ஐம்பெருங் காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி 5 உரையாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரன் இளங்கணி பதிப்பகம் சென்னை- 600 015. நூற் குறிப்பு நூற்பெயர் : ஐம்பெருங்காப்பியங்கள் - 5 வளையாபதி - குண்டலகேசி உரையாசிரியர் : முதுமுனைவர் இரா.இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் முதற்பதிப்பு : 2009 தாள் : 16கி. வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 144 = 168 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 105/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் எண் : 7/2 செம்படத்தெரு, சைதாப்பேட்டை மேற்கு, சென்னை - 600 015. பதிப்புரை மலைகளாலும், ஆறுகளாலும் வரும் வளத்தை விட பெரும் கோயில்களால் தோன்றும் மாண்பைவிட, புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட காப்பியங்களால் ஏற்படுகின்ற புகழ் ஒரு இனத்துக்குப் பீடும், பெருமையும் தருவனவாகும். பெருங்காப்பியச் செல்வங்களாக தமிழர் போற்றிக் காப்பவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி இவை தமிழருக்குக் கிடைத்த அரும்பெரும் கருவூலங்கள். சிலப்பதிகாரத்தில் சமணக் கருத்துக்கள் இடம்பெற்றிருந் தாலும் இது முற்றிலும் தமிழ் தேசியக் காப்பியம். சிந்தாமணியும், வளையாபதியும் சமணக் காப்பியங்கள். மணிமேகலையும், குண்டலகேசியும் புத்த சமயக் காப்பியங்கள். தமிழர் தம் வாழ்வு வளம்பெற அணிகலன்களாக அமைந்தவை. இச்செந்தமிழ்க் காப்பியங்கள். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு நெறிகளும் செவ்வனே அமையப்பெற்றதும், இயற்கை வருணனை, நாடு நகர வருணனை, வேந்தன் முடிசூட்டும் நிகழ்வு, போர்மேற் செல்லுதல், வெற்றி பெற்று விழா எடுத்தல் என்பனவற்றோடு, இன்னும் பல நிகழ்வுகளும் அமையப் பெற்றதே பெருங்காப்பியம் என்பர் தமிழ்ச் சான்றோர். தமிழகம் அன்றும் இன்றும் வேற்றினத்தார் நுழைவால் தாக்குண்டு, அதிர்வுண்டு, நிலைகுலைந்து, தடம் மாறித் தடுமாறும் நிலையில் உள்ளது. தம் பண்பாட்டுச் செழுமையை, நாகரிக மேன்மையை, கலையின் பெருமையை இசையின் தொன்iமயை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் கற்றுணர்ந்து தமிழர் தம் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இவ் வருந் தமிழ்ச் செம்மொழிச் செல்வங்களை மீள்பதிப்பாக வெளியிடுகிறோம். இச் செம்மொழிச் செல்வங்களுக்குச் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர். இரா. இளங்குமரனார் செவிநுகர் கனிகள் என்னும் தலைப்பில் மிகச்சிறந்த ஆய்வுரையும், பதிப்பு வரலாறும் தந்து எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்துள்ளார். இப்பெரு மகனாருக்கு எம் நன்றி என்றும் உண்டு. தேவநேயப் பாவாணர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு. அருணாசலம், தி.வை சதாசிவப் பண்டாரத்தார் ஆகிய தமிழ்ப் பெருமக்கள் இக்காப்பியங்கள் குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை இந்நூலுள் பதிவாகத் தந்துள்ளோம். அலங்காரங்களும், ஆடம்பரங்களும், படாடோப வாழ்வும் தமிழ் மண்ணில் தலை ஓங்கி ஆட்டம்போடும் காலமிது. விலை வரம்பில்லா இவ் வருந்தமிழ் கருவூலங்களையெல்லாம் தொகுத்துப் பொருள் மணிக்குவியல்களாகத் தமிழர் தம் கைகளுக்குத் தந்துள்ளோம். எம் தமிழ்ப்பணிக்குக் துணைநிற்க வேண்டுகிறோம். - பதிப்பாளர் வளையாபதி வளையாபதி சமண சமயம் சார்ந்த பெருங்காப்பியம். இஃது கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டு இடைவெளிக்குள் வெளிவந்ததாகத் தெரிகிறது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை. நாட்டு வருணனையும் இல்லறத்தின் மேன்மையும் கூறும் நூல். பழம் புலவர் களின் சொல்லையும், பொருளையும் பொன்னே போல் போற்றி உரைக்கும் நூல். தமிழ்மறையாம் வள்ளுவ நெறியை உள்வாங்கி எழுதப்பட்ட நூல். வினையின் வலிமையைப் பேசும் நூல். காலச் சுவடுகளின் கையில் சிக்கியதால் இக்காப்பியச் சுவையைச் சுவைத்து மகிழும் பெருமையை இழந்துவிட்டோம். குண்டலகேசி புத்த சமயம் சார்ந்து இக் காப்பியம்.கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டு இடைவெளிக்குள் வெளிவந்ததாகத் தெரிகிறது. இதன் ஆசிரியர் நாதகுத்தனார் என்பர். வளையாபதிக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல். சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்த நூல். தீவினை யெச்சம், கூடாவொழுக்கம், புணர்ச்சி விழையாமை, யாக்கை நிலையாமை, இறைமாட்சி, குற்றம் கடிதல், இடுக்கண் அழியாமை, தூய்தன்மை எனும் பொருள்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். செவிநுகர் கனிகள் “காதைகள் சொரியன செவிநுகர் கனிகள்” என்பது கம்பர் வழங்கிய தொடர்! காலமெல்லாம் செவி வாயாக நெஞ்சுகளனாகத் துய்க்கும் செவ்விலக்கியச் செழுங் காப்பியங்கள் ஐந்து! அவற்றுள் முழுமையாக வாய்த்தவை மூன்று; மற்றை இரண்டோ தமிழர் பேணிக் காவாப் பேதைமையால் ஒழிந்தவை! எனினும், உரையாசிரியர்களால் ஒரு சில ஒளிமணிகள் எய்தப் பெற்றவை. சிலப்பதிகாரம் உருவாகிய மண் சேரலம்! கண்ணகி கோயில் கொண்ட மண் சேரலம்! சிலப்பதிகாரம் இல்லையேல் சேரல மண்ணை இழந்தமைபோல் செங்குட்டுவன் ஆட்சியோ கண்ணகி கோட்டம் உருவாகிய மாட்சியோ உருத்தெரியாமல் ஒழிக்கப்பட்டிருக்கும். நெஞ்சையள்ளும் சிலம்பு நமக்கு வாய்த்தமையால் முத்தமிழ்க் காவியமாம் மூத்த தமிழ்க் காவியம் பெற்றோம்! அதனைத் தொடுத்த கதையாம் மேகலை என்னும் காவியமும் பெற்றோம்! நெட்ட நெடிய காலத்தின் பின்னர்ச் சீவக சிந்தாமணியாம் காவியம் உற்றோம்! முன்னவை இரண்டும் தமிழ்ண்ணின் கொடைவளமாகத் திகழ, இம் மூன்றாம் காவியம் மொழிபெயர்ப்புக் காவியமாகக் கிட்டியது; மற்றவை இரண்டும் வளையாபதி, குண்டலகேசி என்பவை. அவ்வக் காவிய நிலைகளை அவ்வந் நூல்களில் காண்க. மொழிபெயர்ப்பு என்னும் எண்ணமே தெரியாவகையில் பெருங்காப்பியப் பேறெல்லாம் ஒருங்கமைந்த பெருங்கதை எண்ணத்தக்கது; அரிய கலைக்கருவூலக் காப்பியமாம் அது, காப்பிய வகையில் எண்ணப்படாமல் நின்றது ஏன் எனப் புலப்படவில்லை! காப்பிய வகையுள் வைக்கத்தக்க அருங்கலப் பேழை அஃதாம்! ‘காப்பியம்’ என்பதுதான் என்ன? தண்டியலங்காரம் என்னும் அணிநூல் காப்பிய இலக்கணத்தைக் கைம்மேல் கனியாக வழங்குகிறது. அவ்விலக்கணத்தைக் கற்போர் சிலம்பு முதலாம் காப்பியங்களை முழுதுற ஆய்ந்து அமைந்த கட்டளை அஃது என்பதை அறிவர்: பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின்ஒன் றேற் புடைத் தாகி முன்வர இயன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகடல் நாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம்என் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனர்விளை யாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியில் புலத்தல் கலவியில் களித்தலென்று இன்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரம் தூது செலவு இகல் வென்றி சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப” என்றும் “ கூறிய உறுப்பில் சிலகுறைந் தியலினும் வேறுபா டின்றென விளம்பினர் புலவர்” என்றும் பெருங்காப்பிய இலக்கணம் பேசுகிறது தண்டியலங்காரம் (8,9) அது காப்பிய இலக்கணம் என, “ அற முதல் நான்கினும் குறைபா டுடையது காப்பியம் என்று கருதப் படுமே” என்றும், அவைதாம், “ ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும் உரையும் பாடையும் விரவியும் வருமே” என்றும் கூறுகின்றது. (10,11) ஐம் பெருங்காப்பியங்கள் என எண்ணப்பட்டமை போல, ஐஞ்சிறு காப்பியங்கள் என எண்ணப்பட்டனவும் உள. “அறம் பொருள், இன்பம்” என்னும் முப்பொருள் முறையும், அகம் புறம் என்னும் இரு பொருள் முறையும் அகன்று, “அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே” எனவும், “அறம் பொருள் இன்பம் வீடும் பயக்கும் எனவும் அயல்நெறி பற்றிக் கொண்ட வகையால், “அறமுதல் நான்கு உடையது” எனவும், “அறமுதல் நான்கினும் குறைபாடுடையது” எனவும் சுட்டப்பட்டன. முதற்காப்பியமாம் சிலம்பு, முத்தமிழ்க் காவியமாய், வரிப் பாடல் வைப்பகமாய் அமைந்தமை இளங்கோவடிகள்தெரிமாண் தமிழ்க் கலைவளம் காட்டுவதாம்! சாத்தனார் நூலோ, கதையால் தழுவப்பட்ட தெனினும் காப்பியப் போக்காலும் யாப்பியல் வளத்தாலும் சிலம்பை நெருங்க முடியவில்லை! சமயச் செறிவும் தருக்கமும் அடிகளார் சால்புப் பார்வையோடு சாராமல் ஒருசார் ஒதுங்கி நிற்கிறது! சிந்தாமணி கலைமலி காப்பியமாகக் கமழ்ந்தாலும் வரிப் பாடல்களோ அவர் காலத்துக் கிளர்ந்து விட்ட வாரப்பாடல் களோ இல்லாமல் நடையிடவே செய்கின்றது! வளையாபதி வரிப்பாடல்களைக் கொண்டமையும் நடை நயம் மல்கி நின்றமையும் கிடைத்த பாடல்களாலும், “வாக்குத் தடை யுற்ற ஒட்டக்கூத்தர் வளையாபதியாரை நினைந்தார்” என்னும் உரைக் குறிப்பாலும் புலப்படுகின்றது. குண்டலகேசியின் கதையோ நீலகேசி உரைவழியே அறியக் கிடந்ததாம். அக்கதை நாடகமாய், திரைப்படமாய், அகவலாய், புதுக் காப்பியமாய்ப் பின்னே வடிவெடுக்கத் தூண்டியது. அதன் கதைத் தலைவன் தானே தேடிக்கொணட் தீச்சொல்லின் தீயவிளைவாலேயே யாம்! அதனால், “சொற்பகை காட்டும் கேசி காதை” எனப் படுதலாயிற்று. ஐம்பெருங்காப்பியங்களுள் சிலம்பு பெற்றது அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையுமாம்! முற்றாக வாய்க்க வில்லை எனினும் வாய்த்த அளவில் அவ்வுரைகள் முடிமேல் கொள்ளத் தக்க கலைவளமும் நயமும் உடையவையாம்! சிந்தாமணி பெற்றபேறு நச்சினார்க்கினியர் உரைபெற்ற பெருமையதாம்! மணிமேகலையோ மூலத்தளவே முற்றக்கிடைத்த அமைவினது. உரையாசிரியர் திருக்கண் பார்வை ஏனோ படவில்லை! அதற்குக் குறிப்புரை - கதைச் சுருக்கம் ஆகியவை வரைந்தமை தென்கலைச் செல்வர் உ.வே.சாமிநாதையரையே சாரும். அன்றியும் இம்முப்பெருங் காப்பிய முதற்பதிப்புகளையும் அரும்பாடுபட்டுத் தமிழ உலகக் கொடையாக வழங்கிய பெருமையும் அவரையே சாரும்! முதலிரு பெருங்காப்பியங்களுக்கும் பழைய உரை, குறிப்புரை ஆயவற்றைத் தழுவிய நல்லுரை வழங்கிய பெருமையர் நாவலர் ந.மு.வே. அவர்களும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களுமே ஆவர். வளையாபதி, குண்டலகேசிப் பாடல்களைத் தொகுத்து அடைவு செய்து குறிப்புரை வழங்கிய பெருமையர் பேரறிஞர்கள் இரா.இராகவ ஐயங்கார், மு.இராகவ ஐயங்கார், மயிலை சீனி வேங்கடசாமியார் ஆவர்! ஐம்பெருங்காப்பியம் என்பதன் அடையாளம் காட்டுவது போல வளையாபதியும் குண்டலகேசியும் குறிப்புரையோடும் பொழிப்புரை யோடும் வெளிவந்துள்ளன. கடலாக விரிந்து கிடக்கும் காப்பியங்களோடு, மணற்கேணி ஊற்றுப்போலவேனும் இணைத்துப் பார்க்க உதவுகின்றன பின்னிரு காப்பியங்கள். இவற்றைப் பற்றிய தனித் தனித் தகவுகளை ஆங்காங்குக் கண்டு மகிழ்க! ஐம்பெருங் காப்பியத் தொகுதிகள் இவை எனவும் எங்கள் முந்தையர் தந்த வளம் இவை எனவும் உவப்போடு தமிழ் உலகம் கொள்ள ஒருங்கே தருபவர் குவை குவையாய்த் தமிழ்க்கொடை தொடர்ந்து வழங்கிவரும் தமிழ்ப் போராளி கோ.இளவழகனார் ஆவர்! எல்லார்க்கும் ஒவ்வோர் இயற்கை! ஒவ்வோர் திறம்! அவற்றைத்தாம் பிறந்த மண்ணுக்கும் பேசும் மொழிக்கும் குறைவற வழங்கும் கொடையாளர் புகழ், அக்கொடையோடு என்றும் குன்றாமணம் பரப்பும்! வாழிய நிலனே! வாழிய நிலனே! இரா.இளங்குமரன் வளையாபதி ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதி ஒன்றென அறியப் பட்டாலும் கதையோ, பாடிய புலவர் பெயரோ அறிய முடியாத நூல் வளையாபதியாம். ‘‘இது தமிழிலுள்ள பழைய காப்பியம் ஐந்தனுள் ஒன்று; இதன் பாடல்களும் சில முன்னோர் உரைகளில் ஆங்காங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளனவே அன்றி நூலின் முதல் நடு இறுதி காணப்படாமையின் இந்நூல் இன்ன சரித்திரத்தை யுடையதென்றும், நூலாசிரியர் இன்னார் என்றும் புலப்படவில்லை.’’ என்று உ.வே. சாமி நாதையர் அவர்கள் சிலப்பதிகார அரும்பத அகராதியில் குறிப்பிடுகிறார். மேலும், ‘‘பிள்ளை அவர்கள் இருந்தக் காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்தகச் சாலையில் வளையாபதி ஏட்டுச் சுவடியை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் அத்தகைய பழைய நூல்களில் எனக்குப் பற்று உண்டாகவில்லை. அதனால் அந்நூலை எடுத்துப்படிக்கவோ பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேரவில்லை. பழைய நூல்களை ஆராய வேண்டுமென்ற மனநிலை என்பால் உண்டான பிறகு தேடிப் பார்த்தபோது அந்தச் சுவடி மடத்துப் புஸ்தகச் சாலையில் கிடைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தேடியும் பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழிந்தொழிந்து போயினவென்று தெரிந்து அவற்றிற்காக வருத்தமடைவது என் இயல்பு. ‘‘கண்ணினால் பார்த்த சுவடி கைக்கெட்டாமற் போயிற்றே!’’ என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. ‘கண்ணிலான் பெற்றிழந்தான் என உழந்தான் கடுந்துயரம்’ என்று கம்பர் குறிக்கும் துயரத்துக்குத் தான் அதனை ஒப்பிடவேண்டும்’’ என்று தம் என் சரித்திரத்தில் குறிப்பிடுகிறார் (858) உ.வே.சா. அவர்கள். வளையாபதிச் செய்யுள்கள் பெரும்பாலும் அறிந்து போற்றும் வகையில் நூற்பெயருடன் வெளிப்படுத்திய தொகை நூல் புறத்திரட்டே ஆகும். புறத்திரட்டில் வளையாபதிப் பாடல்கள் 30 தலைப்புகளில். இடம் பெற்றுள்ள பாடல்கள் 66 ஆகும். சமண சமய நூல் இது. வளையாபதியைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், தொல்காப்பிய உரையாசிரியர்கள் இளம்பூரணர் நச்சினார்க்கினியர் ஆகியோர் மேற்கோளாக ஆண்டுளர். யாப்பருங்கல விருத்தியுரையும் புறத்திரட்டில் கிட்டாத பாடல்கள் இரண்டனை வழங்குகின்றது. தக்கயாகப் பரணியை இயற்றிய ஆசிரியர் ஓரிடத்தில் வாக்குத் தடைப்பட்டு நின்றாராம்! அதனால் அவர் வாக்கு வன்மை வேண்டி வளையாபதியாரை நினைந்தாராம்! அதன் பின் வாக்குத் தடை நீங்கி நூலை முற்றுவித்தாராம்! இவ்வாறு வாக்குவளச் சிறப்பு அமைந்தது வளையாபதி என அதன்பழைய உரை குறிக்கும் பெருமையுடையது வளையாபதியாம். ‘இவர் வளையாபதியை நினைத்தார் கவியழகு வேண்டி’ என்பது அக்குறிப்பு (425). வளையாபதியின் பாடலழகைப் புலப்படுத்துவதாக யாப்பருங்கல விருத்தியுரை காட்டும் இரண்டு பாடல்களைக் குறிப்பிடுகிறார் அறிஞர் வையாபுரியார். ‘‘நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து கோலம் குயின்ற குழல்வாழி நெஞ்சே கோலம் குயின்ற குழலும் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியில் வேம்வாழி நெஞ்சே காலக் கனலெரியில் வேவன கண்டாலும் சால மயங்குவ தென்வாழி நெஞ்சே வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே உத்தம நன்னெறிக்கண் நின்றூக்கம் செய்தியேல் சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே.’’ என்பவை அவை. ‘‘ஆறடியான் மிக்கன வேனும் ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின் பாற்படுத்து வழங்கப்படும். கொச்சகக் கலியின் பாற்படுத்தினும் ஆம்’’ என்கிறது யாப்பருங்கல விருத்தியுரை(93) ‘பெருந்தொகை’ என்னும் தொகுப்பிலும், ‘மறைந்து போன தமிழ் நூல்கள்’ என்னும் தொகுப்பிலும் இடம் பெற்ற வளையாபதிப் பாடல்கள், ஐம்பெருங்காப்பியத் தொகுப்பில் இடம் பெறல் வேண்டி உரையுடன் கழகம் வெளியிட்டது. வளையாபதியின் பெயரைக் கதையொடு பதிவு செய்யு மாறு தவத்திரு. சுத்தானந்த பாரதியார் நூலாக்கம் செய்தார்’ இழந்தவற்றை மீட்டெடுத்தலில் அவருக்கிருந்த பற்றுமை அது. இது கால் எளிய தெளிவுரையுடன் செம்மொழி அடங்கலில் இடம் பெறத் தமிழ்மண் பதிப்பகத் தோன்றல் கோ, இளவழகனார் வெளியிடுகிறார்’ அவர் ஒரு கோத்தும்பி அனையர்! தமிழுக்கு ஆக்கமாம் நூல் எதுவாயினும் எப்பாடு பட்டேனும் முயன்று வெளியிடலே தம் பிறவிக் கடன் என்று கொண்டு விட்ட பற்றுமைத் தொண்டர் அவர்! எண்ணரிய நூல்களையெல்லாம் தொகுதி bதாகுதியாகத் தொடர்ந்து வெளியிடும் அவர் தொண்டு வாழ்வதாக! அவர்க்கு உறுதுணை யாக நிற்கும் குடும்பத்தவரும், அலுவலகக் குழுமத்தவரும் மெய்யாகவே பேறு பெற்றவர்கள்! நூற்கொடையாம் மேற்கொடையில் பங்கு கொள்கிறார்கள் அல்லவா! இரா. இளங்குமரன் குண்டலகேசி ‘‘குண்டலகேசி என்பாள் ஒரு வைசிய கன்னிகை. இவள் ஒரு நாள் பிரசாததீஸ்தலத்து விளையாடுகின்றாளாக ஒரு கிதபவ வைசிய புத்திரன் காளன் என்பான் இவன் பௌத்த தரிசனங் கொண்டு பல வழியும் சோர விருத்தி பண்ணிச் செல்வானை, முன்சொன்ன குண்டலகேசி கண்டு காமப் பரவசையாக, அதனை அறிந்து அவளுடைய பிதா ராசாவைக் கண்டு யாதானுமோர் உபாயத்தால் மீட்டு இவனுக்குக் குண்டல கேசி என்னும் கன்னிகையினை விவாக விதியாற் கொடுத்து இனிது செல்கின்ற காலத்து ஒருநாள் பிரணய கலகத்து நர்மோக்தி காலத்து ‘நீகள்வனன்றோ’ என்று குண்டலகேசி சொல்லக் களெனும் தன்னுள்ளத்தே சினங் கொண்டு பின் பொருநாள் வித்தியா சாதன வியாசத்தால் இவளைத் தனிக் கொண்டு ஒரு பர்வதத்தேறி, ‘நீ என்னை இவ்வாறு சொல்லுதலில் யானுன்னைக் கொல்லத் துணிந்தேன்’ என்னக் குண்டலகேசியும் ‘தற்கொல்லியை முற்கொல்லிய’ என்பதன்றே, இவனை யான் கொல்வனென நினைந்து, ‘யான் சாகிறேனாகில் உம்மை வலங்கொண்டு சாவல்’ என அதற்கியைந்த காளனை வலங் கொள்கின்றாள். வரையினின்றும் வீழ நூக்கினள்... நூக்கக் காளனும் புத்த ஸ்மரணையால் மோக்ஷித்தான் குண்டலகேசியும் பர்த்ரு விரஹ துக்கிதை யாகித் துறப்பேன் என நினைத்துப் பர சமயங்கள் எல்லாம் நாவல் நட்டுச் சயித்துப் பௌத்த தரிசனம் கொண்டு முத்தி பெற்றனள்’’ என்பது, நீலகேசியின் உரையாசிரியர் சமய திவாகர வாமன முனிவர் வழியாக அறியவரும் குண்டலகேசியின் மூலக்கதை இதுவாம். எந்தநூல் குண்டலகேசியை மறுக்க வந்ததோ அந்த நூல் கொடையே இக்கதை என்பது எதிர் நூலும் இனிய பயன் செய்யும் என்பதை உணர்ந்து போற்றலாம் என்க. ‘‘இச் சரித்திரம் பௌத்த நூலாகிய தேரிகாதையிலும் கூறப்பட்டிருக்கிறது. குண்டலகேசி என்பது புனைபெயர் என்பதும் பத்திரை என்பதுதான் உண்மைப் பெயர் என்தும் இவள் முதலாவதாக நிகண்டவாதியாய் இருந்தாள் என்பதும், அங்கே இவன் தலை மயிர் பறிக்கப் பட்டுச் சேர்க்கப் பெற்றாள் என்பதும், பின்னர்த் தலை மயிர் வளர்ந்தபொழுது அடர்ந்து சுருண்டிருந்தமையால் குண்டலகேசி எனப்பெயர் வழங்கப்பட்டாள் என்பதும், இவளால் கொல்லப்பட்ட இவளது நாயகனாகிய காளன் ‘ஸ்த்துகன் என்று வழங்கப்பட்டான் என்பதும் பிறவும் தேரிகானதயால் (46ஆம் காதை) விளங்குகின்றன. என்று பேராசிரியர் வையாபுரியார் வரைகின்றார் (புறத்திரட்டு நூன்முகம்) யாப்பருங்கல விருத்தியுரையார் ‘‘சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி நீலகேசி, அமிர்தபதி என்ற இவற்றின் முதற்பாட்டு வண்ணத்தான் வருவனவற்றில் நேரசை முதலாய் வரின் ஓரடி பதினான்கு எழுத்தாம்.’’ என்கிறார். குண்டலகேசி அகலக்கவி என்பதும், தெரியாத சொல்லும் பொருளும் வருதலுண்டு என்பதும், அவ்வாறு அல்லது அகலக் கவி செய்ய ஆகாது என்பதும் வீரசோழிய உரையால் அறியப் படுகின்றது. (வீரசோ. அலங். 4, 13) குண்டலகேசியை இயற்றியவர் நாதகுப்தனார் என்பார் பௌத்த சமயம் சார்ந்தவர். பௌத்தமே உயர் சமயம் என்பதை நிலைநாட்ட எழுதப்பட்ட நூல் இது. குண்டலகேசியின் இக்கதை தவப்பெருஞானி சுத்தானந்த பாரதியாரைக் கவர்ந்து குண்டலகேசி அகவல் எழுதத் தூண்டியது. குண்டலகேசி நாடகமாகவும் புனை கதையாகவும் வெளிப்பட்டது. திரைப்படமாகவும் உலாவந்தது. மந்திரிகுமாரி என்பது அப்பட மெனக் கேட்கப்பட்டது. 1954ஆம் ஆண்டில் ஒரு மாணவன் தூண்டலால் 1127 பாடல்கள் இயற்றி, குண்டலகேசியைப் புதிய பாவிகமாக மதுரை ஆயிரக்கல் மண்டபத்தில் 1959இல் அரங்கேற்றப்பட்டது என்னால். பழைய குண்டலகேசிப் பாடல்களுள் கிடைத்தவற்றைத் தொகுத்து ஐம்பெருங்காப்பியத் தொகுதியொடும் இணைத்துக் கழகம், உரையொடும் வெளியிட்டது. குண்டலகேசி, ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்னும் தொகுப்பில் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களால் வெளியிடப் பட்டது. அதற்கு முற்பட அறிஞர் மு. இராகவ ஐயங்கார் அவர்கள் தொகுத்த பெருந்தொகை என்னும் நூலில் இடம் பெற்றது. அன்றியும் செந்தமிழ் முதல் தொகுதியில் குண்டலகேசி என்னும் கட்டுரையும் வெளிவந்து கமழ்ந்தது. எளிய உரையுடன் தமிழ்மண் பதிப்பகம் குண்டலகேசியை வெளியிட்டு ஐம்பெருங்காப்பியத்தில் அதனிடம் வெற்றிட மாகாமல் செய்கின்றது! சில பாடல்களேனும் ‘பாட்டன் கொடையாக வாய்ந்தமை அரிய வளம் தானே!’ இரா. இளங்குமரன் நுழையுமுன் வளையாபதி ரகுவம்சம், குமாரசம்பவம், மாகம் அல்லது சிசு பாலவதம், கிராதார்ஜுனீயம், நைடதம் என்பன. நாம் அறிய வருகின்ற ஐம்பெருங்காப்பியங்களாகிய ஐந்து நூல்களில், இன்று கிடைக்கும் நூல்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி என்ற மூன்றுமே. சிந்தாமணியும் வளையாபதியும் ஒன்பதாம் நூற்றாண்டு; குண்டகேசி பத்தாம் நூற்றாண்டு என்று மட்டும் இப்போதைக்குக் குறிப்பிடுவோம். மூன்று காப்பியங்களில், மணிமேகலை ஒன்றே கதாபாத்திரத் தால் பெற்ற பெயர்; சிலப்பதிகாரம் சிந்தாமணி இரண்டும் பொருள் தன்மையால் பெற்ற பெயர், குண்டலகேசி காப்பியத் தலைவியின் பெயரால் வந்த பெயர், வளையாபதி, காப்பியத் தலைவியின் பெயரா அல்லது வேறு காரணத்தால் வந்த பெயரா? குண்டலகேசியும் வளையாபதியும் இன்று இறந்து போன பெருங்காப்பியங்கள். குண்டலகேசி செய்தார் நாதகுத்தனார். இளங்கோவடிகள் பாடி நெடுநாள் ஆன பின்னரே, அதிக கால இடையீட்டின் பின்னரே, சாத்தனார் என்பவர் மணிமேகலையைப் பாடினார் என்பது தான் உண்மை. மணிமேகலை பௌத்த காவியம் என்பது உண்மையே. ஆனால் சிலப்பதிகாரம் சைன காவியம். - “தமிழ் இலக்கிய வரலாறு” மு. அருணாசலம்தி பார்க்கர். வளையாபதி என்பது ஐம்பெருங் காவியங்களின் கடைசியில் வைத்து எண்ணப்படுகிறது. இதன் கதையை அறிதற்கில்லை. நூலில் ஒரு சில பாடல்களே அடியார்க்கு நல்லார் உரையிலும் பரிமேலழகர் உரையிலும் இளம்பூரணர் உரையிலும் நச்சினார்க்கினியர் உரையிலும் யாப்பருங்கல உரையிலும் புறத்திரட்டிலும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. இவ்வாறு எழுபதுக்கு மேற்பட்ட பாடல்கள் அகப்படுவனவற்றைச் செந்தமிழ் (1) திரட்டித் தந்துள்ளது. நிக்கந்த வேடத்து இருடிகணமென்றும் அறிவனென்றும் இந்நூல் கூறுவதால் இது ஒரு சைன நூலென்றே கொள்ளுதல் வேண்டும். இந்த நூலில் நாலடியாக வரும் பாக்கள் சில. இரண்டடி வெவ்வேறு எதுகை பெற்று வருவதலும் ஆறடி பெற்ற பாக்கள் வருவதும் இதன் பழைய காலத்தையே நினைப்பூட்டுகின்றன. யாப்பருங்கல விருத்திக்கும் இளம்பூரணத்துக்கும் முற்பட்டுப் பத்தாம் நூற்றாண்டிலேயே இந்நூல் வழங்கி இருத்தல் வேண்டும். பல பல வகையாகச் செய்யுட்களை ஆக்கும் முயற்சி, தேவார, திருவாசகக் காலத்ததென்றால் இந்நூலும் சிந்தாமணிக்கு முந்தியதெனலாம். இந்நூலின் இலக்கிய நலத்தினை ஆராய்தலுக்கு வாய்ப்பிள்ளை. எளிமையும் தெளிவும் அறத்தின் விளக்கமும் கொண்ட தொரு நூலென இதனைக் கூறலாம். உரை ஆசிரியர்கள் பாராட்டிய நூல் என்பதும் நாம் மறத்தல் ஆகாது. தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் அப்பரணியின் நூலாசிரியராகிய கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் “கவியழகு வேண்டி வளையாபதியை நினைத்தார்.” என எழுதுவ தினின்றும் சமணத்தை வெறுத்த சைவராலும் சைவப் புலவராலும் இதன் இலக்கியச் சுவை எவ்வளவு உயர்ந்ததாகக் கருதப் பெற்றதென்பது விளங்கும். - “தமிழ் இலக்கிய வரலாறு” தெ.பொ.மீகாவ்யா வெளியீடு. குண்டலகேசி இது ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. இது பௌத்த நூல். மணிமேகலையும், குண்டலகேசியும் பௌத்த நூல்கள்; ஏனையவை யாவும் சைன நூல்கள். சுருண்ட கூந்தல் காரணமாகக் குண்டலகேசி என்று இக்காப்பியத் தலைவி பெயர் பெற்றாள். - “தமிழ் இலக்கிய வரலாறு” மு. அருணாசலம் தி பார்க்கர். ஐம்பெரும் பாவியங்களுள் ஒன்றாகச் சொல்லப்படும் குண்டலகேசி, அப் பெயர் கொண்ட ஒரு வணிகக் கன்னிகை காளன் என்னுங் கள்வனைக் காதலால் மணந்து, ஒருநாள் அவனைக் கள்வனென்று பழித்ததனால் அவன் சினந்து ஒரு சூழ்ச்சியால் தன்னைக் கொல்ல முனைய, அச் சூழ்ச்சியை வேறொரு சூழ்ச்சியால் வென்று தானே அவனைக் கொன்றபின், சமணத் துறவியாகித் தருக்கத்தில் ஒரு புத்த மாணவர்க்குத் தோற்றுப் புத்தரிடம் அடைக் கலம் புகுந்தாள் என்னும் கதைபற்றிய, இறந்துபட்ட பாவியம். இது, ஒரு தருக்கப் பாவியம் என்பது, “தருக்கமாவன : ஏகாந்தவாதமும் அநேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுள்களுள்ளும், சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளுங் காண்க” என்னும் யாப்பருங்கல விரிவுரையால் (ஒழி. 3) அறியப்படும். இதன் ஆசிரியர் பெயர் நாதகுத்தனார் என்று நீலகேசியுரை கூறும். இது தவறென்றும், நாகசேனர் என்பதே அவர் பெயரென் றும் ஆராய்ச்சிப் புலவர் மயிலை சீனி. வேங்கடசாமியார் கூறுவர். - “தமிழ் இலக்கிய வரலாறு” தேவநேய பாவாணர்தமிழ்மண் வெளியீடு. பொருளடக்கம் பதிப்புரை iii செவிநுகர் vii நுழையுமுன் ஒஎiii முன்னுரை 1 வளையாபதி வயைபாபதிஅகவல் 6 வளையாபதி - உரை 52 குண்டலகேசி குண்டலகேசி அகவல் 79 குண்டலகேசி நாடகம் 87 குண்டலகேசி - உரை 132 செய்யுள் முதற்குறிப்பு அகராதி 142 வளையாபதி முன்னுரை தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன. வளையாபதி, குண்டலகேசி இரண்டும் முழுமையாகக் கிட்டவில்லை. சிலப்பதி காரமும், மணிமேகலையும் சங்க காலத்தை அடுத்துத் தோன்றியவை. எஞ்சிய மூன்றும் காப்பிய காலம் எனப்படும் கி.பி. 9-10-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியவை. காப்பிய கால நூல்களில் பெருங்கதை நீங்கிய பிற அனைத்தும் விருத்தப்பா யாப்பில் தோன்றியவை. தமிழில் ஐம்பெருங் காப்பியம் என்னும் பெயர், நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதரால் முதன் முதலில் (நூற்பா 387 உரை) குறிப்பிடப்படுகிறது. அவரும் ஐம்பெருங் காப்பியங்கள் இவை எனச் சுட்ட வில்லை. வடமொழியில் ‘பஞ்ச காவியம்’ என்றொரு வழக்குண்டு. அதனைப் பின்பற்றித் தமிழிலும் ஐம்பெருங் காப்பியம் என்னும் வழக்குத் தோன்றியுள்ளது. தமிழ் இலக்கண, இலக்கிய உரையாசிரியர்கள் வளையா பதியைத் தம் உரைகளில் மேற்கோளாகக் காட்டியுள்ளனர். இளம்பூரணர், யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், தக்கயாகப் பரணியின் பழைய உரையாசிரியர் ஆகியோர் வளையாபதிப் பாடல்களைக் குறிப்பிடுகின்றனர். இளம் பூரணருக்கு முந்தியவர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர். அவர் வளையாபதியை மேற்கோளாகக் காட்டுவதால் அவர் காலத்திற்கு முன் தோன்றியது வளையாபதி. இளம்பூரணர் தொல்காப்பியச் செய்யுளியலில் (98-ஆம் நூற்பா) வளையாபதியின் ‘உலக மூன்றும்...’ எனத் தொடங்கும் செய்யுளை, இரண்டடியெதுகைக்குச் சான்றாகக் காட்டியுள்ளார். ஆயினும் இன்ன நூலெனக் குறிப்பிடவில்லை. நச்சினார்க்கினியர் செய்யுளியல் 148-ஆம் நூற்பா உரையுள் இச்செய்யுளைத் தரவு கொச்சகமாகக் கொண்டு காட்டி வளையாபதிச் செய்யுள் என்று குறிப்பிடுகிறார். யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர். ‘நீல நிறத்தனவாய்’, ‘வித்தகர் செய்த..’ என்னும் வளையாபதிச் செய்யுள்களைக் (70, 71) கலி விருத்தத்திற்குக் (கொச்சகக்கலியின் பாற்படுத்தினும் ஆம்) காட்டி வளையாபதிச் செய்யுள் என்றே குறிப்பிடுகிறார். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் நாடுகாண் காதையின் 241-ஆம் அடிக்கு வரைந்த உரையில் ‘ஆக்கப் படுக்கும்’ (9) என்னும் வளையாபதிச் செய்யுளைக் காட்டியுள்ளார். பரிமேலழகர் 107-ஆம் திருக்குறள் உரையில் ‘எழுமை யென்றது வினைப்பயன் றொடரும் ஏழு பிறப்பினை’ அது வளையாபதியுட் கண்டது எனவும், 822-ஆம் (இனம் போன்று) என்னும் திருக்குறள் உரையில் ‘அவர் மனம் வேறுபடுவது’ பெண்மனம் பேதின் றொருப் படுப்பேன் என்னும் எண்ணிலொருவன்” (46) என்பதனா னும் அறிக எனவும் வளையாபதிச் செய்யுள்களைக் காட்டியுள் ளார். தக்கயாகப் பரணி பழைய உரையாசிரியர் (425-ஆம் தாழிசை) ‘எம்மனை மாரினி யெங்ஙனம் வாழ்குதிர்’ என்பது சிந்தாமணி. எங்ஙனமென்னும் சொல் இவ்வாறே வளையாபதியிலுமுண்டு (52) என்று உரைத்துள்ளார். இவ்வுரையாசிரியர்களால் வளையாபதிச் செய்யுள்கள் மேற்கோள் காட்டப்படுவதால் சுவைமிக்க பாடல்களையும், சொல்நயம், ஓசை இன்பம் உடைய பாடல்களையும் வளையாபதி பெற்றிருந்தது என்பது தெளிவாகிறது. மேலும், தக்கயாகப் பரணி பழைய உரையாசிரியர், இவர் (ஒட்டக் கூத்தர்) வளையாபதியை நினைத்தார் கவியழகு வேண்டி...’ எனக் (425-ஆம் தாழிசையில்) குறிப்பிட்டுள்ளதால் கவியழகு மிக்க செய்யுள்களையும் வளையாபதி உடையது என அறிய முடிகிறது. வளையாபதியின் ஆசிரியர் பெயர் தெரிந்திலது. ஆயினும், அவர் முன்னோர் மொழிபொருளைப் பொன்னே போல் போற்றியுள்ளார். குறுந்தொகை, திருக்குறள், திருமந்திரம் ஆகிய நூல்களின் பாடல் வரிகளை அப்படியே கையாண்டுள்ளார். “ மாவென மடலும் ஊர்ப: பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமம்காழ்க் கொளினே” (குறுந்தொகை 17) என்னும் பாடல் மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும்; பூவென் றெருக்கி னிணர்சூடுப; புன்மை கொண்டே பேயென் யெழுந்து பிறரார்ப்பவு நிற்ப; காம நோய்நன் கெழுந்து நனிகாழ்க் கொள்வ தாயி னக்கால் (24) என வளையாபதியுள் இடம் பெற்றுள்ளது. ‘யாகாவா ராயினும் என்னும் திருக்குறள் (127) காக்கப் படுவன இந்திரிய மைந்தினுள் நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே”(9) எனவும், ‘சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்..’ என்னும் திருக்குறள் (57) ‘ பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக் கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே’ (5) எனவும் ‘தெய்வம் தொழாஅள்...’ என்னும் திருக்குறள் (55) நாடும் ஊரும் நனிபுகழ்ந் தேத்தலும் பீடு றும்மழை பெய்கெனப் பெய்தலும் கூட லாற்றவர் நல்லது கூறுங்காற் பாடு சான்மிகு பத்தினிக் காவதே” (3) எனவும், “மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை” என்னும் திருக்குறள் (345) மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பு மிகையவை யுள்வழி...”(38) எனவும் திருக்குறள் வரிகள் பொன்னே போற் போற்றப்பட்டுள்ளமை மனங் கொள்ளத்தக்கது. வளையாபதிச் செய்யுள்கள் பல்வேறு யாப்புகளால் இயற்றப்பட்டுள்ளன. கிடைத்துள்ள பாடல்கள் தரவு கொச்க மாகவும், கலிவிருத்தமாகவும் உள்ளன. ஆயினும், யாப்பருங்கல உரையாசிரியர் காட்டும் பாடல்கள் (70, 71) வரிப்பாடல்களாம். சிலப்பதிகாரம் போலக் கதைப் பாத்திரத்தின் கூற்றாய் அமைந் துள்ளன. மேலும் அடியார்க்கு நல்லார் ஆய்ச்சியர் குரவையுள் “வளையாபதியுள்ளும் கருவி கூறிப் பண் கூறுதலானும்” என்று குறிப்பிடுவதால் வளையாபதியும் இசைத்தமிழ் விரவிய கதைப் போக்கில் அமைந்த நூல் எனத் தெரிகிறது. அடியார்க்கு நல்லார் தரும் வேறு சில பாடல்கள் வளையாபதிச் செய்யுள் எனக் கருதத்தக்கன என ஒன்பது பாடல்களை மு. அருணாசலம் காட்டுகிறார். (தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பாகம் பக் 56-57.) வளையாபதிச் செய்யுள்கள், யாக்கை நிலையாமை, கற்புடைய மகளிர், கற்பில் மகளிர், தவத்தின் மேன்மை, அருளுடைமை, புலால் மறுத்தல் முதலிய அறக்கருத்துகளைக் கூறுவதாய் உள்ளன. ‘புறத்திரட்டு’ என்னும் நூல் கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இந்நூலில் வளையாபதிச் செய்யுள்களாக 66 செய்யுள்களை வெவ்வேறு தலைப்புகளில் தொகுத்துத் தந்துள் ளனர். மிகுதியான பாடல்களைப் புறத்திரட்டே நமக்குத் தந்துள் ளது. மு. இராகவையங்கார் தொகுத்த ‘பெருந்தொகை’ வளையா பதிச் செய்யுள்களைத் திரட்டித் தந்துள்ளது. தமிழ்த்தாயின் அணிகலன்கள் பலவற்றைத் தேடித் தொகுத்துத் தமிழ்த்தாய்க்குப் பூட்டி மகிழ்ந்த உ.வே.சா. அவர்கள் சீவகசிந்தாமணி முதற் பதிப்பை கி.பி. 1887-இல் கொண்டு வந்தார். பதிப்புப் பணியை 1886-இல் தொடங்கியிருக்கிறார். அதற்கு முன் திருவாவடுதுறை மடத்துப் புத்தக சாலையில் வளையாபதி ஏட்டுச் சுவடியைப் பார்த்திருக்கிறார். பின் தமிழகமெங்கும் தேடியும் அந்நூல் அவருக்குக் கிட்டவில்லை. எத்தனையோ நூல்கள் தொலைந்தன. அவற்றுள் வளையாபதியும் ஒன்று. சைனமதச் சார்புடைய நூல் சைவ மடத்தில் இருப்பது தகாதென எங்கோ மறைந்துவிட்டது போலும்! வளையாபதி காப்பியக் கதை வைசியபுராணத்தின் 35-ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதன் சுருக்கம்: நவகோடி நாராயணன் என்னும் வைர வணிகன் ஒருவன் அளவற்ற செல்வம் உடையவன்; சிவபக்தன்; பாண்டியனை வென்ற வீரன்; அவனுக்கு இரு மனைவியர். ஒருத்தி வைசிய குலத்தினள்; மற்றொருத்தி வேறு குலத்தினள்; சமூகக் கட்டுப்பாடு காரணமாக வேற்றுக் குலத்தவளை நீக்கி வைத்தான். அப்போது அவள் கருவுற்றி ருந்தாள். நவகோடி பெருஞ்செல்வம் தேடித் தன்குல மனையோடு மகிழ்வாய் இருந்தான். மற்ற குலத்தவள் காளியை வழிபட்டுத் தன் கணவன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டினாள். காளியும் தன் கோயிலருகே வாழ்ந்து வருமாறு கூறியது. அவ்வாறு இருக்கும் போது ஒருநாள் ஓர் ஆண் மகவைப் பெற்றாள். உரிய காலத்தில் பள்ளியில் சேர்ந்தான். ஒரு நாள் பள்ளியில் ஒரு மாணவன் ‘அவனைத் தந்தை பெயர் அறியாதவன்’ எனப் பழித்தான். அவன் தன் தாயிடம் உண்மை யறிந்து நவகோடியின் கடையை அடைந்து வணிகரிடம் தன்னைப் பற்றி கூறினான். காளியினால் உண்மையறிந்த நவகோடி தாயையும் சேயையும் ஏற்றுக் கொண்டான். அறிஞர் சிலர் வேற்றுக் குலப் பெண்ணின் பெயர் ‘வளையாபதி’ எனக் கருதுகின்றனர். சமயங்கள் பல நூல்களைத் தமிழுக்குத் தந்தன. சமயச் சமூகங்கள் சில நூல்களை எரித்தன; எறிந்தன. அவற்றுள் வளையாபதியும் ஒன்று. கிடைத்துள்ள பாடல்களின் வழி அந்நூலைப் படித்தின்புறுவோம். - தமிழகன் வளையாபதி அகவல் 1 - கடவுள் வாழ்த்து நினைவாய் மனமே, நினைவாய் மனமே, நினைக்க நினைக்க நெஞ்சினில் அமுதாம்! இன்பக் கடவுளை, இன்னுயிர்க் குயிராம் அன்புக் கடவுளை ஆர்வங் கொண்டு நினைவாய் மனமே, நித்தலும் போற்றிப் பூசனை புரிவாய் மனமே! புறத்தே திரியும் புலன்களைத் திருப்பி அகத்தே யடக்கி அமைதிகாண் பெரியார், வானும் புவியும் வாழ்வின மெல்லாம் 10 “அதுமயம்” என்றே அறியும், பொதுநிலைப் பொருளைப் போற்றுதி மனமே; போற்றிப் பூரணம் பொலிவாய் மனமே! 2 - சக்தி வணக்கம் சரண்புகு மனமே, சரண்புகு மனமே, வரந்தரு கின்ற பரம்பொருட் சக்தியைச் செல்வச் சிறப்பு நல்குந் திருவை, வெற்றி யளிக்கும் வீரமா காளியை, அறிவுந் திருவும் அருளும் வாணியை, தவக்கன லளிக்குஞ் சிவக்கன லொளியைச் சரண்புகு மனமே, சரண்புகு மனமே! 20 இஃது, தன்சரண் புகுந்த தருமபத் தினியைக் கருணை மிக்க காளிமா தேவி, அருளுரு வான ஒளவையின் மூலம் காத்துக் கவலை தீர்த்த கதையே; வளையா பதியாம் வயிர வாணிகன் வளைந்து கற்பை வணங்கிய கதையே; மாண்புற வழங்கி மறைந்த கதையே; நல்லறஞ் சொல்லுந் தொல்பெருங் கதையே! உலகுள் ளளவும் நிலவத் தமிழர் அமுதெனப் பருகி அகமகிழ் வெய்த 30 வல்லான் எழுதிய நல்லசித் திரம்போல், காவிய மாகிய ஓவியஞ் செய்வாய்! தெள்ளிய நடையும், ஒள்ளிய பயனும், ஆழ்ந்த கருத்தும் அமைவுறப் பாடி, உள்ளன் புடனே உன்கடன் புரிய, கடமையில் வெற்றி கண்டு களிக்க, வளையாபதியின் மாகதை யிதனை இறைவியை எண்ணி எழுதுகோல் ஊன்றித் தீட்டுவாய் மனமே, நாட்டுவாய் புகழே! திருவருட் சார்புடன் செய்கடன் 40 செய்தால் வெற்றி திகழுமென் மனமே! 3 - காவிரிபூம்பட்டினம் காவிரி வாழ்க, காவிரி வாழ்க, 1காவிரி பசுமையாற் பூவளம் பெருக்கும் காவிரி வாழ்க, காவிரி வாழ்கவே! பொங்கும் பொன்னியின் சங்க முகத்திற் பொலியும் செல்வப் பூம்புகார் வாழ்க! பழம்பதி யான பட்டினம்... புலவர் பாடிய பூம்பட் டினமே! தென்னா டெல்லாந் தன்னா டாக்கி, வட நாட் டாரை வணக்கி, இமயப் 50 பொருப்பின் பிடரிற் புலிக்கொடி பொறித்து, நந்தமிழ் வீரரின் முந்திய பெருமையை நாட்டிப் பகைவரை வீட்டி, நன் னீதிச் செங்கோ லோச்சிய திருமா வளவன் ஆக்கிய வளநகர், அருநிதி குவிந்து கிடக்குங் குபேரபட் டினமே! 4 - பட்டினக் காட்சிகள் கலங்கள் வருவதும், கலங்கள் செல்வதும்; சோனகர், யவனர், சீனர் ஆதியாம் அன்னிய வாணிகர், ஆற்றல் படைத்த நந்தமிழ் வாணிகர் நயக்கும் பண்டம் 60 ஆவலாய் வாங்கிக் காவலன் வாழ்கெனப் பொன்னை அள்ளிப் பொழியும் காட்சியும்; பன்மணி முத்து பவளந் தானியம், உண்ணும் பண்டம், உடுக்கும் உடைகள், நாட்டில் விளைந்தவை, வீட்டிற் செய்தவை, துய்த்து மிஞ்சிய தூய பொருட்குவை மரக்கல மேற்றி வளர்பொருள் வணிகர் துறைதுறை சென்று நிறைநிறை செல்வம் கொண்டு வந்து குவிக்குங் காட்சியும்; நெய்தற் பறையி னீளிசை வீக்கிப் 70 பரதவர் ஆடும் பரவசக் காட்சியும்; வெள்ளியும் பொன்னும் வெறிநடம் புரியும், கடைத்தெரு விடையே கலகல வென்று வணிகர் வருவதும், வணிகர் செல்வதும், வண்டி வண்டியாய் வளம்பெறு பொருள்கள் கொண்டு வருவதும் கொண்டு செல்வதும், பண்டமாற் றுகளின் பல்வகைக் காட்சியும்; நவதா னியங்கள் குவிதரு காட்சியும்; “இறைதுணை ஒன்றே, இரண்டு மூன்” றெனவே, அளந்து கொட்டும் ஆணவக் காட்சியும்; 80 அணியணி யாகத் துணிமணிக் காட்சியும்; போகப் பொருள்களின் பொலிவுறு காட்சியும்; வாசனைச் சரக்குகள் வீசுநன் மணத்தைத் தென்றல் அள்ளித் திரியுங் காட்சியும்; கடலை வகையும் காய்கனி கிழங்கும் பன்னிறங் காட்டும் இன்னியற் காட்சியும்; நவமணி வில்விடு நகையணிக் காட்சியும்; குழல்யாழ் மத்தளங் கொம்புகள் பறைகள் இசைபெறு தமிழரின் இசைநலக் கருவிகள் பளபளப் பான படைக்கல வகைகள், 90 தச்சர் கொல்லர் தட்டார் சேணியர் கன்னார் குயவர் காருகர் சிற்பிகள் கலைச்சிறப் புடனே விலைபெறச் செய்த நயம்பெறு பொருள்களை வியனுறக் காட்டி விளம்பரஞ் செய்து விற்குங் காட்சியும்; திரைகட லோடியும் தேச தேசமாய்க் கொண்டு விற்றும் கோப்பெரு வாணிகர், பாடு பட்டுப் பணத்தைத் சேர்த்து, வீடு செழிக்க வீட்டினுள் பெரிய நாடு செழிக்க நன்மன துடனே 100 அறவினை செய்யும் அன்புக் காட்சியும்; காலும் கலமும் கலையார் தொழில்பல புரிந்து வணிகர் பொற்செழிப் போங்கி வாழும் மாட மாளிகைக் காட்சியும்; உயிரைப் போலப் பயிரைப் போற்றிப் பயிரைப் போலப் பழந்தமிழ் போற்றிப் பழந்தமிழ் போலப் பழந்தமி ழீன்ற பரமனை நாளும் பரவிப் பாடித் தாளாண்மை மிக்க வேளாளர் தெருவில் பத்தியும் பணியும் ஒத்தநற் காட்சியும்; 110 அழகுக் கலைகளின் எழில்பெறு காட்சியும்; குழலும் யாழுங் குரலும் முழவும் கூடிக் குழையக் குயிலின மென்னப் பாடகர் பாடப் பரதநாட் டியந்தேர் நாடக மகளிர் நறுங்கலை யின்பம் அள்ளிப் பரப்பும் அரங்கின் காட்சியும்; கலைகளை மாணவர் கற்குங் காட்சியும்; அரியநன் னூல்களை ஆக்கிய புலவர் படித்து விளக்கும் பண்டிதக் காட்சியும்; நடித்து விளக்கு நவரசக் காட்சியும்; 120 நாட்டை உயர்த்து நாடகக் காட்சியும்; இனிவரும் வீரர் இளமையி லினிதே கல்வியுந் தொழிலும் கசடறக் கற்றுத் தேகப் பயிற்சியுஞ் செய்யுங் காட்சியும்; அந்தணர் தெருவின் அமைதியாங் காட்சியும்; வளர்தமிழ்க் கொடிகள் வானை யளாவிச் செருக்குடன் ஆடுந் தெருக்களின் காட்சியும்; முரசு கொட்டி முதுபுகழ் வீரர், அரசவாழ்த் துடனே அதிர்நடை பயின்று, பூமியை வெல்லப் புடைபெயர் காட்சியும்; 130 தேர்பரி கரியினம் ஊர்திருக் காட்சியும்; 1இடம்வல மென்றே எடுத்தடி பெயர்த்துப் படையணி வகுத்துப் பாய்ந்துபாய்ந் திளைஞர், போலிப் போர்கள் புரியுங் காட்சியும்; ஆண்மை ஆண்மை ஆணமையென் றோதும் நிமிர்நடைச் சீயர் நீண்டுயர் தோளர் அகன்ற மார்பினர் அறங்காப் பாளர் அரச வீதியை அணிசெய் காட்சியும் முரசுடன் மேக முழக்கமு முயங்கும் கோபுர மாளிகை நூபுர மார்க்க 140 அணிமணிப் பாவையர் ஆடுங் காட்சியும்; சோலையில் உலவியுந் தோணியிற் சென்றும் காதலர் கூடிக் களிக்குங் காட்சியும்; சைவ வைணவ சமண பௌத்தக் கோயிலில் அடியார் குழுமிய காட்சியும்; வீடு தோறும் விருந்தின் காட்சியும்; தோரணங் கட்டிய வாரண வீதியில் தேர்வல முடனே ஊர்வலக் காட்சியும்; அரசவை நிகழும் அரண்மனைக் காட்சியும் தாங்கி, நல்லிசை ஓங்கிய பூம்புகார் 150 சிறப்பென் சொல்வல்! சேர மாகவி இளங்கோ பாடிய வளம்பெறு நகரே! 5. வயிர வாணிகன் வீரர் வாளும், வேளாண் கலப்பையும், வணிகர் தராசும், வளஞ்செய் புகாரை, வெண்குடை தாங்கிப் பண்புடன் ஆண்ட சோழ னுக்குச் சுடர்முடி சூட்டும், மாண்பு பெற்ற மன்னர் பின்னோர், நாட்டை வளர்த்த நாட்டுக் கோட்டையார், நகர்வள மாக்கிய நகரத் தார்கள், 1செட்டுத் தொழிலார் செட்டி மார்கள், 160 திரைகட லோடித் திரவியஞ் சேர்த்து நல்லறஞ் செய்யுஞ் செல்வக் குபேரர், புகாரை அவரே பொன்னாக் கினரே! அவருள், பட்டினப் பாக்கம் பரவிய புகழோன், செட்டிமார் நாட்டின் சிரோமணி யாவான், வளையா பதியெனும் வயிரவா ணிகனே, அன்னவன், கொற்கை முத்தும், கொச்சி மிளகும், செந்தமிழ்ப் பொதியச் சந்தனக் கட்டையும், மதுரைச் சேலையும், மலைவர் ஏலமும், சேலம் பட்டும், கூல வகைகளும், 170 தொழிலா ளரிடந் தொகைக்கு வாங்கிக் கட்டுக் கட்டாய்க் கப்பலில் ஏற்றி, சிங்களம் கடாரம் சிங்கவூர் மலயம் சாவகத் தீவெலா மேவித் துறைதுறை, குலமுறைப் படிக்குக் கொண்டுபோய் விற்றுப் பைபை யாகப் பணக்குவை சேர்த்தான்; சென்றநா டெல்லாம் சிவமுந் தமிழும் செழிக்கச் செழிக்கச் செல்வம் பொழிந்தான், பெருந்தன வணிகன், வருந்திய பேர்க்குத் தருந்தன வணிகன், தருமக் கிழவன், 180 கடவுட் கோயிலுங் கலையின் கோயிலும் எண்ணறக் கட்டிய புண்ணியன் அவனே! 2“ஒன்பது கோடிப் பொன்படை நாரணன்” என்றும் உலகில் இசைபெற் றோனே! இத்தகை வணிகனுக் கிருந்த ஓர்குறை, குடிவேறு செய்யும் பிடிவாத மொன்றே; கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு தனக்குப் பட்டதைச் சாதித் தெளிதில் வளைந்து தராத மதியுடை யானாய், வளையா பதியென வழங்கப் 190 பெற்றான், இந்தப் பெரும்புக ழோனே! 6 - அந்தரி வளமிகு வயிர வாணிக னுக்கு வாழ்க்கைத் துணைவியர் வாய்ப்புடை இருவர்: ஒருத்தி அந்தரி; ஒருத்தி பத்தினி, இருவர் குணமும் எதிரெதி ராமே! அந்தரி என்பவன் சுந்தரி; தந்திரி; செல்வச் செருக்கி; செட்டிச் சீமான் ஈன்ற புதல்வி; தான்றன தென்னும் இறுமாப் புடையாள்; எதிரே பேசும் நாத்தடிப் புடையாள்; ஆத்திரக் கள்ளி; 200 வளையா பதிபோல் வளையா மனையே! அன்பனை மனப்படி ஆட்டி வைக்கும் சாகசக் காரி; சக்களத் தியுடன் முன்னே நகைத்து முகமன் பேசிப் பின்னே ஏசிப் பிரிவினை செய்யும் வஞ்சகி; அவளிடம் வளையாச் செட்டியும், அச்சங் கலந்தவுள் ளன்புகொண் டானே! 7 - பத்தினி அந்தரி மிக்க சுந்தரி யேனும் பிள்ளைப் பேறு பெறாமை யாலே, பொறாத்துய ரடைந்து பூம்புகார் வாணிகன், 210 மற்றொரு மனைவியை மணக்க விரும்பினான், பெருஞ்சாத் துடனே பெயர்ந்தொரு நாளில், பாண்டி மதுரைப் பதிக்கு வந்து, நல்வே ளாள நண்பன் வீட்டில் விருந்தாய் வயிரன் இருந்தான் மாதோ! அந்த நண்பனின் அழகிய செல்வியே பத்தினி என்னும் பதுமினிப் பெண்ணாம், அவளைக் கண்டதும் அவளுங் கண்டதும், மலர்ந்த கடைக்கண் கலந்து பேசிக் கருத்துங் கருத்தும் பொருத்த முறவே, 220 காத லாகிய கனலெழுந் ததுவே! தமிழர், சைவர், சமரச நண்பர் சம்மதப் படியே தம்மன மொன்றிய காதலர் இருவருங் கடிமணம் புரிந்து, பூம்புகார் மேவும் பொன்மா ளிகையில் மங்கல மான மனையறங் காத்தார், மாசறு நல்லார் மதுரைவே ளாளர் மனையிற் பூத்த மதிமிகு நல்லாள், உள்ளத் தழகே உடலிற் பொலியும், கற்பிற் சிறந்த பொற்புடைத் திருவே, 230 தலைவனைத் தன்னுயிர் நிலையென மதித்து, உடலுயிர் மனந்திரு வுள்ளம் வாழ்வெலாம், பக்தி யுடனே பதிக்கே யீந்தாள்; ஆடல் பாடல் அழகெலாம் அவனை மகிழ்வித் திடவே மாசறப் பயின்றாள், “கண்ணே மணியே கட்டிக் கரும்பே, அழகே அணியே ஆசை அமுதே, பாண்டிநா டீன்ற பச்சிளங் கிளியே, செந்தமிழ் முத்தே, சிந்தா மணியே, என்புது வாழ்வின் இன்பமே!” யென்று 240 கொஞ்சிக் குலாவுங் கொழுநனைப் பத்தினி, “அன்பே, அறவே, ஆருயிர்த் துடிப்பே, என்னுயிர் வாழ்வே!” என்று நாளுமே பரிந்து போற்றிப் பண்புடன் பணிந்து, தாளாண் மைமிகு தலைவ னிடமே தன்னை வைத்துத் தலைவிக் குரிய கடன்முறை யெல்லாங் காத்துவந் தாளே! 8 - கடன்முறை வள்ளுவர் குறளைவழுவறக் கற்றாள்; கோழி கூவுங் குரல்கேட் டெழுந்து, முகத்தைக் கழுவி முதல்வ னுடனே, 250 ஏழிசை யோங்கும் யாழிசை கூட்டி, இறைவனைப் பாடி, இல்லற வாழ்வில் அருள்மணம் பரப்பி, ஆசை கொண்டு சேடிய ருடனே வீடு முழுதும், கண்ணாடி போலக் கழுவி மெழுகிச் சுத்தம் செய்து, துடைப்பன துடைத்து, வைக்கு மிடத்தில் வைப்பன வைத்தே, கோல மிட்டுக் கொழுமலர் நாட்டித் தோய்த்துக் குளித்துத் துணைவ னுக்கு வெந்நீர் வைத்து, விரும்பி யழைப்பாள். 260 நாயகன் ஆங்கே நன்னீர் ஆடி, புத்துடை யணிந்து பூசனை புரிவான். வணக்க வொடுக்கமாய் வழிபாட் டினிலே பத்தினித் தெய்வம் பயின்று மகிழ்வாள். மலர்களைத் தூவி மணந்தரு கனிகளைத் தெய்வநி வேதனஞ் செய்தொளி காட்டிப் பதிப்பா டல்களைப் பாடியாழுடனே தோத்திரஞ் செய்தபின், சுதியுடன் இசைபோல் இணைந்து வாழும் இருவரும் சேர்ந்து, பாலுங் கனியுங் காலையில் உண்பார். 270 அலுவலாய்க கணவன் அகன்றபின் பத்தினி, அமுதக் கையாள், அட்டிலிற் புகுந்தே அன்புச் சுவையுடன் அறுசுவை யாக்கிக் கணவன் வரவே கனிநகை பூத்து, “வாரு” மென்று வரவு கூறி, கைகால் முகத்தைக் கழுவச் செய்து, அமுதை நிவேதனம் ஆக்கிய வுடனே இருக்கையி லிருத்தி, யிலையைப் பரப்பி, நன்னீர் வைத்து நாதனை வணங்கி, அன்புடன் அறுசுவை அமுதம் வைத்துக் 280 குறிப்பை யறிந்து கொடுப்பன கொடுத்து, “மென்றுநன் றுண்பீர்” என்றிதஞ் சொல்லிச் சுறுசுறுப் பாகச் சுவையா ரமுதம் ஊட்டுவாள்; கணவன் உண்டபின் அவளும், பசியள வறிந்து புசித்தெழுந் துடனே, அட்டிலை மெழுகிச் சட்டிகள் கழுவி, முடித்துக் கணவன் படிப்பதைக் கேட்பாள். சற்றிளைப் பாறிச் சடுதியிற் கணவன் உரிய தொழிலில் ஊக்கங் கொள்வான். பாங்குள உண்மைப் பத்தினித் தெய்வம் 290 வீட்டிற் கான வேலைகள் செய்வாள்: துணைவன் அணிமணி சுத்தமாய் வைப்பாள், பாசி கோப்பாள், பவளங் கோப்பாள், இல்லணி செய்வாள், ஏவு முறையில் ஏவ லாளரை ஏவிக் கவனமாய் இடிப்பன இடித்து, வடிப்பன வடித்து, திரிப்பன திரித்துச் சேர்ப்பன சேர்த்துக் குறைகளை யறிந்து நிறைவுறச் செய்வாள். 1விண்மணி மறைந்ததுங் கண்மணிப் பாவை, திருவிளக் கேற்றி, நறுமலர் சூட்டி, 300 “ஒளிமயக் கடவுளே, உன்னருட் சுடரால் எங்கள் வீடு மங்கலம் பொலி” கென மகிழ்வுற வணங்கி மகர வீணையைத் தடவும் போது, தன்னவன், மாலை அனுட்டா னங்களை அமைவுற முடித்தே வந்து தெய்வச் சிந்தனை செய்வான். அகங்குழைந் திருவரும் ஆண்டவன் புகழைப் பாடிப் பாடிப் பரவச மாகித் திபா ராதனை செய்தலும், பாலுடன் சுவைதரும் உணவைச் சுருக்கமாய் முடித்து, 310 நவையறு புலவர் நவின்றநன் னூல்களை அறிந்து படித்தபின், அசுவிவ காரம் பேசிக் குடும்பப் பிழைகளைத் திருத்திப் போக்குவ போக்கி ஊக்குவ ஊக்கி, வீட்டுக் கடமை நாட்டிய பின்னர், அமைதியாய் மீண்டும் அருளை வணங்கி உள்ளங் களிக்கப் பள்ளிகொள் வாரே! இந்த முறையே இல்லற வாழ்வின் இன்ப மெல்லாம் அன்பா லெய்தி, நிறைமுறை யான நேயம் பேணி வாழ்ந்தார் பத்தினி வயிரவா ணிகரே. “ஒத்துக் கூட முத்துக் குழந்தை” என்னும் பழமொழி இனிதுற வாணிகன் மனத்திற் கொண்ட மகவுக் கவலை தீரப் பத்தினி திங்கள் இரண்டாய்க் கருத்தரித் துடம்புங் கலைமதி போன்றாள். மகிழ்ந்த செட்டியின் மனத்தைக் கலைக்கக் கொல்லும் பொறாமை கொளுத்திய தீயால், அந்தரி செய்த தொந்தரை யென்னே! 9 - உலகியல்பு உலக மென்பது பலகுண நாடகம்: 330 ஓவ்வோ ருயிரும் ஒவ்வோர் பாத்திரம் ஆண் பெண் ணியல்புகள் ஆயிரம் வடிவாய், வாழ்வின் அரங்கில் வரிசை வரிசையாய் நவரச முணர்த்தி நடித்துச் செல்லுமே! ஆறும் காற்றும் அலைவது போன்றே விகார மனமும் வேறுபட் டலைந்து, பலவினை யான பயிர்களை வளர்த்து, நலந்தீ தென்னும் பலந்தா னுண்ணுமே! ஆணவ நிலத்தில் ஆசைவே ரூன்றி, எனதி யானென்னும் இருங்கிளை விரிந்து, 340 காமக் குரோததக் கவடுகள் விட்டுப் பொறாமை முட்கள் பொம்மெனப் பெருகி, அலைமன நினைவாம் இலைகள் பொதுளி, மலர்ந்து மலர்ந்து வாடி யுதிரும் கனவுகள் பூத்துக் கருமமாய் விரிந்துபின் கசப்பும் இனிப்புமாம் கனிகள் மல்கி, காலக் காற்றில் ஓலமிட் டாடிப் பட்டுண் டிறப்பதும், வெட்டுண் டிறப்பதும், வினைவிதை யாலே மீண்டுந் தளிர்ப்பதும், வாழ்க்கை மரத்தின் வழக்க மாமே! 350 எத்தகை மாந்தர் நத்திய வாழ்விலும், இருவினைப் போர்கள் இயல்பாய் வருமே! உத்தமி யான பத்தினி வாழ்விலும், சிலகால் இன்பஞ் சிறப்ப நிகழ்ந்ததும் பலகால் துன்பம் படர்ந்ததைக் கேளீர்! 10 - மூத்தாள் மூட்டிய தீ! வயிரன் மூத்தாள் வைரங் கொண்ட படுசக் களத்தி, பத்தினி மேலே குற்றங் காண்பதே குலத்தொழி லானாள்; நெருப்பு நிறத்தாள், நெருப்புக் கண்ணாள், அன்பு நடிப்பாள், ஆசையாய்ப் பேசுவாள், 360 முதலைக் கண்ணீர் முன்னே வடிப்பாள், பின்னே ஆளைப் பேய்போல் அழிக்கச் சூழ்ச்சி செய்வாள், சூதுவா தெல்லாம் உருட்டி வார்த்த உருவே யானாள். கணவனும் புதிய கண்மணிப் பாவையும் ஒன்றி நின்று நன்றே வாழும் பெற்றியைக் கண்டு பெருமூச் செறீந்தவள், குட்டிக் கலகம் கோடி செய்தவள்; எதற்கெடுத் தாலும் இடித்துப் பேசிக் குலகோத் திரங்களின் கொள்கை பற்றி, 370 நலத்தைத் தீதென நாப்பறை யடிப்பவள்; தனக்கு மகவிலா மனக்குறை யுள்ளாள், சக்களத் திக்கரு தரித்ததை நாளும் எண்ணி யெண்ணிப் புண்ணானாளே, அவளுக் கண்ணன், அழிநடைச் செல்வன், சாந்தன் என்னுந் தன்னலப் புலியே, அவனைக் கலந்து கொண்டு காரியந் தொடங்கிப் பதியின் மதியைப் பறித்தவ மாக்கிப் போலி வைத்தியர், போலிச் சோதிடர், காசாசை கொண்டா மோசக் காரர், 380 சாத்தன் இனத்தார் சகலரும் கூடி, “அந்தரிக் கின்னும் அதிட்ட முள்ளது; பிள்ளைப் பேறு பெறுவதும் உறுதி; அடுத்த தையில் ஆண்கு ழந்தை முத்துப் போலே முன்றிலில் ஆடும்; அந்தக் குழந்தை ஆளுமே உலகை; மாண்புறு வாணிகர் மரபினில் வந்த பொற்கொடி அந்தரி புதல்வ னுக்கே, வழிவழி வந்த கொழுவிய செல்வம் உரிய தாகும்; பெரிய குடும்பம், 390 இதுவரை இனத்தார் ஏகோ பித்து வாழ்ந்த குடும்பம், மாசாத் துவரின் செல்வக் குடும்பம், செட்டிமார் குடும்பம்; இன்னொரு சாதி ஈன்ற மகளை வீட்டிற் குள்ளே விடுவதே பிழையாம்; பிறசா தியிலே பிறந்த பெண்ணை நீ கூடி வாழும் கொள்கையை ஒப்போம்; உனக்கே என்றும் உரிய மனைவி அந்தரி ஒருத்தியே; அழைத்து வந்த காமக் கிழத்தியைக் கட்டுடன் விலக்கி, 400 அவள்பெறு மகவை அவளுடன் ஒதுக்கி, மனங்கொண் டினத்துடன் மகிழ்வுற வாழ்வாய்” என்றுரை பேசி “இரண்டு நாளில், காரி முடி “யெனக் கட்டுடன் சொன்னார், பாச நெஞ்சம் பதறிச் சற்றே, வாணிகன் அந்தரி வயப்பட் டானே! தனியே கணவனைத் தன்வசப் படுத்தி முல்லை போல முறுவலைக் காட்டி, கட்டி முத்தம் கணக்கறத் தந்து, அகநட் பில்லா முகநட் பாடி, 410 “உயிரே!” என்றுதன் உடலோ டணைத்து, கண்மதி யிழந்த காம மயக்கில், பெண்மதி கொண்டவன் பேதுறச் செய்தாள்; “ஆசைக் கணவரே, அன்பு மணாளரே, அமிச்க் கரமும், ஆரூ டங்களும், ஐயர் வாக்கும், அகத்திய மாகப் ‘பொன்போல் எனக்குப் புதல்வன் பிறப்பான்’ என்று சொன்னபின், இனிக்குறை யென்னே? மனமகிழ்ந் தென்றும் இனமுடன் ஒன்றி இருப்பதே நமக்கு விருப்புறு நலமாம்... 420 அண்ணல் சாத்தன் அன்பு மிக்கவன், இதமாய்ப் பேசி இனத்தார் சினத்தை மாற்றி யிருக்கிறான், வாய்ப்புள போதே உரியதைச் செய்தல் உமக்குங் கடனே. பிரிய மணாளா, பேசு” மென்றாளே: “கண்ணே, உன்சொல் கட்டிமாம் பழமே! உறவின் முறையார் உரைப்பதுந் தகவே; ஆயினும், பல்லோர் முன்னே நல்லோர் வாழ்த்த மணந்த பத்தினி மங்கல மனைவி, எனக்கே உயிர்க்கும் இனிய உத்தமி; 430 அவளை எப்படி... ஆ! அதை நினைக்கினும் துடிக்குமென் உள்ளம் வடிக்குமே கண்ணீர்!” என்றலும் செட்டி, “நன்று சொன்னீர்; அவளார்? நாமார்? அன்னியச் சிறுக்கி, மாயக் காரி, மருந்துக் காரி, முகமிக மினுக்கி, மோகினி, உம்மை வலைக்கண் வீசி வாகாய்ப் பிடித்து, நல்லவள் போல நாடகம் நடித்து, உள்ளதை ஒளித்தே கள்ளஞ் செய்து, மரபுள செல்வம் வாரிச் செல்ல 440 வந்திருக் கின்றாள்--அந்தரிக் கெதிராய், நேர்மை யாகச் சீர்களைச் செய்து, மாப்பிள் ளைமேல் வாஞ்சை கொண்டு, பிரிய மாகப் பெண்ணை யனுப்பிய செல்வர் எந்தை சீவித் திருந்தால் இப்படி நீரும் இன்னொரு பெண்ணை வீட்டில் வைக்க விடவே மாட்டார், இத்தனை நாளும், உத்தமி நானே பொறுத்தேன் இந்தப் பொல்லாத் தீங்கை, கணவரே, எனதுகண்ணுக் கொளியே, 450 என்னுயிர்த் துடிப்பே, என்வாழ் விற்கு வாய்ந்தநல் லரசே, வஞ்சமில் லாமல் சொல்வன சொன்னேன்; சொல்லைக் கேட்டால், இல்லம் வாழும்; இனத்தார் வாழ்த்துவர், தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்போம்; சாதிக் கட்டை, சமூக விருப்பை மீறினால் விதியே மாறிடும்; பிறகு நாளுங் கிழமை பாழுங் கிழமையாம். இங்கே யாரும் எட்டிப் பாரார்; அங்கே நம்மை அழைக்கவு மாட்டார்; 460 கொண்ட கொடுத்த குடும்பத் திடையே சண்டை வலுக்கும்; சத்தியஞ் சொன்னேன்.” அந்தரி இவ்வகை தந்திரக் கண்ணீர் சொரிந்து சொன்ன சொற்களை நம்பியே, “சரியென் கண்ணே புரிசெய லென்?” என, “சாத்தன், இனத்தார் சம்மதஞ் சொல்வான்; அவன்சொல் லமுதம், அதன்படி செய்வீர்” என்றாள் கள்ளி; எழுந்தான் கணவன்; மறந்தான் மதுரையில் மணந்த மனைவியை; சாத்தனைக் கண்டான்; சண்டாளப் பாவி 470 நஞ்ச மனத்தில் வஞ்சப் புன்னகை, காட்டி “மாப் பிள்ளை வீட்டினில் ஒருத்தியை, மதுரைச் சிறுக்கியை மனமுறக் கொணர்ந்து, கொஞ்சிக் குலாவிக் குழந்தையும் பெற்று, முத்துப் போன்ற மூத்த மனைவியை, மூலையி லொதுக்கிய வேலை கொடிதே! நாயைக் கொஞ்சினால் வாயை நக்கும்; இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும்; கண்ணே யென்றால் கைப்பொருள் பறிக்கும்; மாயக் கள்ளியை வந்த வழியே 480 செல்ல விடுத்தால், அல்ல லின்றி நாட்டா ருடனே கூட்டுற வாக வாழலாம்; வாழும் வகையைச் சொன்னேன்; பிறகுன் விருப்பம்; உறவின் முறையார் சம்மதம் இது” வெனச் சாற்றி வெருட்டினான்; “செய்கிறேன்” என்றான் செட்டிய மாங்கே! 11 - பத்தினி துயரம் ஆசை யுடனே அன்பு மணாளர் வருவா ரென்று வகைவகை யாகப் பண்டம் செய்து, பத்தினித் தெய்வம் இன்பக் கனவுடன் எதிர்பார்த் திருக்கத் 490 துன்பமே வடிவாய்த் தோன்றினான் அவனே! “வாரும், வாருமென் வாழ்வின் உயிரே; மனையை இன்று மலரணி செய்தேன்; பாரும், இனிய பண்டம் செய்தேன்; சுவைத்துப் பாரும், சுருதி கூட்டி, யாழிசை மீட்டி ஏழிசை யின்பம் பருகுவோம் வாரும் பதியே!” யென்ன, வளையா பதியாம் வயிர வாணிகன், “எல்லாம் சரிசரி, எழுந்திரு வுடனே; இந்தவீ டுனது சொந்தவீ டில்லை; 500 உன்னால் எனக்கிவ் வூர்ப்பகை வந்தது; மதுரையில் மயங்கிய மயக்கம் விட்டது; உண்மை யறிந்தேன்; உறவுடன் வாழும் நன்மை யறிந்தேன்; நாட்டார் தீர்ப்பைச் செய்யத் துணிந்தேன், உய்வழி யதுவே” என்று கூச்ச லிட்டான் கணவன். அமைதி யாகவே, அருங்குணச் செல்வி, “நாதா, யார் செய் சூதிது? விளங்கச் சொல்வீர்” என்றலும் கொல்விழி காட்டி, “வெளியே செல்செல்! வீட்டி லிராதே, 510 விளங்கச் சொன்னேன், வேறுபேச் சிலை” யெனக் கையை ஓங்கிக் கட்டளை யிடவே, “என்னுயிர்க் கணவரே, எனக்கொது புகலே, என்பிழை செய்தேன்? ஏழைமேற் சினமேன்? தாயிலாப் பெண்யான், சரண்புகுந் தும்மை அன்புடன் பணிசெயும் அடியாள்; உமக்கே உள்ளங் கொடுத்த உண்மைப் பேதை; ‘தள்ளி யிருந்தால் தங்கமே வாவா, தழுவிக் கொண்டபின் சனியனே போபோ!’ என்ற கதையாய் இருக்குதே பேச்சு! 520 மூத்தாள் சூழ்ச்சி மூட்டிய தீயோ? சாத்தன் செய்த சதியோ? சொல்வீர்!” என்றலும் பாவி இருகண் சிவந்து, “எங்குலத் தவரை இழிவாய்ப் பேசினாய், சாதி கெட்டுச் சாதி விரும்பியென் குடியைக் கெடுத்த நடியே, போபோ! எனது சாதியே எனக்குப் பெரிது! வேறு சாதியென் வீட்டில் ஏலேன்; இனப்பகை தாங்கேன்” என்றான் கொழுநன். சினப்பகை யில்லாச் சீரிய பத்தினி, 530 “சாதிப் பித்தம் சமயப் பித்தம் இனத்தின் பித்தம் மனத்தின் பித்தமே! நாதா கேளீர், நாமெலாந் தமிழர்; தமிழ்த்தாய் பெற்ற அமிழ்தப் புதல்வர்; ஒருதாய் மக்கள், ஒருகுல மாவார். சாதி பேசும் சூதெலாம் இடையே வந்து புகுந்த வழக்கே யாகும். சங்க காலத் தமிழ ரிடையே, வீரமுங் கலையும், வெற்றிப் பொலிவும் நிரம்பிய ஒற்றுமை நிலவிய தாலே, 540 ஒருகுல உணர்ச்சி ஓங்கிய தாலே, தமிழ்மனப் பான்மை தழைத்த தாலே, அவரவர் தொழிலை அவரவர் செய்து, செயலின் பயனைத் தேசம் வாழவே ஈந்து துய்த்துச சாந்த நேயராய் வாழ்ந்தார்; அந்த வாழ்வைச் சிதைத்தது சாதி யென்னும் சங்கடச் சனியே! சாதி சமயஞ் சாத்திர கோத்திரம், நிறமின மாகிய பிறவெலாங் கடந்தே, உடலுயிர் மனமுங் கடந்தே, உள்ளே 550 உள்ளமா யுள்ள வள்ளலாங் கடவுள் அவனா லயமே, சிவனா லயமே, எல்லா வுயிர்களும் என்பதை யறிந்தால், சாதி யொழிந்து சமரசம் வருமே; சமசித் தத்துடன் சன்மார்க் கத்தில், தன்போற் பிறரைத் தான்மதித் தொழுகி, உரையுஞ் செயலும் உள்ளமும் ஒன்றி, உலகத் திற்கு நலமே நாடி, அன்பும், அறிவும், அறமுந் தியாகமும், போற்றி வாழ்வதே புனித வாழ்க்கையாம். 560 குறுகிய பேதங் கொண்டலை மனத்தால், உலகைப் பார்த்தாற் கலகமே யாகும். சகவாழ் வெல்லாம் சக்கர வட்டம்; செல்வ மெல்லாம் செல்வோம் என்னும்; தரித்திரந் தானுந் ‘தரித்திரேம்’ என்னும் ஒளியும் இருளும் உருவும் நிழலும், இனிப்பும் கசப்பும் இன்பமுந் துன்பமும், வெப்பமும் குளிரும் வேளிலும் மாரியும் மாறி மாறி வாழ்வில் வருமே. மனிதர் குணத்திலும் மாறுதல் ஆயிரம்: 570 நெருந லிருந்த நிறைபெறுங் காதல் ‘கண்ணே முத்தே, கண்ணின் மணியே, கட்டிக் கரும்பே கனகக் குவையே’ என்று கொஞ்சி யின்புற் றிருந்த பிரியா நேயம், பிரிவினை செய்யும் வஞ்சர் சூழ்ச்சியால் வாக்கை யிழந்து. மதியை யிழந்து, மனம்பறி கொடுத்து, வெறுப்பே யின்று விளைப்பதைப் பாரீர்; இதுவே உலகின் இயல்பெனக் காணீர்!” வயிர வாணிகன் “உலகையும் கண்டேன்! உன்னையும் கண்டேன்! 580 போதும் உன்றன் புத்தி மதிகள்; கட்டு கடையை! காதலித் துன்னைக் கொண்டு வந்து குடித்தனம் செய்த பாவத் திற்குப் பத்து வராகன் மாதந் தந்தொரு மனையுந் தருவேன்; மனமிலா விட்டால் மதுரைக் கேசெல்! உனக்கிவ் வீட்டில் உரிமை யில்லை.” பத்தினி “ கொண்ட உடலே கூலிக் குடிலே; இந்த உலகில் சொந்தம் எதுவே? இன்று செல்வன் ஏழை யாவதும், 590 செல்வச் செருக்கிற் செழித்தவன் இளைப்பதும், இளைத்தவன் செழிப்பதும் இயல்பிங் காமே! வீடும் செல்வமும் ஓடும் பொருள்கள், எண்ணிப் பார்த்தால் எல்லாம் மண்ணே; உடலும் மண்ணே; உடமையும் மண்ணே; மண்ணுக் காகப் பெண்மையை உமக்குத் தந்தே னல்லேன்; சத்தியஞ் செய்து மனத்தைக் கொடுத்த மாண்பைக் கண்டே, இனத்தைக் கடந்தும் இல்லிற் புகுந்தேன். இருவரும் ஒருவராய் இல்லறஞ் செய்தோம். 600 இல்லறக் கனியும் எய்திடும் விரைவில்! இந்த நிலையில் தந்திரப் பொறாமை சாதிச் செருக்கை ஊதிவிட் டுடனே உம்மனங் கெடுத்த வெம்மையென் சொல்வேன்! என்வினைக் கேடே இப்படி யானது! இருப்பினும் உம்மை இன்னொரு வார்த்தை கேட்ட பிறகு வீட்டைத் துறப்பேன். ஆண்மகன் ஒருவன் அக்கினி சாட்சியாய் மணந்து வந்துவாழ்ந்துபத் தினியை, கருவுந் தரித்த கற்பின் பாவையை, 610 அநாதையாய்த் துறத்தல் அறமா? சொல்லீர்; அதுவும், சாதி அகம்பா வத்தால் தமிழ்மகள் ஒருத்தியைத் தனது கணவனே காரண மின்றிக் கைவிடுங் கொடுமை, என்ன நீதி? எனது சாதியில் என்பிழை கண்டீர்? யான்வே ளாளர் மரபில் வந்த மங்கலச் செல்வி. எண்ணரு முனிவரும், இன்னிசைத் தமிழைக் கண்ணெனக் காத்த புண்ணியப் புலவரும், அறநெறி வேந்தரும், திறமிகு வீரரும் 620 தோன்றிய மரபில், ஆன்ற மதுரையில் முத்தமி ழறிந்த முதலியார் வீட்டில் பிறந்தேன்; எனக்கும் பிழைசொல் பவர்யார்? அவர்களை இங்கே அழையும் பார்ப்போம்...!” வயிர வாணிகன் “உன்சொற் கேளேன், உடனே செல்செல்! மீண்டும் பேசினால், ஆண்டுதோ றுந்தரும் ஆடையும் பணமும் அகப்படா தறிவாய்!” பத்தினி “கணவரே, இந்தக் குணக்கே டேனோ? வாய்மை சொன்னேன், வளைந்து கொடுப்பீர்!” வாணிகன் “வளையேன் உனக்கு; வாய்மை தனக்கும் வளையேன்!” பத்தினி 630 “உம்பெயர் வளையாபதி யெனச் சொல்லக் கேட்டேன்!” வாணிகன் “செல்லடீ, செல் செல்! இனிப்பேச் சில்லை; என்றன் சேவகர் வருவார், வழிப்பணம் தருவார், செல் செல்!” கொடுமையோ கொடுமை! குலத்திரு கண்ணீர் பெருகச் சிந்தி, ஒருதுணை யின்றி, கட்டிய வுடையுடன் கைவளை யுடைத்தே உலக வெறுப்பும், உள்ளே துறவும், எவ்வுயி ருக்கும் இறைவ னான ஒருவன் அன்பும் உடன்கொண் டன்றே 640 மனையை நீத்து வழிநடந் தனளே! வாணிகன் சேவகர் வழங்கிய பணத்தைக் கட்டுடன் மறுத்துச் சட்டெனச் சென்றாள். கருணைத் தெய்வம் காக்கு மென்றே அருளை நம்பி இருளிலே மறைந்தாள். காலமும் உலகுங் கலங்கி நின்றன! மோன மாக வானகந் திகைத்துத் தாரகை மினுக்கித் 1தாரைகாட் டியதே! அந்தரி தந்திரம் பத்தினிச் தெய்வம் பட்டெனச் சென்றதும், “அன்பே, அரசே, இன்பே!” யென்றுடன் 650 அந்தரி கணவனை அள்ளி யணைந்தாள். கொஞ்சிக் குலாவிக் குளிர்மொழி பேசி, “இனிநாம் துய்ப்போம் இந்திர போகம்; கணக்கர் சொன்னது கணக்காய் நடக்கும். இரண்டு மாதம் இருந்து பின்னே தொழிலுக் காகத் தொலைசெல் லுங்கள்! திரும்பி வந்ததும் சேயைக் காண்பீர்; அவன்பெயர் ‘அழகன்’ ஆகுக!” வென்றாள். “பிள்ளை பிறந்ததும் பெயர்வைத் திடுவோம்; அப்பன் பெயரால் ‘சுப்பன் செட்டி’ 660 எனப்பெயர் வைப்பேன்” என்றதும் அந்தரி, சற்றே பிணங்கித் தன்மனம் பெற்றாள். இருவரும் இப்படி யின்புறு நாளில் மருத்துவர், “அந்தரி கருத்தரித் தா” ளென அகத்தியர் தேரையர் மிகத்தரு விருத்தம் பொருத்தமாய்ச் சொல்லிப் பொன்மலர் பெற்றார். செட்டி மகிழ்ந்து, சேடியர் மருத்துவர் உறவினர் தமக்குநல் லுத்தர விட்டு, மங்கலங் கூறி, மனைவியைப் பிரிந்து, கப்பலி லேறிக் கடாரம் சென்றான். 670 அதுமுதற் சாத்தன் முதுபெரு மனையில், இட்டப் படியே கொட்ட மடித்தான். 2வயாவெனச் சொல்லி வஞ்சக் கரவுடன் அந்தரி யுள்ளே அடங்கி யிருந்தாள். மருத்துவன் வந்தான், மருத்துவன் சென்றான், கணக்கன் வந்தான், கணக்கன் சென்றான், காசைக் கொத்தும் ஆசைக் கழுகுகள், முகத்துதி பேசி முடிச்சை யவிழ்ப்போர், இருந்தால் மந்தை, இன்றேல் நிந்தை; கண்ட போது கைகுவித் தெடுப்பர்; 680 காணாத போது கல்லை யெடுப்பர்; சாது போலே வீதியிற் காண்பார். உள்ளே விட்டாற் கொள்ளை யடிப்பார்; நாக்கி லொன்று நடையி லொன்று கண்ணி லொன்று கருத்தி லொன்று கொண்டவர் சாத்தன் கும்பலானாரே! அந்தரிக் கிவரே மந்திர ரானார். பத்து மாதம் பதுங்கி யிருந்து, இடுப்பில் எந்தக் கடுப்புமில் லாமல், பெறாத பிள்ளை பெற்றாள் அவளே! 690 மலடி வயிற்றில் வந்தது மகவென, உறவினர் வியந்தார்! உண்மை யாதெனின், (மனத்தி னுள்ளே மறைவாய்க் கொள்க; வாயைத் திறந்தால் வருவது வசவே.) ‘ஆ, குவா’ என்றே அந்தரி மடியில் தவழுங் குழந்தை சாத்தன் குழந்தையே; வேசை பெற்று விற்ற குழந்தையே! அழகன் அழகன் என்னும் அந்தச் சேயைத் தடவித் தடவித் தாங்கித் தாங்கிச் செல்வச் செருக்குடன் சீர்பல செய்து, 700 சாத்தன் வழியே தாய்வளர்த் தாளே. வளர்த்த கொழுங்கடா மார்பிலே பாயும் கதைபோல், அந்தக் கடாயனும் பெருத்துத் தாயை எதிர்ப்பதுந் தந்தையை வைவதும், போற்றிய வீட்டைப் பொட்ட லடிப்பதும், தடித்தன மாகக் குடிப்பதும் அடிப்பதும், வேசையர் சேற்றில் விழுவது மாகச் சகுனி போன்ற சாத்தன் சீடனாய் வளர்ந்தான்; கதையை வளர்த்தென் பயனே? நிலத்திற் கேற்ற நீரைப் போலே 710 குலத்திற் கேற்ற குணமது மாமே! மகன்வந் தானென மகிழ்ந்த வணிகனும். அழிநடை கண்டு, “நீ யார்மக” னென்றே வாயை மீறி வார்த்தை பேசி அந்தரி பிணக்கைச் சந்ததம் பெற்றான். செல்வங் கரையச் சீர்மை கரையக் குலப்பெயர் குறையக் குண்டுணிச் சாத்தன் கொட்ட மடிக்கக் கோபமுந் தாபமும், வாழ்வைச் சித்திர வதைசெய, வாணிகன் கவலை மோதுங் கடலில் மூழ்கி, 720 “வினைப்பயன் வினைப்பயன்வினைப்பயன்” என்றே தலையி லடித்துச் சங்கடப் பட்டு, முகமும் வாடி, அகமும் வாடி, உடலும் வாடி, உயிர்ப்பிண மானான். இடையிடை பத்தினி எண்ணமும் வருமே. ஆயினும், சாத்தன் பேயினும் கொடியன்; பழிபல கூறிப் பகையைத் தூண்டி, அந்தரி யுடனே அந்தநல் லணங்கைத் தூற்றினான்... அந்தத் தூயளின் கதையென்? காளி கோயில் காரிருள் சூழக் காட்டிலும் வயலிலும், 730 வழியைத் தடவி, மலரடி நோவ நடந்து நடந்து நடையுந் தளர்ந்து, காலுங் கடுக்கக் கசிவிழி சோர, உறைவிடந் தேடி, உத்தம பத்தினி, கண்டாள் ஒருசிறு காளி கோயிலே! “அப்பா டா”வென் றாங்கே விழுந்தாள்: “அம்மா தேவி, அநாதைக் கருளாய்! உலகம் என்னை உதறித் தள்ள, உன்னிடம் வந்தேன், உலகநா யகியே! உன்மகள் இனிநான்...என்னைக் காப்பாய், 740 கதிவே றில்லை...காளிஓம் காணி! உடலும் தளர்ந்தேன், உள்ளம் உடைந்தேன்; மனமுங் கசந்தது, வாழ்வும் புளித்தது, இனியான் இருந்தென்? இறைவி, இறைவி! இப்படி யேயெனை இணையடி சேர்ப்பாய்; இன்றேல் உன்கை யிலகும் வாளால், அறுத்தெனைப் பலியாய் அளிப்பேன். உறுதி! என்னைப் போலே இன்னொரு சீவனைப் பெற்றென்? அதுவும் பிறவிக் கடலில் வீழ்ந்து வினைப்பயன் சூழ்ந்து தவிப்பதேன்? 750 பிறந்தது போதும், பெற்றவள் அன்றே இறந்தாள்; கணவனுந் துறந்தான்; கனவென மறந்தேன் அனைத்தும்; வருந்திய கண்ணீர் சொரிந்தேன் உன்னடி, பிரிந்தினி வாழேன்! அம்மா, உலகை ஆளும் அருளே, அதருமப் பகைவரை அழிக்குங் கனலே, தரும சீலரைத் தாங்கும் புனலே, அபயந் தந்தெனை ஆண்டுகொள்! இன்றேல், உபயநா தத்தில் ஊற்றுவேன் இரத்தம்; கருணைத் தாயே, கடைக்கண் பாராய்!” 760 என்று பத்தினி இறைஞ்சி யிறைஞ்சி, சொல்லு நினைப்புஞ் சோர்ந்துகண் ணயர்ந்தாள். அந்தக் கரணம் அடங்கி யுறங்கும் அமைதியில், அன்னை அவளுட் புகுந்து கனவாய் நின்று, “ காப்பேன்! கலங்கேல்! காலை இங்கொரு கருணைக் கிழவி வருவாள்; புகலைத் தருவாள்; உனக்கினி நலமே!” யென்று நவின்றுல கன்னை மறைதலும், பத்தினி மலர்விழி திறந்தே திடுக்கிட் டெழுந்தாள்; “தெய்வத் தாயே, 770 உன்சரண் உன்சரண் உன்னருள் துணை “யெனக் காளியை வணங்கிக் கடன்புரிந் தாளே! நல்ல காலை மந்த மாருதம் வந்தது கொஞ்சி, மலரின் இனிய மணமும் வந்தது. கொக்கொக் கோவெனக் கோழிகள் கூவின சிவசிவ வென்று சிவ்வெனப் பறந்து, காலைப் புட்கள் களிப்புடன் பாடின; கிழக்கு வெளுத்தது; கிளர்பொன் னகையால், அருண சுந்தரி அமைதி கூறினாள். நேற்று நடந்த நிகழ்ச்சி யெல்லாம் 780 கனவென ஒதுக்கிக் கற்புள பத்தினி, அஞ்சாத் துணிவுடன் அகில உலகைச் சுற்றி நோக்கிச் “சுத்தான்ம நாதன் காலடித் தூசியிற் காசினி” யென்றாள். அவனரு ளாகும் அன்னையைத் தவிர மற்றெலா நினைப்பையு மறந்து துறந்து, முன்னுள குளத்தில் முழுக்குப் போட்டாள். ஆங்கே, குமுதங் குவிந்து, கொழுந்தீச் சுடர்போல் கமலம் விரிந்து கனிநகை புரியக் கண்டாள்; காலைக் கதிர்கள் இறங்கிப் 790 புனிதப் புனலைப் பொன்மய மாக்கக் கண்டாள்; அந்தக் கனகக் காட்சியை வெண்ணகை புரிந்தும் செந்நகை புரிந்தும், ஒளியைப் பருகி உள்ளங் குவிந்தும், அழகுடன் மணமும் அளித்தும், சுற்றிப் பாடும் வண்டுகள் பருகுதே னீந்தும், வாடு மட்டும் வாழ்வாங்கு வாழும் கவலையில் லாத கமலங் களையே பார்த்து வாழ்வின் பயனை யறிந்தாள்! “பூக்களிற் புன்னகை புரியும் சக்தி, 800 கனிகளிற் சுவையைக் காட்டும் சக்தி, பறவைக ளாகப் பாடும் சக்தி, உயிர்க்குயி ராக உலாவும் சக்தி, உலகெலாங் கோயி லுடையசிற் சக்தி, என்னையுங் காப்பாள்” என்று நினைந்து, தேவி முன்னே தியானஞ் செய்து, “தாயே, இனியெனைத் தாங்குவ துன்பரம்” என்றாள்; ஆங்கே நின்றாள் யாரே...? கருணைக் கிழவி வெள்ளுடை தரித்த ஒள்ளிய உருவினள், இளமை பொலியு முதுமைக் கோலம், 810 அறிவொறி வீசும் அருட்சுடர் விழியாள், பன்மலர் வனம்போற் புன்னகைச் செவ்வாய், கருணை பொழியுங் கனிமொழிச் செல்வி, ஊரெலாம் போற்றும் உத்தமி, ஒளவை யென்னும் செவ்வியள் அவளே! கண்டதும் பத்தினி, ‘காளி யன்னை கனவிற் காட்டிய கருணைக் கிழவி இவளே’ யென்றவள் இணையடி பணிந்தாள்; “அம்மா, உன்னை அறிந்தேன் இனியுன் வாட்டந் தீர்வாய், வாபின் பேசுவோம்” 820 என்றன் புடனே இட்டுச் சென்று “மகளே, இங்கே சுகமா யிரு” வெனத் தன்மனைக் குள்ளே தயவுட னமர்த்தி, பால்பழந் தந்து பசியைத் தணித்தபின், பத்தினி பட்ட பரிபவங் கேட்டாள்: பத்தினி “தெய்வத் தாயே, திக்கிலேன் என்னை மகள்போல் ஏற்றுப் புகலருள் அன்னாய்; மதுரைவே ளாளர் மரபி லுதித்தேன்; பிறந்ததுந் தாயைப் பிரிந்தேன்; எந்தை சிவமுந் தமிழுஞ் செழிக்கப் புகட்டி, 830 என்னை வளர்த்தார்; தன்னை யறிந்த பூம்புகார் நண்பர் பொன்மிகு செல்வர் வயிரவா ணிகர்க்கு மனைவியா யீந்தார். கணவ ருடனே கருத்தொரு மித்து வாழு நாளில், வன்பகை கொண்ட மூத்தாள் பொறாமை மூட்டிய தீயால், சாதிச் செருக்கு தலைக்குமே லேறிக் கருவுறு மென்னைக் கருணையில் கணவர் தெருவில் விடுத்தார்; அருளை நம்பி உலகை வெறுத்தேன், உடலை வெறுத்தேன்; 840 தனிவழி நடந்தேன்; பனியிரு ளிரவில் கால்கள் ஓய்ந்து காளி கோயிலிற் களைப்பு நீங்கிக் கண்ணீர் விட்டு, “நீ இரங்கா யாகில் இறப்பேன்” என்று கதறிய வாறே கண்ணும் அயர்ந்தேன்; என்தாய் கனவில் எனக்கருள் புரிந்தாள்; அவளே ஒளவையாய் ஆண்டுகொண் டாளே! என்கதை யிதுவே; இனிதெனைக் காத்த உங்கதை சொல்லுதிர்! உலகில் இனியான் வாழும் வகையும் வழுத்துதிர்; தாயும் 850 அருட்பெருங் குருவும் ஆவிர் நீரே!” ஒளவை பொன்மொழி “உன்கதை, உள்ளம் உருக்குதென் மகளே! பட்டுப் பட்டுச் சுட்டொளி வீசும் பொன்போ லானதென் பொறுமை வாழ்வே! காளி குடியிது கவின்பெருங் கிராமம்; சாலையுஞ் சோலையுஞ் சத்தி ரங்களும், மலர்கனி வனங்களும் வளம்பெற ஓங்கும், பொன்னிக் கரையிற் பொலியுமிவ் வூரே! இங்கே செல்வர் ஏகப்ப ரென்னும் உத்தமர் மகளாய் உதித்து வளர்ந்தேன் 860 வயது வந்ததும் வலுக்கட் டாயமாய் மாமன் மகனை மணம்பு ரிவித்துத் தந்தை யிறந்தார்; வந்த கணவன் எனக்கோர் மகளை யீந்தான்; பிறகு வேசை யொருத்தியின் ஆசை பற்றி, உடலுஞ் செல்வமும் உயிரும் இழந்தான். அருமைப் பெண்ணை அன்புடன் வளர்த்தேன்; வயது வந்ததும் வாய்த்த கணவனைக் கூடி வாழ்ந்து குழந்தையும் பெற்றாள்; ஒருநாள், அரவு கடித்தென் ஆயிழை யிறந்தாள்; 870 தாயிலாக் குழந்தையுந் தவறிய தந்தோ! உடலும் உள்ளமும் உடைந்தன; யானும் செத்துப் பிழைத்தேன்; சொத்து சுகமெலாம் துறவிகட் கென்றே துறந்தேன் முற்றும். உலகின் இயல்பும், உடலின் இயல்பும், மாந்தர் இயல்பும், வாழ்வின் இயல்பும், அறிந்தேன்; கண்முன் அனுபவங் கண்டேன்; பிறவிக் கடலிற் பெருந்துய ரடைந்தேன்; பிறந்தவ ரெல்லாம் இறந்து மண் ணாகும் உண்மையு மறிந்தேன்; உய்வழி சொல்லும் 880 ஞான குருவை நாடெலாந் தேடினேன்; பிரக்ஞான ரென்னும் பிக்குவைக் கண்டேன்; அவரடி பணிந்தேன்; அன்புடன் பெரியார், புத்தர் துறவும், போதி சத்துவர் அருளிய சொல்லும், அறநெறிச் சாரமும் முறைமுறை விளக்கி, முன்னே விளைந்த வேதனை போகச் சாதனந் தந்தார்; அறவண வடிகளை யடிபணிந் தாங்கே மணிமே கலையென மாதவஞ் செய்தேன்; அதன்பின் காஞ்சிக் கருகே நின்ற 890 ஆரியாங் கனைகள் அமர்ந்த பள்ளியில், குந்தகுந் தரெனுங் குருவடி பற்றிக் கொல்லா நெறியைக் கோதறப் பயின்றேன்; வினைகளை யுதிர்த்து விடுதலை யடையும், பக்குவ நல்கும் சுக்கிலத் தியானம் செய்தேன்; அமைதி சேர்ந்தபின் இன்னும், தத்துவ ஞானத் தாகந் தூண்ட வேதாந் திகளில் மேதாவி யென்ற பூரணா னந்தரின் பொன்னடி வணங்கி, அகமாத்ம ஞானம் அமைவுறக் கேட்டேன்; 900 அதன்பின் சிதம்பரம் அடைந்தேன் மாதே! சிற்சபா நாதர் திருச்சந் நிதியில் நின்ற வுடனே நிம்மதி கண்டேன்; சித்தாந் தத்தின் சிரப்பொருள் கண்ட சிவகுரு நாதர் சேவடி பணிந்து, சிவஞான போதத் தெள்ளுரை கேட்டேன்; பொய்ம்மயக் கொழிய மெய்யறிந் துய்ந்தேன்; அகத்தும் புறத்தும், அறநெறி யெல்லாம் தன்னுட் கொண்ட தனிப்பெருஞ் சைவம், சரியை கிரியை சாதனங் காட்டி 910 உள்ளங் குவியும் யோகந் தந்து, சீவன் சுத்த சிவமய மாகும் உண்மையின் பறிவை யுணர்த்தும் சைவம், பதிபசு பாசப் பான்மையை விளக்கி, மும்மல மாயை முற்றிலு மகன்று, தூய வுயிர்சிவ நேயங் கொண்டு, பாழும் பிறவிப் படர்வினை நீங்கி, வாழும் வகையை வழுத்திடுஞ் சைவம் காட்டிய வழியே கலக்கற நின்றேன்; இனியொரு தேட்டம் இல்லையென்கிளியே!” பத்தினி 920 “அறிவறிந் துண்மை யனுபவங் கண்டீர், கதியெனக் கீந்த கருணைத் தாயே, உலகை உள்ளத் தறிந்து துறந்தீர்; சைவம் பௌத்தம் சமண மாதிய பன்மதந் தெளிந்தீர், என்மயக் கொழிப்பீர்; பவநெறி தவிர்க்கச் சிவநெறி நின்றீர்; வேறு சமய வெறுப்புமக் குண்டோ? பலவாம் சமயக் கலாம்வளர் உலகில், கலக மின்றிக் கலந்து வாழப் பொதுநெறி காட்டும் புண்ணியப் புலவர் 930 எப்படி யிருப்பார் எனக்கியம் பீரே!” ஒளவை “உயிர்க்குயி ரான ஒருபொருள் உணர்வில் ஊன்றி யாங்குமவ் வுண்மையே காணும், வித்தகர் விருப்பு வெறுப்பற் றிருப்பார்; அவரவர் பக்குவம் அறிந்து பழகி, எதிலும் ஒட்டா திருப்பார் அவரே; இசையும் உலகோர் வசையும் பொறுத்துச் சமநிலை தாங்கித் தன்னல மின்றி, நல்லன நினைத்து, நல்லன சொல்லி, நல்லன செய்வார், அல்லன நீப்பார்; 940 ஐந்துறுப் படக்கும் ஆமை போலே, பொறிபுல னடக்கி அறிவா யிருந்தே உள்ளுறைந் துலகில் உலாவிடு வாரே! ஆயி யாகியும் ஆறுகள் பாய்ந்தும், குறைநிறை யற்ற திரைகடல் போல்வார்; பன்மணிக் கயிறெனப் பார்வகை யெல்லாம் ஒன்றிற் கோத்து நின்றதை யறிவார்; அளவுடன் அருந்தி, அளவுடன் உறங்கி, அளவுடன் பேசி, அளவுடன் ஆற்றி, உட்புறத் தூயராய்க் கற்பனை விலக்கி 950 மெய்வழி வாழ்வார் மேலவர் பொதுநிலை கண்ட புண்ணியர் தாமே!” பத்தினி “எம்மதத் திற்குஞ் சம்மத மான பொதுநிலை வாழ்க்கை இதுவெனக் கண்டேன்! என்னிலை யுணர்ந்தீர்; எனக்கொரு வழியைக் குறிப்பீர், தெய்வமுங் குருவுநீர் தாயே!” ஒளவை “அறிவும் அருளும் ஆற்றலும் ஓங்கிய செந்தமிழ்க் குலத்தில் வந்தபூங் கொடியே, தாளாண்மை மிக்க வேளாண் மணியே, மனைவியின் கடமையை மனமுறச் செய்தாய். 960 மாசறு மணியென மகப்பே றெய்தி, மகனுடன் எனது மகள்போ லிருப்பாய், இழந்த மகளை இன்றே பெற்றேன்; ஒருமக னுடனே உவந்துநீ பின்னும் பற்றுறு வாழ்வைப் பற்றா தென்றும், அவவழி நீங்கித் தவவழி சேர்ந்து, சிவசிந் தனையும், சீவகா ருண்யமும், கல்விப் பயிற்சியுங் கற்றதன் பயனைக் காணும் பயிற்சியும், காட்சி முனிவர் தொண்டுங் கொண்டு துகளற வாழ்ந்தென் 970 கொள்கைக் கேற்ற கொள்கல மாகி பெண்ணுல கிற்குப் பெரும்பணி செய்து நீடு வாழ்வாய், 1கூடலின் விளக்கே!” பத்தினி “வாழ்வினி இலையென வருந்திய வெனக்கு, வாழ்வும், வாழும் வழியும் ஆனீர்! தாயினும் பெரிய தயவே போற்றி, சேயினுஞ் சிறியேன், திக்கிலேன் அநாதை, கவலைப் புயலின் கடுமையால் இளைத்தேன், என்னையுய் வித்தீர் அன்னையீர் போற்றி! உம்மடி விட்டினி ஒருபுக லுண்டோ, 980 உள்ளமும் உயிரும் உயிரின் வாழ்வும், உமக்கே தந்தேன் உம்விருப் பாகுக! குருவே சரணம், அருளே போற்றி!” என்றடி பற்றி இருவிழி பனிப்ப வணங்கிய மகளை வாரி யணைத்து, வாழ்த்தி ஒளவை மகிழ்வுடன் பேணி, ஒவ்வொரு நாளும், திவ்விய ஞான விருந்தினை யருத்திப் பெருந்தயை யுடனே காத்தாள் பத்தினி, களித்தாள் மாதோ! உத்தமன் நிறைமா தத்திற், பொறைமிகு பத்தினி, 990 அரதனம் போலோர் ஆண்மக வீன்றாள். சான்றோன் என்று சாற்றிநம் ஒளவை. உத்தமன் எனப்பெயர் உதவியன் பிசைத்தாள். ஒவ்வொரு நாளும் செவ்விய னாகி, இளமையிற் பெரியனை யிலக்கி னான்மகனே! தாமரை முகமும் தழலெனப் பொலிவும். அறிவுக் கனலும் அகன்ற கண்ணும், மங்கல முறுவலும், மதுரநன் மொழியும், திங்களின் சாந்தமும், தினகரன் போலக் கடமை காக்கும் கலங்கா வுறுதியும், 1000 சிங்கம் போன்ற திண்மன வீரமும், தங்க மேனியுந் தளரா வீறும், தீயர் அஞ்சுந் திறனுந் தூய நேயர் விரும்பு நேர்மையும், தெய்வ மாதவர் முன்னே வணக்கமும் பணிவும், பொதுநல விருப்பமும் புதுப்புதுக் கலைகளைக் கற்கு முயற்சியுங் கற்றநல் லடக்கமும், செறிந்ததன் மகனைத் தினந்தினங் கண்டு, ‘பெரியோன்’ என்று பெற்றவள் மகிழ்ந்தாள்! ‘அரியோன்’ என்றுநல் ஆன்றவர் போற்றினார்; 1110 ஊரெலாம் ‘உத்தமன், உத்தம’ னென்றே புகழ்ந்து பேசப் புதல்வன் வளர்ந்தான். ஊர்த்தோ ழருடன் உத்தமன் ஒருநாள், கூடி ஆடிக் குலாவும் போது, ‘எந்தை இப்படி; எந்தை இப்படி என்றொவ் வொருவரும் இயம்பிய பிறகு, “தந்தை யறியாத் தனயனிவ் வுத்தமன்” என்றொரு பையன் இகழ்ந்ததைக் கேட்டே தாங்கா உத்தமன் தாயிடம் ஓடி, “என்தாய், எந்தை எவரெங்” கென்றான். 1020 மலர்முகம் சுருங்கி, வாட்கண் கலங்கி, விசனநீர் தெளிக்க விம்மிட மூச்சு, பழவினை நினைத்துப் பத்தினி சொல்வாள்; “மகளே, உந்தை வயிர வாணிகர்; பூம்புகார்ச் செல்வர்; புண்ணிய வாழ்வினர்; மதுரையில் என்னை மணந்து வந்து பிரியமா யிருந்தார்; பிரிவினை செய்ய முனைந்தாள் அவரது மூத்த மனைவியே, ‘நாங்கள் செட்டி, நீங்கள் முதலியார்’ என்று பேசி என்னையும் ஏசி, 1030 வீட்டை விட்டு வெளியேற் றிடவே, இங்கே வந்தேன்; இந்த நல் லன்னையே ‘மகளே’ என்றென் புகலே யானார். இந்த உலகில் இவரே நமக்குச் சொந்தமுந் துணையுந் தூயநன் மகனே!” உத்தமன் “அநீதியைத் தாங்கேன், அம்மா விடைதா! தந்தைக் கென்னைத் தனயனென் றோதி, சாதிப் பித்தந் தணியப் பேசி, மாண்புடன் உன்னை மதிக்கச் செய்வேன்; பெற்றவ ளுக்குப் பிள்ளை செய்யும் 1040 கடனிது தாயே, கட்டளை யிடுவாய்!” பத்தினி “அப்பா, உன்னை அந்தரி கண்டால், சாபம் வைப்பாள்; சாத்தனைத் தூண்டி அடாதன செய்வாள்; ஆபத் தாகும்! அடக்கமா யிருப்போம் அருமைச் சேயே!” உத்தமன் “அச்சத் தாலே அடக்கமா யிருத்தல் பேடித் தனமெனப் பெரியார் சொல்வர். அம்மா நெஞ்சில் ஆண்மை துடித்துப் ‘போபோ, நீதியைப் புகன்றுவெல்’ எனுமே; வீரனுன் மகனென விளங்கக் காட்டுவேன்; 1050 என்னை எதிரிகள் எதிர்த்தால், அந்த ஊரெலாங் கூட்டிப் பேரிகை யடித்துன் உண்மையை வெல்ல உபாயஞ் செய்வேன்; உரிமை நாட்டுவேன்; உடன்விடை தந்துநல் ஆசி கூறி அன்னாய் அனுப்”பென மார்பைத் தட்டி மைந்தன் பேசலும், பத்தினி ஒளவையைப் பணிவுடன் கேட்டாள்; “சென்று வருக செயம்பெறு மைந்தன்” என்று முதியாள் இயம்பிட, உவந்தாள். தாயும் ஒளவையும் தந்துதம் ஆசி, 1060 “தீரனே, சென்று செய முடன்வா” வென, வணங்கி யெழுந்து மந்திரஞ் சென்று காளியை போற்றிநல் வேளையில் உத்தமன் பூம்புகா ருக்குப் போந்தனன் மாதோ! அந்தோ செல்வம்! இதற்கு முன்பே, எதற்கும் உதவா வேசை மகன்செய் மோசமென் சொல்வேன்! கப்ப லேறிக் கடலை யுழுது, திரவியங் கொண்டு திரும்பிய வாணிகன், வீடெலாங் கொள்ளைக் காடெனக் கண்டான். அந்தரி சலுகையில் ஆதரம் பெற்ற 1070 சாத்தன் வீட்டைத் தன்வசப் படுத்தி, வேசைக் கீந்தவ் வேசை மகனுடன் கொட்ட மடிக்கக் குறிவைத் தானே! வேசை அல்லியும் விரைவாய் அந்தச் செட்டி வீட்டைப் பொட்ட லடிக்க மகனைத் தூண்டி மாயஞ் செய்தாள். பாதி சொத்துப் பரத்தைக் கானதைக் கண்ட செட்டி கைதலை வைத்தான்: “பாடு பட்டுத் தேடிய செல்வம் ஆண்டுக் கணக்காய் அலையுட னலைந்தே 1080 துறைதுறை சென்று, சோர்வற முயன்று வேர்க்க வேர்க்கச் சேர்த்த செல்வம், பட்டப் பகலிற் பாதகத் திருடர் வாரிச் செல்ல வந்தது விதியே! ஆக்கலு மரிதே, காக்கலு மரிதே, நீத்தலு மரிதே நிலையிலாச் செல்வம், அச்சமே கலந்த துச்சமாஞ் செல்வம், எச்சிற் கையால் ஈயோட் டாமல், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்த்துக் கருமிகள் சிறையிடுஞ் செல்வம். 1090 செருக்கும் வஞ்சமும் பெருக்குஞ் செல்வம் தீக்கணை தனினுந் தீயவெங் காம நோய்க்கணைக் கிரையாய் ஆக்கிடுஞ் செல்வம்! அந்தோ, செல்வம் அடைந்தவர் வைத்துப் பூட்டிப் பூட்டிப் பூதங் காக்க, இனந்தரு திருடரும், .இரவுத் திருடருங் கொள்ளை யடிக்கக் கூத்தியும் வழக்கும் வெள்ளம் போலே அள்ளிச் செல்ல, ஆளை வெறுமை ஆக்குவ தென்னே! தானும் வாழத் தன்னவர் வாழ, 1100 உலகும் வாழ உள்ளார்ந் துதவிச் சீரிய நல்லறஞ் செய்து மகிழ்வதே பொருளைப் படைத்த பொருளா கும்மே. இத்தனை நாளும் எத்தனை நல்லறம் இயற்றினேன்; இன்னும் எஞ்சிய பொருளை அள்ளி யள்ளி அறவினை செய்திலேன்; புல்லிய சாத்தன் புகுந்தென் வீட்டில் ஆசைப் பொருளை வேசைக் கீய விட்டேன்; எனைப்போல் விழலனும் உண்டோ? அயோக்கியப் பதரின் அழிவினை யாலே 1110 அந்தரி கெட்டாள்; அழகன் என்றுதன் வேசை மகனை விற்றா னிங்கே! வெட்கக் கேட்டை விளம்பவும் போமோ?” என்று செட்டி ஏமாந் தயர்ந்தான்! இன்னும் நடந்ததை இயம்பக் கேண்மோ! வேசையின் மோசம் விலைமகள் விரித்த வலைப்படு சாத்தன் கொள்ளை யடித்துக் கொடும்பொரு ளீந்தான்; போக்கிட மில்லாச் சாக்கடைப் புழுப்போல், காமச் சேற்றிற் கண்ணிழந் துழன்று, மெய்யு மிளைத்துக் கையு மிளைத்து 1120 மனமு மிளைத்துத் தனமு மிளைத்துத் தேய்ந்து தேய்ந்து தேவாங் காகி, ஓய்ந்து போனான்!... உடனே வேசை அந்தரி பிழைப்பை அந்தர மாக்கி, தன்மகன் அழகனைத் தந்திர மாகக் கூட்டி யிரவில் ஒட்ட மெடுத்தாள். உண்மை யறிந்தவ் வூரெலாஞ் சிரிக்க, வாணிகன் வெட்கி வாய்விட் டலறி, சாத்தஞ் செட்டியைத் தகவே யொறுத்தான். புத்தி வந்த பொய்மனச் சாத்தன், 1130 புலம்பித் தீயிற் புழுவெனத் துடித்தான்: “மேனி மினுக்கி, வீதி சுற்றும் விலைமகள், என்னைக் கொலைசெய் தாளே! அழகுப் பேயவள், அகப்பட் டாரைக் கசக்கிப் பிழியுங் காம வரக்கி! கண்வலை வீசிக் கருத்தைப் பிடித்துப் புன்னகைத் தூண்டிலைப் போட்டிழுத் தழுத்தும் வஞ்ச நெஞ்சச் சஞ்சல மோகினி! ஆடலும் பாடலும் அழகுங் காட்டி, ஆசை யூட்டும் வேசைப் பிசுhசு! 1140 கச்சவிழ் கொங்கையாந் துச்ச மாமிச நச்சுக் கனியை நயமுடன் ஊட்டிப் பொன்னால் அளந்து புணர்ச்சியைத் தந்து, போக மென்னும் பொய்ம்மயக் கேற்றி, ஆளைப் பித்தாய் அடித்துப் பறித்தபின் சந்தியி லோட்டும் சாகசக் கள்ளி! கொம்பு கொம்பாய்க் குதிக்குங் குரங்கெனச் செல்வர் செல்வராய்த் தினந்தினந் திரியும் வெட்கங் கெட்ட வேதனைப் பூதனை! வேசையை நம்பி மோசமா னேனே! 1150 வாங்குவேன் பழி” யென வருந்திய சாத்தன் வயிரவா ணிகனிடம் மன்னிப் பிறைஞ்சி, அல்லியைத் தேடிக் கொல்லவே சென்றான்... கொன்றான்: அவனுங் கொலையுண் டிறந்தான்... அழகனு மறைந்தான்... அதேகதைச் சுருக்கம். ஆட்டு மட்டும் ஆடி ஊஞ்சலாய்க் காட்டும் வேசையைக் களிநகை பகட்டி, வஞ்சனை நேயம் வளமுற நடித்து, வந்ததைப் பற்றி வாழ்வைக் கெடுத்துப் பஞ்சை யாக்கும் பரத்தையை நம்பி 1160 யாரே வாழ்ந்தார்? எவரே சுகித்தார்? மயங்கிய மனத்தை மாற்றவு மாமோ? உமியைக் குற்றி உண்ணலு மாமோ? நீர்தளும் பாத நிறைகுடம் போன்ற நிறைமனக் கற்பும் பொறையுட னன்பும் கொண்ட நல்ல குலமக ளுடனே, இல்லறந் தாங்கலே நல்லற மாகும்! எவரா யிருப்பினும் இன்னொரு மாதைக் கனவிலே நினைத்தலுங் கலக்கந் தருமே! ஆண்பெண் கற்பே அறத்தின் அடிப்படை. 1170 அதனை மீறி அழிவழி சென்ற சாத்தன் முடிவையும், சாத்தனை நம்பிய அந்தரி துயரையும், அந்தரி வசமாய், உத்தமி யான பத்தினிக் கடவுளைத் துரத்திய தந்தை துயரமும் ஊரெலாம் பேசக் கேட்டுப் பெரிதும் வியந்து, நேர்மை யான நிமிர்நடை கொண்ட உத்தமன் ஆங்கே உண்மை விளக்க வந்தனன் வீர 1வயமா வெனவே! உத்தமன வீர உரை அருணனைப் போன்றநல் லழகன், வீரன், 1180 களை நிரம்பிய கனிமுகச் செல்வன் அவனைக் கண்டதும் அன்பு தளிர்த்தும், பகர வொண்ணாப் பாச மெழுந்தும், வளையா வாத முளையினு மிருப்பதால், இளைஞ, யார் நீ? எய்திய காரியம் யா” தெனக் கேட்டான்; ஓதினான் இளைஞன்: உத்தமன் “வணக்கம் பெரியீர், மதுரையி லேநீர் பத்தினி யென்னும் பதிவி ரதையை மணந்து வந்து, மங்கல மாகக் குடித்தனஞ் செய்தீர்: குடியைக் கெடுக்கும் 1190 ஓருவன் சூழ்ச்சியால் ஒருத்தி தூண்டவே கருவுற் றிருந்த தருமபத் தினியை விரட்டி யடித்தீர்; வேளா ளர்குல மாணிக்க மான மாதா அவளைத் தெய்வ சக்தி உய்வித் தருளவே, காளி குடியில் கருணைத் தவஞ்செய் ஒளவையின் காப்பில் அமர்ந்தெனைப் பெற்றாள். எந்தையே, என்தாய் பத்தினி, என்னை உத்தமன் என்றே உரைப்பாள், அறிவாய்! தாயின் உரிமையைத் தாங்கிநன் னீதி 1200 சொல்ல வந்த தூதன் யானே!” வயிரவாணிகன் “என்ன சொன்னாய்? என்மக னாநீ? வெட்கங் கெட்டு வீதியிற் சென்ற ஒருத்தி பெற்ற ஒருவனே போபோ! செட்டிச் சாதியிற் சேர்க்க மாட்டோம்...” உத்தமன் “எந்தையே, சற்றே சிந்தைசெய் திடுவீர்; என்தாய் பத்தினி, இயல்புள உத்தமி; வீதியில் அவளை விரட்டிய தாரோ? தமிழர் அனைவரும் சரிநிகர் சமானராம் ஒருகுலத் தவரெனும் உண்மை மறந்தீர்; 1210 செழியனைப் பெற்ற செய்யவே ளாளரைத் தாழ்வு செய்தீர்; சாத்தன் சூழ்ச்சியால் மூத்த தாரம் மோகமாய்த் தூண்ட பத்தினி வாழ்வைப் படக்கெனக் கெடுத்தீர். பாப புண்ணியம் பார்த்து நடப்பதே மனிதத் தன்மை; மானிட ரெல்லாம் ஓரினம் என்பதே உயர்ந்த உணர்ச்சி! இனம்பா ராமல் எனது பாட்டன் பெண்ணைத் தந்த பெருமையை எண்ணீர். உன்மகன் யானே ஒப்புக் கொள்ளும்...” வயிரவாணிகன் 1220 “ஊரhர் ஒப்பினால், உள்ளம் ஒப்பினால், தக்க சாட்சி தந்தால் பார்ப்போம்... உனையான் அறியேன்: உதறித் தள்ளிய பத்தினி முகத்தையும் பாரேன், போபோ!” உத்தமன் “போகிறேன்; உமது புத்தி தெளியும் சாட்சி கொணர்வேன், சத்தியர் முன்னே உண்மை யுரைப்பேன், உணர்வீர் நீரும்!” வயிர வாணிகன் “கொண்டுவா சாட்சி, கூறுநின் கட்சி, ஊர்ப்பஞ் சாயம்உரைப்பதைக் கொள்வோம்...” அந்தரி மனமாற்றம் போலிப் பிள்ளையாற் கேலிக் கிடமாய் 1230 மோசம் போன முதியாள், அந்தரி, பரிவகங் கொண்டாள்; பத்தினி தன்னை நினைத்தாள்; யாதோ நெஞ்சில் வேதனை செய்யவே உத்தமச் சிறுவனை யழைத்து, நிகழ்ந்ததைக் கேட்டாள். அகந்தை மாறி, “நாதா, இந்த நல்லிளஞ் செல்வன் உமது மகனே, உண்மை அதுவே; வயதுகா லத்தில், வாய்ந்த பிள்ளையை ஏற்போம்; செல்வம் ஈவோம்” என்றாள். வளையா பதியா வளைந்து கொடுப்பவன்? 1240 “அதிகம் பேசும் அந்தப் பிள்ளை சாட்சி மூலம் சத்தியம் விளக்குக! பிறகு நடப்பதைப் பேசுவோம் பின்னே” என்றலும் அந்தரி எதிர்த்துவா தாடி வளையா பதியை வளைக்கலுற் றாளே. அபயம் அக்கணம் உத்தமன் அன்னையைக் கண்டான். வாணிகன் வம்பு வளர்த்ததைச் சொன்னான்: “காளி, நீயே கதிதர வேண்டும்; கற்புள பத்தினி கலங்கக் காண்பையோ? கணவனுக் குண்மை காட்டி யருள்வாய்!” 1250 என்று வணங்கியவ் விரவில் உறங்கலும், காளிகா தேவி கனவிலே வந்து, “பயப்ப டாதே பத்தினி! உத்தமன் உன்மகன் என்னும் உண்மை விளங்கும்; ஒளவை வாக்கால் ஒவ்விய நீதி உணர்த்தியுன் கணவன் உளத்தை மாற்றுவேன்” என்றிம் மாற்றம் இயம்பி மறைந்தாள். கேட்டாள் ஒளவை கிளர்ச்சிகொண் டெழுந்து, மறுநாட் காலையே, மகளையு மகனையும், இட்டுக் கொண்டு பட்டினஞ் சேர்ந்து, 1260 ஊர்ப்பெரி யார்முன் உறுதிசொன் னாளே...! வெற்றி பட்டினப் பெரியார் பஞ்சா யத்தார், மன்றிற் கூடி வயிரவா ணிகனையும், மகனையும், பத்தினி மாதையும், அந்தரி தன்னையுங் கேட்டு முன்னிகழ் வறிந்தபின், அவையோர் மதிக்கும் ஒளவை யெழுந்து, அன்புச் சொற்கள் அருளிய தென்னே: “நீதிக் கில்லை சாதியும் வகுப்பும். நீதியை உயிர்க்கு நிகரெனத் தாங்கும் தமிழர் தமிழரைச் சாதி காட்டி 1270 வெறுப்பதும் ஒறுப்பதும் வெவ்விய கொடுமை! அந்தக் கொடுமையால் இந்தப் பத்தினி பட்ட துயரைப் பார்த்தவன் யானே. நற்குடி வேளாளர் பொற்கொடி இவளைப் பாண்டி மதுரையில் வேண்டி மணந்து, புகாரில் இல்லறம் பொலிவுற நடத்திய வயிரவா ணிகரை, வஞ்சமில் கணவரை இந்தப் பத்தினி ஏற்றமாய்ச் சொல்வாள். அவர்மனங் கெடுத்தவர் அல்லலுற் றழிந்தார். அழகன் எங்கே? அழகனைப் பெற்ற 1280 தாசி யெங்கே? சாத்தன் எங்கே? காலச் சுழலிற் கலங்கி யொழிந்தார்! ஒழிந்த தொழிக... உண்மையை அறிவோம்: காரிருள் இரவில் கருக்கொண் டிருந்த பத்தினி நடந்தெம் பதியி லிருந்த காளி கோயிலைக் கதியென வடைந்தாள். கண்டேன் இந்தக் கற்புக் கனலை. என்மகள் போலே என்மனை வைத்து, எனக்குறு ஞானம் இயம்பிக் கவலையை மாற்றினேன்; அவளும் மகவை யீன்றதும் 1290 சிவகதி சேரத் தவவினை தொடர்ந்தாள். உத்தமன் உரைத்த உண்மை உண்மையே... சத்திய மாகச் சாற்றினேன்; பெரியீர்!” தவத்துறை தேர்ந்த சத்தியக் கிழவி சொன்னது கேட்டதும், “அன்னதே உண்மை... வயிர வாணிகன் மகனை, மனைவியை ஏற்று நன்று போற்றுதல் வேண்டும். சொத்துக் குரியவன் உத்தமன்; அவனே செட்டி யாரின் செல்வச் சந்ததி” என்றே பெரியோர் இரண்டறச் சொன்னார். 1300 “நன்றே!” என்றார் நகரத் தாரும். வயிர வாணிகன் வைரம் விடுத்துப் “பெரியீர், எனது பேதமை யாலே, வம்பர் பொய்யை நம்பிய தாலே, புத்தி மயங்கிப் புரைசெய் தழிந்தேன். பத்தினி எனது பாக்கிய மனைவி; உத்தமன் எனக்கே உரியநன் மைந்தன்! சென்றதை மறப்போம்; சேர்ந்ததை உகப்போம். அழகா புரியெனும் அழகிய கிராமம், பட்டினக் கடைகள், பரந்த வாணிகக் 1310 கப்பல்கள் அனைத்தும் கண்மணிச் செல்வன் ஆளுக; நாளும் அன்பும் அறமும் ஆற்றியென் மரபைப் போற்றிடும் அவனே! பத்தினி இனியென் உத்தமத் துணைவியாய் இல்லத் தரசியாய் என்றும் வாழ்கவே!” இவ்வகை வணிகன் செவ்வுரை பேசவே, பத்தினி யெழுந்து முத்துரை சொன்னாள்; பத்தினி வாழ்த்துரை! “வணக்கம், எனது கணவரே வணக்ம், வணக்கம் பெரியீர், வாய்மை வென்றது! மாசறு க்ற்புந் தேசுறப் பொலிந்தது! 1320 வளையா பதியும் வளைந்ததைக் கண்டேன். செல்வத் தந்தை செல்வனை ஏற்றார். உள்ளும் புறமும் உலகைப் பார்த்தேன். மாந்தர் இயல்பை மனமுறக் கண்டேன். இல்லறங் கண்டேன்... இல்லிற் பழுத்தே துறவறம் பூண்டேன், அறம்வளர் ஒளவை எனையாட் கொண்டாள்; இனியென் வாழ்வை அவளுக் காக்கிச் சிவபதஞ் சேர்வேன்...; ஆதலாற் கணவரே, அன்பு மகனையே பிரியமாய்ப் பேணி உரியநன் மரபை 1330 வாழையடி வாழையாப் வாழச் செய்வீர். இந்தச் சொற்களால் என்னை நினைப்பீர்; ‘உலகிற் பிறந்த உயிர்க்குலம் அனைத்தும், உயிர்க்குயி ரான ஒருவன் மயமாம். பிறந்தவ ரெல்லாம் சிறந்தவர் தாமே. ஒருமொழி யாளர் ஒருதாய் மக்கள். தமிழர் அனைவரும் தமிழ்க்குல மாவார். சாதி வாதம் பேதமை யாகும். அன்புள காதலர் அறவழி யில்லறந் தாங்கி இன்பம் ஓங்கி வாழ்கவே! 1340 ஒருவருக் கொருவர் ஒருமை யுணர்வுடன் உதவியாய் வாழ்க! உலகிற் பிறந்தார், உடலிற் புகுந்தார் ஒருவரும் இங்கே நீண்ட காலம் நிலைப்ப தில்லை. தொட்டிலி லிருந்து சுடுகாட் டிற்கு நடக்கும் ஊர்வலம் நமது வாழ்வே. இடையே நடக்கும் இந்த வாழ்வைப் பொய்ம்மா யத்திற் போக்கிவி டாமல், மெய்வழி நடந்து துய்யவ ராகி, நாணுவ நாணிப் பேணுவ பேணி, 1350 அருளே நினைந்துநல் லன்பே புரிந்து. சமயங் கடந்த சமரசப் பொருளாம் சச்சிதா னந்த சதாசிவ குருவைச் சரணம் புகுந்து சரியை கிரியை சுத்த யோக சித்தியால் ஞானச் சுடரொளி கலந்து, சுதந்தர மான சீவன் முத்தராய்த் தேவராய் மாந்தர் 1357 மங்கல மாக வாழிய மாதோ!” வளையாபதி வளையாபதி ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. (ஐம்பெரும் காப்பியங்களாவன: சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி.) இந்நூல் இப்போது மறைந்து விட்டது. இதன் ஆசிரியர் யார்? எப்போது இயற்றப் பட்டது? இக் காவியத் தலைவன் பெயர் என்ன? காவியத்தின் கதை என்ன? என்பன யாதொன்றும் தெரியவில்லை. இக்காவியத்தின் சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. இது சமண சமய நூல் என்பதில் ஐயம் இல்லை சிலப்பதிகார உரையாசிரியர் அடி யார்க்கு நல்லாரும், யாப் பருங்கல விருத்தியுரைகாரரும், உரையாசி ரியர் நச்சினார்க்கினியரும் இந்நூற் செய்யுள்களைத் தமது உரைகளில் மேற்கோள் காட்டு கின்றனர். புறத்திரட்டு என்னும் தொகைநூலில், இந்நூலிலிருந்து அறுபத்தாறு செய்யுள்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சென்ற 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வளையா பதி காவியத்தின் ஏட்டுப் பிரதி திருவாவடுதுறை மடத்தில் இருந் தது. அந்த நூற்றாண்டின் இறுதியில் அந்த ஏட்டுப் பிரதி எப்படி யோ மறைந்து விட்டது. டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள், திருவாவடு துறை மடத்தில் சேர்ந்து, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடத்தில் பாடங்கேட்ட காலத்தில், மடத்துப் புத்தகசாலையில் வளையாபதி ஏட்டுச்சுவடியைக் கண்ட தாகவும், பிற்காலத்தில் அச்சிற் பதிப்பிப்பதற்காக அதனைத் தேடியபோது அந்தச் சுவடி கிடைக்க வில்லை என்றும் எழுதியிருக் கிறார். “பிள்ளையவர்கள் (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்) இருந்த காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்தக சாலையில் வளையாபதி ஏட்டுச்சுவடியை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் அத்தகைய பழைய நூல் களில் எனக்குப் பற்று உண்டாகவில்லை. அதனால் அந்நூலை எடுத்துப் படிக்க வோ, பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நேர வில்லை. பழைய நூல்களை ஆராய வேண்டுமென்ற மனநிலை என்பால் உண்டான பிறகு தேடிப்பார்த்த போது அந்தச் சுவடி மடத்துப் புத்தக சாலையில் கிடைக்கவில்லை. தமிழ் நாடு முழுவதும் தேடியும் பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழிந்தொழிந்து போயின வென்று தெரிந்து அவற்றிற்காக வருத்த மடைவது என் இயல்பு. ‘கண்ணினால் பார்த்த சுவடி கைக்கெட்டாமற் போயிற்றே!’ என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. ‘கண்ணிலான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம்’ என்று கம்பர் குறிக்கும் துயரத்துக்குத் தான் அதனை ஒப்பிட வேண்டும்.” தக்கயாகப் பரணியின் (181ஆம் தாழிசை) பழைய உரையா சிரியர், வளையாபதி கவியழகுள்ள நூல் என்று கூறுகிறார். அவர் எழுதுவதாவது: “எங்ஙனம் அங்ஙனம் என்னும் சொற்கள் எங்ஙனே அங்ஙனே யென்று வந்தன. இவர் (தக்கயாகப் பரணி நூலாசிரியராகிய ஒட்டக் கூத்தர்) வளையாபதியை நினைத்தார் கவியழகு வேண்டி ...... ... ... எங்ஙனமென்று இவ்வாறே வளையாபதி யிலுமுண்டு.” வளையாபதியின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது: “ உலக மூன்று மொருங்குட னேத்துமாண் டிலக மாய திறலறி வனடி வழுவி னெஞ்சொடு வாலிதி னாற்றவுந் தொழுவ றொல்வினை நீங்குக வென்றியான்.” இச் செய்யுளை, இளம்பூரணர் தொல்காப்பிய (செய்யு ளியல், 98ஆம் சூத்திரம்) உரையுள் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், இது எந்த நூற்செய்யுளென்று கூறவில்லை. யாப்ப ருங்கல விருத்தியுரை யாசிரியரும் இச் செய்யுள் 37ஆம் சூத்திர உரையில் மேற்கோள் காட்டியுள்ளார். இவரும் இச்செய்யுள் எந்த நூலி னின்று எடுக்கப் பட்டது என்பதைக் கூறவில்லை. நச்சினார்க் கினியர், தொல்காப்பியம் செய்யுளியல் 148ஆம் சூத்திர உரையில் இச்செய்யுளை மேற்கோள் காட்டி, இதனை வளையாபதிச் செய்யுள் என்று குறிப்பிடுகிறார். ஆகவே, இது வளையhபதியின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் என்பது தெரிகிறது. கீழ்க்காணும் வளையாபதிச் செய்யுள்கள், புறத்திரட்டில் தொகுக்கப்பட்டுள்ளன: மயிலை சீனி வேங்கடசாமி - மறைந்துபோன தமிழ் நூல்கள் வளையாபதி உரை “ வினைபல வலியி னாலே வேறுவே றியாக்கை யாகி நனிபல பிறவி தன்னுட் டுன்புறூஉ நல்லு யிர்க்கு மனிதரி னரிய தாகுந் தோன்றுதல், தோன்றி னாலும், இனியவை நுகர வெய்துஞ் செல்வமு மன்ன தேயாம். (புறத்திரட்டு-25) 1 (பொழிப்புரை) செய்த பல்வேறு வினைகளின் பயனுக்குத் தக வெவ்வேறு உடல்களைப் பெற்றுப் பலப்பல பிறவிகளில் உழன்ற உயிர்க்கு, மனிதப்பிறவி வாய்த்தல் அரிதாகும். அவ்வாறு மனிதப் பிறப்புப் பெற்றாலும் இன்புறவாழுதற்குத் தக்க செல்வத்தையும் சேர அடைதல் மேலும் அரிதாகும். உயர்குடி நனியுட் டோன்றல் ஊனமில் யாக்கை யாதல் மயர்வது கல்வி கேள்வித் தன்மையால் வல்ல ராதல் பெரிதுண ரறிவே யாதல் பேரறங் கோடல் என்றாங் கரிதிவை பெறுதல் ஏடா பெற்றவர் மக்கள் என்பார். (புறத்-26) 2 (பொ-ரை) என்னோடு தருக்கமிடுதற்கு வந்த அடே, உயர்ந்த குடியில் பிறத்தல், குறையிலா உடல் பெறல், மயக்கமிலாக் கல்வி கேள்விகளில் சிறப்புறல், மெய்யறிவு பெறல், அறநெறி பற்றல், என்பவை மிக அரிதாம்; இவற்றைப் பெற்றவரே மக்கள் எனப்படுவார். நாடும் ஊரும் நனிபுகழ்ந் தேத்தலும் பீடு றும்மழை பெய்கெனப் பெய்தலும் கூட லாற்றவர் நல்லது கூறுங்காற் பாடு சான்மிகு பத்தினிக் காவதே.” (புறத்-78) 3 (பொ-ரை) கூடிவாழும் சிறப்புடைய இல்லற மகளிரை, நாடும் போற்றும்; ஊரும் போற்றும்; பெருந்தக்கதாம் மழை பெய் என்ற அளவில் பெய்யவும் செய்யும். இவை அவர்தம் சிறப்புகள். பள்ள முதுநீர்ப் பழகினும் மீனினம் வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம் கள்ளவிழ் கோதையர் காமனொ டாயினும் உள்ளம் பிறிதா யுருகலுங் கொண்ணீ. (புறத்-88) 4 (பொ-ரை) ஆழமானதும் பழமையானதுமாம் நீர்நிலையிலே மகிழ்ந்து வாழ்ந்தாலும், மீன் கூட்டம் புதுநீர் வரக் காணின் அதனிடம் விரும்பித் தாவும். அது போல் காமனே கணவனென வாய்த்தாலும் கட்டற்ற மகளிர் தம் உள்ளம் மாறிப் பிறர் வயப்படுவதையும் காண்பாயாக. உண்டியுட் காப்புண் டுறுபொருட் காப்புண்டு கண்ட விழுப்பொருள் கல்விக்குக் காப்புண்டு பெண்டிரைக் காப்ப திலமென்று ஞாலத்துக் கண்டு மொழிந்தனர் கற்றறிந் தோரே. (புறத்-89) 5 (பொ-ரை) உணவைத் தகவாகக் காக்கலாம்; பொருள் களையும் காக்கலாம்; சிறந்த பொருளாம் கல்வியையும் காக்கலாம்; ஆனால் கற்றறிந்த மேலோர் கட்டற்ற பெண்களைக் காக்க வல்லேம் அல்லேம் என்று உலகியல் அறிந்து கூறினார். எத்துணை யாற்று ளிடுமணல் நீர்த்துளி புற்பனி யுக்க மரத்திலை நுண்மயிர் அத்துணை யும்பிற ரஞ்சொலி னார்மனம் புக்கன மென்று பொதியறைப் பட்டார். (புறத்-90) 6 (பொ-ரை) ஆற்று மணல், நீர்த்துளி, பனித்துளி, மரத்திலை, நுண்ணிய மயிர் என்பவை எண்ணிக் கணக்கிட வல்லவோ! அவ்வளவு பேர் கட்டற்ற மகளிர் வயப்பட்டுப் புழுக்கறையுள் வீழ்ந்தவராயினர். தளிப்பெயற் றண்டுளி தாமரை யின்மேல் வளிப்பெறு மாத்திரை நின்றற் றொருவன் அளிப்பவற் காணுஞ் சிறுவரை யல்லால் துளக்கிலர் நில்லார் துணைவளைக் கையார். (புறத்-91) 7 (பொ-ரை) மழைத்துளி தாமரை இலையின் மேல் படக், காற்று விசிறிய அளவில் நின்று வீழ்ந்துபடும். ஒருவன்தன் பொருளை வழங்கிய அச்சிறுபொழுதை அல்லாமல் சிறிதும் ஒட்டி நிற்க மாட்டார் கட்டொழுங்கிலா மகளிர். பொறையிலா வறிவு போகப் புணர்விலா விளமை மேவத் துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மை நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச் சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே. (புறத்-98) 8 (பொ-ரை) மக்கட் பேறு வாயாதார் பெற்ற செல்வம், பொறுமை யற்ற அறிவு, துய்த்தல் இல்லாத இளமை, இறங்குதுறை இல்லாத் தாமரைப் பொய்கை, ஆடை இலாத ஒப்பனை, மணமில்லா மாலை, கல்வியில்லா அறிவு, நன்னீர் சூழ்ந்து வாயாத நகரம் போன்றதாகும். ஆக்கப் படுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும் போக்கப் படுக்கும் புலைநரகத் துய்ப்பிக்கும் காக்கப் படுவன விந்திரிய மைந்தினும் நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே. (புறத்-130) 9 (பொ-ரை) சொல்லும் சொல், நலங்களை எல்லாம் ஆக்கும்; அச் சொல்லே சிறைக்கும் சேர்க்கும்; உள்ளவற்றை எல்லாம் அழிவுக்கு ஆக்கும்; கீழாம் நிரயமும் சேர்க்கும்; ஆதலால் ஐம்பொறி களுள்ளும் காக்க வேண்டுவதொன்று நாக்கே ஆம்; மற்றவற்றைக் காத்தலினும் நாவைக் காத்தல் கட்டாயமாம். தாரம் நல்லிதந் தாங்கித் தலைநின்மின் ஊரும் நாடும் உவத்தல் ஒருதலை வீர வென்றி விறல்மிகு விண்ணவர் சீரின் ஏந்திச் சிறப்பெதிர் கொள்பவே. (புறத்-155) 10 (பொ-ரை) நன்மனைவியின் பண்பு நலம் பாராட்டி அவர் வழியில் நிற்பீராக. நின்றால் ஊரும் மகிழும்; நாடும் மகிழும்; இஃது உறுதியாம். இத்தகு இல்லற வாழ்வினர் வெற்றி மிக்க விண்ண வரும் விருந்தினர் ஏற்றுச் சிறப்பித்தலைப் பெறுவர். பெண்ணி னாகிய பேரஞர் பூமியுள் எண்ண மிக்கவ ரெண்ணினு மெண்ணிலார் பின்னி நின்ற பெருவினை மேல்வரும் என்ன தாயினும் ஏதில்பெண் ணீக்குமின். (புறத்-156) 11 (பொ-ரை) பெண்ணால் அமைந்த இப் பெருந்துயர உலகில் அறிவு வல்லார் எத்தனை எண்ணிப் பார்த்தாலும் எண்ண மாட்டார்; அதனால் தொடரும் தீமை தொடரவே செய்யும். ஆதலால் எவ்வாறாயினும் தகவிலாப் பெண்டிர் சார்பு இல்லாது விலகுவீராக! பொய்யன் மின்புறங் கூறன்மின் யாரையும் வையன் மின்வடி வல்லன சொல்லிநீர் உய்யன் மின்னுயிர் கொன்றுண்டு வாழுநாட் செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின். (புறத்-198) 12 (பொ-ரை) பொய் சொல்லாதீர்; எவரையும் புறம் கூறாதீர்; அவ்வாறே எவரையும் வையாதீர்; சிறுமைகள் சொல்லித் திரியாதீர்; உயிர்க் கொலை புரிந்து உயிர் வாழாதீர்; சிறுமை யரொடு நெருங்காதீர்! கள்ளன் மின்கள வாயின யாவையும் கொள்ளன் மின்கொலை கூடி வருமறம் எள்ளன் மின்னில ரென்றெண்ணி யாரையும் நள்ளன் மின்பிறர் பெண்ணொடு நண்ணன்மின். (புறத்-199) 13 (பொ-ரை) கள் பருகாதீர்; களவால் எதனையும் கொள் ளாதீர்; கொலைப் பாவமும் செய்யாதீர்; அறத்தை இகழாதீர்; இல்லார் என்று எண்ணிப் பழியாதீர்; பிறன் மனையை விரும்பி நில்லாதீர். துற்றள வாகத் தொகுத்து விரல்வைத்த தெற்றுக்கஃ தென்னி னிதுவதன் காரணம் அற்றமில் தானம் எனைப்பல வாயினுந் துற்றவி ழொவ்வாத் துணிவென்னு மாறே. (புறத்-215) 14 (பொ-ரை) நுகரும்அளவாகத் தொகுத்து எண்ணி வைத்ததற்குக் காரணம் என்ன எனின், முடிவற்ற அறமும் கொடையும் என எவை செய்யினும் உண்ணும் உணவுக் கொடைக்கு இணை இல்லை. ஆற்று மின்னருள் ஆருயிர் மாட்டெலாம் தூற்று மின்னறந் தோம்நனி துன்னன்மின் மாற்று மின்கழி மாயமும் மானமும் போற்று மின்பொரு ளாவிவை கொண்டுநீர். (புறத்-256) 15 (பொ-ரை) அருள் புரிக, எல்லா உயிர்களிடத்தும்; பரப்புக அறத்தை; குற்றம் எதுவும் புரியாதீர்; மயக்குதலும் மானக் கேடு புரியாமலும் வாழ்க; இவற்றை யெல்லாம் மெய்ப் பொருளாகக் கொண்டு சிறக்க. பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா தருளைப் பொருளா வறஞ்செய்தல் வேண்டும் அருளைப் பொருளா வறஞ்செய்து வான்கண் இருளிலியல் பெய்தாத தென்னோ நமரங்காள். (புறத்-257) 16 (பொ-ரை) நம் அன்பர்களே, பொருளைப் பொருட்டாக நினைத்து அறம் செய்யாது ஒழியீர்; அருளைப் பொருளாக நினைத்து அறம் செய்தல் வேண்டும். அருளைப் பொருளாக நினைத்து அறம் செய்து விண்ணின்ப ஒளியைப் பெறாதது என்னே! தகாதுயிர் கொல்வானின் மிகாமையிலை பாவம் அவாவிலையி லுண்பான் புலால்பெருகல் வேண்டும் புகாவலை விலங்காய்ப் பொறாதுபிற வூன்கொன் றவாவிலையில் விற்பானு மாண்டருகல் வேண்டும். (புறத்-264) 17 (பொ-ரை) அருள் தன்மை இல்லானாய் உயிர்க் கொலை செய்வானுக்கு மேம்பட்ட பாவப்பிறவி இல்லை. புலால் வேட்கையால் விலைக்கு வாங்கியுண்டு தன் புலால் பெருக வேண்டுவான் உணவுக்காக விலங்கு போல் அலைக்கப்படும் பிறவியாய்ப் பிறக்க வேண்டும். கொல்வானும் ஊன் உண்பானும் ஊன்விலங்காகவும், விற்பானாகவும் பிறக்க வேண்டும். கொல்வானின் என்பதற்குக் கொல்வதனின் என்பது பாடம் ஆகலாம் என்பது பெருந்தொகை. பிறவிக் கடலகத் தாராய்ந் துணரின் தெறுவதிற் குற்ற மிலார்களு மில்லை அறவகை யோரா விடக்கு மிசைவோர் குறைவின்றித் தஞ்சுற்றந் தின்றன ராவர். (புறத்-265) 18 (பொ-ரை) கடல் போன்ற பிறவிச் சூழலை ஆராய்ந்து பார்த்தால் உயிர்களைக் கொல்லும் குற்றம் இல்லார்கள் இல்லை. ஆனால் அருளறம் எண்ணாமல் ஊன் உண்பவர் தம் சுற்றத்தைத் தாமே கொன்று தாமே சுவைத்தவரும் ஆவர். உயிர்க ளோம்புமி னூன்விழைந் துண்ணன்மின் செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்தொரீஇக் கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர். (புறத்-266) 19 (பொ-ரை) எல்லா உயிர்களையும் பேணுங்கள்; ஊனை விரும்பி உண்ணாதீர்கள்; குற்றங்களிலிருந்து விலகுங்கள்; கோபம் நீங்குங்கள்; அவ்வாறாயின் நற்கதிபெற்றார் நன்மதிப்பொடு வழிபடும் குறைவிலா நிறைவுப் பிறப்பினை அடைவீர். பொருளொடு போகம் புணர்தல் உறினும் அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின் இருளில் கதிச்சென் றினியிவண் வாரீர் தெருள லுறினுந் தெருண்மி னதுவே. (புறத்-277) 20 (பொ-ரை) பொருளும் நுகர்வும் பொருந்துதலுற்றாலும் அருளால் நிரம்பிய அரிய தவத்தைச் செய்யுங்கள். ஒளி வழியில் செல்வீர்; மீளப் பிறக்க மாட்டீர். தெளிதலுற்றீர் என்றாலும் மேலும் தெளிவுறுவீராக. தவத்தின் மேலுறை தவத்திறை தனக்கல தரிதே மயக்கு நீங்குதல் மனமொழி யொடுமெயிற் செறிதல் உவத்தல் காய்தலொ டிலாதுபல் வகையுயிர்க் கருளை நயந்து நீங்குதல் பொருடனை யனையது மறிநீ. (புறத்-278) 21 (பொ-ரை) மயக்கம் நீங்குதல்; எண்ணம் சொல் செயல் செவ்வி தாதல்; விருப்பு வெறுப்பு அகலல்; பல்வகை உயிர்க்கும் அருளுதல்; பொருட்பற்று அகலல்; ஆகிய இவை தவத்தின் மேலாம் தவத்தர் தமக்கு அல்லாது பிறர்க்கு அரிதாம். எண்ணின்றி யேதுணியு மெவ்வழி யானு மோடும் உண்ணின் றுருக்கு முரவோருரை கோட லின்றாம் நண்ணின்றி யேயு நயவாரை நயந்து நிற்குங் கண்ணின்று காம நனிகாமுறு வாரை வீழ்க்கும். (புறத்-293) 22 (பொ-ரை) காமம் என்பது எண்ணி அறியும் அறிவு அற்றது; அது எண்ணாதவை எண்ணும்; கூடாததைத் துணியும்; எங்கெங்கும் ஓடும்; உள்ளேவாட்டும்; அறிவும் வலிவும் உடையார் அறிவுரையைக் கொள்ள விடாது; நெருங்கக் கூடாதவரை நெருங்கச் செய்து வீழ்த்தி அழிக்கும். சான்றோ ருவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்; ஆன்றாங் கமைந்த குரவர்மொழி கோட லீயார்; வான்றாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர்; காமன் தான்றாங்கி விட்ட கணைமெய்ப்படு மாயி னக்கால். (புறத்-294) 23 (பா-ரை) காமன் கணையால் தாக்கப்பட்டவர், சான்றோர் பழிப்பதையோ தனித்தனி பழிப்பதையோ கருதார்; அகன்று விரிந்த பெரியர் மூத்தோர் சொல்லைக் கொள்ளார்; பெருமையால் ஓங்கிய புகழையும் குறையும் கறையும் படியச் செய்வர். மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும்; பூவென் றெருக்கி னிணர்சூடுப; புன்மை கொண்டே பேயென் றெழுந்து பிறரார்ப்பவு நிற்ப; காம நோய்நன் கெழுந்து நனிகாழ்க்கொள்வ தாயி னக்கால். (புறத்-295) 24 (பொ-ரை) காமம் என்னும் நோய் பெருகி எழுந்து மிக வலிமை கொண்டு விட்டது என்றால், குதிரை உலா என்று சொல்லிப் பனைக் கருக்கு மடலில் ஏறுவர், மன்றங்களிலெல்லாம்; எருக்கம்பூவைமாலை யெனச் சூட்டிக் கொள்வர்; சிறுமையான செயலால் பேய் கொண்டான் என்று பிறர் பழிப்பவும் இருப்பர். நக்கே விலாவி றுவர்நாணுவர் நாணும் வேண்டார் புக்கே கிடப்பர் கனவுந்நினை கையு மேற்பர் துற்றூண் மறப்ப ரழுவர்நனி துஞ்ச லில்லார் நற்றோள் மிகைபெ ரிதுநாடறி துன்ப மாக்கும். (புறத்-296) 25 (பொ-ரை) காதலியர் நல்ல தோளே குறியெனக் கொண்டவர் விலாவொடிய நகைப்பர்; நாணுவார் நாணத்தை வெறுப்பார்; காமத்துமட்டுமே புகுந்து கிடப்பர்; அதுவே கனவும் நினைவும் ஆவர்; உண்ணும் ஊணை மறப்பர்; அழுவர்; உறக்கமும் கொள்ளார்; உலகறி துன்பத்தை உண்டாக்குவர். அரசொடு நட்டவ ராள்ப விருத்தி அரவொடு நட்டவ ராட்டியு முண்பர் புரிவளை முன்கைப் புனையிழை நல்லார் விரகில ரென்று விடுத்தனர் முன்னே. (புறத்-297) 26 (பொ-ரை) ஆள்பவரை நெருங்கிய நட்பினார் பலவகை நலமும் பெறுவர்; பாம்பொடு பழகியவர் அதனை ஆட்டிக் காட்டி அதன் வருவாயால் வாழ்வர். அணிகளை அணிந்த பொய்ம்முயக்கு மகளிரை நெருங்குதல் ஆகாது என்று அறிவாளர் விடுத்தனர். விருத்தி என்பது வரியிலாநிலம். பீடில் செய்திக ளாற்கள விற்பிறர் வீடில் பல்பொருள் கொண்ட பயனெனக் கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத் தோட லின்றி யுலையக் குறைக்குமே. (புறத்-309) 27 (பொ-ரை) சிறுமைச் செயல்களும் களவும் தொழிலாகக் கொண்டவர் கொண்ட பயன் தான் என்ன? பலரும் கூடிக் காலும் கையும் பற்றிப் பிடித்துத் தப்பி ஓட விடாது என்றும் துயருற அவ்வுறுப்புகளை வெட்டி அகற்றுவர் (கையும் காலும் முதலாம் உறுப்புக் குறைபட உழலுவர்). பொய்யி னீங்குமின் பொய்யின்மை பூண்டுகொண் டைய மின்றி யறநெறி யாற்றுமின் வைகல் வேதனை வந்துற லொன்றின்றிக் கௌவை யில்லுல கெய்துதல் கண்டதே. (புறத்-312) 28 (பொ-ரை) பொய்யோடு பொருந்தாதீர்; மெய்யோடு பொருந்துவீர்; உறுதியாம் அறநெறிகளைச் செய்வீர்; என்றும் எத்துயரும் வருதல் இல்லாமல் இன்பஉலகு எய்துவீர். கல்வி யின்மையும் கைப்பொருள் போகலும் நல்லில் செல்லல்க ளானலி வுண்மையும் பொய்யில் பொய்யொடு கூடுதற் காகுதல் ஐய மில்லை யதுகடிந் தோம்புமின். (புறத்-313) 29 (பொ-ரை) கல்லாமை, பொருளிழப்பு, குடும்ப வாழ்வில் உண்டாம் துயர்களால் நலிவு ஆகியவை பொய்யொடு பொய் கூடிய கூட்டேயாம் என்பதற்கு ஐயமில்லை; அதனை அகற்றிப் பாதுகாத்து வாழ்வீராக. உலகுடன் விளங்கவுயர் சீர்த்திநிலை கொள்ளின் நிலையில்கதி நான்கினிடை நின்றுதடு மாறும் அலகில்துய ரஞ்சினுயி ரஞ்சவரும் வஞ்சக் கொலையொழிமி னென்றுநனி கூறின ரறிந்தார். (புறத்-337) 30 (பொ-ரை) அறிவறிந்தவர், “உலகளாவிய உயர் பெருமை கொண்டால் நிலையில்லாத தேவர்கதி, மக்கள் கதி, விலங்கின் கதி, நரகர் கதி என்னும் நான்கு கதிகளிலும் தடுமாறுவதாம் பிறவித் துயருக்கு அஞ்சிக் கொலைச் செயலைக் கொள்ளாதீர் என்றார். வெள்ள மறவி விறல்வேந்தர் தீத்தாயங் கள்வரென் றிவ்வாறிற் கைகரப்பத் தீர்ந்தகலும் உள்ளி லுறுபொருளை யொட்டா தொழிந்தவர் எள்ளும் பெருந்துயர்நோ யெவ்வ மிகப்பவோ. (புறத்-351) 31 (பொ-ரை) வெள்ளம், மறதி, கொடிய வேந்தர், கேடாம் சுற்றம், கள்வர் என்று இவர்களால் கரந்து பற்றிக் கொள்ள அகலும் பொருள் பற்றினை நெருங்க விடாமல் நீங்கி நின்றவர் பழியும் துயரும் இல்லாராய் வாழ்வர். ஒழிந்த பிறவற னுண்டென்பா ருட்க வழிந்து பிறரவாம் வம்பப் பொருளை இழந்து சிறிதானு மெய்தா தொழிந்தார் அழிந்து பெருந்துயர்நோய்க் கல்லாப்பவரே. (புறத்-352) 32 (பொ-ரை) அருளறம் பேணாராய்ப் பிற அறம் உண்டு என்பார் ஒளி இழக்க மற்றையோர் விரும்பும் பொய்யாம் பொருளைப் போக விட்டு மீளச் சிறிதும் அடையாமல் இழந்து போனவர், பெருந் துயர்க்கும் நோய்க்கும் ஆளாகிக் கிடப்பவரே ஆவர். இன்மை யிளிவாம் உடைமை யுயிர்க்கச்சம் மன்னல் சிறிதாய் மயக்கம் பெரிதாகிப் புன்மை யுறுக்கும் புரையி லரும்பொருளைத் துன்னா தொழிந்தார் துறவோ விழுமிதே. (புறத்-353) 33 (பொ-ரை) அறவே இல்லாமை இழிவாகும்; மிகுவுடை மையோ உயிர்க்கும்அச்சமாம்; நிலைப்பதோ சிறிது காலம்; மன மயக்கமோ பெரிது; சிறுமைக்கே இடமான இப் பொருளைத் தொடாமல் விலக்கியவர் துறவே மேம்பட்ட துறவாம். ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம் மாண்பி லியற்கை மருவி லரும்பொருளை வேண்டா தொழிந்தார் விறலோ விழுமிதே. (புறத்-354) 34 (பொ-ரை) தேடிச் சேர்ப்பது அரிது; தேடியது அழிவது எளிது; நண்ணியிருப்பது சிறிது; அதனால் வரும் நடுக்கமோ பல; பெருமை தாராப் பொருளின் இயல்பறிந்து வெறுத்து ஒதுக்கியவர் வீறு, மிகப் புகழுக்குரியதாம். இல்லெனின் வாழ்க்கையு மில்லையுண் டாய்விடிற் கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர் இல்லையுண் டாய்விடி னிம்மை மறுமைக்கும் புல்லென்று காட்டும் புணர்வது மன்றே. (புறத்-355) 35 (பொ-ரை) பொருள் இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை; பொருள் உண்டாகி விட்டால் கயவர் கொல்வர்; பொருள் கவரப்பட்டதும் ஏக்கத்தால் உயிர் துறப்பர்; இல்லாமல் இருந்தாலும் உண்டாய் இருந்தாலும் இம்மைக்கும் மறுமைக்கும் சிறுமையே; போம்போது உடன் வருவதும் அன்று. வேற்கண் மடவார் விழைவொழிய யாம்விழையக் கோற்கண் நெறிகாட்டக் கொல்கூற் றுழையதா நாற்ப திகந்தாம் நரைத்தூதும் வந்ததினி நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே. (புறத்-367) 36 (பொ-ரை) வேல்போலும் கண்ணையுடைய பெண்டிரை விரும்புதல் ஒழிக; கையில் பிடித்த கோல் வழியைக் காட்டக் கொல்லும் கூற்றுவனை அடைய நேரும்; நாற்பது வயது கடந்தால் நரை முதுமைத்தூதாக வரும். அந்நிலையிலேனும் துறவு கொள்ளல் அறிவாகும். இளமைதானோ நிற்பது? இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல வளமையும் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம் உளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும் விளைநில முழுவார்போல் வித்துநீர் செய்து கொண்மின். (புறத்-396) 37 (பொ-ரை) இளமைப்பருவம் நிலையாது; இன்பமும் நிற்பதில்லை; வளமையும்அவையே போல் நில்லாது; நாள் தோறும் வரும் துயர் வெள்ளப் பெருக்காம்; இன்னும் உளது என நினையாமல் இப்பொழுதே விளைநிலத்தை உழும் உழவரைப் போல் வீட்டின்ப விளைவு பெற துறவுழவு கொள்ளுவீர்! மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பு மிகையவை யுள்வழிப் பற்றா வினையாய்ப் பலபல யோனிகள் அற்றா யுழலு மறுத்தற் கரிதே. (புறத்-422) 38 பிறப்பு வேண்டா என்று தெளிந்த அறிவினர்க்குத் தம் உடம்பொடும் என்ன தொடர்பு. தன் உடலே தனக்கு வேண்டாப் பொருளாம். அவை உளவானால் பல்வகை வினைகட்கும் இடமாய் - பிறப்புகளுக்கும் இடமாய்ப் பிறவிச் சுழலேவரும். அதனை அகற்றற் கியலாது. உற்ற வுதிர மொழிப்பான் கலிங்கத்தை மற்றது தோய்த்துக் கழுவுத லென்னொக்கும் பற்றினா னாகிய பாவத்தை மீட்டும் பற்றொடு நின்று பறைக்குறும் ஆறே. (புறத்-423) 39 துணியில் பட்ட குருதியைப் போக்க குருதியிலேயே தோய்த்துக் கழுவப்போகுமா? அதுபோலவே பற்றால் உண்டாகிய பாவத்தை அப்பற்றொடு நின்று அகற்றுவேம் என்று முழங்குவதாம். தானம் செய்திலம் தவமும் அன்னதே கானந் தோய்நில விற்கழி வெய்தினம் நானந் தோய்குழல் நமக்குய்த லுண்டோ மானந்தீர் கொள்கையார் மாற்றம்பொய் யல்லவால். (புறத் - 423) 40 இதுவரை கொடை புரியேம்; தவமும் செய்யேம். காட்டில் பொழிந்த நிலாப் போல் பயனற்றுக் கழிந்தேம்; நறுமணம் கமழும் மகளிரைக் கொண்டு நமக்கு உய்வு உண்டோ? குற்றமற்ற பெரியவர்கள் சொல்வது பொய்யன்றாம். பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி ஒருவந்த முள்ளத் துவத்த லொழிமின் வெருவந்த துன்பம் விடுக்குந் திறலோன் ஒருவன் உலகிற் குளனென்னு மாறே. (புறத்-438) 41 அஞ்சத்தக்க துன்பங்களை விட்டொழிக்கவல்ல திறமுடை யான் ஒருவன் உலகிற்கு உள்ளான் என்னுமாறு நீங்கள் எண்ணுங்கள். துயருறுவார் மிகப்பலர் என்று எண்ணி உவப்பதை விடுங்கள்; அவனைப் பற்றிக் கொண்டு துயரை ஒழியுங்கள். உய்த்தொன்றி யேர்தந் துழவுழுது ஆற்றவும் வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்னொக்கும் மெய்த்தவ மில்லான் பொருளொடு போகங்கட் கெய்த்துழந் தேதான் இடர்ப்படு மாறே. (புறத்-473) 42 ஈடுபாடு கொண்டு ஏரோட்டி உழுது அவ்வுழவின்பின் வித்து இல்லாமலே பயிரை விளையச் செய்தல் முடியுமோ? அவ்வாறு எண்ணல் மெய்யாம் தவநெறி கொள்ளாதவன் பொரு ளும் போகமும் அடைய நினைந்து வருந்துவது போலவேயாம். செந்நெலங் கரும்பினொ டிகலுந் தீஞ்சுவைக் கன்னல் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும் இன்னவை காண்கிலன் என்று பூகமும் முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே. (புறத்-837) 43 செந்நெற்பயிர் கரும்பினும் போட்டியிட்டு உயரும்; இனிய அக்கரும்பு கமுகினை வென்று உயரும்; இவற்றை யான் காணப் போறேன் என்று கமுகு விண்ணில் தவழும். முகில்களிடையே முகத்தை மூடிக் கொள்ளும். குலந்தருங் கல்வி கொணர்ந்து முடிக்கும் அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும் நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப் புலம்பில் பொருடரப் புன்கண்மை யுண்டோ. (புறத்-897) 44 வெடித்து வெம்பிய பாலை நில நடந்து சென்று வளமான பொருள் தேடிவரத் துணிந்தார்க்குத் துயருண்டோ? அப்பொருள் குடிக்குப் பெருமையாம் கல்வியைக் கொண்டுவந்து தரும். வறிய சுற்றத்தாரின் பசிப்பிணியையும் ஒழிக்கும். கெட்டே;ம இதுவெந் நிலையென்று சார்தற்கண் நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம் பெட்டது சொல்லிப் பெரிதிகழ்ந் தாற்றவும் எட்டவந் தோரிடத் தேகி நிற்பவே. (புறத்-425) 45 தீயவர்களோடு சேர்ந்து யாம் கெட்டோம்; இது எம் நிலை என்று நட்பினை இழந்தவர் மிகுபவர். இத்தகையர் தாம் விரும்புவ சொல்லியும் உற்றார் உறவை இகழ்ந்தும் மிக வேண்டாரிடத்துச் சென்றும் நிற்பர். ‘ஏசி நிற்பவே’ என்பது பாடம். தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட எண்ணெய்கொண் டீட்டற் கிவறுத லென்னொக்கும் பெண்மனம் பேதித் தொருப்படுப்பெ னென்னும் எண்ணில் ஒருவன் இயல்பெண்ணு மாறே. (புறத்-980) 46 பரவிய நீரில் கொட்டப்பட்ட எண்ணெயை மீளத் திரட்டிச் சேர்த்தல் எத்தகையது? ஆராய்ச்சி அறிவில்லாத ஒருவன் பெண்டிர் மனத்தை ஒருப்படுத்தி விடுவேன் என்பது போன்றதாம். நீண்முகை கையாற் கிழித்தது மோக்குறு மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறிற் பேணலு மன்பும் பிறந்துழிப் பேதுசெய் தாணைப்பெண் ணைய வணைக்குறு மாறே. (புறத்-981) 47 நெடிய முகையைக் கிழித்துப் போட்டு அதனை முகர்ந்து பார்க்கின்ற செய்கையை ஒப்பதாகும்; விருப்பும் அன்பும் உண்டா கிய போது மயக்கி ஓர் ஆணைப் பெண் வருந்த அணைத்துக் கொள்வது. அந்தகன் அந்தகற் காறு சொல்லொக்கும் முந்துசெய் குற்றங் கெடுப்பான் முழுவதும் நன்கறி வில்லான் அதுவறி யாதவற் கின்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே. (புறத்-986) 48 முன்னே செய்த குற்றத்தைப் போக்கும் அறிவில்லாதவன், அதனை அறியாத மற்றொருவனுக்கு வீட்டின்பம் அடையும் வழி காட்டுவேன் என்பது கண்ணிலான் ஒருவன் கண்ணிலான் ஒருவனுக்கு வழிகாட்டுவது போன்றதாம். யாறொடி யாழ்ஞெலி கோனில வார்கொடிப் பாறொடு பத்தினி மாபோ லொழுகென்று கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்கிவை வேறொ ரிடத்து வெளிப்பட நன்றாம். (புறத்-1044) 49 ஆறு, யாழ், தீக்கடைகோல், நிலவு, படர்கொடி, நாவாய், பத்தினி, குதிரை போலாக வருவோரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று முதிர்ந்த கூத்தி ஒருத்தி மகளுக்குக் கூறினாள். தனித்திருக்கும் இடம் ஒன்றிலே இவ்வாறு கூறினாள். இவ்வறிவுரை விளக்கமாக வரும் பின்வரும் பாடல்களில். ஆய்குரங் கஞ்சிறை வண்டினம் போல்கென்று பாயிர மின்றிப் பயிற்றி மொழிந்தனள் மேவரும் வான்பொருள் தந்துநின் தோணம்பி யாவ ரடைந்தவர்க் கவையும் புரைப. (புறத்-1045) 50 மேலும் குரங்கு போலவும் வண்டினம் போலவும் இருத்தல் வேண்டும் என்று விரிந்து விளக்காமல் அறியக் கூறினாள். அடைதற்கு அரிய மிகு பொருள் தந்து உன்னை விரும்பி எவர் அடைந்தாலும் இவ்வாறாகுக என்றாள் முதிய கூத்தி. வாரி பெருகப் பெருகிய காதலை வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின் மாரி பெருகப் பெருகி யறவறும் வார்புன லாற்றின் வகையும் புரைப. (புறத்-1046) 51 வருவாய் பெருகிய அளவு பெருகக் காட்டிய காதலை வருவாய் சுருங்கிய அளவு சுருக்கி விடுவதால் நீர் பெருகி வரப் பெருகி அது குறையக் குறைய ஓடும் ஆற்றின் இயல்பு போன்றது. எங்ஙன மாகிய திப்பொரு ளப்பொருட் கங்ஙன மாகிய வன்பின ராதலின் எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற் கங்ஙனம் ஆகிய யாழும் புரைப. (புறத்-1047) 52 எவ்வாறு பொருள் வரப் பெற்றதோ, அதற்குத்தக அவ்வாறு அன்பு காட்டும் அளவால், எவ்வளவு பொருள் பெற்றானோ பாணன் அப்பொருளுக்குத் தக மீட்டப்படும் யாழ் போன்றது. கரணம் பலசெய்து கையுற் றவர்கட் கரண மெனுமிவ ராற்றிற் கலந்து திரணி யுபாயத்திற் றிரண்பொருள் கோடற் கரணி ஞெலிகோ லமைவர வொப்ப. (புறத்-1048) 53 காமக் களியாடல் பல செய்து அகப்பட்டவர்க்கு இவளே எம் காதலரணம் என்னுமாறு இரண்டறக் கலந்து பயின்ற தந்திர வழிகளால் பெரும் பொருளைக் கவர்ந்து கொள்ளுதல் வழியால் தீக்கடைக்கோல் போன்றவர். நாடொறு நாடொறு நந்திய காதலை நாடொறு நாடொறு நைய வொழுகலின் நாடொறு நாடொறு நந்தி யுயர்வெய்தி நாடொறுந் தேயும் நகைமதி யொப்ப. (புறத்-1049) 54 நாள்தோறும் நாள்தோறும் வளர்ந்து வரும் அன்பாகக் காட்டிப் பின்னர் நாள்தோறும், நாள்தோறும் குறைந்து படுமாறு நடந்து, நாள்தோறும் நாள்தோறும் வளர்ந்து பின் நாள்தோறும் நாள்தோறும் தேய்ந்தொழியும் மதியினைப் போன்றவர். வனப்பில ராயினும் வன்மையி லோரை நினைத்தவர் மேவர நிற்பமைக் காவர்தாங் கனைத்துடன் வண்டொடு தேனின மார்ப்பப் புனத்திடைப் பூத்த பூங்கொடி யொப்ப. (புறத்-1050) 55 அழகில்லாதவராயினும் மனஉறுதி இல்லாதவரை நினைத்து அவர் தம்மை நாடி வந்து நிற்குமாறு செய்தலால் அவர் வண்டினமும் தேனி இனமும் மொய்க்குமாறு காட்டில் பூத்துநிற்கும் பூங்கொடியைப் போன்றவர். தங்கட் பிறந்த கழியன்பி னார்களை வன்கண்மை செய்து வலிய விடுதலின் இன்பொரு ளேற்றி யெழநின்ற வாணிகர்க் கங்கட் பரப்பகத் தாழ்கல மொப்ப. (புறத்-1051) 56 தன்மேல் உண்டாகிய மிகப் பேரன்புடையவர்களைக் கொடுமை செய்து வலுவாக வெளியேற்றி விடுதலால், வேண்டும் பொருள்களை ஏற்றியும் இறக்கியும் கடற்பரப்பில் ஓட விடும் கல வாணிகர்களின் கப்பலை ஒப்பர். ஒத்த பொருளh னுறுதிசெய் வார்களை யெத்திறத் தானும் வழிபட் டொழுகலிற் கைத்தர வல்குற்பொற் பாவையி னல்லவர் பத்தினிப் பெண்டிர் படியும் புரைப. (புறத்-1053) 57 தருமானமான பொருளுடையராய் உறுதியான மனமுடை யவராய் இருப்பவரை எவ்வகையானும்விடாமல் தெய்வமெனப் போற்றலால் ஓவிய மனைய அவர் மெய்யான கற்புடைய மகளிரைப் போல இருப்பர். வீபொரு ளானை யகன்று பிறனுமோர் மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின் மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு மாவும் புரைப மலரன்ன கண்ணார். (புறத்-1053) 58 பொருளோடு வந்து இழந்து விட்டவனை விட்டுப் பொருள் உடையவன் பக்கம் சார்ந்து அவனை விரும்புதலால் மேய்ந்த நிலத்தில் புல் அற்றுப்போக மற்றோரு புற் புலத்தினை விரும்பும் ஆடு மாடு போன்றவர் ஆவர். நுண்பொரு ளானை நுகர்த்திட்டு வான்பொருள் நன்குடை யானை நயந்தனர் கோடலின் வம்பிள மென்முலை வாணெடுங் கண்ணவர் கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப. (புறத்-1054) 59 சிறு பொருளானைத் துய்த்துப் புறம் விட்டுப் பெரும் பொருள் வளமாக உடையவனை விரும்பிப் பற்றிக் கொள்ளுதலால் அவர்கள் கிளைக்குக் கிளை தாவித் திரியும் குரங்கைப் போன்றவர். முருக்கலர் போற்சிவந் தொள்ளிய ரேனும் பருக்கா டில்லவர் பக்க நினையார் அருப்பிள மென்முலை யஞ்சொ லவர்தாம் வரிச்சிறை வண்டின் வகையும் புரைப. (புறத்-1055) 60 சிவந்த முள் முருக்கு மலர் போன்ற பொலிவுடையவர் எனினும் மிகு பொருள் இல்லார் பக்கம் நினைக்க மாட்டா அவர், வரிவனப்புடன் வளமான சிறகமைந்த வண்டுகளைப் போன்றவர். மக்கட் பயந்து மனையற மாற்றுதல் தக்க தறிந்தார் தலைமைக் குணமென்ப பைத்தர வல்குற் படிற்றுரை யாரொடு துய்த்துக் கழிப்பது தோற்றமொன் றின்றே. (புறத்-1056) 61 தக்கவற்றை அறிந்து கண்டவர் மக்களைப் பெற்று மனையறம் காத்தல் மாண்பு என்பர். ஆனால் பொய்மை யன்புடையவரொடு கூடிக்களித் தொழிப்பது எப்பெருமையும் தாராது. நகைநனி தீது துனிநன்றி யார்க்கும் பகைநனி தீது பணிந்தீயா ரோடும் இவைமிகு பொருளென் றிறத்த லிலரே வகைமிகு வானுல கெய்திவாழ் பவரே. (புறத்-1134) 62 சிறந்த வீட்டுலகம் எய்தி வாழ்பவர் விருப்பு வெறுப்பு பகை என்பவற்றைச் சிறந்த பொருளாக எண்ணி வரம்பு கடவார். ஒப்ப எண்ணி வாழ்வர் பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது கொண்ட விரகர் குறிப்பினி னஃகுப வெண்டறை நின்று வெறுக்கை யிலராயின் மண்டினர் போவர்தம் மக்களு மொட்டார். (புறத்-1170) 63 வறியராய் நின்று வாழ்வு வீழ்ந்தாரை மனைவியரும் மதியார்; சுற்றமும் சுற்றாது; அறிவினரும் கூட உறசைச் சுருக்குவர் பெற்ற மக்களும் ஒட்டி நில்லார். சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர் நல்லவை யாரும் நன்மதிப் பாரல்லர் கல்வியுங் கைப்பொரு ளில்லார் பயிற்றிய புல்லென்று போதலை மெய்யென்று கொண்ணீ. (புறத்-1171) 64 வறுமைக்கு ஆட்பட்டவர் சொல்லத்தக்க நல்லவை சென்று சொல்ல மாட்டாராய் ஒதுங்குவர்; ஆராய்ந்தறியும் நல்லவை யினரும் நன்கு மதியார்; அவர் கற்பிக்கும் கல்வியும் கற்பாரிடத்து அற்பமாகி விடும்; இதனை நீ மெய்யாக உணர்க. தொழுமக னாயினுந் துற்றுடை யானைப் பழுமரஞ் சூழ்ந்த பறவையிற் சூழ்ப விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தாற் பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப. (புறத்-1172) 65 பெருநோயன் எனினும் துய்ப்பு வளமுடையவனைப் பழ மரத்தைத் தேடிக் கூடும் பறவையினம் போலப் பலரும் கூடியிருப்பர். அவன் செல்வம் ஒழிந்தானேல் எவ்வளவு சிறந்தவராயினும், பழ மரம் பட்டு வீழ்ந்த போது பறவைகள் ஓடிப் போவது போலப் போய்விடுவர். பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும் அருளி லறனும் அமைச்சில் அரசும் இருளினு ளிட்ட விருண்மையி தென்றே மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப.” (புறத்-1173) 66 மயக்கமற்ற புலமையாளர் தெளிவுடன் பொருளில்லாத குடும்பத்தையும், பொறுமையில்லாத தவத்தையும், அருளியல் இல்லாத அறத்தையும் தக்க அமைச்சில்லாத அரசையும் இருட்டினுள் இடப்பட்ட இருண்ட பொருள் என்றே கூறுவர். கீழ்க்காணும் வளையாபதிச் செய்யுள்களை அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டுகிறார். “துக்கந் துடைக்குந் துகளறு காட்சிய நிக்கந்த வேடத் திருவடி கணங்களை யொக்க வடிவீழ்ந் துலகியல் செய்தபி னக்கதை யாழ்கொண் டமைவரப் பண்ணி. 67 (சிலம்பு, கனாத்திறம், 13ஆம் அடி, உரை மேற்கோள்) பிறவித்துயரம் ஒழிக்கும் குற்றமற்ற பேரறிவுடைய அருகக் கோலத்து அடியார் கூட்டத்தை மனம் ஒருப்பட்டு உலகியல் முறைப்படி வணங்கிய பின்னர் யாழினை மீட்ட அமைவுறுத்தி. பண்ணாற் றிறத்திற் பழுதின்றி மேம்பட்ட தொண்ணூற் றறுவகைக் கோவையும் வல்லவன் விண்ணா றியங்கும் விறலவ ராயினுங் கண்ணாறி நோக்கிக் கடுநகை செய்வான். 68 (சிலம்பு, கனாத்திறம், 14ஆம் அடி, உரை மேற்கோள்) பண்ணும் திறமும் பழுதறக்கற்று மேம்பட்ட தொண்ணூற்று ஆறு வகைக் கோவையும் தேர்ந்தவன்; விண் வழியே உலாவும் திறத்தவரே எனினும் கண் வழியே நோக்கி மகிழும் ஆற்றலுடையவன். அன்றைப் பகற்கழிந் தாளின் றிராப்பகற் கன்றின் குரலுங் கறவை மணிகறங்கக் கொன்றைப் பழக்குழற் கோவல ராம்பலு மொன்றல் சுரும்பு நரம்பென வார்ப்பவும்.” 69 (சிலம்பு, ஆய்ச்சியர், 3ம் அடி, உரை மேற்கோள்) அன்று பகற்கு வருந்தினாள்; இன்று இராப்பகலாய்க் கன்றின் குரலும் கறவை மாட்டின் மணி ஒலியும் கொன்றைத் தீங்குழல் ஒலியும் கோவலர் இசைக்கும் ஆம்பல் ஒலியும் ஒன்றிச் சேர்ந்து வண்டுகள் போலவும் யாழ் நரம்புகள் போலவும் (கேட்கலானாள்.) யாப்பருங்கல உரையாசிரியர், கீழ்க்காணும் வளையாபதி செய்யுள்களைத் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார்: “நீல நிறத்தனவாய் நெய்கனிந்து போதவிழ்ந்து கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே கோலங் குயின்ற குழலுங் கொழுஞ்சிகையும் காலக் கனலெரியின் வேம்வாழி நெஞ்சே காலக் கனலெரியின் வேவன கண்டாலும் சால மயங்குவ தென்வாழி நெஞ்சே. 70 நெஞ்சமே, கருநிறம்; நெய் தடவல்; மலர் சூடல்; ஓப்பனை மிகுதல் கொண்ட கூந்தல் வாழ்வதாக! நெஞ்சமே, இத்தகு புளைவுகள் கொண்ட கூந்தலும் சூடலும் காலமாம் நெருப்பால் வெந்தழியும். இவ்வாறு காலமாம் நெருப்பில் வேகக் கண்டhலும் நெஞ்சே அதில் மிக மயக்கம் கொள்வதேன்? வாழ்வாயாக! வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக்க ணில்வாழி நெஞ்சே உத்தம நன்னெறிக்க ணின்றூக்கஞ் செய்தியேற் சித்தி படர்தல் தெளிவாழ் நெஞ்சே.” 71 (93ஆம் சூத்திர உரை மேற்கோள்) நெஞ்சே, செய்வினைத் தேர்ச்சியாளர் செய்த திருமுடியைச் சூட்டினார் அவர்தம் யானை மேலாக வீற்றிருக்கும் சீர்மை அழிதலையும் காண்பாயாக. நெஞ்சேஅவ்வாறு அழிதல் கண்டு மயங்காமல் உயர்ந்த அருள் நெறிக்கண் நிலைபெறுவாயாக. நெஞ்சே, அவ்வாறு உயர்ந்த அருள் நெறிக்கண் நின்று ஊக்க மாகச் செயலாற்றினார். சித்திநிலை பெறுவாய் என்பது தெளிவாயாக. வளையாபதியில் கிடைத்த பாடல்களுக்குப் புலவர் இரா. இளங்குமரனார் எழுதிய பொழிப்புரை நிறைந்தது. செய்யுள் முதற்குறிப்பு அகராதி அந்தகன் அந்தகற் 48 அரசொடு நட்டவ 26 அன்றைய பகற்கழிந் 69 ஆக்கப் படுக்கும் 9 ஆய்குரங் கஞ்சிறை 50 ஆற்று மின்னரு 15 இல்லெனின் வாழ்க்கை 35 இளமையு நிலையா 37 இன்மை இளிவா 33 ஈண்டல் அரிதாய் 34 உண்டியுட் காப்புண்டு 5 உய்த்தொன்றி யேர்தந்து 42 உயர்குடி நனியுட் 2 உயிர்க ளோம்புமின் 19 உலகுடன் விளங்க 30 உற்ற வுதிர 39 எங்ஙன மாகிய 52 எண்ணின்றி யேது 22 எத்துணை யாற்று 6 ஒத்த பொருளான் 57 ஒழிந்த பிறவற 32 கரணம் பலசெய்து 53 கல்வி யின்மையும் 29 கள்ளன்மின் களவாயின 13 குலந்தருங் கல்வி 44 கெட்டேம் இதுவெக் 45 சான்றோ குவர்ப்பத் 23 செந்நெலங் கரும்பி 43 சொல்லவை சொல்லார் 64 தகாதுயிர் கொல்வானின் 17 தங்கட் பிறந்த 56 தவத்தின் மேலுறை 21 தனிப்பெயற் தண்டுளி 7 தாரம் நல்விதந் 10 தானம் செய்திலர் 40 துக்கந் துடைக்கும் 67 துற்றுள வாக 14 தெண்ணீர்ப் பரந்து 46 தொழுமக னாயினுந் 65 நகைநனி த்து 62 நக்கே விலாவிறுவர் 25 நாடு மூரு 3 நாடொறு நாடொறும் 54 நீண்முகை கையாற் 47 நீல நிறத்தனவாய் 70 நுண்பொரு ளானை 59 பண்ணாற் நிறத்திற் 68 பருவந்து சாலப் 41 பள்ள முதுநீர்ப் 4 பிறவிக் கடலகத் 18 பீடில் செய்திக 27 பெண்டிர் மதியார் 63 பெண்ணி னாகிய 11 பொய்யன் மின் 12 பொய்யின் நீங்குமின் 28 பொருளில் குலனும் 66 பொருளைப் பொருளாப் 16 பொருளொடு போகம் 20 பொறையிலா வறிவு 8 மக்கட் பயந்து 61 மற்றுத் தொடர்ப்பா 38 மாவென்று ரைத்து 24 முருக்கலர் போற்சிவந் 60 யாறொழ யாழ்நெறி 49 வனப்பிலா ராயினும் 55 வாரி பெருகப் 51 வித்தகர் செய்த 71 வினைபல வலியி 1 வீபொரு ளானை 58 வெள்ள மறவி 31 வேற்கண் மடவார் 36 வளையாபதி - அருஞ்சொற்பொருள் அகராதி அஃகுப - சுருக்குப 63 அந்தகன் - குருடன் 48 அரணம் - பாதுகாப்பு 53 அரணி - தீக்கடைக்கட்டை கோல் 53 அருப்பு - அரும்புகிற 60 அலந்தசினை - வறிய சுற்றம் 44 இகந்து - நீங்கி 19 இணர் - பூங்கொத்து 24 இவறுதல் - சேர்த்தல் 46 ஈட்டல் - திரட்டுதல் 46 ஈண்டல் - சேர்தல் 34 உட்க - அஞ்ச 32 உதிரம் - இரத்தம் 39 உலந்தால் - வறுமையுற்றால் 65 உவர்ப்ப - பழிப்ப 23 ஊனம் - குறை 2 எட்டவந்தார் - வேண்டாதார் 45 எயில் - சிறை 21 ஒருவந்தம் - ஒருதலை, உறுதி 46 ஒள்ளியர் - பொலிவுடையர் 60 கணை - அம்பு 23 கமுகு - பாக்கு 43 கரணம் - காம ஆட்டம் 53 கலம் - கப்பல் 56 கலிங்கம் - ஆடை 39 கன்னல் - இனிப்பு 43 காழ் - வயிரம் 24 குரவர் - பெரியோர் 23 கௌவை - பேரொளி 28 சிகை - கூந்தல் 20 சிறுவரை - சிறுபொழுது 7 சிறை - தேக்கம் 8 சுரும்பு - வண்டு 69 செயிர் - குற்றம் 19 செற்றம் - கோபம் 19 ஞாலம் - உலகம் 5 ஞெலிகோல் 49 தளிப்பெயர்-குளிர்மழை 7 தளை - தடை, சிறை 9 தாயம் - சுற்றம் 31 தாரம் - மனைவி 10 திரணி - பொருள்பெரும் வழிகளில் ஒன்று 53 தீயன்மின் - நெருங்காதீர் 12 துற்று - துய்ப்பு, உணவு 65 துற்றுதல் - உண்ணுதல் 25 துன்னன்மின் - நெருங்கிச் செய்யாதீர் 15 துன்னாது - நெருங்காது 33 துனி - வெறுப்பு 62 தூற்றுமின் - பரப்புங்கள் 15 தெருளல் - தெளிதல் 20 தெறுவது - கொல்வது 18 தொழுமகன் - தொழுநோயன் 65 தோம் -குற்றம் 15 நக்கு - சிரித்து 25 நண்ணுதல் - நெருங்குதல் 22 நந்திய - வளர்ந்த 54 நமரங்காள் - அன்பர்களே 16 நல்லார் - மகளிர் 26 நள்ளன்மின் - பழிக்காதீர் 14 நறை - மணம் 8 நாண்டல் - நாணுதல் 34 நானம் - மான்மதம் 40 நிக்கந்தன் - அருகன் 67 நைய - குறைய 54 படிற்றுரை - பொய்யுரை 61 பரப்பகம் - கடல் 56 பருக்காடு - மிகுபொருள் 60 பருவந்து - துயருற்று 41 பறைக்குறுதல் - முழங்குதல் 39 பாயிரம் - விளங்கக்கூறுதல் 50 பீடு - பெருமை 27 புகா - உணவு 17 புரைப - ஒத்தன 51 புரையில் - குற்றமற்ற 33 பூகம் - பாக்கு 43 பெட்டது - விரும்பியது 45 பெருங்கிளை - பெருஞ்சுற்றம் 63 பேரஞர் - பெருந்துயர் 11 பைத்தரவு - பாம்பின் படம் 61 பொதிந்து - காத்து 16 பொதியறை - மூடியஅறை 6 பொறை - பொறுமை 8 மறவி - மறதி 31 மறு - குற்றம் 19 மன்னல் - நிலைத்தல் 33 மா - குதிரை 24 மான - பெரிதும் 58 மாரி - மழை 51 முருக்கலர் - இலவ மலர் 60 மோககுறுதல் - மோத்தல் 46 யாக்கை - உடல் 1 வம்பப்பொருள் - பொய்ப்பொருள் 32 வளி - காற்று 7 வனசம் - காடு 8 வாரி - வருவாய் 51 வாவி - குளம் 8 விடக்கு - புலால் 18 விரகு - சூழ்ச்சி 26, 63 விருத்தி - வரியிலாநிலம் 26 விறல் - வீறு 34 வீழல் - அழியாத 27 வெண்டறை - வறியர் 63 வெருவந்த - அஞ்சத்தக்க 41 வெறுக்கை - செல்வம் 63, 65 வைகல் - நாள்தோறும் 28 குண்டலகேசி குண்டலகேசி அகவல் 1 - காப்பு கனிவார் முகமும் கருணை விழியும் அருளார் மனமும் அன்புச் சொல்லும் பிறர்க்கே வாழும் பெருந்தகை வாழ்வும் அறமார் பணியும் அணிந்த பகவன் 5 மாசறு காட்சி மன்னவன் சேவடிக் கமலஞ் சிந்தைசெய் வோமே! 2 - அகலக் காவியம் அவனருட் பெருமை அறியச் சொல்லும் பழந்தமிழ்ப் புலவர் பாடிய குண்டல கேசி யென்னுந் தேசுறு மாக்கதை, 10 ஐம்பெருங் காப்பிய மதனுள் ஒன்றாம். ஆயினும், பெயரள வினிலே உயிர்வைத் துள்ளது: சூளாமணிபோற் சொற்சுவை மிக்கதாம்; அகலக் காவியம்; அதிற்பத் தொன்பதே 15 பாட்டு நமக்குப் படிக்க நின்றன; கவிதை போயினும் கதையினை யேனும் தமிழர் அறியச் சாற்றிடு வேனே! 3 - குண்டல கேசி சீர்த்தி யோங்குந் திருநக ரதிலே, கல்வியும் வாணிகஞ் செல்வமுஞ் செழித்து 20 வாழ்ந்தான், இசைபெறு வாணிக மணியே. அன்னவன் பெற்ற மின்னிடை யன்னம், மதிவளர் முகத்தாள்; மலர்தரு விழியாள்; அமுதம் பொழியும் குமுத வாயாள்; புயலும் புகையும் போலச் சுருண்ட 25 கூந்தல் அழகி; குண்டலகேசி என்னும் 1பத்திரை, பதுமினி, சித்திரத் தெழுதொணாத் திருவுடை மாதே! 4 - ஆடி நின்றாள் பருவ மடைந்த திருமா தொருநாள் கொஞ்சுங் கிளிபோற் கூவுங் குயில்போல் 30 தோகை மயில்போல் தோழிய ருடனே மாடத் தின்மேல் ஆடிநின் றாளே. 5 - காளன்மேற் காதல் அத்ததி தெருவில் அரசன் காவலர் திருட னொருவனைச் சிறைப்பிடித் தேகினர். பார்த்தாள் பெண்மணி; பதைபதைப்படைந்தாள்: 35 “எழிலார் வாலிபன், இளந்திரு வுடையான்; என்மனம் விரும்பு மன்மதன் இவனே! இவனோ கள்வன்? இவனென் காதலன்!” என்று திகைத்து நின்றாள் பாவை. “காளன்” என்னும் காளையக் கள்வன்; 40 அரசருக் கினிய அமைச்சன் புதல்வன்; புத்த சமயம் புகுந்து பயின்றும் அடங்கா மனத்தால் அறமல செய்தான். சிறையிட் டிவனைச் சிரம்வாங் கிடவே வேந்தன் பணித்தான்; வினைப்பய னென்னே! 45 கோவின் காவலர் கொண்டு சென்றாரே. 6 - மணாளன் ஒருவனே காத லாலே கலங்கிய நங்கை உடலம் வெளுத்தாள்; உள்ளஞ் சோர்ந்தாள்; நுவலமாட் டாத நோய்கொண் டயர்ந்தாள். கண்ணைக் கவர்ந்த கள்வனைத் தவிர 50 வேறு நினைப்பெலாம் வீணென விடுத்தாள்; செல்வ வாலிபர் சொல்லையும் வெறுத்தாள்; காதலன் விடுதலை காண வேண்டிப் 1போதி நாதனைப் பூசனை செய்தாள். பெற்றார் திருமணம் பேசும் போதெலாம், 55 “மனத்திற் கிசைந்த மணாளன் ஒருவனே; அவனை யன்றி யெவனையும் பாரேன்” என்றுதம் உள்ளம் நன்றுரைத் தாளே. 7 - போகம் புசித்தார் மந்திரி முயன்றான்; மாசறு தந்தையும் அரசனை வேண்டினான். ஆண்டவன் கருணையால் 60 காளன் விடுதல் கண்டான்; கண்டு கன்னி மகிழ்ந்தாள், கடிமணம் புரிந்தாள்! செல்வம் பெருகிய செட்டி மகிழ்ந்தே “எனதிளஞ் செல்வர் இனிதுவாழ் கெ”ன்றே இல்லந் தந்தான்; செல்வந் தந்தான்; 65 கவலை யற்றுக் காதலர் நாளும் புதுப்புதுப் போகம் புசித்தனர் ஆங்கே! உலகை மறந்தார்; உடலுக் கினிய சுகமே நினைந்து, சுதியுடன் இசைபோல், இருவரும் அன்பால் ஒருவரே யானார்; 70 கணமள வேனும் இணைபிரி யாமல் கரையிலாக் காமக் கடல்குளித் தாரே. 8 - அரைநொடி இன்பம் துய்த்துக் காமந் துடைப்போ மென்னல் அனலை நெய்யால் அணைப்பது போலாம். நினைவறப் புணர்ந்ததை நீக்குவே மென்பார், 75 புனலாற் புனலின் போக்கணைப் பவரே! வேல்விழி தாக்கத் தோல்வியுற் றிணங்கிக் காமத் தீயில் 2வேமிம் மாந்தர் எத்தனை போக துய்க்கினு மென்னே? அவர்நுக ரின்பம் அரைநொடி யின்பமே! 80 நில்லா யாக்கை நிகரவே, யதன்பால் ஊறுங் காமமும் வேறுபா டுறுமே! மாந்தர் ஆசை மண்டல மதனில் விருப்பும் வெறுப்பும், விழைவும் சோர்வும், இனிப்புங் கசப்பும், எரிப்புங் குளிரும் 85 அலைகளைப் போலே ஆடிப் புரளும்; இன்றுநே சித்தவர் இன்னொரு நாளே கொடும்பகை கொதிக்குங் கூற்றுமா வாரே. 9 - கலக்கம் காதலும் பொறாமையும் கலந்த நாகன் என்னுஞ் செல்வன் இயற்றிய சூதால் 90 கேசியுங் காளனு நேசித் திருந்த வாழ்விற் கலக்கம் வந்ததும் விந்தையோ? கூடலே யுவந்து நீடிய காதல், கூடல் சுருங்கி ஊடல் பெருகவே, ஊடலி னூடே உரைகள் வளரவே, 95 உரைக ளுடனே குறைகள் கூறவே, பேச்சுத் தடிக்கவே, பெண்ணணங் கொருநாள், “ஒழுக்க மென்னும் உயர்நல முடைய செவ்ன் அருமைச் செல்வி, யானே! நீயோ, ஒழுக்க நிலைகெட் டலைந்து 100 கடுஞ்சிறை வருந்திய கள்வன்” என்றாள். “நானுன் கணவன், நீயென் மனைவி; என்னையா கள்வன் என்றனை பெண்ணே? பாதகி, உன்னைப் பழிவாங் குகிறேன்” என்றுட் சினத்தால் எரிமனக் காளன், 105 போலிச் சிரிப்பாற் பொழுதைப் போக்கிக் காலம் பார்த்துக கண்விழித் தானே. 10 - மலைக்குச் செல்லல் உட்சினங் கொண்ட உறவெத் தனைநாள்? உதட்டு நேயமும் உட்சின முறுவலும் புழுவுளே துளைத்த பழமெனப் போமே! 110 காளன் ஒருநாள், “கனியிளம் பாவாய், செல்வச் சீமான் செல்விநீ; யின்றுன் அணிமணி வரிசையாய் அணியுற வுலகின் அரம்பைபோல் என்னுடன் அழகாய் வா வா” என்றனன்; சரியெனச் சென்றனள் பேதை! 115 காளனும், சரிகை கட்டித் தன்னை மாரவேள் போலவள் மதித்திட நின்றான்! குண்டல கேசியின் கோமள வனப்பைக் கண்டு கள்ளக் களிநகை பூத்து, “கண்ணே, அழகுக் கரும்பே, உத்தமப் 120 பெண்ணே, எனது பெருமட மானே, துயர்சிறை நீங்கித் தூக்கு மேடையைத் தப்பினேன், போதி அப்பன் அருளால்! ஆதலால், இன்றே அவனை வணங்கிப் படையல் வைக்கப் பருவதச் சிகரம் 125 ஏறிச் செல்வோம், என்னுடன் வா”வெனக் கூட்டிச் சென்றான்; கோதைசென் றாளே! 11 - வஞ்சனைக்கு வஞ்சனை மலைமுடி மேலே, மணாளர் சென்றதும், சிலைபோற் சற்றே சிந்தனை செய்து, காதலன் முகத்திற் கடுமை காட்டி, 130 “கள்ளீ, நீயெனைக் கள்வன் என்றாய்! ஆம்யான் கள்வன், அழகுக் செருக்கீ....., மண்டைக் கருவம் கொண்ட பேதையே! கள்வன் இன்றுனைக் கொள்ளை யடித்துக் கொல்வான், கொடுமனக் கசடீ” என்றான். 135 தீப்பொறி பறக்கும் சினக்கண் உருட்டி நிற்குங் கணவனைப் பொற்கொடி பார்த்தாள்; சற்றே கலங்கிச் சங்கடப் பட்டாள். பிறகுதன் னுள்ளே பேசிக் கொண்டே, “கணவனைப் பணிதலே கற்பிற் கழகாம்; 140 தேவரீர் செய்க திருவுளம்; ஆனால், என்னைக் கொல்லுமுன் என்னுயிர்க் கணவரே, தம்மை யடிளாள் மும்மை சுற்றி வணங்கி நிற்கும் வரந்தர வேண்டும்” என்றலுங், கள்வன் இணங்கினான்; அந்தக் 145 கள்ளியும் வலம்வரக் காட்டி, அவனைத் தந்திர மாகத் தள்ளினாள். அந்தோ.......! “புத்தா சரணம்......... போதி நாதா, வஞ்சனை செய்ய வந்தேன்; என்னை வஞ்ச நினைவே வதைத்தது; செய்த 150 தீவினை, விளைத்தது தீப்பயன் எனக்கே; மன்னித் துனது மலரடி சேர்ப்பாய்” என்று காளன் இறைவனை நினைந்தே, இருண்ட மடுவி லுருண்டு பயங்கர மௌனப் பாழில் மறைந்தொழிந் தானே! 12 - துறவு 155 “தற்கொல் லியினை முற்கொன் றேன்” என ஒருநொடி நகைத்தாள்! மறுநொடி, “அந்தோ! கணவனைக் கொன்ற கள்ளியா னேனே. என்ன தீவினை யியற்றி முடித்தேன்? இந்த வினைப்பழி என்னை விடுமா? 160 என்ன செய்வேன், எனது நாதரே? நானும் உம்முடன் ஏனிக் கணத்தில் விழுந்துசா வாமற் கழுந்துபோ லிருக்கிறேன்?” என்று கண்ணீர் இறைத்தாள் பேதை. அந்தியில் புத்த நந்தி முனிவர் 165 புத்தசங் கத்திற் புகுவெனத் தூண்டினார். பிறகவள் உலகிற் பிறந்த பயனை அடைந்தே சாதல் அழகெனக் கொண்டாள். பிறந்தவ ரெல்லாம் இறந்து வினையாற் பிறந்து பிறந்துயிர் துறந்துமண் ணாவார். 170 சுற்றும் உலகில், சூழும் இயற்கையில், கற்றும் கேட்டும் கண்டும் பெற்ற பொருளிற், செல்வ போக மதனில், எதுவே நிலையாம்? எல்லாம் ஓட்டம்! இன்றுளார் நாளை யில்லை யாவார்! 175 1குழந்தை யிறந்து குமரி யாகிக் 1குமரி யிறந்து குலமக ளாகிக் குலமகள் தாயாய்க் குலச்சுமை தாங்கித் தாயும் பாட்டியுமாய்த் தளர்ந்து தளர்ந்து புதைகுழிக் கிரையாய்ப் போய்மண் ணாவதே 180 உடலின் கதையாம்! உயிரின் கதையோ....... மனத்தி லடைந்த மாசுக ளெல்லாம், பற்றாய்ப் பெருகிப் பந்த தொந்த விகாரமாய் வளர்ந்து, வெவ்வினை பெருகி, சித்தமும் புத்தியுஞ் சிதைந்து கெட்டு, 185 மோகங் கொண்டு மூட மதியால் ஆவியும் விடுதலை அடைவதிங் கிலதால், மீண்டும் கருமம் வேண்டும் பலனை அனுபவித் தனுபவித் தயர்வதை எண்ணின் ஆஆ......துன்பம்; ஆஆ,........பிறவி.........! 190 வேதனை தப்பி விடுதலை பெறவே உடலையும் உலகையும் உள்ளே துறந்து, அருளார் வாழ்வை அடைந்த சிலரே உத்தம முத்தர்! உற்றவர் வழியில் செல்வேன்; இந்தச் சென்மiத் தொல்லையைக் 195 கொல்வேன்!” என்று குண்டல கேசி ஆரியாங் கனைகள் அருகனை வணங்கும் தவமடஞ் சேர்ந்துபின் சத்துவ போதராம் புத்தர் சேவடி புகலெனப் புகுந்தாள். புத்த பிக்குணி, புனித விரதையாய் 200 மாசு மறுவற மனதைக் காத்துப் புலன்களை யடக்கிப் புத்தியை வென்று, வாழ்வை யெல்லாம் வன்றவ மாக்கினாள். வெயிலுடன் மழையும், வெப்புடன் குளிரும், பசியும் விருந்தும், பழிப்பும் புகழும் 205 சமமெனத் தாங்கித் தன்னூண் சுருக்கி, காற்றையே நோக்குங் கப்பலைப் போலே உயிரைச் சார்ந்த உடலைப் போலே சுத்த சித்தனாம் புத்த தேவனின் அருனையே சார்ந்து மருளை விலக்கினாள்! 210 தீக்காய் பவர்புகைத் தீங்கு நோக்கார்; நோயர் மருந்தின் கசப்பை நோக்கார்; சுடச்சுட நோற்குந் தூயவர் அதன்பால் வருமிடர் நோக்கார்; வருத்தம் பாரார்; நல்ல தாகு நலமே நோக்கார்; 215 தீய தாகுந் தீமையே நோக்கார்; நலந்தீ தற்ற பொலங்கொள் சமதை காக்குந் தூயர் கனலுறத் தவஞ்செய் சங்க மெய்திய நங்கை கேசி, வினைகெட, வினையின் விளைமுளை கெடவே 220 ஆசா பாசம் அறுந்துக நோற்று, மாசறு மனமும் தேசுறு ஞானமும் பெற்றாள்! புத்த பிரானையுங் காணப் பெற்றாள்! பிறப்பின் பெரும்பயன் யாவும் 224 பெற்றாள்!--பெரிய பிறவாப் பெருமையே! முற்றிற்று குண்டலகேசி நாடகம் முதற் காட்சி (மந்திரி வித்தகன், மகன் காளன் போக்கையெண்ணி, புத்தர் அவனுக்கு நல்ல புத்தி கொடுக்க இறைஞ்சுகிறான்.) வித்தகன்: விருத்தம் (இராகம் பூரிகல்யாணி) ஆருயிர் உலகுக் கெல்லாம் அன்புடன் அருளு மேவிக் காருயர் வானம் போலக் கருணையே புரிந்த வள்ளால், பாருயர் இன்பமே தன் பணிதரும் இன்ப மானாய், சீருயர் புத்த தேவா, சேவடி பணிகின் றேனே! போதிநாதா, அகளங்கா! உன் அருட்குடைக் கீழ் எனது குலம் தழைக்கிறது; எத்தனையோ பெரியார் அதில் விளங்கினார்கள். எனது குலப்பெயரைக் கெடுக்க இந்தக் காளன் வந்தானே! இறைவா, அவனுக்கு நல்ல புத்தி வரச்செய்! மூத்தமகன் என்று செல்லமாக வளர்த்தேன்; அறநூல்களைப் பயிற்றினேன். இருந்துமென்ன? பாயசக் கரண்டி இனிப்பறியுமா? படித்தென்ன? ஒழுக்கமில்லையே! இன்று வரட்டும்.... இதோ வருகிறான். (காளன் சீழ்க்கை யடித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் வருதல்.) காளன்: இராகம் மாண்டு திரை ஏக தாளம் இருக்கு மட்டும் இன்ப மாக வாழுவோம்; இனிய பாட்டும் இனிய கூத்தும் காணுவோம்! வித்தகன்: காளா, என்ன பாட்டு? என்ன சீழ்க்கை? ஏன் இத்தனை நாழிகை? காளன்: அப்பா, இதெல்லாம் கேட்பா யென்று தானே பாட்டாகப் பதிற் சொல்லி வருகிறேன்.. இருக்குமட்டும்.... காணுவோம்...! (பாடுகிறான்) வித்தகன்: சை, அதிகப்ரசங்கி! போதும் நிறுத்து பாட்டை...! காளன்: முழுதும் பாடி நிறுத்துகிறேன் அப்பா... இருக்குமட்டும், இருக்குமட்டும்... நொறுக்க உண்டு பெருக்கச் செல்வத் தேடுவோம்! நூறு நூறு கலைரசத்தை நுகருவோம், நுகருவோம், நுகருவோம்...! வித்தகன்: காளா, போதும் பாட்டு! உன்னை இதற்கா பெற்று வளர்த்தேன். படிக்க வைத்தேன், ஆளாக்கினேன்? அந்தோ, என் குலப்பெயரைக் கெடுக்க வந்த துரோகியே, ஊர்க் காலிகளுடன் உனக்கென்னடா நிநேகம்? ஊதாரிகளுடன் சீழ்க்கையடித்து திரிவதேன்? நீ ஏதாவது தீயவழிகளில் அகப்பட்டு, என் மானத்தைக் கெடுக்கப் போகிறாய்; தீயருடன் சேராதே! காளன்: அப்பா, என் நேயரைத் தீயர் என்றால் எனக்குக் கெட்ட கோபம் வரும். நான் கலா ரசிகன்; நல்ல பாட்டுக் கேட்கவே அவர்களுடன் கூடுகிறேன். (இராகம் புன்னாகவராளி) (ஆதி தாளம்) இளமைக்கேற்ற விருப்பம்--என் இச்சைக் கேற்ற செய்கை; வளமைக்கேற்ற போகம்--அப்பா வளர்வ தென்ன குற்றம்? வித்தகன்: என்னை எதிர்த்தா கேள்வி கேட்கிறாய்? நீ மனிதனா? கூர்மையான மதியும், உயர் கொள்கை யுள்ள சொல்லும், நேர்மையான நடையும்--கொண்ட நீதியாளன் மனிதன்! உனது நடை சுத்தக் கோணல்! காளன்: எனது நடையா கோணல்? இதோ பாரப்பா, நான் காளன்; மயிலைக் காளைபோல நடக்கிறேன்; டட், டக் டக், பார்த்துக்கொள்! வித்தகன்: தலையரட்டை பிடித்த பயலே; என் முன் நிற்காதே, போடா! காளன்: அப்பா, அப்பா, தயவு செய்து நூறு வராகன் தா, ஓடியே போய் விடுகிறேன். இரண்டு நாள் உன்முன் தலை காட்டவே மாட்டேன்.; தயவு செய்து நூறே வராகன்! வித்தகன்: என் எரிச்சலைக் கிளப்பாதே! உனக்கு இனி ஒரு காசு தரமாட்டேன். இனி என்னை ‘அப்பா’ என்னாதே! காளன்: பிறகு யாரை, ‘அப்பா’ என்பேன்? வித்தகன்: இப்படித் தத்தாரிப் பிள்ளை எனக்குத் தேவையில்லை; வெளியேறு; தாலிக் கூட்டத்துடன் எப்படி யாவது நாசமாய்ப் போ! என் மானத்தையும் சொத்தையும் அழிக்க வராதே! காளன்: அப்பா, நீ மறுத்தாலும் நான் உன் பிள்ளை; என் சொத்து எனது. ஏராளமான பணம் இருக்கிறதே; எனக்கு நூறு வராகன் கொடுத்தால்... வித்தகன்: போடா வெளியே; பதரே, அதமா., போ! (டப்பென்று கதவை அடைத்து விடுதல்.) காளன்: (வாயிலிருந்து) அப்பா, நன்றாகப் போகிறேன். நண்பர் என்னை ஆதரிப்பார். இரண்டாங் காட்சி (காளனைத் தீயநண்பர் பயன்படுத்திக்கொண்டு ஒரு வீட்டில் திருடுகிறார்கள்.) 1 போக்கிரி: காளா, என் அப்பன் பணந் தராவிட்டால் என்ன? ஹ, ஹ, ஹ, பார் வேடிக்கை? ... நம்மை நம்பப்பா! ஊரில் உள்ள பணமெல்லாம் நமது பணந்தானே? வை கை! இத்த வீட்டில்...உன் அப்பனுக்கு நண்பன் ஆரியநாதன். நீ மட்டும் ஓசைப்படாமல் உள்ளே சென்று கொல்லைக் கதவைத் திறந்து வைத்துவிடு போதும். மற்றதெல்லாம் எங்கள் வேலை. காளன்: கெhல்லைக் கதவு திறந்தே வைத்திருக்கிறேன். ஆனால், அண்ணா, எனக்குப் பயமாயிருக்கிறது. 1 போக்கிரி: பயமா? எதற்கு? யாருக்கு? சாமிக்குக்கூடப் பயமில்லை. கழுத்துக்கு மிஞ்சிய சிட்டையில்லையே? நண்பா, நம்மை நம்பு; தைரியமாயிரு! இதோ, அரைமணி நேரத்தில் பை பையாகக் கொண்டு வருகிறேன். நாளை இன்பச் சிகரத்தில் ஏறி நடனமாடுவோம். நமது பொன்னிக்கு கை நிரம்பக் கொடுத்துவிட்டால், நாளெல்லாம் ஆடல் பாடல் அமளியாக அனுபவிக்கலாம். காளன்: நான் வெளியேதான் இருப்பேன். 2 போக்கிரி: அட தொடை நடுங்கி! நமது உபதேசம் பெற்றும் இன்னும் பயமா? 2 போக்கிரி: போதுமண்ணே, காரியத்தைப் பார்.... வா! (இருவரும் உள்ளே சென்று திருடுதல்.) காளன்: தந்தை சொல்வது மெய்தான். இவர்கள் உறவு தீதே. நாளை இவர்களை விலக்கிவிடுவோம். (திரைக்குப் பின்:) ஐயோ கள்ளர், திருடர்! பிடி பிடி டடடேய், விடாதே! ஹா, அதோ, இதோ! அடி, பற்று, கட்டு! ஐயோ போய் விட்டான்! இ.தோ இவனே கள்ளன்; கூட்டுக் களவாணி; பிடி, அடி, போடு விலங்கு! (இச்சமயம் உள்ளே பெருஞ்சத்தம்; திருடர் சொத்தை எடுத்தோடல். காவலர் காளனைப் பிடித்து விலங்கிட்டுச் செல்லல்.) காளன்: ஐயா, நான் திருடனல்லேன். எனக்கொன்றும் தெரியாது. காவலர்: தெரியாதா? எல்லாம் அரசன் முன்; கள்ளா, அகப்பட்டாய்; உன் கூட்டுக் களவாளிகளின் உளவைச் சொல்லா விட்டால் கழுத்தை சீவி விடுவோம். காவலர்: அடே விடாதே கட்டு, தூக்கு! ஒரே தூக்! காளன்: ஆ! எனக்கோ இப்பழி வந்தது? தந்தையே, உம்சொற் பலித்தது. காவலர்: பேசாதேடா, கைதி, வா! (இழுத்துச் செல்கின்றனர்.) மூன்றாங் காட்சி (அரசவை: அமைச்சர் முதலியோர்: அரச வாழ்த்துச் பாடுகின்றனர்.) எல்லாரும்: (இராகம் காப்பி) (ரூபக தாளம்) பல்லவி பாலெல்லாம் போற்று கின்ற பரமனைப் பணிகுவோம் (பா) அநுபல்லவி சீ...ரோங்கி...எங்கள் வேந்தன் செயம் பெருகிடப் பயம் விலகிட (பா) சரணம் அறமும், அறிவும், அன்பும், இன்பும் அருளும், பொருளும் ஓங்கவே... திறமையான தெய்வ நீதி... திகழ மகிழ அகிலம் புகழப் (பா) வீரசேன மகாராஜன் வெல்க! (காளனைக் காவலர் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.) அரசன்: அமைச்சர்காள், இறைவன் அருளாலும், உங்கள் துணையாலும் நமது செங்கோல் வெற்றி மேல் வெற்றியே பெற்றது. நேற்று வரையில், நமது குடைக்கீழ் கொலை களவு கள் விபசாரம் இவை இல்லை. இன்றோ...ஹா...என்ன கொடிய திருட்டு! வித்தகரே, உம் மகனோ இப்படிச் செய்தான்? வித்தகன்: அரசே, அவன் எனது சொற் கேளாது தடித்தான்; தீயருடன் சேர்ந்து குடித்தான்; நேற்று என் நண்பர் வீட்டிற் கொள்ளையடித்தான். இனி அவன் என் மகனல்லன்; தங்கள் கைதி. அரசன்: காளா, உன் மதி ஏன் இப்படிப் போனது? உன்னுடன் திருடியோர் எங்கே? பொருள் எங்கே? சொல் நேர்மையாக! காளன்: அரசே, விதி மதியைக் கெடுத்தது பயனை அனுபவிக் கிறேன். என்னைக் கெடுத்த திருடர் பொருளைக் கொண்டோடினர். எனக்கு வேறொன்றுந் தெரியாது. அரசன்: தெரியாதா? ஹும்...உன் திருட்டுக்குச் சிறை! கள்வரும் பொருளும் வநது சேர வேண்டும்! மந்திரி, இன்னும் ஐந்தே நாள்; பொருள் உரியவரிடம் சேர வேண்டும். இக்கள்வன் உள்ளதைச் சொல்லாவிட்டால், தலை தப்பாது. காவலர்காள், இவனைக் கொண்டுபோய்ச் சிறையிடுங்கள்! காவலர்: ஆணை...ஒரே தூக்க...வா கள்ளா! (விலங்கிட்டு இழுத்துச் செல்லல்) காளன்: ஹா புத்த தேவா, உனது “தம்மபாதம்” படித்தும் மதிகெட்டேனே! அரசன்: அமைச்சர்காள், நம் நண்பர், வணிக மணி உலகறிந்தவர்; அவர் துணையைக் கொண்டு துப்பறிக! காளன் மனந்திருந்தி, பொருளும் கிடைத்தால், விடுதலை. அமைச்சர்: அரசே, எங்களால ஆனதை உடனே செய்கிறோம். நீதி முறைப்படி நடக்கட்டும்! அரசன்: இனி, நாளை கூடுவோம்; சபை கலைக! நான்காங் காட்சி (குண்டலகேசி கன்னிமாடத்தில் தோழியருடன் பாடிக்கொண்டே பந்தாடல்.) எல்லாரும்: (இராகம் குந்தலவராளி) (திஸ்ர ஏக தாளம்) வந்து வந்து செல்லு கின்ற வாழ்க்கை மின்னல் என்னவே, உந்தி உந்தி, முந்தி முந்தி, ஓங்கிப்பந் தடிப்பமே! ஆதிரை: அடி குண்டலகேசி, அன்னத்தைப் பாரடி! உன் பின்னே நடைகற்று வருகிறது! தோழி: அடி குண்டலகேசி, உன் கூந்தலைக் கண்டு இந்த மயில் தோகைவிரித் தாடுகிறதே! குண்டலகேசி: தோழிகாள், என் மனமயில் அப்படி ஆடவில்லையே! ஆதிரை: ஆடும் ஆடும், கொஞ்சம் பொறு! குண்டலகேசி: எதற்கெடுத்தாலும் உனக்குக் கேலி தானம்மா; ஆட்டத்தைக் கவனி! பொன்னணி குலுங்கவே பொலங் கொடியைப் போலவே, மின்னிடை துவள வேக மாகப்பந் தடிப்பமே! ஆதிரை: இந்தப் பாட்டில் உன்னையே படம் பிடித்து விட்டாயே, குண்டலகேசி! தோழிமார்: வெற்றி வெற்றி யென்று நாம் விரும்பி யன்புமேவியே, ஏற்றி ஏற்றி இங்கு மங்கும் ஏகிப்பந் தடிப்பமே! ஆதிரை: வென்றாள் குண்டலகேசி; ஆட்டம் முடிந்தது. (எல்லாரும் கைதட்டல்) குண்டலகேசி, அதோ நிறைமதி மரக்கிளையில் மறைந்து உன் முகத்தைப் பார்க்கிறது: தனக்குப் போட்டி வந்ததென்று திகைக்கிறது போலும்! குண்டலகேசி: தோழீ, முல்லைத்தென்றல் வீசி, அந்தி வந்தது; அந்தி மகிழச் சந்திரன் வந்தான்! ஆதிரை: உனக்கும் ஒரு சந்திரன் வருவான்; பயப்படாதே! (இச்சமயம் காவலர், காளனைத்தெருவோடு இழுத்து வருகின்றனர்; காளன் கன்னிமாடத்தையே பார்க்கிறான்.) காவலர்: கள்ளா, காளா, கண் எங்கே பார்க்கிறது? ஹ, கன்னி மாடத்தில் யாரைப் பார்க்கிறாய்? ஹும்! காளன்: காவலர்காள், மரியாதை! நான் மந்திரி மகன். காவலர்: நீ ராசாமகனானால்தான் என்ன? நீ எங்கள் கைதி; நேரே நட! (செல்லல்) குண்டலகேசி: (மனதுள்) ஆ! யாரந்த அழகன்...? அவனையேன் காவலர் கொண்டு செல்கிறார்கள்? ஆ, அவன் என் உள்ளங்கவர் கள்ளனே! ஆதிரை: குண்டலகேசி, தெருவில் என்ன பார்க்கிறாய்? சந்திரன் இல்லையே, அதோ காவலர் கொண்டு செல்வது! கள்வன். குண்டலகேசி: போம்மா, சும்மா! ஆதிரை: எங்கே என்னைத் தூது போகச் சொல்லுகிறாய்? குண்டலகேசி: தோழீ ஆதிரை, அந்தக் காலவருடன் செல்லும் அழகன் யார்? அறிந்து வாராயோ? ஆதிரை: நன்றாக அறிந்து வருகிறேன். ஆனால், அவனைப்பற்றி உனக்கென்ன விசாரம்? குண்டலகேசி: கேள்வி கேட்காதே; குறும்பு செய்யாதே; சொன்னதைச்செய்! (தாய் பொன்னி வருகிறாள்) பொன்னி: அம்மா குண்டலகேசி, புத்த நமஸ்காரஞ் செய்ய வா! விளக்கேற்றியாயிற்று. குண்டலகேசி: இதோ வருகிறேனம்மா. தோழிகாள், செல்வோம்! ஐந்தாங் காட்சி (பூசையறையில் பொன்னியும் குண்டலகேசியும்.) பொன்னி குண்டலகேசி, புத்தபகவான் உனக்கு நல்ல கணவனைத் தரட்டும். புத்தநமஸ்காரம் சொல்லி மலர் தூவி வணங்கம்மா! (பாடுகிறாள்) குண்டலகேசி: (“நாதவிந்துகலாதி” என்ற மெட்டு) பூரணானந்த ஜோதீ-நமோ நம புத்த சத்குரு நாதா நமோ நம பாலெ லாம்புகழ் மாதா நமோநம--முனிராஜா! தீர ஞானப்ர காசா--நமோ நம ஜீவ காருண்ய நேசா--நமோ நம மார னஞ்சிடுந் தேஜா நமோ நம--பகவானே! புத்ததேவா, இறைவா, என் மனங்கொண்ட அந்த அழகனையே எனக்குந் தந்தருள்! (மணியடித்தல்) எல்லாரும்: ஓம் நமோ நஸ்ஸ, பகவதோ அரஹதோ ஸம்மா ஸம் புத்தஸ்ஸ, புத்தா சரணம்! அறமே சரணம்! அறவீர் சரணம்! (செல்லல்) ஆறாங் காட்சி (வணிகமணியும் பொன்னியும் மகள் நிலையைப் பற்றிப் பேசுதல்) வணிக: பொன்னி, குண்டலகேசிக்குச் சில நல்ல வரன் களைப் பார்த்தேன்; உன்னிடமும் சொன்னேன். பொன்னி: நான் அவளிடமும் எல்லாம் சொன்னேன்; அவள் ஒரே பிடிவாதமாகத் திருமணமே வேண்டா மென்றாள்; பிறகு பித்துப் பிடித்தது போல் தனியே உம்மென்று உட்கார்ந்தாள்; பிறகு ஏதோ பிதற்றினாள். இப்போது ஊணுறக்கமில்லை; ஆடல் பாடல் இல்லை; யாழ் புளித்ததாம்; பால் கசந்ததாம்; பிதற்றுகிறாள்! ஆதிரை மூலம் காரணமெல்லாம் அறிந்தேன். இந்த மாதமே கலியாணம் செய்ய வேண்டும். வணிக: எல்லாம் வயதின் வக்கிரமே! பொன்னி, நான் பார்த்த மாப்பிள்ளைகள் தங்கமானவர்கள். மதுரைக் கணபதிக்கென்ன? பொன்னி: கணபதிக்கு யானை உடம்பாம்; பானைத் தொந்தியாம்; எறும்புக்கண்ணாம்! ‘அவன் வேண்டா’ என்கிறாள் குண்டலகேசி. வணிக: கும்பகோணம் நாகப்பனுக்கென்ன?... செல்வச்சீமான்; இவள் மேல் உயிராயிருக்கிறான். பொன்னி: கும்பகோணம் நாகன் வம்புக்காரனாம்; கம்பி நீட்டுவானாம்; ஆடல்பாடல்தான் மிச்சமாம்! வணிக: அட்டைசுவரியம் அழகப்பன்? பொன்னி: அட்டைசுவரியம் அழகப்பனுக்கு முட்டை மூளையாம்; கெட்ட சகவாசமாம்; துட்ட நடத்தையாம். வணிக: இரத்தினம் பிள்ளை சொக்கு மன்மதன் போலிருக் கிறானே! பொன்னி: சொக்கு மன்மதக் குரங்காம்; சேட்டைதான் மிச்சமாம். வணிக: இப்படி எல்லாரையும் தட்டிக் கழித்தால் என்ன செய்வது? அவள் நோக்கந்தான் என்ன? பொன்னி: அவள் நோக்கத்தை ஆதிரையும் சொன்னாள்; நேற்று அவளும் சால்லி விட்டாள்; கனவிலும் “காளன், காளன்” என்று புலம்பினாள்... வணிக: காளனா? வித்தகன் பிள்ளையா? அந்தக் கள்வனா? திருடனுக்கா என் மகளைத் தருவேன்? அரசர் அவனைச் சிறையிலே வைத்திருக்கிறார். அவனுடன் சேர்ந்த கூட்டுக் களவாணிகளைக் கண்டு பிடிக்க வேண்டும்; திருட்டுச் சொத்தை மீட்க வேண்டும். அரசர் ஆனைப்படி நானும் மந்திரியும் முயன்று கொண்டிருக்கிறோம். அவன் திருந்தி, விடுதலையாகி, அவமானம் நீங்கிய பிறகன்றோ ஆள்? இவள் புத்தி இப்படி மண்ணானதே! பொன்னி: நானும் சொல்லிப் பார்த்தேன். மனங்கொண்ட மணாளனுக்கே வாழ்க்கைப்படுவாளாம். காளனைத்தான் அவளுக்குப் பிடித்திருக்கிறதாம். அவன் நிரம்பக் கற்றவனாம்; மாசற்றவனாம்; தேசுற்றவனாம். யாரோ பொல்லாதவர்கள் அவனைக் கெடுத்து விட்டார்களாம். காளன் நல்லவனாய் விட்டானாம். புத்ததேவர் கனவில் வந்து சொன்னாராம். பிதற்றுகிறாள்! வணிக: அரசன் மகிழ்ந்தால், காளன் திருந்தியிருந்தால், என் நண்பன் வித்தகன் சம்மதித்தால் இந்தக் காரியத்தை நடத்துவோம். பொன்னி: காரியம் விரைவாக நடக்கட்டும். நல்ல செய்தி கேட்டதும் அவளிடம் சொல்லுகிறேன். பெண்ணின் பிடிவாதம் கொண்டதை விடாது. வணிக: இதோ செல்கிறேன்: செய்தியனுப்புகிறேன். ஏழாங் காட்சி (காளன் சிறையில் புலம்பல்.) காளன்: தீயரைத் தொட்டேன்; கெட்டேன்; அல்லல் பட்டேன்; கலையின் மோகத்தால் கொலைகாரர் வலையிற் சிக்கினேன்; உட்கினேன். நானங்கே நின்றதும் பிசகே; பனையடியிற் பாலுண்டாலும் கள்ளென்னும் உலகம்! இறைவா, என்னை விடுவி! இச்சிறையில் உடலே உள்ளது. மனமோ ஓர் அழகிற் சிறையுண்டு துடிக்கிறது. தெருவிற் செல்லும்போது, கன்னி மாடத்திலிருந்து என்னையே பார்த்த நங்கை யாவளோ?? அவளிடம் ஏன் என் உள்ளம் சிக்கியது? (இராகம் மோகனம்) (ஆதி தாளம்) மேகத்திலே வளர் மின்னல் போல்--அந்த மெல்லிய பூங்கொடி என்மன மோகத்திலே வளர் கின்றனள்--அவள் முகமலரை யினிக் காண்பனோ! எனக்கும் விடுதலையாகி, விருப்பமும் நிறைவேறுமா? (வருதல் மந்திரி, வணிகமணி, காவலர்.) மந்திரி! காளா பிழைத்தாய்; கள்ளர் பிடிபட்டனர். பொருள் கிடைத்தது; நீதி நிலைத்தது. உன்னை அரசர் விடுவிக்கிறார். காளன்: தந்தையே நன்றி, தங்கள் சொல் மந்திரம். புத்தி வந்தது. கற்றேன் பாடம். இனி, நேர்மையாகவே நடப்பேன்; திருந்தினேன். அப்பா, நன்நி, நன்றி! மந்திரி: காளா, இதோ நிற்கும் பெரியாருக்கே நன்றி செலுத்து; இவராலேதான் இன்று நீ விடுபட்டாய். இவரே கள்ளரைக் கண்டு பிடித்துப் பொருளையும் கணக்காகக் கண்டுபிடித்தவர். இவரை வணங்கி நட! காளன்: பெரியீர் நன்றி, வணக்கம். தங்கள் விருப்பமெப் படியோ அப்படியே நடக்கிறேன். வணிகமணி: காளா, என் விருப்பத்தை உடனே அறிவாய். நேராக எனது மனைக்கே வா! மந்திரி: காவலர்காள், இவரைச் சிறை நீக்கி, மரியாதையுடன் வண்டியேற்றி யனுப்புங்கள்! காவலர்: உத்தரவு எசமான். (சிறை நீக்கல்) காளன்: (வெளிவந்து விடுதலை, விடுதலை, விடுதலை! செல்லல்) எட்டாங் காட்சி (குண்டலகேசியின் விரகதாபம்; ஆதிரை சமாதானப் படுத்தல்.) ஆதிரை: குண்டலகேசி, என்னருமைத் தோழி, ஏனிந்த மயக்கம், தியக்கம், தளர்ச்சி? ஐயோ, உன் பூமேனி ஏனிப்படி வாடித் துவள்கிறதடீ...? குண்டலகேசி: ஆதிரை, காரணம் தெரியாதா? தாயிடம் சொன்னாயா? தந்தை என்ன சொல்லுகிறார்? ஆதிரை: அம்மா குண்டலகேசி, அமைதியாயிரு! தந்தை உனக்கு நல்ல இடம் பார்த்திருககிறார். குண்டலகேசி: எந்த இடம்? ஆதிரை, விபரமாகச் சொல்லு! ஆதிரை: குண்டலகேசி, கும்பகோணம் நாகப்பன் பெரிய செல்வன்; கலாநிபுணன்; பெற்றோரில்லை; ஏராளமான செல்வாக் குண்டு; வாணிபத்தால் பொன்மலை குவிக்கிறான். அவன் வீட்டிற்கு நீ தான் அரசி. அவன், உன்மேல் உயிர் வைத்திருக்கிறான். குண்டலகேசி: ஆதிரை, ‘இந்தமாதிரி என்முன் பேசாதே!’ என்று எத்தனை தடவை சொல்வது? அந்த நாகப் பாம்பை நான் அறிவேன்; அழகான விஷத்தை நான் கொள்ளேன். அவன் வாழ்க்கை ஆடல் பாடலுடன் சரி. கலையின் பெயரால் தனது ஒழுக்கத்தைக் கொலை செய்து கொள்ளும் அவனைப் பற்றி இனிப் பேசாதே! என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வனைப் பற்றி அன்னையிடம் சொன்னாயா? ஆதிரை: சொன்னேனம்மா...உன் தாயார் உன் தந்தையிடம் எல்லாம் சொன்னாள். காளன் விடுதலையாவானாம்! குண்டலகேசி: தோழீ, ஆ, அந்த விடுதலைக்கு முன், இந்தக் கூண்டுக்கிளி விடுதலையாய்விடும் போலிருக்குதடீ! இராகம் உசேனி) (திஸ்ர ஏக தாளம் ஆவி துடிக்குதடீ--சகியே ஆசை துடிக்குதடீ--இந்தப் பாவி மனம்பறித்த--கள்ளன் பரிந்து வாரானோ! தோழீ, ஆதிரை! உலகமே பிடிக்கவில்லையடீ...நான் முன்னே விரும்பிய பாட்டும் இயற்கையும் நஞ்சாயின... சகியே, பஞ்சவர்ணக் கிளியும்--என்னைப் பகடி செய்யுதடீ--சகியே கொஞ்சுங் குயிலிசையும்--என் குட்டை யுடைக்குதடீ! ஆதிரை குண்டலகேசி, உனக்கு வசந்தகாலம் பிறந்தது; கவலைப்படாதே... அதோ, திங்கள் எவ்வளவு அமைதியாக மேகத் திரைகளைப் பிளந்து கொண்டு நகைக்கிறது! கவலை மேகத்தை உனது புன்னகையால் உதறியெறி! குண்டலகேசி: தோழி, காவியங்களில் சந்திராலோ பனத்தைப் படித்தபோது, நான் தமயந்தியையும் சீதையையும் கேலி செய்தேன். இப்போதே கவியுள்ளம் தெரிகிறது! திங்களின் வெண்ணிலவும்--கொடுந் தீயினை வீசுதடி-சகியே பொங்கும் புதுத் தென்றல் என்னுடன் போர் தொடுக்குதடீ! ஆதிரை தோழி, இந்த மனப்போரை வெல்வாய்; அதற்கு வீரனொருவன் வருவான்; அமைதியாயிரு! குண்டலகேசி: அமைதியெங்கே? என் அமைதி அங்கே சிறையில் வாடுதடீ... ஆதிரை, தாயிடம் சொன்னாயா? ஆதிரை: எல்லாம் சொன்னே னம்மா! குண்டலகேசி: காளன், இன்றேல் காலன்...! இரண்டி லொன்று தீர்மானம்... ஆதிரை, உடனே சென்று தந்தையிடமிருந்து செய்தி கேட்டுவா! ஆதிரை: வருகிறேன்; தோழி, அமைதியாயிரு! (செல்லல்.) குண்டலகேசி மாரனை வென்ற வீரனே, புத்த பகவானே, இந்த நோயைத் தீர்! இன்றேல், என் ஆசையை விழுங்கி விடு, பாசத்தை அறுத்தெறி! வேதனை தீராதோ?--என்மன வேட்கை தணியாதோ? போதி யடி யமர்ந்தாய்--சரணம் புத்த பகவானே! (வருதல்ஆதிரை, பொன்னி) ஆதிரை: தீர்ந்தது வேதனை! தோழி, ஐயம், சுபம், உன் மனோரதம் கைகூடியது... தாயார் நல்ல செய்தி கொண்டு வந்தாள், கேள்! பொன்னி: மகளே, காளன் விடுதலை யடைந்தான்; அவனும் உன்னையே நேசிக்கிறான். தந்தையும் சம்மதித்தார். மந்திரிக்கும் மகிழ்ச்சி; நாளையே திருமணம். என் கிளியே, புத்த பெருமான் உன் விருப்பத்தை நிறைவேற்றினார்; நிம்மதியாயிரு! குண்டலகேசி: வந்தனம் அம்மா; புத்தனை நினைத்தேன், நற்செய்தி வந்தது; வந்தனம். ஒன்பதாங் காட்சி (நாகப்பனும், ஆதிரையும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.) நாகப்பன்: ஆதிரை, உன் தோழியிடம் என் ஆசையைச் சொன்னாயா? ஆதிரை: எல்லாம் சொன்னேன்! நாகப்பன்: என் அழகு, எனது செல்வம், என் கலைச்சுவை, எனது வாழ்வின் சுதந்திரம், எனது செல்வ மாளிகை, எல்லாம் குறித்துச் சொன்னாயா? ஆதிரை: சொன்னேன், சொன்னேன்...... நாகப்பன்: எனக்கு வாழ்க்கைப் பட்டால் இந்திரபோகம் அனுபவிக்கலாம் என்றாயா? ஆதிரை: ஆம், ஆம்! நாகப்பன்: நான் ஒரே பிள்ளை, பெற்றோரும் காலஞ் சென்றனர். எனக்கு வாழ்க்கைப்பட்டால், அவளே என் வீட்டின் தனியரசியா யிருப்பாள். மாமியார், மாமனார் அதிகாரமில்லை; நாத்தனார் இல்லை சுதந்திரமாயிருக்கலாம் என்றாயா? ஆதிரை: ஆம், ஆம், ஆம்! நாகப்பன்: தலைமுதல் கால் வரையில் தங்கமா யிழைப்பேன்; அன்னத்தூவி மஞ்சத்தில் வைத்துச் சீராட்டுவேன் என்றாயா? ஆதிரை: அவளை நீ தலையில் வைத்துத் தாங்குவாய்; குதிரைகூடச் சுமப்பாய் என்று சொன்னேன்! நாகப்பன்: நாளொரு நகையும், பொழுதொரு புடவையுமாக அவளுக்கு அலங்கரிப்பேன் என்றாயா? ஆதிரை: அலங்காரத்திற்கே ஆயிரம் சேடி வைப்பாய் என்றேன்! நாகப்பன்: குண்டலகேசி என்ன சொன்னாள்? என்னைக் காதலிக்கிறாளா? ஆதிரை: அவள் முகத்தை அப்புறம் திருப்பிக் கொண்டு, தோளில் கன்னத்தை ஓர்இடி இடித்துச் சும்மாதான் இருந்தாள். நாகப்பன்: ஆ, அதுதான் காதலுக்கு அடையாளம்; உள்ளம் நிறைந்த காதலுக்கு உரையேது! ஆதிரை, இன்னொருதரம் கேள்; அவள் ஜாடையாகத் தலையசைத்தாலும் போதும்! ஆதிரை: நாகப்பா, பேச்சை வளர்க்காதே! அவளுக்கு உன்மேல் பிரியமில்லை. அவள் மனமெல்லாம் காளனிடம் உள்ளது. வேறெவர் பேச்சையும் அவள் விரும்பவில்லை. நாகப்பன்: ஐயையோ, ஐயையோ! எனது காதலெல்லாம் பகற்கனவானதே! சரி ஆதிரை, மறுதரம் எனக்காக மன்றாடு! குண்டலகேசி தலையசைத்தாலே போதும், இலட்சம் வராகன் கொண்டு ஓடி வருகிறேன். ஆதிரை: நாகப்பா, குண்டலகேசியை நீ மறந்து விடு! உனக்கென்ன பெண்ணுக்குக் குறைவா? போ! தோழி காத்திருப்பாள்; நான் போகிறேன்... செல்லல்.) நாகப்பன்: மறப்பதா? இந்த அழகான பூங்கொடியை மறப்பதா? இவளைக் காளன் மணப்பதா? மணக்கட்டும், மணக்கட்டும். இவர்கள் கூடி வாழாமல் செய்து விடுகிறேன். தந்திரம் எனக்குத் தெரியும். காளன் கலைமயக்கங்கொண்ட இசைப்பித்தன்; சரியான விறலியர் பாட்டில் ஈடுபடுத்தி வேலை செய்கிறேன். குண்டலகேசி நீ என்னுடன் வாழ்வாய்; அவனுடன் வாழமாட்டாய்.... இப்போதே என் சூழ்ச்சிகளைத் தொடங்கு கிறேன். காளா, தோழா, எனக்குப் போட்டியாகவா புகுந்தாய்? வா வா! (செல்லல்.) பத்தாங் காட்சி காளன் - குண்டலகேசி திருமணம்; மணவினை முடிந்தபிறகு எல்லாரும் வாழ்த்துதல்.) எல்லாரும்: குண்டலகேசியும் காளனும் இல்லற வாழ்வில் இன்பமோங்குக! புதுமணாளர் வாழ்க்கை பொலிக, பொலிக! இராகம்சுருட்டி) (ஜம்பை தாளம் பல்லவி மங்களம் மங்களம்--சுப மங்களம் மங்களம்... (மங்களம்) அநுபல்லவி நங்குலம் ஓங்கிட நாடு செழித்திட (மங்களம்) சரணம் பொங்குக எங்குமே பொன்னும் பசுமையும் புதுமணக் காதல்வை போகம் பொலியவே! (மங்களம்) புதுமணாளர் நீடுவாழ்க! பதினோராங் காட்சி (குண்டலகேசியும் காளனும் நிலாமுற்றத்தில் அமர்ந்திருக்கின்றனர்) காளன்: கண்ணே, குண்டலகேசி, முன்னே இருளாயிருந்த உலகம் இப்போது ஒளிமயமாயிருக்கிறது; எங்கும் உன் மதிமுகப் புன்னகையே காண்கிறேன்; இயற்கை யழகைப் பார்; அதோ, திங்கள் புரியும் மாயச் சிரிப்பைப் பார்! குண்டலகேசி: நாதா, திங்களின் சிரிப்பு, முன்னே எரிப்பா யிருந்தது; இப்போது இனிப்பாயிருக்கிறது! அதன் வெண்ணி லாவை வரவேற்கிறேன். இராகம் நீலாம்பரி) (திரிபுடை தாளம் அல்லிக் குளத்தருகே வெண்ணிலாவே--நீ அன்னம்போல் ஆடு கின்றாய்--வெண்ணிலாவே! காளன்: மெல்லியதென்றலுடன் வெண்ணிலாவே--எங்கள் மேனியைக் கொஞ்சுகின்றாய் வெண்ணிலாவே! குண்டலகேசி: நாதா, உள்ளமும் உள்ளமும் பொருந்திய வுடன் உலகே இன்பமயமானது. அன்பும், அழகும், ஆர்வமும், கலையும் சேர்ந்த இல்லறமே நல்லறம். காளன்: கண்ணே, இல்லறமே அறம்பொருளின்பக் கலை தான். அதிலும் உன்னைப் போன்ற கற்பிளஞ் செல்வியுடன் கூடிய இல்லற வாழ்க்கை பேரின்பமளிக்கிறது; என் முத்தின்பத்தின்முன் முத்தியின்பமும் கைத்தது! (இராகம் மோகனம்) (ஜம்பை தாளம்) முத்தியின் இன்பமும் கைத்ததே--உன் மோகன முத்து முறுவல்முன் பத்தரை மாற்றுப் பசும்பொன்னே--உன்னைப் பார்க்கப் பார்ப்பப்பர மானந்தம்! குண்டலகேசி அன்றிலுங் கிள்ளையும் போலவே--கண்ணா ஆவியும் யாக்கையும் போலவே, ஒன்றியுள் ளன்பினில் ஓங்குவோம்--குறள் ஓதிடும் இல்லறந் தாங்குவோம்! காளன்: கண்ணே, நானே நீ, நீயே நான். உடலே இரண்டு, உயிரும் உள்ளமும் ஒன்று. குண்டலகேசி: கண்ணாளா, இப்படியே நாம் இன்புற்றிருக்க புத்த பெருமான் அருள் புரியட்டும். இனித் துயில் கொள்வோம்! பன்னிரண்டாங் காட்சி (நாகப்பன் மாளிகையில் விறலியர் ஆடல் பாடல். நாகப்பன் காளனை மயக்கிப் பாட்டில் ஈடுபடுத்துகிறான்.) விறலியர்: (பாடுகின்றனர்) (இராகம் காம்போதி) (ஆதிதாளம்) பல்லவி ஆடலும் பாடலும் அழகுடன் கூடலும் ஆனந்தம், ஆனந்தமே! (ஆட) அநுபல்லவி தேடக் கிடைக்காத செல்வ மணாளனுடன் தினமும் மனம்பொருந்தி திவ்ய ரச கீதத்தால் (ஆட) காளன்: ஹா, ஹா! இன்பம், இன்பம்! நாகப்பன்: காளா, என் தோழா, எப்படி இந்த இன்பம்! காளன்: இசை யின்பமே யின்பம்! ஆடலே ஆனந்தம்! ஆனால், நாழியாயிற்று. நாகப்பன்: அட சை, நீ ரசிகனா? காலத்தை மறந்து கலையை அனுபவிக்க வேண்டுமப்பா! காளா, இன்னும் கேள், கேள்! பாட்டு பரவசமாக நடக்கட்டும்! விறலியர்: ஆசைக்கிளி கொஞ்ச, ஆர்வக்குயில் மிஞ்ச, அமுத யாழுடன் குழல் குமுதமிட்டுக் கொஞ்ச, பாசமெல்லாஞ் சொல்லிப் பரவச முடன் புல்லி, பதஸா நிதபம கமபத நித வென (ஆட) காளன் ஹா, ஹா, பேரின்பம் பேரின்பம்! நாகப்பன்: காளா, இப்பேரின்பத்தை நீ தினமும் அருந்தலாம்! நண்பா, சந்தனம் பூசிக்கொண்டு, தாம்பூலந் தரித்துச் செல்லலாம். அடீ காம்போதி, இவருக்கு கஸ்தூரிச் சந்தனம் பூசடீ! அடீ பைரவி, தளிர் வெற்றிலை மடித்துக் கொடடீ! காளன்: ஆ, பாட்டின்பத்தில் வீட்டை மறந்தேன்! நாகப்பா, நன்றி; செல்கிறேன். பதின்மூன்றாங் காட்சி (நாகப்பன் பொறாமைகொண்டு குண்டலகேசியையும் காளனையும் பிரிக்கச் சூழ்ச்சி செய்கிறான்; தன் விறலியின் பாடலைக் கேட்கக் காளனைத் தந்திரமாய் அழைத்து, நேரங் கழித்தனுப்பி, ‘இதோ உன் கணவன் கணிகையரிடம் சென்று வருகிறான்’ என்று தோழி ஆதிரை, குண்டலகேசியிடம் சொல்லும்படி செய்கிறான்.) ஆதிரை: நாகப்பா, மெய்தானா? நாகப்பன்: ஆதிரை, காளன் முழுக்கள்ளன். அங்கே மனைவியிடம் மகா உத்தமன் போல நடந்து கொள்கிறான்; இங்கே வந்ததும் வேசையரின் ஆடல் பாடல் அழகில் சொக்கிப் போய் வீட்டையே மறந்து விடுகிறான். “ஒரு பெண்ணைக் கட்டிக் கொண்டு, நீ இப்படித் திரிவது நன்றாயில்லை” என்றால் அவனுக்கு அசாத்திய முன்கோபம் வருகிறது. சினத்தில் இவன் வேட்டை நாய்; தந்திரத்தில் குள்ள நரி. இவனை நம்பவே கூடாது என்று குண்டலகேசியிடம் சொல்ல வேண்டும். ஆதிரை: நாகப்பா, இவன் இப்படிப்பட்டவன் என்று முன்பே தெரிந்திருந்தால், பெண்ணைக் கொடுத்திருக்க மாட்டார்களே பெற்றோர். உனக்குத்தான் அவளை தரத் தந்தை விரும்பினார். அவள் பிடிவாதம் இப்படி ஆனது. தங்கம்போல மனைவியிருக்கத் தரங்கெட்டலையும் கணவனை என்னென்பது? நாகப்பன்: கடைத்தெருவில் இங்கு மங்கும் மோப்பம் பிடிக்கும் நாய்போல், கணிகையர் தெருவில் அவன் அலைகிறான். பழைய திருட்டுத் தோழரும் அவனைக் கெடுக்கிறார்கள். குண்டலகேசி இனி அவனை ‘நாதா, பாதா’ என்று பாடாமல், ஊடலை அதிகமாக்கி அவனுக்கு உணர்ச்சி வரும்படி இடித்துக் காட்டச் சொல்லு! ஆதிரை: ஆகட்டும், இன்று குண்டலகேசியிடம் சரியான படி சொல்லுகிறேன். பெண்களுக்கு நகைக்கவுந் தெரியும், பகைக்கவுங் தெரியும்; இன்புறுத்தவுந் தெரியும், சாகசத்தால் துன்புறுத்தவுந் தெரியும். காளன் வண்டவாளத்தைப் பார்ப்போம்; அவன் மட்டும் நேரஞ்சென்று வரட்டும். நாகப்பன்: இன்று அவன் கணிகையரிடம் சென்று வருவான்; அவனுடைய மார்ச் சந்தனம், வாசனை, பூ, சிவந்த வாய்--இவற்றைப் பார்த்தாலே தெரியும். அவளிடம் சொல்லிவை! ஆதிரை: ஆகட்டும். தோழி காத்திருப்பாள்; செல்கிறேன் (செல்லல்) நாகப்பன்: பலித்தது சூழ்ச்சி. சேர்ந்தவரைப் பிரிப்பதில் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி! ஹஹஹ..............! பதினான்காங் காட்சி (பள்ளியறையில் குண்டலகேசி ஆத்திரத்துடன் உலவிக் கொண்டே பேசுகிறாள்.) குண்டலகேசி: ஆதிரை சொல்வது உண்மைதான்! தினம் நேரங்கழித்து வருகிறார். காரணம் கேட்டால் சரியான பதில் இல்லை. முன்போல் என்னை நேசிப்பதில்லை. ‘கண்ணே, முத்தே’ என்ற தெல்லாம் அந்தக் காலம். பரத்தையர் வலைப்பட்டே இவர் பாழாகிறார். மாந்தர் ஆசையெல்லாம் இப்படித்தான்--விருப்பொரு நாள், வெறுப்புப் பலநாள்; இனிப்பு, கசப்பு, சிரிப்பு எரிப்பு எல்லாம் அலைகளைப் போலப் புரண்டு மோதும் மனித மனத்தை, எப்படி நம்புவது? இன்று நேசித்தவர் நாளையே பகைத்துக் கொள்கிறார்! அதிலும் காமத்தீயில் வேகும் மனம் மாறக் கேட்க வேண்டுமா? ஹா, பெண்கள் தலைவிதி இப்படியிருக்கிறது! ஆண்கள் வெளிப்படையாக நெறிதவறலாம். ஆனால் பெண், கண்ணை அப்படி இப்படித் திருப்பினாலும் ‘கட்டை விரல் சட்டம்’ வந்து மானத்தைக் கெடுக்கும். வரட்டும் இன்று; பயமென்ன? நன்றாகக் கேட்கிறேன். (கதவுச் சத்தம் டட் டட் டட்) யாரது? காளன்: நான்தானடீ காளன், திற கதவை! குண்டலகேசி: ஏன், அந்த வீட்டிற்கே திரும்பிச் செல்லலாமே? காளன்: கதவைத் திறக்கிறாயா, என்ன? குண்டலகேசி: சரி திறக்கிறேன். (திறத்தல்) காளன்: என்ன சொன்னாய்? குண்டலகேசி: அடிக்கடி இப்படி நேரங்கழித்து வருவதேன்? காளன்: என்னைக் கேட்க நீ யார்? நான் எப்போது வந்தாலும் நீ கதவைத் திறக்கத்தான் வேண்டும். குண்டலகேசி: இதேமாதிரி, நான் இரவில் வெளியே சென்று வந்தால், உங்களுக்குச் சம்மதமாகுமா? காளன்: நான் ஆண்பிள்ளை; போவேன் வருவேன். நீ பெண்பிள்ளை, வீட்டைக் காத்திருக்க வேண்டும். குண்டலகேசி: பெண்ணென்ன வீட்டைக் காக்கும் நாயோ? பெண்ணின் பெருமையே, ஆணின் பெருமை! (கும்மி மெட்டு) தீரர் விளைவதும் பெண்ணாலே--கலைச் செல்வஞ் செழிப்பதும் பெண்ணாலே! பாரில் அழகும் சுவையும்--அமுதும் பரந்து தழைப்பதும் பெண்ணாலே! காளன்: ஏன், ஆண்மைக்கு அழகும் கலையும் இல்லையோ? பொருள் விளைவதும் ஆணாலே--சுக போகம் விளைவதும் ஆணாலே! அருள் விளைவதும் ஆணாலே--அறி வாற்றல் செழிப்பதும் ஆணாலே! தெரியுமா? உயர்வு தாழ்வு பேசி உரிமை கொண்டாடாதே! ஆண் பெண் இரண்டும் சரிநிகர் சமானம். குண்டலகேசி: சரி-நிகர்-சமானம், எல்லாம் நாக்கிலே தான்; நடத்தை வழவழா! பெண்களை அடுப்பங்கரைப் பூனை போலத்தான் நடத்துகிறீர்கள்? ஆண் இப்படிக் கண்ட இடத்திற்கெல்லாம் சென்று நடுநிசியில் வரலாம். பெண் ஒருத்தி அடுத்த தெருவுக்குப் போனால் ‘ஐயோ, ஓடுகாலி!’ என்று உலகம் தூற்றும்! காளன்: குண்டலம், நான் பிசகான இடத்திற்குச் சென்று வருவதாக நீ சந்தேகிக்கிறாய். யாரோ உன் மனத்தைக் கெடுத்திருக் கிறார்கள். அசடே, நல்ல ஆடல் பாடலில் எனக்குப் பிரியம். என் நண்பன் நாகப்பன் இசையரங்கு கூட்டினான்; கேட்டு வந்தேன். குண்டலகேசி: இதோ என்னைப் பாரும். என் முகத்தைப் பார்க்கவாவது உமக்குத் தகுதியுண்டா? உமது ஐவ்வாது மணமும், மார்ச் சந்தனமும், பூவும், தாம்பூலச் சிவப்பும், அசடுவழியும் முகமும், கள்ளப் பார்வையும்--பார்த்தாலே யோக்கியதை தெரிகிறதே! காளன்: பெண்ணே, என்ன, வார்த்தை மீறிப் பேசுகிறாய்! நான் யாரென்று நினைத்தாயடி? குண்டலகேசி: தாங்கள் திருடருடன் திருடிச் சிறை சென்ற கள்வர்தாமே! என் தந்தை தங்கள் தலையைக் காத்துச் சிறைவிடுத்தார். கொஞ்சநாள் மாறியிருந்தீர். மீண்டும் பழைய கள்ளனானீர்: பொய் சொல்லவும், தாசி வேட்டையாடவும் ஆரம்பித்து விட்டீர். காளன்: சட், அடக்கு வாயை! நான் எந்த வேசையிடமும் போகவில்லை. பொய் சொல்லாதே! மரியாதையாகப் பேசு! குண்டலகேசி: மரியாதையாக நடந்தால் மரியாதை. வழிதப்பி நடந்தால் முன்போலச் சிறைகாக்க வேண்டியதுதான்; பழைய நண்பர் உம்மைக் கெடுக்கிறார்கள்; மறுபடியும் பழைய கள்ளனாகப் போகிறீரோ? காளன்: ஹா, என்னையா கள்ளன் என்றாய்! நான் கள்ளனானால் நீ கள்ளிதானே! (மனதுள்) மனமே பொறு! முன்கோபமே இன்று அடங்கு! வார்த்தை வீசாமல், என்னைக் கள்வனென்று அவமதித்த கள்ளியைப் பலி வைத்து விடுகிறேன். பகையே வெளியே நகை! (வெளியே) என் கண்ணே, குண்டலகேசி உயிரான நீ இருக்கையில், பிறமாதரைத் தீண்டுவேனா? நாகப்பன் இசையரங்கு வைத்து உபசரித்து, இப்படிச் சந்தன தாம்பூலந் தந்தான். எந்தப் பெண்ணிடமும் நான் போகவில்லை; உறுதி. என் ஆருயிர்க் குண்டலம், உன்னையே காதலித்தேன்; என்றும் காதலிப்பேன். குண்டலகேசி: என்னைக் காதலிக்கக் கொடுத்து வைக்க வேண்டுமே! என் தந்தையார் கோடீசுவரர்; தருமவான்; அரசன் நண்பர். அவரின்றேல் உமக்கு விடுதலையேது? காளன்: உண்மை. ஒப்புக் கொள்ளுகிறேன். உன் தந்தையே என்னைக் காத்தார். கண்ணே, தெய்வத் துணையும் எனக்கிரங்கி விடுதலை தந்தது. அதற்காக நான் வேண்டிக் கொண்டேன். மலை முடிச் சாமிக்குப் பொங்கல் வைக்க வேண்டும். நீயும் வரவேண்டும். குண்டலகேசி: வேண்டுகோள் நிறைவேற்ற வருகிறேன். காளன்: கண்ணே, நீ பட்டத்தரசிபோல் அலங்கரித்துக் கொண்டு வரவேண்டும். குண்டலகேசி: ஆகா, அப்படியே வருவேன். தாங்கள், இனி, வேறெந்த மாதரையுங் கனவிலும் நினைக்கக் கூடாது. உறுதி கூறும்! காளன்: உறுதியாக, உன்மேல் ஆணையாக, நான் பிறமாதரை என்றும் மனத்தினாலும் தீண்டேன். குண்டலகேசி: அத்தான் சமர்த்து! இனிப் பழைய கள்ளனாகாமல் பகவான் உம்மைக் காக்கட்டும்! காளன்: (மனதுள்) இன்றும் கள்ளனென்கிறாயா? வா வா நாளை (வெளிப்படையாக) கண்ணே, நீதான் கள்ளியாகி எனது நெஞ்சைக் கவர்ந்து கொண்டாயே! (இராகம் கமாஸ்) (திஸ்ரசதி அல்லது ரூபகம்) ஜாலமோக னாங்கி யேயுன் சரசமென்ன சொல்லுவேன்! காலன் வந்த போதிலும், உன் காதல் வெந்து போகுமோ? குண்டல: மோகங் கொண்ட காதலியை மோசஞ்செய்ய லாகுமோ? தாகங்கொண்ட நெஞ்சை வஞ்ச நஞ்சு தீண்ட லாகுமோ? காளன்: குண்டலகேசி, என்னிடம் நஞ்சுமில்லை. உன்னிடம் வஞ்சமுமில்லை. இருவரும் பிணக்கத்தை விடுவோம். போதும் ஊடல். புத்த பகவானை நினைத்துறங்குவோம்; நாளை மலைக்குச் செல்வோம். இருவரும்: இருவிகார மனதை வென்ற இறைவனைப் பணிருவோம்! நிருவிகார மின்றி நன்று நின்று நிவல வாழ்க்கையே! ஓம், புத்தா சரணம்! பதினைந்தாங் காட்சி (நாகப்பனிடம் காளன் விடைபெற்றுக் கொள்கிறான்.) நாகப்பன்: இன்று விறலியர் பாட்டு அமாகமாயிருந்தது! காளன்: உண்மை; ஆனால், என் மனம் இன்று செவிக்கு இணங்கவில்லை. நாகா, உள்ளே ஏதோ சங்கடஞ் செய்கிறது. நாகப்பன்: காளா, உன் சங்கடமெல்லாம் அவளாலேதான் வருகின்றது. அவளை மட்டும் நம்பாதே! எனது காம்போதியின் அன்பின் பத்திலொரு பங்கு கூட உன்னிடம் அவளுக்கில்லை. காளன்: நாகா, நான் எதையும் நம்ப முடியவில்லை; என்னையே நம்பமுடியவில்லை. எனக்கு முன் கோபம் வந்தால், ஆளே மாறிப் போகிறேன். படித்ததெல்லாம் பறந்து போகிறது. உலகையே நான் நம்ப முடியவில்லை. நான் ஏன் பிறந்தேன்? இந்த விளையுடலை ஏன் இன்னும் சுமக்கிறேன்? நாக: காளா, நாம் பிறந்தது சுகபோகங்களை அனுபவிக்கத் தான். உடலுள்ள மட்டும் உடலுக்குரிய இன்பங்களை அனுபவிக்க வேண்டும். காளன்: எனக்கென்னவோ இச் சுகபோகங்கள் இன்பமளிக்க வில்லை. என் தந்தை மந்திரி, எனக்கு ஏராளமான செல்வமுண்டு. செல்வத்தில் நிறைவான இன்பங் காணவில்லை. உலகமே வஞ்சமோகக் காடாயிருக்கிறது. சூதும் வாதும் கோளும் பொறாமையும் சினமும் பகையும் போரும் கொலையுமாகவே உலகம் என்முன் காட்சியளிக்கிறது. நாக: போடா பைத்தியக்காரா, இதையெல்லாம் நினைத் தால் இன்பங் கெட்டுப் போகும். காளன்: நாகா, பணக்காரர் இன்பத்தைச் சுற்றிப் பல்லாயிரம் ஏழைகளின் துன்பக்கண்ணீர் இரத்த வெள்ளமாக ஓடுகிறதைக் காணாயோ? நாக: காளா, என்ன வேதாந்தத்தில் இறங்கி விட்டாய்? ஏழைகள் எக்கெடு கெட்டால் நமக்கென்ன? நாம் இரத்த வெள்ளத்திற்கூட நீந்தியே பேரும் புகழும் பெற்று, உலகைச் சுகிக்க வேண்டும். காளன்: இங்கே கண்ட சுகமெல்லாம் பளிச்சென்று மின்னி நம்மை இருட் புயலில் கைவிட்டு மறைகின்றன. நாக: காளா, உன்னைக் கள்ளனென்றே அவமதிக்கும் அந்தப் பெண்ணாலேதான் இப்படி உனக்கு வேதாந்த வெறி பிடித்து விட்டது; அவளை நம்பாதே! காளன்: நான் யாரையும் நம்புதற்கில்லை; என் மனத்தை ஏதோ ஒரு துக்கம் துளைக்கிறது; நாகா, நண்பரிடம் அன்பைச் சொல்லு! நாளை மலைச்சிகரம் செல்கிறேன். நாக: சென்று வா; மறுநாள் பைரவியின் நடனம்! காளன்: நல்விடை; (சிந்தனையுடனே நடக்கிறான்) சாவின் பயங்கர நடனந்தான் எங்கும் காண்கிறது. வாழ்க்கையின் முடிவு சாவுதானே? சாவுதான் அறிவின் சாவியாயிருக்கிறது! (செல்லல்) பதினாறாங் காட்சி (காளனும் குண்டலகேசியும் மலை முடிமேல் புத்தரை வணங்கி நிற்றல். காளன் வஞ்சகமாக வாளையுருவுதல்.) காளன்: கண்ணே, நீ பாண்டிமாதேவிபோல விளங்குகிறாய். உன் அழகே யழகு! கண்ணே, இவ்வளவு அணிமணி அலங்காரங்களையும் சுமப்பது நாற்ற உடல்தானே? இந்தச் செல்வ வாழ்வைக் கானல் நீரென்று புத்த பகவான் உதறிச் சென்றாரே! விருத்தம் (இராகம் பைரவி) பொன்னெலாம் புவியின் மாசு; பொருளெலாம் பொன்றும் மண்ணே; பெண்ணெலாம் பிணியின் தூது; பிறப்பெலாம் இறப்பின் நேசன்; மண்ணெலாம் அகந்தை; இந்த மாயையில் மோத லுற்றான் புண்ணலால் வேறொன் றில்லை; போகிறேன் அடவி யென்றான். புத்த பகவானே, அப்படி உலக மாயத்தை உதறித் தள்ளிய போது, அதில் அறிவாளி மயங்கலாமா? குண்டலகேசி: நாதா, அப்படிப்பட்ட பக்குவம் நமக்கு வரவேண்டுமென்று தான் இன்று புத்த பகவானுக்குப் பொங்கல் வைத்து வணங்கினோம். பெண்ணிடம் தீதில்லை; மனமாiயதான் தீது. காளன்: கண்ணே, என் கண்மணிப் பாவையே. நான் பெண்ணியல்பை நன்றாகப் பார்த்தே சொல்லுகிறேன். கணவனைக் கள்ளன் என்கிற ஒரு பெண்ணை என்னென்பது? கள்ளி என்றுதானே சொல்ல வேண்டும். குண்டலகேசி: கள்ளளைக் கள்ளன் என்று சொல்வதிற் குற்றமென்ன? வெட்கமாயிருந்தால் ஒழுங்காய் நடந்து காட்டலாமே! காளன்: ஹட், மீண்டுமா? யாரையடீ கள்ளன் என்றாய்? இதோ பார், உன்னை இந்த வாளால் வெட்டிக் கணவாயில் தள்ளிச் செல்கிறேன். பத்தினியானால் நில் வாள்முன்! அரக்கி, வஞ்சகி, வாயாடி, நில் வாள்முனையில்; உனது நாக்கொழுப்பால் சா, அழகுச் சிறுக்கி! குண்டலகேசி: (மனதுள்) இதற்கா இழுத்து வந்தாய்? இரு இரு; கணவாய் ஆழந்தான். (வெளியே) என் பிராணநாதா, உமது கையால் வெட்டுண்டு சாவது எனது பாக்கியம். ஆனால், சாகுமுன் ஏழையின் வேண்டுகோள் ஒன்றுண்டு. அதை அளித்தருள்க! காளன்: சொல் உடனே! குண்டலகேசி: நாதா, நான் பதிவிரதை. தங்களை மூன்று தடவை சுற்றிவந்து. தங்கள் திருப்பாதத்தில் மலர் தூவி வணங்கிப் பிறகு கழுத்தைத் தருகிறேன்; ஒரே வெட்டாக வெட்டிக் கணவாயில் போட்டு விடுங்கள்! காளன்: சரி செய்! குண்டலகேசி: (சுற்றி வருதல்) பாதகா, துரோகி, என்னையா கொல்லப் பார்த்தாய்? இதோ விழு கண வாயில் (தள்ளுகிறாள்) நீ இருப்பது பெண்டிர் கற்பிற்கே அபாயம்! ஹ, ஹ, ஹ! காளன்: ஐயோ, என்வினை என்னையே கொன்றது! புத்தா சரணம்! புனிதா சரணம்! குண்டலகேசி: பழி தீர்த்தேன். வஞ்சகனுக்கு வஞ்சனை செய்தேன். தற்கொல்லியினை முற்கொன்றேன். ஆ, ஆனால் அந்தோ என்ன செய்தேன்! கணவனைக் கொன்ற கள்ளியானேனே! இந்தப் பாவம் என்னை விடுமா? ஐயோ! நானும் தற்கொலை செய்து கொள்ளவா? கணவனைக் கொன்று கழுந்து போல வாழும் கள்ளிக்குக் கதியுண்டோ? விருத்தம் (இராகம் முகாரி) பாவிநான் பாதகி யிந்தப் பருவுடல் சுமந்தேன் செய்தேன்? பூவிற்குப் பார மானேன்; புண்ணியா, புத்த தேவா! சாவினைத் துணையாய்க் கொண்டுன் சாந்தவிண் ணகத்திற் கேயான் ஆவியாய் வருவேன்; என்னை ஆண்டுகொள் அருளின் வேந்தே! நாதா, இ.தோ உம்முடன் வருகிறேன். (தாவப் போகிறாள்; வருதல் புத்தநந்தி) புத்தநந்தி: ஹாஹா, நில் நில்...! குண்டலகேசி: யாரது? ஆ, அடிகளா? புத்தநந்தி: தாயே, ஏனிந்தத் தற்கொலைக்குத் துணிந்தாய்? இது கொடிது! குண்டலகேசி: அடிநாள் கொலையா, தற்கொலையா? எது கொடிது? புத்தநந்தி: இரண்டும் கொடியன. தாயே, உனது துயரென்ன? உன் கண்ணருவியின் கதையென்ன? குண்டலகேசி: ஐய, என் கணவர் இக்கணவாயில் விழுந்து இறந்தார். நானும் அவருடன் போகிறேன். புத்தநந்தி: அம்மா நில், வா என்னுடன்; புத்த மந்திரத்தில் இரு! தற்கொலை தீது. குண்டலகேசி: அடிகாள், நான் செய்த பாவத்தை எப்படித் தொலைப்பேன்? புத்தநந்தி: தாயே, பாவந் தொலைய வழிகாட்டுகிறேன், வா புத்தாலயத்திற்கு! குண்டலகேசி: புத்தா, நீயே குருவாக வந்து வழி காட்டினாய்! (bசல்லல்) பதினேழாங் காட்சி (பொன்னியும், வணிகமணியும் மகளைத் தேடி மலைச்சி கரத்திற்கு வருகின்றனர்.) பொன்னி: ஐயோ, என் மகளைக் காணேனே! காளன் மலைச் சாமிக்குப் பொங்கவிடுவதாக அழைத்துச் சென்றான். அவனையும் காணோம்! இவளையும் காணோமே! என் அருமை மகளே, நீ எங்கே சென்றாய்? வணிக: இந்தக் கணவாயில் யாரோ விழுந்ததாக மலைக்குறவர்கள் சொன்னார்களே. இருவருந்தான் கால் தவறி விழுந்தார்களோ? ஐயோ விதியே...! ஹா இந்த இருட்கணவாய் நமது மனம்போல் இருளாயிருக்கிறது; ஏ பயங்கர மோனமே, எங்கள் செல்வரை நீயா விழுங்கினாய்? (வருதல்மந்திரி) மந்திரி: காளா, காளா, உன் விதி இப்படியா முடிய வேண்டும்! ஐயோ மகனே! வணிக: வாருங்கள், செய்தி கிடைத்ததா? மந்திரி: ஹா, கேட்ட செய்தியை எப்படிச் சொல்லுவேன்? நண்பா, வணிக மணியே, காளன் இக்கணவாய்க்கே இரையானான்.... ......குண்டலகேசியும் இங்கேதான் கணவனுடன் விழுந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனாலும், நாற்புரமும் வீரர் சென்று விசாரிக்கின்றனர். வணிக: வித்தகரே, விசாரித்தென்ன இனி? வாழ்வின் நாடகம் அவ்வளவுதான்! நமது புத்த பிரான் உலகின் நிலைமையைக் கண்டு வருந்தியபடி நாமும் வருந்தித் துறப்போம். இருப்பதெல்லாம் இறப்பதே.... வாடிய மலரைத் தூய வாரியிற் புயலை, நாளும் வீடிய இலையைக் கண்டே விழியினின் றருவி பாய்ச்சி, சேடியர் மனைவி மக்கள் திருவுடன் மின்னும் இன்பம் நாடகவுலகச் சீர்; போம் நமன்விடுந் திரைக்குள் என்றான்! அவ்வளவுதhனே செய்தி? நாமும் ஓர் நாள் அதே திரைக்குள் மறைய வேண்டியது தான். பொன்னி: நாம் இதுகாறும் மகளுக்காகவே உலகில் பாசம் வைத்திருந்தோம். இனி, யாருக்காக வாழவேண்டும்? இ.ருவரும் புத்தாலயத்திற் சேர்ந்து இறுதி நாட்களில் புண்ணியந் தேடுவோம். மந்திரி: மூவராகச் செல்வோம். எனக்கும் உலகம் புளித்தது. புத்த பகவானுக்கு ஞானக்கிழவன் சொன்ன அறிவுரைகள் எனது செவியில் ஒலிக்கின்றன. நானும், எனது பட்டம் பதவி, சொத்து சுகமெல்லாம் துறந்து, புத்தரைச் சரண்புகுவேன். செல்வோம் மூவரும்! (வருதல் நாகப்பன்) நாகப்பன்: ஏன், நால்வராகச் செல்வோம். பெரியீர். செய்தி கேட்டேன். என் நண்பன் காளன் இன்று இறப்பென்னும் கணவாயில் வீழ்ந்தான்; நாளை நாமும் அப்படியே! மந்திரி: நாகப்பா, உனக்கெப்படி இந்த வைராக்கியம் வந்தது? நாகப்பன்: ஐய, நான் செல்வச்செருக்கின் உச்சத்தில், ஆடல் பாடல்களை அனுபவித்தேன்; ஏழைகளைக் கொள்ளையடித்துப் பணஞ்சேர்த்துப் பரத்தையருக்கீந்தேன்; நான் பிரியம்வைத்த வெண்டிர், என்னையே புறம்பேசி யிகழ்வதைக் கேட்டேன். நேற்று என்னுடன் குலாவிய காளன், இன்று சாவுக் கணவாயின் பயங்கர இருளில் மின்னென மறைந்ததைக் கண்டேன்! இச்சோக நாடகத்தின் சூத்திரதாரி இந்தப் பாவியே! நானே ஒன்றிய காதலரைப் பிரிக்கச் சூழ்ச்சி செய்தேன். என் வினை என்னையே சுடுகிறது; பெரியீர், இனிப் பேச்சென்ன? புத்த பகவான் போகசுகத்தின் உச்சியிலிருந்து சொன்னதை நாமும் சொல்லிச் செல்வோம்: விருத்தம் (இராகம்: கானடா) துயிற்சுவை யென்னே மாதர் நோட்சுவை யென்னே சுற்றும் செயற்சுவை யென்னே உண்ணத் தீஞ்சுவை அமுத மென்னே! மயற்சுவை அனைத்தும் சாவின் வாய்ச்சுவை என்ன நீத்தான்! இயற்சுவை உள்ளே கண்டார் இகச்சுவைக் கலைவ தாமோ? செல்வோம் நால்வரும்! ஆதிரை: உண்மை, உண்மை. ஐவராகச் செல்வோம்; ஆருயீர்த்தோழி சென்றபிறகு வாழ்வே புளித்தது; இனிப் புத்தனே இன்பம்; புத்த சேவையே வாழ்க்கை! எல்லாரும்: புத்தா போற்றி, அறமே போற்றி, அறவீர் போற்றி! (செல்லல்.) பதினெட்டாங் காட்சி (குண்டலகேசி புத்தபாதம் பற்றித் தன் பிழைகளுக்கு வருந்தல்; புத்தநந்தி ஆறுதலளித்தல்.) குண்டல: புத்த தேவா, உன் மலரடியில் துயர்க் கண்ணீர் வார்க்கிறேன். நீயே புகல். உலகெங்கும் இருள், துயர், இடர், வஞ்சம், கொலை, பயங்கர நரகம்! உனது திருவடியைச் சுற்றித்தான் அமைதியொளி காண்கிறேன். என் அப்பனே, நீ எனக்கிரங்கு வாயா? அக்கொடிய செயலைச் செய்த பாதகிக்கும் இரங்குவாயா? கருணைக் கடலே, பெண்ணாய்ப்பிறந்து, செல்வமனையில் வளர்ந்து, நான் பெற்றதென்ன? ஒருவனைக் காதலித்துச் சிற்றின்பத்தால் நான் பெற்றதென்ன? ஒன்றுமில்லை. இனம் வெறுத்து, மனம் வெறுத்துச் சாவின் ஆழக்கணவாயில் குதிக்கும் போது, உனது கருணை மின்னொளி போல என்னுட் புகுந்தது! புத்தா, ஞானச்சித்தா, என்னைத் தடுத்தாட்கொண்ட உனக்கு வணக்கம், வணக்கம்! பெற்றோர் மற்றோர் உறவெல்லாம் புளித்தன; உன் திருவடியார் உறவே உறவு! இறைவா, என்றும் உன்னடியார் சுட்டத்திலிருந்து உன் பணி புரியும் இன்பமருள்! ஆ, ஆனால், இந்த இன்பச்சுற்றத்திலும் அதை நினைத்தால், துன்பக் கணவாய் என்னை விழுங்க வருகிறதே! நாதா, என்னை மன்னிப்பீரா? ஆ, அந்த இருட் கணவாயில் எவ்வாறு தவித்தீரோ? கொலை பாதகம் என்னை விடுமா? (காளன் ஆவி பளிச்செனத் தோன்றல்.) ஆ இதோ என் கணவர் உரு! வந்தீரா? காளன் உரு: குண்டலகேசி, நானே கொலைஞன். முன்கோபத்தால் உன்னையும் கொன்று, நானும் கணவாயில் விழத் துணிந்தேன்; என் வினை என்னை மாய்த்தது; நான் புத்த பெருமானையே சிந்தித்ததால், இதோ நல்ல பதவி சேர்ந்துளேன். குண்டலகேசி, நீ வினையுலகைத் துறந்து பகவான் பணிநலம் புரி; சென்றதை மற! உலகில் பாபமூட்டை சுமந்து எத்தனை நாள் இருப்பது? நீ அறவோர் திருக் கூட்டத்துடன் தரும சேவை செய்து, புண்ணியஞ் சுமந்து விண்ணகம் வா! அங்கே இருவரும் சந்திப்போம். ஓம், நமோ புத்தாய! (மறைதல்) குண்டல: ஆறுதலுற்றேன்1 சென்றதை மறப்போம்; இறைவனையே நினைப்போம். ஆஆ துன்பம்...அந்தோ பிறவி! இன்றுளார் நாளை யில்லை யாவார். குழந்தை யிறந்து குமரி யாகிக் குமரி யிறந்து குலமக ளாகிக் குலமகள் தாயாய்க் குலச்சுமை தாங்கித் தாயும் பாட்டியாய்த் தளர்ந்து தளர்ந்து புதைகுழிக் கிரையாய்ப் போய்மண் ணாவதே, உடலின் கதையாம்; உயிரின் கதையோ, மமையக் காட்டம்! மற்றொரு பிறவி வேண்டேன் வேண்டேன், விநாயக மூர்த்தியே! மாரனை வென்ற வீர தீரனே, போதி சத்துவ ஜோதியே, சரணம்! (வருதல் புத்தநந்தி) புத்தநந்தி: அம்மா குண்டலகேசி, புத்த பாதம் உனக்கு அமைதி யளித்ததா? குண்டலகேசி: புத்தபாதம் எப்போதும் அமைதியே அளிக்கும்! மாங்கனி எப்போதும் இனிக்கும்; ஆனால், பித்தம் பிடித்தவனுக்கு இனிக்காது. அடிகாள், தங்கள் அருளால் எனது நெஞ்சை யழுத்திய கவலைச்சுமை பெரிதும் குறைந்தது. எனது வாழ்விற்கு புத்தசேவை கிடைத்ததே பெருமகிழ்வு! ஆனாலும், துயர்மேகம் இன்னும் கண்ணீர் பொழிந்து கொண்டுதான் இருக்கிறது; வினை கரையவில்லை. புத்தநந்தி: குண்டலகேசி, ஆகாயத்தில் கார் மேகங்கள் படர்ந்து, அடைமழை கொட்டுகிறது. அப்போது வெய்யிலுக்கhக உலகம் தவிக்கிறது. மேகங்களெல்லாம் பொழிந்து, மறைந்த பிறகு, வானம் தெளிகிறது; சூரியன் உதிக்கிறது. ஆ, அந்த உதயத்தின் தெள்ளிய ஒள்ளிய அழகை நீ பார்த்திருப்பாய். அன்று அடிக்கும் வெய்யிலின் அழகே அழகு! உலகெல்லாம் அன்று பொன்னும் பச்சையும் குலுங்கும். அதேமாதிரி, மனக்கவலைகள் புத்தர் திருவடிப்பற்றால், கண்ணீராகக் கரைந்துருகி வெளியேறிய பிறகு, ஜீவனில் தெளிவும் அமைதியும் புகுந்தொளிரும். குண்டலகேசி: குருநாதா, இப்பிறவியில் அந்த அமைதி இப்பாவிக்கு வருமா? எனது வினைச்சுமை மலையினும் பெரிது; எனது பாவம் என் கழுத்தைப் பிடித்துத் துன்பத்தில் தள்ளுகிறதே! புத்தநந்தி: அம்மா, குண்டலகேசி, உலகமே ஒரு நாடக சாலை; அதில் இருவிகார நாடகம் நடக்கிறது. அந்த நாடகத்தில் இன்பக் கண்ணீரை விடத் துன்பக்கண்ணீரே ஆறாகப் பெருகும். முடிவில் நாடகப் பாத்திரர் அனைவரும் அக்கண்ணீர் வெள்ளத்திலேயே கரைந்து மறைகின்றனர். அம்மா, மண், செடி, மரம், புழு, பூச்சி, விலங்கு முதலிய எத்தனையோ பிறவியெடுத்து, மானிடம் வருகிறது. மானிடத்திலும் படிப்படியாக எத்தனையோ வேறுபாடுகள் உண்டு. பலபிறவிகள் எடுத்தபிறகே மனிதன் ஞானம் பெறுகிறான். அத்தகைய ஞானத்தைப் புத்த பகவான் போதியடியில் பெற்று, உலகிற்கு உபதேசித்தார். குண்டலகேசி, ஜீவர்கள் தீயில் விழுந்த புழுப் போல் துன்பத்தில் வீழ்ந்து மடிகிறார்கள். குண்டல: குருதேவா, துன்பத்தின் காரணமென்ன? புத்தநந்தி: தாயே, புத்தபெருமான் போதியடியில் ஞானம் பெற்ற பிறகு, ஐந்து சீடர்களுக்கு இவ்வாறு உபதேசித்தார்: “துறவிகாள், பற்றினாலே தான் துன்பம் வருவது; பற்றற்றால் இன்பமே. ஆசை தான் பற்றாவது; ஆசைக்கட்டை அறுத்தால், துயரில்லை. துக்க நிவாரணத்திற்கு முதற்படி பஞ்சசீலம்: உயிர்க் கொலை தவிர்த்தல், பிறர் பொருளைத் திருடாமை, பொய்சொல்லாமை, கள்ளுண்ணாமை, வியபசாரியாகாமை-இவையே பஞ்சசீலம். தூய உணவு, தூய நினைவு, தூய நடை இம்மூன்றும் வாழ்வைத் தூய்மையாக்கும். குண்டல: குருவே தூய வாழ்க்கையை இந்த அன்பர் கூட்டத்திலேயே கண்டேன். புறவுலகில் நான் பெற்ற சீரும் செல்வமும் என்னையே அசுத்தமாக்கின. ஆசைவாழ்வு, பாசவாழ்வு; மோசவாழ்வு; அதை ஒழித்தேன். தங்கள் அருளால் துன்பவீட்டை நீத்தேன்; இனி இன்பவீட்டை யடையவேண்டும்; அதற்கு வழி யருளுக! புத்தநந்தி: தாயே, பகவான் புத்தர் இன்பவழியை இவ்வாறு அருளுகிறார்: விருத்தம் (இராகம் தோடி) பொல்வினை நீத்துப் பாசப் போர்வினை நீத்துத் தீய கொல்வினை நீத்து, நல்ல குணங்களைப் பயின்று, சென்ம வல்வினை நீத்து, தூய மாதவம் புரிந்து நாளும், எல்லையில் முத்தி யின்பம் எய்துக வுலக மெல்லாம்! (வருதல் பொன்னி, வணிகமணி, ஆதிரை, மந்திரி, நாகப்பன்) எல்லாரும்: புத்தரே சரணம்! அடிகாள், ஆ அந்த முத்தியின்பத்திற்கே தாகங்கொண்டு வந்தோம்? ஆதிரை: ஆ, இதோ நமது குண்டலகேசி! பொன்னி: மகளே, இங்கா புகுந்தாய்? ஆ, நீ மறைந்தாய், இறந்தாய் என்று விசனித்தோம்; பகவான் காத்தார்! வணிக: மகளே, சென்றதை மற! நாங்களும் மறந்தோம், இனி இங்கே தான் இருக்கை. குண்டல: பெரியீர், முன்னுறவுகளெல்லாம், துன்பவுறவுகள்; பாவ வுறவுகள்! இங்கே, புனிதமான அறவோர் உறவும் அகளங்கர் அருளும் கொண்டு உய்ந்தேன்! எல்லாரும்: நாங்களும் உய்வுபெறவே வந்தோம் அம்மா; குருதேவா, எங்களை ஏற்றருள வேண்டும். எங்கள் உடல் பொருள் ஆவியெல்லாம் இனிப் புத்த சேவைக்கே! புத்தநந்தி: அன்பர்காள், இருங்கள்; அமைதி பெறுங்கள்! குண்டலகேசி, இனி இந்த நாடகம் முடிந்தது. எல்லாரும் புத்தபிரானைப் பாடி வணங்குவோம்: (இராகம் நாதநாமக்ரியை) (சதுச்ரஜாதி ரூபக தாளம்) அத்தா என்னை ஆண்டாய் இனி வேண்டேன் அரும் பிறவி பித்தாகிய சக மாயையைப் பின்விட்டுனைப் பணிந்தேன். சித்தா, ஜீவன் முக்தா, ஜீன நாதா, குரு தேவா, புத்தா, போதி சத்வா, பரி சுத்தா சரண் இறைவா! குண்டலகேசி நாடகம் முற்றிற்று. குண்டலகேசி - உரை சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகக் குண்டலகேசி கூறப்படுகிறது. இது குண்டலகேசி விருத்தம் எனவும் கூறப்படுகிறது. சமய வாதங்களைக் கூறுகிற நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி முதலிய கேசி நூல்களில் ஒன்றாகவும் குண்டலகேசி கூறப்படுகிறது. இக் காவியத் தiலயின் பெயர் குண்டலகேசி. ஆகையால், அவள் பெயரே இந்நூலில் பெயராகச் சூட்டப் பட்டது. குண்டலகேசி என்பவள், பகவன் கௌதமபுத்தர் காலத்தில் வாழ்ந்திருந்தவள். இவளுடைய வரலாறு பௌத்த நூல் களாகிய தேரிகாதை, தம்மபதாட்ட கதா, அங்குத்தர நிகாய என்னும் நூல்களிலும், நீலகேசி என்னும் iஜனத் தமிழ் நூலிலும் கூறப்படு கின்றது. இராசிகருக நாட்டு அரசனுடைய அமைச்சனுக்குப் பத்திரை என்னும் பெயருள்ள கன்னிகை இருந்தாள். அவள் தனது மாளிகையில் இருந்தபோது ஒருநாள், அரச சேவகர் கள்ளன் ஒருவனைக் கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டாள். அக்கள்ளன் இளமையையும் அழகையும் கண்ட பத்திரை அவன் மேல் காதல் கொண்டாள். இதனை யறிந்த அவள் தந்தையாகிய அமைச்சர் கள்ளனை விடுவித்து, அவனுக்குத் தன் மகள் பத்திரையை மணஞ் செய்வித்தான். அவ்விருவரும் கணவனும் மனைவியுமாய் வாழ்ந்து வருகிற காலத்து ஒருநாள் ஊடலின்போது பத்திரை அவனை நோக்கி ‘நீ கள்ளன் அல்லனோ” என்று கூறினாள். அதைக் கேட்டுச் சினங் கொண்ட அவன், பின்பொருநாள், பத்திரையை அழைத்துக் கொண்டு மலைமேல் ஏறினான். ஏறியபின், அவளை மேலிருந்து உருட்டித் தள்ளப்போவதாக கூறினான். நிலைமையை யுணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள் போல் நடித்து, “நான் இறப்பதற்கு முன்பு உம்மை வலம் வரவேண்டும்” என்று கூறி, அவனை வலம் வருவது போல் பின்சென்று அவனை ஊக்கித் தள்ளினாள். அவன் மலையினின்று வீழ்ந்து இறந்தான். பிறகு பத்திரை வாழ்க்கையை வெறுத்தவளாய், அலைந்து திரிந்தவள், சமண சமயத்து ஆரியாங்கனைகள் வாழும் மடம் ஒன்றை அடைந்தாள். ஆரியாங்கனைகள், இவள் வரலாற்றை யறிந்து, இவளைத் தமது பள்ளியில் சேர்த்துத் தமது சமய நூல்களையெல்லாம் கற்பித்தனர். சமணப் பள்ளியில் சேர்ந்த போது, ஆரியாங்கனைகளின் வழக்கப்படி, பத்திரையின் தலை மயிர் மழிக்கப்பட்டது. மழிக்கப்பட்ட மயிர், பிறகு வளர்ந்து சுருண் டிருந்தது. ஆகவே, பத்திரை குண்டலகேசி என்று பெயர் பெற்றாள். கல்வியைக் கற்றுத் தேர்ந்த பத்திரை, சமயவாதம் செய்யப் புறப்பட்டு, சென்றவிடம் எல்லாம் நாவல் நட்டு, சமயவாதம் செய்து வந்தாள். ஒரு நாள் ஓர் ஊருக்குச் சென்று வழக்கம்போல் நாவற் கிளையை நட்டுவைத்து, ஊருக்குள் பிச்சை ஏற்கச் சென்றாள். அப்போது, கௌதம புத்தரின் மாணவராகிய சாரிபுத்தர் என்பவர் பிச்சைக்காக அவ்வூருக்கு வந்தவர், நாவற்கிளை நட்டிருப்பதைக் கண்டு, அதனைப் பிடுங்கி எறிந்துவிட்டு ஊருக்குள் பிச்சை ஏற்கச் சென்றார். பிச்சை ஏற்று உணவு கொண்ட பின்னர், குண்டலகேசியும் சாரிபுத்தரும் நாவற்கிளை இருந்த இடத்திற்கு வந்தனர். நாவற்கிளையை வீழ்த்தியவர், வாதம் செய்யவேண்டுவது கடமையாகையால், இருவரும் சமயவாதம் செய்யத் தொடங்கினார்கள். நெடுநேரம் வாதப்போர் நடந்தது. குண்டலகேசி கேட்ட வினாக்களுக்கு சாரிபூத்தர் விடையளித்தார். பிறகு, சாரியுத்தர் கேட்ட வினாக்களுக்கு விடையளித்துவந்த குண்டலகேசி, சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல், தனது தோல்வியை ஒப்புக்கொண்டாள். பிறகு, குண்டலகேசி, சாரிபுத்தரை வணங்கி, தன்னைப் பௌத்த மதத்தில் சேர்த்துக்கொள்ளும்படி வேண்டீனாள். சாரிபுத்தர், குண்டலகேசியைப் பகவன் புத்தரிடம் அழைத்துச் சென்று, அவர் முன்னிலையில் பௌத்தத் துறவியாக் கினார். பிறகு, குண்டலகேசி நெடுநாள் பௌத்தத் தேரியாக வாழ்ந்து கடைசியில் வீடு பேறடைந்தாள். குண்டலகேசியின் இந்த வரலாற்றினைக் கூறுவதுதான் குண்டலகேசி என்னும் பௌத்தக் காவியம். இக் காவியத்தை இயற்றியவர் நாதகுத்தனார் என்னும் பௌத்தர் என்று நீலகேசி, 344ஆம் செய்யுள் உரை கூறுகிறது. சோழநாட்டில் இருந்த பௌத்த பிக்குவாகிய பேர்போன காசியபதேரர், ‘விமதிவினோதனீ’ என்னும் பாலிமொழி நூலுக்குத் தாம் எழுதிய டீகா என்னும் உரையிலே, குண்டல கேசியின் ஆசிரியராகிய நாகசேனரைக் கூறுகிறார். அவர் கூறுவது இது: “புப்பேகிர இமஸ்மின் தமிளாட்டே கோசிபின்னலத்திகோ நாகசேனோ நாம தேரோ குண்டலகேசி வத்துள் பாவாத மதன நய தச்சனத்தன் தமிள கப்ப ரூபேன கதராந்தோ.” இதன் பொருள்: “பழங்காலத்தில் இந்தத் தமிழ் நாட்டில் மாறுபட்ட கொள்கை யுடைய நாகசேனன் என்னும் ஒருதேரர், எதிரிகளின் கொள்கைகளை அழிக்க எண்ணிக் ‘குண்டலகேசி’ என்ற காப்பியத்தைத் தமிழில் இயற்றினார்.” இதனால், குண்டலகேசியின் ஆசிரியர் பெயர் நாதகுத் தனார் என்று நீலகேசியுரை கூறுவது தவறு என்பதும், நாகசேனர் என்பதே அவர் பெயர் என்பதும் தெரிகின்றன. நாகசேனர் வரலாறு முதலியன தெரியவில்லை. குண்டலகேசிச் செய்யுள்கள் வீரசோழிய உரையிலும் யாப்பருங் கல விருத்தி யுரையிலும் மேற்கோள் காட்டப்பட்டி ருப்பதால், இந்நூல் களின் கால மாகிய கி.பி. 10ஆம் நூற்றாண் டுக்குமுன் குண்டலகேசி இயற்றப் பட்டிருக்கவேண்டும். குண்டலகேசியில், சமண சமயக் கொள்கைகள் மறுக்கப் பட்டிருந்தபடியால், அம் மறுப்புகளுக்கு விடையளிப்பதற்காகத் தோன்றியது நீலகேசி என்னும் நூல். குண்டலகேசி என்னும் காவியம் இப்போது மறைந்துவிட்டது. அக்காவியத்திலிருந்து சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. புறத்திரட்டு, வீர சோழிய உரை, நீலகேசி உரை இவைகளில் குண்டலகேசிச் செய்யுள்கள் காணப்படுகின்றன. குண்டலகேசியில் கலித்துறைச் செய்யுள்களும் விரவி யிருந்தன. தெரியாத சொற்களும் அதில் இருந்தன. “குண்டலகேசி முதலான காப்பியமெல்லாம் விருத்தமாம்” என்றும், “குண்டல கேசி ... முதலாக உடையவற்றிற் றெரியாத சொல்லும் பொருளும் வந்தனவெனின், அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லதாகா தென்பது. அன்றியும், அவை செய்த காலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கி யிருக்கும் என்றாலும் அமையும் எனக் கொள்க” என்றும், வீரசோழிய உரை இந்நூலைப் பற்றிக் கூறுகிறது. மயிலை சீனி வேங்கடசாமி - மறைந்து nபான தமிழ் நூல்கள் புறத்திரட்டு என்னும் நூலில் உள்ள குண்டலகேசிச் செய்யுள்கள் இவை: உறுப்புகள் தாமுடன் கூடி யொன்றா யிருந்த பெரும்பை மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேலிவ் வுறுப்புக் குறைத்தன போல வழுகிக் குறைந்து குறைந்து சொரிய வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவது முண்டோ.” (புறத் 412) 1 இவ்வுடல், உறுப்புகள் பலவுடையது: அவை ஒன்றாக இருக்கும் பெரும் பை. அதனை மறைத்துப் பொதிந்ததால் விரும்பத்தக்கதாம் உருவில் மயக்குகின்றது. இவ்வுறுப்பைச் சிதைத்ததுபோல அழுக விட்டும் குறைய விட்டும் குருதி ஒழுகவிட்டும் வெறுக்குமாறு கிடக்கும் போது இதனை விரும்புகின்றதாம் தன்மை ஏதாவது உண்டோ? இல்லை! “எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல் தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகி நுனைய புழுக்குலந் தம்மா னுகரவும் வாழவும் பட்ட இனைய வுடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ.” (புறத் 413) 2 என்னுடையது என்று எண்ணுதலால் இந்த உடல் இன்பத்துக்கு ஆகும் என்றால் தினையரிசிச் சோறு போல் சிறிதும் பெரிதுமாக நெளியும் புழுக்களால் தின்னப்படவும் அதனொடு வாழவும் ஆகிய இவ்விழிவு டைய உடம்பை பாவியாகிய யான் என் பெருமைக்குரிய உடைமை என்று கூறலாமோ? “இறந்த நற்குணம் எய்தற் கரியவாய் உறைந்த தம்மையெல் லாமுட னாக்குவான் பிறந்த மூர்த்தியொத் தான்றிங்கள் வெண்குடை அறங்கொள் கோலண்ணல் மும்மத யானையான்.”(புறத் 494) 3 திங்கள் போலும் வெண்குடையும் அறக்கோட்பாடும் செங்கோல் ஆட்சியும் கொண்ட வேழ மன்னன், அடைதற்கரிய நற்குணங்களும் தம்மை அடைந்தாரை எல்லாம் தம் நிலைக்கு ஆக்குபவனும் ஆகிய அறிவனைப் போன்றவனாம். “சீற்றஞ் செற்றுப்பொய் நீக்கிச்செங் கோலினாற் கூற்றங் காய்ந்து கொடுக்க வெணுந்துணை மாற்ற மேநவின் றான்றடு மாற்றத்துத் தோற்றந் தன்னையுங் காமுறத் தோன்றினான்.” (புறத் 495) 4 சினத்தை அழித்துப் பொய்யை அகற்றிச் செங்கோல் ஆட்சியால் கொல்லும் கூற்றத்தையும் வென்று நலமெலாம் கொடுக்க எண்ணுமளவு அருளுரை பகர்ந்து அவலத் தடுமாற்றத் திற்குரிய பிறப்பையும் கண்டவர் விரும்புமாறு தோற்றமுற்றான். “மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டாதே யன்று வாய்மை நண்ணினார் திறத்துங் குற்றங் குற்றமே நல்ல வாகா விண்ணுளார் புகழ்தற் கொத்த விழுமியோ னெற்றி போழ்ந்த கண்ணுளான் கண்டந் தன்மேற் கறையையார் கறையன் றென்பார்.” (புறத் 551) 5 மண்ணுலகில் பிறந்து வளரும் தம்மைப் போன்றவர் அளவில் நின்று விடுவது அன்று வாய்மை என்பது. அவ் வாய்மைக்குமாறு எவரிடத்துத் தோன்றினும் குற்றம் குற்றமேயாம். அது நல்லதாகி விடாது. விண்ணவரும் புகழும் இறைவன் கழுத்தில் உள்ள கறையைக் கறை இல்லை என்று எவரே கூறுவார்? அதுவும் வாய்மையால் கறையேயாம். “மறிப மறியும் மலிர்ப மலிரும் பெறுப பெறும்பெற் றிழப்ப விழக்கும் அறிவ தறிவா ரழுங்கா ருவவார் உறுவ துறுமென் றுரைப்பது நன்று.” (புறத் 723) 6 வளையவருவ வளையவரும்; பெருகி வருவ பெருகும்; பெற வேண்டுவ பெறும்; பெற்று இழப்பவை இழக்கும்; இவற்றை அறிவுடையார் அறிவார்; அதற்காக வருந்தார்; மகிழார்; வருவது வந்தே ஆமென்று அமைவதே நன்றாம். “முன்றான் பெருமைக்க ணின்றான்முடி வெய்து காறும் நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்று ஒன்றானு முள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தா னன்றே யிறைவ னவன்றாள் சரணாங்க ளன்றே.” (புறத் 7) 7 (குறிப்பு : இச்செய்யுளைக் கடவுள் வாழ்த்தாக சிலர் கருது கின்றனர்) இறைவன் முற்பட்டோன்; பெருமையில் நிலைத்தோன்; முடிவுவரை நல்லதே நினைத்தான்; நற்பண்பையே உரைத்தான்; தனக்கென்று எந்த ஒன்றையும் நினைத்தான் அல்லன்; அனைத்தும் பிறர் நன்மைக்கெனவே பாடுபட்டான். அவனே எம் அடைக்கலம் இறைவன் ஒருவன். “நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்க கில்லார் தீக்குற்ற காத லுடையார்புகைத் தீமை யோரார் போய்க்குற்ற மூன்று மறுத்தான் புகழ்கூறு வேற்கென் வாய்க்குற்ற சொல்லின் வழுவும் வழுவல்ல வன்றே.” (புறத் 13) 8 நோய்க்கு ஆட்பட்டவர் அதனைத் தீர்க்கும் மருந்தின் சுவையைப் பார்க்க மாட்டார். ஒளியின் வேட்கையுடையார் அவ்வொளியாக்குங் கால் உண்டாம் புகையின் நாற்றத்தை எண்ணார். காமம் வெகுளி மயக்கமாம் முக்குற்றமும் நீங்கிய பெற்றியனைக் கூறும் என் சொல்லில் உண்டாம் குற்றமும் குற்றமற்றதேயாம் என்றே கருதுவர். “வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவாய் ஆயுவினை நோக்கியுள வாழ்க்கையது வேபோல் தீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத் தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம்.” (புறத் 205) 9 வலிய பெரிய கப்பல் பருவக் காற்றையே நோக்கியுள்ளது. வாழ்க்கையோ வாழுநாள் அளவையேநோக்கியுள்ளது. தீயவற்றை எண்ணும் இயல்பு சற்றேனும் இல்லாத தூய குருவனை நோக்கியே உள்ளது நன்மக்கள் வாழ்வெல்லாம். “போர்த்தலுடை நீக்குதல் பொடித்துகள்மெய் பூசல் கூர்த்தபனி யாற்றுதல் குளித்தழலுள் நிற்றல் சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலையர் ஆதல் வார்த்தையிவை செய்தவ மடிந்தொழுக லென்றான்.” (புறத் 288) 10 முழுதுற மூடல், முழுதுற நீக்கல், புழுதியைப் பூசுதல், கடிய பனியைத் தாங்கல், தீக்குள் நிற்றல், சார்ந்தவர் தரு பிச்சை யெடுத்தல், சடைத்தலையராதல் என்று சொல்லுவ செய்தல் தவநெறி விடுத்துச் செய்வனவாம். “வகையெழிற் றோள்க ளென்று மணிநிறக் குஞ்சி யென்றும் புகழெழ விகற்பிக் கின்ற பொருளில்கா மத்தை மற்றோர் தொகையெழுங் காதல் தன்னால் துய்த்துயாந் துடைத்து மென்பார் அகையழ லழுவந் தன்னை நெய்யினால் அவிக்க லாமோ.” (புறத் 302) 11 அழகிய தோள்கள் என்றும், அழகிய கூந்தல் என்றும் புகழுண்டாக விரிவாகப் புகலுகின்ற பொருளற்ற காம வெப்பை, மேலும் மேலும் துய்த்துத் துடைத் தொழிப்போம் என்பர்; கொழுந்து விட்டு எரியும் எரியை மேலும் வளர்க்க வாய்ப்பாம் நெய்யை விட்டு அழிக்கக் கூடுமோ? “அனலென நினைப்பிற் பொத்தி யகந்தலைக் கொண்ட காமக் கனவினை யுவர்ப்பு நீராற் கடையற வவித்து மென்னார் நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குது மென்று நிற்பார் புனலினைப் புனலி னாலே யாவர்போ காமை வைப்பார்.” (புறத் 303) 12 தீயை வளர்ப்பதுபோல் வளர்த்து உள்ளெரியாய் ஆக்கிக் காமமாம் பொய்யுணர்வை வெறுப்பு என்னும் நீரால் முற்ற அவித் தொழிப்போம் என்ன மாட்டார். தன்னை மறந்த இன்பப் புணர்ச்சியால் அழிப்போம் என்பார். வெள்ளப் பெருக்கை வெள்ளப் பெருக்கால் தடுத்துப் போக விடாமல் எவரே நிறுத்துவார்? “போதர உயிர்த்த வாவி புகவுயிர்க் கின்ற தேனும் ஊதிய மென்று கொள்வ ருணர்வினான் மிக்க நீரார் ஆதலா னழிதல் மாலைப் பொருள்களுக் கழிதல் வேண்டா காதலா லழுது மென்பார் கண்ணணி களைய லுற்றார்.” (புறத் 388) 13 போகுமாறு வெளிவந்த உயிர் மீளப்புகுந்துலாவுகின்றது. எனினும் அதனை மெய்யுணர்வாளர் மேலான வருவாய் என்றே எண்ணுவர். ஆதலால் அழிதலை இயல்பாக உடையவை அழிதற்காக வருந்துதல் வேண்டா. அதன் மேல் விருப்பால் அழுகின்றேம் என்பார் கண்ணுக்கு அணிகலமாம் கண்ணோட்ட அணிகலத்தைக் கழற்றியவர் ஆவர். “அரவின மரக்க ராளி யவைகளுஞ் சிறிது தம்மை மருவினாற் றீய வாகா வரம்பில்கா லத்து ளென்றும் பிரிவில மாகி தன்சொற் பேணியே யொழுகு நங்கட் கொருபொழு திரங்க மாட்டாக் கூற்றின்யா ருய்து மென்பார்.” (புறத் 389) 14 பாம்பு, கொடிதாக அழிக்கும் இயல்பர். அரிமா என்னும் இத்தகையவும் தம்மை அடைந்து விட்டார்க்குத் தீமை செய்யா. அளவிலாக் காலமாக என்றும் பிரியாமல் எந்நாளும் தன் கட்டளைக்குப் பணிந்து வாழும் நம்மீது ஓரோ ஒரு பொழுது தானும் இரக்கமில்லாமல் அழிக்கும் கூற்றுக்கு எவரே தப்புவார்? “பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும் காளையாந் தன்மை செத்துங் காமுறு மிளமை செத்தும் மீளுவிவ் வியல்வு மின்னே மேல்வரு மூப்பு மாகி நாளுநாம் சாகின் றாமால் நமக்குநா மழாத தென்னோ.” (புறத் 390) 15 கருவாய் நின்ற நிலையில் செத்தும், பாலப் பருவ நிலைமை செத்தும், காளைப் பருவ நிலை செத்தும், அதன் மேல் காமம் பெருகு நிலைப் பாடாம் வாலிபப் பருவம் செத்தும் மீளமீள இவ்வாறாய், முதுமையடைந்து ஒவ்வொரு நாளும் நாம் செத்துக் கொண்டே உள்ளோம். ஆயினும் நம் சாவுக்கு நாம் அழாமல் பிறர் பிறர் சாவுக்கு அழுவது என்ன இரங்கத் தக்கநிலை. “கோள்வலைப் பட்டுச் சாவாங் கொலைக்களங் குறித்துச் சென்றே மீளினும் மீளக் காண்டும் மீட்சியொன் றானு மில்லா நாளடி யிடுதல் தோன்று நம்முயிர்ப் பருகுங் கூற்றின் வாளின்வாய்த் தலைவைப் பாக்குச் செல்கின்றோம் வாழ்கின் றாமே.” (புறத் 399) 16 சூழ்ச்சி வலைக்கு ஆட்பட்டுச் சாவு வரும்; கொன்று தீர்க்கக் கொலைக்களம் கொண்டு செல்லப் பட்டவனும் மீளலாயினும் மீள்வான். ஆனால் மீட்சி என்னும் ஒன்று இல்லாமல் நாள்தோறும் நம்மைத் தொடுத்துநடையிட்டு வரும் கூற்று என்னும் வாளின்மேல் தலை வைக்குமாறே சென்று கொண்டிருக்கிறோம்! நாம் வாழவோ செய்கிறோம்? “நன்கன நாறுமி தென்றிவ் வுடம்பு நயக்கின்ற தாயி ஒன்பது வாயில்க டோறு முண்ணின் றழுக்குச் சொரியத் தின்பதொர் நாயு மிழுப்பத் திசைதொறுஞ் சீப்பில்கு போழ்தின் இன்பநன் னாற்ற மிதன்க ணெவ்வகை யாற்கொள்ள லாமே.” (புறத் 410) 17 நறுவிதாக மணக்கு மென்று கோலம் செய்து விரும்புகின்ற இவ்வுடம்பு ஒன்பது துளைகளையுடையது: ஒவ்வொரு துளையும் அழுக்கை ஒதுக்குவது; இவ்வுடம்பு உயிரற்றால் நாயும் இழுக்கும்; பக்கமெல்லாம் நாறும்; இவ்வுடம்பில் இனிய நறுமணத்தை எவ்வாறு கொள்ள முடியும்? “மாறுகொள் மந்தர மென்று மரகத வீங்கெழு வென்றுந் தேறிடத் தோள்க டிறத்தே திறத்துளிக் காமுற்ற தாயிற் பாறொடு நாய்க ளிசிப்பப் பறிப்பறிப் பற்றிய போழ்தின் ஏறிய வித்தசை தன்மாட் டின்புற லாவதிங் கென்னோ.” (புறத் 411) 18 பகைவெல்லவல்ல மந்தமலை அன்னதென்றும், மரகதத்தால் செய்யப்பட்ட’எழு’ போன்றது என்றும் தெளிந்த தோள்களைக் கண்டு காமுறப் பெற்றது எனின், பருந்தொடு நாய்கள் இழுத்துண்ணப் பறித்துப் பறித்துப் போகும் பொழுதில் திரண்ட இத்தசையை எண்ணி இன்பப்படுவதற்கு என்ன உண்டு? “வேரிக் கமழ்தா ரரசன் விடுகென்ற போழ்துந் தாரித்த லாகா வகையாற் கொலைசூழ்ந்த பின்னும் பூரித்தல் வாடுத லென்றிவற் றாற்பொலி வின்றிநின்றான் பாரித்த தெல்லாம் வினையின்பய னென்ன வல்லான்.” (புறத் 724) 19 தடுக்க மாட்டா நிலையில் கொலை வந்து கூடியபொழுதும் நறுமண மாலையணிந்த வேந்தன் கொலை தவிர்க என்று ஆணை யிட்ட பொழுதும் வருந்துதலும் வாடுதலும் என்பவற்றால் மாற்றம் சிறிதும் இன்றி ஒரு நிலையனாய் இருந்தான், நிகழ்வன எல்லாம் என் வினைப்பயனே என்று தெளிந்த மனவுறுதியன்! புறத்திரட்டு வழியாகக் கிடைத்த குண்டலகேசிப் பாடல்களுக்குப் புலவர். இரா. இளங்குமரனார் எழுதிய பொழிப்புரை நிறைந்தது. குண்டலகேசி - அருஞ்சொற் பொருள் அகராதி அரவின 14 அனலென 12 இறந்த 3 உறுப்புகள் 1 எனதெனச் 2 கோள்வலைப் 16 சீற்றஞ் 4 நன்கன 17 நோய்க்குற்ற 8 பாளையாந் 15 போதர 13 போர்த்தலுடை 10 மண்ணுளார் 5 மறிப மறியும் 6 மாறுகொள் 18 முன்றான் 7 வகையெழிற் 11 வாயுவினை 9 வேரிக்கமழ் 19 அருஞ்சொற் பொருள் அகராதி செய்யுள் எண் அகையழல்-கொழுந்துத்தீ 11 அடியிடுதல்-அடிஒற்றிவருதல் 16 அரவு - பாம்பு 14 அழிதல்மாலை - அழியும் இயல்பு 13 அழுங்கார் - வருந்தார் 6 அழுவம் - பாலைநிலம் 11 ஆளி - சிங்கம் 14 இசிப்ப - இழுப்ப 18 உவர்ப்பு - வெறுப்பு 12 உவவார் - மகிழார் 6 உழந்தான் - பாடுபட்டான் 7 ஊதியம் - வருவாய் 13 ஓரார் - ஆராயார் 8 கண்டம் - கழுத்து 5 பாறு - கழுகு 18 பில்கு - நாறும் 17 புன்கம் - சோறு 2 பூரித்தல் - வருந்துதல் 19 பொத்தி - பொருத்திவளர்த்து 12 போழ்ந்த - பிளந்த 5 மந்தரம் - மலை 18 மருவினால் - பழகினால் 14 மலிர்ப - பெருகுவன 6 மறிப - வளைவன 6 வாயு - காற்று 9 வாவி - குளம் 13 குவரி - தேன் 19