தமிழுக்குத் தொண்டாற்றிய பிறநாட்டு அறிஞர்கள் ஆசிரியர் பி. இராமநாதன் க.மு; ச.இ., தமிழ்மண் நூற் குறிப்பு நூற்பெயர் : தமிழுக்குத் தொண்டாற்றிய பிறநாட்டு அறிஞர்கள் ஆசிரியர் : பி. இராமநாதன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2015 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 128 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 120/- படிகள் : 1000 நூலாக்கம் : வி. சித்ரா செல் : 9791140555 அட்டை வடிவமைப்பு : கவி. பாஸ்கர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2. சிங்காரவேலர் தெரு தியாகராய நகர் சென்னை - 600 017. தொ.பே. 2433 9030. நூன்முகம் “எல்லாமே ஏற்கெனவே சொல்லப்பட்டவை தாம்; ஆனால் யாரும் கண்டுகொள்வதில்லை; எனவே நாம் அவ்வப்பொழுது நினைவூட்ட வேண்டியுள்ளது”. “Everything has been said already, but as no one listens, we must always begin again” - அந்த்ரே கைடு (Andre Gide) தமிழுக்கு மறக்கொணாத அருந்தொண்டு ஆற்றிய ஐரோப்பிய - அமெரிக்க அறிஞர்கள் பலராவர். அவர்களில் பெரும்பாலோருடைய அரும்பணிகள் 1800-1980 கால அளவில் நிகழ்ந்தவை. குறிப்பிடத்தக்க முதன்மை வாய்ந்தவர்கள் 50க்கு மேற்பட்டவர்களைப் பற்றியது இப் பகுதி -- இன்றும் வாழ்ந்து பணி செய்து வருபவர்கள் சிலர் உட்பட. 2. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமிழுக்குச் செய்த பணியில் சிறந்தவர்கள் தாம். எனினும் சிலர் பணிகள் வேறு எவரும் செய்திருக்க இயலாத அரும்பணிகள்; வித்தகர்கள் கால்டுவெல், போப், ஹீராஸ், லகோவாரி, வீரமாமுனிவர், பரோ, எமெனோ, வின்சுலோ, கிரால், சுவலெபில், ஹார்ட், லெவிட், ஹகோலா, சாலெக் போன்றவர்கள். இவர்களைப் பற்றிய செய்திகளைச் சற்று விரிவாகத் தெரிந்து கொள்வது தமிழின், தமிழரின் நலனுக்கு உகந்தது ஆகலின் அவ்வாறே தரப் பட்டுள்ளன. ஏனையோர் அரும்பணிகளும் சுருங்கக் கூறப்பட்டுள்ளன. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது என்ற குறளை நினைவு கூர்க. 3. (i) “வெறும் கால முறைப்படியோ, அல்லது வெறும் அகர வரிசைப்படியோ இவ்வறிஞர்களை நிரல்படத்துவதைவிட எந்த வகைப்பணியில் ஈடில்லாத பங்களிப்புச் செய்தனர் என்ற அடிப்படையில் செய்வது நலமெனக் கருதி அவ்வாறே செய்யப் பட்டுள்ளது. (ii) முதல் 16 அறிஞர்கள் தமிழின் தொன்மை, முன்மை, தென்மை, ஞாலமுதன் மொழிக்கு அதன் நெருக்கம் ஆகியவற்றை நிறுவியவர்கள்; தலைசிறந்த வரலாற்று - ஒப்பியல் மொழியியல் வல்லுநர்கள்; மாந்த இனத் தொன்மை நாகரிகங்கள் – மொழி களுக்கும் தமிழுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை நிறுவியவர்கள். (iii) அடுத்து வருபவர்கள் பணிகளைப் பெருமளவுக்கு பின்வருமாறு வகைப்படுத்தலாம்: அ) தமிழ், தமிழ்-பிறமொழி, பிறமொழி - தமிழ் என்றவாறு சிறந்த அகர முதலிகளைத் தொகுத்தமை (பெப்ரிசியஸ், வின்சுலோ போன்றவர்கள்) (ஆ) தமிழ் இலக்கியத்தில் தோய்ந்து, அதன் சிறப்பை ஏனைச் செம்மொழி இலக்கியங்கள், நம் காலத்தில் முதல் நிலை வகிக்கும் மொழிகளின் இலக்கியங்கள், ஆகியவற்றோடு ஒப்பிட்டு தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும் சீர்மையையும் விளக்குதல். (ஜார்ஜ் எல். ஹார்ட், ஏ.கே. இராமானுஜன், சுவெலபில், குரோ, தககஷி) (இ) சிறந்த தமிழ்நூல்களை (இலக்கியங்கள், இலக்கணங்கள்) ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் திறம்பட மொழிபெயர்த்துப் பன்னாட்டறிஞருக்கு உணர்த்தியமை; (வீரமாமுனிவர், கிரால், பேதான்) உ) தமிழ் நூல் பட்டியல் தொகுத்தோர் (கிரிகரி ஜேம்ஸ், வில்லியம் டேலர்.) 4. பொருளடக்கம் 62 பிரிவுகளாக அமைந்துள்ளது. எனினும் ஏறத்தாழ நூறு அறிஞர்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. ஒரு சிலரைப் பொறுத்தவரைஅவரவருக்குத் தனிப் பிரிவு தருவதற்கான வாய்ப்பின்மையின் அவரவர் செய்தவகைப் பணியில் முன்னனியில் நிற்போர் பற்றிய பிரிவின் கீழ் அன்னோர் பற்றிய தகவல்களும் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. 5. தக்க ஆதார நூல்கள், இதழ்கள் அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தந்த அறிஞரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்புவோர் படித்தற்குரிய நூல்கள், கட்டுரை கள் உரிய இடங்களில் தரப்பட்டுள்ளன. இவ்வறிஞர்கள் அனைவரைப் பற்றிப் பொதுவாகவோ அந்தந்த நாட்டை / சமயக்குழுவை / அமைப்பைப் பற்றியோ அறிய விரும்புவோர் பார்வைக்காக பின்வரும் சுருக்கமான நூற்பட்டியலும் தரப்படுகிறது. 6. “தமிழுக்குத் தொண்டு செய்த” என்று இந்நூலின் தலைப்பு சுருக்கமாக இருப்பினும், தமிழுக்கு, தமிழியத்துக்கு தமிழக மக்களுக்குப் பல துறைகளிலும் தொண்டாற்றிய பலநூறு பிறநாட்டுச் சான்றோர்களில் முதன்மை வாய்ந்த சிலரைப் பற்றி மட்டுமே இந்நூலில் ஓரளவு குறிப்பிட இயன்றது. இந்நூலை வெளியிடும் தமிழ்மண் பதிப்பக இளவழகனாருக்கு என்றும் நன்றியுடையேன். நூற்பட்டியல் James, Gregory 2000. Colporul: A history of Tamil dictionaries: Chennai: Cre - A. Lehmann, Arno, 1956. It began at Tranquebar: The history of the first Protestant Mission in India Madras: CLS H 352 (German original published in 1955 at Berlin) Manickam (2004 - 05) “Christian missionaries and Tamil Studies: their contribution to Dravidian Culture” [2004 March seminar paper] “Dravidian studies” Kuppam II- 4 and III 1-4: pp279-300. மாஸ்கரனேஸ், ரம்போலா 1972 கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்; திருச்சி மீனாட்சிசுந்தரம், கா 1974 “The Contribution of European Scholars to Tamil Studies சென்னைப் பல்கலைக் கழகம் நஜ்மா. மு, மற்றும் மூவர் (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு வழிகாட்டுதலின்படி Ph.D. ஆய்வு செய்தோர் நடத்திய கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுப்பு) 2012காஞ்சி, சென்னை. வேங்கடசாமி, மயிலை சீனி 1947கிறித்தவமும் தமிழும். மோகனவேலு சி.எஸ். 1993 German Tamilology: German contributions to Tamil language, literature and culture during 1700 - 1945; Madras: SISSW. Leif walter laif. 1971/1977 India and the Germans: 500 years of Indo- German contact (பக். 350: தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் பக். 35-65இல்). சண்முகம், செ.வை (1993): கிறித்துவ அறிஞர்களின் இலக்கணப்பணி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113. - பி. இராமநாதன் பதிப்புரை இந்நூலைத் தமிழ்மண் பதிப்பகத்திற்காக உருவாக்கித் தந்துள்ளவர் எம்பதிப்பக நூலாசிரியர்களுள் ஒருவரான பி. இராமநாதன் ஆவார். இவருடைய தொன்மைச் செம்மொழி தமிழ்; (2007); தமிழர் வரலாறு (இன்றைய நோக்கில்) – பண்டு முதல் இன்று வரை; (2008) உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ் (2009) தொல்தமிழியச் சிந்து நாகரிகம் (2012) போன்ற சிறந்த நூல்களை வெளியிட்டுள்ளோம். இந்நூல்கள் அனைத்துமே தமிழ், தமிழர் தொன்மையையும் முன்மையையும் பல்வேறு புலங்களின் (various disciplines of sciences and humanities)) இன்றைய ஆதாரங்களுடன் நிலை நாட்டுவனவாகும். 2. இந்நூல் பிறநாட்டுத் தமிழறிஞர், மொழியியலறிஞர், பிறதுறையறிஞர் ஆகியோர் தமிழுக்கு ஆற்றியுள்ள மறக் கொணாத தொண்டுகளை (தக்க வரலாற்றுக் குறிப்புகளுடன், விளக்குகிறது. இவ்வகையில் முன்னோடியும், வேறு எவரும் செய்யாத தொண்டைத் தமிழுக்கு உரிய காலக்கட்டத்தில் செய்தவர் கால்டுவெல் ஆவார். அவர் 1856இல் வெளியிட்ட திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் A Grammar of the Dravidian or South Indian family of languages என்ற நூல்தான் தமிழின் தொன்மை, முன்மை ஆகியவற்றை நிலை நாட்டும் பல்வகை ஆய்வுகள் பிற்காலத்தில் நடந்திட வேராகவும் வழிகாட்டியாகவும் அமைந்தது. அதுவரைத் தமிழிய மொழிக் குடும்பம் என்று வழங்கிய பெயருக்கு பகரமாக மொழியியலில் ஒரு இடுகுறிப் பெயராக ‘திராவிட மொழிகள்’ என்ற சொற் றொடரை கால்டுவெல் தான் உருவாக்கினார். ஸஎனினும் 1885இல் ஜி.யு. போப் தமிழிய மொழிக் குடும்பம் என்ற பெயரே சாலப் பொருந்துவது என்று வலியுறுத்தியுள்ளார். எல்.வி. இராமசாமி ஐயரும் பின்னர் இக்கருத்தை வழிமொழிந்துள்ளார்.] 3. கால்டுவெல், போப் ஆகிய சான்றோர்கள் மட்டுமன்றி கி.பி. 17ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழுக்காகவும் (மொழி, மொழியியல், இலக்கியம்) கலை, பண்பாடு சமுதாயம், சமயம் வரலாறு முதலிய புலங்கள் சார்ந்தும் அரும்பணியாற்றி யுள்ள வீரமாமுனிவர், சீகன்பால்கு, ஹொய்சிங்டன், ஹீராஸ், பரோ, எமெனோ, அந்திரநாவ், சுவலெபில் முதலிய பல பிறநாட்டு அறிஞர்களுக்கும்; நம் காலத்திலும் தமிழின் தொன்மை, முன்மை, சிறப்பு ஆகியவற்றை நிறுவிவரும் அறிஞர்களான ஜார்ஜ் எல். ஹார்ட், பிரான்சுவா குரோ, அஸ்கோ பர்போலா, எவா வில்தன், ஜரோஸ்லாவ் வாசக், ஸ்தீபன் ஹில்யர் லெவிட், ஹெச்.பி.ஏ. ஹகோலா, பெனான் ஸ்பிக்னீயூ சாலெக் போன்ற அறிஞர்களுக்கும் நன்றி பாராட்டுமுகத்தான் தமிழுக்குத் தொண்டாற்றிய செய்த பிறநாட்டறிஞர்கள் என்னும் நூலை வெளியிடுகிறோம். - கோ. இளவழகன் பொருளடக்கம் அ. தமிழின் தொன்மை, முன்மை, தென்மை, மாந்தன் முதன் மொழிக்கு அதன் நெருக்கம் ஆகியவற்றை நிறுவியவர்கள் 1. இராபர்ட் கால்டுவெல் ................................................................................................13 2. ஜார்ஜ் அக்லோ போப் ..............................................................................................17 3.[தமிழுக்கு கால்டுவெல், போப் செய்த பணிகளை ஒப்ப கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளுக்குத் தொண்டாற்றிய] கிட்டல், குந்தர்த், பிரௌன் ........................................................................................................................................22 4. ஹென்றி ஹீராஸ் .......................................................................................................24 5. என். லாகோவாரி .......................................................................................................27 6. தாமஸ் பரோ...............................................................................................................29 7. மரே பார்ன்சன் எமெனோ...........................................................................................31 8. ஆந்த்ரே எப் ஸ்ஜோபெர்கு .........................................................................................33 9. கமில் வாக்லாவ் சுவெலபில் .......................................................................................35 10. சுசுமு ஓநோ...............................................................................................................37 11. எம்.எஸ். அந்திரநாவ்.................................................................................................38 12. ஜரோஸ்லாவ் வாசெக் ..............................................................................................39 13. ஸ்தீபன் ஹில்யர் லெவிட் .........................................................................................40 14. அஸ்கோ பர்போலா .................................................................................................43 15. ஹெச். பி.ஏ. ஹகோலா ............................................................................................47 16. பெனான் ஸ்பிக்னீயு சாலெக் ....................................................................................50 ஆ. தமிழுக்கு அகராதி, இலக்கணம், நூற்பதிப்பு, பிறமொழிப் பெயர்ப்பு முதலிய துறைகளில் சிறந்த பணி செய்தவர்கள்; தமிழ் இலக்கியங்கள் (குறிப்பாகச் சங்க இலக்கியங்களின்) உயர்தனிச் சிறப்பைத் தமது பன்மொழிப் புலமை அடிப்படையில் நிறுவியவர்கள்; தமிழியல் சார்ந்த வரலாறு, சமுதாயவியல், மாந்தவியல், அரசியல், பண்பாட்டியல் துறைகளில் நுண்மாணுழை புலமிக்க கருத்தாக்கங்களைத் தந்தவர்கள் 17. ஹென்றிக் ஹென்ரிகஸ் ...........................................................................................52 18. அந்தாவோ தா புரோயன்சா .....................................................................................54 19. ராபர்ட் தெ நொபிலி .................................................................................................55 20 வீரமாமுனிவர்............................................................................................................57 21. அபே ஜே. ஏ. தூபோ ................................................................................................59 22. பர்த்தொலொமியோ சீகன்பால்கு .............................................................................62 23. பிரான்சிஸ் வைட் எல்லிஸ் .......................................................................................64 24. ஜான்பிலிப் பெப்ரிசியஸ்...........................................................................................67 25. ஜான்பீட்டர் ராட்லர் ..............................................................................................69 26. மிரன் வின்சுலோ ......................................................................................................70 27. கிரிகரி ஜேம்ஸ் .........................................................................................................73 28. ஹென்றி ஆர். ஹாய்சிங்டன் ....................................................................................74 29. வில்லியம் டேலர்.......................................................................................................76 30. சாமுவேல் பிஸ்க் கிறீன் ............................................................................................78 31. வில்லியம் ஹாய்ல்ஸ் துரு .........................................................................................79 32. பீட்டர் பெர்சிவல் ..................................................................................................80 33. கார்ல் கிரால் .............................................................................................................81 34. ஹுல்ட்ஸ் .................................................................................................................85 35. ஜோவி, தூப்ரேல் ......................................................................................................85 36. ஹெர்மன் பேதான் .................................................................................................86 37. ஹில்கோ வியார்தோ ஸ்கோமரஸ் ...........................................................................86 38. அல்ரிக் நிக்லாஸ் அம்மையார் ..................................................................................87 39. எவா. வில்தன் அம்மையார்.......................................................................................88 40. தாமசு லெமான் .........................................................................................................89 41. ஜூலியன் வின்சன்...................................................................................................89 42. ஜுல்ஸ் லாக்.............................................................................................................91 43. பிரான்சுவா குரோ.....................................................................................................92 44. ஜுன் லக் செவிலார்டு ..............................................................................................97 45. டேவிட் சுல்மன் ..................................................................................................98 46. செமியோன் ருதின் .................................................................................................100 47. அலெக்சாந்தர் துபியான்ஸ்கி ..................................................................................102 48. ஜார்ஜ் எல் ஹார்ட் ..................................................................................................103 49. அ.கி. இராமானுசன் ...............................................................................................105 50. பிராங்க்ளின் சி. சௌத்வொர்த் ...............................................................................106 51. ஹரால்டு எப்.ஷிப்மான்...........................................................................................108 52. சான்போர்டு ஸ்டீவர் ..............................................................................................109 53. ஜான் ரால்ஸ்டன் மார்.............................................................................................110 54. ஆர். ஈ. ஆஷர் .........................................................................................................113 55. தகநோபு - தககஷி ..................................................................................................115 56. எமானுயெலா பநத்தோநி .......................................................................................115 57. பீட்டர் ஷால்க் ........................................................................................................116 58. மார்டின் கெஸ்டைன் ..............................................................................................116 59. லெஸ்லி சி. ஆர்.......................................................................................................117 60. கில்பெர்ட் ஸ்லேடர் ................................................................................................118 61. டேவிட் வாஷ்புரூக் மற்றும் மூவர் ...........................................................................120 [1850 முதல் தமிழக வரலாறு, சமூகவியல் துறைகளில் ஆய்வு நூல்களை வெளியிட்டவர்கள்] 62. வேறு சில அறிஞர்களைப் பற்றிய சிறு குறிப்புகள் .................................................122 தமிழுக்குத் தொண்டாற்றிய பிறநாட்டு அறிஞர்களின் பெயர்கள் - ஆங்கில அகர வரிசைப்படி .............................................................125  1 இராபர்ட் கால்டுவெல் Robert Caldwell (மே திங்கள், 1814 - ஆகஸ்டு 25, 1981) ஸ்காட்லாந்து சார்ந்த இவர் பெற்றோர் அயர்லாந்தில் சில ஆண்டுகள் வசித்தபொழுது அங்கு பிறந்த இவர், பெற்றோர் தாய்நாடு திரும்பியபொழுது தாமும் ஸ்காட்லாந்து போந்து கிளாஸ்கோ நகரில் வசித்தார். 2. தமிழிய (திராவிட) மொழிகளின் ஒப்பிலக்கணத்தை 1856இல் எழுதித் தமிழின் தமிழரின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், (இரண்டாவது பதிப்பு 1875). இன்றுள்ள மொழிகளில் தமிழும் தமிழிய மொழிக்குடும்பமுமே மாந்தன் முதன்மொழிக்கு மிக நெருங்கியதாயிருக்கலாம் என்ற முடிவை 1856லேயே தேற்றமாகக் குறிப்பிட்டவர். தமிழைக் கருதும் பொழுது கால்டுவெலையும் கருதியாக வேண்டும் என்ற பெருமித நிலையில் உள்ளவர். 3. தமது இருபதாம் வயதில் லண்டன் விடையூழியர் சங்கத்தில் சேர்ந்தார். கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் (அச்சங்கம் அனுப்பிய) மாணவராகச் சேர்ந்து ஈராண்டு பயின்று பி.ஏ .B.A. பட்டம் பெற்றார். இயல்பாகவே கால்டுவெல் நாட்டம் கொண்டிருந்த மொழிகளின் ஒப்பாய்வு Comparative Philology என்னும் துறையில் மேலும் ஆழமாக அவரை ஈர்த்தவர் அவருடைய கிரீக் பேராசிரியர் தானியேல் சான்ட்போர்டு ஆவார். “நாம் வேற்றுமொழிகள் பேசும் நாடுகளுக்குச் சென்றால் அந்நாட்டு மொழிகளையும், ஒப்பாய்வு செய்து மொழியியல் துறைக்கு வளம் சேர்க்க வேண்டும்” என்று அப்பொழுதே சூளுரைத்துக் கொண்டதாக அவர் எழுதியுள்ளார் (“Caldwell Reminiscences” by J.L. Wyatt; 18987) தமிழின், தமிழரின் நல்லூழ், காரணமாக கால்டுவெல் தமிழ்நாட்டில் பணி செய்ய அனுப்பப் பட்டார். மூன்று ஆண்டுகள் சென்னையில் தங்கிய பின்னர் திருநெல்வேலியில் இடையன் குடிக்கு அவர் இறை பணியாற்றச் சென்றார். அவர் சென்னையில் வாழ்ந்தபொழுது ஏற்கனவே தமிழ்ப்பணியிலும் தமிழாய்விலும் ஈடுபட்டிருந்த போப், துரு, வின்ஸ்லோ, பவர் (Bower) ஆகியோரொடு பழகித் தம் தமிழறிவைப் பெருக்கிக் கொண்டார். பின்னர் இடையன் குடியில் மறைப்பணி ஆற்றத் தொடங்கிய பின்னரும் மொழியியலாராய்ச்சியில் இடையறாது கடுமையாக 15 ஆண்டுகளுக்கு மேல் உழைத்துத் தமது அரிய ஒப்பிலக்கண நூலை வெளியிட்டார். 4. உலக மொழிகளிலேயே தமிழின் தொன்மை - முன்மை யையும் முதன்மையையும் முதன் முதலில் கண்டறிந்து சாற்றியவர் இவரே: “தமிழிய மொழிகளில் உள்ள சில சொற்கள்/வேர்கள் மாந்தன் முதன்மொழியில் இருந்திருக்கக் கூடிய வடிவங்கள் எனக் கூறலாம்.” ஒருபு ற ம் தமிழிய மொழிகளுக்கும் மறுபுறம், இந்தோ - ஐரோப்பிய மொழிகள் செமித்திய மொழிகள், எலாமைட் மொழி, சித்திய (இப்பொழுது “உரால்-அல்தாய்க்”) மொழிகள்,சப்பானிய மொழி, ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மொழிகள் ஆகியவற்றுக்கும் இடையே காணும் இலக்கண ஒப்புமைகள், சொல் ஒப்புமைகள் ஆகியவற்றைப் பற்றி முதன்முதலாக ஆணித்தரமான ஆழ்ந்த பல செய்திகளைத் தந்தார். இம்மொழிக் குடும்பங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரியுமுன்னர் இருந்த (மாந்தன் தொன் மொழியின்) நிலையை விளக்குவதற்கான ஒளியை ஞால முதன் மொழிக்கு மிக நெருங்கிய தமிழிய (திராவிட) மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளிலிருந்துதான் பெற்றாக வேண்டும் என்பதை கால்டுவெல் தான் நிறுவினார். அவர் நூல் என்றும் நிலைத்து நிற்கும் தன்மை பெற்றது. தமிழ் மொழியியல் - இலக்கண ஆய்வு குறித்து எழுதப்பட்ட நூல்களில் தலையாயது. பரந்துபட்ட சான்றுகள், நுட்பமான விளக்கம், கூரிய ஆராய்ச்சி, ஒப்பியலாய்வு நிறைந்த நூல். 5. இருபதாம் நூற்றாண்டிலும், நம் காலத்திலும் நூஸ்திராதிக், ஞாலமுதன் மொழி ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோர் அனைவருக்கும் முன்னோடி அவர். அவருடைய 1856/1875 நூலை அவர்கள் ஆழ்ந்து கற்பார்களானால் இன்றும் அவர்களுக்குப் புதிய ஒளி தர வல்லவை அவர் ஆய்வுகள். 6. இன்று பல துறை சார்ந்த பன்னாட்டறிஞர்களின் (ஜே.எச். கிரீன்பெர்க், தால்கோபால்ஸ்கி, ஏ.ஆர்.பொம்ஹார்டு, வாக்லாவ் பிலாசக், காலின் மாசிகா, லெவிட், ஹகோலா முதலிய வர்களின்) ஒருமித்த கருத்தின்படி, (i) உலகில் இன்றுள்ள 700 கோடி மக்களின் மூதாதையராகிய மிகச் சிறிய குழுவினர் ஆப்பிரிக்காவில் இன்றைக்கு முன்னர் (இ.மு) B.P. 1,50,000ஐ ஒட்டித் தோன்றிய பின்னர் அவர்களில் இருந்து பிரிந்த ஒரு சிறு குழுவினர், இ.மு. 70000-50000ஐ ஒட்டி ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்காக தென்னிந்திய கடலோரக் கண்டத்திட்டு (Continental Shelf abutt ing South India) ஆஸ்திரேலியாவரைப் பரவினர். மாந்த முதன்மொழி இ.மு. 70000-50000க்கு முன்னரே தோன்றி விட்டது. தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் தமிழ் மொழி பேசுநர் கி.மு. 50000லிருந்தே தொல் குடிகளாக வாழ்ந்து வருகின்றனர். (ii) தொல் தமிழிய (திராவிட) மொழி பேசுநர் இந்தியாவிலிருந்து வடக்கே பரவிய பிற்றைக் காலகட்டத்தில் தான் இந்தோ ஐரோப்பியம்; செமித்தியம், உரால் – அல்தாய்க் முதலிய மொழிக் குடும்பங்கள் கிளைத்தன. [பின் இயல்களில் லெவிட், ஹகோலோ பற்றிய குறிப்புகளையும் காண்க.] 7. கால்டுவெல் காட்டிய வழியில் தொடர்ந்து முறையான மொழியியல் கோட்பாடுகளின்படி ஆய்வு செய்தவர்கள், செய்பவர்கள் பலருள் (குறிப்பிடத்தக்கவர்கள்: நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்; ஞா. தேவநேயப் பாவாணர், எச்.எஸ். டேவிட், இரா. மதிவாணன், அருளி, கு. அரசேந்திரன், ஸ்தீபன் ஹில்யர் லெவிட், எச்.பி.ஏ. ஹகோலா போன்றவர்கள்) கால்டுவெல் 1856இல் வெளியிட்ட கோட்பாட்டை - அதாவது தமிழே ஞால முதன்மொழிக்கு மிக நெருங்கியது என்பதை மெய்ப்பித்து விட்டனர் எனலாம். தமிழ்மொழி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் பெயர் கால்டுவெல். 8. இவருடைய வரலாறை “கால்டுவெல் ஐயர் சரிதம்” என்னும் பெயரில் 130 பக்கங்களில் திறம்பட தீந்தமிழில் இரா.பி. சேதுப்பிள்ளை எழுதி 1944இல் வெளியிட்டா. (பழனியப்பா பிரதர்ஸ் அதன் மறுபதிப்புகளைக் கொணர்ந்துள்ளது) அரிய செய்திகளுக்காக மட்டுமன்றி அழகுநடைக்காகவும் தமிழர் அனைவரும் படிக்க வேண்டியது அந்நூல். அந்நூலின் முடிவுரையில் வரும் மறக்கொணாத பகுதிகள்:- “ஐயர் இறந்தமையால் அருங்கலையுலகம் சிறந்த அறிஞரை இழந்தது. தமிழ்நாடு தகை சான்ற மைந்தனை இழந்தது. வேத விளக்கச் சங்கம் விழுமிய தொண்டரை இழந்தது. கற்றறிந்தடங்கிய நற்றவப் பெரியாரது பிரிவறிந்து பரிவு கூர்ந்தார் பலர்.” “தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு, கற்றறிந்தடங்கிய நற்றவச் செவ்வராய், தம்மையே தமர்க்கு நல்கிய தனிப்பெருந் தொண்டராய் விளங்கிய தகை சான்ற கால்டுவெல் ஐயரை மனக்கோயிலுள் அமைத்துப் போற்றுதல் தமிழ்நாட்டு மக்கள் கடனாம்.” 9. ஆங்கிலத்தில் 2007இல் ஓய். வின்சென்ட் குமார தாஸ் “Robert Caldwell: A scholar missionary in colonial South India” என்ற பெயரில் கால்டுவெல் வாழ்க்கை வரலாற்றை 301 பக்க நூலாக வெளியிட்டுள்ளார். 10. தமிழ்ப் பொழில் 34-44: (1958 ஆகஸ்டு கால்டு வெல் நூற்றாண்டு மலரின்) பக் 97-136 இல் கால்டுவெல் தமிழ்ப்பணி பற்றிய தமிழ்க்கட்டுரையையும் IJDL(Jan1989; xviii - 1 பக். 42 - 66) இதழில் அக்கட்டுரைச் செய்திகளின் ஆங்கில வடிவையும் காணலாம். 2 ஜார்ஜ் அக்லோ போப் George Uglow Pope (1820 ஏப்ரல் 24 -- 1908 பிப்ரவரி 11) இங்கிலாந்து நாட்டறிஞர் தமிழ் இலக்கியச் சிறப்பை உலகுணரச் செய்த மேலை நாட்டறிஞர் குறிப்பிடத்தக்க சிலருள் போப் ஒருவர். கால்டு வெல்லுக்கு இணையாகத் தமிழரின் நன்றிக்குரியவர். 2. திருக்குறள் முழுவதையும் ஆங்கிலப்படுத்தி முதன் முதலாக 1886 இல் வெளியிட்டுள்ளார். செய்யுள் வடிவிலேயே குறளை மொழிபெயர்த்துள்ளார். குறள் நூலின் மொழியியல் தன்மை, இலக்கணம் முதலியவை பற்றியும் முதன்முதலில் இந்நூலில் ஆய்வு செய்துள்ளார். 3. பின்னர் 1894இல் நாலடியாரை யும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவருடைய நோக்கம் ஐரோப்பிய அறிஞர்களுக்குத் தமிழ் இலக்கியங்களை அறிமுகப்படுத்தலும் அவற்றை ஆராயும்போது ஐரோப்பிய ஆய்வுமுறைகளைப் பின்பற்றச் செய்தலும் ஆகும். நாலடியார் இலக்கண நடையையும் ஆய்வுசெய்து “ஆங்கிலத்தில் உள்ள `சானட்’ வகைப் பாடலைப் போலவே, வெண்பாவும் இலக்கணக் கட்டுப் பாடுடைய சிறந்த அமைப்புக் கொண்டது” என்று பாராட்டு கிறார். மொழி பெயர்த்த நூல்களில் எல்லாம் அகராதியும், சொல்லடைவும் (Concordance) தந்துள்ளார். அவற்றில் வேர்ச் சொற்கள், தோற்றம், வளர்ச்சி போன்ற பல்வேறு செய்திகள் தரப்பட்டுள்ளன. 4. சைவ சமயத்தையும் தமிழ் மக்களையும் பிற மொழியினர் நன்கு புரிந்து கொள்வதற்காக 1900 இல் `திருவாசகத்’ தையும் போப் மொழிபெயர்த்தார். பின்னிணைப்பில் சைவ சமயத்தின் கொள்கைகளை நன்கு விளக்கியுள்ளார். உலகச் சமயங்களில் தமிழரின் சைவ சித்தாந்த சமயமும் மிகச் சிறந்த இடம் வகிக்கிறது என்பதை நிறுவினார். [1982 ïš Glenn YocumHymns to the dancing Siva (a study of Tiruvacakam) (New Delhi) நூலை வெளியிட்டுள்ளார்.] 5. தமிழகத்தில் அவருடைய கல்விப்பணி பின்வருமாறு அமைந்தது:- 1842-1849 தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் கிறிஸ்துவ சமயப் பரப்புநர் பயிற்சிப்பள்ளி Seminary தலைவராகப் பணி. (பள்ளி ஆசிரியர், மதம்பரப்புநர் (catechists); பாஸ்டர் ஆகிய பணிகளுக்காக 200 இளைஞர்களைப் பயிற்றுவித்தார்.) 1849இல் இங்கிலாந்து சென்றார்; மணஞ் செய்து கொண்டார். 1851-1857: தஞ்சாவூரில் பீட்டர் கலாசாலைத் தலைவர். 1858-1870 ஒத்தகமந்து (உதகை) நகரில் தாமே வெள்ளை அதிகாரிகள் குழந்தைகளுக்காக ஒரு பள்ளி (grammar school) நடத்தினார். 1871-1882 பெங்களூர் பிஷப் காட்டன் பள்ளி முதல்வர். 6. போப் 24-4-1820இல் (இன்றைய கனடா நாட்டில் உள்ள) நோவா ஸ்கோஷியாவை ஒட்டிய பிரின்ஸ் எட்வர்ட் தீவில் ஜான் போப் -- கேதரின் அக்லோ இணையருக்குப் பத்துக் குழந்தை களின் தலைச்சனாகப் பிறந்தவர். லண்டனில் பயின்றவர். 1882இல் தமிழ்நாட்டில் பணிமுடித்து இங்கிலாந்து சென்ற பின்னர் 1885-1908 கால அளவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளுக்குப் பேராசிரியராகப் பணியாற்றினார். அக்காலத்தில் அவர் செய்த அரும்பெரும் மொழிபெயர்ப்புப் பணிகளை மேலே கண்டோம். 7. போப் இலக்கியப் பணிகளில் ஆழ்ந்து விட்டாரே யொழிய மொழியியல் புலமையும் மிகுந்தவர்; ஆனால் மொழி யியல் ஆய்வில் தொடர்ந்து ஈடுபடவில்லை. தமது 1855 A hand book of the Tamil language நூலில் அவர் பின்வருமாறு சாற்றியுள்ளார்: `தமிழிய மொழிக்குடும்ப மொழிகள், சம்ஸ்கிருத மொழியை ஒத்த தொன்மை உடையதும், அது தோன்றிய காலத்திலேயே தோன்றியதும் ஆன மொழியின் பிரிவுகளே ஆகும். கிரீக், காதிக் (ஜெர்மன்), பெர்சியன் போன்ற (இந்தோ - ஐரோப்பிய) மொழிகளோடு சமஸ்கிருதம் தன் உறவைக் காட்ட இயலாத பல விஷயங்களிலும் தமிழிய மொழிகளுக்குத் தெளிவான உறவுள்ளமை இன்றும் காணக்கிடக்கிறது. “Tamulian [to be christened “Dravidian or South Indian” by Caldwell in 1856] languages are probably disjecta membra of a language co-eval with Sanskrit and having the same origin with it. They certainly contain many traces of clear connection with the Greek, the Gothic (German), the Persian and other languages of the same family in points even where Sanskrit presents no parallel”. 9. தென்னிந்தியாவில் வழங்கிய தமிழிய மொழிகளை ஒரே இனம் என்று கால்டுவெல் நிறுவியதைப் போப் அவர்களும் ஏற்றபோதிலும், கால்டுவெல் அம்மொழிக் குடும்பத்துக்கு “திராவிடம்” எனப் புதுப்பெயர் சூட்டியதை போப் ஒப்புக் கொள்ளவில்லை. போப் Journal of Royal Asiatic Society of Great Britain and Ireland XVII, 1855, 163-82 பக்கங்களில் எழுதிய “On the study of South Indian vernaculars ” என்னும் கட்டுரையில் “திராவிட மொழிகள்” என்ற பெயரைப் பயன்படுத் தாமல் “தென்னிந்திய மொழிகள்” என்றே சுட்டியுள்ளார். மேலும் தமது 1886 திருக்குறள் ஆங்கில வடிவ நூலின் முன்னுரையிலும் அவர் தென்னிந்திய மொழிக் குடும்பத்தை தமிழிய மொழிக் குடும்பம் என அழைப்பதே சரி என்பதைப் பின்வருமாறு கூறுகிறார்: “தமிழே தென்னிந்திய மொழிகளின் தாய். அம்மொழிக் குடும்பத்தைத் தமிழிய மொழிக் குடும்பம் என்று அழைப்பதே பொருத்தம். காரணம் (தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய) பிற எந்த மொழியின் மொழியியல் ஆய்வுக்கும் தமிழ்தான் வழிகாட்டுவதாகும்.[Tamil] is the mother of the South Indian languages... I prefer to call the family of South Indian language, the Tamilian, as it is certain that for the study of each dialect of them, Tamil must be the language of reference.”” எல்.வி. இராமசாமி (“The Educational Revew” July 1928 pg. 394). ஹெர்மன் பேதான் (Praktische Gramatic der Tamulsprache.. 1943 லீப்சிக் நகரம்) – உம் இக்கருத்தினரேயாவர். Siddhanta Deepika (VIII. iii) 1908 இதழில் ஜே.எம். நல்ல சாமி பிள்ளை வெளியிட்டுள்ள கட்டுரையில் தனக்கு 10.10.1900 அன்று போப் எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வரி வருமாறு “Whenever I die ‘A student of Tamil’ will be inscribed on my monument.” போப் இறந்த பின்னர் அவருடைய இவ்விருப்பத்தை (ஆகஸ்போர்டு நகரம், வால்டன் தெரு St Sepulchre Cemetery யில் உள்ள போப் கல்லறைக் கல்வெட்டு பின்வருமாறு நிறைவேற்றி யுள்ளதை சோமு (“அக்கரைச் சீமையில்” பக். 89) 1961 நவம்பரில் பார்த்தாக எழுதியதை The Mail 9-2-1964 வெளியிட்டது. “ஜார்ஜ் அக்லோ போப் இறையியல் பண்டாரகர்; தென்னிந்தியாவில் பணியாற்றியவர். ஆக்ஸ்பர்டு பல்கலைக் கழகத்தில் சில ஆண்டுகள் தமிழ், தெலுங்கு பயிற்றுநராகவும், பேலியல் கல்லூரிக் கோயில் குரு ஆகவும் இருந்தார். பிறப்பு 24 ஏப்ரல் 1820; மறைவு: 11 பிப்ரவரி 1908. கீழ்த்திசை இலக்கியம் - தத்துவம் இவற்றைப் பரப்புவதற்காக வாணாள் முழுவதும் உழைத்த அன்னாரின் தொண்டை அன்புடன் வியந்து பாராட்டி அவர்குடும்பத்தினரும் தென்னிந்தி யாவிலுள்ள அவருடைய தமிழ் நண்பர்களும் இந்நினைவுக் கல்வெட்டைப் பொறித்துள்ளோம்.” George Uglow Pope, D.D. of South India; some time Lecturer in Tamil and Telugu in the University and chaplain of Balliol college, Oxford. Born 24th April 1820. Died 11th February 1908. This stone has been placed here by his family and by his Tamil friends in South India in loving admiration of his life - long labours in the cause of Oriental literature and philosophy. 10. போப் தமது வாழ்வின் இறுதி ஆண்டுகளில் பழந்தமிழிலக்கியங்கள் பலவற்றில் வழங்கும் சொற்கள், (அவற்றின் பொருள்கள்) ஆகியவற்றை ஆராய்ந்து ஒரு பேரகராதி (லெக்சிகன்) உருவாக்குவதற்கான தரவுகளைத் தொகுத்து வைத்திருந்தார். (அவருடைய 28-5-1905 கடிதம் “I have accumulated great stores of material for an exhaustive Lexicon of the Tamil language”) 1905 தொடக்கத்தில் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் செயல்பட்ட புராடெஸ்டண்ட் அமைப்புகள் வின்ஸ்லோவின் 1862 அகராதியை மேலும் விரிவாக்கிப் பதிப்புக்கும் பணியை மேற்கொண்டன. அவ்வாறு செய்யும் பொழுது பயன்படுத்திக் கொள்ள, தம் தரவுத் தொகுப்பையும் தர போப் இசைந்தார். அவர் இறந்தபின் 1910 தொடக்கத்தில் போப் மகன் (வான் சொமரென் போப்) ஆஸ்திரேலியாவுக்குப் போகும் வழியில் சென்னையில் இறங்கி போப்பின் தரவுத்தொகுப்புகளை கவர்னரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். தமிழ் லெக்சிகனை தொகுக்க உதவிட 16.1.1911 அன்று சென்னை மாகாண அரசு இசைந்தது. அப்பணியை ஜே.எஸ். சாண்ட்லர் தலைமையில் அமைந்த குழுவின் மூலம் செய்திடச் சென்னைப் பல்கலைக் கழகத்துக்கு அரசு ஒப்படைத்தது. லெக்சிகன் பணி 1-1-1913 அன்று மதுரையில் தொடங்கிப் பின்னர்ச் சென்னைக்கு மாற்றப்பட்டது. ஆக தமிழ் லெக்சிகன் பணியில் போப் உழைப்பும் உள்ளது (காண்க;சென்னை கிறித்தவக் கல்லூரி இதழ்கள் 1912-13, 1914-15 ஆகியவற்றில் தமிழ் லெக்சிகன் தொடக்க வரலாறு பற்றி ஜே.எஸ். சாண்ட்லர் எழுதிய இரண்டு கட்டுரைகளை.) 3 [தமிழுக்கு கால்டுவெல், போப் செய்த பணிகளை ஒப்ப] கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளுக்குத் தொண்டாற்றிய கிட்டல், குந்தர்த், பிரௌன் கால்டுவெல், போப் இவர்கள் காலத்தில்வாழ்ந்து ஏனைத் தமிழிய (திராவிட) மொழிகளாகிய கன்னடம், மலையாளம் இவற்றுக்கு இலக்கணம் வரைந்தும் அகராதிகள் இயற்றியும், தமிழிய மொழிகளின் தொன்மைப் பிணிப்பையும் உறவையும் நிறுவிய ஜெருமானிய அறிஞர்கள்: பெர்டினாந்த் கிட்டெல்; ஹெர்மன்குண்டர்த்; ஆகியோரையும்; தெலுங்குக்குப் பெருந் தொண்டாற்றிய சி.பி. பிரௌன்-ஐயும் பற்றியது இவ்வியல். 2. இத்தலைப்பின் கீழ் கிட்டல், குந்தர்த் இருவரையும் பற்றிச் சிறிதளவு குறிப்பிடுவதை இப்புத்தகத்தின் வரம்பை மீறியதாகக் கருதற்க. காரணம் இவர்கள் அவரவர் ஆய்வு செய்த மொழியை நன்கு அறிந்தவர்களான சிறந்த மொழியி யறிஞர்கள் [இப்பொழுது நாம் linguists என்று சுட்டுபவர்களை அன்று philologists என அழைத்தனர்]. சமகாலத்தவரான அவர்களும், கால்டுவெல், போப் முதலியவர்களும் ஒருவருக் கொருவர் தொடர்பு கொண்டு தம் நுண்மாணுழை மிக்க கருத்தாக்கங்களைப் பகிர்ந்து கொண்டவர்கள். ஒருவர் நூல்கள் கட்டுரைகளில் ஏனையோர் கோட்பாடுகளைப் பற்றியும் குறிப்பிட்டு விவாதித்துப் பொருத்தமான முடிவுகளுக்கும் வருவதை அவர்கள் அனைவரின் நூல்களையும் கற்போர் உணர்வர். இவ்விருவர் நூல்கள்:கன்னட - ஆங்கில அகராதி 1894;கன்னட இலக்கணம் [ஆங்கிலத்தில் 1903]; ஹெர்மன் குந்தர்த் Hermann Gundert நூல்கள்: மலையாள இலக்கணம் 1851; மலையாளம் - ஆங்கில அகராதி 1852. 3. இவ்விடத்தில் சி.பி. பிரௌன் Charles Philip Brown (1798 - 1884) தெலுங்குக்கு ஆற்றிய பணியையும் குறிப்பிடுதல் நலம். 1817இல் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரியாக தெலுங்கு மாவட்டங்களில் பணியாற்றினார். தெலுங்கை நன்கு கற்று வேமனர் பத்யங்கள் போன்றவற்றை ஆங்கிலத்தில் பெயர்த்தார். பழைய ஓட்டுச் சுவடிகளில் இருந்த நூல்களைப் படியெடுத்துப் பாதுகாத்தார். சம்ஸ்கிருதம் தழுவிய கிரந்த நடையை விட்டு விவகாரிகத் (உள்ளூர்) தெலுங்கு நடையானது பேச்சிலும் எழுத்திலும் வலுப் பெறச் செய்தார். அவர் பின்னாளில் கூறியது: “1817 இல் தெலுங்கு இலக்கியத்தில் உயிர் இல்லை; 30 ஆண்டுகளில் நான் அதற்கு உயிரூட்டம் தந்தேன். In 1817, I found Telugu literature dead. In thirty years, I raised it to life” (Mangamma, J 1975 Book Printing in India with special reference to the contribution of Europian scholoars to Telugu (1740-1851) Nellore; Bangorey Books.) 4 ஹென்றி ஹீராஸ் Henry Heras (1888-1955) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தான் நிகழ்த்திய பேருரை ஒன்றின் இறுதியில் தன்னை ‘ஸ்பெயின் நாட்டுத் தமிழன் (திராவிடன்)’ எனக் குறிப்பிட்டு 14-3-1942 அன்று நாவலர் இரா. நெடுஞ்செழியன் நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட்டு மகிழ்ந்தவர். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தென்தமிழ் நாட்டிலிருந்தே நாகரிகத்தைத் தமிழர் சிந்துவெளி, எலாம், சுமேரியம், எகிப்து வரை பரப்பினர் என்பதை விளக்கும் Studies in Proto - Indo Mediterranean Culture என்னும் அரிய நூலை (551 பக்கம்) 1953 இல் வெளியிட்டார். இருபதாண்டுகளுக்கு மேல் அவர் சிந்து நாகரிகத்தைப் பற்றிச் செய்து நுண்மாணுழை புலமிக்க செய்திகளை அந்நூலில் நமன்ககுக் கொடையாகத் தந்துள்ளார். சிந்து நாகரிகம் தமிழருடையது என்பதை அன்றே ஹீராஸ் நிறுவியதை இன்று பன்னாட்டுப் பல்துறை அறிஞரும் ஏற்கின்றனர். அந்நூலில் அவர் தமது விரிவான ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் பின்வருவனவற்றையும் (அவை போன்றே புத்தொளி தருவனவான பிறவற்றையும்) தமது முடிவுகளாகத் தந்துள்ளார்; (அ) இந்தோ ஆரிய மொழி பேசுநரின் (சிறு எண்ணிக்கை யில் நுழைவுக்கு முன்னர்) இந்தியாவெங்கும் திராவிட மொழி பேசுநரே வசித்து வந்தனர் (ஹெவிட் 1889; ஹால் 1913)ரிக்வேதம் உபநிஷத்துக்கள் காலத்திலிருந்தே திராவிடத் தாக்கம் (வினைக் கொள்கை, மறுபிறப்பு, யோகம்) உள்ளது. வேத, புராணப் பகுதிகளில் பல பண்டைத் திராவிட நூல்களின் மொழி பெயர்ப்புகளே. [ஹீராசுக்கு 22-11-1942 அன்று எழுதிய கடிதத்தில் வி.எஸ். சுக்தங்கர் `யுதிஷ்டிரன் கதை ஆரியர் வரவுக்கும் ரிக்வேதத்து க்கும் முந்தியது என்பது சரியான கருத்தே’ எனத் தெரிவித்தார்] நாகரிகமற்ற நிலையில் இந்தியாவிற்குள் நுழைந்த இந்தோ ஆரியர் தமது மொழியை சம்ஸ்கிருதமாக (திருந்திய மொழியாக) ஆக்கிக்கொண்டனர். (They converted their rude matter - of - course speach -- a speach of shepherds and husbandmen - into a classical Sanskrit language) திராவிடமொழி பேசுநர் நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கும் தென்இந்தியாவிற்கும் வந்தவர்கள் அல்லர். இங்கிருந்து அங்கு சென்று பின்னர் உலகெங்கும் நாகரிகத்தைப் பரப்பியவர்கள் இவர்களே. இத்துறை ஆய்வுகள் நிறைவடையும் பொழுது திராவிட நாகரிகமாகிய சிந்துநாகரிகம் உலக நாகரிகத்தின் தொட்டில் என்பது ஏற்கப்படும். “the Dravidian of India, after a long period of development in this country, travelled westwards, and settling successively in the various lands, they found their way from Mesopotamia upto the British isles, spread their race -- afterwards named Mediterranean owing to the place where they were known anthropologically -- through the west and made their civilization flourish in two continents, being thus the originators of the modern world civilization.The Mediterranean nations of the ancient world were racial off - shoots of the mighty proto - Indian race” “[After the problems of decipherment of Indus script and those of the migration of Dravidian civilisation out of the India to Elam, Sumeria and the west are solved] India will be acknowledged as the cradle of human civilization.” (ஆ) தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் உருவான திராவிடா (திராவிட மொழிபேசும் இனத்தினர்) ஒரு பிரிவினர் தாம் நிலவழியாகப் படிப்படியாக மேற்கே சென்று சுமேரிய நாகரிகம், சிரியாவில் ஹிட்டைட் நாகரிகம், பொனிசிய (= பாணி) நாகரிகம்; (கிரீட் தீவில்) மினோவன் நாகரிகம் – இத்தாலியில் எத்ருஸ்கன் Tyrrenoi (திரையர்?) நாகரிகம் ஆகியவற்றை உருவாக்கினர். (இ) இன்னொரு பிரிவினர் கடல் வழியாக ஏமன் (எகிப்தியர் `பண்ட்’ என்று அழைத்தது), தென் எகிப்து, லிபியா (காரமாந்தெஸ்), ஐபீரியா (ஸ்பெயின்), பிரிட்டிஷ் தீவுகளில் துரூயித் Druid என்றவாறு பரவினர். ஸதற்கால மாந்த இனம் AMH ஆப்பிரிக்காவில் 1,50,000-இல் தோன்றி கி.மு. 70,000 ஐ ஒட்டி உலகெங்கும் பரவியது; ஒரு பிரிவு தென்னிந்தியக் கரையோர மாகச் சென்று கி.மு. 50000க்குள் ஆஸ்திரேலியாவரைச் சென்றடைந்தது; மைடகாண்டிரியல் மரபணு (Mitochondrial DNA) அடிப்படையில் இன்றைய மரபணு ஆய்வாளர்கள் அறிவியல் பூர்வமாக நிறுவியுள்ள முடிவுகள் ஹீராஸ் 1953ல் தெரிவித்த இக்கருத்திற்கெதிரானதாக இல்லை என்பதை ஓர்க.] மேற்சொன்ன அனைத்துப் பண்டை இனத்தவரும் ஹாமித்தியப் பேரினத்தைச் சார்ந்தவர்களேயாவர். (ஈ) இன்றைய துருக்கியின் பகுதியான அனதோலியா (ஆசியா மைனர்) பகுதியில் பண்டு தெர்மிலய் Termilai என்பவர் வசித்து வந்ததாக ஹெரதோதஸ் (கி.மு. 480-425) கூறும் மக்களும் தமிழரும் ஓரினத்தவரே. 5 என். லாகோவாரி N. Lahovary (-1962) ருமேனியா நாட்டைச் சார்ந்த பல்துறை வல்லுநர் ஆகிய இவர் வியத்தகு வரலாற்று / ஒப்பியல் மொழிப் புலமையும் வாய்ந்தவர். பிரெஞ்சு முதலிய மொழிகளில் தாம் 1950-62 கால அளவில் எழுதிய கட்டுரைகளை ஆங்கிலப் படுத்தி இவர் திராவிடர் தோற்றமும் மேலை நாடுகளும் (Dravidian origins and the west Orient Longmans; Madras) என்ற அறிய நூலை எழுதினார். “திராவிடர் (தமிழியமொழி பேசுநர்) நண்ணிலக்கரை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்து இந்தியாவில் சிந்துப் பகுதியில் முதற்கண் குடியேறிப் பின்னர் குமரி வரைப் பரவினர்” என்ற ஆதாரமற்ற கொள்கையை அவர் கைக்கொண்டார் எனினும் அந்நூல் பின்வரும் சிறந்த மொழியியல் மெய்ம்மை களை உணர்த்துவதாகும்:- i) 6000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அட்லாண்டிக் கடல் வரை ஒரே மாதிரியான “பலசொல் பிணிப்பு ஒட்டுநிலை” (Polysynthetic suffixal) மொழிகள், இடையீடு இன்றிப் பரவியிருந்தன. அவற்றின் சொற்களஞ்சியங்கள் ஓரளவுக்கு ஒன்றுபோல் இருந்தன. பொதுச்சொல் விழுக்காடு மொழிக்கு மொழி மாறுபட்டு இருந்திருக்கலாம். திராவிட மொழிகள், எலாம், சுமேரியன், ஹர்ரி, காகேசியன், ஹல்தி போன்றவை ஒரே மொழியமைப்புக் கொண்டு, ஒன்றுக்கொன்று உறவுடையவையாகச் சங்கிலித் தொடர்போல அமைந்திருந்தன. ii) இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநர் (கி.மு. 2000ஐ ஒட்டி) ஐரோப்பாவுக்குள் கிழக்கிலிருந்து நுழையுமுன்னர் அங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் ஒன்றான பாஸ்கு (யூஸ்கரா) இன்றும் பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரெனீஸ் மலைப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது. [லயோலா, சேவியர், சைமன் பொலிவார், இவர்கள் எல்லாம் பாஸ்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்] தொல் திராவிட மொழி இந்த பாஸ்கு மொழியுடன் மட்டுமின்றி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் பேசப்பட்ட தொன்மொழிகளுடனும் உறவுடையது. iii) இம்மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புள்ளவை; ஒரே பொதுவான தாய் மொழியின் வட்டார வழக்குகள் என்றே கூறலாம். 2) இப்பொழுது மாந்தமரபணுவியல், மாந்த இனப்பரவியல், நாஸ்திராதிக் - ஞால முதன்மொழி ஆய்வுகள் ஆகியவை 1990க்குப்பின் வளர்ச்சியடைந்த நிலையில் இ.மு. (Before Present: B.P.) 50000-10000 கால அளவில் தென்னிந்தியாவிலிருந்து தமிழிய மொழி பேசுநர் ஏற்றத்தில் (Dravidian Ascent) தமிழிய மொழிக் குடும்பத்தி லிருந்து உருவானவையே இந்தோ ஐரோப்பியம், செமித்தியம், உராலிக், அல்தாயக், சப்பானியம் – கொரியம் ஆகிய மொழிக் குடும்பங்களும் மொழிகளும்” என்பது நிலை நாட்டப்பட்டு விட்டது. லாகோவாரி அரிதின் முயன்று வியத்தகு நுண்ணறி வுடன் கண்டு நிறுவியுள்ள மொழி யொப்புமைகள். இன்றைய (சரியான) கோட்பாட்டிற்கும் வலுவான ஆதாரங்கள் ஆகும். லாகோவாரி 1963 நூலை தமிழ் வளர்ச்சிக்கான பல அமைப்புகளில் யாதானுமொன்று ஒளிப்பட மறு அச்சு செய்தல் நலம். 6 தாமஸ் பரோ Thomas Burrow (1909 - 1986) வேதமொழி சம்ஸ்கிருதம் இவற்றில் கற்றுத் துறைபோய வரும் தமிழிய (திராவிட) மொழியியலில் விற்பன்னரும் ஆன இங்கிலாந்து நாட்டறிஞர் பரோ, அமெரிக்கத் திராவிடமொழி யியலறிஞர் எமனோவுடன் சேர்ந்து மிகக் கடுமையாக உழைத்து திராவிட மொழிகளின் சொற்பிறப்பியல் அகராதியை Dravidian Etymological Dictionary 1961,1984 Revised உருவாக்கிய பேரறிஞர். இவ்வகராதியையே பன்னாட்டு மொழியியலறிஞர்கள் இன்றும் தமிழிய மொழிகளுக்கும், பிற மொழிக்குடும்ப மொழிகளுக்கும் இடையில் ஒப்பியலாய்வு செய்வதற்கான கருவி நூலாகப் பயன்படுத்தி வருகின்றனர். 2. பரோ எழுதியுள்ள சம்ஸ்கிருத மொழி The Sanskrit language” ( 1973) என்ற நூல் அம்மொழியின் வரலாற்றைச் செவ்வனே அறிதற்குரிய அடிப்படை நூல்களில் ஒன்று. ரிக்வேதமொழிக் காலத்தி லிருந்தே தமிழிய ஒலியன்/ இலக்கணக் கூறுகள் / ஏராளமான தமிழ்ச் சொற்கள் இவற்றை வடமொழி மேற்கொண்டுள்ளது என்பதை பின்வரும் ஆய்வுகளில் நிறுவியுள்ளார். 1945: Some Dravidian words in Sanskrit. “Transactions of Philological Society” (T.P.S) pp 79-120. 1946 Loan words in sanskrit, T.P.S pp 1-30. 1948 Dravidian, Studies VII. Further Dravidian words in Sanskrit Bulletin of the School of Oriental and African Studies (BSOAS), London. Vol. 12: 365-96. 3 Dravidian Etymological Dictionary, Revised (1984) ஐப் பின்பற்றியே தமிழிய மொழிக் குடும்பத்துக்கும் ஏனைமொழிக் குடும்பங்களுக்கும் இடையிலுள்ள தொன்மைக் கால உறவு (Nostratic and Mother Tongue Studies) மொழியியலறிஞர் இதுவரைச் செய்து வருகின்றனர். 1985-2011 கால அளவில் அச்சில் வெளியான தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியின் மடலங்கள் 1-9 (மொத்தம் 27 பாகங்கள்) 11. தமிழ் அகரமுதலி வரலாறு (ஒரே பாகம்) 12 சொற்பிறப்பியல் நெறிமுறைகள் (ஒரே பாகம்) ஆக 29 பாகங்களையும் அவ்வறிஞர்கள் இனிப் பயன்படுத்துவது நலமாகும். [மடலம் 10 அயற்சொல் மடலத்தின் மூன்று பாகங்களுமே தமிழில் அருகிய புழக்கத்தில் இருந்தனவும் இருப்பனவும் ஆன தமிழல்லாத ஏனை மொழிச் சொற்களின் தொகுப்புதான்] 7 மரே பார்ன்சன் எமெனோ Murray Barnson Emeneau (1904 -2005) அமெரிக்க ஐக்கிய நாட்டறிஞர் ஆகிய இவர் 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழிய (திராவிட) மொழியிய லறிஞர்கள் சிலரில் ஒருவர். தாமஸ் பரோ உடன் சேர்ந்து திராவிட மொழிகளின் சொற்பிறப்பியல் அகராதியை (Dravidian Etymological Dictionary) (1961/1984) உருவாக்கியவர்; வடமொழி யிலும் (வேத மொழி; சமற்கிருதம்) இந்தி முதலிய இற்றை வடநாட்டு மொழிகளிலும் உள்ள ஏராளமான தமிழிய (மொழியியல், இலக்கணக்) கூறுகளை தமது “இந்தியா ஒரு மொழியியற்புலம் (India as a Linguistic Area)” கட்டுரையில் நிறுவியவர் (Language 32; பக் 2-18). 2. சேவியர் எஸ். தனிநாயகம், தெ.பொ. மீனாட்சி சுந்தரன், மு. வரதராசன், வ.ஐ. சுப்பிரமணியன், சாலை இளந்திரையன் முதலியவர்கள் மேனாட்டறிஞர்களாகிய பரோ, எமனோ, பிரெஞ்சுநாட்டு இந்தியவிலறிஞர் ஜீன் பிலியோசா (Jean Filliozat 1906-1982), சுவெலபில் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் ஆய்வுக்கான பன்னாட்டு (International Association of Tamil Research) என்னும் அமைப்பை 1964இல் நிறுவினர். இம்மன்றமே 1966லிருந்து 1995 முடிய உலகத் தமிழ் மாநாடுகள் International Conference - Seminars of Tamil Studies நடத்தித் தமிழுக்கும் தமிழாய்வுக்கும் பெரும் பணி செய்தது. 3. தனிநாயக அடிகள் 1951ல் தொடங்கிய இதழ் Tamil Culture. 1954இல் Academy of Tamil Culture அமைப்பையும் அவர் தொடங்கி அவ்திழை வெளியிடும் உரிமையை அந்த அமைப்புக்கு மாற்றித் தாந்தார். அவ்வமைப்பு 19646க்குப்பின்னர் அவ்விதழை வெளியிட இயலாமல் நிறுத்திவிட்டது. 1969இல் தனிநாயகத்தின் அனுமதி யுடன் International Association of Tamil Research 1969 Journal of Tamil Studies என்ற பெயரில் (Tamil Culture இன்மாற்று வடிவமாக) நடத்தத் தொடங்கி 1969 ஏப்ரல் முதல் 1970 அக்டோபர் வரை நான்கு அரையாண்டு இதழ்களை வெளியிட்டது. சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவவனம் 21-10-10 அன்று தொடங்கிய பின்னார் IATR இசைவுடன் Journal of Tamil Studies இதழை உலக தமிழாராய்ச்சி நிறுவனமே நடத்தி வருகிறது - செப்டெம்பர் 1972 முதல் [காண்க: JTS 75 சூன் 2009 பக் 122-3 இல் அ.அ. மணவாளன் விளக்கம்] 4. ஒரு நூற்றாண்டுக்குமேல் வாழ்ந்த எமெனோ 20ம் நூற்றாண்டின் சிறந்த தமிழியல் (திராவிடவியல்) பேரறிஞர் பத்துப் பேர்களுள் ஒருவராக கருதப்படக்கூடிய முதன்மை யுடையவர். 8 ஆந்த்ரே எப் ஸ்ஜோபெர்கு (Andree F. Sjoberg) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆஸ்தின் நகரிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பணி செய்த இவ்வம்மையார் 1971க்கு முன்னரே திராவிட நாகரிகம் பற்றிய கருத்தரங்கு நடத்தி பல அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகளை 1971 இல் Symposium on Dravidian civilisation (ஆஸ்தின்/ நியூயார்க் ஜெங்கின்ஸ் பப்ளிஷிங் கம்பெனி) என்னும் நூலாக வெளியிட்டவர். அதில் 1971 வரை வெளிவந்த மேலை அறிஞர் நூல்களில் கண்ட கருத்துகளின் அடிப்படையில் ““Who are the Dravidians? The present state of knowledge” என்ற தமது கட்டுரையையும் சேர்ந்திருந்தார். 2. பின்னர் அவர் தமிழிய (திராவிட) மொழியியல், பண்பாடு, நாகரிகம், முதலியவை 3500 ஆண்டுகட்கு முன்னர் இருந்து இன்றுவரை, “இந்திய மொழியியல், பண்பாடு, நாகரிகம், சமயம்” ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கும் தன்மையை விளக்குகிறார். ஆனால் இன்றைய மேலைநாட்டு இந்தியவியல் அறிஞர் (பரோ, எமெனோ, பஷாம், ஆல்சின் தம்பதியர், ஜிம்மர் (Zimmer) ஸ்டால் (Stael)) முதலிய ஒரு சில நுண்மாணுழை புலமிக்க சிலர் தவிர ஏனையோர்) இப்பங்களிப்பைக் கண்டு கொள்வதில்லை என்பதையும் சுட்டுகிறார்: i) 1999: Non Aryan (mainly “இந்தியக் காவியங்களின் சமயக் Dravidian) features in the religious கோட்பாடுகளிள் ஆரியமல்லாத content of the Indian epics IJDL (பெரும் பாலும் திராவிட) 38 (1999)71-90 கோட்பாடுகளே மிகுந்துள்ளமை”. ii) 1990 The Dravidian contribution to “இந்திய நாகரிக வளர்ச்சிக்கு திராவிட development of Indian civilization: மொழிபேசுநர் பங் களிப்பு: மறு ஆய்வு A call for reassessment : at pp தேவை” ஏற்கெனவே பரோ, எமனோ 40-74 of Comparative Civilization களில் எழுதியவை) Zimmer 1951. Review vol 23 (1945 - 1980 டைலர் 1973; தண்டேகர் 1974; Neill 1974; ஹார்ட் 1975; ஆல்சின் தம்பதி யர் 1982; Stael 1983,சென் 1983. ஆகியோரின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இவ்வம்மை யார் எழுதியது. iii) 1992 ““The impact of Dravidian “இந்தோ ஆரிய மொழிகளில் of Indo - Aryan: an overview” at (பண்டைக்காலம், இடைக் காலம், pp 507 - 529 of “Reconstructiong பிற்காலம்) திராவிட மொழிகளின் languages and Cultures” Ed. Fdgar தாக்கம்” C. Polome and another; Berlin: Mouton de Gruyter 3. முன்பத்தியிற் குறித்த ஆந்த்ரே அம்மையார் கட்டுரைகளோடு அவர் எழுதிய மேலும் சில மொழியியல் [ஒப்பீட்டு மொழியியல் (திராவிடம் - அல்தாய்க்) உட்பட] கட்டுரைகளையும் தொகுத்து 2009 இல் வெளியிட்டு குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடப்பா இரமணய்யா அரும்பணி செய்துள்ளார். அந்நூலின் பெயர் “Dravidian Language and Culture” (பக் 200; ரூ. 180) என்பதாகும். 9 கமில் வாக்லாவ் சுவெலபில் (Kamil Vaclav Zvelebil) (1927 - 2009) செக்குடியரசு நாட்டறிஞர் ஆகிய இவர் தமிழ் (திராவிட) இயலின் பல துறைகளிலும் தனக்கெனத் தனித்த அடை யாளத்தை பதித்தவர். தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல் பற்றி (பண்டு முதல் இன்று வரை) தரமாக, விரிவாக, ஆங்கிலத்தில் விளக்கி ஏராளமான ஆய்வு நூல் செய்தவருள் முதலிடம் இவருக்கே. இவர் நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இவர் நூல்கள் அனைத்துமே - குறிப்பாகப் பின் வருபவை. 1970 Comparative Dravidian phonology 1973 The Smile of Murugan: On Tamil literature of South India E.J. Brill; Leyden. 1974 Tamil LIterature; Otto Harassovitz; Weisbaden 1975 Tamil Literature; E.J. Brill Leyden. 1986 Literary conventions of Akam Poetry. Institue of Asian Studies; Chemmancheri. 1989 Classical Tamil prosody, an introduction. Chennai 1990 Dravidian Linguistics, an introduction; PILC Pondicherry. 1992 Companion studies to History of Tamil literature. E.J. Brill. 1993 The Poets of the powers. (சித்தர்கள் பற்றியது) 1995 A Lexicon of Tamil literature E.J. Brill. தமிழிய ஆய்வுப் புலங்களில் ஆய்வு செய்பவர் அனைவருக்கும் பார்வை நூலாக உள்ளன. 2. (அ) தமது 1990 நூலில் அவர் தமிழுக்கும் பின்வரும் பிறமொழிக் குடும்பங்களுக்கும் இடையிலுள்ள தொல் பழங்கால உறவை விரிவாக விளக்கியுள்ளார்:- (i) தமிழும் சிந்து நாகரிக முத்திரை வாசகங்களில் உள்ள மொழியும். (ii) தமிழும் எலாம் மொழியும். (iii) தமிழும் உரால் - அல்தாய்க் மொழிக் குடும்பமும் (iv) தமிழும் சப்பானிய மொழியும் ஸஇதுபற்றி ஆழ்ந்த ஆய்வு செய்த சுசுமு ஓநோ - பொன். கோதண்டராமன் முடிவுகளை இவர் தமது நூல்களிலும் கட்டுரைகளிலும் ஆதரித்துளளார்.] (ஆ) தமது 1990 நூலின் 144 ஆம் பக்கத்தில் “இன்றைக்கு 10000 ஆண்டுகளுக்கு முன்னர் (BP 10,000)இம்மொழிகள் எல்லாம் ஒரே மூலத்தில் இருந்து கிளைத்தவையாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். 10 சுசுமு ஓநோ Susumu Ohno (1928 - 2000) இவர் நிப்பன் (ஜப்பானிய) மொழியும் தமிழும் ஒரு தாய் மக்கள் என நிறுவும் ஆணித் தரமான ஆய்வை (அறிஞர் பொன். கோதண்டராமனுடன் இணைந்து) மேற்கொண்ட ஜப்பானிய அறிஞர். (கமில் சுவெலபில் போன்றவர்களும் இக்கருத்தினரே) 11 எம்.எஸ். அந்திரநாவ் Michael servevich Andronov உருசிய நாட்டவராகிய இவர் தமிழ்/தமிழிய நூல்/மொழியியல் ஆய்வறிஞர். உருசிய மொழியில் தமிழ் இலக்கண நூலை எழுதியவர். தமிழிய மொழிக் குடும்பத்துக்கும் அல்தாய்க் (துருக்கி, மங்கோலியம்) மொழிக் குடும்பத்துக்கும் உள்ள உறவை வலியுறுத்தியவர். (1968 Two lectures on the histority of language families Annamalai University 2. Indian Linguistics 25: 119-126 இதழில் இவர் 1964இல் தற்கால இந்தோ - ஆரிய மொழிகளாகக் கருதப்படும் இந்தி முதலிய வட இந்திய மொழிகளுக்கும் தமிழிய (திராவிட) மொழிகளுக்கும் மொழிக்கட்டமைப்பில் உள்ள ஒற்றுமை “typological similarity” பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதில் அவர் “அத்தகைய வலுவான அடிப்படை ஒப்புமைகளின் அடிப்படை யில் பார்த்தால் அவ்வட இந்திய மொழிகளை இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையாகக் கருதுவதே சரியன்று” என்று செப்பியுள்ளார். “Modern Indic should really not be considered a member of the Indo - European family” (இக்கருத்தின் வேர் சர் வில்லியம் ஜோன்ஸ் 1778 இலேயே உணர்ந்து தெரிவித்ததுதான்) 20001 இல் A comparative grammer of the Dravidian languages நூலை அந்திரநாவ் எழுதியுள்ளார். 12 ஜரோஸ்லாவ் வாசெக் Jaroslav Vacek செக் குடியரசு நாட்டறிஞர் ஆகிய இவர் தமிழிய மொழிக் குடும்பத்துடன் அல்தாய்க் (துருக்கி, மங்கோலியம்) மொழிக் குடும்பம் மிக நெருங்கியது என்பதை நிறுவிவரும் சிறந்த மொழியியலறிஞர். இதுபற்றிய அவருடைய ஆய்வுக் கட்டுரைகளில் முக்கியமானது “Dravidian and Altaic - in search of a new paradigm” (IJDL 35. 1 சன 2006 பக் 29-96) ஆகும். (அதன் மூலம் Archiv Orientalni 2004 இல் வெளிவந்தது.) சங்க இலக்கிய அகப்பொருள் ஆய்வுகளை மிக ஆழமாக, விரிவாகச் செய்து வருகிறார். பல நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் குறள் பீடம் விருதைப் பெற்றுள்ளார். 13 ஸ்தீபன் ஹில்யர் லெவிட் Stephen Hillyer Levitt (1943) தமிழிய மொழிக் குடும்பத்தின் தொன்மையானது தென்னிந்தியாவிலும் இந்தியாவிலும் இ.மு. (Before Present) 70000 - 50000 அளவுக்கு முந்தியது என்பதை இன்று நம் காலத்தில் ஆணித்தரமாக நிறுவி வரும் அமெரிக்க அறிஞர்.மேலை இந்தோ - ஐரோப்பிய மொழிகளிலும், தொல் இந்தோ - ஐரோப்பியம், நாஸ்திராதிக் நிலைகளிலும் இன்றும் காணப்படும் பல தமிழிய மொழியியல் கூறுகளை இவர் நிறுவியுள்ளார். ஞா. தேவநேயப் பாவாணரின் மொழியியல் நோக்கானது ஏற்கத் தக்கதென நிலைநாட்டி வரும் முதன்மையான மேலை மொழியியலறிஞர். இவர் அமெரிக்காவில் நியூயார்க்கில் வாழ்பவர். அவர் (International Journal of Dravidian Linguistics (IJDL) 2007 கட்டுரையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. “ஆங்திரேலியப் பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் அம்மக்களின் மொழிகள் திராவிட மொழிகளுடன் மட்டுமே தொடர்புள்ளவை எனக் கண்டுள்ளனர். உறவுமுறை (Kinship), பூமராங் (வளைதடி) பயன்பாடு ஆகியவையும் அம்மக்களுக்கும் திராவிடருக்கும் உள்ள தொடர்பைக் காட்டு கின்றன. கி.மு. 8000ஐ ஒட்டி உலகெங்கும் கடல் மட்டம் உயர்ந்து நிலப்பகுதிகளின் பரப்பு சுருங்கிய பொழுது உலகின் பிற பகுதி மக்களுடைய நாகரிகங்களிடம் இருந்து துண்டிக்கப் பட்டனர் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள். அவர்கள் தென்னிந்தியாவி லிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் புலம் பெயர்ந்தது ஏறத்தாழ 50,000 ஆண்டுகட்கு முன்னர் இருக்கலாம் என்கின்றனர் ஆஸ்திரேலிய அறிஞர். இதிலிருந்து குறைந்தது 50,000 ஆண்டுகட்கு முன்னரே திராவிட (தமிழிய) மொழி பேசுநர் இந்தியாவில் இருந்தனர் என்பது தெளிவாகிறது. இந்த (“திராவிடர் ஏற்றம் (Dravidian Ascent)”) கோட்பாட்டின்படி திராவிட மொழி பேசுநர் தென்னிந்தியாவிலிருந்து வடநாடு செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து பாரசீகத்திற்கும் அதைத் தாண்டிப் பிற நிலப்பகுதிகளுக்கும் செல்கின்றனர். அந்தப் பிற நிலப்பகுதிகளில் மூல திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து பிரிந்து உராலிக், அல்தாயிக், இந்தோ- ஐரோப்பியம் ஆகிய மொழிக் குடும்பங்கள் உருவாகின்றன. இந்தோ – ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்குத் (தமிழிய) திராவிட மொழிக் குடும்பம் தாயா? தமக்கையா? என்பதை இன்றைய நிலையில் திட்ட வட்டமாகக் கூற இயலாது” 2013 சூன் IJDL கட்டுரையில் லெவிட் முடிவுகள் வருமாறு: தமிழிய (திராவிட) மொழிகளில் நாம் காணும் ஒலியன் மாற்றங்கள்; ஒரு ஒலியனுக்குப் பகரமாக இன்னொரு ஒலியனைப் பெய்து பொருள் மாற்றம் / புதுப் பொருள் தெரிவிப்பது இவை யெல்லாம் திராவிட மொழிகளில் கழிபழங்காலத்துக்கு முன்னரே இருந்ததைக் காணலாம். அம்மாற்றங்களை நாஸ்திராதிக் நிலையிலேயே முந்து திராவிடத்திடம் இருந்து கி.மு. 45000க்கு முன்னர் பெற்றுவிட்ட (இந்தோ - ஐரோப்பியம் உள்ளிட்ட) பிற நாஸ்திராதிக் மொழிக் பெருங் குடும்ப மொழிகளில் (Indo European and other language families coming under Nostratic macrofamily) இன்றும் நிலைபெற்றுள்ளதைக் காணலாம். மாந்தஇன (முதல்) தாய்மொழி ஆய்வில் 1995 முதல் ஈடுபட்டு வரும் (அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் West Newton நகரில் உள்ள) Association for the study of language in Prehistory (ASLIP) அமைப்பு வெளியிட்டு MOTHER TONGUE(XIII: 2012)இதழில் “The number one” என்னும் கட்டுரையை வெளியிட்டுள்ளார். “நாஸ்திராதிக்” கில் அடங்கிய மொழிக் குடும்பங்கள் பலவற்றில் `ஒன்று’ (1) என்பதைக் குறிக்கும் சொற்களின் ஆதிவேர்களாக இன்று உன்னிக்கப்படும் ஐந்து வேர்களுக்கு பதிலாக இரண்டு வேர்கள் மட்டுமே என்று நிறுவலாம் என்பதும், அவ்விரண்டின் ஆதி உருவாக்கம் எப்படி நேர்ந்திருககும் என்பது பற்றிய தெளிவையும் தமிழில் நாம் நடைமுறையில் காணும் ஒலியன் மாற்ற விதிகள் (alternation of consonants) அடிப்படையில் உணரலாம் என அக்கட்டுரையில் விளக்குகிறார். 14 அஸ்கோ பர்போலா Asko Parpola (1941) பின்லாந்து நாட்டறிஞர் ஆகிய இவர் 1960 களிலிருந்து சிந்து எழுத்து ஆய்வுகளையே தமது வாழ்நாள் பணியாகக் கொண்டுள்ளார். கி.மு. 3000 - 1900 சார்ந்த சிந்து நாகரிக முத்திரை எழுத்துக்களைஅறுபது ஆண்டுகளாக ஆழ்ந்த ஆய்வு செய்து அவ்வெழுத்துக்கள் தமிழிய மொழி சார்ந்தவையே என்பதைப் பன்னாட்டுப் பல்துறை அறிஞரும் ஒருமுகமாக ஏற்கும் வண்ணம் தேற்றமாக நிறுவியுள்ளார். சிந்து முத்திரை வாசகங்கள் அனைத்தையும் மூன்று மடலங்களில் படங்களுடன் பதிப்பித்துள்ளார். அவருடைய Deciphering the Indus Script (1994) இன்றியமையாத கருவி நூல் ஆகும். 2. தமது ஆய்வு முடிவுகளை 2010 சூன் 25 அன்று கோயம்புத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆற்றிய “சிந்து எழுத்துச் சிக்கல் திராவிடத் (திராவிட மொழித்) தீர்வு” என்னும் பொழிவில் சுருக்கமாகத் தந்துள்ளார். முக்கியமான சிலவற்றைக் காண்போம். “(i) தொல் இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுநர் கி.மு. 3000க்குப் பின்னர் தென் - கிழக்கு ஐரோப்பியப் பகுதியிலிருந்து (கருங்கடல் - காஸ்பியன் கடல்களுக்கு வடக்கிலுள்ள பகுதி) மேற்கு, தெற்கு, தென் கிழக்காகப் பரவத் தொடங்கிய பொழுது கி.மு. 2300 - 1500 காலம் சார்ந்த பாக்டிரிய – மார்ஜியானா தொல்லியல் (Bactria and Margiana Archaeological Complex = BMCA) தொல்லியல் எச்சப் பகுதியைத் தாண்டி கி.மு. 1900 - 1600 இல் ஈரான் - சிந்துப் பகுதிக்கு வரலாயினர். (கி.மு. 1900 – 1600 என்பது ஹாரப்பா நாகரிகத்தின் கடைப் பகுதியாகும்). வரலாற்று மொழியியல் சான்றுகள் அடிப்படையில் குறிப்பாக ரிக்வேத த்திலேயே காணப்படும் திராவிட மொழியியல், இலக்கணக் கூறுகள், திராவிடச் சொற்கள் இவற்றின் அடிப் படையில், ஹாரப்பா நாகரிக மக்கள் பேசியது திராவிட மொழியாகத்தான் இருந்திருக்க வேண்டும் (Historical Linguistics, thus suggests that the Harappans probably spoke a Dravidian language) “(ii) ஒன்றுக்கொன்று சரியாகப் பொருந்தும் ரீபஸ் முறை வாசிப்புகளைக் கணிசமான எண்ணிக்கையில் கண்டோம். அவற்றுக்கு அடித்தளமாக அமைந்து முழு ஆதரவுதரும் மொழியியல் செய்திகளையும் பண்பாட்டுத் தன்மைகளையும் விளக்கி இம்முடிவுகள் தற்செயலான போலி ஒப்புமைகள் அல்லவென்பதையும் நிறுவியுள்ளோம். அறிவியல் ரீதியான கராறான ஆய்வு முறையைப் பின்பற்றி வாசித்துள்ளோம் - மாந்தன் மொழிகளின் எழுத்து வரிவடிவத் (லிபி) தோற்றம், வளர்ச்சி, வரலாறு; புரியாத லிபியைப் படித்தறியக் கையாள வேண்டிய அறிவுபூர்வமான முறை, இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டும், வரலாற்று மொழியியலின் (திராவிட மொழிகளின் ஒப்பு நோக்கு மொழியியல் உட்பட) ஆய்வுச்செய்திகளின் பின்புலத்திலும் இவ்வாய்வு நடந்துள்ளது. முத்திரைகளின் பட உருவங்கள் எதைக் குறிக்கின்றனவென்பதையும் மிகக் கவனமாக வே கருதிப் பார்த்துளளோம். பண்டை இந்தியப் பண்பாட்டு வரலாறு, ஹரப்பா நாகரிகத்தின் (தோற்றம், தன்மை, வளர்ச்சி, பிற பண்பாடுகளுடன் தொடர்பு முதலிய) சூழல் ஆகிய இரண்டையும் அடிச்சட்டமாகக் கொண்டு பார்த்தால் ஆய்வில் கூறப்படும் முடிவுகள் நியாயமாக ஏற்கத் தக்கவை என்பது தெற்றென விளங்கும். அம்முடிவுகளும் முழுமையான தெளிவான சான்றுகளும் ஆதாரங்களும் அமைந்த சிற்றளவினவான ஆய்வுப்புலச்செய்திகளின் அடிப்படையில் தான் (மறுக் கொணாத வகையில்) அமைந்துள்ளன. (அப்புலங்கள் அரச மரத்தோடு இணைந்த மகப்பேறு வேண்டுதல் நம்பிக்கை; வானியல், காலக்கணிப்பு இவற்றோடு தொடர்புடைய முக்கியமான பழைய இந்து மதத் தொன்மக்கதை; இந்துமதத்திலும், பழந்தமிழ் மதத்திலும் முதன்மைபெற்ற (முருகன் போன்ற) தெய்வங்கள் முதலியன) “(iii) மேற்சொன்னவற்றின் அடிப்படையில் சிந்து எழுத்தைப் படித்தறிவதற்கான வாயில் திறக்கப்பட்டுவிட்டது என உறுதியாக நான் நம்புகிறேன். சிந்து முத்திரை வாசகங்கள் தொல் திராவிட மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து கொண்டோம்.அந்த லிபியின் அமைப்பும் எவ்வழிகளில் முயன்றால் அதைப் படிக்கலாம் என்பதையும் அறிந்துள்ளோம். இதுவரைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்ட செய்திகளும் அவற்றின் விரிவான சூழல்களும் மேற்கொண்டு செய்ய வேண்டிய ஆய்வுகளுக்கு வழிகாட்டுகின்றன, எனினும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. பல படவெழுத்துகளின் திட்டவட்டமான பொருள் இன்னும் தெரியவரவில்லை. தொல்திராவிடச் சொற்கள், சொற்றொடர்கள், மரபு வழக்குகள் போன்றவற்றைப் பற்றிய செய்திகள் நமக்கு முழுமையாகத் தெரியவில்லையாகையால், பொருத்தமான வாசிப்பு முயற்சிகள் மூலம் மேலும் பலவற்றைப் படிப்பதற்கும் அப்படிப் படித்து முன் வைக்கப்படுவனவற்றை நன்கு சரிபார்த்து அறிவுலகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிறுவுவதற்கும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த நிலையில் தமிழையும் பிற திராவிட மொழிகளையும் தாய்மொழியாகப் பேசுபவர்கள் இந்த ஆய்வில் ஊக்கத்துடன் தலைப்பட்டு மேலும் ஆய்வு செய்ய வேண்டும். (வட அமெரிக்காவில் மெக்சிகோ நாட்டில் உள்ள) மயா நாகரிக எழுத்தும் சொல் - அசையன் (logo - syllabic) வரிவடிவத்தில்தான் உள்ளது. மயா மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு அந்த லிபியைப் படிக்கும் முறைகளில் பயிற்சி அளித்த பின்னர் ஆய்வு வேகமாக வளர்ச்சியடைந்தது. சிந்து முத்திரை வரிவடிவத்தைப் பொறுத்தும் ஓரளவுக்கு இது பொருந்தும். பல்கலைக்கழகப் பேராசிரியர் போன்ற வல்லுநர் மட்டுமல்லாது, ஆர்வமுள்ள பொதுமக்களும் சிந்து முத்திரைப்பட உருக்கள் எதைக் குறிக்கின்றன என்பது குறித்து சிந்தித்துப் பொருத்தமான கருத்துகளைத் தெரிவிக்கலாம்; இவ்வாறு செய்ய ஒருவர் திராவிட மொழி பேசுநராகத்தான் இருக்க வேண்டுமென்ப தில்லை. எனினும் இந்தியப் பண்பாடு, தென் ஆசிய இயற்கைத் திணைப் பொருள்கள் ஆகியவற்றைப் பற்றிய திறமான புலமை இருந்தால் இத்தகைய ஆய்வு மேலும் சிறக்கும். தமிழ் மக்கள் இவ்வகையில் தெரிவிக்கும் ஆய்வுக் கருத்துகளை யெல்லாம் சென்னையில் (தரமணி மைய பாலிடெக்னிக் வளாகம்) ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ள சிந்து ஆய்வு மையம் ஒருங்கிணைத்து ஊக்குவிக்கலாம். வெளிப்படும் தரமான கருத்துகளை அம்மையம் தனது வலைத்தளத்திலும் வெளியிடலாம்.” 15 ஹெச். பி.ஏ. ஹகோலா Hanu Panu Aukusti Hakola (1924 - ) பின்லாந்து நாட்டறிஞர் ஆகிய இவர் தமிழிய (திராவிட) மொழிகளுக்கும்; மறுபால் (i) உரால் (துருக்கி - மங்கோலியம்) அல்தாய்க் (பின்னிஷ் முதலியவை) மொழிகள் (ii) சப்பானிய மொழி (iii) தென் அமெரிக்க பெரு நாட்டு கொசுவா மொழி ஆகியவற்றுக்கும், கழிபழங்காலத்திலிருந்து (கி.மு. ஆயிரத்துக்கும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்தே) தொடர்ந்து வரும் மொழியியல் சார் உறவை விளக்குமஆயிரம் துரால்ஜன் வேர்ச் சொற்கள் என்னும் நூலை 2000இல் வெளியிட்டார். தமிழ் - பின்னிஷ் மொழிகளிடையே உள்ள வேர்ச்சொல் ஒப்புமை களைப் பற்றிய அவருடைய 2009 / 2011 நூல் Lexical AffinitiesBetween Tamil and Finnish (A Contribution to Nostratic studies from the angle of close Genetic affinities between the Dravidian and Uralic Language families), என்பதாகும். இந்நூலில் 765 + 373 சொல்லொப்புமைகளை பரோ - எமெனோ (1983DEDR மற்றும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி (1985 - 2007) இவற்றையும் பயன்படுத்தி ஆய்வு செய்து தந்துள்ளார். இந்நூலில் அவர் வெளியிட்டுள்ள முடிவுகள் வருமாறு: (i) 50000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது ஞால முதன் மொழி (Mother Tongue of Man) அந்த ஞால முதன் மொழிக்கு அடுத்த நிலையில் தோன்றிய மொழிப் பெருங் குடும்பங்களில் (Macrofamily) ஒன்றான Pre - Proto Nostratic (தொல் நாஸ்த்ராதிக்) முதன் முதலில் தென்னிந்தியாவில் நிலவி யிருக்கலாம். உலகில் இன்றுள்ள தமிழியம், இந்தோ ஐரோப்பியம், செமித்தியம், உரால் - அல்தாயிக் மொழிக் குடும்பங்கள் (மற்றும கி.மு. 3000 அளவில் வழங்கிய சுமேரியம், எலாம் ஆகிய மொழிகள்) இவற்றின் தாய்க்கு மொழியியலாளர் சூட்டியுள்ள பெயர் நாஸ்திராதிக் / யுரோசியாடிக் என்பதாகும். (ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் 2000 அக்தோபரில் பத்ரிராஜு கிருஷ்ண மூர்த்தியோடு பேசும்பொழுது ஜோசப் ஹெச். கிரீன்பெர்கு கூறியது: “திராவிட மொழிக்குடும்பம் யுரேசியாடிக்கின் மகள் அல்ல; சகோதரி யாகத்தான் இருந்திருக்க முடியும்” என்பதாகும்) (ii) 1000 (Before Present) BP ஒட்டி தொல் – நாஸ்திராதிக் பேசுநர் தென்னிந்தியாவிலிருந்து வடக்கு நோக்கிப் பரவிய பின்னர் (தொல் திராவிட - தமிழிய - மொழியினர் இந்தியா அளவில் நிற்க) நாஸ்திராதிக்கின் ஏனைய பிரிவினர் மையக் கிழக்கு - மைய ஆசியப் பகுதியில் 10000 - 8000 BP கால அளவில் உடனுறைந்த பின்னர், சில ஆயிரம், ஆண்டுகளில் சுமேரியம், இந்தோ - ஐரோப்பியம், உரால் - அல்தாயிக், செமித்தியம் ஆகிய மொழிக் குடும்பங்கள் பிரிந்து ஆசியாவில் பல பகுதிகளுக்கும், எகிப்து முதலியவற்றுக்கும் பரவின. (iii) 7,000 BP (= கிமு 5000) யிலிருந்து இந்தியா முழுவதும் (சிந்து - பஞ்சாப் உட்பட) தமிழிய மொழி பேசியவர்கள் வாழ்ந்து வந்தனர். (iv) மையக்கிழக்கு - மைய ஆசியப் பகுதியில் கி.மு. 6000 - 4000 அளவில் வாழ்ந்த “இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்ப மூலமொழியை (Proto - Indo - European) பேசியவர்களிடமிருந்து கிழக்கு நோக்கிப் பிரிந்த இந்தோ இரானியப் பிரிவின் ஒரு உட்கிளையாகிய “வேத - சம்ஸ்கிருத” மொழி பேசுநர் கிமு 2500 - 1500 கால அளவில் சிறு எண்ணிக்கையில் வடமேற்கு இந்திய (சிந்து - பஞ்சாப்) பகுதிக்கு வந்து அங்கு தமிழிய (திராவிட) மொழி பேசுநருடன் கலந்து விட்டனர். 16 பெனான் ஸ்பிக்னீயு சாலெக் (Benon Zbigniewu Szalek) போலந்து நாட்டில் ஸ்கெசின் (Szezecin) பல்கலைக் கழகத்தில் மொழிகளின் தொன்மை வரலாறுகளைப் பற்றி விரிவாக ஆய்வு செய்துவரும் பேராசிரியர் (Professor of Heuristics and Praxiology) இவர். ஒரு பால், தமிழிய (திராவிட) மொழி களுக்கும் மறுபால், வேறுபல தொன்மொழிகளாகிய சுமெரியன், எத்ருஸ்கன், மயா, எகிப்து, பாஸ்கு (அதாவது ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கு இடையில் பிரனிஸ் மலைப்பகுதியில் வாழும் தொல்குடியினர் சுமார் 10 லட்சம் பேர் பேசிவரும் யூஸ்கரா மொழி, (காண்க:“முதன்மொழி” சென்னை III 1-2 அக் -நவ2013) இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் இடையிலுள்ள இயைபுகளையும் விளக்கி அவர் தனித்தனி ஆய்வு நூல்கள் (ஒவ்வொன்றும் 200 பக்கத்துக்கு மேல்) எழுதியுள்ளார். 2. ஐரோப்பாவில் நண்ணிலக் கரை நாடுகளிலும் அனதோலியாவிலும் (பின்னர் ஆசியா மைனர் என்று அழைக்கப்பட்டது; இன்று துருக்கி நாட்டின் ஆசியப்பகுதி) இந்தோ - ஐரோப்பிய மொழி பேசுநர் ஏறத்தாழ கி.மு. 1700ஐ ஒட்டி நுழைந்து பரவுவதற்கு முன்னர் அப்பகுதியில் லிடியன், லிசியன், காரியன் போன்ற இந்தோ - ஐரோப்பியமல்லாத மொழிகள் பேசப்பட்டு வந்தன; பின்னர் மறைந்துவிட்டன. (அனதோலியாவில் லிடியமொழி பேசிய பகுதியிலிருந்து இத்தாலியின் நடுப்பகுதிக்குக் குடியேறி அங்கு கி.மு. 600 வரை சிறப்பாக வாழ்ந்த எத்ருஸ்கன் மொழி பேசுநரும் இந்தோ - ஐரோப்பியமல்லாத மொழியினரே. லிசியன், லிடியன் பற்றியும் அவற்றுக்கும் பிற தொன்மொழிகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி அவர் 2006 இல் Lycian, Lydian and other Ancient languages in the light of Heuristics and Cryptology என்ற நூலை அவர் வெளியிட்டார். (காண்க: CHEMMOZHI III 2-3: 35 - 37) ஆசியா -மைனர் பகுதியில் கிடைத்துள்ள கி.மு. 7-2 நூற்றாண்டுகளைச் சார்ந்த லிசியன், லிடியன் மொழிப் பொறிப்புகளில் உள்ளவை தமிழிய (திராவிட) மொழி வாசகங்கள் என்பது இவர்ஆய்வின் முடிவு. (கிடைத்துள்ள பொறிப்புகள் மிக சிலவே -கல்வெட்டுகள் 150; நாணயங்கள் 100) 3. சிந்து நாகரிக எழுத்தையும் திராவிட மொழியாகப் படித்து 1999இல் இவர் The Narmini Report என்ற அரிய நூலையும் வெளியிட்டுள்ளார். 4. 2013 இல் சாலெக் வெளியிட்டுள்ள புத்தகம் The Japanese, Ainu, Korean, Altaic (Manchu - Tungus, Mongolic, Turkic), Ugro – Finnic (Finnish, Hungarian), Basque, Mayan, Polynesian (Maori) and Dravidian (Tamil) languages in the light of heuristics (பக் 60 + 165) ஆகும். மேற்கண்டவற்றுள் திராவிடமல்லாத மொழிகளைப் பொறுத்த வரையில் அவற்றின் மீது தொல்பழங்காலத்தில் இந்தியாவிலும் அதையொட்டிய மேற்கு ஆசியா, மைய ஆசியா, கீழை ஐரோப்பா பகுதிகளிலும் வசித்து வந்த தொல் திராவிட மொழிபேசுநர் தாக்கம் அம்மொழிகளின் மீது ஏற்பட்டிருக்கும் என்று நிறுவுகிறார் சாலெக். 17 ஹென்றிக் ஹென்ரிகஸ் Henrique Henriques (16ம் நூற்றாண்டு) தூத்துக்குடிக்குத் தெற்கே புன்னைக் காயலில் ஏசு சபைப் பாதிரியார்களுக்கான தமிழ் பயிற்றும் பள்ளியில் பணியாற்றிய போர்ச்சுகல் நாட்டவரான இவர் தான் முதன் முதலில் தமிழல்லாத பிறமொழியில் (லத்தீனில்) தமிழ் இலக்கணச் சுருக்கத்தை எழுதினார். அவரே கிறித்தவ மன்றாட்டுகள் அடங்கிய “கார்த்தில்யா” என்ற (போர்த்துக்கீசிய பெயர் கொண்ட) 38 பக்க நூலைத் தமிழில் எழுதி ரோமன்லிபியில் அச்சிட்டார். மேலும் அவரே தம்பிரான் வணக்கம் (16 பக்கம்) என்னும் மன்றாட்டு நூலை 1578இல் கொல்லத்தில் அச்சிட்டார். இந்தியாவில் தமிழில் அச்சேறிய முதல் தமிழ்நூல் இதுதான். ஐரோப்பிய மொழிகள் அல்லாத பிற மொழிகள் அனைத்திலும் முதலில் அச்சு வாகனமேறியது இத்தமிழ் நூலே அடுத்து கிரிசித்தியானி வணக்கம் (பக் 122) நூலையும் 1579இல் கொச்சியில் அச்சிட்டார். Image 18 அந்தாவோ தா புரோயன்சா Antao da Proenca (17ம் நூற்றாண்டு) தமிழல்லாத பிறமொழிகளில் முதன்முதலாக வெளிவந்தது இவர் உருவாக்கிய தமிழ் போர்த்துகீசிய அகராதி (Vocabulario Tamulica) தான். இவரும் போர்ச்சுகல் நாட்டவரே 19 ராபர்ட் தெ நொபிலி (Rovert de Nobili) 1577 - 1655 (தத்துவ போதகர்) இத்தாலி நாட்டில் ரோம் நகரில் பரம்பரைப் பெருங்குடியில் பிறந்தவர். இவர் குடும்ப முன்னோர்களில் இருவர், ஜுலியஸ் III; கிரிகரி XII, கத்தோலிக்க மதத் தலைவராகிய போப்புகள் ஆவர். இவர் 19 வயதில் (பாஸ்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இக்னேஷியஸ் லயோலா நிறுவிய) யேசு சபையில் சேர்ந்தவர். 1605ல் கோவாவில் வந்திறங்கி 1606 - 1615 ஆண்டுகளில் மதுரையில் வாழ்ந்து கிறித்துவ சமயத்தைப் பரப்பும் கத்தோலிக்கப் பாதிரியாராகப் பணியாற்றினார். இந்திய சமுதாய அமைப்பை நன்குணர்ந்த இவர் இந்தியாவில் இந்து மத குருக்கள் உடை, உணவு, ஆசாரங்கள் முதலியவற்றைத் தாமும் கைக்கொண்டு வாழ்ந்து கிறித்துவத்தைப் பரப்பியதால் பலர் கிறித்தவராயினர் -- “உயர்ந்த சாதியினர்” என அழைக்கப்பட்ட பலர் உட்பட. புறவாழ்க்கை யில் அவர் மேற்கொண்ட “இந்துமத குருக்களின்” சாயலைக் கத்தோலிக்க சமயத்தில் அவருக்கு மேல் அதிகாரத்தில் இருந்தவர்கள் ஆதரிக்காததால் அவர் மதுரையி லிருந்து மாற்றப்பட்டார். பின்னர் திருச்சி, தஞ்சை, சேலம் போன்ற வேறு இடங் களிலும் பணியாற்றினார். 1645 - 48 இல் யாழ்ப்பாணத்திலும் 1648 - 1656 இல் மைலாப்பூரிலும் வாழ்ந்தார். `தத்துவ போதகர்’ என இவர் அழைக்கப்பட்டார். 2. நொபிலியுடைய தனிச்சிறப்பு அவர் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் சிறந்த புலமை பெற்றவர் என்பதாகும். தமிழை ‘Most beautiful, very copious and most elegant’ (மிக அழகிய, விழுமிய செறிவுடைய, மேதக்க மொழி) என்று போற்றியுள்ளார். அப்பொழுது மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி நடந்தமையால் தெலுங்கையும் நன்கறிந்தவர். ஞானோபதேசம், ஆத்தும நிருணயம், அஞ்ஞான நிவாரணம் முதலிய கத்தோலிக்க சமயம் சார்ந்த பல நூல்களைத் தமிழில் எழுதியுள்ளவர். இவருக்குப் பின் வந்த (ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்தும் வந்த) கிறித்தவ சமயப்பரப்புநருக்கு இவர் ஒரு முன்னோடியாக அமைந்தார். 3. இவருடைய வரலாற்றை வின்சென்ட் க்ரோனின் சுவைபட ““A Pearl to India”” என்ற 297 பக்க நூலாக எழுதி 1959ல் வெளியிட்டுள்ளார். (நியூயார்க் E.P. Dutton கம்பெனி) 20 வீரமாமுனிவர் Constazo Joseph Beschi (1680 - 1747) இவர் இத்தாலி நாட்டில் மாந்துவா மாவட்டத்தில் காஸ்திகிலியோனே என்னும் ஊரில் பிறந்தவர். இயற்பெயர் கான்ஸ்டான்ஷியஸ் ஜோசப் பெஸ்கி. 1698இல் இயேசு சபையை (Society of Jesus) சேர்ந்தார். 1711 ஆம் ஆண்டு தென்பாண்டி நாட்டுக்கு வந்தார். தம் 30 ஆம் ஆண்டின் பின் தமிழ் கற்கத் தொடங்கிப் பெரும்புலமை அடைந்தார். 2. அவர் காலத்தில் ஐரோப்பியச் செம்மொழியாகிய விளங்கிய இலத்தீனில் தமிழ் இலக்கண நூல்கள் மூன்று இயற்றினார்.லத்தீனில் திருக்குறள், தமிழில்சதுரகராதி, (இயேசு வின் தந்தை யோசேப்பின் வரலாறு ஆகிய) தேம்பாவணிக் காவியம் ஆகியவை அவருடைய சிறந்த படைப்புகள். ஏனையவை`தமிழ் - லத்தீன் பேச்சுமொழி அகராதி’ (இருமொழி அகராதி);`போர்த்துகீசிய - லத்தீன் - தமிழ் அகராதி’ (மும்மொழி அகராதி) ஆகியவை. தமிழ் அகராதிக் கலை வளர்ச்சியில் இவர் முன்னோடி. 3.`சதுரகராதி ’ தமிழில் உருவாகிய முதல் அகராதி ஆகும். பெயர், பொருள், தொகை, தொடை என நான்கு பகுதிகளைக் கொண்டது. முதற் பகுதியில் பெயர்ச் சொற்களோடு வினை, இடை, உரிச்சொற்களும் `பெயரகராதி’யில் இடம்பெற்றுள்ளன. `பெயரகராதி’யில் பல்வேறு இடங்களில் அகரநிரல்படிவரும் பெயர்கள், `பொருளகராதி’யில் பொருளுக்குரிய பெயர்களாகத் தொகுத்து இடம்பெற்றுள்ளன. நிகண்டுகள் `பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி’ எனக் குறித்ததைச் `சதுரகராதி’ `தொகை அகராதி’ என்னும் பெயரால் சுட்டுகின்றது. ராட்லர், பெர்சிவல், வின்ஸ்லோ முதலிய பிற்றை அகராதி அறிஞரும் சதுரகராதிச் செய்திகளைப் பயன்படுத்தியுள்ளனர். 4. கிறித்தவக் காப்பியங்களுள் தலை சிறந்ததாகக் கருதப்படுவது`தேம்பாவணி’. 1726இல் இயற்றியது 3,615 பாடல் களையும் 36 பாடல்களையும் கொண்ட தேம்பாவணி 90 சந்தங்களைக் கொண்டது. 12,000 பாடல்களைக் கொண்ட கம்பராமாயணத்தில் 87 சந்தங்களையே கம்பர் பயன் படுத்தியிருக்க, தேம்பாவணியில் 90 சந்தங்கள் உள்ளமை வியக்கத்தக்கது. 5. இவர் காலத்துக்கு முன்னர் உயிரெழுத்துகளை எ,ஒ [குறில்] எ, ஒ [நெடில்] என்றவாறும் எ,ஒ,ஏ,ஓ உயிர்கள் ஏறிய மெய் எழுத்துகளையும் குறில், நெடில் வேறுபாடு காட்டாமல் கெ, கெ,கொ, கொ என்றே எழுதிவந்தனர். இவர் நெடில் தெளிவாகத் தெரியுமாறு சிறுமாற்றம் செய்து எ,ஒ; ஏ ஓ என்றும் கெ, கோ; கே, கோ என்றும் வடிவங்களைப் புகுத்தித் தெளிவை ஏற்படுத் தினார். [காண்க: செ.வை. சண்முகம் (1993) கிறித்துவ அறிஞர் களின் இலக்கணப்பணி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்; தரமணி சென்னை 113; பக் 118 - 121] 6. எளிய இனிய தமிழ் உரைநடைக்கு ஒரு முன்னோடியாக இவர் எழுதிய நகைச்சுவை மிக்க “பரமார்த்த குரு கதை ” விளங்குகிறது. 21 அபே ஜே. ஏ. தூபோ Abbe J.A. Dubois (1765-1848) பிரான்சு நாட்டவரான இந்த யேசு சபைப் பாதிரியார் கத்தோலிக்க சமயப்பரப்புப் பணிக்காக 1792ம் ஆண்டில், தமது 27வது வயதில் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். (ஆங்கிலமும் நன்கு தெரிந்தவர்) தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பணியாற்றிய பின்னர் 1823 இல் தம் நாட்டுக்குத் திரும்பினார்; தொடர்ந்து 1848இல் இறக்கும் வரை வெளிநாடுகளில் சமயப்பரப்பு தலுக்கான பிரெஞ்சு அமைப்பின் தலைவராக இருந்தார். தென்னிந்தியாவில் கிருஷ்ணா ஆற்றுக்குத் தெற்கிலுள்ள பகுதிகளில் பல இடங்களுக்கும் சென்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவை வழங்கும் பகுதிகளில் மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகியும் பெரும்பாலும் அவர்களைப் போலவே வாழ்ந்தும் அனைத்தையும் நேரடியாகக் கண்டறிந்தவர். (அம்மொழிகளையும், சம்ஸ்கிருதத்தை ஓரளவுக்கும் தெரிந்தவர்) சில ஆண்டுகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பணி செய்துள்ளார். (எனவே தமிழ்நாட்டு மக்களின் பலதுறைச்செய்திகளை விரிவாக நன்கு விளக்கி யுள்ளார்). பின்னர் மைசூர் நாட்டில் திப்பு ஆட்சி முடிந்த பின்னர் அங்கு சென்று பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 2. கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவையும் கைவந்தவர். எனவே சம்ஸ்கிருதம் மற்றும் தென்னகமொழி நூல்களில் குறிப்பாகத் தமிழில் உள்ள முக்கியமான செய்தி களைத் தொகுத்து வந்ததுடன் நேரடியாகத் தென்னாட்டு மக்கள் அனைத்துப் பிரிவினர், சாதியினருடன் தானே அன்றாடம் நெருங்கிப் பழகி உணர்ந்த செய்திகளையும் சேர்த்து 60 தமிழுக்குத் தொண்டாற்றிய பிறநாட்டு அறிஞர்கள் தென்னாட்டு மக்களின் அன்றைய (1792-1823) வாழ்வியலின் அனைத்துக் கூறுகளையும் அவர் உணாந்தவாறு ஒரு கலைக்களஞ்சியம் போலப் பதிவு செய்துள்ளார். அவர் பிரெஞ்சு மொழியில் “இந்து வாழ்வியல், பழக்கவழக்கங்கள், சடங்குகள்” என்ற தலைப்பில் உருவாக்கிய பிரெஞ்சு கைப் பிரதியை அன்றைய சென்னை கவர்னர் பெண்டிங் பிரபு 2000 ஸ்டார் பகோடா [தூபோவின் முழுமையான நூலின் ஆங்கிலப் பெயர்ப்பை போசாம்ப் அச்சிட்ட 1897இல் ரூ. 8000க்குச் சமம்] விலைக்கு அரசின் சார்பாக வாங்கினார். பிரெஞ்சுக் கைப் பிரதியை வாங்கியவுடன் ஆங்கிலப்படுத்தி 1816இல் மேஜர் வில்க்ஸ் பார்வையில் முதல்பதிப்பு வெளியாகியது. [அதன் மூன்றாம் பதிப்பை (411 பக்கங்கள்) 1879 இல் சென்னை ஹிகின்பாதம்ஸ் நிறுவனம் ஜி.யூ.போப் மூலம் மீண்டும் அச்சிட்டது.] 3. முதற்பதிப்பு 1816இல் தூபோவின் பிரெஞ்சு கைப்பிரதியை ஆங்கிலப்படுத்தி அச்சிடப்பட்ட போதிலும், தூபோ பிரான்சுக்கு 1823இல் தான் திரும்பிச் சென்ற பின்னரும் பிரெஞ்சு மூலத்தைத் திருத்திக் கொண்டும் விரிவாக்கிக் கொண்டும் இருந்தார். அவ்வாறு விரிவாக்கிய இறுதிப் பிரெஞ்சு மூலத்தை 1897இல் ஹென்றி கே. போசாம்ப் Henry K. Beauchamp ஆங்கிலப்படுத்தி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மூலம் 741 பக்க நூலாக வெளியிட்டார். 4. போசாம்ப் 1897இல் ஆங்கிலப்படுத்தி வெளியிட்ட தூபோவின் (இறுதியாகத் திருத்திய) நூலின் அமைப்பு வருமாறு: பகுதி I பக் 14-159 இந்திய (குறிப்பாகத் தென்னிந்திய) சமூக அமைப்பு மற்றும் சாதிமுறை, சடங்குகள். II (பக் 160 - 541) பிராமணர் (மற்றும் பிற வருணத்தவர்) வாழ்வியலின் கூறுகள். (பக். 433 - 482 இல் பஞ்சதந்திரக் கதைகள், போன்றவை; பழமொழிகள் முதலியவை). III (பக் 542 - 684) சமயம்; வழிபாடு, மறுபிறவி, இந்துக் கோவில்கள், கடவுளர்; நீதிமுறை, நரபலி, போர்முறைகள், பாளையக்காரர்கள். இணைப்புகள் பக் 685 - 741; பொருட் குறிப்பகராதி 723 - 741. 5. கி.பி. 1800ஐ ஒட்டிய காலத்தில் தமிழகத்திலும் தென்னாட்டு வாழ்வியல் எவ்வாறு இருந்தது என்பதை முப்பதாண்டு காலம் பல வகை மக்களோடும் மிக நெருங்கிப் பழகிய அறிஞரான ஒரு பிரெஞ்சு பாதிரியாருடைய பார்வையில் காண உதவும் தூபேயின் நூல் சமூகவரலாற்று ஆய்வாளர்களுக்குப் பயன்படுவதாகும். 22 பர்த்தொலொமியோ சீகன்பால்கு Bartholomew Ziegenbalq (1682 - 1719) தரங்கம்பாடிப் பகுதியில் வாழ்ந்த சில ஆண்டுகளில் (டேனிஷ் மிஷன் புராடெஸ்டண்ட் விடையூழியராக) அரும்பணி செய்த செருமனி நாட்டறிஞர். தமிழ் நூல்கள் சிலவற்றின் ஜெர்மன் பெயர்ப்பு, அன்றைய தமிழகத்தை விளக்கும் அரிய நூல்கள், ஆகியவற்றைச் செய்துள்ளார். இந்தியாவில் முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் டென்மார்க் அரசரின் முயற்சியால் லூத்தரன் (கிறித்தவ) சபை தோற்று விக்கப்பட்டது. இதன் முதல் ஊழியர் பர்த்தொலொமியோ சீகன்பால்குதான். 2. அவர் தமிழர் வணங்கும் தெய்வங்களைப் பற்றி 1713 இல் ஒரு நூல் எழுதினார் அது 1867 இல் அச்சிடப்பட்டது. ஆங்கிலப் பெயர்ப்பை டேனியல் ஜெயராஜ் 2005இல் “Geneaology of the South Indian deities” என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். 3. தமிழ் - ஜெர்மன் அகராதி யை இயற்றி 1719இல் அச்சிட்டார். “தமிழர்கள் ஐரோப்பிய அறிஞர்களைப்போலவே தத்துவப் பொருள்களை விவாதித்தனர். எல்லாச் சமயப் பொருள்களும் விவாதித்து விளக்கப்படுகின்ற ஒழுங்கான விதிமுறைகள் அவர்களிடம் உள்ளன” என்பதை ஐரோப்பிய அறிஞர்களுக்கு உணர்த்தியவர். 4. இவர் வரலாற்றைத் தரும் நூல்கள்; Brijraj Singh, 1999 The first Protestant missionary in India; pp 195, OUP, New Delhi. Daniel Jayaraj 2006. Bartholomaus ziegenbalq - an Indian assessment” p XIX : 313: 313; Indian SCK; Delhi 110006. 23 பிரான்சிஸ் வைட் எல்லிஸ் Francis Whyte Ellis (1777 - 1819) இவர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரியாக இருந்தவர்.A.D. காம்பெல் எழுதிய தெலுங்கு இலக்கண நூலின் முன்னுரையின் விளக்கக் குறிப்பாக எல்லிஸ் எழுதிய 31 பக்கக் குறிப்பில் இவர் தெள்ளத் தெளிவாக தமிழிய (திராவிட) மொழிக்குடும்பம் (இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் சார்ந்த) இந்தோ ஆரிய (வேதமொழி - சம்ஸ்கிருதம்) மொழியிலிருந்து வேறுபட்டது என்பதைப் பின்வருமாறு தநிறுவினார்.” “தமிழோ, தெலுங்கோ அவற்றின் இனமொழிகளோ சம்ஸ்கிருதத்திலிருந்து கிளைத்து உருவானவை அல்ல. சம்ஸ்கிருதம் இம்மொழிகளை மெருகூட்டப் பயன்படுத்தப் பட்டிருந்த போதிலும் அவற்றின் இருப்புக்குத் தேவையற்றது; அவை ஒரு தனியான மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. அம்மொழிகளில் சம்ஸ்கிருதச் சொற்கள் (குறிப்பாகப் பிற்காலங் களில்) கலந்துள்ள போதிலும் வேர்ச் சொற்கள் நிலையில் அவற்றோடு சம்ஸ்கிருதத்துக்குத் தொடர்பில்லை. [எல்லிஸ் குறிப்பின் ஆங்கில வடிவின் மூலத்தையும் தமிழாக்கத்தையும் பி. இராமநாதன் (2009)உலக அறிஞர்களின் பார்வையில் தமிழ் நூலில் காணலாம்.] மேலும் பின்வரும் நூல்களையும் காண்க. i) தாமஸ் ஆர்.டிரவுட்மன் (2007) Language and Nations. The Dravidian proof in colonial Madras. ii) மேற்படி நூலின் தமிழாக்கம் இராமசுந்தரம் செய்தது (2009) “திராவிடச் சான்று: எல்லிஸும் திராவிட மொழிகளும்” MIDS சென்னை& காலச்சுவடு பதிப்பகம்) 2. இக்கருத்தின் வேரை - அதாவது தென்னிந்தியாவிலும் ஏன் வட இந்தியாவிலும் வழங்கும் மொழிகள் வேதமொழி சம்ஸ்கிருதத்துக்கு முந்தைய மொழிகள்; அவற்றில் பிற்காலத்தில் பல்வேறு அளவுகளில் சம்ஸ்கிருத மொழிக் கூறுகள் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் பின் வருமாறு சர் வில்லியம் ஜோன்ஸ் 1788இலேயே நுண்மாணுழைபுலத்துடன் தெரிவித்திருந்தார். “இந்தி முதலிய வடஇந்திய மொழிகளில் மொழியியல், இலக்கணக் கூறுகள் இந்தோ ஆரியமொழிக்குரியவையல்ல [அப்பொழுது தமிழிய மொழிக் குடும்பம்” பற்றி மேனாட் டறிஞருக்கு தெரியாது] ஆரியமல்லாத பிறமொழிக் குடும்பம் சார்ந்த மொழிகளே வட இந்தியா முழுவதும் வழங்கி யிருக்க வேண்டும்; பண்டு வந்த சம்ஸ்கிருதமொழி பேசுநர் தமது மொழிக் கூறுகளை அம்மொழிகளில் புகுத்தியிருக்க வேண்டும்”. (Regarding modern Indo Aryan languages): “and this analogy might induce us to believe, that the pure Hindi, whether of Tartarian or Chaldean origin, was primeval in upper India, into which the Sanskrit was introduced by conquerors from other kingdoms in some very remote age” 3. தமிழ் மொழியின் வேர்களைப் போன்றே செமித்திய மொழிகளாகிய எபிரேயம், அரபு முதலியவற்றின் வேர்களும் இருப்பதை எல்லிஸ் ஆய்வுக் குறிப்புகளில் எழுதி வைத்திருந்தார். “தமிழானது வேர்ச்சொல் அடிப்படையில் (செமித்திக் என்று அழைக்கப்படும்) மொழிக்குடும்பத்துடன் -- அதில் மிகப் பழையது ஹீபுரு; மிக வளர்ந்தது அரபு -- உறவுடையது. தமிழ்ச் சொற்கள் - `அப்பன், அம்மன்’ [ஈற்றசை இன்றி `அபி, `அம்’] போன்றவை எந்த மொழியிலுமே பெரும்புழக்கம் உடையவை; கடன் வாங்கப் படுபவை அல்ல; அவையும் பின்வருவனவும் ஒன்றேயாகும்; ஹீபுரு ab மற்றும் கால்திய யb; அரபு abu; ஹீபுரு am; அரபு amu. The Tamil is radically connected with that family of languages of which the Hebrew probably the most ancient and the Arabic certainly the most polished... The resemblance in terms includes some of most frequent occurrence and which in all languages are expressed by words of native derivation, appen and ammen (or without the termination ab and am) are the same as Hebrew ab, Chaldaic ab and the Arabic abu, the Hebrewam and the Arabic amu.(ஆக்ஸ் போர்ட் நூலகத்தில் உள்ள எல்லிஸ் கையெழுத்துப் பிரதியிலிருந்து) - Chemmozhi 1-4 சூலை திச 2007). 4. திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு மிக விரிவான சிறந்த உரையை எல்லிஸ் ஆங்கிலத்தில் எழுதி அச்சிட்டிருந்தார். அதை இரா. பி. சேதுப்பிள்ளை (சென்னைப் பல்கலைக் கழகம்) ஆய்வு முன்னுரையுடன் 1995இல் செம்மையாகப் பதிப்பித்தார். 2011இல் அது மீண்டும் அச்சிடப்பட்டுள்ளது. 24 ஜான்பிலிப் பெப்ரிசியஸ் John Phillip Fabricius (1711 - 1791) ஜெர்மனி நாட்டவராகிய இவர் சீகன்பால்குவுக்குப் பின் தரங்கம்பாடிக்கு விடையூழியராக வந்தவர். தமிழ் – ஆங்கில அகராதிகளின் முன்னோடியாக இவர் 1789இல் தொகுத்து வெளியிட்ட “A Malabar and English Dictionary தமிழும் இங்கிலீசு மாயிருக்கிற அகராதி” உள்ளது. இப்பணியில் இவருக்கு உதவியவர் கிறிஸ்தியன் ப்ரெய்தாப்ட் இவ்வகராதியில் 9000 சொற்கள் உள்ளன. 2. பலதுறைத் தமிழ்ப் பணியை 51 ஆண்டுகள் (பெரும்பகுதி சென்னை வேப்பேரியில்) செய்தவர். ஜெர்மனி நாட்டவர். ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன், முதலிய மொழிகளைக் கற்றறிந்தவர். தமிழ் இலக்கிய - இலக்கணங்களை முறையாகக் கற்றவர். 25 ஜான்பீட்டர் ராட்லர் John peter Rottler (1749 - 1836) இவர் பெப்ரீசியஸ் அகராதி யைப் பெரிதாக்கி 1834இல் வெளியிடத் தொடங்கினார். முதல் தொகுதி 1834இல் வந்தது. பின்னர் 2-4 தொகுதிகள் வில்லியம் டேலர், டி. வெங்கடசால முதலி, ஆந்த்ரு இராபர்ட்சன் ஆகியவர்கள் மேற்பார்வையில் 1837, 1839, 1841ல் வெளிவந்தன. மொத்தம் பக்கங்கள் 1434; சொற்பதிவுகள் 36109. 26 மிரன் வின்சுலோ Miron Winslow (1789 - 1864) இவர் அமெரிக்க விடையூழியராக ஈழத்தில் முதலில் வடுக்கோட்டை, உடுவில் ஆகிய இடங்களில் பணியாற்றினர். பின்னர் 1836ஆம் ஆண்டுக்குப் பின்னர் சென்னையில் பணியாற்றினார். ஏற்கெனவே வெளிவந்த பெப்ரிசியஸ், ராட்லர் அகராதிகளை விரிவாக்கிச் செம்மைப்படுத்தும் பணியை இவர் மேற்கொண்டார். ஈழத்தில் இருந்தபொழுது ஜோசப் நைட், லீவை ஸ்பால்டிங் ஆகியோரும், பின்னர் பெர்சிவல் - உம் இவருக்கு உதவினர். ஏற்கெனவே மானிப்பாய் (அல்லது) யாழ்ப்பாண அகராதி என்ற பெயரில் வெளிவந்திருந்த 58500 சொற்களைக் கொண்ட அகராதியும் பயன்படுத்தப்பட்து. சென்னையில் இராமானுசகவிராயர், விசாகப்பெருமாளையர், விசுவநாதபிள்ளை முதலிய தமிழ்நாட்டு அறிஞர்களின் உதவியையும், வின்ஸ்லோ பெற்றார். இத்தகைய பெருமுயற் சியாலும் கடும் உழைப்பாலும் 1862 இல் வின்ஸ்லோ வெளியிட்ட A comprehensive Tamil and English dictionary பக் 976; சொற்கள் 67452 அதுவரை வெளிவந்திருந்த அகராதிகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. 2. 1905 தொடக்கத்தில் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் புராடெஸ்டன்ட் அமைப்புகள் வின்ஸ்லோ அகராதி யை மேலும் விரிவாக்கி அச்சிடும பணியைத் தொடங்கிய கால கட்டத்தில் ஜார்ஜ் அக்லோ போப் அதுவரைத் தாம் (ஒருதமிழ் லெக்சிகன் உருவாக்கக் கருதித்) தொகுத்து வைத்திருந்த தரவுகளைப் பற்றிய செய்தியும் தெரிய வரவே, இரண்டு முயற்சி களையும் இணைக்கச் சில ஆண்டுகள் சென்னை மாகாண அரசின் ஆதுரவுடன் தமிழக - இலங்கை புராடெஸ்டெண்டு அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள் இறுதியில் 1913 முதல் முதல்சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் லெக்சிகன் பணியாக உருவாகியது என்பதை மேலே போப் பற்றிய செய்தியில் கண்டோம். 3. (i) தமிழ் மொழியானது வேதமொழி – சம்ஸ்கிருதத்தின் தாயான இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் தொடக்கத்தை ஒத்த தொன்மையுடையது; ஏன் அதற்கும் முந்தையதாக இருக்கலாம் என்ற கால்டுவெல் (1856) நூலின் கருத்தை போப் ஏற்றிருந்ததை மேலே கண்டோம். (ii) அக்கருத்தை வின்ஸ்லோவும் தம் 1862 அகராதியில் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார். “தமிழிய மொழிகளுக்கும் ஏனைக் குடும்ப மொழிகளுக்கும் இடையேயுள்ள ஒப்புமைகள் பற்றி ஏற்கெனவே ஏராளமான சான்றுகளைக் கால்டுவெல் தந்துள்ளார்; மேலும் சில இப்புத்தகத்திலும் தரப்படும். அவற்றின் அடிப்படையில் தமிழிய மொழிகளின் சொற்கள், வேர்களில் பலவற்றுள் சம்ஸ்கிருதம் (= மெருகூட்டப்பட்டது; சீரமைத்தது) உட்பட்ட இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் சொற்கள் வேர்கள் எந்த மூலத்தில் தோன்றினவோ அந்த மூலவடிவங்களை இன்றும் காணலாம்; ஏ ன் ! கழி பழங்காலத்தில் உலகம் முழுவதும் ஒரே மொழி வழங்கிய காலத்திய சொற்கள், வேர்களையும் காணலாம். But from affinities traced out by him (கால்டுவெல்) in addition tothose hereinafter given it would seem that we may go farther back for many roots and forms in these tongues, to some common fountain both for them and for the languages of the Indo - European family, including Sanskrit ( = burnished, polished) nearer to the time when “the whole earth was of one language” இறுதியாக ஒன்று. வின்ஸ்லோ கருத்துப்படி “ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகள் இன்றுள்ள எந்தக் கருத்தையும் தெளிவாக, முழுமையாக நுட்பமாகக் கூறத் தேவையான ஆற்றல்மிக்க சொல்வளம் பெற்றுள்ளன; அதே போன்ற சொல்வளத்தைப் பெற்றுள்ள தமிழை அவற்றுக்கு நிகரானது எனக் கூறலாம். In its fullness and power it more resembles English and German than any other language.” 27 கிரிகரி ஜேம்ஸ் Gregory James வீரமாமுனிவர் காலத்திலிருந்து வின்சுலோ காலம் முடிய நடந்த அருமையான அகராதிப் பணிகளை பல பற்றி முன் இயல்களில் கண்டோம். எனவே இங்கு கிரிகரி ஜேம்ஸ் உடைய நூலைக் குறிப்பிடுவது பொருத்தமாகும். 2. தமிழ் அகராதிகளின் Colporul - A History of Tamil dictionaries என்ற சிறந்த நூலாக உருவாக்கி 2000இல் வெளியிட்டார். அடையாறு Cre A பதிப்பகம் 2000இல் வெளியிட்டுள்ளது. 3. இந்த இடத்தில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம் 2007இல் (அத்திட்ட அகரமுதலியின் XI வது மடலமாக) “தமிழ் அகரமுதலி வரலாறு” என்ற நூலை வெளியிட்டுள்ளதையும் குறிப்பிட வேண்டும். அந்நூலில் தமிழ் அகரமுதலிகளைப் பற்றிய பல்வேறு செய்திகளை 1-241 பக்கங்களில் காணலாம்; 19ம் நூற்றாண்டில் அச்சாகி வெளிவந்த சில அகர முதலிகளின் நிழற்படி மாதிரிகளும் க-க 20 பக்கங்களில் உள்ளன. (செ.சொ.பி. அகரமுதலி பற்றிய செய்திகளை அந்நூலின் பக். 242- 369இல் காண்க.) 28 ஹென்றி ஆர். ஹாய்சிங்டன் Henry R. Hoisengton (1801-1858) யாழ்ப்பாணத்தில் விடையூழியராகப் பணியாற்றிய அமெரிக்க நாட்டறிஞர். தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் புலமை பெற்றவர். 1836-1849 ஆண்டுகளில் வட்டுக் கோட்டை (செமினரி) தலைவர்அமெரிக்க ஓரியன்டல் கழக இதழ் ((Journal of the American Oriental Society) மடலம் மூன்றில் 1853 ஆம் ஆண்டில் “தமிழ்மொழி பற்றிய சில குறிப்புகள்” என்னும் அரிய கட்டுரையை வெளியிட்டார். (அது 19.5.1852 இல் அவர் அமெரிக்காவில் ஆற்றிய உரை) அவர் கருத்துகள். “செந்தமிழை விடச் செறிவு, சொல்வளம், எக்கருத்தையும் வெளியிடும் ஆற்றல், இனிமை ஆகிய தன்மைகளைக் கொண்ட மொழி வேறு எதுவும் இருக்க இயலாது.” “தென்னிந்தியாவில் மொத்தம் ஏறத்தாழ இரண்டு மூன்று கோடி பேர் பேசும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் மற்றும் சில மொழிகளைத் தோற்று வித்தது தமிழே என்று கருதப்படுகிறது. ஆகவே தமிழைத் தென்னிந்தியத் (தொன்) மொழியாகவே கருதலாம்”. 2. சைவசித்தாந்தத்தை இவர் கற்றுத்தேறியதனைப் போல இலங்கையில் பணிபுரிந்த எந்த மிஷனரியும் கற்றுத் தேரவில்லை. (எஸ். ஜெபநேசன். 1983:“அமெரிக்கன் மிஷனும் இலங்கையில் தமிழ் வளர்ச்சியும்”) 3. சென்னைப் பல்கலைக்கழகம் 1857இல் முதன்முதலாக B.A. தேர்வு நடத்திய பொழுது தேறிய இருவர் ஆகிய சி.வை. தாமோ தரம்பிள்ளையும், கறல விசுவநாதபிள்ளையும் இவரிடம் பயின்றவர்களே. 29 வில்லியம் டேலர் William Taylor 1796 – 1878 இவர் 1815லிருந்து சென்னையில் புராடஸ்டெண்ட் பாதிரியாகப் பணியாற்றியவர். ராட்லர் அகராதியின் 3, 4 பகுதிகளை இவர் பதிப்பிக்க உதவியதை மேலே கண்டோம். 2. கிழக்கிந்தியக் கம்பெனி இராணுவப் பொறியாளர் / சர்வேயர் ஆக 1782 முதல் தென்னாட்டில் பணியாற்றிய ஸ்காட்லாந்து சார்ந்த காலின் மெக்கென்சி (1751 - 1821) தமது பயணங்களில் தமிழ் உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ஏடுகள், நூல்கள், தொல்பொருள்கள் முதலியவற்றைத் தொகுத்து வைத்திருந்தார். 1813ல் “சர்வேயர் ஜெனரலாக” பதவி உயர்வு பெற்று கல்கத்தா செல்லும்பொழுது அவற்றை உடன்கொண்டு சென்றார். அவர் 1821இல் இறந்தபின் அவர் மனைவியிடம் கவர்னல் ஜெனரல் ஹேஸ்டிங்கஸ் 10000 பவுன் விலைக்கு அத்தொகுப்பினை விலைக்கு வாங்கினார் 1828 இல் அத்தொகுப்பு நூல்கள் பட்டியலை H.H வில்சன் இரண்டு மடலங்களாக கல்கத்தா ஆசியாவில் ஆய்வுச் சங்கம் Asiatic Society மூலம் வெளியிட்டார். பின்னர் 1830இல் மெகன்சி தொகுப்பில் இருந்த தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் சுவடிகளை ஆசியவியல் சங்கம் சென்னையிலிருந்த Madras Literary Society க்கு அனுப்பி வைத்தது. [அவ்வாறு வந்தவை ஏற்கெனவே சென்னை யிலிருந்த நூல்கள், சுவடிகள்; லண்டனிலிருந்து வந்திருந்த டாக்டர் Leyden சுவடிகள்; C.P. பிரௌன் சுவடிகள் உட்பட -- உடன் சேர்க்கப்பட்டன] இச்சுவடிகள் அனைத்துக்கும் மூன்று தொகுதிகளில் (1857, 1860, 1862) டேலர் Acatalogue raissonne of Oriental Manuscripts என்ற பெயரில் விரிவான விளக்கப்பட்டியலை டேலர் எழுதி வெளியிட்டார். (இவற்றுள் மக்கென்சி தொகுப்பில் இருந்த தமிழ்ச்சுவடிகள் 192 -- உள்ளூர் வரலாறு, வாழ்க்கை வரலாறு பற்றிய 39 சுவடிகள் உட்பட. இச்சுவடிகளில் தமிழ், மலையாளம் மொழிகளில் உள்ளவற்றில் வரலாறு சார்ந்த வற்றின் சுருக்கத்தை ஆங்கிலத்தில் T.V. மகாலிங்கம் 1972 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிட்டார். Machenzie manuscripts என்ற பெயரில் பக் LXXIV; 342 [தமிழ் 74 சுவடிகள் பக் 1 - 281; மலையாளம் 12 சுவடிகள் பக் 282-342] 2011 இல் மறுபதிப்பு வந்துள்ளது. இச்சுருக்கங்கள் 1932 – 66 காலகட்டத்தில் நீலகண்ட சாஸ்திரி, வி.ஆர்.ஆர். தீட்சிதர், டி.வி. மகாலிங்கம் ஆகியோர் வழிகாட்டுதலில் வரலாற்று ஆய்வு மாணவர்கள் எழுதியவை. 3. அதிவீரராமபாண்டியன் (மதுரை நாயக்கர்களின் சிற்றரசனாக வாழ்ந்தவன்) கி.பி. 16ம் நூற்றாண்டில் எழுதிய “வெற்றிவேற்கை (நறுந்தொகை)” நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து டேலர் வெளியிட்டுள்ளார். 30 சாமுவேல் பிஸ்க் கிறீன் Samuel Fisk Green (1822 - 1884) அமெரிக்க ஐக்கிய நாட்டில் மசச்சுசெட்ஸ் மாநிலத்தில் வொர்செஸ்டர் நகரில் பிறந்த இவர் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டையிலும் மானிப்பாயிலும் 1847 - 1857ல் பணி செய்தவர். தமிழ் மருத்துவக் கல்வியையும் 1863 - 1872 கால அளவில் கற்பிக்கத் தொடங்கி அதற்காக மேனாட்டு மருத்துவ நூல்களை அன்றே தமிழ்ப்படுத்தி (மொத்தம் 4000 பக்கங்களில்) வெளியிட்டவர். வாழ்க்கை வரலாறுகள் Culter, Ebenezer (1891) Life and letters of Samuel Fisk Green அம்பிகை பாகன் (1995) மருத்துவத் தமிழ் முன்னோடி டாக்டர் கிரீன்; சை.சி. நூ.ப.க; சென்னை; பக் 173. 31 வில்லியம் ஹாய்ல்ஸ் துரு William Hoyles Drew இங்கிலாந்து நாட்டவராகிய இவர் 1832-1860 கால அளவில் சென்னையிலும் அருகிலுள்ள பகுதிகளிலும் புராடெஸ்டண்டு விடையூழியராகப் பணியாற்றினார். திருக்குறளின் முதல் 63 அதிகாரங்களை ஆங்கிலத்தில் உரைநடையில் மொழிபெயர்த்துள்ளார். “செந்தமிழ்ச் செல்வி” 38 (1963) பக் 313-15இல் உள்ள மு. சதாசிவம் கட்டுரையைக் காண்க. 32 பீட்டர் பெர்சிவல் (Peter Perciwal) (1803 - 1882) இங்கிலாந்து நாட்டவராகிய இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் 1870களில் தமிழ்மொழி, இலக்கியப் பேராசிரியராக இருந்துள்ளார். பொதுக்கல்வி பற்றி பிள்ளைகளுக்குச் சுருங்கிய அகராதிகள் தயாரித்ததில் பெரும்பங்கு வகித்தவர். தமிழ் மூதாட்டி ஒளவையாரின் ஆத்திசூடியை மொழி பெயர்த்துள்ளார்.`வேதம் பிறந்த நாடு’ என்ற நூலின் ஆசிரியர். ஆறுமுகநாவலரின் உதவியுடன்பைபிளை நல்ல தமிழில் மொழி பெயர்த்தவர். பெர்சிவல் தமிழ்ப் பழமொழிகளின் தொகுப்புகளை முதல் முதலில் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் 1842ல் வெளியிட்டவர். அடுத்து ஜான் லாசரஸ் 1894 A dictionary of Tamil Proverbs என்னும் தொகுப்பில் 9000 பழமொழிகளை வெளியிட்டார். பின்னர் மேலும் விரிவான தொகுப்பாக 1897இல் டென்மார்க் நாட்டினரான ஹெர்மன் ஜென்சன் 3644 தமிழ்ப் பழமொழிகளைத் தெரிந்தெடுத்து பொருண்மைப்படி வகைப்படுத்தி “A classfied collection of Tamil Proverbs ”ஐ வெளியிட்டார். 33 கார்ல் கிரால் Karl Graul (1814 - 65) தரங்கம்பாடியில் முதுலில் டென்மார்க் நாட்டு அரசன் தொடங்கி நடாத்திய “டேனிஷ் புராடஸ்டெண்டு விடையூழியம்” டென்மார்க் வாணிகத்தலங்கள் தரங்கம்பாடி முதலியவற்றை ஆங்கில அரசிடம் ஒப்படைத்து விட்ட பின்னர், ஜெர்மனி யிலுள்ள `லீப்சிக் எவரஞ்செலிகல் லூதரன் விடையூழியத்தின்’ கைக்கு மாறியது. அதன் பின்னர் இங்கு வந்து சில ஆண்டுகள் பணியாற்றியவர் கார்ல் கிரால். செருமன் தமிழறிஞரில் தலைசிறந்தவர் இவர் எனலாம். 2. இவர் தமது “பிபிலியோதெகா தமுலிகா” நூல் வரிசையில் பின்வரும் நூல்களை லீப்சிக் நகரில் வெளியிட்டார்:- 1854 I (203 பக்கம்) கைவல்ய நவவீதம் (The fresh butter of life) தாண்டவமூர்த்தி சுவாமி எழுதியது; பஞ்சதசபிராகரணம் (15 Chapters) பொறையாறு அருணாசல சுவாமி எழுதியது; ஆத்ம போத பிரகாசிகம் (சம்ஸ்கிருத மூலம் - ரோமன் எழுத்துப் பெயர்ப்பில்) 1855 II (174 பக்கம்) கைவல்ய நவநீதம் தமிழ்நூல் ; அதன் ஜெர்மன் மற்றும் ஆங்கிலப் பெயர்ப்புகள்; சொற்றொகுதி; இலக்கணச் செய்திகள். 1856 III (196 பக்கம்) திருக்குறள் தமிழ் மூலம் ; ஜெருமன் பெயர்ப்பு; இலக்கணக் குறிப்பு; அரும்பதப்பொருள் உடன். 1865 IV குறள் மூலம் ; சாதாரணத் தமிழில் குறள்; லத்தீன் மொழிபெயர்ப்பு 3. கீழ்த்திசை (ஆசியவியல்) ஆய்வுகள் சார்ந்த சிறந்த ஜெர்மன் இதழான Zeitzscift Der Morgenlandischaen Gesceallschaftஇல் 1854 ல் சிவஞானசித்தியார், ஜெர்மன் பெயர்ப்பையும் வெளியிட்டார். 4. கிராலின் குறள் ஜெர்மன் பெயர்ப்பைப் படித்தவர் களுள் லியோதால்ஸ்தாயும் ஒருவர். மகாத்மாகாந்தி அன்பரான தாரகநாத் தாஸ் அமெரிக்காவில் நடத்திய Free Hindusthan இதழுக்கு தாஸ்ஸ்தாய் (தாஸ் வேண்டியபடி) ஒரு கட்டுரையை 14.12.1908 அன்று அனுப்பினார்; “மாந்தர் வாழ்க்கைக்குத் தேவையான ஒரே விதி அன்புடைமை; அன்புடைமைக்குக் கட்டளைக்கல் தீயவை செய்தார்க்கும் இன்னா செய்யாமையேயாகும்” (Great religious teachers have laid down) one invariable condition of love, namely the enduring of injuries, insults and violence of all kinds without resisting evil by evil. என்று அக்கட்டுரையில் எழுதியிருந்தார். மேலும் தம் கருத்துக்கான பல சான்றுகளில் ஒன்றாகத் திருக்குறளிலிருந்து “இன்னா செய்தார்க்கும்...” “அஃகி அகன்ற.... “பிறர்க்கு இன்னா..” முதலிய நாலைந்து குறள்களின் ஆங்கில மொழி பெயர்ப்பையும் தந்திருந்தார். மேலும் அதே கட்டுரையில் தால்ஸ்தாய் “மறுபிறவி” உட்பட பல மூடநம்பிக்கைகளை விட்டுவிட வேண்டும் என்றும் எழுதினார் (“If only people freed themselves from their beliefs in all kinds of Ormuzds, Bhramas and their incarnation as Krishnas and Christs, from belief in paradise and hell, in reincarnations and resurrections, interference of gods in external affairs and infallibility of Veda, Bible, Koran etc”) `பிரீ இந்துஸ்தான்’ இதழில வந்த இக்கட்டுரையைப் படித்த அண்ணல் காந்தியடிகள் தால்ஸ்தாய் அனுமதி பெற்று அந்த 14.12.1908 கடிதத்தை அச்சிட்டு தென் ஆப்பிரிக்காவில் ஆயிரக் கணக்கில் பரப்பினார். உலகப் பெரியார்களில் ஒருவரான ஆல்பர்ட் சுவைட்சர் அவர்கள் கிராலின் திருக்குறள் ஜெர்மன் வடிவத்தைப் படித்த பின்னர் தமது 1935 ஜெர்மன் நூலில் (ஆங்கில வடிவம் 1951: “Indian thought and its developments” Adam and Charles Black லண்டன்; பக்.200 - 205 பார்க்க) இந்திய மெய்யியல் அறிவர்களில் திருவள்ளுவர் தலைசிறந்து விளங்குவதைப் பாராட்டியுள்ளார்; சில பகுதிகள் வருமாறு. “பிராமணீயம், புத்தமதம், பகவத்கீதை போன்றளவற்றைப் போல் இம்மை மறுமைப் பயன் கருதியே அறநெறியில் நிற்றல் வேண்டும் என்ற வாணிகக் கொள்கையைக் குறள் வலியுறுத்துவது இல்லை. நல்லது செய்வதே தக்கது என்ற உணர்வினாலேயே நல்லது (அறம்) செய்ய வேண்டும் என்று குறள் கூறுகிறது (குறள்கள் 222, 211) பகவத்கீதையோ கருமம் செய்து கொண்டிருப்பது பிரபஞ்சநியதி என்று வறட்டுத்தனமாக வலிந்து கூறுகிறது. ஆனால், என்ன வியப்பு, குறளோ மாந்தன் உழைப்பதும் ஈட்டுவதும் பிறருக்கும் பிற உயிர்களுக்கும் அவன் நன்மை செய்வதற்காகத்தான் என்று சாற்றுகிறது. (குறள்கள் 81, 212) பகவத் கீதைப்படி கடமை சாதிக்குத் தக்கபடி வேறுபடும். குறளோ மக்கள் அனைவரும் `நல்லவை செய்தொழுகக்’ கூறுகிறது.”“ஏனை இந்திய தர்மசாத்திரக்காரர் ழைப்பதில், முயற்சி செய்வதில், மகிழ்வோடு ஈடுபடு என்று கூறவில்லை. குறள்கள் 619, 630 போன்றவையே உலகியலிலும், வாழ்க்கை யிலும், ஆர்வத்துடன் ஈடுபடும்படி அறிவுறுத்துகின்றன. “(பௌத்தமும் கீதையும் போலப் பற்றின்மை, வெறுப்பின்மை, கொல்லாமை, அகிம்சை ஆகியவற்றையும் குறள் வலியுறுத்தினாலும் கூட அதே சமயத்தில்) குறள் அதிகமாக வலியுறுத்துவது அன்பும் அருளுமே யாம் (the living ethic of love). காண்க குறள்கள் 72, 78, 79, 103, 226, 241. “அறநெறிசார் உலக வாழ்க்கை இலட்சியத்தைத் திறம்படச் சுட்டுகிறது குறள். மாந்தனின் தனி வாழ்க்கை, பிற உயிர்களோடும் உலகத்தோடும் உறழும் அவன் வாழ்க்கை ஆகியவற்றில் கைக்கொள்ள வேண்டிய நெறிகளைக் குறள் வியத்தகு பண்புடனும் சால்புடனும் நடைமுறைக்குகந்த வகையில் வகுத்துள்ளது (Characterised by nobility and good sense). உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இவ்வளவு சிறந்த ஒளிமயமான அறவுரை வாசகங்களை வழங்கும் நூலைக் காண இயலாது. (குறள்கள் 92, 105, 108, 121, 159, 162, 216, 298, 319, 578, 594, 628, 757, 782, 874, 931, 973, 999, 1007, 1024, 1032)”. “ஆக, கிறித்துவ ஊழித் தொடக்கக் காலத்திலேயே இந்திய மக்களிடையே உலக வாழ்க்கையிடமும் உயிர்களிடமும் பண்பும் அன்பும் காட்டும் ஒரு தன்மை இயல்பாக இருந்து வந்துள்ளதைக் குறளிலிருந்து அறிகிறோம். பிராமணியம், பௌத்தம், பகவத்கீதை சார் இந்துமதம் ஆகியவற்றின் கோட்பாடுகளில் இல்லாதது அது. ஆனால் கீழ்சாதியின ரிடமும், சாதாரண மக்களிடமும் தோன்ற மக்களோடு மக்களாக வாழ்ந்த சிறந்த சமயப் போதகர்கள் மூலமாக அத்தன்மை மெதுமெதுவாக நாளடைவில் இந்து மதத்தில் இடம் பெறலாயிற்று.” 34 ஹுல்ட்ஸ் Hultzh (1857 - 1927) சென்னை மாகாண அரசின் தலைமைக் கல்வெட்டாய் வாளராக 1886 முதல் சில ஆண்டுகள் இருந்தவர்; செருமானியர் தென்னிந்தியக் கல்வெட்டுகள் மடலங்கள் I-III I அவர்தாம் 1890 - 1903 இல் வெளியிட்டார். தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பழங்கால வரலாறு பற்றிய அவர் கட்டுரைகளின் பட்டியலை Zeitschrifts -Der Morgenlandischen Gessellschaft Vol 83 லீப்சிக்நகரம், 1928 பக் 61-67 இல் காண்க. 35 ஜோவி, தூப்ரேல் Joueve, Dubreil (1885 - 1945) தமிழக வரலாற்றைச் சீரிய முறையில் கல்வெட்டுச் சான்றுகளுடன் எழுத வழிகாட்டியவர்களுள் ஒருவர் பிரெஞ்சு நாட்டு அறிஞராகிய டாக்டர் கேபிரியல் ஜுல் சார்லஸ் ஜோவி தூப்ரேல் ஆவார். பல்லவர் வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான அடிப்படை ஆதாரச் சான்றுகள் பலவற்றைக் கண்டுபிடித்தார். மண்டகப்பட்டுக் குகைக் கல்வெட்டையும் இவேர கண்டுபிடித்தார். (“விசித்திரசித்தன்” என்று தன்னை அழைத்துக்கொண்ட மகேந்திரவர்மன் கல்வெட்டு அது.) 2. சித்தன்னவாசல் குகை ஓவியங்களை கண்டு ஆய்வு செய்தவர். “மத்தவிலாச பிரகசனம்” என்ற சம்ஸ்கிருத நாடக நூலை எழுதியவன் மகேந்திவர்மன்தான் என்பதையும் நிறுவினார். பல்லவர் வரலாறு குறித்த நூலையும் எழுதியுள்ளார். 36 ஹெர்மன் பேதான் Hermann Beythan (1875 - 1943) இவர் செருமனி நாட்டறிஞர். 1943 இல் லீப்சிக் நகரில் Prakische Grammatic Tamilsprache என்ற பெயரில் ஜெர்மன் மொழியில் தமிழ் இலக்கணத்தை எழுதினார். தமிழிய மொழிகளில்தமிழின் தொன்மையைப் பற்றி அவர் கூறுபவை: “திராவிட மொழிகளின் தொன்மையை நிலைநாட்டும் மிகப் பழைய நூல்கள் தமிழில மட்டுமே கிடைக்கின்றன.” “திராவிட மொழிகளின் அடிப்படைத் தன்மையை அறிய விரும்புபவர் எவரும் தமிழைத் தான் முதலில் கற்கத் தொடங்க வேண்டும்” Tamil is the one language whose written records take us back farthest into the Dravidian past” `anyone wishing to know the essence of the Dravidian type of language can only begin with Tamil”) பேதானை 20.9.1945 அன்று ரசிய ரகசிய போலீஸ் பெர்லின் நகரில் கைது செய்தது. அத்துடன் அவர் மறைந்துவிட்டார். (இந்தியன் எக்ஸ்பிரஸ்: சென்னை 11-12-1996.) 37 ஹில்கோ வியார்தோ ஸ்கோமரஸ் Hilco Viyardo Schomarus இவர் 1912-1933 காலகட்டத்தில் சைவசித்தாந்த நூல்கள் பலவற்றை (திருவாசகம், பெரியபுராணம் உட்பட) ஜெர்மன் மொழியில் பெயர்த்து வெளியிட்டார்.காரைக் காலம்மையார், ஆண்டாள் பாடல்களையும் அவ்வாறு பெயர்த்து வெளி யிட்டுள்ளார். 38 அல்ரிக் நிக்லாஸ் அம்மையார் Ulrike Niklas இவர் ஜெருமனியில் 1964இல் தொடங்கிய Cologne கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் – தமிழாய்வுகள் துறைத் தலைவராக உள்ளார். இங்கு டாக்டர் சஸ்சா எபெலிங் Sascha Ebeling 19ம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளார். தமிழுக்காக இருக்கைகள் உள்ள ஓரிரு ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று. 39 எவா. வில்தன் அம்மையார் Eva Wilden (1965-) ஆஸ்திரிய நாட்டறிஞராகிய இவர் நற்றிணை யையும் குறுந்தொகை யையும் அண்மையில் (பாட பேதக்குறிப்புகள், ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு, ஆங்கில வடிவம், ஆய்வுக் குறிப்புகள் முதலியவற்றுடன்) சிறப்பாக கீழை ஆசிய ஆய்வுகளுக்கான பிரெஞ்சு நாட்டு ஆய்வுக் கழகத்தின் மூலம் வெளியிட்டார். இவ்விரு நூல்களையும் தமிழகத்தில் தமிழ்மண் பதிப்பகம் அச்சிட்டு வெளிக்கொணர்ந்துள்ளது. அந்நூல்கள் தரம் வாய்ந்த ஆய்வுப் பதிப்புகள் (Critical editions)ஆகும். சங்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்ற மேலைநாட்டறிஞர் சிலரில் இவர் ஒருவர். சங்க இலக்கிய அகப்பொருள் சார்ந்து நுண்மாணுழைபுலம் மிக்க ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். 40 தாமசு லெமான் Thomas Lehman (ஹைடல்பர்க் பல்கலைக் கழகம்) (1954-) சங்க இலக்கியச் சொல்லடைவை (மால்டன் உடன் சேர்ந்து) 1993 இல் ஆசியவியல் நிறுவனம் (செம்மஞ்சேரி) மூலமாக வெளியிட்டுள்ளார். ஐங்குறுநூறு ஆய்வுப் பதிப்பில் இந்த செருமன் நாட்டறிஞர் ஈடுபட்டுள்ளார். தற்காலத் தமிழ் இலக்கணத்தை விளக்கி இவர் எழுதியுள்ள ““A grammer of Modern Tamil” (1989;P.I.L.C. பாண்டிச்சேரி) மிகச் சிறந்ததாகும். 41 ஜூலியன் வின்சன் Julien Vinson (1843 - 1926) தமிழ்நாட்டில் பிரெஞ்சு ஆதிக்கம் பாண்டிச்சேரியில் [இப்பொழுது `புதுச்சேரி’] மட்டுமே 1674 முதல் (பிஜபூர் சுல்தான் தளபதி ஷெர்கான் லோடி அனுமதியுடன்) தொடங்கியது. பிற்காலத்தில் காரைக்காலிலும் ஆதிக்கம் பெற்றனர். எனினும் அச்சிறுபகுதிக்கு வந்த பிரெஞ்சு மற்றும் பிற ஐரோப்பிய நாட்டு அறிஞர்களும் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியுள்ளனர். 18ம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க அறிஞர் ஆங்கொதில் தூபெரான் Anquetil Duperron ஊக்கு வித்ததன் காரணமாக புதுச்சேரித் தமிழறிஞர் மரியதாஸ்பிள்ளை (1721 - 96) பாகவத புராணத்தை பிரெஞ்சு மொழியில் பெயர்த்தார். அதனை 1788இல் அப்சென்வில் (Obsonville) உம் 1921இல் ஹாஸ்டன் (Hosten உம் அச்சிட்டுள்ளனர். J.B.P. More: “Recovering Tamil Scholars: Indo - French Intellectual activities in Pondicherry during the colonial period” Journal of Tamil Studies; (Chennai 113.) No. 83 pp 62 - 86. 2. காரைக்காலில் பிறந்து குழந்தைப் பருவத்தில் அங்கு வாழ்ந்து பின்னர் பிரான்சு சென்றவர். பாரிசு பல்கலைக்கழகத்தில் 1921 வரைத் தமிழ் கற்பித்தார். (அவருக்குப் பின் 1921 – 51 காலகட்டத்தில் அப்பணியைச் செய்தவர் ஜுல்ஸ் பிலாக் (Jules Bloch) சங்க இலக்கியங்களில் பலவற்றைப் பதிப்பித்த அறிஞர் உ.வே. சாமிநாதையரை இவர் பாராட்டி ஊக்குவித்தவர். 3. சிந்தாமணிச் சுருக்கத்தைப் பிரஞ்சில் மொழிபெயர்த்து அப்பெருங்காப்பியச் செல்வத்தை ஐரோப்பியர்க்கு அறிமுகப் படுத்தினார். சாமிநாத ஐயரின் பணியைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். இக்கடிதம் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாரிசிலிருந்து வந்தது. சிந்தாமணிப் பதிப்பைக் கண்டு தாம் இன்புற்றதாகவும் சிலப்பதிகாரம் முதலிய மற்ற நான்கு காவியங்களையும் பதிப்பிக்க வேண்டும் என்பதாகவும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார். “எம்முடைய புன் தமிழை உம்முடைய தயையினால் வாசித்துக் கொண்டு ஒரு காகிதம் எமக்கு மறுபடியனுப்பினால் மிகவும் சந்தோஷமாயிருப்போம். சுவாமியுடைய கிருபையெல்லாம் உம்மேல் வருக. என்றும் உங்கள் Colleague and Servant ஆகியிருக்கிறோம்” என்று அக்கடிதம் முடிக்கப் பெற்றிருந்தது. 4. வில்சன் 1878 பாரிஸ் நகரில் “தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுமொழிகளில் வினைச்சொற்கள்” பற்றிய 75 பக்க ஆய்வுநூலை வெளியிட்டுள்ளார். 42 ஜுல்ஸ் பிலாக் Jules Bloch கால்டுவெல் 1856/1875 II இல் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில் ஆந்திரம், ஒரிசா, சத்தீஸ்கார், ஜார்கண்டு போன்ற மாநிலங்களில் வழங்கும் சிறுசிறு எண்ணிக்கையில் பழங்குடிகள் பேசிவரும் திராவிட மொழிகளைப் பற்றி விரிவான செய்திகள் இல்லை. அச்செய்தி களையும் தொகுத்து ஆராய்ந்து 1946இல் பாரிஸ் நகரில் பிரெஞ்சு மொழியில் ஒரு புத்தகம் வெளியிட்டவர் ஜுல்ஸ் பிலாக். அதனை 1954இல் The grammatical structure of Dravidian languages என்று ஆங்கிலத்தில் பெயர்த்து புனேயிலுள்ள டெக்கான் கல்லூரி வெளியிட்டுள்ளது. 43 பிரான்சுவா குரோ Francois Edouard Stephane Gros (1933--) 2009 - 10 க்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் குறள்பீடம் விருதைப் பெற்றுள்ள இவர் பிரான்சு நாட்டில் லியான்ஸ் Lyons நகரில் பிறந்தவர். தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பரப்புகளிலும் சங்க இலக்கியம், இடைக்கால இலக்கியம், தற்காலக் கவிதை நாவல்/சிறுகதை அனைத்திலும் புலமையுடையவர்; ஆய்வு நூல்கள், கட்டுரைகள் எழுதியவர். சில ஆண்டுகள் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவன French Institute நிறுவனராகப் பணி செய்துள்ளார். 2. பரிபாடலின் பிரெஞ் The song of the river Vaiyai:” முன்னுரை, குறிப்புரைகளுடன் 1968இல் வெளியிட்டார். பரிபாடலின் சிறப்பைப் பின்வருமாறு குரோ உணர்த்துகிறார்:- “சங்க இலக்கிய நூல்களின் சிறப்பு என்ன? நம் கால ஆய்வுமுறைகளின்படி நோக்கினாலும் அவை இன்றும் நம் உணர்வுகளுக்கு வளம் சேர்க்கின்றன; அவை என்றும் சிறந்த இலக்கியம் என்பதை நிறுவி விடுகின்றன. பரிபாடலும் அத்தகைய நூலே - சில பாடல்களே நமக்குக் கிடைத்திருப்பினும். பாண்டிய நாட்டின் ஒரு பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலை நாம் நன்கு உணர்கிறோம். மதுரை நகர், புறநகர், வையை ஆறு, இரு குன்றுகள் இவை சார்ந்த சிறுபகுதிதான் அது. அப்பகுதியைப் பாடும் சில பாடல்களிலிருந்தே இந்து சமயத்தின் முழுமையையும் உணர்கிறோம். அதன் தொன்மங்கள், படிமங்கள் உட்பட -- அதுவும் சங்கப்புலவர்கள் உருவாக்கியிருந்த சிறந்த கவிமரபில் அப்பகுதித் தமிழ் மக்களுக்கேயுரிய பல்வேறு எண்ணம், உணர்வு, அவற்றின் அடிப்படையிலமைந்த செயற்பாடுகள் இவற்றைச் சித்தரிக்கும் இப்பரிபாடல்கள் சிலவேயெனினும் கவியுணர்வு கொண்ட எந்நாட்டு மக்களும் பாராட்டிப் பயிலும் பாங்குடன் இன்றும் உள்ளன. பாடியவர்கள் மாபெரும் கவித்துவம் வாய்ந்தவர்கள். மதுரையைப் பாடும் பரிபாடற் பாடல்கள் அப்பகுதிப் பொதுமக்கள் களியாட்டம், விழவெடுத்தல், வழிபடுதல் இவற்றையே விவரிக்கின்றன; எனினும் அப்புலவர்களின் ஆற்றல் இந்நூலை ஒரு செவ்விலக்கிய நூலாக்கிவிட்டது. (Paripatal) shares to the fullest extent that which defines the tone most often attached to early Tamil Sangam literature; under formal research its freshness of feeling and its authenticity are never lost. In this mutilated anthology we sense a large number of people living, loving and praying in a small province. But all around Maturai and its river and two hills, there is Hinduism in its entirety with its myths land its images, in as original from and with the particular conventions of its Tamil expression. And, because these poets were great poets, the proud particularism of the subjects of the Pantiya king offers universally human interest. Whether its muses frolic, celebrate or sing their prayer the Paripatal has the value of a great classic. பக்தி தமிழ்நாட்டில் தோன்றியது என்பர் அறிஞர். இப்பாடல்களோ மதுரை நிகழ்வுகள் பற்றியவை. பக்தியைப் பொறுத்தவரை அந்நிகழ்வுகள் இந்தியா முழுமைக்கும் பொருந்துமெனலாம் என்ற கருத்தில் Saint - Pol Roux சொன்ன “Britanny is the Universe” கூற்றை குரோ சுட்டுகிறார். 3. (i) இவர் 1992 இல் திருக்குறள் காமத்துப்பாலை பிரெஞ்சு மொழியில் பெயர்த்து அரிய 30 பக்க முன்னுரையுடன் (Le Livre de l’ Amur) என்ற பெயரில் வெளியிட்டவர். அதில் de madave என்னும் இராணுவ அதிகாரி புதுச்சேரியிலிருந்து 1761இல் கொண்டுவந்த திருக்குறள் (தமிழும் பிரெஞ்சுப் பெயர்ப்பும்) கையெழுத்துப் படியிலிருந்து 1769இல் பாரிஸ் இல் de la Flotte என்பவர் வெளியிட்ட The Essais historiques sur I’Inde நூலில் வள்ளுவர் குறளிலிருந்து (Coral de Vallouren) 20 செய்திகள் தரப்பட்டதை சுட்டுகிறார். பின்னர் 1867இல் குறள் முழுவதின் பிரெஞ்சுப் பெயர்ப்பு வெளியானது. (ii) இவருடைய காமத்துப்பால் பிரெஞ்சுப் பெயர்ப்பின் முன்னுரையின் ஆங்கில வடிவை (குரோ 2002இல் வெளியிட்டதும்) தமிழிலக்கியம் சார்ந்த இவருடைய முக்கியமான பிரெஞ்சு படைப்புகளின் ஆங்கில வடிவங்களைக் கொண்டதும் ஆன “Deep Rivers: Selected writings of Tamil Literature புதுச்சேரி (2004) பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் நூலில் காண்க. அம்முன்னுரையில் அருமையான மிக நுட்பமான கருத்துகள் உள்ளன. பிரெஞ்சிலிருந்து அப்படைப்புகளை அருமையாக ஆங்கிலப் படுத்தியவர் M.P. Boseman (1942-) (iii) குறள் காமத்துப்பால் மீது பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியர்கள் தந்த கருத்துகளை நுட்பமாக ஆராய்ந்து மேற்சொன்ன Deep Rivers 2009 புத்தகத்தில் (பக் 153 - 173) மூலநூலுக்கும் உரைக்கும் உள்ள உறவு பற்றி அரிய விளக்கம் தந்துள்ளார். உரைகாரர்களைப் பற்றிப் பின்வரும் அறிஞர் கூற்றுகளையும் சுட்டுகிறார். “சிறந்த நூல்களை (புனிதமானவை உட்பட) தமது சாகடிக்கும் புல்லறிவாண்மை வாய்ந்த உரைகளால் களங்கப் படுத்தும் மூட உரைகாரர்களை என் செய்வது. (“And how to put up with these stupid sectarians sullying the holy books with murderous commentaries”) - Victor Hugo நல்லதோ, கெட்டதோ, உரையெழுதுபவன் சொல்லு வதையே படிப்பவர்கள் அப்படியே நம்பி விடுகின்றனர். (“for better or for worse it is the commentator who has the last word”) – Vladimir Nabokov 4. காரைக்காலம்மையார் பாடல்களை காரவேலன் 1956 இல் பிரெஞ்சு மொழியில் பெயர்த்தார். 1982ல் இரண்டாம் பதிப்பு வந்தது குரோவின் அரிய ஆய்வு முன்னுரையுடன் அதன் “ஆங்கில வடிவை 2002 Deep Rivers நூலில் காண்க. (நார்மன் கட்லர் - உம் தமது 1987 நூல் Songs of Experience: The poetry of Tamil devotion (Indiana University press) இல் காரைக்காலம்மையார் பாடல்களை ஆங்கிலப்படுத்தியுள்ளார். 5. 1983ம் ஆண்டில் பாரிஸ் (பிரெஞ்சு) இதழ் “Purushartha - VI” இல் குரோ Cankam literature and its Public பற்றி எழுதியுள்ளார். அதன் ஆங்கிலத்தை Deep Rivers புத்தகத்தில் காண்க. நயமான கருத்துகள் அதில் பல உள. 6. குரோ தஞ்சையில் 4.1.95(தஞ்சை) உலகத் தமிழ்நாட்டில் ஆற்றிய உரையும் (அங்கிலத்தில்) Deep Rivers நூலில் உள்ளது - “Language in Tamil History”. ஆங்கில மொழி ஆதிக்கத்தை எதிர்த்து அன்றும் இன்றும் தற்காப்புடன் செயல்பட்டு வருபவர்கள் பிரெஞ்சு மொழியாளர்கள். எனவே 1990க்குப் பின் உலகமய மாக்கப்பட்ட (= வெள்ளையராதிக்க மயமாக்கப்பட்ட) உலகில் Killer language கொலைகார மொழி என்று உலகின் பல மொழியாளரும் சுட்டும் ஆங்கில மொழி ஆதிக்கம் தமிழ்நாட்டில் (1970க்குப்பின்) முன்னைவிட அதிகமாகி வருவதையும் தேவையில்லாமல் சாதாரணப் பொருள்களுக்கெல்லாம் ஆங்கில சொற்களையே அனைவரும் பயன்படுத்துவதையும் சுட்டி எச்சரித்துள்ளார். சில அறிவுரைகளும் தந்துள்ளார். அவை வருமாறு: “செயற்கையாக பல்வேறு புலங்களுக்கு நேரடிப் பயன் பாட்டுச் சூழல் இன்றி உருவாக்கப்படும் கலைச் சொற்களஞ்சி யங்களால் பயன் அதிகமில்லை. அவற்றை அப்படியே (கற்பிக்கும்பொழுதோ தொழிற்சாலைகளில் பொருள் உற்பத்தி செய்யும் நிலையிலோ) பயன்படுத்துவது இயல்வதல்ல உலகில் எங்குமே இப்படி அகரவரிசைப்படி (புலம், உட்புலம், என்றவாறு) ஏட்டுச் சுரைக்காயாக உருவாக்கும் கலைச் சொற்களஞ்சியங்களின் அடிப்படையில் அவற்றைப் புழக்கத்தில் கொண்டு வருவது கடினம். . These terms were created in vitro without context and could hardly survive the test of actual usage: their insertion unto the meaningful continuum of common parlance. Nowhere in the world can words be coined merely to apear in alphabetical or even taxonomical order ஒவ்வொரு மொழிக்கும் அதனதற்குரிய வாழ்வு [பல்வேறு சூழ்நிலைகள், தாக்கங்களுக்குட்பட்டு] எப்படி அமையும் என்று யாரும் நிர்ணயிக்க இயலாது. அந்தந்த மொழி சார்ந்த அறிஞர்கள், சான்றோர் முயற்சிகள் மட்டுமே அதனை (நல்வழியில்) செலுத்திவிட இயலாது; படைப்பிலக்கியக் காரர்கள் கொஞ்சம் இம்முயற்சியில் வெல்லலாம், வரலாற்று 96 தமிழுக்குத் தொண்டாற்றிய பிறநாட்டு அறிஞர்கள் நிகழ்வுகளின் (சமுதாயம், அரசியல், ஊடகங்கள், உலகளாவிய தொடர்பு) தாக்கம் முக்கியமானது. Languages has a life of its own, which scholars can hardly control, but which creative writers can influence, and history can shake. 44 ஜுன் லக் செவிலார்டு Jean - Luc Chevillard (கீழையில் ஆய்வுகளுக்கான பிரான்சு நாட்டு நிறுவனம் Ecole Francais de Extreme Orient புதுச்சேரி & பாரிஸ்) இவர் தொல்காப்பியம் சேனாவரையர் உரை யைத் திறம்பட ஆங்கிலப்படுத்தி வெளியிட்டுள்ளார். இந்நிறுவனமும் இந்தியவியல் ஆய்வுக்கான பிரான்சு நிறுவனமும் (French Institute of Indology) சேர்ந்து தமிழியலின் பல்வேறு துறைகளிலும் தலைசிறந்த ஆய்வு நூல்களை வெளியிட்டு வருகின்றன. 45 டேவிட் சுல்மன் David Shulman இவர் இஸ்ரேல் நாட்டவர். தமிழ் நாட்டுக் கோயில் புராணங்கள் Tamil Temple Myths: Sacrifice and Divine Marriage in the South Indian Saiva Tradition (Prinction: New Jersey) என்ற சிறந்த நூலை 1980 இல் எழுதியுள்ளார். சங்க இலக்கியக் கவிதைகளை ஹீப்ரு மொழியில் கொண்டுவர இருக்கிறார். 9.11.2011 நேர்காணலில் அவர் கூறியவை சில. “மொழிகளுக்கு அப்பாற்பட்டு கவிதைக்கு என்று ஒரு மொழி இருக்கிறது. நல்ல கவிதைகளை எல்லா எல்லைகளையும் தாண்டி அது எடுத்துச் சென்றுவிடும். சங்கக் கவிதைகளுக்கு ஹீப்ரு அறிஞர்களிடையே வரவேற்பு இருக்கிறது! “தமிழ்ச் சமூகத்தினுடைய அக்கால வாழ்க்கையை அப்படியே சங்க இலக்கியம் படம்பிடித்து இருக்கிறது. தமிழ் இலக்கியத்துக்குப் பெண் கவிகள் ஆற்றியிருக்கும் பங்களிப்பும், பெண்களின் குரல் அதில் தனித்துக் கேட்பதும் என்னைப் பிரமிக்கச் செய்கின்றன. “தமிழின் எதிர்காலம் மிகச் சிறப்பாகவே இருக்கும் என நினைக்கிறேன். தமிழ் மக்களின் பயன்பாட்டில் இருக்கும் மொழி. சமஸ்கிருதம் போன்றோ, லத்தீன் போன்றோ வெறும் நூலகங்களில் உயிர் வாழும் மொழி அல்ல. கிட்டத்தட்ட 7 கோடிப் பேர் அன்றாட வாழ்வில் பேசிக் கொண்டு இருக்கும் மொழி.” 46 செமியோன் ருதின் (Semyon Rudin) உருசிய நாட்டறிஞரும் பன்மொழிப் புலவருமான ருதின் (Semyon Gesselevich Rudin) லெனின் கிராட் நகரில் பிறந்தவர். சமஸ்கிருதம், இந்தி, வங்காளி, மராத்தி போன்ற இந்திய மொழிகளில் பேசக்கூடிய திறமையும், எழுதக்கூடிய ஆற்றலும் அவருக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய மொழி களோடு, பண்டை எபிரேயத்தையும், இலத்தீனையும் அவர் கற்றிருந்தார்; 1960ஆம் ஆண்டில், அவருடைய பேருழைப்பையும் பெருந்திறமையையும் புலப்படுத்தும் தமிழ் - ருஷிய அகராதி வெளியிடப் பெற்றது. அவ்வரும்பணியில் பேராசிரியர் எ. பியாதிகோர்ஸ்கியும் சேர்ந்து செயலாற்றினார். இவ்வகராதியில் ஏறக்குறைய ஐம்பதாயிரம் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பாதிக்கு மேற்பட்டவை பழகு தமிழ்ச் சொற்களாகும் என்பது அவ்வகராதியின் சிறப்பியல்பு ஆகும். தமிழ் மொழியின் ஒலியழுத்தம் (Stress) குறித்து 1964ஆம் ஆண்டில், இவர் எழுதிய சுவைமிக்க மொழியியல் ஆய்வுக் கட்டுரை புகழ்பெற்றது. 1970இல் தமிழ்ச் சொல்லியல் சொற்றொடமைப்பு பற்றிய ஆய்வுநூலை வெளியிட்டார். 47 அலெக்சாந்தர் துபியான்ஸ்கி Alxander Dubiyanski திறமான சங்க இலக்கிய ஆய்வறிஞரும் தமிழ்மொழி, இலக்கண, இலக்கிய ஆய்வாளரும் ஆன இவர் உருசியாவில் தமிழை மாணவர் பயிலவும், தமிழாய்வு நிலைக்கவும் வகை செய்து வருபவர். முல்லைத் திணை சார்ந்த விரிவான ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். ஆண்டாள் திருப்பாவை யை உருசிய மொழியில் பெயர்த்துள்ளார். இவர் 2000இல் “Ritual and mythological sources of the Early Tamil Poetry” என்னும் ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். 48 ஜார்ஜ் எல் ஹார்ட் (George L Hart) (1927 - ) பேராசிரியர் இ. மறைமலைக்கு தமிழ்மொழியின் செம்மொழித்தகுதி பற்றி நுண்மாணுழை புலத்துடன் நறுக்குத் தெறித்தாற் போல எழுதிய 11.4.2000 கடிதத்தின் மூலம் தமிழ் கூறும் நல்லுலக மக்கள் அனைவரின் நெஞ்சத்திலும் நீங்காத இடம் பெற்றவர் ஹார்ட். 2. சங்க இலக்கிய நூல்களில் ஆழ்ந்த புலமையுடையவர். ஹைபீயட்ஸ் உடன் சேர்ந்து 1999இல்புறநானூறை ஆங்கிலத்தில் பாவடிவில் சிறப்பாக மொழிபெயர்த்தவர் (“Four hundred songs of War and Wisdom”) “ஆரியர் வருகைக்கு முற்பட்ட தென்னிந்தி யாவை, ஏன் பெருமளவுக்கு ஆரியருக்கு முந்திய இந்தியாவையே விளக்கிக் காட்டும் ஆவணம்புறநானூறு a testament of pre – Aryan south India and, to a significant extent of pre Aryan India” என்பது அவர் கருத்து. சங்கத்தமிழ் இலக்கியங்களின் தாக்கம் வடமொழிக் காவியங்களிலும் உள்ளதை நிறுவியவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2006-07 ஆண்டிற்கான குறள் பீடம் விருதை 2010 இல் பெற்றுள்ளார். 3. ஏ.கே. இராமானுஜத்திடம் தமிழைக் கற்றுக் கொண்டவர். கலிபோர்னியாவில் பெர்கலி நகரில் வசித்து வருகிறார். கம்ப இராமாயண ஆரண்ய காண்டத்தை அருமையாகத் தமிழாக்கம் செய்துள்ளார். இவர் முதலில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத்திலும் இந்தியவியலிலும் முனைவர் பட்டம் பெற்றவர். 1979 Poets of the Tamil Anthologies: Ancient poems of love and war என்ற தலைப்பில் எட்டுத்தொகை நூல்களில் உள்ள சிறந்த பாடல்களை ஆங்கிலப்படுத்தி வெளியிட்டவர். 49 அ.கி. இராமானுசன் A.K. Ramanujan (1929 - 1993) இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் குடியுரிமை பெற்ற வராகிய கருநாடக மாநில அறிஞர். சங்கத் தமிழிலக்கியப் பாடல்களை, குறிப்பாக குறுந் தொகை யை, அருமையான ஆங்கிலக் கவிதையில் (“The Interior Landscape”) பெயர்த்து வெளியிட்டு மேலை நாட்டு மக்களுக்குத் தமிழின் சிறப்பை உணர்த்திப் பெரும் புகழ் பெற்றவர். புறநானூற்றுப் பாடல்கள், ஆழ்வார்கள் பாடல்கள் ஆகிய வற்றையும் ஆங்கிலக் கவிதையில் பெயர்த்து வெளியிட்டு அரும்பணி செய்துள்ளார். 50 பிராங்க்ளின் சி. சௌத்வொர்த் Franklin C. Southworth (பென்சில்வேனியா பல்கலைக் கழகம்: 1998இல் ஓய்வு) இவர் 2007இல் Linguistic Archaeology of South Asia (2005: Routl[edge,, லண்டன் பக் 369) என்னும் நூலில் [Linguistic Archaeology என்று பெயரிட்டு] இந்தியாவில் தென் ஆசியாவில் - அதாவது முன்பு `இந்தியா’ எனச் சுட்டப்பட்ட பகுதியின் மொழியியல் சார்ந்த பல ஆய்வுப் புலங்களாகிய (மொழிக் குடும்பங்களின் தொன்மை வரலாற்றை ஆய்வு செய்யும்) Linguistic Palaeontology என்னும் துறை, ஒப்பியல் மொழியியல், சமுதாய மொழியியல் போன்ற துறைகளைப் பற்றி எழுதியுள்ளார். 2. இந்தியாவில் இன்று வழங்குவனவும் இந்தோ – ஆரிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்தனவாகச் சுட்டப்படுவனவுமான இந்தி முதலிய மொழிகளில் (வேற்றுமை முதலிய இலக்கணக் கூறுகளில்) காணும் திராவிட மொழிகளின் தாக்கம்; மகாராட்டிரப் பகுதிகளில் வழங்கிய திராவிட மொழி படிப்படியாக மாறி இந்தோ ஆரிய மொழித் தன்மையைப் பெருமளவு எய்தியமை; சிந்துப்பகுதி நாகரிகத்தில் கி.மு. 1900க்கு முன்னர் வழங்கிய மொழி; போன்ற பலவகைச் செய்திகளையும் இந்நூல் தருகிறது. பி.டி. சீனிவாச ஐயங்கார் Indian Antiquary 42 (1913) பக் 47-49ல் எழுதிய “On the Pronouncenment of Sanskrit” என்னும் கட்டுரையில் சம்ஸ்கிருதம் என்றுமே மக்கள் பேச்சு வழக்கில் இருந்த மொழி அல்ல (Sanskrit was never the spoken language of the people ப; 49) என்பதையும் மராத்தி முதலிய மொழிகளை உருவாக்கிக் கொண்டவர்கள் தொன்றுதொட்டு இருந்த தமது திராவிடமொழி உச்சரிப்புத் தன்மைக்கேற்ப சம்ஸ்கிருத உச்சரிப்பைத் திரித்துக் கொண்டார்கள் (imposed their Dravida pronounciation on Sanskrit) என்று முன்னரே நிறுவி யுள்ளதை நினைவுகூர்க. 3. சவுத்வொர்த் தமது 1974 “Linguistic Statigraphy of India” கட்டுரையில் பின்வரும் உண்மையையும் விளக்கியிருந்தார்:- (இந்தியாவின் தொல்குடிகளான) இந்தோ – ஆரியமல்லாத மொழி பேசுநரோ அல்லது அவர்களின் வழித்தோன்றல்களோ வேதயக்ஜங்கள் போன்றவற்றில் கலந்து கொண்டிருந்தால் ஒழிய, ஏன் வேதமந்திரங்களை எழுதிய ரிஷிகளிலும் சிலராகக் கலந்திருந்தால் ஒழிய, வேதகால யக்ஞ மந்திரங்களில் இந்தோ ஆரியமல்லாத மொழிச் சொற்களும், மொழித் தன்மைகளும் கலந்திருக்கும் நிலைமையை விளக்குவது கடினம்”. எமெனோ தமது 1974 (IJDL III - 1 pp 92-134) கட்டுரையில் விளக்கியிருந்த பின்வரும் நிலைமையை இங்கு நினைவுகூரலாம். “ஒரு கால கட்டத்தில் சம்ஸ்கிருதத்தைப் பரப்பியவர்களுள் பெரும் விழுக்காட்டினர் தாய்மொழியைத் திராவிடமாகக் கொண்டு, ஆயினும் சம்ஸ்கிருதத்தை இரண்டாவது மொழி யாகக் கற்றுத் தேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். We must postulate Sanskrit was handed over at some early period by a majority of speakers who learned it as a second language, their first language being Dravidian. 51 ஹரால்டு எப்.ஷிப்மான் Harold F. Shiffman (1938 -) (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்) தமிழ் Aspectual system பற்றிய மாற்றிலக்கணம் (A transformational grammar of the Tamil Aspectual system(1969); A reference grammar of spoken of Tamil (1999: Cambridge) இவை இவருடைய முக்கியமான நூல்கள். தமிழ் வேற்றுமை அமைப்பைப் பற்றி ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளார். (காண்க South Indian Horizons 2004 - குரோ பாராட்டு மலர் பக் 293 - 305) 2006இல் வந்த International Encyclopaedia of Linguistics II வது பதிப்பு (Keith Brown) 12வது மடலம் பக் 497-8இல் இன்றைய தமிழைப் பற்றி ஷிப்மான் கட்டுரை எழுதியுள்ளார். (அதே கலைக் களஞ்சியத்தில் ஜீன் லக் செவிலார்டுதொல்காப்பியம் - நன்னூல் - உரையாசிரியர்கள் பற்றிய செய்திகளைப் பக்கம் 499ல் தந்துள்ளார்). 2010 இல் இவர் “An English dictionary of the Tamil Verb meant for non - Tamils to cope with spoken tamil”என்னும் 775 பக்க நூலை எழுதியுள்ளார். 52 சான்போர்டு ஸ்டீவர் Sanford B. Steever இற்றைத் திராவிட மொழியறிஞருள் சிறந்த சிலருள் இவரும் ஒருவர். இவர் திராவிட மொழிகளைப் பற்றி உருவாக்கி சுடிரடெநனபந நிறுவனம் 1998இல் வெளியிட்ட The Dravidian Languages என்பது சிறந்த பார்வை நூல். அந்நூலில் திராவிட மொழிகளைப் பற்றி இவர் பொதுவாக எழுதியுள்ள ஆய்வுரை சிறப்பானது, ஆழமானது. 53 ஜான் ரால்ஸ்டன் மார் John Ralston Marr (1927 - ) எட்டுத்தொகை நூல்களை ஆழ்ந்து ஆய்வு செய்து இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1950இல் முனைவர் பட்டம் பெற்ற ஆங்கிலேயர். அவர் ஆய்வு நூலை The Eight Anthologise – a study in early Tamil literature (பக் xvi,550) என்ற பெயரில் Institute of Asian Studies [ இப்பொழுது சென்னைக்குத் தெற்கில் செம்மஞ்சேரியில் உள்ளது] 1985இல் வெளியிட்டுள்ளது. இச்சிறந்த நூலின் அமைப்பு பின்வருமாறு உள்ளது. இயல் I தோற்றுவாய் 1 - 13 II சங்க நூல்களின் செய்யுள் அமைப்பு (அகத்திணை, புறத்திணை) தொல்காப்பியத்தின்படி 14 – 68 III – V புறநானூறு : வேந்தர், குறுநில மன்னர் 69 – 261 தலைவர், பிறபாடு பொருள். II – VIII பதிற்றுப்பத்து; பதிகமும் “பத்துகள் 2-9ம் 453 – 360 262 – 326 IX அகப்பொருள் நூல்கள் 5-ம் பரிபாடலும் 327-389 X எட்டுத்தொகை நூல்களின் யாப்பு 390 - 452 XI முடிவுரை இணைப்புகள் (i) புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும் உள்ள துறைகள் (ii) அவ்விருநூற்பாடல் ஆசிரியர் பெயர்கள் 474 – 487 (iii) அருஞ்சொற்பொருள், குறிப்பகராதி முதலியன 488 – 540 3) அ) புறநானூறு குறித்து 1958க்கு முன்னரே விரிவாக ஆய்வு செய்த மார் அவர்களுக்குப் பின்னர்புறநானூறு குறித்து [பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் 1930-80இல் இருந்த பேராசிரியர் (மார்க்ஸீயக் கொள்கையர்) ஜார்ஜ் தாம்ப்சன் வழிகாட்டுதலில்] ஆய்வு செய்த கே. கைசலாசபதி Tamil Heroic Poetry (OUP) என்னும் புத்தகத்தை வெளியிட்டார். ஸதமிழில் - 2006 “தமிழ் வீரநிலைக்கவிதை” K.V. பாலசுப்பிரமணியம் செய்தது. குமரன் புத்தக நிலையம், வடபழனி] சங்க இலக்கியப் பாடல்களில் வாய்மொழிப் பாடல் ballaed poetry கூறுகள் formulaic style proper to oral poetry இவை இருப்பதாகக் கூறினார் கைலாசபதி. ஆ) கைலாசபதியின் இந்தக் கொள்கை ஆதாரமற்றது என்பதை பிரான்சுவாகுரோ (1983: ஞரசரளாயசவாய பாரிஸ் 7 – VII கட்டுரை “Cankam literature and its Public” கட்டுரை நிறுவிவிட்டது. முதன் முதலில் ஹோமர்இலியதம், ஆடிசி கிரேக்கக் காவியங்கள் இரண்டுமே வாய்மொழிப் பாடல்களில் இருந்தே உருவாகியது என்ற விநோதக் கருத்தை அக்காவியங்களின் நுணுக்கங்களை ஒழுங்காகப் புரிந்து கொள்ளாமல் தெரிவித்தவர்கள் சர் செசில் பௌரா, HM & N.K.. சாட்விக், மில்மன் பாரி முதலியோர். இந்தக் கருத்தை நன்கு ஆராயாமல் அப்படியே `குதிரைக்கு குர்ரம், ஆனைக்கு அர்ரம்’ என்று தாம்சன் காட்டிய வழிச்சென்று கைலாசபதி முன்மொழிந்த கோட்பாடு ஆதாரமற்றது என்பதை குரோ 1983 கட்டுரை விளக்குகிறது (காண்க: Gros 2009: “Deep Rivers...” P 43 ) லிருந்து – “Professor Italo Sciciliano (1968: Torino): “Les chan de geste it I’ep opee - mythes - historic poems”, a diabolically intelligent book in which he ferociously denounced the cliches [Sir Cecil Bowra etc] that have accumulated around all oral literatures and their proceedings in a vain attempt to reduce the written masterpieces to such cliches in all their precariousneas. With this book, a phamphlet really, but dazzling in its culture, the worth of K. Kailasapathi’s book was dated and qualified before ever it was published” இ) ஜார்ஜ் எல். ஹார்ட் அவர்களும் தமது (1999: புறநானூறு ஆங்கில மொழிபெயர்ப்பு முதலிய நூல்களில் கைலாசபதியின் கருதுகோளை மறுத்துள்ளார். 54 ஆர். ஈ. ஆஷர் R.E. Asher ஸ்காட்லாந்து எடின்பரோ பல்கலைக் கழகத்தவரான இச்சிறந்த மொழியியலறிஞர் தமிழ், தமிழ் இலக்கியத்திலும் ஆய்வாளர். தமிழ் உரைநடை வளர்ச்சி பற்றி ஆய்வு நூல் செய்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்புச் செய்தவர். 2. உலகளாவிய (அனைத்து மொழிகளின்) மொழியியல் கலைக்களஞ்சியத்தின் (International Encyclopaedia of Linguistics) முதற்பதிப்பை எல்செவியர் குழுமம் சார்ந்த Pergamon அச்சகத்தார் வல்லுநர் குழுவைக் கொண்டு 1993இல் உருவாக்கிய பொழுது அக்குழுவின் தலைவர் ஆக இருந்து செயல் பட்டவர் ஆஷர். [அக்களஞ்சியத்தின் இரண்டாவது புதிய பதிப்பை 2006இல் எல்செவியர் Elsevier, Oxford,, குழுமத்தினர் உருவாக்கியபொழுது அக்குழுவின் தலைவராக இருந்தவர் Keith Brown. அப்பதிப்பு 12 பெரு மடலங்களாக வெளிவந்துள்ளது. 3. ஆஷரும் Christopher Morleyயும் சேர்ந்து 1994இல் Atlas of the World’s Languages (Roubledge; pp 400) வெளியிட்டனர். அதனுடைய IIவது பதிப்பு 2007 இல் வந்துள்ளது. 4. மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினர் உலகில் உள்ள 6000 மொழிகளில் 2560 மொழிகளை மொழியமைப்புக் கூறுகளின்படி (ஒலியனியல், சொல்லியல்) சொற்றொடர் அமைப்பு போன்றவற்றின்படி) பாகுபாடு செய்து மார்டின் ஹாஸ் பெல்மாத் மற்றும் மூவர் The World Atlas of Language Structures என்ற 695 பக்க நூலை வெளியிட்டுள்ளனர். 6000 மொழிகள் பேசப்பட்டாலும் மிகச்சிறு எண்ணிக்கையினர் பேசும் மொழிகளின் எண்ணிக்கையே அதிகம். (i) ஒவ்வொன்றையும் 10 கோடி பேசும் மக்கள் மக்களுக்குமேல் பேசும் மொழி எண்ணிக்கை கோடியில் களாகிய சீனம், ஸ்பானிஷ், ஆங்கிலம், இந்தி, வங்காளி, போர்ச்சுகீஸ், ரசியன் சப்பா னியம் ஆகிய 8 மொழிகளைப் பேசுவோர் மொத்தம். 300 (ii) ஒவ்வொன்றையும் 1-10 கோடி பேர் பேசும் 72 மொழிகளைப் பேசுவோர் மொத்தம். 380 (iii)ஏனையவை (குறைந்த எண்ணிக்கையினர் பேசும் மொழிகள் -- ஒவ்வொன்றும் 10 ஆயிரத்துக்கும் குறைந்தவர்கள் பேசும் 3300 மொழிகள் உட்பட 30 _______________ ஆக மொத்தம் 710 _______________ 55 தகநோபு - தககஷி (1951 - ) Takanobu Takakashi டோக்யோ பல்கலைக்கழகத்தில் இந்திய இலக்கியம் பயிற்றுவிப்பவர்; தமிழறிஞர். 1999இல் திருக்குறளை சப்பானிய மொழியில் பெயர்த்து வெளியிட்டார் 1995இல் தமிழ் அகப்பொருள் பாடல்களைப் பற்றியும் அவற்றின் பாவியத் தன்மை பற்றியும் (Tamil love poetry and poeties” E.J. Brill: Leyden) ஆயவு நூல் வெளியிட்டுள்ளார். தொல்காப்பியம் பொருளதிகார ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளார். 56 எமானுயெலா பநத்தோநி (1945-) Emmanuaela Panattoni (இத்தாலியில்) பைசா பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறைகளில் 1979முதல் திராவிடமொழிகள் இலக்கியம் “பேராசிரியராக உள்ளார் பத்துப்பாட்டு, புறநானூறு “Quattrocento Poesi digurra: Purananuru” ஆழ்வார்கள்; பாடல்கள் முதலியவற்றை இத்தாலிய மொழியில் பெயர்த்துள்ளார். 57 பீட்டர் ஷால்க் (1944) Peter Schalk சுவீடன் நாட்டில் அப்சலா Uppsale பல்கலைக்கழகப் பேராசிரியர். 2002இல் “தமிழகத்திலும் ஈழத்திலும் 1500க்கு முன்னர் தமிழர்களிடையே வழங்கிய புத்தசமயம் (Buddhism among Tamils in Re-colonial Tamilakam and Ilam) பற்றிய நூலை 2002இல் வெளியிட்டார். 58 மார்டின் கெஸ்டைன் (1967 - ) Martine Gestine இவர் மாந்தவியல் அறிஞர் ஏலக்காய் மலை முதுவர் பற்றி ஆய்வு செய்தவர். மாந்தவியல் கோட்பாடுகள் அடிப்படையில் நக்கீரர் பெயரால் வழங்கும் “இறையனார் அகப்பொருள்” பின்புலத்தில் சங்ககால அகப்பொருள் நூல்களில் காதல், மணஉறவுகள் போன்றவற்றை ஆய்வுசெய்து “A brilliant gloss for Tamil social history: Promarital courtship and marriage at the time of Nakkirar” என்ற கட்டுரையை தி.வே. கோபாலையர் நினைவுக் கருத்தரங்கு மலராகிய “Between Presentation and Recreation” புத்தகத்தின் பக் 183- 226இல் எழுதியுள்ளார். 59 லெஸ்லி சி. ஆர் (1948) கன்கார்டியா பல்கலைக் கழகம்; மான்ட்ரீல்; கனடா Leslie C. Orr இடைக்காலத் தமிழ்நாட்டில் நிலவிய தேவதாசி முறைபற்றி 2000 இல் Donors, devotees and daughters of god நூல் வெளியிட்டுள்ளார். 60 கில்பெர்ட் ஸ்லேடர் Gilbert Slater (-1938) இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய பின்னர் இவ்வாங்கிலேயர், 1915-23 கால அளவில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் Economics துறையைத் தொடங்கி நிலைப்படுத்தினார். 1916 - 17இல் சுமார் பத்து தென்னிந்தியக் கிராமங்களில் (பல இன்றைய தமிழ்நாட்டில்) பொருளியல் கள ஆய்வு செய்து 1918 இல் Some south Indian Villages என்னும் ஆய்வு நூலை வெளியிட்டார். (பின்னர் அதே கிராமங்களில் பி.ஜே. தாமஸ் மீண்டும் கள ஆய்வு செய்து 1940இல் அன்றைய நிலையை விளக்கும் ஆய்வை வெளியிட்டுள்ளார்.) 2. இவர் பல்துறை வல்லுநர். இங்கிலாந்திற்கு போன பின்னர் 1931 இல் Seven Shakespeares என்ற நூலை எழுதியவர் (எஸ். முத்தையா THE HINDU நாளிதழ் 20.2.2012 கட்டுரை). பொருளியல் குறித்து ஐந்தாறு நூல்களை எழுதியுள்ளார். 1924 இந்திய நாகரிகத்தில் திராவிடக் கூறுகள் The Dravidian element in Indian Culture நூலை வெளியிட்டார். அதில் பல நுட்பமான கருத்துக்கள் உள்ளன. தமிழிய மொழி பேசி வந்த தமிழக இனக் குழுவினரிடம் ஏற்கெனவே நிலவிய ஒரு வகையான (சாதி போன்ற) இனக்குழுத் தன்மைகளை வருணாசிரமக் கொள்கை வழிபட்டதற்காக விரகாக மாற்றி சாதிவேற்றுமையும் கொடுமைகளும் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என்பர் ஸ்லேடர். The Aryans found a system resembling caste, already in force among the Dravidian inhabitants and they adopted and modified it to suit their own purposes. 3. (மறைமலையடிகள் 1923: சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்; ஏ.எல். பஷாம் 1945/1955; கே.கே. பிள்ளை 1977, Cohn 1987, Dirks 1987 / 1992; Inden 1986/1990 ஆகியோர் கருத்தும் பெருமளவுக்கு இதுதான்) 61 டேவிட் வாஷ்புரூக் மற்றும் மூவர் [1850 முதல் இன்று வரை உள்ள தமிழக வரலாறு சமுகவியல் முதலிய துறை ஆய்வறிஞர்கள்] இவ்வறிஞர்கள் நால்வரும் எழுதிய சிறந்த நூல்கள் இருபதாம் நூற்றாண்டுத் தமிழக அரசியல், சமூகம், பண்பாடு, மொழி முதலியன பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு இன்றியமை யாத பல்வேறு அடிப்படைச் செய்திகளை அரிய ஆதாரங்களுடன் தருவனவாகும். அவரவர் எழுதிய அத்தகைய நூல் விவரங்களைக் கீழே காண்க:- டேவிட் வாஷ்புரூக் David Washbrook (ஆய்வுப்பணி 1969 - 75) 1976 The Emergence of Provincial Politics - The Madras Presidency 1870 - 1920; pp. 358. (ஆ) யூஜின் இர்ஷிக் (களப்பணி 1961-63) (Eugene Irschic) i) 1969 “Politics and Social Conflict in South India - The Non Brahman Movement and Tamil Separatism, 1916 - 1928; Bombay: OUP 1969 pp. 414 ii) 1986 Tamil Revivalism in the 1930’s; Chennai Cre A; pp. 372 (இ) சி. ஜான் பேக்கர் C. John Baker 1976 The Politics of South India 1920 - 1937, Delhi; Vikas; pp. 363.. (ஈ) மார்கரிட் ராஸ் பார்னட் Marguerite Ross Barnett 1976 The politics of cultural Nationalism in South India. Princeton: New Jersey; pp. 368. 62 வேறு சில அறிஞர்களைப் பற்றிய சிறு குறிப்புகள் (பின்வருபவர்களுள் பெரும்பாலோர், தமிழுக்கு/ தமிழியத்துக்கு / தமிழருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்பதைத் தமது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றியவர் அல்லர். எனினும் “தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார்” ஆகலின் சில செய்திகள் மிகச் சுருக்கமாகக் கூறப்படுகின்றன. இன்னும் ஒரு பதிப்பு வருமாயின் அவை சற்று விரிவாக்கப்படும்.) அ. தமிழ் நூல்களின் ஆங்கில வடிவங்களை /ஆங்கிலப் பெயர்ப்புகளைத் தந்தவர்கள். i) அலெய்ன் டேனியல் Alain Danielou : இந்திய இசை ஆய்வாளர் ஆகிய இவர்,சிலப்பதிகாரத்தின் பால் ஈர்க்கப்பட்டு அதனையும் பின்னர் மணிமேகலை யையும் ஆங்கில உரைநடையில் - ஆங்காங்கு சில பகுதிகள் ஆங்கிலக் கவிதையில் உருவாக்கி வெளியிட்டார். (பெங்குயின் பதிப்பகம்) 1965 Silappadikaram (The ankle bracelet) p. 211.. 1989 Manimekhalai The dancer with the magic bowl (கோபாலய்யர் உதவியுடன்) இந்தோ - ஆரிய மொழி பேசுநர்க்கு முந்தைய Pre Aryan தொன்மை வாய்ந்த “(மறு பிறவி உட்பட) பல்துறை நுண்ணறிவு” பெருமளவுக்கு ஆசீவகர்களிடமிருந்தது. ஆசீவகக் கொள்கைகள் பின்னர் சமண, புத்த மதங்களிலும் ஏறிவிட்டன; புத்தர், மகாவீரர் இருவருக்குமே ஆசிரியர் மற்கலி கோசர்; திக்நாகரின்நியாய பிராகாச நூல்மணிமேகலை க்குப் பிந்தியது. இவையெல்லாம் லேனியல் உடைய கருத்துகளாகும். ii) அர்நோ லெமான் Arno Lehmann இவர் தரங்கம்பாடி (முதலில் டேனிஷ் / பின்னர் லூதரன்) விடையூழியராகப் பல ஆண்டு பணியாற்றியவர். 1935 இல் தாயுமானவர் பாடல்களை முழுமையாக ஜெர்மன் மொழிப்படுத்தி வெளியிட்டார். தமது விடையூழிய அமைப்பு சீகன்பால்கு காலத்திலிருந்து இன்றுவரைச் செய்துள்ள அரும்பணிகள் விளக்கி 1956 இல் It began at Tranquebar புத்தகத்தை வெளியிட்டார். iii) நார்மன் எம். பென்சர் Norman M. Penzer : 1926 இல்நளன் கதைச் சுருக்கத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டார். iv) நார்மன் கட்லர் Norman Cutler:: தமிழ் பக்தி இலக்கியங்களைப் பற்றி “The Songs of experience: The Poeties of Tamil devotion” நூல் எழுதியவர். இவர் Journal of American Oriental Society ( (அக் = திச 1992 பக் 549 - 556) இல் எழுதிய “Interpreting Tirukkural: the role of commentary in the creation of text :” என்னும் நுண்மாணுழைபுலமிக்க அரிய கட்டுரை பரிமேலழகர் உரையானது (வள்ளுவர் குறளின் அடிப்படைத் தன்மைக்கு மாறாக) பெருமளவுக்கு சம்ஸ்கிருத தர்ம சாஸ்திரக் கருத்துக்களை வலிந்து புகுத்துவதாக உள்ளது என்பதை விளக்குகிறது. v) ஸ்டுவார்ட் பிளாக்பர்ன் Stuart Blackburn: பெரும்பாலும் கம்பராமாயண அடிப்படையில் அமைந்த கதையானது தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பாவைக்கூத்து ஆக நடத்தப் படுகிறது. அதுபற்றிய ஆய்வு நூல்Conversations inside the Drama House: Rama Stories and Shadow Puppets in South India.. (பெர்கலி, கலிபோர்னியா) vi) மார்த்தா ஆன் செல்பி Martha Ann Selby: ஐங்குறுநூற்றுப் பாடல்கள்500 யையும் முழுமையாக, நயமாக ஆங்கிலப்படுத்தி 2011இல் Tamil Love Poetry: The Five Hundered Short poems of Ainkurunuru என்ற பெயரில் கொலம்பியா பல்கலைக்கழக அச்சகம் மூலமாக வெளியிட்டுள்ளார். vii) டேவிட் சி. பக் David C. Buck .குற்றாலக் குறவஞ்சி யை 2005இல் ஆங்கிலத்தில் பெயர்த்தவர். (ஆசியவியல் ஆய்வு நிறுவனம்; செம்மஞ்சேரி). viii)லூயி டுமான்ட் Louis Dumont: மாந்தவியல் ஆய்வாளர் பிரமலைக் கள்ளர் பற்றி கள ஆய்வு செய்து பிரெஞ்சு மொழியில் விரிவான நூல் எழுதியவர். இந்நூலில் ஆங்கில வடிவமும் வந்துள்ளது. இந்திய மாந்தவியலில் முக்கியமான படைப்புகளில் ஒன்றான Homo Hierarchicus நூலின் ஆசிரியர். Ix) பிரென்டா பெக் Brenda Beck: மாந்தவியல் ஆய்வாளர். கொங்குப்பகுதி மாந்தவியல் பற்றிய Peasant Society in Kongu (1972) pp 331 British Columbia University என்ற சிறந்த கள ஆய்வு நூலை ஆக்கியவர்.அண்ணன்மார் சுவாமி கதையை ஆங்கிலப்படுத்தி வெளியிட்டவர். x) அல்தே ஹில்தெபெய்டெல். Alte Hiltebeitel (1988 / 1991). இவர் தமிழ்நாட்டில் திரௌபதி வழிபாடு பற்றி விரிவாக ஆய்வு செய்து, அது பற்றியும் பிற தாய்த்தெய்வங்கள் வழிபாடு பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்: The Cult of Draupadi: I-Mythologies from Gingee to Kurukshetra. II - On Hindu ritual and the goddess (Chicago; University of Chicago Press) xi) ஜான் மர்டாக் John Murdoch. 19ஆம் நூற்றாண்டில் அச்சில் வெளிவந்த தமிழ் நூல்கள் அனைத்தின் பட்டியலையும் (துறைவாரியாகத்) தொகுத்து வெளியிட்டவர். xii) எஃப். ஸ்க்வார்ட்ஸ் F. Schwartz (1726 - 1798). தரங்கம்பாடிக்கு 1750 இல் விடையூழியராக வந்தவர். தஞ்சை மராட்டிய மன்னர் துளசியின் நண்பர். பின்னர் சரபோஜியின் குருவாகவும் பாதுகாவலராகவும் விளங்கினார். பின்னாளில் திருச்சிராப்பள்ளி முதலிய பகுதிகளில் கிறித்துவ விடையூழியம் செய்தார். தமிழுடன் ஆங்கிலத்தையும் கற்றுத் தரும் பள்ளிகள் சிலவற்றை அன்றே தொடங்கி நடத்தினார்.  தமிழுக்குத் தொண்டாற்றிய பிறநாட்டு அறிஞர்களின் பெயர்கள் - ஆங்கில அகர வரிசைப்படி 1. Andronov, M.S. - அந்திரநாவ், எம்.எஸ். 2. Asher, Ronald E- ஆஷர், ரோனால்டு இ. 3. Baker, C. John - பேக்கர், சி. ஜான் 4. Barnett, Marguerite Ross - பார்னட், மார்கரிட் ராஸ் 5. Beck, Brenda S.- பெக், பிரெந்தா எஸ். 6. Beschi, Joseph Constanzo [Veeramamunivar] - பெஸ்கி, ஜோசப் கான்ஸ்டன்சோ (வீரமாமுனிவர்) 7. Beythan, H.. - பேதான், எச். 8. Blackburn, Stuart - பிலாக்பர்ன், ஸ்டுவார்ட் 9. Bloch, Jules- பிலாக், ஜுல்ஸ் 10. Brown, C.P.- பிரவுன், சி.பி. 11. Buck, David C.. - பக், டேவிட் சி. 12. Burrow, Thomas - பரோ, தாமஸ் 13. Caldwell, Robert - கால்டுவெல், ராபர்ட் 14. Chevillard,Jean – Luc - செவிலார்ட், ஜீன் - லக் 15. Cutler, Norman - கட்லர், நார்மன் 16. Danielou, Alain - டேனியல், ஆலென் 17. Dubiansky, Alexander - தூபியான்ஸ்கி, அலெக்சான்டர் 18. Dubois, Abbe- தூபோ, அபெ 19. Dubreul, Joveau - தூப்ரேல், ஜோவி 20. Dumont, Louis- தூமான்ட், லூயி 21. Duperron, Anquetil- தூபெரான், ஆன்கொதில் 22. Ebeling, Sascha - எபெலிங், சஸ்சா 23. Ellis, F.W. . - எல்லிஸ், எப். டபிள்யு 24. Emeneau, Murray Barnson - எமெனோ, மரே பார்ன்சன் 25. Fabricius, J.P.. - பெப்ரீசியஸ், ஜே.பி. 26. Filiozat, Jean- ஃபிலியோசா, ஜீன் 27. Gestine, Martin- கெஸ்டைன், மார்டின் 28. Graul, Karl- கிரால், கார்ல் 29. Green, Samuel Fisk - கிரீன், சாமுவேல் ஃபிஸ்க் 30. Gros, Francois- க்ரோ, ஃபிராங்கோ 31. Gundert, Hermann- குந்தர்த், ஹெர்மன் 32. Hakola, H.P.A. - ஹகோலா, எச்.பி.ஏ. 33. Hart, George L.. - ஹார்ட், ஜார்ஜ் எல். 34. Henriques, Henrique - ஹென்ரிகஸ், ஹென்ரிக் 35. Heras, Henry - ஹீராஸ், ஹென்றி 36. Hiltebeitel, Alte - ஹில்தேபெய்டெல், அல்தெ 37. Hoisington, Henry - ஹாய்சிங்டன், ஹென்றி 38. Hultzsch, Eugen - ஹுல்ட்ஸ், யூஜின் 39. Irschik, Eugene- இர்ஷிக், யூஜின் 40. James, Gregory - ஜேம்ஸ், கிரிகரி 41. Jensen, Herman - ஜென்சன், ஹெர்மன் 42. Kittel, Ferdinand - கிட்டல், பெர்டினாந்த் 43 Lahovary, N.. - லாகோவரி, என். 44. Lazarus, John - லாசரஸ், ஜான் 45. Lehmann, Arno - லெஃமான், அர்நோ 46. Lehmann, Thomas - லெஃமான், தாமஸ் 47 . Levitt, Stephan Hillyer - லெவிட், ஸ்தீபன் ஹில்யர் 48. Mackenzie, Colin - மக்கென்ஸி, காலின் 49. Malten, Thomas - மால்டென், தாமஸ் 50. Marr, John Ralston - மார், ஜான் ரால்ஸ்டன் 51. Murdoch, J - மர்டாக், ஜே. 52. Niklas, Ulrike - நிக்லாஸ், அல்ரிக் 53 Nobili, Robert D.. - நோபிலி, ராபர்ட் டி. 54. Ohno, Susumu - ஓநோ, சுசுமு 55. Orr, Leslie - ஆர், லெஸ்லி 56. Panattoni, Emmanuela - பனதோனி, எம்மானுவெலா 57. Parpola, Asko - பர்போலா, அஸ்கோ 58. Penzer, Norman M.. - பென்சர், நார்மன் எம். 59. Percival Peter - பெர்சிவல், பீட்டர் 60. Pope, George Uglow - போப், ஜார்ஜ் அக்லோ 61. Proenza, Antao da - புரோயென்சா, அந்தோவா தா 62. Ramanujan A.K . - இராமானுஜன் ஏ.கே. 63. Rudin, Semyon - ரூதின், செம்யோன் 64. Schalk, Peter - ஸ்சால்க், பீட்டர் 65. Schiffman, Harold - ஷிஃப்மென், ஹெரால்டு 66 Schomerus, H.W. - ஸ்கோமெரஸ் எச். டபிள்யு 67. Schwartz, F. - ஸ்குவார்ட்ஸ், எப் 68. Schweitzer, Albert - ஸ்வைட்சர், ஆல்பர்ட் 69. Selby, Martha Ann - செல்பி, மார்தா ஆன் 70. Shulman David - ஷுல்மென், டேவிட் 71. Szalek B.Z.. - ஸ்ஜாலக் பி.ஸ். 72. Sjoberg, Andre F - ஸ்ஜோபெர்க், ஆன்ட்ரி எப். 73. Slater, Gilbert - ஸ்லேடர், கில்பர்ட் 74. Steever, Sanford B - ஸ்தீவர், சான்போர்டு பி. 75. Takakashi, Takanobu - தககக்ஷி, தகநொபு 76. Taylor, William - டேலர், வில்லியம் 77. Tschacher, Torsten - ஸ்சாக்கர், தார்ஸ்டன் 78. Vacek, Jaroslav - வாசக், ஜரோஸ்லாவ் 79. Vinson, Julien - வின்சன், ஜூலியன் 80. Washbrook, David - வாஷ்புரூக், டேவிட் 81. Rudin, Semyon - ரூதின், செம்யோன் 82. Wilden, Eva - வில்தன், ஏவா 83. Winslow, Miron - வின்ஸ்லோ, மிரன் 84. Yocum, Glenn - யோகம், கிலென் 85. Ziegenbalq. B.. - சீகன்பால்கு, பி. 86. Zvelebil Kamil S.. - சுவெலபில், கமில் எஸ். 