்டேன். “ஆம்” எனக் கூறினாள் எனது சகோதரி பிரிந்து சென்றபின் மேலும், இரண்டு மணி நேரம் ஆவிகளுடன் பேசப்பட்டது. ஐந்து ஆவிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து பேசின. ஓசைகள் அறையின் வெவ்வேறிடங் களிலிருந்து வந்தன. ஒவ்வொரு ஆவியின் குரலும் வெவ்வேறு வகையாக இருந்தது. ஆவிகள் வருவதன்முன் எக்காளங்கள் எழுந்து அறையைச் சுற்றி வந்தன. இரண்டாவதாக வந்த ஆவி, தனது பெயர் ஆதர் பிராண்டி எனக் கூறிற்று. இவருடைய மரணத்துக்குப் பின் திவிக்கொவ், இவர் நிலத்தை விலைக்கு வாங்கியிருந்தார். அவ் வாவி இப்பொழுது சென்றிருக்கும் உலகத்தில் தான் மகிழ்ச்சியோடு வாழ்வதாகவும், இவ்வுலகுக்கு வருவதற்கு தான் விரும்பவில்லை என்றும் கூறிற்று. அடுத்து வந்து பேசியது ஒரு கனடியனின் (கனடா நாட்டவன்) ஆவி. அது திருத்தமில்லாத ஆங்கிலமும் பிரஞ்சு மொழியும் பேசிற்று. அது தனது பெயர் ‘கோகும்’ எனக் கூறிற்று. திவிக்கோவ் அவனை முன்னே அறிவார். அவர் அதைப் பாடும்படி கேட்டார். அது மிக உச்சமான குரலில் ‘வாபலோமா’ என்னும் பாட்டைப் பாடிற்று. அவ்வோசை கால் மைல் தூரம் கேட்கக் கூடியதாக இருந்தது. இவ்வளவு உரக்கப் பாடியமையால் அதற்கு மேலான வலிமை இருக்கலாம் என்று நான் நினைத்து, ‘என்னைத் தொட முடியுமோ? என்று கேட்டேன். உடனே ஒரு கை விரல் எனது தலையைத் தடவிற்று. கோகும் சென்ற பின் வேறோர் ஆவி வந்தது. அவ் வாவியின் பெயர் பாட்ஒபிரியன். இவன் நாற்பத்திரண்டு ஆண்டுகளின் முன் கடலில் மாண்டான். அவன் சிகாகோவில் தச்சு வேலை செய்தவன். அயர்லாந்துக்குத் திரும்பி வரும்போது அவனுக்கு மரணம் நேர்ந்தது. இவ் வாவி சென்றபின் எவற் என்பவனின் ஆவி வந்தது. நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அது பதிலளித்தது. மரணத்துக்குப்பின் உயிர்கள் நிலைபெறுகின்றன என்னும் உண்மையை மக்களுக்கு அறிவிப்பதற்காகவே ஆவிகள் இவ்வுலகில் வந்து பேசுகின்றன என்றும் அது கூறிற்று. அடுத்து வந்தது. டாக்டர் குறுஸ்கொவ் என்பவரின் ஆவி. அது தான் ஆறு நாட்களுக்கு முன் இறந்து விட்டதாகவும், தனது உடல் எரிக்கப்பட்டதாகவும், அதனால் ஆவிக்குப் பங்கம் உண்டாயிருக்கக்கூடுமோ என்று தனது மாணவர் குழப்பம் அடைந் திருக்கிறார்கள் என்றும் உடல் எரிக்கப்பட்ட பின்னும், ஆவி இருக்கிற தென்று அவர்களுக்கு அறிவிக்கும்படியும் கூறிற்று. அடுத்த நாள் சனிக்கிழமை (6-7-23) நாங்கள் ஆவியோடு பேசும் அறையில் இருந்தோம். விளக்கு அணைத்துக் கால்மணி நேரத்தில் உரத்த குரலில் இஸ்கொத்திய மொழி உச்சரிப்பில் ஒரு ஆவி வந்து பேசிற்று. எனது சகோதரியின் ஆவி வருமோ என்று நான் நினைத்தேன். உடனே அவ்வாவி வந்து பேசிற்று. நாங்கள் இருவரும் இருபது நிமிடங்கள் வரையில் பேசினோம். பின்பு ஒரு பெண்குழந்தையின் ஆவி வந்து பேசிற்று. அவளது பெயர் அனி. அவளுக்கு ஒரு கால் நொண்டியாயிருந்தது. அவள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளின் முன் இறந்துபோயினாள். அவள் தான் வளர்ந்து வருவதாகவும், பள்ளிக் கூடத்தில் படிப்பதாகவும், இப்பொழுது தான் நொண்டியல்லள் என்றும் தனது வாழ்க்கை இன்பமாயிருக்கிற தென்றும் கூறினாள். பெண்ணின் ஆவி கூறியவை 1940ஆம் ஆண்டு பெண் ஒருத்தியின் ஆவி, பிளஞ்சட் என்னும் கருவி மூலம் எழுதியவை மைசூரில் இருந்து வெளிவரும் ‘மிதிக் இதழில்’ (Mythic magazine) 1942ஆம் ஆண்டு வெளியாயின. அவ் வாவி கூறியவை பெரும்பாலன மேல்நாட்டு நூல்களில் வெளிவந்தவைகளை ஒத்துள்ளன. ஆவிகள் கூறுகின்றவைகளில் சில மாறுபாடுகளும் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் இவ்வுலகில் மக்களுக்கு எவ்வாறு எல்லாக் கருத்துக் களும் நன்கு தெரியாதோ, அப்படியே ஆவிகளுக்கும் உண்டு என ஆவி ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். பெண்ணின் ஆவி கூறியவற்றில் சிலவற்றை இங்குத் தருகின்றோம். கேள்வி : நீ யார்? மறுமொழி : நான் பிளஞ்செட் கே : இவ்வுலகில் ஆவிகள் உண்டா? ம : ஆம் கே : நீ இவ்வுலகில் ஏன் தங்கி நிற்கின்றாய்? ம : நான் ஒரு பெண்ணின் ஆவி; நான் அமிஸ்ரார் என்னும் இடத்திற் கொல்லப்பட்டேன். என் கணவர் என்மீது சந்தேகங் கொண்டு நடு இரவில் கொன்றுவிட்டார். அவர், அரசினர் தண்டனைக்குட்பட்டு அந்தமான் தீவில் இருக்கிறார். கே : இது எப்பொழுது நிகழ்ந்தது? ம : 1917இல் கே : நீ வருங்காலத்தைப்பற்றிக் கூறமுடியுமா? ம : கூற முடியாது கே : உனக்கு இரவும் பகலும் உண்டா? ம : இல்லை கே : நீ உணவு உண்கிறாயா? ம : இல்லை கே : எப்படி உணவின்றி நீ இருக்கமுடியும்? ம : எங்களுக்கு ஊன் தொடர்பான உடல் இல்லை கே : கெட்ட ஆவிகள் உண்டா? ம : ஆம் கே : அவை ஏன் மக்களைப் பிடித்துத் தொந்தரவு செய்கின்றன? ம : அவர்களுக்குத் தீமை செய்யவேண்டும் என்னும் விருப்பினால், தீமை செய்வது அவர்களுக்கு விளையாட்டு. கே : ஒருவரை ஒருவர் அறிய உங்களுக்கு வடிவு உண்டா? ம : ஆம். கே : மரணத்துக்குப் பின் என்ன நிகழ்கிறது? ம : ஆவி, ஆவி உலகத்தை அடைகின்றது கே : பின்பு என்ன நிகழ்கின்றது? ம : அதனதன் தரத்துக்கேற்ற உலகத்துக்கு அனுப்பப்படுகின்றது. கே : மரணத்துக்குப்பின் சுற்றத்தவர்மீது பற்று உண்டா? ம : ஆவிகளுக்கு இவ்வுலகத் தொடர்பு இருந்தால், உண்டு. கே : இவ்வுலகத் தொடர்பு என்றால் என்ன? ம : நிறைவேற்றப்படாத ஆசைகள். கே : அவ்வகை ஆவிகள் கெட்டவையா? நல்லவையா? ம : பெரும்பாலும் நல்லவை. ஆவிகளின் நேர் பேச்சு 1ஒருவன் அல்லது ஒருத்தி மரணத்துக்குப்பின் வாழ்வதைப்பற்றி அறிந்துகொள்வதற்கு உனக்கு அல்லது எனக்கு எவ்வகையான அத்தாட்சி வேண்டும். இறந்தவர் எங்களுக்கு முன் தோன்றிப் பேசுவதே போதிய அத் தாட்சியாகுமென்று நினைக்கிறேன். அது மிகவும் நேரடியான அத்தாட்சியே யாகும். மரணத்துக்குப்பின் என்ன நிகழ்கின்றது என்று ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் இதைவிட நூற்றுக்கணக்காண சான்றுகளை அறிவார்கள். எனது மகன் யான் பதினோராவது வயதில் மரணமானான். 1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி எனது நண்பர் ஒருவர் வீட்டில் யானின் குரல் கேட்டது. இதனை நானும் பிறரும் கேட்டோம். “எனது தந்தையுடன் பேசப்போகின்றேன்” என்பதே முதல் வார்த்தையாகும். பின்பு அவன் உற் றாண்மையானதும் என்னோடு சம்பந்தப்பட்டதுமாகிய சில செய்திகளைக் கூறினான். இறந்தவர்களுடன் பேசுவதில் பெரிதும் சந்தேகப்படுகின்ற நான் எனது பையனே பேசுகின்றானென்றும் இதில் யாதும் புரளி இல்லை என்றும் அறிந்துகொண்டேன். எனக்கு அப்பொழுது இருந்த கவலையையும் அதைப் போக்கும் வழியையும் அவன் எனக்குக் கூறினான். அவ்வறைக் குள் இருந்த எவரேனும் இவைகளை ஒரு போதும் முன் அறிந்திருக்க முடியாது. இச் சத்தம் ‘நேர் ஒலி’ எனப்படும். நேர் ஒலி என்பது ஆவேசித்துப் பேசுபவர் மூலமன்றி வானில் நின்று வருவது. அவ்வாண்டில் மே மாதம் 5ஆம் நாள் அவன் தனது தாய்க்கும் சகோதரிக்கும் செய்தி அனுப்பினான். அதே ஆண்டில் அக்டோபர் மாதம் 20ஆம் நாள் யான் உச்சரிப்பதற்கு அதிகம் வில்லங்கமான தனது சகோதரி யின் பெயரைக் கூறினான். அங்கிருந்த எவருக்காவது யானைப்பற்றித் தெரியாது. அப்பொழுது சேகிரேவ் அம்மையாரும் பிறரும் சமூகமாயிருந் தார்கள். அவன் தான் அடைந்துள்ள மனமாற்றங்களைப் பற்றிக் கூறினான். அடுத்தபடி செப்டம்பர் மாதத்தில் அவன் என்னோடு தெளிவாகப் பேசினான். அவன் பேசும் குழல் ஒன்றை எனது முழங்கால்மீது வைத்துத் தான் பேசுவதைப் பிறர் கேளாதபடி பேசினான். நான் குனிந்து குசுகுசுத்துப் பேசினேன். அவனுடைய குரலும் குழல் வழியாகக் குசுகுசுத்து வந்தது. இப் பேச்சு தனதும் தனது தாய் சகோதரியரின் மனோநிலை சம்பந்தமானதாகும். அப்பொழுது அவனுடைய தாய் விசேஷ சிகிச்சை ஒன்று பெற்றுவந்தாள். இதைக் குறித்து அவன் சம்பாஷித்தான். நான் அவனைக் கடைசியாக 1940ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி சந்தித்தேன். பல ஆண்டுகளாக நாம் அடிக்கடி சந்தித்தோம். நான் அவன் இறந்துபோனதாக ஒரு போதும் நினைக்கவில்லை. சர் அலிவர் லாட்ஸ் தனது மகன் ராய்மண்டோடு பலமுறை சம்பாஷித்திருக்கிறார். இறந்தவர்களோடு பேசுவதற்கு மீடியம் (ஆவேசித்துப் பேசுவோர்) தேவையாயினும் நேர் பேச்சுக்கு மீடியம் தேவையில்லை. பேச்சு ஆகாயத்தில் நின்று நேரே வருகின்றது. இவ் வுண்மையை ஆவி ஆராய்ச்சியாளர் நன்கு அறிவார்கள். இவ்வாறு ஆவிகள் நேரே பேசுவதை நான் பல தடவைகளிற் கேட்டிருக்கிறேன். சில சமயங்களில் பல ஆவிகள் ஒருமித்துப் பேசின. இவ்வாறு இறந்தவர்களின் ஆவிகள் இலண்டனில் பலர் முன்னிலையில் சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கின்றன. இறந்துபோன சர் ஹென்றி செர்கேவ் என்பவர் தனது மனைவியுடன் பேசியிருக்கின்றார். அவர் பேசிய காரியங்கள் அவ்விருவருக்கும் மாத்திரம் தெரிந்தவை. அவருடைய ஆவி வடிவு அறையை விட்டவுடன் என்னுடன் வந்து மரியாதையாகப் பேசிற்று. எங்கள் பேச்சு ஒன்று 1933ஆம் ஆண்டு சூன் மாதம் 2ஆம் நாள் நிகழ்ந்தது. எங்கள் காலத்தில் பேர்போன ஆசிரியர்களுள் ஒருவரும் மறு பிறப்பைப்பற்றி ஒரு நாடகம் எழுதியவருமாகிய ஒருவர் என்னுடன் பல தடவைகள் பேசினார். அவரது பெயரை வெளியிடுவதை அவர் மனைவி விரும்பவில்லை. அவர் மரணமான சிறிது நாட்களின்பின் 1933ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் அவர் என்னோடு பேசினார். அப்பொழுது இருபது பேர் சமூகமாயிருந்தனர். செகிரேவ் அம்மையார் அவர்களுள் ஒருவர். ஒரு முறை செர் ஆதர் கனன்டேலின் ஆவி இருபத்துமூன்று பேருக்கு எதிரே என்னுடன் பேசவேண்டுமெனக் கூறிற்று. ஆவிகள் பேசுவதில் சந்தேகமும் கவனமுமுடைய நான் பேசப்போவது கனன்டேல் தானென்று அத்தாட்சிப்படுத்தும்படி சொன்னேன். அவர் என்னைக் காட்சி முறையாகச் சந்தித்த இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். இது சரியாக இருந்தது. நாங்கள் இருவரும் வெஸ்ட்மின்ஸ்டரில் விக்டோரியா வீதியில் பெருமழைக்கு ஒதுங்கி நிற்கும்படி ஒரு வீட்டு வாயிலுக்கு ஓடிச்சென்று நின்ற போது சந்தித்தோம். பின் அவர் தனது மனைவிக்கும் மகன் டெனிசுக்கும் செய்தி சொன்னார். அப்போது சர்ஹென்ரி செகிரேவும் பேசினார்: மீடியங்களும் ஆவிவுலகப் பேச்சும் பல காலமாக மறு உலகத்துக்கும் இவ்வுலகத்துக்குமுள்ள ஆராய்ச்சி களில் ஈடுபட்டிருந்தேன். ஆவி உலகத்துக்கும் இவ்வுலகத்துக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அங்கு வாழுகின்றவர்களுக்கு இவ்வுலகம் எங்களுக்கு எவ்வாறு தோன்றுகிறதோ அவ்வாறு திடமுடையதாக இருக்கின்றது. மக்க ளுடைய உடல் ஒரே வகையான வேகத்தில் இயங்கும்போது திடம்போல் தோன்றும். ஓர் ஆவி மூடப்பட்ட கதவுக் கூடாகச் செல்லமுடியும்; கூடிய இயக்கமுள்ள பொருள், குறைந்த இயக்கமுள்ள பொருள்களுக் கூடாகச் செல்லக்கூடும். அதற்குக் கதவின் தடுப்பு இல்லை. அது தனது இயக்கத் தின் வேகத்தைக் குறைக்கும்போது ஆவி சதையும் இரத்தமுள்ள மனித சரீரம்போலத் திடமுடையதாகின்றது. அப்பொழுது அது கதவுக்கூடாகக் செல்லமுடியாது. இவ்வாறு செல்லும் ஆற்றலைப்பற்றி உயிரோடிருக்கும் பலர் அறிந் துள்ளார்கள். எனது நண்பனான யோனானிஸ் கொலென்பேக் என்னும் டானிஸ்காரர் நினைத்தபோது தனது உடலைவிட்டுச் செல்லும் ஆற்றல் பெற்றிருந்தார். இவ்வாறு நுண்ணுடலோடு பயணஞ் செல்லக்கூடியவர்கள் நம்மவர் அறைகளுள் செல்லமுடியும். மீடியம் மூலம் ஆவி உலகத்துக்கும் இவ்வுலகத்துக்கும் இடையிலுள்ள கதவு திறக்கப்படும்போது கீழ் நிலையி லுள்ள ஆவிகள் குறும்பு செய்வதுமுண்டு; இதனால் உண்மையல் லாத பல செய்திகள் கிடைக்கின்றன. இப் பூமியில் வாழும் பல திறப்பட்ட மக்களை ஒப்பவே மறு உலகிலும் பலதிறப்பட ஆவிகள் உறைகின்றன. இது பற்றித் தான் மறு உலகிலிருந்து வரும் செய்திகள் பல பொருளற்றனவாகக் காணப்படுகின்றன. ஆவி உலகிலிருந்து கிடைத்த செய்திகள் அபாயங்களிலிருந்து பலரைக் காப்பாற்றியிருக்கின்றன; குற்றமற்ற பலரைப் பொய்யான குற்றச் சாட்டுகளிலிருந்து தப்ப வைத்திருக்கின்றன; இழந்துபோன மரண சாசனங்களைக் கண்டுபிடிக்க உதவி செய்திருக்கின்றன. பல நாடுகளில் போலிசார் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஆவி களுடன் பேசுவோரைப் பயன்படுத்தி வருகின்றனர். 1914ஆம் ஆண்டு யுத்த காலம் முதல் பல நாடுகள் இம் முறையைக் கையாண்டு வருகின்றன. இவ்வாறு ஆலோசனை செய்யுமுன் ஹிட்லர் ஒரு கருமத்தைப்பற்றித் தீர்மானத்துக்கு வருவதில்லை எனஅவரது முன்னைய நண்பராகிய ரோச்நிங்(Rauschning) அவரைக் குற்றஞ் சாட்டியிருக்கின்றார். உலோக சம்பந்தமானவை தாவரங்களாகவும், தாவரங்கள் சிற்றுயிர்க ளாகவும், சிற்றுயிர்கள் விலங்குகள் பறவைகளாகவும், விலங்குகள் பறவைகள் மனிதராகவும் மாறுகின்றன என்பதற்குப் பிராணி நூல் சான்றளிக்கின்றது. பூமியல்லாத மற்றக் கிரகங்களில் இப் பூமியிலுள்ள உயிர்கள் போலல்லாதவையும் போன்றவையுமான உயிர்கள் இருக்கின்றன என்று ஆவி உலகத்தவர் கூறி இருக்கின்றனர். சமய நூல்கள், தேவர்களையும் தேவதூதர்களையும் பற்றிக் கூறியுள்ளன. இவ் வுலகுகளிலிருந்து மேல் உலகங்களுக்குச் செல்ல மரணமுண்டாகின்ற தென்று ஆவிகள் கூறு கின்றன. எங்கள் உலகம் ஏழு பிரிவுகளாக உள்ளன என்றும், நாம் இறந்ததும் நாம் எம்மை ஆயத்தஞ் செய்துகொள்ளும்படி மரணகாலத்தில் அவை களுள் ஒன்றுக்குச் செல்கின்றோமென்றும் அவை கூறுகின்றன. உயர்வான எண்ணமும் உயர்ந்த வாழ்க்கையுமுள்ளவர், உயர்ந்த மண்டலத்துக்குச் செல்வார். சாதாரண மக்கள் பொதுவாக மூன்றாவது உலகத்துக்குச் செல் கின்றனரென்றும் அங்குள்ள நிலைமை உடலளவில் வேறுபாடன்றி மற்றைய எல்லா வகையும் பூமியிலுள்ளது போன்றது என்றும் அவை கூறுகின்றன. நாம் மூன்றாமுலகைவிட்டு நாலாம் உலகை அடையும்போது மனித வடிவம் மாறுபட்டு இன்னொரு வடிவம் உண்டாகின்றதென்றும், அது ‘கூட்ட உயிர்’ என்றும் அவ்வுலகை அடைந்த மேயர்ஸ் முதலிய சாத்திர அறிஞர் கூறியுள்ளார்கள். கூட்டு உயிர் என்பதைப் பற்றி இன்னோரிடத்திற் கூறுவோம். இவ் வுலகத்தில் நாம் வாழும்போது நாம் அக்கூட்டத்தின் உறுப்பினரென்றும் மரண காலத்தில் அக் கூட்டத்தை அடைகின்றோ மென்றும் எங்கள் உண்மையான வீடு மறு உலகமேயன்றி இவ்வுலக மல்ல வென்றும் அவர் கூறியுள்ளனர். அங்கு நேரமும் தூரமும் இல்லையென்றும், நேரம் உலகத்தின் சுழற்சியைப் பொறுத்ததென்றும், எங்கள் நேரம் என்றும் மூன்றாம் உலகத்தின் நேரமல்ல என்றும் கூறியுள்ளார்கள். ஆவிகளை அழைப்பது எப்படி? எங்கள் நாட்டில் சிலர் சில தேவதைகளை வாலாயம் பண்ணியிருக் கிறார்கள் என மக்கள் நம்பி வருவதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்கள் தேவதையை அழைப்பதற்குத் தேவதையை நினைக்கிறார்கள் என்றும் அறிகிறோம். ஒருவரைப்பற்றி இன்னொருவர் நினைத்தால், அவருக்குத் தும்மல் உண்டாகின்றது என்றும் நம்பப்படுகின்றது. ஒருவர் மனத்தில் நினைப்பதை அறிந்து கூறும் ஆற்றல் பலரிடம் உண்டு. இதனை மேல்நாட்டவர்கள், ‘தாட்ஸ் ரீடிங்’(Thoughts reading) எனக் கூறுகிறார்கள். எங்கள் நாட்டில் இது “நினைத்த காரியம் சொல்லுதல்” என்னும் பெயர் பெற்று வழங்குகின்றது. இவற்றால் ஒருவர் நினைவு இன்னொருவர் உள்ளத் தில் பதியத்தக்கது என நாம் அறிகின்றோம். எண்ணங்களுக்கு வடிவு உண்டு. இது மேற்புல அறிஞரால் ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டது. இது போன்ற இயற்கை விதியினால் ஒருவர், இறந்தவரைப்பற்றி உறுதியாக நினைத்தால் அந் நினைவு இறந்தவர்களின் அறிவுக்கு அறிய வருகின்றது. அப்பொழுது அவை இவ்வுலகுக்கு வந்து, தாம் ஆவேசித்து நின்று பேசத் தகுதியுடையவர் மூலம் பேசுகின்றன1. எல்லோர் மூலமும் ஆவிகள் பேச மாட்டா. சிலருடைய உடல், மூளை அமைப்புக்களே ஆவிகளை ஏற்றுப் பேசத் தக்கன. ஒரு உடலில் இரண்டு ஆவிகள் தங்குவதால், (தகுதியற்றவர் களினுடலில் ஆவிகள் ஆவேசித்தால்,) அவர்களின் மூளை நொறுங்கிக் கெட்டுவிடும் என்று கருதப்படுகின்றது. பேய்கள் எல்லோரையும் பிடிப்ப தில்லை. சிலரையே பிடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்குக் காரணம் முன் கூறப்பட்டதாகலாம். சீனர் ஆவியோடு பேச அறிந்திருந்தார்கள் சீனர் பழங்காலத்திலேயே வீ (V) வடிவான பிளஞ்சட்1 மூலம் ஆவி களோடு பேசினார்கள். கேள்விகள் கடுதாசியில் எழுதிக் கொடுக்கப்பட்டன. ஆவியோடு பேசுகின்றவர் கேள்விகளை மற்றவர்கள் அறியுமுன் பலிபீடத் துக்கு முன்னால் நெருப்பில் இட்டுக் கொளுத்தினார். “பிளஞ்சட்” அக் கேள்விகளுக்கு விடை எழுதிற்று. இக் கருமம் இதனையே தொழிலாக உள்ள சிலரால் மாத்திரம் செய்யப்பட்டது. பிளஞ்சட் என்பது இருதய வடிவான ஒரு கருவி. அதில் ஆவியோடு பேசுகின்றவர் எழுதுகோலையும் கீழே தாளையும் வைத்திருந்தால் ஆவி கையை இயக்கி எழுதும். இன்னொரு முறையாகவும் அவர்கள் ஆவியோடு பேசினார்கள். இதைப் பற்றிய வரலாறு ஏழாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கியங் களில் காணப்படுகின்றது. ஆவியோடு பேசுகிறவனுக்கு முன்னால் மெழுகுத் திரி கொளுத்தி வைத்துச் சாம்பிராணிப் புகை போடப்பட்டது. அப்பொழுது அவன் மயக்க நிலை அடைந்து சிலவற்றைக் கூறுகின்றான். அவன்மீது ஆவி ஆவேசித்திருப்பதாகக் கருதப்படுகின்றது.2 தெளிவுக் காட்சி (Clairvoyance) ஒரு முனிவரோ, தேவனோ, ஒருவனுக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து ஆபத்துக் காலத்தில் அம் மந்திரத்தை உச்சரித்துக் தம்மை நினைத்தால், தாம் வந்து உதவி செய்வதாகக் கூறினார்கள் என்பது போன்று உள்ள பழங்கதைகள் தொலைவில் உணர்தலை(Telepathy) அடிப்படையாகக் கொண்ட கதைகளாகும். தொலைவிலுணர்தல் என்பது தொலைவிலிருந்து ஒருவர் நினைப்பதை மற்றொருவர் அறிதல். தெளிவுக் காட்சி என்பது தொலைவிலும் அண்மையிலும் நிகழும் செய்திகளைப் பிறர் நினைக்காமலே இயல்பாக அறியும் ஆற்றல். முனிவர்கள் “ஞான திருட்டி யால்” தொலைவில் நிகழ்ந்தவற்றைக் கூறினார்கள் என வரும் பழங் கதைகள் தெளிவில் உணர்தலுக்கு எடுத்துக் காட்டாகும். இவ்வாற்றல் எல்லாமக்களிடத்தும் இயல்பாக மறைந்து இருக்கின்றது. மனிதனுக்கு வெளிமனம் உள்மனம் என இருமனங்கள் உள்ளன. விழிப்பு நிலையில் தொழிற்படுவது வெளிமனம். மனோவசிய முறையில் அறிதுயில் கொள்ளும்படி செய்யப்பட்ட ஒருவனுக்கு உள்மனம் விழிப்பு நிலையில் இருக்கின்றது. இந் நிலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் கண்ணால் பாராமலே அயலே உள்ள பல நிகழ்ச்சிகளைக் கூறவல்லவர் களாயிருக்கின்றனர். இதனைச் சென்னை வீதிகளில் தினமும் பார்க்கலாம். ஒருவன் சில வித்தைகளைக் காண்பித்தபின், மற்றொருவனை மயக்க நிலைக்குக் கொண்டு வருகின்றான். பின்பு அவனுடைய முகம் துணியால் மூடப்படு கின்றது. சூழ நிற்பவர்களில் ஒருவன் வைத்திருக்கும் நாணயம் எவ்வகை யினது, எப்பொழுது அடிக்கப்பட்டது என்று கேட்டால் அவன் சரியான விடை அளிக்கிறான்; இப்படியே கடிகாரத்தில் நேரமென்ன? ஒருவன் மனத் தில் நினைப்பது என்ன என்பவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் அவன் சரியான விடை அளிக்கின்றான். இது எல்லோருக்கும் வியப்பளிப்பதாகவே இருக்கின்றது. யோகம் என்பதும் வெளிமனம் தொழிற்படாது உள்மனம் தொழிற்படும்படியான ஒருவகை நிலையில் இருப்பதேயாகும். ஆனால் மனோவசிய அறிதுயிலுக்கும் யோக அறிதுயிலுக்கும் வேறுபாடு உண்டு. சிலருக்குத் தெளிவுக் காட்சி உணர்ச்சி, இயல்பாகவே அமைந்துள்ளது. 1759ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் ஒரு நாள் சனிக்கிழமை மாலை சுவிமன்பேக் என்பவர் இங்கிலாந்திலே கொத்தின்பேக் என்னும் இடத்துக்குச் சென்றிருந்தார். அவர் அங்கு நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி யிருந்தார். அவர் இரண்டு மணி நேரம் வெளியே சென்றபின் ஸ்டோக் ஹோல்ம் என்னும் இடத்தில் மோசமான தீ மூண்டெரிவதாகக் கூறினார். ஸ்bடாக்ஹோல்ம், கொத்தின்பேக்கிலிருந்து ஐம்பது மைல் தூரத்திலுள்ளது. அவர் நெருப்பு விரைவாகப் பரவுகின்றது என்று சொல்லிக்கொண்டு அடிக்கடி வெளியே சென்றார். அவர் தனது நண்பர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் வீடு சாம்பலாகி விட்டதென்றும் தனது வீடு அபாய நிலையில் இருக்கின்றதென்றும் கூறினார். எட்டு மணி அளவில் அவர் முகம் மலர்ச்சி அடைந்தது. தனது வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் நெருப்பு அணைக்கப்பட்டுவிட்டதெனக் கூறினார். இந் நிகழ்ச்சி பட்டினத்தில் அதிகக் கிளர்ச்சியை உண்டுபண்ணிற்று. இதற்கிடையில் இச் செய்தி கவர்னருக்குக் கிட்டிற்று. ஞாயிற்றுக்கிழமை காலை கவர்னர் சுவிமன்பேக்கை அழைத்துத் தீயைப்பற்றி வினவினார். அவர் உடனே எப்படித் தீ ஆரம்பித்தது என்றும், அது எவ்வளவு நேரம் எரிந்ததென்றும், அது எப்படி அணைக்கப் பட்டதென்றும் கூறினார். திங்கட்கிழமை காலையில் நெருப்பைப் பற்றிய செய்தி கொத்தின் பேக்குக்குக் கடிதமூலம் வந்தது. அது சுவிமன்பேக் கூறியது போலவே இருந்தது.* ஹான்ட்ஸ் என்பவர் எலின் என்பவளுக்கு மனவசிய முறையாக நோய்க்கு வைத்தியம் செய்தார். அவள் மயக்க நிலையில் ஆழ்ந்திருந்த போது, கண்ணினால் பாராமலே பொருள்களைக் கண்டாள்; அவள் தான் நேரில் பாராத இடங்களையும் மக்களையும் பற்றிச் சரியாக விவரித்துக் கூறினாள். கண்ணுக்குப் பஞ்சுவைத்துக் கட்டியபின், இருட்டறையில் காட்டப்பட்ட அச்சிட்ட படங்களை அவள் சரியாகக் கூறினாள்.* கூட்டமான உயிரும் பேருயிரும் (The “Group Soul” and “Greater Self”) நாங்கள் உடல் சம்பந்தமாகவும் பலவாறு கூட்டப்படுத்தப்பட்டிருக் கின்றோ மென்பதற்குப் பல அடையாளங்கள் உண்டு. ஒரு ஆணாவது ஒரு பெண்ணாவது தனக்காக வாழமுடியாது. இவ்வுலக வாழ்க்கையில் நாம் மற்றவர்களோடு இணைக்கப்படுகின்றோம். நாம் சிலரால் கவரப்படுகின் றோம்; அவர்கள் எங்களால் கவரப்படுகின்றார்கள். நாம் சிலரை மறுபடியும் மறுபடியும் எதிர்பாராத இடங்களில் பலமுறை சந்திக்கின்றோம். வாழ்க்கை யில் நாம் ஒருபோதும் பார்த்திராத சிலர் எங்களுக்கு அறிமுகப்பட்டவர் களாகவும் தோன்றுகின்றனர். சிலரை நாம் பார்த்தமாத்திரத்தில் வெறுக்கின் றோம். இவைகளுள் பல கூட்டமான உயிர்கள் என்பதைப்பற்றி அறிவிக் கும் சான்றுகளாகும். கூட்டமான உயிர்கள் என்றால் என்ன? இங்கு கூறப்படு கின்றவைகளுள் பல செய்திகள் அவ் வுலக ஆவிகளாற் கூறப்பட்டனவும் நாம் நித்திரையில் மறு உலகிலுள்ள கூட்டமான உயிர்களோடு தொடர்பு பெறுவதாலும் பெற்ற அனுபவத்தாலும் கிடைத்தனவாகும். நாம் எல்லோரும் மறு உலகத்திலுள்ள கூட்டங்களுள் சிலவற்றைச் சேர்ந்தவர்களாவோம். இவ்வுலகம் நமது உண்மையான உறைவிடமன்று. நாம் சில அனுபவங்களைப் பெறும் பொருட்டு இப் பூமியில் சில காலம் தங்குவதற்கு வந்தவர்களாவோம். ஆவி உலகில் நாம் இருக்கும்போது இவ்வுலகில் நாம் பிறப்பதற்கு அடிக்கடி அழைப்பு வருகின்றது. விரும்பி னால் நாம் அவ் வழைப்புகளை மறுக்கலாம். மற்றவைகளில் சுதந்திரம் இருப்பது போலவே இவ்வாறு மறுப்பதற்கும் எங்களுக்குச் சுதந்திரம் உண்டு. உடனோ காலந்தாழ்ந்தோ நாங்கள் அழைப்புக்கு உடன்பட்டுப் பூமிக்குச் செல்கின்றோம். நாம் இவ் வுலகைவிட்டுப் போகும்போது எங்கள் கூட்டத்தினர் எப்படி நம்மைச் சுற்றிக் கூடுகிறார்களோ அப்படியே நாம் ஆவி உலகத்தைவிட்டு இவ்வுலகுக்கு வரும்போதும் நாம் எக் கூட்டத்தைச் சேர்ந்துள்ளோமோ அக் கூட்டத்திலுள்ள நமது நண்பர் கூடி எங்களை வழியனுப்புகிறார்கள். நாம் மறுபடியும் ஆவி உலகை அடையும்போதும் அவர்கள் நம்மை வரவேற்கிறார்கள். நாம் எழுபது ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கலாம். அது காலம் இல்லாத அவ்வுலகில் கழிந்த ஒரு மாலைப் பொழுதுபோல் இருக்கலாம். எம்மை இவ்வுலகிலும் அவ்வுலகிலும் ஒரு குறிக்கப்பட்ட கூட்டத்தில் சேர்ப்பது எமது அனுதாப உணர்ச்சியும் விளங்கிக் கொள்ளும் தன்மையுமாகும். இக் காரணம் பற்றியே நாம் இப் பூமியில் காண்கின்ற ஒரு சிலர்மீது வெறுப்பும், வேறு சிலர் மீது விருப்பும் உண்டாகின்றது. நாம் திரும்ப ஆவியுலகத்துக்குச் செல்லும்போது நாம் இவ்வுலகில் நுகர்ந்த இன்பங்கள் துன்பங்கள் மூலம் அடைந்த அனுபங்களோடு எங்கள் கூட்டத்துக்குச் செல்கின்றோம். இவ் வனுபவங்கள் எங்கள் கூட்டத்தினர் எல்லோருக்கும் பொதுவான முதற் பொருள் போன்றன. இவ் வனுபவங்கள் அக்கூட்டத்தின் அறிவு வளர்ச்சிக்கும் அக் கூட்டத்தில் ஒவ்வொரு உயிரின் விரிவளர்ச்சிக்கும் வேண்டப்படுவனவாகும். நாம் இவ்வுலகில் தங்கும் காலம் நாம் ஓரிரவு ஒரு விடுதியில் தங்கியது போலாகும். நாம் உணரா விட்டாலும் நாம் ஒவ்வொரு நொடியும் மறு உலகிலுள்ள கூட்ட உயிரோடு தொடர்புடையவர்களாக இருக்கின்றோம். நாம் ஒவ்வொரு இரவும் நித்திரை கொள்ளும் போது உயிர் இப்பரு உடலைவிட்டு மறு உலகிற் சென்று தனது கூட்டத்திலுள்ள உயிர்களையும் தனது கூட்டத்திற்குப் புறம்பேயுள்ள பிற உயிர்களையும் சந்திக்கின்றது. ஆவி உலகில் உள்ளவர்கள் கூறுவதனால் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு நாட்காலையிலும் தான் சந்தித்த உயிர்களோடு நடத்திய பேச்சுகளை ஞாபகத்தில் வைத்துச் சொல்லப் பழகிய சிலர் மூலமாகவும் இவ்வுண்மையை அறிகின்றோம். சில சமயங்களில் தனிப்பட்டவர்களாக இருப்பதாக நினைந்து வருந்தும் நிலை உண்டாகின்றது. இது நாம் எமது தாயுலகமாகிய ஆவி உலகிலிருந்து பிரிந்திருப்பதை நினைவுக்குக் கொண்டுவரும் மறைந்து நிற்கும் உணர்ச்சியினாலாகும். இதை ஊன் இரத்தங்களோடு கூடிய இவ்வுடலை எடுத்து வாழ்வது தன்னலத்தைத் துறத்தலாலும், மற்றவர்க்கு உதவி செய்வதினாலும் துயருறுதலினாலும் நாம் ஈடேற்றம் அடைகின்றமையால் இத் துறவு வேண்டியதாகும். கிறித்துநாதராகிய பெரியவரே இவ் வகைத் துறவுக்குத் தம்மை ஒப்படைத்தார். இக் கூட்ட உயிர் தனித்தனி உயிர்களால் உண்டாயிருப்ப தல்லாமல் இவ் வுயிர்களுக்கெல்லாம் விளக்கமளிக்கும் ஒரு பெரிய உயிராலும் உண்டாகி இருக்கின்றது. கோடிக்கணக்கான சிறிய உயிர்க் கோளங் களாலான மனித உடலுள் பெரிய ஓர் உயிர் இருப்பதை இதற்கு ஒப்பிடலாம். பகை அல்லது அன்பு எங்களை இக் கூட்டங்கள் ஒன்றில் சேர்த்துவிடலாம். உயர்ந்த உலகில், பகை அன்பாக மாறுகின்றது. ஒவ்வொரு கூட்டத்திலு முள்ள உயிர்களின் எண்களும் மாறுபடுகின்றன. ஒவ்வொன்றிலும் பத்து இருபது அல்லது பத்துலட்சம் இருக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றுக் கும் ஒரே வகை அனுதாபமும் விளக்கமும் உண்டு. அவை ஒன்றின்மேல் ஒன்று அன்பாக இருத்தலையும் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்தலையும் மகிழ்ச்சியாகக் கொள்கின்றன. நாம் பரவச நிலையடைகின்ற காலத்தில் நமக்குப் பின்னால் பெரிய ஆற்றல் ஒன்று இருப்பதாகவும் அது எங்களின் பகுதியாக்கியிருப்பதாகவும் உணர்கின்றோம்.  மனிதன் எப்படித் தோன்றினான்? முன்னுரை இவ்வுலகில் தோன்றிய உயிர்கள், அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப, அடுத்த அடுத்த பிறவிகளில் மேலான உடல்களைப் பெற்று, இறுதியில் மனிதனாகப் பிறக்கின்றன என்பது தென்னிந்திய மக்கள் மிகமிக முற்காலம் முதல் அறிந்திருந்த உண்மையாகும். இக் கருத்தினைப் ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்..........செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் - எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்” என வரும் திருவாசகத்திலும் காணலாகும். உயிர்த் தோற்ற வளர்ச்சிக் கொள்கையினரும் (Evolutionists) இக் கருத்தினையே வெளியிடுகின்றனர். அவர்கள், உயிர்களின் மறு பிறப்பைப் பற்றி யாதும் பேசாது ஒவ்வொரு உயிருக்கும் அடுத்த அடுத்த படியில் மேலின உயிர்கள் தோன்றிப் பெருகின என்றும், ஒரு உயிரின் வளர்ச்சியே அடுத்தபடியி லுள்ளது என்றும் கூறுவர். இக் கருத்துகளைக் குறித்த செய்திகள் படிப்ப தற்கு இன்பம் அளிப்பனவாயுள்ளன. இப் பரந்த உலகில் ஆங்காங்கு வாழும் மக்கள் எல்லோரும் நாகரிக வளர்ச்சியில் ஒரே வகையான பல படிகளைத் தாண்டி வந்துள்ளார்கள். மனித சமூகத்தில் தோன்றியுள்ள மொழி, சமயம் முதலியனவும், இசை, கூத்து, மருந்து, கணிதம் போன்ற எல்லாக் கலைகளும் ஒரே வகையாகத் தோன்றி வளர்ச்சி யடைந்தன. நம் நாட்டிலுள்ள தூக்கணங் குருவி போலவே இங்கிலாந்திலுள்ள தூக்கணங் குருவியும் கூடு கட்டுகிறது. ஆனால் அது கூடு கட்டுவதற்குப் பயன்படுத் தும் பொருள் அவ்விடங்களிற் கிடைப்பனவாகலாம். இது போலவே, மனிதனுடைய நாகரிகங்களும் இடங்களுக்கு ஏற்றவாறு சிறு மாறுதல்களை அடைந்துள்ளன. இவ்வகைக் கருத்துகள், வரலாற்றுப் பயிற்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன. அவ்வகையில் இந் நூல் பெரிதும் பயனளிப்பதாகும். சென்னை 25.7.1947 ந.சி. கந்தையா மனிதன் எப்படித் தோன்றினான்? தோற்றுவாய் வரலாறுகளுள் மனிதனுடைய வரலாறு சிறந்தது. மனித வரலாற்றைக் கற்பதால் நாம் சரித்திரத் தொடர்பான பல செய்திகளை எளிதில் விளங்கிக் கொள்ள முடிகின்றது. மேல் நாட்டு அறிஞர் மனித வரலாற்றை மிகச் சிறப் புடையதெனக் கொண்டு அதனை ஒரு கலையாக வளர்த்து வருகின்றனர். ஆகவே அவர்களிடையே மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிந்து வருகின்றன; உண்மை அறிவு ஓங்குகின்றது. இச் சிறிய நூல் மனித வரலாற்றை இயன்ற அளவு சுருங்கவும் விளங்கவும் கூறுகின்றது. நாம் வாழும் உலகம் மனித வரலாற்றைப் பற்றிப் பயிலுமுன் மனிதன் வாழ்வதற்கு இடனாயுள்ள இவ்வுலகைப் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். இப் பூமியின் மேற்பரப்பில் பயிர் பச்சைகளும், ஆறுகளும், மலைகளும், பல்வகை உயிர்த்தோற்றங்களும் காணப்படுகின்றன. பூமியின் மேற்பரப்பு மிகக் குளிர்ச்சி உடையதாகக் காணப்படுகின்றது. ஆனால் அதன் வயிற்றுள், கடிய இரும்பையும் கல்லையும் நீராக உருக்கவல்ல நெருப்பு இருக்கின்றது. இந் நெருப்பே சில காலங்களில் குமுறி வெளியே எழுகின்றது. அப்பொழுது கீழிருந்து வெளியே தள்ளப்படும் பொருள்கள் குவிந்து மலையாகின்றன. அம் மலையின் நடுவில் பெரிய துவாரம் இருக்கும். அவ் வகை மலை களுக்கு எரிமலைகள் என்று பெயர். பூமியின் வயிற்றில் நெருப்பு இருப்ப தற்குக் காரணம் யாது? இப் பூமி ஒரு காலத்தில் நெருப்புப் பந்தாக இருந்தது. இது, ஞாயிற்றினின்றும் தெறித்து விழுந்த ஒரு துண்டு. இது எண்ணில்லாத காலம் அந்தரத்தே சுழன்று கொண்டிருந்தது. அப்பொழுது அதன் மேலோடு சிறிது சிறிதாகக் குளிர்ச்சி யடைந்தது. பூமியின் மேலோட்டின் 32 மைல் கனம் குளிர்ந்திருக்கின்றது. அதன் கீழ், எரிகின்ற நெருப்பு இருக் கின்றது. கீழே உள்ள நெருப்பு, காலத்துக்குக் காலம் சீறி மேலே எழுந்து தணலையும் கடினமான பொருள்களையும் கக்கிற்று. இயற்கை மாறுபாட் டால் பல தடவை கடல் தரையாகவும், தரை கடலாகவும் மாறின. மலைகள் பல தோன்றின. மலைகளிலிருந்து வழிந்து ஓடும் மழைநீர் மணலை வாரிக் கீழே கொண்டுவந்து பள்ளங்களை நிரப்பின. இவ்வகைக் காரணங்களால் பூமியின் மேல் ஓட்டின் மீது கல்லும் மண்ணும் ஏறுண்டன. அவ்வாறு ஏறுண்ட பொருள்களின் கனம் இருபத்தொரு மைல். மண், மணல் என்பன, பாறைகள் நொறுங்குவதால் உண்டாகிய சிறு துண்டுகள். பாறைகள் அதிக சூடேறி விரைவில் குளிர்வதாலும் பாறை வெடிப்புகளுள் நீர் தங்கிப் பனிக் கட்டியாக உறைவதாலும் அவை நொறுங்கும். நொறுங்கிய சிறு துண்டுகளை மழைநீர் அடித்துக்கொண்டு கீழே செல்லும். இவ்வாறு காலத்துக்குக் காலம் ஏறுண்ட மண் கல் முதலியன, ஏறுண்ட முறைப்படி, அமர்ந்து நெரிந்து படிந்து பாறை அடுக்குகளாக மாறி உள்ளன. எரிமலைக் குழப்பம், பூமி அதிர்ச்சி போன்ற இயற்கைக் குழப்பங்களால் அப் பாறை அடுக்குகளின் சில பகுதிகள் வெளியே தள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் சில பகுதிகள் கடல் அலைகளால் அரிக்கப்பட்டு நாம் காணக்கூடியனவாகச் சில இடங்களில் உள்ளன. அவற்றை ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து பார்த்து நூல்கள் வெளி யிட்டிருக்கின்றனர். அவர்கள் பூமியின் மேலோட்டுக்குமேல் உள்ள பாறை அடுக்கு களை நால்வகையாகப் பிரித்துள்ளார்கள். அப் பாறை அடுக்குகளில் அவ்வக் காலங்களில் வாழ்ந்த உயிர்களும் தாவரங்களும் பதிந்து கிடக் கின்றன. அவற்றுக்குக் கற்படி உருவங்கள்(Fossils) என்று பெயர். ஒவ்வொரு பாறை அடுக்குக்கும் வெவ்வேறு பெயர் இடப்பட்டுள்ளது. அப் பெயர்கள் அப் பாறை அடுக்குகளில் காணப்படும் உயிர்களின் தொடர்பானவை. பாறைகளில் காணப்படும் உலோகப் பொருள்களைக் கொண்டு அவற்றின் வயதுகள் கணிக்கப்படுகின்றன. கீழே உள்ள பாறை அடுக்கு முதல், மேலே உள்ள பாறை அடுக்கு வரையில் படிப்படியே வளர்ச்சியடைந்த உயிர்களும் தாவரங்களும் தோன்றியிருந்தன. ஒரு பாறை அடுக்கில் காணப்படும் உயிர்கள் எல்லாம் அழிந்து போக, அவற்றிலும் பார்க்க வளர்ச்சியடைந்த உயிர்கள் அடுத்த காலத்தில் தோன்றி வாழ்ந்தன. ஒரு கீழ்ப்படியிலுள்ள உயிருக்கும் மேற்படியிலுள்ள உயிருக்கும் நெருங்கிய உறவு காணப்படுகின்றது. இவ்வியல்புகளை ஆராய்ந்து உயிர்த் தோற்ற வளர்ச்சி நூலார்(Evolutionists) மிகத் தாழ்ந்த உயிர்களே எண்ணில் லாத காலத்தில் படிப்படியே வளர்ந்து, மேலின உயிர்களாக மாறியுள்ளன எனக் கூறுவர். உயிர்களின் தோற்றம் வளர்ச்சி மனிதன், உயிர் இனத்தைச் சேர்ந்தவனாதலின் இவ்வுலகில் காணப் படும் உயிர்களைப் பற்றி நாம் அறிதல் வேண்டும். தொடக்கத்தில் இப் பூமி வெப்பமுடையதாக இருந்ததது. அப்பொழுது அங்கு உயிர்கள் தோன்றி வாழ்ந்திருக்க முடியாது. கனல் மிகுந்திருந்தமையால் காற்றும் நீரும் தரை மட்டத்தில் இருந்திருக்கவும் முடியாது. இந் நிலைமை மாறிற்று. அப்பொழுது உயிர்கள், இப் பூமியில் தோன்றி வாழத்தொடங்கின அவை அணுவின் பருமை உடையனவாயிருந்தன. இப் பழைய உயிர்கள் எங்கிருந்து இப் பூமியை அடைந்தன என்று கூற முடியாது. ஆதிகால உயிர்கள் நீர், காற்று, கரைந்த உப்பு என்ப வற்றில் வாழக்கூடியனவாகவும் கண்ணுக்குப் புலப்பட முடியாத சிறியனவாகவுமிருந்தன. அவை தமது வாழ்க்கை யைக் கடலிலேயே தொடங்கின. அவற்றில் தாவர உயிர்கள் பச்சை நிறமுடையனவாயிருந்தன. ஞாயிற்றின் ஒளியி லிருந்து கரியமிலவாயுவைப் பிரித்துச் சர்க்கரை, மா என்னும் உணவை உண்டாக்குவதற்குப் பச்சை நிறம் அவற்றுக்குப் பயன்பட்டது. உணவை உட்கொள்வதால் அவற்றின் உடலில் உயிர்ச் சத்துத் திரண்டது. அச் சத்து அவற்றின் கண்ணறைகளில்(Cells) சேமித்து வைக்கப்பட்டன. அவை முளைபோல வளர்ந்தன. அவற்றின் உதவியைக்கொண்டு அச் சிற்றுயிர்கள் நீரில் சுறுசுறுப்போடு உலாவிக் கொண்டிருந்தன. மாரிகாலத்தில் நிலத்திலும் படிக்கட்டிலும் பாசிபோன்ற ஒரு வகைப் பச்சை நிறப்பொருளைக் காண்கின்றோம். அவை ஒரு கண்ணறை உடலமைப்புடைய தாவரங்களின் கூட்டங்களாகும். இவ்வகைச் சிறிய தாவரங்களிலிருந்தே இன்று காணப்படும் பெரிய நிழல் மரங்கள் முதல் புல், பூண்டு முதலிய எல்லாவகைத் தாவரங்களும் வளர்ச்சியடைந்தன. காற்று, நீர், உப்பு என்பவற்றிலிருந்து உயிர்ச் சத்தை(Organic Matter) உண்டாக்க மாட்டாதனவும், தம்மைப் போன்ற உயிர்களை உண்டு வாழ்வனவுமாகிய இன்னொருவகை அணு உயிர்கள் இருந்தன. இவ்வணு உயிர்களினின்றே இவ்வுலகிற் காணப்படும் ஊர்வன முதல் மனிதன் வரையிலுள்ள எல்லா உயிர்களும் தோன்றின. தாவரம், காற்று, நீர், உப்பு என்பவற்றிலிருந்து உணவை வாங்கும் ஆற்றல் உடையது. அது வாங்கும் உயிர்ச் சத்துள்ள பொருள்கள், சிறிய சிறிய கண்ணறைகளில்(Cells) அடைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கண்ணறையும் சுவர்களால் பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே அது நகர்ந்து உலாவ முடியாததாயிற்று. தாவரம் தனது தேவைக்கு அதிக உணவைச் சேமிக்கின்றது; சிறு அளவைச் செலவிடுகின்றது. அதனிடத்தே சேரும் கழிவுப் பொருளை வெளியே போக்கும் மார்க்கம் அதற்கு இல்லை. ஆகவே அது மந்த நிலை அடைந்துள்ளது. தாவரமல்லாத உயிர்களின் கண்ணறைகள் சுவர்களால் பிரிக்கப்படுவ தில்லை. ஆகவே, அவை அசைந்து உலாவக்கூடியனவாய் இருக்கின்றன. அவை சேமிப்பு இன்றி, வருவாய் அளவில் உயிர்ச்சத்தைச் செலவு செய்து வாழ்கின்றன. அவை உட்கொள்ளும் உணவு செரிக்கும்போது கரியமில வாயுவின் தொடர்பைப் பெறுகின்றது. அதனால் வெளியே கழிந்துபோவது உயிருள்ள நெருப்பின் சாம்பலாகும். இச் சாம்பல், தாவரங்களில் வெளியே கழிந்து விடாமல் உப்பாகத் தங்குகின்றது. இயங்கும் உயிர்கள் அதனை மலமாகக் கழிக்கின்றன. தாவரங்களைச் சூழ்ந்து பல உயிர்கள் வாழ்கின்றன. ஆனால் உயிர்களைச் சூழ்ந்து சில தாவரங்களே வளர்கின்றன. இவ்வாறு உயிர்களும் தாவரங்களும் பிரிந்து வாழத் தொடங்கிய காலம் முக்கியமானது. நாம் உட்கொள்ளும் பிராண வாயு, தாவரங்களின் இரசாயனசாலையாகிய இலைகளினின்றும் கிடைக்கின்றது. அவ்விலைகள், சூரிய ஒளியின் உதவியால் தமக்கு வேண்டிய உணவை ஆக்கிக்கொள்கின்றன. பூமியில் மேடுகளும் பள்ளங்களும் தோன்றிக் கண்டங்களும் கடல்களும் உண்டாயின. அப்போது நீரில் மிதந்து கொண்டு திரிந்த தாவரங்கள் கரையை அடைந்தன. அவை வெளிச்சத்தை விட்டு அகல விரும்பவில்லை. ஆகவே அவ்விடத்திலேயே தங்கின. தொடக்கத்தில் கடற்கரையில் உண்டான தாவரங்கள் கடற்சாதனையாகும். அணுவடிவான சிற்றுயிர்கள் கடற் பஞ்சாக வளர்ந்தன. சிற்றுயிர்கள் ஒரு கண்ணறை உடையனவாக விருந்தன. அவ் வுயிர்கள் இரண்டாகப் பிரிந்து பெருகும் இயல்பின. சொறிமீன்(Jelly fish) போன்ற ஓர் அறை உடலமைப்புள்ள உயிர்கள், பிரிந்து தனித்தனியாக வாழ் கின்றன. நல்ல தண்ணீரில் வாழும் ஹைடிரா(Hydra) என்னும் உயிர், கிளை விட்டுப் பெருகுகின்றது. உணவு கிடைப்பது அரிதாகும்போது கிளைகள் பிரிந்து தனித்தனியே வாழ்கின்றன. இது முட்டையிட்டுக் குஞ்சு பொரியாமலும் கருவுற்றுக் குட்டி ஈனாமலும் உயிர்கள் பெருகும் முறை. உயிர்களும் தாவரங்களும் இவ்வாறு பெருகுதல் இயல்பு. ஒரு மண் புழுவைத் துண்டுகளாக வெட்டிவிட்டால் அவை தனித்தனிப் புழுக்களாக வாழ்கின்றன. ஒரு தேனீ அல்லது பறவை இவ்வாறு பெருக மாட்டாது. உயிர்கள் கிளைவிட்டுப் பெருகுவதற்கு அடுத்தபடியாக, ஆண், பெண் என்னும் வேறுபாடாகும். இவ் வேறுபாட்டை அடைந்த உயிர்கள் முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரிக்கின்றன. இவற்றுக்கு அடுத்த படியாக குஞ்சுகளைக் கருப்பைக்குள் பொரித்துக் குட்டி களை ஈனும் உயிர்கள் தோன்றின. இவ்வகைப் படைப்பு களுள் மனிதப் படைப்பு முடிவானது. உயிர்த்தோற்ற வளர்ச்சி நூலார், உயிர்களின் தோற்ற வளர்ச்சிகளைக் குறித்துக் கூறியுள்ள தன் சுருக்கம் இதுவேயாகும். அவர்களின் கருத்துக்குப் பாறைகளில் படிந்து கிடக்கும் கற்படி உருவங்களும் சான்று அளிக்கின்றன. பாறை அடுக்குகளில் காணப்படும் கற்படி உருவங்கள் ஒரு பாறை அடுக்கில் காணப்பட்ட உயிர் வகைகள் அடுத்த பாறை அடுக்குகளிற் காணப்படவில்லை. உயிர்த்தோற்ற வளர்ச்சி நூலார் கூறுவது போலவே முதலில் நீரில் வாழும் உயிர்களும், பின் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர்களும் தோன்றி வாழ்ந்தன. பின்பு அவற்றுட் சில தரையில் வாழும் உயிர்களாக மாறி வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஏற்ற மாற்றங்களை அடைந்துள்ளன. பூமி அடைந்திருந்த வெப்ப நிலைகளில் வாழக்கூடியன வாகவும், அந்நிலைமையில் கிடைக்கும் உணவை உண்டு வாழத் தக்கனவு மாகிய உயிர்கள் தோன்றியிருந்தன. பாறை அடுக்குகளில் படிந்து தோன்றும் உருவங்கள் முறையே சொறி மீன், கடற்சிலந்தி, கடல்தேள், மீன், நீரினும் நிலத்தினும் வாழ்வன, குட்டி யீனும் வெளவால் போன்ற பறவைகள், பற்கள் உள்ள பறவைகள், குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்குகள், குரங்குகள், கொரில்லா போன்ற மேலினக் குரங்குகள் என்பன. முதல் மூன்று பாறை அடுக்குகளிலும் மனிதனின் கற்படி உருவங்களோ மனித எலும்புகளோ காணப்படவில்லை. நாலாவது பாறை அடுக்கிலேயே மனிதனின் மண்டை ஓடுகளும் எலும்புகளும் காணப்படுகின்றன. இவ்வாறு படிப்படியே வளர்ச்சியடைந்த உயிர்கள் காணப்படுகின்றமையி னாலேயே, கீழ் இன உயிர்களே மேலின உயிர்களாக வாழ்க்கைப் போராட்டத்துக்கேற்பச் செய்யும் எத்தனங்களுக்கு ஏற்ப மாறியுள்ளன வென்று உயிர்த்தோற்ற வளர்ச்சி நூலார் கூறுகின்றனர். ஒரு உயிர் வேறொரு உயிராக வளரமாட்டாது என்றும், உயிர்கள் அறிவு வளர்ச்சிக்கேற்ப மேலான உடலை, அடுத்த அடுத்த பிறப்புகளில் அடைகின்றன என்றும் இந்திய, கிரேக்க தத்துவ நூலார் கூறுவர். ஒரு உயிர் இன்னொரு உயிராக மாற முடியுமோ என்னுங் கருத்து இன்னும் முடிவு பெறாமலே இருந்து வருகின்றது. மனிதனும் குரங்கும் இன்றைக்கு முன்பின் பத்து இலட்சம் ஆண்டு களின் முன்னே மனிதன் தோன்றினான். மேல் இனக் குரங்கின் உடல் அமைப்புக்கும், மனிதனின் உடல் அமைப்புக்கும் பெரிதும் ஒற்றுமை காணப்படு கின்றது. கொரில்லா என்னும் மனிதக் குரங்கு, ஓர் அளவில் மனிதனை ஒத்திருக்கின்றது. ஆனால் அதன் உறுப்புகளுக்கும் மனித உறுப்புகளுக்கும் வேறுபாடு உண்டு. மனிதக் குரங்கின் மண்டை சிறியது; உடல் பெரியது; கீழ் உறுப்புகள் குள்ள மானவை; மேல் உறுப்புகள் கீழ் உறுப்புகளை விட நீளமானவை. மனிதனின் மிகச் சிறிய மண்டை 63 கன அங்குலப் பருமன் உடையது; மனிதக் குரங்கின் மண்டை 34½ கன அங்குல அளவினதாகும். மனிதக் குரங்கின் மூளை இருபது அவுன்சுக்கு அதிகப்படுவதில்லை; மனிதனின் மூளை 32 அவுன்சுக்குக் குறைவதில்லை. குரங்கு, மனிதனை ஒத்திருந்தாலும் அது மனிதனைவிடப் பலவகைகளிற் குறைபாடுடையது. இவ்வகை ஆராய்ச்சி களால் குரங்கு, மனிதனுக்கு அடுத்த கீழ்ப்படியிலுள்ளது எனத் துணியப்படுகின்றது. மனிதனுக்கும் குரங்குக்கும் இடைப்பட்ட உயிர்கள் டார்வின் என்பார் உயிர் நூற் புலமையில் தலை சிறந்து விளங்கினார். அவர் உயிர்களையும் தாவரங்களை யும் பற்றிய உண்மைகள் பலவற்றை வெளியிட்டுள்ளார். அதற்கு முன் நாம் முற்கால உயிர்களைப் பற்றி யாதும் அறியாதவர்களாக விருந்தோம். இக்கால உயிர்த் தோற் றங்கள் எல்லாம் முற்கால உயிர்த் தோற்றங்களின் வளர்ச்சி என்றும் அவர் கருதியுள்ளார். குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட ஆறுவகை உயிர்களின் எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டன. அவ்வுயிர்களிற் சில நெருப்பைப் பயன்படுத்தின. ஆகலே அவை மக்கள் இனத்தைச் சேர்ந்தன என்று கருதப்பட்டன. மற்றைய உயிர்கள் ஒருவகைக் கைத்தொழி லும் புரியவில்லை; ஆகவே அவை கொரில்லா என்னும் மனிதக் குரங்கினும் மேற்பட்ட வாலில்லாக் குரங்குகள் என்று கொள்ளப்பட்டன. முற்கால மக்களின் வடிவம் பண்படுதல் முற்கால மனிதனின் உடலமைப்பு இக்கால மனித னின் உடலமைப்பை விடச் சிறிது வேறுபட்டது. முற்கால மனிதன் நீண்டகால வாழ்க்கையில் மேல்நோக்கி முயன்று வந்தான். அதனால் அவனுடைய உடலமைப்பு சிறிது சிறிதாகப் பண்பட்டது. அவ்வாறு பல படியான பண்பட்ட நிலையிலுள்ள மக்களின் எலும்புகள் கிடைத்துள்ளன. அவ்வெலும்பு களைத் துணைக்கொண்டு அவற்றுக்குரிய மக்களின் வடிவங்கள் களி மண்ணால் அமைக்கப்பட்டுள்ளன. சீனா தேசத்தில் பீக்கின் என்னும் ஓர் இடம் உள்ளது. அங்கே உள்ள மலைக்குகை ஒன்றில், மிகப் பழங்கால மனிதனின் மண்டை ஓடு ஒன்று கண்டு எடுக்கப்பட்டது. அம் மண்டை ஓட்டுக்குரிய மனிதன் பீக்கின் மனிதன் எனப்படுவான். அவன் சாவக மனிதனுக்கு முன் வாழ்ந்தவனாவன். பீக்கின் மனிதனின் மண்டை ஓடு கண்டு எடுக்கப்பட்ட குகையுள், கல் ஆயுதங்களும் அடுப்பும் கருகிய எலும்புகளும் காணப்பட்டன. ஆயுதங்கள் செய்தற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் அவ்விடங்களில் கிடைக்கக் கூடாதவை. ஆகவே அவை பிற இடங்களினின்றும் கொண்டுவரப்பட்டன வாதல் வேண்டும். பீக்கின் மனிதன் நெருப்பின் பயனை நன்கு அறிந் திருந்தான். இவன் காலம் 1,000,000 ஆண்டு அள வில் என்று கருதப்படுகின்றது. பீக்கின் மனிதனுக்கு அடுத்தபடியில் வாழ்ந்த மனிதனின் எலும்பு, சாவகத்(Java) தீவில் கிடைத்துள்ளது. அம் மனிதனின் தோற்றம் குரங்கின் சாயலை ஓரளவு ஒத்துள்ளது. மக்கள் நூலார், அம் மனிதனுக்கு நிமிர்ந்து நிற்கும் வாலில்லாக் குரங்கு மனிதன் எனப் பெயர் இட்டுள்ளார்கள். அம் மனிதன் சாவக மனிதன்(Java man) எனப்படுவான். அவன் ஐந்து இலட்சம் ஆண்டுகளின் முன் வாழ்ந்தான். இங்கிலாந்திலே பில்ட்டௌன் (Pilt down) என்னும் இடம் ஒன்று உண்டு. இங்கு முற்கால மனிதனின் மண்டை ஓடு ஒன்று கண்டு எடுக்கப் பட்டது. இம் மனிதனுக்குப் *பில்ட்டௌன் மனிதன் என்று பெயர். இம் மனிதன் சாவக மனிதனுக்கு பிற்பட்ட காலத்தவனாவன். செர்மனியிலுள்ள ஹெய்டில்பர்க்(Heidelberg) என் னும் இடத்தில் வேறொரு முற்கால மனிதனின் மண்டை ஓடு கண்டு எடுக்கப்பட்டது. இம் மண்டையோட்டுக் குரியவன் ஹெய்டில்பர்க் மனிதன் எனப்படுவான். இவன் பில்bட்டௌன் மனிதனுக்கு பிற்பட்ட காலத்தவனாவான் இம் மனிதனின் காலம் ஒரு இலட்சம் ஆண்டு வரையில் ஆகலாம். இம் மனிதனுக்கும் பிற்பட்டவன் நிண்டேர்தல் மனிதன். இவனுடைய மண்டையோடு செர்மனியிலுள்ள நிண்டேர்தல் என்னுமிடத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வகை மனித எலும்புகள் பெல்சியம், பிரான்ஸ், ஸ்பெயின், சிபிரால்டர், இங்கிலீஷ் கால்வாயிலுள்ள தீவுகள், இத்தாலி முதலிய இடங்களிலும், பால்கனின் பல பகுதி களிலும் காணப்பட்டன. எலும்புகளோடு மக்கள் பயன்படுத்திய கல்லாயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. நிண்டேர்தல் மனிதனின் காலம் 70,000 ஆண்டுகள் வரையில். நிண்டேர்தல் மனிதனுக்குப் பிற்பட்டவன் குரோமக் நன்(Cro-magnan) மனிதன். இவன் இனத்தைச் சேர்ந்த மக்கள் ஆசியாவிலோ ஆப்பிரிக்காவிலோ தோன்றி, ஐரோப்பாவில் பரவி யிருக்கலாம். இவ்வகை மனித எலும்புகள் பிரான்சிலுள்ள குரோமக்நன் என்னும் குகையுள் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு காலத்துக்குக் காலம் வாழ்ந்த மக்களின் எலும்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட வடிவங்களை முறையே வைத்து நோக்கும் போது மக்கள் சிறிது சிறிதாக உருவிற் பண்பட்டு வந்திருக்கிறார்கள் எனத்தோன்றும். மறைந்துபோன தொடர்புகள் (Some missing links) இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளின் முன் பழைய மனிதனின் மண்டை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அம் மண்டை ஓடு, வாலில்லாக் குரங்கினின்று மனிதன் தோன்றினாhன் என்பதை வலியுறுத்தும் எனக் கருதி, அம் மண்டை ஓட்டுக்கு மறைந்து போன தொடர்பு என்று டார்வினின் கொள்கையைப் பின்பற்றுவோர் பெயரிட்டனர். அக் காலம் முதல் ஆறு வெவ்வேறு வகையான மனித மண்டை ஓடுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அம் மண்டை ஓடுகளுக்குரிய உயிர்கள் சில, குரங்குகளை விட மனிதச் சாயல் மிகுந்தனவாகவும், சில மனிதனைவிடக் குரங்கின் வடிவம் உடையனவாகவும் காணப்பட்டன. அவை குரங்கு அல்லது மனிதனைச் சேர்ந்தன என்பதை அங்கநூல்(Anatomy) விளக்கும். அவை எதையாவது உண்டாக்க அறிந்திருந்தால் அவை நாகரிகப்படியில் ஏற ஆரம்பித்திருந்தன எனக் கூறலாம். முன் கூறிய மண்டை ஓடுகளுக் குரியோர், உடலமைப்பில் குரங்குகள் அலலராயினும் நடத்தையில் குரங்கு களாக இருக்கலாம். எலும்புகளை ஆராய்வதைவிட ஆயுதங்களை ஆராய் வதால் அவர்களைப் பற்றி அதிகம் அறிதல் கூடும். அவர்கள் குகைகளில் ஓவியங்கள் வரையவும், எலும்புகளில் உருவங்களைச் செதுக்கவும் அறிவ தன் முன் நீண்டகாலம் கற்களை உடைத்து ஆயுதங்கள் செய்தனர். எல்லாச் சாதாரண மீன்களுக்கும் இரண்டு அலகுகள் உண்டு. சில மீன்களுக்கு அலகுகள் இல்லை; ஆனால் புழுக்களுக்கு இருப்பது போன்ற வட்டமான வாய் உண்டு. இம் மீன்களுக்குச் சிறகுகளும் இல்லை. வேல்சிலே உள்ள ‘சிலூறியன்’(Silurian) பாறை அடுக்குகளில் மீன்களின் என்புக் கூடுகள் காணப்படுகின்றன. இம் மீன்களுக்குக் கீழ் அலகும் சிறிய சிறகு களும் காணப்படுகின்றன. இவை, ஆதிகால மீன்களைபும் இக்கால மீன்களையும் இணைப்பனவாக இருக்கின்றன. கற்படி உருவங்களை ஆராய்வதால் இன்னும் ஒரு வெளியை நிரப்பலாம். மீனுக்கும், தரையிலும் நிலத்திலும் வாழும் உயிருக்கும் இடையில் இன்னொரு வகை உயிர் வாழ்ந்தது. மீன்கள் நீருக்கு வெளியே வந்து தம் சிறகுகளைக் கால்களாக மாற்றின என்பதில் ஐயங்கொள்வோர், இலண்டன் நூதன உயிர்க்காட்சிச் சாலையிலுள்ள சேற்றிலே பாயும்(Mud skipper) மீனைப் பார்க்கலாம். அவை தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தரையில் போக்குகின்றன. அவற்றின் முன் செட்டைகள் முழங்கை போன்று வளர்ச்சியடைந்துள்ளன. அவற்றின் உதவியால் அவை பாய்கின்றன. 25 கோடி ஆண்டுகளின் முன்னே நீரில் மீன்கள் தோன்றி வாழ்ந்தன. மீன்களின் செட்டைகளிலிருந்து நம் முன்னோரின் உறுப்புகள் வளர்ச்சி அடைந்தன என்றும் தலைக்குக் கீழே இருந்த மூக்கு மேலே நாளடைவில் வந்ததென் றும், தண்ணீரில் அதிக காலத்தைப் போக்கும் முதலை தவளை போன்ற வற்றுக்கு அவ்வாறு அமைதல் அவசியம் என்றும் ஆராய்ந்து காட்டமுடி யும். உயிர்த்தோற்ற வளர்ச்சிக்கொள்கை உண்மையாயினும் இத் தொடர்புகள், டார்வின் காலத்தில் அறியப்படவில்லை. ஆப்பிரிக்கா தேசப் பாறை அடுக்குகளில் பொன், வயிரம் முதலியன அல்லாமல் நூற்றுக் கணக்கான குட்டி யீனும் விலங்குகளின் எலும்பு களும் காணப்படுகின்றன. இவ் விலங்குகள் ஊர்வன வையும் குட்டி யீனும் உயிர்களையும் தொடுப்பன வாகக் காணப்படுகின்றன. சில, பல்லிகளை அல்லது முதலைகளைப்போல இருக்கின்றன. ஆனால் அவற்றின் உடல் நிலத்துக்கு மேல் உயர்ந்து நின்றது. அவற்றுக்கு உணவை அரைக்கும் தாடைப் பற்களும் வேட்டைப் பற்களும் காணப்பட்டன, ஆனால் ஊர்வனவற்றுக்கு எல்லாம் ஒரே வகையான பற்கள் உண்டு. சில உயிர்களின் பழமையை அவ்வினங்களின் பழைய எலும்பு களைக் கொண்டு ஆராய்ந்து அறிதல் கூடும். இவ்வழியில் பெரிய இடை வெளிகள் இருக்கின்றன. ஊர்வனவற்றிலிருந்து பறவைகள் தோன்றின என்பதில் சந்தேகமின்று. மிகப் பழைய பறவைகள், எலும்புடைய வாலும் செட்டைகளில் நகமும் பற்களுமுடையனவாகக் காணப்பட்டன. இவை எப்படி ஊர்வனவற்றிலிருந்து தோன்றின என்று தெரியவில்லை. டார்வினும் அவர் கொள்கையினரும் நில நூலாரின் ஆராய்ச்சி நிறைவடையவில்லை எனக் கூறினர். உலகில் வாழ்ந்த இலட்சக்கணக்கான உயிர் இனங்களில் சில இன்று நிலைபெறுகின்றன. மக்கட் குலங்கள்(Human races) இவ்வாறு தோன்றிப் பெருகிய மக்களுக்கு வேண்டியன, பசி தாகம் என்பவற்றைப் போக்கும் உணவும் நீருமாகவே இருந்தன. இவை இரண்டையும் தேடி அலைந்து திரிந்த மக்கள் உலகின் பல பாகங்களில் தங்கிப் பெருகினார்கள். உலகில் எல்லாப் பாகங்களிலும் வெப்பநிலை ஒருவாறாக இல்லை. பூமியின் நடுக் கோட்டினின்றும் வடக்கு நோக்கி அல்லது தெற்கு நோக்கிச் சென்றால் படிப்படியே வெப்பம் குறைந்து குளிர் மிகும். நடுக் கோட்டை அடுத்த நாடுகளில் வாழ்ந்த மக்களின் நிறம் கறுப்பு அல்லது மங்கிய கறுப்பு நிறமாக இருந்தது. நடுக்கோட்டுக்கு வடக்கிலும் தெற்கிலும் வாழ்ந்த மக்களின் நிறம் படிப்படியே கருமை குறைந்து வெண்மை உடையதாக இருந்தது. இவ்வாறு நிறம் மாறிய மக்கள் கறுப்பு, வெள்ளை, மஞ்கள் என்னும் நிறங்கள் பற்றி வெவ்வேறு குலங்களாக அறியப்பட்டார்கள். செய்யும் தொழில், உண்ணும் உணவு, உடுக்கும் உடை போன்றவற்றால் மக்களின் உடல் வளர்ச்சி, உறுப்பு வளர்ச்சிகளிலும் சில மாறுபாடுகள் உண்டாயின. உடல் நிறத்தோடு இவ் வேறுபாடுகளும், குணங்களைப் பிரித்து அறிவதற்குப் பயன்படுகின்றன. இவ்வாறு உலகிலே நீகிரோவர், காகேசியர், மங்கோலியர் எனக் கூறப்படும் குலத்தினர் தோன்றினர். நிறங்கள், வெப்ப நிலைகளுக் கேற்பப் பாதுகாப்பளிப்பன என்று சொல்லப்படுகின்றது. ஆப்பிரிக்க கறுப்பு மக்கள் வாழும் நாடுகளில் தங்கும் வெள்ளையர், கறுப்பு மக்களைப் போல அங்குத் தோன்றும் நோய்களுக்கு எதிர்த்து நிற்க முடிவதில்லை. கறுப்பு மக்கள் அவற்றை எதிர்த்து நிற்கும் ஆற்றலுடையவர்களாக இருக்கின்றனர். மனிதனின் ஆதிகால வாழ்க்கை தொடக்கத்தில் மனிதன், விலங்குகளைப் போலவே வாழ்க்கையை ஆரம்பித்தான். பசி உண்டானபோது காட்டில் உள்ள காய்கனிகளைப் பறித்து உண்டான்; தாகம் உண்டானபோது சுனை நீரைக் குடித்தான். மனிதனுடைய பற்களும் குடலும் தாவர உணவை உட்கொண்டு வாழ்வதற்கேற்ற அமைப் புடையன. ஆகவே அவன் அவ்வகை உணவுகள் கிடைக்கக்கூடிய காடு களிலேயே வாழ்ந்து வந்தான். பலவகை ஆபத்துகள் அவனைச் சூழ்ந் திருந்தன. பலவகை விலங்குகள் காடுகளில் திரிந்தன. அவைகள் கொன்று தின்று விடாதபடி அவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந் தது. சில சமயங்களில் தற்காப்பின் பொருட்டு அவன் அவற்றை எதிர்த்துப் போராட வேண்டியும் இருந்தது. அவனிடத்தில் ஆயுதங்கள் இல்லை. அவன், அடி பருத்து நுனி ஒடுங்கிய மரக்கிளைகளை ஒடித்துத் தண்டாயுதங் களாகப் பயன்படுத்த அறிந்தான். கால் அடியிற் கிடந்த கற்களையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தினான். காடுகளில் பருவ காலங்களில் மட்டும் காய் கனிகள் கிடைக்கும். சில காலங்களில் அவை கிடைப்பதில்லை. அதனால் அவன், அக்காலங்களில் உணவு கிடையாமல் பசி பட்டினிகளால் வருந்தினான். அக்காலங்களில் அவன் தற்காப்பின் பொருட்டுக் கொன்ற விலங்குகளின் ஊனை உண்டு பசியைப் போக்கினான். இவ்வாறு அவன் தாவர உணவுகளோடு ஊன் வகைகளையும் உண்ணும் பழக்கம் பெற்றான். அவன், வளையக்கூடிய காட்டுத்தடிகளை வளைத்துக் கட்டி, வில்லும் செய்தான். அதில் கூரிய முட்களை வைத்து எய்தான். வில் அம்புகளின் உதவியால் அவன் தூரத்தே நிற்கும் விலங்குகளை வேட்டை ஆடினான். வேட்டை ஆடிக் கொன்ற விலங்குகளின் தோலை உரிக்கக்கூரிய கற்களைக் கத்தியாகவும் பயன்படுத்த அறிந்தான்; காட்டு விலங்குகளுடன் எதிர்த்துப் போராடும்போது தற்காப்பாக இருக்குமாறு அவன் விலங்கின் தோலை மார்பில் போர்த்துக் கட்டிக் கொண்டான். அவன் வெய்யிற் காலங்களில் மர நிழல்களில் தங்கினான். இராக்காலங்களில் மர நிழல்களில் நித்திரை கொள்வது ஆபத்தாக இருந்தது. கொடிய விலங்குகள் அவனைக் கொன்று தின்னக் காத்துக் கொண்டிருந்தன. அதனால் அவன், மரப் பொந்துகளிலும் மலைக்குகைகளிலும் படுத்துத் தூங்கினான். மரங்கள் மீது பரண்கள் கட்டி அவற்றிலும் தங்கினான். இவ்வாறு ஆதிகால மனிதனின் வாழ்க்கை இருந்தது. மனிதன் நெருப்பை உண்டாக்க அறிதல் மனிதன் தொடக்கத்தில் நெருப்பு உண்டாக்க அறிந்திருக்கவில்லை. அதனால் அவன், உணவைப் பச்சையாகவே உண்டு வந்தான். அவன் காடுகளில் தீ மூண்டு எரிவதைக் கண்டான். ஒரு மரத்தோடு ஒரு மரம் உராய்வதால் தீ உண்டாகின்றது என்பதை அவன் அறிந்தான். அவன் இரு மரத்துண்டுகளைத் தேய்த்துத் தீ மூட்ட அறிந்து கொண்டான். நெருப்பு அவனுக்குப் பலவகையில் பயன்பட்டது. நெருப்பு எரிவதைக் கண்ட விலங்குகள் பயந்து ஓடின. ஆகவே அவன், தான் தங்கும் குகைகளின் வாயிலில் இராக்காலத்தில் தீ மூட்டி எரித்தான். அதனால் அவனுக்கு இராக் காலங்களில் விலங்குகளால் ஆபத்து நேரும் என்னும் அச்சம் நீங்கிற்று. அவன் நெருப்பில் தடிகளின் முனையை எரித்துப் பாறைகளில் தேய்த்து மர ஈட்டிகளையும் அம்புகளையும் செய்தான். நெருப்பிலே வெந்த உணவுகள் சுவை தருவனவாக இருந்தன. ஆகவே அவன் , உணவை நெருப்பில் வேக வைத்து உண்ணத் தொடங்கினான். உணவை இலையில் பொதிந்து மண்ணால் மூடினான். அதன் மீது தீ மூட்டி எரித்தான். இவ்வாறு அவன் உணவைச் சமைக்கலானான். அவன் குழி தோண்டினான். குழியின் மீது நீளமான கற்களைப் பரப்பி வைத்தான். இவற்றின் மீது உணவை வைத்தான். கீழே தீ மூட்டி எரித்தான். இவ்வாறும் அவன் சமையல் செய்தான். இம் முறையிலிருந்தே அடுப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மனிதன் இவ்வாறு சிறிது சிறிதாக நெருப்பின் பயனை அறிந்து கொண்டான். அவன், உண்டு எஞ்சிய இறைச்சியையும் எலும்பையும் எறிந்தான். அவற்றைக் காட்டில் வாழும் ஓநாய்கள் தின்றன. அவன் அவ்வோநாய்களின் குட்டிகளைப் பிடித்து வளர்த்தான். அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவையும் உடன் சென்றன. அவை, வேட்டை ஆட அவனுக்கு உதவியாக இருந்தன. பழைய கற்காலம் ஆதிகால மனிதன் உலோகங்களைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அவன் முரடான கற்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தினான். அவன் பயன்படுத்தியன கைக்கோடாரி, உளி போன்றன. இவை முரட்டுக் கற்களால் செய்யப்பட்டவை. ஒரு கல்லை வேறு ஒரு கல்லால் அடித்து உடைத்து அவ்வாயுதங்கள் செய்யப்பட்டன. அவன் எலும்பாலும் சில ஆயுதங் களைச் செய்தான். எலும்பினால் செய்த ஊசிகளைக் கொண்டு தோல்களைப் பொருத்தித் தைத்தான். மனிதன் முரடான கற்களால் ஆயுதங்களைச் செய்து பயன் படுத்திய காலம் ‘பழங்கற்காலம்’ எனப் படும். காலம் செல்லச் செல்ல அவன் படிப்படியே அழுத்தமான ஆயுதங் களைச் செய்யப் பழகிக்கொண்டான். அவ்வாறு படிப்படியே அழுத்தமுள்ள கல்லாயுதங்கள் உலகின் பல பாகங் களில் கண்டு எடுக்கப்பட்டன. இப் படிப்படியான கல்லாயுதங்கள் செய்து பயன்படுத்தப்பட்ட காலங்கள் பழைய கற்காலத்தின் உட்பிரிவுகளாகும். பழைய கற்காலத்தில் மக்கள் பெரும் பாலும் மலைக்குகைகளில் வாழ்ந் தார்கள். குகைகளில் பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களும், அடுப்புகளும், எலும்புகளும் காணப்பட்டன. அக்காலத்தில், இன்று அடியோடு அழிந்துபோன சில விலங்குகளும் வாழ்ந்தன. அவை சடை யானை, சடைக் காண்டாமிருகம் என்பன. பழைய கற்கால மக்கள், தாம் வாழ்ந்த குகைச் சுவர்களில் நிற மைகளால் அழகிய ஓவியங்கள் வரைந் திருக்கின்றனர். அவர்கள் வேட்டையாடச் செல்வதன் முன் மக்கள் வேட்டை யாடி விலங்குகளைக் கொல்லும் காட்சி அளிக்கும் ஓவியங்களைத் தீட்டினால், வேட்டையில் விலங்குகள் கிடைக்கும் என நம்பினார்கள். இவ் வோவியங்கள் மந்திர வித்தையாகப் பயன்பட்டன. பில்லி, சூனியம் என்னும் மந்திர வித்தையும் இக் கருத்தை அடிப்படையாகக் கொண் டனவே. ஒருவன் வேறு ஒருவனுக்குத் தீமை விளைவிக்க விரும்பினால் அவன் பகைவனைப் போன்ற ஒரு பாவை செய்கிறான். பின் அவனுடைய பெயரை அதில் எழுதுகிறான். அவன் அப் பாவையின் கை முறிவதாகச் சில நாட்கள் நினைக்கின்றான்; பின் அப் பாவையின் கையை ஒடித்துவிடு கிறான். அப்பொழுது பகைவனின் கை முறிந்துவிடும் என மந்திர வித்தைக் காரன் நம்பினான். இவ்வாறு பில்லி சூனியத்தில் பயன்படுத்திய பாவைகள் பல, கொழும்பு நூதன பொருட் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. புதிய கற்காலம் முரடான கல்லாயுதங்களைச் செய்து பயன்படுத்திய மக்கள், ஆயுதங்களைச் செய்து பாறைகளில் உரைஞ்சி அழுத்தம் செய்யப் பழகிக் கொண்டனர். ஆயுதம் எவ்வளவு நன்றாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கு உணவும் எளிதிற் கிடைக்கின்றது. அவர்கள், அம்புகளுக்குக் கல்லினாற் செய்த கூரிய அம்புத் தலைகளைப் பயன்படுத்தினார்கள்; மீன் பிடிக்கவும், களிமண்ணில் செய்து வெய்யிலில் காயவைத்த மட்பாண்டங்களைப் பயன்படுத்தவும் அறிந்துகொண்டார்கள். அக்காலத்தில் அவர்கள் விலங்கு களைப் பழக்கி வளர்த்தார்கள். நீர் நிலைகளில் மரத்தூண்களை இறுக்கி, அவற்றின்மீது சிறு குடிசைகள் கட்டி வாழ்ந்தார்கள்; நிலத்தைத் தோண்டிப் பெரிய குகை செய்து அதன் வாயிலைத் தடிகளால் மூடி அதனுள்ளும் வாழ்ந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் முரடான துணிகள் நெய்யவும், தானியங்களைச் சிறிது விளைவிக்கவும் அறிந்திருந்தார்கள். உலோக காலம் பின்னே உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலிலே கண்டுபிடிக்கப் பட்ட உலோகம் பொன். அது மிருதுவாகவும், அதிகம் கிடைக்கக் கூடாத தாகவுமிருந்தது. ஆகவே, அதனால் ஆயுதங்கள் செய்யப்படவில்லை. பொன்னுக்குப் பிறகு செம்பு கண்டுபிடிக்கப்பட்டது. செம்பு அதிகம் கிடைக்கவில்லை. மக்கள் அதனை உலையில் இட்டு உருக்கி அடித்து, பல வகையான ஆயுதங்கள் செய்தார்கள். அவ் வாயுதங்கள் கல்லினால் செய்யப் பட்ட ஆயுதங்களின் வடிவாகவே இருந்தன. அதன் பிறகு செம்பினால் போர்க்கருவிகளும் சமையற் பாத்திரங்களும் பிற பொருள்களும் செய்யப் பட்டன. மக்கள், செம்பில் வேலை செய்யும் திறமை அடைந்தார்கள். செம்பு ஆயுதங்கள் இலகுவில் வளையக்கூடியனவாக இருந்தன. பின்னே தகரம் கண்டு பிடிக்கப் பட்டது. தகரத்தையும் செம்பையும் கலந்தபோது உறுதியான ஓர் உலோகம் உண்டாயிற்று. அது வெண்கலம் எனப்பட்டது. வெண் கலத்தினால் உறுதியான ஆயுதங்கள் செய்யப்பட்டன. வெண்கல ஆயுதங் கள் கற்களைச் செதுக்கவும் பயன்பட்டன. எகிப்திய பிரமிட் சமாதிகள் கட்டப்பட்ட காலத்தில் வெண்கல ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன. வெண்கலக் கோடரிகள் மரங்களை எளிதில் தறித்தன. வெண்கல வாள் களால் மரங்கள் பலகைகளாக அரியப்பட்டன. அப்பொழுது தச்சு வேலை யும் வளர்ச்சி அடைந்தது. மக்கள் பெரிய கட்டிங்களைக் கல்லினாலும் மரத்தினாலும் எடுத்தார்கள். பிறகு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. மேற்குத் தேசங்களில் இரும்புக்கு இட்டு வழங்கிய பெயர் ‘வானுலகத்தின் கரும் பொன்’ என்னும் பொருளுடையதாக இருந்தது. ஆகவே முதலில் இரும்பு, விண் வீழ்க் கொள்ளிகளினின்றும் கிடைத்தது எனத் தெரிகிறது. பின்னர் சுரங்கங்களி னின்றும் இரும்பு அரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது இரும்பு எல்லா உலோகங்களையும்விட உறுதியானது. இதன் உபயோகத்தின் பின் நாகரிகம் வளர்ச்சியடைந்து இன்றைய நிலையை அடைந்தது. மனிதனின் மூன்று நாகரிகப் படிகள் மக்களின் நாகரிக வளர்ச்சி மூன்று வகைப்படும். அவை, வேட்டையாடுதல், ஆடு மாடுகளைப் பழக்கி வளர்த்தல், பயிரிடுதல் என்பன. தொடக்கத்தில் எல்லா மக்களும் வேட்டையாடுதலால் மட்டும் தமது உணவைப் பெற்றனர். ஓர் இடத்திலேயே வேட்டையாடு வதற்கு விலங்குகள் காணப்பட மாட்டா. ஆகவே அவர்கள் விலங்குகளைத் தேடிக் காடுகளில் அலைந்து திரிந்தனர். மக்கள் வேடராய் அலைந்து திரிந்த காலத்தில், ஒரே இடத்தில் தங்கும் வாய்ப்புப் பெறவில்லை. ஆகவே அவர், குடிசைகள் கட்டி நிலையாக வாழவும் முடியவில்லை. தாம் சென்ற இடங்களில் மலைக் குகைகளிலும், மர நிழல்களிலும், தங்கினர். மனிதன் வேடனாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியபோது வில், அம்பு என்ப வற்றின் பயனையும், அவற்றைப் பயன்படுத்தவும் நன்கு அறிந்திருந்தான். கத்தி, உளி போன்ற சில முரடான கல்லாயுதங்களையும் செய்து பயன்படுத்த அறிந்திருந்தான். எலும்புகளினால் ஊசிகள் செய்து அதன் உதவியால் விலங்குகளின் தோல்களைப் பொருத்தித் தைத்து அவற்றை உடையாகவும், போர்வையாகவும், படுக்கையாகவும் பயன்படுத்தினான். அக்காலத்தில் அவன் பழக்கி வளர்த்த விலங்கு, நாயே. மிக முற்காலம் முதல், நாய், மனிதனின் நண்பனாக இருந்து வருகின்றது. இடையர் வேட்டையாடும் மக்களுக்கு ஒழுங்காக உணவு கிடைப்பதில்லை. சில நாட்களில் அவர்களுக்கு விலங்குகள் எவையும் கிட்டாது போவது முண்டு. அதனால் அவர்கள் பசி, பட்டினியால் வருந்தினார்கள்; வேட்டை ஆடும்போது அவர்களுக்கு அகப்படக்கூடியதாக இருந்த ஆட்டுக்குட்டி களையும் பசுக்கன்றுகளையும் பிடித்து வளர்த்தார்கள். அவை வளர்ந்து குட்டிகளையும் கன்றுகளையும் ஈன்றபோது பால் கொடுத்தன. அவற்றின் பால் உண்பதற்குச் சுவை உடையதாகவும், பசியைப் போக்குவதாகவும் இருந்தது. ஆகவே அவர்கள் வேட்டையாடுவதால் உணவு கிடையாத காலங்களில் பாலை உண்டு பசியைப் போக்கினார்கள். சில சமயங்களில் அவ் விலங்குகளில் ஒன்றைக் கொன்று அதன் இறைச்சியை உண்டார்கள். இப்பொழுது அவர்களுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. ஆடு மாடுகள் பெருகின. அவர்கள் அவற்றைப் பசிய புல் வளர்ந்திருக்கும் இடங்களுக்குக் கொண்டு சென்று மேய்த்தார்கள். மந்தைகள், புல்லுள்ள இடங்களில் சிலகாலம் தங்கி மேய்ந்தன. அப்பொழுது மந்தைகளை மேய்ப்போர், தடிகளை நட்டு, பொருத்தித் தைத்த விலங்கின் தோல்களைப் படங்குகளாகக் கட்டிய கூடார நிழலில் தங்கினார்கள். ஓர் இடத்தில் உள்ள புல்லை மந்தைகள் மேய்ந்தபின், அவர்கள் அவற்றை வேறு ஒரு புல்வெளிக்குக் கொண்டு சென்றார்கள்; செல்லும்போது தமது கூடாரங்களையும் வீட்டி லுள்ள பால் கறக்கும் கலையம், சட்டி, பானை முதலிய வீட்டுத் தட்டுமுட்டுக் களையும் உடன் கொண்டு போனார்கள். மந்தைகளை மேய்க்கும் மக்கள் ஆடுகளினின்றும் கிடைத்த கம்பளியிலிருந்து ஆடை செய்தார்கள். இராக் காலங்களில் வானத்தில் விளங்கும் விண்மீன்களின் செலவை நோக்கினார்கள். இக்காலத்திலேயே மக்களுக்கு வான நூல் ஆராய்ச்சி தோன்றியிருந்தது. உழவன் இவ்வாறு அலைந்து திரிந்த மக்கள், ஆற்றோரங்களை அடைந் தார்கள். ஆற்றோரங்கள் செழுமையாக இருந்தன. அங்குத் தங்கிய மக்கள், சில புற்களின் விதைகள், உண்பதற்கு நல்லனவாகவும் பசியைப் போக்கு வனவாகவும் இருக்கக் கண்டார்கள். அவர்கள், அவ் விதைகள் சிலவற்றைத் தாம் தங்கும் இடங்களின் அருகே விதைத்தார்கள். அவை வளர்ந்து கதிர் களை நீட்டின. அவற்றினின்றும் அதிக விதைகள் கிடைத்தன. அவ்வாறு சேர்க்கப்பட்ட விதைகள், அவர்களுக்குப் பல நாட்களுக்கு போதுமானதாக இருந்தன. அவர்கள், ஆடு மாடுகளுடன் அலைந்து திரிவதைக் காட்டிலும், தானியங்களை விதைத்து, வேண்டிய உணவைச் சேகரிக்கப் பழகிக்கொண் டார்கள். அவர்கள் ஓரிடத்தில் தங்கி இருந்தபடியால் தானியங்களை விதைப்பதற்கேற்ற பருவ காலங்களையும் அறிந்து கொண்டார்கள். எவனிடத்தில் அதிக உணவு இருக்கின்றதோ, அவனே செல்வன் ஆகின் றான். பயிரிடும் மக்களிடத்தில் அதிக செல்வம் இருந்தது. உணவின் பொருட்டுப் பலர், அவர்களிடத்தில் வந்தார்கள். அவர்களுக்கு இப்பொழுது தேவைகள் அதிகரித்தன. அவர்கள் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்கு வீடு வேண்டியிருந்தது. தானியம் பயிரிடுவதற்குரிய மண்வெட்டி, பாரை, கத்தி, ஏர், நுகம் முதலிய கருவிகள் வேண்டியிருந்தன. தானியங்களின் உமியைப் போக்குவதற்கு உரல், உலக்கை முதலியன வேண்டியிருந்தன. உணவைச் சமைப்பதற்கு மட்பாண்டங்கள் வேண்டியிருந்தன. தானியம் விளைவிக்கும் காலம் போக, அவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. அக்காலங்களில் அவர்கள் மகிழ்ச்சியாகப் பொழுது போக்கவும், நல்ல ஆடை உடுக்கவும், ஆடல் பாடல்களைக் காணவும் கேட்கவும் விரும் பினார்கள். உணவின் பொருட்டு, மக்கள் பலர் அவர்களைச் சூழ்ந்து தங்கி னார்கள். அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து உதவினார்கள். அவர்கள், இவர்கள் செய்யும் தொழிலுக்குக் கூலியாகத் தானியத்தைக் கொடுத்தார்கள். தொலைவிடங்களிலிருந்து பலர் வந்தார்கள். அவர்கள் தம்மிடத்திலுள்ள அரிய பண்டங்களைக் கொண்டுவந்தார்கள். அவற்றைக் கொடுத்துத் தமக்கு வேண்டிய தானியங்களைப் பெற்றார்கள். இவ்வாறு ஆற்றோரங்கள், மக்கள் குடியேறி வாழும் இடங்களாயின. எங்குச் செல்வம் இருக்கின்றதோ, அதனை மக்கள் கவர விரும்புவார்கள். செல்வத்தைக் கவர அயல் இடங்களினின்றும் மக்கள் திரண்டு வந்தார்கள். அவ் வாறு வரும் மக்கள், எளிதில் மக்கள் வாழ் இடங்களை அணுக முடியாத படி குடியிருப்பைச் சூழ்ந்து பெரிய மதில் கட்டப்பட்டது. அதன் வாயிலை வீரர் நின்று காவல் புரிந்தனர். போர்க் காலங்களில் வீரமுடைய ஒருவனே படையை நடத்த வேண்டும். ஆகவே வீரமுள்ள ஒருவன் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். போர்க்காலங்களில், படைத்தலைவன் சொல்லே சட்டம். அவனுக்கு எல்லோரும் பணிந்து நடத்தல் வேண்டும். இவ்வாறு அவன் அதிகாரி, சர்வாதிகாரி ஆனான். அவன் நாட்டுக்குத் தலைவனு மானான். அவன், தனது கால்வழியிலுள்ளவர்களே தொடர்ந்து அரசராக வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவனுக்குப் பின், அவன் புதல்வன் அரசனானான். இவ்வாறு மனிதன், கீழ் நிலையிலிருந்து படிப் படியே உயர்நிலையை அடையலானான். உலகில் பெரிய ஆற்றோரங்களி லேயே, பெரிய நாகரிகம் தோன்றி வளர்ச்சி அடைந்தது. சமூகம் மக்கள், கூட்டமாக வாழத் தொடங்கிய பின்பே நாகரிகம் தோன்றி வளர்ச்சி அடைவதாயிற்று. பெரும் பாலும் தற்காப்பின் பொருட்டே மக்கள் கூட்டமாக வாழத் தொடங்கினார்கள். விலங்குகளும் பறவைகளும் கூட்ட மாக வாழ்தலையும் அவை மேயும்போது எதிரிகளின் வருகையை அறிவதற்கு தம்முள் ஒன்றைக் காவல் காத்து நிற்க நிறுத்துதலையும் போன்ற செயல்களை உயிர் நூலார் கூறுகின்றனர். மனிதனைச் சூழ்ந்து பகைகள் இருந்தன. கொடிய விலங்குகள் எந்த நேரத்திலும் அவனைக் கொன்று விடக் கூடியனவாக இருந்தன. மனிதன், சிங்கம் புலி போன்ற, மூர்க்க குணமும் போர் செய்யும் விருப்பமுடையவனாகவும் இருந்தான். ஆகவே மனிதரில் சிலர், எதிர்ப்பட்ட தம்மை ஒத்த சிலரை எதிர்த்து அவர்களைக் கொன்றுவிடவும் கூடும். இன்றும் மக்கள், போர்க் குணம் உள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். நியூகினியர் முதலிய பிற்போக்கான மக்கள், தம்மைப்போன்ற மக்களைத் தாக்கி அவர்கள் தலை களை வெட்டி வேட்டையாடுகிறார்கள் என்னும் செய்தியைச் சரித்திரங் களில் படிக்கின்றோம். இவை போன்ற ஆபத்துக்களினின்றும் தம்மைக் காத்துக்கொள்வதற்கு ஆதிகால மக்கள் கூட்டங்களாக வாழத் தொடங்கி னார்கள். மக்கள் கூட்டங்களாக வாழத் தொடங்கிய போது, அவர்கள், குடும்பங்களாகப் பெருகி னார்கள். தந்தை தாய் பிள்ளைகள் உறவினர் என் னும் பிணிப்பு உண்டாயிற்று. பின்பு திருமணச் சடங்குகளாலும், பிதாபுத்திர கடமைகளாலும் அவர்கள் கட்டுப்படும்போது சமூகம் உண்டாவ தாயிற்று. சமூகங்களுள் சட்டங்களும் கட்டுப்பாடு களும் பலவாறு இருந்தன. ஆதி மக்களின் குடும்ப சமூகக் கட்டுப்பாடுகளை அறிந்துகொள்வது மிகக் கடினம். பிள்ளைகள் தாய் வழியால் அறியப்படுதல் மக்கள் கீழ்நிலையில் வாழ்ந்த காலத்தில், பிள்ளைகள் தாய் வழியால் அறியப்பட்டார்கள். ஆஸ்திரேலிய மக்கட் கூட்டத்தினரின் பிள்ளைகள் இவ்வகையினர். ஆகவே உள்நாட்டுக் கலகங்களில் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராட நேர்ந்தது. பழைய நாகரிக மக்க ளிடையே தாய் வழியால் பிள்ளைகள் அறியப்படும் வழக்கு மறக்கப்பட் டிருந்தது. ஹெரதோதசு(Herodotus) என்னும் கிரேக்க வரலாற்று ஆசிரியர் (கி. மு. 480) இலைசிய மக்கள் தங்கள் மரபைத் தாய்வழியினின்றும் கூறினார் களென்றும், அவ்வாறு கூறுதல் அயல் நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு வியப்பு விளைப்பதாக இருந்தது என்றும் கூறி உள்ளார். சொந்த கூட்டத்தில் பெண் கொள்ளாமை பழைய மக்கட் கூட்டத்தினர் தனது கூட்டத்துள் பெண் கொள்ள வில்லை; வேறு ஒரு கூட்டத்தினின்றும் கொண்டனர். பிற்போக்குடைய மக்களிடையே இன்றும் இவ் வழக்கு நிலவுகின்றது. வடஅமெரிக்காவில் பிள்ளைகள் தாய் வழியால் அறியப்படுவார்கள். தாய் கரடிக் குலத்தவளாயின் பிள்ளைகளும் அக்குலத்தைச் சேர்ந்தவர்களாவர். கரடிக்குலத்தவன் மான் அல்லது கழுகுக் குலத்தில் பெண் கொண்டான். தமது கோத்திரத்திற்குள் மணத்தல் கூடாது என்னும் வழக்கு இந்தியப் பிராமணருக்குள் உண்டு. தென்னிந்தியப் பழங்குடிகள் பலரிடையும் இவ் வழக்கு காணப்படுகின்றது. சீனரும் தமது சொந்த கூட்டத்துள் பெண் கொள்வதில்லை. மணக்கிரியை ஆப்பிரிக்காவில், நிகரகுவா நாட்டு வேட்டையாடும் குல இளைஞன் ஒருவன், ஒருத்தியை மணக்க விரும்பினால், அவன் ஒரு மானைக் கொன்று அதனையும் சில விறகு கட்டைகளையும் அவளுடைய பெற்றோரின் வீட்டு வாயிலில் போடுவான். அவற்றை அவள் தந்தை ஏற்றுக்கொண்டால், வேறு கிரியைகளின்றி உடனே மணம் நிகழ்கின்றது. திருந்திய மக்களிடையே மணங்கள் கிரியைகளுடனும், உண்டாட்டு, களியாட்டு முதலிய கொண் டாட்டங்களுடனும் நடைபெறுகின்றன. கிரியைகளில், மதகுரு ஆசீர்வதிக் கும்படி அழைக்கப்படுகிறார். இது பெண்களை வலிமையாற் பிடித்து மனைவியராக்கும் அநாகரிக முறையிலும் வேறுபட்டது. பிரேசில் காடு களில் வாழும் மக்கள், இன்றும் அயல் கிராமப் பெண்களை வலிதிற் கவர்ந்து அவர்களை மனைவியராக வீட்டுக்குக் கொண்டு வருகின்றனர். இவ் வழக்கு உரோமிலும் ஒருகால் நிலவிற்று. கிரேக்க நாட்டில் மணம் சமாதானமாக நடைபெற்றபோதும் மணமகன் மணமகளை வலிதிற் கவர்ந்து போதல் போன்ற கிரியை நடத்தப்பட்டது. உவெல்ஸ் நாட்டில் இவ் வழக்கு, சில தலை முறைக்கு முன்னம் நடைபெற்றது. அயர்லாந்தில் மணமகன் கட்சியார் தூரத்தே நின்று பெண் வீட்டார் மீது ஈட்டிகளை எறிவது வழக்கமாக இருந்து வந்தது. பெண்களை விலைகொடுத்து வாங்குதல் மக்கள் சொத்து உடையவர்களானபோது, பெண்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டனர். ஒரு சூலுமகன் ஐந்து அல்லது பத்து எருதுகளைக் கொடுத்து மனைவி ஒருத்தியை வாங்கினான். இங்கிலாந்தில் மேற்கு சாக்சனி யிலும் இவ் வழக்கு நிலவிற்று. பொருள் கொடுத்துப் பெண்ணை வாங்கும் வழக்கு, இன்றும் தென்னிந்திய சமூகத்தினர் சிலரிடத்தில் காணப்படுகின்றது. குடும்ப முதல்வர் பெயரால் குடும்பங்கள் அறியப்படுதல் பல குடும்பங்கள் கூட்டங்களாகச் சேர்ந்து வாழ்ந்தன. இக் கூட்டங் களை எல்லாம் ஒன்றுபடுத்துவதற்கு அவர்கள் எல்லோருக்கும் முதல்வராக இருந்த ஒருவரின் பெயர் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டத்தின ரும் தாம் அம் முதல்வரினின்று தோன்றியவர்களாக நம்பி வந்தார்கள். சமூகங்களுள்ளே சட்டங்கள் திருந்தாத மக்கள், அமைதியுடன் வாழமாட்டார்கள். ஆகவே அவர்களிடையே சிலர் அமைதியை நிலைநிறுத்தினர். அமைதி நிலவி, உணவும் கிடைத்தபோது அவர்கள் அமைதியுடன் வாழ்ந்தனர். கொலம்பஸ், மேற்குத் தீவுகளில் இறங்கியபோது, அங்குள்ள மக்கள் அமைதியுடன் வாழ்ந்தார்கள். நியூகினியில் நீரில் வீடுகள் கட்டி வாழும் திருந்தாத மக்கள், நியாயத்துக்கு அடங்கி நடக்கும் மனப்பான்மை யுடையவர்களாயிருக் கின்றனர். திருந்தாத மக்களிடையும், நன்மை தீமைகளை அறிந்து கட்டுப்பாடு செய்யும் சட்டங்கள் உண்டு. அவ்வகைச் சட்டங்கள் எல்லாக் கூட்டத்தின ரிடையும் ஒரே வகையாக இருக்கவில்லை. சிலர், முதியவர்களுக்கு மரியாதை காட்டி, அவர்களை வழிபடுகின்றனர். சில காட்டுச் சாதியினரிடையே பெற்றோர் பற்று, அவர்கள் முதுமை அடையும்போது அகன்று விடுகின்றது. ஆப்பிரிக்க மக்கள் சிலர், முதிய பெற்றோர்களைத் தண்டாயுதங்களால் அடித்துக் கொன்று விடுகின்றனர். செர்மனியிலே வென்ட்ஸ் (Wends) என்னுமிடத்தில் முதியவர்களைக் கொன்று, அவர்களின் மாமிசத்தைச் சமைத்து உண்ணும் வழக்கம் இருந்தது. சுவீடன் நாட்டிலே ஆலயத்தில் குடும்பத் தண்டாயுதங்கள் எனப்பட்ட ஒரு வகை மரத் தண்டாயுதங்கள் இருந்தன. அவை சிலவற்றை இன்றும் காணலாம். அக்காலத்தில் முதிர்ந்த வர்களையும் நோயினாற் பிழைக்கமாட்டாதவர்களையும் அவர்களின் சுற்றத்தார் ஆலயங்களிற் கொண்டு சென்று, தண்டாயுதங்களால் அடித்துக் கொன்றனர். மனித உயிர் பரிசுத்தமுடையதென எவ்வளவுக்குக் கருதப் பட்டதோ, அவ்வளவுக்கு நாகரிகத்தின் வளர்ச்சி இருந்தது. தற்காப்பு, போர், பழிவாங்குதல், தண்டனை, பலி, என்பவற்றிலில்லாமல் மனிதனைக் கொல்வது ஏற்றதெனக் கொள்ளும் சட்டம் எங்கும் இருக்கவில்லை. ஒருவன் தனது வீரத்தைக் காட்டும் பொருட்டு மற்றொருவனைக் கொல்லுதல் சட்டத்துக்கு ஏற்றதாகச் சில கூட்டத்தாரால் கருதப்பட்டது. போர்ணியோவி லுள்ள இடைக்கர் குலத்தானொருவன் ஒரு மனிதனது தலையை வெட்டிக் கொண்டு வராத வரையில் அவனது திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது. குற்றங்களுக்கு ஏற்ற தண்டனைகளை விதிப்பதே நாகரிகத்தின் அடையாளம் என்று இன்று கருதப்படுகிறது. இவ் வழக்கு உலகில் படிப்ப டியே வளர்ச்சி அடைந்தது. சட்டம் என்பது பதிலுக்குப் பதில் செய்தலாகும். ஒருவன் கொல்லப்பட்டால், பழி வாங்கும் உணர்ச்சி உண்டாகின்றது. ஆஸ்திரேலியன் ஒருவன் கொல்லப்பட்டால், கொல்லப்பட்டவனின் கிட்டிய உறவினனது கடமை, கொன்றவனைக் கொன்று பழிவாங்குவது. கொலை செய்தவன் ஓடி மறைந்து விட்டால் அவன் குடும்பத்தினர் கொல்லப் படுவார்கள். மக்கள் செல்வத்தைச் சேர்த்து வைத்திருந்த காலத்தில் பழி வாங்குதலுக்குப் பதில், பணம் நட்ட ஈடாகக் கொடுக்கப்பட்டது. சொத்தைப்பற்றிய சட்டங்கள் வேட்டையாடும் சட்டங்களிலிருந்து நிலத்தைப் பற்றிய சட்டங்கள் உண்டாயின. பிரேசில் நாட்டில் ஒவ்வொரு கூட்டத்தினருடைய வேட்டை யாடும் நிலங்களின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தன. ஒரு கூட்டத்தைக் சேர்ந்தவன் வேட்டை விலங்கைத் துரத்திக்கொண்டு வேறு ஒரு கூட்டத்துக் குரிய நிலத்துள் செல்வானேல் அது பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. சில சமயங்களில் அவன் அவ்விடத்திலேயே கொலையுண்டான். கொல்லப் பட்ட விலங்கு கொன்றவனுக்குச் சொந்தமாயிற்று. இதனால் ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் பொது நிலம் உண்டு என்னும் சட்டம் உண்டாயிருந்த தெனத் தெரிகின்றது. குடிசை, ஒரு குடும்பத்துக்கு அல்லது வாழும் பல குடும்பங்களுக்குச் சொந்தமானது. அதன் அயலே உள்ள நிலம் வேலி அடைத்துப் பயிரிடப்படுமாயின், அது பொதுத்தன்மையை இழந்து குடும்பத்துக்கு உடையதாயிற்று. குடிசையிலுள்ள அம்மி, உரல், உலக்கை, பானை, சட்டி முதலியன குடும்பத்துக்குச் சொந்தமானவை. குடும்பத்துக்குச் சொந்தமாயினும், ஒரு குடும்பத்தலைவன் அல்லது பிதா மூலம் அவை சொந்தமாக இருந்தன. இவ்வாறு நாகரிகமற்ற மக்கள், பொது நிலம், குடும்ப நிலம், குடும்ப அல்லது சொந்த உடைமை முதலியவற்றைப் பெற்றிருந் தார்கள். யுத்தப் போக்குள்ள மக்கள், நிலம் வைத்திருக்கும் முறையில் புரட்சி செய்தனர். படையெடுப்புக் காலங்களில் வெல்லப்பட்ட நாட்டின் நிலங் களைப் படைத்தலைவன் அல்லது அரசன், வீரருக்கு இடையில் பிரித்து அளித்தான். இங்கிலாந்திலே நார்மானியரின் வெற்றிக்கு முன்பு மக்களின் பொதுநிலங்கள் அரசனால் இவ்வாறு பிரித்துக் கொடுக்கப்பட்டது. போர்க் காலங்களில் அரசனே நிலம் எல்லாவற்றிற்கும் சொந்தமுடையவனானான். ஆண்டுதோறும் ஒரு தொகை பணத்தை வரியாகத் தனக்குக் கொடுத்து நிலங்களைப் பயன்படுத்தும்படி அவன் மக்களுக்குக் கட்டளையிட்டான். இம்முறை இந்தியாவிலும் எகிப்திலும் நடைமுறையில் உள்ளன. உரோமில் காணியாளர் விளைவில் ஒரு பகுதியைக் கொடுப்போருக்கு நிலங்களைப் பயிரிடும்படி கொடுத்தார்கள். போரில் அடிமைகளாக்கப் பட்டோர் நிலங்களை உழுது பயிரிடும் தொழில் புரியும்படி சொந்த உடைமை போல் பயன்படுத்தப்பட்டனர். உழும் பொருட்டு மாடுகள் வளர்க்கப்பட்டன. விலை உயர்ந்த பொருள்கள், வாணிகம், நாணயப் புழக்கம் என்பன செல்வம் என்பதில் அடங்கும். சர்வ அதிகாரம் ஒவ்வொரு கூட்டத்திலும் சுய ஆட்சி நடைபெற்றது. பிரேசில் காட்டுக் குடும்பத் தலைவன் ஒருவனுக்குத் தனது மனைவியையோ, பிள்ளைகளையோ அடிமைகளையோ விற்கும் உரிமை உண்டு. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குள் தலைவன் ஒருவனைத் தெரிவது வழக்கம். அவனுடைய பதவியைத் தலைமுறை தலைமுறையாக ஏற்கும் விருப்பு அவன் சந்ததியினருக்கு எழுந்தது. போர்க்காலத்தில் திருந்தாத மக்கள் சமாதான காலத் தலைவனை ஒதுக்கிவிட்டு, யுத்தத் திறமையுடைய வேறு ஒருவனைத் தெரிவது இயல்பு. அக்காலத்தில் வீரனுக்கு உயர்வு உண்டாகின்றது. அவ்வுயர்வு சர்வ அதிகாரம் வரையிற் சென்றது. போர், தலைவனுக்கு மேலான அதிகாரத்தைக் கொடுத்த தல்லாமல், தேசத்தின் ஒழுங்கைப் பாதுகாக்கும் அவன் படையினருக்கும் அவ்வகை வலிமையை அளித்தது. ஆகவே மக்கள், இராணுவக் கட்டுப் பாட்டினால் அதிகாரத்துக்குட்பட்டு நடக்கும் ஒழுங்கைப் பெற்றார்கள். மக்களிடையே பல தரங்கள் ஒவ்வொரு மக்களிடையும் பல தரங்கள் உண்டாயின. ஆதியில் அடிமைகள், அடிமைகளல்லாதோர் என இரு பிரிவுகள் உண்டாயிருந்தன. எருது, கழுதை என்னும் செல்வங்கள் தோன்றுவதன் முன் ஆண், பெண் வேலையாளர் செல்வமாக மதிக்கப்பட்டனர். அடிமைகள் வேலை செய்தலினாலேயே கைத்தொழில், பயிர்த் தொழில்கள் வளர்ச்சி அடைந்தன. செல்வம் திரண்டதும், குருமார், எழுதுவோர், புலவர், தத்துவ நூலார் முதலாயினோர் மக்களின் மன நிலையை உயர்த்துவதற்கு ஒழிவு கண்டனர். அடிமை வழக்கிலிருந்து கூலி பெற்று வேலை செய்யும் வழக்கு உண் டாயிற்று. அடிமை வைத்திருந்தோர், ஊதியம் கருதிக் கூலிக்கு வேலை செய்யும்படி அடிமைகளைப் பயன்படுத்தினர். பின்பு அடிமைகளல்லா தோரும் பொருள் ஈட்டக் கருதிக் கூலி வேலை புரிந்தனர். இதனால் வேலை புரியும் வகுப்பு ஒன்று உண்டாயிற்று. அடிமைகளல்லாதார் பல வகுப்பு களாகப் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். பழைய நோர்மானியரிடையே, பிரபுக்கள், அடிமைகள், அடிமைகளல்லாதார் என மூன்று பிரிவினர் காணப் பட்டனர். பிரபுக்களில், அரசகுடும்பத்தைச் சேர்ந்தார், சேராதார் என இரு வகையினர் இருந்தனர். முன்னவர் பின்னவரைக் கீழாக மதித்தனர். மக்கள் பெருகிச் செல்வமும் விவேகமும் உடையவர்கள் ஆனார்கள். ஆகவே ஆட்சி முறையில் மாற்றம் வேண்டியிருந்தது. ஒரு அதிகாரியின் பழைய கடமை, வழக்குத் தீர்ப்புச் செய்வது. கவீர்(Kafir) பிரதானி வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தான். இரு கட்சியினரும் அவனுக்குச் சன்மானமாக எருதுகளைக் கொடுத்தனர். கிழக்கு நாடுகளில் அரசரே நியாயத்தீர்ப்பு அளித்தனர். ஆனால் அவ் வேலை ஞாயத்தார் (ஞாயாதி பதிகள்) கைக்கு மாறிவிட்டது. எகிப்திலும் பாபிலோனிலும் பொதுக் கருமங்கள் தனித் தனி அதிகாரிகளால் மேற்பார்க்கப்பட்டன. இன்றைய ஆட்சி முறையும் இதுவே. அரசனுடைய ஆணை அவன் முதல், காவற் காரன் வரையிற் சென்றது. இவ்வாறு மக்கட் சமூகங்களின் சட்டங்களும் கட்டுப்பாடுகளும் கீழ் நிலையினின்று படிப்படியே வளர்ச்சி அடைந்தன. மொழி மக்கள் சமூகங்களாக வாழத் தொடங்கிய பின்பே மொழியும் கலைகளும் தோன்றி வளர்ச்சி அடைந்தன. கலைகளுக்கு முன், மொழியே தோன்றுவதாயிற்று. ஒருவன் தனது கருத்தை வெளிப்படுத்துவதற்கு, சைகைகளையோ சில ஒலிக்குறிகளையோ பயன்படுத்துகின்றான். இவ் வடிப்படையினின்றே மொழி தோன்றிற்று. விலங்குகள் பறவைகளிடத்தும் மொழிக்கு அடிப்படை யாக உள்ள இவ்வியல்புகளைக் காணலாம். குஞ்சுகளோடு உலாவித் திரியும் கோழி, சடுதியில் ஒருவகை ஓசை செய்கின்றது; உடனே குஞ்சுகள் ஓடி மறை கின்றன. அது அபாயம் நீங்கி விட்டதை அறிவிக்க இன்னொரு வகையாகச் சத்தமிடுகின்றது. அப்பொழுது மறைந்திருந்த குஞ்சுகள் தாயிடம் ஓடி வரு கின்றன. இவ்வாறே விலங்குகள், தம் கன்றுகளைக் கூவியழைத்தலையும், மகிழ்ச்சி, வெறுப்பு, அச்சம் முதலியவற்றை உணர்த்த வெவ்வேறு வகையாக ஒலித்தலையும் காணலாம். விலங்குகள், மனிதன் பேசத் தொடங்குவதற்கு மிக முற்காலத்திலேயே பேசின. நாய் தனது வாலைக்கொண்டு அன்பு முதல் கோபம் வரையிலுள்ள பலவகையான உணர்ச்சிகளை அறிவிக்கின்றது. அது, குரலினால் விளையாட்டு முதல் பலவகையான, எண்ணங்களைத் தெரிவிக்கின்றது. வாலினால் பேசும் கருத்துகளைவிட எண்ணங்களைக் குறிக்கப் பதினைந்து வகை வெவ்வேறு வகையாக ஒலிக்குறிகளை அது கையாளுகின்றது. ஆடு மாடுகளும் குதிரைகளும் 22 ஒலிக்குறிகள் வரை யில் பயன்படுத்துகின்றன. புறாவும் கோழியும் பன்னிரண்டு ஒலிக்குறிகளை மொழியாகப் பயன்படுத்துகின்றன. எறும்பும் மற்றைய பூச்சிகளும் முகத்தி லுள்ள கொம்புகளால்(Feelers) பேசுகின்றன. பறவைகள், மகிழ்ச்சி, அழுகை, அபாயம், காதல் போன்ற பல கருத்துகளைக் குறிக்க வெவ்வேறு வகை யாகச் சத்தமிடுகின்றன. குதிரைகளும் ஆடு மாடுகளும் ஒன்று மற்று ஒன்றை மூக்கினால் உரைஞ்சியும், கனைத்தும், அழுதும் பேசுகின்றன. கொரில்லா வும் சிம்பன்சியும் 20 சொல் ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. கிப்பன் (Gibbon) என்னும் குரங்கு பாடுகின்றது. மக்களும் ஆதியில் இவ்வகையான ஒலிக்குறிகளையும் சைகைகளையுமே தமது மொழியாகப் பயன்படுத்தி னார்கள். இவ்வகை மொழி, மக்கள் எல்லோருக்கும் பொதுவாக இருந்தது. பின்பு மக்கள், தம்மைச் சூழ்ந்துள்ள பறவைகள், விலங்குகள் செய்யும் ஓசை களையும் இயற்கைப் பொருள்களினின்று எழும் ஓசைகளையும் உற்றுக் கேட்டார்கள். அவர்கள் அவ்வொலிகளையே அவ் விலங்குகள், பறவைகள், இயற்கைப் பொருள்களுக்கும் பெயராக இட்டு வழங்கினார்கள். கோ, கோ என்னும் சத்தமிடும் பறவை கோழி எனப்பட்டது. ஆங்கிலத்தில் “கொக்” என்னும் பெயரும் இவ்வகையினதே. கூ கூ எனக் கூவும் பறவை குயில் எனப்பட்டது. மா, மா, எனக் கத்தும் விலங்கு மாடு எனப்பட்டது. கா, கா எனக் கரையும் குருவி காக்கை அல்லது காகம் எனப்பட்டது. இவ்வாறு தோன்றிய சொற்களை, மொழிகளில் காணலாம். பின்பு மக்கள் பொருள் களின் பண்புகளையும் செயல்களையும் குறிக்க ஒலிக்குறிகளை அமைத்து வழங்கினார்கள். மக்கள், கூட்டமாக வாழ்கின்ற காலத்திலேயே இவ்வகை யான ஒலிக்குறிகள் தோன்றி, அக் கூட்டத்திலுள்ள மக்கள் எல்லோராலும் அவ்வப் பொருள்களையும் பண்புகளையும், செயல்களையும் குறிப்பன வாக வழங்கும். இவ் வொலிக்குறிகளும், ஒலிக்குறிகள் இல்லாதவற்றுக்கு இடையிடையே செய்யப்படும் உடற்குறி, பார்வை போன்றவைகளுமே ஆதியில் மொழியாக வழங்கின. இன்றும் ஒலி வடிவமான மொழியோடு சைகைகளும் இருந்து வருதலைக் காண்கின்றோம். மொழி, மக்களிடையே தோன்றி வளர்ச்சி அடைவதை, ஒரு சிறிய குழந்தை வளருந்தோறும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்ளுகின்றதோ, அதனோடு ஒப்பிட்டு அறிதல் கூடும். ஆதிகாலத்தில் மக்கள், சிறிதுசிறிதாகச் சொற்களை உண்டாக்கித் தோற்றுவித்த மொழியின் வளர்ச்சியே, இன்று உலகில் காணப்படும் எல்லா மொழிகளும் ஆகும். எழுத்து மக்கள், சொற்களைப் பயன்படுத்த அறியாத காலத்தில், சைகை களைப் பயன்படுத்தினார்கள். எழுத்தைப்பற்றி அறியாதிருந்த காலத்தில் அவர்கள், படங்களை எழுத்துகளாகப் பயன்படுத்தினர். நாம் அறிந் திருக்கும் எல்லாச் சொற்களும், முற்காலத்தில் பட வடிவாக எழுதப்பட்டன. சீன எழுத்துகள் இன்றும் இவ்வகையினவே. சொற்களை ஒலிமுறையாகப் பிரித்து எழுதிக்காட்டி உச்சரிக்கும் முறை பிற்காலத்தது. கட்டடக் கலை மிகமிக முற்காலத்தில் மனிதன் உறைவிடங்கள், மலைக்குகைகள், மரப் பொந்துகள், மர நிழல்களாக விருந்தன. மலைக்குகைகள், இயற்கையாக அமைக் கப்பட்ட வீடுகளாகும். குகைகளில்லாத இடங்களில் தங்க நேர்ந்தபோது, அவர்கள் மரக்கொம்புகளைச் சுற்றிவர வட்டமாக நாட்டி, மேலே வைக்கோல், தழை, மரப் பட்டை முதலியவற்றை இட்டு வேய்ந்த ஒதுக்கிடங்களைப் பயன்படுத்தினர். இதி லிருந்து வட்ட வடிவினதாகிய குடிசைகள் அமைக்கும் பழக்கம் உண்டாயிற்று. இடம் விட்டு இடம் அலைந்து திரியும் இடையர், தடிகளை நாட்டிக் கம்பளியினால், அல்லது தோலினால் வேய்ந்த வட்ட வடிவான கூடாரங்களில் தங்கினார்கள். இன்று போர் வீரர் தங்கும் கூடாரங்களும் இவ்வகை யினவே. பின்பு பக்கங்களில் உள்ள கம்புகளுக்குப் பதில் சுவர்களை எழுப்பி, மேலே வைக்கோல், ஓலை முதலியவற்றால் வேய்ந்த குடில் வீடுகள் அமைக்கப்பட்டன. வட்டத்துக்குப் பதில் நீண்ட சதுரம் அமைப்பதால், வீட்டில் அதிக இட வசதி உண்டு. பின்பு, பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழக்கூடிய நீளமான வீடுகள் கட்டப்பட்டன. அவை, அமைப்பு அளவில் இன்றைய வீடுகளைப் போலவே இருந்தன. கல் பெரிதும் கிடைக்கக் கூடிய இடங்களில் கற்களை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கிச் சுவர்கள் எழுப்பப் பட்டன. கட்டடம் கட்டும் திறமை உண்டானபோது, கற்களை ஒன்றோ டொன்று அண்டும்படி வெட்டி மட்டம் செய்து, ஒன்றின்மேல் ஒன்றை வைத்துச் சுவர்கள் எழுப்பப்பட்டன. எகிப்திய சமாதிக் கட்டடங்கள் இவ்வாறே கட்டப்பட்டுள்ளன. இன்றியமையாதபோது உலோகப் பிடிப்புகள் பயன்படுத்தப்பட்டன. அக்காலத்தில் “சிமெந்தின்” பயன் அறியப்பட்டிருந் தது. மண் வீடுகளின் உட்புறச் சுவர்கள், மண் பூசி அழுத்தப்பட்டன. மண்ணைக் குழைத்து எறிந்து சுவர் வைத்தலைவிட, களிமண்ணில் கல்லரிந்து காயவிட்டு அதனால் சுவர் அமைத்தல் இலகு வானது. பின்பு, சூளையிட்ட களிமண் கற்கள் பயன்படுத்தப்பட்டன. வீடுகளுக்கு முன்னால் இரு பக்கமும் வளர்ந்த செடிகளை வளைத்துக் கட்டுவதால் வில் உண்டா யிற்று. அது அழகு செய்வ தாயிருந்தது. பின்பு, வில் வைத்துச் சுவர் அமைக்கும் பழக்கம் உண்டாயிற்று. குகைகளில் வாழ்ந்த மக்களின் சந்ததியினர் குகை வடிவாகவும், கூடார வடிவமாகவும் வீடுகளமைத்தார்கள். முகமதிய கிறித்துவ இந்தியக் கட்டட அமைப்புகள் வேறுபடுவதற்குக் காரணம் இதுவே. உடை இன்றும், உலகின் சில பகுதிகளில் உடை இன்றி வாழும் மக்கள் காணப்படுகிறார்கள். வெப்ப நாடுகளில் ஆடையினால் யாதும் பயனில்லை. ஆகவே, அழகு அல்லது மானம் என்பவற்றுள் ஒன்றிற்காகவே அது அணியப்படுகிறது. உடை அணியாத, அல்லது அற்ப உடை அணியும் மக்கள், உடலில் நிறம் பூசிக்கொள்கிறார்கள். அந்தமான் தீவு மக்கள், நிற மண்ணையும் பசையையும் குழைத்து உடம்பில் பூசிக்கொள்கிறார்கள். இது, அவர்கள் உடலை வெயில், கொசுக்கடி என்பவற்றிலிருந்து காக்கின்றது. அவர்கள் அப் பூச்சின் மீது பல கோடுகள் இழுத்து அலங்காரம் செய்கிறார்கள். பழங்காலக் காட்டு மக்கள், மரணத் துக்கத்தைக் காட்ட, முகத்தில் கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தைப் பூசிக்கொள்வார்கள். ஜூலியஸ் சீசர் காலத்தில் பிரிட்டன் மக்கள், போருக்குச் செல்லும்போது உடலில் நிறங்கள் பூசினார்கள். பச்சை குத்துவது அழகைக் கருதியே ஆகும். அது, நிறம் பூசுவதற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டது. உடை, உடலை அதிகம் மூடும்போது பழங்கால அலங்காரங்கள் (பச்சைகுத்துதல், நிறம்பூசுதல்) குறையத் தொடங்கின. உடலை அலங்கரித்தற்குப் பலவகை அணிகளும் பயன்படுத்தப்பட்டன. எலும்பு, பற்கள், நகங்கள் போன்றவற்றை அணிவதி லிருந்தே, இன்று முத்து, பவளம் முதலியவற்றை அணியும் வழக்கம் உண்டாயிற்று. அலங்காரத்தின் பொருட்டுத் தழை, மரப்பட்டை, தோல் முதலியன அணியப்பட்டன. மக்கள், புற்களில் பாய் முடைய அறிந்தார்கள். ஒரு துணியை நாம் குலைத்துப் பார்த்தால் அது நூல்களால் முடையப்பட்ட ஒரு பாய் என நமக்கு விளங்குகின்றது. நெசவு செய்வதற்கு, நூல் அல்லது கயிறு செய்யும் பழக்கம் வேண்டும். எல்லா மக்களும் தும்பு, மயிர், கம்பளி முதலியவற்றை உள்ளங்கையில் அல்லது தொடையில் வைத்து உருட்டி நூல் திரிக்க அறிவார்கள். உள்ளங்கையில் வைத்து உருட்டி நூல் திரிப்பதி லும் வேகமாகச் சுழலக்கூடிய கதிரில் நூல் திரிப்பது எளிது. கதிர்கள் கொண்டு நூல் திரிக்கும் பழக்கத்தை மக்கள் மிக மிக முற்காலத்திலேயே பெற்றிருந்தார்கள். இன்றைய நூல் நூற்கும் பொறிகள் என்பவை, நூல் நூற்கும் நூற்றுக்கணக்கான கதிர்களை நீராவியினால் இயக்கி, வேலை செய்விக்கும் அமைப்புகளே ஆகும். ஒரு கம்பளியை அல்லது நீண்ட தோலை நடுவே துளையிட்டு அணிந்து அரையில் ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டால் அது இன்று கிறித்துவ பாதிரிமார் அணியும் அங்கி போன்றதாகும். இவ்வகை உடையின் திருத்தமே இன்றைய அங்கியாகும். குதிரையின்மீது சவாரி செய்ய நேர்ந்த பொழுது அங்கியின் கீழ்ப்பாகம் நடுவே இரண்டாகக் கிழித்துத் தைக்கப் பட்டது. அப்பொழுது, காற்சட்டையும் மேற்சட்டையும் தனித்தனி அணிவது வசதிபோல் காணப்பட்டது. இவ்வாறு காற்சட்டை மேற்சட்டை அணியும் பழக்கம், குளிர் தேசங்களில் உண்டாயிற்று. இன்று காற்சட்டை மேற்சட்டைகளை வெப்ப நாட்டு மக்கள், அழகுக்காகவே அணிகின்றனர். வெப்ப நாடுகளில் மக்கள், கௌபீனம் அணிந்தனர். பின்பு அழகுக் காக அரையில் துணியைச் சுற்றினார்கள். இவ்வகை உடைகளைச் சாஞ்சிக் கோபுரச் சிற்பங்களிற் பார்க்கலாகும். நாள் ஏற ஏற அரையிற் கட்டிய துணி, முழங்கால், கெண்டைக்கால் வரையும் வருவதாயிற்று. நடக்கும் வாய்ப்புக் கருதி உடையின் கீழ்த்தலைப்புகள் இழுத்துப் பின்னே செருகப்பட்டன. இதிலிருந்து மூலைக்கச்சம் கட்டும் வழக்கம் உண்டாயிற்று. முற்காலத்தில் தலை மயிர் சிலும்பாமல் இருக்கும் பொருட்டுத் தலையைச் சுற்றி நாடா கட்டப்பட்டது. நாடா கட்டும் பழக்கத்திலிருந்து துணி கட்டும் பழக்கம் உண்டாயிற்று. துணி கட்டும் பழக்கம், பாகை வைக்கும் வழக்கமாக மாறிற்று. பழைய சிற்பங்களில் பாகைகளின் வகைகள் பலவற்றைக் காணலாகும். இவ்வாறு உடைகள் இடங்களுக்கேற்ப மாறுபட்டன. பாடல் பேச்சு, நடை, ஆட்டப் பாட்டு, இராகப் பாட்டு என்பன ஒன்றோடு ஒன்று இணைந்து கரந்து கிடக்கின்றன. ஆஸ்திரேலிய மக்கள், போருக்குப் போகுமுன் “அவன் தலையைக் குத்து - அவன் நெஞ்சைப் பிள - அவன் ஈரலை வாங்கு” என்பன போன்ற மொழிகளைக் கோபத்துடன் பாடுவர். இழவு காலத்தில் பெண்களில் ஒருத்தி, பாடலின் ஒரு அடியைச் சொல்லு வாள்; மற்றொருத்தி மற்றொரு வரியைச் சொல்லுவாள்; பின்பு எல்லோரும் மூன்றாவது நாலாவது அடிகளைச் சொல்லுவார்கள். இவ்வாறு அவர்கள் ஒருவகை ஓசையில் பாடுகிறார்கள். இப் பாடல்கள் அளந்து செய்யப் பட்டன அல்ல. இவ்வகை முரடான பாடல்களிலிருந்து, அளந்து செய்யப் படும் பாடல்கள் தோன்றின. செய்யுள் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு, அளந்து செய்யப்பட்டது என்பது பொருள். பாடலின் நோக்கம் இசையோடு பாடுவது. இவ்வாறு பாடுதல், பேச்சு நடையில் இருந்து வளர்ச்சி அடைந்தது. நாம் பேசும்போது எல்லாச் சொற் களையும் ஒரேவகை ஓசையோடு சொல்லுவதில்லை. கேள்வி, மறு மொழிக்கு ஏற்பவும் உணர்ச்சிகளுக்கு ஏற்பவும் ஓசை பெறுகின்றன. இவ் வகை, தொடக்கத்திலிருந்தே உணர்ச்சிகளுக்கேற்ப வெவ்வேறு இசைகளில் பாடல்கள் தோன்றின. பத்தி, காதல், வீரம், சோகம் போன்றவற்றை உணர்த் தும் பாடல்கள் வெவ்வேறு ஓசைகளில் பாடப்படுதலைக் காண்கின்றோம். ஆடல் ஆடல், இக்காலப் பொழுதுபோக்குகளுள் ஒன்று என்று நாம் கருதலாம். காட்டுச் சாதியினர் தமது மகிழ்ச்சி, துக்கம், காதல், கோபம், சமயம், மந்திரவாதம் போன்றவற்றையெல்லாம் ஆடிக் காட்டுவர். முற்காலச் சமயத்தில் ஆடல், வணக்கத்துக்கு மிக மிக இன்றியமையாததாக இருந்தது. கிரீசில் அப்பலோவின் திருநாளிற் குருமார் பாடி, ஆடிக் கேடகங்களை அடித்துக்கொண்டு வீதிகளில் சென்றார்கள். இன்றைய நாகரிகத்தில், சமய சம்பந்தமான இசையில் ஆட்டம் விடப்பட்டடுள்ளது. ஆடலும், கதையை நடித்தலும் ஒன்றே ஆகும். வட அமெரிக்கரின் நாய்க்கூத்து, கரடிக்கூத்துகள், விலங்குகள் ஒன்றை ஒன்று கடித்துப் புரளுவது போன்ற நடிப்பே ஆகும். ஆடலும் பாடலும் சேர்ந்து நாடகம் உண்டாயிற்று. ஆட்டத்தின் பொருட்டு இசைக்கருவிகள் தோன்றியிருக்கலாம். ஆடும் தாளத்துக்கு ஏற்பச் சேர்ந்து ஒலிப்பதற்கு இசை வேண்டியதாயிற்று. பலவகை ஓசைகள், ஆட்டக்காரனுக்குப் பலவகை ஊக்கத்தை எழுப்புவதற் காகப் பயன்பட்டன. சமயம் சமயம், பயத்தினால் தோன்றிய ஒன்று ஆகும். மனிதன் இறந்து போதலையும், அவனுடைய ஆவி, கனவிலும் நனவிலும் அவனுடைய உடை ஆயுதங்கள் முதலியவற்றோடு தோன்றுவதையும் முற்கால மனிதன் கண்டான், மனிதனைப் போலவே மற்றைய பொருள்களுக்கும் ஆவி போன்ற உயிர் இருக்கின்றன என்றும் அவற்றை இறந்து போனவர்கள், ஆவி வடிவிற் பயன்படுத்த முடியுமென்றும் அவன் கருதினான். ஆகவே இறந்தவர்களோடு அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் பிற பொருள் களும் வைத்துப் புதைக்கப்பட்டன. இறந்தவர்களின் ஆவிகள் தமக்குத் துன்பம் விளைவிக்கக் கூடும் என நம்பி, அவன் அவற்றுக்கு உணவு, நீர் முதலியவற்றைக் கொடுத்து அவற்றை மகிழ்விக்க நினைத்தான். இவ் வுலகில் அஞ்சத்தக்கவனாக இருந்த ஒருவன் இறந்தபோது, அவன் சிறப்பாக வழிபடப்பட்டான். அவ் வகையினன் மிக்க தீமையைச் செய்தல் கூடுமென அவன் நம்பினான். இவ்வாறு உலகில், இறந்தவர் வழிபாடு தோன்றியிருந்தது. பின்பு மக்கள், சிறிது சிறிதாகத் தம்மிலும் மேலான வல்லமை ஒன்று இருப்பதை அறிந்தார்கள். அவ் வல்லமை இவ்வுலகுக்கு ஒளியை வழங்கும் ஞாயிறு என நம்பி, மக்கள் ஞாயிற்றை வழிபட்டார்கள். பின் திங்களும் மற்றைய கிரகங்களும் வழிபடப்பட்டன. இன்றும் இந்திய ஆலயங்களில் ஒன்பது கிரகங்கள் இடம் பெற்று வழிபடப்படுகின்றன. பின்பு மக்கள் இவற்றை அன்றி ஞாயிற்றுக்கு ஒளியைக் கொடுப்பதும், உயிருள்பொருன், உயிர் இல்பொருள் என்பவற்றை எல்லாம் இயக்குவது மாகிய தனிப் பேர் ஆற்றல் ஒன்று உண்டு என அறிந்து, அதனையே முழுமுதற் கடவுள் எனக் கொண்டு வழிபடுவராயினர். இறந்தவரின் ஆவி வழிபாடு முதல் மேலான ஒரு கடவுளை வழிபடும் வழிபாடு வரையில் உள்ள மதங்களை இவ்வுலக மக்களிடையே நாம் இன்றும் காணலாகும். பழங்கதைகள். எழுத்து கண்டுபிடிக்கப்படுவதன் முன், மக்கள் தம் வரலாறுகளை, காலத்துக்குக் காலம் ஒருவருக்கு ஒருவர் சொல்லித் தலைமுறை தலைமுறை யாகக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இக் கதைகள் பெரும்பாலும் இன்று மறக்கப்பட்டுள்ளன. மற்றும், தம் முன்னோர் வரலாறுகளைக் கன்ன பரம்பரைக் கதைகள் மூலம் காப்பாற்றிவரும் மக்களும் இவ்வுலகில் காணப் படுகிறார்கள். அக் கதைகள் உண்மையாகவே உள்ளன என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. தென் கடல் தீவுகளின் ஒன்றாகிய உரொது மாவில்(Rotuma) பெரிய முதிய மரம் ஒன்று நின்றது. கன்ன பரம்பரைக் கதை யின்படி அம் மரத்தின் வேர்களுக்குள் பெரிய அதிகாரி ஒருவனின் கல் ஆசனம் புதைக்கப்பட்டிருந்தது என, அங்குள்ள மக்கள் கூறி வந்தார்கள். அம் மரம் பாறி விழுந்தபோது அதன் வேர்களுக்குள் அவ் வாசனம் காணப்பட்டது. இவ்வாறு பல நிகழ்ச்சிகள் உண்டு. ஆனால் இவ்வாறு தலை முறை தலைமுறையாக வரும் கதைகளோடு சில கட்டுக்கதைகளும் சேர்ந்து விடுகின்றன. எகிப்தியர், கிரேக்கர்களின் உண்மை வரலாறுகளோடும் கட்டுக்கதைகள் கலந்து இருத்தலை நாம் காணலாகும். முற்காலப் புலவர்கள், அரசர், பெருமக்களைப் பற்றிய உண்மையான வரலாறுகளை மையமாக வைத்துக்கொண்டு, கேட்பவருக்கு இன்பம் அளிக்கக் கூடிய வகையில் அவற்றைத் திரித்துப் பாடியுள்ளார்கள். இராமாயணம், பாரதம், ஹோமரின் இலியாட் போன்ற நூல்களை நோக்கி நாம் இதனை அறியலாகும். கட்டுக் கதைகளோடு பின்னிக் கிடக்கும் பழைய வரலாறுகள், கட்டுக் கதைகள் என ஒதுக்கிவிட வேண்டியன வல்ல. அவற்றைப் படிப்பவர் களுக்கு, நம்பத்தக்கன இவை, நம்பத்தகாதன இவை என அறிந்துகொள்ள வேண்டியது கடனாகும். பழைய வரலாறு எழுதுவோர் உண்மை வரலாறு களைக் கட்டுக் கதைகளோடு சேர்த்து எழுதி வைக்கலானார்கள். பாண்டியர் கூட்டிய தமிழ்ச் சங்கத்தில் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், முருகவேள் முதலிய கடவுளர் இருந்து நூல் ஆராய்ந்தார்கள் எனக் கூறப்படும் வரலாறும் இவ்வகையினதே. கடவுளர் சங்கத்தில் இருந்தார்கள் எனக் கூறியிருத்தலின், தமிழ்ச் சங்கம் நடைபெறவில்லை எனக் கூறும் ஒரு சாராரும் உளர். அவர்கள், மக்களைப் பற்றிய வரலாற்றை ஒரு சிறிதும் அறியாத கல்லா மாந்தரே ஆவர். பஞ்சதந்திரக் கதைகள் போன்ற ஒவ்வொரு நோக்கம் கருதி எழுதப்படும் கதைகளும் உண்டு. சமய சம்பந்தமாக மக்களுக்குப் பத்தி, அச்சம் முதலியன விளைவிப்பதற்கு எழுதப்பட்ட கதைகள் பெரும்பாலும் இவ்வகையினவே. கதைகள் காலத்துக்குக் காலம் மாற்றம் அடைகின்றன. புதிய கதை சொல்லுவோர், பழங்கதைகளைக் கேட்போர் விருப்புக்கு ஏற்ற வகையில் மாற்றி விடுகிறார்கள். சினிமாக்களில் காணப்படும் கோவலன் கதையை நோக்கி இதன் உண்மை காண்க. ஒவ்வொரு காலத்தில் மக்களின் நம்பிக்கைகள் ஒவ்வொரு வகை யாக இருந்தன. அவ்வக் காலங்களில் சொல்லப்படும் கதைகள் அவ்வம் மக்களுக்கு ஏற்றனவாகத் தோன்றின. ஹெரதோதசு போன்ற வரலாற் றாசிரியர்களே இன்று, கற்பனைக் கதைகள் என்று நமக்குத் தோன்றும் பலவற்றைத் தமது வரலாற்றில் கூறியுள்ளார். ஆடு, மனிதனோடு பேசிற்று, ஓநாய் பேசிற்று என்று சொன்னால், இன்றைய சிறுவரும் அதனைக் கட்டுக் கதை எனவே கூறுவர். முற்காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை. கணக்கு முற்கால மக்கள் கைவிரல் கால் விரல்களை எண்ணிக் கணக்குப் போட்டார்கள். சில தேச மக்கள், ஐந்தைக் குறிக்க வழங்கும் பெயர் ஒரு கையைக் குறிக்கும்; பத்தைக் குறிக்க வழங்குவது இரண்டு கைகளையும் குறிக்கும். ஆறைக் குறிப்பதற்கு அடுத்த கையின் ஒரு விரல் குறிக்கப்படும். இவ்வாறு இரண்டு கை வரையில் வந்து, பின் கால் விரலிலிருந்து ஆரம்பிக் கும், பதினைந்துக்கு இரண்டு கையும் ஒரு காலும் குறிப்பிடப்படும். பின்பு அடுத்த காலின் முதல் விரல் குறிக்கப்படும். இருபத்து ஒன்றுக்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும், அடுத்த மனிதனின் முதல் கைவிரலும் குறிக்கப்படும். இப்படியே அடுத்த மனிதன், இரண்டாவது மனிதன், மூன்றாவது மனிதன் என்று எண்ணுதல் செல்லும். விரல்களைக் கொண்டு கணக்குப் பார்த்தமையினாலேயே ஐந்து, பத்து, என்று எண்ணும் பழக்கம் முற்காலத்தில் உண்டாயிருந்தது. இலக்கங்களை எழுத நேர்ந்தபோது ஒன்றுக்கு ஒரு கீறும், இரண்டுக்கு இரண்டு கீறும், மூன்றுக்கு மூன்று கீறும், நான்குக்கு நான்கு கீறும், ஐந்துக்கு V அடையாளமும் எழுதப்பட்டன. அது ஒரு கையைக் குறிக்கும். பத்தைக் குறிக்க X அடையாளம் இடப்பட்டது. அது இரண்டு கைகளையும் குறிக்கும். கணக்குகள் கூழாங்கற்களை எண்ணிப் போடப்பட்டன. கணக்குப் பார்த்தலைக் குறிக்கும், “கால்குலேட்”(Calculate) என்னும் ஆங்கிலச் சொல்லும், கால்குலஸ்(Calculus) என்னும் இலத்தின் சொல்லும் கல் என்னும் அடியாகப் பிறந்தன. கல் என்பது இன்றும் தமிழில் வழங்கும் பழந்தமிழ்ச் சொல்லாகும். கல்லை எண்ணுவது, பலகையில் காய் எண்ணுவதாக மாறிற்று. இன்றும் சீன மக்கள் இவ்வாறு கணக்குப் போடுகிறார்கள். பள்ளிக் கூடப் பிள்ளைகள் பலகைகளில் காய்களை எண்ணிக் கணக்குப் போடப் பழகுகிறார்கள். இவ்வாறு கைவிரல் எண்ணுவதிலிருந்து, இன்றைய கழித்தல், கூட்டல், வகுத்தல், பெருக்கல் முதலிய கணக்குப் போடும் பழக்கங்கள் சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்தன. இன்று, கணக்குப்போடும் இயந்திரங்கள் உள்ளன. கணக்குக்குப் பின் உள்ளது அளவை. முற்கால மக்கள் விரல், சாண், அடி, முழம், பாகம் எனத் தமது உறுப்புகளைக் கொண்டே அளந்தார்கள். பின்பு இவற்றுக்குப் பதிலாக வில், கோல் முதலியன பயன்படுத்தப்பட்டன. வில்லால் அளக்கப்படும் தூரம் ‘விற்கிடை’ எனப்பட்டது. கூப்பிடும் தூரம் ‘கூப்பிடு’ (ஒருவன் கூப்பிடும் சத்தம் கேட்கும் தொலைவு) நிறுத்தல் அளவை, நெல்லெடை, தலைச்சுமை, ஆட்சுமை என்பதுபோல் அளக்கப் பட்டன. பொன் குன்றிமணி, மஞ்சாடி, கழஞ்சு என்பன போன்ற நிறைகளால் நிறுக்கப்பட்டன. விஞ்ஞானம் விஞ்ஞானம், மந்திர வித்தையிலிருந்து வளர்ச்சி அடைந்தது. முன்பு மந்திர வித்தைக்காரராக இருந்த குருமார், தமது மந்திர வித்தை பலிக்காத இடத்து வேறு உபாயங்களைக் கையாண்டனர். உரோமாபுரியில் குருமார், நிலத்துக்குக் கீழாக நீராவியைச் செலுத்திக் கோயிற் கதவைத் திறக்கவும், உலோகத்தால் செய்த கிளியைப் பாடுவிக்கவும் அறிந்திருந்தனர். குருமார் பல மூலிகைகளைக் கண்டுபிடித்து நோய்களைக் குணப்படுத்தி, அது மந்திரத்தால் முடிந்தது எனக் கூறினர். பழைய வைத்திய முறைகள் மந்திர வித்தையோடு சேர்ந்து இருப்பதற்கு இதுவே காரணம். முடிவுரை மனிதன் தோன்றிப் படிப்படியே அறிவாலும் கலைகளாலும் வளர்ச்சி அடைந்த முறைகளைக் கூறும் நூல் “மனித வளர்ச்சி நூல்”(யவோசடியீடிடடிபல) எனப்படுகின்றது. இக் கருத்துகளை எல்லாம் இச்சிறு நூலில் விரித்தல் இயலாமையின், பொது மக்கள் இக் கருத்துகளைப் பொழிப்பாகப் பயிலு மாறு இந் நூல் சுருங்க எழுதப்படலாயிற்று. எஎஎஎ 1 2 1. Early man was savage, stupid and obscene. He is represented today as inmates of goals and lunatic asylums. Crime and lunacy are atavistic, showing stage. - Foot prints of the past, J.M. Wheeler. 1. Moses himself is said to have made a brazen serpent which down to Hezakeal’s time continued to be worshipped at Jerusaleme as an image of Jehovah -Encyclopaedia Britannica. 1. Another emblem of God only once referred to is the snake. The snake is one of the most common symbols of Siva and modern Hinduism. Thus an inscription of Mohenjo-Dara informs us that mind meditates on the snake of the three-eyed one. - Fr. Heras. 2. ‘தமிழர் சமயம் எது?’ ... என்னும் நூலில் காண்க. 1. Chamber’s Encyclopaedia - Serpent worship. 2. It is possible that the worship of Isis may find its foot types in the adoration of the Indian Isi. The worship of the serpent - p. 124. Deane. 1. The origin of civilization and the primitive condition of man—P. 188-Lubbock. 2 Rivers in life—Forlong. 3 Primitive culture—P. 241-E.B. Tylor. 1. The Sun and the Serpent - Chapter X-XI-C.F. Oldham. 15 பழைய பிரான்ஸ் மக்களின் பாம்புக் கடவுள் 14 பழைய உரோமரின் கொடி 3 ஆதித் தாய் தந்தையர் (ஆதாம், ஏவாள், பாம்பு) 4 13 12 5 அமராபதி சிற்பம் 6 11 10 7 தையர் (பினீசியர்) நாட்டுப் பழைய நாணயம் 8 தென்னிந்திய மக்களின் நாகம்மாள் 9 32 17 18 1. ஜாவா மனிதனின் காலம் 475,000 ஆண்டுகள் வரையில். சீனாவில் பீக்கிங் (Peking) என்னும் இடத்தில் பழங்கால மனிதனின் எலும்புகளும் மண்டை ஓடும் 1929ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இம் மனிதன் பீக்கிங் மனிதன் எனப்படுவான். இவன் காலம் 1,000,000 ஆண்டுகள் வரையில். இவனைப்பற்றி அதிகம் தெரியாது. 2. ஜெர்மனியிலே ஹெய்டில்பர்க் (Heidelburgh) என்னும் இடத்தில் பழங்கால மனிதனின் எலும்புகளும் மண்டை ஓடும் 1907இல் கண்டு எடுக்கப்பட்டன. இம் மனிதன் ஹெய்டில் பர்க் மனிதன் எனப்படுவான். இவன் காலம் 300,000 ஆண்டுகள் வரையில். இங்கிலாந்திலே ப&#E html> 16 பாம்பு வணக்கம் முன்னுரை இவ்வுலகில் மக்கள், தமக்கு மேலான வல்லமை யாதோ உண்டு என்று அறியத் தொடங்கிய காலம் முதல், அது யாது, அது எவ்வகையினது என்று அறிந்துகொள்ள முடியாதவர்களாய் இன்று நமக்குப் பைத்தியகாரத்தனம் எனத் தோன்றும்படியான பல செயல்களைச் சமயம் என்னும் பெயரால் செய்து வந்திருக்கின்றனர். 1இச் செயல்கள் உலகம் முழுமையிலும் காணப் பட்டன. இவ்வகைச் செயலைக் குறித்து வரலாற்று முறையில் நாம் ஆராய்ந்து பார்ப்பதனால் காரணம் விளங்காமல் பயனுடையனவென்று நாம் புரிந்துவரும் பயனற்ற செயல்களின் இயல்புகளை அறிந்து அவை களை எளிதில் கைவிடுதற்கு இயலுவதாகும். முற்கால மனிதன் தான் வாழ வேண்டுமாயின், தம்மைச் சூழ்ந்துள்ளவைகளைக் கொன்றே வாழ வேண்டி யிருந்தது. மனிதன் தூங்கிவிட்டால் கொடிய விலங்குகள் அவனைக் கொன்று விடும். விலங்குகள் தூங்கிவிட்டால் மனிதன் அவைகளைக் கொன்றுவிடு வான். இவ்வகையான காலத்தே மக்கள் தொடங்கிய வழிபாட்டு முறைகள் கொலை மலிந்ததாகவே உள்ளது. அவ் வழிபாடுகளின் நிழல்கள் இன்றும் காணப்படுகின்றன. இவைபோன்ற உண்மைகளை அறிதல், அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது எனக் கருதிப் பாம்பு வணக்கம் என்னும் இச் சிறிய நூலை எழுதலானேன். சென்னை 10.4.1947 ந.சி. கந்தையா பாம்பு வணக்கம் தோற்றுவாய் நாம் வாழும் பூமி மிக அகன்ற இடம். அதில் இந்தியா ஒரு சிறு பகுதி. இங்கு பற்பல மொழிகளை வழங்கும் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் குடிகளும் குலங்களுமாக (Castes and tribes) பிரிந்து வாழ்கின்ற னர். இக் கூட்டத்தினர், குலத்தினர்களிடையே பல பழக்க வழக்கங்களும் ஒழுக்கங்களும் காணப் படுகின்றன. அவைகளுட் பல எல்லாக் கூட்டத் தினருக்கும் பொதுவாக உள்ளன; சில மாறுபட் டன. இந்திய மக்கள் எல்லோருக்கும் பொது வாகிய சில பழக்கங் களும் ஒழுக்கங்களும் காணப்படுதல் போலவே, உலக மக்களுக்குப் பொது வான சில கொள்கை களும் பழக்க வழக்கங் களும் காணப்படுகின்றன. இவ் வடிப்படையைக் கொண்டு உலக மக்களின் உற்பத்தியும் வளர்ச்சியும் ஒரே மையத்தினின்றும் தொடங்கின என்று மனித வரலாற்று நூலார் முடிவு செய்திருக்கின்றார்கள். இந்திய நாட்டில் காணப்படும் சமயக் கொள்கைகளும் பிறவும், இவ் விந்திய நாட்டுக்கே உரியன என்று நம்மவர் பலர் நம்பி வருகின்றார்கள். உலக மக்களின் வரலாற்றை ஆராயுமிடத்து அவை மற்றைய நாட்டு மக்களுக்கும் உரியனவாகக் காணப்படுகின்றன. மேல்நாட்டறிஞர் இவ்வுலக மக்களுக்கே பொதுவாயுள்ள பல கருத்துகளையும் பழக்க வழக்கங்களையும் நாட்டுக் கதைகளையும் திரட்டி அவைகளின் ஒற்றுமையை ஒப்பிட்டுக் காட்டி நூல்கள் பல செய்துள் ளார்கள். அவை கற்பனைக் கதைகளிலும் பார்க்கச் சுவை அளிப்பதோடு, மக்கள் தமது வரலாற்றை அறிந்து கொள்வதற்கும் உதவிபுரிகின்றன. வரலாறு, மக்களிடையே தலைமுறை தலைமுறையாகப் பழங்கதைகள் மூலம் தொடர்ந்து வரும் மூடக் கொள்கைகளுக்குத் தொடக்கத்தை அறிந்து கொள்ளவும், பகுத்தறிவுக்கு ஏலாதவைகளை ஒழிக்கவும் உதவி புரிகின்றது. மேல்நாட்டவர்கள் வரலாற்றின் இன்றியமையாமையை உணர்ந்து, அதனை ஓர் கலையாக வளர்த்து வருகின்றனர். அக் கலையில் தேறுவோருக்குப் பட்டங்களும் வழங்குகின்றனர், நமது நாட்டிலோ, நாகரிகம் ஊர்ந்து செல்கின்றது; மற்றைய நாடுகளில் பறந்து செல்கின்றது. இதற்குக் காரணம் நம்மவர்கள் பழங்கதைகள் மூலம் தொடர்ந்துவரும் மூடக் கொள்கைகளை ஒழிக்க விரும்பாது, பழைய போக்கிலேயே செல்ல முயல்வதாகும். மேல்நாட்டு ஆசிரியர்கள், சீனா இந்தியா என்னும் நாடுகளில் நாகரிகம் விரைவில் மேலோங்காததற்குக் காரணம், அவர்கள் பழம் பிடிகளைக் கைவிட மனமில்லாது அப் பாழுங் கொள்கைகளை வைத்துக் கட்டி யழுவது போன்றவைகளாகும் எனக் கூறியுள்ளார்கள். இச் சிறிய நூல், பாம்பு வணக்கத்தைப் பற்றிக் கூறுகின்றது. உலக மக்களுக்குப் பொதுவாகிய பல கொள்கைகள் உண்டு எனக் கூறினோம். அவைகளுள் பாம்பு வணக்கம் ஒன்றாகும். பாம்பு வணக்கம் இந்திய மக்களுக்கே உரியது எனப் பலர் கருதுகின்றார்கள். அது இப் பூமியில் கிழக்கிலும் மேற்கிலும் வடதுருவம் தென் துருவங்களுக்கு உட்பட்ட நாடுகளிலெல்லாம் காணப்பட்டது. அந் நாடுகளில் மக்கள் பாம்பை வழிபட்ட முறை பெரும்பாலும் இன்றைய இந்திய மக்களின் நாக வழிபாட்டு முறையை ஒத்திருக்கின்றது. இதனால் பாம்பு வழிபாடு மக்களுக்கு வேண்டியதெனக் கூறுவது எமது கருத்தன்று. பாம்பு வழிபாட்டின் பழமை கிறித்துவ மறையின் பழைய ஏற்பாடு, படைப்பு வரலாறு, பெரிய வெள்ளப்பெருக்கு முதலியவைகளைப்பற்றிக் கூறுகின்றது. இவ் வரலாறுகள் சால்திய மக்கள் மூலம் கிடைத்தன என்று வரலாற்று அறிஞர் கூறியுள் ளார்கள். சால்தியாவில் மிகப் பண்டு தொட்டே பாம்பு வணக்கம் இருந்து வந்தது. அவ் வணக்கத்தின் எதிரொலியே பழைய ஏற்பாட்டில் காணப்படும் பாம்பு வரலாறு என்று கருதப்படுகின்றது. கிறித்துவ மறையில் பாம்பு, ஆதாமையும் ஏவாளையும் விலக்கப்பட்ட கனியைப் புசிக்கும்படி தூண்டியதெனக் கூறப்பட்டபோதும், பாம்பு இஸ்ரவேலரால் நீண்டகாலம் வணங்கப்பட்டது. மோசே என்பவர் யேகோவாக் கடவுளின் அடையாள மாக வெண்கலத்தினால் பாம்பு செய்து வழிபட்டார். அப் பாம்பு எசாக்கி யேல் காலம்வரை (700 ஆண்டுகள் வரை) இஸ்ரவேலரால் வழிபடப் பட்டது.1 மொகஞ்சதரோ நாகரிகம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அங்குக் காணப்பட்ட பட்டையங்களில் பாம்பு வழிபாட்டைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.1 ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் பல இடப் பெயர்கள் பாம்பு தொடர்புடையன. சூடிய நாகபுரி, நாகப்பட்டினம், நாகர்கோயில் போன்ற பழைய இடப் பெயர்கள் இன்றும் இந்திய நாட்டிற் காணப்படுகின்றன. இலங்கையில் வாழ்ந்த பழங் குடிகளில் ஒரு பகுதியினர் நாகர் எனப்பட்டார்கள். நாக அரசர் இருவரிடையே ஒரு மணி ஆசனத்தின் பொருட்டு நேர்ந்த போரை விலக்கப் புத்தர் இலங்கைக்குச் சென்றிருந்தாரென்று மகாவமிசம் என்னும் நூல் கூறுகின்றது. சாஞ்சி, அமராபதி, இலங்கை முதலிய விடங் களிலுள்ள பண்டைய சிற்பங்களில் நாக வழிபாட்டைப் பற்றிய அடையாளங்கள் காணப்படுகின்றன. பின்னால் ஆராய்ந்து கூறப் படுவன கொண்டு பாம்பு வணக்கம் சரித்திர ஆராய்ச்சிக்கு எட்டாத பழமையுடையது எனத் தோன்றும். பாம்பு வணக்கத்தின் தொடக்கம் பாம்பு நஞ்சுள்ள உயிர். அது கடித்தால் மனிதர் மாண்டு விடுவார்கள். பாம்பின் தோற்றம் மக்களுக்கு அச்சத்தை உண்டாக்குகின்றது. “பாம்பென் றால் படையும் நடுங்கும்” என்பது பழமொழி. இவ் வியல்புகளுடைய பாம்பை மக்கள் வணங்கி வந்தார்கள். பாம்பு வணங்கப்படுகின்றதென்றால், அது வியப்பைத் தருகின்றது. வரலாற்று ஆசிரியர்கள் அதன் தொடக் கத்தைப்பற்றி அறியப் பெரிதும் முயன்று வந்தார்கள். சிலர் சில காரணங்கள் காட்டுவாராயினர். அவர்கள் கூறியவைகளில் ஒன்று மிக ஏற்புடைத்தாகக் காணப்படுகின்றது. இவ்வுலகில் இறந்தவர்கள் வழிபாடு மிகப் பழமை யுடையது. இறந்தவர் வழிபாடு என்பது தமிழ்நாட்டில் தென்புலத்தார் வழிபாடு என்னும் பெயர் பெற்றுள்ளது. திவசம், திதி, குருபூசை என்பன தென்புலத்தார் வழிபாடுகளே. தொடக்கத்தில் மக்கள் இறந்தவர்களின் ஆவிகளையே வணங்கினார்கள். இவ் வடிப்படையிலிருந்தே உலகில் சமயம் தோன்றி வளர்ச்சியடைந்தது. இதனைப் பிறிதோரிடத்தில் விரித்து விளக்கியுள்ளோம்.2 அக்கால மக்கள் இறந்தவரை அடக்கம் செய்த சமாதி யின்மேல் ஊர்ந்து செல்லும் பாம்பை, இறந்தவர்களாகவே (இறந்தவர்களின் பிறப்பு) கருதினார்கள். ஆகவே, அவர்கள் பாம்புகளைத் தமது இறந்த முன்னோராகக் கருதி வழிபட்டனர். தென்புலத்தார் வழிபாடு, பாம்பு வழிபாடு என்பன ஒரே தொடக்கமுடையன. இன்று இந்திய மக்களுட் பலர் தமது வீட்டுக்கு வரும் பாம்புகளைத் தம் முன்னோர் எவரோ எனவே கருது கின்றார்கள். ஆப்பிரிக்காவில் சூலு மக்கள், தமது வீட்டை நோக்கி வரும் தீங்கற்ற பாம்புகளைத் தம் முன்னோராகக் கருதுகின்றார்கள். அவைகளின் உடலில் காணப்படும் ஏதேனும் ஒரு அடையாளத்தைக் கொண்டு, அவை இறந்தவர்களுள் யார் எனவும் நிச்சயம் செய்கிறார்கள்.1 இவ் வணக்கம் எங்குத் தொடங்கிற்று என ஆராய்வோம். அதனை ஒருவாறு ஆராய்ந்து அறியலாம். பாம்பு வழிபாடு சாலடியாவில் மிகவும் பழமை பெற்றுள்ளது. சாலடிய நாட்டினின்றுமே இவ் வழிபாடு மற்றைய நாடுகளுக்குச் சென்றதென வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். வேத கால இந்தியா (Vedic India) என்னும் நூல் எழுதிய ரெகோசின் (Regozin) என்பார் சாலடிய மக்களுக்கும் திராவிட மக்களுக்கும் பொதுவாயுள்ள பல கொள்கைகளை எடுத்து விளக்கிச் சாலடியரும் திராவிடரும் ஒரே கொடி வழியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ளார். பல காரணங்களால் இந்திய மக்களே மேற்கு ஆசியாவில் குடியேறிச் சாலடியர் எனப் பெயர் பெற் றார்கள் என்றும் அவர் கருதினார். இருக்கு வேத இந்தியா என்னும் நூல் எழுதிய அபினஸ் சந்திரதாஸ் என்பவர், சோழ தேசத்தினின்றும் மேற்கு ஆசியாவிற் குடியேறிய மக்களே சாலடியர் எனக் கூறிய அளவில் அமை யாது, சோழ தேசம் என்னும் பெயரே மருவிச் சால்தியா ஆயிற்று என்றும் கூறியுள்ளார். பர்லாங் (Forlong) என்னும் ஆசிரியர், சால்தியரின் முன்னோர் திராவிட இனத்தினர் என ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். எகிப்தியர் வழி பட்ட பாம்புகள் இந்திய நாட்டினின்றும் கொண்டு வரப்பட்டன என்றும், அவர்களுடைய இசிஸ் என்னும் தெய்வம் ஈசுவரனின் தேவியாகிய ஈசுவரியே யாகும் என்றும் 2டீன் என்பவர் தமது பாம்பு வணக்கம் என்னும் நூலிற் கூறியுள்ளார். மேற்கு ஆசிய நாடுகளில் துர்க்கை, சிவன் வடிவங்கள் இந்திய நாட்டில் இன்று காணப்படுவன போலவே, இருந்தனவாதலாலும், அவை இந்திய நாட்டினின்றுமே அந் நாடுகளுக்குச் சென்றன என்று அறியப்படுதலினாலும், பாம்பு வணக்கம் இந்திய நாட்டினின்றும் சென்ற தெனத் துணிதல் பிழையாகாது. பாம்பு வழிபாட்டின் வியாபகம் ஒபியலாட்றியா (Ophiolatreia) என்னும் நூலில் பின்வருமாறு கூறப் பட்டுள்ளது. ‘பாம்பு வணக்கம் இவ்வுலகம் முழுமையிலும் பரவியிருந்தது. பண்டைக் காலத்தில் இவ் வழிபாடு காணப்படாத ஒரு நாடும் இருக்க வில்லை. இவ் வழிபாடு நிலவியதற்கு அறிகுறி யாகப் பல செய்குன்றுகளும் கோயில்களும், மண் மேடுகளும் பிற சின்னங்களும் புதிய, பழைய உலகங்களிற் காணப்படுகினறன. பாரசீகம், இந்தியா, இலங்கை, சீனா, ஜப்பான், பர்மா, ஜாவா, அராபியா, சிரியா, சின்ன ஆசியா, எகிப்து, எதியோப்பியா, கிரீசு, இத்தாலி, வடமேற்கு ஐரோப்பா, மெக்சிக்கோ, பெரு, அமெரிக்கா முதலிய நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபாட்டின் அடையாளங்கள் காணப் படுகின்றன. இவ் வழிபாடு ஒரு நடு இடத்தில் தோன்றிப் பரவியிருத்தல் கூடும். சில நாடுகளில் பாம்பு நல்ல தெய்வமாக வும், சில நாடுகளில் தீய தெய்வமாகவும் கொள்ளப்பட்டது. உயிர்ப் பாம்புகளை வழிபடுதல் பெரும்பாலும் இந்திய நாட்டில் மக்கள் பாம்புச் சிலைகளையே வழிபடுகின்றார்கள். ஆகவே இந்திய மக்கள் பாம்பு வழிபாடு என்றால், பாம்புச் சிலை வழிபாடு எனக் கருதியிருக்கின்றார்கள். இன்னும் பாம்புகளை உணவு கொடுத்து வளர்த்து அவைகளை வழிபடும் மக்கள் காணப்படுகின்றார்கள். லப்பக் என்பவர் கூறுவது வருமாறு: “பழைய எகிப்து, இந்தியா, பினீசிய, பாபிலோன், கிரீஸ், இத்தாலி, அபிசீனிய நாடுகளில் பாம்பு வணக்கம் முதன்மை அடைந்திருந்தது. லிதுவேனியர் உயிர்ப் பாம்புகளையே தெய்வமாக வழிபட்டனர். தென்னாபிரிக்கக் கபீர் மக்கள் இறந்த முன்னோர் பாம்பாகப் பிறக்கிறார்கள் என நம்பினார்கள். பெரு(Peru) நாட்டில் கடவுட் சிலைகளுக்குப் பதில் பாம்புகளே கோயில்களில் இருந்தன. ஆப்பிரிக்காவில் மழையின்மை, பஞ்சம், பிணி முதலிய காலங்களில் மக்கள் பாம்புகளைச் சிறப்பாக வழிபட்டனர். இவ்வாறு உரோமரும் ஒரு காலத்தில் செய்தனர். நீக்ரோ, ஒருவனாவது பாம்புக்கு வேண்டுமென்று தீங்கு இழைக்கமாட்டான். தற்செயலாக ஒருவன் பாம்பு ஒன்றைக் காயப்படுத்தினானாயினும் அவன் கொல்லப்படுவான். ஒருமுறை ஆங்கிலக் கப்பற்காரர் சிலர், தாங்கள் தங்கிய வீட்டினுள் வந்த பாம்பு ஒன்றை அடித்துக் கொன்றார்கள். அதன் பொருட்டு அவர்கள் அங்குள்ள மக்களால் இரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள். பாம்புகள் உறைவதற்கெனக் கட்டப்பட்ட குடிசைகள், நாடு எங்கும் காணப் படுகின்றன. இவைகளுக்கு முதிய பெண்கள் தினமும் உணவு கொடுக் கிறார்கள். பாம்புகளுக்கு அழகிய பெரிய கோயில்களும் இருக்கின்றன. ஒவ்வொரு வகைப் பாம்புகளையும், கவனிப்பதற்கு வெவ்வேறு வேலை யாட்கள் இருக்கின்றார்கள்.” “நியுகினியில் சோலைகளில் பாம்புகளின் கோயில்கள் இருக்கின் றன. இவைகளுக்குப் பருவ காலங்களுக் கேற்றவாறு பன்றி, ஆடு, கோழி முதலியன உணவாக அளிக்கப்படுகின்றன. சிலாவோனிய (Slavonic) ஆலயங்களில் பாம்புக்குப் பால் கொடுத்து, மக்கள் அதனை வழிபட்டார்கள். பாம்பும் ஞாயிறும் ஆல்ட் ஹாம் என்பார் எழுதியுள்ள “சூரியனும் பாம்பும்” என்னும் நூலில், பாம்பு வணக்கத்தைப் பற்றிய அரிய செய்திகள் காணப்படுகின்றன. அதன் சுருக்கத்தை இங்குத் தருகின்றோம். 1மோசேயாற் செய்யப்பட்ட வெண்கலப் பாம்பு யெகோவாக் கடவுளின் அடையாளமாக நீண்ட காலம் வழிபடப்பட்டது. இந்திய நாட்டில் படமுள்ள பாம்பு ஞாயிற்று வணக்கத்தோடு தொடர்பு பெற்றிருக்கின்றது. அது பெரும்பாலும் ஞாயிற்றினின்றும் தோன்றியவர்கள் எனக் கூறிக் கொள்ளும் மக்களின் குலக்குறியாகும். நாக குலத் தினர் மரணத்துக்குப்பின் பகற் கடவுளாகவோ, பிற கடவுளாகவோ வணங்கப்படுகின்றனர். அவர் களின் உருவச் சிலைகளைப் பாம்புகளின் விரிந்த படங்கள் கவிந்து தாங்குகின்றன. எங்கெங்கு ஞாயிறு வணங்கப்பட்டதோ, அங்கெல்லாம் படமுடைய பாம்பு புனிதமுடையதாகக் கருதப் பட்டது. இந்திய நாட்டிற் போலவே, ஞாயிற்றை வழிபடும் நாடுகளிலெல்லாம் பாம்பு வழிபடப் பட்டது. சீனா, பெரு, ஆப்பிரிக்கா முதலிய நாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று அதிக தொலைவில் உள்ளன. அந் நாட்டு வழிபாடுகள் மற்றைய நாடுகளின் தொடர்பின்றித் தனித்துத் தோன்றின என்று கூறுதல் முடியாது. இவ் வணக்க முறை ஒரு நாட்டில் காணப்படுதல் போலவே மற்றைத் தேசங்களிலும், காணப்படுகின்றது. ஆகவே சூரிய குலத்தவர் என்று சொல்லிக்கொண்ட ஒரு குலத்தவர்களுடைய மத்தியிலிருந்தே இவ் வழிபாடு பரந்து நாலா திசைகளிலும் சென்றிருத்தல் வேண்டும். உலகம் முழுமையிலும் நாகம் புனிதமுடையதாகக் காணப்பட்டது. சரித்திர காலத் தொடக்கத்தில் பாம்பு, பகல் வழிபாடுகள் நன்றாக வளர்ச்சி யடைந்திருந்தன. மிகப் பழங்காலத்தில் யூபிரட்டிஸ், சிந்து ஆறு களுக்கிடையில் இவ் வழிபாடுகள் ஓங்கியிருந்தன. அகிக்கும் ஆரியருக்கு மிடையில் போர்கள் நிகழ்ந்தனவென்று வேதங்களிற் சொல்லப்படும் வரலாறு, நாக சாதியினருக்கும் பாரசீகருக்குமிடையில் நேர்ந்த போர்களே. பழைய மீதியாவிலுள்ள எசிதியர் (Yezidis) இன்னும் உதயகாலச் சூரியனை வணங்குகின்றனர்; ஆலயங்கள் மீது பாம்பு வடிவங்களை அமைக்கின்றனர். பாபிலோனிலும் அதனை அடுத்த நாடுகளிலும் பண்டை நாட் களில், ஞாயிறு, பாம்பு வழிபாடுகளே இருந்தன. பாபிலோன் மக்களின் ஆதிக் கடவுளர்களில் ஒருவர் ஈஆ (Ea). அவர் ஏழுதலைப் பாம்பு வடிவுடையர். சாலதிய மக்கள் ஈஆவையும் அவருடைய புதல்வன் மார்துக்கையும் (Mar-duk) காத்தற் கடவுளாக வழிபட்டனர். சாலதியரின் மனுவுக்குப் பின் நிகழ விருக்கும் பெரிய வெள்ளப் பெருக்கைப்பற்றி எச்சரிக்கை கொடுத்தவர் ஈஆக் கடவுளே. ஈஆ பெரிய வெள்ளப்பெருக்கைப் பற்றிய செய்தியைத் தனது மந்திரிக்குக் கூற, அவன் அதைச் சூரிபாக் என்னும் சாலதிய மனுவுக்கு நவின்றான். ஈஆ என்னும் தெய்வ வணக்கம் மிகப் பரந்திருந்தது. மித்தினி (சின்ன ஆசிய) மன்னன் துஷரதன் மூன்றாம் அமனோபிசு என்னும் எகிப்திய அரசனுக்கு அனுப்பிய திருமுகத்தில் பல தெய்வங்களுக்குத் துதி கூறியுள்ளான். அத் துதியில் ஈஆக் கடவுள், எல்லா மக்களுடைய கடவுள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. பாம்பு செமித்திய மக்களின் குலக்குறியாகத் தெரியவில்லை. அக்கேடிய சுமேரிய வணக்கங்களோடு அவர்கள் இதனைப் பெற்றார்கள் எனத் தெரிகிறது. நியுக்சம்பர் என்னும் பாபிலோனிய அரசன், மர்துக் என்னும் பகற் கடவுளின் கோயில் வாயில்களில் தான், நச்சுப் பாம்பு களின் சிலைகளை வைத்தமையைப்பற்றிக் கூறியுள்ளான். காஸ்பியன் கடலுக்குத் தெற்கிலும், மேற்கிலும் உள்ள நாடுகளிலும் துரானிய மக்க ளிடையும் பாம்பு வழிபாடு காணப்பட்டது. சாலடியப் பாடல்களில் கூறப் படும் கோயில் யாத்திரைகள், சோலைகளின் நடுவே அமைக்கப்பட்ட ஆலயங்கள். வேட்டையாடிக் கொன்ற மிருகங்களின் கொம்பினால் கோயில்களை அலங்கரித்தல் போல்வன, இமயமலைச் சாரல்களில் வாழும் பாம்பு, ஞாயிற்று வழிபாட்டினராகிய மக்களிடையே இன்றும் காணப்படு கின்றன. ஞாயிறும் பாம்பும் பினீசியரால் வணங்கப்பட்டன; அவர்கள் அவ் வணக்கத்தைப் பாபிலோனியரிடமிருந்து பெற்று, அதனை மற்றைய இடங்களுக்குக் கொண்டு சென்று மிருக்கலாம். இவ்விரு வணக்கங்களும் சிரியாவிலும் மேற்கு ஆசியாவின் பல பாகங்களிலும் காணப்பட்டன. கிரேக்கர் ஞாயிற்றையும் பாம்பையும் வணங்கினார்கள். கிகுரோப்ஸ் (Cecrops) என்னும் அதேனிய முதல்அரசன் எகிப்திலிருந்து வந்தான் என்பதும், அவன் பாதி பாம்பும், பாதி மனிதனுமா யிருந்தான் என்பதும், அவர்களது பழங் கதைகளிற் காணப்படுகின்றன. சரித்திர காலத்தில் கிரேக்கரின் ஞாயிற்றுப் பாம்பு வழிபாடுகள், வேறு வழிபாடுகளுடன் கலந் திருந்தன. ஹெரதோதசு (Herodotus) காலத்தில் அதேன்சின் சுற்றாடல்களைக் காக்கும் கடவுள் ஒரு பெரிய பாம்பாக விருந்தது. ஐரோப்பாவின் எல்லா இடங்களிலும் ஞாயிறு, பாம்பு வழிபாடுகள் இருந்தமைக்கு அடை யாளங்கள் காணப்படுகின்றன. எகிப்தில் ஆதிகாலம் முதல், பகலும் படமுள்ள பாம்பும் வணங்கப் பட்டு வந்தன. எகிப்திய அரசர் ஞாயிற்றினின்று தமது பரம்பரையைக் கூறினர். ஞாயிறே அரசனாகப் பிறக்கின்றது என மக்கள் நம்பினார்கள். அவனுக்குக் கடவுளுக்குச் செய்யப்படும் எல்லா மரியாதைகளும் செய்யப் பட்டன. மரணத்துக்குப் பின் எல்லா அரசரும் ஞாயிற்றுக் கடவுளாக வழி படப்பட்டார்கள். அவனுடைய முடியின் முன்புறத்தில் படம் எடுக்கும் பாம்பின் வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. எதியோப்பியர் கிறித்துவ மதத்தைத் தழுவுமுன், ஞாயிற்றையும் பாம்பையும் வணங்கினார்கள். எதியோப்பிய அரசன், ஹெலியோ பொலிஸ் எனப்படும் சூரியக் கடவுளின் நகருக்குச் சென்று அக் கடவுளின் ஆலயத் தில் குருவாகச் சேவித்தான். எகிப்திய வேந்தரைப்போலவே, எதியோப்பிய அரசரும் கடவுளுக்குரிய மதிப்பைப் பெற்றனர். எதியோப்பியர் சின்ன ஆசியாவிற் குடியேறி காசைட்ஸ் (Kassites) எனப்பட்டார்கள். இவர்கள் எல்லம் மக்களுக்கு இனமுடையவர்கள் எனக் கருதப்படுவர். எதியோபிய அரசனின் நகுஸ் என்னும் பட்டப் பெயர், இமயமலைப் பக்கங்களில் பாம்பு களை வணங்கும் கூட்டத்தினர் தலைவர்களுக்கு வழங்கும் நெகி (Negi) என்னும் பெயரை ஒத்திருக்கின்றது. பண்டு (Punt) நாடு பாம்புகளுக்கு உறைவிடம் என்று எகிப்தியரால் கொள்ளப்பட்டது. பைபிரஸ் புத்தகங்களிலுள்ள சில பகுதிகளில் பண்டு நாட்டின் அரசன், பெரிய பாம்பு என்று கூறப்பட்டுள்ளான். கப்பல் உடைந்து தட்டுக்கெட்டு நின்ற ஒருவனுக்குப் பெரிய பாம்பு ஒன்று வெளிப்பட்டு நாலு திங்களுள் ஒரு நாவாய் அவ் விடத்தை அடையுமென்றும், இரண்டு திங்கள் பயணஞ் செய்தபின் அவன் தனது இடத்தைச் சேருவான் எனக் கூறிற் றென்றும் சொல்லப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவின் மேற்கு மத்திய பாகங் களில் பாம்பு வழிபாடு இருந்தது. அந்நாட்டு மக்களின் தெய்வமேறியாடும் கூத்து முதலியன அவ் வணக்கத்துக்குரியனவே. மெக்சிகோவில் பாம்பு வழிபாடுகளில் நரபலிகள் கொடுக்கப் பட்டன. சூரியகுல அரசரால் பாம்பும் ஆமையும் தெய்வத்தன்மை யுடையனவாக மதிக்கப்பட்டன. அவர்கள் பாம்புக்குப் பலியிட்ட பின்பே, எக் கருமத்தை யும் தொடங்குவர். அவர்கள் மந்திர வித்தை தொடர்பாகப் பயன்படுத்தும் யந்திரங்கள் இந்தியாவிலும் மற்றும் சூரிய வணக்கமுடைய நாடுகளிலும் காணப்படுவன போன்றன. இந்நாடுகளில் இவ் வணக்கங்கள் எப்படி வந்தனவென்று அறிய முடியவில்லை. அறிய முடியாத பழைய காலந் தொட்டே, சீனாவிலும் அதன் அயல் நாடுகளிலும் சூரிய, பாம்பு வணக்கங் கள் இருந்து வந்தன. இந்தியாவிலும் மற்றைய இடங்களிலும் காணப்படுதல் போலவே, அது தெய்வமாக்கப்பட்ட முன்னோர் வழிபாட்டோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. சீன அரசன் ஞாயிற்றின் புதல்வன் எனப்பட்டான். அவன் உயிரோடு இருக்கும்போது கடவுளுக்குரிய மதிப்பைப் பெற்றான். பாம்பும் ஆமையும் தீட்டிய கொடியால் சீன தளபதி அறியப்பட்டான். சீனரின் பழங் கதைகளில், பழைய அரசரிற் சிலர் பாதி பாம்பு வடிவும், பாதி மனித வடிவுமுடையர். சீனரின் நாகரிகம் காஸ்பியனுக்கும், பாரசீக வளை குடாவுக்கு மிடையிலிருந்து வந்திருக்கலாம் என் லெக்கோபெரி என்பவர் கருதியுள்ளார். மஞ்சூரிய மக்கள் சூரிய வம்சத்தினர். அவர்களுடைய பாம்புத் தெய்வங்கள் இன்றும் ஆறுகளுக்கும் மழைக்கும் அதிபதிகள். கொரியா நாட்டு அரசரும் சூரிய மரபினர். அவர்களைப் பாம்புக் கடவுள் காக்கின்றது. மக்கள் பாம்புகளைக் குலதெய்வங்களாக வணங்குகின்றனர். ஜப்பானியரின் சூரியக் கடவுள் பெண் தெய்வமாகும். ஜப்பானிய அரசர் சூரியக் கடவுளின் புதல்வர் என மக்கள் நம்பி வருகின்றனர். ஜப்பானியர் ஐதீகத்தின்படி அவர் களுடைய மலைக் கடவுளர் பாம்பு வடிவை எடுத்துள்ளனர். இந் நாடுகளின் சூரிய பாம்பு வழிபாடுகள் இந்தியாவிற் காணப்படுவதை ஒத்தன. இந்தியாவில் சேர நாடு, பாம்பு வழிபாட்டுக்குப் பேர்போனது. சாரை என்பதே சேர என மாறிற்று. இன்றும் ஒவ்வொரு நாயர் சாதியினரின் கொல்லையிலும் நாக தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. கிறித்துவ ஆண்டின் முற்பகுதியில் சீன யாத்திரிகர்கள் இந்தியா வுக்குச் செல்லும் வழியில், பாம்புக் கடவுளர் எல்லா ஆறுகளையும் குளங் களையும் ஆள்வதைக் கண்டனர். திபேத்தில் இன்றும் ஆறுகளும் நீரூற்று களும் பாம்புத் தெய்வங்களால் ஆளப்படுகின்றன. ஸ்பானியர் அமெரிக்கா வுக்குச் சென்றபோது, எங்கும் சூரிய பாம்பு வணக்கங்களே காணப்பட்டன. அமெரிக்காவில் படமுள்ள பாம்புகள் காணப்படாமையால் சலசலக்கும் பாம்புகள் (Rattle snakes) அவைகளுக்குப் பதில் வணங்கப்பட்டன. பெருவில் கசமார்க்கா என்னும் இடத்தில் பாம்பு வடிவக் கல் இருந்தது. அமெரிக்கரால் ஆமையும் தெய்வத்தன்மை யுள்ளதாகக் கருதப்பட்டது. மனிதத் தலையுடைய பாம்பு, ஆமைச் சிலைகள் காணப்படுகின்றன.1 பாம்பு வணக்கம் சீனாவும் ஜப்பானும் சீனரின் கொடியில் பாம்பு எழுதப்பட்டிருந்தது. பாம்பின் வடிவம் கோயிற் சிற்பங்களில் அமைக்கப்பட்டது. வீட்டுத் தளவாடங்களிலும் அவ் வடிவம் வெட்டப்பட்டது. அரசனின் செங்கோலிலும் பாம்பின் வடிவம் எழுதப்பட்டிருந்தது. அரண்மனையிலுள்ள எல்லாப் பாத்திரங்களிலும் அவ் வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது. கான்பூசியஸ் ஞானியார் பிறந்தபோது அவரின் உடலைக் கழுவும் போது, இரண்டு பாம்புகள்கூட இருந்தன என்னும் பழங்கதை உள்ளது. சீனரின் கடவுளாகிய போகி(Fohi)யின் வடிவம், மேலே மனித வடிவமும் கீழே பாம்பு வடிவமுமாக வுள்ளது. ஜப்பானியரும் சீனரும் பாம்பை வணங்கினார்கள். ஜப்பானியரின் பழங்கதைகளில் பாம்பைப் பற்றிய செய்திகள் நிறைந்துள்ளன. ஜப்பானிய அரசர் சிலரின் உடை, ஆயுதங்கள், கத்தி, வீட்டுத் தளவாடங்கள், மேலே அழகுக்காகத் தூக்கும் தோரணங்கள் முதலியவைகளில் பாம்பின் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தொடக்கத்தில் ஜப்பானியர், கோயில்களில் பாம்பை வழிபட்டார்கள் எனத் தெரிகின்றது. ஜாவா ஜாவா நாட்டில் பழைய இடிபாடுகள் காணப்படுகின்றன. அங்கு அழிந்து கிடக்கும் கோயில்களிலுள்ள திருவுருவங்கள் பாம்பு ஆபரணம் அணிந்திருக்கின்றன. சில திருவடிவங்களின் கைவளை சுருண்டு வளைந்த பாம்பாக அமைந்துள்ளது. அவைகளின் அரைக்கச்சும் பாம்பே. அராபியா அராபிய மொழியில் அராபியரின் பழைய சமயத்தை விளக்கும் சொற்கள் காணப்படுகின்றன. அராபிய மொழியில் பாம்பையும் வணக்கத் தையும் குறிக்க ஒரே சொல் ஆளப்படுகின்றது. இதனால் அராபியர் பாம்பை வணங்கினார்கள் எனத் தெரிகின்றது. சிரியா தாதஸ் (Taautus) என்பவன் பினீசியாவில் பாம்பு வணக்கத்தைத் தொடங்கினான் என்று சொல்லப்படுகின்றது. இவன் சலப் பிரளயத்துக்கு முன் வாழ்ந்தவனாவன். கானான் தேச மக்கள் வழிபட்ட ‘ஒப்’ பாம்புக் கடவுளே யாவர். கிரேக்க நாட்டில் தெல்பி (Delphi) ஆலயத்தின் பெண் பூசாரி வழி பட்ட கடவுள் பாதியா எனப்பட்டது. பாதியா என்பது பிதோன் (Phython) என்பதன் திரிபு. இப் பெயர் பாம்புக் கடவுளைக் குறிக்கும். குருமாரும் அரசரும் அவர்களின் வழிபாட்டுக்குரிய அக் கடவுளின் பிள்ளைகள் எனப் பட்டனர். மோசே செய்து வைத்து வழிபட்ட வெண்கலப் பாம்பை ஹெசாக்கியேல் உடைத்தெறிந்தான். தையர் நாட்டில் பாம்பு உருவங்கள் பல காணப்பட்டன. பினீசியர் ஆலயங்களில் பாம்பின் வடிவங்களை வைத் திருந்தார்கள். பினீசியர் ஜானஸ் (Janus) என்னும் கடவுளைப் பாம்பு வடிவில் வழிபட்டார்கள். ஆலயங்களில் உயிர்ப் பாம்புகள் வளர்க்கப்பட்டன. சிடோன் பட்டினத்துக்கு அருகிலுள்ள சோலையில் பாம்புகள் வணங்கப் பட்டன. எல்காபலுஸ் என்னும் நாட்டின் தலைமைக் குருவின் கோயில் எமாசா என்னுமிடத்திலிருந்தது. அவன் உரோமுக்கு எகிப்திய இனப் பாம்பு களை அனுப்பினான். அப் பாம்புகள் இவனால் வழிபடப்பட்டவை. சின்ன ஆசியா பிரிகியா (Phrygia) என்னும் இடத்தில் பெரிய உயிர்ப் பாம்பு வணங்கப் பட்டது. அக்காலத்திலேயே பிலிப்பு என்னும் அப்போஸ்தலர் அந்நாட்டு மக்களைக் கிறித்துவ மதத்துக்குத் திருப்பினார். அவர் தனது செபத்தினால் பாம்பைக் கொன்றார் என்றும், அம் மகிமையைக் கண்ட மக்கள் கிறித்துவ மதத்தைத் தழுவினார்கள் என்றும் பழங் கதை உள்ளது. ஹெக்டரின் கேடகத்தில் பாம்பு எழுதப்பட்டிருந்தது. சின்ன ஆசியாவில் அடிக்கப்பட்ட பழைய காசுகளில் பாம்பு அடையாளம் காணப்படுகின்றது. அங்குள்ள இடப் பெயர்கள் பல பாம்புக் கடவுள் தொடர்பானவை. கோயில்களின் கருவில்(மூலத்தானத்தில்) பெரும்பாலும் உயிர்ப் பாம்புகள் வைக்கப் பட்டிருந்தன. சைபிரஸ் தீவுக்கு ஒபியாசா (Ophiasa) என்பது பழைய பெயர். ஒபியூசா என்பதற்குப் பாம்பு என்பது பொருள். ஆப்பிரிக்கா எகிப்தில் பாம்பு உயர்ந்த கடவுளாகக் கொள்ளப்பட்டது. பழைய எகிப்தியரின் ஹார்ப்போகிற்றேசு என்னும் கடவுள் பாம்பு வடிவில் வழிபடப்பட்டார். இசிஸ் என்னும் கடவுளும் அவ் வடிவில் வழிபடப் பட்டது. இசிஸ் கடவுளுக்குப் பூசை செய்யும் பூசாரியின் உடைகளில் பாம்புகளின் அடையாளங்கள் இடப்பட்டிருந்தன. எகிப்திய அரசனின் உடையிலும் மடியிலும் பாம்பு அடையாளங்கள் இருந்தன. இசிஸ் ஆலயங்களில் உயிர்ப் பாம்புகள் இருந்தன. எகிப்தியர் வணங்கிய பாம்பு அந்நாட்டுக் குரியதன்று. அது ஒருபோது படமுடைய இந்தியப் பாம்பா யிருக்கலாம். தீப்சு நகரிலே யூபிதர் கோயிலிலுள்ள பாம்புக்கு இரண்டு கொம்புகள் உண்டு. எகிப்தியரின் இசிஸ் வழிபாடு இந்தியரின் ஈசுவரி (Isi) வழிபாட்டினின்றும் வந்ததாகலாம். எகிப்திய தெய்வங்கள் பலவற்றுக்குப் பாம்பு உடலுண்டு. சில பாம்புக் கடவுளருக்கு மாட்டுத் தலை, சிங்கத் தலை யுண்டு. சமாதிக் கட்டடங்களில் பாம்பு வடிவங்கள் காணப்படுகின்றன. எகிப்தியக் கோயில்களில் ஒரு வட்ட வடிவத்துக்கு இரண்டு சிறகுகள் இருப்பது போலப் பாம்புகளின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எகிப்தியர் நாணயங்களில் பாம்பு வடிவங்களைப் பொறித்தனர். நீரோ என்னும் உரோமன் சக்கரவர்த்தியும் அவ்வாறு செய்தான். எகிப்திய குருமார் கோயில்களின் மூலைகளில் குழிகள் தோண்டி அவைகளுள் பாம்புகளை விட்டு வளர்த்தார்கள். பக்குவஞ் செய்யப்பட்ட பிரேதங்கள் சிலவற்றின் மார்பில் பாம்பு அடையாளங்கள் பொறிக்கப்பட்டன. பெண்கள் பாம்பின் வடிவாகச் செய்த அணிகலன்களைப் பூண்டார்கள். சிறுவர்களும் அவ்வகை அணிகளை அணிந்தனர். எகிப்திய பூசாரி, மூன்று பாம்புகளுக்கு முன்னால் நின்று வணங்கும் வெட்டப்பட்ட சலவைக் கல் ஒன்று உரோமில் 1709இல் கண்டு எடுக்கப்பட்டது. அபிசீனியாவின் முதல் அரசன் பாம்பு. அபிசீனிய மொழியில் பாம்பைக் குறிக்கும் நாகாஷ் என்னும் சொல் நாகம் என்பதன் திரிபு. அபிசீனியர் கிறித்துவ மதத்தைத் தழுவுவதன்முன் அங்கு நாக வணக்கம் இருந்தது. அபி சீனியாவில் சங்கலா என்னும் இடத்தில் வாழும் நீகிரோவர் இன்னும் பாம்பை வணங்குகின்றனர். ஆப்பிரிக்காவில் விடா (Whidah) என்னும் இடத்தில் பாம்புக் கோயில் இருக்கின்றது. அங்குப் பலவகைக் காணிக்கைகள் கொடுக்கப்படுகின்றன. பாம்புக் கோயில்களுள் முதன்மையுடையது பாம்பு வீடு எனப்படும். இவ் விடத்துக்குப் பலர் யாத்திரை செய்கின்றனர். இங்கு ஆண் பூசாரிகளும், பெண் பூசாரிகளும் உண்டு. அவர்கள் உடலில் பாம்பின் அடையாளங்களை எழுதி யிருப்பர். இங்கு 1726ஆம் ஆண்டு வரையில் பாம்பு வணக்கம் இருந்தது. தகோமியர்(Dahomeys) இவர்களை வென்றபோது பாம்புகளைக் கொன்றுவிட்டனர். ஆப்பிரிக் காவில் வாழும் நீகிரோவர் பாம்புகளுக்கு நல்லுணவு கொடுத்து அவைகளை வழிபட்டார்கள். ஐரோப்பா கிரீசில் பாம்பு வணக்கம் சாதாரணமாக இருந்து வந்தது. பக்கஸ் கடவுளின் விழாவில் எல்லோரும் பாம்பின் வடிவங்களைத் தலையிலும் உடையிலும் அணிந்தார்கள். அதேன்ஸ் பட்டினத்தின் அயலில் ஒரு பாம்பு இருந்ததென்றும், அது அந் நகரின் காவற்றெய்வம் என்றும் ஹெரதோதசு கூறியுள்ளார். அதற்குத், தேன்கலந்த அல்லது தேனில் பக்குவஞ் செய்யப் பட்ட ரொட்டி கொடுக்கப்பட்டது. மினர்வா என்னும் தெய்வம் சில வேளை பாம்பு வடிவில் வழிபடப்பட்டது. பிடியாஸ்(Phidias) என்னும் தெய்வத்தின் சிலை, பாம்பு வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டது. அடியன்(Aordian) என்னும் அரசன் அதேன்சில் யூபிதர், ஒலிம்பியஸ் கடவுளுக்கு ஆலயம் அமைத்து அதில் இந்திய நாட்டினின்றும் கொண்டுவரப்பட்டதெனக் கருதப்பட்ட பாம்பை அங்கு வைத்தான். உரோமரின் கொடி பாம்புக் கொடியாக விருந்தது. அங்குக் கிடைத்த பட்டையங்களில் பெரிய பாம்பின் வடிவங் காணப்படுகின்றது. சமாதிற்றா என்னும் இடத்தில் பாம்பு வழிபடப் பட்டது. வீடுகளிற் பாம்புகள் வளர்க்கப்பட்டன. வட ஐரோப்பாவில் ஒவ் வொரு வீட்டிலும் குடும்பத் தெய்வமாகக் கருதிப் பாம்பு வளர்க்கப்பட்டது. வீட்டுத் தலைவன் பாம்பை வைக்கோலில் கிடக்கும்படி வைத்து அதற்கு உணவு கொடுத்துப் பலி செலுத்தினான். ஜெரோமி (Jerome) என்னும் அரசன் அவைகளைக் கொன்று அழிக்கும்படி கட்டளை யிட்டான். ஸ்காண்டினேவியாவில் பாம்புகளுக்குப், பசுப்பால், ஆடு, சில வேளைகளில் குழந்தைகளின் இறைச்சி உணவாகக் கொடுக்கப்பட்டன. அவைகளுக்குத் தீங்கிழைப்பது பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. டேனியர்(Danes)களின் கொடி பாம்பு. டானியரிடமும் நார்மானியரிடமும் இருந்து பிரான்சியர் பாம்புக் கொடியைப்பெற்றனர். இது நார்மாண்டியின் சிற்றரசனுடையதாக நெடுநாள் இருந்து வந்தது. டென்மார்க்கில் பாம்பு வழிபாட்டைக் காட்டும் பல சின்னங்கள் கண்டு எடுக்கப்பட்டன. பிரித்தானியாவில் துரூயித்தியர் (Druids) பாம்பை வழிபட்டனர். துரூயித்தியரின் வணக்கத்தில் பாம்பு முதன்மையுடையது. பாபிலோனிய மக்கள் உயிர்ப் பாம்பை வணங்கினார்கள். துரூயித்தியரின் கோயில்களில் உயிர்ப் பாம்புகள் உறைந்தன. பழைய பிரித்தானியர் பாம்பின் வடிவம் வெட்டப்பட்ட கற்களைக் கழுத்தில் அணிந்தார்கள். பிரித்தனில் பாம்பை ஞாயிறும் திங்களும் சுற்றி வருவது போன்ற வடிவங்கள் காணப்படுகின்றன. பிரித்தன் மக்களின் கொடி பாம்பாக விருந்தது. பிற்காலத்தில் பாம்புக்குப் பதில் ஒரு கொம்புடைய குதிரை அமைக்கப்பட்டது. அயர்லாந்தில் நியூகிரேஞ்ச் (New Grange) என்னுமிடத்தில் பாம்புச் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. பாட்ரிக் ஞானியார் (St. Patrick) செபத்தினால் அயர் லாந்தினின்றும் எல்லாப் பாம்புகளையும் ஓட்டினார் என்னும் பழங்கதை யுள்ளது. அக்கதை பாட்ரிக் ஞானியார் பாம்பு வணக்கத்தை ஒழித்த வரலாற்றை உணர்த்தலாம். கிரேக்கரின் தானியக் கடவுளின் தேரை இழுத்துச் செல்வன பாம்புகள். கிரீசில் பெண்கள் பாம்பு போன்ற அணிகளைச் செய்து, கையிலும் மார்பிலும் அணிந்தார்கள். குழந்தைகளுக்கும் அவ்வகை அணிகள் இடப்பட்டன. யூரப் (Aur-ab) என்னும் ஐரோப்பாவைக் குறிக்கும் பெயருக்குச் சூரியப் பாம்பு என்பது பொருள். ஐரோப்பாவின் ஆதி மக்கள் பாம்பின் பிள்ளைகள் எனப்பட்டார்கள். எகிப்து, பினீசியா முதலிய நாடுகளிலிருந்து வந்த பாம்பு வணக்கக்காரரால் கிரீசு குடியேறப்பட்டது. அமெரிக்கா அமெரிக்காவில் விற்சிலி புற்சிலிக் கடவுளின் கோயில், ஒரு பாம்பின் மீது இன்னொரு பாம்பை வைத்துக் கட்டியது போல வட்டமாகக் கட்டப்பட்டுள்ளது. அக் கோயில் பாம்பு வளையம் எனப்படுகின்றது. அக் கடவுளின் கைத்தடி, பாம்பு. அக் கடவுள் நிற்கும் மேட்டின் நான்கு மூலை களிலும் நான்கு பாம்புத் தலைகள் காணப்படுகின்றன. மெக்சிக்கரின் மாதத்தில் இருபது நாட்கள் உண்டு. இரண்டு நாட்களின் பெயர்கள் பாம்பின் பெயர்களாக அமைந்துள்ளன. காற்றுக் கடவுளின் கோயிற் கதவுகள் பாம்பின் அங்காந்த வாய்போல் அமைக்கப்பட்டுள்ளன. மெக்சிகர் பாம்புச் சிலைகளை வணங்குவதோடு நிற்கவில்லை. அவர்கள் வீடுகளிலும் பாம்பு களை வளர்த்தார்கள். அவர்கள் சலசலக்கும் பாம்பைக் கடவுள் தன்மை யுடையதெனக் கொண்டார்கள். கோட்டிஸ் என்னும் ஸ்பானிய தளபதி வெற்றியாளனாக மெக்சிக்க ஆலயம் ஒன்றுக்குச் சென்றபோது அவன் கண்ட காட்சி பின்வருமாறு: “கோயிலின் உச்சிக்கு ஏறிச் சென்றபோது விலங்குகள் பலவற்றை வெட்டிக் கொல்லும் இடமாகிய மேடை ஒன்று காணப்பட்டது. அவ் விடத்தில் பெரிய மலைப் பாம்பின் வடிவங்கள் கிடந்தன. அவைகள் மீது இரத்தக் கறை படிந்திருந்தது. அதைத் தாண்டிச் சென்றபோது ஒரு மண்டபங் காணப்பட்டது. அங்குக் கொடிய பார்வையும் கொழுத்த உடலு முடைய போர்க் கடவுளின் வடிவம் இருந்தது. அது பொன் ஆபரணங் களை அணிந்திருந்தது. அதன் உடம்பில் பொன் பாம்புகள் கிடந்தன. முன்னால் தூபச்சட்டி கிடந்தது. அதில் பலி விலங்குகளின் ஈரல் சாம்பிராணி யோடு கலந்து எரிக்கப்பட்டது. அதற்கு இடப்புறத்தில் கரடித் தலையுடைய வடிவங்கள் காணப்பட்டன. அவற்றிற்குப் பாம்பின் வால்கள் உண்டு. அந்தப் பாம்பின் தோலால் கட்டப்பட்ட பெரிய மேளமிருந்தது. அவற்றிற் குச் சிறிது தூரத்தில் பயங்கரமான வடிவங்கள் காணப்பட்டன. அவை பாம்புகள் போலவும் பேய்கள் போலவும் இருந்தன.” மெக்சிகர் பாம்புக் கடவுளுக்கு மக்களைப் பலியிட்டுத், தலைகளை ஒரு பாத்திரத்தில் வைத்தார்கள். மெக்சிக்கரின் பழைய வரலாற்றை ஆராயு மிடத்துப் பாம்பின் தொடர்பில்லாத கடவுள் இருக்கவில்லை. பல தெய் வங்கள், பாம்பைக் கையில் வைத்திருக்கின்றன. குருமாரின் சிலைகள்மீது பாம்பு வடிவங்கள் காணப்படுகின்றன. மெக்சிக்கன் ஒருவனுக்கு நோய் வந்தால் பூசாரி அழைக்கப்படுகின்றான். அவன் நோயாளியின் தலையைச் சிரைத்துவிட்டு அவன் கழுத்தில் பாம்பின் என்புகளைத் தொங்கவிடுவான். பெரு(Peru) மக்கள் மெக்சிக்கரைப் போலவே பாம்புகளை வணங்கினர். தொபிரா(Topera) என்னும் இடத்தில் உலோகத்தால் செய்த பெரிய பாம்பு ஒன்று இருந்தது. அதற்கு ஆண்டுதோறும் நரபலி இடப் பட்டது. வீடுகளிலும், கோயில்களிலும் பாம்புகளின் ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்தன.  ஆதி மனிதன் (PRE - HISTORIC MAN) முன்னுரை ஆதி மனிதன் என்னும் இச் சிறிய நூல் மிக மிகப் பழங்காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள், அவர்கள் எவ்வாறு கீழ் நிலையிலிருந்து படிப்படியே மேல் நிலையை அடைந்தார்கள் என்பவை போன்ற பழைய செய்திகளை சிறுவரும் எளிதில் கற்றறியும் வகையில் கூறுகின்றது. மனிதனுடைய வரலாறே மக்கள் தொடர்பான வரலாறுகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை. மனிதனைப் பற்றிய வரலாறுகளை ஆதி முதல் அறிந்து கொள்ளாது பிற வரலாறுகளைக் கற்பது தளமிடாது கட்டிடம் அமைக்கத் தொடங்குவது போன்றதாகும். இந் நூல் ஆங்கிலத்தில் எழுதப் பட்டுள்ள பெருநூல்கள் சிவற்றின் கருத்துக்களை சுருங்கக் கூறி விளங்க வைப்பது. சென்னை 15.3.48 ந.சி. கந்தையா ஆதிமனிதன் தோற்றுவாய் மனிதனுடைய வரலாறு மிக வியப்பானது. பிற வரலாறுகளைப் பயில்வதன்முன் நாம் மனிதனைப்பற்றிய வரலாற்றையே அறிதல் வேண்டும். மனித வரலாறே மற்றைய வரலாற்றுக் கல்விகளுக்குத் துணை புரிவது. அவனுடைய வடிவமும் இன்றைய மனிதனைவிட வேறுபட் டிருந்தது. இப் பூமியில் வாழத் தொடங்கிய பல்லாயிரம் ஆண்டுகளில் அவனுடைய வடிவம் சிறிது சிறிதாகப் பண்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. அவனுடைய வாழ்க்கை முறைகளும் அவ்வாறே பண்பா டடைந்துள்ளன. இன்றைய மக்கட் கூட்டத்தினரின் முன்னோனான ஆதி மனிதனின் வியப்பான வரலாற்றை இச் சிறிய நூல் கூறுகின்றது. மனிதத் தோற்றம் இவ்வுலகில் மக்கள் எக்காலத்தில் தோன்றினார்கள் எனக் கூறமுடி யாது. இக்கால விஞ்ஞானிகள் தமது யூகையினால் மக்கள் இவ்வுலகில் தோன்றி வாழத் தொடங்கிய காலத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வுலகில் மக்கள் தோன்றி வாழத்தொடங்கிப் பத்து இலட்சம் அல்லது இருபது இலட்சம் ஆண்டுகள் ஆகலாம் என அவர்கள் கூறுகின்றனர். இவ்வுலகின் பல வேறு இடங்களில் மிக மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் மண்டை ஓடுகளும் எலும்புகளும் கண்டு எடுக்கப்பட்டன. அவைகளை வைத்து அம் மக்களின் வடிவங்களை விஞ்ஞானிகள் அமைத்துள்ளார்கள். கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகளுக்கும் எலும்புகளுக்கும் அருகில் கல்லாயுதங்களும், விலங்குகளின் எலும்புகளும் கிடந்தன. இவைகளை ஆதாரமாகக் கொண்டு ஆராய்ச்சியாளர் ஆதிகால மக்களின் வரலாறுகளை எழுதியுள்ளார்கள். மக்கள் நாகரிகமடைந்து எழுதப் பயின்று வரலாறுகளை எழுதிவைக்கத் தொடங்குவதற்கு முற்பட்ட மனித வரலாறு இவ்வகையி லேயே எழுதப்பட்டுள்ளது. மேல் நாட்டார் மனித வரலாற்றை ஓர் கலை யாகக்கொண்டு அதனை ஊக்கத்தோடு கற்கின்றனர்; பற்பல புதிய நூல்களை வெளியிடுகின்றனர். மனித வரலாறு மனிதனின் பகுத்தறிவைத் தூண்டி வளர்க்கத்தக்கது; தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கைகள், பழக்கங்கள், வழக்கங்கள், பழங்கதைகள் போன்ற பலவற்றைத் தக்கவாறு விளக்கத்தக்கது. ஆதிமனிதன் துர்போயிஸ் (Durbois) என்னும் டச்சுக்காரர் 1891இல் ஜாவாவிலே மிகப் பழங்கால மனிதனின் மண்டை ஓட்டையும் எலும்புகளையும் கண்டு எடுத்தார். இவை ஆறு வாரிக்கொண்டு வந்து குவித்த மணற்படைகளுள் கிடந்தன . இவை கிடந்த இடத்தின் அருகில் விலங்குகளின் எலும்புகளும் காணப்பட்டன. துர்போயிஸ் கண்டு எடுத்த மண்டை ஓட்டுக்கும் எலும்பு களுக்கும் உரிய மனிதனுக்கு விஞ்ஞானிகள் ஜாவா மனிதன் எனப் பெய ரிட்டுள்ளார்கள். இவனுடைய வடிவு குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப் பட்டது. ஆகவே நிமிர்ந்து நிற்கும் வாலில்லாக் குரங்கு மனிதன் எனவும் அவன் அறியப்படுவான். அம் மனிதனின் மூளை இன்றைய மனிதனின் மூளையில் மூன்றில் இரண்டு பங்கு அளவினது. மந்திரவாதி ஒருவன் ஜாவா மனிதன் எனப்பட்ட பழங்கால மனிதனுக்கும், வேறு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளுக்குரிய பழங்கால மனிதனுக்கும் உயிர் கொடுத்து அவர்களை எழுப்பினான் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அம் மனிதர் தம்முடைய வரலாற்றைப் பின்வருமாறு கூறுவர். ஜhவா மனிதன் எழுந்து தனது வரலாற்றைச் சொல்லுகின்றான்: இன்றைய மக்கள் என்னை வாலில்லாக் குரங்கு மனிதன் என்று அழைக்கிறார்கள் என நான் அறிவேன். இதை அன்றி அவர்களுக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியாது. எனது மயிர் மூடிய உடலையும், தொங்கும் தோள்களையும், பெரிய உறுப்புகளையும், முன்புறம் தள்ளிய தாடையையும் நோக்குகின்றவர்களுக்கு நான் வாலில்லாக் குரங்குபோல் தோன்றலாம் ; ஆனால் நான் மனிதனே. குரங்குகள் தவழ்ந்து செல்லும். நடக்கத் தொடங்கியபின் நான் ஒரு போதும் நாலு கால்களில் சென்றதில்லை. இன்று காணப்படுவது போன்ற தல்லாத அழகிய ஓர் இடத்தில் நான் பிறந்தேன்; மரத்தில் கட்டப்பட்ட ஒரு கூட்டில் இருந்து வளர்ந்தேன்; பால்குடி மறந்தபின் தோற்றத்தில் கிட்டத் தட்ட எங்களைப் போன்ற ‘ஓராங் ஊத்தாங்’ என்னும் குரங்குக்குட்டி களோடு விளையாடினேன். நான் மனிதக் குரங்கு அல்லன் என்று நான் அறிவேன். மனிதக் குரங்குகள் செய்யும் ஒலிக் குறிகளின் பொருளை நான் அறிந்திருந்தேன். நானும் அவைகளைப் போலவே சத்தமிட்டேன். நான் சிறிது வளர்ந்தவனானேன். அப்பொழுது எனது தந்தை தனது கையினால் என்னைப் பலமுறை அடித்து “குடும்பத்தவர்களுக்கு உணவு தேடிவா” என்று கூறியதை நான் அறிந்துகொண்டேன். உண்ணக் கூடிய பழம், நத்தை, பூச்சிகள் போன்றவைகளை நான் தேடிக்கொண்டு வந்தேன். சில சமயங் களில் பறவைகளையும் பிடித்து அவைகளின் இறைச்சியையும் உண்டேன். குரங்குகளிடம் காணப்படாத சில குணங்கள் எங்களுக்கு உண்டு. நானும் பெற்றோரும் ஆகிய மூவரும் தேடிய உணவை நாம் இருக்கும் மரத்தடிக்குக் கொண்டு வந்தோம்; அதனைத் தந்தை சமமாகப் பிரித்துத் தந்தார். வாலில்லாக் குரங்குகளோ தமக்கு வேண்டிய உணவைத் தாமே தேடி உண்டன. காட்டிலே தாயோடு இருக்கும் குட்டியின் தந்தைக் குரங்கு மாத்திரம் தாய்க்கும் குட்டிக்கும் உணவு கொண்டு வந்தது. எங்கள் இனத்தில் பத்து அல்லது பன்னி ரண்டு குடும்பங்கள் வரையில்தான் இருந்தன. நாங்கள் வாலில்லாக் குரங்குகளுள் திருமணம் செய்து கொள்ளவில்லை. எங்களுள் வயது வந்த ஓர் ஆண், பெண்ணைத் தேடும் பொருட்டு நூற்றுக்கணக்காண மைல்கள் திரிந்தான். என்னைப் போல் உடம்பு முழுவதும் மயிருள்ள ஒரு இளம் பெண் எனக்குக் கிடைத்தாள். நாங்கள் உறுமிச் சத்தமிட்டு ஒருவர் கன்னத்தோடு ஒருவர் கன்னத்தை உரைஞ்சினோம். உடனே இருவரும் திருமணம் செய்துகொள்வதென நிச்சயம் செய்துகொண்டோம். இருவரும் உயர்ந்த மரம் ஒன்றின் மீது கூடுகட்டத் தீர்மானித்தோம். அவ்வாறே கூடுகட்டி இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தோம். மரம் ஆற்றங்கரையில் நின்றது. அதன் கிளைகள் ஆற்றுக்கு மேலே தொங்கின. ஒருநாள் பூமி வெடித்தது போலப் பெரிய சத்தம் கேட்டது. நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். ஆற்றில் ஐம்பதடி உயரமுள்ள ஒரு அலை எழுந்தது. அது என்னையும் எனது மனைவியையும் ஆற்றில் அடித்து விழுத்தி வாரிக்கொண்டுபோய் விட்டது. அவ்வலை எரிமலைக் குழப்பத் தினால் உண்டாயிற்று. ஹெய்டில்பர்க் 2மனிதன் ஜாவா மனிதன் தனது வரலாற்றைச் சொல்லி முடித்ததும் ஹெய்டில்பர்க் மனிதன் தனது வரலாற்றைக் கூறுகின்றான் : எனக்கு ஒரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் இருந்தார்கள். நாங்கள் நான்கு பேரும் ஒரு மரத்தில் கூடுகட்டி வாழ்ந்தோம். நீண்டு வளைந்த பற்களையுடைய கொடிய புலி இரை தேடுவதற்கு இரவில் உலாவித் திரிந்தது. நாங்கள் அக்கொடிய விலங்குக்குப் பயந்து வாழ்ந்தோம். அப் புலி இராக்காலத்தில் மரங்களை முன்னங்கால்களால் உதைத்து ஆட்டும். மரக்கிளைகளில் இருக்கும் குரங்குகள் பழங்களைப் போலப் பொத்தென்று கீழே விழும். எங்கள் கூடு மரத்தின் உச்சிக் கிளையில் இருந்தது. ஆகவே நாங்கள் கீழே விழாமல் பிழைத்தோம். ஒருநாட் காலையில் நாங்கள் கீழே இறங்கினோம். உடனே பெரிய புலி ஒன்று பக்கத்தேயிருந்த புதரிலிருந்து அம்பு போல் பாய்ந்தது. மறு நொடியில் அது எனது சகோதரனைச் சதை சதையாகக் கிழித்தது. அதைக் கண்டு நான் பதைபதைத்தேன். ஒருமுறை சிம்பன்சி என்னும் மனிதக் குரங்கின் மனைவியைப் புலி பிடித்தது. அப்போது அம் மனிதக் குரங்கு ஆத்திரங்கொண்டு பெரிய கல்லை எடுத்துப் புலியின் மண்டையில் அடித்தது. புலி அக் குரங்கைத் தனது முன்னங்கால்களால் வாரி எடுத்துக் கிழித்தெறிந்துவிட்டது. பின்பு அம் மனிதக் குரங்கின் சகோதரனைப் புலி சதை சதையாகக் கிழிப்பதைக் கண்டு எனது மனம் வேலை செய்து கொண்டிருந்தது. நான் உடனே எனது சகோதரிமாரோடு ஓடி மறைந்துவிட்டேன். எனது உயிர் போக நேர்ந் தாலும் அப் புலியைக் கொன்று விட வேண்டுமென நான் எண்ணினேன். தொலை வில் நின்றபடியே புலியைக் கொல்லலாம் என எனது மூளையில் தோன்றிற்று. எனது தந்தை ஒரு தண் டாயுதத்தைச் செய்து வைத்திருந் தார். அதுமுதல் நாங்கள் பறவை களைக் கல்லால் எறிவதை நிறுத்தி விட்டோம். கற்கள் நிச்சயமாகப் பறவைகள் மீது படமாட்டா. பறவைகளுக்குக் கிட்டச் சென்று அவைகளை எறிவதும் கடினம், எறிவதில் தடிகள் பயனளிக்கத்தக்கன. ஆனால் அவை புலியைக் கொல்வதற்குப் பயன்படமாட்டா. பல நாட்களாக நான் தனியே யிருந்து இதைக் குறித்து ஆலோசனை செய்தேன். எனது சகோதரிமார் தினமும் வெளியே சென்று உணவு கொண்டுவந்தார்கள். பழங்கள், குருவி களின் முட்டைகள், தவளைகள், முயல், இலைகள் என்பவை அவர்கள் கொண்டுவரும் உணவு வகைகள். நான் உணவு தேடும் பொருட்டு ஒரு விரலைத்தானும் அசைக்கவில்லை. கடைசியில் ஒரு எண்ணம் தட்டிற்று; உடனே மகிழ்ச்சியினால் ஆரவாரஞ் செய்து எழுந்து கூத்தாடினேன். உடனே சிம்பன்சி என்னும் மனிதக்குரங்குகளும் ஓடிவந்து நான் ஆடுவது போலக் கூத்தாடின. நான் தோலைப் பிளந்து அதனால் ஒரு கவண் செய்தேன். நான் ஆற்றங்கரைக்குச் சென்று அங்குக் கிடக்கும் அழுத்தமான கூழாங்கற் களைக் கவணில் வைத்துச் கழற்றி எறிந்து பழகினேன்; நாளடைவில் கல் இலக்கில் படும்படி எறியும் பழக்கம் உண்டாயிற்று. பின்பு, பறக்கும் பறவை களின் இறக்கைகள் மீது கல் படும்படி எறியப் பழக்கம் அடைந்தேன். ஒரு நாள் மத்தியான நேரம் ; வெய்யில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. நான் புதர்களைப் பார்த்துக் கற்களை எறிந்தேன். சடுதியாகப் புதர் அசைந்தது. உடனே புலியொன்று வெளியே வந்தது. அதன் வால் நிலத்தை அடித்துக் கொண்டிருந்தது. வெய்யில் படுதலால் அதன் கண்கள் வெளிச்சமாகத் தோன்றின. உடனே நான் இரண்டு கற்களை அக் கண்கள் மீது விரைவாக வீசி எறிந்தேன். ஒரு கல் அதன் மூளையின் ஆழத்தில் புதைந்து சென்றது. புலி உடனே விழுந்து இறந்து போயிற்று. நான் இருந்த தீவிலே எனது இனத்தவர்கள் பலர் வாழ்ந்தார்கள். அவர்கள் கவண் செய்யும் வகையைத் தமக்கு அறிவிக்கும்படி என்னைக் கேட்டார்கள். அவர்கள் வரும்போது முயல்களையும் பிறஉணவுப் பொருள்களையும் கொண்டு வந்தார்கள். கவணின் துணையைக்கொண்டு நன்றாக வேட்டையாடலாம். நான் புலியைக் கொல்லும் போது சிம்பன்சிக் குரங்குகள் பார்த்துக் கொண்டிருந்தன. அதன்பின் அவை எனக்குக் கிட்ட வருவதில்லை. உணவு சமித்து உடல் செழுமையுறுவதற்கு மனிதன் பலவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும். எறிதடி, கவண் என்பவைகளின் உதவியாலும் அவைகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களின் வாய்ப்பினாலும் எங்களுக்கு ஊன் உணவு எப்பொழுதும் கிடைத்தது. நான் முதலாவது உறை பனிக் காலத்துக்குப் பின் தோன்றி இரண்டாவது வெப்பக் காலத்தில் ஐரோப்பிய சமவெளிகளில் வாழ்ந்தேன். எல்லா வகை உணவு களையும் உண்ண அறியாமலிருந்தால் நாங்கள் விலங்குகள் சென்ற வழியே போயிருப்போம். நானும் எனது இனத்தவர்களும் மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தோம். விலங்குகள் மலைக் குகைகளில் வசிப்பதையும், குகைகள் மழைக்கும் வெய்யிலுக்கும் அவைகளுக்குப் பாதுகாப்பு அளிக் கின்றன என்பதையும் நான் கவனித்தேன். எனக்குக் கீழ்ப்பட்ட விலங்குகள் குகையில் சேமமாக வாழ நாங்கள் மரக்கிளைகளில் கூடுகட்டி வாழ வேண்டுமோ என்று எண்ணினேன். பெரிய மலைக் குகை ஒன்றுக்குக் சென் றேன். அங்கு கழுதைப்புலி ஒன்று தனது குடும்பத்தோடு வாழ்ந்து கொண் டிருந்தது. தந்தை, தாய், குட்டிகள் என்னும் அப் புலிக் குடும்பத்தை நான் அக் குகையினின்றும் துரத்தினேன். அவை பற்களைக் காட்டிக் கொண்டு வெளியேறின. இதற்குப் பிறகு நாங்களும் எங்களினத்தவர்களும் மரத்திற் கூடிகட்டி ஒருபோதும் வாழவில்லை; குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்தோம். நிண்டேர்தல்1 மனிதன் நிண்டேர்தல் மனிதன் இப்பொழுது எழுந்து நின்று தனது வரலாற்றைச் சொல்லு கிறான்: ஹெய்டில்பர்க் மனிதனுக்கும் எனக்கு மிடையில் இரண்டு இலட்சம் ஆண்டுகள் கழிந்தன. இக்காலத்தில் உறைபனி மூன்று முறை மனிதரையும் விலங்குகளையும் தனக்கு முன்னால் துரத்திக் கொண்டு பூமியைச் சுற்றிவந்தது. நான் நாலாவது குளிர்காலத்தில் வாழ்ந்தேன். எனக்கு முன்னமே நமது இனத்தவர் முன்னேற்ற வழிகளில் செல்ல ஆரம்பத் திருந்தார்கள். மனித இறைச்சியை உண்ணும் 2மக்களும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு நாடி(chin) எலும்பு இருக்கவில்லை. ஆகவே அவர்கள் அதிகம் பேசமாட்டாதவர்களா யிருந்தனர். அவர்கள் தமது கைகளால் காட்டும் சைகைகளோடு இருபது ஒலிக் குறிகளையும் பேச்சாகப் பயன் படுத்தினர். மனித இறைச்சியை உண்ணும் குணம் பசிக்கொடுமையால் உண்டாக வில்லை. எலும்புகளை உடைக்கும்போது அவைகளினுள் உள்ள ஊன் மிகச் சுவையுடையதாயிருந்தது. சுவை காரணமாக மனித எலும்பையும் உடைத்து ஊனை உண்ட மக்கள் மனித இறைச்சியையும் உண்ணத் தொடங்கினார்கள். இன்றும் தென் கடல் தீவுகளில் வாழும் மக்கள் நீளப்பன்றியைச் சிறந்த உணவாகக் கொள்கிறார்கள். நீளப்பன்றி என்பது மனிதனைக் குறிக்கும். வீரமுள்ளவனைக் கொன்று தின்பதால் அவனுடைய வீரம் உண்பவனைச் சேர்கின்றதென்னும் நம்பிக்கையும் இருந்து வந்தது. எனக்கு முன்பு மக்கள் நெருப்பைப் பற்றி அறிந்திருக்கவில்லை. நாங்கள் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் நடுங்கிக்கொண்டிருந்து உணவைப் பச்சையாகப் புசித்தோம். எங்களை ஓநாய்களிடமிருந்தும் புலி களிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள எங்களிடம் மிகக் கீழ்த்தரமான ஆயுதங்கள் மாத்திர மிருந்தன. நாட்கள் கழிந்தன. எங்களின் உடல்கள் வயிரமடைந்தன. இளைஞர், இருபது பேர் அல்லது முப்பது பேர் சேர்ந்து கூட்டங்களாகத் திரிந்தார்கள். வயது முதிர்ந்த நாங்கள் அவர்களோடு செல்ல முடியாமலிருந்தது. தம்மைப் பின் தொடர்ந்து செல்லமுடியாதவர்களை வலி யுள்ள ஒருவன் தனது தண்டாயுதத்தால் மண்டையிலடித்துக் கொன்றான். நெருப்புக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது முன்னேற்றம் விரைந்து சென்றது. ஒருநாள், குகைக்கு வெளியே இரவு முழுதும் புயல் அடித்தது. மின்னல் இடைவிடாமல் நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்தது. காலையில் காட்டுமரங்கள் புகைந்து கொண்டிருந்தன. எரிந்து சிந்திக் கிடக்கும் சாம்பலில் நெருப்பில் வெந்து கிடக்கும் விலங்குகளையும் பறவைகளையும் பார்த்தேன். அவைகளுள் ஒன்றை எடுத்துக் கரியைத் துடைத்துவிட்டுப் பல்லாற் கடித்துப் பார்த்தேன். இவ்வகை உருசியான உணவை நான் முன் ஒருபோதும் உண்டதில்லை. நெருப்புத் தணலைக் கல் ஒன்றின்மீது வைத்து அதனை விலங்கின் குடல் ஒன்றால் தூக்கிக்கொண்டு எனது குகைக்குச் சென்றேன். நான் எனது மனைவியர் பலருள் ஒருத்தியைச் சுள்ளிகள் பொறுக்கி வரும்படி சொன்னேன்; சுள்ளிகள் மீது தணலை வைத்து நெருப்பை மூட்டி எரித்தேன். என்னினத்தவர்கள் என்னிடமிருந்து நெருப்பைப் பெற்றுச் சென் றார்கள். நெருப்பு இராப்பகல் எரியும்படி விறகிட்டு எரிக்கப்பட்டது. நெருப்பு அவிந்துபோகுமாயின் மறுபடி மின்னலும் புயலும் உண்டாகும் காலத்தைப் பார்த்திருக்க வேண்டும். நெருப்பு இல்லாவிடில் குளிர் காயவும், சமைக்கவும் முடியாது. குகையிலுள்ள பெண்களுக்கும் வளர்ந்த பிள்ளைகளுக்கும் இப்பொழுது புதுக் கடமை ஒன்று உண்டாயிற்று. அக் கடமை விறகுகளை இட்டு நெருப்பை அணைந்து போகாதபடி பார்த்துக் கொள்வதாகும். நெருப்பு எப்பொழுதாவது அணைந்து விடுமோ என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். ஒருமுறை நாங்கள் வேட்டையாடச் சென் றோம். இன்னொரு வேட்டையாடும் கூட்டத் தினர் எங்களைச் சந்தித்தார்கள். இரு கூட்டத் தாரும் எதிர்த்துக் கடுமையாகச் சண்டை செய்தோம். எங்களை எதிர்த்தவர்கள் எங்களினும் பலராயிருந்தனர். அவர்கள் எங்களைத் துரத்தி விட்டு எங்கள் நெருப்பைப் பிடித்துக் கொண்டார்கள். நாங்கள் ஓடிச் சென்று தங்கிய குகைகளில் நெருப்பு இல்லை; ஆகவே நாம் குளிரால் வருந்திக் கொண்டிருந்தோம். உணவைச் சமைக்க முடியாமலும் துயரப்பட்டோம். எனக்குப் புதல்வர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் சோம்பேறியும் பலங் குறைந்தவனுமாயிருந்தான். அவன் வேண்டும்போது நெருப்பை உண்டாக்கக் கண்டுபிடித்தான். அவன் தீத்தட்டிக்கல் ஆயுதத் தால் வேலை செய்வதில் கெட்டிக்காரன். அவன் முரடான கல்லாயுதத்தால் மரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது மரம் சூடேறுவதை அவன் கண்டான். அவன் பின்பு ஒருநாள் இரண்டு மரத்துண்டுகளை எடுத்து நீண்ட நேரம் உரைஞ்சினான். சடுதியில் புகை யுண்டாயிற்று. பின்பு மரத்தின் துளையில் நெருப்புத் தோன்றிற்று. அவன் உடனே பெருங்கூச்சசலிட்டான். நான் ஓடிச் சென்று என்ன நடந்தது என்று அறிந்தேன். இதன் பின்பு நாங்கள் ஒரு போதும் எங்களோடு நெருப்பைக்கொண்டு திரியவில்லை. நெருப்பைச் சுற்றிச் சிறு குடிசைகள் எழுந்தன. நாங்கள் நெருப்பின் உதவியால் ஆயுதங் களை நன்றாகக் கூராக்கவும் வயிரப்படுத்தவும் அறிந்தோம். நெருப்பைக் கண்டுபிடித்தபின் குடும்ப உணர்ச்சியும் நெருங்கி வளர்ந்தது. நெருப்பு எங்களையும் விலங்குகளையும் பிரித்து வைத்தது. குளிர் மிகுந்த இராக் காலத்தில் சிம்பன்சி என்னும் மனிதக் குரங்குகள் நமது குகைமுன் எரியும் நெருப்பண்டை வந்தன; தமது கைகளை நெருப்பில் காய்ச்சிக் குளிர் காய்ந்து மகிழ்ச்சியினால் சத்தமிட்டன. ஒரு மனிதக் குரங்குக் காவது நெருப்பின்மேல் விறகை இட்டு எரிக்கத் தெரியாது. நெருப்பு அணைந்தவுடன் அவை மறுபடியும் குளிரால் நடுங்கின. வாழத் தகுதியுள்ளது நிலைபெறுதல், தகுதியற்றது மறைந்துபோதல் என்பதே அன்று முதல் இன்று வரையும் உள்ள இயற்கை விதி. இவ் விதிக்கமைய இன்னொரு மயிரதிகமில்லாதவரும், உயரமுடையவருமாகிய ஒரு சாதியினர் எங்களை வேட்டையாடி அழித்தார்கள். விரிவளர்ச்சி (evolution) விதி தகுதியுள்ளதற்கு அல்லது வலியதற்கு இடங்கொடு என்பதே. நாங்கள் இவ்விதிக்கு மாறாக நிற்க முடியவில்லை. பெண்கள் விலங்குகள் போன்ற மக்களிடையே பெண்களின் நிலை எவ்வா றிருந்ததது? பெண்கள் மிகவும் கவனிக்கப்படாதவர்களாகவும் அடிமை போன்றவர்களாகவு மிருந்தனர்; பெண் புனிதமானவள், இரக்கமுள்ளவள், மனிதனின் இனிய பாதியாயுள்ளவள் என்னும் கருத்துகள் தோன்ற வில்லை. அக்காலத்தில் மனிதன் அரை விலங்காகவே இருந்தான். பெண்கள் அடர்ந்த மயிருள்ளவர்களாகவும், முகம் அதிக விறைப்பு ஏறாதவர்களாகவும், சாந்தமான தோற்ற முடையவர்களாகயும் இருந்தனர். அவர்களிற் பலர் வட்டமாகக் குந்தியிருப்பார்கள். அவர்களுட் சிலர் கல்லாயுதங்களால் கிழங்குகளைச் சுரண்டிச் சுத்தஞ் செய்வர்; சிலர் விதைகளைக் கல்லின்மேல் வைத்துக் கல்லால் அடித்து உடைத்துக் கொண்டிருப்பர். சிலர் மான் முதலிய விலங்குகளின் தோல்களை பல்லினால் சப்பி மிருதுவாக்கிக் கொண் டிருப்பர். சிலர் தமது குழந்தைகளுக்கும், பன்றி, நாய்க் குட்டிகளுக்கும் பால் கொடுத்துக் கொண்டிருப்பர். நெருப்பைச் சுற்றியிருந்து அவர்கள் பல வகைக் கதைகளைப் பேசுவார்கள். இருபதாம் நூற்றாண்டாகிய இன்று நன்கு வளர்க்கப்படும் பெண்கள், பெண்ணினத்தினர் ஆண்களை விலங்கு நிலையினின்றும் எப்படி மேலே வரச்செய்தார்கள் என்பதை அறியமாட்டார்கள். சமீப காலத்திலேயே பெண்கள் ஆண்களை ஒத்த உரிமைகளைப் பெற்று அவர்களோடு சம வாழ்க்கை நடத்துகின்றனர். இன்று ஆண்களைப் போலவே பெண்களும் வேலை செய்து கூலி பெறுகிறார்கள்; அவர்கள் தங்கள் உழைப்பைக் கொண்டே வாழ்கின்றனர். ஆடவனின் சம்பந்தமில்லாமலே பெண் சுதந்தர மாக வாழ்கின்றாள். குரோமக்நன் மனிதன் நிண்டேர்தல் மனிதருக்குப் பின் குரோ மக்நன் மனிதர் தோன்றினார்கள். இவர்கள் துருவமான் மனிதர் (Reindeer-men) எனவும் அறியப்படுவர். இவர்கள் நிண்டேர்தல் மக்களை ஈவு இரக்கமின்றி வேட்டையாடிக் கொன்றனர். இவர்கள் ஆசிய நாடுகள் முதல் ஐரோப்பிய நாடுகள் வரையில் பரவி வாழ்ந்தார்கள். இவர்கள் நெட்டையான வர்களாயும் குறைந்த மயிர் அடர்த்தி உடையவர்களாயுமிருந்தனர். இவர்கள் சிறு குடிசைகளில் வாழ்ந்தனர். ஒரு பெரிய குடிசையைச் சுற்றிப் பல சிறிய குடிசைகள் இருந்தன. குரோமக்நன் மக்கள் குடும்பம் என்னும் சமூக நிலையை அடைந்தனர். இவர்களிலிருந்தே சமூக வாழ்க்கை தோன்றிற்று. குடும்ப நெருப்பைச் சுற்றிக் குடும்பம் வளர்கின்றது. குடும்பத்திலிருந்தே சமூகம் வளர்ந்ததென்று விரிவளர்ச்சிக் கொள்கை (Evolution Theory) கூறுகின்றது. மற்றவர்களின் மனத்தோடு பழகுவதால் இவர் மனம் வளர்ச்சியடைகின்றது. இவர்கள் பிரிந்து சென்று வெவ்வேறு கூட்டங்களாக வாழ்ந்தபோதும், தாம் எல்லோரும் ஒரு பெரிய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று துருவ மான்களை வேட்டை யாடினர். துரத்தப்படும் விலங்குகள் எங்குச் சென்றனவோ அங்கெல்லாம் இவர்களும் சென்றார்கள். துருவ மான், காட்டுக் குதிரை, கஸ்தூரி மாடுகள் மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் சென்றபோது இவர்களும் அவைகளை வேட்டையாடும் பொருட்டு அவைகளைப் பின்தொடர்ந்து சென்றனர். வரலாறு ஆரம்பிப்பதன் முன் மத்திய ஐரோப்பிய புல்வெளிகளில் புல் முழங்கால் உயரமாயிருந்தது. அங்கு மேயும் துருவ மான்களும் காட்டுக் குதிரைகளும் வேட்டைக்காரரை மோப்பம் பிடித்தற்கு அடிக்கடி தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தன. வேட்டைக்காரர் தவழ்ந்து அம்பு பாயக்கூடிய அண்மையில் சென்றனர். காட்டின் தொலைவில் ஒரு பக்கத்தில் பெண்கள் நின்றார்கள். மூன்று மான்களும் ஒரு குதிரையும் மேலே துள்ளிக் கீழே விழுந்தன. உடனே மற்றைய விலங்குகள் காட்டுக்கு ஊடாகப் பாய்ந்து வேகமா யோடி மறைந்தன. பெண்கள் ஓடி வந்தனர். வேட்டையாடப்பட்ட விலங்குகளைத் தோள்களிலிட்டுச் சுமந்துசென்றனர். இறைச்சி பொரிக்கவோ, சமைக்கவோ அல்லது அவிக்கவோ படவில்லை. அக்காலப் பெண்கள் பானை செய்ய அறிந்திருக்கவில்லை. இப் புல்வெளியில் வேட்டையாடு வோர் ஒரு வாரம் தங்கியிருந்தார்கள். பின்பு இன்னொரு கூட்டம் விலங்குகள் அவ்விடம் வந்தன. அங்கு மம்மத்து என்னும் யானை வந்து கொண்டிருக்கும் செய்தியை இளைஞன் ஒருவன் வந்து சொன்னான். பின்பு எல்லோரும் சேர்ந்து பொறிக் கிடங்கு ஒன்று தோண்டினார்கள். மம்மத்தின் முன்நின்று அதனை வேட்டையாட அவர்கள் அஞ்சினார்கள். மம்மத்து யானைக் கூட்டம் வந்தது. அக் கூட்டத்திலுள்ள யானையொன்று கிடங்கின் மேலே பரப்பியிருந்த தடிகள் மீது காலை வைத்தது. அது உடனே குழியில் விழுந்து அகப்பட்டுக் கொண்டது. அது எக்காளமிட்டுச் சத்தஞ் செய்தது. மற்ற யானைகள் அதனை மீட்பதற்குக் குழி அண்டை வந்தன. அவை களால் அதற்கு உதவி அளிக்க முடியவில்லை. அவைகள் அதனைக் குழி யிடத்திலேயே விட்டுச் சென்றன. வேட்டைக்காரர் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் குழியைச் சுற்றி நின்று கூத்தாடினார்கள். விலங்கு இறந்து போகும் வரையில் தமது ஈட்டிகளை அதன் மீது பாய்ச்சினார்கள். ஈட்டிகளை நக்கி இரத்தத்தைச் சுவைத்தார்கள். மக்கள் வேட்டை விலங்குகளோடு வெளியிலேயே வாழ்ந்தார்கள். அங்கும் இங்கும் குகைகள் இருந்தன. இவை நிலையானவும் உறுதியான வும் குடிசைகளாகப் பயன்பட்டன. வேட்டை விலங்குகள் கிடைப்பது அருமையான காலங்களில் வேட்டை யாடுவோர் அவைகளில் தங்கியிருந் தார்கள். ஆண்டில் ஒரு முறை அல்லது இரண்டு முறை எல்லோரும் ஓரிடத் தில் கூடினார்கள். இவ்வழக்கம் 40,000 ஆண்டுகளின் முன் தொடங்கியது. இது எங்கள் காலம் வரையில் இருந்து வருகின்றது. நிண்டேர்தல் மனிதனிடத்தில் காணப்படாத பொருள்கள் குரோமக்நன் மனிதனிடத்தில் இருந்தன. குரோமக்நன் மனிதரிடத்தில் குகைகளில் வாழும் கரடி, வாள் போன்ற பல்லுடைய புலி களை எதிர்த்துப் போராடத்தக்க ஆயு தங்கள் இருந்தன. வில்லையும் அம்பை யும் அவர்கள் பயன்படுத்தினார்கள். இவர்கள் ஆடை உடுக்கவில்லை. தம்மை அழகுபடுத்தும் பொருட்டுத் தோல் அணிந்திருந்தார்கள். இவர்கள் புல்வெளிகளில் வாழ்ந்தார்கள். சிறிது சிறிதாக இவர்களின் எண் குறையத் தொடங்கிற்று. பேச்சு பேச்சு என்றால் என்ன? “மன நிறைவினால் வாய் பேசுகிறது” என விவிலிய வேதத்தில் ஓர் இடத்தில் கூறப்பட்டுள்ளது. முற்கால மனிதனுக்குத் தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளியிட வேண்டும் என எழுந்த தூண்டுதலால் அல்லது மன நிறைவால் அவனது நா பேசப் பழகிற்று. பேச்சு சடுதியில் தோன்றவில்லை. மற்றவைகளைப் போலவே, பேசும் பேச்சும் பேச்சு எனப்படும் நிலையை அடையப் பல நூற்றாண்டுகளாயின. மனிதன் பேசுவதற்கு நெடுங்காலத்தின் முன்னரே விலங்களும் பறவைகளும் பேசின. எல்லா உயிர்களுக்கும் சொந்தமாகிய பேச்சு உண்டு. பழைய கால மம்மத்து என்னும் சடை யானை எக்காளஞ் செய்தும், தும்பிக் கையால் சைகை செய்தும் தனது கருத்துக்களை உணர்த்தும் பேச்சை அறிந்திருந்தது. நம்மைச் சுற்றி வாழும் உயிர்களைக் கூர்ந்து நோக்கினால் நாம் அவை பேசுவதைக் காணலாம். நாய் வாலினால் பேசுகின்றது. அது கோபம் முதல் அன்பு வரையிலுள்ள எல்லா வகையான உணர்ச்சிகளையும் உணர்த்த முடியும். எறும்புகள் தமது மீசைகளால் பேசுகின்றன. குருவிகள் பல வகையான ஒலிகள் செய்கின்றன; சில ஒலிகள் மகிழ்ச்சியையும், சில அபாயத்தையும், சில வெவ்வேறு கருத்துகளையும் தெரிவிக்கின்றன. குதிரைகளும் மாடுகளும் மூக்குகளை உரைஞ்சியும், அழுதும், கனைத்தும் பேசுகின்றன. அவை இருபத்திரண்டு வெவ்வேறு ஒலிக் குறிகளையும் சைகைகளையும் பயன்படுத்துகின்றன. கோழிகளும் புறாக்களும் தனித்தனி பன்னிரண்டு வெவ்வேறு ஒலி களால் பேசுகின்றன. நாய்கள் வாலைக்கொண்டு கருத்துகளை உணர்த்துவ துடன் பதினைந்து வெவ்வேறு ஒலிகளால் பேசுகின்றன. மிகத் தாழ்ந்த காட்டு மக்கள் முந்நூற்றுக்குக் குறையாத சொற்களைப் பயன்படுத்து கின்றனர். கொரிலா, சிம்பன்சி என்னும் மேலினக் குரங்குகள் இருபது ஒலிக் குறிகளைப் பேசப் பயன்படுத்துகின்றன. அவை இவைகளோடு சைகை களையும் உபயோகிக்கின்றன. குரங்குகளுள் பாடக்கூடியது கிபன் ஒன்று தான். இவ்வாறு பாடும் குரலே பேசும் குரலாக மனிதனிடத்தில் மாறுபட்ட தென ஆராய்ச்சி அறிஞர் கருதுகின்றனர். பாட்டிலிருந்து பேச்சு வளர்ச்சியடைந்தது எனக் கூறுவது நியாய மற்றதாகத் தோன்றமாட்டாது. ஆரம்பத்தில் மனிதன் உரத்தும் தனித்தும் பாடுவது போன்று எழுப்பிய ஒலிகளே சொற்களாகத் துணிக்கப்பட்டுச் சொல் மூலங்களாயினவாகலாம். உடற்குறிகளும் சைகைகளும் ஒலி முறையான பேச்சுக்கு முற்பட்டவை. பேசும் மொழி நீண்ட காலமாக வளர்ந்தது. அது மக்கட் குலம் அல்லது கூட்டத்தின் வாழ்க்கையிலிருந்து மிக மிக மெதுவாக வளர்ந்தது. பழைய மனிதன் கருத்துகளைச் சொற்களிலும் பார்க்கச் சைகைகளால் அறிவித்தமையின் பேசப்படும் மொழி மெதுவாக வளர்ந்தது. அவனுடைய வாழ்க்கைச் செயல்கள் குலம் அல்லது கூட்டத்துக்குரிய கூத்தாக ஆடப் பட்டது. வேட்டைக் கூத்தில், அவன் மொழியால் சொல்வதிலும் பார்க்க நடிப்பினால் தான் வேட்டையாடி விலங்குகளைக் கொன்றதை விளக்கி னான். கலியாணக் கூத்துகள், இழவுக் கூத்துகள், சமயக் கூத்துகள் எனப் பல வகைக் கூத்துகள் இருந்தன. முன் உள்ள சொற்களோடு மேலும் மேலும் சொற்கள் சேர்க்கப் பட்டன. ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருளையோ செயலையோ குறித்தது. மொழி, அறிவினால் அல்லது நினைக்கும் வகையினால் உண்டாவது. ஒரே இரத்தத்துக்குரிய சாதியினரின் மொழி ஒரே வகையா யிருப்பதற்குக் காரணம் அவர்கள் ஒரே வகையாக நினைத்து ஒரே வகை யாக எண்ணங்களை உணர்த்தினமையினாலாகும். இதிலிருந்து இலக்கணம் தோன்றுகின்றது. எழுத்துகளின் ஒலி, எண்ணங்களை ஒழுங்குபடுத்திக் கூறும் வகை, எண்ணங்களைக் குறிக்கும் சொற்களை வைக்கும் ஒழுங்கு, சொல்லின் வகைகளை ஒன்றோடு ஒன்று சேர்க்கும் வகை போல்வன பெரிய மொழிக் கூட்டங்களில் ஒரே வகையா யிருக்கக் காணலாம். இது பற்றியே ஆரிய மொழிகளின் இலக்கணம் ஒரு வகையாகவும், திராவிட மொழிகளின் இலக்கணம் மற்றொரு வகையாகவும், இவையல்லாத பிறமொழிகளின் இலக்கணம் வேறுவகையாகவும் காணப்படுகின்றன. சைகைகளால் பேசும் பேச்சு முற்றுப் பெறாதது. சொற்களால் எவற்றையும் உணர்த்தலாம். உலகில் எல்லாம் எங்கிருந்தோ வருவதுபோல மொழிகளுக்கும் ஒரு வேர் வேண்டுமென்பது நியாயமானதே. அவை ஒரு மக்கட் குலம் அல்லது குழுவின் மொழியாகிய வேரினின்றே வளர்ந்திருக்க வேண்டும். எக் கூட்டத்தாரிடையே அது தொடங்கிப் பின் பிரிந்து பலவாறு சென்றதென எவராலும் கூறமுடியாது. மாயமான பாஸ்க்குக் 1குலத்தினர் ஸ்பெயின் நாட்டில் காணப்படு கின்றனர். இவர்கள் காக்கேசிய மலைகளில் வாழ்ந்தார்கள் என்று கருதப் பட்டார்கள். இவர்கள் பழைய இந்திய மக்களுக்கு இனமானவர்கள் ஆகலாம். பழைய எகிப்தியரும் மற்றைய ஹமித்தியச் சாதியினரும் தமது போக்கான மொழிகளை அமைப்பதன்முன், இவர்களே புதிய கற்காலத்தின் ஆரம்பத்தில் மொழியைத் தோற்றுவித்தவர்களாகலாம். அவர்களின் மொழி அமெரிக்கப் பழங்குடி மக்களின் மொழிக்கு இனமுடையதாகலாம். குலத்தைப் போலவே மொழியின் அடையாளங்களும் பின்னிக் கிடக் கின்றன. மனிதனுடைய எண்ணங்களின் நிறைவால் மொழி உண்டாயிற்று. பின்பு விரிவளர்ச்சிச் சட்டத்தின்படி (Law of Evolution) அது வளர்ச்சியடைந் தது. ஊர்வனவிலிருந்து குட்டிக்குப் பாலூட்டி வளர்க்கும் விலங்குகள் தோன்றியமை போல சாதாரண ஒலிக்குறிகளான பேச்சிலிருந்து ஒலிமுறை யான சொற்கள் தோன்றின. பின்பு மனிதன் நாலு ஐந்து குலங்களாகப் பிரிந்த போது மொழியும் அவ்வாறு பிரிந்தது. பின்பு ஒவ்வொரு குலத்தினரும் சிறு சிறு கூட்டத்தினராகப் பிரிந்தபோது மொழிகளும் அவ்வக் கூட்டத்துக்குரிய கிளைமொழிகளாகப் பிரிந்தன; பின்பு ஒவ்வொரு பேசும் மொழியும் மற்றவருக்குப் பயன்படாதபடியும் விளங்கிக்கொள்ள முடியாதபடியும் மாறுதலடைந்தன. சாதிகளுக்கிடையில் கலப்பு மணங்கள் உண்டாவது போல மொழிகளும் கலப்பு அடைகின்றன. பின்பு இருவகைப் பெற்றோரி லிருந்தும் புது மொழிகள் பிறக்கின்றன. சில விலங்கினங்கள் மக்களினங்கள் மறைந்து போதல் போல மொழிகள் மறைந்து விடவும் படுகின்றன. இறந்துபோன மொழிகளின் வேர்கள் சில உயிர்மொழிகளில் காணப்படுகின்றன. கிரேக்க, உரோமன் மொழிகளின் மூலங்கள் இன்றைய பிரெஞ்சிய, உருமேனிய, இத்தாலிய மொழிகளில் காணப்படுகின்றன. உயிரோடு உலவும் மொழிகளைப் பயில்வதால் இக்கால மனித னுக்குப் பல வாய்ப்புகள் உண்டு. அம் மொழிகள் வழங்கும் நாடுகளுக்குச் செல்லுமிடத்து அவனுக்கு நன்மைகள் உண்டாகின்றன. அம் மொழிகளை வழங்கும் அறிஞர் எழுதிய நூல்களைக் கற்று அறியவும் கூடும். இன் னொரு சாதியாரின் உள்ளம் எவ்வாறு செல்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ஒருவன் எத்தனை மொழிகளை அறிகிறானோ அவன் அத்தனை அதிக அறிவைப் பெறுகின்றான். பழைய மொழிகளின் கலப்பு, இன்று வழங்கத் தகுதியுள்ள அழகிய மொழிகளாக மாறியுள்ளன. எண்ணங்கள் வளர வளர அவைகளை உணர்த்தும் புதிய சொற்களும் தோன்றுகின்றன. எழுத்து முற்கால மனிதன் எவ்வாறு எழுதினானென்று உங்களுக்குத் தெரியுமா? அவன் இக்கால முறையான எழுத்துகளை அறிந்திருக்கவில்லை. தான் எழுத விரும்பியவைகளைப் படமாக எழுதினான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் வெட்டினான் என்பதை எழுதிக்காட்ட விரும்பினால் அவன் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் வெட்டுவது போன்ற படத்தை எழுதிக் காட்டினான். விலங்குகள், பறவைகள், ஆறுகள், மலைகள் போன்றவைகளைக் குறிக்கவும் அவைகளின் வடிவங்கள் எழுதப்பட்டன. ஆதி மனிதன் இவ்வாறு எழுதிய படங்கள் நாளடைவில் சுருங்கிக் கோடுகள் கீறுகள் ஆயின. கீறுகளும் கோடுகளும் தனித்தனி எழுத்து ஒலிகளைக் குறி யாமல் ஒரு முழுச் சொல்லையே குறிப்பனவாயிருந்தன. பின்பு ஒரு முழுச் சொல்லையே குறிக்கும் அடையாளத்தின் ஒலி முறையான உச்சரிப்பைத் தனித்தனி ஒலிக்குறிகளால் எழுதக்கூடிய முறையில் எழுத்துகள் கண்டு பிடிக்கப்பட்டன. இன்று இவ் வுலகின் எல்லா மொழிகளில் வழங்கும் எழுத்து களும் இவ் வகையினவே. சீன தேச மக்கள் வழங்கும் எழுத்துகள் பழங்கால எழுத்துகள் போன்றவை. சீன மொழியில் ஒரு சொல்லைக் குறிக்க ஒரு எழுத்து வழங்குகின்றது . சீன மொழியில் எத்தனை சொற்கள் இருக்கின்றனவோ அத்தனை எழுத்துகள் உண்டு. இது நமக்கு வியப்பாகத் தோன்றுகின்றது. புதிய கற்கால மக்கள் குரோமக்நன் மக்கள் மறைந்து ஐயாயிரம் ஆண்டுகளின் பின் புதிய கற்கால மக்கள் தோன்றினார்கள். மக்கள் எழுத்துகளைப்பற்றி அறியுமுன் வரலாறு தோன்றவில்லை. கற்காலமக்கள் பயன்படுத்திய பொருள்கள் எல்லாவற்றையும் ஓரிடத்தில் வைத்து நோக்கும்போது அவர்களின் வரலாறு புலப்படுகின்றது. இம் மக்கள் இருள் அல்லது கபில நிறமுடைய வர்களாயிருந்தனர். இவர்கள் உலகம் முழுமையிலும் சென்று பரந்து தங்கி வாழ்ந்தார்கள். வெப்பநிலை, உணவு, பழக்க வழக்கங்கள், சமய வழக்கம் போன்றவை காலின் வளர்ச்சி, தாடை எலும்புகளின் நீளம், உடலின் உயரம் அல்லது குறுக்கம், மண்டையின் பருமை, பாதத்தின் அளவு போன்ற மாற்றங் களை உண்டுபண்ணின. வாழத் தகுதியுடையவர்கள் நிலை பெற்றார்கள்; தகுதியற்றவர் மறைந்து போயினர். தகுதியுடைய ஒரு சாதியார் தோன்றும் போது தகுதியற்றவர் மறைந்து போகின்றனர். வரலாறு தொடங்கும்போது மங்கிய நிறமுள்ள மக்கள் வட ஆப்பிரிக்கா மத்திய தரைக் கடல் ஓரங்கள் முதல் இந்தியாவரையில் வாழ்ந்தார்கள். புதிய கற்கால மக்கள் குடிசை கட்டி வாழ்ந்தார்கள். மரங்கள் தோப்புகள் போல் வளர்ந்திருந்தன. சோலைக்கு வெளிப் புறத்தில் நாற்புறத்தும் பயிர் செய்யும் நிலங்கள் இருந்தன. பெண்கள் உணவு தேடும் பொருட்டுக் காட்டுக்குள் வெகுதூரம் சென்று அலைய வில்லை. அவர்கள் தானியத்தை நிலத்தில் விதைத்தார்கள். ஆண்டுதோறும் அவை விளைவு அளித்தன. அவர்களின் கணவர் ஓரிடத்தில் தங்கியிருந்தார்கள். வீடு இன்றி அலைந்து திரிந்த அவர்கள் இப்பொழுது வீட்டில் இருந்தார்கள். வீடுகளில் நாய்கள் நின்று குரைத்தன. நாய் அவர்களுக்கு உதவியாக விருந்தது. மாலை நேரத்தில் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலத்தில் நின்றும் ஓட்டிக்கொண்டு வர அது உதவி புரிந்தது. காட்டில் வாழும் துருவ மான், பன்றி, குதிரை, மாடு, ஆடுகளை அவர்கள் பிடித்துப் பழக்கி அவை உணவின் பொருட்டுத் தம்மிடம் தங்கி வாழும்படி செய்தார்கள். அவர்கள் வேட்டை நாய்களுடன் வேட்டையாடவும் சென்றார்கள். இப்பொழுது வேட்டையாடாமலே உணவு கிடைத்தது. ஆகவே அவர்கள் வேட்டை யாடுவதைப் பொழுதுபோக்காக மாத்திரம் கொண்டனர். கொல்லன் செம்பை நெருப்பில் காய்ச்சி அடித்து வேட்டையாடப் பயன்படும் ஈட்டிகளைச் செய்தான். புதிய கற்கால மனிதனே முதன் முதல் செம்பில் வேலை செய்தான். பின்பு பொன்னிலும், அதன்பின் வெண்கலத் திலும் வேலை செய்தான். நாள் ஏற ஏற வேலை திறமையடைந்தது. வயலில் நிற்பவள் பெண்ணே. அவள் மண்வெட்டியோடு நின்று வயலில் வேலை செய்தாள். முதல் முதல் மண்வெட்டியினால் வேலை செய்தவள் அவளே யாவள். நிலத்தை மண்வெட்டியால் கொத்திப் பயிரிடுவது பெண்ணுக்குரிய வேலையாகக் கொள்ளப்பட்டது. பெண் மண்வெட்டியினால் வேலை செய்யும் வலு உடையவளாயிருந்தாள். ஆடவன் அவள் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மாடுகள் பழக்கி வளர்க்கப்பட்டபோது மாற்ற முண்டாயிற்று. பெண்கள் மண்வெட்டியால் கொத்திப் பயிரிட்ட நிலத்தில் மாடுகள் கலப்பையை இழுத்துச் சென்றன. புதிய கற்கால மனிதன் கலப்பையைச் செய்ய அறிந்து, மாடுகள் அதனை இழுத்து உழும்படி பழக்கி னான். பெண்கள் கலப்பையில் மாட்டைப் பூட்டி உழும் வலு இல்லாதிருந் தனர். ஆகவே உழுவது ஆடவனின் வேலையாக மாறிற்று. மனிதன் உழ அறிந்ததும் பெண்ணின் நிலை உயரத் தொடங்கிற்று. அங்குமிங்குமாகக் கிடந்த குடிசைகளிலிருந்து ஆடவர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிலர் மட்பாண்டங்களைச் செய்தனர். அவர்கள் பானை சட்டி செய்யும் சக்கரத்தை யறிந்திருந்தனர். சிலர் கல்லாயுதங்களால் பானை சட்டிகள் மீது ஓவியங்களை வெட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் இவர்களின் முன்னோர் பயன்படுத்தியவை களைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவை; அழுத்தமும் அழகும் வாய்ந்தவை. கிராமத்திலிருந்து சிறு தொலைவில் இறந்தவர்களைப் புதைக்கும் திடர்கள் காணப்பட்டன. அவர்களின் தலைவன் பெரிய குடிசையில் வாழ்ந் தான். அவன் அடுத்து வரும் ஞாயிற்றுக் கடவுளின் விழாவைக் குறித்துத் சிந்தித்துக் கொண்டிருந்தான். ஞாயிற்றுக் கடவுளுக்குப் பையன்களைப் பலியிடுவது வழக்கம். ஞாயிற்றுக் கடவுள் மனித பலியை விரும்புகின்றா ரென நினைப்பது மூடத்தனம் என அவன் உணர்ந்தான். அடுத்த நாள் அவன் சூழ உள்ளவர்களை அழைத்து இரவில் ஞாயிற்றுக் கடவுள் தோன்றித் தனக்கு மனிதபலி வேண்டாமென்று மூன்றுமுறை கூறியதாகச் சொன்னான். பின்பு மனித பலிகள் நின்று போயின. புதிய கற்காலத் தலைவனின் மகள் கழுத்தில் ஓடுகள் கோத்த மாலையை அணிந்திருந்தாள். முற்காலப் பெண்களைவிட இவள் வாழ்க்கை பத்திர மாயிருந்தது. முற்கால இளம் பெண்களை வாலிபர் மண்டையில் அடித்து விழுத்தி மயிரைப் பிடித்து இழுத்துக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. இப்பொழுது அவ்வாறு நிகழவில்லை. அவர்கள் பெண்ணின் தந்தையிடம் வந்து அவளை விலை கொடுத்து வாங்கிச் சென்றார்கள். தந்தை, தனது பெண்ணைத் தான் எவ்வளவு மேலாக மதிக்கிறான் எனக் காட்டுவதற்கும், அதிகப் பொருளைப் பெறும் பொருட்டும் அதிக விலை கூறினான். அடுத்த கூட்டத்திலுள்ள ஒருவன் மற்று எவரும் இதுவரை கொடாத அளவு ஆடு மாடுகளைப் பெண்ணின் தந்தைக்கு அவளின் விலையாகக் கொடுத்தான். பெண் மிகவும் மனப் பூரிப்பு அடைந்தாள். கணவனின் வேறு இரண்டு அல்லது மூன்று மனைவியர்களோடு வாழவேண்டுமென்பதைப் பற்றி அவள் கவலை கொள்ளமாட்டாள். அவ்வாறு வாழ்தல் பொதுவான வழக்கம்; இது நேரான முறை எனக் கொள்ளப்பட்டது. பலர் நீர்நிலைகளில் கிராமங்களைக் கட்டி வாழ்ந்தார்கள். சுவிட்சர் லாந்து, ஸ்காட்லாந்து முதலிய இடங்களில் நீர்நிலைகளில் மரத் தூண்களை இறுக்கி அவைமீது கட்டப்பட்ட பழைய கிராமங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இக் குடியிருப்புக்களிலிருந்து கரைவரையும் ஒடுங்கிய பாலம் இடப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடிசைக்கும் சொந்தமான படகொன்று மரத்தூணில் கட்டப்பட்டிருந்தது. புதிய கற்கால மனிதனின் குடிசைகளில் பன்றிகளும் மக்களோடு இருந்து வளர்ந்தன. இப்பொழுது அவர்கள் ஆடையை அலங்காரத்தின் பொருட்டு அணியவில்லை. உடையின் பொருட்டே அணிந்தனர். கிறித்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளின் முன் கோழிகள் ஐரோப்பாவில் காணப்படவில்லை. பிற்பாடே கோழிகள் அந் நாடுகளிற் பெருகின. ஆடு மாடுகளின் பால் உணவாகக் கொள்ளப்பட்டது. மந்தைகளை வளர்ப்போர் அவைகளைக் கொல்லவில்லை. அவை கொடுக்கும் பால் அளவில் திருப்தி அடைந்திருந்தார்கள். குயவர் பானை சட்டிகள் செய்தார்கள். மக்கள் செம்பையும் தகரத்தை யும் கலந்து வெண்கலம் செய்ய அறிந்தார்கள். அக்காலத்தில் பொன், வெண்கலம், பளிங்கு முதலியவைகளால் செய்த ஏனங்கள் பயன்படுத்தப் பட்டன. மதுச் செய்யும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் தேனைப் புளிக்கவிட்டு மதுவைச் செய்தார்கள். சிலர் கோதுமையிலிருந்து அதனைச் செய்தார்கள். பின்பு திராட்சைச் சாற்றிலிருந்து மதுச் செய்யும் முறை கண்டு பிடிக்கப்பட்டது. கம்பளியிலிருந்து நூல் முறுக்கலாமென மனிதன் அறிந் தான். அப்பொழுது நூல் நூற்கும் கதிர் கண்டுபிடிக்கப்பட்டது. பெண்கள் நூல் நூற்றார்கள். சணலுடை தோலுடைகளுக்குப் பதில் புதுவகையான உடைகள் பயன்படுத்தப்பட்டன. தாவரங்களிலிருந்து கிடைக்கும் சாயங்கள் உடைகளுக்கு ஊட்டப்பட்டன. கற்கோடாரிகளுக்குப் பதில் வெண்கலக் கோடாரிகள் பயன்படுத்தப்பட்டன. வெண்கல ஈட்டி வெண்கல ஆபரணங் களைத் தலைவர்களே தொடக்கத்தில் பயன்படுத்தினார்கள். பழைய மக்களின் ஓவியக்கலை குகைகளில் வாழ்ந்த மக்கள் ஓவியக்கலையில் திறமையடைந் திருந்தார்கள். உண்பது, குடிப்பது, திருமணஞ் செய்வது என்பவைகளை ஒழிந்த சிலவற்றைக் குகைகளில் வாழ்ந்த மக்கள் கண்டுபிடித்திருந்தார்கள். அழகை வெளியிடும் விருப்பு உண்டாயிருந்தது. இதனாலேயே ஓவியக் கலை உலகில் தோன்றிற்று. தான் கண்ட அழகுகளை வெளியிடுவது மனிதனின் முதல் கடமையாக விருந்தது. மனிதன் குகைகளில் வாழ்ந்த காலமே ஓவியக் கலை யின் பொற்காலமாகும். உலகில் முதல் தோன்றிய ஓவியரிடம் தூரிகைகளும், மசியும், துணி யும், பலகைகளும் இல்லை. அவர்கள் வாழ்ந்த குகைகளின் சுவர்கள் அழுத்தமாக விருந்தன அவர்களிடம் அழுத்தமான சுண்ணாம்புக் கற்களும், எலும்பு களும், தந்தங்களும் இருந்தன. அவர்கள் தீட்டிய படங்களைப் பாருங்கள். அவை அவர்கள் வாழ்ந்த இருண்ட குகைகளுள் 20,000 ஆண்டுகளின் முன் எழுதப்பட்டவை. அக் காலப் படங்கள் இன்றைய படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கன. இவ் வகையான படங்களை வரையக் கூடியவர்கள் ஒரு கூட்டத்தில் ஒருவர் இருவர் மாத்திரம் இருந்தனர். அவர்கள் மனித உருவை வரைதலிலும் பார்க்க விலங்குகளை எழுதுவதில் அதிக திறமை பெற்றிருந்தார்கள். அவர்கள் வரைந்துள்ள மனித ஓவியங்கள் ஒன்றுக்கும் உடை காணப்படவில்லை. சில மனித ஓவியங்கள் உடம்பில் மயிரின்றியும், சில மயிருள்ளனவாகவும் காணப்படு கின்றன. இதனால் அக் காலத்தில் மனிதனின் உடம்பில் மயிர் உதிரத் தொடங்கிவிட்டதென்றும், சிலருக்கு இன்னும் மயிர் இருந்ததென்றும் தெரிகின்றன. பெண்களின் வடிவங்கள் மிகவும் கொழுப்பு ஏறினவையாகக் காணப்படுகின்றன. அக் காலத்தில் மிகவும் கொழுத்துப் பருத்த பெண்ணே அழகுடையவளாகக் கருதப்பட்டாள். இன்றும் கிழக்குத் தேசங்கள் சிலவற்றில் பெண்களின் அழகு அவளின் கனத்தைக் கொண்டு கணிக்கப்படுகின்றது. சுவர்களில் மக்கள் விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்படவில்லை; வெட்டப்பட்டுள்ளன. மக்கள் அலங்காரத்தில் பிரியமுடையவர்களாயிருந் தார்கள். அவர்கள் ஆயுதங்களை அழகாகச் செய்தார்கள். கத்திகள், ஈட்டிகள், ஆயுதங்களின் பிடிகளை வட்டம், விலங்கு முதலிய ஓவியங்களால் அழகுபடுத்தினார்கள். மக்கள் குகைகளில் வாழ்ந்த காலத்தில் உணவு பாத்திரங்களில் இட்டுச் சமைக்கப்படவில்லை. குகை மனிதருக்குப் பின் வாழ்ந்த புதிய கற்கால மக்களே பானை சட்டிகளைச் செய்ய அறிந்திருந்தார்கள். அக் காலத்தில் வழங்கிய பானை சட்டி போன்ற மட்பாண்டங்களின் வடிவங்கள் அவர்கள் பயன்படுத்திய கத்தி, ஈட்டிப் பிடிகளிலும் பிற பொருள்களிலும் தீட்டப்பட்டுள்ளன. அவர் தாம் வரைந்த விலங்குகள் பறவைகளை உயிருள்ளன போல் தோன்றும்படியாக வரைந்தார்கள். பிற்காலத்து வாழ்ந்த புதிய கற்கால மக்கள் குகை மனிதரைப்போல் ஓவியந் தீட்டுவதில் திறனை யடைந்திருக்கவில்லை. புதிய கற்காலம், வரலாற்றுக் காலத்தை அணுக அணுக ஓவிய, சிற்பக் கலைகள் வாணிக சம்பந்தமாக மாறின. மட்பாண்டங்கள், செம்பு வெண்கல ஏனங்கள், ஆயுதங்கள், அணிகலங்கள், தையல் வேலைப்பாடுடைய தோல்கள், உடைகள் என்பன ஒரு சாதியாரிடமிருந்து இன்னொரு சாதியாருக்குக் கை மாறின. ஓடுகள் அல்லது தீத்தட்டிக் கற்களைக் கட்டிச் செய்த மாலைகளை, அல்லது விலங்குகளின் மயிருள்ள பாதத்தை அழுக்கு நிறைந்த கழுத்தில் தொங்கவிடுதல் போன்ற முற்காலக் காட்டுமனிதனின் சிறிய அலங்கரிக்கும் தொடக்கத்திலிருந்தே சிற்பக்கலை வளர்ச்சியடைவதாயிற்று. மக்கட் குலங்கள் ஆதியில் மக்கள் அலைந்து திரிபவர்களாக விருந்தனர். ஆகவே அவர்கள் உலகின் பல பகுதிகளிற் சென்று பரவினர். உலகின் பல பாகங்கள் வெப்பநிலையால் மாறுபட்டுள்ளன. ஒவ்வொரு வெப்பநிலையிலுள்ள நாட்டிலும் வெவ்வேறு வகையான உணவுப்பொருள்கள் கிடைக்கின்றன. ஆகவே மக்கள் உணவுகளில் வேறுபாடுகள் உண்டாயின. அவர்கள் வெவ் வேறு வகையான பகைகளாலும் தாக்கப்பட்டார்கள். ஆகவே ஒவ்வொரு இடங்களிலும் வாழ்வோர் இடங்களுக்கேற்ப மாற்றமடைந்தனர். ஒவ்வொரு உயிர்களிலும் பற்பல இனங்கள் தோன்றுதல் போலவே மக்களுள்ளும் பல இனங்கள் உண்டாயின. ஒரு மக்கட் கூட்டத்தினர் மற்றவர்களிலிருந்து கடல், மலை, வனாந்தரங்கள் போன்றவைகளாற் பிரிக்கப்பட்டிருந்தால் அவர்களின் வாழ்க்கை முறைகள் இடங்களுக்கேற்றவாறு மாற்றமடை கின்றன. மனிதன் எப்பொழுதும் அலைந்து திரிபவனாயிருந்தமையால் தடைகளால் அவன் பெரிதும் தடுக்கப்படமாட்டான். மனிதர் மனிதரைப் பார்த்து நடக்கின்றனர்; ஒருவரோடு ஒருவர் போர் செய்து வெற்றி கொள் கின்றனர். ஒரு கூட்டத்தினர் இன்னொரு கூட்டத்தினருடன் கலக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரண்டு பெரிய ஆற்றல்கள் தொழிற் பட்டு வருகின்றன. ஒரு ஆற்றல் மக்களைச் சிறு சிறு கூட்டங்களாகப் பிரிப்பது; மற்றது பிரிந்து வேறுபட்ட மக்களைக் கலக்கச் செய்து புதிய இனங்களைத் தோற்றுவிப்பது. குகைகளில் வாழ்ந்த பழைய கற்கால மக்கள் உலகின் விசாலமான பரப்புகளில் உலாவித் திரிந்தார்கள். புதிய கற்கால மனிதனிடத்தில் சில பொருள்கள் இருந்தன. அதனால் அவன் பழைய கற்கால மக்களைவிடக் குறுகிய இடங்களில் அலைந்து திரிந்தான். வேட்டையாடுவோனா யிருந் தமையின் அவன் விலங்குகள் செல்லும் இடங்களுக்கு அவைகளைப் பின் தொடர்ந்து சென்றான். பருவகாலம் வாய்ப்பா யில்லாதபோது அவன் பல நூறு மைல்கள் கடந்தும் சென்றிருக்கலாம். பயிர்ச் செய்கை உண்டான போதே மக்கள் ஓரிடத்தில் நிலையாக வாழத் தொடங்கினார்கள். மக்கள் இனங்களாக வளர்ச்சியடைய இவ் வாழ்க்கை வாய்ப்பளித்தது. நாகரிகத்தின் மிகக் கீழ்நிலையிலும், மிக உயர்நிலையிலும் கட்டுப்பாடின்றி மக்கள் அலைந்து திரிகிறார்கள். பழைய கற்கால மக்கள் உலகம் முழுமையிலும் அலைந்து திரிந்து நெருக்கமின்றி வாழ்ந்தார்கள். உலகம் முழுமையிலும் காணப்பட்ட பழைய கற்கால ஆயுதங்கள் எல்லாம் ஒரே வகையின. ஒருகாலத்தில் கடல், மலைகளால் பிரிக்கப்பட்டிருந்த மக்கள், கடல் மலைகள் மறைந்து போதல் போன்ற இயற்கை மாறுபாடுகளால் மறுபடியும் மற்றைய மக்களோடு கலக் கிறார்கள். இவ் வகையான கலப்புகள் உண்டானபோது ஒரு இனத்தவரை இன்னொரு இனத்தவரிலிருந்து பார்த்த மாத்திரத்தில் அறியக்கூடிய பெரிய மக்கட்கூட்டங்கள் காணப்படுகின்றன. சிலர் மஞ்சள் நிறத்தினராகவும், சிலர் வெண்ணிறத்தினராகவும், சிலர் கரிய நிறத்தினராகவும் சிலர் மங்கிய நிறத்தினராகவும் உளர். ஆப்பிரிக்காவிலே வனாந்தரத்துக்குத் தெற்கிலுள்ள மக்கள் கறுப்பு நிறமும், தடித்த உதடுகளும், சுருண்ட மயிரும் உடையராவர். வட, வடமேற்கு ஐரோப்பாவிலுள்ள மக்கள் நீலமான கண்ணும், சிவந்த நிறமும், வெளுத்த மயிருமுடையர். மத்திய தரையைச் சூழ்ந்து வெண் ணிறமும், கறுத்த விழியும், கறுத்த மயிருமுடைய மக்கள் காணப்படு கின்றனர். மங்கிய வெண்ணிறமுள்ள மக்களின் மயிர் நேரானது; வளைவில் லாதது; மஞ்சட் சாதியினரின் மயிர் போன்று வயிரமில்லாதது. தென்னிந்தியா வில் மங்கிய கபில நிறமுள்ளவர்களும் நேரிய மயிருள்ளவருமாகிய மக்கள் காணப்படுகின்றனர். நியூகினி, பாப்புவா முதலிய தீவுகளில் சுருண்ட மயிருடைய கறுப்பு, மங்கிய நிறம், கபில நிறமுடைய மக்கள் காணப்படு கிறார்கள். இற்றைக்குப் பத்தாயிரம் அல்லது பன்னீராயிரம் ஆண்டுகளின் முன் இவ்வாறு வேறுபடுத்தி அறியக்கூடிய மக்கள் வாழ்ந்தார்கள். இற்றைக்கு அறுபது அல்லது எழுபது ஆண்டுகளின் முன்னிலிருந்தே 1இன்றைய முறையான மக்களின் குலப்பிரிவுகளைக் குறிப்பிடும் வழக்கு உண்டா யிற்று. அதற்குமுன் கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டில் சொல்லப் படும் பழங்கதைகளை ஆதாரமாகக் கொண்டே மக்கட் குலங்கள் குறிப் பிடப்பட்டன. நோவாவையும், பேழையையும் பற்றிய வரலாற்றில் நோவா வுக்கு சம்(Sham), ஹாம்(Ham), யபெத்(Japhet) என்னும் மூன்று மக்கள் இருந்தனர் எனச் சொல்லப்பட்டுள்ளது. சமின் சந்ததியினர் என்று கருதப் படும் அராபிய மக்கள் செமித்தியர் எனவும், ஹாமின் சந்ததியினர் எனக் கருதப்பட்ட ஆப்பிரிக்கர் ஹாமித்தியரென்றும், ஐரோப்பாவிற் குடியேறிய வராகக் கருதப்படும் யபெத்தின் சந்ததியினர் ஆரியர் என்றும் கொள்ளப் பட்டார்கள். இப் பிரிவு, மக்கள் இன ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதன்று. மனிதன் முன்னேறிய வகை ஆதியில் மனிதன் விலங்குகளை ஒப்ப உணவு ஒன்றை மாத்திரம் தேடி அலைந்து திரிந்தான். அக் காலத்தில் ஒருவகை முன்னேற்றமும் உண்டாகவில்லை. மனிதனைச் சூழ்ந்து நாற்புறத்தும் பகைகள் இருந்தன. அவன் சிறிது அயர்ந்துவிடுவானாயின் சூழவிருந்த விலங்குகள் அவனைக் கொன்று தின்றுவிடும். அவன் உணவின் பொருட்டுப் போராடுவதோடு தனது பகைகளையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. வேட்டை யாடுவதிலும் பார்க்கத் தனது பகைகளை எதிர்த்துப் போராடுவதற்கே அவனுக்கு ஆயுதங்கள் அவசியம் வேண்டியிருந்தன. முரடான கற்களும் மரக்கிளைகளுமே அவனுடைய ஆயுதங்களாக விருந்தன. நாள் ஏற ஏற அவன் ஆயுதங்களை அழகாகச் செய்ய அறிந்தான். ஆதிகால மனிதன் கல்லில் செய்து பயன்படுத்திய கத்தி, வாள், உளி, கோடாரி போன்ற வைகளின் வடிவைப் பின்பற்றியே இன்றைய ஆயுதங்களும் உலோகங் களாற் செய்யப்படுகின்றன. முரடான கல்லாயுதங்களை மனிதன் பயன்படுத்திய காலம் பழைய கற்காலம் எனப்படும். பழைய கற்காலத்துக்குப்பின் வந்த மனிதன் ஆயுதங்களைப் பாறைகளில் தீட்டி அழுத்தமாகவும் அழகாகவும் செய்ய அறிந்தான். அழுத்தமான கல்லாயுதங்களை மனிதன் பயன்படுத்திய காலம் புதிய கற்காலம் எனப்படும். புதிய கற்காலத்திய மனிதன் விலங்குகளைப் பழக்கி வளர்க்க அறிந்திருந்தான். ஆடு, மாடு முதலியவை பால், தயிர் முதலிய உணவுகளைக் கொடுத்தன. ஆகவே புதிய கற்கால மனிதன் உணவின் பொருட்டு ஓய்வின்றி அலைந்து திரியவில்லை. தனது மந்தைகளுடன் சில காலம் ஓரிடத்தில் தங்கியிருந்தான். பின்பு மேய்ச்சல் நிலத்தைத் தேடி வேறோரிடத்துக்குத் தனது மந்தைகளுடன் சென்றான். இப்பொழுது நாகரிகம் தோன்றி வளர ஆரம்பித்தது. மக்கள் ஆற்றோரங்களில் தங்கிப் பயிரிடத் தொடங்கினார்கள். ஒரு முறையில் கிடைக்கும் விளைவு பலருக்கு நீண்டகால உணவுக்குப் போதியதாக இருந்தது. இப்பொழுது அவர்கள் உணவின் பொருட்டு அலைந்து திரியவில்லை; ஓர் இடத்திலேயே தங்கி யிருந்தார்கள்; போதிய ஓய்வு இருந்தது. இக் காலத்திலேயே பலவகைக் கலைகள் தோன்றி வளர்ந்தன. நாகரிகம் என்பது ஒழுங்கான உணவு பெறுதலேயாகும். எகிப்து, மேற்கு ஆசியா, சீனா, இந்தியா முதலிய நாடுகள் பழமையே நாகரிகம் பெற்று விளங்கின. இந் நாகரிகங்கள் எல்லாம் ஆற்றோரங்களிலேயே தோன்றி வளர்ச்சியடைந்தன. எங்கு மக்களுக்கு அதிக உணவு கிடைக்கின்றதோ அங்கு நாகரிகமும் செல்வமும் ஓங்கி வளர்கின்றன.  ஆதி உயிர்கள் முன்னுரை இவ்வுலகில் உயிர்கள் எல்லாம் இன்று காணப்படுவன போல் திடீர் எனத் தோன்றவில்லை. அவை கோடிக்கணக் கான ஆண்டுகளின் முன் தோன்றி வாழ்ந்த கண்ணுக்குப் புலப்படாத அணுப் போன்ற சிற்றுயிர்களிலிருந்து படிப் படியே வளர்ச்சியடைந்துள்ளன என மேல்நாட்டு அறிஞர் ஆராய்ந்து சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார்கள். உயிர்கள் கீழ்நிலையிலிருந்து அறிவு வளர்ச்சித் தரங்களுக்கேற்பப் படிப்படி மேலான பிறவிகளை அடைகின்றன என்பதே தமிழ் மக்கள் மிகப் பழங்காலம் முதல் கொண்டிருந்த கொள்கையாகும். தமிழர் கொண்டது உயிர்களின் தகுதிக் கேற்பக் கடவுள் அவைக்கு ஏற்ற உடலை அளிக்கின்றார் என்பது. அவை வாழ முயலும் வகைகளால் அவைக்கு உருவ மாற்றம் உண்டாகின்ற தென்பது மேல் நாட்டறிஞர் கருத்து. இவ் விரண்டு கொள்கைகளில் எது ஏற்றது என்பதை இந் நூலைப் படிப்பவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டியது. உயிர்களின் கிரம வளர்ச்சி(Evolution)யைப் பற்றிய வரலாறு கற்பதற்கு மிக இன்பம் பயப்பதாயும், அறிவு வளர்ச்சிக்கு உகந்ததாயும் உள்ளது. இக் கருத்துகள் ஆங்கில நூல்களிற் கூறப்பட்டவற்றைத் தழுவி எழுதப்பட்டவை. சென்னை 10.1.1949 ந.சி. கந்தையா ஆதி உயிர்கள் தோற்றுவாய் இவ்வுலகு ஞாயிற்றினின்றும் தெறித்து விழுந்த ஒரு துண்டு. இதன் வெப்பம் ஆறுதற்கு எண்ணில்லாத ஆண்டுகள் கழிந்தன. இப் பூமி குளிர்ந்து கடலும் நிலமுமாக மாறியபோதே பூமியில் உயிர்கள் தோன்றி வாழலாயின. ஆதியில் இன்று நாம் காண்பவை போன்ற உயிர்கள் தோன்றி வாழவில்லை. கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண்ணிய உயிர்களி லிருந்தே இன்று நீரிலும் நிலத்திலும் வாழும் எல்லா உயிர்களும் வளர்ச்சி யடைந்துள்ளன. இக் கூற்றுக் கேட்பதற்கு மிக வியப்பைத் தரலாம். தொல் லுயிர்களைப் பற்றி ஆராய்ச்சி நடத்திய பேரறிஞர் ஆதியில் இவ் வுலகில் தோன்றி வாழ்ந்த சிற்றுயிர்கள் எவ்வாறு படிப்படி வளர்ச்சி அடைந்துள்ளன வென்பதை நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். இவ் வுலகில் காணும் ஒவ்வோர் உயிரும் கீழ் உயிரிலிருந்து தோன்றிற்று என்று கூறுதற்கு ஏற்ற பல ஆதாரங்கள் உள்ளன. பல்வேறு காலத்தில் தோன்றிய பூமியின் பாறை அடுக்குகளில் ஒன்றின் தொடரில் மற்றொன்று தோன்றியது என்று கூறுதற் கேற்பத் தொல்லுயிர்களின் கற்படி உருவங்கள் (Fossils) காணப்படுகின்றன. உலகில் எவ்வாறு உயிர்கள் தோன்றி வளர்ச்சியுற்றன என்பதைப்பற்றி இந் நூலிற் சிறிது படிப்போம். ஆதி உயிர்கள் ஆதியில் உயிர்கள் நிலத்தில் தோன்றவில்லை; கடலிலே தோன்றின. இவை கண்ணுக்குத் தெரியாத அணுத்தன்மை யுடையவை; தாவர இனத்தைச் சேர்ந்தவை. இவைக்கு ஒரு கண்ணறை உடலுண்டு. கண்ணறை என்பது நடுவே ஒரு கருவும் கருவைச் சூழ்ந்து வழுவழுப்பான பொருளும், வழுவழுப்பான பகுதியைச் சுற்றிச் சவ்வு போன்ற அல்லது ஆடை போன்ற போர்வையு முள்ளது. இச் சிற்றுயிர்கள், காற்றிலும் நீரிலுமுள்ள மிருதுவான பொருள்களி லிருந்து தமது ஒரு கண்ணறை உடலை மூடியிருந்த தோலினால் உணவை உறிஞ்சிக் கொண்டன. வெளித்தோலே அவற்றின் வாயாக விருந்தது; பின்பு உணவை உள்ளே யிழுப்பதற்கு அவை ஒரு குழாயை வளர்த்துக் கொண்டன. உறிஞ்சி உணவை ஓரிடத்திற் சேர்த்து வைத்துச் சீரணிப்பதற்காக அவை ஒரு பிரிக்கும் உறுப்பையும் உண்டாக்கிக் கொண்டன. அல்கே (algae) என்னும் இத் தாவர உயிர்கள் தண்ணீரில் வளர்ந்து பெருகின. அவை நீந்திக் கொண்டு வாழும்போது புதிய கண்ணறைகள் வளர்ந்தன. சில அவைகளின் சொந்தத் தேவைக்குப் பயன்பட்டன; சில தம்மைப் போன்ற உயிர்களைத் தோற்றுவிப்பதற்குப் பயன்பட்டன. அவையிடத்துப் புதிய கண்ணறைகள் வளர்ந்து பிரிந்து புதிய தாவர உயிர்களாகப் பெருகின. இவ்வாறு தோன்றிய புதிய தாவர உயிர்களும் அவ்வாறே சந்ததியைப் பெருக்கின. இவ்வாறு கடல்நீரில் தோன்றிய தாவர உயிர்கள் பெருகின. உணவின் பொருட்டுப் போராட நேர்ந்தமையின் அவை பலவகைத் தாவ ரங்களாக வளர்ச்சியடைந் தன. இச் சிறிய தாவர உயிர்களே கடற் சாதாழை முதல் பெரிய நிழல் மரங் களுக்கெல்லாம் தாய் களும் தந்தைகளும் ஆகும். ஒரு சிறிய தாவர உயிருக்கு 1,000,000 பிள்ளைகள் வரையில் இருந்தன. ஒவ்வொரு தாவர உயிரும் கிட்ட உள்ள மற்றத் தாவர உயிரிலும் பார்க்க முன்னேற முயன்றது. காற்றிலுள்ள கரி வாயுவை அல்லது சூரிய ஒளியிலிருந்து கரிவாயுவைப் பெறும் பொருட்டு உடலின் அல்லது கண்ணறையின் வடிவை மாற்றிக்கொள்ள மாட்டாத உயிர்கள் சந்ததிகள் பலவற்றைத் தோற்றுவிக்கும்படி நீண்டநாள் வாழ வில்லை. ஒன்றின் பக்கத்தே ஒன்றாக நின்று வளரும் இரண்டு தாவரங்கள் வளர்ந்து ஒன்றை ஒன்று மறைத்துச் சூரிய ஒளியைப் பெறமுயன்றன. இதனாலேயே இலைகள் வளர்ச்சியடைந்தன. இலைகள் தாவரங்களின் வாய்கள். சூரியஒளி படாவிடில் இலையின் மேற்கண்ணறைகள் காற்றிலிருந்து உறிஞ்சிய வாயுவை, கீழே உள்ள பச்சை நிறக் கண்ணறைகள் இழுத்துப் பயன்படுத்த முடியாது. தாவரங்கள் வாழ்க்கையின் பொருட்டுப் போராடிக் கொண்டிருந்தன. அதிக உணவைப் பெறக்கூடிய நிலத்தையும், சூரிய ஒளியையும் அடையக் கூடிய கெட்டித்தனமுள்ள வலிய தாவரங்களே பிழைத்தன. வலியற்ற வைக்குக் கருணை காட்டப்படவில்லை. வலிய தாவரம் அயலே நின்ற வலி குறைந்த தாவரத்தின் உணவைத் தனது வேர் வழியாகக் கவர்ந்தது. வலிவுடையது நிலைபெறுதல் என்னும் இயற்கைவிதி மிகக் கொடியதாகத் தோன்றிற்று. அல்கே என்னும் தாவர உயிரிலிருந்து கடற்சாதாழை, கடற்பாசி, ஓலை போன்ற இலையுடைய தாவரங்கள் (Ferns) முதலியவை தோன்றின. இவை விதையில்லாத தாவரங்கள். எரிமலைக் குழப்பங்களால் பலமுறை கடல் நிலமாகவும் நிலம் கடலாகவும் மாறின. அப்பொழுது கடலாழத்தில் சென்று பல்லாயிர ஆண்டுகளாகக் கல், மண் முதலியவைகளாற் புதை யுண்டு கிடந்த அக்காலக் காடுகளின் தாவரங்களே இன்று நிலக்கரியாக நமக்குக் கிடைக்கின்றன. அசையும் உயிர்கள் (Animals) நீரில் நீந்திக்கொண்டிருந்த ‘அல்கே’ நீரில் மிதந்த உயிரில்லாப் பொருள்களிலிருந்து உணவை இழுத்தது. ஒரு நாள் அவ்வகையான ஓர் உயிர் உயிருள்ள ஒன்றிலிருந்து தனது உணவை இழுத்தது. இவ்வகை உயிர் அமீபா (amoeba) எனப்படும். இச் சிற்றுயிரிலிருந்து தாவரமல்லாத உயிர்கள் பெருகின. இவைகளும் தாவர உயிர்களாகிய அல் கேயைப் போலவே வளர்ந்து இரண்டாகப் பிரிந்து சந்ததியைப் பெருக்கின. இவற்றின் உடல் சளி போன்று வழுவழுப்புடையதா யிருந்தது. காலங் கடந்தது. இவை மாற்றமடையத் தொடங்கின. சில கடற்பஞ்சாக மாறின. கடற் பஞ்சு அன்று முதல் இன்றுவரை கடற் பஞ்சா கவே இருக்கின்றது. அது வேறு மாற்றம் அடைய வில்லை. சில சொறி மீன்களாக வளர்ந்தன; அவை பின் பல குடும்பங்களாகப் பிரிந்தன. சில பவளப் பூச்சிக ளாக மாறின. இவை நிலத்தில் ஊர்ந்து திரிவதற்குப் பதில் அளவில்லாத தலைமுறைகளாகச் சுண்ணாம்புப் படைகளைக் கட்டி எழுப்பிக் கொண்டு இறந்துபோன தம் முன்னதுகளின் உடல்களில் வாழ்கின்றன. அவ் வுடல்கள் நாளடைவில் சுண்ணாம்புப் பாறைகளாக மாறுகின்றன. இவ்வா றமைந்த சுண்ணாம்புப் பாறைகள் ஒரு நாள் கடல் அலைகளுக்கு மேலே தோன்றுகின்றன. பறவைகள் பறந்து செல்லும் போது விதைகளை அங்கே போடுகின்றன; கடல் நீரோட்டம் தேங்காய்களைக் கொண்டுவந்து மணலில் புதையும்படி விடுகின்றது. சில காலத்தே அங்கு ஒரு பசுந்தரை காணப்படு கின்றது. பவளப்பூச்சிகளுக்கு முதுகெலும் பில்லை. ஆகவே அவை அன்றுமுதல் இன்று வரையும் நீரில் வாழும் பூச்சிகளாகவே இருக்கின்றன. நத்தை, சிப்பி முதலிய ஓடுள்ள கடல் உயிர்கள் இரையைத் தேடி மணலில் ஊர்ந்து திரிவதைக் காண்கிறோம். எல்லா உயிர்களின் ஓடுகளும் சுண்ணாம்பினால் கட்டப்பட்டவை. முதுகெலும்பில்லாத இவ்வுயிர்கள் ஊர்ந்தும் மிதந்தும் செல்கின்றன. இவை களின் வளர்ச்சி இவ்வளவோடு நின்று விடுகின்றது. இப் பொழுது முதுகெலும்பில்லாத எல்லா உயிர்களின் உடலும் மென்மையுடையது. கடல் முட்பந்துகள்(sea-urchins) என்பவை உயி ருள்ள முட்பந்துகளே. இவ்வுயிர் தோலில் முள் வளர்ந்த சிறுபை போன்றது. கடல் முட்பந்துகள், நட்சத்திர மீன், கல் அல்லி (stone lilies) என்பவை பவளப்பூச்சிக்கு மேற்பட்டவை. இவைக்கு ஒருவகையான வயிறு உண்டு. இவற்றின் விருப்பமான உணவு ‘அல்கே’. இவைக்கு அடுத்தபடியில் ‘வுட் லைஸ்’ (Wood-Lice) என்னும் நண்டுபோன்ற ஓர் உயிர் தோன்றிற்று. இது நிலஉயிர் நீர்உயிர் என்னும் இரண்டுக்கும் இடைப்பட்டது. அதற்கு அடுத்தபடியில் நண்டு தோன்றிற்று. இது கடலி னின்றும் வெளியேறி நிலத்தில் வாழப் பழக்கமடைந்தது. இதன் உறுப்புகள் பொருத்துகளுடையவை. பொருத்து களில் உறுப்புகளை வளரச் செய்கின்ற எல்லா உயிர்களும் பூச்சி வகையில் அடங்கும். இவ்வகையில் பல உயிர்கள் தோன்றின. இவைகளுக்கு முதுகெலும்பில்லை. இந்திய பசிபிக் கடற்கரைகளில் வாழும் திருடன் நண்டு (Robber-crab) உணவைத் தேடி பனை மரங்களில் ஏறுகின்றது. இப் பூச்சி இனங்களிலிருந்து வேறு இனங்கள் தோன்றவில்லை. கடற் பூச்சிகளிலிருந்து தரைப் பூச்சிகள் உண்டாயின. அவைகளின் உடல் அமைப்பும் அதே வகையாக விருந்தது. அவற்றுக்கு முதுகெலும்பில்லை; பொருத்துகள் இருந்தன; அவைக்கு ஒருவகை இருதய மும், மூளைபோல் ஒரு பகுதியும் உண்டு. சொறிமீன்கள்(Jelly fish) போன்ற சில பூச்சிகள் தமது அறைகளை நீண்ட நூல் போல் வளர்த்தன. இவைகளிலிருந்து முதுகெலும்பு உடையது போன்ற தோற்றமுடைய புழுக்கள் தோன்றின. இவ்வாறு தோன்றிய உயிர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஒன்றை ஒன்று பிடித்து உண்டு வாழும் போது அவைகளுக்கு, நகங்கள், இறக்கைகள், அலகுகள், மீசைகள் வளர்ந்தன. மேலும் இலட்சக்கணக்கான ஆண்டுகள் கடந்தன. அப்பொழுது முதுகெலும்புள்ள உயிர்கள் கடலுள் தோன்றலாயின. புழுவாக வளர்ந்த பூச்சி மீனாக மாறுதலடைந்தது. முதல் முதல் தோன்றிய மீனுக்கு துவாரம் போன்ற வாயுண்டு; அலகுகள் தோன்றவில்லை. இதற்கு அடுத்தபடியில் விலாங்கு(Eel) என்னும் மீன் தோன்றிற்று. இதற்கு அலகுகள் உண்டு. ஆனால் அதன் முதுகெலும்பு வலியுடையதன்று. முதுகெலும்பு பெற்ற உயிர்கள் சில மிக மிகப் பெரியனவாய் வளர்ந்தன. அவைகளுக்கு முள் நிறைந்த கரகரப்பான தோலும் சுறாமீனுக் கிருப்பவை போன்ற பற்களு மிருந்தன. விலாங்கு மீனுக்கு மேற்படியிலுள்ளதே உண்மை யான மீன். அதன் முட்கள் வயிரமடைந்துள்ளன. மிதக்கும் வாய்ப்பின் பொருட்டு அதன் உடலுள் காற்றுப்பை உண்டாயிருந்தது. அதன் உதவியைக் கொண்டு அது கடலில் நீந்தவும் கடலின் வெவ்வேறு அளவுள்ள நீரில் மிதந்து திரியவும் இயன்றது. உணவின் பொருட்டு மீன் கரைக்கு வந்தது. கடலுள் மீன்கள் பெருகின. வாழ்க்கைப் போராட்டம் கடுமை ஆயிற்று. இதனால் பல மாறுதல்கள் உண்டாயின. கடலுயிர்கள் தரைவாழ் உயிர்களாயின நிலத்தில் உயிர்கள் தோன்றிப் பெருகின. அப்பொழுது தரையில் வாழும் உயிர், நீரில் வாழும் உயிர்கள் என உயிர்கள் இரண்டாகப் பிரிந்தன. நிலத்தில் வாழும் உயிர்களிற் சில கடற்கரைகளில் உலாவின; பின்பு அவை கடலிற் சென்று வாழ விரும்பின; தரையில் வாழ்தற்கு வாய்ப்பான உறுப்புக் களைப் போக்கிக் கொண்டு நீரில் வாழ்ந்தன. இவ்வாறு இலட்சக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தபின் அவை மறுபடியும் தரையில் வாழ விரும்பின. தரையில் வாழ்ந்தபின் கடலிற் சென்ற உயிர்களிற் சில திமிங்கிலம் போல வாழ்ந்தன. திமிங்கிலத்தின் இரத்தம் வெப்பமானது. மீன் குளிர்ந்த இரத்த முடையது. முன் தரையில் வாழ்ந்த உயிர்களினின்றும் பிரிந்து கடலுக்குச் சென்றமையால் திமிங்கிலத்திற்கு வெப்பமான இரத்தமுண்டு. கடற்பசு என்னும் கடல் விலங்கு காணப்படு கின்றது. இதன் எலும்புக் கோவை, முதுகெலும்பு, சந்ததியைப் பெருக்கு வது, கன்றை ஈன்பது முதலியன வெல்லாம் தரையில் வாழும் பசுவுக் குடையவை போன்றன. எல்லா உயிர்களையும் போல மீன்களும் மூச்சுவிட்டு வாழவேண்டும். அவை செவுள் வழியாக மூச்சு விட்டன. அவை நீரிலிருந்து காற்றைப் பிரித்து எடுத்துக்கொண்டன. முது கெலும்பிலிருந்து துடுப்புகள் வளர்ந்தன. முன்புறம் வளர்ந்திருந்த துடுப்புகள் முன்னங்கால்கள் போலவும், பின்னேயிருந்த துடுப்புகள் பின்னங்கால்கள் அல்லது பாதங்கள் போலவும் இருந்தன. இவைகளின் துடுப்புகள் பூச்சிகளின் கால்கள் போலப் பொருத்துடையனவல்ல. இத் துடுப்புகள் அல்லது செட்டைகளே உறுப்புகள் வளர்வதற்கு முதற்படியிலுள்ளவை. கரையிலே வளர்ந்த நாணல்களிலும் புதர்களிலும் பலவகைப் பூச்சிகள் இருந்தன. கரைக்கு வந்த மீன் களால் மூச்சுவிட முடியவில்லை. செவுள்கள் நீருள் மூச்சு விடுதற்கேற்ற அமைப்புடையன. தரையிலுள்ள காற்றுச் செவிள் வழியாக உள்ளே செல்லமுடியாமல் இருந்தது. ஆகவே அவை செவிள்களை அப்படியே இருக்கவிட்டுத் தொண்டையில் காற்றுப் பையை வளர்த்துக் கொண்டன. இம் மூச்சுப் பையின் உதவி யைக்கொண்டு அவை தரையில் மூச்சு விடவும் நீரில் மிதக்கவும் முடிந்தது. இப்பொழுது அவை தரையில் சிறிதுநேரம் தங்கிப் பூச்சிகளை உணவாகப் பிடித்து உண்ண முடிந்தது. கடலில் நீந்தும் மீன்கள் இவை ஒன்றையும் கருத்திற் கொள்ள வில்லை. அவைகளின் சிறிய துடுப்புகள் அல்லது சிறகுகள் பெரிதாக வளர்ந்தன. மூச்சுப் பையுடைய மீன்களால் கடற்கரையில் நீந்திச்செல்ல முடியாது. அவை தவழ்ந்து சென்றன. மீன்கள் தவழப் பழகாவிட்டால் மனிதன் நடக்கப் பழகியிருக்கமாட்டான். அவைகளின் முன் துடுப்புக் களும் பின் துடுப்புகளும் வயிரமேறி நுனியில் மடிப்பு உண்டாயிற்று. அது சப்பையான கையிணைப்புடைய மணிக்கட்டுப் போன்றது. ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக அவை துடுப்புகளைக் கரையிலுள்ள சேற்றிலும் மணலிலும் ஊன்றித் திரிந்தமையால் அவை அவ்வாறு ஆயின. அவை, துடுப்புகளின் முனையை அழுத்தி விரித்துப் பயன்படுத்தினமையால் அது பிரிந்து விரல்கள் போலாயிற்று. ஒவ்வொரு துடுப்பிலும் ஐந்து விரல்களுக்கு மேல் தோன்றவில்லை. தரையில் வாழ்ந்த மீன்கள் மூச்சுப்பையில் திருத்தம் செய்து கொண்டன. அவை நிலத்தில் வாழவேண்டுமென்னும் விருப்பங்கொண்ட போதே பெரிய மாற்றம் உண்டாயிற்று. அவை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மேலும் திருத்தமுடைய சந்ததிகளைத் தோற்றுவித்தமை யால் தரையில் வாழும் நாற்காலுடைய உயிர்கள் தோன்றின. நாற்காலுடைய உயிர்களின் முதுகெலும்பு உறுதி உடையது. அவைக்கு மூச்சுப்பையும் கைகளும் கால்களும் உண்டு. அவற்றின் உறுதி யான மண்டையில் பற்கள் அமைந்திருந்தன. மீனுடைய பல் தொடக்கத்தில் செதிலாக விருந்தது. பின்பு செதில்கள் எலும்புத் தன்மை அடைந்து வாய் அலகுகளில் வலிபெற்றிருந்தன. பயன்படுத்தப்படாத செதிற் பற்கள் மறைப்புப் போன்றிருந்தன. இவற்றின் வாலிலிருந்த சிறகுகள் மறைந்து போயின. அவற்றின் பின்புறம் ஒழுங்கான வாலாக மாறிற்று. இதன்பின் பாதி நீரிலும் பாதி நிலத்திலும் வாழும் உயிர்கள் தோன்றின. இவ் வுயிர்கள் வாலினாலும் முன்கைகளாலும் நீந்திச்சென்று சிறிய மீன்களையும் பூச்சிகளையும் உண்டன; தரைக்கு வந்தபோது அவை மண்புழுக்களையும் பூச்சிகளையும் தின்றன. இவை செவுள்களையும் மூச்சுப் பையையும் பயன்படுத்தக்கூடியனவாயிருந்தன. பின்பு அவை தவளைகளைப் போலத் தமது வாலைப் போக்கிக்கொண்டன. அவற்றின் முன்கால்கள் நீளமாக வளர்ந்திருந்தன. இவ் வுயிர்கள் நிலத்தில் வாழவேண்டியிருந்த போதும் நீரிலேயே பிறந்தன. முட்டைகளை நீரிலேயே இட்டன. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்தபோது அவை செவுள்களைப் பயன்படுத்தின; மூச்சுப்பையைப் பயன்படுத்தவில்லை. அவை வாலோடு இருந்து வாலில்லாத தவளையாக வரும்போது செவுள்கள் மறைந்துபோகின்றன. வால் உள்ளே நுழைந்து மறைந்து போகின்றது. பின்னங்கால்கள் வெளியே வருகின்றன. அது உடனே தனது மூச்சுப் பையைப் பயன்படுத்து கின்றது. குறிக்கப்பட்ட ஓர் அளவு நேரத்துக்குமேல் அவைகளால் நீருள் இருக்கமுடியாது. தவளையின் கைகளில் விரல்கள் இருந்தன. தொண்டை யால் சத்தமிடும் நரம்புகள் தவளைக்கே முதல்முதல் தோன்றியிருந்தன. சில விஞ்ஞானிகள் தொண்டையால் சத்தமிடும் நரம்புகள் முதலைக்கே முதலில் தோன்றியிருந்தனவென்று கூறுவர். முதலை முட்டைக்குள் இருக்கும் குஞ்சு விநோதமான சத்தமிடும். அச் சத்தத்தைக் கேட்ட முதலை, முட்டைகள் புதைக்கப்பட்டிருக்குமிடத்திற்குச் சென்று முட்டைகளை வெளியே கிளறி எடுக்கும். ஓட்டோடு கூடிய முட்டை வழுவழுப்பான சொறி மீன்களிலி ருந்து பூச்சி இனங்கள் உண்டான வகையைப்பற்றி அறிந்தோம். பூச்சி வகைகளுள் நூல் போன்ற முதுகெலும்பு வளர்ச்சியடைந்தது. உடம்பின் முடிவு போன்ற தலையுடையதே புழு. மிருதுவான உடம்பின் முடிவு அல்லது முனை நாளடைவில் மண்டை ஓடாக வளர்ந்தது. துவாரம் போன்ற வாய் திறக்கவும் மூடவும் கூடிய அலகுகளைப் பெற்றது. அலகுகளின் ஓரங் களிலுள்ள தோலில் வளர்ந்த பற்கள் அலகுகளில் ஊன்றின. முதுகெலும்பி லிருந்து விலாவெலும்புகள் வளர்ந்தன. முன் துடுப்புகள் போன்றிருந்த செட்டைகள் புயங்களாகவும், விரல்களோடு கூடிய பகுதிகளாகவும் மாறின. கைகளின் இறுதியான வளர்ச்சி விரல்களைப் பெற்றிருப்பது. ஆரம்ப உயிர்களுக்குப் புதிதாக நினைக்கும் ஆற்றல் இல்லை. அவை இயற்கை அல்லது பரம்பரை அறிவையே (instinct) பயன்படுத்தின. ஒவ்வொரு உயிரும் தனது செயல்களில் முன்னேற முயன்று வந்தது. இதனால் அவை பற்பல இனங்களாகப் பிரிந்தன. தாவர வகையில் சிறிய ‘அல்கே’ எப்படிப் பெரிய நிழல் மரங்களாக வளர்ந்ததோ அப்படியே ஊர்ந் தும் தவழ்ந்தும் திரிந்த உயிர்களே பல்வகைத் தோற்றங்களாக வளர்ச்சி யடைந்தன. ‘தகுதியுடையது நிலைபெறுதல்’ என்னும் இயற்கை, விதிக் கிணங்க, அவை உணவு தேடுவதற்குப் போராடியபோது, நீந்தும், தவழும், ஊரும் உயிர்கள் வளர்ச்சிப் பாதைகளில் விடுபட்டன. ‘தாழ்ந்துபோ அல்லது நீந்து’, ‘உயிர்வாழ் அல்லது இறந்துபோ’ என்னும் விதிகள் எல்லாம் உணவின் பொருட்டே யன்றி விடுதலையின் பொருட்டன்று. உணவு பெற முடியாத உயிர்கள் அழவேண்டியதில்லை; ‘எனக்கு மரணத்தைத் தா’ எனக் கேட்பதே இயற்கை விதி. இயற்கை இவ் வேண்டுதலைக் கவனித்தது. உயிர்கள் நிலைபெறுவதற்கு ஒரே வழி உணவு. பதினாயிரக்கணக்கான உயிர் இனங்கள் இவ் வுலகில் அடியழிந்துபோயின. இவைகளுக்குப்பின் பல தோன்றின; அவைகளும் மறைந்தன. இவ்வாறு பல தோற்றங்களும் மறைவுகளும் உண்டாயின. இப்பொழுது பூச்சியினத்தைப் பற்றிச் சிறிது கவனிப்போம். பூச்சிகள் மிகமிகப் பெரிய கூட்டங்களாகப் பெருகின. அவை நீரில் வாழ்தல் அளவில் நில்லாமல் நிலத்திற்கு வந்தன. கடல் தேள் நிலத் தேளாகவும், கடல் தெள்ளு(lice) மரத் தெள்ளாக வும் மாறின. நண்டுகள் பல குடும்பங் களாகப் பிரிந்தன. நீர்ச்சிலந்தி தரைச் சிலந்தியாக மாறிற்று. அது வலை பின்ன இன்னும் அறிந்து கொள்ள வில்லை. உயரப் பறப்பவைகளுள் தும்பி அரசனாக விருந்தது. அது சிறகுகளை விரித்தால் ஒரு முனையிலிருந்து மற்ற முனைக்குள்ள நீளம் முப்பது அடி அளவிலிருந்தது. பச்சை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு நிறமுடைய பறக்கும் உயிர்களால் வானம் நிறைந்திருந்தது. அவை நீரில் மிதக்கும் மீன்களின் முட்டைகள், புழுக்கள், நீர்ப்பூச்சிகள் முதலியவைகளை உண்டு வாழ்ந்தன. அவற்றிற்கு நீரில் வாழும் விருப்பும் உண்டு. சிறியனவாயிருக்கும் போது அவற்றிற்குச் செவுள்கள் உண்டு. தவளை முட்டைகளைப் போலத் தும்பிகளின் முட்டை தண்ணீரில் பொரிக்கும். சிறிய தும்பிகளுக்குச் செவுள்கள் உண்டு. அவை செவுள்களால் மூச்சுவிடும். மூர்க்கமுள்ள இவை ஒன்றை ஒன்று பிடித்து உண்டன. தும்பியின் செட்டைகள் உறுதியானவை யல்ல. வாலுள்ள தவளைக் குஞ்சுகள் வாலை நீக்கிவிட்டுத் தவளையாக மாறும்போது செவிள் மறைந்துவிடுகின்றது; அது போலச் செட்டை முளைக்கும்போது சிறு தும்பிகளுக்குச் செவுள்கள் மறைந்துபோகின்றன. தும்பிகளின் செட்டைகளை உண்மையான செட்டைகள் என்று சொல்ல முடியாது. நண்டு காலத்துக்குக் காலம் தனது ஓட்டை மாற்றிக்கொள்வது போல இவையும் காலத்துக்குக் காலம் தமது தோலை மாற்றிக்கொண்டு புதிய தோலுடன் வெளிவருகின்றன. பார்வைக்கு வெறுப்புத் தரும் இன்னொரு பூச்சியும் அங்குக் காணப்பட்டது. அதற்குப் பெரிய செட்டைகள் உண்டு; ஆனால் அவை பறப்பதற்காக அமைந்தவையல்ல. அது இரைந்து கொண்டு புதர்களில் இருந்தது. அது நிலத்திற் குதித்த போது விரை வாக ஓடிற்று. அது கரப்பான் பூச்சி (cockroach) எனப்படும். அது தும்பியிலும் பார்க்கப் பெரியது; வான்கோழிச் சேவலளவு பருமையுடையது. அதன் சந்ததியில் வந்தவை களே பத்திலட்சக்கணக்கான ஆண்டுகளின் பின் நமது அடுக்களைகளிற் காணப்படுகின்றன. பூச்சிகளின் உள்ளுடல் மிருதுவானது. அவைகட்கு எலும்புகள் இல்லை. அவற்றின் பகுதி பகுதியான உடலமைப்பின் பொருத்துகளுக்கு வெளியே உறுப்புகள் வளர்ந்தன. அவற்றின்மேல் உடலை வயிரமான கவசம் மூடியிருந்தது. பூச்சிகள் தம் வாழ்க்கையின் பொருட்டு மற்ற உயிர் களோடு போராடிய தன்மைகளால் அவற்றின் வடிவம் நிறம் முதலியன மாறுதலடைந்தன. அவற்றிற்கு அடுத்தபடியில் ஊரும் பிராணிகள் தோன்றின. நீரிலிருந்து வெளியே வந்த மீன்கள் பாதி மீனும் பாதி மீனல்லாதவுமாகிய மூச்சுப் பையினால் மூச்சுவிடும் உயிர்களாக மாறின; இவையே முதல் தோன்றிய நாற்கால் உயிர்கள். இவ்வாறு, பகுதி நீரிலும் பகுதி நிலத்திலும் வாழும் உயிர்களே ஓடுள்ள முட்டைகளை இட்டன. வெளியிலே குஞ்சு பொரிக்கும் முட்டை போன்றவைகளை எல்லாம் நாம் முட்டைகள் என்று நினைக்கிறோம். நீரில் வாழும் உயிர்களின் முட்டைக்கும் தரையில் வாழும் உயிர்களின் முட்டைக்கும் வேறுபாடு உண்டு. பல்லிகள் அல்லது ஊர்வன முட்டையிடத் தொடங்கியபின் பல ஊரும் உயிர்க் குடும்பங்கள் தோன்றின. தவளையிலிருந்து சலமான்டர் போன்றவை தோன்றின. பலவகைப் பல்லிகள், பாம்புகள், முதலைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமைகள் இன்று காணப்படாத இன்னும் மிகப் பல உயிர்கள் வாழ்ந்தன. சலமான்டர்1 அல்லது தவளைதான் ஓட்டோடு கூடிய முதல் முட்டையை இட்டிருத்தல் வேண்டும். நீரில் இடப்படும் முட்டைக்கு மெல்லிய வெளிச்சவ்வு மாத்திரமுண்டு. நீரில் இடப்பட்ட முட்டைகளில் தோன்றிய உயிர்கள் முன்னேற்றமடையவில்லை. ஓட்டோடு கூடிய முட்டை என்பது காய்ந்த தரையில் குஞ்சு பொரிக்கக்கூடியதே. முட்டைகளிலிருந்து பொரித்த குஞ்சுகள் மூச்சு விடுவதற்குச் செவிள்கள் வேண்டியதில்லை. ஓடுள்ள முட்டையில் தோன்றிய உயிர்கள் பல்லி இனங்களிற் சில தமது கால்களைச் சிறிது சிறிதாக உள்ளுக்கு இழுத்துக்கொண்டன. இறுதியில் அவை வெளியே தெரியாதபடி மறைந்து போயின. பின்பு கால் இல்லாத பல்லிகள் தாம் விரும்பிய அளவுக்கு உடலை வளர்த்துக் கொண்டன. அவை பாம்புகளாயின. பெரிய உயிர் களுக்கு அகப்படாதபடி புதர்களில் வளைந்து சென்று மறைந்து கொள்வ தற்கு இவ்வகை உடல் ஏற்றதாக விருந்தது. இன்றும் சில பாம்புகளுக்குக் கால்களின் அடையாளங்கள் காணப்படுகின்றன. பாம்பாக மாறிய பல்லிகள் எல்லாம் உயிர் பிழைக்கவில்லை; சுறுசுறுப்பும் வலிமையும் உள்ளவையே பிழைத்தன. கடலில் மிகப் பெரிய மீன் பல்லிகள் வாழ்ந்தன. இவை நாளடைவில் மறைந்துபோயின. கடற் பல்லிகள் வயிற்றினுள்ளே முட்டை யைப் பொரித்துக் குட்டியை வெளியே ஈன்றன. குட்டிக்குப் பால் கொடுக்கும் விலங்குகள் பல்லிகள் போன்ற ஊரும் உயிர்களிலிருந்து பிறந்தன. ஊரும் உயிர்கள் முட்டைகளை இட்டுக் குஞ்சு பொரிக் கும்படி அவைகளை வெய்யில் வெப்பத்தில் விட்டன. குட்டிக்குப் பால்கொடுக்கும் விலங்கோடு ஊர்வதை ஒப்பிட்டால் பின்னது குட்டிகளுக்கு வளர்ப்புத்தாய் போன்றது. குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்கே உயிர்களுக் கெல்லாம் உண்மையான தாய். ஊரும் உயிர் சிலவற்றுக்கு நல்ல இரத்தத்தைக் கெட்ட இரத்தத்திலிருந்து பிரிக்கக்கூடிய இருதயம் வளர்ந்தது. குட்டிக்குப் பால் கொடுக்கும் ஆதி உயிர்கள் சிறியனவாயிருந்தன. பெரிய ஊரும் உயிர்கள் இவைகளை வேட்டையாடி உண்டன. தகுதி உடையது நிலைபெறுதல் என்னும் இயற்கை விதிக்கேற்ப அவை வாழ்தற்கு மிக முயன்றன. வெய்யிற் சூட்டினால் முட்டையிலிருந்த குஞ்சு பொரிக்கும் ஊர்வனவுக்கு ஞாபக சக்தி குறைவு. தாய்ப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்குகளுக்கு தம் மினத்துக்குரிய ஞாபகம் அதிகம் உண்டு. ஒரு பல்லியை அல்லது ஒரு பாம்பைக் காணும்போது நமக்கு வெறுப்புணர்ச்சி உண்டாகின்றது. ஊர்வனவெல்லாம் பாலூட்டி வளர்க்கப்படும் உயிர்களுக்கு ஒரு காலத்தில் பகையாயிருந்தன என்னும் பழைய ஞாபகம் நமக்கு இருப்பதுதான் இதற்குக் காரணம். முற்காலத்தில் மிகமிகப் பெரிய ஊர்வன குளங் குட்டைகளில் உலாவித் திரிந்தன. நாங்கள் நினைத்துப் பார்க்கமுடியாத அவ்வளவு பயங்கரமாக அவைகளின் வடிவு இருந்தது. எல்லாவற்றிலும் மேற்படியிலுள்ள உயிர்களைத் தவிர மற்றவை எல்லாம் ஒவ்வொரு வகை உணவை உண்டு வாழத் தொடங்கின. கண்ட வற்றை எல்லாம் உண்டு வாழ்ந்த ஆதி உயிர்களின் வாழ்க்கை இலகுவாக விருந்தது. ஒவ்வொரு வகை என்றது பூச்சிகள், நத்தைகள், இறைச்சி முதலிய வைகளைக் குறிக்கும். முற்காலக் கடற்பல்லி அக்காலத்தில் தோன்றியிருந்த பெரிய கணவாய் மீன்களை மாத்திரம் உண்டு வாழ்ந்தது. ஒவ்வொரு வகை உணவையே உண்டு வாழ்ந்த உயிர்கள் அவ்வகை உணவு கிடையாதபோது மறைந்து போயின. பெரிய உயிரினங்கள் தாவரம் ஊன் என்பவைகளில் ஒன்றை உண் கின்றன. பாம்பு பூச்சிகளை உண்கின் றது; புல்லை உண்பதில்லை. முற் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய உயிர்கள் தாவரங்களையே உண்டன. முற்காலத்தில் இடியேற்றுப்பல்லி (Thunder lizard) என்னும் ஒருவகை உயிர் வாழ்ந்தது. அதன் வாலின் நீளம் முப்பதடி; உடலின் நீளம் எண்பதடி. இன்று இடியேற்றுப்பல்லிகள் காணப்படவில்லை. அவை குளங்களுக்குக் கீழே வளர்ந்த நீர் அல்லிகளை உண்டு வாழ்ந்தன. இகுவானோடன்(Igunanodon) என்னும் ஒருவகைப் பல்லியும் தோன்றி வாழ்ந்தது. இதன் கழுத்துக் குறுகியது. இதன் மூளையும் அற்பமானது. இடியேற்றுப் பல்லிக்கும் இகுவானோடன் என்னும் பல்லிக்கும் மூளை வாலில் வளர்ந்திருந்தது. இடியேற்றுப்பல்லி பின்னங்காலில் நின்று மரங்களின் இலைகளை உண்டது. முதுகிலே வாள் போன்ற சதை வளர்ந்த பல்லிகளும் வாழ்ந்தன. மேல் வாயில் கொம்புகளுடைய பல்லிகளும் வாழ்ந்தன. சில பல்லிகளுக்குத் தோல் அழுத்தமாக விருந்தது. மீன்களை உண்டு வாழும் பல்லிகளுக்கு நன்கமைந்த பற்களிருந்தன. தாவரங்களை உண்டு வாழ்ந்த பல்லிகளுக்குப் பாரமான எலும்புகள் அமைந்திருந்தன. அவைகளின் பல ‘டன்’ பாரமுள்ள உடலைத் தாங்கு தற்கு அவ்வகை எலும்புகளே தேவை. ஊனுணவை உண்ணும் பல்லிகளின் எலும்புகள் பாரங் குறைந்தனவா யிருந்தன. பாம்புபோல் நீண்டு வளர்ந்த பல்லிகள் தமது கால்களைத் துடுப்புகள் போல ஆக்கிக்கொண்டன. இவை களிலிருந்து முதலைகள் தோன்றின. மரங்கள்மீது பறக்கும் முதலை கள் காணப்பட்டன. இவை சிறிய பல்லி இனங்களிலிருந்து வளர்ச்சி யடைந்தவை. பூச்சிகள் மரநுனிகளில் பறந்து திரிந்தன. ஆமைகளைப் போன்று கவசம் பெற்ற பல்லிகள் சில மரத்தின் அடிமீது உடலைச் சார்த்தி மரத்தின்மீது ஏறிப் பழங்களை உண்டன. இப் பல்லிகள் மரத்தினின்றும் குதித்து அபாயத்துக் குள்ளாதல், பகைகளுக்கு இரையாதல் போன்ற ஆபத்தினின்றும் தப்பிக் கொள்வதற்காக விரல்களின் இடைகளில் சவ்வை வளரச்செய்தன. முன்னங்காலில் வளர்ந்த சவ்வு பின்னங்காலோடு இணைக்கப்பட்டிருந்தது. மரத்தில் வாழும் பல்லிகள் இச் சவ்வைச் சிறகு போல் விரித்துக்கொண்டு மரத்திலிருந்து நிலத்திற்கு இறங்கிப் பகைகளி னின்றும் தப்பக் கூடியதாக இருந்தது. மரத்தினின்றும் குதிப்பதாலுண்டாகும் அபாயம் அதற்கு நீங்கிற்று. இவ்வாறு தப்பிப் பிழைத்தவைகளுள் வலியுடை யவை பெரியவைகளாக வளர்ந்தன. இவை வெப்ப மண்டலங்களில் வாழ்ந் தமையால் பறக்கும் முதலைகளாக மாறின. பெரிய உடம்பை மேலே ஆகா யத்தில் மிதக்கச் செய்வதற்குப் பெரிய செட்டைகள் தேவையாயிருந்தன. பறக்கும் முதலைகள் வெளவாலின் செட்டைகள் போன்ற செட்டைகளுடன் இருபது அடி நீள முடையனவாயிருந்தன. இவை மேலே பறந்து திரியும் பூச்சி களைப் பிடித்து உண்டன. அவைகட்குப் பற்கள் இல்லை. பறக்கும் முதலை தனது வாலைப் போக்கிக்கொண்டது; பின்னங் கால்களையும் உடலுக்குள் இழுத்துக் கொண்டது. அதற்குப் பின்னங்கால்கள் தேவைப்படவில்லை. அதன் எலும்புகள் உள் துளை உடையனவாய் பாரம் குறைந்தவை. தடித்த தோலுக்குப் பதில் பட்டுப் போன்ற மெல்லிய தோல் உண்டாயிற்று. இப் பறக்கும் முதலை செட்டைகளை விரித்தபோது இருபதடி நீளமுள்ளதாயிருந்தது. இப் பறக்கும் முதலை விரைவில் மறைந்துபோயிற்று. சவ்வு போன்ற செட்டையை வளர்த்துக் கொண்ட எல்லாப் பல்லி களும் முற்காலப் பறக்கும் முதலை போலிருக்கவில்லை. இவைகளில் மிகவும் வெறுப்புத் தருவது பல்லி வெளவாலே. இது தனது பல்லைப் போக்கிக் கொள்ளவில்லை. கடலாழத்தில் முதன்முதல் மூச்சுப்பை யுள்ள மீன்கள் கரைக்கு வந்தன. இயற்கை அவற்றின் உடலை வயிர மடையச் செய்தது. புகைமயமான அலைகள் மறைந்தன. பவளப் பாறைகளில் பச்சை, கருஞ்சிவப்பு, சிவப்பு முதலிய நிறங்களுடைய கடற்சாதாழைகள் வளர்ந்தன. கடற்பூ(Sea anemones), கடற் சிவப்பு(Sea pinks) என்பவை பாறை அடிகளிற் செழித்து வளர்ந்தன. இவை பாதி தாவரமும் பாதி அசையு முயிராகவும் இருந்தன. இவை ஊர்வது போன்ற அசைவுடன், பாம்பு ஆயிரந் தலைகளை நீட்டுவது போலத் தமது விரல்களை உணவின் பொருட்டு நீட்டிக்கொண்டிருந்தன. வியப்பான கடல் அல்லிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கூட்டமாகக் கடலின் கீழ் வாழ்ந்தன. ஞாயிற்றின் ஒளி அப் பூக்கள் மீது பட்டவுடன் அவை அசைந்தன. பாறைகளின் வெடிப்புகளில் பல சிறிய உயிர்கள் தங்கி வாழ்ந்தன. சிறிய கணவாய் மீன்கள் வில்லிலிருந்து விடுபட்ட அம்பைப் போலப் பின்னோக்கி நீந்திச் சென்றன. சுருள் வடிவான ஓடுடைய நத்தை இனங்களும் வாழ்ந்தன. இவை நான்கு அல்லது ஐந்து அடிச் சுற்றள வுடையன. இவை, வானவில், வெள்ளி, பொன் நிறங்களுள்ள மீன்கள் வருவதை வட்டமான கண்களால் பார்த்துக்கொண்டு திறந்த வாய்களுடன் மறைவிற்கிடந்தன. அங்குமிங்கும் கூட்டமாகக் கடற் சாதாழைகள் கிடந்தன. ஒரு கடற்சாதாழைக் கூட்டத்திலிருந்து இன்னொரு கடற் சாதாழைக் கூட்டத்துக்குக் கடற் பாம்புகள் விரைவாக நீந்திச் சென்றன. சிறிது விறைப்பான முதுகெலும்புடைய புழுக்களிலிருந்து சுறா, திருக்கை முதலிய மீன்கள் தோன்றின. முற்காலத்தில் மிகமிகப் பெரிய சுறா மீன்கள் வாழ்ந்தன. அவைகளுட் பெரியது நாற்பத்தைந்தடி நீளமுள்ளது. அதன் பருமைக்கு ஏற்றதாக வாயுமிருந்தது. இவ் வகைச் சுறா மீனிலிருந்து பல்லில்லாத மீன்களும் பல்லிகளும் தப்பிப் பிழைப்பது கடினமாயிருந்தது. சுறா மீன்களுக்குப் பின் வாள்மீன்கள் தோன்றின. தமது மூக்கை நீண்ட குத்தும் ஆயுத மாக வளர்த்துக்கொண்ட சுறாமீன் களே வாள்மீன்களாகும். அவற் றின் வாள் ஐந்தடி நீளமுள்ளதாக விருந்தது. அவை திமிங்கிலம் போன்ற பெரிய மீன்களைத் தாக்கி அவற்றின் குடலை உண்டன. கடலுள் பெரிய திருக்கை மீன்களும் உலாவித் திரிந்தன. இவைகளின் உடல் வட்டமாகவும் அழுத்தமாகவும் இருந்தது. மின்சாரஅலை வீசும் மீன்கள் பல வாழ்ந்தன. இம் மீன்களின் நரம்புகளில் மின்சக்தி இருந்தது. அவை மின்சக்தியைச் செலுத்திக் கிட்ட வரும் சிறிய மீன்களைக் கொல்லத்தக்க ஆற்றல் பெற்றிருந்தன. திருக்கை மீன்களின் வாலில் முட்கள் இருந்தன. அது வாலை வீசி மீன்களை வெட்டிற்று. பசாசு மீன்(Devil Fish) எனப்பட்ட பெரிய திருக்கை மீன்கள் வாழ்ந்தன. இவை இருபது அடிக்குமேல் நீள முடையன. இவைகளின் வால் வீச்சு ஆழமாக வெட்டக்கூடியது இவை கடல் ஆழத்தில் சுழி ஓடிச்சென்றன; மறுபடியும் தமது 1,500 அல்லது 2,000 இராத்தல் சுமையுள்ள பாரமான உடலோடு கடலுக்கு மேலே சில அடிகள் எழும்பிக் கீழே விழுந்தன. இதனால் பக்கங்களில் பெரிய அலைகள் உண்டாயின. இவ்வாறே திருக்கை மீன்கள் இந்தியக் கடல்களிலும் ப்ளாரிடா(Florida) கடற்கரைகளிலும் விளையாடுகின்றன. இதன்பின் கணவாய்மீன் குடும்பங்கள் வருகின்றன. கணவாய் மீனுக்கு உறிஞ்சும் வழுவழுப்பான பத்துக் குழாய்கள் உண்டு. அது இவை களால் தான் உண்ணக்கூடிய இரையைப் பிடித்து வாய்க்குக் கொண்டுவரு கின்றது. அது கடலாழத்திலே மணல் பரந்த தரையின் கிட்டச் செல்லும் போது அங்கு உலாவும் சிறிய கணவாய் மீன்களையும் பிற சிறிய மீன்களை யும் பிடிக்கின்றது. தனக்கு ஆபத்து நேரும்போது அது ஒரு வகை மையைக் கக்குகின்றது. இம் மை அதனைத் துரத்திவரும் மீனுக்கும் அதற்கும் திரை மறைப்புப் போலப் பயன்படுகின்றது. அதனைத் தொடர்ந்து வந்த மீன் அதனைப் பார்க்கமுடியாமையால் திரும்பிச் செல்கின்றது. குளிர்காலம் வந்தபோது இன்று இவ்வுலகில் வாழ்கின்ற உயிர்களெல்லாம் உலகில் தோன்றிய பெரிய குளிர் காலத்திற்குப் பிழைத்து வந்தவையே. வெப்ப காலம் பத்திலட்சக்கணக்கான ஆண்டுகள் இருந்தது. வெப்பமான கடலுள் உயிர்கள் நிறைந்திருந்தன. அவை சுறா, திருக்கை, திமிங்கிலம், பாம்பு, பல்லி போல்வன. கடலில் மிதக்கும் முட்டைகளை நீரோட்டங்கள் ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் கொண்டு சென்றன. கடற்கரைகளில் அவை குஞ்சு பொரிப்பதற்கு ஆயத்தமாக இருந்தன. கோடிக்கணக்கான அம் முட்டைகளுள் சிலவே குஞ்சு பொரித்தன. நீரிலும் தரையிலுமுள்ள பூச்சிகள் அம் முட்டைகளிற் பெரும்பகுதியை உண்டன. பூச்சிகள் பூச்சிகளையும் ஊரும் உயிர்களையும் உண்டன. முடிவில்லாத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. நாணல், பாசி, செடிகள் முதலியவை கீழே வேரைச் செலுத்தி ஒன்றை ஒன்று அமுக்கிக் கொன்றன. இறக்கை உள்ள பூச்சிகள் வானத்தில் தமது இரையைத் துரத்திச் சென்றன. ஊர்வன ஒன்றை ஒன்று பிடித்துத் தின்றன. இவ்வாறு முடிவில்லாத கொலை நடைபெற்றது; நடைபெறுகின்றது. தாவரங்கள் இறந்தவைகளின் என்பு சதைகளிலிருந்து உணவை இழுத்து வளர்கின்றன; தாவரங்களை உண்டு வாழும் உயிர்கள் மறுபடியும் அவற்றை உண்டு வாழ்கின்றன. பத்து லட்ச ஆண்டுக்கணக்கான கோடை காலத்தில் உயிர்கள் எல்லாம் உண்ணக்கூடிய அளவு உணவு நிறைந்திருந்தது. உயிர்கள் நெருக்கமடைந்தன. இப் பூமி ஒரே கொலைக் களம்போல் மாறுதலடைந்தது. பற்களும் நகங் களும் ஒன்றை ஒன்று கிழிப்பதில் ஓயவில்லை. இரத்தந் தோய்ந்த நிலத்திலிருந்து புதிய உயிர்கள் தோன்றின. மாரி வந்தது. பல்லாயிர ஆண்டுகளாக குளிர் அலை அலையாக வந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு அலையும் முன்னதிலும் பார்க்கக் குளிராக விருந்தது. பல ஆயிரம் அடி உயர முள்ள மலைத்தொடர்கள் தோன்றியிருந்தன. பூமியைச் சுற்றியிருந்த நீராவிமயமான போர்வை மறைந்தது. நிலத்திலிருந்தும் பயிர் பச்சை களிலிருந்தும் நீராவியாக மாறிய நீர் முகிலாக மிதந்தது. முகில் மறுபடியும் நீரை மழையாகப் பொழிந்தது. நீர் வற்றியிருந்த நீர்நிலைகள் நீரால் நிறைந் தன. மலைகளினின்றும் வடிந்து ஓடும் நீர் பெரிய ஆறுகளை உண்டு பண்ணின. தேங்கிக் கிடக்கும் நீருக்குப் பதில் நீர் ஓட்டங்கள் இருந்தன. பெரிய காடுகள் நடுங்கின; குளிர் அலைகளால் எண்ணில்லாத உயிர்கள் மடிந்தன. குளிரைத் தாங்கும் வன்மையுடைய உயிர்கள் நிலை பெற்றன. முதற்குளிர் அலையைத் தொடர்ந்து இன்னொரு குளிர் அலை வந்தது. உணவு சுருங்கிற்று. வாழ்க்கை கடுமையாயிற்று. அங்கும் இங்கும் சில முரடான உயிர்கள் குளிரைத் தாங்கும் பழக்கம் அடைந்தன. அவை குளிர் காலத்தை இயற்கை நிகழ்ச்சியாக வரவேற்றன. சில உயிர்கள் வெப்ப மான இடங்களை நாடி நீண்ட பயணஞ் செய்தன. இறுதியில் அவை வெப்ப முள்ள இடங்களை அடைந்தன. இவ் வுலகின் எல்லா இடங்களிலும் ஒரே காலத்திற் குளிர்காலம் இருக்கவில்லை. மலைகளிலிருந்து உறைபனி கீழே வந்தது. அது கீழே நிலத்தில் பரவிச் சென்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகள் ஒருகாலத்தில் உறைபனியால் மூடுண் டிருந்தன. உறைபனி மூடாத இடங்களில் கோடைகாலம் இருந்தது. வெப்ப இடங்களுக்குச் சென்ற மீன்கள், ஊர்வன, நத்தைகள், நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர்கள் பிழைத்தன. அசையும் உயிர்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதே தாவர உயிர் களுக்கும் ஆசியாவில் நிகழ்ந்தது. ஆஸ்திரல் ஆசியாவில் பழங்கால உயிர்கள் சில இன்றும் காணப்படுகின்றன. நியுசிலாந்தில் இன்று பாசி, பூண்டுக் (fern) காடுகள் காணப்படுகின்றன. முதற் குளிர்காலம் உண்டானபோது தாவரங்கள் அசைய முடியாமல் இருந்தன. ஒரு குளிர்காலத்திற்குப்பின் மறு குளிர்காலம் வந்தது. அப்பொழுது அவை வயிரமடைந்து உரம் பெற்றன. பத்து இலட்சம் ஆண்டுகளாக ‘வேண்’(fern) என்னும் பூண்டுகள் மட்டம் விட்டுக் கிளைத்தன. விதை தோன்றாத காலத்தின் பின் பல்லாயிரக்கணக் கான தாவரங்களில் விதைகள் தோன்றின. நியுசிலாந்தில் பழங்காலத்து வேண்(fern) பூண்டுகளும் ஊர்வனவும் பிழைத்திருத்தல் தகுதியுடையது நிலைபெறும் என்பதற்கு எடுத்துக்காட்டாகின்றது. தாயன்பு முதற் குளிர் காலத்திற்குப் பிழைத்திருந்த பூச்சிகளும் மீன்களும் மற்றும் உயிர்களும் தமது இனங்களைப் பெருக்கின. நீரிலிருந்து வெளியே வந்த பல்லிகள் இப்போது முட்டையிடாது குட்டி யீனும் உயிர்களாக மாறின. ஊர்வனவுக்கு மூன்று அறைகளுள்ள இருதயமுண்டு. குட்டியீனும் உயிர்களுக்கு நான்கு அறையுள்ள இருதயமுண்டு. மூன்று அறை இருதய முள்ள ஊர்வன குளிர்ந்த இரத்தமுடையன. ஊர்வன வாழ்ந்து பெருகுவதற்கு வெளியில் வெப்பம் வேண்டும். குளிர்காலம் மறைந்ததும் வெப்பகாலம் வந்தது. குளிரினால் வாடிக் கொண்டிருந்த தாவரங்கள் உயிர்பெற்றன. குளிருக்குப் பிழைத்திருந்த பூண்டுகள் வளர்ந்தன. பூமியின் பெரும் பகுதி நீருள் மறைந்தது. அங்கு மிங்கும் வெளியே தெரிந்த பகுதிகளில் வளர்ந்த பச்சை நிறச் செடிகளில் பூக்கள் உண்டாயின. வெப்ப காலத்தில் ஊரும் உயிர்கள் நன்றாக வாழ்ந்து பெருகின. மறுபடி குளிர்காலம் வந்தபோது வாழத் தகுதியுடையவை சில இருக்க மற்றவை மறைந்துபோயின. பனிக்காலம் மறைதலும் இன்னும் ஒருமுறை ஊரும் உயிர்கள் பெருகின. குளிருள்ள இடங்களில் வாழ்ந்த உயிர்களிற் சில சுறுசுறுப்புடையனவாய் நிலத்தைத் துளைத்துச் சென்றும், மரங்கள் மீதேறியும் வாழ்ந்தன. இவை வெப்ப இரத்தமுள்ள உயிர்களாக மாறின. தோலில் மயிர் வளர்ந்தது. மயிர் அவைகளுக்கு வெப்பமளித்தது. மயிர்களைச் சுற்றி மயிர்த் துவாரங்கள் தோன்றின. மயிர்த்துவாரங்களி லிருந்து தாய், குட்டிக்கு பால் கொடுக்கும் உறுப்புகள் வளர்ந்தன. உடம்பில் மயிருள்ள உயிர்களிலிருந்து உண்மையான தாய்மை உண்டாயிற்று. இன்றும் மனிதக் குழந்தை பிறப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்தொட்டு அதன் உடம்பில் மயிர்கள் தோன்றுகின்றன. மயிர்த் துவாரங்கள் எப்படிப் பால் கொடுக்கும் உறுப்புகளாக வளர்ந்தன? படிப்படியே மேல்நிலை அடைந்த உயிர்களிற் பல இவ்வுலகிற் காணப்படுகின்றன. குட்டிக்குப் பால் கொடுக்கும் உயிர்களில் மிகக்கீழ் நிலையிலுள்ளவை தாராச் சொண்டுடைய நீர் அகழான் (Duck-billed water mole.), முள் மயிருள்ள எறும்பு தின்னி (Porcupine ant-eater) என்பவை. இவ்விரண்டு வகை உயிர்களும் ஆஸ்திரேலியாவிற் காணப்படுகின்றன. இவைகளின் கழிவுப் பொருள்கள் வெளியே செல்வதற்கு ஒரு வாயில் மாத்திரம் உண்டு. இவ்வுயிர்களில் ஒன்றுக்கு மயிருண்டு; மற்றதுக்கு முள் உண்டு. இவை முட்டை இடுகின்றன. அம் முட்டைகள் ஊரும் பிராணிகளின் முட்டைகளைப் போலவே வெய்யில் வெப்பத்தால் பொரிக்கின்றன. குஞ்சுகள் முட்டைக்குள் இருந்து வெளியே வந்தபின் தாய் முதுகைக் கீழே திருப்பிக்கொண்டு கிடக்கின்றது. குட்டிகள் தோலிலுள்ள பெரிய சில துவாரங்கள் வழியாக உணவை உறிஞ்சுகின்றன. அத் துவாரங்களின் கீழ் உணவுச் சத்துப்பொருள் உள்ளது. இத் துவாரங்களிலிருந்தே குட்டிகள் பால் உறிஞ்சும் முலைக்காம்புகள் தோன்றின. வேறு உயிர்கள் இதற்கு அடுத்த படியிலுள்ள வளர்ச்சியைக் காட்டுகின்றன. தென்னமெரிக்காவில் ஒப்பாசும் (Opossum) என்னும் அணில் போன்ற உயிரும் எறும்பு தின்னிகளும் வாழ் கின்றன. சிறிய எலி, முயல், அணில், தாஸ்மேனிய ஓநாய், கங்காரு முதலியவை குளிர்கால முடிவில் பிழைத்திருந்த குட்டிக்குப் பால் கொடுக் கும் விலங்குச் சந்ததியிலுள்ளவை. அவைகளுட் சில மரத்திலும், சில நிலத்திலும் வளை தோண்டியும் வாழ்ந்தன. இவைகட்குக் குட்டிக்குப் பால் கொடுக்கும் உறுப்புகள் வளர்ந்தன. அவை அதற்குப்பின் முட்டையிட வில்லை. தாயின் வயிற்றினின்றும் வெளியே வந்தவுடன் தாமாக உணவு தேடி உண்டு வாழக்கூடிய நிலையில் அவை குட்டிகளை ஈனவில்லை. குட்டிகள் தாய் வயிற்றினின்றும் உதவியற்ற நிலையில் வெளியே வந்தன. ஒரு வெள்ளாட்டின் பருமையுள்ள கங்காருவின் குட்டி ஒரு அங்குலப் பருமையுடையது. குட்டி தாயின் வயிற்றிலுள்ள பைக்குள் விழுந்தது. வெளியே பாயக்கூடிய பலம் அடையும் வரையும் அது இருந்தது. ஒரு அங்குலப் பருமையுடைய கங்காருக் குட்டி தாயின் பைக்குள் இருந்து பால் குடித்து வளர்கின்றது. இவ் வகை விலங்குகளின் முலைக் காம்பு பெரிதாய் வளர வளர விலங்குகளும் மேல் நோக்கி வளர்ந்தன. விலங்குகளின் குட்டிகள் தாய்ப்பாலோடு தமது குலமுன்னோர் பயின்றிருந்தவைகளை எல்லாம் இயற்கை உணர்ச்சி(instinct) ஞாபகமாக உறிஞ்சுகின்றன. தாயினாலேயே மூளை வளர்ச்சியடைந்தது. அவ் வளர்ச்சி அவைகளின் இனத்திடத்துப் பற்றை உண்டாக்கிற்று. தாயன்பு காரணத்தி லிருந்தே விலங்குகள் பொதுப் பாதுகாப்பின் பொருட்டுக் கூட்டமாகத் திரிகின்றன. பாதையில் பிரிவு கடலிலும் குட்டிக்குப் பால் கொடுக்கும் விலங்குகள் வாழ்கின்றன. அவை கடல் நாய்(seals), திமிங்கிலம், வால்ரஸ்(walrus) என்பன. வால்ரஸ் நீர்நாய் இனத்தைச் சேர்ந்தது. இதற்கு யானையின் தந்தங்கள் போல வளர்ந்த பற்களுண்டு. இவைகளால் அது புற்றுகளை நன்றாகத் தோண்டி நண்டு களையும், நத்தைகளையும் பிடித்துத் தின்னவும், பனிக்கட்டிமேல் ஏறவும் தன் இனத்தவைகளோடு எதிர்த்துச் சண்டையிடவும் முடியும். கடற்பசு சூடான நாடுகளிலுள்ள ஆழமற்ற பரந்த வாவிகளிலும், குடாக்கடலிலும் ஆறுகளிலும் வாழும். பசுமாடுகள் புல்வெளிகளில் புல் மேய்வதுபோல இவை கடலின் கீழுள்ள தாவரங்களை உண்கின்றன. வட பசிபிக் கடலில் வாழ்ந்த கடற் பசுக்கள் அவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெயின் பொருட்டுக் கொல்லப்பட்டன. தண்ணீரில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது திமிங்கிலம். இது மீனினத்தைச் சேர்ந்தது என்று சிலர் நினைக்கின்றனர். மாடு அல்லது குதிரை எப்படி மீன்களல்லவோ அப்படியே திமிங்கிலமும் மீனன்று. ஊர்வன முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் மேல்காற்றை அடைய விரும்புகின்றன. அவை விரும்பியவாறே ஒரு வகையில் அடைந் தன. பறக்கும் பல்லிகளும் பறக்கும் முதலைகளும் சவ்வு சம்பந்தமான செட்டைகள் உடையனவாயிருந்தன. அவை வளைந்து வளைந்து பறப்பதும் செட்டையை அடித்துக் கொள்வதும் உண்மையான பறத்தல் ஆகமாட்டாது. விலங்குத் தன்மையுள்ள உயிர்களிற் பல முட்டைகள் இட்டுக் கொண்டிருந்தன. அவை உண்மையான விலங்குகளாக மாறுவதற்கு உடம்பில் மயிர்த்துவாரங்களை உண்டாக்க முயன்று கொண்டிருந்தன. ஒப்பாசம், எலி, அகழான், முயல் என்பவை குளிர்கால முடிவிலிருந்து வாழ்வதற்கு மிக முயன்றுகொண்டிருந்தன. உண்மையான பல்லிகள் மிகச் சுறுசுறுப் படைந்தன. ஊர்வனவிற் சில பறக்கும் பல்லியைப் போல ஆகாயத்துக்குத் துரத்தப்பட்டிருக்கலாம். அவை பறக்கும் பூச்சிகளை அல்லது பறக்கும் மீன்களைப் பிடித்து உண்ண அல்லது தமது பகைகளிலிருந்து தப்பிக்கொள்ள அவ்வாறு செய்திருக்கலாம். வானத்திற் பறந்த பல்லிகளிலிருந்து முதன்முதற் பறவைகள் தோன்றின. முதல்முதல் தோன்றிய பறவை பல்லிக்கும் விலங்குக்கும் இடைப்பட்டதாயிருந்தது. பறக்கும் பல்லிகள் விரல்களிடையே சவ்வை வளர்த்திருந்தன. பறவைக ளாக மாறிய ஊர்வன முன்னங்கால்களைச் செட்டைகளாக மாற்றிக் கொண்டன. விலங்குகள் உடலில் மயிரை எவ்வாறு வளரச் செய்தனவோ அவ்வாறே பறவைகளும் இறக்கைகளை வளரச் செய்தன. பல்லிகளின் உடலிற் கிடந்த செதில்கள் பிரிந்து மெதுவடைந்து மிருதுவான தூவிகள் அல்லது இறகுகளாயின. மிகப் பழங்காலப் பறவைக்கு ஊர்வனவுக்குப் போல கீழ்மேல் வாய்களிற் பற்களுண்டு. பல்லியாயிருக்கும் போது இருந்த அதன் கால்கள் செட்டைகளின் வெளியே தெரிந்தன; அது பறவையிலும் பார்க்கப் பல்லி போன்ற தோற்றமுடையது. இத் தோற்றம் அது பறவையை யும் பல்லியையும் பிரிக்கும் தோற்றத்தைக் கடந்தமையைத் தெளிவாகக் காட்டுகின்றது. பறவைகளின் இருதயம் பல்லிகளின் இருதயத்திலும் பார்க்கத் திருத்தமுடையது. பல்லிக்கு மூன்று அறைகளுடைய இருதயமுண்டு. ஆனால் அது நன்றாக இரத்த ஓட்டஞ் செய்வதில்லை. பறவையின் இருதயம் இரண்டறையுள்ளது. அவ்வாறிருந்தபோதும் அது நன்றாக இரத்த ஓட்டஞ் செய்கின்றது. இருதயத்தின் இரண்டு பகுதிகளும் வெவ்வேறாக இருக்கின்றன. நரம்புகளின் இரத்தமும் நரம்புக் குழாய்களின் இரத்தமும் கலக்கமாட்டா. பறவை விலங்கைப்போல விவேகத்தை வளர்த்துக்கொள்ள முடியாது; குட்டியீனாது முட்டையிடுவதே அதற்குக் காரணம். அதற்குப் பால் கொடுக்கும் உறுப்புகள் இல்லையாயினும் அது பல்லிகளிலும் பார்க்க அதிகம் தாயன்பை வளர்த்துள்ளது. பறவை தன் குஞ்சுகளுக்கு இரைதேடிக் கொடுத்தல், அவைகளுக்காக எதிரிகளுடன் போராடுதல் போன்றவை பறவைகளின் தாயன்புக்கு எடுத்துக்காட்டுகளாகும். பறவைக்கு ஊரும் உயிர்களுக்குடையவை போன்ற கண்களுண்டு. பாம்பு தனது பார்வை யினால் பறவைகளை மயக்கும்(hypnotize). பறவையின் கண்கள் விலங்கு களின் கண்களிலும் பார்க்க விரைவும் கூர்மையும் உடையன. குட்டிக்குப் பால் கொடுக்கும் உயிர்களுக்கு அண்மையிலுள்ளது மாடப்புறா. குஞ்சு பொரித்ததும் தாய் தந்தை என்னும் இரண்டும் குஞ்சு களுக்குத் தமது தொண்டையிலுள்ள பையிலிருந்து வரும் ஒருவகைப் பால்போன்ற இரையை ஊட்டுகின்றன. உணவு கொடுக்கப்படும் பருவத்தில் புறாக் குஞ்சு இறந்துவிட்டால் அவை அவ் வுணவுப் பொருளை வெளியே உகுத்துவிடுகின்றன. கன்றுக்குட்டி இறந்துவிட்டால் தாய்ப் பசுவின் மடி விம்மி எப்படி வேதனை உண்டாகின்றது? இத் தன்மையினாலேயே பறவைகள், பல்லிகளும், விலங்குகளுமல்லாத புதுவகை உயிர்கள் என்று கூறுகின்றோம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் காற்று, பறவை, விலங் குகள் மூலம் விதைகளைப் பரப்பக்கூடிய அளவுக்குத் தாவரங்கள் வளர்ந் தன. கடல்களுக்கு அப்பாலுள்ள இடங்களுக்குப் பறவைகள் விதைகளைக் கொண்டு சென்று பரப்பின. ஆனால் தாவரங்கள் இடம்விட்டுப் பெயர வில்லை. தாவரங்களின் விரி வளர்ச்சி(evolution) ஒரே இடத்தில் நின்று உண்டானது. பறவைகளின் விரிவளர்ச்சி தாவர வளர்ச்சி முறைக்கு மாறு பட்டது. இதனை ‘அசைவு விரி வளர்ச்சி’ எனக் கூறலாம். ஆதி கால ‘அல்கே’ பாதி அசையும் உயிர்(animal) ஆகிப் பின் முழு அசையும் உயிராக மாறிற்று. தாவரம் தாவரமாகவே வளர்ச்சி யடைந்தது. பகுதி தாவரமும் பகுதி அசையும் உயிருமாக மாறிய உயிர் அசையும் உயிர்ப் படியைப்பற்றி வளர்ந்தது. பல்லிகள் வால்களுடன் செட்டைகளைப் பரப்பி ஆகாயத்தில் பறந்த போது பறவைகள் விலங்கு களின் தொடர்பை விட்டுப் பிரிந்தன. பறவையும் விலங்கும் ஒரே ஊர்வனவிலிருந்து, தோன் றியபோதும் விலங்குகள் பறவை களிலிருந்து தோன்றவில்லை. பழங்காலப் பறவைகளுக்குப்பின் செட்டைகளில்லாத பறவைகள் தோன்றின. அவை தீப் பறவையைப்போலக் குறுகிய செட்டைகளும் வால்களு முடையவனவாய்ப் பறப்பதற்குப் பதில் ஓடின. இப் பறவைகள் சிலவற்றுக்கு ஆமைகளுக்கிருப்பன போன்ற பற்களிருந்தன. முற்காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய பறவைகள் பறப்பதற்குப் பதில் ஓடின. இக்காலத் தீக் கோழியை முற்காலப் பறவையோடு ஒப்பிட்டால் முற்காலப் பறவை கோழியும், தீப்பறவை அதன் குஞ்சும் போன்றதாகும். ஓடும் பறவை களுக்குக் கால்கள் வளர்ச்சியடைந்தன. பின்பு இன்று காணப்படுவன போன்ற சிறிய பறவைகள் தோன்றின. நகமும் பல்லுமுள்ள உயிர்கள் குளிர்காலத்திற்குப்பின் தோன்றிய கோடைகாலம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளின்பின் மறைந்தது. கோடைகாலத்தில் கடலிலிருந்த உயிர்கள் பல வெளியே வந்து வாழ்ந்தன. முன் காணப்பட்ட ஊர்வனவுக்குப் பதில் இப்போது விலங்குகள் தோன்றியிருந்தன. தாவரங்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து அழகிய பூக்களைப் பூத்தன. பூக்கள் தோன்றுதலும் வண்ணாத்திப் பூச்சிகளும் தேனீக்களும் தோன்றின. தாவரம் மீன் ஊர்வன பறவை என்பவற்றைப் போல ஒன்றுக்குப்பின் ஒன்றாகப் படிமுறையான விரிவளர்ச்சி விலங்குகளிடையும் தோன்றின. இவ்வாறு தோன்றிய புதிய இனங்கள் குளம்பும் நகமும் பெற்றிருந்தன. விலங்குகளைப்போன்ற உயிர்கள் வெப்பகாலத்தில் நன்றாக உண்டு கொழுத்து வளரும். இவைகளுள் மிகக் கீழ்ப்பட்ட இனங்கள் ஆஸ்தி ரேலியாவிலேயே பரவின. ஒருகாலத்தில் ஆஸ்திரேலியாவும் ஆப்பிரிக்காவும் பிரிக்கப்படாத கண்டமாயிருந்தன. சடுதியாக எரிமலைகள் குமுறி நிலம் நடுங்கிற்று. அப்பொழுது ஆஸ்திரேலியாவும் ஆப்பிரிக்காவும் இரண்டு கண்டங்களாகப் பிரிந்துபோயின. முட்டையிட்டவும், முற்றாத குட்டிகளை ஈன்றவும் விலங்குகளும் ஆஸ்திரேலியாவில் தனித்து விடப்பட்டன. ஆப்பிரிக்காவிலும் ஆசியா விலும் தனித்து விடப்பட்ட விலங்குகள் ஆஸ்திரேலியாவுக்குப் போக முடியவில்லை. பல்லிகள் எப்படி விலங்குகளாக மாறும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலிய விலங்குகள் இன்று உள்ளன. பல்லிகள் விலங்குகளாக மாறியபோது அவை மரங்களில் வாழும் சிறிய உயிர்களாக விருந்தன. கோடைகாலம் வந்தபோது பூச்சிகள் அதிகம் பெருகின.1 மிகப் பெரிய சிலந்திகளும் தோன்றி வாழ்ந்தன; அட்டை, மயிர்ப் புழு, புழு முதலிய எண்ணிறந்த உயிர்கள் இருந்தன. பூச்சிகளை உண்ணும் விலங்குகள் பெரியனவாய் வளரத் தொடங்கின. பெரியனவாக வளர்ந்த விலங்குகளுட் சில மரத்தைவிட்டு இறங்கி நிலத்தில் வாழ்ந்தன. சில விலங்குகள் ஆரம்ப முதல் தாவர உணவு கொள்வனவாயிருந்தன; சில புல் மேய்ந்தன; சில பழங்களையும் விதைகளையும் உண்டன. அக் காலத்தில் ஈரப்பலா, தெங்கு, வெப்ப மண்டலங்களில் வளரும் பழ மரங்கள் முதலியன சிலவற்றுக்கு உணவளித்தன. ஒருநாள் விலங்கு ஒன்று பூச்சிபோற் காணப்பட்ட ஒன்றைப் பிடித்தது. அது பூச்சியன்று; ஒரு அகழான். அது அவ் வகழானை வாய்க்குள் வைத்து மென்றது. அது உருசியாக விருந்தது. அது முதல் சில விலங்குகள் ஊனுணவை விரும்பின. இப்பொழுது தாவரமுண்ணும் விலங்குகள் ஊன் உண்ணும் விலங்குகள் என்னும் பிரிவுகள் உண்டாயின. பல்லிகள் தோன்றி யிருந்த காலத்தைய வரலாறு இன்னுமொரு முறை நிகழ்வதாயிற்று. ஊனுண்ணும் விலங்குகள் தாவரம் உண்ணும் விலங்கு களை வேட்டையாடின. சிலவற்றின் உடம்பு பெரிதாக வளர்ந்தது. அவைகளுக்குக் காண்டாமிருகத்துக்குக் கொம்பும், யானைக்குத் தந்தமும் இருப்பது போல ஆயுதங்கள் இருந்தன. விலங்குகளுக்குக் கால்கள் ஓடவும், நடக்கவும், நிற்கவும் பயன்பட்டன. விரிவளர்ச்சி முறையில் கால்கள் விரைவாக ஓடக்கூடியனவாக வளர்ந்தன. பல்லும் நகமுமுள்ளவைகளுக்கு அவை பலமடைந்தன. அவைகளின் தேவையில்லாத விரல்கள் மறைந்து போயின. ஊனுண்ணும் விலங்குகளை விட்டு மற்றைய விலங்குகள் தூரத்தே ஓடிச் சென்றன. ஆகவே ஊனுண்ணும் விலங்குகள் தமது உணவை அதிக பிரயாசையுடன் பெறவேண்டு மென்றுணர்ந்தன. முற்காலத்தில் சடுதியாகப் பெரிய மலைகள் தோன்றின; கண்டங்கள் மறைந்தன; புதிய நிலங்கள் தோன்றின. அக் காலத்தில் இவ் விலங்குகள் கண்டங்கள்தோறும் அலைந்து எங்கும் பரவி வாழ்ந்தன. ஊர்வன தோன்றி வாழ்ந்த செழிப்பான காலத்தில் முதலை இனங்களும், மலைப்பாம்புகளும், பெரிய பாம்புகளும் தோன்றின. ஊன் உண்ணும் விலங்குகளுக்குத் தப்பி ஓடும் தாவரமுண்ணும் விலங்குகள் தாம் இலகுவில் ஒடக்கூடியதாகத் தமது ஐந்து விரலுள்ள பாதங்களின் வடிவை மாற்றிக் கொண்டன. தாவரம் உண்ணும் விலங்குகள் நாலு கால்களில் உலாவுவன; அவை விரல்களை உள்ளுக்கு இழுத்துக் கொண்டன. தற்காப்பின் பொருட்டுத் தோலை அல்லது கொம்பை வளர்த்துக் கொள்ளாத விலங்குகள் மோப்பம் பிடிக்கும் உணர்ச்சியை வளர்த்துக் கொண்டன. மான், ஒட்டகம், காட்டுக்குதிரை, ஆடு, மாடு, பன்றி முதலியவை தமது விரல்களைப் போக்கிக்கொண்டன. புல் மேயாத விலங்குகளுக்கு நான்கு விரல்களும், ஐந்து விரல்களுமிருந்தன. புல் மேயும் விலங்குகளின் பாதங்கள் வட்டவடிவும் கொம்புத் தன்மையும் வேகமா யோடக் கூடியனவு மாயின. இவ் விலங்குகள் பெரியன பெரியனவாய் வளர்ந்தன. மிக முற்காலத் தில் பன்றி போன்றிருந்த விலங்கு யானை. தொடக்கத்தில் இதற்குத் தும்பிக்கை இல்லை; நீண்ட மூக்கு மாத்திரம் இருந்தது. இவ் விலங்கு விரைவிற் பெரிதாக வளர்ந்தது. பின்பு அதற்கு அச்சம் விளைக்கக்கூடிய தந்தங்கள் வளர்ந்தன; அது விலங்குகளுக்குப் பயந்து ஓடவில்லை; அது தனது ஐந்து விரல்களையும் போக்கிக் கொள்ளவில்லை. காண்டாமிருகம் போன்ற விலங்குகள் உடம்பில் கேடகம் போன்ற தோலை வளர்த்துக் கொண்டன; அவைகட்கு மண்டையில் மூன்று கூரிய கொம்புகளும் வளர்ந்திருந்தன. அவை தமது விரல்களைக் குளம்பாக மாற்றிக் கொண்டன. காண்டாமிருகம் எதிரிக்குப் பயந்தோடுவதற்குப் பதில் அதனை எதிர்த்துத் தாக்கும். சீல் (seal) என்னும் கடல் நாய் கரடிக்கு இன முடையது. இது கடலில் இறங்கி மீன்களை உண்ண விரும்பிற்று. இது கடலில் நீந்திச் செல்லும் பொருட்டு முன்னங் கால்களைத துடுப்புகள் போல மாற்றிக் கொண்டது. பன்றியிலிருந்து ஹிப்படமஸ் என்னும் நீர் யானை, தபிர்(Tapir) முதலிய மற்றைய இனங்கள் தோன்றின. இவைகட்குத் தடித்த தோல் உண்டு. நீர் யானை நீரில் தங்கி ஊனுண்ணும் விலங்குகளுக்குத் தப்பிக் கொண்டது. ஊனுண்ணும் விலங்குகள் மிகக் கொடியவை. அவைகளுக்குத் திருந்திய பற்களும் நகங்களும் வளர்ந்தன. அவைகளின் எலும்புகள் இலேசாக விருந்தன. ஆகவே அவை இரைமீது பாய்ந்து அதனைப் பிடிக்கக் கூடியதாக விருந்தன. கோடைகாலத்தில் தும்பிக்கை இல்லாத யானைகள் வெப்ப மண்டலக் காடுகளில் தங்கி நிலைத்தன. மூன்று கொம்புடைய காண்டா மிருகங்கள் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்தன. ஊன் உண்ணும் விலங்குகள் பயங்கர மான வடிவை அடைந்தன. ஒட்டகம், குதிரை, பன்றி முதலியன இவை களின்றும் பிரிந்து வாழ்ந்தன. முற்காலத்தில் பாதி நாயும் பாதி கழுதைப் புலியும் போன்ற ஒரு வகை மிகப் பெரிய விலங்கு வாழ்ந்தது. இதிலிருந்து நாய் தோன்றியிருக்கலாம். பூனையின் முன்னதுகளான பெரிய விலங்கினங்கள் பல இன்றும் வாழ்கின்றன. இன்றைய விலங்குகளின் முன்னதுகளான வேறு பல விலங்கு களும் வாழ்ந்தன. ஊனுண்ணும் விலங்குகள் மிகப் பலவாகப் பெருகின. இவைகளிலிருந்து பிழைப்பதற்குத் தமது ஓட்டத்தை நம்பியிருந்த விலங்குகள் அதனைக் கைவிட்டன. அகழான், முயல், எலி இனங்கள் போன்றவை நிலத்துள் மறைந்து வாழ்ந்தன. ஒப்போசும்(opossum), சிலாத் (Sloth) என்னும் கரடி போன்றவை மரங்களில் வாழ்ந்தன. வெளவால் தனது பாதுகாப்பை விரும்பி இராக்காலத்தில் சஞ்சரித்தது. கடல்நாய் இனங்கள் நீருள் மறைந்தன. நீர் யானை, பீவர்(beaver) முதலியவை ஆறுகளில் புகுந்தன. விரல் பெற்றிருந்த விலங்குகளால் நின்று போரிட முடியவில்லை. ஆகவே அவை விரல்களைக் குளம்புகளாக மாற்றிக் கொண்டு ஓடின. வாழ்க்கை முன்போல் போராட்டமுடையதாக மாறிற்று. விலங்குகள் பல்லி இனங்களினும் பார்க்க விவேகமுடையன. அவை நூறு வகையாக வேட்டை யாடவும், வேட்டையாடுவனவினின்றும் தப்பி ஓடவும் தமது விவே கத்தைப் பயன்படுத்தின. விலங்குகளின் உலகம் இவ்வாறு இரத்தக்கறை படிந்ததாகவிருந்தது. வேட்டையாடும் விலங்குகளுள் நாயும் பூனையும் வெவ்வேறு குடும்பங்களாகப் பிரிந்தன. நாய்க் குடும்பத்திலிருந்து கரடி, ஓநாய், நரி, கழுதைப்புலி, நீர்நாய் முதலியவை தோன்றின. சிங்கம், புலி, சிறுத்தை, கீரி முதலியவை பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. விலங்குகள் ஒன்றை ஒன்று கொன்று வாழும் காலத்தில் அவை மோப்பம் பிடிக்கும் உணர்ச்சியை வளர்த்துக் கொண்டன. அப்பொழுது சில விலங்குகள் கஸ்தூரி புனுகு போன்ற மணமுள்ள பொருள்களைத் தமது உறுப்புகளினின்றும் வெளிப் படுத்தின. இம் மணப்பொருள்கள் தொலைவிலிருக்கும் தமது கூட்டத் துக்குத் தாமிருப்பதை அறிவித்தற்குப் பயன்பட்டன. உலகில் பற்பல நிறங் களுள்ள தாவரங்கள் வளர்ந்தன. இப்பொழுது தேவாங்கு, குரங்கு முதலிய சிறிய விலங்குகள் தோன்றலாயின. பல்லாயிரக்கணக்கான விலங்கு களும், ஊர்வனவும் பூச்சிகளும் பெரு கின. பூனைக் குடும்பத்திலிருந்து சிங்கம், புலி என்னும் இருவகை விலங் குகள் தோன்றி வாழ்ந்தன. சிங்கத்தின் வாலும், சிவந்த மயிரும், மிகப் பெரிய உடலுமுடைய ஒருவகைப் புலிகள் தோன்றியிருந்தன. இவை தாவர முண்ணும் விலங்குகளைப் பெரிதும் கொன்று தொலைத்தன. இறுதியில் எல்லாத் தாவரமுண்ணும் விலங்குகளும் விரல்களை உள்ளுக்கிழுத்துக் குளம்பை வளர்த்துக் கொண்டன. அவை இப்பொழுது நன்றாக ஓடின. சிங்கப் புலிக்கு உண்ண உணவு கிடைக்க வில்லை. ஆகவே அது இறந்து மறைந்துபோயிற்று. அவ் விலங்கின் வாடை தூரத்தில் வீசிற்று. அதனைத் தூரத்தே நின்று மேய்ந்துகொண்டு நின்ற விலங்குகள் மோப்பம் பிடித்து ஓடி மறைந்தன. தகுதியுடையது நிலைபெறும் வழிகளில் இதுவும் ஒன்று. விலங்குகள் நான்கு கண்டங்களிலும் அலைந்து திரியும்போது யானைக்குத் தும்பிக்கையுண்டாயிற்று. முன்பு இதற்கு நீண்ட மூக்கு மாத்திரம் இருந்தது. யானை பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அது மூக்கை நீட்ட முயன்று வந்தபோது மூக்கு தும்பிக்கையாக வளர்ந்தது. யானைக்கு உணவு காடுகளிற் கிடைத்தது. விலங்குகள் எல்லாவற்றுள்ளும் யானை புத்திக் கூர்மையுடையது. அது கூட்டமாக வாழும் அறிவை வளர்த்தது. அதற்குத் தந்தங்களும் வளர்ந்தன. பின்பு வாலில்லாக் குரங்கு போன்ற ஒரு விலங்கு தோன்றிற்று. இதன் ஒரு சந்ததி வாலில்லாக் குரங்கு; மற்றது மனிதன். கருப்பத்திலிருக்கும் குழந்தைகளுக்கு உடலில் மயிரும் வாலும் தோன்றுகின்றன. குழந்தை பிறப்பதற்கு முன் வால் மறைந்து போகின்றது. இவ்வாறு அணுவிலிருந்து அல்கேயும், அல்கேயிலிருந்து மீனும், மீனிலிருந்து நீரிலும் நிலத்திலும் வாழ்வனவும் பல்லிகளும், பல்லி களிலிருந்து விலங்குகள் பறவைகளும் தோன்றின; பின்பு விலங்கிலிருந்து மனிதன் தோன்றினான். மனிதன் தோன்றி வளர்ச்சியடைந்து இன்றைய மனிதன் ஆனான் என்பதை விளக்கும் வரலாறு ஆதிமனிதன் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. உயிர்களின் வாழ்க்கைப் போராட்டமும் அதற்கேற்ற வாய்ப்புகளும் உயிர்களின் வாழ்க்கை இடைவிடாத போராட்டம் மலிந்த தாயிருக்கின்றது. போராட்ட மென்பது ஈண்டு வருந்தி உழைத் தலைக் குறிக்கும். உயிர்கள் போதிய உணவைப் பெறும் பொருட்டு இடைவிடாது முயல்வ தோடு தம்மைப் பிற உயிர்கள் கொன்று தின்றுவிடாதபடியும் காப்பாற்றிக்கொள்ள வேண்டி யிருக்கின்றது. அவை, தம்மை வாழுமிடங்களின் வெப்ப தட்ப நிலைகளுக்கேற்பவும் சூழல்களுக் கேற்பவும் தகுதிப்படுத்திக் கொள்ள வும் வேண்டும். இவ்வகைப் போராட்டங்களுக்கு உதவும் பாதுகாப்புகளை இயற்கையாகிய அன்னை தனது குழந்தைகளாகிய உயிர்களுக்கு அளித்திருக்கின்றது. இயற்கை இடைவிடாது உயிர்களிடையே மாற்றங்களை உண்டாக்கி வருகின்றது. அம் மாற்றங்கள் மிகத் தாமதப்பட்டு நிகழ்வதால் அவைகளை அறிந்து கொள்வதற்கு மனிதனின் வாழ்நாள் போதாமல் இருக்கின்றது. இன்று வாழும் சில உயிர்களின் முற்சந்ததிகளை நோக்குவோமாயின் இக் காலத்தன எவ்வெம் மாற்றங்களை அடைந்திருக்கின்றனவென்று நாம் எளிதில் அறிந்துகொள் வோம். முற்கால உயிர்கள் தமது வரலாறுகளைக் கற்பாறைகள் மீது விட்டுச் சென்றிருக்கின்றன. ஒவ்வொரு இன உயிர்களும் வாழ்க்கைக்குத் தகுதியு டையனவா யிருக்கும்படி ஒவ்வொரு சந்ததியின் தந்தை தாய்களை எவ்வாறு இயற்கை தெரிவு செய்கின்றது? ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் நிலைத்திருப்பதற்கு முயன்று வருதலினாலேயே இத் தெரிவு செய்யப்படு கின்றது. பெருந்தொகை உயிர்கள் பிறக்கின்றன; ஆனால் அவைகளுட் சந்ததியைப் பெருக்கக்கூடிய பருவம் எய்தும்வரை பிழைத்திருப்பன சிலவே. வலிமையும், கெட்டித்தனமும், சாக்கிரதையும் உள்ள உயிர்கள் வாழ்தற்குத் தகுதியும், உணவைப் பெறுவதில் அனுகூலமும், அபாயத்தைத் தடுக்கும் வல்லமையும் உடையனவாகின்றன. ஆகவே இவ்வுயர்ந்த பண்புக ளுடைய உயிர்கள் நீண்டகாலம் வாழ்ந்து தமது மேலான தன்மைகளைத் தமது சந்ததிகளுக்கும் அளிக்கின்றன. அவைகளே தங் குழந்தைகளுக்கு நல்லுணவு கொடுத்து வளர்க்கக்கூடியன. ஆகவே அக் குழந்தைகள் நல்வாழ்க்கையைத் தொடங்கும். இது எப்பொழுதும் உண்மையானதன்று. மிகப் பலமும், போர்க்குண மும் உடைய விலங்குகள் இன்னொரு இன விலங்குகளாற் கொல்லப்பட லாம். சுற்றிடங்களிலே சடுதியில் உண்டான வெப்பதட்பநிலை மாற்றம் தகுதியுடையவைகளையும் தகுதியற்றவைகளையும் ஒரு சேர அழித்தும் விடலாம். ஆனால் பெரும்பாலும் வாழ்க்கைக்குத் தகுதி யுடையது எது? அதுவே நிலைபெறுகின்றது. ஒவ்வொரு இன உயிர்களும் நீண்டகாலம் ஊறு இன்றி வாழ்தற்கேற்ற வழியில் முயன்று, வாழ்தற் பொருட்டு மேலும் மேலும் தகுதியுடையனவாய் வந்திருக்கின்றன. வாழ்க்கைப் போராட்டமென்பது துன்பமின்றி இன்பமாய் வாழ்தற்குச் செய்யப்படும் எத்தனமாகும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இரை யாகும் உயிர்கள் தமக்கு நேரவிருக்கும் ஆபத்தை உணர்வதில்லை. ஆபத்து அணுகும் வரையில் அவை பயம் அடைவதும் இல்லை. மரணம் அவைகளை விரைவாகவும், சடுதியாகவும், அணுகி நோவின்றிக் கொன்று விடுகின்றது. பயப்படும் இயல்புடைய முயல்கள் ஆபத்துக்கள் பலவற்றின் இடையே மாலை நேரங்களில் கொல்லைப்புறங் களிலிருந்து விளையாடி மகிழ்வதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஒரு சோடிப் பறவைகள் அதிக நேரம் தேடிப் பூச்சி புழுக்களை எடுத்துக்கொண்டு தமது பசியுள்ள குஞ்சுகளிடம் வருதலைப் பார்க்கின்றோம். அவை தமது கடிய உழைப்பிலும் பார்க்க மகிழ்ச்சியையே பெரிதாகக் கொள்கின்றன என்று தெரிகின்றது. இன்னும் வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருக்கின்றன. இவை களை விளங்கிக் கொள்வதற்கு, இயற்கை, உயிர்களுக்கு அளித்திருக்கும் எதிர்ப்புத், தற்காப்பு ஆயுதங்களைப்பற்றி நாம் சிறிது சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். அவை ஊன் உண்ணும் உயிர்களின் பயங்கரமான பற்களும், நகங்களும், இரைகளைப் பிடிக்கும் பறவைகளின் வளைந்த அலகும் கூரிய நகங்களும், பாம்புகளின் நச்சுப் பற்களும், சிலந்தியின் வாயும், பூச்சிகளின் கொடுக்குகளும், இன்னும் இவைபோன்ற ஆயிரக்கணக்கானவைகளு மாகும். எதிர்ப்புக்குரிய பல ஆயுதங்கள் இருப்பன போலவே தற்காப்புக் குரிய பல ஆயுதங்களும் இருக்கின்றன. இயற்கை, பாரபட்சமின்றி எல்லா உயிர்களுக்கும் தாயாக விருக்கின்றது. அழுங்குக்கு எலும்புபோன்ற வயிரமான கவசமிருக்கினறது. முட்பன்றிக்கு வயிரிய ஈட்டிபோன்ற முட்கள் இருக்கின்றன. வட அமெரிக்காவில் பூனையின் பருமையுடைய இஸ்கங்கு (Skunk) என்னும் ஒருவகை விலங்கு உண்டு. அதனை எதிரிகள் துரத்திச் சென்றால், அல்லது அணுகினால் அது எவரும் அணுகமுடியாத மிக்க கொடிய நாற்றமுடைய ஒருவகை நீரை வெளியே கொப்பளிக்கின்றது. இலாமா என்னும் இன்னொரு தென்னமெரிக்க விலங்கு தனக்குத் தொந்தரவு கொடுப்பவர்மீது அதிக எச்சிலை உமிழ்கின்றது. தேரை போன்றவைகளின் மாமிசம் கசப்பாயிருப்பதால் அவற்றை மற்றைய உயிர்கள் அதிகம் உண்பதில்லை. நண்டுகளின் குறடு போன்ற கால்கள் மற்ற உயிர்களுக்கு அச்சம் விளைக்கத் தக்கன. அவைகளை வயிரமான கவசம் மூடியிருக்கின்றது. அவைகளின் ஓடு வளரத்தக்கதன்று. நண்டு, வளரும் போது ஓட்டை உடைத்துக்கொண்டு வெளியே வருகின்றது. அப்பொழுது அதன் மேற்புறம் மென்மையாகவும், பாதுகாப்பில்லாமலும் இருக்கின்றது. தபதி நண்டு(Hermit Crab) என ஒரு வகை நண்டு உண்டு. அதன் பின்பாகம் வயிரமான ஓட்டினால் மறைக்கப்பட்டிருக்கவில்லை. இன்னொரு கடலூரி யின் ஓட்டுக்குள் நுழைந்து கொள்ளாவிடின் அது மற்ற உயிர்களுக்கு எளிதில் இரையாகிவிடும். அது தான் நுழைந்து வாழும் ஓட்டையும் செல்லும் இடங்களுக்கெல்லாம் கொண்டு செல்கின்றது. ஆபத்துக் காலங் களில் தனது சொந்த ஓட்டுக்குள் நுழைவதுபோல் அது அவ் வோட்டினுள் புகுந்து மறைந்து கொள்கின்றது. வாழ்க்கைப் போராட்டத்தில் வேட்டையாடுவனவும், வேட்டை யாடப்படுவனவுமாகிய உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பன சூழல்களின் நிறத்தை ஒப்ப உள்ள அவைகளின் நிறங்களேயாகும். இவ்வாறு அவற்றின் நிறம் அமைவதால் அவை இலகுவில் எதிரியாற் காணக்கூடாதனவாய் பல ஆபத்துக்களினின்றும் பிழைக்கின்றன. எப்பொழுதும் பனிக்கட்டியுள்ள துருவ நாடுகளில் வாழும் உயிர் களின் நிறம் பெரும்பாலும் வெண்மையாயிருக்கும். துருவக் கரடியின் நிறம் வெண்மை அல்லது மங்கிய வெண்மை. மற்றைய இடங்களில் வாழும் கரடிகள் கறுப்பு அல்லது கபில நிறமுடையன. எல்லாக் காலங்களிலும் மழையில்லாதனவும், சிறிய தொலைவி லுள்ளனவுமாகிய இடங்களில், பருவ காலங்களுக்கு ஏற்றவாறு உயிர்களின் நிறங்கள் மாறுகின்றன. துருவநரி, மலை முயல் முதலியவைகளின் கோடை கால நிறம் நரை அல்லது கபிலம். இந் நிறங்கள் மாரிக்காலத்தில் வெண்மை அடைகின்றன. அவ் விடங்களிற் காணப்படும் சில உயிர்களுக்கு ஆண்டு முழுமையும் கோடைகால நிறம் மாத்திரம் உண்டு. ஆனால் அவை வேறு வகையில் நன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன. ‘சேபிள்’ என்னும் ஒருவகை விலங்கு மரக்கொம்புகளில் இருந்து வாழ்கின்றது. அதன் கபில நிற மயிரி லும் பார்க்க வெண்ணிறம் எதிரிகளுக்குச் சடுதியில் தோன்றத்தக்கதாக விருக்கும். வனாந்தரங்களில் வாழும் உயிர்கள் மண் நிறமுடையன; மண் நிறம் மாத்திரமல்லாமல் இடையிடையே வேறு நிறங்களும் காணப்படும். சிறிது தொலைவில் நின்று அவ்வுயிர்களைப் பார்த்தல் முடியாது. பிறெம்(Brehm) என்பவர் புறாவின் பருமையுள்ள ஒருவகைப் பறவைகள் வனாந்தரங்களில் மனிதனின் வருகையைப் பொருட்படுத்தாது நின்று மேய்தலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அது பின்வருமாறு: “பறவைகள் மேய்ந்துகொண்டு நிற்பதைக் காணும் அனுபவம் இல்லாத பிரயாணி துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அவைகளை நோக்கிச் செல்கின்றான். அவை அவனுடைய கண்ணெதிரில் மறைந்து விடுகின்றன. நிலம் அவைகளை விழுங்கிவிட்டது போற் றோன்றுகிறது. தங்களுடைய இறக்கைகளுக்கும் நிலத்துக்குமுள்ள நிற ஒற்றுமையை நம்பி அப் பறவைகள் பதுங்கி இருக்கின்றன. ஒரு கணத்தில் அவை கற்குவியல்களாகவும் கற்களாகவும் மாறிவிட்டன.” மணல் நிறம் பொருந்திய மேற்பாகம் சில சமயங்களில் நரை நிறமாக வும், சில வேளை ஒளி பொருந்திய மஞ்சள் நிறமாகவும், வரிசையாகப் பிரிந்து ஒடுங்கிய வரைகளும் மெல்லிய கீறும் புள்ளியும் உடையதாகவும் இருக்கும். இவ்வகை நிறம் தொலைப் பார்வைக்குப் புலப்படக் கூடுமென்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் அந்நிறம் நிலத்தின் நிறமேயாகும். நிலம் பறவையைத் தனது பகுதியாக்கி அதனைப் பாதுகாத்தல் வியப்பன்று. இவ் வகைப் பாதுகாப்பு நிறமுடைய பூச்சிகள் பலவுண்டு. பல புழுக்கள் தாம் உணவைப் பெறும் மரங்களின் நிறங்களைப் பெற்றிருக் கின்றன. சில பூச்சிகள் உலர்ந்த இலை அல்லது பாசித்துண்டு போல் இருத்தலும் ஆச்சரியப்படத்தக்கது. ஒருவகை வண்ணாத்திப் பூச்சியின் இறக்கைகளின் மேற்புறம் பிரகாசமான நிறமுடையது. பறக்கும்போது அது நன்றாகக் கண்ணுக்குப் படும். இறக்கைகளை நிமிர்த்திக்கொண்டு மரப்பட்டையில் இருக்கும்போது அதன் கீழ்ப்புறம் வாடிய இலையின் நிறமுடையதாயிருக்கும். வண்ணாத்திப் பூச்சிகளிலும் பல வகைகளுண்டு. சில வண்ணாத்திப் பூச்சிகள் உண்பதற்கு விரும்பத்தகா சுவை உடையனவாயிருத்தலின் அவைகளைப் பறவைகள் உண்பதில்லை. ஆகவே அவைகளுக்குப் பாது காப்பு நிறம் வேண்டியதில்லை. ஆகவே அவை கண்ணுக்குப் புலப்படக் கூடிய நிறமுடையனவாயிருக்கின்றன. அவை காணக்கூடியனவாயிருத்த லின், பறவைகள், அவை உண்ணத்தகாதன என்று விரைவில் அறிந்துகொள் கின்றன. பறவைகளால் உண்ணப்படாத வண்ணாத்திப் பூச்சிகள் உள்ள இடங்களில் இன்னொரு இனம் காணப்படுகின்றது. சில சமயங்களில் பல இனங்களும் காணப்படுகின்றன. இவை முன்கூறப்பட்ட வண்ணாத்திப் பூச்சிகளின் நிறத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இவை முன் இனத்தைச் சேர்ந்தவைகளல்ல. இவ்வகை வண்ணாத்திப் பூச்சிகள் பறவைகள் உண்ப தற்கு நல்லன; ஆனால் பறவைகள் இவைகளை முன்னைய இனத்தினின்றும் பிரித்தறிய மாட்டாமையால் உண்ணாது விடுகின்றன. ஒவ்வொரு உயிரும் உணவுக்காக ஆடும் போராட்டம் மிகக் கடுமை யானது. சில வண்ணாத்திப் பூச்சிகளின் புழுக்கள் மரங்களில் நெருங்கி யிருந்து இலைகளை உண்கின்றன. இலைகளைத் தின்று ஒழித்தபின் இன்னொரு மரத்தில் ஏறுதற்கு அவை பந்துபோலச் சுருண்டுகொண்டு நிலத்தில் விழுகின்றன. பல நெருங்கியிருந்து உண்கின்றமையின் மிகச் சுறுசுறுப்பும் வலிமையுமுள்ள புழுவே அதிக உணவைப் பெறுகின்றது. பல புழுக்களுக்கு அற்ப உணவு மாத்திரம் கிடைக்கின்றது. அதனால் அவை வண்ணாத்திப் பூச்சிகளாக வளரமாட்டா. இவ்வகைப் போட்டியைத் தடுப்பதற்கு இயற்கை பலவகை வழிகளை அறிந்திருக்கிறது. ஒன்றோடு ஒன்று இனமுடைய உயிர்கள் வெவ்வேறு வகை உணவை உண்பதால் அவை, ஒரேவகை உணவை உண்ணும் உயிர்களைவிடப் பெருங்கூட்டமாக ஒரே இடத்தில் வாழ்தல் கூடும். இவ் வகை வெவ்வேறு உணவு கொள்ளும் இனங்கள் எலிகளிலும் பறவைகளி லும் அதிகம் காணப்படுகின்றன. பல உயிர்களுக்கு வாழ்க்கைப் போராட்டம் மிகவும் இலகுவாக்கப் பட்டிருக்கின்றது. குளிர்காலம் தொடங்குதலும் உணவு அருமை ஆகின்றது. அப்பொழுது பல உயிர்கள் உறக்கத்துக்குச் செல்கின்றன. இவை களின் உறக்கம் பல அளவாக உண்டு. நித்திரை போகாதவை சுறுசுறுப்பை இழந்து அடங்கிக்கிடக்கின்றன. அதனால் அவைகளுக்கு முன்னையிலும் குறைவான உணவு போதுமானதாயிருக்கும். நித்திரை கொள்ளும் பிராணிகள் வெப்பமான நாளொன்றில் விழித் தெழுந்து சிறிது உணவை உண்டபின் மறுபடியும் தூங்கும். சில பிராணிகள் மாரிகாலத்துக்கென்று உணவைச் சேமித்து வைக்கின்றன. அற்ப நித்திரை கொள்ளும் உயிர்களுள் அணில் ஒன்று. அது, தான் சேமித்து வைத்த விதை களை உண்பதற்கு இடையிடையே விழித்தெழுகின்றது. மர எலி மாரிகாலம் முழுவதும் பசியுடன் உறங்குகின்றது. எலிகள் தானியம் விளைந்திருக்கும் காலங்களில் தானியக் கதிர்களைச் சேகரித்து வைக்கின்றன. அதிக நித்திரை செய்யும் உயிர்கள் உணவைச் சேகரித்து வைப்ப தில்லை. கோடைகால இறுதியில் அவை அதிக உணவை உண்கின்றன. அதனால் குளிர்காலம் வரும்போது அவை மிகக் கொழுப்படைகின்றன. பின்பு அவை உறங்குவதற்கு மறைவிடங்களைத் தேடிச்செல்லும். துருவக் கரடி பனிக்கட்டியில் குழிதோண்டி அதில் உறங்குகின்றது. முட்பன்றி இலைகளாற் செய்த கூடுகளுள் மறைந்து கிடந்து உறக்கம் கொள்ளும். வெளவால் இருண்ட குகைகளுக்குள் தலைகீழாகத் தொங்கும். தவளை சேற்றுள் மறைந்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு தோல்வழியாக மூச்சுவிடும். அதிக நித்திரை கொள்ளும் இவ்வகை உயிர்களின் வாழ்க்கை இப்பொழுது அமைதி அடைகின்றது. அவை ஆறுதலாக மூச்சுவிடுகின் றன. இருதயம் மெல்லென அடிக்கின்றது. அம் மிருகங்களின் ஆற்றல் அற்பமாகச் செலவழிகின்றது. கழிவுப்பொருள் உடம்பினுள் திரளுகின்றது. உறக்கத்தில் இருக்கும் விலங்குகள், வெளிச்சமும் சூடும் கெடாதிருந்து, காற்றுப்பட்டதும் மூண்டெரியக்கூடிய சாம்பல் பூத்த நெருப்புப் போன்றன. இலை துளிர்காலங் கிட்டுதலும் இவை முன் சேமித்துள்ள கொழுப்புச் செலவழிந்துபோகின்றது. நித்திரை கொள்ளும் உயிர்கள் இலைதுளிர்காலத் தில் விழித்துத் தங்கள் மறைவிடங்களினின்றும் வெளியே வருகின்றன. தமக்கு விருப்பமான பழங்களும் கிழங்குகளும் அதிகம் இருக்கும்போதே அவை விழிக்கின்றன. பசியின் கொடுமையால் அவை எதிர்ப்படும் எதை யும் எவரையும் எதிர்க்கும். உணவு அருமையான காலத்தில் வாழ்வதற்கேற்ற வழியைப் பறவைகள் கண்டுபிடித்துள்ளன. உணவு சுருங்கும்போது அவை கூட்ட மாகத் திரளுகின்றன; வட்டமிட்டுப் பறந்து தமது பலத்தைச் சோதிக்கின் றன. இறுதியில் அவை எப்பொழுதும் வெய்யிலுள்ள தென் தேசங்களுக்குப் பறந்து செல்கின்றன. அங்கே உணவு பெரிதும் கிடைக்கின்றது. இளம் பறவைகள் முன்னே பறக்க முதிய பறவைகள் பின்னாற் பறந்து செல்லும் உணவின் பொருட்டு அவை வழியில் பல முறை தங்கும். பழக்காலம் முடி வதன்முன் அவை தமது இடங்களை மாற்றிக் கொள்ளும். இவ்வாறு உயிர் களின் வாழ்க்கைப் போராட்டம் நிகழ்ந்து வருகின்றது. இவ்வாறு உயிர்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் முயலும் முயல்வினாலேயே ஒவ்வொரு உயிரினங்களிலும் பற்பல கிளை இனங்கள் தோன்றுகின்றன. ஆடு, மாடு, நாய், புறா போன்றவைகளிலும் மரஞ் செடி முதலியவைகளிலும் சிறிது சிறு தோற்றத்தில் மாறுபட்ட வெவ் வேறு கிளை இனங்களைக் காண்கின்றோம்.  மரணத்தின் பின் WHAT HAPPENS AFTER DEATH முன்னுரை மரணம் என்று நினைக்கும்போதே மனக்கண்ணின் எதிரே ஒருவகை இருளும் அச்சமுந்தோன்றுகின்றன. மரணத்துக்குப்பின் செல்லும் இருண்ட வழியில் என்ன ஆகுமோ என்று மனிதன் ஏங்குகின்றான். அப்பொழுது இறந்தார் பொருட்டுக் கிரியைகள் செய்தால், அவர்கள் நல்லுலகை அடைவார்கள் எனச் சமய குருமார் கூறிப் பல கிரியைகளை வகுத்தும், கருடபுராணம் போன்ற நூல்களை எழுதியும் மக்களை அச்சுறுத்தியும், அவற்றின் மூலம் வருவாய் பெற்று வருகின்றனர். இது குருடனுக்குக் குருடன் வழி காட்டியது போலாகும். ஆவிகள் மறு உலக வாழ்க் கையைப் பற்றிக் கூறிய பல செய்திகளைப் படிக்கும்போது, குருமாரின் சடங்குகளினால் யாதும் பயன் இல்லை என்றும், இவ்வுலக வாழ்வில் மக்கள் பிறர்க்கு நன்மை புரியும் உயரிய உள்ளமுடையவர்களாய் வாழின், அதனால் நன்மை அடைதல் கூடுமென்றும் தெரிகின்றன. இன்று இறந்தவர்மேல் பற்று வைத்துள்ள அவரது சுற்றத்தவர், அவர்கள் நல்வழிப்பட வேண்டு மென்னும் விருப்பினால் தாம் அரிதில் முயன்று தொகுத்து வைத்திருக்கும் பொருளைக் கிரியைகள் மூலம் பிறருக்கு இறைத்து வருகின்றனர். இவைபோன்ற பயனற்ற செயல்களில் பொருளையும் அரிய காலத்தையும் செலவழி யாது, மக்களை நல்வழியில் ஊக்கும் பொருட்டு இந் நூல் எழுவதாயிற்று. ந.சி. கந்தையா மரணத்தின்பின் தோற்றுவாய் “உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” (குறள். 339) மரணத்துக்குப் பின் என்ன நிகழ்கின்றது என்னும் கேள்வி மனிதன் தோன்றிய காலம் முதல் எழுந்துள்ளது. அன்று முதல் இன்று வரையும் இக் கேள்விக்கு விடை அறிய மக்கள் முயன்று வருகின்றார்கள். இம்முயற்சி யினாலேயே உலகில் சமயங்களும் தத்துவக் கொள்கைகளும் தோன்றி வளர்ச்சி எய்தன. ஆதிகாலம் முதல் மரணம் என்றால் என்ன? மரணத்துக்குப் பின் உயிர் நிலை பெறுகின்றதா? அல்லது அழிந்து போகின்றதா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகள் அறியப்பட்டிருந்தன. மரணத்துக்குப் பின் உயிர் அழிந்து போகின்றது என்னும் கொள்கையுடைய மக்கள் இவ் வுலகில் எங்கும் காணப்படவில்லை. மரண காலத்தில் உயிர் இவ்வுடலை விட்டு ஆவி வடிவான இன்னொரு உடலோடு வெளியேறி விடுகின்றது என்னும் உண்மை எல்லா மக்களாலும் மிகப் பழங்காலம் முதல் அறியப் பட்டிருந்தது. பலர், இவ் வாவி வடிவங்களைப் பார்த்தார்கள். இன்றும் சிற்சிலர் கண்களுக்கு அவை தோன்றுகின்றன. இவ்வுலகில் இறந்தவர்களின் ஆவிகள் நிறைந்துள்ளன என நம்பும் மக்கள் காணப்படுகின்றார்கள். ஆவிகளில் தீயவை பேய்கள் என்றும், நல்லவை தேவர்(angels) என்றும் அறியப் பட்டன இவைகளைப்பற்றிய விளக்கம் மிகவும் அற்பமாகவே இருந்து வந்தது. சென்ற நூற்றாண்டு முதல் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆவிகளோடு பேசும் இயக்கம் ஒன்று தோன்றி வளர்ச்சியடைவதாயிற்று. இவ் வாராய்ச்சியில் பலர் ஈடுபட்டுள்ளார்கள்; நூற்றுக்கணக்கான சங்கங்கள் தோன்றின. இக் கருத்துகளையும், நிகழ்ச்சிகளையும் பத்திரிகைகளும் புத்தகங்களும் வெளியிட்டன; வெளியிடுகின்றன. ஆவிகள் சம்பந்தமான நூல்களின் எண்ணிக்கை மொழி இலக்கியங்களுக்கு இரண்டாவதாக இடம் பெறுகின்றதெனக் கூறப்படுகின்றது. நமது நாட்டிலோ இவ்வகை நூல்கள் ஒன்றேனும் காணப்படவில்லை. மேல் நாட்டு அறிஞர் சிறு உண்மை ஒன்றைக் கண்டுபிடித்தால் அவ்வளவோடு நின்றுவிடமாட்டார்கள்; மேலும் மேலும் ஆராய்ச்சியினாலேயே அவர்கள் நீராவி, மின்சக்தி, பொறிகள் (machines) என்பவைகளின் பயன்களைக் கொண்டு உயர்ந்த வாழ்க்கை நடத்துகின்றனர். ஆவிகளைப் பற்றிய ஆராய்ச்சி மிக இன்பந் தருவது. அது மனிதனை மரணத்துக்கு அஞ்சாது இருக்கும்படியும் செய்கின்றது. மரணத்தைப்பற்றிய மனிதனின் ஆராய்ச்சியே சமயத்தின் தொடக்கம். மனிதன் மரணத்தின் பின் உயிர்களின் நிலையைப்பற்றி எவ்வாறு எண்ணி னானோ அக் கொள்கைகளே சமயத்தின் தத்துவக் கொள்கைகளாகவும் இருந்தன. மரணத்தின் ஆராய்ச்சியிலிருந்தே பௌத்தம், சைனம், வேதாந்தம், சித்தாந்தம் போன்ற உயர்ந்த தத்துவக் கொள்கையுடைய மதங்கள் எழுந்தன. மதங்கள் ஒழுக்கத்துக்கு அடிப்படை. மனிதன் விலங்குகளைப் போல் வாழாது நன்மை தீமை பாவ புண்ணியம் என்பவைகளைப் பகுத் துணர்ந்து ஒழுக்கமுடையவனாய் இவ்வுலகில் வாழ்வதற்கு அடிப்படையா யுள்ளதும் மரணத்தைப் பற்றிய ஆராய்ச்சியே. ஆகவே மரணத்தைப்பற்றி ஆராயும் இந்நூல் சிறந்த சமய நூலாகவும் ஒழுக்க நூலாகவும் பயனளிக்கும். மேல்நாடுகளில் ஆவிகளைப்பற்றிய ஆராய்ச்சி எவ்வாறு தொடங்கிற்று என்னும் வரலாற்றை முதற்கண் கூறுகின்றோம். ஆவியைப்பற்றிய ஆராய்ச்சி மனித வரலாற்றில் தலைசிறந்து விளங்கியவர் டெய்லர்(E. B. Tylor). அவர் மக்களிடையே ஆவிகளைப்பற்றிய கருத்து எவ்வாறு இருந்து வந்ததெனக் கூறியுள்ளார். அது இக்கால ஆவி ஆராய்ச்சியாளர் கூறும் உண்மைகளைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. அவ் வாசிரியர் கூறியுள்ளதை இங்குத் தருகின்றோம். “ஆதிகாலம் முதல் மக்கள் மரணத்துக்குப்பின் உயிர்கள் ஆவி வடிவில் நிலைபெறுகின்றன என்று நம்பி வந்தார்கள். பலர் இறந்தவர்களின் வடிவில் அவைகளைக் கனவிலும் நனவிலும் பார்த்திருக் கிறார்கள். முற்கால மக்கள், தூக்கத்தில் உயிர் வெளியே சென்றிருக்கின்ற தென நம்பினார்கள். தூக்கம் உயிர் மீண்டு வருவதாகிய நித்திரை; மரணம் உயிர் மீண்டு வராததாகிய நித்திரை என்று அவர்கள் கருதினார்கள். உயிர் வெளியே சென்றிருக்கும் நேரத்தில் உடலைக் குழப்புதல் கூடாதென்னும் கருத்துப்பற்றியே தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்புதல் கூடாது என்னும் கொள்கை உண்டாயிற்று. ஹோமர் என்னும் மாகவி தனது இலியட் என்னும் நூலில் பரக்லொஸ்(Paroklos) என்பவன், நித்திரையாயிருக்கும் அச்சில்லிஸ் என்பவனிடம் தனது ஆவி உடலில் வந்தானென்றும், அச்சில்லிஸ் அவனுடைய புகைபோன்ற கையைப் பிடிக்க முயன்றபோது. அது கைக்கு அகப்படவில்லையென்றும், அவன் நிலத்தின்கீழ் மறைந்து விட்டா னென்றும் கூறியுள்ளார். ஹெர்மோற்றிமஸ் (Hermotimos) என்பவர் தனது உடலைவிட்டு ஆவியுலகங்களுக்குச் செல்வது வழக்கம் என்றும், ஒரு முறை உயிர் ஆவி உலகைவிட்டுத் திரும்பி வருவதன் முன் அவன் மனைவி உடலை எரித்துவிட்டாளென்றும், அதனால் உயிர் ஆவி வடிவில் நின்றதென்றும் கூறப்பட்டுள்ளன. ஆதி மக்கள், உயிர், உடல்களைப்பற்றி எவ்வகைக் கருத்துக் கொண்டிருந்தார்களோ அக் கருத்தே இன்றுவரையும் நிலைபெறுகின்றது. நாய், குதிரை போன்ற அஃறிணைப் பொருள்களுக்கும் உயிருண்டு என ஆதிகால மக்கள் நம்பி வந்தார்கள். பியூசி(Fiji) தீவிலுள்ள மக்கள் வில், அம்பு, ஓடம் போன்ற பொருள்களுக்கும் உயிர் இருக்கின்ற தென நம்புகிறார்கள். உலகின் பல பாகங்களில் இறந்தவர்கள் பொருட்டுப் பலிகள் இடப்படுகின்றன. பெரு நாட்டில் ஒரு அரசன் இறந்தால் அவனுடன் கூடத் துணை செல்லும் பொருட்டு அவன் மனைவியர் தூங்கிச் சாக வேண்டும்; பரிவாரங்களிற் பலர் அவனுடன் கூடப் புதைக்கப்படுவார்கள். மடகாசுகரில் இராடமா(Radama) என்னும் அரசன், அவனுடன் புதைக்கப் பட்ட குதிரைகள் ஒன்றின்மீது ஏறி ஆவி வடிவில் தோன்றினான் என்று சொல்லப்பட்டது. அதிகாரிகள் புதைக்கப்பட்ட பழைய சமாதிகளைச் சூழப் பலரது என்புகள் காணப்படுகின்றன. அவ் வென்புகள் அவர்களின் பரிவாரங்களுடையவையாகும். பாட்ரொகொலொஸ்(Patrokolos) என்பவ னின் உடலை எரித்தபோது சிறை பிடிக்கப்பட்ட ட்ரோசன்(Trojan) மக்களும், குதிரைகளும், நாய்களும் எரிக்கப்பட்டனர். சித்திய நாட்டில் (Scythia) இறந்தவர்களை அடக்கஞ் செய்யும்போது இவ்வாறு செய்யப் பட்டதென ஹெரதோதசு கூறியுள்ளார்; மெலீகா என்பவளுடன் அவள் ஆடைகளும் எரிக்கப்படாமையால் அவளது ஆவி குளிரால் நடுங்கிக் கொண்டிருந்ததெனஅவரே குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கணவருடன் மனைவியர் கொளுத்தப்பட்டார்கள். ஐரோப்பாவில் மனைவியரையும் அடிமைகளையும் உடன் புதைக்கும் அல்லது உடன் கொளுத்தும் வழக் கங்கள் நின்றுபோயின; இன்னும் குதிரைகள் கொல்லப்பட்டு இறந்தவர்க ளுடன் எரிக்கப்படுகின்றன. இவ்வாறு செய்வது, குதிரை மறுஉலகப் பயணத்துக்குப் பயன்படும் என்பது கருதியே யாகும். சில இடங்களில் இறந்தவர்கள் வழிப்பயணத்தில் கிழிந்த துணிகளைத் தைப்பதற்காகப் பிணத்துடன் ஊசியையும் நூலையும் வைத்துப் புதைப்பர். சிலர் பிணத்தின் கையில் சிறு பணத்தை வைத்துப் புதைத்தனர். இது மரண ஆற்றைக் கடப்பதற்கு ஓடக்கூலி கொடுப்பதற்காகும். இவ்வாறு மரணத்துக்குப் பின்னும் மக்கள் ஆவி வடிவில் உறைகிறார்கள் என்னும் கருத்து அநாகரிக காலம் முதல் இருந்து வருகின்றது. ஆவிகள் பெரும்பாலும் இராக்காலங் களிலேயே மக்கள் கண்களுக்குத் தோன்றுகின்றன. இரவில் மக்களைக் காண வருமுன் அவை, யாதோ ஓர் இடத்தில் தங்கியிருத்தல் வேண்டும் எனக் கருதப்பட்டது. மரணமடைந்த குடிசைகளிலேயே அவை தங்கு கின்றன எனச் சிலர் கருதினார்கள். ஆகவே ஒருவர் இறந்தால் அக் குடிசையை விட்டு எல்லோரும் வெளியேறினார்கள். சிலர் அவை இடுகாட் டில் தங்குகின்றன என்று நம்பினார்கள். மறு உலகிலோ, மலை உச்சிகளிலோ தங்கி இராக்காலத்தில் அவை இறங்கி வருகின்றன என்று சிலர் நம்பினார்கள். அவை மறுபடியும் குடும்பங்களில் வந்து பிறக்கின்றன என்னும் கொள்கை யும் மக்களிடையே பரவியிருந்தது. “மரணத்தின்பின் ஆவிகளாக மாறியவர்கள் தமது குடும்பத்தினர் மீது இரக்கமுள்ளவர்களாயிருக்கிறார்கள் என்னும் நம்பிக்கை உண்டாயிற்று. இறந்தவர்களுக்கு ஆண்டில் ஒருமுறை விருந்து இடும் வழக்கம் ஆசியா, ஐரோப்பா என்னும் நாடுகளில் இருந்து வருகின்றது. இவ் வாவிகள் தம் முன்னோராவர் என்னும் கொள்கை மாத்திரமன்று, அவை மக்களுக்கு நன்மையும் தீமையும் செய்ய வல்லன என்றும் கருதப்பட்டது. ஒரு தலைவன் இறந்தால் அவன் ஒரு கடவுள் போல ஆகிறான் என நினைக்கப்பட்டது.” ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கிறித்துவ மதம் பரவியுள்ளமை யாலும், ஆவிகளின் செயல்கள் பேய்கள் தொடர்பான செயலெனக் கொள்ளப் பட்டமையாலும், பேய்கள் சுவர்க்கத்தினின்றும் வழுக்கி விழுந்த ஒருவகைக் கெட்ட ஆவிகள் எனக் கருதப்பட்டமையாலும், கிறித்துவ குருமார் ஆவிகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மதத்துக்கு மாறானவை என்று கொண்டமையாலும், ஆவிகள் சம்பந்தமான ஆராய்ச்சி அமெரிக்கா ஐரோப்பா முதலிய நாடுகளில் தலைஎடுப்பது கடினமாக இருந்துவந்தது. மத்திய காலங்களில் மந்திரவித்தைக்காரரென்று ஐயுறப்பட்டவர்கள், தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டார்கள்; அல்லது ஆற்றில் எறியப்பட்டார்கள். மெஸ்மர் என்பவர் “மெஸ்மெரிசம்” என்னும் வித்தையைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து வெளியிட்டபோது அவர் மந்திரவித்தைக்காரர் என்று கருதி ஆஸ்திரிய அரசாங்கம் அவர் அந்நாட்டில் இருப்பதை அனுமதிக்கவில்லை. அவர் பிரான்சிலே சென்றிருந்து தனது ஆராய்ச்சி களை நடத்திப் புகழ் அடைந்து பலரால் போற்றத்தக்கவரானார். கலிலியோ கலிலி என்பவர் தொலைநோக்கியைச்(Telescope) செய்து அதன்மூலம், சூரியனைக் கிரகங்கள் சுற்றுகின்றன என்னும் கொள்கையை வெளியிட்டார். இதற்காக இவர்மீது குற்றஞ்சாட்டி விசாரணை செய்த கத்தோலிக்க மதகுரு அவரைச் சிறையிலடைக்கக் கட்டளையிட்டார். கலிலியோ தனது தொலை நோக்கி மூலம் கிரகங்களை நோக்கித் தான் கூறுவதன் உண்மையை அறிந்து கொள்ளும்படி அவர்களைக் கேட்டபோது அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்தனர். அவ்வாறு செய்யின் ஒருபோது தாங்கள் கொண்டுள்ள கருத்துப் பொய்யாய்விடுதல் கூடுமென அவர்கள் அஞ்சினார்கள். 1இவ்வாறு முற்காலங்களில் புதிய உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்குச் சமயம் பெருந் தடையாக இருந்து வந்திருக்கின்றது. ஆவி ஆராய்ச்சியைப்பற்றிய வரலாற்றுச் சுருக்கம் தத்துவ மனோதத்துவ அகராதி2 என்னும் நூலில் ஆவி ஆராய்ச்சி (Spiritualism) என்னும் பொருள்பற்றிக் கூறப்பட்டிருப்பது வருமாறு: மரணத்துக்குப் பின் ஆவிகள் இவ்வுலகை விட்டு மறு உலகிற் சென்று வாழும் வரலாற்றை ஆராயும் ஆராய்வு ஆவி ஆராய்ச்சி எனப்படும். ஆவி களைப்பற்றிய ஆராய்ச்சி 1848ஆம் ஆண்டு தொடங் கிற்று. நியூயார்க்கிலே ஹைடிவெல்லா என்னும் இடத்தில் நிகழ்ந்ததை ஒத்த நிகழ்ச்சிகள் பல இடங்களில் நிகழ்ந்துள்ளன. 1649இல் வூட்ஸ்டக் (Wood stock) அரண்மனைகளில் நிகழ்ந்த குழப்பங்களும் இவ் வகையினவே. அமெரிக்கா ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் ஆவி ஆராய்ச்சியைப் பற்றி மாத வெளியீடுகள் பல நடத்தப்படுகின்றன. கதவைத் தட்டிய பேய் நியூயார்க்கிலே ஹைடிவெல்லா என்னும் இடத்தில் பாக்ஸ் (Fox) குடும்பத்தினர் குடியிருந்தார்கள். 1848இல், அவர்கள் குடியிருந்த வீட்டில் அடிக்கடி தட்டும் சத்தம் கேட்டது. தட்டுகிறவர்களைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. அதனால் அவர்கள் தொந்தரவு அடைந்து வந்தார்கள். தட்டும் சத்தத்தினால் நிலம் அதிர்ந்தது. அவர்கள் அயலவர்களைத் தமக்கு உதவி புரியும்படி அழைத்தார்கள். ஒவ்வொரு அறையிலும ஐந்து அல்லது ஆறு பேர் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். சிலர் வெளியே நின்றார்கள். சத்தம் வழக்கம் போற் கேட்டது. ஒருநாள் பாக்ஸ் வெளியே போயிருந்தார். நித்திரை கொள்ள முடியாதிருந்த அவரது சிறுமிகள் வெளியே தட்டும் சத்தத்தை போலத் தாமும் தட்டினார்கள். இவர்கள் எத்தனை தரம் தட்டினார்களோ அத்தனை தரம் தட்டும் சத்தம் வெளியே கேட்டது. பின்பு பாக்ஸின் மனைவி சிறிய பெண்ணைப் பத்துவரையும் எண்ணும்படி சொன்னாள் உடனே பத்துச் சத்தங்கள் வெளியினின்று வந்தன. பின்பு பாக்ஸின் மனைவி தட்டுவது மனிதரா என்று கேட்டாள். மறுமொழி யில்லை. நீ ஆவியாயிருந் தால் இருமுறை தட்டு என்றாள். இரண்டு தட்டும் சத்தங்கள் வந்தன. இவ் வகையான தட்டும் சத்தங்களால் ஆவியுடன் பேசப்பட்டது. அங்குத் தட்டியது முப்பது வயதுள்ள ஒரு சில்லறை வியாபாரியின் ஆவியென்றும் அவன் பணத்தின் பொருட்டு நடு இரவில் கொல்லப்பட்டானென்றும், அவனுடைய உடல் அவ்விடத்தில் புதைக்கப்பட்டதென்றும் தெரிய வந்தது. அயலவர்களை அழைத்தால் தட்டி மறுமொழி கூறமுடியுமோ என்று கேட்கப் பட்டது; முடியும் என்னும் மறுமொழி தட்டுதல்மூலம் வந்தது. அயலவர்கள் கூடினார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்ட விடைகள் சரியாக விருந்தன. தட்டும் சத்தம் கேட்கும்போது, பாக்சையும் அவர் மனைவியையும் சிறுமிகளையும் பலர் கவனித்தார்கள். அவர்களின் கால்களும் கைகளும் பைகளுக்குள் விட்டுக் கட்டப்பட்டன. அவர்கள் பஞ்சு மெத்தையின்மீது நிற்கும்படி விடப்பட்டார்கள். இச் சத்தம் உண்டா வதில் ஒருவகையான சூழ்ச்சியும் இல்லையென முடிவு செய்யப்பட்டது. இச் செய்தி பரவியது. உடனே குருமார், நீதிபதிகள், சட்ட வல்லுநர் முதலிய பலர் அவ்விடம் சென்றார்கள். பின்பு இத் தட்டுதல் பல வீடுகளிற் கேட்கத் தொடங்கின. பின்பு பாக்ஸ் குடும்பத்தினர் றோசெஸ்ரர் என்னும் இடத்தில் ஒரு வீட்டில் சென்று குடியிருந்தார்கள். அங்கு ஆயிரக்கணக்கானோர் அவர்களிடம் இவ் வியப்பைக் கேட்டறிய வந்தார்கள். இதுவே மேற்குத் தேசங்களில் ஆவியைப்பற்றி ஆராய்வதற்கு ஆரம்பமாக விருந்தது. பாக்ஸ் குடும்பத்தினர் குடியிருந்த ஹைடிவெல்லாவில் கரியுடனும் சுண்ணாம்புடனும் மனித எலும்பு தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. விரிவுரைகள் நிகழ்த்திய வேலையாள் 1845இல் நியூயார்க்கில் ஆண்ட்ரு ஜாக்சன்(Andrew Jackson) என்னும் ஒருவன் இருந்தான். அவன் வறிய நெசவுக்காரனின் மகன். அவன் சப்பாத்துக் கட்டுபவன் ஒருவனிடம் வேலை செய்து வந்தான். அவனிடத் தில் சில ஆற்றல்கள் காணப்பட்டன. அவன் சில சமயங்களில் ஒருவகை மயக்க நிலையை அடைந்தான். அவனுக்குப் பல தெளிவுக் காட்சிகள் தோன்றின. அவன் பல நோயாளரைக் குணப்படுத்தினான். மயக்க நிலை யில் இருக்கும்போது அவனுடைய அறிவு ஆற்றல் அளவு கடந்திருந்தது. அந்நிலையில் நியுயார்க் நகரில் உள்ள அறிஞரின் சார்பில் அவன் 157 விரிவுரைகள் செய்தான். அவை 800 பக்கங்கள் கொண்ட புத்தக வடிவில் அச்சிடப்பட்டன. இவ்வகை ஆற்றல் அவன் வாழ்நாளில் நீண்டகாலம் இருந்து வந்தது. அவனுடைய மாணவனாகிய தாமஸ் லேக் ஹாரிஸ் (Thomas Lake Harris) என்பவன் 384 பக்கங்கள் அடங்கிய பாடல்களை (Lyric of the golden age) தொண்ணூற்றுநான்கு மணி நேரத்தில் சொன்னான். அப் பாடல்கள் மில்டனின் பாடல்களுக்கு இணையானவை என்று வில்லியம் ஹேவிட் புகழ்ந்துள்ளார். பையனின் ஆவி 1846இல் முந்நூறு மைல் தூரத்துக்கு அப்பால் வாழ்ந்த பையன் ஒருவனின் தோற்றம் ஹோப்(Hope) என்பவருக்கு முன்னால் தோன்றிக் குறித்த நேரத்துக்கு மூன்று நாட்களின்முன் தான் இறந்துபோனதாகக் கூறிற்று. ஆராய்ச்சியில் அது உண்மையாகக் காணப்பட்டது. சடப்பொருள்கள் தாமே அசைதல் சில சமயங்களில் யார் செய்வதென்று அறிய முடியாத சத்தங்களும் வாத்திய ஒலிகளும் கேட்கின்றன; சில சடப்பொருள்கள் தாமே அசைகின்றன. சில வேளைகளில் அறைகள் நடுங்குகின்றன. பூ, பழம் முதலிய பொருள்கள் மூடப்பட்ட அறைக்குள் கொண்டுவரப்படுகின்றன. சில சமயங்களில் அவிழ்க்கமுடியாத முடிச்சுகள் அவிழ்க்கப்படுகின்றன. சில வியப்புகள் மயக்க நிலைமை அடைந்திருக்கும் ஆவியுடன் பேசுகின்றவர் பிடித்திருக்கும் வாத்தியப் பெட்டி தானே ஒலிக்கின்றது. அவரின் பக்கத்தே இருப்பவர்கள் வைத்திருக்கும் வாத்தியப் பெட்டிகளும் சில சமயங்களில் ஒலிக்கின்றன. பூட்டப்பட்டிருக்கும் “பியானோ” பெட்டிகளில் ஒலி உண்டாகின்றது. சில வேளைகளில் எழுத்துகளும் ஓவியங்களும் மனிதர் வரையாமலே எழுதப்படுகின்றன. மேசைகளின் கீழ் எறியப்பட்ட கடுதாசி களிலும், அல்லது மேசை அறைகளில் வைத்துப் பூட்டப்பட்ட கடுதாசிகளி லும், இரண்டு சங்குப்புரி ஆணியாற் பூட்டப்பட்ட இரண்டு கற்பலகைகளி னிடையே வைத்த கடுதாசிகளிலும் எழுத்துகள் காணப்படுகின்றன. இவ்வாறு எழுதப்பட்டவை ஆவியோடு பேசுகின்றவர் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடைகளாகக் காணப்படுகின்றன. ஓவியங்கள் பல வகையின. சில கற்பலகைகளில் கற்குச்சிகளால் அல்லது வெண்கட்டிகளால் எழுதப்பட்டிருக்கின்றன; சில, கடுதாசியில் எழுதப்பட்டுள்ளன. மனிதர் எழுத முடியாத விரைவில், நிறக்கட்டிகளாலும், நிற மைகளாலும், நிற எண்ணெய் மைகளாலும் எழுதப்படுகின்றது. தெளிவுக்காட்சியுள்ள ஒரு ஸ்கொத்தியர் இருட்டில் அழகிய ஓவியங்களைத் தீட்டியுள்ளார். மேசையி லிருந்து கீழே தொங்கும்படி விடப்பட்டுள்ள துணிக்குக் கீழ் எறியப்பட்ட அட்டைகளின் மீது பதினைந்து அல்லது இருபது நொடிகளுக்குள் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவ்வகை ஓவியங்களிற் பல இறந்துபோன பெஞ்சமின் கோல்மன் என்பவரிடம் இருந்தன. கோல்மன் ஒருமுறை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக ஒரு அட்டையில் இரண்டு இடங்களில் குண்டூசியால் குத்திவிட்டு அதனை மேசையின் கீழ் எறிந்தார். இரண்டு பறவைகள் இரண்டு பூமாலையைப் பிடித்து நிற்பதாக அதன்மீது ஓவியம் வரையப்பட்டிருந்தது. குண்டூசி குத்தப்பட்ட அடையாளங்களில் பறவைகளின் கண்கள் அமைந்திருந்தன. சில சமயங்களில் மேசைகள் அந்தரத்தில் எழுந்தன. ஹோம் என்பவர் தமது கையில் நெருப்புத் தணலை எடுத்து வைத்திருந்தார். பிறர் கையிலும் வைத்தார். அது அவரைச் சுட வில்லை. யான் எட்டு முறை நெருப்புத் தணலை கையில் வைத்திருந்தேன். யான் கையை முகத்துக் கருகில் கொண்டுபோனபோது வெப்பம் முகத்தில் வீசிற்று. சில சமயங்களில் கண்ணுக்குப் புலப்படக்கூடிய கைகள் வந்து எழுதுகின்றன. கண்ணுக்குத் தெரியும்படியும், தெரியாமலும் வந்த ஆவிகள் நிழற்படம் பிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆவிகளைப் பார்த்து அவைகள் மூலம் தூரத்திலுள்ள செய்திகளை அறிந்திருக்கிறார்கள். அவை கூறிய வருங்காரியங்கள் உள்ளவாறு நிகழ்ந்தன. ஆவிகளுடன் பேசக்கூடிய வர்கள் பெரிய விரிவுரைகளையும் கட்டுரைகளையும் வரைந்திருக்கிறார்கள். நீதிபதி எட்மொண்ட்(Judge Edmond) என்னும் அமெரிக்கர் இவ் வாராய்ச்சி யில் பெரிய ஊக்கம் கொண்டிருந்தார். அவரது மகள் கலாசாலைக் கல்வி அதிகம் பயிலவில்லை. ஆயினும் மயக்க நிலையை அடையும்போது அவள் தான் அறியாத பல மொழிகளில் பேசினாள். அவள் கிரேக்க மொழியையும் திருத்தமாகப் பேசியிருக்கிறாள். நீ யார் இவ்வுடலை விட்ட பின் நீ வாழ்வதை நம்பினால் இவ் வுடலோடு சம்பந்தப்பட்டிருக்கும்போது உண்டாகும் துயரங்களை நினைந்து நீ பரிகாசம் செய்வாய். அழிவில்லாத நீ இவைகளுக்கு எல்லாம் மேற்பட்டவன். இவ் வுலகில் நிகழும் சுக துக்கங்களெல்லாம் உனது அனுபவங்கள் அல்லது பரீட்சைகள். மரணத்துக்குப் பின் நாம் வாழ்வதை ஆராய விரும்பினால் நாம் பின்வரும் கேள்விகளைக் கேட்கவேண்டும். நாங்கள் ஏன் வாழ்கின் றோம்? எங்கிருந்து வந்தோம்? எங்கு செல்கின்றோம்? நாங்கள் என்றால் என்ன? இவ் வுடல் மனிதனா? அல்லது அவனுக்கு மனமும் ஆவியும் இருக்கின்றனவா? இவ் வுலகில் தோன்றிய பெரிய அறிவாளிகளாகிய புத்தர், சொராஸ்ரர், பிளாட்டோ, சென்போல், யேசு போன்றவர்கள் எல்லாம் மனிதன் உடல் உயிர் ஆவிகளோடு கூடியவன் என்று கூறியிருக்கிறார்கள். இக்காலத்திலும் வெளிப்படையான இவ் வுண்மையை அறிஞர் மறுக்கவில்லை. உடலில் இம் மூன்றும் வெளிப்படையாக விருக்கின்றன. உடலென்றா லென்ன? அது உயிரும் ஆவியும் உறையும் வீடு. இவ் வீட்டைவிட்டு அவை பிரிந்து செல்வதை மரணம் என்கிறோம். அது நாங்கள் களைந்து எறிந்துவிடும் உடை போன்றது. உயிரென்பது என்ன? பெண் அல்லது ஆண் என்பதே உயிர். இது இறந்த பின் வாழ்வது; ஒழுக்க சம்பந்தமாக அடைந்த வளர்ச்சி களை இவ் வுடலோடு சம்பந்தப்பட்டிருக்கும்போது தன்னைப்போன்ற பிறருக்குக் காட்டுவது. இவ் வுயிரை உடம்பு செய்வது போல் உணர்த்துவதும் பிடித்திருப் பதுமே ஆவி. அது எல்லா உயிர்களுக்கும் பின்னால் இருப்பதும் அழிக்க முடியாததுமாகிய ஆற்றல். ஆவி என்பது சடத்தை உயிருடன் இருக்கச் செய்யும் ஆற்றல் அல்லது விசையாகும். ஆவியின் சத்தி உடல் மனங்களி லிருந்து உள்ளுக்கிழுக்கப்படும்போது மனிதன் இறந்துபோகின்றான். அப்பொழுது அவன் உயிர்ப்புள்ள ஆவியோடு அடுத்த உலகை அடை கின்றான். இப்பொழுது மனிதன் அழியாதவன் என்று நாம் சான்றுப்படுத்த முடியாது. அவ் வுலகிலுள்ள ஆவித் தலைவர்கள் அவ்வுலகிலிருந்து வேறு மேல் ஆவி உலகங்களுக்குச் செல்வோர் இறக்கின்றனர் என்று கூறுவதை நாம் அறிவோம். இதனால் நாம் அனுமானிப்பது மந்தமான இயக்கத்தி லிருந்து படிப்படியே மேலான இயக்கமுள்ள உலகங்களை நாம் இறந்து அடைகின்றோம் என்பதே. எங்களுக்கு இருக்கின்ற இவ் வுடல் ஒன்று மாத்திரம் உள்ளதா? இல்லை. சதையும் இரத்தமுமல்லாத வேறு நுண்ணிய சடப்பொருளால் ஆன காற்றுப் போன்ற ஒரு உடலுமுண்டென்று ஆராய்ச்சியாளர் கூறுகின் றனர். இவ்வுடலையே நாங்கள் ஆவி என்கின்றோம். மரண காலத்தில் அது பருஉடலைவிட்டு வெளியேறுகின்றது. அப்பொழுது பருஉடல் அழிந்து போகின்றது. உயிர் இக் காற்றுமயமான உடலுள் உறைந்து, மரணத்துக்குப் பின் செல்லும் உலகை அடைகின்றது. மரணத்துக்குப் பின் உயிர்கள் செல்லும் உலகங்கள் பல. இறந்தபின் உயிர் வெளியேறும் காற்றுமயமான உடலே சிலருக்குத் தோற்றப்படுகின்றது. உயிரைத் தாங்கி நிற்கின்ற காற்றுமயமான உடலை பல காலங்களில் கோடிக்கணக்கானோர் பார்த்திருக்கின்றனர். தற் காலத்தில் அவை நிழற்படம் பிடிக்கவும் பட்டிருக்கின்றன. அவை உடலை விட்டுப் பிரிந்துபோகும் நிலைமையிலும் புகைப்படங்கள் பிடிக்கப் பட்டிருக்கின்றன. இருவகை உடல் உயிருக்கு இருவகை உடல்கள் உண்டு என்னும் உண்மையை மக்கள் வெகுகாலத்துக்கு முன்னரேயே அறிந்திருந்தார்கள். மரணத்துக்குப் பின் உயிர் நுண் உடலுடன் இறந்த இடத்திலோ உடல் புதைக்கப்பட்ட இடத்திலே தங்கி நிற்கின்றதென்னும் நம்பிக்கை பற்றியே இறந்தவர்கள் பொருட்டுப் பல சடங்குகள் செய்யப்படுகின்றன. பருமனாகிய இவ் வுடலில் உயிர் தங்குவதற்குத் தகுதியில்லாமல் போகும்போது, அது அவ் வுடலை விட்டுத் தனது நுண்ணிய உடலுடன் பிரிகின்றது. அவ் வுடலுடன் அது நினைத்த இடங்களுக்கோ, பிற உலகங்களுக்கோ செல்லக் கூடிய நிலையை யடைகின்றது. இவ்வகை உடலைச் “சூக்கும” உடல் என்று நம்மவர் வழங்குவர். இறந்தவர்களின் ஆவி வடிவங்களை நாய்கள், குதிரைகள், மாடுகள் என்பன எளிதிற் காணத்தக்கன என்று நம்பப்படுகின்றது. இது உண்மையென்று கொள்வதற்குரிய பல சான்றுகளும் உள்ளன. இந் நுண் ணுடல் நுண்ணிய காற்றுப் போன்ற சடப்பொருளினால் ஆனது. அவ் வுடலை ஊறுபடுத்த முடியாது. நம் முன்னோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அறிந்திருந்த இவ் வுண்மையையே இன்றைய மேற்புல அறிஞரும் வெளியிட்டுள்ளார்கள்.1 ஆதர்கானன்டாயல் என்பார் தனது பரு உடலை விட்டு நுண் உடலோடு வெளியே சென்று மீண்ட ஒரு டாக்டரின் வரலாற்றைக் கூறியுள்ளார். அது வருமாறு: “அமெரிக்க அகராதியைத் தொகுத்தவரும், ஆவி ஆராய்ச்சி யாளருமாகிய வங்க்(Mr. Funk) என்பவர் அமெரிக்க மருத்துவர் ஒருவரின் அனுபவத்தைப் பற்றிக் கூறியுள்ளார். மருத்துவர் புளோரிடா(Florida) என்னும் இடத்தில் இருந்தார். ஒரு நாள், அவருக்கு ஒருவகை மயக்கம் உண்டாயிற்று. அப்பொழுது அவர் தான் தனது உடலை விட்டு வெளியேறு வதாக உணர்ந்தார். அவர் தான் தனது உடலின் பக்கத்தே நிற்பதைக்கண்டர். அவர் தனது உடலையும் அதன் தோற்றத்தையும் பார்த்து, அது தனது உடல் என்று அறியக்கூடியதாக விருந்தது. அப்பொழுது அவருக்குத் தொலை விடத்தே வாழும் நண்பர் ஒருவரின் நினைவு வந்தது. சிறிது நேரத்தில் அவர் அந் நண்பரின் அறைக்குள் இருப்பதை அறிந்தார். நண்பரின் இடம், அமெரிக்காக் கண்டத்தின் மத்திய பகுதியில் உள்ளது. அவர் தனது நண்பரைப் பார்த்தார். நண்பர் தன்னைப் பார்த்ததையும் அவர் கண்டார். சிறிது நேரத்தில் அவர் தனது உடலுக்குப் பக்கத்தே மீண்டு வந்து நின்றார். அவ் வுடலுள் நுழையலாமா அல்லது விடலாமா என்னும் எண்ணம் அவருக்குத் தோன்றிப் போராடியது. அவர் அதைப் பற்றிச் சிறிதுநேரம் தனக்குள்ளேயே நினைத்துப் பார்த்தார். அவர் அசைவற்றுக் கிடந்த தனது உடலின் உட்புகுந்து உயிர் பெற்று எழுந்தார். அவர் நிகழ்ந்தவற்றைப்பற்றித் தனது தண்பருக்குக் கடிதம் எழுதியிருந்தார். நண்பர், குறித்த நாளில் தான் அவரைத் தனது அறையுள் பார்த்ததைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.” இவ் வரலாறு, திருமூல நாயனார் இடையனுடைய உடலில் புகுந்தார்; விக்கிரமாதித்தன் பட்டி என்போர் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை அறிந்திருந்தார்கள் என வழங்கும் பழங்கதைகளை மிக இது ஒத்திருக் கின்றது. உடலைவிட்டு உயிர் தனது ஆவி உடலோடு பயணஞ்செய்து, மறு படியும் மீண்டு வந்ததைக் குறிக்கும் வரலாறுகள் உள்ளன. இதற்கு எடுத்துக் காட்டாக இன்னொரு நிகழ்ச்சியை இங்குத் தருகின்றோம். “யோசேப் கொவ்வி என்பவரின் மனைவிக்கு நோய் கண்டது. அவள் தந்தை வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டாள். அவ் வீடு கணவன் வீட்டிலிருந்து ஒன்பது மைலுக்கு அப்பால் உள்ளது. அவள் 1691ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4வது நாள் மரணமானாள். இறப்பதற்கு முன் அவர் தனது இரண்டு பிள்ளைகளைக் காண ஆவல் கொண்டிருந்தாள். அவள் தனது விருப்பத்தைக் கணவனுக்குத் தெரிவித்தாள். பயணம் செய்வதற்கு ஏற்ற உடல் நிலையில் அவள் இல்லை என அவன் கூறினான். அன்று இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் இடையில் அவள் ஒரு வகை மயக்கம் அடைந்தாள். அவளுடன் அந் நேரம் இருந்த ரேணர் என்பவள் பின் வருமாறு கூறினாள். ‘அவளுடைய விழிகள் ஒரே பார்வையாக விருந்தன; வாய் மூடி யிருந்தது. ‘நர்ஸ்’ தனது கையை அவள் வாய்மீதும் மூக்கின்மீதும் வைத்துப் பார்த்தாள்; மூச்சு வரவில்லை. நோயாளி மயக்கத்தில் இருக்கின் றாளோ, இறந்துவிட்டாளோ என்று கூறமுடியவில்லை என்று சொன்னாள். நோயாளி மயக்கம் தெளிந்து எழுந்தவுடன், தான் தனது பிள்ளைகளைப் பார்த்து வந்ததாகக் கூறினாள். அப்படியிருக்க முடியாது; நீ படுக்கையில் இருக்கிறாய் என்றேன். நித்திரை யாயிருந்தபோது நான் பிள்ளைகளைப் பார்த்து வந்தேன் என்றாள்.’ “பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அலக்சாத்ரின் விதவை யாகிய ‘ஆயாள்’ கூறியது வருமாறு; ‘இரவு இரண்டு மணிக்கு முன்பு மேரி என்பவள், பிள்ளைகளில் ஒன்று கிடத்தப்பட்டிருந்த அடுத்த அறையி னின்றும் நான் இருந்த அறைக்குள் வந்தாள். அங்கு அவளது இளைய பிள்ளை கிடத்தப்பட்டிருந்தது. அவளுடைய உதடுகள் பேசுவது போல அசைந்தன. ஆனால் சத்தம் எதுவும் வரவில்லை. அவ் வடிவம் இங்குப் பதினைந்து நிமிடம் வரையில் தங்கிற்று’ இவ் வுண்மையை அவள் அதிகாரிகள் முன்னிலையில் சத்தியம் செய்து கூறினாள். அடுத்த நாள் மேரி இறந்து விட்டாள்.1” இறந்தவரின் ஆவி அவர் இறந்து சிறிது நேரத்துள் தொலைவிலுள்ள நண்பர் அல்லது உறவினருக்குத் தோற்றப்படுவதைப்பற்றிய செய்திகள் பல வுள்ளன. இங்குச் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகின்றோம்: (1) “சிறுமியாயிருக்கும்போது நான் எனது சகோதரியோடு படுத்து நித்திரை கொள்வது வழக்கம். ஒரு நாள் இரவு நாங்கள் படுத்தபின், விளக்கை அணைத்தோம். அடுப்பில் மெதுவாக எரிந்துகொண்டிருந்த நெருப்பின் வெளிச்சம் அறைக்குள் தெரியக்கூடியதாக இருந்தது. நான் அடுப்பைப் பார்த்தபோது ஒருவர் இருந்து குளிர் காய்ந்துகொண்டிருந்தார். அடுத்த கிராமத்தில் பெரிய குருவாயிருந்த எனது மாமனாரின் தோற்றத்தை அவ் வடிவம் ஒத்திருந்தது. உடனே நான் என்னுடைய சகோதரியை எழுப்பி அவ் வடிவத்தைக் காட்டினேன். அவளும் அவ் வடிவம் எங்கள் மாமனாரைப் போல் இருப்பதைக் கவனித்தாள். நாங்கள் பயந்து ‘உதவி! உதவி! என்று சத்தம் இட்டோம். அடுத்த அறையில் நித்திரை கொள்ளும் எங்கள் தந்தை படுக்கையினின்றும் குதித்து, மெழுகு திரியுடன் ஓடிவந்தார். உடனே அவ் வுருவம் மறைந்தது. எங்கள் மாமனார், கடந்த மாலையில் இறந்து விட்டார் என்னும் செய்தியைக் கொண்ட கடிதம் அடுத்த நாள் காலை எங்களுக்குக் கிடைத்தது.” (2) n.j.s. என்பவரும் F.L. என்பவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்தார்கள். இவர்கள் எட்டு ஆண்டுகளாக நண்பர்களாயிருந்து வந்தனர். 1883ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி திங்கட்கிழமை F.L. என்பவர், உடல் நலம் இல்லாதிருந்தார். மார்ச் மாதம் 24ஆம் திகதி சனிக்கிழமை N.J.S. என்பவர் தலைவலியால் வருந்தினார். அவர் சாய்வு நாற்காலியிற் சாய்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தனது நண்பர் F.L. தனக்கு முன்னால் நிற்கக் கண்டார். அவர் தொப்பியில் கறுப்பு நாடாக் கட்டியிருந் தார். கையில் தடி வைத்திருந்தார். அவர் N.J.S. என்பவரைக் கூர்ந்து பார்த்துவிட்டு மறைந்து விட்டார். அப்பொழுது N.J.S. ஒரு ஆவி வந்து சென்றதாகத் தனக்குள் எண்ணினார். அவர் உடல் சில் என்று குளிர்ந்தது. மயிர்கள் கூச்செறிந்தன. அவர் மனைவியை அழைத்து நேரம் என்ன என்று கேட்டார். அவள் ஒன்பது மணிக்குப் பன்னிரண்டு நிமிடங்கள் இருப் பதாகக் கூறினாள். அப்பொழுது அவர் F.L. இறந்துவிட்டார் என்று அவளுக்குத் தெரிவித்தார். அப்படி இருக்கமுடியாது என்று அவள் அவருக்குத் தைரியங் கூறினாள். அவர் தான் சொல்வது உண்மை எனக் கூறினார். அடுத்த நாள் F.L. என்பவரின் சகோதரன் சனிக்கிழமை 9 மணிக்குப் பதினைந்து நிமிடம் இருக்கும்போது இறந்துவிட்டார் எனக் கூறினார்.1” ஆவி உடல் 2மரணகாலத்தில் உயிரைத் தாங்கி ஒருவனை அல்லது ஒருத்தியை மறு உலகத்துக்குக் கொண்டு செல்வது காற்றுமயமான இவ் வுடலாகும். நான் பகல் நேரத்திலும் இரவிலும் ஆவிகளைப் பார்த்திருக்கிறேன். நான் அவை களுடன் பேசியுமுள்ளேன். நான் அவைகளின் கையைப் பிடித்துப் பரிசித் திருக்கிறேன். எனக்கும் வேறு பலருக்கும் முன்னிலையில் அவை பரு உடல்போல் வயிரமடைந்து தோற்றமளிப்பதையும் பார்த்திருக்கிறேன். பின்பு அவை படிப்படியே உருவம் கலைந்து மறைந்துவிட்டன. பல முறைகளில் இறந்தவர் ஆவி வடிவில் நின்று சொற்பொழிவுகள் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அப் பேச்சுகளில் இவ் வுலக மறு உலக அறிவுக்குரிய செய்திகள் அடங்கியுள்ளன. இவ் வுடலோடு கூடிய உயிர்கள் செய்யமுடியாத பல செயல்களை அவை புரிவதையும் நான் பார்த்திருக் கிறேன். நான் ஒரு எகிப்திய ஆவியோடு பழகியிருந்தேன். அதன் மூலம் நான் பல ஆராய்ச்சிகளை நிகழ்த்தினேன். சிவப்பு வெளிச்சமுள்ள அறை யில் நிகழ்ந்தது வருமாறு. அறையிலிருந்த ஒரு பெண் கையில் வைத் திருந்த மின்சாரச் சூளை(Electric torch) ஆவி தனது கையால் எடுத்துத் தனது முகத்துக் கெதிரே பிடித்தது. எங்கள் காலுக்கு இரண்டு அல்லது மூன்றடி தூரத்தில் வெள்ளை முகில்போன்ற தோற்றம் அறையிலிருந்த ஒன்பது பேருக்கும் தெரிந்தது. இம் மேகம் 18 அங்குலச் சதுரமுடையதா யிருந்தது. அம் மேகத்திலிருந்து நான் பழகியிருந்த ஆவியின் முகம் சிறிது சிறிதாக வெளிப்பட்டுத் தெரிந்தது. கண் மூடப்பட்டிருந்தது. வெள்ளைச் சலவைக் கல்போல் முகம் வெண்மையாயிருந்தது. மூக்கும் கண்களும் உயிருள்ளவர் களின் கண்கள் போன்றிருந்தன. அது மூன்று முறை வெளிச்சத்தைத் தனது முகத்துக்கு நேரே பிடித்தது. நாம் மூன்று முறையும் அதன் முகத்தைத் தெளிவாகப் பார்த்தோம். சிறிது நேரத்தில் ஒருகை எனது இடது கையையும் இடது முழங்காலையும் தொடுவதாக உணர்ந்தேன். முதலில் அது குளிராக விருந்தது. விரைவில் அது வெப்பமாகவும் மனிதக் கை போலவும் மாற்ற மடைந்தது. அதன் விரல்கள் வெப்பமாக விருந்தன. அவை உயிருடைய வர்களின் விரல்போல் அழுத்தமும் வளையக்கூடியனவுமாயிருந்தன. எங்களிற் சிலருக்கு ஆவியின் கைகளிலிருந்து அரிய வயிரக் கற்கள் கிடைத்தன. எனக்கு அழகிய வயிரம் ஒன்று கிடைத்தது. இன்னொருவருக் குக் கறுப்புக் கல் கிடைத்தது. இன்னொருவருக்குச் சிவப்புக் கல் கிடைத்தது. 1934ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29ஆம் திகதி சிவப்பு முகில் என்னும் என்னோடு வாலாயப்பட்ட எகிப்திய ஆவி வந்தது. அறையில் பதினான்கு பேரிருந்தோம். அறையில் எவராவது எப்பொருளாவது நுழைய முடியாதபடி எல்லாப் புறங்களும் மூடப்பட்டிருந்தன. ஆவிகள் தடித்த வடிவங் கொள்ளவும் நுண்ணிய வடிவங் கொள்ளவும் முடியுமென்பதை அத்தாட்சிப்படுத்த விரும்பினேன். அடுத்த தோட்டத்தில் கூட்டுக்குள் இருக்கும் பறவைகளுள் ஒன்றைப் பூட்டப்பட்டுள்ள எங்கள் அறைக்குள் கொண்டு வரும்படி சொன்னேன். உடனே ஆவி அச் சிறிய பறவைகளி லொன்றை உலோகத் தகடு ஒன்றின் எதிரில் எங்களுக்குக் காட்டி எங்கள் எல்லோரையும் அதைப் பிடித்து அதன் இறக்கைகளைத் தட்டும்படி விட்டது. அப்பறவை மயக்க நிலையில் வெப்பமாக விருந்தது. அதன் வாலிலிருந்து சில இறக்கைகள் பிடுங்கப்பட்டன. இப் பரிசோதனையின் போது ஒருவரும் வெளியே செல்லவில்லை. அறைக்கு ஒரு கதவு மாத்திர மிருந்தது. பின்பு பறவை கூட்டில் விடப்பட்டது. ஆவி உலகில் ஆவிகள் மனிதரைப்போலக் கேட்கவும் கூடுமென்ப தற்கு எனது பரிசோதனைகளில் ஒன்று போதிய சான்றாகும். ஒரு நாள் சாயங்காலம் நான் மாடியில் நின்று எனது மனைவியோடு சில அந்தரங்க கருமங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அதனைக் கேட்பதற்கு அவ்விடத்தில் வேறு யாரும் இல்லை. சிலமணிநேரம் கழித்து நான் சில மைல்களுக்கு அப்பால் இருந்தபோது எனது வாலாயமான ஆவி நண்பன் நான் கூறியவற்றைச் சொல்லி எனக்கு ஆறுதல் அளிக்க வந்தான். நாங்கள் பேசிக்கொண்டிருந்த கருமத்தை எவரும் அறியமாட்டார்கள். அது ஒருவரின் சிக்கலான கருமத்தைப் பற்றியதாகும். இவ்வகையான நிகழ்ச்சிகளைத் தொலைவிலுணர்தல் என இக் கால ஆராய்ச்சியாளர் கூறுவதை நிறுத்தி விட்டனர். நானும் வேறு பலரும் அப்பொழுது மனதில் நினையாத பல கருமங்களைப் பற்றிய செய்திகள் புலப்படாத உலகினின்றும் வந்தன. இவற்றை தெலிபதி என்று கூறமுடியாது. ஆவிகள் காற்றுமயமான தமது உடலை மனித உடல்போல ஆக்கிக் கொண்டு தோன்றவும் முடியுமென்று சொல்லப்படுகிறது. ஆவிகளின் வடிவம் ஆவிகள் இறந்தவரின் வடிவிற் காணப்படுகின்றன. அவைகளின் தலைகளும் மேற் பக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றன. கீழ்ப்பாகங்கள் சிறிது சிறிதாகத் தேய்ந்து நீராவிபோலக் கண்ணுக்குத் தெரியாதவா றிருக் கின்றன. அவைகளின் கால் ஒருபோதும் கண்ணுக்குத் தெரிவதில்லை. 1தெய்வங்களின் கால் நிலத்திற் படிவதில்லை. அவை கண்இமை கொட்டுவ தில்லை எனத் தமிழ் நூல்களில் கூறப்படுவது, மேல் நாட்டறிஞர் ஆராய்ந்து கூறுபவைகளை நன்கு ஒத்துள்ளன. விலங்குகளின் ஆவிகள் விலங்கு களைப் போலவே உள்ளன. இதனை விளக்க ஒரு எடுத்துக்காட்டுத் தருகின் றோம். பின்வருவது ஆவிகள் தொடர்பான பொருளுரைகள் அடங்கிய ஒரு நூலிற் காணப்படுகின்றது. “ஒரு நாள் எனது நண்பர் ஒருவர் இரவில் சிறிது நேரம் கழித்து வந்துகொண்டிருந்தார். அவருக்குக் கிராமத்தில் ஒரு வயல் நிலம் இருந்தது. அவர் தனது வீட்டுக்குச் சிறிது தூரத்திலுள்ள ஒரு வயலில் கழுதை பயிரை மேய்ந்துகொண்டு நிற்பதைக் கண்டார். அவர், அதைப் பிடித்துக் கொண்டு வந்து வீட்டில் கட்டிவைத்து, அதன் சொந்தக்காரன் வந்து கேட்கும்போது அதனைக் கொடுக்கலாம் என்று நினைத்தார். அவர் கழுதையைக்கொண்டு வந்து தொழுவத்தில் கட்டப்போகும்போது அது மாயமாக மறைந்து போயிற்று. அவர் உடனே பயமடைந்து தனது தமையன் வீட்டுக்குச் சென்று அவரை நித்திரையினின்றும் எழுப்பி நிகழ்ந்தவற்றைக் கூறினார். காலையில் வயலிற் சென்று பார்த்தபோது பயிர் மேயப்படாமல் அப்படியே இருந்தது. பேய்கள் இறந்தவர்களின் ஆவிகள் சில காலம் இவ்வுலகத்தோடு சம்பந்தப் பட்டு நிற்கின்றன. தற்கொலை புரிந்தவர், அபாயத்தினாற் கொல்லப்பட்டவர், அல்லது மற்றவர்களாற் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள், மரணம் அடைந்த இடத்தில் சிறிது காலங்களுக்குத் தங்கி நிற்கின்றன. இவைகள் இறந்த இடத்தில் ஆவி வடிவில் தோன்றுதலையும் பலருக்குத் தீமை விளைத் தலையும், வீடுகளில் தட்டுதலையும் பொருள்களை எடுத்து எறிதலையும் போன்ற செயல்களைப் புரிகின்றன. இவை போன்ற ஆவிகளையே, மக்கள் முனிகள் பேய்கள் எனக் கூறுவர். இவை பேய்கள் எனவும் படும். கெட்ட ஆவிகள் இவ்வுலகில் சில காலம் தங்கி நிற்கின்றன. அவை மக்களைப் பிடித்தால், அவர் தனது சொந்த அறிவோடு இருப்பதில்லை. பேயாற் பிடிக்கப்பட்டவரின் கையில் நெருப்புக் கொளுத்தி வைத்தால் அது அவரைச் சுடாது. 1“சீனர் ஆவிகளுக்கு மிக அஞ்சுவர். அவர்கள், கெட்ட ஆவிகள் நல்ல ஆவிகள் என, ஆவிகளை இரண்டு வகையாகப் பிரிப்பர். நல்ல ஆவி களைக் குறித்து அவர்கள் சிறிதும் அஞ்சுவதில்லை. கெட்ட ஆவிகளுக்கு அவர்கள் பெரிதும் அஞ்சுவர். இவை இருண்ட இடங்களில் தங்கியிருந்து காரணமின்றி வழிப்போக்கருக்குத் துன்பஞ் செய்கின்றன. ஒருவரால் துன்புறுத்தப்பட்டவரின் ஆவி மிகவும் அஞ்சத்தக்கது. வாங்கிய கடனைக் கொடுக்காது ஏய்க்கும் ஒருவனைப் பழிவாங்குவதற்குக் கடன் கொடுத்தவன் அவன் வீட்டு வாயிலில் நஞ்சு தின்று இறப்பான். கொடுமையாக நடத்திய மாமியாரைப் பழிவாங்குவதற்கு மருமகள் தூங்கி இறப்பாள்”. இங்குக் கூறியவை இறந்த ஆவிகளே பேயாக மாறுகின்றன என்பதற்குப் போதிய சான்றுகளாகும். ஆவிகளைப் பற்றிய சில செய்திகள் இங்குக் கூறப்படும் செய்திகள், ஆவிகளைப் பற்றிய நூல்களி லிருந்து எடுக்கப்பட்டவை. எடுத்தாளப்பட்ட நூற் பெயர்கள் அடிக்குறிப் பில் காட்டப்பட்டுள்ளன. 1. “1885ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில் ஒருநாள் யான் மடேரியா (Madeiria) என்னும் இடத்திலே ஒரு விடுதியில் படுத்து உறங்கினேன். நிலவு வெளிச்சம் இருந்தது . சன்னலுக்கு வலை போடப்பட்டிருந்தது. யாரோ ஒருவர் அவ் வறைக்குள் இருப்பதை நான் உணர்ந்தேன். 25 வயதுள்ள வாலிபன் நிற்பதைக் கண்டேன். அவன் நான் படுத்திருப்பதற்கு நேராகத் தனது வலது கை விரலை நீட்டிக் காண்பித்தான். நான் உடனே எழுந்து என்ன வேண்டுமென்று கேட்டேன். யாதும் விடை வரவில்லை. மறுமொழி சொல்லாமையால் நான் அவனைக் கையால் அடித்தேன். ஆனால், கை எட்ட வில்லை. யான் படுக்கையை விட்டுக் குதிக்க முயன்றபோது, அவ் வுருவம் சன்னல் வழியாக மறைந்துவிட்டது. அவ் வறையினுள் மரணமடைந்த ஒருவனின் ஆவி வருகின்றதென்று பின்பு விசாரணையால் அறிந்தேன்.”2 2. “எனது நண்பர் ஒருவர், ஒரு முறை பெரிய சத்தம் ஒன்று, சுவரிலிருந்து வருவதைக் கேட்டுப் பயம் அடைந்தார். வெளிச்சுவருக்குப் பக்கத்தில் வேறு கட்டடம் எதுவும் இல்லை. இந் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் ஒருநாள் மாலை 9 மணியளவில் உண்டாயிற்று, வெளியே ஒருவரும் காணப்படவில்லை; வெளியே நல்ல வெளிச்சம் இருந்தது. உள்ளேயிருந்து சத்தம் வருவதற்குரிய காரணம் ஒன்றும் இருக்கவில்லை அச் சத்தத்தைக் கேட்ட நண்பருக்குப் பயத்தினால் காய்ச்சல் உண்டாகிவிட்டது. இச் சத்தம் உண்டாவதற்கு இருபது நிமிடத்துக்கு முன், நண்பருடைய சகோதரர் அபாயத்துக்குட்பட்டு மரணமானார் எனத்தெரிந்தது.1” 3. நாற்பத்தெட்டு ஆண்டுகளின்முன் செந்தனாக்(Sentanac) என்னும் இடத்தில் பீற்றோ என்னும் உபதேசியார் மரணமானார். அதன்பின்பு, தேவாலயத்தில் யாரோ நாற்காலிகளைத் தூக்குவது போலவும், நடப்பது போலவும், மூக்குத்தூள் சிமிழைத் திறப்பது போலவும், மூக்குத்தூளை மூக்கி லிட்டு உறிவது போலவும் இராக்காலங்களில் சத்தங்கள் கேட்டன. இவ்வாறு நீண்டகாலம் நடைபெற்றது. உபதேசியாரின் ஆவியே அவ்வாறு செய் கின்றதெனச் சிலர் கூறினார்கள் அதனைக் கேட்டுக் கிராமத்திலுள்ளவர்கள் பரிகாசம் செய்தார்கள். தேவாலயத்தின் அயலே குடியிருந்த அந்தோனி, கெல்லி என்னும் இருவர் இச் சத்தங்கள் உண்டாவதன் காரணத்தை நேரில் அறிய விரும்பினார்கள். ஒரு நாள் இருவரும் துப்பாக்கியையும் கோடாரியை யும் கொண்டு இராப்பொழுதைத் தேவாலயத்திற் கழிக்கச் சென்றார்கள். அவர்கள் சமையலறையில் தீமூட்டி எரித்துக் குளிர்காய்ந்தபின், கிராமத்த வர்களின் அறியாமையைக் குறித்துப் பேசிவிட்டுப் படுத்து நித்திரை யானார்கள். அப்பொழுது அவர்களுக்கு எதிரேயுள்ள அறையில் சத்தம் கேட்டது; நாற்காலிகள் அசைந்தன. யாரோ அங்கும் இங்கும் நடந்து செல்லும் ஓசைகேட்டது. பின்பு ஒருவர் படிக்கட்டில் இறங்கிச் சமைய லறைக்குச் சென்றார். யார் வந்தாலும் வெட்டுவதற்கு ஆயத்தமாக அந்தோனி கோடாரியை மறைத்து வைத்துக்கொண்டு சமையலறைக் கதவுப் பக்கத்தே நின்றான். கெல்லி துப்பாக்கியைத் தோளோடு அணைத்து வைத்துக் கொண்டு சுட ஆயத்தனாக நின்றான். சமையலறைக்குச் சென்றவர் மூக்குத் தூளில் ஒரு சிட்டிகை எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சினார். சமைய லறைக்குச் செல்வதற்குப் பதிலாக ஆவி கூடத்துக்குச் சென்றது. அங்கே அது உலாவிக்கொண்டு நின்றது. இருவரும் தமது ஆயுதங்களுடன் கூடத்துக்குச் சென்றார்கள். அங்கு ஒன்றும் காணப்படவில்லை. அவர்கள் மாடிக்குச் சென்று எங்கும் தேடிப்பார்த்தார்கள். நாற்காலிகள் எல்லாம் அப்படியே இருந்தன. அப்பொழுது அவர்கள் இறந்தவரின் ஆவியே சத்தம் செய்கின்றதென்னும் முடிவுக்கு வந்தார்கள். பீற்றோவுக்குப் பின் மொன்சூர்பெரி என்பவர் உபதேசியாராக வந்தார். மேரி கல்வெற் என்பவள் அவரது வேலைக்காரி. ஒருநாள் அவள் சமையல் ஏனங்களைச் சுத்தஞ் செய்து கொண்டிருந்தாள். எசமானர் அடுத்த கிராமத்துக்குப் போயிருந்தார். அப்பொழுது ஒருவர் பேசாது அவளுக்கு முன்னே செல்வதைக் கண்டாள். அப்பொழுது அவள் அவரைத் தனது எசமானர் என்று கருதி, “என்னைப் பயப்படுத்த நினைக்கவேண்டாம். இறந்துபோன பீற்றோ திரும்பி வந்து விட்டாரென நான் ஒரு போதும் நினைக்கமாட்டேன்” என்று சொன்னாள். தனது எசமானர் என்று கருதியவர் பேசாததினால் அவள் உருவம் சென்ற திசையை நோக்கினாள். ஒன்றையும் காணவில்லை. அவள் பயம் அடைந்து உடனே அந் நிகழ்ச்சியை அயலவர்களுக்குச் சொன்னாள்.”* 4. “கீழ்வரும் நிகழ்ச்சி 1812ஆம் ஆண்டு எனது தந்தையின் வீட்டில் நிகழ்ந்தது. ஒருநாள் இராப் பத்து மணியளவில் எனது தாய் சமையலறை யில் யாதோ வழக்கமல்லாத சத்தத்தைக் கேட்டு விழித்தெழுந்தாள். அவள் உடனே எனது தந்தையை எழுப்பிச் சமையலறைக் கதவை மூடிவிட்டு வரும்படி சொன்னாள். சமையலறையில் நாய் புகுந்து சத்தம் செய்கின்றதென அவள் நினைத்தாள். கதவைத் தாழிட்டதைப்பற்றித் திடமாயிருந்த தந்தை அவள் கேட்ட சத்தம் கனவாயிருக்கலாம் என நினைத்தார். பத்து நிமிங் கட்குப்பின் மறுபடியும் சத்தம் கேட்டது. அப்பொழுதும் எனது தாய், தந்தையை எழுப்பினாள். அப்பொழுதும் அவர் இதனைக் கருத்திற்கொள்ள வில்லை. ஆனால் நித்திரை கொள்ளாது அவர் எழுந்திருந்தார். அப்பொழுது சமையற் பாத்திரங்களை நாய் தட்டி விழுத்துவது போன்ற சத்தம் கேட்டது. உடனே அவர் வெளிச்சத்தை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றார். எல்லாம் இருந்தபடியே இருந்தன. அவர் படுத்துச் சிறிது நேரத்துக் கெல்லாம் சமையலறையில் இருந்து பெரிய இரைச்சல் கேட்டது. உடனே அவர் வீட்டு அறைகள் எல்லாவற்றிலும் சென்று பார்த்தார். சத்தம் ஓயாது வந்து கொண்டிருந்தது. பின்பு அவர் வெளியே படுத்திருந்த வேலை யாட்கள் எல்லாரையும் எழுப்பி வீடு முழுவதையும் ஆராய்ந்து பார்த்தார். எவரையும் காண முடியவில்லை. ஆனால் சத்தம் மாத்திரம் ஓயவில்லை. இப்பொழுது சத்தம் சாப்பிடும் அறைக்குள் கேட்டது. மேலே இருந்து இருபது அல்லது முப்பது இராத்தல் பாரமுள்ள கல் விழுவதுபோற் சத்தம் கேட்டது. இச் சத்தத்தைக் கேட்ட அயலார் பலர் வந்து சேர்ந்தார்கள். சத்தம் காலை நாலு மணியளவில் ஓய்ந்தது. பகல் ஏழு மணிக்கு ஒருவர் வீட்டுக்கு வந்தார். எங்கள் உறவினரில் ஒருவர், இரவு பத்துமணிக்கும் பதினொரு மணிக்கும் இடையில் இறந்தார் என்றும் இறப்பதன் முன் தனது சிறுவனின் பாதுகாப்புப் பொறுப்பை எனது தந்தை ஏற்கவேண்டுமென விரும்பினா ரென்றும் அவர் கூறினார். எனது தந்தை அதற்கு மறுத்துவிட்டார். எனது தாய் இக் காரணத்தினால் இச் சத்தம் உண்டாயிருக்கலாம் என நினைத்து எனது தந்தையை இறந்தவரின் விருப்பத்துக்கு இணங்கும்படி வேண்டி னாள். அவர் அதற்கு இணங்கவில்லை. சத்தம் மறுபடியும் கேட்டால் தான் அதற்கு இசைவதாகக் கூறினார். அவர் அச் சத்தம் யாரோ தனது எதிரிகளால் செய்யப்பட்டதென எண்ணியிருந்தார். அவர் இரண்டு தடியர்களை வீட்டில் படுத்து உறங்கும்படி செய்தார். அடுத்த இரவின் நடுச்சாமத்தில் முந்திய இரவிலும் பார்க்கப் பலத்த சத்தம் உண்டாயிற்று. எனது தந்தை எழுந்து இருவருக்கும் இதனை அறிவித்தார். சத்தத்தைக் கேட்ட இருவரும் பயத்தி னால் எழும்ப மறுத்தார்கள். அவர்களின் உடல் முழுமையும் வியர்வையால் நனைந்தது. எனது தந்தை வேலையாட்களுடன் அறைகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்தார். ஒருவரும் காணப்படவில்லை. பின்பு அவர் எனது தாயின் எண்ணத்துக்கு இசைந்து இறந்தவரின் எண்ணத்தை நிறைவேற்றினார்.1 5. 1855ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆலுஸ்(Aulus) என்னும் வெந்நீர் ஊற்றுக்களின் சொந்தக்காரன் மரணமானான். உடனே அங்கிருந்த வீட்டில் வழக்கமல்லாத சத்தங்கள் கேட்டன. அறையிலுள்ள கணக்குப் புத்தகங்களைப் புரட்டும் சத்தம் கேட்டது. மெழுகுதிரியைக் கொளுத்திப் பார்த்தபோது அங்கு யாரும் காணப்படவில்லை. சில சமயங்களில் ஆள் நடப்பது போலவும், மாடிப்படியில் ஏறுவது போலவும், கட்டிலைத் தூக்குவது போலவும், நிலத்தில் சுத்தியால் அடிப்பது போலவும் சத்தங்கள் கேட்டன. பகல் நேரங்களிலும் இவ் வகைச் சத்தங்கள் உண்டாயின. ஒரு நாள் சுங்க அதிகாரி ஒருவர், மலையிலிருந்து வரும்போது கட்டடம் விழப்போவது போன்ற பயங்கரமான சத்தம் ஒன்றைக் கேட்டார். காவற்காரனின் அறைக்குப் பக்கத்தில் பெண் ஒருத்தி ஒரு நாள் படுத்திருந்தாள். கண்ணுக்குப் புலப் படாத ஒரு கை அவளின் படுக்கைத் துணியை இழுத்தது. உடனே அவள் அறையைவிட்டு வெளியே ஓடிச் சென்றாள். 1872 வரை இவ்வாறு நடந்து பின்னர் இக் குழப்பங்கள் குறைய ஆரம்பித்தன.2 இயக்கம் (Vibration) நீ தூரத்திலுள்ள நண்பனொருவனோடு பேச விரும்பும்போது நீ தெலிபோன் கருவியைத் துணைக்கொண்டு பேசுகிறாய். அவ்வியந்திரம் ஒலியைக்கொண்டு செல்வதால் நீ அவ்வாறு செய்கிறாய். கம்பி மூலம் ஓசையைக்கொண்டு செல்லாத ரேடியோ மூலமும் நீ பேசலாம். நீ மறு உலகி லுள்ள நண்பனொருவனொடு பேசவிரும்பினால் நீ ஒரு மனித இயந் திரத்தைப் பயன்படுத்துகிறாய். அது மீடியம்(medium) எனப்படும். இவ்வாறு பயன்படுத்தப்படும் ஆண் அல்லது பெண் இவ்வகையான ஆற்றலைப் பெற்றிருக்கின்றார். அவர்கள் சாதாரண மக்களைவிடச் சிறப்பான ஆற்றல் பெற்றவர்கள். அவர்கள் கண்ணுக்குப் புலப்படாத உலகங்களைப் பார்க்க வும் அங்குள்ளவர்கள் பேசுவதைக் கேட்கவும்கூடிய ஆற்றலுடையவர்கள். இவ்வகையான ஆற்றல்கள் உண்டு எனபதைப் பருப்பொருள் விஞ் ஞானிகள் ஒருபோது மறுத்தார்கள். இவ்வகை ஆற்றல்கள் உண்டென்பது பலகாலங்களாகக் கிடைத்துள்ள உண்மைச் செய்திகளால் நிலை நாட்டப் பட்டுள்ளது. ஒரு மீடியமாய் இருப்பதற்கேற்ற ஆற்றலை என்ன அளிக்கின்றது. அவர்களின் மனக்கண்ணும் காதும் அளவுகடந்த உணர்ச்சியுடையனவாய் மற்றவர்கள் அறிய முடியாத இயக்கங்களை அறிகின்றன. சுருங்கக் கூறின் அவை மனித பூதக்கண்ணாடிகளும் மனிதத் தொலைநோக்கிகளுமாகும். அவைகளை உயர்ந்த சத்திவாய்ந்த மனித ரேடியோக்கள் என்றும் கூறலாம். நீ அடுத்த உலகிலுள்ள நண்பரொருவரோடு பேச விரும்பும்போது நீ மீடியத்தின் நுட்பமான கண்ணையும் காதையும் பயன்படுத்துகின்றாய். இது தெளிவான அறிவு. இதில் மயக்கந் தருவதோ துயரம் தருவதோ எதுவும் இல்லை, தொடுதலால் உண்டாகும் உணர்ச்சியும் பேச்சினால் உண் டாகும் ஒலியும் இயக்கத்தினால் பரவுகின்றன என விஞ்ஞானிகள் கூறுகின் றனர். சுருங்கச் சொல்லின் உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் இயக்கத் துக்குட்பட்டிருக்கின்றன. சில மெதுவாக இயங்குகின்றன; சில வேகமாக இயங்குகின்றன. மனிதராகிய நாம் சுருங்கிய இடத்திலுள்ள இயக்கங்களை மாத்திரம் அறியவல்லோம். ஒலிபெருக்கி தெலிபோன் கருவிகளால் நாங்கள் இயக்கங்களை அறியும் அறிவு விசாலிக்கிறது. எங்களின் அறிவுக் கெட்டாதனவும் மரணத்துக்கு அப்பாலுள்ளவுமாகிய உலகங்களின் செய்தி களை நாம் மீடியங்களைப் பயன்படுத்தி அறியலாம். எல்லா மீடியங்களின் தொழிலும் கண்ணுக்குப் புலப்படும் உலகினதும் புலப்படா உலகங்களினதும் இயக்க சம்பந்தமான தடையைத் திறந்துவிடுதலாகும். நாம் இறந்தவர்களின் ஆவிஉடலைப் பார்க்க முடியாமலிருப்ப தற்குக் காரணம் அவை சடப்பொருள்களாலான எங்கள் உடலிலும் பார்க்க வேகமாக இயங்குவதாலாகும். நாங்கள் பார்க்க முடியாவிட்டாலும் இவ் வாவிகள் நாம் நித்திரை கொள்ளும்போதும் விழித்திருக்கும்போதும் நமக்குப் பக்கத்தே இருக்கின்றன. அவை விஞ்ஞானிகளாலும் பொதுமக்க ளாலும் நிழற்படம் பிடிக்கப்பட்டுள்ளன. அவை எப்பொழுதும் நம்மோடு பேச எதிர்பார்த்திருக்கின்றன. பேச அதிகம் விரும்புகிறவர்கள் நாங்களல்லர்; அவையே எங்களோடு பேச விரும்புகின்றன. எங்களுக்கு உதவி புரிய அவற்றிற்கு நாம் சமயம் அளிப்பதால் அவை ஆவி வளர்ச்சி சம்பந்தமான மேல் நிலையை அடைகின்றன. ஒருவருக்கு ஒருவர் உதவி அளிக்கும் இயல்பினாலேயே எல்லா உயிர்களும் நிலைபெறுகின்றன. ஆவி ஆராய்ச்சியாளர் அவை செய்யும் சாதாரணமல்லாத நிகழ்ச்சி களைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாத உலகங்களைப்பற்றி அறிகி றார்கள். இறந்த ஆண்களும் பெண்களும் பேசுவதையும் அவர்கள் கேட் கிறார்கள். இவ் வாராய்ச்சிக்காரருள் ஒருவர் மீடியமாயிருப்பின் அவ்வுலகங் களில் என்ன நடக்கின்றன என்று அறிகின்றார். “நான் இவ்வுலகத்தவ ரிடையே இருப்பதிலும் பார்க்க ஆவி உலக மக்களிடையே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” என்று ஒரு மீடியம் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். தாம் ஆவிகளைக் காணாமையினால் ஆவி உலகம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். மிக வேகமாகச் சுழலும் வாள் கண்ணுக்குத் தோன்ற மாட்டாது. கண்ணுக்குத் தோன்றாவிட்டாலும் கைவிரலை நீட்டினால் அது வெட்டிவிடும். சுழலும் விசை குறைந்தவுடன் அது கண்ணுக்குப் புலப்படு கின்றது. சில சமயங்களில் சாதாரண மக்கள் ஆவியைக் காண்கிறார்கள். இறந்தவரின் ஆவி மனிதரின் கண்களுக்குப் புலப்படும்படி தனது இயக்கத் தின் வேகத்தைக் குறைப்பதினாலேயே இது உண்டாகின்றது. இவ்வாறு தோன்றுவதற்கு மீடியத்திடமும், கூட இருப்பவர்களிடமு மிருந்து ஒருவகை உயிர்ச் சத்தை(ectoplasm) ஆவிகள் இரவல் பெறுவது வழக்கம். எங்கள் எல்லாரிடமும் வெள்ளிய புகைபோன்ற இவ் வகைச் சத்து உண்டு. இது பலமுறைகளில் நிழற்படம் பிடிக்கப்பட்டுள்ளது. நீ உனது இறந்துபோன தாய் அல்லது தந்தையோடு பேச விரும்பி னால் அவர்களோடு பேசவிடும்படி நீ மீடியத்தைக் கேட்கிறாய். இது ஒரு தெலிபோன் இணைப்பிலுள்ள பெண்ணை இவ்வாறு செய்வதற்குக் கேட்பது போன்றது. மீடியம் மயக்க நிலையில் அல்லது விழிப்பு நிலையி லிருந்து தனது மனத்தையும் உடலையும் நீ விரும்பியவரோடு பேசுவதற்கு இணைத்துவிடுகிறது. ஆவிகளுடன் பேசுதல் 1 ஆவிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்வோர் ஆவிகளோடு பேசியிருக் கிறார்கள். ஆவிகளுக்கு நேரில் பேசும் ஆற்றல் இல்லை. இவை சிலர் மூலம் பேசுகின்றன. ஆவியுடன் பேசுவோர் ஒருவகை மயக்க நிலை அடைகின் றனர். அப்பொழுது கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் மறுமொழி சொல்லு கிறார்கள். எவரது ஆவி பேசுகின்றதோ அவ்வாவிக்குரியவரின் குரல் போல் பேச்சு இருக்கின்றது. சில சமயங்களில் கேட்கும் கேள்விகளுக்கு விடைகள் எழுதப்படுகின்றன. இவ்வாறு ஆவிகளுடன் பேசிய விவரங்கள் பல, புத்தகங்களாக வெளிவந்துள்ளன. எங்கள் நாட்டிலும் இது அறியப் பட்டிருந்தது. இது பல பொய்ச் செயல்களோடு கலந்திருப்பதால் உண்மை அறியமுடியாமல் இருக்கிறது. உலகில் எல்லா நாடுகளிலும் வெளிப்பாடு கூறுதலில்(oracle) நம்பிக்கை இருந்துவந்தது. வெளிப்பாடு கூறுகின்ற வனின் வாக்கு அவன்மீது தெய்வமேறிக் கூறுவதாகக் கருதப்பட்டது. “சோதிடம் சொல்லுதல்” என வாய்ப்புக் கூறுவோர் அனுமானோ, மலை யாள பகவதியோ, தொட்டியத்துச் சின்னானோ, வேறு ஒரு தெய்வமோ, தமது நாவிலிருந்து கூறுவதாகக் கூறுகின்றனர். இவையெல்லாம் ஆவி பேசுதல் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டனவே. பேய்பிடித்தவனின் பேச்சுக்கள் பேயின் கூற்றாகவே கருதப்படு கின்றன. ஆவி பேசுதலுக்கு உதாரணமாக ஒரு யோகியின் செயலை இங்குத் தருகின்றோம். “1 நான் இராமானுச யோகியுடன் சிலகாலம் தங்கியிருந்தேன். எனக்கு ஒரு வயதுள்ள ஒரு மருமகன் குழந்தை இருந்தான். அவர் அக் குழந்தை யைத் தனக்கு எதிரே கொண்டுவந்து இருத்தும்படி கூறினார். நான் அப்படியே செய்தேன். அவர் அக் குழந்தையைத் தனது போர்வையால் மூடினார். அவர் வைத்திருந்த பிரம்பினால் குழந்தையைத் தட்டினார். உடனே குழந்தை வீர ஆசனம் என்னும் யோக இருக்கையில் இருந்து கொண்டு தமிழ்ப்பாடல்கள் மூலம் இராசயோகத்தைப் பற்றிப் பேசிற்று. இது நடக்கும் போது நான் யோகியைக் கவனித்தேன். அவர் உடல் அசைவற் றிருந்தது. மயக்கத்தில் இருக்கிறார் என நினைந்து அவரை எழுப்ப முயன்றேன். முதலில் அவர் உடல் கட்டை போல இருந்தது. பின்பு விழித் தெழுந்தார். உடனே குழந்தை அழத் தொடங்கிற்று. அவர் குழந்தைக்குப் பால் கொடுக்கும்படி சொன்னார்.” ஆவிகளுடன் பேசுகின்றவர் “மீடியம்”(medium) எனப்படுவர். இராக்காலத்தில்தான் ஆவியுடன் பேசுவார்கள். ஒரு அறையில் மேசை இடப்பட்டிருக்கும். மேசையின் பக்கத்தில் திரைச் சீலை தொங்கவிடப்பட் டிருக்கும். ஆவியோடு பேசுபவரின் பக்கத்தே சிலர் இருப்பார்கள். அறையின் சன்னல்கள் எல்லாம் நன்றாக அடைக்கப்படும். அப்பொழுது ஆவியுடன் பேசுகின்றவர் மயக்க நிலையை அடைவார். அவர் மூலம் ஆவி பேசும். பக்கத்தே இருப்போர் கேள்விகளைக் கேட்பார்கள். அவை களுக்கு ஆவி “மீடியம்” மூலம் விடை அளிக்கும். இவ்வாறு, ஆவி களுடன் பேசிய பேச்சுக்கள் புத்தக வடிவில் வெளிவந்துள்ளன. ஆவிகள் தாம் குறிக்கப்பட்டவர்களின் ஆவிகள்தான் என்று உறுதிப்படுத்தும் பொருட்டுத் தமது வாழ்நாளில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளைக் கூறும். கீழ் வருவது ஒரு ஆவி பேசியதைப் பற்றிய நிகழ்ச்சியாகும். “2நான் ஒரு முறை ஆவியுடன் பேசும் ஒருவருடன் அறையில் இருந்தேன். அப்பொழுது எனது நண்பர்களும் இருந்தார்கள். கதவுகளும் சன்னல்களும் அடைக்கப்பட்டன. நான் தரையையும் பலகை அமைக்கப் பட்ட உட்கூரையையும் நன்றாகப் பரிசோதித்தேன். பின்பு விளக்கு அணைக்கப்பட்டது. ஆவியோடு பேசுபவர் நாற்காலியோடு நன்றாகக் கட்டப்பட்டார். நான் அவருக்குப் பக்கத்தில் இருந்தேன். ஒருவர் மெல்லிய குரலில் சமயத் தொடர்பில்லாத ஒரு பாட்டுப் பாடினார். சிறிது நேரத்தில் ஆவியோடு பேசுகின்றவர் மயக்கநிலை அடைந்தார். அதற்கு அடையாள மாக அவர் பேசத் தொடங்கினார். முதலில் அவர் பேச்சுத் தடைப்பட்டு வந்தது. பின்பு அவர் ஆவியின் குரலில் மிகவும் உணர்ச்சி ததும்பப் பேசினார். அவ்வகையான உணர்ச்சியுடைய பேச்சை நான் இதற்கு முன் ஒருபோதும் கேட்கவில்லை. ஆவியுடன் பேசியவர் சாதாரண நாட்களில் மிக அமைதியாக விருப்பார். அவர் இவ்வகையாக ஒருபோதும் பேசின தில்லை. அவ்வாறு பேசவும் அவருக்குத் தெரியாது. பேச்சு நல்ல தொனி யுடையதாயும், வாக்கியங்கள் அழகாகவும் அமைந்திருந்தன. அவருடைய பேச்சைக் கேட்ட சில பெண்களின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. நான் உபதேசியாரின் ஆவி, மனிதன் மூலம் பேசுகின்றதோ? என்று சொல்லி, அப்படியானால் சில அடையாளங்கள் செய்யும்படி கேட்டேன். உடனே ஆம் என்னும் விடை வந்தது. பின்பு சிறிது நேரம் அமைதி நிலவிற்று. சிறிது நேரத்தில் எனது முகத்தில் குளிர் காற்று வீசிற்று. கதவுகளும் சன்னல் களும் அடைக்கப்பட்டிருந்தமையால் அவ்வகைக் காற்று வருவதற்குக் காரணம் அறியமுடியாமல் இருந்தது. உடனே ஒரு கை எனது கையைத் தடவ ஆரம்பித்தது. நான் உடனே மடித்திருந்த கைவிரல்களில் இரண்டை நீட்டி ஆவியின் கையைத் தடவிப்பார்த்தேன். அது காற்றுப்போல இருக்கும் என நான் நினைத்திருந்தேன். ஆவிகளுக்கு நாம் தடவிப் பார்த்து உணரக்கூடிய உடல் இல்லை என்று நான் பிறர் சொல்லக் கேட் டிருக்கின்றேன். அக் கையை நான் நன்றாகப் பிடிக்கக் கூடியதாயிருந் ததைக் கண்டு மிக வியப்படைந்தேன். அது பொதுவான கையைவிடப் பெரியதுபோல எனக்கு இருட்டில் தோன்றிற்று. ஆவியின் கை எனது கையைத் தடவும்போது நான் எல்லாப் பக்கங்களிலும் காலை நீட்டி உதைத்துப் பார்த்தேன். ஆவியோடு பேசும் “மீடியத்தின்” கையாயின், கைக்குப் பக்கத்தில் அவர் உடல் இருக்கும் என நான் நினைத்தேன். இப்பொழுது எனது கையைத் தடவிய கை நொய்வுடையதாகத் தோன்றிற்று. தெரிந்து கொண்டாயா என்று ஆவி கேட்டது. நான் உடனே மயக்கமாக இருக்கின்றதென விடைகூறினேன். ஆராய்ந்து பார்; உண்மை வெளிப்படும் என ஆவி கூறிற்று.” இன்னொரு வியக்கத்தக்க நிகழ்ச்சியை இங்குத் தருகின்றோம். அது வருமாறு: “1சிறிய மேசை ஒன்றின் மீது ஒரு வாத்தியப் பெட்டி வைக்கப்பட் டிருந்தது. அறையில் கம்பளம் விரித்திருக்கவில்லை. வேறு ஒருவகையான அலங்காரங்களும் அங்கு இருக்கவில்லை; ஆறு நாற்காலிகள் மாத்திரம் அறையில் இருந்தன. அவை ஒன்றில் ஆவியுடன் பேசுகின்றவர் இருந்தார். இன்னொன்றில் நானும், மற்றவைகளில் எனது நண்பர்களும் இருந்தார்கள். இரண்டு மெழுகு திரிகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தன. பின்பு அறை யின் மத்தியிலுளள ஒரு வட்டத்துள் எக்காளம்(Trumpet) ஒன்று வைக்கப் பட்டது. மெழுகு திரிகள் அணைக்கப்பட்டன. சிறிது நேரத்தில் வாத்தியப் பெட்டியினின்று ஓசை எழுந்தது. பின்பு எக்காளம் அசையத் தொடங்கிற்று. அது அந்தரந்தில் எழுந்து மிதந்தது. எக்காளத்தின் மினுக்கான பகுதி வந்து மூன்று முறை எனது முழங்காலில் முட்டிற்று. அது மிதந்து வந்து எல்லா ரிடமும் சென்றது. மனிதரின் சூழ்ச்சி எதனாலும் இவ்வாறு செய்யமுடியாது. அதனைக் கண்டு எனக்கு மிக வியப்பு உண்டாயிற்று. பின்பு அவ் வெக்காளத்தின் உள்ளேயிருந்து நண்பர்களே மாலை வணக்கம் என்னும் ஒரு ஓசை எழுந்தது. “முன் இவ்வுலகத்தில் வாழ்ந்த எவரின் ஆவி நீ” என்று நான் கேட்டேன். அது தனது முழுப் பெயரையும் கொடுக்க விரும்பவில்லை. பின்பு அது மெல்லிய குரலில் வில் குரூக்ஸ்(Will Crooks) என்று கூறிற்று. அவரது மரணத்துக்கு முன் அரசாங்க சபையில் சந்தித்த போது, அவர் பேசிய குரல்போல அத் தொனி இருந்தது. “நான் மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன். நான் அரசியல் தொடர்பான உதவிகளைச் செய்ய விரும்புகிறேன். போனர்லோ(Bonar Low) என்பவர் இங்குத்தான் இருக்கின்றார். நான் எனது பழைய கருத்துகளை மாற்றிக் கொண்டேன். நான் கருமங்களை நன்றாக அறிகின்றேன். குடியேற்ற நாடு களுக்கு முழுப் பாதுகாப்பையும் அளிக்கவேண்டும்” என்னும் வார்த்தைகள் வந்தன. குரூக்ஸ் பிற்போக்காளரில் ஒருவர். அவர் இவ்வாறு பேசியது எனக்கு வியப்பை அளித்தது. போனர்லாவோடு பழகியதால் இக்கருத்து உண்டாயிற்றோ என்று என்னாற் கேளாமல் இருக்க முடியவில்லை. குரூக்ஸ் பேசும்போது தனக்கு எதிரில் கிளாஸ்டனின் வடிவம் தோன்றிற்று என்று “மீடியம்” கூறினார். ஆவிகள் உண்டு என்பதற்குரிய சான்றுகள் “ஆவிகளின் ஒளிகள் காணப்பட்டன. மனித ஓசை போன்ற சத்தங்கள் கேட்டன; மனிதனுடைய முயற்சியில்லாமல் எழுத்துகள் தோன்றின; தமது உறவினருக்குப் பக்கத்தே நிற்கும் ஆவிகளின் நிழற்படங்கள் பிடிக்கப் பட்டன; ஆவிகளுடன் பேசும் அறைகளில் ஆவிகள் கண்ணுக்குத் தெரியக் கூடிய வடிவில் தோன்றின; ஆவிகளோடு பேசும் சிலர் அந்தரத்தே தூக்கப் பட்டார்கள்; சுவர் போன்ற வயிரமான பொருள்களுக்கூடாக பிற வயிரமான பொருள்கள் கொண்டுவரப்பட்டன; கயிற்று முடிச்சுகள் கண்ணுக்குப் புலப் படாத கைகளால் அவிழ்க்கப்பட்டன; சேர்த்துக் கட்டப்பட்ட கற்பலகை களின் இடையே செய்திகள் எழுதப்பட்டன; மேசைகள் அந்தரத்தே உயர்த் தப்பட்டன. பிளஞ்சட் என்னும் கருவிமூலம் அறியமுடியாத செய்திகள் எழுதப்பட்டன. ஒருவரது இரகசியமான செய்திகள் வெளியிடப்பட்டன. இவ்வகையான நிகழ்ச்சிகள் ஆவிகள் உண்டு என்னும் உண்மையை நிலைநிறுத்துகின்றன.1 மரணம் அஞ்சத்தக்கதன்று மரணம் மக்கள் எல்லோராலும் பெரிதும் அஞ்சத்தக்க தொன்றா யிருக்கின்றது. அதற்குக் காரணம், மரணமென்றால் என்ன? அதற்குப்பின் நிகழ்வது என்ன? என்பவைகளைப்பற்றி அறிந்து கொள்ளாமையேயாகும். மரணம் என்பது ஒரு நிலையின் முடிவு; ஆனால் உயிர் செல்லும் பயணத்தின் முடிவன்று; இன்னும் செல்லவேண்டிய பாதையின் தொலைவு எமது நினைவினால் அறியமுடியாதது. மரணமென்பது, தான் வாழும் உடலாகிய சடப்பொருளைத் தொழிற்படுத்தும் வல்லமையை இழந்து உயிர் வெளியேறுதலாகும். நாங்கள் பிறக்கும்பொழுது எங்கள் முன் நிலை மையை மாற்றிக் காற்றுள்ள இவ்வுலகுக்கு வருகின்றோம். மரணத்தின் போது இந்நிலையை மாற்றி இன்னொரு பிறப்பே யாகும். ஆகவே அதற்கு நாம் அஞ்சவேண்டியதில்லை. இறந்தவர்களின் ஆவிகள் கூறியுள்ள செய்திகளால் மரணம் வருத்தம் விளைப்பதன்று என்றும், மரணத்துக்குப் பிற்பட்ட வாழ்வு, மிக மகிழ்ச்சிக்கிடனாயுள்ள தென்றும் தெரிகின்றன. அவைகளைப் பின் கூறப்படுபவைகளைக் கொண்டு அறிக. உயிர் உடலை விட்டு நுண்ணிய உடலோடு வெளியேறும்போது வாழ்நாளில் நிகழ்ந்தவற்றின் காட்சிகள் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக நினைவில் வருகின்றன. மனிதன் இறந்தவன் போலத் தோன்றலாம். நாடித் துடிப்பு இருதயத் துடிப்பு நின்றதற்கும், உடம்பில் வெப்பம் அகன்று போவ தற்கு மிடையிலுள்ள சில விநாடிகளில் மூளை நினைக்கின்றது. அப்பொழுது உயிர் தனது வாழ்க்கையில் நிகழ்ந்தவைகளை எல்லாம் தெளிவாக அறிகின்றது. மரணப் படுக்கைக்குப் பக்கத்தே உதவிக்கு இருப்பவர்கள் மெதுவாகப் பேசவேண்டும். மரணமானவுடன் அமைதியாக இருத்தல் வேண்டும். உரத்துப் பேசினால் அதன் நினைவுகளைக் குழப்புதல் கூடும்.1 மரண காலத்தில் நிகழ்வது 1மரண காலத்தில் நிகழ்வது என்ன என்பதைத் தெளிவுக்காட்சியாளர் (Clairvoyants) கூறியுள்ளார்கள். தெளிவுக்காட்சி என்றால் என்ன என்பதைப் பிறிதோர் இடத்தில் விளக்குவோம். தெளிவுக்காட்சியாளர் கூறியவை களைப் போலவே ஆவிகளும் தமது பேச்சுகள் மூலம் அறிவித்துள்ளன. மரண காலத்தில் மனிதனின் நுண்ணிய உடல் ஆவிவடிவில் உடலை விட்டுச் சிறிது சிறிதாகக் கழன்று வெளியே வருகின்றது. மரணப் படுக்கைக் குப் பக்கத்தில் அது முன்னைய உணர்ச்சி, முன்னைய நினைவுகளோடும் முன்னைய வடிவோடும் நிற்கின்றது. பக்கத்தே உள்ளவர்களை அது அறி கின்றது. ஆனால் அதற்குத் தான் அங்கு நிற்பதைப்பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்க முடியாமல் இருக்கின்றது. அது கண்ணில்லாமல் பார்க்க முடியுமோ எனச் சிலர் கேட்கலாம். புளோரிடா டாக்டர் எப்படித் தனது உடலைப் பார்த்தார்? ஆவி மயமான உடலில் பார்க்கும் சக்தி இருக்கின்றது. அதன் உதவியைக் கொண்டு அது பார்க்கின்றது. இதற்கு அதிகமாக எம்மால் ஒன்றும் கூறமுடியாது. தெளிவுக் காட்சியாளருக்கு அது நிழல் போலத் தோன்றுகின்றது. பொதுவான ஒருவருக்கு அது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோல, அது இன்னொரு ஆவிக்குப் புலப்படலாம். காலம் போகப் போக அது தூய்மை அடைகிறதென்றும், மரணமான உடனும் அதன்பின் சில காலத்தும் அது சடப் பொருள்களுக்கு அண்மையிலுள்ளதென்றும் தெரிகிறது. ஆனமையி னாலேயே இறந்தவர்களுடைய ஆவிகளின் தோற்றங்கள் இறந்த உடனும் அதன்பின் சில காலத்தும் தெளிவாகத் தோன்றுகின்றன. பரு உடலை விட்டுப் பிரிந்த அண்மையில் அவ் வாவியுடலில் பாரமான சடப்பொருள் அணுக்கள் செறிந்திருக்கலாம். 2மரணத் தறுவாயை அல்லது இரண்டு உலகங்களுக்கும் இடையி லுள்ள நிலையை அடைந்தவர்கள் மறு உலகைக் காண்கிறார்கள். ரோஸ் மெரி என்னும் “மீடியம்” பழைய எகிப்திய மொழியில் ஆவிகள் கூறிய செய்திகளைச் சொன்னாள். அவள் கூறியவை பழைய எகிப்திய மொழியை ஆராய்ச்சி செய்வோருக்குப் பெருவியப்பளித்தது. மீடியம் மயக்க நிலையி லிருந்து மீண்டபோது ஆவி உலகத்திலிருந்து இவ்வுலகத்துக்கு வருவது எவ்வளவு பயங்கரமானது என்று கூறினாள். இவள் ஒருத்தி மாத்திரம் பழைய எகிப்திய மொழியைப் பேசுவதைக் கேட்டவள் அல்லது அதன் உச்சரிப்புகளை அறிந்தவளாவள். 1934ஆம் ஆண்டு சூன் மாதம் 27ஆம் தேதி லேடி நோனா என்பவள் (மீடியம் மூலம்) எனக்கும் வேறு பன்னிரண்டு பேருக்கும் எதிரில் பழைய எகிப்திய மொழியில் ஓட்டமாகப் பேசினாள். எகிப்திய இளவரசியாகிய லேடி நோனா என்பவள் பழம் பொருளா ராய்ச்சியாளர் மொழியாராய்ச்சியாளர்களின் வியப்புக்கும் விருப்பத்துக்கும் ஏதுவாக ரோஸ்மேரி என்னும் மீடியம் வாயிலாக 1936ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் நாள் பழைய எகிப்திய மொழியில் சில செய்திகளைப் பேசினாள். இப் பேச்சு கிராமபோன் தட்டில் பதிக்கப்பட்டது. 3400 ஆண்டுகளின் முன் இறந்த ஒரு பெண் இக்கால இசைத்தட்டில் பதிக்கும் பொருட்டுப் பழைய எகிப்திய மொழியிற் பேசினாளென்பது மிக வியக்கத்தக்கதே. இதனாற் பெறப்படும் உண்மை இத்துணை காலத்தின் முன் இறந்தவர் இன்றும் உயிரோடிருக்கின்றா ரென்பதேயாகும். இறந்துபோவதைப் பற்றிய பல செய்திகள் அவ்வுலகத்தினின்றும் சேகரிப்பட்டுள்ளன. அவ்விடத்தினின்று கிடைக்கும் செய்திகள் பெரும் பாலும் அடிப்படையில் ஒத்திருக்கின்றன. இறந்துபோவதைப்பற்றிப் பல வகையான மனோகற்பனைகள் இருந்துவருகின்றன. மரணம் இலகுவானது. அது ஒவ்வொரு இரவும் நித்திரை கொள்வதை ஒத்தது. நீ விழிக்கும்போது என்றும் வாயில் திறந்திருக்கும் ஒரு உலகைக் காண்கிறாய். அக் கதவுதான் மரணம். கவலைத் தழும்புகள் ஏறப் பெற்றிருப்பது கடவுள் நிந்தையாகும். மரணம் இக் கவலைத் தழும்புகளைப் போக்குவதாகும். அழுகையும் இழவுக் கொண்டாட்டங்களும் அநாகரிக மக்களுக்குக்குரியன. மரணம் மகிழ்ச்சிக்குரியதொன்று. கிரேக்கர் மரணக் கொண்டாட்டத்தில் விளை யாட்டுகள் வைத்தார்கள். ஐரிஸ் மக்களின் ‘வேக்’ என்பது மகிழ்ச்சிக்குரிய இவ்வகைக் கொண்டாட்டத்தின் நிழலே. துக்கங் கொண்டாடுதலும் அழுது புலம்புதலும் மரணமானவருக்கு இடையூறு விளைப்பன. இறந்துபோன அரசருக்கும் அதிகாரிகளுக்குமாக நாட்டுமக்கள் கொண்டாடும் துக்கக் கொண்டாட்டங்கள் இறந்த உயிர்களுக்கு விடுதலையளிக்க முயலும் ஆவிகளுக்கு மிக்க தொந்தரவளிக்கின்றன என்று அவை கூறியுள்ளன. மோர்மன்(Mormons) என்னும் மக்களிடையே நான் வாழ்ந்தபோது அவர்கள் மரணக்கொண்டாட்ட காலத்தில் வெள்ளைப் பூக்களை அணி வதையும் பிணப்பெட்டியை வெள்ளைப் பூக்களால் அலங்கரிப்பதையும் கண்டேன். நல்லவர்களின் மரணத்தைத் துக்கமயமான பாடல்களால் கொண் டாடுதல் கூடாது; நல்ல பாடல்களைப் பாடிக் கொண்டாடுதல் வேண்டும். மரணத்தின் பின் அவர்கள் அமரரோடு உறைகிறார் எனப் புலுற்றா என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் கூறியிருக்கின்றனர். பிறப்பின் போது நாம் மகிழ்கின்றோம்; மரணகாலத்தில் அழுகின்றோம். இவ்விரண் டின் உண்மை களை நாம் அறிந்திருந்தால் துன்பகரமான இவ்வுலகத்துக்கு வந்ததைப் பற்றி நாம் துக்கப்படுவோம்; இன்ப மயமான ஆவி உலகத்திற் செல்வதைப் பற்றி நாம் மகிழ்ச்சி கூறுவோம். மரணத்தைப்பற்றி அறியப்பட்ட உண்மைகள் வருமாறு: மரணமென்பது நாம் இயங்கும் வேகத்தில் உண்டாகும் மாறுதல். இது மனித உயிர் உடலை மாற்றுவதால் உண்டாகின்றது. அது மெதுவான இயக்க முள்ளதும் வேகமாக இயங்கக்கூடிய காற்றுப் போன்ற உடலைத் தொழிற் படுத்துகின்றது. எவ்வுலகிலாயினும் இறக்கின்ற உயிருக்கும் இதுவே நிகழ் கின்றது. இவ்வுயிர் ஆயத்தமில்லாது உடலைவிட்டு உயர்ந்த இயக்கமுள்ள இன்னொரு உலகிற் பாய்ந்தால் ஒருவன் பனிக்கட்டிபோல் குளிர்ந்த நீருள் குதிப்பதுபோன்ற அதிர்ச்சி உண்டாகும். இவ்வாறு ஆயத்தஞ் செய்வதற்குச் சிறிது காலம் வேண்டும். இடைப்பட்ட இந் நிலையை மரண நித்திரை எனக் கூறலாம். மரண நித்திரை என்பது மரணத்துக்குப்பின் உண்டாகும் தூக்க நிலை. ஆவி உடலோடு ஒரு உலகிலிருந்து இன்னொரு உலகுக்குச் செல்லும் போதும் மரணம் உண்டாகிறது. வாழும் பொருட்டு ஒருவன் நெடுகிலும் இறக்கின்றான். நாங்கள் உடல் உயிர் ஆவி என்னும் முப்பொருளாலானவர்கள். உயிர் உடலை விடும்போது உள்ளே இருக்கின்ற காற்றுமயமான உடலுடன் வெளியேறுகின்றது. காற்றுமயமான உடலை இன்னொரு உறை மூடியிருக் கின்றது. இது, உயிர் 1மூன்றாவது உலகில் சென்று பிறப்பதற்கு உதவியாக விருக்கின்றது. மரணத்துக்குப்பின் நித்திரை கொள்ளும் உலகிலிருந்து பிறப்பு உண்டானதும் வெளியே உள்ள உறை கழன்று விடுகிறது. இது நாம் அணிந்திருக்கும் சட்டையைக் கழற்றிவிடுதல் போன்றது. இவ்வாறு கழன்ற உறை காற்றுமயமான உடலின் வடிவினதாயிருக்கும். இவ்வுறையின் தொழிற்பாடு பூமியிலுள்ள பெண் அல்லது ஆணுக்கு மிக இன்றியமை யாதது. இது உள்மனத்துக்கும், மூளைக்கும் இடையில் மின்சக்தியைத் தொழிற்படுத்தும் யந்திரம் போல் வேலைசெய்கினறது. இவ்வாறு இது மனிதருக்கு இடைவிடாது உணர்ச்சி ஊட்டுகின்றது. நித்திரைக் காலத்தில் உயிர் கூட்டுள் உறைவதுபோல் உறைக்குள் தங்கிவிடுகின்றது. அப்பொழுது உயிர் வெளியுடலோடுள்ள தொடர்பை இழந்துவிடுகின்றது. காந்தசத்தியைப் பரப்பும் “டைனமோ” செய்வதுபோல உடல், உயிரின் ஒளியைப் பெற்று இருக்கின்றது. மரண காலத்தில் என்ன நிகழ்கின்றதென்று தெளிவுக்காட்சியாளர் கவனித்திருக்கிறார்கள். மரணகாலத்தில் நொய்யஉடலை மூடியிருக்கும் உறை தலைவழியாகக் கழல்கின்றது. அப்பொழுது நாபி மூளை என்னும் இரண்டு கயிறுகளால் பிணிக்கப்பட்ட நிலையில் அது உடலுக்கு அண்மை யில் நிற்கின்றது. பின்பு கயிறுகள் அறுந்துபோக உயிர் உறைக்குள் இருக்கும் நுண்ணுடலோடு மறு உலகுக்குப் பயணமாகின்றது. புது உலகுக்குச் செல்வதாகிய புதிய பிறப்பு வருத்தம் விளைப்பதா யுள்ளதோ என்று கேட்கிறார்கள். அது வருத்தம் விளைப்பதன்று. மரணத் துக்குப்பின் செல்லும் நித்திரை உலகில் அரைவிழிப்பு நிலை உண்டா கின்றது. அங்கு நின்றும் மறு உலகுக்குச் செல்லும் பிறப்பு உண்டாகின்றது. மரணத்துக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் இவ்வுடலை விட்டுக் காற்றுமயமான உடல் பிரிந்து சென்றுவிடும். சில நாட்களுக்கு அவ்வாறு நிகழாமல் இருப்பதும் உண்டு. இரண்டு வகையிலும் இறப்பு நோவற்றது. மனிதன் இறக்கும்போது காந்த சத்திபோன்ற உடலின் இயக்கம் தானாக நோவின்றி நிகழும். இவ்வியக்கங்கள் காற்றுமயமான உடலை இவ்வுலக உடலினின்றும் பிரிப்பதால் உண்டாகின்றது. இறக்கும் மனிதனை அவ்வுலக நண்பர் சந்திக்கிறார்கள். அவர் களுட் சிலர் உண்மையில் பிள்ளை பெறுவிக்கும் வைத்தியராவர். அவர்கள் இவ்வுலக உடல் காற்றுமயமான உடலைப் பிணிக்கின்ற பற்றுகளை ஒவ்வொன்றாக விடுவித்து விடுகிறார்கள். புதிய பிறப்பு நிலை பலருக்குப் பிள்ளைப்பேற்று விடுதியில் எவ்வாறு நிகழ்கின்றதோ அவ்வாறு பலவாறாக விருக்கும். மூன்றாவது உலகில் பிறப்பது இவ்வுலகில் பிறப்பதை ஒத்தது. இவ்வுலகில் இறந்தவுடன் நாம் காற்றுமயமான உடலுடன் அடுத்த உலகுக்குச் செல்கின்றோம். காற்றுமயமான உடலை ஒரு உறை மூடியிருக் கின்றதெனக் கூறினோம், இவ்வுறை பிள்ளையைச் சூழ்ந்து கிடந்து பிள்ளை பிறந்தபின் விழுந்து போகின்ற நஞ்சுக்கொடியை ஒத்தது. நஞ்சுக்கொடி போன்றுள்ள உறை மூன்றாவது உலகில் பிறப்பதற்குத் துணையாயிருப்பது மாத்திரமல்லாமல் காற்றுமயமான உடல் உயர்ந்த இயக்கத்தில் பழக்கமடை யுங் காலம் வரையில் பாதுகாக்கும் உறையாகவும் இருக்கின்றது. நீ வெளிப் படுத்தும் இயக்கங்களை, உறை உள்ளே அடக்கி வைத்திருக்கின்றது. ஆவி உலகில் சஞ்சரிக்கப் பழகுமுன் பூமி சம்பந்தமான அலைகள் கழுவப்படுதல் வேண்டும். காற்றுமயமான உடலினின்றும் கழன்றுபோன உறை சில சமயங்க ளில் காற்றுமயமான உடலின் வடிவோடு இவ்வுலகுக்கு வந்து மிதந்து திரி கின்றது. அது ஆவிமயமான உடலில் நின்றும் பெற்ற சிறிது உயிர்ப்புச் சக்தி யோடு சிறிது நேரம் மனிதனைப் போலக் காட்சியளித்து விரைவில் மறைந்து போகின்றது. சில சமயங்களில் நாம் கல்லறைகளிற் காணும் ஆவிகள் இவ்வகையினவே; சில, இறந்தவர்களின் ஆவிகளாகவும் இருக்கலாம். நீ இறக்கும்போது உனது இவ்வுலகப் பற்றுகள் படிப்படியாகத் தீர்ந்துபோகின்றன. உனது படுக்கைக்குப் பக்கத்திலுள்ள நண்பர்களைப் பார்க்கவும் அவர்கள் செய்யும் ஓசைகளைக் கேட்கவும் உன்னால் முடியும். ஆனால் சிறிது சிறிதாக அவை கனவு போல மறைந்துபோகின்றன. பின்பு நீ கனவு போன்ற மயக்கமான ஒரு நிலையை அடைகின்றாய். இறக்கும்போது மனிதர், தாம் செய்த பாவங்களைப் பற்றிய நினை வால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று சொல்லப்படுவது உண்மையாகலாம். மரணப்படுக்கை நன்மை தீமைகளை ஆராய்கின்ற இடமன்று. வாழ்க்கை யில் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிக் காணும் இயல்பு மரணத்துக்கு முன் உண்டு. தெரியாத கடலிலுள்ள துறைமுகத்தைப் பிடிப்பதற்குப் பாயெடுத்துச் செல்கின்ற கப்பலைப் போல மனத்தில் ஓர் உணர்ச்சியும் தோன்றுகின்றது. இருதயத் துடிப்பு இருக்கும்போதும் இறக்கும் மனிதர் இவ்வுலகை விடடுச் செல்கின்றார்கள் என்பது உண்மை. இருதயம் அடிக்கும்போதும் அவர்களின் ஒரு கால் அவ்வுலகிலும் மறு கால் இவ்வுலகிலும் இருக்கின் றன. இன்னொரு உலகில் பிறப்பதாகிய மரணம் தொடங்கி விட்டது. பிள்ளையையும் தாயையும் இணைக்கின்ற கொப்பூழ்க் கொடியைப் போன்ற தொன்று காற்றுமயமான உடலையும் பரு உடலையும் பிணிக்கிறது. அது அறுவதற்கு முன் மரணம் நிகழமாட்டாது. இருதயம் நின்று மனிதன் இறந்து போனதாகக் கருதப்பட்டபின் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரையிலும் மனிதன் உயிரோடிருத்தல் கூடும். காற்றுமயமான உடலோடு அதன் உறையைப் பிணைக்கும் வலைபோன்ற நூல்களும் உண்டு. இக் கட்டுகளை ஆவி உலக மருத்துவர் அறுக்குமுன் ஆவிமயமான உயிர் ஆவியுலகில் வாழமுடியாது. இது மூன்றாம் உலகச் செய்தியைக் குறிக்கும். இம் மூன்றாவது உலகுக்கே பெரும்பாலோர் செல்கின்றனர். குறுகிய காலம் அல்லது நீண்டகாலம் மயக்க நிலையிலிருந்த பின்பு விழிக்கும்போது அறையில் வெள்ளை உடுப்பு அணிந்த மருத்துவரும் தாதிமாரும் நிற்பதை நீ காண்பாய். இது நீ அபாயத்துக்குள்ளான பின்பு மருத்துவசாலை அறையில் விழிப்பது போலாகும். நீ இறந்துவிட்டாய் என்று ஒருவர் உனக்குச் சொல்லும்வரையில் நீ நினைப்பாய். இறந்து விட்டாயென்று உன்னை நம்பச் செய்தல்தான் மிக வில்லங்கமான காரியம். உனது படுக்கைக்கு முன்னால் உயிருள்ளவர்களைக் காணும்போது நீ எப்படி இறந்திருக்கிறாயென்று நம்பமுடியும். நீ சன்னல் வழியாகத் திறந்த உலகைப் பார்க்கவும், தொலைவிலிருந்து வரும் இசையையும், பறவைகள் பாடும் ஓசையையும் கேட்கவும் முடியும். உனக்கு அதிக பசியிருக்கும் போது இறந்துவிட்டாயென்று நீ எப்படி நம்ப முடியும். நீ உணவு வேண்டு மென்று கேட்கிறாய். உடனே உணவு கிடைக்கிறது. உனக்குத் தாகம் உண்டாகிறது. உனக்கு விருப்பமான தேநீரையோ தண்ணீரையோ நீ குடிக்கலாம். பின்பு உனக்கு நித்திரை உண்டாகின்றது. பின்பு தாதி ஒருத்தி உனது படுக்கைக் கெதிரேயுள்ள திரைச் சீலையை இழுத்துவிடுகின்றாள். நீ நித்திரை கொள்கிறாய். விழிக்கும்போது இப்பூமியை ஒத்த ஒரு உலகில் இருப்பதை நீ காண்கிறாய். மறுபடியும் பூமியில் இருப்பதாக நீ எண்ணு கிறாய். நீ நீலவானத்தையும் மரங்களையும் கடல்களையும் பார்க்கிறாய். இரண்டு பதினொரு பேர் கிறிக்கட் பந்தாடுவதையும் நீ காணமுடியும். தாதி உன்னைப் பார்க்க வரும்போது நீ விழிப்பாயிருந்தால் அவளுடைய கை மனிதக்கை போலக் சூடாகவும் அழுத்தமாகவும் இருப் பதைப் பார்த்து நீ ஆச்சரியப்படமாட்டாய். உன்னுடைய ஆவிமயமான உடல் மேலான இயக்கத்தில் பழகும்போது நீ இறந்துவிட்டாயென்றும் ஆனால் உயிரோடிருக்கிறாயென்றும் நீ அறிவாய். பூமியிலிருந்ததிலும் பார்க்க நீ அதிகம் உயிர்ப்பாயிருக்கிறாய். இந்தப் புதிய உலகில் மயக்க நிலையிலிருந்து விழித்தெழுவதைப் பற்றிக் கூறியுள்ளேன். இம் மயக்கம் அல்லது நித்திரை என்பது என்ன? இது பூமிக்கும் மூன்றாவது உலகத்துக்கும் இடையிலுள்ள நிலைமை. பூமியில் இறப்பவர்கள் எல்லாம் இந் நிலைமையைக் கடந்து செல்ல வேண்டும். ஆவி உடலோடு விரைவான இயக்கமுடைய ஆவி உலகத்துக்குச் செல்வதற்கு இந் நித்திரை உயிரை ஆயத்தஞ் செய்வதாகும். அந் நித்திரை யில் ஒரு சிறப்புண்டு. இது ஒரு நிமிடம் ஒரு மாதம் அல்லது ஒரு ஆண்டு நீடிக்கலாம்; சில சமயங்களில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளும் ஆகலாம். இங்கு உண்டாகும் நித்திரையின் அளவு உயிர் பூமியில் நடத்திய வாழ்க்கை யின் தன்மையையும் அதற்கு எவ்வளவு இளைப்பாறுதல் வேண்டுமென் பதையும் பொறுத்தது. அதனை மத்திய உலகம் என்பதற்கு மேல் அதிகம் கூறமுடியாது, ஆவி உலகத்தில் உண்டாகும் மாறுதல்கள் அதிசயப்படத்தக்கவை. ஆவி உலகில் நேரம் என ஒன்று இல்லை. இறந்தவர் ஆவி உடலோடு வாழும் மூன்றாவது உலகில் இறப்பு, நிகழ்வு, வருங்காலங்கள் ஒன்றோடு ஒன்று பின்னியுள்ளன. நாம் இவ்வுடலோடு இருக்கும்போது இதைப்பற்றி அறிந்து கொள்ள முடியாது. 1ஆவியுலகம் மூன்றாவது உலகம் ஆவிஉலகங்களில் முதலாவதாகும் பூமி அமைப்புக்குள்ள சடப்பொருளிலும் பார்க்க ஆவி உலக அமைப்பிலுள்ள சடப்பொருள்களும், அவ்வுலகங்களில் இயங்கும் வேகங்களும் வேறானவை. உறையினால் மூடப்பட்ட காற்றுமயமான உடல் சதைமயமான உடலை விட்டுப் பிரியு முன்பும் வெள்ளிய கயிறு அறுபடுமுன்னமும் இறக்கின்ற மனிதன் இவ் வியல்பை உணர்கின்றான். இவ்வுலகத்துக்கும் ஆவி உலகத் துக்கும் இடையில் கனவுபோன்ற நிலையில் இருக்கும்போது நீ உனது மரணப் படுக்கையின் பக்கத்தில் நின்று உனது உடலைப் பார்ப்பதை அறிந்து நீ ஆச்சரியப்படுவாய். இதன் பின் மூடப்பட்ட சன்னலுக்கு அல்லது கதவு களுக்கு ஊடாக அவைகளால் தடைபடுத்தப்படாமல் செல்வதை நீ காண்பாய். ஆவியுலகத்தை அடைந்ததும் அங்கு இரவோ பகலோ சூரியனோ இல்லாதிருப்பதை நீ காண்பாய். அங்கு பரந்த மெதுவான வெளிச்சம் எப்பொழுதுமுண்டு. அதனை அங்குள்ளவர்கள் ஆவிமயமான சூரியன் என்கிறார்கள். அங்கு நிழல் இல்லை என்று சொல்லமுடியாது. ஆவி உலகம் சூரியனைச் சுற்றி வருவதில்லை. ஆகவே அவர்கள் காலத்தைப்பற்றி அறியார். அவர்களுக்குத் தூரமும் இல்லை என அறிய வருகின்றது. ஆவி உலகிலுள்ளவர்கள் வருங்காலச் செய்திகளைச் சொல்லும்போது காலத்தைக் குறிப்பிட வில்லங்கமடைகின்றனர். காலஞ் செல்ல செல்ல ஆவி உலகிலுள்ளவர்க்கு நித்திரையோ, பசியோ தோன்றுவதில்லை. பசியும் நித்திரையும் பூமியிலுள்ள பழக்கங்கள். அவர்கள் உடல் சம்பந்தமானவைகளைக் கடந்து விடுகிறார்கள். உணவின்பொருட்டு நாங்கள் ஆவிமயமான உடலிலுள்ள துவாரங்கள் வழியாகப் போஷணையை இழுத்துக் கொள்ளுகின்றோம். பசி கொள்ளும் பழக்கம் விரைவில் மறைந்துபோகின்றது. அவ்வுலகில் பொருளாதாரம் சம்பந்தமான தொடர்புகள் இல்லை. அங்கு இலாபம் வாடகை வட்டி போன்றவைகள் இல்லை. மண்ணுலகத்திலுள்ளவர்கள் இவைகளுக்குத் தலைவணங்கித் தமது திறையை இறுத்து வருகிறார்கள். அங்குச் சென்றதும் அவ்விடத்தில் வாணிபம் இல்லாதிருத்தல் அவ்விடத்து நூதனங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. அங்கு நினைவினால் எல்லாவற்றையும் உண்டாக்கிக் கொள்ளலாம். ஒரு பொருளைப்பற்றி நினைத்ததும் அது கிடைக்கின்றது. மரணத்துக்கு அப்பாலுள்ள உலகம் அங்கு வாழும் கோடிக்கணக் கானவரின் நினைவினால் உண்டானது. அதைப்பற்றி நாம் தெளிவாக ஒன்றும் கூறுதற்கில்லை. அவ்வுலகத்தினின்றும் ஆயிரக்கணக்கான ஆவிகள் அவ் வுலகத்தைப்பற்றிக் கூறியிருக்கின்றன. பூமியிலுள்ளவர்கள் தமது ஆச்சரியத்தைக் குறிப்பிடும்போது, இவ்வுலகிலுள்ள வீடு, தோணி போன்றவை முதலில் நினைக்காமற் செய்யப் படுகின்றனவோ என்று அவர்கள் கேட்கிறார்கள். சில சமயங்களில் இப்பக்கத்திலுள்ள நாங்கள் எண்ணங்களினால் படைத்தல் செய்கின்றோம். நித்திரையில் காணும் கனாக்கள் சில சமயங் களில் உண்மையாக நிகழ்கின்றன. உடல் சம்பந்தமான போராட்டங்கள் இல்லாத இவ்வுலக அரசியல் போராட்டங்கள் போன்றவை அவ்வுலகில் இல்லை. எல்லாருக்கும் விடுதலையுள்ளதும் எவருக்கும் சம உரிமை மறுக்கப்படாததுமாகிய ஒரு உலகில் பழம்போக்கு புதியபோக்கு என்னும் பேச்சுகள் பொருளற்றன வாகும். எங்களுலக அரசியல் கொள்கைகள் அதிகாரத்தையும் பொருளை யும் குறிக்கோளாகக் கொண்டவை. இவ்வகையான சொற்களே இல்லாத அவ்வுலகங்களில் இவ்வகைப் போராட்டங்கள் இல்லை. நாம் விரும்பிய வற்றை எண்ணங்களாற் படைத்துக்கொள்ள முடியுமானால் நாம் வாங்கவோ விற்கவோ வேண்டியவை எவையும் இல்லை. அங்குப் போக்குவரத்து மிகப் புரட்சிகரமானது. நாம் நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்தை அடைகின்றோம். இப் பூமியில் இது முடியாத காரியம். நாம் விரும்புகிறபடி நாம் இருக்கிறோம். அப்படியாயின் அவ்விடத்தில் போராட்டங்கள் இல்லையா? அங்கு நன்மை தீமைகளுக் கிடையில் எதிர்ப்பில்லையா? அவ்விடத்திற் சென்றதும் நாம் நிறைவுடைய வர்களாக மாறிவிடுகின்றோமா? என்று நீவிர் கேட்கக்கூடும். இவ்வாறில்லை. எங்கள் குணம் சம்பந்தப்பட்ட மட்டில் நாம் இங்கிருப்பதுபோலவே இருக்கிறோம். அங்கு நன்மைக்கும் தீமைக்கும், சரிக்கும் பிழைக்குமிடையில் போராட்டங்கள் நிகழ்கின்றன. பாரமான உடலை விட்டுப்போன அவ் வுலகத்தில் இப் போராட்டங்கள் மிகக் கூர்மை யாகவும் உணர்ச்சியுடையனவாகவும் இருக்கின்றன. இங்கு காம இச்சை உள்ளவன் அங்கும் அப்படியே இருக்கின்றான். இங்கு சோம்பலாயிருப்பவள் அங்கும் அப்படியே இருக்கிறாள். இங்கு அதிகாரத்துக்கு ஆசைப்படுகின்றவர்கள் அங்கும் அப்படியே இருக்கி றார்கள். அவ்விடத்தில் இதனைப் பெறும் வாய்ப்பு மிகக் குறைவாயிருக் கின்றது. ஆவி உலகில் உள்ள ஒரு துயரம். அங்குள்ளவர்கள் தமது கீழான இவ் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு அடிக்கடி இவ்வுலகுக்கு வரமுடியாமலிருப்பதாகும். ஏன் இதற்கு மாறாக இருக்க முடியாது? இவ் வுடலைவிட்டு ஆவி உடலுடன் இருப்பது அளவில் மாத்திரம் மாற்றமுள்ளது. ஆவியுலகை அடையும்போது மனநிலை பூமியிலிருந்தது போலவே இருக்கின்றது. இவ்வுலகில் தீமைகளையே செய்வோர் பெரும்பாலும் மூன்றாவது உலகத்திலேயே வாழ்கிறார்கள். இவர்கள் இங்கு பெண்போகம் ஆண் போகம் போன்ற நுகர்ச்சிகளில் மூழ்கலாம். காற்றுமயமான உடல் அவர்கள் இவ்வாறு இன்பங்களை நுகர்வதற்கு இடம் அளிக்கின்றது. இவ்வாறு இன்பங் களை நுகர்ந்தபின் அவர்களின் ஆசைகள் தணிந்துபோகின்றன. பின்பு அவர்கள் மேலான உலகங்களில் வாழ நினைக்கிறார்கள். மறு உலகில் கல்வி, தொலைவிலுணர்தல் (தெலிபதி) முறையானது. அவர்கள் புத்தகங்களைப் பயன்படுத்துவதில்லை. அவர்களால் எங்கள் புத்தகங்களை வாசிக்கவும் முடியும். வாய்பாடஞ் செய்தலும் பரீட்சைகளும் இல்லாத ஆவி உலகில் படிப்பு முறை மனத்தை ஒன்றில் நிறுத்தும் அடிப் படையுடையது. அங்கு உள்ளவர்கள் எல்லாரும் ஒரே சமயத்தவரா? இவ் வுலகில் எவ்வாறு நம்பிக்கையுள்ளவர்களா யிருந்தார்களோ அவ்வாறே அவ்வுலகிலும் இருக்கிறார்கள். ஆவி உலகிலுள்ளவர்களின் சமயமும் வாழ்க்கையும் இணைந்து செல்கின்றன. எங்கள் சமயமும் வாழ்கையும் வெவ்வேறானவை. 1ஆர்தர் கொனான்டேல், ஆவி உலகத்தைப் பற்றித் தமது நூல் ஒன்றில் கூறியிருப்பது வருமாறு: “இறந்தவர் பலரிடமிருந்து செய்திகள் பல நாடுகளிற் பலகாலங்களிற் கிடைத்துள்ளன. அவற்றில் இவ் வுலகத்தைப்பற்றிய உண்மையான செய்திகள் அடங்கியுள்ளன. அச்செய்தி களுள் நாம் ஆராய்ந்து பார்த்து அறியக்கூடியன, மெய்யாகக் காணப் பட்டால் நாம் ஆராய முடியாமலிருப்பனவும் மெய்யாயிருக்குமெனக் கொள்ளுதல் தவறாகாது. பல இடங்களில் பலவேறு காலங்களிற் கிடைத்த செய்திகள் ஒத்திருத்தலால் அவை உண்மை என்று கொள்ளுதல் வலி யுடையதெனத் தோன்றுகின்றது. நான் நேரில் இருந்து எழுதி வைத்திருக் கின்ற பதினைந்து அல்லது இருபது ஆவிகளுடைய பேச்சுகளின் குறிப்புகள் பிழையாக இருக்கும் என்று கூறமுடியாது. ஆவிகள் இவ்வுலக நிகழ்ச்சிகளைக் கூறுதல் போலவே மறு உலக நிகழ்ச்சிகளையும் கூறுதல் கூடும். அவை கூறும் இவ்வுலக நிகழ்ச்சிகள் மெய் என்றும் மறு உலக நிகழ்ச்சிகள் பொய் என்றும் கூறமுடியாது. அண்மையில் ஒரே வாரத்தில் மறு உலகத்தைப்பற்றி இரண்டு செய்திகள் எனக்குக் கிடைத்தன. ஒன்று ஒரு தேவ ஆலயத்தின் உயர்ந்த பதவியிலுள்ள ஒருவருடைய உறவினரின் கைவாயிலாக ஆவி எழுதியது. இன்னொன்று ஸ்காத்துலாந்திலுள்ள ஒரு தொழிலாளனின் மனைவி மூலம் வெளிவந்தது. இவ்விருவருக்கும் ஒருவரைப்பற்றி ஒருவருக்குத் தெரியாது. ஆனால் இருவர் மூலம் வெளிவந்த செய்திகள் ஒரேவகையாக உள்ளன. இருவர் மூலமும் ஆவிகள் வெளியிட்ட செய்திகளால் நாம் அறியக் கிடப்பன வருமாறு. மரண காலத்தில் உயிர் நோவின்றியும், இலகுவாகவும் உடலைவிட்டு வெளியேறுகின்றது. அப்பொழுது சமாதானமும் சுகமும் தோன்றுகின்றன. மரணம் அடைந்தவர், ஆவியுடலில் நிற்கும்போது தனது பலவீனம், நோய், உறுப்புக் குறைவு தன்னைவிட்டு நீங்கிவிட்டனவாக உணருகின்றார். இவ்வுயிர் மரணப்படுக்கையிலுள்ள உடலுக்குப் பக்கத்தே மிதக்கின்றது; அல்லது நிற்கின்றது. அப்பொழுது அது தனது உடலையும் அதற்குப் பக்கத்திலுள்ளவர்களையும் பார்க்கின்றது. இப்பொழுது அவ் வாவி உடல் சடப்பொருள்களுக்கு அண்மையிலுள்ளது. ஆகையினா லேயே அப்பொழுது, இறந்தவர், அவர் நினைக்கும் ஒருவரின் முன் ஆவி வடிவில் தோன்றுகின்றார். இவ்வாறு பரீட்சித்துப் பார்த்த 250 ஆவித் தோற்றங்களில் 134 தோற்றங்கள் மரணம் நிகழ்ந்தவுடன் தோன்றியவை. மரணப் படுக்கையின் பக்கத்தே நிற்கும் ஆவி, பக்கத்தேயுள்ள தனது நண்பர்களைப்பற்றி நினைக்கின்றது. அது தனது எண்ணங்களை வெளியிட முயல்கின்றது. ஆனால் அவ்வாறு செய்ய அதற்கு முடிவதில்லை. அதனை அவர்கள் உணர முடிவதில்லை. அங்கு உயிரோடு இருப்பவர்களைவிட இன்னும் வேறு சிலர் இருப்பதை அது உணர்கின்றது. அவர்களின் முகங்கள் அதற்குப் பழகியனவாகக் காணப்படுகின்றன. அவர், முன்னே இவ்வுலகில் இருந்து இறந்து போனவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் அதன் கையைப் பிடித்து முத்தமிடுகின்றனர். அவர்களுடனும் இன்னும் அங்கு இப் புதிய ஆவியை எதிர்பார்த்திருந்த சில ஆவிகளுடனும் பருப்பொருள் களாகிய தடைகளைக் கடந்து மிதந்து செல்கின்றது. இது உண்மையான வரலாறு. இதனையே பல ஆவிகள் திரும்பத் திரும்பக் கூறியுள்ளன. ஆவி பேய் அல்லது தேவதையன்று. அது இறந்தவரின் ஆற்றல், அறிவு, வடிவம் முதலியவைகளைக் கொண்ட தோற்றம். புதிய வாழ்க்கைக்குச் செல்வதன் முன் புதிய ஆவி சிலகாலம் நித்திரைக்குச் செல்கின்றது. இக்கால எல்லை பலவாறு மாறுதல் உடையது. சில ஆவிகளுக்கு நித்திரை உண்டாவதில்லை. சில ஆவிகளுக்கு வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு நித்திரை உண்டா கின்றது. ரேமாண்ட் என்பார் தனக்கு ஆறு நாட்களுக்கு நித்திரை இருந்த தெனக் கூறினார். மேயேர்ஸ்(Myers) என்பவர் தனக்கு நீடித்த நித்திரை இருந்ததெனக் கூறினார். வாழ்க்கையில் எவ்வளவு மனக் குழப்பம் இருந் ததோ, அவ்வளவுக்கே நித்திரையும் உண்டு எனத் தெரிகிறது. அக் குழப்பங் களை ஒழிப்பதற்காகவே, நித்திரை உண்டாகிறதெனத் தெரிகின்றது. சிறு குழந்தைக்கு அவ்வகை நித்திரை வேண்டியிராது. மரணப் படுக்கையில் படுத்திருப்பவர்கள், இறந்தவர்கள் வந்திருப்ப தாக கூறுவதைக் கேட்டிருக்கின்றோம் நாங்கள் அவர்களைப் பார்ப்ப தில்லை. அவர்கள், வந்து நிற்பவரைச் சுட்டிக் காண்பிக்கின்றார்கள். நாங்கள், நோயின் கூற்றினால் அவர்கள் பிதற்றுகிறார்கள் எனக் கருதுகின்றோம், அவர்கள் கூறுவன உண்மை நிகழ்ச்சிகளே என்று இப்பொழுது எமக்குத் தெரிகிறது. நித்திரையைவிட்டு எழுந்தவுடன் ஆவி மிகவும் பலவீனமாக இருக் கிறது. அது, பூமியில் பிறந்த குழந்தைக்கு உடல் எப்படி இருக்கின்றதோ அது போன்றது. உடனே மறுபடியும் பலம் உண்டாகின்றது. மறுபடியும் வாழ்க்கை ஆரம்பமாகின்றது. மறு உலக வாழ்க்கை மகிழ்ச்சிக் குரியதாக உள்ளதென்று எல்லா ஆவிகளும் கூறுகின்றன. ஒரே வகையான கருத் துடையவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்கிறார்கள். அவர்கள் மறுபடியும் இவ்வுலகுக்குத் திரும்பிவர விரும்புவதில்லை. இது வெறும் கதையன்று. இது உண்மை என்று காட்டுவதற்குப் பல சான்றுகள் உள்ளன. இறந்து அதிக நாளாகாதவர்களின் ஆவிகளே பெரும்பாலும் வந்து பேசுகின்றன. நாட்செல்லச் செல்ல அவை தோன்றுவதில்லை. டௌசன் ரொசர்(Dawson Roger) என்பவர் மூலம் மான்தான்(Manton) என்பவரின் ஆவி பேசிற்று. அது, தான் லோஹன்ஸ் லிதியாட் என்னும் இடத்திற் பிறந்த தென்றும், தனது உடல் 1677இல் ஸ்ரோக்நியுக்டன் என்னும் இடத்தில் புதைக்கப்பட்டதென்றும் கூறிற்று. ஆராய்ச்சியில் அவ்வகையானவர் இருந்தார் என்றும், அவர் கிராம்வெல் காலத்தில் தேவாலயத்தில் ஊழியம் செய்தவர் என்றும் நன்றாக அறியவந்தது. இது வரையும் பேசிய ஆவிகளுள் இது பழங்காலத்தது. மறு உலகத்தில் குறித்த, சிலகால எல்லைக்குப்பின் அவை வெவ்வேறு மண்டலங்களுக்குச் செல் கின்றன. இம் மண்டலங்களுக்குள்ள தொடர்பு எங்களுக்கும் ஆவி உலகத் துக்குமுள்ள தொடர்பு போன்றது. கீழ் உள்ளது மேலே போகமுடியாது; மேல் உள்ளது விரும்பியபோது கீழே வரமுடியும். வாழ்க்கை இவ்வுலகின் சிறந்த பகுதிகளை ஒத்தது. இவ்வுலக வாழ்க்கை உடலோடு தொடர்புடையது. அவ் வுலக வாழ்க்கை மனத்தோடு சம்பந்தமுடையது. உணவு, பொருள், பண்டம், ஆசை, நோய் போன்றவை இவ்வுடம்போடு அகன்றுவிடுகின்றன. அறிவு சம்பந்தமானவை வளர்ச்சியடைகின்றன. இவ்வுலக வாழ்க்கையில் எப்படி உடை அணிந்திருந்தார்களோ, அவ்வாறே அவ்வுலகிலும் உடை அணிந் திருக்கிறார்கள். சிறியவர்கள் பெரியவர்களாக வளர்கிறார்கள். அங்கு அவர்கள் கூட்டங் கூட்டமாக வாழ்கிறார்கள். ஆவி உலகிலுள்ள ஆண், உண்மையான பெண் துணையைத் தேடிக்கொள்கிறது. ஆனால் ஆண் பெண் தொடர்பான சேர்க்கையும் பிள்ளைப் பேறுகளும் இல்லை. அங்கு மொழிகள் இல்லை. எண்ணங்களே மொழியாக வழங்குகின்றன. ஆவி களுக்கு எல்லாம் அறிவது போன்ற ஒருவகை உணர்ச்சியுண்டு. இவ்வுலகி லுள்ள சமயக் கொள்கைகளில் ஒன்று மற்றதிலும் பார்க்கச் சிறந்தது அன்று என்றும், எல்லாம் முன்னேற்றத்துக்குரியனவே என்றும் எல்லா ஆவிகளும் கூறியுள்ளன. கடவுளைத் துதிப்பதினால் நன்மை உண்டாகிறது என்றும் அவை அறிவித்துள்ளன. புதிதாக மற்ற உலகத்துக்குச் சென்ற ஆவிகள், தாம் மரணமடைந்து விட்டதாக உணர்வதில்லை. கொனண்டேல் “புதிய வெளிச்சப்பாடுகள்”1 என்னும் நூலில் கூறி யிருப்பது வருமாறு. எனக்கு கிடைத்துள்ள செய்திகளைக்கொண்டு அறியக் கிடப்பன வருமாறு: இறந்தவர்களின் ஆவிகளுக்கு வடிவுண்டு. அவை நமது கண்களுக்குப் புலப்படுவதில்லை. அவ் வடிவங்கள் இவ்வுலகில் நடமாடிய உடலின் வடிவைப்போன்றன. ஆனால் அதிலும் பார்க்க அழகிய தோற்றமுடையன; அவற்றுக்கு முதுமை, நோய், வறுமை செல்வம் என்பன இல்லை. அவை உடை தரிக்கின்றன. அவை நித்திரை கொள்வ தில்லை; ஆனால் ஒருவகைப் பாதி விழிப்பும், பாதி உறக்கமுமாகிய நிலையை அடைகின்றன. அதனையே அவை நித்திரை எனக் கூறுகின்றன. இவ்வுலக வாழ்க்கைக் காலத்தினும் பார்க்கச் சுருக்கமான ஒரு காலத்தில் அவை வேறு மண்டலங்களுக்குச் செல்கின்றன. ஒரேவகை எண்ணமும் உணர்ச்சியும் உடையவை ஒன்றாகச் சேர்ந்து வாழ்கின்றன. கணவன் மனைவியராய் இம்மையில் வாழ்ந்தோர் மறுபடியும் கட்டாயமாக இணைக் கப்படவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள அன்பு இருக்கின்றது. மரணத்துக்குப்பின் ஆவிகள் பாதி உணர்ச்சியும், பாதி உணர்ச்சி இல்லாதது மாகிய ஒருவகை நிலையை அடைகின்றன. அவ்வாறு இருக்கும் கால எல்லை பலவகையினது. அவற்றுக்கு உடம்பில் நோய் அல்லது வருத்தம் உண்டாவதில்லை. மரண காலத்தில் நோய் உண்டாவதில்லை. மரணத்துக் குப் பின் பலவகைச் சமய நம்பிக்கைகளில் வேறுபாடு காணப்படுவதில்லை. மறு உலக வாழ்க்கையில் இருப்பவர்கள் திரும்பிவர விரும்புவதில்லை. அவர்களின் வாழ்க்கை இன்பமானது. ஆவிகளுடன் பேசுதல் 2 (பிராட்லி கூறும் விவரம்) யான் திவிக்கொவ் என்பவரின் விருந்தாளியாக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தேன். அவர், “ஆவி பேசுவதைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று என்னைக் கேட்டார். “பொழுதுபோக்காக அவ்வாறு செய்யலாம்” என நான் கூறினேன். அவர் ஜாட்ஸ் வலியண்டன் என்னும் ஆவியோடு பேசுகின்றவருக்கு (Medium) உடனே ‘தந்தி’ கொடுத்தார். 6-6-1923இல் இரவு உணவுக்கு முன் சிறிது நேரம் வலியண்டினோடு பேசிக்கொண்டிருந்தேன். நான் முன் ஒருபோதும் ஆவியோடு பேசுகின்றவர்களைச் சந்தித்ததில்லை. இரா உணவு கொண்டபின் சிறிது நேரம் நாங்கள் பொழுதுபோக்காகப் பேசிக்கொண்டிருந்தோம். ஆவியுடன் பேசுவதற்கு ஒரு அறை ஆயத்தஞ் செய்யப்பட்டது. அறையில் நான்கு பேர் இருந்தோம். திவிக்கோவ் ‘மீடியத் தின்’ கையில் இரு மினுக்கமான வளையங்களை மாட்டினார். இது அவர் கையை அசைத்தால் மற்றவர்கள் இருட்டில் பார்ப்பதற்காக ஆகும். நாங்கள் நாற்காலிகளில் வட்டமாக இருந்தோம். ஒவ்வொருவருக்கு இடையிலும் ஐந்தடி வெளி இருந்தது. நடுவில் இரண்டு எக்காளங்கள் வைக்கப்பட்டன. அவை அலுமினியத்தால் செய்யப்பட்டவை. அவைகளின் ஓரங்கள் பளபளப்பாக இருந்தன. உடனே விளக்குகள் அணைக்கப்பட்டன. இச் செயல் வீணானவை என்று எனக்குத் தோன்றின. அறிவாளிகள் இவ்வகை யான சிறு பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்களே என் நான் எண்ணினேன். நாங்கள் சிறிது நேரம் மனத்தில் தோன்றியவைகளை எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். ஒன்றும் நிகழவில்லை. பொழுது போக்குவதற்குச் சிறுவர் பாடுவது போல நாங்கள் சிறிதுநேரம் பாடினோம். எங்கள் எல்லோருடைய குரல்களும் மிக மோசமானவை. அவைகளுள் என் குரல் மிக மோசமானது. பாட்டை நிறுத்தவிட்டு மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின்பு சிறிது நேரம் பாடினோம் இவ்வாறு செய்வது எனக்கு மிக வெறுப்பாக விருந்தது. சடுதியில் ஒரு நிகழ்ச்சி உண்டாயிற்று; அமைதி நிலவிற்று. ஐந்தாவது ஒரு ஆள் அறையில் இருப்பது போல் நான் உணர்ந்தேன். ஒரு பெண்ணின் மெல்லிய குரல் அமைதியைக் கலைத்தது. அக் குரல் என்னைப் பெயர் சொல்லி அழைத்தது. அவ்வோசை எனக்கு மூன்று அடி தூரத்தில் இருந்து வருவதாகத் தெரிந்தது. அதைக் கேட்டு நான் குழப்பம் அடையவில்லை. நான், ‘ஆம்’ என்று வழக்கமான குரலில் விடை அளித்தேன். இருமுறை எனது குறித்த பெயர் சொல்லி அழைக்கப்பட்டது. பிராட்லி : நான் இங்கு இருக்கிறேன்; எனக்கு என்ன சொல்ல விரும்புகிறாய்? ஆவி : நான் உன்னை நேசிக்கிறேன்! நான் உன்னை நேசிக்கிறேன்!! பிரா : நீ யார் என்று தயவுசெய்து எனக்குச் சொல்லுவாயா? ஆவி : அன்னி பிரா : உனது முழுப்பெயரையும் கூற முடியுமா? ஆவி : உனது சகோதரியாகிய அன்னி. பின்னே நாங்கள், எல்லோரும் கேட்கும்படி பலவற்றைப் பேசினோம். அவள் இறக்குமுன் நாங்கள் இருவரும் மிக அன்போடு இருந்தோம். அவள் எனக்கு வயதாற் சிறிது மூத்தவள். நாங்கள் பதினைந்து நிமிடங்கள் வரையில் பேசினோம். தான் பல ஆண்டுகளாக என்னோடு பேச முயன்று வந்ததாகவும், நான் செல்லும் இடங்களுக்கும் கூடவே சென்றதாக வும், நான் எழுதிய புத்தகங்களைப் பற்றித் தான் அறிந்ததாகவும், நான் தனிமையில் இருந்து எழுதிக்கொண்டிருக்கும்போது எனக்கு எண்ணங் களைத் தோற்றுவிப்பதில் உதவியாயிருந்ததாகவும் கூறினாள். அவள் பிரிந்து செல்வதன் முன் அடுத்த இரவில் வந்து பேச முடியுமோ எனக் கேட்டேன். “ஆம்” எனக் கூறினாள் எனது சகோதரி பிரிந்து சென்றபின் மேலும், இரண்டு மணி நேரம் ஆவிகளுடன் பேசப்பட்டது. ஐந்து ஆவிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து பேசின. ஓசைகள் அறையின் வெவ்வேறிடங் களிலிருந்து வந்தன. ஒவ்வொரு ஆவியின் குரலும் வெவ்வேறு வகையாக இருந்தது. ஆவிகள் வருவதன்முன் எக்காளங்கள் எழுந்து அறையைச் சுற்றி வந்தன. இரண்டாவதாக வந்த ஆவி, தனது பெயர் ஆதர் பிராண்டி எனக் கூறிற்று. இவருடைய மரணத்துக்குப் பின் திவிக்கொவ், இவர் நிலத்தை விலைக்கு வாங்கியிருந்தார். அவ் வாவி இப்பொழுது சென்றிருக்கும் உலகத்தில் தான் மகிழ்ச்சியோடு வாழ்வதாகவும், இவ்வுலகுக்கு வருவதற்கு தான் விரும்பவில்லை என்றும் கூறிற்று. அடுத்து வந்து பேசியது ஒரு கனடியனின் (கனடா நாட்டவன்) ஆவி. அது திருத்தமில்லாத ஆங்கிலமும் பிரஞ்சு மொழியும் பேசிற்று. அது தனது பெயர் ‘கோகும்’ எனக் கூறிற்று. திவிக்கோவ் அவனை முன்னே அறிவார். அவர் அதைப் பாடும்படி கேட்டார். அது மிக உச்சமான குரலில் ‘வாபலோமா’ என்னும் பாட்டைப் பாடிற்று. அவ்வோசை கால் மைல் தூரம் கேட்கக் கூடியதாக இருந்தது. இவ்வளவு உரக்கப் பாடியமையால் அதற்கு மேலான வலிமை இருக்கலாம் என்று நான் நினைத்து, ‘என்னைத் தொட முடியுமோ? என்று கேட்டேன். உடனே ஒரு கை விரல் எனது தலையைத் தடவிற்று. கோகும் சென்ற பின் வேறோர் ஆவி வந்தது. அவ் வாவியின் பெயர் பாட்ஒபிரியன். இவன் நாற்பத்திரண்டு ஆண்டுகளின் முன் கடலில் மாண்டான். அவன் சிகாகோவில் தச்சு வேலை செய்தவன். அயர்லாந்துக்குத் திரும்பி வரும்போது அவனுக்கு மரணம் நேர்ந்தது. இவ் வாவி சென்றபின் எவற் என்பவனின் ஆவி வந்தது. நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு அது பதிலளித்தது. மரணத்துக்குப்பின் உயிர்கள் நிலைபெறுகின்றன என்னும் உண்மையை மக்களுக்கு அறிவிப்பதற்காகவே ஆவிகள் இவ்வுலகில் வந்து பேசுகின்றன என்றும் அது கூறிற்று. அடுத்து வந்தது. டாக்டர் குறுஸ்கொவ் என்பவரின் ஆவி. அது தான் ஆறு நாட்களுக்கு முன் இறந்து விட்டதாகவும், தனது உடல் எரிக்கப்பட்டதாகவும், அதனால் ஆவிக்குப் பங்கம் உண்டாயிருக்கக்கூடுமோ என்று தனது மாணவர் குழப்பம் அடைந் திருக்கிறார்கள் என்றும் உடல் எரிக்கப்பட்ட பின்னும், ஆவி இருக்கிற தென்று அவர்களுக்கு அறிவிக்கும்படியும் கூறிற்று. அடுத்த நாள் சனிக்கிழமை (6-7-23) நாங்கள் ஆவியோடு பேசும் அறையில் இருந்தோம். விளக்கு அணைத்துக் கால்மணி நேரத்தில் உரத்த குரலில் இஸ்கொத்திய மொழி உச்சரிப்பில் ஒரு ஆவி வந்து பேசிற்று. எனது சகோதரியின் ஆவி வருமோ என்று நான் நினைத்தேன். உடனே அவ்வாவி வந்து பேசிற்று. நாங்கள் இருவரும் இருபது நிமிடங்கள் வரையில் பேசினோம். பின்பு ஒரு பெண்குழந்தையின் ஆவி வந்து பேசிற்று. அவளது பெயர் அனி. அவளுக்கு ஒரு கால் நொண்டியாயிருந்தது. அவள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளின் முன் இறந்துபோயினாள். அவள் தான் வளர்ந்து வருவதாகவும், பள்ளிக் கூடத்தில் படிப்பதாகவும், இப்பொழுது தான் நொண்டியல்லள் என்றும் தனது வாழ்க்கை இன்பமாயிருக்கிற தென்றும் கூறினாள். பெண்ணின் ஆவி கூறியவை 1940ஆம் ஆண்டு பெண் ஒருத்தியின் ஆவி, பிளஞ்சட் என்னும் கருவி மூலம் எழுதியவை மைசூரில் இருந்து வெளிவரும் ‘மிதிக் இதழில்’ (Mythic magazine) 1942ஆம் ஆண்டு வெளியாயின. அவ் வாவி கூறியவை பெரும்பாலன மேல்நாட்டு நூல்களில் வெளிவந்தவைகளை ஒத்துள்ளன. ஆவிகள் கூறுகின்றவைகளில் சில மாறுபாடுகளும் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் இவ்வுலகில் மக்களுக்கு எவ்வாறு எல்லாக் கருத்துக் களும் நன்கு தெரியாதோ, அப்படியே ஆவிகளுக்கும் உண்டு என ஆவி ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். பெண்ணின் ஆவி கூறியவற்றில் சிலவற்றை இங்குத் தருகின்றோம். கேள்வி : நீ யார்? மறுமொழி : நான் பிளஞ்செட் கே : இவ்வுலகில் ஆவிகள் உண்டா? ம : ஆம் கே : நீ இவ்வுலகில் ஏன் தங்கி நிற்கின்றாய்? ம : நான் ஒரு பெண்ணின் ஆவி; நான் அமிஸ்ரார் என்னும் இடத்திற் கொல்லப்பட்டேன். என் கணவர் என்மீது சந்தேகங் கொண்டு நடு இரவில் கொன்றுவிட்டார். அவர், அரசினர் தண்டனைக்குட்பட்டு அந்தமான் தீவில் இருக்கிறார். கே : இது எப்பொழுது நிகழ்ந்தது? ம : 1917இல் கே : நீ வருங்காலத்தைப்பற்றிக் கூறமுடியுமா? ம : கூற முடியாது கே : உனக்கு இரவும் பகலும் உண்டா? ம : இல்லை கே : நீ உணவு உண்கிறாயா? ம : இல்லை கே : எப்படி உணவின்றி நீ இருக்கமுடியும்? ம : எங்களுக்கு ஊன் தொடர்பான உடல் இல்லை கே : கெட்ட ஆவிகள் உண்டா? ம : ஆம் கே : அவை ஏன் மக்களைப் பிடித்துத் தொந்தரவு செய்கின்றன? ம : அவர்களுக்குத் தீமை செய்யவேண்டும் என்னும் விருப்பினால், தீமை செய்வது அவர்களுக்கு விளையாட்டு. கே : ஒருவரை ஒருவர் அறிய உங்களுக்கு வடிவு உண்டா? ம : ஆம். கே : மரணத்துக்குப் பின் என்ன நிகழ்கிறது? ம : ஆவி, ஆவி உலகத்தை அடைகின்றது கே : பின்பு என்ன நிகழ்கின்றது? ம : அதனதன் தரத்துக்கேற்ற உலகத்துக்கு அனுப்பப்படுகின்றது. கே : மரணத்துக்குப்பின் சுற்றத்தவர்மீது பற்று உண்டா? ம : ஆவிகளுக்கு இவ்வுலகத் தொடர்பு இருந்தால், உண்டு. கே : இவ்வுலகத் தொடர்பு என்றால் என்ன? ம : நிறைவேற்றப்படாத ஆசைகள். கே : அவ்வகை ஆவிகள் கெட்டவையா? நல்லவையா? ம : பெரும்பாலும் நல்லவை. ஆவிகளின் நேர் பேச்சு 1ஒருவன் அல்லது ஒருத்தி மரணத்துக்குப்பின் வாழ்வதைப்பற்றி அறிந்துகொள்வதற்கு உனக்கு அல்லது எனக்கு எவ்வகையான அத்தாட்சி வேண்டும். இறந்தவர் எங்களுக்கு முன் தோன்றிப் பேசுவதே போதிய அத் தாட்சியாகுமென்று நினைக்கிறேன். அது மிகவும் நேரடியான அத்தாட்சியே யாகும். மரணத்துக்குப்பின் என்ன நிகழ்கின்றது என்று ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் இதைவிட நூற்றுக்கணக்காண சான்றுகளை அறிவார்கள். எனது மகன் யான் பதினோராவது வயதில் மரணமானான். 1933ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி எனது நண்பர் ஒருவர் வீட்டில் யானின் குரல் கேட்டது. இதனை நானும் பிறரும் கேட்டோம். “எனது தந்தையுடன் பேசப்போகின்றேன்” என்பதே முதல் வார்த்தையாகும். பின்பு அவன் உற் றாண்மையானதும் என்னோடு சம்பந்தப்பட்டதுமாகிய சில செய்திகளைக் கூறினான். இறந்தவர்களுடன் பேசுவதில் பெரிதும் சந்தேகப்படுகின்ற நான் எனது பையனே பேசுகின்றானென்றும் இதில் யாதும் புரளி இல்லை என்றும் அறிந்துகொண்டேன். எனக்கு அப்பொழுது இருந்த கவலையையும் அதைப் போக்கும் வழியையும் அவன் எனக்குக் கூறினான். அவ்வறைக் குள் இருந்த எவரேனும் இவைகளை ஒரு போதும் முன் அறிந்திருக்க முடியாது. இச் சத்தம் ‘நேர் ஒலி’ எனப்படும். நேர் ஒலி என்பது ஆவேசித்துப் பேசுபவர் மூலமன்றி வானில் நின்று வருவது. அவ்வாண்டில் மே மாதம் 5ஆம் நாள் அவன் தனது தாய்க்கும் சகோதரிக்கும் செய்தி அனுப்பினான். அதே ஆண்டில் அக்டோபர் மாதம் 20ஆம் நாள் யான் உச்சரிப்பதற்கு அதிகம் வில்லங்கமான தனது சகோதரி யின் பெயரைக் கூறினான். அங்கிருந்த எவருக்காவது யானைப்பற்றித் தெரியாது. அப்பொழுது சேகிரேவ் அம்மையாரும் பிறரும் சமூகமாயிருந் தார்கள். அவன் தான் அடைந்துள்ள மனமாற்றங்களைப் பற்றிக் கூறினான். அடுத்தபடி செப்டம்பர் மாதத்தில் அவன் என்னோடு தெளிவாகப் பேசினான். அவன் பேசும் குழல் ஒன்றை எனது முழங்கால்மீது வைத்துத் தான் பேசுவதைப் பிறர் கேளாதபடி பேசினான். நான் குனிந்து குசுகுசுத்துப் பேசினேன். அவனுடைய குரலும் குழல் வழியாகக் குசுகுசுத்து வந்தது. இப் பேச்சு தனதும் தனது தாய் சகோதரியரின் மனோநிலை சம்பந்தமானதாகும். அப்பொழுது அவனுடைய தாய் விசேஷ சிகிச்சை ஒன்று பெற்றுவந்தாள். இதைக் குறித்து அவன் சம்பாஷித்தான். நான் அவனைக் கடைசியாக 1940ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி சந்தித்தேன். பல ஆண்டுகளாக நாம் அடிக்கடி சந்தித்தோம். நான் அவன் இறந்துபோனதாக ஒரு போதும் நினைக்கவில்லை. சர் அலிவர் லாட்ஸ் தனது மகன் ராய்மண்டோடு பலமுறை சம்பாஷித்திருக்கிறார். இறந்தவர்களோடு பேசுவதற்கு மீடியம் (ஆவேசித்துப் பேசுவோர்) தேவையாயினும் நேர் பேச்சுக்கு மீடியம் தேவையில்லை. பேச்சு ஆகாயத்தில் நின்று நேரே வருகின்றது. இவ் வுண்மையை ஆவி ஆராய்ச்சியாளர் நன்கு அறிவார்கள். இவ்வாறு ஆவிகள் நேரே பேசுவதை நான் பல தடவைகளிற் கேட்டிருக்கிறேன். சில சமயங்களில் பல ஆவிகள் ஒருமித்துப் பேசின. இவ்வாறு இறந்தவர்களின் ஆவிகள் இலண்டனில் பலர் முன்னிலையில் சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கின்றன. இறந்துபோன சர் ஹென்றி செர்கேவ் என்பவர் தனது மனைவியுடன் பேசியிருக்கின்றார். அவர் பேசிய காரியங்கள் அவ்விருவருக்கும் மாத்திரம் தெரிந்தவை. அவருடைய ஆவி வடிவு அறையை விட்டவுடன் என்னுடன் வந்து மரியாதையாகப் பேசிற்று. எங்கள் பேச்சு ஒன்று 1933ஆம் ஆண்டு சூன் மாதம் 2ஆம் நாள் நிகழ்ந்தது. எங்கள் காலத்தில் பேர்போன ஆசிரியர்களுள் ஒருவரும் மறு பிறப்பைப்பற்றி ஒரு நாடகம் எழுதியவருமாகிய ஒருவர் என்னுடன் பல தடவைகள் பேசினார். அவரது பெயரை வெளியிடுவதை அவர் மனைவி விரும்பவில்லை. அவர் மரணமான சிறிது நாட்களின்பின் 1933ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் அவர் என்னோடு பேசினார். அப்பொழுது இருபது பேர் சமூகமாயிருந்தனர். செகிரேவ் அம்மையார் அவர்களுள் ஒருவர். ஒரு முறை செர் ஆதர் கனன்டேலின் ஆவி இருபத்துமூன்று பேருக்கு எதிரே என்னுடன் பேசவேண்டுமெனக் கூறிற்று. ஆவிகள் பேசுவதில் சந்தேகமும் கவனமுமுடைய நான் பேசப்போவது கனன்டேல் தானென்று அத்தாட்சிப்படுத்தும்படி சொன்னேன். அவர் என்னைக் காட்சி முறையாகச் சந்தித்த இடத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். இது சரியாக இருந்தது. நாங்கள் இருவரும் வெஸ்ட்மின்ஸ்டரில் விக்டோரியா வீதியில் பெருமழைக்கு ஒதுங்கி நிற்கும்படி ஒரு வீட்டு வாயிலுக்கு ஓடிச்சென்று நின்ற போது சந்தித்தோம். பின் அவர் தனது மனைவிக்கும் மகன் டெனிசுக்கும் செய்தி சொன்னார். அப்போது சர்ஹென்ரி செகிரேவும் பேசினார்: மீடியங்களும் ஆவிவுலகப் பேச்சும் பல காலமாக மறு உலகத்துக்கும் இவ்வுலகத்துக்குமுள்ள ஆராய்ச்சி களில் ஈடுபட்டிருந்தேன். ஆவி உலகத்துக்கும் இவ்வுலகத்துக்கும் பெரிய வேறுபாடு உண்டு. அங்கு வாழுகின்றவர்களுக்கு இவ்வுலகம் எங்களுக்கு எவ்வாறு தோன்றுகிறதோ அவ்வாறு திடமுடையதாக இருக்கின்றது. மக்க ளுடைய உடல் ஒரே வகையான வேகத்தில் இயங்கும்போது திடம்போல் தோன்றும். ஓர் ஆவி மூடப்பட்ட கதவுக் கூடாகச் செல்லமுடியும்; கூடிய இயக்கமுள்ள பொருள், குறைந்த இயக்கமுள்ள பொருள்களுக் கூடாகச் செல்லக்கூடும். அதற்குக் கதவின் தடுப்பு இல்லை. அது தனது இயக்கத் தின் வேகத்தைக் குறைக்கும்போது ஆவி சதையும் இரத்தமுள்ள மனித சரீரம்போலத் திடமுடையதாகின்றது. அப்பொழுது அது கதவுக்கூடாகக் செல்லமுடியாது. இவ்வாறு செல்லும் ஆற்றலைப்பற்றி உயிரோடிருக்கும் பலர் அறிந் துள்ளார்கள். எனது நண்பனான யோனானிஸ் கொலென்பேக் என்னும் டானிஸ்காரர் நினைத்தபோது தனது உடலைவிட்டுச் செல்லும் ஆற்றல் பெற்றிருந்தார். இவ்வாறு நுண்ணுடலோடு பயணஞ் செல்லக்கூடியவர்கள் நம்மவர் அறைகளுள் செல்லமுடியும். மீடியம் மூலம் ஆவி உலகத்துக்கும் இவ்வுலகத்துக்கும் இடையிலுள்ள கதவு திறக்கப்படும்போது கீழ் நிலையி லுள்ள ஆவிகள் குறும்பு செய்வதுமுண்டு; இதனால் உண்மையல் லாத பல செய்திகள் கிடைக்கின்றன. இப் பூமியில் வாழும் பல திறப்பட்ட மக்களை ஒப்பவே மறு உலகிலும் பலதிறப்பட ஆவிகள் உறைகின்றன. இது பற்றித் தான் மறு உலகிலிருந்து வரும் செய்திகள் பல பொருளற்றனவாகக் காணப்படுகின்றன. ஆவி உலகிலிருந்து கிடைத்த செய்திகள் அபாயங்களிலிருந்து பலரைக் காப்பாற்றியிருக்கின்றன; குற்றமற்ற பலரைப் பொய்யான குற்றச் சாட்டுகளிலிருந்து தப்ப வைத்திருக்கின்றன; இழந்துபோன மரண சாசனங்களைக் கண்டுபிடிக்க உதவி செய்திருக்கின்றன. பல நாடுகளில் போலிசார் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்கு ஆவி களுடன் பேசுவோரைப் பயன்படுத்தி வருகின்றனர். 1914ஆம் ஆண்டு யுத்த காலம் முதல் பல நாடுகள் இம் முறையைக் கையாண்டு வருகின்றன. இவ்வாறு ஆலோசனை செய்யுமுன் ஹிட்லர் ஒரு கருமத்தைப்பற்றித் தீர்மானத்துக்கு வருவதில்லை எனஅவரது முன்னைய நண்பராகிய ரோச்நிங்(Rauschning) அவரைக் குற்றஞ் சாட்டியிருக்கின்றார். உலோக சம்பந்தமானவை தாவரங்களாகவும், தாவரங்கள் சிற்றுயிர்க ளாகவும், சிற்றுயிர்கள் விலங்குகள் பறவைகளாகவும், விலங்குகள் பறவைகள் மனிதராகவும் மாறுகின்றன என்பதற்குப் பிராணி நூல் சான்றளிக்கின்றது. பூமியல்லாத மற்றக் கிரகங்களில் இப் பூமியிலுள்ள உயிர்கள் போலல்லாதவையும் போன்றவையுமான உயிர்கள் இருக்கின்றன என்று ஆவி உலகத்தவர் கூறி இருக்கின்றனர். சமய நூல்கள், தேவர்களையும் தேவதூதர்களையும் பற்றிக் கூறியுள்ளன. இவ் வுலகுகளிலிருந்து மேல் உலகங்களுக்குச் செல்ல மரணமுண்டாகின்ற தென்று ஆவிகள் கூறு கின்றன. எங்கள் உலகம் ஏழு பிரிவுகளாக உள்ளன என்றும், நாம் இறந்ததும் நாம் எம்மை ஆயத்தஞ் செய்துகொள்ளும்படி மரணகாலத்தில் அவை களுள் ஒன்றுக்குச் செல்கின்றோமென்றும் அவை கூறுகின்றன. உயர்வான எண்ணமும் உயர்ந்த வாழ்க்கையுமுள்ளவர், உயர்ந்த மண்டலத்துக்குச் செல்வார். சாதாரண மக்கள் பொதுவாக மூன்றாவது உலகத்துக்குச் செல் கின்றனரென்றும் அங்குள்ள நிலைமை உடலளவில் வேறுபாடன்றி மற்றைய எல்லா வகையும் பூமியிலுள்ளது போன்றது என்றும் அவை கூறுகின்றன. நாம் மூன்றாமுலகைவிட்டு நாலாம் உலகை அடையும்போது மனித வடிவம் மாறுபட்டு இன்னொரு வடிவம் உண்டாகின்றதென்றும், அது ‘கூட்ட உயிர்’ என்றும் அவ்வுலகை அடைந்த மேயர்ஸ் முதலிய சாத்திர அறிஞர் கூறியுள்ளார்கள். கூட்டு உயிர் என்பதைப் பற்றி இன்னோரிடத்திற் கூறுவோம். இவ் வுலகத்தில் நாம் வாழும்போது நாம் அக்கூட்டத்தின் உறுப்பினரென்றும் மரண காலத்தில் அக் கூட்டத்தை அடைகின்றோ மென்றும் எங்கள் உண்மையான வீடு மறு உலகமேயன்றி இவ்வுலக மல்ல வென்றும் அவர் கூறியுள்ளனர். அங்கு நேரமும் தூரமும் இல்லையென்றும், நேரம் உலகத்தின் சுழற்சியைப் பொறுத்ததென்றும், எங்கள் நேரம் என்றும் மூன்றாம் உலகத்தின் நேரமல்ல என்றும் கூறியுள்ளார்கள். ஆவிகளை அழைப்பது எப்படி? எங்கள் நாட்டில் சிலர் சில தேவதைகளை வாலாயம் பண்ணியிருக் கிறார்கள் என மக்கள் நம்பி வருவதை நாங்கள் கேட்டிருக்கிறோம். அவர்கள் தேவதையை அழைப்பதற்குத் தேவதையை நினைக்கிறார்கள் என்றும் அறிகிறோம். ஒருவரைப்பற்றி இன்னொருவர் நினைத்தால், அவருக்குத் தும்மல் உண்டாகின்றது என்றும் நம்பப்படுகின்றது. ஒருவர் மனத்தில் நினைப்பதை அறிந்து கூறும் ஆற்றல் பலரிடம் உண்டு. இதனை மேல்நாட்டவர்கள், ‘தாட்ஸ் ரீடிங்’(Thoughts reading) எனக் கூறுகிறார்கள். எங்கள் நாட்டில் இது “நினைத்த காரியம் சொல்லுதல்” என்னும் பெயர் பெற்று வழங்குகின்றது. இவற்றால் ஒருவர் நினைவு இன்னொருவர் உள்ளத் தில் பதியத்தக்கது என நாம் அறிகின்றோம். எண்ணங்களுக்கு வடிவு உண்டு. இது மேற்புல அறிஞரால் ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டது. இது போன்ற இயற்கை விதியினால் ஒருவர், இறந்தவரைப்பற்றி உறுதியாக நினைத்தால் அந் நினைவு இறந்தவர்களின் அறிவுக்கு அறிய வருகின்றது. அப்பொழுது அவை இவ்வுலகுக்கு வந்து, தாம் ஆவேசித்து நின்று பேசத் தகுதியுடையவர் மூலம் பேசுகின்றன1. எல்லோர் மூலமும் ஆவிகள் பேச மாட்டா. சிலருடைய உடல், மூளை அமைப்புக்களே ஆவிகளை ஏற்றுப் பேசத் தக்கன. ஒரு உடலில் இரண்டு ஆவிகள் தங்குவதால், (தகுதியற்றவர் களினுடலில் ஆவிகள் ஆவேசித்தால்,) அவர்களின் மூளை நொறுங்கிக் கெட்டுவிடும் என்று கருதப்படுகின்றது. பேய்கள் எல்லோரையும் பிடிப்ப தில்லை. சிலரையே பிடிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதற்குக் காரணம் முன் கூறப்பட்டதாகலாம். சீனர் ஆவியோடு பேச அறிந்திருந்தார்கள் சீனர் பழங்காலத்திலேயே வீ (V) வடிவான பிளஞ்சட்1 மூலம் ஆவி களோடு பேசினார்கள். கேள்விகள் கடுதாசியில் எழுதிக் கொடுக்கப்பட்டன. ஆவியோடு பேசுகின்றவர் கேள்விகளை மற்றவர்கள் அறியுமுன் பலிபீடத் துக்கு முன்னால் நெருப்பில் இட்டுக் கொளுத்தினார். “பிளஞ்சட்” அக் கேள்விகளுக்கு விடை எழுதிற்று. இக் கருமம் இதனையே தொழிலாக உள்ள சிலரால் மாத்திரம் செய்யப்பட்டது. பிளஞ்சட் என்பது இருதய வடிவான ஒரு கருவி. அதில் ஆவியோடு பேசுகின்றவர் எழுதுகோலையும் கீழே தாளையும் வைத்திருந்தால் ஆவி கையை இயக்கி எழுதும். இன்னொரு முறையாகவும் அவர்கள் ஆவியோடு பேசினார்கள். இதைப் பற்றிய வரலாறு ஏழாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கியங் களில் காணப்படுகின்றது. ஆவியோடு பேசுகிறவனுக்கு முன்னால் மெழுகுத் திரி கொளுத்தி வைத்துச் சாம்பிராணிப் புகை போடப்பட்டது. அப்பொழுது அவன் மயக்க நிலை அடைந்து சிலவற்றைக் கூறுகின்றான். அவன்மீது ஆவி ஆவேசித்திருப்பதாகக் கருதப்படுகின்றது.2 தெளிவுக் காட்சி (Clairvoyance) ஒரு முனிவரோ, தேவனோ, ஒருவனுக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து ஆபத்துக் காலத்தில் அம் மந்திரத்தை உச்சரித்துக் தம்மை நினைத்தால், தாம் வந்து உதவி செய்வதாகக் கூறினார்கள் என்பது போன்று உள்ள பழங்கதைகள் தொலைவில் உணர்தலை(Telepathy) அடிப்படையாகக் கொண்ட கதைகளாகும். தொலைவிலுணர்தல் என்பது தொலைவிலிருந்து ஒருவர் நினைப்பதை மற்றொருவர் அறிதல். தெளிவுக் காட்சி என்பது தொலைவிலும் அண்மையிலும் நிகழும் செய்திகளைப் பிறர் நினைக்காமலே இயல்பாக அறியும் ஆற்றல். முனிவர்கள் “ஞான திருட்டி யால்” தொலைவில் நிகழ்ந்தவற்றைக் கூறினார்கள் என வரும் பழங் கதைகள் தெளிவில் உணர்தலுக்கு எடுத்துக் காட்டாகும். இவ்வாற்றல் எல்லாமக்களிடத்தும் இயல்பாக மறைந்து இருக்கின்றது. மனிதனுக்கு வெளிமனம் உள்மனம் என இருமனங்கள் உள்ளன. விழிப்பு நிலையில் தொழிற்படுவது வெளிமனம். மனோவசிய முறையில் அறிதுயில் கொள்ளும்படி செய்யப்பட்ட ஒருவனுக்கு உள்மனம் விழிப்பு நிலையில் இருக்கின்றது. இந் நிலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் கண்ணால் பாராமலே அயலே உள்ள பல நிகழ்ச்சிகளைக் கூறவல்லவர் களாயிருக்கின்றனர். இதனைச் சென்னை வீதிகளில் தினமும் பார்க்கலாம். ஒருவன் சில வித்தைகளைக் காண்பித்தபின், மற்றொருவனை மயக்க நிலைக்குக் கொண்டு வருகின்றான். பின்பு அவனுடைய முகம் துணியால் மூடப்படு கின்றது. சூழ நிற்பவர்களில் ஒருவன் வைத்திருக்கும் நாணயம் எவ்வகை யினது, எப்பொழுது அடிக்கப்பட்டது என்று கேட்டால் அவன் சரியான விடை அளிக்கிறான்; இப்படியே கடிகாரத்தில் நேரமென்ன? ஒருவன் மனத் தில் நினைப்பது என்ன என்பவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் அவன் சரியான விடை அளிக்கின்றான். இது எல்லோருக்கும் வியப்பளிப்பதாகவே இருக்கின்றது. யோகம் என்பதும் வெளிமனம் தொழிற்படாது உள்மனம் தொழிற்படும்படியான ஒருவகை நிலையில் இருப்பதேயாகும். ஆனால் மனோவசிய அறிதுயிலுக்கும் யோக அறிதுயிலுக்கும் வேறுபாடு உண்டு. சிலருக்குத் தெளிவுக் காட்சி உணர்ச்சி, இயல்பாகவே அமைந்துள்ளது. 1759ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் ஒரு நாள் சனிக்கிழமை மாலை சுவிமன்பேக் என்பவர் இங்கிலாந்திலே கொத்தின்பேக் என்னும் இடத்துக்குச் சென்றிருந்தார். அவர் அங்கு நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி யிருந்தார். அவர் இரண்டு மணி நேரம் வெளியே சென்றபின் ஸ்டோக் ஹோல்ம் என்னும் இடத்தில் மோசமான தீ மூண்டெரிவதாகக் கூறினார். ஸ்bடாக்ஹோல்ம், கொத்தின்பேக்கிலிருந்து ஐம்பது மைல் தூரத்திலுள்ளது. அவர் நெருப்பு விரைவாகப் பரவுகின்றது என்று சொல்லிக்கொண்டு அடிக்கடி வெளியே சென்றார். அவர் தனது நண்பர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர் வீடு சாம்பலாகி விட்டதென்றும் தனது வீடு அபாய நிலையில் இருக்கின்றதென்றும் கூறினார். எட்டு மணி அளவில் அவர் முகம் மலர்ச்சி அடைந்தது. தனது வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் நெருப்பு அணைக்கப்பட்டுவிட்டதெனக் கூறினார். இந் நிகழ்ச்சி பட்டினத்தில் அதிகக் கிளர்ச்சியை உண்டுபண்ணிற்று. இதற்கிடையில் இச் செய்தி கவர்னருக்குக் கிட்டிற்று. ஞாயிற்றுக்கிழமை காலை கவர்னர் சுவிமன்பேக்கை அழைத்துத் தீயைப்பற்றி வினவினார். அவர் உடனே எப்படித் தீ ஆரம்பித்தது என்றும், அது எவ்வளவு நேரம் எரிந்ததென்றும், அது எப்படி அணைக்கப் பட்டதென்றும் கூறினார். திங்கட்கிழமை காலையில் நெருப்பைப் பற்றிய செய்தி கொத்தின் பேக்குக்குக் கடிதமூலம் வந்தது. அது சுவிமன்பேக் கூறியது போலவே இருந்தது.* ஹான்ட்ஸ் என்பவர் எலின் என்பவளுக்கு மனவசிய முறையாக நோய்க்கு வைத்தியம் செய்தார். அவள் மயக்க நிலையில் ஆழ்ந்திருந்த போது, கண்ணினால் பாராமலே பொருள்களைக் கண்டாள்; அவள் தான் நேரில் பாராத இடங்களையும் மக்களையும் பற்றிச் சரியாக விவரித்துக் கூறினாள். கண்ணுக்குப் பஞ்சுவைத்துக் கட்டியபின், இருட்டறையில் காட்டப்பட்ட அச்சிட்ட படங்களை அவள் சரியாகக் கூறினாள்.* கூட்டமான உயிரும் பேருயிரும் (The “Group Soul” and “Greater Self”) நாங்கள் உடல் சம்பந்தமாகவும் பலவாறு கூட்டப்படுத்தப்பட்டிருக் கின்றோ மென்பதற்குப் பல அடையாளங்கள் உண்டு. ஒரு ஆணாவது ஒரு பெண்ணாவது தனக்காக வாழமுடியாது. இவ்வுலக வாழ்க்கையில் நாம் மற்றவர்களோடு இணைக்கப்படுகின்றோம். நாம் சிலரால் கவரப்படுகின் றோம்; அவர்கள் எங்களால் கவரப்படுகின்றார்கள். நாம் சிலரை மறுபடியும் மறுபடியும் எதிர்பாராத இடங்களில் பலமுறை சந்திக்கின்றோம். வாழ்க்கை யில் நாம் ஒருபோதும் பார்த்திராத சிலர் எங்களுக்கு அறிமுகப்பட்டவர் களாகவும் தோன்றுகின்றனர். சிலரை நாம் பார்த்தமாத்திரத்தில் வெறுக்கின் றோம். இவைகளுள் பல கூட்டமான உயிர்கள் என்பதைப்பற்றி அறிவிக் கும் சான்றுகளாகும். கூட்டமான உயிர்கள் என்றால் என்ன? இங்கு கூறப்படு கின்றவைகளுள் பல செய்திகள் அவ் வுலக ஆவிகளாற் கூறப்பட்டனவும் நாம் நித்திரையில் மறு உலகிலுள்ள கூட்டமான உயிர்களோடு தொடர்பு பெறுவதாலும் பெற்ற அனுபவத்தாலும் கிடைத்தனவாகும். நாம் எல்லோரும் மறு உலகத்திலுள்ள கூட்டங்களுள் சிலவற்றைச் சேர்ந்தவர்களாவோம். இவ்வுலகம் நமது உண்மையான உறைவிடமன்று. நாம் சில அனுபவங்களைப் பெறும் பொருட்டு இப் பூமியில் சில காலம் தங்குவதற்கு வந்தவர்களாவோம். ஆவி உலகில் நாம் இருக்கும்போது இவ்வுலகில் நாம் பிறப்பதற்கு அடிக்கடி அழைப்பு வருகின்றது. விரும்பி னால் நாம் அவ் வழைப்புகளை மறுக்கலாம். மற்றவைகளில் சுதந்திரம் இருப்பது போலவே இவ்வாறு மறுப்பதற்கும் எங்களுக்குச் சுதந்திரம் உண்டு. உடனோ காலந்தாழ்ந்தோ நாங்கள் அழைப்புக்கு உடன்பட்டுப் பூமிக்குச் செல்கின்றோம். நாம் இவ் வுலகைவிட்டுப் போகும்போது எங்கள் கூட்டத்தினர் எப்படி நம்மைச் சுற்றிக் கூடுகிறார்களோ அப்படியே நாம் ஆவி உலகத்தைவிட்டு இவ்வுலகுக்கு வரும்போதும் நாம் எக் கூட்டத்தைச் சேர்ந்துள்ளோமோ அக் கூட்டத்திலுள்ள நமது நண்பர் கூடி எங்களை வழியனுப்புகிறார்கள். நாம் மறுபடியும் ஆவி உலகை அடையும்போதும் அவர்கள் நம்மை வரவேற்கிறார்கள். நாம் எழுபது ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்திருக்கலாம். அது காலம் இல்லாத அவ்வுலகில் கழிந்த ஒரு மாலைப் பொழுதுபோல் இருக்கலாம். எம்மை இவ்வுலகிலும் அவ்வுலகிலும் ஒரு குறிக்கப்பட்ட கூட்டத்தில் சேர்ப்பது எமது அனுதாப உணர்ச்சியும் விளங்கிக் கொள்ளும் தன்மையுமாகும். இக் காரணம் பற்றியே நாம் இப் பூமியில் காண்கின்ற ஒரு சிலர்மீது வெறுப்பும், வேறு சிலர் மீது விருப்பும் உண்டாகின்றது. நாம் திரும்ப ஆவியுலகத்துக்குச் செல்லும்போது நாம் இவ்வுலகில் நுகர்ந்த இன்பங்கள் துன்பங்கள் மூலம் அடைந்த அனுபங்களோடு எங்கள் கூட்டத்துக்குச் செல்கின்றோம். இவ் வனுபவங்கள் எங்கள் கூட்டத்தினர் எல்லோருக்கும் பொதுவான முதற் பொருள் போன்றன. இவ் வனுபவங்கள் அக்கூட்டத்தின் அறிவு வளர்ச்சிக்கும் அக் கூட்டத்தில் ஒவ்வொரு உயிரின் விரிவளர்ச்சிக்கும் வேண்டப்படுவனவாகும். நாம் இவ்வுலகில் தங்கும் காலம் நாம் ஓரிரவு ஒரு விடுதியில் தங்கியது போலாகும். நாம் உணரா விட்டாலும் நாம் ஒவ்வொரு நொடியும் மறு உலகிலுள்ள கூட்ட உயிரோடு தொடர்புடையவர்களாக இருக்கின்றோம். நாம் ஒவ்வொரு இரவும் நித்திரை கொள்ளும் போது உயிர் இப்பரு உடலைவிட்டு மறு உலகிற் சென்று தனது கூட்டத்திலுள்ள உயிர்களையும் தனது கூட்டத்திற்குப் புறம்பேயுள்ள பிற உயிர்களையும் சந்திக்கின்றது. ஆவி உலகில் உள்ளவர்கள் கூறுவதனால் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு நாட்காலையிலும் தான் சந்தித்த உயிர்களோடு நடத்திய பேச்சுகளை ஞாபகத்தில் வைத்துச் சொல்லப் பழகிய சிலர் மூலமாகவும் இவ்வுண்மையை அறிகின்றோம். சில சமயங்களில் தனிப்பட்டவர்களாக இருப்பதாக நினைந்து வருந்தும் நிலை உண்டாகின்றது. இது நாம் எமது தாயுலகமாகிய ஆவி உலகிலிருந்து பிரிந்திருப்பதை நினைவுக்குக் கொண்டுவரும் மறைந்து நிற்கும் உணர்ச்சியினாலாகும். இதை ஊன் இரத்தங்களோடு கூடிய இவ்வுடலை எடுத்து வாழ்வது தன்னலத்தைத் துறத்தலாலும், மற்றவர்க்கு உதவி செய்வதினாலும் துயருறுதலினாலும் நாம் ஈடேற்றம் அடைகின்றமையால் இத் துறவு வேண்டியதாகும். கிறித்துநாதராகிய பெரியவரே இவ் வகைத் துறவுக்குத் தம்மை ஒப்படைத்தார். இக் கூட்ட உயிர் தனித்தனி உயிர்களால் உண்டாயிருப்ப தல்லாமல் இவ் வுயிர்களுக்கெல்லாம் விளக்கமளிக்கும் ஒரு பெரிய உயிராலும் உண்டாகி இருக்கின்றது. கோடிக்கணக்கான சிறிய உயிர்க் கோளங் களாலான மனித உடலுள் பெரிய ஓர் உயிர் இருப்பதை இதற்கு ஒப்பிடலாம். பகை அல்லது அன்பு எங்களை இக் கூட்டங்கள் ஒன்றில் சேர்த்துவிடலாம். உயர்ந்த உலகில், பகை அன்பாக மாறுகின்றது. ஒவ்வொரு கூட்டத்திலு முள்ள உயிர்களின் எண்களும் மாறுபடுகின்றன. ஒவ்வொன்றிலும் பத்து இருபது அல்லது பத்துலட்சம் இருக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றுக் கும் ஒரே வகை அனுதாபமும் விளக்கமும் உண்டு. அவை ஒன்றின்மேல் ஒன்று அன்பாக இருத்தலையும் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்தலையும் மகிழ்ச்சியாகக் கொள்கின்றன. நாம் பரவச நிலையடைகின்ற காலத்தில் நமக்குப் பின்னால் பெரிய ஆற்றல் ஒன்று இருப்பதாகவும் அது எங்களின் பகுதியாக்கியிருப்பதாகவும் உணர்கின்றோம்.  மனிதன் எப்படித் தோன்றினான்? முன்னுரை இவ்வுலகில் தோன்றிய உயிர்கள், அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப, அடுத்த அடுத்த பிறவிகளில் மேலான உடல்களைப் பெற்று, இறுதியில் மனிதனாகப் பிறக்கின்றன என்பது தென்னிந்திய மக்கள் மிகமிக முற்காலம் முதல் அறிந்திருந்த உண்மையாகும். இக் கருத்தினைப் ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்..........செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் - எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்” என வரும் திருவாசகத்திலும் காணலாகும். உயிர்த் தோற்ற வளர்ச்சிக் கொள்கையினரும் (Evolutionists) இக் கருத்தினையே வெளியிடுகின்றனர். அவர்கள், உயிர்களின் மறு பிறப்பைப் பற்றி யாதும் பேசாது ஒவ்வொரு உயிருக்கும் அடுத்த அடுத்த படியில் மேலின உயிர்கள் தோன்றிப் பெருகின என்றும், ஒரு உயிரின் வளர்ச்சியே அடுத்தபடியி லுள்ளது என்றும் கூறுவர். இக் கருத்துகளைக் குறித்த செய்திகள் படிப்ப தற்கு இன்பம் அளிப்பனவாயுள்ளன. இப் பரந்த உலகில் ஆங்காங்கு வாழும் மக்கள் எல்லோரும் நாகரிக வளர்ச்சியில் ஒரே வகையான பல படிகளைத் தாண்டி வந்துள்ளார்கள். மனித சமூகத்தில் தோன்றியுள்ள மொழி, சமயம் முதலியனவும், இசை, கூத்து, மருந்து, கணிதம் போன்ற எல்லாக் கலைகளும் ஒரே வகையாகத் தோன்றி வளர்ச்சி யடைந்தன. நம் நாட்டிலுள்ள தூக்கணங் குருவி போலவே இங்கிலாந்திலுள்ள தூக்கணங் குருவியும் கூடு கட்டுகிறது. ஆனால் அது கூடு கட்டுவதற்குப் பயன்படுத் தும் பொருள் அவ்விடங்களிற் கிடைப்பனவாகலாம். இது போலவே, மனிதனுடைய நாகரிகங்களும் இடங்களுக்கு ஏற்றவாறு சிறு மாறுதல்களை அடைந்துள்ளன. இவ்வகைக் கருத்துகள், வரலாற்றுப் பயிற்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன. அவ்வகையில் இந் நூல் பெரிதும் பயனளிப்பதாகும். சென்னை 25.7.1947 ந.சி. கந்தையா மனிதன் எப்படித் தோன்றினான்? தோற்றுவாய் வரலாறுகளுள் மனிதனுடைய வரலாறு சிறந்தது. மனித வரலாற்றைக் கற்பதால் நாம் சரித்திரத் தொடர்பான பல செய்திகளை எளிதில் விளங்கிக் கொள்ள முடிகின்றது. மேல் நாட்டு அறிஞர் மனித வரலாற்றை மிகச் சிறப் புடையதெனக் கொண்டு அதனை ஒரு கலையாக வளர்த்து வருகின்றனர். ஆகவே அவர்களிடையே மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிந்து வருகின்றன; உண்மை அறிவு ஓங்குகின்றது. இச் சிறிய நூல் மனித வரலாற்றை இயன்ற அளவு சுருங்கவும் விளங்கவும் கூறுகின்றது. நாம் வாழும் உலகம் மனித வரலாற்றைப் பற்றிப் பயிலுமுன் மனிதன் வாழ்வதற்கு இடனாயுள்ள இவ்வுலகைப் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும். இப் பூமியின் மேற்பரப்பில் பயிர் பச்சைகளும், ஆறுகளும், மலைகளும், பல்வகை உயிர்த்தோற்றங்களும் காணப்படுகின்றன. பூமியின் மேற்பரப்பு மிகக் குளிர்ச்சி உடையதாகக் காணப்படுகின்றது. ஆனால் அதன் வயிற்றுள், கடிய இரும்பையும் கல்லையும் நீராக உருக்கவல்ல நெருப்பு இருக்கின்றது. இந் நெருப்பே சில காலங்களில் குமுறி வெளியே எழுகின்றது. அப்பொழுது கீழிருந்து வெளியே தள்ளப்படும் பொருள்கள் குவிந்து மலையாகின்றன. அம் மலையின் நடுவில் பெரிய துவாரம் இருக்கும். அவ் வகை மலை களுக்கு எரிமலைகள் என்று பெயர். பூமியின் வயிற்றில் நெருப்பு இருப்ப தற்குக் காரணம் யாது? இப் பூமி ஒரு காலத்தில் நெருப்புப் பந்தாக இருந்தது. இது, ஞாயிற்றினின்றும் தெறித்து விழுந்த ஒரு துண்டு. இது எண்ணில்லாத காலம் அந்தரத்தே சுழன்று கொண்டிருந்தது. அப்பொழுது அதன் மேலோடு சிறிது சிறிதாகக் குளிர்ச்சி யடைந்தது. பூமியின் மேலோட்டின் 32 மைல் கனம் குளிர்ந்திருக்கின்றது. அதன் கீழ், எரிகின்ற நெருப்பு இருக் கின்றது. கீழே உள்ள நெருப்பு, காலத்துக்குக் காலம் சீறி மேலே எழுந்து தணலையும் கடினமான பொருள்களையும் கக்கிற்று. இயற்கை மாறுபாட் டால் பல தடவை கடல் தரையாகவும், தரை கடலாகவும் மாறின. மலைகள் பல தோன்றின. மலைகளிலிருந்து வழிந்து ஓடும் மழைநீர் மணலை வாரிக் கீழே கொண்டுவந்து பள்ளங்களை நிரப்பின. இவ்வகைக் காரணங்களால் பூமியின் மேல் ஓட்டின் மீது கல்லும் மண்ணும் ஏறுண்டன. அவ்வாறு ஏறுண்ட பொருள்களின் கனம் இருபத்தொரு மைல். மண், மணல் என்பன, பாறைகள் நொறுங்குவதால் உண்டாகிய சிறு துண்டுகள். பாறைகள் அதிக சூடேறி விரைவில் குளிர்வதாலும் பாறை வெடிப்புகளுள் நீர் தங்கிப் பனிக் கட்டியாக உறைவதாலும் அவை நொறுங்கும். நொறுங்கிய சிறு துண்டுகளை மழைநீர் அடித்துக்கொண்டு கீழே செல்லும். இவ்வாறு காலத்துக்குக் காலம் ஏறுண்ட மண் கல் முதலியன, ஏறுண்ட முறைப்படி, அமர்ந்து நெரிந்து படிந்து பாறை அடுக்குகளாக மாறி உள்ளன. எரிமலைக் குழப்பம், பூமி அதிர்ச்சி போன்ற இயற்கைக் குழப்பங்களால் அப் பாறை அடுக்குகளின் சில பகுதிகள் வெளியே தள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் சில பகுதிகள் கடல் அலைகளால் அரிக்கப்பட்டு நாம் காணக்கூடியனவாகச் சில இடங்களில் உள்ளன. அவற்றை ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து பார்த்து நூல்கள் வெளி யிட்டிருக்கின்றனர். அவர்கள் பூமியின் மேலோட்டுக்குமேல் உள்ள பாறை அடுக்கு களை நால்வகையாகப் பிரித்துள்ளார்கள். அப் பாறை அடுக்குகளில் அவ்வக் காலங்களில் வாழ்ந்த உயிர்களும் தாவரங்களும் பதிந்து கிடக் கின்றன. அவற்றுக்குக் கற்படி உருவங்கள்(Fossils) என்று பெயர். ஒவ்வொரு பாறை அடுக்குக்கும் வெவ்வேறு பெயர் இடப்பட்டுள்ளது. அப் பெயர்கள் அப் பாறை அடுக்குகளில் காணப்படும் உயிர்களின் தொடர்பானவை. பாறைகளில் காணப்படும் உலோகப் பொருள்களைக் கொண்டு அவற்றின் வயதுகள் கணிக்கப்படுகின்றன. கீழே உள்ள பாறை அடுக்கு முதல், மேலே உள்ள பாறை அடுக்கு வரையில் படிப்படியே வளர்ச்சியடைந்த உயிர்களும் தாவரங்களும் தோன்றியிருந்தன. ஒரு பாறை அடுக்கில் காணப்படும் உயிர்கள் எல்லாம் அழிந்து போக, அவற்றிலும் பார்க்க வளர்ச்சியடைந்த உயிர்கள் அடுத்த காலத்தில் தோன்றி வாழ்ந்தன. ஒரு கீழ்ப்படியிலுள்ள உயிருக்கும் மேற்படியிலுள்ள உயிருக்கும் நெருங்கிய உறவு காணப்படுகின்றது. இவ்வியல்புகளை ஆராய்ந்து உயிர்த் தோற்ற வளர்ச்சி நூலார்(Evolutionists) மிகத் தாழ்ந்த உயிர்களே எண்ணில் லாத காலத்தில் படிப்படியே வளர்ந்து, மேலின உயிர்களாக மாறியுள்ளன எனக் கூறுவர். உயிர்களின் தோற்றம் வளர்ச்சி மனிதன், உயிர் இனத்தைச் சேர்ந்தவனாதலின் இவ்வுலகில் காணப் படும் உயிர்களைப் பற்றி நாம் அறிதல் வேண்டும். தொடக்கத்தில் இப் பூமி வெப்பமுடையதாக இருந்ததது. அப்பொழுது அங்கு உயிர்கள் தோன்றி வாழ்ந்திருக்க முடியாது. கனல் மிகுந்திருந்தமையால் காற்றும் நீரும் தரை மட்டத்தில் இருந்திருக்கவும் முடியாது. இந் நிலைமை மாறிற்று. அப்பொழுது உயிர்கள், இப் பூமியில் தோன்றி வாழத்தொடங்கின அவை அணுவின் பருமை உடையனவாயிருந்தன. இப் பழைய உயிர்கள் எங்கிருந்து இப் பூமியை அடைந்தன என்று கூற முடியாது. ஆதிகால உயிர்கள் நீர், காற்று, கரைந்த உப்பு என்ப வற்றில் வாழக்கூடியனவாகவும் கண்ணுக்குப் புலப்பட முடியாத சிறியனவாகவுமிருந்தன. அவை தமது வாழ்க்கை யைக் கடலிலேயே தொடங்கின. அவற்றில் தாவர உயிர்கள் பச்சை நிறமுடையனவாயிருந்தன. ஞாயிற்றின் ஒளியி லிருந்து கரியமிலவாயுவைப் பிரித்துச் சர்க்கரை, மா என்னும் உணவை உண்டாக்குவதற்குப் பச்சை நிறம் அவற்றுக்குப் பயன்பட்டது. உணவை உட்கொள்வதால் அவற்றின் உடலில் உயிர்ச் சத்துத் திரண்டது. அச் சத்து அவற்றின் கண்ணறைகளில்(Cells) சேமித்து வைக்கப்பட்டன. அவை முளைபோல வளர்ந்தன. அவற்றின் உதவியைக்கொண்டு அச் சிற்றுயிர்கள் நீரில் சுறுசுறுப்போடு உலாவிக் கொண்டிருந்தன. மாரிகாலத்தில் நிலத்திலும் படிக்கட்டிலும் பாசிபோன்ற ஒரு வகைப் பச்சை நிறப்பொருளைக் காண்கின்றோம். அவை ஒரு கண்ணறை உடலமைப்புடைய தாவரங்களின் கூட்டங்களாகும். இவ்வகைச் சிறிய தாவரங்களிலிருந்தே இன்று காணப்படும் பெரிய நிழல் மரங்கள் முதல் புல், பூண்டு முதலிய எல்லாவகைத் தாவரங்களும் வளர்ச்சியடைந்தன. காற்று, நீர், உப்பு என்பவற்றிலிருந்து உயிர்ச் சத்தை(Organic Matter) உண்டாக்க மாட்டாதனவும், தம்மைப் போன்ற உயிர்களை உண்டு வாழ்வனவுமாகிய இன்னொருவகை அணு உயிர்கள் இருந்தன. இவ்வணு உயிர்களினின்றே இவ்வுலகிற் காணப்படும் ஊர்வன முதல் மனிதன் வரையிலுள்ள எல்லா உயிர்களும் தோன்றின. தாவரம், காற்று, நீர், உப்பு என்பவற்றிலிருந்து உணவை வாங்கும் ஆற்றல் உடையது. அது வாங்கும் உயிர்ச் சத்துள்ள பொருள்கள், சிறிய சிறிய கண்ணறைகளில்(Cells) அடைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கண்ணறையும் சுவர்களால் பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே அது நகர்ந்து உலாவ முடியாததாயிற்று. தாவரம் தனது தேவைக்கு அதிக உணவைச் சேமிக்கின்றது; சிறு அளவைச் செலவிடுகின்றது. அதனிடத்தே சேரும் கழிவுப் பொருளை வெளியே போக்கும் மார்க்கம் அதற்கு இல்லை. ஆகவே அது மந்த நிலை அடைந்துள்ளது. தாவரமல்லாத உயிர்களின் கண்ணறைகள் சுவர்களால் பிரிக்கப்படுவ தில்லை. ஆகவே, அவை அசைந்து உலாவக்கூடியனவாய் இருக்கின்றன. அவை சேமிப்பு இன்றி, வருவாய் அளவில் உயிர்ச்சத்தைச் செலவு செய்து வாழ்கின்றன. அவை உட்கொள்ளும் உணவு செரிக்கும்போது கரியமில வாயுவின் தொடர்பைப் பெறுகின்றது. அதனால் வெளியே கழிந்துபோவது உயிருள்ள நெருப்பின் சாம்பலாகும். இச் சாம்பல், தாவரங்களில் வெளியே கழிந்து விடாமல் உப்பாகத் தங்குகின்றது. இயங்கும் உயிர்கள் அதனை மலமாகக் கழிக்கின்றன. தாவரங்களைச் சூழ்ந்து பல உயிர்கள் வாழ்கின்றன. ஆனால் உயிர்களைச் சூழ்ந்து சில தாவரங்களே வளர்கின்றன. இவ்வாறு உயிர்களும் தாவரங்களும் பிரிந்து வாழத் தொடங்கிய காலம் முக்கியமானது. நாம் உட்கொள்ளும் பிராண வாயு, தாவரங்களின் இரசாயனசாலையாகிய இலைகளினின்றும் கிடைக்கின்றது. அவ்விலைகள், சூரிய ஒளியின் உதவியால் தமக்கு வேண்டிய உணவை ஆக்கிக்கொள்கின்றன. பூமியில் மேடுகளும் பள்ளங்களும் தோன்றிக் கண்டங்களும் கடல்களும் உண்டாயின. அப்போது நீரில் மிதந்து கொண்டு திரிந்த தாவரங்கள் கரையை அடைந்தன. அவை வெளிச்சத்தை விட்டு அகல விரும்பவில்லை. ஆகவே அவ்விடத்திலேயே தங்கின. தொடக்கத்தில் கடற்கரையில் உண்டான தாவரங்கள் கடற்சாதனையாகும். அணுவடிவான சிற்றுயிர்கள் கடற் பஞ்சாக வளர்ந்தன. சிற்றுயிர்கள் ஒரு கண்ணறை உடையனவாக விருந்தன. அவ் வுயிர்கள் இரண்டாகப் பிரிந்து பெருகும் இயல்பின. சொறிமீன்(Jelly fish) போன்ற ஓர் அறை உடலமைப்புள்ள உயிர்கள், பிரிந்து தனித்தனியாக வாழ் கின்றன. நல்ல தண்ணீரில் வாழும் ஹைடிரா(Hydra) என்னும் உயிர், கிளை விட்டுப் பெருகுகின்றது. உணவு கிடைப்பது அரிதாகும்போது கிளைகள் பிரிந்து தனித்தனியே வாழ்கின்றன. இது முட்டையிட்டுக் குஞ்சு பொரியாமலும் கருவுற்றுக் குட்டி ஈனாமலும் உயிர்கள் பெருகும் முறை. உயிர்களும் தாவரங்களும் இவ்வாறு பெருகுதல் இயல்பு. ஒரு மண் புழுவைத் துண்டுகளாக வெட்டிவிட்டால் அவை தனித்தனிப் புழுக்களாக வாழ்கின்றன. ஒரு தேனீ அல்லது பறவை இவ்வாறு பெருக மாட்டாது. உயிர்கள் கிளைவிட்டுப் பெருகுவதற்கு அடுத்தபடியாக, ஆண், பெண் என்னும் வேறுபாடாகும். இவ் வேறுபாட்டை அடைந்த உயிர்கள் முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பொரிக்கின்றன. இவற்றுக்கு அடுத்த படியாக குஞ்சுகளைக் கருப்பைக்குள் பொரித்துக் குட்டி களை ஈனும் உயிர்கள் தோன்றின. இவ்வகைப் படைப்பு களுள் மனிதப் படைப்பு முடிவானது. உயிர்த்தோற்ற வளர்ச்சி நூலார், உயிர்களின் தோற்ற வளர்ச்சிகளைக் குறித்துக் கூறியுள்ள தன் சுருக்கம் இதுவேயாகும். அவர்களின் கருத்துக்குப் பாறைகளில் படிந்து கிடக்கும் கற்படி உருவங்களும் சான்று அளிக்கின்றன. பாறை அடுக்குகளில் காணப்படும் கற்படி உருவங்கள் ஒரு பாறை அடுக்கில் காணப்பட்ட உயிர் வகைகள் அடுத்த பாறை அடுக்குகளிற் காணப்படவில்லை. உயிர்த்தோற்ற வளர்ச்சி நூலார் கூறுவது போலவே முதலில் நீரில் வாழும் உயிர்களும், பின் நீரிலும் நிலத்திலும் வாழும் உயிர்களும் தோன்றி வாழ்ந்தன. பின்பு அவற்றுட் சில தரையில் வாழும் உயிர்களாக மாறி வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஏற்ற மாற்றங்களை அடைந்துள்ளன. பூமி அடைந்திருந்த வெப்ப நிலைகளில் வாழக்கூடியன வாகவும், அந்நிலைமையில் கிடைக்கும் உணவை உண்டு வாழத் தக்கனவு மாகிய உயிர்கள் தோன்றியிருந்தன. பாறை அடுக்குகளில் படிந்து தோன்றும் உருவங்கள் முறையே சொறி மீன், கடற்சிலந்தி, கடல்தேள், மீன், நீரினும் நிலத்தினும் வாழ்வன, குட்டி யீனும் வெளவால் போன்ற பறவைகள், பற்கள் உள்ள பறவைகள், குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்குகள், குரங்குகள், கொரில்லா போன்ற மேலினக் குரங்குகள் என்பன. முதல் மூன்று பாறை அடுக்குகளிலும் மனிதனின் கற்படி உருவங்களோ மனித எலும்புகளோ காணப்படவில்லை. நாலாவது பாறை அடுக்கிலேயே மனிதனின் மண்டை ஓடுகளும் எலும்புகளும் காணப்படுகின்றன. இவ்வாறு படிப்படியே வளர்ச்சியடைந்த உயிர்கள் காணப்படுகின்றமையி னாலேயே, கீழ் இன உயிர்களே மேலின உயிர்களாக வாழ்க்கைப் போராட்டத்துக்கேற்பச் செய்யும் எத்தனங்களுக்கு ஏற்ப மாறியுள்ளன வென்று உயிர்த்தோற்ற வளர்ச்சி நூலார் கூறுகின்றனர். ஒரு உயிர் வேறொரு உயிராக வளரமாட்டாது என்றும், உயிர்கள் அறிவு வளர்ச்சிக்கேற்ப மேலான உடலை, அடுத்த அடுத்த பிறப்புகளில் அடைகின்றன என்றும் இந்திய, கிரேக்க தத்துவ நூலார் கூறுவர். ஒரு உயிர் இன்னொரு உயிராக மாற முடியுமோ என்னுங் கருத்து இன்னும் முடிவு பெறாமலே இருந்து வருகின்றது. மனிதனும் குரங்கும் இன்றைக்கு முன்பின் பத்து இலட்சம் ஆண்டு களின் முன்னே மனிதன் தோன்றினான். மேல் இனக் குரங்கின் உடல் அமைப்புக்கும், மனிதனின் உடல் அமைப்புக்கும் பெரிதும் ஒற்றுமை காணப்படு கின்றது. கொரில்லா என்னும் மனிதக் குரங்கு, ஓர் அளவில் மனிதனை ஒத்திருக்கின்றது. ஆனால் அதன் உறுப்புகளுக்கும் மனித உறுப்புகளுக்கும் வேறுபாடு உண்டு. மனிதக் குரங்கின் மண்டை சிறியது; உடல் பெரியது; கீழ் உறுப்புகள் குள்ள மானவை; மேல் உறுப்புகள் கீழ் உறுப்புகளை விட நீளமானவை. மனிதனின் மிகச் சிறிய மண்டை 63 கன அங்குலப் பருமன் உடையது; மனிதக் குரங்கின் மண்டை 34½ கன அங்குல அளவினதாகும். மனிதக் குரங்கின் மூளை இருபது அவுன்சுக்கு அதிகப்படுவதில்லை; மனிதனின் மூளை 32 அவுன்சுக்குக் குறைவதில்லை. குரங்கு, மனிதனை ஒத்திருந்தாலும் அது மனிதனைவிடப் பலவகைகளிற் குறைபாடுடையது. இவ்வகை ஆராய்ச்சி களால் குரங்கு, மனிதனுக்கு அடுத்த கீழ்ப்படியிலுள்ளது எனத் துணியப்படுகின்றது. மனிதனுக்கும் குரங்குக்கும் இடைப்பட்ட உயிர்கள் டார்வின் என்பார் உயிர் நூற் புலமையில் தலை சிறந்து விளங்கினார். அவர் உயிர்களையும் தாவரங்களை யும் பற்றிய உண்மைகள் பலவற்றை வெளியிட்டுள்ளார். அதற்கு முன் நாம் முற்கால உயிர்களைப் பற்றி யாதும் அறியாதவர்களாக விருந்தோம். இக்கால உயிர்த் தோற் றங்கள் எல்லாம் முற்கால உயிர்த் தோற்றங்களின் வளர்ச்சி என்றும் அவர் கருதியுள்ளார். குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட ஆறுவகை உயிர்களின் எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டன. அவ்வுயிர்களிற் சில நெருப்பைப் பயன்படுத்தின. ஆகலே அவை மக்கள் இனத்தைச் சேர்ந்தன என்று கருதப்பட்டன. மற்றைய உயிர்கள் ஒருவகைக் கைத்தொழி லும் புரியவில்லை; ஆகவே அவை கொரில்லா என்னும் மனிதக் குரங்கினும் மேற்பட்ட வாலில்லாக் குரங்குகள் என்று கொள்ளப்பட்டன. முற்கால மக்களின் வடிவம் பண்படுதல் முற்கால மனிதனின் உடலமைப்பு இக்கால மனித னின் உடலமைப்பை விடச் சிறிது வேறுபட்டது. முற்கால மனிதன் நீண்டகால வாழ்க்கையில் மேல்நோக்கி முயன்று வந்தான். அதனால் அவனுடைய உடலமைப்பு சிறிது சிறிதாகப் பண்பட்டது. அவ்வாறு பல படியான பண்பட்ட நிலையிலுள்ள மக்களின் எலும்புகள் கிடைத்துள்ளன. அவ்வெலும்பு களைத் துணைக்கொண்டு அவற்றுக்குரிய மக்களின் வடிவங்கள் களி மண்ணால் அமைக்கப்பட்டுள்ளன. சீனா தேசத்தில் பீக்கின் என்னும் ஓர் இடம் உள்ளது. அங்கே உள்ள மலைக்குகை ஒன்றில், மிகப் பழங்கால மனிதனின் மண்டை ஓடு ஒன்று கண்டு எடுக்கப்பட்டது. அம் மண்டை ஓட்டுக்குரிய மனிதன் பீக்கின் மனிதன் எனப்படுவான். அவன் சாவக மனிதனுக்கு முன் வாழ்ந்தவனாவன். பீக்கின் மனிதனின் மண்டை ஓடு கண்டு எடுக்கப்பட்ட குகையுள், கல் ஆயுதங்களும் அடுப்பும் கருகிய எலும்புகளும் காணப்பட்டன. ஆயுதங்கள் செய்தற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் அவ்விடங்களில் கிடைக்கக் கூடாதவை. ஆகவே அவை பிற இடங்களினின்றும் கொண்டுவரப்பட்டன வாதல் வேண்டும். பீக்கின் மனிதன் நெருப்பின் பயனை நன்கு அறிந் திருந்தான். இவன் காலம் 1,000,000 ஆண்டு அள வில் என்று கருதப்படுகின்றது. பீக்கின் மனிதனுக்கு அடுத்தபடியில் வாழ்ந்த மனிதனின் எலும்பு, சாவகத்(Java) தீவில் கிடைத்துள்ளது. அம் மனிதனின் தோற்றம் குரங்கின் சாயலை ஓரளவு ஒத்துள்ளது. மக்கள் நூலார், அம் மனிதனுக்கு நிமிர்ந்து நிற்கும் வாலில்லாக் குரங்கு மனிதன் எனப் பெயர் இட்டுள்ளார்கள். அம் மனிதன் சாவக மனிதன்(Java man) எனப்படுவான். அவன் ஐந்து இலட்சம் ஆண்டுகளின் முன் வாழ்ந்தான். இங்கிலாந்திலே பில்ட்டௌன் (Pilt down) என்னும் இடம் ஒன்று உண்டு. இங்கு முற்கால மனிதனின் மண்டை ஓடு ஒன்று கண்டு எடுக்கப் பட்டது. இம் மனிதனுக்குப் *பில்ட்டௌன் மனிதன் என்று பெயர். இம் மனிதன் சாவக மனிதனுக்கு பிற்பட்ட காலத்தவனாவன். செர்மனியிலுள்ள ஹெய்டில்பர்க்(Heidelberg) என் னும் இடத்தில் வேறொரு முற்கால மனிதனின் மண்டை ஓடு கண்டு எடுக்கப்பட்டது. இம் மண்டையோட்டுக் குரியவன் ஹெய்டில்பர்க் மனிதன் எனப்படுவான். இவன் பில்bட்டௌன் மனிதனுக்கு பிற்பட்ட காலத்தவனாவான் இம் மனிதனின் காலம் ஒரு இலட்சம் ஆண்டு வரையில் ஆகலாம். இம் மனிதனுக்கும் பிற்பட்டவன் நிண்டேர்தல் மனிதன். இவனுடைய மண்டையோடு செர்மனியிலுள்ள நிண்டேர்தல் என்னுமிடத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வகை மனித எலும்புகள் பெல்சியம், பிரான்ஸ், ஸ்பெயின், சிபிரால்டர், இங்கிலீஷ் கால்வாயிலுள்ள தீவுகள், இத்தாலி முதலிய இடங்களிலும், பால்கனின் பல பகுதி களிலும் காணப்பட்டன. எலும்புகளோடு மக்கள் பயன்படுத்திய கல்லாயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. நிண்டேர்தல் மனிதனின் காலம் 70,000 ஆண்டுகள் வரையில். நிண்டேர்தல் மனிதனுக்குப் பிற்பட்டவன் குரோமக் நன்(Cro-magnan) மனிதன். இவன் இனத்தைச் சேர்ந்த மக்கள் ஆசியாவிலோ ஆப்பிரிக்காவிலோ தோன்றி, ஐரோப்பாவில் பரவி யிருக்கலாம். இவ்வகை மனித எலும்புகள் பிரான்சிலுள்ள குரோமக்நன் என்னும் குகையுள் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு காலத்துக்குக் காலம் வாழ்ந்த மக்களின் எலும்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட வடிவங்களை முறையே வைத்து நோக்கும் போது மக்கள் சிறிது சிறிதாக உருவிற் பண்பட்டு வந்திருக்கிறார்கள் எனத்தோன்றும். மறைந்துபோன தொடர்புகள் (Some missing links) இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளின் முன் பழைய மனிதனின் மண்டை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அம் மண்டை ஓடு, வாலில்லாக் குரங்கினின்று மனிதன் தோன்றினாhன் என்பதை வலியுறுத்தும் எனக் கருதி, அம் மண்டை ஓட்டுக்கு மறைந்து போன தொடர்பு என்று டார்வினின் கொள்கையைப் பின்பற்றுவோர் பெயரிட்டனர். அக் காலம் முதல் ஆறு வெவ்வேறு வகையான மனித மண்டை ஓடுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அம் மண்டை ஓடுகளுக்குரிய உயிர்கள் சில, குரங்குகளை விட மனிதச் சாயல் மிகுந்தனவாகவும், சில மனிதனைவிடக் குரங்கின் வடிவம் உடையனவாகவும் காணப்பட்டன. அவை குரங்கு அல்லது மனிதனைச் சேர்ந்தன என்பதை அங்கநூல்(Anatomy) விளக்கும். அவை எதையாவது உண்டாக்க அறிந்திருந்தால் அவை நாகரிகப்படியில் ஏற ஆரம்பித்திருந்தன எனக் கூறலாம். முன் கூறிய மண்டை ஓடுகளுக் குரியோர், உடலமைப்பில் குரங்குகள் அலலராயினும் நடத்தையில் குரங்கு களாக இருக்கலாம். எலும்புகளை ஆராய்வதைவிட ஆயுதங்களை ஆராய் வதால் அவர்களைப் பற்றி அதிகம் அறிதல் கூடும். அவர்கள் குகைகளில் ஓவியங்கள் வரையவும், எலும்புகளில் உருவங்களைச் செதுக்கவும் அறிவ தன் முன் நீண்டகாலம் கற்களை உடைத்து ஆயுதங்கள் செய்தனர். எல்லாச் சாதாரண மீன்களுக்கும் இரண்டு அலகுகள் உண்டு. சில மீன்களுக்கு அலகுகள் இல்லை; ஆனால் புழுக்களுக்கு இருப்பது போன்ற வட்டமான வாய் உண்டு. இம் மீன்களுக்குச் சிறகுகளும் இல்லை. வேல்சிலே உள்ள ‘சிலூறியன்’(Silurian) பாறை அடுக்குகளில் மீன்களின் என்புக் கூடுகள் காணப்படுகின்றன. இம் மீன்களுக்குக் கீழ் அலகும் சிறிய சிறகு களும் காணப்படுகின்றன. இவை, ஆதிகால மீன்களைபும் இக்கால மீன்களையும் இணைப்பனவாக இருக்கின்றன. கற்படி உருவங்களை ஆராய்வதால் இன்னும் ஒரு வெளியை நிரப்பலாம். மீனுக்கும், தரையிலும் நிலத்திலும் வாழும் உயிருக்கும் இடையில் இன்னொரு வகை உயிர் வாழ்ந்தது. மீன்கள் நீருக்கு வெளியே வந்து தம் சிறகுகளைக் கால்களாக மாற்றின என்பதில் ஐயங்கொள்வோர், இலண்டன் நூதன உயிர்க்காட்சிச் சாலையிலுள்ள சேற்றிலே பாயும்(Mud skipper) மீனைப் பார்க்கலாம். அவை தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தரையில் போக்குகின்றன. அவற்றின் முன் செட்டைகள் முழங்கை போன்று வளர்ச்சியடைந்துள்ளன. அவற்றின் உதவியால் அவை பாய்கின்றன. 25 கோடி ஆண்டுகளின் முன்னே நீரில் மீன்கள் தோன்றி வாழ்ந்தன. மீன்களின் செட்டைகளிலிருந்து நம் முன்னோரின் உறுப்புகள் வளர்ச்சி அடைந்தன என்றும் தலைக்குக் கீழே இருந்த மூக்கு மேலே நாளடைவில் வந்ததென் றும், தண்ணீரில் அதிக காலத்தைப் போக்கும் முதலை தவளை போன்ற வற்றுக்கு அவ்வாறு அமைதல் அவசியம் என்றும் ஆராய்ந்து காட்டமுடி யும். உயிர்த்தோற்ற வளர்ச்சிக்கொள்கை உண்மையாயினும் இத் தொடர்புகள், டார்வின் காலத்தில் அறியப்படவில்லை. ஆப்பிரிக்கா தேசப் பாறை அடுக்குகளில் பொன், வயிரம் முதலியன அல்லாமல் நூற்றுக் கணக்கான குட்டி யீனும் விலங்குகளின் எலும்பு களும் காணப்படுகின்றன. இவ் விலங்குகள் ஊர்வன வையும் குட்டி யீனும் உயிர்களையும் தொடுப்பன வாகக் காணப்படுகின்றன. சில, பல்லிகளை அல்லது முதலைகளைப்போல இருக்கின்றன. ஆனால் அவற்றின் உடல் நிலத்துக்கு மேல் உயர்ந்து நின்றது. அவற்றுக்கு உணவை அரைக்கும் தாடைப் பற்களும் வேட்டைப் பற்களும் காணப்பட்டன, ஆனால் ஊர்வனவற்றுக்கு எல்லாம் ஒரே வகையான பற்கள் உண்டு. சில உயிர்களின் பழமையை அவ்வினங்களின் பழைய எலும்பு களைக் கொண்டு ஆராய்ந்து அறிதல் கூடும். இவ்வழியில் பெரிய இடை வெளிகள் இருக்கின்றன. ஊர்வனவற்றிலிருந்து பறவைகள் தோன்றின என்பதில் சந்தேகமின்று. மிகப் பழைய பறவைகள், எலும்புடைய வாலும் செட்டைகளில் நகமும் பற்களுமுடையனவாகக் காணப்பட்டன. இவை எப்படி ஊர்வனவற்றிலிருந்து தோன்றின என்று தெரியவில்லை. டார்வினும் அவர் கொள்கையினரும் நில நூலாரின் ஆராய்ச்சி நிறைவடையவில்லை எனக் கூறினர். உலகில் வாழ்ந்த இலட்சக்கணக்கான உயிர் இனங்களில் சில இன்று நிலைபெறுகின்றன. மக்கட் குலங்கள்(Human races) இவ்வாறு தோன்றிப் பெருகிய மக்களுக்கு வேண்டியன, பசி தாகம் என்பவற்றைப் போக்கும் உணவும் நீருமாகவே இருந்தன. இவை இரண்டையும் தேடி அலைந்து திரிந்த மக்கள் உலகின் பல பாகங்களில் தங்கிப் பெருகினார்கள். உலகில் எல்லாப் பாகங்களிலும் வெப்பநிலை ஒருவாறாக இல்லை. பூமியின் நடுக் கோட்டினின்றும் வடக்கு நோக்கி அல்லது தெற்கு நோக்கிச் சென்றால் படிப்படியே வெப்பம் குறைந்து குளிர் மிகும். நடுக் கோட்டை அடுத்த நாடுகளில் வாழ்ந்த மக்களின் நிறம் கறுப்பு அல்லது மங்கிய கறுப்பு நிறமாக இருந்தது. நடுக்கோட்டுக்கு வடக்கிலும் தெற்கிலும் வாழ்ந்த மக்களின் நிறம் படிப்படியே கருமை குறைந்து வெண்மை உடையதாக இருந்தது. இவ்வாறு நிறம் மாறிய மக்கள் கறுப்பு, வெள்ளை, மஞ்கள் என்னும் நிறங்கள் பற்றி வெவ்வேறு குலங்களாக அறியப்பட்டார்கள். செய்யும் தொழில், உண்ணும் உணவு, உடுக்கும் உடை போன்றவற்றால் மக்களின் உடல் வளர்ச்சி, உறுப்பு வளர்ச்சிகளிலும் சில மாறுபாடுகள் உண்டாயின. உடல் நிறத்தோடு இவ் வேறுபாடுகளும், குணங்களைப் பிரித்து அறிவதற்குப் பயன்படுகின்றன. இவ்வாறு உலகிலே நீகிரோவர், காகேசியர், மங்கோலியர் எனக் கூறப்படும் குலத்தினர் தோன்றினர். நிறங்கள், வெப்ப நிலைகளுக் கேற்பப் பாதுகாப்பளிப்பன என்று சொல்லப்படுகின்றது. ஆப்பிரிக்க கறுப்பு மக்கள் வாழும் நாடுகளில் தங்கும் வெள்ளையர், கறுப்பு மக்களைப் போல அங்குத் தோன்றும் நோய்களுக்கு எதிர்த்து நிற்க முடிவதில்லை. கறுப்பு மக்கள் அவற்றை எதிர்த்து நிற்கும் ஆற்றலுடையவர்களாக இருக்கின்றனர். மனிதனின் ஆதிகால வாழ்க்கை தொடக்கத்தில் மனிதன், விலங்குகளைப் போலவே வாழ்க்கையை ஆரம்பித்தான். பசி உண்டானபோது காட்டில் உள்ள காய்கனிகளைப் பறித்து உண்டான்; தாகம் உண்டானபோது சுனை நீரைக் குடித்தான். மனிதனுடைய பற்களும் குடலும் தாவர உணவை உட்கொண்டு வாழ்வதற்கேற்ற அமைப் புடையன. ஆகவே அவன் அவ்வகை உணவுகள் கிடைக்கக்கூடிய காடு களிலேயே வாழ்ந்து வந்தான். பலவகை ஆபத்துகள் அவனைச் சூழ்ந் திருந்தன. பலவகை விலங்குகள் காடுகளில் திரிந்தன. அவைகள் கொன்று தின்று விடாதபடி அவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியிருந் தது. சில சமயங்களில் தற்காப்பின் பொருட்டு அவன் அவற்றை எதிர்த்துப் போராட வேண்டியும் இருந்தது. அவனிடத்தில் ஆயுதங்கள் இல்லை. அவன், அடி பருத்து நுனி ஒடுங்கிய மரக்கிளைகளை ஒடித்துத் தண்டாயுதங் களாகப் பயன்படுத்த அறிந்தான். கால் அடியிற் கிடந்த கற்களையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தினான். காடுகளில் பருவ காலங்களில் மட்டும் காய் கனிகள் கிடைக்கும். சில காலங்களில் அவை கிடைப்பதில்லை. அதனால் அவன், அக்காலங்களில் உணவு கிடையாமல் பசி பட்டினிகளால் வருந்தினான். அக்காலங்களில் அவன் தற்காப்பின் பொருட்டுக் கொன்ற விலங்குகளின் ஊனை உண்டு பசியைப் போக்கினான். இவ்வாறு அவன் தாவர உணவுகளோடு ஊன் வகைகளையும் உண்ணும் பழக்கம் பெற்றான். அவன், வளையக்கூடிய காட்டுத்தடிகளை வளைத்துக் கட்டி, வில்லும் செய்தான். அதில் கூரிய முட்களை வைத்து எய்தான். வில் அம்புகளின் உதவியால் அவன் தூரத்தே நிற்கும் விலங்குகளை வேட்டை ஆடினான். வேட்டை ஆடிக் கொன்ற விலங்குகளின் தோலை உரிக்கக்கூரிய கற்களைக் கத்தியாகவும் பயன்படுத்த அறிந்தான்; காட்டு விலங்குகளுடன் எதிர்த்துப் போராடும்போது தற்காப்பாக இருக்குமாறு அவன் விலங்கின் தோலை மார்பில் போர்த்துக் கட்டிக் கொண்டான். அவன் வெய்யிற் காலங்களில் மர நிழல்களில் தங்கினான். இராக்காலங்களில் மர நிழல்களில் நித்திரை கொள்வது ஆபத்தாக இருந்தது. கொடிய விலங்குகள் அவனைக் கொன்று தின்னக் காத்துக் கொண்டிருந்தன. அதனால் அவன், மரப் பொந்துகளிலும் மலைக்குகைகளிலும் படுத்துத் தூங்கினான். மரங்கள் மீது பரண்கள் கட்டி அவற்றிலும் தங்கினான். இவ்வாறு ஆதிகால மனிதனின் வாழ்க்கை இருந்தது. மனிதன் நெருப்பை உண்டாக்க அறிதல் மனிதன் தொடக்கத்தில் நெருப்பு உண்டாக்க அறிந்திருக்கவில்லை. அதனால் அவன், உணவைப் பச்சையாகவே உண்டு வந்தான். அவன் காடுகளில் தீ மூண்டு எரிவதைக் கண்டான். ஒரு மரத்தோடு ஒரு மரம் உராய்வதால் தீ உண்டாகின்றது என்பதை அவன் அறிந்தான். அவன் இரு மரத்துண்டுகளைத் தேய்த்துத் தீ மூட்ட அறிந்து கொண்டான். நெருப்பு அவனுக்குப் பலவகையில் பயன்பட்டது. நெருப்பு எரிவதைக் கண்ட விலங்குகள் பயந்து ஓடின. ஆகவே அவன், தான் தங்கும் குகைகளின் வாயிலில் இராக்காலத்தில் தீ மூட்டி எரித்தான். அதனால் அவனுக்கு இராக் காலங்களில் விலங்குகளால் ஆபத்து நேரும் என்னும் அச்சம் நீங்கிற்று. அவன் நெருப்பில் தடிகளின் முனையை எரித்துப் பாறைகளில் தேய்த்து மர ஈட்டிகளையும் அம்புகளையும் செய்தான். நெருப்பிலே வெந்த உணவுகள் சுவை தருவனவாக இருந்தன. ஆகவே அவன் , உணவை நெருப்பில் வேக வைத்து உண்ணத் தொடங்கினான். உணவை இலையில் பொதிந்து மண்ணால் மூடினான். அதன் மீது தீ மூட்டி எரித்தான். இவ்வாறு அவன் உணவைச் சமைக்கலானான். அவன் குழி தோண்டினான். குழியின் மீது நீளமான கற்களைப் பரப்பி வைத்தான். இவற்றின் மீது உணவை வைத்தான். கீழே தீ மூட்டி எரித்தான். இவ்வாறும் அவன் சமையல் செய்தான். இம் முறையிலிருந்தே அடுப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மனிதன் இவ்வாறு சிறிது சிறிதாக நெருப்பின் பயனை அறிந்து கொண்டான். அவன், உண்டு எஞ்சிய இறைச்சியையும் எலும்பையும் எறிந்தான். அவற்றைக் காட்டில் வாழும் ஓநாய்கள் தின்றன. அவன் அவ்வோநாய்களின் குட்டிகளைப் பிடித்து வளர்த்தான். அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவையும் உடன் சென்றன. அவை, வேட்டை ஆட அவனுக்கு உதவியாக இருந்தன. பழைய கற்காலம் ஆதிகால மனிதன் உலோகங்களைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அவன் முரடான கற்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தினான். அவன் பயன்படுத்தியன கைக்கோடாரி, உளி போன்றன. இவை முரட்டுக் கற்களால் செய்யப்பட்டவை. ஒரு கல்லை வேறு ஒரு கல்லால் அடித்து உடைத்து அவ்வாயுதங்கள் செய்யப்பட்டன. அவன் எலும்பாலும் சில ஆயுதங் களைச் செய்தான். எலும்பினால் செய்த ஊசிகளைக் கொண்டு தோல்களைப் பொருத்தித் தைத்தான். மனிதன் முரடான கற்களால் ஆயுதங்களைச் செய்து பயன் படுத்திய காலம் ‘பழங்கற்காலம்’ எனப் படும். காலம் செல்லச் செல்ல அவன் படிப்படியே அழுத்தமான ஆயுதங் களைச் செய்யப் பழகிக்கொண்டான். அவ்வாறு படிப்படியே அழுத்தமுள்ள கல்லாயுதங்கள் உலகின் பல பாகங் களில் கண்டு எடுக்கப்பட்டன. இப் படிப்படியான கல்லாயுதங்கள் செய்து பயன்படுத்தப்பட்ட காலங்கள் பழைய கற்காலத்தின் உட்பிரிவுகளாகும். பழைய கற்காலத்தில் மக்கள் பெரும் பாலும் மலைக்குகைகளில் வாழ்ந் தார்கள். குகைகளில் பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களும், அடுப்புகளும், எலும்புகளும் காணப்பட்டன. அக்காலத்தில், இன்று அடியோடு அழிந்துபோன சில விலங்குகளும் வாழ்ந்தன. அவை சடை யானை, சடைக் காண்டாமிருகம் என்பன. பழைய கற்கால மக்கள், தாம் வாழ்ந்த குகைச் சுவர்களில் நிற மைகளால் அழகிய ஓவியங்கள் வரைந் திருக்கின்றனர். அவர்கள் வேட்டையாடச் செல்வதன் முன் மக்கள் வேட்டை யாடி விலங்குகளைக் கொல்லும் காட்சி அளிக்கும் ஓவியங்களைத் தீட்டினால், வேட்டையில் விலங்குகள் கிடைக்கும் என நம்பினார்கள். இவ் வோவியங்கள் மந்திர வித்தையாகப் பயன்பட்டன. பில்லி, சூனியம் என்னும் மந்திர வித்தையும் இக் கருத்தை அடிப்படையாகக் கொண் டனவே. ஒருவன் வேறு ஒருவனுக்குத் தீமை விளைவிக்க விரும்பினால் அவன் பகைவனைப் போன்ற ஒரு பாவை செய்கிறான். பின் அவனுடைய பெயரை அதில் எழுதுகிறான். அவன் அப் பாவையின் கை முறிவதாகச் சில நாட்கள் நினைக்கின்றான்; பின் அப் பாவையின் கையை ஒடித்துவிடு கிறான். அப்பொழுது பகைவனின் கை முறிந்துவிடும் என மந்திர வித்தைக் காரன் நம்பினான். இவ்வாறு பில்லி சூனியத்தில் பயன்படுத்திய பாவைகள் பல, கொழும்பு நூதன பொருட் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளன. புதிய கற்காலம் முரடான கல்லாயுதங்களைச் செய்து பயன்படுத்திய மக்கள், ஆயுதங்களைச் செய்து பாறைகளில் உரைஞ்சி அழுத்தம் செய்யப் பழகிக் கொண்டனர். ஆயுதம் எவ்வளவு நன்றாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கு உணவும் எளிதிற் கிடைக்கின்றது. அவர்கள், அம்புகளுக்குக் கல்லினாற் செய்த கூரிய அம்புத் தலைகளைப் பயன்படுத்தினார்கள்; மீன் பிடிக்கவும், களிமண்ணில் செய்து வெய்யிலில் காயவைத்த மட்பாண்டங்களைப் பயன்படுத்தவும் அறிந்துகொண்டார்கள். அக்காலத்தில் அவர்கள் விலங்கு களைப் பழக்கி வளர்த்தார்கள். நீர் நிலைகளில் மரத்தூண்களை இறுக்கி, அவற்றின்மீது சிறு குடிசைகள் கட்டி வாழ்ந்தார்கள்; நிலத்தைத் தோண்டிப் பெரிய குகை செய்து அதன் வாயிலைத் தடிகளால் மூடி அதனுள்ளும் வாழ்ந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் முரடான துணிகள் நெய்யவும், தானியங்களைச் சிறிது விளைவிக்கவும் அறிந்திருந்தார்கள். உலோக காலம் பின்னே உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலிலே கண்டுபிடிக்கப் பட்ட உலோகம் பொன். அது மிருதுவாகவும், அதிகம் கிடைக்கக் கூடாத தாகவுமிருந்தது. ஆகவே, அதனால் ஆயுதங்கள் செய்யப்படவில்லை. பொன்னுக்குப் பிறகு செம்பு கண்டுபிடிக்கப்பட்டது. செம்பு அதிகம் கிடைக்கவில்லை. மக்கள் அதனை உலையில் இட்டு உருக்கி அடித்து, பல வகையான ஆயுதங்கள் செய்தார்கள். அவ் வாயுதங்கள் கல்லினால் செய்யப் பட்ட ஆயுதங்களின் வடிவாகவே இருந்தன. அதன் பிறகு செம்பினால் போர்க்கருவிகளும் சமையற் பாத்திரங்களும் பிற பொருள்களும் செய்யப் பட்டன. மக்கள், செம்பில் வேலை செய்யும் திறமை அடைந்தார்கள். செம்பு ஆயுதங்கள் இலகுவில் வளையக்கூடியனவாக இருந்தன. பின்னே தகரம் கண்டு பிடிக்கப் பட்டது. தகரத்தையும் செம்பையும் கலந்தபோது உறுதியான ஓர் உலோகம் உண்டாயிற்று. அது வெண்கலம் எனப்பட்டது. வெண் கலத்தினால் உறுதியான ஆயுதங்கள் செய்யப்பட்டன. வெண்கல ஆயுதங் கள் கற்களைச் செதுக்கவும் பயன்பட்டன. எகிப்திய பிரமிட் சமாதிகள் கட்டப்பட்ட காலத்தில் வெண்கல ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டன. வெண்கலக் கோடரிகள் மரங்களை எளிதில் தறித்தன. வெண்கல வாள் களால் மரங்கள் பலகைகளாக அரியப்பட்டன. அப்பொழுது தச்சு வேலை யும் வளர்ச்சி அடைந்தது. மக்கள் பெரிய கட்டிங்களைக் கல்லினாலும் மரத்தினாலும் எடுத்தார்கள். பிறகு இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. மேற்குத் தேசங்களில் இரும்புக்கு இட்டு வழங்கிய பெயர் ‘வானுலகத்தின் கரும் பொன்’ என்னும் பொருளுடையதாக இருந்தது. ஆகவே முதலில் இரும்பு, விண் வீழ்க் கொள்ளிகளினின்றும் கிடைத்தது எனத் தெரிகிறது. பின்னர் சுரங்கங்களி னின்றும் இரும்பு அரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டது இரும்பு எல்லா உலோகங்களையும்விட உறுதியானது. இதன் உபயோகத்தின் பின் நாகரிகம் வளர்ச்சியடைந்து இன்றைய நிலையை அடைந்தது. மனிதனின் மூன்று நாகரிகப் படிகள் மக்களின் நாகரிக வளர்ச்சி மூன்று வகைப்படும். அவை, வேட்டையாடுதல், ஆடு மாடுகளைப் பழக்கி வளர்த்தல், பயிரிடுதல் என்பன. தொடக்கத்தில் எல்லா மக்களும் வேட்டையாடுதலால் மட்டும் தமது உணவைப் பெற்றனர். ஓர் இடத்திலேயே வேட்டையாடு வதற்கு விலங்குகள் காணப்பட மாட்டா. ஆகவே அவர்கள் விலங்குகளைத் தேடிக் காடுகளில் அலைந்து திரிந்தனர். மக்கள் வேடராய் அலைந்து திரிந்த காலத்தில், ஒரே இடத்தில் தங்கும் வாய்ப்புப் பெறவில்லை. ஆகவே அவர், குடிசைகள் கட்டி நிலையாக வாழவும் முடியவில்லை. தாம் சென்ற இடங்களில் மலைக் குகைகளிலும், மர நிழல்களிலும், தங்கினர். மனிதன் வேடனாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியபோது வில், அம்பு என்ப வற்றின் பயனையும், அவற்றைப் பயன்படுத்தவும் நன்கு அறிந்திருந்தான். கத்தி, உளி போன்ற சில முரடான கல்லாயுதங்களையும் செய்து பயன்படுத்த அறிந்திருந்தான். எலும்புகளினால் ஊசிகள் செய்து அதன் உதவியால் விலங்குகளின் தோல்களைப் பொருத்தித் தைத்து அவற்றை உடையாகவும், போர்வையாகவும், படுக்கையாகவும் பயன்படுத்தினான். அக்காலத்தில் அவன் பழக்கி வளர்த்த விலங்கு, நாயே. மிக முற்காலம் முதல், நாய், மனிதனின் நண்பனாக இருந்து வருகின்றது. இடையர் வேட்டையாடும் மக்களுக்கு ஒழுங்காக உணவு கிடைப்பதில்லை. சில நாட்களில் அவர்களுக்கு விலங்குகள் எவையும் கிட்டாது போவது முண்டு. அதனால் அவர்கள் பசி, பட்டினியால் வருந்தினார்கள்; வேட்டை ஆடும்போது அவர்களுக்கு அகப்படக்கூடியதாக இருந்த ஆட்டுக்குட்டி களையும் பசுக்கன்றுகளையும் பிடித்து வளர்த்தார்கள். அவை வளர்ந்து குட்டிகளையும் கன்றுகளையும் ஈன்றபோது பால் கொடுத்தன. அவற்றின் பால் உண்பதற்குச் சுவை உடையதாகவும், பசியைப் போக்குவதாகவும் இருந்தது. ஆகவே அவர்கள் வேட்டையாடுவதால் உணவு கிடையாத காலங்களில் பாலை உண்டு பசியைப் போக்கினார்கள். சில சமயங்களில் அவ் விலங்குகளில் ஒன்றைக் கொன்று அதன் இறைச்சியை உண்டார்கள். இப்பொழுது அவர்களுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. ஆடு மாடுகள் பெருகின. அவர்கள் அவற்றைப் பசிய புல் வளர்ந்திருக்கும் இடங்களுக்குக் கொண்டு சென்று மேய்த்தார்கள். மந்தைகள், புல்லுள்ள இடங்களில் சிலகாலம் தங்கி மேய்ந்தன. அப்பொழுது மந்தைகளை மேய்ப்போர், தடிகளை நட்டு, பொருத்தித் தைத்த விலங்கின் தோல்களைப் படங்குகளாகக் கட்டிய கூடார நிழலில் தங்கினார்கள். ஓர் இடத்தில் உள்ள புல்லை மந்தைகள் மேய்ந்தபின், அவர்கள் அவற்றை வேறு ஒரு புல்வெளிக்குக் கொண்டு சென்றார்கள்; செல்லும்போது தமது கூடாரங்களையும் வீட்டி லுள்ள பால் கறக்கும் கலையம், சட்டி, பானை முதலிய வீட்டுத் தட்டுமுட்டுக் களையும் உடன் கொண்டு போனார்கள். மந்தைகளை மேய்க்கும் மக்கள் ஆடுகளினின்றும் கிடைத்த கம்பளியிலிருந்து ஆடை செய்தார்கள். இராக் காலங்களில் வானத்தில் விளங்கும் விண்மீன்களின் செலவை நோக்கினார்கள். இக்காலத்திலேயே மக்களுக்கு வான நூல் ஆராய்ச்சி தோன்றியிருந்தது. உழவன் இவ்வாறு அலைந்து திரிந்த மக்கள், ஆற்றோரங்களை அடைந் தார்கள். ஆற்றோரங்கள் செழுமையாக இருந்தன. அங்குத் தங்கிய மக்கள், சில புற்களின் விதைகள், உண்பதற்கு நல்லனவாகவும் பசியைப் போக்கு வனவாகவும் இருக்கக் கண்டார்கள். அவர்கள், அவ் விதைகள் சிலவற்றைத் தாம் தங்கும் இடங்களின் அருகே விதைத்தார்கள். அவை வளர்ந்து கதிர் களை நீட்டின. அவற்றினின்றும் அதிக விதைகள் கிடைத்தன. அவ்வாறு சேர்க்கப்பட்ட விதைகள், அவர்களுக்குப் பல நாட்களுக்கு போதுமானதாக இருந்தன. அவர்கள், ஆடு மாடுகளுடன் அலைந்து திரிவதைக் காட்டிலும், தானியங்களை விதைத்து, வேண்டிய உணவைச் சேகரிக்கப் பழகிக்கொண் டார்கள். அவர்கள் ஓரிடத்தில் தங்கி இருந்தபடியால் தானியங்களை விதைப்பதற்கேற்ற பருவ காலங்களையும் அறிந்து கொண்டார்கள். எவனிடத்தில் அதிக உணவு இருக்கின்றதோ, அவனே செல்வன் ஆகின் றான். பயிரிடும் மக்களிடத்தில் அதிக செல்வம் இருந்தது. உணவின் பொருட்டுப் பலர், அவர்களிடத்தில் வந்தார்கள். அவர்களுக்கு இப்பொழுது தேவைகள் அதிகரித்தன. அவர்கள் தானியங்களைச் சேகரித்து வைப்பதற்கு வீடு வேண்டியிருந்தது. தானியம் பயிரிடுவதற்குரிய மண்வெட்டி, பாரை, கத்தி, ஏர், நுகம் முதலிய கருவிகள் வேண்டியிருந்தன. தானியங்களின் உமியைப் போக்குவதற்கு உரல், உலக்கை முதலியன வேண்டியிருந்தன. உணவைச் சமைப்பதற்கு மட்பாண்டங்கள் வேண்டியிருந்தன. தானியம் விளைவிக்கும் காலம் போக, அவர்களுக்கு அதிக வேலை இருக்கவில்லை. அக்காலங்களில் அவர்கள் மகிழ்ச்சியாகப் பொழுது போக்கவும், நல்ல ஆடை உடுக்கவும், ஆடல் பாடல்களைக் காணவும் கேட்கவும் விரும் பினார்கள். உணவின் பொருட்டு, மக்கள் பலர் அவர்களைச் சூழ்ந்து தங்கி னார்கள். அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து உதவினார்கள். அவர்கள், இவர்கள் செய்யும் தொழிலுக்குக் கூலியாகத் தானியத்தைக் கொடுத்தார்கள். தொலைவிடங்களிலிருந்து பலர் வந்தார்கள். அவர்கள் தம்மிடத்திலுள்ள அரிய பண்டங்களைக் கொண்டுவந்தார்கள். அவற்றைக் கொடுத்துத் தமக்கு வேண்டிய தானியங்களைப் பெற்றார்கள். இவ்வாறு ஆற்றோரங்கள், மக்கள் குடியேறி வாழும் இடங்களாயின. எங்குச் செல்வம் இருக்கின்றதோ, அதனை மக்கள் கவர விரும்புவார்கள். செல்வத்தைக் கவர அயல் இடங்களினின்றும் மக்கள் திரண்டு வந்தார்கள். அவ் வாறு வரும் மக்கள், எளிதில் மக்கள் வாழ் இடங்களை அணுக முடியாத படி குடியிருப்பைச் சூழ்ந்து பெரிய மதில் கட்டப்பட்டது. அதன் வாயிலை வீரர் நின்று காவல் புரிந்தனர். போர்க் காலங்களில் வீரமுடைய ஒருவனே படையை நடத்த வேண்டும். ஆகவே வீரமுள்ள ஒருவன் தலைவனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். போர்க்காலங்களில், படைத்தலைவன் சொல்லே சட்டம். அவனுக்கு எல்லோரும் பணிந்து நடத்தல் வேண்டும். இவ்வாறு அவன் அதிகாரி, சர்வாதிகாரி ஆனான். அவன் நாட்டுக்குத் தலைவனு மானான். அவன், தனது கால்வழியிலுள்ளவர்களே தொடர்ந்து அரசராக வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவனுக்குப் பின், அவன் புதல்வன் அரசனானான். இவ்வாறு மனிதன், கீழ் நிலையிலிருந்து படிப் படியே உயர்நிலையை அடையலானான். உலகில் பெரிய ஆற்றோரங்களி லேயே, பெரிய நாகரிகம் தோன்றி வளர்ச்சி அடைந்தது. சமூகம் மக்கள், கூட்டமாக வாழத் தொடங்கிய பின்பே நாகரிகம் தோன்றி வளர்ச்சி அடைவதாயிற்று. பெரும் பாலும் தற்காப்பின் பொருட்டே மக்கள் கூட்டமாக வாழத் தொடங்கினார்கள். விலங்குகளும் பறவைகளும் கூட்ட மாக வாழ்தலையும் அவை மேயும்போது எதிரிகளின் வருகையை அறிவதற்கு தம்முள் ஒன்றைக் காவல் காத்து நிற்க நிறுத்துதலையும் போன்ற செயல்களை உயிர் நூலார் கூறுகின்றனர். மனிதனைச் சூழ்ந்து பகைகள் இருந்தன. கொடிய விலங்குகள் எந்த நேரத்திலும் அவனைக் கொன்று விடக் கூடியனவாக இருந்தன. மனிதன், சிங்கம் புலி போன்ற, மூர்க்க குணமும் போர் செய்யும் விருப்பமுடையவனாகவும் இருந்தான். ஆகவே மனிதரில் சிலர், எதிர்ப்பட்ட தம்மை ஒத்த சிலரை எதிர்த்து அவர்களைக் கொன்றுவிடவும் கூடும். இன்றும் மக்கள், போர்க் குணம் உள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். நியூகினியர் முதலிய பிற்போக்கான மக்கள், தம்மைப்போன்ற மக்களைத் தாக்கி அவர்கள் தலை களை வெட்டி வேட்டையாடுகிறார்கள் என்னும் செய்தியைச் சரித்திரங் களில் படிக்கின்றோம். இவை போன்ற ஆபத்துக்களினின்றும் தம்மைக் காத்துக்கொள்வதற்கு ஆதிகால மக்கள் கூட்டங்களாக வாழத் தொடங்கி னார்கள். மக்கள் கூட்டங்களாக வாழத் தொடங்கிய போது, அவர்கள், குடும்பங்களாகப் பெருகி னார்கள். தந்தை தாய் பிள்ளைகள் உறவினர் என் னும் பிணிப்பு உண்டாயிற்று. பின்பு திருமணச் சடங்குகளாலும், பிதாபுத்திர கடமைகளாலும் அவர்கள் கட்டுப்படும்போது சமூகம் உண்டாவ தாயிற்று. சமூகங்களுள் சட்டங்களும் கட்டுப்பாடு களும் பலவாறு இருந்தன. ஆதி மக்களின் குடும்ப சமூகக் கட்டுப்பாடுகளை அறிந்துகொள்வது மிகக் கடினம். பிள்ளைகள் தாய் வழியால் அறியப்படுதல் மக்கள் கீழ்நிலையில் வாழ்ந்த காலத்தில், பிள்ளைகள் தாய் வழியால் அறியப்பட்டார்கள். ஆஸ்திரேலிய மக்கட் கூட்டத்தினரின் பிள்ளைகள் இவ்வகையினர். ஆகவே உள்நாட்டுக் கலகங்களில் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போராட நேர்ந்தது. பழைய நாகரிக மக்க ளிடையே தாய் வழியால் பிள்ளைகள் அறியப்படும் வழக்கு மறக்கப்பட் டிருந்தது. ஹெரதோதசு(Herodotus) என்னும் கிரேக்க வரலாற்று ஆசிரியர் (கி. மு. 480) இலைசிய மக்கள் தங்கள் மரபைத் தாய்வழியினின்றும் கூறினார் களென்றும், அவ்வாறு கூறுதல் அயல் நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு வியப்பு விளைப்பதாக இருந்தது என்றும் கூறி உள்ளார். சொந்த கூட்டத்தில் பெண் கொள்ளாமை பழைய மக்கட் கூட்டத்தினர் தனது கூட்டத்துள் பெண் கொள்ள வில்லை; வேறு ஒரு கூட்டத்தினின்றும் கொண்டனர். பிற்போக்குடைய மக்களிடையே இன்றும் இவ் வழக்கு நிலவுகின்றது. வடஅமெரிக்காவில் பிள்ளைகள் தாய் வழியால் அறியப்படுவார்கள். தாய் கரடிக் குலத்தவளாயின் பிள்ளைகளும் அக்குலத்தைச் சேர்ந்தவர்களாவர். கரடிக்குலத்தவன் மான் அல்லது கழுகுக் குலத்தில் பெண் கொண்டான். தமது கோத்திரத்திற்குள் மணத்தல் கூடாது என்னும் வழக்கு இந்தியப் பிராமணருக்குள் உண்டு. தென்னிந்தியப் பழங்குடிகள் பலரிடையும் இவ் வழக்கு காணப்படுகின்றது. சீனரும் தமது சொந்த கூட்டத்துள் பெண் கொள்வதில்லை. மணக்கிரியை ஆப்பிரிக்காவில், நிகரகுவா நாட்டு வேட்டையாடும் குல இளைஞன் ஒருவன், ஒருத்தியை மணக்க விரும்பினால், அவன் ஒரு மானைக் கொன்று அதனையும் சில விறகு கட்டைகளையும் அவளுடைய பெற்றோரின் வீட்டு வாயிலில் போடுவான். அவற்றை அவள் தந்தை ஏற்றுக்கொண்டால், வேறு கிரியைகளின்றி உடனே மணம் நிகழ்கின்றது. திருந்திய மக்களிடையே மணங்கள் கிரியைகளுடனும், உண்டாட்டு, களியாட்டு முதலிய கொண் டாட்டங்களுடனும் நடைபெறுகின்றன. கிரியைகளில், மதகுரு ஆசீர்வதிக் கும்படி அழைக்கப்படுகிறார். இது பெண்களை வலிமையாற் பிடித்து மனைவியராக்கும் அநாகரிக முறையிலும் வேறுபட்டது. பிரேசில் காடு களில் வாழும் மக்கள், இன்றும் அயல் கிராமப் பெண்களை வலிதிற் கவர்ந்து அவர்களை மனைவியராக வீட்டுக்குக் கொண்டு வருகின்றனர். இவ் வழக்கு உரோமிலும் ஒருகால் நிலவிற்று. கிரேக்க நாட்டில் மணம் சமாதானமாக நடைபெற்றபோதும் மணமகன் மணமகளை வலிதிற் கவர்ந்து போதல் போன்ற கிரியை நடத்தப்பட்டது. உவெல்ஸ் நாட்டில் இவ் வழக்கு, சில தலை முறைக்கு முன்னம் நடைபெற்றது. அயர்லாந்தில் மணமகன் கட்சியார் தூரத்தே நின்று பெண் வீட்டார் மீது ஈட்டிகளை எறிவது வழக்கமாக இருந்து வந்தது. பெண்களை விலைகொடுத்து வாங்குதல் மக்கள் சொத்து உடையவர்களானபோது, பெண்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டனர். ஒரு சூலுமகன் ஐந்து அல்லது பத்து எருதுகளைக் கொடுத்து மனைவி ஒருத்தியை வாங்கினான். இங்கிலாந்தில் மேற்கு சாக்சனி யிலும் இவ் வழக்கு நிலவிற்று. பொருள் கொடுத்துப் பெண்ணை வாங்கும் வழக்கு, இன்றும் தென்னிந்திய சமூகத்தினர் சிலரிடத்தில் காணப்படுகின்றது. குடும்ப முதல்வர் பெயரால் குடும்பங்கள் அறியப்படுதல் பல குடும்பங்கள் கூட்டங்களாகச் சேர்ந்து வாழ்ந்தன. இக் கூட்டங் களை எல்லாம் ஒன்றுபடுத்துவதற்கு அவர்கள் எல்லோருக்கும் முதல்வராக இருந்த ஒருவரின் பெயர் கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு கூட்டத்தின ரும் தாம் அம் முதல்வரினின்று தோன்றியவர்களாக நம்பி வந்தார்கள். சமூகங்களுள்ளே சட்டங்கள் திருந்தாத மக்கள், அமைதியுடன் வாழமாட்டார்கள். ஆகவே அவர்களிடையே சிலர் அமைதியை நிலைநிறுத்தினர். அமைதி நிலவி, உணவும் கிடைத்தபோது அவர்கள் அமைதியுடன் வாழ்ந்தனர். கொலம்பஸ், மேற்குத் தீவுகளில் இறங்கியபோது, அங்குள்ள மக்கள் அமைதியுடன் வாழ்ந்தார்கள். நியூகினியில் நீரில் வீடுகள் கட்டி வாழும் திருந்தாத மக்கள், நியாயத்துக்கு அடங்கி நடக்கும் மனப்பான்மை யுடையவர்களாயிருக் கின்றனர். திருந்தாத மக்களிடையும், நன்மை தீமைகளை அறிந்து கட்டுப்பாடு செய்யும் சட்டங்கள் உண்டு. அவ்வகைச் சட்டங்கள் எல்லாக் கூட்டத்தின ரிடையும் ஒரே வகையாக இருக்கவில்லை. சிலர், முதியவர்களுக்கு மரியாதை காட்டி, அவர்களை வழிபடுகின்றனர். சில காட்டுச் சாதியினரிடையே பெற்றோர் பற்று, அவர்கள் முதுமை அடையும்போது அகன்று விடுகின்றது. ஆப்பிரிக்க மக்கள் சிலர், முதிய பெற்றோர்களைத் தண்டாயுதங்களால் அடித்துக் கொன்று விடுகின்றனர். செர்மனியிலே வென்ட்ஸ் (Wends) என்னுமிடத்தில் முதியவர்களைக் கொன்று, அவர்களின் மாமிசத்தைச் சமைத்து உண்ணும் வழக்கம் இருந்தது. சுவீடன் நாட்டிலே ஆலயத்தில் குடும்பத் தண்டாயுதங்கள் எனப்பட்ட ஒரு வகை மரத் தண்டாயுதங்கள் இருந்தன. அவை சிலவற்றை இன்றும் காணலாம். அக்காலத்தில் முதிர்ந்த வர்களையும் நோயினாற் பிழைக்கமாட்டாதவர்களையும் அவர்களின் சுற்றத்தார் ஆலயங்களிற் கொண்டு சென்று, தண்டாயுதங்களால் அடித்துக் கொன்றனர். மனித உயிர் பரிசுத்தமுடையதென எவ்வளவுக்குக் கருதப் பட்டதோ, அவ்வளவுக்கு நாகரிகத்தின் வளர்ச்சி இருந்தது. தற்காப்பு, போர், பழிவாங்குதல், தண்டனை, பலி, என்பவற்றிலில்லாமல் மனிதனைக் கொல்வது ஏற்றதெனக் கொள்ளும் சட்டம் எங்கும் இருக்கவில்லை. ஒருவன் தனது வீரத்தைக் காட்டும் பொருட்டு மற்றொருவனைக் கொல்லுதல் சட்டத்துக்கு ஏற்றதாகச் சில கூட்டத்தாரால் கருதப்பட்டது. போர்ணியோவி லுள்ள இடைக்கர் குலத்தானொருவன் ஒரு மனிதனது தலையை வெட்டிக் கொண்டு வராத வரையில் அவனது திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது. குற்றங்களுக்கு ஏற்ற தண்டனைகளை விதிப்பதே நாகரிகத்தின் அடையாளம் என்று இன்று கருதப்படுகிறது. இவ் வழக்கு உலகில் படிப்ப டியே வளர்ச்சி அடைந்தது. சட்டம் என்பது பதிலுக்குப் பதில் செய்தலாகும். ஒருவன் கொல்லப்பட்டால், பழி வாங்கும் உணர்ச்சி உண்டாகின்றது. ஆஸ்திரேலியன் ஒருவன் கொல்லப்பட்டால், கொல்லப்பட்டவனின் கிட்டிய உறவினனது கடமை, கொன்றவனைக் கொன்று பழிவாங்குவது. கொலை செய்தவன் ஓடி மறைந்து விட்டால் அவன் குடும்பத்தினர் கொல்லப் படுவார்கள். மக்கள் செல்வத்தைச் சேர்த்து வைத்திருந்த காலத்தில் பழி வாங்குதலுக்குப் பதில், பணம் நட்ட ஈடாகக் கொடுக்கப்பட்டது. சொத்தைப்பற்றிய சட்டங்கள் வேட்டையாடும் சட்டங்களிலிருந்து நிலத்தைப் பற்றிய சட்டங்கள் உண்டாயின. பிரேசில் நாட்டில் ஒவ்வொரு கூட்டத்தினருடைய வேட்டை யாடும் நிலங்களின் எல்லைகள் குறிக்கப்பட்டிருந்தன. ஒரு கூட்டத்தைக் சேர்ந்தவன் வேட்டை விலங்கைத் துரத்திக்கொண்டு வேறு ஒரு கூட்டத்துக் குரிய நிலத்துள் செல்வானேல் அது பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. சில சமயங்களில் அவன் அவ்விடத்திலேயே கொலையுண்டான். கொல்லப் பட்ட விலங்கு கொன்றவனுக்குச் சொந்தமாயிற்று. இதனால் ஒவ்வொரு கூட்டத்தினருக்கும் பொது நிலம் உண்டு என்னும் சட்டம் உண்டாயிருந்த தெனத் தெரிகின்றது. குடிசை, ஒரு குடும்பத்துக்கு அல்லது வாழும் பல குடும்பங்களுக்குச் சொந்தமானது. அதன் அயலே உள்ள நிலம் வேலி அடைத்துப் பயிரிடப்படுமாயின், அது பொதுத்தன்மையை இழந்து குடும்பத்துக்கு உடையதாயிற்று. குடிசையிலுள்ள அம்மி, உரல், உலக்கை, பானை, சட்டி முதலியன குடும்பத்துக்குச் சொந்தமானவை. குடும்பத்துக்குச் சொந்தமாயினும், ஒரு குடும்பத்தலைவன் அல்லது பிதா மூலம் அவை சொந்தமாக இருந்தன. இவ்வாறு நாகரிகமற்ற மக்கள், பொது நிலம், குடும்ப நிலம், குடும்ப அல்லது சொந்த உடைமை முதலியவற்றைப் பெற்றிருந் தார்கள். யுத்தப் போக்குள்ள மக்கள், நிலம் வைத்திருக்கும் முறையில் புரட்சி செய்தனர். படையெடுப்புக் காலங்களில் வெல்லப்பட்ட நாட்டின் நிலங் களைப் படைத்தலைவன் அல்லது அரசன், வீரருக்கு இடையில் பிரித்து அளித்தான். இங்கிலாந்திலே நார்மானியரின் வெற்றிக்கு முன்பு மக்களின் பொதுநிலங்கள் அரசனால் இவ்வாறு பிரித்துக் கொடுக்கப்பட்டது. போர்க் காலங்களில் அரசனே நிலம் எல்லாவற்றிற்கும் சொந்தமுடையவனானான். ஆண்டுதோறும் ஒரு தொகை பணத்தை வரியாகத் தனக்குக் கொடுத்து நிலங்களைப் பயன்படுத்தும்படி அவன் மக்களுக்குக் கட்டளையிட்டான். இம்முறை இந்தியாவிலும் எகிப்திலும் நடைமுறையில் உள்ளன. உரோமில் காணியாளர் விளைவில் ஒரு பகுதியைக் கொடுப்போருக்கு நிலங்களைப் பயிரிடும்படி கொடுத்தார்கள். போரில் அடிமைகளாக்கப் பட்டோர் நிலங்களை உழுது பயிரிடும் தொழில் புரியும்படி சொந்த உடைமை போல் பயன்படுத்தப்பட்டனர். உழும் பொருட்டு மாடுகள் வளர்க்கப்பட்டன. விலை உயர்ந்த பொருள்கள், வாணிகம், நாணயப் புழக்கம் என்பன செல்வம் என்பதில் அடங்கும். சர்வ அதிகாரம் ஒவ்வொரு கூட்டத்திலும் சுய ஆட்சி நடைபெற்றது. பிரேசில் காட்டுக் குடும்பத் தலைவன் ஒருவனுக்குத் தனது மனைவியையோ, பிள்ளைகளையோ அடிமைகளையோ விற்கும் உரிமை உண்டு. ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குள் தலைவன் ஒருவனைத் தெரிவது வழக்கம். அவனுடைய பதவியைத் தலைமுறை தலைமுறையாக ஏற்கும் விருப்பு அவன் சந்ததியினருக்கு எழுந்தது. போர்க்காலத்தில் திருந்தாத மக்கள் சமாதான காலத் தலைவனை ஒதுக்கிவிட்டு, யுத்தத் திறமையுடைய வேறு ஒருவனைத் தெரிவது இயல்பு. அக்காலத்தில் வீரனுக்கு உயர்வு உண்டாகின்றது. அவ்வுயர்வு சர்வ அதிகாரம் வரையிற் சென்றது. போர், தலைவனுக்கு மேலான அதிகாரத்தைக் கொடுத்த தல்லாமல், தேசத்தின் ஒழுங்கைப் பாதுகாக்கும் அவன் படையினருக்கும் அவ்வகை வலிமையை அளித்தது. ஆகவே மக்கள், இராணுவக் கட்டுப் பாட்டினால் அதிகாரத்துக்குட்பட்டு நடக்கும் ஒழுங்கைப் பெற்றார்கள். மக்களிடையே பல தரங்கள் ஒவ்வொரு மக்களிடையும் பல தரங்கள் உண்டாயின. ஆதியில் அடிமைகள், அடிமைகளல்லாதோர் என இரு பிரிவுகள் உண்டாயிருந்தன. எருது, கழுதை என்னும் செல்வங்கள் தோன்றுவதன் முன் ஆண், பெண் வேலையாளர் செல்வமாக மதிக்கப்பட்டனர். அடிமைகள் வேலை செய்தலினாலேயே கைத்தொழில், பயிர்த் தொழில்கள் வளர்ச்சி அடைந்தன. செல்வம் திரண்டதும், குருமார், எழுதுவோர், புலவர், தத்துவ நூலார் முதலாயினோர் மக்களின் மன நிலையை உயர்த்துவதற்கு ஒழிவு கண்டனர். அடிமை வழக்கிலிருந்து கூலி பெற்று வேலை செய்யும் வழக்கு உண் டாயிற்று. அடிமை வைத்திருந்தோர், ஊதியம் கருதிக் கூலிக்கு வேலை செய்யும்படி அடிமைகளைப் பயன்படுத்தினர். பின்பு அடிமைகளல்லா தோரும் பொருள் ஈட்டக் கருதிக் கூலி வேலை புரிந்தனர். இதனால் வேலை புரியும் வகுப்பு ஒன்று உண்டாயிற்று. அடிமைகளல்லாதார் பல வகுப்பு களாகப் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். பழைய நோர்மானியரிடையே, பிரபுக்கள், அடிமைகள், அடிமைகளல்லாதார் என மூன்று பிரிவினர் காணப் பட்டனர். பிரபுக்களில், அரசகுடும்பத்தைச் சேர்ந்தார், சேராதார் என இரு வகையினர் இருந்தனர். முன்னவர் பின்னவரைக் கீழாக மதித்தனர். மக்கள் பெருகிச் செல்வமும் விவேகமும் உடையவர்கள் ஆனார்கள். ஆகவே ஆட்சி முறையில் மாற்றம் வேண்டியிருந்தது. ஒரு அதிகாரியின் பழைய கடமை, வழக்குத் தீர்ப்புச் செய்வது. கவீர்(Kafir) பிரதானி வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தான். இரு கட்சியினரும் அவனுக்குச் சன்மானமாக எருதுகளைக் கொடுத்தனர். கிழக்கு நாடுகளில் அரசரே நியாயத்தீர்ப்பு அளித்தனர். ஆனால் அவ் வேலை ஞாயத்தார் (ஞாயாதி பதிகள்) கைக்கு மாறிவிட்டது. எகிப்திலும் பாபிலோனிலும் பொதுக் கருமங்கள் தனித் தனி அதிகாரிகளால் மேற்பார்க்கப்பட்டன. இன்றைய ஆட்சி முறையும் இதுவே. அரசனுடைய ஆணை அவன் முதல், காவற் காரன் வரையிற் சென்றது. இவ்வாறு மக்கட் சமூகங்களின் சட்டங்களும் கட்டுப்பாடுகளும் கீழ் நிலையினின்று படிப்படியே வளர்ச்சி அடைந்தன. மொழி மக்கள் சமூகங்களாக வாழத் தொடங்கிய பின்பே மொழியும் கலைகளும் தோன்றி வளர்ச்சி அடைந்தன. கலைகளுக்கு முன், மொழியே தோன்றுவதாயிற்று. ஒருவன் தனது கருத்தை வெளிப்படுத்துவதற்கு, சைகைகளையோ சில ஒலிக்குறிகளையோ பயன்படுத்துகின்றான். இவ் வடிப்படையினின்றே மொழி தோன்றிற்று. விலங்குகள் பறவைகளிடத்தும் மொழிக்கு அடிப்படை யாக உள்ள இவ்வியல்புகளைக் காணலாம். குஞ்சுகளோடு உலாவித் திரியும் கோழி, சடுதியில் ஒருவகை ஓசை செய்கின்றது; உடனே குஞ்சுகள் ஓடி மறை கின்றன. அது அபாயம் நீங்கி விட்டதை அறிவிக்க இன்னொரு வகையாகச் சத்தமிடுகின்றது. அப்பொழுது மறைந்திருந்த குஞ்சுகள் தாயிடம் ஓடி வரு கின்றன. இவ்வாறே விலங்குகள், தம் கன்றுகளைக் கூவியழைத்தலையும், மகிழ்ச்சி, வெறுப்பு, அச்சம் முதலியவற்றை உணர்த்த வெவ்வேறு வகையாக ஒலித்தலையும் காணலாம். விலங்குகள், மனிதன் பேசத் தொடங்குவதற்கு மிக முற்காலத்திலேயே பேசின. நாய் தனது வாலைக்கொண்டு அன்பு முதல் கோபம் வரையிலுள்ள பலவகையான உணர்ச்சிகளை அறிவிக்கின்றது. அது, குரலினால் விளையாட்டு முதல் பலவகையான, எண்ணங்களைத் தெரிவிக்கின்றது. வாலினால் பேசும் கருத்துகளைவிட எண்ணங்களைக் குறிக்கப் பதினைந்து வகை வெவ்வேறு வகையாக ஒலிக்குறிகளை அது கையாளுகின்றது. ஆடு மாடுகளும் குதிரைகளும் 22 ஒலிக்குறிகள் வரை யில் பயன்படுத்துகின்றன. புறாவும் கோழியும் பன்னிரண்டு ஒலிக்குறிகளை மொழியாகப் பயன்படுத்துகின்றன. எறும்பும் மற்றைய பூச்சிகளும் முகத்தி லுள்ள கொம்புகளால்(Feelers) பேசுகின்றன. பறவைகள், மகிழ்ச்சி, அழுகை, அபாயம், காதல் போன்ற பல கருத்துகளைக் குறிக்க வெவ்வேறு வகை யாகச் சத்தமிடுகின்றன. குதிரைகளும் ஆடு மாடுகளும் ஒன்று மற்று ஒன்றை மூக்கினால் உரைஞ்சியும், கனைத்தும், அழுதும் பேசுகின்றன. கொரில்லா வும் சிம்பன்சியும் 20 சொல் ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. கிப்பன் (Gibbon) என்னும் குரங்கு பாடுகின்றது. மக்களும் ஆதியில் இவ்வகையான ஒலிக்குறிகளையும் சைகைகளையுமே தமது மொழியாகப் பயன்படுத்தி னார்கள். இவ்வகை மொழி, மக்கள் எல்லோருக்கும் பொதுவாக இருந்தது. பின்பு மக்கள், தம்மைச் சூழ்ந்துள்ள பறவைகள், விலங்குகள் செய்யும் ஓசை களையும் இயற்கைப் பொருள்களினின்று எழும் ஓசைகளையும் உற்றுக் கேட்டார்கள். அவர்கள் அவ்வொலிகளையே அவ் விலங்குகள், பறவைகள், இயற்கைப் பொருள்களுக்கும் பெயராக இட்டு வழங்கினார்கள். கோ, கோ என்னும் சத்தமிடும் பறவை கோழி எனப்பட்டது. ஆங்கிலத்தில் “கொக்” என்னும் பெயரும் இவ்வகையினதே. கூ கூ எனக் கூவும் பறவை குயில் எனப்பட்டது. மா, மா, எனக் கத்தும் விலங்கு மாடு எனப்பட்டது. கா, கா எனக் கரையும் குருவி காக்கை அல்லது காகம் எனப்பட்டது. இவ்வாறு தோன்றிய சொற்களை, மொழிகளில் காணலாம். பின்பு மக்கள் பொருள் களின் பண்புகளையும் செயல்களையும் குறிக்க ஒலிக்குறிகளை அமைத்து வழங்கினார்கள். மக்கள், கூட்டமாக வாழ்கின்ற காலத்திலேயே இவ்வகை யான ஒலிக்குறிகள் தோன்றி, அக் கூட்டத்திலுள்ள மக்கள் எல்லோராலும் அவ்வப் பொருள்களையும் பண்புகளையும், செயல்களையும் குறிப்பன வாக வழங்கும். இவ் வொலிக்குறிகளும், ஒலிக்குறிகள் இல்லாதவற்றுக்கு இடையிடையே செய்யப்படும் உடற்குறி, பார்வை போன்றவைகளுமே ஆதியில் மொழியாக வழங்கின. இன்றும் ஒலி வடிவமான மொழியோடு சைகைகளும் இருந்து வருதலைக் காண்கின்றோம். மொழி, மக்களிடையே தோன்றி வளர்ச்சி அடைவதை, ஒரு சிறிய குழந்தை வளருந்தோறும் எவ்வாறு பேசக் கற்றுக்கொள்ளுகின்றதோ, அதனோடு ஒப்பிட்டு அறிதல் கூடும். ஆதிகாலத்தில் மக்கள், சிறிதுசிறிதாகச் சொற்களை உண்டாக்கித் தோற்றுவித்த மொழியின் வளர்ச்சியே, இன்று உலகில் காணப்படும் எல்லா மொழிகளும் ஆகும். எழுத்து மக்கள், சொற்களைப் பயன்படுத்த அறியாத காலத்தில், சைகை களைப் பயன்படுத்தினார்கள். எழுத்தைப்பற்றி அறியாதிருந்த காலத்தில் அவர்கள், படங்களை எழுத்துகளாகப் பயன்படுத்தினர். நாம் அறிந் திருக்கும் எல்லாச் சொற்களும், முற்காலத்தில் பட வடிவாக எழுதப்பட்டன. சீன எழுத்துகள் இன்றும் இவ்வகையினவே. சொற்களை ஒலிமுறையாகப் பிரித்து எழுதிக்காட்டி உச்சரிக்கும் முறை பிற்காலத்தது. கட்டடக் கலை மிகமிக முற்காலத்தில் மனிதன் உறைவிடங்கள், மலைக்குகைகள், மரப் பொந்துகள், மர நிழல்களாக விருந்தன. மலைக்குகைகள், இயற்கையாக அமைக் கப்பட்ட வீடுகளாகும். குகைகளில்லாத இடங்களில் தங்க நேர்ந்தபோது, அவர்கள் மரக்கொம்புகளைச் சுற்றிவர வட்டமாக நாட்டி, மேலே வைக்கோல், தழை, மரப் பட்டை முதலியவற்றை இட்டு வேய்ந்த ஒதுக்கிடங்களைப் பயன்படுத்தினர். இதி லிருந்து வட்ட வடிவினதாகிய குடிசைகள் அமைக்கும் பழக்கம் உண்டாயிற்று. இடம் விட்டு இடம் அலைந்து திரியும் இடையர், தடிகளை நாட்டிக் கம்பளியினால், அல்லது தோலினால் வேய்ந்த வட்ட வடிவான கூடாரங்களில் தங்கினார்கள். இன்று போர் வீரர் தங்கும் கூடாரங்களும் இவ்வகை யினவே. பின்பு பக்கங்களில் உள்ள கம்புகளுக்குப் பதில் சுவர்களை எழுப்பி, மேலே வைக்கோல், ஓலை முதலியவற்றால் வேய்ந்த குடில் வீடுகள் அமைக்கப்பட்டன. வட்டத்துக்குப் பதில் நீண்ட சதுரம் அமைப்பதால், வீட்டில் அதிக இட வசதி உண்டு. பின்பு, பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழக்கூடிய நீளமான வீடுகள் கட்டப்பட்டன. அவை, அமைப்பு அளவில் இன்றைய வீடுகளைப் போலவே இருந்தன. கல் பெரிதும் கிடைக்கக் கூடிய இடங்களில் கற்களை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கிச் சுவர்கள் எழுப்பப் பட்டன. கட்டடம் கட்டும் திறமை உண்டானபோது, கற்களை ஒன்றோ டொன்று அண்டும்படி வெட்டி மட்டம் செய்து, ஒன்றின்மேல் ஒன்றை வைத்துச் சுவர்கள் எழுப்பப்பட்டன. எகிப்திய சமாதிக் கட்டடங்கள் இவ்வாறே கட்டப்பட்டுள்ளன. இன்றியமையாதபோது உலோகப் பிடிப்புகள் பயன்படுத்தப்பட்டன. அக்காலத்தில் “சிமெந்தின்” பயன் அறியப்பட்டிருந் தது. மண் வீடுகளின் உட்புறச் சுவர்கள், மண் பூசி அழுத்தப்பட்டன. மண்ணைக் குழைத்து எறிந்து சுவர் வைத்தலைவிட, களிமண்ணில் கல்லரிந்து காயவிட்டு அதனால் சுவர் அமைத்தல் இலகு வானது. பின்பு, சூளையிட்ட களிமண் கற்கள் பயன்படுத்தப்பட்டன. வீடுகளுக்கு முன்னால் இரு பக்கமும் வளர்ந்த செடிகளை வளைத்துக் கட்டுவதால் வில் உண்டா யிற்று. அது அழகு செய்வ தாயிருந்தது. பின்பு, வில் வைத்துச் சுவர் அமைக்கும் பழக்கம் உண்டாயிற்று. குகைகளில் வாழ்ந்த மக்களின் சந்ததியினர் குகை வடிவாகவும், கூடார வடிவமாகவும் வீடுகளமைத்தார்கள். முகமதிய கிறித்துவ இந்தியக் கட்டட அமைப்புகள் வேறுபடுவதற்குக் காரணம் இதுவே. உடை இன்றும், உலகின் சில பகுதிகளில் உடை இன்றி வாழும் மக்கள் காணப்படுகிறார்கள். வெப்ப நாடுகளில் ஆடையினால் யாதும் பயனில்லை. ஆகவே, அழகு அல்லது மானம் என்பவற்றுள் ஒன்றிற்காகவே அது அணியப்படுகிறது. உடை அணியாத, அல்லது அற்ப உடை அணியும் மக்கள், உடலில் நிறம் பூசிக்கொள்கிறார்கள். அந்தமான் தீவு மக்கள், நிற மண்ணையும் பசையையும் குழைத்து உடம்பில் பூசிக்கொள்கிறார்கள். இது, அவர்கள் உடலை வெயில், கொசுக்கடி என்பவற்றிலிருந்து காக்கின்றது. அவர்கள் அப் பூச்சின் மீது பல கோடுகள் இழுத்து அலங்காரம் செய்கிறார்கள். பழங்காலக் காட்டு மக்கள், மரணத் துக்கத்தைக் காட்ட, முகத்தில் கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தைப் பூசிக்கொள்வார்கள். ஜூலியஸ் சீசர் காலத்தில் பிரிட்டன் மக்கள், போருக்குச் செல்லும்போது உடலில் நிறங்கள் பூசினார்கள். பச்சை குத்துவது அழகைக் கருதியே ஆகும். அது, நிறம் பூசுவதற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டது. உடை, உடலை அதிகம் மூடும்போது பழங்கால அலங்காரங்கள் (பச்சைகுத்துதல், நிறம்பூசுதல்) குறையத் தொடங்கின. உடலை அலங்கரித்தற்குப் பலவகை அணிகளும் பயன்படுத்தப்பட்டன. எலும்பு, பற்கள், நகங்கள் போன்றவற்றை அணிவதி லிருந்தே, இன்று முத்து, பவளம் முதலியவற்றை அணியும் வழக்கம் உண்டாயிற்று. அலங்காரத்தின் பொருட்டுத் தழை, மரப்பட்டை, தோல் முதலியன அணியப்பட்டன. மக்கள், புற்களில் பாய் முடைய அறிந்தார்கள். ஒரு துணியை நாம் குலைத்துப் பார்த்தால் அது நூல்களால் முடையப்பட்ட ஒரு பாய் என நமக்கு விளங்குகின்றது. நெசவு செய்வதற்கு, நூல் அல்லது கயிறு செய்யும் பழக்கம் வேண்டும். எல்லா மக்களும் தும்பு, மயிர், கம்பளி முதலியவற்றை உள்ளங்கையில் அல்லது தொடையில் வைத்து உருட்டி நூல் திரிக்க அறிவார்கள். உள்ளங்கையில் வைத்து உருட்டி நூல் திரிப்பதி லும் வேகமாகச் சுழலக்கூடிய கதிரில் நூல் திரிப்பது எளிது. கதிர்கள் கொண்டு நூல் திரிக்கும் பழக்கத்தை மக்கள் மிக மிக முற்காலத்திலேயே பெற்றிருந்தார்கள். இன்றைய நூல் நூற்கும் பொறிகள் என்பவை, நூல் நூற்கும் நூற்றுக்கணக்கான கதிர்களை நீராவியினால் இயக்கி, வேலை செய்விக்கும் அமைப்புகளே ஆகும். ஒரு கம்பளியை அல்லது நீண்ட தோலை நடுவே துளையிட்டு அணிந்து அரையில் ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டால் அது இன்று கிறித்துவ பாதிரிமார் அணியும் அங்கி போன்றதாகும். இவ்வகை உடையின் திருத்தமே இன்றைய அங்கியாகும். குதிரையின்மீது சவாரி செய்ய நேர்ந்த பொழுது அங்கியின் கீழ்ப்பாகம் நடுவே இரண்டாகக் கிழித்துத் தைக்கப் பட்டது. அப்பொழுது, காற்சட்டையும் மேற்சட்டையும் தனித்தனி அணிவது வசதிபோல் காணப்பட்டது. இவ்வாறு காற்சட்டை மேற்சட்டை அணியும் பழக்கம், குளிர் தேசங்களில் உண்டாயிற்று. இன்று காற்சட்டை மேற்சட்டைகளை வெப்ப நாட்டு மக்கள், அழகுக்காகவே அணிகின்றனர். வெப்ப நாடுகளில் மக்கள், கௌபீனம் அணிந்தனர். பின்பு அழகுக் காக அரையில் துணியைச் சுற்றினார்கள். இவ்வகை உடைகளைச் சாஞ்சிக் கோபுரச் சிற்பங்களிற் பார்க்கலாகும். நாள் ஏற ஏற அரையிற் கட்டிய துணி, முழங்கால், கெண்டைக்கால் வரையும் வருவதாயிற்று. நடக்கும் வாய்ப்புக் கருதி உடையின் கீழ்த்தலைப்புகள் இழுத்துப் பின்னே செருகப்பட்டன. இதிலிருந்து மூலைக்கச்சம் கட்டும் வழக்கம் உண்டாயிற்று. முற்காலத்தில் தலை மயிர் சிலும்பாமல் இருக்கும் பொருட்டுத் தலையைச் சுற்றி நாடா கட்டப்பட்டது. நாடா கட்டும் பழக்கத்திலிருந்து துணி கட்டும் பழக்கம் உண்டாயிற்று. துணி கட்டும் பழக்கம், பாகை வைக்கும் வழக்கமாக மாறிற்று. பழைய சிற்பங்களில் பாகைகளின் வகைகள் பலவற்றைக் காணலாகும். இவ்வாறு உடைகள் இடங்களுக்கேற்ப மாறுபட்டன. பாடல் பேச்சு, நடை, ஆட்டப் பாட்டு, இராகப் பாட்டு என்பன ஒன்றோடு ஒன்று இணைந்து கரந்து கிடக்கின்றன. ஆஸ்திரேலிய மக்கள், போருக்குப் போகுமுன் “அவன் தலையைக் குத்து - அவன் நெஞ்சைப் பிள - அவன் ஈரலை வாங்கு” என்பன போன்ற மொழிகளைக் கோபத்துடன் பாடுவர். இழவு காலத்தில் பெண்களில் ஒருத்தி, பாடலின் ஒரு அடியைச் சொல்லு வாள்; மற்றொருத்தி மற்றொரு வரியைச் சொல்லுவாள்; பின்பு எல்லோரும் மூன்றாவது நாலாவது அடிகளைச் சொல்லுவார்கள். இவ்வாறு அவர்கள் ஒருவகை ஓசையில் பாடுகிறார்கள். இப் பாடல்கள் அளந்து செய்யப் பட்டன அல்ல. இவ்வகை முரடான பாடல்களிலிருந்து, அளந்து செய்யப் படும் பாடல்கள் தோன்றின. செய்யுள் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு, அளந்து செய்யப்பட்டது என்பது பொருள். பாடலின் நோக்கம் இசையோடு பாடுவது. இவ்வாறு பாடுதல், பேச்சு நடையில் இருந்து வளர்ச்சி அடைந்தது. நாம் பேசும்போது எல்லாச் சொற் களையும் ஒரேவகை ஓசையோடு சொல்லுவதில்லை. கேள்வி, மறு மொழிக்கு ஏற்பவும் உணர்ச்சிகளுக்கு ஏற்பவும் ஓசை பெறுகின்றன. இவ் வகை, தொடக்கத்திலிருந்தே உணர்ச்சிகளுக்கேற்ப வெவ்வேறு இசைகளில் பாடல்கள் தோன்றின. பத்தி, காதல், வீரம், சோகம் போன்றவற்றை உணர்த் தும் பாடல்கள் வெவ்வேறு ஓசைகளில் பாடப்படுதலைக் காண்கின்றோம். ஆடல் ஆடல், இக்காலப் பொழுதுபோக்குகளுள் ஒன்று என்று நாம் கருதலாம். காட்டுச் சாதியினர் தமது மகிழ்ச்சி, துக்கம், காதல், கோபம், சமயம், மந்திரவாதம் போன்றவற்றையெல்லாம் ஆடிக் காட்டுவர். முற்காலச் சமயத்தில் ஆடல், வணக்கத்துக்கு மிக மிக இன்றியமையாததாக இருந்தது. கிரீசில் அப்பலோவின் திருநாளிற் குருமார் பாடி, ஆடிக் கேடகங்களை அடித்துக்கொண்டு வீதிகளில் சென்றார்கள். இன்றைய நாகரிகத்தில், சமய சம்பந்தமான இசையில் ஆட்டம் விடப்பட்டடுள்ளது. ஆடலும், கதையை நடித்தலும் ஒன்றே ஆகும். வட அமெரிக்கரின் நாய்க்கூத்து, கரடிக்கூத்துகள், விலங்குகள் ஒன்றை ஒன்று கடித்துப் புரளுவது போன்ற நடிப்பே ஆகும். ஆடலும் பாடலும் சேர்ந்து நாடகம் உண்டாயிற்று. ஆட்டத்தின் பொருட்டு இசைக்கருவிகள் தோன்றியிருக்கலாம். ஆடும் தாளத்துக்கு ஏற்பச் சேர்ந்து ஒலிப்பதற்கு இசை வேண்டியதாயிற்று. பலவகை ஓசைகள், ஆட்டக்காரனுக்குப் பலவகை ஊக்கத்தை எழுப்புவதற் காகப் பயன்பட்டன. சமயம் சமயம், பயத்தினால் தோன்றிய ஒன்று ஆகும். மனிதன் இறந்து போதலையும், அவனுடைய ஆவி, கனவிலும் நனவிலும் அவனுடைய உடை ஆயுதங்கள் முதலியவற்றோடு தோன்றுவதையும் முற்கால மனிதன் கண்டான், மனிதனைப் போலவே மற்றைய பொருள்களுக்கும் ஆவி போன்ற உயிர் இருக்கின்றன என்றும் அவற்றை இறந்து போனவர்கள், ஆவி வடிவிற் பயன்படுத்த முடியுமென்றும் அவன் கருதினான். ஆகவே இறந்தவர்களோடு அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் பிற பொருள் களும் வைத்துப் புதைக்கப்பட்டன. இறந்தவர்களின் ஆவிகள் தமக்குத் துன்பம் விளைவிக்கக் கூடும் என நம்பி, அவன் அவற்றுக்கு உணவு, நீர் முதலியவற்றைக் கொடுத்து அவற்றை மகிழ்விக்க நினைத்தான். இவ் வுலகில் அஞ்சத்தக்கவனாக இருந்த ஒருவன் இறந்தபோது, அவன் சிறப்பாக வழிபடப்பட்டான். அவ் வகையினன் மிக்க தீமையைச் செய்தல் கூடுமென அவன் நம்பினான். இவ்வாறு உலகில், இறந்தவர் வழிபாடு தோன்றியிருந்தது. பின்பு மக்கள், சிறிது சிறிதாகத் தம்மிலும் மேலான வல்லமை ஒன்று இருப்பதை அறிந்தார்கள். அவ் வல்லமை இவ்வுலகுக்கு ஒளியை வழங்கும் ஞாயிறு என நம்பி, மக்கள் ஞாயிற்றை வழிபட்டார்கள். பின் திங்களும் மற்றைய கிரகங்களும் வழிபடப்பட்டன. இன்றும் இந்திய ஆலயங்களில் ஒன்பது கிரகங்கள் இடம் பெற்று வழிபடப்படுகின்றன. பின்பு மக்கள் இவற்றை அன்றி ஞாயிற்றுக்கு ஒளியைக் கொடுப்பதும், உயிருள்பொருன், உயிர் இல்பொருள் என்பவற்றை எல்லாம் இயக்குவது மாகிய தனிப் பேர் ஆற்றல் ஒன்று உண்டு என அறிந்து, அதனையே முழுமுதற் கடவுள் எனக் கொண்டு வழிபடுவராயினர். இறந்தவரின் ஆவி வழிபாடு முதல் மேலான ஒரு கடவுளை வழிபடும் வழிபாடு வரையில் உள்ள மதங்களை இவ்வுலக மக்களிடையே நாம் இன்றும் காணலாகும். பழங்கதைகள். எழுத்து கண்டுபிடிக்கப்படுவதன் முன், மக்கள் தம் வரலாறுகளை, காலத்துக்குக் காலம் ஒருவருக்கு ஒருவர் சொல்லித் தலைமுறை தலைமுறை யாகக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இக் கதைகள் பெரும்பாலும் இன்று மறக்கப்பட்டுள்ளன. மற்றும், தம் முன்னோர் வரலாறுகளைக் கன்ன பரம்பரைக் கதைகள் மூலம் காப்பாற்றிவரும் மக்களும் இவ்வுலகில் காணப் படுகிறார்கள். அக் கதைகள் உண்மையாகவே உள்ளன என்பதற்குப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. தென் கடல் தீவுகளின் ஒன்றாகிய உரொது மாவில்(Rotuma) பெரிய முதிய மரம் ஒன்று நின்றது. கன்ன பரம்பரைக் கதை யின்படி அம் மரத்தின் வேர்களுக்குள் பெரிய அதிகாரி ஒருவனின் கல் ஆசனம் புதைக்கப்பட்டிருந்தது என, அங்குள்ள மக்கள் கூறி வந்தார்கள். அம் மரம் பாறி விழுந்தபோது அதன் வேர்களுக்குள் அவ் வாசனம் காணப்பட்டது. இவ்வாறு பல நிகழ்ச்சிகள் உண்டு. ஆனால் இவ்வாறு தலை முறை தலைமுறையாக வரும் கதைகளோடு சில கட்டுக்கதைகளும் சேர்ந்து விடுகின்றன. எகிப்தியர், கிரேக்கர்களின் உண்மை வரலாறுகளோடும் கட்டுக்கதைகள் கலந்து இருத்தலை நாம் காணலாகும். முற்காலப் புலவர்கள், அரசர், பெருமக்களைப் பற்றிய உண்மையான வரலாறுகளை மையமாக வைத்துக்கொண்டு, கேட்பவருக்கு இன்பம் அளிக்கக் கூடிய வகையில் அவற்றைத் திரித்துப் பாடியுள்ளார்கள். இராமாயணம், பாரதம், ஹோமரின் இலியாட் போன்ற நூல்களை நோக்கி நாம் இதனை அறியலாகும். கட்டுக் கதைகளோடு பின்னிக் கிடக்கும் பழைய வரலாறுகள், கட்டுக் கதைகள் என ஒதுக்கிவிட வேண்டியன வல்ல. அவற்றைப் படிப்பவர் களுக்கு, நம்பத்தக்கன இவை, நம்பத்தகாதன இவை என அறிந்துகொள்ள வேண்டியது கடனாகும். பழைய வரலாறு எழுதுவோர் உண்மை வரலாறு களைக் கட்டுக் கதைகளோடு சேர்த்து எழுதி வைக்கலானார்கள். பாண்டியர் கூட்டிய தமிழ்ச் சங்கத்தில் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், முருகவேள் முதலிய கடவுளர் இருந்து நூல் ஆராய்ந்தார்கள் எனக் கூறப்படும் வரலாறும் இவ்வகையினதே. கடவுளர் சங்கத்தில் இருந்தார்கள் எனக் கூறியிருத்தலின், தமிழ்ச் சங்கம் நடைபெறவில்லை எனக் கூறும் ஒரு சாராரும் உளர். அவர்கள், மக்களைப் பற்றிய வரலாற்றை ஒரு சிறிதும் அறியாத கல்லா மாந்தரே ஆவர். பஞ்சதந்திரக் கதைகள் போன்ற ஒவ்வொரு நோக்கம் கருதி எழுதப்படும் கதைகளும் உண்டு. சமய சம்பந்தமாக மக்களுக்குப் பத்தி, அச்சம் முதலியன விளைவிப்பதற்கு எழுதப்பட்ட கதைகள் பெரும்பாலும் இவ்வகையினவே. கதைகள் காலத்துக்குக் காலம் மாற்றம் அடைகின்றன. புதிய கதை சொல்லுவோர், பழங்கதைகளைக் கேட்போர் விருப்புக்கு ஏற்ற வகையில் மாற்றி விடுகிறார்கள். சினிமாக்களில் காணப்படும் கோவலன் கதையை நோக்கி இதன் உண்மை காண்க. ஒவ்வொரு காலத்தில் மக்களின் நம்பிக்கைகள் ஒவ்வொரு வகை யாக இருந்தன. அவ்வக் காலங்களில் சொல்லப்படும் கதைகள் அவ்வம் மக்களுக்கு ஏற்றனவாகத் தோன்றின. ஹெரதோதசு போன்ற வரலாற் றாசிரியர்களே இன்று, கற்பனைக் கதைகள் என்று நமக்குத் தோன்றும் பலவற்றைத் தமது வரலாற்றில் கூறியுள்ளார். ஆடு, மனிதனோடு பேசிற்று, ஓநாய் பேசிற்று என்று சொன்னால், இன்றைய சிறுவரும் அதனைக் கட்டுக் கதை எனவே கூறுவர். முற்காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை. கணக்கு முற்கால மக்கள் கைவிரல் கால் விரல்களை எண்ணிக் கணக்குப் போட்டார்கள். சில தேச மக்கள், ஐந்தைக் குறிக்க வழங்கும் பெயர் ஒரு கையைக் குறிக்கும்; பத்தைக் குறிக்க வழங்குவது இரண்டு கைகளையும் குறிக்கும். ஆறைக் குறிப்பதற்கு அடுத்த கையின் ஒரு விரல் குறிக்கப்படும். இவ்வாறு இரண்டு கை வரையில் வந்து, பின் கால் விரலிலிருந்து ஆரம்பிக் கும், பதினைந்துக்கு இரண்டு கையும் ஒரு காலும் குறிப்பிடப்படும். பின்பு அடுத்த காலின் முதல் விரல் குறிக்கப்படும். இருபத்து ஒன்றுக்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும், அடுத்த மனிதனின் முதல் கைவிரலும் குறிக்கப்படும். இப்படியே அடுத்த மனிதன், இரண்டாவது மனிதன், மூன்றாவது மனிதன் என்று எண்ணுதல் செல்லும். விரல்களைக் கொண்டு கணக்குப் பார்த்தமையினாலேயே ஐந்து, பத்து, என்று எண்ணும் பழக்கம் முற்காலத்தில் உண்டாயிருந்தது. இலக்கங்களை எழுத நேர்ந்தபோது ஒன்றுக்கு ஒரு கீறும், இரண்டுக்கு இரண்டு கீறும், மூன்றுக்கு மூன்று கீறும், நான்குக்கு நான்கு கீறும், ஐந்துக்கு V அடையாளமும் எழுதப்பட்டன. அது ஒரு கையைக் குறிக்கும். பத்தைக் குறிக்க X அடையாளம் இடப்பட்டது. அது இரண்டு கைகளையும் குறிக்கும். கணக்குகள் கூழாங்கற்களை எண்ணிப் போடப்பட்டன. கணக்குப் பார்த்தலைக் குறிக்கும், “கால்குலேட்”(Calculate) என்னும் ஆங்கிலச் சொல்லும், கால்குலஸ்(Calculus) என்னும் இலத்தின் சொல்லும் கல் என்னும் அடியாகப் பிறந்தன. கல் என்பது இன்றும் தமிழில் வழங்கும் பழந்தமிழ்ச் சொல்லாகும். கல்லை எண்ணுவது, பலகையில் காய் எண்ணுவதாக மாறிற்று. இன்றும் சீன மக்கள் இவ்வாறு கணக்குப் போடுகிறார்கள். பள்ளிக் கூடப் பிள்ளைகள் பலகைகளில் காய்களை எண்ணிக் கணக்குப் போடப் பழகுகிறார்கள். இவ்வாறு கைவிரல் எண்ணுவதிலிருந்து, இன்றைய கழித்தல், கூட்டல், வகுத்தல், பெருக்கல் முதலிய கணக்குப் போடும் பழக்கங்கள் சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்தன. இன்று, கணக்குப்போடும் இயந்திரங்கள் உள்ளன. கணக்குக்குப் பின் உள்ளது அளவை. முற்கால மக்கள் விரல், சாண், அடி, முழம், பாகம் எனத் தமது உறுப்புகளைக் கொண்டே அளந்தார்கள். பின்பு இவற்றுக்குப் பதிலாக வில், கோல் முதலியன பயன்படுத்தப்பட்டன. வில்லால் அளக்கப்படும் தூரம் ‘விற்கிடை’ எனப்பட்டது. கூப்பிடும் தூரம் ‘கூப்பிடு’ (ஒருவன் கூப்பிடும் சத்தம் கேட்கும் தொலைவு) நிறுத்தல் அளவை, நெல்லெடை, தலைச்சுமை, ஆட்சுமை என்பதுபோல் அளக்கப் பட்டன. பொன் குன்றிமணி, மஞ்சாடி, கழஞ்சு என்பன போன்ற நிறைகளால் நிறுக்கப்பட்டன. விஞ்ஞானம் விஞ்ஞானம், மந்திர வித்தையிலிருந்து வளர்ச்சி அடைந்தது. முன்பு மந்திர வித்தைக்காரராக இருந்த குருமார், தமது மந்திர வித்தை பலிக்காத இடத்து வேறு உபாயங்களைக் கையாண்டனர். உரோமாபுரியில் குருமார், நிலத்துக்குக் கீழாக நீராவியைச் செலுத்திக் கோயிற் கதவைத் திறக்கவும், உலோகத்தால் செய்த கிளியைப் பாடுவிக்கவும் அறிந்திருந்தனர். குருமார் பல மூலிகைகளைக் கண்டுபிடித்து நோய்களைக் குணப்படுத்தி, அது மந்திரத்தால் முடிந்தது எனக் கூறினர். பழைய வைத்திய முறைகள் மந்திர வித்தையோடு சேர்ந்து இருப்பதற்கு இதுவே காரணம். முடிவுரை மனிதன் தோன்றிப் படிப்படியே அறிவாலும் கலைகளாலும் வளர்ச்சி அடைந்த முறைகளைக் கூறும் நூல் “மனித வளர்ச்சி நூல்”(யவோசடியீடிடடிபல) எனப்படுகின்றது. இக் கருத்துகளை எல்லாம் இச்சிறு நூலில் விரித்தல் இயலாமையின், பொது மக்கள் இக் கருத்துகளைப் பொழிப்பாகப் பயிலு மாறு இந் நூல் சுருங்க எழுதப்படலாயிற்று. எஎஎஎ 1 2 1. Early man was savage, stupid and obscene. He is represented today as inmates of goals and lunatic asylums. Crime and lunacy are atavistic, showing stage. - Foot prints of the past, J.M. Wheeler. 1. Moses himself is said to have made a brazen serpent which down to Hezakeal’s time continued to be worshipped at Jerusaleme as an image of Jehovah -Encyclopaedia Britannica. 1. Another emblem of God only once referred to is the snake. The snake is one of the most common symbols of Siva and modern Hinduism. Thus an inscription of Mohenjo-Dara informs us that mind meditates on the snake of the three-eyed one. - Fr. Heras. 2. ‘தமிழர் சமயம் எது?’ ... என்னும் நூலில் காண்க. 1. Chamber’s Encyclopaedia - Serpent worship. 2. It is possible that the worship of Isis may find its foot types in the adoration of the Indian Isi. The worship of the serpent - p. 124. Deane. 1. The origin of civilization and the primitive condition of man—P. 188-Lubbock. 2 Rivers in life—Forlong. 3 Primitive culture—P. 241-E.B. Tylor. 1. The Sun and the Serpent - Chapter X-XI-C.F. Oldham. 15 பழைய பிரான்ஸ் மக்களின் பாம்புக் கடவுள் 14 பழைய உரோமரின் கொடி 3 ஆதித் தாய் தந்தையர் (ஆதாம், ஏவாள், பாம்பு) 4 13 12 5 அமராபதி சிற்பம் 6 11 10 7 தையர் (பினீசியர்) நாட்டுப் பழைய நாணயம் 8 தென்னிந்திய மக்களின் நாகம்மாள் 9 32 17 18 1. ஜாவா மனிதனின் காலம் 475,000 ஆண்டுகள் வரையில். சீனாவில் பீக்கிங் (Peking) என்னும் இடத்தில் பழங்கால மனிதனின் எலும்புகளும் மண்டை ஓடும் 1929ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இம் மனிதன் பீக்கிங் மனிதன் எனப்படுவான். இவன் காலம் 1,000,000 ஆண்டுகள் வரையில். இவனைப்பற்றி அதிகம் தெரியாது. 2. ஜெர்மனியிலே ஹெய்டில்பர்க் (Heidelburgh) என்னும் இடத்தில் பழங்கால மனிதனின் எலும்புகளும் மண்டை ஓடும் 1907இல் கண்டு எடுக்கப்பட்டன. இம் மனிதன் ஹெய்டில் பர்க் மனிதன் எனப்படுவான். இவன் காலம் 300,000 ஆண்டுகள் வரையில். இங்கிலாந்திலே பில்ட்டௌன் (Piltdown) என்னுமிடத்தில் பழைய மனிதனின் எலும்பு களும் மண்டை ஓடுகளும் 1911இல் கண்டு எடுக்கப்பட்டன. இம்மனிதன் பில்ட்டௌன் மனிதன் எனப்படுவான். இவன் காலம் 125,000 ஆண்டுகள் வரையில். 1. 1857இல் ஜெர்மனியில் நிண்டேர்தல் (Neanderthal) என்னுமிடத்தில் பழைய மனிதனின் மண்டை கண்டு எடுக்கப்பட்டது. இம்மனிதன் நிண்டேர்தல் மனிதன் எனப்படுவான். இவன் காலம் 40,000 ஆண்டுகள் வரையில். 2. மனிதரை உண்ணும் சாதியினர் உலகம் முழுமையிலும் காணப்பட்டார்கள். சில சாதியினர் மனித இறைச்சியை வாணிகம் செய்தார்கள். அவர்களிடையே இறந்தவர்களை அடக்கஞ் செய்யும் வேலை இருக்கவில்லை. மேல் காங்கோ(ஆப்பிரிக்கா)விலுள்ள சிறுவரும், பெண் களும், ஆடவரும் இறைச்சியின் பொருட்டு வெளியில் கொண்டு வந்து விற்கப்பட்டார்கள். நியூ பிரிட்டன் தீவில் மனித இறைச்சி, கடைகளில் விற்கப்பட்டது. சாலமன் தீவில் இறைச்சியடிப்பதற்காகப் பெண்கள் கொழுப்பேற்றப்பட்டார்கள். தாகித்தி (Tahiti) தீவிற் போலினீசிய தலைவன் வெள்ளை மனிதனின் இறைச்சிப் பொரியல் வாழைப்பழம் போன்று சுவையுடையதென பெரிலொதி என்பவனிடம் கூறினான். வெள்ளையரின் இறைச்சி அதிக உப்புக் கரிப்புள்ள தென்றும் வெள்ளைக் கப்பற்காரனின் இறைச்சி உண்பதற்கு நல்லதன்று என்றும் வியூசி (Fiji) தீவு மக்கள் கூறினார்கள். - நாகரிகத்தின் வரலாறு - வில்லியம் டூரன்ட். 1. பிரான்சிலே குரோமக்நன் (Cromagnon) என்னுமிடத்தில் 1868இல் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோட்டுக்குரிய மனிதன் குரோமக்நன் மனிதன் எனப்படுவான். இவன் 20,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்தான். 1. பாஸ்க்கு மொழி திராவிட மொழிக்கு இனமுடையதென்றும் திராவிடம், பாஸ்க்கு, சுமேரியம் முதலிய மொழிகள் ஓரினத்தைச் சேர்ந்தனவென்றும் எச். ஜி. வெல்ஸ் கூறியுள்ளார். 31 30 19 20 நெருப்பு உண்டாக்குதல் 29 28 மம்மத்தை குழிக்குள் வீழ்த்தும் பொறிக் கிடங்கு ஹெய்டில் பர்க் மனிதன் 21 1ஜாவா மனிதன் 22 27 1குரோமக்நன் மனிதன் 26 சிம்பன்சி என்னும் மனிதக் குரங்கு 23 24 நிண்டேர்தல் மனிதன் நெருப்பு உண்டாக்க அறிதல் 25 48 சுற்றி ஓட்டை வளர்த்துக் கொண்ட ஒரு கண்ணறை உயிர் பழைய கற்கால மனிதன் கல்லாயுதங்களை செய்தல் 33 34 பழைய கற்கால ஆயுதங்கள்: இடதுபுறத்திலிருப்பவை மூன்றும் கற்கோடாரிகள். வலதுபுறத்திலிருப்பவை இரண்டும் அம்புத் தலைகள். கடற்காய். இது தாவரமன்று; கடலில் வாழும் உயிர். 47 நட்சத்திர மீன் (star fish) 46 கல் அல்லி சொறி மீன் (Jelly fish) பவளப் பூச்சி 35 புதிய கற்கால ஆயுதங்கள். இவை கல் ஈட்டிகள் 36 காட்டு மாடு (குகை மனிதன் தீட்டிய ஓவியம்) ஓலை போன்ற இலையுடைய பூண்டு (fern) கடற் பஞ்சு கடற் பாசி பூக்கும் தாவரம் 45 44 ஒரு கண்ணறை உயிர் வளர்ந்து பிரிந்து பெருகுதல் கடற் சாதாழை பன்றி வேட்டையாடும் காட்சி 37 38 கண்ணறை (cell) 43 42 1. கறுப்பு நிற மக்கள் நீக்ரோவர் எனவும், மஞ்சள் நிற மக்கள் மங்கோலியரென்றும், வெண்ணிற மக்கள் காக்கேசியர் எனவும் அறியப்படுவர். 39 40 41 64 தன்னைச் சுற்றி ஓட்டை வளர்த்துக் கொண்ட ஒரு கண்ணறைக் கடலுயிர் புழு 49 50 கடல் தேள் 1. இன்று உள்ள பூச்சி இனங்கள், 10,000,000. 63 62 மோஆ (moa) என்னும் ஓடும் பறவை இது நியூசிலாந்திற் காணப்பட்டது; இப்பொழுது அடி அழிந்துபோயிற்று. இதன் உயரம் பதினொரு அடி முதல் பன்னிரண்டடி வரையில். மோஆ விலும் பெரிய எபொர்னிஸ் (epornis) என்னும் பறக்காத பறவையும் வாழ்ந்தது. ஒரு கோழி முட்டையின் பருமை 2½ அங்குலநீளம் 1 5/8 அங்குலத் தடிப்பு; மோஆ முட்டை 10½x6 அங்குலம்; தீக்கோழி முட்டை 6x4½ அங்குலம்; எப்போர்னிஸ் முட்டை 13x9 அங்குலம். டொடோ (Dado) என்னும் ஓடும் பறவை. மோஆவைக் கோழிக்கு ஒப்பிட்டால் இது கோழிக்குஞ்சு பருமையுடையது. இது மொறிசஸ் தீவில் காணப்பட்டது. இப்பொழுது அது அழிந்து போயிற்று. நிலக்கரி உண்டான காலத் தாவரங்கள் 51 52 கடற் பூ. இது தாவர மன்று; நீர் வாழ் உயிர் 1. சலமான்டர் (Salamander) பாதி தவளையும் பாதி பல்லியும் போன்ற வடிவுடைய உயிர். இதன் நீளம் நாலடி வரையில். 61 60 பறக்கும் பல்லிகள் வால்ரஸ் இடியேற்றுப்பல்லி 53 54 இகுவானோடன் என்னும் பல்லி முற்காலப் பல்லிகளில் இன்னொரு வகை 59 58 பல்லி இனங்களில் இன்னொரு வகை நத்தை இனங்கள் 55 56 முற்காலப் பூச்சி வகைகள் 57 80 65 66 மம்மத் என்னும் சடையானை முற்காலக் காண்டாமிருகம்; சடையுள்ளது 79 78 1. One fine word about Spiritualism. This branch of magic was known in antiquity. We see it often mentioned in the annals of ancient peoples, and sometimes of such great proportions that kings forbade its practice under severest penalties. The Fathers of the early centuries of the church fulminated against the talking tables in the exorcisms of the same epoch, it is the rapping spirits that they were banning with their conjuration at prayers - Posthumous Humanity- pp. 182, 183-Adolphe D’assier. 2. Dictionary of Philosophy and Psychology 1. A number of striking experiments seems to indicate in the strongest manner possible that, in addition to our physical body, we possess another body of the same shape composed of a sort of ethic or semi fluidic substance, which has given to the supposition that it is composed of matter of a different degree of density or solidity than the matter we know...It is presumed that this body survives the shock of death and that it is the seat of consciousness-or at least consciousness is somehow connected with it - The problems of psychical research-Herward Carrington. 1. Madame D, of St Gaudens - Posthumous Humanity 1. Enigmas of Psychical research P. 228-James H. Hystoph. 2. You can speak with your dead-Show Desmond. 1. I refer to the fact that apparitions (ghosts) are nearly always seen to be clear and distinct as to the head and upper portions of the body, while they taper off to a point and filmy nothingness in the lower limbs so that often the feet are not visible at all - The problems of psychical research P. 38 1. The Civilization of China-Herbert A. Giles. 2. Enigmas of Psychical Research-P. 247 1. Spiritualism and Psychical Research-P. 25. - Arthur-Hill. 1. Posthumous Man-P. 182 1. Posthumous Humanity-P. 8. 2. Ibid-P. 15 1. Posthumous Humanity - P.377 2. The Mysterious Medium - P. 24 - Sydney A. Moseley. 1. The Mysterious Medium - P. 83 - Sydney. P. Moseley. 1. Spirit lights were seen; quasi-human voices were heard; writing was produced without intervention; spirit photography showed the spirit forms hovering about their living relatives; in materialization séances ghostly forms appeared with the features of departed friends. Some mediums were lifted or elevated, in the air; solids were passed through solids; cords and bands were unfastened by unseen hands; messages were written upon slates carefully tied together and removed from human influence; tables were tilted, mysterious messages were written by the platelets; one's private and secret affairs were revealed by mediumistic knowledge - Dictionary of Philosophy and psychology. 1. At the last moment the whole life is reflected in our memory, and emerged from all the forgotten nooks and corners, picture after picture, one event after another...... The man may appear dead, yet from the last pulsation, from and between the last throbbing of his heart and the moment when the last spark of animal heat leaves the body, the brain thinks, and the Ego lives over in whispers. Ye who assist at a deathbed, and find yourselves in the solemn presence of death, especially have yet to keep quiet after death has laid her clammy hand upon the body, Speak in whispers, I say, lest ye disturb the quiet ripple of thought, and hinder the hussy work of the past, casting its reflection upon the veil of the future. - Man: Fragments of Forgotten History - PP 119,120 - Key to Theosophy, H.P. Blavatsky P. 109 1. The Vital Message - P.87 - Arthur Conan Doyle. 2. Shaw Despond - You can speak with your Dead 1. நாம் வாழும் உலகம் முதலாவது, இறந்தபின் நித்திரை கொள்ளுமுலகம் இரண்டாவது; விழித்தபின் வாழும் உலகம் மூன்றாவது. 1. Shaw Desmond-You can speak with your dead. 1. The New Revelation - P. 83 - Arthur Conandoyle. 1. The New Revelation P. 148-149-Arthur Conondoyle 1. Shaw Desmond 1. Mediums are persons who have the faculty of allowing their machinery to be set in operation by minds other than their own. 1. There are two forms of automatic writing: one is the actual hand writing with a pencil or a pen on sheets of paper and the other an even quicker form-is obtained with the aid of the ouija board. The ouija board takes the form of the letters of the alphabet A to Z - and the numbers 1 to 9 being placed in numerical order on a green baize table with a sheet of plate glass on top of them. The value of the ouija board is that it affords an equivalent automatic rapidity to that of the typewriter. The medium places his hand on a small padded pointer. When the massage comes through the hand moves with phenomenal rapidity and the messages are read out. Toward the Stars - P. 230 2. Civilization of China - p. 67-Herbert A, Giles * Psychical research P. 156 - W.F. Barrett. F. R. S. மனித வளர்ச்சி 67 68 எறும்பு தின்னி என்னும் அழுங்கு 77 76 69 70 75 74 71 72 35 அடி 10 1 5 6 8 3 9 4 7 2 1, 3, 5, 9 இவை மறைந்து போன பல்லி இனங்கள். 2. இடியேற்றுப் பல்லி (diplodocus) 105 அடி நீளம். 4. கடல் தேள். 6. மம்மத் என்னும் யானை. 7. டொடோ என்னும் கோழி. 8. மோஆ என்னும் கோழி. 10. பறக்கும் பல்லி. 73 96 81 82 95 94 83 84 93 92 85 86 91 90 87 88 89 112 97 98 111 110 99 100 109 108 101 102 107 106 103 104 105 128 நிலக்கரி உண்டான காலத்தில் காடுகளில் வளர்ந்த மரம்; பூக்காதது கிளைவிட்டுப் பெருகும் ஒரு கண்ணறை உயிர் 113 114 ஒரு கண்ணறை உயிர் 127 126 115 116 125 124 117 118 123 122 119 120 121 144 கொரில்லா 129 130 சிம்பன்சி என்னும் மனிதக் குரங்கு கிபன் என்னும் மேலினக் குரங்கு 143 142 * பில்ட்டௌன் மனிதன் சாவக மனிதனுக்குப் பிற்பட்ட காலத்தவனாக சிலகாலம் கருதப் பட்டான். பின்னர் அவ்வோடு மோசடி எனத் தெரிய வந்தது. - பதிப்பகத்தார். பில்ட்டௌன் மனிதன் நிண்டேர்தல் மனிதன் சாவக மனிதன் 131 132 குரோமக்நன் மனிதன் ஆடை நெய்தல் 141 140 நூல் நூற்றல் ஆதிகால உழவு ஊர்வனவற்றுக்கும் பறவை களுக்கும் இடைப்பட்ட உயிர் 133 134 139 138 ஏரிகளில் வீடு அமைத்து வாழ்ந்த கற்கால மக்கள் 135 136 பழைய கற்கால குடும்பம் உலோகத்தை உருக்குதல் 137 156 இணைப்பு 1 1. ஆதி உயிர்கள், ஆதி மனிதன் தோற்றம். Cavalli-Sforze L.I, and others: THE HISTORY AND GEOGRAPHY OF HUMAN GENES; 1994; Princeton University Press; New Jersey Steve-Jone: THE CAMBRIDGE ENCYCLOPAEDIA OF HUMAN EVOLUTION;Cambridge Uty Press; 1992 Steve-Jones: ALMOST LIKE A WHITE the origin of Life Updated; Doubleday; London; 1999; pp 499; pp 535 Gamble, Clive: TIMEWALKERS, THE PREHISTORY OF GLOBAL COLONIZATION Alan Sutton; London; 1993; pp 309 (Penguin reprint: 1995) TIME,(Jan 17, 2000) Up from the Apes-remarkable new evidence is filling in the story of how we became human NATIONAL GEOGRAPHIC MAGAZINE, (July 2000) : People like us இணைப்பு 2 2. பாம்பு வணக்கம் Jivaratnam : Serpent Worship in India; SIDDHANTA DEEPKIKA Vol VIII-3 (1907-8) Karmarkar, A.P.: An early attempt of the Aryans against the Naga cult; NEW INDIAN ANTIQUARY; Vol V: Nov 1942; pp 184-189 Hornell, James: The ancient village Gods of South India; ANTIQUITY;Vol XVIII-69; March 1944; pp 78-87 இணைப்பு 3 3. மரணத்தின் பின் Koestler, Arthur: THE GHOST IN THE MACHINE-the Pathology of the Human Mind; Hutchinson; London; 1967; pp 384 Schumacher, E.F. A GUIDE TO THE PERPLEXED; Jonathan Cape; 1977 Enright, D.J.: THE OXFORD BOOK OF DEATH; oup: 1983; PP 351 Andrews, Lewis, M: TO THINE OWN SELF BE TRUE; Anchor Press; New York; 1987; pp 222 Midgley, Mary: THE ETHICAL PRIMATE (HUMANS, FREEDOM AND MORLITY) Routledge; 1994; pp 190 Greenfield, Susan: THE HUMAN BRAIN; Phoenix; 1997; pp 206  145 146 155 154 மனிதன் மிண்டியின் பயனை அறிதலும் சக்கரம் அமைக்க அறிதலும் 147 148 முற்கால நீர்க் கடிகாரம் (நாழிகை வட்டம்) 153 152 149 150 151 xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் நூலறிமுகவுரை திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன. திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன. இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு: சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன். 2/7, றாம்ஸ்கேட், அன்புடன் 58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர் கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். கருவிநூல் தந்த ந.சி. கந்தையா தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று. தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை. தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள். மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம். நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. பேரா. கு. அரசேந்திரன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் மனிதன் எப்படித் தோன்றினான்? ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன் எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : மனிதன் எப்படித் தோன்றினான்? ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதற் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20 + 156 = 176 படிகள் : 1000 விலை : உரு. 80 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix xx உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii நூலறிமுகவுரை . . . xi கருவிநூல் தந்த ந.சி.க. . . . xiii பதிப்புரை . . . xv நூல் 1. பாம்பு வணக்கம் . . . 1 2. ஆதி மனிதன் . . . 17 3. ஆதி உயிர்கள் . . . 41 4. மரணத்தின் பின் . . . 73 5. மனிதன் எப்படித் தோன்றினான் . . . 123 xvii xviii xix