வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு – 29 மகாத்மா காந்தி ( மொழிபெயர்ப்பு நூல் ) ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 29 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2007 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16+ 304= 320 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 200/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ.மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி.க., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்க வேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனை களையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. . ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய் மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். சர்மா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர் களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழி நடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர். தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். தமிழர்கள் கல்வியில் வளர்ந்தால்தான் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தேடி யெடுத்து வெளியிடுகிறோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடா முயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் கட்டுரை இலக்கிய நூல்கள் 11. இந்நூல்களை 3 நூல் திரட்டுகளாக வெளியிட்டுள்ளோம். இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவி களாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுதிகளை முத்துமாலையாகத் தமிழர்தம் பார்வைக்குத் தந்துள்ளோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனின் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும். பதிப்பாளர் பொருளடக்கம் அணிந்துரை iii சர்மாவின் சாதனைகள் v சர்மாவின் பொன்னுரைகள் ix பதிப்புரை x நகைத்தல் நல்லது 1. நகைத்தல் நல்லது 3 2. எனது கல்யாணம் 14 3. எனது மாப்பிள்ளை 18 4. எனது வக்கீல் அண்ணா 22 5. வரன் தேடப் போகிற வக்கணை 26 6. நவராத்திரி கொலுவு 30 7 பாட்டுக் கச்சேரி 33 8 கட்டுரைப் பக்கம் 37 9 பெயரின் பெருமை 41 10 கடவுளுக்கு விடுமுறை 43 11 ஜாக்கிரதை 47 12 நல்ல யோகம் 53 13 காந்தி பெயரால் 58 14 பார்க்க வேண்டியவை 63 15 கோணங்கிராயன் குடும்பம் 67 16 தர்ம சங்கடம் 74 பெண்மையிலேதான் வாழ்வு வாசகர்களுக்கு 1. பெண்மையிலேதான் வாழ்வு 91 2. பெண்மை 94 3. காதல் 97 4. உனக்காக வாழ்வேன் 99 5. உன்னை நான் எப்படி மறக்க முடியும்? 100 6. என்னை ஏன் காதலிக்கிறாய்? 102 7. விடுதலை - ஆனால் கட்டுப்பட்டேன் 103 8. பெண் கல்வி 104 9. பெண்களின் சமூக அந்தது 108 10. பெண்களைப் பார்த்தல் 113 11. தாய் யார்? 115 12. அம்மா! 116 13. தாய்மை 117 14. இரு குலத்திற்கும் ஒரே நீதி 126 15. இல்லறம் 131 16. தாயும் சேயும் 136 17. குழந்தை 141 18. குழந்தையின் தேவைகள் 142 19. குழந்தை வளர்ப்பு 143 20. குழந்தைகள் போதிக்கும் பாடம் 148 மனிதன் யார்? 1. மனிதன் யார்? 155 2. பெரிய மனிதன் 157 3. மனிதன் பண்பு 162 4. மனிதனே - கேள்! 168 5. சின்னஞ் சிறு செயல்கள் 172 6. மனிதனும் சமுதாயமும் 175 7. மனிதப் பிராணி 179 8. வாழ்க்கை 182 9. லட்சிய வாழ்க்கை 185 10. வாழ்க்கைப் போராட்டம் 190 11. நீ யார்? 191 12. வாழ்ந்து வீழ்ந்தவர் 192 13. வீழ்ந்தும் வாழ்ந்தவர் 193 14. எது நாகரிகம்? 196 15. நாகரிகமும் பண்பாடும் 202 16. மனிதனும் யந்திரமும் 207 17. வருங்கால சமுதாயம் 211 18. சுதந்திரமே - வா! 218 19. இருதய சுதந்திரம் 219 20. அன்பின் ஆட்சி 220 21. நன்மையும் தீமையும் 221 22. நமது கடமை 222 இக்கரையும் அக்கரையும் 1. இக்கரையும் அக்கரையும் 225 2. உழைப்பும் பிழைப்பும் 236 3. படிப்பும் பண்பாடும் 241 4. அறிவும் அன்பும் 245 5. வெற்றியும் வாழ்க்கையும் 254 6. பணமும் மனமும் 259 7. இளமையும் முதுமையும் 263 8. நன்மையும் தீமையும் 266 9. சான்றோரும் சிற்றினமும் 272 10. இன்பமும் துன்பமும் 277 11. வீடும் நாடும் 285 12. காலமும் கடவுளும் 295 சர்மாவின் பொன்னுரைகள்.......  மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.  பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.  உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே;உயர்வு உன்னைத் தேடி வரும்.  பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.  மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப் பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல் மொழியைப் போற்றுவதைத் தவிர்.  தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.  உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.  ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.  கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.  ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத்திற்கு உயர்வு கொடு.  எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.  நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.  விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான். நகைத்தல் நல்லது நகைத்தல் நல்லது உலகத்திலுள்ள சகலமான பேருக்கும் ஒரு யோசனை. உலகத்திலுள்ள அத்தனை பேருக்கும் யோசனை சொல்ல நீ யார், உனக்கென்ன தகுதியிருக்கிறது என்று கேட்கிறீர்களா? வாதவம். எனக்கே, என்னுடைய நன்மைக்கே யோசனை செய்யத் தெரிந்து கொள்ளாத நான், உலகத்திற்கு என்ன யோசனை சொல்லப் போகிறேன்? அதற்கான தகுதி என்னிடம் ஒன்றுமில்லைதான். உலகம் என்பது ஒரு மங்கலச் சொல். மங்கலச் சொல்லோடு தான் எந்த ஓர் எழுத்துப் பணியையும் தொடங்க வேண்டுமென்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள், உலகம் யாவையும் தாமுள வாக்கலும் என்றுதானே கம்பனுடைய ராமகாதை தொடங்குகிறது? பெரிய புராணம் மட்டுமென்ன? உலகெலாம் உணர்ந்தோ தற்கரியவன் என்றுதான் ஆரம்பிக்கிறது. இதனால்தான் நானும் உலகம் என்ற சொல்லை முதலில் வைத்து ஆரம்பிக்கிறேனே தவிர வேறொன்றுமில்லை. உலகத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அது சந்திரனையும் சூரியனையும் கட்டிப் பிடிக்க முனைந்து வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது; நானோ என்னையே கட்டுப்படுத்திக் கொள்ளத் தெரியாமல் திகைத்து நிற்கிறேன். உலகத்தில் நான் இருக்கிறேன். ஆனால் என்னில் உலகம் இருக்கிறதா? உலகத்தை நன்றாகப் பார்க்க வேண்டுமென்ற ஆசை யென்னவோ எனக்கு நிறைய இருக்கிறது. ஆனால் உலகம் என்னைப் பாராமலல்லவோ இருக்கிறது? ஆகவே, உலகத்திற்கு எந்த யோசனையையும் சொல்ல நான் முன்வரவில்லை. என் எழுதுகோலோடு உறவு கொண்டிருக்கும் சகோதர சகோதரி களுக்குத்தான் சில யோசனைகளைத் துணிந்து சொல்ல முன் வந்திருக்கிறேன். கேட்டால் கேட்கட்டும்; விட்டால் விடட்டும் கேட்டால் நல்லது; விட்டால் கெடுதல் இல்லை. ஒவ்வொருவரையும் தனித்தனியாக வைத்துப் பேச விரும்பு கிறேன். ஆதலின் முன்னிலை ஒருமைப் பிரயோகத்தைக் கையாளு கின்றேன். சகோதரா, ஐந்து பெண்களும் மூன்று பிள்ளைகளுமா உனக்கு? ஒரு பெண்ணுக்குக்கூட இன்னும் விவாகமாகவில்லை யென்றால், பிள்ளை களுக்கு எங்கே ஆகியிருக்கப்போகிறது? இன்னும் ஒரு வருஷம் ஒன்பது மாதந்தான் நீ உத்தியோகம் பார்க்கலாம். அதற்குப் பிறகு பென்ஷன் பெறும் மாஜி உத்தியோகதனாகி விடுவாய். அதற்குள் ஒரு பெண்ணுக்காவது, கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறிப்பார்த்து விட வேண்டுமென்று நீயும் என்னென்னவோ பிரயத்தனங்கள் செய்து பார்க்கிறாய். ஒன்றும் நடக்க வில்லை. ஏன் விசாரப்படுகிறாய்? மூன்று பிள்ளைகளாயிற்றே, ஒரு பிள்ளையாவது உன் விசாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறானா? எல்லாம் தறிதலைகள்! பள்ளிக் கூடத்தில் படித்தென்ன? உலகத்திலே படிக்காத பிள்ளைகள்! அவர்களுக்காகக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறாயா? உன் சம்சாரமா? ஏன் அவள் முகத்தில் எப்பொழுதும் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருக்கிறது? தன் பிறந்தகத்திலிருந்து கொண்டு வந்த சீதனச் சொத்திலிருந்து குடும்ப காலட்சேபம் நடக்கிறதாகக் கருதியல்லவோ உன்னை நடத்துகிறாள்? இதுவும் என் விதியா என்று ஏக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாயா? நீ குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரன், நீ கொடுக்க வேண்டிய மூன்று மாத வாடகை பாக்கிக்காக, சமையலறையின் கூரை ஓடுகள் இரண்டைப் பிரித்து விட்டானே என்பதற்காக அவன் மீது கோபமா உனக்கு? பிதிரார்ஜித சொத்தாக உன் கிராமத்தில் இருந்துவரும் முப்பது ஸெண்ட் நன்செய் நிலத்தை, வந்த விலைக்கு விற்றுத் தொலைத்து, இந்த வாடகை பாக்கியையும் சில்லரைக் கடன்களை யும் தீர்த்துவிட வேண்டு மென்று நீ செய்து வருகிற பிரயத்தனங்களில் ஒன்று கூட பலிக்க வில்லையே என்று ஏன் ஆத்திரப்படுகிறாய்? இந்த விசாரம், கவலை, ஏக்கம், கோபம், ஆத்திரம் எல்லாவற்றி லிருந்தும் விடுதலை பெற உனக்கு ஒரு யோசனை சொல்லுகிறேன். எல்லாவற்றிற்கும் சிரித்து விடு. அவ்வப்பொழுது, அதாவது அந்தந்த விசாரமோ கவலையோ ஏற்படுகிறபொழுது சிரி; அல்லது எப்பொழுதும் சிரித்துக் கொண்டிரு. சகோதரி! உன் பெண், சினிமாவிலே சேர்ந்து நடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, சதா உன்னை நச்சரித்துக் கொண்டிருக்கிறாளா? அதற்கேற்ற முகவெட்டு அவளுக்கு இல்லையென்பது உனக்கல்லவோ தெரியும்? பரதநாட்டியமாவது கற்றுக்கொடுத்துத் தொலைக்கலாமென்றால், அவளுடைய இடுப்பின் சுற்றளவு, நாளுக்கோர் அங்குலம் விகிதம் அதிகப்பட்டுக் கொண்டல்லவோ வருகிறது? நீயும் எத்தனையோ மாதங்களாக, அடுத்த வீட்டு ஆண்டாள் மாதிரி ஒரு வைரத்தோடு போட்டுக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு உன் புருஷனைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய்; அவரும் முடியாது என்று சொல்ல முடியாமல், பார்ப்போம், பார்ப்போம் என்று உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொல்லி வருகிறாரே, அவருடைய சாமர்த்தியத்தைத் தான் என்னவென்று சொல்வது? நீ ஒரு மாமியாராகக் கூடிய அந்ததுக்கு வந்திருக்கிறாய்; ஆனால் ஐயோ, இன்னமும் உன் மாமியார் உயிரோடு இருந்து கொண்டிருக்கிறாளே, இதைவிட வேறு என்ன வேதனை வேண்டும்? அம்மணி, இவைகளுக்காக வெல்லாம் வேதனைப் பட்டுக் கொண்டிராதே; ஏக்கமிட்டு ஏக்கமிட்டு, உன் மனத்தைப் புண்ணாக்கிக் கொள்ளாதே. எல்லாவற்றிற்கும் சிரித்துவிடு. உன் மன அரிப்பு நிச்சயமாகக் குறைந்துவிடும். சிரிப்பு என்பது ஓர் அபூர்வ வது. எல்லோருக்கும் அது கிட்டு வதில்லை. சிரித்த முகம் என்று எல்லாரையுமா சொல் கிறோம்? இல்லை; ஒரு சிலரிடத்தில் மட்டுமே சிரித்த முகத்தைக் காண்கிறோம். அவர்களைப் பார்த்த மாத்திரத்தில், அவர்களிடத்தில் நம்மையறியாமல் ஒரு வித வாஞ்சை உண்டாகிறது. அவர்களோடு பேசி அவர்களுடைய சிநேகத்தைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையும் உண்டாகிறது. இதனால் சிரிப்புக்கு ஒருவித வசீகர சக்தி இருக்கிறதென்று தெரிகிறதல்லவா? ஆனால் யார் சிரித்தாலும், எப்படிச் சிரித்தாலும் எப்பொழுது சிரித்தாலும் அதற்கு வசீகரிக்கும் சக்தி இருக்கிறதென்று சொல்ல முடியாது. கேளுங்கள். என்னுடைய பாட்டியின் முப்பத்திரண்டு பற்களில் ஆறு பற்கள்மீது, என் பாட்டனார், அவர் மாமியார் வீட்டுக்கு ஒரு சமயம் போயிருந்தபோது, தன் கைவரிசையைக் காட்டிவிட்டாராம். என் பாட்டி அப்பொழுது சின்னவள் தானே? ஏதோ எதிர்த்துப் பேசினாளாம். கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டிருக்கிறார். ஆறு பற்களை அவருக்குக் காணிக்கை செலுத்திவிட்டாள். அந்தச் சிறு வயதிலேயே என் பாட்டி. பிறகு ஒவ்வொரு பல்லாக சொத்தை பிடிக்க ஆரம்பித்தது. இதனால் வரிசைக் கிரமத்தில் பதினேழு பற்களை, பல் வைத்தியருக்கு தக்ஷிணையோடு தானஞ் செய்து விட்டாள். வெற்றிலை பாக்கு இல்லாமல் அவளால் ஒரு நிமிஷங் கூட இருக்க முடியாது. சதா அசை போட்டுக் கொண்டேயிருப்பாள். இதனால் அவளுடைய நான்கு கடைவாய்ப் பற்கள் உருத்தெரியாமல் தேய்ந்து மாய்ந்து போய்விட்டன. என் சிறிய பாட்டனார் மகன், அதாவது அவளுடைய மைத்துனன் மகன், எப்பொழுதோ ஒரு சமயம் வீட்டுக்கு வந்து மூன்று நாட்களுக்கு மேல் தங்கிவிட்டானாம். அவளுக்கு இது சகிக்கவில்லை. நான்காவது நாள் அவனுக்கு இலையில் சோற்றைக் கொட்டிவிட்டு, அவனைப் பார்த்ததும் பாராததுமாய் பல்லை நறநற வென்று கடித்திருக்கிறாள். கடி பொறுக்கமாட்டாமல் மூன்று பற்கள் அவள் திருப்பாத கமலங்களில் சரணாகதியடைந்து விட்டன. இரண்டு பற்கள் எப்படி எப்பொழுது காணமற் போயின என்பது அவளுக்கே தெரியவில்லை. ஆக இப்பொழுது நிரந்தரமாக இருப்பது பொக்கை வாய்தான், பொக்கை வாய்ப் பாட்டி என்று தான் நான் அழைப்பேன். அவள் சிரித்தால், அழுகிறாளா சிரிக்கிறாளா என்பது எனக்குத் தெரிவதில்லை. அவளையே கேட்டு விடுவேன், பாட்டி, நீ சிரிக்கிறாயா? mG»whah? என்று. சிரிக்கிறேண்டா கண்ணு என்று அவள் சொன்ன பிறகுதான் அவள் சிரிக்கிறாளென்று எனக்குத் தெரியும். அவளைப் போன்றவர்கள் - பொக்கை வாயர்கள் - சிரிப்பிலே என்ன வசீகர சக்தியைக் காண முடியும்? ஆபத்திரியில் நோயாளிகளாகப் படுத்துக் கொண்டிருக் கிறாள் மனைவி. அவளைப் பார்க்கச் செல்கிறான் கணவன். அவனைப் பார்த்ததும் அவள் சிரிக்கிறாள். அந்தச் சிரிப்பிலே வசீகர சக்தி இருக்கிறதென்று சொல்ல முடியுமா? தன் மனைவியின் ஒற்றைவடச் சங்கிலியை அவசரமாக அடகு வைத்து முப்பது ரூபாய் பெற்றுக் கொண்டு அவசரமாகக் குதிரைப் பந்தயத்திற்குச் சென்ற கோணங்கிராயன், அந்த முப்பது ரூபாயையும் அங்கேயே அவசரமாக அழுதுவிட்டு, வீடு திரும்பும் நோக்கத் துடன், தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பந்தய மைதானத் திற்கு வெளியே வருகிறான். அப்பொழுதுதான், வீட்டுக்குப் போக, கையிலே காசில்லை என்ற நினைவு அவனுக்கு வருகிறது. சுற்று முற்றும் பார்க்கிறான். யாரோ ஒருவன் தென்படுகிறான். அவனை எப்பொழுதோ பார்த்தமாதிரி, எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறது. அவனை, ஒரு கால் ரூபாய், கைமாற்றாகக் கேட்டுப் பார்க்கலாமென்று அவனை அணுகு கிறான் நம்மள் கோணங்கிராயன், அவனைத் திடீரென்று கேட்கலாமா? அவனுடைய சௌக்கியத்தை யல்லவோ முதலில் விசாரிக்க வேண்டும்? அப்படி விசாரிக்கிறபோது, முகத்தில் பலவந்தமாகச் சிரிப்பை வரவழைத்துக் கொள்கிறான். அந்தச் சிரிப்பில் வசீகரம் இருக்க முடியுமா? கரியை அப்பிப் பூசிக் கொண்டிருக்கிற மாதிரி நிறமுடைய என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனைக் காக்காய் என்று எல்லோரும் அழைப்பார்கள். காக்கைக்காவது கழுத்தில் கொஞ்சம் வெளுப்பு இருக்கும். என் நண்பனுக்கோ அது கூட இல்லை. அமாவாசையன்று பாதி ராத்திரியில் திடீரென்று என்னைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் வந்துவிட்டதாம். வந்து விட்டான் வீட்டுக்கு. தெருக்கதவைத் தடதட வென்று தட்டினான். யாரோ, என்ன அவசரமோ என்று படுக்கையிலிருந்த டார்ச்லைட்டைக் கூட எடுத்துக் கொள்ளாமல் அவசரமாக ஓடிப்போய், கதவைத் திறந்தேன் என்னடா சாமு என்றான் சிரித்துக் கொண்டே. அந்தச் சிரிப்பிலே அவன் கோரைப் பற்கள் மூன்று மட்டுந்தான் தெரிந்தன. நான் பயந்து போய் மூர்ச்சையாகாமல் இருந்தேனே, அது என் சம்சாரம் செய்த பாக்கியம். அவனுடைய அந்த இருட்டுச் சிரிப்பிலே எள்ளு மூக்களவு வசீகர சக்தியையாவது பார்க்க முடியுமா? என் மகனுடைய டியூஷன் வாத்தியார், மாதம் பிறப்பதற்குப் பத்து நாட்கள் முந்தியே, முன் பணமாகப் பத்துரூபாய் தேவையென்று பல்லிளித்துக் கொண்டு என் முன்னே வந்து நிற்கிறார். இளிப்பதாகக் காட்டிக் கொள்ளாமல் சிரிக்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொள்கிறார். அவருடைய சிரிப்பிலே சீரகத்தின் அளவு வசீகரமாவது இருக்கிறதா என்று நீங்களே பார்த்துச் சொல்லுங்கள். பைத்தியக்கார ஆபத்திரிக்குச் சென்று பாருங்கள். அங்குள்ள அத்தனைபேரும் சிரிக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சிரிப்பைப் பார்த்தால் நமக்கு அழுகைதான் வருகிறது; அவர்கள் மீது இரக்கம் உண்டாகிறது. அவர்களுடைய சிரிப்பிலே வசீகர சக்தி இருக்கிற தென்று சொல்ல முடியுமா? இப்படி வசீகரமில்லாத சிரிப்பு வகைகளை அடுக்கிக் கொண்டு போகிறீர்களே, எந்த வகையான சிரிப்பிலே, யாருடைய சிரிப்பிலே வசீகர சக்தி இருக்கிறதென்று சொல்லித் தொலையுங்கள் என்று சலிப்புத் தோன்றக் கேட்கிறீர்களல்லவா, கேளுங்கள். புதிய தம்பதிகளின் சிரிப்பிலே எத்தகைய ஆகர்ஷண சக்தி இருக்கிறது? பரபரம் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்கும், இருவரும் இணைந்து வாழ்வதற்கும், இந்தச் சிரிப்பு எவ்வளவோ உதவியாயிருக்கிறதல்லவா? சொல்லொணாத வேதனைப்பட்டு குழந்தையைப் பெற்றதும், தாயாரின் முகத்திலே ஒருவித மலர்ச்சி உண்டாகிறது; பக்கத்திலே படுக்க விட்டிருக்கும் குழந்தையைத் தலைசாய்த்துப் பார்க்கிறாள். அவளை யறியாமல் அவள் உதட்டில் புன்சிரிப்பு வந்து விளையாட ஆரம்பிக்கிறது. அந்தச் சிரிப்பு, தாய்மையின் பெருமித உணர்ச்சியை வெளிப்படுத்து கிறதல்லவா? குழந்தை தூங்குகிறபோது சிறிது உற்றுக் கவனியுங்கள். முகத்திலே எவ்வளவு அழகான புன்சிரிப்பு! கள்ளங் கபடமற்ற உள்ளத்தை வெளிப் படுத்துகின்ற அந்தப் புன்சிரிப்பைப் பார்த்தவுடன் அந்தக் குழந்தையை எடுத்து அணைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை நம்மையறியாமலே நமக்கு உண்டாகிற தல்லவா? அந்தக் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிற போது, சிரிக்கிற சிரிப்பிலே எவ்வளவு வசீகர சக்தி இருக்கிறது! ஆக, குழந்தை - பொதுவாக எல்லாக் குழந்தைகளும் – தூங்குகிற போதும், விழித்துக் கொண்டிருக்கிறபோதும், யாரையும் வசீகரிக்க வல்ல சிரிப்பின் ஊற்றுக் களமாயிருக்கின்றன. குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்கிற போதெல்லாம், தாயார், களுக், களுக் கென்று சிரிக்கிறாள். அப்பொழுது அவள் இதயத்தி லிருந்து பொங்கி வரும் ஆனந்தத்தை அந்தச் சிரிப்பு வெளிப்படுத்துகிறது. தாயார் மட்டுமென்ன, பொக்கைவாய்ப் பாட்டிகூட அந்த மழலைச் சொல்லைக் கேட்டுச் சிரிக்கிறபோது, அதில் சிறிது வசீகர சக்தி இருக்கத்தான் செய்கிறது. பாட்டிமாரின் சிரிப்பிலே கூட வசீகர சக்தியை ஊட்டவல்ல குழந்தையின் தூய உள்ளப்பாங்கை உலகம் அறிந்து பின்பற்று மானால், பாட்டிமார்களுக்கும், பாட்டன்மார்களுக்கும் பல் விழாது; மயிர் நரைக்காது; கூனல் ஏற்படாது; மூக்குக் கண்ணாடியின் அவசியமும் இராது; அதாவது எல்லோரும் இளமையோடிருப்பர். உத்தியோகத்திற்காக விண்ணப்பத் தாள்களை எழுதி எழுதி அனுப்பியும், படிகள் ஏறி ஏறி இறங்கியும் கை கால்கள் சோர்ந்து போன ஒருவனுக்கு, ஏதாவது ஓர் உத்தியோகம் கிடைத்துவிட்டால், அவன், தன் அதிருஷ்டத்தை நினைத்து நினைத்துச் சிரிக்கிற சிரிப்பிலே கூட ஒரு வித அழகு இருக்கவே செய்கிறது. முப்பத்திரண்டு வயதான தன் பெண்ணுக்கு மூன்று வருஷமாக வரன் தேடியும், முப்பத்தேழு ஜாதகங்களைப் பார்த்தும், எதுவும் பொருத்த மாக அமையவில்லையென்று சோதிடர் சொல்வதைக் கேட்டு, அந்தச் சோதிடர்மீது ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தகப்பனாரிடம், அந்தச் சோதிடரே புதிதாக ஒரு ஜாதகத்தைக் கொடுத்து இது பொருந்துகிறதென்று சொல்லுகிறபோது அவர் - அந்தத் தகப்பனார் - அடைகிற ஆனந்தம், அந்த ஆனந்தத்தினால் அவருக்கு உண்டாகிற சிரிப்பு இருக்கிறதே அதற்கு அலாதியான மகிமையுண்டுதான். ஜாதகம் பொருந்தினாலும், பிள்ளை யாண்டான் பொருத்தமானவனாயிருக்கிறானா வென்பதைப் பின்னாடி யல்லவோ அவர் பார்க்கப் போகிறார். அது வேறு இலாகாவிற்குச் சென்று காத்துக் கிடக்க வேண்டிய நிலையல்லவா? வெகு நாட்களாகக் குடிக் கூலிக்கு இடம் அகப்படாமல் தவித்துக் கொண்டிருந்து, இருபத்தைந்து ரூபாய் வாடகையில் இரண்டு அறையுள்ள ஓர் ஒதுக்கிடம் காலியாக இருக்கிறதென்று கேள்விப்படுகிறவன், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுட்கால சிறைவாசத் தண்டனையாக மாற்றப்பட்டிருக்கிறதென்று அறிவிக்கப்படுகிறவன், தண்டனைக்காலம் முடிவதற்கு முந்தியே விடுதலை பெற்று சிறைச்சாலையிலிருந்து வெளியே வருகிறவன், கடன்காரனை நேரில் சந்தித்தும், அவனைப் பாக்கி கேட்க வொட்டாமல் சாமர்த்தியமாகப் பேசி அவனிடமிருந்து தப்பித்துக் கொள்கிறவன், புரோகிதஞ் செய்யும் மாமனாரிடமிருந்து எதிர்பாராத விதமாக இருபத்தைந்து ரூபாய்க்கு மணியார்டர் பெறும் படித்த மாப்பிள்ளை, இப்படிப்பட்டவர்கள் அடையும் சந்தோஷம், அந்தச் சந்தோஷம் அள்ளிக் கொட்டும் சிரிப்பு, இவற்றிற்குத் தனிப்பட்டதொரு வசீகர சக்தி இல்லையென்று யாராவது சொல்ல முடியுமா? இவற்றிற்கு அடித்தளமாயமைந் திருக்கிற இதயம் எத்தகையதென்பது வேறு விஷயம். பொதுவாக, சிரிப்புக்கு ஒரு புனிதத் தன்மை கொடுத்துப் பேச வேண்டுமானால், எந்த இதயம் காமக்குரோதமாகிய ஆறு பகைவர் களுக்கு இருப்பிடமாயில்லையோ, எந்த இதயம் அன்பின் ஊற்றாயிருக் கிறதோ, அந்த இதயத்திலிருந்து பிறக்கிற சிரிப்பில் ஒரு தனிச் சோபையைக் காணலாம். அப்படியே முதிர்ந்த அறிவும், அந்த அறிவுக்கேற்ற பணிவுமுடையவர்கள், உயிரினும் பெரிதாக ஒழுக்கத்தை மதித்து நடக்கிறவர்கள், இயற்கையோடியைந்த வாழ்க்கையில் இன்பம் நுகர்கிறவர்கள், பலதுறை அடிமைத் தனத்தில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு விடுதலை வாங்கித் தர உழைக்கிறவர்கள், பிறர் துயரைத் தங்கள் கண்ணீரினால் கழுவி விடுகிறவர்கள் ஆகிய இப்படிப்பட்டவர்கள் சிரிக்கிறபோது கூர்ந்து கவனியுங்கள். இவர்களுடைய சிரிப்பில் ஒருவித தெய்வீகத் தன்மை ஒளிவிட்டு வீசுவதைக் காண்பீர்கள். சிரிப்பில் எத்தனை வகையுண்டென்று தெரியுமா உங்களுக்கு? குறட்டையில் எத்தனை வகையுண்டோ அத்தனை வகையுண்டு சிரிப்பிலும். அதிர்வேட்டுச் சிரிப்பு, ஆகாசவாணச் சிரிப்பு, கணீர் சிரிப்பு, கள்ளச் சிரிப்பு, காதற் சிரிப்பு, குதிரைச் சிரிப்பு, குபு குபு சிரிப்பு, கெக்கெக்கே சிரிப்பு, நமட்டுச் சிரிப்பு, பக் பக் சிரிப்பு, இப்படி எத்தனையோ வகை. இவற்றுள் எதை நம்பினாலும் நம்புங்கள். நமட்டுச் சிரிப்பு இருக்கிறதே அது மகா ஆபத்தானது; அதில் ஒரு கணம் வசியப்பட்டிருந்தால் கூட போதும், நிலை தடுமாறி நிற்க வேண்டியதுதான். நாம் அசடா, சமர்த்தா என்று நம்மையே நாம் பார்த்துக் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு அது நம்மை உட்படுத்திவிடும். கள்ளச் சிரிப்பும் ஏறக்குறைய இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், நம்முடைய புத்திசாலித்தனத்தைச் சிறிது உபயோகப் படுத்திப் பார்த்தோ மானால், கள்ளச் சிரிப்புக்காரனுடைய உள்ளத்தை ஒருவாறு பார்க்கலாம். அப்படிப்பட்டவனிடத்தில், நாம் முன்னெச்சரிக்கை யுடன் நடந்து கொள்வது நல்லது. மற்ற வகைச் சிரிப்புகளினால் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் உண்டாகாது; தொந்தரவும் இராது. அவற்றில் சிலவற்றைச்சகித்துக் கொள்ள நமக்குக் கொஞ்சம் பொறுமைதான் வேண்டும். சில சமயங்களில் நாம் சிரிப்பது, நமக்கே ஆபத்தாக வந்து முடிவதுண்டு, மகாபாரத யுத்தம் மூளுவதற்கு மூலகாரணமா யமைந்தது, துரோபதையின் சிரிப்பல்லவோ? சீன சரித்திரத்திலே கூட இப்படி ஓர் அரசியின் சிரிப்பு, ராஜ்யத்திற்குப் பெரு நெருப்பாகி விட்டிருக்கிற செய்தியைப் படிக்கிறோம். இது நிகழ்ந்தது கிறிது சகத்திற்குச் சுமார் ஏழு நூறு ஆண்டுகளுக்கு முந்தியென்று சரித்திரக்காரர்கள் காலவரையறை செய்திருக்கிறார்கள். சிரித்துக் கொண்டே ஒருவரைப் புகழ்தலும் கூடாது; இகழ்தலும் கூடாது. முன்னதனால், நாம் தவறாகக் கருதிக் கொள்ளப்பட்டு விடுவோம். நாம் மனப்பூர்வமாகப் புகழவில்லை யென்று தெரிந்துவிட்டால், பிறகு நம்முடைய எந்த ஒரு சொல்லுக்கும் மதிப்பே இராது. சிரித்துக் கொண்டே இகழ்ந்து பேசினால், நம் உயிருக்கு ஆபத்துண்டாதலும் கூடும். காரசார மாக ஒருவனைத் திட்டிவிட்டால் அவனும் நம்மைக் காரசாரமாகத் திருப்பித் திட்டிவிட்டுத் திருப்தியடைந்து போவான். சிரித்துக் கொண்டே குத்தலாகப் பேசினால் யாருக்குமே ஆத்திரம் வரத்தான் செய்யும். அந்த ஆத்திரத்தில் அவன் ஏதும் செய்யக் கூடுமல்லவா? சிரித்துக் கொண்டே ஒருவன் நம்மோடு சிநேகம் செய்து கொள்ள வருவானாகில் அவனிடத்தில் நாம் உஷாராயிருக்க வேண்டும். அவன் ஏதோ சுயகாரியமாகத்தான் நம்மோடு உறவு கொண்டாட வந்திருக்கிறான். அவன் காரியம் முடிந்தவுடன் நம்மைவிட்டுப் போய்விடுவான். அவனுடைய சிநேகம் நீடித்திராது. அவன் நினைத்து வந்த காரியம் நினைத்தபடி முடியவில்லையானால், நம்மைப் பரம விரோதியாகக் கருதத் தொடங்கிவிடுவான்; நமக்குத் தீங்கு விளைவிக்க முற்பட்டால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஒருவனுடைய குடிப் பிறப்பைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டு மானால், அவனுடைய முகத்தைப் பார்த்தாலே தெரியுமென்று சொல்லு வார்கள். அதாவது நற்குடிப் பிறந்தவன், எப்பொழுதும் நகை முகத்தோடு இருப்பான். அவன் பார்வையிலே கனிவு இருக்கும்; அவன் பேச்சிலே இனிமை இருக்கும். அவன், இரக்க உணர்ச்சியோடு கூடியவனாயிருப்பான்; மறந்தும் பிறரை இகழ்ந்து பேச மாட்டான். அவனைப் பார்த்த மாத்திரத்தில், அவனுடைய தொடர்பு நமக்கு என்றென்றும் இருந்து கொண்டிருக்க வேண்டுமென்ற ஆசையே நமக்கு உண்டாகும். நகை, ஈகை, இன்சொல், இகழாமை நான்கும், வகை என்ப வாய்மைக் குடிக்கு என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு இங்குச் சிந்திக்கற்பாலது. வாழ்க்கையானது, வெறும் வறண்ட பாலைவனமாக இருக்கக் கூடாதென்பதற்காகத்தான், துன்பமும் துயரமுமே மிகுதியாகவுள்ள புதர்க் காடாகிவிடக் கூடாதென்பதற்காகத்தான், ஆண்டவன், சிரிப்பென்னும் பசும்புற்றரையைப் படைத்திருக் கிறான். இந்த ஒன்றை மட்டும் படைக்க மறந்துவிட்டு, மற்ற எல்லாவற்றையும் படைத்திருந்தாலும், அவனுடைய படைப்புத் தொழில் முற்றுப் பெற்றதாகக் கருதப்பட மாட்டாது. ஏனென்றால், சிரிப்பில்லாமல் மனிதனை மட்டும் படைப்பது, பலகணி களில்லாமல் வீட்டைக் கட்டுவது போலாகும். அந்த வீட்டினால் யாருக்கு என்ன பயன்? நகைச்சுவையில்லாத மனிதன், மற்றவர்களுக்குப் பிரயோஜனப் படாதவனாயிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; அவனுக்கே அவன் பயனுள்ளவனாயிருப்பானா என்பது சந்தேகம். அதாவது, அவனுக்கே அவனுடைய நல்வழி இன்னதென்று புலப்படாது. ஏனென்றால் அவனுக்கு - நகைச்சுவை பெறாத அந்த மனிதனுக்கு - உலகம், இருள் மயமாகவே தோன்றும். அவனுக்கு எதிலும் ருசியிராது; யாரிடத்திலும் நம்பிக்கை யிராது; எங்கும் அருவருப்பான முகங்களே தென்படும். அவன், தன்னம்பிக்கை இழந்தவனாய், சதா எரிந்து விழும் உருவமாய், பொறாமையின் உறையுளாய், நோய் நொடிகளின் இருப்பிடமாய் உலவி வருவான். சுருக்கமாக, அவனைப் பொருத்த மட்டில், பகல், இரவாகவே இருக்கும். நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம், பகலும் பால் பட்டன்று இருள் என்பதல்லவோ வள்ளுவத்தின் வாசகம்? இங்ஙனம் மனித வாழ்க்கையில் வெளிச்சம் படரச் செய்கின்ற சாதனமாயிருப்பதனால்தான், நகைச் சுவைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்துப் பேசியிருக்கின்றனர் நமது முன்னோர். சிங்காரம், வீரம், கருணை, அற்புதம், நகை, பயம், பீபற்சம், ரௌத்திரம், சமநிலை என்னும் ஒன்பது சுவைகளின் வரிசையில் இந்த நகைச்சுவை இடம் பெற்றிருக் கிறதல்லவா? கவிஞனோ, ஓவியனோ, நடிகனோ, தன் தன் படைப்பில், நகைச்சுவையை, ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது புகுத்திப் பேசாது போனால், அந்தப் படைப்பு, சோபிதமடைவ தில்லை. கம்பனுடைய ராம காதை போன்ற காவியங்களிலும், கோயில்கள் முதலியவற்றில் தீட்டப் பெற்றிருக்கும் வண்ண ஓவியங்களிலும் நகைச்சுவை ஒளிர்வதைக் காண்கிறோம். நாடகத்தில், நகைச்சுவையை நல்க வல்ல விதூஷகன், இன்றியமையாத ஒரு பாத்திரமாக, வெகு காலந்தொட்டு இருந்து வந்திருக்கிறான். அரசவையிலும், விதூஷகன் என்னும் விகட கவி ஒரு கௌரவமான தானம் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறான். உண்மையில், அரசனுடைய அந்தரங்கத் தோழனாக இருக்கிறவன் இவனே. அந்தப்புரக் கதவுகள் உள் பக்கம் தாளிட்டுக் கொண்டு விட்ட காலத்திலும், போர்க் களத்தில் புறமுதுகு காட்ட வேண்டிய நிலை ஏற்பட்ட போழ்தும், அரசனுக்கு ஆறுதல் அளிக்கிறவன் இந்த விகடகவி, இதனால் இவன் பல திறப்பட்ட புலவனாகவும், பலதுறை அனுபவமுடையவனாகவும் இருக்க வேண்டுமென்பது சித்தமாகிறது. சாதாரணமாக எல்லோரும் சிரிக்கலாம். எல்லோராலும் பிறரைச் சிரிக்க வைக்க முடியாது. அதிலும், தான் சிரிக்காமல் மற்றவர்களைச் சிரிக்க வைப்பது கொஞ்சம் கடினம். ஆனால் அதில்தான் உண்மையான நகைச்சுவையைக் காண முடியும். தான் சிரித்துக் கொண்டே மற்றவர் களைச் சிரிக்க வைக்க முயலுகிறவன், ஒரு கையால் சாப்பிட்டுக் கொண்டே மற்றொரு கையால் சாப்பாடு போடுகிறவன் மாதிரி. அப்படி ஒரு கையால் போடுகிற சாப்பாட்டில் ஏதேனும் ருசி காண முடியுமா? தான் சிரிக்காமல் மற்றவர்களைச் சிரிக்க வைக்க வேண்டு மென்றால், உடல், பலமுடையதாகவும் தூய்மை யுடையதாகவும் இருந்தால் மட்டும் போதாது; ஆத்மா, ஆரோக்ய முடையதாகவும் பரிசுத்த முடையதாகவும் இருக்க வேண்டும். ஆத்மாவின் ஆரோக்கிய நிலையி லிருந்துதான் நகைச்சுவை பிறக்கிறதென்று பெரியோர்கள் சொல்லு வார்கள். ஆரோக்கியமில்லாத ஆத்மா, அவலச் சுவையைத்தான் நல்கும். ஒரு ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? வெகு நாட்களாகவே, இதை உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்பது என் ஆவல். நீங்கள் அழுதால் தான் மற்றவர்கள் அழுவார்கள்; ஆனால் நீங்கள் சிரித்தால் மற்றவர்கள் சிரிக்க மாட்டார்கள். நான் சிரிக்கிறேன்; மற்றவர்கள் ஏன் சிரிக்கவில்லை என்று நீங்கள் கோபித்துக் கொள்ள முடியுமா? அப்படி அவர்கள் சிரிப்பார்களானால், அதற்காக நீங்கள் சந்தோஷப் பட முடியாது; சந்தோஷப்பட வேண்டாமென்று கூட உங்களுக்குச் சொல்லுவேன். ஏனென்றால், அவர்கள் உங்கள் சிரிப்பைக் கேட்டுச் சிரிக்கவில்லை; உங்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். வெள்ளையாகச் சொல்ல வேண்டுமானால், உங்களை ஏளனம் செய்கின்ற முறையில் சிரிக்கிறார்கள். அதைப் பார்த்தோ, கேட்டோ நீங்கள் சந்தோஷமடைய லாமா? ஆதலின் உங்கள் பேச்சிலோ, எழுத்திலோ உண்மையிலேயே நகைச்சுவை ததும்பி நிற்க வேண்டுமானால், அந்தச் சுவையை அனுபவிக்கின்ற முறையில் மற்றவர்கள் சிரிக்க வேண்டுமானால், முதலில் ஆத்ம பரிசுத்தம் பெறுங்கள்; உலகமென்னும் பள்ளிக்கூடத்திலே படியுங்கள்; முற்காலத்துப் பெரியோர்கள், நெருக்கடியான நிலைமைகள் ஏற்பட்ட போழ்தெல்லாம் எப்படி அவற்றைத் தங்கள் சிரிப்பினாலும், சிரிப்பை அடிப்படையாகக் கொண்ட சொல்லினாலும் சமாளித்திருக் கிறார்களென்பதைக் கல்வி வாயிலாகவோ, கேள்வி வாயிலாகவோ தெரிந்து கொள்ளுங்கள். மனிதனுக்கும் மிருகத்துக்கும் எத்தனையோ வேற்றுமை களுண் டென்றாலும், ஒரு வேற்றுமையைப் பற்றி மட்டும் இங்குச் சொல்லிக் காட்டுதல் பொருத்தமாயிருக்கும். மனிதன், சகிப்புத் தன்மையை மீறிய அளவுக்குத் துன்பத்தை அனுபவிக்கிறபோது, சிரித்து விடுகிறான்; மிருகமோ, அந்த நிலையில் கண்ணீர் விடுகிறது; கதறியழுகிறது. அது போலவே, மனிதன், கோபத்தின் உச்சியில் ஏறி நிற்கிறபொழுது, சிரித்து விடுகிறான்; அதே நிலையில் மிருகமானது, மூச்சிலே அனல் கக்க முட்டு கிறது; துள்ளிப்பாய்கிறது. சிரிக்கத் தெரிந்திருந்தால் சிரித்திருக்குமோ என்னவோ? ஆனால் அது மிருகமல்லவா? சிரிப்பினால் எத்தனையோ வகை நன்மைகளுண்டு. இதை அனுபவத்தில் பார்க்கலாம். பகலில், சோம்பேறித்தனம் உங்களை அடிமை கொள்ளப் பார்க்கிறதா? சிரிப்பினால் அதனை அடிமை கொண்டு விடுங்கள். இரவில் தூக்கம் வரவில்லையா? சிரித்துக் கொண்டே உலவிக் கொடுங்கள். மனத்தில் ஏதோ ஒரு வேதனை புகுந்து கொண்டு உங்களை உலுக்கி வருகிறதா , சிரியுங்கள். அஜீரணத்தால் அவதைப்படுகிறீர்களா? உரக்கச் சிரியுங்கள். பிச்சைக்காரனுக்கு ஒரு பிடி அரிசிபோட உங்களுக்குச் சக்தி இல்லையா? சிரித்துக் கொண்டே இல்லையென்று சொல்லுங்கள். அவன் உறுத்து உறுத்துப் பார்த்துவிட்டுத் திரும்பிச் செல்ல மாட்டான்; சிரித்துக் கொண்டே திரும்பிப் போய்விடுவான். நீங்கள் அலுவல் பார்க்கு மிடத்து அதிகாரி உங்களை அகாரணமாகக் கோபித்துக் கொள்கிறாரா? பதில் பேசாமல் வெறுமனே சிரியுங்கள். அவர் கோபம் தணிந்து போகும். நல்லவர்கள் பரிச்சயத்தைப் பெறவேண்டுமென்றும், நான்குபேர் மத்தியிலே பழகிப் பெரிய மனிதனாக வேண்டுமென்றும் ஆசைப்படு கிறீர்களா? உங்கள் முகம் எப்பொழுதும் சிரித்த முகமாயிருக்கட்டும். இப்படி ஒன்றா இரண்டா, எத்தனையோ அனுகூலங்களை நீங்கள் அடையலாம். ஆனால் ஓர் எச்சரிக்கை. எந்தக் காரணத்தை முன்னிட்டும் நீங்கள் தனியாயிருந்து சிரித்துக் கொள்ளாதீர்கள். பார்க்கிறவர்கள், உங்களுக்கு ஏதோ மூளைக் கோளாறு ஏற்பட்டிருக்கிறதென்று கருதிவிடுவார்கள்; உங்கள் மீது வைத்த கருணையினால், உங்களைப் பலவந்தமாக அழைத்துக் கொண்டு போய் பைத்தியக்கார ஆபத்திரியில் விட்டாலும் விட்டு விடுவார்கள். ஆகவே, யாரைப் பார்த்தாவது சிரியுங்கள்; ஆனால் எப்பொழுதும் சிரியுங்கள். பொதுவாகவே, அறிவைத் துலக்கப்படுத்திக் கொள்ள, ஆன்மாவை உயர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள, உடம்பில் வியாதிகள் வராமல் தடுத்துக் கொள்ள நகைத்தல் நல்லது. 2. எனது கல்யாணம் எனக்குக் கல்யாணம் ஆகி ஒரு தலைமுறைக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் இப்பொழுது அதனை நினைத்துக் கொண்டால் கூட, என் தலை முடிச்சிலே மல்லிகைச் சரம் சுற்றிக் கொள்கிறது; என் மார்பிலே சந்தனம் கமகமவென்று வாசனை வீசுகிறது; புது வேஷ்டி, என் இடுப்பிலே புதிய புதிய வரிகளைப் போட ஆரம்பித்துவிடுகிறது. மாப்பிள்ளை ஸார் என்று யாரோ என்னைக் கூப்பிடுவது போலவும், நான் மாப்பிள்ளையா யிருக்கிறபோது என்னை இப்படித் தொந்தரவு படுத்தலாமா என்கிற பாவனையில் நான் அவர்களை அலட்சியமாகத் திரும்பிப் பார்ப்பது போலவும் நினைவு உண்டாகிறது. மறுபடியும் ஏன் கலியாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது என்றுகூடத் தோன்றுகிறது. ஆனால் என் எஜமானி சம்மதிப்பாளா? நடுவிலே ஒரு வார்த்தை. இது திரீ சுதந்திர காலம் புருஷர்கள் யாருமே, மனைவிமார்களை எஜமானிகள் என்றுதான் அழைக்க வேண்டும். அப்படி அழைக்காவிட்டால், திரீகளெல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டு சத்தியாக்கிரகம் செய்யப்போவதாக பயமுறுத்தினால் என்ன செய்வது? என் எஜமானியும் கிழவியாகி விட்டாள். எனக்கும் இனி பாலியம் திரும்பாது. காயகல்ப சிகிச்சை செய்து கொள்ளலாமா வென்று என் நாயகியைப் பார்த்தால் எண்ணம் உண்டாகிறது. ஆனால் -? எனக்குத் திடீரென்று தான் விவாகம் நிச்சயமாயிற்று. திங்கட் கிழமை முகூர்த்தம். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திற்கு முன்னர், எனக்கு இப்பொழுது மனைவியாக வாய்த்திருக்கிற பெண்ணைக் கொடுப் பதாக நிச்சயமாயிற்று. இந்த அவசரத்தில், நான் பெண்ணைப் பார்த்து என் சம்மதத்தைத் தெரிவிக்க அவகாசம் எங்கே? தவிர, இந்தக் காலத்து மோதரா? எங்கள் காலத்தில் பெற்றோர்கள் கீறின கோட்டைத் தாண்டி நாங்கள் போக மாட்டோம். எப்படியோ எங்கள் இருவரையும் முகூர்த்த மணையில் உட்கார வைத்தார்கள். என்னோடு வாழ்க்கைக் கப்பலிலே சேர்ந்து பிரயாணஞ் செய்யப் போகிறவள் எப்படித்தான் இருக்கிறாள் என்று பார்த்து விடவேண்டுமென்ற ஆசை எனக்கு. ஆனால் எப்படிப் பார்ப்பது இத்தனை பேரும் சுற்றிக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிற பொழுது? எனக்குப் புரோகிதராக வாய்த்தவரும் என்மாதிரி மனச் சஞ்சலம் அடைந்தவர் போலிருக் கிறது. இந்த ஜாடை தெரிந்து கொண்டுதான், மாப்பிள்ளை, கொஞ்சம்நெருங்கி உட்காரணும் என்றார். அவர் கொஞ்சம் என்றார். நான் அதிகம் நெருங்கி உட்கார்ந்தேன். ஆனால் அவளும் அதிகம் நகர்ந்து உட்கார்ந்தாள். எல்லோரும் கொல்லென்று சிரித்து விட்டார்கள். ஹோமத்தீ வளர்க்க ஆரம்பித்து விட்டார் புரோகிதர். என்னென்ன வோ மந்திரங்களை யெல்லாம் சொன்னார். ஆனால் என் வாய்தான் முணுமுணுத்தது. என் மனமோ, பக்கத்திலேயுள்ள உருவத்தைச் சுற்றிச் சுற்றிப் பிரதட்சணம் பண்ணிக் கொண்டிருந்தது. ஹோமப் புகை வரவர அதிகமாகி விட்டது. என் கண்களில் நீர் தாரை தாரையாக வடிய ஆரம்பித்தது. கண்ணைத் துடைத்துக் கொள்ளப் பக்கத்திலே துண்டு ஒன்றையுங் காணோம். ஏதோ மறந்தவன் போல் பக்கத்திலே உட்கார்ந் திருந்த என் மனைவியின் தலைப்பை எடுத்துத் துடைத்துக் கொண்டேன். உடனே அவளுக்கு ஆத்திரம் உண்டாகி விட்டது. என்னை வெறிக்கப் பார்த்தாள். நானும் அவளை உற்றுப் பார்த்தேன். பத்து வினாடிகள் இருக்கும். உடனே இருவர் உதட்டிலிருந்தும் எப்படியோ சிரிப்பு வந்து விட்டது. அவள் கண்களை நான் பார்த்தேன். என் கண்களை அவள் பார்த்தாள். அந்தப் பார்வை, அந்தச் சிரிப்பு - ஹா! ஹா! இதையெல்லாம் சொல்ல முடியுமா என்ன? அனுபவிக்கத்தான் முடியும். அந்தப் பாழாய்ப் போன அகத்துறை முதலிய ஒன்றையுமே அப்பொழுது நான் படித்துத் தொலைக்கவில்லை. எங்கள் தெற்கோடித் தோட்டத்துக் கிணற்றுத் துறையொன்று தான் அப்பொழுது எனக்குத் தெரியும். அவளைப் பார்த்தேன். அவள் அழகுள்ளவளா, அவள் என்ன நிறம் ஒன்றையும் பார்க்கவில்லை. அவளைப் பார்த்தேன். அவள் மனத்திலே புகுந்து கொண்டேன். என் மனத்தை இழந்து விட்டேன். பிறகு அவள்தானே நான். நான் தானே அவள். அன்று நாங்கள் சிரித்த சிரிப்பு தான் இப்பொழுதுகூட எங்களை விடவில்லை. நான் ஆபீஸிலிருந்து வந்தவுடன் என்னைப் பார்த்துச் சிரிப்பாள்; நானும் என் எஜமானர்களிடம் பட்ட அடி உதைகளை யெல்லாம் மறந்து சிரிப்பேன். இதிலே ஒரு விசேஷம். இப்படி நாங்கள் சிரிப்பது ஒருவருக்குமே தெரியாது. எங்கள் வாழ்க்கையிலே வேறொரு பாக்கியத்தையும் நாங்கள் காணாவிட்டாலும், இந்த நகைப் பாக்கியம் ஒன்றுதான் எங்களுக்கு. பிறகு மாங்கல்ய தாரணம் நடந்தது. நுகத்தடியை அவள் தலைமீது வைத்தார்கள். நான் அவள் கழுத்தில் தாலி பூட்டினேன். அப்பொழுது அவள் என் பாதத்தைப் பார்த்தாள். நான் அவள் தலையைப் பார்த்தேன். நான் காலாலிட்ட வேலையை அவள் தலையால் செய்யவேண்டுமென்பதற்கு முன்னெச்சரிக்கையோ என்னவோ இது? பழைய கால சம்பிரதாயப்படி நலுங்கு, ஊஞ்சல் எல்லாம் நடை பெற்றன. அந்த வேளை எப்பொழுது வரும் என்று நான் எவ்வளவு ஆவலாகக் காத்துக் கொண்டிருப்பேன் தெரியுமா! என் சகோதரி ஒருத்தி இருந்தாள். கொஞ்சம் பிகுவான பேர்வழி. நலுங்கு, ஊஞ்சல் இவை களுக்குப் பெண் வீட்டார் வந்து அழைத்தால், உடனே போய் விடாதே. கொஞ்சம் முடுக்காயிரு. இல்லாவிட்டால் பெண் மட்டுமல்ல, பெண் வீட்டார் கூட உன்னை அலட்சியம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று எனக்கு உபதேசம் செய்வாள். எனக்கோ, அவர்கள் எப்பொழுது வந்து கூப்பிடப் போகிறார்கள் என்று இருக்கும். இந்த மாதிரியான மனச் சங்கடங்களை யெல்லாம் மாப்பிள்ளைகளுக்கு வைக்கக் கூடா தென்பதற்குத்தான், ஒரே பிள்ளையுள்ள இடமாகப் பார்த்துப் பெண் வீட்டார் தங்கள் பெண்ணைக் கொடுக்கிறார்கள் போலிருக் கிறது! எப்படியோ ஒரு தினுசாக ஐந்து நாள் கலியாணம் முடிந்தது. ஐந்தாவது நாள், இன்றோடு கலியாணம் முடிகிறதே யென்ற மன வருத்தம் எனக்கு. என் காதலியை இனி எப்பொழுது பார்க்க அனுமதிப்பார்களோ தெரியாதல்லவா? அன்று நலுங்கிட்டு, மஞ்சள் பூசி என்னென்னவோ செய்தார்கள் எங்களுக்கு. என் மனைவியை விட்டு எப்படிப் பிரிவது என்ற ஏக்கந்தான் எனக்கு. இதை நான் எப்படி வெளிப்படுத்திக் கொள்வேன்? உன்னிடத்திலே நான் ஆசை கொண்டிருக்கிறேன் என்று எப்படி நான் என் மனைவிக்குத் தெரிவித்துக் கொள்வேன்? எங்களிருவரையும் கை கோத்துக் கொண்டு அப்படியும் இப்படியும் போகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம் என் மனைவியின் சுண்டு விரலைப் பிடித்து நசுக்கிக் கொண்டிருந்தேன். ரத்தின வியாபாரம் நடக்கிற இடங்களில், ஒருவருக்கொருவர் எப்படி விலை பேசிக் கொள்வார்கள் தெரியுமா? ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு, இருவர் கைகளின் மீதும் துணியை மூடி விட்டு, அந்தக் கைகளிலேயே விலையை நிர்ணயம் செய்து கொள்வார்கள். அது போலவே நாங்களும் சுண்டு விரல்கள் மூலமாகவே பேசிக் கொண்டோம். என்ன பேசிக் கொண்டோம் என்பது மட்டும் தெரியாது. ஆனால் பேசுவதற்குத் தான் என்ன இருக்கிறது. மனந்தான் ஒன்றுபட்டு விட்டதே. எங்களுக்கு விவாகமாகி இத்தனை வருஷங்கள் ஆயிற்றே; இது வரையில் நாங்கள் ஒரு நாளாவது சண்டை போட்டுக் கொண்டதே கிடையாது. தமிழ்ப் புலவர்கள் ஏதோ ஊடல் என்று சொல்லுகிறார்களே அந்த இழவெல்லாம் எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் இப்படி நாங்கள் இருவரும் அந்நியோந்நியமாய் இருக்கிறோமென்பதை, நவீன நாகரிக தம்பதிகளைப் போல் வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதும் கிடையாது. அதாவது மாலை நேரத்தில் காற்று வாங்கச் செல்கிற போது ஒருவர் மீது ஒருவர் இடித்துக் கொண்டு போவதில்லை; அல்லது உரக்கச் சிரித்துக் கொண்டு போவதுமில்லை. அதனால்தான் எங்கள் இரண்டு பேருடைய முகத்திலும் கர்நாடகக் களை சொட்டுகிறது போலும்! 3. எனது மாப்பிள்ளை மாப்பிள்ளைகள்! அடேயப்பா! இந்தப் பெயரைச் சொன்னாலே இப்பொழுது எனக்குப் பயமாயிருக்கிறது. மேனாடுகளிலே என்னென்ன வோ சங்கங்க ளெல்லாம் ஏற்படுத்திக் கொள் கிறார்களே, அதைப்போல், நமது நாட்டிலும் மாப்பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து தனியாக ஒரு சங்கம் ஏற்படுத்திக் கொள்ளா திருக்க வேண்டுமென்றுதான் நான் பிரார்த்தித்துக் கொண்டிருக் கிறேன். மாமனார்மார்களே! நான் மாமனாயிருந்து வழக்குரைத்த படலத்தைச் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள். எனக்குப் பிறந்தது ஒரு பெண்தான். அதனால் அவளை எவ்வளவு பராமரிப்போடு, எவ்வளவு கண்ணுங்கருத்துமாக வளர்த்திருப்பேன் என்பதை, டஜன் கணக்கான பெண்களைப் பெற்று டஜன் கணக்கான மாப்பிள்ளை களோடு அவதிப்படும் உங்களுக்கச் சொல்ல வேண்டுவதில்லை யல்லவா? என் பெண்ணுக்கு, ஐயா, நான் என்னென்ன சொல்லிக் கொடுத்தேன் தெரியுமா? கவர்ன் மெண்ட் பள்ளிக் கூடத்தில் நான்காவது வகுப்புவரை படிப்புச் சொல்லிக் கொடுத்தேன். என் சிநேகிதர் ஒருவர். நான் உத்தியோகம் பண்ணுகிற ஆபீசிலே அவர் டெச்பாச் குமாதா. அவருக்குச் சங்கீதம் தெரியும். மருதங்குடி மூர்த்தி பாகவதருடைய காலட்சேபங்களில் அநேகந் தடவை பின்பாட்டுப்பாடியிருக்கிறார். அவருடைய மகனுக்கு நான் ட்யூஷன் சொல்லிக் கொடுப்பதாயும், அதற்குப் பதில் என் பெண்ணுக்கு அவர் இலவசமாகப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் படியும் ஏற்பாடு செய்தேன். வாய்ப்பாட்டு மட்டும் சொல்லிக் கொடுத்தேன் என்று நினைக்கிறீர்களா? ஹார்மோனியம் கூட வாங்கிக் கொடுத்தேன். என் பெண்ணுக்கு அழகில் தான் என்ன குறைச்சல்? அம்மைவடுக்கள் ஒன்றிரண்டு முகத்திலே இருந்ததி னாலேயே குரூபியாகிவிட்டாளா என்ன? ராத்திரி வேளை களில் இருட்டில் அவள் என்னை அப்பா என்று கூப்பிடுவாள். நான் விழித்துப் பார்ப்பேன். பூனை பார்ப்பது போல் இருக்கும் அவள் பார்வை. ஆனாலும் அவள் முகத்திலே களையுண்டு. டைபாயிட் ஜுரம் அடித்து, தலைமயி ரெல்லாம் உதிர்ந்து போய்விட்டது. இப்பொழுதுதான், கட்டை குட்டையாய், அடர்த்தியாய் மயிர் வளர்ந்து வர ஆரம்பித்திருக்கிறது. இவ்வள வெல்லாம் என் பெண்ணை நானே வர்ணித்து விட்டேனே என்று நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது. அவள் பெயரை மட்டும் சொல்லி விடுகிறேன். கனகசுந்தரி. எவ்வளவு அழகான பெயரை அவளுக்கு வைத்திருக் கிறேன் பார்த்தீர்களா? அவள் மாமியார் வீட்டிலே அதிக சிரமப்படக் கூடாதென்பதற்காகவும், ஆரம்பத்திலிருந்தே நல்ல பெயரெடுக்க வேண்டுமென்பதற்காகவும், அவள் தாயார், அவளுக்குச் சிறு வயதிலிருந்தே சமையல் செய்யக் கற்றுக் கொடுத்தாள். ஒரு வற்றல் குழம்பு பண்ணுவாள் பாருங்கள்; அடடா, இன்றெல்லாம் அதை நாக்கிலே வைத்துத் தேய்த்துக் கொண்டிருக்கலாம் போல அவ்வளவு ருசியா யிருக்கும். கத்திரிக்காய் பொரிச்சக் கூட்டு பண்ணி, இலையிலே பரிமாறி னால், என்னுடைய பாட்டன், முப்பாட்டனெல்லாரும் எழுந்து வந்து என் இலையைப் பறித்து இழுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்து விடப் போகிறார்களே யென்று நான் நினைப்பதுண்டு. பாத்திரங்களை யெல்லாம் எவ்வளவு சுத்தமாகத் துலக்கி வைப்பாள்? புடவை, வேஷ்டி என்ற வித்தியாசம் பாராமல் எல்லாவற்றையும் சுத்தமாகத் துவைத்துப் போடுவாள். என் கோட்டு, ஷர்ட்டுகளையெல்லாம் கூட அவள்தான் துவைத்துப் போடுவது வழக்கம். என்ன உங்கள் கோட்டு இப்படி கசங்கினாற்போலிருக்கிறதே யென்று என் ஆபீ அக்கவுண்டண்டு அடிக்கடி கேட்பார். என் பெண் துவைத்த சட்டை ஸார் என்று பெருமையாக நான் சொல்லிக் கொள்வேன். இவ்வளவு செல்வமாக வளர்த்து வந்த பெண்ணுக்கு, நல்ல வரன் கிடைக்க வேண்டுமே யென்று எத்தனை ஊர்களைச் சுற்றிப் பார்த்தேன்? எத்தனை செருப்புகள் தேய்ந்தன? எத்தனை பேருடைய பரிகாசமான வார்த்தைகளைக் கேட்டுப் பொறுத்துக் கொண்டிருந்தேன்? கடைசியில் ஒரு பிள்ளை அகப்பட்டான். அவனுக்கு ஐந்நூறு ரூபாய் வரதட்சிணை யாகக் கொடுத்தேன். ஐந்து நாள் கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடத்தினேன். மாப்பிள்ளைக்கு ஊஞ்சல் துப்பட்டா மட்டும் ஐந்து ரூபாயில் வாங்கினேன் என்றால் கல்யாணச் செலவு எவ்வளவு ஆகியிருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இருபத்தேழு ரூபாயில் வாலாஜா பேட்டை பட்டு வேஷ்டி. பத்தொன்பது ரூபாய் எடையில் வெள்ளி பஞ்ச பாத்திர உத்தரணி. இவ்வளவு தடபுடலாகச் சீர் செய்தேன். இவற்றிற்கெல்லாம் பதிலாக எனக்கு என்ன பிராயச்சித்தம் நடக்கிறது தெரியுமா? இந்த ஆசாமிக்கு என்ன தெரியும்? பட்டிக்காட்டான் என்று என் காது படவே சொல்கிறான் மாப்பிள்ளை. என் வயிற்றிலே பாலை வார்ப்பதற்குப் பதிலாக, என் வாயிலே விளக்கெண்ணெயை ஊற்றுகிறான். இவன் செய்கிற அட்டகாசத்துக்குப் பயப்படுவேனா? என் பெண், என் எதிரில் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்துக் கண்ணீர் விடுவேனா? என் வீட்டுக்கார், நிமிஷத்துக்கொரு முறை வந்து 'இப்படிக் கிளியை வள்ரத்து பூனைக்குக் கொடுக்கலாமா?' என்று என்னை நங்குவதைக் கண்டு ஏங்குவேனா? என் மாப்பிள்ளைக்கு எங்கும் வேலை கிடையாது. என் வீட்டிலேதான் டேரா அடித்துக் கொண்டிருக்கிறான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரு மில்லை. பிய்ச்சல் பிடுங்கல் ஒன்றும் இராதே யென்பதற்காகத் தான் இந்த இடத்திலே பார்த்துக் கொடுத்தேன். அது கடைசியில் என் தலையிலேயே வந்து விடிந்தது. காலையிலே எழுந்தவுடன் காபி என்கிறான் அதிகாரத்தோடு. அது நிரம்ப திக்காக இருக்க வேண்டுமாம். என் குழந்தை, பாவம், நடு நடுங்கிக்கொண்டு அவன் எதிரே போய் நிற்கிறது. அதனிடத்திலே என்னென்னமோ அதிகாரமெல்லாம் பண்ணிவிட்டு உடனே ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறான். அழுக்குப்படாமல் போட்டுக் கொள்ள ஷர்ட் கோட் முதற்கொண்டு நான் வாங்கிக் கொடுக்க வேண்டும். சாப்பிட உட்காரும் போது என்ன ஜபர்தது? கை நிறைய நெய்; இலை நிறைய கறிகாய்; கெட்டித் தயிர். இரவு படுக்கிற போது சுண்டக் காய்ச்சின பால் ஓர் உழக்கு. இவ்வளவுக்கும் நான் எங்கே போவது? ஆனால் இவைகளுக்கெல்லாம் கூட நான் துக்கப்படவில்லை. சிகரெட்டும், சீட்டுக் கட்டும் கூட நான் வாங்கித் தரவேண்டுமென்று சொல்கிறானே, அதுதான் வயிற்றெரிச்சலாய் இருக்கிறது. அப்படித்தான் வாங்கிக் கொடுத்தாலென்ன? என் எதிரிலேயே புகை விட வேண்டுமா? சதுர் முக பாராயணத்திற்கு என்ன? Ú§fS« xU if c£fhU»Ö®fsh? என்று என்னையே சங்கோஜமில்லாமல் அழைக்க வேண்டுமா? இவையெல்லாம் அவனைச் சொல்லிப் பிரயோஜனமில்லை; என் தலையெழுத்து; என் கர்மம். வேறெவ்விதமாக நான் திருப்தி செய்து கொள்வது? ஒரே பிள்ளையா யிருக்கிறானே, பெற்றோர், பிடுங்கித் தின்னுவார் ஒருவருமில்லையே என்று தான் என் பெண்ணைக் கொடுத்தேன். இப்படிக் குரங்காய் இருப்பான் என்று நான் எண்ணவே யில்லை. இவனால் வீட்டுக்காரியிடம் பழிச்சொல் கேட்பேனென்று கனவிலும் கருதவில்லை. வீட்டிலே டிகாணா அடித்துக் கொண்டிருக்கிற மாப்பிள்ளைகள், ஏதோ இட்ட வேலையைச் செய்து கொண்டு வீட்டுப் பிள்ளை மாதிரி இருக்க மாட்டார்களோ? என் வீட்டிலே என்ன கைக்குழந்தை இருக்கிறதா எடுத்து வைத்துக்கொள்ள? அல்லது இரவு படுக்கப் போவதற்கு முன்னர், மறுநாள் காலை காபிக்கு, காபி மெஷினில் காப்பிக் கொட்டை அரைக்க வேண்டுமா? அல்லது விடியற்காலை, பால்காரன் வந்தால் முணுமுணுத்துக் கொண்டே எழுந்து பால் வாங்க வேண்டிய அவசியந்தான் இருக்கிறதா? ஒரு தொந்தரவு மில்லையே என் வீட்டில்? அப்படியிருக்க, என் மாப்பிள்ளை ஏன் என்னை இப்படியெல்லாம் அழப்படுத்துகிறானோ தெரிய வில்லையே? என் மாப்பிள்ளைக்கு நல்ல புத்தி வரவேண்டுமென்றும், அப்படி வந்து நானோ அல்லது என் அகத்துக்காரியோ அல்லது என் பெண்ணோ சொல்கிறபடி நடப்பானாகில், எங்கள் கிராமத்து அரசமரத்துப் பிள்ளை யாருக்கு இருபத்து மூன்று தேங்காய் உடைப்பதாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். என் மாப்பிள்ளைக்கு வயது இருபத்து மூன்று. அதனால்தான் இருபத்து மூன்று தேங்காய் உடைப்பதாகப் பிரார்த்தனை. என் சம்சாரம் பதினாறு சுமங்கலிகளுக்கு வெற்றிலைப் பாக்குக் கொடுப்பதாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறாள். ஏனென்றால் என் குழந்தைக்கு வயது பதினாறு. எங்கள் பிரார்த்தனைக்கு அந்த அரச மரத்துப் பிள்ளையார் மனமிரங்குமா? அல்லது கல்லுப் பிள்ளையாராகத்தான் இருக்குமா? 4. எனது வக்கீல் அண்ணா எனக்கு மூத்த தமையனார் ஒருவர் உண்டு. பரம சாது. யாராவது ஒருவன் விபூதி ருத்திராட்சம் தரித்துக் கொண்டு வந்து இந்தச் சூரியன், என்னுடைய உபதேசத்தைக் கேட்டு நாளைய தினத்திலிருந்து வடக்குப் பக்கமாகத்தான் உதயமாகப் போகிறான் என்று சொன்னால், அதை அப்படியே நம்பி விடுவார். அவனை சாஷ்டாங்கமாக நமகாரம் செய்வார். என் மதனியிடம் சென்று எப்படியாவது தன் சாமர்த்தியத்தை எல்லாம் காட்டி ஒரு நாலணாவாவது வாங்கி அவனிடம் தாம்பூல சகிதம் கொடுத்து வாசற்படி வரையில் வழி விட்டு வருவார். இத்தனைக்கும் அவர் என்ன தெரியுமா? ஒரு பி.ஏ.பி.எல். சென்னை ஹைகோர்ட், தற்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டதற்கு முன்னர், அவர் வக்கீலாகக் கோர்ட்டுக்குப் போய்க்கொண்டு வந்திருக்கிறார். இப்பொழுது சென்னை இரண்டாவது லைன் பீச் ரோட் இருக்கிறதல்லவா? அந்த இடத்திலே தான் பழைய ஹைகோர்ட் இருந்தது. அந்தக் கட்டடத்தின் படிகளில் ஏறி இறங்குவதே தமக்கு மிகுந்த சிரமமாயிருக்கிறதென்று அப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தார். இப்பொழுது இந்தப் புதிய ஹைகோர்ட்டின் படிகளில் எப்படித்தான் ஏறி இறங்குகிறாரோ பாவம்! தவிர, வயதும் ஆகிவிட்டது. வாழ்க்கையிலே ஒருவித வெறுப்பும் ஏற்பட்டு விட்டதல்லவா? இதனால்தான் இப்பொழுது வாரத்திற்கு இரண்டு முறைதான் கோர்ட்டுக்குப் போகிறார் போலும்! நாங்கள் அவிபக்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பாகம் செய்து கொள்வதற்குத்தான் என்ன இருக்கிறது? எங்கள் தகப்பனார் உஞ்ச வ்ருத்தி செய்து காலட்சேபம் செய்தவர். அந்தப் பித்தளைச் செம்பு ஒன்றுதான் இருக்கிறது. அதை எப்படி இரண்டாகப் பங்கிட்டுக் கொள்ள முடியும்? அதனால்தான் நாங்கள் அவிபக்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு வந்தோம். என் தமையனாருடைய கவுன் இருக்கிறதல்லவா, அதனை, அமெரிக்காவிலிருந்து யாராவது வந்து பார்த்தால் உடனே எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கித் தங்கள் பொருட் காட்சி சாலையில் கொண்டு வைத்து விடுவார்கள். இதனை என் தமையனார் சூட்சுமமாக உணர்ந்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ஏனென்றால் எப்பொழுதுமே அவர் தமது கவுனைச் சுருட்டி மடக்கி வைத்துக் கொண்டு போவார். கோர்ட்டிலே இதனை அவர் போட்டுக் கொண்டு நான் பார்த்ததே யில்லை. ஆனால் எந்த ஜட்ஜ் முன்னரும் அவர் ஆஜரானதும் இல்லையல்லவா? என் தமையனார் வீட்டுத் தெருச்சுவரில் தொங்கும் போர்டில் அவர் பெயருக்குக் கீழே பி.ஏ.பி.எல்; ஹைகோர்ட் வக்கீல் என்ற விருது களெல்லாம் எழுதப்பட்டுத் தானிருக்கின்றன. ஆனால் பாழாய்ப்போன ஒரு கட்சிக்காரன் கூட இந்தப் போர்டை அண்ணாந்து பார்ப்பதில்லையே. அவன் உள்ளே எங்கே நுழையப் போகிறான்? இந்த போர்ட் மாட்டின வேளை, சரியானதில்லையோ என்று கருதி, இந்தப் போர்டை எடுத்து விட்டு பித்தளை போர்ட் ஒன்று எழுதுவித்து மாட்டினார். ஆனால் அந்தப் போர்ட் செய்தவன், இன்னும் பணத்துக்காக வந்து அலைகிறான். நீ என்ன மனசோடு பண்ணிக் கொடுத்தாயோ அந்த போர்டை? அது மாட்டின வேளையிலிருந்து, அந்த போர்ட் செலவுக்குக் கூட பணம் வரவில்லை என்று என் மதனி அவனை இடித்து இடித்துக் கூறுவாள். அவன் என்ன செய்வான் பாவம்? என் அதிருஷ்டம் வக்கீல் ஐயாவை ஒட்டிக் கொண்டதா? அல்லது வக்கீல் ஐயா அதிருஷ்டம் என்ன ஒட்டிக் கொண்டதா? என்ற கேள்விக்குச் சரியான விடை தெரியாமலே வீடு திரும்பி விடுவான். என் மதனிக்கு ஸ்ரீதனமாகக் கொஞ்சம் சொத்து கிடைத்தது. அதனை ரொக்கமாக்கி பாங்கியில் போடச் செய்திருந்தாள். அதிலிருந்துதான் என் தமையனாருடைய காலட்சேபம் ஒரு தினுசாக நடந்து வருகிறது. ஆனால் எத்தனை நாட்களுக்கு? இந்தக் கேள்வியை என் தமையனார் அடிக்கடி கேட்டுக் கொண்டு வந்தார். இதனால் அவருடைய தலை மயிரும் அதி சீக்கிரத்தில் நரைத்துப் போய்விட்டது. என்ன தான் செய்ய முடியும் அவர்? எண்ணித்தான் தொலைக்கலாம். வேறென்ன செய்யலாம்? இந்த லட்சணத்தில் அவருடைய குடும்பம் வர வர விருத்தியடைந்து வருகிறது. பாழாய்ப் போன கடவுளே! காசிக்கும் ராமேசுவரத்துக்கும் லட்சக்கணக்கான பணத்தைச் செலவழித்துக் கொண்டு போகிறவர்களுக்கு ஒரு பிள்ளையைக் கூடக் கொடுக்க மாட்டேனென்கிறாய். எனக்கு ஏன் ஐந்து பெண்களும் நான்கு பிள்ளைகளும்? என் ஆதியைப் பங்கிட்டுக் கொள்ள ஆசாமியில்லையென்று அழுதேனா? அல்லது என் அதிருஷ்டத்தில் அவர்கள் வளரட்டும் என்று பிரார்த்தனை செய்தேனா? நான் என்ன தான் செய்வேன்? பணம் சம்பாதிக்க வேண்டுமே யென்று கவலைப் படுவேனா? அல்லது இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுவ தெப்படி என்பதைப் பற்றிக் கவலைப்படுவேனா? இப்படியெல்லாம் தமது பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு கண் மூடிய வண்ணம் யோசித்துக் கொண்டிருப்பார் என் தமையனார். இவ்வளவு கஷ்ட நிஷ்டூரங்களெல்லாம் இருந்தும், வக்கீல் ஹோதாவை விட முடியுமா? மாம்பலத்தில் - இல்லை, இல்லை; தியாகராயநகரில் - காம்பவுண்ட் உள்ள ஒரு வீட்டில்தான் வசிக்க வேண்டியிருக்கிறது. வண்ணான் மடிப்பு கலையாமல், கும்பகோணம் துகிலி வேஷ்டியைத்தான் கட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. தட்டைக் கொட்டை காபி உள்ளே இறங்குவதில்லை. குண்டுக் கொண்டை காபிதான் தொண்டைக்குள் செல்கிறது. மேலே போட்டுக் கொள்கிற அல்பாகா கறுப்பு கோட்டை எத்தனை நாள் போட்டுக் கொண்டாலும் அழுக்குத் தெரியாது. அதைப்பற்றி ஒருவரும் கவலையும் படமாட்டார்கள். ஆனால் உள்ளே போட்டுக்கொள்கிற ஷர்ட்டாவது சலவையிலிருந்து எடுத்ததாக இருக்க வேண்டாமா? மாதச் சம்பளம் சரியாகக் கொடுக்கிறோமே இல்லையோ, வீட்டிலே ஒரு சமையல்காரப் பாட்டியையாவது வைத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. பால்காரன், மாத முதலில் தானே தெருவில் வந்து தனது நீண்ட தகரக் குவளையைத் தட்டித் தட்டிக் கூச்சல் போடப் போகிறான். அதுவரையில், தெருவில் பசுவைக் கொண்டு வந்து நிறுத்தச் சொல்லி, பால் கறந்து வாங்கிக் கொள்ளலாமல்லவா? நன்கொடை என்று சொல்லிக் கொண்டு காதிலே பென்சிலும் கையிலே நோட் புதகமுமாய் வருகிற பெயர்வழிகளை யெல்லாம் சும்மா வெறுங் கையுடன் அனுப்பி விடலாமா? அவர்கள் கொண்டு வந்த புதகத்தில் ஏதோ ஒரு ரூபாய் அரை ரூபாய் என்று போட்டுவிட வேண்டியது அவசியமாயிருக்கிறது. பணங் கொடுக்கிறபோது பார்த்துக் கொள்வோம். அவன் கொடுத்துவிட்டுப் போனது என்ன மிஞ்சிப் போகிறது? கொடுப்பது இனாம்தானே; மெதுவாகத் தான் கொடுப்போமே. இந்த அந்ததையெல்லாம் கவனித்துக்கொள்ள வேண்டு மானால் கையில் பணவறட்சி. அதற்காக, ஹைகோர்ட் போவதற்குக் கூட டிராம் செலவுக்கு என் மதனியின் முகத்தைத்தான் பார்ப்பார். சில சமயங்களில் தம்மை யறியாமலே மதனியிடம் சிரிப்பார். பாவம், எல்லாம் பணக் கொடுமைதான். என்னால் ஏதேனும் உதவி செய்ய முடிந்தால் அவருக்குச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பல சமயங்களில் எனக்குத் தோன்றும். ஆனால் என் கதியோ அப்பன் ஆலாய்ப் பறக்கிறான்; பிள்ளை கஞ்சிக்கு அழுகிறதாம் என்கிற மாதிரி இருக்கிறது. என் தமையனாருடைய வீட்டிலே சென்று, வாரத்தில் இரண்டு மூன்று நாளாவது டிகாணா போட வேண்டிய தாய்த்தான் இருக்கிறது. நானும் பதினைந்து மாதகாலமாக இன்ஷ்யூரென் ஏஜெண்டாக இருக்கிறேன். ஓர் உயிரையாவது இன்ஷ்யூர் செய்ய முடியவில்லை. யாரிடத்திலே போனாலும் எவ்வளவு தர்க்கம் பேசுகிறார்கள்? வாயில்லாத ஜீவ ஜந்துக்களை இன்ஷ்யூர் செய்யலாம் என்று ஏற்பாடு இருந்தால் கூட பரவாயில்லை யென்று தோன்றுகிறது. ப்ரிமியம் யார் கட்டுகிறார்களோ என்னவோ, நமக்குக் கமிஷன் கிடைக்கிறதோ இல்லையோ, இத்தனை பேரை இன்ஷ்யூர் செய்திருக் கிறேன் என்று கௌரவமாகச் சொல்லிக் கொள்வதற்குக் கூட முடியாமல் இருக்கிறதே இப்பொழுது என்பதுதான் என்னுடைய வருத்தம். ஆனாலும் என் அதிருஷ்டம் என் தமயைனாரைப் போல் இராது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. காலம் வரவில்லை. அவ்வளவுதான். நல்ல காலம் வருமானால் என் செலவுவகைகளை மட்டும் பார்த்துக் கொண்டு போவேன் என்று நினைக்கிறீர்களா? என் தமையனாரையும் அவருடைய குடும்பத்தை யும் அப்படியே கையேந்திக் கொண்டிருக்க மாட்டேனா? 5. வரன் தேடப்போகிற வக்கணை தை மாதம் பிறந்து விட்டது. கையிலோ, செம்பாலடித்த காசு இல்லை. பெண்ணுக்கோ, பதினாறு வயது முடிந்து பதினேழாவது வயது நடக்கிறது. ஊர் சிரிக்காத இந்த வருஷமும் கலியாணம் பண்ணாவிட்டால் இவ்வாறெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார் ஆபத்தோத்தாரண ஐயர். காலை வேளை, அப்பொழுதுதான் சூரியன், தன்னை மூடிக் கொண்டிருந்த மேகத் திரையைக் கிழித்து அப்புறப் படுத்தி விட்டு, பிரபஞ்ச நாடக மேடையில் காட்சி யளிக்கத் தொடங்கியிருக்கிறான். வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, ஐயர் சூரிய நானம் செய்து கொண்டிருக்கிறார். இன்னும் பல் துலக்கவில்லை. இருங்காவேளூர் அக்கிரகாரத்தில், அவ்வளவு சீக்கிரமாக யாரும் பல் துலக்குவது வழக்கமில்லை. அவரவருடைய வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு, வாயில் தம்பலத்தை அடக்கிய வண்ணம், முந்திய நாள் இரவு யாரார் எந்தெந்த விதமாகத் தூங்கினார்கள் என்பது முதல், இன்றைய தினம் பகல் சாப்பாட்டுக்கு என்னென்ன கறிகாய் தினுசுகள் இருக்கின்றன என்பது வரையில், உலகத்து அரசியல், பொருளாதார சம்பந்தமான எல்லா விஷயங் களையும் ஒரு தினுசாகப் பரிசீலனை செய்துவிட்டு, பிறகுதான் பல் துலக்க வாய்க்காலுக்கோ தண்ணீர்த் துறைக்கோ செல்வார்கள். இவர்களுடைய சம்பாஷணைகளில் பெரிய பெரிய கலெக்டர்களெல்லாம் தவிடுபொடியாவார்கள். உலகத்தில், எந்தெந்த ஜாதி திரீகள் அழகுள்ளவர்கள் என்பதைப்பற்றி இவர்கள் ஆராய்ச்சி செய்கிற போது, இருங்கா வேளூரிலுள்ள எந்த திரீயும் அந்தப் பக்கமாகத் தலை நிமிர்ந்து செல்ல முடியாது. இந்த மாதிரியான அக்கிரகார கோஷ்டியைச் சேர்ந்தவர்தான் நமது ஆபத்தோத்தாரண ஐயர். அன்று, நமது ஐயர் சம்பிரதாயமாக இந்தச் சம்பாஷணையில் கலந்து கொள்ளவில்லை. வீட்டில் விவாக வயதடைந்த ஒரு பெண் இருந்துவிட்டால், அந்தப் பெண்ணைப்பெற்ற தகப்பனுக்கு கலகலத்த சம்பாஷணை யேது? ராத்திரியில் தூக்கமேது? கால் செருப்புக்குத்தான் ஓய்வேது? ஆபத்தோத்தாரண ஐயர், அன்றைக்கு முந்திய நாளிரவுதான், இரண்டு மூன்று வரன்களைத் தேடிக் கொண்டு, பல இடங்களுக்குச் சென்று அலைந்து விட்டு வந்தார். சென்ற விடமெல்லாம் இவருடைய மரியாதைக்குத்தான் குறைவு ஏற்பட்டதே தவிர காரியசித்தி ஒன்றும் ஏற்படவில்லை. பிள்ளையைப் பெற்றவர்கள், பெண் கேட்க வந்தவர்களிடம் முகங்கொடுத்துப் பேசுகிறார்களா என்ன இந்தக் காலத்தில்? வரதட்சிணை எவ்வளவு என்று கண்டிப்பாகக் கேட்பது ஒருபுற மிருக்கட்டும். பெண்ணின் தகப்பனார் எப்படி இருக்கிறார், எந்த ஆபிசில் எவ்வளவு சம்பளத்தில் என்ன உத்தியோகம் பார்க்கிறார் என்பன போன்ற வரலாறுகளை யெல்லாந் தானே பிள்ளை வீட்டுப் பெண்டுகள் விசாரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். பெண்ணின் சுபாவ மெப்படி, குடித்தனத்தைச் செட்டாக நடத்துவாளா என்பவைகளெல்லாம் கூட முக்கியமல்ல; அவள் காதிலே லோலாக்கும், கண்ணிலே கண்ணாடியும் போட்டுக் கொண்டிருக் கிறாளா? நேர் வகிடு எடுத்துக் கொள்கிறாளா அல்லது கோணல் வகிடு எடுத்துக் கொள்கிறாளா? அவளுக்கு எந்தப் புஷ்பத்திலே பிரியம்? மஞ்சள் கனகாம்பரத்திலா அல்லது நீல கனகாம்பரத்திலா? இந்த மாதிரியான சந்தேகங்கள் தான், பிள்ளை வீட்டாருக்கு ஒன்றின் மேலொன்றாய் உதிக்கத் தொடங்கி விடுகின்றன! ஆனால் பிள்ளை வீட்டார் மட்டுந்தான் இப்படியென்று நினைக்க வேண்டாம். பெண் வீட்டார் இதற்கு மேலேதான். பிள்ளைக்கு என்ன இருக்கிறது? பி.ஏ. வரையிலாவது படித்திருக்கிறானா? வெறுமனே படித் திருந்தால் மட்டும் போதுமா இந்தக் காலத்தில்? படித்தவர் களெல்லாருந்தான் வேலையில்லாமல் திண்டாடுகிறார்களே. சரி; அப்படித்தான் ஏதாவதொரு வேலையில் இருந்தாலும் அது போதுமா? உத்தியோகத்திலிருந்து கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு இப்பொழுது காலட்சேபம் நடத்த முடிகிறதா? ஏதாவது சொத்து பற்றுக்கள் இருக்க வேண்டும்; ஒரு வீடாவது சென்னை அல்லது திரிசிராப்பள்ளி அல்லது மதுரை ஏதேனும் ஓர் ஊரில் இருக்க வேண்டும். ஆனால் இவ்வளவெல்லாம் இருக்கிற அந்தப் பிள்ளை ஒரு பிள்ளையாகத் தான் இருக்க வேண்டும்; கூடப் பிறந்தவர் சேரப் பிறந்தவர் இருக்கவே கூடாது. அவர்களோடெல்லாம் நம்மள் பெண் மாரடிக்க முடியுமா என்ன? இப்படி யெல்லாம்தான் பெண் வீட்டார் கோருகிறார்கள். நமது ஆபத்தோத்தாரண ஐயருக்கும் இந்த மாதிரியான எண்ணங்கள் தான் இருந்தன. பிள்ளை, மூக்கும் முழியுமா இருந்தால் போதும் என்பாள் ஐயர்வாளின் சம்சாரம். மூக்கும் முழியும் இருந்து என்ன பண்ணுகிறது? வாசாலக மாகப் பேசத் தெரிய வேண்டும்; அப்படியாவது இரண்டு காசு சம்பாதிக்கத் தெரிந்தவனாயிருக்க வேண்டும் என்பார் ஐயர். நம்மள் வீட்டிலேயே இருக்கிறவனா யிருக்க வேண்டும் என்பது பெண்கள் கட்சி. எங்கே யிருந்தால் என்ன? பெண்ணைப்படுத்தாமல் வைத்துக் கொண்டிருந்தானானால் நல்லது என்பது ஆண்கள் கட்சி. இப்படியாக, ஆபத்தோத்தாரண ஐயர் வீட்டில் அடிக்கடி தர்க்கப் போட்டிகள் நடைபெறும். இருங்காவேளூருக்கு இரண்டு காத தூரத்தில் இந்தளாம் பேட்டை என்றொரு கிராமம். இதன் ஜமீன்தார் புஷ்ப சாதிரிகள். பரம வைதிகர். அவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. மேற்படி ஜமீனைத் தவிர, பக்கத்துக் கிராமங்களில் சுமார் இருநூற்றைம்பது வேலி நிலம் இருக்கிறது. ரொக்கமாக ஒரு லகாரத்திற்கு மேல் இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் யாருக்கோ அடமானமாம். இப்படித்தான் ஊர் வதந்தி. இதில் எவ்வளவு தூரம் பொய்யும் மெய்யும் கலந்திருக்கிறதோ தெரியாது. மேற்படி புஷ்ப சாதிரிகளுக்கு ஒரே பிள்ளை. மார்க்க சகாயம் என்று பெயர். சென்னை கிறிதுவக் கலாசாலையில் பி.ஏ. வகுப்பில் படிக்கிறான். அந்த வகுப்புக்கும் இவனுக்கும் நெருங்கின சம்பந்தம் உண்டு. வகுப்பு, இவனை விட மாட்டேனென்கிறது; இவன், வகுப்பை விட மாட்டேனென்கிறான். இப்படியாகச் சுமார் ஐந்து வருஷ காலமாக இருவருக்கும் விடாப்பிடி சண்டை. பையனுக்கு இருபத்து மூன்று வயதுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் மூஞ்சி முற்றவில்லை. பார்ப்பதற்கு இளங்கன்றுக் குட்டி மாதிரி இருக்கிறான். சென்னைக் கடற்கரையோரம் ஜலத்தின் பக்கமாக அந்த நொய் மணலில் இவன் குதித்து குதித்து ஓடுகிறபோது - எல்லாம் தேகபலம் விருத்தியாவதற்குத்தான் - நடை வண்டி பிடித்துக்கொண்டு நடை பழகுகிற குழந்தை போல் இருக்கும். மார்க்க சகாயத்திற்கு, அவனுடைய தகப்பனார் மாதா மாதம் இருநூறு ரூபாய் படிப்புச் செலவுக்காக அனுப்பிக் கொண்டு வந்தார். ஜமீன்தாருடைய பிள்ளையல்லவா? அந்த அந்ததுக்குத் தகுந்தாற் போல் இருக்க வேண்டாமா? மாதம் மாதம், இரண்டு அல்லது மூன்றாந் தேதி, மணியார்டர்காரன் வருகிற மார்க்கத்தை மார்க்க சகாயம் பார்த்துக் கொண்டிருப்பான். ஆனால் இவனுக்கு பி.ஏ. பரீட்சையில் தேறுவதெப்படி என்ற மார்க்கம் மட்டும் தெரியவில்லை. மார்க்க சகாயத்திற்குத் தன் பெண்ணைக்கொடுக்க வேண்டு மென்பது ஆபத்தோத்தாரண ஐயருடைய எண்ணம். ஆனால் ஐயருடைய சம்சாரத்திற்கு அந்த இடம் அவ்வளவு பிடித்தமில்லை. ஏனென்றால் புஷ்ப சாதிரிகளின் சம்சாரம் - மார்க்கத்தின் தாயார் - நிரம்ப இளையவள். இப்பொழுதுதானே நாற்பத்திரண்டு வயதாகிறது. இன்னும் எத்தனை வருஷகாலம் இருப்பாளோ தெரியாது. அவளிடம் தன் பெண் போய் எவ்வளவு காலந்தான் கஷ்டப்படுவது? ஏதோ கொஞ்சம் வயசான மாமியாராக இருந்தால், கொஞ்ச காலத்திற்குள் மூட்டையைக் கட்டிக் கொண்டு யம தரிசனத்திற்குச் சென்று விடுவாள். அப்புறம் நமது பெண், பிய்க்கல் பிடுங்கல் இல்லாமல் குடும்பத்தை நடத்திக் கொண்டு போகலாம். மாமனார் மட்டும் இருந்தால் பரவாயில்லை. அவர் பாட்டுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கப் போகிறார். அவரால் ஒரு தொந்தரவும் இராது. இந்த மாதிரியாகத்தான் ஆபத்தோத்தாரண ஐயருடைய சம்சாரத்தின் மனப்போக்கு இருந்தது. என்ன செய்வார் ஐயர்? புஷ்ப சாதிரிகளுடைய பையனைத் தவிர வேறு நல்ல வரன் கிடையாது என்று சொல்லிவிட்டார். ராத்திரி சாப்பிட்ட பிறகு, இரண்டு பேருக்கும் தினந்தோறும் வரன் சம்பந்தமாகச் சச்சரவுகள் நிகழ்ந்து வந்தன. சில சமயங்களில் மனதாபம் முற்றிவிடும். நீயே எங்கேயாவது உன் பெண்ணுக்கு இடந்தேடிக் கொள் என்று கோபித்துக் கொண்டு ஐயர் படுக்கைக்குப் போய் விடுவார். உன்னாலேதானே இந்த வசவு திட்டுகளெல்லாம் என்று சொல்லி, ஐயரின் சம்சாரம், தன் பெண்ணின் தலைமேல் ஒரு குட்டு குட்டுவாள். அவளும் விக்கி விக்கியழுது கொண்டு படுக்கப் போவாள். இப்பொழுது தானே தை மாதம் பிறந்திருக்கிறது. இன்னும் நாள் இருக்கிறதே. நல்ல இடமாகப் பார்த்துப் பண்ணலாம் என்று அம்மாள், தானே ஆறுதல் செய்து கொண்டு குறட்டைவிடத் தொடங்குவாள். ஆபத்தோத்தாரண ஐயர் வீட்டில் இந்தத் தை மாதம் பிறந்த பிறகு, தினசரி நடக்கிற உற்சவம் இது. 6. நவராத்திரி கொலுவு கோவிந்தராஜபுரம் கோவிந்தம்மாள் அந்த ஊருக்குள்ளே பெரிய பணக்காரி. அவளுடைய பணப் பெரிசுக்குத் தகுந்தாற்போல் அவளுடைய தேகமும் பெரிசுதான். இரண்டு கண்கள் போதுமே! கொட்டைப் பாக்கு என்பார்களே அதெல்லாம், கற்பனையில்லாத கவிகளின் கைச்சரக்கே தவிர, உண்மையில் அவர்கள் கோவிந் தம்மாளின் கண்களைப் பார்த்திருந் தால் அவர்களுக்கு இந்த அற்பமான கற்பனைகளெல்லாம் உதித்தே யிராது. நாகதாளிப்பழம் மாதிரி என்று சொன்னால் அது ஒருவாறு பொருந்துமோ என்னவோ? கோவிந்தம்மாள் இப்பொழுது ஒரு விதந்து. தன்னுடைய முதல் பிரசவத்திற்குப் பிறகு, வெள்ளைச் சீலையணிந்து கொண்டதாகச் சொல்லிக் கொண்டு வருகிறாள். எத்தனை வயதில் தனக்குக் கலியாணமாயிற்றென்பதும், எத்தனையாவது வயதில் இந்த முட்டாக்குக்கோலம் ஏற்பட்ட தென்பதும் அவளுக்கே தெரியா திருக்கிறபோது, நமக்கெப்படித் தெரியும்? கோவிந் தம்மாளுக்கு ஒரே ஒரு பெண். அதிலும் பணக்காரப் பெண். அந்தப் பெண்ணின் பெயரென்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் சின்ன கோவிந்தம்மாள் என்று கோவிந்தராஜபுரம் வாசிகள் அழைப்பார்கள். பணக்காரப் பெண்ணாகவும் ஒரே பெண்ணாக வும் இருப்பதனால் அழகு, எப்படியோ தானாக வலியவந்து அங்குக் குடியேறி விடுகிறதல்லவா? ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். என் பெண்ணைவிட சின்ன கோவிந்தம்மாள் அழகுதான். அதில் ஆட்சேபமே கிடையாது. பணத்தின் மத்தியில் வளர்ந்து வருவதனால் சின்ன கோவிந்தம்மாள், பருத்திருக் கிறளா அல்லது தாயாரின் பிரதிபிம்பமாக வந்திருக்கிறாளா வென்பது தெரியவில்லை. ஆனால் எப்படி யிருப்பாள் என்று என்னைக் கேட்டீர் களானால், வெண்ணெய் மொத்தை மாதிரி இருப்பாள் என்றுதான் எனக்குச் சொல்லத் தெரிகிறது. நவராத்திரி ஆரம்பித்துவிட்டது. குழந்தை கொலு வைக்க வேண்டாமா? வீட்டிலே ஒரே அமர்க்களந்தான். படிகள் போட்டு பொம்மைகளை எடுத்துவைக்க என்ன தாமதம், எவ்வளவு நாழிகை என்றெல்லாம் தோட்டக்கார கோவிந்தனை, கோவிந்தம்மாள் அதட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறாள். கோவிந்தன் எதைக் கண்டான்? அழகைக் கண்டானா? ஒழுங்கைக் கண்டானா? அவன் குடிசையிலே இருக்கிற பொத்தல்களை அடைக்கவே அவனுக்குத் தெரியவில்லையே. கூட அவனுக்கு அவகாசமும் இல்லை. அவனும், கோவிந்தம்மாளின் வீட்டுக்கு வேலையாளாக வந்தமர்ந்தது முதல், குடிசையைக் கொஞ்சம் ஒழுங்கு பண்ணித் தருமாறு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். கோவிந்தம்மாளின் உருட்டல் மிரட்டல்களுக்கு ஆட்பட்டதற்குப் பிறகு, அவனுக்கு மூன்று ஆண் குழந்தைகளும், நான்கு பெண் குழந்தைகளும் பிறந்து விட்டன. பிரசவம், சமையல், சாப்பாடு எல்லாம் இந்த ஒண்டிக் குடிசையில் தான். அவனுடைய பிரபஞ்சமெல்லாம், இந்தக் குடிசை யிலேயே அடங்கியிருந்தது. அப்படிப்பட்டவனை, என்றுமில்லாமல் இந்த வருஷத்தில் நவராத்திரி கொலுவுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னால், அவன் என்ன செய்வான்? மண்ணினால் செய்யப்பட்ட வெண்டைக் காயையும், கத்திரிக்காயையும் திருப்பித் திருப்பிப் பார்ப்பான். இந்த மாதிரியான கறிகாய்களை ஒரு நாளாவது சாப்பிட்டு ருசி பார்க்க மாட்டோமா? என்று அவன் மனம் ஏங்கும். மண்ணினால் செய்யப்பட்ட இந்த வெண்டைக்காயும், கத்திரிக்காயுமாவது பச்சைப்பசேலென்று இருக்கிறது. ஆனால் என் வயிற்றுக்குப் புழுத்த கத்திரிக்காய் ஒன்று கூடக் கொடுப்ப தில்லையே எஜமானியம்மாள். கறிகாய்ச் செடிகளை யெல்லாம் நான் நட்டுப் பயிராக்குகிறேன். அவை பசுமையாய்ச் செடியில் காய்த்துத் தொங்குவதைப் பார்த்து, எஜமானி அம்மாள், ‘ நான் நட்ட செடி; என்ன அழகாய் வளர்ந்து பூவும் காயுமாய்த் தழதழ வென்று இருக்கிறது பார்த்தாயா? என்று ஊராருடன் ஜம்பம் பேசிக் கொள்கிறாள். இவள், கிணற்றிலிருந்து ஒரு பொட்டு ஜலம் இழுத்து ஒரு செடிக்காவது கொட்டியிருப்பாளா? அட கண்ட்ராவியே! இது தான் உலக தருமம் போலிருக்கிறது! என்று என்னென்னவோ எண்ணங்களை யெல்லாம் எண்ணிக் கொண் டிருந்தான். எந்தப் பொம்மையோடு, எந்தப் பொம்மையைச் சேர்த்து வைக்க வேண்டுமென்ற ஒழுங்கு முறைகளெல்லாம் கோவிந்தனுக் கென்ன தெரியும்? பசுப்பொம்மை யொன்று இருந்தது. அதன் பக்கத்தில் வாழைப் பழப் பொம்மையைக் கொண்டு வைத்தான். என்னடா இது? ஒழுங் கில்லாமல் வைக்கிறாய்? என்று அதட்டுப் போட்டாள் கோவிந்தம்மாள். இல்லையம்மா, வீட்டிலேயுள்ள பசுவுக்கு நாம் ஆகாரம் சரிவரப் போடுவதில்லை. இந்தப் பொம்மைப் பசுக்காவது பொம்மைப் பழத்தை ஆகாரமாகப் போடுவோமே யென்ற எண்ணந்தான் எனக்கு என்றான். இதில் என்ன அர்த்தம் வைத்துப் பேசினானோ என்னவோ எனக்குத் தெரியாது. கோவிந்தம்மாளுக்கு இதன் கூடார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கோவிந்தன் குறும்புத்தன மாகப் பேசுவதாக மட்டும் ஊகித்துக் கொண்டு விட்டாள். எப்பொழுதுமே, பணக்காரர்களுக்குச் சந்தேக மனப்பான்மை இருக்குமல்லவா? ஆரம்பித்து விட்டது. கோவிந்தனுக்குக் கொலுவு! நவராத்திரி கொலுவு! நவராத்திரி கொலுவு என்று ஆரம்ப மானதோ அன்றே கோவிந்தனுக்கும் ஆரம்பித்து விட்டது. அர்ச்சனாதி அலங்காரங்கள். அவன் எந்த வேலையைச் செய்தாலும் அதில் ஏதோ கோளாறு இருப்பதாகக் கனவு கண்டு கொண்டு வந்தாள் கோவிந்தம்மாள். இவளுடைய இந்த அட்டகாசத்தினால், கோவிந்தனும் பயந்துபோய், ஒழுங்காகச் செய்து வந்த காரியங்களைக் கூட தவறிச் செய்ய ஆரம்பித்து விட்டான். ஒருபுறம் சந்தேகம்; மற்றொரு பக்கம் பயம். ஆகவே இரண்டும் மோதிக் கொண்டு கடைசியில் கோவிந்தனை வீட்டை விட்டு வெளியே கிளப்பி விட்டன. அட கோவிந்தா! நவராத்திரி கொலுவு உனக்குத் தானா வர வேண்டும்? 7. பாட்டுக் கச்சேரி ஏன் சீட்டுக் கச்சேரியை விட்டு வந்தோம் என்று ஆகிவிட்டது, பாட்டுக் கச்சேரிக்கு வந்த அரை மணி நேரத்திற்குள், சீட்டுக் கச்சேரியில் நான் தொலைத்தது, அன்று ரூ 7-15-0. ஆனாலும், அதனைத் திருப்பி எடுத்து விடலாமென்ற நம்பிக்கை யாவது இருந்தது. ஆனால் பாட்டுக் கச்சேரிக்காக நான் வாங்கின டிக்கட்டுக்குக் கொடுத்த எட்டணா போனது போனதுதான். அது திரும்பி வரப் போகிறதா? இல்லவே இல்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை. சரியாக மூன்று மணிக்குக் காபி சாப்பிட வந்து விட்டான் என் நண்பன் பூவராகம். ஞாயிற்றுக் கிழமை யென்றால் என் வீட்டில் தான் காபி குத்தகை அவனுக்கு. அன்று மட்டும், அவன் வீட்டிலே போடுகிற காபி நன்றாயிருப்ப தில்லையாம். நானும், இரண்டரையணா பெறுமான காபி தானே என்று அவனுக்குத் தொலைத்து விடுவது வழக்கம். ஆனால் என் சம்சாரத்திற்கு மட்டும் இது பிடிப்பதில்லை. வழக்கம் போல் பூவராகம் வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டு விட்டுக் கொஞ்ச நேரம் சீட்டாடினான். நான்கு மணி அடித்தது. சோழவந்தான்குடி சோமேசபாகவதருடைய கச்சேரியாமே, போகலாமா? என்றான். என்னையு மறியாமல் தலையசைத்து விட்டேன். பிடித்தது சனியன் என்னை. எனக்கு மட்டுந்தான் எட்டணா அழுதேன் என்று நினைக் கிறீர்களா? பூவராகத்துக்குச் சேர்த்தல்லவோ அழுது விட்டேன்? பாகவதருடைய பெயரென்னவோ பெரிய பெயராகத்தான் இருக்கிறது. ஆனால் அவரை நேரில் பார்த்து விட்டால், வேண்டுமென்றே சோமேச பாகவதர் என்று அவருக்குப் பெயர் வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது. ஒரே கறுப்பு; மயிர் நிறைந்த முகத்தின் நடுவில் கோவைப் பழம் போன்ற இரண்டு கண்கள். அந்தக் கண்களைப் பார்த்தாலே, சங்கீத தேவதை அவரிடத்தில் எவ்வளவு பயந்து நடு நடுங்கிக் கொண்டு இருக்கிறாளென்பது நன்கு தெரியும். அதனால்தான் ஆரம்பத்தில் ஹம்ஸத்வனி ராகத்தில் வாதாபி கணபதீம் என்ற கீர்த்தனத்தை ஆரம்பிக்கிற போதே, என் தேகத்தில் வியர்வை கொட்ட ஆரம்பித்து விட்டது. என் நண்பன் பூவராகத்துக்கு எனக்கு மேலே சங்கீத ஞானம். பாகவதர், பல்லவியை முடித்துக் கொண்டு சரணத்தை எட்டிப் பிடிக்க ஆரம்பித்தாரோ இல்லையோ, அவன் குறட்டைவிட ஆரம்பித்தான். என் தோளின்மீது தலையை மொட்டு மொட் டென்று இடிக்கத் தொடங்கி விட்டான். பாகவதருடைய அபார சங்கீதத்தைச் சகித்துக் கொண்டிருப்பதா, அல்லது இவனுடைய தலையிடியைச் சகித்துக் கொண்டிருப்பதாவென்று எனக்குத் தெரிய வில்லை. எழுந்து போய் விடலாமா வென்று கூடப் பார்த்தேன். ஆனால் அரை ரூபாய் வீணாக வல்லவோ போகிறது என்ற எண்ணம் வந்தது. எனவே, எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு கடைசி வரையில் மூச்சு விடாமல் இருந்து விடுவதென்று தீர்மானித்து விட்டேன். பாகவதர், கணபதி தோத்திரத்தை முடித்து விட்டு, தோடி ராகத்தில் ஆலாபனை செய்யத் தொடங்கினார். ஆகா, என்னென்று சொல்வேன் அதனை? அதனைக் கேட்ட பிறகு, எனக்குச் சங்கீதத்தை அனுபவிக்கிற சக்தி இருக்கிறதா இல்லையா வென்ற சந்தேகம் வந்து விட்டது. ஏனென்றால், ஒரு பாகவதரை, ஏதோ சங்கீத ஞானம் உடையவரென்று மதித்துத் தானே கச்சேரி பண்ணச் சொல்லியிருக்கிறார்கள். அவரும், தமக்கு ஏதோ தெரியுமென்று நம்பித்தானே, சபையில் வந்து கம்பீரமாக உட்கார்ந்து பாடத் தொடங்கியிருக்கிறார். அப்படி யிருக்கிறபோது, அவருடைய பாட்டு, அல்லது தோடி ஆலாபனை நமக்குப் பிடிக்க வில்லை யானால் அது நம்முடைய குறையாயிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுவது சகஜந்தானே? ஆனால், தோடி ஆலாபனை செய்து கொண்டிருந்த பாதி சமயத்தில் நான் சிறிது திரும்பிப் பார்த்தேன்; என்னைப் போலவே, இரண்டொரு சங்கீத ரஸிகர்களும், ‘ஏன் இந்தக் கச்சேரிக்கு வந்து தொலைத்தோம்? என்ற பாவனையில் முகத்தைச் சுளித்துக் கொண்டிருந்தார்கள். பாகவதருடைய சங்கீதம் ஒரு புறமிருக்கட்டும். இவருடைய அங்க சோஷ்டைகள் இருக்கின்றனவே, அடேயப்பா, இவற்றை இவர் எங்கிருந்து தான் கற்றாரோ தெரியவில்லை. இதற்காக எவ்வளவு சிரமப்பட்டாரோ, எவ்வளவு பணஞ் செலவழித்தாரோ தெரியாது. ஆரோகணத்தில் இவர், தம் முகத்தைப் படுத்துகிற பாட்டை, இவரைப் படைத்த அந்தப் பாழாய்ப் போன பிரம்மதேவன் ஒருமுறை பார்ப்பானாகில், இவரை, ஏன் படைத்தோம் என்று தன்னையே நொந்து கொள்வான். இந்த ஆரோகண காலங்களில் இவருடைய இரண்டு கண்களும் நெற்றியிலே ஏறிக்கொண்டு ஏன் இந்த இடத்திற்கு வந்தோம் என்று தெரியாமல் மிரளமிரள விழிக்கின்றன. இவருடைய மூக்கிலுள்ள இரண்டு துவாரங்களும், தாராளமாக ஒரு வட கயிற்றை உள்ளே நுழைத்து, இரண்டு காதுகளின் வழியாக இழுத்துக் கொண்டுவந்து, இவர் தலையசைக்கிறபோது, இழுத்து இழுத்துப் பிடித்துக் கொள்வதற்கு வாட்டமாய் விரிந்து கொடுக்கிறது. . இவர் வாயசைக்கிறதும், இவருடைய இரண்டு கைகளும் நீண்டு நீண்டு மடங்குவதும் ஏறி இறங்குவதும், ‘யார் உங்களை இந்த கச்சேரிக்கு வரச் சொன்னது?’ என்று நம்மைப் பார்த்துக் கேட்பது போல் கைகளைக் குத்திக் குத்திக் காட்டுவதும், இவையனைத்தையும் ஒரே சமயத்தில் நாம் பார்ப்போமானால், ‘நாம் என்ன சங்கீதக் கச்சேரிக்கு வந்திருக்கிறோமா அல்லது மிருகக்காட்சி சாலைக்கு வந்திருக் கிறோமா? என்ற சந்தேகம் யாருக்குமே உண்டாகும். பாகவதர், தாம் பாடிய தியாகய்யர் கீர்த்தனைகளுக்கு அர்த்தம் தெரிந்து பாடினாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் இண்டர்வெல்லுக்குப் பிறகு, திருப்புகழில் இரண்டும், சுப்பராமையர் பதங்களில் இரண்டும் பாடினார். இவற்றைக் கேட்டு விட்டுப் பிறகு, பக்கத்திலிருந்தவர்களைக் கொண்டு, இது தமிழ்ப் பாஷையென்று நான் தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று. சாதிரீய முறையில் பாடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, தற்காலத்திலே சில வித்துவான்கள், கேட்பவர்களுக்கு ஒன்றுமே புரியாத முறையில் பாடுகிறதாகச் சொல்லு கிறார்களே அந்தக் கோஷ்டியில் சேர்ந்தவர் போல் இருக்கிறது நமது சோமேச பாகவதரும் என்று நான் தீர்மானித்துக் கொண்டேன். தமிழையே தாய்ப் பாஷையாகக் கொண்ட பாகவதருடைய தமிழ் பாட்டுக்கள் இந்தப் பாடுபடுமேயானால், இவர் பாடும் தெலுங்குப் பாடல்களின் தாத்பர்யத்தை இவர் எவ்வளவு தூரம் உணர்ந்திருக்கிறார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை யல்லவா? அழகான தேவாரம் ஒன்று பாடினார் பாகவதர். இவருக்கு அகப்பட்ட தேவாரம் எந்தப் பதிப்பிலிருக்கிறதோ எனக்குத் தெரியாது; அல்லது இவருக்குத் தமிழ்ச்சங்கீதம் சொல்லிக் கொடுத்த வித்துவான்தான் யாரோ அதுவும் தெரியவில்லை. பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக் கசைத்து என்ற அழகான தேவாரத்தைப் பாடத் தொடங்கி விட்டார். கண்ட்ராவி! கேட்கச் சகிக்க முடியவில்லை. பொண்ணார் மேணியனே, புளித் தோளையரைக் கலைத்து என்று பாகவதர் திருப்பித் திருப்பிச் சொல்கிறபோது, மரியாதை யொன்றையும் பாராமல், சபைநடுவிலே எழுந்து பாகவதருடைய கன்னத்தில் இரண்டு அடி கொடுத்து விட்டு வரலாமாவென்ற ஆத்திரம் வந்தது. ஆனால் நானும் ஒரு மனிதன் தானே? எனவே கொஞ்சம் இரக்கம் வந்தது. ஒரு திருப்தி எனக்கு. பாகவதர் இந்தத் தேவாரத்தை, ஆண்டவன் சந்நிதானத்தில் எங்காவது ஒரு கோயிலுக்குச் சென்று பாடாமல் பக்தி ரஸத்திலே மிதந்து செல்லாத ஒரு ஜனக் கூட்டத்திலே வந்துபாடுகிறாரே என்று ஒரு சந்தோஷம். ஏனென்றால் கோயிலில் சென்று இந்தத் தேவாரத்தை இவர் பாடினால் சிலையினால் செய்து வைக்கப்பட்டிருக்கும் கடவுள் கூட கரைந்து நெக்குருகி அருவமாகிப் போய்விடப் போகிறாரே என்ற கவலை எனக்கு. நல்ல வேளையாக பாகவதர், பொன்னார் மேனியனே தேவாரத்தில் முதல் இரண்டடியை மட்டும் பாடி முடித்து விட்டார். அதற்கு மேல், அவருக்குப் பாடத் தெரியாதோ, அல்லது பின்னிரண்டடிகள், அவர் வாயிலிருந்து வர மாட்டோம் என்று சத்தியாக்கிரகம் செய்து விட்டனவோ நமக்குத் தெரியாது. எப்படியோ, கச்சேரி ஒரு தினுசாக எட்டு மணிக்கு முடிந்தது. பவமானுத பாடத் தொடங்கினார் பாகவதர். எழுந்து விட்டேன் நான், ஆனால் கூடவே தலைவலி தொடர்ந்து விட்டது. வீட்டுக்குப் போவதற்கு மகா சிரமமாகி விட்டது. ராத்திரியெல்லாம் தூக்கமே யில்லை. ஜன நெருக்கத்தில் உட்கார்ந்திருந்த பலனா அல்லது பாகவதருடைய சங்கீதத்தைச் சகித்துக் கொண்டிருந்ததன் பலனா என்று தெரியாமல் அன்றிரவு முழுவதும் விழித்துக் கொண்டிருந்தேன். 8. கட்டுரைப் பஞ்சம் பத்திரிகாசிரியர்களுடைய தலை, வழுக்கை விழுந்திருப்ப தற்குக் காரணம் இத்தனை நாட்களாக எனக்குத் தெரியாமலே இருந்தது. நேற்று முன் தினம் மாலை நாட்டாண்மை ஆசிரியர் ஸ்ரீ தீர்த்தகிரியைச் சந்தித்துப் பேசிய பிறகுதான் உண்மை தெரிய வந்தது. அவர் நிரம்ப சரளமான சுபாவி. கொஞ்சங்கூட கள்ளங் கபடில்லாதவர். இன்றைய தினம் ராத்திரி, வீட்டிலே காற்படி அரிசிக்குக்கூட வழியில்லையென்று தன்னுடைய பரிதாப நிலையை எல்லாரிடத்திலும் ரகசியமாகச் சொல்லுவார். இதற்குமேல், உலகத்திலே யுள்ள எல்லாப் பத்திரிகாசிரியர்களுடைய நிலைமையும் இப்படித்தான் என்று சொல்லிக் கொண்டு தாமே சமாதானமும் செய்து கொள்வார். இவருடைய நண்பர்கள் ஒருவராவது இவருடைய கால் வயிற்றுக் கஞ்சிக்குக்கூட உதவி செய்தது கிடையாது. ஆனால் தேனொழுகப் பேசிவிட்டுப் போய் விடுவார்கள். இவருடைய பத்திரிகாலயத்தின் படி இறங்கியதும் நாட்டாண்மை ஆசிரியர் நன்றாகத்தான் எழுதுகிறார்; ஆனால் ஒரு க்ரூ லூ போல் இருக்கிறது என்று உரத்த குரலில் பேசத் தொடங்கி விடுவார்கள். ஸ்ரீ தீர்த்தகிரியின் காதில் இந்த வார்த்தைகள் எத்தனையோ முறை விழுந்திருக்கின்றன. ஆனால் அவர் இவற்றையெல்லாம் லட்சியம் செய்கிறவரா? பேனாவைக் காகிதத்தில் குத்திக் கொண்டு, புருவங்களை நெற்றியிலே ஏற்றிக்கொண்டு, உதட்டைப் பிதுக்கிக் கொண்டு இன்னும் என்னென்னவோ கொனஷ்டை களெல்லாம் செய்து கொண்டு நமக்கு ஒரு க்ரூ லூ என்று சொல்கிற வரெல்லாருக்கும் இரண்டு க்ரூ லூ என்று சொல்லிக் கொண்டு திருப்தி யடைந்து விடுவார். பாவம், இவரும் எப்படியோ இருபத்திரண்டு வருஷகாலம் பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டுக் காலங்கடத்தி விட்டார். உலகத்திலே வேறெந்த திருப்தியை அடையாவிட்டாலும் ஒரே ஒரு திருப்தி மட்டும் இவருக்கு இருந்தது. அதாவது தமது கவலை களைப் பிதிரார்ஜித சொத்தாக அடைந்து அனுபவிப்பதற்குப் புத்திர பாக்கியம் இல்லாதது பற்றி இவருக்குப் பரம திருப்தி; ஒரு பெருமை கூட. யாராவது இதைப்பற்றி இவரிடத்தில் பிரதாபித்தால், எனக்கென்ன ஐயா, கட்டா, காய்தாவா? இந்த நிமிஷத்திலேயே துணியை உதறித் தோள் மேலே போட்டுக் கொண்டு மான சரோவரத்துக்கும் போவேன்; அதற்கப்பாலும் போவேன் என்று ஜம்பமாகப் பேசுவார். உலகத்திலே நிரந்தரமான சில உண்மைகள் உண்டு. அவற்றில் ஒன்று பத்திரிகாசிரியர்களுக்குச் சந்தான பாக்கியம் அதிகமாகக் கிடையா தென்பது. இவர்களுக்கு, இந்தப் பாக்கியத்தைப் பெற அவா இருந்தாலும், அவகாசம் எங்கேயிருக்கிறது? பத்திரிகை களைப் புரட்டிப் பார்க்க, ஓயாமல் ப்ரூப் படிக்க, யாருடைய மனமும் புண்படாமல் எப்படி எழுதுவ தென்பதைப் பேனாக் கட்டையினால் மண்டையில் அடித்துக் கொண்டு சிந்திக்க, தம்மைப் பார்க்க வருகிறவர்களிடத்திலே யெல்லாம் மனம் இருந்தாலும் இராவிட்டாலும் பல்லைக் காட்டிக் காட்டிப் பேச, இப்படி எழுதித் தொலையாத ஏழாயிரம் விஷயங்களில் மனத்தைச் செலுத்தத் தான் இவர்களுக்கு அவகாசம் இருக்கிறதே தவிர, இல்லறம், காதல் முதலியவை பற்றி ஆராய எங்கே பொழுது இருக்கிறது? இதனால் தான் அநேக பத்திரிகாசிரியர்களுடைய எழுத்துக்களிலே ஈரமே இருப்பதில்லை போலும். ஸ்ரீ தீர்த்தகிரியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இரட்டை மண்டை; கொஞ்சம் கூன் முதுகு; நாள் பூராவும் குனிந்து கொண்டே எழுதியும் ப்ரூப் பார்த்தும் வந்தால் வெகு சீக்கிரத்தில் ததீசி மகரிஷியின் அவதாரமாக வேண்டியதுதானே! நெற்றியிலே எண்ணாயிரம் கோடுகள்; கீழ் நோக்கிய பார்வை; குழிந்த கண்கள்; ஒட்டிய தாடை; மேலே ஒரு சட்டை மட்டுந் தான் போட்டுக் கொண்டிருப்பார்; அதில் இங்கி நட்சத்திர மண்டலம். இவருடைய பேனாக்கட்டை இருக்கிறதே, அது ஓர் அலாதி வது. நுனி ஒடிந்து, நூல் கயிற்றினால் நிப் (முள்) பைச் சேர்த்துக் கட்டப்பெற்ற அந்தப் பேனாக்கட்டை எழுதுகோலாக இருக்கிற நேரந் தவிர, மற்ற நேரங்களில் ஆசிரியருடைய சிந்தனா சக்தியை மண்டையில் தட்டித் தட்டி எழுப்பு வதற்குத் தூண்டுகோலா யிருக்கும்; அவருடைய காது அழுக்குகளைத் தோண்டும்; முதுகிலே தினவு உண்டானால் அதனைச் சொரியும் கருவியாக அமையும்; கோடை காலத்தில் ஆசிரியருடைய தேகத்திலே கொட்டும் வியர்வையை வழித் தெடுக்கும். சுருக்கமாகச் சொன்னால் ஆசிரியருடைய செங்கோல் இது. இதனைக் கொண்டுதானே இவர் உலகத்தையாள்கிறார்? இவருடைய மேஜை இருக்கிறதே, அது ஒரு பொருட்காட்சி சாலை. எல்லா இடங்களிலும் சகஜமாகப் பார்க்க முடியாத வதுக்கள் என்று எதை எதை நீங்கள் கருதுகிறீர்களோ அவையெல்லாம் அதில் இருக்கும். எலிப் புழுக்கை முதல் அபிதான சிந்தாமணி வரை அந்த மேஜையில் நீங்கள் தரிசிக்கலாம். துருப் பிடித்த கத்தரிக்கோலும், ஒட்டினால் பிடித்துக் கொள்ளாத உலர்ந்துபோன பசையும், மேஜையின் இரண்டு பக்கங்களிலும் துவார பாலகர்கள் மாதிரி இருக்கும். எழுதுகோல் கூட முக்கியமில்லை, நமது தீர்த்தகிரி ஆசிரியருக்கு. கத்தரிக்கோலும் பசையும் மேஜைமீது இல்லாவிட்டால், இவருடைய பஞ்சப் பிராணன் களும் ககன மார்க்கத்திலே சஞ்சரித்திடச் சென்று விடும். இதனால் தான் இவர் அடிக்கடி ஆசிரியர்கள் அரசர்களைவிட மேலானவர்கள் என்று சொல்லுகிறார் போலிருக்கிறது. அரசருக்கு ஒரு கோல் தான்; அது செங்கோல். ஆசிரியர்களுக்கோ இரண்டு கோல்; ஒன்று எழுதுகோல், மற்றொன்று கத்தரிக்கோல். பொருத்தமாயிருக் கிறதல்லவா? இவருடைய தலையங்கங்களுக்கு விசேஷமான ஒரு மதிப்பு உண்டு. எல்லாரும் எழுதும் விஷயங்களைப் பற்றி இவர் எழுதவே மாட்டார். மற்றவர்கள் எழுதாத, அல்லது அவர்களால் எழுத முடியாத விஷயம் எதுவென்று பார்த்துத்தான் இவர் எழுதுவார். விஷயம் எப்படியிருக் கிறதோ, இவர் தலையங்கங்களுக்குக் கொடுக்கிற தலைப்புகள் மகா அற்புதமாயிருக்கும். நெல்லும் காந்தியும், மூட்டைப் பூச்சியும் யூதனும், சேனாதிபதி முதலியாரின் திருமணம், ஹிட்லரும் ப்ரஹ்மசரியமும்; இத்தியாதி, இத்தியாதி. சென்ற வாரம் இவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது எனக்கு நெடு நாளாக இருந்த சந்தேகத்தை இவரிடம் தெரிவித்துக் கொண்டேன். பத்திரிகாசியர்களுடைய தலை வழுக்கை விழுவதேன்? என்று கேட்டேன். இதே தலைப்புப் பெயர் கொடுத்து மறுநாள் நாட்டாண்மை பத்திரிகையில் ஒரு தலையங்கம் வெளிவந்து விட்டது. அதை அப்படியே கத்தரித்து இந்தக் கட்டுரையோடு ஒட்டியிருக்கிறேன். பத்திரிகாசிரியர்களுடைய தலை வழுக்கை விழுவதேன்? உலகத்தில் வெகு சீக்கிரத்தில் பத்திரிகாசிரியர்களுக்குத்தான் தலை வழுக்கை ஏற்பட்டு விடுகிறது. நமது அனுபவமும் இப்படித்தான் இருக்கிறது. இதற்குக் காரணம் என்னவா யிருக்குமென்று நாம் அநேக உடற்கூறு நூல்களையும் மனோதத்துவ சாதிரங்களையும் புரட்டிப் பார்த்தோம். சரியான காரணத்தை எந்த ஆசிரியரும் கூறினாரில்லை. நாம் இதைப்பற்றி நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து பின்வரும் முடிவுக்கு வந்திருக் கிறோம். அஃதென்னையோவெனின், பத்திரிகாசிரியர் களுக்கு அடிக்கடி ஏற்படுகிற கட்டுரைப் பஞ்சம்தான்இதற்குக் காரணம். பத்திரிகையில் எதை வெளியிடுவது என்று இவர்கள் யோசித்து யோசித்துக் கடைசியில் என்னென்னவோ புனை பெயர்களைப் போட்டும், நடையை மாற்றியும் இவர்களே அநேக விஷயங்களைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. இதற்காக இவர்கள் அடிக்கடி தங்கள் பேனாக் கட்டையை மண்டையில் அடித்து அடித்துச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. மூளையைக் கவிந்து கொண்டிருக்கும் மண்டையோட்டின் பேரிலுள்ள சதை மிகவும் நொல்பமானது. இதனால் அடிக்கடி இந்த எழுதுகோலின் தாக்குதலினால் மண்டை மேலுள்ள மயிர்கள் உதிர்ந்து போய் வழுக்கை உண்டாகி விடுகிறது. இதைவிட வேறு காரணம் இருக்கமுடியாது. சுருக்கமான இந்தத் தலையங்கத்தைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன். இந்த முடிவு சரியானால், வக்கீல்களுக்கும் ஏன் வழுக்கை விழுகிறதென்ற சந்தேகம் எனக்கேற்பட்டது. வக்கீல்கள் ஒரு பக்கத்துக் கட்சியை எடுத்துச் சொல்கிறவர்கள்; பத்திரிகாசிரியர்களோ இரண்டு பக்கத்துக் கட்சியையும் எடுத்துச் சொல்ல வேண்டியவர்கள். இந்த நிலைமையில் பார்த்தால் முன்னவருக்கு ஒரு பக்கம் வழுக்கையும், பின்னவருக்கு இரண்டு பக்கம் வழுக்கையுமல்லவோ விழவேண்டும்? ஆனால் இப்படியிருக்கலாம். இரண்டு பேருக்கும் அடிக்கடி ஒரே விதமான பஞ்சம் ஏற்படுவதனால் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான வழுக்கை விழக்கூடும். பத்திரிகாசிரியர்களுக்குக் கட்டுரைப் பஞ்சம்; வக்கீல்களுக்கு கே பஞ்சம். காலம் இப்படித்தானே இருக்கிறது! 9 பெயரின் பெருமை பெயரிலே என்ன இருக்கிறதென்று கேட்கிறார்கள். அப்படியில்லை. பெயரிலே எல்லாம் இருக்கிறது. சென்னை தியாகராய நகரத்துக்கு ஒருமுறை சென்று விட்டு வாருங்கள். அப்பொழுது தெரியும் உங்களுக்குப் பெயரின் மகிமை. அங்கே பெயரில்லாத வீதிகளையோ, விலாசமில்லாத வீடுகளையோ நீங்கள் பார்க்க முடியாது. அங்கே, வீட்டைக் கொண்டு, வீட்டின் முகப்பிலுள்ள பெயரைக் கொண்டு, வீட்டிற்குள் இருப்பவருக்கு மதிப்பு. பெயரைக் கொண்டு ஆளை மதிப்பிடுகிற காலம் இது. பணத்தைக் கொண்டு குணத்தை மதிப்பிடுகிற காலம் இது. பெயருக்குத் தனித்தன்மை ஒன்று இருக்கிறது. நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உள்நாட்டிலே விரிந்திருக்கிற அது வெளி நாட்டுக்குச் சென்றதும் சுருங்கிவிடுகிறது. தஞ்சாவூரில் நல்ல குற்றாலம் பிள்ளையாக இருந்தவர் ரங்கூனில் என்.கே.பிள்ளையாகி விடுகிறார்; கீழக்கரை கிருஷ்ணமூர்த்தி ஐயர், சிங்கப்பூரில் கே.கே.மர்ட்டியாகி விடுகிறார். கண்ணமங்கலத்து ஆறுமுகம், மோரீசில் கே.ஏ.காம் ஆகிவிடு கிறார். சிலவிடங்களில் ராமநாதன், ராபர்ட் நாதனாகவும், ராமசாமி ராம்ஸே யாகவும், பரமேசுவரன் பி. வாரனாகவும் இப்படித் தினுசு தினுசாக மாறிவிடுவதுமுண்டு. பெயருக்கு மகிமையில்லை யென்று யாராவது சொல்லமுடியுமா? ராமனை நாம் பார்த்ததில்லை. ஆனால் பாகவதர் அவனுடைய பெயரைப் பக்தியோடு உச்சரிக்கிறபோது நாம் உருகிவிடுகிறோம். சர்ச்சிலை நாம் பார்த்ததில்லை. ஆனால் அவருடைய பெயரைப் பத்திரிக்கைகளில் கொட்டை எழுத்துக் களில் பார்க்கிறபோது, தோல்வி மனப்பான்மை நம்மைவிட்டு அகன்று போகிறது. ஒரு தெருவின் பெயரைக்கொண்டு, அத்தெருவிலுள்ளவர்களின் நிலைமையை நிர்ணயித்துவிடு கிறோமல்லவா? லிட்டன் ரோட்டா? இதில் பெரிய மனிதர்கள் தான் வசித்துக் கொண்டிருக்க வேண்டும். நாராயணசாமித் தெருவா? சாதாரண மனிதர்கள் வசிக்கிற வீதி! பாராத பொருளைக் கூட, அதன் பெயரைக் கேட்டு மதிப்பிட்டு விடுகிறோம். அப்படி யானால், பெயருக்கு மகிமையில்லையென்று சொல்ல முடியுமா? நாம் ஒருவர் மீது ஆசை வைத்திருக்கிறோம் என்பதற்கு அடையாளம், அவர் பெயரைச் சுருக்கிக் கூப்பிடவேண்டும்; சிதைத்தும், உருவத்தை மாற்றியும் கூப்பிடவேண்டும். குழந்தையின் கை கால்களை வெட்டிவிட்டு, அதன் முகத்திற்கு முத்தம் கொடுப்பது போல. கோபால கிருஷ்ணனை கோபு, சுப்பிர மணியனை சுப்புணி, சரவதியை சச்சி, ஜகதாம்பாளை ஜக்கி என்று இப்படியாக அவரவர் பெயரையும் குறுக்கி அழைக்கவேண்டும். பெயருக்கு மகிமையில்லையென்று சொல்ல முடியுமா? வீட்டுக்குள் விளக்கு எரிகிறதோ இல்லையோ, வீட்டுக்கு வெளியே பெயர்ப் பலகை தொங்கவேண்டும். இன்றைய நாகரிகத்தின் விசேஷ அமிசங்களில் இஃது ஒன்று எஜமானி அம்மாள் கைநீளாத கருமி; அவள் வீட்டின் பெயர் கல்பதரு. இத்தலியிலிருந்து வந்த சலவைக் கல், பெல்ஜியத்திலிருந்து வந்த கண்ணாடி. இங்கிலாந்திலிருந்து வந்த பூந்தொட்டி முதலிய அலங்காரப் பொருள்களால் அழகு படுத்தப் பட்டிருக்கும். பங்களாவுக்குப் பெயர் பர்ணகுடி. வீட்டு எஜமானனுக்கு முகவிலாசமே இராது. அவன் வீட்டுக்குச் சௌந்திர விலாசம் என்று பெயர். வீட்டுக்குள்ளே பொட்டலம் கட்டுவதற்குக் கூட காகிதம் இராது. வீட்டுக்குப் பெயர் சரவதி பவனம். இன்னும் சில வீடுகளுக்கு இங்கிலீஷ் பெயர்களை வைத்துப் பெருமையும் திருப்தியும் அடைகிறார்கள். பெல்மாண்ட், மூன்டைட், ஹனிகோம்ப், வீட்ஹோம்! அட கடவுளே! தமிழர் வசிக்கிற வீட்டுக்குத் தமிழ்ப் பெயருக்கும் பஞ்சமா? எட்டியிருக்கும் பொருளின் மீது அபிமானம் உண்டாவது சகஜம். அதைப்போல் எட்டியிருக்கும் பெயர்களின் மீது கூட ஒரு மோகம் விழுகிறது. தமிழர்கள் சிலர், வடநாட்டுத் தலைவர் களுடைய பெயர்களை தங்கள் சந்தானங்களுக்கு வைத்துத் திருப்தியடைகிறார்கள். பாராத தாதாபாயின் பேரைப் பேரனுக்கு வைக்கிறோம். தடுமாறி நடக்கின்ற பிள்ளைக்குத் திலகன் என்று நாமமிடுகிறோம். சொள்ளொழுகும் சுந்தரத் திற்குச் சுரேந்திரநாதன் என்று பெயர். கள்நாற்றம் வீசும் கனவானுக்குக் கதூரி ரங்கன் என்று பெயர் இருப்பது போல் இல்லையா இது? பெயருக்கு மகிமையில்லை யென்று சொல்ல முடியுமா? 10. கடவுளுக்கு விடுமுறை கடவுளுக்கு விடுமுறை தேவையா இல்லையா? அவருடைய விருப்பம் எப்படியோ நமக்குத் தெரியாது. ஆனால் அவருக்கு விடுமுறை கொடுத்து, இந்த உலகத்திலிருந்து அவரைச் சற்று அப்புறப்படுத்த வேண்டியது இப்போது அவசியமாயிருக்கிறது. ஏனென்றால் எதிரிலே ஒரு மனிதனை நிறுத்தி வைத்து, அவனைச் சதா பரிகசித்துக் கொண்டும், இகழ்ந்து கொண்டும் இருப்பதைக் காட்டிலும், அவனைக் கண்ணுக்கு மறைவாகக் கொண்டு போய் வைத்து விடுதல் நல்லதல்லவா? கடவுள் கண் மறைவாகப் போய் விட்ட பிறகாவது அவர்மீது நமக்குச் சிறிது பக்தி உண்டாகலாம். இருக்கிற பொருளைக் காட்டிலும் இல்லாத பொருளிடத்தில் மதிப்பு ஏற்படுவது மனித இயற்கை. மனிதன், தான் எதுவாக இல்லாமலிருக்கிறானோ அதுவாகவே தன்னைக் காட்டிக் கொள்ள விரும்புகிறான. அப்படியே கடவுள் எதுவாக இல்லாமல் இருக்கிறாரோ அதுவாகவே அவரைப் பார்க்கிறான். உருவமில்லாத அவருக்கு உருவம் சமைத்து விடுகிறான். ஊரும்பேரும் இல்லாத அவரை ஊராளன் என்றும் பேராளன் என்றும் அழைக்கிறான். எங்கும் நிறைந்துள்ள அவரைக் கோயிலிலே ஓர் இருட்டறையிலே சிறைப் படுத்தி விடுகிறான். அவர் இல்லாத இடமில்லை. ஆனால், அவர் இருப்பிடம் எங்கே, எங்கே யென்று தேடிக் கொண்டு அலைகிறான். கடவுள், மனிதனைப் படைத்தாரா? அல்லது மனிதன் கடவுளைப் படைத்தானா? இருதயத்தை மூடிக் கொண்டு, அறிவை மட்டும் ஆராய்ச்சி ஏணியிலே ஏற்றி விட்டுப் பார்த்தோமானால், மனிதன்தான் கடவுளைப் படைத்திருக்கிறான் என்ற முடிவுக்கு வருவோம். கடவுள் சிருஷ்டிகர்த்தர் என்பதற்கு நமது நம்பிக்கை தான் ஆதாரம். ஆனால் கடவுளை நாம் சிருஷ்டிக்கிறோம் என்பதற்கு அநேக பிரத்தியட்சப் பிரமாணங்கள் இருக்கின்றன. நம்மைப் போலக் கடவுளைக் கருதுகிறோமே தவிர, கடவுளைப் போல நம்மை நினைத்துக் கொள்கிறோமில்லை. நம்மைப் போலவே அவருக்கு நீராட்டுகிறோம்; ஆடையாபரணங்கள் அணிவிக் கிறோம்; பள்ளியறை கூட தயாரித்து அவரைப் படுக்க வைக்கிறோம்; அவரும் உறங்குகிறார். நமக்கு ருசியாயுள்ள ஆகாராதிகளை அவருக்கு உண்பிக்கிறோம்; ஆனால் ஒரு நிபந்தனையோடு! அதாவது நமக்குப் பசியெடுக்கிறபோது அவருக்குப் பசியெடுக்க வேண்டும்; அதே பிரகாரம், நமக்குத் தூக்கம் வந்தால், அவரும் படுக்கையறைக்குப் போய் விட வேண்டும். ஆகாரத்தைக்கூட, அவருடைய முன்னிலையிலே வைத்து திறந்து காட்டுகிறோமே யொழிய, அவர் வாயிலே ஊட்டுகிறோமா என்ன? கடவுள், சாப்பிடத் துணிந்து விட்டால், நைவேத்தியம் என்ற சடங்கு அடியோடு நின்று விடும் என்பது நிச்சயம். அவர், நல்ல ஆடைகளை அணிந்து கொள்ளத் திருவுளங்கொண்டு விடுவா ரானால், அவரைத் திகம்பரராகப் பார்த்து மகிழ்வதிலேதான் நமக்கு அதிக விருப்பம் இருக்கும். கடவுள் எல்லாம் வல்லவர் என்று படிக்கிறோம்; ஆனால் அவருடைய எல்லாம் வலிவிழந்து கிடப்பதைப் பார்க்கிறோம். அவருக்கு ஏதேனும் மருந்து வாங்கிக் கொடுத்துக் கொஞ்சம் சக்தி உண்டுபண்ண வேண்டும் என்ற எண்ணம்கூட நமக்கு இல்லை. ஆனால், நமக்கே சக்தி இல்லையே; அவருக்கு எங்கே சக்தியை உண்டு பண்ணப் போகிறோம்? உண்மையில் அவருக்குச் சக்தி இருக்குமானால், உலக வல்லரசுகளுக் கிடையே அவ்வப்பொழுது ஏற்படும் பிணக்குகள், பூசல்கள் முதலிய வற்றைத் தடுத்து நிறுத்த மாட்டாரா? அல்லது குறைக்கவாவது செய்ய மாட்டாரா? நிறுத்தவும் வேண்டாம், குறைக்கவும் வேண்டாம், அவருடைய சொந்த விவகாரங்களையாவது அவரால் கவனித்துக் கொள்ள முடிகிறதா வென்றால், அதுவும் இல்லை. பிரிட்டிஷ் ராஜ்யத்திற்கும், ஜெர்மன் ராஜ்யத் திற்கும் சண்டை என்றால், காஞ்சிபுரம் வரதராஜருக்கு வைகாசி உற்சவம் கிடையாது! தில்லை நடராஜர் ஆருத்திரையன்று பக்தர்களுக்குத் தரிசனம் கொடுக்கமாட்டார்! கிறிதுவின் சீடர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்; ஹிந்துக் கடவுளர் வாய் பொத்திக் கிடக்க வேண்டியிருக்கிறது. ஹிந்து பக்தர்கள் தங்கள் கடவுளர் சார்பாகப் பரிந்து பேசக்கூட முன்வர மாட்டோமென்கிறார்கள். மனிதர் அமைதியாயிருந்தால், கடவுளுக்கு ஆரவாரம்; மனிதர் ஆரவாரமாயிருந்தால், கடவுளுக்கு உபவாசம். மனிதக் குழந்தைகள் பாலில்லாமல் தவிக்கிறபோது, கடவுள் பால் நானம் செய்கிறார். மனிதர் நடப்பதற்குத் திராணி யில்லாமல் சாகிறார்கள்; கடவுளோ, வாகன மில்லாமல் வெளியே கிளம்புவதில்லை. மனிதர் உண்டிக்குத் தவிக் கிறார்கள்; கடவுளின் உண்டி நிரம்பிக் கொண்டிருக்கிறது. கட்டுப்பார்ப் பதற்கு வக்கீல்கள் கட்டணம் வாங்குவார்கள். கடவுள் தம்மைப் பார்ப் பதற்கே கட்டணம் வாங்குகிறார்! இருபதாவது நூற்றாண்டுக் கிறிதுவக் கடவுள் தான், ஆச்சரியப் படத் தக்கவிதமாக, பாராத கண்ணும் பேசாதவாயும் உடையவரா யிருக்கிறாரென்றால், ஹிந்துக் கடவுளர்கள் அவருடைய சகோதரர்களாகி விட்டார்களே! கடவுள் சுத்தமானவர். ஆனால் அவர் கோயிலில் அசுத்தந்தான் நிறைந்திருக்கிறது; அசுத்தமானவர்களே அதிகமாயிருக்கிறார்கள். கடவுள் எல்லோருக்கும் வெளிச்சம் கொடுக்கிறவர்; ஆனால் அவர் இருப்பிடம் இருள் மயம்; அவரைப் பார்ப்பதற்கே வெளிச்சம் வேண்டியிருக்கிறது. கடவுள், கருணாமூர்த்தி; ஆனால் அவர் கோயிலில், மற்றவர்களுடைய கருணைக்காகப் பலர் கையேந்தி நிற்கிறார்கள். பல்லைக்காட்டித் தங்கள் வயிற்றையும் தட்டிக் காட்டுகிறார்கள்; கடவுள், தரித்திர நாராயணர்; ஆனால் அவர் சந்நிதானத்தில், தரித்திரமானது கூன் குருடு செவிடாகவும், ரோக மாகவும் காட்சி யளிக்கிறது. நெற்றியிலே திருநீறு அல்லது திருமண்; கழுத்திலே ருத்திராட்சம் அல்லது துளசி மாலை; வாயிலே முணுமுணுப்பு; கண்ணிலே மூடி மூடித் திறக்கிற பார்வை; அவ்வப்போது ஓர் அசட்டுச் சிரிப்பு; தலை மேலே கூப்பிய கைகள். இவையெல்லாம் பக்தர்களின் அடையாளங்கள். இவர்கள் ஆடுவார்கள்; பாடுவார்கள்; அழுவார்கள்; கீழே விழுவார்கள். ஆனால், உடம்பிலே வியர்வை சொட்ட ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள்; தாகத்தினால் நாக்கு வறண்டு போகிறதென்று கேட்டால், குழாயில் சரியாக ஜலம் வரவில்லை யென்பார்கள்; காலிலே காயம்பட்டு விட்டதென்று சொன்னால் குனிந்துகூடப் பார்க்க மாட்டார்கள். இவர் களெல்லோருக்கும் என்ன பெயர் தெரியுமா? தொண்டர்கள்! உடம்பை அசைக்காமல் எப்படித் தொண்டு செய்ய முடியும்? பாசுரம் பாடுதலும், கண்ணீர் விடுதலும் மட்டும் சிறந்த தொண்டாகுமா? அப்படிப் பாடுகிறபோதும் நாம் என்ன கேட்கிறோம். எனக்கு முத்தி வேண்டும், என்னை உன்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்; உனது அருளை எனக்கு நல்கவேண்டும் என்ற இப்படிப்பட்ட கருத்துக்கள் அடங்கிய பாட்டுக்களைப் பாடுகிறோம், அல்லது நமது குறைகளைச் சொல்லி முறையிடுகிறோம். இரப்பது தொண்டாகுமா? பெற்றோர்களைப் பார்த்துக் குழந்தைகள் பட்சணம் கேட்கின்றன. அப்படிக் கேட்பது அந்தப் பெற்றோருக்குப் பணிவிடை செய்ததாகி விடுமா? அவர்கள் தான் சந்தோஷப்படுவார்களா? இரக்கம் காட்டலாம்; மகிழ்ச்சி கொள்ள முடியாது. இப்படி யெல்லாம் தொண்டு செய்து கடவுளை ஏமாற்றப் பார்க் கிறோம். ஆனால் நாம் ஏமாந்து போவது நமக்குத் தெரிவதில்லை. கடவுளைச் சுற்றிப்போடப்பட்டிருக்கும் வேலிதான் மதம். ஆனால் மனிதர், வேலியையே கடவுள் என்று நினைத்துக் கொண்டு, சண்டை போடுகிறார்கள்; மண்டைகள் உருளுகின்றன. கடவுளை அறியவேண்டும்; அவரை அடையவேண்டும் என்ற ஆவலுடை யவர்கள் சண்டை போடமாட்டார்கள்; நான் நான் என்ற அகங்காரம் படைத்தவர்கள் தான் சண்டை போடுவார்கள்; அப்படிப்பட்டவர்கள் கடவுட் பக்தர்களல்லர்; மதப்பித்தர்கள். மதாசாரியர்கள், புரோகிதர்கள் முதலியோர் மேற்படி மதவேலியைக் காப்பதற்காக நியமனம் செய்யப்பட்ட காவலாளிகள். ஆனால் அவர்களிற் சிலர் கடவுளின் தரகர்களாகி விட்டார்கள்; கடவுளின் திருவருளை அவரிடமிருந்து பலவந்தமாகப் பறித்து மக்களுக்கு விலைக்கு விற்கிற வியாபாரிகளாகி விட்டார்கள். அவர்கள், கடவுளைத் தங்களுடைய ஆதீனத்தில் வைத்துக்கொண்டு, அவரை ஜனங்களுக்கு எட்டாத பொருளாக்கி விட்டார்கள். அவர்கள் ஜனங்களுடைய பாவத்தைக் கழுவி விடுவதாகச் சொல்கிறார்கள்; ஆனால், தங்களுடைய தேகத்தில் சுமந்து கிடக்கும் அழுக்கைக் கழுவிக் கொள்வதற்குக்கூட அவர்களால் முடிவ தில்லை; அவர்களுக்கு அவகாசமும் இல்லை அவர்களுடைய போக வாழ்க்கையிலே, ஆடம்பரத் தன்மையிலே, கடவுள் அழுந்திப் போய் திணறிக் கொண்டிருக்கிறார். கடவுளே, உனக்கு விடுதலை எப்பொழுது? வாழ்க்கையோடு ஒட்டியது மதம். வாழ்க்கைக்காக மதமே தவிர, மதத்திற்காக வாழ்க்கை இல்லை. பயிருக்காக வேலியே தவிர, வேலிக் காகப் பயிரில்லை. வாழ்வினின்று விலகிய மதம், வாழ்வுக்கு உபயோகப் படாத மதம், சுரைக்குடுக்கை, தண்ணீர் முகப்பதற்குத் தான் தகுதி யுடையது. இன்றைய மதங்கள் பெரும்பாலும் தீர்த்த யாத்திரையிலும், தண்ணீரைக் குடிப்பதிலும் இறைப்பதிலும் விளக்கம் பெறுகின்றன. இன்றைய மதானுஷ்டானங்கள், மனிதனைக் கடனாளியாக்குகின்றன; கோழையாக்குகின்றன; சம்பிரதாயங்களுக்கு அடிமையாக்குகின்றன; தன்னம்பிக்கை யற்றவனாகச் செய்துவிடுகின்றன. இப்படிப்பட்ட மனிதனுடைய தோத்திரங்களைக் கேட்டுக் கேட்டு, கடவுளும் இப்போது உணர்ச்சியற்றவராகி விட்டாரோ என்று நினைக்க வேண்டியிருக் கிறது. எங்குப் பார்த்தாலும் தற்போது கடவுட் பக்தி பெருகிக் கொண்டு வருகிறது, மத உணர்ச்சி வலுத்துக் கொண்டு வருகிற தென்று சிலர் சொல்லுகிறார்கள். உண்மையில் அப்படியிருந்தால், மோட்ச லோகம் என்பது, இன்று நம்மால் காணமுடியாத ஒரு பொருளாயிருக்குமா? உழைக்கிறவர்கள் உழைத்துக் கொண்டே யிருக்க, சோம்பேறிகள், பண மூட்டைகளின் மேல் ஏறிக்கொண்டு போவார்களா? ஜனங்கள் தான் பலாத்கார சக்திகளுக்குப் பலியாகிக் கொண்டிருப்பார்களா? இப்படி யெல்லாம் இல்லவே இல்லை. ஜனங்கள், உண்மையான மதத்தை அனுஷ்டிக்கவில்லை; மதத்தைப் பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள். சமயஞானம் பரவவில்லை; சமயத்தைப் பற்றிய நூல்கள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக் கின்றன. கோயில்கள் கட்டுகிறார்கள்; ஆனால் அவைகளில் கடவுளுக்குப் பதிலாகக் கற்சிலைகளை தாபித்து விடுகிறார்கள். கடவுள் எங்கே? 11. ஜாக்கிரதை ஓடுகின்ற ரெயிலில் ஏறி உட்கார்ந்தால், ஜாக்கிரதை என்ற ஐந்தெழுத்து வார்த்தை, நம் கண்ணை உறுத்துகின்றது. நகர வீதிகள் சிலவற்றில், அதாவது பங்களாக்கள் நிறைந்த ரோட்டுகளில் நடந்து செல்லும்போது சிறிது நின்று பார்த்தால், அதே ஜாக்கிரதை என்ற ஐந்தெழுத்து வார்த்தை நம் கண்ணை உறுத்துகின்றது. அந்த வார்த்தையை நீங்கள் உறுத்துப் பார்ப்பதற்கு முன், வாசகர்களே, உங்களுக்கு ஒரு ஜாக்கிரதை போட்டு வைக்கிறேன். பெரிய மனிதர்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டிருக்கிற மோட்டார் ஆசாமிகள் அல்லது மோட்டா(பருத்த) ஆசாமிகள் வசிக்கிற வீதிகளை ரோட் என்று அழைக்கவேண்டும்; நடுத்தர வகுப்பினர், அதாவது ஆபி குமாதாக்கள், சில்லறை வியாபாரிகள் இப்படிப் பட்டவர்கள் வசிக்கும் வீதிகளுக்குத் தெரு என்று சொன்னால் போதும்; ஏழை பாழைகள், கூலிவேலை செய்து கால் வயிற்றோடு இருக்கிறவர்கள், இப்படிப்பட்டவர்கள், அடர்ந்தாற்போல் குடிசைகள் போட்டுக் கொண்டு இருக்கிற இடத்தை சேரி என்றோ, குப்பம் என்றோ அல்லது மேடு என்றோ ஏதோ ஒரு பெயரால் கூப்பிட்டால் போதும். ஏன் எங்கள் இருப்பிடத்தை இந்தப் பெயரால் அழைக்கிறீர் களென்று அவர்களில் யாரும் உங்களைக் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். யாராவது தூண்டிவிட்டால், எப்பொழுதாவது ஒரு சமயம், ஏதாவதொரு கொடியைப் பிடித்துக்கொண்டு ஒழிக, ஒழிக என்று கூச்சலிட்ட வண்ணம் ஊர்வலம் வருவார்கள். அவ்வளவு தான். அதனால் உங்களுக்கு என்ன பாதகம்? அடடா! வாசகர்களே, என்னை மன்னிக்கவேண்டும். பழைய நினைவிலே பேசுகிறேன். இப்பொழுதெல்லாம், இந்தச் சேரிகள், குப்பங் களெல்லாம், நகர்களாகவும் புரங்களாகவும் மாறிக் கொண்டு வருகின்றன. இங்கெல்லாம் இப்பொழுது தண்ணீர்க் குழாய்கள் இருக்கின்றன. இவற்றில் நீர் வருகின்றதா அல்லது சொட்டுகின்றதா என்று மட்டும் கேளாதீர்கள். வரிசையாக மணிக் கணக்கில், குப்புறக் கவிழ்ந்தும் ஒரு பக்கமாகச் சரிந்தும் தவங்கிடக்கும் சட்டி பானைகளைப் பார்த்தாலே தெரிய வில்லையா? இன்னும், மாறிக்கொண்டிருக்கும் இந்த நகர்களிலும் புரங்களிலும் மின்சார விளக்குக் கம்பங்கள் இருக்கின்றன; இவற்றில் விளக்குகள்கூட தொங்கிக் கொண்டிருக்கின்றன. இவை வெளிச்சம் கொடுக்கின்றனவா இல்லையா என்பதை, இந்தக் கம்பங்களில் போய் முட்டிக்கொண்ட பிறகுதான் பார்க்கலாம். ஆனாலும் இந்த நகர்களுக்கும் புரங்களுக்கும் ஒரு மவுசு வந்திருக் கிறது. இப்பொழுது, மறுபடியும் வாசகர்களே, என்னை மன்னித்து விடுங்கள். ஜாக்கிரதையென்று உங்களுக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு நான் எங்கேயோ போய்விட்டேன். வேறு எங்காவது, ஜாக்கிரதை என்ற இந்த ஐந்தெழுத்து வார்த்தை காணப்படுகிறதா என்று கண்டு வர, என் பார்வையைச் சிறிது உலவி விட்டுமாறு உத்தரவிட்டேன். நாகரிகமான கட்டைவண்டி என்று சொல்லக் கூடிய பகளில் இந்தப் பஞ்சாட்சரந் தான்; பாங்கிகளில் நுழைந்தால் முதலில் கண்ணில் படுவது இந்தப் பஞ்சாட்சரந்தான்; படமாடுங் கோயில்களில் கூட இந்தப் பஞ்சாட்சரந்தான் அங்குச் செல்லும் நடமாடுந்தெய்வங் களிடமிருந்து அங்குள்ள மூர்த்திகளுக்குப் பாதுகாப் பளிப்பதற் காகவே இந்த ஐந்தெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன வாம். ஒரு வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா? கோயிலுக்குச் சென்று நமசிவாய என்ற ஐந்தெழுத்தைச் சொல்ல ஆரம்பித்தமாத்திரத்தில், எங்கிருந்தோ கொட்டாவிவர ஆரம்பிக்கிறது. ஜாக்கிரதை என்ற பஞ்சாட் சரத்தைப் பார்த்த மாத்திரத்தில், நமது இரண்டு கை விரல்களும் நமது இடுப்பைத் தடவித் தடவிக் கொடுக்க ஆரம்பிக்கின்றன; நமது இரண்டு கண்களும், எதிரிலிருக்கும் மூலவரையோ உற்சவரையோ பாராமல், அக்கம்பக்கத்திலுள்ளவர் களை வட்டமிட்ட வண்ணம் இருக்கின்றன. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான ஜாக்கிரதை யென்று எண்ணாதீர்கள். ஒவ்வோரிடத்தில் ஒவ்வொருவரிடமிருந்து ஜாக்கிரதை. அதாவது ரெயிலில் திருடர்களிடமிருந்து ஜாக்கிரதை; பங்களாக்கள் முன்னர் நாய்களிடமிருந்து ஜாக்கிரதை; பாங்கிகளில் ஜேப்படிக்காரர் களிடமிருந்து ஜாக்கிரதை; கோயில்களில் பக்தர்களிடமிருந்து ஜாக்கிரதை; இப்படி நாம் அர்த்தப் படுத்திக்கொள்ள வேண்டும். அங்கங்கே பொறித்திருப்ப தென்னவோ திருடர்கள் ஜாக்கிரதை, நாய்கள் ஜாக்கிரதை, ஜேப்படிக்காரர்கள் ஜாக்கிரதை, பக்தர்கள் ஜாக்கிரதை இப்படி இப்படி கோயில்களில் பக்தர்கள் ஜாக்கிரதை என்று பச்சையாகப் போடாமல், ஏமாறாதீர்கள் என்று கண்ணியமாய்ப் போட்டிருப் பார்கள். இதற்கு, பக்தர்களே, பக்தர்களிடமிருந்து ஏமாறாதீர்கள் அல்லது கோயிலில் குடி கொண்டிருக்கும் தெய்வங்களே, பக்தர்களிடமிருந்து ஏமாறாதீர்கள் என்று எப்படிவேண்டுமா னாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம். பொதுவாக, திருடர்கள் ஜாக்கிரதை என்ற வாக்கியத்திற்கு நேரான அர்த்தத்தைப் பார்ப்போமானால், திருடர்களே, பிரயாணிகளிடமிருந்தும் வருகிறவர் போகிறவர்களிடமிருந்தும் ஜாக்கிரதையாயிருங்கள்; உங்களைக் கையும் பிடியுமாகப் போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துவிடப் போகிறார்கள், என்று திருடர்களுக்கு எச்சரிக்கை செய்வதுபோலிருக்கிறது. ஒரு விதத்தில் பார்த்தால் இப்படி அர்த்தப்படுத்திக்கொள்வது தவறு என்று தோன்றுகிறது. ஏனென்றால், ஜாக்கிரதையாயிருக்கக் கூடியவர்கள் தானே திருடுவதற்கு முன்வருகிறார்கள்? அவர்களுக்கு ஜாக்கிரதை எச்சரிக்கை எதற்கு? ஆகவே, பிரயாணிகளுக்கும் மற்றவர் களுக்குந்தான் எச்சரிக்கை யென்று இதற்கு அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஆனால் பங்களாக்களுக்கு முன்னே நாய்கள் ஜாக்கிரதை என்ற போர்ட் தொங்குகிறதே, அதுதான் எனக்குப் புரியமாட்டேனென்கிறது; புதிராகவும் இருக்கிறது. நாய்கள் என்று பன்மையிலே போட்டிருப் பதனால், உள்ளே எத்தனை நாய்கள் இருக்கின்றன என்று கேட்பதற்கே பயமாயிருக்கிறது. பார்க்கப் போனால் அநேக இடங்களில் ஒரு நாய்தான் கட்டப்பட்டிருக்கிறது. உள்ளே ஒன்றிருக்க, வெளியில் பலவாகக் காட்டுதல் என்ன சூட்சுமமோ தெரியவில்லை. என்னென்னவோ மாதிரி அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறதில்லையா? ஆனால் சமீப காலமாக, நாய்களையுடைய பங்களாக்களில் உள்ளவர்களுக்குச் சிறிது விவேகம் வந்திருக்கிற மாதிரி தெரிகிறது. ஏனென்றால் இப்பொழுதெல்லாம் சில இடங்களில் நாய் - ஜாக்கிரதை என்று ஒருமையிலேயே போட்டு வருகிறார்கள். அந்த மட்டில் சந்தோஷப்பட வேண்டியதுதானே? யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும்; நம்மைக் காட்டிலும் நமது முன்னோர்கள், அதாவது இரண்டு மூன்று தலைமுறை களுக்கு முன்னாடிவரை இருந்தவர்கள், பரந்த மனம் படைத்தவர் களாகவும் தீர்க்க திருஷ்டியுடையவர்களாகவும் இருந்தார்களென்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். அவர்கள் வீட்டை அமைத்துக்கொண்ட விதம் ஒன்றிலிருந்தே இதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். முந்தியெல்லாம் எந்த ஒர் ஊரிலும் எந்த ஒரு தெருவிலும், வீடுகள், தெருவோடு ஒட்டினாற்போலவே கட்டப் பெற்றிருக்கும். முன் பக்கம் காலியிடமாக ஐந்தடி விடவேண்டும். பத்தடி விடவேண்டும் என்ற நிர்ப்பந்தங்களெல்லாம் கிடையாது. தவிர, அவரவருடைய சௌகரியத் திற்கும் பண வசதிக்கும் ஏற்றாற்போல வீடுகள் கட்டிக் கொள்வார்கள். முன்கூட்டி பிளான் தயாரித்து அனுப்பி அனுமதி பெற்ற பிறகு தான் கட்டடவேலை துவங்க வேண்டுமென்று யாரும் சொல்ல மாட்டார்கள். அண்டை அயலில் உள்ளவர்களுக்கோ பொதுஜனப் போக்கு வரத்துக்கோ எவ்வித இடையூறும் இல்லாமல் வீட்டை அமைத்துக் கொள்கிற அளவுக்கு அவர்கள் பண்பாடுடையவர்களாயிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் முன்புறம் இரண்டு பக்கங்களில் திண்ணைகள் இருக்கும். இரண்டு திண்ணைகளிலும் சார்மணைகள் கட்டி யிருப்பார்கள். அவை தவிர, சுவர் ஓரமாகச் சுமார் அரையடி உயரத்திற்கு, தலையணைக்குப்பதில் உபயோகித்துக் கொள்ளக் கூடிய மாதிரி கட்டைச்சுவர் இருக்கும். இதற்கு மாப்பிள்ளைத் தலையணை என்று பெயர். தலை கனத்திருக்கும் மாப்பிள்ளைகள், இந்த மாப்பிள்ளைத் தலையணையில் படுத்தால் கொஞ்சம் கனம் குறையுமோ என்னவோ? எப்படியோ, மாப்பிள்ளைக்கும் இந்தத் தலையணைக்கும் நெருங்கிய சம்பந்தம் இருந்திருக்கவேண்டு மென்று நாம் நம்பலாம். மாப்பிள்ளைத் தலையணை யோடு கூடிய இந்தத் திண்ணை களினால் எத்தனை அனுகூலங்கள், பாருங்கள். கால் கடுக்க வருகிறவர்கள், சிறிது நேரம் உட்கார்ந்துகொண்டு களைப்பாறி விட்டுப் போவார்கள்; கண்ணயர்ந்து போனாலும் பரவாயில்லை; மாப்பிள்ளைத் தலையணை இருக்கிறதல்லவா? சாய்ந்தாற்போல் இருப்பதற்கு, அதாவது சாய்வு நாற்காலிக்குப் பதிலாக சார்மணையும் இருக்கிறது. வெயிலுக்கோ மழைக்கோ ஒதுங்கியிருப்பதற்கு இந்தத் திண்ணைகள் பெரிதும் பயன்பட்டன. இவைகளுக்கெல்லாம், வீட்டிலுள்ளவர்களுடைய முன் அனுமதி பெற வேண்டுமென்பதில்லை. அவர்கள் - வீட்டிலுள்ளவர்கள் - அநேகமாக, மற்றவர்களுடைய தன் மதிப்பு உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுக்கிறவர்களாகவே இருப்பார்கள். அதாவது தங்களுடைய தயவை எதிர்பார்க்கிற நிலைமையில் யாரையும் வைக்க விரும்பாதவர்கள்; தங்களுக்கு முன்பின் பரிச்சயமில்லாதவர் களாயிருந்த போதிலும் அவர் களுக்குத் தங்களாலான சௌகரியத்தைச் செய்து கொடுப்பது தங்கள் கடமையென்று கருதுகிறவர்கள்; இந்தக் கடமையின் ஒரு சிறு பகுதி யாகவே, தெருத் திண்ணைகளைகட்டிவைத்திருந்தார்கள். தவிர, பழைய மோதர் வீடுகளைப் பார்த்தீர்களானால், இடைகழி என்ற ஒரு பகுதி இருக்கும். பேச்சு வழக்கில் இதனை ரேழி என்று சொல்லுவார்கள். கால் கடுக்க வரும் பெண்டிர், இரவிலோ பகலிலோ ஓரிடத்தில் தங்கிப்போக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவர்களுக்கு இந்தப் பகுதி பயன்படுத்தப் பெற்றது. அச்சமும் நாணமும் இயற்கை யாகவே உடைய பெண்டிர், சிறிது நேரமே தங்க நேரிட்டாலும், தனிமையை விரும்புவார்களென்பதை அனுபவத்தினால் உணர்ந்திருந்த நமது முன்னோர், வீட்டின் ஒரு பகுதியாக இந்த ரேழியை அமைத்து வைத்தார்கள். அவர்களுடைய தீர்க்க திருஷ்டியை என்னென்று சொல்வது? மற்றும், பழைய மாதிரி வீடுகளின் முகப்பில், அவரவருடைய தாய்மொழியில் நல்வரவு என்று அர்த்தப்படக்கூடிய வார்த்தை பொறிக்கப்பட்டிருக்கும்; அல்லது அவரவருடைய மதச் சின்னங்கள் இடம் பெற்றிருக்கும்; அல்லது அவரவர் வழிபடும் தெய்வங்களின் உருவங்கள் வண்ண ஓவியங்களாகக் காட்சி யளிக்கும்; அல்லது தெய்வங்களின் பெயர்களாவது எழுதப் பட்டிருக்கும். வீட்டுப் படியேறி வருகிறவர்கள் இவைகளைப் பார்த்ததும் மனத்தில், ஒருவித மகிழ்ச்சியும் சாந்தியும் அடைவார்கள்; குறைந்த பட்சம் வேண்டாத விருந்தினராக நாம் வரவில்லை யென்ற உணர்ச்சியையாவது பெறுவார்கள். எல்லோரும் நம்மிருப்பிடத்தை நாடி வர வேண்டுமென்பதல்லவோ நமது முன்னோர் களின் விருப்பமாயிருந்தது? இப்பொழுதோ? வீடு நாடி வருகிறவர்களுக்கு நல்வரவு கூற வேண்டாம்; அவர்கள் மீது நாயை ஏவி, கடிக்கச் செய்யாம லிருந்தால் போதுமென்ற நிலைமைக்கு வந்திருக்கிறோம். வீட்டுக்குள் இன்முகத்தோடு நுழைய முடிகிறதா? இல்லையே, பயந்து பயந்து, சுற்றுமுற்றும் பார்த்துப் பார்த்தல்லவோ நுழைய வேண்டியிருக்கிறது? முன்னெல்லாம் வாருங்கள் என்று ஒரு தடவைக்கு இரு தடவையாகச் சொல்லி மனிதர்கள் வரவேற்றார்கள். இப்பொழுது நீ யார்? என்ன தைரியத்தோடு உள்ளே நுழைகிறாய்? என்று கேட்கிற மாதிரி நாய்கள் குரைக்கின்றன. அலறிப் புடைத்துக்கொண்டு திரும்பி ஓடி வருவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. நாய்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; வீட்டுக்குள் நுழைந்தோம் என்பது, அதாவது வீதியிலிருந்து நேரே வீட்டுக்குள் நுழைந்தோம் என்பது இப்பொழுது இல்லையே. அதற்கு முன்னாடி, காம்பவுண்ட் கேட்டை யல்லவோ தாண்டிச் செல்ல வேண்டும்? கேட்டிலுள்ள கூர்க்கா காவலாளி யின் உறுத்த பார்வையை மீறிக் கொண்டு தோட்டத்தினூடே உள்ளே சென்றால், குரைக்கும் நாய்கள் நமக்கு முகமன் கூறும்; முன் பக்கத்து ஹாலில் காலியாகக் கிடக்கும் சோபாக்களும் நாற்காலிகளும், எஜமான் வருவார் என்று மௌனமாக நமக்கு ஆறுதல் கூறும். சிறிது நேரம் கால் கடுக்க நின்றுவிட்டு பிறகு, தைரியமிருந்தால், சுவரில் பொருத்தப் பட்டிருக்கும் மின்சார மணியை அழுத்தலாம். அதைக் கேட்டு, உள்ளேயிருந்து ஒரு வேலையாள் வந்து, நம்மை இன்னாரென்று கேட்டு விசாரித்துக்கொண்டு போய் உள்ளிருக்கும் எஜமானருக்குத் தெரிவிப்பான். அவர் மனமிருந்தால், வெளியே வந்து முகத்தைக் காட்டுவார். அவர் தூங்கிக்கொண்டிருந்தால், எஜமான் நிரம்ப வேலையாயிருக்கிறார். இப்பொழுது பார்க்க முடியாது என்று வேலையாள் அவருக்குப் பிரதிநிதியாயிருந்து சொல்லி, காம்பவுண்ட் கேட் பக்கம் தன் கையை நீட்டிக்காட்டி நம்மை வழியனுப்பி விடுவான். சுருக்கமாக, முற்காலத்தில் தெருக்கதவு திறந்திருக்கிற வீடுகளை அதிகமாகப் பார்க்கலாம். இப்பொழுதோ, தெருக்கதவு மூடியிருக்கிற அல்லது திரைச்சீலை போட்டு மறைத்திருக்கிற வீடுகளை அதிகமாகப் பார்க்கலாம். தெருக்கதவு மூடியிருக்கிற வீடுகள் என்று தவறாகச் சொல்லி விட்டேன்; தெருக்கதவு மூடியிருக்கிற பங்களாக்கள் என்று சொல்ல வேண்டும். ஏதோ பழைய ஞாபகத்தில், என்னுடைய பழைய எழுதுகோல், வீடுகள் என்று எழுதிவிட்டது. பங்களா வாசிகள் மன்னிப்பார்களாக! ஆக, இது ஜாக்கிரதைக் காலம். எங்குப் போனாலும் யாரிடத்தில் பழகினாலும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். வீதியிலே நடந்து செல்கிறபோது ஜாக்கிரதை என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே செல்லவேண்டும். இல்லாவிட்டால், உங்கள் வீட்டிலே பால் கறக்கும் சாதுவான பசு, ஓசைப்படாமல் பின்னாடி வந்து உங்களை முட்டிவிடும்; அந்தப் பசுவின் பின்னாடி வருகிற பால்காரப் பக்கிரிப் பிள்ளையும் உங்களைப் பார்த்துச் சிரிப்பான்; அல்லது, யாராவது ஒருவன் வேகமாக வந்து உங்கள் மீது உராய்வான்; அவன் உராய்கிற சமயமும், கனத்திருக்கிற உங்கள் சட்டைபை லேசாகி விடுகிற சமயமும் ஒன்றாயிருக்கும்; சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டும் மிரள மிரள விழித்துப் பார்த்துக் கொண்டும் நீங்கள் நிற்பீர்கள்; அவனும் உங்களைப் பார்த்துச் சிரித்துவிட்டு வேகமாகப் போய்க்கொண்டிருப்பான்; அல்லது உங்கள் கனம் நண்பருடைய மோட்டார் வண்டி, ஒரு பிடி மண்ணை உங்கள் கண்ணிலே தூவிவிட்டுப் போய் விடும்; அல்லது தெரு ஓரமாகவுள்ள நடை பாதையில் ஏக தேசமாக இருந்து வரும் மூடப்படாத சாக்கடைக் குழியில் ஒரு காலை விட்டுவிட்டு மற்றொரு காலால் தவங்கிடக்க வேண்டி வரும். போவோர் வருவோர், உங்களைப் பார்த்து, ஆழம் பார்க்கிற பெயர்வழி போலிருக்கிற தென்று சொல்லிச் சிரித்துக் கொண்டே தங்கள் கால்களை நீட்டி நீட்டி வைப்பர். எனவே, எப்பொழுதும் ஜாக்கிரதையாயிருங்கள்! எங்கும் ஜாக்கிரதையா யிருங்கள்! 12. நல்ல யோகம் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பெயருக்குச் சுக்கிரதசை யடிக்கிறது. பணஞ் சம்பாதிப்பதிலேயே குறியாயுள்ள வியாபாரிகள், எந்தப் பெயருக்குச் சுக்கிரதசை ஆரம்பிக்கிறதென்பதை எப்படியோ சூட்சுமமாகத் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். அந்தப் பெயரை, தாங்கள் தயாரிக்கும் பொருள்களுக்கோ, விற்பனை செய்யும் பொருள்களுக்கோ வைத்து, வர்ணக் காகிதங்களினால் அழகு படுத்தி மார்க்கெட்டுகளுக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். உள்ளேயிருக்கிற சரக்கு அசலா, போலியா, இரண்டும் சேர்ந்த கலப்படமா என்பவைகளைப் பற்றியெல்லாம் யார் கவனிக் கிறார்கள்? வெளிப் பார்வைக்கு நன்றாயிருந்தால் போதும். வெளித் தோற்றத்தில் மயங்குகிற காலமல்லவா இது? இதைப் பயன் படுத்திக்கொள்வதில் வியாபாரிகளைக் காட்டிலும் வேறு சாமர்த்திய சாலிகள் யாரும் இருக்க முடியாது. ஆனால் இந்தச் சாமர்த்தியம் நீடித்து நிற்பதில்லை. சரக்கு களுக்கு இவர்கள் கொடுக்கும் மெருகும் சீக்கிரத்தில் மறைந்து போகிறது. மார்க்கெட்டுகளுக்கு இவர்கள் கொண்டுவரும் சரக்கு களுக்கு எவ்வளவு சீக்கிரத்தில் மவுசு ஏற்பட்டதோ அவ்வளவு சீக்கிரத்தில் அந்த மவுசு மாயமாய்க் கரைந்துபோய்விடுகிறது. கும்பகோணம் பாலாமணி என்ற ஓர் அம்மையாரின் பெயரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இருபதாவது நூற்றாண்டுத் தொடக் கத்தில், நாடகத் துறைக்கு ஒரு சோபையைக் கொடுத்தவர், இந்த பாலாமணி பெயர் ஒரு காலத்தில் எவ்வளவு அடிபட்டது? உங்கள் வீட்டிலே கேளுங்கள், பாலாமணி சேலையைப் பார்த்திருக்கிறாயா என்று? உங்கள் தகப்பனார், பொடி போடுகிற சுபாவமுடையவராயிருந்தால், பாலாமணி பொடி போட்டிருக்கிறாரா? உங்களுடைய உறவினரில் யாரோ ஒருவர், பெரிய உத்தியோகத்திலிருப்பதாகச் சொன்னீர்களே, அவருடைய பங்களா பெயர் பாலாமணி விலா தானே? இந்த அம்மையார் காலமாகிவிட்ட சொற்ப காலத்திற்குள், இந்தப் பெயருக்கிருந்த மவுசும் போய்விட்டது. கிட்டப்பாதான் உங்களுக்குத் தெரியுமே? அவர் நாடக மேடையில் வந்து தோன்றினாலே உங்களுக்குக் குஷி பிறந்து விடுமே? அவருடைய சாரீர சம்பத்து, உங்கள் மகன் சம்பத்துக்குக் கிடைக்க வேண்டுமென் பதற்காக விடியற்காலை எழுந்து அகார சாதகம் பண்ணும்படி சொல்லி, அவன் தலையில், உங்கள் மகன் சம்பத்து தலையில்தான் - எத்தனை குடம் பச்சை நீரைக் கொட்டியிருக்கிறீர்கள்? இந்தக் கிட்டப்பா பெயருக்கு ஒரு தசையடித்தது உங்களுக்குத் தெரியாமலிருக்குமா? சென்னையில் பஜார் பக்கம் அடிக்கடி போய்வந்து கொண்டிருந்த உங்களுக்குத் தெரியாமலிருக்குமா? கிட்டப்பா சாந்து; கிட்டாப்பா பாக்குப் பொடி; கிட்டப்பா நடைகூட. எல்லாம் கிட்டப்பா மயந்தான். மேலே சிவப்பு உருமால் துண்டும், கையிலே ரிட் வாட்சும் வெள்ளிப் பூண் போட்ட தடியும், நெற்றியிலே கிட்டப்பா சாந்தும், இந்த வரிசைக் கோலத்துடன் போனால்தான், நாடகக் கொட்டகைக்குள் உங்களுக்கு எல்லாரும் ஒதுங்கி வழி விடுவார்கள். அஃதொரு காலம். அந்தக் காலமும் மலையேறி விட்டது. ஜிண்டான் மாத்திரையைப் பற்றி நீங்கள் கேள்விப்படாமலிருந் திருக்க முடியுமா? நாகரிக சமூகத்தின் மத்தியில் இதற்கு ஒரு காலத்தில் அதிக மவுசு இருந்தது. ஜிட்டான் ஜிட்டான், ஜிணுக்கு ஜிட்டான் என்ற பாட்டுக்கூட இந்த மாத்திரையோடு போட்டியிட்டது ஒரு காலத்தில். யார் வீட்டுக்குச் சென்றாலும், உங்கள் எதிரில் தாம்பூலத் தட்டோடு ஜிண்டான் மாத்திரை களடங்கிய புட்டியை வைப்பார்கள். எப்படி இப்பொழுது, காபி சாப்பிட கொஞ்சம் நேரமாகி விட்டால் தலை வலிக்கிறது என்று சொல்வது நாகரிகமாயிருக்கிறதோ, அப்படி, அப்பொழுது, ஜிண்டான் மாத்திரை யில்லாவிட்டால் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்ட ருசியே இல்லாமற்போய் விடுகிறது என்று சொல்வது நாகரிகமாயிருந்தது. இப்பொழுது ஜிண்டான் மாத்திரை யென்றொரு மாத்திரை இருந்ததா வென்று கேட்கக் கூடிய காலம் ஏற்பட்டு விட்டது. ஒயிட் ரோ வினோலியா சோப்! இந்தப் பெயரைச் சொன்னாலே, ஒரு காலத்தில் எல்லார் உடம்பிலும் வாசனை வாசனையாய் வீசிக் கொண்டிருந்ததல்லவா? இதை நீங்கள் தேய்த்துக் கொள்ளாமலா இருந்திருப்பீர்கள்? இதற்கேற் பட்டிருந்த மகிமையை நினைத்தாலே போதும்; என் கவிதை உணர்ச்சி, என்னே, என்னே, என்று இசைபாட ஆரம்பித்து விடுகிறது. அந்தக் காலத்தில், கடைகளுக்குச் சென்று, வேறெந்த சோப்பைக் கேட்டாலும் இந்த ஒயிட்ரோ வினோலியாவைத் தான் அக்கரையோடு சிபார்சு செய்வார்கள். ஆனால் இதற்கு முன் பிரபல மடைந்திருந்த பியர் சோப் மாதிரி, இதன் மீதிருந்த மோகமும் போய்விட்டது. இப்பொழுது எவர்சில்வருக்கு தசாநாதன் உச்சத்திலே இருக்கிறான். அதிலும் நம்மள் சகோதரிகள், அதன் பளபளப்பைப் பார்த்து, கிளு கிளுத்துக் பேசுவதை, ஐயோ, சகோதரர்களே, டேப் ரிகார்டிங் எடுக்க மாட்டீர்களா? முன்னெல்லாம் நம் சகோதரிகள், அறிந்தவர் தெரிந்தவர் வீட்டுக்குப் போனால், அவர்கள் என்னென்ன மாதிரி புடவைகள் வாங்கியிருக் கிறார்கள், புதிதாக என்னென்ன நகைகள் செய்திருக்கிறார்கள். இவை களைப் பற்றிப் பேசுவார்கள். இப்பொழுதோ? எவர்சில்வர் பாத்திரங்களைப் பற்றிய பேச்சுதான். மளிகைக் கடைக்காரனுக்கு மூன்று மாசத்துப் பாக்கி நின்று போயிருந்தால் என்ன? என்ன விலை கொடுத்தாவது இரண்டு எவர்சில்வர் டம்ப்ளர் வாங்கி, பாத்திர அலமாரியில் வைத்து அழகு பார்க்க வேண்டாமா? பழைய துணிகளை வாங்கிக்கொண்டு புதிய எவர் சில்வர் பாத்திரங் களைக் கொடுக்கிறோ மென்று சொல்லி, எத்தனையோ கருணா மூர்த்திகள், நம் கண்முன் அடிக்கடி தென்பட்டுக் கொண்டிருக்கிறார்களே, பின் நமக்கேன் கவலை? அதோ, கொடியிலே உலர்த்தி யிருக்கும் உறையூர் சேலை என்ன விலை? பதினெட்டு ரூபாயா? எப்பொழுது வாங்கியது? இரண்டரை மாதத்திற்கு முந்தி. அப்படியானால் அதை ஏன் இன்னும் கொடியில் உலர்த்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எவர்சில்வர் பாத்திரக்காரனிட மல்லவோ அது போய்ச் சேரவேண்டும்? பாத்திரக்காரனைப் பார்த்தாலே, அவன் தெருவில் கூவிக் கொண்டு செல்வதைக் கேட்டாலே, புடவையின் சாயம் வெளுத்த மாதிரியல்லவோ உங்கள் கண்ணுக்குப் படுகிறது? சாயம் போன புடவையை எப்படி உடுத்துவது? உங்கள் சகோதரரின் ஷர்ட், எங்காவது ஒரு மூலையில் தையல் விட்டுக்கொண்டு வருகிற மாதிரி தெரிகிறதா? கூப்பிடுங்கள் பாத்திரக் காரனை. உங்கள் குழந்தையின் மேல்சட்டை நலுங்கிப் போயிருக்கிறதா? போட்டு விடுங்கள் பாத்திரக்காரனுக்கு அதனை. எவர்சில்வரில், குறைந்த பட்சம் ஒரு பூனோ, அதிகபட்சம் ஒரு கரண்டியோ வருமல்லவா? உங்கள் மூத்த மகனுக்கு விவாகம் நிச்சயமாயிருக்கிறதா? நீங்கள் தலை யெடுத்துப் பண்ணுகிற முதல் கல்யாணமல்லவா இது? அப்படியானால் பெண் வீட்டார் வைக்க வேண்டிய சீர் வரிசைகளில், ஒரு செட் எவர்சில்வர் பாத்திரங்கள் கட்டாயம் இருக்க வேண்டுமென்று முன்னதாகவே சொல்லி விடுங்கள். ஓட்டை உடைசலாகிப் போன பித்தளைப் பாத்திரங் களையோ, அலுமினியப் பாத்திரங்களையோ, பழைய பாத்திரக் காரர்களிடம் போட்டால் ஒரு சில அணாக்களாவது கொடுப்பார்கள். எவர்சில் வரைப் போட்டால் ஒரு சில நயே பைசாக்களாவது கிடைக்குமா என்பது சந்தேகம். ஆனால் அதற்கல்லவோ இப்பொழுது மவுசு? மவுசு எவ்வளவு காலத்திற்கு? எவர் சில்வருக்கு அடுத்தாற்போல் மவுசு பெற்றிருப்பது பிளாடிக். எல்லாம் பிளாடிக் மயம்! பிளாடிக் கூடையிலே கறிகாய்கள் வாங்கிக் கொண்டு வந்தால் அவைகளுக்கு அலாதியான ருசி இருக்கத் தான் செய்கிறது! பிளாடிக் சீப்பினால் தலைவாரிக் கொண்டால், கூந்தல் சீக்கிரத்தில் படிமானத்திற்கு வந்து விடுகிறது! மழையில் நனையாமல் செல்ல வேண்டுமா? பிளாடிக் சீலையைத் தலைமேலே போட்டுக் கொள்ளுங்கள். பிளாடிக்கில் தினுசு தினுசான சேலைகள் கூட வந்திருக் கின்றன. சகோதரிகளுக்குத் தெரியாமலிருக்குமா என்ன? மந்திரி வர்க்கத்தின் மீது இப்பொழுது ஒரு மோகம் ஏற்பட்டிருக்கிறது தெரியுமா? ஆமாம்; இது ஜனநாயக யுகமல்லவா? மந்திரிகள் யார்? மக்களின் பிரதிநிதிகள். இதனால் மக்களோடு நெருங்கிப் பழக வேண்டியவர்கள். அப்படிப் பழக அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாமா? ஒரு சந்தர்ப்பமா? பல சந்தர்ப்பங்கள் கொடுக்க வேண்டும். ஆகவே, அவர்களை அடிக்கடி உங்கள் ஊருக்குக் கூப்பிடுங்கள். புதிதாக அமைக்கப்பட்ட குழாயைத் திறந்து வைக்க வேண்டுமா? கோபுர வாசலைத் திறந்து விடவேண்டுமா? புதிதாகச் செடி நடவேண்டுமா? பாலத்தைத் திறந்து வைக்க வேண்டுமா? எல்லாவற்றிற்கும் நீங்கள் மந்திரிகளைத் தாராளமாகக் கூப்பிடலாம். அவர்களும் தாராளமாக வருவார்கள்; அலுப்பு சலிப்புக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். தலைநகரத்திலிருந்து கொண்டு தங்கள் இலாகா அலுவல்களை மெதுவாகக் கவனித்துக் கொள்கிறார்கள்; அவைகளுக்கு இப்பொழுது என்ன அவசரம்? மக்களோடு தொடர்பு கொள்ள வேண்டியதல்லவோ முக்கியம்? இந்த ஜனநாயக யுகத்திலே, விழாக்களுக்கு நல்ல யோகம் போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் விழா தான். நூல் வெளியீட்டு விழா, கொடியேற்ற விழா, மூன்றாம் நெம்பர் ஆசாமியின் பிறந்ததின விழா, அவனைப் பாராட்டும் விழா, அவனுக்குப் பொன்னாடை போர்த்தும் விழா, ஹோட்டல் திறப்பு விழா எல்லாம் விழா தான். காரியாமிசத்தில் இவற்றினால் என்ன பயன் என்று மட்டும் கேளாதீர்கள். அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை? விழாவை நடத்துகிறவர்கள் கவலைப் படவேண்டிய விஷயமல்லவா அது? நீங்கள் எந்த யுகத்தில் வாழ்கிறீர்களென்று யாராவது உங்களைக் கேட்டால், தெரியாத்தனமாக, கலியுகத்தில் வாழ்கிறோ மென்று சொல்லி விடாதீர்கள். அப்படிச் சொன்னால், அட பித்துக்குளியே! என்று உங்களைப் பரிகாசம் செய்வார்கள். நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது சினிமா யுகத்தில். எப்பொழுதும் உங்கள் நினைவிலிருக்கட்டும். அந்த நினைவில்லாமற் போனால் நீங்கள் வாழ்ந்தும் வாழாதவர்கள்தான். பஸுக்காகக் காத்து கியூ வரிசையில் நிற்கிறீர்களா, உங்கள் நண்பருடைய மகனின் கலியாணத்திற்குச் சென்று அங்கு நடைபெறும் சடங்குகளின் மீது உங்கள் கவனம் சென்று கொண்டிருக்கிறதா, விருந்துபசாரத்தில் கலந்து கொண்டிருக்கிறீர்களா, எங்கும் சினிமா பேச்சுதான். வீட்டுக்கு வெளியேதான் இப்படியென்றால், வீட்டுக்குள்ளே வந்தால் உங்களுக்குக் கிடைக்கிற கேள்விச் செல்வம் என்ன? உங்களுடைய மகள், தன் புருஷனோடு, இன்று காலை தானே புக்ககத்திலிருந்து வந்தாள்? மாமியார் மாமனார் நச்சரிப்பிலிருந்து விடுதலை பெற்று வந்தோமேயென்று, இரண்டு வேளையாவது நிம்மதியாகத் தூங்க மாட்டாளா? வந்த அன்று மாலையே, ஏதாவது ஒரு சினிமாவுக்குக் கூட்டிக் கொண்டு போக வேண்டுமென்று ஏன் இப்படி உங்களை நச்சரிக்கிறாள்? உங்கள் மாப்பிள்ளை கூட அல்லவோ, எந்த தியேட்டரில் குளிர்சாதனம் இருக்கிற தென்று உங்களைத் துணிந்து கேட்கிறார் உங்கள் ஏழு வயதுப் பையன், பள்ளிக்கூடத்துப் பாடத்தைப் படிக்காமல், சினிமா பாட்டையல்லவோ படிக்கிறான்? டான் கூட ஆட ஆரம்பித்து விட்டானே? குடும்பம் ஆடிப் போகுமேயென்று கவலைப் படுகிறீர்களா? கவலைப்பட்டு என்ன செய்வது? சினிமா யுகத்திலல்லவோ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலத்தில் நல்ல யோகம் அடிக்கும் போலும்! 13. காந்தி பெயரால் ஒரு பக்கத்தில், காந்தி செத்துப்போய் விட்டாரே என்று நினைக்கிற போது, துக்கம் துக்கமாக வருகிறது மற்றொரு பக்கத்தில், மகானுபாவன் அந்த மட்டிற்கும் சீக்கிரமாகக் கண்மூடிக் கொண்டு விட்டாரே என்று சந்தோஷப்பட வேண்டியிருக்கிறது. அவருக் காகத்தான் சந்தோஷம்; நமக்காகவல்ல. அவர் இருந்திருந்து, இப்பொழுது அவர் பெயரால் பேசப்படுகிற பேச்சுக்களைக் கேட்பாரானால், செய்யப்படுகிற காரியங் களைப் பார்ப்பாரானால், தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் அவருக்கு தோன்றினாலும் தோன்றக் கூடும். ஆனால் அவர் அப்படிச் செய்யமாட்டார். ஏனென்றால் அவர் கோழையல்ல. ஆனால் நிச்சயம் அவர் இமயமலைக்குத் தவஞ் செய்யச் சென்றிருப்பார். இப்படி உயிரோடிருந்து வேதனைப்படப் போகிறாரே என்று அவர் மீது வைத்த அபார கருணையினால்தான் அவரை, கோட்ஸே என்ற புண்ணியாத்மா, ஒரே நிமிஷத்தில் தீர்த்து விட்டானோ என்னவோ? அவர் வாழ்க்கையை வாழ்ந்து காட்டியபடி நம்மால் வாழ முடியாது தான்; அவர் சொன்னவற்றில், ஒரு கடுகத்தனையை யாவது எடுத்துக் கொண்டு அதை நம் வாழ்க்கையில் புகவிட்டுப் பார்ப்பதற்குக் கூட நம்மால் முடியவில்லை. அது கூட தவறில்லை. ஏனென்றால், அவர், லட்சிய ஆகாயத்திலே வெகு சுலபமாகப் பறந்து கொண்டிருந்தவர். நாமோ, பிரத்தியட்ச மண்ணில் கால் தடுமாறாமல் நடக்க இன்னும் கற்றுக் கொள்ளாதவர்கள்; ஊர்ந்து செல்வதற்குக் கூட நமக்குத் திராணி இல்லை; உழன்று உழன்று கொண்டிருக்கிறோம். இந்த லட்சணத்தில், சூரிய மண்டலத்தையும் சந்திர மண்டலத்தையும் எட்டிப்பிடித்துக் கட்டி யாளவேண்டு மென்ற ஆசை யென்னவோ நமக்கு நிறைய இருக்கிறது. .இதில் போட்டா போட்டிவேறே. அது போகட்டும். காந்தி நடந்தபடி நடந்து கொள்ள முடியா மலிருப்பதிலோ, அவர் சொன்னபடி செய்யாம லிருப்பதிலோ தவறில்லை தான். ஆனால் அவர் எண்ணாததை எண்ணாமலும், சொல்லாததைத் சொல்லாமலும், செய்யாததைச் செய்யாமலுமாவது இருக்கக் கூடாதா? எண்ணாததை எண்ணு கின்றோம்; சொல்லாததைச் சொல்லுகிறோம்; செய்யாதததைச் செய்கிறோம். அவர் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே தான் இவ்வளவும் நடக்கின்றன. அவர், எதற்காக, எந்தச் சந்தர்ப்பத்தில், என்ன சொன்னார், என்ன செய்தார், அதை எப்படிச் செய்தார் என்பவைகளைப் பற்றி நாம் சிறிதுகூட யோசித்துப் பார்ப்பதில்லை. அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு எதையும் செய்யலாமென்ற விபரீதமான நிலைமைக்கல்லவோ நாம் வந்திருப்பதாகத் தோன்றுகிறது. மதுவிலக்குச் சட்டம், அமுலில் இருப்பதனால், காந்தியின் பெயர் பிரபலமாவதற்கு எவ்வளவு தடையாயிருக்கிறது? காந்தியின் பெயரை வைத்துக் பகிரங்கமாகக் கள்ளுக்கடை நடத்த முடியவில்லையல்லவா? காந்தியடிகளார் கள் விற்பனை நிலையம் என்று கண்ணியமான பாஷையில் எழுதப்பட்ட விளம்பரப் பலகையை வெளியிலே தொங்க விட்டு விட்டு, உள்ளே யிருக்கும் காந்தி பக்தியைப் புலப்படுத்திக் காட்ட சந்தர்ப்பம் இல்லாம லல்லவோ செய்து விட்டது, இந்தப் பாழாய்ப் போன மதுவிலக்குச் சட்டம்? காந்தி பெயரைச் சொல்லி, கள்ளை விற்றாலும் பாவமில்லை, குடித்தாலும் பாவமில்லை என்ற எண்ணம், பகிரங்கமாக உலவி வந்தது போய், இப்பொழுது ரகசியமாக வல்லவோ உலவி வருகிறது? காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு ரகசியமாக எவ்வளவு சாராயம் காய்ச்சி விற்றாலும் அதனால் நல்ல லாபம் கிடைக்கிற தென்று வைத்துக் கொண்டாலும், காந்தியடிகளின் ஆத்மா அதனால் எப்படிச் சாந்தி யடையும்? ஆகவே அதற்கு ஒரு பரிகாரம் அவசியம் தேட வேண்டும். என் நண்பர், சமீபத்தில் கட்ட இருப்பதாகத் திட்டமிட்டிருக்கும் பங்களாவுக்கு காந்தி நிலையம் என்று பெயர் சூட்டி விடலாமா அல்லது சபர்மதி என்று பெயர் வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். காந்தி பெயரிலே எவ்வளவு மகத்துவம் இருக்கிறது? காந்தி சிகரெட்டைப் பிடித்தால் அது தவறில்லை. ஜெர்மனியிலோ; ஜப்பானிலோ அச்சிடப் பெற்று இந்தியாவுக்கு வருகிற காந்தி படமொன்றை வாங்கி வீட்டிலே மாட்டிக் கொண்டுவிட்டால், ஒரு நாளைக்கு எத்தனை பொய்கள் வேண்டுமானாலும் சொல்லலாமே? நீங்கள் வசிக்கிற தெருவுக்கு காந்தி தெரு என்று பெயர் வைக்குமாறு தீர்மானங்கொண்டு வரும்படி உங்கள் பிரதிநிதியாக நகர சபையிலே வீற்றிருக்கும் கனவானைக் கேளுங்கள்; இல்லாவிட்டால், அடுத்த தேர்தலில் அவருக்கு ஓட்டுக் கொடுக்க முடியாது என்று கட்டாயம் சொல்லி விடுங்கள். பயமுறுத்தியாவது, காந்தி பெயரிலுள்ள மகத்துவத்தை அவருக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டாமா? ஆனால், நீங்கள் வசிக்கிற வீட்டிற்குத் தெருப் பக்கத்திலேயே, வீட்டில் சேரும் குப்பையைக் கொட்டுமாறு உங்கள் பெண்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் குழந்தைகளை, தெருவிலேயே, மலஜலங் கழிக்குமாறு செய்யுங்கள். காந்தி பெயரைக் கொண்ட தெருவிலே எதை வேண்டுமானாலும் செய்யலாமல்லவா? மகாத்மா காந்தி, உண்ணாவிரத மிருந்தாலும் இருந்தார்; சத்தியாக்கிரகம் செய்தாலும் செய்தார்; அடடா, அவையிரண்டும் இப்பொழுது படுகிறபாடு, பஞ்சுதான் படுமோ? பகரத்தான் போகுமோ? எதற்கெடுத்தாலும் உண்ணா விரதந்தான்; சத்தியாக் கிரகந்தான். ஒரு தியாகி சொல்லுகிறார் : - எனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா இல்லையா என்பதைப் பற்றி இந்தக் காங்கிர மந்திரிகளுக்கு என்ன கவலை? எனக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளத்தில் ஓர் உத்தியோகம் போட்டுக்கொடு என்றால் கொடுக்க வேண்டியது தானே? என்னைப்போன்ற தியாகிகளுக்கு உத்தியோகம் செய்து வைக்கக்கூட முடியாவிட்டால் இவர்களால் தேசத்திற்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது? எனக்கு உத்தியோகம் தயார் செய்து வைத்துக் கொள்ளாமல் என்னை ஏன் ஜெயிலிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்? அதற்காகத்தான், இந்த மந்திரியின் வீட்டிலேயே சத்தியாக்கிரகம் செய்ய போகிறேன்; பட்டினியாகக் கிடந்து சாகிறேன் பார், இங்கேயே, ஒரு தேசபக்தர் கூறுகிறார் :- நான் ஜெயிலில் இருந்த காலத்தில் என்னை எவ்வளவு அலட்சியமாக நடத்தினான் அந்த ஜெயில் மேலதிகாரி? நான் ஒரு தேசபக்தன் என்பதை அவன் சிறிதுகூட எண்ணிப் பாராமல் என்னை எவ்வளவு அவமரியாதையாகப் பேசினான்? எனக்கு ரகசியமாக வந்து கொண்டிருந்த சிகரெட் டின்களையும், பாதாம் ஹல்வாயையும் கூட அல்லவோ அவன் நிறுத்தி விட்டான்? கேட்டால், ஜெயில் விதிப்படி அனுமதிக்க முடியாதென்று என் எதிரில் நின்று கொண்டு எவ்வளவு துணிச்சலாகப் பேசினான்? நான் ஜெயிலிலிருந்து விடுதலையான பிறகு, அவனை வேறு ஏதாவது ஓரு கஷ்டமான ஜில்லாவுக்கு மாற்ற வேண்டு மென்று இந்த மந்திரியிடம் சென்று எத்தனை தரம் முறையிட்டேன்? மாற்ற முடியாதென்றால், அவனுடைய பிரமோஷனை இரண்டு வருஷத் திற்கு நிறுத்தி வைக்குமாறு எத்தனை மகஜர்கள் அனுப்பியிருப்பேன்? இந்த மந்திரி காதிலே போட்டுக் கொண்டாரா? என்னை அவமானப் படுத்துகிறமாதிரி ஒரு ஜெயிலுக்கு அதிகாரியாயிருந்த அவனை, எல்லா ஜெயில்களுக்கும் மேலதிகாரியாகவல்லவோ பிரமோஷன் செய்து விட்டிருக்கிறார்? ஆகவே இந்த மந்திரியின் ஆபி அறைக்கு எதிரிலேயே பாயை விரித்து அதன்மீது படுத்துக்கொண்டு பட்டினியாகச் சாகிறேன் பார். சத்தியாக்கிரகப் பள்ளிக் கூடத்தில், நானும் இந்த மந்திரியைப்போல் படித்தவன் தானே? ஒரு பாஷாபிமானி பேசுகிறார் : - ஹிந்தி பாஷைக்குச் செல்வாக்குத் தேடும் பொருட்டு, அதனைப் பள்ளிக்கூடங்களில் கட்டாய பாடமாக்க வேண்டுமென்று சிலர் சொல்கிறார்களே, இவர்களைக் கண்டால் எனக்கு என்ன எரிச்சல் உண்டாகிறது தெரியுமா? அதே சமயத்தில் என் தாய் மொழியின் மீது இரக்கமும் உண்டாகிறது. ஹிந்தி கட்டாயமாகி விட்டால் என் தாய் மொழியின் கதி என்னாவது? நாமெல்லோரும் இருக்கும் பொழுது, நமது தாய் மொழிக்கு இப்படி அவமானம் ஏற்படலாமா? இதற்குப் பழைய பெருமையைத் தேடித் தருவது எப்படி? சத்தியாக்கிரகத்தின் மூலமாகத் தான். ஹிந்தியைக் கட்டாயமாக்குவதில்லையென்று அரசாங்கத்தார் உத்தரவு பிறப்பிக்கிறவரை அல்லது நான் சாகிறவரை, பட்டினி கிடக்கப் போகிறேன். அப்படிக் கிடக்கப் போவதாகப் பத்திரிக்கைகளில் படித்துக்கூட இந்த ஹிந்தி ஆதரவாளர்கள் பயப்படவில்லை யென்றால், பின்னால் நண்பர்கள், உறவினர்கள் முதலியவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், வற்புறுத்தலுக்கிணங்கவும் என் உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொண்டு விடுகிறேன். ஆரஞ்சுப் பழ ரசமோ, திராட்சைப் பழ ரசமோ, என்னிடம் அநுதாபம் காட்டுகிறவர்களுடைய நன்கொடையாகக் கிடைக்குமல்லவா? சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம் இவையெல்லாம் அவ்வளவு பெரிய விஷயங்களா என்ன? கிள்ளுக்கீரை மாதிரி. எப்பொழுது வேண்டு மானாலும் ஆரம்பிக்கலாம்; எப்பொழுது வேண்டு மானாலும் வாப பெற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால், மகாத்மா காந்தி தென்னாப்பிரிக் காவில் சாதாரண கூலி ஜனங் களிடத்தில் சத்தியாக்கிரகத்தையும் உண்ணாவிரதத்தையும் பரீட்சை செய்து பார்த்திருப்பாரா? உங்கள் பெயர் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் வரவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? உங்களைச் சுற்றி நாலு பேர் ஜே போட வேண்டுமென்று விரும்புகிறீர்களா? உங்களைச் சுட்டிக்காட்டி இரண்டு பேராவது பேச வேண்டுமென்ற விருப்பம் இருக்கிறதா உங்களுக்கு? சுலபமான வழி, சத்தியாக்கிரகம் அல்லது உண்ணாவிரதம்! காந்தியடிகள் காலத்தில் வெகு பிரபலமாயிருந்த ஒத்துழையாமை என்பது இப்பொழுது வேறொரு போர்வையைப் போர்த்திக்கொண்டு உலவுகிற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? இதற்கு வேலை நிறுத்தம் என்று பெயர். சமுதாயத்தின் பல துறைகளின் மீதும், இந்த வேலை நிறுத்தமானது அலை அலையாக வந்து மோதுவது உங்கள் காதில் படவில்லையா? இந்த வேலை நிறுத்தத்தில் இரண்டு வகையுண்டு. ஒன்று, உள்ளேயிருந்து கொண்டே, ஒரு வேலையும் செய்யமாட்டோம் என்பது. மற்றொன்று, நாங்கள் செய்து வந்த வேலையை இனிச் செய்ய மாட்டோமென்று சொல்லிவிட்டு, வெளியே வந்துவிடுவது. ஏதோ குறைகள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, அவைகளுக்குப் பரிகாரம் தேடுகின்ற முறையில்தான் இந்த வேலை நிறுத்தங்கள். கொடுத்த வேலையை ஏன் சரியாகச் செய்யவில்லை யென்று மேலதிகாரி கேட்கலாமா? தினந்தோறும் குறித்த நேரத்தில் ஏன் ஆபீசுக்கு வரவில்லையென்று கேட்கலாமா? ஆறு மாத காலம் வேலை கற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கொடுத்தும் ஒருவன் வேலை கற்றுக்கொள்ள வில்லையென்றால் அவனை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நீ வேறு வேலை பார்த்துக் கொள் என்று சொன்னால், வந்தது ஆபத்து. எல்லாவற்றிற்கும் வேலை நிறுத்தம் தான். வேலை நிறுத்தம் செய்துவிட்டுச் சும்மாயிருக்கலாமா? சும்மா யிருந்தால் பொது ஜனங்களுடைய அநுதாபத்தை எப்படிப் பெறுவது? ஆகையால், ஏதோ ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு ஊர்வலம் வரவேண்டும்; ஒழிக, ஒழிக என்று கத்திக்கொண்டு - இல்லை, இல்லை; கோஷமிட்டுக்கொண்டு - சந்து பொந்து களிலெல்லாம் சென்றுவர வேண்டும்; அல்லது, எந்த தாபனத்தில் வேலை நிறுத்தமோ அந்த தாபனத்தின் நுழை வாயிலில் நின்று போவோர் வருவோரைத் தடுக்க வேண்டும்; அல்லது ஏளனமாகச் சமிக்ஞைகள் செய்யலாம்; பேசலாம். இதற்கு மறியல் என்று பெயர். மகாத்மா காந்தி உபயோகித்த வார்த்தை யல்லவா இது? உள்ளே இருந்துகொண்டு வேலை செய்ய மாட்டோ மென்றால் அதற்கும், வேறு எந்த தாபனத்திலேனும் வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு அநுதாபம் காட்ட வேண்டுமானால் அதற்கும், அடையாளமாக ஒரு சிவப்பு நாடாவையோ சீட்டையோ சட்டையில் சொருகிக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் தொழிலாளர் நலனுக்காகச் செய்யப்படுகின்ற காரியங்கள்! மகாத்மா காந்தி சீக்கிரமாகச் செத்துப் போனாரே யென்று துக்கப் படுவதா, அப்படிப் போனதும் நல்லது தான் என்று எண்ணி ஆறுதல் அடைவதா? தெரியவில்லை. 14. பார்க்க வேண்டியவை சாதாரணமாகக் காலையில் எழுந்தவுடன் ஏதாவது ஒரு நல்ல பொருளைப் பார்க்க வேண்டுமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதற்காக, அதாவது என்னென்ன பொருளைப் பார்க்கலாமென்று ஒரு பட்டியலும் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால் அதைப் பார்க்கிறவர்கள் யார்? அது, பாழாய்ப்போன அந்தப் பஞ்சாங்கத்திலல்லவா இருக்கிறது? அதைத் தொடலாமா? அதைப்பற்றிப் பேசலாமா? அதைத் தொடுவதும் அதைப்பற்றிப் பேசுவதும் மூட நம்பிக்கையைச் சேர்ந்தவை யாகுமல்லவா? யாராவது ஒரு வெள்ளைக்காரன், தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் பார்க்கக்கூடிய பொருள்களுக்கு ஒரு ஜாபிதா கொடுத்து எழுதியிருந்தால், அதைப் படிக்கலாம்; அதைப்பற்றிப் பேசலாம்; ஏனென்றால், அவன் எதையும் விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து எழுதி யிருப்பான். தவிர, அவன் மூட நம்பிக்கையில்லாதவன்; தன் அறிவுக்கு எட்டுகிற விஷயங்களை மட்டுமே ஒப்புக்கொள்வான்; எட்டாதவற்றை நம்பமாட்டான்; ஆனால் அவனைப் பார்த்து ‘ஏன் பதின்மூன்றாம் நெம்பர் உனக்குக் கசப்பாயிருக்கிறது?’ என்று கேளுங்கள்; ‘ஏணியின்கீழ் ஏன் நுழைந்து செல்லப் பயப்படுகிறாய்? என்று கேளுங்கள். பார்லிமெண்ட் கூடுகிற ஒவ்வொரு தடவையும், ஆரம்பத்தில், பார்லிமெண்ட் கட்டடத்தை உடைத்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் யாராவது ரகசியமாகப் பதுங்கிக் கொண்டிருக்கிறார்களா வென்று, நல்ல பகல் வேலையில் விளக்கை எடுத்துக்கொண்டு ஒரு சிலர் கட்டட முழுவதையும் தேடிப்பார்க்கிற சடங்கு நடக்கிறதே அஃது எதற்காகவென்று கேளுங்கள். இப்படிப் பார்லிமெண்ட் ஒன்றைப் பொறுத்த மட்டில் எத்தனையோ பழக்க வழக்கங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றனவே, அவை ஏன் என்று கேளுங்கள். கிரீ தேசத்திலே முற்காலத்தில் சகுனம் பார்ப்பதிலும் குறி கேட்பதிலும் ஜனங்கள் மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். வெளியே புறப்படுகிற சமயத்தில் கால் இடறினாலும் சரி, பூனை குறுக்கே போனாலும் சரி, யாராவது தும்மினாலும் சரி, என்ன அபசகுனம் என்று சொல்லி, பயணத்தை நிறுத்திக்கொண்டு விடுவார்கள். இன்னும் சில தேசங்களில், யாருக்காவது நோய் வந்து விட்டால், அவனை சைத்தான் பிடித்தாட்டுகிறதென்று கருதினார்கள். இவற்றையெல்லாம் நாம் படிக்கிறோம். இவை, குருட்டு நம்பிக்கைகளென்றோ, மூடப் பழக்க வழக்கங்களென்றோ நமக்குத் தோன்றுவதில்லை. நமது நாட்டில், நமது முன்னோர்கள், எத்தனையோ நூற்றாண்டுகள் அனுபவத்தின் பேரில், சில நியதிகளை வகுத்து வைத்துப் போயிருக்கிறார்கள். எல்லாம் நம்முடைய நன்மைக்குத்தான். ஆனால் அவற்றை நாம் அலட்சியப்படுத்துகிறோம்; பரிகசிக்கிறோம்; நமது முன்னோர்களை மூடர்களென்று சொல்லி நாம் புத்திசாலிகளாகப் பார்க்கிறோம். இஃதொரு பக்கமிருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. காலையில் எழுந்தவுடன் இன்னின்ன பொருள்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னார்கள். அதாவது சூரியோதயத்திற்கு முன் எழுந்திருக்கிறவர்களைப் பார்த்துச் சொன்னதாகத்தானே இதற்கு அர்த்தம்? அப்படியிருக்க, நாம் ஏன் இதைப்பற்றி விசாரப்பட வேண்டும்? நாம்தான் காலையில், அதாவது சூரியோதயத்திற்கு முன்னாடி எழுந்திருப்பதில்லையே! நாகரிகம் நிறைந்த நகரத்திலே வசித்துக் கொண்டு, கண்ணியமாக ஜீவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறவர்கள், சூரியோதயத்திற்கு முன் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியுமா? முடிந்தாலும் எழுந்திருக்கலாமா? அது கேவலமல்லவோ? வைதிகக் குடுக்கை யென்றால்லவோ எல்லோரும் ஏளனம் செய்வார்கள்? அப்படி எழுந்துதான் என்ன சாதித்துவிடப் போகிறோம்? எழுந்ததும், கலைந்திருக்கும் கிராப்பை சீவிக் கொண்டு, அரைகுறையாகப் பல் துலக்கிவிட்டு, சுடச்சுட காபி சாப்பிட வேண்டும்; உடனே பத்திரிக்கையைப் புரட்டிப் பார்க்க வேண்டும்; படிக்க வேண்டு மென்ற அவசியமில்லை; அதை முடித்துக் கொண்டு, வேகமாக நான அறைக்குச் சென்று சீக்கிரமாகக் குளித்து விட்டு வந்து, நிதானமாக, கிராப் பை சீவிக் கொள்ள வேண்டும். அதற்கு ஓர் ஐந்து நிமிஷம் அதிகப் படியானாலும் பரவாயில்லை. பிறகு, அவரவருடைய வசதிக்கும் அந்ததுக்கும் தகுந்தபடி உடையலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அதற்கப்புறந்தான் சாப்பாடு, சாப்பிடுவது என்றால் என்ன? அவசரம் அவசரமாக வாயிலே அள்ளிக் கொட்டிக் கொள்ள வேண்டிய ஒரு சடங்கு என்று அர்த்தம். இங்கே ஓர் எச்சரிக்கை செய்துவிட விரும்புகிறேன். முற்பகல் பத்து அல்லது பத்தரை மணிக்கு, உத்தியோக தானத்தில் இருக்க வேண்டிய அவசியத்துக்குட் பட்டிருக்கிற கனவான்களே! உடையலங்காரம் செய்து கொண்ட பிறகு சாப்பிடுங்கள்; சாப்பிட்டுவிட்டு உடையலங்காரம் செய்து கொள்ளாதீர்கள். அப்படிச் செய்து கொள்வீர்களானால், நீங்கள் வகிக்கிற உத்தியோகத்திற்குக் கௌரவக் குறைவு. அதாவது, நல்ல உத்தியோகத்தில் இல்லை போலிருக்கிறதென்று உங்களை ஒருவிதமாக நினைப்பார்கள். நினைப்பது யாரென்று நினைக்கிறீர்கள்? கூல் பைனல்வரை படித்துவிட்டு உங்களுக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிற உங்கள் சம்சாரந்தான்; பி.ஏ. வகுப்பில், மார்ச்சு மாதப் பரீட்சைக்கும் செப்டம்பர் மாதப் பரீட்சைக்கும் மாறி மாறிப் படையெடுத்துக் கொண்டிருக்கும் உங்கள் மூத்த பிள்ளைதான். உங்கள் தாயார் உயிரோடிருந்தால், உயிரோடிருக்கக் கூடிய சூழ்நிலையில் உங்கள் சம்சாரம் அவளை வைத்திருந்தால், சாப்பிட்டுவிட்டு, கால்குழாயை மாட்டிக் கொள்ளக் கூடாதா வென்று ஒரு மூலையில் உட்கார்ந்து முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். அதை நீங்கள் ஏன் காதில் போட்டுக் கொள்ள வேண்டும்? ஆக, படுக்கையிலிருந்து எழுந்திருப்பது முதல் அலுவலகத்திற்குப் போகிற வரை, செய்து முடிக்க வேண்டிய எல்லாக் காரியங்களுக்கும், அதிக பட்சம் ஒரு மணி நேர அவகாச மிருந்தால் போதாதா? பத்து மணிக்குக் காரியாலயத்தில் இருக்க வேண்டியவர்கள், ஒன்பது மணிக்கு வீட்டில் படுக்கையை விட்டு எழுந்திருந்தால் என்ன? குடியா முழுகிப் போய் விடும்? ஒன்பது மணிவரை படுக்கையில் புரண்டு கொண்டிருக்க மனமில்லை யென்றால், எட்டு மணிக்கு எழுந்திருந்தால் போதும்; பத்தரை மணிக்கு ஆபீசுக்குப்போக வேண்டியவர்கள் எட்டரை மணிக்கு எழுந்திருந்தால் போதும். சூரியோதயத்திற்கு முன்னால் எழுந்திருந்து சாதிக்கப் போகிற காரியந்தான் என்ன? அப்படித்தான் எழுந்திருக்கிறோம்; உடனே காபி கிடைக்கிறதா? பால்காரன் ஏழு மணிக்குத்தானே வருகிறான்? அவனும் நம்மைப் போல் நகரவாசிதானே? நாகரிக புருஷன் தானே? காபி சாப்பிட்டுவிட்டுத் தானே அவன் பால் சப்ளை செய்ய வெளியிலே கிளம்ப வேண்டியிருக்கிறது? இதனால், காலையில் எழுந்தவுடன் ஒரு நல்ல பொருளைப் பார்க்க வேண்டு மென்று சொன்னது, சூரியோதயத்திற்கு முன்னாடி எழுந்திருக் கிறவர்களை நோக்கித் தானே யொழிய, முற்பகலில் எழுந்திருக்கிற நாகரிகமானவர்களான நம்மை நோக்கியல்ல வென்பது சித்தமாகிறது. காலையில் எழுந்தவுடன் பார்க்கவேண்டிய பொருள்களிலே ஒன்று, ஆம், முக்கியமான பொருள், சம்சாரம். அதாவது, தாலி கட்டிய மனைவியை, காலையில் கண் விழித்தவுடன் பார்த்தல் நல்லதென்று சொல்லிப் போயிருக்கிறார்கள் பெரியோர்கள். பார்க்கின்ற தினத்தன்று, வரக்கூடிய தரித்திர தசையாவது சிறிது தள்ளிப் போகுமே என்று அவர்கள் கருதினார்கள் போலும்! வாதவம். அவள், நமக்கு முன்னாடி எழுந்திருக்கிறவளாயிருந்தால், நாம் விழித்துக் கொண்டவுடன் அவளைப் பார்க்கலாம். ஆனால் அவள் விழித்துக் கொண்டவுடன் முதன் முதலாகப் பார்க்கிற பொருள் நாமாகத்தானே இருக்கிறோம்? எழுந்திரு, எழுந்திரு என்று எத்தனை தரம் உசுப்பினாலும், பால் காரன் வந்துவிட்டானா என்று கேட்டுக் கொண்டே படுக்கையில் புரண்டு புரண்டல்லவோ கொடுக்கிறாள் அவள்? அதோடு நின்றாலும் பரவாயில்லை; அடுப்பை மூட்டி, காப்பிக்கு ஜலம் வைக்கக் கூடாதா, எதற்காக முன்னாடி எழுந்திருந்தீர்கள் என்று கூட கேட்டு விடுகிறாள். ஆண்கள் எழுந்திருப்பதற்கு ஒரு மணி நேரம் முந்தி பெண்கள் எழுந்திருந்தால் போதாதா வென்பது அவள் கட்சி. அவள் கட்சிக்கு எதிர்க்கட்சி நம்மால் பேச முடியுமா? இதனால்தான், காலையில் எழுந்தவுடன் முதன் முதலாக, நம் சம்சாரத்தைப் பார்க்க முடிவ தில்லை; இதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதிலும் பயனில்லை; நல்ல பொருளைப் பார்க்க வேண்டுமென்று சொல்லியிருக்கிற பஞ்சாங்கம் முதலியவைகளையோ, சொன்ன நமது முன்னோர்களையோ பரிகசித்துக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை. இப்பொழுதெல்லாம், காலையில் எழுந்தவுடன் முதன் முதலாகப் பார்க்கக் கூடியது காபிதான். காபியே! உன்னைப் பார்த்தாலே போதும்; பரவசமுண்டாகிறது. உன்னுடைய வாசனையே போதும்; பசி தீர்ந்து விடுகிறது. உன்னிடமிருந்து எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக நுரை வருகிறதோ அவ்வளவுக்கவ்வளவு குடிக்கிறவர்களுடைய அந்தது உயர்கிறது. காட்டுமிராண்டித் தனத்திலிருந்து நாகரிக பாதைக்கு எங்களைக் கொண்டு விட்டிருக்கிற புனிதமான இரண்டெழுத்துச் சொல்லே! நீ வாழ்க! ஆனால் காபியே, நீ எங்கே பிறந்தாய் என்பதுதான் சரியாகத் தெரியவில்லை. ஆப்பிரிக்காவில் பிறந்ததாகச் சொல்கிறார்கள் சிலர்; அரேபியாவில் பிறந்ததாகச் சொல்கிறார்கள் சிலர். நீ எங்கே பிறந்தாயோ, இப்பொழுது எல்லார் வாயிலும் மணக்கிறாய்; எல்லா மொழிகளிலும் ஒரே பெயராய் விளங்குகிறாய்; சிரஞ்சீவிப் பட்டம் உனக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம். 15. கோணங்கிராயன் குடும்பம் உலகத்தில் யாருக்கும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. பார்க்கிற உத்தியோகமா, செய்கிற வியாபாரமா, நடத்துகிற குடும்பமா, வாழ்கிற ஊரா, இப்படி எல்லாவற்றிலும் குறைதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறை. குறையின் தரத்திலே வித்தியாசம் இருக்கலாம்; குறையில் கூடுதல் குறைச்சல் இருக்கலாம்; ஆனால் எல்லோருக்கும் குறை யென்னவோ குறைதான். காலையில் எழுந்து தெருப்பக்கம் வந்தேன். முதன் முதலாகத் தென்பட்டான் கோணங்கிராயன். அவனுக்கும் எனக்கும் லேசான பரிச்சயம்தான். எப்பொழுதாவது தெருவிலே போகிறபோது வருகிறபோது அவன் என்னைப் பார்த்து லேசாகச் சிரிப்பான்; நான் அவனைப் பார்த்து லேசாக சிரிப்பேன். அவ்வளவுதான். அவன் என்ன உத்தியோகம் செய்கிறான். அவனுடைய குடும்ப நிலவர மென்ன, இவைகளைப்பற்றி யெல்லாம் எனக்கொன்றும் தெரியாது. நானும் இதுவரை அவனைக் கேட்டதில்லை. இருவருக்கும் நெருங்கிய பழக்கமில்லையல்லவா? அன்று அகமாத்தாக, நான் தெருப்பக்கம் வந்து நின்றதும், அவன் என் கண்ணுக்குத் தென்பட்டதும் ஒன்றாயிருந்தன. அவனை நான் நிரம்ப ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்தானோ என்னவோ, நேரே என் தெருத்திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டு விட்டான். ஏதோ அவசர காரியமாக வந்திருக்கிறான் போலிருக்கிறது என்று நானும் எண்ணிக்கொண்டு, அவனுக்கு எதிர்ப்புறமாகத் திண்ணையில் உட்கார்ந்தேன். என்ன விசேஷம்? என்று கேட்க வாயெடுத்தேன். mtD«., உடனே, தன் குடும்பத்தைப் பற்றி ஒரு குறை அழுது தீர்த்துவிட்டான். அதைக் கேட்ட பிறகு, இவ்வளவு சங்கடங்களுக்கு மத்தியில் அவனுக்குக் குதிரைப் பந்தயத்திற்குப் போக எப்படி மனம் வருகிறது, பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்ற கேள்விகளை நானே எனக்குள் கேட்டுக் கொண்டேன். ஆனால் அஃது அவன் சொந்த விஷயமல்லவா? அவன் சொன்னதை, அப்படியே, அவன் சொன்ன படியே உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். கேட்டால் கேளுங்கள்; விட்டால் விடுங்கள்; அவன் சொன்னான்:- என் குடும்பம் சிறிசுதான்; ஆனால் அது கொடுக்கிற தொல்லையோ மிகப் பெரிசாயிருக்கிறது. ஏன் கல்யாணம் செய்து கொண்டோமென்று இப்பொழுது தோன்றுகிறது. இப்பொழுது தோன்றி என்ன பயன்? சம்சாரம் சாகரம் என்று எந்த மகான் சொல்லிப் போனாரோ அவருடைய வாயில் ஒரு மணங்கு சர்க்கரையையாவது அள்ளிக்கொட்ட வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருக்கிறது. ஆனால் சர்க்கரை விலைதான் ஏறு முகத்திலிருக்கிறதே? உப்பு நீரைக் கொண்ட சாகரத்தில் திமிங்கிலங்களும் சுறா மீன்களும் இருக்கின்றன; கூடவே முத்தும் பவழமும் அகப்படு கின்றன. தித்திப்பான இளநீரைக்கொண்ட சாகரமா யிருக்கு மென்று கருதி, இந்தச் சம்சார சாகரத்தில் இறங்கினேன். இங்கே முத்தையும் காணோம்; பவழத்தையும் காணோம். என் வீட்டுப் புறக்கடையின் வலப்பக்கத்தில் ஒரு குத்துக் கல்லும், இடப் பக்கத்தில் காய்ந்து கிடக்கிற ஒரு பவழ மல்லிகைச் செடியுந்தான், முத்துக்கும் பவழத்திற்கும் பிரதிநிதிகளாயிருக்கின்றன. ஆனால் திமிங்கிலங்களுக்கும் சுறாமீன்களுக்கும் குறைவில்லை. இவை களைப் பார்த்த பிறகு, இவைகளோடு பழகிய பிறகு, உப்பு சமுத்திரத்துத் திமிங்கிலங்களைப் பற்றியும் சுறாமீன்களைப் பற்றியும் எனக்கிருந்த பயம் அடியோடு போய்விட்டது. ஒரு சமயமில்லா விட்டால் ஒரு சமயம், அந்த உப்புச் சமுத்திரத்தில் போய் இறங்கிவிடலாமா வென்றுகூடத் தோன்று கிறது. அப்படித் துணிந்து இறங்கினால்தான் விமோசனம் ஏற்படுமே? மகா விஷ்ணுவைப் போல் அதிலே படுத்துக் கிடக்கலாமே? ஆனால் அதற்குத் தைரியம் வரவில்லை. குரங்காய் என்னை ஆட்டிவைக்கிற பாழாய்ப் போன இந்த மனம், என்னோடு வர மறுக்கிறது; சம்சார சாகரத்தின் ஆழத்தில் என்னை இன்னும் அதிகமாக அழுத்தப் பார்க்கிறது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறேன். கேளுங்கள் என் குடும்பக் கதையை. எனக்கு ஒரு மகள்; ஒரு மகன்; ஒரு மனைவி; ஒரு மாமியார். இவர்கள்தான் என் குடும்பம். என்னையும் சேர்த்துக் கொண்டால், நாங்கள் பஞ்சபூதங்களாகிறோம். ஆம்; என் மகள் மண்ணாங் கட்டி யென்றால், என் மகன், ஆற்று நீராய் ஓடுகிறான்; சமுத்திர நீராய் அலைபாய்கிறான். சுருக்கமாக, அவன் நின்ற நிலையில் நின்று நான் பார்த்தறியேன். என் மனைவி நெருப்பென்றால், என் மாமியார், காற்றாயிருந்து அதனைச் சதா ஊதிக்கொண்டே யிருக்கிறாள். நானோ ஆகாசமாய் எட்டினாற்போலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அநேக சமயங்களில், நானே இந்தப் பஞ்சபூதங்களாகவும் நடிக்க வேண்டியிருக்கிறது. நடிக்கவேண்டி யிருக்கிறதென்ன? நடந்து கொள்ளவே வேண்டியிருக் கிறது. இந்த நான்குபேருடைய அசட்டுத் தனத்தையும் அகம்பாவத்தையும் பொறுத்துக் கொள்வதில் நான் பெரும்பாலும் பூமாதேவியா யிருக்கிறேன். ஒவ்வொரு சமயம், என் சம்சாரமும் மாமியாரும் சிரமப்படப் போகிறார்களே என்பதற்காக, தண்ணீர் வராத குழாயிலிருந்து, எப்படியோ தண்ணீரை வரவழைத்து, வீட்டிலுள்ள பாத்திரங்களிலெல்லாம் நிரப்புவதில் ஜல ராஜனாகிவிடுகிறேன். சில சமயங்களில், என்னையும் மிஞ்சிப் கோபம் வந்து விடுகிறது. நான் எல்லாருக்கும் நெருப்புதான் அப்பொழுது; என் கண்களைப் பார்த்தால், நெருப்புத் துண்டங்கள் இரண்டு என் முகத்தில் எரிந்து கொண்டிருப்பது போலிருக்கும். ஒவ்வொரு சமயம், இந்த நான்குபேரும் ஒன்றுகூடி ஏதோ ரகசியம் பேசுவார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு ஆத்திரம் வந்துவிடும். அப்பொழுது நான் பேய்க்காற்று தான்; ஹா! ஹா! என்று அலறல் போடுவேன். நான்கு பேரும் மூலைக் கொருவராகப் பிய்த்துக்கொண்டு ஓடுவார்கள். இப்படியெல்லாம் இருந்தும், இவர்களுடைய நன்மையை முன்னிட்டு நான் எண்ணுகிற எண்ணங்களையும் படுகிற வேதனைகளையும் கணக்கிட்டுப் பார்த்தால், ஆகாசத்தில் எத்தனை நட்சத்திரங்கள் உண்டோ அத்தனையாக இருக்கும். ஆகவே, அந்த விஷயத்தில் நான் ஓர் ஆகாசந்தானே? ஒவ்வொரு சமயம், நான் கற்பனை உலகத்திற்குச் சஞ்சரிக்கப் போவதுண்டு. அங்குச் சென்று பார்த்தால், நாங்கள் ஐந்து பேரும் ஐந்து பொறிகளாக, அதாவது பஞ்சேந்திரியங்களாக எனக்குத் தோன்றும். மெய், வாய், கண், மூக்கு, செவி, ஆகிய ஐம்புலன்களும் ஒன்றுக்கொன்று முரணிக்கொண்டு எப்படி ஒரே உடம்பில் குடி கொண்டிருக்கின்றனவோ அப்படி நாங்கள் ஐந்துபேரும் ஒருவரைப்போல் ஒருவரில்லாமல் ஒரே வீட்டில் குடியிருக் கிறோமல்லவா? என் மகன் பெயர் காசி; மகள் பெயர் சேது. காசிக்கும் ராமேசுவரத்துக்கும் நான் போவானேன்? என் மனைவி காவேரி; என் மாமியார் கங்காபவானி. புண்ணிய நதிகளைத் தேடிக் கொண்டு நான் அலைய வேண்டியதில்லை. பிள்ளையார், தமது பெற்றோர்களான பார்வதியையும், பரமேசுவரனையும் சுற்றி வலம் வந்துவிட்டு, உலகத்தை யெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டதாகச் சொன்னாராம். அதைப்போல் நானும் வீட்டுக்குள்ளிருந்து கொண்டே க்ஷேத்திர தரிசனமும், தீர்த்த யாத்திரையும் செய்து கொண்டிருக்கிறேன். அதை ஏன் கேட்கிறீர்கள்? சொன்னால் வெட்கக் கேடு. என் மகன் காசி இருக்கிறானே, அவன் ஒரு செல்லாக்காசு. குட்டிச்சுவர் மாதிரி பதினெட்டு வயது ஆகிறது. இன்னும் எட்டாவது வகுப்பை எட்டிப் பார்க்கவில்லை. ஏழாவது வகுப்பில் மூன்று வருஷமாக ஒரே பெஞ்சியைத் தேய்த்துக் கொண்டிருக் கிறான். அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிற வாத்தியார்கூட மூன்று வருஷமாக அந்த அழுமூஞ்சி அர்த்த நாரீச பண்டிதராகவா இருக்க வேண்டும்? அவன், பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்திருக்கிற அறை இருக்கிறதே, அதைக் கூடவா மூன்று வருஷமாகச் சுண்ணாம்பு அடிக்கக்கூடாது? கஷ்டகாலம். என் பையனுக்கு மூளை இல்லை. பள்ளிக்கூடத்திற்குப் பணமில்லை. என் பெண் சேது, மகா சாது. என் வீட்டுக் கூடத்தில், ஒரு மண் உறை இருக்கிறது. அவள் பிறந்த அன்றுதான் அதைக் கட்டிமுடித்தேன். ஆகவே, இருவருக்கும் ஒரே வயதாகிறது. அந்த உறையில் ,ஒரு படியோ, ஒரு மரக்காலோ, ஒரு கலமோ எவ்வளவு நெல் கொட்டினாலும் அது பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கும். என் பெண் சேதுவினிடத்தில், யாரையாவது பற்றி ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விடுங்கள்; அதை ஒவ்வொரு வீடாகப் போய்ச் சொல்லிவிட்டு வருவாள். அப்பொழுதுதான் அவள் தலை கனம் குறையும். சொல்லி விட்டு வீடு வந்து சேர வேண்டியதுதான்; அவள் பின்னால் பத்துபேர் வந்து அப்படிச் சொன்னீர் களாமே? இப்படிச் சொன்னீர்களாமே என்று என்னையும் என் சம்சாரத்தையும் பிலு பிலு வென்று பிடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது? சேது அழகிலே எப்படி என்று கேட்கிறீர்களா? ஒரே மொத்தாகாரம். கொழுக்கட்டைக்குக் கண்ணும் காலும் வைத்தால் எப்படியோ அப்படி. என் பெண் என்பதற்காக நான் ஒசத்தியாகச் சொல்லிவிட முடியுமா? எனக்கு அந்தப் பட்சபாதமெல்லாம் கிடையாது. சேதுவுக்கு, அழகில்லாமல் போனால் போகிறது; குணமாவது உண்டா? சொன்னதைக் கேட்கமாட்டாள்; தனக்காகவும் தெரியாது. வேறென்ன வேண்டும்? புத்தி, வக்ரபுத்தி. குணம், நிர்க்குணம். சேதுவுக்குப் பாட்டு ஏதாவது சொல்லிக் கொடுத்திருக் கிறீர்களா வென்று என்னைக் கேளாதீர்கள். ஒன்றுக்கும் குறைச்சலில்லை. யாராருக்கு எவ்வளவு எவ்வளவு அழவேண்டுமோ அவ்வளவையும் அழுதுவிட்டேன். பலன் நிஷ்பலன். சேது பாடினால், துருப்பிடித்த கத்தியினால் புண்ணைச் சுரண்டுவது போலிருக்கும்.அவள் சாதாரண மாகப் பேசினாலே, ஆடறுக்குந் தொட்டியில் ஆடுகள் கத்துமே அது மாதிரி இருக்கும். அவ்வளவு நயமான குரல்! பாடினால் கேட்க வேண்டுமா? என் தர்ம பத்தினி காவேரி இருக்கிறாளே, அவளை நானாகப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. என் தகப்பனாராகப் பார்த்து நிச்சயம் செய்துவிட்டார். மணப் பந்தலில் தான் முதன் முதலாக அவளைப் பார்த்தேன். மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்ததாகப் படித்திருக்கிறேன். உண்மையில் அப்படி ஓர் அவதாரத்தை அவர் எடுத்திருப்பாரா என்பது எனக்குச் சந்தேகமா யிருந்தது. என் மனைவியைப் பார்த்த பிறகு, நிச்சயமாக அவர் வராக அவதாரம் எடுத்திருப்பார் என்று உறுதி செய்து கொண்டேன். திருமணமான பிறகு, தம்பதிகளுக்குள் இருக்கவேண்டிய பத்து பொருத்தங்களில் எனக்கும் அவளுக்கும் எத்தனை பொருத்தங்கள் இருக்கின்றன என்று பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்தேன். அட கடவுளே! ஒரு பொருத்தம்கூட இல்லை. நான் தேவகணமா யிருந்தால் அவள் ராட்சஸ கணமாயிருக்கிறாள். எங்கள் வாழ்க்கையில் எவ்வளவு இனிமை இருக்குமென்பதைப் பற்றி நான் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா? என் மாமியார் பெயர் கங்காபவானி என்பதுதான் உங்களுக்கு ஞாபகமிருக்குமே. ஒரு பாறாங்கல்லை எடுத்து அவள் தலையிலே போடுங்கள். அப்பொழுது கூட அவள் கண்களிலிருந்து ஒரு பொட்டு தண்ணீர் வராது. உள்ளே, அதாவது மனத்தில் ஈரமிருந் தாலல்லவோ வெளியிலே நீர்வரும்? என் சீமந்தத்தின் போது என் வீட்டிற்குள் நுழைந்து கூடாரமடித்துக் கொண்டு விட்டாள். பதினெட்டு வருஷமாகிறது. இன்னும் அவளுக்குக் காலம் வர வில்லை. காலனிடமிருந்து பென்ஷன் எதிர்பார்க்கிறாள் போலிருக் கிறது. இந்த மாதிரியான குடும்பத்தில் எனக்கு நிம்மதி கிடைக்கு மென்று எதிர் பார்க்கிறீர்களா? கூறாமற் சந்நியாசங் கொள் என்று யாரோ சொன்னார்களாமே அவர்களை அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடிகிறது. இந்த லட்சணத்தில், என் பெண் சேதுவை, எப்படியாவது இந்த வருஷத்தில் ஒரு நல்ல இடம் பார்த்துக் கல்யாணம் செய்து கொடுத்து விடவேண்டுமென்று என் மாமியார் என்னை உளுத்துக் கொட்டுகிறாள். அவள் மூக்சு இருப்பதற்குள், அவளை - அதாவது என் பெண்ணை - அவள் அகமுடையானுடன் சேர்ந்திருக்கச் செய்து, தன் கண்ணால் பார்த்துவிட வேண்டுமாம். எனக் கென்னவோ இவ்வளவு அவசரம் எதற்கு என்று தோன்றுகிறது. ஏனென்றால், என் மாமியாரின் மூச்சும் இப்பொழுது நிற்கப் போவதில்லை; கண் பார்வையும் மங்கப் போவதில்லை. அப்படி ஏற்பட்டால் தான், என் குடும்ப பாரம் கொஞ்சம் குறையுமே? ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது என் மனைவி, என்னுடன் சுமுகமாகப் பேசுவாளே? தவிர, இந்தக் காலத்தில், நல்ல பிள்ளையாகப் பார்த்து நிச்சயம் செய்வதென்பது அவ்வளவு சுலபமாயிருக்கிறதா? எல்லாம் வெள்ளையப் பனை பொறுத்த விஷயமாகவல்லவோ இருக்கிறது? வரன் விசாரிக்கப் போனால், முதலில், பெண் சிவப்பா கறுப்பா என்று கேட்கிறார்கள்; பிறகு ஒல்லியா, பருமனா என்று பிள்ளையாண்டான் தெரிய விரும்புவதாகக் கேட்கிறார்கள். இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்க, நாமும் ஏதோ நம்மால் முடிந்தவரையில் பதில் சொல்லி வந்தால், அதில் திருப்தியடை கிறார்களா? பெண்ணின் தகப்பனாருக்கு என்ன வேலை, என்ன சம்பளம், பென்ஷன் உத்தியோகமா, பென்ஷன் உத்தியோகமா யிருந்தால் எவ்வளவு பென்ஷன் கிடைக்கும், பென்ஷனில் எவ்வளவு தொகையை, முன்கூட்டி மொத்தமாக வாங்க உத்தேசம், அந்தத் தொகையை என்ன செய்வதாக யோசனை, இப்படி வரிசையாகக் கேட்கிறார்கள். இவற்றோடு விட்டாலும் பரவாயில்லை. பெண் பாடுவாளா? ஆடுவாளா? என்ன படித்திருக்கிறாள்? ஹிந்தி யில் என்ன பா செய்திருக்கிறாள்? என்னென்ன நகைகள் இப்பொழுது போட்டிருக்கிறீர்கள்? கல்யாணத்தின்போது என்னென்ன போடுவதாக உத்தேசம்? வெள்ளிப் பாத்திரங்கள் எவ்வளவு செய்து வைத்திருக்கிறீர்கள்? எவர்சில்வரில் ஒரு செட், வரிசையாக வைப்பீர்களல்லவா? சரமாரியான இந்தக் கேள்வி களுக்கும் ஒருவாறு பதில் சொல்லியாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, பெண் சிரித்த முகமாயிருப்பாளா? தலை மயிர் நீளமா, குட்டையா? சவுரி வைத்துக் கொள்ளும் வழக்கம் உண்டா? கண்ணில் மை இட்டுக் கொள்வாளா? எல்லாப் பற்களும் வரிசையாக இருக்கின்றவா? பேசுகிறபோது படபடத்துப் பேசுவாளா, நிதானமாகப் பேசுவாளா,? கீச்சுக் குரலா? கட்டைக் குரலா? எங்களுக்குத் தெரிந்தவர்களோடெல்லாம் சகஜமாகப் பழகுவாளா? இல்லை, மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு மூலையில் போய் ஒதுங்கி இருப்பாளா? அடிக்கடி சினிமா பார்க்க வேண்டுமென்ற ஆசையுண்டா? வாரத்தில் எத்தனை படங்கள் பார்க்க வேண்டுமென்று கேட்பாள்? அட கடவுளே! இவ்வளவுக்கும் பொறுமையாகப் பதில் சொல்லித் தொலைத் தாலும், விடுகிறார்களா? பெண்ணுக்கு பெட்காபி - அதாவது காலையில் படுக்கை யிலேயே காபி - சாப்பிடுகிற பழக்கம் உண்டா? அப்படியானால் எங்கள் வீட்டில் ஏழு மணிக்கு மேல் தான் பால்காரன் வருவான்? அவளுக்கு இது சரிப்படுமா? அவளுக்கே காபி போடத் தெரியுமா? சமையல் சுமாராகச் செய்வாளா? சாணத்தைக் கையால் தொடுவாளா? மாலை நேரங்களில் அழகாகத் தலையைச் சீவிப் பின்னிக்கொண்டு, குத்து விளக்கை ஏற்றி வைப்பாளா? அல்லது, காற்றுவாங்க, பார்க்குக்கோ, பீச்சுக்கோ போக வேண்டுமென்று முரண்டு பிடிப்பாளா? முகத்தில் பூசிக் கொள்ளும் பவுடர், மாதம் எத்தனை டின் தேவையாயிருக்கும்? மூக்குக் கண்ணாடி போட்டுக் கொண்டிருக் கிறாளா? எப்பொழுதுமா? அல்லது வெளியில் போகிறபோது மட்டுமா? அவளுக்குப்போடும் நகைகளில் கைக் கடிகாரமும் சேர்ந்தது தானே? இப்படிச் சம்பந்தா சம்பந்தமில்லாத கேள்விகளுக்கும் சாவதானமாகப் பதில் சொல்லியான பிறகு, ஏதாவது முடிவு சொல்கிறார்களா? என்ன அபிப்பிராயமோ? யோசித்துச் சொல்கிறோம். அப்படியானால் எப்பொழுது வந்து பார்க்கலாம்? சௌகரியப் பட்டபோது வாருங்களேன். உங்கள் சௌகரியத்தை அனுசரித்து வருகிறேன் என்ன ஐயா இப்படி அவசரப் படுகிறீர்கள்? நிரம்ப நச்சுப் பிடித்தவராக இருப்பீர் போலிருக்கிறதே? பிள்ளையாண்டானைக் கலந்து யோசிக்க வேண்டாமா? அவன் யார் மீது கண் வைத்திருக் கிறானோ? இதற்கு மேல் என்ன பேசுவது? பல்லை இளித்துக் கொண்டு அப்புறம் வருகிறேன் என்று சொல்லி விட்டு வரவேண்டியது தான். ஏறக்குறைய எல்லா இடங்களிலும் இந்த மாதிரிதான் இப்பொழுது நடக்கிறது. என் மாமியாருடைய நச்சரிப்பு பொறுக்க மாட்டாமல், நானும், என் அழகான பெண் சேதுவுக்கு ஓரிரண்டு இடங்களில் வரன் விசாரிக்கப் போனேன். கேட்ட கேள்விகளுக்குக்கெல்லாம், உளுந்தில் களி மண்ணுருண்டையைக் கலப்பது போல, கரி மூட்டையில் பொடி செங்கல்லைக் கலப்பது போல, காபி பொடியில் புளியங்கொட்டையை மாவாக்கிக் கலப்பதுபோல, ஒரு பங்கு மெய்யும், ஒன்பது பங்கு பொய்யுமாகக் கலந்து பதில் சொல்லி வந்தேன். ஆயினும், பலன் ஒன்று மில்லை. விட்டு விட்டேன் வரன் தேடுகிற வேலையை. காசியைப் போல் சேதுவும் ஒரு பிள்ளையாக வீட்டில் கிடக்கிறாள். இவைகளுக்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா என்ன? இதற்காகவே, கவலையை மறப்பதற்காகவே, நான் கையில் கொஞ்சம் சில்லறை சேர்ந்தால், அல்லது சேரப்பண்ணிக் கொண்டு, குதிரைப் பந்தயத்திற்குப் போய் விடுவது வழக்கம். எப்படி? சரிதானே? இப்படி ஒரு கேள்வியைப் போட்டுவிட்டு தன் குடும்ப புராணத்தை ஒருவாறு முடித்தான் கோணங்கிராயன். அவனுக்கு நான் என்ன பதில் சொல்வது? மௌனமாக உள்ளே சென்று விட்டேன். அவனும் தெரு வழியே சென்று விட்டான். 16. தர்ம சங்கடம் லோகநாதனும் லோகநாயகியும் கணவனும் மனைவியுமாக வாழ்க்கைப் பட்டார்கள். ஏறக்குறைய பத்து வருஷங்களாகி விட்டன. இன்னமும் இருவர் மனமும் ஒன்று சேரவில்லை. ஏதோ வாழ்க்கையைக் கடத்துகிறார்களே தவிர, வாழ்க்கையை நடத்தவில்லை. காரணம் என்ன வென்று நினைக்கிறீர்கள்? எல்லாம் இந்தப் பாழாய்ப்போன பட்டப் படிப்புதான். இருவருடைய திருமணமும் நடைபெறுகிறபோது, இருவருடைய பெற்றோர்களும் வெகுவாகச் சந்தோஷப் பட்டார்கள். ஏனென்றால், இருவருக்குமிடையில், பஞ்சாங்கப் பொருத்தங்கள் பல இருந்ததோடு வேறு சில பொருத்தங்களும் இருந்தன. முதலாவது, பெயர்ப் பொருத்தம். லோகநாதன் - லோகநாயகி. ஆண்பால் பெண்பால் சரியாயிருக்கிறதல்லவா? இரண்டாவது, இருவரும் பி.ஏ. ஹானர். ஹானர் வகுப்பில் இருவரும் முக்கிய பாடமாக எடுத்துக் கொண்டது கூட ஒரே சரித்திர பாடந்தான். இது மூன்றாவது பொருத்தம். விவாகமாவதற்கு முன்னர், இருவரும் சேர்ந்தே டென்னி விளையாடி வந்தார்கள். இதை நான்காவது பொருத்தமென்று சொல்லலாமல்லவா? டென்னி தான் ஆடிவந்தார்களே, இருவரும் ஒரே நாளில் ஒரே மந்திரியின் கையிலிருந்து வெற்றிக் கிண்ணத்தைப் பரிசாகப் பெறவேண்டுமா? ஐந்தாவது பொருத்தத்திற்கு வந்துவிட்டோம். இன்னும் எத்தனை பொருத்தங்கள் இருக்கின்றன, பாருங்கள். வெற்றிக் கிண்ணத்தைப் பரிசாகப் பெறும்போது இருவர் கண்களும் ஒரே சமயத்தில் ஒன்றோ டொன்று பொருந்தவேண்டுமா? பொருத்தம் ஆறு. கண்கள் பொருந்தின பிறகு பேச்சேது? இவர்களுக்குள்ளும் பேச்சு இல்லை; இவர்களுடைய பெற்றோர்களுக்குள்ளும் பேச்சு இல்லை. சொற்ப காலத்திற்குள் விவாகம் நிச்சயமாகி உடனே நடந்தும் விட்டது. விவாகமாவதற்கு முந்தியே இருவரும் ஒரே நாளில் அக்கவுண்டெண்ட் - ஜெனரல் ஆபீசில் உத்தியோகத்திற்கு விண்ணப்பத் தாளைப் பூர்த்திசெய்து அனுப்பி வைத்தார்கள். இப்படி ஒரே நாளில் இருவரும் தெரிந்தே அனுப்பினார்களோ, தெரியாமலே அனுப்பினார்களோ நமக்குத் தெரியாது. ஒரே நாளில் விண்ணப்பத் தாளைத்தான் அனுப்பினார்களே, இருவருக்கும் ஒரே நாளில் உத்தியோக நியமன உத்தரவும் கிடைக்க வேண்டுமா? கிடைத்தது. ஒரே நாளில் உத்தியோகத்தை ஏற்றுக்கொண்டார்கள். இதற்குப் பிறகுதான் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முந்தியே எத்தனை பொருத்தங்கள்! பெயர்ப் பொருத்தத்திலிருந்து உத்தியோகம் ஏற்றுக் கொண்டதுவரை கணக்கிட்டுப் பாருங்கள்; ஒன்பது பொருத்தங் களாகின்றன. விவாகத்தையும் சேர்த்தால் பத்து பொருத்தங்களாகின்றன. பஞ்சாங்கத்தில் தசவித பொருத்தங்கள் சொல்லியிருக்கிறார்களே, அவைகளைப் பற்றி இனி யாருக்கு என்ன கவலை? அக்கவுண்டெண்ட் - ஜெனரல் ஆபீசில் இருவரும் ஒரே நாளில் உத்தியோகத்தில் அமர்ந்த பிறகுதான், இருவருடைய பொருத்தங்களும் வேலை செய்ய ஆரம்பித்தன. இருவருக்கும் மேற்படி ஆபீசில் ஒரே இலாகாவிலேயே, அதாவது ஒரே செக்ஷனிலேயே வேலை செய்ய வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டது. எவ்வளவு முக்கியமான பொருத்தம் இது? எவ்வளவு சந்தோஷப் படக்கூடிய விஷயமிது? ஒருவர் முகத்தை ஒருவர் எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாமல்லவா? இப்படி எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருப்பது, விவாகமான சிறிது காலம் வரை மிக இனிப்பாக இருக்கும். பிறகு, மெல்ல மெல்ல கசப்பு தட்டும். எதுவுமே மிதமிஞ்சிப் போனால் விரசம் உண்டாவது இயல்பு தானே? இப்படி ஒரே செக்ஷனிலேயே வேலை செய்யக் கூடிய பாக்கியம் ஏற்பட்டதைப் பற்றி லோகநாதனுக்கும் லோகநாயகிக்கும் சொல்ல முடியாத சந்தோஷம். இதற்கேற்றாற்போல், எதிரெதிராயுள்ள இரண்டு மேஜைகளில் இருவரும் அமர்ந்து அலுவல் பார்க்கக் கூடிய விதமாக இடமும் அமைந்துவிட்டது. கேட்க வேண்டுமா இருவர் கண்களும் பேசிக்கொள்வதற்கு? ஆபீசில் கண் பேச்சு; வீட்டிலே வாய்ப் பேச்சு. ஆபீசில் இருவரும் கொஞ்சம் விலகினாற்போல் எதிரெதிராக உட்கார்ந்து, ஒரு கண்ணால் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதும், மற்றொரு கண்ணால் ஆபீ வேலைகளைக் கவனிப்பதுமாயிருந்தார்கள். வீட்டில், இருவரும் தோளோடு தோள் இணைந்து உட்கார்ந்து, இரண்டு கண்களாலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆபீசுக்கும் வீட்டுக்கும் இதுதான் வித்தியாசம். அக்கவுண்டெண்ட் - ஜெனரல் ஆபீசில் வேலைக்குப் போய்ச் சேருகிறவர்கள் - சேர்ந்த பிறகு, குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் இலாகா பரீட்சைகளில் தேர்ச்சி பெறவேண்டுமென்று ஒரு நியதி உண்டு. தேர்ச்சி பெற்றால்தான் சம்பளம் அதிகப்பட்டுக் கொண்டு போகும்; உத்தியோக பதவியும் உயரும். லோகநாயகி, உத்தியோகத்தில் சேர்ந்த சிறிது காலம் வரையில் தான், லோகநாதன் மீது ஒரு கண்ணும் ஆபீ வேலையில் மற்றொரு கண்ணுமாக இருந்தாள். பிறகு, தன் உத்தியோக உயர்விலே நாட்டம் செலுத்த ஆரம்பித்தாள். இரண்டு கண்களையும் ஒரு மனத்தையும், ஆபீ வேலைகளிலேயே செலுத்தினாள். மற்றவர்கள் இரண்டு அல்லது மூன்று வருஷம் படித்து, பரீட்சைக்கு உட்காருவார்கள். இவளோ, ஒரே வருஷத்தில் படித்து, பரீட்சைக்கு அமர்ந்து, தேர்ச்சி பெற்றுவிடுவதென்று தீர்மானித்தாள். ஆபீசிலும் வீட்டிலும், பரீட்சைக்கான புத்தகங்களைப் படிப்பதும், அது சம்பந்தமான வேலைகளைக் கவனிப்பதும், அனுபவங் களைப் பெறுவதுமாக இருந்தாள். லோகநாதனோ நேர்மாறாக இருந்தான். உத்தியோக உயர்வு பெறவேண்டுமென்பதில் அதிக சிரத்தை காட்டவில்லை. லோகநாயகியின் கணவனாக இருப்பதிலேயே திருப்தி கண்டான்; ஆனந்தமடைந்தான். ஆனாலும் பரீட்சைக்குப் படிக்காமல் இருக்க முடியுமா? லோகநாயகி, பரீட்சைக்குப் படிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறபோது, தான் மட்டும் சும்மாயிருக்கலாமா? சும்மாயிருந்தால், லோகநாயகி, தன்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வாள்? தான் ஓர் ஆண்பிள்ளை யென்பதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டுவந்தான். பரீட்சைக்குப் படித்தான். வித்தியாசம் என்னவென்றால், லோகநாயகி, புத்தகங்கள்மீது மனம் வைத்துப் படித்தாள். லோகநாதன், புத்தகங்கள் மீது கண் வைத்துப் படித்தான். அவ்வளவுதான். பரீட்சையும் வந்தது. இருவரும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் அமர்ந்து விடைத் தாள்களைப் பூர்த்தி செய்தார்கள். சிறிது காலத்திற்கு பிறகு முடிவு தெரிவிக்கப்பட்டது. லோகநாயகி தேறிவிட்டாள். தேறியவர்களுள் முதல் தானம் இவளுடையதாக இருந்தது. லோகநாதன் விஷயமென்ன? தேறியவர்களின் பட்டியலில் அவன் பெயர் காணப் படவில்லை. இதற்காக லோகநாயகி மிகவும் வருத்தப்பட்டாள். லோகநாதனோ, லோகநாயகியின் பெயர் பட்டியலின் முதலில் இருந்ததற்காகச் சந்தோஷப்படவில்லை. அவள் பெண் பிள்ளை; இவன் ஆண்மகன்! வித்தியாசமில்லையா? லோகநாதன், தன் பெயர், பட்டியலில் காணப்படவில்லை என்பதற்காகக் கூட அவ்வளவு வருத்தப்படவில்லை. அடுத்த வருஷம் பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைவு அடிக்கடி தோன்றி அவனுக்கு ஆறுதல் அளித்து வந்தது. அவன் வருத்தமெல்லாம் லோகநாயகி மீதுதான். பரீட்சையில் தேறி முதல் தானம் பெற்றுவிட்டால் தானென்ன? அவள் பாட்டுக்குச் சும்மா இருக்கக்கூடாதா? சும்மாயிராமல் அவளென்ன, தாவித் தாவியா ஓடி ஆடினாள்! இல்லையே! அவளைச் சும்மா இருக்க விடவில்லை ஆபீசிலுள்ள மற்றவர்கள், தேறியவர்களின் பட்டியல் வெளியானதும், ஆபீசிலுள்ளவர்கள் ஒருவர் பின்னொருவராக லோகநாயகியிடம் வந்து, முதலில் தேறியதற்காக அவளைப் பாராட்டினார்கள். எப்படிப் பாராட்டினார்கள்? அவளைக் கைகுலுக்கிப் பாராட்டினார்கள்; அவளோடு சிரித்துச் சிரித்துப் பேசிப் பாராட்டி னார்கள். அவளைப் பாராட்டத்தான் செய்தார்களே, லோகநாத னிடம் வந்து, என்ன சார், உங்கள் பெயர் பட்டியலில் காணப் படவில்லையே என்று வருத்தமாக ஒரு வார்த்தையாவது சொல்லி விட்டுப் போனார்களா? இல்லவே இல்லை. லோகநாயகியைப் பாராட்டிச் சென்றவர்கள் லோகநாதனைப் பாராமலே போய்விட்டார்கள். லோகநாயகியின் கணவனான அவனுக்கு இஃது உறுத்தாமலிருக்குமா? இதற்குப் பிறகு, தான் ஒரு கணவன் என்ற எண்ணமே அவனை ஆட்கொண்டுவிட்டது. ஆபீசில் கூட இந்த எண்ணத்திற்கே அவன் அடிமையாகிவிட்டான். ஆயினும் அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. காட்டிக்கொள்ளத் தான் முடியுமா? லோகநாதனுடைய இந்த தான் ஒரு கணவன் என்ற எண்ணம், வீட்டிலும் லேசுலேசாக எதிரொலி கொடுக்க ஆரம்பித்தது. சாதாரண மாக இரண்டு பேரும் - கணவனும் மனைவியும் - காலை நேரத்தில் சமையலறையில் உட்கார்ந்து தமாஷாகப் பேசிக் கொண்டு காபி அருந்துவார்கள். இப்பொழுது, அதாவது, லோகநாதன், தன்னை ஒரு கணவனாக எண்ணிக் கொண்டு விட்ட பிறகு, முன் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு விடுவான். லோகநாயகி, காபியை எடுத்து வந்து கொடுக்க வேண்டும். என்ன இருந்தாலும் கணவனல்லவா? மீசை முளைத்த ஆண்பிள்ளை யல்லவா? மனைவியோடு சரிசமானமாக உட்கார்ந்து, அதிலும் சமையறையில் காபி சாப்பிடலாமா? அவள் பி.ஏ. ஹானர்ஸா யிருந்தா லென்ன? அக்கவுண்டெண்ட் - ஜெனரல் ஆபீசில் உத்தியோகமாயிருந்தாலென்ன? கட்டின பெண்டாட்டிதானே? இது மாதிரி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகள். இத்தனை நாட்களாக, லோகநாதன், நான அறைக்கு, தானே டவல், சோப், எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சென்று குளித்துவிட்டு வருவான்; ஆபீசுக்குச் செல்லு முந்தி, தன்னுடைய உடுப்புக்களை, தானே எடுத்து வைத்துக் கொள்வான்; இரவில், தன் படுக்கையைத் தானே போட்டுக் கொண்டதோடு லோகநாயகிக்கும் படுக்கை போட்டு வைப்பான். ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கு சென்றாலும் லோகநாயகியைக் கூட்டிக் கொண்டுதான் செல்வான். இப்பொழுது எல்லாம் மாறிவிட்டன. தான் லோகநாயகியின் கணவன் என்பதையும், அவள், தன்னுடைய அதிகாரத் திற்குட்பட்டு நடக்க வேண்டியவள் என்பதையும் நாளுக்கு நாள் அதிகமாக உணரத் தலைப்பட்டான். இந்த உணர்ச்சியை வீட்டில் எவ்வளவு அதிகமாக வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு அதிகமாக வெளிப்படுத்தி வந்தான். ஆனால் ஆபீசில்? வெளிப்படுத்த முடியுமா? இப்படியிருக்கையில், பரீட்சையின் முடிவு தெரிந்த மூன்று மாதம் கழித்து, லோகநாயகி, மேல் பதவிக்கு உயர்த்தப்பட்டாள். அதாவது எந்த செக்ஷனில் அவள் ஒரு குமாதாவாக இருந்தாளோ அந்த செக்ஷனிலேயே சூப்பிரண்டெண்டெண்டாக நியமிக்கப் பட்டாள். லோகநாதன், எப்பொழுதும் போல் அதே செக்ஷனில் வேலை செய்ய வேண்டிய வனானான். பட்டவர்த்தனமாகச் சொல்ல வேண்டுமானால், லோக நாயகியின் மேற்பார்வையில்,அவளுடைய உத்தரவுகளுக்குக் கட்டுப் பட்டு, லோகநாதன் வேலை செய்ய வேண்டியவனானான். இதைக் காட்டிலும் தர்ம சங்கடமான நிலைமை வேறென்ன இருக்கமுடியும்? சூப்பிரண்டெண்டெண்டான பிறகு, லோகநாயகிக்குத் தனி இடம்; தனி மேஜை. மேஜையின் மீதுள்ள மணியை அடித்தால் உடனே ஒரு வில்லைச் சேவகன் ஓடிவந்து, சலாம் செய்து நிற்கிறான்; பிற்பகல் மூன்று மணிக்குச் சரியாக, அவள் மேஜையின்மீது, சூடான டீயும், ஒரு தட்டில் இரண்டு ரொட்டித் துண்டுகளும் வந்து அமர்ந்து, அவள் கண்ணோட்டத் திற்குக் காத்து நிற்கின்றன. ஆபீ ததவேஜுகளில் ஏதேனும் பிழை நேர்ந்து விட்டால், சம்பந்தப்பட்ட குமாதாவைக் கூப்பிட்டு, வன்மையாக. ஆனால் இனிமையாகக் கண்டிக்கிறாள்அவள். குமாதாக்களும் அவள் கண்டனத்தைப் புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்; அவள் எதிரில் உட்காராமல் நின்று கொண்டேதான், அவள் கேட்கும் கேள்விகளுக் கெல்லாம் சமாதானம் சொல்கிறார்கள். அவளும், தன் செக்ஷனில் வேலை செய்யும் குமாதாக்களை, தனக்குச் சமதையாக, தன்னெதிரில் உட்காருவதற்குச் சந்தர்ப்பம் கொடாமல், தன் பதவிக்கு இழுக்கு நேரிடாமல் காப்பாற்றி வருகிறாள். அவள் நடந்து கொள்கிற தோரணை அக்கவுண்டெண்ட் - ஜெனரல் காதுக்குக் கூட எட்டி விட்டது. மற்ற செக்ஷன் சூப்பிரண்டெண்டு களும் அவள் மாதிரி தோரணையாக நடந்து கொண்டால், ஆபீ வேலைகள் இன்னும் நன்றாக நடக்குமென்று அவரும் - அக்கவுண்டெண்ட் - ஜெனரலும் - ஜாடை மாடையாக அவ்வப் பொழுது தெரிவித்து வந்தார். லோகநாதன்! - பாவம், அவன் பெயரைச் சொன்னாலே பரிதாபமா யிருக்கிறது. அவனும், வேறு செக்ஷன்களுக்கு, தன்னை மாற்றிக் கொள்ள என்னென்னவோ பிரயத்தனங்கள் செய்து பார்த்தான். ஒன்றும் பலிக்கவில்லை. இனி என்ன? தலைகுனிந்து வேலை செய்யவேண்டியது தான். இதற்காக, வேலையை ராஜீநாமா செய்துவிட முடியுமா? தன்மானம் பெரிதுதான். ஆனால் அதைக் காட்டிலும் மாதம் பிறந்தால் நூற்று நாற்பது ரூபாயைக் கையிலே கொண்டு வந்து கொடுக்கும் உத்தியோகம் பெரிதல்லவா? தவிர, தன்மானம் என்று சொல்லிக் கொண்டு, உத்தியோகத்தைத் தியாகம் செய்துவிடக் கூடிய மனோ தைரியம் அவனுக்கு ஏற்படவில்லை. பி.ஏ. ஹானர் அல்லவா? சரி; உத்தியோகத்தை ராஜீநாமா செய்து விடலாம். வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது? லோகநாயகி என்ன நினைப்பாள்? ஆபீசில் அவள் மேஜை முன்னர் நின்று கொண்டு அவள் இடும் உத்தரவுகளுக்குக் காத்துக் கிடப்பதற்குப் பதிலாக, வீட்டில் அவள் போடும் சோற்றுக் கல்லவோ காத்துக் கிடக்க வேண்டும்? அவள் அப்படிச் செய்வாளா என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டோ, செய்யமாட்டாள் என்ற நம்பிக்கையுடனோ வீட்டிலே வந்து உட்கார்ந்து கொண்டுவிட ஆண்பிள்ளையான லோகநாதனுக்குத் துணிச்சல் உண்டாகவில்லை. அப்படி உட்கார்ந்து கொண்டு சாப்பிட மனமில்லாமல், வேறெங்காவது உத்தியோகத்திற்குப் பிரயத்தனப்படலாம். பிரயத்தனம் செய்கிற இடத்தில், ‘இதற்கு முன் எங்கே உத்தியோகம் செய்தாய்? என்று கேட்டால், அக்கவுண்டெண்ட் - ஜெனரல் ஆபீசில் என்றல்லவோ பதில் சொல்லவேண்டும்? அக்கவுண் டெண்ட் - ஜெனரல் ஆபீசில் உத்தியோகம் பார்த்து ராஜீநாமா செய்து விட்டு வெளியே வந்தவர்களுக்கு வேறெங் கேனும் உத்தியோகம் கொடுப்பார்களா? ஏனென்றால், அந்த ஆபீசில் உத்தி யோகம் பார்த்தவர்களுக்கு, குற்றங் கண்டுபிடிக்கத்தான் தெரியுமே தவிர, குணம் என்பது அவர்கள் கண்ணிலேயே படாது. அவர்களுக்கு எடுத்ததெல்லாம் சந்தேகந்தான். அரசாங்கத்திட மிருந்து உங்களுக்கு ஒரு தொகை வர வேண்டியிருந்து, அதை நீங்கள் அக்கவுண்டெண்ட் - ஜெனரல் ஆபீஸில் பெற்றுக் கொள்ள நேரிடுகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு லேசிலே அந்தப் பணம் கிடைக்கிறதா, பாருங்கள். நீங்கள் யார், பணம் பெற்றுக் கொள்வதற்குரிய நபர் நீங்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம், நீங்கள்தான் என்பதற்கு, இந்த ஆபீசிலே உள்ளவர்களில் யாராவது அடையாளம் சொல்லுவார்களா, இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். இப்படிப் பதில் சொல்லிக் கொண்டு காத்துக் கிடப்பதைக் காட்டிலும், பணமே வேண்டாமென்று உங்களுக்குத் தோன்றிவிடும். தான், இந்தச் சந்தேக வருக்கத்தைச் சேர்ந்தவன் என்பது லோகநாதனுக்கு நன்கு தெரிந்திருந்தது. இதனால், தான் வேறு எந்த உத்தியோகத்திற்கும் தகுதியில்லாதவன் என்பதையும் அவன் நன்கு உணர்ந்திருந்தான். ஆகவே, அக்கவுண்டெண்ட் - ஜெனரல் ஆபீ தான், தன் கதியென்று தீர்மானித்துக் கொண்டு விட்டான். இப்படி ஒரே ஆபீஸில் ஒரே செக்ஷனில் மனைவி மேலதிகாரி யாகவும், கணவன் கீழ் உத்தியோகதனாகவும் வேலை பார்ப்பதில் எத்தனையோ தர்ம சங்கடங்கள்! எத்தனையோ இக்கட்டான நிலைமைகள்! லோகநாதனும் லோகநாயகியும் வீட்டிலிருந்து ஆபீசுக்கு ஒரே சமயத்தில் சேர்ந்து புறப்படலாமா? கூடாதா? கணவனும் மனைவியு மாகச் சேர்ந்து புறப்பட்டால் நல்லதுதான். ஆனால் ஆபீசுக்குச் சேர்ந்து வந்தால், சூப்பிரண்டெண்டெண்ட் லோகநாயகியை குமாதா லோகநாதன் காக்காய்ப் பிடிக்கிறா னென்றல்லவோ சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்? அதற்காக ஒன்றாகப் புறப்பட்டு, நடு வழியில் பிரிந்து வருவதா? அப்படி வந்தாலுமென்ன? ஆபீசுக்கு வருகிற மற்றக் குமாதாக்கள் இவர்களுடைய தந்திரத்தைத் தெரிந்து கொள்ள மாட்டார்களா? சரி; ஆபீசில், லோகநாயகிக்கு ஆபீ சம்பந்தமாக லோக நாதனிட மிருந்து ஏதேனும் தகவல் கேட்க வேண்டியிருந்தால் என்ன செய்வது? சூப்பிரண்டெண்டெண்ட் லோகநாயகி, குமாதா லோகநாதனைக் கூப்பிட்டனுப்பிக் கேட்பதா? அல்லது மனைவி லோகநாயகி கணவன் லோகநாதனிடம் சென்று தகவல் கேட்டுக் கொண்டு வருவதா? அது போகட்டும்; ததவேஜுகளை எடுத்துக் கொண்டு, லோகநாதன் சூப்பிரண்டெண்டெண்ட் அம்மாள் மேஜைக்கு வந்தால் அவனை உட்காரச் சொல்லுவதா? நிற்கச் செய்வதா? மற்றக் குமாதாக்கள், நின்றுகொண்டே தகவல் கேட்டும் தெரிந்துகொண்டும் போகிறபோது லோகநாதன் மட்டும் உட்கார்ந்து கொண்டிருப்பது நன்றாகயிருக்குமா? சூப்பிரண் டெண்டெண்ட் பதவிக்கு மதிப்புக் கொடாதது போல் -------------------மற்றும் இதர குமாதாக்கள்---------------- கொள்ள மாட்டார்கள்? பகலில் சிற்றுண்டி கொள்கிற போது, லோகநாயகிக்கு, தனியே இருந்து, அதாவது லோகநாதனை விட்டுவிட்டு தான் மட்டும் கொள்ள மனம் இருப்பதில்லை. என்ன இருந்தாலும் பெண்ணல்லவா? லோகநாதன், சிற்றுண்டி நேரத்தில் மற்றக் குமாதாக்களோடு சேர்ந்து கொண்டு விடுவதனால், லோக நாயகியைத் தனியே விட்டுச் சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் அதிகமாக அவனுக்கு உண்டாவதில்லை. என்றாலும், ஒவ்வொரு சமயம் அந்த எண்ணம் வரவே செய்யும். என்ன இருந்தாலும் லோகநாயகியின் கணவனல்லவா? இப்படி லோகநாதனுக்கும் லோகநாயகிக்கும் எத்தனையோ தர்ம சங்கடமான நிலைமைகள் ஏற்பட்டன. இவை ஏற்பட ஏற்பட, விவாக காலத்தில் இருவருக்கும் எத்தனை விதமான பொருத்தங்கள் இருந்தனவோ, அவை ஒன்றன்பின்னொன்றாக விலகிக்கொண்டு விட்ட மாதிரி இருவருக்கும் தோன்றின. ஆனாலும், இவர்கள் விலகிக் கொண்டுவிட முடியுமா? ஆபீசில் எப்படி இருந்த போதிலும், வீட்டைப் பொறுத்த மட்டில், லோகநாயகி ஆணுக்கு ஆட்பட்டு நடந்துகொள்ள வேண்டிய பெண்ணாகவே இருந்தாள். லோகநாதன், பெண்ணை ஆட்படுத்தி நடத்த வேண்டிய ஆணாகவே இருந்தான். அடக்குவதில் ஆணும், அடங்குவதில் பெண்ணும் முறையே பெருமை காண்கிறார்கள் என்ற வாசகத்தை, ஒரு பலகையில் எழுதி, இவர்கள் வீட்டு முன் வாயிலில் தொங்க விடலா மல்லவா? பெண்மையிலேதான் வாழ்வு வாசகர்களுக்கு பெண்மையில் இறைமையைக் காண்கின்றவன் நான்; அதனை எந்நாளும் போற்றுகின்றவன். என் உறவினர் சிலர், பெண்களுக்காகப் பெரிதும் பரிந்து பேசுகிற பெயர் வழி இவன் என்று என்னைப் பல காலும் பரிகசிப்பதுண்டு. அதற்காக நான் வருத்தப்படுவதில்லை. அந்தப் பரிகாசத்தின் மூலம் அவர்கள் என்னைப் பெருமைப்படுத்துவதாகவே கருதுவேன். பிறர் நலத்திற்காகத் தன்னலைத்தை விட்டுக் கொடுப்பதிலும், மற்றவர் இன்பத்திற்காக துன்பத்தை வலிய ஏற்று அனுபவிப்பதிலும், மனம் கோணாமல் முகஞ்சிணுங்காமல் கொடுப்பதிலும், அல்லதை மறந்து நல்லதை எஞ்ஞான்றும் நினைவில் வைத்துப் பாராட்டுவதிலும் பெண்களுக்கு நிகர் பெண்களே யாவர். இந்தத் தன்மைகளில் இவர்களோடு போட்டி போட ஆண்களால் ஒருபோதும் முடியாது. இங்ஙனம் நிகரற்ற தன்மைகளையுடைய பெண் குலத்தை வழிபடுதல், ஆண் குலத்தின் கடமையன்றோ? அப்படி வழிபடுதல், ஆண்குலத்தின் தன் முனைப்பு உணர்ச்சிக்கு விரோதமாய் இருக்கலாம்; ஆனால் அதன் - ஆண் குலத்தின் தன் மதிப்பு உணர்ச்சிக்கு ஒரு நாளும் பங்கம் ஏற்படாது. உண்மையில் தன் மதிப்பு உணர்ச்சி மிகுந்த ஒர் ஆடவன், பெண்மைக் குரிய மதிப்பைக் கொடுத்து அதன் முன்னர் தலை வணங்கி நிற்பான். இந்தச் சந்தர்ப்பத்தில், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு காட்சி என் அகக்கண் முன்னர் வந்து நிற்கிறது. பண்டித மதன மோகன மாளவியாவைப் பற்றிப் பலரும் அறிந்திருப்பர். அப்பொழுதிருந்த தேசீயத் தலைவர்களில், வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும், பண்பாட்டிலும் மூத்தவராகவும் சிறந்தவராகவும் மதிக்கப்பட்டு வந்த பெரியார் அவர். ஹிந்து தர்மத்தின் பிரதிநிதியாகவும், இந்திய நாகரித்தின் பிரதி நிதியாகவும் அவர் விளங்கினார் என்று சுருக்கமாகச் சொல்லால். வடநாட்டில் அவருக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் மிக அதிகம். அவர் பூதவுடல் மறைந்து பல ஆண்டுகளாகியும், அவர் புகழுடம்புக்கு இன்னும் அந்தச் செல்வாக்கும் மதிப்பும் இருந்து வருவதை, வட நாட்டில் ஒரு முறை சுற்றுப் பிரயாணம் செய்து தெரிந்து கொள்ளலாம். இத்தகைய பெரியார் ஒரு சமயம், அதாவது நாற்பது ஆண்டுகளுக்கு முந்தி, சென்னைக்கு வந்திருந்தார். அவரை வரவேற்று உபசரிக்க, கடற்கரையில் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது. சென்னையிலுள்ள பல்வேறு சங்கங்கள் அப்பொழுது அவருக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுத்தன. ஒவ்வொரு சங்கத்தின் பிரதிநிதியும், மேடைக்கு முன்னால் வந்து நின்று, உபசாரப் பத்திரத்தைப் படித்துக் கொடுப்பர். அப்பொழுது பண்டிதர், மேடைமீது அமர்ந்த வண்ணம் புன்முறுவல் பூத்த முகத்துடன் உபசாரப் பத்திரத்தின் வாசகங்களைச் செவி மடுப்பார். பத்திரத்தைப் படித்து முடித்ததும் அதை, சங்கத்தின் பிரதிநிதி, பண்டிதரிடம் இரு கரத்தாலும் கொடுப்பார். பண்டிதரும் அப்பொழுதும் மட்டும் எழுந்து நின்று அதை இரு கரத்தாலும் வாங்கிக் கொள்வார். இப்படிப் பல சங்கங்களைப் போல், சென்னை யுவர் சங்கம் என்ற ஒரு தாபனமும் அவருக்கு உபசாரப் பத்திரம் வாசித்தளித்தது. வாசித்துக் கொடுத்தவர் ஸ்ரீமதி ருக்மணி லட்சுமீபதி. வயது, அனுபவம் முதலிய எல்லாவற்றிலும் பண்டிதருடைய மகளாகக் கருதப் படக்கூடிய நிலையில் இருந்த அந்த அம்மையார், உபசாரப்பத்திரத்தைப் படிக்க முன் வந்து நின்றது முதல், படித்து முடித்து கரம் நீட்டிக் கொடுக்கிறவரை, பண்டிதர் நின்று கொண்டேயிருந்தார்; நின்று கொண்டே உபசாரப் பத்திரத்தின் வாசகத்தைச் செவிமடுத்தார்; தலை குனிந்து கரங்கூப்பி அந்த அம்மையாருக்கு வணக்கஞ் செலுத்திவிட்டு, பிறகு உபசாரப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டார்; பெற்றுக் கொண்ட பின்னரே ஆசனத்தில் அமர்ந்தார். இஃதொரு சிறிய விஷயமாகச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இதில், பண்டித மாளவியாவின் பெருந்தகைமை புலப்படுவதோடு, ஹிந்து தர்மத்தில் பெண்மைக்குரிய தானம் என்னை, இந்திய நாகரிகம் எத்தனையோ தாக்குதல்களைத் தாங்கிக் கொண்டு செழுமை குன்றா மலிருப்பதற்குக் காரணம் யாது என்பவையும் ஒரு வாறு புலனா கின்றனவல்லவா? பெண் குலம் வாழ்ந்து கொண்டிருப்பதனால் தான் ஆண்குலம் அழியாமல் இருந்துகொண்டிருக்கிறது. இப்படி அழியாமல் இருந்து கொண்டிருந்தால் மட்டும் போதுமா? இதில் திருப்தியோ பெருமையோ அடையலாமா? கூடாது என்பதுசிறியேன் கருத்து. ஆண் குலம், பெண் குலத்தை வழிபடுதல் வேண்டும்; பின் பற்ற வேண்டும். பின்பற்றினால், உலகத்தில் சண்டை சச்சரவுகள் இரா; ஐக்கிய தேச தாபனத்திற்க வேலை இராது. ஐக்கிய தேசதாபனம் என்ன வேலைதான் செய்து கொண்டிருக் கிறதென்று இங்கே ஒரு கேள்வி எழுப்பப் படலாம். வேலை செய்து கொண்டிருக்கிற தென்னவோ வாதவம். ஆனால் அதன் பயனைத்தான் யாரும் சரியாக அனுபவிக்க முடியவில்லை. உலகத்தில் நிறவெறியும், இனப்பகையும், பரபர சந்தேகங்களும், பொறாமைகளும் வளர்ந்து வருகின்றனவே தவிர குறையவில்லை. ஐக்கிய தேச தாபிமோ அது போன்ற வேறு எந்த ஒர் உலக தாபனமோ, பெண் குலத்தின் நிருவாகத் திற்குட்படுமானால், உலக மக்களிடையே பரபர அன்பும் நம்பிக்கையும் வளரும்; அச்சுறுத்தலும், அச்சுறுத்தப்படுதலும் மறையும். இஃதென்ன பைத்தியக்கார யோசனை? நடக்கிற காரியமா இது என்று சிலர்எண்ணலாம். ஆம்; நடக்கிற காரியமில்லை தான். ஆனால் நடந்தால் நல்லது என்று நினைக்கலாமல்லவா? பெண்குலத்தை வழி படுதல் வேண்டும், பெண் குலம் நிருவாகத்தை நடத்தவேண்டும் என்று நான் சொல்லுவதை, அன்பர்கள், வார்த்தைக்கு வார்த்தை அர்த்தப் படுத்திக் கொள்ள மாட்டார்களென்று நம்புகின்றேன். பெண் தன்மையை வழி படுதல் வேண்டும், எந்த ஒரு நிருவாகத்திலும் பெண் தன்மை நிலவவேண்டும் என்றே நான் சொல்லுகிறேன். அப்படி வழிபடுகின்ற ஆண்குலம் தெய்வகுலமாகிவிடும்; நிருவாகத்திற்குட் பட்டிருக்கும் யாவரும் தேவர்களாகி விடுவர்; என்ன, யாவுமே தெய்வப் பிறவிகளாகிவிடும். இதற்கு மேலும் ஒரு படி செல்ல நான் விரும்புகிறேன். இந்த நிலவுலகம், அதாவது ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து வாழ்கின்ற இந்தஉலகம் தெய்வ லோகத்தைக் காட்டிலும் மேலான உலகமாகி விடுமென்று நான் கருதுறேன். எப்படி? பிருகதாரண்யக உபநிஷதத்தில் ஒரு கற்பனை நிகழ்ச்சி வருணிக்கப்படுகிறது. பிரம்ம தேவனிடம் பயின்ற வந்த தேவர்கள், அசுரர்கள் மனிதர்கள் ஆகிய முப்பிரிவினரும், பயிற்சி முடிந்ததும், தங்கள் ஆசிரியனை, அதாவது பிரம்ம தேவனை நோக்கி எங்களுக்கு விடை கொடுக்கு முகத்தான் ஏதேனும் உபதேசம் அருளுங்கள் என்று முறையே கேட்டார்கள். அதற்கு பிரம்ம தேவன், போகத்தை அனுபவித்து அனுபவித்துச் சலித்துப் போன தேவர்களைப் பார்த்து, அடக்கத்தைக் கையாளுங்கள்; அதாவது எதிலும் நிதானமாயிருங்கள் என்றருளினான். கொடுமைகள் பல செய்து செய்து சலித்துப் போன அசுரர்களை நோக்கி, எல்லோரிடத்திலும் தயை காட்டுங்கள் என்றருளினான். பலவித துக்கங்களில் மூழ்கி மூழ்கி எழுந்து கொண்டிருந்த மனிதர்களைப் பார்தது, ஆசையை அடக்கி உங்களிடம் இருப்பதை உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்குக் கொடுங்கள் என்றருளினான். இவைகளைப் பற்றிச் சொல்லப்படும் வியாக்கியானங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். பெண்ணினத்திற்குப் பொருந்துகின்ற முறையில் இந்தஉபதேசங்களை வைத்துப் பார்ப்போம். எந்தத் தன்மைகள் தேவர், அசுரர், மனிதர் ஆகிய மூவரிடத் திலும் இருக்க வேண்டுமென்று கூறப்பட்டதோ அந்தத் தன்மைகள், அதாவது நிதானம், தயை, தியாகம் ஆகி மூன்றும் பெண்களிடத்தில் இயல்பாகவே அமைந்திருக்கின்றன இல்லையா? தவிர, அவர்கள் எதிலும் சலிப்புக் கொள்ள மாட்டார்கள். சிறப்பாக, மற்றவர்கள் சுகத்தின் பொருட்டு, துன்பத்தை அனுபவிக்கின்ற விஷயத்தில் அவர்களுக்குச் சலிப்பு ஏற்படுவதேயில்லை. பொதுவாகவே, துன்பத்தை அனுபவிக்கிற விஷயத்தில், பெண்களும் ஆண்களும் நிரம்ப வித்தியாசப் பட்டவர்களாயிருக்கிறார்கள். ஒரு பெண் மகள், துன்பத்தை அனுபவிக்க வேண்டிய அவசியத்திற்குட்பட்டுவிட்டால் அதைப் புன்சிரிப்போடு ஏற்று அனுபவிக்கிறாள். அப்படி அனுபவிப்பது தன் கடமையென்று கருதி அனுபவிக்கிறாள். துன்ப அனுபவத்தினால் அவள் உடல்பலவீனப்படலாமோ என்னவோ, உள்ளம் பலவீனப்படுவதில்லை. அதற்கு மாறாக அது புதிய சக்தியைப் பெறுகிறது; வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டுமென்பதில் அவளுக்கு அதிக உற்சாகம் தருகிறது. ஆண் மகனோ தன்னிடத்திலேயுள்ள போராடுஞ்சக்தியின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்து, துன்பத்தை எதிர்த்துப் போராடு கிறான். இதனால் அவன் உடலும் உள்ளமும் பலவீனப்படுகின்றன; தோல்வியடைகிறான். பிறகு என்ன? வாழ்க்கையிலே சலிப்பு; உலகத்தின் மீது வெறுப்பு. மரணத்தின் மீது அவன் மனம் செல்லுகிறது. பிரம்ம தேவன், பொதுவாக மனிதர்களைப் பார்த்து, கொடுங்கள் என்று சொன்னதாகச் சொல்லப் பட்டாலும், அது சிறப்பாக ஆண் மக்களைப் பார்ததுச் சொன்னதாகக் கொள்வது பொருத்தமற்றதாயிராது. ஏனென்றால், ஆண் மக்களுக்கு, கொடுப்பதற்குப் பதில் வாங்குவதற்கே அதிகம் தெரியும். வாங்க வாங்க துன்பம்; கொடுக்கக் கொடுக்க இன்பம். இந்தச் சூட்சமத்தை ஆண் மக்கள் அறிவதில்லை. துன்பத்தினின்று விலகி இன்பத்தின் அருகே செல்ல வேண்டுமானால் மனிதன் கொடுக்க வேண்டும்; அதாவது தன்னுடைய அறிவு ஆற்றலை, உழைப்புச் சக்தியை பிறர் நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும். இதற்கே தியாகம் என்று பெயர். எனவே கொடுக்கத் தெரிந்து கொள்ளாத ஆண் மக்களே, கொடுக்கத் தெரிந்து கொள்ளுங்கள்; தியாக சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள். துக்கத் தினின்று விடுதலை பெறுவீர்கள் என்றே பிரம்மதேவன் உபதே சித்தருளினானென்று கருதலாமல்லவா? பெண்மக்களுக்கு இந்த உபதேசம் தேவையில்லை. ஏனென்றால், தியாகஞ் செய்வதே அவர்கள் தொழில். அகங்குளிர, முகம் மலர, கொடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அவர்களிடந்தான் செல்ல வேண்டும். எனவே, அன்பு, அடக்கம், நிதானம், தயை, தியாகம் இப்படிப்பட்ட மேலான பண்புகள் பலவற்றைக் கொண்டதே பெண் தன்மை என்பது தெளிவாகிறது. இந்தப் பெண் தன்மையைப் பூரணமாகத் தெய்வ லோகத்தில் காணமுடியாது. ஏனென்றால், அங்கு வசிக்கும் தேவர் களிடத்தில் அடக்கமும் நிதானமும் குறைவல்லவா? அவை நிறையத் தேவை என்று தானே பிரம்மதேவன் அவர்களுக்கு உபதேசித் தருளினான்? ஆகவே, மேற்சொன்ன மேலான பண்புகள் பலவும் இந்த நிலவுலகத்தில் நிலவுமானால் அதனைத் தெய்வலோகத்தைக் காட்டிலும் மேலான உலகமென்று ஏன் துணிந்து சொல்லக்கூடாது என்று தான் நான் கேட்கிறேன்.? பெண்மையை வழுத்திக் கொண்டு வெகு தூரம் போய்விட்டேனோ என்னவோ? ஆனால் யுகக் கணக்கில் வழுத்திச் சென்றாலும் நான் சலிப்படைய மாட்டேன். ஏனென்றால் பெண்மையைப் பற்றிப் பேசப் பேச, எழுத எழுத, என் உள்ளம் தூய்மை யடைந்து வருவதாக உணர்கிறேன். அப்படியிருக்க பெண்மையை வழுத்தாமலோ வாழ்த்தாமலோ என்னால் இருக்க முடியுமா? பெண்மை என்னும் செடியானது வளர்ந்து தாய்மை என்னும் கொடியாகப் படாந்து, குழந்தைமை என்னும் நறுமலரை நல்குகிறது. இந்த மூன்றையும் பெண்மை, தாய்மை, குழந்தைமை ஆகிய மூன்றையும் தனித்தனியாகப் பிரித்து வெவ்வேறு கோணங்களில் வைத்துப் பார்க்கலாமாயினும், இவை, ஒன்றில்லாவிட்டால் மற்றொன்று இல்லையென்னும்படி தொடர்பும் இயைபுமுடையவை. இதை மனத்தில் கொண்டு, இம்மூன்றைப் பற்றிய கட்டுரைகளை வரிசைப்படுத்தி இந்நூலில் இடம் பெறச் செய்திருக்கிறேன். இந் நூலிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு பெயர்களுடன் வெவ்வேறு பத்திரிகை களில் வெளிவந்தவை. ஒரு சில இந்நூலுக்கென்ற எழுதப்பட்டவை. அனைத்திற்கும் அடிப்படையில் ஒரே கருத்தோட்டத்தைக் காணலாம். ஆணுலகமே. பெண்ணுலகத்தைப் பார்; தலை வணங்கு; புனித மடைவாய்! வாழ்க பெண்மை! தியாகராயநகர் சென்னை - 17 28.2.1960 1. பெண்மையிலேதான் வாழ்வு பெண்ணுலகம் இருக்கிறதே, அஃது ஒரு தனி உலகம். அங்கே புயற்காற்று அடிப்பதில்லை. வாழ்க்கையிலே ஏற்படும் சூறாவளிகளி லிருந்து தப்பித்துத் தஞ்சம் புக மனிதன் அந்த உலகத்தையே நாடிச் செல்கிறான். அங்கே ஆனந்தமும் அன்பும் தாண்டவம் செய்கின்றன. குற்றமற்ற தன்மையும் அமைதியும் கூடி வாழ்கின்றன. அங்கே சந்தேகங் களில்லை; பொறாமைகளில்லை; இரண்டு நாவுகள் படைத்த பொய்மையும் அங்கு இல்லை. பழித்தல் என்னும் விஷமும் அங்குக் கிடையாது. அதனைச் சாந்தம் என்பது கவிந்து காப்பாற்றுகிறது. அங்கே இல்லை என்ற பேச்சே இல்லை. எப்பொழுதும் நிறைவுதான். அந்த உலகத்திற்குள் மனிதன் நுழையும்போது, தன் துக்கங்களை யெல்லாம் மறந்து விடுகிறான். கவலைகள் பறந்தோடுகின்றன. வாழ்க்கையிலே அடைந்த ஆசாபங்கங்கள் அவன் ஞாபகத்திற்கு வருவதே கிடையாது. உடனே தன் இருதயத்தை, நம்பிக்கைக்கும் இன்பத்துக்கும் திறந்து விடுகிறான். அப்படிப்பட்ட உலகம் எது? ஒழுக்கமுள்ள ஒரு பெண்ணின் நிருவாகத்தின் கீழ் நடை பெற்று வரும் ஒழுங்கான குடும்பந்தான். பெண்கள் - அந்தப் பெண் தெய்வங்கள் - கடமைக்காக எதையும் தியாகம் செய்யச் சித்தமாயிருக்கிறார்கள். அவர்களிடத்தில் முடியாது என்பது கிடையாது. அன்பு, கௌரவம், நிஷ்கபடம், மதம் ஆகிய இவற்றைக் காப்பாற்றுவதற்குச் சிறிதும் பின் வாங்கமாட்டார்கள். சந்தோஷத்தின் குரலையோ அதிகாரத்தின் தொனியையோ அவர்கள் கவனியாமல் செல்லலாம். ஆனால் எங்கே துக்க ஓசை கேட்கிறதோ அங்கே உடனே காது கொடுத்துக் கேட்பார்கள். நோயாளிகளின் அறையிலே, சாகுந்தறுவாயிலுள்ளவர்களின் தலையணைக்குப் பக்கத்திலே, இறந்து போனவர்களின் சவக்குழிக்கு அருகிலே, மதத்தின் பலி பீடத்திலே பெண்களை நிச்சயமாகப் பார்க்கலாம். அவர்களில்லாவிட்டால் அவர்களுடைய அநுதாப மாவது அங்கே இருக்கும். பெண், இயற்கையிலேயே அச்சமுடையவள்தான். காற்றுக் கூட அவள் மீது வேகமாக வீச அஞ்சும். மெல்லியலாள் தான். ஆனால் சில சமயங்களிலே - சிறப்பாகக் கடமையை நிறைவேற்ற வேண்டிய சந்தர்ப்பங் களிலே - ஆபத்தைப் பார்க்கிறாளில்லை. அசாதாரணமான தைரியம் அவளிடத்திலே பிறந்து விடுகிறது. பின்னால் என்ன விளையுமோ என்றுகூட அவள் கவலைப்படுவதில்லை. அப்பொழுதுதான் அவள் ஒரு புதிய சக்தி பெற்று விளங்குகிறாள். அந்தச் சக்தி, துன்பங்களை வலிய ஏற்பதில்லை. அப்படி வலிய வந்தால் அதற்குப் பயந்து ஓடுவது மில்லை; முணுமுணுக்காத, செய்வினைக்கு இரங்காத ஓர் உன்னத நிலையை அடைந்துவிடுகிறாள். துன்பத்திலே அவள் காட்டும் சகிப்புத்தன்மை, மரணத்தையும் சில சமயங்களில் வென்று விடுகிறது. நமது அதிருஷ்டம் மாறிவிடலாம்; செல்வாக்கெல்லாம் போய் விடலாம்; ஒழுக்கத்திலே நாம் நிலைதவறிவிடலாம். ஆனால் நமது தாய், நம் மீது வைத்திருக்கும் அன்பு மட்டும் மாறாது. தனது மக்களின் வளர்ச்சியிலே அவள் எப்படி இன்பத்தைக் காண்கிறாளோ அப்படியே அவர்களுடைய வீழ்ச்சியிலும், அவர்களுக்கேற்படுகிற அகௌரவத்திலும் அவள் துக்கத்தை அடைகிறாள். மக்களின் நிலையைக் கண்டு தாயின் இதயத்தி லிருந்து ரத்தம் வடிகிறது; அடக்கியும் அடங்காமல் அவள் கண்களிலிருந்து நீர் வடிகிறது. அவர்கள் நேரில் இருக்கிறபோது, அவள் கண்கள் அவர்களுடனேயே சுற்றித் திரிகின்றன. அவர்கள் நேரில் இல்லாதபோது அவர்களுக்குப் பின்னால் அவளுடைய ஆத்மா சென்று கொண்டிருக்கிறது. சலிப்புக் கொள்ளாத பொறுமையோடு, முடிவு காணாத தன்னல மறுப்போடு, அவள் - அந்தத் தாய் - தன் மக்களின் சுகத்திற்காகவும் சந்தோஷத்திற்காகவும், தனது எல்லாவற்றையும் தியாகம் செய்து விடுகிறாள். அவள் காட்டும் அநுதாபம் எல்லாராலும் உணரப்படுகிறது. அவள் கூறும் ஆறுதல் மொழிகள் மக்களின் ஆன்மாவிற்குச் சாந்தியளிக் கின்றன. அவள் காட்டும் அன்போ, வாழ்க்கையிலே மாற்றமில்லாதது; மரணத்திலே பலமுடையது. அவள் தன் கடைசி மூச்சையும் தன் குழந்தைகளின் நன்மைக்காகவே விடுகிறாள். துரதிருஷ்டமாகிற அம்புகள் நம்மீது வந்து விழும்போது, தாயன்பு அவைகளைத் தகைந்து நிற்கிறது; துன்பத்திலிருந்து நம்மை உயரத் தூக்கிவிடுகிறது; நோயின்போது தலையணையாயிருந்து உதவுகிறது. தலைவலி என்றால், அந்த வலியைப் போக்க, தாயின் கையன்றோ விரைந்து வருகிறது? உலகமெல்லாம் நம்மை உறுத்துப் பார்த்தபோதிலும் தாயின் புன்சிரிப்பிலல்லவோ நாம் அடைக்கலம் புகுந்து கொள்கிறோம்? தொட்டிலிலே குழந்தை தூங்குகிறது; அல்லது நோயாய்ப் படுத்திருக் கிறது. அருகே நிற்கின்ற தாய் அதனை ஆட்டுகிறாள்; பாடுகிறாள்; அதன் மீது ஈ கொசு வராதபடி விசிறியாலோ, முந்தானையாலோ வீசுகிறாள். ஆனால் குழந்தையின் முகத்தோற்றத்தில் ஏதேனும் மாறுதல் உண்டானால் தாயின் முகத்திலே எவ்வளவு சீக்கிரமாக மாறுதல் உண்டாகிறது? குழந்தை நிம்மதியாகத் தூங்க வேண்டுமென்பதற்காக, எத்தனை இரவுகள் தூங்காமல் விழித்திருக்கிறாள்? இந்தத் தாயன்புக்குச் சமமாக, உலகத்திலே வேறெந்தச் சக்திதான் இருக்கிறது? தனது குழந்தை, பிற்காலத்திலே சுகமாக வாழ வேண்டுமென்பதற்காக, எத்தனை பகல்கள் உழைப்பு! எத்தனை இரவுகள் விழிப்பு! தனது சுகங்களை எத்தனை தரம் தியாகம் செய்திருக்கிறாள்! ஓ! அந்தத் தாயன்பு, மோட்ச உலகத்தின் ஓர் அமிசம்; பெண்மையின் ஆன்ம பொக்கிஷத்திலிருந்து வரும் களங்கமற்ற ஜோதி; குழந்தைகள் துன்பமாகிற இருளிலே மயங்குகிறபோது, அவர்களுக்கு வழிகாட்டும் தூண்டா விளக்கு. நம்மோடு பாலியத்தில் படித்த சிநேகிதர்கள் நம்மை மறந்து விடலாம். நமது பெயரின் மீதும் செல்வத்தின் மீதும் களங்கமும் வறுமையும் விழலாம். நமது தகப்பன் கூட, நீயார்? வெளியே போ என்று நம்மைத் துரத்திவிடலாம். ஆனால் தாயன்போ சூரியனைப்போல் அழியாதது. அவள் வாழ்க்கையோடு அவள் அன்பு பின்னிக் கொண்டிருக் கிறது. ஒன்று அழிந்தால்தான் மற்றொன்று அழியும். அவள் நா, குழறக் குழற கூறும்:- நீ என்னுடைய குழந்தை: உலகமெல்லாம் உன்னை வெறுத்த போதிலும் நீ என் குழந்தைதான். தன் குழந்தைக்கு நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கை தாய்க்கு எப்பொழுதுமே இருக்கும். 2. பெண்மை பெண்மை என்பது ஒரு பண்பு. இஃது உருவங்கடந்து நிற்பது; பாலுணர்ச்சிக்கு அப்பாலிருப்பது. ஆனால் மனிதன் - ஆண்மகன் - இதனை உருவத்தில் இறக்கி வைத்தே பார்க்கிறான்; பெண்பாலென்று பிரித்து வைத்தே பேசுகிறான். என்ன விந்தை இது! இடத்திலோ காலத்திலோ, எதிலும் எல்லை கடந்து நிற்கின்ற எதனையுமே இப்படித்தான் பார்க்கிறான் இவன்; பேசுகிறான் இவன். உண்மையென்பது, ஒரு சிலருடைய உரிமைப் பொருள்! அன்பு என்பது, உற்றார் உறவினர், அறிந்தவர் தெரிந்தவர் இவர்களுக்கு மட்டும் வழங்கப்படவேண்டிய பிரசாதம்! அழகா? நம்முடைய சொந்த சொத்தல்லவா அது! பக்தியா? எனது என்ற எல்லைக்குள் சுழன்று ஆடுகின்ற பம்பரம்! இப்படி எல்லை யில்லாதன வற்றிற்கெல்லாம் எல்லை வகுத்துக் காட்டி அதற்குள்ளே அவைகளைச் சிறைப்படுத்திவிட்ட மனிதன், அவைகளை எவ்வளவு நெருக்கமாகச் சிறைப்படுத்தி வைக்கிறோமோ அவ்வளவுக்கு நாம் அறிவிலே வளர்ச்சி யடைந்து வருகிறோம்; நாகரிகத்திலே முதிர்ச்சியடைந்து வருகிறோம் என்று கொக்கரிக்கும் மனிதன், பெண்மையையும், உருவத்திலே சிறை வைத்துப் பார்க்கிறான். உணர்ச்சியை ஊட்டுகின்ற கருவியென்று கருது கிறான். மனிதனே! உன்னைச் சபிக்கலாமாவென்று தோன்று கிறது. ஆனால் உனது அறியாமையைக் கண்டு இரங்கவே வேண்டி யிருக்கிறது. பெண்மையை, உருவங்கடந்த நிலையிலே, உணர்ச்சிக்கு அப்பாற் பட்ட இடத்திலே வைத்துக் காண்டல் சாத்தியமாவென்று கேட்கலாம். உலகத்திலே, தமக்காக வாழ்கின்றவர்களுக்கு – இவர்கள் தானே பெரும்பாலோராயிருக்கின்றனர்! - இது முற்றிலும் சாத்தியமில்லைதான். ஆனால் பிறருக்காக வாழ்கின்றவர்களுக்கோ இது சாத்தியமாகவே இருக்கிறது. வேண்டுமானால் ஓரளவு சாத்தியமாயிருக்கிறதென்று சொல்லிக்கொள்ளுங்கள். அது வேறு விஷயம். அசாத்தியமல்லவே இது? அசாத்தியம் என்று வைத்துக் கொண்டாலும், இந்த அசாத்திய நிலையை எட்டியாவது பார்த்துவிட வேண்டுமென்று ஆவல் கொள்வதே, முயற்சி செய்வதே ஒரு கடினமான சாதனையல்லவா? பாகவதத்திலே நாம் சந்திக்கும் சுகப் பிரமம், இந்த அசாத்திய நிலையை அடைந்து விட்டாரென்று சிலரும், இல்லை, இல்லை, எட்டித்தான் பார்த்தாரே தவிர அடையவில்லையென்று வேறு சிலரும் கூறுவர். இஃதெப்படியோ, அவரைத் தான் கேட்கவேண்டும். எட்டித்தான் பார்த்தாரென்று வைத்துக் கொண்டபோதிலும், அதுவே, மற்றவர்கள் இருக்கின்ற நிலைக்கு வெகு தொலைவி லில்லையா? பூமியிலிருந்து ஆகாயம் எவ்வளவு தொலைவில் இருக்கிறதோ அவ்வளவு தொலைவில் அவர் நம்மிலிருந்து நிற்கிறார். ராமாயணத்திலே நமக்குக் காட்சி தரும் கலைக் கோட்டு மாமுனிவன், பெண்மையை உருவமாகக் கண்டறியாமலே வெகு காலம் இருந்தான்; பின்னர் உருவமாகக் கண்டான்; உணர்ச்சி வசப்பட்டு விட்டான். ஒரு படி இறக்கந்தான் இவனைப் பொறுத்தமட்டில். ஆனால் இவனுடைய இறக்கம் நாட்டுக்கு ஏற்றமாயிருந்தது. கிரேக்க ஞானியாகிய ஸாக்ரட்டீ, பெண்ணோடு வாழ்ந்தான்; அந்த வாழ்க்கையிலிருந்து மக்களென்னும் மலர்களும் பூத்தன. ஆனால் அவனுக்கு - ஸாக்ரட்டீஸுக்கு - பெண்மையை, உருவங்கடந்த நிலையிலே, பாலுணர்ச்சிக்கு அப்பாற்பட்ட நிலையிலே வைத்து அனுபவிக்க நன்கு தெரிந்திருந்தது. இதையே மெய்க்காதலென்று கூறி மகிழ்ந்தான். நமது தாய் நாட்டின் ஞான பரம்பரையிலே வந்த ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் பெண்ணோடு தான் வாழ்ந்தார்; ஆனால் அந்தப் பெண்மையில் இறைமையைக் கண்டார். பாலுணர்ச்சியென்பது அவரை அணுகவே இல்லை. ஸ்ரீ சாரதாமணி தேவியின் சேவையைப் பெறுவதிலே அவர் இன்பம் நுகர்ந்தார். ஸ்ரீ சாரதாமணி தேவியும் அவருக்குச் சேவை செய்வதிலே இன்பங் கண்டார். பாலுணர்ச்சிக்கு அப்பாற்பட்ட நிலையில் நின்றுதான் இருவரும் தாம்பத்ய வாழ்க்கை நடத்தி னார்கள். ஸ்ரீ ராம கிருஷ்ணர், தம்மை விட்டுப் பிரிந்ததும் தாயே, தாயே என்று ஸ்ரீ சாரதாமணிதேவி கதறியழுதார். அவருடைய மேலான நிலையை எடுத்துக் காட்டுவதாக இல்லையா இது? இந்த மாதிரி உறவு கொண்டாடிக் கொண்டு உலகத்திலே உலகத்திற்காக வாழ்ந்தவர் எத்தனையோ பேர். இவருள் சரித்திரத்தில் இடம் பெற்றவர் சிலர்; இடம் பெறாதவர் பலர். பெண்மையைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்த்தோமானால், அதில் நிறைந்திருக்கிற விபரீத முரண்பாடுகள் நம்மைத் திகைக்கவே செய்யும். அது - பெண்மை - தென்றற் காற்று; ஆனால் சந்தர்ப்பம் வரின் சண்ட மாருதம். மலரினும் மென்மையானது; ஆனால் மலைப் பாறையினும் கடினமாகி விடக்கூடியது. காலைப் பனியினும் குளிர்ந்தது; ஆனால் எரி நெருப்பையும் எரித்து விடவல்லது. அடங்கிப் போகுந் தன்மையில் அதை யாரும் மிஞ்ச முடியாது; ஆனால் அவசியம் நேரிடுகிற பொழுது அதிகாரஞ் செலுத்த அதற்குத் தெரிகிற மாதிரி வேறு யாருக்கும் தெரியாது. தேனைப்போல் இனிப்பது அது; ஆனால் வேப்பெண்ணெய் போலாகி விடவும் அதற்குத் தெரியும். எளிமையை அழகுபடுத்திக் காட்டுவதில் அது மிகவும் கெட்டி; ஆனால் ஆடம்பரமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள அது முனைந்துவிட்டால், அரசனது ஆதான மண்டபம் அதனிடம் பிச்சை வாங்கவேண்டியதுதான். பெண்மையென்பது ஒரு பண்பு என்று முதலில் கூறினோம். ஒரு பண்பு தானா? பல பண்புகள். நற்பண்புகள் பலவற்றின் சேர்க்கைதான் பெண்மை. இனிமை, பொறுமை, நிதானம், அழகு, தியாகம் இவை பலவற்றின் திரட்சிதான் பெண்மையென்ற பெயரைப் பெற்றிருக்கிறது. நுண்கலைகளென்று போற்றப்படு கின்ற இசை, நடனம், ஓவியம் முதலியன இதனிடம் அடைக்கலம் புகுந்து பெருமையடைகின்றன. பெண்மையானது, தாய்மையில் விளக்கம் பெறுகிறது; புனித மான அந்த நிலையில், தன்னுடைய சிருஷ்டி சக்தியை வெளிப்படுத்து கிறது; உலகை வாழ வைக்கிறது. தாய்மைக்கு முன்னே எல்லோரும் தலைவணங்க வேண்டியதுதான். பெண்ணாசை விட்ட பேராண்டிகளும் சரி, வணங்காமுடி மன்னரும் சரி, எல்லோரும் தலைவணங்கின ரென்பதைச் சரித்திரத்தில் பார்க்கிறோம். முற்றத்துறந்த பட்டினத்தடி களும், சங்கரரும், தங்கள் தாய்மார்களைத் துறக்கவில்லை.சிலுவையிலே அறையப்பட்ட காலத்திலும் ஏசுநாதர், தமது தாயை மறக்கவில்லை. ஐரோப்பாவையே கதி கலங்கச் செய்திட்ட நெப்போலியன், தன் தாய்க்கு முன்னே தலைகுனிந்து நின்றான். காடு மேடுகளை யெல்லாம் புலிபோல் பாய்ந்து கடந்த சிவாஜி மகாராஜன், தன் தாயின் சந்நிதியிலே பூனைபோல் அடங்கி ஒடுங்கி நின்றான். தாயன்புக்குச் சமமானது, உலகத்தில் வேறொன்றுமில்லையென்று கூறிப் போந்தனர் அறிஞர். உலகத்திலே அற்ப சொற்பமாக வேனும் பரவிக் கிடக்கின்ற அன்பு, தாயுள்ளமாகிற ஊற்றிலிருந்து பிறந்ததுதான்; வளர்ந் திருக்கிற அறிவு, தாய்மடியிலிருந்து உற்பத்தியானதுதான். பார்க்கப்போனால், தாய்மை என்பது என்ன? இறைமையின் பிரதிநிதி; வருங்கால சந்ததிகளின் வாழ்க்கைப் பாதையைச் செப்பனிட்டுக் கொடுக்கும் உருளை; சீலமென்னும் குன்றின்மீது எரியும் விளக்கு; ஓயாத உழைப்பின் நீங்காத மௌனம். வளர்க பெண்மை! வாழ்க தாய்மை! 3. காதல் காதல், தன்னலம் பாராதது; கைம்மாறு கருதாதது; உள்ளுந் தொறும் உள்ளத்தில் உவகை அளித்துக் கொண்டிருப்பது. காதல், உருவத்தினால் அளவிடப் பெறாதது; காலத்தினால் கோடிடப் பெறாதது; பேச்சினால் கட்டுப் பெறாதது. அது, தனிமையிலே வளர்கிறது; மௌனத்திலே மணம் வீசுகிறது. காதலை அறிவினால் ஆராய முடியுமா? உணர்ச்சியினால் அளக்க முடியுமா? இவையிரண்டிற்கும் மேற்பட்டதல்லவோ காதல்? ஒருவன் அல்லது ஒருத்தியின் இதயத்தில் சிறு பொறியாகப் பிறக்கிற இந்தக் காதல், மற்றொருத்தி அல்லது மற்றொருவனுடைய இதயத்தைப் பற்றிக் கொண்டு இருவரிடத்திலும் சேர்ந்து பெரு நெருப்பாக எரிகிறது. இந்த எரியிலே இருவரும் கைகோத்துக் கொண்டு குளிக் கிறார்கள். அப்பொழுதுதான் இவர்களுக்குத் தண்ணீரிலே குளித்தால் என்ன சாந்தி உண்டாகுமோ அந்தச் சாந்தி உண்டாகிறது. இருவரும் பிரியாமலே இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இந்த விருப்பம் அதிகரிக்க அதிகரிக்க, இருவருடைய மனமும் ஒரு மனமாகி விடுகிறது. ஈருடல் - ஒரு மனம் என்ற நிலையை யடைகிறார்கள். நாளா வட்டத்தில் ஈருடல் என்ற பேச்சே அடங்கிப் போய் விடுகிறது. ஏனென்றால் உடலுறவு தேவையில்லாத நிலையில் உடலைப் பற்றிய பேச்சு உண்டாகா தல்லவா? அதிருஷ்டத்திற்காகவோ துரதிருஷ்டத்திற்காகவோ இருவரிலே ஒருவர் பிரிய நேரிட்டால் மற்றொருவருடைய நிலை என்னவாகிறது? காதலரின் பிரிவு நிலையிலே, அவர்களுக்குச் சந்திரன் சூரியனாகக் காய்கிறான், சந்தனக் குழம்பு அக்கினிக் குழம்பாகப் படுகிறது, உடல் இளைத்துப் போகிறது என்றெல்லாம் கவிஞர்கள் வருணித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இவையெல்லாம் நிஜந்தானா அல்லது வெறுங் கற்பனையா என்ற ஆராய்ச்சியில் இப்பொழுது நாம் இறங்க வேண்டுவ தில்லை. ஆனால் ஒன்றுபட்ட தம்பதிகள் பிரிந்துவிட்டால், ஏதோ ஒன்றை இழந்துவிட்டது போன்றதோர் உணர்ச்சி அவர்களுக்கு இருந்து கொண்டிருக்கிறது; அவர்களுடைய மனம் அவர்களிடத்தில் அநேகமாக இருப்பதில்லை; எங்கேயோ பறந்துசென்று கொண்டிருக்கிறது. இன்னும், அவர்களுக்கு உணவில் ருசி இருப்ப தில்லை; நித்திரையில் நிம்மதி இருப்பதில்லை. இவையனைத்தும் காதலின் சேஷ்டைகள். ஆனால் இந்தச் சேஷ்டைகளினால்தான் அந்தக் காதல் இனிமை பெறுகிறது. காதலுடன் பிறந்தது துன்பம். காதல் வளர வளர, துன்பத்தை அனுபவிக்க வேண்டிய அவசியமும் அதிகரிக்கிறது. ஆனால் அந்தத் துன்பத்தை மீறிச் செல்வதில்தான் காதல் சோபிதமடைகிறது. ஒருவன் ஒருத்தியைச் சந்திக்க வேண்டுமென்று விரும்புகிறான். அந்தச் சந்திப்பு நியாயமான சந்திப்புதான்; கள்ளச் சந்திப்பல்ல. இருந்தாலும் அதற்கு எத்தனை இடையூறுகள்? எத்தனை பேருடைய பொறாமைப் பார்வைகள்? இவைகளையெல்லாம் மீறிச் செல்வதிலேயே காதலர்கள் இன்பம் நுகர்கிறார்கள்; வெற்றி காண்கிறார்கள். சந்திப்பிலே இன்பம் பூர்த்தியடை கிறது. காமத்திற்குக் கண்ணில்லை யென்று சொல்வார்கள். இருக்கலாம். ஆனால் காதலுக்குக் கண்ணுண்டு; பார்வையுமுண்டு. அந்தப் பார்வை நல்லதையே பார்க்குந் தன்மையது; நல்லதையே அடையுந் தன்மையது. அந்த ஒன்றிலே தன்னை இழந்து விடுந் தன்மையது கூட. ஒருவனையும் ஒருத்தியையும் பிணைத்து வைப்பது மட்டும் காதலல்ல. அந்தப் பிணைப்பிலே காதல் ஆரம்பிக்கிற தென்று சொல்லலாம். அவ்விருவரையும், தங்களை அழித்துக்கொண்டு உலகத் திற்காக வாழுமாறு தூண்டுவது எதுவோ அது காதலின் வளர்ச்சி. அந்தத் தூண்டுதலுக் குட்பட்டு அவர்கள் வாழ்கிற வாழ்க்கையிலே, செய்கிற தொண்டிலே அந்தக் காதல் விகாசமடைகிறது. அந்த வாழ்க்கையினாலும் தொண்டினாலும் மற்றவர்கள் பயன் பெறுகிறபோதுதான் அந்தக் காதல் பூரணத்துவம் பெறுகிறது. இங்ஙனம் உலகம் பூராவும் வியாபித்துக் கொண்டிருப்பதனால் தான், குணம், நிறம், காலம் இவைகளுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால் தான், காதலை புனிதமானதென்றும், தெய்விகத் தன்மை வாய்ந்த தென்றும் பெரியோர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட மகத்துவமான காதலைப் பற்றி அடிக்கடி பேசியும், எழுதியும் அதற்குக் களங்கத்தை உண்டு பண்ணலாமா? 4. உனக்காக வாழ்வேன் என் காதலா! உள்ளத்தின் அரசே! என் தெய்வமே! மரிப்பதற்குத் தயாராயிருந்தேன். ஆனால் உனக்காக வாழத் தீர்மானித்துவிட்டேன். உன்னை எதிர்பார்த்து நிற்கிறேன். அதனால் சந்தோஷமும் அடைகிறேன். அந்தச் சந்தோஷத்திற்காகவாவது உயிர் வாழக் கூடாதா? உன்னடியிலே என்னைப் பலி கொடுக்கத் தயார். அதனால் பலனில்லை யென்று நீ கருதினாலும் என் கடமையைச் செய்கிறேன் என்ற திருப்திக்காகவாவது நான் உயிர் வாழக் கூடாதா? 5. உன்னை நான் எப்படி மறக்க முடியும்? நான் தனியாகவே ஜீவன யாத்திரை செய்து கொண்டிருந்தேன். என் மனத்தில் வேறொரு விசாரமும் இல்லை. எங்கே சென்று கொண்டிருக்கிறேன், எங்கே செல்லவேண்டும் என்பது தெரியாமலே போய்க் கொண்டிருந்தேன். உன்னைப் பற்றிய எண்ணம் ஒன்றுதான் என் உள்ளத்தில் நிரம்பியிருந்தது. அப்படியிருக்க உன்னை நான் எப்படி மறக்க முடியும்? கண்ணில்லாத கபோதியைப் போல் இந்த வாழ்க்கையென்னும் மார்க்கத்தில் காலடி எடுத்து வைத்துச் சென்று கொண்டிருந்தேன். எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. அந்தச் சமயத்தில் நீ என் எதிரே வந்து நின்றாய். என் பார்வையை உன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டாய். உடனே எனக்கு வழிகாட்டியாயமைந்து, மனிதத்தன்மை என்ற லட்சியத்தை நோக்கிக் காலடி எடுத்து வைக்குமாறு உற்சாகப்படுத்தினாய். அப்படியிருக்க உன்னை நான் எப்படி மறக்க முடியும்? வழியிலே செல்லும்போது, என் மனம், உலகத்தின் துச்ச வார்த்தைகள், வேதனையின் புலம்பல் முதலியவைகளில் ஈடுபட்டு ஓடப்பார்த்தது. அப்பொழுது நீ என் மீது கருணை பூண்டு என்னுடைய லட்சியத்தை எனக்குக் காட்டி, நன்னெறியினின்று நழுவிச் செல்லாமல் என்னைக் காப்பாற்றினாய். அப்படியிருக்க உன்னை நான் எப்படி மறக்க முடியும்? சென்று கொண்டிருக்கும்போது இடையிலே எனக்கு களைப்பு ஏற்பட்டுவிட்டது; லட்சியத்தை அடைய முடியாது என்ற அவநம்பிக்கை உண்டாயிற்று. இனி இந்தப் பாதையிலே செல்வதில் பயனில்லை என்று தீர்மானித்துவிட்டேன். அப்பொழுது நீ, உன்னுடைய தாமரைப் புஷ்பம் போன்ற கைகளினால் என்னைத் தூக்கிவிட்டு ஊக்கமூட்டினாய்; என் மனத்தைத் திடப்படுத்தினாய். அப்படியிருக்க உன்னை நான் எப்படி மறக்க முடியும்? உலகத்தாரின் தூற்றுதல்களைக் கேட்டு என் இருதயம் மலினமடைந்து உடைந்து சுக்கு நூறாகப் போகும் போலிருந்தது. அமைதியை இழந்தேவிட்டேன். அப்பொழுது நீயல்லவோ முன் வந்து, உனது காதலால் என் இருதயத்தை நிரப்பி, அதற்கு ஒரு புதிய உயிரைக் கொடுத்தாய்? ஒரு சக்தியையும் அளித்தாய்? அப்படியிருக்க உன்னை நான் எப்படி மறக்க முடியும்? துக்கத்தின் எல்லையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த உலகமனைத்தும் சேர்ந்து என்னை வெறுக்கத் தொடங்கிவிட்டது. தனியனானேன். ஆற்றுவார் இல்லை; தேற்றுவாருமில்லை. அப்பொழுது நீயல்லவோ ஓடோடியும் வந்து காப்பாற்றினாய்? என்னுடைய ஆத்மா, என்னுடைய இருதயம், என்னுடைய வாழ்க்கையாவும் நிம்மதியான சுகத்தை யடையும் பொருட்டு, உனது பிரேமை நிறைந்த இருதயத்தில் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு விட்டாய்? இவ்வளவுக்கும் உனக்கு நான் நன்றி செலுத்துவதெப்படி? நீயே சொல், உன்னை நான் எப்படி மறக்கமுடியும்? 6. என்னை ஏன் காதலிக்கிறாய்? நாதா! நினது வடிவிலே எனது கண்ணிரண்டும் ஈடுபட்டு விட்டன; எனவே நான் குருடி! நாதா! நினது மதுர வசனத்திலே எனது செவியிரண்டும் சேர்ந்துவிட்டன; எனவே நான் செவிடி! நாதா! உன்னிலே என் இதயத்தை ஒப்புக் கொடுத்துவிட்டேன்; எனவே நான் இதய சூனியை! நாதா! இப்படியெல்லாம் நானிருக்க என்னை ஏன் நீ காதலிக்கிறாய்? 7. விடுதலை - ஆனால் கட்டுப்பட்டேன் மதுரமான ஒரு சங்கீதம் என் செவிகளை நிரப்பியது. உடனே விட்டேன் வீடு வாசலை; துறந்தேன் பந்து மித்திரர்களை; ஓடினேன் வெளியே. தேவலோகத்து அழகு ஒன்றைக் கண்டேன். பைத்தியம் பிடித்து விட்டதெனக்கு. அதன் பின்னாலேயே ஓடினேன். வாழ்க்கையின் லட்சியத்தை அடைந்து விட்டோம் என்ற உணர்ச்சி எனக்கு உண்டாயிற்று. சுகபோகங்களை யெல்லாம் உதைத்துத் தள்ளினேன். ஜனசேவை என்கிற விரதத்தை மேற்கொண்டேன். நான் நினைத்தேன் பந்த மற்றவனாகிவிட்டேன் என்று. ஆனால் எனது வாழ்க்கையின் பொக்கிஷமே! உன்னைத் தரிசித்தேன்! என் விரக்தி யெல்லாம் தலை கீழாகி விட்டது. உனது திருப்பாதங்களின் தொண்டனாகி விட்டேன். உனது காதல் கயிற்றால் என்னை இறுகக் கட்டி விட்டாய். எனது வாழ்க்கையை உன்னிடத்திலே அர்ப்பணஞ் செய்து விட்டேன். என் அன்பே! விடுதலை யடைந்தேன். ஆனால் உடனே கட்டுப்பட்டு விட்டேன். இல்லை; முக்தனும் கைதியும் ஒரே சமயத்தில் ஆகி விட்டேன்! 8. பெண் கல்வி பெண் மக்கள் அமைப்பிலும் நடை உடை பாவனைகளிலும் ஆண் மக்களினின்றும் வேறுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படும் கல்வியானது, அவர்களது அமைப்பிற்கும், பிற்கால வாழ்க்கைக்கும் ஏற்றாற்போலிருக்க வேண்டும். பெண்களின் தேக மென்மைக்குத் தகுந்தாற் போல் அவர்களுடைய அறிவும் அமைந்து கிடக்கிறது. விஷயங் களை விரைவில் கிரகிக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. ஆனால் கிரகித்த விஷயங்களை உடனே மறக்கும் சக்தியும் அவர்களிடத்தில் இருக்கிறதென்பது சிலருடைய அபிப்பிராயம். பொதுவாகவே, ஆண் மக்களின் அறிவை விடப் பெண் மக்களின் அறிவு அதிகமாகப் பண்பட்டிருக்கிறது என்று சில அறிஞர் நினைக்கின்றனர். வீணான கவலைகளிலும் பயங்கரமான சம்பவங்களிலும் பெண்மக்களின் அறிவு சென்றால் அது கலக்கமடையும். ஆதலின், அவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வியானது, அமைதியுடைத்தாய் ஆனால் அதிக மேன்மையுடைத்தாய் இருக்க வேண்டும். பெண் மக்கள், ஆண் மக்களுக்கு ஊழியம் செய்யவே பிறந்தார்கள் என்ற எண்ணம் உலகில் ஒழிய வேண்டும். குழந்தைகளைப் பெறும் யந்திரமாக அவர்களைக் கொள்ளல் அநாகரிக முடைத்தாம். ஆண் மக்களுக்குப் பெண் மக்கள் இன்றியமையாதவர்கள். பெண் மக்களுக்கு ஆண் மக்களின் உதவி வேண்டும். ஆதலின், இருதிறத்தாரும் சமமான நிலையில் இருந்து உலகவாழ்க்கையை நடத்த வேண்டுமென்ற எண்ணத்துடனேயே இருவரையும் ஆண்டவன் சம்பந்தப்படுத்தியிருக் கிறான். பெண் மக்களுக்கென்று தனியான உலகம் உண்டு; தனியான வாழ்க்கை உண்டு; தனியான நாகரிகம் உண்டு. ஆனால் அவர்களுடைய உலகம், வாழ்க்கை, நாகரிகம் ஆகிய இவை ஆண் மக்களின் உலகம், வாழ்க்கை, நாகரிகம் இவைகளோடு பிணைந்து நிற்கின்றன. இங்ஙனம் பிணைந்து நின்றாலன்றி இன்பமென்பது உலகத்தில் இராது. இந்த உண்மையை உணர்ந்து பெண் மக்களுக்குக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பண்டைக் காலத்துப் பெண் மக்கள் பெரிய கவிகளாக விளங்கினார்கள்; சிறந்த புலவர்களாயிருந்தார்கள்; யுத்த வீரர்களாகப் போற்றப் பட்டார்கள். வேதத்தின் சில பாகங்கள் பெண் மக்களால் பாடப்பட்டிருக்கின்றன. அரசியல் விவகாரங் களிலும் அவர்கள் தலை யிட்டுழைத்தார்கள். வேத காலத்தில், பெண் மக்கள், ஆண் மக்களுக்குச் சமமாக எல்லாத் துறைகளிலும் விளங்கினார்கள். ஆனால், பெண் மக்களுக்கு ஆபரணங்களான கற்பையாதல் வேறு பல நற்குணங் களையாதல் அவர்கள் இழந்து விடவில்லை. பெண் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படும் கல்வியானது, அவர்கள் பிற்காலத்தில் உத்தமத் தாய்மார்களாகவும், சிறந்த மனைவிமார் களாகவும், உயர்ந்த சகோதரிகளாகவும் விளங்கும்படி இருத்தல் வேண்டும். அவர்கள் வீட்டிற்கு மட்டு மல்லாது நாட்டிற்கும் நலஞ் செய் வோராய் இருக்கும்படி செய்ய வேண்டும். தங்கள் கற்பைக் காத்துக் கொள்ளவும் திறனற்றவர்களாய் இருக்கும்படி செய்யக்கூடாது. இத்தகைய கல்வியினாலேயே பெண் மக்களுக்கும், அவர்களின் மூலமாக நாட்டிற்கும் நலன் உண்டாகும். சங்கீதம், தாய்மொழி, இந்திய தேச சரித்திரம் இவைகளில் நல்ல பயிற்சி பெறும்படியாகப் பெண் மக்களைச் செய்ய வேண்டும். சங்கீதத்தின் பெருமை அளவிடுவதற்குரிய தன்று. முற்காலத்தில் குடும்ப திரீகள் சங்கீதத்திலும் பரத நாட்டியத்திலும் வல்லுநர்களா யிருந்தார்கள். இப்பொழுது சங்கீதத்தைப் பெண் மக்களிடையில் விருத்தி செய்ய வேண்டும். பள்ளிக்கூடங்களில் இந்திய முறையில் சங்கீதத்தைப் பெண் மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பக்திரசமான கீர்த்தனை களையும், வீரச்சுவை ததும்பும் பாக்களையும் பெண்பிள்ளைகள் சங்கீத முறைப்படி பாடினால் எவ்வளவு இன்பமா யிருக்கும் என்பதை நாம் கூற வேண்டுவதில்லை. இங்ஙனம் கற்றுக் கொடுக்கும் கீர்த்தனங்களின் பொருள்களை அவர்களுக்கு உணர்த்தி பிறகு பாடச் சொன்னாலன்றி நன்மை உண்டாகாது. பொருள் தெரியாமல் தற்காலத்துப் பெண்மக்களிற் சிலர் பாடுவதனால் அக்கீர்த்தனங்கள் உருக்குலைந்து எங்ஙனம் அல்லலுறுகின்றன என்பதை நாம் கூற வேண்டுவதில்லை. தாய்மொழிப் பயிற்சி, பெண்களுக்கு இன்றியமையாதது. தாய் மொழியைச் செவ்வனே கற்றுக் கொள்ளாத பெண்கள் சிறந்த தாய்மார் களாக விளங்க முடியாது. பல மொழிகளைப் பயிலுதல் பெண்களுக்கு மிகவும் சுலபம். ஆனால் தாய் மொழியை மறந்து, பாலியத்தில் மழலைச் சொற்களால் பெற்றோரை மகிழ்வித்தது எந்த மொழியோ அந்த அருமையான மொழியை மறந்து, அந்நிய மொழிகளில் புலமை பெற விரும்புதல் அழகுடைத்தன்று. தன் தாய் மொழியை மறக்கும் பெண்மணி தனது தாய்த் திருநாட்டை மறந்தவளாகிறாள்; தனது மதத்தை மறந்த வளாகிறாள். இங்ஙனம், தனது பாஷையை, நாட்டை, மதத்தை மறந்த பெண்ணரசி, அந்நிய மொழியினரால், அந்நிய நாட்டினரால், அந்நிய மதத்தினரால் சரி சமானமானவளாக ஏற்றுக் கொள்ளப்படுகிறாளோ? இல்லை. ஆதலின் ஒவ்வொரு பெண் பள்ளிக்கூடத்திலும் தாய் மொழியை முதற்பாடமாகக் கற்றுக் கொடுக்க வேண்டும்; அம்மொழியில் சிறந்த புலமையை உண்டு பண்ண வேண்டும். இந்திய தேச சரித்திரமே எல்லாவற்றிலும் மிக முக்கியமானது. இதைச் சரியான முறையில் கற்றுக் கொடுப்பதனாலேயே பெண் மக்களின் பிற்கால வாழ்வு பயனடைகிறது. சிறந்த புத்திரர்களைப் பெறுவதற்கும் தேச சரித்திரமே காரணமாயிருக்கிறது. அலெக்ஸாந்தரிடத்தில் தோல்வி யுற்ற போர கடைசியில் காட்டிய வீரமும், அசோகனுடைய கருணையும், மீராபாயின் பக்தியும், பத்மினிதேவி தன் கற்பைக் காத்துக் கொண்டதும், சிவாஜியின் ஆண்டகைமையும், அவனுடைய தாயின் நேசபாவமும், மங்கம்மாளின் தரும உணர்ச்சியும் எந்தப் பெண்மணியின் மனத்தைத் தான் உருக்கிவிடாது? இவர்களுடைய சரித்திரங்களைப் படித்த பெண் குழந்தைகளுக்குத் தாங்கள் அத்தகைய தாய்மார்களாக விளங்க வேண்டு மென்ற விருப்பம் உண்டாகாதா? புராணங்களிலும் இதிகாசங்களிலும் உள்ள பத்தினிப் பெண்டிர்களின் சரித்திரத்தையும், வீரர்கள், கொடை யாளிகள் முதலியவர்களுடைய சரிதத்தையும் பெண்களுக்குப் போதிக்க வேண்டும். இந்தியாவின் இயற்கை வளப்பத்தையும், வற்றாத நதிகளின் பெருக்கத்தையும், சிறந்த முனிவர்களையும் உயர்ந்த மூலிகைகளையும் தமது இருப்பிடமாகக் கொண்ட மலைகளின் பெருமையையும் பெண் மக்களுக்குப் போதிக்க வேண்டும். இந்தியாவின் அழகிய மலைகளை, ஆறுகளை, வனங்களை, கோபுரங்களை, கோயில்களைப் பிற்காலத்தில் சென்று பார்க்கும்படியான ஓர் ஆவலைப் பெண் மக்களுக்குத் தூண்டிவிட வேண்டும். இப்பொழுதுள்ள பெண் பள்ளிக்கூடங்களில் சரித்திரம் சரியாகப் போதிக்கப்படுவதில்லை. சிவாஜியை மலையெலி என்றும் கொள்ளைக் காரனென்றும் கூறும் சரித்திர புத்தகங்களை நம் பெண் மக்கள் படித்தால் என்ன பயன் உண்டாகும்? தேச சரித்திரத்தைப் படிப்பதனால் பெண் மக்களுக்குத் தேசாபிமான உணர்ச்சி உண்டாதல் வேண்டும். பண்டைக் காலத்தில் இவ்வளவு பெருமை யடைந்திருந்த இந்தத் தேசம் இப்பொழுது இவ்வளவு சீர்குலைந்து போயிருக்கிறதே என்ற உணர்ச்சி அவர்களுக்கு வரவேண்டும். சீர்குலைந்து போயுள்ள நமது நாட்டைப் பண்டை நிலைக்குக் கொண்டு வர வேண்டாமா என்று அவர்கள் எழுச்சி கொள்ள வேண்டும். இத்தகைய வழியில் இந்திய தேச சரித்திரம் கற்பிக்கப்படல் வேண்டும். ஓவியம், சிற்பம், நூல் நூற்றல், தையல், சித்திரித்தல் முதலிய துறைகளிலும் பெண்கள் இறங்கும்படி செய்ய வேண்டும். இறந்து போயிருக்கும் ஓவியத்தையும் சிற்பத்தையும் நமது பெண் மக்கள் மூலமாக உயிர்ப்பிக்க வேண்டும். ஓவியத்தில் பெண்களுக்கு இயற்கை யாகவே ஓர் ஆர்வம் உண்டு. ஆதலின் இந்தப் பாடங்கள் அவர்களுக்கு மிகவும் இன்பம் தரத்தக்கனவாயிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்தக் கலைகள் யாவும் இந்திய முறையையே அனுஷ்டிப்பனவாக இருக்க வேண்டும். குடும்ப முறைகளையும் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுத்தல் நலம். குடும்பச் சிக்கனம், குடும்பப் பாதுகாப்பு, நோய் வராது பாதுகாத்தல் முதலியன யாவும் பெண்களுக்குக் கற்பிக்கவேண்டுவது அவசியமாகும். அரசியல் விவகாரங்களையும் அவர்களுக்குப் புகட்டி வரவேண்டும். பண்டைக் காலத்தில் எந்தவிதமான ஆட்சி முறை நடைபெற்றது. இடைக்காலத்தில் எந்தவிதமான ஆட்சி முறை நடை பெற்றது, இப்பொழுது எந்தவிதமான ஆட்சி முறை நடைபெறுகிறது, இவ்வாட்சி முறைகளுக்குள்ள ஒற்றுமை வேற்றுமைகள் யாவை முதலிய யாவும் பெண்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இந்த பயிற்சியினாலேயே அவர்கள் பிற்காலத்தில் நாட்டிற்கு நன்மை செய்யும் இயக்கங்களோடு ஒத்துழைக்க முடியும். பொதுவாகக் கூறுமிடத்து, தேச முன்னேற்றத்திற்குக் கருவிகளாய் பெண் மக்கள் இருப்பதற்குரிய முறையில் அவர்களுக்குக் கல்வி போதிக்க வேண்டும் என்று கூறலாம். இப்பொழுது இந்தியாவில், தாய்நாட்டின் பொருட்டு உழைக்க வீரத் தாய்மார்கள் வேண்டும்; கற்புக்கரசிகள் வேண்டும்; இல்லொளிகள் வேண்டும்; பத்தினிக் கடவுளர்கள் வேண்டும்; பல கண்ணகிகள் வேண்டும்; பல சாவித்திரிகள் வேண்டும்; பலசாந்த் பீபிகள் வேண்டும்; பலசுல்தானா ரஜீயாக்கள் வேண்டும். இத்தகையோரை உண்டாக்கும் கல்வியே இப்பொழுது வேண்டும். தாய்மார்கள் இதற்கு முன் வருவார்களா? தங்கள் நாட்டின் பெருமையைக் காப்பாற்ற விரும்பும் பெண் மக்கள் வெளி வருவார்களா? 9. பெண்களின் சமூக அந்தது சரித்திரத்தை நாம் ஆதியிலிருந்து ஆராய்ந்து பார்த்தோ மானால், ஆண்களைப் போலவே பெண்களும் சரித்திரத்தை உண்டு பண்ணியிருக் கிறார்கள். வேண்டுமானால் திரீகளை மூலப் பொருளாகவும் புருஷர் களைப் பண்படுத்தப் பெற்ற பொருளாகவும் கூறலாம். எப்படியிருந்த போதிலும் மனித சமூகத்தின் பாதி எண்ணிக்கையின ராயுள்ள இவர்கள் உலக நாகரிக வளர்ச்சிக்குக் காரணமாய் இருந்திருக்கிறார்கள். இதை யாருமே மறுக்க முடியாது. நாகரிக தீவட்டியை முன்னே பிடித்துச் சென்றவர்கள் ஆண்களே யென்றும், அவர்களுக்குப் பின்னாலேயே பெண்கள் வந்து கொண்டிருந்தார் களென்றும் சாதாரணமாக எண்ணப்பட்டு வருகிறது. இதனாலேயே சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் இவர்களுக்கு முக்கிய தானம் கொடுக்க வில்லை. விவாக முறை, ஒழுக்க நிலை முதலியவற்றைப் பற்றிப் பேசும்போது மட்டும் எங்காவது ஓரிரண்டு இடங்களில் பெண்களைப் பற்றிய குறிப்புக்கள் வரும். அவ்வளவே தவிர, ஆண்களைப் போல் பெண்களிடத்தில் சரித்திர ஆராய்ச்சி சரியான கவனஞ் செலுத்தவில்லை. மனிதனுடைய சரித்திரம் என்றால் அது திரீயினுடைய சரித்திரமும் அல்லவா? இரண்டு பேரும் மனித சிருஷ்டிகள் தானே? இரண்டு பேருக்கும் வாழ்க்கையில் ஒரே வழி தானே? ஆதிகாலத்தில் மனிதன் குகைகளிலும் மரநிழல்களிலும் ஆற்றோரங்களிலும் வசித்துக் கொண்டிருந்த போழ்து - காட்டு மிருகங் களுடன் போராடிய போழ்து - ஆண்களின் சரித்திரமும் பெண்களின் சரித்திரமும் ஒன்றாகவே இருந்தது. ஆனால் காலஞ் செல்லச் செல்ல, மனித சமூகம் வளர்ந்து விவசாயஞ் செய்தல், யுத்தந் தொடுத்தல், கூட்டங் கூட்டமாகப் பொது விதிகளுக்குட்பட்டு வாழ்தல் முதலிய நியதிகள் ஏற்பட்டதும், இரண்டு பேருடைய சரித்திரமும் வேறு வேறாகப் பிரிய ஆரம்பித்தது. அது முதற்கொண்டு பெண்களின் அந்தது என்ற சொற்றொடரும் வழக்கில் வரத் தொடங்கியது. ஆண்களின் சரித்திரமும் பெண்களின் சரித்திரமும் வேறு வேறாகப் பிரிந்ததற்கு நான்கு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அவை (1) பால் வேற்றுமை (2) யுத்த எண்ணம் (3) பொருளாதார சக்திகள் (4) பொதுப் படையான தத்துவங்கள் என்பவை. தேக சம்பந்தமான வேற்றுமைகளைக் கவனிக்கின்றபோது ஆணை விடப் பெண் பலவீனமாயிருக்கிறாள். தாய்மை என்கிற பொறுப்பு இவள் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே ஆண்களுக்குரிய சில பழக்க வழக்கங்களென்றும், பெண்களுக்குரிய சில பழக்க வழக்கங் களென்றும் ஏற்பட்டன. மனித சமூகமானது, தான் வளர்ச்சியடையுங் காலத்தில் பல சக்திகளோடும், பல இனத்தாரோடும் போராடியிருக்கிறது. இந்தப் போராட்டம் எப்பொழுதும் பெண்களின் அந்ததுக்குப் பாதகமாகவே இருந்தது. ஏனென்றால் பெண்களின் மனப்பான்மையானது யுத்தத்தில் செல்வதே கிடையாது. அந்த மனப் பான்மையோடு இவர்களுடைய தேகமென்மையும் சேர்ந் திருப்பதனால் யுத்தத்தில் வெற்றிப் பொருள் களாக இவர்கள் கருதப்பட்டார்கள். ஆண்கள் எவ்வளவுக் கெவ்வளவு யுத்த வெறிபிடித்து அலைந்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு பெண்களின் நிலை கேவலமடையத் தொடங்கியது. ஆனால் இப்படிப் பொதுப் படையாகச் சொல்வதற்குமில்லை. சென்ற ஐரோப்பிய மகாயுத்தத்திற்குப் பிறகு பொதுவாகவே பெண்களின் அந்ததும் முக்கியத்துவமும் அதிகமாயிற்று என்று சொல்ல வேண்டும். எப்படியென்றால் யுத்த களத்திற்கு ஆண்கள் சென்று விட்டபடியால், சமூகத்தின் பொருளாதாரத் தேவைகளைப் பெண்கள் பூர்த்தி செய்து வைத்தார்கள். இதன் பிறகுதான் பெண்கள், தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அதிகமாகப் போராட வேண்டியிருந்தது. இதற்கு ஆண்கள் பலர் துணை செய்தனர் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. பொருளாதார சக்திகளைப் பொறுத்த அளவில், பெண்கள் குறைவான ஊதியம் பெற்று அதிகமான உழைப்பைச் செய்ய வேண்டியவர் களாயிருக் கிறார்கள். பெண்களின் மெல்லிய சுபாவத்தை ஆதாரமாகக் கொண்டு சமூகத்தின் ஒவ்வொரு சாராரும் தங்களுக்குச் சாதகத்தைத் தேடிக் கொள்ளப் பார்க்கிறார்கள். பொதுப்படையான தத்துவங்கள் என்று சொல்கிற அளவிலே சட்டம், ஒழுக்கம், சொத்துரிமை முதலியவை பெண்களுக்கென்று தனியாகவே ஏற்பட்டிருக்கின்றன. இனி, முற்காலத்து உலக நாகரிக தேசங்களில், பெண்கள் என்னென்ன விதமாக நடத்தப்பட்டார்கள் என்பதைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். இற்றைக்குச் சுமார் ஆறாயிரம் ஆண்டு களுக்கு முன்னே எகிப்து தேசத்தில் உன்னதமான நாகரிகம் பரவியிருந்தது. நீதி மன்றங்கள், தபால் போக்குவரத்து சௌகரியங்கள், வியாபாரப் போக்குவரத்து முதலியன யாவும் இருந்தன. அப்பொழுது ஆண்களைப் போலவே பெண்களும் வியாபாரம் செய்தார்கள்; மாஜிடிரேட், கவர்னர், ஜட்ஜ் முதலிய உத்தியோகங்கள் வகித்தார்கள்; ஆசிரியர்களாகவும், கோயில் பூசாரி களாகவும் இருந்தார்கள். ஒழுக்க விஷயத்தில்கூட ஆண்களுக்கும் பெண் களுக்கும் ஒரே மாதிரியான சட்டமே அமுலில் இருந்தது. விபசாரம் செய்த ஆண்களோ பெண்களோ நீரில் மூழ்கடிக்கப்பட்டார்கள். சுமார் மூவாயிர வருஷங்களுக்கு முந்திய காலம் வரை, கீரி தேசத்தில் பெண்களுக்குச் சம அந்தது இருந்தது. அதற்குப் பிறகு தான் பெண்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதை கிரேக்கர்கள் வெறுத்தார்கள். வர வர இவர்கள், ஆண்களின் உபயோகத்திற்காகவே இருந்தார்கள் என்னும் படியான நிலைமைக்கு வந்தார்கள். ஒழுக்கமுள்ள ஒரு பெண், வீட்டோடு இருக்க வேண்டுமென்ற எண்ணம் வர வர வேரூன்ற ஆரம்பித்தது. குழந்தைகளின் பாதுகாப்பில்கூட பெண்களுக்கு எவ்வித உரிமையும் கொடுக்கப் படவில்லை. ரோம ராஜ்யத்தில் சட்ட பூர்வமாகவே பெண்களுக்கு எல்லா உரிமை களும் அளிக்கப்பட்டிருந்தன. சொத்துரிமையும் இருந்தது. தற்போது பார்லிமெண்டில் பெண் அங்கத்தினர்கள் இருப்பது போல ரோமஸெ னெட்டிலும் ஸோயே மியா என்ற ஒரு பெண் இருந்து பல சட்டங்கள் நிறைவேறுவதற்குக் காரணமாயிருந்திருக்கிறாள். ஆனால் பிற்பாடு இது மாறிவிட்டது. பொதுவாகச் சொல்லப் போனால், பெண்களின் தியாகம், வீரம் முதலியனவெல்லாம், அவர்களுடைய நெருங்கிய உறவினர் சம்பந்தப் பட்டதாகச் சொல்லப்பட்டதே தவிர, ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதைப்போல் கொடுக்கப்படவில்லை. இதனை எல்லாத் தேச சரித்திரங்களிலும் பரக்கக் காணலாம். இந்தியாவை எடுத்துக் கொள்வோம். வேத காலத்தில் பெண் களுக்கு எல்லாவித உரிமைகளும் ஆண்களுக்குச் சமமாகவே கொடுக்கப் பட்டன. பெண்கள் கவி பாடினார்கள்; அறுவடை செய்தார்கள்; போர் புரிந்தார்கள்; கப்பல் செலுத்தினார்கள்; ஆனால் புராண காலத்தில் பெண்கள் தாழ்ந்த அந்தது அளிக்கப் பட்டார்கள். உலகியலிலும், ஆத்மார்த்தத் துறையிலும் எதிலுமே பெண்களுக்கு இரண்டாவது தானமே அளிக்கப் பட்டது. புராதன நாகரிகம் படைத்த தேசமென்று சொல்லப்பட்ட சீனாவிலும் பெண்களின் அந்தது பரிதபிக்கத் தக்கதாய் இருந்தது. பெண் குழந்தைகளின் பாதங்களைச் சிறு வயதிலிருந்தே நசுக்கி வளரவிடாமல் செய்கிற வழக்கம் இருந்து வந்ததைக் கொண்டே பெண்களை நிர்க்கதி யினராக்கி வைக்க வேண்டுமென்ற எண்ணம் சமூகத்தில் வேரூன்றி இருந்தது என்பது நன்கு புலனாகிறதல்லவா? இடைக்காலத்தில் இந்தியா முதலிய கீழ்நாடுகளில் இல்லறத்தைத் தூற்றியும் துறவறத்தைப் போற்றியும் பேசுவது சிறந்ததென்ற எண்ணம் தோன்றலாயிற்று. இது பின்னர் மேனாடுகளிலும் பரவியது. மனிதனுக்கு பிரம்மசரியம் அவசிய மென்றும், ஆனால் இது கெடுவதற்குப் பெண்களே காரணர் களாயிருக்கிறார்களென்றும், இதனால் இவர்கள் இழிவானவர் களென்றும் கூறப்பட்டன. நரகத்தின் வாயில் என்று பெண்கள் கூறப் பட்டார்கள். மேனாட்டிலும் மடங்களில் பாதிரிகளாகச் சேருவோர் பூரண பிரம்மசாரிகளாக இருக்க வேண்டுமென்றும், அதுதான் மனிதனுடைய அபிவிருத்தியின் உன்னத தான மென்றும் சொல்லப்பட்டன. பெண்கள் பேய் பிசாசுகளின் தூதர்களென்றும், இவர்களைக் கடவுள் தவறுதலாகவே சிருஷ்டித்து விட்டாரென்றும் பாதிரி மடங்களில் சொல்லப்பட்டு வந்தன. பின்னர்தான் பெண்கள் பாதிரி மடங்களில் சேர்ந்து பிரம்மசாரிணி களாய் சமய சேவை செய்யலாமென்று சொல்லப்பட்டது. பாதிரிக ளல்லாத மற்றவர்கள், சிறப்பாக உயர் குடும்பத்தினர், தாங்கள் செய்யும் எந்தக் காரியமும் பெண்களின் தயவைச் சம்பாதிப்பதற் காகவே என்ற எண்ணம் இடைக் காலத்தில், அதாவது கி.பி. 1200-லிருந்து 1500 வரை பரவியிருந்தது. பெண்களின் மேல் வைத்த காதலுக்காகவே வீரர்கள் யுத்த களத்திற்குச் சென்றார் களென்றும், அந்தக் காதலிகளோ தங்கள் கணவன்மாருடைய வருகைக்காகவே காத்துக் கொண்டிருந் தார்களென்றும் இப்படியெல்லாம் சொல்லப்பட்டன. இடைக்காலத்துக் காவியங்களெல்லாம் இந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே எழுதப் பட்டிருக்கின்றன. ஆனால் இந்த எண்ணமானது பிறகு பெண் களுக்குச் சாதகமாகவே பரிணமித்தது. என்றாலும், சில தீமைகளும் இதனால் உண்டாகாமலில்லை. பெண்கள், தங்களைப் பற்றி அதிக உயர்வாக எண்ணிக்கொண்டு விட்டார்கள். ஆடவர்களை வசீகரிப்பதற் கென்று ஆடம்பரச் செலவுகள் செய்யவும், செயற்கை அலங்காரங்கள் செய்து கொள்ளவும் முற்பட்டு புருஷர்களின் குடும்ப வாழ்க்கையில் ஒரு கலக்கத்தை உண்டு பண்ணினார்கள். மேலை நாட்டைப் பொறுத்த மட்டில், பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகுதான் பெண்களின் சுதந்திர இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதென்று சொல்லலாம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கை, தங்கள் விஷயத்திலும் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்று பெண்கள் போராடினார்கள். ஏனென்றால் அந்தக் காலத்தில் ஐரோப்பா முழுவதும் தொழிற் புரட்சி ஏற்பட்டது. பெரிய பெரிய தொழிற்சாலைகள் நிறுவி பெருவாரியாகப் பொருள்களை உற்பத்தி செய்வது என்ற இயக்கம் தீவிரமாகப் பரவவும், பெண்களால் நடத்தப்பட்டு வந்த குடிசைத் தொழில்கள் நசித்துப் போக, அநேக குடும்பங்கள் நகரங்களில் வந்து குடியேறலாயின. ஆண்களும் பெண்களும் தொழிற்சாலைகளில் வேலை யாட்களாக நியமிக்கப்பட்டார்கள். ஏற்கனவே கூறியுள்ளபடி பெண்களின் மென்மையான சுபாவத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு, தொழில் முதலாளிகள் அவர்களுக்குக் குறைவான கூலியும் அதிகமான உழைப்பும் கொடுத்தார்கள். இதனாலும் இன்னும் பிற காரணங்களினாலும், பெண்கள், சமூகத்தின் தாழ்ந்த அந்ததிலிருந்தார்கள். இவர்களைக் கை தூக்கிவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் ஆங்காங்குப் பல இயக்கங்கள் தோன்றின. சமூகத்தில் செல்வாக்கு நிரம்பிய பெண்கள் பலர் இந்த இயக்கங்களின் ஜீவ நாடியாய் இருந்தார்கள். இதுமுதற் கொண்டு பெண் சுதந்திர இயக்கம் வலுத்து வரத் தொடங்கியது. இப்பொழுது இங்கிலாந்திலும் மற்ற நாடுகளிலும் பெண்கள் பல அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். 10. பெண்களைப் பார்த்தல் பெண்களைப் பார்த்தலைப்பற்றி நாம் எழுதவோ குறை கூறவோ இங்கு வரவில்லை. பெண்மை, அழகு இவைகளை மேலான திருஷ்டியில் தரிசிக்க வேண்டும், இயற்கை யழகில் ஈடுபட வேண்டும், இவற்றை ஆக்கிய சக்தியை எல்லாரும் வணங்க வேண்டு மென்பதே இங்கு எழுத வந்ததன் நோக்கம். வீதியிலே போகிற பெண்களை முறைத்து முறைத்துப் பார்க் கிறவர்கள் ஆண்களிலே கடையர்கள்; பெண்மையை அறியாதவர்கள். இவர்கள், தங்களுடைய சகோதரியையோ, மனைவியையோ வழிப் போக்கர் யாராவது முறைத்துப் பார்த்தால் அப்பொழுது தங்களுக்கு எப்படி இருக்கும் என்பதைச் சிறிது யோசித்துப் பார்ப்பார்களானால், பிறகு, மற்ற திரீகளை முறைத்துப் பார்க்கும் இழிவான செயலில் இறங்க மாட்டார்கள். ஆனால் அப்படி யோசிப்பது தான் இல்லை. வீதியிலே சுவாமி புறப்பாடு. கூடவே பக்தர்கள் பின் தொடர்கிறார்கள். அவர் களுடைய கால்கள் சுவாமிக்கு முன்னாலும் பின்னாலும் மெது மெதுவாக நகர்கின்றன. ஆனால் அவர்களுடைய கண்கள் தெருவின் இரு பக்கங்களிலுமுள்ள மாடிகளையும் ஜன்னல் களையுமே நோக்குகின்றன. இப்படி மேல் பார்வை பார்த்துக் கொண்டே நடக்கிற போது சில சமயங்களில் இடறியும் விழுந்து விடுகிறார்கள்; அல்லது எதிரில் வருகிறவர்களோடு மோதிக் கொள் கிறார்கள். பரிபூரண பக்தர்களாய் வேடந் தரித்துக் கொண்டு பவனி வரும் வேறு சில நண்பர்கள், சுவாமியின் அலங்காரத்தைப் பார்த்து மகிழ்ந்து கொண்டே கூப்பிய கையராய், ஒதுங்கி நிற்கும் திரீகளையும் கீழ்க் கண்ணாலும் மேல் கண்ணாலும் பார்த்துப் பார்த்துப் புளகாங்கித மடைகிறார்கள். பட்டுருமால் தரித்த லௌகிக பக்தர்கள் சிலர், சுவாமிக்கு முன்னே செல்லும் தாசிகள் கோஷ்டியோடு ஐக்கியமாகி விடுகிறார்கள்; தங்களுடைய புன்முறுவலால் அவர்களுடைய கண்களைத் தங்கள் பக்கம் திருப்பத் தீவிர முயற்சி செய்கிறார்கள். இதற்காக, பாவம், அந்தத் தாசி கோஷ்டியை வலம் வருகிறார்கள்! சில புருஷர்கள், வீட்டிலேயே பெண்கள் இருக்குமிடத்தைச் சதா வட்ட மிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இந்தப் பெண் வாய்க் கந்தர்கள், பெண்கள் பேசுகிறபோது அவர்களுடைய வாய் எப்படி அசைகிறது, கண்கள் எப்படிச் சுழலுகின்றன, கைகள் எப்படி அபிநயம் பிடித்துக் காட்டுகின்றன முதலியவைகளை யெல்லாம் உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பதிலே பேரானந்தம் அடைகிறார்கள். அவர் களோடு பேச்சுக் கொடுத்துப் பேச்சு வாங்குவதிலே திருப்தி கொள் கிறார்கள். அவர்கள் விரும்புகிற வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்து முடித்து அவர்களை மகிழ்விப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். இவை களுக்காகத் தங்களுடைய அரிய காலத்தையும் சுய மரியாதையையும் செலவிடுவதற்கு இவர்கள் தயங்குவதில்லை. பெண்களுடைய தனிமையைக் கௌரவிக்க வேண்டுமென்ற எண்ணமே இவர்களுக்குக் கிடையாது. இப்படிப்பட்டவர்களை, ஆண்மையை அறிந்த பெண்களும், பெண்மையைப் போற்றுகின்ற ஆண்களும் வெறுக்கிறார்கள். அழகு எங்கிருந்தாலும், எப்படிப்பட்டதாயிருந்தாலும் அதைப் பார்த்து அனுபவிக்க யாருக்கும் உரிமையுண்டு என்று சிலர் வாதம் செய்கிறார்கள். வாதவம். இந்த உரிமையை நாம் மறுக்கவில்லை. ஆனால் பெண்களை உற்றுப் பார்க்கிற ஆண்கள், அழகு என்றால் என்ன வென்பதைத் தெரிந்து கொண்டு அவர்களைப் பார்க்கிறார்களாவென்று கேட்கிறோம். அழகு இன்னதென்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்களானால் பெண் களை இப்படி முறைத்துப் பார்க்கமாட்டார்கள். அவர்கள் பார்ப்ப தெல்லாம் தூல தேகத்தையே தவிர சூட்சும அழகையல்ல. அழகு என்பது இயற்கையோடு ஒட்டியது; செயற்கையினின்று விலகி நிற்பது; கால எல்லையைக் கடந்து ஒளிர்வது; மனிதனிடத்திலேயுள்ள சீல சுபாவங் களைத் தூண்டி விடுவது. பெண்களை முறைத்துப் பார்க்கிறவர்கள், கீழான இச்சை களிலே இன்பம் துய்ப்பவர்கள்; வெளிவேஷதாரிகள்; பகட்டிலே மனத்தைப் பறி கொடுப்பவர்கள்; அந்தரங்கத்தில் கோழைகள். அவர்கள் சூரியோதயத்தின் அழகை, மந்த மாருதத்தின் மென்மையை, சங்கீதத்தின் இனிமையை, மலரின் மந்தகாசத்தை அனுபவிக்க மாட்டார்கள். கடல் ஒலி, அருவியின் சல சலப்பு, பட்சிகளின் கீச் கீச் சென்ற சப்தம், குழந்தைகளின் மழலைப் பேச்சு, குழலோசை இவையெல்லாம் அவர்களின் காதிலே விழாது. 11. தாய் யார்? தாய் யார்? தாய், ஆதி சக்தி; சிருஷ்டியின் ஊற்று; பிராணிகளின் ஜனனீ. தாய், உலகத்திற் கெல்லாம் வெளிச்சங் கொடுக்கும் ஜோதி; ஜன சமுதாயத்தின் வழி காட்டி; வீட்டின் எஜமானி. தாய், சாட்சாத் அன்பின் சொரூபம்; தனது மக்களின் சுகத்திற் காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வதிலேதான் அவள் ஆனந்த மடைகிறாள். அவள், தவம் - தியாகம் இவ்விரண்டின் மூர்த்தி. தாய், கீழே விழுந்து கிடக்கிறவர்களைக் கை தூக்கி விடுவதற் காகவும், பாவிகளுக்குப் பிராயச்சித்தஞ் செய்வதற்காகவும், ஜனங்களின் க்ஷேமத்திற்காகவும் ஜன்ம மெடுத்திருக்கிறாள். தாய், தேசம் - சமூகம் இவை நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாயிருக் கிறாள். அவளே தேசத்தின் ஆத்மா. உலகத்திலே தாயாரின் தானம் மகாசிரேஷ்டமானது. அவள் எல்லாராலும் பூஜிக்கப்படவேண்டியவள். உலகத்தினால் வந்திக்கப் படும் தேவி அவள். இனிமையான தமிழ் மொழியிலே, புனிதமான சொல் எது? மென்மையை விளக்கும் சொல் எது? அதுதான் தாய். இந்தத் தெய்விகச் சொல்லைச் சுற்றி உலகத்தின் சுக துக்கங்கள் அனைத்தும் வட்டமிடு கின்றன. தாய், மரணத்தின் நிழலிலே நடக்கிறாள். ஏன்? மற்றோர் உயிரைக் கொடுக்க. அவள், காதல் மேடை மீது, தன் உயிரையே பணயமாக வைக்கிறாள். 12. அம்மா! அம்மா! சங்கீதம், மௌனத்திலே போய் ஐக்கிய மாகலாம்; சிரத்தை, வைராக்கியத்திலே கொண்டு போய்ச் சேர்க்கலாம்; சூரியனைக் கண்டதாமரை, இதய விகாசமே யடையாமற் போகலாம்; ஆனால், சேயான என்னைத் தாயான நீ தள்ளித் தான் வைப் பையோ? உலகத்தில் கெட்ட பிள்ளைகள் இருப்பது சாதாரணம். ஆனால், கெட்ட தாய்மார்கள் இருக்கவே மாட்டார்களல்லவா? 13. தாய்மை பெண்மை யானது, தாய்மையிலேதான் விகாசமடைகிறது; நிறைவு பெறுகிறது. அப்படி விகாசமடையாத, நிறை வெய்தாத பெண்மை, கனி தராத மரம்; மெய்யறிவு பெறாத கல்வியறிவு. பெண்மை யானது, அலுத்து வந்தவர்களுக்கு நிழலாயிருக்கிறது; வாடிய பயிர்களுக்குத் தண்ணீர்போல் நிற்கிறது. தாய்மையோ, நிழல் தந்து உண்டியும் கொடுக்கிறது; தண்ணீர் போல் இருப்பதோடு மேற்கொண்டு வளர்வதற்கு உரமாகவும் அமைகிறது. பெண்மை, இம்மையில் மட்டும் இன்பம் அளித்து விட்டு நின்று விடுகிறது. தாய்மையோ மறுமைக்கும் அழைத்துச் செல்லுகிறது. பெண்மைக்கு நிகழ்கால வாழ்வு மட்டுந்தான். தாய்மைக்கோ எல்லையற்ற எதிர்கால வாழ்வுமுண்டு. பெண்மையை இளமை அணைத்துக் கொண்டிருக் கிறவரையில் தான் அந்தப் பெண்மைக்கு மதிப்பு. தாய்மைக்கோ, இளமை கழிய கழிய, முதுமை எய்த எய்த மதிப்பு உயர்கிறது. பெண்மைக்கு அன்பு செலுத்தும் ஆற்றல் உண்டுதான். ஆனால் அந்த ஆற்றல், ஒரு வரம்புக் குட்பட்டே இயங்குகிறது; தனக்குக் கொழு கொம்பாயிருக்கிறவர்களை மட்டுமே அது தழுவிக் கொண்டிருக் கிறது. தாயன்போ, உலகனைத்திற்கும் தன் உள்ளத்தில் இடங்கொடுக்க வல்லது; வைதாரை வாழ்த்தியும், இகழ்ந்தார்க்கு இனியவை கூறியும், தன்னைத் துறந்தாரையும் துறவாமல் அவர்களைத் துப்புரவு செய்தும் மகிழ்கிறது. பெண்மை, கொள்வதில் இனிமை காண்கிறது. தாய்மையோ, கொடுப்பதில் இனிமை நுகர்கிறது. பெண்மையின் பார்வை, மேல் நோக்காகச் செல்வது. தாய்மையின் பார்வையோ, பார்க்கப்படு கின்றவர் களுடைய அகத்தின் ஆழத்திற்குச் செல்லக் கூடியது. சிருஷ்டிக்கின்ற சக்தி, உலகனைத்தையும் அன்பினால் அணைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல், இன்ன பலவற்றைப் பெற்றிருப்பதனால்தான், தாய்மையை இறைமையோடு இயைபு படுத்திக்காட்டினர் நமது முந்தையோர்; கடவுளை, தாயே என்றும் அழைத்து வழிபட்டனர். ஆண்டவனே, நீ எனக்குத் தாயாயிருந்து பால் ஊட்டக் கடமைப் பட்டவன். அப்படி நீ ஊட்டா திருப்பாயேல், நான் சவலைப்பிள்ளையாக இளைத்துப் போவே னல்லவா என்று ஏங்குகின்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் என்று சொன்னால், சொல்லளவில் ஆண் பாலா யிருப்பினும், பொருள் அளவில், ஏன், உருவ அளவில்கூட பெண் பாலையும் சேர்த்துக் குறிப்பதாகவே கொள்கிறோம். நான்முகன் நாவில் சரவதியும், உலகளந்தான் மார்பில் லட்சுமியும், முப்புரமெரித்தான் பாகத்தில் பார்வதியும் முறையே வீற்றிருப்ப தாகச் சொல்லப்படுவது எதைக் குறிக்கிறது? பெண்ணோடு கூடியவனே பரமன், பெண் அகன்ற பரமனில்லை என்ற பேருண்மையையல்லவோ குறிக்கிறது? சக்தியின்றிச் சிவமில்லை யென்ற மூதுரையின் கருத்தும் இது தான். இந்தச் சக்தியை, ஜனனீ என்றும், ஜகன் மாதா என்றும் அழைத்து வழிபட்டனர் அருட் செல்வர்கள். பிரதியொரு பெண்ணும், தாய்மைப்பேறு பெற வேண்டு மென்றே ஆசைப்படுகிறாள். இந்த ஆசை நிறைவேறுவதற்காக எத்தனை நோன்புகள் நோற்கிறாள்? எத்தனை உபவாசங்கள் இருக்கிறாள்? இந்த நோன்பு உபவாச காலங்களில் அவள் காட்டும் மனோ உறுதி, இந்த நோன்பு களும் உபவாசங்களும் தனக்குத் தாய்மைப் பேற்றை அளிக்கும் என்பதில் அவள் கொண்டுள்ள திட நம்பிக்கை ஆகியவை, யாருடைய மனத்தையும் அசைத்துக் கொடுக்கக் கூடியனவல்லவா? ஆண்டவனுடைய மனத்தைக் கூடத்தான். அவன், நிச்சயம், தன்னுடைய அருட் பார்வையைச் செலுத்தவே செய்கிறான். தாய்மை மலர்கிறது. பெண்ணின் உள்ளம் புளகாங்கித மடைகிறது. பெரும்பாலும் ஒரு பெண் மேற்கொள்கிற நோன்புகள், உபவாசங்கள், க்ஷேத்திர யாத்திரைகள் ஆகியவற்றில் எதுவும் வீண்போவதில்லை யென்பது அனுபவ உண்மையன்றோ? இந்த நோன்புகள், உபவாசங்கள் முதலியன, கோரிய பலனை அளிக்காவிட்டால், அதற்காக, அவள் - அந்தப் பெண் - யாரையும் நொந்து கொள்வதில்லை; ஆண்டவனைக் கூட. எல்லாம் நல்க வல்லவன் ஆண்டவன் என்பதில் திடநம்பிக்கையுடைய அவள், தன் விஷயத்தில் அந்த ஆண்டவன் பராமுகமாயிருக்கிறானென்று கருதி, அவனிடமிருந்து தன் முகத்தையோ அகத்தையோ திருப்பிக் கொள்வதில்லை. அதற்கு மாறாக அந்த ஆண்டவனிடத்தில் இன்னும் அதிகமாக ஈடுபடுகிறாள். அவனுடைய பரம கருணையிலே பரிபூரண நம்பிக்கைக் கொண்ட வளல்லவா அவள்? இப்பிறவியிலில்லா விட்டாலும், அடுத்த பிறவியி லேனும் ஆண்டவனே, மகப்பேற்றை அருளாய் என்று உள்ளங்கசிந்து வேண்டுகிறாள். தான் ஒரு தாயாகத் திகழ வேண்டுமென்பதிலே அவளுக் குள்ள ஆவல், அந்த வேண்டுதலிலே நன்கு புலனாகிறது. இப்பிறவியில் தனக்குத் தாய்மைப் பேறு கிட்டாதென்று ஒரு நிலைகடந்த பிறகு தெரிந்ததும், ஒரு பெண், சடங்கு பூர்வமாகவோ, அபிமானமாகவோ, வேறொருவருடைய குழந்தையை எடுத்து வளர்க்கவும், அந்த வளர்ப்புக் குழந்தை, தன்னை அம்மா என்று அழைக்க, அதைக் காதாரக் கேட்கவும் ஆசைப்படுகிறாள். அம்மா என்ற சொல்லிலே எவ்வளவு இனிமை மண்டிக்கிடக்கிற தென்பதை ஒரு பெண்தான் அறிய முடியும். அதை அனுபவிக்க வேண்டுமென்று அவள் ஆசை கொள்வதில் ஆச்சரியமென்ன இருக்கிறது? எனவே, அவள், தனது உற்றார் உறவினரிடம், மேற்சொன்ன விதம், சடங்கு பூர்வமாகவோ, அபிமான மாகவோ தனக்கு ஒரு மகவு வேண்டுமென்று யாசிக்கிறாள். அப்படி யாசிப்பதிலே இழிவில்லை யென்பது அவள் கருத்து. அவள் கருத்துமட்டுமல்ல; எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. ஏனென்றால், அவள் யாசிப்பது, சுயநலத்திற்காக அல்ல. சுயநலம் ஓரளவு உண்டு என்று சொல்லலாமாயினும், அஃதொன்றுக்காக மட்டுமே அவள் யாசிப்பதில்லை; தன் குலம், அதாவது தான் புகுந்த குலம் விளங்க வேண்டும். வாழையடி வாழையாக வாழவேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அவள் யாசிக்கிறாள். இதில் சிறுமை எங்ஙனம் தோன்ற முடியும்? உண்மையில் இதனை ஒரு பெருமை யாகவே அவள் கருதுகிறாள். அவளுடைய நாட்டமெல்லாம், தான் அம்மா என்று அழைக்கப்பட வேண்டுமென்ற ஒன்றிலேயே ஒன்றி நிற்கிறது. மகப்பேறில்லாத ஒரு மனையாட்டியைப் பார்த்து, உனக்குக் குழந்தைகளில்லையா என்று கேட்டு விடுங்கள். அவள் முகம் எப்படி மாறுதலடைகிறது? அவள் உள்ளத்தில் என்னென்ன அசைவுகள் உண்டாகின்றன வென்பது வெளிப்பார்வைக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் நிச்சயம் அசைவுகள் உண்டாகவே செய்கின்றன. உனக்குக் குழந்தைகளில்லையா என்ற கேள்வி, நீ ஒரு குற்றவாளி இல்லையா என்ற அம்பாகவே அவள் மனத்தில் பாய்கிறது. அந்த ஒரு கேள்வியில் எத்தனையோ ஏச்சுப் பேச்சுக்கள் அடங்கியிருப்பதாக அவள் உணர்கிறாள். ஏன் பெண்ணாய்ப் பிறந்தோம் என்ற ஏக்கம் அவளை ஆட்கொள்கிறது. எல்லோருடைய அலட்சியப் பார்வையும் தன்மீது வந்து விழுவதாகக் கருதிக் கொண்டு விடுகிறாள். அதனால் யார் முன்னிலையிலும் வந்து நின்று சர்வசகஜமாகப் பேச அவள் மனம் கூசுகிறது. உலக அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, தான் என்ன பேசினாலும் அந்தப் பேச்சுக்கு மதிப்பிராதென்று அவளுக்குப் படுகிறது. தாய்மை அனுபவம் தனக்குக் கிட்டாதது எவ்வளவு பெருங்குறை என்பதை உணர உணர அவள் உள்ளம் கொதிக்கின்ற குழம்பாகிறது. அந்தக் குழம்பிலிருந்து தெளிக்கும் துளி களாக, சில சமயங்களில் அவள் வாயிலிருந்து சுடு சொற்கள் வெளிவந்து விடுகின்றன. அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், சகோதர சகோதரிகளே, அவளைக் கோபியாதீர்கள்; அதற்கு மாறாக அவள்மீது இரக்கங் காட்டுங்கள். அதற்கும் முன்னதாக அவளைப் பார்த்து - ஏன்? எந்த ஒரு பெண்ணையும் பார்த்து - உனக்குக் குழந்தைகளில்லையா என்று நேர் முகமாகக் கேளாதீர்கள். அந்த விவரம் தெரிந்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவைகளைத் தெரிந்து பேச சிறிது முன் யோசனை வேண்டும். அவ்வளவுதான். தன்னுடைய குழந்தை என்று சொல்லிக்கொள்ள முடியாத நிலையி லிருக்கும் ஓர் இல்லக்கிழத்தி, மற்றவர்களுடைய குழந்தைகளை எடுத்துக் கொஞ்சிக்குலாவ வேண்டு மென்பதில் எவ்வளவு ஆர்வமுடையவளா யிருக்கிறாள்? அப்படிக் கொஞ்சிக் குலாவக்கூடிய உரிமை தனக்குக் கிடைத்துவிட்டதேயானால், அதற்காக அவள் அடைகிற ஆனந்தத்தைச் சொல்லினால் அளந்து காட்ட முடியுமா? தன் சொந்தக் கடமைகளைக் கூட புறக்கணித்துவிட்டு, அந்தக் குழந்தையைக் குளிப்பாட்டி, தலைசீவி, உடை அணிவித்து, உண்டி கொடுத்து அகமகிழ்கிறாள். அதன் ஒவ்வொரு மழலைச் சொல்லும் அவளுடைய இரு செவிகளிலும் இன்பத்தேனாக வந்து பாய்கிறது; அதன் நடையின் ஒவ்வோர் அடியையும், அம்பல வாணனின் ஆனந்தக் கூத்தாகக் கருதுகிறாள்; அதைக் கண்டு அவள் வடிக்கும் ஆனந்தக் கண்ணீர், தெய்வத்தன்மை வாய்ந்த அந்தக் குழந்தையின் இதயத்தில் சென்று பாயாமலிருக்குமா? உடனே அஃது எவ்வளவு எட்ட இருந்தாலும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் அவள் கிட்டவந்து அவளை அணைத்துக் கொள்கிறது. இந்த அணைப்பில் அவள் உடல் புளகாங்கித மடைகிறது. ஆனால் அதே சமயத்தில், இஃது உன் உடைமையல்ல என்று எங்கிருந்தாவது ஒரு குரல் எழும்பி வந்து, இந்த அணைப்பிலிருந்து அந்தக் குழந்தையைப் பறித்துக் கொண்டு போய்விடுமோ என்ற ஏக்கம் அவள் உள்ளத்தைப் பற்றுகிறது. ஓ, ஓ, நம் உடமையல்லாத ஒன்றின்மீது பற்று வைக்கிறோமா என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டே, தன் அணைப்பிலிருந்து அந்தக் குழந்தையை விடுவிக்கிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குத்தான் இப்படி. மறுபடியும் அவள் கரங்கள் அந்தக் குழந்தையை நோக்கி நீளுகின்றன. அதுவும் ஓடோடி வந்து அவள் மடியைத் தன் படுக்கையாக்கிக் கொள்கிறது. அதனை எப்பொழுதும் போல் கொஞ்சிக் குலவுகிறாள். அவளால் வேறு விதமாக இருக்க முடியாது. தன் உடைமையல்ல என்ற ஒரு காரணத்திற்காக, எந்த ஒரு பெண்மணியும் எந்த ஒரு குழந்தையையும் அலட்சியப் படுத்தவோ அதன்மீது அசூயை கொள்ளவோ மாட்டாள். குழந்தைமைப் பற்று என்பது, பெண்மையோடு ஒட்டி வளரும் ஒரு பண்பு. பொதுவாகச் சொல்லப்போனால், தாய்மைப் பேற்றை விரும்பாத பெண், பெண்ணல்ல; அதாவது, பெண்களுக்கு இயற்கையாக இருக்க வேண்டிய சுபாவங்கள், உணர்ச்சிகள் ஆகியவைகளோடு கூடிய பெண்ணல்ல. அவள், இயற்கைக்கு மாறுபட்ட ஒரு பிறவி. அவள் நடத்தும் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கினால், அஃது, இயற்கைக்கு மாறுபட்ட தொரு வாழ்க்கையாகவே இருக்கு மென்பது உறுதி. ஆனால் அத்தகைய ஒரு பெண் இதுகாறும் உலகம் கண்ட தில்லையென்றே சொல்ல வேண்டும். ஒரு தாய், அன்பின் ஊற்றாய் இருப்பது போல் நன்றியின் ஊற்றாகவும் இருக்கிறாள். ஒரு சிறுதுரும்பு, தனக்கு உதவி செய்தாலும் அதற்குப் பனையளவு நன்றி செலுத்துவது அவள் சுபாவம். இந்தச் சுபாவம், ஒவ்வொரு தாயின் கண்களிலும் ஒளி விட்டு வீசுவதைப் பார்க்கலாம். ஆனால் இதை அவள் பெரிதாகக் கருதுவதில்லை. ஏனென்றால், வைதாரையும் வாழ்த்துகின்ற பண்புடையவள் அவள். இப்படி எத்தனையோ பண்புகளின் தொகுப்பாயிருக்கின்ற அவளிடத்தில் நன்றி மறவாமை என்பது, ஒரு சிற்றணுவாக, அவளுடைய ரத்த நாளங்களில் கலந்திருக்கிறது. அதை அவளால் அகற்ற முடியாது. இதனால்தான் அதை அவள் பெரிதாகக் கருதுவதில்லை. படமுடியாத துயரத்தைப் பட்ட பின்னர்தான் மகப்பேறு கிட்டுகிறது. கிட்டியதும், பட்டதுயரத்தை மறந்து பெற்ற மகவைப் பரிவோடு பார்க் கிறாள். அவள் உதட்டில் புன்சிரிப்பு தவழ்கிறது. உள்ளத்தில் உவகை பொங்குகிறது. ஆனால் அதை அவள் வெளிக்குக் காட்டிக் கொள்வ தில்லை. அடக்கிக் கொள்ளும் ஆற்றல் அவளுக்கு உண்டு. தான் அடங்குவது மட்டுமல்ல, மற்றவர்களை அடக்குவதிலும் அவள் வல்லவள். உள்ளத்தே பொங்கியெழும் உவகையை அடக்கிக்கொண்டு அவள், தன்னிரு கண்களையும் சிறிது நேரம் மூடிக்கொள்கிறாள். அந்தச் சிறிது நேரத்திற்குள், தாய்மைப் பேற்றை அளித்த ஆண்டவனுக்குப் பெருநன்றி செலுத்துகிறாள். துயரத்தை அனுபவிக்கச் செய்து தானா இந்த மகப்பேற்றை எனக்கு அளிக்க வேண்டும் என்று அவள், ஆண்டவனை நோக்கி மனம் நொந்து கேட்பதில்லை. இன்ப அமுதைப் பெறுவதற்கான பக்குவ நிலையில் கொண்டு நிறுத்துவதற்காகவே, பிரதியொரு பெண்ணுக்கும் பிரசவ வேதனையை நல்கியிருக்கிறான் ஆண்டவன் என்ற பேருண்மையை அவள் நன்கு உணர்ந்தவள். எனவே, அவள் தன்னையோ பிறரையோ நோவதில்லை. அஃது அவளுடைய சுபாவத்திற்கு விரோதம். வழுத்து தலையும் வாழ்த்துதலையுமே அவள் அறிவாள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், உலகத்தில், பயன் கருதாது பணியாற்றுகின்ற வியக்தி தாய் ஒருத்திதான். யோகிய ரென்றும் ஞானியரென்றும் அழைக்கப்படுகின்ற அத்தனை பேரும் அவளுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகின்றவர்களே. தன்னுடைய முதுமைப் பருவத்தில் தனக்கு ஊன்று கோலாய் இருக்குமென்று நம்பி, எந்த ஒரு தாயும் தன் குழந்தையை வளர்ப்பதில்லை. தன்னுடைய நலனுக்காகக் குழந்தையின் நலனை நாடுகின்றவளல்லள் அவள். தன் குழந்தை நன்றாக உண்ண வேண்டுமே யென்பதற்காக அவள் பலதடவை உண்ணாவிரதமிருக் கிறாள்; அப்படியே அது நன்றாக உறங்கவேண்டுமே யென்பதற்காக அவள் பல இரவுகள் விழித்துக் கொண்டிருக்கிறாள். இந்த மாதிரி உண்ணாமலும் உறங்காமலுமிருப்பதில் அவள் நெடுநாள் பழக்கப்பட்டவள் போலவே, யோகியரையும், ஞானியரையும் போலவே நடந்து கொள்கிறாள். மரணவேதனையென்னும் கணவாயைக் கடந்து வந்து புத்திரப்பேறு என்னும் மலைச் சிகரத்தை அடைந்திருக்கிற அவளுக்கு இந்த உண்ணாமையும் உறங்காமையும் சர்வ சகஜமாக இருக்கின்றன. ஒரு கணமேனும் அவள் உடல் அலுப்பதில்லை; மனஞ் சலிப்பதில்லை; முகஞ் சுளிப்பதில்லை. தன் புத்திர ரத்தினம், குன்றின் மேலிட்ட விளக்காய் என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதற் காக, இருட்டறையிலே கிடக்கவேண்டுமா, மலைக் குகையிலே வசிக்கவேண்டுமா, சூறாவளியில் அகப்பட்ட சருகுபோல் அங்குமிங்கும் அலையவேண்டுமா, எதற்கும் அவள் உடன் படுகிறாள். சுருங்கச் சொன்னால், தன் சந்ததியின் அமர வாழ்வுக் காக, அவள், மரணத்தின் எல்லைக் கோட்டை மிதிக்கச் சித்தமா யிருக்கிறாள். நிறைவுள்ள இடத்தைக் காட்டிலும் குறைவுள்ள இடத்திற்கே தாயன்பு விரைந்து செல்கிறது. பிணி, பசி, வறுமை முதலியனவுள்ள இடங்களில் ஒரு தாயின் மௌனமான பணியைக் காணலாம். உடல் வலிமையும், பொருள் வளமும், வேறு பல வசதிகளுமுடைய வனாயிருக்கிறான் ஒரு மகன்; இவையொன்றுமே இல்லாதவனா யிருக் கிறான் மற்றொரு மகன்; இவ்விருவரையும் பெற்ற தாய், இல்லாத வனிடத்தில் சென்று இருக்கவே விரும்புகிறாள். அவனுடைய கஷ்ட நிஷ்டூரங்களிலே பங்கெடுத்துக் கொண்டு அதன் மூலம் அவனுக்கு ஆறுதல் அளிக்கிறாள். உள்ளவனிடத்தி லிருந்து முடிந்த மட்டில் அதிகப்படியான உதவியை இல்லாதவன் பெறுவதற்கு அவள் ஒரு பாலமா யமைகிறாள். அவளுடைய ஆறுதல் மொழிகளும், ஆரவாரமற்ற சேவையும், இல்லாதவன் இல்லாமையை உணர முடியாதபடி செய்து விடுகின்றன. மகனே, உன்னுடைய எண் சாண் உடம்பின் ஒரு சிறு இடத்தில் ஒரு சிறு வலி உண்டாகி விடட்டும், உன் தாயின் உள்ளம் எப்படித் துடிக்கிறது! அப்பொழுது அவளுடைய கண்களைப் பார்; ஈரம் படிந்திருக்கும். அவளுடைய இனிமையான குரலைக் கேள்; நடுக்கமெடுத்திருக்கும். அவளுடைய மிருதுவான கரங்கள் உன் உடம்பை ஒரு தடவை தடவிக் கொடுத்தால் கூட உனக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது! உலகத்திற்கு ஆண்டவன் அளித்திருக்கிற சிறந்த நன்கொடைகளிற் சிறந்தது தாயன்பு. அந்த நன்கொடை உனக்குக் கிடைத்திருக்கிறபோது, அதை நன்றாகப் பயன்படுத்திக்கொள். அதை லேசாக மதித்து, அலட்சியப்படுத்தி விடாதே. பிற்காலத்தில் உனக்கு எத்தனையோ நண்பர்கள் கிடைக்கலாம்; உற்றார் உறவினர் பாசத்தை நீ பெறலாம்; ஆனால் தாயன்பு மட்டும் உனக்குக் கிட்டாது. மகனே, உன்னுடைய அறியாமை, ஒழுங்கற்ற நடக்கை, இப்படி ஏதோ ஒன்றைக் காரணமாகக் காட்டி உன் தந்தை உன்னைப் புறக்கணித்து விடலாம். சீரிலும் சிறப்பிலும் நீ தாழ்ந் திருக்கிற காலத்தில் உன் சகோதரிகள் உன்னைத் திரகரிக்கலாம். உன் சகோதரர்களோ உன்னைப் பரம சத்துருவாகக் கருதலாம். உன் மனைவி உன்னை அலட்சியப் படுத்தலாம். மனைவியோடு சேர்ந்து வாழ முடியாத ஓர் அவல நிலை உனக்கு ஏற்படலாம். ஆனால் உன்னுடைய தாய் மட்டும் உன்னை விட்டுப் பிரிந்திருக்கமாட்டாள். உன்னுடைய வாழ்விலும் தாழ்விலும், வெற்றி யிலும் தோல்வியிலும், நீ புகழப்பட்ட காலத்திலும் இகழப்பட்ட காலத்திலும், எப்பொழுதும் அவளுடைய அன்புக் கரங்கள் உன்னை அணைத்துக் கொண்டிருக்கும். உலகமெல்லாம் சேர்ந்து ஒரே குரலில் உன்னை நீசனென்று ஒதுக்கித் தள்ளிவிட்டாலும், அதற்காக உன் தாய் உன்மீது இரக்கங் காட்டுவாளே தவிர, தானும் உலகத்தோடு சேர்ந்து கொண்டு உன்னை நீசனென்று அழைக்க மாட்டாள். உன்னை நல்வழிப்படுத்த எல்லா வகையிலும் முயற்சி செய்வாள். அப்படிப் பட்டவளை ஒரு கணமாவது நீ மறந் திருக்கலாமா? ஒரு குடும்பத்தில், தாய், நரைக்கும் திரைக்கும் இரையாகி, உடல் மெலிந்து, ஒரு வேலையும் செய்யச் சக்தியற்றவளா யிருக்கலாம். ஆயினும், அவள் உயிரோடிருப்பது அந்தக் குடும்பத் திற்கு எவ்வளவோ பலமாயிருக்கிறது. அவளை மையமாக வைத்துக் கொண்டே குடும்பத்தின் சகல விவகாரங்களும் நடக்கின்றன. குடும்பத்தில் சர்வ சாதாரணமாக நிகழும் எல்லாச் சச்சரவுகளும் அவளிடம் வந்து முடிவடைகின்றன. எல்லாச் சந்தேகங்களும் அவளிடம் வந்து தெளிவு பெறுகின்றன. அவள், சொல்லாமற் சொல்லும் ஒரு சொல்லுக்கு எல்லாரும் செவிசாய்க் கின்றனர். அவளாக முன் வந்து ஒரு காரியத்தைச் செய்யாவிட்டாலும், அவளிட்ட காரியத்தை எல்லாரும் மகிழ்ச்சியோடு செய்கின்றனர். அவளுடைய உருவம் மறைந்து போகட்டும்; அந்தக் குடும்பம், சிறிது காலம் வரை, துடுப்பு இழந்த படகுபோல் தத்தளிக்கிறது. ஆதலின், சகோதர சகோதரிகளே, தாயைப் போற்றிக் காப்பாற்றுங்கள். ஒரு குடும்பத்தின் பரம்பரை தருமங்கள், ஆசார நியமங்கள், சம்பிரதாயங்கள் ஆகிய யாவும் ஒரு தாய்க்குத்தான் தெரிந்திருக் கின்றன. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருடைய ருசியையும் தேவையையும் அவள் தெரிந்து வைத்திருக்கிறாள். அது மட்டுமல்ல; ஒவ்வொருவருடைய மனப் பாங்கையும் அவள் உணர்ந்து வைத்திருக் கிறாள். அவரவருடைய உடல் தேவைக்கும் உள்ளப் போக்குக்கும் ஏற்றாற்போல் காரியங்களைச் செய்தும், செய்வித்தும், அவரவரும் திருப்தியடையுமாறு நடந்து கொள்ளும் ஆற்றல் அவள் ஒருத்திக்குத்தான் உண்டு. ஆதலின், சகோதர சகோதரிகளே, தாயைப் பின்பற்றுங்கள். கலியுகத்தில், தர்ம தேவதை ஒற்றைக் காலால் நடப்பதாகப் பெரியோர்கள் கூறுவார்கள். அந்த ஒற்றைக் காலுக்கும் ஊனம் ஏற்படாதபடி பாதுகாத்து வருகிறவள் தாய்தான். எந்த ஒரு நாட்டில் தாய்க்கு மதிப்புக் கொடுக்கப்படுவதில்லையோ அந்த நாட்டில் அறத்திற்கு மதிப்பிராது; அன்பிற்கு இடமிராது. அழகு, இனிமை முதலியன வெல்லாம் வெறுஞ் சொற்களாக இருக்கும். சுருக்கமாக, அந்த நாட்டு மக்கள் நாகரிக வாழ்க்கை நடத்துகிறார்களென்று சொல்ல முடியாது. தன் மகன், ஓடு ஏந்தும் ஆண்டியாயிருந்தாலும், கோல் ஏந்தும் அரசனாயிருந்தாலும், முக்காலால் நடக்கும் முதுமைப் பருவத்தினனா யிருந்தாலும், அவனை ஒருமையிலே அழைக்க, தாய் ஒருத்திக்குத் தான் உரிமையுண்டு. அந்தத் தனியுரிமையை அவளிடமிருந்து யாரும் பறித்துவிட முடியாது. இந்த ஒன்றைக் கொண்டே அவளுக்கேற் பட்டிருக்கும் உன்னதமான தானத்தை யாரும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம். ஆண்டவன் எங்கும் இருப்பதாகப் பக்தர்கள் புகழ்ந்து பாடினாலும், அவன் எங்கும் எல்லார் கண்ணுக்கும் புலப்பட்டுக் கொண்டிருக்க முடியா தல்லவா? இதனால் அவன் - அந்த ஆண்டவன் - தன்னுடைய பிரதிநிதி களாகத் தாய்மார்களைப் படைத்துவிட்டான். அவனுடைய கடமைகளைத் தாய்மார்கள் செய்து வருகிறார்கள். இதனால், ஆண்டவன் அளிக்க வல்ல எதனையும் தாய்மார்கள் அளிக்க வல்லவர்களாயிருக்கிறார்கள். தாய்மையில் இறைமையைக் கண்டார்கள் ஆன்றோர்கள் என்றால், அதில் ஆச்சரியமென்ன இருக்கிறது? இங்ஙனம் தெய்வத் தன்மை படைத்தவளாயிருப்பதனால்தான், வணங்கத் தக்கவர் வரிசையில் தாயாருக்கு முதலிடம் கொடுத்துப் போற்றியிருக்கின்றனர் நமது முன்னோர். உபாத்தியாயனைவிட ஆசாரியன் பத்து மடங்கு உயர்ந்தவன். ஆசாரியனைவிட தகப்பன் நூறு மடங்கு உயர்ந்தவன். தகப்பனைவிட தாய், தன் மகிமையால் ஆயிரம் பங்கு உயர்ந்தவள் என்பது ஒரு பழைய வாசகம். வாடும் பயிருக்கு மழையாய், கோடை வெயிலுக்கு இளந் தென்றலாய், காரிருளில் கடுவழி செல்வோருக்குத் தீவட்டி வெளிச்சமாய், திக்குத் தெரியாமல் திகைத்து நிற்கின்ற இல்லறக் கப்பலுக்குத் திசையறி கருவியாய் இருப்பது எது? தாயன்பு; ஆம்; தாயன்பு தான். தாயே, நீ தோன்றி உலகத்தைத் தோற்றுவித்தாய். உலகம் வாழ நீ வாழ்கின்றாய். உன் புனிதமான பெயரை உச்சரிக்க, நாவில் ஊறாத அமிழ்து ஊறுகின்றது. ஊழுழி காலம் உன் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க நானிலத் திற்கு வரமருள்வாய். 14. இரு குலத்திற்கும் ஒரே நீதி ஆண் குலம் வேறு, பெண்குலம் வேறுதான்; ஆனால் இரு குலமும் ஒரு குலமாகவே வாழ வேண்டியிருக்கிறது. இதனால் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் பல ஒன்றாகவே இருக்கின்றன. இவற்றை எடுத்துக்காட்டும் சொற்கள் சில, இரு சாராருக்கும் பொருந்து வனவாக இருக்கின்றன. அதாவது, ஆண் பாலருக்குரியதாக ஒரு சொல் எடுத்தாளப்பட்டாலும், அது பெண் பாலருக்கும் உரியதென்றும், அப்படியே பெண் பாலருக்குரியதாக ஒரு சொல் எடுத்தாளப்பட்டாலும் அஃது ஆண்பாலருக்கும் உரியதென்றும் நாம் பொருள் கொள்ளவேண்டும். அப்படிப் பொருள் கொண்டால்தான், சமுதாயத்தை ஒருமை நோக்கில் வைத்துப் பார்க்க முடியும். எப்படியென்று பார்ப்போம். ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய் என்று வள்ளுவன் வாசகம், மகனை மட்டுமல்ல, மகளையும் குறித்துச் சொன்னதாகும். ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட தன் மகள், பிறந்த குடும்பத்திற்கும் புகுந்த குடும்பத்திற்கும் மாசு உண்டாகாமல் நடந்துகொள்ள வேண்டுமென்று எந்த ஒரு தாயும் விரும்புவது இயற்கையல்லவா? தன் விருப்பம் நிறைவேறி வருகிறதென்று பிறர் வாயிலாகக் கேள்விப்படுகிற பொழுது, அந்த மகளைப் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைகிறாள். குடும்பத்தின் விரிவுதான் சமுதாயம். குடும்பமின்றேல் சமுதாயமில்லை. குடும்பத்தில் இனிமை தவழ்ந்து கொண்டிருந்தால் தான் சமுதாயத்தில் அமைதி நடமாடிக் கொண்டிருக்கும். குடும்பத்தை வேரென்று கொண்டால் சமுதாயத்தை மரமென்று சொல்லலாம். வேருக்கு உரமூட்டுகிறவள் பெண்ணென்றால், சமுதாயத்தை வளர்க்கிறவன் ஆண். எனவே, குடும்ப நலனுக்காக, குடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்றி வருகின்ற முறையில் வாழ்க்கையை நடத்துகின்ற ஒரு பெண், அந்தக் குடும்பத்தில் பிறக்கின்ற ஓர் ஆண் மகன், - ஏன், ஆண் மக்கள் என்றும் கூறலாம். - குடும்ப நலனுக்காக மட்டுமல்ல, சமுதாய நலனுக்காக, சமுதாயத்தின் நற்பெயரைக் காப்பாற்றுகின்ற முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு அடிகோலியவளா கின்றாள். ஆகவே, ஒரு பெண், குடும்பத்தில் வாழ்ந்து கொண்டே, சமுதாயத்தையும் வாழ்விக்கின்றவளாகிறாள். இன்னும், பிறர் வாழ, வாழ்கின்றவள் பெண் என்று சொல்லலாம். இப்படிச் சொன்னதனால், ஒரு பெண்ணின் அறிவு, சேவை ஆகிய எல்லாம், குடும்பத்தின் எல்லையில் வந்து நின்று விடுகிறது அல்லது நின்றுவிட வேண்டும் என்று நாம் கருதுவதாக எண்ணிவிடக்கூடாது. குடும்ப எல்லையைக் கடந்து சென்று, சமுதாயத்தையே தங்கள் குடும்ப மாகக் கருதிச் சேவை செய்திருக்கிற பெண்மணிகள் எத்தனையோபேர் உலகத்தில் தோன்றியிருக்கிறார்கள்; எப்பொழுதும் தோன்றிக் கொண்டிருப்பார்கள். மக்களின் மனத்தைப் பண்படுத்த, சமுதாயத்தை நல்வழி செலுத்த, இவர்கள் செய்திருக்கிற உபதேசங்களையும் ஆற்றி யுள்ள நற்றொண்டுகளையும் எண்ண எண்ண இதயம் இறும்பூதெய்து கின்றது. ஆனால் எந்த ஒரு பெண்மணியும், குடும்பத்தைப் புறக்கணித்து விட்டோ, குடும்பத்தின் மீது கொண்ட வெறுப்பினாலோ, அந்தக் குடும்பத்திலிருந்து விலகி வந்து, தொண்டு என்னும் கொடியைத் தாங்கிக் கொண்டு, சமுதாயத்தின் முன் வந்து நிற்கவில்லை. குடும்பத்தின் மீது கொண்ட வெறுப்பினால் அதை விட்டு வெளியே வருவதென்பது பெண் களுக்கு இயலாத காரியம். பெண் துறவிகள் பலர் இருந்திருக் கிறார் களென்று சொன்னால், உற்றார் உறவினர்கள் மீது கொண்ட கோபத்தினாலோ, வாழ்க்கையில் ஆசாபங்கங்கள் பல அடைந்ததன் விளைவாகவோ, குடும்பத்தில் சர்வசாதாரணமாக ஏற்படக் கூடிய தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுகின்ற முறையிலோ, குடும்பப் பொறுப்பை ஏற்று நிருவகிப்பதற்கான திறமை தங்களிடம் இல்லை யென்பதை உணர்ந்தோ அவர்களில் யாரும் வெளிவர வில்லை. இந்த மாதிரியான காரணங்களுக்காக, குடும்பத்திலிருந்து வெளியே வருவதென்பது ஆண்களுக்கு ஓரளவு சுலபமா யிருக்கலாம்; ஆனால் பெண்களுக்கு அஃது இயலாத காரியம். கற்பு என்ற ஒரு சொல், பெண்களுக்கே உரித்தானதொரு சொல்லாகப் பலராலும் வழங்கப்பட்டு வருகிறது. உண்மையில், இஃது ஆண்களுக்கும் உரித்தானதொரு சொல்லேயாகும். ஒருத்தி, ஒருத்த னோடு இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டுமென்பது நியதியானால் அதே பிரகாரம், ஒருத்தன், ஒருத்தியோடு இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டுமென்பது நியதியாகாதா? உடலமைப்பின் வேறுபாடு காரணமாக, ஆண்களுக்கென்று சில கடமைகளும் பெண்களுக்கென்று சில கடமைகளும் வகுக்கப் பட்டிருக்கலாம். ஆனால் இருவருக்கும் நீதி ஒன்றுதானே? கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்ற ஔவைப் பிராட்டியின் வாக்குக்கு புருஷனுடைய சொல்லை மீறி நடவாதிருத்தலே கற்பு என்று பெண்ணைப் பார்த்துச் சொன்னதாகப் பொருள் கொள்ளுவோ மாயின், பத்தினியின் புத்திசாலித்தனமான பேச்சை அல்லது யோசனையை மீறி நடவாதிருத்தலே கற்பு என்று ஆண்களைப் பார்த்துச் சொன்னதாகப் பொருள் கொள்ளுதல் பொருத்தமாயிராதா? பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் என்றும், தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்றும் பெண்குலத்திற்குப் பெருமை தரப் பேசியிருக்கிற வள்ளுவப் பெருந்தகை, அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் என்றும், நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில் பிறற்கு உரியாள் தோள் தோயாதார் என்றும் ஆண் குலத்திற்கும் அறிவுரை புகட்டியிருக்கிறானே? ராம பிரானுடைய லட்சிய வாழ்க்கையை மூன்று சொற் களுக்குள் அடக்கி வைத்துப் பேசுவர் ஆன்றோர். ஒரே சொல், ஒரே பாணம், ஒரே மனைவி ஆகிய இந்த மூன்றிலும் ராமனுடைய லட்சிய வாழ்க்கை அடங்கி விடுகிறது. ஒரு லட்சிய புருஷனுடைய லட்சணத்தையும் இந்த அடக்கத்தில் ஒருவாறு காண்கிறோம். சீதை ஒருத்திக்கே தான் உரித்தானவன் என்று ராமன் மேற்கொண்டிருந்த விரதந்தான், ராவணனை, சிறையிருந்த சீதையிடம் நெருங்க வொட்டாமல் தடுத்து நிறுத்தியது. அப்படியே, ராமன் ஒருத்தனுக்கே தான் உரித்தானவள் என்று சீதை மேற்கொண்டிருந்த விரதந்தான், ராமனுக்குக் கடலையும் கடந்து வந்து, அவளை மீட்டுச் செல்லும் ஆற்றலை அளித்தது. இப்படிச் சொல்வது, கற்பனையின் வெகு உயரத்திற்குப் போவதாகச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் நமது பண்டைய இலக்கியங்கள் வாயிலாக, கற்புத் திறன், எப்படிச் செயல் வடிவமாக வெளிப்பட்டிருக்கிறது என்பதை நோக்குகிற போது, கற்பனைக்குப் பதில் உண்மையே நம் எதிர் வந்து நிற்கிறது. அருவமாயுள்ள கற்பு, ஓர் உருவத்தின் மூலமாகவே, வெளிப் படுகிறது. அந்த உருவம், அளவிலே சிறிதாயிருக்கலாம்; மெலிந்தும் நலிந்தும் இருக்கலாம். ஆயினும், கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெற்றிருப்பதனால், அஃது - அந்த உருவம் - எத்தகைய இக்கட்டான சூழ்நிலையிலும், பிறர் உதவியின்றி, பிறர் உதவியை எதிர்பாராமல், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளுஞ் சக்தியைப் பெற்று விடுகிறது. சிறைக் கூடத்திலே உழன்று கொண்டிந்தாலும் சரி, அடர்ந்த காட்டிலே தன்னந் தனியாய்த் திரிந்து கொண்டிருந்தாலுஞ் சரி, சத்துருக் களின் மத்தியில் சிக்கிக்கொண்டிருந்தாலுஞ் சரி, கற்புடைய ஒரு பெண், தனக்குத் தானே காவலாக அமைந்து கொண்டு விடுகிறாள். இந்தச் சந்தர்ப்பத்தில் சீதையும் தமயந்தியும் துரோபதையும் நமது நினைவுக்கு வருகிறார்களல்லவா? இதனால், சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை என்ற வள்ளுவன் வாக்கு, வெறுங் கற்பனையிலிருந்து எழுந்த தன்று, உண்மை என்னும் அடிப்படையி லிருந்து எழுந்த தென்பது பெறப்படுகிறது. கற்பை, எரிக்கும் நெருப்புக்கு ஒப்பிட்டுப் பேசுவர் பெரியோர். ஆனால் இரண்டுக்கும் சில வேற்றுமைகள் உண்டு. நெருப்புக்குப் பார்க்கத் தெரியாது; பேசத் தெரியாது. ஆனால் தொட்டாரைச் சுட்டு விடும்; சுடுகிற போது, தமரென்றும் பிறரென்றும் வித்தியாசம் பார்க்கத் தெரியாது. கற்புக்கோ, பார்வையுண்டு; பேசும்; உரிமையுடைய ஒருத்தனுக்கோ ஒருத்திக்கோ மட்டும் குளிர்ந்திருக்கும். உரிமையற்றார், எண்ணத்தி னாலோ, பார்வையி னாலோ, பேச்சினாலோ, சமிக்ஞையினாலோ, உடைமையாக்கிக் கொள்ள விரும்பினாலும் சரி, முயன்றாலும் சரி, அவர்களைப் பார்வையினாலேயே எரித்து விடும்; ஒரு சொல்லினாலேயே சுட்டு விடும்; குறைந்தபட்சம் அங்கப் பழுதுடையவர்களாகவாவது ஆக்கி விடும். கற்பின் அழலால் கொடுஞ்சிலைக்கை வேடன் உடலம் கரியாக்கி விட்டாளன்றோ தமயந்தி? கற்பின் கனலியாகிய சீதா பிராட்டி, தன்னை விரும்பும் ராவணனை மட்டுமல்ல, மற்ற யாரையுமே சொல்லினால் சுட்டுவிடும் சக்தி பெற்றிருந்தாளாயினும், ராமபிரானுடைய கோதண்டத்தின் சக்தி வெளிப்பட வேண்டு மென்பதற்காக, தன் சக்தியைப் பிரயோகிக்கவில்லை. எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் என்பது கம்பன் வாக்கு. இவ்வளவென்ன? தன் கணவனைக் கொன்ற பழிக்குப் பழியாக நிலைகெழு கூடல் நீள் எரியூட்டியவள் ஒரு பத்தினிக் கடவுளல்லவோ? காலன் கவர்ந்து சென்ற உயிரை, தன் கற்புத்திறத்தினால் மீட்டு வந்த காரிகையின் புகழ், நாரியரின் நாவிலே நடம்புரிகிற தன்றோ? மற்றும் கற்பானது, தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்ளும் சக்தி படைத்திருப்பதோடு, தன் நிழலோடு ஒட்டி வந்தாரையும் காப்பாற்றும் ஆற்றல் பெற்றது. அயோத்திமா நகரம் விடுத்துக் கானகம் நோக்கிச் செல்கின்றனர் நம்பியும் நங்கையும் இளவலோடு. இரவில் வழி நடக்கின்றனர். அப்பொழுது அவர்களைக் காத்து நின்றவை யாவை? சீதையின் கற்புக்கே முதலிடம் கொடுத்துப் பேசுகின்றான் கம்பன். தையல் தன் கற்பும், தன்தகவும், தம்பியும், மையறு கருணையும், உணர்வும், வாய்மையும் செய்ய தன் வில்லுமே, சேமமாய்க் கொண்டு, ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே என்பது அவன் வாக்கு. ஆக, கற்பு என்பது, ஒருத்திக்கு ஒருத்தன் என்பது மட்டுமல்ல, ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற நியதியையும் குறிப்பதாகும். குஞ்சி யழகும், கொடுந்தானைக் கோட்டழகும், மஞ்சளழகும் அழகல்ல; நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வியழகே அழகு என்ற நாலடியார் செய்யுளொன்று, ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்துகின்றது. ஆணோ பெண்ணோ, கற்பின் நிலைக்களனா யிருந்து வாழ்க்கை நடத்துவதற்கு உண்மையான கல்வியே அடித்தளமா யமையவேண்டுமென்பது இங்குச் சுட்டிக்காட்டப்படுகிறது. பெண்டிர், ஏட்டைத் தொட்டுக் கொண்டிருந்தால், அடுக்களையில் நெருப்பு பற்றாது என்று நமது முன்னோர்கள் எப்பொழுதுமே எங்குமே சொல்லவில்லை. அதற்கு மாறாக, அடுப்பூத, படிப்பு வேண்டும் என்றே சொல்லிப் போந்தார்கள். ஒரு குடும்பத்தில், எல்லோருக்கும், வயிற்றுக் குணவு கொடுப்பது மட்டும் பெண்டிர் கடமையாகாது. பொதுவாக, அந்தக் குடும்பத்தில், அழகு, இனிமை, அமைதி, மகிழ்ச்சி இன்ன பலவற்றையும் நிலவச் செய்வது பெண்டிரின் பொறுப்பேயாகும். இதற்குக் கல்வியறிவு இன்றியமையாததல்லவா? நீதியை இரு கூறாக்கி, ஆணுக்கொரு நீதி யென்றும், பெண்ணுக் கொரு நீதியென்றும் பிரித்து வைக்கவில்லை. நமது நாட்டுப் பெரியோர்கள். இரு குலத்திற்கும் ஒரே நீதி யென்ற வகையிலேயே, அந்த வகையைச் சுட்டிக் காட்டுகின்ற முறையிலேயே, நமது தாய்மொழியில் பல்வேறு சொற்களைப் புகுத்தியிருக்கின்றனர். 15. இல்லறம் இல்லறமென்பது ஒரு கூட்டு தாபனம். அதில் இரண்டு பேர் கூட்டாளிகள். இருவரும் சம உரிமையும் சம அந்ததும் சமநோக்கு முடையவர்கள். உடலமைப்பிலும், சிலசில சுபாவங்களிலும் இருவருக்கும் வேற்றுமையுண்டு. ஆனால் இந்த வேற்றுமையே இருவரையும் ஒற்றுமைப்படுத்தி வைக்கிறது; இருவருடைய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் காரணமாயிருக்கிறது. ஒரு கூட்டாளி கணவன்; மற்றொரு கூட்டாளி மனைவி. கல்விச் செல்வமும், பொருட்செல்வமும், ஆண்மைக்குரிய பல தன்மைகளும் படைத்த ஓர் ஆண் மகன், தனித்திருந்து வாழ்க்கை நடத்து வானாகில், அஃது இல்லறமாகாது. அப்படியே, அழகும், இனிய தன்மை களும், பெண்மைக்கே உரிய கலைத்திறன்கள் பலவும் பெற்றிருக்கும் ஒரு பெண்மகள், தனித்திருந்து வாழ்க்கை நடத்துவாளாகில் அதுவும் இல்லறமாகாது. ஆணும் பெண்ணும் சேர்ந்து நடத்துகிற வாழ்க்கைக்குத் தான் இல்லறமென்று பெயர். குறைந்த பட்சம் இவ்விருவரையும் கொண்டது தான் குடும்பமென்று அழைக்கப்படுவதற்குரியதா கிறது. புருஷன் என்று சொன்னால், திரீயோடு கூடி வாழ்கிறவன் என்றே அர்த்தம். அதுபோலவே, புருஷனோடு கூடி வாழ்கிறவள் என்ற பொருளிலேயே திரீ என்ற சொல் வழங்கப்படுகிறது. உலகியலில் இருவரும் ஒன்றாகவே கணிக்கப்படுவது வழக்கம். இருவரையும் சேர்த்து முழுப்புள்ளி என்று அழைப்பர். தனித்தனி இருந்தால் அரைப்புள்ளிதான். தனித்தனியே வாழ்கின்ற ஓர் ஆண்மகனையும் ஒரு பெண்ம களையும், ஒரு கத்தரிக்கோலின் இரண்டு அலகுகளுக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம். அலகுகள் இரண்டையும் தனித்தனியே பிரித்து விட்டால், ஓர் அலகை மட்டும் கத்தரிக்கோல் என்று யாருமே அழைப்பதில்லை. ஒன்றோடொன்று இணைந்திருக்கிற போதுதான், அதாவது இரண்டு பொருள்கள் ஒரு பொருளாகிற போதுதான் அதற்கு ஒரு பெயர் கொடுத்து அழைக்கிறோம். அந்த ஒரு பொருளால்தான் பயனுண்டு. இரண்டா யிருந்தால் சீந்துவாரற்றுக் கிடக்க வேண்டியதுதான். அதுபோலவே, ஒரு பெண்மகளோடு கூடி வாழ்கிற ஆண்மகன் புருஷன். அவனால்தான் சமுதாயத்திற்குப் பயனுண்டு. ஓர் ஆண் மகனோடு கூடி வாழ்கிற பெண்மகள்தான் திரீ. அவளால்தான் ஒரு குடும்பத்திற்கு நல்ல பெயர் வாங்கித்தர முடியும். சரி; ஓர் ஆண்மகனும் ஒரு பெண்மகளும், பருவகால உணர்ச்சிக்கு வசப்பட்டவர்களாய், உடலுறவை மட்டுமே வரம்பாகக் கொண்டு ஓரிடத்தில் ஒன்றாகச் சேர்ந்திருப்பார்களானால், அஃது இல்லற மாகுமா? ஒரு போதும் ஆகாது. அவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை வாழ்க்கை யென்றுதான் சொல்ல முடியுமா? முடியவே முடியாது. உண்டு உடுத்து உறங்குவது வாழ்க்கையானால் அவர்கள் நடத்துவதும் வாழ்க்கை தான்! ஆனால் மனிதப் பிறவி எடுத்ததன் பயன் அது வல்லவே! இல்லறத்திலே ஈடுபடுத்தப்பெற்ற இருவரும், ஒரு மனப்பட்ட வராதல் வேண்டும்; ஒரே கருத்தில் தோய்தல் வேண்டும்; ஒரே நோக்கு நிலையில் நின்று உலகத்தைக் காணல் வேண்டும்; ஒரே லட்சிய முடையராதல் வேண்டும். இவர்கள்தான் தம்பதிகளென்று அழைக்கப் படுதற்குரியராகின்றார். இவர்களிடையே நிலவும் உறவு முறையானது, அழிகின்ற உடலை அடிப்படையாகக் கொண்டிராது; அழியாத ஆத்மாவை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இவர்கள், ஐம்பொறிகளினால் கிடைக்கக்கூடிய இன்பத்தைப் பெரிதாகக் கருதமாட்டார்கள்; ஆன்ம சொரூபத்தைக் காணும் முயற்சியில் ஏற்படக் கூடிய இன்பத்தையே பெரிதாகக் கருதுவார்கள். இவர்கள், மேலான உணர்ச்சிகளின் நிலைக்களமாயிருப்பார்கள். அந்த உணர்ச்சிகளை, மற்றவர்களுடைய நன்மைக்காகச் செயல் துறையில் கொண்டு வந்து காட்டுவார்கள். இவர்கள், மௌனத்திலே பேசுவார்கள்; பிரிவிலே நெருங்கியிருப்பார்கள். நரை, திரை, மூப்பு ஆகிய எதுவும் இவர்களுடைய ஒருமையைக் குலைக்காது. வறிய குடிலும் செல்வ மாளிகையும் இவர்களுடைய மதிப்பில் சம இடம் பெற்றே நிற்கும். இவர்கள் நடத்தும் இல்லறத்தையே நல்லறமென்று சொல்ல வேண்டும். கணவன்-மனைவி உறவை, ஈருயிரும் ஓருடலு மென்றும், இரு கண்களும் ஒரு பார்வையுமென்றும் வருணிப்பதுண்டு. இருவரை யும் சமநிலையில் வைத்துப் பேசுகின்ற முறையில் இது பொருத்த மாகவே இருக்கிறது. இப்படித்தான் நமது முன்னோர்களும் பேசியிருக்கிறார்கள். ஆனால் அனுபவ ரீதியாகப் பார்க்கிறபோது, ஒரு குடும்பத்தில், கணவனைக் காட்டிலும் மனைவியே முக்கிய இடம் பெற்றிருக் கிறாளல்லவா? பரம்பரையாக அனுஷ்டானத்தில் இருந்து வரும் குடும்ப தருமங்களென்ன, ஆசார நியமங்களென்ன, இவைகளைப் பற்றி ஆண்களைக் காட்டிலும் பெண்களல்லவோ அதிகமாக அறிந்து கொண்டிருக்கிறார்கள்? வீதியில் போகிற பிச்சைக்காரன், என்னவென்று கூவிப் பிச்சை கேட்கிறான்? அம்மா, தாயே, மக்களைப் பெற்ற மகராசி, என்றல்லவோ கேட்கிறான்? எந்தக் குடும்பவிவகாரத்தையும், மனைவியின் ஆலோசனையோ ஒத்துழைப்போ இல்லாமல், கணவனால் மட்டும் நிறைவேற்றி வைக்க முடிகிறதா? ஆதலின் குடும்பத்தில், மனைவிக்கே முதலிடம் கொடுத்துப் பேச விரும்புகிறோம். இங்ஙனம் முதலிடம் பெறுகின்ற மனைவியை குடும்பத்தின் உயிராகவும், கணவனை உடம்பாகவும் இயைபு படுத்திப் பார்க்கிற போது, அஃது எவ்வளவு அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது! உயிருக்கும் உடம்புக்குமுள்ள உறவே, மனைவிக்கும் கணவனுக்குமுள்ள உறவென்று சொல்லலாம். உயிரில்லாமல் உடம்பு இல்லை. அப்படியே உடம்பில்லாமல் உயிர் தனித்து இயங்குதல் இல்லை. இரண்டையும் பிரிக்க முடியாது. ஒன்றிலே மற்றொன்றாக இருந்து இயங்க வேண்டியவை. ஒன்றிலே மற்றொன்றாக மட்டும் இல்லை, ஒன்றுக்காக மற்றொன்று இருக்க வேண்டியது அவசியமாகிறது. இரண்டும் தனித்தனியே பிரிந்திருந்தால் உயிரென்ற பெயரோ உடம்பு என்ற பெயரோ இல்லை. பெயரே இல்லாத பொழுது இரண்டுக்கும் மதிப்போ, வாழ்வோ எங்கிருந்து வரப்போகிறது? உயிரானது எப்படிப் பிறர் கண்ணுக்குப் புலப்படாமல் தன்னுடைய நடமாட்டத்தினால் மட்டும் புலப்படுத்திக் கொண்டு உடம்பை இயக்கு கின்றதோ, எப்படி அதனுடைய நடமாட்டமே அதனுடைய செயலாக இருந்து உடம்பைச் செய்விக்கின்றதோ, அது போல, மனைவி யானவள், வீட்டுக்குள்ளேயே இருந்து இயங்குவதன் மூலம், கணவனை, சமுதாய மனிதனாக, சமுதாயத் தொண்டனாக இயங்கும்படி செய்கிறாள். அவனுடைய நல்லியக்கத்துக்கு அவளுடைய உந்துதலும் ஒத்துழைப்பும் அவசியமாகின்றன. அவன் எரிகின்ற விளக்கானால், அவள் எரியச் செய் கின்ற சக்தி. இதனால் இந்தச் சக்திக்கு முதலிடம் கொடுத்துப் பேசுவது தவறில்லை யல்லவா? அப்படிப் பேசுவதற்கான இன்னும் சில ஆதாரங்களை நாடிச் செல்வோம். இல்லாள் என்ற ஒரு சொல்லை எடுத்துக் கொள்வோம். இது, பெண்பாலுக்கே உரித்தானதொருசொல். இல் என்றால் வீடு. இல்லாள் எனின், இல்லுக்குரியவள், அதாவது வீட்டுக்குடையவள் என்பதே பொருளாகின்றது. இல்+ஆள்=வீட்டை ஆள்கின்றவள் என்று சிறிது நீட்டிப் பொருள் கொண்டாலும் தவறாகாது. தவிர, இல் என்ற தனிச் சொல்லுக்கே மனைவி என்ற ஒரு பொருளுண்டு. சரி; இல்லாள் என்பதற்கு ஆண்பால், இல்லான் என்றாகிறது. இல்லாதவன், அதாவது ஏதுமில்லாதவன், தரித்திரன் என்பது இதன் பொருள். வீட்டுக்குடையவன் என்ற பொருளில் இல்லான் என்று யாரும் சொல்வதில்லை. இல்லம் என்றாலும் வீடுதான். வீட்டுக்குரியவள் என்ற அர்த்தத்தில், இல்லக்கிழத்தி என்ற சொற்றொடரே பெரும்பாலும் வழக்கில் இருந்து வருகிறது. இல்லக்கிழவன் என்று அதிகமாகச் சொல்வதில்லை. மனைவி என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். மனை என்றால் வீடு; மனைவி என்ற பொருளும் உண்டு. வீட்டுக்குடையவளை இது குறிக்கிறதென்பது தெளிவாகிறதல்லவா? மனைக்குரியவள் என்ற அர்த்தத்திலேயே மனையாட்டி, மனையாள், மனைக்கிழத்தி என்ற சொற்கள் ஆட்சியில் இருந்து வருகின்றன. இவைகளுக்கேற்ற ஆண்பாற் சொற்களைக் காண்டல் அரிதன்றோ? வீட்டுக்குடையவள் என்ற பொருளில் வழங்கப்பெறும் இந்தச் சொற்களின் ஆட்சியைக் கொண்டே, குடும்பத்தில், பெண், எவ்வளவு முக்கியமான தானத்தை வகிக்கிறாளென்பது தெளிவாகிறது. குடும்பத்தை நடத்திக் கொடுக்கிறவள் என்ற கருத்திலேயே வீட்டரசி, இல்லரசி என்ற பெயர்களால் இவள் அழைக்கப்படுகிறாள். இல்லம் என்று சொன்னால், கல்லாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பெற்று நான்கு பக்கமும் சுவர்களுடைய இடம் என்பது அர்த்தமல்ல. மேற்போக்காகப் பார்க்கிறபோது இந்த அர்த்தமே நமக்குத் தென்படு மாயினும், ஆழ்ந்து நோக்குகிறபோது, இல்லாளையுடையதுதான் இல்லம் என்ற உண்மைப் பொருள் புலப்படும். மனைவியையுடையது மனை என்பதும் இப்படியே. அவள் - மனைவி - இருக்கும் இடம் சாண் இடமாயினும் அது தனிச் சோபையுடன் விளங்குகிறது அங்கு எல்லாம் நிறைந்திருக்கின்றன. அங்கு இல்லாத தொன்றுமில்லை. இதனாலேயே அவள் கிருகலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். ஆனால், அவள், எல்லாமிருந்து, தனியொருத்தியாக மட்டும் இருந்து கொண்டிருப்பாளாகில், அவளை கிருகலட்சுமி என்று சொல்ல முடியாது; அவள் வசிக்கிற இடத்தையும் இல்லம் அல்லது மனை என்று அழைக்க முடியாது; அதாவது ஒரு வீட்டுக்கு எது இருந்தால் லட்சணமா யிருக்குமோ அதை அங்கே காணமுடியாது. அந்த லட்சணம் என்ன? கணவனுக்கும் மனைவிக்குமிடையே நிலவ வேண்டிய தெய்விக உறவு. அது போலவே, எல்லா வசதிகளையும் பெற்ற ஓர் ஆண்மகன், மனைவி என்ற ஒருத்தியின் அன்பையும் நம்பிக்கையையும் பெறாமல் தனியொருவனாக இருந்து கொண்டிருப்பானாகில், அவனைப் புருஷ னென்று, அதாவது புருஷ லட்சணத்தோடு கூடியவனென்று சொல்ல முடியாது. அவன் வசிக்கிற இடத்தையும் லட்சணமான வீடு என்று சொல்ல முடியாது. ஆகவே, கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழ்கின்ற இடந்தான் வீடு. அந்த வீட்டுக்குள் சென்றால், அன்பு நம்மை வரவேற்கிறது. அறம் நமக்கு அறிமுகமாகிறது. சத்தியமும் சாந்தமும் ஈருருவங்களாக நமக்குக் காட்சியளிக்கின்றன. வணக்கஞ் செலுத்துகிறோம். பிரதி வணக்கத்தையும் பெறுகிறோம். இதுதான் இல்லறமென்றால், இதனினும் இனிதாவது எங்கும் காணோம் என்று இசை முழக்க ஆரம்பித்து விடுகிறோம். இங்ஙனம் இல்லறத்தை இனிது நடத்தும் இருவர், மூவருக்கு உறுதுணையாயிருக்கின்றார். அதாவது இவ்விருவருடைய வாழ்க்கை, மூவருடைய வாழ்க்கை இனிது நடைபெற உதவுகின்றது. அந்த மூவர் யார்? பிரம்மசாரி, வானப்பிரதன், சந்நியாசி. மூவராவார், ஆசாரி யனிடத்தினின்று ஓதுதலும் விரதங் காத்தலு மாகிய பிரம்மசரிய ஒழுக்கத்தாலும், இல்லை (இல்-வீடு) விட்டு வனத்தின்கண் தீயோடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தாலும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தாலும் என இவர் என்று மூவரின் இலக்கணம் கூறப்படுகிறது. இம்மூவருக்கும் இல்வாழ்க்கையின் இருவர் எப்படி உதவு கின்றார்? மூவரின் ஒழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும் அச்செலவிற்குப் பசி, நோய், குளிர் முதலியவற்றால் இடையூறு வராமல் உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி அவ்வவ நெறிகளின் வழுவாமல் செலுத்துகின்றார். இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை என்ற திருக்குறளையும், இதற்கு மேலே எடுத்துக் காட்டப்பெற்ற உரைப்பகுதியையும் சிந்தித்துப் பார்த்தால், இல்லறத்தின் மாண்பு நன்கு புலனாகும். 16. தாயும் சேயும் தாய்போல் சேய் என்று ஒரு வசனம் உண்டு. சேய் என்ற சொல், பொதுவாக, ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் குறிக்கின்ற தாயினும், சிறப்பாக ஆண் மகனையே குறிக்குமென்று பெரியோர் கூறுவர். முருகக் கடவுளுக்குச் சேயோன் என்ற ஒரு பெயருண்டு. ஆண் மகனையே குறிக்கின்ற ஒரு சொல்லாக இது கூறப்படினும், பெண் மகளையும் இது குறிக்கிறதென்று நாம் கொள்வது தவறாகாது. சேய் என்ற இந்தச் சொல், ஏன் மகனை மட்டுமே சுட்டிக் காட்டுவதாகக் கொள்ளப்படுகிறது? மகன், சமுதாயத்திலே வாழ வேண்டியவன்; சமுதாயத்திற்காக வாழவேண்டியவன். அதாவது அவன், பெற்ற தாய்க்கு மட்டும் உரியவனல்லன்; சமுதாயத்தின் பொதுச் சொத்து. தாயின் தனி உடைமைப் பொருளாக மட்டும் அவன் இருப்பானாகில், அவனை, வாழ்கிறவன் என்று சொல்ல முடியாது; உயிரைப் பிடித்துக் கொண்டு, எந்தவித நோக்கமு மில்லாமல் உலவிக் கொண்டிருக்கிற ஓர் உருவமென்றே சொல்ல வேண்டும். இப்படிச் சொன்னதனால், அவன், தாயைத் துறந்து விட்டு, சமுதாயத்திற்குள் புகவேண்டுமென்பது கருத்தல்ல. தாயின்றிச் சமுதாயமேது? தாய் அரும்பானால், சமுதாயம் மலர். எனவே, தாயைத் துறந்து விட்டுச் சமுதாயத்திற்குச் செல்லுதலும் கூடாது; அப்படியே, சமுதாயத்தை மறந்துவிட்டு, தாய்க்கு மகனாக மட்டும் இருத்தலும் கூடாது. இரண்டையும், அதாவது தாயை மையமாகக் கொண்டு இயங்குகின்ற குடும்பத்தையும், மனிதத் தன்மையுடைய மனிதனை மையமாகக் கொண்டு இயங்குகின்ற சமுதாயத்தையும் அணைத்துக் கொண்டும், இரண்டுக்காகவும் வாழ வேண்டும். அவன்தான், மகன் என்று அழைக்கப்படுதற்குத் தகுதியுடையவன். அவனைத் தகுதிப் படுத்திக் கொடுக்கிறவள்தான் தாய் என்று அழைக்கப்படுதற் குரியவள். அதாவது, ஒருதாய், தன் வயிற்றிலே பிறந்த மகனை, தனக்கு மட்டுமே உரிய பிள்ளையாக, தன் குடும்பத்தையே சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிற பிள்ளையாக வளர்த்தால் போதாது; சமுதாயத்திற்குரி யவனாக, சமுதாய சேவகனாக வளர்க்க வேண்டும். குடும்பத்தின் எஜமானனா யிருக்கும் தன் மகன், சமுதாயத்தின் சேவகனாகவும் இருக்கிறா னென்று எந்தத் தாய் கேள்விப்படுகிறாளோ அவள் தான் புனிதவதி. அப்படியானால், தாயின் பொறுப்பு எவ்வளவு மகத்தானதென்று நமக்கு ஒருவாறு தெரிகிறது. பிள்ளைகளைப் பெற்று விடுவது சுலபம்; ஆனால் தாயாகவோ தந்தையாகவோ இருப்பது கடினம் என்று சொல்வ துண்டு. எவ்வளவு ஆழ்ந்த கருத்துடைய வாசகம் இது! பிள்ளை களைப் பெற்று விட்ட மாத்திரத்தில் ஒரு தாய் சந்தோஷப்பட்டு விடுவாளாகில், அவள் தாய்மையின் லட்சணத்தை அறியாதவ ளென்றே சொல்ல வேண்டும். பிள்ளைகளைப் பெறுகிற காலத்தில் அவள் எவ்வளவு சிரமங்களை மேற்கொள்ள வேண்டியவளா யிருக்கிறாளோ அவைகளைக் காட்டிலும் அதிகமான சிரமங்களை, அந்தப் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கிற போது மேற்கொள்ள வேண்டியவளாயிருக்கிறாள். அந்தச் சிரமங்களை அனுபவிக்கிற போது, பெற்ற காலத்தில், தான் அடைந்த சந்தோஷம் உண்மையான தல்ல, நீடித்திருக்கக் கூடியதல்ல என்ற உண்மையை உணர்கிறாள். ஏன் இந்தப் பிள்ளைகளைப் பெற்றோம் என்றுகூட அவளுக்குத் தோன்றி விடுகிறது. ஆனால் அந்தச் சிரமங்களைப் பொருட் படுத்தாமல் பிள்ளைகளை வளர்த்தால்தான், அந்தப் பிள்ளைகளை மனிதர்களாக உருவாக்க முடியும் மனிதர்களாக உருக்கொண்ட அந்தப் பிள்ளைகள், மனிதர்களாக வாழ்கிறார்களென்று கேள்விப்படுகிறதாய் பெற்ற போதும் வளர்த்த போதும் பட்ட சிரமங்கள், அனுபவித்த வேதனைகள் அனைத்தையும் மறந்து விடுகிறாள். அவள் உள்ளத்தில் ஒருபெருமித உணர்ச்சி நிரம்புகிறது. அந்த உணர்ச்சி அவள் முகத்தில் பிரதிபலிக்காமற் போகுமா? சான்றோன் என்று சமுதாயத்தினரால் கொண்டாடப்படும் ஒருவனுடைய தாயின் முகத்தைப் பார்த்தால் இதன் உண்மை புலனாகும். அவளுக்குத் தலைவணங்குவது தெய்வசக்திக்குத் தலைவணங்குவதாகும். ஆகவே, தாய்மை என்பது பட்டமல்ல; பதவி யல்ல; உரிமைகளையும் சலுகைகளையும் எதிர்பார்த்து உழைக்கின்ற யந்திரமல்ல; ஆடை ஆபரணங்களால் நிரப்பப்பட்டு நிற்கின்ற உருவமுமல்ல. அது-தாய்மை-பொறுப்பு, உழைப்பு, அறிவு, அனுபவம், பொறுமை, இனிமை, அன்பு, தியாகம் ஆகிய இவையனைத்தையும் திரட்டி ஓர் உருவமாக்கி, உலக நன்மைக்காக ஆண்டவனால் அருளப்பட்ட வரப்பிரசாதம். தாய் போல் சேய் என்ற வாசகத்திற்கு, உடலமைப்பு, முகத் தோற்றம் ஆகிய இவ்விரண்டில் மட்டும் தாயும் சேயும் ஒரே மாதிரி இருப்பர் என்று யாரும் அர்த்தப்படுத்திக் கொள்ள மாட்டார்களென்று நம்புகிறோம். ஒரு தாயினிடத்தில் என்னென்ன குண நலன்கள் காணப்படுகின்றனவோ அவை யாவும், அவளுடைய சேயினிடத்தில் குடி கொண்டிருக்கும் என்ற கருத்தை அடிப்படை யாகக் கொண்டே இந்த வாசகம் எழுந்தது. இதன் மூலம் ஒரு தாயின் புனிதமான கடமை என்னவென்பது சொல்லாமற் சொல்லிக் காட்டப்படுகிறது. ஒரு தாயின் உள்ளப் பாங்கு எப்படி இருக்கிறதோ அப்படியே அவளுடைய மகன் அல்லது மகளுடைய உள்ளப் பாங்கும் அமைகிறது. தந்தையின் பங்கு இதில் உண்டென்றாலும் தாயின் பங்குதான் அதிக மென்று சொல்ல வேண்டும். மண்ணைப் பிசைந்து கொடுக்கிறவன் தந்தையே யானாலும், அதை அகன்ற வாயுடைய பானையாகவோ, குறுகிய வாயுடைய குடுவையாகவோ வனைவது தாயேயாகும். அப்படி வனைவதற்கான தகுதியும் திறமையும் தாய்க்கே உரியனவாய் இருக்கின்றன. மனிதரிலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் இயல்பான ஊக்கமும் செயலாற்றும் திறனும் அமைந்திருப்பது போல், தாய்க்கு, தன் சந்தானங்களை வளர்க்கும் கலையில் இயல்பான அறிவும், அதனை நடைமுறையில் கொணர்வதற்கான திறமையும் அமைந்திருக் கின்றன. இந்தத் திறமை வெளிப்படுவதற்கான மனப்பக்குவம் அவளுடைய பெண்தன்மையோடு ஒட்டியதாய் இருக்கிறது. அதாவது, இன்னா நினையாமை, இனியவை கூறல், இனியன செய்தல், பிறர் தேவையை எளிதில் உணர்தல் இன்ன பலவும் அவளுடன் பிறந்த பண்புகளன்றோ? தவிர, தன் குழந்தைகளோடு நெருக்கமான தொடர்பு கொள்வதும், தொடர்பு கொள்வதற்கான சந்தர்ப்பங்களை அதிகமாகப் பெறுவதும் தாயே தவிர தந்தையல்ல. குழந்தைகளை உண்பித்தல் முதல் உறங்க வைத்தல் வரை எல்லாம் தாயின் கடமையாகி விடுகின்றது. இதனால் தன் குழந்தை களின் தேவைகளையும் விருப்பு வெறுப்புக்களையும் தாயாலேயே சுலபமாக அறிந்து கொள்ள முடிகிறது. அப்படித் தாய் அறிந்து சொன்னால் அதை நிறைவேற்றி வைக்கிறவனே தந்தை. ஆனால் முதலில் அறிகின்றவள் தாய்தான். மனிதனுடைய வாழ்க்கையின் உதய காலம் குழந்தைப் பருவம். அந்தப் பருவத்தின் பெரும்பகுதி - ஏன்? பருவ முழுவதும்-தாயின் மடியிலும் அடி நிழலிலுமே கழிகின்றது. இதனால் அந்தப் பருவத்தின் பசிய உள்ளம் தாயின் சுவாதீனத்திலேயே இருக்கிறது. தன் சுவாதீனத்திலுள்ள அந்தப் பொருளை - பசிய உள்ளத்தை - தாய், எப்படி வேண்டுமானாலும் உருவாக்கலாம். அதில் எந்த மாதிரி முத்திரை யிடுகிறாளோ அந்த முத்திரைக் கேற்றாற்போலவே அந்தக் குழந்தையின் பிற்கால வாழ்வு அமைகிறது. பெண்கள் எப்படியாக்கிக் கொடுக்கிறார் களோ அப்படியே ஆண்கள் இருக்கிறார்கள் என்கிறான் ஒரு மேலைநாட்டு அறிஞன். ஆகவே, மனிதனை, அகன்ற வாயுடைய பானையாகவனைவ தோ, குறுகிய வாயுடைய குடுவையாக வனைவதோ, தாயின் வசத்திலேயே இருக்கிறது. தந்தை, மகனுடைய அறிவை வளர்த்துக் கொடுக்கலாம்; ஆனால் இதயத்தைத் தூய்மைப் படுத்தியும் பண்படுத்தியும் கொடுக்கிறவள் தாய்தான். அறிவு வளர்ந்திருக்க, இதயம் சூனியமாயிருந்தால் அது பெரிய ஆபத்தல்லவோ? இதயமில்லாத மனிதன் எதையும் செய்யக் கூடுமே? ஆகவே, தன் சந்தானத்தினால் குடும்பத்திற்குக் களங்கம் உண்டாகாத படியும், சமுதாயத்திற்கு ஆபத்து நேரிடாதபடியும் பார்த்துக் கொள்வது தாயின் பொறுப்பே யாகிறது. ஒரு நாட்டு மக்களுக்கு நல்ல முறையில் கல்வி கற்பிக்க வேண்டு மானால், முதலில், நல்ல தாய்மார்களைச் சிருஷ்டிக்க வேண்டுமென்று அறிஞர்கள் கூறுவார்கள். எந்த ஓர் அரசாங்கமும் எந்த மாதிரியான கல்வித் திட்டத்தை வகுத்துச் சட்ட புத்தகத்தில் ஏற்றி வைத்தாலும் அது தாய்மார்களின் ஒத்துழைப்பில்லாமல் நடைமுறையில் வராது. ஆனால் அவர்களுடைய ஒத்துழைப்பு, விளம்பரமற்றதாய், ஆடம்பரமில்லாததாய் இருக்கும். மௌனமான சேவையின் மூலந்தான் அவர்கள் தங்கள் ஒத்துழைப்பைத் தருவார்கள். இதில்தான் அவர்கள் திருப்தி யடைகிறார்கள். உலகத்தில் எத்தனையோ பேரைச் சான்றோரெனப் போற்றி அவர் களுடைய புகழைப் பாடி வருகிறோம். ஆனால் அவர்களைச் சான் றோராக்கிய தாய்மார்களைப் பற்றி நமக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்கிறது? ஒரு சிலருடைய பெயர் மட்டும் தெரிந்திருக் கிறது. அவ்வளவுதான். இதனால் அவர்களுடைய பெருமையை நாம் குறைத்துப் பேச முடியுமா? தன்னடக்கத்திலே தான் அவர்களுடைய தொண்டு பரிமளிக்கிறது. தங்கள் சந்தானங்களை முன்னணிக்குத் தள்ளி விட்டு, தாங்கள் பின்னணியில் வாய் மூடிக் கொண்டு நிற்பதிலேதான், கண் திறந்து பார்த்துக் கொண்டிருப்ப திலேதான் தங்களுடைய பெருமை இருக்கிற தென்று அவர்கள் கருதுகிறார்கள். தங்கள் மக்களுக்கு ஏற்படும் புகழிலேதான் அவர்கள் வாழ்கிறார்கள். தவிர ஒரு தாய், தன் மக்களின் கல்விப் பயிற்சிக்காக எந்த ஒரு சட்டதிட்டத்தையும் வகுத்துக் கொள்வதில்லை; எந்த ஒரு விசேஷ நூலையும் படிப்பதில்லை. ஏனென்றால், அவளுடைய பயிலுவிக்கும் பணியில் வெறும் நூலறிவு மட்டும் இடம் பெறுவ தில்லை; நல்ல சுபாவங்களை வளர்ப்பதே அதிக இடம் பெறுகிறது; ஏன், முக்கிய இடம் பெறுகிறதென்று சொல்லவேண்டும். தன் மக்கள் எல்லாரும் ஒரே வார்ப் படத்தில் வைத்து வளர்க்கப்பட வேண்டியவர்களென்று அவள் கருதுவ தில்லை. எல்லாரும் தன் மக்களேயானாலும், பல காரணங்களினால், ஒவ்வொருவருடைய மனப்போக்கும் ஒவ்வொரு வழியிலே செல்லக் கூடியதாயிருக்கு மென்பதை ஒவ்வொருவருடைய இளமைப் பருவத்திலேயே, அதாவது சுமார் ஐந்து வயதுக்குள்ளாகவே அவள் ஊகித்தறிந்து கொண்டு விடுகிறாள். அதற்குத் தகுந்தாற்போல் ஒவ்வொரு வருக்கும் பயிற்சி அளிக்கிறாள். அளிக்கும் பயிற்சி, ஒருவருக்கும் மற்றொருவருக்கும் வித்தியாசமாயிருந்தாலும், எல்லாரும் சீலமென்னும் பாதையிலே செல்லவேண்டும், சான்றாண்மைக்கு ஆழியென வாழ வேண்டும் என்பதே அவள் நோக்கமாயிருக்கிறது. அந்த நோக்கத்தை நிறைவேற்றி வைக்கக் கூடிய ஆற்றல் அவளிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. தன்னிடத்திலே இயல்பாக அமைந்திருக்கிற இந்தச் சக்தியைச் சரிவர பயன்படுத்தாதவள், தாய்மைக்கு இழுக்குத் தேடிக் கொடுத்தவளாகிறாள். 17. குழந்தை வாழ்க்கையின் உதய காலம் குழந்தைப் பருவம். எனவே உதய சூரியனும் குழந்தையும் ஒன்று. சூரியனைக் கண்டு தாமரை மலர்கிறது; குழந்தையைக் கண்டு மனம் விரிகிறது. சூரியனைக் கண்டு பனி ஓடுகிறது; குழந்தையைக் கண்டு கவலை பறக்கிறது. உலகத்திலுள்ள மனிதர்கள் எல்லோரும் குழந்தைகளாகிவிட்டால், யுத்தமே இராது; மனிதன், தினந்தோன்றும் இறந்து பிறக்க வேண்டியிராது; பொறாமைத் தீயிலே பொசுங்கிக் கருக வேண்டியிராது. செம்பைத் தங்கமாக்குவது ரசவாதம். இதைப் பெரும்பாலோர் கேள்விப்பட்டுத்தான் இருக்கிறார்கள். ஆனால், பகைவர்களை நண்பர் களாக்குவது குழந்தைகள். இதை எல்லோரும் பார்த்திருக் கிறார்கள். தாய் அடித்தால், அவள் முகத்தை முத்தம் கொடுக்கிறது; கோபத்தைச் சிரிப்பாக மாற்றுகிறது; அன்புக்கு யாரேனும் தாழ்ப் பாளிட்டால் அதைத் திறந்து விடுகிறது யார்? குழந்தை. வீட்டில் ஒரு குழந்தை தவழ்ந்து கொண்டிருக்குமானால், பத்து விருந்தினர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மாதிரி. அதனுடைய கால் சதங்கைச் சப்தம், தேவகானம். அதனுடைய கோப வார்த்தை, வீணாநாதம். குழந்தை, தூய்மையிலே தும்பை மலர்; சிரிப்பிலே முல்லை மலர்; நடையிலே குருவி; மழலைப் பேச்சிலே தேனாறு. குழந்தையைப் போற்றினால் மகாத்மாவாகி விடலாம். இது சத்தியம். 18. குழந்தையின் தேவைகள் ஐந்து அல்லது ஆறு வயது வரை, குழந்தையை வளர்ப்ப தென்பது சிறிது கடினமான காரியந்தான். ஆனால் இந்தப் பருவந்தான். அதன் வளர்ச்சியின் முக்கியமான ஒரு திருப்பம். இந்தப் பருவத்தில் அதன் முக்கியமான தேவை வருமாறு:- 1. நல்ல காற்று; நல்ல வெளிச்சம். 2. புஷ்டி தரக்கூடிய உணவு. 3. நன்றாக ஓடி விளையாட வசதியான இடம். 4. மனங்கொண்ட மட்டும் சப்தம் செய்வதற்கு உரிமை. 5. சம வயதுக் குந்தைகளின் நட்பு. 6. பெற்றோரின் கண்டிப்பான கண்காணிப்பிலிருந்து விடுதலை. 7. கீழான உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் வாய்ப்பு அளிக்காத வாசதலம். 19. குழந்தை வளர்ப்பு பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறு குற்றங்கள் செய்து விட்டால், அவர்களைச் சீர்திருத்துவதற்கென்று தனியான பள்ளிக் கூடங்கள் எந்த ஒரு நாட்டிலும் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இத்தகைய பள்ளிக்கூடங்களில் ஒன்று, அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் இருக்கிறது. இந்தப் பள்ளிக்கூடத்திற்குத் தன் மகனை அனுப்பி விடுமாறு, ஒரு சமயம் ஒரு தாயார் நகர மாஜிதிரேட்டிடம் வந்து விண்ணப்பித்துக் கொண்டாள். இதைக் கேட்ட அந்த மாஜிதிரேட்டுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. ஏன் அனுப்பச் சொல்லுகிறீர்கள்? என்று தாயாரைக் கேட்டார். என் மகன் மிகவும் பொல்லாதவனாயிருக் கிறான்; அவனை வீட்டிலேயே வைத்துக் கொண்டு என்னால் சமாளிக்க முடிய வில்லை என்று வருத்தத்தோடு கூறினாள் அந்தத் தாய். உடனே, மாஜிதிரேட் சிறுவனை அழைத்து, ஏன் இப்படித் தாயாருக்குத் தொந்தரவு கொடுக்கிறாய்? என்று கேட்டார். நான் அன்புடன் வளர்த்து வரும் நாயை என் தாயார் அடிக்கடி அடிக்கிறாள்; அதனால் அவளிடத்தில் நான் எப்படி நல்ல பிள்ளையாக நடந்துகொள்ள முடியும்? என்று சிறுவன் பதில் சொன்னான். பின்னர் விசாரித்ததில், அடுத்த வீட்டு நண்பர் ஒருவர், இந்தப் பையனுக்கு, மூன்று மாத வயதுடைய ஒரு நாய்க்குட்டியைக் கொடுத்த தாகவும், அதை அவன் வாங்கி வளர்த்து, சில வித்தைகள் கற்றுக் கொடுத்திருப்பதாகவும், அது தனித்துத் தூங்குவதற்கென்று ஒரு சிறு வீடு கட்டியிருப்பதாகவும் தெரிய வந்தன. நாய் வந்ததன் பிறகு, தன் மகன் அதிகமாக வெளியில் அலை வதில்லை யென்பதைத் தாயார் ஒப்புக் கொண்டாள். மகனால் நேசிக்கப்படும் நாயின்மீது அன்பு செலுத்துமாறு தாயாருக்குச் சொல்லி, மாஜிதிரேட், தாயையும் மகனையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதன் விளைவென்ன? சிறுவன் ஒழுங்காக நடந்து கொள்ள ஆரம்பித்தான். தாயாரிடத்தில் பரம விசுவாசம். தாயும் மகிழ்ச்சி கொண்டாள். இவை யனைத்திற்கும் காரணமென்ன? அன்பு. இந்த அன்பு தான், அறிவுப் பெட்டியைத் திறப்பது; இளமையை விகசிக்கச் செய்வது. எப்படிச் சூரியன், எல்லாப் பொருள்களுக்கும் உயிரை அளிக்கிறானோ, அப்படியே அன்பு, குழந்தைகளின் வளர்ச்சிக்கு அழகை அளிக்கிறது. அன்பினால்தான், குழந்தை களின் நல்ல தன்மைகள் யாவும் வெளிப்பட்டுப் பிரகாசிக்கின்றன. நல்லதையும் அழகானதையும் விரும்புகிற சுபாவம் குழந்தை களுக்கு இயற்கையாகவே உண்டு. இதனால் வீரர்களுடைய சரித்திரங் களையும், எஜமான விசுவாசம் முதலியவை சம்பந்தமான கதைகளையும் அவை ஆசையோடு கேட்கும். அப்படிப்பட்டவைகளையே அவைகளுக்குச் சொல்லவேண்டும். மனித னிடத்தில் இருக்க வேண்டிய உயர்ந்த தன்மைகள் யாவும் குழந்தைகளிடம் இருக்கின்றன. ஒரு குழந்தையின் பிற்கால வாழ்க்கை, அதன் இளமையில் அதற்கு அமைகிற ஆசிரியர்களையும், தோழர்களையும் பொறுத்திருக்கிறது. எந்த ஒரு குழந்தையிடத்திலும், நன்மையை விளைவிக்கக்கூடிய சக்திகளும், தீமை பயக்கக்கூடிய சக்திகளும் இருக்கின்றன. நல்ல சக்திகளை மட்டும் நாம் தட்டி யெழுப்பி விட்டோமானால் கெட்ட சக்திகள், தாமாகவே கேட்பாரற்று அழிந்துபடுகின்றன. இதனால் குழந்தைகளை இளமையில் எப்படிப் பழக்க வேண்டுமென்பதைப் பெற்றோர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். குழந்தைகளை எப்பொழுதும் கடிந்து பேசவே கூடாது. குறைத்தும் பழித்தும் வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அவர்களுடைய பலவீனத்தைச் சுட்டிச் சுட்டிக் காட்டக்கூடாது. எத்தனையோ பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளைப் பார்த்து, அடே முட்டாள், இப்படிச் செய்யலாமா? அடே சோம்பேறி, இப்படித் தூங்கிக் கொண்டிருக்கலாமா? ஒன்றுக்கும் உதவாதவன் நீ? என்பன போன்ற பிரயோகங் களைச் சரமாரியாக உபயோகிக்கிறார்கள். இவை அவ்வளவும் கெடுதல். இதனால் பிள்ளைகள் உற்சாகங்குன்றி, வாழ்க்கை யிலே சிறிது கூட இன்பத்தைக் காண முடியாதவர்களாகிவிடுகிறார்கள். குழந்தைகளை எப்பொழுதும் சிறிது தூக்கி வைத்தே பேச வேண்டும்; தட்டிக் கொடுத்துக் கொண்டே போக வேண்டும். ஒரு பையன் தவறாக ஒரு கணக்கைப் போட்டுக் காட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம். 'ஏன் தவறு செய்தா? என்று திருப்பித் திருப்பி அவனைக் கேள்வி கேட்டுப் பரிகசித்துத் திட்டுவதை விடுத்து இதனால் பாதகமில்லை; இனிச் சரியாகச் செய் என்கிற மாதிரி மேலே உற்சாகப்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும். பெற்றோர்கள், தங்களிடத்தில் பிள்ளைகள் நம்பிக்கை வைக்கும் படியாக நடந்துகொள்ள வேண்டும். எப்படி ஒரு சிறந்த சிநேகிதனுடைய நம்பிக்கையைப் பெறுவதில் நாம் கவலை யுள்ளவர்களாக இருக்கிறோமோ அப்படியே நாம், பெற்றோர்கள் என்ற முறையில் குழந்தைகளின் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்ய வேண்டும் சில குழந்தைகள், தங்கள் பெற்றோர்களைப் பற்றி மற்றவர்களிடத்தில் குறையாகச் சொல்வதை நாம் கேட்கிறோம். ஏன் அப்படி? குழந்தைகளின் நம்பிக்கையைப் பெற்றோர்கள் சம்பாதித்துக் கொள்ளவில்லை யென்பது தான் இதன் அர்த்தம். அத்தகைய பெற்றோர்களைக் குழந்தைகள் எப்படிப் பின்பற்ற முடியும்? அவர்களை முன் மாதிரியாக வைத்து எப்படித் தங்கள் வாழ்க்கையை நிர்ணயித்துக்கொள்ள முடியும்? அன்பு செலுத் தினால் அன்பு கிடைக்கிறது; மரியாதை கிடைக்கிறது. இந்த விதி எல்லாருக்கும் பொதுதானே? குழந்தைகளின் சந்தோஷகரமான வாழ்க்கைக்கு இன்றியமை யாதவை மூன்று. அவை முறையே ஆகாரம், அன்பு, விளையாட்டு. ஆகாரத்திற்கும் அன்புக்கும் அடுத்தபடியாக, குழந்தைகளின் வளர்ச்சிக்குத் துணை செய்வது விளையாட்டுதான். ஆனால் அநேகம் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை விளையாடவிடுகிறார்களில்லை. அதனால் தேகம் கெட்டுவிடு மென்றும், படிப்பிலே புத்தி செல்லாதென்றும் தவறாக நினைக் கிறார்கள். ஒரு காலத்தில் மேலை நாடுகளிலுள்ள சில கிறிதுவப் பாதிரி மார்கள், குழந்தைகளை அதிகமாக விளையாட விட்டால் அவர்களுடைய ஆன்ம வளர்ச்சிக்குப் பாதகம் உண்டாகுமென்று நினைத்தார்களாம்! இது வேடிக்கையாக இல்லையா? குழந்தைகளை விளையாட விடாத பெற்றோர்கள், அவர்களை உண்மையில் நேசிப்பவர்களில்லையென்று தான் சொல்லவேண்டும். குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மட்டுமல்ல, அறிவு வளர்ச்சியையும் அவர்கள் கட்டுப்படுத்தி விடுகிற குற்றத்திற்கு ஆளாகிறார்கள். அந்தக் குற்றத்தினின்றும் விடுதலை பெற வேண்டுமானால், பெற்றோர்கள், குழந்தைகளை அதிகமாக விளையாடுவதற்குச் சௌகரியங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முற்காலத்தில் மேலைநாட்டின் சில பிரதேசங்களில், அங்கப் பழுதுடனோ வேறு குறைகளுடனோ பிறக்கிற குழந்தைகளை, காட்டு மிருகங்களுக்கு இரையாக்கி விடுவதோ அல்லது தூர எறிந்து விடுவதோ வழக்கமாயிருந்தது. கிறிதுநாதர் தோன்றி, குழந்தைகளின் உரிமைகளுக் காகப் பெரிதும் போராடியிருக்கிறார் என்பதற்கு அநேக ஆதாரங்கள் இருக்கின்றன. குழந்தைகளை நேசிக்காதவன் கழுத்தில் கல்லைக் கட்டிச் சமுத்திரத்தில் அழுத்த வேண்டியதுதான் என்று ஓரிடத்தில் அவர் சொல்லியிருக்கிறாரில்லையா? இப்பொழுது மேலை நாடுகளில் நிலைமை மாறி விட்டது. அநேக நாடுகளில், குழந்தைகள் விஷயத்தில் அரசாங்கத்தார் அதிக கவனஞ் செலுத்தி வருகிறார்கள்; குழந்தைகளுக்கென்று போஷணை தலங்கள் பலவற்றை ஏற்படுத்தித் திறம்பட நடத்தி வருகிறார்கள். இங்ஙனமே உலகத்திலுள்ள எல்லா நாட்டு அரசாங்கங்களும் குழந்தைகள் விஷயத்தில் கவனஞ் செலுத்த வேண்டும்; குழந்தைகளைத் தேசீயப் பொக்கிஷமாகக் கருத வேண்டும். சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அதிக செல்லங் கொடுத்து வளர்க்கிறார்கள். இவர்களுடைய இந்தத் தவறான அன்பு, குழந்தை களுக்குச் சத்துருவாக வந்து முடிகிறது. உதாரணமாக, குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குப் போக மறுத்து, நோய் வந்து விட்டதென்று பாசாங்கு செய்தால், அது பாசாங்கு என்று அறியாமல் குழந்தையை வீட்டுக் குள்ளேயே இருத்தி வைத்து, முதுகையும் தலையையும் தடவிக் கொடுத்து, கண்ணே, முத்தே என்று கொஞ்சிக் குலவுகிறார்கள். குழந்தை யானது, தன் காரியம் வெற்றி பெற்றதென்று கருதி, இதே முறையை அடிக்கடி கையாள்கிறது. கடைசியில், அதன் பிற்கால வாழ்க்கை அடியோடு கெட்டுவிடுகிறது. சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் சுயநலத்தை வளர்த்துக் கொடுக்கிறார்கள். உனக்குக் கொடுத்த தின்பண்டத்தை நீயே சாப்பிடு; வேறொருவருக்கும் கொடாதே. வேண்டுமானால் அந்த மூலையில் ஒளிந்திருந்து தின்றுவிட்டு வெளியே வா என்பன போன்ற போதனை களைச் செய்கிறார்கள். என்ன கேவலம்! இன்னுஞ் சில பெற்றோர்கள், குழந்தைகளைக் கோழை களாக்கி விடுகிறார்கள். அங்கே போகாதே, இங்கே போகாதே என்பன போன்ற அச்ச வார்த்தைகளைப் புகட்டி, குழந்தைகளுக்கு இயற்கையாயமைந்துள்ள தைரிய சுபாவத்தை நசுக்கி விடுகிறார்கள். இதனால் இந்தக் குழந்தைகள் பெரியவர்களான பிறகு, தன்னம்பிக்கையற்று, எதற்கும் பிறருடைய உதவியை நாட வேண்டிய நிலைமைக்கு வந்து விடுகின்றன; இந்த மாதிரி வளர்த்த தங்கள் பெற்றோர்களைச் சபிக்கின்றன. பெற்றோர்களே, நீங்கள் எத்தனையோ குழந்தைகளுக்குப் பெற்றோராயிருக்கலாம். ஆனால் உங்களில் எத்தனை பேருக்குக் குழந்தைகளின் மனப்பான்மையை அறிந்து நடக்கிற சக்தி இருக்கிறது? சிறிது யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய குழந்தைகளின் சுயநல எண்ணத்தை வளர்ப்பதற்காக, மற்றவர் களுடைய உரிமைகளின் மீது கல் போடாதீர்கள். உங்களுடைய உரிமைகள் மீது மற்றவர் தாக்கினால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது? ஆதலின் மற்றவர்களுடைய உரிமைகளைக் காப்பாற்றுவதில் உங்கள் குழந்தைகள் கவனஞ் செலுத்துமாறு செய்யுங்கள். குழந்தைகளிடத்தில் குற்றமே கண்டுபிடித்துக் கொண்டிருந்தீர் களானால், அவைகளின் விரோதத்தைத்தான் நீங்கள் சம்பாதித்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்காக, அவை மீது குருட்டுத் தனமான அன்பு செலுத்திக் கெடுத்து விடாதீர்கள். குழந்தைகளை வளர்ப்பதென்பது ஒரு தெய்விகமானகாரியம். அதற்கு அதிகமான முன் யோசனையும் பொறுமையும் வேண்டும். இவ்விரண்டையும் அன்பு வழியிலேயே செலுத்துங்கள். 20. குழந்தைகள் போதிக்கும் பாடம் குழந்தைகளைப் போல் தாங்கள் ஆக வேண்டுமென்று ஞான மார்க்கத்திலே செல்லும் பிரயாணிகள் முயன்று கொண்டிருக் கிறார்கள். ஆனால் உலக விவகாரங்களில் மூழ்கிக் கிடக்கும் நாமோ, நம்மைப்போல் குழந்தைகளை ஆக்கிவிட முயன்று கொண்டிருக்கிறோம். ஞானிகள், குழந்தைகளிடத்தில், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராத அன்பானது ஆராவமுதமாகத் தேங்கிக் கிடப்பதைக் காண்கிறார்கள். ஆனால் உள்ளே இருக்கும் தேங்காயை விட்டுவிட்டு வெளியே இருக்கும் மட்டையை மட்டும் பிடித்துக்கொண்டு அதற்காகச் சதா சர்வகாலமும் உழன்று கொண்டிருக்கும் நாமோ, அந்தக் குழந்தைகளிடத்தில் அறியாமையையும் அசட்டுப் பிடிவாதத்தையுமே காண்கிறோம். நமக்கு விமோசனம் ஏது? உலகத்திலே ஞானிகள் மிகக் குறைவான பேர்தான்; குழந்தைகளோ கோடி கணக்கில். ஞானிகள், உலக ஆரவாரத்தி லிருந்து ஒதுங்கினவர் களாய், வெளியழகிற்கு முக்கியத்துவம் கொடாதவர்களாய், கடவுட் பித்தர் களாய் வாழ்கிறார்கள். குழந்தைகளோ, நம்மிடையிலே, ஆரவாரத்தின் மத்தியிலே, அந்த ஆரவாரத்தை இனிமையுடையதாகச் செய்து கொண்டு கொச்சை மொழியிலும் குறும்புச் செயலிலும் அழகுடையவையாய், உடலிலே அழுக்குப் படிந்திருந்தாலும் உதட்டிலே புன்சிரிப்பு மலர்ந்து கொண்டிருக்க நடமாடுகின்றன. அந்த ஒரு சிலராயுள்ள ஞானிகளைப் போல் நாம் ஆகவேண்டாம்; அப்படி ஆக முடியாதென்றுதான் நம்மிடத்திலே நம்பிக்கையின்மையெல்லாம் சேர்ந்து கூச்சலிடு கின்றனவே; நமது வார்ப்படங்களாயுள்ள குழந்தைகளைப் போலவாவது நாம் ஆக வேண்டாமா? அப்படி ஆக முடியாமற் போனால் போகிறது. அந்தக் குழந்தைகளை நாம் அறிந்து கொள்ளவாவது கூடாதா? அவைகள், அந்தக் குழந்தைகள், இலவசமாக நமக்கு எத்தனையோ பாடங்களைக் கற்பிக்கத் தயாராயிருக்கின்றன. ஆயினும் நாம் கற்றுக் கொள்ள மறுக்கிறோம். ஒரு குருவின் முன்னிலையில் எப்படி ஒரு சிஷ்யன் பயபக்தியுடன் உட்கார்ந்து கொண்டு பாடங்கற்றுக் கொள் கிறானோ அப்படி, குழந்தைகளிடம் பாடங்கற்றுக் கொள்ள வேண்டு மென்று நாம் சொல்லவில்லை. அவைகள் ஆடும்போதும் பாடும்போதும், உண்ணும் போதும் உறங்கும் போதும், அவைகளிடமிருந்து நாம் எத்தனையோ பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். ஆயினும் நாம் கற்றுக் கொள்ள மறுக்கிறோம். ஒன்றுமட்டும் இங்கே நிச்சயமாகச் சொல்லலாம். நாமெல்லோரும் - படிப்பாளிகள், உழைப்பாளிகள், விஞ்ஞான சாதிரிகள், அரசியல் வாதிகள் ஆகிய எல்லோரும் - குழந்தை மனமுடையவர்களாகிவிட்டோ மானால் உலகத்திலே, யுத்தம் ஏற்படாது; யாரும் யாருடைய சுதந்திரத்தையும் அபகரித்துக் கொள்ளமாட்டார்; ஒருவரை அழித்து மற்றொருவர் ஆக்கம் பெற மாட்டார்; எங்கும் சுபிட்சமாயிருக்கும்; எல்லோரும் எல்லோ ருடைய நலனையும் நாடுவர். குழந்தைகளைப் பற்றிய நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், உலகத்தில் எல்லாப் பாஷைகளிலும் எத்தனையோ வெளி வருகின்றன. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியையும் மன வளர்ச்சியையும் கணித்துச் சொல்வதற்கென்று எத்தனையோ விதமான பரிசோதனைகள் நடைபெறு கின்றன. ஆனால் நூல்களை எழுதுகிறவர்கள், பரிசோதனை செய்கிற வர்கள் எத்தனை பேர், குழந்தைகளின் மனப் பண்போடு தங்களை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? தாங்களே குழந்தைகளாகிவிட முயன்றிருக் கிறார்கள்? உலகத்திலே ஞானிகளாயிருக்கப் பட்டவர்களைக் காட்டிலும் ஞானத்தை உபதேசிக்கிறவர்கள் அதிகமான பேரா யிருப்பதைப் போல், குழந்தைகளைப் பற்றிச் சொல்வோர் அதிகம்; குழந்தைகளாக வேண்டுமென்ற விருப்பமுடையோர், குழந்தை களாயிருப்போர் குறைவு. உலகம், சுரைகுடுக்கை மாதிரி லேசாகிக் கொண்டு வருகிறதென்றால் அதில் என்ன ஆச்சரியம்? குழந்தை மனம், பனித்துளி போல் தூய்மையானது; நிலவொளியைப் போல் தண்மைசெய்யும் தன்மையது; வானவில் போல் மாறுபடும் பல உணர்ச்சிகளுடையது; சூரியனைப் போல் சமதிருஷ்டியுடையது; நல்ல இருட்டிலே வெளிச்சம் கொடுக்கும் நட்சத்திரத்தைப் போல் துக்கத்திலே சந்தோஷத்தை அளிக்கும் சக்தியுடையது. இந்தக் குழந்தை மனம் உலகத்திலே எல்லோருக்கும் ஏற்பட வேண்டுமென்று நாம் பிரார்த்தனை செய்வோமாக. சாதாரணமாகக் குழந்தைகள், விடியற்காலையிலேயே தூக்கத்தி லிருந்து விடுதலை பெற்றுக் கொண்டு விடுகின்றன. உடனே கைகளை ஆட்டிக்கொண்டும், கால்களை உதைத்துக் கொண்டும் விளையாடத் தொடங்கிவிடுகின்றன. தாங்கள் நித்திரையிலிருந்து எழுந்துவிட்டதைப் போல் மற்றவர்களையும் நித்திரையிலிருந்து எழுப்பி விடுகின்றன. சூரிய கிரணங்கள் தங்கள் மீது சுறுக்கென்று தைத்த பிறகு படுக்கையை விட்டு எழுந் திருப்பதுதான் கௌரவம் என்று கருதும் பெரிய மனிதர்களே! குழந்தைகளைப்போல நீங்களும் விடியற்காலை துயிலைத் துறந்து பாருங்கள். வைத்தியருக்குக் கை நீட்டுவது நிச்சயமாகக் குறையும். மற்றும் லோகோபகாரிகளான மகான்கள், தாங்கள் விழிப்புப் பெற்றதோடு திருப்தியடைய மாட்டார்கள்; மற்றவர்களையும் விழிக்கச் செய்வார்கள். தாங்கள் விழிப்படைவது, மற்றவர்களை விழிப்படையச் செய்வதிலேதான் பூர்த்தியடைகிற தென்று அவர்கள் நம்புகிறார்கள். குழந்தைகளிடமிருந்துதான் இந்த நம்பிக்கையை அவர்கள் பெற்றார்களோ என்னவோ? குழந்தைகள், நாவின் ருசிக்காக ஆகாரம் உட்கொள்வதில்லை; பசிக்காகவே உட்கொள்கின்றன; பசிக்கின்றபோதுதான் தங்கள் குரலை எழுப்புகின்றன. ஆனால், உருவத்திலே வளர்ந்துவிட்ட நாமோ, நமது ஆகார விஷயத்தில் நாவின் ருசிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கி றோம். பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆகாரத்தைத் தேடுகிறோ மில்லை. ஆகாரத்தைத் தீர்த்து விடுவதற்காகப் பசியைத் தருவித்துக் கொள்கிறோம். விளைவு என்ன? அஜீரணந்தான். குழந்தைகள் எப்பொழுதும் வெளிச்சத்தை நாடிச் செல்வதை நீங்கள் காணலாம். என்ன அர்த்தம்? அறிவை நாடிச் செல்வதிலே அவைகளுக்கு அவ்வளவு ஆர்வம் என்றல்லவோ ஏற்படுகிறது? அறிவுடையவர்களென்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நமக்கோ நல்ல வெளிச்சத்தைக் கண்டால் கண் கூசுகிறது. எங்கே வெளிச்சமில்லையோ அங்கே சென்று ஆறுதலடையப் பார்க் கிறோம். அனேகம் பேர் தூங்குகிறபோது வெளிச்சம் கூடாதென்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? தூக்கத்திலே, இருட்டிலே பெரியவர்கள் ஆறுதல் காண்கிறார்கள்! விழிப்பிலே, வெளிச்சத்திலே குழந்தைகள் ஆர்வங் காட்டுகின்றன! குழந்தைகளுக்கு அச்சமென்பது தெரியவே தெரியாது. கட்டெறும்பைப் பிடிக்கின்றன; விஷப் பாம்பைத் தொடுகின்றன. அவை, இடியோசையைக் கேட்டு உடல் நடுங்குவதில்லை; அமாவாசை இருட்டைப் பார்த்து அலறுவதில்லை. நாம்தான் அதைத்தொடாதே, இதைப் பாராதே, அங்கே போகாதே, இங்கே வராதே என்று அடிக்கடி எச்சரிக்கை செய்து அவைகளை அச்சுறுத்தி வைக்கிறோம். நம்மிடத்திலே தேங்கிக் கிடக்கும் அச்சத்தை அவைகளுக்கு மெதுமெதுவாக இன்ஜெக்ஷன் செய்கிறோம். நாளாவட்டத்தில் அவைகளிடத்திலேயுள்ள அஞ்சாமை வறண்டு போய் அந்த இடத்தில் அச்சம் தோன்றுமானால், அதற்காக நம்முடைய பிற்காலத்தில் நாம் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? குழந்தைகள் சமதிருஷ்டியுடையவை. வெள்ளைப் புறாவும் கறுப்புக் காக்கையும் அவைகளுக்கு ஒன்றுதான்; செங்கல்லும் வைரக்கல்லும் ஒன்றுதான்; அரசனும் ஆண்டியும் ஒன்றுதான்; ஆணும் பெண்ணும் ஒன்றுதான்; நெற்குவியலும் குப்பைமேடும் ஒன்று தான்; ஆழ்ந்த கிணறும் உயர்ந்த கூரையும் ஒன்றுதான். எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் தங்கள் கல்மஷமற்ற மனத்தில் தாராளமாக இடங்கொடுக்கின்றன; பரிவு காட்டுகின்றன. தான் வேறு, மற்றவர்கள் வேறு என்ற வேற்றுமை எண்ணமே அவைகளுக்குக் கிடையாது. உலகம் யாவும் ஒரு குடும்பமாகும் நாள் எந்நாளோ என்று ஏங்கி நிற்கும் லட்சியவாதிகளே! குழந்தைகளை உங்களுக்கு வழிகாட்டிகளாகக் கொள்ளுங்கள். ஒரு குழந்தைக்கு ஏதேனும் சிறிது தின்பண்டம் கொடுத்துப் பாருங்கள். அது, தானே தின்னாது; தனக்கு மட்டுந்தான் அந்தத் தின்பண்டம் என்று கருதாது. தன்னைச் சுற்றி யார் இருக்கிறார் களென்று பார்த்து அவர்களுக்கு அதில் கொஞ்சம் பகிர்ந்து கொடுக்கும். அப்படிப் பகிர்ந்துக் கொடுப்பதிலே அதற்கு ஒரு சந்தோஷம்; தன் கடமையைச் செய்கிறதாக ஒரு திருப்தி. இப்படிப் பட்ட சமதர்ம சிந்தனையுள்ள குழந்தைகளுக்குச் சுயநலத்தை விஷம்போல் ஊட்டுகிறோம்; சுற்றுமுற்றும் பார்த்து ஒருவரும் வராதிருக்கையில் நீ தனியாக இருந்து உனக்குக் கொடுத்த தின்பண்டத்தைச் சாப்பிடு என்று எச்சரிக்கைச் செய்கிறோம். நாளா வட்டத்தில் அவை நம்மைப் போல் சுயநல வடிவங்களாக வளர்வதில் என்ன ஆச்சரியம்? நாம் வளர்த்துக் கொடுத்த இந்த சுயநலமானது நம்மையே பிற்காலத்தில் நிராகரித்து விடுகிறது. அப்பொழுது வருத்தப்பட்டு என்ன பலன்? இரண்டு குழந்தைகள் நன்றாக விளையாடிக் கொண்டிருக் கின்றன; திடீரென சண்டை வந்து விடுகின்றது; ஒன்றையொன்று அடித்துக் கொள் கின்றன; அல்லது டூ, கா என்று சொல்லிக் கொண்டு விலகிவிடுகின்றன. சிறிது நேரத்திற்கெல்லாம் பாருங்கள். தங்கள் சண்டையை மறந்துவிட்டு ஒன்றுசேர்ந்து பழைய மாதிரி விளையாடத் தொடங்குகின்றன. அவைகளுக் கேற்படுகிற கோபதாபங்க ளெல்லாம் க்ஷண நேரந்தான். பெரியவர்களாகிய நாம் அப்படியல்லவோ இருக்க வேண்டும்? ஐம்புலன்களும் ஐவகை உணர்ச்சிகளும் அவைகளுக்குரிய வேலையைச் செய்து கொண்டிருக்கிற வரையில் கோபதாபங்கள் உண்டாவது சகஜந்தான். ஆனால், அவைகளை வளரவிடக்கூடாது; உடனே அவை களை மறந்துவிட வேண்டும். கோபதாபங்களை வளர விட்டோமானால் அவை காலக்கிரமத்தில் நம்மையே பொசுக்கி விடும். குழந்தையை, விஷமஞ் செய்ததற்காகத் தாயார் அடிக்கிறாள்; அல்லது திட்டுகிறாள். குழந்தையும் தேம்பித் தேம்பி அழுகிறது. தாயாரும் தன் காரியங்களைக் கவனிக்கப் போய்விடுகிறாள். சிறிது நேரத்திற் கெல்லாம் என்ன ஆகிறது? தாயை நோக்கி குழந்தை ஓடி வருகிறது. ஏன்? அடித்த தாயை அடிக்கவா? இல்லை. இல்லை; அடித்த தாயுடன் கொஞ்சி விளையாட. தன் தாய் அடித்ததை மறந்து விடுகிறது அப்படி மறந்துவிட்ட தன் மூலம் தாய்க்குத் தன்மீது இரக்கம் உண்டாகும்படி செய்து கொள்கிறது. பெரியவர்களாகிய நாம், நமது அன்றாட வாழ்ககையில் இந்த நியதியைக் கடைப் பிடிப்போமானால், குடும்பப் பிணக்குகள், வகுப்புப் பொறாமைகள் முதலியனவெல்லாம் சுலபமாக மறைந்துவிடுமல்லவா? குழந்தைகள், கட்டுப்பாட்டை அறவே வெறுக்கின்றன; தங்கள் இஷ்டப்படி ஆடி ஓடுவதைத்தான் விரும்புகின்றன. ஒரு வீடு எவ்வளவு விசாலமுடையதாயிருந்த போதிலும் அதில் குழந்தைகள் புழங்க விரும்புவதில்லை யென்பதைக் கவனித்திருக்கிறீர்களா? தோட்டத்திலே, திறந்த வெளியிலேதான் அவை அதிகமான குதூகலத்தை அடைகின்றன. அதாவது அவை, சுதந்திர வாழ்க்கையி லும் இயற்கையோடியைந்த வாழ்க்கையிலும் இச்சையுடையவை என்பதே தாத்பரியம். ஆனால் நாமோ, திறந்த வெளியைக் கண்டு பயப்படுகிறோம். சுதந்திர வாழ்க்கையின் லட்சணமென்ன வென்றுகூட நமக்குத் தெரியாது. அப்படித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலும் நமக்கு இருப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகளுக்கு எண்ணம் குறைவு; செயல் அதிகம். இதனால் தான் அவை வளர்ச்சி யடைகின்றன. நாமோ எண்ணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்; செயலைக் குறைத்துக் கொண்டு விட்டோம். நமக்கு வாழ்வானது ஊற்றுப் பெருக்கெடுத் தோடாமல் குட்டை நீராகத் தேங்கிக் கிடக்கிறது. குட்டை நீரில் கொசுக்கள் மலிந்திருப்பதைப் போல் நம்முடைய வாழ்க்கையிலும், விகற்ப எண்ணம், விபரீத புத்தி எல்லாம் மலிந்து கிடக்கின்றன. இவைகளை அகற்றி வாழ்க்கையைத் தூய்மை யுடையதாகச் செய்து கொள்ள, குழந்தைகளே! நீங்கள்தான் எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.  மனிதன் யார்? 1. மனிதன் யார்? எவனொருவன் ஒரு பெரிய கூட்டத்தில் தனது தனித்துவத்தை விட்டுக் கொடாமலிக்கிறானோ, எவனொருவன் தனது நம்பிக்கையிலே தைரியங் கொண்ட வனய், உலகமெல்லாம் ஒன்று சேர்ந்து ஆம் என்று உரக்கச் சத்தமிட்ட போதிலும் இல்லை என்று கூற வல்லானோ. எவனொருவன் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்றுக் கொண்டுள்ள தொழிலை, அது தரும் ஊதியத்தைக் கொண்டு இழிவென்றோ உயர் வென்றோ கருதாமல், அத்தொழிலுக்குப் புறம்பானவனா யிருக்கிறானோ, எவனொருவன் தனது தொழிலில் ஆத்ம அபிவிருத்தி, ஞானப் பெருக்கம், ஒழுங்கு, ஒழுக்கம், மனிதத்தன்மை ஆகியவற்றைக் காண் கிறானோ, எவனொருவன் நிதான புத்தியுடையவனாய், தனது உபயோகத்தை யும் அதிகாரத்தையும் ஒரு சிறு குறை காரணமாக உலக நன்மைக்குப் பயன்படுத்த முடியாத சாபத்தைப் பெறாம லிருக்கிறானோ, எவனொருவன் இயற்கையிலேயே கோழையாக இல்லாமல் வீர புருஷனாக விளங்குகிறானோ, எவனொருவன் தனது ஆத்ம வளர்ச்சியை ஒரு சார்பாக மட்டும் செலுத்தாமல் பல சார்பாகவும் ஒரே நிதானமாகச் செலுத்து கிறானோ, எவனொருவன் விசால நோக்குடன் விஷயங்களை ஆழ்ந்து கவனித்து, கல்லூரியில் படித்த விஷயங்களை, ஏட்டுச்சுரைக் காயாகக் கொள்ளாமல் அனுபவ வாழ்க்கைக்குக் கொண்டு வருகிறானோ, எவனொருவன் தனது நல்ல பெயரை விலையற்ற பொக்கிஷ மாகக் கருதுகிறானோ, எவனொருவன் வெறுந்துறவியா யில்லாமல் உயிரும் ஊக்கமும் நிறைந்தவனாய், தனது உணர்ச்சிகளையெல்லாம் தனது மனோ பலத்திற்குக் கட்டுப்படுத்துகிறவனாய், தனது மனச் சாட்சிக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவனாய், இயற்கை யழகையும் கலை யழகையும் அனுபவிக்கக்கூடியவனாய், இழிவான எண்ணங் களையும் செயல் களையும் புறக்கணிப்பவனாய், தன்னைப்போல் பிறரையும் மதிக்கக் கூடியவனாய் இருக்கிறானோ, அவனே மனிதன் மனிதன், நிமிர்ந்து நிற்க வேண்டும்; தூய்மையுள்ளவனாய் இருக்க வேண்டும்; தாராள மனப்பான்மை கொண்டவனாய் இருக்க வேண்டும். இவை மட்டும் போதா. அவன், அறிவு, திறமை, வீரம் முதலியன நிறைந்த வனாகவும் இருக்க வேண்டும். இத்தகையவனே மனிதன் என்று கடவுள் அழைக்கிறார். அவனது நரம்புகள் உணர்ச்சி வேகத்தினால் முறுக்கேறி நிற்க வேண்டும். அவனது அறிவு, கூர்மை, ஆழம், விசாலம் இவற்றோடு கூடி இருக்க வேண்டும். அவனது கரங்கள் எந்தத் தொழிலையும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். அவனது கண்கள் தூரதிருஷ்டிக் கண்ணாடி போல இருக்க வேண்டும். அவனது இருதயம் மிருதுவானதாய், மிகப்பரந்ததாய், பளிங்கு போல் இருக்க வேண்டும். அவன்தான் மனிதன். 2. பெரிய மனிதன் பெரிய மனிதன் என்று ஒருவனைப் பார்த்துச் சொல்கிறோம். எந்த அர்த்தத்தில் அப்படிச் சொல்கிறோமென்பதை நாம் அதிகமாகச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஒருவனுடைய உருவம், அவனைப் பெரிய மனிதனாக்கி விடாது. அவன் பெற்றிருக்கும் பிள்ளைகள், அவர்களுக்காக அவன் சேர்த்து வைத்திருக்கும் சொத்து சுதந்திரங்கள், பட்டம் பெறுவதற்காக அவன் படித்த படிப்பு, அந்தப் படிப்புக்காக அவன் பறி கொடுத்த பணம், இசை, ஓவியம் போன்ற நுண்கலைகளில் அவன் பெற்றுள்ள தேர்ச்சிக்காக கிடைத்த விருதுகள். கல்லையும் கரைந்துருகச் செய்யவல்ல அவனுடைய பேச்சாற்றல் இப்படிப் போன்ற எதுவும் ஒருவனைப் பெரிய மனிதனாக்கிவிட முடியாது. இவை பலவும் ஒருவனிடத்தில் ஒன்று திரண்டு அவனைப் பெரிய மனிதனாக்க முயன்றாலும், அந்த முயற்சி தோல்வியடையும். போகட்டும்; அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கிறவனையோ, அமர்த்தப்பட்டிருக்கிறவனையோ பெரிய மனிதனென்று சொல்ல முடியுமா? ஒரு போதும் முடியாது. அதிகாரத்தில் இருப்பதனால் ஒருவன் பெரிய மனிதனாகி விட மாட்டான். பெரிய மனிதனாயிருக்கிறவன் அதிகார பீடத்தில் அமர்வதுதான் முறை; அமர்த்தப்படுவது தான் நியாயம். இந்த நியாயம் கடைப்பிடிக்கப் பட்டால், உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் சகோதர உறவு பூண்டு வாழும். ஆனால் அதிகார சக்தியும் மனிதத்தன்மையும் பெரும்பாலும் இணைந்து போவதில்லை. ஒன்றின் மீது மற்றொன்று ஆதிக்கங் கொள்ளவே பார்க்கிறது. கடைசியில் இரண்டில் ஒன்றுதோல்வி யடைந்து மற்றொன்றினிடம் சரண் புக வேண்டி வந்து விடுகிறது. அதிகார சக்தி எப்பொழுதுமே தன்முனைப்புடையது; தன்னலம் பேணுவது; தற்காப்பு நிமித்தம் தகாத செயல்களில் ஈடுபடத் தயங்காதது; யாரையும் சந்தேகத்துடன் பார்ப்பது; எந்தச் சமயத்தில் எந்தவிதமான ஆபத்து தன்னைச் சூழ்ந்து கொள்ளுமோ என்று அடிக்கடி மருள்வது; அச்சத்தினால் சுலபமாக ஆட்கொள்ளப் படுவது, மனிதத் தன்மையோ இவைகளுக் கெல்லாம் நேர்மாறானது. அது, பணிவிலே பெருமை காண்பது; பரநலம் பேணுவது; அஞ்சாமையின் நிலைக்களன்; அதனால் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிமித்தம் அதற்கு ஏற்படுவதில்லை. யாரையும் நம்புகிறது; எங்கணும் நன்மையையே காண்கிறது. இந்த நிலையில் இரண்டும் - அதிகார சக்தியும் மனிதத்தன்மையும் இணைந்து போக வில்லை யென்றால் அதற்காக நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. என்றாலும் ஆதிகாலத்திலிருந்து ஒரு சிலர் இரண்டையும் அணைத்துக் கொண்டு வாழ முயற்சி செய்யாமலில்லை. அதாவது பெரிய மனிதனாகவும் அதே சமயத்தில் மேலதிகாரியாகவும் இருந்து வாழ்க்கையை நடத்த முயன்றிருக்கிறார்கள். இந்த முயற்சியில் இவர்கள் முழு வெற்றி கண்டார்களா என்பது வேறு கேள்வி. முயன்றதே பெரிய சாதனையல்லவா? அப்படிப்பட்டவர்களில் ஒரு சிலரே சரித்திர ஏடுகளில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களை அந்தச் சரித்திர ஏடுகளிலேயே வீற்றிருக்கும்படி செய்து விட்டு,பெரிய மனிதன் யார் என்ற கேள்விக்கு விடை காண முற்படுவோம். எவன், ஒரு ராஜ்யத்தை ஆட்டி வைக்கின்ற அதிகாரத்தைப் பெற்றிருந்த போதிலும், அந்த அதிகாரத்தைத் தன்னுடைய ஒரு சிறு நன்மைக்காகக்கூட பயன்படுத்தாமலிருக்கிறானோ, தனது நலன் வேறு, அதிகார நலன் வேறு என்று மனப்பூர்வமாகக் கருதி அதை இம்மியும் பிசகாமல் நடைமுறையில் கொண்டு வருகின்றானோ அவன் பெரிய மனிதன். கி.மு. நான்காவது நூற்றாண்டில் இந்தியாவில் மௌரிய சாம்ராஜ்யத்தைக் கட்டியாண்ட சந்திரகுப்தனை அரசு கட்டிலில் அமரச் செய்த சாணக்கியன் என்னும் கௌடல்யன், தனக்கென்று ஒரு சிறு வீடு கட்டிக் கொள்ளவில்லை; கடைசி நாட்கள் வரை ஒரு சிறு குடிசை அமைத்துக் கொண்டு அதிலேயே வாழ்ந்தான். அவன் தன்னுடைய அரசியல் அறிவு, அதிகாரசக்தி எதையும், தன்னுடைய நன்மைக்குச் சிறிதும் உபயோகித்துக் கொள்ளவில்லை; ராஜ்ய நன்மைக்காகவே செலவழித்தான். மதுரையில் புதுமண்டபம் இருக்கிறதல்லவா, அது, நீலகண்டர் என்ற மகா வித்துவான் காலத்தில் கட்டப் பெற்றது. அவர் வட மொழியில் அநேக நூல்கள் இயற்றியுள்ளார்; திருமலை நாயக்கருடைய முக்கிய மந்திரிகளில் ஒருவராயிருந்து அவருடைய அன்பையும் நன் மதிப்பையும் பெற்றவர். இருந்தாலும் எளிய முறையிலேயே வாழ்க்கையை நடத்தி வந்தார். எந்த ஒரு சலுகையை யும் நாயக்கரிட மிருந்து பெறவில்லை. கடைசி காலத்தில், துறவு பூண்டு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பாலாமடை என்னும் சிற்றூரில் தங்கியிருந்து அங்கேயே முக்தியடைந்தார். அவருடைய மூதாதையர் பலரும் அதிகார பதவியிலிருந்த போதிலும், சாதாரண மனிதர்கள் போல, ஆனால் பெரிய மனிதர்களாக வாழ்ந்து வந்தார்கள். பிரான் தேசத்தில் இருபதாவது நூற்றாண்டின் முற் பகுதியில் பிரபல ராஜ தந்திரியாக விளங்கியவன் பாயின்கரே1 என்பவன். முதல் உலக மகாயுத்தத்தில் (1914 - 1918) இவன் எடுத்துக் கொண்ட பங்கு அதிகம். சுமார் நாற்பது வருஷம் இவனுக்கும் அரசாங்கத்திற்கும் ஏதோ ஒருவித தொடர்பு இருந்து வந்தது. மூன்று தடவை பிரதம மந்திரியாயிருந்தான். ஆனால் ஒரு தடவை கூட அரசாங்க பொக்கிஷத்திலிருந்து சம்பளம் பெற்றுவந்த ஒரு சிற்றாளை, தன் சொந்தக் காரியத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதில்லை. தான் அலுவல் பார்த்து வந்த அறையின் முன் பக்கம் அமர்ந்து வருவோர் போவோருக்கு வழி காட்டும் வேலையைச் செய்து வந்த சேவகனை, தன்னுடைய ஒரு சிறு தேவைக்காக ஒரு தடவைகூட ஏவியதில்லை. அலுவலகத்துச் சிப்பந்திகளிடம் மட்டுமல்ல, பொது மக்களிடமும் இவனுக்கு அபரிமிதமான செல்வாக்கு இருந்தது என்ன ஆச்சரியம்? எவன் மற்றவர்களின் அவல நிலையைக் கண்டு ஐயோ என்று பெருமூச்சுவிடுகிறானோ மூச்சுவிடுவதோடு நின்றுவிடாமல் தன் பேச்சினாலும் செயலினாலும் அந்த அவலநிலையிலிருந்து அவர் களை மீட்க, சிரித்த முகத்துடன் முன் வருகிறானோ அவன் பெரிய மனிதன். அவன் அரசனாயிருக்கலாம்; அல்லது சாதாரண ஒரு குடியான வனாயிருக்கலாம்; எப்படியிருந்த போதிலும் அவன் மனிதத் தன்மையின் சிகரத்தில் ஏறி நிற்கிறவனே. ஐரோப்பாவிலுள்ள ஆதிரியா தேசத்தின் தலைநகரமாகிய வியன்னாவில் ஒரு சமயம் வாந்திபேதி நோய் பரவி அநேக உயிர் களைக் கொள்ளை கொண்டு வந்தது. பொதுவாக ஐரோப்பியர்கள் மற்ற நோய்களைக் கண்டு அஞ்சினாலும் அஞ்சா விட்டாலும் மேற்படி நோய்க்குப் பெரிதும் அஞ்சி விடுவார்கள். இதனால் நகர வீதிகளில் அதிக ஜன நடமாட்டம் இல்லாம லிருந்தது. இறந்து போனவர்களை அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் பொழுது உற்றார் உறவினர் கூட சவத்திற்குப் பின்னால் செல்ல அஞ்சினார்கள். இப்படியிருக்கையில், அப்பொழுது ஆண்டு வந்த பிரான்சி என்ற மன்னன் ஊர் நிலைமையை நேரில் அறிந்து கொள்ள விரும்பி ஒரு நாள் தன் மெய்க்காப்பாளன் ஒருவனுடன் ஒரு தெரு வழியே கால் நடையாக வந்து கொண்டிருந்தான். அப்பொழுது, இறந்து போன ஒருவனைக் கோணியில் சுருட்டிக் கட்டி, இரண்டு பேர் இழுத்துக்கொண்டு வருவதை எதிரில் பார்த்தான். பின்னாடி ஒருவர் கூட வரவில்லை. இறந்து போன இவனுக்குத் துக்கம் கொண்டாடுவோர் ஒருவர்கூட வரவில்லையா என்று கேட்டான் அரசன். இவன் பரம ஏழை வாந்தி பேதியால் இறந்து விட்டான். இதனால் துக்கம் கொண்டாடக் கூடிய உறவினர் யாரும் வரத்துணியவில்லை என்று பதில் கிடைத்தது. அப்படியானால் நாம் துக்கம் கொண்டாடுவோராக இருந்து இந்தச் சவத்தைப் பின் தொடருவோம் என்று சொல்லி அரசனும் மெய்க்காப்பாளனும் பின் தொடர்ந்தார்கள். சவ அடக்கத்திற்குரிய இடத்திற்குச் சென்று, கிறிதுவ முறைப்படி சடங்குகள் நடைபெறுமாறு செய்து, எல்லாம் முடிந்த பிறகு அரண்மனை திரும்பினான் அரசன். இத்தாலியில் ஒரு சம்பவம், வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிவந்த ஓர் ஆறு. ஒரு பாலத்தின் மீது மோதி அதன் இரு பக்கங் களையும் உடைத்து விட்டது. நடுப்பக்கம் மட்டும் அப்படியே இருந்தது. ஆனால் அதுவும் சில நிமிஷங்களில் விட்டுப் போகக் கூடும். இந்த நிலைமையில், பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த நாலைந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர். நடுப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். என்ன செய்வார்கள்? இரு கரையிலு முள்ளவர்களை நோக்கிக் குய்யோ முறையோ என்று கத்தினார்கள். பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு பக்கத்துக் கரையிலே நின்று கொண்டிருந்த ஒரு பணக்காரப் பிரபு. தன்னால் நேரடியாக உதவிக்குச் செல்ல முடியாவிட்டாலும், வேறு யாரையாவது கொண்டு உதவி செய்ய வேண்டுமென்ற அளவுக்கு இளகிய மனம் படைத்தவன். யாராவது இவர்களை மீட்டுக் கொண்டு வந்தால் நூறு பவுன் கொடுக்கிறேன் என்று பக்கத்திலிருந்தவர்களைப் பார்த்துச் சொன்னான். இதைக் கேட்டும் கேளாததுமாய், ஒரு குடியானவன் ஒரு படகை எடுத்துக் கொண்டு பாலத்தை நோக்கிச் சென்றான். சென்று, தத்தளித்துக் கொண்டிருந்த குடும்பத்தினரைப் படகிலே ஏற்றிக் கொண்டு கரை வந்து சேர்ந்தான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த பிரபு அந்தக் குடியானவனிடம் சென்று உன் உயிரையும் பொருட்படுத்தாமல் இவர்களை மீட்டு வந்ததற்காக மிகவும் சந்தோஷம். நான் சொன்னபடி நூறு பவுன் கொடுக்கிறேன்; பெற்றுக் கொள், என்று பணத்தோடு கையை நீட்டினான். அந்தக் குடியானவனோ, நான் பணத்திற்காக உயிரை விற்கிறவனன்று; இந்தக் குடும்பத்தினருக்குக் கொடுங்கள்என்று சொல்லி, பிரபுவின் பார்வையி லிருந்து மறைந்து விட்டான். பெரிய மனிதனைக் கணிப்பதற்கு, சமுதாயத்தில் குறிப்பிட்ட ஓர் அந்தது பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை. பெரிய மனிதனை, பனி உறைந்த பிரதேசத்திலும் பார்க்கலாம்; பாலைவனத் திலும் பார்க்கலாம். நல்ல பரம்பரையில் வந்தவன் என்பதற்காக ஒருவனைப் பெரிய மனிதன் என்று மதிக்க முடியுமா? அப்படியே நற்குணங்களற்ற பெற்றோருக்குப் பிறக்கும் ஒருவன் பெரிய மனிதனாக வாழ்க்கை நடத்தி எல்லோருடைய மதிப்பையும் பெறுதல் கூடும். வறுமையில் பெருமை மலர்வதையும், செல்வத்தில் சிறுமை வளர்வதையும், உலக வரலாற்றில் சர்வசாதாரண மாகக் காணலாம். உலகத்துப் பலமொழி அறிஞர்கள், பெரிய மனிதனுக்கு எத்தனையோ லட்சணங்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். ஓர் அறிஞன் கூறுகிறான்; நேர்மை, சாந்தம், உதாரகுணம், தைரியம், அறிவுடைமை இவை எவனிடத்தில் ஒன்று கூடியிருக்கின்றனவோ, எவன், இவைகளை அழகான முறையிலும் இனிமையான முறையிலும் வெளிப்படுத்து கிறானோ அவன் பெரிய மனிதன். இன்னோர் அறிஞன் சொல்கிறான் :- எவனிடம் குறைந்தபட்சம் பன்னிரண்டு விதமான குணங்கள் இருக்கின்றனவோ அவன் பெரிய மனிதன். பன்னிரண்டு குணங்கள் யாவை? 1.நித்தியமாயும் நல்லதாயு முள்ளது எதுவோ அதனிடத்தில் திடமான விசுவாசம், 2. அன்புடைமை, 3. நியாயபுத்தி, 4. உலகியலறிவு, 5. எது சரி, எது தவறு என்று நிர்ணயிக்கின்ற விவேகம், 6. எதிலும் நிதானம், 7. உறுதி, 8. உண்மை கடைப்பிடித்தல், 9. தாராள மனப்பான்மை, 10. சுறுசுறுப்பு, 11. சர்வானுகூல நம்பிக்கை, 12. ஆண்மை. மற்றோர் அறிஞன் பேசுகிறான் :- தன்னைப் போல் பிறரைக் கருதுதல், விரிந்த மனம் படைத்திருத்தல், அடக்கம், தனக்குரிய நிலையினின்று தாழாமை இவையே ஒரு பெரிய மனிதனின் அடையாளங்கள். பொதுவாகச் சொல்லப் போனால், யாரார் தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் பெருந் தன்மையாக நடந்து வந்திருக்கிறார்களோ அவர்கள் என்றும் பெரிய மனிதர்களாக - சிரஞ்சீவிகளாக - வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள், அவர்களுடைய பெருந்தன்மையைப் புரிந்து கொள்ளா தவர்கள், இருந்த காலத்திலேயே இறந்து விட்டவர்கள். ஸாக்ரட்டீஸுக்கு மரண தண்டனை விதித்தவர் களோ, விஷங் குடிக்கச் செய்தவர் களோ, யாருடைய நினைவிலாவது இருக்கிறார்களா? ஆனால் ஸாக்ரட்டீ எல்லோருடைய இதயத்திலும் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். மகாத்மா காந்தியைச் சுட்டி வீழ்த்திய கோட்ஸே., உலக மக்களிட்ட சாபத்தீயிலே என்றைக்கோ பொசுங்கிப் போய்விட்டான். ஆனால் மகாத்மா காந்தி, உலகத்தாரின் மௌனப் பிரார்த்தனையில் கொலு வீற்றிருப்பதை அறியாதார் யார்? 3. மனிதப் பண்பு மனிதப் பண்பு என்பது, குறிப்பிட்ட ஓர் இனத்தார் அல்லது நாட்டாருக்கு மட்டும் உரித்தானதொரு தனிச்சொத்தல்ல; எல்லா இனத்தார்க்கும், எல்லா நாட்டார்க்கும் பொதுவானதொரு சேம நிதி ஏதோ ஒரு காலத்திற்கு மட்டும் வெளிச்சங் காட்டிவிட்டு அணைந்து போகும் விளக்கல்ல; எக்காலத்திலும் எரிந்து கொண்டிருக்க வேண்டிய தூண்டா விளக்கு. அடர்ந்த காட்டிலே, மலை முகட்டிலே, இருட்டுக்குகையிலே, பனி உறைந்திருக்கும் பிரதேசத்திலே எத்தனையோ விதம் விதமான மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுடைய பழக்க வழக்கங்கள், நமக்குச் சில சமயங் களில் சிரிப்பையூட்டுகின்றன. அவர்களுடைய உணவு வகைகளும் உடை மாதிரிகளும் நமக்குச் சிறிது அருவருப்பைக் கொடுக்கின்றன. இருந்தாலும் இந்தக் காரணங்களினால் அவர்களிடத்தில் மனிதப்பண்பு இல்லையென்று தீர்மானித்துவிட முடியாது. இதே பிரகாரம் நாகரிகத்தில் முதிர்ச்சி பெற்றவர்களென்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கணித்துப் பார்க்க வேண்டும். ஒருவன், போர்க்களத்தில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்திருக்கலாம்; நூறாறு வீரப்பதக்கங்கள் வாங்கியிருக்கலாம்; ஆனால் அவன் மனிதனாக ஒரு கணமாவது வாழாமல் மரித்துப் போய்விடலாம். இன்னொருவன், அரசாங்க நிருவாகத்தில் மிகத் திறமை யுள்ளவனாயிருக்கலாம்; நூற்றுக் கணக்கான பேர் அவன் காலாலிட்ட வேலையைத் தலையால் செய்யக் காத்துக் கிடக்கலாம். ஆனால் அவனிடத்தில் மனிதப் பண்பு எங்காவது ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று அந்தப் பணியாட்களுடைய உள்ளம் தேடிக் கொண்டுதான் இருக்கும். இன்னொருவன், செல்வத்திலே புரண்டு எழுந்து கொண்டிருக்கலாம். ஆனால் மனிதன் என்ற வார்த்தை அவனுக்குப் புரியாத புதிராயிருக்கலாம். ஆக,வசிக்கின்ற இடம். உண்ணுகின்ற உணவு, உடுக்கின்ற உடை, வகிக் கின்ற பதவி, படைத்திருக்கிற செல்வம் இவைகளைக் கொண்டு மனிதப் பண்பைக் கணித்துவிட முடியா தென்பது பெறப்படுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மனிதப் பண்பு என்பது, புறத்திலே தெரியும் ஒரு காட்சிப் பொருளல்ல; அகத்திலே மலர்ந்து மணம் வீசும் பன்னிற மலர். பண்பு என்ற சொல்லுக்கு பிறர் இயல்பறிந்து நடக்கும் நற்குணம் என்று பொதுவாகப் பொருள் கூறுவர் அறிஞர். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், இந்தப் பொருள் சிறிது மயக்கந்தருவது போல் இருக்கும். எப்படியென்றால், அதிகார பதவியிலுள்ள ஒருவன்; பணத்தாசை தவிர வேறொன்றும் அவன் சிந்தையில் எழுவதில்லை. அஃது அவனுடைய இயல்பாயிருக்கிறது. அப்படிப்பட்டவனிடம் ஒருவன் ஊழியம் பார்க்கிறான். பிறர் இயல்பறிந்து நடக்க வேண்டுமென்றால், அந்த அதிகாரி யினுடைய பணத்தாசைக்குத் தூபம் போட்டுக் கொண்டிருக்க வேண்டு மல்லவா? அப்படிச் செய்வானாகில், அந்த ஊழியனை மனிதப் பண்பு டையவன் என்று சொல்ல முடியுமா? சிலர் எரிந்து விழுகிறமாதிரி பேசுகிறார்கள். சிலர், எப்பொழுதும் கேலி செய்த வண்ணமிருக்கிறார்கள். சிலர், யாரிடத்தில் என்ன குறை இருக்குமென்பதைத் தேடிப் பிடிப்பதிலேயே தங்கள் அறிவையும் காலத்தையும் செலவழிக் கிறார்கள். இவையெல்லாம் அவர்களுடைய சுபாவங்கள்; அதாவது அவர்களிடமிருந்து இந்தத் தன்மைகளைப் பிரிக்க முடியாது. இவையும் அவர்களும் அவ்வளவு ஐக்கியப்பட்டிருக் கிறார்கள். துரதிருஷ்ட வசமாக இப்படிப்பட்டவர்களிற் சிலருடைய நட்பு நமக்குக் கிடைத்து விடுகிறது. அந்த நட்பைக் காப்பாற்றி வரவேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம். அவர்களுடைய மேலே சொன்ன சுபாவங்களுக் கெல்லாம் நாம் இணைந்து கொண்டுபோகலாமா? அதாவது, அவர் களுடைய இயல்பறிந்து நடப்பது நமது பண்புக்கேற்றதாகுமா? பிறர் இயல்பறிந்து நடத்தல் என்று சொன்னால், நம்முடைய தனித்துவத்தை ஒரு விதமாக ஒதுக்கி வைத்துவிட்டு, யாரார் எப்படி எப்படி இருக்கிறார்களோ, எப்படி எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்களோ, அப்படி அப்படியெல்லாம் நாமும் இருக்க வேண்டும். நடந்து கொள்ள வேண்டும் என்றல்லவோ அர்த்தமா கிறது? அப்படி நடந்து கொள் வோமோனால், இழுத்த இழுப்புப்படி ஆடுகின்ற நிழலாட்டப் பொம்மைக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? இயற்கையோடு இணைந்தது இயல்பு. இரண்டு சொற்களும் ஏறக்குறைய ஒரே பொருளைத் தருவன. இயற்கையின் தன்மை என்ன? அழகாயிருப்பது; குளிர்ச்சி தருவது, பிறர் வேண்டுதலின்றித் தன்னிடத் திலுள்ளதை வழங்குவது; அழித்தும் அழிபடாமல் எப்பொழுதும் புதுமையை நல்கிக் கொண்டு நிலையாயிருப்பது. இயற்கைக்காட்சி என்று சொன்னால், அழகு, குளிர்ச்சி, இனிமை இவை பலவற்றையும் கொண்டுள்ள ஒன்றைத்தான் குறிப்பிடு கிறோமே தவிர. அவை இல்லாத ஒன்றைக் குறிப்பிடுகிறோமில்லை. அதுபோலவே ராமனுடைய இயற்கை அல்லது கோவிந்தனுடைய இயல்பு என்றுசொன்னால் ராமனிடத்திலோ கோவிந்தனிடத்திலோ யுள்ள அழகானதும், குளிர்ச்சி யுடையதும், நல்லதும், எந்த நிலைமையிலும் பழுதுபடாதிருப்பதுமான தன்மைகளை அல்லது சுபாவங்களைத்தான் குறிப்பிடுமே தவிர, அவற்றிற்கு மாறாக இருக்கப்பட்டவைகளைக் குறிக்காது. அப்படி மாறான தன்மை களை அல்லது சுபாவங்களை அந்த ராமனோ கோவிந்தனோ கொண்டிருந்தால், அவன் இயற்கையான மனிதனல்லன்; ஊழ் வலியாலோ, சகவாசதோஷத்தாலோ களங்கமாகி விட்டிருக்கும் செயற்கையான மனிதன். அதாவது, மனிதன், பிறக்கிறபோது, நல்ல தன்மைகளோடு கூடினவனாகத்தான் பிறக்கிறான்; பிறகு தான் வல்வினைகள் பல வந்து சூழ்ந்து கொண்டு, அவனைச் செயற்கை மனிதனாக்கி விடுகின்றன. ஆகவே நல்லது இயற்கை; அஃதல்லது செயற்கை. அப்படியே இயல்பு என்று சொன்னால், நல்லதைத்தான் குறிக்குமே தவிர, கெட்டதைக் குறிக்காது. பொதுவாக, இயல்பு என்ற சொல்லுக்கு, நற்குணம், நேர்மை, ஒழுக்கம், தகுதி என்று இப்படித்தான் பொருள் கூறியிருக்கின்றனர் பெரியோர். எனவே, பிறர் இயல்பறிந்து நடத்தல் என்றால், அவர் களிடத்திலே யுள்ள நல்ல குணங்களை அறிந்து, அனுசரித்து, மதித்து நடத்தல் என்றே பொருள் கொள்ள வேண்டும். அப்படி நடப்பதுதான் பண்பு எனப்படும். திருக்குறளில் வரும் பண்புடைமை என்னும் அதிகாரத்திற்கு பண்புடைமையாவது யாவர் மாட்டும் அவரோடு ஒத்த அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும் அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும், பகுத்துண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை என்று விளக்கங்கூறும் பரிப்பெருமாளின் உரை இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. பிறர் இயல்பறிந்து நடத்தல் என்ற வாக்கியத்தில் பிறர் என்பது யாரைக் குறிக்கிறது? இயற்கை மனிதரென்றும் செயற்கை மனித ரென்றும் சொன்னோமே அவர்களெல்லோரையுமா குறிக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடை காண முயலுவோம். இடத்தையும் காலத்தையும் உருவத்தையும் கடந்த ஒன்றி லிருந்து பிறந்த ஒரு சிறு பொறியே மனிதன். அந்த ஒன்று, நல்லவை அனைத்தும் திரண்ட ஒரு திரட்சி. அதிலிருந்து பிறக்கும் மனிதன், அந்தத் திரட்சியின் ஒரு சிறு பகுதியுடனேயே பிறக்கிறான்; அதாவது நல்ல சுபாவங்களோடு கூடினவனாகவே பிறக்கிறான். இந்தச் சுபவாங்களை யெல்லாம் சேர்த்து தெய்வ சம்பத்து என்ற பெயரால் அழைப்பர் பெரியோர். இந்தச் சம்பத்தை அபிவிருத்தி செய்து கொண்டு போவது பிரதியொரு மனிதனுடைய கடமை. பிறவியோடு ஒட்டி வந்த நல்ல சுபாவங்களை வளர விடாமல் ஒடுங்கிப் போகும்படி செய்து விட்டு, அவைகளின் தானத்தில் நல்லதல்லாத சுபாவங்களுக்கு இடங்கொடுத்து வளர்த்து வருகிறவன் மனிதனல்லன்; மனித உருவிலே தோன்றும் அரக்கன். அவனிடம் குடி கொண்டிருக்கும் நல்லதல்லாத சுபாவங்களின் திரட்சியை அசுர சம்பத்து என்பர் பெரியோர். ஆகவே, பிறர் என்பது, தெய்வ சம்பத்துடையவர்கள் யாரோ அவர்களைக் குறிக்கும் என்று கொள்ளலாம். இயல்பு என்னும் சொல்லுக்கு உண்மைப் பொருள் இன்னதென்று உணர்ந்து நடக்கும் மனிதன், அதாவது இயற்கையான மனிதன், இயற்கைக்கு வேறாகவுள்ள ஒருவனிடம் நட்புக் கொள்ளவோ நெருங்கிப் பழகவோ மாட்டானல்லவா? அவர்களைக் காணுங்காலத்திலேயே அவனுக்குக் கூச்சம் உண்டாகு மல்லவா? எனவே அவனைப் பொறுத்தமட்டில், பிறர் என்பது அவனைப் போன்ற பிறரையே, அதாவது தெய்வ சம்பத்துடையவர்களையே குறிக்கும். இனத்தோடு இனம் சேர்வது இயற்கை நியதி. பிறப்போடு கூடவந்த நல்ல தன்மைகளை மேலும்மேலும் வளர்த்து, அவற்றை எந்தக் காரணத்திற்காகவும் எந்தக் கணத்திலும் கை நழுவவிடாமல் காப்பாற்றியும் கடைப்பிடித்தும் வாழ்கின்றவர் சிலர். நல்ல தன்மைகளோடு பிறந்தாலும், அவைகளைக் கடைப் பிடிப்பது கடமை என்பதை உணர்ந்திருந்தாலும், சில சில காரணங்களினால் அந்தக் கடமையைப் பூரணமாகச் செய்ய முடியாமல், நல்ல தன்மைகளோடு சமரஸம் செய்து கொண்டு ஏதோ வாழ்வது போல் வாழ்கின்றவர் பலர். முன்னவரைச் சான்றோர் என்று கணித்துப் போற்றுகின்றது உலகம். பின்னவரை ஏதோ ஒரு பெயரிட்டு அழைக்க வேண்டுமல்லவா, அதற்காக மனிதர் என்று அழைக்கின்றது அதே உலகம். வேண்டுமானால் முன்னவரை முற்றிய மனிதர் என்றும் பின்னவரை பிஞ்சு மனிதர் என்றும் கூறலாம். எந்தக் காலத்திலுமே உலகத்தில் முற்றிய மனிதர்களின் எண்ணிக்கை குறைவு; பிஞ்சு மனிதர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் முந்திய வகை மனிதர்களால்தான், உலகம் ஏதோ ஓர் ஒழுங்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது; அறம் என்கிற அச்சாணிக்கு அதிக துரு ஏறாமலிருக்கிறது. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்ற வாசகத்தில் உயர்ந்தோர் என்பது இந்த முற்றிய மனிதர்களையே குறிக்கும். இனி மனிதப் பண்பு என்ற சொற்றொடருக்கு வருவோம். இது பல பொருள்கள் கொண்ட ஒரு தொகுப்பு. இதற்கு இலக்கணம் கூறவேண்டு மானால், திருக்குறளை நாடுதல் அவசியம். அதில் பொதுவாக மனிதர்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் தன்மைகள் பல கூறப்பட்டிருப்பினும், சிறப்பாகக் குடிமை, பெருமை, சான்றாண்மை, பண்புடைமை என்ற நான்கு அதிகாரங் களில் வரும் நாற்பது குறட்பாக்கள். இந்தத் தன்மைகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளப் போதுமானவையா யிருக்கின்றன. இந்த நாற்பது குறட்பாக்களில் மூன்று பாக்கள், மனிதப் பண்பை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிற மாதிரி அமைந்திருக் கின்றன என்று சொல்லலாம். அவை வருமாறு :- ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். நகை, ஈகை, இன்சொல், இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு. அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்து சால்பு ஊன்றிய தூண். இம்மூன்று பாக்களில், மூன்று, நான்கு, ஐந்து என்று வரிசைப் படுத்தி வைத்தாற்போல் சில பண்புகள் சொல்லப் பட்டிருக்கின்றன. இவற்றைப் பகுத்துப் பார்த்தாலும் தொகுத்துப் பார்த்தாலும் அடிப்படையில் கிடைக்கின்ற பொருள் ஒன்றாகவே இருக்கும். அதுதான் ஒழுக்கம். ஒழுக்கம் என்பது பல பொருள்களைக் கொண்ட ஒரு சொல். இதில் எல்லா நற்பண்புகளும் வந்து கூடுகின்றன. இதிலிருந்து எல்லா நற்பண்பு களும் பிறக்கின்றன. வள்ளுவத்தில் இது தனி அதிகாரச் சிறப்புப் பெற்றிருக்கிறது. இதனை உயிரினும் பெரிதெனக் கருதிப் பாதுகாத்துவர வேண்டுமென்று அது வலியுறுத்து கிறது. ஒழுக்கம் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில், சிலருக்கு, பிறனில் விழையாமை என்ற ஒரு பொருள் மட்டும் தொனிக்கும். அந்த ஒரு பொருள் இருப்பது உண்மையே. ஆனால் அது மட்டுமில்லை; வேறு பல பொருள்களும் இருக்கின்றன; மேலே காட்டப்பெற்ற மூன்று குறட்பாக்கள் கூறும் அத்தனை பண்புகளும் அதற்கு மேலும் இருக் கின்றன. அந்த மூன்று குறட்பாக்கள் கூறும் பண்புகள், அதாவது உண்மைக்கு உயர்வு கொடுத்தல், பழிபாவங்களுக்கு நாணுதல், எப்பொழுதும் நகை முகத்துடனிருத்தல், பிறர் நலத்திற்காகத் தன்னலத்தைக் கொடுத்தல், யாவரிடத்தும் இனிமை தவழப் பேசுதல், யாரையும் இகழாதிருத்தல், அனைவர் மாட்டும் அன்பு செலுத்துதல், உலகியலை அறிந்து நடத்தல் ஆகியவை. ஒழுக்கமென்னும் முழுத் தன்மையின் ஒரு சில கூறுகளே. இதனாலேயே எல்லா நற்பண்புகளுக்கும் வித்தாயிருப்பது ஒழுக்க மென்றும், இதனைப் பரிந்து ஓம்பிக் காக்க வேண்டுமென்றும் வள்ளுவம் முழங்கு கின்றது. ஒருவன், அறிவுக் களஞ்சியமாயிருக்கலாம்; நல்ல பரம்பரையைச் சேர்ந்தவனாயிருக்கலாம்; உற்றார் உறவினர் மெச்சும்படியான வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் அவனிடம் ஒழுக்கம் என்பது இல்லாது போனால், அவனுடைய அறிவு, பரம்பரை, பிற வசதிகள் யாவும் ஒரு நாளில்லா விட்டால் ஒரு நாள் நடுச்சந்திக்கு வந்து, அறிந்தவர் அறியாதவர் எல்லாருடைய ஏச்சுப் பேச்சுக்களுக்கு இரையாகி விடும். ஒழுக்கத்தில் உயர்ந்தவனைப் பலர் பின்பற்றுவர். அஃதில்லாது மற்றவற்றில் மேம்பட்டவனை, அவனைச் சூழ்ந்துள்ள ஒரு சிலர் முகதுதி செய்வர். ஒழுக்கத்தில் உயர்ந்து நிற்கிறவன், இறந்த பிறகும் சிறந்தவன் என்று போற்றப்படுவான். அஃதில்லாதான் இருக்கும்போதே மறந்துவிடப் படுவதற்கு ஏதுக்கள் பல உண்டாதல்கூடும். ஆதிகாலத்திலிருந்து நம் நாட்டிலாகட்டும் பிற நாடுகளிலாகட்டும் அவதரித்த சான்றோர் பலருடைய வாழ்க்கை ஏடுகளைப் புரட்டிப் பார்த்தோமானால், அவற்றில் ஒழுக்க மென்னும் ஒளி படர்ந்திருப்பதைக் காணலாம். 4. மனிதனே - கேள்! உலகத்தில் ஒரு பிராணிக்குக் காலையில் நான்கு கால்; பகலில் இரண்டு கால்; மாலையில் மூன்று கால். அது, காலையில் தெய்வம்; பகலில் அரக்கன்; மாலையில் இரண்டுங்கெட்ட நிலை. அது, காலையில் வாய் திறந்தால் மழலை என்கிறோம்; பகலில் பேச்சு என்கிறோம்; மாலையில் குளறல் என்கிறோம். தெரியவில்லையா யாரென்று? மனிதனே, நீ தான்! மனிதனே, உன்னைப் பற்றி நினைக்க நினைக்க, எத்தனை எத்தனை எண்ணங்கள் கியூ வரிசையில் வந்து நிற்கின்றன! உன்னைப் பற்றி என்ன முடிவு கட்டுவதென்பது தெரியவில்லை. விடுவிக்க முடியாத ஒரு புதிரோ நீ? மிருகத்தினின்று வேறுபட்டவனாக நீ வாழ வேண்டுமென்ற நன்னோக்கத்துடன் தான் மிருகத்திற்கு நான்கு கால் கொடுத்த ஆண்டவன், உனக்கு இரண்டு கால் மட்டும் போதுமென்று நினைத்தான். மிருகத் திற்குக் குரலை மட்டும் கொடுத்தான்; பேசுஞ் சக்தியைக் கொடுக்க வில்லை. உனக்கோ இரண்டையும் கொடுத் திருக்கிறான். மிருகத்தைக் குறுக்கு வாட்டில் வளரும்படி செய்தான்; உன்னையோ நெடுக்கவாட்டில் வளரும்படி உத்தர விட்டான், எல்லாவற்றிற்கும் மேலாக, உனக்குப் பகுத்தறிவை வேறே கொடுத் திருக்கிறான். உன்னைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் இந்தப் பகுத்தறிவு விஷயத்தில் சொந்தம் கொண்டாட முடியாது. இவ்வளவு சலுகைகள் உனக்கு காட்டியிருந்தும், நீ, அடிக்கடி மிருகத்துக்குத் துணை சென்று விடுகிறாய். அநேக சமயங்களில் மிருக இச்சையும் உன்னிச்சையும் ஒன்றாகவே இருக்கின்றன. சில சமயங்களில் அதற்கும் கீழான நிலைக்குப் போய் விடுகிறாய். அஃது, அந்த மிருகம் - உன்னால் கட்டுப்படுத்தப்பட்டாலன்றி, பெரும் பாலும் இயற்கையோடு உறவு பூண்டு வாழ்வதிலேயே விருப்பங் காட்டுகிறது. நீயோ, செயற்கையான வாழ்க்கையிலே தான் பெருமை காண்கிறாய். அது, தன் தேவையை எவ்வளவுக்கெவ்வளவு குறைத்துக் கொள்ள வேண்டுமோ அவ்வளவுக்கவ்வளவு குறைத்துக் கொண்டிருக்கிறது; நீயோ, மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு வருகிறாய். அதற்கு அதன் சிறு தேவை பூர்த்தியானவுடன் திருப்தி ஏற்பட்டு விடுகிறது. உனக்கோ, உன்தேவை அதிகரிக்க அதிகரிக்க உன் ஆசையும் அதிகரித்துக் கொண்டு போகிறது. சூரிய மண்டலமும் சந்திர மண்டலமும், உன் ஆசைக்கு இரையாகிவிட வேண்டி வருமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கின்றன! அவற்றையும் சென்று குடைந்து பார்க்க ஆரம்பித்து விட்டா யல்லவா? அது மட்டுமல்ல; ஆரம்பத்திலேயே அவற்றின் மீது உரிமை கொண்டாட முனைந்து விட்டாய்! எட்டநிற்கும் அந்தக் கோளங்களின் நிலைமையே இப்படி யென்றால், உன் சுபாவத்தை நன்கு அறிந்த பூமியின் நிலைமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? தன்னை இன்னும் எங்கெங்கெல்லாம் குடைந்து பார்க்கப் போகிறானோ இவன் என்று அது நடுங்கிக் கொண்டிருக் கிறது. அதற்கு அடிக்கடி ஏற்படுகிற நடுக்கந்தான் பூகம்பம்; அது வடிக்கிற கண்ணீர்தான் வெள்ளப் பெருக்கு. அது நடுங்க நடுங்க, கண்ணீர் வடிக்க வடிக்க, உன் குலந்தான் - மனித குலந்தான் - நாசமடைந்து வருகிறது. இதை நீ இன்னமும் உணர்ந்திலை. ஆசை, தன்னைத்தான் அழித்துக் கொள்ளுந் தன்மையது என்ற உண்மையை நீ எப்பொழுதுதான் உணர்ந்து நடக்கப் போகிறாயோ தெரியவில்லை. பொறுமைக்குப் பூமியை உவமை காட்டிப் பேசுவார்கள் பெரியோர் கள். ஆனால் அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை யுண்டல்லவா? அந்த எல்லை கடந்தால், அது, சினத்தீயாக மாறி, பொறுமையைச் சோதித்தவர் களையே அழித்து விடுகிறது. அவ்வப்பொழுது எரிமலைகள் தோன்றி நெருப்பைக் கக்குவது, பூமியின் சினத்தீ யல்லாது வேறென்ன? மனிதனே, உன்னுடைய பேராசை என்னென்ன விபரீத விளைவுகளை உண்டு பண்ணி விடுகிறதென்பதை நீ ஒரு கணமாவது சிந்தித்துப் பார்க்கிறாயா? இந்த விபரீத விளைவுகளையும் உன்னையும் தொடர்பு படுத்திப் பார்க்கிறபோது, உன்னைச் சபித்து விடலாமா என்று ஒரு சமயம் ஆத்திரம் உண்டாகிறது. ஆனால் அடுத்த நிமிஷமே, உன்னையும் உனக்களிக்கப் பட்டிருக்கும் சாதனங்களையும் இணைத்துப் பார்க்கிற போது, ஐயோ மனிதனே, எப்படி இருக்க வேண்டியவன் எப்படி இருக்கிறாய் என்று உன் மீது இரக்கப்பட வேண்டியிருக்கிறது. நூற்றாண்டுகள் கணக்காக நீ பேசி வந்திருக்கிற பேச்சுக் களிலும், எழுதி வைத்திருக்கிற நூல்களிலும் தெய்வ மணங் கமழ்கிறது. எவ்வளவு உயர்ந்த கருத்துக்களை அவற்றுள் புக விட்டிருக்கிறாய்! ஆனால் நூற்றாண்டுகள் கணக்காக நீ செய்து வந்திருக்கும் காரியங்களைத் தொகுத்துப் பார்த்தால், உன் சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு முரண்பாடு! கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க வேண்டுமென்று உன் குரல் கதறுகிறது; உன்னிரு கைகளே ரத்தக்கறை பட்டுச் சிவந்து கிடக்கின்றன! உன் அறிவை வான வெளியில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறாய்; ஆனால் அதே சமயத்தில் உன் இதயத்தை, பூமியின் ஆழத்திலே கொண்டு போய்ப் புதைத்து விட்டாய்! உன் பாதங்கள், பூமியின் மீது படிந்து நடக்க இன்னும் தெரிந்து கொள்ளவில்லை; உன் தலையோ வான் முகட்டை முட்டிப் பார்க்கிறது! என்னவென்று சொல்வது உன்னை? ஆண்டவன், தெய்வலோகத்திலுள்ள பைத்தியக்காரர்களை யெல்லாம் ஒன்று திரட்டி மனிதர்கள் என்று பெயர் கொடுத்து பூலோகத்திற்கு அனுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கிறானோ என்று சில சமயங்களில் நினைக்க வேண்டியிருக்கிறது! ஆனால் எல்லா மனிதர்களும் இப்படியில்லையென்று தெரிகிற பொழுது சிறிது ஆறுதல் உண்டாகிறது. ஒரு சிலர் அவ்வப்பொழுது தோன்றி ஆண்டவனுடைய செய்தியைப் பரப்பி வருகிறார்கள்; அவனுடைய கட்டளையை நிறைவேற்றி வருகிறார்கள். இவர்களால் தான் உலகம் தடம் புரளாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. மனிதனை எப்படி எடைபோட்டுப் பார்க்க வேண்டு மென்பதற்கு ஓர் அறிஞன் ஒரு வழி சொல்லுகிறான் :- மனிதனை, அவனுடைய பார்வையையும் பேச்சையும் வைத்து எடை போடாதே; அவனுடைய செயல்களை வைத்து எடைபோடு. செயல் களென்றால், வெறுஞ் செயல்களல்ல; சீலத்தை அடிப்படையாகக் கொண்ட செயல்கள். அவை, பிறர் பிரமிக்கும்படியான பெரிய செயல் களாக இருக்க வேண்டு மென்பதில்லை; சின்னஞ்சிறு செயல்களாயிருக்கலாம். ஆனால் அவைதான், அவனை எடைபோடுவதற்கான படிக்கற்கள். ஒரு மனிதனை, அவன் மேலே என்ன இருக்கிற தென்று பார்த்து மதிப்பிடாதே; அவன் உள்ளே என்ன இருக்கிற தென்று பார்த்து மதிப்பிடு என்றான் ஓர் அறிஞன். உண்மையான வாசகம்! ஆனால் உள்ளே என்ன இருக்கிறதென்று எப்படித் தெரியும்? பார்க்கிறவன் உள்ளம் சுத்தமாயிருக்க வேண்டும்; அப்பொழுதுதான் பார்க்கப் படுகிறவனுடைய உள்ளே என்ன இருக்கிறதென்று தெரியும். அவன்தான் மற்றவனுடைய உள்ளே என்ன இருக்கிறதென்று பார்க்கத் தகுதியுடையவன். எப்பொழுதுமே, தன் எடையில் சரியாக நிற்கிறவன்தான். மற்றவனை எடை நிறுத்திப் பார்க்கத் தகுதியுடையவன். ஆதலின் மனிதனே! உன் எடையில் நீ சரியாக நில். மனிதனே, உலகத்தில் தோன்றிய எல்லா மதங்களும், எல்லாக் கலைகளும், எல்லாத் தரும நியாயங்களும், எல்லாச் சட்டங்களும், உன்னையே மையமாகக் கொண்டிருக்கின்றன; நீ வழி வழியாக வாழ வேண்டும், வாழ்க்கையிலே உயர்ந்து நிற்க வேண்டும் என்று முரசு கொட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பக்கம் உன் செவியைத் திருப்பு; உன் பார்வையைச் செலுத்து. மனிதனே, நீ சிறந்த ராஜதந்திரியாக இருக்கலாம்; சிறந்த வீரனாயிருக்கலாம். ஆனால் எப்பொழுதும், உன் வாழ்நாள் முழுவதும், ராஜதந்திரியாகவோ வீரனாகவோ இருக்க முடியாது. ஒரு காலத்தில் அதிலிருந்து நீ இறங்கித்தானாக வேண்டும். அதிலிருந்து உனக்குக் கிடைத்த பெயரோ புகழோ ஒரு காலத்தில் மங்கித்தான் போகும். ஆனால் நீ மனிதனாக எப்பொழுதும் இருக்கலாம்; இருக்க முடியும்; இருக்க வேண்டும். அதனால் உனக்குக் கிடைக்கும் பெயரோ புகழோ, உன் உடம்பை நீ கழற்றிப் போட்ட பிறகும், உன்னைத் தொடர்ந்து வரும். 5. சின்னஞ் சிறு செயல்கள் உண்மையிலேயே ஒருமனிதனை மதிப்பிட வேண்டுமானால், அவனுடைய சின்னஞ் சிறு செயல்களை உரைகற்களாக உபயோகிக்க வேண்டும்; அவற்றில் அவனுடைய மனிதத் தன்மை எந்த அளவுக்கு ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறதென்று பார்க்க வேண்டும். சாதாரணமாக நம்மில் பெரும்பாலோர், எத்தனையோ சிறிய காரியங்களை அலட்சியமாகச் செய்கிறார்கள். அந்தச் சிறிய காரியங் களினால் மற்றவர்களுக்கு எவ்வளவு பெரிய தொல்லை உண்டாகிற தென்பதை அவர்கள் சிந்திப்பதேயில்லை. தொல்லைப் படுகிறவர்கள், பகிரங்கமாக அவர்களைக் கண்டிக்கிறதில்லையாயினும், மனத்துக்குள், இவர்களென்ன மனிதர்களா, மிருகங்களா என்று முணுமுணுக்காம லிருப்பதில்லை. இந்த முணு முணுப்பு, சில சமயங்களில், விபரீத பலன் களை விளைவிப்பதுண்டு. பாதையிலே நடந்து செல்கிறபோது, காலில் ஒரு கல் இடர்ப் படுகிறது; அதனால் சிறிது காயமும் உண்டாகிறது. வேதனைப் படுகிறோம். ஆயினும் அந்தக் கல்லை அப்புறப் படுத்தாமல் மேலே சென்று கொண்டிருக்கிறோம். நமக்குப் பின்னால் ஒரு வயோதிகரோ கண் பார்வை மங்கியவரோ, யாராவது ஒருவர் வரக்கூடும். அவர், இந்தக் கல் தடுக்கிக் கீழே விழுந்து படுகாயமடையலாம்; உயிருக்கு ஆபத்துண்டா தலும் கூடும். நாம் முதலிலேயே அந்தக் கல்லை அப்புறப்படுத்தி யிருந்தால், மற்றவர்கள் துன்பப் படாதிருக்கலாமல்லவா? நாம் இடர்ப் பட்டதுதான் நமக்குப் பெரிதாகத் தோன்றுகிறதே தவிர, நம்மைப் போல் பிறர் இடர்ப்படுவார்களே என்பதைப் பற்றி நாம் சிறிதும் சிந்திப்பதில்லை. மற்றவர்களுடைய துன்பத்திற்கு நம்மால் பரிகாரங் காண முடியாமற் போனால் போகிறது. துன்பம் நேரிடாமல் நம்மால் முடிந்தவரை பார்த்துக் கொள்ளலாமல்லவா? ரெயில் வண்டியிலோ பஸிலோ பிரயாணஞ் செய்கிற போது, சிலர், சளசளவென்று பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்; சிலர், மற்றப் பிரயாணிகள், திரும்பித் திரும்பிப் பார்க்கக்கூடிய மாதிரி உரக்கச் சிரிக் கிறார்கள்; தம்பலத்தைத் துப்புகிறார்கள்; எதிர்ப் பக்கத்திலுள்ள ஆசனங்களில் காலை வைக்கிறார்கள்; புகையிலை சம்பந்தப்பட்ட வதுக்களை உபயோகித்து மற்றவர்களுடைய கண்ணுக்கும் மூக்குக்கும் தொந்தரவு உண்டாகும் படி செய்கிறார்கள். பார்க்கப் போனால் இவையெல்லாம் மிகவும் அற்பமான விஷயங்கள் தான். ஆனால் இவற்றில்தான் ஒருவருடைய மனிதத் தன்மையைப் பார்க்க வேண்டும். நடைபாதையில் நான்கு நண்பர்கள் குறுக்காக நின்று, மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்பதை நகரங்களில் சர்வ சாதாரண மாகப் பார்க்கலாம். வேகமாகச் செல்லும் மோட்டார் முதலிய வாகனங்களுக்குப் பலியாகாமல், அச்சமும் கவலையுமின்றி நடந்து செல்வோருக்கு அனுகூலமாகவே நடைபாதை அமைக்கப்பட்டிருக் கிறது. அந்த நடைபாதையை அடைத்துக் கொள்கிற மாதிரி நான்குபேர் குறுக்காக நின்று கொண்டு விட்டால், போவோர் வருவோருக்கு எவ்வளவு சங்கடமுண்டாகிறது? அதிலும் பெண்களுக்குக் கேட்க வேண்டுமா? ஆனால் இளம் ஆண் சிங்கங்கள் இவைகளைக் கவனிப்பதேயில்லை. அநேக பெரிய மனிதர்கள், தாங்கள் சுத்தமாயிருக்க வேண்டு மென்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே தவிர, தங்களைப் போல் மற்றவர்களும் சுத்தமாயிருக்க விரும்புவார் களென்பதைப் பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை. மற்றவர்கள் அறியாமையினாலோ வசதிக் குறைவினாலோ அசுத்தமாயிருந்தால் அவர்களைச் சுத்தப்படுத்துவது நமது கடமையாயிருக்க, அவர்கள் தொடர்ந்து அசுத்தமாயிருப்பதற்கு நாம் தூண்டுகோல் போலிருந்தால், அது கேவலமல்லவா? நமது மனிதத் தன்மைக்கு இழுக்குத் தேடித் தருவதாகுமல்லவா? நமது வீட்டுக்கு எல்லையில் காரித் துப்புகிறோம்; குப்பை கூளங்களைக் கொண்டு வந்து கொட்டுகிறோம். ஆனால் அவை அண்டை வீட்டெல்லைக்குச் சென்று தஞ்சம் புகுதல் கூடுமென்பதைப் பற்றி நாம் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. நம்மைப் போல் அந்த அண்டை வீட்டாரும் நம் விஷயத்தில் நடந்து கொண்டால் நம் நிலைமை என்னாகும்? இதை நம்மில் பலர் சிந்தித்துப் பார்ப்பதேயில்லை. எப்பொழுதுமே நம்மைப் போல் பிறரை நினைக்க வேண்டும்; மதிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது மனிதத் தன்மை மதிப்புப் பெறுவதாகும். படித்த குடும்பத்தினர் பலர். தங்கள் குழந்தைகளை, வீட்டுத் தெருப்பக்கத்துப் பாதையோரத்தில் மலஜலங் கழிக்க விடுகிறார்கள். இதனால் பொது ஜன சுகாதாரம் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிற தென்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே யில்லை. இரவு நேரம் அண்டை அயலிலுள்ளவர்கள் படுத்துறங்கப் போகுஞ் சமயத்தில், நம்மில் சிலர், கிராமபோனை முடுக்கி விடுகிறார்கள்; ரேடியோவைத் திருப்பி விடுகிறார்கள்; உரத்த குரலெடுத்துப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இவைகளினால் மற்றவர்களுடைய நிம்மதி குலைகிறது. இது மிகத் தவறல்லவா? சிலர், மற்றவர்களோடு சம்பாஷிக்கிற போது, மூக்கையும் காதையும் குடைந்த வண்ணமிருக்கிறார்கள்; நகத்தைக் கடித்துக் கொண்டே பேசுகிறார்கள்; எச்சில் தெறிக்கப் பேசுகிறார்கள். இவையெல்லாம், மற்றவர்களுக்கு எவ்வளவு அருவருப்பு உண்டாகிறது? எப்பொழுதுமே, உண்பது, உடுப்பது, உறங்குவது போன்ற எந்த ஒரு சிறிய விஷயத்திலும் பிறருக்கு அருவருப்பு உண்டாகாமல் நடந்து கொள்ள வேண்டும். செடி கொடிகள் முதல் உலகத்து எல்லாப் பொருள்களும் ஏதோ ஓர் உபயோகத்திற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன. அந்த உபயோகத்தை நம்மால் அறிந்து கொள்ள முடியாமலிருக்கலாம். அதற்காக அந்தப் பொருள்களை நாம் அலட்சியப் படுத்திவிடக் கூடாது. ஒரு சமயமில்லாவிட்டால் ஒரு சமயம் அவை, நம்மை யறியாமலே நமக்கு உபயோகமாதல் கூடும். ஆகவே எதையும் அலட்சியம் செய்யலாகாது; யாரையும் அலட்சியம் செய்யலாகாது. 6. மனிதனும் சமுதாயமும் அவனுக்கு நிறைய அறிவு உண்டு; அதைக் காட்டிலும் அதிகமாக உலக அனுபவம் உண்டு; தமரென்றும் பிறரென்றும் வேற்றுமை பாராட்டாமல் எல்லாரிடத்திலும் அன்பு செலுத்து கின்ற பண்பாடு உண்டு. தன் சக்திக்கியன்றவரையில் பிறருக்கு உபகாரம் செய்கிறான். அவனுடைய தேவைகளோ மிகக் குறைவு. அவற்றைத் தனது சொந்த முயற்சியினாலேயே பூர்த்தி செய்து கொள்கிறான். மற்றவர்களுடைய தயவிலோ, சலுகையிலோ வாழ்க்கை நடத்துகின்றவர்களைக் கண்டால் அவன் முகம் சிவந்து போகிறது. சின்னஞ்சிறு குடிலமைத்துக் கொண்டு அதில் நிம்மதியாக வாழ்கிறான். இன் முகத்தினன். இனிய சொல்லினன். எண்ணித்தான் பேசுவான். சுருக்கமாக, அவன், மனிதப் பண்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருகிறானென்று சொல்லலாம் ஆனால் சமுதாயம், அவனை அலட்சியப்படுத்துகிறது; வாழத் தெரியாதவனென்று ஏசிப் பேசுகிறது. ஏன் தெரியுமா? சமுதாயம், மனிதனை எந்த மதிப்புப் போட்டுப் பார்க்கிறதோ அந்த மதிப்புக்கு அவன் வராததுதான் காரணம். இன்றைய சமுதாயம், மனிதனை, அவன் வைத்துக் கொண்டிருக்கும் பணத்தைக் கொண்டு மதிக்கிறது; அவன் வகிக்கும் பதவியைக் கொண்டு பார்க்கிறது; அவன் வசிக்கும் வீடு, ஏறும் ஊர்தி, அணியும் ஆடை இவைகளைக் கொண்டு நிறை போடுகிறது; அவன் வேயும் வாய்ப்பந் தலைக் கண்டு ஆவென்று வாய் திறக்கிறது; பேஷ் என்று கை கொட்டுகிறது. அவனுக்கென்னவோ, பணம், பதவி இவைகளைத் துரத்திக் கொண்டு செல்கிறவர்களைக் கண்டால் சிரிப்பு வருகிறது. தேவைக்கு மீறிய வகையில் வீட்டைக் கட்டிக்கொண்டு, அதில் உபயோகத்திற்கு மீறிய பொருள்களை நிரப்பி வைத்து எல்லோருக்கும் காட்டுவதில் பெருமை காண்கிறவனைக் கண்டு, அட மனிதா, நீ கட்டியிருக்கும் வீட்டின் விரிவில் நூற்றுக்கு ஒரு சதவிகிதமாவது உன் மனம் விரிவடைந்திருக்கிறதா, மனித வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் என்னென்ன பொருள்கள் தேவை யென்பதைப் பற்றி ஒரு சிறிதாவது தெரிந்து கொண்டிருக்கிறாயா என்று அவனைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது. அப்படிக் கேட்டாலும் அவன் சொல்லைக் கேட்பார் யார்? இன்றைய சமுதாயம் மட்டுமென்ன, எப்பொழுதுமே இப்படித்தானே இருந்து வந்திருக்கிறதென்று சிலர் கேட்கலாம். வாதவம், பணமும், பதவியும் ஏற்றம் பெற்று நின்றன என்பது உண்மைதான். ஆனால் இவையிரண்டும் மனிதப் பண்புக்கு முன்னே தலை வணங்கி நின்றன. பணம் படைத்தவனோ பதவியிலிருந்தவனோ, அவையிரண்டும் இல்லாத ஒருவனுக்கு அதிகமான மதிப்புக் கொடுத்தான். ஏன்? அவனிடம் மனிதப் பண்பு குடி கொண்டிருந்ததனால், அவன் புசித்தது காய் கிழங்குதான்; உடுத்தது ஒரு சாண் அகலத் துண்டுதான்; வசித்தது குடிசைதான். இருந்தாலும் அவன் சொல் அரசவை வரையில் சென்றது. பணக்காரர்களோ, பதவியிலுள்ளவர்களோ அவனுடைய ஆலோசனையை நாடினார்கள். அவர்களும் மனிதப் பண்புக்குப் பங்கம் நேரிடாமல் அவன் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான சூழ்நிலையை அவனுக்கு அமைத்துக் கொடுப்பது தங்களை தலையாய கடமையென்று கருதினார்கள். ஏனென்றால், உலகத்தில் மனிதப் பண்பு உயிரோடியிருந்தால்தான் தங்களுடைய உலகியல் வாழ்க்கை சரளமாகவும் இனிமையாகவும் நடைபெறும் என்ற சூட்சுமம் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. இப்படியெல்லாம் கவிகளின் கற்பனை உலகத்தில் இருந் திருக்கலாம். நிஜ உலகத்தில் இருந்திருக்குமா என்று சிலர் சந்தேகிக்கக் கூடும்; இருந்திருக்க முடியாதென்று சிலர் உறுதியாகச் சாதிக்கவும் கூடும். இவர்களிஷ்டப்படி இருந்திருக்க முடியா தென்றே வைத்துக் கொள்வோம். மனிதப் பண்புக்கு முக்கியவத் துவம் கொடுத்து வாழ்ந்தவன் விஷயத்தில், அதற்கு முக்கியத்துவம் கொடாதவர்கள், அதாவது பணத்திற்கும் பதவிக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்கள் தலையிடாமலாவது இருந்தார்களென்பதை யாவது இவர்கள் ஒப்புக் கொள்வார்களல்லவா? ஆம்; ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பொதுவாக, முந்திய காலங்களில், மனிதப் பண்புக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள், தங்களுடைய தனித்துவத்திற்குப் பழுதுண்டாகா வண்ணம் வாழ்ந்து வந்தார்கள்; வாழ்ந்துவர அனுமதிக்கப் பட்டார்கள். உலகியல் வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தவர்கள், தங்களுடைய பேராசை வலையை அவர்கள் மீது வீசவில்லை; தங்களுடைய சுயநல ஆட்டத்தில் அவர்கள் ஒரு கருவியாக உபயோகிக்கவில்லை; எப்படியோ கிடந்து போகட்டு மென்று அவர்களிஷ்டப்படி வாழவாவது விட்டிருந்தார்கள். இன்றைய சமுதாயம், மனிதப் பண்புக்கு மதிப்புக் கொடாமற் போனால் போகிறது; மனிதப் பண்புக்கு மதிப்புக் கொடுத்து வாழ்கிறவனை, அவன் இஷ்டத்திற்காவது வாழ விடுகிறதா? அவனுடைய நன்மை அவனுக்குத் தெரியவில்லை யென்றும், கட்டாயப்படுத்தியாவது அவனுக்கு நன்மை செய்தே தீரவேண்டுமென்றும் எண்ணிக் கொண்டு, அவனிடத்தில் என்னென்ன சாகஸங்களைச் செய்து காட்டுகிறது? இந்தச் சிறு குடிலில் ஏன் வசித்துக் கொண்டிருக்கிறாய்? இதைச் சூழ்ந்துள்ள ஜன சந்தடி உன் அமைதியைக் குலைக்கவில்லையா? நீ அமைதியாக வாழ வேண்டியவனல்லவா? ஆகையால், இந்தக் குடிசைக்கும் இதைச் சுற்றியுள்ள இடத்திற்கும் நல்ல கிராக்கி இருக்கிறது; நிறையப் பணம் வரும் என்று ஒருவன் வந்து ஆசை காட்டுகிறான். இன்னொருவன் வந்து நீ ஏன் எந்தக் கட்சியிலும் சேராமலிருக் கிறாய்? எங்கள் கட்சியில் சேர்ந்தால் நல்ல பதவி உனக்கு வாங்கித் தருகிறேன் என்று பசப்பு மொழிகள் பேசுகிறான். வேறோருவன் வந்து நீ அடிக்கடி சென்று சில பெரிய மனிதர்களைப் பார்த்து வரக் கூடாதா? அவர்களைப் புகழ்ந்து இரண்டு கவிதைகள் பாடினால் போதுமே; இரண்டு வார்த்தைகள் பேசினால் போதுமே; உனக்குக் கனகாபிஷேக மல்லவோ நடக்கும் என்று தித்திக்கும் வார்த்தைகளை அளந்து அளந்து கொட்டுகிறான். இப்படி வந்து புத்திமதி சொல்கிறவர்கள் ஒருவரா? இருவரா? பலர். ஒரு தடவையா? இரண்டு தடவையா? பல தடவை. இப்படிப் பலர் வந்து பல தடவை பேசிவிட்டுப் போவதை ஏறக்குறைய தினசரி அனுபவமாகப் பெற்றிருக்கும் அந்த அப்பாவி மனிதன் - மனிதப் பண்பு என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவன்- அட சமுதாயமே, நீ எங்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாய் என்று ஏக்கத்தோடு கேட்கிறான். கேட்கிறானென்றால் யாரைப் பார்த்துமல்ல; சூனியத்தைப் பார்த்துதான். சரி; நண்பர்கள் சொல்கிறபடி, அவன், தன் சிறு குடிலையும் அதைச் சூழ்ந்துள்ள இடத்தையும், நல்ல விலைக்கு விற்று விடுகிறா னென்று வைத்துக் கொள்வோம். விற்ற பணத்தைக் கொண்டு என்ன செய்வது என்ற ஏக்கமல்லவோ அவனை ஆட் கொண்டு விடும்? பணத்திற்கு மனிதன் அடிமையாகக் கூடாது. மனிதனுக்குத் தான் பணம் அடிமையாயிருக்க வேண்டும். தவிர, தேவைக்கு மிஞ்சின பணம் என்றைக்கும் ஆபத்தல்லவோ? அப்படி மிஞ்சின பணமுள்ள வர்கள், பாராத கண்ணுடையவர்களாய், கேளாத செவியுடையவர் களாய், நீளாத கையுடையவர்களாய், ஈரமில்லாத மனமுடையவர் களாய் இருக்கிறார்கள். அவர்களில் தான் ஒருவனாகிவிட்டால் என்று எண்ணுகின்ற பொழுதே அவன் உடல் நடுக்கமெடுத்துப் போகிறது. ஏதாவதொரு கட்சியில் அவன் - அந்த மனிதப் பண்புடைய மனிதன் - சேர்ந்து கொள்ளலாந்தான். சேர்ந்தாலென்னவோ ஒரு பதவி கிடைக்கச் செய்யும். குறைந்த பட்சம் சில சலுகைகளையாவது பெறலாம். ஆனால் மனச்சாட்சியை என்ன செய்வது? அஃதொன்று இருந்து கொண்டு அவனை நிற்கும் நிலையிலிருந்து இறங்க விடாமலல்லவோ தடுத்து வருகிறது? அதனை எங்கே கொண்டு போய்த் தள்ளி விடுவது? அஃது அவனை விடாப் பிடியாகவல்லவோ பிடித்துக் கொண்டு விட்டிருக்கிறது? சரி; பெரிய மனிதர்களென்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்களை அந்த மனிதப் பண்புள்ள மனிதன், அடிக்கடி சென்று பார்க்கிறானென்றே வைத்துக் கொள்வோம். முதலாவது, அவர்களை அணுகுவதற்கே அவன் மனம் கூசுகிறது. நண்பர்களின் வற்புறுத்தலுக்கிணங்கி, கூச்சத்தை ஒதுக்கித் தள்ளி விட்டுச் சென்றால், அவர்களிடம் என்ன பேசுவது? எப்படிப் பேசுவது , முகதுதி செய்யவோ அவனுக்குத் தெரியாது. அவர்களுடைய பேச்சு வார்த்தைகளில் அவன் மனம் ஈடுபடவும் முடியாது. அவர்களிடம் காணப்பெறும் குற்றங் குறைகளை அவர்கள் முகத்திற்கெதிரே எடுத்துச் சொல்லவும் கூடாது. இந்த மாதிரியான தர்ம சங்கட நிலையில் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டுமென்று கருதி அவன் எந்தப் பெரிய மனிதரையும் அணுகாமலே இருந்து விடுகிறான். ஆகவே இன்றைய சமுதயச் சூழ்நிலையில் மனிதப் பண்புக்கு மதிப்புக் கொடுத்து வாழ முற்படுகிறவன் ஒதுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவனாகவே வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது. இதற்காக அவன் வருத்தமடைவதில்லை. ஆனால், தன் இனத்தவரின் எண்ணிக்கை, வரவரக் குறைந்து வருகிறதேயென்று தான் அவன் ஏங்கிப் போகிறான். ஒரு சமுதாயத்தின் உயர்வையோ தாழ்வையோ கணித்துப் பார்க்க வேண்டுமானால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு பார்க்கக்கூடாது; அந்த மக்களின் தரத்தைக் கொண்டு, அதாவது அவர்களிடம் குடிகொண்டுள்ள மனிதப் பண்புகளின் அளவைக் கொண்டுதான் பார்க்க வேண்டும். மற்றும் அந்த மக்கள், அரசியல் வாழ்விலோ பொருளாதார வாழ்விலோ மிகவும் மேம்பாடுற்றவர்களாயிருக்கலாம். அதனால் அவர்களைக் கொண்ட சமுதாயத்திற்கு நன்மதிப்பு ஏற்பட்டு விடாது. அந்த மக்களின் அன்றாட வாழ்க்கையுள்பட எல்லாத் துறைகளிலும் அறம், அன்பு, சீலம் முதலிய பண்புகள் பரவியிருக்க வேண்டும். அப்பொழுது தான் அந்தச் சமுதாயத்திற்கு உண்மை யான மதிப்பு ஏற்படும். எனவே, எந்த ஒரு சமுதாயமும் மதிப்புப் பெற ஒரு சமுதாய மாக உலகில் நீடித்து வாழ வேண்டுமானால், அதில் மனிதப் பண்புகள் நிறைந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டுமென்பது சித்தமாகிறது. 7. மனிதப் பிராணி தங்களுடைய தேகத்திலே வழிகிற வியர்வையைத் துடைக்க மாட்டார்கள்; ஆனால் மற்றவர்களுடைய அழுக்கை நிரம்ப சிரத்தையோடு சுரண்டுவார்கள். இப்படிப்பட்ட பேர்வழிகள் பலர் உலகத்திலே உலவு கிறார்கள். இவர்களை என்னவென்று அழைப்பது? மனிதப் பிராணிகள் என்றுதான் அழைக்க வேண்டும். இவர்களுக்குத் தங்களைப் பற்றிக் கவலையில்லை; மற்றவர் களைப் பற்றித்தான் அதிகமான கவலை. தம் வீட்டுக் கொல்லையில் வாழை இன்னும் ஏன் குலை ஈனவில்லை என்பது இவர்களுக்கு முக்கியமல்ல; அடுத்தவீட்டு நடுமுற்றத்திலுள்ள மாமரம் இவ்வளவு சீக்கிரத்தில் எப்படிப் பிஞ்சுவிட ஆரம்பித்த தென்பதைப் பற்றித் தான் அதிக வேதனை. என் வீட்டுக்காரி என்னைத் தினந்தோறும் மல்லுக் கிழுத்துக் கொண்டிருக்க, அடுத்த வீட்டுப் புருஷனும் மனைவியும் மட்டும் எப்படி ஒற்றுமையாயிருக்கலாம் என்பது இவர்கள் கேள்வி, இவர்கள் தாங்களாகவும் உழைக்க மாட்டார்கள்; பிறர் உழைத்தாலும் பொறுக்க மாட்டார்கள். தங்களுக்கும் வாழத் தெரியாது; மற்றவர்கள் வாழ்ந்தாலும் கண் பொறுக்காது. இவர்கள் பொறாமையின் அவதாரம். பொறாமை என்பது என்ன? மற்றவர்களுடைய சந்தோஷத்தைப் பார்த்துத் துக்கப்படுதல். இப்படித் துக்கப்பட்டு துக்கப்பட்டுக் கடைசியில் ஒரு நாள் மூச்சை விட்டு விடுகிறார்கள். இவர்களுக்கு வாழ்க்கையிலே சுகம் என்பது தெரியாது. துக்கப்படாமலிருக்கத் தெரிந்து கொண்டாலல்லவோ சுகப்படத் தெரியப் போகிறது? இந்த மனிதப் பிராணி இருக்கிறானே, இவன் பணத்தைப் பூட்டி வைப்பதிலே மகா கெட்டிக்காரன். ஆனால் தன் கண்களையும், காதுகளையும் வாயையும் பூட்டி வைக்க மட்டும் இவனுக்குத் தெரியாது. தன் தாயார், சகோதரி இவர்களைப் பற்றி யாரேனும் பரிகசித்தால் தனக்கு எவ்வளவு ஆத்திரம் உண்டாகும் என்பதைப் பற்றி இவன் சிந்திக்க மாட்டான். ஆனால் வீதியிலே போகிற பெண்ணை முறைத்து முறைத்துப் பார்ப்பான்; அவர்களுடைய நடையையும், உடையையும் பற்றிப் பரிகசிப்பான்; அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி பகிரங்கமாகப் பேசுவான். எல்லாருடைய விவகாரங்களும் தனக்குத் தெரிந்திருப்ப தாக இவனுக்கு எண்ணம்; அதைப் பற்றி ஒரு பெருமை. ஆனால் யாருடைய விவகாரங்களைப் பற்றித் தான் தெரிந்து கொண் டிருப்பதாக இவன் எண்ணுகிறானோ அவருடைய வீட்டு வாசற் படியை மிதிப்பதற்குக்கூட இவனுக்கு யோக்கியதை இராது. எவனொருவன் மற்றவர்களுடைய கற்பில் சந்தேகங் கொள் கிறானோ, அவன் ஒழுக்கவீனன். அவனுக்குக் காதல், அழகு, இன்பம் முதலிய வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியாது. அவன் உடல் சேர்க்கையைத் தான் அறிவான்; உள்ளச் சேர்க்கையை அறிய மாட்டான். அவனுக்கு உலகத்திலுள்ள தீய அமிசங்கள்தான் தெரியுமே தவிர, நல்லனவும் உலகத்தில் இருக்கின்றன வென்பது தெரியவே தெரியாது. கீழான இச்சைகளில் அவன் மனம் லயிக்கும். சங்கீதம் என்றால் மிரண்டு ஓடுவான்; சூரியோதயம் என்றால் கண்ணைக் கூசுகிறதே யென்பான்; பெண்மைக்கு மதிப்புக் கொடான்; ஆனால் ஆண்மையென்பது அவனுக்குப் புரியாத விஷயம். அவனுக்கு ஓய்வென்பதே தெரியாது. பகலிலே, மற்றவர்களோடு பேசிப் பேசிப் பொழுதைப் போக்குவான்; இரவிலே, மற்றவர் களுடைய குடும்ப விவகாரங்களைப் பற்றி மனைவியோடு பேசிப் பேசி அவளையும் தூங்கவிடமாட்டான்; தானும் தூங்க மாட்டான். தன் வீட்டிலே ஒட்டடை கூண்டு கட்டிக் கொண்டிருக்கும்; மூலைக்கு மூலை குப்பை கூளங்கள் மேடிட்டுக் கொண்டிருக்கும். அவைகளை அகற்றிச் சுத்தமாய் வைத்துக் கொள்ள அவனுக்கு அவகாசம் இராது. ஆனால் வீடுதோறும் ஏறிச் சென்று அங்குள்ளவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நிரம்ப அக்கரையோடு கவனிப்பான். அவர்கள் என்னென்ன விதமான கஷ்ட நிஷ்டூரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குதூகலத் தோடு விசாரிப்பான்; அவர்களுடைய குறைகளைக் குத்திக் குத்திக் கேட்பான். புளியமரத்தில் எத்தனை இலைகள் இருக்கின்றனவோ அத்தனை குறைகள் அவனிடத்தில் இருக்கும். ஒவ்வொரு குறையாக அகற்றிக் கொண்டு வந்தாலும் அவனுடைய ஆயுட்காலம் போதாது. ஆனால் மற்றவர்களுடைய குறைகளைக் கூட்டிப் பெருக்குவதில் தன் ஆயுட் காலம் முழுவதையும் செலவழிப்பான். மனிதப் பிராணிக்கு எப்பொழுதும் கீழ்க் கண்பார்வைதான். அவனுக்கு மேல் நோக்கம் இல்லையென்பதற்கு அடையாளம் அது. தவிர, அவன் சுபாவத்திலே ஒரு கோழை. நிமிர்ந்த பார்வை ஏது அவனுக்கு? மற்றவர்கள் மேஜை மீது என்ன கடிதம் இருக்கிற தென்று அதைப் பிரித்துப் பார்ப்பான். மற்றவர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாலோ, பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாலோ அதைக் கீழ்க் கண்ணால் பார்ப்பான்; குனிந்து பார்ப்பான். மற்றவர்களுக்கு வருகிற கடிதத்தைத் தபால்காரனிடமிருந்து வாங்கி, அது யாரிடமிருந்து வந்தது. அதில் என்ன எழுதியிருக்கக்கூடும் என்பவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பரபரப்பான். தான் இளமையில் இரந்து குடித்தது அவனுக்குத் தெரியாது; தனது வமிசாவழியில், சந்திரனிடத்திலுள்ள முயற் களங்கம் போல் அழியாத களங்கம் உண்டாகியிருப்பதை மறந்து விடுவான். மற்றவர் களுடைய பூர்வோத்தரம் என்ன, யாராருடைய மூதாதையர்கள் எந்தெந்த இடத்தில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்தார்கள் என்பவைகளை அக்கரையோடு விசாரித்துத் தெரிந்து கொள்வான். அப்படி விசாரிப்பதும் யாரை? சம்பந்தப் பட்டவர்களையல்ல; ஒருவரைக் கொண்டு மற்றொரு வரை விசாரிப்பான். யாராருக்கு எவ்வளவு கடன் இருக்கிறது. சென்ற வருஷம் குதிரை வண்டி வைத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த வருஷம் மோட்டார் வண்டி வாங்கியதன் ரகசியம் என்ன, இப்படிப் பட்டவை களைப் பற்றித்தான் அவனுக்கு விசாரம். மற்றவர்களுடைய துக்கத்தை விசாரித்து அதற்குப் பரிகாரம் தேடிக் கொடுக்க வேண்டியது நியாயந்தான்; அஃது ஒவ்வொருவ னுடைய கடமையுங் கூட. ஆனால் வீடுதோறும் சென்று குறைகள் எங்கே யிருக் கின்றனவென்று தேடியலையக் கூடாதல்லவா? வைத்தியன் இருக்கிறான். அவன் தன்னிடம் எந்த நோயாளி வந்தாலும் அவர் களுக்குச் சிகிச்சை செய்யக் கடமைப் பட்டிருக்கிறான். ஆனால் அவன், ஒவ்வொருவரிடமும் சென்று உனக்கு வியாதி இருக்கிறதா வென்று கேட்பானாகில் அவனுக்கு என்ன மரியாதை கிடைக்கும்? வீட்டை விட்டு வெளியே துரத்தப்படுவான். அவ்வளவுதான், வந்த வழக்கைத் தீர்த்து வைப்பது வக்கீலின் கடமை. வழக்கைத் தேடிக் கொண்டு செல்கிறவன் வக்கீலல்ல; வம்பன். மனிதப் பிராணி இந்த மாதிரியான ஒரு வம்பன். அவன், யாரைச் சந்தித்தாலும், ஏதாவது புதிதாக விசேஷம் உண்டா என்று கேட்பான். அல்லது ஏதோ ஒரு குறையைச் சொல்ல வேண்டும். இப்படித் தான் அவன் எதிர்பார்க்கிறான். எல்லாம் நல்ல விசேஷந்தான் என்று பதில் சொல்லுங்கள்; அஃது அவனுக்குத் திருப்தியாய் இராது. இத்தகைய மனிதப் பிராணியை ஒதுக்கித் தள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வப்பொழுது அவனுக்கு இடித்து இடித்துச் செல்ல வேண்டும். யார் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் மிகுதியால், வீட்டுக்குள் ஓசைப் படுத்தாமல் நுழைந்தால், அப்படிச் செய்வது மரியாதைக் குறைவு என்று அவனுக்கு முகத்திலடித்தாற்போல் நேரில் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லாமல் அலங்கார பாஷையால் அழகு படுத்திச் சொன்னால் அவன் புரிந்து கொள்ள மாட்டான். அப்படிப் புரிந்து கொள்கிறவனாயிருந்தால் அவன் மனிதப் பிராணியாயிருக்க மாட்டானல்லவா? 8. வாழ்க்கை வாழ்க்கை யென்பது என்ன? குடிக்க வேண்டிய நீர் ஊற்று; ஏற வேண்டிய மலை; எரிய வேண்டிய கற்ப்பூரம். மரம், நிழல் கொடுத்தால் மட்டும் போதாது; பலனையும் கொடுக்க வேண்டும். அதைப் போல் நூலறிவும் செல்வச் சிறப்புமுடையது மட்டும் வாழ்க்கையாகாது; பிறருக்குப் பயனுடையதாய் இருப்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கையானது மல்லிகைப்பூ பரப்பிய படுக்கையல்ல; சிமெண்ட் போட்ட பாதையல்ல; உண்டு உறங்குவதற்கான சத்திர வாசலல்ல. அஃது ஒழுங்குச் கக்தி; ஒழுக்க நெருப்பு; சேவைப் பம்பரம். வாழ்க்கையிலே ஓய்வு வேண்டுமென்று விரும்புகிறவன் நோயாளி; சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக் கிறவன் சோம்பேறி; தோல்வியினால் சோர்வடைகிறவன் கோழை; பிறர் சொல்லுக்குப் பயந்து, தன் செயலை மறந்துவிடுகிறவன் இருந்தும் இறந்தவன். சதா சலித்துக் கொண்டிருப்பது எதுவோ அதுதான் வாழ்க்கை. அந்தச் சலனத்திலிருந்து சிந்தனைப் பொறி கிளம்ப வேண்டும்; செயல்கள் உருவாக வேண்டும். சிந்தனை செய்யாத மனமும், செயலாற்றாத வாழ்வும், சவக்குழியிலே சரண் புகுவதற்குத் தகுதியுடையவை. வாழ்க்கையிலே ஒரு லட்சியம் வேண்டும். என்னிடத்திலே என்ன சக்திகள் இருக்கின்றன என்ற கேள்வியை எவனொருவன் தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறானோ அவனுக்கு லட்சியம் தானாகப் புலப்பட்டுவிடும்; அவனுடைய அன்றாட வாழ்க்கை யிலே ஒரு பெரிய மாறுதல் ஏற்படும். தன் சக்திகளை உணராத வரையில்தான் மனிதனுக்கு ஆபத்து; உணர்ந்து கொண்டு விட்ட பிறகு அவைகளை உபயோகத்திற்குக் கொண்டு வரவே செய்வான். அப்படி உபயோகத்திற்குக் கொண்டு வருகிறபோது, தன்னுடைய சக்திகளை எந்தவிதமாக உபயோகித்தால் அதிகமான பேருக்கு அதிகமான நன்மை உண்டாகுமென்று பார்க்க வேண்டும். அதிக மான பேருக்குச் சந்தோஷம் உண்டாகிறதா என்று பார்ப்பது விசேஷ மல்ல; கெடுதலுங்கூட. அதிகமான நன்மை உண்டாகிறதா வென்று பார்ப்பதுதான் விசேஷம். ஒரு லட்சியவாதியின் லட்சணமே இதுதான். அதிகமானபேருக்கு அதிகமான நன்மையைச் செய்ய வேண்டு மென்ற எண்ணம் எவனுக்கு உண்டாகிறதோ, எவன் அப்படி உறுதி செய்து கொள்கிறானோ, அவனுக்குக் கூடவே பல சங்கடங்கள் தொடர்கின்றன. அவன் பல பரிசோதனைகளுக்கு ஆளாகிறான். அவைகளிலிருந்து அவன் மீண்டு வந்தால் மட்டும் போதாது; அவனது லட்சியப் பார்வை மாறா மலிருக்க வேண்டும். அதாவது எந்தக் காரியத்தைச் செய்யத் துவங்குகிற போது அவனுக்குத் தடைகள் ஏற்பட்டனவோ அந்தக் காரியத்தை அவன் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதான் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறவனாவான். வாழ்க்கையின் இரண்டு சகடங்கள் அன்பும், அஞ்சாமையும்; அச்சாணியாயிருப்பது பற்றின்மை. பற்றின்மை யென்றால் உலகத்தைத் துறந்து விடுதல் என்பது அர்த்தமல்ல. செயலின் பலனில் பற்று இருக்கக் கூடாதென்பது ஓர் அர்த்தம். எந்த ஒரு காரியத்தையும், மனம் வைத்துச் செய்ய வேண்டும்; பற்று வைத்துச் செய்ய வேண்டும். ஆனால் அஃது என்ன பலனைக் கொடுக்கப் போகிறதென்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இது கடினமான சாதனைதான். ஆனால் இதுதான்வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மார்க்கம். பற்றின்மை என்பதற்கு உடைமை உணர்ச்சி இல்லாமை என்பது மற்றோர் அர்த்தம். உடைமை இல்லாமல். அதாவது நிலம், வீடு, வாசல், துணிமணி முதலியன இல்லாமல் வாழ்க்கையை நடத்த முடியாது. ஆனால் அவை எனக்காக மட்டும் பிரயோஜனப் பட வேண்டும். அவைகளுக்கு நானே உடையவன் என்ற எண்ணம் போக வேண்டும். இந்த எண்ணம் போன இடத்தில்தான் அன்பு, அஞ்சாமை, தியாகம் முதலிய பயிர்கள் செழிப்பாக உண்டாகும். இந்தப் பயிர்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையை நடத்துகிறவன்தான் மனிதன். பணத்தைச் சம்பாதிப்பது சுலபம்; செலவழிப்பது கடினம். அறிவை உபயோகியாமலோ, திறமையில்லாமலோ, பணம் வந்து விடலாம்; ஆனால் அதைப் பிறர்க்குப் பயன்படுகிற விதமாகச் செலவழிக்க அறிவு வேண்டும்; திறமை வேண்டும். அதைப் போல், ஒருவன் மனிதனாகப் பிறந்து விடலாம்; மனிதனாக வாழத்தெரிய வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான புற சாதனங்கள் யாவும் ஒருவனுக்குக் கிடைக்கலாம்; ஆனால் அவைகளை உபயோகிக்கத் தெரிய வேண்டும்; தனக்காகவல்ல; மற்றவர்களுக்காக. அதற்கு அக வளர்ச்சி தேவை. இந்தத் தேவையை முன்னிட்டுத்தான் நமது முன்னோர்கள் நூல்கள் எழுதி வைத்திருக் கிறார்கள். அவர்கள் அக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர புறத் தோற்றத்திற்கல்ல. ஆயினும் புறத்தை அவர்கள் புறக்கணித்து விடவில்லை. மேலே சொன்ன அன்பு, அஞ்சாமை, பற்றின்மை முதலிய அனைத்தையும் சேர்த்துத் தொகுப்பாக சீலம் என்று பெயர் கொடுத்தனர் இந்தியர், சீனர் முதலிய கீழ் நாட்டார். ஒரு சீனக் கிரந்தம், சீலத்திற்குப் பின் வருமாறு லட்சணங் கூறுகிறது:- சீல மென்பது தண்ணீர் மாதிரி. யாவற்றையும் ஆகாரமாயிருந்து வளர்ப்பது நீர்; ஆனால் யாவற்றிற்கும் கீழான தானத்திலேயே இருக்கிறது. ஆறுகளும் சமுத்திரங்களும் நூற்றுக்கணக்கான சிற்றாறுகளுக்கு அரசர்கள் மாதிரி. ஏனென்றால் அந்தச் சிற்றாறுகளுக்குக் கீழான நிலையிலேயே ஆறுகளும் சமுத்திரங்களும் இருக்கின்றன. தண்ணீரைவிட மிருதுவானது வேறொன்றும் கிடையாது; ஆனால் கடின வதுக்களை வெற்றி கொள்கிறது. அதைப் போல், அறிஞனாயிருக்கிறவன் தானே வலிய முன்னுக்கு வந்து நிற்பதில்லை; தன்னைப் பெரிய மனிதனாக்கிக் கொள்வதுமில்லை. அவன் யாரோடும் சண்டை போடுவதில்லை. அதனால் அவனோடு யாரும் சண்டை போடுவதில்லை. அனேக பொருள்கள் வளர்வதற்கு அவன் உதவியா யிருக்கிறான்; ஆனால் அவைகள் விஷயத்தில் அவன் தலையிடுவ தில்லை. அவனுக்கென்று சொந்தமான இருதயமில்லை; ஆனால் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் இருதயம் அவனுடையதாயிருக்கிறது. அதாவது அவன், தனக்கென்று வாழ்வதில்லை; பிறருக்காக வாழ்கிறான். அவன் நன்மையை நன்மையினால் சந்திக்கிறான்; தீமையையும் நன்மையினால் சந்திக்கிறான். எல்லாரிடத்திலும் அவன் பணிவா யிருக்கிறான். இதனால் உலகமெல்லாம் அவனையே நாடுகிறது. குடும்பத்தைவிட்டு ஓடிப் போய் உலகத்திற்குத் தொண்டு செய்வதாகச் சொல்கிறார்களே, அவர்களை நம்பாதீர்கள். ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பட விரும்பாதவர்கள் தான் அப்படிச் செய்வார்கள். அவர்களுடைய வாழ்க்கை வைரம் பாயாத மரம். அவர்களுடைய தொண்டில் இனிமை இராது. குடும்பத்தி லிருந்து தேசம்; தேசத்திலிருந்து மானிட சமுதாயம், இவை வெவ்வேறு படிகளானாலும் ஒன்றுக்காக மற்றொன்றைத் துறந்து விடக் கூடாது. ஒன்றிலே மற்றொன்றைக் காண்பதில்தான் மனிதன் வளர்ச்சியடைகிறான்; அவனுடைய வாழ்க்கை நிறைவடை கிறது. எனக்காக நான் வாழ்கிறேன் என்ற எண்ணம் போய் மற்றவர்களுக்காக நான் வாழ்கிறேன் என்ற எண்ணம் எவனிடத் தில் உதயமாகிறதோ அவனுடைய வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை. மற்றவர்களுடைய தெல்லாம் வெறும் சக்கையென்று வாழ்க்கைக்குச் சுருக்கமாக உரை கூறலாம். 9. லட்சிய வாழ்க்கை உலகத்தில், எவ்வித லட்சியமுமில்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போவோர்தான் பெரும்பாலோராயிருக்கின்றனர். இவர்கள் வாழ்க்கையின் லட்சணத்தை அறியாதவர்கள். அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலும் இவர்களுக்கு இருப்பதில்லை. லட்சியத்தைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியப் போகிறது? ஆனால் இந்தப் பெரும்பாலோரிடத்தில்தான் பணம், பட்டம், பதவி, எல்லாம் சென்று அடைக்கலம் புகுந்து கொண் டிருக்கின்றன. இவர்களுடைய சொற்கள்தான் நீதிமன்றங்களில் உரக்க ஒலிக்கின்றன. அதிகார சக்தி, இவர்களுக்கு வந்தனை செய்தவண்ணம் இருக்கிறாள். இத்தகைய பெரும்பாலோரைக் கொண்ட உலகத்தை, முன்னேற்ற மடைந்து வருவதாகவும், நாகரிகமடைந்து வருவதாக வும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அணுகுண்டுகளும், ஒலிபரப்பிகளும், பொய்ப்பிரசாரங்களும், இந்த முன்னேற்றத் திற்கும் நாகரிகத்திற்கும் முன்னே கட்டியங் கூறிக் கொண்டு செல்கின்றன! உலகத்தில் ஏன் பெரும்பாலோர் எவ்வித லட்சியமுமில்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்கின்றனர்? லட்சியமென்பது, சொல்லளவிலே, எளிமையுடையதாகவும் இனிமையுடையதாகவும் இருக்கிறது. செயல் நிலைக்கு அதனைக் கொண்டு வருகிறபோது, அஃது எவ்வளவு கடினமுடையதாகவும் கடுமையானதாகவும் இருக்கிறது? அதனை நாடி நாம் செல்லச் செல்ல அஃது ஓடிக் கொண்டே போகிறது. லட்சியத்தின் லட்சணமே இதுதான் போலிருக்கிறது! ஆக சாதாரண அறிவுக்கும் முயற்சிக்கும் எட்டாதது எதுவோ, நடைமுறைக்கு வராதது எதுவோ, அதுதான் லட்சியம் என்ற ஒன்று போலும் என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. உலகத்திலுள்ள பெரும் பாலோர் சாதாரண அறிவும் முயற்சியும் படைத்தவர்கள்தானே? இவர்கள் எவ்விதலட்சியமுமில்லாமலிருப்பது பற்றி ஆச்சரியப் படத் தேவையில்லை. ஆனால் அசாதாரண அறிவும் முயற்சியும் படைத்தவர்கள் ஒரு சிலர் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். முந்தியும் இருந்தார்கள், இனியும் இருப்பார்கள். இவர்களால்தான் உலகம் வாழ்கிறது. வாழ்க்கை யென்றால் என்ன என்பதைப் பற்றி இவர்கள் அவ்வப்பொழுது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். அந்த மக்களும் இவர்களுடைய அறிவுரை களைக் கேட்டுக் கேட்டு, சில சமயங்களிலேனும் தங்களைப் பற்றியும், தாங்கள் நடத்தும் வாழ்க்கையைப் பற்றியும் சிறிது சிந்திக்கிறார்கள். காலம் நெடுகிலும் இப்படித்தான் நடைபெற்று வந்திருக்கிறது. அசாதாரண அறிவும் முயற்சியும் படைத்த ஒரு சிலரையே மகான்களென்றும், லட்சியவாதிகளென்றும், கடவுளைப் பல பெயர்களிட்டு அழைப்பது போல் பல பெயரிட்டு உலகம் அழைக்கிறது; இவர்களைப் பின்பற்ற வேண்டுமென்கிறபோது தான் பின்வாங்கிக் கொண்டு விடுகிறது. இப்படிப் பின்பற்றாமல் இருப்பதோடு மட்டுமில்லை. இவர்களை - இந்த லட்சியவாதிகளை - உலக வாழ்க்கைக்குப் பிரயோசன மற்றவர்களென்று ஏசவும் பேசவும் செய்கிறது. ஆனால் இவர்கள் இந்த ஏச்சுப் பேச்சுக்களைப் பொருட்படுத்தாமல், தங்கள் லட்சியத்திலேயே கண்ணாயிருக்கிறார்கள். இந்த லட்சியத்தின் அருகே இவர்கள் செல்லச் செல்ல, இவர்களுடைய உடல், பொருள், ஆவி மூன்றும் தேய்ந்து மாய்ந்து போகின்றன. கடைசியில் இவர்களுடைய சாம்பல் மீதுதான் இவர்கள் கொண்ட லட்சியம் நித்திய வாழ்வு பெற்றுப் பூரணப் பொலிவுடன் பிரகாசிக்கிறது. இத்தகைய லட்சியவாதிகளைச் சாதாரண மக்கள் அடிக்கடி நினைவு கொள்ள வேண்டுமென்ற நன்னோக்கத்துடன்தான், புராணங்கள், இதிகாசங்கள் முதலியன எழுந்தன. இவைகளை வேறுபல கோணங்களி லிருந்து பார்க்க நமக்குச் சம்மதமில்லாது போனாலும் இந்த ஒரு கோணத்திலிருந்து - லட்சிய வாழ்க்கை என்ற கோணத்திலிருந்து - பார்த்தாலே போதும், எத்தனையோ உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்; எத்தனையோ பெரியார்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். கடவுளைக் காண வேண்டுமென்ற ஒரே லட்சியமுடைய வனாயிருந்தான் துருவன். எத்தனையோ அல்லல்களுக்குட் பட்டான். கடைசியாக, தன் விருப்பத்திற்கேற்ற முறையில் கடவுளைக் கண்டே விட்டான். அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாயிருக்கிறார் கடவுள் என்ற ஒரே நம்பிக்கை கொண்டவன் பிரகலாதன். இந்த நம்பிக்கையை அசைத்துவிட எத்தனையோ இடர்கள் அவனைக் குறுக்கிட்டன. கடைசியில், தன் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் காட்டினான், கடவுளைத் தன் தந்தைக்குக் காட்டி! பிரகலாதனுடைய வழித் தோன்றலாகிய மாவலிச் சக்கரவர்த்தி மூன்றடிமண் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு தன்னையே ஒப்புக்கொடுத்துவிட்டான் ஆண்டவனுக்கு. இல்லையென்னாது கொடுப்பதையே லட்சியமாகக் கொண்ட கர்ணன், எத்தனை விதமான பழிச் சொற்களுக்கு ஆளானான்? ஆயினும் கொடையை நிறுத்தவே இல்லை. கொடுத்துக் கொடுத்துக் கடைசியில் அந்தக் கொடையிலேயே தன் உயிரையும் கொடுத்துவிட்டான். இப்படி எத்தனையோ லட்சியவாதி களை நமது புராண இதிகாசங் களிலிருந்து எடுத்துக்காட்டலாம். இன்னும் சரித்திர காலத்தில், இத்தகைய மகான்கள் எத்தனையோ பேர் நமது நாட்டிலும் பிற நாடுகளிலும் காட்சியளிக் கிறார்கள், க்ஷத்திரிய சிகாமணியாகிய மகாராணா பிரதாப சிம்மன், சுதந்திரத்தை லட்சியமாகக் கொண்டவன். இதற்காக, அக்பர் சக்ரவர்த்தியினுடைய மகத்தான ஆக்கிரமிப்புக்களை யெல்லாம் எதிர்த்து நின்றான்; தனது குடும்பத்துடன், காடு மேடுகளிலெல்லாம் அலைந்து திரிந்தான். கடைசி மூச்சு இருக்கிறவரை தனது சுதந்திரலட்சியத்தைக் கைவிடவேயில்லை. அக்பரின் ஆதிக்கத்திற்கு அப்புறத்தனாகவே இருந்து உயிர் துறந்தான். கி.பி. பன்னிரண்டாவது நூற்றாண்டில் இத்தலியில் செயிண்ட் பிரான்சி ஆப் அஸிஸி1 என்ற ஒரு கிறித்துவ முனிவன் இருந்தான். எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்துவதே இவன் லட்சிய மாக இருந்தது. தனது லட்சியத்தை நடைமுறையில் கொணரும் பொருட்டு, கந்தலுடுத்தி, பிச்சைக்காரனைப் போலவே வாழ்ந்தான். இவன், கடவுளை நோக்கிப் பின்வருமாறு பிரார்த்தனை செய்கிறான்:- ஆண்டவனே! உனது திருவருளுக்குரியதொரு கருவியாக என்னை ஆக்கிவிடு. எங்கே பகைமை இருக்கிறதோ அங்கே நான் அன்பு விதையை விதைக்கட்டும். தீங்கிழைக்கப்பட்டால், மன்னிக்கட்டும். சந்தேகமுள்ள இடத்தில் நம்பிக்கையை ஊட்டட்டும். அப்படியே சோர்வுற்ற போது நம்பிக்கை அளிக் கட்டும். துக்கமுள்ள இடத்தில் மகிழ்ச்சியைக் கொடுக் கட்டும். அண்டர் நாயக! ஆறுதல் பெறுவதற்குப் பதில் ஆறுதல் அளிப்பேன். அறியப்படுவதற்குப் பதில் அறிந்து கொள்வேன். நேசிக்கப் படுவதைக் காட்டிலும் நேசிப்பேன். எப்பொழுதுமே கொடுப் பதிலேதான் நாம் பெறுகிறோம். மன்னிப்பளிப்பதிலேதான் மன்னிப்புப் பெறுகிறோம். மரணத்திலேதான் நித்திய வாழ்வு பெறுகிறோம். பிரான்சி முனிவனுடைய இந்தப் பிரார்த்தனைப் பாடல், லட்சியவாதிகள் எத்தகையர் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஏதோ ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவன், அன்றாட வாழ்க்கையில் என்னென்ன பரிசோதனைகளுக்கெல்லாம் உட்பட வேண்டியிருக்கிறது? எத்தனை தடுமாற்றங்கள்! எத்தனை விபரீத சந்தேகங்கள்! எது சரி, எது தவறு என்று தெளிந்து கொள்ள முடியாத ஒரு சங்கட நிலைக்குப் பலதரம் ஆட்பட வேண்டியவனாயிருக்கிறான். ஓரிரண்டு உதாரணங்களைச் சொன்னால் தான் இது தெளிவுபடும். உணவுப் பொருள் பங்கீடுமுறை (ரேஷன்) நமது நாட்டில் சிறிது காலம் நடைமுறையில் இருந்ததல்லவா? அப்பொழுது, நியாய அநியாயத்திற்குக் கட்டுப்பட்டவர்களும் மனச்சாட்சி படைத்தவர் களுமான பலர் எவ்வளவு தர்ம சங்கடமான நிலைக்குட்பட வேண்டியிருந்தது தெரியுமா? உணவுப் பொருள்கள் அளந்தே கொடுக்கப்பட்டன. அவையும் பெரும்பாலும் சுத்தமாயிருக்க மாட்டா. சுத்தப்படுத்திப் பார்க்கிறபோது அளவில் குறைந்து போகும். உரியவர்களுக்கு அவை போதுமானவையா யிருக்க மாட்டா. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக விருந்தினர் சிலர் வந்துவிடுவர். அவர்களைத் திருப்தி செய்து அனுப்ப வேண்டும். இதற்காக என்ன செய்வது? அதிகப்படி தேவைக்குக் கள்ளச் சந்தையில் பொருள் களை வாங்குவதா? பெயரே கள்ளச் சந்தை! களவு என்பது ஐம்பெரும் பாவங்களில் ஒன்றல்லவா? சரி; கள்ளச் சந்தைக்குச் செல்லாமல் உள்ளதை விருந்தினர்க்கு உபயோகப்படுத்தி விட்டு நாம் பட்டினி கிடக்கலாம். ஆனால் அப்படிப் பட்டினிகிடப்பது தற்கொலைக்குச் சமானம். நாமாவது ஒரு வேளை இரண்டு வேளைப் பட்டினி கிடந்து விடலாம். நம்முடைய குழந்தை குட்டிகளைப் பட்டினி போடலாமா? இதைக் காட்டிலும் வேறு பாவம் உண்டோ? இந்தச் சங்கடங்களெல்லாம் எதற்கு என்று கருதி, வந்த விருந்தினரைத் திருப்பி அனுப்பி விடலாம். வீடேறி வந்தவர்களை வெறும் வயிற்றோடு அனுப்பி விடுவதா? இந்தியாவிலே பிறந்த யாருக்கும் இப்படிச் செய்ய மனம் வராது. இந்த நிலையில், உண்மையைக் கடைப் பிடிப்பதையே தனது வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்ட இல்லறத்தான் ஒருவன் என்ன செய்வான்? என்ன செய்யலாம், எப்படி நடந்து கொண்டால், தனது குறிக்கோளுக்குப் பழுது ஏற்படா மலிக்கும் என்றெல்லாம் சிந்திக்க அவனுக்கு அவகாசம் இருப்ப தில்லை. அவகாசம் இருந்தாலும் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் அவனுக்கு இருப்பதில்லை, ஆசையிருந்தாலும் ஆற்றல் இல்லை. அவன் பெற்றிருக்கும் கல்வி, அவனுக்கு அமைந்திருக்கிற சூழ்நிலை இவையெல்லாம் சேர்ந்து வாழ்க்கையை அதுபோகிற போக்கிலே விட்டுவிடும்படியான ஒரு மனப்பான்மையை அவனுக்கு ஏற்படுத்திக்கொடுத்து விட்டிருக்கிறது. இன்னும் நம் நெருங்கிய நண்பன் ஒருவன் நம்மிடம் பரமரகசிய மான செய்தியொன்றைச் சொல்லிவிட்டுப் போகிறான். சிறிது நேரத்திற்கெல்லாம் அவனைப் போலவே மற்றொரு நெருங்கிய நண்பன் வந்து அவன் என்ன சொல்லிவிட்டுப் போனான் என்று கேட்கிறான். அப்படிக் கேட்பது முறையன்று என்று அவனைத் தடுத்துச் சொல்ல நமக்குப் போதிய மனோதிடம் இருப்பதில்லை. சொன்னதைச் சொல்வது தவறு. ஒன்றும் சொல்லவில்லையென்று சொல்வது, பொய் சொன்ன குற்றமாகும். இந்த தர்ம சங்கடமான நிலையிலிருந்து விடுதலை பெற எதையோ ஒன்றைச் சொல்லிவைக்கிறோம். அப்படிச் சொல்வது உண்மைக்கு மாறுபட்டிருக்கிறதென்பதை நாம் தெரிந்து கொள்ளா மலில்லை. ஆயினும் என்ன செய்வது? காலக் கிரமத்தில் உண்மைக்கு மாறுபடப் பேசுவது நமது சுபாவத்தில் ஒன்றாகி விடுகிறது. இவைகளுக் கெல்லாம் காரணம் நமக்கென்று ஒரு லட்சியத்தை வகுத்துக் கொள்ளாதது தான்; அப்படி லட்சியம் என்ற ஒன்று இருந்தாலும், அதற்காக வாழ்க்கையே தவிர, வாழ்க்கைக்காக லட்சியமில்லை என்ற திட சங்கற்பம் கொள்ளாததுதான். பார்க்கப் போனால், நவீன நாகரிக சாதனங்களெல்லாம் தோன்றாமலிருந்த காலத்தில், மக்களிற் பெரும்பாலோர், ஏதோ ஒரு வித லட்சியத்தை வகுத்துக் கொண்டு அதற்கிசைய தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தனர். அன்றாட வாழ்க்கையில், அறமும் அன்பும் நிலவியிருந்தன. அகந்தை அகன்று நின்றது. எல்லாவற்றிலும் ஒரு நிதானமே காணப்பட்டது. இத்தகைய நல்லியல்புகள் வாய்ந்த பண்டைக் காலத்தவரை நாம் அடிக்கடி நினைவு கொள்வோமானால், நம்முடைய அன்றாட வாழ்க்கை எத்தனையோ வகைகளில் செம்மையுற அமையும். 10. வாழ்க்கைப் போராட்டம் வாழ்க்கை, ஒரு பெரிய போர்க்களம்; அதில் ஆண்டவனே! எனக்கு ஒரு கௌரவமான தானம் கொடு. அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள எல்லோரையும் போல் எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடு. முயற்சி செய்ய, துணிவாக நடக்க ஒரு தைரியத்தை அளி. நான் வெற்றியுற்றால், அந்த வெற்றிக் கட்டடத்தின் மீது என் நம்பிக்கையும்; நாணயமும் கொடிகளாகப் பறக்கட்டும் தோல்வி யுற்றேனாயின், வெற்றி காண்பவர்களுக்கு வழி விலகி விட்டு, அவர்களுக்காகக் கைகொட்டிக் களிக்கும் மனப்பான்மையைக் கொடு. 11. நீ யார்? உலகினிலே இருவகை மாந்தருண்டு, கூறுவையோ அவர்தாம் யாரென்று? பாவிகளும் ஞானிகளுமோ? இல்லை. செல்வரும் வறியருமோ? இல்லை. தலை தாழ்ந்தாரும் தூக்கினாருமோ? இல்லை. சுகப்பட்டவரோ? துக்கித்தவரோ? இல்லை. உலகினிலே இருவகை மாந்தர்தானுண்டு. அவரே பிறரைக் கைதூக்கி விடுவார்; பிறரால் தூக்கப் படுவார். எங்குச் சென்றாலும் சீர்தூக்கிப்பார். இந்த இருவகைப் பிரிவினையே காண்பாய். ஒருவர் தூக்குவார்; இருபதின்மர் தூக்கப்படுவார் நீ எந்த வகுப்பில் சேர்ந்து சிறப்புறுகிறாய்? தூக்குவோர் சுமையைக் குறைக்கிறாயா? தூக்கப் படுவோருடன் சேர்ந்து துன்புறுகிறாயா? 12. வாழ்ந்து வீழ்ந்தவர் நல்ல உன்னத திதியில் நீ இருந்தாய். செல்வமிழந்து பதவியும் போனபிறகு, இப்பொழுது, உன் பழைய நிலைமையை நினைவு படுத்திக்கொள்கிறாய். புழுப்போல் துடிக்கிறாய். வீழ்ச்சி, உனக்குப் பெரிய அதிர்ச்சி; விதியின் கொடுமையான சதி; மீள முடியாத ஒரு துன்ப நிலை. அதோ எதிரே சற்று தூரத்தில், உன் சத்துருக்களில் ஒருவன், உன் நிலையைப் பார்த்து மெதுவாகச் சிரிக்கிறான். மற்றவர்களின் புறக் கணிப்பிலே, உன்னுடைய சிறுமை நன்கு வெளியாகிறது. நீ அளித்த பல விருந்துகளை நன்றாகச் சாப்பிட்ட உன் நண்பர்கள், இவ்வளவு தடபுடல் விருந்துகள் வைத்திருக்க வேண்டாமென்று இப்பொழுது சொல்கிறார்கள். உன் குற்றங்கள் இப்பொழுது மற்றவர் கண்களுக்குப் புலனாகின்றன. இனி உன்னிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய தொன்றுமில்லையாதலினால், நன்றிகொன்ற தன்மை, இப்பொழுது பகிரங்கமாக உனக்கெதிரே தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. உனக்கு இந்த நிலைமை ஏற்படுமென்று ஒவ்வொரு முட்டாளும் இப்பொழுது சொல்ல ஆரம்பிக்கிறான். உன்னுடைய தேவைகளைக் கவனிக்க ஒரு வேலைக்காரன் கூடத் தேவையில்லை யென்று இப்பொழுது உனக்குத் தோன்றுகிறது. உன் தோட்டத்தில் உண்டான பழவகைகளை முந்தி உன் நண்பர் களுக்குக் கூடை கூடையாகக் கொடுத்தனுப்பி வந்தாய். அவைகளையெல்லாம் விற்று முதலாக்கி யிருக்கலாமே என்று இப்பொழுது உனக்குத் தோன்று கிறது. இந்த நிலையில் பிச்சைக் காரர்களுக்குப் பிச்சை போடுவதா? நீயே பரம ஏழையாயிற்றே? இந்தத் துரதிருஷ்டமான நிலைமைக்குத்தான் வீழ்ந்த வாழ்வு என்று பெயர். ஒவ்வொரு நாளும் இறந்து, பிழைக்கிற நிலை இது. வாட்டர்லூ1 யுத்த களத்தில் நெப்போலியன்2 நின்ற மிடுக்கென்ன? பின்னர் செயிண்ட் ஹெலீனா3 தீவில் அவன் தலை குனிந்து உலவிக் கொண்டிருந்ததென்ன? யோசித்துப் பார். 13. வீழ்ந்தும் வாழ்ந்தவர் உலகத்தில் மனிதர்களை விலைக்கு வாங்கிவிடலாம். விலைக்கு என்றால் அவர்கள் உடலையா? ஆம். அது மட்டு மில்லை; அவர் களுடைய மனச்சாட்சியைக் கூட. ஆனால் மனச் சாட்சியைப்பணத் திற்கு விற்கிறவர்கள் மனிதர்களா என்பதுதான் கேள்வி. மனிதனுக்குத் தரித்திரம் நாலாபக்கங்களிலும் பிடுங்கித் தின்னலாம். யமன், அவன் வீட்டு வாயிலில் இருந்து கொண்டு உள்ளே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கலாம். நோய், பல உருவங்களெடுத்து அவனைச் சித்திரவதை செய்யலாம். உலக மெல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, ஒரு குரலில் அவனைப் பரிகசிக்கலாம். அரசாங்கத்தின் அதிருப்திக்கு அவன் இரையாக லாம். அவன் தேகத்தை இரும்புச் சங்கிலிகள் பல வருஷங் களாகப் பிடித்து இறுக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவனுடைய மனச் சாட்சியை மட்டும் யாரும் விலை கொடுத்து வாங்கி விட முடியாது. அப்படிப்பட்டவன்தான் மனிதன். ஆண்டவன் படைப்பில் அவனுக்கு முதல் தானம் உண்டு. சாக்கடையிலே அவன் வாழ்வு; ஆனால் அவனுடைய ஆத்மா நிர்மலமான ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. அவன் உடலெல்லாம் ஒரே அழுக்கு; ஆனால் அவன் உள்ளம் பனிக்கட்டி போல் சுத்தமாயிருக்கிறது. அவன்தான் மனிதன். இத்தகைய மனிதர் பலர் அவ்வப்பொழுது உலக சரித்திர ஏடுகளின் மூலம் நமக்கு அறிமுகமாகி யிருக்கிறார்கள். அவர்கள், வறுமைப் பேயைக் கண்டு அஞ்சி ஓடவில்லை; அதனை எதிர்த்துப் போராடினார்கள். அவர்கள் செல்வத்தைக் கண்டு மயங்கவில்லை; காலால் உதறித் தள்ளக்கூடிய புழுதி மண்ணாக அதனைக் கருதினார்கள். அவர்கள், அதிகார சக்தியைக் கண்டு மருளவில்லை; அதற்கு அடிபணிய வில்லை; அதனை அலட்சியமே செய்து விட்டார்கள். இவை மட்டுமல்ல; தங்களுடைய வறிய நிலையில் கூட, மற்றவர்களுடைய உதவிக்குச் சென்றார்கள். ஸாமியல் ஜான்ஸன்1 என்ற ஆங்கிலப் புலவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? இவன் பரம ஏழை. வயிற்றுச் சோற்றுக்கு எத்தனையோ முறை அலைந்து திரிந்திருக்கிறான். இப்படிப்பட்ட கஷ்டமான நிலையிலுங்கூட, தன்னை அண்டியவர் களுக்கு உபகாரஞ் செய்வதில் சிறிதும் பின்வாங்க மாட்டான். கிழிந்த சட்டை போட்டுக் கொண்டிருப்பான்; குளிரோ நடுக்கும். தன் சட்டைப் பையில் ஏதேனும் காசுகள் இருந்தால் அவற்றை மற்றவர்களுக்குத் தாராளமாக வழங்கி விடுவான். இவன் ஒரு பொழுதும் பணத்துக்கு அடிமைப் பட்டது கிடையாது. ஒரு சமயம் இவன் நோயினால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந் தான். கையில் ஒரு காசுகூட இல்லை. அப்பொழுது இவனுடைய புலமையில் மதிப்பு வைத்திருந்த ஒருவன், ஒரு சிறு தொகையை ஓர் ஆள் மூலம் அனுப்பி வைத்தான். ஆனால் ஜான்ஸன் இதை மறுத்து விட்டான். மறுத்து விட்டதோடு மட்டுமல்ல; பணத்தைக் கொண்டு வந்த ஆளிடம் நான் ஒரு குறுகிய சந்தில் வசிக்கிறேனென்பதற்காக இந்தப் பணத்தை அனுப்பி வைத்தான் போலும்; அவனுடைய ஆத்மாதான் குறுகிய சந்திலே வசிக்கிறதென்று போய்ச் சொல் என்று மிடுக்காகச் சொல்லியும் அனுப்பிவிட்டான். ஜான்ஸனின் சம காலத்தவனான ஆலிவர் கோல்ட்மித்1 என்ற பெரும் புலவனும் வறுமையின் ஆழத்திலே உழன்று கொண்டிருந் தான். இந்த கோல்ட்மித் வெறும் புலவன் மட்டுமல்ல; பெரிய கவிஞன். புல்லாங்குழல் வாசித்துக் கொண்டே ஐரோப்பா முழுவதும் நடந்து சென்று தன் வயிற்றை நிரப்பிக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தான். வெளிச்சமற்ற குடிசையிலும் திறந்த மைதானத்திலும் இவன் இராப் பொழுதைக் கழித்த சமயங்கள் பல. பட்டினி கிடப்பதென்பது இவனுக்குச் சர்வ சாதாரணம். கடைசியில் புத்தகம் எழுதிக் கொடுத்து, பிழைப்புக்கு வழிதேடிக் கொள்ள முனைந்தான். இதில் இவனுக்கு நல்ல பேரும் புகழும் கிடைத்தன. ஆனால் வறுமை இவனை விடவேயில்லை. ஒரு சமயம், கோல்மித்திடமிருந்து ஜான்ஸனுக்கு ஒரு சீட்டு வந்தது. நான் நிரம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உடனே எனக்கு உதவிதேவை என்று அதில் காணப்பட்டிருந்தது. உடனே ஜான்ஸன் கோல்ட்மித்திடம் சென்றான். சென்று அவனை எங்கே கண்டான்? சிறையில்! ஏன்? வீட்டு வாடகை பாக்கி! அதற்காகச் சிறைவாசம்! அப்பொழுது கோல்ட்மித் கையில் ஒன்றுமில்லை; அவன் எழுதி வைத்திருந்த ஒரு நூலின் கையெழுத்துப் பிரதி மட்டும் இருந்தது. அதை ஜான்ஸன் புரட்டிப் பார்த்தான். நல்ல முறையில் எழுதப்பட்ட நூல் என்று தெரிந்தது. உடனே ஒரு பிரசுரகர்த்த னிடம் அதனை எடுத்துச் சென்று கொடுத்தான். அறுபது பவுன் கிடைத்தது. அதை வாங்கி வீட்டுக் காரனிடம் கொடுத்துவிட்டு கோல்ட்மித்தை விடுதலை செய்வித்தான். ஆனாலும் அவனுக்கு - கோல்ட்மித்துக்கு - கடன் வாங்க வேண்டிய அவசியம் எப்பொழுதுமே இருந்து கொண்டிருந்தது. ஒரு கடனாளியாகவே தான் அவன் இறந்தான். இங்ஙனம் வாழ்நாள் முழுவதும் வறுமையிலே உழன்று கொண்டிருந்த போதிலும் கோல்ட்மித்தைப் பணம் மயக்கி விடவில்லை. அரசியல்வாதிகள் சிலர். தங்கள் கட்சிப் பிரசாரத் திற்காக இவனை உபயோகித்துக் கொள்ள முயன்றார்கள். ஆனால் இவன் இணங்க வில்லை. பணத்தையோ புகழையோ இவன் பெரிதாகக் கருதவில்லை; மனிதத் தன்மையையே பெரிதாகக் கருதினான். இவனைப் போல் எத்தனையோ பேர் உலகத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 14. எது நாகரிகம்? சாதாரணமாக நாம், ஒருவன், உடுத்திக் கொண்டிருக்கிற உடை, சாப்பிடுகிற மாதிரி, வசிக்கிற இடம், பேசுகிற தோரணை, தற்கால விஞ்ஞான சாதிர அபிவிருத்தியின் விளைவாகவுள்ள நவீன சாதனங் களை அவன் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் அல்லது எந்த அளவுக்கு அனுபவிக்கிறான் என்ற விவரம் ஆகியவைகளைக் கொண்டு அவனுடைய நாகரிகத் தன்மையைக் கணித்துப் பார்க்கிறோம். ‘இதுவரையில் நான் ஒரு சினிமாகூட பார்த்ததில்லை’ யென்று ஒருவன் இந்தக் காலத்தில் நம்மிடம் வந்து சொல்வானாகில், ‘இப்படிப்பட்ட ஒரு மனிதன் இருக்க முடியுமா! என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். நான் இன்னும் ஒரு தடவைகூட ஆகாய விமானத்தில் ஏறிப் பார்க்க வில்லை யென்று ஒருவன் சொன்னால், அவனை ஒரு பட்டிக்காட்டானாகக் கருதிப் பாரிகாசம் செய்கிறோம். இவர் களெல்லாரும் நாகரிகம் தெரியாதவர்களென்பது நமது எண்ணம். ஆனால், பட்டாடை உடுப்பதும் ஆகாய விமானத்தில் வேகமாகப் பறந்து செல்வதும் மட்டுமே நாகரிகமாகுமா? மேஜை மீது தட்டுகள் வைத்துக் கொண்டு சாப்பிடுவதும், வேளை சமயம் இல்லாமல் ரேடியோவை முடுக்கிவிடுவதும் மட்டும் நாகரிக மாகுமா? ராமபிரான், கங்கையை ஓடத்தினால் கடந்து சென்றான். நாம் இப்போது அதே கங்கையை நீராவிப் படகினால் கடந்து செல்கிறோம். இதனால் ராமபிரானைக் காட்டிலும் நாம் நாகரிக மடைந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? இவையெல்லாம் புறவளர்ச்சியைக் காட்டுவனவே யன்றி, அகமலர்ச்சியைக் காட்டுவனவாகா. நாகரிகமென்பது, உள்ளத்தின் விரிவில்தான் இருக்கிறதே யொழிய, புறத்தோற்றத்திலோ புற நடவடிக்கைகளிலோ இல்லை. நாகரிக மென்பது முக்கியமாகப் பிறர்க்குப் பயன்படும் தன்மையது. காலத் தினாலும் இடத்தினாலும் வேறுபாடடையாதது; எல்லை யற்றது; பூரணத் துவமுடையது; என்றும் ஒரே படித்தாயிருப்பது. இப்படித்தான் நாகரிக மென்பதற்கு வியாக்கியானம் சொல்ல வேண்டும். அதாவது சத்தியம், ஞானம், தருமம் முதலியவைகளை எந்த தானத்திலே வைத்துப் பார்க் கிறோமோ அதே தானத் திலேயே இந்த நாகரிகமென்பதையும் வைத்துப் பார்க்க வேண்டும். ஒரு மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கிறது; இலைகளில் பசுமை நிறைந்திருக்கிறது; நிழலும் கொடுக்கிறது. இருந்தும் அந்த மரத்தைச் செழுமையுள்ள மரம் என்றோ, பயன் தரும் மரமென்றோ சொல்கிறோமா? இல்லை. பூவும், பிஞ்சும், கனியும் அது கொடாதவரை, அதனை நாம் லேசாகவே மதிக்கிறோம். அதனை ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வர வேண்டுமென்ற எண்ணம் நமக்கு உண்டாவதில்லை. அதுபோல், தீய தன்மைகள் எதுவும் வந்து கலந்து விடாதபடி எந்த உயர் குணத்தை நாம் காப்பாற்றி வரவேண்டுமோ, எதனைக் காப்பாற்றுவதன் பயனாக அது பிறர்க்குப் பயன்படுவதாயிருக்குமோ, அதற்குத்தான்- அந்த சிறந்த இயல்புக்குத்தான் - நாகரிகமென்று பெயர். அந்த இயல்பு செழுமை யுற்றிருப்பதற்குச் சாதகமாகவே, புற சாதனங்களை நாம் உபயோகித்துக் கொள்ள வேண்டும். அப்படிக்கில்லாமல், புற சாதனங்களையே நாகரி கமென்று கருதிவிட்டோமானால், மேற்சொன்ன சிறந்த இயல்பையே நாம் இழந்து விட்டவர்களாகி விடுவோம். உலகத்திலுள்ள எல்லா ஜாதியாருடைய பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரியா யிருப்பதில்லை. அவரவர்கள் வசிக்கிற பிரதேசத்தின் சீதோஷ்ண நிலைமை, பொருளாதார வசதிகள், ஆட்சி முறை, மற்ற அயல்நாட்டாருடன் அவ்வப்போது ஏற்படுத்திக் கொள்ளுகிற தொடர்பு முதலியவைகளை ஒட்டியும், விஞ்ஞான சாதிர அபிவிருத்தியை எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ அந்த அளவைப் பொறுத்தும், அவரவர்களுடைய மத நம்பிக்கை, பரம்பரை ஆகியவை காரணமாகவும், இந்தப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இந்தப் பழக்க வழக்கங் களையே அளவு கோலாக வைத்துக் கொண்டு, ஒருவரை நாகரிகமடைந் தவரென்றும் மற்றொருவரை நாகரிக மற்றவரென்றும் சொல்லிவிட முடியுமா? உதாரணமாக, ஒரு ஜாதியார், ஒருவரையொருவர் சந்திக்கிற போது கைகுலுக்கிக் கொள்கிறார்கள்; இன்னொரு ஜாதியார் சலாம் செய்கிறார்கள்; பிறிதொரு ஜாதியார் நமகாரம் பண்ணுகிறார்கள். இவர்களில் யார் நாகரிக முடையவரென்றும் யார் அநாகரிக முடையவரென்றும் சொல்ல முடியுமா? இவ்விதமே சிலர் கீழே அமர்ந்து கையினால் பிசைந்து சாப்பிடுகிறார்கள்; இன்னுஞ் சிலர், தங்களுக்கு முன்னே தாழ்வான ஒரு முக்காலியைப் போட்டுக் கொண்டு, அதில் பீங்கான் தட்டுகளை வைத்து, மூங்கில் குச்சியினால் எடுத்துச் சாப்பிடுகிறார்கள்; மற்றும் சிலர், நாற்காலி களில் அமர்ந்து கொண்டும், மேஜைகளின் மீது பிளேட்டுகளை வைத்துக் கொண்டும், பூன் கத்தி முதலிய ஆயுதங்களை உபயோகிக்கிறார்கள். இவர்களில் ஒருவரை நாகரிகத்தில் உயர்ந்தவர் என்றும் மற்றொருவரைத் தாழ்ந்தவர் என்றும் சொல்லலாமா? சொல்லக் கூடாது. இப்படிச் சொல்லக்கூடாதென்பது நமக்கு நன்றாகத் தெரிந்திருந் தாலும், நாம் இப்படித்தான் சொல்கிறோம். நம்மிலேயே சிலர் - அதாவது இந்திய பரம்பரையிலேயே வளர்ந்த சிலர் - கையினால் சாப்பிடுவது அநாகரிக மென்றும், பூனை உபயோகித்துச் சாப்பிடுவதுதான் நாகரிக மென்றும் சொல்லக் கேட்கிறோ மில்லையா? இப்படியே உடை, பேச்சு முதலியவை விஷயத்திலும் இதற்குக் காரணமென்ன? ஆட்சிமுறைதான். எந்த ஒரு கூட்டத்தார் அல்லது எந்த ஒரு ஜாதியார் ஆட்சி செய் கிறார்களோ அந்தக் கூட்டத்தாருடைய அல்லது அந்த ஜாதியாருடைய பழக்க வழக்கங்களை அவர்களுக்கு ஆட் பட்டிருக்கும் கூட்டத்தார் அல்லது ஜாதியார் அனுஷ்டிக்கிறார்கள். இதை உலக சரித்திரத்தின் பல கட்டங்களிலும் நாம் நன்றாகக் காண்கிறோம். ஆள்வோர், தங்களுடன் ஜனங்கள் ஐக்கியப் பட்டிருக்க வேண்டுமென்பதற்காகவும், தங்களுடைய ஆட்சியில் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்க வேண்டுமென்பதற் காகவும், தங்களுடைய பழக்க வழக்கங்களை நயமாகவோ, பயங் காட்டியோ, அந்த ஜனங்களிடத்தில் புகுத்துகிறார்கள். ஆட்பட்டிருக்கச் சம்மதங்காட்டும் அந்த ஜனங்களும் ஆள்வோரிடத்திலே கொண்ட ஒரு பிரமையினாலும் பயத்தினாலும், அந்த ஆள்வோருடைய தயவைப் பெற வேண்டுமென்பதற்காகவும், அவர்களுடைய பழக்க வழக்கங்களை அப்படியே மேற்கொள்கிறார்கள்; அதிலே ஒரு பெருமையும் அடை கிறார்கள். ஆள்வோர் மாறினால் ஆட் படுவோருடைய பழக்க வழக்கங் களும் மாறுகின்றன. பழைய ஆட்சி, சரித்திரக் காட்சியாகப் போய் விடுகிறது; அந்த ஆட்சியின் கீழ் நடைபெற்று வந்த அனுஷ்டானங்கள் அலட்சியப்படுத்தப் படுகின்றன; பரிகசிக்கப் படுகின்றன. இவைகளுக்கு எதிரிடையாகப் புதிய ஆட்சியில் மோகம் உண்டாகிறது; இதன் ஆதரவில் புகுத்தப்படும் ஆசார விவகாரங்கள் யாவும் அப்படியே பின்பற்றப் படுகின்றன. பரம்பரையாக வந்து கொண்டிருக்கிற, அசைக்க முடியாதது என்று கருதப்படுகிற கடவுள் நம்பிக்கைகூட, ஆட்சிமுறை மாறுவதன் காரணமாக ஆட்டங்கொடுத்து விடுகிறது. பேச்சு வார்த்தைகளுக்கும், நடை உடைகளுக்கும் கேட்பானேன்? உதாரணமாக, இந்தியாவில் ஹிந்துக்கள் ஆண்டு வந்தபோது, உடம்பை அதிகமாக மூடாத உடை தரிப்பதும், சமகிருதம் பேசுவதும் பழக்கமாயிருந்தது; அதுவே நாகரிகமாகவும் கருதப்பட்டது. பின்பு, முலிம்களின் ஆட்சி ஏற்பட்டபோது, நீண்டஅங்கி தரிப்பதும், தலையிலே தலைப்பாகை வைத்துக் கொள்வதும் உடை விஷயத்தில் நாகரிகமான தென்றும், அரபி, பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்றிருப்பது கல்வி விஷயத்தில் நாகரிகமான தென்றும் கருதப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி தோன்றிய பிறகு, கால் குழாயும், சுருங்கிய அங்கியும், தலையிலே ஹாட்டும் தரித்துக் கொண்டு ஆங்கில மொழியில் பேசினால் அதுவே நாகரிகமாகக் கருதப்பட்டது. இதனால் ஆட்சிமுறை மாற்றத்துக்கேற்ப, நாகரிகமென்பதன் அடையாளங் களும் மாறுபாடடைகின்றன என்பது பெறப்படுகிறது. மற்றும், ஓர் ஆட்சியினர், தங்களுடைய ஆட்சியை மேன்மைப் படுத்திக் காட்டுவதற்காக, தங்களுக்கு முந்தியிருந்த ஆட்சியினரின் நடை முறைகளை இழிவு படுத்திக் காட்டுகிறார்கள்; தங்களுடைய ஆசார அனுஷ்டானங்களில் ஜனங்களுக்கு நம்பிக்கை உண்டாக வேண்டு மென்பதற்காக, தங்களுக்கு முந்தியிருந்தவ ருடைய ஆசார அனுஷ்டானங்களில் அவநம்பிக்கை உண்டாகும் படி செய்கிறார்கள். இதற்கேற்றாற்போலவே நூல்கள் வெளியா கின்றன. இப்படிப்பட்ட நூல்களே பள்ளிக்கூடங்களில் பாட புத்தகங்களாகத் திணிக்கப் படுகின்றன. இதனால், நிகழ் காலத்தவருக்கு, சென்ற காலத்தவரைப் பற்றி ஒருவித அவமதிப்பு ஏற்படுகிறது. தங்களுடைய வருங்காலத்தை ஆள்வோரிடத்தில் ஒப்புக்கொடுத்து விடுகிறார்கள். இன்னும், ஒரு ஜாதியார் மற்றொரு ஜாதியாரை அடக்கியாள வேண்டுமென்று தீர்மானித்து விட்டாரானால், அதற்கு முதற்படியாக அடக்கியாளப்பட வேண்டிய ஜாதியாருடைய பழக்க வழக்கங்களையும், ஆசார அனுஷ்டானங்களையும் இழிவு படுத்திப் பேச வேண்டியது அவசியமாகிறது. அப்படி இழிவு படுத்திப் பேசினால்தான், ஆளப்பட வேண்டியவர். தங்களுடைய பலவீனத்தை உணர்ந்து, ஆள்வோருக்கு எளிதாக அடங்குகிறார்கள். ஆள்வோருக்கு அடக்குவது சுலபமாகிறது. ஆட்படுவோருடைய பலவீனமே ஆள்வோருடைய பலமாகி விடுகிறது. இவ்வாறு ஆரம்பத்தில் இந்தக் கைங்கரியத்தைச் செய்வது ஒருபுறமிருக்க, ஆட்சியை ஏற்றுக் கொண்டு விட்ட பிறகும், தாங்கள் ஆட்சியை ஏற்றுக் கொண்டது நியாயமென்று மெய்ப்படுத்திக் காட்டு வதற்காக, ஆட்பட்டிருப்போரை அநாகரிகர்களென்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுடைய பூர்விகத்தை ஏளனஞ் செய்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. கி.பி. பதினாறாவது நூற்றாண்டில் பானிஷ்காரர்கள், மண்ணாசை யும் பொன்னாசையும் பிடித்தவர்களாய், அமெரிக்காவிலுள்ள, மெக்ஸிகோ, பெரு முதலிய பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்; லட்ச கணக்கான மக்களைக் கொலை செய்தார்கள். இவைகளுக்கெல்லாம் அவர்கள் என்ன சமாதானம் சொன்னார்கள் தெரியுமா? மேற்படி மெக்ஸிகோவிலும் பெருவிலும் வசிக்கிற ஜனங்கள் அநாகரிகர்களா யிருக்கிறார் களென்றும், அவர்களை நாகரிகப்படுத்தவே அவர்களைத் தங்களுக்கு ஆட்படச் செய்ய வேண்டியது அவசியமா யிருக்கிற தென்றும் கூறினார்கள்! ஆனால், உண்மையில் மெக்ஸிகோவிலும் பெருவிலும் வசித்துக் கொண்டிருந்த வர்கள், பானிஷ்காரர் களைவிட எந்த விதத்திலும் அநாகரிகர்களாக இல்லை. தேக பலத்திலாகட்டும், மனத் தூய்மையிலாகட்டும், பொருள் பெருக்கத்திலாகட்டும், மற்ற எல்லா வகையிலும் மெக்ஸிகர் களும் பெருவியர்களும் மேம்பட்டவர்களாகவே இருந்தார்கள். பானிஷ் காரர்கள், கபட நாடகம் நடித்தே அவர்களை அழித்தார்கள். இருந்தாலும், பானிஷ் சரித்திராசிரியர்கள், மெக்ஸிகர்களையும் பெருவியர்களையும் இழிவுபடுத்தியே எழுதி வைத்துப் போயிருக்கிறார்கள். வாசகர்களுடைய விளக்கத்துக்காக ஓர் உதாரணத்தை இங்கே எடுத்துக்காட்ட விரும்பு கிறோம். பெரு தேசத்தை பானிஷ் ஏகாதிபத்தியத்துக்குச் சேர்த்துக் கொடுத்தவன் பிஸாரோ1 என்பவன். இவன் பெரு தேசத்தின் மீது படையெடுத்துச் சென்றபோது (1530 - 1532) அங்கே அத்தவுல்பா2 என்ற ஒரு மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அவனை நயவஞ்சகமாய்ப் பிடித்துச் சிறைப்பிடித்தி விட்டான் பிஸாரோ. இதற்காக மனம் வருந்திக் கொண்டிருந்த அத்தவுல்பா மன்னன், தன்னை விடுதலை செய்வித்தால் இருபது அடி நீளமும் பதினேழு அடி அகலமும் ஒன்பது அடி உயரமும் உள்ள ஓர் அறையைப் பொன்னால் நிரப்பி விடுவதாகக் கூறினான். பிஸாரோ இதற்குச் சம்மதித்து, அப்படியே மேற்படி அறையை அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பல பொன்னாபரணங்களினால் நிரப்பிக் கொண்டான். கடைசியில் என்ன செய்தான்? அத்தவுல்பா மன்னனை விடுதலை செய்யவில்லை; ஏதோ குற்றஞ்சாட்டி உயிரோடு கொளுத்தி விட்டான்! இதில் யார் நாகரிகமுடையவர் என்று வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆயினும், பானிஷ்காரர்கள் நாகரிகமுடையவர்களென்றும், மெக்ஸிகோவி லும் பெருவிலும் வசித்து வந்த சிவப்பு இந்தியர்கள் அநாகரிகர் களென்றும் மேலைநாட்டர் எழுதி வைத்துப் போன சரித்திரங்கள் கூசாமல் கூறுகின்றன. எதற்காக இந்த உதாரணங்களை யெல்லாம் எடுத்துச் சொல்கிறோமென்றால், ஆள்வோர் யாரோ அவர்களுடைய விருப்பங் களெல்லாம், அவர்களுடைய அரசியல் சம்பிரதாயங் களெல்லாம், அன்றாடப் பழக்க வழக்கங்களெல்லாம் நாகரிகமாகா என்பதை வலியுறுத்திக் காட்டுவதற்குத்தான். நாகரிகமென்பது எல்லா ஜாதியினருக்கும் எக்காலத்துக்கும் பொதுவானது; மேலே சொன்னபடி, மனிதனுடைய மன மலர்ச்சிக்குத் தான் நாகரிகமென்று பெயர். இந்த நாகரிக மென்பதை, கல்வியினாலோ, செல்வத்தினாலோ அளந்து காட்ட முடியாது; சாதாரணமாக நாம் எதை அழகு என்று சொல் கிறோமோ அந்த அழகிலே இதைக் காண முடியாது. இந்த நாகரிகம், மற்றவர்களுடைய முக துதிக்கு வசப்படாதது; ஏழை எளியவர்களுக்கு இரங்குவது; அதிகார சக்திக்குத் தலை வணங்காதது. ஆனால் அடக்கமே இதன் உயிர்; உலகனைத்தும் இதற்குச் சொந்தம். நகரத்திலிருந்து பிறந்தது நாகரிகமென்று சொல்கிறார்கள். நகரம் என்றால் பலர் சேர்ந்து வாழ்கிற இடம் என்று அர்த்தம். இப்படிப் பலர் சேர்ந்து வாழ்கிற நிலைமை ஏற்படுகிறபோது, ஒருவருடைய தேவையை மற்றொருவர் பூர்த்தி செய்கிறார். ஒருவருடைய உதவி மற்றொரு வருக்குத் தேவையாயிருக்கிறது. இதனால் பரபர மன ஒற்றுமை ஏற்படுகிறது; அன்பு உண்டாகிறது. சுக துக்கங்களில் பரபரம் எல்லோரும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இதனால் நகரத்திலே வசிக்கிற மனிதன், சுயநல புருஷனாயிராமல், பரநலத்தில் கலந்து கொள்ள வேண்டிய வனாயிருக்கிறான். அப்படிக் கலந்து கொள்ள வேண்டியது அவனுக்கு அவசியமாகிறது. தன்னைச் சுற்றியிருக்கப் பட்டவர்களுடைய க்ஷேமத்தை இவன் கோரினால்தான் இவனுடைய க்ஷேமத்தை மற்றவர்கள் கோருவார்கள். இந்த அடிப்படையான காரணத்தினால் இவன் மனம் விரிவடைகிறது. உலகத்திலுள்ள சர்வ ஜீவராசிகளும் தன்னைப் போன்றவைகளே என்ற எண்ணம் இவனுக்கு உண்டாகிறது. தன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறானோ அப்படியே இவன் மற்றவர்களை நடத்தத் தொடங்குகிறான்; தன்னைப் போல மற்றவர்களைப் பார்க்கிறான். கடைசியில், தான் வேறு, உலகம் வேறு என்ற எண்ணம் இவனுக்கு இல்லாமல் போய்விடுகிறது. தனக்காக இவன் வாழாமல், உலகத்திலே உலகத்துக்காக வாழ்கிறான். இந்த உயர்ந்த நிலையைத்தான் நாகரிகம் என்று சொல்ல வேண்டும். பெயக்கண்டு நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் என்பது குறள். தன்னை நஞ்சிட வந்தவர்களிடத்தும் நயமாக நடந்து கொள்ளுதலே நாகரிகமென்பது இதன் கருத்து. இப்படி நடந்து கொள் வதற்கு மனம் எவ்வளவு பண்பட்டிருக்க வேண்டும்? இந்த மனப் பண்பாடு தான் நாகரிகம் இந்தக் குறளுக்கு இலக்கியமாயிருந்தவன், கிரேக்க ஞானியாகிய ஸாக்ரட்டீ1 இவன், இரண்டாயிரத்தைந்நூறு வருஷங் களுக்கு முன்னே வாழ்ந்தவனா யிருந்தாலும் நாகரிகத்தில் நமக்கு வழி காட்டியாகவும், நம்மோடு நெருங்கியவனாகவும் இன்றளவும் இருக்கிறான். இவனைப் போல் உலகத்தின் பல பாகங்களில் பல காலங் களில் பல நாகரிக புருஷர்கள் இருந்திருக்கிறார்கள்; இப்பொழுதும் இருக்கிறார்கள். 15. நாகரிகமும் பண்பாடும் எனக்கு ஒரு நண்பர்; பெரிய மனிதர். அவர் வசிக்கும் வீடு. உடுக்கும் உடை. ஏறும் மோட்டார் எல்லாம் புது மோதர்; அவர் பெரிய மனிதர் என்று கட்டியங் கூறிக் கொண்டு நின்றன. இவற்றைக் கொண்டுதானே ஒருவனைப் பெரிய மனிதனென்று எடைபோட்டுப் பார்க்கிறார்கள் இந்தக் காலத்தில்? அவரிடம் பணத்திற்கும் குறைவில்லை; சில லகாரங்களில் சொல்ல வேண்டும். அவருக்குப் பிதிரார்ஜிதமாகக் கிடைத்தது கொஞ்சமாயினும் சுயமாகச் சம்பாதித்ததுதான் அதிகம். எப்படிச் சம்பாதித்தார் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்; அது வேறு விஷயம். பணத்தோடு படிப்பும் உண்டு. அவர் பி.ஏ. பட்டதாரி. பொழுது போக்குக்கான நூல்களைப் படிப்பதைக் காட்டிலும், நல்ல நூல்களை, உயர்ந்த ரக நூல்களைப் படிப்பதிலே தமக்கு அலாதியான ருசி என்று அடிக்கடி சொல்லுவார். வள்ளுவன், கம்பன், பாரதி போன்ற நம் நாட்டுப் புலவர்களைக் காட்டிலும் எமர்ஸன், பேக்கன், மாத்யு ஆர்னால்ட் போன்ற மேனாட்டுப் புலவர்கள்தான் அவர் பேச்சிலே அடிக்கடி புரண்டெழுந் திருப்பார்கள். நாகரிகம், பண்பாடு இவைகளைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டாரானால் காலம் போனதே தெரியாது. அவ்வளவு உற்சாகம் அந்த இரண்டிலும் அவருக்கு. அந்த இரண்டுக்கும், மேனாட்டுப் புலவர்கள் என்னென்ன விதமான வியாக்யானங்கள் செய்திருக்கிறார்களோ அத்தனையும் அவர் படித்து ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசுவார். அவ்வள வென்ன? நாகரிகத்தையும் பண்பாட்டையும் கரைத்துக் குடித்து விட்டிருக்கிறார் என்று கூடச் சொல்லலாம். அவர் பேசுகிறமாதிரியைப் பார்த்தால். எனக்கும் கொஞ்சம் புதகப் பைத்தியம் உண்டு என்பது அவருக்குத் தெரியும். இதனால் பொழுது போக்க, ஆம், நல்ல பொழுதாகப் போக்க அவர் அடிக்கடி, அநேகமாகக் காலை நேரங்களில் என் வீட்டுக்கு வருவார். இரண்டு பேரும் நாகரிகத்தைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் தான் அதிகமாகப் பேசுவோம். அவர் வரும்போதெல்லாம் அவருக்குக் காப்பி கொடுக்கச் செய்வேன்; வெறுங் காப்பி மட்டுமல்ல; குறைந்த பட்சம் இரண்டு வாழைப் பழத்துடன். இரண்டு பழமானாலும் அவற்றை ஒரு சிறிய தட்டிலே வைத்துக் கொடுக்கச் செய்வேன். ஆனால் அது வெள்ளித் தட்டல்ல; சாதாரண பித்தளைத் தட்டுதான். வெள்ளித் தட்டுக்கு நான் எங்கே போக? ஒரு நாள் அவர் என் வீட்டுக்கு வந்து பேசிக் கொண்டிருக்கையில், நான் வெகு காலமாகப் பத்திரப் படுத்தி வைத்திருந்த ஒரு புதகம் அவர் கண்ணுக்குத் தென்பட்டு விட்டது. அதுவும் என்ன மாதிரி புதகம்? நாகரிகம், பண்பாடு இவைகளைப் பற்றி விரிவாகக் கூறும் புதகம். விடுவாரா அதனை நண்பர்? அந்தப் புதகத்தைப் படித்துவிட்டுத் திருப்பி விடுவதாகவும், மூன்று நாளைக்கு மட்டும் இரவல் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டார்; கெஞ்சினாற் போலவும் கேட்டார். நான் எப்படி மறுக்க முடியும்? கொடுத்தேன்; ஆனால் தயக்கத்தோடுதான் கொடுத்தேன். மூன்று நாளாயிற்று; முப்பது நாளாயிற்று; மூன்று மாதமாயிற்று. புதகத்தை வாங்கிக் கொண்டு போன பிறகு நண்பர் என் வீட்டுப் பக்கம் திரும்பவே இல்லை. எனவே புதகத்தைப் பற்றிய கவலை என்னை அரிக்க ஆரம்பித்து விட்டது. ஒருநாள் காலை அவர் வீட்டுக்குச் சென்றேன். அவர்தான் என் வீட்டுக்கு அடிக்கடி வருவாரே தவிர, நான் அவர் வீட்டுக்குச் செல்வதில்லை. எப்பொழுதோ ஒரு தடவை சென்று வந்ததாக ஞாபகம். அவரும் வாய்திறந்து என் வீட்டுக்கு வாருங்களேன் என்று ஒரு தடவை கூடச் சொன்னதில்லை. அஃது அவருடைய சுபாவம் என்றுதான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன். இப்பொழுது புதகத்திற்காக அவர் வீட்டுக்குப் போக வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டு விட்டது. நான் சென்றது காலை நேரமல்லவா? வெள்ளித் தட்டில் பலகாரம், வெள்ளி டம்ளரில் காபி இவற்றோடு காட்சியளித்தார் நண்பர். நான் போய் எதிரில் உட்கார்ந்தேன். அவருடைய வாய், என்னை வாவென்று அழைத்தது. முகமோ, ஏன் வந்தாய் என்று கேட்டது. எனக்கு ஒரு மாதிரியாகவே இருந்தது. ஆனாலும் என்ன செய்வது? புதகம் திரும்பி வர வேண்டுமல்லவா? மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவரும் நிதானமாகப் பலகாரம் சாப்பிட்டார். நான் ஒருவன் எதிரில் உட்கார்ந்திருக்கிற நினைப்பே அவருக்கு இல்லை. எல்லாவற்றையும் சங்கோபாங்கமாக முடித்துக் கொண்டு ‘என்ன விசேஷம்? என்று கேட்டார். புதகத்தைப் பற்றிப் பிரதாபித்தேன். புதகமா? ஏது? எப்போது வாங்கி வந்தேன்? என்றெல்லாம் கேட்கத் தொடங்கினார். "ஐயோ, இஃது என்ன விபரீதம்? என்று உள்ளம் பதறினேன். அவர் வாங்கிப்போன நாள், கிழமை, நேரம் அனைத்தையும் நினைவாகச் சொன்னேன். அப்படியும் அவர், இல்லவே இல்லையென்று ஒரேயடியாகச் சாதித்து விட்டார். என்ன செய்வது? உளம் புழுங்கி வீடு திரும்பினேன். இவர் கதை இப்படி இருக்கட்டும். என் பாட்டனார் ஒருவர் இருந்தார். அப்பாவி மனிதர்கள் என்று சொல்வார்களே அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர். அந்தக் காலத்துத் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தவர். அவர் வீடு, உடை, வாகனம் எல்லாம் பழைய மோதர். பட்டவர்த்தனமாகச் சொல்லப் போனால், அவருக்கு கோட், ஷர்ட் இவைகளை உபயோகிக்கக்கூடத் தெரியாது. வாழ்நாள் முழுவதும் கிராமவாசியாகவே கழித்து விட்டார். விவசாயம் செய்தே பெரிய குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். அவருக்குப் பொய் சொல்லத் தெரியாது. அவர் யாருக்கும் தீங்கு நினைத்ததே இல்லை. கள்ளங்கபடற்ற உள்ளம் படைத்தவர். எந்த நேரத்தில் யார் வந்தாலும் சரி, அவருக்கு இனிய முகம் காட்டி, வீட்டிலுள்ள உப்புக் கஞ்சியோ, நீர்மோரோ ஏதாவதொன்றைக் கொடுக்கச் செய்தால்தான் அவர் மனம் நிம்மதி பெறும். அவர் ஒரு நாளும் தனியே உட்கார்ந்து சாப்பிட்டதில்லை. சாப்பாட்டு நேரத்தில், வீட்டுக்கு வெளியில் வந்து சிறிது நேரம் காத்து நிற்பார்; சாப்பாட்டுக்கு யாராவது இருக் கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்ப்பார். எதிர்பாராத விதமாக யாராவது வந்தால் அவரைக் கைகொடுத்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று தன் பக்கத்தில் உட்காரச் செய்து உடன் உண்பார். ஒருவரும் அன்று தென்படவில்லையென்றால் அதற்காக ஏங்கவும் செய்வார். தினசரி அவர் அனுஷ்டித்து வந்த வழக்கமிது. இவ்விருவரில் யார் நாகரிகர்? யார் பண்பாடுடையவர்? என் நண்பரா? என் பாட்டனாரா? நண்பர்களே! சொல்லுங்கள். நகரத்தில் வசிப்பதனால் மட்டும் ஒருவன் நாகரிக புருஷனாக மாட்டான். அப்படியே படித்துப் பட்டம் பெற்றவர் களெல்லோரும் பண்பாடுடையவர்களென்று சொல்ல முடியாது. காட்டிலே, மேட்டிலே, குடிசையிலே, குகையிலே நாகரிகத்தைக் காணலாம்; ஆனால் அதைக் காண, நல்ல கண் வேண்டும். அப்படியே எழுத்து வாசனையில்லாத உழவனிடம், தொழிலாளியிடம் சிறந்த பண்பாட்டைப் பார்க்கலாம். ஆனால் அதை அறிந்து பாராட்ட நல்ல மனம் வேண்டும். வட துருவத்திற்கருகிலுள்ள கிரீன்லாந்து1 பிரேதசத்தில் எகிமோக்கள் என்ற ஜாதியார், சிறு சிறு பனி வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கிறார்களல்லவா? இவர்கள், தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் கடைப் பிடிக்கும் சில கண்டிப்பான நியதிகளைப் பற்றிச் சொன்னால் நேயர்கள் ஆச்சரியப்படக் கூடும். எகிமோக்களில் யாரும் பொய் சொல்லவோ திருடவோ கூடாது. இவ்விரண்டையும் இவர்கள் பெரிய குற்றங்களாகக் கருதுகிறார்கள். இந்தக் குற்றங்களைச் செய்கிறவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மற்றும் இந்த எகிமோக்கள், தங்களுக்குள் ஏற்படும் எல்லாச் சச்சரவுகளையும், தங்களுக்குள்ளேயே இரண்டு ஆண்களையும் இரண்டு பெண்களையும் கொண்ட ஒரு மத்தியத சபையை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் தீர்த்துக் கொள் கிறார்கள். இந்த எகிமோக்கள், தாங்கள் வசிக்கும் பிரதேசம் பனியினால் உறைந்து கிடப்பதற்காகச் சந்தோஷப்படுகிறார்கள். ஏனென்றால், மற்றப் பிரதேசங்களைப் போல் தங்கள் பிரதேசம். காடும் மலையும் மண்ணுமாக இருக்குமானால், பொன்னாசையும் மண்ணாசையும் கொண்ட ஐரோப்பியர்கள். தங்களை நாகரிகப் படுத்தப் போட்டி போட்டுக் கொண்டு வந்து விடுவார்களல்லவா? அவர்களிடமிருந்து, தங்கள் பனிப் பிரதேசம்தான் தங்களைக் காப்பாற்றுகிறதென்று கருதி மகிழ்கிறார்கள். இங்ஙனம் தங்கள் பிரதேசங்கள் ஐரோப்பியர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யாத பிரதேசமாயிருந்த போதிலும், அவர்கள் - அந்த ஐரோப்பியர்கள் - ஏன் தங்கள் பிரதேசத்திற்கு ஏகதேசமாக வருகிறார் களென்றால், தங்களிடமிருந்து சில நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொண்டு போவதற்குத்தான் என்று இந்த எகிமோக்கள் நம்புகிறார்கள். இப்படி நம்புவது தவறு என்று நாம் சொல்ல முடியுமா? எல்லாம் எனக்கே என்றிராமல், எல்லாம் எல்லாருக்கும் என்ற கொள்கையைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்ற எத்தனையோ இனத்தவரை, இன்றும் உலகத்தின் பல பகுதிகளில் காணலாம். அமெரிக்காவின் பல பகுதிகளில் வசிக்கும் சிவப்பு இந்தியர் களென்று அழைக்கப்படுகிற புராதன ஜாதியாரிடையிலும், தென் கிழக்கு ஆசியாவிலுள்ள சில தீவுகளில் வசிக்கும் ஜனங்களிடையிலும், நிலமானது சமுதாயப் பொதுச் சொத்தாகவே கருதப்பட்டு வருகிறது; எல்லாரும் சேர்ந்து பயிரிட்டு, விளையும் பொருள்களை எல்லோரும் பங்கிட்டுக் கொள்வார்கள். தேவைக்கதிகமான உணவுப் பொருள்களை வைத்துக் கொண்டிருக் கின்றவர்கள், அவை இல்லாதவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கிற வழக்கம். இன்னும் சில புராதன ஜாதியாரிடம் இருந்து வருகிறது. இன்னும் சில ஜாதியார், ஒருவன் சாப்பிடுவதற்கு முன், வேறு யாராவது சாப்பிட வருகிறார்களா என்று ஒரு முறை உரக்கக் கூப்பிட்டுவிட்டுத் தான் சாப்பிட வேண்டுமென்ற வழக்கத்தைப் பின் பற்றி வருகிறார்கள். ஆப்பிரிக்கா கண்டத்துச் சுதேசிகளை நாகரிகப் படுத்த ஐரோப்பியர்கள் முதன் முதலாகச் சென்ற போது, சுதேசிகளிடம் தங்கள் அன்பைக் காட்டுகின்ற முறையில், ஒரு சிலருக்குச் சில துணிமணிகளைக் கொடுப்பார்களாம். அந்த ஒரு சிலர் தாங்களே அந்தத் துணிமணிகளே உபயோகித்துக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுப்பார் களாம். மத்திய அமெரிக்காவிலுள்ள சில புராதன ஜாதியாருக்கு, ஐரோப்பியர்களின் உரத்த பேச்சும் மரியாதைக் குறைவான நடக்கையும் சிறிதுகூடப் பிடிப்பதில்லை. இதற்காக அவர்களை - ஐரோப்பியர் களை - வெறுக்கவும் செய்கிறார்கள். ஆனால் ஐரோப்பியர்களோ அந்தப் புராதன ஜாதியாரை நாகரிகப் படுத்துவதாகச் சொல்லிக் கொண்டு அவர்களிடையே வலுக் கட்டாயமாகச் செல்கிறார்கள். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம். பொதுவாக, மனிதனை, இயற்கையோடு உறவு கொள்ளச் செய்வது எதுவோ, தன்னைப் போல் பிறரை மதிக்குமாறு அவனைத் தூண்டுவது எதுவோ, அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை இவற்றிற்கு நிலைக்களனாக அவனை ஆக்குவிப்பது எதுவோ அது தான் நாகரிகம்; அதுதான் பண்பாடு. 16. மனிதனும் யந்திரமும் மனிதன் நாலுபேருடைய கூட்டுறவின் மத்தியில் தான் வாழ விரும்புகிறான். இதனாலேயே மனிதன் ஒரு சமுதாயப் பிராணி என்று பெரியோர்கள் சொல்வது வழக்கம். எனவே ஒரு நாகரிகம் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதை அளந்து பார்க்க வேண்டுமானால், அந்த நாகரிகத்தின் கீழ் இருக்கும் சமுதாயம் எவ்வளவு தூரம் வளர்ச்சி யடைந்திருக்கிறது என்பதைக் கொண்டுதான் பார்க்க வேண்டும். வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டு மானால் பலருடைய ஒத்துழைப்பின் பேரில் அநேக காரியங்கள் நடைபெற வேண்டியிருக்கிறது. அதாவது, சமுதாயத்திலுள்ள அத்தனை பேரும் சேர்ந்து ஒரு முகமாகக் காரியங்களைச் செய்வதைப் பொறுத்தே வாழ்க்கைப் போராட்டத்தின் வெற்றி இருக்கிறது. மனிதன் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக உழைக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் வாழ்க்கையில் உயர்வடைகிறான்; சமுதாயத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்தவனாகிறான். தன்னுடைய உழைப்புச் சக்தியானது அதிக பலனைத் தர வேண்டுமென்பதற்காக மனிதன் இயற்கையின் உதவியை நாடுகிறான். அதாவது, இயற்கைச் சக்திகளை தன் சக்தியோடு பிணைத்துக் கொள்கிறான். ஆதி காலத்திலிருந்தே மனித வாழ்க்கை யானது இயற்கைச் சக்திகளின் உதவி கொண்டுதான் நடைபெற்று வந்திருக்கிறது. இந்த இயற்கைச் சக்திகளின் அந்தரங்கமென்ன, இவற்றை எவ்வாறு உபயோகித்துக் கொள்ளலாம் என்பன போன்ற ஆராய்ச்சி தான் விஞ்ஞானம். எனவே தற்போது மானிட சமுதாயத்தின் வளர்ச்சி யானது விஞ்ஞான வளர்ச்சியைப் பொறுத்திருக்கிறது. ஆகையால் தற்காலத்துச் சமுதாய அமைப்பையும் அதன் வளர்ச்சியையும் விஞ்ஞானக் கண் கொண்டுதான் நாம் பார்க்க வேண்டும். முதலில் மனிதன் தூல வடிவத்தில் உயிர் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதாவது தேக போஷணை முதலில் இன்றியமையாதது. பிறகுதான் அறிவு வளர்ச்சி, ஆன்ம வளர்ச்சி முதலியன வெல்லாம். ஆகையால் அக வாழ்வுக்கு அடிப்படையா யிருப்பது புற வாழ்க்கையே. அதாவது, பகிரங்கமாகக் கண்ணுக்குத் தெரியும் வெளிச் சாதனங்களை யெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலமாகத் தான் மனிதன் ஆன்ம வளர்ச்சி பெறுகிறான். முதலில் உடலில் உயிர் இருக்க வேண்டும். பிறகுதான் வாழ முடியும். தேக போஷணையோ, அந்த போஷணைக்கு வேண்டிய சாதனங்களோ இல்லாமற் போனால் அந்த தேகத்திற்குள்ளே இருப்பதாகச் சொல்லப்படுகிற ஆன்மா எப்படி வளர்ச்சி யடையும்? ஆகையால் மனிதன் முதலில் தான் இருப்பதற்குச் சௌகரியம் செய்து கொள்ள வேண்டும்; பிறகு தான் வாழ்க்கை. மனிதனுடைய ஆன்ம சக்தி வரம்பு கடந்தது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். வாதவம். ஆனால் முதலில் மனிதன் தன்னிடத்திலே அளவு கடந்த சக்தியிருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? அப்படி அவன் தெரிந்து கொண்ட பின்னர் தான் அந்தச் சக்தியை வளர்க்க முயற்சி செய்வான். அதற்குப் போதிய அவகாசமும் சந்தர்ப்பமும் அவனுக்கு வேண்டும். அந்த அவகாசம் எப்பொழுது கிடைக்கும்? தன்னுடைய அன்றாட ஜீவனத்துக்குச் சதா போராடிக் கொண்டிருப்ப தினின்று எப்பொழுது விடுதலை பெறுகிறானோ அப்பொழுதான் ஆன்ம வளர்ச்சியைப் பற்றிச் சிந்திப்பதற்கு அவனுக்கு அவகாசமிருக்கும். தற்போதைய விஞ்ஞான சாதிர அபிவிருத்தியின் பயனாக மனிதனுக்கு இந்த அவகாசம் கிடைத்திருக்கிறது. ஆனால் அவன் இதைச் சரியாக உபயோகித்துக் கொள்கிறானா என்பதுதான் பிரச்னை. மனிதனிடத்திலே சிருஷ்டிக்கிற சக்தி யொன்று இருப்பதினாலே தான் அவன் தெய்விகத் தன்மை பொருந்தியவன் என்று சொல்லப் படுகிறது. நவீன யந்திர சாதனங்கள் அனைத்தும் மனிதனுடைய சிருஷ்டிகள் தான். இந்தச் சாதனங்களைக் கொண்டு மனிதன் உலக மார்க்கத்தில் வெகு தூரம் சென்றிருக்கிறான். இன்னும் மேலே மேலே செல்ல வேண்டுமானால் இந்த யந்திர சாதனங்களின் துணையைத்தான் நாட வேண்டும். சாதாரணமாக என்ன பேசப்படுகிறதென்றால், நமது முன்னோர் களைக் காட்டிலும் நாம் கேவலமான திதியிலிருக் கிறோம்; வாழ்க்கையின் சுவையை நாம் சரியாக அனுபவிக்க வில்லை; நமது ஆன்ம வளர்ச்சி மிகவும் குன்றிப் போயிருக்கிறது என்று இப்படி யெல்லாம் சொல்வது இப்பொழுது ஒரு சம்பிரதாயமாகி விட்டது. இப்படி நாம் தீர்ப்புக் கூறுவதற்கு முன்னர் எந்த அளவுகோல் கொண்டு நமது முன்னோர் களையும் நம்மையும் ஒப்பிட்டு அளந்து பார்க்கிறோம் என்பது முக்கிய மானது. அதாவது இன்றைய மனிதன் தன்னுடைய அன்றாட ஜீவனத்திற் காக எவ்வளவு உழைப்பையும் காலத்தையும் செல விடுகிறான்; முற்காலத்தவர் இதற்காக எவ்வளவு செலவிட்டார்கள் என்பனவற்றைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டும். மனிதனுடைய அன்றாட வாழ்க்கையானது எந்த நிலைமையில் அமைக்கப் பட்டிருக்கிறதோ அந்த நிலைமைக்கு அளவாகத்தான் அவனுடைய ஆன்ம வளர்ச்சியும் இருக்கும். இன்றைய மனிதனுடைய வாழ்க்கை நிலைமையை அளந்து பார்த்தோமானால் அவன் தன் ஆன்ம வளர்ச்சிக்கு முந்திய காலத்து மனிதர்களை விட அதிகமான சாதனங்களைப் பெற்றிருக்கிறான் என்பது நன்கு புலப்படும். இன்றைய நாகரிகத்தை நாம் எப்படி மதிப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்றால், ஒரு மனிதன் தன்னுடைய ஜீவனோபாயத் திற்காக ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற கேள்விக்கு வரும் பதிலைக் கொண்டுதான் மதிப்பிட வேண்டும். இப்பொழுது மனிதன் தினம் நான்கு மணி நேரம் உழைத்தால் போதும். அவ்வளவு தூரத்திற்கு விஞ்ஞானமும் யந்திர சாதனங்களும் விருத்தி யடைந்திருக்கின்றன. இந்த யந்திர சாதனங்கள், எல்லோருக்கும் பயன்பட வேண்டுமென்பதற்காகத் தான் சிருஷ்டிக்கப்பட்டன. ஒரு சிலர் மட்டும் இந்தப் பயனை நுகர, மற்றவர்கள் அந்தப் பயனை சிருஷ்டித்துக் கொடுப்பவர்களா யிருக்கக் கூடாது. யந்திரங்கள் ஏற்பட்டது ஒரு சிலருடைய நன்மைக்காக மட்டுமல்ல; எல்லோருடைய நன்மைக்குந் தான். இந்த யந்திரங்களை மனிதர்கள் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வில்லை. இதற்காக இந்த யந்திரங்களை குறை கூறலாமா? இஃது ஒரு புறமிருக்கட்டும். மனிதனிடத்திலுள்ள ஆன்ம சக்தியை எப்படி அபிவிருத்தி செய்வது? ஒரு சிலர்தான், உலகத்தினின்று அப்புறப்பட்டவராய், வன வனாந்தரங் களுக்குச் சென்று துறவி ஆசிரமத்தை மேற்கொண்டு தங்களுடைய ஆன்ம அபிவிருத்திக்கான மார்க்கத்தைத் தேடிக் கொள்ள முடியும். எல்லோருக்கும் இந்தச் சௌகரியம் ஏற்படுமா? இவர்கள் சமுதாயத் திலேயே இருந்து கொண்டுதான், சமுதாய வாழ்க்கையை நடத்திக் கொண்டுதான் ஆன்ம அபிவிருத்திக்கான மார்க்கத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். இதை எப்படிச் செய்வது? ஜனங்களுடைய அவசியமான தேவைகள் பூர்த்தி செய்யப் பட்டும், அவர்களுடைய சமுதாயப் பொறுப்புக்கள் நிறைவேற்றப் பட்டும் போனால், அவர்களுக்கு, ஆன்ம அபிவிருத்திக்கான அவகாசம் அதிகமாகக் கிடைக்கும். மற்றும், ஆன்ம அபிவிருத்தி செய்து கொள்வதற்கான வசதிகளும் அவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட வேண்டும். இதனை ஓர் உதாரணத்தின் மூலமாக விளக்குவோம். எந்த ஒரு தேசமும் முன்னேற்றமடைய வேண்டு மானால், அந்தத் தேசத்து மக்களுக்கு இலவச ஆரம்பக் கல்வி கொடுக்கப்பட வேண்டுவது அவசியமாகும். இந்த இலவச வசதியை ஜனங்கள் எப்பொழுது உபயோகித்துக் கொள்வார்கள்? இதற்குச் சாதகமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுத்தால்தானே? ஜனங்களிற் பெரும்பாலோர் ஏழைகளாயிருந்து, குழந்தைகள் முதல் எல்லோரும் ஜீவனோபாயத்திற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டிருப்பார் களானால், அவர்களுக்கு இலவசக் கட்டாயக் கல்வியை ஏற்படுத்திக் கொடுத்து என்ன பயன்? அப்படியே, ஏழைகளான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக் கூடங்களுக்கு ஏதோ ஒரு கட்டாயத்தினால் அனுப்புகிறார் களென்று வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தை களுக்குப் புதகங்கள் முதலியன வாங்கிக் கொடுக்கப் பணமேது? பணங் கொடுப்பது யார்? இதைப் போல, மனிதன் ஆன்ம வளர்ச்சி பெறுவதற்கு முன்னர், அந்த வளர்ச்சியைப் பெறுவதற்கான வசதிகளையும் சந்தர்ப்பங் களையும் அவனுக்குக் கொடுக்க வேண்டும். இந்த வசதிகளையும் சந்தர்ப்பங்களையும், தற்கால யந்திர சாதனங்கள் மனிதனுக்குத் தந்துதவுகின்றன. ஆகையால், மனிதனுடைய முன்னேற்றத்தை அளந்து காட்டும் கருவி, யந்திர சாதனந்தான். இந்தச் சாதனம், முன்னேற்றத்தை அளந்து காட்டும் கருவியாயிருப்பதோடல்லாமல், மனிதனுடைய ஆன்ம வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்வதாயுமிருக்கிறது. மேலே சொன்னவை யாவும், தற்கால அறிஞர் சிலர் கொண்டுள்ள கருத்துக்களாகும். 17. வருங்கால சமுதாயம் ஆதியிலே ஏற்பட்ட சமுதாயம் குடும்பம். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதனால், இருவருடைய தேவைகளும் பூர்த்தி யடைகின்றன. புருஷன் ஆகாரத்தைத் தேடிக் கொணர்ந்து கொடுக்கிறான்; திரீ அதனைப் பக்குவப்படுத்தி அவனுக்கு உண்பித்துத் தானும் உண்ணு கிறாள். புருஷனுக்குத் தன்னுடைய ஆகாரத்தைத் தானே பக்குவப்படுத்திக் கொள்கிற சிரமம் குறைகிறது. திரீக்கு ஆகாரத்தைத் தேடிக் கொண்டு வர வேண்டிய சிரமம் குறைகிறது. இங்ஙனம் ஒருவர் சிரமத்தை மற்றொருவர் பகிர்ந்து கொள்வதனால், இருவரும் வாழ்க்கையின் மற்றத் துறைகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த முடிகிறது. குடும்பமாகத் தொடங்கிய சமுதாயம், பல குடும்பங்க ளடங்கிய ஒரு குலமாக அல்லது கிராமமாக வளர்ந்து, பின் பல குடும்பங்களடங்கிய அல்லது கிராமங்களடங்கிய ஒரு நாடாக விரிந்து, அப்பால் சிறுசிறு நாடுகளுடன் சேர்ந்து பெரு நாடாகப் பரந்திருக்கிற நிலையை இப்பொழுது அடைந்திருக்கிறது. இந்த நிலையையும் கடந்து உலக சமுதாயமாக மாற வேண்டுமென்ற எண்ணம், இன்றைய மானிட ஜாதியின் இருதயத்தில் அரும்பி யிருக்கிறது. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறபொழுது, எப்பொழுதுமே தேக உபாதிகள், மன வேதனைகள், இப்படிப் பட்டவைகளெல்லாம் உண்டாதல் இயல்பு. இந்த உபாதிகளையும் வேதனைகளையுமே இன்றைய உலகம் அனுபவித்து வருகிறது. இந்த இருபதாவது நூற்றாண்டின் முற்பாதியில் மட்டும் இரண்டு உலக மகாயுத்தங்கள் நடை பெற்றிருப்பதே இதற்குச் சாட்சி. இந்த இரண்டு யுத்தங்களிலும் ஏற்பட்ட உயிர்ச் சேதம், பொருட் சேதம் இவை மட்டும் எப்படிப்பட்ட அமைதியுள்ள மனத்தையும் கலக்கிவிடும். இவை இரண்டுக்கும் மேலாக, மனிதர் களுடைய அன்றாட வாழ்க்கை எவ்வளவு சீர்குலைந்து விட்டது? மனிதர்களிடத்திலே நியாயமாக இருக்க வேண்டிய மேலான உணர்ச்சிகள் எவ்வளவு மழுங்கி விட்டன? இப்படி இவர்கள் நீடிக்க விடுவார்களானால், இவர்களிடத்தில் கொஞ்சநஞ்சம் இருக்கிற மனிதத் தன்மையும் இல்லாதொழிந்துவிடும். மிருகங்கள் வசிக்கிற காட்டுக்கும், மனிதர்கள் வசிக்கிற நாட்டுக்கும் வித்தியாசம் இராது. ஆதலின் இவர்கள் தங்கள் வருங்காலத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்; வருங்கால சமுதாயத்தை எப்படி அமைத்துக் கொள்வது, சமுதாய அமைப்பு எப்படி இருந்தால், உலக மக்கள் எல்லோரும் ஒரு குலமாகவும் ஓரினமாகவும் வாழ்வார்கள் என்பது பற்றி யோசிக்க வேண்டும். இங்ஙனம் யோசிப்பதோடு நில்லாமல், அந்த யோசனைகளைச் செயலில் கொண்டு வர வேண்டும். இந்த விஷயத்தில், அதாவது வருங்கால உலக சமுதாயத்தை அமைக்கிற விஷயத்தில் இந்தியா வகிக்க வேண்டிய பொறுப்புக் களும் ஆற்ற வேண்டிய கடமைகளும் மிக அதிகமாக இருக்கின்றன. ஏனென்றால், இந்தியாதான் வருங்கால உலகத்திற்கு வழிகாட்டியாக இருக்கப் போகிறது. உலகத்திலே நாகரிகத்தைப் பரப்புவதற்கு ஆதிகாலத்தில் இந்தியா மகத்தான சேவை செய்திருக்கிறது என்பதை ஒவ்வோர் இந்தியனும் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். இந்தியனுடைய நியாயமான பெருமையை, உலகத்திலுள்ள மற்ற ஜாதியார் அனைவரும் ஒப்புக் கொண்டே தீர வேண்டும். ஆனால் இந்தியன் தன்னுடைய பழைய பெருமையிலே தன்னை இழந்து விடக் கூடாது. அதற்கு மாறாக, நாகரிக உலகத்திற்கு முற்காலத்தில் அவன் செய்த சேவையானது, வருங்கால உலகத்தை ஒழுங்குபடுத்தி அமைக்கும் முயற்சிக்குத் தூண்ட வேண்டும். சென்ற கால சமுதாய அமைப்புக்களை அப்படியே நகல் செய்து வைத்த மாதிரி வருங்கால சமுதாயத்தை அமைப்போ மானால், அந்த அமைப்பு நீடித்து நிலைக்காது. காலத்திற்கேற்ற வகையில் அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பழையதை அப்படியே பின்பற்றக் கூடாது. பழமையிலிருந்து நாம் கற்றுக் கொண் பாடங் களைப் புதுமைக்கு, புதிய வாழ்வு கோலுவதற்கு உபயோகப்படுத்திக் கொள்கிற அளவுக்குத் தான் நாம் பழமையை உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். பழமை, புதுமைக்கு வழிகாட்டி; அதிவாரம். அந்த அளவுக்குத்தான் அதற்கு நாம் பெருமை கொடுக்க வேண்டும். வருங்கால சமுதாய அமைப்பானது, ஒரு வகுப்பினருக்கோ, ஓர் இனத்தினருக்கோ, ஒரு நிறத்தினருக்கோ, ஒரு நாட்டினருக்கோ மட்டும் நலம் பயப்பதாக இருக்கக்கூடாது; அதிகமான நன்மையை, அதிகமான பேர் அடைவதற்குத் துணை செய்வதாக இருக்க வேண்டும். அரிடாட்டல்1 என்ற கிரேக்க அறிஞன். வெறும் வாழ்வு, சமுதாய வாழ்வு, நல்வாழ்வு என்று வாழ்க்கையை மூன்று வகையாகப் பிரித்து, பிரஜைகளின் நல் வாழ்வையே ஒவ்வொரு ராஜ்யமும் தனது லட்சியமாகக் கொள்ள வேண்டுமென்று கூறுகிறான். ராஜ்யம் என்றால் அரசியல் சமுதாயத்தையே குறிப்பிடுவதாகும். ஆதலின், வருங்கால சமுதாயம், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்பதையே லட்சியமாகக் கொள்ள வேண்டும். கி.பி. பத்தாவது நூற்றாண்டிலிருந்து விஞ்ஞான சாதிர மானது வெகு வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வந்திருக்கிறது. ஒரு சமயம் இல்லாவிட்டாலும் மற்றொரு சமயத்தில், இன்னும் சிறிது நிதானமாக வளர்ச்சியடைந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று கவலைப்படும் படியாகக்கூட அவ்வளவு வேகமாக வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. கி.பி. பதினாறாவது நூற்றாண்டில் வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது, இருபதாவது நூற்றாண்டின் முற்பகுதியில், நூற்றுக்க ணக்கான சதுரமைல் விதீர்ணமுள்ள செழுமையான பிரதேசத்தை ஒரு நொடியில் ஓர் அணுகுண்டினால் சாம்பலாக்கிவிட முடிகிறது. விஞ்ஞான சாதிர அபிவிருத்தியினால் பல நன்மைகள் உண்டாகியிருக்கின்றன என்பதை நாம் மறுக்கவில்லை. போக்குவரவு சாதனங்களின் அபிவிருத்தி ஒருபுறம் இருக்கட்டும்; இறந்து போனவராகக் கைவிடப்பட்டவர்களைப் பிழைப்பூட்ட முடிகிறது; பிறவிக் குருடர்கள், சாதாரணப் புத்தகங்களைப் படிக்க முடிகிறது; தேகத்திலுள்ள தசை நார்கள் எப்படி வேலை செய்து கொண்டிருக் கின்றன என்பதை நம் கண்ணினால் காணமுடிகிறது. இவை யெல்லாம், மனிதன் நல்வாழ்வுக்குத் துணை செய்வன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் விஞ்ஞான சாதிரத்தின் இந்த நல்ல அபி விருத்திகளினால் மனிதன் அடைந்திருக்கிற அனுகூலங்களைக் காட்டிலும், கெட்ட அபிவிருத்திகளினால் அடைந்திருக்கிற பிரதிகூலங்கள் தாம் அதிகமாயிருக்கின்றன. இதனால் உலகத்தில் சண்டை சச்சரவுகளும், சந்தேகங்கள், அவநம்பிக்கைகள், பொறாமைகள் ஆகியவனவும் மலிந்த பொருள் களாகிவிட்டன. இன்றைய சமுதாய நிலை எப்படி இருக்கிறதென்பதை ஆல்பர்ட் ஐன்டீன்1 என்ற பிரபல விஞ்ஞானி பின்வருமாறு அழகாகத் தெரிவித் திருக்கிறான். நாம் வசிக்கிற காலம், புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கிற அறிவில் மிகவும் செழுமையுடையதாயிருக்கிறது. இப்படிப் புதிதாகக் கண்டுபிடிக்கப்படுகிற விஷயங்கள், நமது வாழ்க்கையை மிகவும் சுலபப்படுத்தி விடுவனவாயிருக்கின்றன. மின்சார சக்தி முதலிய சக்திகளினால் நாம் சமுத்திரங்களைத் தாண்டுகிறோம்; மற்றும், தேக உழைப்பினால் ஏற்படுகிற சிரமத்தைக் குறைப்பதற்காக இந்தச் சக்திகளை உபயோகப்படுத்துகிறோம். நாம் ஆகாயத்தில் பறக்கக் கற்றுக் கொண்டு விட்டோம். மின்சார அலைகளின் மூலம், உலகம் பூராவுக்கும் செய்தி களை அனுப்ப முடிகிறது. இவ்வளவெல்லாம் இருந்தாலும், பொருள்கள் உற்பத்தி செய்வதையும் அவற்றை விநியோகிப்பதையும் இன்னும் நாம் ஒழுங்குபடுத்திக் கொள்ளவில்லை. இங்ஙனம் ஒழுங்குபடுத்திக் கொள்ளாமையினால், தங்களுக்குத் தேவையான பொருள்கள் எங்கே கிடைக்காமற் போய்விடுகின்றனவோ என்று உலகத்தி லுள்ள சர்வ ஜனங்களும் பயந்து கொண்டே வாழ வேண்டி யிருக்கிறது. மற்றும், பல பல நாடுகளில் வசிக்கும் ஜனங்கள், அவ்வப்பொழுது ஒருவரை ஒருவர் கொல்லும் வேலையில் ஈடுபட்டு விடுகின்றனர். இதனால் எதிர் காலத்தைப் பற்றிச் சிந்திக்கிற ஒவ்வொருவரும் அச்சத்துடனும் நடுக்கத்துடனுமே வாழ் கின்றனர். இதுதான் இன்றைய நிலை. இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டியது நமது உடனடியான கடமையாகும். மானிட சமுதாயமானது, இதுவரையில் எத்தனையோ துறைகளில் அபிவிருத்தி அடைந்திருக்கிறது. ஒவ்வொரு நாடும் ஒரு காலத்தில் வாழ்வையும் மற்றொரு காலத்தில் தாழ்வையும் அடைந்து வந்திருக்கிறது. ஒரு நாடு, உலக ஏகாதிபத்தியமாகவும் அதற்கு மற்ற நாடுகள் அடங்கியனவாகவும் இருந்து வந்த வரலாறுகளை உலக சரித்திரத்தில் பலபடக் காண்கிறோம். ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. மனிதர்களுடைய எதிர்கால வாழ்க்கையையும் தேசங்களின் எதிர்கால வாழ்க்கையையும் நிர்ணயிக்கிற பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தில் உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் முக்கியத்துவம் பெற்றிருக் கின்றன. ஒரு சில வல்லரசுகள் மட்டும் சேர்ந்து கொண்டு, தங்களுக்கிஷ்டமான வகையில் உலகத்திற்குப் பொதுவான தரும நியாயங்களை வகுத்துவிடலாமென்ற காலம் மலையேறிவிட்டது. உலகத்திலுள்ள சிறிய பெரிய எல்லா நாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையா யிருக்கின்றன. சர்வ தேசங்களையும் ஐக்கியப்படுத்தி வைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பலவித சங்கங்கள் ஆங்காங்கு இருக்கின்றன. இவை, நோக்க அளவில் தான் இருக்கின்றனவே தவிர, காரியத்தில் இறங்கவேயில்லை. சென்ற மகாயுத்தத்திற்குப் பிறகு தோன்றிய சர்வ தேச சங்கத்தை எடுத்துக் கொள்வோம். இது தோன்றுகிற போது உண்டான உற்சாகந்தான் என்ன? ஆனால் சில வருஷங்களுக் குள்ளாக இது, செல்வாக்கிழந்து விட்ட தோடல்லாமல், மற்றொரு யுத்தத்திற்கும் அடிகோலி விட்டு அடியோடு மறைந்து விட்டது. இந்தச் சங்கம் செல்வாக்கிழந்ததற்குக் காரணம் யாது? இதன் அங்கத்தினர்கள், தங்கள் தங்கள் நாடுகளின் உரிமைகளிலும் நலன்களிலும் மட்டுமே கண்ணுங் கருத்துமா யிருந்தார்களே தவிர, உலகப் பொதுவுக்கான உரிமைகளைப் பற்றியும் நலன்களைப் பற்றியும் கவனஞ் செலுத்தவில்லை. தேசீய மனப்பான்மையுடன் தான் இவர்கள் மேற்படி சங்க நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்களே தவிர, சர்வ தேசீய மனப்பான்மை இவர்களுக்கு ஏற்படவில்லை. இந்த யுத்தத்திற்குப் பிறகு தோன்றி யிருக்கிற ஐக்கிய தேச தாபனத்தின் நடவடிக்கைகளிலும் தேசீய மனப்பான்மை தான் தலை தூக்கி நிற்கிறதே தவிர, சர்வ தேசீய மனப்பான்மை, உலக மனப்பான்மை ஏற்படவில்லை. இதன் அங்கத்தினர் ஒவ்வொரு வரும், தனித்தனி நாட்டினராகக் கருதிக் கொண்டு பேசுகிறார்களே தவிர, உலகப் பிரஜை யாகத் தங்களைக் கருதிக்கொண்டு பேசவில்லை. மற்றும் இவர்கள், ஒரு பிரச்னையை எடுத்துக் கொண்டால் அதன் அடிப்படையான கருத்தென்ன, அந்தக் கருத்தை நடைமுறையில் கொண்டு செல்வதெப்படி என்பவை களைக் கவனியாமல், அதன் அர்த்தங்களென்ன, எந்த வாசகத்தில் அதனை எழுத்துருவத்தில் கொண்டு வந்தால் நன்றாயிருக்கும். இந்த மாதிரியான தோரணையில் கவனஞ் செலுத்துகிறார்கள். ஒரு கட்டடத்தின் அதிவாரம் ஆழமாக இருக்கிறதா வென்று பார்ப்பதுதான் முக்கியம். அதை விடுத்து, கட்டடத்தின் சுவர் களுக்குப் பூசப் பட்டிருக்கும் சிமெண்டு எந்த ஊரில் தயாரிக்கப் பெற்றது, உபயோகத்திருக்கிற மரச் சாமான்கள் என்ன விலைக்கு வாங்கியவை என்ற விவரங்களில் கவனஞ் செலுத்துவது முக்கியமல்ல. அதிவாரம் பலமாயிருந்தால் கட்டடம் எந்தவித மான அதிர்ச்சிக்கும் ஆட்டங்கொடாது. இன்னும் இந்த ஐக்கிய தேச தாபனத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நாட்டின் கலாசார பரம்பரை, சரித்திரம், அரசியல் ஆகிய இவையெல்லாந்தான் சிறந்தவை. மற்றவர்கள் பின்பற்றக்கூடிய பெருமை வாய்ந்தவை என்ற மனப்பான்மையோடு பேசுகிறார்கள்; விவகாரங்களை நடத்து கிறார்கள். மற்ற நாட்டினரின் கலாசார பரம்பரை முதலியவைகளை இவர்கள் பகிரங்கமாக, பட்டவர்த்தனமாகப் பழித்துக் கூறவில்லை யாயினும், இவர்களுடைய பேச்சிலும் நடக்கையிலும் இந்தப் பழித்துக் கூறுகின்ற மனப்பான்மை நன்கு பிரதிபலிக்கிறது. மற்றும், இவர்கள், இதற்கு முன் எந்த மாதிரியான வாசகங்களை உபயோகித்திருக்கிறார்கள் என்று மிகவும் முக்கிய மாகக் கவனிக் கிறார்கள். சம்பிரதாயத்தில் இவர்கள் மனம் பெரிதும் ஈடுபட்டிருக்கிறது. விஞ்ஞான சாதிரமானது உலகத்திற்கெல்லாம் பொதுவானது. அறிவானது அகண்டமானது; அதனை யாரும் தங்கள் தங்கள் நாட்டுக் கென்று வரம்பு கட்டிக் கொள்ளக் கூடாது; அறிவினைப் பகிர்ந்து கொள்ள வோ அதன் பயன்களை அனுபவிக்கவோ எல்லோருக்கும் உரிமை உண்டு என்று எல்லா ராஜதந்திரிகளும் வாசாமகோசரமாகப் பேசுகிறார்கள். ஆனால் அனுஷ்டானத்திற்கு வருகிறபோது, இது எங்கள் நாட்டுக்கு மட்டுமே உரியது; இது ரகசியம் என்று சொல்லி, அறிவு வளர்ச்சியைத் தகைந்து விடுகிறார்கள். இவர்கள், அறிவை, அரசியலுக்கு அடிமைப்படுத்திவிடப் பார்க்கிறார்கள். இந்த மாதிரியான குறைபாடுகளெல்லாம் நீக்கப்பட்டால் தான், எந்தச் சர்வ தேசீய தாபனமும் வெற்றிகரமாக முன்னேறிச் செல்லும். மனிதன், தான் இரண்டு கால் பிராணியென்பதை மறந்துவிட வேண்டும்; தான் கடவுளின் அம்சம். தன்னிடத்தில் கடவுள் தன்மை இருக்கிறது என்பதை உணர வேண்டும். அப்பொழுதுதான் அவன், உலகத்து மக்களையெல்லாம் தன் சகோதர சகோதரிகளாகக் கருத முடியும். மனிதனுக்கு, அவனுடைய கடவுள் தன்மையை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்பது இந்தியாதான். இந்தியாவின் புராதன கிரந்தங்கள் யாவும் இந்த ஒரு கருத்தை மையமாகக் கொண்டிருப்பதைக் காணலாம். இதனால் இந்தியர்களுக்கு ஏகாதிபத்திய உணர்ச்சி ஏற்பட வில்லை. பிறநாட்டு மக்களை அடிமைப்படுத்தி அவர்கள் மீது ஆதிக்கஞ் செலுத்த வேண்டுமென்ற எண்ணம் உண்டாகவில்லை. வருங்கால சமுதாய அமைப்பில் ஏகாதிபத்திய உணர்ச்சி, ஒருவரையொருவர் ஆதிக்கங் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் இடம் பெறாதிருக்க வேண்டு மானால், அதற்கு இந்திய தான் வழிகாட்ட வேண்டும். இதனாலேயே, இந்தியாவுக்கு அதிகமான பொறுப்பு ஏற்பட்டிருக்கிறதென்று ஆரம்பத்தில் கூறினோம். இங்கே ஒரு வார்த்தை. மனிதனிடத்திலேயுள்ள கடவுள் தன்மையைத் தூண்டி வளர்ப்பது எதுவோ, அந்த வளர்ச்சியின் விளைவாக அவனுடைய சீல சுபாவங்களை விகசிக்கச் செய்வது எதுவோ, எல்லோரும் ஒரு பரம் பொருளின் குழந்தைகளே; அதனால் எல்லோரும் சகோதரர்களே என்ற ஒரு தன்மையை அவனிடத்தில் வேரூன்றச் செய்வது எதுவோ அதுதான் மதம். மதமென்பது சிக்கலான தத்துவங் களிலே இல்லை; ஆடம்பரமான சடங்குகளிலே இல்லை; தன்னம்பிக்கையிலே, சீலத்திலே, சேவையிலே இருக்கிறது. மதமானது, நமது அன்றாட வாழ்க்கையோடு ஒட்டியது. மதம் வேண்டாமென்று சொல்வது, வாழ்க்கையை வேண்டாமென்று சொல்வது போலாகும். மதத்தை வாழ்க்கைக்கு அடிப்படையாகக் கொண்டிருந்ததனால் தான் இந்தியா, உலகனைத்தையும் தன்னைப் போல் கருதியது; சேர வாரும் செகத்தீரே என்று அறைகூவி அழைத்தது. சென்ற இரண்டு மகாயுத்தங்களினால் ஏற்பட்ட நஷ்டம் மகத்தானது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு சிறிய லாபமும் ஏற்பட்டிருக்கிறது. லாபம் சிறிதே யென்றாலும், இதனைச் சரியாகப் பயன் படுத்தவோமானால் இதனால் அதிகமான சாதகங்கள் ஏற்படும்; புதிய உலக அமைப்பை நாம் காண முடியும். உலகத்திலுள்ள மக்களெல்லோரும் ஒரே மானிட சமூகத்தைச் சேர்ந்தவர்களே. எல்லோருக்கும் பசி தாகம் ஒன்றுதான். ஆசாபாசங்கள், சுகதுக்கங்கள் ஆகியவெல்லாம் ஒன்றுதான். மனிதத் தன்மை என்பது, அதாவது அன்பு, ஒழுக்கம் முதலிய மேலான தன்மைகள் எல்லோரிடத்திலும் இருக்கின்றன. அந்த மேலான தன்மை களை மேலுக்குக் கொணர வேண்டும். எல்லோரும் ஒரு குலத்தினராக, ஓரினத்தினராக வாழவேண்டும் என்ற எண்ணம். இப்பொழுது ஒரு சிலரிடத்தில், மிக மிகச் சிலரிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த எண்ணம் ஏற்பட்டிருப்பதே ஒரு நல்ல அறிகுறியென்று சொல்ல வேண்டும். எண்ணத்தின் முடிவு செயலின் ஆரம்பமல்லவோ? உலக சமுதாயத்தை ஒழுங்குபட அமைக்கக்கூடியவர்கள் இளைஞர்கள். ஆதலின் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் கல்வி யானது, உலக திருஷ்டியுடையதாயிருக்க வேண்டும். தேசீய மனப்பான்மை ஏற்படவேண்டியது அவசியமே. ஆனால் அது சர்வ தேசீயத்திற்கு, உலக சகோதரத்துவத்திற்கு முரண்பட்டதாயிருக்கக் கூடாது. சர்வ தேசீயத்திற்கு, தேசீயம் ஒரு படியாகவே இருக்க வேண்டும். இந்த உலக சமுதாய அமைப்பில், மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் பாராட்டக்கூடாது. இத்தகைய உலக சமுதாயத்தை அமைக்கும் பொறுப்பை, ஒரு சர்வதேச சபையினிடம் ஒப்படைத்தால் நல்லது என்று ஒரு மேலைநாட்டு அறிஞன் யோசனை கூறுகிறான். இந்தச் சர்வதேச சபையில் சுமார் நூறு பேருக்கு மேற்பட்ட அங்கத்தினர்கள் இருக்கக்கூடாதென்றும், இவர்கள் தேசவாரியாகவோ, சமூகவாரியாகவோ தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி களாயிருக்கக் கூடாதென்றும், இவர்கள் ஜாதி மதம் தேசம் ஆகியவற்றைக் கடந்த உத்தம புருஷர்களாயிருக்க வேண்டுமென்றும், அப்படிப்பட்டவர் களால் தான் மானிட சமுதாயத்தின் பொதுவான நன்மையை நாட முடியுமென்றும் இவன் கூறுகிறான். இவன் கூறுவதை அன்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சர்வ தேசீய முறையில் இப்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் தாபனங்கள் அனைத்திற்கும் மேற்பட்டதாக இந்த மேன்மக்கள் சபை இருக்க வேண்டும். உலகத்திற்குப் பொதுவான தரும நியாயங்களையும், நீதி முறைகளையும், பொருளாதார சமத்துவத்தையும், அரசியல் ஒழுங்கையும், இறுதியாக வாழ்க்கைத் தத்துவத்தையும் இந்த மேன்மக்கள் சபை வகுத்துக் காட்ட வேண்டும். 18. சுதந்திரமே - வா! சுதந்திரமே! சிறைக் கம்பிகள் உன் முகத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றன. உன் உடம்பிலே எத்தனை காயங்கள்! எத்தனை சூடுகள்! இத்தனைக்கும் நீ சிரித்துக்கொண்டு இருக்கிறாய்! உன் உறுதிதான் என்னே? அதிகார சக்தி உன்னை விலங்கிட்டு மகிழ்கிறது; உன்னைச் சிறைப்படுத்தி வெற்றி கொண்டாடுகிறது. உன் பெயரால் எத்தனை பேர் பலியாகிறார்கள்? உன்னைக் காப்பாற்றுவதற்காக எத்தனை கொலைக் கருவிகள் கண்டு பிடிக்கப்படுகின்றன? ஆனால் நீ சட்டங்களால் கட்டுண்டும் சாஸனங்களால் மூடுண்டும் கிடக்கிறாய். ராஜதந்திரிகள் உன்னை அழகிய வார்த்தைகளால் அலங்கரிக்கிறார்கள். உரத்த குரலில் உன்னைத் துதி பாடுகிறார்கள். ஆனால் உன்னைச் சிறைப்படுத்திப் பார்ப்பதிலே தான் அவர்களுக்குத் திருப்தி! அதுதான் அவர்களுக்கு வாழ்வு! அம்மே! எவ்வளவு காலம் நீ இப்படிக் கட்டுண்டு கிடக்கப் போகிறாய்? எழுந்திரு! சிறைக் கம்பிகளினின்று வெளியே வா! உன்னைப் பக்தர்கள் பாடுகின்றார்! தொண்டர்கள் தொழுகின்றார்! உன் விடுதலை உலகத்துக்கு நல்வாழ்வு! ஆதலின் வா! எழுந்து வா! வெளியே வா! ஏழைகளின் பேச்சினிலே, உழைப்பாளிகளின் மூச்சினிலே வாழ வா! 19. இருதய சுதந்திரம் தோன்றி மறைந்துபோகக் கூடிய இந்த வாழ்க்கையை மணம் பெறச்செய்வது எது? சுதந்திரம்! ஒளிபெறச் செய்வது எது? சுதந்திரம்! சுதந்திரமில்லாத வாழ்க்கை பிடுங்கி எறியப்பட வேண்டிய களை மாதிரி. ஆனால் ஒருவகையான சுதந்திரம் இருக்கிறது. அதை எந்தக் கவிஞனும் புகழ்ந்து பாடவில்லை; எந்த அரசியல் வாதியும் பாராட்டிப் பேசவில்லை; எந்த அரசனுடைய நன்கொடையிலும் அஃது இல்லை; இகலோகத்திலும் பரலோகத்திலுமுள்ள எந்தச் சக்தியும் அதனைப் பறித்துக் கொண்டுவிட முடியாது. அடக்கு முறையாகட்டும். சிறைவாச மாகட்டும் எதுவும் அதனைப் பந்தப் படுத்திவிட முடியாது. அதனை யுடையவர்களை யாரும் அடிமைப் படுத்திவிட முடியாது. அப்படிப்பட்ட சுதந்திரம் என்ன? அதுதான் இருதய சுதந்திரம். அது தெய்வலோகத்திலிருந்து வந்தது. மனிதனோடு கூடப் பிறந்தது. அது, கடவுளாணை என்கிற முத்திரையிடப் பெற்ற சாஸனம். கடவுளால் மானிட சமுதாயத்திற்கு அருளப் பட்ட எல்லா நன்கொடைகளிலும் அதுவே சிறந்தது. 20. அன்பின் ஆட்சி ஆள்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் அறிஞர்களே! நீங்கள் பாக்கியசாலிகள்! அன்பினால் ஜனங்களை உங்கள் வசப்படுத்துங்கள். அன்புக்கு ஆட்பட மறுப்போர் இவ்வுலகில் யாருமில்லை. ஆட்பட்டிருக்கும் ஜனங்கள் உங்களிடம் விசுவாச முடைவர்களா யிருக்கவேண்டு மல்லவா? அதற்கு ஒரு வழி உண்டு அவர்கள், தங்களுடைய நன்மைக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. தங்களுடைய நன்மைக்குத்தான் ஆட்சி நடை பெறுகிறது என்று மனப்பூர்வமாக உணர வேண்டும். அப்படி அவர்களை உணரச் செய்வதில்தான் உங்கள் ஆட்சியின் வெற்றி இருக்கிறது. அதிகாரத்திற்கு அடங்காதவர் அன்பிற்கு அடங்குவர் என்ற உண்மையை நீங்கள் என்றும் மறவாதிருப்பீர்களாக! 21. நன்மையும் தீமையும் நன்மை, எவ்வளவு நிதானமாக வளர்கிறது? தீமையோ? வளர்ச்சியில் எவ்வளவு வேகம்? உலகத்தின் இயற்கையே இப்படித்தானா? வெடிமருந்தே! மனிதனை அழிக்கப் பிறந்த கரிய பொடியே! நீ தோன்றியதெல்லாம் ஆறு நூற்றாண்டுகளுக்கு முந்திதான். எவ்வளவு வேகமாக வளர்ந்துவிட்டாய்! அணுகுண்டாக உருக்கொண்டு மானிட ஜாதியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறாய்! சமாதான தேவதையே! அறிவுத் தெய்வமே! விஞ்ஞான மூர்த்தியே! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் வளர்ச்சிக்கு எத்தனை இடையூறுகள்! உங்கள் நடையில்தான் எவ்வளவு சோர்வு! உங்களால் வாழ வேண்டிய மனிதர்கள் உங்களாலேயே மடிந்து போகிறார்கள்! என்ன வேடிக்கை! ஒரு ஞானி இப்பொழுது இந்நிலவுலகைப் பார்ப்பானாகில் மனிதர்களுடைய தவறான போக்கைக் கண்டு ஒன்று அழுவான் அல்லது சிரிப்பான். 22. நமது கடமை நீர் பெருக்கக் கண்கள் இருக்கிறவரை, முறித்துப் பிழிந்தெடுக்கப் படுவதற்கு உடம்பிலே நரம்புகள் இருக்கிறவரை, வாயிலே நாக்கு இருக்கிறவரை, தாய் நாட்டின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருப்போம். எங்களுக்கு என்ன கொடுமைகள் இழைக்கப்பட்டாலும் அவை களைப் பொறுமையோடு சகிப்போம்; ஆம், பொறுமையோடு சகித்துக் கொண்டிருப்போம். மனிதன் என்ற பெயரை எவன் பெருமையோடு தாங்கிக் கொண்டிருக்கிறானோ அவன், எந்தவிதமான ஆதிக்கத்துக்கும் உட்படாதிருக்க வேண்டுமென்று நாங்கள் கடவுளைச் சதா பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோமே அந்தப் பிரார்த்தனை நிறைவேறுவதற்காக ஓயாமல் உழைப்போம்; ஆம், உழைத்துக் கொண்டிருப்போம். வாழ்ந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை; மூச்சு விட்டுக் கொண்டிருப்பது வாழ்க்கையல்ல. மற்றவர்களுடைய தேவைக்காக நமது உடலை ஒடித்து உழைப்பது வாழ்க்கையல்ல. ஆனால் அந்த உழைப்பைப் பெறவேண்டு மென்பதற்காகத்தான் இன்று உலகம் ரத்தக் களரியில் இறங்கியிருக்கிறது. அப்படி இறங்கியிருப்பதைக் கண்டு நாம் நம்பிக்கை இழக்க வேண்டாம். உதயமாவதற்குமுன் நீண்ட இரவு இருப்பதைப் போல இது. ஆதலின் நம்பிக்கை இழக்க வேண்டாம்.  இக்கரையும் அக்கரையும் 1. இக்கரையும் அக்கரையும் இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற வாசகத்தை அறியாதார் யார்? வாழ்க்கையின் எந்தத் துறையில் ஒருவன் ஈடுபட்டிருந்தாலுஞ் சரி, அவனுக்கு அந்தத் துறையில் சிறிது காலங்கழித்து, கசப்பு ஏற்பட்டு விடுகிறது. ஏன் இந்தத் துறையில் ஈடுபட்டோம் என்று ஏங்குகிறான். வேறொரு துறையில் ஈடுபட்டிருக்கக் கூடாதா, ஈடுபட்டிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே, வாழ்க்கையில் வெகுதூரம் முன்னேறி யிருக்கலாமே என்றெல்லாம் எண்ணுகின் றான்; தன் துரதிருஷ்ட நிலைக்கு வருத்தப்பட்டுக் கொள்கிறான். மாதந் தோறும் குறிப்பிட்ட தேதியில் ஒழுங்காகச் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கிற அரசாங்க உத்தியோகதனைக் கேளுங்கள். என்ன உத்தியோகம் வேண்டியிருக்கிறது? செய்த வேலையையே செய்து கொண்டு, எப்பொழுதும் மேலதிகாரிகளின் ஆணைக்கும் தயவுக்கும் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது. சுயமாகச் சிந்தித்துச் சுயமாக ஒரு வேலையைச் செய்ய முடிகிறதா? எதற்கும் வாய்ப்பில்லை. ஏதாவது ஒரு வியாபாரத்தைத் தொடங்கியிருந்தாலும், என்னுடைய சுயசக்திகளை உபயோகப்படுத்தி எவ்வளவோ தூரம் முன்னேறி யிருக்கலாம் என்று ஆசாபங்கக் குரலுடன் பேசுகிறான். ஒரு வியாபாரியைக் கேளுங்கள். விலைவாசிகள் ஒரு நிலை யில்லாத இந்தக் காலத்தில் வியாபாரத்தில் என்ன சம்பாதிக்க முடியும்? பாக்கிகளை வசூலிப்பது பெருந்தொல்லையாயிருக்கிறது. ஒரு மாதத்தில் லாபமென்றால் அடுத்த மாதத்தில் நஷ்டம் ஓயாத கவலை. அரசாங்க உத்தியோகத்தில் புகுந்திருந்தால், நாம் செய்கிற வேலை எதுவா யிருந்தாலும், எப்படியிருந்தாலும், மாதந்தோறும் ஒழுங்கான வருவாய் கிடைத்துக் கொண்டிருக்கும். இத்தனை நாட்களுக்குள் பெரிய பதவிக்கு வந்து நான்குபேர் மத்தியில் கண்ணியமும் கௌரவமுமாக இருந்திருக்கலாம் கவலையில்லாத வாழ்க்கை. கடைசியில் பென்ஷனும் வந்து கொண்டிருக்கும். வியாபாரத்தில் பிரவேசித்தது என் பெரிய குற்றம் என்று ஏக்கம் தோய்ந்த குரலில் கூறுகிறான். எத்தனையோ அனுகூலங்களை எதிர்பார்த்து ஒருவன் ராணுவத்தில் போய்ச் சேருகிறான். சொற்பகாலத்திற்குள் என்ன பிழைப்பு? தினந்தோறும் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கிறது என்று சொல்லத் தொடங்கி விடுகிறான். ரெயிலிலோ கப்பலிலோ அலுவல் பார்க்கிறவனுக்கு, எப்பொழுது ஒரே இடத்தில் நிம்மதியாக இருந்து கொண்டு உத்தியோகம் செய்யப்போகிறோம் என்ற எண்ணமே மேலிட்டு நிற்கிறது. உஷ்ணப்பிரதேசத்தில் வசிக்கிறவன், குளிர்ப்பிரதேசத்தில் வசதி ஏற்பட்டால் தேவலையென்று நினைக்கிறான். அப்படியே குளிர் மிகுதி யான நாட்டிலே வசிக்கிறவனுக்கு வெயில் மிகுந்த நாட்டிற்குச் சென்று குடியேறிவிடலாமா என்று தோன்றுகிறது. இப்படி இவர்கள் விரும்பியபடியே இவர்களுக்கு மாறுதல் கிடைக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது - அந்த மாறுதல் நிலையில் - சிறிது காலம் இருந்த பிறகு பழைய நிலையை ஏன் விட்டு வந்தோம்? புதிய மாறுதல், பழைய நிலையைக் காட்டிலும் மோச மாகவல்லவோ இருக்கிறது? அந்த நிலைக்கே திரும்பிப் போய்விடக்கூடிய வாய்ப்புக் கிடைக்காதா என்று எண்ணமிட்ட வண்ணமிருக்கிறார்கள். ஆக, யாருக்கும், இருக்கிற நிலையில் அதிருப்தி; இல்லாத நிலையை எண்ணி மகிழ்ச்சி. உலகத்தில் சர்வசாதாரணமாக இதைப் பார்க்கிறோமில்லையா? இதற்கு என்ன காரணம்? பொதுவாக மனிதன், மாறுதலை விரும்பும் சுபாவமுடையவன். அவனுடைய அகவாழ்க்கையிலாகட்டும் புறவாழ்க்கையிலாகட்டும், இந்தச் சுபாவம் அடிக்கடி பிரதிபலிக்கிறது. அவன் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, இப்படிச் சாதாரண விஷயங்களில் கூட அவன் மாறுதலைக் காண விழைகிறான். காதல் வாழ்க்கையைத் தான் எடுத்துக் கொள்ளுங்கள். காதல் மாறுதலடையாதது, அழியாதது, தெய்வத் தன்மை யுடையது என்றெல்லாம் சொல்கி றோம். வாழ்க்கையில் பரிணமிக்கிற போது, அடிக்கடி இல்லா விட்டாலும் ஏகதேசமாகவாவது மாறுதலைப் பெற்றால்தான் சோபிதம் பெறுகிறது; புனிதமடைகிறது. ஊடலும் கூடலுமாகிய மாறுதல்கள், காதல் வாழ்க்கையின் இயற்கையான நியதிகளா யிருக்கின்றனவல்லவா? மற்றும் மனிதன், கிட்ட; ஒன்றைக் காட்டிலும் எட்ட இருக்கின்ற ஒன்றின்மீது பிரமை கொள்கிற சுபாவமுடையவனா யிருக்கிறான். ஏனென்றால், எட்ட இருப்பது அவனுக்கு தூலமாக அல்லது ஒருபிண்டமாகத்தான் தெரிகிறது. அதாவது அதன் புறத் தோற்றத்தை மட்டுந்தான் பார்க்கிறான். அப்பொழுது அது வழவழப்புடையது போலத் தெரிகிறது. அதன் மீது ஏற்பட்டுள்ள வரிகள், பிளவுகள் முதலியன தெரிவதில்லை. அதன் உள் அமைப்புக் கள், அந்த அமைப்புக்களின் அசைவுகள், அந்த அசைவுகளின் விளைவுகள் ஆகியவை அவனுக்குச் சரியாகப் புலனாவதில்லை. பூனைக்காஞ்சி இலை, சிறிது தூரத்திலிருந்து பார்த்தால் பசுமை யாகத்தான் இருக்கிறது; தீண்டிப் பார்த்த பிறகல்லவோ அதன் தன்மை வெளிப்படுகிறது. ஒரே எரிச்சல். நமது கண்பார்வை எட்டுகின்ற எல்லையிலிருக்கும் ஒரு கட்டடத்தைப் பார்க்கிறோம். நல்ல விதமாகவே தென்படுகிறது. அதில் சென்று சிறிது காலமாக வாவது வசிக்க வேண்டுமென்ற ஆசையும் நமக்கு உண்டாகிறது அதில் நுழைந்து பார்த்த பிறகுதான், அதில் வசிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு அங்குச் சிறிது காலம் வசித்த பிறகுதான், அது நாம் வசிப்பதற்குத் தகுதியுடையதன்று என்பதைத் தெரிந்துகொள்கிறோம். நாம் அதுகாறும் வசித்துக் கொண்டிருந்த இடமே மேலானதென்று தோன்றிவிடுகிறது. தவிர மனிதன், கிட்ட இருக்கின்ற ஒன்றோடு நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுவிடுகிறபோது, ஒரே மாதிரியான வேலையைச் செய்து கொண்டிருக்கிறபோது, அதன்மீது, அந்த வேலையின் மீது, சில சமயங்களில் சலிப்புக் கொண்டு விடுகிறான். அப்படிப்பட்ட சமயங்களில் அவன் மனம், எட்டவிருக்கின்ற ஒன்றின்மீது செல்கிறது. அது சலிப்புத் தராமலிருக்குமென்று கருதுகிறான். ஆனால் அதுவும் ஒரு பிரமை என்பது அப்பொழுது அவனுக்குத் தெரிவதில்லை. இங்ஙனம் இருக்கின்ற நிலையில் ஒருவனுக்கு அதிருப்தி ஏற்படுவதற்கான காரணங்கள் பலவற்றைச் சொல்லிக்கொண்டு போகலாம். அவை ஒரு பக்கம் இருக்கட்டும். இருக்கிற நிலையில் திருப்தி காண்பதற்கு என்ன வழி? வாழ்க்கை பூராவிலும் கூடியமட்டில் கசப்பை அனுபவிக்காமலிருப்பதற்கு ஒருவன் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? இவைகளைப் பற்றிச் சிறிது பேசுவோம். பிரதியொரு மனிதனும், தன் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்வதற்கு முன், தன்னிடம் இயல்பாக அமைந் துள்ள அறிவு, அந்த அறிவின் வரம்பு, தன்னுடைய மனப்போக்கு, செயலாற்றுந் திறன், உடல் நிலை ஆகியவைகளைப் பற்றி நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; பார்த்து அவைகளுக்குகந்த முறையில் தன் எதிர்கால வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அறிவு, பல துறைகளுடையது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறைபற்றின அறிவு இயல்பாகவே அமைந்திருக்கிறது. இப்படி அமைந் திருப்பதை ஒவ்வொருவருடைய குழந்தைப் பருவ நடவடிக்கைகளி லிருந்து தெரிந்து கொள்ளலாம். ஒரு குழந்தை, இசை வரும் திசையில் தன் இரு செவிகளையும் நீட்டுவதில் ஆர்வம் காட்டுகிறது. ஒரு குழந்தை, ஏதோ ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு தரையில் உருவங்கள் பலவற்றை வரைவதில் ஈடுபாடு கொள்கிறது. ஒரு குழந்தை, கடிகாரமோ, ரேடியோவோ, இப்படி ஏதோ ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு, அதன் கருவிகளைப் பிரித்துப் பார்ப்பதிலும் பிறகு அவற்றைப் பொருத்திக் காண்பதிலும் கவனஞ் செலுத்துகிறது. ஒரு குழந்தை, எழுத்துக்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாதபோதிலும், வீட்டில் எங்காவது ஒரு மூலையில் சீந்துவாரற்றுக் கிடக்கும் ஒரு பத்திரிகைக் காகிதத்தையோ, கிழிந்து போன ஒரு புத்தகத்தையோ, தலை கீழாகவாவது வைத்துப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி யடைகிறது. இந்த மாதிரியான நடவடிக்கைகளைக் கொண்டு எந்தக் குழந்தைக்கு எந்தத்துறை பற்றின அறிவு இயல்பாயமைந்திருக்கிற தென்பதைப் பெற்றோர்களோ, பெற்றோர்கள் நிலையிலுள்ள மற்றவர்களோ அறிந்து கொண்டு அந்தத் துறை பற்றின அறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வதற்கான சூழ்நிலையை அந்தக் குழந்தைக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்; வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் குழந்தை, வயது வந்த பிறகு, தன்னுடைய அறிவு நல்லவிதமாகப் பயன்படுகின்ற முறையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். அப்படியின்றி, அந்தக் குழந்தையைப் பெற்றோர்களோ, பெற்றோர்கள் நிலையிலுள்ள மற்றவர்களோ, தங்களுடைய சொந்த நலன் கருதி வேறொரு வாழ்க்கைப் போக்கில் திருப்பி விடுவார்களானால், அவர்கள் அந்தக் குழந்தைக்கு அநீதி செய்தவர்களே யாவார்கள். பெற்றோர்களோ, அவர்கள் நிலையிலுள்ள மற்றவர்களோ, தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டாலும் நடந்து கொள்ளாவிட்டாலும், ஒவ்வொருவனும் சுயமாகச் சிந்தித்து ஒரு முடிவு எடுக்கக்கூடிய பக்குவ வயதை யடைந்ததும், மேலே சொன்ன மாதிரி தன்னிடம் இயல்பாயமைந்துள்ள அறிவு, அந்த அறிவின் வரம்பு, தன்னுடைய மனப்போக்கு, செயலாற்றுந் திறன், உடல்நிலை ஆகியவைகளை அனுசரித்து, தன் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல் பிறருடைய நிர்ப்பந்தத் தின் விளைவாகவோ, உடனடியான பலனை எதிர்பார்த்தோ, வேறொரு போக்கில் தன் வாழ்க்கையைத் திருப்பி விடுவானாகில் அவன் ஒரு கால், லௌகிக வெற்றிகளைப் பெறலாம் ஆனால் அவற்றில் இன்பம் நுகரமாட்டான். சிலருக்கு ஆயுள் பூராவிலும் ஆசாபங்கமே நிறைந்திருக்கக் கூடும். சிலரை, சலிப்பும் சோர்வும் வாழ்க்கை முழுவதிலும் அரித்துக் கொண்டிருக்கும். உதாரணமாக, இளமையில் இசைக்கு வசப்பட்டிருந்த ஒருவன், வயதான பிறகு, விதி வசம் என்று சொல்லிக்கொண்டோ, தன்னையோ பிறரையோ நொந்துகொண்டோ, வைத்தியத் தொழிலில் பிரவேசிப் பானாகில், அவன், தன்னுடைய விடா முயற்சியினாலும் சலியாத உழைப்பினாலும் காலக் கிரமத்தில் நல்ல பெயர் வாங்கி விடலாம்; ஏராளமான பணத்தைக் குவித்து விடலாம். ஆனால் அவன் உள் மனமென்னவோ, தன்னுடைய இளமையில் தன்னை வசப்படுத்திக் கொண்டிருந்த இசைக் கலையோடுதான் உறவாடிக் கொண்டிருக்கும். அந்த உறவிலேதான் அவன் இனிமை காண்பான்; அமைதி பெறுவான். ஒரு நாளில்லாவிட்டால் ஒருநாள் அவன் வைத்தியத் தொழிலை அறவே விட்டு விட்டு, சங்கீதத்திற்குத் தன்னைப் பூரணமாக ஒப்புக் கொடுத்து விடுதலும் கூடும். சி.வி. ராமன், கணித சாதிரத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். அதனால்தான் அவருக்கு அரசாங்கக் கணக்குத்துறை அலுவலகத்தில் உயர்தர உத்தியோகம் கிடைத்தது. அதைத் திறமையாகவும் வகித்தார். ஆனால் அவர் ருசியெல்லாம், ஊக்கமெல்லாம் விஞ்ஞான ஆராய்ச்சி யிலேயே ஒன்றி நின்றது. எனவே சிறிது காலத்திற்குப் பிறகு அந்த உத்தியோகத்தை உதறிவிட்டு விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் வெற்றி கண்டார். நோபல் பரிசும் கிடைத்தது. அறிவு, பலதுறைகளுடையதாயிருப்பது போல், ஒவ்வொரு துறைபற்றின அறிவும் பல பிரிவுகளுடையதாயிருக்கிறது. இதையும் ஒருவன் தெரிந்து தெளிதல் வேண்டும். விஞ்ஞான சாதிரம் என்று பொதுப்படையாகச் சொல்கிறோம். ஆனால் அதில் பௌதிக சாதிரம் என்றும் ரசாயன சாதிரம் என்றும் இரண்டு பெரும் பிரிவுகள் அடங்கியிருக்கின்றன. ஒரு விஞ்ஞான சாதிரிக்கு இரண்டு பிரிவுகளிலும் பொதுவான பயிற்சி இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு பிரிவில்தான் இயல்பான அக்கரை இருக்கும். அதில்தான் அவன் கவனம் அதிகமாகச் செல்லும். வாய்ப்பாட்டு பாடுகிறவனும், குழல் ஊதுகிறவனும், வீணை வாசிக்கிறவனும், மிருதங்கம் அடிக்கிறவனும் எல்லோரும் சங்கீத வித்துவான்கள்தான். ஆனால் ஒவ்வொரு வித்துவானுக்கும் ஒவ்வொன்றில்தான் இயல்பான திறமை இருக்கும்; மற்றவைகளில் பரிச்சயம் இருக்கலாம். அது வேறு விஷயம். எந்த ஒன்றில் ஒருவனுக் குத் திறமை இருக்கிறதோ அந்த ஒன்றைப் பின்பற்றினால்தான், அவன், வாழ்க்கையில் வெற்றி காணமுடியும். எனவே, இந்த உட்பிரிவுகளையும் மனத்தில் கொண்டு ஒருவன் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். அப்படிச் செய்யாமல் எந்த உட்பிரிவாயிருந்தாலென்ன, எல்லாம் ஒரு துறைக்குட்பட்டதுதானே என்று கருதி, தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வானாகில், அதிலிருந்து அவன் அதிகமான பலனை எதிர்பார்க்க முடியாது. ஏதோ ஒரு விதமாக வாழ்க்கைப் போக்கிலே மிதந்து சென்றுகொண்டிருக்கலாம். சொல்லழகும் பொருட் செறிவும் நிறைந்த வாக்கியங்களை அமைத்துக் கடிதங்கள் எழுதுவதில் இயற்கையான ஆற்றல்பெற்ற ஒருவன், ஓர் அலுவலகத்தில் சந்தர்ப்ப விசேஷத்தினால் ஒரு கணக்கனாக அமர்ந்து வேலை செய்யும்படி நேரிட்டால் அவன் அந்த வேலையில் எப்படி சிரத்தைக் கொள்வான்? குடும்ப காலட்சேபம் நடக்க வேண்டுமே யென்பதற்காகத் தன்விதியை நொந்து கொண்டு வேலை செய்வான். அவ்வளவுதான். எழுத்தாளனை எடுத்துக் கொள்வோம். சிறுகதை எழுதுகிற வனும் எழுத்தாளன்தான். சரித்திரம் எழுதுகிறவனும் எழுத்தாளன் தான். ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொன்றில் இயற்கையான ருசியும் ஆற்றலும் மிகுந்திருக்கும். அந்த வழியில்தான் அவன் செல்ல வேண்டும். அப்படிக்கின்றி, தன்ருசிக்கும் ஆற்றலுக்கும் புறம்பான இலக்கியப் படைப்பில் ஈடுபடுவானாகில், அதனால் அவனுக்கு ஊதியம் கிடைக்கலாம்; புகழும் கிட்டலாம் ஆனால் அவன் படைப்பின் மீது அமர முத்திரை விழாது. ஆகவே எவனொருவனும், தனக்கு இயல்பாயமைந்துள்ள அறிவு - அஃது ஏதோ ஒரு துறை பற்றின அறிவாயிருந்தாலுஞ்சரி, அந்த ஒரு துறையின் ஏதோ ஒரு பிரிவைப் பற்றின அறிவா யிருந்தாலுஞ்சரி - பிரகாசம் பெறுவதற்கான வாய்ப்பை அளிக்கக் கூடிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயல வேண்டும். உலகத்தில் பெரும்பாலோர், குறிப்பிட்ட ஒரு துறை பற்றின அறிவை மட்டும் பெற்றிருக்கிறார்கள்; அந்த ஒன்றை மட்டும் பற்றிக்கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்; அதில் பிரகாசிக்கவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு சிலர், இரண்டு மூன்று துறைகளிலும், அந்தத் துறைகளிலுள்ள பல பிரிவுகளிலும் அறிவுடையவர்களாகவும், ஒவ்வொன்றிலும் பிரகாசிக்கின்றவர்க ளாகவும் இருக்கிறார்கள். இவர்களை அதிமேதைகள் என்று அழைக்கலாம். இவர்கள் எந்த மாதிரி யான வாழ்க்கையில் ஈடுபட்ட போதிலும் அதில் பசுமையையே காண்பார்கள்; ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான இன்பத்தை நுகர்வார்கள். லோகமான்ய பாலகங்காதர திலகர்1 இப்படிப்பட்ட அதிமேதாவி களிலே ஒருவர். இவர் வடமொழிப் புலவர்; சரித்திர ஆராய்ச்சியாளர்; கணித சாதிர நிபுணர்; தத்துவ சாதிர போதகர்; அரசியல் பண்டிதர்; எல்லாவற்றிற்கும் மேலாக பெரிய கர்மயோகி. மன்ஹார் பார்வே2 என்ற ஒரு சங்கீத மேதை இருந்தான். இவன் சிறுவயதிலேயே எந்த இசைக் கருவியாயிருந்தாலும் அதை வெகுலாகவமாகக் கையாள்வான் எந்தக் கருவியை எடுத்து இசை கூட்டினாலும், அந்தக் கருவி ஒன்றில் மட்டும் இவன் நிபுணன் போலும் என்ற எண்ணமே நமக்குத் தோன்றும். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலத்திலும் அதிமேதையர் அநேகர் இருந்து வந்திருக்கின்றனர். இத்தகைய அதிமேதையர்களைப் பற்றி நாம் இங்கே பிரதாபிக்கவில்லை. ஏனென்றால், உலகத்தில் பெரும்பாலோர் இவர்களைப்போல் இருப்ப தில்லை யல்லவா? சிலர், ஒரு துறையிலோ பல துறைகளிலோ அறிவைச் சம்பாதித்து, அதை, எவ்வித லௌகிக பிரயோஜனத்தையும் கருதாமல், மக்களின் நலனுக்காகவே பயன்படுத்துகிறார்கள்; அப்படிப் பயன்படுத்துவதையே தங்கள் வாழ்க்கையின் லட்சிய மாகக் கொண்டு விடுகிறார்கள்; அந்த லட்சியத்தை நாடிச் சென்று கொண்டிருப்பதிலேயே இன்பம் காண் கிறார்கள். இப்படிப்பட்டவர்களைப் பற்றியும் நாம் இங்கே பிரதாபிக்க வில்லை. சாதாரண ரீதியில் உலகியல் வாழ்க்கையை நடத்துவதற்காகத் தங்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்திற் குட்பட்டிருக்கிற மனிதர்களைப் பற்றியே பிரதாபிக்கிறோம். இஃதிருக்கட்டும். சுபாவங்களில்தான் எத்தனை மாறுபாடுடையவர்களாயிருக் கிறார்கள் மனிதர்கள்! சிலர், சுபாவத்திலேயே மற்றவர்க ளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாயிருக்கிறார்கள். இவர்கள், தங்கள் சக்தியை உணராதவர்கள்; எப்பொழுதுமே தங்களைப் பற்றித் தாழ்வாகக் கருதிக்கொண்டு எந்த ஒரு பேச்சையும் பேசுகிறார்கள்; எந்த ஒரு செயலையும் செய்கிறார்கள். இவர்கள் ஒரு காரியாலயத்தில் சாதாரண குமாதாவாகவோ, ஒரு தொழிற்சாலை யில் கூலியாளாகவோ, இப்படிப் பிறருடைய ஏவலுக்குட்பட்டு நடக்கக் கூடிய வாழ்க்கைக்குத் தகுதி யுடையவர்கள். இன்னுஞ் சிலர், தங்களுக்குச் சுயமாக ஒரு வேலையைச் செய்யத் தெரியாவிட்டாலும், பிறரை ஏவி வேலை வாங்குவதில் சமர்த்தர் களாயிருக்கிறார்கள். இவர்கள், தங்களுடைய பேச்சு வன்மையால், தங்களுக்கு எதையும் சாதிக்க வல்ல திறமையுண்டு என்று காட்டிக் கொண்டுவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள், எந்த ஒரு வாழ்க்கையிலும் நிலைத்து நிற்க மாட்டார்கள். ஆயினும் அதற்காகக் கவலைப் படமாட்டார்கள். ஏதோ ஒரு விதமாக, ஏதோ ஒரு வாழ்க்கையைக் கடத்திக் கொண்டு போவார்கள். மற்றுஞ் சிலர், சுயமாக வேலையைச் செய்யத் தெரிந்திருப்ப தோடு, மற்றவர்களிடத்திலிருந்து வேலை வாங்குவதிலும் திறமை சாலிகளா யிருக்கிறார்கள். இவர்கள், அதிகாரத்தின் அளவு, பணிவின் சக்தி இரண்டையும் அறிந்தவர்கள். தாங்கள் வகுத்துக் கொண்ட வாழ்க்கையில் எப்பொழுதேனும் சறுக்கல் ஏற்பட்டால், அதற்காகச் சளைத்துப் போகமாட்டார்கள்; அந்தச் சறுக்கலி லிருந்து வெகு லாகவமாக வெளியேறி விடுவார்கள். இதனால் இவர்களுக்குத் தன்னம்பிக்கையுடனும் தன்மதிப் புடனும் வாழ்க்கையை நடத்திக் கொண்டு செல்வது சாத்தியமாயிருக்கும். ஆகவே ஒருவனுடைய வாழ்க்கை அமையும் விஷயத்தில், அவனுடைய சுபாவம், மனப்போக்கு, செயலாற்றுந் திறன் ஆகியவை களும் இடம் பெறுதல் அவசியமாகின்றது. உடல்நிலை எல்லோருக்கும் ஒரே மாதிரியாயிருப்பதில்லை. சிலருடைய உடல்நிலை தொட்டால் சிணுங்கும் தன்மைத்துடைய தாயிருக்கிறது. சிலருடைய உடல் நிலை, எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தியுடையதாயிருக்கிறது. எப்படிப்பட்ட உடல் நிலையுடையவர் களுக்கும் வாழ்க்கை பொதுவானது. ஏதோ ஒரு விதமான வாழ்க்கையை அவர்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அப்படி மேற் கொள்கிறபோது, யாரும் தங்கள் உடல்நிலையைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்தாற்போல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், அந்த வாழ்க்கையின் நடு நடுவே கசப்பு தட்டாது. இப்படிப் பலவற்றையும் அனுசரித்து ஒருவன் இருபத்தைந்து வயதுக்குள், தன் வாழ்க்கைப் போக்கை நிர்ணயித்துக் கொண்டுவிட வேண்டும்; அதாவது தொழிலோ, உத்தியோகமோ ஏதோ ஒன்றில் பிரவேசித்துவிட வேண்டும். இருபத்தைந்து என்பதை அதிகபட்ச வயதாகவே குறிப்பிடுகிறோம். இதற்கு முந்தியே, ஏறக்குறைய இருபதிலிருந்து இருபத்திரண்டு வயதுக்குள் பிரவேசித்துவிடுதல் நல்லது. எப்படியும் இருபத்தைந்து வயதுக்கு மேல் போகக்கூடாது. போனால், அவன் வாழ்க்கை ஒரு போக்கிலேயே செல்லாது; அடிக்கடி வழிமாறிக் கொண்டிருக்கும். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், எந்த ஒரு தொழிலிலும் அல்லது உத்தியோகத்தி லும் அவன் நிலைத்திருக்க மாட்டான். சகட யோகம் என்று சொல்வார்களே அந்த யோகத்தில் அவன் உருண்டு கொண்டிருப் பான். அவனுடைய போஷணைக்கும், பாதுகாப்புக்கும் உட்பட்டவர்கள், அவனுக்குச் சுமையாகத் தோன்றுவார்கள். அவர்களுக்கும் அவன் சுமையாயிருப்பான். ஒருவன், தான் மேற்கொண்ட வாழ்க்கையில் அதாவது தொழிலிலோ, உத்தியோகத்திலோ சலிப்புக் கொள்ளாதிருக்க வேண்டுமானால், முதலாவது அவன் தான் மேற்கொண்ட தொழில் அல்லது உத்தியோகந்தான் தனக்குச் சரியானது. அதற்குத்தான் தான் தகுதியுடையவன் என்று உறுதி கொள்ளவேண்டும். இந்த உறுதி மிக அவசியம். ஏதோ ஒரு வாழ்க்கைத் துறையில் துணிந்து இறங்கிவிட்ட பிறகு, வேறு துறைகள் மீது நாட்டஞ் செலுத்தலாகாது. அப்படிச் செலுத்தினால், இறங்கியிருக்கிற துறையின் மீது நியாயமாகச் செலுத்த வேண்டிய கவனம் சிதறிப் போகுமல்லவா? எந்த ஒரு தொழிலை மேற்கொண்டாலும் அதில் உடனே வெற்றி கிட்டவேண்டுமென்று ஒருவன் எதிர்பார்க்கக் கூடாது. படிப்படியாகச் சென்றால்தான் வெற்றி கிட்டும். தொழில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு வேலையையும் முழு வேகத்தில், ஒரே தடவையில் செய்து முடிக்க வேண்டுமென்று ஆத்திரப்படக் கூடாது. அப்படிச் செய்து முடித்தால்தான் வெற்றிகிட்டுமென்று நினைப்பது தவறு எதையும் நிதானமாகச் செய்ய வேண்டும். பதற்றம் கூடாது. எதை முன்னே செய்ய வேண்டுமோ அதை முன்னதாகவும் எதைப் பின்னே செய்ய வேண்டுமோ அதைப் பின்னதாகவும் ஒரு வரிசைக் கிரமத்தில் செய்து முடிக்கப் பார்க்கவேண்டும். எதிலும் ஓர் ஒழுங்கு முறையை அனுசரிக்க வேண்டும். தவிர, ஒருவேலையைச் செய்கிறபோது, பொறுமையை இழக்கக் கூடாது; மனத்தை அலைபாயவிடக் கூடாது; கூடிய மட்டில் ஒரு நிலையில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். தன் வேலைக்கு இடையூறாக தன் மன ஒருமையைக் குலைக்கின்ற முறையில் யாராவது பேச வந்தால் அவர்களை மரியாதையாகச் சில வார்த்தைகள் சொல்லி அனுப்பிவிடவேண்டும். வேலை நிமித்தமாக வந்தவர்களை, வேலையை முடித்துக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும். வேலைக்கு இடையிடையே சிறிது நேரம்-சில நிமிஷங்க ளாவது - ஓய்வு எடுத்துக் கொள்ளுதல் நல்லது. சிறப்பாக, மூளை வேலை செய்வோருக்கு இது மிகவும் அவசியம். எட்டு மணி நேர உடல் உழைப்பால் எவ்வளவு அசதி ஏற்படுகிறதோ அவ்வளவு அசதி இரண்டு மணி நேர மூளை உழைப்பால் ஏற்படுகிறதென்று சிலர் கணக்குப் போட்டுக் காட்டுகிறார்கள். இந்த விகிதாசாரம் எப்படி எப்படி இருந்தபோதிலும் மூளை உழைப்பினால் அதிக சோர்வு ஏற்படுகிறதென்பது நிச்சயம். விஞ்ஞானிகள், இலக்கிய கர்த்தர்கள் முதலியோரைச் சீக்கிரத்தில் மூப்பு வந்து மூடிக் கொள்வதற்கு இதுதான் காரணம். இங்கே ஒரு சிறு விஷயம். சிறிது நேரம் கண்மூடிச் சாய்ந்து கொண்டோ, படுத்துக் கொண்டோ இருப்பதனால் மட்டும் ஒருவனுக்கு ஓய்வு கிடைத்து விடாது. காற்றாடிபோல் சுழன்று கொண்டிருக்கும் மனத்திற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஆனால் ஓய்ந்திருக்கும் தன்மை அதற்கு இல்லை. எனவே அதனை, செய்து கொண்டிருக்கும் வேலையினின்று திரும்பி வரும்படி செய்து வேறொரு வேலையில் ஈடுபடச் செய்யவேண்டும். அப்படி ஈடுபடச் செய்கின்ற வேலை, ஏற்கனவே செய்துவந்த வேலைக்கு முற்றிலும் மாறுபட்டதாயிருத்தல் நல்லது. உதாரணமாக, ஆராய்ச்சி நடத்தும் விஞ்ஞானி, எழுதுகோலுடன் உறவாடிக் கொண்டிருக்கும் எழுத்தாளன், இப்படிப்பட்டவர்கள், சிறிது நேரம் தோட்ட வேலையில் ஈடுபடலாம்; தோட்ட வசதியில்லாதவர்கள், வீட்டில் இருந்து கொண்டோ, வெளியில் சென்றோ, பொழுதுபோக்கா யிருக்கக்கூடிய, அதே சமயத்தில் பிறருக்கு நன்மைதரக் கூடிய ஏதோ ஒரு தொண்டில் சிறிது நேரம் ஈடுபடலாம். இதே பிரகாரம், உடலால் உழைக்கிறவர்கள், அறிவை அதிகரித்துக் கொள்வதற்கு உதவியா யிருக்கக்கூடிய அல்லது மனத்திற்கு அமைதி தரக்கூடிய ஏதோ ஒரு நல்ல நூலை எடுத்துச் சிறிது நேரம் படிக்கலாம்; அல்லது நல்லவர் களுடன் நட்புக் கொண்டு அவர்கள் அளிக்கும் கேள்விச் செல்வத் தைப் பெறலாம். இப்படி ஏதோ ஒரு வகையில், ஒரு வேலையினின்று மற்றொரு வேலைக்கு மாற்றிக் கொள்வதன் மூலம் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுத்தல் நல்லது. ஒருவன், தன் வேலையில் மட்டும் ஒழுங்கு முறையை அனுசரித் தால் போதாது. தன் உணர்ச்சிகளையும் ஓர் ஒழுங்குக்குட்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். விருப்பு வெறுப்புக்கள், கோப தாபங்கள், சந்தோஷ துக்கங்கள், சோர்வு சலிப்புக்கள் ஆகிய எந்தவிதமான உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டாலுஞ் சரி, அதைப் பக்குவமாக, யாருக்கும் பாதகம் உண்டாகாதபடி வெளியிட வேண்டும். உணர்ச்சிகளை வெளியிடாமலிருக்க யாராலும் முடியாது. வெளியிடக் கூடாதென்று யாரும் யாரையும் கட்டளை யிட முடியாது. அந்தக் கட்டளையினால் பயன் ஏதும் விளையாது. ஏனென்றால் மனிதன் சில சில உணர்ச்சிகளோடு பிறக்கிறான். அந்த உணர்ச்சிகள் அவனோடு வளர்கின்றன. தன்னோடு பிறந்து வளர்ந்தவைகளை, தன்னிடமிருந்து எப்படி அவன் அப்புறப் படுத்திவிட முடியும்? செடி கொடிகளுக்குக்கூட உணர்ச்சியுண்டு என்று விஞ்ஞானிகள் நிரூபித்துகாட்டியிருக்கிறபோது, மனிதன் உணர்ச்சி யற்றவனாயிருக்க முடியாது. ஆனால் அந்த உணர்ச்சிகளை ஒரு கட்டுப்பாட்டுக் குட்படுத்தி வைத்திருக்க வேண்டும்; வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நிதானமாக, அளவிட்டு வெளியிடவேண்டும். அப்பொழுதுதான் அவன் சுயநிலையிலிருந்து அதாவது மனிதத் தன்மையிலிருந்து பிறழாதிருப்பான். உணர்ச்சி வசப்படு கிறவன் தன் வசமிழந்து நிற்பது நிச்சயம். தவிர, உணர்ச்சிகளை வரம்பு மீறி வெளியிடுவதனால் நரம்புத்தளர்ச்சி, மூளைக்கோளாறு முதலிய நோய்கள் உண்டாகும், ஆகவே, உணர்ச்சிகளை ஓர் ஒழுங்குக்குட்படுத்தி வெளியிடுதல், ஒழுங்கான வேலைக்கு இன்றியமையாததாகும். ஒருவன் தான் செய்யவேண்டிய வேலையென்றும், பிறரைக் கொண்டு செய்விக்கின்ற வேலையென்றும், வேலையை இரண்டு பிரிவாகப் பிரித்துக் கொண்டு செய்தலும் செய்வித்தலும் நல்லது. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தால், ஒரு வேலையை முற்றும் முடியச் செய்தோம் என்ற திருப்தி உண்டாகாது. சில சமயங்களில் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியிருக்கும். அதனால் கவனப் பிசகு ஏற்படும். இறுதியில் கண்ட பலன் சலிப்புதான்; சோர்வுதான். ஆகவே, தான் செய்ய வேண்டிய வேலையென்றும் பிறரைக் கொண்டு செய்விக்கின்ற வேலையென்றும் இரண்டு பிரிவாக்கிக் கொள்ளுதல் நல்லது. இப்படிச் சில வழிமுறைகளைக் கையாண்டு ஒருவன் தான் அமைத்துக்கொண்ட வாழ்க்கை எப்பொழுதும் பசுமையுடையதாக இருக்கும்படி செய்து கொள்ளலாம்; இக்கரைக்கு அக்கரை பச்சையென்று மயங்கியிருக்கவேண்டாம். 2. உழைப்பும் பிழைப்பும் உழைக்காமல் பிழைக்க விரும்புகிறவன் சூடு சொரணை யில்லாதவன். தன் மானத்தை இழந்துவிட்டு உலவுகிற ஓர் உருவம். அவன் உடம்பில் வாசனை வீசினால் என்ன? அந்த உடம்பை பட்டுடையும், பொன்னாபரணமும் மூடிக்கொண்டிருந்தாலென்ன? முன்னோர்கள் சேமித்து வைத்த பொருட் குவியலில் அவன் புரண்டு கொண்டிருக்கலாம். பிச்சை கேட்பதற்குப் பதிலாக இச்சகம்பாடி வயிறு வளர்க்கும் சிலரால் அவன் எப்பொழுதும் சூழப்பட்டிருக்க லாம். ஆனாலும் அவன் மக்களுட் பதடி! வனத்திலே வசிக்கும் விலங்குகளும், வான வெளியிலே சஞ்சரிக்கும் பறவைகளும், நீரிலும் நிலத்திலும் முறையே நீந்தியும் ஊர்ந்தும் செல்கின்ற உயிரினங்களும், உண்பதற்கும் உறங்குவதற்கும் வகை தேடிக்கொள்ள ஓயாமல் உழைக்கின்றன. உழைப்பை மேற் கொள்ளாவிட்டால் அவை பிழைப்பு நடத்த முடியாது. இந்த உண்மையை உணருந்தன்மை அவைகளுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. அவைகளைக் காட்டிலும், உழைக்காமல் பிழைக்க விரும்புகிற மனிதன் எந்த விதத்தில் மேலானவன்? மேலானவன் என்று சொல்லிக் கொள்ள அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? பிழைப்பு என்பது என்ன? உண்டு உடுத்து உறங்குவதா? அப்படியானால் மேற்சொன்ன விலங்கினங்களும் பறவையினங்க ளும் உடுத்தாமற் போனாலும் உண்ணவும் உறங்கவும் செய்கின்றன. ஆம்; ஒழுங்காகச் செய்கின்றன. இந்த விஷயத்தில் கூட ஆறறிவு படைத்திருப்பதாகப் பெருமை பேசும் மனிதன் ஒழுங்கைக் கடைப் பிடிப்பதில்லை. வேளை கெட்டு உண்ணுகின்றான்; உறங்கு கின்றான். இதனால் நோய் வாய்ப்பட்டு உழல்கின்றான். உண்பதும் உறங்குவதுமே பிழைப்பு என்று முடிவு கட்டுவோ மானால், மேற்சொன்ன வகை மனிதனைக் காட்டிலும், அதாவது உழைக்காமல் பிழைக்க விரும்பும் மனிதனைக் காட்டிலும் விலங்கினங் களும் பறவையினங்களும் செம்மையாகவும் ஒழுங்காக வும் பிழைப்பு நடத்துகின்றன என்றே சொல்ல வேண்டும். எனவே, ஆறறிவு படைத்த மனிதனைப் பொறுத்த மட்டில், உண்டு உடுத்து உறங்குவது மட்டும் பிழைப்பாகாது. மானம் என்ற ஒன்றை மட்டும் விட்டு விட்டால், இந்த உணவு முதலியவற்றை அடைவது அரிதன்று. ஆனால் மானத்தை விட்டவன், தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றவன். மானத்தோடு பிழைப்பு நடத்த விரும்பும் ஒருவன், முதலில், தன்னம்பிக்கை யுடையவனாயிருக்க வேண்டும். அதாவது அவனுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும், சந்தேகத்திற்கோ, தடுமாற்றத்திற்கோ, தெளிவின்மைக்கோ இடந்தராமல் இருக்க வேண்டும்; மனச்சாட்சி ஏவுகிறபடி இருக்க வேண்டும். அப்படி அவன், அந்த ஏவலுக் கிசைந்தபடி சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லும், செய்கின்ற ஒவ்வொரு செயலும் பிறருடைய அறிவை யும் இதயத்தையும் தொடும். அந்தப் பிறரும், அவனுடைய சொல்லி லும் செயலிலும் நம்பிக்கை வைப்பர். தன்னம்பிக்கையிலிருந்து தன்மதிப்பு பிறக்கிறது. தன்மதிப் புடையவனைத்தான் பிறர் மதிப்பர். மதிப்பர் என்று சொன்னால், மாலை மரியாதைகள் செய்தோ, பட்டங்கள் சூட்டியோ, வேறு வகைகளிலோ அவனைக் கௌரவப்படுத்துவர் என்பது அர்த்த மில்லை; அவனுடைய நேர்மைக்குத் தலைவணங்குவர் என்பதே அர்த்தம். ஆகவே, தன்னம்பிக்கைதான் ஒருவனை மானமுள்ளவ னாக்குகிறது. மனிதன் என்ற சொல்லுக்கு, மானத்தோடு கூடியவன் என்பதுதான் பொருளாய் நிற்கிறது. மானத்தோடு பிழைப்பு நடத்த விரும்புகிறவன், உழைக்க வேண்டும்; ஆம்; ஓயாமல் உழைக்க வேண்டும். உழைப்பில் சலிப்புத் தோன்றக் கூடாது; ஊக்கம் நிறைந்திருக்கவேண்டும்; மற்றும், உறுதியோடும் உண்மையோடும் உழைக்க வேண்டும். உழைப்பின் விளைவாகக் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு நடைபெறும் பிழைப்புதான் உண்மையான பிழைப்பு; பிரதியொரு மனிதனும் நியாயமாக நடத்த வேண்டிய பிழைப்பு. ஊதியத்தை எதிர்பாராமல் உழைப்பது சிறப்புதான். ஆனால் எல்லாராலும் இது சாத்திய மில்லை. ஒரு சிலருக்குத்தான் இது சாத்தியம். இந்த ஒரு சிலரைச் சான்றோரென்று அறிவு உலகம் அழைக்கிறது. இவர்கள், காலம் நெடுக, உலகத்தின் பல பகுதிகளி லும் தோன்றி மக்களுக்கு வழிகாட்டி வந்திருக்கிறார்கள்; இனியும் தோன்றி வழி காட்டுவார்கள். இவர்கள் உழைப்பதையே பிழைப் பாகக் கொண்டு விடுகிறார்கள். அதில்தான் இவர்களுக்கு இன்பம் கிடைக்கிறது. இங்ஙனம் உழைப்பதற்காகப் பிழைப்பு நடத்துகிற ஒரு சிலரைத் தவிர, உலகத்து மக்களில் பெரும்பாலோர் பிழைப்பு நடத்துவதற்காகத் தான் உழைக்கிறார்கள்; ஊதியத்தை எதிர்பார்த்தே உழைக்கிறார்கள். ஊதியமில்லாமல் இவர்களால் பிழைப்பு நடத்த முடியாதல்லவா? ஊதியமென்பது ஒரு சிலருக்குப் பொன்னாகக் கிடைக்கலாம்; சிலருக்குப் பொருளாகக் கிடைக்கலாம். சிலர் அன்றாடக் கூலியாகப் பெறலாம்; சிலர் மாதச் சம்பளமாகப் பெறலாம். ஆயினும் எல்லாரும் உழைத்துப் பிழைக்க வேண்டிய வர்களே. உழைப்பிலே சிறுமை பெருமை இல்லை; கௌரவம் அகௌரவம் கிடையாது. ஒருவன் உடலைக்கொண்டு உழைக்கிறான்; இன்னொருவன் அறிவைக்கொண்டு உழைக்கிறான்; பிறிதொருவன் உடலையும் அறிவையும் சமபங்காகச் சேர்த்துக்கொண்டு உழைக்கி றான். அவனவனுக்கும் அவனவனுடைய உழைப்பின் தரத்துக்குத் தகுந்தபடி ஊதியம் கிடைக்கிறது. அதாவது உழைப்பில் எந்த அளவுக்கு அறிவு இடம் பெறுகிறதோ அந்த அளவுக்கு ஊதியத்தின் அளவும் கூடுதலாகவோ குறைச்சலாகவோ இருக்கிறது. ஊதியத்தில் வித்தியாசமே தவிர உழைப்பில் வித்தியாசம் இல்லை. ஆகவே எந்தவிதமான உழைப்பையும் இழிவாகக் கருதக்கூடாது; அலட்சியம் செய்யக்கூடாது. கவிதை இயற்றுவது எவ்வளவு பெருமை யுடைத்தோ அவ்வளவு பெருமை யுடைத்து நிலத்தில் உழுவது என்று எந்த இனத்தினர் கருத வில்லையோ அந்த இனத்தினர் வளம்பெற்ற வாழ்வை நடத்த முடியாது என்று கூறுகிறான், உழைப்பினால் முன்னுக்கு வந்த புக்கர் வாஷிங்டன்1 என்ற அமெரிக்க நீக்ரோ அறிஞன். எவ்வளவு உழைத்தாலும் பிழைப்பு நடப்பதில்லையென்று சிலர் குறைபடுகிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்பதை இவர்கள் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏதோ ஒரு குறைபாடு இருப்பதை உணர்வார்கள். இவர்கள், உழைப்பில் ஒழுங்கையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய ஊதியம் எப்படிக் கிடைக்கும்? பிழைப்பு எப்படி நடக்கும்? வாழ்க்கை பூராவும் முணு முணுப்பு தான்; சலிப்புதான். இப்படிப்பட்டவர்கள், பிறரைப் பார்த்துப் பொறாமை கொள்வார்கள்; எரிந்து விழுவார்கள். காலக்கிரமத்தில் கீழான எண்ணங்கள் பலவும் இவர்களிடம் தஞ்சம் புகும். ஆதலின் யாரும் எந்தவிதமான வேலையைச் செய்தபோதிலும் அதை சிரத்தையோடு செய்ய வேண்டும். அப்பொழுது தான் அந்த வேலை செம்மையுற விளங்கும்; எதிர்பார்க்கும் பலனையும் கொடுக்கும். உழைப்பினால் உடம்பு கெட்டுவிடும், சீக்கிரத்தில் கிழத்தனம் வந்துவிடும் என்று நினைப்பது தவறு. உண்மையில் உடம்பைப் பேணி வளர்ப்பது உழைப்புதான். முதுமையைத் தடுத்து நிறுத்துவது உழைப்பு தான். முதுமையைத் தடுத்து நிறுத்துவது உழைப்புதான். மனிதனுக்குக் கடவுள் அளித்திருக்கும் காயகல்பம் உழைப்பே யாகும். உழைப்பிலிருந்தே உடல் நலம் பிறக்கிறது; உடல்நலத்தி லிருந்து மன அமைதி உண்டாகிறது என்கிறான் ஓர் அறிஞன். மன அமைதி பெற்றிருக்கிறவர்கள் நீண்ட ஆயுளுடையவர் களாயிருக்கிறார்கள். சாதாரணமாக எண்பது வயதுக்கு மேற்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறவர்களுடைய வாழ்க்கையைப் பரிசீலனை செய்து பார்த்தோமானால் அவர்கள் எப்பொழுதும் ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கிறவர்களென்பது தெரியும். எறும்புபோல் எப்பொழுதும் சுறுசுறுப்பாயிருக்கிறபடியால், அவர்களைச் சிற்றின்ப உணர்ச்சிகள் நெருங்க அஞ்சுகின்றன. மற்றும், அவர்களைக் கவலை அணுகுவதில்லை. அற்பத்தனமான எண்ணங்கள் அவர்களுடைய மனத்தில் உதிப்பதில்லை. அற்பத்தனமான சொற்களை அவர்கள் செவிகள் ஏற்பதில்லை. அற்பத்தனமான செயல்களுக்கு அவர்கள் புறம்பானவர்களாயிருக் கிறார்கள். இவை காரணமாக அவர்கள் எப்பொழுதும் தேகாரோக்கிய முடையவர்களா யிருக்கிறார்கள்; மன அமைதியும் பெறுகிறார்கள். உழைப்பின் காரணமாகச் சீக்கிரத் தில் இறந்துபோனவர்களை உலகத்தில் காண்பது அரிது. உழைப்பை மேற்கொள்ளாதவர்கள், உடம்பின் மீது அதிக கவனஞ் செலுத்த வேண்டிய ஒரு சூழ்நிலையில் சிக்கிக் கொள்கி றார்கள். அப்படிக் கவனஞ்செலுத்தச் செலுத்த நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அந்த உடம்பை ஆட்டி அலைக்கழிக்கின்றன. இதை அனுபவத்தில் யாரும் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். ஆகவே, நோய்வராமல் தடுப்பதற்கு வழி உழைப்புதான். பொதுவாகவே மனிதன், வாழ்க்கையில் எத்தனையோவித இக்கட்டான நிலைமைகளில் வைக்கப்படுகிறான்; சூழ்நிலை காரணமாக அநேகவித கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமை யாகிவிடுகிறான்; வறுமைக்கு அஞ்சி அஞ்சிச் சாகிறான். இவைகளி லிருந்து விடுபட்டு நிற்பதற்கு அவனுக்கு ஒரே ஒரு வழி உண்டு. அதுதான் உழைப்பு. கடவுள், மனிதனைப் படைக்கிறபோது, அவன் உழைத்துப் பிழைக்க வேண்டுமென்ற நியதியைத் தான் அவனுக்கு முன்பாக வைத்தார். உழைப்பைக் கொண்டு அவன் இன்பவாழ்க்கை நடத்த வேண்டுமென்பது அவர் விருப்பம். அவருடைய விருப்பத்திற்கு மாறாக அவரால் படைக்கப்பட்ட மனிதன் நடக்கக் கூடாதல்லவா? உழைக்க விருப்பம் இருக்கிறது; உதவிசெய்ய நண்பர் எவரும் இல்லை என்று எவனேனும் சொன்னால், அவன், தன் சக்தியை உணராதவன் என்றுதான் சொல்லவேண்டும். அவனுடைய கைவிரல்கள் பத்தும் அவனுக்கு நண்பர்களாயிருந்து உதவி செய்யக் காத்திருக்கும் போது, அவன் ஏன் உதவியில்லை யென்று முணு முணுக்க வேண்டும்? அப்படி முணுமுணுத்துக் கொண்டிருப்பா னாகில், அவன் உழைப்பதற்குத் தயங்குகிறானென்பதே அர்த்தம். ஆதலின் மனிதனாகப் பிறந்த யாரும், உழைப்பின் மீது காதல் கொள்ள வேண்டும்; அப்படிக் காதல் கொள்வானாகில் அவனுக்கு ஆசா பங்கம் ஏற்படாது; வாழ்க்கையில் தோல்வி கிட்டாது; எந்தத்துறையில் தன் முழு உழைப்பையும் செலவிடுகிறானோ அந்தத் துறையில் அவனுக்கு வெற்றியுண்டாவது நிச்சயம். 3. படிப்பும் பண்பாடும் படித்தவர்களெல்லோரும் பண்பாடுடையவர்களென்று சொல்ல முடியாது. அப்படியே, பண்பாடுடையவர்களெல்லோரும் படித்தவர்களா யிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. படிப்பு வேறு; பண்பாடு வேறு. படிப்பாளி என்று சொன்னால், கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவன் என்றே இப்பொழுது நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அதாவது, பட்டதாரியே படிப்பாளியாக நமக்குத் தோற்றமளிக்கிறான். ஆனால் பட்டதாரிகளெல்லோரும் படிப் பாளிகள் என்று கருதுவதற் கில்லை. பட்டம் வேறு; படிப்பு வேறு. அந்நிய ஆட்சியின் ஆதிக்கத்திலிருந்து நாம் விடுதலை பெற்றுக் கொண்டு விட்டோம். ஆனால் அந்நிய நாகரிக மோகத்தி னின்று நாம் இன்னும் விடுதலைபெற வில்லை. அந்நிய ஆதிக்கத்தின் விளைவாக, நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட பலவித தழும்புகள் இன்னும் நம்மோடு ஒட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. சொல்லப்போனால், சுதந்திரம் கிட்டுவதற்கு முன்னாடி இருந்ததைக் காட்டிலும், பின்னாடி, இந்தத் தழும்புகள் அதிகமாகப் படர ஆரம்பித்திருக்கின்றனவோ என்றுகூடத் தோன்றுகிறது. ஆங்கிலம் பயின்றவர்கள் தான் படிப்பாளிகள் என்ற எண்ணம் இன்னும் நம்மைவிட்டுப் போகவில்லை. நம் நாட்டு மொழிகள் பல கற்றுத் தேர்ந்திருந்தாலும், ஆங்கில அறிவு பெறாது போனால் அவர்களை நாம் அதிகமாக மதிப்பதில்லை; நாகரிகம் தெரியாதவர், பண்பாடில்லாதவர் என்றுகூட அலட்சியமாகப் பேசி விடுகிறோம். இஃதொன்றே, அந்நிய நாகரிக மோகத்தினின்று நாம் இன்னும் விடுதலை பெறவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிற தல்லவா? அந்நிய ஆட்சி, தன்னை வழுத்திக் கொண்டிருக்கிறவர் களுக்கு, திவான் பகதூர், ராவ் பகதூர் போன்ற பட்டங்களை வழங்கி வந்தது. அந்தப் பட்டங்கள் அந்த ஆட்சியோடு மறைந்து போயின. அவற்றிற்கு இப்பொழுது மதிப்பில்லை. Mdhš mªj M£á f‰w fšÉia Ãiw ngh£L¡ fh£l ÃWÉa ã.V., v«.V., போன்ற பட்டங்கள் இன்னமும் நிலை பெற்றிருக்கின்றன. பார்க்கப் போனால் இவற்றின் மதிப்பு அதிகப்பட்டு வருகிறது. நம்முடைய சுதந்திர அரசாங்கமும், மற்றத் தொழில் தாபனங்களும், இந்தப் பட்டங்களுடையவர்களுக்கே முதல் தானம் கொடுத்து, இவர் களையே தங்கள் சேவையில் அமர்த்திக்கொள்ள விரும்பு கின்றன; இந்தப் பட்டங்களைக் கொண்டே இவர்களுடைய செயலாற்றும் திறமையைக் கணிக்கின்றன; இந்தப் பட்டம் பெற்றவர்களே பண்பாடுடையவர்கள் என்று கருதியும் விடுகின்றன. ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. இந்தப் பட்டங்கள் மீதுள்ள மோகம், அலுவலகங்களில் மட்டுமல்ல, குடும்பங்களிலும் பரவி வருகிறது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில், எம்.ஏ. பட்டம் பெற்றவனுக்கு ஒரு ரூபாய் மதிப்பென்றால், பி.ஏ. பட்டம் பெற்றவனுக்கு முக்கால் ரூபாய் மதிப்புதான். கூல் பைனலா? பூ! அவனுக்கென்ன தெரியும் என்ற கேள்வி. இதுமட்டுமல்ல; திருமணமாகாத பெண்பிள்ளைகள் பட்டதாரி களையே தங்கள் கணவன்மாராக வரிக்க விரும்புகின்றனர். அப்படியே ஆண் பிள்ளைகளும் பட்டதாரிகளான பெண்களே தங்களுக்கு மனைவி மாராக வாய்க்க வேண்டுமென்று கோருகிறார்கள். ஆனால் பட்டதாரி களாகி விட்டதனாலேயே குடும்ப தருமம் இன்னதெனத் தெரிந்து, அதன் படி நடந்து கொள்ளக்கூடிய தகுதி ஏற்பட்டுவிடுமா என்பதை பற்றி இருபாலரும் சிந்திப்பதில்லை. பட்டம், பணத்தையும் பதவியையும் தரும்; இவையிரண்டும் கிடைத்து விட்டால், கணவன்-மனைவி உறவு வலுப்பட்டு நிற்கும் என்று இப்படிக் கருதிவிடுகிறார்கள். இப்படிக் கருது வதற்குக் காரணம் கணவன்-மனைவி உறவை உடலுறவு என்னும் குறுகிய கட்டத்தில் வைத்துப் பார்ப்பதுதான். உண்மையில் ஆன்மிக உறவு என்ற ஒன்று இருக்கிறதென்பது இவர்களுக்குத் தெரிவதில்லை; தெரிந் தாலும் புரிவதில்லை; புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிராகவே அஃது இருந்து விடுகிறது. எவ்வித பட்டத்தின் மீதும் நமக்கு எவ்வித வெறுப்புமில்லை. ஆனால் அந்தப் பட்டமே படிப்பின் முற்றுப் புள்ளி என்று கருதப்படுவதையே நாம் விரும்பவில்லை. படிப்புக்கு முற்றுப்புள்ளி யிட முடியுமா? படிப்பின் உண்மையான பொருள் இன்னதென்று நாம் இன்னும் தெரிந்துகொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது. புத்தகங்களைப் படிப்பது படிப்பன்று; படித்த புத்தகங்களிலிருந்து பல பகுதிகளை நெட்டுருப் போட்டு ஒப்புவிப்பது படிப்பன்று; பிறர் எளிதிலே தெரிந்துகொள்ள முடியாத சில விஷயங்களைப் படித்தோ கேட்டோ தெரிந்து, அவற்றை மூளையின் ஒரு பக்கத்திலே பதுக்கி வைத்துக்கொண்டு, சமயம் வரும்போது, பிறர் மெச்சுதலை எதிர்பார்த்து வெளிப்படுத்துவது படிப்பன்று; இதயத்தை உலர்ந்து போகும்படி செய்துவிட்டு மூளையை மட்டும் செழுமைப்படுத்தி வைத்திருப்பது படிப்பன்று; பொருளையும் புகழையும் மட்டும் நாட்டமாகக் கொள்வது படிப்பன்று; மனித வாழ்க்கையைப் பற்றியோ கடவுள் நெறியைப் பற்றியோ அலங்காரமான பாஷையில் பேசக் கற்றுக்கொடுப்பது படிப்பன்று. அப்படியானால் எது படிப்பு? எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் ஒன்றுபடுத்திவிடுவது எதுவோ, மனிதனை மிருக நிலையினின்று தெய்வ நிலைக்கு அழைத்துச் செல்வது எதுவோ, மன்னுயிர்களைத் தன்னுயிராகக் கருதும்படி செய்வது எதுவோ, அஞ்சாமைக்கு ஆணி வேராய் அமைவது எதுவோ அதுதான் படிப்பு. சுருக்கமாக, பிரதியொரு மனிதனையும் சான்றோனாக்குவது தான் படிப்பு; அதுதான் கல்வி. படிப்பு, கல்வி என்ற இரண்டு சொற்களையும் இங்கு ஒரே பொருளில், விரிந்த பொருளில் பயன்படுத்தியிருக்கிறோம். சால்புடையவன் சான்றோன். சால்புடைத்தாயிருப்பது சான்றாண்மை. சால்பு என்ற சொல். மேன்மை, பண்பு, கல்வி என்ற பல பொருள்களைச் சுட்டிக்காட்டுகிறது. இதனால் சான்றாண்மை, மேலான தன்மையுடைமை, பண்புடைமை, கல்வியுடைமை ஆகிய எல்லாம் ஒன்றே யென்பது நிச்சயமாகிறது. இவற்றைப் பிரிக்க முடியாது; பிரிக்கவும் கூடாது. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கல்விமான், சான்றோன், பண்புடையவன், மேலோன் ஆகிய அனைவரும் ஒருவரேயாகின்றார். அப்படி யானால் தற்காலத்தில் கல்விமான்கள் என்றும் படிப்பாளிகள் என்றும் அழைக்கப்படும் பலரும் இந்த ஒருவராக இருக்கிறார்களா? இல்லையென்ற பதிலைத்தான் மனவருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. படித்தவன் யார்? படிந்தவன்தான் படித்தவன். அதாவது எவன் எந்த ஒன்றிலும் வரம்பிகந்த நிலைக்குச் செல்லாமல் நடுநிலையில் நிற்கிறானோ, எந்த ஒன்றையும் படிமான புத்தியுடன், அடக்கமான சுபாவத்துடன் பார்க்கிறானோ, எவரிடத்திலும் பழகுகிறானோ அவனே படித்தவன். தற்காலப் படிப்பு இந்தப் படிமான புத்தியை நல்கியிருக்கிறதா? பணிவிலே பெருமையுண்டு என்ற உண்மையை உணர்த்தியிருக்கிறதா? இங்ஙனம் நல்காத, உணர்த்தாத படிப்புக்குப் பட்டமென்னும் மெருகு கொடுக்கப்படுகிறது. இந்த மெருகைக் கொண்டு உள்ளிருக் கும் பொருளாகிய படிப்பை நிறை போட்டுவிடுகிறோம். இந்த நிலை மாற வேண்டும். சிலர் இருக்கிறார்கள், எந்த ஒரு பள்ளிக்கூடத்திலும் சேர்ந்து படிக்காதவர்கள். அவர்கள் வீட்டிலே எண்சுவடி கூட இராது. ஆனால் அவர்கள், அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்தும் கொண்ட சால்புடையவர்களாயிருக்கி றார்கள். அவர்களோடு சிறிது நேரம் பழகினாலும் அவர்களிடத்தில் நம்மையறியாமல் ஒருவித மதிப்பு உண்டாகிறது. இதற்குக் காரணம் என்ன? அவர்கள் உலகமென்னும் பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள்; கேள்விச் செல்வம் நிரம்பப் பெற்றவர்கள். அவர்கள் யாதானும் நாடாமால்; ஊராமால் என்ற நினைவிலே தோய்ந்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களைக் கல்லாதவர் கூட்டத்திலே சேர்த்து விடுகிறோம். இதற்குக் காரணம், பள்ளிப் படிப்புதான் படிப்பு, புத்தகப் படிப்புதான் படிப்பு என்ற எண்ணத்தில் நாம் ஊறிப் போயிருப்பதுதான். இந்த எண்ணத்திலிருந்தும் நாம் வெளிவர வேண்டும். இப்படிச் சொன்னதனால், பள்ளிப்படிப்பு, பட்டப் படிப்பு இவை களெல்லாம் வேண்டாமென்று நாம் சொல்வதாக யாரும் கருதிவிடக் கூடாது. இவை, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட, மனிதனுடைய சுயசிந்தனையைத் தூண்டிவிடக் கூடிய, அவனுடைய சுய சக்தியை வெளிப்படுத்தவல்ல படிப்புக்களாக அமைய வேண்டுமென்றும், அமையாத படிப்புக்கள் உருப்படியான பலனைக் கொடாவென்றும் தான் சொல்கிறோம். ஏதோ ஒருவிதமான அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்றுச் சுதந்திரமடைந்த எந்த ஒரு நாட்டு அரசாங்கமும், கல்வி முறையைச் சீர்திருத்தியமைப்பதையே தனது முதற் கடமையாகக் கொண்டிருந் திருக்கிறது. இதற்குக் காரணம் அடிமைத் தனத்தில் அதுகாறும் உழன்று கொண்டிருக்கும்படி செய்திருந்தது இந்தக் கல்வி முறையே யென்பதையும், அடிமைத்தனத்தின் தழும்புகள் அடியோடு மறைய வேண்டுமானால், கல்வி முறை அடியோடு மாற வேண்டுமென்பதையும் அந்த அரசாங்கம் உணர்ந்துவிடுகிறது; உணர்ந்து செயலாற்ற முற்படு கிறது; நாட்டின் பரம்பரை, கலாசாரம் முதலியவற்றை அடிப்படையாக அமைத்துக் கல்விப் போக்கை மாற்றுகிறது. அப்படி மாற்றியமைத்தால்தான், அரிதிற்பெற்ற சுதந்திரம் பறிபோகாமலிருக்கும் என்பதை அது நன்கு தெரிந்து கொண்டிருக்கிறது. 4. அறிவும் அன்பும் அறிவுக்கும் எல்லையில்லை; அன்புக்கும் எல்லையில்லை. ஆனால், இவ்விரண்டுமே மனித வாழ்க்கையைப் பிரகாசிக்கச் செய் கின்றன. இரண்டிலே ஒன்றில்லாவிட்டால் கூட வாழ்க்கை பூர்த்தி பெற்றதாக மாட்டாது. ஒருவன் பல நூல்களைப் படித்துப் பேரறிஞன் என்று பட்டம் வாங்கியிருக்கிறான். பதவியும் அவனுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அவன் இருதயம் ஈரமில்லாதிருந்தால் பிறர் துன்புறுவதைப் பார்த்து அவன் கண் கலங்காதிருந்தால், அவனுடைய அறிவு எதற்குப் பிரயோஜனம்? அதற்கு என்ன மதிப்பு? அப்படியே வேறொருவன் மற்றவர்களுடைய வருத்தத்தைப் பார்த்தோ கேட்டோ தானும் வருத்தப்படுகிறான். ஐயோ, ஜனங்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே யென்று த்ஸூ கொட்டுகிறான். ஆனால் அந்த ஜனங்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள், அந்தக் கஷ்டத்தை நிவர்த்திப் பதற்கு என்ன வழி என்பவைகளைப் பற்றி அவன் சிந்திப்பதில்லை; சிந்திப்பதற்குரிய சக்தியும் அவனுக்கு இல்லை. சிந்தனையே இல்லாதபோது, அவன் மேற்படி கஷ்டங் களைப் போக்க எப்படிப் பரிகாரம் தேடப் போகிறான்? வீட்டிலோ அல்லது எங்காவது ஒரு மூலைக் காட்டிலோ உட்கார்ந்துகொண்டு, ஐயோ பாவம்! Inah ght«! என்று அலறிக் கொண்டிருக்கலாம். அன்பின் காரணமாக அவன் அலறிக்கொண்டிருக்கிறா னென்பது உண்மையாயினும், அவனுடைய அன்புக்கு என்ன பயனுண்டு? காட்டுத் தீயிலே சமையல் செய்ய முடியுமா? அதைப் போல் அவனுடைய அன்பு யாருக்கேனும் ஆறுதல் அளிக்குமா? இதனைச் சில திருஷ்டாந்தங்களினால் விளக்குவோம். நாட்டிலே தொத்து நோய்கள் பரவியிருக்கின்றன. சரியான சிகிச்சை பெறாமல் ஜனங்கள் ஆயிரக் கணக்கில் மடிந்து போகிறார்கள். நாம் என்ன செய் கிறோம்? கோயில்களிலுள்ள கடவுளர்களுக்குப் பலியிடுகிறோம்; அவர்களைப் பூசை செய்கிறோம்; பிரார்த்திக்கிறோம். இதனோடு நமது கடமை முடிந்துவிட்டதாகத் திருப்தியடைகிறோம். இது நோயினால் அவதிப்படுகிறவர்களுக்கு எந்த விதத்தில் ஆறுதல்? இறந்து போகிற எத்தனை பேரை, நமது பிரார்த்தனை, யமலோகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்திருக் கிறது? சென்ற நூற்றாண்டில் இங்கிலாந்தில் லார்ட் பாமர்டன்1 என்ற ஓர் அறிஞன் பிரதம மந்திரியாக இருந்தான். இவன் காலத்தில் காலரா நோய் பரவி அநேக மக்களை இரையாக்கிக் கொண் டிருந்தது. எல்லோருக்கும் ஒரு வாரம் அல்லது ஒரு நாள் ரஜா கொடுக்க வேண்டுமென்றும், இந்த விடுமுறை நாட்களில் தாங்கள் கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்யப் போவதாகவும், ஜனங்கள் கேட்டுக் கொண்டார்கள். இவர்களுடைய வேண்டுகோளை மேற்படி பாமர்டன் நிராகரித்து விட்டான். கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்கிற நேரத்தில், உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள அழுக்குகளை யெல்லாம் அப்புறப்படுத்துங்கள் என்று கூறினான். இப்படிக் கூறியதன்மூலம் இவன் ஜனங்களின் அறியாமையை எடுத்துக்காட்டினான். அறிவில்லாத அன்புக்கு, வருகிற தீமையைத் தடுக்கும் சக்தி இராது. செயலற்றிருக்கிற ஒரு தோஷத்தைத்தான் இதற்குக் கற்பிக்க முடியும். ஆனால் அன்பில்லாத அறிவு இருக்கிறதே அது, தீமை களைச் சிருஷ்டிக்கும் சக்தியுடையது; செயலாற்றும் தோஷ முடையது. இதனால் தீமைகள் அதிகப்படுவதற்கு ஏதுவுண்டு. இரண்டுமே-அதாவது அறிவில்லாத அன்பும் அன்பில்லாத அறிவும்-தோஷமுடையவையே என்றாலும், இரண்டிலே எது அதிகமான தோஷமுடையது என்று பார்க்கிறபோது, அன்பில்லாத அறிவுதான் அதிக தோஷமுடையது என்று நிச்சயமாகக் கூறலாம். மற்றும் ஒருவனிடத்தில் உண்மையான அன்பு மட்டும் இருக்குமானால், அவன் அந்த அன்பை அனுஷ்டானத்திலே கொண்டு வந்து காட்டுவதெப்படி யென்பதைப் பற்றி ஆலோசிக்கி றான். அப்பொழுது அவனுக்கு அறிவின் துணை அவசியமா யிருக்கிறது. அதாவது அன்பானது அறிவைத் தூண்டி விடுகிறது. அப்படியே வேறொருவனிடத்தில் அன்பை அடிப்படையாகக் கொள்ளாத அறிவுமட்டும் இருக்கும்பட்சத்தில், அவன் அந்த அறிவை அனுஷ்டானத்துக்குக் கொண்டுவர அறிவின் துணையையே நாடுகிறான். அறிவு, அறிவை வளர்க்கும் தொழிலிலே ஈடுபட்டு விடுமானால், அஃது அன்பை அடியோடு இழந்துவிடுகிறது. கடைசியில் அந்த அறிவானது மனிதனைத் தூர்த்தனாக்கி விடுகிறது. ஏன்? கொலைக்களத்திலே கொண்டுவந்துகூட அவனை நிறுத்தி விடுகிறது. இதனால் அறிவைக் காட்டிலும் அன்பு சிரேஷ்டமான தென்று புலப்பட வில்லையா? இப்படிக் கூறியதனால், அறிவைப் புறக்கணித்து விட்டு அன்பை மட்டும் வளர்த்துக்கொண்டு செல்லவேண்டுமென்பது அர்த்த மல்ல. அப்படி நினைப்பது தவறு. பரீட்சார்த்தமாக இரண்டையும் ஒரு தராசிலே வைத்து நிறுத்துப் பார்த்தோமானால், எதனுடைய எடை சிறிது தூக்காக நிற்கும், எதனுடைய எடை சிறிது தாழ்வாக நிற்கும் என்பதைக் காட்டுவதற்காவே, மேற்கண்ட விதமாகப் பரிசீலனை செய்து காட்டினோம் ஆனால், இப்படி எடைபோட்டுப் பார்ப்பதே தவறு. அறிவும் அன்பும் எப்படி எல்லையில்லாதவையோ அப்படியே எடைபோட்டுப் பார்க்க முடியாதவை. எல்லையில்லாத ஒன்றை எப்படி எடை போட்டுப் பார்க்க முடியும்? அதற்கு அளவுகோல் ஏது? பூமியை எடைபோட்டுப் பார்க்க முடியுமா? ஆயினும், அது இத்தனை டன் நிறையுள்ள தென்று உத்தேசமாக ஒரு கணக்கு சொல்கிறார் களல்லவா? பூமியை நிறை போட்டுப் பார்க்க வேண்டியது அவ்வளவு அவசியமில்லை யாயினும், அப்படி நிறைபோட முடிந்தாலும் உத்தேசமான ஒரு கணக்கைத்தான் சொல்ல முடியுமென்பது தெரிந்திருந்தாலும், ஒரு மதிப்புக்காக, மற்றப் பொருள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு அனுகூலமாக இருக்கவேண்டுமென்பதற்காக இத்தனை டன் நிறையுடையதென்று கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள். அதைப் போல், அறிவினாலும் அன்பினாலும் முறையே அடையக்கூடிய அனுகூலப் பிரதிகூலங்களை நன்கு தெரிந்துகொள்வதற்காகவே, இரண்டையும் கற்பனையான ஒரு தராசிலே வைத்து நிறுத்திக் காட்டினோம். ஆனால், மேலே சொன்னபடி மனிதனுடைய நல் வாழ்வில் இரண்டும் தேவை யென்பதை மறுபடியும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம். இரண்டிலே ஒன்றுமட்டும இருந்து மற்றொன்றில்லாத வாழ்க்கை, ஒற்றைக் கண் மட்டும் இருக்கிற முகம் மாதிரி. அன்பில்லாத அறிவு, தீமைகளை உற்பத்தி பண்ணும் என்று மேலே கூறினோம். அப்படியே அறிவில்லாத அன்புக்குச் செயலற்ற ஒரு தோஷத்தைக் கற்பித்து அதனால் அஃது அறிவைக் காட்டிலும் உயர்ந்த தென்று கூறினோம். இப்படிச் சொல்வது ஒரு பக்கத்துக் கட்சியை எடுத்துச் சொன்ன மாதிரிதான் ஆகும். அறிவில்லாத அன்புக்குத் தீமைகளைத் தடுக்கும் சக்தியில்லாத ஒரு தன்மை உண்டு என்று சொன்னதனாலேயே, அது, தன்னுடைய தூண்டுதலோ, முயற்சியோ இல்லாமலேயே தீமை களைவளர்க்கிற தென்று அர்த்தமாகவில்லையா? நன்மைகளை வளர்க்க வேண்டுமே தவிர, தீமைகளை வளர்க்கக்கூடாது. பயிர்களை வளர்க்க வேண்டும்; களைகளைப் பிடுங்கவேண்டும். அதுமட்டுமல்ல; பயிர்கள் செழுமையாக வளரவேண்டுமானால், களைகளைக் கட்டாயம் பறித்தேயாகவேண்டும். சிஷ்டர்களைப் பரிபாலனம் செய்வதற் காகத் துஷ்டர்களை நிக்ரகம் செய்தே யாகவேண்டும். அதே போல், நன்மைகள் வளரவேண்டுமானால் தீமைகளை வளரவொட்டாமற் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், நன்மைகளை வளரவொட்டாமல் செய்தவர் களாவோம். எனவே தீமைகளைத் தடுத்து நிற்பதுமட்டும் போதாது; அவை களை வளரவொட்டாமல் அழிக்கவும் வேண்டும். அப்படி அழிக்காம லிருப்பது குற்றம்; செய்ய வேண்டிய கடமையைச் செய்யாத குற்றம். அதுபோல் அறிவில்லாத அன்பானது, வருகிற தீமைகளைத் தடுத்து நிற்கும் செயலற்ற ஒரு தோஷமுடையதாக மட்டும் இருக்கிறதென்று சொன்னால் அது பெரிய குற்றத்தைச் செய்த தாகவே ஆகிறது. ஏனென்றால், அது தீமைகள் வளர்வதற்கு இடங்கொடுத்து விடுகிற தில்லையா? இதனை, நமது அன்றாட வாழ்க்கையிலே ஏற்படுகிற அனுபவங்களை கொண்டே பார்ப்போம். ஒரு தாய் இருக்கிறாள். அவளுக்கு ஒரே மகன். அந்த ஒரு மகன் பேரில் அவளுக்கு அளவில்லாத அன்பு இருக்கிறதென்றால், அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? ஆனால், அந்த அன்பின் மிகுதியினால் அவள் தன் மகனை அறிவோடு வளர்க்க வேண்டு மென்பதை மறந்து விடுகிறாள். பாலும் சோறும் ஊட்டுகிறாள்; வெயிலிலே காயவேண்டாம், மழையிலே நனையவேண்டாம், இருட்டிலே போக வேண்டாம் என்றெல்லாம் சொல்லி, வாழ்க்கை யென்பது மேடு பள்ளங்களுடையது, சுகதுக்கங்கள் கலந்தது என்ற உண்மையை அவனுக்குக் காட்டாமலேயே வளர்த்துவிடுகிறாள். முடிவு என்ன? அவனிடத்திலேயுள்ள மேலான தன்மைகளெல்லாம் அடங்கிப்போய், கீழான தன்மைகளெல்லாம் வளர்கின்றன. இந்த வளர்ச்சியின் காரணமாக, அவன் கோழையாகவோ அல்லது கொடுமை நிறைந்தவனாகவோ ஆகிவிடுகிறான். கடைசியில் தன்னைப் பெற்று வளர்த்த தாயையே அலட்சியப்படுத்துகிறான்; அவமானப்படுத்துகிறான்; மனம் நொந்தோ அல்லது வேறு காரணத்தினாலோ, அவள் இறந்துபடுவதற்கும் காரணமாயிருக்கி றான். இதனை அநேக குடும்பங்களில் நாம் நன்றாகப் பார்க்கிறோம். இதனின்று தெரிவது என்ன? அறிவில்லாத அன்பு, அந்த அன்புக்கே ஆபத்தாக முடிகிறது. அதாவது அன்பு, அந்த அன்பின் அழிவுக்கே காரணமா யிருக்கிறதென்று தெளிவாகிற தில்லையா? இனி, அறிவையும் அன்பையும் தனித் தனியாகப் பிரித்து வைத்துக்கொண்டு ஒவ்வொன்றின் தன்மைகளைப் பற்றியும் சிறிது ஆராய்வோம். அறிவு இருக்கிறதே அது கூர்மையான கத்தி மாதிரி. அதனை நல்லதுக்கும் உபயோகிக்கலாம், கெட்டதுக்கும் உபயோ கிக்கலாம். ஆனால், நல்லதுக்காக உபயோகிக்கிற அறிவுதான் அறிவு; கெட்டதுக்காக உபயோகிக்கிற அறிவை, அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி நாற்றம் என்ற சொல்லை நல்ல வாசனைக்குத்தான் சொல்லவேண்டுமே தவிர, கெட்ட வாசனைக்குச் சொல்லக்கூடாதோ, ஆனால் எப்படி அதற்கு விரோதமாகக் கெட்ட வாசனையைத்தான் நாற்றம் என்று சொல்கிறோமோ அதைப்போல், இப்பொழுது உலக விவகாரங்களில் அநியாயமான முறையில் ஒரு காரியத்தைச் செய்தால், அல்லது பிறருக்குத் தெரியாமல் திருடுதல் முதலிய குற்றங்களைச் செய்து, அந்தக் குற்றங்களுக்கான தண்டனை யைப் பெறாமல் சாமர்த்தியமாகத் தப்பித்துக்கொண்டால், அல்லது அர்த்தமில்லாதவார்த்தைகளை ஓட்டைக் குழாயிலிருந்து வரும் தண்ணீர்போல் கொட்டிக்கொண்டிருந்தால், அல்லது யார் வயிற்றிலே அடித்தாவது பணஞ் சம்பாதித்துச் சேர்த்தால், அப்படிச் செய்கிறவனை அறிவுள்ளவன் என்று கூறுகிறோம்; அவனைப் பாராட்டவும் செய்கிறோம். இது தவறு. எப்படிக் கூர்மையான கத்தி, கொலைக் கருவியாக இல்லாமல் செடி கொடிகளை நறுக்குவதற் கும் புண்ணை அறுப்பதற்கும் இருக்கிறதோ அப்படியே அறிவானது நல்லதைச் செய்வதற்காக ஏற்பட்டிருக்கிறதே தவிர, கெட்டதைச் செய்வதற்காக அல்ல. அப்படிக் கெட்டதைச் செய்யுமானால் அது அறிவல்ல. அறிவு, அறிவாகவே இருக்கவேண்டும்; அதாவது எப்படி இருந்தால் அறிவு லட்சணமாயிருக்குமோ அப்படி யிருக்க வேண்டும் என்பதற்காகவே. அந்த அறிவுக்கு அடிப்படையில் அன்பு இருக்க வேணடுமென்று சொல்கிறோம். அறிவு, அதிகாரத்திலே மோகமுடையது; புகழ்ச்சியிலே விருப்பமுடையது; துணிச்சலுடையது; தனது சக்தியிலே எல்லை மீறிய நம்பிக்கையுடையது; அதன் பயனாக அநேக சமயங்களில் ஆபத்திலே சிக்கிக் கொண்டுவிடுகிறது. ஆகவே, அறிவு பிரயோஜனப் படக்கூடியதாக இருக்கவேண்டுமானால், அது வேறு ஏதேனு மொன்றின் துணையோடு கூடியதாய் இருக்க வேண்டும்; தரும மென்பதை லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். அறிவு வெண்மை நிறமுடையதென்று சொல்வார்கள். இதனாலேயே அறிவின் அதி தேவதையாகிய சரவதியை வெள்ளைக் கலையுடுத்தி, வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் என்று கவிஞர்கள் வர்ணிக்கிறார்கள். வெண்மை, தூய்மைக்கு அடையாளம். அதாவது அறிவுடையவர் கள் தூய்மையுடையவர்களாக இருப்பார் களென்பது மரபு. தூய்மையென்றால் புறத் தூய்மையல்ல; அகத்தூய்மை. ஆனால் அறிவானது, இப்படி வெண்மை நிறமுடையதா யிருப்பதிலே ஓர் ஆபத்தும் உண்டு. அதில் ஒரு சிறு கறைபட்டால் கூட, அது பளிச்சென்று தெரியும். இதனால் அதன்மீது எவ்வித அசுத்தமும் படியாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்படி ஏதேனும் ஒரு சிறு அசுத்தம் படிந்துவிடுமானால், அஃது அந்த வெண்மையினின்று மாறிவிடுகிறது. அதனைத் தூய வெண்மை என்று சொல்ல முடியாது. அப்படியே அறிவு சுத்த அறிவாயிருக்க வேண்டுமானால், அது வேறு எவ்வித அசுத்த குணங்களோடும் சம்பந்தப்படாததாய் இருக்க வேண்டும். அறிவு, முதுமைக்கு விரோதி; இளமைக்குத் தோழன். தலை நரைத்த, உடல் தளர்ந்த கிழவர்கள் அதனை சிரத்தையோடு நாடுவார்களானால், அவர்களை அஃது ஆதரிக்கிறது; அவர்களைப் புதிய உலகத்துக்குக் கொண்டுபோய் விடுகிறது; இதுகாறும் பெற்றிராத ஒரு கௌரவ தானத்தை அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கிறது. இங்ஙனம் வயதிலே முதிர்ந்தவர்கள் அதனை நாடுகிறபோது, இடையிடையே மறதி என்கிற திரை விழலாம். ஆனால், சிரத்தையென்கிற விளக்கை மட்டும் அவர்கள் எடுத்துச் செல்வார்களானால், அந்தத் திரை தானாகவே விலகிவிடும்; அறிவைக் காண்பார்கள்; அந்த அறிவும் அவர்களுக்குத் தரிசனம் கொடுக்கச் சந்தோஷமாகக் காத்துக்கொண்டிருக்கும். அறிவானது ஏன் முதுமைக்கு விரோதியாயிருக்கிறது, ஏன் இளமைக்குத் தோழனாயிருக்கிறது என்று சிலர் கேட்கலாம். ஏனென்றால், அதுவே, அந்த அறிவே, இளமையுடையது; வளருந் தன்மையது. கிரேக்கர் களின் அறிவுத் தெய்வமாகிய அத்தீனே1 அழியாத கன்னிகையென்றே வர்ணிக்கப்பட்டிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. இப்படி மாறாத இளமையுடைய அறிவை நாடுகிறவர்கள் என்றும் இளமை யுடையவர்களா யிருப்பார்கள்; எப்பொழுதும் சுறுசுறுப்பா யிருப்பார்கள். அறிவு, சோம்பலுக்குச் சத்துரு; நித்திரைக்கு விரோதி. இனி, அன்பைப் பற்றிச் சிறிது ஆராய்வோம் அன்பை மூடுபனிக்கு ஒருவாறு ஒப்பிடலாம். எப்படி யென்றால், ஒரு பொருளினிடத்திலோ அல்லது ஒரு ஜீவப் பிராணியினிடத்திலோ அல்லது நம்மைப் போன்ற ஒரு மனிதனிடத்திலோ நாம் அன்புசெலுத்துகிறோம். அப்படி நாம் செலுத்துகிற அன்பு நம்மை யறியாமலே நம்மிடத்தில் உண்டாயிருக்கிறது. ஏன் குறித்த ஒரு பொருளிடத்தில் அல்லது குறித்த ஒரு மனிதனிடத்தில், மற்றப் பொருள்களை அல்லது மனிதர்களைப் புறக்கணித்து விட்டுக்கூட அன்பு செலுத்துகிறோம் என்ற காரணம் நமக்குத் தெரிவதில்லை. இருந்தும் அன்பு செலுத்துகிறோம். அப்படி அன்பு செலுத்துகிற போது, குறித்த அந்தப் பொருளினிடத்தில் அல்லது மனிதனிடத்தி லுள்ள குறைகள் ஒன்றும் நமக்குத் தெரிவதில்லை. நம்முடைய அன்பானது, நமக்கும் அவர் களுக்கும் மத்தியில் மூடுபனிமாதிரி இருந்துகொண்டு, அவர்களுடைய குறைகளை மறைத்துக் காட்டுகிறது. உதாரணமாக, நமது குழந்தை துஷ்டத்தனம் செய்கிறது; அதனால் மனக் கஷ்டமும் பொருள் நஷ்டமும் உண்டாகின்றன. இருந்தாலும், அவைகளை நாம் பொருட்படுத்துவ தில்லை. குழந்தையின் மீதுள்ள அன்பு காரணமாக அதனை மிகவும் துட்டியென்றும் புத்திசாலியென்றும் பல படச் சொல்லிக்கொண்டு சந்தோஷப்படுகிறோம்; இப்படிப்பட்ட பிள்ளை நமக்குப் பிறந்ததே யென்று பெருமையும் அடைகிறோம். இதே பிரகாரம் அயலார் வீட்டுப் பிள்ளை யொன்று துஷ்டத்தனம் செய்யட்டும். அப்பொழுது நாம் அதனைச் சகித்துக்கொண்டிருக்கிறோமா? நமக்கு எவ்வளவு கோபம் வருகிறது! இதற்குக் காரணம் என்ன? அந்தக் குழந்தையி னிடத்தில் நமக்குள்ள அன்புக் குறைவுதான். இதனாலேயே அன்பானது பனிப் படலம் மாதிரி இருந்து மற்றவர்களுடைய குறைகளை நமக்கு மறைத்துக் காட்டுகிறது என்று மேலே கூறினோம். இன்னொரு பாகத்தைப் பார்ப்போம். நவீன கால யுத்தங்களில், மனிதனுடைய அறிவானது விஞ்ஞான சாதிரமென்கிற விருட்சத் தின் உச்சாணிக் கிளையிலே ஏறிக்கொண்டு புதிய புதிய கருவிகளைக் கண்டு பிடித்து நிரபராதிகளான ஜனங்களின்மீது பிரயோகிக்கிறது. அறிவுடைய இந்த விஞ்ஞான சாதிரிகளுக்குத் தங்கள் சகோதர மனிதர்களிடத்தில் உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில், அவர்கள் தங்களுடைய மேமான அறிவை, அந்தச் சகோதர மனிதர்களைக் கொல்வதற்கு உபயோகிப்பார்களா? அவர்கள்-அந்த விஞ்ஞான சாதிரிகள் - யுத்தகளத்துக்கு நேரடியாக வந்து ஜனங்களைக் கொல்லவில்லை யென்பது உண்மையே யானாலும், அவர்கள்தானே யுத்த களத்திலே ஆயிரக்கணக்கான போர்ச் சேவகர்கள் மடிவதற்கும், யுத்தத்தில் எந்த விதத்திலும் சம்பந்தப் படாத, யுத்தத்தின் காரணத்தைக்கூட அறியாத, தொட்டிலிலே தூங்குகிற குழந்தை முதல், தடியூன்றிச் செல்கிற கிழவர் வரை பலகும் திடீர் திடீரென்று குண்டுபட்டோ வேறெக் காரணத்தினாலோ இறந்து போவதற்கும் காரணர்களாயிருக்கிறார்கள்? எனவே, அறிவில்லாத அன்பும், அன்பில்லாத அறிவும் அழிவையே உண்டுபண்ணும் என்பது தெரிகிறது. ஆனால், இந்த அறிவு, அன்பு என்ற இரண்டை மட்டும் தனியாகப் பிரித்து இவை யிரண்டிலே எது சிரேஷ்டமானது என்று கேட்பீர்களானால், அன்புதான் சிரேஷ்டமானது என்று நாம் நிச்சயமாகக் கூறுவோம். அன்புக்கு முதல் தானமும் அறிவுக்கு இரண்டாவது தானமுமே கொடுப் போம். சாதாரணமாக, ஒரு பொருளின்மீது இரண்டு காரணங்களுக்காக அன்பு செலுத்துவ துண்டு. ஒன்று அழகுக்காக; மற்றொன்று உபயோகத்துக்காக. உதாரணமாக, கன்னியாகுமரியை எடுத்துக் கொள்வோம். முக்கடலும் ஒன்று கூடும் இந்த இடம் பார்வைக்கு மிக அழகாயிருக்கிறது. இந்த இடத்திலே நின்று கொண்டு சூரியோதயத்தையோ சூரியா தமனத்தையோ பார்த்துக்கொண்டிருந்தால், நம்மை யறியாமலேயே நமக்கு ஒருவித புளகாங்கிதம் உண்டாகிறது; ஒருவித மனச்சாந்தி ஏற்படுகிறது. இதனால் இந்த இடத்தின்மீது நமக்கு அன்பு ஏற்படுகிறது; அடிக்கடி இந்த இடத்தை வந்து பார்க்கவேண்டு மென்று ஆசைப்படுகிறோம். எனவே, இந்த இடத்து அழகானது இந்த இடத்தின்மீது நமக்கு அன்பு உண்டாவதற்குக் காரணமாயிருக்கிறது. இரண்டாவது, இந்த இடத்துக்குச் சென்று சிறிது காலம் வசித்தால், நமக்கு நல்ல தேகாரோக்கியம் ஏற்படுகிறது. இந்த உபயோகத்துக்காக இந்த இடத்தின் மீது நமக்கு அன்பு உண்டாகிறது. இதேமாதிரிதான், ஜீவப்பிராணிகள், மனிதர்கள் ஆகியவர்கள் விஷயத்திலும். ஆனால், பொதுவாகப் பார்க்கப் போனால், பொருள்களிடத்தினிலுள்ள அழகுக்காக அவைகளின் மீது அன்பு செலுத்துகிறோம்; ஜீவப்பிராணிகள், மனிதர்கள் முதலியோர் விஷயத்தில், அவைகளின் அல்லது அவர்களின் உபயோகத்துக்காக அன்பு செலுத்துகிறோம். சுவரில் படம் மாட்டியிருக்கிறது. அதைத் தினம் தூசு படாமல் துடைக்கிறோம்; கீழே விழாமல் ஜாக்கிரதையாகப் பாதுகாக் கிறோம் ஏன்? அதிலுள்ள அழகானது அதன் மீது நம்மை அன்பு செலுத்தச் செய்கிறது. சரி; வண்ணான் கழுதைமீது அன்பு செலுத்துகிறான். ஏன் அதனுடைய உபயோகத்துக்காக; அதனுடைய அழகுக்காக அல்ல. இவ்விதம் இந்த இரண்டுவித காரணங்களுக்காக அன்பு செலுத்துவதென்பது சாதாரணம் என்றுதான் சொல்லவேண்டும். இவைகளுக்கு விசேஷ மதிப்புக் கொடுக்க முடியாது. எவ்வித காரணத்துக்காகவுமில்லாமல், எவ்வித பிரயோஜனத்தையும் எதிர் பாராமல், அன்புக்காகவே அன்பு செலுத்துவதிருக்கிறதே அதுதான் விசேஷம்; அதுதான் மேலான அன்பு. வெள்ளம் வந்து ஊரை அடித்துக் கொண்டு போய்விடுகிறது. ஜனங்கள் வீடு வாசலின்றித் தவிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் உதவி செய்கிறோம். காரணம் அவர்கள்மீது நமக்குள்ள அன்புதான். இந்த அன்பு, ஜனங்கள் இப்படித் தவிக்கிறார்களே என்ற இரக்கத்தினால் உண்டானதே தவிர, இந்த ஜனங்களிடமிருந்து எவ்வித பிரதிப் பிரயோஜனத்தையும் எதிர் பார்த்தல்ல; இந்த ஜனங்கள் பின்னாடி நமக்கு உதவி செய்வார்களே யென்ற எண்ணத்தினாலுமல்ல. இவ்விதம் அன்புக்காக அன்பு செலுத்துவது விசேஷந்தான். ஆனால், இதைவிட மேலான அன்பு ஒன்று இருக்கிறது. அன்பு செலுத்துவத னால் துன்பம் உண்டாகி, அந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டே அன்பு செலுத்துவது இருக்கிறதே, அதுதான் முதல்தரமான அன்பு என்று சொல்வதற்குரியது. உதாரணமாக, குஷ்டரோகிகளுக்குச் சிகிச்சை செய்கிற தொண்டிலே ஒருவன் ஈடுபடுகிறான். அதற்கு எவ்வளவு சகிப்புத் தன்மை வேண்டும்? இந்தத் தொண்டிலே ஈடுபட்டதன் விளைவாக அவனுக்கே அந்தக் குஷ்டநோய் வந்துவிடுகிறது. இப்படித் தனக்கு நோய் வரக்கூடும் என்று அவனுக்கு ஏற்கனவே தெரியாத தன்று. ஆயினும், துணிந்தே அவன் இந்தத் தொண்டிலே இறங்கினான்; இறங்கி, இந்தக் கொடிய நோயையும் வருவித்துக்கொண்டான். இப்படி நோயை அனுபவித்துக்கொண்டே மற்ற நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்து கொண்டு வருகிறான். இதுவல்லவோ உயர்ந்த அன்பு? தான் அன்பு செலுத்துவதன் விளைவாக மற்றவர்கள் இன்பம் அடைகிறார்களே, அந்த இன்பத்திலேதான் இவன் இன்பம் அடைகிறான்; தனது துன்பத்தையும் மறக்கிறான். ஆகவே, தனது சொந்தத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு, அல்லது அவைகளை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதுதான் முதல்தர அன்பு; மற்றவர்களுக்கு உதவி செய்வதனால் ஒருவித சந்தோஷம் உண்டாகிறது, ஒருவித மனச்சாந்தி ஏற்படுகிறது என்பதற்காக உதவி செய்வது இரண்டாந்தர அன்பு; அழகை நாடியோ, உபயோகத்தைக் கருதியோ அன்பு செலுத்துவது மூன்றாந்தர அன்பு. பலனை எதிர்பார்த்து அன்பு செலுத்துவது அதமம்; பலனை எதிர்பாராமல் ஆனால் சந்தோஷம் உண்டாகிறது என்ற காரணத்துக்காக அன்பு செலுத்துவது மத்திமம்; அன்பு செலுத்துகிறோமென்ற எண்ணமில்லாமலே அன்பு செலுத்துவது, துன்பத்தை அனுபவித்துக்கொண்டாவது அன்பு செலுத்துவது உத்தமம். ஒருவனுக்கு அறிவும் இருக்கலாம்; அன்பும் இருக்கலாம். அவைகளைப் பயன்படுத்துகிற விதத்திலேதான் அவை பிரகாசிக் கின்றன. எவனுடைய வாழ்க்கையிலே இவ்விரண்டும் பிரகாசிக்கின் றனவோ அவனுடைய வாழ்க்கைதான் நல்வாழ்க்கை. அன்பினால் ஊக்கப் பெறுவதும், அறிவினால் நடத்தப் பெறுவதும் எதுவோ அதுவே நல்வாழ்க்கை என்று ஓர் ஆங்கில அறிஞன் கூறியிருப்பது இங்குச் சிந்திக்கத்தக்கது. 5. வெற்றியும் வாழ்க்கையும் வெற்றியென்பது என்ன? தோல்வியின் மறுபுறம்; லட்சக் கணக்கான மக்கள் நாட்கள் கணக்கில் அனுபவித்துவந்த பிரிவாற் றாமை, மனோவேதனை முதலியவைகளைத் தற்காலிகமாக மறைத்து வைக்கின்ற திரை; சிவந்த ரத்தம், உஷ்ணமான கண்ணீர் இவைகளின் மீது கொப்பளித்து எழுகின்ற நுரை; சோர்வு, பிணி, பஞ்சம் முதலியவை களை முதுகிலே மூட்டையாகச் சுமந்துகொண்டு வருகின்ற தூதன்; யுத்த ஆபத்தில் ஜனங்களுக்கு என்ன ஆவேசம் இருந்ததோ அந்த ஆவேசமானது, யுத்தத்தின் முடிவில் ஆத்திரமாகத் தங்கள்மீது திரும்பிவிடாமலிருக்க ராஜதந்திரிகள் உபயோகிக்கிற மாத்திரைக் கோல். வெற்றியினால் ஒரு ஜாதியினுடைய அல்லது ஒரு தேசத்தி னுடைய சுதந்திரம் காப்பாற்றப்பட்டு விட்டது என்று சொல்கி றார்கள். ஆனால் இந்த வெற்றிக்காக, எத்தனை பேருடைய, மனிதத் தன்மையும் மனச்சாட்சியும் படைத்த எத்தனை பேருடைய சுதந்திரம் பறிமுதல் செய்யப்படுகிறது? வெற்றிக்குப் பிறகு அநேகரைச் சிறையிலிருந்து விடுதலை செய்கிறார்கள். ஆனால் இந்த வெற்றிக்கு முன்னர், வெற்றி காண்பதற்காக எத்தனை பேரைச் சிறையி லடைத்து வைக்க வேண்டியிருக்கிறது? ஒரு ஜாதியினுடைய அல்லது தேசத்தினுடைய வெற்றியின் தன்மைகள், வெற்றிக்கு முன்னர் நிகழ்த்தப்படுகின்ற காரியங்கள், வெற்றிக்குப் பின்னர் நிகழ்கின்ற விளைவுகள் இவை. இவை இருக்கட்டும். ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் வெற்றி என்பதற்கு என்ன அர்த்தம், அதற்கு ஏதேனும் லட்சணம் உண்டா என்பவைகளைப் பற்றிக் கவனிப்போம். வெற்றியென்பதற்கு உருவம் கற்பிக்க முடியாது; ஆனால் அது வாழ்க்கையின் தள்ளுகட்டை. அதனுடைய தானம் எப்பொழுதுமே கடைசியில்தான். ஆனால் மனிதனுடைய வாழ்க்கையை ஆரம்பித்துக் கொடுப்பதும் அதுதான். அது, மனிதனிடத்திலே அடங்கிக் கிடக்கிற சக்திகளைக் கிளப்பிவிடுகிறது; எத்தனை இடையூறுகள் வந்தாலும் அவைகளைச் சமாளித்துக் கொள்ளக்கூடிய உடல் வலிமையையும் உள்ளத்திண்மையையும் அளிக்கிறது; மனிதனை, அவனுடைய கடமையிலே கண்ணுங் கருத்துமாயிருக்கச் செய்கிறது. முடிவிலே ஏற்படக்கூடிய சுகதுக்கத்தையோ, லாப நஷ்டத்தையோ பற்றி அது கவலைப்படுவதில்லை. வெற்றி யென்பதற்கு இன்னதுதான் அர்த்தம் என்று நிர்ணயித்துச் சொல்ல முடியாது; அல்லது அதனுடைய லட்சணம் இன்னது என்று சொல்லினால் சித்திரித்துக் காட்டவும் முடியாது. ஒருவனுடைய வாழ்க்கையில் வெற்றியாயிருப்பது மற்றொருவ னுடைய வாழ்க்கையில் தோல்வியாயிருக்கலாம். வைத்தியத் தொழிலில் பயிற்சி பெறுகிற இருவர்களில் ஒருவன், கிராமத்திலே சென்று ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்வதிலும், அமைதியான வாழ்க்கையை நடத்துவதிலும் திருப்தி காண்கிறான். இன்னொருவன், சந்தடியும் போட்டியும் நிறைந்த நகரத்திலே தன் தொழிலைத் தொடங்கி, ஏராளமான பொருள் சம்பாதிக் கிறான்: தூக்கத்திலும் ஓய்வு காணாமல் சதா அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருப்பதிலும், பலரோடு கலந்து வாழ்வதிலும் திருப்தி காண்கிறான். நகர வைத்தியன் என்ன சொல்லக்கூடும்:- முட்டாள், என்னைப் போல்தான் இவன் பரீட்சையில் தேறினான். நகரத்தில் எங்காவது ஒரு மூலையில் தன் தொழிலை ஆரம்பித்திருந்தால் என்னைப்போல் ஆயிரக் கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்க லாம். அதை விட்டுவிட்டு, எங்கோ கிராமத்திலே போய் இருந்து கொண்டு, ஏழை மக்களுக்குத் தொண்டு செய்கிறானாம். இவன் படித்து என்ன பிரயோஜனம்? ஒரு பைசா சம்பாதிக்க யோக்கியதை இல்லை. என்னவோ இவன் வாழ்க்கை ஒரு தோல்வி. இப்படி, இப்படி. நாட்டு வைத்தியன் நகர வைத்தியனைப் பார்த்துச் சொல்லக் கூடும்:- ஏன் இவன் இப்படிப் பேயாய் அலைந்து திரிகிறான்? ஒரு நிமிஷமாவது இவனுக்கு ஓய்வு இருக்கிறதா? மன நிம்மதியோடிருக் கிறானா? படித்தும் பணம் சம்பாதித்தும் என்ன பிரயோஜனம்? இவன் வாழ்க்கையே ஒரு தோல்விதான். இப்படி, இப்படி. இவர்களில் வெற்றியடைந்தவர் யார், தோல்வி யடைந்தவர் யார் என்று எப்படி நிர்ணயித்துச் சொல்வது? முடியவே முடியாது. வெற்றி தோல்வியென்பது, அவரவர்களுடைய மனோ பரிபக்கு வத்தை யொட்டி யிருக்கிறது; வாழ்க்கையின் எந்தத் துறையிலே பிரவேசிக்கிறார்களோ அதனையொட்டி இருக்கிறது. பரம ஏழை; எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு தொழிலைக் கற்றுக்கொள்கிறான்; அந்தத் தொழிலில் நிபுணனாகி, அதன் மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து, பணக்கார குடும்பத்தில் விவாகஞ் செய்துகொண்டு ஒரு மாளிகையில் வசிக்கிறான். இவனுடைய சொந்த வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இவன் வெற்றியடைந்த வன்தான். இப்படியே கீழ்ப்படியிலிருந்து மேல் பதவிகளுக்கு வந்தவர்கள் எல்லோரையும் சொல்லலாம். சாதாரண போர் வீரனாக இருந்து பிரதம சேனாதிபதியானவன், ஜில்லா முனிசீப்பா யிருந்து ஹைகோர்ட் நீதிபதியானவன், இப்படி அவனவனையும் அவனவனுடைய வாழ்க்கைத் துறையில் வெற்றியடைந்தவன் என்றே சொல்ல வேண்டும். ஆனால் பணம் சம்பாதிப்பதும், உயர் பதவிகள் வகிப்பதுமே வெற்றியாகுமா, வாழ்க்கையில் வேறு லட்சியங்கள் இல்லையா என்று கேட்டால், ஆம், வெற்றியாகாது, இவைகளைக் காட்டிலும் வேறு உயர்ந்த லட்சியங்கள் உண்டு என்று கூறி விடலாம்; மேற் சொன்னவர்கள் அடைந்த வெற்றிகளைத் தோல்விகளென்றும் நிரூபித்துவிடலாம். வாழ்க்கையை ஒருவன் எந்த திருஷ்டியிலே பார்க்கிறானோ அதனைப் பொறுத்திருக்கிறது அவனுடைய வெற்றியும் தோல்வியும். பிரிட்டிஷ் பிரதம மந்திரியாயிருந்த ராம்ஸே மாக்டோனால்ட்1 பாலியத்தில் மிகவும் சிரமப்பட்டான். முதன் முதலாக அவன் லண்டனுக்கு வந்தபோது அவனுடைய நிலைமை மிகவும் பரிதாப கரமாயிருந்தது. தன்னுடைய முயற்சியினாலும் உழைப்பினாலும் முன்னுக்கு வந்தான்; தொழிற்கட்சித் தலைவனானான்; பிரதம மந்திரி பதவியையும் வகித்தான். தனி மனிதனுடைய முயற்சி, உழைப்பு, சகிப்புத்தன்மை இவைகளைக் கொண்டு பார்க்கிறபோது அவனுடைய வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கை; ஆனால் அரசியல் கண்கொண்டு பார்க்கிறபோது அவனுடைய வாழ்க்கை தோல்வி யடைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். ஆகவே எந்த திருஷ்டியிலே பார்க்கிறோமோ அந்தத் திருஷ்டியைப் பொறுத் திருக்கிறது வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும். வெற்றிக்கு அதிருஷ்டம் வேண்டுமென்று சிலர் கூறுகின்றனர். இஃது அவ்வளவு சரியில்லை. அதிருஷ்டத்தை நம்பி வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் வெற்றி கிட்டவே கிட்டாது. அதிருஷ்டமென்பது பார்க்கப்படாதது. வெற்றியென்பதோ, அது கொடுக்கிற பலனைக்கொண்டு உணரப்படுவது. அதிருஷ்டம், முயற்சியைக் குன்றச் செய்கிறது. வெற்றியோ, முயற்சியைத் தூண்டிக் கொடுக்கிறது. அடிப்படையிலேயே வித்தியாசப்பட்டுள்ள இவ்விரண்டும்- அதிருஷ்டமும் வெற்றியும்-எப்படி ஒன்றுபட முடியும்? அறிவுமட்டும் இருந்தால் வாழ்க்கையில் நிச்சயமாக வெற்றி யடைந்து விடலாமென்று சிலர் கருதுகின்றனர். வெற்றிக்கு அறிவு மட்டும் இருந்தால் போதுமா? அறிவை உபயோகிக்கிற வழி தெரிய வேண்டும். பிரதியொரு மனிதனிடத்திலும் இயற்கையான சில சக்திகள் இருக்கின்றன. அந்தச் சக்திகளை அறிந்து அவைகளை ஒழுங்குபடுத்தி, வளர்த்து, உபயோகத்திற்குக் கொண்டுவரவேண்டும். அப்பொழுதான் வெற்றி கிட்டும். வெற்றியினால் சந்தோஷம் உண்டாகிற தென்று சொல்லலாம். ஆனால் சரித்திர சம்பவங்களைச் சிறிது ஆராய்ந்து பார்த்தால், சந்தோஷத்திற்குப் பதிலாக துக்கத்தை அனுபவித்திருக்கிறவர்க ளுடைய வரலாறுகளையே அதிகமாகக் காண்கிறோம். ஐரோப்பா முழுவதையும் வெற்றி கண்டான் நெப்போலியன்.1 வெற்றி வீரன் என்று சொன்னால் அவனுக்கே தகும். ஆனால் அவன், தன்னுடைய கடைசி நாட்களில் கைதியாகவே இருந்து இறந்தான். அமெரிக்காவைக் கண்டுபிடித்ததன் மூலம் பானிஷ் ஏகாதிபத்தியத்தை விரிவு படுத்திக் கொடுத்த கொலம்பஸின்2 கடைசிநாட்கள், இருப்பதற்கு இடங்கூட இல்லா மலல்லவோ கழிந்தன? தங்களுடைய அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் வெற்றிச் சங்கு ஊதிக்கொண் டிருந்த முஸோலினி3, ஹிட்லர்4 ஆகியோருடைய இறுதி நாட்கள் எவ்வளவு மனோவேதனையுடன் இருந்திருக்க வேண்டு மென்பதை நாம் சுலபமாக ஊகித்துக் கொள்ள லாமல்லவா? ஆகவே, வெற்றியென்பது சந்தோஷத்திலே கொண்டு போய் விடுமென்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஏகதேசமாக ஒருவர் இருவருக்குத் தான் அந்தப் பாக்கியம் கிட்டுகிறது. சந்தோஷம் நிச்சயமாகக் கிடைக்கு மென்று சொல்ல முடியா விட்டாலும் மனிதன், வெற்றியை நாடித்தான் ஓடுகிறான். அப்படி ஓடுவதிலே அவனுக்குத் திருப்தி ஏற்படுகிறது. வெற்றியானது அவ்வளவு வசீகர முடையது. பணம், படிப்பு, பதவி முதலியவைகளினால் அடைகிற வெற்றி களைக் காட்டிலும் வாழ்க்கையில் வேறு விதமான வெற்றிகள் இருக்கின்றனவென்று சொன்னீர்களே அவையென்ன என்று நீங்கள் கேட்கலாம். சிறிய நாடுகள், பெரிய நாடுகள் என்கிறமாதிரி, பணம், படிப்பு முதலியவைகளினால் கிடைக்கிற வெற்றிகளைச் சிறிய வெற்றி களென்றும், இவைகளைத் தவிர்த்து வேறு துறைகளிலே அடைகிற வெற்றிகளைப் பெரிய வெற்றிகளென்றும் சொல்லலாம். அநேகமாக இந்தப் பெரிய வெற்றிகள் கண்ணுக்குப் புலனாகாதவை; நிகழ்காலத்திலே அதிக பலனைக் கொடாதவை; ஆனாலும் நித்தியமாயிருந்து சாசுவதமான பலனைக் கொடுப்பவை. இந்தப் பெரிய வெற்றிகள் நல்லதை நாட்டமாக உடையவை; சுக துக்கத்தைச் சம நோக்குடன் பார்ப்பவை; செயலிலே செயலின்மையைக் காண்பவை. இந்தமாதிரி வெற்றி கண்டவர் களையே மகான்கள் என்று அழைக்கிறோம். இவர்களுடைய உலகியல் வாழ்க்கை, வறுமையோடு தோழமை பூண்டதாயிருக்க லாம்; அல்லது பெரிய மனிதர்கள் என்று சாதாரண ஜனங்கள் யாரை அழைக்கிறார்களோ அவர்களுடைய ஏளனத்திற்குட்பட் டிருக்கலாம்; இவர்களுடைய கடைசி நாள் வாழ்க்கை, தூக்கு மேடையில் ஏறி நின்றோ, விஷத்தைக் குடித்தோ முடிவு பெற்றிருக்கலாம். ஆயினும் இவர்கள் வாழ்க்கையில் வெற்றி கண்டவர்கள் என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். புத்தர் பிரான் என்ன, கிரேக்க ஞானியாகிய ஸாக்ரட்டீ1 என்ன, இயேசு நாதர் என்ன, மகாத்மா காந்தி என்ன2 இப்படிப் பட்டவர்களுடைய வாழ்க்கையை வெற்றிகரமான வாழ்க்கையென்று சொல்லாமல் வேறெவ்விதமாகச் சொல்வது? இவர்கள் பூதவுடல் நீத்து எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் இவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; என்றும் வாழ்ந்து கொண்டிருப் பார்கள். சிரஞ்சீவிகளாயிருப்பதற்குரிய வாழ்க்கையை யார் நடத்து கிறார்களோ அவர்கள் வெற்றியடைந்தவர்கள். அப்படிப் பட்ட சிரஞ்சீவி களிலே ஒருவனாயிருக்க பிரதியொரு மனிதனும் பிரயத்தனப்பட வேண்டும். 6. பணமும் மனமும் பணம் பத்தும் செய்யும் என்பார்கள். பத்து நல்லதும் செய்யும்; பத்து கெடுதலும் செய்யும். ஆனால் நல்லதும் கெடுதலும் பணமா செய்கிறது? இல்லை, இல்லை; பணத்தைப் படைத்திருக்கிற மனிதன் செய்கிறான். கத்தி இருக்கிறது. அதனைக் கொண்டு காய்கறிகள் நறுக்கலாம்; உடம்பிலே தோன்றும் கட்டிகளை அறுக்கலாம்; உயிர்களைக் கொன்றும் விடலாம். இவையனைத்தையும் செய்வது ஒரு கத்திதான். ஆனால் அது கொடுக்கிற பலன்களோ வேறு வேறே. அதனை எப்படி உபயோகிக்கிறோமோ அப்படியே பலன் கொடுக் கிறது. அது போலவே பணத்தை எப்படி உபயோகிக்கிறோமோ அப்படியே பலனையும் கொடுக்கிறது. ஆக, பணம் என்பது ஒரு கருவி. அதனை உபயோகிக்கிற விதத்தில்தான் அதனுடைய பெருமையோ சிறுமையோ இருக்கிறது. பணம் என்பது பெருமையடைய வேண்டுமானால் அது மனம் என்பதனோடு தோழமை கொள்ள வேண்டும். தனித்து வாழ்கிற பணத்திற்குச் சிறுமைதான். மனத்தோடு கூடி வாழ்கிற பணத்திற்கு நிச்சயமாகப் பெருமை உண்டு. இப்படிக் கூடி வாழ்கிற பணந்தான் பத்து நல்லதைச் செய்யும். தனித்து வாழ்கிற பணம் பத்து கெடுதலைச் செய்யும். பத்து என்ன? நூறு, ஆயிரம் நல்லது கெடுதல்களைச் செய்யும். செய்கிறவர்களுடைய சக்தியைப் பொறுத் திருக்கிறது, நல்லது கெட்டது இவைகளின் எண்ணிக்கை. பணமும் மனமும் சேர்ந்து வாழுமானால் பணமானது மணம் பெறுகிறது; மனமானது, வாழ்க்கையிலே ஏதேனும் உயர்ந்த நோக்கங் களை வைத்துக் கொண்டிருக்குமானால் அந்நோக்கங் களைச் சீக்கிரமாக, எவ்வித இடையூறுகளின்றிச் சென்று அடைகிறது. மனமில்லாமல் பணம் மட்டும் இருந்தால், அந்தப் பணத்திற்கு ஓர் அசட்டுத் துணிச்சல் உண்டாகிறது; எதையும் நம்மால் சாதித்து விட முடியும் என்ற ஓர் அசட்டு நம்பிக்கை ஏற்படுகிறது; தன்னை யொட்டி இருப்பவர்களை அலட்சியப் படுத்துகிறது; எட்டி யிருப்பவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறது; ஏளனம் செய்கிறது; தனக்குப் பெருமையைத் தரக்கூடிய மாதிரியாகவோ மற்றவர் களுக்குப் பிரயோஜனப்படக்கூடிய மாதிரியாகவோ இல்லாமல், ஆடம்பரத்திலும் சோம்பேறித்தனத்திலும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைக் கரைத்துக் கொண்டு கடைசியில், தான் இருந்த இடம் தெரியாமலே மறைந்து விடுகிறது. பணத்தின் துணையில்லாமல் மனம் மட்டும் தனித்திருக்கு மானால் அது, தன் எண்ணத்தைச் செயலிலே கொண்டுவந்து காட்ட முடியாமல் திணறுகிறது; பணத்தோடு தோழமை கொள்ள ஆவல்படுகிறது; ஆனால் அதன் பளபளப்பைக் கண்டு கூசிப் பின்வாங்குகிறது; அல்லது கொஞ்சம் பலவீனமான மனமாயிருந் தால் அந்தப் பணத்திற்கு அடிமையாகி விடுகிறது. ஆக, ஓர் அங்குலம் முன்னேற வேண்டுமானால் அது நூறாறு மேடு பள்ளங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. அப்படிக் கடந்தும் அதனுடைய முன்னேற்றத்தைப் பாராட்டுவோர் எத்தனை பேர்? மிக மிகச் சிலரே. சாதாரணமாக உலகத்தில் அன்றாடம் பார்க்கலாமே, பண முள்ளவர்கள், பெரிய மனம் படைத்தவர்கள் மாதிரி நடிக்கவோ, நடக்கவோ முடிகிறது. ஆனால் மனமுடையவர்கள், அதாவது பண மில்லாமல் வெறும் மனம் மட்டும் உடையவர்கள் என்ன காரியத்தைச் சாதிக்க முடிகிறது? உலர்ந்துபோன வாழைச் சருகுமாதிரி இவர்களுடைய வாழ்க்கை ஆகிவிடுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பணக்காரனா யிருக்கப்பட்டவன், யோக்கியனாக இருக்க முடிகிறது; யோக்கியனா யிருக்கப்பட்டவன் பணக்காரன் ஆகக்கூட முடிவதில்லை. பணமே, உன்னால் என்ன குணமே யென்று சிலர் சொல்கிறார்கள்; பணத்தை இகழ்ந்து பேசுகிறார்கள் இது சரியில்லை. பணமில்லாமல் என்ன காரியம் நடைபெற முடியும்? உண்ண முடியுமா? உடுக்க முடியுமா? பொதுவாக வாழ்க்கையை நடத்த முடியுமா? ஆனால் சிலர் சொல்லலாம், பணத்தின் அவசியமில்லாமலே ஒரு காலத்தில் மானிட சமுதாயம் வாழ்ந்து வந்தது என்று. உண்மை. ஆனால் அந்தக் காலம் இல்லையே இந்தக் காலம்? நிகழ் காலத்திலே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோமே தவிர இறந்த காலத்திலல்ல. இப்பொழுதுள்ள நிலைமைகளை அனுசரித்துதான் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய வாழ்க்கைக்குப் பணம் மிகவும் அவசியம். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை யென்று வள்ளுவர் எப்பொழுதோ சொல்லிப் போனது, இந்தக் காலத்திற்கு முற்றிலும் பொருந்தும்; அவசியம் தேவை. இந்தப் பணத்தின் அவசியத்திற்கு ஓர் எல்லை கற்பிப்பது கடினம் என்று சொல்லலாம். கடினந்தான். ஆனால் பணத்தோடு மனமும் சேர்ந்து கொள்ளுமானால் பண அவசியத்தின் எல்லை மிக மிகச் சுருங்கிவிடுவதைக் காணலாம். பணம் என்பது அவசியமானா லும் அந்த அவசியத்தை ஒரு வரம்புக்குட்படுத்துவது மனந்தான். பணத்தைப் புறக்கணித்துப் பேசுகிறவர்கள், எளிய வாழ்க்கை; உயரிய நோக்கம் என்ற ஒரு சொற்றொடரை அடிக்கடி உபயோகித்து வருவதைக் கேட்கலாம். எளிய வாழ்க்கையென்றால் தரித்திர வாழ்க்கையென்று அர்த்தப்படுத்திக் கொண்டு, தரித்திரத்தைப் போற்றுகிற முறையிலே பேசுகிறார்கள். என்ன வேடிக்கை! வறுமை வாழ்க்கை உயர்ந்த நோக்கத்தை அளிக்குமா? சரி; வாழ்க்கை யென்பது என்ன? நிறைந் திருப்பதுதானே வாழ்க்கை? இந்த நிறைவுக்குச் சாதனமாயிருப்பது எது? வறுமையா? இல்லவே இல்லை. செல்வம். இந்தச் செல்வம் பலவகைப் பட்டது என்று சொல்லலாம். ஆனால் பணம் என்பது இந்தப் பலவகையில் ஒன்று என்பதை யாராவது மறுக்க முடியுமா? எனவே, எளிய வாழ்க்கையென்று சொன்னால் ஆடம்பரமற்ற வாழ்க்கையென்றே அர்த்தம். தேகம் திடமுடன் இருப்பதற்கும், அறிவை அபிவிருத்தி செய்து கொள்வதற்கும், மனம் பண்பட்டு வளர்ச்சி பெறுவதற்கும், வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்று உண்டானால் அந்தக் குறிக்கோளை யடைவதற்கும் என்னென்ன தேவையோ அவைகளை உடைத்தாயிருப்பதற்குப் புறம்பாகவுள்ள யாவும் ஆடம்பரத்தைச் சேர்ந்தவையென்றே சொல்ல வேண்டும். ஆனால் இந்தத் தேவையை நிர்ணயிப்பது மேலே சொன்ன மாதிரி கடினந்தான். உதாரணமாக ஒரு கல்லூரியின் போதகாசிரியன் இருக்கிறான்; அல்லது ஒரு நூலாசிரியன் இருக்கிறான். இப்படிப் பட்டவர்களுக்கு இரவு நேரத்திலே அமைதியா யிருந்து படிப்பதோ, ஆராய்ச்சி செய்வதோ அவசியம். இதற்காக இவர் களுக்கு விளக்கு சௌகரியங்கள் வேண்டும். விளக்கு எதற்கு? அது செயற்கையின் சிருஷ்டிதானே? இயற்கையன்னையினால் அருளப்படும் வெளிச்சத் தில் தங்கள் படிப்பையோ, ஆராய்ச்சியையோ நடத்துவதோடு ஏன் திருப்தியடையக் கூடாது? இரவிலே படிப்புக்காகவும், ஆராய்ச்சிக் காகவும், விளக்கு வேண்டுமென்று கோருவது, ஆடம்பரத்தின் எல்லையை மிதித்துவிட்ட குற்றத்தைச் செய்ததாகும், என்றெல்லாம் பேசு வோமானால் அந்தப் பேச்சுக்கு அர்த்தமில்லையென்றுதான் சொல்ல வேண்டும். பணத்தைச் சம்பாதிப்பதற்கு அறிவு மட்டும் இருந்தால் போதும்; செலவழிப்பதற்கு மனமும் வேண்டும். இந்த மனம் இருப்பதுதான் கடினம். இதனாலேயே பணத்தைச் சம்பாதிப்பது சுலபம்; ஆனால் செலவழிப்பது கடினம் என்று சொல்கிறார்கள் அறிஞர்கள். ஆக, ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கைக்குக் கூட பணம் தேவையா யிருக்கிறதல்லவா? அதிலும் இந்த இருபதாவது நூற்றாண்டில் பணத் தேவை யில்லாமல் ஒரு கணமாவது உயிர் வாழ முடியுமா? வானமே கூரையாக, நிலமே படுக்கையாக வாழ்கிற பிச்சைக் காரனுக்குக்கூட, அவனுடைய தகரக் குவளையில் ஒரு காலணா ஓசைப்பட்டுக் கொண்டிருந்தால்தான், மேலும் மேலும் சென்று பிச்சையெடுக்க அவனுக்கு உற்சாக முண்டாகிறது. ஆனால் பணம் மட்டும் இருந்தால் அது சோறு போடுமா என்று கேட்கலாம். நிச்சயமாகப் போடாது. அதற்குத்தான் மனம் வேண்டுமென்று சொல்கிறோம். பண மூட்டையைத் தலைமாட்டில் வைத்துக்கொண்டு படுத்துறங்கினால் பசி தீர்ந்து போய்விடுமா? பணத்தைச் சோறு போடுகிற கருவியாக உபயோகிக்கிற அறிவு வேண்டும்; மனம் வேண்டும். எனவே பணம் தேவை. ஆனால் பணத்திற்கு மனத்தை அடிமைப் படுத்தி விடக்கூடாது. மனத்திற்குத்தான் பணம் அடிமைப்பட்டிருக்க வேண்டும். 7. இளமையும் முதுமையும் இளமை யென்பது என்ன? முயற்சியின் ஆரம்பம்; உற்சாகத்தின் பொங்கல்; வேகத்தின் பிரதிநிதி; நிஷ்கபடத்தின் வெளித்தோற்றம். முதுமை யென்பது என்ன? அனுபவத்தின் திரட்சி; வாழ்க்கையின் கடைசி மைல்கள்; தளர்ச்சியின் வெளித் தோற்றம்: அழகை அனுபவிக்க முடியாத ஒரு நிலை. இளமைக்குச் சென்ற காலம் சுருக்கமாயிருக்கிறது; ஆனால் எதிர்காலம் நீண்டதாயிருக்கிறது. முதுமைக்கோ, சென்ற காலம் நீளமாகவும் எதிர்காலம் சுருக்கமாகவும் இருக்கிறது. இளமைக்குப் புதுமையின் மீது மோகம். முதுமைக்குப் பழமையின் மீது பற்றுதல். இளமை, ஆரவாரத்திலே இன்பம் நுகர்கிறது. முதுமை, சந்தடியற்ற சூழலிலே சாந்தியைக் காண்கிறது. இளமைக்கு, எண்ண ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பதில் அதிக விருப்பம். முதுமைக்கு, பூலோகத்தில் ஊன்றிக் கொண்டிருக்கிற காலை அப்புறம் பெயர்த்து வைக்காமலிருப்பதிலே பெருமை. சுருக்கமாகத் தற்கால நாகரிகப் படி சொல்ல வேண்டுமானால், இளமை, நகரவாசி; முதுமை, கிராமவாசி. இளமையின் தொடர்ச்சிதான் முதுமை. ஆனால் அந்த முதுமை, வறட்சியுள்ள பாலைவனமா யில்லாதிருக்க வேண்டு மானால், அஃது இளமையை விடாமல் பற்றிக் கொண்டிருக்க வேண்டும். முதுமையிலே இளமை கலந்திராவிட்டால் ஆபத்து; அந்த வாழ்க்கை சாரமற்ற வெறுஞ் சக்கை. ஆனால், இளமையிலே முதுமை தட்டிவிட்டால், அஃது ஆபத்து. பிஞ்சிலே பழுத்த பழம்; வெம்பி உதிர்ந்து போவதற்குத்தான் தகுதி யுடையது. இளமையிலே முதுமை தட்டுவதென்பது உடலைப் பொறுத்த மட்டில்தான் சொல்கிறோம். அறிவிலே முதியவரா யிருத்தல் வேண்டும். இளமை திகழும் உடலும் முதிர்ந்த அறிவும் யாரிடத்தில் ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ, அவர்தான் வாழ்க்கையை அனுபவிப் பதற்குத் தகுதியுடையவர். இரண்டும் கலந்திருப்பது அருமைதான்; ஆனால், அதில்தான் பெருமை இருக்கிறது. இளமை, உஷ்ண முடையது; முதுமை, குளிர்ச்சியுடையது. உடல், உள்ளம், எண்ணம், செயல் எல்லாவற்றிற்குமே இதைப் பொருத்தி வைத்துப் பார்த்துக் கொள்ளலாம். இளைஞர்கள் உணர்ச்சி நிரம்பியவர்களா யிருப்பதைப் பார்க்கிறோம். அந்த உணர்ச்சிக்குப் பலமான அதிவாரம் இருப்ப தில்லை. அது வேகமாக எழுந்து சீக்கிரமாக அடங்கி விடுகிறது. இப்படி அடங்கி விடுகிற காரணத்தினால்தான், இளைஞர்கள், தங்கள் பேச்சிலே எவ்வளவு ஆவேசம் காட்டுகிறார்களோ அவ்வளவு சோர்வைச் செயலிலே அடைகிறார்கள். இப்படி இவர்கள் செயலில் சோர்வடையாமலும், பலமான அதிவார முடைய உணர்ச்சி யுடையவர்களாகவும் இருப்பதற்கு, வயதுதான், அதாவது அனுபவம்தான், இவர்களுக்குத் துணை செய்கிறது. வயது அல்லது அனுபவம் என்பது என்ன? முதுமையின் பிரதிநிதிதானே? ஆகவே, ஒரு மனிதனுக்கு இளமையும் தேவைதான்; முதுமை யும் தேவைதான். இப்படிச் சொல்வதன் தாத்பர்யம் என்னவென் றால், பிரதியொரு மனிதனும் பசிய உள்ளமும் முதிர்ந்த அனுபவமும் உடையவனாயிருக்க வேண்டு மென்பதுதான். இளமையான தோள்களின் மீது முதிர்ச்சியடைந்த தலை அமர்ந்திருக்கிறது என்று சொல்வது இந்தக் கருத்துடன்தான். இளைஞர்கள் எதனையும் துரிதமாகச் செய்து முடிக்க வேண்டு மென்று ஆவல் கொள்கிறார்கள். ஆனால், முதியவர்கள் எதனையும் ஆட்சேபிக்கிறார்கள். இதனால்தான் இளைஞர்கள், முதியவர்களை அலட்சியம் செய்கிறார்கள். முதியவர்கள், இளைஞர் களைக் குறைவாக மதிப்பிடுகிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பேக்கன்1 என்ற அறிஞன் சொன்னமாதிரி இளைஞர்கள், ஒரு பொருளை மதிப்பிடுவதைக் காட்டிலும் ஒரு பொருளைக் கண்டு பிடிப்பதற்குத் தகுதியுடையவர்கள்; ஆலோசனை சொல்வதற்குப் பதில் அனுஷ்டானத்துக்குக் கொண்டு வருவதற்குத் தகுதியுடையவர்கள். இளைஞர்கள், தங்களுடைய சாத்தியத்துக்கு அதிகமாகவே சாதிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்; சாதிக்க முடியு மென்று நம்புகிறார்கள். முதியவர்களோ, ஒரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னமேயே நம்மால் இது சாத்தியமா என்று தலைமீது கைவைத்துக்கொண்டு உட்கார்ந்து விடுகிறார்கள். இளைஞர்கள், நீரைத் தெளிவடையச் செய்வதைக் காட்டிலும், அதனைக் கலக்கி விடுவதிலே வல்லவர்களாயிருக்கிறார்கள். இவர்களுக்கு லட்சியம்தான் முக்கியமே தவிர, அந்த லட்சியத்தை யடைவதற்கான சாதனங்களின் மீது இவர்கள் அதிகமாகக் கவனஞ் செலுத்துவதில்லை. தவறு செய்வதென்பது இவர் களுக்குச் சாதாரணம். ஆனால், அந்தத் தவற்றை ஒப்புக் கொள்வதென்பது இவர்களுக்குக் கடினம் வயது முதிர்ந்தவர்களோ அதிகமாக ஆலோசிக் கிறார்கள்; அதிகமாக ஆட்சேபிக்கிறார்கள். எடுத்த காரியத்தைக் கடைசி வரையில் பார்த்துவிட வேண்டுமென்ற உறுதி இவர்களுக்கு இருப்ப தில்லை. எடுத்ததற்கெல்லாம் சந்தேகம் உண்டாகிறது. ஒரு காரியம் தப்பாகிவிட்டால், அதற்குத் தாங்கள் தான் காரணம் என்று வெகு சீக்கிரத்தில் ஒப்புக்கொண்டு விடுகிறார்கள். புகழின் உச்சத்தையும் பூரண சந்தோஷத்தையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு மிகக் குறைவு. சிறிய புகழிலே, அற்ப சந்தோஷத்திலே, இவர்கள் திருப்தி யடைந்து விடுகிறார்கள். இது வரையில் சொன்னவைகளிலிருந்து இருசாராரிடத்தி லும் குறைநிறைகள் இரண்டும் கலந்திருக்கின்றன என்று ஏற்படுகிற தல்லவா? இந்தக் குறை நிறைகள் ஒன்றோடொன்று கலந்த வாழ்க்கையை ஒரு மொத்தமாகக் காணவேண்டுமானால், அந்த வாழ்க்கையிலே மேலே சொன்ன அர்த்தத்தில் இளமையும் வேண்டும்; முதுமையும் வேண்டும். தனிப்பட்ட மனிதனுடைய வாழ்க்கையிலே எப்படி இளமையும் முதுமையும் கலந்திருக்க வேண்டுமென்று சொல்லுகிறோமோ அதைப் போலவே, ஒரு சமுதாயத்திலும் இளைஞர்களும் முதியவர்களும் கலந்து வாழ வேண்டும்; சமுதாயத் தின் நன்மைக்குக் கலந்து சேவை செய்ய வேண்டும். அப்போது தான் அந்தச் சமுதாயம் முழுச் சமுதாயமாக வளர்ச்சியடையும். 8. நன்மையும் தீமையும் நமது முன்னோர்கள், எப்பொழுதுமே, நன்மையின் விளைவுகளை எந்த விகிதாசாரத்தில் வைத்துப்பேசினார்களோ அதே விகிதாசாரத்தில் தீமையின் விளைவுகளையும் வைத்துப் பேசி வந்திருக்கிறார்கள் நல்லதைச் செய், நல்லவர்களை நாடு என்று சொன்னவர்கள், தீயதைச் செய்யாதே, தீயவர்களை நாடாதே என்று சொல்லத் தவற வில்லை. மாறுபட்ட இரண்டை அடுத்தடுத்து வைத்து, இரண்டின் விளைவுகளையும் விரித்துச் சொல்கிறபோது, ஒன்றைப்பற்றி மட்டும் சொன்னால் போதுமே, அதிலேயே, மற்றொன்றினால் ஏற்படக்கூடிய விளைவுகளும் புலனா கின்றனவே, அப்படியிருக்க, அந்த மற்றொன்றைப்பற்றி ஏன் சொல்ல வேண்டும் என்று சிலர் கேட்கலாம். நியாயமான கேள்வி தான். சாதாரண மனிதன், எப்பொழுதுமே சஞ்சல சுபாவமுடையவன். நின்ற நெறியிலேயே நிற்பதென்பது அவனுக்குப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அசாத்தியமாகிவிடுகிறது. தன் மனத்தில் மாசு மறுக்கள் வந்து குடி புகாமல் பாதுகாத்துக்கொள்ள அவனால் முடிவதில்லை. எத்தனையோ விதமான இச்சைகள் அவனையும் மீறி, அவன் மனத்திற்குள் குடியேறி அமர்ந்து கொண்டு அவனை ஆட்டி அலைக்கழிக் கின்றன. ஆண்டவன் அவனுக்கு நல்ல மனத்தைக் கொடுத்திருந்தாலும் அதனை அடக்கி ஆளும் சக்தியைக் கொடுக்க வில்லை. இதனாலேயே ஆன்றோர்கள் இந்தச் சக்தியைத் தங்களுக்கு அருள வேண்டுமென்று அவனை வேண்டி நிற்கிறார்கள். ஏக தேசமாக ஒரு சிலருக்குத்தான் இந்த வேண்டுதல் பலன் தருகிறது. நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் பேருக்கு மனத்தின் தத்துவமே புரிவதில்லை. புரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையும் இருப்பதில்லை. அவர்கள் ஆண்டவனை நோக்கி எங்கே வேண்டுதல் விடுக்கப் போகிறார்கள்? இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு ஆண்டவனுடைய உண்மையில் அசைவற்ற நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்கவேண்டி யிருக்கிறது. இங்ஙனம் பலதரப்பட்ட இச்சைகளால் அலைக்கழிக்கப் படுகின்ற மனிதன், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அதிலும் முக்கியமான சந்தர்ப்பங்களில், எது நன்மை எது தீமை யென்று விமர்சனம் செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் திகைத்து நிற்கவேண்டியவனாக இருக்கிறான். அந்த மாதிரியான சந்தர்ப்பங் களில் அவனுக்கு நன்மையின் விளைவுகளையும் தீமையின் விளைவு களையும் நினைவுபடுத்தி எச்சரிக்கை கொடுக்க வேண்டியிருக்கிறது. இதனாலேயே நமது முன்னோர்கள், நன்மையையும், தீமையையும் அடுத்தடுத்து வைத்துக் காட்டி, இரண்டினால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி விதந்து கூறியிருக்கிறார்கள். முப்பால் சமைத்த வள்ளுவப் பெருந்தகை, கல்வியினாலாய நன்மைகளைச் சொல்லி, அடுத்தாற்போல் கல்லாமையினால் ஏற்படக்கூடிய தீமைகளைச் சொல்ல மறந்துவிடவில்லை. இங்ஙனமே நல்லாட்சி நடத்த முற்படும் ஓர் அரசன், பெரியாரைத் துணைக் கோடல் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் சிற்றினஞ் சேராதிருத்தலும் என்று எச்சரிக்கை செய்யப்படுகிறான். இன்னும் செங்கோன்மையை அடுத்துக் கொடுங்கோன்மையும், ஊக்க முடைமையை அடுத்து மடியின்மையையும், நல்ல நட்பையடுத்துத் தீ நட்பையும் வைத்துப்பேசப்பட்டிருப்பது சிந்திக்கத்தக்கது. நன்மையானது எப்பொழுதுமே தொலை நோக்குடையது; நிதானமாக இயங்குவது; நிலையாய பயனைத்தருவது. அதற்கு ஆடம்பரத்தின் மீது வெறுப்பு; ஆரவாரத்தின் மீது கசப்பு; எண்ணிக்கையைக் கண்டு அது மகிழ்வதில்லை; தரத்தின் மீதுதான் அதிக கவனஞ் செலுத்துகிறது. அந்தத்தரம் குறையாமலிருக்க வேண்டுமென்பதற்காக அடிக்கடி தன்னையே பரிசோதித்துக் கொள்கிறது. அது, காலத்தைக் குறுகிய கண்ணோட்டத்தில் வைத்துப் பார்ப்பதில்லை. முக்காலத்தையும் ஒன்றாக இணைத்தே பார்க்கிறது. இத்தகைய காரணங்களினால்தான், அதனை நாடுவோர் உலகத்தில் மிகக் குறைந்த பேராயிருக்கின்றனர். தீமையோ, அம்மம்ம, என்ன வேகம்! என்ன சுறுசுறுப்பு! ஆடம்பரமும் ஆரவாரமும் கலந்த சூழலில் அது தலை தெரியாமல் ஆடுகிறது. தன் மீது இச்சை கொண்டாரை அஃது எவ்வளவு சீக்கிரமாக வசப்படுத்திக் கொள்கிறது! அது மட்டுமல்ல; அவர்களை உற்சாகப்படுத்தி எவ்வளவு வேகமாக அழிவுப் பாதைக்கு அழைத்துக் கொண்டு போகிறது! இன்று மட்டும் என்பதோடு அது திருப்தி யடைகிறது; நேற்று, நாளை என்பவை களைப் பற்றிக் கவலைப்படுவ தில்லை. எண்ணிக்கையா? அதன் மீது எவ்வளவு பிரமை அதற்கு! தரத்தின் மீது எவ்வளவு அலட்சியம்! எனவே அதனை வலம் வருவோருடைய எண்ணிக்கை உலகத்தில் அதிகமாயிருப்பதில் ஆச்சரிய மென்ன இருக்கிறது? ஒருவன் வைத்திருக்கும் பணமோ, அடைந்திருக்கும் செல்வாக்கோ, அவன் கண் மூடிக்கொண்டவுடன் மறைந்து விடுகிறது. ஆனால் அவன் நல்லவன் என்று பெயர் படைத்திருந்தால், அந்தப் பெயர்தான் அவனை இறந்த பிறகும் இருப்பவனாக்கி வைக்கிறது. அவன் எப்படி நல்லவனானான், எப்படி நல்லவனாக வாழ்ந்தான் என்பவைகளைப் பற்றித்தான் எல்லோரும் பேசுகிறார்கள். அவன் செய்த நல்ல காரியம் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கலாம். இதற்காக அது மதிக்கப்படா மலிருப்பதில்லை. அது தரும் பயனைக் கொண்டு அவன் மதிப்பு உயர்கிறது. அந்த மதிப்பு உயர உயர, அவனுடைய புகழுடம்பின் ஆயுளும் வளர்கிறது. நம் தோட்டத்தில் உள்ளதெல்லாம் ஒரே ஒரு மரந்தான். அதன் அடிப்பாகத்தின் சுற்றளவோ இரண்டு அல்லது மூன்று அடிக்கு மேல் இல்லை. கப்பும் கிளையும் கூட மிகக் குறைவு. ஆயினும் அது சுவையான கனிகளைக் கொடுத்து வருகிறது. அந்தக் கனிகளைக் கொண்டுதான் அந்த மரத்திற்கு மதிப்புக் கொடுக்கிறோம். அந்த மரத்தின் உயரம் எவ்வளவு, சுற்றளவு என்ன, அதில் எத்தனை கப்பும் கிளைகளும் இருக்கின்றன, இவைகளை யெல்லாம் பற்றி, நாம் அதிகமாக விசாரிக்கிறோமா? இல்லை. அது போல, ஒருவன் எவ்வளவு சொத்து மதிப்புடையவனாயிருந்தான், அவனைச் சூழ்ந்திருந்த சுற்றத்தாரோ பிறரோ எந்தனைபேர் என்பவை களைப் பற்றி அறிந்துக்கொள்ள நாம் ஆவல் காட்டுவதில்லை. அவன் செய்த நல்ல காரியம் ஒன்றாயிருந்தாலும் அது யாது, அது தந்திருக்கும் நிலையான பயன் என்ன என்பவைகளைப்பற்றி மட்டுமே அறிந்துக் கொள்ள ஆசைப்படுகிறோம். அவைகளைக் கொண்டுதான் அவனை மதிப்பிடுகிறோம். அந்த மதிப்பீடுதான், அவனை நம்நினைவிலே வாழ்ந்து கொண்டிருக்கும்படி செய்கிறது. பச்சையப்ப முதலியார், எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார், என்ன உத்தியோகம் செய்தார், எவ்வளவு பொருளீட்டினார் என்பவைகளைப் பற்றிப் பலருக்குத் தெரியாது; தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையும் உண்டாவதில்லை. ஆனால் அவர் நிறுவிய கல்வி தாபனத்தைக் கொண்டு அவர் பெயரை எல்லோரும் அறிந்து கொண்டிருக்கிறார்கள். எல்லோர் நினைவிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நன்மையானது மௌனத்திலேதான் பிரகாசிக்கிறது. அது செயலில் ஈடுபாடுடையதாயிருக்கிறதே தவிர பேச்சிலே இல்லை. அது பேசாமல் செய்கிறது. செய்து விட்டு, செய்த செயலைப்பற்றிப் பேசுவதுமில்லை. அது, விளம்பரத்தை எதிர் பார்ப்பதுமில்லை. உண்மையில் அது, சுய விளம்பரத்தையோ பிறர் தன்னைப்பற்றி விளம்பரம் செய்வதையோ வெறுக்கிறது. நன்மையானது, நிகழ்காலத்தின்மீது அதிகமாக நாட்டஞ் செலுத்து வதில்லை; உடனடியாக என்ன பலன் கிட்டுமென்பதன் மீது சிந்தனை செலுத்துவதில்லை. அதன் நாட்டமெல்லாம் வருங்காலத்தின் மீதுதான்: நீடித்த, நிலையான பயன் மீதுதான் இதனாலேயே அது நிகழ்காலத்தில் பிரகாசம் பெறுவதில்லை. ஆனால் பிரகாசப்படுத்திக்கொள்ள வேண்டு மென்ற விருப்பமும் அதற்கு இருப்பதில்லை. மற்றும் நன்மையானது, தன் செயலினால், பிறர் மகிழ வேண்டு மென்று எதிர்பார்ப்பதில்லை; பிறர் நலம் பெற வேண்டு மென்றுதான் கோருகிறது. அந்தக் கோரிக்கைக்கு இடையூறுகள் ஏற்பட்டால், அவற்றைப் புன்சிரிப்போடு சமாளிக்க முற்படுகிறது. அவற்றிற்காக முகவாட்டமோ மனச் சோர்வோ கொள்வதில்லை; அவற்றைப் பற்றி வெளியில் பிரதாபிப்பதுமில்லை. பிறருக்கு நன்மை செய்கிறவன், அதே சமயத்தில் தனக்கும் நன்மை செய்து கொண்டவனாகிறான். எப்படியென்றால், தான் செய்கிற நன்மையினால் பிறருக்கு நற்பயன்கள் விளையும் என்று எண்ணுவதில் உண்டாகிற மகிழ்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும்; நன்மையைச் செய் வதிலேயே மகிழ்ச்சி உண்டாகிறதல்லவா, அந்த மகிழ்ச்சியே அவனுக்கு நன்மையாகிறது. நல்ல செயலைச் செய்கிறோ மென்பதில் உண்டாகிற மகிழ்ச்சிதான், அந்த நல்ல செயலுக்காக ஒருவனுக்குக் கிட்டுகிற சன்மானம். அதைக்காட்டிலும் உயர்ந்த சன்மானம் வேறொன்றும் இருக்க முடியாது. நன்மையானது, தன்னறிவு, தன்னடக்கம், தன் மதிப்பு இம் மூன்றையும் ஆபரணங்களாக அணிந்து கொண்டிருக்கிறது. இந்த ஆபரணங்களை, விருப்பமிருக்கிறபோது மட்டும் அணிந்து கொண்டு, விருப்பமில்லாதபோது கழற்றி எறிவதென்பதில்லை; அதனோடு ஒட்டி யிருக்கின்ற ஆபரணங்கள் இவை. மல்லிகை போன்ற மலர்களின் வாசனை, வெகுதூரத்திற்குச் செல்லுவதில்லை; வெகு நேரத்திற்கும் வீசுவதில்லை. ஆனால் நல்ல செயல்களின் விளைவோ வெகு தூரத்திற்குச் செல்கின்றது; வெகு காலத்திற்கும் நிலைத்திருக்கின்றது. இதனால்தான், நல்லசெய்கை களுக்கு வித்திட்டவர்களும், அவைகளை, வியர்வையையோ, கண்ணீரையோ, அவசியம் நேரிட்டால் செந்நீரையோ பாய்ச்சி வளர்த்தவர்களும் சிரஞ்சீவிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சும்மாயிருப்பது நன்மையின் சுபாவமல்ல. சதா சர்வகாலமும் சலித்துக் கொண்டிருப்பதுதான் அதன் சுபாவம். இந்தச் சுபாவம் அதனின்று விலகிவிடுமானால் அது நன்மையற்றதாகி விடுகிறது. சலித்துக் கொண்டிருப்பது அதன் சுபாவமென்றால், எவ்வித பயனையும் தராமல் வெறுமனே சலித்துக் கொண்டிருப்பதென்பது அர்த்தமல்ல. அதன் சலனம், நல்ல பயன்களை விளைவிக்கக் கூடியதாயிருக்க வேண்டும். நல்லவனா யிருப்பது பெரிதல்ல; ஏதோ ஒரு நல்லதுக்காக நல்லவனாயிருக்க வேண்டும் என்று பெரியோர்கள் அருளியிருக்கிறார்கள். பிறருக்கு நாம் நல்லதைச் செய்ய வேண்டுமானால், முதலில் நாம் நல்லவர்களாயிருக்க வேண்டும். நல்லதிலிருந்துதான் நல்லது பிறக்கும். ஆகவே மனிதனே, முதலில் உன்னை நீ பார்த்துக்கொள்; பிறகு மற்றவர் களைப் பார்க்கலாம். பிறருக்கு நன்மையைச் செய்ய முற்படுவதற்கு முன், உனக்கு நீ நல்லவனாயிருக்கிற நன்மையைச் செய்துகொள். அப்பொழுது பிறருக்கு நன்மையைச் செய்கிற சக்தி, தானே உன்னிடத்தில் வந்து சேரும். நாம் ஒருவனுக்கு நன்மையைச் செய்கிறோம். அதற்குப் பிரதியாக அவன் நமக்கு ஒரு நன்மையையும் செய்வதில்லை; நன்றிகூடச் செலுத்துவதில்லை. அப்படி அவன் பிரதி நன்மை செய்யாதிருப்பதும் நன்றி செலுத்தாதிருப்பதும் அவன் குற்றம். அதற்காக நாம் அவனுக்கு நன்மை செய்துகொண்டிருப்பதை நிறுத்திவிடலாமா? கூடவே கூடாது. அது மட்டுமல்ல; நாம் அவனுக்கு நன்மையைச் செய்யச் செய்ய அவன் நமக்குத் தீமையையே செய்துகொண்டிருந்தாலும், அப்பொழுதுகூட அவனுக்கு நாம் நன்மையைச் செய்து கொண்டிருப்பதில் தயக்கம் காட்டக்கூடாது. நம்முடைய தாகத்தைத் தணிக்க, ஒரு கோப்பைத் தண்ணீர் கொடுக்க மறுத்தவன், தனக்குத் தாகம் உண்டாகித் தண்ணீர் கேட்க நம்மிடம் வந்தால், அவனுக்கு இரண்டு கோப்பைத் தண்ணீர் கொடுக்க வேண்டும்; அதையும் முக மலர்ச்சியோடு, உள்ளக் கனிவோடு கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான், நாம் நன்மையின் மேல் மாடிக்குச் சென்றவர்களாவோம். அதைத்தான் அஹிம்ஸை என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள். ஆகையால் மனிதனே, உன்னால் முடிந்த நன்மையைச் செய்; எல்லா வழிகளிலும் செய்; கூடியவரை எல்லோருக்கும் செய்; எந்த இடத்திலும் செய்; எந்தக் காலத்திலும் செய்; செய்வதை உற்சாகத் தோடு செய். நன்மை எவ்வளவு பெருமையுடையதா யிருந்தாலும், அதில் எத்தனை சிறப்புக்கள் அடங்கியிருந்தாலும், அதனை நாடினால், மிருக நிலையிலிருக்கிற மனிதன் தெய்வ நிலைக்குவருவது சாத்திய மாயிருந்தாலும், உலகத்தில் பெரும்பாலோர், அதற்கு நேர்மாறான வழியிலேயே, தீய வழியிலேயே செல்லுகின்றனர். தீமையை எண்ணு வதும், சொல்வதும், செய்வதுந்தான் பலருக்கும் பிடித்தமாயிருக் கிறது. ஏனென்றால் அஃது அவ்வளவு வசீகர முடையது. அதன் வசீகர சக்தியில் ஈடுபடாமல் தப்பித்துக் கொள்வது கடினந்தான். ஆனால் மனிதனாக வாழ விரும்புகிறவன், அதனிடமிருந்து தப்பவே முயலவேண்டும். அந்த முயற்சியின் முடிவில்தான் அவனுடைய வாழ்க்கையில் வெற்றி நிற்கிறது. தீமையின் வசீகர சக்தியில், ஒரு தடவைதானே என்று அலட்சியமாகக் கருதி ஈடுபடுவோமானால், பிறகு, பல தடவை நாமாக அதில் வலியச் சென்று ஈடுபடும்படியாகிவிடும். அது நம்மை எந்த ஆழத்தில் கொண்டுபோய் விடுமென்று தெரியாது. சமுத்திரத்தின் ஆழத்தைக் கணக்கிட்டுச் சொல்லிவிடலாம். தீமையின் ஆழத்தைச் சொல்ல முடியாது. அதன் ஆழத்திற்குச் செல்லச் செல்ல, இன்னும் அதிக ஆழத்திற்குச் செல்ல வேண்டுமென்ற ஆவலைத்தான் அது தூண்டிவிடும். அதில் ஈடுபடுகிற ஆரம்ப நிலையில், செல்வம், செல்வாக்கு எல்லாம் கிட்டலாம்; பலர் நம்மைச் சூழ்ந்துகொண்டு புகழ்பாட லாம். வாழ்க்கை வெகு பிரகாசமுடையதாகத் தோன்றும். ஆனால் போகப் போகத்தான் இவை, நம்மை அழிவுக்கு அழைத்துச் செல்கின்றன என்பது தெரியும். பிறகு அதிலிருந்து மீளவே முடியாது. அந்த நிலையில் வருத்தப்பட்டுப் பயனில்லை. நன்மைக்குச் சத்துரு தீமை ஒன்றுதான். ஆனால் தீமையோ, நன்மைக்குச் சத்துருவாயிருப்பதோடு, தனக்குத்தானே சத்துருவாக வும் இருக்கிறது. இதனால் நன்மையினால் விளையக்கூடிய நற்பயன் களைக் காட்டிலும், தீமையினால் விளையக்கூடிய தீய பயன்கள் இரட்டிப்பு மடங்காயிருக்குமென்பது தெளிவாகிறதல்லவா? தீமையைத் தொடர் சங்கிலி என்று சொல்வார்கள். அதாவது ஒன்றுக்குப் பின்னால் மற்றொன்றாகத் தொடர்ந்து செல்லக் கூடியது. தீய எண்ணம், தீய சொல்லில் கொண்டு போய் விடுகிறது. தீய சொல் தீய செயலில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. கடைசியில் இந்தச் செயல் செய்தவர்களையும் செய்யப்பட்டவர்களையும் சேர்த்து அழித்து விடுகிறது. ஆகையால் தீய எண்ணத்திற்கே இடங்கொடுக்கலாகாது. தீய எண்ணம் உள்ளத்தை மட்டுமல்ல, உடலையும் அரித்துவிடும்; இல்லாத பொல்லாத நோய்களுக் கெல்லாம் இரையாக்கி விடும். பொதுவாக, தீமையானது ஒரு தொத்து நோய்; சறுக்குப் பலகை; சொருகு மணல். மனிதனே, எச்சரிக்கை. 9. சான்றோரும் சிற்றினமும் வள்ளுவத்தின் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களுக்கும் தலைப்புப் பெயர் கொடுத்தவர் யாராயிருந்த போதிலும் அவர் நமது பாராட்டுதலுக்குப் பெரிதும் உரியராகின்றார். குறட்பாக்களைப் போல், ஆழ்ந்த கருத்துக்களைச் சுருங்கிய சொற்களில் அமைத்து அதிகாரங் களுக்குப் பெயர் கொடுத்திருப்பது படிப்போரின் சிந்தனைக்கு விருந்தா யிருக்கிறது. உதாரணமாக, அரசனுக்கு அறிவுரை கூறுகின்ற முறையில் அமைந்திருக்கும் அதிகாரங்கள் பலவற்றுள் இரண்டை மட்டும் எடுத்துக் கொள்வோம். ஒன்று, பெரியாரைத் துணைக்கோடல்; மற்றொன்று சிற்றினஞ் சேராமை. பெரியார் என்று சொன்னதனால், இவர்கள் சிலராகவே இருப்பர் என்ற உண்மையும், சிற்றினம் என்று சொன்னதனால் இவர் பலராக இருப்பர் என்ற உண்மையும் சொல்லாமற் சொல்லிக் காட்டப்படுகின்றன. உலகத்தில் ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர் ஒரு சிலராயிருத்தலும், அற்பர்களும் மூடர்களும் பலராயிருத்தலும் கண்கூடு. சான்றோர் ஒரு சிலராயிருப்பினும் அவர்களாலேயே உலகம் கூடிய மட்டில் ஒழுங்காக இயங்கி வருகிறது. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்ற மூதுரையும் இதனாலேயே எழுந்தது. ஒரு சிலராயுள்ள பெரியோர்களை அரசன் நாடித் துணைக் கோடல் வேண்டும். கோடல் என்பதற்குக் கொள்ளல் என்பது பொருள். அதாவது அரசன், பெரியோர்களைத் தேடிப் பிடித்து அவர்களைத் தன்னுடையவர்களாக்கிக் கொள்ளல் வேண்டும். அன்பினாலும் பிற பண்புகளினாலும் தன் உடன் பிறந்தவர்கள் முதலாய சுற்றத்தாரை எப்படித் தன்னிடம் பிணிப்புண்டவராகச் செய்து கொள்கிறானோ அது போல் பெரியோர்களும் நாம் அந்நியரல்லர். அரசனுடைய சுற்றத்தைச் சேர்ந்தவர் என்று உணரும்படி அவர்களைத் தன்னிடம் பிணிப்புண்டவ ராகச் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அவர்களுக்கு அரசனுடைய நன்மையை நாடுகின்ற, தங்களுடைய நன்மை வேறு அரசனுடைய நன்மை வேறு என்று பாகுபடுத்திப் பாராத மனநிலை உண்டாகும். அந்த நிலையிலிருந்து கொண்டு அவர்கள், அரசனுக்குற்ற நோய் நீக்கி உறாமை முன் காக்கும் பெற்றியராய் இருப்பர். அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப் பேணித் தமராக் கொளல் என்ற குறட்பாவின் பின்னடிக்கு, தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பி, தமக்குச் சுற்றமாக்கிக் கொள்ளுதல் என்ற மணக்குடவரின் உரை இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. சிற்றினம் சேராமை என்றதனால், உலகத்தில் சிற்றறிவும் சிறு மனமும் படைத்தவர்களே பெரும்பான்மையோராயுள்ளனர்; அவர்கள் தாமாகவே வலிய வந்து உன்னைச் சார்வர்; அவர்களுடைய எண்ணிக்கை பலத்தையோ, நடிப்பையோ கண்டு நீ மயங்குதல் வேண்டா; எக்காரணத்தை முன்னிட்டும் அவர்களுடன் கூட்டுறவு கொள்ளாதே என்று அரசனுக்கு எச்சரிக்கை கொடுக்கிற மாதிரி பொருள் தருகிறதல்லவா? சரி; பெரியோர்களைத் துணையாகக் கொள்ளவேண்டு மென்று சொன்னதனால். அதிலேயே, சிறியவர்களின் சகவாசம் கூடாதென்ற கருத்தும் அடங்கியிருக்கிறதே. நல்லதை நாடு என்றால், தீயதை நாடாதே என்று தானே அர்த்தம்? அப்படியிருக்க இரண்டையும் அடுத்தடுத்துக் கூறுவானேன்? இப்படிச் சிலர் கேட்கக்கூடும். இதற்கு நமது அன்றாட அனுபவத்திலேயே விடை காணலாம். மகனைப் பள்ளிக்கு அனுப்பும் தாய் என்ன சொல்லி யனுப்புகிறாள்? பாதையோரமாக, நடைபாதையிலேயே போ என்று புத்திசொல்லியனுப்புகிறாள். அதனோடு நிறுத்திக்கொண்டு விடுகிறாளா? இல்லை. பாதையைக் குறுக்காகக் கடந்து போகாதே; அதனால் ஆபத்து உண்டாகும் என்று எச்சரிக்கையும் செய்து அனுப்பு கிறாள். நல்லவர்களைச் சிநேகம் செய்து கொள் என்று நமது சகோதரனுக்குச் சொல்கிறோம். சொல்லிவிட்டுச் சும்மா யிருக்கிறோமா? அடுத்தாற் போலவே கெட்டவர்களோடு பழக்கம் வைத்துக் கொள்ளாதே என்று எச்சரிக்கையும் செய்கிறோம். இங்ஙனம் விதி முகத்தாலும் எதிர்மறை முகத்தாலும் கூறுவது காலம் நெடுகிலும் ஒரு மரபாகவே இருந்து வந்திருக்கிறது. பண்டைய நூல்களில் இப்படிச் சொல்லப் பட்டிருப்பதைப் பரக்கக் காணலாம். பெரியோர் பலருடைய சேர்க்கையினால் உண்டாகிற நல்ல விளைவுகளையும் அற்பன் ஒருவனுடைய சேர்க்கையினால் உண்டாகிற கெட்ட விளைவுகளையும் எடை கட்டிப் பார்தோமா னால், பிந்திய விளைவுகளின் எடை கூட்டியே காட்டும். நல்வழி செல்லும் பலருடைய நட்பு நமக்கு இருக்க, தீயவழி செல்லும் ஒருவனுடைய கூட்டுறவினால் என்ன பாதகம் உண்டாகப் போகிறது? அவனும் நண்பர்களில் ஒருவனாக இருந்து போகட்டுமே என்று ஒருவன், சிறப்பாக அரசன், அலட்சியமாக எண்ணி நடப்பானாகில், அவன், தானும் அழிந்து, தன்னைச் சார்ந்த அனைத்தின் அழிவுக்கும் அடிகோலியவனாவான். அற்பன் ஒருவனுடன் கூட்டுறவு கொள்ளுதலினாலேயே இவ்வளவு விபரீத விளைவுகள் உண்டாகக் கூடுமானால், இந்த அற்பர்கள் பலராக, ஓரினமாக அரசனைச் சூழ்ந்திருப்பார்களானால் அவன் கதி யாதாகும்? விரிக்கவும் வேண்டுமோ? அற்பர்களுடன் நட்புக் கொள்வது, கோடைக் காலத்தில் பாலைவனத்தை நண்ணுதலையொக்கு மென்றும், தீயோர் சிலருடன் பழகுவதைக் காட்டிலும் நச்சுப் பாம்புகள் பலவற்றுடன் பழகுதல் நல்லது என்றும் சுக்கிர நீதி கூறுகிறது. தீக்குச்சி சிறிதே யென்றாலும், அது, தன்னைப் போல் பல குச்சிகளைத் தந்துதவிய பெரிய மரத்தையும், அந்த மரத்தோடு சேர்ந்திருக்கும் நூற்றுக்கணக்காண மரங்களையும் ஒரு கணத்தில் பொசுக்கி விட வல்லதன்றோ? மற்றும் அரசன், எத்தகையோரால் சூழப்பட்டிருக்கிறான், ஆலோசனை கூறுகின்ற முறையிலோ, வேறு வகையிலோ அவனுக்கு உறுதுணையாயிருக்கின்றவர் யாரார் என்பவைகளைக் கொண்டே அவனுடைய பிரஜைகள் அவனை மதிப்பர்; இந்த மதிப்பீட்டின் பேரில்தான் அவனுடைய வாழ்வையோ தாழ்வையோ நிர்ணயிப்பர். எனவே, தன் பிரஜைகளின் விசுவாசத்தைப் பெறவும் அவர்களுடைய நன் மதிப்பிலே உயர்ந்து நிற்கவும் விரும்பும் அரசன், சிற்றினம் சேர்தலாகாது என்று எதிர் மறை முகத்தாலும் அறிவுரை வழங்குதல் அவசியமென்று கருதினர் பண்டைக் காலத்து அரசியல் அறிஞர். பெரியோர்களின் அறவுரைகளைப் புறக்கணித்த அரசர்களும், சிறியோர்களின் நேர்மையற்ற சொற்களுக்குச் செவி கொடுத்த அரசர்களும் இறுதியில் அழிவையே கண்டனர். இதற்கு நமது இதிகாசங் களிலிருந்தும், பிற நாட்டுச் சரித்திர ஏடுகளிலிருந்தும் அநேக உதாரணங் களை எடுத்துக்காட்டலாம். ஒரு சிலவற்றை மட்டும் இங்குக் காண்போம். ராவணன் பேரறிஞன். வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு அள்ளி விண்தொட எடுத்து ஆர்த்த ஆற்றலான். அவன் ராஜ்யத்தில் செல்வம் கொழித்திருந்தது. எண்ணற்ற சுக போகங்களை அனுபவித்தவன். என்றாலும் சீதையைக் கவர்ந்து கொண்டுவந்ததன் மூலம் ஒழுக்கம் தவறிவிட்டான். வந்தது வினை. சீதையை மீட்க ராமன் போருக்கெழுந்த காலை. அவனுக்கு-ராவணனுக்கு-அறவுரைகள் புகல்கின்றனர் இருவர். ராம லட்சுமணர்களாகிய இருவரோடும் மாறுகோடல் கன்மம் அன்று என்றும், கிளையோடும் மடியாது அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டருளுதி என்றும் சொல்லினன் அறிஞரின் மிக்கானாகிய விபீஷணன். மாதுலத்தலைவனாகிய மாலியவான் அடைக்கலம் புகுவதல்லால் இனிப்புகும் அரணுமுண்டோ என்று எச்சரிக்கை யாகவும் கூறினான். கேட்டானா ராவணன் இச்செவ்விய உரைகளை? மகோதரன், வக்கிரதந்தன் போன்ற சிறு மனம் படைத்தவர்கள், அவன் ஆணவத்தையும் படைச் செருக்கையும் தூண்டிவிட்டனர். அவர்களுடைய புன் மொழி களுக்கு வசப்பட்டுப் போருக்கெழுந்தான். தோல்வி கண்டான். மடிந்தும் போனான். அவன் உடலைத் தழுவிக் கொண்டு மண்டோதரி, மரங்களும் மலைகளும் உருக வாய்திறந்து புலம்புகிறபோது என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு என்று அவளோடு சேர்ந்து நாமும் புலம்ப வேண்டியவர்களாயிருக்கிறோம். முடி பணியறியாப் பணிக்கொடியோனான துரியோதனன் எவ்வளவோ மாட்சிமையுடன் ஆட்சிபுரிய வேண்டியவன். அன்பும் பணிவும் உருக்கொண்டோர்-அணுவாயினும் தன் சொல்வழாதவர் பலர் அவன் அவையில் வீற்றிருந்தனர். கொற்ற மிக்க துரோணன் கிருபன் பெருகு கீர்த்தி அக்கங்கையின் மைந்தன் மெய் நெறியுணர் விதுரன் ஆகிய பெரியோர் அவனுக்குத் துணைவர்க ளாக விளங்கி நின்றனர். ஆயினும் என்ன? திருகு நெஞ்சச்சகுனி யொருவன் இருந்து விட்டான். அவன் சொல்லைக் கேட்டான் துரியோதனப் பெயரான் விளைவு என்ன? ஐவரையும் அலைக்கழித்து விட்டுத் தானும் அழிந்தான். இந்த இதிகாச வரலாறுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். சமீப காலத்தில், சிற்றினம் சேர்ந்து சீரழிந்த ஒரு மன்னனின் கதையைக் கேளுங்கள். 1894 ஆம் ஆண்டிலிருந்து 1917 -ஆம் ஆண்டு வரை ருஷ்யாவை ஆண்டு வந்த இரண்டாவது நிக்கோலா இடிக்குந் துணையர் பலரைப் பெற்றிருந்தான். ஆயினும் ராபுட்டீன்1 என்ற ஓர் அயோக்கியனுடைய சொற்படியே நடந்தான். அரசாங்க நிருவாகத்திலும் ராணுவ நிருவாகத் திலும் திறமை யின்மையும் ஊழல்களும் மலிந்து விட்டன. சகுனிக்குத் துணையாக எப்படித் துச்சாதனன் இருந்தானோ அப்படி இந்த ராபுட்டீனுக்குத் துணையாக நிக்கோலாஸின் மனைவி இருந்தாள். முடிவு என்ன? ராபுட்டீன், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டான். நிக்கோலாஸும், அவன் மனைவியும், சுமார் முந்நூறு வருஷ கால ருஷ்ய சிங்காதனத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருந்த அவனுடைய ரோமனாவ் பரம்பரையும் மண்ணோடு மண்ணாகி விட்டன. இங்கிலாந்தில் 1625 -ஆம் வருஷத்திலிருந்து 1649 -ஆம் வருஷம் வரை முதலாவது சார்ல என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனை நல்வழி நடத்திச் செல்ல அறிஞரும் அமைச்சருமான பலர் முயன்றனர். ஆயினும் அவர்களைப் புறக்கணித்து விட்டு அவன், வில்லியம் லாட்2 போன்ற புன்மதி படைத்த ஒரு சிலர் காட்டிய சர்வாதிகாரப்போக்கில் சென்றான். கடைசியில் கொடுங்கோலன் என்றும் தேச விரோதி என்றும் குற்றஞ் சாட்டப்பட்டுத் தலை துணிக்கப்பட்டான். ஆக, நல்லாட்சி நடத்த முற்படும் ஓர் அரசன், பெரியாரைத் துணைக் கொண்டிருந்தால் மட்டும்போதாது, சிற்றினம் சேராதிருத்தலும் வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்த வேண்டியே, வள்ளுவம், பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்தையும் சிற்றினஞ் சேராமை என்ற அதிகாரத்தையும் அடுத்தடுத்து வைத்துப் பேசுகிறது. இந்த அறிவுரை அரசரை நோக்கிச் சொல்லப்பட்ட தாயினும், தனி மனிதர்களுக்கும் பொருந்துவதாகும். 10. இன்பமும் துன்பமும் இன்பமும் துன்பமும் நேர் மாறானவை யாகத் தோன்றிய போதிலும் இரண்டும் ஒரே எல்லைக் கோட்டில்தான் சந்திக்கின்றன. இந்த எல்லைக் கோடு அகன்றதன்று; மிக மெல்லியது. செல்வத்துக்கும் வறுமைக்கும், உடல் நலத்துக்கும் உடல் நலிவுக்கும், நன்மைக்கும், தீமைக்கும், அழகுக்கும் அவலட்சணத்துக்கும், மேதைக்கும் பைத்தியத்துக்கும் நடுவில் ஒரு மெல்லிய காகிதச் சுவர்தான் இருக்கிறது என்று சொல் வார்கள். இன்பத்துக்கும் துன்பத்துக்கும் மத்தியிலுள்ள கோடு, மேற்படி மெல்லிய காகிதச் சுவருக்கும் மெல்லியதாகவே இருக்கிறதென்று சொல்லவேண்டும். ஏனெனில், இன்பத்தின் கடைசியிலிருந்தான் துன்பம் ஆரம்பிக்கிறது. அப்படியே, துன்பத்தின் கடைசியிலிருந்துதான் இன்பம் ஆரம்பிக்கிறது. இதனால்தான் பெரியோர்கள், இவ்விரண்டையும் கடைசி வரை போகவிடக் கூடாதென்று சொல்வார்கள். அதாவது இன்பத்தையோ துன்பத்தையோ, இதற்கு மேல் இல்லை யென்ற அளவுக்கு அனுபவிக்க இடங் கொடுத்தலாகாது. அப்படி இடங் கொடுத்தோ மானால், இன்பத்திற்குப் பிறகு வரும் துன்பம் மிகக் கடுமையாகத் தோன்றும். அப்படியே துன்பத்திற்குப் பிறகு வரும் இன்பம் சப்பென்றிருக்கும். பொதுவாக, இன்பமும் துன்பமும் ஒரே சமயத்தில் பக்கத்துக்குப் பக்கமாக நிற்பதில்லை. அப்படி நின்றாலும், சிறிது முன்னும் பின்னுமாக அல்லது சிறிது ஏற்றக் குறைச்சலாக நிற்கின்றன. இப்படிச் சொல்வது ஏதோ புதிர் மாதிரி இருக்கிற தல்லவா? உண்மை என்னவென்றால், பொதுவாக இன்பமும் துன்பமும், ஒரே சமயத்தில், ஒரே வரிசையில், ஜதை நடை போட்டு கொண்டு மனிதனை வந்து அணுகுவதில்லை. செல்வமும் வறுமையும், ஜதையாக வருவதில்லை. சிரிப்பும் அழுகையும், சேர்ந்தாற்போல் உண்டாவதில்லை. ஒன்றைத் தொடர்ந்துதான் மற்றொன்று வருகிறது. ஏகதேசமாக இரண்டும் சேர்ந்து வந்துவிட்டால், இரண்டும் ஒரே மாதிரியான அனுபவத்தைத் தருவதில்லை. ஒன்று சிறிது அதிகமாகவும் மற்றொன்று சிறிது குறைவாகவுமே தருகிறது. என் மூத்த மகனுக்குத் திருமணம் நடக்கிறது. தம்பதிகள் மணப் பந்தலில் அமர்ந்திருப்பதைக் கண்டு நான் இன்புற்றவண்ணம் இருக்கிறேன். அதே சமயத்தில், என் கடைசி குழந்தைக்கு இரண்டு வேளையாகக் காய்ச்சல் அடித்துக் கொண்டிருக்கிறது. அதன் மழலைச் சொற்கள் முடங்கிக் கிடப்பதையும், அதன் மலர்க் கண்கள் மூடி மூடித் திறப்பதையும் கண்டு என் மனம் துன்புறுகிறது. இருந்தாலும் இந்தத் துன்ப அனுபவம், முந்திய இன்ப அனுபவத்திற் குச் சற்றுக் குறைவாகவே இருக்கிறதென்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எப்படியென்று கேட்கிறீர்களா? மணமக்களைப் பார்த்து நான் அனுபவிக்கிற இன்பம், எனது வமிசக் கொடியினுடைய பசுமையின் மீது படர்ந்து செல்கிறது எனது சந்ததிகளில் ஒரு சிலராவது, என் பெயரைத் தாங்கிக் கொண்டிருப்பார்களென்பதையும், அவர்கள் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதையும் என் கற்பனைக் கண்ணால் பார்க்கிறேன். என்ன இன்பம்! என்ன இன்பம்! அந்த இன்பத்திற்கு முன்னே, என் கடைசி குழந்தையின் காய்ச்சலினால் நான் அனுபவிக்கிற துன்பம், வைத்தியனை வரவழைத்து இரண்டு வேளை மருந்து கொடுக்கச் செய்தால் குணப்பட்டுவிடுகிறது என்ற நம்பிக்கை யினால் குறைந்ததாகவே இருக்கிறது. அசோக வனத்தில் சீதாபிராட்டி, சொல்லொணாத துன்பத்தை அனுபவிக்கின்றாள். ஒரு சமயம், ராவணனின் நெறிகெட்ட சொற்கள், நெறி நிற்கும் அவளைச் சுடுகின்றன. மற்றொரு சமயம், அரக்கியரின் நஞ்சு கலந்த சொற்கள் அவள் நெஞ்சத்தைப் பிளக்கின்றன. காய்கின்ற வெயிலில் எரியும் விளக்குபோல், புகைபட்டு மங்கிக் கிடக்கும் பதுமை போல், மேனி குலைந்தவளாகி விடுகின்றாள். இறத்தலே அறத்தின் ஆறு என்ற முடிவைக் கூடத் தொட்டுவிடுகிறது அவளுடைய துன்ப அனுபவம். ஆனால் இந்த அனுபவத்திற்கு மத்தியில் கருமேக நெடுங்கடல் காரனைய தன் நாயகன், தன்னை மீட்க வருவான் என்ற நம்பிக்கை அவளை விட்டகலாமல் அவளோடவே இருந்துகொண்டு அவளுக்கு இன்ப உணர்ச்சியை ஊட்டிக் கொண்டிருக்கிறது. தன் கணவனுடைய வில் வலியையும் தோள் வலியையும் நினைக்கும் போது அவளுக்கு ஏற்படுகிற இன்ப உணர்ச்சி, புறத்தே அவள் அனுபவிக்கிற துன்பங்களுக்கு மாற்றாக இருக்கிறது. இன்னும் சிறிது தெளிவாகச் சொல்லப்போனால், பிரத்தியட்சமாக அனுபவிக்கின்ற துன்பம் மிகப் பெரிதாக, அடர்ந்த இருள்போல் இருக்கிறதாயினும், அதன் ஊடே, லட்சியம்போல் எங்கேயோ எட்டி நிற்பதும், ஊசிக் கண்போல் சிறிதாயிருப்பதுமான நம்பிக்கையானது ஒளிக் கதிர்போல் நுழைந்து அவளுக்கு இன்பத்தை நல்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவிக்கிற போது நாம் கற்பனை உலகத்திற்குச் சென்று சஞ்சரிக்கக் கூடாது. இது விஷயத்தில் கூடியமட்டும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அப்படிச் சஞ்சரிப் போமானால், ஒரு கணத்தில், இன்பமே துன்பமாக மாறிவிடும்; துன்பமோ மிகுந்து காட்டும். மணப்பந்தலில் வீற்றிருக்கும் தம்பதிகள் நீடூழி வாழ்ந்துகொண்டிருப்பார்கள் என்ற இன்ப நினைவில் நான் திளைத்துக் கொண்டிருக்கிற சமயத்தில், இவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது, ஆபத்திரியில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டுமே, அங்குச் சேர்த்தால் உயிர் தப்பிப் பிழைப்பார்களா என்றெல்லாம் நான் எண்ணத் தொடங்கிவிடுவேனாகில், அந்த இன்ப நினைவு ஒரு கணத்தில் மறைந்துவிடுகிறது. துன்ப அனுபவத்திற்கு ஆளாகி விடுகிறேன். அது போலவே, என் கடைசி குழந்தையின் காய்ச்சல், வைத்தியனுடைய இரண்டு வேளை மருந்தினால் குணப்பட்டு விடுகின்ற நம்பிக்கையில் நான் ஆறுதல் கொண்டிருக்கிற சமயத்தில், வைத்தியன் வரமாட்டானோ, வந்தாலும் அவன் கொடுக்கிற மருந்து குணத்தைக் கொடுக்குமா, கொடுக்காவிட்டால் என்ன செய்வது, ஒருகால் அதைக் குழியிலே கொண்டுபோய்க் கிடத்தவேண்டி வந்துவிடுமோ என்பன போன்ற எண்ணங்கள் மீது என் மனம் ஊர்ந்து செல்லத் தொடங்கி விடுமாகில், எனக்கேற்பட்டிருந்த ஆறுதல், நம்பிக்கை எல்லாம் காற்றிலே உதிர்ந்து விழுந்த சருகுகளாக வல்லவோ ஆகிவிடும்? இதற்கு இடங்கொடுக்கலாமா? அசோக வனத்தில் சீதாபிராட்டி, ராகவனுடைய உறுமேறுறழ் வெஞ்சிலை நாணொலி வாராது, மீட்சிக்கு வழியில்லை என்ற கற்பனையான அவநம்பிக்கையிலே தன் உள்ளத்தைப் பறிகொடுத்து, சாதலே அறம் என்று துணிந்திருப்பாளானால், பின்னாடி அனுமன் மூலமாக அவளுக்கு ஏற்பட்ட இன்ப அனுபவத்திற்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா? திரும்பவும் தன் நாயகனைக் காணும் நற்பேறு கிட்டியிருக்குமா? ஆகவே மனிதன், இன்பத்திலோ துன்பத்திலோ விபரீதமான கற்பனைகளுக்கு இடந்தரலாகாது. இன்பமோ துன்பமோ நீடித்திராது என்ற உண்மையையும், சிறிது முன்னது பின்னதாகவாவது ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று வருதல் காலங்கடந்த நியதியென்பதையும் பிரதியொரு மனிதனும் அறிதல் அவசியம். அளவுக்கு மீறி இன்பத்திலே திளைக்கிற ஒருவன், ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள் சிறிய அளவிலாவது துன்பத்தைப் பரிசாகப் பெறுதல் நிச்சயம். அதுபோலவே அளவு மீறிய துன்பத்தை அனுபவிக் கிறவனுக்கும் ஒரு கண இன்ப அனுபவமாவது பரிசாகக் கிடைத்தல் நிச்சயம். ஆகவே எவனொருவனும், இன்ப அனுபவத்தின் போது துன்ப அனுபவத்தை எதிர்பார்த்து அதற்குக் கூடியமட்டில் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அதே பிரகாரம், துன்ப அனுபவத்தின் போது, இன்ப அனுபவத்தின் வருகையில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். நம்பிக்கை என்ற விளக்கைக் கொண்டு தான் துன்ப இருட்டைக் கடந்து இன்ப வெளிச்சத்திற்குச் செல்ல முடியும். வெறும் அறிவைக் கொண்டோ, செல்வத்தைக் கொண்டோ இன்பத்தைப்பெற முடியாது. அன்போ, சீலமோ, இப்படி நற் பண்புகள் எதனுடைய தொடர்பும் இராமல், அறிவு மட்டும் தனித்து ஒருவனிடம் குடிகொண்டிருக்கும் பட்சத்தில், அந்த அறிவை ஒரு தீவிரத்திற்குக் கொண்டுபோய், அதைத் தன்னலத்துக்குப் பயன்படுத்த முயலும் பட்சத்தில், அதனால் அவனுக்கு இறுதியில் துன்பம் உண்டாவது நிச்சயம் வெறும் அறிவானது, மனிதனிடத்திலே இயல்பாயமைந்துள்ள சில நல்ல சுபாவங்களைக்கூட மழுங்கச் செய்துவிடக் கூடிய தன்மை வாய்ந்தது. வெறும் அறிவினால் சிலரைச் சிறிது காலம் அடக்கியாளலாம்; ஆனால் சிலரோடு சேர்ந்து சிறிது காலங்கூட வாழ முடியாது. அப்படிப் பட்டவனுக்கு இன்பம் எப்படிக் கிட்டும்? வெறும் செல்வத்தைக் கொண்டு ஒருவன், சுவையான உணவு வகைகளை உட்கொள்ளலாம்; பகட்டான உடைகளை அணிந்து கொள்ளலாம்; விசாலமான மாளிகையிலே வசிக்கலாம்; வேகமான ஊர்தியிலே செல்லலாம்; சுருக்கமாக, நாகரிகம் என்ற பெயரால் வெளி யாகும் நவீன சாதனங்கள் பலவற்றையும் கொண்டிருக்கலாம். இவை இன்பம் நல்குமோ? இன்பம் நல்காவிட்டால் போகிறது; இவை மனிதனைச் சீரழிக்கவல்லவோ செய்யும்? வெறும் செல்வம், மனிதனுடைய அகந்தையை வளர்க்கும் எரி; ஆயிமாயிரம் ஆசைகளைக் கிளறிவிடும் தாற்றுக்கோல்; அச்சத்தையூட்டும் நச்சரவம்; சுருக்கமாக, நற்பண்புகள் பலவற்றையும் மெள்ள மெள்ள அரிக்கவல்ல கரையான். ஆகவே வெறும் செல்வத்தினால் மட்டும் இன்பம் கிடைக்காது. நம்முடைய அறிவும் செல்வமும் பிறர்க்குப் பயன்பட வேண்டும். பயன்படுத்துகின்ற மனப்பாங்கை நாம் பெறவேண்டும். அந்த மனப் பாங்குதான் இன்பத் தேன் சொரியவல்லது. அப்படிப் பயன்படுத்து வதற்குப் பக்குவப்படாத மனப்பாங்கை நாம் பெற்றிருப்போமானால், துன்பக் கேணியில் தஞ்சம் புகுவதற்குத் தான் நாம் தகுதியுடைய வர்களாவோம். மேற் கூறியவற்றை ரத்தினச் சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால், பரநலத்தினால் விளைவது இன்பம்; சுயநலத்தினால் கிடைப்பது துன்பம். இங்கு ஓர் எச்சரிக்கை. பரநலத்தை நாடுகிறவன் எடுத்த எடுப்பிலேயே, அதாவது ஆரம்ப தசையிலேயே, இன்பத்தைக் காண முடியாது. முதலில் துன்பத்தை அனுபவிக்க வேண்டும். இந்தத் துன்ப அனுபவம், சிறிய அளவாக இருக்கலாம்; சிறிது காலத்திற்கு மட்டுமே இருக்கலாம். என்றாலும் அனுபவித்துத்தானாக வேண்டும். அனுபவிக்கத் தயாராயில் வாதவனுக்கு இன்பம் கிட்டாது. இந்தத் துன்ப அனுபவ காலத்திலே, அவனுடைய பொறுமை, நெஞ்சுறுதி, தன்னம்பிக்கை, நேர்மை, அவன் கொண்டுள்ள நோக்கத்தின் தூய்மை இப்படிப் பலவும் கடுமையான பரிசோதனைக்குட்படும். இவற்றில் அவன் பெற்றி பெறவேண்டும். அந்த வெற்றியில்தான் அவன் நிலையான இன்பத்தைக் காண முடியும். அப்படிக் காண்கிற இன்பமோ, பிறருக்கு வாய்விட்டுச் சொல்ல முடியாததாய், அவனாலேயே சுயமாக அனுபவிக்கக்கூடியதாய் இருக்கிறது. அந்த இன்பத்தில் தான் அவன் வாழ்கிறான்; பரநலத்தில்தான் தன்னலத்தைக் காண்கிறான். சுயநலத்தை நாடுகிறவனோ, ஆரம்பத்தில் உலக ரீதியான சில இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுகிறான். இந்த இன்பங்கள் யாவும் போலி, சாசுவதமானவையல்ல என்பது அவனுக்குத் தெரிவதில்லை. இந்த நிலையில், தன்னைச் சுற்றியே உலகம் இயங்குகிறதென்று கருதி, அதை அலட்சியப்படுத்துகிறான். தன்னலத்தை முன்னிட்டேனும் பரநலத்தை நாடவேண்டுமென்ற எண்ணம் அவனுக்குத் தோன்றுவதேயில்லை. கடைசியில் பார்த்தால், எந்த உலக ரீதியான இன்பங்களில் அவன் ஆரம்பத்தில் ஈடுபட்டானோ அவையே இறுதியில் அவனுக்குப் பரம விரோதிக ளாகி விடுகின்றன. ஆரம்பத்தில் உலகத்தை அவன் அலட்சியப் படுத்தியதற்குப் பிரதியாக கடைசியில் உலகம் அவனை அலட்சியப் படுத்துகிறது. தன்னைத்தானே நொந்து கொள்கிறான். இதைக் காட்டிலும் வேறு துன்ப அனுபவம் என்ன வேண்டும்? இரண்டு பேர் சிறைக்குச் செல்கின்றனர் ஒருவன் சத்தியாக்கிரகி; மற்றொருவன் திருடன். முன்னவன், முகத்தில் புன்னகை பூக்க, தலை நிமிர்ந்த வண்ணம் செல்கிறான். பின்னவன், வறண்ட முகத்துடன் தலை குனிந்து செல்கிறான். தவிர முன்னவன், சிறையில் தான் எப்படி நடத்தப் படக்கூடும் என்பதை பற்றிய சிந்தனையேயில்லாமல் செல்கிறான். பின்னவனோ, சிறையில் என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாக வேண்டி வருமோ என்று ஏக்கம் பிடித்தவனாய்ச் செல்கிறான். ஏன் இந்த வேறுபாடு? முன்னவன், சிறைவாசத்தை ஒரு துன்பமாகக் கருதவில்லை; நாட்டு மக்களின் நல்வாழ்வை முன்னிட்டு, தான் செய்த தொண்டுக்காக, அதாவது தான் கொண்ட பரநல நாட்டத்திற்காகத் தனக்குக் கிடைத்த பரிசு என்று கருதுகிறான். அதனால் அவன் இன்பத்தையடைகிறான். பின்னவனோ, சுயநலத்திற்காகத் திருட்டுத் தொழிலை மேற்கொண்டான். தண்டனை யாகச் சிறைவாசம் கிடைக்கிறது. துன்பத்தை அனுபவிக்க வேண்டிய வனாகிறான். ஆகவே பரநலம் தருவது இன்பம்; சுயநலம் தருவது துன்பம். பகலுக்குப் பின் இரவு எப்படி நிச்சயமோ, அப்படியே இன்பத்துக்குப் பின் துன்பம் வருவது நிச்சயம். மாறாத இந்த உண்மையை அறிந்தவர்கள், இன்பத்தை அனுபவித்துக் கொண் டிருக்கிற காலத்திலேயே துன்பத்தை அனுபவிப்பதற்குக் தங்களைத் தயார்படுத்திக் கொள்வர். அந்தத் துன்பத்தை வரவேற்கவும் செய்வர். அடுக்கடுக் காக இன்ப அனுபவங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தால், துன்ப அனுபவம் ஏற்பட வேண்டுமென்று பிரார்த்தனையும் செய்வர். மகா அலெக்ஸாந்தரின்1 தந்தையான பிலிப் மன்னன்2 இப்படித்தான் பிரார்த்தனை செய்தான். ஒரே நாளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று நற்செய்திகள் அவனுக்குக் கிடைத்தன. ஒன்று, இல்லீரியர் என்ற ஒருவகை முரட்டு ஜாதியாருடன் அவன் தொடுத் திருந்த போரில் அவன் படைகள் வெற்றி கண்டது; இன்னொன்று, ஒலிம்பிக் விளையாட்டுப் பந்தயத்தில் அவன் அனுப்பியிருந்த குதிரை ஜெயித்தது; மற்றொன்று, அலெக்ஸாந்தர் பிறந்தது. இவைகளைக் கேட்ட பிலிப் மன்னன் உடனே மண்டியிட்டு கடவுளே, ஒன்றன் பின் ஒன்றாகச் சந்தோஷச் செய்திகளை அனுப்பி வருகிறாயே; நான் நிதானந் தவறாமலிருக்க ஒரு துக்கச் செய்தியையும் கூடவே அனுப்பு என்று பிராத்தித்தான்.3 பிலிப் மன்னன், முரட்டு இனத்தைச் சேர்ந்தவன் என்று கிரேக்க சரித்திரம் கூறுகிறது. இருக்கலாம். ஆனால் அவன் மனித வாழ்க்கையின் தத்துவத்தை, இன்ப-துன்ப நியதியை நன்கு அறிந்தவன் என்பதை நாம் ஒப்புக் கொள்ளவே வேண்டும். இன்பத்தை மின்னலுக்கும், துன்பதை இடிக்கும் ஒப்பிட்டுச் சொல்லலாம். எப்படி மின்னலைத் தொடர்ந்து இடி இடிக்கிறதோ அதுபோல் இன்பத்தைத் தொடர்ந்து துன்பம் ஏற்படுகிறது. தவிர, மின்னல் மின்னு வதெல்லாம் ஒரு கண நேரந்தான். அதற்குள் அதனைப் பார்ப்பவர் கண் களைப் பறித்துக் கொண்டுவிடுவது போல் கூசச் செய்கிறது. ஒரு மாதிரி தம்பித்துப் போகிறோம். இடியோசை நம் செவியில் விழுந்த பிறகுதான் சுய நிலையை யடைகிறோம். இதுபோன்றதுதான் இன்பமும். பொதுவாகப் பார்த்தோமானால், இன்பமானது அற்ப ஆயுளுடையதாகவே இருக்கிறது. அதற்குள் அதனை அனுபவிக்கும் மனிதனை சுயநிலை மறந்தவனாகச் செய்துவிடுகிறது. உலக ரீதியான இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்புப் பெற்றவர்கள், அந்த அனுபவந்தான் சாசு வதமானதென்று கருதி, சுற்றுச் சார்புகளை மறந்து அதிலேயே மூழ்கிக் கிடப்பதை உலகத்தில் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். அப்படியே மூழ்கிக் கிடக்கிறவனுக்கு, அவன் எதிர்பாராத விதமாக இடியோசையான துன்பம் வந்துறுகிறது. இடியோசையானது முதலில் நமது உடலைச் சிறிது நடுங்கும் படி செய்கிறது. பிறகுதான் சமாளித்துக் கொள்கிறோம். துன்பமும் இப்படித் தான். அது, முதலில் நம்மைச் சிறிது அசைத்தே கொடுக்கிறது. பிறகுதான் அதனைச் சமாளித்துக் கொள்ளத் தயாராகிறோம். ஆனால் அந்தத் துன்பமே நமக்கு நல்லதைச் செய்கிறது. எப்படி இடிக்குப் பின்னர் பெய்யும் மழை யானது, பூமி மீது படிந்துள்ள அழுக்குகள் அப்புறமாவதற்கு உதவி செய்கிறதோ அதுபோல், துன்பமானது, நம்மிடத்திலேயுள்ள, சிறப்பாக நாம் இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில் நம்மிடத்தில் குடிகொண்டு விட்ட அச்சம், அகந்தை முதலிய அழுக்குகளெல்லாம் அப்புறப் பட்டுப்போக உதவி செய்கிறது; மனித வாழ்க்கையின் பொருளை நமக்கு உணர்த்துகிறது. சுருக்கமாக, மனிதனைப் புடம் போட்டுச் சுத்தப் படுத்துவது துன்பந்தான். இதனாலேயே, பிரதியொரு மனிதனும் சிறிது காலமேனும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியது அவசியம் என்று பெரியோர்கள் கூறிப் போந்தார்கள். துன்பந்தான் இயல்பானது, கட்டாயமாக அனுபவிக்க வேண்டிய தொன்று என அறிந்து எவன் அதற்குத் தயாராயிருக்கிறானோ அவனுக்கு அந்தத் துன்பம் துன்பமாகத் தோன்றாது. இன்பம் விழையாது, இடும்பை இயல்பு என்பான் துன்பம் உறுதல் இலன் என்பது திருக்குறள். இன்பமானது, நாமே தேடிச் சென்று அடையக் கூடிய தொன்றன்று. அப்படித் தேடிச் சென்றால் அஃது ஓடிக்கொண்டே யிருக்கும். புகழும் அத்தகையதுதானே? இன்பம், தானாக நம்மிடம் வரவேண்டும். அது வருவதென்னவோ நிச்சயம். அதன் வருகையை முன்னிட்டு, நமது உள்ளத்தைத் திறந்து வைத்திருத்தல் வேண்டும். அது மட்டும் போதாது; அந்த உள்ளத்தை, பாவக்கறை ஏதும் படியாததாய் வைத்திருக்க வேண்டும். அதில் தெய்வ நம்பிக்கை என்ற விளக்கு எரிந்து கொண்டிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய உள்ளந்தான் இன்பத்தை வரவேற்றுத் தன்னிடம் குடியமர்த்திக் கொள்ளத் தகுதியுடையது. சாதாரணமாகவே இன்பமானது, புறத்திலே இல்லை, அகத்திலே தான் இருக்கிறதென்று சொல்வார்கள். அதாவது, கண்ணால் காணப்படுகிற காட்சிகளெல்லாம், காட்சியளவிலே இன்பத்தை அளிக்கமாட்டா. அவற்றை நமது உள்ளத்திலே கொண்டுவந்து நிறுத்தி வைத்து அனுபவிக்க வேண்டும். அந்த அனுபவத்திலிருந்துதான் இன்பம் சுரக்கும். இப்படிச் சுரப்பதற்குத் தகுதியுடையதாக நம் உள்ளத்தைப் பக்குவப் படுத்தி வைத்துக் கொள்ளவேண்டும். உதய சூரியனை எடுத்துக் கொள்வோம். பெரும் பாலோருக்கு அது செந்நிற உருண்டையாகக் காட்சியளிக்கிறது. அதில் என்ன விசேஷ மிருக்கிறதென்று கருதி அதைப் பார்த்தும் பாராமுகமாய் இருந்து விடு கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு அது, பொன் செய் பேரொளித் திரளாய், பொருள் யாவிற்கும் முதலாய், வேதம் பாடிய சோதியாய் காட்சியளிக் கிறது. அந்தக் காட்சியை அனுபவிக்கி றார்கள். அந்த அனுபவம் அவர்களுக்கு இன்ப மூட்டுகிறது. காரணம், எது நிஜமான இன்பம் என்பதை அறிந்து அனுபவிக்க வல்ல தூய்மையான உள்ளத்தை அவர்கள் படைத்திருப்பதுதான். உலகரீதியான இன்பங்கள் அனுபவிப்பதையே வாழ்நாளின் குறிக்கோளாக யாரும் கொள்ளலாகாது. அப்படிக் கொண்டு விடு கிறவனுக்கு, உடனடியாக இல்லாவிட்டாலும் சிறிது காலங் கழித்தாவது, ஆசாபங்கம், உடல் நோய், உள்ள அரிப்பு இப்படிப் பலவும் கிடைப்பது நிச்சயம். உலர்ந்துபோன மரம் போல் அவன் உலவிக் கொண்டிருக்கலாம். கடைசியில் சுருக்கமாகச் சில வார்த்தைகள் இன்பம் எங்கே இருக்கிறது? அவனவனுக்கேற்பட்ட சுய தர்மத்தைச் செய்து கொண்டு போவதிலே, பிறருக்கு நன்மையானது எதுவோ அதை அறிந்து செய் வதிலே, அப்படிச் செய்யுங்கால் குறுக்கிடும் இடையூறு களைச் சமாளிப்பதிலே, நித்தியமானது எது என்பதைத் தெரிந்து கொண்டு அதன் மீது நாட்டஞ் செலுத்துவதிலே, எல்லாவற்றிற்கும் மேலாக எதையும் மிதமாக அனுபவிப்பதிலே இன்பம் இருக்கிறது. துன்பம் எங்கே இருக்கிறது? கடமையை அடிப்படையாகக் கொள்ளாது கொண்டாடப்படும் உரிமையிலே, பாவமென்று பெரியோர் களால் ஒதுக்கித்தள்ளப்பட்ட செயல்களைச் செய்வதிலே, வாழ்க்கையின் ரகசியமென்ன என்பதை அறிந்து கொள்ளாது நடத்தும் வாழ்க்கையிலே துன்பம் இருக்கிறது. ஆதலின் மனிதனே, இன்ப துன்பங்களின் இருப்பிடத்தை நன்கு அறிந்து வாழ்க்கையை நடத்து! 11. வீடும் நாடும் வீட்டின் விரிவுதான் நாடு. வீடு, வேர். நாடு, அதனின்று வளர்ந்திருக்கும் மரம். வீடின்றேல் நாடில்லை. நாட்டுக்கு அடித்தளமா யமைந்திருப்பது வீடு. வீடு என்று சொல்லப்படுவது ஒரு சிறு குடிசையாயிருக்கலாம். அதில் வாழ்க்கைக்கு இன்றியமையாத சில வசதிகள் கூட இல்லாம லிருக்கலாம். இருந்தாலும், அந்தக் குடிசையில் வசிக்கும் மக்களிடம் அறிவும் அன்பும் நிறைந்திருக்கும் பட்சத்தில் அதுவே நற்றவ வானினும் நனி சிறந்ததாகும். இங்கே நாம் அறிவு என்று சொல்லி, ஏட்டறிவைச் சுட்டிக் காட்டவில்லை. பரந்து கிடக்கிற உலகத்திலே பயின்று பெறுகிற அறிவையே குறிப்பிடுகிறோம். உலக அறிவு இல்லாமல் ஏட்டு அறிவு மட்டும் இருந்தால், அதைக் கொண்டு வாழ்க்கைப் பாதையில் சரளமாகச் செல்ல முடியாது. அநேக வளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஏட்டறிவு இல்லாமல் உலக அறிவு மட்டும் இருந்தால், வாழ்க்கைப் பாதை அவ்வளவு கடினமாயிராது; வளைவுகளைச் சந்திக்க நேரிட்டாலும் அவைகளில் சிக்கிக் கொண்டு, சுற்றிச் சுற்றி வராமல், கூடிய மட்டில் சுலபமாக மீண்டு விடலாம். ஏட்டு அறிவோடு உலக அறிவும் சேர்ந்திருந்தால், அது, பட்டை தீர்ந்ததும் ஒளி நிரம்பியது மான வைரம் போன்றதாகும். வைரம் போன்ற இந்த அறிவை முழு அறிவென்று சொல்லலாம். இதையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம். இதே பிரகாரம் அன்பு என்பது, தன்னலமற்ற, கைம்மாறு கருதாத அன்பையே குறிப்பிடுவதாகும். இந்த அன்பு, உரிமையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; கடமையொன்றின் மீதே கவனஞ் செலுத்துகிறது. அப்படிச் செலுத்துவதில் இன்பம் நுகர வல்லது. இந்த அன்பைப் பூரண அன்பு என்று சொல்லலாம். இதையே இங்கு நாம் குறிப்பிடுகிறோம். இத்தகைய அறிவும் அன்பும் நிறைந்த மக்களைக் கொண்ட இடம் எங்கு இருந்தாலும், சரி எவ்வளவு சிறியதாயிருந்தாலும் சரி, அதுவே நற்றவ வானினும் நனி சிறந்ததாகும். முற்காலத்தில் நமது பாரத நாட்டில், இயற்கையான சூழ்நிலைக்கு மத்தியில் சிறிய சிறிய கிராமங்கள் அமைந்திருந்தன. அவற்றில் சிறு சிறு வீடுகள் கட்டிக்கொண்டு, சமுதாயத்தின் பல்வேறு படியிலுள்ளவர்களும் தங்கள் தங்கள் சுய தருமத்தை நடத்திக் கொண்டு, ஒற்றுமை உணர்ச்சி யுடன் இல்லற வாழ்க்கையை இனிதே நடத்தி வந்தார்கள். இந்த வீடுகள் சிறியனவாயிருந்த போதிலும், இவற்றில் வசித்து வந்தவர்களுடைய எல்லாவித தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கக் கூடியனவாகவும் அதே சமயத்தில் வருவோர் போவோருக்கு வசதியளிக்கக் கூடியன வாகவும் இருந்தன. பிறர் பார்த்து மெச்ச வேண்டுமென்பதற்காகவோ, சுயமாகவே ஏற்படுத்திக் கொண்ட அந்ததைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டு மென்பதற்காகவோ இவை கட்டப் பெறவில்லை. இல்லறத்திற்கு அடுத்த நிலையிலுள்ள வானப்பிரதர்களும், அதற்கடுத்த நிலையிலுள்ள சந்நியாசிகளும், ஜன சந்தடிக்கப்பாற் பட்ட இயற்கையானதொரு சூழ்நிலையில் சிறு சிறு குடில்கள் அமைத்துக் கொண்டு அவற்றில் வாழ்க்கையை வாழ்ந்து காட்டி வந்தார்கள். இந்தச் சிறு குடில்கள், ஆசிரமங்கள் என்ற புனிதமான பெயரைப் பெற்று, அரண்மனையில் வசித்துக் கொண்டிருந் தவர்கள் உள்பட சமுதாயத்தின் பல வகையினருக்கு, வாழ்க்கையின் லட்சணம் இன்னதென்று தெரிவிக்கும் தீப தம்பங்களாய் விளங்கிக் கொண்டிருந்தன. அரண்மனைக ளில் வசித்துக் கொண் டிருந்தார்கள், இந்த ஆசிரமங்களில் வாழ்ந்து வந்தவர்களைப் பற்றி அடிக்கடி பேசி வந்தார்கள்; இவைகளுக்கு அடிக்கடி வந்து போவதைப் பெருமையாகக் கருதினார்கள். ஆனால் இப்பொழுது, நாகரிகம் முதிர்ந்திருக்கிற இந்தக் காலத்தில், கிராம வாழ்க்கைக்கு மதிப்புப்போய் விட்டது; ஆசிரமங்களுக்கிருந்த புனிதத் தன்மை மங்கிவிட்டது. ஜன சந்தடிக்கு மத்தியில் பெரிய பெரிய வீடுகள் கட்டிக்கொண்டு அவற்றில் வாழ்க்கையின் லட்சணம் இன்ன தென்று தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கையை நடத்துவதுதான் கௌரவம் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது; வலுத்தும் வருகிறது. பொதுவாகவே உருவத்திற்கு உயர்வு கொடுக்கிற காலமிது. இது கிடக்கட்டும். வீடு என்பது என்ன? விடுதலையளிப்பது வீடு. எதிலிருந்து விடுதலை? பிரதியொரு மனிதனும், தன்னுடைய அன்றாடப் பிழைப்புக்காக, ஏதோ ஒருவிதமான உழைப்பை மேற்கொள்ள வேண்டிய வனாயிருக்கிறான். அந்த உழைப்பு, அவனுக்குச் சில சமயங்களில் சோர்வைத் தருகிறது. சில சமயங்களில் கவலையைக் கொடுக்கிறது. தனக்கேற் பட்ட வேலையை ஆசையோடு தொடங்குகிறான் ஆனால், வேலை முடிந்ததும் ஆசாபங்கமே உண்டாகிறது. இப்படிச் சோர்வினாலும் கவலையினாலும் ஆசா பங்கத்தினாலும் மனம் வாடிப் போகின்ற நிலையில் அவன் வீட்டுக்கு வருகிறான். வந்ததும் ஒருவிதமான விடுதலை உணர்ச்சி அவனுக்கு உண்டாகிறது. அதாவது வீட்டுக்குள் நுழையும் வரையில் அவனைப் பற்றிக் கொண்டிருந்த சோர்வு, கவலை, ஆசாபங்கம் ஆகியவெல்லாம் அவனை விட்டு அகன்று போகின்றன. அவற்றினின்று விடுதலை யடைந்து விட்டோமென்ற ஆறுதல் அவனுக்கு உண்டாகிறது. அதிலிருந்து ஒரு பெருமூச்சு வெளி வருகிறது. அந்தப் பெருமூச்சில் சுதந்திர மணம் வீசுகிறது. மற்றும் வீடுதான், மனிதனுக்குச் சமத்துவ எண்ணத்தையும் சகோதர உணர்ச்சியையும் வளர்த்துக் கொடுக்கிறது. ஒருவன் அலுவலகத்தில், பெரிய அதிகாரியாயிருக்கலாம்; அல்லது சிறிய கையாளாயிருக்கலாம். ஆனால் வீட்டுக்குள் வந்து தன் குடும்பத்தின ருடன் பழகுகிற போது அவன் பெரிய அதிகாரியுமில்லை; சிறிய கையாளுமில்லை; குடும்பத்தினரின் ஆசாபாசங்களிலே, சுக துக்கங்களிலே பங்கு கொள்கிற ஒருவனே. தன்னை மேலானவ னென்றோ கீழானவனென்றோ கருதிக் கொண்டு அவன் ஒதுங்கி யிருக்க முடியாது. ஒதுங்கி யிருக்கவும் கூடாது. அப்படி யிருந்தால் அவன் ஒதுக்கப்பட்டவனாகவே ஆகிவிடுவான். தவிர அவன், அலுவலகத்திலோ பிற இடங்களிலோ பிறரோடு உறவாடுகிற போது, தான் வேறு அவர்கள் வேறு என்ற உணர்ச்சியிலேயே மிதந்து கொண்டிருக்கிறான். வீட்டுக்கு வந்ததும் அந்த வேற்றுமை உணர்ச்சி அவனை விட்டு அகன்று விடுகிறது. குடும்பத்தினரோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு விடுகிறான். தன்னுடைய எண்ணங்கள், நம்பிக்கைகள் ஆகிய பலவற்றையும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறான். இங்ஙனம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் வளர்த்துக் கொடுக்கும் வீடுதான் மதிப்புடையது; புனிதமானது. வீட்டுணர்ச்சி யென்பதொன்றுண்டு. அது தனிப்பட்டது; சலிப்புத்தராத இன்பத்தைத் தரவல்லது. இரை தேடும் நிமித்தம் பறவையானது எங்கு வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும், மாலை நேரமானதும் தன் வீடாக அமைத்துக் கொண்டிருக்கும் கூட்டுக்குள் அல்லது பொந்துக்குள் வந்து சேர்ந்து விடுகிறது. அப்படி வந்து சேர்ந்து விடவேண்டுமென்பதில் அதற்கிருக்கும் ஆவலை, அது வரும் வேகத்தைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். இரை தேடப்போகுங் காலத்தில், தான்பட்ட துன்பங்களை யெல்லாம் கூட்டிலே வந்து சேர்ந்து விட்ட இன்பத்திலே மறந்து விடுகிறது. ஆகாயத்தில் எவ்வளவு உயரம் பறந்து சென்றாலும், இரையைக் கண்டுபிடிக்க, தன் பார்வையை எங்குச் செலுத்தினாலும், தான் வசிக்கும் கூட்டின் நினைவு அதற்கு இருந்து கொண்டே இருக்கிறது. அந்த நினைவே, அதன் இரை தேடும் முயற்சிக்கு உற்சாகந் தருவதாயிருக்கிறது. காட்டிலே திரியும் மிருகமும் இப்படித்தான். இரைக்காக எவ்வளவு தொலைவு சென்றாலும், இருட்டும் நேரத்தில் தன் குகைக்குள் வந்து அடைக்கலம் புகுந்து கொள்வதில்தான் ஆர்வம் காட்டுகிறது. மனிதனுக்குக் கேட்க வேண்டுமா? எந்த வேலையில் எவ்வளவு மும்முரமாக ஈடுபட்டிருந்த போதிலும் வீட்டு நினைவு அவனை விட்டகல்வதில்லை. பெரிய பதவியில் இருக்கின்றவன் முதல் சிற்றாள் வரையில் யாரும், தங்களுடைய அலுவல்களுக்கு மத்தியில், வீட்டிலுள்ள குழந்தைகளின் மழலைச் சொற்களை நினைவிலே கொண்டு வராமலிருப்பதில்லை; அந்த மழலைச் சொற்களைப் பிறரிடம் சொல்லி மகிழாமலிருப்பதில்லை. அப்படிச் சொல்லி அனுபவிக்கின்ற மகிழ்ச்சியே அவர்களுடைய அலுவல்களுக்குத் தெம்பூட்டுவதாயிருக்கிறது. நம்முடையதல்லாத வேறொரு வீட்டுக்குச் செல்கிறோம். அங்குள்ளவர்கள் நம்மை அன்பாக உபசரிக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பார்க்கிற பார்வை, நம்மோடு பேசுகிற பேச்சு, நமக்காகச் செய்கிற காரியம் யாவும் நம்மை அவர்களோடு ஒன்றுபடச் செய்கின்றன. அப்பொழுது நாம் என்ன சொல்கிறோம்? என் வீட்டிலிருப்பது போலவே இங்கு இருப்பதாக உணர்கிறேன் என்று சொல்கிறோம். அதாவது, நம்மோடு ஒன்றியிருக்கும் வீட்டுணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம். எந்த வீடு, தன்னை நாடி வருவோரை வீட்டுணர்ச்சி பெறும்படி செய்கிறதோ அந்த வீடுதான், வீடு என்ற சொல்லின் முழுப் பொருளைக் கொண்ட வீடாகும். வீட்டின் அருமை, சிறிது காலம் வீட்டிற்கு வராமல் வெளியே தங்கியிருந்து பார்த்தால்தான் தெரியும். பசுந்திடலின் அருமை, மணற் காட்டில் சிறிது தூரம் சென்றால் தானே தெரிகிறது? மணற்காடு விரிந்தும் பரந்தும் இருக்கிறது. அதில் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி எவ்வளவு காலமானாலும் சுற்றித் திரியலா மென்று கருதி அதில் ஒருவன் பிரவேசிப்பானாகில், பிரவேசித்துச் சிறிது தூரம் செல்லும் வரை தேகத்தில் தெம்பு இருக்கலாம். பிறகு? உடற் சோர்வு, உள்ளச் சோர்வு எல்லாம் உண்டாகி, திக்கு திசை தெரியாமல் திரிய வேண்டியதுதான்; நீரெங்கே, நிழலெங்கே என்ற ஏங்கித் தவிக்க வேண்டியதுதான். வீட்டை விட்டு வெளியே சென்றால் சுதந்திரமாயிருக்கலாமென்று கருதிச் சொல்கிறவன் இந்தக் கதியைத்தான் அடைவான். இல்லற வாழ்க்கையை மேற்கொண்டிருப்பவனுக்கு வீட் டுணர்ச்சி இருக்கத்தான் செய்யும்; இருக்கத்தான் வேண்டும். துறவறத்தை மேற்கொண்டிருப்பவன் நிலை வேறு. அவனுக்கு வீடு என்பதொன்றில்லையாயினும் உலகம் பூராவும் அவனுக்கு வீடாகிறது. வீட்டுணர்ச்சியென்பது போய் உலக உணர்ச்சியென்பது வந்து அவனிடம் குடிகொள்கிறது. அவனைப் பற்றி இங்குப் பேச்சு இல்லை. வீட்டிலிருந்து வெளியே செல்கிற ஒருவன், வயிற்றுப் பிழைப்பு நிமித்தமாகவோ, பட்டம், பதவி, புகழ் இப்படி ஏதோ ஒன்றைச் சம்பாதிப் பதற்காகவோ சில சமயங்களில் கீழான இச்சைகள் பலவற்றிற்குத் தன்னையறியாமல் ஆட்படுகிறான்; மனிதப் பண்புக்கு ஒவ்வாத சில காரியங்களைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குட்படு கிறான். விதி வசத்தினாலோ, சூழ்நிலை காரணமாகவோ அவன் நிலைமை இப்படியாகி விடுகிறது. இதற்காக அவன் பிறகு வருந்தாமலிருப்பதில்லை. ஆனால் அவன், வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் வேறு மனிதனாகவே ஆகிவிடுகிறான். கீழான இச்சைகள், சுயநல எண்ணங்கள் ஆகிய யாவும் அவனை விட்டகன்று விடுகின்றன. தன்னைச் சுற்றியிருக்கப் பட்டவர்க ளிடத்தில் அன்பு செலுத்துகிறான். அவர்கள் செலுத்தும் அன்புக்கு வசப்படுகிறான். அவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அப்படிச் செய்வதன் மூலம் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பன போன்ற எண்ணங்கள் அவன் மனத்தில் வளர்கின்றன. அவர்க ளுடைய சுகத்திற்காக, தன்னுடைய சுகத்தைத் தியாகம் செய்ய வேண்டுமென்ற அளவுக்கு அவன் பக்குவப்பட்டு விடுகிறான். இங்ஙனம் தினந்தோறும் வீட்டுத் தொடர்பு கொள்வதன் மூலம் அவன், வீட்டுக்கு வெளியே சஞ்சரிக்கின்ற சமயங்களில் அவனை வந்தடையும் கீழான இச்சைகள், சுயநல எண்ணங்கள் முதலியன காலக்கிரமத்தில் அவனை விட்டு அகன்று போவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக் கின்றன. இளமையில் வீட்டுப் பராமரிப்புப் பெறாதவர்கள், வயது வந்த பிறகு, பலதரப்பட்ட இழி செயல்களைச் செய்யக் கூடியவர்க ளாகி விடுகிறார்கள். குற்றஞ் செய்து தண்டிக்கப் பெற்ற சிறைவாசி களில் நூற்றுக்கு எண்பது பேர், இளமையில் வீட்டுப் பராமரிப்புப் பெறாதவர்களாகவே இருக்கிறார் களென்று ஓர் அறிஞன் கணக்குப் போட்டுக் காட்டுகிறான். இதனால் வீடு என்பது, மனிதனை நேர்வழிப்படுத்திவிடும் ஓர் உலைக்களம் என்பது தெளிவாகிறது. வீட்டில் தான் ஒரு மனிதனுடைய நிஜத்தன்மையைக் காண முடியும். குடும்ப நலத்தை உத்தேசித்து வெளியே செல்கிற போது, அவனுடைய நடை, உடை, தோற்றம், பேச்சு, செயல் எல்லாம் அவனுடைய நிஜத்தன்மையை ஓரளவு மறைத்து விடுகின்றன. சுருக்கமாக, வீட்டில் எப்படி இருந்தானோ அப்படியே வெளியில் நடந்து கொள்ள அவனால் முடிவதில்லை. முடியாத நிலையில்தான் அவன் அடிக்கடி சிக்கிக் கொள்ள வேண்டி யிருக்கிறது. இந்தச் சிக்கலிலிருந்து அவனை விடுவிப்பது வீடல்லவோ? இதயங்கள் பல சந்திக்கின்ற இடந்தான் வீடு. இந்த இதயங்கள், ஒரே மாதிரியான ஆசைத்துடிப்புடையனவாகவோ, நம்பிக்கைகள் நிரம்பியனவாகவோ இருப்பதில்லை. அப்படியே விருப்பு வெறுப்புக் களைப் பெறுவதிலோ செலுத்துவதிலோ வித்தியாசப் படுகின்றன. வீட்டுக்கு வெளியே இவை-இந்த இதயங்கள் - சந்திக்கிறபோது ஒன்றோ டொன்று மோதிக் கொள்ளவும் செய்கின்றன. ஆனால் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் இவை எவ்வளவு குதூகலத்துடன் கலகலத்துப் பேசு கின்றன? வெளியில் மோதிக்கொண்டிருந்ததையெல்லாம் அடியோடு மறந்துவிட்டு எவ்வளவு நெருக்கமாக இழைந்து உறவாடுகின்றன? பிரிந்தவரைச் சேர்த்து வைக்கும் சக்தி வீட்டுக்கு உண்டு. கணவனும் மனைவியுமோ, தந்தையும் மகனுமோ ஏதோ சில காரணங்களினால் பிரிந்திருக்கிறார்களென்று வைத்துக் கொள் வோம். இருந்தாலும் வீட்டின் நினைவு இவர்களை விட்டுப் பிரிவதில்லை. இருதரப்பினருமே, வீட்டிலே பேசியது, நடந்தது எல்லாவற்றையும் அடிக்கடி நினைத்துக் கொள்ளு கிறார்கள்; சில சமயங்களில் தனிமையைத் தேடிச் சென்று அங்குக் கண்ணீர் விடுகிறார்கள். அந்த கண்ணீரானது, காலக்கிரமத்தில், எந்தக் காரணங்களுக்காக இவர்கள் பிரிந்தார்களோ அந்தக் காரணங் களைக் கரைந்து போகும்படி செய்து விடுகின்றது. அந்த நிலையில் வீடு இவர்களை அழைக்கிறது. அழைப்பை மறுக்க இவர்களால் முடிவதில்லை. திரும்பவும் வீடு வந்து சேர்ந்து ஒன்று கூடி விடுகிறார்கள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? இளமையில் நாம் எந்த வீட்டில் பிறந்து வளர்ந்தோமோ, எந்த வீட்டில் நம்முடைய மழலை மொழிகள் தேன் மழையைப் பொழிந் தனவோ, எந்த வீட்டில் நம்முடைய தாயின் மணிக்கரங்கள் நம்மைத் தொட்டிலிட்டுத் தூங்க வைத்தனவோ அந்த வீட்டின் நினைவு, நம் ஆயுளுள்ளளவும் நம்மோடு இருந்து கொண்டே இருக்கிறது. குழந்தைப் பருவத்தில் நாம் எப்படி ஆடிப்பாடினோ மென்பதை நாம் மறந்து விட்டிருக்கலாம். வயதான பிறகு, வேற்று நாட்டுக்குச் சென்று வேற்று மொழியைப் பேசிக்கொண்டு வேற்றினத்தவரோடு மனங்கலந்து உறவாடலாம். வானளாவிய கட்டடத்தில் இருந்து கொண்டு ஆயிரக்கணக்கான பேரை நாம் அதிகாரஞ் செய்யலாம். ஆனால் எந்த வீட்டில் நமது குழந்தைப் பருவம் கழிந்ததோ அந்த வீட்டை நம்மால் மறக்கவே முடிவ தில்லை. அது நம்முடைய இதயத்தில் எப்படியோ, பலவந்தமாகக் கூட, குடி கொண்டுவிடுகிறது. ஒரு மனிதனுடைய மதப்பற்று, கலையுணர்ச்சி, நற்குணங்கள் ஆகிய பலவும் வீட்டில் தான் வித்திடப் பெறுகின்றன. வீட்டின் சூழ்நிலையைப் பொறுத்திருக்கிறது இவை முளை விட்டு வளர்வது. ஆகவே இந்தச் சூழ்நிலை நல்லவிதமாக அமையும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது, வீட்டுப் பொறுப்பை ஏற்று நடத்துகிறவர் களின் முக்கியமான கடமையாகும். பொதுவாக, நல்ல சூழ்நிலையில் அமைந்திருக்கிற ஒரு வீடு, மனிதனுடைய கோபதாபங்களைச் சுட்டெரிக்கிறது; அவனுடைய தான் என்ற எண்ணப் போக்குக்கு அடிக்கடி தடைக்கல் போடுகிறது; அவனுக்கு அவ்வப்பொழுது உண்டாகும் மனவேதனைகளுக்கு மருந்தளிக்கிறது. மற்றும் அது, வாழ்க்கையில் சறுக்கி விழுந்தாரைக் கை தூக்கி விடுகிறது; வேறுபட்டு வந்தாரை ஒன்றுபடுத்தி வாழ்த்துகிறது. அதனால் உண்டாகும் நன்மைகள் அநேகம். இனி நாட்டுக்கு வருவோம். வீட்டுக்கு என்னென்ன லட்சணங்கள் சொல்லப்பட்டனவோ அத்தனை லட்சணங்களும் பெரிய அளவில் ஒரு நாட்டுக்குப் பொருந்தியிருக்க வேண்டுமென்று பொதுப்படையாகச் சொல்லலாம். அப்படிப் பொருந்தியிருக்கிற நாடுதான், நிறைந்த நாடு என்று சொல்லப்படுவதற்குரியதாகிறது. உதாரணமாக, வீட்டிலுள்ளவர்கள் அறிவும் அன்புமுடையவர்களா யிருக்கும் பட்சத்தில் நாட்டிலுள்ள அத்தனை பேரும் அவ்விரண்டும் நிறையப் பெற்றவர்களாயிருப்பார்கள். வீட்டுணர்ச்சிதான் பெரிய அளவில் நாட்டுணர்ச்சியாகப் பரிணமிக் கிறது. இந்த உணர்ச்சியின் முதிர்ச்சிதான் நாட்டுப் பற்று என்ற புனிதமான பெயரைப் பெறுகிறது. வீட்டு நலனுக்குத் தியாகம் செய்யாதவர்கள், நாட்டு நலனுக்குத் தியாகஞ் செய்ய முடியாது. வீட்டில் பலர் இருந்தபோதிலும், அவர்களை இணைத்துப் பிணைக்கும் மனம் ஒன்றாயிருக்குமானால் நாட்டிலுள்ள அத்தனை பேருக்கும் ஒரே மனம் இருக்கும். அதாவது அனைவரும் ஒருமனப் பட்டவர்களாய் ஒரு குரலுடன் பேசி, ஒரு முகமாகத் தங்கள் கடமையின் மீது கவனஞ் செலுத்துவர். ஒரு நாட்டு அரசாங்கத்தின் நிருவாகத் திறமையைக் கணித்துப் பார்க்க, அந்த நாட்டிலுள்ள பெரும்பாலான வீடுகள் எப்படி நிருவகிக்கப் படுகின்றன வென்பதை ஓரளவாவது தெரிந்துகொண்டால் போதும். எவனொருவன் வீட்டுக்குரிய கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டு வருகிறானோ அவனால் தான் நாட்டின் உண்மையான பிரஜையாயிருக்க முடியும். வீட்டுக்குரிய கடமைகளைத் துறந்துவிட்டு நாட்டுக்குப் பணிசெய்ய முன் வருகிறவன் என்றேனும் ஒருநாள் தோல்வியே காண்பான். அவன் பணி, அவன் எதிர்பார்க்கும் பலனைக் கொடாது. ஏனென்றால் சிறிய அளவில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாதவன் எப்படிப் பெரிய அளவில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து வெற்றி காண முடியும்? பத்து அடி தூரம் நடந்து செல்ல மறுக்கிறவன் இருபது கஜ தூரம் எப்படி ஓடுவான்? தவிர, வீட்டிலுள்ளவர் களிடத்தில் அன்பு செலுத்தி ஆதரவளிக் காதவன், நாட்டிலுள்ளவர் களிடத்தில் பரிவு கொண்டு அவர்களுக் குச் சேவை செய்ய முடியுமா? வீட்டுக்குச் செய்ய வேண்டிய சுருங்கிய கடமையே நாட்டுக்குச் செய்ய வேண்டிய விரிந்த கடமையாகப் பரிணமிக்கிற தென்றாலும், வீட்டில் கொண்டும் உரிமையை விரிந்த அளவில் நாட்டில் கொண்டாட முடியாது; கொண்டாடவும் கூடாது. கொண்டாடத் துணிகிறவன் ஒரு பிரஜையின் பொறுப்பை உணராதவன். அப்படி உணராமல் நடந்து கொண்டால் அவன் குற்றவாளியாகக் கருதப்பட்டு அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டியவனாகிவிடுவான். அவனுக்குச் சொந்தமான பிரஜா பாத்தியதைகூட அவனிடமிருந்து பறிக்கப்பட்டு விடுதல்கூடும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் வீட்டா னுடைய உரிமை வேறு; நாட்டானுடைய உரிமை வேறு. என் வீட்டில் ஒரு காலை நீட்டிக் கொண்டு எவ்வளவு நேரமானாலும் படுத்திருக்க எனக்கு உரிமையுண்டு; என்னோடு வசித்துக் கொண் டிருக்கிறவர்களுக்கு இடைஞ்சலில்லாத வரையில் என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது; அப்படி நீட்டிக்கொண்டு படுக்காதே யென்று சொல்ல முடியாது. ஆனால் நானே, நாட்டுக்குப் பொதுவான, நாட்டிலுள்ள பலருக்கும் பயன்படுகின்ற பாதையின் நடுவில் என் இரண்டு கால்களையும் நீட்டிக்கொண்டு படுக்க, பிரஜை என்ற முறையில் எனக்கு உரிமையுண்டு என்று சொல்லிப் படுத்துக் கொள்வேனாகில் நான் சிறைச்சாலைக்கோ பைத்தியக்கார ஆபத்திரிக்கோ அனுப்பப்பட்டுவிடுவேனல்லவா? வீட்டிலே ஒரு தந்தையாகவோ எஜமானனாகவோ இருந்து என் சொற்படி கேளாதவர் களை நான் கண்டிக்கலாம்; உடம்பில் ஊனம் ஏற்படாதவகையில் அவர்களைத் தண்டிக்கவும் செய்யலாம். அதுபோலவே நாட்டின் பிரஜை என்று சொல்லிக்கொண்டு என் சொல் கேளாதவர்களையோ எனக்குப் பிடித்தமில்லாதவர் களையோ நான் கண்டிக்கவோ தண்டிக்கவோ முடியுமா? எனவே உரிமை கொண்டாடும் விஷயத்தில் வீட்டானுக்கும் நாட்டானுக்கு மிடையே அநேக வரம்புகளுண்டு. வீட்டுப் பற்று எந்த விதத்திலும் நாட்டுப் பற்றுக்கு முரண் பட்டதன்று. உண்மையில் வீட்டுப்பற்றில்லாதவன் நாட்டுப் பற்றுடைய வனாக இருக்க முடியாது. மூன்று விதமான பற்றுக்கள் சேர்ந்து நாட்டுப் பற்றாகப் பரிணமிக்கிறதென்று பெரியோர்கள் சொல்லிப் போயிருக் கிறார்கள். அதாவது ஓர் உலோபி பணத்தி னிடம் வைத்திருக்கும் பற்று, கணவனுக்கும் மனைவிக்குமிடையே நிலவும் பற்று, ஒரு தாயார் தன் குழந்தையினிடம் கொண்டுள்ள பற்று ஆகிய மூன்றும் சேர்ந்து நாட்டுப் பற்றாகிறது. இந்த மூன்று விதமான பற்றுக்களும் வீட்டிலேதான் பிறந்து வளர்கின்றன என்பதைப் பற்றி நாம் அதிகம் சொல்லத் தேவையில்லை. இந்த மூன்றனுள் முதலாவதான உலோபியின் பற்று, அவனை மட்டுமே சார்ந்திருக்கிறது. பிந்திய இரண்டு பற்றுக்கள் இருவரை மட்டுமே தழுவிக் கொண்டிருக்கின்றன. நாட்டுப் பற்றோ, லட்சக்கணக்கான பேரை அணைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரிடத்திலும் அன்பு செலுத்துவதாய் அமைகிறது; அத்தனை பேருடைய நலத்தில் தன்னுடைய நலத்தைக் காண்கிறது. நீர் வளம், நில வளம், கனி வளம் போன்றவைகளைக் கொண்டு ஒரு நாட்டின் சிறுமையையோ பெருமையையோ கணித்துப் பார்க்கக்கூடாது. ஒரு நாடு அனுபவிக்கும் சுதந்திரம், அந்த நாட்டு மக்கள் எந்தெந்த வகையில் சமமான உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள், அவர்களிடையே எந்த அளவுக்குச் சகோதர உணர்ச்சி நிலவியிருக்கிறது என்பவைகளைக் கொண்டே அந்த நாட்டின் சிறுமையையோ பெருமையையோ கணித்துப் பார்க்க வேண்டும். வீட்டின் மதிப்பும் இப்படித்தானே கணிக்கப்படுகிறது? வீட்டிலே ஒருவன் எவ்வளவு உண்மையாக நடந்து கொள்கிறானோ அவ்வளவு உண்மையாகவே நாட்டிலும் நடந்துகொள்ள வேண்டும். வீட்டுக்கொரு நியாயம், நாட்டுக்கொரு நியாயம் என்கிற மாதிரியாக நடந்துகொள்ளக் கூடாது. உதாரணமாக, வீட்டில் அந்நியத் துணிமணி களை உபயோகித்துக் கொண்டிருக்கிற ஒருவன், வெளியில் செல்கிற போது மட்டும் நாட்டுப் பொருள்களை உபயோகிப்பானாகில் அவன் வேஷதாரியல்லவா? வீட்டிலே கை நீட்டாத கருமி, நாட்டு விவகாரங் களில் தருமவானைப் போல் நடிக்கலாமா? வீட்டிலே நாள் தவறாமல் கடவுளுக்குப் பூசை செய்கிறவன், நாட்டிலே, விவரம் தெரியாத ஒரு சிலருடைய கரகோஷத்தைப் பெறும் பொருட்டு அந்தக் கடவுளைப் பழித்துப் பேசலாமா? இந்த மாதிரியான விஷயங்களில் ஒரு மனிதன், வீட்டில் எப்படிப்பட்டவனாக இருக்கிறானோ அப்படிப்பட்டவனாகவே நாட்டிலும் நடந்துகொள்ள வேண்டும். வீட்டுக்குடைய ஒருவன், எப்படித் தன்னைச்சுற்றியிருக் கிறவர்கள் நன்மை பெறும் பொருட்டு, தன்னுடைய நன்மையை விட்டுக் கொடுக்கிறானோ அப்படியே ஒரு நாட்டுப் பிரஜையும் அந்த நாட்டு மக்களுடைய நன்மைக்காக, தன் சொந்த நன்மையை ஓரளவேனும் விட்டுக்கொடுக்க வேண்டும். இந்தத் தியாக உணர்ச்சியை ஒரு சிறிதளவாவது ஒரு பிரஜை பெற்றிரா விட்டால் அவன் நாட்டு முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறவனாகவே கருதப்படுவான். அவனுடைய பிரஜா பாத்தியதை எப்பொழுதேனும் பறிமுத லானால் அப்பொழுது அவனுக்குப் பரிந்து பேச யாரும் முன் வரமாட்டார்கள். ஒருவன், தாய் நாட்டின்மீது கொண்டுள்ள பற்று, அவன் வெளி நாட்டிலே தங்கியிருக்கிற போதுதான் நன்றாக வெளிப்படுகிறது. வெளி நாட்டில் சிறிது காலம் தங்கியிரு; அப்பொழுது தாய் நாட்டுப் பற்று எப்படிப் பட்டதென்பது உனக்குத் தெரியும் என்று ஓர் அறிஞன் உபதேசம் செய்கிறான் அதிகார சக்தியினால் நாடு கடத்தப்பட்டவர்கள், தங்கள் நாட்டை நினைத்துக் கொண்டு புலம்பியிருக்கின்ற உருக்கமான வரலாறுகளை உலக சரித்திர ஏடுகளிலே காண்கிறோ மில்லையா? 12. காலமும் கடவுளும் உலகத்தின் வயது, எடை, பரிமாணம் ஆகியவற்றைக் கணக்கிட்டுச் சொல்லுகிறார்கள். கரை வகுத்துக் கொள்ளாத சமுத்திரத்தின் ஆழத்தை அங்குலம் வரை நிர்ணயித்து விடுகிறார்கள். விண் மீன்களின் எண்ணிக்கையை எடுத்துக் காட்டுகிறார்கள். ஆனால் காலத்தைக் கணக்கிட்டு யாரும் சொல்ல வில்லை. அது கடவுளைப் போல் ஆதி அந்தமில்லாதது; பிறப்பு இறப்பு அற்றது; அதற்கு உருவம் இல்லை; ஓய்வு மில்லை. கடவுள் ஆடிக்கொண்டே இருக்கிறார். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. உருவங்கடந்த கடவுளுக்கு, கற்பனையிலாவது உருவம் சமைத்துப் பார்க்க முடிகிறது. ஆனால் காலத்தை அப்படிப்பார்க்க முடிவதில்லை. அது, கற்பனைக்கு அப்பால் இருந்து கொண்டு உயிரினங் களை ஆட்டி வைக்கிறது. கடவுளைக் காட்டிலும் காலம் வலியதோ என்று ஒரு சமயம் நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், கடவுளைப் பக்தியினால் வசப்படுத்தி விடலாம்; பிடித்துக் கட்டி விடலாம். பக்தன், எந்த உருவத்தில் அவரைப் பார்க்க விரும்புகிறானோ அந்த உருவம் எடுத்துக் கொண்டு பக்தனிடம் ஓடி வருகின்றார். அவனுக்குக் குற்றேவல் செய்யவும் அவர் தயங்குவதில்லை. பாண்டவரில் ஒருவனான சகதேவன், கண்ணபிரானைத் தன் கருத்தினால் பிணித்த கதையைப் பாரதத்தில் படிக்கிறோம். மணிவாசகப் பெருமான் இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது இனியே என்று சொல்லி ஆண்டவனுக்குத் தடையுத்தரவு போட்டு விடுகிறார். துருவன், தன் விருப்பத்திற்குகந்த முறையிலேயே, அணுவிலும், அணுவாய், மகத்திற்கும் மகத்தாயுள்ள அந்தப் பரமனைக் கண்டுகளித்தான். இன்னும் ஆழ்வார்களும் நாயன்மார்களும், தாங்கள் கருதிய வடிவத்தில் இறைவனைப் பார்த்து, பிறவிக் கடலை நீந்திக் கடந்திருக்கின்றனர். இவர் களுக்கு அந்தப்பரமன், பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து ஓடி வந்தோ, இருந்த இடத்தில் இருந்து கொண்டோ உதவியிருக்கிறார். காலத்தை, இப்படிப் பக்தியினாலோ வேறு உபாயத்தினாலோ வசப்படுத்த முடியுமா? பிடித்துக் கட்ட முடியுமா? அது, யாருக்கும் எதற்கும் கட்டுப்படாமலல்லவோ ஓடிக் கொண்டிருக்கிறது. கடவுளைத் தந்திரத்தினால் வசப்படுத்த முடியாவிட்டாலும் மந்திரத்தினால் வசப்படுத்த முடியுமென்று சிலர் சாதிக்கிறார்கள். இருக்கலாம். ஆனால் காலத்திடம் தந்திரமோ, மந்திரமோ எதுவும் பலிக்காது. இரண்டினாலும் அதை வசப்படுத்த முடியாது. ஆனால் கடவுளுக்கும் காலத்திற்கும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது. கடவுள் இளையவரென்றும் முதியவரென்றும் ஞானியநென்றும் கர்ம வீரரென்றும் வேற்றுமை பாராட்டாமல் எல்லோருக்கும் வசப்படுகிறார்; கட்டுப்படுகிறார். அது போலவே காலமும், யாரையும், எவ்வித வித்தியாசமும் பாராட்டாமல் தன் வசமாக்கிக் கொள்கிறது. காலத்தின் ஆதிக்கத் திற்குக் கட்டுப்படாதவர் உலகத்தில் யாரும் இல்லையல்லவா? கடவுள், தந்திரத்திற்கு வசப்படாதவர் என்று சொன்னாலும் அவர் பெரிய தந்திரசாலி யென்று கருதவேண்டியிருக்கிறது. அவர், தாம் மட்டும், காலங் கடந்த நிலையில் இருந்து கொண்டு, தமது படைப்புக்குட்பட்ட அனைத்தையும் காலத்திற்குக் கட்டுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறார். அவர் ஏன் தம்மைப் போல் தமது படைப்புக்களைக் கருதக்கூடாது? காலங்கடந்த நிலையில் வைக்கக்கூடாது. ஆனால், இது விஷயத்தில் அவர் ஒரு தலைச் சார்பாகவே நடந்து வந்திருக்கிறார். இந்த பூவுலகைப் போல் வானுலகையும் படைத்தவர் அவர்தானே? அப்படியிருக்க வானுலகத்திலுள்ளவர் களுக்கு மட்டும் நரை, திரை, மூப்பு, மரணம் இவை எதுவும் இல்லையென்று ஏன் நியதி செய்து வைத்திருக்கிறார்? அவர்களுக்கு மட்டும் கண் சிமிட்டுவது, கால் பதிய நடப்பது போன்ற சிரமங்களிலிருந்து ஏன் விடுதலை யளித்திருக்கிறார்? காலத்தின் ஆதிக்கம் அங்கு மட்டும் ஏன் செல்லுபடியாகச் செய்யவில்லை. அவரைப் பார்த்து இந்தக் கேள்விகளைக் கேட்பது யார்? கேட்டால் தான் அவர் எங்கே பதில் சொல்லப்போகிறார்? அவருக்குத்தான் உருவமே இல்லையே. கடவுளுக்கு எத்தனையோ அலுவல்கள்! எத்தனையோ பொறுப்புக்கள்! எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் கவனிக்க வேண்டிய வராயிருக்கிறார். ஒரு பக்கம் படைத்துக் கொண்டும், மற்றொரு பக்கம் படைத்தவற்றைக் காப்பாற்றிக் கொண்டும், இன்னொரு பக்கம் படைத்த விகிதாசாரத்திற்குப் படைத்தவற்றை அழித்துக் கொண்டும் வர வேண்டியிருக்கிறது. இப்படிச் செய்ததையே திருப்பித் திருப்பிச் செய்துகொண்டிருப்பதில் அவர் சிறிதும் சலிப்புக் காட்டுவதில்லை. இதனை ஒரு விளையாட்டாகவே கருதுகின்றார். மற்றும் கடவுள், ஒரு சமயம் காலைத் தூக்கி ஆடுகின்றார்; இன்னொரு சமயம் காலை நீட்டிப் படுத்துத் தூங்குகின்றார். ஆடுவது அம்பலத்தில்; படுத்துத் தூங்குவது பாற்கடலில். ஆடும் பொழுது செம்மேனியராகத் திகழ்கின்றார்; படுத்துத் தூங்கும் பொழுது கருமேனி யராகக் காட்சியளிக்கின்றார். இன்னும் ஆடிக்கொண்டே அசைவற்றிருக் கிறார்; தூங்கிக்கொண்டே விழித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஆட்டத்தில் வகையுண்டு; கிரமமுண்டு, அப்படியே அவர் அறிதுயிலில் இனிமை யுண்டு; உண்மையுண்டு, ஆம்; எத்தனையோ நன்மைகளுமுண்டு. காலத்திற்கு இவையெல்லாம் ஒன்றுமே இல்லை. ஓடிக் கொண்டேயிருப்பதுதான் அதன் வேலை. ஓடுவதிலும் நிதானமுண்டா? இல்லை. ஒரே வேகந்தான். காலம் பறக்கிறது என்று சொல்வார்கள். அஃது எவ்வளவு உண்மை! காலத்தின் வேகத்தை யாராவது கணித்துக் கொடுத் திருக்கிறார்களா? இல்லை. மின்னல் வேகமென்றும், காற்று வேக மென்றும், மனோ வேகமென்றும் இப்படி என்னென்னவோ சொல்லுகிறார்கள். இவைகளுக்குச் சமமாகக் காலத்தின் வேகத்தைச் சொல்லலாமா? அல்லது கண்மூடிக் கண் திறப்பதற்குள் காலம் ஓடுகிற தென்று கூறலாமா? மற்றும் காலமானது, பறந்துகொண்டே மனிதவர்க்கம், பிராணி வர்க்கம், தாவர வர்க்கம் இப்படி எல்லாவற்றினிடத்திலும் என்னென்ன மாறுதல்களை உண்டுபண்ணி விடுகிறது! அதனால் கோடிழுக்கப் பெறாத படைப்பே இல்லையென்று சொல்லலாம். இரண்டு மூன்று துளிர்களோடு பூமியிலிருந்து தலை தூக்கிய செடியானது, நம் கண் முன்னேயே, கப்பும் கிளையும் கொண்ட பெரிய மரமாகிப் பூவும் பிஞ்சும் கனியும் தருகிற தென்று சொன்னால், அது காலத்தின் திருவிளையாடலல்லவா? சில வருஷங்களுக்கு முந்திச் சந்தித்த நமது நண்பனை இப்பொழுது பார்த்தால் அவனிடத்தில் எவ்வளவு மாறுதல்கள் தென்படுகின்றன? கடவுள், அவனைப் படைக்கிறபோது படைப்புத் தொழிலில் தமக்குள்ள முழுத் திறமையையும் காட்ட வேண்டுமென்று கருதி, அவன் முதுகை, உயரமாக வளரும் தேக்கு மரத்தைப்போல் நேராக நிமிர்த்தி வைத்தார்; சிவந்த மாங்கனியை நறுக்கி இரண்டு பக்கத்துக் கதுப்புகளையும் அவனுடைய இரண்டு கன்னங்களிலும் ஒட்டவைத்தார்; மின்னலின் வெளிச்சத்தில் சிறிது பிரித்தெடுத்து அவனுடைய இரு விழிகளிலும் எப்படியோ புகுத்தி வைத்தார்; தனக்கு எத்தனை திருநாமங்கள் உண்டோ அத்தனையையும் எழுதுவதற்குத் தோதாக இருக்கிற மாதிரி, அவனுடைய நெற்றியை அகன்ற ஏடாக உருவாக்கினார். அந்த அகன்ற நெற்றி, அவனுடைய கூரிய அறிவை எடுத்துச் சொல்லும் விளம்பரப் பலகையாக இருந்தது. அவையெல்லாம் இப்பொழுது எங்கே? காலமானது, கடவுளின் படைப்பில் மாறுதல் செய்துவிடக் கூடிய சக்தி, தன்னிடம் இருக்கிறதென்று நிரூபித்துக் காட்டுகின்ற முறையில். அவன் முதுகை, நாணேற்றப்பட்ட வில்லாக்கிவிட்டது; அவனுடைய கதுப்புக் கன்னங்களை நீரற்ற வறண்ட குழிகளாக்கி அவற்றில் கவலையையும் தளர்ச்சியையும் நிரப்பிவிட்டது. அவன் கண்களிலிருந்த ஒளியைப் பறித்துக் கொண்டு அதற்குப் பதில் பூஞ்சணத்தைப் பரப்பிவிட்டது. அவன் நெற்றியா? தனது வேகமான வருகையை முன்கூட்டித் தெரிவிக்கின்ற அறிமுகச் சீட்டுகள் மாதிரி அந்த நெற்றியிலே எத்தனை கோடுகளை இழுத்துவிட்டிருக்கிறது? இப்படிப் பலவிதமான கோலங்களைக் காட்டும் காலமானது, நிலையாமையின் பிரதிநிதியாயிருந்து கொண்டு நிலையாயுள்ள கடவுளின் படைப்புத் திறமையைப் பரிகசித்துக் கொண்டிருக்கிறது. காலத்தை, ஆழங்காண முடியாத ஒரு சமுத்திரமாகக் கற்பனை செய்துகொண்டு பார்த்தால், அதிலிருந்து தெறிக்கும் ஒரு திவலையினும் திவலையாகவே மனிதனுடைய ஆயுள் தென்படு கிறது. மனிதனுடைய அதிகபட்ச ஆயுள் நூறு வயது என்று நிர்ணயித்து வைத்திருக்கிறார்கள் பாரத நாட்டுப் பெரியோர்கள். மனிதன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்று கர்த்தர் அருளியதாக விவிலியம் (ஆதி யாகமம்) கூறுகிறது. காந்தியடிகள், தாம் நூற்றிருபத்தைந்து வருஷம் வாழப்போவதாகத் தன்னம்பிக்கையுடன் சொல்லிவந்தார். ஆனால் எண்பதாவது வயதிலேயே அவருடைய உலக வாழ்க்கை முடிந்து விட்டது. யார் எந்தவிதமாக அதிகபட்ச வயதை நிர்ணயித்துச் சொல்லி விட்டுப் போனபோதிலும், பொதுவாகப் பார்க்கிறபோது, நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து சதவிகிதம் பேர் நூறு வயதை எட்டிப் பாராதவர்களாகவே காலத்தின் ஆக்கிரமிப்புக்குட்பட்டு விடுகிறார்கள். நூறு வயதுக்கு மேல் வாழ்ந்தவர்களோ வாழ்ந்து கொண்டிருக் கிறவர்களோ நூற்றுக் கணக்கில்தான்; ஆயிரம் கணக்கில் என்றுகூடச் சொல்ல முடியாது. உலகத்தின் கோடிக்கணக்கான ஜனத் தொகையில் இந்த எண்ணிக்கை எம்மாத்திரம்? நூறு வயதுக்கு மேல் வாழ்ந்த முனிவர்கள் பலர் நமது நாட்டில் இருந்து வந்தார்கள்; இப்பொழுதும் இருந்து வருகிறார்கள். இவர்கள் உலக சந்தடியின் ஆரவாரத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறபடியால், இவர்களைப் பற்றிய விவரங்கள் நமக்குச் சரியாகத் தெரியவில்லை. இவர்களைத் தவிர, என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறவர் களென்று சிலர், நமது பண்டைய நூல்களின் வாயிலாக நமக்கு அறிமுகமாகிறார்கள். இவர்கள், காலத்தின் ஆக்கிரமிப்புச் சக்திக்குட்படாதவர்கள். இவர்களைச் சிரஞ்சீவி களென்று போற்று கிறோம். இவர்கள் முறையே அசுவத்தாமன், மகாபலிசக்கரவர்த்தி, வியாசன், அனுமான், விபீஷணன், கிருபன் ஆகிய எழுபேரென்று சிலர் சொல்லுவர் இவர்களோடு, மார்க்கண்டன், துருவன், பிரகலாதன் ஆகிய இப்படிச் சிலரைச் சேர்த்துக் கூறுவர் வேறு சிலர். சிரஞ்சீவி என்ற சொல்லுக்கு என்ன பொருள் கூறுவது? அசோக வனத்தில் வைகும் சீதை, ராமனுடைய கணையாழியைக் கொண்டு தந்த அனுமனைப் பார்த்து ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும் ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்று வாழ்த்துகின்றாள். இந்த வாழ்த்துரையைச் சிரஞ்சீவி என்ற சொல்லுக்கு விளக்கவுரையாகக் கொள்ளலாமல்லவா? தற்காலத்தில் விஞ்ஞான சாதிரம் எவ்வளவு தூரம் முன்னேறினாலும், அதனால் இத்தகைய சிரஞ்சீவிகளைச் சிருஷ்டிக்க முடியுமா? சந்தேகந்தான். நூறு வயதுக்கு மேற்பட்டு வாழ்ந்த ஒரு சிலருடைய பட்டியலை விவிலியம் ஆதியாகமத்தில் காண்கிறோம். இவர்கள் யுகப் பிரளயத்திற்கு முந்தி வாழ்ந்திருந்தவர்கள்1 என்று பொதுவாக அழைக்கப்பட்டிருக் கிறார்கள். இவர்களில் மெத்தூசலா2 என்பவன் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம் வாழ்ந்தான். இவன்தான், உலகத்திலேயே அதிகபட்ச வயது வாழ்ந்தவன் என்று விவிலியத்தில் அதிக நம்பிக்கை யுள்ளவர்கள் கருதுகிறார்கள். இஃது எப்படியோ இருந்து போகட்டும். உலகத்தில் தோன்றும் உயிரினங்கள் யாவும், மனிதன் கூட, ஒரு நாளில்லாவிட்டால் ஒருநாள் காலத்தின் ஆக்கிரமிப்புச் சக்திக்கு ஆட்பட வேண்டியதுதான். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலமுண்டு என்பதை விவிலியம் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறது:- ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு; இறக்க ஒரு காலமுண்டு. நட ஒரு காலமுண்டு; நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு. கொல்ல ஒரு கால முண்டு; குணமாக்க ஒரு கால முண்டு; இடிக்க ஒரு கால முண்டு; கட்ட ஒரு கால முண்டு. அழ ஒரு காலமுண்டு; நகைக்க ஒரு கால முண்டு. புலம்ப ஒரு காலமுண்டு; நடனம் பண்ண ஒரு கால முண்டு. கற்களை எறிந்துவிட ஒரு கால முண்டு; கற்களைக் கோக்க ஒரு காலமுண்டு. தழுவ ஒரு கால முண்டு; தழுவாமலிருக்க ஒரு கால முண்டு. தேட ஒரு கால முண்டு; இழக்க ஒரு கால முண்டு. காப்பாற்ற ஒரு கால முண்டு; எறிந்துவிட ஒரு கால முண்டு. கிழிக்க ஒரு கால முண்டு; தைக்க ஒரு கால முண்டு. மௌனமாயிருக்க ஒரு கால முண்டு; பேச ஒரு கால முண்டு. சிநேகிக்க ஒரு கால முண்டு; பகைக்க ஒரு கால முண்டு. யுத்தம் பண்ண ஒரு காலமுண்டு; சமாதானம் பண்ண ஒரு கால முண்டு. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கால முண்டாயினும், யாராருக்கு எது எதற்கு எவ்வளவு எவ்வளவு கால மென்பது, மனிதனே, எவருக்கும் தெரியாது. ஏன், உன்னுடைய காலமே, அதாவது உனக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிற காலமே, உனக்குத் தெரியாதல்லவா? ஆதலின் இப்பொழுது உன் கைவசமிருக்கிற காலத்தை வீணாக்காதே. வீணாக்கி விட்டால் அது திரும்பி வராது. பணத்தைச் செலவழித்து விட்டால் திரும்பச் சம்பாதித்துக் கொள்ளலாம். உன் முயற்சியில்லாமலே கூட, சில சமயங்களில் பணம், உன்னிடம் வந்து சேரலாம். காலத்தைச் செலவழித்து விட்டால் திரும்பச் சம்பாதித்துக்கொள்ள முடியாது. பணத்தைச் செலவழித்து விட்டபிறகு. வீணாகச் செலவழித்து விட்டோமே யென்று வருந்தினால், அந்த வருத்தம், ஒரு கால், உன் முயற்சியைத் தூண்டலாம் நீ இழந்து விட்டிருந்த தன்னம்பிக்கையை அந்த முயற்சியினால் மீண்டும் பெறலாம். ஆனால் காலத்தை வீணாகச் செலவழித்து விட்டு, பிறகு வருந்தினால் அந்த வருத்தம் உனக்கு ஏக்கத்தைத்தான் கொடுக்குமே தவிர ஊக்கத்தைக் கொடாது. ஊக்கத்தை நீ வலுக் கட்டாயமாக வர வழைத்துக் கொண்டால்கூட, அந்த ஊக்கத்தைச் செயல்படுத்தப் போதுமான தேக பலமும் மனோ பலமும் உன்னிடம் இராது. ஆகவே காலத்தை நல்ல விதமாகச் செலவழி. உபயோகமான வழியில் பயன்படுத்து. உன்னுடைய நன்மைக்காக மட்டுமல்ல; மற்றவர்களுடைய நன்மைக்காகவும் பயன்படுத்து. மனிதனே, கடவுளின் உண்மையில் நம்பிக்கைகொள். அவர் எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு தடு மாறாதே உன்னைக் காட்டிலும் எல்லா விதத்திலும் மேலானதொரு சக்தி இருக்கிற தென்பதையும், அதுவே இயங்கும் பொருள்களத் தனையையும் இயக்கி வைக்கிறதென்பதை யும் ஒரு சமயமில்லா விட்டால் ஒரு சமயம் நீ ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சாதாரண காலத்தில் நீ ஒப்புக்கொள்ள மறுத்தாலும், ஆபத்தோ துக்கமோ உன்னை வந்து தாக்குகிற போது, அல்லது முதுமையானது, உன் உடலிலும் உள்ளத்திலும் தளர்ச்சியைக் கொடுக்கத் தொடங்குகிற போது நீ நிச்சயம் ஒப்புக்கொள்ள நேரிடும். அவை வரு முன்னரேயே நீ ஒப்புக்கொண்டு, காலத்தைப் பயனுள்ள வழியில் செலவழிக்க முற்படு வாயேயானால், அந்த ஆபத்தோ, துக்கமோ, முதுமையோ எதுவும் உன்னை அதிகமாகப் பாதிக்காது. அந்த மேலான சக்திதான் கடவுள். அவர்தான் உனக்கு நல்வழி காட்ட வல்லவர். அவர் வல்லமையில் நம்பிக்கை கொள். அவரைப் போற்று. 