செம்மொழிச் செம்மல்கள் 2 முனைவர் பா. இறையரசன் தமிழ்மண் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : செம்மொழிச் செம்மல்கள் - 2 ஆசிரியர் : முனைவர் பா. இறையரசன் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 200 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 125/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : குட்வில் கம்ப்யூட்டர்சு அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு :தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் :tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழின் தொன்மையை, தமிழரின் மேன்மையை உலகுக்குக் காட்டிய பெருந்தமிழ் அறிஞர்களின் வாழ்க்கைச் சுவடுகள் “செம்மொழிச் செம்மல்கள்” எனும் தலைப்பில் இரண்டு தொகுதிகளாக வெளிவருகின்றன. மறைக்கப்பட்டும், புதைக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும், நீருக்கும் நெருப்புக்கும் இரையாக்கப்பட்டதும் போக எஞ்சிய தமிழறிவுக் கருவூலங்களை வருங்காலத் தமிழினத்துக்குத் தேடிஎடுத்துப் புதையலாக வழங்கிச் சென்ற அருந்தமிழ்ப்பெரியோரை இந்த நேரத்தில் நன்றிப் பெருக்குடன் வணங்குவோம். ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொகை தொகையாய் நூல்களை வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரைப் பதித்துவருவதை தமிழுலகம் அறியும். எம் முத்திரைப் பதிப்புகளின்வரிசையில்‘செம்மொழிச் செம்மல்கள்’ நூலும் வெளிவருகின்றன. தமிழர்கள் தம் முன்னோரின் உழைப்பை அறிந்து தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்மண்ணுக்கும் தொண்டாற்ற முன்வர வேண்டும் எனும் விருப்பத்தால் இப்பதிப்பு வெளிவருகிறது. நூலுக்கு பேரா.முனைவர் மா.நன்னன் அவர்களின் அணிந்துரையும், நூலாசிரியரின் “சொல்லவும் பெரிதே” எனும் தன்னுரையும் நூலுக்கு வலிமையூட்டி உள்ளன. கோ.இளவழகன் பதிப்பாளர் அணிந்துரை பேராசிரியர் முனைவர் மா. நன்னன் இந் நூலாசிரியர் திரு பா. இறையரசனுக்கு ஆசிரியர் என்னும் முறையில் இந்நூலுக்குப் பாயிரம் எழுத ஒப்புக்கொண்டோம். திரு பா. இறையரசன் மாநிலக் கல்லூரியில் எமக்கு மாணாக்கரா யிருந்து தமிழ் முதுகலை பயின்றார். அப்போதே எம்மைக் கவர்ந்த நன்மாணாக்கருள் ஒருவராய் அவர் விளங்கினார். அங்கு படிக்கும்போதும், அதன் பின்னரும் தம் பணிகளுக்கிடையே தலையாய பணியாகத் தமிழ்க் காப்புப் பணியையும் தொடர்ந்தும், சிறந்தும் செய்துவருபவராவார். குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்கள், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, தமிழர் நாகரிக வரலாறு, இதழாளர் பாரதியார், மேடு பள்ளம் (சிறுகதைத் தொகுப்பு), பாலை நானூறு (புதுக் கவிதை), பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள், கல்வித் தமிழ் மலருமா?, தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி முதலிய பற்பல பயனுள்ள நூல்களை எழுதிச் சிறந்துள்ளார். தமிழர் யாவரும் அறிந்திருக்க வேண்டிய சான்றோர் வரலாறு களையும் தேனீ போல் திரட்டி இளஞ்சூட்டில் இறக்கி எடுத்த சுவைக் கட்டிகள் போல் இந்நூல் வாயிலாகத் தந்துள்ளார். ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவற்றுள்ளும் சிலவற்றை மட்டும் தேர்ந்துச் சுருங்கச் சொல்லல் எளிதன்று. ஒரு நாளேட்டில் அவர்கள் இதற்காக ஒதுக்கும் இடத்தில் அடங்கும்படியும் கருத்து முழுமை இருக்கும் வகையிலும் எழுதுவது மிகமிக அரிய செயலே. இவ்வரிய செயலைத் திரு இறையரசன் இந்நூலை உருவாக்கியதன் வாயிலாகச் சிறக்கச் செய்துள்ளார். இந்நூலால் அறியப்படும் பெருமக்கள் அத்தனைபேரும் நற்றமிழ்ப் பெருமக்களே! இவர்களில் பலர் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டோராவர். ஆனால் அவர்கள் யாவரும் நம்மால் மறக்கத்தகாதோருமாவர் என்பதை நன்கு உணர்ந்ததாற்றான் திரு இறையரசன் அப் பெருமக்களின் வரலாறுகளை தூசுதுடைத்து மணியமைப்பது போல் அமைத்துத் துலங்கச் செய்துள்ளார். துளக்கமின்றித் துலங்கச் செய்யும் பணியை இறையரசன் நன்றாகச் செய்துள்ளார். பயனுள்ள பணிசெய்துள்ள முனைவர் இறையரசன் அவர்களை உளமாரப் பாராட்டி வாழ்த்துகிறோம். ‘சிறு குடி’ மா. நன்னன் அரங்கராசபுரம், சென்னை - 600 015 நாள் : 07-07-2009 சொல்லவும் பெரிதே! செம்மொழி என்று தமிழை நடுவண் அரசு அறிவித்து விட்டதனாலேயே தமிழுக்குப் பெருமை வந்து சேர்ந்துவிட வில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் செம்மொழிதான். வடமொழியை - சமற்கிருதத்தை உயர்த்திப் பிற மொழிகளைத் தாழ்த்திச் சொன்னபொழுது தமிழை உயர்த்திப் பிடித்து அறிவிக்க வேண்டிய கட்டாயம் திரு ஞானசம்பந்தருக்கும் (பிற நாயன்மார்களுக்கும், ஆழ்வார் களுக் கு ம் ) ப ரஞ் சோதி முனிவருக்கும் தமிழ் விடுதூது ஆசிரியருக்கும் கால்டுவெல், போப்பு முதலான வெளிநாட்டு அறிஞர்களுக்கும் வடலூர் இராமலிங்க வள்ளலாருக்கும் மாகறல் கார்த்திகேயனார்க்கும் ஞானப் பிரகாச அடிகளா ருக்கும் பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் மறைமலைஅடி களுக்கும் பாவாணருக் கு ம் பெருஞ்சி த் திரனா ர் க் கும் என இன்ன பிறர்க்கும் தேவை ஆகியது. சமயத்தின் பெயரால் சமற்கிருதம் செய்து வந்த வல்லாண் மையை ஆட்சி மொழியின் பெயரால் இந்தியும் உலக மய மாக்கலின் பெயரால் ஆங்கிலமும் செய்து வருகின்றன. சமற் கிருதத்திற்கும் இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் கிடைக்கிற — செய்யப்படுகிற சிறப்புகளும் பெருமைகளும் அரசின் உதவியும் வலிமையும் தமிழுக்குக் கிடைக்க வேண்டும். ஏனென்றால் அம்மொழிகளைவிட தொன்மையும் சிறப்பும் ஆற்றலும் வ ரலாறும் வலிமை யு ம் கொண்ட மொழி தமிழ் மொழி என்பதால்! ஆனால் தமிழுக்கு உரிய பெருமைகளைச் சேர்க்கவும் வளர்க்கவும் தமிழனால் முடியவில்லை. ஆட்சியில் ஆவணத்தில் காட்சியில் அறிவியலில் சமயத்தில் என அனைத்துத் துறை களிலும் தமிழுக்குத் தமிழ்நாட்டிலேயே வளர்ச்சியில்லை; வாழ்வுமில்லை! தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு என்று கூறும் பெற்றோர்கள்! ஆங்கிலத்தின் மூலம் தான் தமிழை வளர்க்க முடியும் என்று கூறும் பெரியோர் கள்! பிற மொழிகளை அறிந்து தமிழன் உலகெங்கும் பரந்து பட்டுச் சென்று தன் வாழ்வையும் தமிழ் மொழி வளத்தையும் பரப்புவது வேறு; பிற மொழிகளை ஏற்றுத் தாய்த் தமிழையும் தன் அடையாளத்தையும் உரிமைகளையும் இழப்பது வேறு. பழந்தமிழ் அறிஞர்கள் செய்த தொண்டு அளவிட்டுரைக்க முடி யாதது! தமிழ்த்தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! அவர்கள் செய்த தொண்டில் அணு அளவேனும் நாம் செய் தோமா? அவர்கள் செய்த பணிகள் நிலைக்கச் செய்தோமா? அவர்கள் செய்த நூல்கள் முழுதும் இன்றைக்குக் கிடைக் கின்றனவா? அனைத்து நூல்களையும் முதற் பதிப்புகளையும் பழைய ஏட்டுச் சுவடிகளையும் செப்பேடுகளையும் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்க - அறிவியல் வளர்ந்துள்ள நிலை யில் ஆவணப் படுத்த - நுண்படச்சுருள் (மைக்ரோஃபிலிம்), குறுந்தகடு ஆக்கம் செய்ய வேண்டும். அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்தம் வரலாற்றையும் அவர்தம் நூல்களையும் கூட நாம் முழுமையாக ஆவணப்படுத்தவில்லை. நாமக்கல் கவிஞர் சொல்வதுபோல் பார்ப்பனர்களுக்குச் சமற்கிருதத்தின் பால் பரிவும் தமிழின் பால் தாழ்வுமனப் பான்மையும் உண்டு. ஆயினும் மு.சி. பூரணலிங்கம் பிள்ளை பாராட்டுவது போல் ‘சமற்கிருதத்தில் பற்றும் தமிழைத் தாழ் வாகக் கருதும் மனப்பான்மையும் கொண்ட குலத்தில் பிறந்தும் தமிழின் பெருமையை உலகறியச் செய்த பரிதிமாற் கலைஞரை நாம் மறக்க முடியாது. பாரதியாரும், மு. இராகவையங்காரும், இரா. இராகவையங்காரும், உ.வே. சாமிநாத அய்யரும், பி.டி.சீனிவாச அய்யங்காரும், வி.ஆர். இராமச்சந்திர தீட்சதரும், கிருட்டிண சாமி அய்யங்காரும் செய்த தமிழ்த் தொண்டுகளை மறக்க முடியாது; மறுக்க முடியாது. அவர்கள் செய்த சிறு தவறு களைச் சுட்டிக் காட்டித் திருத்தங்களைச் சொல்லலாம்; அதற்காக அவர்கள் செய்த மாபெரும் பணிகளைத் தூக்கி எறிய முடியாது; கூடாது. சாதியின் பெயரால் அவர்களை உயர்த்திப் பிடிக்கி றார்கள் என்றால், உண்மையின் பெயரால் நாம் தமிழர்களை உயர்த்திப் பிடிக்கவும் தவறக்கூடாது. பாரதியாரின் பாடல் களைப் பாராட்டியது போல் கவிமணி, நாமக்கல்லார் பாடல் களைப் பாராட்டுங்களேன்! உ.வே.சா. ஏடு தொகுத்ததுபோல் சி.வை. தாமோதரம் பிள்ளையும், வெ.ப.சு. முதலியாரும், சி. கனகசபைப்பிள்ளையும் தொகுத்த செய்தி வெளியிடப் பட்டதா? சங்கநூல்களை இராமலிங்க அடிகளாரும் பெரும் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் ஆறுமுகநாவலரும் முன்னரே அறிந்திருந்தனர் என்ற புகழ்பாட வேண்டியதுதானே! சாதி, மதம், இனம், ஊர், கட்சி, கொள்கைகள், சிறு வேறுபாடுகள் இவற்றால் பிளவுபட்டு நிற்பது தவறு. தமிழ் மொழியும், தமிழ்நாடும், தமிழ் இனமும் தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க பெருமையை நிலைநாட்டுவோம். திருவையாற்றில் தெலுங்கு இசை கொண்டாடப் படுகிறது என்றால் தமிழிசையை ஏன் நீங்கள் கொண்டாடவில்லை? ஆபிரகாம் பண்டிதரும் விபுலானந்தரும் குடந்தை சுந்தரேசனாரும் செய்ததுபோல் உங்கள் முயற்சி ஒற்றுமையால் இனத்தின் முயற்சி ஆகட்டும்! தமிழோசை நாளிதழில் தமிழ் மக்கள் நலம் நாடும் பொது வாழ்வியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதினேன்; பின் தமிழோசை இதழின் ஞாயிற்றுக் கிழமை இணைப்பிதழாகிய ‘களஞ்சியம்’ பகுதிக்குத் தொடர்ந்து தமிழறிஞர்களைப் பற்றிச் “செம்மொழிச் செம்மல்கள்” என்று எழுதலானேன். களஞ்சியம் இதழாசிரியர் திரு. யாணன் தந்த ஊக்கம் பெரிது! நான் “தமிழ் இலக்கிய வரலாறு” எழுதிய காலத்திலிருந்து (1982) தொகுத்து வந்த தொல் தமிழ் அறிஞர் வரலாற்றைப் பண்டே பதிந்திருந்த இதழ்கள் நூல்கள் முதலியவற்றின் படைப் பாளர்கள், கட்டுரை ஆக்கும் காலத்தே உதவிய பேராசிரியர் அன்பழகனார் ஆய்வு நூலகத்தின் நூலகர் சுந்தரராசன், தமிழறிஞர்களின் ஓவியம் வரைந்தளித்த நெய்வேலி கோவிந்தன், தமிழோசை இதழிலிருந்து ‘செம்மொழிச் செம்மல்கள்’ கட்டுரைகளை எடுத்து வெளியிட்ட அமெரிக்க இதழ் ‘ தி தமிழ் டைம்ஸ்’, அணிந்துரை அளித்த ‘தமிழைத் தமிழாக்குவோம்’ என இயக்கமாக வாழும் என் பேராசிரியர் மா. நன்னன் ஐயா, ‘செம்மொழிச் செம்மல்கள்’ என நூலாகப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பகத்தார் ஆகிய அனைவரின் பெருமையும் பெரிது! தமிழ்த்தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே! - பா. இறையரசன் கைப்பேசி : 9840416727 மின்னஞ்சல் :iraiarasan@gmail.com இணைய தளம் : http//iraiarasu.blogspot.com உள்ளடக்கம்  பதிப்புரை ..................................................................................................... 3  அணிந்துரை ............................................................................................... 4  சொல்லவும் பெரிதே! ................................................................................. 6 26. தமிழ் செம்மொழியா? .............................................................................. 11 (பரிதிமாற் கலைஞர் 27. மாணிக்கத்தமிழ் ....................................................................................... 19 பா.வே. மாணிக்க நாயக்கர் 28. காந்திக்கு ஆட்டுப் பாலும் திருடனுக்குத் தமிழ்ப் பெட்டியும்! ...... 26 தஞ்சை சீனிவாசபிள்ளை 29. கிறித்துவக் கம்பர்! .................................................................................. 33 எ.ஆ. கிருட்டிணப்பிள்ளை 30. உங்கள் ஊரில் எத்தனை காக்கை? .................................................. 40 வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் 31.அரசு ஊழியர் தூக்கமும் ஆட்சியர் ஏக்கமும்! ................................... 48 கோபால கிருட்டிண பாரதி 32. பாரதிக்குப் பாட்டு தந்த பாரதி ............................................................ 54 சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் 33. தானே தானாம் தக்கடி தங்கம்! ........................................................... 61 அ. மாதவையா 34. அடுப்பெரிக்கப்பட்ட வழக்குத் தாள்கள் ........................................... 70 சிவக்கவிமணி சி.க. சுப்பிரமணிய முதலியார் 35. துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி! ...................................................... 78 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 36. குடிப்பதைத் தடுப்பதே கோடி கோடி புண்ணியம் ........................... 86 நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் 37. செல்லரிக்கும் செப்பேடுகளும் கல்வெட்டுகளும்! .......................... 93 கோவை கிழார் சி.ம. இராமச்சந்திரன் 38. காப்பியமான பேராசிரியர் .................................................................... . 99 பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் 39. புலவருக்குக் கட்டிய கோயில்!............................................................ 107 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 40. சத்திரத்துச் சோறும் சமற்கிருதமும்! ............................................. .. 114 தமிழவேள் உமாமகேசுவரர் 41. அவள் போட்ட கணக்கு! ...................................................................... 122 அரங்கவேங்கடாசலம் பிள்ளை 42. கம்பர் என் மாமனார் ............................................................................ 130 செகவீரபாண்டியனார் 43. ஏர்மனி அரசரும், தமிழ் ஆச்சாரியாரும் ......................................... 137 ஞானப்பிரகாச அடிகளார் 44. இராயப்பேட்டை இரண்டானது ......................................................... 144 கோ. வடிவேலுச் செட்டியார் 45. சமணத் தத்துவ ஞானி ........................................................................ 151 சக்கரவர்த்தி நயினார் 46 தமிழ்த் தேனீ ......................................................................................... . 158 ஆ. சிங்காரவேலு முதலியார் 47. தமிழ்த் தாத்தாவுக்கு உதவியவர்! ................................................... . 164 வி. கனகசபைப் பிள்ளை 48 கந்தசாமிப் பிள்ளையும் தமிழ் மகளும் ............................................. 170 நீ. கந்தசாமிப்பிள்ளை 49 பகுத்தறிவுப் பாட்டன்! .......................................................................... . 177 அயோத்திதாச பண்டிதர் 50. மாணவர் தந்த பாடம் ........................................................................... 185 சூளை சோமசுந்தர நாயகர் 51. தனித்தமிழ்த் தந்தை! ........................................................................... 193 மறைமலை அடிகள்  26. தமிழ் செம்மொழியா? தமிழைச் செம்மொழி என்று முதன் முதல் உலகுக்கு அறிவித்தவர் கால்டுவெல் ஆவார். நான்காம் தமிழ்ச்சங்கம் மதுரையில் நிறுவிய பாண்டித்துரைத் தேவரும் மன்னர் பாசுகர சேதுபதியும் அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்த ஞானி யாரடிகளும் தமிழ் செம்மொழி என்று மேடைகளில் பேசி வந்தனர். கால்டுவெல் கருத்து உலகெங்கும் பரவிய நிலையில் ரைஸ்டேவிட், வின்சென்ட் ஸ்மித், வின்சுலோ முதலியோரும் மனோன் மணியம் பெ. சுந்தரனார், சேசகிரி சாத்திரியார், பி.டி.சீனிவாச அய்யங்கார், இராமச்சந்திர தீட்சிதர், மாகறல் கார்த்திகேய முதலியார் ஆகியோரும் தமிழின் சிறப்பையும் தமிழ் இனத்தின் தொன்மையையும் நிலை நாட்டினர். தொல்காப்பியப் பாயிரத்திலிருந்து பாரதியார் பாடல் வரை ‘செந்தமிழ்’ என்று கூறியிருந்தும், தமிழர் சிலர் ‘தமிழ் செம்மொழியா?’ என்று கேட்டனர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளிவந்த ‘செந்தமிழ்’ என்ற இலக்கியத் திங்கள் இதழில் 1902-இல் ‘தமிழ் செம்மொழியே’ என்று கட்டுரை எழுதினார் வி.கோ. சூரியநாராயண சாத்திரியார். பேராசிரியர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை படித்த போது கல்லூரியின் முதல்வர் முனைவர் வில்லியம் மில்லர் ‘சூரிய நாராயணன்’ என்று வகுப்பில் பெயரைப் படிக்க இடர்ப் பட்டார். “இப்பெயரை மாற்றிக் கொள்ள முடியுமா?” என்று கேட்டார். மறுநாள் ‘சூரிய நாராயண சாத்திரி’ என்று எழுதி யதும், “இது இன்னும் நீளமாக இருக்கிறதே?” என்று கேட்டார் மில்லர். “மாற்றத்தான் சொன்னீர்களே தவிரக் குறைக்கச் சொல்லவில்லையே!” என்றார் சூரியநாராயணர். அவரது துணிச்சலைப் பாராட்டினார் மில்லர். டென்னிசன் பாடலில் ‘ஆற்றில் அன்னம்போல் அசைந்து செல்லும் படகு’ என்று வரும் பகுதியைக் கற்பித்த மில்லர், “இது போன்ற சிறந்த உவமை உலகில் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லை!” என்றார். உடனே சூரியநாராயணர் எழுந்து “முடுகின நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்க், கடிதினின் மடவன்னக் கதியது செல்ல’ என்று தமிழில் கம்பர் பாடியிருக்கிறார்” என்று கூறி மில்லரின் பாராட்டைப் பெற்றார். பாடம் வல்லார் இளங்கலை முடித்த உடனேயே ஆசிரியர் பணியேற்றதால் அவர் இளையராக இருந்தார். அதனால் சில மாணவர்கள் குறும்பாக நடந்தனர். இலக்கண வகுப்பில் “அடி தொடை பற்றி விளக்குங்கள்” என்றான் ஒரு மாணவன். “உனக்கு நாளை விளக்கு மாற்றால் விளக்குவேன்” என்றார் ஆசிரியர் சூரியநாராயணர். “தாமரைக் கண்ணால் நோக்கி” எனவரும் சிந்தாமணி வரிக்கு, பெண்கள் தாமரைக் கண்ணால் நோக்கி என்றும், தாம் அரைக் கண்ணால் நோக்கி என்றும், தாம் மரை (மான்)க் கண்ணால் நோக்கி என்றும் சுவைபட நடத்தியதாக அவர்தம் மாணவர் வ.சு.செங்கல்வராயப் பிள்ளை கூறுவார். காசநோய் வந்து இருமல் தொல்லை தந்தபோதும் “இருமல் பெரு மல் (பெரும் மல் = பெரும் போர்) செய்கிறதே” என்று சிரித்தவாறு கூறியபடியே பாடம் கற்பிப்பாராம். நாடக ஆசிரியர் மனோன்மணியம் சுந்தரனார், பம்மல் சம்பந்தனார், பூண்டி அரங்கநாத முதலியார் ஆகியோரும் மன்னர் பாசுகர சேது பதியும் நாடக வளர்ச்சிக்கு உதவியவர்கள். மன்னர் பாசுகர சேதுபதியின் அவையில் ‘கலாவதி’ நாடகத்தைச் சூரிய நாராயணர் அரங்கேற்றினார். கிறித்துவக் கல்லூரியில் ரூபாவதி நாடகத்தை அரங்கேற்றியதுடன் தாமே கதைத் தலைவியாக நடித்தார். இவருடைய மாணவர் சலசலோசனச் செட்டியார் செகப்பிரியரின் ‘சிம்பலைன்’ நாடகத்தைச் ‘சரசாங்கி’ என மொழி பெயர்த்தார். சங்ககாலத் தமிழ் நாடக இலக்கண நூல் மறைந்ததே என்று வருந்தித் தாமே ‘நாடகவியல்’ என நாடக இலக்கணம் இயற்றினார் என்று பாரதிதாசன் பாராட்டுவார். திராவிட சாத்திரி வடமொழியைப் போற்றித் ‘தமிழைத்’ தாழ்த்திக் கூறுவது பார்ப்பனர்களுக்கும் ஆரிய சார்பினர்க்கும் வழக்கம். வட மொழியே செம்மொழி என்று ஆங்கிலேய அரசுக்குக் கூறி அத்தனை உரிமைகளும் சலுகைகளும் பெற்றுத் தந்திருந்தனர். (இன்றைக்கும் அதுதான் நிலைமை!). அப்படிப்பட்ட குலத்தில் பிறந்திருந்தும் தமிழைப் போற்றிடும் சூரிய நாராயண சாத்திரியைத் ‘திராவிட சாத்திரி’ என்று அழைப்பதே பொருத்தம் என்று சி.வை.தாமோதரனார் கூறுவார். வடமொழியே செம்மொழி என்று கூறித் தமிழைச் செம் மொழியா? என்று கேட்டவர்க்கு விடையளித்து, விரிவாகக் கட்டுரை எழுதினார் சூரியநாராயணர். முகம் என்ற சொல் தமிழ்ச் சொல் இல்லை என்பதாகக் கருதித் ‘தமிழுக்கு முகம் இல்லை’ என்று தமிழைப் பழித்தனர் சிலர். வடமொழியில் வாய் என்பதற்குச் சொல் இல்லை என்பதுடன் அது வாய் வழக்கிழந்த மொழி என்பதால் ‘வடமொழிக்கு வாய் இல்லை’ என்று சூரியநாராயணர் எழுதினார். தமிழர்க்கு நாடகம் இல்லை; நாடகம் என்பதே வடசொல் என்று சிலர் கூறி வந்தனர். இதனை மறுத்து நாடகம் என்பது கதைக் கூத்து என்று எழுதினார். “புராணமாவது என்ன என்றால்... கடவுளைப் பற்றித் தமக்குத் தோன்றியவாறு லீலை செய்ததாகச் சிறுபிள்ளைத் தனமாக எழுதப்பட்டிருக்கும் ஒரு நூலாம்.” என்று எழுதியவர் சூரியநாராயணர். ஆங்கிலமும் தமிழும் ஆங்கில வழியில் படித்து முடித்து ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் வயிற்றுப் பாட்டுக்காக ஆசிரியர்களாகப் பணிசெய்ய வருகிறார்கள்; ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழி லும் தேர்ச்சி மிக்கவர்களையே ஆசிரியப் பணியில் அமர்த்த வேண்டும் என்று எழுதியுள்ளார் சூரியநாராயணர். மேலும், ஆங்கில வழிக் கல்வியைப் பற்றி, “ஐந்து வயதாகும் முன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்குகின்றனர். தமிழ் வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி தொடங்கும் மாணவர் உடல் தேய்ந்து கண் பூத்து மனம் இற்று நாளடைவில் யமனுக்கு உணவாகின்றனர்” - என்று அவர் எழுதியுள்ளதைத் தமிழக மக்கள் நூறாண்டுகள் சென்றும் உணராமல் தங்கள் தமிழ்க் குழந்தைகளை மூன்று வயதாகும் முன்னரே, ஆங்கிலக் கல்வியில் தள்ளுகின்றனரே! கிறித்துவக் கல்லூரி நூலகத்தில் தமிழ் நூல்களுக்கு நடுவில் ஓர் ஆங்கிலப் பேராசிரியர் இருந்தார். சூரிய நாராயணர் அவரை நெருங்கி, ‘நீங்கள்தான் பூரணலிங்கம் பிள்ளையா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்று கூறிவிட்டு அவர் படிப்பில் ஆழ்ந்துவிட்டார். அடிக்கடி அவரைச் சந்தித்து நட்புகொண் டார் சூரியநாராயணர். இருவரும் கடற்கரை மணலில் உலாவிய காலத்தில் தமிழ் வரலாறு பற்றிப் பேசினர். அக்காலத்தில் இளங்கலை பாடத்திட்டத்தில் ‘தமிழ் மொழி வரலாறு’ என்ற பாடம் இருந்தும் போதிய நூல்கள் இல்லை. ‘தமிழ்மொழியின் வரலாறு’ எனத் தமிழில் சூரியநாராயணர் எழுதினார்; பூரணலிங்கம்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு மாற்றாகச் செம்மொழியாகிய வடமொழியைத்தான் படிக்க வேண்டும் என்று 1902-இல் திட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்த்த மு.சி.பூரண லிங்கம் பிள்ளையுடன் சூரியநாராயணரும் குரல் கொடுத்தார். தமிழை நீக்கிச் சமற்கிருதத்தைக் கற்பித்தால் “பிராமண ராயினோர்க்கு விசேஷமான அனுகூலமும் ஏனையோர்க்கு விசேஷ பிரதிகூலமும் விளையுமென்க” என்று சூரியநாராயணர் எழுதினார். அதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது. கடினநடை மு.சி.பூரணலிங்கம் பிள்ளை நடத்திய ‘ஞானபோதினி’ இ தழி ல் இ ணை ஆசி ரி ய ராக ப் பணயா ற்றினார் சூ ரி ய நாராயணர். ஆங்கிலத்தில் மட்டும் வெளிவந்த கிறித்துவக் கல்லூரி இதழில் தமிழில் எழுதி முதன்முதல் வெளிவரச் செய்தார். ‘செந்தமிழ்’ இதழிலும் தொடர்ந்து எழுதி வந்தார். கட்டுரைகள், செய்யுள், நாடகம், புதினம், மொழி பெயர்ப்பு, திறனாய்வு, பாடநூல் எனப் பலதுறைகளில் எழுதினார். சந்தி பிரித்துக் கொச்சை நீக்கி இலக்கிய நடையில் எழுதவும் பேசவும் செய்தார்.இவரது உ ய ரி ய நடை நோக்கி அதே போல் நூலொன்று எழுதுமாறு சி.வை.தாமோதரனார் கூறியதால் ‘மதிவாணன்’ என்னும் புதினம் எழுதினார். இவரது நடையின் உயர்வும் செறிவும் நோக்கி மதுரை மாவட்டப் பள்ளித் தமிழ் ஆசிரியர் ஜான்பாலகிருட்டிண நாயுடு ‘பகலவா, நீ எழுதிய தெல்லாம் இருளாயிருக்கிறதே!’ என்று பாராட்டினாராம். புதின ஆசிரியராகிய இராசம் அய்யர், “வசனமெழுதுவோர் பிரம்மசிறீ சூரியநாராயணசாத்திரியாரின் வழிச்சென்று வசனமெழுதாமல் இருந்தால் பயனடையலாம்’ என்று குறை கூறினார். தனித்தமிழ் பரிதிமாற்கலைஞர் என்று தம் பெயரை மாற்றிக் கொண்டதால் சூரியநாராயணர்தான் தனித்தமிழ் முன்னோடி என்று கூறுவர். சூரியநாராயண சாத்திரி என்ற தம்பெயரைத் தமிழாக்கிப் புனை பெயராகப் பயன்படுத்தியுள்ளார். பதி னான்கடிச் செய்யுள் (சானெட்) வகையில் சில புதிய கருத்து களை வெளியிட ‘பரிதிமாற்கலைஞன், கரூர்’ என்ற புனை பெயரில் 41 மாதங்கள் ஞானபோதினி இதழில் எழுதியுள்ளார். கரூர் என்பது சென்னையில் அவர் வாழ்ந்த லிங்கிச் செட்டித் தெருப் பகுதியைக் கருப்பர் நகர் (பிளாக்கர் டவுன்) என்று ஆங்கிலேயர் கூறியதன் மொழிபெயர்ப்பு. வடசொல் கலப்பு அதிகம் இல்லாமல் இலக்கிய நடையில் எழுதுபவரும் பேசுபவரும் சூரியநாராயணர் ஆவார். ஆங்கிலேய அரசையும் ஆங்கிலத்தையும் ஆதரித்தவர். ஆங்கிலச் சொற்களைத் தமிழில் திசைச் சொற்களாக ஏற்கலாம் என்பார். ஆயினும் வடமொழியின் இலக்கணக் குறைபாட்டையும் தமிழின் மேன்மையையும் கூறி வடமொழியின் வல்லாண் மையை எதிர்த்துச் செம்மொழி தமிழே என்றவர். சூரிய நாராயண சாத்திரியார் சூரிய நாராயண சாத்திரியார் (பரிதிமாற் கலைஞர்) இயற்பெயர் : சூரியநாராயணன் சிறப்புப்பெயர் : சூரியநாராயண சாத்திரி, சூரியநாராயண சிவா, திராவிட சாத்திரி, பரிதிமாற் கலைஞன் (புனைபெயர்) பெற்றோர் : இலட்சுமி அம்மாள், கோவிந்தராசு சாத்திரி பிறந்தநாள் : 06-07-1870 மறைவு நாள் : 02-11-1903 கல்வி தந்தையிடம் வடமொழி; பசுமலை உயர் நிலைப்பள்ளி, மதுரை மாவட்ட உயர் நிலைப்பள்ளி; இ.சபாபதி முதலியா ரிடம் தமிழ் இலக்கியக் கல்வி (1885 முதல்); மதுரைக் கல்லூரி முன்னிலை (எஃப்.ஏ) 1890; சென்னை கிறித்துவக் கல்லூரி : இளங்கலை (பி.ஏ.) 1893. மனைவி : சுபலட்சுமி பணி : சென்னைக் கிறித்துவக் கல்லூரி : உதவித் தமிழாசிரி யர் (1893-1895) தலைமைத் தமிழாசிரியர் (1895-1903) இதழ் இணை ஆசிரியர் : ஞானபோதினி (மாத இதழ்) (1990 ஏப்ரல் - 1903) படைப்புகள் நாடகங்கள் : ரூபாவதி அல்லது காணாமற் போன மகள் (1895), கலாவதி (1898) செய்யுள் நாடகம் : மானவிஜயம் (1902) நாடக இலக்கணம் : நாடகவியல் (1897) புதினம் (நாவல்) : மதிவாணன் (1902) செய்யுள் : மணிய சிவனார் கலி வெண்பா, அவயவ அறிக்கை (1894), சிறீ மணிய சிவனார் சரித்திரம் (1896), சித்திரகவி விளக்கம் (1899), பாவலர் விருந்து (1901) கட்டுரைகள் : தமிழ் வியாசங்கள், தமிழ் மொழியின் வரலாறு (1903), தமிழ்ப்புலவர் சரித்திரம் (1933), (ஞானபோதினி இதழில் வெளி வந்த கட்டுரைகள்). 27. மாணிக்கத்தமிழ் உடற்கூறு நூல் படித்தவர், பொறியாளர், பொறியியற் கல்லூரியில் பேராசிரியர். மேட்டூர் அணைக்கு வரைபடம் வரைந்தவர்; அதற்கு அடிக்கல் நாட்டியவர். ஓவியர்; நிழற்படத் தொழில் நுட்பக்கலைஞர். கவிஞர். கலைச்சொல் ஆக்குநர்; உலக அறிவியலுக்கே உதவியவர். உலகமெல்லாம் உலா வந் தாலும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாலும் தாய்த் தமிழின் பெருமையை அவர் மறக்கவில்லை. அவருடைய அறிவியல் படிப்பு தமிழ்ப் பெருமையை மேலும் அவர்க்குப் புலப் படுத்தியது. அதை அவர் உலகுக்கே கூறத் தொடங்கினார். சமற்கிருதமே செம்மொழி தமிழ் சிறப்பில்லாத மொழி என்று ஆரியச் சார்பினர் கூக்குரலிட்ட பொழுது தமிழே செம்மொழி, தொல் மொழி; சமற்கிருதம் குறைபாடுள்ள எழுத்து முறையை யும் ஒலிப்பு முறையையும் கொண்ட மொழி, தமிழின் எழுத்து முறையையும் ஒலிப்பு முறையையும் ஏற்றுத் தன்னை உயர்த்திக் கொண்ட மொழி; தமிழின் எழுத்து முறையும் ஒலிப்பு முறையும் உலக மொழிகளுக்கே முன்னோடியும் தலைமையும் சிறப்பும் நுணுக்கமும் வாய்ந்தவை என்று நிறுவினார். அவர்தான் பா.வே.மாணிக்கநாயக்கர் ஆவார் . அறிவியல் தமிழ் சென்னை மாநிலப் பொறியியற் கல்லூரியில் படித்துப் பதின்மூன்று பரிசுகளும் ஒரு தங்கப்பதக்கமும் பெற்று வெற்றி பெற்ற மாணிக்கர் ஆங்கிலேய ஆட்சியில் அரசுப் பொறியா ளராகப் பணியாற்றி மேட்டூர் அணைக்கு வரைபடம் வரைந்து தந்ததுடன் அடிக்கல் நாட்டினார். இந்திய அரசு சார்பில் நிழற் படக் கலைஞராகத் தில்லி சென்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடி சூட்டுவிழாவில் 12-12-1912-இல் படம் எடுத்தார். நங்கவரம் பண்ணையார் இராசம் ஐயர் வாங்கிக் கொடுத்த ‘கோடக்’ நிழற்படக் கருவியுடன் திருச்சிராப்பள்ளியிலிருந்து தில்லிக்கு உந்துருளியில் (மோட்டர் சைக்கிளில்) நாமக்கல் கவிஞருடன் சென்றார். மேற்படிப்புப் பயில இங்கிலாந்து சென்ற போது மிக அதிக நேரம் செலவிட்டு மிக நீண்ட கணக்குப் போடும் நிலை அறிந்து, சுருக்கக் கணக்கீட்டு முறை (கால்குலோ கிராஃப்) கண்டுபிடித்து உலக அறிவியலுக்கே உதவினார். நீதிக்கட்சி (ஜஸ்டிஸ்) இதழில் 23-04-1926-இல் தமிழ்க் கலைச் சொல்லாக்கம் பற்றி விரிவான கட்டுரை எழுதினார். தொடர்வண்டி, தொலைபேசி முதலிய சொல்லாக்கங்கள் மாணிக்கர் உருவாக்கியவை. கலைச் சொல்லாக்கத்திற்குப் பெயர்ச் சொற்களைவிட வினைச் சொற்களே பயன்படும் என்பதும், கலைச்சொல்லாக்கம் செய்யும்போது பிற மொழிச் சொற்களைக் கலக்கக்கூடாது என்பதும் மாணிக்கர் கொள்கைகள். அவர் உருவாக்கிய அறிவியல் தமிழ்க் கலைச் சொல்லாக் க ங் கள் நான்கு பு த் த க ங் களா க க் கட்டு செய்யப்பெற்று மறைமலை அடிகள் நூலகத்தில் உள்ளன. அவர் கலைச் சொல்லாக்கம் செய்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னால் 1997-98இல் பொறியியல் பட்டப்படிப்பு தமிழில் கொண்டுவர முயன்றபோது, தில்லி அனைத்திந்தியத் தொழில் நுட்பக்குழு (ஏஐசிடிஇ)வில் இருந்த தமிழர் சிலரே, தமிழில் அறிவியல் கலைச் சொற்கள் இல்லை, பலகோடி ஒதுக்கித் தந்தால் இன் னும் பல ஆண்டுகள் கழித்துச் செய்யலாம் என்று கூறித் தடுத்துவிட்டனர். தமிழ் அறிவியல் மாணிக்கர் உலக மொழிகளிடையே தமிழின் எழுத்து முறையு ம் , ஒலிமுறையு ம் உர்ந்த செப் பமும் நுட்பமும் கொண்ட அறிவியல் தன்மை சார்ந்தவை என்று சென்னையில் வெஸ்லி கல்லூரியில் 23-02-1917-இல் நிறுவினார். தமிழரின் சமயக் கோட்பாட்டு அடிப்படையில் தமிழ் எழுத்துகளின் மேன்மையை உணர்த்தினார். ஒகரம் என்பது அகரம் ஆயிற்று என்றார். எடுத்தல், படுத்தல், நலிதல் ஆகியவை படைப்பு, காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலோடு ஒத்தன என்றார். இவற்றில் சிலர் கருத்து வேறுபடலாம். உலக மொழிகள் அனைத்தையும் ஒலிக்கவும் எழுதவும் தட்டச்சு அச்சு செய்யவும் தமிழ் எழுத்துகள் மிகவும் பொருத்தமானவை என்றார். தமிழ் எழுத்து முறையின் உலகப் பொதுமை பற்றி மாணிக்கனார் உலகம் முழுதும் பரப்பிடச் சென்னைப் பல்கலைக்கழகமும் தமிழக அரசும் ஆவன செய்ய வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளும் கா. சு . பிள்ளை, திருமணம் செல்வகேசவராயர் முதலிய தமிழறிஞர்களும், தீர்மானங்களும் மடல்களும் அனுப் பினர். தமிழக அரசு மாணிக்கரை அழைத்து 17-12-1922-இல் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்குத் தமிழ் எழுத்துகளின் நுணுக்கம் பற்றிச் சொற்பெருக்காற்றச் செய்தது. செம்மொழித் தமிழ் செம்மொழித் தமிழின் சிறப்புகள் பற்றிச் செந்தமிழ்ச் செல்வி இதழில் 48 கட்டுரைகள் எழுதியுள்ளார் மாணிக்கர். திருச்சிராப்பள்ளியில் 1919-இல் நடந்த தமிழகப் புலவர் மாநாட்டில் மாணிக்கர் தலைமைச் சொற்பொழிவு செய்தார். அப்போது, “தமிழ் தொல்பெருந் தனிமொழி. இவ்வுலகிலேயே தன்னிகரற்றுத் தனித்தியங்கும் பண்டைய மொழி. ‘ஹா, ஹீ என்று மூச்சைப் பறிக்காமல் மூச்சுச் செட்டுடன் இயங்குவது தமிழ் மொழி ஒன்றே. வலிய எழுத்தொலிகளால் மூச்சு வீணா கிறது. பிற சொற்கலப்பால் தமிழின் தூய்மை கெடுகிறது. தமிழ் பிற மொழிகளுக்கு இடம் கொடுத்தால் அது தன் இயல்பை இழந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற புதிய மொழியாகிவிடும்” என்று முழங்கினார். சமற்கிருதமே செம்மொழி, தமிழ்மொழி வளர வேண்டு மானால் பிறமொழிச் சொற்களை மிக அதிக அளவுக்குக் கலக்கலாம் என்று கூறியவர்கள் வாயடைத்தனர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழில், பிறமொழிச் சொற்களைக் கலக்கத் தேவையில்லை. தனித்தமிழ் வாழ்வியல் நடைமுறைகளிலும் மாணிக்கர் நல்ல (தனித்) தமிழைப் பயன்படுத்தினார். இரசகுல்லாவைப் பாலுருண்டை, இலட்டை இனிப்பு உருண்டை, பாயசத்தை இனிப்புக்கஞ்சி என்று கூறுவார் என்று சுத்தானந்த பாரதியார் எழுதியுள்ளார். ‘அஞ்ஞானத்தின் வழக்கீடு’ என்ற நூல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் அச்சாகிக் கொண்டிருந்தது. மாணிக்கர் அவ்வப் போது எழுதிப் பாகல்பட்டியிலிருந்து கரந்தைக்கு அனுப்பி வந்தார். அப்போது ஓர் முறை அனுப்புவதில் ஏற்பட்ட இடை யூறு பற்றி நல்ல தமிழில் எழுதியுள்ளார் மாணிக்கர் நூல் முன்னுரையில் : “அஞ்சல் வண்டிக் குதிரைக்கு ஊறு நேர்ந்து வர வேண்டிய நேரத்தில் வரவில்லை. வாடகைக்கு நடக்கும் தானியங்கி வண்டி (Motor Bus)யில் ஆள்வசங்கொடுத் தனுப்பவும் இயலாது. தமியங்கியின் (Engine) பொறி கெட்டு வராது நின்றுவிட்டது. ஏடுகள் எழுதி முடிந்தும் அனுப்ப இயலாததற்கு யான் வருந்தியது உணர்ந்த பொது வேலைக் கண்காணி (Public works Department Overseer) ஒருவர் தன் ஈருருளி (Bicycle) வண்டி மீது சேலம் சென்று ஒரு காவலாள் (Peon) கையிற்கொடுத்து இருப்பு வண்டியில் (Railway Train) கரந்தைக்கு அனுப்புவதாக ஒப்பி ஏடுகளை வாங்கிச் சென்றார்.” - என்று நல்ல கலைச் சொல்லாக்கங்களைப் பயன்படுத்தித் தனித்தமிழில் மாணிக்கர் எழுதியுள்ளார். திருச்சிராப்பள்ளி ஆண்டார் தெருவில் மாமனார் வீட்டில் இருந்தார் மாணிக்கர். தமிழறிஞர்கள் சிலர் மாணிக்கரைக் கண்டு பேச விரும்பினர். காண நேரம் ஒதுக்கித் தருமாறு ந.மு.வே.நாட்டார் மூலம் கவிதைத் தூது அனுப்பினர். உடனே விடையாக, “உற்றிடு கடிகை உசாவலேன்? ஆறுபத்துமே அவரதேயன்றோ!” (ஆறுபத்து=அறுபது-நாழிகையும் தமிழ் அன்பர்களுக்கு உரியது) என்று கவிதை அனுப்பினார். ஒரு நாளின் 24 மணி நேரமும் தமிழுக்கே உரியது என்பது அவரது உள்ளம். சமற்கிருதம் என்றால் செய்யப்பட்ட மொழி என்று பொருள். அம்மொழியே மந்திர ஒலிச்சிறப்பு மிக்கது என்று கூறும் சங்கராச்சாரியார் முன்னிலையில் தமிழ் ஒலிச்சிறப்பு பற்றி மாணிக்கர் பேசினர். அதைப் பாராட்டித் தமிழ் மாணிக்கருக்குச் சமற்கிருத சங்கராச்சாரியார் எழுதிய கலப்பு நடை : “லோகத்தில் வழங்கப்படும் பல பாஷைகளில் எவ்வித உச்சரிப்பும் தோன்றும்படி எழுத எந்தப் பாஷை யின் லிபி அனுகூலமானதென்னும் விமர்சனத்தில் நீர் தக்க பரிஸ்ரமம் எடுத்துக் கொண்டு தமிழ் மொழியே அதற்கு அனுகூலமான தென்று தீர்மானித்து அதன் உபயோக முறை கூடினம் முதலான விவரங்களை இவ்விடம் நேரில் தெரி வித்ததின் மேல் அத்யந்தம் சந்தோஷம் அடைகின்றோம்.” காப்புத் தமிழ் மு. இராகவையங்கார் எழுதிய ‘தொல்காப்பியப் பொருள் ஆராய்ச்சி’ இலங்கை நடத்திய போட்டியில் முதற்பரிசு பெற்றது. தொல்காப்பியம் கூறும் தமிழர் அகத் திணையை திருமண வாழ்வு முறையை மு. இராகவர் வடவர் முறை யோடு ஒப்பிட்டிருந்தார். மேலும் சமயம், வேதம், புராணம், சமற்கிருத மேலாண்மை ஆகிய வற்றின் மேல் கொண்ட பற்றால் பார்ப்பனத் தமிழறிஞர்கள் செய்து வந்த தவற்றை அவரும் செய்திருந்தார். மு.இராகவரின் நூலில் ஐயங்கள் தெரிவித்து 31 மடல்கள் எழுதினார் மாணிக்கர். மு.இராகவர் விடைகளும் மாணிக்கரின் எதிர்வினாக்களும் “தமிழலகைத் தொடர்; முதற் சுவடி” என நூலாகவந்தது. ‘காப்பியக்குடி என்பது கவியாகிய சுக்கிரனது வமிசம்’ என்றும், கற்பு முறை என்பது சூரிய வருணத்தார் மூ வ ர் க் கு ம் இ ரு டி க ளால் ஏ ற் ப டு த் த ப் ப ட் ட து எ ன்று ம் மு.இராகவர் எழுதிய கருத்துகள் தவறு என எதிர்த்தார் மாணிக்கர். கம்பர் இராமனைக் குறை செய்தார் என்றும் வால்மீகியின் இராமாயணமே உயர்ந்தது என்றும் வடமொழி வல்லாண்மை பேசும் ஒருவர் ‘பெண்கல்வி’ இதழில் எழுதினார். நீதிக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கம்பர் பெருமையை நிலை நாட்டி, அந்நூலுக் கு மறுப்பாக ப் ப ல் லவ பு ர த் தி ல் (பல்லாவரத்தில்) மறைமலை அடிகள் தலைமையில் ‘கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்’ என்று சொற் பெருக்காற்றினார். அது நூலாகியது. ஓயாப்பணி ஆறடி உயரம், சிவந்த நிறம், முறுக்கிய மீசை, கூர்மையான தலைப்பாகை, கழுத்து வரை மூடிய குப்பாயம் (கோட்டு), குழாயாடை (பேண்ட்) எனத் தோற்றம் கொண்ட மாணிக்கர் தென்னாட்டு மேடைகளில் தமிழின் பெருமையைப் பற்றித் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மும்மொழிகளிலும் சொற் பெருக்காற்றி வந்தார். ஓய்வு பெற்றபின் முந்நீர்ப்பள்ளத்தில் இருந்த காலங்களில் தமிழ் அறிஞர்களை அழைத்து விருந்தளித் தார்; குழந்தைகளை அழைத்துத் திருக்குறள் சொல்லச் சொல்லிக் கனியும் காசும் பரிசளித்து வந்தார். தந்தையார் ஜமீன் வேங்கடசாமி நாயக்கர் இறந்தபின் சிவபுரம் வளநாடு (ஜமீன்) மாணிக்கரின் பொறுப்பில் இருந்தது. குருதியழுத்தம் ஏற்பட்ட போது நீலமலை (நீலகிரி) குன்றூர் (குன்னூர்) மலைப்பகுதியில் ஓய்வு கொண்டார். மயிலார்ப்பூரில் (மயிலாப்பூரில்) இவர் கல்லறை மேல் கவிதை : “மண்ணில் மறைந்தாலும் மாணிக்கம் தன்னொளி குன்றாது காற்றில் கலந்தாலும் கவின்மலர் தன்மணம் மாறாது.” பா.வே. மாணிக்க நாயக்கர் பா.வே. மாணிக்க நாயக்கர் இயற்பெயர் : மாணிக்கம் சிறப்புப்பெயர் : பாகல்பட்டி வே.மாணிக்க நாயக்கர் பெற்றோர் : முத்தம்மையார், ஜமீன் வேங்கடசாமி நாயக்கர் பிறந்தநாள் : 25-02-1871 மறைவு நாள் : 25-12-1931 பிறந்த ஊர் : சேலம் அருகில் உள்ள பாகல்பட்டி கல்வி : வீட்டுள் படிப்பு 12 அகவை வரை. சேலம் பள்ளி, சேலம் கல்லூரி: முன்னிலை (எஃப்.ஏ); சென்னை மாநிலப் பொறியியற் கல்லூரி:இளம் பொறியியல் (பி.இ.) 1912; இங்கிலாந்து பட்டயப்படிப்பு : செறிவூட்டப்பட்ட கற்காரை (Reinforced Concrete) பணி : அரசுப் பொறியாளர் (1896-1915) சென்னை பொறியியற் கல்லூரி : பேராசிரியர் (1915-1919), அரசுக் கண்காணிப்புப் பொறியாளர் (1919-1928) படைப்புகள் : தமிழ் எழுத்துகளின் நுண்மை விளக்கம் (1917), செந்தமிழ் ஒலியிலக்கணம் (1922), மெய்ஞ்ஞானத்தின் கொலுவி ருக்கையில் அஞ்ஞானத்தின் வழக்கீடு (25-05-1919, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் படிக்கப் பெற்றது. வெளியீடு - 1924), கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்,The Tamil Alphabet and its Mystic Aspect (1917), சென்னையில் நமது மிருகக்காட்சி சாலை (1922) 28. காந்திக்கு ஆட்டுப் பாலும் திருடனுக்குத் தமிழ்ப் பெட்டியும்! புளியமரமும், வேப்பமரமும், தேக்கு, பலா, மா மரங்களும் அடர்ந்த காட்டுவழிப் பாதை. கீழப் பழுவூரிலிருந்து ஏலாக் குறிச்சி, திருமானூர் நோக்கி நடந்து கொண்டே இருந்தான் அந்த இளைஞன். வரும் வழியில் கரும்பு ஆலை போட்டிருந் தவர்கள் வெல்லத்துக்குப் பாகு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். குவளை குவளையாகக் கருப்பஞ்சாறு தந்தார்கள். தந்தை சிவசிதம்பரம் பிள்ளை இரத்தின வணிகர். தந்தை இறந்ததால் அண்ணன் வேலாயுதம்தான் உடையார் பாளை யம் வளநாட்டி (ஜமீனி)லும் அரியிலூர் வளநாட்டி(ஜமீனி)லும் வேலை பார்த்துப் படிக்க வைத்தார். கும்பகோணம் மாநில (மாகாண)க் கல்லூரியில் முன்னிலை வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. திருச்சிராப் பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் எழுத்தர் வேலை அவனுக்குக் கிடைத்தது. சொந்த ஊர் கீழப்பழுவூருக்கு வந்திருந்த போது ஏற்பட்ட கலவரத்தால் வீடுமனை தோப்பு துரவு எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஊரை விட்டே அவன் ஓடினான். கொள்ளிடத்தில் பரிசலில் ஏறி அக்கரையில் இருந்த விளாங்குடிக்கு வந்தான். வரும் வழி எல்லாம் பலர் தயிர் கொடுத்தார்கள். விடுவீடாகக் கொண்டுபோய்த் தயிரும், மோரும், வெண்ணெயும் நெய்யும் விற்பவர்கள், வழிப்போக்கர்களுக்கு மட்டும் இலவயமாய்த் தரும் அறச்சிந்தனை எப்படி வந்தது? அப்பர் தமிழ் பாடிய திருவையாற்றுக் கோயிலில் சமற்கிருதம் சொல்லிக் கொண் டி ரு ந் தார் க ள் . த ஞ்சாவூ ரி ல் கீ ழ வீ தி யி ல் ஒ ரு வீ ட்டுத் திண்ணையில் உட்கார்ந்தான் சீனிவாசன். “உள்ளே வாப்பா! சாப்பிடுகிறாயா?” அழைத்தார் வீட்டுப் பெரியவர். அவன் கதையை க் கேட்டதும் தன் வீட்டில் வேலைக் கு ச் சேரச் சொன்னார். என்ன வேலை? ‘பங்கா’ (விசிறி) இழுக்கிற வேலை. கொஞ்ச நாளாயிற்று. ‘வக்கீல் ஐயா! நீங்கள் கச்சேரிக்குப் (கோர்ட்டுக்குப்) போனபின் நான் வேலையில்லாமல்தானே இருக்கிறேன். இந்த மரநிலைப் பெட்டி (அலமாரி)களில் இவ்வளவு புத்தகங்கள் இருக்கின்றன. நான் படிக்கட்டுமா?” “பெரிய எழுத்து காத்தவராயன் கதை என்று நினைத்தா யா? எல்லா ம் ஆங் கிலம். அதுவு ம் பொடி எழுத்து” “நீங்கள் படிக்கச் சொன்னால் படிக்கிறேன்.” “உம், எல்லாம் சட்டப்புத்தகம். முடிந்தால் படி.” சில மாதங்கள் உருண்டன. பல புத்தகங்களைப் படித்து முடித்து விட்டான். இன்னும் சில மரநிலைப் பெட்டி (அலமாரி) களில் உள்ள புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும். பெரியவர் வழக்கு ஒன்றின் சட்ட நுணுக்கம் பற்றித் தன் கீழ் வேலை பார்க்கும் இளம் வழக்குரைஞர்களிடம் கூறிக் கொண்டிருந்தார். அவர்கள் போனபின், பெரியவரிடம் சட்டப் புத்தகங்களை எடுத்துக் காட்டிச் சரியான சட்டவிதிகளைக் கூறினான் சீனிவாசன். “உம், மிகவும் சரியாகச் சொன்னாய். அறிவாளியாக இருக்கிறாயே! நீ வழக்காடப் படிக்க விரும்பினால் மேலே படிக்க வைக்கிறேன்” பெரியவர் சீனிவாசனைச் சட்டம் படிக்க வைத்தார். சட்டத்தில் பட்டம் பெற்ற பின் “நீ என்னுடன் இருந்தால் கூச்சத்தால் சரியாகப் பேசமாட்டாய். நாகப்பட்டினத்தில் தொழில் செய்” என்று அனுப்பினார். சீனிவாசன் நாகப்பட்டினத்திலிருந்து ஒருமுறை வழக் காடத் தஞ்சாவூர் வந்தான். வழக்கு மன்றத்தில்தான் தெரிந்தது, எதிரியின் வழக்கறிஞர் அவனைப் படிக்க வைத்த பெரியவர் என்று! வழக்கில் சீனிவாசன் வென்றான். பெரியவர் இனி வழக்காடுவதில்லை என்று முடிவெடுத்தார். சீனிவாசனைத் தஞ்சாவூரிலேயே வழக்காடச் சொல்லிவிட்டார். தஞ்சாவூரில் சீனிவாசன் பிள்ளை புகழ் பெற்ற வழக் குரைஞர் ஆனார். ஏறத்தாழ ஐந்தே முக்காலடி உயரம் இருப்பார். நல்ல செந்நிறம்; திடமான தோற்றம்; நெற்றி நிறைய திருநீறு; நீண்ட குப்பாயம் (கோட்டு); ஐங்கட்டு (பஞ்சாசர) வேட்டி; வெண்மையான தலைப்பாகை அணிந்திருப்பார் என்று பேராசிரியர் மு.அருணாசலம் கூறுவார். வழக்குரைஞர் தொழிலில் நல்ல வருவாய். அந்தக் காலத்திலேயே ஐந்தாறு இலட்சம் சொத்தும் மாதச் செலவு 5000 ரூபாயும்! மிகப்பெரிய வழக்குரைஞர்களும் செல்வர்களும் பொதுமக்களும் அவரை மதித்தனர். தஞ்சாவூர்த் தொடர்வண்டி நிலையத்திற்குப் பக்கத்தில் அவருடைய மிகப் பெரிய மாளிகை. வீட்டில் மாம்பழ அறை மல்லிகை அறை என்று தனித்தனி அறைகளில் பழங்களும் பூக்களும் கொட்டிக்கிடக்கும். இரண்டு சமையல் ஆட்கள். ஐந்தாறு ஆஸ்திரேலியக் குதிரைகள். குதிரைக்கு வெங்காயம் கலந்த அரிசிச்சோற்றுணவு; தொப்பி, குதிரைத்தறி (இலாயம்); வேலையாட்கள்; மைசூர் மன்னரிடம் வாங்கிய இரண்டு குதிரை பூட்டிய ‘பீட்டன்’ வண்டியின் அழகைப் பார்த்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் (ஆங்கிலேயர்) வியப்பாராம். ஆளுநருக்கு மட்டுமே நான்கு குதிரை பூட்டக்கூடிய வண்டி என்பதால், ஒப்புதல் (அனுமதி) பெற்று நான்கு குதிரை இழுக்கும் வண்டி (சாரட்டு)யும் வைத்திருந்தார். அவர் வீட்டுக்குத் தெற்கே புது ஆற்றங்கரையில் மிகப் பெரிய பூந்தோட்டம் இருந்தது. பூக்காரத்தெருவில் தன் நிலத்தில் முருகன் கோயிலைக் கட்டினார். பக்கத்தில் பூச்சந்தை அமைத்துப் பொதுமக்களுக்கு வழங்கினார். அன்னிபெசண்டு அம்மையார் தஞ்சை வருவதாக இருந்த 18 நாளில் ‘பெசண்டு இல்லம்’ (லாட்ஜ்) என்று கட்டடம் கட்டி, அவரைக் கொண்டே திறப்பு விழா நடத்தினார். அவர் வீட்டில் காந்தியடிகள், அன்னிபெசண்டு, ஜி.ஏ.நடேசன், திரு.வி.க., வி.எசு.சீனிவாச சாத்திரி முதலியோர் தஞ்சை வந்தபோது தங்கியுள்ளனர். காந்தியடிகள் குடிப்பதற்கு ஆட்டுப் பால் வேண்டும் என்பதற் காகச் சீனிவாசன் பிள்ளை இரண்டு ஆடுகள் வாங்கினார். வள்ளலார் கண்ட பொது நெறியைப் (சமரச சன்மார்க்கம்) போன்ற ‘பிரம்மஞானசபை’ நெறியில் சாதி, மதம், பூசை, சடங்கு முதலியவற்றை நீக்கிய வாழ்க்கை முறையைப் பின்பற்றினார். சீனிவாசன் பிள்ளை வீட்டில் அனைத்து மதத்தினரையும் சாதியினரையும் சந்தித்த காந்தியடிகள் மன்னார்குடி சென்றார். மன்னா ர்குடி மடத்தின் தலைவர் ( ஜீய ர் ) கா ந்தியடிகள் பார்ப்பனர் இல்லை, வணிகர் (வைசியர்) என்பதால், மாட்டுத் தொழுவத்தில் உட்காரவைத்துத், தொலைவிலிருந்து பேசி, தீண்டாமை ஒழிப்பு, குழந்தைத் திருமண ஒழிப்பு, கைம் பெண்மணம் ஆகியவற்றைக் காந்தியடிகள் ஆதரிப்பதைக் கடுமையாக எதிர்த்து இழிவாகப் பேசித்திட்டி அனுப்பினார். காந்தி அண்ணலோ வணங்கி விடைபெற்றார். தஞ்சாவூர் நகர்அவைத் தலைவராக மூன்று முறை விளங்கியவர் சீனிவாசன்பிள்ளை. கூட்டுறவு வங்கி உருவாக்கி அத்துறையின் உயர் அதிகாரி சர்.பிரடரிக் நிக்கல்சனைக் கொண்டு திறந்தார். மேலும் இரு வங்கிகள் (தஞ்சாவூர் பர்மனண்ட் பண்டு, மர்ச்சண்ட்சு பாங்கு) தொடங்கினார். பிரம்ம ஞான சபை (தியாசபிகல் சொசைட்டி) தஞ்சையின் கிளையை 1883-இல் அமைத்தார். இதழாளர் சங்கம் தொடங்கச் செய்தார். தஞ்சை மாவட்ட நூலகக் குழு, கல்விக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து தொண்டு புரிந்தார். தஞ்சை சரசுவதி மகால் நூலகம் 1918-இல் சென்னைக்கு மாற்றப்பட இருந்ததைத் தடுத்துத் தஞ்சையிலேயே இருக்கச் செய்தார். தஞ்சாவூர் வட்டாரத்தின் மிகப்பெரிய நிலக்கிழார்களும் செல்வர்களும் வழக்காடச் சீனிவாசன் பிள்ளையைத் தேடி வந்தனர். தஞ்சை மராட்டிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இரமாத்தம் பாய் வழக்கை வெற்றி பெறச் செய்தார். ஆனால் அந்தப் பெண் மணியின் கடைக்கண் பார்வையில் தோற்றார். பெரியவர் தம்மைப் படிக்க வைத்து வழக்குரைஞராக உருவாக்கியது போலச் சம்பந்தன் என்ற சமையலாள் படிப்பில் ஆர்வம் உடையவராக இருப்பதைக் கண்டு அவரைத் தமிழிலக்கியப் பட்டம் (வித்துவான்) பெறச் செய்து தமிழாசிரியர் ஆக்கினார். தம்மிடம் தோற்றதால் அந்தப் பெரியவர் வழக்குத் தொழிலைத் துறந்ததுபோல், தாம் புதுக்கோட்டை இளம் வழக்குரைஞரிடம் தோற்றதும், அன்றே தொழிலை விட்டார். சட்டப்புத்தகங்களை மட்டுமல்லாமல் தமிழிலக்கியங் களையும், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி முதலியனவும் படித்தவர் சீனிவாசன் பிள்ளை. நன்னூலும் பரிமேலழகர் உரையுடன் திருக்குறளும் அவருக்கு மனப்பாடம். நாவலர் சோமசுந்தர பாரதியார், திரு.வி.க., உ.வே.சா., சரவணபவானந்தம் பிள்ளை, மு.இராகவ அய்யங்கார் முதலியோர் அவரது தமிழுலக நண்பர்கள். கும்பகோணம் கல்லூரியில் தமக்குத் தமிழின் சுவையை அறியச் செய்த தமிழ்ப் பேராசிரியர் தியாகராசச் செட்டியாரைத் தெய்வமாக மதித்தார். அவர் பெயரைக் கூடச் சொல்ல மாட்டார். ‘ஐயா’ என்றுதான் கூறுவார். தாம் எழுதிய ‘தமிழ் வரலாறு’ என்ற நூலைத் தம் ஆசிரியருக்குக் காணிக்கை ஆக்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமைகொண்ட சீனிவாசன் பிள்ளை, ‘தமிழ் வரலாறு’ எழுத நூற்குறிப்புகளைத் திரட்டிப் பெட்டிகளில் போட்டு வைத்திருந்தார். செல்வச் செழிப்பு மிக்க அவர் வீட்டில் திருட வந்த திருடன் கனம் நிறைந்த இரண்டு பெட்டிகளைத் தூக்கிச் சென்று விட்டான். இரண்டு பெட்டி நிறைய தங்க நகைகள் திருட்டுப் போயிருந்தாலும் இழப்பில்லை; அவ்வளவு செல்வம் அவரிடம் இருந்தது. தொகுத்த தமிழ்க்குறிப்புகள் என்ற செல்வம் திருட்டுப் போன தால் தமிழிலக்கிய வரலாற்றின் மீதி இரண்டு பகுதிகளை அவர் வெளியிடவில்லை. சூரிய நாராயண சாத்திரியார் (பரிதிமாற் கலைஞர்) தமிழ்மொழி வரலாற்றையும் (1903), மு.சி.பூரணலிங்கர் ஆங்கிலத் தில் தமிழ் இலக்கிய வரலாற்றையும் (1904), எழுதியிருந்தார்கள். 1922-இல் தஞ்சை சீனிவாசன் பிள்ளை ‘தமிழ் வரலாறு’ என்ற நூலை இரண்டு பாகங்களாக வெளியிட்டார். ‘தமிழ் வரலாறு - முற்பாகம்’ தமிழ்மொழி பற்றியும், ‘தமிழ் வரலாறு - பிற்பாகம் முற்பகுதி’ சங்க காலம் முதல் சமய எழுச்சிக்காலம் வரை உள்ள தமிழ் இலக்கிய வரலாற்றையும் தருகின்றன. வழக்குரைஞர் என்பதால் வாதிடும் முறையிலான நடையிலும் கல்வெட்டு, செப்பேடு முதலிய ஆதாரங்களுடனும் எழுதியுள்ளார். தமிழி லக்கிய வரலாற்று நூல்களில் முதன்மையான நூலாகவும் தமிழில் வெளிவந்த முதல் நூலாகவும் ‘தமிழ் வரலாறு’ விளங்கு கின்றது. தஞ்சை சீனிவாசபிள்ளை தஞ்சை சீனிவாசபிள்ளை இயற்பெயர் : சீனிவாசன் சிறப்புப்பெயர்கள் : தஞ்சை கே.எஸ்.சீனிவாசபிள்ளை, இராவ் சாகிபு, இராவ் பகதூர் தந்தை : சிவசிதம்பரம் பிள்ளை பிறப்பு : 1846 மறைவு : 1928 ஊர் : அரியிலூர் அருகில் கீழப் பழுவூர் கல்வி : கீழப்பழுவூர் : பள்ளிக்கல்வி; கும்பகோணம் : (மாநிலக்) மாகாணக் கல்லூரி : முன்னிலை (எஃப். ஏ), சட்டக்கல்வி (பிளீடர்) பணி : திருச்சிராப்பள்ளி :மாவட்ட ஆட்சியர் அலுவலக எழுத்தர், நாகைப்பட்டினம் : வழக்குரைஞர், தஞ்சாவூர்: வழக்குரைஞர், தஞ்சை நகரவைத் தலைவர். படைப்புகள் : தமிழ் வரலாறு - முற்பாகம் தமிழ் வரலாறு - பிற்பாகம்: முற்பகுதி 29. கிறித்துவக் கம்பர்! திருநெல்வேலிக்கு அருகில் கரை இருப்பு என்ற அழகான சிற்றூர். தெருக்களின் இருபக்கமும் ஓட்டு வீடுகள் வரிசையாகச் சீராக நேராக இருந்தன. எல்லா வீடுகளின் ஓட்டு முகமும் முன் இறங்கும் இறவாணமும் நூல் பிடித்தாற்போல ஒரே உயரத்தி லும் நேராகவும் இருந்தன. எல்லா வீட்டுத் திண்ணைகளும் ஒரே உயரம். திண்ணைச் சுவர்களில் வெள்ளையும் காவியும் பட்டை பட்டையாய்; வாயிலில் கோலம். குழந்தையைத் தூளியில் ஆட்டித் தூங்கப்பண்ணிக் கொண்டிருந்தாள் தாய். வீட்டின் உள்ளே தூளியை ஆட்டிக் கொண்டே தாலாட்டாக அவள் பாடிய “மாணிக்கங்கட்டி...” என்ற ஆழ்வார் பாடல் தெருவில் நடந்து செல்வோர் காதில் தமிழ்த் தேனாய்ப் பாய்ந்தது. திண்ணையில் அரசு அதிகாரிகள் சிலரும் ஒரு நிலக் கிழாரும் உட்கார்ந்திருந்தனர். தொழுவத்தில் இருந்த பசுக் களுக்கு அகத்திக்கீரையைக் கொடுத்து விட்டுச் சங்கர நாராயணப் பிள்ளை பூசை அறைக்குள் நுழைந்தார். மகன் கிருட்டிணன் இராமாயண ஓலைச் சுவடியிலிருந்து பாடல் களைப் படித்தான்; தந்தை விளக்கம் கூறினார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கம்பர், ஆழ்வார் பாடல்களும் விளக்கமு மாகத் தமிழில்தான் வழிபாடு. தனக்கும் மற்றவர்களுக்கும் புரியாத சமற்கிருதத்தில் கத்துவதே பூசை என்பது இன்று சி ல ரின் இழிபாடு . பூசையின் போது படித்துப் படித்துக் கிருட்டிணனுக்குக் கம்பராமாயணம் முழுதும் மனப்பாடம். பிலவண சோசியரிடம் சமற்கிருதமும் படித்து வந்தான். தமிழ்க்கல்வி நாட்டார்பட்டி பள்ளியில் கிருட்டிணன் படித்தான். அந்தக் காலத்தில் பள்ளிக் கூடங்களில் தமிழ் இலக்கியங்களும் தமிழ் எண்களும்தான் கற்பித்தார்கள். ஆங்கிலம் கிடையாது. சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை போன்ற பெரிய நகரங் களில் ஆங்கி லேயர்கள் இருந்ததால் ஆங்கிலமும், அரபிய எண்களும் (1,2,3...) கற்றுத் தந்தார்கள். பதினான்கு அகவையான கிருட்டிணனுக்கு ஒன்பது அகவையான முத்தம்மாளை மணம் செய்து வைத்தனர். பதினாறு அகவையில் தந்தை மறைந்ததால் குடு ம்ப ப் பெ hறுப் பு கிருட்டிணன் தலையில் விழுந்தது. பாளையங்கோட்டையில் குடியேறினார்கள். பக்கத்து வீட்டில் இருந்த வெங்கு முதலியார் நிறைய தமிழ் இலக்கிய நூல்கள் வைத்திருந்தார். கிருட்டிணனும் தம்பி முத்தையாவும் அவரிடம் கேட்டு வாங்கிப் படிக்கத் தொடங் கினர். மேலும் திருப்பாற்கடல் நாதக் கவிராயர் என்ற பெரும் புலவரிடம் முறைப்படித் தமிழ் கற்கலாயினர். இக்கவிராயர் வீட்டிலிருந்துதான் பத்துப்பாட்டுச் சுவடிகள் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதருக்குக் கிடைத்தன. எனவே சாமிநாதர் இந் நூலை அச்சேற்றிடும் முன்னரே சங்க இலக்கியங்கள் படிக்கும் வாய்ப்பு கிருட்டிணனுக்கும் தம்பி முத்தை யாவுக்கும் கிடைத்திருக்கிறது. மாணவரிடம் கற்றது சைவ, வைணவ இலக்கியங்களிலும் குறிப்பாகக் கம்ப ராமாயணத்திலும் தேர்ந்த கிருட்டிணன் ஜி.யூ.போப் உருவாக்கி யிருந்த சாயர்புரம் கிறித்துவப் பள்ளியில் 1853-இல் கால்டு வெல்லால் தேர்வு செய்யப் பெற்றுத் தமிழ் ஆசிரியர் ஆனார். தமிழ் கற்க விரும்பிய வெளிநாட்டாருக்கும் தமிழ் கற்பித்தார். கிருட்டிணரிடம் சாயர்புரம் பள்ளியின் ஆசிரியர் அக்சுடபில் தமிழ் கற்றார். கிருட்டிணரிடம் தமிழ் மாணவராகக் கற்றுக் கொண்ட கிறித்துவப் பள்ளியின் ஆசிரியர் அக்சுடபில், உண்மையில் கிறித்துவின் பெருமைகளைக் கிருட்டிணருக்குக் கற்பித்திருந்தார். இதனால் கிறித்துவ மதத்தில் கிருட்டிணர் ஈடுபாடு கொண்டார். பாளையங்கோட்டையில் சிக்கல் வரலாம் என்பதால், சென்னை சென்று மயிலை சாந்தோம் கிறித்துக் கோயிலில் 18-04-1858-இல் மதம் மாறினார். ஹென்றி ஆல்ஃபிரட் கிருட்டிணப் பிள்ளை என்று பெயர் மாற்றிக் கொண்டார். மதம் மாறியதால் தாயும் மனைவியும் அவரை விட்டுப் பிரிந்து போய் ஓராண்டு கழித்துத்தான் வந்து சேர்ந்தனர். மாறியது மதமா? மதம்தான் மாறினாரே தவிர மனம் மாறவில்லை. தந்தை எவ்வாறு ஒழுக்கத்தையும் பூசையையும் கடுமையாகப் பின் பற்றினாலும் அன்பும் அருளும் இரக்கமும் கொண்டிருந் தாரோ, அதேபோல் கிருட்டிணரும் வாழ்ந்தார். பெயர் ‘ஹென்றி ஆல்ஃபிரட்’ என்று முன்னொட்டுப் பெற்றதைப் போல் அவரது கடவுள் திருமால் என்பது கிறித்து ஆயிற்று. தருமமூர்த்தி, பரமன், பெருமாள், சருவலோகச் சரணியன், சச்சிதானந்த வேந்தன், வேதம், வேதவிளக்கு, விளக்கின் விழுத்தகை சோதி, விமலபோதம், போதம் கடந்த மெய்ப் பொருள் என்றெல்லாம் கடவுளை அவர் கூறும் பெயர்கள் கிறித்துவுக்கும் பொருந்தும் இராமருக்கும் பொருந்தும், பிற கடவுளர்க்கும் பொருந்தும். காப்பியப் பற்று ஆங்கில இலக்கியப் புலவர் ஜான் பன்யன் (1628-1688) இயற்றிய ‘திருப் பயணியின் முன்னேற்றம்’ (பில்கிரீம்ஸ் புராகிரஸ்) என்ற காப்பியம் ஆங்கிலத்தில் 160-க்கும் மேற்பட்ட பதிப்புகளும் உலக மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பு களும் கொண்டது. கம்பராமாயணத்தில் ஆழ்ந்த பற்று கொண்ட கிருட்டிணர், ஜான் பனியனின் ஆங்கிலக் காப்பியத்தில் மூழ்கி இயேசுபெருமானின் அருள் தன்மையைப் பரவுகிறார். அளவற்ற அருளாளர் ஆகிய இயேசுவின் காப்புத் தன்மையைக் கொண்டு அவரை ‘இரட்சணியர்’ என்ற பெயரால் குறிக்கிறார். தம் பா நூல் க ளை இர ட் சணிய ச ரி த ம் , இர ட்சணிய ந வ நீ த ம் , இர ட்சணிய மனோகரம் , இர ட்சணிய யாத் தி ரி க ம் என எழுதினார். “இறைவன் என் இதயத்தைத் திறந்தார்; நான் அவரைப் புகழ என் வாயைத் திறந்தேன்” என்று கிருட்டிணர் கூறுவார். கம்பரின் சந்தப்பாடல் நயத்தையும் உவமை உருவக அமைப்பையும் அறங்கூறும் தன்மையையும் கிருட்டிணர் பின் பற்றினார். கம்பர் திருக்குறளைப் போற்றிப் பயன்படுத்தியது போல், கிருட்டிணரும் தம் காப்பியங்களில் திருக்குறள் அடி களையும் கருத்துகளையும் எடுத்தாண்டார். ‘இயற்றமிழ் முது மொழி’ என்றும் ‘மெய்யாய அறம்விளக்கும் வித்தக நூல்’ என்றும் திருக்குறளைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். மூவர் முத்தமிழ் பத்துக் கம்பன் என்று பாராட்டப் பெற்ற பெரும் புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கிருட்டிணரை மயிலாடுதுறை வேதநாயகர் அறிமுகம் செய்து வைத்தபோது “இவர் இரட்சணிய நவநீதம் எழுதியவர்” என்றார். ‘கைவல்ய நவநீதம்’ என்ற சித்தர் இலக்கியம் போன்று ‘இரட்சணிய நவநீதம்’ எழுதி அப்போது புகழ் பெற்றிருந்தார் கிருட்டிணர். மயிலாடுதுறை வேதநாயகர் கிறித்துவர் ஆயினும் வள்ளலார் வழியில் சமய ஒருமைப்பாடு பேணியவர். மீனாட்சி சுந்தரரோ சைவத்தையும் பெரிய புராணத்தையும் மட்டுமே போற்றுபவர். அத்தகைய பெரும்புலவர் கிறித்துவக் கம்பரின் தமிழ் ஆற்றலைக் கேள்வியுற்றிருந்ததால் கம்பராமாயணத்தையும் ஆழ்வார் பாடல்களையும் கற்றுத் துறைபோகிய வைணவரும் கிறித்து வராக மாறியவரும் ஆகிய கிருட்டிணரைக் கட்டித் தழுவிக் கொண்டார். பெரும்புலவர் மீனாட்சி சுந்தரரும் மயிலை வேதநாயகரும் கிருட்டிணரும் ஆகிய மூவரும் மயிலாடு துறையில் சந்தித்த நிகழ்வு முத்தமிழின் சந்திப்பாகும். அருள் தமிழ் ஆழ்வார் நாலாயிரம், மூவர் தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களின் பக்திப் பெருக்கும், கம்பரின் பா நயமும் தாயுமான வரின் உருக்கமும் ஒரு சேரப் பாடியவர் கிருட்டிணர். அவரது இரட்சணிய யாத்திரிகம் ஓர் கிறித்துவத் தேவாரம் என்று புகழப்பெறும். உலகத்துக்கே சிறந்த அறத்தை வழங்கிய வள்ளுவர் கூறும் அருளுடைமை, உலகம் முழுவதையும் ஒன்றிணைக்க வல்லது. கிறித்துக் கம்பரின் தமிழாற்றல் அருளின் பொருளைப்பாடுகிறது: “தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப் பன்னரிய படும்பாடு படும்போதும் பரிந்தெந்தாய்! இன்னதென அறிகில்லார் தாம்செய்வ திவர்பிழையை மன்னியும்என் றெழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல்.” எ.ஆ. கிருட்டிணப்பிள்ளை எ.ஆ. கிருட்டிணப்பிள்ளை இயற்பெயர் : கிருட்டிணன் சிறப்புப் பெயர் : எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை, ஹென்றி ஆல்ஃபிரட் கிருட்டிணப்பிள்ளை, கிறித்துவக் கம்பர், தமிழ் பன்யன் (க்ஷயலேயn) பெற்றோர் : தெய்வநாயகி அம்மையார், சங்கரநாராயணப் பிள்ளை. பிறப்பு : 23-04-1827 மறைவு : 03-02-1900 ஊர் : நெல்லை மாவட்டம், கரைஇருப்பு கல்வி : தந்தையிடம் : வைணவத்தமிழ். பிலவண சோசியரிடம் : சமற்கிருதம். நாடார்ப்பட்டி: பள்ளிக்கல்வி. பாளையங்கோட்டை; வெங்கு முதலியார் வீட்டு நூலகம், திருப்பாற்கடல் நாதக் கவிராயரிடம்: தமிழ்க்கல்வி. மணம் : முத்தம்மாள் (1836) பணி : சாயர்புரம் கிறித்துவ மறைப்பள்ளி தமிழாசிரியர் (1853-58); சென்னை :தினவர்த்தமானி’ இதழ் :உதவி ஆசிரியர், மாநிலக் கல்லூரிப் பள்ளி :தமிழ் ஆசிரியர், பாளையங் கோட்டை :கிறித்துவமறை ப ர ப்பு க் க ழக ம் (சி . எ ம் .எஸ்) பள்ளி, தமிழாசிரியர் (1864-75); கல்லூரி; தமிழ்ப் பேராசிரியர் (1876-80), திருவனந்தபுரம் :மகாராஜா கல்லூரி: தமிழ்ப் பேராசிரியர் (1880-90) குலசேகரப் பட்டினம் : நண்பர் த னு ஷ்கோ டி இராசு வி ன் உ ப் ப ள மேலாளர் (1891); கிறித்துவ இலக்கியச் சங்கம்; தலைமைப் பதிப்பாசிரியர் (1891-1900). படைப்புகள் : இரட்சணிய சரிதம் (1860), இரட்சணியநவநீதம் (1868), போற்றித்திரு அகவல்(1884), இரட்சணிய யாத்திரிகம்(பாளையங்கோட்டை ‘நற்போதகம்’ மாத இதழில் : ஏப்ரல் 1878 முதல் நவம்பர் 1892வரை தொடராக வந்தது. நூல் 1894), இரட்சணிய தேவாரம், இரட்சணியக் குறள், இரட்சணிய பாலபோதம், தொகுப்பு : காவிய தரும சங்கிரகம் (1893), கட்டுரை : இரட்சணிய சமய நிருணயம் (‘நற்போதகம்’ மாத இதழில் (1893-1896) தொடராக வந்தது). 30. உங்கள் ஊரில் எத்தனை காக்கை? குற்றாலம் அருவி தமிழ் அருவியாய்க் குளிர் நீரைக் கொட்டி முழக்கிக் கொண்டிருந்தது. அருவி நீர் சிற்றாறாகி (சித்தாறு) வெள்ளம் கால்கொண்டு ஓடியது. அங்குத் தோன்றிய அழகிய சிற்றூர்தான் வெள்ளக்கால். ஆழ்வார் குறிச்சியில் பிறந்து வெள்ளக்காலில் 5 அகவை வரை வளர்ந்து, பின் நெல்லையில் மேடை தளவாய் குமாரசாமி முதலியார் அரண் மனையில் அத்தையிடம் வளர்ந்தான் சுப்பிரமணியன். கிறித்துவப் பள்ளியில் தமிழும், ஆங்கிலமும் படித்தான். அரண்மனைக்கு வரும் புலவர்களின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்ததுடன், கவிராச நெல்லையப்பப் பிள்ளையிடம் தமிழ் இலக்கணம் கற்றான். அவர் வீட்டுக்குப் பின்புறம் இருந்த சவுக்கத்தில் (இளைப்பாறும் இடம்) வள்ளல் இராசவல்லிபுரம் முத்துசாமிப் பிள்ளை வந்து தங்குவார். அவரிடம் பாடல்கள் பாடிச் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் முதலிய பெரும் புலவர்கள் பரிசில் பெற்றுச் செல்வார்கள். சிறந்த இலக்கியச் சுவைஞனாக வளர்ந்து, நெல்லை இந்துக்கல்லூரியில் முன்னிலை வகுப்பு படித்துவிட்டு வெள்ளக்காலுக்கு வந்து சிற்றூர் வேளாண் வாழ்க்கை புகுந்தான் சுப்பிரமணியன். ஆங்கிலத் தடை நெல்லை இந்துக் கல்லூரியில் உடன்படித்த டி.என்.சிவஞானம் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில்பட்டப்படிப்பில் சேர்ந்து படித்து வந்த போது, (பிற்காலத்தில் மாநில அமைச்சராக விளங்கியவர்) பலமுறை மடல் எழுதி வற்புறுத்தி அழைத்த தால் சுப்பிரமணியனும் சென்னை வந்து கிறித்துவக் கல்லூரி யில் சேர்ந்தான். தமிழ் வழியி ல் ( மீடி ய ம் ) ப டி த் தி ரு ந் த சுப்பிரமணியன் ஆங்கிலம் கண்டு மிரண்டான். பிற மாணவர் களளுக்குத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தனி வகுப்பு (டியூசன்) நடத்திக் கற்றுக் கொடுத்தான். தமிழ் இலக்கியத்தில் தோய்ந்த அவனை ஆங்கில இலக்கியம் ஈர்த்தது. ஆனால் ஆங்கில வழிப் பாடங்கள் திகைக்க வைத்ததால் பட்டப்படிப்பில் தோல்வி யுற்றான். ஆயினும் மில்லர் முதலிய வெளிநாட்டுக் கிறித்துவ அறிஞர்களிடமிருந்து `ஐந்நெறி` அறி ந் து தன் வாழ்நாளில் உறுதியாகப் பின்பற்றினான். அ ந் நெறி க ள் பு ல ன ட க் க ம் , ம து அருந்தாமை, புலால் உண்ணாமை, தமிழா ற் றலில் முன்னிற் பது, ஆங் கில மொழி ஆற்றலில் முன்னிற்பது. உடைந்தது தடை ஊர் திரும்பி உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்த சுப்பிரமணியன், சென்னைச் சைதையில் வேளாண்மைக் கல்லூரி தொடங்கப் பட்டதை அறிந்து, உடனே ஆர்வத்துடன் சென்று சேர்ந்து படித்துப் பட்டம் பெற்றார். கால்நடை மருத்துவத் துறையில் வேலையும் கிடைத்தது. தமிழ், ஆங்கிலம், வேளாண்மை ஆகியவற்றோடு கால்நடை மருத்துவத்துறை பற்றியும் தொடர்ந்து படித்துத் தகுதியாக்கிக் கொண்டார். பம்பாய் (மும்பை) சென்று கால்நடை மருத்துவத் துறை பற்றிய மேற்படிப்புப் படித்து முடித்தார். ஆங்கிலத் தடையை உடைத்து ஆங்கிலத்தில் புலமை பெற்றுக் கால்நடை மருத்துவ நூல்களை மொழி பெயர்த்ததோடு ஆங்கிலத்திலிருந்து மில்டன், மெர்விக் ஆகியோர் இலக்கியங்களைச் சுவர்க்க நீக்கம், கோம்பி விருத்தம் என மொழி பெயர்த்துப் புகழ் பெற்றார். தமிழுக்குத் தடை ஆங்கிலத்தை வரவேற்றுப் படித்த தமிழர் சிலர், தமிழுக் குத் தடையாக விளங்கினர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழில் பொறியியலும் மருத்துவமும் கற்பிக்கலாம் என்ற போது 1997-98இல் தமிழில் நூல்கள் இல்லை, கலைச் சொற்கள் இல்லை என்று தடுத்தார்கள் அல்லவா? அதேபோல் முன்பும் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கத் தடையாக இருந்தனர். ஆங் கி ல அர சு ஓ ர் உசாவல் குழு அமை த் தது. தமிழ் ப் பல்கலைக்கழகம் அமைத்து அறிவியல் பாடங்களையும் தமிழில் நடத்த முடியும் என்று தாமாகவே முன்வந்து வெள்ளக்கால் ப.சுப்பிரமணியனார் (வெ.ப.சு) கூறினார். இலங்கையில் மருத்துவத்தைத் தமிழில் கற்றுத் தந்ததுடன் பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த மருத்துவர் பிஷர்கிரீனின் நூல்களை அக்குழுவின் முன் வைத்தார். சென்னை மாநிலக் கல்விச் சங்கம் 1934-இல் அமைத்த கலைச் சொல்லாக்கக் குழுவில் இடம் பெற்று வெ.ப.சு. வேளாண்மைச் சொற்களைப் படைத்துக் கொடுத்தார். தாம் பணியாற்றிய கால்நடைத்துறையின் பாடநூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். அந்நூல்களை ஆங்கிலேய அரசு வெளி யிட்டது. அவை பாடநூல்களாக மாணவர்களுக்குப் பயன் பட்டன. (அந்தோ! தமிழினமே! பிஷர்கிரீன் மொழி பெயர்த்த மருத்துவ நூல்களும் வெ.ப.சு.மொழி பெயர்த்த கால்நடை மருத்துவ நூல்களும் இன்றைய மாணவர்களுக்குத் தேவை யில்லாமல்/தெரியாமல் போயினவே!) ஓடி ஒளி அம்மை, கக்கல், கழிச்சல் (வாந்தி, பேதி) நோய்களில் ஏழை எளிய மக்கள் எண்ணற்றோர் இறந்தனர். கடவுள்தான் காரணம் (சாமி குத்தம்) என்று கூறிக்கொண்டு வழக்கமாகக் கைக் கொள்ளும் சித்த மருந்துகளையும் கொடுக்காமல் நோய்வாய்ப் பட்டவர்களைச் சாகவிட்டனர். அதைத் தடுக்க ஆங்கிலேய அரசு அம்மைத் தடுப்புஊசி போடச் செய்தது. “ஏய்! ஊசி குத்துறவன் வர்ரான் டோய்!” என்று பெரியவர்களும் ஓடி ஒளிந்தனர். ஆங்கிலேய அரசின் விளம்பரத்தாலும் பரப்புரை யாலும் இந்நிலை மாறத் தொடங்கியது. வெ.ப.சு. `அம்மை குத்துதலும் அதன் உபயோகங்களும்’ என்று ஒரு சிறு புத்தகம் எழுதி வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் கால்நடை மருத்துவப் பணி தொடர்பாகச் சென்ற போது சிற்றூர்ப்புற மக்களுக்கு அறிவுரை வழங்கினார். தஞ்சைப் பகுதியில் 1906-இல் கால்நடைகளுக் குப் பரவி வந் த கடுமையான நோயைத் தடுப்பதில் வெ.ப.சு. ஆற்றிய பணியை அதிகாரிகளாக இருந்த ஆங்கிலேயர் பாராட்டினர். அகலிகையின் கற்பு: நெல்லையப்பர் திருக்கோயிலில் 1890-இல் ‘நெல்லைச் சிலேடை வெண்பா’ அரங்கேற்றிய வெ.ப.சு. அதனைத் தாமே எழுதிய உரையுடன் நூலாக வெளியிட்டார். இந்நூல் அவரது தமிழ்ப் புலமையை உலகுக்கு உணர்த்தியது. வெ.ப.சு. இளம் அகவையில் அரண்மனை வேலையாள் முத்து சாமிப் பிள்ளை என்ற குருடரிடம் புராணக் கதை கேட்டு வளர்ந்தவர். மேலும் அரண்மனையில் வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் பாரத அம்மானை அல்லி அரசாணிமாலை, பவளக்கொடி, வைகுண்ட அம்மானை, ஏணியேற்றம் முதலிய நூல்கள் படிக்கப்படும் போது, பெரியவர்களுடன் முன் வரிசையில் அமர்ந்து தாமும் கேட்பார். புராணக் கதை மாந்தர்களைப் பற்றிய கருத்துப் போரை தொடங்கிவைக்கும் வகையில் அகலிகையின் பெண் உள்ளத்தை யும் தன்னுணர்வுகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் சீர்தூக்கும் வகையில் முதன் முதலாகத் தனி இலக்கியமாக ‘அகலிகை வெண்பா’ இயற்றினார். அகலிகை கற்புடையவளா? என்ற கருத்துப் போர் எழுந்தவுடன், திருத்தியும் சேர்த்தும் சிறிது மாற்றியும் இரண்டு பதிப்புகள் வெ.ப.சு. வெளியிட்டார். அகலிகை பற்றி வெவ்வேறு கோணத்தில் கட்டுரைகளும் கவிதைகளும் புனை கதைகளும் நாடங்களும் இன்று வரை வெளிவர வெ.ப.சு. தூண்டுதல் ஆவார். தமிழ் நட்பு கால்நடை மருத்துவத்துறையில் பணியாற்றிய வெ.ப.சு. பணி தொடர்பாகச் செல்லும் ஊர்களில் கிடைக்கும் தமிழ் இலக்கிய நூல்களை எல்லாம் தொகுத்தார். தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர், பூண்டி அரங்கநாத முதலியார், மு.ரா. க ந் தசாமிக் கவிரா ய ர் , இரா.பி. சேதுப்பிள்ளை , டி.கே.சிதம்பரனார், இரா.இராகவையங்கார், அ.மாதவையா, ஊற்றுமலைச் சமீன்தார் இருதாலய மருதப்பக் கவுண்டர் முதலிய தமிழறிஞர்கள் தென்காசிப் பகுதிக்கு வரும் போதெல் லாம் வெள்ளக்காலில் வெ.ப.சு.மாளிகையில் தங்கித் தமிழ் உறவாடி மகிழ்வர். ஒரு முறை வெள்ளக்கால் வந்திருந்த தமிழ்த் தாத்தா கேட்டார் “நீங்கள் தான் கால்நடை மருத்துவத் துறையின் கண் காணிப்பாளர் ஆயிற்றே! உங்கள் ஊரில் எத்தனை காக்கைகள் உள்ளன?” “ஒரு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரத்து எழுநூற்று நாற்பத்து இரண்டு.” “உம்! எண்ணிப் பார்த்தால் சரியாக இருக்குமா?” “ சரியாக இருக்கும்.” “ஒரு வேளை குறைந்தால்...? “ வெளியூருக்கு விருந்துக்குப் போயிருக்கும்..” “கூடுதலாக இருந்தால்...? “வெளியூர்க் காக்கைகள் இங்கு விருந்துக்கு வந்திருக்கும்!” வெ.ப.சு. கூறிய விடையால் தமிழ்த்தாத்தா வாய் மூடிக் கொண்டார். தமிழச் சாதி நெல்லை இந்துப் பள்ளியில் பணியாற்றி அதனைக் கல்லூரியாக உயர்த்தியவர் மனோன்மணியம் பெ.சுந்தரனார். அவரை மாதவையா மூலம் மடலில் தொடர்பு கொண்ட வெ.ப.சு. குற்றாலத்தில் சந்தித்தார். கம்பரின் இராமாயணத்தில் தோய்ந்தவர் வெ.ப.சு.; மாறான கருத்துடையவர் பெ.சுந்தரனார். ஆரிய திராவிடப் போராட்டமே இராமாயணக் கதை என்ற சுந்தரனாரின் வரலாற்றாய்வை விவேகானந்தரும், நேருவும் ஏற்றனர். அதேபோல் வெ.ப.சு. ஏற்று ‘இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்தியச் சாதி வரலாறும்` என்ற நூல் எழுதினார். காப்பிய இன்பத்தைக் கம்பர் பாடல்வழிப் பரப்பிய வெ.ப.சு. அறிவியல்தமிழ் மூலம் தமிழர்களை உயர்த்தப் பாடுபட்டவர். வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் இயற்பெயர் : சுப்பிரமணியன் சிறப்புப்பெயர் : வெ.ப.சு.முதலியார், இராவ்சாகிபு (1926) தந்தை : சு.பழனியப்ப முதலியார் பிறந்தநாள் : 14-08-1857 மறைவு நாள் : 12-10-1946 கல்வி : நெல்லை கணபதியாப் பிள்ளையின் திண்ணைப்பள்ளி, நெல்லை அரசரடிப் பாலம் கிறித்துவப் பள்ளி, கவிராச நெல்லையப்பப் பிள்ளையிடம் தமிழ் இலக்கணம் : நெல்லை இந்துக் கல்லூரி : முன்னிலைப்படிப்பு; சென்னை கிறித்துவக் க ல்லூரி : இளநிலை ப் பட் ட வகுப் பு (1878-79); சென்னை வேளாண்மைக் கல்லூரி : கால்நடைமருத்துவப் பட்டம் (1894) பணி : கால் நடை மருத்துவத்துறை ஊழியர் (1885-87): முதுநிலை கால்நடை மருத்துவ உதவியாளர் (1895முதல்): கால்நடை மருத்துவத் துறை: துணைக் கண்காணிப்பாளர் (15.8.1915 வரை) நெல்லை : வட்ட ஆட்சி மன்ற உறுப்பினர் (1916), துணைத்தலைவர் (1919), தலைவர் (1920); தென்காசி நீதிமன்றத் தலைவர் (1922) படைப்புகள் : நெல்லைச் சிலேடை வெண்பா (1890), அம்பலவாண தேசிகமாலை, தனிக்கவித் திரட்டு, (1936) (செந்தமிழ் மாத இதழில் தொடராக 1922இல் வெளிவந்தவை), அம்மைக் குத்துதலும் அதன் உபயோகங் களும். மொழி பெயர்ப்பு : சுவர்க்க நீக்கம் - முதற் காண்டம், அகலிகை வெண்பா (05-04-1914), திருத்தப்பட்ட 2 ஆம் பதிப்பு 1920, 3 ஆம் பதிப்பு 1938, கோம்பிவிருத்தம், சருவ சென சபம், கல்வி விளக்கம், இந்து தேசத்துக் கால் நடைக்காரர் புத்தகம், இந்தியாவில் கால்நடைகளுக்குக்காணு கிற அதிக பிராணாபயமான வியாதிகள் பற்றிய புத்தகம். 31.அரசு ஊழியர் தூக்கமும் ஆட்சியர் ஏக்கமும்! முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவிராயர் என்னும் தமிழிசை மூவரும் பாடிய பாடல்கள் சீர்த்தனை (கீர்த்தனை) வகையை வளர்த்தன. இவர்களைப் பின்பற்றிப் பிற்காலத்தில் தியாகையர், சியாமா சாத்திரிகள், முத்துசாமி தீட்சிதர் என்னும் மூவரும் தெலுங்கில் பாடினர். அருணாசலக் கவிராயரின் இராமநாடகச் சீர்த்தனையை அடுத்துக் கோபாலகிருட்டிண பாரதியின் நந்தனார் சீர்த்தனை புராணக் கதைகூறும் தொடர்நிலைச் செய்யுள்களில் புகழ் மிக்கது ஆகும். தில்லைப் பார்ப்பனர்களின் (தீட்சிதர்களின்) அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் வள்ளலாரை வடலூரில் ‘சத்திய ஞானத் திருச்சபை’ தொடங்கச் செய்தன. சமயத்தின் பெயரால் விளைநிலங்களைக் கைப்பற்றிக் கொண்டு பார்ப்பனர் செய்த முதலாளித்துவக் கொடுமைகளை நந்தனார் கதையில் பாடியவர் கோ.கி.பாரதி ஆவார். இசைக்கல்வி நரிமணத்தில் பிறந்த கோ.கி..பாரதி முடிகொண்டானிலும் பின்னர் ஆன(ந்த) தாண்டவபுரத்திலும் வளர்ந்தார். அண்ணு அய் ய ரின் ஆத ரவில் வா ழ் ந் த கோ. கி . பாரதி அவ ரிட ம் வடமொழி இலக்கியங்களையும் நாடகங்களையும் ஓர்த்துவ (அத்துவித) நூல்களையும் கற்றார். மயிலாடுதுறை சென்று கோவிந்தசிவனிடம் வடமொழி நூல்களைக் கற்றார். இசை நாட்டம் கொண்டு கும்பேசர் குறவஞ்சி இயற்றிய பாபநாச முதலியார், பெரிய திருக்குன்றம் சுப்பராமையர், மாயூரத்தம்மாள் ஆகியோரின் சீர்த்தனைகளைப் பாடித்திரிந்தார். பின்னர்த் திருவிடைமருதூர் சென்று தங்கி, அங்கு மராட்டிய மன்னர் அமரசிம்மரின் அரசவைக் கலைஞர் கனம் கிருட்டிணை யரிடமும் அனந்த பாரதியிடமும் இசைகற்றார்; இராமதா சரிடம் இந்துத்தானி இசையையும் மராட்டியப் பாடல் களையும் கற்றார். இசைவாழ்வு கோ.கி.பாரதி இளமையிலிருந்தே இறைவனைப் பாடிக் கொண்டு தெருவில் பிச்சை எடுத்து (உஞ்சவிருத்தி) வாழ்ந்து வந்தார். திருமணக் காலங்களில் பெண்கள் விரும்பிக் கேட்ட போதெல்லாம் நலுங்கு,கும்மி,ஊஞ்சல், லாலி பாடல்களைப் பாடிக்கொடுத்தார். இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றதால் தெலுங்குப் பாடல்களைக் கைவிட்டு மேடைப் பாடகர்கள் இவரது தமிழ்ப் பாடல்களைப் பாடத் தொடங் கினர். மயிலாடுதுறையப்பர் அஞ்சொல் நாயகி கோயிலில் வழிவழி வேலை பார்த்த இராமசாமி அய்யரின் வீட்டுத் திண்ணையில்தான் கோ.கி.பாரதி படுத்திருப்பார். பகலில் தெருக்களில் பாடிக்கொண்டும் ஊர் விழாக்கள் திருமண வீடுகளில் புராணக்கதைச் சொற்பொழிவு செய்து கொண்டும் இருந்தார். கோ.கி.பாரதி மெலிந்த வற்றிய உடல்வாகு கொண்டவர். “அகலமான புறங்கால்களுக்கு மேல் சூம்பினகால்கள்; இறுகின கழுத்து; பெருத்த முண்டொன்று முன் வந்திருக்கும் குரல் வளை; அந்தக் கழுத்தில் ஒற்றைமுக உத்திராக்கம்; மார்பில் வில்வ ஒட்டு வில்லையோடு உத்திராக்கக் கண்டி; பூனைக் கண்; குறுக்கே நீண்ட தலை; அதன்மேல் நாணற்பூவைப் போல் பறந்து கொண்டிருக்கும் பத்து மயிர்” என உருவ அமைப்புக் கொண் டிருந்தார் என உ.வே.சாமிநாதர் வருணிப்பார். தியாகையர் வியப்பு தியாகையரைச் சந்திக்க விரும்பித் திருவையாறு சென்றார் கோ.கி.பாரதி. காவரி ஆற்றங்கரை ஓரம் பத்துப் பதினைந்து தென்னை மரங்களுக்கு இடையே ஓர் ஓட்டு வீடு. மாணவர் களுடன் இருந்த தியாகையர் கேட்டார்: “எந்த ஊர்?” “அடியேன்... மயிலாடுதுறை” “அப்படியா? அங்குக் கோபால கிருட்டிண பாரதி என்று ஒருவர்...” “அடியேன்தான்” “ஆபோகி’யில் உருப்படி செய்திருக்கிறீர்களா?” அப்போது ‘ஆபோகிப்’ பண்ணில் அமைந்த சீர்த்தனையை தியாகையரின் மாணவர்கள் பாடிக்கொண்டிருந்தனர். ஒன்றும் கூறாமல் அச்சீர்த்தனையில் ஆழ்ந்திருந்தார் கோ.கி..பாரதி. பின் கோயிலுக்குச் செல்வதாக விடை பெற்றார். ஐயாறப் பரையும் அறம் வளர் த்த நாயகியையும் வழிபட்டுவிட்டு ஆட்கொண்டார் திருமுன் படுத்துக் கிடந்தார். மறுநாள் காலையில் தியாகையர் குருகுலத்துக்குச் சென்று ‘ஆபோகி’ப் பண்ணில் “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா” என்ற உருப்படியைப் பாடிக் காட்டினார். “நேற்று கேட்டபோது சொல்லவில்லையே?” என்று வினவினார் தியாகையர். “இரவு தான் இயற்றினேன்” என்று கோ.கி.பாரதி கூறியதும் வியந்த தியாகையர் வாழ்த்தி அனுப்பினார். தில்லை ஈடுபாடு கோ.கி.பாரதியின் அத்தை தில்லை அம்பலவாணரிடம் எல்லையற்ற பத்தி கொண்டவர். அதனால் கோ.கி.பாரதியும் தில்லைக்குச் செல்ல வேண்டும் என்று அடிக்கடி ஆவல் மீதூறப் பெற்றார். திருநாளைப் போவாராய் இருந்து ஒரு நாள் தில்லை சென்றார். தில்லைக் கோயிலில் நடனம் ஆடுபவரும் சீர்த்தனை கள் இயற்றுபவரும் ஆகிய சிவசங்கரத் தீட்சிதரிடம் நட்பு கொண்டு இசை நுணுக்கங்களைக் கற்றார். மேலும் அங்கிருந்த பொன்னுசாமி தீட்சிதரிடம் சீர்காழி முத்துத் தாண்டவரின் சீர் த்தனைகளைப்பாடம் கேட்டார் . தியாகை ய ருக் கு ம் கோ.கி.பாரதிக்கும் 200 ஆண்டுகள் முன் வாழ்ந்தவர் தமிழிசை மூவருள் ஒருவராகிய சீர்காழி முத்துத் தாண்டவர். தேவாரப் பண்களையும் நெஞ்சம் நெக்குருகும் பத்தி உருக்கத்தையும் முத்துத்தாண்டவர்க்குப் பின் வந்தோரும் கோ.கி.பாரதியும் தியாகையருள்ளிட்ட தெலுங்கிசை வாணர்களும் பின்பற்றினர். நந்தனார் சீர் தில்லைக் கோயிலில் கோ.கி.பாரதி எப்போதும் நந்தனார் சிலைமுன் அமர்ந்து தமிழ் பாடிக் கொண்டிருப்பார். “எந் நேரமும் உன்றன் சந்நிதியில் நான் இருக்க வேண்டுமையா” என்று பாடினார். (நந்தனார் தீண்டத்தகாதவர் என்று கூறி இந்தச் சிலை முன் சுவர் எடுத்துத் தடுத்துள்ளதோடு, தமிழையும் தீண்டத்தகாதது என்று கூறித் தேவாரத் தமிழ் பாடிய அம்பலத் தையும் கழுவியுள்ளனர் தில்லைத் தீட்சிதர்கள்). நாகையில் இருந்த கப்பல் வணிகர் ஒருவர் சமயப்பழங் (புராணக்) கதை ஒன்றைச் சீர்த்தனைகளாகப் பாடித்தருமாறு கோ.கி.பாரதியை வற்புறுத்தி வந்தார். அவர் அவ்வாறு வேண்டிப் பழம் அனுப்பினார். ‘பழம் நம்மருங்கு அணையும்’ (நம் பக்கம் வந்து சேர்ந்தது) எனக் கூறியவாறு ‘பழனம் மருங் கணையும்’ என முதற்பாடல் அடியைத் தொடங்கி நந்தனார் வரலாற்றை எழுதலானார். எழுதி முடித்த பின் நாகப் பட்டினத்தில் மூன்று நாள் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கி இரவெல்லாம் அரங்கேற்றம் செய்தார். பக்கத்து ஊர் களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்து கேட்டனர். காரைக்கால் அரசு ஊழியர்களும் இரவில் வந்து கேட்டுவிட்டுப் பகலில் அலுவலகத்தில் தூங்கி வழிந்தனர். காரைக்காலில் மாவட்ட ஆட்சியராக இருந்த சிசே என்ற வெள்ளையர், ஊழியர்களிடம் கேட்டு வியந்து காரைக்காலிலும் கோ.கி.பாரதியை அழைத்து அரங்கேற்றச் செய்ததுடன் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’ 1861- .இல் நூலாக அச்சில் வெளிவரவும் உதவிபுரிந்தார். பொறாமை பெருமை கூறைநாட்டுக் கவிராயர் தாமியற்றிய திருநாவுக்கரசர் வரலாற்றுச் சீர்த்தனை புகழ் பெறவில்லையே என்ற பொறா மையால் கண்டனக் கவி எழுதினார். தில்லைக் கோயிலில் கோ.கி.பாரதி பாடிய செந்தமிழ் இசைப்பாடலைக் கேட்ட ஆறுமுக நாவலர் பத்துஉரூபாய் அளித்து மகிழ்ந்தார்.இசை நிகழ்ச்சிகளில் கிடைத்த பொருளை எல்லாம் சேமித்து அறக் கட்டளையாக் கி த் திருவாவடுதுறை மடத் தின் தலைவர் சு ப்பி ர மணிய தேசிக ர் மேற்பார்வை யில் தில்லை யிலும் மயிலாடுதுறையிலும் நாள் வழிபாட்டுக் குக் கோ.கி.பாரதி உதவினார். கடவுளைத் தவிர வேறு யாரையும் பாடாத அவர், தம் நண்பர் மயிலாடுதுறை வேதநாயகரைப் புகழ்ந்து ‘நீயே புருஷமேரு’ என்ற சீர்த்தனை பாடினார். பெரும்புலவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அதிக இசை நாட்டம் இல்லா தவர்; அதனால்தான் அவரிடம் படித்துக் கொண்டிருந்த உ.வே.சாமிநாதர் கோ.கி.பாரதியிடம் இசை கற்பதை நிறுத் தினார். அப்படிப்பட்ட பெரும் புலவரிடம் சிறப்புப்பாயிரம் வாங்கப் பலமுறை சென்று கேட்டும்,அவர் தர விருப்பப்பட வில்லை. ஒருநாள் அவர் வீட்டுத் திண்ணையில் காத்திருந்த கோ.கி.பாரதி நந்தனார் சீர்த்தனை ஒன்றைப் பாடிக் கொண் டிருந்தார். அதைக் கேட்டு நெஞ்சம் நெக்குருகிய பெரும்புலவர் ஓர்சிறப்புப் பாயிரம் கொண்டு வந்து தந்தார். அருணாசலக் கவிராயரின் இராமநாடகச் சீர்த்தனை களும் கோபால கிருட்டிண பாரதியாரின் நந்தனார் சீர்த்தனை களும் பொதுமக்களின் இசை நாடகச் செல்வங்களாகத் தமிழர் நாவில் வழங்கின. தமிழிசையின் மலர்ச்சிக்கும் தாழ்த்தப் பட்டவர்களின் எழுச்சிக்கும் நந்தனார் சீர்த்தனை வித்திட்டது. கோபால கிருட்டிண பாரதி கோபால கிருட்டிண பாரதி இயற்பெயர் : கோபாலகிருட்டிணன் சிறப்புப்பெயர் : முடிகொண்டான் பாரதி, ஆன(ந்த)தாண்டவபுரம் பாரதி தந்தை : இராமசாமி பாரதி காலம் : ஏறத்தாழ 1810-1905 பிறந்த ஊர் : நரிமணம் (நாகை அருகில்) கல்வி : முடிகொண்டான் அண்ணு அய்யரிடமும் மயிலாடுதுறை கோவிந்த சிவனிடமும் வடமொழி நூற்கல்வி, திருவிடைமருதூரில் கனம் கிருட்டிண அய்யர், அனந்த பாரதி, இராமதாசர் ஆகியோரிடம் இசை. பணி : இறைவனைப் பாடி வாழ்தல், இசை கற்றலும் கற்பித்தலும் மாணவர்கள் : தில்லை (சிதம்பரம்): பொன்னுசாமி தீட்சிதர், இராசரத்தின தீட்சிதர், மயிலாடுதுறை இராமசாமி அய்யர் உடன்பிறப்புகள் படைப்புகள் : சிதம்பரக் கும்மி, கலியாணக்கால நலுங்கு, ஊஞ்சல், லாலிப் பாடல்கள், தனி க் கீ ர் த் தனைக ள் , திருநாளைப் போவார் (நந்தனார்) சரித்திரக் கீர்த்தனை, திருநீலகண்ட நாயனார் சரித்திரக் கீர்த்தனை, காரைக் காலம்மையார் சரித்திரக் கீர்த்தனை. 32. பாரதிக்குப் பாட்டு தந்த பாரதி வள்ளலாரும் கோபால கிருட்டிண பாரதியும் அண்ணா மலை ரெட்டியாரும் பாரதிக்குப் பாட்டு தந்த பாரதி (கலை மகள்) ஆவர். வடலூர் இராமலிங்க வள்ளலாரின் அருட் பாடல்களும் உரைநடையுமே பாரதியாருக்கு முன்னோடிகள். இதனால் பாரதியின் இனிய எளிய பாடல்களும் உரைநடையும் இருபதாம் நூற்றாண்டின் அடையாளங் களாகவும் முத்திரை களாகவும் வழிகாட்டிகளாகவும் அமைந்தன. பாரதியார் இளமையில் கூளப்பநாயக்கன் காதலையும் அண்ணாமலைரெட்டி யாரின் காவடிச் சிந்தையும் மனப் பாடமாகத் தெரிந்து வைத்திருந்தார். தமிழ்ப் புலவர்களை அணுகிக் கல்வி கற்று இலக்கியக் கல்வியோ இலக்கணப் புலமையோ பெறாமலேயே இளம்பருவம் முதல் அவரைப் பாடச்செய்தவை தாயுமானவர், வள்ளலார், கோபால கிருட்டிண பாரதி, அண்ணாமலை ரெட்டியார் ஆகியோரின் சந்தப் பாடல்களே. இவையே அவரைத் ‘ தன்னை மறந்த லயந் தன்னில்...’ ‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பம்’ எனப் பாடச் செய்தன. சிந்துக்குத் தந்தை தேவாரப் பண்ணிசையிலும் தமிழிசை மூவராகிய முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோரின் சீர்த்தனைகளிலும் தோய்ந்தவர் கோபால கி ருட்டிண பாரதி ஆவார் . ச ந் த க் கவியாகிய கோபால கிருட்டிண பாரதியையும் சிந்துக் கவியாகிய அண்ணாமலை ரெட்டியாரையும் பின்பற்றியதால் தான் பாரதியார் வெற்றி யடைய முடிந்தது. கோபாலகிருட்டிண பாரதியின் ‘நந்தனார் சரித்திரக் கீர்த்தனை’யிலிருந்து, 1. ‘ மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளா?’ 2. ‘ஓய் நந்தனாரே! நம்ம சாதிக்கு அடுக்குமோ?’ 3. ‘நாம் என்ன செய்வோம் புலையரே! 4. ‘ஆண்டைக் கடிமைக் காரனல்லவே’ 5. ‘தில்லை வெளியிலே கலந்து விட்டால் அவர் திரும்பியும் வருவாரோ?’ முதலிய சீர்த்தனைகளின் சந்தத்தில் 1. ‘தொண்டு செய்யும் அடிமை உனக்குச் சுதந்திர நினைவோடா?’ 2. ‘ ஓய்! திலகரே... நம்ம சாதிக்கு அடுக்குமோ?’ 3. ‘நாம் என்ன செய்வோம் துணைவரே! 4. ‘அன்னியர் தமக்கு அடிமை அல்லவே!’ 5. ‘வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?’ முதலிய பல பாடல்களைப் பாடியுள்ளார் பாரதியார். அண்ணாமலை ரெட்டியாரின் கழுகுமலை சுப்பிர மணியர் காவடிச் சிந்திலிருந்து ‘ஆறுமுக வடிவேலனே..’ என்னும் பாடலைப் பின்பற்றி அதே சந்தத்தில் பாரதியார், ‘தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர் களும்..’ என்ற பாடலைப் பாடியுள்ளார். இவ்வாறு பாரதியாரின் பாடல்கள் முழுவதும் கோபாலகிருட்டிண பாரதியாரின் சீர்த்தனை வடிவமும் அண்ணாமலை ரெட்டியாரின் சிந்துப் பாடல் சந்தமும் விரவிக் கிடப்பதைக் காணலாம். படிப்பும் பாட்டும் பள்ளிப் படிப்பு படிக்கிற காலத்திலேயே பாடிக்கொண்டு திரிந்த பாரதியாரைப் போலவே திண்ணைப் பள்ளியில் நிகண்டு படிக்கும் போதே இசையோடு பாடிக்கொண்டிருந்தார் அண்ணாமலை. சேற்றூர் சிற்றரசின் (சமத்தானத்தின்) அவைக் களப் புலவராக இருந்து 23 அகவையான முகவூர் மீனாட்சி சுந்தரக் கவிராயரிடம், 20 அகவையான அண்ணாமலை மாண வராக இருந்து பாடம் கேட்டுக் கொண்டார். பின்னர் இருவரும் சேர்ந்து திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவர் உ.வே.சாமிநாதரிடம் படிக்கச் சென்றனர். அங்குத் தங்கிப் படிக்க உதவுமாறு வேண்டியும் மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகரை வாழ்த்தியும், “ அரசன கராதியர் முன்...” என்ற பாடலை மடக்கணியாகப் பாடினார் அண்ணாமலை. இரசமற்றவன் என்னும் பொருளில் (அ+ரசன்) அரசன் என்ற சொல்லை முதன் முதல் பயன்படுத்திய அவரது அறிவாற்றலை வியந்த மடத்தின் தலைவர், “நீ சாதியிலும் ரெட்டி, புத்தியிலும் ரெட்டி” (ரெட்டி: இரட்டி: இரண்டுமடங்கு) என்று பாராட்டினாராம். நன்னூல் முதலிய இலக்கணங்கள் படிக்காததால் திருவா வடுதுறை மடத்தில் புலவராகப் பணியாற்றச் செல்ல மறுத்து விட்டார் பாரதியார். நன்னூல், காரிகை முதலியவற்றின் அடிப் படையில் இயற்றமிழ்ச் செய்யுள்கள் இயற்றுவதை விட தாளக் கட்டுடன் சந்தப்பாடல்கள் இயற்றுவதில் நாட்டம் கொண்ட அண்ணாமலை உ.வே.சாமிநாதரிடம் புராணங்களையும் நன்னூ லையும் சிலகாலம் கேட்டுவிட்டு ஊர் திரும்பினார். அரசவைப் புலவர் சென்னிகுளம் சுந்தரப் பரதேசியார் அண்ணாமலையை வீரகேரளம் புதூரில் வாழ்ந்த ஊற்றுமலை வளநாட்டார் (ஜமீன்தார்) இருதாலய மருதப்பக் கவுண்டரிடம் (கவுண்டர்/ பாண்டியர்/தேவர்) அறிமுகப்படுத்தினார். மூத்த பெரும் புலவர் கள் அவர் அரண்மனையில் இருந்தனர். சேற்றூர் அரண்மனையில் இருந்தவர் என்பதால் நம் அரண்மனையிலும் இருக் கட்டுமே என்று 22 அகவையினராகிய அண்ணாமலையை ஊற்றுமலைத் தேவர் ஏற்றுக் கொண்டார். தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து தம் பாடல்களைப் பாடிப் புலவர்கள் பரிசுகள் பெறுவது போல, வள்ளலாகிய தேவரும் ஊர்தோறும் சென்று புலவர்கள் பலரின் பாடல் களைப் கேட்டு மகிழ்ந்து பரிசில்கள் நல்கும் தமிழ்த்தேனீ ஆவார். ஒருநாள் இசை பற்றிப் பேச்சு வந்தபோது, ‘சரிகமபதநி’ என்று தொடங்கிப் பாடல் இயற்றச் சொன்னார். மூத்த புலவர்கள் தமக்கு இசைபற்றித் தெரியாதே என்று மயங்கிக் கொண்டு பேசாமல் இருந்தார்கள். இளைஞராகிய அண்ணாமலை ‘சரிகம பதநியேற்குச் சந்துசொல் என்பாள்’ என்று தொடங்கிப் பாடினார். சிந்துப்பாடலில் சிறந்த திறமையுடையவராகிய அவர் பாடிய இசை நயம் சேர்ந்த காதற்பாடலைக் கேட்டு அனைவரும் பாராட்டினர். தேவரும் மகிழ்ந்து அவரைத் தம் அரசவைப் புலவராக ஏற்றார். தமிழ்க்காதல் குருவம்மாள் என்ற பெண்ணை, அண்ணாமலை தம் 24-ஆம் அகவையில் திருமணம் செய்து கொண்டார். சென்னி குளத்தில் நடைபெற்ற திருமணத்துக்குத் தேவர் பொருளுதவி செய்ததுடன் ஊர்வலத்துக்கு யானையும் பல்லக்கும் அனுப்பி வைத்தார். சென்னிகுளத்தில் திருமணம் முடிந்ததும் வீரகேரளம் புதூருக்கே வந்து குருவம்மாளுடன் இல்லறம் இனிது நடத்தி வந்தார் அண்ணாமலை. சு ற்றுப் பகுதி ம க் கள் தேவர் தலைமையில் ஆண்டு தோறும் கழுகுமலை முருகப் பெருமாள் கோயிலுக்குக் காவடி எடுத்து நடந்து செல்வது வழக்கம். வழி நடக்கும் அலுப்புத் தெரியாமல் பாடிக்கொண்டு செல்ல முருகன் மேல் பாடல்கள் எழுதித் தருமாறு தேவர் அண்ணாமலையிடம் கேட்டார். மாணிக்கவாசகர் பாடல்களிலும் வள்ளலார் பாடல்களிலும் காணப்படும் பத்திக் காதலைப் பின்பற்றிக் ‘கழுகுமலை சுப்பிர மணியர் காவடிச் சிந்து’ இயற்றினார் அண்ணாமலை. தலைவி இரங்கல், நற்றாய் இரங்கல், தலைவி ஊடல், தலைவியின் புலவி, தலைவன் வருத்தம் சாற்றல் என்னும் அகத்திணைத் துறைகளில் மிக இனிய தாளக்கட்டுடன் இசைச்சந்தம் கொண்டு விளங் கும் இப்பாடல்கள் தமிழகம் முழுதும் பரவின. காமநோய் அழகும் ஆற்றலும் இசைபாடும் திறனும் கொண்ட அண்ணாமலை, கரிவலம் வந்த நல்லூர் நடனமணி (உருத்திர கணிகை) பொன்னம்மாளிடம் மயங்கினார். சிந்துப் பாடல் சந்தத்திற்குரிய புதிய தாளச் சொற்கட்டுகளை அவள் உருவாக்கிக் கொடுத்ததும் அதன்படியே அண்ணாமலை பாடல் இயற்றிட, அடுத்தநொடியே அவர் முன் ஆடி அரங் கேற்றம் செய்தாள் பொன்னம்மாள். எல்லைமீறிய காமம் இரண்டு ஆண்டுகளில் நோயில் வீழ்த்தியது. சங்கர நாராயணன் கோயில் ‘ஆடித்தபசு’ விழா தேவர் செலவில் ஆண்டுதோறும் நடக்கும். அந்த ஆண்டு விழா முடிந்ததும் நோய் முற்றிய அண்ணாமலையைப் பல்லக்கில் சென்னிகுளம் அனுப்பினார் தேவர். அரையாப்புக் கட்டியும், இருமல்நோயும் 26 அகவை யிலேயே அண்ணாமலையை விழுங்கின. சிந்தாத சிந்து காவடிச் சிந்துப் பாடல்களாகிய 24 பாடல்களால், 26 அகவையிலேயே மறைந்தாலும் தமிழின் - மோனை முத்தமிழின்- ஒலிநயச் சிறப்பை உலகுக்கே ஒலிக்கச் செய்தவர் அண்ணாமலை ரெட்டியார் ஆவார். பன்னாட்டு (ஐ.நா) அவையில் இவரது பாடலை இசைத்தார் ம.ச. சுப்புலட்சுமி. அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து போல் பாடுவது முடியாது என்று பெரும்புலவர்களே கூறுவர். பாண்டித்துரைத் தேவர் சிந்து பாட முயன்று கைவிட்டார். பாரதியார் ‘சிந்துக்குத் தந்தை’ என்று அண்ணாமலை ரெட்டியாரை அடியொற்றிப் பாடி வெற்றி பெற்றாலும் தொடக்கத்தில் அவர் எழுதிப் போட்டிக்கு அனுப்பிய ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ என்னும் பாடல் முதற்பரிசு பெறவில்லை; அ.மாதவையா இயற்றிய இந்தியக் கும்மி முதற் பரிசுபெற்றது. தமிழறிஞரும் கால்நடை மருத்துவரும் ஆகிய வெள்ளக் கால் ப.சுப்பிரமணிய முதலியார் காப்பியங்களில் சிறந்தது கம்பராமாயணம் என்று கூறும் போது, சிற்றிலக்கியங்களில் சிறந்தது கலிங்கத்துப் பரணி என்று அண்ணாமலை ரெட்டியார் கூறுவார். ஒலிநயத்தில் சிறந்தது கலிங்கத்துப் பரணி அல்லவா? வெ.ப.சு. முதலியாரிடம் பாதி இரவு வேளையில் “பாதிராத்திரி வேளையில்” என்ற பாடலை ‘பைரவி’ பண்ணில் பாடிக் காட்டினார் அண்ணாமலை ரெட்டியார். இயற்றப்பட்ட காலத்திலேயே அவரது காவடிச் சிந்துப் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவின. வெ.ப.சு. பாராட்டியுள்ளார் : “அண்ணாமலை ரெட்டியாரைத் தமிழர்கள் காவடிச் சிந்து பாடிய புலவன் என்று தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிந்துப் பாடல்கள் அவனுக்கு ஒரு இம்மி மாத்திரம். அவன் ஒரு பெரிய மேதை (ஜீனியஸ்) என்பதைத் தமிழர்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் இயற்பெயர் : அண்ணாமலை சிறப்புப்பெயர் : காவடிச்சிந்தின் தந்தை தந்தை : ஓவு அம்மாள், சென்னவ ரெட்டியார் காலம் : ஏறத்தாழ 1865-1891 ஊர் : நெல்லை மாவட்டம் சென்னிகுளம் கல்வி : சென்னிகுளம்: சிவகிரி சுப்பிரமணியப் பிள்ளையின் திண்ணைப்பள்ளி, கூவலப்புரம் : சுந்தரப்பரதேசியார் திருமடத்தில் தமிழ்க்கல்வி; திருவாவடுதுறை மடத்தில் உ.வே.சாமிநாதரிடம்:புராணம், நன்னூல் பணி : சேற்றூர் சமீன்தார் சுந்தரேச ராசேந்திர பாண்டியர் அரண்மனையில் புலவர்; வீரகேரளம் புதூர் ஊற்றுமலைவேள் இருதாலயமருதப்பக் கவுண்டரின் அரண்மனையில் அரசவைப்புலவர். படைப்புகள் : கழுகுமலை சுப்பிரமணியர் காவடிச் சிந்து, வீரை நவநீத கிருட்டிணன் பிள்ளைத் தமிழ், வீரைச் சிலேடை வெண்பா, வீரைத் தலபுராணம், நவநீத கிருட்டிண சாமிப் பதிகம், கோமதி அந்தாதி, சங்கர நாராயணர் கோயில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, ஊற்றுமலைத் தனிப் பாடல் திரட்டு. 33. தானே தானாம் தக்கடி தங்கம்! தமிழறிஞரும் கால்நடை மருத்துவரும் ஆகிய வெள்ளக் கால் ப.சுப்பிரமணிய முதலியார் திருவல்லிக்கேணியில் இருந்த தம் நண்பர் ஏ.ஓய். நாராயண அய்யங்காரைச் சந்திக்கப் போனார். “வாப்பா! விவேக சிந்தாமணி இதழில் கம்பராமாயணம் பற்றிச் சுவையாக எழுதி வருகிறாய், தொடர்ந்து படிக்கிறேன்” துறுதுறு கண்களுட ன் ஒ ரு சிறுபெண் க த வு க் கு ப் பி ன்னிரு ந் து ‘வாங்கோ’ என்று சொல்விட்டு உள்ளே போனாள். உம்...அந்தப் பெண்ணுக்கு நான்கு அகவையிருக்கும் போதே நாராயண அய்யங்காருக்குக் கட்டி வைத்து விட்டார்களாம். ‘இந்தக் குழந்தை மணம் என்று ஒழியுமோ? இதனால்தானே கைம்பெண்கள் பெருகுகிறார்கள்!’ என்று பெருமூச்சு விட்டார் வெ.ப.சு. “ம்... அதே விவேக சிந்தாமணியில் ‘சாவித்திரி சரிதம்’ என்று கைம்பெண் கதை வருகிறதே! மனத்தை உருக்குதே.” “அந்தக் கதையா? அது இனிமேல் வராதுப்பா....,! கைம் பெண் காதலிப்பதாகவும் மறுமணம் பு ரி ந்து கொள்ளப் போவதாகவும் எழுதுவதைப் பலர் எதிர்க்கிறார்களாம். இத ழாசிரியர் சி.வி.சாமிநாதையர் நல்லவர். பாவம்! அவர் என்ன செய்வார்?” “அடடா! இது எப்படி உங்களுக்குத் தெரியும்?” “அந்தக் கதையை எழுதி வருபவன் என் தம்பிதான். தம்பி!... மாதவையா...” இருபத்து இரண்டு அகவையான இளைஞர் மாதவையா வந்தார். அவர் திருமணம் செய்து கொண்ட போது அவர் மனைவிக்குப் பதினொரு அகவையாம். வெ.ப.சு.வும் மாதவை யாவும் நண்பர்களானார்கள். விவேக சிந்தாமணி இதழில் வெளிவந்து பாதியில் நின்று போன மாதவையாவின் ‘சாவித்திரி சரிதம்’ பின்னாளில் ‘முத்து மீனாட்சி’ என்ற பெயரில் புதின மாக வெளிவந்தது. மாதவையா ‘விஜய மார்த்தாண்டம்’என்ற தம் புதினத்தை வெ.ப.சு.வுக்கு அன்பு காணிக்கையாக்கினார். வெ.ப.சு. மனோன்மணியம் சுந்தரனாரைச் சந்திக்க விரும்பிய போது மாதவையா அவருக்கு மடல் எழுதி ஒப்புதல் பெற்றுச் சந்திக்கச் செய்தார். வெ.ப.சு.வின் முன்னோர் பற்றித் ‘தளவாய் முதலியார்’ என்று மாதவையா ஆங்கிலத்தில் தமிழிலும் நூல்கள் எழுதினார். பாரதியை வென்றார் உப்புவரித் துறையில் பணியாற்றிய மாதவையாவுக்கு இலக்கிய ஈடுபாடு மிகுதி. கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவர் என்பதால் ஆங்கிலத்தில் கவிதை, கதை, கட்டுரை எழுதினாலும் உடனுக்குடன் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார். தமிழிலேயே புதிய படைப்புகளை எழுதவும் தொடங்கினார். கோபால கிருட்டிண பாரதியின் நந்தனார் சீர்த்தனையைப் பின்பற்றி ‘நந்தன்’ என்ற நூல் எழுதினார். அவரைப் போலவே கும்மி, நலுங்கு, கிளிக் கண்ணி,கலியாணப் பாடல்களை இயற்றியவர் மாதவையா. கோ.கி.பாரதியையும் அண்ணாமலை ரெட்டியாரையும் பின் பற்றிச் சீர்த்தனை, கும்மி, சிந்து முதலிய எளிய பாவடிவங்களில் பாடி, மாகவியாக உயர்ந்த பாரதியாரைப் பாட்டுப் போட்டியில் வென்று, தமது ‘இந்தியக் கும்மி’ என்ற பாடலுக்கு முதற்பரிசு பெற்றார் மாதவையா. பாரதி வழியில் பாரதியாரை வென்றாலும் அவர் வழி நின்றவரும் மாதவையாதான். சாதிக்கொடுமை, தீண்டாமை, மூட ந ம் பி க் கை கள் , கு ழ ந்தைமணம், கைம்பெண் கோலம், மாப்பிள்ளை விலை (வரதட்சணை) முதலியவற்றை எதிர்த் தலில் பாரதியாரைப் போலவே உறுதியாக எழுதினார். காதல் மணம் கைம்பெண் மணம் ஆகியவற்றை ஆதரிப்பதிலும், தமிழின் மேன்மை, தமிழிலக்கிய வளர்ச்சி, திருக்குறளின் சி ற ப் பைப் ப ப் பு த ல் , பெண் க ல் வி ஆ கி ய வ ற் றி லு ம் பாரதியாரைப் போலவே எழுதினார். இந்திய அரசியல் விடுதலையிலும் சமுதாய விடுதலையிலும் பிரம்ம சமாஜத்தின் சாதிமதச் சடங்குகள் இல்லாத வாழ்வியலிலும் ஈடுபாடு காட்டினார். ஆங்கிலத்திலும் தமிழி லும் நூல்கள் எழுதினார். பாரதியாரைப் போன்றே தமிழ் எண் ப யன்ப டு த்துத ல், அறிவிய ல் தமிழ் வள ர் த் த ல், மொழி பெயர்த்தல், ‘சாவித்திரி’ என்ற புனைபெயர் ஏற்றல், எளிய நல்ல தமிழில் எழுதுதல் முதலியன புரிந்தார். பாரதியாரைப் போலவே இதழியலில் நுழைந்து தமிழர்நேசன், பஞ்சாமிர்தம் முதலிய இதழ்களை நடத்தினார். மாதவையா பஞ்சாமிர்தம் என்ற மாத இதழை 90 பக்க அளவில் வெளியிட்டார். “உண்மை, அன்பு, அறிவு, ஒற்றுமை, உழைப்பு என்னும் ஐந்தையும் கலந்ததாகும் இப்பஞ்சாமிர்தம். நாடெங்கும் ஆங்கு ஆங்கு முளைத்தெழும் தேசிய உணர்ச்சிப் பயிருக்கு இப் பத்திரிகை மூலமாய் ஊக்க உரமிட்டு அறிவு நீர்பாய்ச்சி, அவ் வுணர் ச்சி யை த் தழை த் தோங் க ச் செய் ய முய ல்வது முக்கியம்” என்று பஞ்சாமிர்தம் இதழின் நோக்கத்தைக் குறித்து எழுதியுள்ளார். பாரதியார் ‘ நடைச்சித்திரம்’ எனப் படைத்தது போல நகைச் சித்திரமாக ‘தானே தானாம் தக்கடி தங்கம்’ என்ற தொடர் எழுதினார். சிறுகதை, புதினம், எளிய கவிதை, பிற மொழி இலக்கியங்களைத் தமிழுக்குக் கொணர்தல், சமுதாயப் புரட்சி ஆகியவற்றில் பாரதியாருக்கு முன்னும் பின்னும் முன் னோடியாகவும் மிகுதியாகவும் எழுதியவர் மாதவையா. இவரது ‘பஞ்சாமிர்தம்’ இதழில்தான் நாவலர் ச.சோமசுந்தரபாரதியார் முதன்முதலாகப் பாரதியாரின் புகழ் பாடும் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். கதை கதையாம் தமிழில் முதல் புதினம் மயிலாடுதுறை வேதநாயகரின் பிரதாபமுதலியார் சரித்திரம் (1879) ஆகும். முதல் சிறுகதை பாரதியாரின் ‘துளசீ பாயி என்னும் ரஜ புத்திர கன்னிகையின் கதை’ (1905) ஆகும். இக்கதை சக்கரவர்த்தினியின் 5 இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தது. ஆனால் இவற்றுக்கு முன்னரே மாதவையாவின் ‘சாவித்திரி சரிதம்’ விவேக சிந்தாமணி இதழில் 1892 சூன் முதல் நவம்பர் வரை 6 இதழ்களில் வந்தது. எனவே தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதை என்ற சிறப்பும் இதழில் வெளிவந்த முதல் புதினம் என்ற சிறப்பும் உண்டு. மாதவையா தமது கிளாரிந்தா, சத்தியானந்தன் என்னும் புதினங்களிலும் பாரதியார் தமது காந்தாமணி கதையிலும் இந்து மதத்திலிருந்து கிறித்துவத்துக்கு மாறிக் கைம்பெண் மணம் நடைபெற்றதாகக் கூறியுள்ளனர். (இந்து மதத்தின் தூய தன்மையைக் காக்கவே இவ்வாறு மாதவையாவும் பாரதியாரும் எழுதினர் எனக்குறை கூறுவோர் உண்டு. கைம்பெண் மணம், காதல் மணம், கலப்புமணம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளாத உயர்சாதி இந்துக்களிடமிருந்து தப்பிக்க மதம் மாறினர் என்பதே உண்மை). தாழ்த்தப்பட்டவர் எதிரே வரக்கூடாது, செருப் பணியக் கூடாது என்று கொடுமை செய்தவர்கள், அவர்கள் கிறித்துவராக மதம் மாறியதும், படித்துப் பட்டம் பெற்று பெரிய பதவியில் நிறைய ஊதியம் பெற்றதும், ஏற்கின்ற மனப் பான்மையைத் ‘தில்லைக் கோவிந்தன்’ புதினத்திலும், தந்தையும் மகனும், குதிரைக்காரக் குப்பன் முதலிய சிறுகதைகளிலும் மாதவையா எழுதியுள்ளார். சாதிக் கொடுமை பார் ப் ப ன ர் க ள் த ம் சாதிப் பெருமையால் மற்ற சாதியினரை அடித்துத் துன்புறுத்துவதையும் இழிவு படுத்துவதையும் மற்ற உயர்சாதி இந்துக்களும் இதனைப் பின்பற்றுவதையும் மாதவையா காட்டியுள்ளார்; கண்டித் தும் உள்ளார். “பிராமணன் கூட இருந்து சாப்பிட விரும்பும் வேளாளன் பறையன் கூட இருந்து சாப்பிடக் கூசுகிறானே” என்று சாடியுள்ளார். ஆங்கிலத்தை ‘நீச’ மொழி என்று ஒரு காலத்தில் பழித்த பார்ப்பனர்கள் இன்று தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆங்கிலத்தைக் கற்று உயர்ந்த அரசு பணிகளில் உள்ளனர். “இப்பொழுதோ பெரிய குண்டல தீட்சிதர் வமிசங் களில்தான் இங்கிலீசு அதிகம். இராஜ பாஷையாம்; வேளைக் குத் தக்க வேசம்” என்று பத்மாவதி சரித்திரத்தில் எழுதி யுள்ளார். வெள்ளையருக்கு உ ரி ய பிணம் அறுக் கும் ம ரு த் துவ ப் படிப்பு வேண்டாமென்று சொன்னவர்கள் பார்ப்பனர்கள். இன்று மருத்துவக் கல்லூரிகளில் பார்ப் பன மாணவர்கள் தான் “கொள்ளையோ கொள்ளை” என்று எழுதியுள்ளார். (இன்றும் அவர்கள் மட்டுமே மிகுதியான இடங்களைப் பிடித்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட பிற் படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று பார்ப்பன மேற்சாதியினர் தடுத்து வருகின்றனர்) நந்தன் நெருப்பு சாதிக் கொடுமையையும் தீண்டாமைத் தீமையை யும் எதிர்த்து மாதவையா தம் புதினங்களிலும் கதைகளிலும் கட்டுரைகளிலும் கவிதைகளிலும் எழுதினார். கோபால கிருட்டிண பாரதியின் நந்தனார் சீர்த்தனையையும் பி.ஆர். இராசம் அய்யரின் நந்தன் கதையையும் பின்பற்றி ‘நந்தன்’ என ஆங் கி ல த் திலும் தமிழிலும் நூல்கள் எழுதிப் பார்ப்பன முதலாளித்துவக் கொடுமையையும் கோயில் உள்ளே நுழையக் கூட உரிமை இல்லாத அவர்கள் நிலைமையையும் மனம்வருந்தி எழுதினார். பிறப்பால் திணிக்கப்படும் சாதி அமைப்பைக் கடுமையாக எதிர்க்கும் காப்பியம் என்பதால் ‘மணிமேகலை’ பற்றி எழுதுவதாகக் கூறியுள்ளார். சாதிசமய மூட நம்பிக்கை களை முதன் முதல் எதிர்த்தவராகிய புத்தரின் வரலாற்றைக் கூறும் ‘சித்தார்த்தன்’ என்ற நூலை எழுதியதுடன் ஆர்னால்டின் ‘ஆசியஒளி’ என்னும் ஆங்கில நூற்பாடல்கள் 78 மொழி பெயர்த்தார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மொழி பெயர்ப்பதற்கு வெகுகாலம் முன்னரே செய்யப்பட்ட பணி இது. ‘ஆசாரச் சீர்திருத்தம்’ என்னும் நூலிலும் மாதவையா தீண்டாமையையும் இளமை மணத்தையும் மூட நம்பிக்கை களையும் எதிர்த்துள்ளார். ஒரிசா, கருநாடகம், ஆந்திரம், கேரளம் முதலிய மாநிலங் களை உள்ளடக்கிய அன்றைய தமிழக மாநிலத்தின் (சென்னை மாகாணம்) கடற்கரைப் பகுதிகளில் பணியாற் றியவர் மாதவையா. குதிரையேரிப் பல ஊர்களுக்கும் பயணம் செய்தவர். ஊழலையும் கையூட்டையும் எதிர்த்து நேர்மையுடன் வாழ்ந்தவர். இந்து மதத்தின் மூட நம்பிக்கை களையும் சடங்கு களையும் கைவிட்டு வாழ்ந்தவர். அனைத்துச் சாதியினரையும் மதத்தினரையும் சமமாக மதித்துப் பழகியதுடன் தம் இல்லத் துக்கு அழைத்துச் சமமாக உணவருந்தியவர். மாப்பிள்ளை விலை (வரதட்சணை) வாங்காமல் திருமணம் செய்து கொண்ட துடன் தம் பிள்ளைகளையும் பின்பற்றச் செய்தார். தம் தந்தைக்கு அவர் விரும்பியதால் இறுதிச் சடங்கு (திதி) செய்த மாதவையா தமக்குச் செய்யக் கூடாது என்று கூறிவிட்டார். ‘பிரம்ம ஞானசபை’ வழியைப் பின்பற்றிச் சமய மூடநம்பிக்கைகளைத் தூக்கியெறிந்து வாழ்ந்தார். மாதவையா சென்னையில் தமிழர் கல்விச் சங்கம் (1917) தொடங்கி அதன் சார்பாகத் ‘தமிழர்நேசன்’ இதழ் நடத்தி அறிவியல் தமிழையும் கலைச் சொல் ஆக்கத்தையும் வளர்த்தவர். இவருடைய அண்ணன் நாராயண அய்யங்காரின் மகன் பெ.நா. அப்புசாமியும், வெ.ப.சு.வும், இராசாசியும் அறிவியல் தமிழில் ஈடுபட இவர் அடித்தளம் ஆவார். ‘ஆசிரியர் அச்சுப் பிரசுராலயம்’ என நடத்தித் தம் நூல்களை வெளியிட்டார். சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிமன்ற உறுப்பினராக இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் வழிக் கல்வி வேண்டும்; தமிழ் கட்டாயப்பாடமாக இருக்க வேண்டும்’ என்று சொற்பொழிவாற்றி அமர்ந்ததும் உயிர்நீத்தார். ‘தமிழ் படிக்கா மலேயே தமிழ்நாட்டில் பட்டம் பெறலாம்’ என்பதை மாற்ற ‘தமிழ் கட்டாயப்பாடம்’ என்று கொண்டு வருவதே மாதவை யாவுக்குச் செய்யும் நன்றிக் கடன்! அ.மாதவையா அ.மாதவையா இயற்பெயர் : மாதவையா புனைபெயர் : சாவித்திரி, குசிகர், நாரதர், அமுதகவி, இந்துதாசன், பம்பா பெற்றோர் : மீனாட்சி அம்மாள், அனந்தராமையர் என்னும் அப்பாவையர் பிறந்தநாள் : 16-08-1872 மறைவு நாள் : 22-10-1925 ஊர் : நெல்லை மா.பெருங்குளம் கல்வி : பெருங்குளம் : தொடக்கக் கல்வி; நெல்லை : இந்துப்பள்ளி, பதின்மக்கல்வி; நெல்லை : இலக்குமணப் போற்றி என்பவரிடம் தமிழ்க் கல்வி; சென்னை : கிறித்துவக் கல்லூரி; இளங்கலை. (பி.ஏ.) மணம் : 1887, மீனாட்சி பணி : சென்னை : கிறித்துவக் கல்லூரிவிரிவுரையாள ர் (1892); உப்புவரித் துறை : துணை ஆய்வாளர் (1892 முதல்), உதவி ஆணையர் (1922 வரை); இதழாசிரியர் : தமிழர் நேசன் (1917- 1924), பஞ்சாமிர்தம் (1924 வைகாசி- 1925 கார்த்திகை) புதினங்கள் : பத்மாவதி சரித்திரம் (1 பாகம் 1898, 2ஆம் பாகம் 1899, 3ஆம் பாகம் 1924-25) விஜய மார்த்தாண்டம் (1903), முத்துமீனாட்சி - ஒரு பிராமணப் பெண்ணின் ஸ்வசரிதை (1903), மோகினி மாசா (முற்றுப் பெறாதது) (1925) கதைகள் : பாலராமாயணம், பாலவிநோதக் கதைகள் (1923), குசிகர் குட்டிக் கதைகள் (1924) நாடங்கள்:திருமலை சேதுபதி (1910) மணிமேகலை துறவு (அகவற்பா, 1918), இராஜமார்த் தாண்டன் (1919), பாரிஸ்டர் பஞ்சநதம் (1924) மொழிபெயர்ப்பு : சேக்சுபியரின் ஒத்தெல்லோ: உதயலன் என்னும் கொற்கைச் சிங்களவன் (1903, திருத்திய பதிப்பு 1916) பாடல்கள் : பொதுதர்ம சங்கீத மஞ்சரி (1914), புது மாதிரி கல்யாணப்பாட்டுகள் (1925), இந்திய தேசிய கீதங்கள் (1925) உரைநடை : ஆசாரத்திருத்தம் (1916), சித்தார்த்தன் (1918), தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1925), தட்சிண சரித்திர வீரர் (1925) தொகுப்பு : குறள் நானூறு (உரையுடன்) 1924 ஆங்கில நூல்கள் : Dox vs Dox (1903) Thillai Govindan (1903), (in England 1916), Sathyananda (1909), Clarinda (1915), Lient Panju (1915), The story of Ramayana (1914), Markandaya (1922), Manimekalai (1923), Nanda (1923), Dalvai Mudaliyar (1924), Kusika’s short stories (1924). 34. அடுப்பெரிக்கப்பட்ட வழக்குத் தாள்கள் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததால் அங்குள்ள தேவாலயத்துக்குத் தமிழர் செல்ல முடியவில்லை. அதைச் சார்ந்த இந்திய எல்லையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாததுடன் நாள்தோறும் சிங்களப்படையால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்து தமிழர்களுக்குரியதாக இருந்த திருமலை (திருப்பதி)யை ஆந்திரர்களுக்குக் கொடுத்ததால் ஏழுமலையானை வழிபட ஏழுமடங்கு வரி செலுத்தித் தமிழர்கள் செல்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோயிலைக் கேரளத்து வனத்துறையினர் பிடியில் தொல்பொருள் துறையினர் விட்டதால் ஆண்டுக்கு ஒருமுறை கேரளக் காவல்துறையின் கெடுபிடியில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். திருவஞ்சைக் களத்தில் (திருவனந்தபுரம்) கேரள மக்களால் வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த சிலைகள் சேரமான் பெருமாள், சுந்தரர் ஆகியோருடையவை என்று நிறுவி ஆண்டு தோறும் குரு வழிபாட்டு நாளில் தமிழர்களை அழைத்துச் சென்றார் சிவக்கவிமணி சி.க.சுப்பிரமணிய முதலியார். கால்வழி தென்னாடுடைய சிவன் வடக்கே இமயமலை உச்சியில் அமர்ந்து பேசாமலேயே தன்கை முத்திரையால் உலகுக்கே வழிகாட்டினான் என்பர். அந்த இறைவனை 12 சூத்திரங்களிலே சிவ ஞானபோதம் என்று மெய்கண்டார் காட்டினார். அதனை விரிவாக்கிச் சிவஞான சித்தியாரைச் செய்தார் அருள்நந்தி சிவம். இதற்கு விளக்கவுரை சிவஞான மாபாடியம் எழுதினார் சிவஞான முனிவர். இவர் மாணவர் கச்சியப்ப முனிவர், இவர் மாணவர் கந்தப்பையர், இவர் மாணவர் திருத்தணிகை சரவணப் பெருமாள் அய்யர், இவர் மாணவர் சந்திரசேகரம் பிள்ளை, இவர் மாணவர் கந்த சாமி முதலியார் ; இவர் மாணவர் திருச்சிற்றம்பலம் பிள்ளை; இவர் மாணவர் சி வக்கவிமணி சி.க.சுப்பிரமணிய முதலியார் ஆவார். சிவக்கவிமணியின் தந்தை கந்தசாமி முதலியார் (1838-1890) வழக்குரைஞர் . பேரூர் க் கிள்ளை விடுதூது, ம ர கதவல்லி பிள்ளைத் தமிழ், பச்சை நாயகி அம்மன் ஆசிரிய விருத்தம் முதலிய பலநூல்கள் பாடியுள்ளார். சைவ சமயத்தைத் தாக்கிப் பேசிய கிறித்துவர்களுக்கு மறுப்புகள் எழுதினார். இவர் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரனார் ஆகியோரின் நண்பர். சைவத் தமிழ் கந்தசாமி முதலியார் 1866-இல் கோவையில் ‘சைவப் பிரசங்க சாலை’ என்று தொடங்கிச் சிவத் தமிழ் அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடக்கச் செய்தார். அவர் மகனாகிய சிவக்கவிமணி இச்சங்கத்தை மீண்டும் செயற்படுத்தினார். கோவைத் தமிழ்ச் சங்கம், சேக்கிழார் திருக்கூட்டம் என்ற அமைப்புகளையும் தொடங்கினார். கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார் கோவையில் 4 ஆண்டுகள் தங்கிப் பெரியபுராணச் சொற்பொழிவுகள் ஆற்றினார். அப்போது உடன் இருந்து கையேடு படித்து வந்தார் சிவக்கவிமணி. இதுவே சிவக்கவிமணி பெரியபுராணப் பேருரை எழுதத் தூண்டுகோலாயிற்று. சேக்கிழார் திருக்கூட்ட அமைப்பின் மூலம் அன்பர்களை அழைத்துக்கொண்டு பாடல்பெற்ற சிவத்தலங்கள் அனைத் துக்கும் சென்று வந்தார். நாள்தோறும் பன்னிரு திருமுறை களைப் படித்து ஓராண்டுக்குள் நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். ஊர்தோறும் சென்று சிவ சமயம் பற்றிச் சொற்பொழிவாற்றியதுடன் சிவ சமய மாநாடுகளில் தலைமை தாங்கிச் சிறப்புரையும் செய்தார். கோயில்களைப் பாதுகாத்துக் குடமுழுக்குச் செய்யவும், தேவாரம் ஓதவும் தூண்டுதல் புரிந்து நிதி உதவியும் செய்தார். பார்ப்பான் நந்தன் திருநீறும் உருத்திராக்கமும் அணிந்து சிவந்த மேனியும், மெலிந்த உடலும், கூர்மையான பார்வையும், இனிமையான சொற்களும் கொண்ட சிவக்கவிமணி எளிமையான உடை உடுத்தி அமைதியான தோற்றம் அளிப்பவர். ஞானியாரடிகள், வரதநஞ்சையம் பிள்ளை, ந.மு.வே. நாட்டார், புலவர் மணி கதிரேசன் செட்டியார், கோ.து.நாயுடு, வ.உ.சி., டி.கே.சி., ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலிய பலர் சிவக்கவிமணியின் நண்பர்கள் ஆவர். மதுரை, திருப்பனந்தாள், திருவாவடுதுறை, சூரியனார்கோயில் சிவமடங்களுக்கு அடிக்கடிச் சென்று அவற்றின் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியும் வந்தார். நந்தனைப் பார்ப்பானாக்கி உயர்த்திப் பிடித்தார் பாரதி. நந்தன் தீக்குளித்தபின் தில்லைக் கோயிலுக்குள் வரலாம் என்றனர் தில்லைப் பார்ப்பனர்கள். சேக்கிழாரோ தில்லைக் கோயில் பார்ப்பனர்கள் நந்தனார்க்குத் திருநீறு பூசி முனி வராக்கியதைப் பாடியுள்ளார். இந்தப் பாடல்களும் ஆலால சுந்தரர் காதற்பாடல்களும் சேக்கிழார் பாடியவை அல்ல என்று ஆரியச் சார்பான உயர்சாதிச் சைவர்கள் சிலர் வாதிட்டத்தைச் சிவக்கவிமணி மறுத்தார். வாழ்வியலிலும் அனைவரிடமும் சமமாகப் பழகினார். சிவக்கவிமணியின் பெரியபுராணச் சொற்பொழிவைக் கேட்டு அவரது சிவப்பற்றையும் தமிழாற்றலையும் வியந்து பாராட்டிய சிவ அன்பர்களும் சிவ மடங்களின் தலைவர்களும் உரை எழுதித் தரும்படி வேண்டினர்; அவர் எழுதத் தொடங் கியதும் நூலாக அச்சிடப் பெரும் பொருளுதவி செய்தனர். தில்லை ஆயிரக்கால் மண்டபத்தில் சேக்கிழார் திருநாளில் 05-06-1935 இல் சிவக்கவிமணியின் உரை முதற்பகுதி அரங்கேற்றப் பெற்றது. பின் முழுநூலும் 06-05-1954 இல் தில்லையில் ஆயிரக்கால் மண்டபத்தில் அரங்கேறியது. யானையின் மீது உரை நூல்களை வைத்துத் தேவார இசையும் மங்கல இசையும் முழங்கத் திருவீதி உலா எடுத்து வந்தனர். தமிழவேள் பி.டி.இராசன் முன்னிலையில் மதுரை மடத்தின் தலைவர் தலைமையில் விழா நடைபெற்றது. இரா.பி.சேதுப்பிள்ளை, அ. சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் முதலிய பேரறிஞர்கள் சிறப்புரை ஆற்றினர். திருவையாறு அம்மன் கோயில் திருப்பணிச் செல்வர் தேவக்கோட்டை சேவு மெய்யப்பச் செட்டியார் சிவக்கவிமணி நூலுக்குப் பத்துப் பவுனில் தங்கத்தில் உறை (அட்டை) செய்திருந்தார். “முதலி யாரின் பொன்னுரைக்குச் செட்டியாரின் பொன்னுறை” என்று பாராட்டினார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். தமிழையும் தமிழறிஞர்களையும் மதித்த காலம் அது! வ.உ.சி. வழக்கு இந்திய நாட்டு விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற தொண்டர்களுக்காகவும் தலைவர்களுக்காகவும் ஊர் ஊராக மேடைகளிலும், வழக்கு மன்றங்களிலும் பேசியவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. ஆனால் சிறைப்படுத்தப் பெற்ற அவருக்காக வழக்காட யாருமில்லை. ஆன்மிகத்தில் மூழ்கிக் கிடந்த சிவக்கவிமணி அவருக்காக வழக்கு மன்றில் வாதாடத் தொடங்கினார். ஆங்கிலேய அரசின் எதிரி என்று சிவக் கவிமணியை உளவுத் துறையின் கழுகுப்பார்வை கண் காணித்தது. அரசுக்கு எதிரான ஆவணங்களைக் கைப்பற்றி வ.உ.சி.க்கு அதிகத் தண்டனை பெற்றுத் தரவும், சிவக் கவிமணியை சிறையில் தள்ளவும் உளவுத்துறையினர் சிவக் கவிமணியின் வீட்டுக்குள் அதிரடியாக நுழையப் புறப்பட்டனர். காட்டிக் கொடுக்கும் கோடரிக் காம்புகளுக்கு இடையில் வேரைக்காக்கும் விழுதுகளும் இருக்கத்தானே செய்கின்றன! உளவுத்துறை வருவதற்குச் சிறிது நேரத்திற்கு முன், வீட்டில் இருந்த சிவக்கவிமணியின் மனைவி மீனாட்சியிடம் சிறைத் துறையில் இருந்த ஓர் தமிழன்பர் அதனைத் தெரிவித்து விட்டு உடனே மாயமாய் மறைந்தார். கணவர் வெளியூர் கோயில் சொற்பொழிவிற்குச் சென்றிருந்ததால் என்ன செய்வதென்று திகைத்துத் தடுமாறிய மீனாட்சி, துணிந்து முடிவுக்கு வந்த வராய், வ.உ.சி. தொடர்பான வழக்குக் கட்டுகளின் தாள்களை அடுப்பில் போட்டு எரித்தார். அடுத்த சில நொடிகளில் உளவுத் துறை நுழைந்தது. வ.உ.சி. வழக்குச் செய்திகளோ வேறு ஆவணங்களோ கிடைக்காததால், சிவக்கவிமணி தொகுத்து எழுதியிருந்த சிவ சமய இலக்கியம் பற்றிய சுவடிக்கட்டுகளைக் கமுக்க (இரகசிய)க் குறிப்புகளோ என ஐயுற்று இருப்பவற்றை அள்ளிக் கொண்டு மீனாட்சியை மிரட்டி விட்டுச் சென்றனர் உளவுத்துறையினரும் காவல் துறையினரும். வ.உ.சி. வழக்கு நடத்தும்போது அதற்குரிய வழக்குக் கட்டு இல்லாமலும் சொற்பொழிவின்போது சிவ சமய இலக்கியக் குறிப்பேடுகள் இல்லாமலும் சிவக்கவிமணி மிகவும் இடர்ப்பட்டார். நன்றி மறவாத நல்ல தமிழர் வ.உ.சிதம்பரனார் தம் மகனுக்குச் சுப்பிரமணியன் எனச் சிவக்கவிமணியின் பெயரையும், மகளுக்கு மீனாட்சி எனச் சிவக்கவிமணியின் மனைவி பெயரையும் சூட்டினார். அறப்பணி கையில் கிடைத்தவற்றைக் கண்டவர்க்கெல்லாம் கொடுக் கும் கொடை உள்ளம் சிவக்கவிமணியிடம் இளமை முதலே இருந்தது. கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.) படித்து முதல் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற சிவக்கவிமணிக்குப் பொற் பதக்கமும் பணப்பரிசும் கிடைத்தன. பொற்பதக்கத்தைத் திருப் போரூர்க் கோயிலுக்கு அளித்தார். பணத்தைத் தம் ஆசிரியர் திருச்சிற்றம்பலம் பிள்ளையிடம் அவர் எழுதிய ‘மாணிக்க வாசகர்’ என்ற நூலை அச்சிட்டு வெளியிட அளித்தார். பெரிய புராண உரை அரங்கேற்றத்தின்போது கிடைத்த பொற் பதக்கத்தைத் தம் துணைவியார்அணிந்திருந்த தங்கச் சங்கிலியில் கோத்துப் பேரூர் அம்மனுக்குச் சாத்த அளித்தார். தமக்குப் போர்த்தப்படும் பொன்னாடைகளைத் தேவார ஓதுவார்களுக்கு அளிப்பது அவர் வழக்கம். குழந்தைகள் இல்லையாதலால் மனைவி இறந்தபின் தம் செல்வத்தின் பெரும் பகுதியை அறக் கட்டளைகள் ஆக்கினார். மதுரை திருஞானசம்பந்த மடத்தில் 1958-இல் துறவு ஏற்றுச் ‘சம்பந்த சரணாலயர்’ எனப் பெயர் பெற்றார். சிவக்கவிமணி சி.க. சுப்பிரமணிய முதலியார் சிவக்கவிமணி சி.க. சுப்பிரமணிய முதலியார் இயற்பெயர் : சுப்பிரமணியன் சிறப்புப் பெயர் : கோவை சி.க.சுப்பிரமணிய முதலியார் சிவக்கவிமணி (1940, சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம்), திருமறை ஞானபானு (1954, மதுரை திருஞான ச ம் ப ந் த ர் ம ட த் தி ன் த i ல வ ர் வழங்கியது) சம்பந்த சரணாலயத் தம்பிரான் சுவாமிகள் (1958, துறவு ஏற்றபின்) பெறறோர் : வடிவம்மையார், வழக்கறிஞர் கந்தசாமி முதலியார் பிறந்தநாள் : 20-02-1878 மறைவு : ...1961 ஊர் : கோவை (கோசன்புத்தூர் / கோயன்புத்தூர் கோயம்புத்தூர் / கோயமுத்தூர்) கல்வி : கோவை: யாழ்ப்பாணம் சோமசுந்தரம் பிள்ளையிடம்; அரசினர் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக்கல்வி, இடைநிலைக் க ல்வி; சென்னை : மாநி ல க் க ல்லூரி : இளங்கலை (பி.ஏ) தத்துவம், சட்டக் கல்லூரி : இளம் சட்டவியல் (பி.எல்) 1903 மனைவி : மீனாட்சி பணி : வழக்குரைஞர், இந்து சமய அறநிலையத் துறை : கோவை வட்ட தேவத்தான உறுப்பினர் (9 ஆண்டு), செயலாளர் 10 ஆண்டு; கோவை நகராட்சி உறுப்பினர், பின் துணைத் தலைவர்; சென்னைப் பல்கலைக்கழகம் : தமிழ் மொழிச் சார்பாளர் (பிரதிநிதி), தமிழ்ப் பேரகராதித் திட்ட உறுப்பினர்; தில்லை (சிதம்பரம்) நடராசர் கோயில் திருப்பணிக் குழுத் தலைவர் 1946 படைப்புகள் : பெரியபுராண விளக்கவுரை (முதற்பகுதி 1935, முழுதும் 1954), சேக்கிழார் (சென்னைப் பல்கலைக்கழகம், அறக்கட்டளைச் சொற்பொழிவு), சேக்கிழாரும் சேயிழையாரும், சேக்கிழாரின் செம்மணித்திரள், வாகீசர் அல்லது மெய்யுணர்தல், மாணிக்கவாசகர் அல்லது நீத்தார் பெருமை, கருவூர்த்தேவர் வரலாறு, திருத்தொண்டர் புராணத்தில் முருகன். 35. துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி! “தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம், வாழ்நாள் முழுதும் தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப் பூச்செண்டு” - என்று இரசிகமணி தி.க. சிதம்பரநாதனாரால் பாராட்டப் பெற்றவை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகள். தமிழ்மகனின் மகன்/மகள், “பச்சைக் கிளியே வா வா! பாலுஞ் சோறும் உண்ண வா! கொச்சி மஞ்சள் பூச வா! கொஞ்சி விளையாட வா!” என்று கவிமணியின் பாடல்களைப் பாடத் தெரியாமல், படிக்கத் தமிழ் எழுத்துகளும் தெரியாமல் ஆங்கிலத் தில் “மழையே மழையே போ! போ!” என்று பாடி உழவர்கள் எதிர்பார்க்கும் மழையை விரட்டுகிறார்கள். தமிழகப் பெண்கள் கொச்சி மஞ்சள் பூசுவது எங்கே? மஞ்சளும் இஞ்சியும் வேம்பும் வெள்ளைக் கொக்குகளின் காப்புரிமையில் சிக்கிடப் பார்க் கின்றன. தமிழை விட்டால் தன்மானம் காக்க முடியுமா? குழந்தைக் கவிஞர் கவிமணி அன்பும் விருந்தோம்பும் பண்பும் கொண்டவர். திருவனந்தபுரத்தில் இருந்தபோது, பக்கத்து வீட்டினர் தம் வீட்டில் இடம் போதாது என்பதால், கவிமணியின் வீட்டில் விருந்து நடத்தினர். அப்போது ஓர் தொலைவரி (தந்தி) வந்தது. வாங்கிமடித்துப் பைக்குள் வைத்துக் கொண்ட கவிமணி, விருந்து முடிந்தபின் அதனை எடுத்துப் படித்தார். உடனே நாகர்கோயில் புறப்பட்டார். ஆம்! தொலைவரியில் அவர் மருமகள் இறந்து விட்டாள் என்ற செய்தி வந்திருந்தது. பள்ளியில் படிக்கும்போது ஆசிரியரின் நாற்காலியில் தாம் எழுதிய கவிதை ஒன்றை வைத்தார். ஆசிரியர் வந்ததும் அக் கவிதைத் தாளை எடுத்துப் படித்து, யாரோ ஒரு சிறந்த புலவர் இயற்றியதாக இருக்கவேண்டும் என்று கூறி, அப்பாடலைப் படித்து நயம் கூறிப் பாராட்டினார். அப்போதும் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளாத அவரைப் பிற்கால உலகம் கவிமணி எனப் பாராட்டியது. அவர் இளமை தொட்டு எழுதிய பாடல்களே ‘மலரும் மாலையும்’ என்ற நூலாகும். குழந்தைகளுக்குப் புரியக் கூடிய எளிமையான பாடல்களும் தாலாட்டுப் பாடல்களும் கொண்டது இந்நூல். துள்ளாத தேசியம் ‘இந் தியாவுக்கு ஆகத்து 1 5 -இல் ஆங் கிலேய அர சு வி டு த லை த ந் தாலும் நாங் கள் தனி நாடு தான்’ என்று திருவனந்தபுரம் சிற்றரசின் தலைமை அமைச்சர் (திவான்) பதவியில் இருந்த சர்.சி.பி. இராமசாமி அய்யர் கூறினார். அந்த அளவுக்கு இந்திய விடுதலைப் போரிலும் தேசிய அரசிய லிலும் கலக்காமல் இருந்தது திருவனந்தபுரம் சிற்றரசு. அங்கு ‘மகாராசா’ பள்ளியி லு ம் க ல்லூரி யி லு ம் பணியாற் றி ய க வி மணி, இ ந் தி ய வி டு த லைப் போராட் ட த் தி ன் வீ ச் சு அற் ற வ ராக த் தான் இருந்தார். வேல்சு இளவரசர் 1905-இல் இந்தியா வந்தபோது பாரதியார் வரவேற்புப் பாடல் பாடியது போல, 1921-இல் வேல்சு இளவரசர் இந்தியா வந்தபோது கவிமணி வரவேற்புப் பாடல் பாடி வாழ்த்தினார். “பாற்கடல் உதித்தெழுந்த பாக்கியமே, தனிமுதலைத் தொழுதடைந்த தவப்பயனே”, என்ற வேல்சு இளவரசருக்குப் பாடும் வாழ்த்து நாட்டினில் பொங்கி வழிந்த உரிமை உணர்வைப் புறக்கணித்து, வெறும் மொழிப்புலமை விளையாடும் முகமனாக முழுமை பெறாத கவிதைப் படைப்பாய் முறிந்து நிற்கிறது” - என்று கா. திரவியம் மதிப்பீடு செய்கின்றார். காந்தி யடிகளின் தலைமையை ஏற்று விடுதலைப் போராட்டம் பரவிய போது, கவிமணியும் ஏற்றார்; காங்கிரசு கப்பல், கதர்விற்பனை, வட்டமேசை மாநாடு எனப் பாடினார். ஆயினும் இவை பரப்புரைப் பாடல்களாகவும் விண்ணப்பப் பாடல்களாகவும் உள்ளனவே தவிர வீர எழுச்சிப் பாடல்களாக இல்லை. ‘கதரை வாங்குங்கள் கதிமோட்சம் தாருங்கள், நூருபேருக்கு அன்ன மளித்த பயன்’ என்று நெசவு செய்யும் ஏழைப் பெண் கதறு வதாய்ப் பாடியுள்ளார். ஆங்கிலேய / அயலார் ஆட்சிக்கு எதிராக இந்துக்களும் மகமதியரும் ஒற்றுமையாக இருக்க மாட்டார்களா என்று கவலைப்பட்டுப் பாடியுள்ளார். உலகப் போரால் ஏற்பட்ட பட்டினிக்கும் தேசியத் தலைவர்கள் சிறைப் பட்டதற்கும் கண்ணீர் மல்கிக் கவிதை படைத்துள்ளார். மக்கள் கவிஞர் நாஞ்சில் நாட்டில் (நாகர்கோயில் பகுதி) ஒருவருடைய சொத்து அவர் பெற் ற பிள்ளைகளுக் கு உரிமையில்லை அவருடைய உடன் பிறந்தாள் பிள்ளைகளுக்கே சேரும். இதனை மருமக்கள் தாயமுறை என்பர். பழமை வாதிகளின் இக்கருத்துக்கு மக்களிடையே எதிர்ப்பு இருந்தது. இவ்வழக்கத்தை எதிர்த்து ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்’ என்ற கவிதைத் தொட ரை த் ‘ தமிழன்’ இதழில் 1 9 1 7 - 1 9 1 8இல் கவிமணி எழுதினார். அரசு மருமக்கள் தாயமுறையை நீக்கி 1926-இல் சட்டம் கொண்டு வந்தது. திருவனந்தபுரம் சிற்றரசில் இருந்த பார்ப்பனர்கள் வட மொழி, மலையாளம், தெலுங்கு ஆகியவற்றை ஆதரிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளைப் பிரித்தெடுத்துக் கொள்ள முற்பட்டனர். அதனால் குமரி, நெல்லை, நாகர்கோயில் பகுதித் தமிழர்கள் பெரிதும் போராட வேண்டியிருந்தது. நாகர்கோயில், திருவனந்தபுரம் முதலியவை தமிழகத்துக்கு உரியவை எனக் கவிமணி போரா டினார். அவர் மறைவுக்குப் பின் 1956-இல் நாகர் கோயில் மட்டுமே தமிழகத்துக்குக் கிடைத்தது. தமிழ் நிலங்களாகிய திருமலை (திருப்பதி)யை ஆந்திரத் திடமும், வெங்காலூரை (பெங்களூர்)கருநாடகத்திடமும், திருவனந்தபுரத்தைக் கேரளத்திடமும் பறிகொடுத்தது அக்கால அரசியல் தலைவர்களின் மாபெரும் குற்றம் ஆகும். கவிதையும் கல்வெட்டும் மாற்று மொழிக் கவிதைகளை மொழிபெயர்த்துத் தமிழுக் குக் கொண்டு வந்தார் கவிமணி. மத்தேயு ஆர்னால்டு என்பவர் இயற்றிய ‘லைட் ஆஃப் ஆசியா’ என்ற ஆங்கிலக் கவிதை நூலை ஆசிய சோதி என மொழி பெயர்த்தார். புத்தர் வரலாற்றை அழகிய தமிழில் பாடியுள்ளார். உமர் கயாமின் ‘ரூபாயத்’ என்னும் பாரசீக மொழிக் கவிதை நூலின் ஆங்கில மொழி பெயர்ப்பைத் தழுவித் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் கவிமணி. மொழி பெயர்ப்புக் கவிதைகளுக்கு முன்னோடி யாகவும் இனிய தமிழிலும் கவிமணியின் பாடல்கள் சிறப்புப் பெறுகின்றன. சுசீந்திரம், நாகர்கோயில், பூதப்பாண்டி, குமரி முதலிய பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுகளையும் செப்பேடு களையும் தொகுத்துத் தந்தார் கவிமணி. இவரது காந்தளூர்ச் சாலை என்ற நூல் சிறந்த வரலாற்று ஆய்வு நூலாகும். சிரிப்புக் கவிஞர் : எளிமையும் மென்மையான மனமும் நகைச்சுவைக்குத் தேவை. ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்’ என்ற குறுங்காப்பியத்தில் நகைச்சுவை பொங்கும் நிகழ்ச்சிகளை அமைத்துச் சிரித்துச் சிந்திக்க வைத்துள்ளார் கவிமணி. நாகர்கோயில் அருகில் புத்தேரியில் சிறு இல்லத்தில் முனிவர்போல் வாழ்ந்த அவர், தென்தமிழ் நாட்டுக்கு வரும் தமிழறிஞர்களைத் தம்மில்லத்திற்கு அழைத்து விருந்தளித்தார். குழந்தைகளுக்காகப் பாடியவரும், குழந்தையுள்ளம் கொண்ட வரும் ஆகிய கவிமணி, தம் பிற்காலத்தில் தம் பேரக்குழந்தைகள் கூட அருகில் வரமுடியாத அளவுக்குத் தோல்நோய் மிகுந்து துன்பப்பட்டார். சிரங்குகள் மிகுந்து சீழும் நாற்றமுமாய்க் கிடந்தபோதும் குழந்தைகளுக்காகப் பாடல்களை எழுதிக் கொண்டே இருந்தார். தீண்டாமைக் கொடுமை, நெசவாளி களின் துன்பம், உலகப் போரின்போது ஏழைகளின் பட்டினி ஆகியவற்றுக்காக அழுது பாடிய அவர், தம் சிரங்கு களுக்காகச் சிரிப்புடன் பாடினார்: “முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம் பத்தியொளி வீசப் பதக்கமெல்லாம் - சித்தன் சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத் தரங்கண்டு தந்த தனம்.” ஓவியக் கவிஞர் கவிமணி குழந்தைகளுக்கான பாடற்நூற்குழுவில் இருந்தார். ஓர் ஓவியர் வரைந்திருந்த படங்களில் திருத்தம் செய்ய வேண்டி உள்ளது என்று கூறினார். பல ஆண்டுகளாகப் புகழுடன் விளங்கும் ஓவியர் மிகுந்த சீற்றத்துடன் கவிமணியிடம் வந்தார். அய்யா, நீங்கள் மிகப்பெரும் கவிஞர்தான். ஆனால் ஓவியர் இல்லை. நான் ஓவியக்கலையில் பல பரிசுகள் வாங்கியவன்” “உங்கள் ஓவியங்கள் மிகவும் அழகு வாய்ந்தவை. அதை நான் குறைசொல்லவில்லை. நீங்கள் என்னை வெறும் கவிஞர்தான், ஓவியர் இல்லை என்றீர்கள். உண்மைதான். ஆனால் நல்ல கவிஞனும் ஓவியனும் கண்களால் நன்றாக உலகத்தை உள்வாங்கிக் கையில் தருதல் வேண்டும்” “நான் பார்ப்பதை அப்படியே வரைவேன்” “கிளியை வரைந்திருக்கின்றீர்கள், மணிப்பொறியை (கடிகாரத்தை) வரைந்திருக் கின்றீர்கள். இதோ பாருங்கள் உங்கள் படங்களை! கிளியைப் பார்த்திருக்கிறீர்களா?” ஓவியர் மிகுந்த சினம் கொண்டவராக, “கிளியைக் கூடவா நான் பார்த்ததில்லை? கிளியைப் பார்க் கவில்லை என்றாலும் இதோ எதிரே இருக்கின்ற மணிப்பொறியைக்கூடவா நான் பார்க்கவில்லை?” - என்று கேட்டார் ஓவியர். கவிமணி படங்களைக் காட்டிக் கூறினார், “ஓவியரே! அந்த மணிப்பொறியில் பாருங்கள்! நான்கு என்பதற்கு நான்கு கோடுகள் இருக்கின்றன! நீங்கள் ஒருகோடும் கவையும் (iv) வரைந்திருக்கிறீர்கள்” ஓவியரின் சுரம் இறங்கியது. மெல்லக் கேட்டார் : “கவிமணி அய்யா, கிளியில் என்ன குறை? சொல்லுங்கள், திருத்திக் கொள்கிறேன்!” “ஓவியரே! கிளிக்கு முன்புறம் தெரிகிற காலில் ஐந்து விரல் கள் வரை ந் தி ரு க் கி றீ ர் கள்; நான்கு விரல் கள்தான் ஒவ்வொரு காலிலும்!” மறுமலர்ச்சிக் கவிஞர் மிக எளிய கவிதைகளில் புரிந்து கொள்ளக் கூடிய மொழி நடையில் புரிந்து கொள்ள வேண்டியவற்றைப் பாடியவர் கவிமணி. பெண்கள் முன்னேற்றம், தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு, தமிழிசை, தேசியம் பாடினார். கோயில் கோபுரங் களிலோ சிலை களிலோ கடவுள் இல்லை , அன்புடை ய நெஞ்சங்களில் குடியிருப்பதாகப் பாடியுள்ளார். “ மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம்செய்திட வேண்டுமம்மா” என்று பெண்மை யைப் போற்றியவர் கவிமணி. “பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு, நீடுலகில் உண்டோ நிகர்” என்று தமிழிசை இயக்கத்துக்குக் குரல் கொடு த் ததுட ன் ‘தேவியின் கீர்த் தனங் கள்’ என ப் ப ல சீர்த்தனைகளைப் பாடியுள்ளார். தேசியப் பாடல்களில் துள்ளாத கவிமணியின் கவிதைஉணர்ச்சி, குழந்தைப் பாடல்களில் துள்ளிக் குதிக்குது! கவிமணியின் சீ ர் த் தனைகளை மேடைகளில் பாடுவதை தமிழி சை வள ர் க் கு ம் வ ழி! தமிழ ர் களின் கு ழ ந்தை கள் , கவிமணியின் குழந்தைப் பாடல்களைப் பள்ளிகளில் பயில்வதே தமிழ்க் கல்வியை வளர்க்கும் வழி! கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இயற்பெயர் : தேசிக விநாயகன் சிறப்புப் பட்டம் : கவிமணி (24-12-1940 சென்னை மாநிலத் தமிழ்ச் சங்கம் வழங்கியது) புனைபெயர் : தே.வி, தேவி, ஆண்டான் கவிராயன், குயில், ஐயம்பிள்ளை, யதார்த்தவாதி பெற்றோர் : ஆதிலட்சுமி அம்மையார், தாணுப்பிள்ளை பிறந்த நாள் : 28-10-1876 மறைந்த நாள் : 26-09-1954 ஊர் : தேரூர், சுசீந்திரம் அருகில் கல்வி : தேரூர் : தொடக்கக் கல்வி; வாணன்திட்டு : திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ்க் கல்வி; கோட்டாறு : ஆங்கிலப்பள்ளி, நாகர்கோயில் : ஸ்காட் கிறித்துவக் கல்லூரி : முன்னிலைப் படிப்பு (எஃப்.ஏ) திருவனந்தபுரம் : ஆசிரியப் பயிற்சிப் பள்ளி பணி : கோட்டாறு : தொடக்கப்பள்ளி ஆசிரியர். நாகர்கோயில்:ஆசிரியப் பயிற்சிப் பள்ளி ஆசிரியர். திருவனந்தபுரம்: மகாராசா பெண்கள் உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர். திருவனந்தபுரம்: மகாராசா மகளிர் கல்லூரி: தமிழ் ஆசிரியர். (விருப்ப ஓய்வு : 1913) சென்னைப் பல்கலைக்கழகம் : பேரகராதித் திட்டம் : சிறப்பு ஆய்வுரைஞர் (1926-1936). 85 திருவிதாங்கூர் பல்கலைக்கழகம்: தமிழ்ப் பாடக் குழு உறுப்பினர் (1941) படைப்புகள் : அழகம்மை விருத்தம், மலரும் மாலையும், நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான் மியம் (‘தமிழன்’ இதழில் 1917 மார்ச்சு - 1918 மார்ச்சு : தொடர்கவிதை) தேவியின் கீர்த்தனங்கள், ஆசிய சோதி, உமர்கயாம் பாடல்கள், கவிமணியின் உரை மணிகள், காந்தளூர்ச் சாலை 36. குடிப்பதைத் தடுப்பதே கோடி கோடி புண்ணியம் அழகான சிறிய தொடக்கப் பள்ளிக் கூடத்தில் ஓர் வகுப்பறை. பாடம் எடுக்கும் ஆசிரியரின் சொற்களைக் காது கேட்டுக் கொண்டிருக்கும்; கை மட்டும் தாளில் ஆசிரியரின் முகத்தோற்றம், உருவம், நிற்கும் நிலை ஆகியவற்றை அப்படியே நிழற்படம் எடுத்தது போல்வரைந்து கொண்டிருக்கும்; மேலும் கீழும் தாவும் கண்களை வைத்து இதனை ஆசி ரி யர் கள் கண்டுபிடித்துப் பரிசாகப் பிரம்படி பூசை தந்தார்கள். பாராட்டும் பதக்கமும் வகுப்புக்கு வந்த தலைமை ஆசிரியர் எலியட்டு பாடம் நடத்தும் போது அம்மாணவர் படம் வரைவதைக் கண்டு பிடித்து விட்டார். தம்மை அச்சடித்தாற்போல மிக அழகாக வரைந்திருந்த திறமையைக் கண்டு மகிழ்ந்து பாராட்டினார். ஓவியம் வரையப் பயன்படும் தூரிகை (புருசு) ஒன்றைப் பரிசாகத் தந்தார். அந்த மாணவர்தான் இராமலிங்கம். சிம்சன் என்ற பொறியாளர் தம் குழந்தை திடீரென்று இறந்ததால், உயிருடன் இருந்தபோது ஒரு நிழற்படம் கூட எடுக்கவில்லையே என்று வருந்தினார். மாணவர் இராமலிங்கம் வரைந்திருந்த ஓவியங்களைப் பார்த்த சிம்சன் தன் குழந்தை இறந்தபின் எடுத்த நிழற்படத்தைக் கொடுத்துக் குழந்தையை உயிர்ப்புடன் வரையச் சொல்லி, ஐம்பது உரூபாய் தருவதாகச் சொன்னார். அந்த மாணவர் வரைந்து கொண்டுபோய்க் கொடுத்ததும், குழந்தை உயிருடன் உள்ளதுபோல் இருப்பதைக் கண்டு உணர்ச்சி மேலிட்டுப் பையில் கையை விட்டு இருப்பவை எல்லாம் கொடுத்தார். அந்த மாணவர் ஐம்பது உரூபாய் போதும் என்று கூறியும், சிம்சன், “இறைவன் உன் திறமைக்கு அளித்த பரிசு” என்று கூறிவிட்டார். மொத்தம் 675 உரூபாய் இருந்தது. ஆசிரியர்கள் கொடுத்த பிரம்படி வலியை ஆங்கி லேயர் கொடுத்த பரிசுகள் போக்கிவிட்டன. படிப்புக்குப் பின் சில காலமே எழுத்தாளராகவும், ஆசிரி யராகவும் பணியாற்றிய அவர் முழுநேர ஓவியர் ஆனார். ஒரு படத்துக்கு ஆயிரம் உரூபாயும் அதற்கு மேலும் தந்து வரைந்து கொண்டு சென்றனர் செட்டிநாட்டுப் பணக்காரர்கள். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டுவிழா தில்லியில் 1912 திசம்பர் 12ஆம் நாள் நடைபெற்றது. பொறியாளரும் நிழற்படக் கலைஞரும் தமிழறிஞருமாகிய பா. வே. மாணிக்க நாயக்கரும், நாமக்கல் லாரும் உந்துருளியில் (மோட்டார் சைக்கிளில்) தில்லி சென்ற னர். சென்னை அரசின் சார்பில் பா. வே. மா. நிழற்படம் எடுத்தார் . பாரத அன்னையே இங்கிலா ந்து அர சருக் கு முடிசூட்டுவதாகவும், பக்கத்தில் அரசியார் இருப்பதாகவும் தாம் வரைந்த ஓவியத்தை நாமக்கல்லார் அரசரிடம் அளித்தார். மகிழ்ந்த அரசியார் பொற்பதக்கத்தைத் தம் கையாலேயே நாமக்கல்லாருக்கு அணிவித்தார். ஆங்கில அரசை ஏற்றுக் கொண்டு வாழ்ந்த காலச்சூழல் அது. வெ.ப.சு. முதலியார் தாம் இயற்றிய அகலிகை வெண்பாவின் இறுதிப் பாடலாக முடி சூட்டுவிழா வாழ்த்துப் பாடல் பாடியுள்ளார். முதற்பாட்டு நாமக்கல்லார் சிறுவனாயிருந்த போது ‘கோவலன் நாடகம்’ என்ற தெருக்கூத்துப் பார்த்துவிட்டு இரவு நீண்ட நேரம் கழித்து வீட்டுக்குப் பசியோடு வந்தார். பழனியக்காளும் நாத்தனாரும் அவருக்குச் சோறு போடாமல் தமக்குள் சண்டை யிட்டுக் கொண்டிருந்தனர். நீண்டநேரம் பொறுத்துப் பார்த்த அவர், தாம் கேட்ட நாடகப் பாட்டின் சந்தத்தில் (மெட்டில்), “நாத்தனாரும் நாத்தியுமாய் நடுவீட்டில் சண்டையிட்டார் சோத்துக்காக வந்தேனம்மா சோறும் காணோம் நீரும் காணோம் சோறுபோட வந்தீர்களா? - இங்கே சண்டை போட வந்தீர்களா?” - என்று பாடிக் கொண்டே குதித்துக் குதித்து ஆடினார். அந்நேரத்தில் வீட்டில் நுழைந்த அவருடைய தந்தை (காவல் துறைஎழுத்தர்: ஏட்டு) ஓசையில்லாமல் பின்னாலிருந்தே இதைக் கண்டு கேட்டு மகிழ்ந்ததுடன் உடனே தம்முடைய காவல் துறை நாட்குறிப்பில் இந்தப் பாடலையும் எழுதி வைத்துக் கொண்டார். பிற்காலத்தில் நாமக்கல்லார் இந்திய விடுதலைப் போராட்டப் பாடல்களைப் பாடியபோதும் ஆங்கிலேய அரசின் உளவுப் பிரிவினர் தம் காவல் துறை நாட்குறிப்பில் இவர் பாடல்களை எழுதிக் கொண்டனர். பாரதி பாட்டு தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.எசு.விசுவநாத அய்யர், கோகலே ரானடே பெயர்களில் கவிதைப் போட்டி நடத்தினார். அதற்குப் பாரதியார் கவிதை எழுதி அனுப்பினார். அவர்தான் பரிசு பெறுவார் என்பதால் மதுரை மு.ரா.கந்தசாமிக் கவிராயர் கவிதை எழுதி அனுப்பாமல் இருந்துவிட்டார். நாமக்கல்லார் எழுதி அனுப்பிய ‘நாட்டுக் கும்மி’ பரிசு பெறும் தகுதியில் இருந்தது. போட்டியை நடத்தியவர்கள் மிதவாதப் பிரிவினர். தீவிரவாதப் பிரிவுத் தலைவர்களாகிய திலகர், அரவிந் த ர் ஆகியோரைக் கடவுளரா க உருவகப் படு த் தி வாழ்த்திப் பாடியிருந்த கடவுள் வாழ்த்துப் பகுதியை நீக்குமாறு கூறினர் . நாம க் கல்லா ர் மறுத்து விட்டதால் முத ற்ப ரி சு அவருக்குக் கிடைக்கவில்லை . ‘ இ ந் தி ய க் கு ம் மி ’ பாடி ய மாதவையாவுக்கு முத ற் ப ரி சு கிடைத்தது. பாரதியாருக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. பாரதியாரை நேரில் சந்தித்து ஓவியம் தீட்ட வேண்டும் என்பது நாமக்கல்லாரின் நெடுநாளைய விருப்பம். ஒருமுறை அவரைச் சந்தித்துத் தாம் ஓவியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பாரதியார் ‘கடகட’ என்று சிரித்தார். “ஓ! நீர் ஓவியரா? நீர் எம்மை ஓவியம் தீட்டும்! நாம் உம்மைக் காவியம் தீட்டுகிறோம்!” “நானும் கொஞ்சம் பாடுவேன்” “அடே! அடே! நம்முடைய இனமா? எங்கே... கொஞ்சம் பாடும்... பாடும்...!” நாமக்கல்லில் வந்து தங்கி இரண்டு ஆண்டுகள் நாடகம் நட த்தி க் கொண்டிருந்தார் கிட்டப்பா . நாமக்கல்லார் அவருடைய நாடகங்களுக்குப் பாடல் எழுதிக் கொடுப்பது வழக்கம். கிட்டப்பா நடத்திய ‘லவகுசா’ என்ற இராமாயண நாடகத்துக்குத் தாம் எழுதிய, “தம் அரசைப் பிறர் ஆளவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்றபோதும்...” என்ற பாடலைக் கணீர் என்ற குரலில் இசையுடன் பாடி னார் நாமக்கல்லார். பாடலைக் கேட்டுத் துள்ளிக் குதித்த பாரதியார், “பலே, பாண்டியா! நீர் ஒரு புலவன்! அய்யமில்லை” என்று பாராட்டினார். இராஜாஜியும் காந்தியும் “பொய் சொல்லாதே! போக்கிரி என்று பெயர் எடுக்காதே!” என்று தாயார் கூறிய இரண்டு அறிவுரைகளையும் ‘தாய் த ந் த த ன ம் ’ என் று கு றி ப் பி டு ம் நாம க் க ல் லார் , கா ந்தி யடிகள் த ம் தாய் மொழியை ப் போற்றியது போல் போற்றிப் பின்பற்றி வாழ்ந்தார். நலத்துறை (சுகாதாரத் துறை)க் கருத்துகளைப் பரப்புவதற்காக ஊர் தோறும் நாடகங்கள் நடத்தி வந்தார் நாமக்கல்லார். திருச்செங்கோடு புதுப்பாளையம் குருகுலத்தில் (ஆசிரமத்தில்) தங்கி, கள்ளுக்கடைகளை மூடும் படி வலியுறுத்திப் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்த இராஜாஜி, மதுவிலக்கை வலியுறுத்தி ஊர் தோறும் பரப்புமாறு வேண்டினார். ‘குடிப்பதைத் தடுப் பதே கோடி கோடி புண்ணியம்’ என்று பாட்டெழுதினார் நாமக்கல்லார். கள்ளுக்கடை மறியல் போராட்டங்களில் இப்பாடலை மக்கள் முழங்கினர். இராஜாஜி தலைமையில் பேராய (காங்கிரசு)க் கட்சியினர் திருச்சியிலிருந்து திருமறைக்காடு (வேதாரண்யம்) நோக்கி உப்பு அறப்போராட்டமாக வழிநடைப்பயணம் சென்றனர். அப் போது நா மக் கல்லா ரின் “ கத்தியின்றி இர த்தமின்றி யுத்த மொன்று வருகுது” என்ற பாடலைப் பொதுமக்கள் வீரத்துடன் பாடி முழங்கிக் கொண்டுசென்றனர். பாரதியார் இல்லையே என்ற குறை நீங்கியது என்று மகிழ்ந்த இராஜாஜி, “திலகர் விதைத்த விதை பாரதியாராக முளைத்தது; காந்தியடிகள் தூவிய விதை நாமக்கல் கவிஞராக வளர்ந்துள்ளது” என்றார். நாமக்கல்லாரின் ‘ஆடு ராட்டே சுழன்றாடு ராட்டே’ முதலிய பாடல்கள் விடுதலைப் போராட்டக் கால மேடைகளில் பாடப்பெற்றன. ஓவியம் வரைவதையும் கைவிட்டு முழு தும் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட்டதால் நாமக் கல்லார் வறுமையுற்றார். நாமக்கல்லாரின் பாடல்களைப் போற்றிய ‘தமிழ்ப் பண்ணை’ சின்ன அண்ணாமலை ‘தமிழன் இதயம்’ என்ற நூலாக வெளியிட்டார். தமிழன் இனநலம் “பார்ப்பனப் பண்டிதர்களுக்கு ஆரிய மொழி என்று சொல்லப்படும் சமசுகிருதத்தில் மிகவும் பரிவும், திராவிட மொழி என்று சொல்லப்படும் தமிழில் பகைமையும் தம்மை யறியாமலே ஏற்படுகின்றன. ஆகவே, இவர்கள் எழுதும் போது சமசுகிருதத்தை உயர்த்தியும் தமிழைத் தாழ்த்தியும் சொல்வது வழக்கமாகிவிட்டது.” - என்று ‘தமிழும் சமசுகிருதக் கலப்பும்’ என்ற கட்டுரையில் (லோகமித்திரன் 1914, சித்திரை இதழில்) நாமக்கல்லார் எழுதி யுள்ளார். தமிழ் வழிக்கல்வி, தமிழிசை, தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு, காந்தியம், இந்தியாவின் அரசியல் விடுதலைக்குப் பின்னர் ஏற்பட வேண்டிய சமூக விடுதலை, பொருளியல் முன்னேற்றம் முதலியன பற்றிப் பாடியுள்ளார். கள்ளுக்கடை மறியலிலும் விடுதலைப் போராட்டத்திலும் சிறை சென்றார்; கடுங்காவல் தண்டனை அடைந்தார். வேலூர்ச் சிறையில் இருந்தபோது ‘மலைக்கள்ளன்’ என்ற புதினத்தை எழுதினார். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என முதன் முதலில் ஆறுமொழிகளில் திரைப்படமாக வெளி வந்த பெருமைக்குரியது. மதுரைச் சிறையில் இருந்தபோது திருக்குறளுக்கு உரை எழுதினார். திருக்குறளையும் கம்ப இராமாயணத்தையும் சிறையிலிருந்தவர்களுக்குப் பாடம் சொன்னார்.இவ்வாறு பாடம் கேட்டவர்களில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரும் ஒருவர். முதலமைச்சரான பின் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அரசவைக் கவிஞராக நாமக்கல்லாரை அமர்த்தி ஐயாயிரம் உரூபாய் தருவதாக இருந்தார். அவர் பதவி இறங்க நேர்ந்ததால் அடுத்து வந்த குமாரசாமி ராசா ரூ.1000 அளித்தார். இராஜாஜி இந்தப் பணத்தையும் நிறுத்தினார். ஆயினும் நாமக்கல்லார் இறக்கும்வரை தமிழ்நாட்டின் அரசவைக் கவிஞராக விளங்கினார். “தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு” என்றும் “தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” என்றும் முழங்கியவர் நாமக்கல்லார். வ.ரா. பாராட்டுவார்: “அவர் இயற்கைக் கனவான், தமிழ்நாட்டின் தவப் புதல்வர், வயிரம் அடித்தளம் போல சொற்களைச் சிறப் பாகச் சித்தரிக்கும் ஓவியர், மக்களின் இயற்கை ஆவலாகிய விடுதலையை இன்னிசையில் பாடியிருக்கும் கவிஞர். அவ ருடை ய கவிதை கள் சாகா நிலை பெ ற் றவை . . . நாம க் க ல் இராமலிங்கம் (பிள்ளை என்பது போயே போய்விடும்) புரட்சிக் காலப் புன்னகைக் கவி” நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கம் நாமக்கல் கவிஞர் வே.இராமலிங்கம் இயற்பெயர் : இராமலிங்கம். அம்மா வைத்த பெயர் : கருப்பண்ணசாமி சிறப்புப் பெயர் : நாமக்கல் கவிஞர், நாமக்கல்லார், அரசவைக் கவிஞர் (15, ஆகத்து 1949 இல் தமிழக அரசு அளித்தது), பத்ம பூசண் (1971நடுவண் அரசு அளித்தது) பெற்றோர் : அம்மணி அம்மாள், வேங்கடராமபிள்ளை பிறந்தநாள் : 19-10-1888 மறைந்த நாள் : 24-08-1972 ஊர் : நாமக்கல் அருகில் மோகனூர் கல்வி : நாமக்கல் நம்மாழ்வார் பள்ளி : தொடக்கக்கல்வி, கோவை உயர்நிலைப்பள்ளி (1908 வரை) திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி. கல்லூரி : முன்னிலை வகுப்பு (எஃப் ஏ.) :1909 பணி : வட்ட ஆட்சியர் அலுவலக எழுத்தர், பள்ளி ஆசிரியர், ஓவியர்; திருச்சி, கரூர், நாமக்கல் பேராய (காங்கிரசு)க் கட்சித் தலைவர், செயலர் பொறுப்புகளில்; சட்ட மேலவை உறுப்பினர் (1954), ‘சாகித்திய அகாதமி’ ஆட்சிக்குழு உறுப்பினர். படைப்புகள் : மலைக்கள்ளன் (புதினம் 1933), அன்பு செய்த அற்புதம் (புதினம்), மாமன்மகள் (புதினம்), அவனும் அவளும் (காப்பியம்), சங்கொலி, பிரார்த்தனை, கவிதாஞ்சலி, காந்தி அஞ்சலி, தமிழ்த்தேன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், திருக்குறள் உரை (1955), இலக்கிய இன்பம், தமிழன் இதயம், தாயார் கொடுத்த தனம்,தமிழ் மொழியும் தமிழரசும், தேமதுரத்தமிழோசை, திருவள்ளுவர் திடுக்கிடுவார், என்கதை. 37. செல்லரிக்கும் செப்பேடுகளும் கல்வெட்டுகளும்! தமிழின் பெருமையையும் தமிழ்நாட்டு வரலாற்றையும் பழங்காலத்திலிருந்து வெளிப்படுத்தும் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் ஏட்டுச் சுவடிகளையும் கர்னல் காலின் மெக்கன்சி முதலிய வெளிநாட்டினர் தொகுத்து நமக்கு அளித்தனர். சி.வை. தாமோதரனார், உ.வே. சாமிநாதர், வெ.ப.சு. முதலியார், வி. கனகசபைப்பிள்ளை, மனோன்மணியம் பெ.சுந்தரனார், கவிமணி தேசிக விநாயகம் முதலிய தமிழ றிஞர்களும் தொகுத்தனர். அவர்களைப் போலவே கோவை கிழார் சி.ம.இராமச்சந்திரன் செட்டியார் இந்துசமய அற நிலையத் துறை ஆணையராகப் பணியாற்றி ஊர் ஊராகப் பணியின் காரணமாகச் செல்ல நேர்ந்தபோது, ஆங்காங்கு கிடைத்த கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும் படி எடுத்துத் தொகுத்தார். தமிழகத்துக் கோயில்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவை ஆயினும், ஆரியப் பார்ப்பனர்களின் தீட்சிதர்களின் சமற்கிருதப் பிடியில் இருந்தாலும், தமிழகத் தொல்வர லாற்றையும் பண்பாட்டையும் நாகரிகத்தையும் தெரிவிக்கக் கூடிய ஏட்டுச் சுவடிகளையும், கல்வெட்டுகளையும், செப்பேடு களையும், ஓவியங்களையும், கட்டடக் கலை நுட்பங்களையும் கொண்டவை என்பதைக் கோவை கிழார் தம் எழுத்துகளால் நிலைநாட்டினார். ஏட்டுச்சுவடிகள் தமிழகத்துக் கோயில்களிலும் கோயில்களைச் சார்ந்த திருமடங்களிலும் திருமடங்களைச் சார்ந்த புலவர்களின் இல்லங்களிலும் தமிழ் இலக்கண இலக்கிய ஏட்டுச் சுவடிகள் இருந்தன. கர்னல் காலின் மெக்கன்சி (1753-1821) தொகுத்த பனை ஓலைச் சுவடிகள் ஆங்கிலேய அரசு ஏற்படுத்திய சென்னைக் கல்விச் சங்கத்தாரிடம் ஒப்படைக்கப் பெற்றன. இச்சுவடிகள் நூலகம் 1858 முதல் மாநிலக் கல்லூரி நூல் நிலையத்துடன் இணைந்த ‘அரசினர் கீழை நாட்டுக் கையெழுத்துச் சுவடிகள் நிலையம்’ ஆகிப், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனித்து இயங்கத் தொடங்கியது. இதன் ஆட்சிக்குழு உறுப் பினராக இருந்து கோவை கிழார் செயற்பட்டார். சோழன் பூர்வபட்டயம், கொங்குதேச ராசாக்கள் கதை, பேரூர்க்கோவை முதலிய நூல்களைப் பதிப்பித்தார். இதேபோல், தஞ்சையில் சரபோசி மன்னர் காலத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஓலைச் சுவடிகளும் நூல்களும் கொண்ட சரசுவதி மகால் நூலகக் குழுவின் செயற்குழு உறுப்பினராகச் செயலாற்றினார். அப் போது இராமப்பையன் அம்மானை, தமிழிசைக் கருவிகள் என்ற நூல்களைச் சுரசுவதி மகால் நூலகத்தின் வெளியீடுகளாகப் பதிப்பித்தார். மடங்களில் தமிழ் கரிவலம் வந்த நல்லூரில் வரகுண பாண்டியன் எழுதிய வையும் தொகுத்தவையும் ஆகிய இலக்கியச் சுவடிகளை - பனை ஓலைச் சுவடிகளைக் கோயிலில் இருந்த ஆரியப் பார்ப்பனர்கள் தீயில் இட்டு வேள்வி செய்து விட்டனர். ‘இலக்கியச் சுவடி களை வேள்வித் தீயில் இட்டு எரிக்கும்படி ஆகமம் சொல்லும் என்றால் அந்த ஆகமங்களையே தீயில் போடலாம்’ என்று தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் கூறினார். வடமொழியில்தான் வழிபாடு (அருச்சனை) செய்யவேண்டும் என்று ஆகமங்கள் கூறுவதாகச் சில மடத்தலைவர்கள் கூறித் தமிழில் வழிபாடு நடத்தக் கூடாது என்று பேசி வருகின்றனர். தமிழில் வழிபாடு நடத்துவதைக் கோவை கிழார் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராகப் பணியாற்றியபோது பரப்பினார். சைவ சித்தாந்தத்தில் புலமை மிகுந்தவரும், திருமுறைகளைக் கற்றுத் தேர்ந்தவரும் ஆழ்ந்த சமயப் பற்றாளரும் ஆகிய கோவை கிழார் தமிழ்வழிபாடு பற்றிக் கூறிய கருத்துகளை யாரும் எதிர்க்க முடியவில்லை. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் என்ற பதவி வலிமையும் இதற்குக் காரணம் ஆகும். கோயில்களில் தமிழ்த்திருமுறைகள் ஓதப்பெறவும் தல வரலாறுகள் எழுதப் பெறவும் ஆவன செய்தவர் கோவைகிழார். தமிழ்க் கல்லூரிகள் ‘சைவ சித்தாந்த சமாஜம்’ என்ற அமைப்பைச் சென்னை யில் தொடங்கிடக் கோவைகிழார் துணைநின்றார். நீதியரசர் ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளை, மறைமலையடிகள் முதலியோர் இந்த அமைப்பைத் தொடங்கிப் பனை ஓலைச் சுவடிகளைப் படியெடுத்துப் பதிப்பித்தனர். சைவ சித்தாந்த சமாஜத்தின் பதிப்புகள் தரம் வாய்ந்தவையாகவும், நம்பிக்கைக்குரியவை யாகவும் விளங்கின. இந்த அமைப்பின் சார்பாக நடத்தப்பெற்ற ‘சித்தாந்தம்’ என்ற இதழின் ஆசிரியராகக் கோவைகிழார் பணியாற்றினார். இந்து சமய அறநிலையத் துறை ஆணையராகவும் சித்தாந்தம் இதழின் ஆசிரியராகவும் சைவ சமயத்தில் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள மடங்களின் தலைவர்களுடன் நல்ல நட்புடனும் நெருங் கிய பழக்கத்துடனும் கோவை கிழார் இருந்தார். பேரூர் சாந்த லிங்க அடிகளார் திருமடத்தில் நல்ல தொடர்பு இருந்ததால் தமிழ்க் கல்லூரி தொடங்கும்படி ஊக்குவித்தார்; அக் கல்லூரியின் முதல்வரும் ஆனார். தம் நூல்நிலையத்தை அக் கல்லூரிக்கே அளித்தார். இவருடைய ஊக்குவிப்பால்தான் மயிலம் மடத்தின் சார்பில் ஓர் தமிழ்க் கல்லூரியும் தருமபுரம் மடத்தின் சார்பில் ஓர் தமிழ்க் கல்லூரியும் தொடங்கப் பெற்றன. தமிழ்வளர்ச்சிக்காகத் தமிழ் மட்டுமே தனிச்சிறப்புடன் கற்பிக் கப்பட்ட தமிழ்க் கல்லூரிகளில் ‘வித்துவான்’ என்று வட மொழிச் சொல்லால் குறிக்கப்படும் பட்டத்தைப் ‘புலவர்’ எனத் தமிழில் மாற்றிப் பெருமையுடன் வழங்கி வந்த நிலை மாறி, இன்று ஆங்கிலத்தில் ‘பி.லிட்...’ என்ற பட்டமாகி, தமிழ்ப் பேராசிரியர்களின் அதிக ஊதியத்திற்காகவும் கல்லூரி வணிகர் களின் பணக் கொள்ளைக்காகவும் பலபட்டக் கல்லூரி களாகிவிட்டன. சமுதாயப்பணி கோவை கிழார் கோவை தமிழ்ச்சங்கம் எனத் தொடங்கி அதன் செயலாளராகத் தமிழ்த் தொண்டு புரிந்தார். இச் சங்கத்தில் மாதக் கூட்டங்கள் நடத்தி, தமிழின் பலதுறைகளைச் சார்ந்தப் பேரறிஞர்களை அழைத்துச் சொற்பொழிவு ஆற்றச் செய்தார். தமிழ்ப் பற்றுள்ளவர்களையும் சைவ சமயப் பற்றுள் ளவர்களையும் ஒருங்கிணைத்ததுடன் கோவை மாநகரின் பலநிலைப்பட்ட மக்களையும் தமிழிலும் வரலாற்றிலும் ஈடுபாடு கொள்ளச் செய்தார். மாணவர்களை அறிவிலும் பண்பிலும் மேம்படுத்தும் வகையில் கல்வியை உருவாக்கக் கல்விச் சீர்திருத்தம் தேவை என்று முழங்கினார். பள்ளி அருகிலேயே ஆசிரியர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பெற வேண்டும் என்றார். கோவையில் ‘கிராம ஊழியர்கள் சங்கம்’ செயற்பட உதவிகள் செய்து தாமும் இணைந்து தொண்டுகள் புரிந்தார். சென்னை ‘மதுவிலக்குப் பிரச்சார சங்கம்’ செய்த பரப்புரையில் பங்கேற்றுத் தாமும் உறுப்பினராகி, சிற்றூர்களுக்குச் சென்று ஏழை எளிய மக்கள் கள்ளையும் சாராயத் தையும் குடித்து மதுவுக்கு அடிமையாகித் தங்கள் வருவாயை இழந்து கடன்காரர்களாகவும் ஆகி அழிவதைத் தடுக்கப் பாடுபட்டார். படைப்பாளி கோவை கிழார் தெலுங்கர் இனத்தில் பிறந்திருந்தாலும் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்த தொண்டுகள் அளப்பரியன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமற்கிருதம், உருது, ஆங்கிலம் என எட்டு மொழிகள் அறிந்தவர் அவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதியும் மேடையில் பேசியும் தமிழின் பெருமை யையும் வரலாற்றுச் சிறப்பையும் பரப்பினார். இவர் கோவை மாவட்டக் கல்விச் சங்கத்திலும் கோவை மாவட்ட நூலகக் குழுவிலும் தலைவராகி அரிய வரலாற்றுச் செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். கவிதை யு ம் இல க் கியமும் புராணமும் மட்டுமே பேசி வந் த தமிழ் அறிஞர் களைக் கல் வெட்டு , செப்பேடுகள், சுவடிகள் கொண்டு தமிழ க வரலாற்றை உணரத் தூண்டினார்; உணரச் செய்தார். தமது இலங்கைப் பயணம் பற்றி 3 நூல்கள் எழுதினார். பயண நூல்கள், வரலாற்று நூல்கள், செய்யுள் நூல்கள் எனப் பல இயற்றிய இவரது வரலாற்றையும் வரலாற்று நூல் களையும் மறந்த தமிழர்கள் வரலாற்றை என்ன சொல்வது? இவரது நாட்குறிப்புத் தொகுப்புகள் 40 இன்னும் வெளிவராமல் உள்ளன. கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் தேடிக் கண்டுபிடித்துப் படி எடுத்து, ஆங்கிலேயன் தொகுத்து அச்சில் வெளியிட்ட தமிழக வரலாற்று ஆவணங்களாகிய புத்தகங் களைக் கருநாடகத்திலும், ஆந்திரத்திலும் செல்லரித்து அழிந்து போக விட்டிருக்கும் தமிழகம் இவற்றைக் காப்பாற்றுமா? கோவை கிழார் சி.ம. இராமச்சந்திரன் கோவை கிழார் சி.ம. இராமச்சந்திரன் இயற்பெயர் : இராமச்சந்திரன் சிறப்புப் பெயர் : கோவை கிழார், சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார், சித்தாந்தப் புலவர்(சென்னை மாநிலத் தமிழ்ச் சங்கம் அளித்தது) பெற்றோர் : கோனம்மாள், மருதாசலம் செட்டியார் பிறந்தநாள் : 30-11-1888 மறைந்த நாள் : 03-12-1969 ஊர் : கோவை கல்வி : கோவை இலண்டன் மிசன் பள்ளி, நகரவைப் பள்ளி, சபாபதிப் பிள்ளை, திருச்சிற்றம்பலம் பிள்ளை ஆகியோரிடம் தமிழ்க்கல்வி; சென்னை மாநிலக் கல்லூரி : இ.க. (பி.ஏ.) இயற்பியல்,1908, சட்ட க் கல்லூரி : இ. ச . (பி . எல் ) 1 9 12 ; தமிழ்க்கல்வி : உ.வே.சாமிநாதரிடம் பணி : கோவை-வழக்குரைஞர், தமிழக அரசு : இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (1940-இல் ஓய்வு) ‘கொங்குமலர்’ இதழ் ஆசிரியர் (1934- 1937); “சித்தாந்தம்” : இதழ் ஆசிரியர் (1947-1953) படைப்புகள் : கொங்கு நாட்டு வரலாறு, சேக்கிழாரும் கல்வெட்டும், நால்வர்களும் கல்வெட்டு களும்,கல்லும் பேசுகிறது, கடலின் கண் முத்து. 38. காப்பியமான பேராசிரியர் கன்னங்கரேல் என்று இருக்கிறார், இடக்கால் இடக்கை ஊனம் உடையவர், வெண்ணிற ஆடை, தோளில் விசிறி மடிப்புத் துண்டு, வேட்டியைக் கச்சம் கட்டியிருக்கிறார், கையில் வெள்ளிப் பூண் உள்ள கைத்தடி, நெற்றி நிறைய திருநீறு. ஆ ம் ! அ வ ர் தான் பு ல வ ர் மணி ( ப ண் டி த மணி) கதிரேசனார்! ‘பண்டிதமணி’ என்றாலே அவரைத்தான் குறிக்கும். அரசரின் அழைப்பு இராமலிங்க வள்ளலாரின் பொதுச்சமய (சன்மார்க்க) நெறியைப் பரப்பும் நோக்குடன், காரைக்குடி சொக்கலிங்க ஐயா வழிகாட்டுதலில், கதிரேசனார் மேலைச்சிவபுரியில் சன்மார்க்க சபை தொடங்கினார். அதன் சார்பில் வ.பழ.சா. பழனியப்பன் செட்டியார் பொருளுதவியுடன், இலக்கணப் பெரும்புலவர் சோழவந்தான் அரசஞ்சண்முகனார் தலைமையில், கணேசர் செந்தமிழ்க் கல்லூரியும் தொடங்கினார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் என மூன்று மொழிகளையும் அறிந்தவர் கதிரேசனார். அவர் பேச்சு எளிமையாகவும், நகைச்சுவையோடு சிந்தனை கலந்ததாகவும் இருக்கும். எழுத்து இலக்கிய நடையாக இருக்கும். வடமொழிப்புலமை இருந்ததால் பல வடமொழி நாடகங் களைத் தமிழுக்கு மொழி பெயர்த்தார். கதிரேசனாரின் திறமை பற்றிக் கேள்வியுற்ற செட்டிநாட்டு வள்ளல் அண்ணாமலை அரசர் நேரில் வந்து அவரை அழைத்துத், தாம் நிறுவியிருந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பதவி அளித்தார். குற்றம் கண்டால் குட்டு திருக்குறள் முழுமையும் மனப்பாடம் செய்த கதிரேசனார், தம் நண்பரிடம், “ஒப்பிக்கிறேன், தவறு இருந்தால் குட்டுங்கள்” என்றார். “அகர முதல எழுத்தெல்லாம்” என்றதுமே, நண்பர் குட்டினார். ‘ஏன்?’ என்றதற்கு, “அகர முதல வெழுத்தெல்லாம் என்று இருக்கிறது. எழுத்தெல்லாம் என்று கூறினால் தவறு தானே?” என்றார் நண்பர். “ஐயோ! 1330 குறளும் சொன்னால் என் தலையே இருக்காது. போதும் நீர் சரிபார்த்தது” என்று கூறி விட்டார் கதிரேசனார். குற்றமில்லாமல் தாம் படித்தது போலவே, பிறர் குற்றம் கண்டால் குறையை நேரே உடனடி யாகக் கூறிவிடுவார். நகைச்சுவை உணர்வுடையவர் ஆகையால் சற்றுக் கிண்டலாகவும் சொல்வார். ஆனால் கடுஞ்சொல் கூறவேமாட்டார். அவரது கிண்டல் பொறுக்காமல் பகை கொண்டோர் உண்டு. நன்னூல் என்னும் இலக்கணத்துக்குப் பல பிழைகளுடன் உரை எழுதி அச்சிட்ட ஒருவர், வெளியீட்டு விழாவில் கதிரேசனாரையும் பேசுமாறு கட்டாயப்படுத்தினார். அவ்விழா மேடையிலேயே கதிரேசனார், “அது நன்னூல், இது நன்னூல் (நல்ல நூல்) இல்லை!” என்று கூறிவிட்டார். மலையிடைப் பிறவா மணி மறைமலை என்னும் தமிழ்மலையுடன் மோதிய மணி கதிரேசனார் ஆவார். மறைமலை அடிகளார் தமது சிறப்புச் சொற்பொழிவின்போது, வடசொற் கலப்பால் தமிழின் தனித் தன்மையும் சிறப்பும் கெடுகின்றன என்று பேசினார். அரங்கில் இருந்த கதிரேசனார் எழுந்து, “அப்பர் பெருமான் சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் - என்று பாடியுள்ளார். சலம், தூபம் என்ற சொற்கள் வடசொற்கள். இதனால் அப்பர் தமிழைக் கெடுத்தார் என்று ஆகுமா?” என்று எதிர்ப்புத் தெரிவித்தார். சிவ மதப் பற்றால் விளைந்த சினம் இது! ஆயினும் நல்ல தமிழில்தான் பேசவும் எழுதவும் செய்தார். இவரிடம் பயின்ற வ.சுப.மாணிக்கம் தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக விளங்கினார். கதிரேசனார் தில்லையில் (சிதம்பரத்தில்) வழிபாட்டிலும் இசையிலும் கல்வியிலும் மாற்றுமொழி போற்றுவோரைக் கண்டார். “நமக்குரிய நாட்டு மொழியைப் புறக்கணித்து வேற்று மொழியில் எத்துணை மேற்சென்றாலும், மொழியறிவாற் பெறும் பயன் முற்றும் பெற்றதாக மாட்டாது. இந்நிலையில் நாம் இன்றியமையாது பயில வேண்டுவது நமக்குரிய தமிழ் மொழியேயாகும்” என்று கதிரேசனார் எழுதியுள்ளார். உரை நடை நூல் களைத் தமிழுக்கு மொழிபெயர்த்து நாடகத் தமிழுக்கும், அண்ணாமலை அரசரின் தமிழிசை முயற்சிகளுக்குத் துணை செய்து இசைத் தமிழுக்கும் தொண்டு செய்தார். சிரிப்புமணி பெண்மணி புலவர்மணி (பண்டிதமணி) கதிரேசனார், மாணவர்களை ஒழுக்கமாக இருக்கச் செய்வதிலும் தமிழுக்காகக் குரல் கொடுப் பதிலும் கண்டிப்புமணி. ஆனால் பண்பிலும் பழக்கத்திலும் பாடங்களை மாணவர்களுக்குச் சுவைபடச் சொல்வதிலும் சிரிப்புமணி. கல்லூரியில் நிறைய விடுமுறை விட்டும் போதாமல், மேலும் விடுப்பு எடுத்துக் கொண்டு வராமல் இருந்தால் படிப்பு என்னாகும்? விடுமுறை முடிந்தவுடனே வராமல், வெகுநாள் சென்றுவரும் மாணவர்களைப் பார்த்து, “ஒரு மரமேறி தேங்காய் நான்கு பறித்தான். உரிமையாளருக்கு ஒன்றும் கொடுக்காமல் நடையைக்கட்டினான். ஏன்?- என்று கேட்டதற்குச் சொன்னான் : ஏற ஒன்று, இறங்க ஒன்று, அன்பளிப்பு என நீங்களாகக் கொடுப்பது ஒன்று, நானாக எடுத்துக் கொண்டது ஒன்று” என்று கிண்டலாகக் கூறுவார். ஒருமுறை கதிரேசனார் சொற்பொழிவின்போது கூட்டத்தில் பல பெண்கள் பேசிக்கொண்டிருந்தனர். ‘பெண்மணிகள் தானே, கலகல என்று ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்’ என்றார் புலவர் மணி. பெண்கள் உட்பட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். பெண்களின் அரட்டை ஒலியும் அத்துடன் அடங்கிவிட்டது. அரியக்குடி சீனிவாசன் அரியக்குடி என்ற ஊரில் ஓர் அன்பர் வீட்டில், குடிக்கப் பால் கொண்டு வந்து வைத்தனர். பாலைப் பார்த்துக் கொண்டே இருந்தார் கதிரேசனார். “ஏன்?” என்று மற்றவர்கள் கேட்டனர். பாலில் எறும்பு கிடந்தது. அன்போடும் மதிப்பு கொடுத்தும் கொண்டு வந்து வைத்ததை எண்ணிப் பார்க்காமல், “எறும்பு கிடக்கிறது. பார்க்கவில்லையா?” என்று மனைவியிடம் - தாயிடம் - உறவுகளிடம் - உணவகத்தில் வழங்குநரிடம் - சீறிச் சினந்து எரிந்து விழுந்து பகைப் பேச்சு பேசுவது பலர் வழக்கம். ஆனால் கதிரேசனாரோ, நகைச்சுவையாக, “பாலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறான்” என்றார். சீனிவாசன் என்றது சீனியில் வாசம் செய்யும் எறும்பு என்பதைப் புரிந்து கொண்டு தமிழ் நண்பர்கள் சிரித்தனர். குடிக்கத் தொடங்கும்போதோ ‘ஊரும் அறியக்குடிதான், அரியகுடிதான்’ என்றார். அறிந்து கொண்டே என்றும் அரிதான என்றும் நகைச்சுவையாக ஊரையும் வழங்கிய பாலையும் குறித்ததால் எல்லோரும் மறுபடியும் சிரித்தனர். பாலில் எறும்பு மிதந்ததை நகைச் சுவையாகக் கூறியதால் வீடே மகிழ்ச்சியில் மிதந்தது. படியளப்பவன் அதிகாரம் உய்யக் கொண்டான் திருமலை என்னும் ஊரில் கதிரேசனார் ந.மு.வே.நாட்டாருடன் கோயில் குளத்துக்குச் சென்றிருந்தார். கதிரேசனார் குளப்படியில் இறங்கும்போது உதவியாக, நாட்டார், “படியில்லை... படியில்லை” என்று அடிக்கடி எச்சரிக்கை கூறிவந்தார். கதிரேசனார், “உலகத்துக்கே படியளப்பவன் கோயிலில் வந்து, ஏனய்யா படியில்லை... படி யில்லை என்று கூறுகிறீர்கள்?” என்றதும், நாட்டாரும் உடன் வந்தவர்களும் சிரித்தனர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தபோது விருந்து நடந்தது. பெரும்புலவர் வரத நஞ்சையம்பிள்ளை சாறு (இரசம்) அதிகக் காரமாக இருந்ததால் செருமினார். உடனே கதிரேசனார், “என்ன, இரசம் அதி காரமா?” என்று கேட்டதும், அவரது சொல்லினிமை அனை வரையும் சிரித்து மகிழவைத்தது. தீயும் கரையானும் ஒற்றுமையின்மையில் பெயர்பெற்ற தமிழர்கள், அருட்பா மருட்பா வாதம் போல, கம்பராமாயணத்தை எரிக்க வேண்டும், எரிக்கக் கூடாது என்று பிளவு பட்டிருந்தனர். கதிரேசனார் ஒரு சொற்பொழிவில், “கம்பராமாயணத்தை எரிக்க முடியாது” என்று கூறினார். ஏன்? “இரசிகமணி டி.கே.சி., கம்பராமாயணப் பொற்காசுகளைக் கொட்டுவார். இடைச் செருகல் என்று செல்லாக்காசுகளைத் தூக்கி எறிவார், படலம் படலமாகக் கூட எறிவார். இப்படியே எறிந்தால் மக்களுக்குப் படிக்கும் தொல்லை யும் இராது. எரிக்கும் அன்பர்களுக்கு எரிக்கவும் ஒன்றும் இருக்காது” என்று நகைச்சுவையாகக் கூறினார்., “தேவாரம் பாடியிருக்கிறேன், பாராட்டிப் பாயிரம் எழுதிக் கொடுங்கள்” என்று வந்தார் ஓர் அரைவேக்காடு. பாடலைக் கண்டு கொதிப்படைந்தாலும் நகைச்சுவையாக “தேவாரம் வந்தது போல் வரட்டும், பாடுகிறேன்” என்றார்.“எப்படி?” “தில்லைப் பார்ப்பனர் களிடம் கொடுத்துக் கரை யானுக்குத் தீனி போடுங்கள். மீதி வந்தால் பாயிரம் பாடுகிறேன்.” வந்தவர் வெந்துபோய்விட்டார். தமிழ் நைந்து போகாமல் தப்பித்தது. “செந்தமிழ்த் தாய் பெற்றெடுத்த செல்வர் கதிரேசனார் காவியம் ஆனார். காவியம் அவராயிற்று” என்று பாராட்டுவார் திரு.வி.க. திரு.வி.க. கூறியதுபோல் கவிஞர் முடியரசன் இயற்றிய ‘பூங்கொடி’ என்னும் காப்பியத்தின் கருவானார் : “சிரிப்பிருக்கும் அவர்வாயில்; பேசும் காலை சிந்தனையின் தெளிவிருக்கும் அவர்மு கத்தில்! விரித்திருக்கும் ஒளியிருக்கும் விழியி ரண்டில்! விரிநெற்றி பொலிவுபெற நீறி ருக்கும்! பருத்திருக்கும் கழியினைக்கை பிடித்தி ருக்கும்! பளபளக்கும் அக்கழியில் பூணி ருக்கும்! விரித்திருக்கும் நீள்விரிப்பில் அமர்ந்தி ருப்போர் விழிகளுக்கு வியப்பிருக்கும் களிப்பி ருக்கும்!” பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் இயற்பெயர் : கதிரேசன் சிறப்புப்பட்டங்கள் : பண்டிதமணி (மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை அளித்தது 27-08- 1925) மகாமகோபாத்தியாய (ஆங்கில அரசு அளித்தது 11-06-1942) பெற்றோர் : சிகப்பி ஆச்சி, முத்துக்கருப்பன் செட்டியார் பிறந்தநாள் : 16-10-1881 மறைந்தநாள் : 24-10-1953 ஊர் : மகிபாலன்பட்டி (பூங்குன்றம்; கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர்), காரைக் குடி அருகில். மனைவி : மீனாட்சி அம்மாள் கல்வி : சோழவந்தான் அரசஞ்சண்முகனாரிடம் தமிழ்க்கல்வி, தருவை நாராயண சாத்திரியாரிடம் வடமொழி, காரைக் குடி சொக்கலிங்க ஐயாவிடம் சமயக்கல்வி. பணி : மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை (15-03- 1909 முதல்) மேலைச்சிவபுரி செந்தமிழ்க் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் (1909 - 1934); அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் (1934 முதல்), அண்ணா ம லைப் ப ல்கலைக் க ழ க த் தமி ழ் த் துறை த் தலை வர் , சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், திருவிதாங்கூர்ப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் உறுப்பினர் : மதுரை, கரந்தைத் தமிழ்ச் சங்கங்கள், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட மொழி வளர்ச்சிச் சங்கம். படைப்புகள் : உரைநடைக்கோவை 1,2; நாட்டுக் கோட்டை நகரத்தார் வரலாறு, நாட்டுக் கோட்டை நகரத்தார் சீர்திருத்தம், பண்டிதமணி கடிதங்கள், பண்டிதமணி பாடல்கள், பண்டிதமணி பதிற்றுப் பத்தாந்தாதி, திருவாசகம் கதிர்மணி விளக்கவுரை மொழிபெயர்ப்பு : உதயண சரிதம், சுலோசனை, மண்ணியல் சிறுதேர் (மிருச்ச கடிகா), சுக்கிர நீதி (ஒளநசம்), கௌடலியம் (அர்த்தசாத்திரம்), மாலதி மாதவம், பிரதாப ருத்திரம், இரச கங்காதரம். 39. புலவருக்குக் கட்டிய கோயில்! நடிகைகளுக்குக் கோயில் கட்டி வழிபடுவதும் நடிகர்களின் வெட்டுருவுக்குப் பால் முழுக்காட்டுவதும் சாராய முழுக் காட்டுவதும் இற்றைத் தமிழ் மகனின் பண்பு; புலவருக்குக் கோயில் கட்டி வழிபடுவானா என்று வியப்புடன் அல்லது ஐயத்துடன் கேட்கிறீர்கள்! வேளாண் குடும்பத்தில் பிறந்து பகலெல்லாம் தந்தைக்கு உறுதுணையாக உழவு செய்து இர வெல்லாம் தமிழ் படித்தவரும், தமிழ்க் கல்லூரி சென்று சேர்ந்து படிக்காமலேயே தனிப்படிப்பின் மூலம் வீட்டிலிருந்தே படித்து ஆறாண்டுத் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பை மூன்றாண்டு களிலேயே படித்து மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வு எழுதி முதல் மதிப்பெண் பெற்று முதன் முதலாகத் ‘தங்கத்தோடா’ பரிசு பெற்றவரும், பொதுமக்களையும் மாணவர்களையும் மட்டு மல்லாமல் தமிழறிஞர்களையும் தம் பேச்சுத் திறத்தால் கட்டிப் போட்டு நாவலர் என்ற பட்டத்தைப் பெற்றவரும் ஆகிய ந.மு.வேங்கடசாமி நாட்டாருக்குத் திருவையாறு அருகில் உள்ள நடுக்காவிரி என்னும் ஊரில் குடமுருட்டி ஆற்றங்கரையில் கோயில் கட்டியிருக்கிறார்கள். நெடியோன் சிவப்பிரகாசம் என்று பிறந்தவுடன் பெயரிடப்பெற்ற இவர், மூத்தவர் இருவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்ததால், பெற்றோரால் திருமலை (திருப்பதி) நெடியோனின் அருள் வேண்டி வேங்கடசாமி என்று மாற்றுப் பெயர் இடம்பெற்றார். தமிழ் படிக்காமலேயே மழலையர் படிப்பு முதல் பல்கலைக் கழகப் படிப்பு வரை படித்துப் பட்டம் பெறும் இழிநிலை இன்று தமிழ்நாட்டில் உள்ளது. ந.மு.வே. வீட்டிலிருந்து தமிழ் படித்தே தமிழ் ஆசிரியராகப் பள்ளியிலும் கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். பாரதியாரும், பாண்டி த் துரைத் தேவ ரு ம் கண்ட க ன வாகி ய த மிழ்ப் பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்று ந.மு.வே. திட்ட அறிக்கை அளித்தார். தமிழினத்தின் தூக்கமுடைமையால் தமிழ்ப் பல்கலைக்கழகம் உடனடியாகத் தொடங்கப்படவில்லை. அவர் நெடிய நிமிர்ந்த தோற்றம் உடையவர். நீண்ட எடுப்பான மூக்கும் ஊடுருவிப் பார்க்கும் கண்களும் கொண்டவர். பரந்த நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் நடுவில் சந்தனப் பொட்டும் வைத்திருப்பார். முழந்தாள் தொடு நீண்ட கைகளும் நடுத்தர உடல்வாகும் பெற்றவர். தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டியு ம் , கழுத்தோடு இறுகிய குப்பாயமும் (கோட்டு), தலைப்பாகையும் அணிந்தவர். வலக்கையில் சிவப்புக் கல் மோதிரம் அணிந்திருப்பார். அடர்ந்த நறுக்கு மீசையும் உருண்டைக் கண்ணாடியும் சரிகைத்துண்டும் ந.மு.வே. அடை யாளங்கள். தொடர் தமிழ் தொட க்கப்பள்ளி மேற்பார்வையாளராக இருந்த ஐ.சாமிநாத முதலியார் என்பவர் தமிழ்ப் பற்றுடையவர். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு என்று சிறப்புக் கூட்டங்கள் நடத்தித் தமிழ் கற்பிப்பதில் ஆர்வம் ஏற்படச் செய்வார். சாவித்திரி வெண்பா என்ற நூல் இயற்றியவர். அவர் ஒருமுறை நடுக்காவிரிக்கு வந்திருந்தார். பக்கத்தில் உள்ள இளங்காடு என்ற ஊரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது தமக்குச் செவ்வந்தி புராணத்தில் ‘கனகத்தானவாரி’ என்ற தொடருக்குப் பொருள் விளங்கவில்லை என்று அவர் தெரி வித்தார். கனகத்தானவ அரி எனப் பிரித்து இரணியனுக்கு எதிரி எனப் பொருள் கூறினார் ந.மு.வே. இதனைக் கேட்டு வியப்பும் மகிழ்வும் கொண்ட மேற்பார்வையாளர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் ந.மு.வே. தனித் தேர்வராகப் படித்துப் பட்டம் பெறும்படி வழிகாட்டினார். இதனால் ஊக்கம் பெற்றுப் படித்துப் புலவர் (பண்டிதம்) பட்டம் பெற்ற ந.மு.வே.பலரைத் தமிழிலக்கிய வல்லுநர்களாக உருவாக்கும் பேராசிரியப் பெரு மகனாரானார். ஐயம் போக்கி ந.மு.வே. மாணவர்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் ஏற்படும் ஐயங்களைப் போக்கி அருந்தமிழில் புலமை வளர்த் தவர். பூவாளூர் சைவ சித்தாந்த சபைக் கூட்டத்தில் திரு.வி.க. பேசத் தொடங்கியபோது ஐயம் கேட்பதாகச் சிலர் எழுந்து பேசிக் கொண்டே இருந்ததால் குழப்பம் நேர்ந்தது. ந.மு.வே. துணிந்து தலையிட்டு “ஐயங்களைத் துண்டுத் தாளில் எழுதிக் கொடுங்கள்; இறுதியாக நான் ஐயம் போக்கித் தெளிவு தரு வேன்” என்றார். அதனால் கூட்டம் அமைதியாக நடக்கத் தொடங்கியது. பாரதிக்குப் பாடம் ஒருநாள் இரவு ந.மு.வே. தன் வீட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது முண்டாசுக் கட்டிக் கொண்டு சட்டை இல்லாமல் பெரிய போர்வையைப் போர்த்திக் கொண்டு ஒருவர் வந்தார். தாம் ஒரு கவிஞர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு சிலப்பதிகாரம் பற்றிச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டு இரவோடு இரவாகப் போய்விட்டார். அவர்தான் பாரதியார்! இந்த நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை பற்றிச் சிலர் ஐயுறுவர். ஆனால் 1912-இல் பாரதியார் தஞ்சாவூர்த் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினார் என்று உளவுத் துறையின் குறிப்பு உள்ளது. மன்னார்குடிக்கு அருகில் உள்ள மேலநாகை என்ற சிற்றூரில் அரவிந்தரின் நண்பரது வீட்டின் மூன்றாம் மாடியில் (இங்கிருந்து கிணற்றில் நீர் எடுக்கலாம்) குதிருக்குள் பதுங்கி இரண்டு மூன்றுநாள் இருந்தார் என்ற செய்தியும் உள்ளது. திருவாரூர் வந்திருந்தார் என்ற குறிப்பும் உள்ளது. எனவே, ந.மு.வே. அவர்களிடம் ‘சேரன் தம்பி சிலம்பை இசைத்த, சிறப்பைப் பாரதியார் விரிவாகக் கேட்டிருக்கலாம். புலவர் வரலாறு திருமணம் செல்வ கேசவராய முதலியார் திருவள்ளுவர், கம்பர் எனப் புலவர் வரலாறும் இலக்கியத் திறனும் கூறும் நூல்கள் எழுதியுள்ளார். அவ்வகையில் ந.மு.வே. நக்கீரர், கபிலர் என்ற நூல்கள் எழுதியுள்ளார். ‘அகத்தியர்’ என்ற தலைப்பில் செந்தமிழ்ச் செல்வி இதழில் எழுதினார். அக்கட்டுரைகள் நூலாகவில்லை. கள்ளர்சரித்திரம், சோழர் சரித்திரம் என்ற வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். கள்ளர் சரித்திரம் குறிப்பிட்ட சாதி வரலாறாக இல்லாமல் தமிழக மக்களின் குல வரலாறாகவும் பட்டப்பெயர்கள் பற்றிய வரலாற்று ஆய் வாகவும் விளங்குகின்றது. உரையாசிரியர் சிறந்த ஆசிரியராகவும், வல்லமை வாய்ந்த பேச்சாளராகவும், வரலாற்று நூலாசிரிய ராகவும், திறனாய்வுக் கட்டுரையாளராகவும் திகழ்ந்த ந.மு.வே. தமிழ் இலக்கணங் களுக்கும் இலக்கியங்களுக்கும் உயர்ந்த தெளிவான எளிய உரைகள் எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலைக்கும் இவர் எழுதிய உரைகள் ஆய்வுத்திறன் மிகுந்தவை. எளியவை என்று கருதப்பெறும் ஆத்திசூடி முதலிய நீதி நூல்களுக்கும் உரை எழுதித் தெளிவு தந்தார். இவர் தம் உரையில் பிற இலக்கியச் செய்திகளின் ஒப்பீடு, இலக்கணத் தெளிவு, தமிழிசை விளக்கம், தமிழக வரலாற்றின் அறியப்பெறாத பகுதிகள், தமிழின் மேன்மை ஆகியன விளக்கிச் சொல்வார். வரலாற்றறிஞர் ந.மு.வே இலக்கியம், இலக்கணம், உரை, வரலாறு, ஆய்வு, தமிழ்க்கல்வி எனப் பலநிலைகளில் பாடுபட்டவர். இரா. இராகவையங்கார் கரூர்தான் சேரர் தலைநகர் என்று கூறியபோது, ந.மு.வே. திருவஞ்சைக்களம்தான் சேரர் வஞ்சி என்று ஆய்வு முடிவு கூறினார். மு.இராகவையங்கார் தமிழ் நாட்டின் வேளிர் என்ற குறுநில மன்னர்களை ஆரியர் என்று எழுதினார். ந.மு.வே. அதனை மறுத்து, வேளிர் தமிழினத்தைச் சார்ந்தவர்களே என்று நிறுவினார். “மு. இராகவையங்காரின் வேளிர் வரலாற்றை ஆராய்ச்சியால் வீசியெறிந்தவர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஆவார்” என்று பாவாணர் பாராட்டுவார். நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இயற்பெயர் : சிவப்பிரகாசம் (எ) வேங்கடசாமி சிறப்புப்பட்டம் : நாவலர் (சென்னை மாநிலத் தமிழ்ச் சங்கம் அளித்தது : 24-10-1940) பெற்றோர் : தைலம்மாள், வீ. முத்துசாமி நாட்டார் பிறந்தநாள் : 12-04-1884 மறைந்த நாள் : 28-03-1944 பிறந்த ஊர் : திருவையாறு அருகில் நடுக்காவிரி கல்வி : நடுக்காவிரி - தொடக்கப்பள்ளிக் கல்வி; திண்ணைப் பள்ளிக் கல்வி; வல்லம் குருசாமி ஆசிரியரிடம் - தந்தையிடம் தமிழ்க்கல்வி; சிறிய தந்தை சொக்கலிங்க நாட்டாரிடம் இசை - தனிப்படிப்பு : மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் - பிரவேச, பால, பண்டித (6 ஆண்டு) தேர்வுகள் : மூன்றே ஆண்டில் (1905, 1906, 1907) - முதல் மதிப்பெண்; தங்கத் தோடா பரிசு. பணி : திருச்சிராப்பள்ளி எசு.பி.ஜி. (பிசப் ஈபர்) கல்லூரி (1908), கோவை மைக்கேல் உயர்நிலைப்பள்ளி (1909-1910), திருச்சி எசு.பி.ஜி. கல்லூரி (1910-1933) தமிழாசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1933-1940) விரிவுரையாளர்; கரந்தைப்புலவர் கல்லூரி (1940-1944) முதல்வர். படைப்புகள் : வேளிர்வரலாற்றின் ஆராய்ச்சி, கள்ளர் சரித்திரம், சோழர் சரித்திரம், கண்ணகி யின் வரலாறும் கற்பு மாண்பும், கட்டுரைத் திரட்டு, நக்கீரர், கபிலர். அகத்தியர் (செந்தமிழ்ச் செல்வி இதழில் கட்டுரைகள்) உரைகள் : ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நன்னெறி, வெற்றிவேற்கை, கார்நாற்பது, க ள வ ழி நாற் ப து , அகநாநூனூறு, சில ப் பதிகா ர ம் , மணிமேகலை , பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம், அகத்தியர் தேவாரத் திரட்டு முதலிய நூல்களுக்கு உரைகள், தண்டியலங்கார உரைத்திருத்தம், யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம். 40. சத்திரத்துச் சோறும் சமற்கிருதமும்! பாண்டித்துரைத்தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைக்கத் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் தூண்டுதல் ஆவார். மதுரைத் தமிழ்ச் சங்கம் அமைக்கத் துணையாக இலக்கணக்கடல் அரசஞ்சண்முகனார், கரந்தை நீ. க ந் தசாமிப் பிள்ளை , தமிழவேள் உமா மகேசுவரனார் முதலியோர் உதவினர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஒன்பதாவது ஆண்டு விழா தமிழகம் எங்கும் குறிப்பாகத் தஞ்சையில் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது. இதனால் தூண்டுதல் பெற்று அரசஞ் சண்முகனாரின் நண்பர் புலவர் வி. சாமிநாதப் பிள்ளை தஞ்சையில் தமிழ்ச்சங்கம் தொடங்கினார். இச்சங்கத் திலிருந்து இளைஞர்கள் சிலர் இராதாகிருட்டிணப் பிள்ளை தலைமையில் பிரிந்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கினர். இராதாகிருட்டிணப் பிள்ளையின் அண்ணன் த.வே. உமா மகேசுவரனார் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை 14-05-1911-இல் ந.மு.வே. நாட்டார் தலைமையில் நடந்த விழாவில் ஞானியாரடிகள்தான் தொடங்கி வைத்தார். கரந்தைத் தமிழ்ச்சங்க வெள்ளி விழா விலும் (16-04-1938) பங்கேற்றுக் கரந்தைத் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கினார் . ஞானியா ரடிகள் நாள்தோறும் முருகப் பெருமானை வழிபடுகையில் தமிழவேளும் கரந்தைத் தமிழ்ச் சங்கமும் சிறந்து விளங்க வேண்டிக் கொள்வாராம். வழக்குச் செல்வம் மயிலாடுதுறை வேதநாயகர், நாவலர் சோமசுந்தர பாரதியார், வ.உ.சி., டி.கே.சி., இரா.பி.சேதுப்பிள்ளை, சிவக் கவிமணி சி.க.சுப்பிரமணியர் முதலியோர் வழக்குரைஞர் களாக விளங்கியதுடன், தமிழ்த் தொண்டர்களாகவும் திகழ்ந்தோர் ஆவர். அவ்வரிசையில் தஞ்சை சீனிவா சன் பிள்ளையும் அவரிடம் பயிற்சி வழக்குரைஞராக இருந்த தமிழவேளும், தமிழவேளின் நண்பர் ஆ. தா. (ஏ.டி.) பன்னீர் செல்வமும் விளங்குகின்றனர். மற்ற தமிழறிஞர்களைப் போல நேர்மையான வழக்குகளை மட்டுமே எடுத்து நடத்துவது தமிழவேளின் வழக்கம். சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து, சட்டவிதிகளைக் குறித்துக் கொண்டு, உண்மையான சாட்சிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு முறையாக வழக்குக் குறிப்பேடு (கட்டு) எழுதி வைத்துக் கொண்டுதான் வழக்காடுவார். அக்குறிப்பேடுகளைப் பார்த்து ஒரு கற்றுக்குட்டி கூட பல ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட வழக்காடி வெல்லமுடியும். ஏழைகளுக்கு இலவயமாக வழக்காடும் பண்புள்ளவர் தமிழவேள். இவருக்குப் பண நாட்டம் இல்லாததால் முறையாக வழக்குக் கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொள்ளும் பொறுப்பைத் தம் உதவியாளரிடம் ஒப்படைத்திருந்தார். மற்றவர்கள் எடுத்து வழக்காடத் தயங்கிய கும்பகோணம் குப்புசாமிஐயர் வழக்கில் இவர் வெற்றி பெற்றதும், நீதிக் கட்சிக்காக வழக்காடியதும், கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளையின் தம்பிக்காக வழக்காடியதும் இவருக்குப் புகழ் சேர்த்தன. செல்வமும் சேர்ந்தது. வழக்காடிப் பெற்ற செல் வத்தை அறச் செயல்களுக்கு அள்ளி வழங்கினார். அதே நேரத்தில், கடன் வாங்குவது குற்றம், கடன் கொடுப்பதும் குற்றம் என்ற கருத்துடையவர். கட்சித் தொண்டு ஆங்கிலேய ஆட்சியாளரை அண்டிப் பிழைத்த பார்ப் பனர்கள் மற்ற சாதியினரைத் தாழ்த்தி வைத்திருந்ததால் பிராமணர் அல்லாதார் இயக்கம் தோன்றி, ‘நீதிக்கட்சி’ (1917) ஆகியது. தஞ்சை மாவட்டத்தில் அதனை கட்டிக் காத்தவர்கள் தமிழவேளும், ஆ.தா. பன்னீர்ச் செல்வமும் ஆவர். தமிழ் நாட்டின் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளை நீதிக் கட்சி கைப்பற்றியது. தஞ்சை மாவட்டக் கழகத்தின் (போர்டு) தலைவராக ஆ.தா. பன்னீர்செல்வமும் வட்டக் கழகத்தின் தலைவராகத் தமிழவேளும் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். தமிழவேள் தஞ்சையைச் சுற்றிலும் உள்ள அனைத்துச் சிற்றூர்களுக்கும் சாலை அமைத்தார். தொடக்கப் பள்ளிகள், பெருகச் செய்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிகள், கல்வித்தரம் மேம்படப் பாடுபட்டார். பணியில் பின் தங்கு வோரையும் ஏமாற்றுவோரையும் கண்டித்தார். கூட்டுறவுத் துறையில் ஈடுபாடு கொண்டு கரந்தைக் கூட்டுறவு வங்கி (1919), கூட்டுறவு நிலவள வங்கி (1926), தஞ்சை மாவட்டக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் சங்க ம் (1939 ) முதலிய வ ற்றை அமைத்தார். திருவையாற்றைச் சார்ந்து நடைபெறும் ஏழுர்த் திருவிழா வின் போது மக்கள் சாலைகளின்றி வயல்களிலும் வரப்புகளிலும் பல்லக்குகளைத் தூக்கிக் கொண்டு செல்வர். மேல் சட்டையும் காலில் செருப்பும் அணியாமல் அவ்விழாவில் பொதுமக்களுடன் ஆண்டுதோறும் நடந்து செல்லும் தமிழ வேள், நல்ல சாலைகள் அமைத்துக் கொடுத்தார். காரோடகச் சேரி (கொரடாச்சேரி) மடத்தின் வாலையானந்த அடிகளா ரிடத்தில் சித்தாந்தப் பாடம் கேட்டார். செங்கற்பட்டு ‘சுய மரியாதை’ மாநாட்டில் (1929) கடவுள் பெயரால் ஒரு காசும் செலவு செய்யக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இது தம் கருத்துக்கு உடன்பாடு இல்லாததால் நீதிக் கட்சியிலிருந்து விலகினார். தமிழுக்கு இடமில்லை திருவையாற்றில் காவிரிக்கரை ஓரத்தில் சிறிய அரண் மனையில் இருந்த சத்திரத்தில் பார்ப்பனர்களுக்கு இலவயமாகச் சோறு போட்டு வடமொழி (சமற்கிருதம்) கற்பித்து வந்தனர். தமிழ் கற்பிக்க வேண்டும் என்று நீதிக் கட்சியினராகிய ஆ.தா. பன்னீர்செல்வமும் தமிழவேளும் கூறினர். தமிழ் கூடாது என்று பார்ப்பனர்கள் வழக்கிட்டனர். பன்னீர் செல்வமும் தமிழ வேளும் தமிழுக்காக வாதாடினர். “சரபோஜி மன்னர் எழுதி வைத்தது இந்த அரண்மனை. இங்கு வேதம் மட்டுமே சொல்லித் தருவோம்” “தெலுங்கு இசை ஏன் சொல்லித் தருகிறீர்கள்?” “தியாகையர் இங்கேதான் பாடினார்” “வேதம் மட்டும்தானே சொல்லித்தர மன்னர் எழுதி யிருக்கிறார்?” “ வேதமும் கலாசாத்திரங்களும் என்று எழுத்தில் இருக்கிறது” “அப்படியா? கலை சாத்திரங்களில் தமிழ் இலக்கியங் களும் அடங்கும்” “உம்... உம்... நன்னா ‘ஆங்கிரேச’ (ஆங்கிலம்) படிச்சுட்டு மடக்கிறேள், நீங்கள் நாத்திகர்... ‘நீதிக்கட்சி’! தமிழ்ப் புராணங் களை வேணா சொல்லிக் கொடுக்கலாம். ஆனா ‘பிராம்ணாள்’ மட்டும்தான் படிக்கலாம்” “தின்னச் சோறும் வகை வகையாய்க் காய்கறிகளும் வழிய வழிய நெய்யும் தயிரும் பாலும் நாங்கள் உழைத்து உண்டாக்கித் தந்தால் இலவயமாய்த் தின்பேள்! வாரம் தோறும் தலைக்குக் குளிக்க நல்லெண்ணெய்யும் அரைப்புத் தூளும், மாதத்துக்கு இரண்டு வேட்டியும் துண்டும் தருகிறோம். நாங்கள் மட்டும் படிக்கக்கூடாது. உள்ளேயே நுழையக் கூடாது! சரி... நாதசுரமும் மேளமும் மற்றவர்களுக்குச் சொல்லித் தருகிறீர்களே?” “சங்கீதம் (இசை) பாட அதெல்லாம் வேண்டுமே! சூத்திராளைச் சத்திரத்துக்கு வெளியிலே உட்கார வைச்சுத் தான் கற்றுத் தர்ரோம்...” “இரயிலில் ஒன்றாக உட்கார்ந்துதான் போகிறீர்கள். பள்ளிக் கூடங்களில் நாங்கள் உள்ளேதான் உட்கார்ந்து படிக்கிறோம். அதனால் எல்லாச் சாதியினரும் தமிழ் படிக்க கனம் கோர்ட்டார் உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார் பன்னீர்செல்வம். தமிழ் கற்பிக்கலாம் எனத் தீர்ப்பாயிற்று. சங்கத் தமிழர் மனைவி இறந் தபின் மறுமணத்திற்கு உறவினர்கள் வற்புறுத்தியும் ‘இன்னொரு வீட்டுக்கு மருமகனாகச் செல்ல மாட்டேன்’, என்று நகைச்சுவையுடன் மறுத்துவிட்டார்; அத்துடன் கண்ணாடிமுன் நின்று ஒப்பனை செய்து கொள்வதையும் கைவிட்டார். மனைவியையும் பிள்ளைகள் இரு வரையும் பறிகொடுத்துத் தம் குடும்ப வாழ்வியலில் துன்பப் பட்டாலும் பொதுத் தொண்டில் தொடர்ந்து உழைத்தார் தமிழவேள். காலையில் வழக்கு மன்றத்தில் முழு ஈடுபாட்டுடன் வழக்காடி முடிப்பார். மாலையில் வழக்கு பற்றி யார் வந்தாலும் பேசமாட்டார். முழுதும் தமிழ்ச் சங்கப் பணிகளில் ஈடுபடுவார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ்க் கல்லூரி ஏற் படுத்திப் பல்கலைக்கழக ஒப்புதலைப் பாடுபட்டுப் பெற்றார். ஏழை மாணவர்களுக்கு இலவயத் தங்குமிடமும் புத்தகங்களும் வழங்கினார். திக்கற்ற மாணவர் இல்லம், இலவய மருத்துவ மனை, நூலகம், தொடக்கப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, செந் தமிழ்க் கைத்தொழிற் கல்லூரி முதலியவற்றையும் சங்க வளாகத் தில் அமைத்தார். தமிழ்ப்பொழில்’ என்ற இலக்கிய மாத இதழைத் (1925- 26) தமிழவேள் தொடங்கினார். ஸ்ரீமான், ஸ்ரீமதி, பத்திராசிரியர், சந்தா, விலாசம், வி.பி.பி. முதலிய பிற மொழிச் சொற்களை இதழ்கள் பயன்படுத்தி வந்தன; அவற்றைத் தவிர்த்து திருவாளர் திருவாட்டி, பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலை கொளும் அஞ்சல் என்ற தனித் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினார். தமிழவேள் பிறமொழிச் சொற்களைப் பேச்சிலும் கலக்கக்கூடாது என்று உறுதியோடு தனித்தமிழைப் பரப்பினார். சோழன் பூங்கா, பாண்டியன் நீழல், சேரன் விளையாட்டரங்கம் எனத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நல்ல தமிழ்ப் பெயர்களே சூட்டினார். தொல்காப்பியத்தைப் பிழையறப் பதிப்பித்ததும் விபுலானந்தரின் யாழ்நூல் வெளி யிட்டதும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ்ப் புலவர் வரலாறுகளை ஆவணப்படுத்தி வெளியிடமுனைந்ததும் தமிழவேளின் திட்டம் ஆகும். தமிழுக்கும் தமிழர் களுக்கும் நன்மை தரும் கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியவுரை (தலையங்கம்) எழுதினார். தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என 1925-இல் தமிழவேள் வற்புறுத்தி வந்தார். அதற்காக அமைக்கப்பட்ட செயற்குழுவில் சென்னை மாநில அமைச்சராக இருந்த திவான் பகதூர் டி.என்.சிவஞானம் தலைவராக இருந்தார். தமிழ் படித்தவர்களுக்கு ‘வித்துவான்’ என வடமொழியில் பட்டம் தருவதைப் ‘புலவர்’ எனத் தமிழில் அளிக்கச் செய்தார். (இன்று ‘பி.லிட்’ என ஆங்கிலத்தில் மாற்றிவிட்டனர். விரைவில் இந்தியில் அல்லது வடமொழியில் மாறினாலும் மாறலாம்). தமிழவேள் இரவீந்திரநாததாகூரின் ‘சாந்தி நிகேதன்’ போன்று தமிழ்ச் சங்கத்தையும் வளர்த்தெடுக்க, அதனைப் பார்க்கச் சென்றார். வழியில் காய்ச்சல் உற்று அயோத்தி அருகே ‘பைசாபாத்து’ என்னும் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி ‘குறசி’ மருத்துவமனையில் சேர்க்கப் பெற்று உயிர் துறந்தார். தமிழவேள் உமாமகேசுவரர் தமிழவேள் உமாமகேசுவரர் இயற்பெயர் : உமாமகேசுவரன் சிறப்புப் பெயர் : செந்தமிழ்ப்புரவலர் (மே 1933, ஞானியாரடிகள் தம் மணிவிழாவில் அளித்தது), இராவ் சாகிபு (1935 : ஆங்கில இந்திய அரசு அளித்தது), தமிழவேள் (15-04-1938: நாவலர், ச.சோ.பாரதியார் அளித்தது) பெற்றோர் : காமாட்சி அம்மையார், வேம்பப் பிள்ளை பிறந்த நாள் : 07-05-1883 மறைந்த நாள் : 09-05-1941 பிறந்த ஊர் : தஞ்சையைச் சார்ந்த கரந்தை (கருந்திட்டைக்குடி) கல்வி : வல்லம் - தொடக்கக் கல்வி, கும்பகோணம் - பள்ளிக்கல்வி, 3ஆம் படிவம் வரை; தஞ்சை - தூய பேதுரு கல்லூரி : 4 ஆம் படிவம் முதல் இளங்கலை (பி.ஏ.வரை); சென்னை - சட்டக்கல்லூரி: இளம் சட்டவியல் (பி.எல்) பணி : தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக எழுத்தர், வழக்குரைஞர் (32 ஆண்டுகள்), அரசு கூடுதல் வழக்குரைஞர், தஞ்சை வட்டக் கழகத் தலைவர், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் (14-05-1911 முதல்), கரந்தைப் புலவர் கல்லூரி நிறுவனர் (16- 04-1938) படைப்புகள் : தமிழ்ப் பொழில் இதழில் :ஆசிரியவுரைகள், மதிப்புரைகள், கடற்செலவு (பைரனின் ‘வாயேஜ்‘ ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு) பதிப்புகள் : யாழ்நூல், நக்கீரர், கபிலர், தொல்காப்பியம், தமிழரசிக் குறவஞ்சி, சிவமும் செந்தமிழும், கரந்தைக் கட்டுரைக் கோவை, இந்தியத் தல யாத்திரை, பரத சாத்திரம் முதலியன. 41. அவள் போட்ட கணக்கு! திருவையாறு. காவிரி ஆற்றங்கரையில் சிறிய அரண்மனை. மராட்டிய மன்னன் சரபோசியின் சிறிய அரண்மனை. அன்ன சத்திரமாக்கி அதற்கு நிலங்களும் எழுதி வைத்திருந்தான் மன்னன். வேத சாத்திரங்கள் படிப்பவர்க்கும் இராமேசுவரம் காசி செல்வோருக்கும் சத்திரத்தில் சோறு இலவயம். ஆ.தா. பன்னீர்செல்வமும் தமிழவேள் உமாமகேசுவரனாரும் அச்சத் திரத்தில் தமிழும் கற்பிக்கப் போராடி வெற்றி பெற்றனர். அரசர் கல்லூரி என்ற பெயரில் இயங்கி அச்சத்திரத்தில் சமற்கிருதம், தமிழ், தெலுங்கு, இசை, மேளம், பெருவங்கியம் (நாதசுரம்) கற்றுத்தரப் பெற்றன. தமிழவேளின் நண்பரும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரும் ஆகிய கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை திருவையாற்றுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார். சமற்கிருதம் தெரிந்த பார்ப்பன ஆசிரியர்களையும் ஆங்கிலம் தெரிந்த கிறித்துவக் குருமார் ஆசிரியர்களையும் மதித்த தமிழர்கள் தம் இனத்துக் கணக் காய ர் களுக் கு க் (தொடக் கக் கல்வி ஆசி ரிய ர் ) கொடுத்த மதிப்பைக் கூடத் தமிழாசிரியர்களுக்குத்தருவதில்லை . நகைச்சுவைக்குரிய பாத்திரங்களாக, கோமாளிகளாக, அக்கால இதழ்களும் புதினங்களும், நாடகங்களும், திரைப்படங்களும், தமிழாசிரியர்களைச் சித்திரித்தன. தமிழ்ப் பேராசிரியராகிய கவியரசு நகைச்சுவை பொங்கப் பாடம் நடத்துவாரே தவிர தோற்றத்திலும் ஆற்றலிலும் வல்லவர். இலக்கணம் திருவையாறு அரண்மனையின் மேல் மாடத்திற்குப் போனால் திரும்பி வர வழி தெரியாமல் குழம்ப வேண்டிவரும். அத்தனை அறைகள், மாடங்கள், வாயில்கள், கதவுகள்! பின்புறம் மிக நீளமான படித்துறை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே குளிக்கச் சுவர் வைத்துத் தடுத்திருந்தார்கள். மேல் மாடத்திலிருந்து பார்த்தால் காவிரி நீரும் அக்கரையில் உள்ள பசுஞ்சோலைகளும் தெரியும். கவியரசர் பெரிய நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். ஆம்! அந்த அரண்மனைதான் சத்திரமும் கல்லூரியும். இலக்கியங்களை மட்டுமல்ல, இலக்கணங்களையும் சுவையுடன் நடத்துவார் கவியரசு. கரிய மேனியும் நரைத்த மீசையும் சந்தனப் பொட்டும், நிமிர்ந்த தோற்றமும் தலைப்பாகையும் துண்டும் வெள்ளா டையும் அமைந்த நடையும் உடையவர். சங்க இலக்கியப் பாடல்களை மட்டுமல்லாது இலக்கணங்களையும் குறிப்பாகத் தொல்காப்பியத்தையும் மனப்பாடமாக நூற்பா எண்ணோடு சொல்லக் கூடியவர். உரைகளும் கூட அவருக்கு மனப்பாடம். வெறும் பாடமாக ஏட்டுச் சுரைக்காயாகக் கற்றுத் தராமல் வாழ்வியல் சிந்தனைகளுடன் நகைச்சுவை ததும்பப் பாடம் நடத்துவார். எல்லா மாணவர்களும் மனம் விட்டு வாய்விட்டுச் சிரித்து மகிழும்போது சிலசமயம் தாமும் தொந்தி குலுங்கச் சிரிப்பார். இலக்கணம் என்றாலே பிலாக்கணம் என்று அஞ்சி ஓடி னாராம் பாரதியார். இலக்கணம் என்றால் பலாச்சுளை என்று எடுத்துத் தேனில் தோய்த்து அளித்தார் கவியரசு. குற்றியலுகரம் என்பது ஒற்றுமை நயம்; உயிர்மெய் என்பது வேற்றுமை நயம் என்னும் கருத்துக்கு எடுத்துக்காட்டாக ஓர் நிகழ்ச்சியைக் கூறினார். புதுக்கோட்டை மன்னர் பார்ப்பனர்களுக்கு இலவய வேட்டி, சேலை அளித்தார். அதனை வாங்க பார்ப்பனப் பெண், மகனுடன் தொடர்வண்டியில் சென்றாள். ஆய்வாளர் வந்து சீட்டு கேட்டபொழுது மடியில் மகனை வைத்துக் கொண்டு ‘நான் மட்டும்தான், மடியில் இருப்பது சிறுகுழந்தை’ என்றாள் அரண்மனையில் பார்ப்பனப் பெண் தனக்குப் புடவையும் தன் குழந்தைக்குத் தனியே சிற்றாடையும், கருவுற்றிருக்கிற தன் வயிற்றைக் காட்டி இன்னொரு சிற்றாடையும் என மூன்று கொடை வாங்கினாள். அவள் போட்ட கணக்கு முதலில் ஒன்றும் ஒன்றும் ஒன்றாகியது! பின் ஒவ்வொன்றாக மூன்று ஆகியது! தனக்கும் குழந்தைக்கும் ஒரு சீட்டு என்றது ஒற்றுமை நயம், மூன்று கொடை வாங்கியது வேற்றுமை நயம் என்றார் கவியரசு. இப்படி நடத்தினால் இலக்கணம் கசக்குமா? கரந்தை கரந்தையிலிருந்து திருவையாற்றுக்குக் குதிரைவண்டியில் கவியரசு போய்க் கொண்டிருந்தார். மிக விரைவாக வண்டியை வண்டியோட்டி ஓட்டியதால் ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்து எழுந்தது வண்டி. உள்ளே இருந்த கவியரசு வண்டியோட்டி யிடம் கேட்டார். “ஏனப்பா, ஒரு நொடியில் கொண்டு போய் விடுகிறேன் என்றது இதுதானா?” என்றார். நொடி என்பது பள்ளத்தையும் குறித்ததால் நண்பர்கள் சிரித்தனர். கரந்தை என்பது கருந்திட்டைக்குடியின் மரூஉ மொழிப்பெயர். கரந்தை என்ற பூவின் பெயர் புறத்திணை அடிப்படையில் மீட்டலைக் குறிக்கும். தமிழின் பெருமையையும் வளர்ச்சியையும் மீட்கும் பணியில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தையே தம் வாழ்வாகக் கொண்டு உழைத்தார் கவியரசு. சங்க அமைச்சராகவும் சங்கத்து இதழாகிய தமிழ்ப்பொழில் ஆசிரியராகவும் இரவு பகல் பாடு பட்டவர் அவர். கரந்தையில் அவர் குடியிருந்தார். நண்பர் ஒருவர், “சாகை கரந்தையில் தானே?” என்று கேட்டார். சாகை என்ற சொல் (ஜாகை) குடியிருப்பதைக் குறிக்கும், தமிழில் சாதல் என்ற பொருளும் தரும். ஆதலால், ‘ஆம்... ஆம்... சாகை கரந்தையில்தான்” என்றார் கவியரசு. சாகை என்றது சாம் போதும் தமிழ் படித்துச் சாகும் வரை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்குத் தொண்டு செய்து வாழ்வேன் என்ற பொருளில் நகைச்சுவையுடன் கூறினார் எனில் அவர் தமிழ்ப் பற்றை என்னென்பது! பெயர் விழையான் உ.வே.சா. ஒருமுறை திருக்காட்டுப்பள்ளிக்கு வந்திருந்தார். ந.மு.வே. நாட்டாரும் கவியரசும் சிலப்பதிகார உரை எழுதிக் கொண்டிருந்தனர். கவியரசின் மாணவர் ஒளவை துரைசாமிப் பிள்ளையும் தமிழவேள் உமாமகேசுவரனாரும் அப்போது உடன் இருந்தனர். தேள் கொட்டியதால் மருந்துண்டு தேறிய நண்பர் ஒருவர், “கடித்த வாய்தான் கடுக்கிறது” என்றார். “கடியும் கடுக்கிறதும் ஒன்றுதானே?” என்று தமிழ வேள் கேட்டார். தமிழ்த்தாத்தா கவியரசரைப் பார்த்தார். கவியரசு தம் மாண வரைப் பார்த்து, ‘நீர் சொல்லும்’ என்று தலையாட்டினார். ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை “கடி என்னும் உரிச்சொல் கடுக்கிறது எனத் திரிந்து வினை ஆயிற்று. ‘கடுத்தது காட்டும் முகம்’ என்றாற் போல்!” என்று கூறினார். தமிழ்த்தாத்தா உடனே, ‘கவியரசரிடம் இலக்கணம் கற்றவர் என்று நிறு வினீர்கள். எடுத்துக் காட்டுக்களுடன் இனிமையான இலக்கணம் கற்பிப்பவர் என்றால் கவியரசுதான்” என்று பாராட்டினார். மேலும் , “ சீ வ க சி ந்தாமணியை நான் ப தி ப் பித் த போது பொறாமையால் பலர் குறை கூறி எழுதினார்கள். ஆனால் உண்மையிலேயே திருத்தங்களை எடுத்துக் காட்டிப் ‘பெயர் விழையான்’ என்ற புனைபெயரில் கவியரசு மடல் அனுப்பியிருந்தார். என்னையே திருத்திய பெரும்புலவர் என்ற புகழ் வேண்டா மென்று தன்னடக்கத்தால் பெயர் எழுதவில்லை” என்று பலவாறு பாராட்டினார் உ.வே.சா. தனித்தமிழ் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் மிகப்பெரும் பணி தனித் தமிழைப் பரப்பியதாகும். தமிழவேள் உமாமகேசுவரனாரும் கரந்தைத் தமிழ்ச்சங்க இதழும் கல்லூரியும் தனித்தமிழில் ஊற்றங்கொள்ளக் கவியரசின் எழுத்தும் பேச்சும் தூண்டல் ஆகும். பா.வே. மாணிக்கநாயக்கரும் தனித்தமிழ் பரப்பி வந்தார். ‘பிரேரேபிக்கிறேன்’ போய் ‘முன்மொழிகிறேன்’ என்றும் ‘தீர்மானம்’ போய் ‘முடிவு’ என்றும் வந்தன. “போஜனம் ஆயிற்றா? எனக் கேட்பது தமிழ் மரபு” என்று எழுதியஉ.வே.சா. தமிழ்ப் பொழிலின் எழுத்துத் தாக்குதலுக்கு ஆளானார். “உண்மைத் தமிழர் ஒவ்வொருவரும் தாம்தாம் பேசுங்காலும் எழுதுங்காலும் தமிழ்ச் சொற்களையே எடுத்தாளுதல் தமது கடமை என்று உறுதி கொள்ளல் வேண்டும். சிறார் முதல் கிழவர் ஈறாக உள்ளார் யாவரும் பிறமொழிக் கலப்பினை எவ் வாற்றானும் வேண்டாது விட்டொழித்தலைக் கடனாகக் கொள்ளல் வேண்டும் என்று கவியரசு ‘தமிழ்ப் பொழில்’ இதழில் எழுதினார். அறிவியல் தமிழ் உழவு, நெசவு, கட்டடம் முதலிய தொழில் நுட்பங் களிலும் மருத்துவம், வானியல் முதலிய அறிவியல் துறை களிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆற்றல் பெற்று விளங்கியவர்கள் தமிழ் இனத்தார். பொறியியல், மருத்துவ நுட்பங்களைத் தமிழ் இலக்கியங்கள் கூறியுள்ளன என்பதோடு தமிழால் தமிழில் - தமிழ் மொழியில் கூறவும் முடியும் என்று பா.வே. மாணிக்கநாயக்கரும், கவியரசும் விளக்கியுள்ளனர். பொறியியல் நுட்பங்களை விளக்குவதற்கு அடிப்படை, ‘கணக்கியல்’ ஆகும். அன்று நிலவு ஒளிபற்றியும் வண்டு எழுப்பும் ஒலி அல்லது இசை என்பது அதன் சிறைகள் (இறக்கைகள்) எழுப்பும் ஓசை என்றும் அறிவியல் செய்திகளை அறிந்திருந்தனர். மணிப்பொறி இல்லாத ப ழ ங் கால த் தில் வெயிலால் ஏற்படும் நிழலைக் கொண்டு கணக்கிட்ட அறிவியல் நுட்பத்தையும் கவியரசு எழுதியுள்ளார். “பெண்ணறிவென்பது பெரும் பேதைமைத்தே” என்னும் அடிக்கு விளக்கமாகப் பெண் ணறிவு எனத் தாழ்வாகக் கூறுவது பெரும் முட்டாள் தன்மை யாகும் என்றார் கவியரசு. கல்வித்தமிழ் ஆங்கிலக் கல்வியால் தமிழ்க் குழந்தைகள் சீர்கெடு கின்றன. இதனை, “ஐயோ! ஐந்து வயதிலேயே தங்கு தடை யின்றிப் பேசக்கற்றிருந்த தாய்மொழியில் இப்போது பேசு வதற்குத் தம்மால் இயலாது என்கின்றனரே! ஆங்கிலம் படித்த வாழ்வுதான் என்னே!” என்று வருந்தி எழுதியுள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வழியாகவும் திருவையாறு அரசர் கல்லூரி யில் பணியாற்றியதன் மூலமும் எண்ணற்ற புலவர் பெரு மக்களையும் தனித்தமிழ் அன்பர்களையும் உருவாக்கியர் கவியரசு. திருவையாற்றுக் கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய பெரும்புலவர் ஒருவர் “செந்தமிழ் என்று இக்காலத்தில் கூறுவதால் முற்காலத்தில் கொடுந்தமிழாக இருந்ததுபோலும்!” என்று பேசினார்; உடனே அதனை மறுத்து “செஞ்ஞாயிறு என்றால் கருஞாயிறு இருந்தது என்று ஆகுமா? செந்தமிழ், என்றும் செந்தமிழ்தான்; செம்மொழிதான்” என்று முழங் கியவர் கவியரசு. அரங்கவேங்கடாசலம் பிள்ளை அரங்கவேங்கடாசலம் பிள்ளை இயற்பெயர் : வேங்கடாசலம் சிறப்புப் பெயர் : கரந்தைக் கவியரசு (கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளிவிழாவில் ஞானியாரடிகள் வழங்கியது) பெற்றோர் : தருமாம்பாள், அரங்கசாமிப்பிள்ளை பிறந்தநாள் : 20-12-1886 (விய, மார்கழி 5) மறைந்த நாள் : 04-12-1953 (விசய, கார்த்திகை, 21, ஞாயிறு) ஊர் : மோகனூர் (புதுக்கோட்டை மா. கந்தர்வக் கோட்டை அருகில்) கல்வி :தஞ்சை : தூயபேதுரு உயர்நிலைப் பள்ளி (1902), தனிக்கல்வி :தமிழ் இலக்கியம்; கரந்தை வேங்கடராமப் பிள்ளையிடம். தமிழிலக்கணம் : மன்னை: காவல் ஆய்வாளர் மா.ந.சோமசுந்தரம் பிள்ளையிடம். பணி : மோகனூர் :வேளாண்மை, கணக்குப்பிள்ளை, மணியக்காரர். கோனார்ப்பட்டு : பள்ளி ஆசிரியர் (1920- 1922), தஞ்சை:தூய பேதுரு உயர்நிலைப்பள்ளி; தமிழாசிரியர் (1922-1932) திருவையாறு : அரசர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் (1932- 1942), கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சர் (செயலாளர்) (1911-1940), க ரந்தைத் தமிழ் ச் சங்க இதழ: தமிழ்ப்பொழில்: ஆசிரியர் (1925-1936) (1942) படைப்புகள் : ஆசான் ஆற்றுப்படை (தூயபேதுரு பள்ளியில் தம் ஆசிரியராக இருந்த குயிலையா என்னும் சுப்பிரமணிய ஐயர் மேல் இயற்றியது), மொழி அரசி, மணிமேகலை நாடகம், செந்தமிழ்க் கட்டுரைகள் (‘தமிழ்ப் பொழில்’ இதழில் வந்த கட்டுரைகள்) உரை : அகநானூறு உரை : வேங்கடவிளக்கு; ந.மு.வே.நாட்டாருடன் இணைந்து பதிப்பு : தொல்காப்பியம் :சொல்லதிகாரம் : தெய்வச்சிலையார் உரை. 42. கம்பர் என் மாமனார் சிங்கத்தையும் யானையையும் அடக்கி வாழ்ந்த தமிழர் களைக் குதிரை ஏறி வந்த ஆரியர்கள் மடக்கிச் சிந்துவெளி நாகரிகத்தைச் சிதைத்தது போல, வாள் வலியும் தோள் வலியும் கொண்ட மறவர்களையும் கோட்டையையும் சிறு குண்டுகளால் அழித்தனர் ஆங்கிலேயர். போர்க்களம் எங்கும் பிணக்குவியலும் குருதி ஆறும். ஓர் ஆங்கிலேயப் படைத் தலைவன் குதிரை மேல் வந்து கொண்டிருந்தான். பாஞ்சாலங் குறிச்சி வீரன் உடலெல் லாம் காயம் பட்டுக் கீழே விழுந்து கிடந்தான். அவன் உடலி லிருந்து குருதியும் உயிரும் வெளியேறிக் கொண்டிருந்தன. ஆங்கிலேயப் படைத் தலைவன் கேட்டான்: “சாகப் போகிறாய்... உன் கையில் ஏன் வாள்?” “உனக்கு வேண்டுமா?” “ஆம்!... ஆம்!... கொடு!” “உனக்காவது பயன்படட்டும்! வாங்கிக் கொள்... வா... வா... கிட்டவா!” குதிரையிலிருந்து கொண்டே குனிந்தான் ஆங்கிலேயன். கடைசி மூச்சுடன் கடைசிப் பணியாக வாளை வீசி ஆங்கி லேயனின் இரண்டு கைகளையும் துண்டாக்கி விட்டு விழுந்தான் பாஞ்சாலன். அவன் வழிவந்தவர்தான் செகவீர பாண்டியனார். தாய்மொழி மூன்று அகவையிலேயே பாண்டியனார் தந்தையை இழந்தார். ‘தந்தையொடு கல்விபோம்’ என்பர். தாயார் தம் மகனைச் சான்றோனாக்கப் பள்ளிக்கு அனுப்பினார். ஆசிரியர் நயினாப் பிள்ளை எண்ணும், எழுத்தும் எழுதப் பழக்கி, நீதி நூல்களைப் பொருள் அறிந்து மனப்பாடம் செய்ய வைத்தார். வீட்டிலோ தாயார் நாள்தோறும் உறங்கச் செல்லும் முன் இராம நாமங்களைக் கூறப்பழக்கினார். மற்போரும் சிலம்புக் கலையும், தமிழ் இலக்கண இலக்கியங்களும் சிறப்புறப் பயின்றார் பாண்டியனார். தாய் கூறிய அருள்மொழியாலும் தாய்மொழிக் கல்வியாலும் இளமையில் ஏற்பட்ட மனப்பதிவால் பண்பில் உயர்ந்தார். நீதிநூல்களில் தலைசிறந்ததாகிய திருக்குறளிலும் இராமகாதை ஆகிய கம்பராமாயணத்திலும் ஆழ்ந்த பற்றும் தேர்ந்த புலமையும் கொண்டு விளங்கினார். தாய்மொழியை - தாயின் மொழியைப் புறக்கணித்து ஆங்கிலத்தில் ‘மழையே மழையே போ, போ!’ என்று படிக்கத் தொடங்கி ஈரமும் வீரமும் அறியாமல், தமிழ் எழுத்தும் தமிழ் எண்ணும் தெரியாமல், மனப்பாடமும் குணப்பாடமும் (நீதி போதனையும்) இல்லாமல் தமிழ்க் குழந்தைகள் இன்று வளர் கின்றனர். மழையைப் போற்றித் தொடங்குவன திருக்குறளும் சிலப்பதிகாரமும். ‘வான மாமழை’ எனத் தொடங்கி 3811 பாடல்களில் ‘வீரபாண்டியம்’ எனக் கம்பராமாயணத்துக்கு இணையான காப்பியத்தைப் பாடினார். மறைந்த தன் மனைவி வெள்ளத்தாய் மொழிந்த நெடுநாள் விருப்பத்தை நிறைவேற்ற இக்காப்பியத்தை எழுதினார். தூத்துக்குடியில் சில காலம் வாழ்ந்து மதுரையில் குடியேறி மேலமாசி வீதியில் ‘திருவள்ளுவர் நிலையம்’ அமைத்து ‘வாசுகி அச்சகம்’ உரு வாக்கித் தாம் எழுதிய நூல்களைத் தாமே அச்சிட்டுத் தமிழ் பரப்பிவந்தார். தாய்நாடு தாய் நா ட்டு க்காக ப் பாடி ய தேசியக் கவி என்று பாரதியாரைப் பற்றி மட்டுமே பலர் அறிவர். அவரையும் தமிழ்நாட்டில் பிறந்ததால் தமிழின் பெருமை பேசியதால் சாதிவெறியைச் சாடியதால் ஒதுக்குவோர் உண்டு. இந்திய அரசு இந்திய விடுதலைக்குப் பாடிய கவிஞர்களைப் பற்றிய திரைப்படம் எடுத்தபோது பாரதியை ஒதுக்கிவிட்டது. இந்திய விடுதலைக்குப் பாடிய தமிழ்க்கவிஞர்கள் கவிமணி தேசிக விநாயகமும் நாமக்கல் கவிஞரும் மட்டும் அல்லர். அவர்களுக்கு முன்னரே வண்ணச் சரபம் தண்டபாணி அடிகளும், மு.ரா. கந்தசாமிக் கவிராயரும் ச.து.சு.யோகியாரும் இத்தகைய பலரும் பாடியுள்ளனர். இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கான தூண்டலாகப் பாண்டியனா ர் இய ற் றி ய வீர பாண்டியம் , தமிழ ர் வீர ம் , பாஞ்சாலங்குறிச்சி வீரவரலாறு முதலிய நூல்கள் அமைந்தன. ஆங்கிலேய அரசால் பாஞ்சாலங்குறிச்சி வீர வரலாறு தடை செய்யப்பட்டிருந்தது. இந்தியத் திருநாட்டின் விழிப் புணர்ச்சிக்காக இயற்றியதே ‘இந்தியத் தாய் நிலை’ என்ற நூல். இந்திய நாட்டின் மீது சீனர்கள் படையெடுத்தபோது (1962) ‘பாரதவீரர்’ ‘வீரதேவதை வணக்கம்’ என்ற நூல்களை எழுதினார். தமிழ் உலகம் ‘கவிராசபண்டிதர்’ என்று தமிழ் உலகம் போற்றும் வண்ணம் ஒன்பதாயிரத்துக்கு மேற்பட்ட பாக்களும் உரை, உரைநடை உள்ளிட்ட 30,000 அச்சுப்பக்கங்களும் எழுதியவர் பாண்டியனார். தமிழ்ப்புலவர்கள் படைத்த இலக்கியங்களைப் பற்றிய விளக்கமாகவும் திறனாய்வாகவும் எழுதிக் குவித்தார். புதினங்களைத் தொடர்கதையாக நூல் இதழ் வடிவில் வெளியிட்டவர்கள் அக்காலத்தில் உண்டு. வை.மு.கோதை நாயகி அம்மையார், ஆரணி குப்புசாமி முதலியார் ஆகியோரின் புதினங்கள் தனி இதழ்களாக மாதம்தோறும் தொடர்கதை போல் வந்தன. தாம் எழுதிய இலக்கியத்தையே மாதம் தோறும் நூல் இதழாகப் பாண்டியனார் வெளியிட்டு வந்தார். அற இலக்கியங்களில் தலைசிறந்ததும் தொன்மையானதும் ஆகிய திருக்குறள் பற்றியும் காப்பியங்களில் சிறந்த கம்பராமாயணம் பற்றியும் சங்கப் புலவர்கள் பற்றியும் எழுதினார். இந்தியத் தேசியம், கல்வி நிலை, மேனாட்டு அறிஞர் கருத்துகள், அறிவியல், உழவு ஆகியன பற்றிப் பாண்டியனார் எழுதினார். வள்ளுவத்தைத் தம் உள்ளத்தே வாங்கித் ‘தரும தீபிகை’ என்று இவர் எழுதிய 1000 பாக்களைக் கொண்ட நூலில் இருந்து 108 பாடல்களைத் தேர்ந்தெடுத்து நியூமென் என்ற அறிஞர் ஆங்கிலத்தில் (Light of Virtue) மொழிபெயர்த்தார். வாழும் வள்ளுவம் திருக்குறளுக்கு எத்தனை உரைகள், எத்தனை விளக்கங்கள், எத்தனை ஆய்வு நூல்கள், எத்தனை மொழி பெயர்ப்புகள்! ஏன்? சமயம் சாராத உலகப் புகழ் பெற்ற வாழ்வியல் நூல் திருக்குறள் ஒன்றே! சங்கக் காலம் முதல் இக்காலம் வரை தமிழ்ப்புலவர்கள் மேற்கோள் காட்டியும் எடுத்தாண்டும் உரை நூல்கள் விளக்க நூல்கள்பல வெளி வந்துள்ளன. முதுமொழிமேல் வைப்பு, வள்ளுவர் நேரிசை, சோமேசர் முதுமொழி வெண்பா முதலிய வெண்பாவகை நூல்கள் எண்ணற்றன தோன்றியுள்ளன. திருக் குறள் 1330 பாக்களையும் கூறி விளக்கமும் ஏற்ற நீதிக்கதையும் கூறிப் பாடியுள்ள நூல் ‘திருக்குறள் குமரேச வெண்பா’ ஆகும். இதனைப் பாண்டியனார் பாடியுள்ளார். இந்நூலுக்குப் பாண்டியனார் தாமே உரை எழுதி உரைக் குள்ளும் சிறப்பான சுவையான விளக்கங்கள் தந்துள்ளார். 4602 பக்கங்களை உடையது இந்நூல். இது 1924 முதல் 1938 வரை நூல் இதழாக மாதந்தோறும் வெளிவந்துள்ளது. திருக்குறளுக்கு உரைசெய்த அறிஞர்களில் தாமும் இடம் பெற வேண்டும் எனச் சென்னைத் தமிழிலும், கொச்சைத் தமிழிலும் முற்போக்கு எனத் தவறான விளக்கங்களை எழுதியும் திருக்குறள் பாக்களையும் அதிகாரங்களையும் முறைமாற்றியும் வெளியிடுவோரைக் கண்டிக்கப் பூவாளூர் தியாகராசச் செட்டியாரும் பாண்டித் துரைத் தேவரும் இன்றில்லை! சிறந்த முறையில் இன்றைய தமிழில் உரை எழுத விரும்புபவர்களும் காசுக்காக அல்லது ஆசைக்காகத் திருக்குறளில் ஆய்வு செய்கிறேன் என்பவர்களும் பாண்டியனாரின் ‘திருக்குறள் குமரேச வெண்பா மூலமும் உரையும்’ கட்டாயம் படிக்க வேண்டும். படிக்கப்போதுமான தமிழறிவு இல்லையென்றால் தொட்டுக் கும்பிட்டு விட்டு வாளா (சும்மா) இருக்க வேண்டும்! காப்பியக்கம்பர் தமிழுக்குத் ‘கதி’ என்பார் கம்பரும் திருவள்ளுவரும் ஆவர். இவர்களைச் சுவைபட அறிமுகம் செய்தவர்கள் நாவல ர் சோம சுந்தரபாரதியாரும் வ. வே. சு. அய்யரும் இரா.பி.சேதுப்பிள்ளையும் ஆவர். இவர்களுக்கு முன்னோடி பாண்டியனார் ஆவார். ‘கம்பன் கலைநிலை’ என 1941 முதல் 16 ஆண்டுகள் நூல் இதழ் மாதந்தோறும் வெளியிட்டு அதில் கம்பரையும் கம்பராமாயணத்தையும் வரலாறாகவும், கருத்துரை யாகவும், திறனாய்வாகவும், உரைபோலவும் கதைபோலவும், நாடகம் போலவும் சுவைபட எழுதினார். மொத்தம் 5888 பக்கங்கள் அச்சில் வந்துள்ளன. கம்பன் காப்பியச் சுவையை முற்றும் துய்த்து மகிழ்ந்தவர் தம் நாட்டுணர்வால் வீர பாண்டியன் ஊமைத்துரை வீர வரலாற்றை வீரபாண்டியம் என வரலாற்றுக் காப்பியமாகப் பாடினார். இக்காப்பியப் பாடல்கள் கம்பன் கவிகளுக்கு இணையானவை. “திருவள்ளுவரும், கம்பரும் எனக்குப் பிரியமான உரிமை யாளராய்ப் பெருகி வந்தனர். வள்ளுவர் எனக்கு நெருங்கிய பாட்டனாராய் நேரே தெரியவந்தார். கம்பன் அன்புரிமையான மாமனாராய் யாண்டும் அணுகி நின்றார்.” - என்று பாண்டியனார் கூறுவது உண்மைதான் என்பது அவர் எழுத்துகளால் புலனாகிறது. செகவீரபாண்டியனார் செகவீரபாண்டியனார் இயற்பெயர் : செகவீரபாண்டியன் சிறப்புப்பெயர் : கவிராசபண்டிதர், சொல்லின் செல்வர், அமுதவாக்கி பெற்றோர் : ஆவுடையம்மை, பெருமாள்சாமி பிறந்தநாள் : 10-03-1886 மறைவு நாள் : 17-06-1967 ஊர் : நெல்லை மா.ஒட்டநத்தம் கல்வி : ஒட்டநத்தம் - நயினார்ப் பிள்ளையிடம் தொடக்கக்கல்வி; கோயிலூர் மடத்திலும் சிவஞானபுரம் இலக்கணமுத்துக் கவிராயரிடத்திலும் தமிழ்க் கல்வி. பணி : தமிழ் கற்பித்தல், நூல்கள் எழுதுதலும் அச்சிடலும் விற்பனையும், சொற்பொழிவு படைப்புகள் : செய்யுள் - திருச்செந்தூர் அந்தாதி, மாசிலாமணி மாலை (1910), தருமதீபிகை (1000 பாடல்கள் உரையுடன், 1932), அணியறுபது (உரையுடன், 1934), வீரபாண்டியம் (3811 பாடல்கள், 1937) திருக்குறள் குமரேசவெண்பா (1330 பாடல்கள் உரையுடன் (1938), அரும்பொருள் அமுதம் (2000 பாடல்கள், 1951), இந்தியத் தாய் நிலை (864 பாடல்கள், 1955), தாய்மையின் தகைமை (1956) வீரதேவதை வணக்கம், பாரதநாட்டு வீரர் (115 பாடல்கள், 1965) உரைநடை : தமிழர் வீரம் (நெல்லை இந்துக் கல்லூரியில் சொற்பொழிவு 19-06-1915 நூல் 1918), அகத்திய முனிவர் (1933), பாஞ்சாலங்குறிச்சி வீரவரலாறு (1939), கல்விநிலை (1954), கவிகளின் காட்சி இறையனார் (1957) நூல் இதழ்கள் : திருக்குறள் குமரேச வெண்பா (1924- 1938), புலவர் உலகம் (1941-) கம்பன் கலை நிலை (1941-1957), மொழிபெயர்ப்பு : உலக உள்ளங்கள் (6000 நன்மொழிகள் கிடைப்பன 832) அச்சேறாதவை : மனிதனும் தெய்வமும், ஒழுக்கம், சாந்தம், கம்பர் கவித்திறம், எனது வாழ்வு, முருக வேள், உழவும் உலகமும், உயிரினங்கள் (எறும்பு முதல் குரங்கு வரை). 43. ஏர்மனி அரசரும், தமிழ் ஆச்சாரியாரும் கடல் அலைகள் இன்னிசை பாடிக் கொண்டிருந்த தரங்கம் பாடியில் வந்து இறங்கினார் சீகன்பால்கு என்னும் குருமார். கடற்கரை மணலில் அவரது கைவிரல்களை அழுத்திப் பிடித்துத் தமிழ் எழுத்துகளை எழுதக் கற்றுத் தந்தார் மலையப்ப ஆச்சாரியார். சீகன்பால்குவுடன் ஏர்மனி (ஜெர்மனி) சென்று அரசருடன் ஏர்மன் மொழியில் பேசினார் பீட்டர் மலையப்பன் எனப் பெயரும் கிறித்துவ மதமும் ஏற்று! சீகன் பால்கு எழுதிய கிறித்துவ சமய நூல்களை அச்சிடத் தமிழ் எழுத்துகளை ஏர்மனியில் ஹாலே நகரில் மலையப்பன் வடிவமைத்துத் தந்தார். சீகன் பால்கு எழுதிய தமிழ் இலக்கணம் 1716-இல் ஹாலே நகரில் அச்சிடப்பெற்றது. அந்த ஏர்மனி நாட்டுக்குத் தமிழ் மொழி வரலாறு, தமிழ் நூல்கள் பட்டியல் , தமிழ்ப் பழமொழிகள், தமிழ் ச் சித் த மருத்துவம், ஓலைச்சுவடிகள் முதலிய தமிழகத்துச் செய்திகள் கிறித்துவக் குருமார்களால் அனுப்பப் பெற்றன. அதனால்தான் இலங்கையிலிருந்து மிகச்சிறந்த தமிழ்மொழி வேர்ச்சொல் ஆய்வாளராகிய ஞானப்பிரகாச அடிகளார் சென்றபோது ஏர்மனி அரசு மிகச்சிறந்த வரவேற்பு அளித்தது. அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலையும் வெளியிட்டு தமிழ் ஆச்சாரியார் (மதபோதகர்) ஆகிய அவரைச் சிறப்பித்தது. ஓட்டமும் நாட்டமும் யாழ்ப்பாணம் மணிப்பாயில் இந்து மதக் கோயிலில் காவலர் வேலை பார்த்து வந்த இராசசிங்கம் சாமிநாதப் பிள்ளை இளம் மனைவியையும் பச்சிளம் பாலகன் வைத்திய லிங்கத்தையும் தவிக்கவிட்டு இறந்து போனார். அவர் மனைவி தங்கமுத்து தனித்து வாழ முடியாத சூழலில் அச்சுவேலி கத்தோலிக்கர் தம்பி முத்துப்பிள்ளையை மறுமணம் செய்து கொண்டார். கல்வி இதழ் ஒன்றை நடத்திவந்த அக்கத்தோலிக்கர் தங்கமுத்து மகனைத் தம் மகனாக ஏற்றுத் தாமே கல்வி தந்தார். தங்கமுத்து மனம்மாறி மதம் மாறியதுடன் மகன் வைத்திய லி ங் க த் தையு ம் ம த ம் மாற் றி ஞானபிரகாசம் எ ன ப் பெயரிட்டார். பெயருக்கேற்ப ஞானப் பிரகாசர் ஞான ஒளி யாகத் திகழ்ந்தார். பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வி யும் முடித்து, குடும்பச் சூழலால் உயர்கல்வி பெறமுடியாமல் தேயிலைத் தோட்டத்தில் கணக்கு எழுதும் வேலையில் சேர்ந்தார். ஞானப்பிரகாசர் தொடர்வண்டித் துறைத் தேர்வு எழுதி இருந்ததால் தேர்ந்தெடுக்கப் பெற்று யாழ்ப்பாணத்தில் கோட்டை தொடர்வண்டி நிலையத்தின் தலைவரானார். நல்லூரில் சில காலம் பணியாற்றினார். வண்டியோட்டத்தைக் கவனிக்கும் மனவோட்டம் இல்லாமல் இறை நாட்டத்தில் ஈடுபட்டார். குருமார் பயிற்சி பெற்றுச் சமயப் பரப்புநர் ஆனார். சமயத் தொண்டு ஞானப்பிரகாசர் சமயச் சொற்பொழிவுகளும் எழுத்துப் பணியும் மேற்கொண்டு வாழ்ந்தார். தொடக்கத்தில் எதிர்ப்புப் பணியும் தருக்கவாதமும் செய்து புராட்டஸ்டன்ட் கிறித்துவத் தையும் இந்து சமயத்தையும் தாக்கிப் பேசவும் எழுதவும் செய்தார். மூடப்பழக்கங்களையும் குறைகளையும் சாடுவதே அவர் நோக்கமாக இருந்தது. பிள்ளையார், முருகப் பெருமான், சிவமதம், இந்து மதம், உயிர்ப்பலி ஆகிய தலைப்புகளில் எழுதினார். தீண்டாமையைக் கடுமையாக எதிர்த்தார். மாட்டு வண்டியில் ஊர் ஊராகச் சென்று மதம் பரப்பினார். ஊர் தோறும் கிறித்துவ ஆலயங்கள் கட்டினார். கல்விக்கூடங் கள் தொடங்கவும் வழிவகை செய்தார். எழைகள், ஏதிலிகள், தாழ்த்தப்பட்டோர் என அனைவருக்கும் உதவினார். மழைக் காலத்திலும் புயலிலும் வெள்ளத்திலும் நோய் பரவிய காலங் களிலும் துன்பப்படுவோரைக் காப்பாற்றினார். கடும் மழையில் நனைந்தபடி தொண்டுகள் புரிந்த ஞானப்பிரகாசர், மழை விட்டதும் த ம் அன் ப ர் களிட ம் மாற்றுடை கேட்டார் . அவருடைய புகழால் பொறாமை கொண்ட ஒருவர் கூறைப் புடவையைக் கொடுத்தார். தயங்காமல் அணிந்து கொண்டு மணக்கோலத்தில் ஞானப்பிரகாசர் தொடர்ந்து சமயப் பயணத்தை மேற்கொண்டார். மிகச் சிறந்த படிப்பாளியும் படைப்பாளியும் பேச்சாள ருமாகிய ஞானப்பிரகாசர் போராளியாகவும் விளங்கினார். சமயத் தொண்டில் தன்னுடன் பணியாற்றும் தோழர்களிடம் அன்பு பாராட்டினாலும் மிகக் கடுமையாக வேலை வாங்கினார். ‘இது ஒரு படைக்களம். கேட்டு நட, இல்லையென்றால் சுட்டுக் கொல்லப்படுவாய்!’ என்பார். தாழ்த்தப்பட்ட சாதியினராகிய ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்திருந்தார். “படிப்பறிவும் பண்பாடும் இல்லாத இவர்கள் அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்கிறார்கள். காலி செய்யச் சொல்லுங்கள்” என்று சில உயர்சாதியினர் கூறினர். “முடியாது! பெற்றவளுக்குத் தான் தெரியும் பிள்ளை வருத்தம்” என்றார் ஞானப்பிரகாசர். தாழ்த் தப்பட்ட சாதியினர் வாழும் பகுதிகளில் உள்ள கிணறுகளிலும் குளங்களிலும் உயர் சாதியினர் குப்பைகளைக் கொட்டினர். சில கொடியவர்கள் நஞ்சும் கலந்தனர். இக்கொடுமைகளைத் தடுத்தார். ஏழைகளுக்கு உதவ மிதிவண்டியில் நெடுந்தொலைவு பயணம் செய்தார். சொல் ஆய்வு இளம் பருவத்தில் பள்ளி நண்பர்கள் ஞானப் பிரகாசரைக் கடுஞ் சொற்களால் திட்டினர். திரும்பத் தீய சொற்களால் திட்டவிரும்பாத ஞானப்பிரகாசர் அவர்களைத் தீஞ்சொற் களால் கடிந்து கவிதை தீட்டினார். அந்த நண்பர்கள் கவிதையை ஆசிரியரிடம் கொடுத்துக் கோள் சொல்லினர். கோல் எடுத்த ஆசிரியர் அடித்த அடியில் ஞானப்பிரகாசரின் கணையாழி (மோதிரம்) தெறித்தது. ஞானப்பிரகாசரின் கவிதை ஆர்வமும் மூட்டை கட்டப் பட்டுவிட்டது. ஆனால் அவரது ஆய்வு மனப்பான்மையும் அறிவுத் தேடலும் இறை நாட்டமும் பெருகின. தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்றும் பள்ளிப் பருவத்திலேயே நன்கு படித்திருந்த ஞானப்பிரகாசர் சமற்கிருதம், தெலுங்கு, கன்னடம், பாலி, திபெத்து, பர்மியம், இத்தாலி, பிரெஞ்சு முதலிய 20 மொழிகள் நன்கு கற்றார். மேலும் கிரேக்கம், போர்த்துக்கீசு, ஏர்மன் (செர்மன்) முதலிய 50 மொழிகள் ஓரளவு அவருக்குத் தெரியும். பலமொழிகள் தெரிந்ததால் ஞானப்பிரகாசருக்குத் தமிழின் உயர்வும் சிறப்பும் தலைமையும் புரிந்தன. தொடர்ந்து தமிழ்ச் சொல் ஆய்வில் ஈடுபட்டார். கால்டு வெல்லின் ஒப்பிலக்கணமும் கதிரைவேற்பிள்ளையின் அகராதியும் தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் அவரை ஈடுபடுத்தின. ‘சிந்து வெளி நாகரிகம் தமிழருடையதே’ என்று நிறுவிய ஈராசு குருமாருடன் இணைந்து கட்டுரைகள் எழுதிச் “சிந்துவெளி எழுத்துகள் தமிழினுடையவை; நா கரி கம் தமிழ ர் நாகரி கம் ” என்று நிறுவினார். சிங்கள மொழியில் இருக்கும் திராவிட மொழிக் கூறு களை விளக்கி ஞானப்பிரகாசர் ஓர் கட்டுரை படித்தார். சிங்களர்களும் புரியாத வேறுசிலரும் எதிர்த்தனர். பல மொழி களிலிருந்து வேர்ச்சொற்கள் காட்டிப் பேசியதும் மிகப் பெரிய மொழியியல் அறிஞர்கள் ஏற்றாலும், சிங்களர் சிலர் தொடர்ந்து கட்டுரையைப் படிக்க விடவில்லை. உடனே 12 மொழிகளில் தம் கட்டுரையை மொழிபெயர்த்து உலக அளவிலான மொழி அறிஞர்களுக்கு அனுப்பினார். ஏர்மனி, பிரஞ்சு நாட்டு அறிஞர்கள் ஞானப்பிரகாசரைத் தம் நாட்டுக்கு அழைத்துப் பாராட்டினர். இலங்கை அரசு அவரை வரலாற்றுக் கையொப்பச் சுவடி ஆய்வுக்குழு உறுப்பினர் ஆக்கியது. ஞானப்பிரகாசர் தமிழின் செல்வாக்கு சிங்கள மொழியில் மட்டுமல்லாது உலக மொழிகள் பலவற்றிலும் உள்ள சிறப்பை எடுத்துக் காட்டிக் கட்டுரைகள், நூல்கள் எழுதியதுடன் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவாற்றியும் நிறுவினார். திருப்பனந்தாள் மடம் அவரைப் பாராட்டியது. ‘கலை’ என்பது வடசொல் என்று சிலர் கூற, தமிழ்ச் சொல் என்று நிறுவினார். தமிழக அரசு ரூபாய் 4,10,000 செலவு செய்து 27 ஆண்டுகளில் பல தமிழ் அறிஞர்களைக் கொண்டு செய்த பேரகராதியில் “தமிழர் என்றால் தம்ளர்” என்று பொருள் வெளியிட்டனர். உலகமொழிகளோடு ஒப்பிட்டுத் “தமிழ் வேர்ச்சொல் ஒப்பியல் பேரகராதி” எனப் பலரிடம் நிதி உதவி பெற்றுத் தொகுதி தொகுதியாகத் தனி ஒருவராக உழைத்து வெளியிட்டுத் தமிழ் மொழியின் சிறப்பையும் உலகமொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழியே மூலமொழி என்பதையும் ஞானப்பிரகாசர் நிறுவினார். இவர் வழியில் வேர்ச்சொல் ஆய்வில் ஈடுபட்டுத் தமிழே உலகத் தாய்மொழி என அறிவித்தனர் மாகறல் கார்த்திகேய முதலியாரும் தேவநேயப் பாவணரும். ஞானப்பிரகாச அடிகளார் ஞானப்பிரகாச அடிகளார் இயற்பெயர் : வைத்தியலிங்கம் சிறப்புப்பெயர் : ஞானப்பிரகாசம், நல்லூர் ஞானப்பிரகாசர், சுவாமி ஞானப்பிரகாசர் பெற்றோர் : தங்கமுத்து அம்மையார், இராசசிங்கம் சாமி நாதப்பிள்ளை பிறந்தநாள் : 30-08-1875 மறைவு நாள் : 22-01-1947 ஊர் : யாழ்ப்பாணம் அருகில் மணிப்பாய்/ மனிப்பாய். கல்வி : வளர்ப்புத் தந்தை தம்பி முத்துப் பிள்ளையிடம் தமிழ்க் கல்வி, உள்ளூர் தொடக்கப்பள்ளிக் கல்வி, வட்டுக் கோட்டை கிறித்துவ ஆங்கிலக் கல்விச் சாலை, புனித பத்திரிசியார் கல்லூரி, தூய மார்ட்டின் குருமத்தில் மதபோதகர் பயிற்சி குரு பட்டம் (1901) பணி : கொழும்பு - தேயிலைத் தோட்டக் கணக்கர், கோட்டை தொடர்வண்டி நிலையத் தலைவர், ஊர்க்காவல் துறையில் உதவி குருமார், தமிழ் வேர்ச்சொல் ஆய்வாளர், எழுத்தாளர் படைப்புகள் : தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும், யாழ்ப்பாணச் சரித்திர ஆராய்ச்சி, கத்தோலிக்கத் திருச்சபையும் அதன் போதகங்களும், துறவிஞானம், தேவ ஆராதனை முறை, ஆண்டவர் சரித்திரம், தருக்க சாத்திரச் சுருக்கம், கிறிஸ்து நாதர் சரித்திர ஆராய்ச்சி, போர்த்துகீசர் ஒல்லாந்தர் கால யாழ்ப்பாணச் சரிதை, போர்த்துகீசரின் ஆளுகையில் யாழ்ப்பாண அரசர்கள் (1916), யாழ்ப்பாண வைபவ விமரிசனம் (1928), கத்தோலிக்க வேத வரலாறு, சுப்பிரமணிய ஆராய்ச்சி (1916) பிள்ளையார் ஆராய்ச்சி (1921) மிருகபலி ஆய்வு (1917) புதினம் (நாவல்) : செகராச சேகரன் ஆங்கில நூல்கள் : யாழ்ப்பாண அரசர், பண்டைய இந்திய சரிதையும் ஆண்டு வரிசையும், தமிழரின் சாதி உற்பத்தி. வேர்ச்சொல் ஆய்வு : தமிழ் அமைப்புற்றது எவ்வாறு (1927), தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகள் (1932), தமிழ் வேர்ச்சொல் ஒப்பியல் பேரகராதி (இரண்டு தொகுதிகள், ஒவ்வொன்றும் பத்து பகுதிகள்) 1938. கிறித்துவ சமய இதழ் :குடும்ப வாசகம் (மாத இதழ்) அமலோற்பவ இராக்கினி தூதன் (மாத இதழ்) சத்திய வேத பாதுகாவலன் (வார இதழ்) 44. இராயப்பேட்டை இரண்டானது வானமே எல்லை எனப் புறப்பட்டு விட்டால் அகவை (வயது) ஓர் தடை ஆகுமா? பத்து வயது வரைதான் படிப்பு. பின் பலசரக்குக் கடை வைத்து வணிகம் பதினாறு ஆண்டு நடத் தியவர். பிறகு முப்பத்து மூன்றாம் அகவையில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. ஓய்வின்றி இரவு பகல் பாராமல் படித்தார். வேதாந்தம் தருக்கம் இரண்டிலும் புகழ் பெற்றார். வள்ளலாரின் அருட்பா மருட்பா அல்ல என்று வாதிட்டார் திருக்குறளின் பெருமையை உலகுக்கே உணர்த்தினார். யாழ்ப்பாணம் நா. கதிரைவேற் பிள்ளையுடனும் திரு.வி.க.வுடனும் மறை மலையடிகளுடனும் எதிர்வாத ம் பு ரிந் தார் . இதழ்களில் எழுதினார். தாமே இதழ்கள் தொடங்கினார். அச்சகம் தொடங்கினார். தம் இதழையும் நூல்களையும் வெளியிட்டார். சொற்பொழிவாற்றினார். தருக்கமேடைகளில் வாதத்தில் வென்றார். உரைகள் எழுதினார். இலக்கியங்களை உரைநடை (வசனம்) ஆக்கினார். நாடகம் செய்தார். மொழிபெயர்த்தார். எழுபது அகவைக் கு மேலும் இத் தனைப் பணிகளையு ம் தொடர் ந்து ஆற்றிக் கொண்டிருந் தவர் கோ.வடிவேலுச் செட்டியார் ஆவார். மலைப்போர் வேதாந்தமும் தருக்கமும் படித்திருந்த வடிவேலர் தம் நோக்கில் “முதற்குறள் வாதம்” என 1897-இல் 16 பக்க அளவில் நூல் வெளியிட்டார். அதனை எதிர்த்து 1898-இல் நாகை வேதாசலம் பிள்ளை (மறைமலையடிகள்) “முதற்குறள் வாத நிராகரணம் என 50 பக்க அளவில் நூல் எழுதினார். அதனை மறுத்து 1900-இல் வடிவேலர் “முதற்குறள் வாத நிராகரண சததூஷணி” என எழுதினா ர். திருக் கு றளைப் பன்முகப் பார்வையில் பா ர் க் க இந்த நூல்கள் தூண்டுகோலாய் அமைந்தன. சாது இரத்தினம் செட்டியாரிடம் வேதாந்தம் 12 ஆண்டுகள் பயின்றவர் வடிவேலர். நடுக்காவேரி கு.சீனிவாச சாத்தியாரிடம் தருக்க நூலும் பயின்றிருந்தார். ஆங்காங்கு ‘வேதாந்த’ அவை (சபை) நிறுவி வேத நெறிப் பாடங்கள் நடத்தினார். தருக்கம் பயின்றிருந்ததால் மேடைகளில் வேத நெறி பற்றிச் சிறப்பாக வாதிட்டு ‘வேதாந்தி’ என்று புகழ்பெற்றார். மருட்போர் வடிவேலர் அருட்பா கட்சியைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணம் நா.கதிரைவேற் பிள்ளை அருட்பாடல்கள் அல்ல என்று மேடைதோறும் பேசி வந்தார். அவரது மாணவராகிய திரு.வி.க. வள்ளலாரை எதிர்க்கவில்லை என்றாலும் ஆசிரியர்க் குத் துணை போக வேண்டியிருந்தது. அதனால் சில காலம் திரு.வி.க.வுடன் வடிவேலர் மாறுபட்டிருந்தார். இராயப்பேட்டை வேதநெறி அவையில் இரவு நடந்த ஒரு கூட்டத்தில் கதிரைவேலர் ‘முக்காலம்’ என்று பேசினார். வடிவேலர் அவரை எதிர்த்து வாதிட்டு ‘எக்காலம்’ என்பதையும் சேர்த்து நான்கு காலம் என்றார். வாதம் மூன்று மணி நேரமும் கடந்து நான்கு மணி நடந்தது. இதனால் எதிரணியாகச் ‘சித்தாந்த’ அவை தோன்றியது. இராயப்பேட்டை அம்மையப்ப முதலித் தெருவில் வேதாந்த அவை வடிவேலர் தலைமையில் கூடிப்பேசுவர். எதிர்தரப்பாகச் சித்தந்த அவை இராயப்பேட்டை முத்து முதலித் தெரு சுந்தரnசுவரர் கோயிலில் திரு.வி.க. தலைமையில் கூடி வேதாந்த கருத்துகளை மறுத்துப் பேசுவர். வேதாந்த சித்தாந்தப் போரால் இராயப்பேட்டை இரண்டாயிற்று! பொதுமக்களுக்கு நல்ல சமய இலக்கிய விருந்து அடிக்கடி இரவு நேரங்களில் கிடைத்தது! அருட்போர் வள்ளலாரின் பொதுநெறியைப் பின்பற்றிய வடிவேலர், ‘அருட்பா அல்ல மருட்பா ’ என்று எதிர்வா தம் செய்த யாழ்ப்பாணம் நா.கதிரைவேலர் மறைந்தபோது, “கதிரைவேல் போய் விட்டானே! வாத அவைகளும் அவனுடன் போயினவே! வாதத்துக் கென்று எத்தனை பேர் தொல்காப்பியம் படித்தனர்? தருக்கம் படித்தனர்? வல்லாளன் மறைந்தான்!” - என்று புலம்பிக் கதறிக் கண்ணீர் சிந்தினார். கருத்தாலும் கொள்கையாலும் மிகப்பெரிய அளவு வேறுபட்டாலும் பகை கொள்ளாமல் வாழ்ந்தன அந்தத் தமிழ் நெஞ்சங்கள்.! திரு.வி.க. தம் ஆசிரியர்க்காக ‘மருட்பா அணியில் இருந்தாரே தவிர மேடையில் எதிர்த்துப் பேசவேயில்லை. வள்ளலாரின் அருள் நெறியும் சமயப் பொதுமையும் திரு.வி.க.வுக்கு உடன் பாடானவை. திரு.வி.க. ஒருமுறை வடிவேலரிடம் கேட்டார் : “முன்னாளில் நீங்கள் ஏன் வாதத்தில் புரண்டீர்கள்?” “கால நிலை, இளமை, பொறாமை, புகழ் விருப்பம்... யானும் கழுதையாய் இருந்தேன். குப்பையில் புரண்டேன்.” - என்று கூறினார் வடிவேலர். “பணியுமாம் என்றும் பெருமை” என்பதன் எடுத்துக்காட்டாக அகவை முதிர்ச்சி அன்பின் முதிர்ச்சியாகி அருள் பழுத்தது! வாதப்போர் விட்டிருந்தாலும் வடிவேலர் ஆரியரின் உயிர்க் கொலை வேள்விக்கும் சிறு தெய்வ வழிபாட்டில் ஆடுமாடு காவு (பலி) க்கும் எதிராக அருட்போர் நடத்தினார். வள்ளலாரின் அருள் நெறியைப் பரப்பி ஊர்தோறும் பேசி வந்தார். வெட்டுவானம் என்ற ஊரில் ‘சன்மார்க்க அவை’ ஆண்டுவிழாவில் ‘பலி மறியல்’ நடைபெற்றது. உயிர்க் கொலை கூடாது என்று மக்களுக்கு உணர்த்த ஆடுவெட்டும் கத்தியின் கீழே தம்முடைய தலையை வைத்தார். உரைப் போர் வேதநெறி பற்றி நிறைய பேசியதுடன் எழுதவும் செய்தார் வடிவேலர். புரியாதது வேதநெறி என்பதை மாற்றப் புரியும்படி எளியநடையில் நிறைய உரைநடைநூல்கள் எழுதினார். தத்துவ, ஞான நூல்களுக்கு விளக்கங்கள் எழுதினார். தொடர்ந்து மக்களை உடடினயாகத் தம் எழுத்துகள் சென்றடைய இதழ் களில் கட்டுரைகளாக எழுதினார். லோகோபகாரி, சக்கர வர்த்தினி என்ற இதழ்களைத் தாமே விலைக்கு வாங்கி நடத்தினார். ‘லோகோபகாரி’ இதழுக்கு ஓர் சிறப்பு உண்டு. வரவர இந்த இதழ் மிகுதியாக விற்பனை ஆவதைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேய - இந்திய அரசு ‘இந்திய மொழி இதழ்கள் கட்டுப் பாட்டுச் சட்டம்’ 1908-இல் கொண்டு வந்தது. இச் சட்டத்தின் நெருக்கடியால்தான் பாரதியார் சென்னையிலிருந்து புதுவைக் குத் தப்பிச் சென்றார். ‘சக்கரவர்த்தினி’ என்ற மகளிர்க்கான இதழ் பாரதியை ஆசிரியராகக் கொண்டு 1905-இல் தொடங் கப்பட்டது. வடிவேலர், இவ்விதழ்களில் வேதநெறி பற்றி மட்டுமல்லாமல் மொழி, அரசியல், வட்டம், தத்துவம், இலக்கியம், விழாக்கள், உலகப்போர், இந்திய விடுதலைப் போராட்டம் பற்றியும் வெளியிட்டார். நூல்கள் இதழ்கள் வழி உரைநடையில் கருத்துகளைப் பரப்பிய வடிவேலர் கடினமான சமயத் தத்துவ நூல்களுக்கு உரையும் எழுதி வந்தார். இவற்றுள் இவருக்குப் பெருமை சேர்ப்பது திருக்குறள் பதிப்பே. வடிவேலர் திருக்குறள் ஆசி ரி ய ரி ன் வ ர லாற்றை எ ழு தி த் தி ரு க் கு ற ள் மூ லமு ம் பரிமேலழகர் உரையும் அதற்குத் தாமெழுதிய இலக்கண இலக்கிய அடிக் குறிப்புகளுடன் மிகச் சிறப்புறப் பதிப்பித்துப் புகழ்பெற்றார். கோ.வடிவேலுச் செட்டியாரை திரு.வி.க. பாராட்டுகிறார் : “கலைகளே செட்டியார்; செட்டியாரே கலைகள். அன்பர் செட்டியாரை ஒரு பல்கலைக்கழகம் என்று கூறல் மிகையாகாது.” கோ. வடிவேலுச் செட்டியார் கோ. வடிவேலுச் செட்டியார் இயற்பெயர் : வடிவேலு சிறப்புப்பெயர் : வேதாந்தி, கோமளேசுவரன்பேட்டை வடிவேலுச் செட்டியார் பெற்றோர் : தனக்கோடி அம்மாள், சுப்பராயச் செட்டியார் பிறப்பு : 1863 மறைவு : 1935 ஊர் : சென்னை, கோமளேசுவரன் பேட்டை கல்வி : தொடக்கக் கல்வி (1868-1975), சாது இரத்தினம் செட்டியாரிடம் வேதாந்தக் கல்வி (1880-1902), நடுக்காவேரி கு.சீனிவாச சாத்திரியாரிடம் தருக்கக்கல்வி. மனைவி : பூங்காவனம் பணி : பலசரக்குக் கடை வணிகர் (1875- 1889); சென்னை, இந்து தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளி, தமிழாசிரியர் (1896-1933); லோகோபகாரி (வார இதழ்) - இத ழாசிரியர், உரிமையாளர். (1911-1922) சக்கரவர்த்தினி (மாத இதழ்) - இத ழாசிரியர், உரிமையாளர் (1911-1918) படைப்புகள் : முதற்குறள் வாதம் (Divita - Mata- Tiraskari) முதற்குறள்வாத நிராகரண சத தூஷணி (1900) புனிதவதி (காரைக்காலம்மையார் 150 வரலாற்று நாடகம்), சித்தாந்த பிந்து (மொழிபெயர்ப்பு), வியாச போதினி, மெய்ஞானோபதேசம், கட்டளை சங்கை நிராகரணம், தருக்க பரிபாடை, சிவஞான போத உரை. உரைநடையாக்க நூல்கள்:கைவல்ய நவநீதம், குசேலே பாக்கியானம், வேதாந்த சூளாமணி, பகவத் கீதை வசனம், நானாசிவ பாதக்கட்டளை குறிப்புரை பதிப்பு : யூபி.தெய்வநாயக முதலியாருடன் இணைந்து பதிப்பித்தது. 45.சமணத் தத்துவ ஞானி சமண (சைன) மதம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிறைய வாரி வழங்கியுள்ளது. தமிழர்களின் தொன்மையான தலைமை யான இலக்கணம் ஆகிய தொல்காப்பியத்தையும் இலக்கிய மாகி ய தி ரு க் கு றளையு ம் இ ய ற் றி ய தொல்காப்பி ய ரு ம் திருவள்ளுவரும் சமணர் என்று கூறப்படுகின்றனர். சிலப்பதி காரமும், சீவகசிந்தாமணியும் வளையாபதி யும், குண்டல கேசியும் ஆகிய காப்பியங்கள் சமணச் சமயத்தைச் சார்ந் தவையே. தொன்மையான தமிழ்ச் சங்கம் போல் மதுரை யில் ச மணர்கள் அமை த்த ‘ திரமிள ச ங்கம் ’ (கி .பி.4 7 0 ) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சிலவும் இலக்கண நூல்களும் தோன்றிய இடம் என்பர். அவ்வழியில் பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளிலும் சமணச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்ப் பணி புரிந்துள்ளனர். சமண மதத்தைச் சார்ந்த சக்கரவர்த்தி நயினார் இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தமிழ்ச் செம்மல் ஆவார். படிப்பு! படிப்பு! காஞ்சிபுரம், தஞ்சாவூர், மன்னார்குடி முதலிய ஊர்களில் சமணர் குடியிருப்புகளும் கோயில்களும் இன்றும் உள்ளன. முற்காலத்தில் சமணத் துறவிகள் மலைமேல் வாழ்ந்து கொண்டு இருந்தனர்; தம்மைத் தேடிவரும் பொது மக்களுக்குத் தமிழ் இலக்கணம் இலக்கியம் வாழ்வியல் அறங்கள் ஆகியவையும் சமணச் சமயக்கருத்துகளும் கூறுவர். சித்த மருத்துவமும் அளிப்பர். திண்டிவனம் அருகில் வீடூரில் பிறந்த சக்கரவர்த்தி நயினார் கல்வித்துறையில் நாட்டம் உள்ளவராக இருந்தார். சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை படித்து மாநிலத்திலேயே முதலாவது மதிப்பெண் பெற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் மில்லர் ஏற்படுத்தியிருந்த அறக் கட்டளையின் தங்கப்பதக்கம் பரிசாகப் பெற்றார். முதுகலை படித்ததுடன் கல்வியியல் பட்டமும் பெற்றார். சமயம், தத்துவம், இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு நிறைய படித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமற்கிருதத்திலும் வல்லுநர் ஆனார். ஓர் நல்ல ஆசிரியர் எப்போதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஓர் சமயத் தத்துவ ஞானி எப்போதும் புதிய கோட் பாடுகளைத் தம் சிந்தனையால் கண்டுபிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். தாம் தேடிக்கண்டுபிடித்த உண்மைகளை நண்பர்களிடத்திலும் மாணவர்களிடத்திலும் எப்போதும் சொல்லிக்கொண்டை இருந் தார்சக்கரவர்த்தி நயினார் .இவற்றை மேடையில் பேசவும் சொற்பொழிவாற்றவும் எழுதவும் செய்தார். திருக்குறள் பெருமை திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை எல்லாச் சமயத்த வரும் உரிமை கொண்டாடுவர். திருக்குறளைப் படைத்தவர் சமணத் துறவியாகிய குந்தகுந்தர் என்கிற ஏலாசாரியர் என்று சமணர் கூறுவர். இவரது சிலை வந்தவாசி அருகில் பொன்னூர் மலையில் உள்ளது. சமண நூல் என்றெல்லாம் எண்ணாமல் தமிழின் மாபெரும் அறஇலக்கியம் என்ற நோக்கில் தான் சக்கரவர்த்தி நயினார் திருக்குறளைப் படித்தார். தாம் படித்து அறிந்த அனைத்துச் சமயத் தத்துவ நெறிகளையும் அறவியல் கோட்பாடுகளையும் கொண்டு திருக்குறளின் ஒப் புயர்வற்ற பெருமையை உணர்ந்தார். ஆல்பர்ட் சுவைட்சர், ஆபிரகாம்லிங்கன், இங்கர்சால், டால்ஸ்டாய், ஜி.யூ.போப், காந்தியடிகள், வினோபா பாவே ஆகியோர் திருக்குறளின் பெருமையை ஆங்கில மொழி பெயர்ப் புகளின் மூலம் அறிந்ததால்தான் போற்றிப் பின்பற்றினர். தமிழ் மொழியின் பெருமையையும் உணர்ந்தனர். காந்தியடிகளும் வினோபா பாவேயும் திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழைக் கற்க விரும்பினர்; கற்க முற்பட்டனர். சென்னை மாநிலத்தின் ஆளுநராக 1810 முதல் 1819 வரை இருந்த எல்லிஸ் என்பவர் திருக்குறளைக் கற்றதோடு ஆங்கிலத் தில் மொழிபெயர்த்தார். வள்ளுவத்தைப் பின்பற்றியும் வாழ்ந் தார். சென்னையில் குடிதண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்ட போது ஏழு கிணறுகளைத் தோண்டிக் கல்வெட்டுகளும் அமைத்தார். திருவள்ளுவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டுத் திருவள்ளுவருக்குப் பெருமை செய்தார். நாம் திருக்குறளைச் சரிவரப் பின்பற்றாமல் அவர் கூறிய கள்ளுண்ணாமையை (மதுவிலக்கைப்) பின்பற்றாமல் அவர் சிலையைச் சிலர் சாக்கு மூட்டையில் கட்டிப்போட கைகட்டி நின்றோம். வள்ளுவர் கூறிய கொல்லாமையை மறந்து குண்டு போட்டுக் கொண்டிருக்கிறோம். திருக்குறளைக் கிண்டர்ஸ்ஸி, எல்லிஸ், ட்ரு (W.H. Drew), கோவர் (G.E. Gover), இராபின்சன் (E.J. Robinson), இலாசரசஸ் (J. Lazarus), ஜி.யூ. போப் என நாற்பதுக்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர். அவ்வகையில் சக்கரவர்த்தி நயினாரும் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அந்நூல் ‘திருக்குறள் வழியில் செய்தி’ என்று தமிழிலும் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது. ‘திருக்குறளும் சமதர்மமும்’ என்ற நூலும் சக்கரவர்த்தி நயினார் எழுதியுள்ளார். திருக்குறள் சைனக் கவிராச பண்டிதர் உரையை இவர் பதிப்பித்துள்ளார். தென்றலுக்குப் பாடம் திருக்குறள் சைனக் கவிராச பண்டிதர் உரையை மட்டு மல்லாது நீலகேசி திவாகர வாமன முனிவர் உரை, மேருமந்தர புராண உரை ஆகியவற்றையும் சக்கரவர்த்தி நயினார் பதிப்பித் துள்ளார். நீலகேசி உரையாசிரியர் திருக்குறளை ‘எம்மோத்து’ (எம்+ஓத்து : எம் மறை, எங்கள் வேதம்) என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சமணர்கள் தம்முடைய மறையாகவே-வேத நூலா கவே திருக்குறளை மதித்தனர் என்று புலனாகிறது. நீலகேசிக்கு முதன்முதல் உரையை வெளியிட்டவர் சக்கரவர்த்தி நயினார் தான்! கல்வித்துறையிலும், தத்துவத் துறையிலும் சமணச் சமய அறிஞர்கள் துறவிகள் நடுவிலும் புகழோடு விளங்கினார். சமணத் தத்துவ அறிஞர் என அவரைப் போற்றினர். சமணம் பற்றி அறிய விரும்பிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் சக்கரவர்த்தி நயினார் வீட்டுக்கு வந்து பாடம் கேட்டார். சேலம் இராமசாமி முதலியாரும் சி.வை.தாமோதரம் பிள்ளையும் தந்த சிந்தாமணியைக் குடந்தைக் கல்லூரியில் பணியாற்றிய உ.வே.சாமி நாதர் முதன் முதலாக 1887-இல் பதிப்பித்தார். இச்சமணக் காப்பியத்தை அடுத்து நீலகேசி உரையைச் சக்கரவர்த்தி நயினார் வெளியிட்டார். குடந்தைக் கல்லூரியில் தத்துவத் துறையில் புகழ்பெற்று விளங்கிய பூண்டி அரங்கநாத முதலியார்தான் உ.வே.சாமிநாதருக்குச் சேலம் இராமசாமி முதலியாரை அறிமுகம் செய்து வைத்தவர். இங்கிலாந்தின் தத்துவப் பேராசிரியர் டங்கன், மனோன் மணியம் சுந்தரனார் ஆகியோரால் புகழ்பெற்றவர் பூண்டி அரங்கநாதர். அவரைப் போலவே குடந்தைக் கல்லூரியில் தத்துவத் துறையில் புகழ்பெற்று விளங்கிய சக்கரவர்த்தி நயினார் ஆசிரியர்கள் மாணவர்கள் ஊர்ப்பொது மக்களிடம் செல் வாக்குப் பெற்றும் விளங்கினார். குடந்தையில் மக்கள் மன்றம் (கிளப்) 1933-இல் ஏற்படுத்தினார். கல்லூரியில் கண்டிப்புடன் இருந்தாலும் அனைவருடனும் சமமாகப் பழகி (டென்னிசு)ப் பந்தாடுவதும் அறவுரை கூறுவதும் இவர் வழக்கம். இவரைப் பாராட்டி ஆங்கிலேய இந்திய அரசு இந்தியக் கல்விப் பணி (ஐ.இ.எஸ்) பட்டத்தையும் (1920), இராவ் பகதூர் பட்டத்தையும் (1938) அளித்தது. சக்கரவர்த்தி நயினார் சக்கரவர்த்தி நயினார் இயற்பெயர் : சக்கரவர்த்தி சிறப்புப்பெயர் : இராவ்பகதூர் சக்கரவர்த்தி நயினார் (1938) பெற்றோர் : அச்சம்மாள், அப்பாசாமி நயினார் பிறந்தநாள் : 17-05-1880 மறைவு நாள் : 12-02-1960 ஊர் : திண்டிவனம் அருகில் வீடூர் கல்வி : சென்னை இராயப்பேட்டை வெஸ்லி உயர்நிலைப்பள்ளி; சென்னை கிறித்துவக் கல்லூரி, இளங்கலை (பி.ஏ) 1902; சென்னை கிறித்துவக் கல்லூரி, முதுகலை (எம்.ஏ) 1904, சென்னை கிறித்துவக் கல்லூரி, கல்வியியல் வல்லுநர் (எல்.டி)1909 பணி : சென்னை கணக்காயர் அலுவலக எழுத்தர் (1905-1906); சென்னை மாநிலக் கல்லூரி, தத்துவத்துறை, விரிவுரையாளர் (1906-1908); குடந்தை (கும்பகோணம்) அரசுக்கல்லூரி தத்துவத்துறை, விரிவுரையாளர் (1908- 1912); இராசமுந்திரி (இராசமகேந்திரபுரம்) தத்துவத்துறை, விரிவுரையாளர் (1912-1917); சென்னை மாநிலக் கல்லூரி, தத்துவத்துறைத் தலைவர், (1917- 1930); இராசமுந்திரி (இராச மகேந்திரபுரம்) அரசுக்கல்லூரி முதல்வர் (1930-1932) குடந்தை அரசுக் கல்லூரி, முதல்வர் (1932-1938) 157 படைப்புகள் : திருக்குறளும் சமதர்மமும் (ஆங்கில ஆக்கம்), திருக்குறள் - ஆங்கிலத்தில் உரை, பஞ்சாத்தி காயம் (சமற்கிருத நூல்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம்), சமயசாரம். பதிப்புகள் : திருக்குறள் சைனக் கவிராச பண்டிதர் உரை, நீலகேசி சமய திவாகர வாமன முனிவர் உரை, மேரு மந்திரப் புராண உரை. 46 தமிழ்த் தேனீ தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆளவைக் கூடம் (செனட் அரங்கம்). முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் எழுந்து நின்று முழங்குகிறார்: “இது தமிழ்ப் பல்கலைக்கழகம். நீங்கள் தமிழ் அறிஞர்கள். தமிழ் மக்களுக்காகத் தமிழில் தமிழ் அகராதி வெளியிடுகிறீர்கள். தமிழ் மொழிச் சொற்களுக்கான தமிழ் அகராதியில் ஆங்கிலச் சொற்களுக்குப் பொருள் எழுது வதா? ஐஸ் கிரீம், பியூட்டி பார்லர், மில்க், தேங்க்ஸ் போன்ற சொற்கள் எல்லாம் தமிழில் பேச்சு வழக்கில் உள்ளன என்று கூறித் தமிழ் அகராதியில் சேர்ப்பீர்கள் என்றால் பல ஆயிரம் ஆங்கிலச் சொற்களையும், இந்தி,உருதுச் சொற்களையும் சேர்க்க நேரும். பிற்காலத்தில் இவையும் தமிழ் என்று கருதுவார்கள். தமிழ் கலப்புத் தமிழாகித் திரிந்து போய்விடும். எனவே தமிழ் அகராதியில் தமிழ்ச் சொற்கள் மட்டுமே சேர்க்கப்பெற வேண்டும்”. தீக்குளிப்பேன் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம் மொழியியல் அறிஞர். அகராதி உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மொழியியல் அறிஞர்கள். எனவே எல்லோரும் ஆங்கிலச் சொற்களைச் சேர்க்கலாம் என்றனர். அப்படியானால் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்பு செய்கின்றேன் என்று கூறி வெளியேறினார் கி.ஆ.பெ.வி. காலை 11 மணிக்குத் தொடங்கியிருந்த அந்தக் கூட்டத்திலிருந்து நண்பகல் 12 மணி அளவில் வெளி யேறிக் கடும் வெயிலில் நடந்தார். துணைவேந்தர் தம்முடைய மகிழுந்தை அனுப்பினார். மிக மெலிந்த உயரமான முத்தமிழ் அறிஞர் விடுவிடு என நடக்கப் பின்னே மகிழுந்து ஊர்வலம் போல் சென்றது. அதில் ஏற மறுத்து நடந்தே சென்று முக்கூட்டுச் சாலையில் நின்று திருச்சிராப்பள்ளி செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றார். ‘தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கும் தமிழ் அகராதியில் ஆங்கிலச் சொற்களைக் கலந்தால் தீக்குளிப்பேன்’ என்று அறிக்கை விடுத்தார். அகராதிப் பிணி யாழ்ப்பாணம் தமிழ் அகராதி 1842-இல் வெளிவந்தது. அடுத்தடுத்துத் தமிழ் அகராதிகளை வெளியிட்டவர்கள் மேலும் மேலும் சொற்களைச் சேர்ந்து வெளியிட்டனர். நா.கதிரைவேற்பிள்ளை 1904-இல் தமிழ் அகராதி வெளி யிட்டபோது அதில் மதநெறி நூல்கள் (சாத்திரங்கள்) பயன் படுத்தியுள்ள சமற்கிருதச் சொற்களையும் சேர்த்து வெளி யிட்டார். மிக மிகுதியான (சிவ சித்தாந்த) சமற்கிருதச் சொற் களைக் கலந்து தமிழுக்குக் கேடு செய்ததாக அப்போது எதிர்ப்பு விளைந்தது. சொல்விளக்கம் கூறும் அக ராதி பேரகராதியாக வளர் ந் தது. மேலும் பொருள் விளக்கம் கூறும் கலைக் களஞ்சியமாக வளர்ந்தது. ஆக்சுபோர்டு ஆங்கிலப் பேரகரா தியை உருவாக்க 71 ஆண்டுகள் (1857-1928) ஆயின. வடமொழிப் பேரகராதி உருவாக்கம் 1948 முதல் நடைபெற்று வருகிறது. தொகுத்து முடிக்க மொத்தம் 90 ஆண்டுகள் ஆகுமாம். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியைத் தொகுக்க 27 ஆண்டுகள் (1909-1936) ஆயின. தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் பெரியசாமி தூரன் 1948-இல் தொடங்கிக் கலைக் களஞ்சியம் தொகுத்து முடிக்க 15 ஆண்டுகள் ஆயின. 1200 அறிஞர்கள் எழுதிய 15,000 சொற்களுக்கான விளக்கங்கள் 10 தொகுதிகளாக வெளிவந்தன. ‘அபிதான சிந்தாமணி’ சென்னைப் பல்கலைக்கழகமும் தமிழ் வளர்ச்சிக் கழகமும் பேரகராதியையும் கலைக்களஞ்சியத்தையும் உருவாக்குவதற்கு முன்னர்த் தனி ஒருவராய் அபிதான சிந்தாமணி என்ற கலைக் களஞ்சியத்தை இருபதாண்டுகள் உழைத்து (1890-1910) ஆ.சிங்காரவேலு முதலியார் உருவாக்கினார். பழங்கால நிகண்டு களும் பிற்காலத்தில் வந்த அகராதிகளும் சொற்பொருள் மட்டுமே தருவனவாயிருக்க சொல் குறிக்கும் பொருள், படிக்கும் பொருள் பற்றிய விளக்கம் தமிழில் இல்லை. படிக்கும்போது வரும் புதிய சொற்களுக்குரிய பொருளும் அவை குறிக்கும் பொருளுக்கான விளக்கமும் அறிய விரும்புபவர்களுக்குப் பயன்படக் கூடியது கலைக் களஞ்சியம் ஆகும். ஏமச் சந்திரன் என்னும் சமணர் செய்த அபிதான சிந்தாமணி என்ற பழைய நிகண்டு ஒன்று உண்டு. புராண நாமாவளி என்றும் சர்வார்த்த சித்தி என்றும் பெயரிட்டு எழுதிய தம் நூலுக்கு ஆ.சிங்காரவேலர் இறுதியாக அபிதான சிந்தாமணி என்று பெயரிட்டார். தமிழ் மொழியில் உள்ள இலக்கியம், இலக்கணம், வரலாறு, பண்பாடு, சமயம், மருத்துவம், கலைகள் முதலிய பல துறைச் சொற்களை எடுத்து முழு விளக்கமும் கட்டுரை போல எழுதி அவ்வப்போது தொகுத்துவந்தார் சிங்காரவேலர். காப்பியங்களிலும் புராணங்களிலும் வரும் கதை மாந்தர், வரலாற்றில் வரும் மன்னர்கள், சமய அடியார்கள், புலவர்கள், ஊர்கள்,வரலாற்றுச் சிறப்பிடங்கள் பற்றிய குறிப்புகளைத் தொகுத்தார். தாம் செல்லும் நூலகங்கள்,ஊர்கள், படிக்கும் நூல்கள், இதழ்கள், துண்டுத் தாள்கள், கேட்கும் சொற் பொழிவுகள் எல்லாவற்றிலிருந்தும் கிடைக்கும் செய்திகளைப் பலவகை மலர்களை நாடிச் சென்று தேன் எடுக்கும் தமிழ் தேனீயாய்த் திரட்டினார். வெளியீட்டு முயற்சி சிங்காரவேலர் 20 ஆண்டுகள் இடையறாது தொகுத்து எழுதி ய ப க் க ங் கள் ஆயி ர த்தை த் தாண்டின. அபிதான சிந்தாமணி என்று பெயரிட்டு அச்சில் கொண்டு வர முயன்றார். அவரிடம் போதுமான பணவலிமை இல்லை. ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்கள் என்றதும் அச்சகத்தாரும் அஞ்சினர். கையால் எழுதிய பக்கங்களும் படங்களும் எடுத்துச் சென்று செல்வர்களிடமும் தமிழ் அறிஞர்களிடமும் காட்டி அச்சியற்ற உதவி வேண்டினார். ‘கடின உழைப்பால்தான் இவ்வளவு தொகுக்க முடியும்; தமிழ் மொழிக்குக் கட்டாயம் தேவையான புதுமையான நூல் என்று பாராட்டிக் கூறினர்; பின் இவ்வளவு பெரிய நூலை அச்சிடுவது கடினம் என்றனர். பலருக்கும் மடல் எழுதினார். பயனில்லை. நூல் பற்றி விளக்கி அறிக்கைகள் அனுப்பினார். விடையில்லை. இதழ் வெளியீட்டாளர்களை அணுகித் தொடராக வெளியிட வேண்டினார். புதினமாக இருந்தால் வாசகர்கள் விரும்பிப் படிப்பர்; இவ்வளவு பக்கங்களைத் தொடராகவும் வெளியிட முடியாது என்று கைவிரித்தனர். வரலாற்றறிஞர் வி.கனகசபைப் பிள்ளை 1899-இல் நூலைப் பாராட்டியும் இந்நூல் வெளியிட உதவுமாறும் மடல் எழுதிக் கொடுத்தார். பேராசிரியர் சேசகிரிச் சாத்திரியார் தாம் இதேபோல நூல் ஒன்று எழுதி வருவதாகக் கூறிவிட்டார். நூலை வெளியிட இயலாமல் சிங்காலவேலர் மனம் நொந்து இருந்தார். தேடி வந்த உதவி சிங்காரவேலர் அனுப்பிய மடல்கள் மூலமும் அறிக்கைகள் மூலமும் தமிழகத்தில் பலருக்கும் அவரது நூல் அச்சேறாமல் கிடப்பது தெரிந்திருந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய பாலவநத்தம் வளநாட்டார் (சமீன்தார்) பாண்டித்துரை தேவர் சென்னைக்கு வந்து சிங்காரவேலர் எழுதிவைத்திருந்த அபிதான சிந்தாமணி நூலின் கையெழுத்துப் படியைப் படித்து நுலின் சிறப்பை உணர்ந்தார். தம்முடன் எடுத்துச்சென்று மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்களைக் கொண்டு உரிய திருத்தங்களும் சே ர் க் கைகளும் செய்தார் . மீண்டு ம் சி ங் கா ரவே ல ரி ட ம் கொடுத்து அச்சியற்றப் பணமும் கொடுத்தார். முதல் பதிப்பு 1910-இல் வெளிவந்தது. இந்நூல் தனிநூலன்று; இது பல சான்றோர் இயற்றிய நூல்களின் தொகுப்பாகும் என்று கூறும் சிங்காரவேலர், தாம் திரட்டிய செய்தித் தொகுப்புக்கு மூலமாக இருந்த நூலாசிரியர்களுக்கும், அரிய நூல்கள் தந்து உதவிய அறிஞர்களுக்கும் இதழாசிரியர்களுக்கும் நன்றி பாராட்டி யுள்ளார். இரண்டாம் பதிப்புக்கு உரிய சேர்க்கைகளும் திருத்தங் களும் செய்து அச்சில் ஆயிரம் பக்கங்கள் வரை அவரே மெய்ப்பு (புரூஃப்) பாத்துத் திருத்தங்கள் செய்தார். அவர் நோய்வாய்ப் பட்டு இறந்ததால், அவர் மகன் சிவப்பிரகாசம் பொறுப்பேற்று அச்சிட முயன்றார். அவரால் இயலாது போகவே அவர்களின் குடும்ப நண்பர் திருவாரூர் சோமசுந்தர தேசிகர் துணையா யிருந்து மெய்ப்புப் பார்த்ததால் இரண்டாம் பதிப்பு 1634 பக்கங்களுடன் வெளிவந்தது. பள்ளிகள், கல்லூரிகள், தமிழ் ஆய்வு நிறுவனங்கள் ஆகிய இடங்களில் இருக்க வேண்டியதும், தமிழ் இலக்கியம் பயிற்றுவி க்கும் ஆசி ரிய ர்கள் , தமிழ் ஆய்வாளர்கள், சொற்பொழிவாளர்கள் ஆகியோரின் கையில் இருக்க வேண்டியதும் ஆகிய சிறந்த அபிதான சிந்தாமணி எனும் இந்நூலைப் படைத்த சிங்காரவேலரின் தொண்டு நன்றியுடன் தமிழர்கள் போற்றுவதற்குரியதாகும். ஆ. சிங்காரவேலு முதலியார் ஆ. சிங்காரவேலு முதலியார் இயற்பெயர் : சிங்காரவேலு சிறப்புப்பெயர் : ஆலூர் சிங்காரவேலு முதலியார் தந்தை : வரதப்ப முதலியார் பிறப்பு : 1855 மறைந்த நாள் : 05-11-1931 ஊர் : பொன்விளைந்த களத்தூர் அருகில், ஆலூர் கல்வி : தொடக்கக்கல்வி, பள்ளிக்கல்வி, சமற்கிருதமும் தெலுங்கு மொழியும்; தமிழ்க் கல்வி : மாநிலக் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இராசகோபாலப் பிள்ளையிடம். பணி : பச்சையப்பன் அறக்கட்டளைக் கல்விச் சாலைத் தமிழாசிரியர் (1875-1913), சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் சைவசித்தாந்த வல்லுநர் (1926-27) படைப்பு : பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை, அபிதான சிந்தாமணி (1910), அபிதான சிந்தாமணி (விரிவுபடுத்திய இரண்டாம் பதிப்பு, 1934) 47. தமிழ்த் தாத்தாவுக்கு உதவியவர்! வின்ஸ்லோ (Rev Dr. Micro Winsiow), பெர்சிவல் (Rev.P.Percival) ஆகிய இருவரும் இலங்கைக்கு 1833-இல் வந்தனர். பேப்ரிஷியஸ் தொகுத்த தமிழ் ஆங்கிலம் அகராதியை விரிவாக்கி இராட்லர் 37,000 சொற்களுடன் பதிப்பித்திருந்தார். அதனைமேலும் செப்பம் செய்து 1862-இல் 67,000 சொற்களுடன் வின்ஸ்லோ வெளியிட்டார். பெர்சிவல் கிறித்துவமறையை (விவிலியத்தை)த் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவரிடம் மாணவராயிருந்து இவருக்கே தமிழ்கற்றுக் கொடுத்த ஆறுமுகநாவலர் மொழிபெயர்ப்புப்பணியிலும் உதவினார். வின்ஸ்லோ, பெர்சிவல் ஆகிய இருவரும் தாம் செய்த அகராதி, கிறித்துவமறை மொழி பெயர்ப்பு ஆகியவற்றை அச்சிடும் பணியில் தமக்கு உதவுவதற்காக ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரன் பிள்ளை ஆகியோரைச் சென்னைக்கு அழைத்து வந்தனர். அதே போல் விசுவநாதன் என்ற தமிழ்ப்புலமை மிக்க இளைஞர் இலங்கையிலிருந்து சென்னை வந்து படிக்க உதவினர். விசுவநாதன் யாழ்ப்பாணத்தின் மல்லாகம் என்ற ஊரினர். மல்லாகம் எனில் (மல் : மற்போர் ; ஆகம் :நெஞ்சு, அகலம், மார்பு) மற்போரில் சிறந்த விரிந்த பரந்த மார்பினை உடைய வீரர்கள் வாழும் ஊர் என்று பொருள். சென்னைக்கு வந்த விசுவநாதன் சென்னைப் பல்கலைக்கழத்தில் இளங்கலை வகுப் பில் சேர்ந்து பட்டம் பெற்றார். இவர் கோமளீசுவரன் பேட்டை யில் குடியிருந்தார். இவருக்குச் சென்னை மாநிலக் கல்வித் துறைத் தலைவர் அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர் வேலை கிடைத்து. வின்ஸ்லோவின் தமிழ் ஆங்கிலம் அகராதியை அச் சிடும் பணியில் மிகவும் உதவியாக இருந்தார். பெருமகன் விசுவநாதன் மகன் கனகசபை பள்ளிப்படிப்பை முடித்துச் சென்னை அரசினர் கல்லூரியில் இளங்கலை படித்துப் பட்டம் பெற்றபோது, பட்டம் பெற்ற சுறுசுறுப்பான அறிவுள்ள அந்த இளைஞனை அனைவரும் ‘பட்டதாரிப் பையன்’ (Boy Graduate) என்று பாராட்டினர். கனகசபை அஞ்சல்துறையில் அலுவலக ஊழியராகப் பணியில் சேர்ந்தார். விடுப்பில் சென்று ஓராண்டில் சட்ட வியலில் இளநிலைப் பட்டம் (பி.எல்.) பெற்றார். மதுரையைச் சேர்ந்த மருத்துவர் பொன்னையாப்பிள்ளையின் மகள் செல்லம் மாளை மணந்தார். அதனால் மதுரையில் வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் சென்னையில் அஞ்சல் துறை மேற்பார்வையாளர் பணி கிடைத்ததால் சென்னைக்கே வந்து சேர்ந்தார். பதவி உயர்வு பெற்றுச் சென்னை மாநில அஞ்சலகங்களின் உயர்நிலைக் கண்காணிப்பாளர் ஆனார். தாத்தாவுக்கு கனகசபையாரின் தந்தை 1884-இலும் தாய் 1885-இலும் இறந்தனர். தந்தை தாயை இழந்த துன்பம் போதாதென்று இவருடைய குழந்தைகள் இரண்டும் அடுத்தடுத்து இறந்தன. வாழ்வியலில் துன்பம் கண்டு துவண்டுபோன தம் உள்ளத்தைத் தமிழ்ப் பற்றால் தேற்றி, அலுவலகப்பணிபோக மீதி நேர மெல்லாம் தமிழ் இலக்கியங்களில் மூழ்கினார். அக்காலச் சென்னை மாநிலத்தின் (ஆந்திரம், கருநாடகம், மலையாளம் உள்ளிட்ட தமிழகம்) அனைத்து ஊர்களுக்கும் அஞ்சலகங்களை மேற்பார்வையிடும் பொருட்டுச் சென்றுவந்தார். செல்லும் ஊர்களில் கிடைக்கும் ஏட்டுச்சுவடிகளைத் தொகுத்தார் கல் வெட்டுக்களைப் படிஎடுத்தார். ஏடுகளைப் படிஎடுக்கத் தமக்கு உதவியாக அப்பாவுப்பிள்ளை என்பவரைப் பணிக்கு அமர்த்திக் கொண்டார். தமிழ் இலக்கண இலக்கிய ஓலைச்சுவடிகளைத் தொகுக்க வும் படிஎடுக்கவும் குறிப்புகள் எழுதவும் அப்பாவுப் பிள்ளை 20 ஆண்டுகள் கனகசபையாரிடம் பணியாற்றியுள்ளார். கடும் உழைப்பில் எவ்வளவு ஏடுகள் 20 ஆண்டுகளில் தொகுக்கப் பெற்றிருக்கும்? அவ்வளவையும் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கு அவ்வப்போது வழங்கினார். இவ்வாறு புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் முதலிய பல இலக்கியங்களின் ஏட்டுச் சுவடிக் கட்டுகளைக் கொடுத்துள்ளார். வரலாற்றுப் பணி பெர்சிவல் குருமார் தமிழகத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். அவரைப்போல் பனை ஓலைச் சுவடிகளையும் கல்வெட்டுகளையும் தொகுத்த கனகசபையார் இலக்கியங்களை வரலாற்றுச் செய்திகளைத் தரும் ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்யத் தொடங்கினார். கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டிச் சங்காலத் தமிழர்களின் வாழ்வியல் சிறப்பை ‘மெட்ராஸ் ரெவியூ’ (ஆயனசயள சுநஎநைற) இதழில் எழுதி வரலானார். இதனைச் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைவ ராகப் பொறுப்பில் இருந்த சர். சுப்பிரமணிய அய்யர் (பிற் காலத்தில் மகான் மணி அய்யர்) பாராட்டி மடல் எழுதியதுடன் தொடர்ந்து எழுதும்படி ஊக்கம் கொடுத்தார். இக்கட்டுரை களை நூலாக்கி ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் (Tamils Eighteen Hundred Years ago) என வெளியிட்ட பொழுது கனகசபையார் தம் நூலை சுப்பிரமணிய அய்யருக்குக் காணிக்கை ஆக்கினார். உ ல க ச் செம்மொழிகள் ஏழி ல் இ ன்றும் வ h ழ் ந் து கொண்டிருக்கும் மொழிகள் சீனமும் தமிழும் மட்டுமே. சீன நாட்டினருக்கும் தமிழ் நாட்டினருக்கும் இருக்கக்கூடிய பண் பாட்டு நாகரிக இன ஒற்றுமைகளைக் கனகசபையார் நிறுவி யுள்ளார். சிலப்பதிகாரத்திலும் அதற்கு முந்தைய சங்க இலக்கியங்களிலும் காணப்படும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு தமிழக நிலப்பிரிவு நிலஅமைப்பு, அயல் நாட்டு நிலப்பிரிவு நிலஅமைப்பு, அயல் நாட்டு உள்நாட்டு வணிகம், பழங்குடியினர் வாழ்வு, மூவேந்தர் ஆட்சி, இலக்கியம், சமயம் ஆகியன பற்றி எழுதியுள்ளார். மங்கோலியர், நாகர் ஆகி யோருடன் பாம்பு வழிபாடு பற்றிய தமிழின வரலாற்றுத் தொடர்புகளை இந்நூலில் காணலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் செம்மாந்த வாழ்வியலை வரலாற்றடிப்படையில் உலகுக்கு ஆங்கிலத்தில் உணர்த்தியது கனகசபையாரின் நூல் ஆகும். வரலாற்றுச் செய்திகளைத் தரக்கூடிய இலக்கியங்கள் ஆகிய வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் தோன்றிய களவழி நாற்பது, கலிங்கத்துப்பரணி, விக்கிரம சோழன் உலா என்னும் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் கனக சபையார். இவை தமிழரின் தொன்மை பற்றிய ஆங்கில இதழில் (The Tamilian Antiquary) ‘தமிழ் வரலாற்று இலக்கியங்கள்’ (Tamil historical Texts) என்ற தலைப்பில் வெளிவந்தன. சீன நாட்டுத் தொடர்பை நிறுவிய கனகசபையார், தமிழர்கள் வங்காளம், பர்மா முதலிய நாடுகளை வென்ற வரலாற்றுப் பெருமையையும் ஆங்கிலத்தில் நூலாக எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக இளங்கலை முதுகலைப் பட்டங்களுக்கான தேர்வுக்குழுக்களில் கனகசபையார் தேர் வாளராக இருந்துள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டுவிழாவில் 1905-இல் தலைமை தாங்கித் தமிழரின் வரலாற்றுப் பெருமை பற்றிச் சொற்பொழிவாற்றினார். எட்வர்ட் இளவரசர் சென்னை வந்தபோது ஆங்கிலத்தில் வரவேற்புரை ஆற்றினார். அஞ்சலக மேற்பார்வைப் பணி தொடர்பாகக் காஞ்சிபுரம் சென்றிருந்த போது நலங்குன்றி இறந்தார். வலங்கைமான் கணியர் (சோசியர்) ஒருவரின் வழி காட்டுதலில் ஓகம் (யோகப் பயிற்சி) கற்றிருந்த கனகசபையார் உடற்பயிற்சியும் செய்து நல்ல உடற்கட்டுடன் வாழ்ந்தவர். சி.வை. தாமோதரனார் இவரைப் போற்றியுள்ளார் : ‘பரந்த நெற்றி, அகன்ற உருண்டையான முகம், குவிந்த கண், பெரிய தலைப்பாகை, கருத்த மீசை, எடுத்த தோற்றம், திண்ணிய உடல் ஆகிய இவை பார்த்தவுடனே இவர் ஒரு நல்ல தமிழர் என்பதை எடுத்துக் காட்டும்.” வி. கனகசபைப் பிள்ளை வி. கனகசபைப் பிள்ளை இயற்பெயர் : கனகசபை தந்தை : விசுவநாதப் பிள்ளை பிறந்தநாள் : 25-05-1855 மறைந்த நாள் : 21-02-1906 ஊர் : யாழ்ப்பாணம் அருகில் மல்லாகம் திருமணம் : 1876, செல்லம்மாள் கல்வி : சென்னை கோமளேசுவரன் பேட்டை : பள்ளிக்கல்வி சென்னை அரசுக்கல்லூரி :இளங்கலை (பி.ஏ) சென்னை சட்டக்கல்லூரி : சட்டவியல் (பி.எல்) பணி : சென்னை அஞ்சல்துறை ஊழியர் 1 ஆண்டு மதுரை : வழக்குரைஞர். சென்னை : அஞ்சல்துறை மேற்பார்வை யாளர், (SUPRINTENDENT OF POST OFFICES) படைப்புகள் : The Tamils Eighteen Hundred Years ago (‘The Madras Review’) இதழில் 1895 - 1901) நூல் : 1904 ; தமிழில் :கா. அப்பாத் துரையார் மொழிபெயர்ப்பு : 1956) “The Indian Antiquary”இதழில் Tamil historical Texts (களவழி நாற்பது, கலிங் கத்துப் பரணி, விக்கிரமசோழன் உலா ஆகிய இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு) The conquest of Begal and Burma by The Tamils : Rajaraja chola. செந்தமிழ் மாத இதழில் கட்டுரைகள். 48 கந்தசாமிப் பிள்ளையும் தமிழ் மகளும் “ஆங்கிலேயப் பேரரசையே இழந்தாலும் இழப்போம்; செகப் பிரியரின் இலக்கியங்களை இழக்கமாட்டோம்” என்றார் கார்லைல். அந்த ஆங்கிலேயப் பேரரசை ஆண்டுவந்த விக்டோரியா பேரரசி காலையில் கண்விழித்ததும் கிறித்துவ மறையைப் (விவிலியத்தை) படிப்பதுடன் திருக்குறளையும் மறவாமல் நாள்தோறும் படிப்பாராம். அதற்குக் காரணம் திருக்குறள் பலமுறை, பலரால் ஆங்கிலத்திலும் பிற மொழி களிலும் மொழி பெயர்க்கப் பெற்று உலகமெல்லாம் பரவியதே ஆகும். உலகெலாம் உணர்ந்து ஓதும் திருக்குறளைத் தமிழ்நாட்டு மக்கள் கற்றுப் போற்றி சரிவரப் பின்பற்றி வாழாமல் உள்ளனரே என்று வருத்தப்பட்டார் இலாசரஸ் என்னும் குருமார் (Rev.Dr.J. Lazarus). இவர் திருக்குறளை 1852-இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்; தமிழ் இலக்கணம் பற்றி 1878-இல் ஆங்கில நூல் எழுதியுள்ளா ர் ; நன்னூலை ஆங் கி ல த் தில் மொழி பெயர்த்ததுடன் தமிழ்ப் பழமொழிகளையும் தொகுத்துள்ளார். இவர் கிறித்துவக் கல்லூரியில் முனைவர் மில்லர் முதல்வராக இருந்தபோது தமிழாசிரியராக இருந்துள்ளார். அழகிய தமிழ்மகள் கருப்பர் நகரத்திலிருந்து (பிளாக்கர்ஸ் டவுன்) அவன் வந்து கொண்டு இருந்தான்; வெள்ளையர் நகரத்திலிருந்து (ஜார்ஜ் டவுன்) அவள் வந்தாள். சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகில் அப்போது கிறித்துவக் கல்லூரி இருந்தது. அவன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ஒரே பெண் அவள்! அவனிடம் அவள் தமிழ்ப் புலமையைக் கண்டாள்; அவளிடம் அவன் பன் மொழி இலக்கிய நோக்குமுறையையும் மொழியி யலையும் புரிந்து கொண்டான். இத்தாலியம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மானியம் அறிந்த அந்தத் தமிழ் மகளை அவன் காதலித் தான். இலாசரசின் மகளாகிய அவளைக் கிறித்துவ மதத்துக்கு மாறித்திருமணம் புரிந்து கொண்டான். அவன் இளவல், மில்லர் வகுப்பில் சூரியநாராயண சாத்திரியுடன் உடன் மாணாக்கனாய் படித்தான். அண்ணன் தம்பி இருவரும் தம் சொந்த ஊராகிய பள்ளி அகரம் வருவர். வரும்போதெல்லாம் தம் சிறிய தந்தை நீலமேகம் பிள்ளையின் மகன் கந்தசாமியிடம் தமிழ் இலக்கியம் பற்றி உரையாடுவர். கந்தசாமி தமிழோடு ஆங்கிலம், இத்தாலியம், சமற்கிருதம், பிரெஞ்சு ஆகிய மொழிகளையும் கற்றுப் புலமை பெற்றதால் மொழி பெயர்க்கவும் இலக்கியத் தமிழ் மகளைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கவும் முடிந்தது. தமிழ்க்கட்டடம் நிலக்கிழாராகவும், கட்டட ஒப்பந்தக்காரராகவும் இருந்த தம் தந்தையைப் போலவே, பள்ளிப் படிப்பை முடித்ததும், நீ. கந்தசாமிப்பிள்ளை தொழிலில் இறங்கினார். கரந்தைத் தமிழ் சங்கத்து ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியதால் பெரும்புலவர் களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. உமா மகேசுவரனாரைப் போலவே நீதிக் கட்சியில் ஈடுபாடு கொண்டு விளங்கினார். தம் வீட்டிற்கு ‘அறிவகம்’ என்று பெயரிட்டு மிகச் சிறந்த நூல்நிலையம் வீட்டிலேயே அமைத்தார். தம் வீட்டையே தமிழ்ச்சங்கம் ஆக்கினார். தஞ்சைக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கும் வருகை தரும் தமிழறிஞர்களைத் தம் வீட்டுக்கு அழைத்து விருந்து நல்கினார். கட்டட ஒப்பந்தக்காரர் வேலையில் கண்டிப்பும், நேர்மை யும், ஒழுங்கும், அறிவு நுட்பமும் கொண்டவராக விளங்கியதால் நீ.க. தஞ்சையில் புகழ் பெற்ற ஒப்பந்தக்காரர் ஆனார். கரந்தைத் தமிழ்ச் சங்கக் கட்டடங்களைக் கட்டிக்கொடுத்தார். தாம் பெற்றிருந்த நற்புகழ், செல்வம், தமிழ்ப் புலமை ஆகியவற்றால் தமிழ்ச் சங்கத்தைக் கட்டிக்காக்கும் அமைச்சராகவும் (செயலாள ராகவும்) ஆனார். கரந்தைத் தமிழ்ச் சங்கத் தாளாளராகவும் (தொடர்பாளராகவும்) இருந்துள்ளார். தமிழ்ச் சங்கத்தின் ‘தமிழ்ப் பொழில்’ இலக்கிய மாத இதழில் ஆசிரியராகவும் இருந்தார். அவ்விதழில் தொடர்ந்து கட்டுரைகளும் எழுதி வந்தார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அண்ணா மலைப் பல்கலைக் கழக ஆட்சிப் பேரவை (செனட்) உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கட்டடங்களை ஒப்பந்தக்காரராக இருந்து கட்டிக் கொடுத்தார். சென்னையில் ‘ பிரகதி’ ( தஞ்சைப் பெரிய கோயி ல் இறைவன் ‘பெருவுடையார்’ என்பதை ஆரியர் சமற்கிருதமாக்கிப் ‘பிரகதீசுவரர்’ என்றதன் சுருக்கம் பிரகதி) என்ற திரைப்படப் படப்பிடிப்பு நிலையத்தை கட்டித் திரைப்படங்கள் எடுத் துள்ளார். பம்பல் சம்பந்த முதலியாரின் ‘சபாபதி’ (1941), சரசுவதி சினி பிலிம் லேபரட்டரி உருவாக்கிய ‘என் மனைவி’ என்னும் இரண்டு திரைப்படங்கள் அவருடைய படப்பிடிப்பு நிலையத் தில் எடுக்கப் பெற்றவை. பதிப்புப் பணி வெண்பா புனைவதில் திறமை பெற்றிருந்த நீ.க. தம் ஊர் பற்றிப் ‘பள்ளியகரப் பழங்கதை’ என்று ‘தலபுராணம்’ போல் எழுதினார். தம் ஊரைச் சார்ந்தும் திருவை யாற்றைச் சுற்றியும் நிகழும் ஏழுர்த் திருவிழா (சப்தஸ்தானம்) அடிப்படையில் ‘ஏழூர் தேவாரத் திரட்டு’ தொகுத்து வெளியிட்டார். கம்ப ராமாயணப் பதிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என ஆங்கிலத் தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தருக்கு எழுதிய மடலும் (1953) ‘கம்பராமாயணப் பதிப்பும் நிலையும்’ எனத் தமிழ்ப் பொழில் இதழில் எழுதிய தொடர் கட்டுரையும் (1954) கம்பராமாயணப் பதிப்பை யாப்பியல் முறைப்படிச் செய்வதற்கும், சந்திபிரித்து எளிமைப்படுத்துவதற்கும் மர்ரே எஸ். இராஜம் நிறுவனத்துக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கும் வழிகாட்டின. தமிழ் இலக்கியங்களைப் புதிதாகக் கற்க முற்படும் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தமிழ் விரைந்து படிக்கத் தெரியாதவர்களுக்கும் இம்முறை மிகப் பெரிய உதவியாய் அமைந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ‘திருவாசகம்’ (1964) பதிப்பிக்கும் பணியை அவரிடம் கொடுத்தது. மர்ரே நிறுவனத் தின் பதிப்பு அறிவுரையாளராக இருந்ததுடன், அந்நிறுவனத்தில் தொல்காப்பியம், கல்லாடம், திருவாசகம் ஆகியவற்றையும் பதிப்பித்தார். தஞ்சை ‘சரசுவதி மகால்’ நூல் நிலையத்தின் மதிப்பியல் செயலாளராக இருந்தபோது அரிய ஓலைச் சுவடி களைப் பதிப்பித்தார். வீரமாமுனிவரின் ‘செந்தமிழ்’, ‘கொடுந்தமிழ்’ என்னும் நூல்களைப் பதிப்பித்தார். மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய ஆங்கிலக் கவிதைகளைத் திரட்டி இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். பிரெஞ்சு இந்திய ஆய்வியல் நிறுவனத்தில் பணியாற்றியபோது பழந்தமிழ்ச் சொல்லடைவு (மூன்று தொகுதிகள்), செந்தமிழ் அகராதி முதலியவற்றைத் தொகுத்தார். மொழி பெயர்ப்பு பன்மொழி அறிவும் மொழி பெயர்ப்பு ஆற்றலும் இலக்கிய நுணுக்கமும் கொண்ட நீ.க. தமிழ்ப் பொழில் இதழில் மதுரா விஜயம் என்ற சமற்கிருத நூலின் மொழிப் பெயர்ப்பாக வந்த நூல் பற்றித் திறனாய்ந்து தொடர் கட்டுரை எழுதினார். தமிழைச் செம்மொழி என முதன் முதல் அறிவித்த கால்டுவெல் வரலாற்று மலரைத் தமிழ்ப் பொழிலில் வெளியிட்டார். தம் அன்பு மகள் உயிரிழந்தபோது ஏற்பட்ட ஆறாத் துயரைத் தமிழ்மகள்பால் கொண்ட பற்றால் தணித்தார்; தாமஸ் கிரே எழுதிய ‘நாட்டுப்புறக் கல்லறை இரங்கற்பா’ என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழி பெயர்த்து மகளுக்குக் காணிக்கை ஆக்கினார். இந்நூலின் முன்னுரையில், “சில சயங்களில் ஒரு அருமையான நூலை மூல மொழியில் பயிலும்போது பெறுகின்ற இன்பத்தையும் பயனையும் விட மொழி பெயர்ப்பு நூலைப் பயிலுகின்ற வர்கள் மிகுதியாக அடையும் நிலை ஏற்படுவதுண்டு”. என்று எழுதியுள்ளார். நீ.க. செய்துள்ள தமிழ்மொழி பெயர்ப் பாகிய இந்நூலைப் பயிலும்போது தமிழ்மக்கள் இதனை உணர்வார்கள். இதைப்போலவே தமிழிலிருந்து ஆங்கிலத் துக்கு நீ.க. மொழி பெயர்த்துள்ள ‘நற்றிணை’ என்னும் சங்கப் பாடல்களைப் படிக்கின்ற மேலை நாட்டார் உணர்வார்கள். தமிழவேள் உமாமகேசுவரனார் போலவே நீதிக் கட்சியை விட்டு விலகிச் சமயஞ் சார்ந்து கம்பராமாயணப் பரப்புநராகவும், திருவாசக நெறியினராகவும் வாழ்ந்தார். பன்மொழி ஆற்றல் மிக்க நீ.க. தனித்தமிழில் பேசவும், எழுதவும் செய்தார். விருந்து அழைப்பில் பாற்குழம்பு (பாயாசம்), மிளகு நீர் (ரசம்), தயிர்சோறு (ததியன்னம்) எனப் பயன் படுத்தினார். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் மதிப்பியல் செயலாளராக இருந்தபோது, சித்த மருத்துவ ஏட்டுச்சுவடி களைப் பதிப்பித்தார். தமிழக அரசு சித்த மருத்துவக் கழகத்தில் நீ.க. - அவர்களை உறுப்பினராக அமர்த்தியது. இந்திய மொழி என்றாலே சமற்கிருதம், இந்திய மருத்துவம் என்றாலே ஆயுள் வேதம் என்று பிற நாட்டினரால் அறிய பெற்றிருந்தது. இந் நிலையில் சங்கத் தமிழ் இலக்கியமாகிய ‘நற்றிணை’யை மொழி பெயர்த்து தமிழின் பெருமையையும் தொன்மையையும் நிலை நாட்டியது போல், சித்த மருத்துவத்தின் தொன்மையையும் சிறப்பையும் வரலாற்றையும் மிகச் சிறந்த முறையில் விளக்கி ஆங்கிலத்தில் விரிவான நூல் எழுதி உலகுக்கே உணர்த்தினார். நீ. கந்தசாமிப்பிள்ளை நீ. கந்தசாமிப்பிள்ளை இயற்பெயர் : கந்தசாமி பெற்றோர் : சவுந்தரவல்லி, நீலமேகம் பிள்ளை பிறந்த ஆண்டு : 1898 மறைந்த ஆண்டு : 1977 ஊர் : தஞ்சை அருகில் பள்ளி அகரம் (பள்ளி அக்கிரகாரம்) கல்வி : தூயபேதுரு பள்ளி : பள்ளி இறுதி வகுப்பு வரை. பெரும்புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். சாமிநாதப் பிள்ளையிடம் திருமுருகாற்றுப்படை, திருவெண்காடு வேங்கடசாமி நாயுடு விடம் கம்பராமாயணம். ஆசிரியர் அப்பாவு ஆசாரியாரிடம் அறிவு நூல், கணக்கியல். பணி : கட்டட ஒப்பந்தக்காரர் க ர ந் தைத் த மி ழ் ச் ச ங் க அமைச்சர் (செயலாளர்) : 1941-44 கரந்தைத் தமிழ்ச்சங்கத் தொடர்பாளர் (தாளாளர்) : 1942-45 கரந்தைத் தமிழ்ச்சங்க இலக்கிய இதழ் ‘தமிழ்ப்பொழில்’ ஆசிரியர். பிரகதி படப்பிடிப்பு நிலைய உரிமை யாளர் (1940-45) அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆளவை (செனட்) உறுப்பினர் (1952 - 54) மர்ரே. எஸ். இராஜம் நிறுவனம்: பதிப்புக் கருத்துரையாளர் (1954-58) புதுவை : பிரெஞ்சு இந்திய ஆய்வியல் நிறுவனம் (1962 -67) தஞ்சை சரசுவதி மகால் :மதிப்பியல் செயலாளர் (1968-73) தமி ழக அர சு சி த் த மருத்துவக் க ழ க உறுப்பினர் (1974-77) படைப்புகள் : பள்ளியகரப் பழங்கதை (1938) தாமஸ் கிரேயின் இரங்கற்பா (1961) : An Elegy written in a country churchyard பழந்தமிழ்ச் சொல்லடைவு (3 தொகுதிகள்) (1967), செந்தமிழ் அகராதி, History of Siddha(1978), Natrinai (Text and Trans lation) பதிப்புகள் : ஏழூர்த் தேவாரத் திரட்டு, தொல் காப் பி ய ம் , க ல் லாட ம் திருவாசகம், சரசுவதி மகால் நூல் நிலையத்தின் சித்த மருத்துவ நூல்கள், வீரமாமுனிவரின் செந் தமிழ் கொடுந்தமிழ். 49 பகுத்தறிவுப் பாட்டன்! காட்டுக்கோயில் தெரு என்று அழைக்கப்பட்ட ‘லஸ்’ பகுதியில் உண்மையில் காடுதான் இருந்தது. பெரிய மாளிகை கட்டி வெள்ளையர் சிலர் வாழ்ந்து வந்தனர். இரவு நேரத்தில் பாம்புகளை அடித்துப் போடுவதும், நரியின் ஊளையைக் கேட்பதும்தான் பொழுது போக்கு. தேனாம் பேட்டை மக்கித் தோட்டத்தில் (ஆயிரம் விளக்கு அருகில் மக்கி மாநகரம்) அயோத்திதாச பண்டிதர் என்ற சிறந்த சித்த மருத்துவர் இருந்தார். அவரிடம் பாம்புக் கடிக்கும், தேள் கொட்டுக்கும் ஓடுவார்கள். காசி மேட்டில் மருத்துவ அறிஞரும், கவிபாடும் புலவரும், சித்த மருத்துவ நூல்கள் பல எழுதியவருமான வல்லக காளத்தி நகர் அயோத்திதாச கவிராச பண்டிதரிடம் படித்த காத்த வராயன், தம் ஆசிரியர்மேல் கொண்ட பற்றால் தம் பெயரை அயோத்திதாசன் என்று மாற்றிக் கொண்டார். ஆசிரியரைப் போலவே மருத்துவத் துறையிலும், தமிழிலும் புலமை பெற்று விளங்கிய அவரைப் பொதுமக்கள் ‘அயோத்திதாச பண்டிதர்’ என்றே அழைத்தனர். சங்கம சங்கம் சிந்துவெளி பசுபதியும் தமிழகத்துத் திருமூலரும் காட்டிய ஓகம் (யோகம்), ஞானம் என்னும் சித்தநெறியில் ‘ஒன்றே குலனும் ஒருவனே தேவனும்’ என வாழும் வகை கண்டவர்கள் தமிழர்கள். அந்தச் சித்தநெறியைப் பரப்பி வந்த காசி விசுநாதப் பண்டாரம் என்பவரிடம் அயோத்தி தாசர் கைவல்ய நவநீதம் கற்றறந்தார் . (தென்னாட்டிலிருந்து காசிவரை நட ந்தேசென்று திரும்புபவர்கள் ‘ சிவன் ’ எனப்பின்னொட்டு பெறுவர். அங்கேயே தங்கிச் சமயச் சடங்குகள் செய்து பணம் ஈட்டுபவர்கள் பண்டாரங்கள் எனப் பெறுவர்; பின்னாளில் இது ‘பண்டா’ எனச் சுருங்கியது. காசியில் அருளுரை கேட்டுச் சமயஞானம் (தீக்கை) பெற்றவர் ஆதிசங்கரர் (கி.பி. 768) ஆவார். பிற்காலச் சங்கரரர்கள்/ சங்கராச்சாரிகள் ஓகம் ஞானம் விட்டு ‘சரியை கிரியை’ என்னும் சடங்குகளையும், குலம், சாதி இனம், மூட நம்பிக்கைகளையும், சமற்கிருத மேலாண்மையையும் பின்பற்றத் தொடங்கினர்). கைவல்யச்சித்தராகிய அ.தா. ஆதிசங்கரரின் ‘இரண்டறு’ (அத்துவைதம்) கொள்கையை ஏற்று 1870-இல் ‘அத்துவைதானந்த சபை’யைத் தொடங்கினார். மதமாற்ற எதிர்ப்பு கிறித்துவர்கள் தமது கல்வித் தொண்டாலும், மருத்துவத் தொண்டாலும் இந்து சமயத்தவரைத் தம் மதத்துக்கு மாற்றினர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் குறிப்பாக மீனவர்களையும், மலைவாழ் பழங்குடியின மக்களையும் அவர்கள் கிறித்துவ மதத்திற்கு மாற்றினர். நீலமலை (நீலகிரி)ப் பகுதியில் உதகமண்டலத்தில் கிறித்துவ மதத்துக்கு மலை இன மக்கள் மாற்றப்படுவதை எதிர்த்து அ.தா.,அங்கு சென்று பணியாற்றினார். கிறித்துவராவதால், தாய்மொழியையும், தாய்நாட்டுப் பற்றையும், பண்பாட்டையும் விட்டு அயல்நாட்டு மொழியை யும் , பண்பாட்டையு ம் ஏற் க நேரி டு ம் என்று எச்சரித்தார். அங்கேயே தோடர் இனப்பெண்ணை மணந்து கொண்டு இந்து மத தேசக் கருத்துகளைப் பரப்பினார். பிழைப்புத் தேடி இரங்கூன், பர்மா முதலிய நாடுகளுக்குத் தமிழர்கள் குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்கள் கண்காணிகளால் ஏமாற்றி அனுப்பப்படுவதை அறிந்த அவரும் அங்குச் சென்று 10 ஆண்டுகள் பணியாற்றித் திரும்பினார். இந்து இல்லை அ.தா. சமற்கிருத மறை (வேத)ச் செய்யுள்களைக் கூறி விளக்கி, ‘இரண்டறு’ கொள்கைகையைப் பரப்பி வந்தார். சமற்கிருத மொழியையும், மறைகளையும் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக்கூடாது; படித்தால் கண்ணைத் தோண்டு, நாக்கை வெட்டு, காதில் ஈயம் காய்ச்சி ஊற்று என்று மிரட்டி யவர்கள் வாளா (சும்மா) விடுவார்களா? பழைமையான இரிக்கு மறையில் (ரிக்வேதம்) சாதி பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்று நிறுவிப், பொய்யான சாத்திரக் குப்பைக்களையும் முறியடித் ததால் எதிர்த்தனர். ‘ஒரே கடவுள் ஒரே மக்கள்’ என முழங்கிய அயோத்தி தாசர், இந்த மதத்தைத் தூக்கி எறிந்தார். ‘நான் பிறக்கும் போது இந்துவாகச் சாகமாட்டேன்’ என்ற அம்பேத்கர் இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர் 1956-இல் தான் இந்து மதத்தை விட்டுப் புத்த மதத்திற்கு மாறினார். பிரம்ம ஞானம் இராசாராம் மோகன்ராயின் பிரம்ம சமாஜம், தயானந்த ச ர சு வ தி யி ன் ஆரி ய ச மாஜ ம் , இ ராம கி ரு ட் டிண ம ட ம் முதலியவை தீண்டாமையை எதிர்த்தாலும், இந்து மதச்சடங்குகளையும் நால்வருணக் கொள்கையையும் பின்பற்றின. அதனால் கர்னல் ஆல்காட்டும், அன்னிபெசண்டும் நியூயார்க்கில் 1875 - இல் தொடங்கிய ‘பிரம்மஞான சபை’ (தியசாபிகல் சொசைட்டி) யில் உறுப்பினர் ஆனார். இதன் கிளை 1882 - இல் சென்னை அடையாற்றில் தொடங்கப்பெற்றுப் பின் தலைமை நிலையமாக மாறியது. ஆல்காட்டுடனும், அன்னிபெசண்டுடனும் இணைந்து அ.தா. பணியாற்றினார். பிரம்மஞானசபை சடங்குகளையும், சாதியையும் அறவே ஒதுக்கிச் செயலாற்றி வந்ததால் அ.தா. அதனைப் போற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பட ‘ஆல்காட்’ பள்ளிகள் என்னும் பஞ்சமர் பள்ளிகள் தொடங்கப் பெற்றன. தாழ்த்தப்பட்ட ஏழைத் கூலித் தொழிலாளிகள் படிக்க இரவுப் பள்ளிகளாக இவை நடந்தன. திராவிட இயக்கம் பிரம்மம் அறிந்தவன் பிராமணன் என்று கூறி பார்ப்பனர் பி ர ம் ம ஞான அவை யிலும் மிகு ந் தனர். இதனா ல் தான் பிராமணர் அல்லாதார் இயக்கம் பி.டி. தியாகராசரால் 1916 - இல் தோற்றுவிக் க ப் பட்டு ப் பி ற கு திராவிடக ழ க ம் ஆகி யது. ஆரியரால் ஒடுக்கப்பட்ட தமிழர்களைத் தனியே அடையாளம் காட்டத் ‘திராவிடர்’ என்ற சொல்லைக் கையாண்டு ‘திராவிட மகாசனசபை’ என 1890 - இல் தொடங்கி முதன் முதல் திராவிட இயக்கம் கண்டவர் அ.தா.ஆவார். ஆரியப் பார்ப்பனர்கள் பிற உயர்சாதி இந்துக்களைத் தமிழர்கள் என்றும் தாழ்த்தப்பட்டவர்களைச் சூத்திரர்கள் என்றும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தாலும் பிராமணரல்லாதார் அனைவரையும் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தினர். ஆயினும் தமிழர்கள் என்ற பெயரில் தாமும், தமிழ்ப்பற்று எனக்கூறிப் புகுந்தனர். எனவே ஆரியப்பார்ப்பனர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்ளத் ‘திராவிடர்’ என்ற சொல்லை அ.தா. தேர்ந்தெடுத்தார். ‘திராவிடர் பாண்டியன்’ என 1885-இல் இதழ் நடத்தினார். சொந்த நிலமற்று மற்றவர் நிலங்களில் கொத்தடிமை களாக, கூலித் தொழிலாளர்களாக உழைக்கும் தாழ்த்தப்பட்ட ஏழை உழவர்களுக்காக ஆங்கிலேய அரசிடம் கோரிக்கை வைத்து நிலம் பெற்றுத் தந்தார். அவை ‘பஞ்சமி நிலங்கள்’ எனப்பட்டன. இரட்டை மலை சீனிவாசன் 1891 - இல் ‘பறையர் மகாசனசபை’ தொடங்கினார். அ.தா . ‘பறையன் என்று அழைக்கக்கூடாது; பூர்வத் தமிழர் அல்லது ஆதி தமிழர் என்றழைக்க வேண்டும், என்றார். அ.தா. மனைவி இறந்தபின், இரட்டை மலை சீனிவாசனின் தங்கையை மணந்தார். தாழ்த் தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கு இருவரும் இணைந்தே பாடுபடலாயினர். தீண்டாமைக் கொடுமையால் தாழ்த்தப்பட்ட மக்களின் துன்பங்கள் மிகுந்தன. கல்வி அறிவு பெற்றால்தான் தங்கள் தாழ்நிலையை உணர்ந்து உயர்வுக்குப் பாடுபடுவர் என்பதால் கல்விப் பணியிலும், அறிவார்ந்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதிலும் அ.தா.இரவு பகலாகப் பணியாற்றினார். புத்தர் நெறி சித்தர் இலக்கியங்களிலும் சித்த மருத்துவத்திலும் புலமை பெற்றிருந்த அ.தா., திருக்குறளைப் பெரிதும் போற்றிப் பரப்பி வந்தார். ஆரிய எதிர்ப்பில் முன்னோடியாக விளங்கிய சித்தார்த் தரும் (புத்தரும்), சுத்தோதனரும் (மகாவீரரும்) திராவிடர்கள் என்பதால் புத்தர் நெறியைப் பின்பற்றத் தொடங்கினார். திருவள்ளுவர் புத்த மதத்தினர் என்பதும், திரிபிடகம் என்பதே திரிக்குறள் என்றாகி திருக்குறள் என்றாகியது என்பதும் அவர் கருத்து. அ.தா. வேண்டிக் கொண்டதற்கிணங்க 1896 - இல் சென்னை கென்னட் சந்தில் ஆல்காட்டு புத்தர் கோயில் கட்டிக் கொடுத்தார். ஆல்காட்டுடன் இணைந்து 1998 - இல் இலங்கை புத்தமத மாநாட்டில் கலந்து கொண்டார். ஆதித் தமிழரைப் (ஆதிதிராவிடர்) ‘பூர்வத் தமிழர்’ என்று குறிப்பிட்ட அ.தா.., புத்தரின் திரிபிடகக் கருத்துகளைப் ‘பூர்வத் தமிழொளி’ என்று தம் இதழில் தொடராக எழுதினார். திரிபிடகம் முழுவதும் மனப்பாடமாக அறிந்த அ.தா., புத்தநெறி பற்றிச் சிறப்பாகச் சொற்பொழிவாற்றி நாடு முழுவதும் பரப் பினார். இராயப்பேட்டையில் சாக்கிய புத்தசங்கம் தொடங் கினார். இதன் கிளைகளை நாடு முழுவதும் தோற்றுவித்தார். இவருடன் பணியாற்றிய இலட்சுமிராசு (நாயுடு) எழுதிய புத்தமதச்சாரம் (Essence of Buddhism) என்று நூல் அம்பேத்கர் புத்தமதம் பற்றிய நூல் எழுத வழிகாட்டியது. கோலார் தங்க வயலில் அ.தா. நடத்திய திருக்குறளை முன்னிலைப் படுத்திய திருமணம் பெரியாரின் சுயமரியாதை திருமண முறைக்கு வழி காட்டியது. பெரியார் 1925-க்குப் பின்தான் பகுத்தறிவுக் கொள்கைக்கு மாறினார்; 1935-இல் தான் இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கினார். இந்தியை எதிர்த்து 1911 - இலேயே தமிழன் இதழில் எழுதிய அ.தா.., இந்தி எதிர்ப்பிலும் முன்னோடி ஆவார். பகுத்தறிவுப் பாட்டன் அ.தா. அறிவியலைத் தமிழில் ஊர்தோறும் பரப்பிய முதல்வரும் ஆவார். மோதல் சாது திரு.வி.க. இராயப்பேட்டையில் நடத்திவந்த ‘பால சுப்பிரமணிய பக்த சபை’ யில் 1903 - இல் யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளை சாக்கிய புத்த மதச் சங்கத்தைத் தாக்கிப் பேசினா ர் . இராயப்பேட்டை சா க்கி ய பு த்த ச ங் கத் தில் அயோத்திதாசர் தலைமையில் பேசியவர்கள் ஆழ்வார் களையும், நாயன்மார்களையும் தாக்கிப் பேசினர். இதனால் அயோத்திதாசரின் கூட்டங்களில் வீம்பு (இரகளை) செய்ய திரு.வி.க.வும் நண்பர்களும் சென்றனர். அயோத்திதாசர் திரிபிடகம் பற்றிச் சொற்பொழிவாற்றிய பின்னர், எப்போதும் ம.சிங்காரவேலுச் செட்டியார் அறிவியல் பாடவகுப்பு நடத் துவார். அறிவியல் பாடவகுப்பால் ஈர்க்கப்பட்ட திரு.வி.க. தொடர்ந்து அயோத்திதாசர் கூட்டங்களுக்கு வந்து ‘சாது’ ஆனார். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போது பத்தியம் தவறியதால் முடக்குவாதம் வந்து நோயில் கிடந்த கலியாண சுந்தரத்தைத் (திரு.வி.க) தம் சித்த மருத்துத்தால் காப்பாற்றியவர் அ.தா. அதையும் மறந்து சமயப்பகை கொண்டமைக்குத் திரு.வி.க. வருந்தினார். வள்ளலாரின் சமயப் பொதுமை நெறியை (சமரச சன்மார்க்கம்) ஏற்று ‘இராயப்பேட்டை முனிவர்’ என்றும் ‘சாது என்றும் பெயர் பெற்ற திரு.வி.க. அயோத்தி தாசரைப் பாராட்டி எழுதியுள்ளார் : “பண்டிதர் வாழ்வை நீத்தபோது யான் ஈமம் வரை சென்று திரும்பினேன். அயோத்திதாசர் என் குடும்ப மருத்துவர். அவர்தம் சங்கம் என் மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று” அயோத்திதாச பண்டிதர் அயோத்திதாச பண்டிதர் இயற்பெயர் : காத்தவராயன் சிறப்புப்பெயர் : அயோத்திதாசர், வைத்திய சித்தர், கவிராச பண்டிதர், பண்டிதர், க.அயோத்திதாச தம்ம நாய்க்கர். தந்தை : கந்தசாமி பிறந்தநாள் : 20-05-1845 மறைவு நாள் : 05-05-1941 பிறந்த ஊர் : கோவை அருகில் அரவம்பாளையம் கல்வி : சென்னை, காசிமேடு வீ.அயோத்திதாச கவிராச பண்டிதரிடம் தமிழும், சித்த மருத்துவமும தனிக்கல்வி; சமற்கிருதம், பாலி, ஆங்கிலம் பணி : அத்துவைதானந்த சங்கம் (1870), திராவிட மகாசன சபை (1890) அமைத்தல் அடையாறு பிரம்மஞான சங்கத்துடன் இணைந்து பஞ்சமர் பள்ளிகள் அமைத்தல், கௌதம சித்தார்த்தர் அச்சுக்கூடம், கோலார் சாக்கிய புத்த சங்கம் (1902), இராயப்பேட்டை சாக்கியபுத்த சங்கம், சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதிப்பணி (1913-1914) ‘திராவிடப் பாண்டியன்’ - இதழ் (1885) ‘ஒரு பைசா தமிழன்’ - வார இதழ் 19.06.1907 முதல் (தமிழன் என 26.8.1908 முதல் வெளி வந்தது) படைப்புகள் : கபாலீசுவரர் சரித்திர ஆராய்ச்சி, விபூதி ஆராய்ச்சி, அரிச்சந்திரன் பொய், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், பூர்வத் தமிழொளியாம் புத்தரது ஆதிவேதம் (1912), புத்த மார்க்க வினா-விடை (1930), சாட்சியக்காரர்களில் ஒருவராகிய சிறீ அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றி ஞானம் (உரைகளுடன்), சாட்சியக்காரர்களில் ஒருவராகிய பாரதமாதா ஒளவையார் என்னும் அம்பிகையம்மன் வரலாறு, சாட்சியக்காரர்களில் ஒருவராகிய சிறீ முருகக்கடவுள் வரலாறு, விசேச சங்கதி தெளிவு, இந்திரர் தேச பண்டிகை விவரம். 50. மாணவர் தந்த பாடம் முத்து வீரியம் என்ற இலக்கண நூலை எழுதிய பெரும் பு லவ ர் முத்துவீர உபா த் தியாய ரி ட ம் தமிழ் இல க் கண இலக்கியங்களைக் கற்றுப் பெரும் புலமை பெற்ற அரங்கசாமி பத்தாம் வகுப்புவரைதான் படித்தவர். அவர் அச்சுதானந்த சுவாமிகள் என்பாரிடம் சிவ ‘தீக்கை’ பெற்றுச் சோமசுந்தரன் எனப் பெயரை மாற்றிக் கொண்டார். சிவமத நெறி நூல்களிலும் (சாத்திரங்களிலும்) தொன்ம நூல்களிலும் (புராணங்களிலும்) ஆழ்ந்தார். தோற்கிடங்கில் கணக்கு எழுதுபவராக வேலைக்குச் சேர்ந்த அவர், பின்னர் சென்னை நகராண்மைக் கழகத்தில் எழுத்தர் வேலை கிடைக்கப் பெற்றார். சிவநெறிச் செல்வராகிய அவர் சிறந்த சொற்பொழிவாளராகிச் சூளை சோமசுந்தரர் எனப் பெற்றார். உண்மையே பேசுவேன் சூ.சோ. கைவல்ய நவநீதம், ஞானவா சிட்டம், பிரபோத சந்திரோதயம், பிரபுலிங்க லீலை முதலிய சிவநெறி இலக்கியங் களைச் சிறப்புற விளக்கிப் பேசி வந்தார். திருவொற்றியூரில் சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார்கள். நகராண்மைக் கழகக் (நகராட்சி மன்ற) கண்காணிப்பாளரிடம் தாம் சிறிது நேரம் முன்னதாகச் சென்றால்தான் சொற்பொழிவுக்குரிய நேரத்தில் சென்று சேரமுடியும் என்று கூறி ஒப்புதல் கேட்டார். “சொற்பொழிவுக்கு போவதற்கெல்லாம் ஒப்புதல் தர முடியாது. வயிற்றுவலி என்று சொல்லுங்கள். இல்லை....ஊரில் யாரோ ஒரு பாட்டி செத்துவிட்டாள் என்று சொல்லி யாவது எழுதிக்கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். அது தான் அலுவலக விதி” என்று கண்காணிப்பாளர் கூறினார். சூ.சோ. நகராண்மைக் கழக மேலாளரிடம் முறையிட்டார். அவரும், “இல்லாத பாட்டிதானே!.........சும்மா எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டே இருங்கோ!” - என்றார். சூ.சோ. சினத்துடன், “நான் பொய் சொல்ல மாட்டேன். உண்மையான காரணத்தைக் கூறும் போது ஒப்புதல் தரவில்லை என்றால் வேலைக்கு இனிவரப் போவதில்லை” - என்று கூறிவிட்டு வெளியேறினார். பின் முழுநேரமும் சமயச் சொற்பொழி விலேயே ஈடுபடலானார். மாணவர் மறைமலை மாயாவாதத்தைப் பின்பற்றி வந்த சூ.சோ., நாகப் பட்டினத்திற்குச் சொற்பொழி விற்குச் சென்றிருந்த பொழுது மதுரைநாயகம் பிள்ளையால் ‘சைவ சித்தாந்தம்’ என்னும் சிவநெறிக் கொள்கையை அறிந்தார். மாயாவாதம், வேதாந்தம், சித்தாந்தம், என்னும் கொள்கைகளை அலசிச் சித்தாந் தமே உயர்வு என்று பேசலானார். தாம் புதிதாக ஏற்ற ‘சைவ சித்தாந்த’க் கொள்கைகளைத் தம் ஆசிரியர் அச்சுதானந்த சுவாமிகளிடமும் கூறி அவரையும் மாற்றினார். மாணவரிடம் கேட்ட பாடத்தால் ‘சைவ சித்தாந்த’ நெறியை ஏற்று அச்சு தானந்தர் தம் பெயரை ‘ஏகாம்பரயோகி’ என மாற்றிக் கொண்டார். சூ.சோ. பரப்பி வந்த சிவநெறிக் கொள்கைகளை மறுத்தும் தாக்கியும் கடுமையாகச் சிலர் பேசியும், எழுதியும் வந்தனர். நாகப்பட்டினத்தில் மதுரைநாயகம் பிள்ளை ஆதரவில் வாழ்ந்து வந்த வேதாசலம் (மறைமலை) சூ.சோ. கருத்துகளை எதிர்த் தோருக்குச் சிவமத இலக்கியங்களிலிருந்து மேற்கோள் கள் காட்டி முறையான மறுப்புக் கட்டுரைகளை நாகை ‘நீலலோசனி’ இதழில் எழுதி வந்தார். அக்கட்டுரை ஆசிரியர் யார் என்று நாகை வந்தபோது சூ.சோ. வினவினார். மதுரை நாயகம் பிள்ளை வேதாசலத்தை அழைத்து வந்து அறிமுகம் செய்தார். அது முதல் வேதாசலம், சூ.சோ.வைக் குருவாக ஏற்றார். சிவநெறி நூல்களை (சாத்திரங்களை) ஆழக்கற்று அவை பற்றி அதிகம் பேசி வந்த சூ.சோ அந்நூல்கள் கூறும் சமயம் சார்ந்த சமற்கிருதக் கலைச் சொற்களைக் கலந்து பேசவும் எழுதவும் செய்தார். ஆயினும் வேதாசலம் மறைமலை (அடிகள்) ஆகித்தனித் தமிழ் இயக்கம் கண்டபோது, அவரைத் தனித் தமிழில் எழுதவும், பேசவும் ஊக்குவித்தார். வடமொழி விற்பன்னர் அக்காலத்துத் தமிழறிஞர்கள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு, சமற்கிருதம், ஆங்கிலம் என்னும் நான்கு மொழிகளும் தெரிந்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் கூட ஓரளவாவது தெலுங்கும், சமற்கிருதமும் அறிந் திருந்தார்கள். தெலுங்கும், ஆங்கிலமும் பள்ளியில் படித்த சூ.சோ., முத்துவீரியரிடம் தான் தமிழும், சமற்கிருதமும் கற்றார். மறைமலை அடிகள் (வேதாசலம்) ஆங்கிலத்திலும், சமற் கிருதத்திலும் புலமைபெறச் சூ.சோ காரணம் ஆவார். பார்ப் பனர்கள் ஆங்கிலத்தையும் சமற்கிருதத்தையும் கற்றிருந்ததால் பிறரைத் தாழ்வாக மதித்தனர். சூ.சோ. மரக்கறி (சைவ) உணவு சாப்பிடுபவராகையால் பார்ப்பனரின் உணவகம் சென்றார். ‘பிராமணாள் ஓட்டல்’ சூத்திரர்களும் தொழுநோயாளிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று பலகையில் எழுதப்பட்டிருந்தது. முன்னறையில் தரையில் உயர் சாதியினர் அமர்ந்ததும் தையல் இலையிலும், உள்ளறையில் பார்ப்பனர்கள் பலகையில் அமர்ந்ததும் வாழை இலையிலும் உணவு பரிமாறப்படும். வெளித்திண்ணையில் கடையின் உரிமையாளராகிய பார்ப்பனரும் சாப்பிட்டு விட்டுத் திண்டில் சாய்ந்திருத்த இ ரண்டு பார்ப்பனர்களும் பேசி க் கொண்டிருந் தனர் . சூ.சோ.வருவதைப் பார்த்து, “நோக்கு ஏன் காணும் கொட்டையும் பட்டையும்? ‘பிரம்மம்’ அறிந்த பிராமணர் களாகிய எங்களுக்குத்தான் சிவனையும் அறியமுடியும், திருமாலையும் அறிய முடியும்” -என்று கிண்டல் பேசினார். திண்ணையில் அமர்ந்த சூ.சோ.சமற்கிருதச் சொல்லகங்களைக் (சுலோகங்களை) கூறி விளக்கம் சொல்லத் தொடங்கினார். தமக்குத் தெரிந்த சமற்கிருத (அரை குறை) அறிவைக் கொண்டு அவர்கள் வாதிட்டுத் தொடர்ந்து பேசமுடியாமல் புறப்பட்டனர். கடையின் உரிமை யாளராகிய பார்ப்பனர் உள்ளே அழைத்துச் சென்று பலகை இட்டு வாழை இலை போட்டு அறுசுவை உணவருந்த செய்து அவரிடம் பணம்வாங்க மறுத்துக் கையெடுத்துப் கும்பிட்டு வழியனுப்பினார். புயல் சிங்கம் வட மொழியிலும் தென்மொழியிலும் ஆற்றல் மிக்க அவரின் சொற்பொழிவைக் கேட்டு எதிரிகள் நடுங்கினர்; அன்பர்கள் மகிழ்ந்தனர். ஓரு பார்ப்பனக் கைம்பெண்ணின் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவன், பிறமதம் மாறுவேன் என்றான்; தாய் அவனுக்கு அறிவுறுத்த முடியாமலும் வழி இல்லாமலும் துடித்தாள்; பின் சூ.சோ.சொற்பொழிவுக்குத் தொடர்ந்து அவனை அழைத்து வந்தாள்; அவன் மனம் திரும் பினான். அவர் சொற் பொழிவைக் கேட்ட இராமநாதபுரம் மன்னர் பாசுகர சேதுபதி, ‘வைதிக சைவ சித்தாந்த சண்ட மாருதம்’ என்று பட்டம் கொடுத்தார். (சண்ட மாருதம்: புயல்). திருவாவடுதுறை மடத்தினர் ‘பரசமயக் கோளரி’ (கோளரி:சிங்கம்) என்று பட்டமளித்தனர். விவேகானந்தர் 1900-ஆம் ஆண்டில் சென்னைக்கு இரண்டாம் முறையாக வந்திருந்த போது சூ.சோ. கூறிய ‘சைவ சித்தாந்த’ விளக்கங்களைக் கேட்டு மகிழ்ந்தார் என்று கூறுவர். தொன்மக் (புராண) கற்பனைக் கதைகளை ஒதுக்கி விட்டுச் சிவநெறிக் கொள்கைகளை (சைவ சித்தாந்தங்களை) ஆழமாக நுணுகி உணரத்தக்க வகையில் பேசிவந்த சூ.சோ. பார்ப்பனர்கள் கட்டிவிட்ட இழிவான பொய்க்கதைகளைத் தகர்த்தெறிந்தார். தென்னாடுடைய சி வனைத் தொழுத இராவணனையு ம் இரணியனையும் திருமால் நெறியினர் தாழ்த்தியது போதா தென்று, தென்னாட்டு மன்னன் குலோத்துங்கனையும் கூரத் தாழ்வார் வென்றார் எனப் பழிக்கு ஆளாக்கினர் தேவாரத்தைப் பூட்டி வைத்தது போலத்தில்லைப் பெருமாளையும் கடலில் போட்டுத் தில்லைப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி குலோத்துங்கனுக்குப் பழி ஏற்படுத்தியது. சிவஞான கண்டராதித்தர் என்னும் சோழ மன்னரின் பேரனும் பே ரர சன் இராசராசனின் அண்ணனும் ஆகி ய ஆதித் த கரிகாலனைப் பார்ப்பன அதிகாரிகள் நான்கு பேர் சூழ்ச்சி செய்து கொலை செய்யவில்லையா! ஆரியத்தால் சிவமதத்தில் ஏற்பட்டிருந்த கொள்கைக் குழப்பங்களை நீக்கினார் சூ.சோ. மாணவராகிய மறைமலை அடிகளும், “உமை என்னும் தாயின் உடல் அழுக்கைத் திரட்டி வைத்தது பிள்ளையாரா? என் தாய் அழுக்கு நிறைந்தவளா?” என்று கேட்டு ஆரியப் பொய்க் கதைகளையும் வேள்வித்தீ நெறியையும் உயிர்ப்பலியையும் எதிர்த்தார். சூ.சோ., மறைமலையாரைத் தம் மகனாகவே ஏற்றிருந்தார். சூ.சோ. மறைந்த போது மறைமலையார் ‘சோமசுந்தரக் காஞ்சி’ என்று பாடினார். கையறுநிலை 8 செய்யுள், தாபத நிலை 10 செய்யுள், மன்னைக் காஞ்சி 67 அடி அகவல் கொண்ட நூல் இது. ஆங்கிலத்திலும் சமற்கிருதத்திலும் அமைந்த இரங்கற் பாக்களையே தூக்கி வைத்துக் கொண்டாடும் சிலர், சங்கப் பா க் களுக் கு நி கரா ன நூற் சி ற ப் பு ம் செ ய் யு ள் வ ன ப் பு ம் உள்ளத்தை உருக்கும் அன்பின் உயர்வும் கொண்ட இந்நூலின் புதுமையைப் பொறாது குறை கூறினர். குறைகளை மறுத்து ‘ சோம சு ந் த ர க் காஞ்சியா க்க ம் ’ என்ற நூலும் , ஆசான் வரலாற்றை விளக்கி ‘சோம சுந்தர நாயகர் வரலாறு’ என்ற நூலும் செய்து சூ.சோ. புகழை நிலைநாட்டினார் மறை மலையார். சூளை சோமசுந்தர நாயகர் சூளை சோமசுந்தர நாயகர் இயற்பெயர் : அரங்கசாமி சிறப்புப்பெயர் : சோமசுந்தரன், சூளை சோமசுந்தரநாயகர், சைவ சித்தாந்த சண்டமாருதம், பர சமயக்கோளரி. பெற்றோர் : அம்மணி அம்மாள், இராமலிங்க நாயகர் பிறந்தநாள் : 16-08-1846 மறைவு நாள் : 22-02-1901 ஊர் : சென்னையில் சூளை கல்வி : சென்னை :அரசினர் பள்ளி, 10 ஆம் வகுப்பு வரை, தெலுங்கு, ஆங்கிலம் முத்துவீர உபாத்தியாயரிடம் : தமிழ்க்கல்வி, சமற்கிருதமும்; அச்சுதானந்த சுவாமிகளிடம்: சமயக்கல்வி மணம் : சிவஞானத்தம்மையார் பணி : சென்னை : தோற்கிடங்கில் கணக்கர், சென்னை நக ராண்மைக் கழக (நகராட்சி) எழுத்தர் (1881 வரை), சிவசமயச் சொற் பொழிவாளர். படைப்புகள் : 1. ஆசிரியரின் ‘தியானானுபூதி’ என்ற நூலில் பின் இணைப்பாக ஆசிரியரைப் பற்றி 85 பாடல்கள். 2. அசம்பிரதாய நிராசநம், ஆராரியப் பிரபாவம், பிரமாத்தும தீபிகையினது ஆபாச விளக்கம், ஆஞ்ச நேய ராம வைபவங்கள், சுரேச விசய பங்கம். 3. சித்தாந்த ஞானபோதம், சித்தாந்த உந்தியார், சித்தாந்த சேகரம், சிவகிரி பதிற்றுப் பத்தந்தாதி, சிவநாமாவளி, சைவ சூளாமணி, பரம பத பிங்க வினா விடை, சிவதத்துவ சிந்தாமணி. 4. சமரச ஞானதீபம், சன்மார்க்க போத வெண்பா, ஞானபோத விளக்கம், ஞான போதத்துணிவு, சிவவாக்கியத் தெளிவுரை. 51. தனித்தமிழ்த் தந்தை! நாகப் பட்டினத்தில் புத்தகக் கடை வைத்திருந்த வெ. நாராயணசாமிப் பிள்ளையிடம் தமிழ் படித்து அறிஞராக உருவானோர் பலர். அவரிடம் படித்த வேதாசலம் அவர் கடையிலேயே வேலைக்குச் சேர்ந்தார். வேதாசலம் (மறை மலை) நாகையிலிருந்து வெளிவந்த நீலலோசனி இதழிலும், திராவிட மஞ்சரி, பாஸ்கர ஞானோதயம், இந்துமதாபிமானி முதலிய இதழ்களிலும் புத்தகக் கடையில் வேலை பார்க்கும் போதே எழுதி வந்தார். சூளை சோமசுந்தர நாயகரின் சிவநெறிக் கோட்பாடுகளை எதிர்த்துச் சிலர் ‘சற்சனர்’ என்ற இதழில் எழுதிய கட்டுரைகளுக்கு மறுப்பாக ‘முருகவேள்’ என்ற புனை பெயரில் நாகை ‘நீலலோசனி’ இதழில் மறைமலையார் கட்டுரைகள் எழுதிவந்தார். நாகை வந்த சூளை சோமசுந்தரர் ‘கட்டுரை ஆசிரியர் யார்?’ என வினவ, மதுரைநாயகம் பிள்ளை மறைமலையாரை அறிமுகம் செய்து வைத்தார். அது முதல் சூளை சோமசுந்தரரைத் தம் குருவாக மறைமலையார் ஏற்றார். வெ. நாராயணசாமிப் பிள்ளையிடம் படித்தவர்கள் சித்தூர் அறமன்றத் தலைவர் ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளையும் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரித் தத்துவப் பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளையும் ஆவர். ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை அழைப்பால் சித்தூர் சென்று ‘சித்தாந்த தீபிகை’ இதழில் ஆசிரியராகச் சிலகாலமும், பெ. சுந்தரம்பிள்ளை அழைப்பால் திருவனந்தபுரம் சென்று மார்த்தாண்டம் நம்பி பள்ளியில் தமிழ் ஆசிரியராகச் சிலகாலமும் மறைமலையார் பணியாற்றினார். பின்னர் பெ.சுந்தரர் எழுதிக் கொடுத்த பாராட்டு மடலுடன் சென்னைக் கிறித்துவக் கல்லூரி சென்றார். தமிழ் கட்டாயமில்லை கிறித்துவக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வில்லியம் மில்லரும் அங்குப் பணியாற்றிய சூரியநாராயண சாத்திரியாரும் பெ.சுந்தரர்க்கு நண்பர்கள். சூரிய நாராயணர் கேட்டார், “என்ன... பரிந்துரை மடலா?” “இல்லை, பாராட்டு மடல்” “என்ன வேண்டும்?” “தமிழாசிரியர் பணி!” “புலவர் பட்டம் வாங்கியிருக்கிறீர்களா?” “இல்லை... படித்திருக்கிறேன்.” “குற்றியலுகரம் முற்றியலுகரம் எடுத்துக்காட்டு சொல்க.” “எனக்குத் தெரியாது.” “உம்.........?” “எனக்கு... குற்றியலுகரம்; தெரியாது... முற்றியலுகரம்.” “சரி... இப்போதே வேலையில் சேருங்கள்!” தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் மூன்றிலும் புலமை பெற்றி ருந்ததால் ஆங்கிலேயர், பார்ப்பனர் இடையே கிறித்துவக் கல்லூரியில் 13 ஆண்டுகள் மறைமலையார் பணி யாற்ற முடிந் தது. ஆனால் 1911-இல் ஆங்கிலம் கட்டாயம், தமிழ் கட்டாய மில்லை என்று சென்னைப் பல்கலைக் கழகம் சட்டம் கொண்டு வந்ததால் மறைமலையார் பணியிழந்தார். வள்ளலார் வழி பன்னாட்டாரும் பல நிலையினரும் தேடிவந்த இடமாகச் சென்னை அக்காலத்தே விளங்கியதால் இந்து, கிறித்துவம், மகமதியம், புத்தம் என மத வேறுபாடுகளையும் துவைதம், அத்துவைத ம் , மாயாவாத ம் , வேதாந்தம் , சித்தாந்தம், உலகாயதம் முதலிய கோட்பாடுகளையும் மேடையிட்டுப் பேசிச் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். தொண்டியைச் சேர்ந் த குணங் குடி மஸ்த் தான் தொண்டியா ர் பேட்டை (தண்டையார் பேட்டை) யிலும் இராமலிங்க வள்ளலார் திருவொற்றியூரிலும் சமயப்பொறை (சமரச) வழிகாட்டினர். வள்ளலாரின் வழிநின்று மறைமலையார் துறவி ஆனார். ப ர ப ர ப் பான சென்னைப் பட்டினத்தை விட்டு நீங்கிப் பல்லவபுரம் (பல்லாவரம்) என்னும் சிற்றூரில் குடிபுகுந்து ‘சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’ என 22-4-1911இல் தொடங் கினார். ‘ஞானசாகரம்’ என்ற இதழ் நடத்தினார். தம் இதழையும் நூல்களையும் அச்சிடத் தம் இருப்பிடத்திலேயே ‘திருமுருகன் அச்சகம்’ தொடங்கினார். வள்ளலார் காட்டிய பொது நெறி, ஓக (யோக) முறை, சித்தமருத்துவம், உடல் ஓம்பல், தமிழ்ப்பணி ஆகியவற்றைப் மறைமலையார் பின்பற்றினார். புலவர்கள் இரந்துண்டு வாழக் கூடாது, செம்மாந்து உடலாலும் உள்ளத்தாலும் செல்வத் தாலும் வளமாக வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகம் முழுவதும் ஊர் தோறும் இலங்கைக்கும் வடநாட்டின் பல ஊர்களுக்கும் பயணம் செய்து தமிழும் சிவநெறியும் பரப்பினார். பொழிவுக்கு வரும் போது தங்குமிடம், படுக்கை அறை, பூசைப் பொருட்கள், வழிச்செலவுக்கு ரூ. 200 முதலியன கேட்டார். தண்ணீர் கலவாத ஆவின்பால் காலையில் காற்படி, மாலையில் அரைப்படி, நான்கரைச் சுற்றளவுள்ள எலுமிச்சம் பழம் 7, இரண்டு அடி நீளத்திற்கு மேற்படாத காய்ந்த வேம்பு விறகு 12, முனை முறியாத பச்சரிசி, புளிப்பு இல்லாத தயிர், பச்சை மங்காத மாங்காய், அப்போது பிடுங்கிய கீரை என்று நீளம், அகலம், எண்ணிக்கை கூறிக் கேட்பது சிலருக்கு வியப்பாக இருந்தது. ஒருவர் கேட்டார் : “ஏன் துறவியாக இருந்துகொண்டு இவ்வளவு கேட் கிறீர்கள்?” “நான் உடலால் உள்ளத்தால் துறவி. ஆனால் சிவநெறிக்கும் தமிழுக்கும் இரவு பகல் கடமை செய்வதற்கு வேண்டிய உணவும் ஏந்தும் (வசதியும்) பணமும் தேவை தானே! தா...தை... என்று கூத்தாடுபவர்களுக்கும், தர்ரான்னா... தர்ரீன்னா... என்று நான்கைந்து தெலுங்குப் பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டு புரியாமல் உருட்டுபவர் களுக்கும் கொட்டித் தரும் போது இப்படிக் கேட்கிறீர்களா?” “எங்களால் இவ்வளவு பெரிய தொகை கொடுக்க முடிய வில்லையே!” “ஆட்டம் பாட்டம் வாண வேடிக்கை என அழிப் பீர்கள்! தமிழுக்கு - புலவனுக்குக் கொடுக்க முடியாதா? என்னை நம்பி அச்சுத் தொழிலாளர்கள், நூல்விற்பனை செய்பவர் கள் இருக்கிறார்கள். இரண்டு இலக்கம் ரூபாய்க்கு மேல் புத்தக வெளியீட்டில் போட்டி ருக்கிறேன். அன்றாடச் செலவுக்கு அன்றாடம் இரவு பகல் நான் நேர்மையாக உழைக்க, எழுத, பேச எனக்கு நல்ல உணவும், பணமும் கூலியாகத்தான் பெறுகிறேன்.”– என்று தன்னிலை விளக்கம் தந்தார் மறைமலையார். தமிழ்ஆண்டு சங்கத் தமிழ் நடையில் மிக நீண்ட சொற்றொடர்களில் மறைமலையார் பேசவும் எழுதவும் செய்தார். பேச்சிலும், எழுத்திலும் மறைமலையாரைப் பின்பற்றிய திரு.வி.க. சிறிய சொற்றொடர்களைக் கையாண்டார். திருவாசகத்திற்கு உரை எழுதக்கூடாது என்ற பழைமைவாதிகளின் கருத்தை மறுத்து மறைமலையார் திருவாசக விரிவுரை எழுதினார். பச்சையப்பன் கல்லூரியில் 1921-இல் திரு.வி.க., கா.சு.பிள்ளை, கா.நமச்சிவாய முதலியார், ந.மு.வே. நாட்டார், கி.ஆ.பெ. விசுவநாதம் முதலிய தமிழறிஞர்களைக் கூட்டி, திருவள்ளுவர் ஆண்டு கிறித்துவ ஆண்டுக்கு 31ஆண்டு முந்தையது, தைத்திங்கள் முதல் தொடங்கு வது என அறிவித்தார். தனித்தமிழ்த் தந்தை ‘உண்மை விளக்கம்’ என்ற இதழின் ஆசிரியராக இருந்த மறைமலையார் 1897-ஆம் ஆண்டிலேயே ‘தெள்ளிய தனித் தமிழில் இனிமைபெருக” எழுதிய போது ஒரு சில வட சொற்களுக்கு இடம் தந்திருந்தார். ஆசிரியர் சூளை சோம சுந்தரர் (1901-இல் மறைந்தவர்), மறைமலையாரின் தனித்தமிழைப் பாராட்டியுள்ளார். ஆயினும் முழுவதும் தனித்தமிழ் ஏற்றது 1916 முதல் என்பர். வள்ளலாரின் “பெற்ற தாய்தனை மக மறந்தா லும்...” என்ற பாடலைப் பாடிக் கொண்டிருந்தபோது, ‘தேகம்’ என்ற வடசொல்லையும், ‘உடல்’ என்ற தமிழ்ச் சொல்லையும் வள்ளலார் பாடி இருக்கிறாரே, தமிழ்ச்சொல் போதுமே! பிற மொழிச் சொற்கலப்பால் தமிழ் நலம் கெடுமே!” என்று கூறினார். உடனே, “பிறமொழிச் சொற்களை அறவே நீக்கு வோம்” என்றார் மகள் நீலாம்பிகை. அப்போதே வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை என்று மாற்றிக் கொண்டார். பின்னர் ‘சமரச சன்மார்க்க சங்கம்’ என்ற தன் இல்லப் பெயரை ‘பொது நிலைக்கழகம்’ எனவும், ‘ஞானசாகரம்’ என்ற தம் இதழின் பெயரை ‘அறிவுக்கடல்’ எனவும் மாற்றிய துடன் தாம் அதுவரை வெளியிட்டிருந்த நூல்களையும் திருத்தித் தூயத் தமிழாக வெளியிட்டார். இராசாசி ஆட்சியில் 1937-இல் இந்திமொழி திணிக் கப்பட்டபோது சென்னை கடற்கரைக் கூட்டத்திலும் கோகலே மண்டபத்தில் நடந்த அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலும் தலைமை ஏற்று இந்தியை எதிர்த்துப் பேசினார். 1939, 1948 இந்தி எதிர்ப்பு மாநாடுகளிலும் தலைமை தாங்கிப் பெரியார், அண்ணா ஆகியோருக்குத் துணைபுரிந்தார். மறைமலையாரின் தனித்தமிழ் இயக்கத்தையும், சிவநெறிச் சீர்திருத்தப் பொது நெறியையும் திருவாசக விரிவுரையையும் தமிழர்கள் சிலரே எதிர்த்தனர். மறைமலையாரை உயர் சாதியினர் என்றும் தனித்தமிழ் உயர்சாதித் தமிழ் என்றும் கூறினர். ‘சோறு’ தமிழ்ச்சொல் ‘சாதம்’ வடசொல் என்று மறைமலையார் கூறியபோது, “சோறு என்பது வேலைக்காரன் பேச்சு” என்று உ.வே.சா கூறினார். “சோறு என்பது தாழ்த் தப்பட்ட சாதிச்சொல்” என்று மடத்தலைவர்கள் கூறினர். பல தூய தமிழ்ச் சொற்களை வடசொல் என்று உ.வே.சா கூறிய போது “பார்ப்பனக் குறும்பு” என்று மறைமலையார் குறிப்பிட்டார். வரதராசுலு நாயுடு, வையாபுரிப்பிள்ளை, ம.பொ.சி. முதலிய தமிழர்களும் தனித்தமிழை எதிர்த்தனர். மறைமலையார் தொடங்கிய தனித்தமிழியக்கம் (1916) அதே கால கட்டத்தில் தொடங்கிய பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் வழிவந்த திராவிடர் இயக்கக் கட்சிகளாலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாலும், தமிழவேள் உமாமகேசுவரனார், பா.வே.மாணிக்கநாயக்கர், மாகறல் கார்த்திகேய முதலியார், கா.சு.பிள்ளை, கா.அப்பாதுரையார், பாவாணர், பெருஞ் சி த் திரனா ர் , இலக்குவனார் , வ . பொ ப ழனிவேலனார் , வ.சுப.மாணிக்கம், தமிழ்க்குடிமகன் முதலியோராலும் வளர்த் தெடுக்கப் பெற்றுள்ளது. மறைமலை அடிகள் மறைமலை அடிகள் இயற்பெயர் : வேதாசலம் சிறப்புப்பெயர் : பல்லாவரம் சுவாமி வேதாசலம், முருகவேள் (புனைபெயர்), மறைமலை, மறைமலை அடிகள், தனித்தமிழ்த்தந்தை பெற்றோர் : சின்னம்மாள், சொக்கநாதப்பிள்ளை பிறந்தநாள் : 15-07-1876 மறைவு நாள் : 15-09-1950 ஊர் : நாகப்பட்டினம் அருகில் காடம்பாடி (காடவர் கோன் பாடி) கல்வி : நாகை, ‘வெசுலியன் மிசன்’ பள்ளி; வெ. நாராயணசாமிப்பிள்ளையிடம் தமிழ்க்கல்வி மணம் : 1893, சவுந்தரவல்லி பணி : திருவனந்தபுரம், மார்த்தாண்டம் நம்பி பள்ளியில் தமிழாசிரியர் (இரண்டரை மாதம்); சென்னை கிறித்துவக் கல்லூரி யில் தமிழாசிரியர் (09-03-1898 முதல் மார்ச்சு 1911 வரை) பொதுப்பணி : நாகை இந்து மதாபிமான சங்கம் (1888) திருப்பாதிரிப்புலியூர் சைவசித்தாந்த மகாசமாசம் (07.07.1905 முதல்), பல்லவபுரம் (பல்லாவரம்) சமரச சுத்த சன்மார்க்கசங்கம், (22-04-1911 முதல்), (27-07-1911 முதல்) பல்லவபுரம், திருமுருகன் அச்சுக்கூடம் (12-12-1911 முதல்) இதழாசிரியர் : ‘சித்தாந்த தீபிகை’ (சித்தூர், 1897), உண்மை விளக்கம் (நாகை, 1897) ஞானசாகரம் (சென்னை, 1902 முதல்), Oriental Mystic Myna (1908 முதல்), The Ocean of Wisdom(1935) படைப்புகள் : திருவொற்றியூர் மும்மணிக் கோவை (1990), சோமசுந்தரக் காஞ்சி (1901) உரைநடை : முதற் குறள்வாத நிராகரணம் (1898) முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை (1903) பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை (1906) பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும் (1906), சிந்தனைக் கட்டுரைகள் (1908) சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911), மரணத்தின் பின் மனிதர் நிலை (1918), பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921), அறிவுரைக் கொத்து (1921), யோக நித்திரை அல்லது அறி துயில் (1922), தமிழர் நாகரிகம் அல்லது வேளாளர் யார் ? (1 92 3) , வேளாளர் நாகரிகம் (1927), மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927), மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (1930), மக் கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (1933), சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934), சிறுவர்க்கான செந்தமிழ் (1934), தொலை வில் உணர்தல் ( 19 3 5) , முற்கால ப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936), இந்தி பொதுமொழியா? (1937), தமிழர்மதம் (1941), திருக்குறள் ஆராய்ச்சி (1951), சோமசுந்தர நாயகர் வரலாறு (1957) மொழிபெயர்ப்பு : சாகுந்தல நாடகம் (1907) நாடகம் : அம்பிகாபதி அமராவதி (1950) புதினம் : குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி (1911), கோகிலாம்பாள் கடிதங்கள் (1921) ஆங்கில நூல்கள் :Saiva Siddhantha as a Pilosophy of practical Knowledge, The ancient and modern Tamil poets, Can Hindi be a lingua - franca. 