வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு – 28 மகாத்மா காந்தி ( மொழிபெயர்ப்பு நூல் ) ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 28 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2007 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16+ 336=352 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 220/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ.மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி.க., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப் பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழி பெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக் கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்க தரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை . ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி டோரதி கிருஷ்ணமூர்த்தி 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், புதுக்கோட்டை - 622 002. பதிப்புரை உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலகச் சாளரங் களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர். சர்மா வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த உலக நிகழ்வுகளை தமிழர் களுக்குப் படம் பிடித்துக் காட்டியவர். அரசியல் கருத்துகளின் மூலம் புத்துணர்ச்சியும் விடுதலை உணர்ச்சியும் ஊட்டி வீறு கொள்ளச் செய்தவர். உலக அரசியல் சிந்தனைகளைத் தமிழில் தந்து தமிழிலேயே சிந்திக்கும் ஆற்றலுக்கு வழிகாட்டியவர். தாம் வாழ்ந்த காலத்து மக்களின் பேச்சு வழக்கையே மொழிநடையாகவும், உத்தியாகவும்கொண்டு நல்ல கருத்தோட்டங்களுக்கு இனிய தமிழில் புதிய பொலிவை ஏற்படுத்தியவர். தமிழ் மக்களுக்கு விடுதலை உணர்வையும்; தேசிய உணர்வையும்; சமுதாய உணர்வையும் ஊட்டும் வகையில் அரும்பணி ஆற்றியவர். தமிழ்ப்பண்பாட்டின் சிறப்புக்களை போற்றியவர்; பொருளற்ற பழக்க வழக்கங்களைச் சாடியவர். தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களும் உலகளாவிய அரசியல் பார்வையைப் பெறுவதற்கு வழி அமைத்தவர். மேலை நாட்டுஅறிஞர்களின் தத்துவச் சிந்தனைகளை எளிய இனிய தமிழில் தந்தவர். வரலாற்று அறிவோடு தமிழ்மொழி உணர்வை வளர்த்தவர். அரசியல் தத்துவத்தை அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ் நாட்டுத் தலைவர்களுக்குக் கற்றுத் தந்தவர். தமிழகத்தின் விழிப்பிற்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். தமிழர்கள் கல்வியில் வளர்ந்தால்தான் உலகில் உயர்ந்து நிற்க முடியும் என்பதை தம் நூல்களில் வாயிலாக உணர்த்தியவர். நன்மையும் தீமையும் இருவேறுநிலைகள்; தீமையை ஓங்கவிடாமல் நன்மையை ஒங்கச் செய்வதே மக்களின் கடமையென்று கூறியவர். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகின்றன. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல்களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்கு வதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல் திறமையைக் குறிக்கோளாகக் கொண்ட - பகுத்தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தேடியெடுத்து வெளியிடுகிறோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடா முயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரைகளை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். இவர் நூல்களைப் படிப்பவர்களுக்கு அந்தந்த நூல்களின் விழுமங்களோடு நெருக்கம் ஏற்படுவது உறுதி. இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ்க் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் கட்டுரை இலக்கிய நூல்கள் 11. இந்நூல்களை 3 நூல் திரட்டுகளாக வெளியிட்டுள்ளோம். இவரின் தமிழ் நூல்கள் வெளிவந்த காலம் வடமொழி ஆளுமை ஒங்கியிருந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடையிலும், மொழி நடையிலும், நூல் தலைப்பிலும் எந்த மாற்றமும் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழி காட்டும் ஒளிவிளக்காக சர்மாவின் நூல்களைப் படைக்கருவி களாகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுதிகளை முத்துமாலையாகத் தமிழர்தம் பார்வைக்குத் தந்துள்ளோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற இந்தியத் தேசியப் பெருங்கவிஞன் பாரதியின் குரலும், ஒற்றுமையுடன் தமிழர் எல்லாம் ஒன்று பட்டால் எவ்வெதிர்ப்பும் ஒழிந்து போகும், என்ற தமிழ்த்தேசிய பெருங்கவிஞன் பாரதிதாசனின் குரலும் தமிழர்களின் காதுகளில் ஓங்கி ஒலிக்கட்டும். உணர்வுகள் ஊற்றாகப் பெருகி நல்ல செயல்களுக்கு வழிகோலட்டும். பதிப்பாளர் சர்மாவின் பொன்னுரைகள்.......  மாந்தப்பண்பின் குன்றில் உயர்ந்து நில். ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதே.  பிறரிடம் நம்பிக்கையுடனும்; நாணயத்துடனும் நடந்து கொள். அது உன்னை உயர்த்தும்.  உழைத்துக் கொண்டேயிரு; ஓய்வு கொள்ளாதே; உயர்வு உன்னைத் தேடி வரும்.  பொய் தவிர்; மெய் உன்னைத் தழுவட்டும்; பெண்மையைப் போற்றி வாழ்.  மொழியின்றி நாடில்லை; மொழிப் பற்றில்லாதவன்,நாட்டுப் பற்றில்லாதவன். தாய்மொழியைப் புறந்தள்ளி அயல்மொழியைப் போற்றுவதைத் தவிர்.  தாய்மொழியின் சொல்லழகிலும் பொருளழகிலும் ஈடுபட்டு உன் அறிவை விரிவு செய். பெற்ற தாய்மொழியறிவின் விரிவைக் கொண்டு உன் தாய் மண்ணின் உயர்வுக்குச் செயல்படு.  உயர் எண்ணங்கள் உயர்ந்த வாழ்க்கைக்கு அடித்தளம் முயற்சி- ஊக்கம் - ஒழுக்கம் - கல்வி இவை உன் வாழ்வை உலகில் உயர்த்தும் என்பதை உணர்ந்து நட.  ஈட்டிய பொருளை அனைவருக்கும் பகிர்ந்தளித்து வாழக் கற்றுக்கொள். உதவா வாழ்க்கை உயிரற்ற வாழ்க்கை.  கடமையைச் செய்; தடைகளைத் தகர்த்தெறி; விருப்பு-வெறுப்புகளை வென்று வாழ முற்படு.  ஒழுக்கமும் கல்வியும் இணைந்து வாழ முற்படு; ஒழுக்கத் திற்கு உயர்வு கொடு.  எந்தச் செயலைச் செய்தாலும் முடிக்கும் வரை உறுதி கொள். தோல்வியைக் கண்டு துவளாதே;  உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒரே நிலையில் வாழக் கற்றுக்கொள்.  நாட்டுக்குத் தொண்டு செய்வது தரிசுநிலத்தில் சாகுபடி செய்வது; கண்ணிழந்தவர்களுக்குக் கண் கொடுப்பது.  விழித்துக் கொண்டிருக்கும் இனத்திற்குத்தான் விடுதலை வாழ்வு நெருங்கிவரும். விடுதலை என்பது கோழைகளுக்கல்ல; அஞ்சா நெஞ்சினருக்குத்தான். நுழையுமுன்... நமது பிற்போக்கு கலையும் இலக்கியமும் , வாழ்க்கையும் அரசியலும், இன்றைய மனிதன் எனும் முத்தலைப்புகளை உள்ளடக்கிய நூலது. எந்த இனம் அடிமைத் தனத்தையெல்லாம் தாங்கிக் கொள்கிறதோ அந்த இனத்திற்கு விடுதலை எனும் ஒளியே கிட்டாது என்பதை இந்நூல் வழி அறியலாம். ஆங்கிலக் கல்வியை அரைகுறையாகக் கற்று அடிமைத் தொழில் செய்ய ஆவல் கொள்ளும் கூட்டத்திற்கு எச்சரிக்கை செய்யும் நூல். கலைகளெல்லாம் மாந்தனுடைய முழுமையான வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டவை என்பதையும், அதன் நுண் பொருளை யும் அறிவதற்கு உதவும் நூல். குமுகாயம் ஒழுங்காக மட்டும் இயங்கினால் போதாது. ஒழுக்கத்துடனும் இயங்கவேண்டும். ஒழுங்கு புறவளர்ச்சியையும், ஒழுக்கம் அகவளர்ச்சியையும் கொண்டு இயங்க வேண்டும் என்பதை அழுத்தமாகக் கூறும் நூல். தமிழ்க் குமுகம் ஒழுங்கும் ஒழுக்கமும் கொண்டு திகழ வேண்டும் எனும் உணர்வுடன் எழுதப்பட்ட நூல். திரைப்படங்களால் சமூகம் தமிழ் உட்புறத்தில் அழுகிக் கொண்டு வருகிறது என்னும் நெஞ்சக் குமுறலால் எழுதப்பட்ட நூல். கலை, இசை, நாடகம் குமுகாய வாழ்வுக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். குமுகாயம் தன்மதிப்புடைய உணர்ச்சியோடு உயர்ந்து நிற்க வேண்டும் எனும் உணர்வுடன் ஆக்கப்பட்ட நூல். தமிழர்களின் தெருக்கூத்து, பொம்மலாட்டம், மரபுவழி அடையாளங்கள் தமிழரின் நாகரிக மேன்மைக்குச் சான்று பகர்வன. இவை யாவும் திரைப்படங்களால் மறைக்கப்பட்டு அழிவுண்டுவிட்டன., இது நமக்குப் பேரிழப் பல்லவா? குழலும் யாழும் தமிழர்களின் இசைமரபுச் செல்வங்கள். தமிழிசையின் சின்னங்கள். ஆனால் தமிழர்களின் வீடுகளில் ஹார்மோனியமும் கிராமபோன் பெட்டியும் தலைதூக்கி நிற்கின்றனவே என்னும் மனக் குமுறலால் உருவாக்கப்பட்ட நூல். உடலும் உள்ளமும் தாம் அடிமைப்பட்டுக் கிடக்கின்றன என்றால் நமது இசையும் சிதைக்கப்பட்டு கிடக்கிறதே என்பதற்கு யார் கவலைப் பட்டார்? இந்தக் கவலைக்கு மருந்தென்ன என்று சிந்திக்கத் தூண்டும் செய்திகள் அடங்கிய நூல். தமிழ் நாட்டில் வெளியிடப்பெறும் கீழான விளம்பரங்களும் போட்டிப் பரிசு களும் இந்த நாட்டின் அவலமில்லையா? மக்களின் தாழ்ந்த மன உணர்வுகளைக் கண்ணாடி போல் காட்டும் செய்திகள் புதைந்து கிடக்கும் நூல். ஊம் நம்பி மதியை இழந்து வருகிறோம். உடல் சோர்வும் உள்ளச்சோர்வும் நம்மவர்களிடம் அதிகமாக எதிரொலித்து வருவது நம் இனத்தின் வலுவின்மையை காட்டவில்லையா? என்ற கவலையை வெளிக்காட்டும் நூல். எப்படி வாழவேண்டும்? கவிஞன் தூங்கிக் கொண்டிருக்கும் ஓர் இனத்தைத் தட்டி எழுப்புகிறவன் கவிஞன். சோர்வுற்று; கிடக்கும் மாந்தனின் நாடி நரம்புகளில் முறுக் கேற்றுபவன் அவன்; சிதறிக் கிடக்கும் மக்கள் ஒன்று சேர உண்மை நிலையை அவ்வப்போது உணர்த்தி வருபவன் கவிஞன். நற்பண்புகளின் தொகுப்புகளாக திகழ்பவன் எவனோ அவனே கவிஞன். ஓவியன் . எவன் ஒருவன் தன் உணர்ச்சிகளை உருவமாக வரைந்து காட்டுகிறானோ, எவன் ஒருவன் அன்பின் ஊற்றாகவும், மகிழ்ச்சியின் கடலாகவும் இருக்கிறானோ? எவன் ஒருவன் நல்லதையே முடிவாகக் கொண்ட வழியில் தன் வழியை முன்னெடுத்துச் செல்கிறானோ அவனே ஓவியன். நெஞ்சைத் தொடுவது எதுவோ, தொட்டுச் சிறிதேனும் அசைத்துக் கொடுப்பது எதுவோ, அசைத்துக் கொடுத்துச் சிறிதேனும் அதை தூக்கிக் கொடுப்பது எதுவோ அதுதான் ஓவியம். நடிகன் தன்னுடைய நாட்டின் பழைமையை வெளிக்காட்டும் கண்ணாடி யாகவும், நிகழ்காலக்குறைகளை எடுத்துச் சொல்லும் ஒலிபரப்பியாகவும், வருங்கால வாழ்விற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் இருப்பவனே நடிகன். ஆசிரியன் இயற்கை அறிவை வளர்த்தெடுப்பவர் எவரோஅவர்தான் ஆசிரியர். மாந்தனிடத்தில் அடங்கியிருக்கும் அறிவை மேல்நிலைக்கு கொண்டு வருகின்றவர் யாரோ அவர்தான் ஆசிரியர். மாணவர்களுக்கு மனதில் நிலைக்கத்தக்க அளவில் கல்வியறிவையும் நல்லவற்றை எவர் தருகிறாரோ அவரே ஆசிரியர். தன்னம்பிக்கையையும் தெளிந்த சிந்தனையையும் தன்னடக்கத்தையும் ஒழுக்கத்தையும் எவர் ஒருவர் கற்றுத் தருகிறாரோ அவரே ஆசிரியர். வாழும் தலைமுறையை வளமிக்க தலைமுறையாக ஆக்குபவர் எவரோ அவரே ஆசிரியர். மருத்துவன் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா என்பது முந்தையர் மொழி. இன்று மருத்துவர் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்பது இன்றைய மொழி. புகழையோ பொருளையோ நாடாது எளிய மக்களின் நல்வாழ்வுக்காக எவன் ஒருவன் பகல் முழுதும் தொண்டு செய்து விட்டு இரவில் ஓய்வு கொள்ள விழைகிறானோ அவன் மருத்துவன். மருத்துவம் என்பது தொண்டின் தொட்டில். வணிகன் தேவைக்கு மிஞ்சிய இடத்தில் உள்ள பொருளைத் தேவையான வற்குக் கொடுப்பதே வணிகம். தேவைப்படும் பொருள்களைக் கொள் வதும் கொடுப்பதுமே வணிகம் ஆகும் . தேவைக்கு மிஞ்சி இருப்பவற்றை கொடுப்பதும் கொள்வினையும் கொண்ட மரபே வணிகமரபாகும். ஒரு நாடு வாழ்வதும் வீழ்வதும் வணிகத்தின் அணுகுமுறையால்தான். அரசு ஊழியன் அரசுப் பணியாளன் என்பவன் பொதுநலம் ஒன்றைக் குறிக் கோளாகக் கொண்டவனாகவும், நேர்மை தவறாதவனாகவும் இருக்க வேண்டும். அறிவும் ஆற்றலும் பட்டறிவும் தொண்டுணர்வும் மிக்கவர் களாக அரசுப் பணியாளர்கள் தங்களை ஆளாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் உலக மாமேதைகளில் ஒருவராக இன்றளவும் போற்றப்படும் சீனநாட்டின் பேரறிஞர் கன்பியூசியசை வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும். ஆனால் இன்று அரசுப் பணியாளர் பலரும் எளிய மக்களை எப்படி நடத்துகின்றார்கள் என்ற அவலம் நாம் அறியாததல்ல. விவசாயி மாந்த இனத்தின் நாகரிகத்திற்கும் செல்வச்செழிப்பிற்கும் முதன் முதல் வித்திட்டவர்கள் வேளான்குடிமக்களே. இவனே நாகரிகத்தின் தந்தை என்று போற்றப்படுபவன். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் ன (குறள் 1033) என்னும் குறள்நெறி பேசப்படும் நூல்.ஒரு நாடு சீரும் சிறப்புமாக வாழவேண்டுமானால் உழவுக்கு உரிய மதிப்பு கொடுக்கவேண்டும் என்னும் வள்ளுவ நெறியை வழியாகக் காட்டும் நூல். ஙபோல் வளை! ஊருடன் கூடி வாழ் ! ஔவையின் பொன்மொழிகள் பொன்னே போல் போற்றப்படும் செய்திகள் அடங்கிய நூல். நாடும் மொழியும் நாடு மாந்தனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாக அமைந் திருக்க வேண்டியது நாட்டுப்பற்று. நாட்டுப்பற்று என்பது மாந்தனின் மூச்சைப் போன்றது, நெஞ்சின் ஆழத்திலிருந்து வருவது; உணர்ச்சிகளால் உருவாக்கப்படுவது. தியாகத்தால் உலகுக்கு உணர்த்தப்படுவது. பயன் கருதாது ஆற்றும் தொண்டுதான் நாட்டுப்பற்று என்பதாகும். சப்பான், கிரேக்கம், பாலத்தீன பழங்கதைகளில் கூறப்படும் நாட்டுப்பற்று இந்த நூலில் பதியப்பட்டுள்ளது. மொழி மாந்தஉணர்வுகளை வெளிப்படுத்த கருவியாய் இருப்பது மொழி. தாய்க்கும் பிள்ளைக்கும் என்ன உறவுண்டோ அந்த உறவுதான் தாய்மொழி. வீழ்ந்து பட்டுக் கிடக்கும் தேசிய இனத்தின் எழுச்சியும் தன்னம்பிக்கை உணர்ச்சியும் தன்மான (சுயமரியாதை) உணர்வும் தாய்மொழியால்தான் வரும் என்பதை அறிய உதவும் நூல். நமது எண்ணங்களையும் மனஉணர்ச்சிகளையும் தாராளமாக வெளியிடு வதற்கு மொழி ஒன்றே கருவியாக அமைவது; மக்களோடு நெருங்கிய உறவு கொள்வதற்கும் கொண்ட கொள்கையின்பால் தம் மக்களை ஈர்ப்ப தற்கும் தாய்மொழி ஒன்றே கருவியாக அமையும். முகத்தை இழந்த மாந்தன் உயிர் வாழ முடியாது . மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும். சுதந்திரமும் சீர்திருத்தமும் சுதந்திரம், சீர்திருத்தம், மதம் பிரச்சாரம், சுலபமா? எண்ணம், நாடும் நகரமும், கிராம வேலை, சுயராஜ்யம் தேவை ஆகிய இத்தலைப்புகளை உள்ளடக்கிய நூல். இந்நூலை ஊன்றிப் படித்தால் கடந்த கால நிலையும் நிகழ்கால நிலையும் எதிர்காலத்தில் நாம் என்ன செய்யவேண்டும் எதைச் செய்யவேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்தும் நூல். கோ. இளவழகன் பொருளடக்கம் சர்மாவின் சாதனைகள் iii சர்மாவின் பொன்னுரைகள் vi நுழையுமுன் vii பதிப்புரை xiii நமது பிற்போக்கு 1. கலையும் இலக்கியமும் 3 2. வாழ்க்கையும் அரசியலும் 24 3. இன்றைய மனிதன் 48 எப்படி வாழ வேண்டும் வாசகர்களுக்கு 1. கவிஞன் 71 2. ஓவியன் 83 3. நடிகன் 90 4. ஆசிரியன் 99 5. வைத்தியன் 127 6. வியாபாரி 158 7. உத்தியோகதன் 178 8. விவசாயி 194 நாடும் மொழியும் 1. தேச பக்தி 217 2. பாஷை 225 3. தமிழ் நாடு 235 4. இன்றைய தேவை எது: ஆழ்ந்த நூலா? நீண்ட நூலா? 253 5. கவியும் நாடும் 255 சுதந்திரமும் சீர்த்திருத்தமும் 1. சுதந்திரம் 279 2. சீர்திருத்தம் 285 3. மதம் 292 4. பிரசாரம் 296 5. சுலபமா? 301 6. எண்ணம் 307 7. நாடும் நகரமும் 313 8. கிராம வேலை 318 9. சுய ராஜ்யம் 323 10. தேவை 330 நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெ.சு. மணி, ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு வ.மலர் மேலட்டை வடிவமைப்பு வ. மலர் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய இராசா, இல.தர்மராசு, ரெ. விஜயகுமார், எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . நமதுபிற்போக்கு 1. கலையும் இலக்கியமும் நாம் சர்வானுகூல வாதிகள். எந்த விதமான விபத்து அல்லது வீழ்ச்சி ஏற்பட்டபோதிலும் எல்லாம் நன்மைக்கே என்று சமாதானம் செய்து கொண்டுதான், அந்த விபத்தைக் கடக்க வேண்டும்; அல்லது வீழ்ச்சி யினின்று மேலேற வேண்டும். இதுவே நமது திடமான நம்பிக்கை. இந்த நம்பிக்கை யில்லாவிட்டால் மனிதன் வாழவே முடியாது. வாழலாம்; அதாவது உயிரைப் பிடித்து ஒட்ட வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அது வாழ்க்கையாகா தல்லவா? சர்வானுகூல நம்பிக்கை யில்லா விட்டால் நமது வாழ்க்கையிலே ஒரு துடிப்பு இராது; ஜீவசக்தி இராது. வாழ்க்கை என்பது என்ன? சலனந்தானே? ஆனால் இந்தச் சர்வானுகூல நம்பிக்கை, நம்மைச் சோம்பேறி களாக்கிவிடக்கூடாது; செயலாற்றும் திறனில்லாதவர்களாகச் செய்து விடக்கூடாது. இது விஷயத்தில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீடு பற்றி எரிகிறது; எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிக் கொண்டு, நெருப்பை அணைக்காமல் சும்மா இருந்துவிடலாமா? குழந்தை, நோயால் அவதைப் பட்டுக்கொண்டு சாகுந் தறுவாயிலிருக்கிறது; எல்லாம் கடவுள் சித்தம் என்று சொல்லிக்கொண்டு, வைத்தியரை அழைத்து வராமலிருக்கலாமா? எனவே, சர்வானுகூல நம்பிக்கை யுடையவனென்று சொல்லிக் கொண்டு எந்த மனிதன் தன்னுடைய குறைகளைப் பரிசீலனை செய்து பாராமலிருக்கிறானோ, தன்மீது படிந்துள்ள அழுக்குகளைத் துடைத்துக் கொள்ளாமலிருக்கிறானோ அந்த மனிதன், மீளாத குழியில் விழுந்துமாளவேண்டியதுதான். ஒரு ஜாதிக்குக்கூட இது பொருந்தும். எந்த ஜாதி தன்னுடைய அடிமைத்தனத்தை, எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கையுடன் சகித்துக்கொண்டிருக்கிறதோ அந்த ஜாதிக்கு விமோசனமே கிடையாது. தனது நிகழ்கால நிலையைக் கண்டு அது வெறுப்புக் கொள்ள வேண்டும்; அதிருப்தி யடையவேண்டும். வீரத்திற்கு விளைநிலமாயிருந்த நமது பாரததேசம் இப்பொழுது கோழைத்தனத்தினால் தலைகுனிந்து கிடக்கிறதென்று சொன்னால் அதற்குக் காரணம், நம்மிடத்திலே அளவுக்கு மீறி ஊறிப்போயிருக்கிற இந்தச் சர்வானுகூல நம்பிக்கைதான். இந்தச் சர்வானுகூல நம்பிக்கை, நமது தன்னம்பிக்கையைச் சிறைப்படுத்திவிட்டது; அடிமைச் சங்கிலியை நமக்குப் பூட்டி விட்டது; நமது சிந்தனாசக்தியை ஆள்வோரிடத்தில் அடகு வைத்து விட்டது. சென்ற ஆயிர வருஷ காலமாகவே நாம் இந்த திதியில் தானிருந்து வருகிறோம். ஏதோ ஒரு முனையை அதிக உற்சாகத்தோடு பற்றிக்கொண்டு மற்றொரு முனையை இழந்துவிடுகிறோம். வாழ்க்கையென்பது இரண்டு தட்டுகளுள்ள தராசு மாதிரி. ஒரு தட்டில் அதிகமான பளுவை வைத்துக் கொண்டு போனால் மற்றொரு தட்டு மேலே தூக்கிக் கொண்டுவிடுகிறது; பளுவான தட்டு கீழே அழுந்தி விடுகிறது. கடைசியில் தராசு பயனற்றதாகி, அது காட்டும் நிறைக்கு மதிப்பே இல்லாமற் போய்விடுகிறது. பாரத மக்கள் இன்று எண்ணும் எண்ணத்திற்கும், பேசும் பேச்சுக்கும் உலகத்தில் எங்கேனும் உண்மையான மதிப்பு இருக்கிறதா? இல்லை. இதற்குக் காரணம், நமது வாழ்க்கைத் தராசை நாம் சம எடையிலே வைத்துப் பாராமலிருப்பதுதான்; அதாவது, எதையுமே நாம் ஒருவித அதீதத்திற்குக் கொண்டுபோய் விட்டிருக் கிறோம். ஆத்மபலம் என்று சொல்லிக் கொண்டு தேக பலமில்லாதவர்களா யிருக்கிறோம். நமது அதிதீவிரமான கடவுள் நம்பிக்கை, நம்மைத் தன்னம்பிக்கை யில்லாதவர் களாகச் செய்துவிட்டிருக்கிறது. துறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்; மனத்தையும் மானத்தையுங் கூட. பரலோகத்தைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறோம். ஆனால் இகலோகம் நம்மைவிட்டு அகன்று கொண்டே போகிறது. அஹிம்சை என்று எந்த விகிதாசாரப்படி உரத்துக் கூச்சல் போடுகிறோமோ அந்த விகிதாசாரப் படி நாம் கோழைகளாகிக்கொண்டு வருகிறோம். முன்னேறிச் செல்வதாகக் கருதிக்கொண்டே பின்னுக்குப் போய்க்கொண்டிருக் கிறோம். கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமையர் களாயிருக்கிறோம். இந்த மாதிரியான நிலைமையில் பாரத ஜாதி இருக்கிறதென்பதை உணர்விக்கும் பொருட்டுத்தான், நாம் அடிக்கடி நிரானுகூலவாதப் பல்லவியைப் பாடுகிறோம். அப்படிப் பாடுவது சிலருடைய காதில் அபவரமாக விழலாம். கிராமத்தின் நடுவே குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பையை அப்புறப்படுத்துகிறபோது, நாற்ற மெடுக்கத்தான் செய்யும். குழந்தையின் வயிற்றிலுள்ள அழுக்குகளைப் போக்கவேண்டுமானால், விளக்கெண்ணெயைக் கொடுத்தேயாக வேண்டும். புண்ணைக் கீறினால் ரத்தமோ சீழோ வடியத்தான் செய்யும். இதற்காக, குப்பையையோ, அழுக்கையோ, புண்ணையோ அகற்றா மலிருக்க முடியுமா? மீண்டும் சொல்கிறோம், நாம் நிரானுகூலவாதிகளல்ல; சர்வானு கூலவாதிகள். ஆனால் இந்தச் சர்வானுகூல நம்பிக்கை யானது நம்மை முழுச்சோம்பேறிகளாக, முழுமூடர்களாக, முழு அடிமை களாக ஆக்கி விடக் கூடாதென்பதற்காகத்தான் நிரானுகூலவாத சுருதியிலே பாட்டிசைக்கிறோம்; நமது அழுக்கு களைக் கழுவிக் காட்டுகிறோம். உறக்கத்தினின்று விழித்துக் கொள்ளும் பொருட்டுத்தான் தட்டுகிறோம். அப்படித் தட்டி எழுப்பாவிட்டால், அந்த உறக்கம், மீளா உறக்கமாகப் போய் விட்டால் என்ன செய்வது என்ற கவலை நமக்கு. இந்தக் கட்டுரைகளில், நமது பாரதஜாதி, இன்று முன்னேறிக் கொண்டிருக்கிறதா அல்லது பின்னுக்குப் போய்க்கொண்டிருக் கிறதா என்பதைப்பற்றி விமரிசனம் செய்ய விரும்புகிறோம். எதற்காக இந்தப் பிரச்னையை இப்பொழுது எடுத்துக்கொண்டோ மென்றால், நமது நிலைமையை நாம் உணர்ந்துகொள்ளும் பொருட்டுத்தான். அதாவது, ஒருவன் முன்னுக்காவது போய்க் கொண்டிருக்கலாம்; அல்லது பின்னுக் காவது வந்து கொண்டிருக்கலாம். இரண்டும் அசைவுதான். இரண்டையும் அவன் சுய உணர்வோடுதான் செய்கிறான். முன்னுக்குச் செல்வதிலே சந்தோஷமும் பின்னுக்கு வருவதிலே கவலையும், அவன் முறையே அடைகிறான். அவனைச் சுலபமாகத் திருத்த முடியும், திருப்பவும் முடியும், ஆனால் எவனொருவன் முன்னுக்குப் போவதாக நினைத்துக் கொண்டே பின்னுக்குச் சென்றுகொண்டிருக்கிறானோ அவன் சுயஉணர்வை இழந்துவிட்டவன்; சித்த சுவாதீனமில்லாதவன். அவனைத் திருத்தவும் திருப்பவும் வேண்டுமானால் கடுமையான ஔஷதங்களைக் கொடுக்கவேண்டியது அவசியம். இன்றைய பாரத ஜாதியின் நிலைமை இதே மாதிரிதான் இருக்கிறது. நாம் இன்பக் கனவு கண்டுகொண்டே துன்பத்தில் உழல்கின்றோம். வானத்திலே நமது கைப்பிடிக்கு அகப்படாமல் தகதகவென்று பிரகாசித்துக் கொண்டிருக்கும் சுதந்திர சூரியனைப் பார்த்துக்கொண்டே, அடிமைக் கேணிக்குள் ஒவ்வொரு படியாக உருண்டு செல்கிறோம். நுண்ணறிவு வாய்ந்த நமது தலைவர்கள், நாம் இப்படி உருண்டு செல்வதைத் தடுக்க எவ்வித பிரயாசையும் எடுத்துக்கொள்ளாமல், நாம் சுதந்திர சூரியனைப் பார்த்துக் கொண்டே யிருந்தால் நமது கண்கள் கூசிப்போய், நமது பார்வைக்கு எங்கே ஊனம் ஏற்பட்டுவிடப் போகிறதோ என்ற நம் மீது கொண்ட கருணையினால், அந்தச் சுதந்திர சூரியனை, ஆத்ம பரிசுத்தம், அஹிம்சை, அந்தர்யாமியாயுள்ள ஆண்டவனின் அனுக்ரஹம் என்பன போன்ற திரைகளைப்போட்டு மறைத்து, அவை மூலமாக ஜாஜ்வல்யம யமான அந்தச் சுதந்தரப் பிழம்பைப் பார்க்குமாறு நமக்கு உபதேசிக் கிறார்கள். நாமும் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதே சமயத்தில் நமது பந்தங்கள் அதிகமாகிக்கொண்டு வருகின்றன; அந்நிய ஆதிக்கத்தின் இரும்புப் பிடி இறுக்கிக்கொண்டு வருகிறது. உலகத்திலேயுள்ள எல்லா நாட்டினருக்கும் சுதந்திரம் உண்டு என்று சொல்கிறார்கள். அத்லாந்திக் சாஸனம் -அதாவது சர்ச்சிலும் ரூவெல்ட்டும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையிருக்கிறதே அது-இந்தியா விஷயத்தில் அமுலுக்குக் கொண்டுவரப்படமாட்டாது, அஃது இந்தியாவுக்குப் புறம்பானது என்று பஷ்டமாக, பகிரங்கமாகத் தெரிவித்து விட்டார்கள். இது விஷயத்தில் நமது அரசியல் தலைவர்களுக்கு இன்னும் ஏதேனும் சந்தேகம் ஒட்டிக்கொண்டிருக்கப் போகிறதே யென்று கருதி இரண்டாவது முறையும் தெரிவித்துவிட்டார்கள். இதற்காக ஸ்ரீ சர்ச்சிலையோ ஸ்ரீ அமெரியையோ நாம் குறைகூறமாட்டோம். வருஷக் கணக்காக அனுபவித்து வந்த ஒரு பொருளை யாருமே போக்கடித்துக் கொள்ளச் சம்மதப்பட மாட்டார்கள். அவர்களே அந்தப் பொருளை மனமுவந்து கொடுத்து விடுவார்களென்று எதிர்பார்ப்பதும், அவர் களுடைய மனத்தை நல்வழிப்படுத்த முயல்வதும் நமது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை. வேண்டுமானால், நம்முடைய மனோ திருப்திக்காக, அவர்கள் அறியாத்தனத்தினால் இப்படியெல்லாம் காரியங் களைச் செய்கிறார்களென்று நாம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அப்படியில்லை. தெரிந்தேதான் அவர்கள் இந்தியா சம்பந்தப்பட்ட எந்தக் காரியத்தையும் செய்கிறார்கள். நாம்தான் அதைத் தெரிந்துகொள்ள வில்லை. யாருக்குமே, பக்குவத்திற்குத் தகுந்தபடிதான் பலன் கிட்டும்; தகுதிக்கேற்றாற்போலவே பரீட்சையில் மார்க்குகள் கொடுக்கப்பெறும். இந்தியா விஷயத்தில் யார் எப்படி வேண்டு மானாலும் நடந்து கொள்ளலாம் என்கிற மாதிரியாக நாம் நடந்துகொள்கிறோம். நமது அரசியல் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருக்கின்றன. அழுகிற குழந்தையை அபினி கொடுத்து உறங்க வைப்பது போல் என்று சொல்வார்கள். ஆனால் நாம் அழாத குழந்தைகளாயிருக்கிறோம். அழாமலிருக்க முடியுமா? அழாத குழந்தை இறந்துபோகுமல்லவா? ஆம்; நாம் அழுகிறோம்; சென்ற ஐம்பத்தைந்து வருஷ காலமாக அழுது கொண்டுதானிருக்கிறோம். ஆனால் பயந்து பயந்து அழுகிறோம்; மற்றவர்களுக்கு உபத்திரவமா யிருக்கக்கூடாதென்று அடக்கி அடக்கி அழுகிறோம். சரியாக அழுவதற்குக்கூடத் தெரியவில்லையென்று தான் மற்றவர்கள் நம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள். ஆனால் நாம், அழாத சாதுக்குழந்தைகளென்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். நாம் இப்படி மயங்கி உறங்கிக் கிடப்பதைப் பார்த்துத்தான், சில அந்நிய தேசத்து வித்துவான்கள், ஓ! இந்தியாவா! எதையும் சகித்துக் கொண்டு போகும் ஆற்றல் அதற்கு இருக்கிறது; அதனுடைய புராதன நாகரிகமும், ஆத்மஞானமுந்தான் அதனைக் காப்பாற்றி வருகின்றன என்றெல்லாம் துதிபாடி நம்மை இன்னும் நன்றாக மயக்கி உறங்க வைக்கிறார்கள். இந்த நிலையை நாம் எப்படி முன்னேற்றம் என்று மனமொப்பிச் சொல்வது? வெற்றியிலே தோல்வி உண்டென்றும், முன்னேற்றத்திலே பிற்போக்கு உண்டென்றும் சொல்லி நம்மை நாம் சமாதானப் படுத்திக் கொள் கிறோம். வாதவம். வெற்றிகள் அதிகமா, தோல்விகள் அதிகமாவென்றும், எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம், எவ்வளவு தூரம் பிற்போக்கடைந்திருக்கிறோமென்றும் கணக்குப் போட்டுப் பார்ப்போம். நிகர மிச்சம் வெற்றியா? தோல்வியா? முன்னேற்றமா? பிற்போக்கா? நாம் ஓர் அங்குல நிகர முன்னேற்றம் அடைந்திருந்தாலும், நிகரமாக ஒரு வெற்றி நமக்குக் கிடைத்திருந்தாலும், அத்லாந்திக் சாஸனம் இந்தியாவுக்குப் பொருந்தாது என்று தைரியமாகச் சொல்லியிரு ப்பார்களா? இப்படிச் சொன்னது, இந்தியாவின் முகத்தை நோக்கி வீசி யெறியப்பட்ட ஓர் அவமானம். இஃது அவமானம் என்பதைக்கூட நாம் உணரவில்லை. ஆயினும் சுதந்திரப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருப்பதாக நாம் மயங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் தேசீய மனம் அணுஅணுவாக அழுகிக்கொண்டு வருகிறது; அங்குலம் அங்குலமாக நாம் பின்னுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். இதுதான் நமது திடமான அபிப்பிராயம். வாரக் கணக்கில் ஓடும் சினிமாப்படங்கள், பக்கம் பக்கமாக வெளியாகும் பத்திரிகைகள், அரசியல் சம்பந்தமாக நடைபெறும் மேடைப்பிரசங் கங்கள், ரெயில், டிராம், ப முதலிய போக்குவரவு சாதனங்களில் கேட்கப் படும் சம்பாஷணைகள், ஆங்கிலக் கல்வியை அரைகுறையாகக் கற்று அடிமைத் தொழில் செய்ய ஆவல் கொள்ளும் இளைஞர்கூட்டம் இவை யாவும் நம்முடைய மேலே சொன்ன அபிப்பிராயத்தை ஊர்ஜிதம் செய் கின்றன. இவற்றைக் கொஞ்சம் விதரிப்போம். முதலில் சினிமாக்களை எடுத்துக்கொள்ளலாம். சினிமாவோ நாடகமோ, ஒன்று, நமது பூர்வீகர்களுடைய உயர்ந்த வாழ்க்கையை அப்படியே நமக்கு எடுத்துக்காட்டி, அதனைப் பின்பற்றுமாறு நம்மைத் தூண்டவேண்டும்; அல்லது நிகழ்கால வாழ்க்கையை, அதாவது இன்றைய சமுதாயத்தில் காணப்படும் குறைநிறைகளை நமக்கு விதரித்துச் சொல்லி, அவைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுமாறு நம்மை உற்சாகப் படுத்தவேண்டும்; அல்லது நமது எதிர்கால வாழ்க்கை இத்தகைய லட்சியத்தோடுதான் இயங்க வேண்டுமென்று நமக்குச் சுட்டிக் காட்டுவதாயிருக்கவேண்டும். எழுத்து வாசனையை நுகராதவர்களும் படிப்பு ருசியில்லாதவர்களும் நேரில் ஒரு சம்பவத்தைப் பார்த்து அதன்மூலம் தங்களைச் சீர்திருத்திக்கொள்ள ஏதுவாயிருப்பதுவே சினிமா அல்லது நாடகம். கலையென்று சொன்னால், அதற்குச் சில லட்சணங்களும் சில லட்சியங்களும் உண்டு. அபிநயம் பிடிப்பது, சித்திரம் வரைவது, பாட்டிசைப்பது, இத்தியாதி நுண்கலைகளெல்லாம், மனிதனுடைய பூரண வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டே ஏற்பட்டன. மனிதன், தன்னுடைய மனிதத் தன்மையில் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெறு கிறானோ அவ்வளவு தூரம், எந்தச் சமுதாயத்தில் அவன் ஓர் அங்கத்தினனோ அந்தச் சமுதாயமும் வளர்ச்சியடைகிறது. சமுதாய மானது ஒழுங்காக இயங்கிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. அஃது ஒழுக்கத்துடனும் இயங்கவேண்டும். ஒழுங்கு என்பது புற வளர்ச்சியையும், ஒழுக்கம் என்பது அக வளர்ச்சியையும் குறிப்பன. ஒழுக்கமில்லாத ஒழுங்கை நாம் பாராட்டலாம்; ஆனால் அதனைப் பின் பற்ற முடியாது. ஒழுக்கமில்லாத ஒழுங்கு, வாசனையில்லாத புஷ்பம்; படிப்பில்லாத பணம்; ஆத்மா இல்லாத உடல். இந்த ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் மனிதனிடத்திலே வளர்த்து, அவன்மூலம் சமுதாய மானது ஒழுங்காகவும் ஒழுக்கத்துடனும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டுமென்னும் உயர்ந்த நோக்கத்துடன் தான் இந்த நுண்கலைகளை ஆண் பெண் வித்தியாசமின்றி எல்லோருக்கும் பயன்படுமாறு அமைத்தனர் நமது முன்னோர். நெய்திரள் நரம்பின் தந்த மழலையினியன்ற பாடல் தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்க கைவழி நயணஞ் செல்ல கண்வழி மனமுஞ் செல்ல ஐய நுண்ணிடையாராடும் ஆடக அரங்கு கண்டார் என்று கம்பன் மிதிலாபுரியிலுள்ள நாடகசாலைகளை வருணித்த போது, அவன், வெறுங் கற்பனையிலிருந்து வருணிக்கவில்லை; உண்மையிலிருந்துதான் வருணித்தான். இளங்கோவடிகள், தாமியற்றிய சிலப்பதிகாரத்தில், மேலே சொன்ன நுண்கலைகளுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அப்படிக் கொடுத்து அதன்மூலம் அந்தக் காலத்துச் சமுதாய நிலைமையை நமக்குப் படம் பிடித்துக் காட்டி யிருக்கிறார். இந்தப் படத்தில், மக்களின் வாழ்க்கை, ஒழுங்கு ஒழுக்கம் என்னும் இரண்டு கண்களுடன் பிரகாசித்து வந்ததைப் பார்க்கிறோம். இந்தக் காலத்தில் காட்டப்பெறும் நாடகத்தின் நகல்களாகிய சினிமாக்களில், மேலே எடுத்துக் காட்டிய அமிசங்களில் ஏதேனும் ஒன்றிருக்கிறதாவென்று நாம் வாசகர்களைக் கேட்கிறோம். சமுதாய வளர்ச்சிக்கும் இந்தச் சினிமாக்களுக்கும் ஏதேனும் சம்பந்தமிருக் கிறதாவென்று, மனச்சாட்சியின்மீது கைவைத்துக் கேட்குமாறு வாசகர் களைப் பிரார்த்திக்கிறோம். ஒரே ஒருவித சம்பந்தம் மட்டும் இருக்கிறது. அதாவது, நமது சமுதாயம் எப்படி உட்புறத்தில் அழுகிக்கொண்டு வருகிறதென்பதற்கு இந்தச் சினிமாக்கள் நல்ல உதாரணங்களாயிருக் கின்றன. ஒருநாட்டு மக்களின் எண்ணப் போக்கு எந்த திதியிலிருக் கிறதென்பதைப் பிரதிபலித்துக் காட்டுவதாகவே அந்த நாட்டு இலக்கியம், கலை, கவிதை முதலியனவெல்லாம் இருக்கின்றன. அந்த எண்ணப் போக்கு முற்போக்கில் சென்றுகொண்டிருக்கிறதா, அல்லது பிற்போக்கில் சென்றுகொண்டிருக்கிறதா, அல்லது ஒரேமாதிரி ஒரே இடத்தில் தேங்கிக் கிடக்கிறதா என்பதை, அந்தநாட்டில் வெளியாகும் நூல்களைக் கொண்டும், அல்லது பத்திரிகைகளைக் கொண்டும், அல்லது நடிக்கப் பெறும் நாடகம், சினிமா முதலியவைகளைக்கொண்டும் அந்த நாட்டு பாஷா ஞானமில்லாத எந்த ஓர் அந்நியனும் சுலபமாக அளந்து விடுவான். கி.பி. இருபதாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐர்லாந்திலும், ருஷ்யா விலும் முறையே வெளியிடப்பெற்ற நூல்கள், காட்டப்பெற்ற நாடகம் முதலிய காட்சிகள் இவைகளைக்கொண்டு அந்த நாட்டு மக்களுக்கிருந்த சுதந்திர தாகத்தை நாம் நன்றாகத் தெரிந்து கொள்கிறோம். நூல்களும், காட்சிகளும் மக்களின் சுதந்திர தாகத்தை அதிகப்படுத்தின. அங்ஙனமே மக்களின் சுதந்திர தாகத்தை, நூல்களும் காட்சிகளும் பிரதிபலித்துக் காட்டின. ஒன்றுக்கொன்று துணையாயும் தூண்டுகோலாயும் இருந்தன. ஐர்லாந்து, அந்நிய ஆதிக்கத்தினின்று விடுதலை பெற்றுச் சுதந்திர மடைந்தது என்று சொன்னால் அதற்கு, கவிஞனும் நாடகாசிரியனு மான டப்ளியு. பி. ஈட்1 ஒரு முக்கிய காரணதன். இவனைப்போல் அல்லது இவனுக்குத் துணையாக டக்ள ஹைட்2, டெர்ரென் மாக்வீனி3 போன்ற பலர், ஐரிஷ் கலைத்துறையைச் செப்பனிட்டார்கள். இங்ஙனமே ருஷ்யா, ஜார் ஆட்சிக்கொடுமையினின்று விடுதலை பெற்றதென்று சொன்னால் அதற்கு முக்கிய காரண புருஷனாயிருந்தவன், சாதாரண மக்களுக்குக் கலைச்சுவையைத் திறம்பட ஊட்டுவதில் கைதேர்ந்தவனாகிய மாக்ஸிம் கோர்க்கி4 என்பவன். இவனுக்குத் துணையாக டால்டாய்5, அலெக்ஸாந்தர் ப்ளாக்6 முதலியவர்களெல்லோரும், ஜனங்களுடைய இருதயத்தைச் சுதந்திரத்திற்குப் பண்படுத்திக் கொடுத்தார்கள். இங்ஙனமே, ஒவ்வொரு நாட்டிலும் கலைச் செல்வர்கள், இசைப்புலவர்கள், நாடகாசிரியர்கள் முதலியோர்தான், சமுதாயத்தின் சுதந்திர வாழ்வுக்கு அடிகோலியிருக் கிறார்கள்; சமுதாயத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்திருத்தியிருக் கிறார்கள்; சமுதாயத்தின் தன்மதிப்பு உணர்ச்சியை உயர்த்திக் கொடுத் திருக்கிறார்கள். நாடகமேடைகளும், சங்கீதக் கழகங்களும், நாட்டிய சாலை களும், ஜனங்கள் ஏதோ பொழுது போக்குவதற்காக வந்து கூடுகிற இடங்களல்ல; அன்றாட உழைப்பிற்குப் பின்னர், சிறிது நேரம் மனத்தை லேசாக வைத்துக் கொண்டிருந்துவிட்டுப் போவதற்கான ஓய்வு தலங்களல்ல. ஒவ்வொரு நாடக மேடையும் ஒவ்வொரு யாகசாலை மாதிரி. இங்கே மனிதன், தன்னைப் பார்க்கிறான்; தன் சமுதாயத்தைப் பார்க்கிறான்; தனது மூதாதையர்களைப் பார்க்கிறான். தன்னிடத்திலே, தனது சமுதாயத்திலே காணப்படுகிற மாசு மறுக்களெல்லாம், நவரசம் என்னும் நெய்யினால் எரிக்கப்படுவதைப் பார்க்கிறான்; அதே ஒன்பது சுவைகளுடன், லட்சிய வாழ்க்கை இன்னது என்று நிதரிசித்துக் காட்டப்படுவதைப் பார்க்கிறான். இதிலிருந்து பிரதியொரு மனிதனும் புதிய வாழ்வு பெற்று, அதன் மூலமாகச் சமுதாயத்தை முன்னுக்குத் தள்ளிக்கொண்டு போகிறான். சிறந்ததொரு நாடகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்புகின்ற எவனும் சிந்தனை நிரம்பிய உள்ளத்தோடுதான் திரும்ப வேண்டுமே தவிர சூனியமான உள்ளத்தோடு திரும்ப முடியாது. ஆனால், நமது நாட்டின் இன்றைய நாடக மேடைகளில், கலைக் கழகங்களில் என்ன காண்கிறோம்? நாடக மேடைகள், கலைக்கழகங்கள் என்று சொன்னால், இப்பொழுது எல்லாம் சினிமாவையே சுட்டிக் காட்டுவன வாயிருக்கின்றன. இருக்கட்டும்; சினிமாக்கள் எந்த திதியி லிருக்கின்றன? எந்த ஒரு சினிமாப் படமேனும், தேசத்தில் ஆவல் இன்ன தென்று தெளிவுபடுத்திக் காட்டுகிறதா? சமுதாயத்தில் இன்ன மாதிரியான ஊழல் இருக்கிறது, அதனை இன்னமாதிரியாகக் களைய வேண்டும் என்று ஏதேனும் ஒரு வகையாக எடுத்துச் சொல்லுகிறதா? படம் பிடிப் போருக்கும் தேச பக்திக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா? படத்தில் நடிப் போரில் எத்தனை பேருக்கு நடிக்கிற கதையின் பூரா விபரங்களும் தெரியும்? இந்த நடிகர்களுடைய ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் சமுதாயத்தில் என்ன மதிப்பிருக்கிறது? சென்ற சுமார் பதினைந்து வருஷ காலமாக வெகு மும்முரத்துடன் நடை பெற்றுவரும் இந்தச் சினிமாத் தொழிலானது, நமது தேசீய வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் துணை செய்திருக்கிறது? சுதந்திர பாதையென்று சொன்னால் அஃது இப்படித்தான் இருக்கும் என்று நமக்கு ஏதேனும் ஒரு சமிக்ஞையாவது செய்து காட்டியிருக்கிறதா? இவைகளைப்பற்றியெல்லாம் சிந்திக்குமாறு நமது வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். உதாரணமாக நாரதர் ஒரு சிறந்த பக்தர்; தீர்க்கதரிசி; தமக்கென்று ஒன்றையும் வைத்துக்கொள்ளாமல், எல்லோருடைய நன்மைக்காகவும் சதா உழைத்துக் கொண்டிருக்கிற தியாகி; கண்ணபிரானுடைய குழல் நாதத்தைப்போல், அவருடைய வீணாகானம், தாவர வர்க்கங்களைக்கூட மனங்குவியப் பண்ணும் தன்மையது. அவர் ரச உணர்ச்சி நிரம்பியவர். அவர் முக்காலத்தையும் உணர்ந்த ஒரு மகான். அவர் தேவர்களுக்குத் தேவராகவும, மனிதர்களுக்கு மனிதராகவும், அசுரர்களுக்கு அரசுராகவும் இருந்து, அவரவர்களையும் மேல் நிலைக்கு அழைத்துக் கொண்டுபோகும் ஆற்றல் வாய்ந்தவர். அவர் ஒரு ராஜதந்திரி. இப்படிப்பட்ட நாரதர் இன்றைய சினிமாக்களில் என்ன விதமாகக் காட்சியளிக்கிறார்? அந்தோ, படப்பிடிப்பாளர்கள் கையில் அகப்பட்டுக்கொண்டு அவர் படுகிற பாட்டைப் பார்த்தால், பாடுகிற பாட்டைக் கேட்டால், நாரதர் என்னும் பெயர் விஷயத்தில்கூட நமக்கு அநுதாபம் உண்டாகிறது; ஆனால் ஓர் ஆசையும் ஏற்படுகிறது. அதாவது இந்தச் சினிமா நாரதர், தெய்வலோகத்தில் எந்த நாவிதனிடத்தில் முக க்ஷவரம் செய்துகொள்ளுகிறாரோ அந்த நாவிதனிடத்தில் ஒரு முறையாவது நாமும் க்ஷவரம் செய்துகொள்ள வேண்டுமென்பது தான் அந்த ஆசை. நாளைக்கொருதரமோ அல்லது வேளைக்கொருதரமோ முகக்ஷவரம்; கழுத்தில் வாடாத மாலை; மார்பில் கலையாத சந்தனம்; தோளில் தந்தியில்லாத வீணை; (அப்படி தந்தியிருந் தாலும் தந்தியை மீட்டிக் கொண்டிருக்கத்தான் தெரியுமேயொழிய வீணையை வாசிக்கத் தெரியாது இந்த நாரதருக்கு. கையில் தாளத்திற்குப் பொருத்தமில்லாமல் ஓசைப் பட்டுக்கொண்டிருக்கும் சப்பளாக் கட்டை. இந்த ஒரே மாதிரியான அலங்கார கோலத்துடன்தான், நமது சினிமா நாரதர்கள் ப்ரஹ்மதேவனுடைய சபையிலும் காட்சியளிக்கிறார்கள்; சத்தியபாமையின் சயன அறையிலும் காட்சியளிக்கிறார்கள். நாரதரின் இந்தக் கலையாத வேஷத்தையும், பக்தி ரசமே இல்லாத பாடலையும் ஏறக்குறைய எல்லாச் சினிமாக்களிலும் ஒரே மாதிரியாகவே நாம் பார்க்கிறோம். இந்த நாரதரைப் பார்த்தோ, அல்லது இவரது பாடலையும் பேச்சையும் கேட்டோ யாருடைய இருதயத்திலாவது, பக்தியென்பது சொற்பமேனும் முளை விட்டிருக்கிறதா? இங்ஙனமே நமது புராணங்களிலும் இதிகாசங்களிலும் வரும் வீர புருஷர்களை, மகான்களை, புனித ஆத்மாக்களை, ஐயோ, இந்தச் சினிமாக் களில் நாம் எவ்வாறெல்லாம் சின்னாபின்னப்படுத்தி விடுகிறோம்? தீரோதாத்த நாயகனான ராமபிரானும், சத்தியசீல னாகிய தரும புத்திரனும், கற்புக்கணிகலனாகிய கண்ணகியும், யமனோடு வாதாடி தன்புருஷன் உயிரை மீட்டுக் கொண்டு வந்த வீராங்கனையான சாவித்திரியும், பாரத ஜாதியின் கௌரவ சின்னங்களாயிருக்கப் பட்டவர்கள்; பாரத ஜாதியின் ஆத்மாவிலே கௌரவமான முத்திரை யிட்டிருப்பவர்கள். இவர்களுடைய வாழ்க்கை இன்றைய தலைமுறைக் காகட்டும், அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்காகட்டும் வழிகாட்டும் விளக்குகள் மாதிரியிருக்கின்றன, ஆனால் நமது சினிமா முதலாளிகளும், நடிகர்களும் இவர்களை எவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்? இவர்களைத் தெரிந்துகொள்ளாவிட்டால்கூட பாதகமில்லை; இவர்களை அவமானப்படுத்தாமலிருந்தாலே போதும். புராண, இதிகாச படங்களைத் திரையிலிட்டுக் காட்டுகிற போது, கூடிய வரையில் அந்தந்தக் காலத்து நாகரிகம், நடை, உடை, பாவனைகளை அனுசரிக்கவேண்டும். அப்படி அனுசரிப்பதற்கு, சரித்திர ஞானம் வேண்டும்; நாகரிகப் பண்புகள் தெரிய வேண்டும். சினிமாத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறவர்களில் எத்தனை பேருக்கு இவை தெரிந்திருக்கின்றன? நாடக மேடைகளிலாகட்டும், சினிமாக்களிலாகட்டும் பேசப் படுகிற ஒவ்வொரு பேச்சும், பாடப்படுகிற ஒவ்வொரு பாட்டும், சந்தர்ப்பப் பொருத்தமுடையதாகவும், அர்த்த புஷ்டியுடையதாகவும், ஜாதீய கௌரவத்தை லட்சியமாகக் கொண்டதாக வும், மனிதனுடைய எண்ணத்தை உயர்த்திக் கொடுப்பதாகவும் இருக்கவேண்டும். ஆனால் இன்றைய காட்சிகளில், சம்பாஷணை களும் பாட்டுகளும் எவ்வளவு தாழ்வான நிலையை யடைந் திருக்கின்றன என்பதைப்பற்றி விதரித்துக் கூற நமது எழுதுகோல் கூசுகிறது. சம்பாஷணைகளிலும், பாட்டு களிலுந்தான் ஒரு கம்பீரம் இல்லையென்று சொன்னால், பெயர் கொடுப்பதில்கூட ஒரு கம்பீரம் இருக்கக்கூடாதா? படங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; பெயரில் ஒரு கௌரவம் இருக்க வேண்டாமா? அம்மாஞ்சி! மிளகாய்ப் பொடிபார்! செல்லாக் காசு! அட கடவுளே! இவையெல்லாம் என்ன பெயர்கள்? நாம்தான் உலக அரசியல் நாணயச் செலாவணி மார்க்கெட்டிலே செல்லாக்காசு களாக இருக் கிறோமே, அந்த அவமானம் போதாதா? சினிமாக் களிலேகூட நாம் செல்லாக்காசுகளாக முத்திரையிட்டுக் கொள்ள வேண்டுமா? கிழட்டுப் பிராமணன் ஒருவன், தனது இரண்டாந் தாரத்துக்குத் தலைவாரி முடிப்பது; அல்லது அவன் மனைவி, அவனுக்கு அன்னம் படைப்பது; அல்லது குறத்தி குறி சொல்வது; அல்லது வண்ணான் வண்ணாத்திக் காட்சி; இவையெல்லாம் ஹாய ரஸம்! மயங்கிக் கீழே விழுந்து கிடக்கும் ஒரு பெண்ணைத் தோள்மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு ஓடுவது; அல்லது ஓடுகிற ரெயிலிலிருந்து, மோட்டாரிலிருந்து கீழே குதிப்பது; இவை யெல்லாம் வீரச்சுவை! தோட்டத்திலே ஒரு பெண் பூக்கொய்து கொண்டிருப்பாள். ஓர் ஆடவன் அவளுக்குப் பின்புறமாக வந்து அவள் கண்களை இறுகமூடுவான். அவள் அவன்கைகளைப் பிடித்துக் கொள்வாள். அதற்குள் அந்த வீர இளைஞன் அவள் கன்னங்களில் தன் உதட்டைப் பொருத்தி வைப்பான். அந்த ஓசை அனைவருக்கும் கேட்கும். அல்லது, புருஷோத்தமனாகிய கண்ணபிரான், சத்தியபாமையின் படுக்கை யறைக்கு வெளியே நின்றுகொண்டு தாளிட்டுக் கிடக்கும் கதவின் மீது தன் தலையை முட்ட வைத்த வண்ணம் காமி, சத்தியபாமா, கதவைத் திறவாய் என்று புலம்பிக் கொண்டிருப்பான். இவையெல்லாம் சிருங்கார ரஸம்! இந்த ரஸக்காட்சிகளைக் கண்டு நமது ஜனங்கள் கைகொட்டி ஆரவாரிக்கிறார்கள். பணப்பையின்மீது கை வைத்துக் கொண் டிருக்கும் பட முதலாளிகள் இந்த மாதிரியான காட்சி களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ரஸ உணர்ச்சிக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய இத்தகைய காட்சிகள், ஜனங்களுடைய மனத்தை எவ்வளவு தூரம் சிதிலப் படுத்திவிட வேண்டுமோ அவ்வளவு தூரம் சிதிலப்படுத்திவிடுகின்றன. கீழான எண்ணங்கள், கீழான ஆசைகள் முதலியவற்றைத் தூண்டி விடுகின்ற இந்தக் காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்கள் தங்கள் தனித்துவத்தைக்கூட நாளா வட்டத்தில் இழந்து விடுகிறார்கள். இத்தகைய ஜனங்களைக்கொண்ட ஜாதிக்கு, கடைசியில் மனம், மானம் என்பவைகள் இல்லாமலே போய் விடுகின்றன. இந்த ஜாதியை அடிமைத் தனத்திலிருந்து மீட்பதென்று சொன்னால் அஃது எவ்வளவு சிரமசாத்தியமான காரியம்? வெறும் தத்துவோபதேசங்களினால் மட்டும் ஆகிற காரியமா அது? ஹிட்லரின் இன்றைய ஆக்கிரமிப்பு முறைகளை நாம் பலமாக ஆட்சேபிக்கலாம். ஆனால், அவன் தனது ஜெர்மானிய ஜாதிக்கு, ஒரு புதிய ஜீவசக்தியைப் புகட்ட என்னென்ன முறைகளைக் கையாண்டான் என்பதை நாம் அலட்சியப்படுத்தி விட முடியுமா? நாடகங்கள், சினிமாக்கள் முதலியன, மனிதனுடைய கீழாசைகளைத் தூண்டிவிடுவதாயிராமல், அவனை மேல்நிலைக்கு அழைத்துச் செல்வதா யிருக்கவேண்டும் என்றும், சமூக வாழ்வைச் சீர்குலைக்கும் வண்ணம் தோன்றும் கலை, இலக்கியம் முதலியவற்றின் போக்கைச் சட்ட ரீதியாக அடக்கவேண்டும் என்றும் ஹிட்லர் கண்டிப்பான திட்டம் ஏற்படுத்தினான். ஒரு சமுதாயம் அல்லது ஜாதி தலைநிமிர்ந்து நடப்பதற்கு நாடகமேடைகளும் சினிமாக்களும் எவ்வளவு தூரம் துணை செய்கின்றனவென்பது இதனின்று தெரிந்து கொள்ளலாம். சினிமா சம்பந்தமாக வெளியாகும் விளம்பரங்களைக் கொண்டு மட்டும் நமது ஜாதீய உணர்ச்சி அல்லது பெண்மக்களிடத்திலே நாம் வைத்திருக்கும் மதிப்பு முதலியன எவ்வளவு கேவலமான திதியை அடைந்திருக்கின்றனவென்பதை நிர்ணயித்துக் கொள்ளலாம். பெண்ணாசையைத் துறந்துவிட்டதாக அர்த்தப்படக்கூடிய பெயரைப் படத்திற்கு வைக்கிறார்கள். ஆனால் அந்தப் படத்தை விளம்பரப் படுத்துகிறபோது ஒரு பெண் ணுருவத்தைப் போட்டுத்தான் விளம்பரப் படுத்துகிறார்கள். புராணப்படங்களாகட்டும், சமூகப் படங்களென்று பெயர் கொடுத்துத் திரைக்குக் கொண்டு வரப்படுகிற படங்களாகட்டும் எல்லாம் பெண்ணை முன்னிலைப்படுத்தித்தான், பெயரையும் பணப்பையையும் பெருக்கவேண்டி யிருக்கின்றன. பெண்மைக்குத் தெய்வத் தன்மையைப் புகுத்தி, அதனை வழிபட்டு வந்த பாரத ஜாதியானது, இன்று, அந்தப் பெண்மைக்கு எவ்வளவு தாழ்வான மதிப்பு வைத்திருக்கிறது? நமது சினிமாக்களில் பெரும்பாலானவற்றுள், இடப் பொருத்தம், காலப் பொருத்தம், விஷயப் பொருத்தம் முதலியனவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை யென்பதற்கு நாம் அவ்வள வாக விசனிக்கவில்லை. வேஷப் பொருத்தத்தையாவது கவனிக்கக் கூடாதா வென்றுதான் கேட் கிறோம். வேஷப் பொருத்தத்தில் ஏற்றத் தாழ்வுகளிருந்தால்கூட சகித்துக்கொண்டுவிடலாம் போலிருக்கிறது. ஆனால் இந்த வேஷப்பொருத்தம், சில சந்தர்ப்பங்களில் விபரீதப் பொருத்தமா யிருப்பதைக் குறித்து நாம் திகைப்பும் துக்கமும் அடைகிறோம். ஏதோ சில இடங்களில், சில நிகழ்ச்சிகளில் ஆண், பெண் வேடந் தரிப்பதும் பெண், ஆண் வேடந்தரிப்பதும் ஆட்சேபிக்கத் தகாததாக இருக்கலாம். ஆனால் ஆணாகவே இருந்து நடித்துக் காட்டவேண்டிய கதைகளில், பாட்டுக்காகவோ, டிக்கட்டு அறையில் நாணய ஓசை சதா ஒலித்துக்கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகவோ பெண்ணைக் கொண்டுவந்து நிறுத்துவது எவ்வளவு கேவலமானது? நமது ரஸனானுபவத்தை எவ்வளவு தூரம் பங்கப்படுத்தக் கூடியதா யிருக்கிறது? உதாரணமாக, நந்தனார், நாரதர், மார்க்கண்டேயர், ஹனுமார், பட்டினத்தார், சங்கராச்சாரியார் முதலிய பாத்திரங்களெல்லாம் ஆண்களாலேயே நடிக்கப் படக்கூடிய பாத்திரங்கள். இவைகளில் பெண்களைக் கொண்டுவந்து புகுத்தி, நமது பரம்பரையின் புனிதத் தன்மையில் ஒரு களங்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாமா? இது விபரீதமென்றும், பொருத்தமற்ற தென்றும், ரஸ உணர்ச்சிக்கு விரோதமென்றும் நமக்கு இன்னும் தோன்ற வில்லையே. என்ன ஆச்சரியம்! ஆனால் உலக ஜனத் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினராயிருந்தும், நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோமே என்பதைக் குறித்து நாம் இன்னும் ஆச்சரியப் படாமலிருக்கிறபோழ்து, இந்த விபரீதவேஷப் பொருத்தம், நமக்குப் பொருத்தமாகத் தோன்றுவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? அடிமைக்கு அழகை அனுபவிக்கத் தெரியாது என்று சொல் வார்கள். நகர வாசிகளைப் பொருத்தமட்டில் இந்த வாசகம் முற்றிலும் உண்மையாகவே இருக்கிறது. கிராமங்களிலே நடிக்கப்பெற்ற தெருக் கூத்துக்கள், பொம்மலாட்டங்கள் முதலியன, நமது பரம்பரைக் கௌர வத்தைக் காப்பாற்றி வந்தன; நமது வாழ்க்கைக்கு ஒரு சோபையைக் கொடுத்து வந்தன. ஆனால் அவை யாவும் இப்பொழுது சினிமாக்களைக் கண்டு மருண்டு ஓடிவிட்டன. இது விஷயத்தில் பண்டித ஜவஹர்லால் நேருவின் அபிப்பிராயத்தை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறோம். அவர் கூறுகிறார்:- சினிமாக்கள் பெரும்பாலும் நகர மக்களாலேயே பாராட்டப் படுகின்றனவென்று கருதுகிறேன். ஒழுங்கற்றதும் வருந்தத்தக்கது மான இந்தக் காட்சிகளுக்கும், இன்னும் உயிர்வைத்துக் கொண்டிருக்கும் கிராமப் பாட்டுகள், ஆட்டங்கள், தெருக் கூத்துக்கள் முதலியவற்றில் காணப்படும் அழகுக்கும் உள்ள வித்தியாசம் மிகவும் குறிப்பிடத்தக்கது. வங்காளம், குஜராத், தென்னாடு முதலிய பிரதேசங்களில், கிராமவாசிகள் தங்களையறியாமலே, அடிப்படையான அழகுடையவர்களாகவும், அழகை அனுபவிக்கும் சக்தி யுடையவர்களாகவும் இருக்கிறார் களென்பதைப் பார்க்கிறபோது, நாம் ஆச்சரியத்தினால் திகைப்படைந்து போகிறோம். ஆனால் மத்திய வகுப்பாரிடத்தில் இந்தச் சக்தி இல்லை. அவர்கள், தங்கள் அடிப்படையையே இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு அழகு பரம்பரையும் இல்லை. நகரவாசிகளின் வீடுகளுக்குள் நுழைந்து பார்த்தால், அங்கு மாட்டப் பட்டிருக்கும் படங்களின் வரிசையொன்றைக் கொண்டு, நம்மவர்களுக்கு எவ்வளவு தூரம் அழகை அனுபவிக்கத் தெரியும், நமது கலாரஸ உணர்ச்சி எந்த அளவில் இருக்கிறது, பாரத ஜாதியின் சீல வாழ்க்கை எவ்வளவு தூரம் கௌரவிக்கப்பட்டு வருகிற தென்பனபோன்ற விஷயங்களை யெல்லாம் ஒரு கணத்தில் தெரிந்துகொண்டு விடலாம். ஜெர்மனியிலோ அல்லது வேற்று நாடுகளிலோ அச்சடிக்கப்பட்ட படங்களை, அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சட்டங்களால் அணைத்து, அவற்றை அயல் தேசங்களிலிருந்து வருகிற ஆணிகளிலே மாட்டி வீட்டை நிரப்பிவிடுகிறோம். நமது தெய்வதேவாதிகளையும், நமது முன்னோர்களையும் அந்நியர்கள் எந்தவிதமாக உருவப்படுத்திக் காட்டு கிறார்களோ அந்த விதமாக அவர்களை நாம் கண்டு வழிபடு கிறோம். நமது பூஜை அறைகளில் மூர்த்தீகரித்துக்கொண்டிருக்கும் விக்கிரகங்கள் கூட, பெரும்பாலும், அந்நிய நாடுகளிலிருந்து எழுந்தருளியவைதான். விநாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி, ராம நவமி முதலிய தினங்களில் நாம் முறையே வழிபடும் கணபதியும், கிருஷ்ணனும், ராமனும் நமது நாட்டு மண்ணினால் செய்யப்பட்ட உருவங்களாயிருந்தால், அவை, நமக்குத் திருப்தி தருவதில்லை. மண்ணாலான மூர்த்தியை வணங்குவது நமது கௌரவத்திற்குக் குறைவாகவும் தோன்றுகிறது. அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற மங்குக்கடவுளர்களை வழிபடுவதில்தான் நாம் திருப்திகொள்கிறோம்; பெருமையடைகிறோம். ஐயோ, அடிமை நாட்டான், தன் தேசத்து மண்ணுக்குக்கூட மதிப்புக் கொடுக்க மறுக்கிறான்! ஆனால், அந்நியர்கள், அந்த மண்ணின் கீழ் பதுங்கிக் கிடக்கும் உலோகப் பொருள்களுக்கு எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள்! எவ்வளவு கண்ணோட்டம் செலுத்துகிறார்கள்! சிறு குழந்தைகளுக்கு ஆபரணங்களை அணிவித்து அழகுபடுத்திப் பார்க்கவேண்டுமென்று நமக்கு ஆசை உண்டா கிறது. நல்ல ஆசைதான். ஆனால் இந்த ஆசையைப் பூர்த்தி செய்து கொள்கிற விஷயத்தில்கூட அந்நிய நாடுகளின் துணையை நாம் நாட வேண்டியிருக்கிறது. அயல்நாடுகளிலிருந்து இறக்குமதியாயிருக்கிற தெய்வ உருவங்களை அதிக விலைகொடுத்து வாங்கி காதணிகளிலோ, கழுத்தணிகளிலோ இணைத்து, குழந்தைகளுக்குப் போட்டு, அடடா, என்ன அழகு! என்ன அழகு! என்று அகமகிழ்ந்து போகிறோம். அழகை அனுபவிக்கிற விஷயத்தில்கூட, நம்முடைய அடிமைப் புத்திதான் முன்வந்து நிற்கிறது. யாழினிது, குழலினிது என்று சொன்னார்கள் நமது முன்னோர்கள். நல்லிசைப் புலவனொருவன் குழலையோ யாழையோ, ஏதேனு மொன்றை, மனங்கலந்து வாசித்துக்கொண்டிருக்க, அந்த ஓசையை நாம் காதால் பருகுகிறபோது, நம்மை அறியாமல், நமது அடிவயிற்றில் ஓர் இன்பப் பெருக்கு ஊற்றெடுத்து, அலைபோல் உயர்ந்து, இதயத்தை மோதி அதில் ஒரு சாந்தி உண்டு பண்ணுவதை யாருமே அனுபவித்துப் பார்க்கலாம். இது சத்திய வாக்கு; அனுபவ உண்மை. குழலும் யாழும் நமது ரஸ உணர்ச்சியை எப்பொழுதும் கூர்மையாகவே வைத்துக் கொண்டிருக்குந் தன்மையன. இவை நமது ரஸனானுபவத்தின் உயர்ந்த சிகரங்கள். இதனாலேயே கண்ணன் குழலை ஊதுகிறான்; சரவதி வீணையில் கானஞ் செய்கிறாள். இவை இரண்டும், நமது நாகரிகத்திற் கிசைந்த இசைக்கருவிகள். ஆனால் இவைகளுக்கு வசைதேடிக் கொடுப்பதுபோல் இப்பொழுது ஹார்மோனியம் தலைதூக்கி நிற்கிறது. நாகரிகமான வீடு என்று சொன்னால் அங்கே ஒரு ஹார்மோனியம், ஒரு கிராமபோன் பெட்டி ஆகிய இவை இரண்டும் இருக்கவேண்டும் என்கிற மாதிரியான நிலைமை இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது. நமது இசை உணர்ச்சியை எவ்வளவு தூரம் மழுங்கச் செய்யவேண்டுமோ அவ்வளவு தூரம் இந்த ஹார்மோனியம் மழுங்கச் செய்திருக்கிறது. உயர்ந்த சங்கீதம் என்று சொன்னால், அது தேனொழுக்குடையதாய், தொடர் வரிசை யுடையதாய், நல்லிணக்கமாய், இனிய ஓசையுடையதாய், ஆத்மாவின் அந்தரங்கத்திற்குள் நுழையக்கூடியதாய் இருக்கவேண்டும். ஆனால் ஹார்மோனியத்தில், இந்த மாதிரியான சங்கீதத்தை நாம் அனுபவிக்க முடிகிறதா? ஹார்மோனியத்தில் பாட்டுகள் பாடப்படுகிறபோது, தவளை, தத்தித் தத்திப் பாய்கிறமாதிரியான எண்ணம் நமக்கு உண்டாக வில்லையா? நமது சரீரந்தான் அடிமைப்பட்டுக் கிடக்கிறதென்று சொன்னால், நமது சாரீரமும் கட்டையாகிக் கிடக்கிறதென்பதை இந்த ஹார்மோனியம் நிரூபித்துக் காட்டவில்லையா? அந்நிய ஆதிக்கம், நமது எண்ணத்தை எப்படிச் சிதைத்திருக்கிறதோ அப்படியே இந்த ஹார்மோனியமும் நமது சங்கீதத்தைச் சிதைத்திருக்கிறது. எவ்வளவோ மனம் புழுங்கிப்போய்தான் பண்டித ஜவஹர்லால் ஓரிடத்தில் கூறுகிறார்:- சுயராஜ்யம் அரசாங்கம் ஏற்பட்டால், அது முதலில் செய்யவேண்டிய பல வேலைகளில் ஒன்று, ஹார்மோனியம் என்னும் அந்தப் பயங்கர வாத்தியக் கருவியை உபயோகத்திற்குக் கொண்டு வராமல் தடுப்பதாக வேயிருக்கும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனவே, இதுகாறும் கூறியவாற்றான், நமது கலா ஞானம், அழகு அனுபவம், ரஸ உணர்ச்சி முதலிய யாவும் பிற்போக்கடைந்திருக் கின்றன வென்பது நிரூபித்துக் காட்டப்பட்டது. இனி இலக்கியக் கடலில் சிறிது பிரவேசித்துப் பார்ப்போம். இதன் ஒரு முக்கிய அமிசமாயிருப்பது பத்திரிகை. தற்போழ்து வெளியாகும் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தால் நான்கு விஷயங்கள் நம் கண்ணை உறுத்துகின்றன. முதலாவது சோதிட விளம்பரங்கள்; இரண்டாவது, தாது புஷ்டி மருந்துகள், மானிட மர்ம சாதிரங்கள் ஆகிய இவை சம்பந்தமான விளம்பரங்கள்; மூன்றாவது, ஒரு ரூபாய்க்கு இருநூற்றைம்பது சாமான்கள் என்றும், முந்நூற்றிருபது சாமான்கள் என்றும் வெளியாகிற விளம்பரங்கள்; நான்காவது போட்டிப்பரிசுகள். இவை நான்கும் நமது தேசத்தின் ஈனதிதியையும், ஜனங்களின் தாழ்ந்த மனப்பான்மையையும் பளிங்குபோல் எடுத்துக் காட்டுகின்றன. எந்த ஒரு மனிதனும் சுய உதவியைக் கொண்டு பிழைப்பை நடத்த முடியாத தருணத்தில் தான், கண்ணுக்குத் தெரியாத ஒரு பொருளின் உதவியை நாடுகிறான்; திருஷ்டிக்கு அகப்படாதது என்னும் அர்த்தத்தையுடைய அதிருஷ்டம் என்னும் வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறான். ஏதோ அதிருஷ்ட வசத்தில்தான் நமக்குச் சுதந்திரம் கிடைத்தால் கிடைக்கலாமே தவிர, நம்முடைய உழைப்பு, நம்முடைய முயற்சி, நம்முடைய தியாகம் ஆகிய இவைகளைக் கொண்டு சுதந்திரம் பெறுவதென்பது துர்லபம் என்று எந்த மனப்பான்மை பிரேரிக்கிறதோ, அந்த மனப்பான்மை, சோதிடத்தில் சுலபமாக நம்பிக்கை வைக்கிறது. எப்பொழுது நாம் சோதிடத்தில் அதிகமாக நம்பிக்கை வைக்கத் தொடங்கிவிட்டோமோ அப்பொழுதே, சுய உதவியினால் நாம் வாழ முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். மதியிருந்தால் விதியொன்றும் செய்யாது. விதியையே நம்பி மதியை யிழந்துவிடுகிறபோழ்துதான், அந்த விதியே நமக்குச் சத்துருவாக வந்து சேருகிறது. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் என்று திருவள்ளுவர் கூறியது அனுபவ வாசகமே தவிர, ஏட்டுச் சுரைக்காயல்ல. நாளென் செயும், வினைதான் என் செயும், எனை நாடி வந்த கோளென் செயும், கூற்றென்செயும் என்று அருணகிரியார் உறுதியோடு முழக்கம் செய்தது தமிழ்நாட்டிலேதான். இப்படிப்பட்ட மகோன்னதமான பரம்பரையைக்கொண்ட தமிழ் மக்கள், சோதிடத்தில் அதியற்புதமான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள், சுயராஜ்யம் எப்பொழுது கிடைக்கும் என்று கிரகங்களைப் பார்த்துக் கேட்டால் அவை என்ன பதில் சொல்லும்? நம்மைப் பார்த்துப் பரிகசிக்கும்! நரம்புகளுக்கு முறுக்கேற்றிக் கொடுக்கும் மருந்துகள், இன்ப சாதிரங்கள் முதலியவை சம்பந்தமான விளம்பரங்கள் யாவும் நமது உடல் சோர்வையும் உள்ளச் சோர்வையும் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி களாயிருக்கின்றன. தேச மக்கள் எவ்வளவு தூரம் வலுவிழந்து கிடக்கிறார் களென்பதற்கு, இவற்றைத் தவிர வேறு அத்தாட்சி தேவையில்லை. ஒரு சிலர் தங்களுடைய ஒரு சாண் வயிற்றுப் பிழைப்புக்காக, இப்படி யெல்லாம் தேசத்தை அலங்கோலப் படுத்திப் பார்க்கிறார்கள். இதைப்பற்றி விதரித்துச் சொல்ல, எமது உள்ளம் நாணுகின்றது. எந்தத் தேசத்தை அடிமைத்தனமானது அரித்துக்கொண்டு வருகிறதோ அந்தத் தேசத்தில் இந்த மாதிரியான அலங்கோலங்களையெல்லாம் நாம் நன்றாகப் பார்க்கலாம். பிரான் வீழ்ச்சியுற்றுப் போனதற்கு முக்கிய காரணம், அந்த நாட்டுமக்கள், இந்த மாதிரியான சிற்றின்ப உணர்ச்சிகளிலே அதிகமாக ஈடுபட்டிருந்ததுதான் என்பதைமட்டும் குறிப்பிட்டுவிட்டு மேலே செல்கிறோம். ஒரு ரூபாய்க்கு, நூற்றுக் கணக்கில் சாமான்களை அள்ளிக் கொடுப்பதாக விளம்பரப்படுத்துகிற காட்சி! மலிவானதும் அவசியமே யில்லாததுமான அந்நிய நாட்டுப் பொருள்களை பாமர ஜனங்களிடத்திலே கொண்டு திணிப்பதற்கு இந்த முறை கையாளப்படுகிறது. கள்ளங் கபடற்ற கிராமவாசிகள், பொருளின் தன்மையைக் கவனியாமல், எண்ணிக்கையை மட்டும் பார்த்து விட்டு, மயங்கிப்போய் அவைகளை ஆவலோடு வாங்கு கிறார்கள். வாங்கிப் பார்த்த பிறகு, அவை தங்களுடைய அன்றாட உபயோகத்திற்கு எவ்விதத்திலும் அவசிய மில்லாதவை என்று தெரிந்து கொள்கிறார்கள். ஆயினும் வாங்கிவிட்டோமேயென்ற எண்ணத்தினாலும் விலை கொடுத்து வாங்கின பொருளை உபயோகியாமலிருக்கலாமா வென்ற எண்ணத்தினாலும் உந்தப்பட்டவர்களாய், நாளாவட்டத்தில் அந்தப் பொருள்களைத் தங்கள் தினசரி உபயோகத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இப்படியே அந்நிய நாட்டுச் சாமான்களை உபயோகிக் கிற பழக்கம் இவர்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றது. கடைசியில் இந்தப் பழக்கத்தை இவர்களால் கைவிட முடிவதில்லை. காலிலே அணிந்து கொள்கிற பூட் முதல், முகத்திலே பூசிக் கொள்கிற பவுடர் வரையில் எல்லாவற்றிற்கும் நகரவாசியைப் போல் கிராமவாசியும் இப்பொழுது அந்நிய நாடுகளின் தயவை எதிர்பார்க்க வேண்டியவ னாகிவிட்டான். தலைவலி மருந்து முதல் குழந்தைக்குத் தேவையான ஆகாரம் வரை எல்லாம் அந்நிய நாட்டுப் பகட்டான முத்திரையுடன் இப்பொழுது கிராமங்களில் பிரவேசிக்க ஆரம்பித் திருக்கின்றன. இந்தப் பிரவேசத்தைத் துரிதப்படுத்திக் கொடுப்பது போல் மேலே சொன்ன விளம்பரங்கள் இருக்கின்றன. இவை யனைத்தும், நமது தேசத்தின் பொருளாதாரச் சீரழிவைத் துலக்கப்படுத்திக் காட்டவில்லையா? உடை உடுப்பதிலும், ஆகாரத்தைச் சுவைத்துப் பார்ப்பதிலும், அழகுபடுத்திக் கொள்வதிலும், ஏன், எல்லாவற்றிலுமே நம்முடைய அடிமைத் தனந்தான் முன் வந்து நிற்கின்றது. ஜியுஸெப்பே ஜியூடி1 என்ற இத்தாலியக் கவிஞன், இத்தாலியர்கள், ஆதிரியாவின் ஆதிக்கத் திற்கு எவ்வகையால் உட்பட்டிருந்தார்களென்பதை ஒரே ஒரு வாக்கியத்தில் அழகாகச் சுருங்கிக் கூறிவிட்டான். இத்தாலியர்கள், தாங்கள் சாப்பிடும் ரொட்டியில் ஆதிரியாவைக் கலந்து சாப்பிட்டார்கள் என்பதுதான் இந்த வாக்கியம். நமது நாட்டிற்கு இஃது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது? அடுத்தது போட்டிப் பரிசு. இஃதொரு தொத்து நோய் மாதிரி தமிழ் நாட்டிலே இப்பொழுது பரவியிருக்கிறது. ஒரு சிலர், பணம் சம்பாதிப் பதற்கேற்ற முறையாக இதனைக் கையாண்டு வருகின்றனர். எவ்வித உழைப்புமில்லாமல் சுலபமாகப் பணம் சம்பாதித்துவிட வேண்டுமென்ற ஜனங்களுடைய ஆசையை, இந்தப் போட்டிப் பரிசுகள் பிரதிபலித்துக் காட்டுவதோடு, அந்த ஆசையை உரமிட்டு வளர்ப்பதாகவும் இருக்கின்றன. இவை தமிழ்நாட்டுக்கு ஒரு சாபக்கேடு; தமிழர்களுக்கு ஒரு மானக்கேடு. ஜனங்களுடைய இருதயத்தில், அவர்களையறியாமல், பரம்பரை வாசனை காரணமாக ஏதேனும் ஒன்றிரண்டு உயர்ந்த எண்ணங்கள் ஒட்டிக் கொண்டிருந்தால், அவற்றை இழுத்துப் பறித்து வெளியே கொணர்ந்து காலால் போட்டு மிதித்து நாசமாக்கிவிடுகின்றன இந்தப் போட்டிப் பரிசுகள். இந்தப் போட்டிப் பரிசுகளைத் தாங்கிக் கொண்டு வரும் பத்திரிகைகளுக்குத்தான் பொருளாதாரச் செல்வாக்கு ஏற்படுகிறது. அதாவது ஜனங்களுடைய மன அழிவின் மீது ஒரு சிலருடைய மாடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன வென்பது அர்த்தமாகிறது. இது நிற்க. காலஞ் சென்ற ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாருக்குப் பிறகு, தமிழ் நாட்டில் ஒரு மகான் கவி தோன்றவில்லை யென்பதைப் பற்றியும், கவிப்பெருக்கானது வற்றவில்லையாயினும் ஊற்றெடுத்துப் பிரவாக மாக ஓடவில்லையென்பதைப் பற்றியும், சிறந்த இலக்கிய சிருஷ்டிகள் இன்னும் தமிழ்நாட்டில் உண்டாகவில்லை என்பதைப் பற்றியும் ஏற்கனவே நாம் பலமுறை தெரிவித்திருக்கிறோம். பத்திரிகைகளா கட்டும். புதகங்களாகட்டும், கவிதைகளாகட்டும் எண்ணிக்கையில் அதிகப் பட்டிருப்பதைக் கொண்டு நம்மால் திருப்திகொள்ள முடியவில்லை. இவற்றில் தேசத்தின் நாடித் துடிப்பு எந்த அளவுக்கு எதிரொலி கொடுக்கிறதென்பதுதான் நமக்கு முக்கியம். சிறிய மனமுள்ள பெரிய மாளிகைக்குத்தான் நாம் மகத்துவம் கொடுக்கிறோமே யொழிய, பெரிய மனமுள்ள சிறிய குடிசைக்கு நாம் மகத்துவம் கொடுக்கிறோமில்லை. பொழுது போக்குவதற்கான நூல்களோ, பத்திரிகைகளோ எதுவுமே இப்பொழுது நமது நாட்டிற்குத் தேவையில்லை. குவிந்து கிடக்கும் நமது இருதயத்தை விகசிக்கச் செய்யும் ஆற்றலுள்ள, வறண்டு கிடக்கும் நமது அறிவுக்கு ஈரமுண்டாக்கும் திறன்வாய்ந்த, இகலோகத்தில் நாம் எப்படி வாழ வேண்டுமென்பதை வகுத்துக் காட்டும் வழிகள் நிறைந்த, நமது நிகழ்கால நிலையை நமக்கு நன்றாக உணர்த்திக் காட்டுகிற நூல்கள், கவிதைகள், பத்திரிகைகள் முதலியனவே இப்பொழுது தேவை. இவை தோன்றாத வரையில் நாம் நிம்மதி கொள்ள முடியாது. எனவே, இலக்கியத் துறையிலும் நாம் பிற்போக்கடைந்திருக் கிறோ மென்பது, இதுகாறும் சொன்னவற்றிலிருந்து ஊர்ஜிதம் செய்யப்பட்டது. இனி, மேடைப் பிரசங்கங்களைப்பற்றியும், படித்தவர்களென்ற சுய திருப்தியுடன் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளும் நபர்கள் போக்கு வரத்து சாதனங்களில் நடத்தும் சம்பாஷணை களைப் பற்றியும் சில வார்த்தைகள் கூற விரும்புகிறோம். பொதுவாக நாம் கேட்கும் மேடைப் பிரசங்கங்களுக்கு மையமா யிருக்கும் விஷயங்கள் இரண்டு மூன்றுதான். ஒன்று, நமது தேசத்தின் புராதனப் பெருமையைப் பற்றிக் கூறுவதாயிருக்கும்; அல்லது நமது தலைவர்களின் தோத்திரப் பாடல்களாயிருக்கும்; அல்லது யாருமே பாராத அல்லது பெரும்பாலோருக்குப் புரியாத பாரமார்த்திக உலகத்தைப் பற்றியாவது இருக்கும்; அல்லது அயல் நாடுகளில் நடைபெறுகிற விஷயங்களைப்பற்றியாவது இருக்கும். இந்தப் பேச்சுக்களினிடையே, தேசத்தின் நிகழ்கால திதியைப் பற்றி வருகிற அமிசம் மிகச் சொற்பந்தான். அப்படி அற்ப சொற்பமாக நமது கவனம், நிகழ்காலத்திற்கு ஈர்க்கப் படுமாயின், உடனே சத்தியாக்கிரகம், அஹிம்ஸை போன்ற புனிதமான விஷயங்கள் அந்தக் கவனத்தைக் கவிந்துகொண்டு விடுகின்றன. சம்பாஷைணைகளின்போது, தலைவர்களின் பேச்சு, அயல் நாட்டிலிருந்து அதிகாரிகள் சொல்கிற வார்த்தை ஆகிய இவைகளுக்கு வியாக்கியானம் செய்வதில் நாம் காட்டுகிற அபார சாமர்த்தியம், உண்மையில் பொறாமைப்படத் தக்கதுதான். ஆனால் அந்தப் பேச்சிலிருந்து, அல்லது வார்த்தைகளிலிருந்து நாம் ஏதேனும் பாடம் கற்றுக் கொள்கிறோமா என்று பார்த்தால், இல்லை. அப்படிக் கற்றுக் கொண்டிருந்தால், இந்த நிலையில் இருக்கமாட்டோமே? இதில் ஒருவித அதிருப்தியைக் காட்டுவோமே? பொழுது போக்குவதற்காகப் பிரசங்கங்களையும், பிரயாணத்தில் அலுப்புத் தட்டாமலிருப்பதற்காகச் சம்பாஷணைகளையும் சாதனங்களாக உபயோகித்துக் கொள்வதில்தான் நாம் திருப்தி யடைகிறோம். விஷயம் உணர்ந்துகொள்ளவும், விஷய முணர்த்தவும், இவை எவ்வளவு தூரம் சாதனங்களாக உபயோகப் படுத்தப்படுகின்றன? ஒரு சிறிய உதாரணத்தை இந்தச் சந்தர்ப்பத்தில் எடுத்துக் காட்டவிரும்பு கிறோம். அஹிம்ஸை என்பது, இன்றைய இந்திய அரசியல் அரங்கத்தின் ஒரு முக்கிய காட்சியாயிருக்கிறது. இதைப்பற்றி அடிக்கடி பேசப்படுவதை நாம் கேட்கிறோம்; நாமும் பிறரிடத்தில் இதைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் நம்மிலே எத்தனைபேர் இதனை அறிந்து, அனுபவித்து, அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர்? அரசியல் வாழ்க்கையில் அனுஷ் டானத்திற்குக் கொண்டு வருவது ஒருபுறமிருக் கட்டும். தனிப்பட்ட நமது அன்றாட வாழ்க்கையிலேனும் இதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோமா? அஹிம்ஸை என்பது எதிர்மறைச்சீலமல்ல; உடன்பாட்டுச் சீலம். அதாவது, ஹிம்ஸை செய்யாமலிருப்பதுமட்டும் அஹிம்ஸை யல்ல. பிறர் செய்யும் ஹிம்ஸையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அப்படி ஹிம்ஸை செய்கிறவர்களுக்கு இதத்தைச் செய்யவேண்டும். அதிலும் அன்பு உள்ளத்தோடு செய்ய வேண்டும். இந்தத் தூய அன்பு எங்கிருந்து உதிக்கும்? அஞ்சாமை உள்ளத்தி லிருந்து. அஞ்சாமைக்குத் துறவு வேண்டும். காந்தியடிகளின் சிஷ்யையான மீராபென்1 அம்மையார் அஹிம்ஸைக்குப் பின் வருமாறு வியாக்கியானம் செய்கிறார்:- அஹிம்ஸை, பலாத்காரமின்மையையும், ஹிம்ஸை யின்மையையும், கொல்லாமையையும் குறிப்பதோடு நின்றுவிட வில்லை. ஒருவனுக்கு உண்மையாக உபயோகத்திற்கு வேண்டும் அளவிற்கு மிஞ்சிய சொத்தையும், பணத்தையும், உணவையும், உடையையும் வைத்துக் கொள்ளாதிருத்தலையும் அஃது அடக்கிக் கொண்டுள்ளது. எனவே, அஹிம்ஸை என்பது, நாம் சொல்வதைப் போலவும், கேட்பதைப் போலவும் அவ்வளவு சுலபமானதல்ல. அஃதொரு மகத்தான சக்தி. அந்தச் சக்தியானது, பிறருடைய இருதயத்தில், நம்மைப்பற்றி ஒரு மரியாதையான எண்ணத்தை உண்டு பண்ணவேண்டும். நம்மிடத்திலே யுள்ள அபார சக்தியினால், ஆற்றலினால் நாம் அடங்கி நடக்கவேண்டும். அப்படிப்பட்ட அடக்கத்திற்குத்தான் மற்றவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள். அப்படிப்பட்ட மதிப்பைப் பெறுவதற்குத் தகுதியுடையது எதுவோ அதுதான் உண்மையான அஹிம்ஸை. இவ்வளவு உயர்வு வாய்ந்த இந்தச் சக்தியை நாம் லேசாகக் கருதிவிடலாமா? சுலபமாக நினைத்துவிடலாமா? காந்தியடிகளே, தமது யங் இந்தியா பத்திரிகையில் (5-11-1925) பின் வருமாறு கூறியுள்ளார்:- இந்த உயர்ந்த தத்துவத்தைச் சொல்லிவிடுவது மிகவும் சுலபம். இதனைத் தெரிந்து கொண்டு சச்சரவும், சந்தடியும், ஆசாபாசங்களும் நிறைந்த இந்த உலகத்தில் இதனை அனுஷ் டானத்திற்குக் கொண்டு வருவதிருக்கிறதே, அது மகா கடினமான காரியம். இது கடினமென்பதை, நான் நாளுக்குநாள் அதிகமாக உணர்ந்து வருகிறேன். ஹிம்ஸையின் முடிவு எல்லைதான், அஹிம்ஸையின் ஆரம்ப எல்லை. எப்படி இல்லறத்தில் அதிகமாக ஈடுபட்டிருக்கிறவனுக்கு, துறவறத்தைச் சுலபமாகக் கைப்பற்ற முடிகிறதோ, எப்படி தேக பலம் மிக உடையவனுக்கு ஆத்ம பலத்தை எளிதிலே அடைய முடிகிறதோ அப்படிப்போல், ஹிம்ஸையிலே அதிகமாகத் தோய்ந்திருக்கிறவனுக்கு அஹிம்ஸையைச் சீக்கிரத்தில் அனுஷ்டிக்க முடியும். ஹிம்ஸையின் சக்தி தெரிந்தால்தான் அஹிம்ஸையின் சக்தி எளிதில் புலனாகும். நமக்கு ஹிம்ஸை செய்யத் தெரியுமா? ஹிம்ஸை செய்ய நமக்குச் சக்தி இருக்கிறதா? அந்தச் சக்தியைப் பெறுவதற்குக்கூட சுதந்திரம் வேண்டுமே? சுதந்திரம் வேண்டுமானால் அடிமைத் தனத்திலிருந்து விலகவேண்டும். அடிமைத் தனத்திலிருந்து விலக வேண்டுமானால் , அடிமைத்தனத்தி லிருப்பதாக உணரவேண்டும். இன்றைய நமது நிலைமை எந்த மாதிரி யான நிலைமையென்பதை நாம் எவ்வளவு தூரம் உணர்ந்திருக்கிறோம்? அல்டோ ஹக்லி1 என்ற மேனாட்டு அறிஞன் கூறியமாதிரி, அஹிம்ஸைக்கு அடிப்படையாயிருப்பன தேக பலமும் மனோபல முந்தான். நம்மிடத்திலே இப்பொழுது எந்த விதமான பலம் இருக்கிறது? ஒருவிதமான பலமும் இல்லையே. ஆயினும் அஹிம்ஸையைப் பற்றி வாசாமகோசரமாய்ப் பேசுகிறோம். அஹிம்ஸை என்பது ஒரு முதிர்ந்த பழம். அந்தப் பழத்தைச் சாப்பிடுவதுதான் நல்லது. இந்த அளவுக்குச் சரிதான். ஆனால் எட்டடி உயரத்திலே பழுத்துத் தொங்கும் இந்தக் கனியை, இரண்டடி உயரம் கூட வளர்ச்சி பெறாத நாம், உண்ண ஆசைப்படுகிறோம். ஆசையென்னவோ இருக்கவேண்டியதுதான். ஆனால் நாம் வளர்ச்சியடையாமல் ஆசையை வளர்த்துக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? அது கடைசியில் நிராசையாக வல்லவோ முடியும்? தவிர, எந்த ஒரு பழமும், பூவாகி, பிஞ்சாகி, காயாகிக் கடைசியில்தான் கனியாகிறது. அதாவது அநேக நிலைகளைக் கடந்த பிறகு, மேலானதொரு பக்குவ நிலையையடைகிறது. அதைப்போல் அஹிம்ஸைக் கனியும் பல பக்குவநிலைகளையடைய வேண்டும். இந்த அடிப்படையான உண்மையை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும். இதைத் தெரிந்து கொள்ளாத முறையிலேயே, பிரசங்கங்கள் செய்யப்படுவதையும், சம்பாஷணைகள் நடைபெறுவதையும் நாம் காண்கிறோம். 2. வாழ்க்கையும் அரசியலும் எந்த ஒரு ஜாதி, மற்றொரு ஜாதிக்கு அடிமைப்பட்டு விடுகின்றதோ, அந்த ஜாதியினுடைய வாழ்க்கை, அடிமைப்பட்டு விட்ட அந்த நிமிஷத்தி லிருந்தே, இரவல் வாழ்க்கையாகி விடுகிறது. அதாவது, அதனுடைய எண்ணப் போக்கு, சம்பிரதாயம், விவகாரரீதி, தரும நியாயம், அரசியல் பார்வை ஆகிய எல்லாம் இரவல் மயமாகவே ஆகிவிடுகின்றன. இப்படி இரவல் வாழ்க்கையை நாம் நடத்துகிறோமென்று எந்த அடிமை ஜாதி உணர்ந்துகொண்டுவிடுகிறதோ அந்த ஜாதிக்கு விமோசனம் உண்டு; விடுதலை கிடைக்கும். அந்த உணர்ச்சி ஏற்படாத வரையில் அஃது, அடிமைத்தனம் என்னும் பாழுங் கிணற்றிலே பரதவித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். இரவல் வாழ்க்கையென்று சொன்னால் என்ன? பராதீன வாழ்க்கை. அதாவது, தனது சொந்த வாழ்க்கையைக்கூட, தன்னுடைய ஆதீனத்தில் வைத்துக் கொண்டிருக்க முடியாத வாழ்க்கை. இப்படிப்பட்ட வாழ்க்கையை யுடையவனுக்குச் சமுதாய வாழ்க்கை யென்றும், அரசியல் வாழ்க்கையென்றும் தனியாக இருக்க முடியுமா? முடியாது. எப்பொழுது ஒருவன் தன்னுடைய சொந்த வாழ்க்கையைக்கூட தன்னிச்சைப்படி நடத்த முடியாத நிலைமைக்கு வந்து விடுகிறானோ அவன் மானத்தை இழந்துவிடுகிறான். ஏன்? எப்பொழுது அவன் தன்னுடைய சுதந்திரத்தை மற்றவர்களுக்குப் பராதீனப்படுத்திக் கொடுக்கச் சம்மதித்து விட்டானோ அப்பொழுதே அவன் தன்மானத்தையும் பறிகொடுத்துவிட்டான். மானத்தை இழந்தவன் மரணத்தை யடைந்தவன். இல்லையா? இதனால்தான் நமது பெரியோர்கள் மான மழிந்து வாழாமை முன்னினிதே என்று கூறினார்கள். மானம் என்றால் என்ன? திருக்குறளுக்கு உரை வகுத்த ஆசிரியர் பரிமேலழகர், மானம் என்பதற்கு, தனது நிலையிலிருந்து தாழாமை என்று கூறினார். ஒருவனுடைய தனது நிலையென்ன? தன்னுடையது என்று ஒருவித உரிமையோடு, ஒருவித பற்றுதலோடு, ஒருவித பெருமையோடு எந்த நிலையைச் சொல்லிக் கொள்ள முடியுமோ அதுதான் தனது நிலை. இந்த நிலைதான் இயற்கை நிலை. இதற்கே சுதந்திர நிலை என்று பெயர். இப்படிச் சுதந்திரமாக, அதாவது சுயமாக வாழ முடியாத நிலைமைக்கு ஒருவன் எப்பொழுது வந்துவிடுகிறானோ அப்பொழுதே அவன், இயற்கை நிலையிலிருந்து செயற்கை நிலைக்கு வந்துவிட்டவனாகிறான். இதனால், சுதந்திரமாயிருப்பதுதான் இயற்கை; பராதீனப்பட்டுக் கிடப்பது செயற்கை யென்பது பெறப்படுகிறது. இப்படி இயற்கை நிலையிலே, அதாவது சுதந்திர நிலையிலே மனிதன் வாழ்ந்துகொண்டிருந்தால் தான் அவனுக்குப் பெருமையுண்டு; வலிமையுண்டு. மானம் என்ற சொல்லுக்கே, பெருமை யென்றும், வலிமையென்றும் அர்த்தங்களிருக்கின்றன. ஒருவனைப் பார்த்து அவன் மானத்தோடு வாழ்கிறான் என்று சொன்னால் என்ன அர்த்தம்? அவன் சுதந்திரமாக வாழ்கிறான், பெருமையோடு வாழ்கிறான், வலிமையோடு வாழ்கிறான் என்றுதான் அர்த்தம். ஒருவனை மானபங்கப் படுத்திவிட்டோமென்று சொல்கிறோம். அதாவது அவனை, இயற்கை நிலையிலிருந்து செயற்கை நிலைக்குக் கொண்டுவந்துவிட்டோம்; அவனுடைய சுய இச்சையை, அதாவது அவனுடைய எண்ணத்தை, ஆசையை, தேவையை எல்லாவற்றையும் சீரழித்துவிட்டோமென்று அர்த்தம். ஆகவே, இயற்கையான சுதந்திரத்தை இழந்தவன், செயற்கை யான இழிவை யடைகிறான்; அதாவது அடிமையாகிறான். இயற்கையின் முன்னிலையில், செயற்கைக்கு எங்கேனும் மதிப்பு இருக்குமா? மரியாதை இருக்குமா? தானாக மலர்ந்த மல்லிகை மலருக்குப் பக்கத்தில், காகிதத்தினால் செய்யப்பட்ட மல்லிகைப் புஷ்பத்தை வைத்தால் எதை எடுத்து நாம் மூக்கில் முகர்வோம்? எதை நாம் பாராட்டிப் பேசுவோம்? இயற்கை மல்லிகையைத் தானே? தவிர, காகித மல்லிகையை நாம் எத்தனைவித அழகுபடுத்தினாலும், அத்தனை விதமும் இயற்கை மல்லிகையிலிருந்து வாங்கின இரவல்தான்; அதனை, நகல் செய்ததுதான். அந்தக் காகித மல்லிகையின்மீது நாம் என்னதான் வாசனைகளைத் தெளித்தாலும், இயற்கை மல்லிகையில் இருக்கிற வாசம் அதில் இருக்கவே முடியாது; அழகும் இராது. அதுபோல் சுதந்திர புருஷனுக்கு முன்னிலையில் அடிமைக்கு மதிப்பு இருக்குமா? அந்தச் சுதந்திர புருஷன்தான் அடிமைக்கு மதிப்புக் கொடுப்பானா? வேண்டுமானால் தன்னுடைய காரிய சாதனைக்காக அந்த அடிமையை அவன் தட்டிக் கொடுத்துப் பேசலாம். உன்னால்தான் நான் வாழ்கிறேன் என்றுகூடச் சொல்லலாம். நாம்கூட, நம்முடைய வேலைக்காரனைப் பார்த்து, தம்பி! நீ பலகாரம் செய்து கொடுத்தால்தான் என் வயிறு நிரம்புகிறது; வாய்க்கு ருசியா யிருக்கிறது என்று சொல்கிறோம். உண்மையிலேயே அவன்மீது வைத்த மதிப்பினாலா அப்படிச் சொல்கிறோம்? இல்லையே. அவன்மீது நமக்கு விசுவாசம் இருக்கலாம். ஏனென்றால், அவன், நமது தேவை களைக் கவனித்துப் பூர்த்தி செய்துகொண்டு வருகிறானல்லவா? நம்முடைய நன்மைக்காக, அவன் சௌக்கியமாயிருக்க வேண்டி யிருக்கிறதல்லவா? ஆனால், அப்படி நமது விசுவாசத்தைப் பெற்ற அவன், தன் இஷ்டப்படி ஒரு நாள் நமக்குப் பலகாரம் செய்து கொடுக்கட்டும்; அல்லது அவனுடைய சௌகரியங்களை அவன் இச்சைப்படி செய்து கொள்ளட்டும்; அப்பொழுது நமக்கு அவன்மீது எவ்வளவு கோபம் வருகிறது? எவ்வளவு ஆத்திரம் உண்டாகிறது? ஏன் அப்படி நமக்குக் கோபமும் ஆத்திரமும் உண்டாகின்றன? அவன் நம்முடைய வேலைக் காரனா யிருப்பதனால்; நாம் எஜமான தானத்திலே இருப்பதனால். ஆகவே, வேலைக்காரன், அதாவது அடிமை, எஜமானனுடைய சௌகரியங் களை நாடுவதன் மூலம்தான், தன் சௌகரியங்களை அடைய வேண்டி யிருக்கிறது. இதனால் நாளாவட்டத்தில் எஜமானனுடைய எண்ணப் போக்கு, தேவை, ருசி முதலிய அனைத்தையும் அடிமையானவன் இரவல் வாங்கிக்கொண்டு, அதன்படியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிற நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. அப்பொழுது அந்த வேலைக்காரன், தன்னுடைய அடிமைத் தனத்திலேயே, சேவகத் தொழிலிலேயே திருப்தியடைகிறான். அவனுடைய சகாக்களில் யாரேனும் வந்து எவ்வளவு காலம் நாம் இப்படி அடிமைகளாயிருப்பது என்று சொல்லி அவனுடைய சுய உணர்வைச் சிறிது தூண்டிவிட முயற்சி செய்தால் அட போடா! இப்பொழுது எவ்வளவு நிம்மதியாயிருக்கிறது? நம்மால் இனிக் கஷ்டப்பட முடியாது என்று சொல்லி தன்னுடைய அடிமைத் தொழிலிலே தன்னை இழந்துவிடுகிறான். இப்படிப்பட்டவனை மீட்க முடியுமா? மரணந்தான் இவனை மீட்கவேண்டும். அதுபோல, ஆளும் ஜாதியினுடைய சௌகரியத்திற்காகவே வாழ்கிற ஓர் ஆளப்படும் ஜாதியினுடைய நிலைமையும் இருக்கிறது. அதனைத் தட்டி எழுப்பவேண்டுமென்று சொன்னால், அதன் சுய உணர்வைத் தூண்டவேண்டுமென்று சொன்னால், அது லேசான காரிய மல்ல. அன்றாட வாழ்க்கையிலே தொடர்ந்து அனுஷ்டித்துக் கொண்டு வர முடியாத வறட்டுத் தத்துவங்களை உபதேசித்து விடுவதனால் மட்டும், அந்த ஜாதியை அடிமைத் தனத்திலிருந்து கரையேற்றிவிட முடியுமா? அல்லது, ஆகாசத்திலே மணல் வீடு கட்டிக் காட்டி அதுதான் உங்களுடைய வருங்கால வாசதலம் என்று சொன்னால், அதுவே அந்த ஜாதியைத் திருப்தி செய்ததாகுமா? அடிமைப்பட்டிருக்கிற ஒரு ஜாதிக்கு இறந்த காலமும் இல்லை; எதிர் காலமுமில்லை. அதற்கு உள்ளதெல்லாம் நிகழ்காலம் ஒன்றுதான். நிகழ்காலத்தின்மீது அது தன் முழுக் கவனத்தையும் செலுத்துமானால், அதனுடைய எதிர்காலக் கதவு தானாகவே திறக்கும். இறந்த காலம் அதனைத் தானாகவே பிடர்பிடித்து முன்னே தள்ளும். எப்பொழுது ஒரு ஜாதி, பிறரால் ஆளப்படுவதற்குச் சம்மந்தங் கொடுத்து விடுகிறதோ அப்பொழுதே, அந்த ஆளும் ஜாதியி னுடைய நாகரிகச் சாயல், ஆளப்படும் ஜாதியின்மீது படிந்து விடுகிறது. இதனால் ஆளப்படும் ஜாதியினுடைய தனித்துவம் போய் விடுகிறது. தனித்துவம் போன பிறகு அதனுடைய வாழ்க்கையில் எஞ்சியிருப்பது போலித் தனந்தான். அதாவது அதனுடைய வாழ்க்கை, சுய வாழ்க்கையாக இல்லாமல் இரவல் வாழ்க்கையாகி விடுகிறது. இந்த இரவல் வாழ்க்கையை நடத்துகிற ஒரு ஜாதி, அடிமைத் தனத்திலே அமைதி இருக்கிறதென்று சொல்லுமானால் அதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? சென்ற ஆயிர வருஷ காலமாக, பாரத ஜாதி இந்த மாதிரியான ஒரு போலி வாழ்க்கையை நடத்தி வருகிறது; அந்த வாழ்க்கையிலே இன்பத்தையும் கண்டு வருகிறது. பாரத தேசத்தை, பெற்றெடுத்த தாயாக வருணித்துப் பாடுகிற நமது கவிஞர்களும் புலவர்களும் அம்மா! உன்மீது எத்தனையோ பேர் படை யெடுத்து வந்தார்கள்; அவர்களெல்லோருக்கும் நீ முக மலர்ச்சியுடன் வரவேற்பளித்தாய்; உனது உதார குணம் என்னே! என்று வியந்து பாடுகிறார்கள். இது வியப்பதற்குரிய விஷயமா? வெட்கப்படக்கூடிய விஷயமல்லவா? சமுத்திர அலைபோல், ஒரு ஜாதியாருக்குப் பின் மற்றொரு ஜாதியாராக வந்து நம்மை ஆட்படுத்தி, அவர்களிஷ்டப்படி ஆண்டுவிட்டுச் சென்றதோ, அல்லது நிலைத்திருப்பதோ நமக்குப் பெருமைதரக்கூடிய விஷயமா? இப்படித் தலைவணங்கிக் கொடுப்பதைச் சிறப்பித்துச் சொல்வது அடிமை மனப்பான்மைக்குத்தான் சாத்தியமாகும். 1752-ஆம் வருஷம் நடைபெற்ற ஆறுகாடு முற்றுகையின் போது, இந்திய சிப்பாய்கள், சோற்றிலிருந்து வடித்தெடுத்த கஞ்சியைத் தாங்கள் குடித்துவிட்டு, சோற்றை ஐரோப்பிய சோல்ஜர்களுக்கு அளித்தார் களென்றும், இது சிப்பாய்களின் வீரத்தையும் தியாகத்தையும் காண்பிக் கிறதென்றும் நமது பள்ளிக்கூட சரித்திர பாட புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கிறது. இது பிள்ளைகளுக்கு வலியுறுத்திப் போதிக்கப் படுகிறது. தேசீய சுய மரியாதையுள்ள எவனாவது, இந்தச் சிப்பாய் களின் செயலை வீரமென்றும் தியாகமென்றும் போற்ற முடியுமா? இந்தச் சிப்பாய்கள் சோற்றைக் கொடுத்து கஞ்சியைக் குடித்ததின்மூலம் பாரத ஜாதியை நிரந்தரமான அடிமைத் தனத்திற்குள்ளாக்கிய மகா பாபகரமான செயலைச் செய்தவர்களாக வில்லையா? இந்த மாதிரியான உதாரணங்கள் பல இந்திய சரித்திரத்தில், சிறப்பாக ராஜபுத்திரர்களுடைய சரித்திரத்தில் வருகின்றன. இவைகளை யெல்லாம் அடிமைப்பட்ட மனப்பான்மைதான் சகித்துக்கொண்டிருக்க முடியும்; பாராட்டவும் செய்யும். ஏனென்றால் அந்த மனப்பான்மையில் தான் சுதந்திர சூரிய வெளிச்சமில்லையே? வெளிச்சமில்லாத இடத்தில் தூய்மை இருக்குமா? தூய்மை இல்லாத இடத்தில் கோழைத்தனம், போலித்தனம் முதலிய தூசுகள் வந்து படிவதிலே என்ன ஆச்சரிய மிருக்கிறது. இதனால்தான் சுதந்திரமில்லாத இடத்தில் ஒழுக்கமும் இல்லை யென்றும், எங்கே சுதந்திரம் இல்லையோ, அங்கே மனித வாழ்க்கையானது, ஐம்பொறிகளுடைய யந்திரம் போலாகி விடுகிறது என்றும் இத்தாலிய அறிஞனாகிய மாஜினி கூறினான். இந்தியாவில் மொகலாயர்களின் ஆதிக்கம் செழித்தோங்கி நின்ற காலத்தில், முலிம்கள் மாதிரி உடையுடுப்பதும், பாரசீக பாஷையில் பேசுவதும், இப்படிப் பல வகையான முலிம் சம்பிரதாயங்களை அனுஷ்டிப்பதும் கௌரவமென்றும் நாகரிக மென்றும் கருதப்பட்டன. ஆங்கிலேயர்களுடைய ஆதிக்கம் வந்த பிறகு, ஆங்கில மாதிரியில் உடைதரிப்பதும், ஆங்கில பாஷையில் பேசுவதும் நாகரிகமாகக் கருதப்படு கிறது. ஆங்கில உடையும், ஆங்கில பாஷையுந்தான் நமது கண்ணுக்கும் இருதயத்திற்கும் முறையே அழகாகவும் இன்பமாகவும் தென்படுகின்றன. ஓய்வு கொள்வதில் கூட, ஞாயிற்றுக்கிழமையன்று ஓய்வு கொண்டால் தான், ஓய்வு கொண்ட மாதிரி ஒரு மன நிம்மதி நமக்கு ஏற்படுகிறது. ஏன்? ஆள்வோருடைய ஓய்வு நாளல்லவா அது? நமக்கு வருகிற வியாதிகள் கூட ஆங்கில மருந்துகளை உட்கொண்டால்தான், போகிறோமென்று பிடிவாதம் செய்கின்றன. சுதேசத்திலே உண்டாகிற காலணாச் சுக்கைக் காட்டிலும் அந்நிய நாட்டிலிருந்து ஆடம்பரமான உறையோடு வந்திறங்கு கிற இரண்டணா ஆப்ரின் என்னும் தலைவலி மாத்திரையில்தான் அதிக சக்தி இருக்கிறது! பல்குத்தும் குச்சியும், ஹோட்டல்களிலே குளிர்ந்த பானங்களை உறிஞ்சிக் குடிப்பதற்காகக் கொடுக்கப்படும் வைக்கோல் குழாயும், பலசரக்குக் கடைகளில் பொட்டலம் கட்டுவதற்காக உபயோகிக்கப்படும் காகிதமும், இப்படிப்பட்டவை யெல்லாங்கூட அந்நிய நாடுகளிலிருந்து தான் நமக்கு வரவேண்டி யிருக்கின்றன. அதாவது அந்நிய நாடுகளில் கழிவுப் பொருள்களென்று எவை எவை ஒதுக்கிவிடப்படுகின்றனவோ அவையெல்லாம் இந்திய மார்க்கெட்டுக்குள் திணிக்கப்பட்டு கிராக்கி யோடு விற்கப்படுகின்றன! இவைகளைப் பற்றி நம் அரசியல் தலைவர் களும் பொருளாதார நிபுணர்களும் எவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்திருக் கிறார்கள், என்ன சிரத்தை யெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் இவையனைத்தும் நமது அன்றாட வாழ்க்கையை உள்ளூர அரித்துக் கொண்டு வருகின்றனவென்பதை மட்டும் நாம் நன்கு உணர்கிறோம். ஆனால் நம்மிலே எத்தனைபேர் இதனை அறிந்துகொண்டிருக்கின்றனர்? குறிப்பிட்ட ஒரு ஜாதியினுடைய ஆதிக்கத்துக்கே நாம் உட்பட்டிருந்தாலும் அப்படி உட்படச் சம்மதித்த அந்தக் காரணத்தினாலேயே, சுதந்திரமாயுள்ள மற்ற ஜாதியாருடைய அரசியல், பொருளாதார ஆசைகளுக்கு நாம் எளிதில் இரையாகி விடுகிறோமென்று இவைகளினின்று புலனாக வில்லையா? நாம் சுதந்திரமாயில்லாத ஒரு காரணத்தினாலேயே, நமது எண்ணப் போக்கு, நமது தேவைகள் முதலியன எப்படி இரவல் தன்மை நிறைந்த தாயிருக்கின்றனவென்பதை இங்குச் சில உதாரணங்களால் விதரிக்க விரும்புகிறோம், நம்மைப்பற்றியோ, நம்முடைய கலைஞானம், புத்திகூர்மை முதலியவைகளைப் பற்றியோ அந்நியர்கள் உயர்த்திப் பேசுகிற போழ்துதான் நம்முடைய உயர்வு நமக்குத் தெரிகிறது; நம்முடைய கலைஞானம், புத்தி கூர்மை ஆகியவற்றிலுள்ள விசேஷம் நமக்குப் புலனாகின்றது. ரவீந்திரநாத் தாகூர், வங்க மொழியில் இயற்றிய கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதன் மூலமாக நோபல் பரிசைப் பெற்ற பிறகுதான், அவருடைய கவிதா சக்திக்கு நாம் மதிப்புக் கொடுக்க ஆரம்பித்தோம். ஸர் சி. வி. ராமன், நோபல் பரிசு பெற்றிரா விட்டால் அவரை நாம் தெரிந்துகொண்டிருப்போமோ? சென்னைக் கலாச் சாலையிலும், மைசூர் கலாசாலையிலும், சல்கத்தா சர்வ காலாசாலை யிலும் தத்துவ போதகாசிரியராயிருந்த ஸர் எ. ராதாகிருஷ்ணன், இங்கிலாந்துக்குச் சென்று சில பிரசங்கங்கள் செய்த பிறகும், ஆக்போர்ட் சர்வ கலாசாலையில் தத்துவ போதகாசிரியராக நியமிக்கப்பட்ட பிறகுந்தான், அவருடைய தத்துவ ஞானத்தை நாம் புகழ ஆரம்பித்தோம். சுவாமி விவேகானந்தர், சிக்காகோவில் கூடிய சர்வ மத மகாநாட்டில் ஹிந்து மதத்தின் உயரிய கோட்பாடுகளைப் பற்றிப் பிரசங்கம் செய்த பிறகுதானே, நாம் அவரை, எங்களுடைய பாரத மாதாவின் தவப்புதல்வர் என்று கொண்டாட ஆரம்பித்தோம்? இப்படித் தனிப்பட்ட மனிதர்களுக்கு நாம் மதிப்புக் கொடுப்பது ஒரு புறமிருக்கட்டும். நமது கலைகளும், நமது உணவுப் பொருள் களுங்கூட அந்நிய நாட்டு முத்திரை போட்டுக்கொண்டு வந்த பிறகுதான் நம் நாட்டிலே செலாவணியாகின்றன. நமது நாட்டு மொழிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்யவோ, நமது புராதன சரித்திர வரலாற்றைப் பரிசீலனை செய்யவோ வேண்டுமானால் அந்நிய நாடுகளுக்குத்தான் நாம் ஓட வேண்டியிருக்கிறது. நம் நாட்டு அறிஞர்கள், தாங்கள் எழுதும் நூல்களை அந்நிய நாடுகளிலுள்ள பிரசுராலயங்களைக் கொண்டு வெளியிடச் செய்வதில்தான் பெருமையும் திருப்தியுமடைகிறார்கள். அந்நிய நாடுகளிலிருந்து தகர டப்பிகளிலோ, கண்ணாடிப் புட்டிகளிலோ அடைத்து வரும் உணவு வகைகளில்தான் சத்துப் பொருள்கள் இருப்பதாக நமது ஆகார நிபுணர்கள் நமக்குச் சொல்கிறார்கள். பசுப் பாதுகாப்புக்குப் பெயர்போனது நமது பாரத நாடு. வேத காலத்திலிருந்து இந்தப் பெருமை நமக்கு உண்டு. இரண்டாயிரத் திருநூறு வருஷங்களுக்கு முன்னே நமது நாட்டில் ஆண்ட சிறந்த அஹிம்ஸா வாதியாகிய அசோகன், பசுக்களுக்கும் மற்ற மிருக ஜாதி களுக்கும் ஆங்காங்கு சிகிச்சை சாலைகள் ஏற்படுத்தியிருந்தானென்று நாம் இப்பொழுது பெருமையோடு பேசிக் கொள்கிறோம். ஆனால் நமது நாட்டிலே நமக்குத் தேவையான வெண்ணெயோ பாலோ நமக்குக் கிடைக்கிறதா? டப்பிகளிலே வருகிற வெண்ணெயை ரொட்டிக்கு உபயோகித்துக் கொள்வதும், காபி, டீ முதலியவைகளுக்கு டின் பாலை உபயோகித்துக் கொள்வதும், நமது நாட்டு மத்தியதர குடும்பங்களிலும் உயர்தர குடும்பங்களிலும் சர்வ சகஜமாகக் காண்கிறோமில்லையா? நாம் வளர்க்கிற நாய்க்குத் தேய்த்துக் குளிப்பாட்ட உபயோகிக்கிற சோப்பும், பட்சிகளுக்குக் கொடுக்கிற தானிய ஆகார வகைகளும் வெளிநாடுகளி லிருந்து வந்தால்தான் நமக்குப் பரம திருப்தி உண்டாகிறது! நமது நாட்டிலிருந்து ஏராளமான தோல் ஏற்றுமதியாகிறது. ஆனால் அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பூட்களை அணிந்து கொள்வதில்தான் நம்முடைய தன்மதிப்பு உயர்கிறது! நமது நாட்டிலே, நமது நாட்டு மக்களால், நமது நாட்டு மரங்களிலிருந்து தயார் செய்யப்படுகிற தலைவாரிக்கொள்ளும் சீப்பு, காலணாவுக்கு இரண்டு கிடைக்கிறது. அதை நாம் சட்டை செய்வதில்லை. ஆனால் ஆட்டுக் கொம்பிலிருந்தும், மாட்டுக் கொம்பிலிருந்தும் தயார் செய்யப்பட்டு பளபளப்போடு அந்நிய நாடு களிலிருந்து வந்திறங்கும் சீப்புகளை, அணாக்கணக்கிலோ, ரூபாய்க் கணக்கிலோ விலைகொடுத்து வாங்கி வாரிக்கொண்டால்தான், கூந்தல் சிக்குப் படாமல் படிந்திருக்கிறது! தலையிலே சொருகிக் கொள்கிற கொண்டை ஊசி, சட்டைகளுக்கு அணிகிற பொத்தான், எழுதுகிற மை, காகிதத்திற்குக் குத்துகிற குண்டூசி இப்படிப்பட்ட சாதாரண சாமான் வகையராக்களுக்குக்கூட, வெளிநாடுகளிலுள்ள இயந்திர சாலைகளின் தயவுக்கு நாம் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. நமது அன்றாடத் தேவை களைக்கூட, சாதாரணத் தேவைகளைக்கூட, அற்ப சொற்பமான தேவை களைக்கூட, நம்மால் பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. அத்தி பூத்தாற்போல் ஏதோ அங்குமிங்குமாக ஓரிரண்டு தொழிற் சாலைகள் அந்நிய நாட்டுப் போட்டியோடு போராடிக்கொண்டும், உயிருக்கு மன்றாடிக் கொண்டும் இருப்பதைப் பார்த்து, நாம், தேசீய உணர்ச்சி வலுத்துவிட்டது; சுதேசியத் தொழில்கள் செழிப்பாக இருக் கின்றன- என்றெல்லாம் வாயால் உரக்கச் சொல்லிவிட்டு, அனுஷ்டானத்தில் அமைதியாக அடங்கிவிடுகிறோம். காங்கிர மஹா சபை கூடுகிற காலத்தில் நடைபெறுகிற சுதேசப் பொருட்காட்சிகளைப் பார்த்துவிட்டு அகமகிழ்ந்து போகிறோம். இந்தப் பொருட் காட்சிகளும் தொழில் தாபனங்களும், கடலிலே கரைத்த பெருங்காயம் மாதிரி. நமது தேவை மகத்தானது. நமது முயற்சி அணுவானது. இதைத்தான் நாம் வலியுறுத்திக் கூறுகிறோம். லாலா முரளீதரர் என்பார் 1891-ஆம் வருஷம் நாகபுரியில் கூடிய காங்கிரசில் பின் வருமாறு பேசினார்:- இந்தப் பகட்டான விளக்குகள், ஐரோப்பாவில் தயாரிக்கப் பட்டு வருகிற மேஜை நாற்காலிகள், ஆடம்பரமான உடை தினுசுகள், உங்கள் வீட்டு அலங்காரப்பொருள்கள் இவையெல்லாம் என்ன? இந்தியாவின் வறுமைக்கு அடையாளங்கள்! இந்தியர்களின் பட்டினிக்கு உதாரணங்கள்! அந்நிய நாட்டுப் பொருள்களுக்கு நீங்கள் செலவழிக்கிற ஒவ்வொரு ரூபாயும், உங்கள் ஏழைச் சகோதரர்களிடமிருந்து, நாணயமாகத் தொழில் நடத்திக் கொண்டு வந்த உங்கள் சகோதரத் தொழிலாளர்களிடமிருந்து, களவாடப்பட்ட ரூபாயாகும். நம்மீது கொண்ட ஒரு பரம கருணையினால், அந்நிய நாட்டுப் பொருள்கள் இந்தியாவில் கொண்டு வந்து திணிக்கப்படு கின்றனவென்பதை நான் அறிவேன்! அந்தக் கருணையினால்தான் நமது சுதேசித் தொழில்களெல்லாம் சீரழிக்கப்பட்டனவென்பதை நான் அறிவேன்! ஆனால் அந்தக் கருணையினால், நம் சகோதரர்கள் பட்டினி கிடக்கிறார்கள்........... நம்முடைய காருண்ய அரசாங்கம் சுதேசித் தொழில்க ளெல்லாம் நசித்துவிட்டனவே யென்று எவ்வளவு வருத்தப்படுகிறது! நம்முடைய தேவைகளை நாம் பூர்த்தி செய்து கொள்ள வேண்டு மென்பதற்காகவும், நம்மவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டு மென்பதற்காகவும், முப்பது கோடி மக்கள் நிறைந்த நமது நாட்டில் பன்னிரண்டு கைத்தொழில் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்! இவர் பேசி ஏறக்குறைய ஐம்பது வருஷங்களுக்கு மேலாகின்றன. இப்பொழுது நாம் எந்த திதியிலிருக்கிறோம்? அந்நிய நாட்டுப் பொருள் களின் உபயோகத்தை நாம் எவ்வளவு தூரம் குறைத்துக் கொண்டிருக் கிறோம்? எது வரையில் நம்முடைய அரசியல் பார்வையானது, கடிகாரத் தொங்கட்டம் மாதிரி அப்படியும் இப்படியுமாகச் சதா ஆடிக் கொண்டே யிருக்கிறதோ, நாம் அடையவேண்டிய லட்சியம் இன்னதுதான் என்று நிர்ணயித்து அஃதொன்றின் மீதே நாம் எதுவரையில் நமது அரசியல் பார்வையைச் செலுத்தா திருக் கிறோமோ, எதுவரையில் கடவுளின் திருவுளச் சம்மதத்திற்கும், அந்நியநாட்டு அரசியல் பண்டிதர்களின் நன்மதிப்புக்கும் நாம் காத்துக் கொண்டிருக்கிறோமோ, முரண்பட்ட பல சக்திகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டுதான் சுதந்திர பாதையில் காலடி எடுத்து வைக்க வேண்டுமென்று எதுவரையில் நம் தலைவர்கள் நமக்கு உபதேசித்து வருகிறார்களோ, அது வரையில் நாம் எந்தத் துறையி லும் எந்தவித உருப்படியான காரியத்தையும் செய்ய முடியாது. சமுதாய சீர்திருத்த விஷயத்திலேயாகட்டும், பொருளாதாரத் துறையிலேயா கட்டும், அரசியல் முயற்சிகளிலே யாகட்டும், எதிலும். அப்படியும் இப்படியுமாகச் சில சில மேல்பூச்சுகளான காரியங்களைச் செய்துவிட்டுச் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்; நம்மை நாமே பாராட்டிக் கொள்ளலாம். ஆனால் இவையொன்றுமே, அந்நிய ஆதிக்கத்தை அசைத்துக் கொடுக்க மாட்டா. பிரிட்டிஷ் அரசாங்கத்தை அசைத்துக்கொடுக்கத் தாம் எடுத்துக்கொண்ட முயற்சியில் காந்தியடிகள் தவறிவிட்டார் என்பது ஸர் எ. ராதாகிருஷ்ணனுடைய தீர்ப்பு. ஒரு பணக்காரப் பிரபுவினுடைய வீட்டிலிருக்கும் அரிசி மூட்டையிலிருந்து ஒவ்வொரு பிடி அரிசி எடுத்து எப்படி ஏழைகளுக்கு வழங்கப் படுகிறதோ, அதைப்போல் அவ்வப்பொழுது, உரத்துக் கத்துகிற சமயங்களில், நமக்குச் சில சில்லரை அரசியல் திருத்தங்கள் வழங்கப்படுகின்றன. இவைகளைக் கொண்டு நாம் திருப்தியடையத் தயாராயிருக்கிறபோது, இவையே, இந்த சில்லரைச் சீர்திருத்தங்களே ஒரு பெரிய வெற்றியென்று நாம் பூரித்துவிடுகிறபோது, இவற்றைச் செயலில் நடத்திக் காட்டி நமது அரசியல் ஞான பக்குவத்தைக் தெரிவித்துக் கொள்ள நாம் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு முனைந்து நிற்கிறபோது, நமது லட்சியம் அதாவது சுதந்திர வாழ்வு-நமது பார்வைக்கும் பிடிக்கும் அகப்படாமல் எட்டி எட்டித்தான் போய்க் கொண்டே யிருக்கும். எது வரையில் நம்மிடத்தில் சீர்திருத்த மனப்பான்மை யிருக் கிறதோ அதுவரையில் சமரஸ மனப்பான்மை நமக்கு இருக்கவே செய்யும். சமரஸ மனப்பான்மையென்பது என்ன? சந்தேக மனப்பான்மையின் சகோதரன். அதாவது நமது திறமையிலே, நமது சக்தியிலே, நமது சங்கல்பத்திலே, நமது லட்சியத்திலே எல்லாவற்றிலும் ஒரு சந்தேகந்தான்; ஒரு தடுமாற்றந்தான். இந்த மனப்பான்மை நம்மிடத்தில் வேரூன்றிப் போயிருக்கிறதினாலேயே, நாம் எந்தக் காரியத்தையும் வெற்றியானாலும் தோல்வியானாலும் பிரயத்தனப் பட்டுப் பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டு செய்கிறோம். பிரதிக்ஞை என்று சொன்னால், உறுதியென்று சொன்னால், அஃது ஒன்றுதான் இருக்க முடியும், ஒன்றாகவே இருக்க முடியும். அல்லது என்ற வார்த்தைக்கு அதில் இடமே யில்லை. சுமார் இரண்டாயிர வருஷங்களுக்கு முன்னே, ரோம ராஜ்யத்தில் பேபிய1 என்ற ஒரு வீரன் இருந்தான். அவன், வயோதிகத்தினால் உடல் தளர்ந்திருக்கிற காலத்தில், ரோமர் களுக்கும் ஸாம்னைட்டுகள்2 என்ற மற்றொரு ஜாதியாருக்கும் மகத்தான தொரு யுத்தம் மூண்டது. பேபிய, ரோமர்களுடைய சேனாதிபதியாக நியமிக்கப்பட்டு யுத்தத்தில் வெற்றி சம்பாதித்துக்கொண்டுவர வேண்டுமென்று உத்தரவிடப்பட்டான். அப்பொழுது அவனுடைய போர்வீரர்கள் போர்க்களத்திற்குச் செல்வதற்கு முன்னர் ஒரு பிரதிக்ஞை செய்து கொண்டுபோனார்கள். என்ன பிரதிக்ஞை? மடிவது அல்லது வெற்றியடைவது என்ற பிரதிக்ஞையா? இல்லை. வெற்றிபெறுவது என்ற ஒரே பிரதிக்ஞையைத்தான் செய்து கொண்டு போனார்கள். அந்தப் பிரதிக்ஞையை நிறைவேற்றவும் செய்தார்கள். 1526-ஆம் வருஷம் பானிப்பட்டில் நடைபெற்ற யுத்தத்தில் பாபர் மன்னன், வெற்றிபெறுவதாக யுத்த களத்திலேயே சபதஞ்செய்து கொண்டான்; வெற்றியும் அடைந்தான். துருக்கியக் குடியரசை தாபித்த கமால் அத்தாதுர்க் 1922-ஆம் வருஷம் கிரேக்கர்களோடு போராடுவதற்கு முன்னர், துருக்கியர்களைப் பார்த்து, ஒன்று கூடுங்கள்; கச்சை கட்டுங்கள்; வெற்றி நமதே யென்று முழங்கினான். இன்னோரிடத்தில் நமக்கு வெற்றி கிடைக்கும். இதில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை யாருமே அசைக்க முடியாது. துருக்கிக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன்: நாம் வெற்றியடைவோம் என்று கூறினான். துருக்கிக்கு வெற்றி கிடைத்தது. ஐரோப்பிய வல்லரசுகள், அது முதல் அதனை மதிப்புடன் நடத்தத் தொடங்கின. இப்படி நாம் ஒரே சங்கல்பத்துடன், ஒரே திடத்துடன் நமது அரசியல் விவகாரங்களை நடத்தத் தொடங்காத வரையில், நமது லட்சியத்தை நாம் அடைய முடியாது; அந்த லட்சியமும் நமது பார்வைக்குச் சரியாகப் புலப்படாது. ஏனென்றால், நமக்கு நம்முடைய லட்சியத்தில் நிச்சய புத்தி இல்லாமலிருக்கிற போழ்து, திடநம்பிக்கை இல்லாமலிருக்கிற போழ்து, அந்த லட்சியம், நமது பார்வைக்குச் சுலபமாகப் புலப்படுமா? அரசாங்க அதிகாரிகளுக்கும் நமக்கும் ஊடல் ஏற்படுகிறபோது பரிபூரண சுதந்திரம் என்கிறோம். அந்த ஊடல் மாறிவிட்ட காலத்தில் குடியேற்ற நாட்டந்தது என்கிறோம். சில சமயங்களில் இரண்டும் ஒன்றுதான் என்று சொல் கிறோம். இதுவரையில் எங்காவது நம் தலைவர்கள், சுயராஜ்யம் என்றால் என்னவென்பதைப்பற்றி நிர்ணயமாக நமக்கு வகுத்துக் காட்டியிருக் கிறார்களா? ராமராஜ்யம் என்றும், ஆத்ம சுயராஜ்யம் என்றும் என்னென்னவோ சொல்கிறார்களே தவிர, சுயராஜ்யம் என்றால் அதன்கீழ் சமுதாயம் என்னென்ன தன்மைகளோடு கூடியதாய் இருக்கும் என்று எங்கும் சொல்லவில்லை; எப்பொழுதும் சொல்லவில்லை. ராமனும் கிருஷ்ணனும் கற்பனை புருஷர்களே தவிர, உண்மையான சரித்திர புருஷர்களல்லவென்ற நம்பிக்கை கொண்டவர்கள், ராமராஜ்யத்தைப் பற்றியும், கிருஷ்ணனுடைய பகவத்கீதையைப் பற்றியும், அழகாகப் பேசுகிறார்கள்! நமக்குக் கற்பனை தேவையில்லை; உண்மைதான் தேவை. கற்பனையிலிருந்து நாம் எவ்விதமான பாடத்தையும் கற்றுக்கொள்ள முடியாது அப்படிக் கற்றுக்கொள்கிற பாடமும் கற்பனையாகத்தான் இருக்கும். கற்பனை உலகத்திலே வாழவிரும்புவோர் அந்தக் கற்பனைப் பாடத்தைக் கற்றுக் கொள்ளட்டும். நமக்கு அதைப்பற்றியோ, அவர்களைப் பற்றியோ அக்கரையில்லை. நமக்கு வேண்டுவது, நாற்பது கோடி மக்களுக்கு வேண்டுவது, நிஜ வாழ்வு; உண்மை வாழ்வு. கனவிலே கிடைக்கிற ஒரு கோடி ரூபாய் நமக்கு வேண்டாம். நனவிலே கிடைக்கிற ஒரு குவளைக் கஞ்சிதான் நமக்குத் தேவை. இந்த நனவு வாழ்க்கையை அடைய, நம் தலைவர்கள் சென்ற கால் நூற்றாண்டில் நம்மை எவ்வளவு தூரம் தகுதிப்படுத்தியிருக்கிறார்கள்? நம்மை எவ்வளவு தூரம் அழைத்துக் கொண்டு போயிருக்கிறார்கள்? பண்டித ஜவஹர்லால் நேரு, தமது சுய சரித்திரத்தில் பின் வருமாறு எழுதுகிறார்:- நம் தலைவர்களில் பெரும்பாலோருக்கு, சுய ராஜ்யம் என்பது சுதந்திரத்தைக் காட்டிலும் தாழ்ந்த ஏதோ ஒன்று என்னும் கருத்துத் தான் இருக்கிறது. இந்த விஷயத்தில் காந்தியடிகள் ஆச்சரியப்படத் தக்க விதமான நிச்சயமற்றவராக இருந்தார். இதைப்பற்றித் தெளிவாகச் சிந்திக்கத் தொடங்கினால் அதையும் அவர் ஆதரிக்கவில்லை. பொதுவாக, ஆனால் உறுதியாக, ஏழை மக்களின் சார்பாகவே அவர் எப்பொழுதும் பேசி வந்தார். இஃது எங்களிற் பெரும் பாலோருக்கு ஆறுதலளித்தது. ஆனால், அவர் அதே சமயத்தில், சமுதாயத்தின் மேல்படியிலுள்ளவர்களுக்கும் உறுதி மொழிகள் கொடுத்துவந்தார். சுய அறிவைக்கொண்டு எந்தப் பிரச்னையையும் ஆராய்ச்சி செய்யவேண்டுமென்பதை காந்தியடிகள் வற்புறுத்தாமல், பக்திக்கும் ஒழுக்கத்திற்குமே அவர் சிறப்புக் கொடுத்து வந்தார். இந்திய மகாஜனங்களுக்கு, நிமிர்ந்து நிற்கக்கூடிய சக்தியையும், ஒழுக்கத்தையும் கொடுத்த விஷயத்தில் அவர் மகா ஆச்சரியகர மான வெற்றி பெற்றார். ஆயினும் இந்த நிமிர்ந்து நிற்கிற சக்தியையும், ஒழுக்கத்தையும் பெறாதவர்கள்தான் அதிகம். பலஹீனமான சரீரமும், இளக்கமான பார்வையுமே பக்தியின் புறச்சின்னங்கள் என்று பலர் கருதிக்கொண்டு விட்டார்கள். பாபு பகவான்தா என்ற அறிஞர், இந்திய அரசியல் வாழ்க்கையைப் பற்றிப் பரிசீலனை செய்து எழுதுகிறபோது ஓரிடத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:- மகாத்மா காந்தியோ, பண்டித ஜவஹர்லால் நேருவோ, பாபு சுபாஷ் சந்திர போஸோ, வேறு எந்தக் காங்கிர தலைவரோ (சி.ஆர். தாஸைத் தவிர) சுயராஜ்யம் என்றால் என்ன வென்பதை இதுவரையில் பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லவேயில்லை. 1936 அல்லது 1937-ஆம் வருஷம் வரையில் மகாத்மா காந்தி, சந்தர்ப்பம் வாய்த்தபோது, தம்மைப் பொறுத்தமட்டில் சுயராஜ்யம் என்றால் `` டொமினியன் அந்தது என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார். 23-3-1939இல் ஒரு பத்திரிக்கை நிருபர், காந்தியடிகளிடம் சுயராஜ்யத்தைப் பற்றிக் கேட்டபோது, ``அது விஷய மாக நான் எந்த நிலைமையில் இருக்கிறேன் என்பது எனக்கு விளங்க வில்லை என்று கூறினார்..... இந்தியாவில் எந்த விதமான அரசாங்க முறை இருக்க வேண்டுமென்பதைக் காட்டிலும் இந்தியாவின் சமுதாய அமைப்பு வருங்காலத்தில் எப்படியிருக்க வேண்டுமென்பதே முக்கிய மாகும். இதைப்பற்றி மகாத்மா காந்தி ஒன்றுமே சொல்லவில்லை. இந்தியாவின் தற்போதைய நிலைமை என்ற பெயர் கொடுத்து லியோனார்ட் எம். ஷிப்1 என்ற ஓர் ஆங்கிலேயன் ஒரு நூல் எழுதி யிருக்கிறான். இதற்கு பண்டித ஜவஹர்லால் நேரு முகவுரை அளித்திருக் கிறார். இந்த நூலில் மேற்படி எம். ஷிப், காந்தியடிகளின் மகத்தான பலம், அவருக்கென்று எந்த விதமான லட்சியமும் இல்லாமலிருப்பதுதான் என்று கூறுகிறான். எனவே, சென்ற இருபத்தைந்து வருஷ காலமாக, அதாவது இந்திய தேசீய இயக்கத்திலே புதியதொரு பரிசுத்தமான சக்தி புகுந்துவிட்டதென்று பெருமையோடு நாம் சொல்லிக்கொண்டு வருகிற சென்ற இருபத்தைந்து வருஷ காலமாக, நாம் எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் நமது அரசியல் விவகாரங்களை நடத்தி வருகிறோமென்பது நன்கு புலப்படும். ஆனால், சில சமயங்களில் நாம் சிந்தித்துப் பார்க்கிறபோது, நமக்குக் குறிக்கோள் இல்லாமற் போனாலும் போகிறது; நம்முடைய அரசியல் எண்ணத்திலே யாவது ஒரு தெளிவு இருக்கக்கூடாதா என்று கவலைப் படுகிறோம். நம் தலைவர்கள், புத்தி கூர்மையுள்ள ஆனால் தீர்க்க திருஷ்டி யில்லாத நம் தலைவர்கள், தங்களுடைய பேச்சுத் திறமையினால், யுக்திவாதத்தினால் இல்லாததை உண்டு என்று நமக்கு எடுத்துக் காட்டுகிறார்கள்; கனவை நனவு என்று நம்பும்படியாக நம்மை வற்புறுத்துகிறார்கள். பரிபூரண சுதந்திரம் என்று சொன்னால், யாருடைய உதவியும் கலப்புமின்றி இயங்குவது என்றும், குடியேற்ற நாட்டந்தது என்று சொன்னால், மற்றொரு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருப்பது என்றும், சாதாரண அறிவுள்ள எவரும் அர்த்தப்படுத்திக் கொள்வர். இப்படி அர்த்தப்படுத்திக் கொள்வதுதான் நியாயமுங்கூட. ஆனால் காலஞ்சென்ற மகாமேதாவியான சித்தரஞ்சன தாஸர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத் திற்குட்பட்ட குடியேற்ற நாட்டந்ததைக் காட்டிலும், பரிபூரண சுதந்திரம் என்பது குறைவான, தாழ்வான லட்சியம் என்று பகிரங்கமாகக் கூறினார். இப்படி ஒரு வக்கீல்தான் கூற முடியும்; வக்கீல் மனப் பான்மைக்குத்தான் இப்படிக் கூறுவது சாத்தியமாகும். இப்படி இவர் பேசியதைக் கேட்டுக் கைகொட்டினவர்களும், இதில் ஏதோ சூட்சும அர்த்தம் இருக்கிறதென்று சொன்னவர்களும் நாம்தான்! எது வரையில், ஒரு தேசத்தின் தலைவிதியை எழுதும் புனிதமான கைங்கரியத்தை வக்கீல்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அதுவரையில் அந்தத் தேசம் உருப்படியே ஆகாது; அதுவரையில் அந்தத் தேசத்திற்கு விமோசனமே ஏற்படாது. எட்வர்ட் தாம்ப்ஸன்1 என்ற ஓர் அறிஞர் ஓரிடத்தில் பின் வருமாறு சொல்கிறான்:- வக்கீல்கள் சாதாரணமாகப் பிறரைக் கோபமூட்டும் தன்மையர்கள். சர்வதேச சங்கத்தில், பிரிட்டனுடைய பிரதிநிதி களாகச் சென்றவர்க ளத்தனைபேரும் வக்கீல்களாயிருந்த போழ்து, அவர்களுடைய இந்தத் தன்மை வெளிப்பட்டதல்லவா? எந்த நாட்டிலேனும் புரட்சி ஏற்பட்டு பின்னர், பொதுமக்கள் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொள்வார் களானால், அவர்கள் முதலில் செய்கிற சீர்திருத்தம், எல்லா வக்கீல் களுக்கும் மரண தண்டனை விதித்து விடுகிறார்கள். இந்த ஒரு சீர்திருத் தந்தான், ஜனங்களால் பிற்காலத்தில் விசனிக்கப்படாத சீர்திருத்தம். தவராஜ சிங்கமாகிய சுவாமி விவேகானந்தர், 1896-ஆம் வருஷம், தம் நண்பரொருவருக்கு எழுதிய கடிதமொன்றில் பின் வருமாறு குறிப் பிட்டிருக்கிறார்:- என்னுடைய தகப்பனார் ஒரு வக்கீலாயிருந்த போதிலும், எனது அன்புக்குரியவர்கள் யாரும், வக்கீல்களாகிவிடக்கூடா தென்பது என் விருப்பம். என் குருநாதர், இப்படி வக்கீல்களாவதற்கு விரோதமா யிருந்தார். எந்தக் குடும்பத்தில் அதிகமான வக்கீல்கள் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் துக்கத்தினால் துன்பப்படும் என்பது நிச்சயம். நமது நாட்டில் அதிகமான வக்கீல்களிருக்கிறார்கள். நமது நாட்டுச் சர்வ கலாசாலைகள் இவர்களை வருஷந்தோறும் உற்பத்தி செய்த வண்ணமா யிருக்கின்றன. இந்திய தேசீய வாழ்வின் மீது வக்கீல்கள் ஆதிக்கங் கொண் டிருக்கிற வரை, நமது லட்சியமும் நமக்குச் சரியாகப் புலனாகாது; நமது அரசியல் எண்ணத்திலும் தெளிவு ஏற்படாது. வேண்டுமானால் சட்டசபைக் கூட்டங்களிலும், காங்கிர கமிட்டிக் கூட்டங்களிலும் அற்புதமான தர்க்கவாதம் பேசப்படுவதைக் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஹிம்ஸை யிலே அஹிம்ஸையென்றும், தோல்வியிலே வெற்றி யென்றும், அரசியல் தவறுகளைக் கடவுளின் கட்டளையென்றும் யுக்தி வாதம் செய்யப்படுவதை, நமது அறிவுக்கு விருந்தாக அளித்துக் கொண்டிருக் கலாம். அவ்வளவுதான். சுதந்திரமென்னவோ, நமக்கு எட்டாத ஒரு பொருளாகத்தான் இருந்துகொண்டிருக்கும். இப்படி நம்முடைய லட்சியத்திலே நமக்குச் சரியான பார்வை யில்லாததினாலும், நம்முடைய அரசியல் எண்ணத்தில் தெளிவு ஏற்படாமையினாலும்தான், நமது தாய்த் திருநாட்டில் எல்லா விதமான அரசியல் பரிசோதனைகளும் நடைபெறுகின்றன. அதற்குத் தகுந்தாற்போல், நம் தலைவர்களும் தங்களுடைய ஆத்ம பரிசோதனைக் காக, இந்திய அரசியல் மேடையை, ஒரு பரிசோதனைக் களமாக உபயோகித்துக்கொண்டு வருகிறார்கள். இந்த நிலைமையில் அந்நிய மதத்தினர் பலர் இங்கு வந்து மத பரிசோதனைகள் நடத்துவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? நாமும் எல்லாவற்றிற்குந்தான் தலை யாட்டிக் கொண்டிருக்கிறோம். இல்லாவிட்டால் உலகத்திலேயில்லாத புதுமையான இரட்டையாட்சி முறையை நம் நாட்டிலே கொண்டு வந்து புகுத்தியிருப்பார்களா? இந்தியர்களுக்கு ஆளும் பயிற்சியை யளிப்பதற் காகவே இந்த முறை, கொண்டு புகுத்தப்பட்டதென்று அந்நியர்கள் சொன்னால்,அதற்கு நாம் ஆம் என்று தலையசைத்தோம். நம்முடைய ஆயிரங் கால அரசியல் வாழ்வையெல்லாம் மறந்தோம். அரசியல் பயிற்சிக்கு உட்பட்டோம். பணமில்லாத வெறும் பையை மட்டும் பெற்றுக்கொண்டு, பணக்காரர்களென்று நமக்கு நாமே சந்தோஷப்பட்டுக் கொண்டோம். காங்கிர தலைவர்கள், இந்த இரட்டையாட்சியின்கீழ், சட்டசபைகளுக்குள் பிரவேசித்து அந்நிய ஆதிக்கக் கோட்டையைத் தகர்த்தெறிந்து, சுயராஜ்யக் கோட்டையைப் பிடித்துவிடப்போவதாகச் சொன்னார்கள். விளைந்தது என்ன? அந்த நிருவாக யந்திரத்திற்குள்ளேயே அகப்பட்டுக் கொண்டு விட்டார்கள். உத்தியோகங்களை ஏற்றுக்கொள் வதில்லையென்று சொல்லிக் கொண்டே, அரசாங்கத்தாரால் அவ்வப்பொழுது நியமிக்கப்படும் கமிஷன்களில் அங்கம் வகித்தார்கள். ராணுவத்தை இந்திய மயமாக்குவதற்கான யோசனைகளைச் சொல் வதற்காக அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்ட ஒரு கமிஷனில், - இதற்கு கீன் கமிஷன் என்று பெயர். - பண்டித மோதிலால் நேரு ஓர் அங்கத்தினரானார். ஸ்ரீ வி. ஜே. பட்டேல், இந்திய சட்டசபையின் தலைவராயிருந்து அரசாங்கத்தாரிடமிருந்து சம்பளம் வாங்கினார். ஸ்ரீ எ. பி. தம்பி என்பவர், மத்திய மாகாண அரசாங்கத்தின் நிருவாக சபை அங்கத்தினரானார். சுயராஜ்யக் கட்சியினருடைய வரம் இறங்கிவிட்டது; இந்தக் கட்சியைச் சேர்ந்த பலர், எதிர்க் கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர். இங்ஙனம் சுயராஜ்யக் கட்சியினர், சுயராஜ்யக் கோட்டையைப் பிடிக்கிற முயற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில்தான், நாணய மாற்று விகிதத்தை ஒரு ரூபாய்க்கு ஒரு ஷில்லிங் ஆறு பென் என்று நிரந்தரமாக ஊர்ஜிதம் செய்துவிட்டனர் இந்தியா அரசாங்கத்தார். இதன் பயனாக, ஏழை விவசாயிகள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், ஜனங்களின் சாமான் வாங்கும் சக்தி எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது, இந்தியச் சாமான்களுக்கு கிராக்கி எப்படி மந்தப்பட்டுப் போய்விட்டது. நாணய மாற்று விகிதம் இங்ஙனம் ஊர்ஜிதம் செய்யப்பட்டதானது, 1930-31 ஆம் வருஷத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்திற்கு எந்த விகிதாசாரம் காரணமாயிருந்தது என்பன போன்ற விஷயங்களை யெல்லாம், நம் அரசியல் தலைவர்கள் எவ்வளவு தூரம் உணர்ந்திருக்கிறார்கள்? எத்தனை மேடைப் பிரசங்கிகளுக்கு இந்த விஷயங்கள் தெரியும்? இப்பொழுது இந்தியாவெங்கணும் எந்த விதமான ஆட்சி முறை நடைபெறுகிறதோ இது 1935-ஆம் வருஷத்து இந்தியா அரசாங்கச் சட்டப்படி நடைபெறுகிறது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கம் திரமாக ஊன்றிக்கொண்டிருக்கிறது என்ற மையமான உண்மையை இந்தச் சட்டம் சிறிதுகூட மாற்றிக் கொடுக்கவில்லை என்று ஜான் குந்தர்1 என்ற அறிஞன் கூறுகிறான். இந்த மையமான உண்மையை நம் தலைவர்கள் நன்றாகத் தெரிந்துகொண்டிருக் கிறார்கள். இந்தச் சட்டத்தை அணு அணுவாகப் பிய்த்தெடுத்து, ஒவ்வொன்றும் அழுகியிருக்கிறதென்று எடுத்துக் காட்டும் சாமர்த்தியம் நம் தலைவர்களுக்கு இருக்கிறது. இந்த மாதிரியான விஷயங்களில் நம் தலைவர்களுக்கிருக்கிற அறிவுத் திறமையைக் கண்டு உலகத்திலுள்ள எந்த அரசியல் மேதாவியும் பொறாமைப் படவே வேண்டும். ஆனால் இந்தச் சட்டத்தை வேலை செய்துகாட்ட நம் தலைவர்கள் இசைந்தார்கள்; தங்கள் சக்திகளையெல்லாம் செலவழித் தார்கள். இவர்கள், மாகாணங்களில் நடத்திய இரண்டு வருஷ கால ஆட்சியில் மேலே ஜான் குந்தர் எடுத்துச் சொன்ன மையமான உண்மையை எவ்வளவு தூரம் அசைத்துக்கொடுத்தார் களென்று கேட்கிறோம். அப்படி அசைத்துக் கொடுக்க இவர்களால் முடியவில்லை யாயினும், நம்முடைய சமுதாயத்தின் அடிப்படையையாவது சிறிது அசைத்துக் கொடுத்தார்களா? இல்லவேயில்லை. ஏழைகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று இவர்கள் வாய் சொல்லியது. ஆனால் இவர்களுடைய இருதயம் பணக்காரர்களோடு ஐக்கியப் பட்டிருந்தது. நிலச்சுவான்தார் களுடைய வருமானத்திற்கோ, அரசாங்கத்தினுடைய நிலவரி வருமானத்திற்கோ எவ்வித பாதகமும் ஏற்படாமல், விவசாயி களின் வரிச்சுமையைக் குறைக்கப் பார்த்தார்கள். முதலாளிகளுடைய மனம்நோகாவண்ணம், தொழிலாளர்களுடைய மனத்தைத் திருப்தி செய்ய முயன்றார்கள். கேவலமான பொருளாதார நிலைமை காரணமாக மனம் புழுங்கிக் கிடக்கும் ஏழை மக்களின் ஆத்திரத்தை, ஹரிஜன ஆலயப்பிரவேசம் என்னும் வாய்க்காலில் சாமர்த்தியமாகத் திருப்பி விட்டார்கள். ஏகபோக உரிமைகளுக்குப் பூஜை போட்டுக்கொண்டே, உரிமையிழந்தவர்களையும், உடைமையற்றவர்களையும் புகழ்ந்து பாடினார்கள். சென்னை மாகாணத்தில் ஸ்ரீ பிரகாசத்தினுடைய ஜமீன்தாரி அறிக்கை, அரசாங்க ததவேஜு அலமாரியிலே தூங்கிக் கொண்டிருக்கிறது. ஐக்கிய மாகாணத் திலும், பீஹார் மாகாணத்திலும் காங்கிர நிருவாக காலத்தில், நிலச்சுவான்தார்களுடைய கிளர்ச்சி எவ்வளவு வலுவுடையதா யிருந்ததென்பதையும், இந்தக் கிளர்ச்சிக்கு காங்கிர மந்திரிகள் இணங்கிக் கொடுத்த விதத்தையும் பற்றி நேயர்களுக்கு இப்பொழுது நினைவுபடுத்தத் தேவையில்லையென்று கருதுகிறோம். 1937-ஆம் வருஷம் ஆகடு மாதம் காங்கிர கட்சியினர் மந்திரிப் பதவிகளை ஏற்றுக்கொண்டவுடனேயே, தொழிலாளர்களின் நலன்கள் கவனிக்கப்படுமென்று சொல்லப்பட்டது. அப்படியே காங்கிர காரியக் கமிட்டியானது, தொழிலாளர் பிரச்னையைக் கவனிப்பதற் கென்று ஓர் உப கமிட்டியை நியமித்தது. இந்த உப கமிட்டி 1937-ஆம் வருஷம் அக்ட்டோபர் மாதம் கல்கத்தாவில் கூடியது. இதற்கு எல்லா மாகாண மந்திரிகளும் பார்லிமெண்ட்டரி காரியதரிசிகளும் பிரசன்னமாயிருந்தார்கள். இந்த மகாநாடு சில திட்டங்களை வகுத்தது. இந்தத் திட்டங்களை, காங்கிர கட்சியினர், அதிகார பதவியிலிருந்த காலத்தில் எவ்வளவு தூரம் அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர முடிந்தது? சில சில இடங்களில், உதாரணமாக கான்பூர், பம்பாய் முதலிய இடங்களில், தொழிலாளர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டதையும், இவைகளுக்கு அஹிம்ஸை வியாக்கியானம் செய்யப் பட்டதையும் இவ்வளவு சீக்கிரத்தில் இந்திய மகாஜனங்கள் மறந்து விடுவார்களா? இந்த ஏழை மக்களின் விஷயம் ஒரு புறமிருக்கட்டும், காங்கிர மந்திரிகள் நிர்வாகத்திலிருந்த காலத்தில், தேசீய முறையில் கல்வித் திட்டத்தை மாற்றியமைக்க என்ன முயற்சி எடுத்துக் கொண்டார்கள்? வார்தா திட்டம் வராத திட்டமாகவே போய்விட்டது. மத்திய மாகாணத்து வித்யா மந்திரத் திட்டம் குப்தமாயிருக்கிறது. காங்கிர மந்திரிகளுடைய காலத்தில் சுதேச பாஷைகள் என்னென்ன மாதிரியான அபிவிருத்தி களையடைந்தன? சுதேச பாஷா பண்டிதர்களின் சம்பளமோ அந்ததோ ஏதேனும் உயர்ந்ததா? இப்படி நாம் எவ்வளவோ அடுக்கிக்கொண்டு போகலாம். ஆனால் அஃதொரு சலிப்புத் தரும் வேலை; மன வருத்தத்தை உண்டு பண்ணும் விஷயம். பொதுவாகவே, தேசத்தின் கவனம், அந்நிய ஆதிக்கத்தினிடமிருந்து திருப்பப்பட்டு, சில்லரை விஷயங்களிலே செலுத்தப்பட்டது. எங்குப் பார்த்தாலும் ஊர்வலங்கள்! பூமாலைகள்! ஜே கோஷங்கள்! மேடைப் பிரசங்கங்கள்! இவைகள்தான் கண்ட பலன்கள். இப்பொழுது தேசத்திலே என்ன காண்கிறோம்? மகத்தான உறக்கம். இந்த உறக்கத்திற்கு பூர்வாங்கமாகத்தான், அந்த இரண்டு வருஷ காலமும், - அதாவது காங்கிர கட்சியினர் மந்திரிப் பதவி வகித்துக் கொண்டிருந்த இரண்டு வருஷ காலமும்-அதிகமான சலசலப்பு காணப்பட்டது போலும்! இந்திய தேசீய இயக்கத்தின் சென்ற இருபத்தைந்து வருஷ கால சரித்திரத்தை நாம் ஊன்றிப் பரிசீலனை செய்து பார்க்கிறபோது, ஒரு நோயாளியைப் பரிசோதனை செய்து பார்த்தால் என்ன விதமான மனோவேதனை உண்டாகிறதோ அந்த மாதிரியான மனோ வேதனை உண்டாகிறது. ஆறிடு மேடும் மடுவும் போலாம் செல்வம் என்று சொல் வார்கள். ஆனால் ஆறிடும் மேடும் மடுவும் போல நமது அரசியல்வாழ்வு இருந்து வந்திருக்கிறது. அரசாங்கத்தாரோடு சிறிது காலம் ஒத்துழைப்பதும், சிறிது காலம் ஒத்துழையாமை செய்வதும், ஆக இப்படி மாறிமாறி நடந்து வந்திருக்கிறோமே தவிர, ஒரு நிரந்தரமான லட்சியத் திற்காக நிரந்தரமான முறையை நாம் கையாளவே இல்லை. அந்தர்யாமியா யுள்ள கடவுளின் மௌன வாக்குத்தான், நமது அரசியல் தலையெழுத்தை எழுதிக்கொண்டு வந்திருக்கிறதே தவிர, மனிதயத் தனமோ, வருங்காலத்தை அனுசரித்து நடக்கக்கூடிய தீர்க்க தரிசனமோ நம்மை அரசியல் பாதையில் அழைத்துக்கொண்டு செல்லவேயில்லை. 1919-ஆம் வருஷம் மார்ச்சு மாதம் தொடங்கப் பட்ட சத்தியாக் கிரகத்திலிருந்து, 1940-ஆம் வருஷம் பேச்சுரிமைக் காகத் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரகம் வரையில், நம்முடைய லட்சியத்தை எத்தனையோ வகையாக மாற்றி மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சமயம் ரௌலட் சட்டங்களுக்காக என்றோம்; இன்னொரு சமயம் பஞ்சாப் அநீதி, கிலாபத் அநீதி களுக்காக என்றோம்; மற்றொரு சமயம் சுயராஜ்யத்திற்காக என்றோம்; பிறிதொரு சமயம், உப்பு வரிக்கு விரோதமென்றோம்; இப்பொழுது தனிப்பட்டவர்களுடைய பேச்சுரிமைக்காகப் போராடுவதாகச் சொல்கிறோம். ஆக, எப்பொழுதாவது ஒரு நிர்ணயமான கொள்கையை வகுத்துக்கொண்டு அதன்பொருட்டு நமது தேசீய சக்திகளை ஒருமுகப் படுத்தி, சில வருஷ காலமாவது தொடர்ந்தாற்போல் கொண்டு செலுத்தி யிருக்கிறோமா? சிறிது காலம் கதர் இயக்கத்திலே உற்சாகங் காட்டு கிறோம்; உடனே தீண்டாமை என்கிறோம்; அதற்குப் பிறகு மதுவிலக்கு என்கிறோம்; பின்னாடியே அந்நியத் துணி பகிஷ்காரமென்கிறோம். திடீரென்று இவைகளுக்கெல்லாம் கிருஷ்ணபட்சம் வந்துவிடுகிறது. உடனே சட்டசபைப் பிரவேசம், தல தாபனங்களில் தாபனங்களைக் கைப்பற்றுதல் முதலிய விஷயங்களில் தீவிரமாக ஈடுபடத் துணி கிறோம். ஐயோ, இவையெல்லாம் என்ன வேடிக்கை? அரசியல் என்பது கண்ணாமூச்சி விளையாட்டா யிருக்கலாம். ஆனால் சுதந்திரப் பாதை அப்படியில்லையே. சுதந்திரமாயுள்ளவர்கள் அனுஷ்டிக்கிற அரசியல் முறைகள் வேறே; சுதந்திரத்தையடைய முற்பட்டிருக்கிறவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய அரசியல்முறைகள் வேறே. இந்த இரண்டுக்குமுள்ள வித்தியாசங்களை நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். சுதந்திர நாடுகளின் அரசியல் எண்ணங் களையும் உச்சரிப்புகளையும் நாம் இரவல் வாங்கிக்கொண்டு, அந்த வரத்திலேயே நமது அரசியல் கீதத்தைப் பாடத் தொடங்கினோமானால், நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கும் பின்னல்கள் இன்னும் நன்றாக முறுக்கிக் கொள்ளுமே தவிர, விலகிக்கொடுக்கமாட்டா. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நமது சென்ற ஒரு தலைமுறையின் அரசியல் வாழ்வு இந்த இரவல் சங்கீதமாகவே இருக்கிறது. பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டில் என்ன பேசுகிறார்கள், ராஜப் பிரதிநிதி என்ன அறிக்கை வெளியிடுகிறார், அமெரிக்காவின் அநுதாபம் எப்படியிருக்கிறது, மற்ற நாடுகளுக்கு நாம் எவ்வாறு உதவி செய்வது என்பனபோன்ற விஷயங்களில் அதிகமான கவனஞ் செலுத்துகிற மாதிரியாகவே மகாநாடுகளில் நிறைவேற்றப் படுகிற சொற்பொழிவுகளும், பத்திரிகைகளில் வெளிவரும் கட்டுரை களும் இருக்கின்றன. இந்த ஒரு தலைமுறையில் நாம் நடத்தி வந்திருக்கிற அரசியல் கிளர்ச்சிகளையெல்லாம் தொகுத்து வைத்துப் பார்ப்போம். இந்தத் தொகுப்பினால், ஆளும் சக்தி எவ்வளவு பலஹீனமடைந்திருக்கிறது? அதன் செல்வாக்கு எவ்வளவு குறைந்திருக்கிறது? உலக அரசியல் மேடையில் அதன் அந்தது எவ்வளவு தாழ்ந்திருக்கிறது? அதன் வருமானம் எவ்வளவு சுருங்கியிருக்கிறது? அல்லது ஆளப்படுவோரின் வருமானம் எவ்வளவு அதிகப்பட்டிருக்கிறது? நம்முடைய தேசீய அந்தது எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது? அல்லது நமது சமுதாயத்தின் புரைப்புண்களில் ஏதேனும் ஆறியிருக் கின்றனவா? ஒரு சிறிய உதாரணத்தை இங்கு எடுத்துக்காட்ட விரும்பு கிறோம். 1930ஆம் வருஷம் உப்புச் சத்தியாக்கிரகம் தொடங்கப் பட்டது நேயர்களுக்கு நினைவிருக்கும். இதன் காரணமாக ஆயிரக் கணக்கான பேர் சிறை சென்றனர்; தடியடிபட்டனர். எங்குப் பார்த்தாலும் ஒரே உற்சாக மாயிருந்தது. ஆனால் இந்தக் காலத்தில் அரசாங்கத்தின் வருமானம் என்ன தெரியுமா? சாதாரண காலங் களில் உப்பு வரியின் மூலமாகக் கிடைக்கிற வருமானத்தைக் காட்டிலும் இந்தக் காலத்தில் அதிகமான வரி கிடைத்தது என்பதைக் கீழ்க்கண்ட புள்ளி விவரங்களினால் தெரிந்து கொள்ளலாம். உப்புவரியின் மூலமாக இந்தியா அரசாங்கத்திற்குக் கிடைத்த வருமானம் எந்த வருஷம்? v›tsî %ghŒ?எந்த வருஷம்? எவ்வளவு ரூபாய்? 1931-32 85,792,000 1934-35 80,001,000 1932-33 100,736,000 1935-36 84,280,000 1933-34 88,565,000 இனி நிகழ்காலத்திற்கு வருவோம். சென்ற சுமார் ஒன்றரை வருஷ காலமாக, தேசத்தில் சத்தியாக்கிரகம் நடைபெறுவதாகச் சொல்லப் படுகிறது. ஆம்; நடைபெறுவதாகப் பத்திரிகைகளில் படிக்கிறோம். சமுதாயத்தின் மேல்படியிலுள்ள சிலர், பூமாலை, ஜேகோஷம், விருந்து வகையராக்கள் முதலிய சம்பிரதாய சம்பிரமங்களுடன், அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்து அவர்களையும் கூடவே இருத்தி வைத்துக் கொண்டு, ஓரிரண்டு வாக்கியங்களைத் தொண்டை நோகாமல் சொல்லிவிட்டு, கூப்பிய கையராய், சிரித்த முகத்தினராய், கம்பீர கோலத்துடன் சிறைபுகும் காட்சி ஆங்காங்கு நடைபெறுகிறது. இங்கே முக்கியமான ஒரு விஷயத்தை நேயர்களுக்கு நினைவு படுத்த ஆசைப்படுகிறோம். அதாவது, இந்தச் சத்தியாக்கிரகம், அரசாங்கத்தை எவ்விதமான நிர்ப்பந்தத்திற்கும் உட்படுத்தாமல் நடைபெறவேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. ஆம்; கிறிம விடுமுறை நாட்களில் சத்தியாக்கிரகம் நடைபெற வில்லையல்லவா? ஏன்? அதிகாரிகள் ஓய்வு எடுத்துக் கொண்டிருக் கிறபோது அவர்களைத் தொந்தரவு படுத்தலாமா? சரி; இஃதொரு புறமிருக்கட்டும். மேலே சொன்னமாதிரி சத்தியாகிரகிகள் சிறை செல்லுகிற காட்சியைப் பார்த்து எளிய கிராமவாசி, ஏழை விவசாயி, என்னுடைய வரிச்சுமை ஏதேனும் குறையுமா வென்று கேட்கிறான். நகரத் தொழிலாளி என் கூலி விகிதம் ஏதேனும் அதிகப்படுமா வென்று வினவுகிறான். பிறக்கிற குழந்தையெல்லாம் மரண தேவதைக்கு உடனுக்குடன் இரையாகக் கொடுத்துவிட்டோம்; எஞ்சியிருக்கும் எங்களுடைய ஓரிரண்டு குழந்தைகளுக்குப் பால் கிடைக்குமா, கஞ்சி வார்ப்பீர்களா வென்று தாய்மார்கள் ஏக்கத்துடன் கேட்கிறார்கள். இதே சமயத்தில், அந்நிய நாட்டுப் பொருள்களில் வியாபாரம் செய்கிற வியாபாரிகள் தங்கள் பொக்கிஷ அறையை விரிவுபடுத்திக் கொண்டு வரு கிறார்கள். மில் முதலாளிகள், தங்கள் பொருள்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுவிட்டதைக் கண்டு இரவு பகலாக இயந்திரங்களை வேகமாக ஓட்டச் செய்கிறார்கள். பிதிரார்ஜித சொத்தையெல்லாம் ஆங்கிலப் படிப்புக்காக அழுதுவிட்டு, அதன் பயனாகத் தங்கள் பெயருக்குப் பின்னால், ஓரிரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக் கொண்டு அது காரணமாகத் தங்களுக்கு ஓர் அந்தது ஏற்பட்டுவிட்டதென்ற போலித்தனமான நினைவோடு சட்டையிலே அழுக்குப் படாமல், தேகத்திலிருந்து ஒரு பொட்டு வியர்வை கொட்டாமல், குளிர்ந்த நிழலில் இருந்து வேலை பார்க்கக்கூடிய உத்தியோகங்கள் கிடைக்குமாவென்று ஏங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள், தங்களுக்கு ஏதோ வயிற்றைக் கழுவிக் கொண்டு போகிற மாதிரியாகவாவது அங்கும் இங்கும் உத்தியோகம் கிடைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு சந்தோஷப் படுகிறார்கள். இப்படி இவர்களுக்குக் கிடைக்கக்கூடிய உத்தியோகம், அந்நிய ஆதிக்கத்தை இன்னும் அதிகமாக ஊர்ஜிதம் செய்வதற்குத் துணை செய்யுமானால், அஃதென்ன அவ்வளவு பிரமாதமான விஷயம்! நாம் நடத்துவதுதான் அறப்போராயிற்றே! சத்தியாக்கிரக மாயிற்றே! சத்தியத்திற்கு வெற்றி கிடைப்பதென்னவோ நிச்சயம். அஃது இன்றைக்குக் கிடைத்தாலென்ன? ஏழேழு ஜென்மங்களுக்குப் பிறகு கிடைத்தாலென்ன? நாம்தான் நமக்காகப் போராடவில்லையே! வருங்கால சந்ததிக்குத்தானே போராடுகிறோம்! ஆகாய விமானத்திலிருந்து குண்டு விழுந்தால் அதனை எப்படி அஹிம்ஸா முறையில் எதிர்த்து நிற்பது என்று கேட்டால் அஹிம்ஸையாகச் செத்துப்போ என்றுதானே நமக்கு உபதேசிக்கப் படுகிறது! இப்படிக் கோலாகலத்துடன் சிறை செல்லும் சத்தியாக்கிரகிகள், சமுதாயத்திலே தாங்கள் எந்த அந்ததை வகித்துக் கொண்டிருந் தார்களோ அந்த அந்ததுக்குத் தகுந்தபடி ஏ வகுப்பென்றும், பி வகுப்பென்றும், சி வகுப்பென்றும் பிரிக்கப்பட்டு வைக்கப்படு கிறார்கள். வகுப்புக்குத் தகுந்தபடி சலுகைகளில் வித்தியாசங்கள் காட்டப்படுகின்றன. அரசியல் காரணங்களுக்காகச் சிறை செல்வோரை அந்தது வாரியாகப் பிரிப்பதென்கிற இந்த முறை மகா கேவல மானது. தியாகம், தேசாபிமானம், கடவுள் பக்தி, தூய வாழ்வு, சத்தியம் முதலியனவெல்லாம் ஜாதி வரம்புகளையும் அந்தது வரம்புகளையும் கடந்து நிற்பன. சாதாரண விவகாரங்களில்தான் மனிதன் வேற்றுமை களைப் பாராட்டுகிறானென்று சொன்னால் உயர்ந்த லட்சியங்களை நாடிச் செல்லுகிற விஷயங்களில்கூட வேற்றுமைகளையும் சமுதாய அந்ததுகளையும் பாராட்ட வேண்டுமா? நாம் நடத்துவது தரும யுத்த மென்றும், நமக்கெல்லாம் சிறைச்சாலைதான் தவச்சாலையென்றும் சொல்லிக்கொண்டு, அதே சமயத்தில் தவச்சாலையாகிய அந்தச் சிறைச்சாலையில் அந்தது வித்தியாசங்களை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கலாமா? சிறையிலிருந்து வெளி வருகிற சத்தியாக்கிரகிகளுக்கு நடக்கிற ஊர்வலங்கள், விருந்துகள், பரபரப் புகழுரைகள், இவைகளைப் பற்றிப் பத்திரிகைகளில் வெளியாகும் கட்டுரைகள், இவைகளை யெல்லாம் பார்த்து, அம்மம்ம! நம்மால் சகிக்கவே முடியவில்லை. வாழ்க்கையிலே நகைச்சுவை வேண்டியதுதான். ஆனால் நம்மைப் பார்த்துப் பிறர் பரிகசிக்கும்படியாக நாம் நடந்துகொள்ளக் கூடாதல்லவா? இவையெல்லாங்கூட நமக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை. இப்பொழுது நடைபெறுகிற சத்தியாக்கிரக இயக்கம் சம்பந்தமாக மகாத்மா காந்தி, 1941ஆம் வருஷம் அக்டோபர் மாதம் முப்பதாந் தேதியிட்டு வெளி யிட்டிருக்கிற அறிக்கையைக் கண்டு நாம் உண்மையில் திகைப்படைந்து போனோம். தற்போது நடை பெறுகிற சத்தியாக் கிரகத்தின் போக்கு, தமக்குப் பரமதிருப்தியை அளிப்பதாக அவர் கூறுகிறார். தேசத்திலே உற்சாகமில்லையென்று சொன்னால், வெறும் நொப்பும் நுரையும் நீராகாது என்கிறார். உண்மையான சத்தியாக்கிரகிகள் இரண்டுபேர் இருந்தாலும் போதுமென்கிறார். ஆக, அரசாங்கத்திற்கு எந்த விதமான நிர்ப்பந்தமும் உண்டுபண்ணாமல் இந்தச் சத்தியாக்கிரக இயக்கம் நடைபெற வேண்டுமென்பதும், பேச்சுரிமையைப் பெறுவதுதான் இந்தச் சத்தியாக்கிரகத்தின் நோக்கமென்பதும் இந்த அறிக்கையின் மூலம் காந்தியடிகள் தெளிவாகச் சொல்லிவிட்டார். தவிர, அரசாங்கத்தார் பேச்சுரிமையை வழங்கிவிட்டால் சத்தியாக்கிரகத்தை நிறுத்தி விடுவதாகவும் வேறோரிடத்தில் கூறியிருக்கிறார். எனவே இந்தச் சத்தியாக்கிரக இயக்கம் சுதந்திரம் பெறுவதற்காக நடைபெறவில்லையென்பது வெள்ளிடை மலை. 1920-ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் கூடிய விசேஷ காங்கிரஸில், சுயராஜ்யத்தைப் பெறுவதற்காக அஹிம்ஸா முறையில், படிப் படியான ஒத்துழையா இயக்கத்தை நடத்துவது என்று தீர்மானிக் கப்பட்டது. அப்படியே ஒத்துழையா இயக்கம் நடைபெற்றது. அதாவது இருபது வருஷங்களுக்கு முன்னே, சுயராஜ்யம் என்ற பொதுவான ஒரு லட்சியத்திற்கு, உயர்ந்ததொரு லட்சியத்திற்கு, ஒத்துழையாமைப் போரை நடத்தினோம். இருபது வருஷங் கழித்து, இப்பொழுது, பேச்சுரிமை யென்னும் ஒருகிளை லட்சியத்திற்கு, மொத்தத்தில் ஒரு சிறு அமிசமா யுள்ள லட்சியத்திற்குச் சத்தியாக்கிரகப்போர் நடத்துகிறோம். இங்கே ஒரு விஷயத்தை வாசகர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அதாவது ஒத்துழையாமை வேறே. சத்தியாக்கிரகம் வேறேயல்ல. 1924-ஆம் வருஷத்து பெல்காம் காங்கிரஸிற்குத் தலைமை வகித்த மகாத்மா காந்தி, தமது தலைமையுரையின் கடைசியில் பின் வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:- ஒத்துழையாமை, சட்ட மறுப்பு என்ற இரண்டும், சத்தியாக்கிரகம் என்ற ஒரு விருட்சத்தின் இரண்டு கிளைகள். எனவே இருபது வருஷங்களுக்கு முன்னர், கிளை முறையைப் பின்பற்றி முழுலட்சியத்தையடைய முயன்றோம். இப்பொழுது முழு முறையைப் பின்பற்றிக் கிளை லட்சியத்தையடைய முயன்றுகொண்டிருக்கிறோம். இருபது வருஷங்களில் நாம் எவ்வளவு தூரம் முற்போக்கடைந் திருக்கிறோம் பார்த்தீர்களா? அப்படி நாம் உண்மையிலேயே முற்போக்கடைந்திருந்தோ மானால், அதாவது பாரத ஜாதியின் அரசியல் அந்தது ஓர் அங்குலமேனும் உயர்ந்திருக்குமானால், வெளி நாடுகளில் வசிக்கிற இந்தியர்களுக்கு, இப்பொழுது ஏற்பட்டு வருகிற அவமானங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்க மாட்டா. காந்தியடிகள் நடத்திய சாத்வீக எதிர்ப்புப் போரினால், தென்னாப்ரிக்காவிலுள்ள இந்தியர்களின் அந்தது உயர்ந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது ஆனால் இந்தியர்கள் அங்கே இப்பொழுதும் ஒதுக்கித்தான் வைக்கப்படு கிறார்கள். அவர்களுக்கென்று இப்பொழுதும் பிரத்தியேக சட்டங்கள் செய்யப்பட்டுத்தான் வருகின்றன. இலங்கை யிலும் பர்மாவிலும் இந்தியர்களின் பிரவேசத்திற்கும் சலுகைகளுக்கும் தடைகள் விதிக்கப்படுகின்றன. இப்பொழுது மலேயாவில்கூட, ஜாவாவி லிருந்து ஜாவானியத் தொழிலாளிகளை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிகிறோம். ஆக எங்குச் சென்றாலும் இந்தியன் அவமதிக்கப்படுகிறான்; எள்ளி நகையாடப் படுகிறான். நான் ஓர் இந்தியன் என்று பெருமையோடு, உரிமை யோடு அவன் தலை நிமிர்ந்து சொல்லிக் கொள்ளக்கூடிய காலம் இன்னும் அவனுக்கு வரவில்லை; அந்தத் தைரியமும் அவனுக்கு இல்லை. கோழையாக, புழுப்போல் அவன் நெளிந்து நெளிந்து கொடுத்துக் கொண்டிருக்கிறான். அப்படி அவன் நெளித்துக் கொடுத்துக் கொண்டிருப்பதுதான் அசைவு என்றும், போராட்ட மென்றும் அவனுக்கு உபதேசிக்கப்படுகிறது. என்ன விந்தை! முப்பத்து முக்கோடி தேவர்கள் வசித்துக்கொண்டிருந்த பெருமை யையுடையது பாரதநாடு என்று சொல்வார்கள். தேவர்கள் என்றால் யார்? மனிதர்கள். அதாவது பாரத நாட்டில், தெய்வ சக்தி நிரம்பிய, அறிவோடும் ஆண்மையோடும் கூடிய முப்பத்து மூன்று கோடி மனிதர்கள் வசித்துக்கொண்டிருந்தார்கள் என்பது அர்த்தம். இப்பொழுது? நாற்பது கோடி பேர் வசிக்கிறார்கள். எல்லோரையும் தெய்வ சக்தி நிரம்பியவர் களென்றும் அறிவோடும் ஆண்மை யோடும் கூடியவர்களென்றும் சொல்ல முடியுமா? ஒரு கோடி பேரைத்தான் சொல்ல முடியுமா? வேண்டாம், ஒரு லட்சம் பேரைத்தான் சொல்ல முடியுமா? அல்லது ஆயிரம் பேராவது இருப்பார்களா? இதற்குப் பதில், சென்ற ஒரு தலைமுறையாக நடத்தப்பட்டு வந்திருக்கிற அரசியல் போராட்டமானது, சரணாகதியைச் சாதிர ரீதியாகப் பண்படுத்திவிட்டிருக்கிற அறிஞர்களை நமக்குச் சிருஷ்டி செய்து கொடுத்திருக்கிறது; நம்முடைய அரசியல் யுத்த மைதானத்திற்கு, சமரஸ வேலி போட்டு வந்திருக்கிறது. ஹிமாலய பர்வதத்தைக் கொண்டு மட்டும் நாம் பெருமைப் பட்டுக் கொண்டிருந்தால் போதாது; ஹிமாலயத் தவறுகளைக் கண்டும் நாம் பெருமைப்பட வேண்டு மென்ற பாடத்தை நமக்குக் கற்பித்திருக்கிறது; அனுபவ உண்மை யென்னும் நிலத்தில் கால் தோயாமல், தெளிவில்லாத ஞானாகாசத்தில் பறந்து சென்று நம்மை இழந்துவிட்டிருக்கிற ஒரு தன்மையை அளித்திருக் கிறது. இந்தச் சந்தர்ப்பத்திலே காந்தியடிகளுக்கு நமது வணக்கத்தைச் செலுத்துகிறோம். ஏன்? அவருடைய உறுதிக்காக. பிடிவாதம் என்ற சாதாரண பாஷையில் அந்த உறுதியை நாம் அழைக்க விரும்ப வில்லை. அவர், தமது கொள்கையிலே காட்டுகிற உறுதியை, பாரத ஜாதி, தனது லட்சியத்தை யடைவதற்காகப் பின்பற்றுமானால், அது வெகு சீக்கிரத்தில் முன்னேறிவிடக் கூடும். உண்மையான சத்தியாக்கிரகிகள் இரண்டு பேர் இருந்தாலும் நாம் சுயராஜ்யம் பெற்றுவிடலாமென்று அவர் பதினைந்து வருஷங் களுக்கு முந்தியும் கூறினார்; இப்பொழுதும் அப்படித்தான் சொல்கிறார். கதர் நமக்குக் காமதேனு என்றும், சத்தியமே பெரிதென்றும், கடவுள் சக்தியினால் ஆட்டுவிக்கப்படும் கருவிகள் நாமென்றும், தோல்வியிலே வெற்றியைக் காண்பதுதான் சத்தியாக் கிரகியின் லட்சணமென்றும் எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே அவர் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார். சர்வதேசங்களுக்கிடையில் ஏற்படுகிற மனமாற்சரியங்களைச் சமாதான முறையிலேயே தீர்த்து வைக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடன், சென்ற மகாயுத்தத் திற்குப் பிறகு தாபிக்கப்பட்ட சர்வதேச சங்கமானது, இப்பொழுது நடை பெறுகிற கோர யுத்தத்தைத் தடுக்க முடியாமல் எங்கேயோ பதுங்கிக் கிடப்பதை நாம் கண்கூடாகக் கண்டுகொண்டிருந்தும், உலகத்திற்கு உய்யும் மார்க்கம் அஹிம்ஸையில்தான் இருக்கிறதென்று அவர் பரிபூரண மாக, உறுதியாக நம்புகிறார். அவருடைய உத்தம குணத்தை, சீல சுபாவத்தை, கடவுள் நம்பிக்கையை, வைரம் போன்ற உறுதியை, பாரத ஜாதி என்றுமே மறக்க முடியாது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக, அவருடைய உத்தம குணம், சீலசுபாவம், கடவுள் நம்பிக்கை, வைரம் போன்ற உறுதி ஆகிய இவை யாவும் சேர்ந்து பாரத ஜாதிக்கு அந்த விடுதலை வழியைக் காட்டவில்லை. அந்த வழியில் அடியெடுத்து வைக்கும் ஆற்றலையும் அதற்கு அளிக்கவி ல்லை. இந்த உண்மையை நாம் உணராத வரையில், தெரிந்து கொள்ளாத வரையில் பிற்போக்கில்தான் சென்றுகொண்டிருப்போம். மற்றும், நாம் நின்றாலும், படுத்தாலும், குப்புறக் கவிழ்ந்தாலும் நாமே சுயமாக, சுயேச்சையாக, நம் இஷ்டப்படி, நாம் இஷ்டப் பட்டபோது நிற்கவேண்டும்; படுக்கவேண்டும்; குப்புறக் கவிழ வேண்டும். இவைகளுக்கெல்லாம் நாம் எது வரையில் அயலாருடைய துணையை நாடிக்கொண்டிருக்கிறோமோ அதுவரையில் நாம் முன்னேற்றத்தை அடைந்தவர்களாக மாட்டோம். எச். டபிள்யு. நெவின்ஸன்1 என்ற ஓர் ஆங்கில அறிஞன் கூறுகிறான்:- அயலார், நமக்கு, புத்திசாலித் தனமாக வழிகாட்டிக் கொண்டு செல்ல, அதைப் பின்பற்றி நாம் நாசூக்காக நடந்து செல்வதைக் காட்டிலும், நாமே நம்முடைய சுய சக்தியைக் கொண்டு, சுய பலத்தைக் கொண்டு முன்னுக்கு வர, கண்மூடித் தனமாகவோ, வீணாகவோ போராடுவதுதான் சிலாக்கியமானது. இந்த வாசகம், ஒரு மனிதனுக்கு எப்படிப் பொருந்துகிறதோ அப்படியே ஒரு ஜாதிக்கும் பொருந்தும். அயலார் நமக்குச் சுதந்திரம் கொடுக்கவில்லையேயென்று எதுவரையில் நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோமோ, அயலாருடைய மனத்தைப் பண்படுத்துகிற முயற்சியிலே நாம் எதுவரையில் ஈடுபட்டிருக்கிறோமோ, ஆளப்படுவோருடைய பலஹீனந்தான் ஆள்வோருடைய பலம் என்பதை நாம் எது வரையில் உணராமலிருக் கிறோமோ அதுவரையில், நாம், அதாவது பாரத ஜாதி, அமைதியிலே இன்பம் நுகர்ந்துகொண்டிருக்க வேண்டியது தான். ஆனால் அமைதியே சுதந்திரமாகாது. 3. இன்றைய மனிதன் இன்றைய மனிதன் ஒரு நாகரிகப் பிராணி. அவன் இன்னும் நாகரிக புருஷனாகவில்லை. இந்த முடிவுக்குத்தான் நாம் இப்பொழுது வந்திருக்கிறோம். இப்படி வருவதற்கு முன்னர், நாம் எத்தனையோ தடவை, கர்மவீரனான கண்ணபிரான் அருளிய பகவத் கீதையையும், புத்தர்பிரானுடைய அறமொழிகளையும், ஏசு நாதரின் அன்பு உபதேசங் களையும் ஊன்றி ஊன்றிப் படித்தோம். எத்தனையோ பிரச்னைகளை நமது மனத்துக்குள் கொண்டு வந்து புகுத்தி, அவைகளை அலசி அலசி ஆராய்ந்தோம். ஆயினும் மேலே சொன்ன முடிவுக்கே வரவேண்டி யிருக்கிறது. இது, துரதிர்ஷ்டமான முடிவாயிருக்கலாம்; ஆயினும் இது கண்கண்ட உண்மை. ஒரு ஜீவ ஜந்துவுக்கு ஆடை உடுத்தி, அங்கி அணிவித்து, கையிலே ஒரு புதகத்தையும் கொடுத்துவிட்டால், அஃது என்ன காட்சியளிக்குமோ, அந்தக் காட்சியைத்தான் இன்றைய மனிதன் அளித்துக்கொண்டிருக் கிறான். அவனுக்கு அறிவு இருக்கிறது; இருதயமில்லை. ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறான்; ஒழுக்கத்தைக் கைவிட்டுவிட்டான். ஓரிரண்டு பேரைக்கூட அன்பினால் அணைக்க அவனுக்குத் தெரியவில்லை; ஆனால் ஆயிரக்கணக்கான பேரை ஆகாய விமானத்திலிருந்து குண்டு எறிந்து கொல்வதற்கு அவன் சக்தி பெற்றிருக்கிறான், பரம கருணாநிதியான கடவுளை, எவ்வளவுக் கெவ்வளவு இறுக்கமாகக் கண்மூடிக் கும்பிடுகிறானோ அவ்வளவுக் கவ்வளவு, கடவுள் தன்மை யினின்று எட்டிப் போய்க் கொண்டிருக்கிறான். உடலை மெருகிட்டுக் காப்பாற்ற அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது; ஆனால், உயிரை வளர்க்க அவனுக்குத் தெரியவில்லை. சந்திர மண்டலத்தில் ஏதேனும் தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றனவா வென்று அவன் தாவித் தாவிக் குதிக்கிறான்; ஆனால் பூமியிலே விளைகிற பொருள்களை, தனது சுயநலத்திற்காக, கடலிலே அள்ளிக் கொட்டுகிறான். செடி கொடி களுக்குக்கூட உயிருண்டு, உணர்ச்சியுண்டு என்று கண்டு பிடித்திருக்கிற அவன், தன் சகோதர மனிதர்களை, உயிரும் உணர்ச்சியுமற்ற ஆடற் கருவிகள்போல் ஆட்டி வைக்கிறான். என்ன வேடிக்கை! தெய்வ ஸம்பத்து, அசுர ஸம்பத்து என்ற இருவகை ஸம்பத்துகள் உண்டு. அதாவது, அஞ்சாமை, உள்ளத்தூய்மை, உறுதி, ஈகை, தன்னடக்கம், நேர்மை, கொல்லாமை, வாய்மை, துறவு, ஆசையின்மை, சலியாமை, துரோகஞ் செய்யாமை முதலியன வெல்லாம் தெய்வ ஸம்பத்தைச் சேர்ந்தவையென்றும், டம்பம், கர்வம், கோபம், கடுமையாக நடந்துகொள்ளுதல் முதலியன வெல்லாம் அசுர ஸம்பத்தைச் சேர்ந்தவையென்றும் சொல்வார்கள். இன்றைய மனிதன் எந்தவிதமான ஸம்பத்துடையவனாயிருக்கிறான்? தெய்வ ஸம்பத்தை யுடையவர் களுக்கு விடுதலை கிடைக்குமென்றும், அசுர ஸம்பத்துடையவர்களுக்கு அதிகமான பந்தங்களுண்டாகு மென்றும் கீதை கூறுகிறது. அப்படி யானால், இந்த இருபதாவது நூற்றாண்டு மனிதன் தேவ புருஷனாகக் காட்சி யளிக்கிறானா, அல்லது அசரனாகத் தரிசனங் கொடுத்துக் கொண்டிருக்கிறானாவென்பதை நேயர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். இன்று மேனாட்டிலும் கீழ்நாட்டிலும் நடைபெறுகிற சம்பவங்களைக் கூர்ந்து கவனித்து வருவோர்க்கு, இந்த உண்மை நன்கு புலனாகும். சி.இ.எம். ஜோட் 1 என்ற ஒரு மேனாட்டு அறிஞன், சுதந்திரம் இன்று எந்நிலையிலுள்ளது என்பதைப் பற்றி எழுதியுள்ள ஒரு நூலில், மனிதன் இப்பொழுது எந்த நிலைக்கு வந்துவிட்டா னென்பதைப் பற்றி வேடிக்கை யாகச் சில வார்த்தைகள் கூறுகிறான். இப்பொழுது சாதாரணமாக நாம் ஒருவர்க்கொருவர் பேசுகிற போது, தெருவிலே போகிற மனிதன் என்று சொல்கிறோமல்லவா அப்படி இனிச் சொல்லக்கூடாதாம்; பூமிக்குள் குழி வெட்டி அதில் பதுங்கிக்கொண்டிருக்கும் மனிதன் என்று சொல்ல வேண்டுமாம்! அதாவது, மனிதன் நிர்ப்பயமாக வீதிகளில் நடந்து செல்ல முடியாத நிலைமைக்கு வந்துவிட்டானென்பதையும், எந்த நிமிஷத்தில் ஆகாய விமான வருகையின் அபாய அறிவிப்புச் சங்கு ஊதப்படுமோ என்ற பயத்துடனேயே அவன் சதா வாழவேண்டி யிருக்கிறதென்பதையும் சுட்டிக் காட்டுவதற்காகவே இப்படிச் சொல்கிறான். இதே பிரகாரம் அன்றாடப் பத்திரிகைகளைப் படிக்கிறபோது வாக்கியங்களுக் கிடையிலுள்ளதை வாசித்துப் பார் என்று இதுவரையில் சொல்லிக் கொண்டு வந்ததைப்போல் இனியும் சொல்லக் கூடாதாம்! பொய் களுக்கிடையிலுள்ளதை வாசித்துப்பார் என்றுதான் சொல்ல வேண்டுமாம்! அதாவது, பொய்ப் பிரசாரம் உலகத்திலே எவ்வளவு மலிந்து விட்டதென்பதையும், உண்மையைக் கண்டு பிடிப்பது மிகவும் கடினமாகி விட்டதென்பதையும் எடுத்துக் காட்டுவதற்காகவே இங்ஙனம் கூறுகிறான். இதனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதென்னவென்றால், நாகரிகம் என்ற ஊன்றுகோலைத் துணை பிடித்துக்கொண்டு. மனிதன், மேல் நிலையாகிய தெய்வ நிலைக்குப் போகாமல், கீழ் நிலையாகிய மிருக நிலைக்குத்தான் வந்து கொண்டிருக்கிறான் என்பதேயாம். சுமார் ஐயாயிரம் வருஷங்களுக்கு முன்னர் ஆயர் பாடியில் அவதரித்த கண்ணபிரான், போர்க்களத்தில் கலங்கி நின்ற அருச்சுன னுக்குப் பின் வருமாறு உபதேசித்தருளினான்:- எவனை உலகத்தார் வெறுப்பதில்லையோ, உல கத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, களி யாலும், அச்சத்தாலும், சினத்தாலும் விளை யும் கொதிப்புக்களினின்றும் எவன் விடுபட் டானோ அவனே எனக்கினியவன். அத்: 13-சுலோ: 15 நன்றாகச் செய்யப்படும் பரதர்மத்தைக் காட்டி லும், குணமற்றதெனினும் வதர்மமே சிறந் தது. வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றே யாம். பரதர்மம் பயத்துக்கிடமானது. அத்: 3-சுலோ: 35 இன்பம், துன்பம்; இழவு, பேறு; வெற்றி, தோல்வி; இவற்றை நிகரெனக் கொண்டு நீ போர்க்கொருப்படுக. இவ்வண்ணம் புரிந் தால் பாவமெய்தாய். அத்: 2-சுலோ: 38 இந்த லட்சணங்களை வைத்துக்கொண்டு இன்றைய பாரத ஜாதியின்மீது நமது பார்வையைச் சிறிது செலுத்துவோமானால் நாம் என்ன காண்கிறோம்? உலகத்தினரால் உதாசீனத்துடன் நடத்தப்படுகிற ஒரு ஜனத் தொகுதியை, வதர்மத்தைக் கைவிட்டுவிட்டுப் பரதர்மத்திலே ஈடுபட்டிருக்கிற ஒரு மனிதக் கும்பலை, எவ்வித திட ஸங்கல்பமு மில்லாமல், யாருக்கோ எடுக்கிற இழவு மாதிரி நடைபெறும் சில ஆரவாரக்கிளர்ச்சிகளையே சுதந்திரப் போராட்டமென்று கருதி அதிலே மயங்கிப்போய், சிந்தனா சக்தியைக்கூட இழந்துவிட்டிருக்கிற மக்கள் கூட்டத்தைப் பார்க்கிறோம். பாரத ஜாதி என்பதொன்றுண்டு, அதற்கென்று ஓர் அந்தது உண்டு, அதன் சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு மதிப்பு உண்டு என்றெல்லாம் இப்பொழுது நாம் சொல்ல முடியுமா? மஹா அலெக்ஸாந்தர், பாரத நாட்டின்மீது படையெடுத்து வந்தானென்று சொன்னால், அது நமது நாட்டின் வீரம், அறிவு, செல்வம் ஆகிய மூன்றனையும் சுவைத்துப் பார்ப்பதற்குத்தான். ஆனால் இன்றைய பாரத நாட்டிலே இந்த மூன்றுக்குப் பதிலாகக் கோழைத்தனம், அறியாமை, வறுமை ஆகிய மூன்றும் குடிகொண்டிருக்கின்றன! மகாபாரதம் ஆரண்ய பர்வத்தில் பின் வரும் வாக்கியங்கள் காணப்படுகின்றன:- பிறரை யாசிக்காமல் தன் வீட்டிலுள்ள அற்பமான காய் கறிகளையாவது தின்பது சுகமும் கௌரவமு முடையது. பிறருடைய வீட்டில் எவ்வளவு நல்ல போஜனமாக இருந்தாலும் அதைச் சாப்பிடு கிறவனுக்கு அவமானம் கிடைப்பது எப்பொழுதும் நிச்சயம். அதாவது நாம் சரீரப் பிரயாசைப்பட்டு ஜீவனம் பண்ண வேண்டுமே தவிர பிறரை எதிர் பார்க்கக் கூடாது. பாரத ஜாதியினுடைய தற்போதைய திதி எப்படி இருக்கிறது? பிறருடைய தயவை எதிர்பாராமல் நாம் சுகமாக வாழக்கூடிய திதியில் இருக்கிறோமா? அந்த திதி நமக்கு ஏற்படாமலிருப்பது முன்னேற்றமா? பிற்போக்கா? சுமார் இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுத்தோதனரின் அருட்குமாரராய் கபிலவாது நகரத்தில் தோன்றிய புத்தர் பிரான், தமது வாழ்நாள் முழுவதும் அன்பு உபதேசத்தைச் செய்தார். துவேஷத்தைத் துவேஷத்தினால் வெல்ல முடியாது என்று கூறினார். உலக நன்மைக்காக, தமது ராஜ போகங்களை யெல்லாம் துறந்தார். ஆனால் அவரைப் பின்பற்றுகிறவர்களைப் பெரும்பான்மையோராகக் கொண்ட கீழ் நாட்டிலே இன்று என்ன காண்கிறோம்? ஒரே மதத்தினராகிய சீனர்களும் ஜப்பானியர்களும் சென்ற நாலரை வருஷ காலமாகச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.1 இப்பொழுது சமீப காலத்தில் பௌத்த நாடுகளாகிய இந்தோ-சைனா, சையாம் முதலிய நாடுகளும் ரணகளத்தில் இழுத்துவிடப்பட்டிருக்கின்றன. ஆகாயவிமானங்களிலிருந்து குண்டு களை வீசி உயிர்களை வதை செய்வதும், நகரங்களைத் தீயிட்டுக் கொளுத்துவதும், ஒருவரையொருவர் சுரண்டப் பார்ப்பதும், தங்களுடைய பௌத்த தருமத்துக்கு விரோதமில்லையென்று இவர்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள்! பட்டை, முதன்முதலாக உற்பத்தி செய்தது சீனா; காகிதத்தை முதன்முதலாக உபயோகத்திற்குக் கொண்டு வந்தது சீனா; திசையறி கருவியைக் கண்டு பிடித்தது சீனா. இப்படி எத்தனையோ வகையில் உலகத்தினருக்குப் பாடங் கற்பித்துக் கொண்டு வந்த சீனா, இன்று, தாசிப் பெண்போல, எல்லோருடைய கண்பார்வைக்கும் கைத் தீண்டுதலுக்கும் உரியதாயிருக்கிறது! இது முன்னேற்றமா? பிற்போக்கா? சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னே, மரியாளின் மகனாய் பெத்ல்ஹேம் நகரில் ஜனித்த யேசுநாதர், தம் சிஷ்யர்களுக்கு என்ன நன்மொழிகளைக் கூறினார்:- எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்கிறேன். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர் களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தைக் கொடு. உன் அங்கியை எடுத்துக் கொள்கிறவனுக்கு உன் வதிரத்தையும் எடுத்துக் கொள்ளத் தடைபண்ணாதே. உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்கிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்பு கிறீர்களோ அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும், தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் படியாகப் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள். அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளா யிருப்பீர்கள்; அவர், நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருப்பது போல், நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருப்பீர்கள். மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படா திருப்பீர்கள்; அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள். விடுதலை பண்ணுங்கள்; அப்பொழுது நீங்களும் விடுதலை பண்ணப்படுவீர்கள். லுக்கா-அதி: 7: 27-37 இந்த உபதேசங்களை நாம் பக்தி சிரத்தையோடு படித்துவிட்டு அதே மூச்சில், இன்றைய மேனாட்டு அலங்கோலங்களை நமது மனக்கண் முன்னர் கொண்டு வந்து நிறுத்திப் பார்ப்போமானால், நாம் பெருமூச்சு விடாமல் சும்மாயிருக்க முடியுமா? விடுதலை பண்ணுங்கள்; அப்பொழுது நீங்களும் விடுதலை பண்ணப்படுவீர்கள்.mUikahd உபதேசந்தான்! சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது! ஆனால் இன்றைய கிறிதவ ஐரோப்பா, இதற்கு நேர்விரோதமாக நடந்து காட்டு கிறது! விடுதலைக்காக என்று சொல்லிக்கொண்டே, அடிமைத்தனத்தை ஊர்ஜிதம் செய்வதற்காக, இப்பொழுது ஐரோப்பாவில் போராட்டம் நடைபெறுகிறது! ஏசுநாதர் எத்தனையோ பேருக்கு உயிர் கொடுத்தார். ஆனால் இன்றைய கிறிதவ ஐரோப்பா, எத்தனையோ உயிர்களைக் கொலைசெய்து கொண்டிருக்கிறது. இவையெல்லாம் முன்னேற்றமா? பிற்போக்கா? இந்த இருபதாவது நூற்றாண்டை விஞ்ஞான முன்னேற்ற நூற்றாண்டு என்று பலரும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அதாவது மனிதன், எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் தன் அறிவை ஆழமாகச் செலுத்தியிருக்கிறான். ஆனால் அவனுடைய வாழ்க்கைக்கு அதிகமான ஆபத்து ஏற்பட்டுக் கொண்டு வருகிறது; அவனுடைய சுபாவத்திலே கூட ஒரு மாறுதல் உண்டாகிக் கொண்டு வருகிறது. கடுமையான பரிசோதனைகளுக்கு அவன் உட்படுத்தப்படுகிறான்; ஆனால் அதிலிருந்து அவன் வெற்றியோடு திரும்பி வருவதில்லை. வேகம், வேகம் என்று சொல்லிக் கொண்டு அவன் அமைதியின்மையைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். மனத் திருப்தி இல்லாவிட்டாலும் மன நிம்மதி கூட அவனுக்கு உண்டாகவில்லை. விஞ்ஞானத்தின் துணை யினால், விளை பொருள்களின் உற்பத்தி அதிகமாக அதிகமாக, ஜனங்களின் வறுமையும் அதிகமாகிக் கொண்டு போகிறது. மனிதன் தற்காப்புக்கென்று வாயால் சொல்லிக்கொண்டு, ஆயுதங்களைத் தயாரிக் கிறான்; ஆனால் பிறரைத் தாக்குவதற்காகவே அவைகளை உபயோ கிக்கிறான். சுருங்கிய காலத்திற்குள் அதிகமான இடங்களில் சகோதரத்துவம், சமத்துவம் என்னும் அழியா விதைகளைத் தெளித்துக் கொண்டு செல்வதற்கு உபயோகிக்கப்படவேண்டிய ஆகாய விமானங்கள், இப்பொழுது, விஷப்பொருள்கள் நிறைந்த வெடிகுண்டுகளை, ஒரு பாவமுமறியாத ஏழை ஜனங்களின் மீது கொட்டிக்கொண்டு போகின்றன. இவையெல்லாம் முன்னேற்றமா? பிற்போக்கா? ஆனால், சில அறிஞர்கள், பத்தொன்பதாவது நூற்றாண்டைக் காட்டிலும் இருபதாவது நூற்றாண்டு பிற்போக்கடைந்திருக்கிற தென்று தான் அபிப்பிராயப்படுகிறார்கள். அல்டோ ஹக்லி1 என்ற ஓர் அறிஞன் தான் எழுதியுள்ள ஒரு நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்:- உண்மையான முன்னேற்றம் என்று சொன்னால், சன்மார்க்கத்திலே அதாவது அன்பு நெறியிலே முன்னேறிச் செல்வதுதான். மற்ற முன்னேற்றங்களெல்லாம் இரண்டாம் பட்ச முன்னேற்றங்களே என்று டாக்டர் ஆர்.ஆர்.மார்ரெட்2 என்ற அறிஞர் கூறுகிறார். இதுகாறும் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிற சரித்தர ததவேஜுகளை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், உண்மையான முன்னேற்றமானது திடீர் திடீரென்று தான் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சமயம் சன்மார்க்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதென்று சொன்னால் அதற்கடுத்தாற்போல், பிற்போக்கும் உண்டாகியிருக்கிறது. கி.பி.பதினெட்டாவது நூற்றாண்டை, உண்மை யான முன்னேற்ற நூற்றாண்டு என்றுதான் சொல்லவேண்டும். பத்தொன்பதாவது நூற்றாண்டின் பெரும்பாகம், அப்பொழுது கைத்தொழிற் புரட்சி காரணமாக அநேக கொடுமைகள் நடைபெற்ற போதிலும் பொதுவாக முன்னேற்றமான காலமென்றுதான் சொல்லவேண்டும். இப்பொழுது, இருபதாவது நூற்றாண்டில் ஆங்காங்கு மனிதத்தன்மைகள் காணப்படுகின்றன என்றாலும், முக்கியமான அரசியல் விவகாரங்களைப் பொறுத்தமட்டில், இந்த நூற்றாண்டு நிர்ணயமான ஒரு பிற்போக்கை அடைந்திருக்கிறதென்றே சொல்ல வேண்டும். உதாரணமாக, பதினெட்டாவது நூற்றாண்டின் அறிஞர்கள், ஒரு தேசத்தின் அரசாங்கம், தன் பிரஜைகளைச் சித்திரவதை செய்தால், அதைக் கண்டித்து வந்தார்கள். ஆனால் இருபதாவது நூற்றாண்டு ஐரோப்பா விலுள்ள ஆளுங்கூட்டத்தார், சித்திரவதை முறையைத் தாராளமாகக் கையாள்கிறார்கள். அதுமட்டுமல்ல; ராஜ்யாதிகாரத்தைத் துணையாகக் கொண்டு செய்யப்படுகிற எந்த ஓர் அட்டூழியத்தையும் சவுக்கடி கொடுப்பது, சூடுபோடுவது முதலியவை முதல், சிறுபான்மை யோராயுள்ள ஜாதியினரை ஒரேயடியாகப் படுகொலை செய்து விடுவது, பொதுப்படையாக யுத்தந் தொடுப்பது முதலியனவரை அனைத்தையும் நியாயமென்று நிர்த்தாரணம் செய்கிற அறிஞர்களும் இப்பொழுது இருக்கிறார்கள். மற்றொரு வருந்தத்தக்க விஷயமென்னவென்றால், இந்த இருபதாவது நூற்றாண்டுப் பொதுஜனங்கள், கொலை, கொடுமை முதலியவைகளைப் பற்றி வெளியாகும் செய்திகள், புகைப் படங்கள், சினிமாக்கள் முதலியவைகளை எவ்வித மனோ வேதனையுமின்றிப் படிக்கவும் பார்க்கவும் செய்கிறார்களே அதுதான். இதற்குச் சிலர் சமாதானம் சொல்லலாம். சென்ற இருபது வருஷங்களாக ஜனங்கள், கொடுமைகளை அதிகமாக அனுபவித் திருக்கிறபடியால், அவர்களுக்கு, இந்தக் கொடுமைகளைக் கண்டு இரக்க உணர்ச்சியும் உண்டாக வில்லை, கொடுமைகளை இழைப்போர் மீது ஆத்திரமும் உண்டாக வில்லையென்று, ஆனால், இவர்கள், அதாவது பொதுஜனங்கள், இந்தக் கொடுமைகளின் விஷயத்தில் பாராமுகமாயிருக்கிறார்களென்ப தென்னவோ உண்மை. இப்படி இவர்கள் பராமுகமாக இருப்பதையே ஆதார மாகக் கொண்டு, இன்னும் அதிகமான கொடுமை இழைக்கப் படுகின்றது. மனிதன், சன்மார்க்கத்தில் இங்ஙனம் பிற்போக்கடைந் திருப்பது போல், அவன், உண்மைக்கு வைத்திருந்த மதிப்பும் குறைந்துவிட்டிருக் கிறது. இந்த இருபதாவது நூற்றாண்டு அரசியல் சர்வாதிகாரிகளும் பொருளாதார சர்வாதிகாரிகளும், தற்போதைய விஞ்ஞான அபிவிருத்தியைத் துணையாகக் கொண்டு வெட்ககர மான முறையில் ஒழுங்கான பொய்ப்பிரசாரஞ் செய்கிறார்களே இந்தமாதிரி, உலக சரித்திரத்தில் எந்தக் காலத்திலும் நடைபெற வில்லை. இந்த ஒழுங்கான பொய்ப்பிரசாரமானது, மனிதர் களிடையிலே துவேஷத்தையும் அகங்காரத்தையும் உண்டு பண்ணி, அவர்களுடைய மனத்தை யுத்தத் திற்குத் தயார் பண்ணுகிறது. இந்தப் பொய்ப் பிரசாரகர்களுடைய முக்கிய நோக்கம் என்னவென்றால், சர்வதேச அரசியல் நடவடிக்கைகளில் எவ்விதமான தரும உணர்ச்சி. தரும நியாயம் முதலியன எதுவும் இருக்கக் கூடாதென்பதுதான். தவிர, உலகத்தில் அன்பு நெறியில் முன்னேற்றம் காண வேண்டுமானால், எல்லா மக்களும் ஒரே கடவுளின் பிள்ளைகள் என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் வளரவேண்டும். ஆனால் சென்ற ஐம்பது வருஷ காலமாக, எல்லோரும் வணங்குகிற கடவுள் ஒருவர்தான் என்ற எண்ணம் போய், அதற்குப் பதிலாக, ஜாதியையும், வகுப்பையும், தனிப்பட்ட மனிதர்களையுங் கூட ஜனங்கள், தெய்வங் களாய்ப் போற்றத் தொடங்கிவிட்டார்கள். இந்த மாதிரியான நிலைமையில் தான் இன்றைய உலகத்தை நாம் காண்கிறோம். முன்னேற்றம் என்பதனை, எந்த அளவுகொண்டு கணித்துப் பார்க்கவேண்டுமோ அந்த அளவு கொண்டு கணித்துப் பார்ப்போமானால், இப்பொழுதைய உலகம் பிற்போக்கடைந் திருக்கிறதென்றுதான் சொல்ல வேண்டும். விஞ்ஞான அபிவிருத்தி யென்னவோ, வெகு துரிதமாகத்தான் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால் சன்மார்க்கத்தில் அதாவது அன்பு நெறியில் முன்னேற்ற மில்லாவிட்டால் மற்ற முன்னேற்றங்களெல்லாம் பயனற்றவைகளே; பயனற்றவைகளைவிடக் கேவலமானவைகளே. இப்பொழுது ஏற்பட்டு வந்திருக்கிற விஞ்ஞான முன்னேற்றமானது, மானிட ஜாதியைத் திறம்படப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு போவதற்குத் தான் துணை செய்திருக்கிறது. சென்ற பதினெட்டு பத்தொன்பது ஆகிய இரண்டு நூற்றாண்டு களிலும் ஏற்பட்ட யுத்தங்கள், யுத்தச்சேதங்கள் ஆகிய இவைகளைக் காட்டிலும் இந்த இருபதாவது நூற்றாண்டின் முதல் நாற்பது வருஷங் களில் ஏற்பட்டிருக்கிற யுத்தங்களும், யுத்தச் சேதங்களும் அதிகமாயிருக் கின்றன. சிறப்பாக, சென்ற நான்கு வருஷகாலமாக உலகத்திலே ஏற்பட்டு வந்திருக்கிற மகத்தான கொந்தளிப்பு, பரபர துவேஷம், சுரண்டும் எண்ணம், ஏகாதிபத்திய ஆசை முதலியன யாவும் சேர்ந்து, லட்சக்கணக்கான உயிர்களை விழுங்கியிருக்கிறது; இன்னும் லட்சக்கணக்கான பேரை வாழ்க்கைக்குப் பிரயோஜனமற்றவர்களாக்கி யிருக்கிறது. அப்படி யானால் நாம் முன்னேற்றமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக் கிறோ மென்று சொல்ல முடியுமா? இந்த இருபதாவது நூற்றாண்டில், மனிதர்களுடைய நம்பிக்கை களும் ஆசைகளும் எவ்வளவு உச்சதாயியில் ஏற்றி வைக்கப்பட வேண்டுமோ அவ்வளவு உச்சதாயிக்கு ஏற்றிவைக்கப் பட்டு, அதே சமவேகத்தில் அந்த நம்பிக்கைகளும் ஆசைகளும் கீழே தள்ளப்பட்டுச் சிதற அடிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்றமும் இறக்கமுமாகிய இரண்டு செயல்களும் ஒரே சமயத்தில் நடைபெறுகிற விநோதத்தை இந்த இருபதாவது நூற்றாண்டிலே தான் காணலாம். அரசியல் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் ஜனங்களுக்கு எந்தவிதமான ஆசைகளை ஊட்டினார்களோ அந்த ஆசைகளுக்கு நேர்விரோதமாகவே காரியங்கள் நடைபெற்றிருக் கின்றன. ஏதோ ஒன்றில் நம்பிக்கை வைத்து, அதற்காகத் தங்கள் உடல் பொருள் ஆவியனைத்தையும் அர்ப்பணஞ்செய்த களங்கமில்லாத ஜனங்கள், பின்னர் தாங்கள் கொண்ட நம்பிக்கைகளில் ஏமாற்றமடைந்து, எண்ணற்ற துயரங்களை அனுபவித்திருக் கிறார்கள். உதாரணமாக, உலகத்திலே ஜன ஆட்சியை, அதாவது பொது ஜனங்களுக்குத் தேச அரசியலிலே முக்கியமான பங்கு இருக்க வேண்டு மென்ற கொள்கையை,நிலை நாட்ட வேண்டுமென்ற புனிதமான நோக்கத் திற்காகவே சென்ற 1914-ஆம் வருஷத்து மகாயுத்தம் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், யுத்த முடிவில் உண்டான பலன் என்ன? பெரும்பாலான நாடுகளில் ஏறக்குறைய சர்வாதிகார ஆட்சியே நிலைபெற்று விட்டது. வீரர்கள் வசிப்பதற்குத் தகுதியான இடமாக இந்த உலகத்தைச் செய்துவிட வேண்டுமென்றும், அதற்காகவே 1914-ஆம் வருஷ யுத்தம் நடைபெறுகிறதென்றும் அப்பொழுது சொல்லப்பட்டது. ஆனால் யுத்த முடிவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகியது. மற்றொரு யுத்தம் வராமல் தடுப்பதற்காக 1914-ஆம் வருஷத்து யுத்தம் நடைபெறுவதாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த யுத்த முடிவிலேயே, மற்றொரு யுத்தத்திற்குத் தயார் செய்து விட்டார்கள் ஐரோப்பிய ராஜதந்திரிகள்.! ஒவ்வொரு நாட்டி னுடைய ராணுவச் செலவும், அந்தந்த நாட்டினுடைய மொத்த வருமானத்தில் பெரும் பாகத்தை விழுங்கிவிட்டிருக்கிறது! சென்ற மகாயுத்தத்தின் விளை வாகப் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் ஊர்ஜிதம் செய்யப்படு மென்று சொல்லப்பட்டது. ஆனால் இந்த மகாயுத்தத்தின்போது, இந்தியாவில் பேச்சுரிமைக்காகச் சத்தியாக்கிரகம் நடைபெறுகிறது! உலக நாகரிக மக்களுக்குப் பொதுச் சொத்தாயிருந்த உண்மை, சிந்தனை, தருமம், அழகு, ஒழுக்கம் முதலியன வெல்லாங்கூட, இப்பொழுது ஜாதிவாரி யாகவும் தேசவாரியாகவும் பிரிக்கப்பட்டுப் போய்விட்டன. நாஜிகலையென்றும், பிரிட்டிஷ் நேர்மையென்றும், பாசிட் எண்ண மென்றும், கம்யூனிட் தருமமென்றும் இப்படிப் பல வகையாகப் பிரித்துச் சொல்கிறார்கள்! ஒரு மேனாட்டு அறிஞன் கூறுகிறான் - நாகரிக உலகம் என்று சொல்லப்படுகிற தற்போதைய உலகத்தின் பெரும்பாலான நாடுகளிலே, சுயமாகச் சிந்திக்கும் உரிமை கிடையவே கிடையாது. அரசாங்கம் என்பது சர்வ வல்லமையுள்ளதாயும், பொறுப்பில்லாததாயும் இருக்கிறது. அரசாங்கத்தின் வாயே பத்திரிக்கை; அது செய்யும் பிரசாரமே அது புகட்டும் கல்வி; அதற்குப் பரிந்து பேசுவதே சரித்திரம்; அதனுடைய எதிரொலியே கலைகள். இவையெல்லாவற்றையும் பார்க்கிறபோது, நாம் முன்னேற்ற மான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோமென்று சொல்ல முடியுமா? மனிதன், காட்டுமிராண்டி நிலையிலே இருந்தபோதாவது அவனிடத்தில் வீரம் இருந்தது; அவன் உள்ளத்தில் ஈரம் இருந்தது. நாகரிகம் வளர வளர, ஆயுத பலத்தின் துணையை அதிகமாக நாடநாட அவன் கோழையாகிக்கொண்டு வந்திருக்கிறான். உலக சரித்திர பரம்பரை, இந்த உண்மையைத்தான் நமக்குப் புகட்டுகிறது. ரூஸோ என்ற பிரெஞ்சு அறிஞன், இந்த மாதிரியாகத்தான் அபிப்பிராயப்படுகிறான். ஆனால் இப்பொழுது நாம் இங்கே கோழைத்தனத்தின் சரித்திரத்தை ஆராய விரும்பவில்லை, பாரத ஜாதிக்கும் கோழைத்தனத்திற்கும் என்ன தொடர்பிருக்கிற தென்பதைப்பற்றி மட்டும் இங்குச் சுருக்கமாகச் சொல்ல விரும்பு கிறோம். உலகத்திலே எந்த ஜாதிக்குக் கோழைத்தனம் இருக்கிறதோ இல்லையோ, நமது பாரத ஜாதியினிடத்தில் அது பரிபூர்ணமாகக் குடிகொண்டிருக்கிறது. ஒரு மனிதன் அல்லது ஒரு ஜாதி கோழையாக இருக்கலாம்; ஆனால் அந்த மனிதன் அல்லது அந்த ஜாதி தனது கோழைத்தனத்தை உணராமலிருப்பதுதான் ஆச்சரியம். அப்படி உணராமல், அந்தக் கோழைத்தனத்தையே அஹிம்ஸை என்னும் பட்டுத் துணியினால் மூடிக் காட்டுவதிருக்கிறதே அது மகா ஆச்சரியம். ஆனால் இந்த மாதிரியான ஆச்சரியங்களையெல்லாம் இந்தியாவிலேதான் காணலாமே தவிர, வேறெந்த நாட்டிலும் காண முடியாது. சென்ற ஒரு தலைமுறையாக நமது தேசத்திலே அஹிம்ஸைப் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வந்திருக்கிறது. அஹிம்ஸைக்கு முதல் தானமும், சுதந்திரத்திற்கு இரண்டாவது தானமும் கொடுக்கப்பட்டு அந்த மாதிரியே தலைவர்கள் பத்திரிகைகளில் எழுதியும் மேடைகளில் பேசியும் வந்திருக்கிறார்கள். இந்த அஹிம்ஸைப் பாலை உண்டு வளர்ந்த தற்காலத் தலைமுறையினர், சிறப்பாக ஆங்கிலம் படித்த இளைஞர்கள், அதாவது இருபத் தைந்து அல்லது முப்பது வயதுக்குட்பட்டவர்கள், நமக்கு எந்த மாதிரி தரிசனம் கொடுக்கிறார்கள் தெரியுமா? காட்டிலே உண்டாகும் அற்ப சலசலப்பைக் கேட்டு மருண்டோடும் மான்குட்டிகளைப் போல் பயங்கொள்ளிகளாய்க் காட்சி யளிக்கறார்கள். அஹிம்ஸை என்பது நமது நாட்டிலே எவ்வளவு மேல் பூச்சான முறையில் பரவி வந்திருக்கிற தென்பது, இந்த இளைஞர்களுடைய உருவங்களையும் செயல்களையும் பார்த்த மாத்திரத்திலேயே நமக்கு நன்றாகத் தெரிகிறது. அதுவும் கீழ்நாட்டில் யுத்த மேகங்கள் கருத்துக் குமுறிக் கொண்டிருக்கிற இந்தத் தருணத்தில், இவர்கள் அஹிம்ஸையின் லட்சணம் எதுவோ அதற்கு நேர்மாறாக நடந்துகொள்வதைக் கண்டு நமக்கு ஒருவித பரிதாபமும் இரக்கமும் இவர்களிடத்தில் உண்டாகின்றன. அஹிம்ஸையென்று சொன்னால் அது வீரத்தின் சிகரம்; கருணையின் ஊற்று. மகா துணிச்சலும் ஆனால் அதே சமயத்தில் பரம சாந்தமும் உடையவர்கள்தான் அஹிம்ஸாவாதிகளாக இருக்க முடியும். மனம், வாக்கு, தேகம் ஆகிய மூன்றும் யாரிடத்தில் வலுவுள்ளதா யிருக்கிறதோ, தலைமீது இடி விழுந்தாலும் மலை உருண்டு ஓடினாலும் யார் தங்கள் கண்ணிமைகளைச் சிறிதுகூட அசைத்துக் கொடுக்கா மலிருக்கிறார்களோ, தங்களுடையதென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் பிறருடைய நலனுக்காக யார் அர்ப் பணம் செய்துவிடுகிறார்களோ, யாரிடத்தில் துறவும் தன்னடக்கமும் ஆபரணங்களாகப் பிரகாசிக்கின்றனவோ அவர்கள்தான் உண்மையான அஹிம்ஸாவாதிகள். இப்படிப்பட்ட அஹிம்ஸாவாதிகள் ஏற்பட்டால்தான், இந்தியாவுக்கு விமோசனம் உண்டு என்று காந்தியடிகள் நம்புகிறார். அவரைப் பொறுத்த மட்டில் இது சரிதான். ஆனால் அவருடைய உபதேசங்களை அப்படியே கிரகித்துக் கொண்டுவிட்டதாகவும், அவரை உண்மையாகப் பின்பற்றுவ தாகவும் நடிக்கிற அன்பர்கள், யுத்தக் குமுறல்களைக்கேட்டுக் கோழைகளைப் போல் மனங்குழைந்து ஓடுவதைப் பார்க்கிற போதுதான், இத்தகைய பாரத சந்தானங்களை வைத்துக்கொண்டு நாம் சுதந்திரக் கோயிலை அடைய முடியுமா என்ற சந்தேகம் நமக்கு உண்டாகிறது. தங்கள் பெயருக்குப் பின்னால் பி.ஏ. என்றும் எம்.ஏ. என்றும் எழுத்துக்களைச் சேர்த்துக் கொண்டு, எங்கேனும் நிரந்தரமான மாத வருமானம் கிடைக்குமாவென்று ஏங்கித் திரியும் ஆங்கிலக் கல்வி பயின்ற இளைஞர்கள், தங்கள் பொறுப்பை உணராமல், கடமையை மறந்து, இருப்பிடத்தைவிட்டு ஓடிப் போவது ஐயோ! எவ்வளவு பரிதாபகரமாயிருக்கிறது! இவர்கள், சமாதான காலத்தில் யுத்த தந்திரங்களைப் பற்றி வெகு அழகாகப் பேசுகிறார்கள். தங்கள் வயிறு நிறைந்தவுடன் ஏழை மக்களின் பசிநோயைப்பற்றிப் பரிந்து பேசுகிறார்கள். அரசாங்கத்தின் அசைக்க முடியாத தம்பங்களா யிருந்துகொண்டே தேசீய வாதத்தைப்பற்றித் தீவிரமாகப் பிரசங்கங்கள் செய்கிறார்கள். தங்கள் தாய்நாட்டின் சரித்திரத்தையும் பூகோளத்தையும் சரிவரத் தெரிந்துகொள்ளாத இவர்கள், ருஷ்ய-ஜெர்மானியப் போராட்டத்தைப்பற்றியும் சீன-ஜப்பானிய யுத்தத்தைப் பற்றியும் வாசாமகோசரமாகப் பேசுகிறார்கள். இவர்கள் தங்கள் தேசத்திற்கு நெருக்கடி ஏற்படுகிறபோது, எப்படி நடந்துகொள்வார்களென்பதைச் சமீபத்தில் (1942) நாம் நன்றாகச் சுவைத்துப் பார்த்தோம். கிராமச் செல்வங் களை அரித்துத் தின்று பருத்துக் கிடக்கும் இந்த ஆங்கிலம்படித்த கரையான்கள், துரும்பென மதிக்கவேண்டிய உயிரைப் பெரிதெனக் கருதிக்கொண்டு, மனத்தையும் மானத்தையும் இழந்து ஓடோடிப் போவதைப் பார்த்தால், இவர்களிடத்தில் எந்தவித பொறுப்பான காரியத்தையும் ஒப்படைக்க முடியாதென்றே நாம் முடிவு கட்ட வேண்டியிருக்கிறது. இப்படி இவர்கள் ஓடிப் போகிறபோது, தாங்கள் ஓட்டமெடுப்பதற்குச் சமாதானஞ் சொல்கிறார்களே அதுதான் நமக்குச் சகிக்க முடியாததாயிருக்கிறது. ஐயோ, இந்த நகர வாசம் எதற்கு? உயிரைக் கொடுத்தாவது இப்படிச் சம்பாதியாமற் போனால் யார் அடிக் கிறார்கள்? எங்கள் முன்னோர்கள் அனுஷ்டித்து வந்த தொழிலை அனுஷ்டிக்கிறோம் என்று இவர்கள் ஏறக்குறைய ஒரேவிதமான பல்லவியைத்தான் பாடுகிறார்கள். இவர்களுக்கு இப்பொழுது ஏற்பட்ட இந்த ஞானோதயம், ஆங்கில எழுத்துக்களை உச்சரிக்கக் கற்றுக் கொண்டபோதே ஏற்பட்டிருக்கக் கூடாதா? இவர்களுடைய பிதிரார்ஜித சொத்தாவது மிகுந்திருக்குமே? இவர்களுடைய தேக பலமும் மனோபல முமாவது விருத்தியாயிருக்குமே? யுத்த களத்திலே இறந்துபோன வீரர்களுக்கு நடுகல் நட்டு அவர் களை வழிபட்டு வந்தது தமிழ்நாட்டிலேதான். ரணகளத்தில் மார்பிலே காயமடையாமல் முதுகிலே காயமடைந்தான் என் மகன் என்று கேட்டு, என் வயிறு, என்ன, புலிக்குகையோ என்று ஏங்கின தாய்மார்களைப் பெற்றெடுத்தது தமிழ்நாடுதான். மகாபாரதத்து யுத்தகளத்தில் தங்களுடைய சொந்த ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல், இரு பக்கத்துச் சைனியங்களுக்கும் தைரியமாகச் சோறளித்தது தமிழ் நாட்டார்தான். வடவரை வணக்குவித்து, யவனரை ஏவலாட்களாகக் கொண்டவர் தமிழர்தான். இத்தகைய திருநாட்டிலே பிறந்த தமிழர்கள் இன்று, அற்ப சொற்பமான யுத்தக் கூச்சலைக் கேட்டு, சாக்கடைப் புழுக் களைப் போல் நெளிந்து நெளிந்து வேகமாக ஓடுவதைப் பார்க்கிறபோது, உண்மையிலேயே இவர்கள்மீது நமக்கு ஒருவித பச்சாதாபம் உண்டாகிறது. ருதுக்களிலே எப்படி வசந்த ருது சிரேஷ்டமானதோ அப்படியே மனித வாழ்க்கையில் யௌவன பருவம் சிரேஷ்டமானது, ஏனென்றால், மனிதன், வசந்தகாலத்தில் சுகத்தை அனுபவிக்கிறான்; யௌவன பருவத்தில் கடமையை உணர்கிறான். கடமையைத் தெரிந்து கொண்டிருந்தால் மட்டும் போதாது; அதை உணரவேண்டும். அப்பொழுது தான் நாம் செயலுக்கு உந்தப்படுவோம். கடமையைத் தெரிந்து கொள் வதிருக்கிறதே அது புதக ஞானம் மாதிரி; உணர்வது அனுபவ ஞானம் மாதிரி. கடமையை உணராத மனிதன், வாழாத மனிதன், அவன் பிறக்கிற போது கூடவே அவனுடைய கடமையும் பிறக்கிறது; அவன் இறக்கிற போது அது முடிவடைகிறது. மனிதன் வேறே, மனிதன் கடமை வேறே என்று பிரிக்க முடியாது. கடமையை உணர்ந் தவர்கள்தான், உரிமை கேட்க உரிமையுடையவர்கள். அப்படிப் பட்டவர்களுக்கு உரிமையும் கிடைக்கும். கடமையிலிருந்துதான் உரிமை பிறக்கிறது; அந்த உரிமையில்தான் கடமை பரிமளிக்கிறது. வாழத் தெரிந்தவன்தான் பிறரை வாழ்விக்க முடியும். கீழ்ப்படியத் தெரிந்துகொள்கிறவன்தான், உத்தம எஜமானனாக வரக்கூடும். சரியானபடி ஆளப்படுவதற்கு நம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டால்தான், நமக்கு ஆளும் சக்தியுண்டாகும். ஆனால் துரதிருஷ்ட வசமாக, நமது தற்காலத் தலைமுறையினர், இந்த உண்மையை ஆழ்ந்து பாராத நிலையிலேயே இருக்கின்றனர். நமது சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலும், இந்தக் கடமை உணராத தன்மைதான் படிந்திருக்கிறது. ஆசிரியத் தன்மையின் மகத்தானதும் புனிதமானதுமான பொறுப்பை உணராதவர்கள் ஆசிரியர்களாயிருப்பதைப்போல், சொந்த விஷயத்திலே கூட சுகாதாரத்தை அனுஷ்டிக்காதவர்கள் சுகாதார அதிகாரிகளாக வேலை பார்ப்பதுபோல், இளமையோடு ஒட்டின கடமையை உணராத இளைஞர்கள்தான் நமது நாட்டிலே அதிகமான பேராயிருக்கின்றனர். ஆனால் இவர்களை அதிகமாகக் குறைகூறவும் நமது மனம் துணிய வில்லை. ஏனென்றால், இவர்களுடைய வாழ்க்கை, மகா மோசமான சுற்றுச்சார்பின் மத்தியில் நடைபெறுகிறது. இவர்கள் யாராரைத் தெய்வங்களாகப் போற்ற வேண்டுமென்று போதிக்கப்படுகிறார்களோ அந்தப் பெற்றோர்களும், ஆசிரியன்மார்களுமே கோழைகளாய், பொறுப்பையும் கடமையையும் உணராதவர்களாய், ஏனோதானோ என்று நடந்து கொள்வார்களானால், அவர்கள் மத்தியிலே, அவர்கள் போஷிப்பிலே வளர்கிற பிள்ளைகள் எந்த திதியிலே இருப்பார்கள்? இதற்காகத்தான், தேசமே ஒரு பாடசாலையாக மாறவேண்டுமென்றும், அதிலுள்ள ஆண், பெண், சிறியோர், பெரியோர் முதலிய எல்லோரும் வாழ்க்கையின் ஆரம்பப் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டு மென்றும் நாம் அடிக்கடி கூறி வருகிறோம். இதற்காக ஒரு சில தலைவர்கள், தங்கள் வாழ்க்கையைப் பலி கொடுத்தாவது, இந்தப் போதனை செய்யும் துறையில் இறங்க வேண்டும்; தேச மக்களுக்கு ஒரு ஜீவ சக்தியைப் புகுத்த வேண்டும். வெறும் தாதுபுஷ்டி மருந்து களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மட்டும் ஜீவசக்தியுண்டாகி விடுமா என்ன? எவனொருவன் கடமையை உணர்கிறானோ அவன், யுத்த விமானங்கள் தலைமேலே பறந்தாலும், குண்டுகள் சுற்றி விழுந்தாலும் அவைகளைப் பொருட்படுத்த மாட்டான். அவன் அஞ்சாமையின் ஆணி வேர்போல் இருப்பான். இதற்காக அவன், வலியச்சென்று ஆபத்திலே சிக்கிக் கொள்வான் என்பது அர்த்தமில்லை. புறச்சூழல்கள், அவனுடைய மனோதிடத்தைச் சிறிது கூட அசைத்துக் கொடுக்காது என்பதுவே அர்த்தம். இந்த மாதிரியான ஒரு மனோதிடம் நமது இளைஞர் சமுதாயத் திற்கு ஏற்படவேண்டுமானால் அவர்கள் முதலில் தங்கள் கடமையை உணரவேண்டும்; தலைவர்கள், அவர்களுக்கு உணர்த்தவேண்டும். ஆனால் அபாக்கியவசமாக நமது நாட்டிலே கடமையை உணராத தலைவர்களும் உரிமைக்காக மட்டும் கூச்சல்போடும் அரசியல் வாதிகளுமே அதிகமாயிருக்கிறார்கள்! இந்த மாதிரியான பரிதாப திதிக்கு நமது இளைஞர்கள் வந்ததற்குக் காரணம், இவர்கள் பெற்றுள்ள ஆங்கிலக் கல்வி முறையேயென்று ஒரு சிலர் சமாதானங் கூறக்கூடும். இந்தச் சமாதானத்தை நாம் நன்கு அறிவோம். தற்போதைய ஆங்கிலக் கல்வி முறை, நமது இளைஞர்களை ஒன்றுக்கும் உதவாத உருப்படி களாக்கிவிட்டதென்பதை நாம் நன்கு தெரிந்துகொண்டிருக் கிறோம். ஆனால் இந்த நிலைமையை மாற்ற நாம் தேசீயத் தலைவர்கள் என்ன முயற்சி எடுத்துக் கொண்டிருக் கிறார்களென்று கேட்கிறோம். ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஜீவாதாரமாயிருப்பது, அந்தத் தேசத்து இளைஞர்களுக்குப் புகட்டப்படும் கல்வி முறையேயாகும். ஆனால் இப்பொழுது நமது இளைஞர்களுக்குப் போதிக்கப்படும் கல்வியானது, அவர்களை எவ்வளவு தூரம் மனுஷ்யத் தன்மையினின்று அப்புறப்படுத்திவிட முடியுமோ அவ்வளவு தூரம் அப்புறப்படுத்தியிருக் கிறது. அரசாங்க ஆதரவைத் தேடாமலோ, அரசாங்க முறையைப் பின்பற்றாமலோ தேசீய முறையைப் பின்பற்றிச் சுயமாக இயங்கக்கூடிய கல்லூரி, நாற்பது கோடி மக்கள் நிறைந்த இந்தியாவில் ஒன்றுகூட இல்லை. இதற்காக நம் தலைவர்கள் எவ்விதமான தீவிர முயற்சியையும் எடுத்துக்கொள்ளவில்லை. நமது நாட்டிலுந்தான் எத்தனையோ கோடீசுவரர்கள் இருக்கிறார்கள்! நம் தலைவர்களுந்தான் எத்தனையோ வருஷ காலமாகத் தேசீயக் கல்வித் திட்டமென்று சொல்லால் முழக்கிக் கொண்டிருக்கிறார்கள்! பொதுவாகவே நமது நிகழ்காலத் தலைவர்களிடத்தில் நமக்கு அதிகமான மதிப்போ, மரியாதையோ இல்லை. இதை நாம் பலமுறை பஷ்டமாகத் தெரிவித்திருக்கிறோம். ஒரு மரத்திலிருந்து உற்பத்தியாகும் பழத்தைக் கொண்டுதான், அந்த மரத்தின் தன்மையை நாம் அறிய முடியும். அதைப்போல ஒரு தேசத்தின் அரசியல், பொருளாதார, சமுதாய முன்னேற்றத்தைக் கொண்டுதான் அந்தத் தேசத்தினுடைய தலைவர் களின் ஆற்றலை அளந்து பார்க்கவேண்டும். பாரத நாட்டுத் தலைவர் களின் சென்ற அரை நூற்றாண்டு வேலையைத் தொகுத்துப் பார்த்தோ மானால், அதிவாரமில்லாமல் கட்டுகிற கதையாகவே இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் ஒரு முறை கூறிய மாதிரி, நம் தலைவர்கள் நுனி மரத்திலிருந்து அடிவேரை வெட்டுகிறவர்களாகவே இருக்கிறார்கள். நாம் ஏற்கனவே கூறியதுபோல் நம் தலைவர்கள் கோருகிற சீர்திருத்தங்கள், செய்கிற வேலைகள் முதலியன யாவும் இரவல் மயமாகவோ அந்நியர்களைத் திருப்திப் படுத்துகிற மாதிரியாகவோ இருக்கிறதே தவிர, தேசீயத் தன்மை கொண்டதாக இல்லவே இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் தலைவர்களுடைய லட்சணங்களைப் பற்றிச் சிறிது கூறவிரும்புகிறோம். ஒரு தலைவனுக்கு மூன்று விதமான நம்பிக்கைகள் இருக்க வேண்டும். முதலாவது, தன்னிடத்திலே நம்பிக்கை; அதாவது தன்னம்பிக்கை. இரண்டாவது, தன்னைப் பின்பற்றுவோர் களிடத்தில் நம்பிக்கை. மூன்றாவது, தன்னுடைய லட்சியத்திலே நம்பிக்கை. இந்த மூன்று நம்பிக்கைகளும் எந்த ஒரு தலைவனிடத்தில் குடிகொண்டிருக்கிறதோ அந்தத் தலைவனைப் பெற்ற நாட்டினர்தான் சுதந்திர புருஷர்களாயிருக்க முடியும். எந்த நாடு, அடிமைக்குழியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அந்த நாட்டுத் தலைவர்களிடத்தில் மேற்கொண்ட மூன்று நம்பிக்கை களில் ஏதேனும் ஒன்று குறைவாயிருக்கிற தென்பதுதான் அர்த்தம். ஒரு தலைவனிடத்தில் கீழ்க்கண்ட பத்து லட்சணங்கள் இருக்க வேண்டுமென்று நாபே1 என்ற அறிஞன் கூறுகிறான்:- 1. ஒரு லட்சியத்தில் அநுதாபமுடையவர்களையும், அதனைப் பக்தி சிரத்தையோடு பின்பற்றக் கூடியவர்களையும் கொண்ட ஒரு கோஷ்டியை அமைக்கும் ஆற்றல் பெற்றவனாகவும், 2. உள்ள நிலைமையைப்பற்றிய பூரண ஞானம் உடையவ னாகவும், பிரச்னைகளைத் தெளிவுபடப் பார்க்கக்கூடியவனாகவும், 3. அவ்வப்பொழுது ஏற்படுகிற நிலைமைக்குத் தகுந்தபடி நடந்துகொள்ளும் சாமர்த்தியமுடையவனாகவும், 4. பிரச்னைகளுக்குப் பரிகாரந்தேடி, வெறுந்தத் துவரீதியாக இருக்கப்பட்டவைகளை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரக் கூடியவனாகவும், 5. தன்னைப் பின்பற்றுவோர் பல கட்சியினராகப் பிரிந்திருந்தால் அவர்களை ஒன்று சேர்க்கக் கூடியவனாகவும், அவர்களுக்குப் பிரதிநிதியாக இருந்து பேசக்கூடியவனாகவும், அவர்களுக்குத் திட்டம் வகுத்துக் கொடுக்கக் கூடியவனாகவும், அதாவது சுருக்கமாகச் சொல்லப் போனால், எல்லாச் சக்திகளையும் ஒன்று கூட்டுந் திறல் படைத்தவனாகவும், 6. துணிந்து முதலில் தானே ஒரு காரியத்தைச் செய்யக் கூடிய வனாகவும், நிருமாண சக்தியுடையவனாகவும், தன்னைப் பொறுத்த மட்டில் வசீகர சக்தியுடையவனாகவும், 7. தன்னைப் பின்பற்றுவோர்களின் ஒழுக்கம், உணர்ச்சி இவை களைப் பிரதிபலிக்கக் கூடியவனாகவும், ஆனால் இந்த ஒழுக்கம், உணர்ச்சி ஆகிய இரண்டையும் மாற்றக் கூடியவனாகவும், 8. எடுத்துக் கொண்ட காரியத்தை இறுதிவரை கொண்டு செலுத்தக் கூடியவனாகவும், 9. தலைவனாயிருந்து காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்ற விருப்பமுடையவனாகவும், 10. லட்சியத்திலே பற்றுதலும், உறுதியான நம்பிக்கையு முடையவனாகவும் இருக்க வேண்டும். மில்லர்1 என்ற மற்றொரு மேனாட்டு அறிஞன், ஒரு தலை வனுக்குப் பின்வரும் பதினாறு தகுதிகள் இருக்க வேண்டு மென்று கூறுகிறான்:- 1. எளிய வாழ்க்கை. 2. வேலை செய்யவேண்டுமென்பதில் ஆர்வம். 3. தன்னடக்கம். 4. உறுதி. 5. விவகார ஞானம். 6. விஷயங்களைப் பகுத்துப் பார்க்கும் அறிவு. 7. நியாயமாக நடந்துகொள்ளுதல். 8. உற்சாகம். 9. விடாமுயற்சி. 10. சாமர்த்தியம். 11. தைரியம். 12. நம்பிக்கை. 13. லட்சியத்தில் பக்தி. 14. விஷயங்களை நுணுகிப் பார்க்கும் சக்தி. 15. சத்தியத்தைக் கடைப்பிடித்தல். 16. நேர்மையாக நடந்து கொள்ளுதல். இந்த மாதிரியான லட்சண அளவைகளை வைத்துக் கொண்டு நமது தற்போதைய தலைவர்களை நிறுத்துப் பார்ப்போமானால், என்ன முடிவுக்கு வரவேண்டுமென்பதை வாசகர்களுடைய தீப்புக்கே விட்டுவிடுகிறோம், மேலே சொன்ன லட்சணங்களமைந்த தலைவர்கள் நம் தேசத்தில் தோன்றாத வரையில் நாம் முன்னேற்ற மடைந்து வருகிறோமென்று சொல்லிக்கொள்ள முடியுமா? இங்ஙனம் பொதுவாக உலகமும், சிறப்பாக நமது தாய்த் திருநாடும், பிற்போக்கான நிலையிலிருப்பதற்கும் பிற்போக்கில் சென்றுகொண்டே முன்னேற்ற மடைந்திருப்பதாகக் கருதிக் கொண்டிருப்பதற்கும் மூலகாரணமாயுள்ளது எது? அரசியலிலும், பொருளாதாரத்திலும், சமுதாய அந்ததிலும் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதுதான். எது வரையில் இந்த ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றனவோ அது வரையில் உலகத்தில் சண்டை சச்சரவுகள் இருந்துகொண்டுதானிருக்கும்; உலகம், பிற்போக்கில் தான் சென்று கொண்டிருக்கும். சுமார் இரண்டாயிரத்தைந்நூறு வருஷங்களுக்கு முன்னரேயே, ஸோலோன்2 என்ற கிரேக்கசட்ட நிபுணன், இந்த உண்மையை ஒரே வாக்கியத்தில் நிரூபித்துவிட்டுப் போயிருக்கிறான். அவன் கூறுகிறான், சமத்துவம் இருக்கப்பட்ட இடத்தில் யுத்தம் உண்டாவதில்லை யென்று. இந்த உண்மையை உலகத்து அரசியல் பண்டிதர்களும், ராஜதந்திர நிபுணர்களும், பொருளாதாரத் துறைத் தலைவர்களும் உணராதவரை உலகத்திற்கு க்ஷேமம் கிடையாது. அது பிற்போக்கில்தான் சென்று கொண்டிருக்கும்.  எப்படி வாழ வேண்டும் ? வாசகர்களுக்கு இந்நூலில் இடம்பெற்றிருக்கும் எண்மரும், ஒரு சமுதாயத்தின் நல்லியக்கத்துக்கு இன்றியமையாதவர்களென்பது என் கருத்து. இதற்கு மாறுபட்ட கருத்துடையவர்கள் இருக்கலாம். உதாரணமாக, முதல் மூவராக விளங்கும் கவிஞனும், ஓவியனும், நடிகனும் இன்றியமை யாவர்களா, இவர்களில்லாவிட்டால் ஒரு சமுதாயம் இயங்காதா என்ற கேள்வி பிறக்கலாம். இந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறுவது? உயிரில்லாமற் போனால் உடல்நடமாடிக் கொண்டிராதா என்று திருப்பிக் கேட்பதைத் தவிர வேறு பதில் கூற முடியாது. ஒரு சமுதாயம், ஜீவ சத்தியுடைய தாயிருக்கிறது, அழகுடன் விளங்குகிறது என்று சொன்னால், அதற்குக் காரணமாயிருப்பவர் இம் மூவருமே. சமுதாயத்தின் அகவாழ்வு இம்மூவரிடமே பிரதிபலிக்கின்றது. இவர்கள் செய்து வரும் தொண்டு, பகட்டற்றது; பொருளையோ புகழையோ குறிக்கோளாகக் கொள்ளாதது. ஆனால், தன்னடக்கத்தினால் திகழ்வது; மௌனத்தினால் பேசுவது. இவர்களை வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஒரு சமுதாயம் வாழ்கிறதென்று சொன்னால், அது வாழ்க்கையுமல்ல; அது சமுதாயமு மாகாது. இதனால்தான், இம்மூவரும் இந்நூலில் முதலிடம் பெற்றிருக் கின்றனர். உத்தியோகதன், சமுதாயத்திற்கு இன்றியமையாதவனா என்று சிலர் கேட்கக் கூடும். ஒரு சமுதாயத்தை இயக்கிக் கொண்டு செல்வது அரசாங்கமே. இந்த அரசாங்கமோ ஒரு யந்திரம். இது தானாக இயங்காது; இயக்குவோர் இருந்தால்தான் இயங்கும். இயக்குவோர் யார்? உத்தியோக தர்கள். இதனால்தான் இவர்கள் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அரசாங்க உத்தியோகதர்களைப் பற்றிச் சொல்லுகிற போது, தனிப்பட்ட தாபனங்களைச் சேர்ந்த உத்தியோகதர்களையும் சேர்த்துச் சொல்லியிருக் கிறேன். எவ்வகை உத்தியோகதர்களாயிருப்பினும், ஏற்றுக்கொண்டிருக் கிற பொறுப்பும், ஆற்றுகின்ற பணியும், வாங்குகின்ற ஊதியமும் ஏறக்குறைய எல்லாருக்கும் ஒன்றுதானே? கவிஞன் முதல் விவசாயி ஈறாகவுள்ள எண்மரையும் வரிசைக் கிரமமாக நிறுத்தி வைத்துப் பார்த்தோமானால், முதல் மூவர், ஒரு சமதுயத்தின் அக வாழ்க்கைக்குப் பிரதிநிதிகளாயிருக்கிறவர்களென்பதும், இடைமூவர், அந்தச் சமுதாயத்தின் அகமும் புறமும் இணைந்து வளமுற வளர்வதற்குத் துணை புரிகின்றவர்களென்பதும், கடை இருவர், அந்தச் சமுதாயத்தைத் தாங்கி நிற்கும் வலிய தூண்களென்பதும் நன்கு புலனாகும். எண்மரைக் கொண்ட இந்தச் சமுதாயத்தில், சட்டத்திலே உழலும் நியாயவாதிக்கு - இல்லை, இல்லை; வக்கீல் என்று சொல்லவே விழைகிறேன். - இடமில்லையா என்று அன்பர் சிலர் வினவுதல் கூடும். வக்கீல்களுக்கு இடமில்லை; நிச்சயமாக இல்லை. ஏனென்றால், எந்த ஒரு சமுதாயமும் இதய சுத்தத்தோடு இருக்க வேண்டுமென்பது என் ஆசை. அங்கு - அந்தச் சமுதாயத்தில் - உண்மையும் நீதியும் மதிப்புப் பெற்று வாழவேண்டுமென்பது என் விருப்பம். இதனால் தான் வக்கீல்களுக்கு இந்நூலில் இடங் கொடுக்கப்படவில்லை. இந்நூலில் ஒவ்வொருவரைப் பற்றிப் பிரதாபிக்கிறபோதும், ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் வற்புறுத்தி வந்திருக்கிறேன். தனி மனிதனிடத்திலாகட்டும், சமுதாயத்தினிலாகட்டும், இவ்விரண்டு பண்புகளும் நன்கு போற்றி வளர்க்கப்படவேண்டும். இல்லாவிட்டால், தனிமனிதன் இரண்டு கால் பிராணியாகவும், சமுதாயம் கீழான உணர்ச்சி களின் விளையாட்டு மைதானமாகவும் மாறிவிடுதல் திண்ணம். சிறப்பாக, இழந்துவிட்ட சுதந்திரத்தை மீண்டும் பெற்றிருக்கிற ஒரு ஜாதி, இந்த இரண்டு பண்புகளையும் வெகு ஜாக்கிரதையுடன் போற்றிக் காப்பாற்றி வரவேண்டும். சுதந்திர இந்தியாவே! இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள். இந்நூலின் கண்ணுள்ள எட்டு அத்தியாயங்களில் சில சிறியன வாகவும், சில பெரியனவாகவும் இருப்பதைக் காணலாம். யாரைப்பற்றி எவ்வளவு கூறினால் போதுமென்று எனக்குப் பட்டதோத, எவ்வளவுக்கு மேல் கூறினால் வாசகர்கள் சலிப்புக் கொள்வார்களென்று எனக்குத் தோன்றியதோ அவ்வளவுக்கு மட்டும் கூறியிருக்கிறேன். வேறு காரணமோ, நோக்கமோ இல்லை. எனது எழுத்துக்களுக்கு ஆதரவு காட்டி வரும் அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. தியாகராய நகர் சென்னை 07.09.1955 1. கவிஞன் கவிஞன், ஒவியன், நடிகன் இம்மூவருள் முதலிடம் யாருக்கு என்று, வாசகரே, எம்மைப் பார்த்துக் கேட்பீரானால், யாருக்கு என்றுதான் நாமும் உம்மைப் பார்த்துக் கேட்க வேண்டியவர் களாயிருக்கிறோம். கேள்விக்குக் கேள்வியைத்தான் பதிலாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது. மூவரும், ஒரு சமுதாயத்தின் மேலான பண்புகளுக்குப் பிரதி நிதிகள்; அதன் தன்மதிப்பு உணர்ச்சியை உயர்த்தி வைத்திருக் கிறவர்கள்; அதனை அறத்தினாற்றுப்படுத்தும் ஆற்றல் வாய்ந் தவர்கள்; செல்வச் செருக்கினாலோ, அதிகாரத் திமிரினாலோ அது வீங்கிப்போகுமானால், அந்த வீக்கம் வடிய, வைத்தியம் செய்யக் கூடியவர்கள்; இனியும் தலை கனத்திருக்க வேண்டா மென்று அதற்கு அவ்வப்பொழுது எச்சரிக்கை செய்கிறவர்கள். இவர்களில் யாருக்கு முதலிடம் கொடுப்பது? மூவரும் சம மதிப்புக் குரியவரே; எனவே சம நிலையில் வைத்துப் பேசப்பட வேண்டியரே. அவரவரைப் பற்றிப் பேசும்போது, அவரவரை முதல்வராக வைத்துப் பேசுவோம். அதுதான் மூவருக்கும் உகந்ததாயிருக்கும். நாம் நியாயமாகச் செய்யவேண்டியதும் அதுதான். கவிஞன் யார்? யார், சூரியன் புகாத இடத்திலெல்லாம் புகுந்து பார்க்கிறானோ, பார்த்து அனுபவிக்கிறானோ, அனுபவித்ததைப் பிறர் அனுபவிக்கும்படி சொல்கிறானோ அவன்தான் கவிஞன். அவன், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதெதுவோ, வார்த்தைகளினால் அளந்து காட்ட முடியாததெதுவோ, வார்த்தைகளினால் அளந்து காட்டமுடியாத தெதுவோ, அதை வார்த்தைகளினாலேயே நமக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான்; அதன் தன்மை இன்ன தென்று நமக்கு உணர்த்தியும் விடு கிறான். எவ்வளவு நுட்பமான அறிவுடையனாயிருக்கிறாய், கவிஞனே நீ! ஆம்; தொட்டால் சிணுங்கிச் செடியைப் போன்றதல்லவோ உனது அறிவு! உனது இதயமும் தொட்டால் சிணுங்கிதான். பிறர் துயரைக் கண்டு நீ எவ்வளவு துடிக்கிறாய்? அநீதியைக் கண்டு எப்படிப் பொருமுகிறாய்? தீநெறி என்று தெரிந்ததும் எப்படித் துணுக்குற்று , அதனின்றும் ஒதுங்கிக் கொண்டு விடுகிறாய்? பனித்துளி படிந்த பசும்புல், நடை மெலிந்து வரும் நீரருவி, காலைச்சூரியன், மாலை மதியம், வண்ணப் பறவை, துள்ளும் கன்று, விளையாடும் குழந்தை இவைகளையெல்லாம் கண்ட மாத்திரத்தில் உன் உள்ளத்தில் பொங்கும் ஆனந்தத்திற்கு அளவுண்டோ? அழகைப் பேச வைக்கிறவன் நீ. அன்பை வளர்க்கிறவன் நீ. இன்னும், நீ அறத்தின் வேலி; உண்மையின் ஒலி; மனிதத்தின் அச்சாணி. மனித குலம் வாழ, கவிஞனே, நீ வாழ்க! கவிஞன் யாரென்ற வினாவுக்கு ஒருவாறு விடை கண்டோம். யார் கவிஞனல்லன்? இதற்கும் விடை காண்பது அவசியம். யாப்பிலக்கிணத் திற்குப் பொருந்த சொற்களை அடுக்கி வைத்துக் காட்டுகிறவன் கவிஞனல்லன். பசிப்பிணியைப் போக்கிக் கொள்ளப் பாடுகிறவன் கவிஞனல்லன்.இச்சகம் பேசி இரு கைகளையும் நீட்டுகிறவன் கவிஞனல்லன். கடவுள் நம்பிக்கையில்லாதவன் கவிஞனல்லன். சமுதாயத்தின் கட்டுக்கோப்பைக் குலைக்கின்ற முறையில் தன் சிருஷ்டி சக்தியைச் செலவழிக்கிறவன் கவிஞனல்லன். இப்படிப்பட்டவர்களின் சிருஷ்டிகள் மேற்பார்வைக்கு என்னதான் பளபளப்பாக மின்னிக் காட்டினாலும் அவைகளின் வாழ்வும் மின்னல் வாழ்வுதான்; ஒரு சிலர் உதட்டிலே ஒரு சிறிது காலம் நடமாடிவிட்டு மறைந்துபோகும். கவிஞன் யார்? மறுபடியும் இந்தக் கேள்வியா என்று, அன்பரே, முணுமுணுக்காதீர். எவன், தன்னுடைய வாழ்க்கையில் கவிதையைக் காண்கிறானோ, எவனுடைய வாழ்க்கை கவிதை மயமாகத் துலங்கு கிறதோ, அவன்தான் கவிஞன். அப்படியானால் கவிதை எது? அந்தக் கவிஞனுடைய வாழ்க்கையின் குரலாயிருப்பதுதான் கவிதை. இஃதென்னவோ புதிர் மாதிரி இருக்கிறதேயென்று மலைக்கிறீர்களா? அப்படியொன்றுமில்லை. ஒருவன் நடத்துகின்ற வாழ்க்கையும் இயற்று கின்ற கவிதையும் ஒன்றாயிருக்க வேண்டுமென்றுதான் சொல்கிறோம். அப்படிக்கின்றி, நடத்துகின்ற வாழ்க்கை வேறாகவும் இயற்றுகின்ற கவிதை வேறாகவும் இருக்கும் பட்சத்தில் அவன் கவிஞனல்லன்; உதட்டிலிருந்து பேசுகிறவனுக்கு என்ன மதிப்பு இருக்குமோ அந்த மதிப்புதான் அவனுக்கு இருக்கும். அது கவிதையுமல்ல; அதன்மீது அமர முத்திரை விழாது; ஜாலவித்தைக்காரனுடைய மாஞ்செடிக்குள்ள ஆயுள்தான் அதற்கு இருக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால், வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறவன் கவிஞனல்லன்; வாழ்க்கையை வாழ்ந்து காட்டி, அதனை - வாழ்ந்து காட்டுவதைச் - சொல்கிறவன்தான் கவிஞன் என்பது சித்தமாகிறது. ஒரு கவிதையினிடத்தில் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டுமென்று நாம் எதிர் பார்க்கிறோம்? தூய்மை; ஆனால் மென்மை. ஆழம்; ஆனால் தெளிவு. எளிமை; ஆனால் இனிமை. மிடுக்கு; ஆனால் நயம். சிக்கனம்; ஆனால் செம்மை. இன்னோரன்ன பண்புகள் பலவும் ஒரு கவிஞனிடத்திலும் இருக்க வேண்டும். இந்தப் பண்புகளின் தொகுப்பாகவே அவன் வாழ்க்கை திகழவேண்டும். நற்பண்புகள் பல நிறைந்தவர்கள் என்ற காரணத்திற்காகத்தான் கவிஞர்கள், சமுதாயத்தினரால் மதிக்கப்பெற்று வந்தார்கள்; எப் பொழுதும் மதிக்கப்பெற்று வருவார்கள். அரசர்கள், அவர்களை ஆதரித்து வந்தார் களென்றால், அவர்களுடைய நூற்புலமைக்காகவல்ல; ஞாபக சக்திக்காக வல்ல; அவர்களிடம் ஒளிவிட்டு வீசிய நற்பண்புகளுக்காக; வாழ்ந்து காட்டிய வாழ்க்கைக்காக. இல்லாவிட்டால் அவர்களுடைய சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்திருப்பார்களா? போர்க்களத்தில் பகைகொண்டு நின்ற அரசர்கள், கவிஞர்களின் தலையீட்டினால் நண்பர்களாகக் கைக்குலுக்கி யிருக்கிறார்கள். சொந்த விவகாரங்களிலாகட்டும், நாட்டுப் பொது விவகாரங்களிலாகட்டும், கவிஞர்களின் உதவியை நாடிய அரசர்கள் எத்தனையோபேர். அரசர்கள், தங்கள் இரு கைகளாலும் கவிஞர் களுக்கு வாரிக் கொடுத்திருக்கிறார்களென்பது வாஸ்தவம். ஆனால் கவிஞர்கள், அரசர்களுக்காக உயிரையே கொடுத்திருக்கிறார்களே? இது வெறும் புலமையினால் சாத்தியமா யிருந்திருக்குமோ? அன்பர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். சமுதாயத்தின் மதிப்பைப் பெற்று நிற்கும் கவிஞன், சமுதாயத் திற்காகவே வாழ்கிறான். அது தூங்கிக் கொண்டிருந்தால் தட்டி எழுப்பு கிறான்; சோர்வுற்றுக் கிடக்குமானால் அதன் நரம்புகளுக்கு முறுக்கேற்றி விடுகிறான்; அதன் பல துறைச் சக்திகள் சிதறிக் கிடக்குமானால் அனைத்தையும் ஒன்று சேர்த்து வைக்கிறான்; அதன் உண்மை நிலையை அவ்வப்பொழுது அதற்கு உணர்த்திக் கொண்டு வருகிறான். நமது தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்றதற்கும், அதன் பண்பாடு இன்னதென்று எடுத்துக் காட்டியதற்கும் காரணமாயிருந்தது எது? அரசியல்வாதிகளின் சலியாத உழைப்பு; அவர்களுடையத் தன்னலத் தியாகம். வாஸ்தவம். இவர்களுக்கு வணக்கம். ஆனால் இந்த உழைப்பையும், தியாகத்தையும் சேர்த்துத் துணைக் காரணமாகத்தான் கொள்ளவேண்டும். மூலகாரணம் கவிஞனுடைய குரல்தான். ஸர் முகம்மது இக்பால் என்ன, ரவீந்திரநாத் தாகூர் என்ன, சரோஜினி தேவி என்ன சுப்பிரமணியபாரதி என்ன, இவர்களை இந்தியா மறக்குமா? இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ கவிஞர்கள் நமது தாய்நாட்டின் நல்வாழ்வுக்கு வழிகோலியிருக்கிறார்கள். நாராயண வாமன திலகன் என்ற ஒரு மராத்தியக் கவிஞன், தாய்நாட்டை நினைந்து எப்படி உருகுகிறான் பாருங்கள்:- என் தாய்நாடே! c‹ m‹ig¥ bgW« bghU£L¤ jÉ£il c©ng‹; fªijia cL¤Jnt‹; ïir, ï‹g« všyht‰iwí« v¿ªJÉLnt‹.*** என் தாய்நாடே! உனக்காக என் உடலை ஈவேன்; என் உயிரைக் கொடுப்பேன். உடல் மறந்து நான் நிற்கும் நிலையைக் கண்டு சிலர் சிரிக்கலாம்; சிலர் பரிதாபப் படலாம்; ஆனால் நான் அவர்களை லட்சியம் செய்யப் போவதில்லை. நான் உன் மகன்; அப்படியே நடப்பேன். flîŸ mUŸ òÇthuhf!*** உன் ஊழியத்தில் நான் துன்புறுவதை, உனக்காகத் தொண்டு செய்வதில் உயிர் துறப்பதை நீ காண்பாய்; உனக்கு ஊழூழி காலம் ஊழியம் செய்து கொண்டிருப்பேன். சென்ற நூற்றாண்டின் கடைசி பகுதியில் மதுரையம் பதியில் வாழ்ந்துகொண்டிருந்தான் ஒரு கவிஞன். முத்துக்குமாரு பிள்ளை என்று பெயர். தாய்நாட்டின் அடிமை நிலையை எண்ணி எண்ணிக் கண்ணீர் விட்டான். அவன் பாடிய இரண்டு மூன்று கண்ணிகளை மட்டும் கேளுங்கள்:- எல்லாரும் பிச்சைபுகின் யாரிடுவார் நீங்களென்ன கல்லா மரமா கருத்திலையா என்மகனே அந்நியனுக் காளடிமை யானவனைத் தான் கொண்ட பன்னி மதிப்பாளோ படித்தவனென் றென்மகனே என்னபடிப்பு என்னபட்டம் என்னபணம் தேடிவிட்டார் தன்னைவிற்று வாழ்வதினும் சாதல்நல மென்மகனே. இவர்களைப் போல் இன்னும் எத்தனையோபேர் - கவிஞர்கள் தான் - நாட்டின் நிலைகுறித்துக் கண்ணீருகுத்துக் கதறியிருக்கிறார்கள். இவர்களை அறிந்து போற்றுநாள் எந்நாளோ? இப்படியே ஒவ்வொரு நாட்டிலும், கவிஞர்களே, சுதந்திர வாழ்வுக்கு வழி கோலி யிருக்கிறார்கள்; வழி காட்டியுமிருக் கிறார்கள்; இதனோடு திருப்தி யடையாமல் சமுதாயத்தின் பல துறைகளிலும் புகுந்து, மாசு மறுக்கள் இருக்கும் இடத்தில் அவற்றைத் துடைத்தும், செப்பனிட வேண்டிய இடத்தைச் செப்பனிட்டும், புதிதாக நிர்மானம் செய்ய வேண்டியிருந்தால் நிர்மாணஞ் செய்தும் கொடுத்திருக்கிறார்கள். இவர் களுடைய கவிதை மலர்களையெல்லாம், தமிழ் நாடே, நீ எப்பொழுது மணங் கொள்ளப் போகிறாய்? கவிஞனுக்குச் சொந்த ஊர் உண்டு. சொந்த நாடு உண்டு. ஆனால் உலகெலாம் அவன் ஊர் தான்; அவன் நாடு தான். தனது நாட்டு மக்களிடத்தில் அவன் பேரன்பு பூண்டவனாயிருக்கிறான்; அவர்கள் சேமமுற்று வாழவேண்டுமென்பது அவன் கலையாத சிந்தனை. ஆனால் அதே சமயத்தில், உலகத்து மக்களனைவரும், சர்வ ஜீவராசிகளும், அவனுடைய அன்புத் தளைக்குட்பட்டவனாகவே இருக்கின்றன. நிகழ் காலத்திலேதான் அவன் வாழ்கிறான்; ஆனால் முக்காலத்தையும் உணர்ந்தவனா யிருக்கிறான். இந்நிலவுலகத்தில் எல்லாரையும் போல் தான் அவன் வாழ்க்கை நடைபெறுகிறது; ஆனால், அவன் மூவுலகத்தையும் ஏன்? ஈரேழு புவனங்களையும் அறிந்தவனா யிருக்கிறான். இப்படியெல்லாம் இருந்தும் அவனை வறுமையானது புடமிடுகிறது; வேதனையானது அரிக்கிறது. இருந்தாலும் அவன் சிருஷ்டி சக்தி குன்றுவதில்லை; இதயம் உடைவதில்லை. வறுமையில் செம்மை காண்கிறான். தும்பை மலர் போலாகிறது அவன் வாழ்க்கை. வேதனையில் இன்பம் நுகர்கிறான். சிருஷ்டிக்கு முன் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நியதியாகவே இந்த வேதனையைக் கருதி அலட்சியமே படுத்தி விடுகிறான். என்ன விந்தையடா கவிஞனே, உனது வாழ்க்கை! விந்தையான வாழ்க்கையோ, நிந்தையான வாழ்க்கையோ அதை எப்படி நடத்த வேண்டும்? எப்படி நடத்தி வந்தால் அவனுடைய கவிதா சக்தி மலர்ந்து மணக்கும்? என்னென்ன தகுதிகளை அவன் பெறவேண்டும்? ஒரு கவிஞனிடம் முக்கியமாக இருக்க வேண்டிய பண்புகள் இரண்டு. இவையிரண்டுந்தான் அவனுடைய வாழ்க்கைக்கு அஸ்திவாரம். இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கைவிட்டால் கூட அவன் அணைந்த விளக்குதான்; இடிந்த சுவர்தான்; ஒடிந்த ஊதுகுழல்தான். இதனாலேயே இவற்றைப்பற்றி முதலில் பிரஸ்தாபிக்கத் துணிந்தோம். ஒன்று ஒழுங்கு; மற்றொன்று ஒழுக்கம். இவற்றை எவனொருவன் விடாப்பிடியாகக் கடைப்பிடித்து வருகிறானோ அவன் யாருக்கும் அஞ்சான்; எவருக்கும் பணியான்; தன்னுடைய கவிதா சக்தியில் திட நம்பிக்கை கொள்வான்; எனவே சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெறுவான். அவன் இயற்றும் கவிதை அழுத்தமுடையதாயிருக்கும்; ஆனால் அதில் உணர்ச்சி ததும்பும். சுலபமுடையதாயிருக்கும்; ஆனால் சிந்தனைக்கு விருந்தளிக்கும். ஒரு கவிதைக்குப் பின் வரும் லட்சணம் இருக்க வேண்டுமென்று கூறுகிறான் கவிஞன் பாரதி: நெசவிலே நாட்டு நெசவு மேல் விலைக்கு நெய்வதைக் காட்டிலும் புகழுக்கு நெய்வது மேல்... காசிப் பட்டுப்போல பாட்டு செய்ய வேண்டும். அல்லது உறுதி யான, உழவனுக்கு வேண்டிய கச்சை வேஷ்டி போல நெய்யவேண்டும்... பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை இத்தனையும் இருக்க வேண்டும். இதற்குமேல் வர்ணஞ் சேர்த்தால் குற்ற மில்லை; சேராமலிருந்தால் விசேஷம். ஒழுங்கும், ஒழுக்கமும் ஒரு கவிஞனுக்கு இரண்டு கண்கள் போல. கண்களைக் காப்பாது போல இவ்விரண்டினையும் காத்து வரவேண்டும். காப்பதில் எப்பொழுதும் விழிப்புடனிருக்க வேண்டும். சிறிது பிசகினாலும் போதும்; வாழ்க்கை பூராவும், மேகத்தினால் மூடப்பட்ட சந்திரன் போலாகிவிடும். அடுத்தாற் போல் ஒரு கவிஞன், எப்பொழுதும் இயற்கை யோடு உறவு பூண்டவனா யிருக்க வேண்டும். இயற்கையின் தன்மைகள் என்ன? குன்றாத செழுமை, மாறாத அழகு, கலையாத அமைதி இவையே யல்லவா, இந்த மூன்றும் ஒரு கவிஞனுடைய சொந்த வாழ்க்கையில் அமைந்து விட்டால் அவன் இயற்றும் கவிதைகள் இனிமை யுடையன வாகவும், அழகு பொருந்தியன வாகவும், எல்லோருக்கும் நலம் தருவன வாகவும் இருக்குமென்பதில் என்ன ஐயம்? ஒரு கவிஞன், தன்னுடைய வாசத்திற் கென்று எந்த மாதிரி யான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்கு, நமது நாட்டு முற்காலத்து மூதறிஞர்கள் சில விவரங்கள் தந்திருக்கிறார்கள். முதலாவது, தன்னுடைய வாசஸ்தலத்தை ஆற்றோரமோ, கடற்கரையோ, மலையடியோ, இப்படி ஏதேனும் ஓரிடத்தில் அமைத்துக் கொள்ளுதல் நல்லது. இந்த இடங்களில்தான், இயற்கையன்னையின் நல்லருள் அவனுக்கு எப்பொழுதும் கிடைத்துக் கொண்டிருக்கும். தான் வசிக்குமிடத்தைக் கவிஞன் தூய்மையுடையதாக வைத்துக் கொள்ள வேண்டும். வருஷத்தில் ஆறு பருவங்கள்1 உண்டல்லவா, ஒவ்வொரு பருவத்திலும் தட்ப வெப்பநிலை மாறுபாடடைகின்றது. இந்த மாறுபாட்டுக் கேற்றவாறு அவன், தன்னுடைய இருப்பிடத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து அமைத்துக் கொள்ள வேண்டும். இருப்பிடத்தைச் சுற்றிப் பெரிய தோட்டம் இருக்க வேண்டும். அதில் செயற்கையான குன்று, குளம், ஆறு முதலியன அமைத்துக் கொள்ள வேண்டும்; நல்ல ஜாதிப் பட்சிகளை அங்கே வளர்க்க வேண்டும்; கோடை காலத்தில் வெப்பத்தினின்று பாதுகாத்துக் கொள்ள, பூமிக்குக் கீழ் சுரங்க அறைகளும், பூமிக்குமேல் நீர்ஊற்றுக்கள், கொடிவிதானங்கள் முதலியவற்றை ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும். வேலை மிகுதியினால் அவ்வப்பொழுது அவனுக்கு மனச்சோர்வு ஏற்படுதல் கூடும். அந்த மாதிரியான சமயத்தில், தனிமையாக இருந்து பொழுது போக்குவதற்கேற்றவிதமான ஒதுக்கிடங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த இடங்களில் அவனுடைய விருப்பத்தையும் தேவையையும் பூர்த்தி செய்யக்கூடிய பணியாட்கள் இருக்க வேண்டும். அவர்களோ, சமிக்ஞைகள் மூலமாக, இடுகிற வேலை களைச் செய்யக்கூடிய திறமை படைத்தவர்களாக இருக்க வேண்டும். இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள் நமது ஆன்றோர்கள். இதைக் கொண்டு, ஒரு கவிஞன், வறுமைக்கு அப்பாற்பட்டவனாயிருக்க வேண்டுமென்பதில் அவர்கள் எவ்வளவு சிரத்தை காட்டினார் களென்பது நன்கு புலனாகும். வறுமை, பொருளிச்சை, சந்தேக மனப்பான்மை, அதிருஷ்டமின்மை, துஷ்டர்கள் விரோதிகள் முதலியோரிடத்தில் நம்பிக்கை வைத்தல் ஆகிய இவை ஐந்தும் நல்ல கவிதைகள் இயற்றுவதற்குப் பெரிய இடையூறுகள் என்று ஒரு வடமொழிக் கவிதை கூறுகிறது. புகழுடன் வாழ விரும்பும் ஒரு கவிஞன், இளமையிலிருந்து நல்ல நூல்கள் பலவற்றைக் கற்க வேண்டும். பழமையாயுள்ள இதிகாச புராணங்களென்ன, காவிய நாடகங்களென்ன, சங்கீதம், சிற்பம், நாட்டியம் முதலிய நுண்கலைகளென்ன, இப்படிப் பலவற்றிலும் நல்ல தேர்ச்சி பெறவேண்டும். உலக விவகாரங்களில் நல்ல பரிச்சயம் பெறவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐவகை இலக்கணங்களிலும் நல்ல புலமை பெறவேண்டும். கவிதை யானது இலக்கண வரம்புக்குட்படாதது என்று சொல்லிக் கொண்டு இலக்கணத்தைப் புறக்கணிக்கக்கூடாது. இதைச் சிறிது வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறோம். கவிஞன் பிறக்கிறான் என்பது உண்மை. கவிதை இயற்றக் கூடிய ஆற்றல் அவனுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிற தென்பது வாஸ்தவம். இந்த ஆற்றலை அவன் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டாமா? எதையும் பயிலாமல், உலக அனுபவம் எதுவுமில்லாமல் கிடப்ப னாகில், அரும்பாயுள்ள அவனுடைய கவிதா சக்தியானது நாளாவட்டத்தில் கருகிவிடும்; அல்லது அந்தச் சக்தியானது கீழான உணர்ச்சிகளைக் கிளறிக் கொடுக்கும் பாட்டுக்களாக வெளிப்படும். காளிதாசன் ஒரு வரகவி. இதற்காக அவன் எந்த நூலையும் படிக்காமலிருந்தானென்று நினைக்கிறீர்களா? ராமாயணத்தை நெடுகிலும் படித்து வந்தான்; திருப்பித் திருப்பிப் பலமுறை படித்துப் பயன்பெற்றா னென்றும், அதில் சுந்தர காண்டத்தைத் தினந்தோறும் பாராயணம் செய்து வந்தானென்றும் சொல்லப்படு கின்றன. இப்படி அநேக நூல்களை இளமையிலிருந்தே படித்து, தனது கவிதா சக்திக்கு உரமிட்டு வந்தான் காளிதாசன் என்பர். கல்ஹணன் என்று ஒரு கவிஞன் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன், ராஜ தரங்கிணி என்ற ஒரு சரித்திர காவியத்தை இயற்றியவன். இந்தியர்களுக்குச் சரித்திரப் பார்வை கிடையாது என்ற அவதூறுக்கு மறுப்புப் - போலுள்ளது இவனுடைய நூல். இவன் - இந்தக் கல்ஹண பண்டிதன் - இளமையில் கண்டிப்பான கண்காணிப்பில் வேதம் முதலாய பண்டைய நுல்களைக் கற்றுத் தேர்ந்தானென்றும், சிறப்பாக இலக்கணத்தில், அதுவும் அணியிலக்கத்தில் நல்ல பயிற்சி பெற்றிருந்தானென்றும், இதிகாசங்களில் இவனுக்கு அதிக ருசி இருந்ததென்றும் இவனுடைய வாழ்க்கை வரலாறு கூறுகிறது. கம்பனோ, வள்ளுவனோ, இளங்கோவோ படிக்காமலே கவிபாடினார் களென்று நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை. நாம் கண்டறிந்த பாரதியை எடுத்துக்கொள்வோம். இலக்கணத்தையோ, பண்டைய நூல்களையோ இவன் முறையாகப் பயின்றவனில்லை யென்றும், இயற்கையறிவு அல்லது ஏதோ ஒரு சக்தி உந்த இவனது வாக்கி லிருந்து கவிதை மலர்கள் உதிர்ந்தனவென்றும், இதனாலேயே இவனது பாடல்களில் இலக்கண வழுக்கள் ஆங்காங்குக் காணப் படுகின்றனவென்றும் சிலர் கூறுவர். உண்மைக்கு முற்றிலும் விரோதமான கூற்று இது. பன்மொழிப் புலவன் இவன். கம்பனையும், வள்ளுவனையும் வியாசனையும் கரைத்துக் குடித்தவன்; இலக்கண வரம்பை நன்கு அறிந்தவன். இல்லாவிட்டால் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியனாக அலுவல் பார்த்திருப்பானா? இங்ஙனமே கவிஞர்களாகப் புகழ்பெற்று வாழ்ந்தோர் பலரும், பிள்ளைப் பருவத்தி லிருந்து முறையாக எல்லா நூல்களையும் பயின்றவர்களாக இருந்திருக் கிறார்கள். கவிஞன், சிறந்த கல்வியுடையவனாக மட்டும் இருந்தால் போதாது; நிறைந்த கேள்வியுடையவனாகவும் இருத்தல் வேண்டும். தன்னுடைய கேள்விச் செல்வத்தை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகச் சம்பாதித்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு தன்னுடைய கற்பனாசக்தி வலுவடைந்து வருவதை அவன், அனுபவத்தில் நன்கு உணரலாம். தான் கற்றுத் தெரிந்தவைகளைக் கேட்டு தெரிந்தவைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, தனது அறிவிலே ஒரு தெளிவை உண்டு பண்ணிக்கொள்வது அப்பொழுது அவனுக்குச் சுலபமாக இருக்கும். மற்றும், தான் கற்றவற்றைப் பிறர் வாயிலாகக் கேட்கிறபோது, தான் கற்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது என்ற தன்னடக்கம் அவனுக்கு உண்டாகும். இந்தத் தன்னடக்கம், ஒரு கவிஞனுக்காகட்டும், வேறு எந்தப் புலவனுக்காகட்டும் மிகமிக இன்றியமையாதது, வித்தையானது வினயத்தினால்தான் சோபிக்கிறது. இஃதில்லா விட்டால், மேலும் மேலும் கற்கவேண்டுமென்ற ஆவல் காலக்கிரமத்தில் மழுங்கிப் போய், அதன் ஸ்தானத்தில் கர்வம் குடி கொள்ளும். கவிஞன், தன்னைப்போலுள்ள மற்றக் கவிஞர்களுடன் கலந்து பழக வேண்டும்; அவர்களுடன் பல விஷயங்களைப் பற்றிச் சர்ச்சை செய்ய வேண்டும்; அவர்களிடத்திலிருந்தும், மற்ற அறிஞர்களிடமிருந்தும், காலதேச வர்த்தமானங்களையும், பிறநாட்டு மக்களின் பழக்க வழக்கங் களையும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்; பிற மொழிகளிலுள்ள காவிய நயங்களைக் கேட்டு ரசிக்க வேண்டும். கவிஞன், எந்தப் பொருளிலும் உண்மை காண வேண்டு மென்ற ஆவல் கொண்டவனாயிருக்க வேண்டும்; மற்றவர்களின் கவிதைகளில் குற்றங் கண்டு பிடிக்கிற சுபாவமில்லாதவனாயிருக்க வேண்டும். பிறருடைய கவிதைகளில் குற்றங் காண்பதென்பது, கண்ணாடி வீட்டுக் குள்ளிருந்து கொண்டு கல்லெறிகிற மாதிரி. பிறருடைய கவிதைகளில் குற்றங் காணாதிருக்கும் பண்பை வளர்த்துவர வேண்டுமானால், கவிஞன், முதலில் தன்னுடைய தகுதியைப் பற்றி, தன்னுடைய சக்தியைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். தன்னுடைய மொழிப்புலமை என்ன, தன்னுடைய திறமை என்ன, பொதுவாக ஜனங்களுடைய ருசி எப்படி இருக்கிறது, தன்னுடைய கவிதைகளை யாரார் ரசிக் கிறார்கள், தன்னிடத்திலுள்ள சாதனங்கள் என்னென்ன, இவை களையெல்லாம் பற்றி அவன் நன்கு சிந்தித்து வைத்துக்கொள்ள வேண்டும். தன்னைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு தன் குறைநிறை களை நன்கு உணர்ந்தவனாவான். இங்ஙனம் உணர்ந்தவன்தான் பிறருடைய கவிதைகளைப் பாராட்ட முடியும்; தன்னைப்போலொத்த கவிஞர்களிடம் அநுதாபமும் காட்டமுடியும். கவிஞன், தன்னுடைய கவிதைகளில் மற்றவர்கள் குற்றங் காணாதிருக்க வேண்டுமென்றும், குறை சொல்லாதிருக்க வேண்டு மென்றும் விரும்புவது சகஜம்; தன் கவிதைகளை மற்றவர்கள் நகல் செய்துவிடக்கூடாதென்று கவலை கொள்வதும் இயற்கை. இதற்காக அவன், தான் அரைகுறையாக எழுதியிருப்பதை மற்றவர்களிடம் படித்துக் காட்டக்கூடாது. ஏனென்றால், அவர்கள், அந்த எழுத்துக்களைக் கேட்டு விட்டு, இவ்வளவுதானா இவனுடைய எழுதும் ஆற்றல், கவிதா சக்தி என்று பரிகசிக்கின்ற முறையில் பேசலாம். இந்தப் பேச்சு மெதுமெதுவாகப் பலரிடம் பரவி, கடைசியில் கவிஞனுடைய சிருஷ்டி சக்திக்கே ஊனம் உண்டாகக்கூடிய நிலைமை ஏற்படுதலுங்கூடும். இதற்கு இடங் கொடுக்கக் கூடாதல்லவா ஒரு கவிஞன். மற்றும் ஒரு கவிஞன், தனியாக ஒருவரை வைத்துக் கொண்டு அவரிடம் தானியற்றியுள்ள கவிதைகளை வாசித்துக் காட்டுதல் கூடாது. ஏனெனில், கேட்கிற அவர், நேர்மையற்றவராகவே போலிப் புகழில் விருப்பமுடையவராகவோ இருக்கும் பட்சத்தில், தாம் கேட்டவற்றை அப்படியே நினைவில் வைத்துக் கொண்டு, தனியே சென்று எழுதி, பிறகு நல்ல சந்தர்ப்பம் பார்த்து, அவை தாமியற்றிய கவிதைகளென்று விளம்பரம் செய்துகொண்டு விடுதல் கூடு மல்லவா? அவரை எப்படித் தடுப்பது? யார் தடுப்பது? அவை அசலல்ல, நகல்தான் என்று நிரூபணம் செய்வதற்குச் சாட்சி யார்? கவிதைப் பண்பு நிரம்பியவர்கள், இவற்றிற்கெல்லாம் இடங்கொடா திருத்தல் வேண்டும். கவிஞன், தனக்குக் கிடைக்கிற புகழைக் கண்டு அளவுக்கு மிஞ்சின சந்தோஷமடைதல் கூடாது; அப்படியே, இகழ்ச்சி ஏற்படுமானால் அதைக் கண்டும் அளவுக்கு மிஞ்சின துக்கங் கொண்டாடக்கூடாது. எதிலும் ஒரு நிதானம் இருக்க வேண்டும். சிறப்பாக, சுக துக்கங்களைப் பாராட்டுகிற விஷயத்தில் வரம்புமீறிச் செல்லுதல் கூடாது. பொதுவாகச் சொல்லப்போனால், கவிஞர்கள், - ஏன்? எல்லாக் கலைஞர்களுந்தான் - தங்கள் சொந்த நாட்டவராலும் சமகாலத் தவராலும் சரியாகப் பாராட்டப்படுவதில்லை; அலட்சியப்படுத்தப்படுவது முண்டு. இதற்காக அவர்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தால், எதிர்காலத்தில் வாழ்வதெப்படி? எதிர்கால சந்ததிக்கு என்ன சேமித்து வைக்க முடியும்? ஆகவே, ஒரு கவிஞன் நிகழ்காலத்தைப் பொருட் படுத்தாமல், எதிர்காலத்திற்காக வாழவேண்டும். கவிஞன், யாருடன் சம்பாஷித்தாலும் சரி, அந்தச் சம்பாஷணையில் இனிமை தவழவேண்டும்; கீழோராயினும் தாழ உரைக்க வேண்டும். கவிஞன், உள்ளத் தூய்மையுடையவனாயிருத்தல் அவசிய மென்பதைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. தன்முனைப்பு, தற்பெருமை, பொறாமை, பகைமையுணர்ச்சி, இத்தகைய கீழான தன்மைகள் உள்ளத்தில் இடம் பெறுதலே கூடாது. சஞ்சல புத்தியுடைய வனாயிருத்தல் கூடாது. எதிலும் ஓர் உறுதியைக் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுதும் சுறுசுறுப்பா யிருத்தல் வேண்டும். உள்ளத் தூய்மைக்கு அடுத்தபடி உடல் தூய்மை, உடலின் சகல உறுப்புகளையும் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். கை, கால், நகம் முதலியவற்றில் அழுக்கு படிந்துவிடாமல் அவ்வப்பொழுது கவனித்துவர வேண்டும். வாயில் நாற்றம் வீசாதிருக்க, தாம்பூலம் தரித்துக் கொள்ளலாம். உடல் நாற்றத்தைத் தடுக்க, சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களை உபயோகிக்கலாம். நல்ல ஆடைகளால் அலங்கரித்துக் கொள்ளலாம்; ஆனால் அவை பகட்டில்லாமல் இருக்கவேண்டும். தலையிலோ, கழுத்திலோ மலரணிந்து தன்னை அழகுபடுத்திக் கொள்ளலாம். இன்னும், கவிஞன், உணவு கொள்ளும் விஷயத்தில் ஒரு நியமத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கண்ட நேரத்திலும், கண்ட இடத்திலும் கண்டவற்றையும் புசித்தல்கூடாது. கவிஞன், எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். இதன் அவசியத்தைப் பற்றி ஏற்கனவே பிரஸ்தாபித்துள்ளோம். தினசரி அவன், தன் அலுவல்களை எப்படி கவனிக்க வேண்டுமென்பது குறித்து, நமது ஆன்றோர்கள் அவனுக்கு ஒரு வேலைத்திட்டத்தை வகுத்துக் கொடுத் திருக்கிறார்கள்; இரவு பகல் சேர்ந்த ஒரு நாளை, மூன்று மணி நேரம் கொண்ட எட்டுப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு பகுதியிலும் இன்னது இன்னது செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். பகலில் முதற்பகுதியில், துயில் நீங்கியதும், காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, கலைமகளை, மனோ வாக்கு காயங்களினால் தொழ வேண்டும். பிறகு, முற்கால, தற்கால நூல்களை ஒருமுறை பார்க்க வேண்டும். இப்படிப் பார்ப்பது, அவனுடைய கவிதா சக்திக்கு ஆக்கங் கொடுப்பதாயிருக்க வேண்டும். இரண்டாவது பகுதியில், கவிதைகள் இயற்ற வேண்டும். முடிந்த வரையில் இதைச் செய்துவிட்டு, பிறகு நீராடல், உணவு உட்கொள்ளுதல் முதலியனவற்றை முடித்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது பகுதியில், கவிதைகள் சம்பந்தமாக மற்றவர்களுடன் சம்பாஷித்தல், புதிய கவிதைகள் இயற்றுவதைப் பற்றிச் சிந்தித்தல் முதலிய செயல்களில் ஈடுபடவேண்டும். நான்காவது பகுதியில், தான் இரண்டாவது பகுதியில் இயற்றிய கவிதைகளை ஒருமுறைக்கிரு முறை பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். ஏனென்றால், ஏதே ஓர் உணர்ச்சியினால் உந்தப்பட்டு முதலில் ஒரு கவிதையை இயற்றி யிருக்கலாம். பின்பு அதனைச் சாவதானமாகப் பார்க்கிறபோது, அதில் சிலமாற்றங்கள் செய்தால் நன்றாயிருக்குமென்று தோன்றும். அதற்குச் சந்தர்ப்பம் வேண்டுமல்லவா, அதுவே இந்த நான்காவது பகுதி. இரவில் முதற்பகுதியில், மாலைக்கடன்களை முடித்துக் கொண்டு, கலைமகளைத் தொழவேண்டும். பிறகு, பகலில் தான் இயற்றிய கவிதைகளை ஒழுங்கு படுத்தி வைக்க வேண்டும். இரண்டாவது மூன்றாவது பகுதிகளில் நல்ல நித்திரை செய்ய வேண்டும். நான்காவது பகுதியில், துயில் நீங்கி, தான் முந்தியநாள் பேசியதைப் பற்றியும் எழுதியதைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். இப்படிப் பொதுவாக ஒரு வேலைத்திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார்களாயினும், இதன் பிரகாரம் ஒரு கவிஞன் தினசரி நடக்க முடியுமென்று அவர்கள் - நமது முன்னோர்கள் - எதிர்பார்க்கவில்லை. அப்படி நடக்க முடியாதென்பது அவர் களுக்குத் தெரியும். ஏனென்றால், கவிஞன், எந்தவிதமான கட்டுத் திட்டங்களுக்கும் உட்படாதவனல்லவா? என்றாலும், அவன் தினசரி வாழ்க்கையில் ஒருவித ஒழுங்கு இருக்க வேண்டுமென்பதற் காகவே இப்படி ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். கவிஞனுக்குத் திடீரென்று சில நல்ல கருத்துக்கள் உதய மாகலாம். அவற்றைச் செய்யுள் வடிவத்தில் கொணர, அவன் பக்கத்தில் எப்பொழுதும் ஓலையும் எழுதாணியுமோ, கரும்பலகை யும் பலப்பமுமோ, காகிதமும் பேனாவுமோ இருக்க வேண்டும். இவற்றுள் ஏதேனுமொன்று அவசியமென்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். பிறர் கட்டுப்பாடுகளுக்குட்படாமல், தானே வகுத்துக் கொண்ட சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு எந்த ஒரு கவிஞன் தன் தினசரி வாழ்க்கையை நடத்தி வருகின்றானோ அவன் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பான். 2. ஓவியன் இதயத்தைத் தொடுவது எதுவோ, தொட்டுச் சிறிதேனும் அசைத்துக் கொடுப்பது எதுவோ, அசைத்துக் கொடுத்துச் சிறிதேனும் அதைத் தூக்கிக் கொடுப்பது எதுவோ,அதுதான் ஓவியம். அது காகிதத்திலே இழுக்கப்பட்ட சில கோடுகளின் இணைப்பாயிருக்கலாம்; கல்லிலே செதுக்கப்பட்ட ஓர் உருவமாய் இருக்கலாம்; துணியிலே வரையப்பட்ட ஏதோ ஒரு பொருளாய் இருக்கலாம். எதுவாயிருந்தாலும் அது மேலே சொன்ன மூன்று காரியங்களைச் செய்யவேண்டும். அப்படிச் செய்யாமலிருந்தால் அஃது ஓவியமல்ல; வெறும்படமோ, பதுமையோ, இப்படி ஏதோ ஒன்றுதான்; பசுமையில்லாத இலை மாதிரி; வர்ணமில்லாத வான வில் மாதிரி. உண்மையான ஓவியம், மௌனமான கவிதை. ஒரு கவிதையைக் கேட்ட மாத்திரத்தில் நமக்கு என்னென்ன விதமான உணர்ச்சிகள் உண்டாகின்றனவோ அந்த உணர்ச்சிகளெல்லாம் ஓர் ஓவியத்தைப் பார்த்த மாத்திரத்தில் உண்டாகவேண்டும். கவிதைக்கோ ஓவியத் திற்கோ இதுதான் உரைகல். கவிஞன், உணர்ச்சிகளைச் சொற்களினால் அலங்கரித்துக் காட்டு கிறான். ஓவியன், அந்த உணர்ச்சிகளை உருவமாக வரைந்து காட்டு கிறான். இரண்டு பேருடைய சிருஷ்டிகளும் நம்மோடு பேசுகின்றன. ஒன்று குரலெடுத்துப் பேசுகிறது; மற்றொன்று மௌனமாகப் பேசுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம். இரண்டு பேருக்கும் இதயத்தோடு தான் நெருங்கிய சம்பந்தம். அதிலும் அந்த இதயத்தின் மேலான பகுதிதான் அவர்களுக்குச் சொந்தம். அதாவது, மனிதனுடைய மேலான தன்மைகளை வளர்த்துச் செழுமை யுறச் செய்வது எதுவோ அதுதான் கவிதை; அதுதான் ஓவியம். எவன், தன்னுடைய கீழான உணர்ச்சி களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறானோ, பிறரையும் விடுவிக்கிறானோ, விடுவிப்பதோடு சந்தோஷத்தையும் நன்மையை யும் அடைகிறானோ, பிறரையும் அடையச் செய்கிறானோ அவனே கவிஞன் என்கிறான் ஓர் அறிஞன். கவிஞனும்,ஓவியனும் கலைஞர்கள் என்பதை நாம் சொல்லிக் காட்டத் தேவையில்லை. எனவே, ஓர் ஓவியன், முதலாவது, தனது இதயத்தைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். இதய சுத்தமில்லாமல் அவன் எதை வரைந்தாலும் அது சோபிக்காது; யாருடைய இதயத்தையும் அது தொடாது. ஓவியனிடத்திலேதான் ஓவியத்தின் ரகசிய மெல்லாம் இருக்கிறதென்று சொல்வார்கள். அதாவது ஓவியன் எப்படி இருக்கிறானோ அப்படித்தான் அவன் ஓவியமும் இருக்கும். இதயத்தைச் சுத்தமாக வைத்திருத்தல் என்றால் என்ன? சூனியமாக வைத்திருத்தலா? இல்லை; இல்லை. வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று சொன்னால், அதில் எவ்வித சாமான்களும் இருக்கக் கூடாதென்பது அர்த்தமல்லவே? அதுபோல், இதயத்தைச்சுத்தமாக வைத் திருக்க வேண்டுமென்று சொன்னால் காமத்தை முதல்வனாகக்கொண்ட ஆறு உட்பகைவர்களை1 அந்த இதயத்திலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டுமென்றே அர்த்தம். அவர்களில்லாத மனந்தான் சுத்தமான மனம். அதில்தான் அன்பு சுரக்கும்; ஆனந்தம் பொங்கும்; சாந்தம் நிலவும். எனவே ஓவியன், அன்பு ஊற்றாகவும், ஆனந்தக் கடலாகவும், சாந்த மலையாகவும் இருக்க வேண்டும். ஓவியனுக்குப் புலனடக்கம் மிக அவசியம். ஓவியனுக்கு மட்டு மென்ன, ஆளுங் கலையில் ஈடுபட்டிருக்கிறவர்கள் உள்பட எல்லாவித கலைஞர்களுக்குந்தான். புலனடக்கமாதல், அந்தந்தப் புலனை அதனதன் போக்கிலே விட்டுவிடாமல் இழுத்துப் பிடி த்து, நல்லதையே முடிபாகக் கொண்ட பாதையில் நிதானமாகக் கொண்டுசெலுத்துதல் என்பதே பொருள். ஓவியனைப் பொறுத்தமட்டில், ஐம்புலன்களை2 அடக்கியாளா விட்டால், ஆறு உட்பகைவர்களை அவனால் வெல்ல முடியாது. அப்படி முடியாத நிலையில் அவன் சிருஷ்டிக்கின்ற எதுவும் சிரஞ்சீவியாயிராது. புலனடக்கம் பெறாத ஓவியன் பொறுமையைக் கையாள முடியாது. மற்றக் கலைகளைக் காட்டிலும், ஓவியக் கலைதான், பொறுமையினால் அதிகம் சோபிக்கிறது. ஓர் ஓவியம், ஓவியனுடைய மனோபாவப்படி உருப்பெற ஆண்டுகள் பலவாதல் கூடும். ஆண்டுகள் பல கழிவதை அவன் பொருட்படுத்துவ தில்லை.தன்னுடைய பாவம் சரியாக உருக்கொள்ள வேண்டு மென்பதில்தான் அவன் நாட்டமெல்லாம் இருக்கிறது. அப்படி யிருக்க, பொறுமையைக் கையாளவிட்டால், அவன் சிருஷ்டி எப்படி அமர வாழ்வு பெறமுடியும்? இத்தலி தேசத்து ஓவியப்புலவன் ஒருவன், டிஷியன்3 என்று பெயர். நூறாவது வயதை எட்டிப் பார்ப்பதற்கு ஒரு வருஷம் பாக்கியிருக்கிற வரை வாழ்ந்தான். இவன் எத்தனையோ ஓவியங்கள் தீட்டியிருக்கிறான். இவற்றுள் ஓர் ஓவியத்தைப் பூர்த்தி செய்ய ஏழு வருஷமும், மற்றோர் ஓவியத்தைப் பூர்த்தி செய்ய எட்டு வருஷமும் முறையே இவன் எடுத்துக் கொண்டதாக இவனது வாழ்க்கை, வரலாறு கூறுகிறது. இந்தக் காலத்தில் இவன் ஓய்வென்பதே எடுத்துக் கொள்ளவில்லை: இரவு பகலென்று வேற்றுமை பாராட்டாமல் உழைத்தான். ஓவியங்கள், பூர்த்தியாகி, கலை யுலகில் இன்றளவும் நட்சத்திரங்களாகப் பிரகாசித்துக் கொண்டிருக் கின்றன. ஓவியன், தன்னுடைய தொழிலில் சோர்வு கொள்வதோ, சலிப்புக் காட்டுவதோ கூடவே கூடாது. கோடுகளைத் திருப்பித் திருப்பி வரைய வேண்டியிருக்கலாம். உருவங்களை மறுபடியும் மறுபடியும் செதுக்க வேண்டியிருக்கலாம். ஆயினும் மனத்திலுள்ள கருத்து பூரணமாக வெளிப்படாமல் இருக்கலாம். இதற்கு அவன் சோர்வு கொள்ளலாமா? சலிப்புக் காட்டலாமா? எத்தனையோ ஏமாற்றங்களைக் கடந்துதான், எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் ஆகவேண்டும்; இதற்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சரி, ஓர் ஓவியன், பத்தே நாட்களில் தனது ஓவியத்தைப் பூர்த்தி செய்துவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். இங்ஙனம் பூர்த்தி செய்யும் தகுதியைப் பெற அவன் எத்தனை வருஷ காலம் பயின்றிருக்க வேண்டும்? உழைத்திருக்கவேண்டும்? செய்ததையே திருப்பித் திருப்பிச் செய்திருக்க வேண்டும்? குறைந்த பட்சம் முப்பது வருஷம் ஆகியிருக்கு மில்லையா? அப்பொழுது அவன் ஒரு தடவையேனும் த்ஸூ வென்று சலிப்பாகச் சொல்லியிருந்தாலும் சரி, சை என்று சொல்லி, தன் உபகரணங்களை வீசி எறிந்திருந்தாலும் சரி, இந்தத் தகுதியைப் பெற்றிருக்க முடியுமா? உலகத்தில் புகழ்பெற்று விளங்குகிற ஓவியர் களின் வாழ்க்கைச் சரித்திரங்களை நாம் வாசித்துப் பார்த்தோமானால், அந்தோ, ஆரம்பத்தில், பயிற்சி பெறுங்காலத்தில் எவ்வளவு இன்னல் களுக்குட் பட்டிருக்கிறார்கள்? வாழ்க்கை வசதிகள் என்று சொல்கிறோமே, அவற்றுள் ஒன்றையேனும் பெற்றிருக்கிறார்களா? சித்திரக் கலையில் அவர்களுக்கிருந்த ஆர்வம், எத்தனைதரம் தடைப்பட்டுத் தடைப்பட்டு வெளிவந் திருக்கிறது? இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர்கள் ஒரு தடவை யேனும் சோர்வோ, சலிப்போ காட்டியிருப்பார்களானால், அவர்கள் தீட்டிய ஓவியங்களை இன்று நாம் பார்த்து மகிழ முடியுமா? ஓவியன், மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் பெறவேண்டும். எந்தச் சித்திரத்தைத் தீட்டச் சங்கற்பித்துக் கொள்கிறானோ அந்தச் சித்திரம் முதலில் அவன் மனதில் உருவாக வேண்டும். உள்ளே உருவான பிறகு தான் அதனை வெளியே கொணர முடியும். ஒருவன், தனது நண்பனொருவனுடைய விருப்பத்திற்கிசைய, சித்திர மொன்றைத் தீட்டிக் கொண்டிருந்தான். நண்பன் எதிர்பார்த்தபடி, சித்திரம் சீக்கிரத்தில் பூர்த்தி யாகவில்லை. சைத்திரிகனோ, தீட்டியதையே கலைத்துக் கலைத்துத் தீட்டிக் கொண்டிருந்தான். நண்பனுக்குச் சிறிது ஆத்திரம் வந்தது. ‘V‹ ï¥go¤ jhkj¥gL¤J»whŒ?என்று கேட்டான். சித்திரத்தை இப்பொழுது மனத்திற்குள் திரும்பத் திரும்பத் தீட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றான் சைத்திரிகன் நிதானமாக. சித்திரம் மனதில் உருவாதல் எங்ஙனம்? மனம் பூராவும் அந்தச் சித்திரத்தில் ஒன்றுப்படுவதன் மூலமாகத் தானே? ஏகதேசமாக மனம் சித்திரத்தில் ஒன்றுபடுமானால் மட்டும் அந்தச் சித்திரம் உருவாகாது. எப்பொழுதுமே சதா சர்வ காலமும் அந்தச் சித்திரம் பூர்த்தியாகும் வரை மனமானது அதில் லயித்திருக்கவேண்டும். எவனொருவன் ஓவியக் கலையில் மேம்பாடடைய வேண்டுமென்று தீர்மானிக்கிறானோ அவன், காலை சூரியயோதயத்திலிருந்து இரவு படுக்கப்போகும் வரை, அந்த ஒன்றிலேயே தன் மனம் முழுவதையும் செலுத்த வேண்டும் என்கிறான் ஓர் ஓவிய நிபுணன். அவனே இன்னோரிடத்தில் கூறுகிறான்:- ஓவியக் கலையில் மேம்பாடடைய விரும்புகிறவர்கள் தங்கள் அன்றாட மனப்போக்கைப் பொருட் படுத்தாமலும், காலையென்றும் பகலென்றும் இரவென்றும் பாராமலும் தங்கள் தொழிலில் ஈடுபடவேண்டும். விளையாடுவதுபோல் இந்தக் கலையில் ஈடுபட்டால் வெற்றி பெற முடியாது. கடினமான உழைப்பை மேற்கொண்டால்தான் இதில் வெற்றி காணமுடியும். ஓவியன், ஆத்ம திருப்திக்காகவே, மனச் சாந்திக்காகவே சிருஷ்டிக்க வேண்டும். பொதுவாக ஒரு கலைஞனிடத்தில், சில உணர்ச்சிகள் மண்டிக்கிடக்கின்றன. அவற்றை ஏதோ ஒரு முகத்தில் வெளிப்படுத்தக் கூடிய சக்தியும் அவனிடத்தில் இயற்கையா யமைந்திருக்கிறது. அவன் வெளிப்படுத்தியே யாகவேண்டும். அப்படி வெளிப்படுத்தாவிட்டால் அவன் மனம் வெடித்துப் போகும்; மரண வேதனைக்குச் சமமான ஒரு துன்பத்தையடைவான். வெளிப்படுத்தி விட்டாலோ அவன் மனம் லேசாகிறது; அலாதியான ஒரு மகிழ்ச்சி அதில் கொப்பளித்து எழுகிறது; சிருஷ்டிப்பதற்கு முன்னர் எந்த அளவுக்கு வேதனை அடைந்தானோ அந்த அளவுக்கு, சிருஷ்டித்த பின்னர் ஆனந்தத்தையடைகிறான். எனவே, இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும், கலப்பில்லாத ஆனந்தத்தை அடையவுமே ஓர் ஓவியன் சிருஷ்டிக்கவேண்டும். அந்த சிருஷ்டிதான், அந்த ஓவியந்தான், அதனைக் கண்டு அனுபவிக்கும் பக்குவம் பெற்றவர்களின் வேதனையைப் போக்கும்; அவர்களுக்கு ஆனந்தத்தை உண்டுபண்ணும். அப்படிக்கின்றி, வெறும் புகழுக்காகவோ, கேவலம் பணத்திற்காகவோ, சுயநலத்தையே பிரதான மாகக்கொண்ட ஒருவனுடைய அல்லது ஒரு சிலருடைய ஆசையைப் பூர்த்தி செய்வதற்காகவோ, ஒருவன் ஓவியம் தீட்டுவானாகில், அவன் ஓவியனல்லன்; வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டு ஓவியம் வரைவதை ஒரு தொழிலாகக் கொண்டவன். அவனை ஒரு தொழிலாளியென்று தான் சொல்ல வேண்டுமே தவிர, கலைஞன் என்று சொல்ல முடியாது. நுண்கலைகளென்று எவை எவைகளைச் சொல்கிறோமோ அவை களில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு ஒருவித இயற்கையறிவு இருக்கிறது. அந்த அறிவை முன்னே தள்ளிக் கொண்டுதான் அவர்கள் ஒரு கலைக்குள் பிரவேசிக்கிறார்கள். ஆனால் அந்த அறிவோடு அவர்கள் திருப்தியடையக் கூடாது. அதை வளர்க்க வேண்டும்; வளப்படுத்த வேண்டும். வளப்படுத்திப் பிறர்க்குப் பயன்படுத்தவும் வேண்டும். இந்த மூன்றையும் செய்ய, சிலர் கற்றலைச் சாதனமாகக் கொள்கிறார்கள். சிலர் கேட்டலைச் சாதனமாகக் கொள்கிறார்கள். ஓவியனைப் பொறுத்தமட்டில், பார்த்தலைத்தான் பிரதான சாதனமாகக் கொள்கிறான் பார்த்த லென்றால், கண்களைக் கண்ட வழியில் போகவிட்டுப் பார்த்தலல்ல; மேலெழுந்தவாரியாகப் பார்த்தலு மல்ல. எந்தப் பொருளைப் பார்த்த மாத்திரத்தில் நம்மையறியாமல் ஒருவித பரவசமுண்டாகிறதோ அந்தப் பொருளை ஊன்றிப் பார்த்தல்; சிந்தித்ததற்கு ஏதுவாய் முறையில் ஆழ்ந்து பார்த்தல்; நமது கருத்தையும் செலுத்திப் பார்த்தல். இந்த மாதிரியானதோர் அர்த்தத்தில்தான் பார்த்தல் என்ற சொல்லை இங்கே உபயோகித்திருக்கிறோம். ஒரு பொருளின் அந்தரங்கத்திற்குள் பிரவேசிக்க இந்த மாதிரியான பார்வை அவசியம். இதனைக் கூர்மைப்படுத்தி வைத்துக் கொண்டிருப்பது ஓர் ஓவியனுடைய கடமையாகும். ஓவியத்தில், கண்திறத்தல் என்பது முக்கியமான அமிசம். வீட்டுக்கு வாசற்கால் வைக்க எப்படி நல்ல நாள் நட்சத்திரம் முதலியன பார்க் கிறோமோ அப்படியே ஓர் ஓவியன், தான் சமைக்கும் உருவத்திற்குக் கண் திறக்கத் தன் மனத்தைச் சரிப்படுத்தி வைத்துக்கொள்கிறான். அந்தக் கண்கள் எந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்குப் பல கணிகளாக இருக்கவேண்டுமென்று அவன் சங்கற்பித்துக் கொள்கிறானோ அந்த உணர்ச்சியை அப்படியே தன் கண்களில் வரவழைத்துக் கொள்கிறான். அவற்றிலிருந்து தூரிகையின் மூலம் அந்த உணர்ச்சியை உருவத்தின் கண்களில் பெய்கிறான். கண் திறந்தாகிவிட்டது. கண் திறந்தலென்றால், கண்களென்னும் உறுப்பையோ, இரண்டு கருவிழிகளையோ அமைத்தல் என்பதல்ல; அந்தக் கண்களில் சரியான பார்வையை அமைத்தல் என்பதே கருத்து. ஓவியத்தின் பார்வையைக் கொண்டு ஓவியனுடைய மனப்பக்குவத்தை ஒருவாறு துணியலாம்; அவனது பார்த்தலென்னும் சாதனம் எவ்வளவு கூர்மையாயிருக்கிறதென்பதை அறியலாம். எனவே ஓர் ஒவியனுடைய அகக்கண்ணுக்கும் அவன் தீட்டும் ஓவியத்தின் புறக்கண்ணுக்கும் நெருங்கிய தொடர்புண்டென்பது பெறப்படுகிறது. ஓவியத்தின் கண்களில் ஒளி வீச வேண்டுமானால், ஓவியனின் அகக்கண் ஒளி நிறைந்ததாயிருக்க வேண்டும். ஓவியன், அழகுக்கு உருவத்தையும் உயிரையும் கொடுக்கிறவன். கொடுக்கிறவன் எதை எதைக் கொடுக்கிறனோ அதில் அதில் நிறைந்த வனாயிருக்க வேண்டுமல்லவா? எனவே அவன் அழகும் உயிரும் நிரம்பியவனாயிருக்கவேண்டும். அழகு என்பது ஆன்மாவின் அழகையும், உயிர் என்பது ஊனை உருக்கவல்ல, அசையாப் பொருள்களையும் அசைத்துக் கொடுக்கவல்ல உயிரையுமே இங்குச் சொன்னதாகும். ஓவியன், சொல்லாளனல்லன்; செயலாளன். சிருஷ்டிக்க வேண்டு மானால் அவன் செயல் புரிந்தேயாக வேண்டும். தூரிகையையோ, சிற்றுளியையோ கையில் பிடித்தேயாக வேண்டும். அவனுடைய கைத்திறனைப் பொறுத்துத்தான் அவனது சிருஷ்டி உருவமெடுக்கிறது. ஆகவே அவன், ஐம்புலன்களிலே கண்ணையும், உடலுறுப்புக்களிலே கையையும் வெகு ஜாக்கிரதையாகக் காத்து வர வேண்டும். கண்ணொளியோ, கைத்திறனோ குன்றாமலிருக்க, வைத்திய சாஸ்திரத்தின் துணையை அவன் நாடுவானாகில் அதில் தவறில்லை. ஓவியன், தன் பெரும்பொழுதைக் கற்பனை உலகத்திலே, சிந்தனை உலகத்திலே கழிக்கிறானென்பது வாஸ்தவம். இதனால் அவனுக்கு நிஜ உலகமில்லை யென்பதில்லை; நிறைய உண்டு. அதிலேதான் அவன், தனது அன்றாட வாழ்க்கையை நடத்த வேண்டியவனாயிருக்கிறான். ஆனால் அந்த நிஜ உலகத்திற்காக அவன் வாழவேண்டும். இதில்தான் அவன்,மற்றவர்களினின்று வேறுபடுகிறான். நிஜ உலகத்திற்காகவே, அதில் அழகும் இனிமையும் நிறைந்திருக்க வேண்டுமென்பதற்காகவே அவன் கற்பனை உலகத்திலும், சிந்தனை உலகத்திலும் வாழ்கிறான். அவனது கற்பனையும் சிந்தனையும் நல்லவற்றிலேயே திளைத்துக் கொண்டிருப்பதற்கு உதவி செய்கின்ற வகையிலேயே அவனது நிஜ உலக வாழ்வு அமைந்திருக்க வேண்டும். ஓவியன், இயற்கையழகு சொட்டுகின்ற ஒரு சூழ்நிலைக்கு நடுவில் தனது வாசஸ்தலத்தை அமைத்துக் கொள்ளுதல் நல்லது. மலையுச்சி அல்லது அடிவாரம், ஆற்றோரம், கடற்கரை, மரங்கள் அடர்ந்த ஒரு தோப்பு, நீரோடையையோ ஊருணியையோ நடுவில் கொண்டதொரு சமவெளி, இப்படிப்பட்டதோர் இடமாயிருந்தால் விசேஷம். அப்பொழுதுதான் இயற்கையன்னை போதிக்கும் முடிவில்லாத பாடத்தை அவன் சுலபமாகக் கற்றுக் கொள்ளமுடியும். அவன், உண்பது, உறங்குவது போன்றவைகளுக்காக ஒரு சிறிய இடத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டால்போதும். ஆனால் அந்தச் சிறிய இடத்தை அவன் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். அழகோ,பயனோ இல்லாத பொருள்கள் அங்கு இருத்தல் கூடாது. அவன் கலை சிருஷ்டி செய்கின்ற இடம், கூடிய மட்டில் தனியாக இருத்தல் நல்லது. சாப்பாட்டைச் சுவைத்துச் சாப்பிட விரும்புகிறவர்கள், சமையலறையை எட்டி எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கலாமா? விஞ்ஞான சாஸ்திரி, தன்னுடைய பரிசோதனை சாலையில் மற்றவர்களைப் புக விடுகிறானா? பொதுவாக, சிருஷ்டித் தொழில் ரகசியமான இடத்திலேயே நடைபெறுகிறதென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். எனவே, ஓவியன், தனது சிருஷ்டித் தொழிலுக்குத் தனியானதோர் இடத்தை அமைத்துக் கொள்வானாகில் அதற்காக அவனைப் பாராட்ட வேண்டும். ஓவியன், தனது புற வாழ்க்கையை மிக எளிய முறையில் அமைத்துக் கொள்ளுதல் அவசியம். என்ன தேவையோ, எவ்வளவு தேவையோ அதனைப் பெற்றுக் திருப்தியடையவேண்டும். எது முக்கியம், எது முக்கியமில்லையென்பதை அவன் நன்கு தெரிந்து கொண்டிருக்க வேண்டும். நிலையற்ற பொருள்களிலே அவன் நாட்டங் கொள்ளா திருப்பானாக! இதற்காக அவன் ஏசிப் பேசப் படலாம்; பொருட்படுத்த வேண்டியதில்லை அவன். அவன் உண்மையை நாடுகின்றவன்; அழகின் உபாசகன். உண்மையல்லாதன வற்றையும், அழகல்லாதனவற்றையும் அவன் எங்ஙனம் ஏற்றுக் கொள்வான்? 3. நடிகன் காவியம் புனைவோன், ஓவியம் வரைவோன், நாடகம் நடிப்போன் ஆகிய மூவரும் கலையுலகத்தின் திரிகர்த்தர்கள். இவருள் முதலிரு வரும், தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதில்லை; தங்களுடைய சிருஷ்டிகளை மட்டும் வெளிப்படுத்தினால் போதும்; பொருளோ புகழோ இவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. நடிகன் அப்படியல்ல. அவனுடைய நிலைமை வேறு. அவன், தன்னையே வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய வனாயிருக்கிறான். அவன் வேறு, அவன் சிருஷ்டி வேறாக இருப்ப தில்லை. அவனே ஒரு சிருஷ்டியாகக் காட்சியளிக்க வேண்டியவனா யிருக்கிறான். கவிஞனுடையவோ ஓவியனுடையவோ உடலமைப்பு, முகத் தோற்றம், நடை, குரல் இவைகளையெல்லாம் நாம் பார்ப்பதுமில்லை; கேட்பதுமில்லை; இவைகளைப் பற்றி நாம் கவனஞ் செலுத்துவது மில்லை. இவை எப்படியிருந்தபோதிலும் இவர்களுடைய கவிதையும், ஓவியமுமே நமக்கு முக்கியமாகப் படுகின்றன. இவைகளைத்தான் நாம் ரசிக்கிறோமே தவிர இவர்களையல்ல. ஆனால் ஒரு நடிகன் விஷயத்தில், மேற்சொன்ன உடலமைப்பு, முகத்தோற்றம், நடை, குரல் எல்லாம் முக்கியமாயிருக்கின்றன. அவன், எந்தப் பாத்திரமாக மேடைமீது தோன்றியபோதிலும், அந்தப் பாத்திரத்தைத் திறம்பட நடிப்பதற்கு இவை யாவும்-உடலமைப்பு முதலிய யாவும் - முக்கிய சாதனங்களா யிருக்கின்றன. இவையின்றேல் நடிகனில்லை. கவிதையிலும் ஓவியத்திலும், அவைகளைச் சிருஷ்டித்தவர் களுடைய அகத்தை மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால் நடிகனுடைய நடிப்பில், அவனுடைய முகத்தைப் பார்த்துதான் அவனுடைய அகத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். கவிஞனும், ஓவியனும், தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை லட்சிய உலகத்திலேயே கழிக்கிறார்கள். அப்படிக் கழிப்பதுதான் அவர் களுக்குக் கௌரவம். நடிகனோ, பிரத்தியட்ச உலகத்திலும் வாழவேண்டிய வனாயிருக்கிறான். அந்தப் பிரத்தியட்ச உலகத்தை அணைத்துக்கொண்டு போகாவிட்டால் அவனுக்குக் கௌரவக் குறைவு மட்டுமல்ல. பொருளோ, புகழோ எதுவும் கிடைக்காது. லட்சிய வாழ்க்கை இன்னது என்று அவன் நடித்துக் காட்ட வேண்டியவன்; அதற்காகப் பிரத்தியட்ச உலகத்தில் நடந்து காட்ட வேண்டியவன். எவ்வளவு கடினமான சாதனை ஒரு நடிக னுடையது? அப்படியானால் அவன் எப்படி இருத்தல் வேண்டும்? ஒரு நடிகன், சமுதாயத்தில் தனக்கு ஒரு கௌரவமான ஸ்தானம் உண்டு என்பதை முதலில் உணர்தல் வேண்டும். தன்மதிப் பில்லாதவன் பிறரால் மதிக்கப்படமாட்டான். ஜீவனத்திற்கு வேறு வகையில்லாமல் இந்த நாடகத் தொழிலை மேற்கொண்டிருக்கிறோம் என்று ஒரு நடிகன், தன்னைக் கருதிக்கொண்டு விடுவானாகில், அவன் தன்மதிப்பு உணர்ச்சியற்றவனே; அதுமட்டுமல்ல, நாடகக் கலைக்குக் களங்கம் உண்டு பண்ணியவ னாகிறான். நாடகத் தொழிலை குறைவற்ற தொழில் என்று போற்றி வளர்த்திருக்கின்றனர். நமது முன்னோர் என்பதை ஒவ்வொரு நடிகனும் தெரிந்துகொள்ளுதல் அவசியம். ஒரு நடிகன், தனது நாட்டின் பழமையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாகவும், நிகழ்காலத்தின் குறைநிறைகளை எடுத்துச் சொல்லும் ஒலி பரப்பியாகவும், வருங்கால நல்வாழ்வுக்கு வழிகாட்டும் விளக்காகவும் இருத்தல் வேண்டும். இம்மூன்று காலங்களையும் தனது நடிப்பிலே கொண்டு வந்து காட்டும்ஆற்றலுடையவனாயிருக்கவேண்டும். ஒரு நடிகன், தனது நடிப்பின் மூலம் சமுதாயத்தின் மீது படிந்திருக்கும் அழுக்குகளை அப்புறப்படுத்தலாம். ஆனால் அதை நாசூக்காகச் செய்யவேண்டும். சமுதாயத்தைச் சுத்தபடுத்த வேண்டு மென்பதுதான் அவன் நோக்கமாயிருக்க வேண்டுமே தவிர, அழுக்கு களைக் கழுவிக் காட்டுவதே அவன் நோக்கமாயிருக்கக் கூடாது. அப்படிக் கழுவிக் காட்டுவதில் திருப்தியோ மகிழ்ச்சியோ அடையக்கூடாது. கழுவிக் காட்டுவதென்பது அழிவு வேலையின் பாற்படும். நடிகன், ஆக்கத்திற்காக இருக்கிறானே தவிர அழிவுக்காக அல்ல; ஆக்கத்திற்காக அழிவைச் செய்யலாமே தவிர, அழிவுக்காக அழிவைச் செய்யக்கூடாது. எனவே ஒரு நடிகன், சமுதாயத்தினருடைய மதிப்பையும் மரியாதையையும் பெறவேண்டுமானால், சமுதாயத்திற்குத் தன்னா லியன்றவரை தொண்டு செய்துகொண்டிருக்க வேண்டுமானால், அவன் தன்னைப் பலவிதங்களிலும் தகுதிப்படுத்திக் கொள்ளுதல் அவசிய மில்லையா? எப்படி, எப்படி? ஒரு நடிகன், நூலறிவு மிகப் படைத்திருத்தல் வேண்டும்; தனது நாட்டின் புராதனக் கிரந்தங்களில் நல்ல பரிச்சயமும், அவை களிலிருந்து தக்க சந்தர்ப்பங்களில் மேற்கோள்கள் எடுத்துக் காட்டக்கூடிய ஞாபகச் சக்தியும் பெற்றிருத்தல் வேண்டும்; தன் சமகாலத்தில் என்னென்ன புதிய நூல்கள் வெளியாயிருக்கின்றன வென்பதைத்தேடிப் பிடித்து, அவற்றில் நல்ல நூல்கள் இன்னவை என்று தெரிந்தெடுத்து அவற்றைப் படித்து, தன் அறிவை அவ்வப்பொழுது மெருகிட்டுக் கொண்டுவர வேண்டும். நல்ல நூல்களைத் தெரிந்தெடுப்பதென்பதே ஒரு சிரம சாத்தியமான காரியமல்லவா? அதற்கும் ஒரு தகுதி வேண்டுமல்லவா? இந்தத் தகுதியை அவன், ஆரம்பத்திலேயே சுலபமாகப் பெற்றுக் கொண்டுவிட வேண்டும். உலகத்தில் நல்லதுக்காகவே நாம் பிறந்திருக்கிறோமென்ற எண்ணம் யாருடைய நெஞ்சத்தில் நிலைத்திருக்கிறதோ நெஞ்சத்து நல்லம் யாம் என்ற நினைவு யாருடைய அன்றாட வாழ்க்கையில் பரவியிருக்கிறதோ அவருக்கு, நூல்களில் நல்ல நூல்களிவை என்று தெரிந்தெடுத்தல் கஷ்டமாயிராது. இந்த எண்ணம், இந்த நினைவு, ஒவ்வொரு நடிகனுக்கும் இருத்தல் வேண்டும். புராதனக் கிரந்தங்களில் நல்ல பரிச்சயம் இருக்க வேண்டு மென்று மேலே சொன்னோமல்லவா,இவற்றுள் சிறப்பாக, தனது நாட்டின் சரித்திரத்தில் அதிக பரிச்சயம் இருக்கவேண்டுவது ஒரு நடிகனுக்கு மிகவும் அவசியமாகும். முன்னோர்கள், அன்றாட வாழ்க்கையை எப்படி நடத்தி வந்தார்கள், அவர்கள் வாழ்க்கையில் கண்ட உண்மைகளென்ன, அவர்களுடைய நடை, உடை பாவனைகளெல்லாம் எவ்வாறு அமைந் திருந்தன. அவர்கள் காலத்தில் சமுதாயம் எப்படி இயங்கிக்கொண்டு வந்தது, அந்த இயக்கத்தில் எப்பொழுதேனும் கரகரப்பு ஏற்பட்டிருக்கு மானால் அதற்கு என்னென்ன காரணங்கள், அந்தக் கரகரப்பு எப்படி நிறுத்தப்பட்டது முதலியவைகளை ஒரு நடிகன் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன், அவைகளையெல்லாம் தனது நடிப்பில் சரியாகப் பிரதிபலித்துக் காட்ட முடியும். ராமனாக நடிக்கிறவன், ராமாயணத்தை நன்கு படித்துத் தெளிந்திருக்க வேண்டுமென்பதை நாம் சொல்லத் தேவையில்லையல்லவா? நாட்டின் சரித்திரத்தைத் தவிர, நாடக சம்பந்தமான நூல்களையும் ஒரு நடிகன் அதிகம் பயிலவேண்டும். அந்த நூல்கள் எந்த மொழியில் வெளிவந்திருக்குமானாலுஞ் சரி,அவற்றை வாங்கியோ, வாங்கச் செய்தோ படித்தறிய வேண்டும். தனக்குத் தெரியாத மொழியில் வெளி வந்திருக்கும் நூல்களை, அம்மொழி தெரிந்தவர்களைக் கொண்டு படிக்கச் செய்தோ, அம்மொழி தெரிந்தவர்களிடமிருந்து கேட்டோ அவற்றின் சாரத்தைக் கிரகித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக ஒரு நடிகனுக்கு, தனது தாய்மொழியைத் தவிர்த்து வேறு இரண்டு மூன்று மொழிகளேனும் நன்கு தெரிந் திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவனுக்கு, அந்த மொழிகள் மூலம் நாடகக் கலை யானது எங்ஙனம் வளர்ச்சி யடைந்திருக்கிறதென்பதை ஒருவாறு அறிந்து கொள்ளுதல் இயலும். நாடகக் கலைகளைப் பற்றின நூல்களைப் பயின்றிருந்தால் மட்டும் போதாது, அந்தக் கலையில் அனுபவ அறிவும் பெற்றிருக்க வேண்டும். ஒரு நடிகன், உதாரணமாக, அற்புதம், ரௌத்திரம், கருணை, குற்சை, சாந்தம், சிங்காரம், பயம், பெருநகை, வீரம் என்ற ஒன்பது சுவைகளின் பெயர்களை மட்டும் தெரிந்துகொண்டிருந்தால் போதுமா? அவற்றை உரிய இடங்களில் வெளிப்படுத்தத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி வெளிப்படுத்துவதை பார்க்கிறவர்கள் அனுபவிக்கக் கூடிய விதமாக வெளிப்படுத்த வேண்டும். அதாவது, பார்க்கிறவர்கள் உள்ளத்தில் உணர்ச்சி யுண்டாகுமாறு ஒருவன் நடிக்கவேண்டும். அதில்தான் ஒரு நடிகனுடைய சிறப்பு இருக்கிறது. ஒரு நடிகனுக்கு எல்லாச் சுவைகளையும் அபிநயித்துக் காட்டக் கூடிய ஆற்றல் இராது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவையில் திறமை இருக்கும். இது சகஜம். எந்தச் சுவையை நன்கு அபிநயத்துக் காட்டத் தன்னால் முடியுமென்று ஒருவனுக்கு நம்பிக்கை இருக்கிறதோ அந்தச் சுவை பற்றின சகல அமிசங்களையும் அவன் நன்கு தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதனை அடிக்கடி அபிநயித்துப் பார்த்துக் கொள்ளவேண்டும். இப்படிச் சொன்னதனால், தன்னால் முடிந்த சுவையைப் பற்றி மட்டும் தெரிந்துகொண்டு, மற்றச் சுவைகளை மறந்து விடலாம், அதாவது தெரிந்து கொள்ளாமலே இருந்து விடலாமென்பது அர்த்தமல்ல, மற்றச் சுவைகளை அவனால் அபிநயித்துக் காட்டமுடியா விட்டாலும், அவற்றினை அபிநயித்துக் காட்டுகிறவர்களைப் பாராட்டவோ, அவர்களுடைய அபிநயத்தில் குறைகள் காணப்படின் அவற்றினை எடுத்துச் சொல்லவோ அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அறையிலாடிய பின்னரே அம்பலத்திலாட வேண்டுமென்று சொல் வார்கள். இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஒரு நடிகனுக்கு முற்றிலும் பொருந்தும். பகிரங்கமாக ஒரு நாடகத்தை நடத்துவதற்கு முந்தி எப்படி ஒத்திகைகள் பல நடைபெறு கின்றனவோ, அதுபோல, தனிப்பட்ட ஒரு நடிகன், தன்னுடைய குறிப்பிட்ட நடிப்புத் திறனைப் பலர் முன்னிலையில் காட்ட முற்படுவதற்கு முந்தி, தனியாக இருந்து அதில் அபிநயித்து அபிநயித்துப் பயிற்சிபெறல் வேண்டும். ஒரு நடிகன், உலகத்தோடொட்டி வாழ்ந்து உலக இயல்பை அறிதல் வேண்டும். மனிதர்களில் எல்லோருடனும் கலந்து பழகவேண்டும். அப்பொழுதுதான், ஏட்டிலே கண்டதற்கும் நாட்டிலே காண்பதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அவனால் நன்கு அறிந்துகொள்ளமுடியும். அறிந்து கொண்டால் தானே அந்த ஒற்றுமை வேற்றுமைகளைத் தனது நடிப்பிலே கொண்டு வந்து காட்ட முடியும். ஒரு நடிகன், அரசனாகவும் நடிக்கவேண்டியிருக்கும்; ஆண்டியாகவும் நடிக்கவேண்டியிருக்கும். அப்படியானால் அவன் இரு தரத்தினருடைய வாழ்க்கை விவரங்கள், பேச்சு வார்த்தைகள் முதலிய பலவற்றையும் நன்கு தெரிந்து கொண்டிருக்க வேண்டுமில்லையா? ஒரு நடிகனுக்கு மூன்றுவித சக்திகள் இருக்க வேண்டுவது முக்கியம். முதலாவது, ஒன்றைக் கண்டாலுஞ் சரி, கேட்டாலுஞ்சரி, அதை உடனே கிரகித்துக் கொள்ள வேண்டும்; இரண்டாவது, கிரகித்துக் கொண்டதை நன்றாக மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்; மூன்றாவது, மனதிலே பதிய வைத்துக் கொண்டதை,தக்க சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்லும் தைரியமும் தன்னம்பிக்கையும் வேண்டும். இந்த மூன்று சக்திகளோடு நல்ல கற்பனாசக்தியும் வேண்டும் ஒரு நடிகனுக்கு. உரிய வேஷம் தரித்துக் கொண்டு மேடைமீது வந்து நின்றுவிட்டான் நடிகன். நடிக்கவும் ஆரம்பித்துவிட்டான். நடுவில், தான் சொல்லவேண்டிய பாடத்தை மறந்துவிடுகிறான்; அல்லது தன் வேஷத்தில் ஏதோ ஒன்று கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கிறது என்பதைப் பார்க்கிறான். இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் அவன் என்ன செய்ய வேண்டும்? சுற்று முற்றும் பார்த்துக் கொண் டிருக்கலாமா? மேற் கொண்டு பேச்சு வரவில்லையே என்று சும்மா இருக்கலாமா? அல்லது வேஷத்தில் அதிகமாயிருப்பதை அகாரணமாக, சந்தர்ப்பப் பொருத்த மில்லாமல் மேடைமீதிருந்து கொண்டே அகற்றிக் கொண்டிருக்கலாமா? அல்லது குறைவாயிருப்பதைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகத் திடீரென்று உள்ளே சென்று வரலாமா? இப்படியெல்லாம் செய்தால் பார்க்கிறவர்களுக்கு விரசமாகவல்லவோ போய்விடும்? இடப்பொருத்தம், காலப்பொருத்தம், வேஷப்பொருத்தம், மேடை மீதிருக்கும் மற்ற நடிகர் களுடைய நிலைமை இவைகளனைத்தையும் அனுசரித்து அவன் பேசவும் நடந்துகொள்ளவும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இதற்கு நல்ல கற்பனா சக்தி வேண்டுமல்லவா? ஒருவனிடத்தில் நடிப்புத்திறன் இருக்கும் பட்சத்தில், அது பூரண விகாசம் பெற்று விளங்கக்கூடிய காலம், அவனுடைய இருபத்தோரு வயதிலிருந்து ஐம்பது வயது வரையென்று நிர்ணயித்திருக்கிறார்கள் அறிஞர்கள்.அப்படியானால், இருபத்தோரு வயதுக்கு முந்தியாரும் நாடக அரங்கத்தில் வந்து நிற்கக்கூடாதா வென்று வாசகர்கள் கேட்கலாம். அப்படியல்ல,வந்து நிற்கலாம்; நின்று நடிக்கலாம். பிறவியிலேயே ஒருவனுக்கு நடிப்புச் சக்தி இருக்குமானால் அதை யாராலும் அடக்கி வைக்க முடியாது.அஃது எப்படியாவது வெளிப்பட்டுத்தான் தீரும். அதற்கு வயது நிர்ணயமும் இல்லை. ஏழு வயது எட்டு வயதுக் குழந்தைகள் கூச்சமின்றி மேடைமீது வந்து நின்று சொல்லிக் கொடுத்தபடி சொல்லுவதையும் செய்வதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால் இதனாலேயே அந்தக் குழந்தைகளின் நடிப்புத் திறன் பூரண வளர்ச்சி பெற்றுக் பிரகாசிக்க ஆரம்பித்துவிட்டது என்று சொல்லிவிட முடியுமா? முடியாது. அப்படிச் சொல்லவும் கூடாது. அவைகளின் நடிப்புத்திறன் அப்பொழுதுதான் வெளிப் படையாகத் தோன்ற ஆரம்பித் திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அது வளர்ச்சியடைந்து, பலர் மெச்சும் வண்ணம் பொலிய, சில ஆண்டுகள் ஆகுமில்லையா? இதனால்தான் இருபத்தோரு வயதை ஆரம்ப எல்லையாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள் பெரியோர்கள். இருபத்தோரு வயது வரையில் ஒருவன் நடிப்புத் துறையில் பயிற்சி பெறும் மாணாக்கனே. அதற்குப் பிறகுதான் அவனுடைய நடிப்புத் திறன் பூரணப்பொலிவுடன் விளங்கத் துவங்குகிறது. இதைத்தான் நாம் மேலே கூறினோம். சிறு குழந்தைகள் என்ன தான் நன்றாக நடித்தாலும், அந்த நடிப்பை நம்மால் உண்மையில் ரசிக்க முடிகிறதா? சாதாரண ஜனங்களுடன் சேர்ந்து நாம் தலையசைக்கலாம்; கைகொட்டலாம். அது வேறு விஷயம். உண்மையில் அந்த நடிப்பை உணர்ந்து அனுபவிக்க முடிகிறதா என்று தான் கேட்கிறோம். முடியவே முடியாது. காரணம் என்ன? நடிக்கிற குழந்தைகளின் குற்றமா? இல்லவே இல்லை. அவைகளின் நடிப்பில் அழகு இருக்கிறது; இனிமை இருக்கிறது; ஆனால் உணர்ச்சியில்லை. குழந்தை களிடத்தில் உணர்ச்சி இன்னும் அரும்பு விடவில்லை. அப்படியிருக்க அவை உணர்ச்சியுடன் எப்படி நடிக்க முடியும்? அஃது - அந்த உணர்ச்சி-அரும்புவிட்டு மலர ஆரம்பிக்க வேண்டுமானால் அதற்கு இருபத்தோரு வயது ஆகவேண்டும். இதனால்தான் இருபத்தோரு வயது என்று நிர்ணயித்திருக்கிறார்கள் பெரியோர்கள். இதற்கு மட்டுமா? அரசியலில்கூட, ஓட்டுப்போடும் உரிமை பெறுவதற்கு இருபத் தோரு வயது ஆக வேண்டியிருக் கிறதில்லையா? மேற்படி இருபத்தோரு வயதுக்கு முந்தி யாருடைய உணர்ச்சி யேனும் பலவந்தம் காரணமாகவோ, சூழ்நிலை காரண மாகவோ மலருமானால், அந்த உணர்ச்சி விரைவிலே வாடிப் போகும்; அந்த மலர்ச்சியில் வாசனையுமிராது. இது விஷயத்தில் நடிகன் எச்சரிக்கை யுடனிருக்க வேண்டுவது அவசியமாகும். இருபத்தோரு வயது முதல் ஐம்பது வயது வரையென்றால், முப்பது வருஷமாகிறது. இந்த முப்பது வருஷ காலந்தான், ஒரு நடிகனால் நாடகக் கலைக்கு நிஜமானதொண்டு செய்ய முடியும். பொருளையோ புகழையோ பெறுவதெல்லாம் இந்த முப்பது வருஷ காலத்திற்குள் தான். அப்படி யானால் இது முக்கியமான காலமல்லவா? இந்தக் காலத்தில் எப்படி எப்படி இருக்கவேண்டும்? மற்றவர்களுடைய வாழ்க்கையைப் போன்றதன்று நடிகனுடைய வாழ்க்கை; சிறிது மாறுபட்டதென்று சொல்ல வேண்டும். முன்னிரவிலே விழித்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். முற்பகலிலே தூங்கவேண்டி யிருக்கும். மற்றவர்கள் மாலை வேளைகளில் காற்று வாங்கத் திறந்த வெளியில் உலவப் போகையில் நடிகன், அரங்கத்திற்குள்ளே அடைபட்டுக் கிடக்க வேண்டியவனாயிருக்கிறான். இந்த நிலையிலே அவன், தன் உடலை வெகு ஜாக்கிரதையாகப் பாதுகாத்து வரவேண்டியது எவ்வளவு அவசியமென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. உணவு, உறக்கம், இவ்விரண்டிலும் ஒரு நியமத்தை வைத்துக் கொள்ளவேண்டும். இரவில் எவ்வளவு நேரங்கழித்துப் படுக்கைக்குச் செல்ல வேண்டியிருந்த போதிலும், எல்லாரையும்போல் அதிகாலையில் எழுந்து பல் துலக்கி ஸ்நானம் செய்துவிடவேண்டும். குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்யப் பழகிக் கொள்வது நல்லது. அப்பொழுதுதான் உடம்பு உஷ்ணம் குறையும்; கண் எரிச்சல் அடங்கும். ஸ்நானத்தை முடித்துக்கொண்டு லேசாக ஆகாரம் செய்துவிட்டு, நித்திரைக்குச் செல்லலாம். நித்திரைக்கென்று அமைதி யான ஒரு தனியிடத்தை அவன் ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதில் சுமார் மூன்று மணிநேரம் தூங்கினாலும் போதும். அதற்குமேல் தூங்க வேண்டுமென்பது அவசியமில்லை. அண்டை அயலிலுள்ளவர்கள் சுறுசுறுப்பாயிருக்கிற முற்பகல் நேரத்தில் அவன் தூங்கவேண்டிய நிர்பந்தத்திற்குட்பட்டிருப்பதனால், தன்னை மறந்து அவனால் தூங்க முடியாதுதான்; அப்படித் தூங்குவதென்பது சிறிது கடினந்தான். இருந்தாலும், தூக்கம் வராத சமயங்களில், கண்களை நன்றாக மூடிக்கொண்டு படுத்திருத்தல் நல்லது.அப்பொழுதுதான் கண்கள் ஓய்வு பெறும். நடிகனால் பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்புகளில் கண்கள் மிகவும் முக்கியமானவை. கண்ணாடி யணிந்துகொண்டு அவன் நடிக்கக் கூடாதல்லவா? ஆகவே, கண்ணாடி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லாதபடி அவன் கண்களைப் பாதுகாத்து வரவேண்டியது மிக முக்கியம். இங்ஙனம் தூங்கியெழுந்த பிறகு பகலுணவை உட்கொண்டு, அடுத்துத்தான் தான் நடிக்கவிருக்கிற நாடக சம்பந்தமான அலுவல் களைக் கவனிக்க வேண்டும். நடிக்க வேண்டிய பாகத்தை ஒத்திகை செய்து பார்த்துக் கொள்வதோ, பேசவேண்டிய பகுதிகளைப் பாடம் செய்வதோ, மேடையில் தான் அணிய வேண்டிய உடுப்புகளைப்பற்றிச் சிந்தித்து, இன்னின்னவை இன்று தேவை என்று ஒரு பட்டியல் தயாரிப்பதோ, இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் பிற்பகலில் செய்துகொள்ள வேண்டும். நாடகசாலைக்குச் செல்வதற்கு முன்னர், நடிகன் லேசாக ஆகாரம் உட்கொண்டு செல்லவேண்டும். பசியெடுக்கும் நிலையிலுள்ள வயிற்றுடனோ, அல்லது முழு வயிற்றுடனோ செல்லக்கூடாது. இரண்டும், நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்த முடியாதவாறு தடை செய்தல்கூடும். இதே பிரகாரம், நாடக சாலையிலிருந்து திரும்பி வந்த பிறகு லேசாக ஆகாரம் செய்து கொண்டுதான் படுக்கச் செல்லவேண்டும். பார்க்கப் போனால், ஒரு நடிகன், ஆரஅமர்ந்து நல்ல முறையில் சாப்பிடுவதெல்லாம் ஒருவேளை தான். ஒருவேளை சாப்பிடுகிறவர்களை யோகிகள் என்று சொல்வார்கள். உண்மையில் நடிகன் ஒரு யோகிதானே? நாடக சாலைக்குச் செல்லுமுன், நடிகன், நன்றாகக் குளித்து விட்டுச் செல்லுதல் அவசியமாகும்.நாடக மேடை ஒரு தவச்சாலை மாதிரி என்று சொல்வார்கள். அங்கு நடிக்கச் செல்கிறவன், தன்னை மறந்துவிட்டு, எந்தப் பாத்திரமாக நடிக்கிறனோ அந்தப் பாத்திரமாகி விடுகிறான். இப்படியாவதற்கு உடல் தூய்மையும் உள்ளத் தூய்மையும் மிகவும் அவசியமல்லவா? நடிகன் தன் சரீரத்தைப் போலவே சாரீரத்தையும் நன்கு பாதுகாத்து வரவேண்டும். குரலில் கரகரப்பு நடுக்கம் முதலியவை களெல்லாம் உண்டாகாமல் அவ்வப்பொழுது கவனித்து வரவேண்டும். நடிகன் எப்பொழுதும் தூய்மையான, ஆனால் பகட்டில்லாத உடைகளையே அணிந்துகொள்ளல் வேண்டும் நடிகனுக்குப் புறத்தூய்மை மிகவும் அவசியமானதாகும். பார்த்தாரைப் பிணிக்குந் தன்மையதாகிற ஒரு தோற்றத்தையே எப்பொழுதும் நடிகன் கொண்டிருக்க வேண்டும். மற்றும், தான் எந்தப் பாத்திரமாகப் பெரும்பாலும் நடிக்கிறானோ, அந்தப் பாத்திரத்திற்குரிய உடைகள், அணிகள் முதலியவற்றைத் தானே சொந்தமாக வைத்துக்கொண்டிருத்தல் நல்லது.இந்த உடைகளையும் அணிகளையும் கூடிய மட்டில் இரவல் கொடுக்காமலோ, பிறரிடமிருந்து இரவல் வாங்காமலோ இருத்தலும் நல்லது. நடிகன், தன்னைப் பொறுத்த மட்டில் புறத்தூய்மை யுடைய வனாயிருந்தால் போதாது; தான் வசிக்கின்ற இடத்தையும் தூய்மை யுடையதாக வைத்துக்கொள்ள வேண்டும். வசிப்பது ஓர் அறையா யிருந்தாலும் அதனைச் சுத்தமாக வைத்திருத்தலோடு, அதில் வைக்கப் பட்டிருக்கும் சாமான்களில் ஒரு வித ஒழுங்கு, அழகு முதலியன வெல்லாம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நடிகன், சகோதர நடிகர்கள் விஷயத்தில் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது; பொறாமை கொள்ளக்கூடாது; எல்லாரையும் ஊக்குவித்து முன்னுக்கு வருமாறு செய்யவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நடிகன், சிறிதுகூட ஒழுக்கம் தவறாதிருத்தல் வேண்டும். இது விஷயத்தில் அவன் நெருப்புப்போல் இருக்கவேண்டும். ஒழுக்கத்தில் சிறிது சறுக்கல் ஏற்பட்டால்கூட, அவனுடைய கலைத்தொண்டு சோபிதமடையாது. ஒழுக்கம் தவறியவன், உண்மைக் கலைஞனாகான். கடைசியாக நடிகன், பணத்தையே பெரிதாகக் கருதாமல், கலை வளர்ச்சியிலேயே நாட்டமுடையவனாயிருக்க வேண்டும். பணம் தேவைதான்; பணத்தைச் சம்பாதிக்க வேண்டியதுதான். பணத்திற்காகக் கலையென்றிருக்கக் கூடாது; கலைக்காகப் பணம் என்றிருக்கவேண்டும். 4. ஆசிரியன் அறிவு, பலதுறைப்பட்டது. ஏட்டிலுள்ள எழுத்தைப் படிப்பது மட்டும் அறிவாகாது. கல்லிலே உளியால் எழுத்தைச் செதுக்குவதும் அறிவு தான்;அதில் உருவம் சமைப்பதும் அறிவுதான்; கிழிந்த சட்டைக்கு ஒட்டுப் போடுவது முதல் காட்டுப் பொருள்களைக் கண்டு தெளிவது வரை எல்லாம் அறிவுதான். இதனாலேயே அறிவுக்கு எல்லையில்லை என்று கூறிப்போந்தனர் பெரியோர். ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு துறையில் ஆற்றல் மிகுந் திருப்பதைக் காண்கிறோம். காரணம் அந்தத்துறை பற்றின அறிவு அவனுக்குப் பிறவியிலேயே அமைந்திருப்பதுதான். இந்த இயற்கை யறிவை வளர்த்துக் கொடுக்கிறவன் யாரோ அவன்தான் ஆசிரியன். பொன்னை உருக்கி நகை செய்யக் கற்றுக் கொடுக்கும் தட்டானும் ஆசிரியன்தான்;தெருத் திண்ணையில் உட்கார்ந்து பாடஞ்சொல்லிக் கொடுக்கிறவனும் ஆசிரியன்தான். சுருக்கமாக யாரெல்லாம், ஆற்றி லுள்ள ஊற்றைப்போல், சுரங்கத்திலுள்ள பொருளைப் போல், மனிதனிடத்தில் அடங்கியிருக்கும் அறிவை மேலுக்கு கொண்டு வருகிறார்களோ அவர்களெல்லாம் ஆசிரியர்கள்தான். அறிவு பல துறைப்பட்டதுபோல் அறியாமையும் பலதுறைப் பட்டது. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறதென்று சொல்ல முடியாதல்லவா? ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதமான அறியாமை குடிக்கொண்டிருக்கிறது. மேதாவியான விஞ்ஞானிக்கு, ஒரு மோட்டார் வண்டியைத் திறம்பட ஓட்டத் தெரியாதிருக்கலாம். திறம்பட்ட ஒரு மோட்டார் ஓட்டிக்கு காலால் அளந்து காலத்தைக் கணிக்கத் தெரியாதிருக்கலாம். இப்படி ஒரு துறையில் அறிஞனாயிருக்கிறவன் மற்றொரு துறையில் அறியாதவனாயிருக்கிறான். அவனுக்கிருக்கிற அந்தத் துறை பற்றின அறியாமையை எவனொருவன் அகற்றி விடுகிறானோ அவனும் ஆசிரியன்தான். தோட்டத்தில் விதையூன்றுகிறவனும் தோட்டக்காரன்தான்; ஊன்றின விதைக்குத் தண்ணீர் ஊற்றி அதைச் செடியாக வளர்க் கிறவனும் தோட்டக்காரன்தான்; களைபிடுங்கி உரமிடுகிறவனும் தோட்டக் காரன்தான். ஆனால் இந்த ஒவ்வொரு வேலையைச் செய்ய ஒவ்வொரு தோட்டக்காரன் இருப்பதில்லை. ஒருவனே இந்தப் பல வேலைகளையும் செய்கிறான். அதுபோல, அறியாமையைப் போக்குகின்ற ஆசிரியன் வேறே, அறிவை வளர்க்கின்ற ஆசிரியன் வேறே என்று இருப்பதில்லை. அழித்தால்தான் ஆக்க முடியு மென்பதுபோல, ஆக்குவதற்கு அழிப்பது அவசியமாவதுபோல், அறியாமையை அப்புறப்படுத்தினால் தான் அறிவை வளர்க்க முடியும். அறிவு வளர்வதற்கு,வளம் பெறுவதற்கு, அறியாமையை விலக்க வேண்டியது அவசியமாகிறது. விலக்குவது ஒரு தொழில், வளர்ப்பது ஒரு தொழில் என்றாலும் இரண்டையும் செய் கிறவன் ஒருவனாகவே இருக்கிறான். எனவே, ஆசிரியத் தொழில் இருவகைத்தென்று சொல்லலாமாயினும் ஆசிரியன் ஒருவனே. இங்கு மூவகை ஆசிரியன்மாரைப்பற்றிப் பிரஸ்தாபிக்க விரும்பு கிறோம். ஒரு வகையினர் பத்திரிகாசிரியர்; இன்னொரு வகையினர் நூலாசிரியர்; பிறிதொரு வகையினர் போதகாசிரியர். இந்த ஒவ்வொரு வகையினரையும் மூன்று வகையினராகப் பிரித்துச் சொல்லலாம். பத்திரிகாசிரியர்களில், தினசரி,வாரப்பத்திரிகைகளில் பணிபுரிவோர் ஒரு வகையினர்; மாத, மும்மாத சஞ்சிகைகளில் அலுவல் பார்ப்போர் ஒரு வகையினர்; பொதுவாகப் பத்திரிகைகளுக்கு அவ்வப்பொழுது விஷயதானஞ் செய்து வருகிறார்களே அவர்கள் ஒரு வகையினர். இவர்களையும் பத்திரிகாசிரியர் குழாத்திலேயே சேர்த்துக் கொள்கிறோம். நூலாசிரியர்களில், மொழிபெயர்க்கிறவர்களென்றும், பொழுது போக்குக்காக எழுதுகிறவர்களென்றும், நிதானமாகச் சிந்தித்துப் படிக்க வேண்டிய நூல்களை எழுதுகிறவர்களென்றும் இப்படி மூவகையினராகப் பிரிக்கலாம். போதகாசிரியர்களில், ஆரம்ப நிலைப்பள்ளி ஆசிரியர் களென்றும், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களென்றும், கல்லூரி ஆசிரியர் களென்றும் மூவகையினர் என்று கூறலாம். இந்தப் பிரிவினைகள் என்று முள்ளவையென்றோ, இவைதான் சரியானவையென்றோ நாம் சாதிக்க வில்லை. கொடுக்கின்ற உழைப்பிலும், பெறுகின்ற ஊதியத்திலும் ஒருவருக் கொருவர் வித்தியாசப்பட்டவர்களாக இருக்கிறார் களென் பதற்காக இப்படிப் பிரித்துக் காட்டினோமே தவிர வேறொன்றுக்குமில்லை. ஒவ்வொரு வகையினருக்குமுரிய பொறுப்பும் கடமையும் ஒன்றாகவே இருக்கின்றன. உதாரணமாக, தினசரிப் பத்திரிகைகளில், காலந்தான் முக்கியம். இந்த மணிக்குள் இது முடிந்தாக வேண்டுமென்ற துரித காலத்திலேயே இங்கு வேலை செய்யவேண்டும். காலமும் வேகமும் முக்கியத்துவம் பெற்றுவிடுவதால், எழுத்துப் பிழை, கருத்துப்பிழை முதலியவற்றை அலட்சியமாகப் புறக்கணித்துவிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இன்று தவறினால் நாளை திருந்த இங்குச் சந்தர்ப்பம் உண்டு. தவறு தலுக்காக யாரும் வருந்தப் போவதில்லை; அப்படியே, திருத்தத்திற்காகச் சந்தோஷப்படப் போவதுமில்லை; மற்றும், சுயசிந்தனைக்கோ, சொந்த அபிப்பிராயங்களை வெளியிடுவதற்கோ தினசரிப் பத்திரிகைகளில் அதிகமான சந்தர்ப்பங்கள் கிடையா. ஆனால் வெகு சீக்கிரத்தில் யந்திரங்கள் மாதிரியாகிவிட அதிகமான சந்தர்ப்பங்கள் உண்டு. கிடைத் ததைக் கொடுத்து விட்டோமென்று திருப்திகொள்ள இங்கு இடமுண்டு. எதைக் கொடுத்தோம், எப்படிக் கொடுத்தோம், விளைவு என்னவாகும் என்பவைகளைப்பற்றி அதிகமாகச் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மாதப் பத்திரிகைகளில், கடிகாரத்தின்மீது கண் செலுத்திக் கொண்டிருக்க வேண்டாம்; கொடுக்கின்ற விஷயத்தின்மீது அதிக மாகக் கருத்துச் செலுத்தவேண்டும். வாசகர்களுக்கு எதைக் கொடுத்தால் ருசிக்கும் என்பதில் கவனஞ் செலுத்த வேண்டியதுதான்; ஆனால்அதைக் காட்டிலும் எதைக் கொடுத்தால் வாசகர்களுக்கு நல்லது என்பதில்தான் அதிக கவனஞ் செலுத்த வேண்டும். அதாவது நல்லதைச் சுவை தரத்தக்க முறையில் கொடுக்க வேண்டும். இதில்தான் ஒரு மாசிகையின் ஆசிரியனுடைய திறமையெல்லாம் இருக்கிறது. இன்றைய வேலை இன்றோடு முடிந்தததென்று நிம்மதியுடன் இவன் - மாசிகையின் ஆசிரியன் - வீட்டுக்குச் செல்லமுடியாது; ஆனால் நிம்மதியாகச் சிந்திக்க இடமுண்டு; வசதியுண்டு; சிந்தித்ததைத் தெளிவாக்கி வாசகர்களுக்குக் கொடுக்கச் சந்தர்ப்பமுண்டு. இது சிறந்த சேவையல்லவா? பத்திரிகைகளுக்கு அவ்வப்பொழுது விஷயதானஞ் செய்கிறவர் களை, எழுத வேண்டுமென்ற ஆசை உந்த எழுதுகிறவர் களென்றும், பணத்திற்காக எழுதுகிறவர்களென்றும், அன்றாட நிகழ்ச்சிகளைக் குறித்து தினசரிப் பத்திரிகைளில் ஏகதேசமாக எழுதகிறவர்களென்றும், இப்படிப் பல தரத்தினராகப் பிரிக்கலாம். ஆனால் இந்தப் பிரிவினை இங்கு நமக்குத் தேவையில்லை. பொதுவாக இவர்கள், விரும்பியதை எழுதும் சுதந்திர முடையவர்கள்; ஆனால் வெளியிடுகின்றவர்களுடைய விருப்பத்தை அனுசரித்து எழுத வேண்டுமென்ற கட்டுப்பாட்டுக்குட் பட்டவர்கள். ஆக, இந்த மூன்று வகையினரும் பத்திரிகாசிரியர்கள்தான். இவர்கள், தங்கள் தொழில் துறையில் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகளை வகுத்துக் கூற விழைகிறோம். 1. உள்ளத்தை உள்ளவாறு சொல். உனது கற்பனைத் திறனை அதில் புகுத்தாதே. 2. இனப்பற்று, சமயப் பற்று முதலிய பல்வேறு பற்றுக்கள், உன் எழுத்திலே புகுந்து அதன் நேர்மையைக் குலைத்துவிடுமாறு செய்யாதே. 3. பொதுநலமொன்றே உன் எழுத்தின் குறிக்கோளாயிருக்கட்டும். 4. வேற்றுமைகளை விரிவுபடுத்திக் காட்டாதே; ஒற்றுமையை வலுப்படுத்தி வைக்கிற வகையில் எழுது. 5. வகுப்பு, சமயம், மொழி, நிறம், பொருளாதாரநிலை, சமூக அந்தஸ்து, இப்படிப்பட்டவற்றினை அடிப்படையாகக் கொண்டு எழும் பூசல்கள், பிணக்குகள் முதலியன. தலைதூக்கி நிற்கின்ற காலத்தில் உன் எழுதுகோலை நிதானமாக ஓட்டு; தன்னடக்தைக் கவசமாக அணிந்து கொள். 6. பகிரங்கப்படுத்தக் கூடாதென்ற நிபந்தனையின் மீது உன்னிடம் சில அந்தரங்கமான செய்திகள் சொல்லப்படுமானால், அந்த நிபந்தனையை எந்தக் காரணத்தை முன்னிட்டும் மீறி நடக்காதே. அப்படி ஒரு தடவை நடந்தாலும் போதும், உன் மீது வைக்கப் பட்டுள்ள நம்பிக்கை பூராவும் அகன்றுவிடும். 7. நீ கொடுக்கிற செய்திகளுக்கும் அறிவிக்கிற அபிப்பிராயங் களுக்கும் முழுப் பொறுப்பையும் நீயே ஏற்றுக் கொள்ள வேண்டும். இது விஷயத்தில் நீ சிறிது கூடப் பின்வாங்கக் கூடாது. 8. பத்திரிகாசிரியன் என்ற முறையில் உனக்கு ஓர் அந்தஸ்து கொடுக்கப்படுகிறது; சில சலுகைகளும் காட்டப்படுகின்றன. இந்த அந்தஸ்தையோ, சலுகைகளையோ, உன் தொழிலுக்குப் புறம்பான விஷயங்களுக்காக உபயோகப்படுத்தாதே. இந்த மாதிரி சில நியமங்களைக் கடைப்பிடிக்கின்ற ஒரு பத்திரிகாசிரியனுடைய வாழ்க்கை என்றும் பொலிவுடன் இலங்கும். அடுத்தது நூலாசிரியர் குழாம். இவர்களுள் மொழி பெயர்ப் பாசிரியர்களுடைய வேலை அதிக கஷ்டமானது; அதிக பொறுப்புடையது; ஆனால் குறைந்த பாராட்டுதலைப் பெறுவது. கிடைக்கும் ஊதியமும் குறைவுதான். எனினும் சொந்த மகிழ்ச்சிக் காகவும் சுய திருப்திக்காகவுமே ஓர் ஆசிரியன் இந்தப் பணியில் ஈடுபடுகிறான்; இந்த நோக்கோடுதான் ஈடுபடவேண்டும். மொழி பெயர்க்கும் ஆசிரியன், எந்த மொழியினின்று பெயர்க் கிறானோ அந்த மொழியிலும், எந்த மொழியில் பெயர்க் கிறானோ அந்த மொழியிலும் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டும்; அந்த மொழிகளின் பண்பாடு பூராவையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்; அந்த மொழிகள் பேசுவோரின் உளப்பாங்கு, நாகரிக வாழ்க்கை முதலிய அனைத்தினையும் செவ்வனே உணர்ந்திருக்கவேண்டும். எழுத்துக்கு எழுத்தென்பது மொழிபெயர்ப்பாகாது. மூலத்திலுள்ள கருத்தைக் கொணரவேண்டும். அது மட்டும் போதாது. அந்தக் கருத்துக்கு அடிப்படையிலுள்ள பாவத்தையும் கொண்டுவரவேண்டும். அதாவது மூலத்தைப் படிக்கிறபோது என்ன உணர்ச்சி உண்டாகிறதோ, என்ன மாதிரியான அனுபவத்தை அடைகிறோமோ, அந்த உணர்ச்சி, மொழி பெயர்ப்பை படிக்கிறபோது உண்டாக வேண்டும்; அந்த மாதிரியான அனுபவத்தை அடைய வேண்டும். ஆனால் இது சாத்தியமில்லையென்று சொல்வார்கள். இஃது ஓரளவுக்கு உண்மையே. ஆயினும் முடிந்த மட்டில் மொழிபெயர்ப்பாசிரியன் முயலவேண்டும். இதில் எந்த அளவுக்கு இவன் வெற்றி பெறுகிறானோ அந்த அளவுக்கு இவனுடைய பெயர் நீடித்தும் நிலைத்துமிருக்கும். பொழுது போக்காக எழுதுகிற நூலாசிரியர்களென்று சொன்னோம். இவர்களென்னவோ பொழுது போவதற்கு உபயோகப்படும் என்று கருதி நூல்கள் எழுதுவதில்லை; நல்ல சிருஷ்டிகள், நல்லதையே உண்டு பண்ணுமென்று கருதியே எழுதுகிறார்கள். ஆயினும் இவை பொழுதைக் கழிப்பதற்கென்றே உபயோகப்படுகின்றன. பொழுது எப்படி வேண்டு மானாலும் கழிந்துவிடும். ஆனால் அதை நல்ல விதத்தில் உபயோகிக்க வேண்டாமா? வாழ் நாளின் ஒவ்வொரு கணத்திலும் நாம் உயர்ந்து கொண்டு போகவேண்டாமா? இங்ஙனம் உயர்த்திக்கொடுக்கின்ற பொழுது தான் நல்ல பொழுது. அந்தப் பெழுதை இனிமையாக்கிக் கொடுக்கின்ற வண்ணம் ஒரு நூல் இருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான நூல்கள் பொழுதைக் கழிப்பதற்கே துணை செய்வனவாயிருக்கின்றன. உலகத்துப் பல்வேறு மொழிகளிலும் இதுகாறும் புத்தக வடிவில் வெளிவந்திருக்கும் நூல்களனைத்தையும் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்துப் பார்த்தால் குறைந்த பட்சம் ஐந்து மைல் உயரமிருக்குமென்று வைத்துக் கொள்வோம். இதில் அரைக்கால் மைல் உயரமுள்ள புத்தகங் களாவது நல்ல புத்தகங்களாக, மனித வாழ்க்கையை உயர்த்திக் கொடுக்கக்கூடிய நூல்களாக இருக்குமா? இராதென்றுதான் தோன்று கிறது. உலகத்திலேயே மிகச் சிறந்த நூல்களென்றும், என்றும் நிலைத் திருக்கக் கூடியவையென்றும் சொல்லத் தகுந்தவை மொத்தம் நூறு மட்டுமேயென்று அறிஞர்கள் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். நூறு என்பது குறைவான எண்ணிக்கை என்று தோன்றினால் ஆயிரம் அல்லது பதினாயிரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி வைத்துக் கொண்டாலும், மொத்த நூல்களில் நல்ல நூல்கள் எத்தனை சதவிகித மிருக்கு மென்று, வாசகர்களே, நீங்களே கணக்குச் செய்து பாருங்கள். பொழுது போக்குக்காகப் புத்தகங்கள் எழுதுகிறவர்களுக்கு ஓர் அனுகூலம் உண்டு. சீக்கிரத்திலேயே பணம், புகழ் இரண்டும் கிடைத்து விடலாம்; கிடைத்தும் விடும். ஆனால் இவை சாசுவதமா யிருக்குமா வென்பதுதான் கேள்வி. மின்மினிப் பூச்சிபோல் இவர்கள் சிறிதுகாலம் பிரகாசத்தைக் காட்டிவிட்டு மறைந்து போவார்கள். ஆனால் இவர்கள்தான் பெரும்பாலோராக, பாதிக்கு மேற்பட்டவராக இருக்கிறார்கள். இதனாலேயே இவர்களைப் பற்றித் தனியாக பிரஸ்தாபிக்க முற்பட்டோம். நிதானமாகச் சிந்தித்துப் படிக்க வேண்டிய நூல்களை எழுது கிறவர்களுக்குச் சிரமங்கள் அதிகம். எழுதுவதற்காகப் படும் சிரமங்கள் மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கை நடத்துவதற்காகப் படும் சிரமங்கள் அதிகம். இவைகளுக்கு ஈடு செய்கின்ற வகையில் இவர்களுக்குப் புகழும் சீக்கிரத்தில் கிடைப்பதில்லை. தங்களுக்கு எதிர்காலமொன்றுண்டு என்ற நம்பிக்கையில்தான் இவர்கள் நிகழ்காலத்தைக் கடத்துகிறார்கள். ஆயினும் இவர்களால் எழுதாமலிருக்க முடியாது. இவர்களுடைய எழுத்துகள்தான், மக்களுக்கு உய்யும் வழியைக் காட்டுகின்றன. பொதுவாக, பத்திரிகாசிரியர்களோ, நூலாசிரியர்களோ அனைவரும் எழுத்தாளர் என்னும் பெருங்குழுவின் அங்கத்தினரே. இவர்கள் தாங்கும் ஆயுதம் எழுதுகோல் ஒன்றுதான். அஃதில்லை யானால் இவர்களுக்கு வாழ்க்கையே இல்லை. எனவே அதனைச் சர்வ ஜாக்கிரதையுடன் உபயோகிக்கவேண்டும். அப்படிக்கின்றி அது போகும் வழியிலேயே விட்டு விட்டால், அரசனுடைய செங்கோல் கோணினால் என்ன தீமை உண்டாகுமோ அதைக் காட்டிலும் அதிகமான தீமை உண்டாகும். எழுத்தாளனே! எச்சரிக்கை! படிப்பது ஒரு கலையென்று சொல்வார்கள். சரி; எழுதுவது? அதைக் காட்டிலும் கடினமான கலை. இதில் சந்தேகமே வேண்டுவதில்லை. எப்படியென்றால், படிக்கிறவன், தன்னுடைய திருப்திக்காக மட்டும் படிக்கிறான். எழுதுகிறவனோ, தன்னுடைய திருப்திக்காகவும் எழுது கிறான்; அதே சமயத்தில் படிக்கிறவர்களைத் திருப்தி செய்ய வேண்டிய வனாகவுமிருக்கிறான். அவர்களைத் திருப்தி செய்விப்பதென்பது, அவர்கள் இவனுடைய எழுத்தைப் படித்ததன் பயனாக உயர்வு பெறு கிறார்களே, அந்த உயர்வினால் அடைகிற ஒரு திருப்தியையே குறிப்ப தாகும். பிறர் திருப்திக்காகவும் உயர்வுக்காகவும் ஆக்கப்பெறும் கலை எதுவா யிருந்தாலும் அது கடினமானது தானே? இதனாலேயே படித்தவர்களெல்லாரும் எழுத்தாளர்களாக முடிவதில்லை. ஒருவன் நன்றாகப் படித்திருக்கலாம்; ஆனால் படித்ததைப் பிறருக்கு விளங்கும்படி எடுத்துச் சொல்ல முடியாதவ னாயிருக்கலாம். சொல்லும் திறமை படைத்தவன், சொன்னபடி எழுதத் தெரியாதவனாயிருக்கலாம். எனவே, படிப்பது, பேசுவது, எழுதுவது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலை. இம்மூன்றிலும் ஆற்றல் மிக்கார் ஒரு சிலரேயாவர். எழுத்தாளன், பெரும்பாலும் மௌனமாக இருந்தே தன் கடமையைச் செய்ய வேண்டியவனாக இருக்கிறான். மௌனத்திலே தான் இவனுடைய எண்ணங்கள் குவிகின்றன; கற்பனை வளர்கிறது; அகக்கண் திறக்கிறது; உலகத்தையும், காலத்தையும் காண்கிறான்; எழுதுகோல் நகர்கிறது. இதனால் இவனைப் பார்க்கிறவர்கள், சுலபமான காரியத்தை யல்லவோ இவன் செய்து கொண்டிருக் கிறான் என்று சுலபமாகக் கருதிவிடுகிறார்கள். உண்மையில் எழுத்தாளனைப்போல் உழைக் கிறவன் வேறெவனுமில்லை. ஒரு மணி நேர மூளை உழைப்பு, எட்டு மணி நேர உடலுழைப்புக்குச் சமானமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே இவன் இரக்கப்படுதற்குரியனே தவிர பொறாமைப் படுதற்குரியனல்லன். எழுத்தாளன், ஓயாது சிந்திக்கிறான்; அடிக்கடி உணர்ச்சி வசப்படு கிறான்; பெரும்பாலும் உட்கார்ந்தே தன் பணியைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் இவனுக்கு ஏற்படுகிறது. அன்றாட வாழ்க்கைத் துன்பங்கள் வேறே. கேட்பானேன், நரை, திரை, மூப்பு மூன்றும் இவனை விரைவிலே வந்தடைவதற்கு? சாதாரணமாக ஓர் எழுத்தாளனுடைய வயதைப் பற்றிக் குறிப்பிடுகிறபோது, இருபது வயதைக் கூட்டியே பார்க்க வேண்டுமென்று சொல்வார்கள். அதாவது ஐம்பது வயதடைந்த எழுத்தாளன், எழுபது வயதானவனைப் போலாகி விடுகிறான் என்பதே தாத்பரியம். முதலாவது, கண்பார்வை மங்குகிறது; முதுகு கூன் விழுகிறது; ஜீரணக் கோளாறு ஏற்படுகிறது; நரம்புத் தளர்ச்சிக்குத் சொல்லத் தேவையில்லை; இரவில் நிம்மதியான நித்திரையென்பது அறவே இல்லாதொழிகிறது. மூலம், இருமல், வாதம் இப்படி ஏதேனும் ஒரு நோய் இவனை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டு விடுகிறது. மருந்துக்கு அடிமையாகிறான்; அல்லது மனவேதனைக்கு இரையாகிறான். இலக்கிய உலகில் பிரசித்தியடைந் திருக்கிற எந்த ஓர் எழுத்தாள னுடைய வாழ்க்கை வரலாற்றை வேண்டு மானாலும் எடுத்துக் கொண்டு பாருங்கள், ஏதோ ஒரு வியாதி யினால் அவன் அவஸ்தைப் பட்டிருப்பதை நன்கு காண்பீர்கள். ஆதலின் எழுத்தாளனே, ஜாக்கிரதை! உடலுக்கு ஊறு உண்டாகாத படி உனது அன்றாட வாழ்க்கை முறையை, வேலைத் திட்டத்தை அமைத்துக்கொள். சிந்திப்பது, படிப்பது, எழுதுவது இவைகளைத் தவிர, பொழுது போக்குக்காக ஏதேனும் ஒர் அலுவலை ஏற்படுத்திக்கொள். அந்த அலுவல், உன் மனதுக்கு ஓய்வு கொடுப்பதாயிருக்கட்டும்; உன் மூளையைக் குளிர்விப்பதா யிருக்கட்டும்; பிறர்க்குப் பயன்படுவதா யிருந்தால் மிக விசேஷம். கிரேக்கப் பெருமகனாகிய ஸாக்ரட்டீஸ்1, சிந்தனை உலகத்திலேயே சதா வாழ்ந்து கொண்டிருந்தான்; பிறருடைய அறிவைத் தூண்டி விடுவதையே தனது பெரும்பணியாகக் கருதிச் செய்து வந்தான். அவனுக்குக்கூட, சிறிது நேரமேனும் சிந்தனை உலகத்திலிருந்து வெளி வந்திருக்க வேண்டுமென்ற விருப்பம் தோன்றும். அப்பொழுது, ஆத்தென்ஸ் நகரத்திலுள்ள ஏதேனுமொரு விளையாட்டு மைதானத் திற்குச் செல்வான்;அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மரக்குதிரை களொன்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்வான். ஓடாத குதிரை அது; அதனை விடாமல் ஓட்டுவான். பரம ஞானியான அவன் பாலகனைப் போல விளையாடினான். இந்த விளையாட்டு வேண்டாத போழ்து, இசைக் கருவியொன்றை எடுத்து வாசித்துக் கொண்டிருப்பான். ஸாக்ரட்டீஸின் சீடனான பிளேட்டோவும்2 இப்படித்தான்; பொழுது போக்குக்காகவும், அதே சமயத்தில் உடல் நலத்தைப் பேணுகின்ற முறையிலும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுவான்; எல்லாவித விளையாட்டுக்களும் அவனுக்குத் தெரிந்திருந்தன. தோட்ட வசதியுள்ள எழுத்தாளன், தோட்டத்திலே இறங்கிச் சிறிது நேரம் வேலை செய்யலாம். இயற்கையோடு உறவு கொள்வதற்கும், உடற்பயிற்சிக்கும் இதைக் காட்டிலும் சிறந்த மார்க்கம் வேறொன்று மில்லை. எவன் செடிகொடிகளோடு உறவு கொள்கிறானோ அவன் ஆத்ம சுத்தியடைகிறானென்பர் அறிஞர். தோட்ட வசதியில்லாத எழுத்தாளன், காலையிலோ, மாலை யிலோ, இரண்டு வேளைகளிலுமே உலவிவிட்டு வரலாம். தினந் தோறும் சிறிது தூரமேனும் நடந்துவிட்டு வருகிறவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கிறதென்பர் வைத்திய நிபுணர்கள். எப்படியோ ஓர் எழுத்தாளன், கடல், மலை, ஆறு, திறந்த வெளி இவற்றுள் ஏதேனுமொன்றுடன் சிறிது காலமேனும் தொடர்பு இருக்கும் படியான சந்தர்ப்பத்தை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். எழுதுவதற்கு உற்சாகந் தருபவையென்று சொல்லி ஓர் எழுத்தாளன், மதுபானம், புகையிலையை ஏதோ ஒரு விதமாக உபயோகித்தல், அடிக்கடி வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொள்ளுதல், அளவுக்கு மிஞ்சி காபி குடித்தல் முதலிய பழக்கங் களில் ஈடுபடக்கூடாது. இவைகளினால் ஆரம்பத்தில் சிறிது உற்சாகம் உண்டாகலாம்; எழுதுகோலும் சிறிது வேகமாக ஓடலாம். ஆனால் பின் விளைவு விபரீத மாயிருக்கும்; நரம்புத் தளர்ச்சி முதலிய சில தீராத வியாதிகளிலே கொண்டுபோய்விடும்.சுருக்கமாக, ஐம்புலன்களும் விரைவிலே சக்தி குன்றும். இவைகளினின்று தடுத்துக் கொள்வது ஓர் எழுத்தாளனுடைய இன்றியமையாத கடமையாகும். ஓர் எழுத்தாளனுக்கு இன்றியமையாத சில தகுதிகள் தேவை. இவற்றை அவன் முனைந்து சம்பாதித்துக் கொள்ளவேண்டும். முதலாவது, படிப்பிலே ருசி தேவை. எழுத்தாளனைப் பொறுத்த மட்டில்,படிப்பு என்பது முடிவடைவதேயில்லை. படித்துக் கொண்டிருக் கிறவன்தான் எழுதிக் கொண்டிருக்க முடியும். தான் எந்த மொழியில் நூல்களெழுதுகிறானோ அந்த மொழியிலுள்ள பண்டைய இலக்கியங் களில் அவன் நல்ல பரிச்சயம் பெற்றிருக்கவேண்டும். அவற்றைச் சிறிது காலம் இடைவிட்டு இடைவிட்டுப் படித்தால் புதிய புதிய கருத்துக்கள் தோன்றும். இதனை அவன் அனுபவத்தில் நன்கு காணலாம். இங்ஙனம் காண்பது அவன் எழுத்துக்கு மிகவும் பயன்படும். அடுத்தபடி ஓர் எழுத்தாளனுக்கு உலக அனுபவம் மிகத் தேவை. இதற்காக அவன் எதையும் கூர்ந்து காண்கிற சக்தியையும், கண்டதை மனதிலே பதிய வைத்துக் கொள்கிற சக்தியையும், நல்லோரிணக்கம் பெற்று அவர்களிடமிருந்து பல விஷயங்களைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலையும், தனக்குப் புறத்தியாயுள்ள சமயத்தினர், இனத்தினர், நாட்டினர் இப்படிப் பட்டவர்களுடைய பழக்கவழக்கங்கள், பண்பாடு முதலியவற்றை அறிந்து பாராட்டும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். வயது ஆகஆக அனுபவம் தானே வரும் என்று சிலர் கூறக் கூடும். இஃது அவ்வளவு சரியன்று. வயதுக்கும் அனுபவத் திற்கும் சம்பந்தமே இல்லை. வயது முதிர்ந்தவர்களெல்லோரும் அனுபவம் மிகுந்தவர்கள் என்று சொல்ல முடிகிறதா? இல்லையே. மேற் சொன்ன பண்புகளை எவ்வளவுக்கெவ்வளவு ஒருவன் விரைவில் வளர்த்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவன் அனுபவசாலி யாகிறான். எழுத்தாளனுக்கு உள்ளத்தூய்மை தேவை. நல்ல உள்ளத்தி லிருந்துதான் நல்ல கருத்துக்கள் உதயமாகும். இந்தக் கருத்துக்களைப் பலருக்கும் சொல்ல வேண்டுமென்ற ஆவலும் அவனுக்கு உண்டாகும். ஆவலுடன் தன்னம்பிக்கையும் பெறுவான். தன்னம்பிக்கையுள்ள எழுத்தாளன்தான் தன் கருத்துக்களைத் திடமாகத் தெரிவிக்க முடியும்; தெளிவாகவும் சொல்ல முடியும். எழுத்தாளனுக்குத் தன்னம்பிக்கைக்குச் தன்னடக்கமும் தேவை. தன்னுடைய எழுத்தின் தரம் எப்படி, அதை அறிஞர்கள் எப்படி மதிக்கின்றனர் என்பவைகளைப் பற்றிச் சிறிதுகூடப் பொருட்படுத்தாமல் எழுதிவிட்டோமென்ற ஒரு திருப்தியில் எழுத்தாளன் மூழ்கிக் கிடப்பானாகில், அவன் வெகு சீக்கிரத்தில் கிணற்றுத் தவளையோடு போட்டிக்கு நிற்கவேண்டியதுதான்; அகந்தையின் இருப்பிடமுமாவான். அவன்,தனது எழுத்துக்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் காட்டுவதிலே தான் முனைவான்; அந்த எழுத்துக்களிலும் ஒரே மாதிரியான கருத்துக் கள்தான் வெவ்வேறு குரலில் ஓசைப்பட்டுக் கொண்டிருக்கும். சிநேக முறையில்கூட தகுதியற்றவனாகக் கருதப்பட்டு ஒதுக்கிடம் பெறுவான். இந்த நிலைக்கு இறங்கிவிடாமல் ஓர் எழுத்தாளன் தற்காத்துக் கொள்ளவேண்டும். எழுத்தாளனுக்குப் பொறுமை மிகத் தேவை. ஒரு நூலை எழுதுகிற காலத்தில், அது சம்பந்தமாக வேறு பல நூல்களைப் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்; குறிப்புக்களும் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்; அறிஞர் சிலரையணுகி அநேக ஆலோசனைகளைக் கேட்க வேண்டி யிருக்கும். இவைகளுக் கெல்லாம் பொறுமை தேவையல்லவா? நிதானம் அவசியமல்லவா? சரியோ, தவறோ, மனதில் பட்டதை எழுதிவிடுவோ மென்று ஓர் எழுத்தாளன் முனைவானாகில், அவனுடைய எழுத்து விமர்சனத்தராசுக்கு வராது; நிகழ்கால மதிப்பைக்கூட பெறாது. மற்றும் ஓர் எழுத்தாளன், எடுத்த எடுப்பிலேயே என்னுடைய எழுத்து அச்சில் வரவேண்டுமென்று ஆவல் காட்டக்கூடாது. வந்தால் விசேஷந்தான். வராவிட்டால் சோர்வோ, ஏக்கமோ கொள்ளக்கூடாது. எழுதி எழுதிப் பழக வேண்டும். பழகி வந்த எழுத்தென்பது அதன் நடையிலேயே தெரியும். அது தெள்ளத்தெளிவான நடையாயிருக்கும். அந்த நடை கைவரும் வரை ஓர் எழுத்தாளன் எழுதி எழுதிப் பழகியேயாக வேண்டும். எதற்கும் பொறுமை வேண்டுமல்லவா? எழுத்தாளன், எந்த மொழியில் எழுதுகின்றானோ அந்த மொழியின் மரபு என்ன, காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் சொல் வழக்குகள் எப்படி மாறுபாடடைந்து வந்திருக்கின்றன, ஒரே மொழி எந்தெந்த பகுதியில் எந்தெந்த மாதிரி பேசப்படுகிறது இப்படிப் பலவற்றையும் நன்கு அறிந்திருக்க வேண்டும். உதாரணமாகத் தமிழில் எழுதுகின்ற ஓர் எழுத்தாளன், தொண்டை நாடு, சோழ நாடு, பாண்டி நாடு, கொங்கு நாடு ஆகிய பல்வேறு பகுதிகளிலும் வழக்கிலுள்ள பேச்சு முறைகளில் நல்ல பரிச்சயம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவன் எழுதுவது? எல்லாப் பகுதியினருக்கும் புரிகிற மாதிரி, படித்து இன்புறக்கூடிய மாதிரி இருக்க வேண்டும். இதைக்கொண்டு அவனுடைய திறமையும், அவனுடைய எழுத்தின் ஆயுளும் கணிக்கப் பெறும். எனவே ஓர் எழுத்தாளன் இந்தத் தகுதியைப் பெறும் விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டட நிபுணர்கள், ஒரு கட்டடம் கட்டுவதற்கு முன்னர், அதன் அகல, நீள, உயரங்களையும் அதன் அமைப்பு முறையையும் காகிதத்திலே வரைந்து கொள்கிறார்கள். இதற்கு பிளான்1என்று பெயர். இப்படிச் சொன்னால்தான் எல்லோருக்கும் புரியும்.இந்தப் பிளானில்லாமல் எந்த ஒரு கட்டட நிபுணனும் கட்டட வேலை துவங்குவதில்லை. அதுபோலவே ஓர் எழுத்தாளனும் தான் எழுதப் புகும் நூலுக்கு ஒரு பிளான் போட்டுக் கொள்ள வேண்டும். சிறப்பாக ஆரம்ப எழுத்தாளர்களுக்கு இது மிக அவசியம். அதாவது நூலில் என்னென்ன விஷயங்கள் வரவேண்டுமோ அவற்றை வரிசைக் கிரமமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வரிசையிலும் என்னென்ன கருத்துக்களைக் கூறலாமென்று தோன்று கிறதோ அவற்றையும் குறித்துக் கொள்ளவேண்டும். இந்த நிலை யிலேயே, நூல் எந்த முறையில் அமையும் என்பது ஒருவாறு புலனாகி விடும். பிறகு எழுதினால் சொல்லப்புகும் விஷயங்கள் கோவையாக அமைவதோடு, கூறியது கூறல், மிகைப்படக்கூறல் முதலிய குற்றங் களும் ஏற்படமாட்டா. இன்னொரு யோசனையும் கூற விழைகிறோம்; ஆரம்ப எழுத்தாளர்களுக்குத்தான். மேலே பிளான் போட்டுக் கொண்டு எழுதினீர்களல்லவா, அதை-கையெழுத்துப் பிரதியை- அப்படியே சிறிது காலம் பெட்டியில் வைத்துவிடுங்கள். அதைத் தொட்டுக் கூடப் பார்க்க வேண்டாம். சிறிது காலங்கழித்து, குறைந்தபட்சம் ஒரு வருஷங்கழித்து அதை எடுத்துப் படித்துப் பாருங்கள். திருத்தங்களோ, மாற்றங்களோ செய்ய வேண்டுமென்று தோன்றி னால் செய்யுங்கள்; சேர்க்க வேண்டு மானாலும் சரி, நீக்க வேண்டுமானாலும் சரி, செய்யுங்கள். சிறிதுகூடத் தயங்க வேண்டாம். நீங்கள் செய்கிற திருத்தங்களோ, மாற்றங்களோ, சேர்ப்பதோ, நீக்குவதோ யாவும், நீங்கள் இடைக்காலத்தில் பெற்றிருக்கிற அனுபவத்தையும், அறிவையும் பொறுத்திருக்கும். இதை நீங்கள் நன்கு உணரலாம். இங்ஙனம் ஒருமுறைக்கிருமுறை பரிசீலனை செய்து பார்த்து, உங்கள் மனதுக்குத் திருப்தியாயிருக்கிறதென்று தோன்றினால், ஒழுங்காக நகல் செய்து, பிரசுரமாவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.முதலில் எழுதியது எழுதியது தான், அதைத் திரும்பப் படித்துப் பார்ப் பதில்லையென்று சொல்லாதீர்கள்; அப்படிச் சொல்வது கௌரவ மென்று கருதாதீர்கள். எழுதியதைத் திரும்பப் படித்துப் பார்ப்பதிலே எவ்வித கௌரவக் குறைவுமில்லை; திறமையிலே அவநம்பிக்கை கொள்வதுமாகாது. எழுதுவதில் எந்த மாதிரியான நடையைப் பின்பற்றலா மென்று, எழுத விழையும் சகோதரா, கேட்கிறாயா? இதற்கு விடை கூறுவது கடினம். ஏனென்றால், நடையென்பது தானாக அமைவது; பிறர் அமைத்துக் கொடுப்பதல்ல. அப்படி அமைத்துக் கொடுப்பது நடையுமாகாது. தானாக அமைகிற நடையில்தான் அழகும் இனிமையும் சேர்ந்திருக்கும்; அதுதான், உன்னையும் வாசகரையும் இணைத்து வைக்கும். பார்க்கப் போனால், நடையென்பது என்ன? உன் எண்ணத்திற்கு உடை அணிவித்துக் காட்டுவதுதான். நல்ல நடை கைவரப்பெற்றவன் நல்ல தையற்காரன் மாதிரி. உடலுக்குத் தகுந்த உடுப்பும், உடுப்புக்குத் தகுந்த உடலும் இருந்தால்தானே நன்றாயிருக்கிறது. அதுபோல் நல்ல நடை கைவர வேண்டுமானால் நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வந்தால் நல்ல நடையும் தானாக அமைந்து விடும். நல்ல எண்ணங்கள் எப்பொழுது வளர்ச்சியடையும், நல்ல விதமாக வாழ்க்கையை நடத்தி வந்தால்தான். எனவே, நடைமுறை வாழ்க்கைக்கும், எண்ணுகின்ற எண்ணங்களுக்கும், எழுதுகின்ற நடைக்கும் நெருங்கிய சம்பந்தமுண்டென்பது பெறப்படுகிறது. இதை எந்த ஓர் எழுத்தாளனும் அனுபவத்தில் நன்கு கண்டுணரலாம். மற்றும் உனது நடையைக் கொண்டு, உனது படிப்பின் ஆழம், சிந்தனையின் தெளிவு, சரியான இடத்தில் சரியான சொல்லைப் பிரயோகிக்கின்ற சாமர்த்தியம், இவை பலவற்றையும் அறிஞர்கள் சுலபமாகக் கண்டு கொள்வார்கள். ஆகவே உனது படிப்பின் ஆழத்தை அதிகப்படுத்திக்கொள்; சிந்தனையில் தெளிவைக்காண்; சொல் செல்வத்தை விருத்தி செய்துகொள். உனது நெருங்கிய நண்பர் ஒருவரை எதிரில் உட்கார வைத்துக் கொண்டு, அவரிடம் உனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறாய் என்று வைத்துக்கொள்; எப்படிச் சொல்வாயோ, எப்படிச் சொன்னால் அவர் இதயத்தில் பதியும் என்று கருதுகிறாயோ அப்படியே நீ எழுது. அதுதான் இயற்கையான நடை. இப்படிக் கூறியதனால் சொல்கிறபடியே எழுதிவிட வேண்டுமென்பது கருத்தல்ல. அது முடியவும் முடியாது; சரியுமில்லை. பேசுகிறபோது, நமது கருத்துக்களை வெளிப் படுத்த நாவைத் துணையாகக் கொள்கிறோம்; சமிக்ஞைகள் செய்து காட்டுகிறோம். எழுதுகிறபோதோ, மௌனந்தான் நமக்குப் புகலிடமா யிருக்கிறது. இந்த நிலையிலிருந்து கொண்டு, பேச்சினால் எப்படிப் பிறரைப் புரிய வைக்கிறோமோ அப்படி எழுத்தினால் புரிய வைக்க வேண்டும்; அப்படி எழுதவேண்டும். இதைத்தான் பேசுவதுபோல் எழுதுவது என்று சொல்வது. இது சிறிது கடினந்தான். ஏனென்றால், பேசுகிற போது நாம் இலக்கண வரம்புக்குட்பட்டு நிற்கிறோமில்லை; வார்த்தைகளைக் குறுக்கியோ நீட்டியோ விடுகிறோம். எழுதுகிறபோதோ, இலக்கண வரம்புக் குட்பட்டேயாக வேண்டும்; வார்த்தைகளை உள்ளது உள்ளபடியே பொருத்தி எழுத வேண்டும். இது சிறிது கடினமென்று சொன் னாலும் இதுதான்-இப்படி எழுதுவதுதான் - இயற்கையான நடை. இந்த நடையை சகோதரா நீ பழக்கிக்கொள். ஓர் எச்சரிக்கை உனக்கு. எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிறருடைய நடையைப் பின்பற்றாதே; உனது அறிவைத் தூண்டி விட்ட ஆசிரியருடைய நடையைக் கூடத்தான். உனக்கென்று தனியாக ஒரு நடையை வகுத்துக்கொள். அந்த நடையில்தான் உன்னுடைய தனித்துவம் வெளியாகும். உனக்கென்று சொந்தமான ஒரு நடை அமைய வேண்டு மானால், சுருக்கமான வழியொன்றுண்டு. எழுதத் தொடங்குவதற்கு முன்னர், எப்படி எழுத வேண்டுமென்பதைப் பற்றிக் கவலைப் படாதே; எதை எழுத வேண்டுமென்பதைப் பற்றிச் சிந்தனை செய். அதைப் பற்றிய எண்ணங்கள் செறிந்து வருகிறபோது எழுதுகோல் தானாக ஓடும். கடைசியாக, சகோதரா, உனக்கு ஒரு வார்த்தை. எப்படி ஒரு மனிதனை, அவனுடைய உயரத்திற்காகவும் பருமனுக்காகவும் மதிப்ப தில்லையோ, ஆனால் அவன் அறிவுக்காகவும் அருங்குணங்களுக்காக வும் மதிக்கிறோமோ அதுபோல், நீ எத்தனை நூல்களை எழுதியிருக் கிறாய் என்பதைக்கொண்டு உனக்கு மதிப்போ புகழோ ஏற்படாது; எந்த மாதிரியான நூல்களை எழுதியிருக்கிறாய் என்பதைக்கொண்டுதான் மதிப்போ புகழோ ஏற்படும். நீ எழுதுவதெல்லாம் ஒரே ஒரு நூலாக இருக்கலாம்; இருந்தாலும் அதனால் அணையாத விளக்குப்போல் உனது புகழ் பிரகாசிக்கும். கம்பன், ஒரு ராம காதையினால்தான் புகழ் பெற்றான். வள்ளுவனுக்கு ஏற்பட்டிருக்கிற புகழெல்லாம் ஒரு திருக்குறளினால் தானே? ஆகவே, நன்மை தரத்தக்க, என்றும் நின்று நிலவக்கூடிய ஒரு சில நூல்களை எழுத வேண்டுமென்பதிலேயே உனது நாட்ட மெல்லாம் செல்லட்டும். இனி போதகாசிரியன் பக்கம் திரும்புவோம். ஆசிரியன் என்று சொன்னாலே அது போதகாசிரியனைத்தான் குறிப்பதாக நாம் அர்த்தப் படுத்திக் கொள்கிறோம். ஏனென்றால், இவன் ஒருவன்தான், ஆசிரியப் பணியை, அதாவது அறியாமையை விலக்கியும் அறிவை வளர்த்தும் கொடுக்கிற அரும்பணியை நேர்முகமாக இருந்து செய்கிறான்; அறியாமையை விலக்கிக்கொள்ள வேண்டியவர்கள். யாரோ, அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியவர்கள் யாரோ அவர்கள் கண்ணால் காணும் வண்ணமும் காதால் கேட்கும் வண்ணமும் செய்கிறான். மாணாக்கர்கள் நேருக்குநேர் இந்த ஆசிரியனைத்தான் சந்திக்கிறார்கள். எனவே, முதல்மொழித் தொடர்பு ஏதும் இராத வெறும் ஆசிரியன் என்ற சொல், போதகாசிரியனை மட்டுமே குறிக்கும் என்று கொண்டால் அது சாலப் பொருத்த முடைத்தேயாம். இந்த அத்தியாயத்திற்கு ஆசிரியன் என்ற தலைப்புக் கொடுத்ததுகூட, இந்தப் போதகாசிரியனைப் பற்றிச் சிறிது அதிகம் கூற வேண்டுமென்ற ஆசையினால்தான். கையெழுத்து மூலமாகப் போதிக்கும் பணியை மேற் கொண்டுள்ள பத்திரிகாசிரியனுக்கும் நூலாசிரியனுக்கும், வாய்ச்சொல் மூலமாகப் போதிக்கும் பணியை மேற்கொண்டுள்ள போதகாசிரி யனுக்கும் அதிக வித்தியாசங்கள் உண்டு. முன்னவர் இருவரும், யாருக்குப் போதிக்கிறார்களோ அவர்களை நேரில் சந்திப்பதில்லை. பின்னவனோ நேரில் சந்தித்தேயாக வேண்டி யிருக்கிறது; அப்பொழுது தான் அவனுடைய போதனை பயனுடைத்தாகிறது. முன்னவர் மௌனிகள்; அப்படியிருந்தால் தான் அவர்கள், தங்கள் பணியைத் திறம்படச் செய்தல் சாத்தியமா கிறது. பின்னவனோ பேச்சாளன்; பேசிப் பேசித்தான் தன் போதனையைப் புகுத்த வேண்டியிருக்கிறது. முன்னவர் போதனை யெல்லாம் பெரும்பாலும் வயது வந்தவர்களை நோக்கியே; எழுதப் படிக்க நன்கு தெரிந்தவர்களைக் குறித்தே. பின்னவன் போதனையோ பெரும்பாலும் இளம் பிராயத்தினரை நோக்கியே; எழுதப்படிக்க நன்கு தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலுடையவர் களைக் குறித்தே. முன்னவர்களுக்குத் துணைக்கருவியாயிருப்பது எழுதுகோல்; பின்னவனுக்கோ அவனுடைய நாக்கு. ஆனால் இரண்டையும் வெகு ஜாக்கிரதையாக உபயோகிக்க வேண்டும். நல்ல விதமாக உபயோகித்தால் கிட்டும் நன்மைகள் அதிகம்; சிறிது தவறி உபயோகித்தாலோ விளைகிற அனர்த்தங்கள் அனந்தம். வாளாயுதத்தைக் காட்டிலும் வலியது எழுதுகோல் என்று கருதினான் நெப்போலியன்1. நாக்கின் நீளம் மூன்றங்குலந்தான்; ஆனால் ஆறடி உயரமுள்ள மனிதனைக் கொல்லுஞ் சக்தி அதற்கு உண்டு என்பது ஒரு ஜப்பானியப் பழமொழி. போதகாசிரியர்களை - இனி இவர்களை வெறும் ஆசிரியர் களென்றே அழைத்துக் கொண்டுபோவோம். - ஆரம்ப நிலைப் பள்ளி ஆசிரியர்களென்றும், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களென்றும், கல்லூரி ஆசிரியர்களென்றும் மூவகையினராகப் பிரித்துச் சொன்னோமல்லவா, இவர்களில் முதல்வரது கடமை அறியாமையை விலக்கி வைப்ப தென்றும், இரண்டாமவரது கடமை ஆழ்ந்து கிடக்கும் அறிவை மேலுக்குக் கொண்டு வருவதென்றும், மூன்றாமவரது கடமை மேலுக்கு வந்திருக்கும் அறிவை வளர்த்துக் கொடுப்பதென்றும், இப்படி இவர்களுடைய கடமைகளைப் பகுத்துச் சொல்லலாம். அல்லது முதல்வரை அஸ்திவாரம் அமைக்கிறவர்களென்றும், இரண்டாம வரை சுவர் எழுப்புகிறவர் களென்றும், மூன்றாமவரை கூரை வேய்கிறவர் களென்றும் கூறலாம். இந்த மூன்றுவித கடமைகளும் சிரம சாத்தியமானவைதான். ஆனால் அவரவரும் தங்கள் தங்கள் கடமைதான் சிரமமானதென்று சொல்லிக் கொள்வார்கள். இதில் ஆச்சரியமில்லை. இதே பிரகாரம், அந்தஸ்திலும், பெறும் ஊதியத்திலும் முன்னவரைவிடப் பின்னவர் மேலானவர் என்று சொல்லப்படுவதுண்டு. இங்ஙனம் இவர்கள், தங்கள் கடமைகளைப்பற்றி என்ன சொல்லிக்கொண்ட போதிலும் சரி, தங்கள் நிலைமையைப் பற்றி என்ன நினைத்துக் கொண்ட போதிலுஞ்சரி, நம்மைப் பொறுத்தவரை, மூவரும் ஒரே மாதிரியான கடமையைச் செய்ய வேண்டியவர்களே; ஒரே மாதிரியான அந்ததில் வைக்கப்பட வேண்டியவர்களே; ஒரே மாதிரியான ஊதியம் பெற வேண்டியவர்களே. எனவே மூவரும் ஒருவரே; ஒருமையிலேயே இனி அழைத்துக் கொண்டுபோகிறோம். தற்போதைய நிலைமையில், படித்துப் பட்டம் பெற்றவர்கள், வேறெங்கும் உத்தியோகம் அகப்படாவிட்டால் கடைசி பட்சமாக ஆசிரியத் தொழிலில் அமர்வதென்று வைத்துக் கொண்டிருக் கிறார்கள். எது முதல் ஸ்தானத்தில் வைத்துக் கௌரவிக்கப்பட வேண்டுமோ அது - பெருமை வாய்ந்த ஆசிரியத் தொழில் - கடைசி ஸ்தானத்தில் வைத்துப் பேசப்படுகிறது. இதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்படலா மாயினும் அடிப்படையான காரணம் ஒன்றே ஒன்றுதான். அதுவே பொருளுக்குத் தற்காலத்தில் நாம் வைத்திருக்கிற மதிப்பு. பணத்தைக் கொண்டு தான் ஒருவருடைய திறமையுள்பட எதனையும் இப்பொழுது நாம் அளந்து பார்க்கிறோம். எந்த தொழிலும், அது கொடுக்கிற வருவாயைக் கொண்டுதான் பெருமையோ சிறுமையோ அடைவதா யிருக்கிறது. இந்த வருவாய் விஷயத்தில் ஆசிரியத் தொழில் கவர்ச்சி கரமானதா யில்லையல்லவா? இதில், அதிகமான உழைப்பைச் செலவிட வேண்டியிருக்கிறது; அதிகமான பொறுப்பை மேற்கொள்ள வேண்டி யிருக்கிறது; ஆயினும் குறைந்த வருவாய். ஏன் இதை நாடவேண்டும்? குறைந்த வருவாய் இருந்த போதிலும், மற்ற உத்தியோகங்களில் ஈடுபட்டிருக்கிறவர்களுக்குச் சமுதாயத்தில் என்ன அந்தஸ்து இருக்கிறதோ அந்த அந்தஸ்தாவது ஓர் ஆசிரியனுக்குக் கொடுக்கப் படுகிறதா? அதுவுமில்லை. பள்ளிக்கூடத்து வாத்தியாரா! என்றுதான் அலட்சியமாகப் பேசுகிறோம்; வேறு எங்கும் உத்தியோகம் அகப்பட வில்லையோ? என்றும் கேட்டுவிடுகிறோம். இந்த நிலைமையில், தக்கவர்கள் ஆசிரியர்களாக அலுவல் பார்க்க முன்வருவதில்லை. இந்த நிலைமை மாற வேண்டுமானால் நாம் பழமைக்குத்தான் செல்ல வேண்டும். முற்காலத்துக் கல்வித் திட்டத்தில், பணம் பிரதான அமிச மாக விளங்கவில்லை; கல்வி நிலையங்களுக்குப் பெரிய பட்டங்கள் தேவையென்று கருதப்படவுமில்லை. கல்விபெறும் பிள்ளைகளிடமிருந்து சம்பளம் வசூலிப்பதென்பது அப்பொழுது தெரியவே தெரியாது. பிள்ளைகளே, தங்கள் கல்வியை முடித்துக் கொண்டு வீடு திரும்புகிற காலத்தில், தங்கள் சக்திக்கியன்றபடி பொன்னையோ பொருளையோ கொடுத்தனர். இதற்குக் குருதட்சிணையென்று பெயர். தட்சிணை கொடுக்க வேண்டியது அவசியமென்று கருதப்பட்டதே தவிர எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று வரையறுத்துச் சொல்லப்படவில்லை. இது குறிப்பிடத் தக்கது. ஆக, குருதட்சிணையென்பது என்ன? ஆசிரியன் செய்த உதவிக்கு, மாணாக்கன் செலுத்தும் நன்றியின் அறிகுறி தானே? சம்பளமென்று சொல்லி பிள்ளைகளிடமிருந்து வலிந்து பெறுவதற்கும், அவர்களே தட்சிணை யென்று சொல்லி விரும்பிக் கொடுப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டல்லவா? இப்படிப் பார்க்கிறபோது, இலவசக் கல்வி வேண்டுமென்ற கூக்குரல் இப்பொழுது உலகெங்கணும் எழுப்பப்படுகின்றதல்லவா, இது நமது நாட்டில் சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருந்து வருவ தென்று கூறலாம். கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு, அவர்களுடைய சுய நன்மைக்காகப் பாடுபட வேண்டிய அவசியமே இல்லாமற் செய்யப்பட்டது. அவர்களுடைய அன்றாட வாழ்க்கை முட்டின்றி நடைபெறுமாறு பார்த்துக் கொள்வது ஜனங்களுடைய பொறுப்பாயிருந்தது. இதனால் அவர்கள் - ஆசிரியர்கள் - தங்கள் முழுநேரத்தையும் முழுச் சக்தியையும் கல்வி அபிவிருத்திக்காகவே செலவிட்டனர். அவர்களுக்கு இது சுலப சாத்தியமாயிருந்தது. சுருக்கமாக, ஜனங்களுடைய அறிவுப்பசியைத் தீர்த்து வைப்பது ஆசிரியர்களுடைய தர்மமாயிருந்தது; ஆசிரியர் களுடைய வயிற்றுப் பசியைத் தீர்த்து வைப்பது ஜனங்களுடைய தர்மமா யிருந்தது. இந்தப் பரஸ்பர நலன்மீது, நல்லுறவின் மீது கல்வி என்ற கட்டடம் வெகு சோபிதமாக எழும்பிக் காட்சியளித்தது. இந்த நிலைமை தான் அல்லது இந்த நியதிதான், வெகுகாலத்திற்கு முன்னர் நடைபெற்று வந்த குருகுலங்களிலிருந்து சமீபகாலம் வரை நடைபெற்று வந்த திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இறுதியாக இருந்து வந்தது. மற்றும், முற்காலத்து ஆசிரியர்கள், அறிவை அறிவுக்காகவே சம்பாதித்துக் கொண்டவர்கள்; அப்படிச் சம்பாதித்துக் கொண்ட அறிவை மற்றவர்களுக்குப் பயன் கருதாமல் வழங்கியவர்கள். அறிவைப் பெறுவதிலே எவ்வளவு இன்பங் கண்டார்களோ அவ்வளவு இன்பம், அதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான இன்பம், பெற்ற அறிவைப் பிறர்க்கு வழங்குவதிலே கண்டவர்கள். இந்த இன்ப நுகர்ச்சிக்காகவே ஆசிரியத் தொழிலை மேற்கொண்டவர்கள். இத்தகைய பயன்கருதாப் பணியாளர்களை, நிகழ்கால சமுதாயம் ஆதரித்தும் கௌரவித்தும் வந்ததில் என்ன ஆச்சரியமிருக்கிறது கௌரவித்து வந்ததென்றால், சொல்லளவில் மட்டுமல்ல; செயலில்கூட; அதாவது அநேக சந்தர்ப்பங்களில் இவர்களுடைய அறிவுரைகளையும் அறவுரைகளையும் கேட்டுத் தன்னைத் திருத்திக்கொண்டது. இவர்களும் - இந்த ஆசிரியன்மார் களும் - சென்ற கால அறிவு அனுபவம் இவற்றின் திரட்சியாக இருந்தபடியால், நிகழ்காலத்திற்குச் சுலபமாக வழி காட்டினார்கள்; வருங்கால சந்ததிகளின் அறிவுக் கண்ணையும், அனுபவப் பாதையையும் சுலபமாகத் திறந்துவிட்டார்கள். இவர்களால் நடத்தப்பட்ட கல்வி நிலையங்களோ, அரசாங்கத்தின் மேற்பார்வைக்குட்பட்டோ, அது விதிக்கும் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டோ இருக்கவில்லை; சுயேச்சை யாகவே நடைபெற்றன. இதன் விளைவு என்ன? மாணாக்கர்கள், சுதந்திர புருஷர்களாக வளர்ந்தார்கள்; அவர்களுடைய மனோதர்மம் விசாலமடைந்தது. ஆசிரியர்களும், மாணாக்கர்களின் அறிவைத் தூண்டிவிட்டார்கள்; சுயசிந்தனையைக் கிளறி விட்டார்கள். இவை மட்டுமா? மாணாக்கர்களை மனத்துக்கண் மாசிலராக்கினர்; எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டி விளக்கினர். இந்த விளக்கம் பெற வேண்டுமென்பதற்காகவே மாணாக்கர்கள், தங்கள் பெரும்பொழுதை ஆசிரியர்களுடனேயே செலவிட வேண்டுமென்ற நியதி நடைமுறையில் இருந்து வந்தது. இங்ஙனம் வாழத் தெரிந்து கொண்ட மாணாக்கர்கள், ஆசிரியர்களிடம் விடைபெற்றுக் கொண்டு உலக மார்க்கத்தில் பிரவேசித்தார்கள்; உத்தமப் பிரஜைகளாக விளங்கினார்கள். இவர்களால் ராஜ்யம் க்ஷேமமுற்றது; சமுதாயம் கட்டுவிடாமல் நின்றது. உத்தமப் பிரஜைகளை ஈன்றளித்த இந்தக் கல்வி நிலையங் களை, அரசாங்கம், கண்காணிக்கவோ, தனது அதிகார வரம்புக் குட்படுத்தவோ துணியவில்லை. அதற்குப் பதிலாக இவைகளுக்கு அநேக விதமான சலுகைகள் காட்டியது வேண்டுமவற்றை வேண்டாமலே அளித்துப் பெருமையடைந்தது; இவற்றிலிருந்து வெளிவரும் வித்தியார்த்திகளைச் சன்மானித்தும் கௌரவித்தும் திருப்தி கண்டது. இத்தகைய கல்வி நிலையங்கள் மீண்டும் ஏற்படுமா? ஆசிரியர்கள் முன்போல் ஆதரவும் கௌரவமும் பெறுவார்களா என்றெல்லாம், ஆசிரியத் தொழிலில் இறங்கிவிட்ட அன்பனே, கேட்டுக் கொண்டிராதே. பழைய நிலைமை திரும்பி வருவது உன் வசத்திலில்லை. ஆதலில் இருக்கப்பட்ட சூழ்நிலையில் உன் கடமையை ஒழுங்காக செய்து கொண்டு போ. அவ்வளவு தான் நீ செய்யக்கூடும். அதைத்தான் நீ செய்யவும் வேண்டும். ஆர்வம் காரணமாக இந்த ஆசிரியத் தொழில் இறங்கினாயோ, அல்லது சந்தர்ப்பமானது இந்த தொழிலில் இறங்கும்படி உன்னை நிர்ப்பந்தித்ததோ, எப்படியிருந்த போதிலும், இதை வெறும் ஜீவனோபாயமாக மட்டும் கொள்ளாதே. இந்தத் தொழிலின் மூலம் உனது அன்றாட ஜீவனம் நடைபெறுகிற தென்பது உண்மை. ஆனால் ஜீவனத்தை உபாயமாகக் கொள்ள வேண்டுமே தவிர அதனையே லட்சியமாகக் கொண்டுவிடக் கூடாது. நீ கொடுக்கிற தொழில்தான் உனக்கு லட்சியமாக இருக்கவேண்டும். அதாவது அதை நன்றாகச் செய்யவேண்டும்; மனம் வைத்துச் செய்யவேண்டும். இதனை எத்தனை தரம் உனக்கு வற்புறுத்திச் சொன்னாலும் பொருந்தும். ஏனென்றால், மற்றத் தொழில்களைப் போன்றதன்று ஆசிரியத் தொழில். ஆசிரிய னிடத்தில் வருங்கால சமுதாயம் ஒப்படைக்கப்படுகிறது. ஆம்; வருங்கால சமுதாயத்துடன் நேரடியான தொடர்பு கொள்கிறவன் ஆசிரியன். அதனை - அந்த வருங்கால சமுதாயத்தை - நஞ்சு படுத்துவதோ, அமுதமயமாக்குவதோ அவன் வசத்தில் இருக்கிறது. பச்சிளம் பயிர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண் டிருக்கிற விவசாயி மாதிரி அவன். அவற்றை வாட விடுவதோ, வளர்த்துப் பலன் கொடுக்கச் செய்வதோ அவன் வசத்தில் இருக்கிற தல்லவா, அது போலத்தான், ஆசிரியனே, உன் பொறுப்பும். வருங்கால சமுதாயத்துடன் நேரடியான தொடர்பு கொண்டு அதற்குப் போதனை செய்வதை, கேவலம் ஒரு தொழில் மாத்திர மாகக் கருதிவிடக்கூடாது. ஏனென்றால், தொழில் என்றதும், ஏதோ ஒருவகை ஊதியத்தைக் கொண்டு தருவது என்று கருதிவிடுகிறோம். இப்படியே நமக்கு பழக்கமாகப் போய்விட்டது. ஆனால் போதனை செய்வதை, ஊதியக் கண்கொண்டு பார்க்கவே கூடாது. அப்படிப் பார்ப்பாயானால், ஆசிரியனே, நீ ஏமாற்றமடைவதோடு, போதித்தல் என்னும் புனிதமான செயலையும் ஒரு படி இறக்கத்திலே கொண்டு விட்டவனாவாய். ஆதலின், மீண்டும் கூறுகிறோம், அதனை ஒரு தொழில் மாத்திரமாகக் கருதாதே. இதனால்தான் மற்றத் தொழில்களைப் போன்றதன்று ஆசிரியத் தொழில் என்று மேலே சொன்னோம். பேச்சு வழக்கையொட்டியும், எல்லாருக்கும் விளங்குமென்பதற்காகவும் ஆசிரியத் தொழில் என்று சொல்கிறோமே தவிர, நியாயமாக ஆசிரியத் தொண்டு அல்லது ஆசிரிய சேவையென்றுதான் சொல்லவேண்டும். போதித்தலை உனது கடமையாகக் கொண்டுவிடு. கடமை உணர்ச்சியுடன் பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுப்பதில் எவ்வளவு இன்பம் இருக்கிறதென்பதை அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும். இப்படிக் கடமையாகக் கொண்டுவிட்டாயானால் அதுவே காலக்கிரமத்தில் உன் சுபாவமாகிவிடும். அதைச் செய்யாமல் உன்னால் இருக்க முடியாது. அப்பொழுது, பயனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு மனப்பான்மை உன்னை விட்டு அகன்று விடும். பயனை எதிர் பார்த்துக் கொண்டிராமல் நீ உன் கடமையில் எவ்வளவுக்கெவ்வளவு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறாயோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமான பயன்கள் உனக்குக் கிட்டும். இது, தர்க்கத்தைக் கடந்த உண்மை. அப்படியே, உன் கடமையைச் செய்கிறபோது, எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான பயன்களை எதிர்பார்க்கிறாயோ அவ்வளவுக்கவ்வளவு ஆசாபங்கத்தை யடைவாய். இதுவும் தர்க்கத்தைக் கடந்த உண்மை. பயனை நீ நாடிச் செல்லாதிருப்பாயானால் அதுவே உன்னை வந்தடையும். அதில்தான் சுகம் இருக்கிறது; பெருமை இருக்கிறது. வணக்கத்திற்குரியவர்களில், தாய் தந்தையருக்கு அடுத்தபடி ஆசிரியனை வைத்துக் கௌரவித்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். ஏன் தெரியுமா? தாய் தந்தையர்கள் எந்த விதமான பிரதிப் பிரயோ ஜனத்தையும் எதிர்பாராமல் எப்படித் தங்கள் குழந்தைகளுக்கு நல்லதை செய்கிறார்களோ அப்படியே ஆசிரியனும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளுக்கு நல்லதையே செய்கிறான் நல்லதைத் தவிர வேறொன்றையும் இவர்களால் செய்ய இயலாது. குழந்தைகளின் வளர்ச்சிதான் இவர்களுடைய குறிக்கோள். அவர்களுக்குக் கிடைக்கிற சிறப்புதான் இவர்களுக்கு ஏற்படுகிற மகிழ்ச்சி. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்குப் போதிப்பதாயிருந்தால் எப்படி மனப்பூர்வமாகப் போதிப்பார்களோ அப்படியே ஆசிரியனும், தன் வசம் ஒப்புவிக்கப் பட்டிருக்கும் மாணாக்கர்களுக்கு மனப்பூர்வமாகப் போதிக்க வேண்டு மென்பதுதான், தாய் தந்தையருக்கு அடுத்தபடி ஆசிரியனை வைத்துக் கௌரவித்திருப்பதன் உட்கருத்து. ஆசிரியனே! இதை நீ நன்குணர்ந்து நடப்பாயானால் நிச்சயம் கௌரவிக்கப் பெறுவாய். உனது கடமையை, தொண்டு என்றும், சேவையென்றும் மேலே சொன்னோம். இவை லேசாக உபயோகித்திருக்கிற வார்த்தைகளல்ல; பொருளாழழுடையவை. இடையறாது செய்யப்படுவது எதுவோ அதுதான் தொண்டு. செம்மையாகச் செய்யப்படுவது எதுவே அதுதான் சேவை. ஆசிரியனாக இருக்க எந்த நிமிஷத்தில் நீ தீர்மானித்துக் கொண்டாயோ அந்த நிமிஷத்திலிருந்து கடைசி வரையில், அதாவது இனி சரியாக போதிக்க முடியாதென்ற நிலை ஏற்படுகிற வரையில் ஆசிரியனாகவே இருந்துவிடு. இடையிடையே வேறுவேறு தொழில்களில் நாட்டங் கொள்ளாதே; சோர்வோ, சலிப்போ காட்டாதே. அதே பிரகாரம் போதிக் கின்ற காரியத்தைச் செம்மையாகச் செய்; ஏற்கனவே சொன்னபடி மனம் வைத்துச் செய்; பிள்ளைகளின் வணக்கத்தை நீ பெறவேண்டுமானால் அவர்களுடைய முன்னேற்றத்தில் நீ சிரமத்தை கொள்ளவேண்டும். இப்பொழுது நான் வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இந்த உபதேசங்களெல்லாம் அனுஷ்டான சாத்தியமற்றவை என்று நீ கூறலாம். ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். பொழுது விடிந்தால் ரூபாய் அனா பைசாவின் முகத்தில் நீ விழிக்க வேண்டியவனா யிருக்கிறாய். பணமானது அவ்வளவு தேவையாகிவிட்டது இப்பொழுது உனக்கு. உனக்கு மட்டுமா? எல்லாருக்குந்தான். ஆனால் இங்கே வலியுறுத்துவது என்னவென்றால், பணத்திற்கு நீ அடிமையாகிவிடாதே, உன்னுடைய தொழிலையும் அடிமைப்படுத்தி விடாதேயென்பதுதான். நீ எப்பொழுது ஆசிரியனாயிருக்கச் சங்கற்பித்துக் கொண்டு விட்டாயோ அப்பொழுதே உன் மனப்போக்கு ஒருவாறு புலனாகிவிட்டது. பணத்திற்காக வாழ்கிறவனல்லன் நீ பணத்தை ஒரு கருவியாகக் கருதுகிறவன். போதுமென்ற மனப்பான்மை உனக்கு இளமை தொட்டே அமைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியத் தொழிலில் இறங்கத் துணிந்திருக்கமாட்டா யல்லவா? இந்த தொழில் அதிக வருமானத்தைக் கொண்டு தராது என்று தெரிந்து தான் இதில் நீ பிரவேசித்திருக்கிறாய். ஆதலின் போதுமென்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள். உன் தொழிலில் மனம் வை. எந்த ஒரு தொழிலும், அதில் புகுத்தப்படுகிற சிரத்தையைக் கொண்டு தான் பெருமையோ சிறுமையோ அடைகிறது. தவிர, தன்மதிப்பு உணர்ச்சியை நீ மிக மிக வளர்த்துக் கொள்ள வேண்டும். பட்டத்தையோ, பணத்தையோ, பதவியையோ கொண்டு பல்லிளிக்காதே. அதிகார சக்தியைக் கண்டு மருளாதே. இவைகளுக் கெல்லாம் மேற்பட்டது அறிவு. அதன் உபாசகன் நீ; அதனை வளர்க் கிறவன் நீ. அறிவு எங்கே இருக்கிறதோ, அறிவு எங்கே மதிக்கப்படுகிறதோ அங்கே நீ தலைவணங்கு; அன்புக்குத் தலை வணங்கு; அறத்திற்குத் தலைவணங்கு. அதிகாரத்திற்கு நீ தலைவணங்க வேண்டியதுதான். ஏனென்றால் உன்னுடைய சக்திக் குட்பட்டதாகவே இப்பொழுது உன்னுடைய தொழில் இருக்கிறது; அது வகுத்துக் கொடுக்கிற முறைப்படிதான் நீ போதனை செய்ய வேண்டியிருக்கிறது. எனவே அதன் விருப்பத்திற்கு மாறாக நீ நடக்க முடியாதுதான். ஆனால் அதற்குத் தலை வணங்குகிறாயே, உன் சுயமதிப்புக்கு ஊறு உண்டாகாதபடி பார்த்துக் கொள். உன் வணக்கம், கோழைத்தனத்தின் வெளித் தோற்றமாகவோ, அச்சத்தின் பரிணாமமாகவோ இருக்கக்கூடாது. நிறைந்த புலமையினின் றெழுந்த, உனது போதனா சக்தியில் உனக்கிருக்கிற திட நம்பிக்கை யினின்றெழுந்த அடக்கத்தின் புறச்செயலாக உனது வணக்கம் இருக்க வேண்டும். ஆரம்ப தசையில் இது முடியாத காரியம் போலவே தோன்றும். ஆனால் அனுபவம் ஏற்பட ஏற்பட, உனக்கு இது சர்வ சாதாரணமாகிவிடும். ஆனால் சில இடங்களில், சில சமயங்களில், பணிதல் என்னும் இந்த உயர்ந்த பண்பானது, உன்னை இடர்களத்திலே கொண்டுபோய் நிறுத்திவிடுதலுங்கூடும். நீ அலுவல் பார்க்கும் கல்வி நிலையத்தினர், நீ எதற்கும் இணங்கிக் போகிறவன் என்று கருதி, உன்னுடைய தகுதி, திறமை, அனுபவம் முதலியவற்றைப் புறக்கணித்து விட்டு அவற்றில் உனக்குக் கீழோராயிருக்கிறவரை உனக்கு மேலோராக்கலாம்; தணிக்கை அதிகாரிகள் முன்னிலையில், உன்னுடைய போதனா சக்தி மங்கித் தோன்றுமாறு செய்யலாம்; இப்படி உத்தியோக முறையில் அநேக அநீதிகள் உனக்கு இழைக்க முற்படலாம். இந்த மாதிரி சமயங்களில் நீ தலை நிமிர்ந்துதான் காட்டவேண்டும்; அநீதியைச் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று நயமான முறையில் தெளிவுப்படுத்தி விட வேண்டும். உனது கடமைகளை ஒழுங்காகச் செய்து கொண்டு போக முடியாதபடி தடைகள் விதிக்கப்படுமானால் அந்தத் தடைகளை உடைத்தெறிவது உனது தர்மமாகும். இதனால் உனக்குச் சில சங்கடங்கள் ஏற்படலாம். அவைகளை நீ பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் உன் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் நீ நிச்சயம் வெற்றி காண்பாய். அப்பொழுதுதான் உன் சான்றாண்மை எல்லோருக்கும் புலனாகும். பொதுவாகவே நமது முன்னோர்கள், பொறுமை, பணிவு, நிதானம் இப்படிப்பட்ட சிறந்த பண்புகளுக்கெல்லாம் ஒரு வரம்பு வைத்திருக் கின்றனர். இவற்றைப் பாராட்டத் தெரியாதவர் முன்னிலையில் இவற்றைப் புலப்படுத்துவாயேயானால் அறிந்தும் அறியாதவனே. அறிவிலோ, ஆற்றலிலோ பலவீனங் காரணமாகப் பொறுமையாயிருக் கின்றாயில்லை, பணிவு காட்டுகின்றாயில்லை, நிதானத்தைக் கைப்பிடிக் கின்றாயில்லை என்பதைப் பலவகை யானும் நீ தெரியப்படுத்த வேண்டும். அப்படிச் செய்வது தர்மம்; உன் கடமை. செய்யாவிட்டால் குற்றம்; பிரதியொரு மனிதனுக்கும் தன் மதிப்பு என்று ஒன்று உண்டல்லவா, அதனை, அந்தத் தன்மதிப்பைப் பறிகொடுத்தவனாய். ஆனால் இங்கு ஓர் எச்சரிக்கை. தன்மதிப்பு என்பது தன் முனைப்பாகத் தடித்துவிடக்கூடாது இடம் பொருள் காலமறியாப் பணிவு எப்படிக் கோழைத்தனமாக காட்சி யளிக்குமோ அப்படியே உனது தன்மதிப்பு உணர்ச்சியை இடம் பொருள் காலமறியாமல் வெளிப்படுத்த முந்துவாயேயானால் தன்முனைப்புடையவனாகவே கருதப்பெற்று நிந்திக்கப்படுவாய். தன்மதிப்பு உணர்ச்சியென்பது, தனித்து வெளிப் படுவதில்லை; பணிவோடு, பரிவோடு, நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நம்பிக்கையோடு வெளிப்படுவது. ஆதலில் இது விஷயத்தில் நீ சர்வ ஜாக்கிரதையுடனிருக்க வேண்டும். நீ தன்மதிப்புடையவனாயிருக்க வேண்டுமானால், அதற்காக உன்னை எல்லாரும் மதிக்க வேண்டுமானால், நீ ஒழுக்கமுடையவ னாயிருக்க வேண்டும். ஒழுக்கத்தினின்று பிறப்பதுதான் தன்மதிப்பு. ஒழுக்கமின்றேல் மதிப்பில்லை; செல்லாக்காசுதான். செல்லாக்காசை வைத்துக்கொண்டு ஒரு சிலரை ஏமாற்றலாம்; ஒரு சில நாள் ஏமாற்றலாம் ஆனால் எல்லாரையும் எப்பொழுதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. இதை நீ நன்கு உணர வேண்டும். ஏனென்றால் சிறு பிள்ளைகளின் ஒழுக்கத்திற்குப் பொறுப்பாளியல்லவா நீ? ஒழுக்கமென்பது, பிறனில் விழையாமை மட்டுமன்று; சொன்ன சொல் தவறாதிருத்தல் முதல், கொடுத்த பொருளைக் காப்பாற்றி வைத்துக் கேட்ட போது திருப்பிக் கொடுத்தல் வரை, அழுக்காறு கொள்ளாமை முதல் நன்றி மறவாமை வரை யாவும் ஒழுக்கத்தின் பாற்படும். சுருக்கமாக, எல்லா நல்ல தன்மைகளும் சேர்ந்ததே ஒழுக்கம். இதனால்தான், எல்லாம் வல்ல இறைவன், ஒழுக்கன் என்றும் சீலமே பெரிதுமுடையான் என்றும் அழைக்கப்படுகிறான்1. எல்லா நல்ல தன்மைகளுமுடையவனல்லவா அவன்? ஒழுக்கத்திற்கு அடுத்தது ஒழுங்கு. குறித்த நேரத்தில் கல்வி நிலையம் போந்து, பாடக்கிரமத்தில் குறிப்பிட்டுள்ளபடி பாடங்களை நடத்துவதென்ற நியமத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகள் உன்னுடைய போதனையில் கவனஞ் செலுத்துவர்; உன்னைத் தங்கள் வழிகாட்டியாகக் கொள்வர். ஏனென்றால், அவர்கள் உன்னைப் பார்த்துத்தான் ஒழுங்கைக் கற்றுக்கொள்ள வேண்டும். நீ எப்படி நடந்து கொள்கிறாயோ அப்படித்தான் அவர்கள் நடந்து கொள்வார்கள். இங்ஙனம் பிள்ளைகளிடத்தில் ஒழுங்கைப் புகுத்த வேண்டுமானாலுஞ் சரி, கல்வி நிலையத்தைப் பொறுத்த விஷயங்க ளில் ஒழுங்காக நடக்க வேண்டுமானாலுஞ் சரி. முதலில் உன் சொந்த விவகாரங்களில் ஒழுங்கை அனுசரிக்க வேண்டும். வீட்டிலே நடப்பது தான் நாட்டிலேயென்று சொல்வார்கள். இதை நீ நன்குணர்ந்தல் வேண்டும் விடியற்காலை படுக்கையைவிட்டு எழுந்திருப்பது முதல் இரவில் தூங்கச் செல்லும் வரை, நீ செய்கிற ஒவ்வொரு காரியத்திலும், அதாவது, குளிப்பது,உண்பது,உடுப்பது இப்படிப்பட்ட சாதாரண விஷயங்களில்கூட ஒழுங்கு இருக்க வேண்டும். பொதுவாக எல்லாருக்கும் பொருந்துகின்ற நியதி இதுவானாலும், நீ இது விஷயத்தில் கண்ணும் கருத்து முடையவனாயிருக்க வேண்டும். வருங்கால சமுதாயத்தை ஒழுங்காக அமைத்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக் கிறவர்களுள் நீ ஒருவன், முக்கியமானவன் என்பது எப்பொழுதும் உன் நினைவிலிருக்கட்டும். இந்த இடத்தில் உன்னுடைய உடையைப்பற்றி விசேஷமாகச் சில வார்த்தைகள் சொல்லவேண்டிய அவசியமாயிருக்கிறது. நீ அளிக்கிற தோற்றம் நீ அணிகிற உடையைப் பொறுத்திருக்கிறது. உடையென்பது வேஷந்தானே? அதில் என்ன அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது? என்று நீ கேட்கலாம். அப்படியில்லை. எந்த வேஷம் தரிக்கிறோமோ அந்த வேஷத்திற்குப் பொருத்தமாக, அந்த வேஷந் தரித்திருக்கிற வரையி லாவது நடக்க வேண்டியிருக் கிறது. இதுவே நாளாவட்டத்தில் பழக்கமாக போய்விடுகிறது. நல்லது பழக்கமாவது நல்லது தானே? உடையானது, ஒருவனுடைய மதிப்பை உயர்த்திக் கொடுக்கிறது. நீ அணியும் உடையினால், மாணாக்கர்களிடையே உன் மதிப்பு உயர வேண்டும். ஆனால் அந்த உடை ஆடம்பரமில்லாததாகவும் இருக்க வேண்டும். நீண்ட அங்கியுடனும் தலைப்பாகையுடனும் ஆசிரியர்கள் காட்சி யளிப்பது இப்பொழுது அரிதாகிவிட்டது. எளிய உடையென்று சொல்லி, மாணாக்கர்களின் உடையினின்று அதிக வித்தியாசப் படாத முறையில் ஆசிரியர்கள் உடையணிவது இப்பொழுது சர்வ சகஜமாகிவிட்டது. இது விரும்பத்தக்கதல்ல. நீண்ட அங்கிக்கும் தலைப்பாகைக்கும் வரவேற்பு அளித்தால் நன்றாயிருக்கும். இனி, ஆசிரியனின் போதனைப் பணிக்கு வருவோம். பிள்ளைகளை, நெட்டுருப்போடச் செய்வது போதனையல்ல; அவர்களைச் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக்கி விடுவது போதனையல்ல; விஷயத் துணுக்குகளை அவர்கள் மூளையில் திணிப்பது போதனையல்ல. அப்படி யானால், எவ்வாறிருப்பது போதனை? என்ன பயனைத் தரவேண்டும் அது? சுயமாகச் சிந்திக்கும் சக்தியை அளிக்க வல்லது எதுவோ,புதிய எண்ணப் போக்கை வகுத்துக் கொடுப்பது எதுவோ, புதிய லட்சியங்களைக் காட்டிக் கொடுப்பது எதுவோ அதுதான் போதனை, இளைஞர்களின் மனம் மொட்டுப் போன்றது. போதனையானது அதை விகசிக்கப் பண்ண வேண்டும்; உலகத்துப் பேரறிஞர்களின் உள்ளத்தோடு உறவு கொள்ளும் பக்குவத்தை அதற்கு உண்டாக்கவேண்டும்; இயற்கையிலே அழகையும் இனிமையையும் காணும் ஆற்றலை அதற்கு அளிக்கவேண்டும்; கடவுள் பக்தியும், அறநெறியிலே செல்ல வேண்டுமென்ற உறுதிப்பாடும் உண்டாக்க வேண்டும். போதனையினால் இத்தகைய பயன்கள் விளையவேண்டு மானால், ஆசிரியன், பிள்ளைகளிடத்தில் பூரண அன்பு செலுத்த வேண்டும்; அவர்கள் முன்னுக்கு வரவேண்டுமென்ற நல்லெண்ணம் கொள்ளவேண்டும்; போதிக்கின்ற அளவோடு அவர்களுக்கும் தனக்குமுள்ள தொடர்பு முற்றுப் பெற்று விடுகிறதென்று கருதக் கூடாது; மேலும் மேலும் கற்க வேண்டு மென்ற உற்சாகத்தை அவர்களுக்கு ஊட்டவேண்டும்; கற்பதிலே சலிப்பு உண்டாகும் படியாகப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கக்கூடாது; அவர் களுடைய அறியாமையிலே அநுதாபங் காட்டவேண்டும்; தங்களுக்கு ஒரு விஷயம் சுலபமாகப் புரிந்துவிடுவது போல் மாணாக்கர்களுக்குப் புரிய வில்லையென்று ஆத்திரப்படக் கூடாது; அவர்கள்மீது கோபத்தைக் காட்டக் கூடாது. தெளிவான வாசகம், இனிமையான பாஷை இவ்விரண்டும் போதனையில் கலந்திருக்க வேண்டும். பாடஞ் சொல்லிக் கொடுக்கிறபோது, சொற்களைச் செயற்கையான முறையில் உச்சரித்தல், விஷயத்தை விளக்கிக் காட்டுவதாகச் சொல்லி, அங்க அவயவங்களை அனாவசியமாக அசைத்துக் காட்டல், அபஸ்வரத்துடன் செய்யுட்களைச் சொல்லல், உரக்கக் கத்துதல், அல்லது மிகத்தாழ்ந்த குரலில் முணுமுணுக் கிறமாதிரி கூறல், கண், மூக்கு, செவி இவைகளிலுள்ள அழுக்கை எடுத்தல், தலையைச் சொரிதல், அடிக்கடி தும்முதல், இருமுதல், கொட்டாவி விடுதல், மேஜைமீது இரு கைகால்களையும் நீட்டிக் கொள்ளல், புகைபிடித்தல், பொடிபோடுதல், பிறரைப் பழித்தல், பரிகசித்தல் இப்படிப்பட்டவைகளில் ஆசிரியன் ஈடுபடுதலே கூடாது. அப்பொழுதுதான் மாணாக்கர்களுக்குப் போதனையின் மீது முழுக் கவனமும் செல்லும்; ஆசிரியன் மீதும் வெறுப்பு உண்டாகாதிருக்கும். சொல்லிக் கொடுப்பதைச் சிரத்தையோடு சொல்லிக் கொடுக்க வேண்டும். சொல்லிச் சொல்லி சலிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதைச் சிறிதுகூடக் காட்டிக் கொள்ளக்கூடாது. அப்படிக் காட்டினால் மாணாக்கர்களுக்கும் சலிப்பு ஏற்பட்டுவிடும். மதம், அரசியல் இப்படிப் பல விஷயங்களைப்பற்றி ஆசிரியனுக் கென்று சொந்தமான சில அபிப்பிராயங்கள் இருக்கலாம்; விருப்பு வெறுப்புக்கள் இருக்கலாம். ஆனால் இவற்றைப் போதிக்கிற பாடத்தில் புகுத்தல் கூடாது. தன் கருத்துக் களுக்கிசைய, பாட புத்தகங்களிலுள்ள கருத்துக்களைத் திரித்துக் கூறுதல் கூடாது. எந்த நிலையிலுள்ள மாணாக்கர்களுக்கு எந்த விஷயத்தை எந்த அளவுக்குச் சொன்னால், அவர்களுக்குப் புரியும், அவர்கள் மனதில் பதியும் என்பதை ஆசிரியன் நன்கு தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அந்த வண்ணமே போதிக்கவேண்டும். இளைஞருள்ளம் எப்பொழுதுமே புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில் ஆவல் காட்டுந் தன்மையது; இதற்காகத் துருவித் துருவிக் கேள்விகள் போட்டுக் கொண்டிருக்கும். ஆசிரியன், இந்த ஆவலை வளர்க்க வேண்டும்; கேள்விகளுக்காக வருந்தக் கூடாது; சலிப்புக் காட்டக்கூடாது. தெரிந்தவற்றிற்குப் பதில் சொல்லவேண்டும்; தெரியாதனவற்றிற்குத் தெரிந்து சொல்ல வேண்டும். இதில் சிறிதுகூட நிதானம் இழக்கக் கூடாது. ஆசிரியன், கற்பிக்கிறவன் மட்டுமல்ல; கற்கிறவனுங்கூட. கற்கக் கற்கத்தான் கற்பிக்கின்ற கடமையை அவன் திறம்படச் செய்ய முடியும். எரிகிற விளக்குதான் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரே பாடத்தை அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கலாம். சொல்லிக் கொடுத்தது தானே என்று சிறிது கூடமுன் தயாரிப்பில்லாமல் அசிரத்தையுடன் வகுப்புக்குச் சென்று பாடஞ் சொல்லத் துணிவானாகில், நாளாவட்டத்தில் மாணாக்கர்களுடைய நம்பிக்கையை இழந்து விடுவான்; அவர்களுடைய அதிருப்தியையும் பெறுவான். ஒரே விஷயந்தான்; சொல்லிக்கொடுத்த பாடந்தான் ஆனால் படிக்கப் படிக்க, அதன்மீது சிந்தனை செலுத்தச் செலுத்த, பல புதிய கருத்துக்கள் உதயமாவதை அவன் அனுபவத்தில் கண்டுணரலாம். அவ்வப்பொழுது எழும் கருத்துக்களை அவ்வப்பொழுது மாணாக்கர் களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவன் கடமை யன்றோ? மற்றும் ஆசிரியன், எந்தத் துறையில் பயிற்சியளிக்கிறானோ அந்தத் துறையில் விசேஷப் புலமை பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஆனால் இதனோடு அவன் நின்று விடக்கூடாது; பல துறைகளிலும் அவன் பரிச்சயமாவது பெற்றிருக்கவேண்டும். உலகத்தில் அவ்வப்பொழுது பல்வேறு மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன;ஒரு துறையிலல்ல; பல துறைகளில். இவையனைத்தின் மீதும் ஆசிரியன் கவனஞ் செலுத்திவர வேண்டும். ஆசிரியனுடைய கவனத்திற்குப் புறம்பான விஷயமெதுவுமே இல்லையென்று சொல்லலாம். அப்பொழுதுதான், மாணாக்கர்களுக்கு அவ்வப் பொழுது எழும் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து அதன்மூலம் அவர்களுடைய அன்பையும் மரியாதையையும் பெற்றுக் கொள்வது சுலபமாயிருக்கும். இதற்காக ஆசிரியன், கல்வி நிலையத்திலுள்ள நூறு நிலையத் துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கவேண்டும். புதிதுபுதிதாகச் சேர்க்கப்பட்டு வரும் நூல்களை படித்து, தனது பலதுறை அறிவினை வளர்த்துக் கொள்ளவேண்டும். சிலர், நூல் நிலையத்தினின்று பெறும் நூல்களை மாதக் கணக்கில் தங்களிடம் வைத்துக்கொண்டு விடுகின்றனர். இதனால் மற்றவர்கள் இவைகளை உபயோகிக்க முடியாது போய்விடுகின்றது. இது தவறல்லவா? குற்றங்கூட, தவணைக்குள் நூல்களைப் படித்துத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இதுதவிர, பிரதியோர் ஆசிரியன் வீட்டிலும் ஒரு சிறிய நூல் நிலையமாவது இருத்தல் அவசியம். நல்ல நூல்களை அவ்வப்பொழுது அவன் சேகரித்து வரவேண்டும். எப்படி ஆயுதங்களில்லாத தொழிலாளி இல்லையோ அப்படியே நூல்களில்லாத ஆசிரியன் இல்லை. எல்லா வகை ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும். ஒருவனுடைய ஆத்மா நோய்வாய்ப்பட்டு விடுகிறபோது அவனுக்கு ஔஷதம்போல் உதவுபவை நூல்கள். நல்ல நூல்களில்லாத வீடு ஜன்னல்களில்லாத அறை மாதிரி என்று கூறுகிறான் ஓர் அறிஞன். இதற்குமேல் நூல்களின் அவசியத்தைப் பற்றி நாம் கூற விரும்பவில்லை. கற்ற அளவுக்குப் பாராட்டி, மேலும் மேலும் கற்க வேண்டு மென்று சொல்லி மாணாக்கர்களை உற்சாகப்படுத்தி வரவேண்டியது ஆசிரியன் கடமை. இப்படி உற்சாகப்படுத்தி விட்டால், அவர்கள் தலை கனத்துப் போய்,மேலும் கற்க வேண்டு மென்பதில் சிரத்தை காட்டமாட்டார் களென்று கருதிச் சிலர், அவர்களைப் பழித்தும் குறை கூறியும் வருவர். இந்த முறையினால் தான் அவர்களை முன்னுக்குக் கொண்டுவர முடியுமென்பது இவர்கள் நினைப்பு. இது தவறு. இதனால், மாணாக்கர்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுவார்கள். அவர்களுடைய கற்க வேண்டுமென்ற ஆர்வம் குன்றிப் போய்விடும். ஆதலின் ஆசிரியன் இந்தக் கண்டன முறையைக் கையாளாதிருப்பானாக. ஆசிரியன், பிள்ளைகளிடத்தில் எந்தவிதமான பாரபட்சமும் பாராட்டாதவனாயிருக்க வேண்டும். இன்ன இனத்தான்,இவ்வளவு பணமுடையான் என்ற பாகுபாடே அவன் உள்ளத்தில் உதிக்கக் கூடாது. பாடஞ் சொல்லல், விடைத்தாள்களைப் பரிசீலித்தல் முதலியவற்றில் யாருக்கும் எந்த விதமான சலுகையும் காட்டக் கூடாது. பொதுவாக ஆசிரியன் சலுகை காட்டுகிறவனல்லன்; கடமையைச் செய்கிறவன். இதனை அவன் நேர்மையுடனும் நிதான மிழக்காமலும் செய்ய வேண்டும். எந்த ஒரு தொழிலிலும் சௌகரியங்களும் உண்டு; அசௌகரியங் களும் உண்டு. ஆசிரியத் தொழிலிலும் இதைக் காணலாம். முதலில் சௌகரியங்களை வரிசைப்படுத்திக் கூறுவோம்:- 1. நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தல் என்று சொல் கிறார் களே அந்தச் சிரமம் இல்லை. கூடிய மட்டில் தேகாரோக்கியத்துட னிருப்பதற்கான வசதிகள் உண்டு. 2. ஓய்வு நாட்கள் நிறையக் கிடைக்கும். அன்றாடம், சொந்த அலுவல் களைக் கவனிப்பதற்கான அவகாசம் உண்டு. 3. இளைஞர்களோடு பழகுவதில் ஏற்படக்கூடிய அலாதியான இன்பத்தை எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டிருக்கலாம். 4. நல்ல நண்பர்களைப் பெற்று அவர்களுடன் சல்லாபம் செய்து கொண்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் பல உண்டு. 5. நல்ல பிரஜைகளைச் சிருஷ்டித்துக் கொடுக்கிறோ மென்ற திருப்தியடையலாம். 6. பொதுவாக, நல்வாழ்க்கை நடத்துவதற்கான ஒரு சூழ்நிலையை அமைத்துக்கொள்ள அதிகம் பிரயாசைப் படத் தேவையில்லை. அதுவே சுலபமாக வந்து அமைந்துவிடும். அசௌகரியங்கள் வருமாறு:- 1. அதிக பணம் சம்பாதிக்க முடியாது. சேர்த்து வைப்பதெங்கே? தன்னுடைய சந்ததிகளுக்கு ஆஸ்தி வைத்துப் போதலென்பது இயலாது. 2. படிப்படியாக மேல்நிலைக்கு வருவதென்பது கிடையாது. ஆசிரியனாக ஆரம்பித்து ஆசிரியனாக முடிய வேண்டியதுதான். 3. திருப்பித் திருப்பி ஒரே மாதிரியான வேலையை, -சொன்ன பாடங் களையே சொல்லிக் கொடுத்தல், மாணாக்கர்கள் எழுதுவதைத் திருத்துதல், இப்படிப்பட்ட வேலைகளை - செய்து கொண்டிருக்க வேண்டும். 4. அரசியல் விவகாரங்களில் எவ்வளவு உற்சாகம் இருந்த போதிலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவோ, அவற்றில் நேரடியாகக் கலந்துகொள்ளவோ முடியாது. 5. சமுதாயத்தை அசைத்துக் கொடுத்துவரும் நிகழ்காலப் பிரச்சினைகளில் சம்பந்தப்படாதவன் போலவும், பழமையோ டொட்டிய சம்பிரதாயங்களில் ஈடுபட்டவன் போலவும் நடந்துவர வேண்டும். 6. பிறருடைய அசட்டைக்கும் சலிப்புக்கும் ஆட்பட்டவனாக வாழ வேண்டும். இங்ஙனம் சௌகரியங்களும் அசௌகரியங்களும் ஒரே அளவின தாகக் கலந்திருந்தபோதிலும், சௌகரியங்களையே பெரிதாகக் கருதித் தன் தொழிலில் ஈடுபடவேண்டியது ஆசிரியன் கடமையாகும். யாருக்குமே, தான் செய்கிற தொழிலில் ஒருவித அதிருப்தி இருந்து கொண்டிருக்கும். ஆசிரியன், இந்த அதிருப்திக்கு இரையாகாமல் இதைக் கடந்தவனாயிருக்க வேண்டும். அப்பொழுது தான் அவன் பணி சிறக்கும். 5. வைத்தியன் மனிதன், முன்னேற்றமென்ற பெயரால் என்னென்னவோ சாதனை களையெல்லாம் சாதித்து வருகிறான். நாகரிகமென்ற பெயரால் என்னென்னவோ அனுகூலங்களையெல்லாம் அடைந்து வருகிறான்; ஆனால் நோயற்றவானாக வாழுஞ் சக்தியைப் பெற்றானில்லை. உண்மையில் அவன், முன்னேற்ற மார்க்கத்தில் முடுகிச் செல்லச்செல்ல, நாகரிகத்தில் முதிர முதிர நோய்கள் நிறைந்தவனாகவே ஆகி வருகிறான்; அப்படி ஆகி வருவதில் ஒரு பெருமையும் அடைகிறான். அதுதான் வேடிக்கை! நாகரிக வாழ்க்கை நடத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு குடும்பத்தினர் வசிக்கின்ற வீட்டிற்குள் நுழைந்து பாருங்கள்; எத்தனை அழகான மருந்துப் புட்டிகள்! அந்த வீட்டார்தான், எத்தனை விதமான நோய்களைச் சொல்லுகிறார்கள்! இந்த மாதம், டாக்டர் பில் இவ்வளவு ஆயிற்று என்று சொல்லுவதில் அவர்கள் அடையும் திருப்தியோ, பெருமையோதான் என்னே! நாகரிகமானது, நோயாளி தோளைப் பற்றிக்கொண்டுதான் முன்னேற்றப் பாதையில் செல்லுகிறது போலும்! மனிதன், இயற்கையன்னையின் அணைப்பிலிருந்து எப்பொழுது விலக ஆரம்பித்தானோ அப்பொழுதே வைத்தியனை அணுக ஆரம்பித்து விட்டான். அந்த வைத்தியனும் சமுதாயத்தின் இன்றியமையாத உறுப்பினனாகி விட்டான். வைத்தியனில்லாத ஊரில் வாசஞ் செய்ய வேண்டாமென்ற நிலைக்கல்லவோ இப்பொழுது நாம் வந்திருக்கிறோம். புதிய புதிய வியாதிகள்தான் எத்தனை! அந்த வியாதிகளைப் போக்கடிப் பதற்கென்று கண்டு பிடிக்கப்படுகின்ற புதிய புதிய மருந்துகள் தான் எத்தனை? வியாதிகள் உண்டாகின்ற வேகத்திற்கு மருந்துகள் கண்டு பிடிக்கப் படுகின்றனவா அல்லது மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்ற வேகத்திற்கு வியாதிகள் உண்டாகின்றனவா என்று சொல்ல முடியா மலிருக்கிறது. எந்த நாட்டில் வைத்தியர்கள் குறைவான பேராயிருக் கிறார்களோ, இருக்கின்ற வைத்தியர்களுக்கும் அதிமான வேலை யில்லையோ, அந்த நாட்டில் எல்லா வகைச் செல்வங்களும் நிறைந்திருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி, எத்தனையோ நூற்றாண்டு அனுபவத்திலிருந்தன்றோ பிறந்தது? ஒரு நாட்டிற்குரிய லட்சணங்கள் ஐந்தனுள் ஒன்று பிணியின்மை என்பதை திருக்குறள் வலியுறுத்துகிறது. நோயற்ற வாழ்வையே பெருநோக்காகக் கொண்டிருந்தனர் முந்தையோர் எந்த நாட்டிலும். இப்பொழுதோ? ஒவ்வொரு நாட்டிலும் ஆஸ்பத்திரிகளின் பெருக்கத்தைக் காண்கிறோம்; வைத்தியர்களின் பற்றாக்குறைக் கூக்குரலைக் கேட்கிறோம். இப்படிச்சொன்னதானால் முற்காலத்தில் எந்த நாட்டிலும் ஜனங்களிடையே நோய்கள் தலைக்காட்டவில்லை போலும் என்று வாசகர்கள் எண்ணிக்கொண்டுவிடக் கூடாது. நோய்கள் வந்து போயின; வைத்தியர்களும் இருந்து சிகிச்சை செய்தார்கள். ஆனால் இப்பொழுதுள்ளதைப்போல் அதிகமாயில்லை. முற்காலத்தில் நூற்றுக்குத் தொண்ணூறுபேர் நோயற்றவர்களென்று சொல்லும் படியா யிருக்கிறது. இப்பொழுது - இந்த இருபதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் - நூற்றுக்குத் தொண்ணூறு பேர் நோயுள்ளவர் களென்று சொல்லும்படியாயிருக்கிறது. இந்த விகிதாசாரத்தில், நாட்டுக்கு நாடு வித்தியாசப் படலாம்; நோய் வகைகளில் கூடுதல் குறைச்சல் இருக்கலாம். ஆனால் ஜனங்களுடைய ஆரோக்கியம், தலைமுறைக்குத் தலைமுறை படிப்படியாகக் குன்றி வருவதை எந்த நாட்டிலும் பரவலாகக் காணலாம். வாசகரே! உமது தந்தையின் உடல் வளமோ, உள்ளத் திண்மையோ உமக்கு இருக்கிறதா? மாறுதலடையும் தட்ப வெப்ப நிலை களுக்கு அவர் தேகம் ஈடுகொடுத்தது போல் உமதுதேகம் ஈடு கொடுக்கிறதா? இல்லை யென்று சொல்ல ஏன் தயங்குகிறீர்? உமது தந்தையைக் கேட்டால், என் தந்தைக்கு - அதாவது உமது பாட்டனாருக்கு - இருந்த பலத்தில் கால்வாசி எனக்கில்லை யென்றுதான் சொல்லுவார். இப்படியே பார்க்கலாம், ஆரோக்கியமென்பது தலைமுறைக்குத் தலைமுறை ஜனங்களிடமிருந்து அகன்று செல்வதை. அப்படியானால் ஆரோக்கியமென்பது என்ன? இதைச் சிறிது விளக்கினால்தான் மேலே சொன்ன உண்மை ஒருவாறு தெளிவாகும். உயரம், பருமன், கனம் இவைமட்டும் ஆரோக்கியத்தின் அறிகுறி களாகமாட்டா.இந்த மூன்றும் படைத்த பலரை நாம் பார்க்கிறோம். இவர்களிற் சிலர், கால் விரலில் ஒரு சிறு காயம் ஏற்பட்டால்கூட கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டு வைத்தியனிடம் ஒடுகிறார்கள். தாக்குப் பிடிக்கிற சக்தி என்று சொல்கிறார்களே அது லவலேசமும் இவர்களுக்கு இருப்பதில்லை. இன்னுஞ் சிலர், தலைவலி, வயிற்றுப் பொருமல் இப்படிப்பட்ட சில்லரை வியாதிகளினால் அடிக்கடி பீடிக்கப்படுகிறார்கள்; இதனால் மனக்கிலேசமும் அடைகிறார்கள். இந்தத் தேக உபாதிகளோ, மனக்கிலேசங்களோ தோன்றிய சீக்கிரத்தில் மறைந்து போகலாம்; இவை களினால் இவர்களுடைய அன்றாட காரியக் கிரமங்கள் எள்ளளவும் பாதிக்கப்படாமலிருக்கலாம். இருந்தாலும் இவை நோய் வித்துக்கள்; பிற்காலத்தில் பெரிய வியாதிகள் தோன்றுவதற்கான அறிகுறிகள். மற்றுஞ்சிலர், கோபதாபங்களுக்கு எளிதில் இரையாகி விடு கிறார்கள்; பொறாமைப்பேய் பிடித்து அடிக்கடி ஆடுகிறார்கள்; ஆசைக் கடலில் முழுகி முழுகி எழுந்திருக்கிறார்கள்; சுருக்கமாக, கீழான உணர்ச்சிகள் பலவற்றிற்கும் அடைக்கல ஸ்தானமாயிருக் கிறார்கள். காரணம், இவர்கள் மனம் நோய்வாய்ப் பட்டிருப்பதுதான். இப்படிப்பட்டவர்களெல்லாரையும் ஆரோக்கிய புருஷர் களென்று எப்படிச் சொல்ல முடியும்? கீழான உணர்ச்சிகளின் தங்குமிடமாக எந்த மனம் இல்லையோ அந்த மனந்தான் திண்மை உடையதாயிருக்கும்; மலைபோல் வரும் துன்பத்தைப் பஞ்சுபோல் ஊதித் தள்ளிவிடக் கூடிய ஆற்றல் பெற்றிருக்கும்; ஒழுங்கு என்னும் பாதையில் ஒழுக்கம் என்னும் ஊன்றுகோலைத் தாங்கிக்கொண்டு செல்லும்; அன்பின் ஊற்றுக் களமாயிருக்கும். இதன் கோயிலாக விளங்கும் உடலுக்கு எவ்வித ஊறும் நேரிடாது. எனவே, ஆரோக்கியமென்பது, உடல்நோயின்மை மட்டுமல்ல; உள்ளமும் நோயற்றிருக்கவேண்டும். உடல்வேறு உள்ளம் வேறுதான் என்றாலும் ஒன்றில்லாமல் மற்றொன்று இயங்க முடியாதல்லவா? ஒன்று வலிமை யுடையதாயிருந்தால், மற்றொன்றும் வலிமையுடைய தாகிறது. அப்படியே ஒன்றுக்கு ஊனம் ஏற்பட்டால் மற்றொன்றும் பாதிக்கப் படுகிறது. எனவே, இரண்டும்அதனதன் நிலையிலே இருந்து அதனதன் தொழிலைச் செய்துகொண்டும்; பரஸ்பரம் ஒத்துழைத்துக்கொண்டும் இருந்தால்தான் ஆரோக்கியம். திரும்பவும் சொல்லுகிறோம் - உடல் உரம் பெற்றிருந்து உள்ளம் ஊனப்பட்டுக் கிடந்தால் அஃது ஆரோக்கியமாகாது; அப்படியே உள்ளம் திண்மை பெற்றிருக்க, உடல் உளுத்துப்போன ஊதுகுழலாயிருந்தால் அதுவும் ஆரோக்கியமாகாது. இரண்டும் சேர்ந்திருப்பதுதான் ஆரோக்கியம். இத்தகைய ஆரோக்கிய ஸ்திரீ புருஷர்கள், உலகத்தின் மொத்த ஜனத்தொகையில் எத்தனை சதவிகிதம் பேர் இருப்பர்? புள்ளிப்போட்டுக் காட்டும் நிபுணர்களே! சிறிது சொல்லுங்கள். உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் சேர்த்துக் செப்பனிடுவது தான் வைத்தியம்; செப்பனிடுகிறவன்தான் வைத்தியன். வைத்தியத்தின் கடமைகளை நான்கு பெருங்கூறுகளாகப் பிரித்துக் காட்டலாம். ஒன்று, உடலையும் உள்ளத்தையும் அதனதன் நிலையிலே இருக்கச் செய்து அதனதன் கடமைகளை ஒழுங்காக அனுஷ்டித்து வருமாறு செய்தல் மற்றொன்று, அதே சமயத்தில் ஒன்றோடொன்று இணங்கிப் போகுமாறு செய்வித்தல், இன்னொன்று, ஒன்றுக்குச் சிகிச்சை செய்கிற போது, மற்றொன்று அந்தச் சிகிச்சைக்கு உதவியாய் நிற்கிறதாவென்று கவனித்துக் கொள்ளுதல்; பிறிதொன்று, அப்படி உதவியாக நிற்காவிட்டால் நிற்கும் வண்ணம் செய்தல். இந்த நான்கு வித கடமைகளைச் செய்துவர அதற்கு- வைத்தியத்திற்கு-இரண்டு வித அறிவு தேவைப்படுகிறது. ஒன்று. உடற்கூறு சாதிரத்தைப் பற்றிய அறிவு; இந்த மற்றொன்று மனோதத்துவ சாதிரத்தைப் பற்றிய அறிவு. இரண்டுவித அறிவைப் பெற்றிருக்கிறவன்தான் முழு வைத்தியன் இவன் செய்கிற சிகிச்சைக்குத்தான் பலனுண்டு. உயிர்களைக் காப்பாற்றிவிட்டால் மட்டும் போதாது. அந்த உயிர்களை நல்வழிப்படுத்திவிடவும் வேண்டும்; இதுவே வைத்தியத் தின் லட்சியமாயிருக்க வேண்டும்; இப்படி கூறுகிறான் ஓர் அறிஞன் இதையே மேலும் விஸ்தரித்து கூறுகிறான்; மனிதர்களுடைய சந்தோஷம் அதிகரிப்பதாகும், அவர்களுடைய உடலும் ஆன்மாவும் பூரணத்துவம் பெறுவதற்கும் உறுதுணையாயிருக்கின்ற உபகரணங்கள் சந்தர்ப்பங்கள் முதலியவைகளை அடையச் செய்கின்ற வியாதிகளோடு வைத்திய மானது உறவு கொள்ள வேண்டும். ஞானம், அழகு, தர்மம் இவைகள்மீது ஆவல் கொள்ள செய்வதாக வைத்தியமானது இருக்க வேண்டும். இந்த ஆவல் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம். எனவே, ஒரு சமுதாயத்தின் மேற்புறம் மட்டுமல்ல, உட் புறமும் ஆரோக்கிய வழியில் சென்று கொண்டிருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது வைத்தியனுடைய பொறுப்பு என்பது தெளிவாகிறது. வைத்தியம்தான், சகலசாஸ்திரங்களுக்கும் முதன்மையானது; தாய்போன்றது. வான சாஸ்திரம், ரசாயன சாஸ்திரம், ஆன்ம தத்துவ சாஸ்திரம் இப்படிப் பலவகை சாஸ்திரங்களுக்கும் காரணமா யுள்ளது. வைத்தியசாஸ்த்திரமே. ஆயுளும் ஆரோக்கியமும் இருந்தால்தானே ஆராய்ச்சிகள் நடைபெறுதலும், அவை களிலிருந்து சாஸ்திரங்கள் பிறத்தலும் சாத்தியம்? இதனாலேயே பாரத நாட்டுப் பெரியோர்கள், வைத்தியத்தை, வேதங்களுள் ஒன்றாகக் கொண்டு இதற்கு ஆயுர்வேதமென்று பெயர் கொடுத்தனர். வைத்தியத்தின் பழமை வெகு ஆழமானது. கிறிஸ்து சகத்திற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முந்தியிருந்தே உலகத்துப் பல்வேறு நாடுகளிலும் இது பண்பட்ட நிலையிலே இருந்து வந்திருக்கிறது. இப்பொழுது நாம் எவை எவைகளையெல்லாம் நூதன சிகிச்சை முறை களென்று கருதி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ அவை யெல்லாம் பழமையின் விழுதுகளே. எல்லாச் சாஸ்திரங்களையும் எல்லாக் கலைகளையும் தொட்டி லிட்டுத் தாலாட்டி வளர்த்து உலகினுக்கு வழங்கியது போல் வைத்தியத்தையும் சாஸ்திரரீதியாக வளர்த்து மக்களின் நன்மைக் காகப் பயன்படுத்தியது. நமது தாய் நாடு. சாஸ்திர ரீதியாக வளர்த்து என்று ஏன் சொல்கிறோமென்றால், மேலை நாட்டார் நாகரிகத்தில் தலைதூக்கி நின்ற பிறகுதான் வைத்தியமானது சாஸ்திர ரீதியாக ஒழுங்குப்படுத்தப் பட்டதென்ற ஒரு தவறான எண்ணம் நம்மில் பலரிடையே நிலவி வருவதனால்தான். பார்க்கப் போனால், மேலை நாட்டாருடைய வைத்திய சம்பந்தமான முன்னேற்ற மெல்லாம் கி.பி. பதினாறாவது நூற்றாண்டுக்குப் பிறகேயாகும். அதிலும் 1914-ஆம் ஆண்டுத் தொடங்கிய முதல் உலக மகாயுத்தத்திற்குப் பிறகே இந்த முன்னேற்றம் தீவிர மடைந்ததென்று சொல்ல வேண்டும். இந்த மகாயுத்தம், மற்றத் துறை களில் புதிய புதிய பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டதைப்போல், வைத்தியத் துறையிலும் புதி புதிய வியாதிகளைக் கிளறிவிட்டது. இதனால் இந்தத் துறையில் தீவிர முன்னேற்றம் காணவேண்டியது அவசிய மாயிற்று. தீவிரமான இந்த முன்னேற்றம் பிரமிக்க தக்கதாயிருக்கிற தென்றாலும், வைத்தியத்துக்கு எது இன்றியமையாததோ, எது இல்லாமற் போனால் அதனின்று எவ்வித நல்ல பயனும் விளையாதோ அஃது-அந்த மனிதப் பண்பு தேய்பிறைச் சந்திரனைப் போலாகிக் கொண்டு வருகிறது. உயிரில்லாத யந்திரம் இயங்குவதுபோல் இப்பொழுது வைத்தியத் தொழிலில் நடைபெறுகிறதென்று சொன்னால், மேனாட்டு முறையில் பயின்ற வைத்தியர்கள் நம்மைக் கோபித்துக் கொள்ளமாட்டார்களென்று நம்புகிறோம். இங்ஙனம் வைத்தியமானது யந்திரமயமாகி விட்டபடியால் தான், என்னென்னவோ நூதனமான சிகிச்சை முறைகளெல்லாம் கையாளப் பட்டபோதிலும், காணும் பலன் கொஞ்சமாகவே இருக்கிறது. ஏற்கனவே சொன்னபடி நோய்கள் அதிகப்பட்டுக் கொண்டு வருகின்றன. முன்னேற்றம் என்று பறை சாற்றுவதிலே என்ன பெருமை இருக்கிறது? இஃது இருக்கட்டும். கிறிஸ்து சகத்திற்கு வெகு காலத்திற்கு முந்தியே இந்தியாவில், வைத்தியமானது சாஸ்திரரீதியாக ஒழுங்குபடுத்தப்பெற்று அனுஷ்டானத்தில் இருந்து வந்திருக்கிறது. பலவகை நோய்கள் உண்டாவதற்கான காரணங்கள் அவைகளுக்குரிய பரிகாரங்கள் முதலியவைகளை எட்டு வகையாகப் பிரித்துப் பேசியிருக்கிறார்கள். நூற்றுக் கணக்கான மூலிகைகளைப்பற்றி வேதங்கள் பேசுகின்றன. போர்க் களத்திற்குச் செல்லும் படைகளுடன் வைத்தியர்கள் சென்று , அவ்வப் பொழுது தேவைப்படும் சிகிச்சைகளைச் செய்து வந்திருக் கிறார்கள். பொதுவாக, வேதகாலமென்று எந்தக் காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறோமோ அந்தக் காலத்தில், ஜனங்களுடைய சுகாதாரம் மிகவும் நல்ல நிலைமையில் இருந்தது. ஒவ்வொரு நாட்டிலும்,வைத்தியத்தின் தந்தையென்று ஒருவனைச் சொல்லிப் போற்றுவதுண்டு. இந்தியாவில், தன்வந்திரியைச் சொல் வார்கள்; அகத்தியரையும் சொல்வதுண்டு. இவர்கள், தங்கள் சீடர்கள் வாயிலாக வைத்தியத்தை உலகில் பரவச் செய்தார்களென்பது அதிகம். இஃதெப்படி இருந்தபோதிலும், இன்றைய இந்திய வைத்தியத்திற்கு-ஆயுர்வேத முறைக்கு-வழிகாட்டி களென்று கௌரவிக்கப்பெற்று பின்பற்றப்படுகிறவர்கள் இருவர். ஒருவன் சரகன்; மற்றொருவன் சுஸ்ருதன். இவர்கள் எந்தக் காலத் தவர் என்று நிர்ணயப்படுத்திச் சொல்வதிற்கில்லை. கிறிஸ்துவுக்குப் பல ஆண்டுகள் முந்தியவர்கள் என்று நிச்சயமாகக் கூறலாம். இவர்களில் சரகன், மருந்துகள் கொடுத்து நோய்களைக் குணப் படுத்துவதில் வல்லவன். சுஸ்ருதன், சத்திர சிகிச்சையில் வல்லவன். இவர்கள் எழுதி வைத்துப்போன நூல்களே பிற்காலத்தில் வைத்தியர்களுக்கு வேத புத்தகங்களாக இருந்து கொண்டிருக்கின்றன. கி.பி. ஏழாவது நூற்றாண்டிலேயே இவை அராபிய மொழியிலும், பிறகு பாரசீகம்,லத்தீன் முதலிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரசித்தமடைந்தன. சரகன், மிகமிக நேர்மையுடன் தன் தொழிலை நடத்தி வந்தான். சுயநல நோக்கங்கொண்டு சிகிச்சை செய்யக் கூடாதென்று இவன் விதி செய்தான். உன்னுடைய நன்மைக்காக இல்லாமல், உலக ரீதியாகக் கிடைக்கக்கூடிய அனுகூலங்களை அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதாயில்லாமல், மானிட சமுதாயத்தின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, நோயாளி களுக்கு நீ சிகிச்சை செய்ய வேண்டும்.அப்படிச் சிகிச்சை செய்வதன் மூலந்தான் நீ மற்றவர்களை விஞ்சவேண்டும். சிகிச்சை செய்வதை வியாபாரப் பொருளாகக் கருதி விற்கிறவர்கள், பொன்னைப் பறி கொடுத்து விட்டு மண்ணைத் திரட்டிக் குவிக்கிறவர்களேயாவர் என்பது, இவன் வைத்தியர்களுக்குச் செய்யும் உபதேசம். இவன், வைத்தியத்தை ஒரு தொழிலாகக் கருதி நடத்தவில்லை; சேவையாகக் கருதியே செய்து வந்தான். சுருக்கமாக, வைத்தியமே இவனுடைய வாழ்க்கையாக இருந்த தென்று கூறலாம். ஒரு சிகிச்சைசாலை-தற்கால ஆஸ்பத்திரி-எப்படி எப்படி அமைந்திருக்க வேண்டுமென்பதைப்பற்றி இவன் கூறுவதைக் கண்டு நாம் பிரமித்துப் போகவேண்டியிருக்கிறது. சுஸ்ருதனுடைய சத்திர சிகிச்சை முறைகளிற் சிலவற்றை எகிப்தியர்களும் கிரேக்கர்களும் அப்படியே பின் பற்றியிருக் கிறார்கள். எந்த இடம் சத்திரமிடப்படவேண்டுமோ அந்த இடம் மரத்துப்போய் நோயாளிகளுக்கு வலி தெரியாமலிருக்கும் பொருட்டு இவன் சில உபாயங்களைக் கையாண்டிருக்கிறான்; எலும்புகள் உடைந்துபோயிருந் தாலும் சரி, இடம்விட்டு இடம் பெயர்ந்திருந்தாலும் சரி, இவைகளை யெல்லாம் சரிப்படுத்தி விட்டிருக்கிறான். சுருக்கமாக, இந்தக் காலத்து சர்ஜன்கள் கடினமானவை என்று கருதுகின்ற அநேக ஆபரேஷன்களை இவன் சர்வ சுலபமாகச் செய்திருக்கிறான். கொசுக்கடியினால்தான் மலேரியா ஜூரம் உண்டாகிறதென்று சொல்லி அதற்கான பரிகார முறைகளையும் இவன் கூறியிருக்கிறான். சரகனையும், சுஸ்ருதனையும் பின்பற்றி எத்தனையோ பேர் நமது நாட்டில் அற்புதமான சிகிச்சைகள் பல செய்து அரும்புக ழெய்தியிருக்கிறார்கள். அரசாங்கத்தின் சார்பில் அநேக சிகிச்சாலயங்கள்-ஆஸ்பத்திரிகள்-நடைபெற்று வந்திருக்கின்றன. அசோகனுடைய சாஸனங்கள் மூலம் மிருக வைத்திய சாலைகளும் இருந்திருக் கின்றனவென்று தெரிகிறது. அரசாங்கத்தின் சார்பில் நடைபெற்று வந்த ஆஸ்பத்திரி களைத் தவிர, அயோத்தி,காசி,பாடலிபுத்திரம், காஞ்சிபுரம் இப்படி அநேக நகரங்களில் வைத்திய நிபுணர்கள் சொந்தமான சிகிச்சாலயங்கள் ஏற்படுத்தி, தொலை தூரங்களிலிருந்து வந்தவர்கள் உள்பட பலருக்குச் சிகிச்சை செய்து குணப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். ஜீவகன் என்ற ஒருவன். புத்தர் பெருமானுக்கும் அவர் சீடர் களுக்கும் வைத்தியம் பார்த்தவன்; வைத்தியத்திலும் ரண சிகிச்சை யிலும் கை தேர்ந்தவன். அநேக அரசர்களுக்குச் சிகிச்சை செய்திருக் கிறான். இதனால் வைத்தியர்களில் அரசனாயிருந்திருக் கிறான். இவன் பயிற்சி முடித்த வரலாற்றைக் கேளுங்கள். இவன் பயின்றது மொத்தம் ஏழு வருஷம். இஃதானதும், ஆசிரியனை யணுகி, நான் பயின்றது போதுமா? விடைபெற்றுக் கொள்ளலாமா? என்று கேட்டான். விடை கொடுப்பதற்குமுன் ஆசிரியன் இவனை ஒரு பரீட்சைக்குட்படுத்த விரும்பினான். இதோ, ஒரு கடப்பாரையை எடுத்துக்கொள். இந்த இடத்திலிருந்து சுமார் எட்டரை மைல் விஸ்தீரணத்திற்கு நான்கு திசையிலும் சுற்றிப்பார். சுற்றிப் பார்த்து, எங்கேனும், மருந்துக்கு உபயோகப்படாத செடியோ கொடியோ ஒன்றிருக்குமானால்கூட அதைக் கொண்டுவா என்று உத்தரவிட்டான். ஜீவகன் அப்படியே சென்று சுற்றிப்பார்த்து விட்டுத் திரும்பி வந்து மருந்துக்கு உபயோகப்படாத செடியோ கொடியோ ஒன்றுகூட இல்லை என்று கூறினான். அப்படி யானால் உன் பயிற்சி முடிந்து விட்டது.வைத்தியம் செய்யத் தகுதி யுடையவ னாகிவிட்டாய் என்று ஆசிகூறி வழிச் செலவுக்குச் சிறிது பணங் கொடுத்து விடையும் கொடுத்தான். இங்ஙனம் பயிற்சி பெற்ற இவன் பிற்காலத்தில் வைத்தியர்களில் அரசனாக விளங்கியதில் ஆச்சரிய மென்ன? பொதுவாகவே, வைத்தியத்தின் பல அமிசங்களிலும் பூரண ஞானம் கைவரப் பெற்ற பிறகே ஒருவன் வைத்தியனாக அங்கீகரிக்கப் பட்டுத் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டான். அரசாங்கத்தின் கண் காணிப்பிலேயே இவன் தொழில் நடத்த வேண்டுமென்ற நியதியும் இருந்தது. அரைகுறையாகச் சிகிச்சை செய்ய முனைந்தவன் அரசாங்கத்தால் தண்டிக்கவும்பட்டான். இந்தக் காலத்தைப்போல் ஜனங்கள் சில்லரை வியாதிகளுக் கெல்லாம் வைத்தியனை நாடிச் செல்லவில்லை. சுய சிகிச்சைக்கு அப்பாற்பட்ட வியாதிகளுக்குத்தான் வைத்தியனிடம் சென்றார்கள். ஏனென்றால், எல்லாருமே வைத்திய சம்பந்தமான சாதாரண அறிவு பெற்றிருந்தார்கள்; தங்களுடைய ஆரோக்கியத்தைத் தாங்களே கவனித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள்; சுகாதார விதிகளைக் கண்டிப்பாக அனுஷ்டித்து வந்தார்கள். இதற்குக் காரணம், நாட்டில் நிலவி வந்த கல்விமுறை தான். ஆரம்பப் பள்ளிகளில் வைத்தியம் கட்டாய பாடமாகப் போதிக்கப் பட்டு வந்தது; சுகாதார விதிகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. ஏட்டிலே கற்றதை எல்லாரும் கூடிய மட்டில் நடைமுறைப் பழக்கமாக்கிக் கொண்டு விட்ட தனால் வைத்தியனை அதிகமாக நாடவேண்டிய அவசிய மில்லா மலிருந்தது. நம் நாட்டு வைத்தியர்களின் புகழ் வெளி நாடுகளில் பரவியிருந்தது. கி.பி எட்டாவது நூற்றாண்டில் அரேபியாவில் ஆண்ட ஒரு மன்னன், தனது நாட்டு வைத்தியர்களிற் சிலரை அனுப்பி, இங்கு அனுஷ்டானத்தில் இருந்து வரும் வைத்திய முறைகளைக் கற்று வருமாறு செய்தான் மற்றும், இங்கிருந்து சுமார் இருபது பேருக்கு மேற்பட்ட வைத்தியர்களைத் தனது நாட்டிற்கு வரவழைத்து, அங்கு நடைபெற்று வந்த ஆஸ்பத்திரி களின் மேலதிகாரிகளாக நியமித்துக் கொண்டான். இவர்களைக் கொண்டு, வடமொழியிலுள்ள அநேக வைத்திய நூல்களை அரேபிய மொழியில் மொழிபெயர்க்கச் செய்தான். சரகனும் சுஸ்ருதனும் அரேபிய மொழியில் காட்சியளித்தார்கள்.அரேபிய வைத்தியர்களால் குணப்படுத்த முடியாத அநேக வியாதிகளை இங்கிருந்து சென்றவர்கள் குணப்படுத்தியிருக் கிறார்களென்று அறிந்து மகிழ்கிறோம். இந்தியாவுக்கு அடுத்தது சீனா; பழமையிலே பெருமை கொண்ட நாடு. இங்கு, ஏசுநாதரின் அவதாரத்திற்குச் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் முந்தி ஷென்-நுங் என்ற ஓர் அரசன் ஆண்டு வந்தான்1. இவனையே வைத்தியத்தின் தந்தையாக கொண்டாடு கிறார்கள் சீனர்கள். சீனாவின் தன்வந்திரி என்று இவனைச் சொல்லலாம். பென்த் ஸாவோ2, என்ற வைத்திய சாஸ்திரத்தை இவன் இயற்றியதாகச் சீனர்கள் நம்புகிறார்கள். இவனைப்போலவே ஹூவாங்க்தி3 என்ற ஒரு சக்ரவர்த்தி நெய்சிங்4 என்ற ஒரு வைத்தியக் கிரந்தத்தை எழுதி உலகிற்கு உபகரித் தானென்று கூறுவர். இவற்றிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டியதென்ன வென்றால், சீனாவில் அரசர்கள், தங்கள் பிரஜைகளின் பொருள் களைக் காப்பாற்றிக் கொடுக்கின்ற பொறுப்பை மட்டுமில்லாமல், அவர்களுடைய உயிரை வளர்த்துக் கொடுக்கின்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதேயாம். சீனாவில், அரசாங்கத்தின் ஆதரவு பெற்றே வைத்தியத் துறை யானது செழுமை பெற்று வந்தது. வைத்தியர்கள் அரசாங்க உத்தியோகஸ்தர்களாக இருந்தார்கள். வருஷந் தோறும் வைத்தியப் பரீட்சையொன்று நடத்துவித்து அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அவர்களுடைய தகுதிக் கேற்ப சம்பளம் நிர்ணயித்து தனது சேவையில் அமர்த்திக் கொள்வதை அரசாங்கம் தனது கடமையாகக் கொண்டிருந்தது. புதிதாக வைத்தியத் தொழிலில் பிரவேசிக்கிறவர் களுக்கு மட்டும் இந்தப் பரீச்சை என்பதில்லை; ஏற்கெனவே தொழில் செய்துகொண்டு வருவோருக்கும் இந்த வருஷாந்தப் பரீட்சையுண்டு. மற்றத் தொழில் களைப் போலல்லாமல், வைத்தியத் தொழில்மட்டும் அடிக்கடி புதுப்பிக்கப் பட்டு வரவேண்டிய தொன்று என்பதைச் சீனர்கள் நன்கு உணர்ந்திருந் தார்களென்று இதிலிருந்து நன்கு தெரிகிறது. மேலே சொல்லப்பெற்ற ஷென்-நுங், ஹூவாங்க்தி இவர்களைத் தவிர த்ஸாங்-குங்5 என்ன, சாங் சுங்சிங்6 என்ன, ஹூவாதோ7 என்ன இப்படி அநேக வைத்திய நிபுணர்கள் ஒவ்வொரு நோயைப்பற்றியும் நன்கு ஆராய்ந்து, ஒவ்வொரு நோய்க்கும் தாங்கள் கையாண்ட சிகிச்சை முறை களையும், அவைகளினால் ஏற்பட்ட அனுகூலப் பிரதிகூலங்களையும் விவரித்துச் சிறந்த வைத்திய கிரந்தங்களை எழுதியிருக்கிறார்கள். சுருக்கமாக, சீனர்கள், மற்றத் துறைகளில் முதல்வனாயிருந்தது போல் வைத்தியத் துறையிலும் அநேக அமிசங்களில் முதல்வராக இருந்திருக்கிறார்கள்1. இனி எகிப்துக்குச் சென்று பார்க்கலாம். கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியே இந்த நாடு நாகரிகத்தின் உச்ச நிலையிலே இருந்தது. வைத்தியத்தின் சிறப்புக்குக் கேட்பானேன்? ஆயுர்வேதத்திற்கு தன்வந்திரி எப்படியோ அப்படியே எகிப்திய வைத்தியத்திற்கு இம்ஹோடேப்2. இவனைப் பெரிதும் போற்றினார்கள் எகிப்தியர்கள். இவனுக்கு ஒரு கோயிலும் கட்டி வழிபட்டார்கள். இவன் கி.மு.2980-ஆம் ஆண்டிலிருந்து கி.மு.2900-ஆம் ஆண்டுக்குள் வாழ்ந் திருக்கக்கூடுமென்று இவன் காலத்தையும் நிர்ணயம் செய்திருக் கிறார்கள் வைத்தியத்தின் சரித்திரத்தை ஆராய்ந்திருக்கிற அறிஞர்கள். வைத்திய சம்பந்தமான நூல்கள் பல இருந்திருக்கின்றன எகிப்தில். இவற்றில் நோய் வகைகளும் சிகிச்சை முறைகளும் விளக்கப்பட்டிருக் கின்றன. தலை வழுக்கை விழுந்து போனால் என்ன செய்வது? கண் பார்வை குன்றிப்போனால் என்ன செய்வது? இந்த நூல்களில் பரிகாரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. ஒரு நூலில், சத்திரமிடப்பெறவேண்டிய நாற்பத்தெட்டு வகையான நோய்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. மருந்து வகைகளில் விளக் கெண்ணெயை அதிகமாக உபயோகப்படுத்தி வந்திருக்கிறார்கள் எகிப்தியர்கள். உயிர்போன பிறகு உடலை வைத்துக் காப்பாற்றுவதில் எகிப்தியர்கள் வல்லவர்களாயிருந்தார்களென்பதைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இதேபோல், வயிற்றுக்குள் ஏற்படும் ரணங்களை ஆற்றிக் கொடுப்பதிலும் வல்லவர்களாயிருந்தார்கள். வைத்தியன், நோயாளியிடத்தும் அவனைச் சேர்ந்த உறவினர் களிடத்தும் எப்படி எப்படி நடந்துக்கொள்ள வேண்டுமென்பதைப் பற்றிக் கண்டிப்பான சில விதிகள் வகுக்கப்பட்டு அனுஷ்டானத்தில் இருந்தன. இவைகளையே கிரேக்கர்கள் பின்பற்றினார்களென்று சொல்லப்படுகிறது. இப்பொழுது ஈராக் என்று எந்தப் பிரதேசத்தை அழைக் கிறோமோ அது முந்தி மெஸோபோட்டேமியா என்று அழைக்கப்பட்டது3. இங்கு கிறிஸ்து சகத்திற்கு அநேக நூற்றாண்டு களுக்கு முந்திச் சிறு சிறு சாம்ராஜ்யங்கள் தோன்றிப் பிரகாசமான வாழ்க்கையை நடத்தி வந்தன. இந்தச் சாம்ராஜ்யங்களில் வைத்தியத் தொழில் மிகச் சிறப்பாக நடை பெற்று வந்தது. ஜனங்களின் சுகாதாரம் அரசாங்கத்தின் பாதுகாப்புக்குட்பட்டிருந்தது. இந்தச் சாம்ராஜ்யங்களில் ஒன்றான சுமேரியாவில், ஒருவனுக்கு நோய் வந்துவிட்டால் அஃது அவனைச் சேர்ந்த விஷயமென்று கருதப்படவில்லை; சமுதாயமனைத்தும் சேர்ந்து கவனிக்கவேண்டிய விஷயமென்று கொள்ளப்பட்டது. இந்தக் காலத்தில் இது மிக விசித்திர மாகத் தென்படலாம்;இது நடை முறையில் எப்படிச் சாத்தியமென்றும் கேட்கப்படலாம். ஆனால் இது சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருந்து வந்தது; ஆம்; கிறிஸ்துவுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தி. எப்படி? நோய்வாய்ப்பட்டிருப்பவனைச் சந்தை கூடுமிடத்திற்குக் கொண்டு வருவார்கள். சந்தை கூடுவதென்பது முற்காலத்தில் எல்லா நாடுகளிலும் தினசரி சம்பவம். இந்த இடத்திற்குக் கொண்டு வரப்படும் நோயாளியைப் போவோர் வருவோர் யாவரும் பார்த்துப் பேசுவார்கள். தங்களுக்கோ, தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ இது மாதிரியான நோய் வந்திருக்கிறதா, அப்படி வந்திருந்தால் அதற்கு என்ன சிகிச்சை செய்யப் பட்டது என்றெல்லாம் சிந்தித்துப் பார்ப்பார்கள்; தங்களுடைய அனுபவத்தையும் தாங்கள் கையாண்ட பரிகார முறைகளையும் அல்லது மற்றவர்களிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் நோயாளி யிடமோ, அல்லது அவனோடு கூட வந்திருக்கிறவர்களிடமோ தெரிவிப் பார்கள். இப்படித் தெரிவிக்காமல் போகக்கூடாதென்ற நியதியும் இருந்தது. இதைப்பற்றிப் பிரதம கிரேக்க சரித்திராசிரியனான ஹெரோடோட்டஸ்1 தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறான். தனிப்பட்ட மனிதர் பலர் சேர்ந்ததுதான் சமுதாயம். அதில் ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டால்கூட அந்த அளவுக்குச் சமுதாயம் நோய்ப்பட்டிருக்கிறதென்பதே அர்த்தம். இதனால் இந்த நோய்க்குப் பரிகாரந் தேடிக்கொடுப்பது சமுதாயத்தின் பொறுப்பாகக் கொள்ளப் பட்டது. மற்றும் இந்த முறையினால், சகோதர நேயம், ஒற்றுமை உணர்ச்சி, ஜீவகாருண்யம் ஆகிய மேலான பண்புகள் வளர்ந்தன. பாபிலோனியாவில் சென்று பார்ப்போம். இங்குக் கிறிஸ்து சகத்திற்குச் சுமார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹாம்முராபி2 என்ற ஓர் அரசன் ஆண்டு வந்தான். இவன் நமது நாட்டு மனு நீதியைப்போல் ஒரு நூல் எழுதியிருக்கிறான். ஹாம்முராபியின் சட்ட திட்டங்கள்3 என்றே இதனை அழைப்பார்கள். இதனால்தான் இவன் இன்றளவும் பிரசித்த முடையவனாயிருக்கிறான். இவன் இந்த நூலின் ஒரு பகுதியில், ஒரு வைத்தியன் இன்ன வியாதியைக் குணப்படுத்தினால் இவ்வளவு கட்டணம் பெறுவதற்குரியன் என்று நிர்ணயம் செய்து காட்டியிருக்கிறான். ஓர் உதாரணம்:- சத்திர சிகிச்சை செய்துகொள்கிறவன் ஒருகனவானா யிருந்தால் அவனிடமிருந்து பத்து வெள்ளிக்காசுகளும், மத்தியதர வகுப்பினனா யிருந்தால் அவனிடமிருந்து ஐந்து வெள்ளிக் காசுகளும் முறையே ஒரு வைத்தியன், தனக்குரிய கட்டணமாகப் பெறக்கடவன். ஓர் அடிமைக்குரிய சத்திர சிகிச்சை செய்யவேண்டி யிருந்தால் அந்த அடிமைக்குச் சொந்தக்காரன் யாரோ அவனிடமிருந்து வைத்தியன் இரண்டு வெள்ளிக் காசுகள் பெறக்கடவன். வைத்தியன், ஒருவனுடைய உடைந்து போன எலும்பைக் கூட்டி வைத்தாலும் சரி, அல்லது ஒருவனுடைய வயிற்றுக் கோளாறைத் தீர்த்து வைத்தாலும் சரி, அவனிடமிருந்து ஐந்து வெள்ளிக் காசுகளைத் தனக்குரிய கட்டணமாகப் பெறக்கடவன்1 இந்த மேற்கோளிலிருந்து வாசகர்கள் இரண்டு விஷயங் களைத் தெரிந்துகொள்ளலாம். ஒன்று, பாபிலோனியாவில், சமுதாயத் தினர் மூன்று தரத்தினராக, அதாவது கனவான், மத்திய தரத்தினன், அடிமை என்ற மூன்று தரத்தினராகப் பிரித்திருந்தனர் என்பது. மற்றொன்று பாபிலோனியாவில், வைத்தியம், அரசாங்கத் தின் ஆதரவு பெற்ற ஒரு தொழிலாகவே, அதாவது ஜீவனோபா மாகவே நடைபெற்று வந்த தென்பது. நமது நாட்டிலோ வைத்தியம் செய்வதென்பது ஒரு தொண்டாகவே கொள்ளப்பட்டது. இந்தத் தொண்டின் வாயிலாகக் கிடைத்த ஊதியத்தைக்கொண்டு, அதாவது சிகிச்சை பெற்றவர்கள் மனமகிழ்ந்து கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்தார்கள் நமது நாட்டு முற்கால வைத்தியர்கள். எவ்வளவு வித்தியாசம்! கி.மு. ஏழாவது நூற்றாண்டில் அஸ்ஸிரியாவில் ஆண்டு கொண்டிருந்த அஷுர்பாணிபால்2 என்ற அரசன், சிறந்ததொரு நூல் நிலையத்திற்குச் சொந்தக்காரனாயிருந்தான். இதில், உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட அநேக வைத்தியக் கிரந்தங்கள் இருந்தன. மேலை நாட்டு நாகரிகத்தின் தாயகமாக விளங்கிய கிரீஸில் தான் எத்தனை வைத்தியப் பள்ளிக்கூடங்கள் இருந்திருக்கின்றன! எத்தனை வைத்தியர்கள் அரிய சிகிச்சைகள் செய்து வந்திருக் கிறார்கள்! உடலையும் உள்ளத்தையும் ஒரே மாதிரி ஆரோக்கிய நிலையில் வைத்திருப்பதில் கிரேக்கர்கள் அதிக சிரத்தை காட்டினார் களென்பது சரித்திரப் பிரசித்தி பெற்ற விஷயம் கி.மு.776-ஆம் வருஷம் தொடங்கப்பெற்று சுமார் நாற்பது தலைமுறைகளுக்கு அதிகமாகத் தொடர்ந்தாற்போல் நடைபெற்றுவந்த ஒலிம்ப்பிய விழாவே இதற்குச் சாட்சி. கிரேக்க வைத்தியத்தின் தந்தை ஆஸ்க்ளேப்பியஸ்1. இவனை ஒரு தெய்வமாக வழிபடுகிறார்கள் இன்றளவும் கிரேக்கர்கள். ஹோமர்2 மகாகவியின் காவியத்திற்குப் பொருளாயிருக்கிற ட்ரோஜன் யுத்தத்தில்3, இவனும், அதாவது ஆஸ்க்ளேப்பியஸும் இவனுடைய இரண்டு குமாரர் களும் சேர்ந்து போர்வீரர்களுக்கு அவ்வப்பொழுது ஏற்பட்டு வந்த நோய் களுக்குப் பரிகாரங்கண்டு வந்தார்களென்பது ஐதிகம். ஆனால் வைத்தியத்தைச் சாஸ்திர ரீதிக்குட்படுத்தி, கிரேக்கர் களுக்கு மட்டுமல்ல, மேலை நாட்டாருக்கே வழி வகுத்துக் கொடுத்தவன் ஹிப்போக்ராட்டீஸ்4 என்பவன். இவன் அறுதியிட்டுச் சென்ற அநேக நியதிகளை இன்றளவும் மேனாட்டு முறையில் வைத்தியம் பயிலுவோர் கடைப்பிடித்து வருகிறார்கள். ஹிப்போக்ராட்டீஸ், ஆத்தென்ஸ்5 நகரத்தில் தன் தந்தையிடமே முதன்முதல் வைத்தியம் பயின்றான். பிறகு கிரீஸின் பல பகுதி களுக்கும் சென்று தொழில் நடத்தினான். இவன் கைபட்டுக் குணம் பெற்றோர் பல்லோர், குணப்படுத்தியது பெரிதல்ல; தன்னுடைய அனுபவத்தையும், தன்னுடைய அறிவுத் திறனால் கண்ட அநேக புதிய விஷயங்களையும் அப்படி அப்படியே எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறான் இவன். இதுதான் இவனைச் சிரஞ்சீவியாக வாழ வைத்திருக்கிறது. நோயாளியின் முகத்தோற்றம், கைநாடி, சீதோஷ்ண நிலை, மூச்சு வேகம், சிறுநீர், கோழை இவைகளை யெல்லாம் நுணுக்கமாகப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டுமென்ற முறையை முதன்முதலாகச் செய்து பார்த்தவன் இவனே. மரணத் தறுவாயிலிருக்கும் ஒருவனுடைய முகத்தோற்றம் எப்படி இருக்கு மென்பதை இவன் மிக நன்றாகக் குறித்து வைத்திருக் கிறான். இதைக் காட்டிலும் நுணுக்கமாகவோ, விவரமாகவோ இன்றைய வைத்தியர்கள் குறித்துக் காட்ட முடியுமா வென்பது சந்தேகந்தான். தான் கண்ட அனுபவ உண்மைகளை இவன் பழமொழிகள் போல் எழுதி வைத்துப் போயிருக்கிறான். சில வருமாறு:- இளைஞர்களைக் காட்டிலும் வயோதிகர்களுக்குக் குறைவான நோய்களே ஏற்படுகின்றன. ஆனால் நீடித்த நோயொன்று வயோதி கர்களைப் பற்றிக்கொண்டு விடுமானால், அஃது அவர்களை மரணம் வரையில் விடுவதில்லை. தேகம் பருத்தவர்கள் சீக்கிரத்தில் இறந்து போகிறார்கள். வயோதிகர்களுக்கு உண்ணாவிரதமிருப்பது கஷ்டமில்லை. காரணமில்லாமல் அசதி ஏற்படுமானால் ஏதோ ஒரு நோய் ஆரம்பமாகிறது என்று அர்த்தம். நீண்ட நோய்க்குப் பின்னர் வயிறு புடைக்கச் சாப்பிடுதல் தீங்கு பயப்பதாகும். ஒருவனுக்குக் காயமேற்பட்டு அதனால் அவனுக்கு வலிப்பு உண்டாகுமானால் அது மரணத்திற்கறிகுறியேயாகும். ஹிப்போக்ராட்டீஸிடம் காணப்பட்ட விசேஷமென்ன வென்றால், தனக்கு முந்தியிருந்தவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை களை ஆதாரமாக வைத்துக்கொண்டோ, அனுமானத்தின் பேரிலோ எதையும் கூறாமல், எதைப் பற்றியும் ஒரு முடிவு சொல்லாமல், தனது அறிவாலும் அனுபவத்தாலும் கண்ட உண்மைகளை மட்டும் கூறிச்சென்றதுதான். கிரீஸில், பிரஜைகளின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாயிருந்தது. பிரபல வைத்தியர்கள் அரசாங்க சேவையில் அமர்ந்திருந்தார்கள். இவர்களுக்கு நல்ல மதிப்பும் இருந்தது; அதிக சம்பளமும் பெற்று வந்தார்கள் இவர்கள். டெமோஸிடீஸ்1 என்ற ஒரு வைத்திய நிபுணன், எஜீனா2 தீவில், வைத்திய இலாகாவின் மேலதிகாரியாக வருஷத்தில் 3,600 ரூபாய் சம்பளம் பெற்று வந்தான். இவனுடைய திறமையைக் கண்டு, இவன் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் ஆத்தென்ஸ் அரசாங்கம், வருஷத்திற்கு 6,000 ரூபாய் சம்பளம் பேசி இவனைத் தன் சேவையில் அமர்த்திக் கொண்டது. இதற்குப் போட்டி போடுவது போல் சாமோஸ்3 தீவு அரசாங்கம், இவனுக்கு வருஷத்தில் 200 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகச் சொல்லி இவனைத் தன்னிடம் வரவழைத்துக் கொண்டது. இதிலிருந்து திறமையான வைத்தியர்களுக்கு எவ்வளவு கிராக்கி இருந்ததென்பது நன்கு புலனாகும். மகா அலெக்ஸாந்தரின்1 ஆசிரியனான அரிஸ்ட்டாட்டில்2, வைத்தியஞ் செய்வதை ஒரு தொழிலாகக் கொள்ளவில்லை யாயினும், வைத்திய சாஸ்திரத்தை நன்கு பயின்றவன்; இந்த ஒரு சாஸ்திரமா, இவன் பயிலாத சாஸ்திரமே, இல்லையென்று சொல்லலாம். இவனுடைய தந்தையே ஒரு வைத்தியன். கேட்பானேன் இவனுடைய வைத்தியம் புலமைக்கு? இங்ஙனம் வைத்தியத்தின் பல அமிசங்களிலும் கிரீஸ் வெகு முன்னேற்றம் கண்டிருந்தபோதிலும், பிற்காலத்தில் மேலை நாட்டிற்கு வழிகாட்டியாக அமைந்திருந்த போதிலும், பிறநாடு களிடமிருந்து இது பெற்றது அநேகம் ஒரு கருத்து வருமாறு:- ஒரு வைத்தியன் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் பலவற்றைக் கிரேக்கர்கள், மெஸெபோட்டேமியா விலிருந்து கற்றார்கள்; எகிப்தி லிருந்து அநேக மூலிகைகளைப் பெற்றார்கள்; பாரசீகத்திலிருந்தும் இந்தியாவிலிருந்தும் அநேக வைத்திய உண்மைகளைக் கற்றார்கள். கிரேக்கர்கள், தாங்கள் பெற்றதையும் கற்றதையும் தாங்களே மூடி வைத்துக் கொண்டுவிடாமல் அவைகளைப் போற்றி வளர்த்து ரோமபுரிக்கு வழங்கினார்கள். ரோம ஏகாதிபத்தியத்தின் ஆரம்ப தசையில், வைத்தியம் பார்த்தவர்களெல்லாரும் கிரேக்கர்களே. முதன்முதலாக ரோமாபுரிக்குச் சென்று குடியேறி வைத்தியன் அர்காகாதஸ்3 என்பவன். இவன் குடியேறியது கி.மு.220-ஆம் வருஷமென்பர். இவனைத் தொடர்ந்து தான் பலர் சென்றனர். ஆனால் இவர்களிற் பெரும்பாலோர் அரைகுறை வைத்தியர்களே. முதன்முதலாக லத்தீன் மொழியில் வைத்தியக் தம் இயற்றியவன் ஸெல்ஸஸ்4 என்பவன். இவன் அனுபவ வைத்திய னில்லை. இதனால் இவனுடைய சம காலத்தவர் இவனை ஏசிப் பழித்தனர்; இவன் எழுதிய நுல்களை அலட்சியஞ் செய்தனர். ஆயினும் இந்த நூல்களிற் பல பிற்கால வைத்தியர்களுக்கு அநேக அமிசங்களில் வழிகாட்டியாக விளங்கின. இவற்றுளொன்று, கி.பி.1478-ஆம் ஆண்டு முதன்முதலாக அச்சிடப் பெற்றது. இது பின்னர் நூற்றுக்கு மேற்பட்ட பதிப்புக்களாக வெளி வந்ததென்று சொன்னால், இதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் அதிகம் சொல்லத் தேவையில்லை. இவனைப் பின்தொடர்ந்து வைத்தியத் துறையில் புலமை பெற்றவர் பலர். இவர்களில் ஒருவனைப் பற்றி மட்டும் இங்குக் குறிப்பிடுதல் அவசியமாகும். இவன் தான் காலென்5 என்பவன். உடற்கூறு சாஸ்திர சம்பந்தமாக இவன் செய்து வைத்துப் போன ஆராய்ச்சிகள், இன்றளவும் மேலைநாட்டு வைத்தியர்களுக்குக் கலங்கரை விளக்கமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இவன் திறமைக்கு ஓர் உதாரணம். அரச ஞானியாகத் திகழ்ந்த மார்க்கஸ் அரேலியஸ்1, தனது ஆஸ்தான வைத்தியர்களில் ஒருவனாக இவனை அமர்த்திக் கொண்டிருந்தான். அரசன் ஒரு சமயம் போர்க்களம் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. சென்று வெற்றி கண்டான். தலைநகரம் திரும்பியதும் அரண்மனையில் ஒருநாள் விருந்தொன்று நடைபெற்றது. இந்த விருந்துக்குப் பிறகு அரசன் நோயாகப் படுத்துவிட்டான். ஆஸ்தான வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டார்கள். நோய் யாதாயிருக்கக் கூடு மென்பதைப் பற்றி இவர்களிடையே பலத்த வாக்குவாதங்கள் நடை பெற்றன. அப்பொழுது நாட்டில் பிளேக் நோய் பரவி இருந்தது. அதுவா யிருக்கக்கூடுமோ என்று அரசனுக்கு அச்சமூட்டு கின்ற முறையில் பேசினர். காலென், இவைகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே நின்றான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த அரசன் ஏன் ஒதுங்கி நிற்கிறாய்? மற்றவர்களைப் போல் நீ என் கை நாடியைப் பரீட்சை செய்யாமலிருப்பதன் காரணம் என்ன? என்று கேட்டான். போர்க்களத்திற்கு தங்களோடு வந்த இரண்டு வைத்தியர்கள் ஏற்கனவே தங்கள் நாடியைப் பரீட்சை செய்திருக்கிறார்கள்; அவர்களுக்கல்லவோ தங்களுடைய தற்போதைய தேகஸ்திதி நன்றாகத் தெரியும்? நான் பார்த்து என்ன பிரயோஜனம்? என்று அடக்கமாகப் பதில் கூறினான். அரசன், இதைக் கேளாமல், தன்னைப் பரீட்சித்துப் பார்க்கும்படி காலனைக் கேட்டுக் கொண்டான். காலெனும் அப்படியே பார்த்து பயப்படக்கூடிய மாதிரி நோய் எதுவும் தங்களுக்கு இல்லை; விருந்துண்டதன் விளைவுதான்; அஜீரணக் கோளாறு என்றான். அரசனும் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று ஒப்புக்கொண்டு இதற்கென்ன பரிகாரம்? என்று கேட்டான். `சாதாரண மானவர் களாயிருந்தால் கொஞ்சம் மதுவில் மிளகைத் தட்டிப் போட்டுக் குடிக்கச் செய்வேன்; ஆனால் தாங்கள் சக்ரவர்த்தி; வயிற்றின்மீது ஒத்தடம் கொடுக்கலாம் என்றான் காலென். அரசன் ஆகட்டு மென்று சொல்லி காலெனை அனுப்பிவிட்டு, அவன் போன பிறகு, அவன் சொன்னபடி மிளகு கலந்த மதுவை அருந்திக் குண மடைந்தான். இதற்குப் பிறகு அரசனுக்கு இவனிடத்தில் அளவு கடந்த நம்பிக்கையும் அன்பும் ஏற்பட்டன. காலெனுக்குப் பிறகு அநேகர் தோன்றி அற்புதமான ஆராய்ச்சிகள் நடத்தி அழியாத புகழெய்தியிருக்கிறார்கள். அவர்களைப் பற்றியெல்லாம் விஸ்தரித்துக் கொண்டு போவது, இங்கு எடுத்துக் கொண்ட விஷயத் திற்குப் புறம்பானதாகி விடுமல்லவா? எனவே இதனோடு நிறுத்திக் கொண்டு, வைத்தியத் தொழிலைப் பற்றியும் வைத்தியர்களைப் பற்றியும் பேசுவோம். மற்றெல்லாச் சாஸ்திரங்களைக் காட்டிலும் வைத்திய சாஸ்திர மொன்றுதான் மனித வாழ்க்கையை நேரடியாகத் தொட்டுக் கொண்டிருக் கிறது. மற்றச் சாஸ்திரங்களின் உதவியில்லாமல், அவற்றைப் பற்றின அறிவைப் பெற்றுத் தானாக வேண்டுமென்ற அவசியமில்லாமல், மனித வாழ்க்கை நடைபெறுதல் கூடும். அந்த வாழ்க்கை நல்லவிதமாக அமைந்திருக்குமா, ஒழுங்காக நடை பெறுமா என்பது வேறு விஷயம். ஏதோ ஒரு விதமாக நடைபெறும். இது நிச்சயம். ஆனால் வைத்திய சாஸ்திரத்தின் உதவியோ அதைப்பற்றிய அறிவோ இல்லாமற்போனால், உலகத்தில் மனித குலமென்பதே இல்லாமற்போய்விடும். மனித வாழ்க்கை நடைபெறுவதெங்ஙனம்? வைத்திய சாஸ்திரமானது பரநலத்தையே நோக்கமாகக் கொண்டது. அதனுடைய பெருமையெல்லாம் அது பிறர்க்கு அளிக்கும் ஆறுதலிலேயே இருக்கிறது. அது கொடுக்கும் ஊதியம் எண்ணிலே அடங்கிவிடும்; ஆனால் அஃது அளிக்கும் ஆறுதல் - மனசாந்தி – எழுத்திலே கூட அடங்காது. உண்மையான ஒரு வைத்தியனை அணுகிக் கேளுங்கள், எதிலே பெருமையடை கிறானென்று? தன்னிடம் வைத்தியம் செய்து கொண்ட ஒருவன் குணமடைந்து அதன் விளைவாக மலர்ந்த முகத்துடன் இருப்பானாகில் அவனைக் காண்பதில்தான் பெருமையடைகிறான்; மகிழ்ச்சி கொள்கிறான். அவனுக்கேற்பட்டிருக்கிற மனச்சாந்தி யிலேதான் இவன் - இந்த உண்மையான வைத்தியன் - சாந்தி காண்கிறான். இங்ஙனம் அளிக்கின்ற ஆறுதல் எதிர் காலத்தினதாக இருப்ப தில்லை; நிகழ்காலத்தினதாகவே இருக்கிறது. இது வைத்திய சாஸ்திரத்தின் விசேஷம், அதாவது, சரியான படி வைத்தியம் செய்தால் உடனடியான பலன் கிட்டுவதைக் காண்கிறோம். சிகிச்சை பெற்றவுடனேயே ஒரு நோயாளி அடைகின்ற நிம்மதியைச் சொல்லி னால் சொல்லிக் காட்ட முடியுமோ? எனவே, வைத்திய சாதிரத்தை நன்றாகக் கற்று, ஒழுங்காக அனுஷ்டிக்கிறவன், தான் பெறுகிற கட்டணத்தைக் காட்டிலும், தான் அளிக்கிற ஆறுதலையே பெரிதாகக் கருதக் கடவன். பெறுகின்ற கட்டணம் விரைவிலே கரைந்துபோகும். அளிக்கின்ற ஆறுதல் என்றும் நிலைத்து நிற்கும். முற்றிலும் மாறுபட்ட சுற்றுச் சார்புகளுக்கு மத்தியில் இருந்து கொண்டு, வைத்தியன் தன் வேலையைச் செய்ய வேண்டியவனா யிருக் கிறான். இது மிகவும் கடினந்தான். ஆனால் இதில்தான் இவனுடைய சிறப்பு இருக்கிறது. பணத்தையே பிரதானமாகக் கருதிக்கொண்டு, அதை எப்படிச் சம்பாதிக்கலாம், எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று சதா சிந்தித்துக் கொண்டும், அதற்காக அல்லும் பகலும் பாடுபட்டுக்கொண்டுமிருக்கிற மக்கள் மத்தியில் இவன், பணத்தைப் பெரிதாகக் கருதாமலும், பணத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணமில்லாமலும் தன் கடமையைச் செய்துகொண்டு போக வேண்டும். மற்றத் தொழில்களில் ஈடுபட்டிருக்கிறவர்கள், தங்களிட முள்ள சரக்குகளைப் பற்றியோ, தாங்கள் செய்யும் அலுவல்களைப் பற்றியோ விளம்பரம் செய்ய வேண்டியவர்களா யிருக்கிறார்கள். எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக விளம்பரம் செய்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு அவர்களுடைய தொழில் அபிவிருத்தி யடைகிறது. வைத்தி யனோ, விளம்பரமே செய்யக்கூடாதவன். தன்னைப் பற்றியோ, தன்னுடைய ஆற்றலைப் பற்றியோ விளம்பரம் செய்ய முற்படு வானாகில், அதிகமாகப் பேசுவானாகில் கூட இவனிடத்தில் எல்லாருக்கும் சந்தேகம் உண்டாகும். இவனுடைய திறமையில் அவநம்பிக்கை கொள்வர். தொழிலாளி, வியாபாரி இப்படிப் பலரும், மற்றவர் களுடைய தேவைகளை ஏதோ ஒரு வகையில் பூர்த்தி செய்து அதன் மூலமாக லாபமடைகிறார்கள். இந்த லாபம், ரூபாய் அணா பைசா வடிவத்தில் இவர்கள் கைக்குக் கிடைக்கிறது. தங்களுடைய நோக்கம் நிறைவேறி விட்டதாக இவர்கள் திருப்தியும் அடைந்துவிடுகிறார்கள். வைத்தியனோ, மற்றவர்களுடைய குறைகளைத் தீர்த்து வைக்க வேண்டியவனா யிருக்கிறான். அவர்கள் குறை தீர்ந்து ஆறுதல் பெறுவார்களானால் அது தான் இவனுக்குக் கிடைக்கிற லாபம். அவர்களே விரும்பிக் கொடுக்கிற கட்டணத்தைக் கொண்டுதான் இவன் திருப்தி காணவேண்டும். வியாபாரி, தன்னுடைய சரக்கை யாருக்கு விற்பனை செய்கிறானோ அவனுடைய நன்மையைப்பற்றி அதிகமாக எண்ணுவதில்லை. சரக்கை விற்பது, பதிலுக்குப் பணத்தைப் பெறுவது என்கிற அளவோடு இருவருடைய தொடர்பும் முற்றுப் பெற்றுவிடுகிறது. கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளியும் இப்படித்தான். தன்னுடைய உழைப்பைக் கொடுத்துக் கூலி பெற்றுக் கொள்கிற வரையில்தான் இருவருடைய - முதலாளி தொழிலாளி உறவும் இருக்கிறது. அதற்குப் பிறகு நீ யாரோ, நான் யாரோ என்ற நிலைதான். வைத்தியனோ அப்படியில்லை. தன்னிடம் வைத்தியம் பார்த்துக்கொள்ள வருகிறவர்களுடைய க்ஷேமத்தில் அக்கரை காட்டவேண்டும். அவர்களுடைய நோய் தீருகிறவரையில் அவர் களைப்பற்றி இவனுக்குக் கவலை. தன்னுடைய இதயத்தில் அவர்களுக்கு ஓரிடமே ஏற்படுத்திக் கொடுத்துவிடுகிறான். அவர்களும், தங்களுடைய நோய் தீர்ந்த பிறகுகூட இவனை மறப்பதில்லை. நோய் திரும்பவும் அணுகாமலிருப்பதற்காகவும், அப்படி வந்தாலும் அதற்குப் பரிகாரந் தேடிக் கொடுக்கக் கூடியவன் இவனே என்று உணர்ந்தும் இவனை அடிக்கடி நாடுகிறார்கள். இவன் சொற்படி தங்கள் வாழ்க்கை நியதிகளை அமைத்துக் கொள்கிறார்கள். அமைத்துக் கொண்டு அனுஷ்டிக்கிறபோது, வைத்தியனை நினைக்காமலிருக்க முடியுமா? வைத்தியன் விஷயத்தில் இன்னொரு விசேஷமான அமிசம் உண்டு. ஒரு வியாபாரி மற்றொரு வியாபாரிக்குச் சரக்கு விற்றானாகில், அதற்குண்டான கிரயத்தைப் பெறுகிறான். பெற்றுக் கொள்ளாதிருந்தால் வியாபாரத்தில் நஷ்டமே உண்டாகும். பெற்றுக்கொள்ளாதவன் சரியான வியாபாரியாகக் கருதப்பட மாட்டான். வைத்தியனோ, சகோதர வைத்தியனுக்கு அல்லது அவனுடைய குடும்பத்தினருக்கு வைத்தியம் பார்த்தால் அதற்காக எவ்வித கட்டணமும் வாங்கக்கூடாது. வைத்தியர்கள் பரஸ்பரம் அனுஷ்டிக்க வேண்டிய தருமம் இது. வியாபாரியிடத்தில்போய், சாமான் வாங்குகிறீர்கள்; முன்பணம் கொடுத்துத்தானாக வேண்டும். ரெயிலில் பிரயாணஞ் செய்ய விரும்பு கிறீர்கள். முன்னதாகப் பணத்தைக் கொடுத்தால் தான் டிக்கட் கொடுப்பார்கள். பாங்கியில் கடன் கேட்கிறீர்கள் முன்னதாக உங்கள் உடைமையையோ நாணயத்தையோ அடகு வைத்தால்தான் கடன் கிடைக்கும். இவர்களைப் போல் வைத்தியன் முன் பணம் கேட்க முடியுமா? அச்சாரமாக இவ்வளவு கொடுத்தால் தான் சிகிச்சை தொடங்குவேன் என்று சொல்ல முடியுமா? முடியாது; இப்படிச் செய்யவும் கூடாது. இவனுடைய தொழிலுக்கே இஃது இழுக்கு. சிகிச்சையெல்லாம் முடிந்த பிறகு, சிகிச்சை செய்து கொண்டவன், தான் குணமடைந்து விட்டதாகத் தெரிவித்த பிறகு, தனக்குரிய கட்டணத்தைப் பெறவேண்டும். இங்ஙனம் பெறுகிற கட்டணம், சிகிச்சை செய்து கொண்டவன் திருப்தியுடன் கொடுப்பதாய் இருக்க வேண்டும்; அவனுடைய நன்றியின் பிரத்தியட்ச வடிவமாயிருக்க வேண்டும். ஒரு கால் அவன் - சிகிச்சை செய்து கொண்டவன் - பொருளின்மையாலோ வேறு காரணத்தி னாலோ, உரிய கட்டணத்தைக் கொடுக்க முடியாது போனால், அவன் மீது கோபமோ தாபமோ கொள்ளக்கூடாது; அவனை நிர்ப்பந்தப் படுத்தி வசூலிக்கவும் கூடாது. இலவசமாகச் சிகிச்சை செய்யச் சந்தர்ப்பம் கிடைத்ததேயென்று மகிழ்ச்சியே கொள்ள வேண்டும். வைத்தியன், சமுதாய சேவகன், நாணயமான வியாபாரி, வாடிக்கைக்காரரை நாடிச் செல்வதில்லை. லேவா தேவிக்காரனும் அவனைப்போன்ற சிலரும் இப்படித்தான். இவர்களைப் போல் வைத்தியன் இருக்கமுடியுமா? இவன், எவ்வளவுதான் திறமைசாலியா யிருந்தபோதிலும், புகழடைந்தவனா யிருந்தபோதிலும், நோயாளி களை நாடிச் செல்ல வேண்டும்; வேளை சமயமென்று பாராமல், தன்னுடைய உடல் நலத்தைக்கூடப் பொருட்படுத்தாமல், கூப்பிட்ட இடத்திற்குப் போய்த்தானாக வேண்டும். என்ன நோய், எவ்வளவு கட்டணம் கொடுக்க முடியும் என்றெல்லாம் கேட்கலாமா? கேட்பது, வைத்திய தருமத்திற்கு விரோதம்; கேட்கிறவன் உண்மையான வைத்தியனுமல்ல. உண்மையான வைத்தியனுடைய லட்சணத்தை ஓர் ஆசிரியன் பின் வருமாறு வருணிக்கிறான்:- புதிய புதிய மருந்துகள் கண்டுபிடித்து அது காரணமாகப் புகழப்படுகிறானே அவன் வைத்தியனல்ல. பொது வாழ்வில் தலைவனென்று போற்றப்படுகிறானே அவன் வைத்தியனல்ல. கெட்டிக்கார வைத்தியனென்று பெயர் வாங்கியிருக்கிறானே அவன் வைத்தியனல்ல. தன்னிடம் இல்லாத திறமையை இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, அதனாலேற்படுகிற அனுகூலங்களைத் தன் சொந்த நலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறானே அவன் வைத்தியனல்ல. இவர்களில் யாரையும் உண்மையான வைத்திய னென்று சொல்ல முடியாது. எவன், எவ்வித படாடோபமு மில்லாமல் திறமையாகத் தன் கடமையைச் செய்து வருகிறானோ, எவன் புகழையோ, பொருளையோ இச்சிக்காமல் சாதாரண மக்களிடையே இருந்துகொண்டு உழைக் கிறானோ, எவன் பகல் பூராவும் தொண்டு செய்துவிட்டு, இரவில் ஓய்வு கொள்ள விழைகிறானோ அவன்தான் வைத்தியன். அடக்கமே அவன் அணிகலன். எளிய வாழ்க்கை, உயரிய எண்ணம் என்பதே அவன் கையாளும் பழக்கம். சிறிய கிராமத்திலாகட்டும், பெரிய நகரத்திலா கட்டும், மலையுச்சியி லாகட்டும் எங்கும் ஒரேவிதமாகவே அவன் தன் கடமையைச் செய்துகொண்டு போகிறான். வைத்திய உலகத்தில் புதிதாக ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால் அதை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன் பலன்களைக் காண்கிறவன் அவன்தான். வைத்தியனா யிருந்து கொண்டே அரசியலில் பிரவேசித்து அது காரணமாகப் பிரபலமடைந் திருக்கிறவனைக் கண்டு அவன் சிரிக்கிறான். பகட்டுச் செய்ய தனக்கு வாய்ப்பு ஏற்படாமலிருக்கிறதேயென்று தனக்குள்ளே சந்தோஷப்பட்டுக் கொள்கிறான். இத்தகைய உண்மையான வைத்தியனை நாம் எல்லாரும் போற்றுகின்றோமாயினும், உண்மையில் இவன் நம்மெல்லா ருடைய அனுதாபத்திற்கு முரியவனாயிருக்கிறான். எப்படியென்று கேட்கிறீர்களா? நாமெல்லாரும் தினந்தோறும் நம்மைப் போன்றவர் களுடனேயே, அதாவது நம்மைப்போல் ஆரோக்கிய நிலையி லுள்ளவர்களுடனேயே பழகுகிறோம். வைத்தியனோ, தினந் தோறும் நோயாளிகளுடனேயே பழகுகிறான்; அவர்கள் சொல்லும் குறைகளையெல்லாம் செவி கொடுத்துக் கேட்கிறான்; செவிக்கொடுத்துக் கேட்டால் மட்டும் போதாது; மனம் வைத்தும் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நோயின் கூறு இன்னதென்று இவர் தெரிந்துகொள்ள முடியாதல்லவா? அவர்கள் முகம் சிணுங்கிச் சொன்னாலும் இவன் முகமலர்ந்து கேட்க வேண்டும். அவர்கள் படபடத்து வார்த்தைகளைக் கொட்டினாலும் இவன் நிதானமாக அவற்றை வாங்கிக்கொள்ள வேண்டும். படமுடியாதினித் துயரம் என்று அவர்கள் அழுதாலும் சரி, அவர்களுடைய துக்கமானது முதிர்ந்து சிரிப்பாக வெளிப்பட்டாலுஞ் சரி, அவர்களே பின்னாடி வெட்கப்படக்கூடிய மாதிரி ஏதேனுஞ் சொன்னாலுஞ் சரி, செய்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் பொறுமையாயிருக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டுவிடக் கூடாது. இதற்காக உணர்ச்சியில்லாதவன் போலவும் காட்டிக் கொள்ளக்கூடாது. உணர்ச்சிகளைத் தன் வசப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிற ஒருவனாக நடந்துகொள்ள வேண்டும். இது மிகக் கடினந்தான். அசாதாரணமான மனத்திண்மை இதற்கு வேண்டும். வைத்தியனுக்கு இந்த மனத்திண்மை இன்றியமையாதது. இவன் இதனைத் தனது நடைமுறைப் பழக்கமாக்கிக் கொண்டுவிட வேண்டும். அப்பொழுதுதான் இவன் செய்யும் சிகிச்சைக்குப் பலனுண்டு. மற்றும் வைத்தியனிடம் எல்லோரும் தங்கள் குறைகளைச் சொல்லிக்கொள்ள வருகிறார்கள். ஆனால் இவனுடைய குறையைக் கேட்பவர் யார்? இவனிடம் இரக்கம் காட்டுவார் யார்? ஏதோ ஒரு கவலையினாலோ, உடற்சோர்வினாலோ இவன் சிறிது அயர்ந் திருக்கிற சமயத்தில், சிகிச்சைக்காக ஒருவன் வருவானாகில் வைத்தியர் சிறிது அயர்ந்திருக்கிறார் என்று சொல்லிப் பாருங்கள், அவனுக்கு என்ன ஆத்திரம் உண்டாகிறது? நான் அவஸ்தைப் பட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். இதைத் தீர்க்காமல் வைத்தியர் அயர்ந்திருக்கவாவது? ma®ªâU¡f mtU¡F v‹d cÇik ïU¡»wJ? என்கிற பாவனைகளை அவன் முகம் பேசிக் காட்டி விடுகிறதல்லவா? ஐயோ பாவம் என்று வாய்தவறியாவது சொல் கிறானா, பாருங்கள். இன்னும், வைத்தியனுக்கு, உண்ணும் வேளை இதுவென்றும், உறங்கும் வேளை இதுவென்றும் ஒரு நிர்ணயம் ஏற்படுத்திக் கொண்டு அதன் பிரகாரம் நடக்க முடியாது. காயம் பட்டுக் கொண்டு வருகிற ஒருவனை இப்பொழுது சாப்பாட்டு நேரம்; கட்டுக்கட்ட முடியாது என்று சொல்லித் திருப்பியனுப்பிவிட முடியுமா? மூச்சுவிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறான்; உடனே வந்து பார்க்கவேண்டும் என்று ஒருவன் வந்து அழைத்தால் இது தூக்க வேளை; நாளை வருகிறேன் என்று சொல்லிவிட முடியுமா? இப்படிச் சொல்லுவது வைத்திய தருமத்திற்கு விரோதம். இந்த மாதிரியான நிலைமைகளில் தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் வைத்தியனிடம் யார்தான் அனுதாபங் காட்டாமலிருப்பர்? ஆனால் வைத்தியன், யாருடைய அநுதாபத்திலும் வாழ்கிறவனில்லை; எல்லாருடைய நன்றியிலும் வாழ்கிறவன், வைத்தியனே! இந்த நன்றியிலே நீ நீடுழி வாழ்வாயாக! வைத்தியன், தன்னிடம் வரும் நோயாளி சொல்வதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கொள்கிறான்; அதே சமயத்தில் அவனை ஏற இறங்கப் பார்க்கிறான்; சில சில கேள்விகளையும் கேட்கிறான். இந்தப் பார்வையின் மூலமாகவும் கேள்வியின் மூலமாகவும் நோயாளியின் மனோநிலை, குடும்பநிலை, எந்தச் சூழ்நிலையில் அவனுடைய அன்றாட வாழ்க்கை நடைபெறுகிறது. அவனுடைய பொருளாதார நிலை, இப்படிப் பலவற்றையும் ஒருவாறு அறிந்து கொள்கிறான். இவைகளுக்கேற்றாற் போல் சிகிச்சை தொடங்குகிறான். என்ன சிகிச்சை செய்யலாமென்று யோசிப்பதும், உடனே சிகிச்சை தொடங்குவதும் தொடர்ந்தாற் போல் நிகழ வேண்டியவை. இதற்கு நோய் இன்னதென்றும், அதற்கு இன்னது தான் பரிகாரமென்றும் உடனுக்குடன் தீர்மானிக்கும் ஆற்றல் தேவை. எவனொருவன் நூலறிவும் அனுபவ அறிவும் ஒருங்கே கைவரப் பெற்றிருக்கிறானோ அவனுக்கு இந்த ஆற்றல் சுலபமாகக் கிட்டும். அதாவது, வைத்திய சாஸ்திரத்தை நன்கு பயின்றிருந்தால் மட்டும் போதாது; அந்தப் பயிற்சியை எப்படிப் பிரயோகஞ் செய்வது என்பதையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். இரண்டிலே ஒன்று மட்டும் தெரிந்து கொண்டிருக்கிறவன், உண்மையான வைத்தியனாகப் பிரகாசிக்க முடியாது. அப்படி ஒன்றோடு நிற்கிறவன், ஒற்றைச் சக்கரம் பூட்டிய வண்டி மாதிரி; ஒரு பக்கத்துச் சிறகுள்ள பறவை மாதிரி. ஒற்றைச் சக்கர வண்டி எப்படிச் செல்ல முடியாதோ, ஒருபக்கத்து சிறகுள்ள பறவை எப்படி மேலே பறக்க முடியாதோ அப்படியே ஒரு புறத்து அறிவைமட்டும் பெற்றிருக் கிறவன் சரியான முறையில் வைத்தியம் செய்ய முடியாது. இதனாலேயே, வைத்தியக் கல்லூரி மாணாக்கர்களுக்கு ஏட்டறிவும் அனுபவ அறிவும் சேர்ந்தாற்போல் கொடுக்கப்பட வேண்டு மென்பது, காலம் நெடுகிலும் ஒரு நியதியாயிருந்து வந்திருக்கிறது. இங்ஙனம் நூலறிவையும் அனுபவ அறிவையும் பெற்று விட்டால் மட்டும் போதாது; அவற்றை வளர்த்துக் கொண்டும் வர வேண்டும். புதிய புதிய முறைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன; புதிய புதிய பரிகாரங்களும் காணப்படுகின்றன. இவற்றையெல்லாம் அறிந்தும், அனுபவத்தில் கொண்டும் வர வேண்டும். பொதுவாகவே, வைத்திய சாஸ்திரம், வளர்கின்ற சாஸ்திரங்களுக்கெல்லாம் தலையாகிறது. இதனோடு வைத்தியனும் வளர்ந்துகொண்டு வர வேண்டும். வளர விரும்பாத வைத்தியன், அரும்பெடுத்தவுடன் கருகிப்போகிற மலர் மாதிரியாகி விடுகிறான். வைத்தியனுக்குப் புலனடக்கம் இன்றியமையாதது. எதை எத்தனைதரம் வலியுறுத்திச் சொன்னாலும் பொருந்தும். புலனடக்கம் பெறாத வைத்தியன், கடிவாளமில்லாத குதிரை மாதிரிதான். கண் ஒரு பக்கமும் கருத்து ஒருபக்கமுமாக வேலை செய்யும் பட்சத்தில், இவனிடம் வருகிற நோயாளிகள் ஆசாபங்கமடைந்து போவர். இவன் செய்யும் சிகிச்சைக்குப் பலனே இராது. நோயாளியைப் பரிசோதனை செய்கிற போதாகட்டும், அவனுக்குச் சிகிச்சை செய்கிற போதாகட்டும் இவனுக்கு ஐம்புலன்களும் ஒரு முகப்பட்டிருக்க வேண்டும். சிறிது கலைந்தால் கூட, ஒரு சமயமில்லாவிட்டாலும் மற்றொரு சமயம் ஏதேனும் ஒரு வித ஆபத்து நிகழ்தல் கூடும். ஒரு சமயம் ஊறு ஏற்பட்டால் கூட போது மல்லவா? அது காறும் அவன் செய்துவந்த நற்பணிகளெல்லாம் அதில் கரைந்துபோகும். எனவே ஒரு வைத்தியன், வைத்தியனாயிருந்து பணியாற்றுகின்ற வரையில், தனது ஐம்புலன்களும் ஒருமுகப்பட்டு இயங்கக் கூடிய வண்ணம் தனது சூழ்நிலையை அமைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். முதலாவது, தனது வைத்தியசாலையைச் சுகாதாரமானதோ ரிடத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும். கட்டடத்தைச் சுற்றிப் பசுமை தரும் செடி கொடிகளை வளர்க்க வேண்டும். இந்தச் செடி கொடிகளில் ஒரு சில வேனும் வைத்தியத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் இருந்தால் மிகவும் நல்லது. கட்டடத்திற்குள்ளும் போகின்ற நோயாளிகள் அமர்வதற்கென்று ஒரு தனிப் பகுதியும், சத்திர சிகிச்சைக்கென்று ஒரு தனிப்பகுதியும் மருந்துகள் தயாரிப்பதற்கென்று ஒரு தனிப்பகுதியும் இப்படித் தனித்தனிப் பகுதிகள் அல்லது அறைகள் இருக்க வேண்டும். இங்ஙனமிருப்பது, வைத்தியனுக்கு நல்லது; நோயாளிகளுக்கு அனுகூலம். சிகிச்சைக்காக வருகின்ற எவனொருவனும், தன்னை துன்புறுத்தும் நோய் எவ்வளவு அற்பமானதாயிருந்த போதிலும் அதை நான்கு பேர் முன்னிலையில் சொல்லிக் கொள்ள விரும்ப மாட்டான். அவனுடைய தன்மதிப்பு உணர்ச்சியைத் தொடுகின்ற விஷயமிது. இதை வைத்தியன் மதித்து, அவனைத் தனியாக அழைத்துப் போய் தான் அவன் சொல் வதையெல்லாம் கேட்டுக் கொள்ள வேண்டும்; அவனைப் பரிசோதனையும் செய்ய வேண்டும். வைத்தியனிடத்தில் நோயாளி எதனையும் மறைக்கக் கூடாது. மறைப்பது அவனுடைய உயிருக்கே ஆபத்தாக முடிந்தாலும் முடியக்கூடும். எனவே நோயாளி, வைத்தியனிடத்தில் தனது நோய் சம்பந்தப்பட்ட சகலமானவற்றையும் ஒளி மறைவின்றி, ஆனால் வைத்தியனுக்குச் சலிப்பு ஏற்படாவண்ணம் சொல்வானாக! வைத்தியனும், நோயின்கூறு இன்னதென்று விளங்கிக் கொள்ள நோயாளியைச் சில கேள்விகள் கேட்கக் கூடும். அவன் உடலில் ஊறுபட்டிருக்கிற பாகத்தைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியமாயிருக்கும். இவைகளுக்கெல்லாம் பிரத்தியேகமான அறை இருந்தால்தானே நல்லது. சுருக்கமாக, பரிசோதனை அறையில் வைத்தியனையும், நோயாளியையும் தவிர மற்றவர்கள் இருத்தல் கூடாது. சத்திர சிகிச்சையின்போது வைத்தியன், தன்னுடைய முழுக் கவனத்தையும் அந்த ஒன்றிலேயே செலுத்த வேண்டியிருக்கிறது. கண்ணோ காதோ கருத்தோ சிறிது நிலை பிறழ்ந்தால்கூட போதும்; அனர்த்தமே விளையும். சத்திரமிடப்பட வேண்டியவர் பெரும் பாலும் ஸ்மரணையற்றுக் கிடப்பர்; சத்திரமிடுகிறவரும் அவருக்குத் துணையாய் நிற்கின்றவர்களும் வாய்மூடியிருப்பர். சத்திரசாலையில் மௌனமே குடி கொண்டிருக்கும். இதுதான் பொதுவான நியதி. இதற்கனு சரனையாகவே வைத்தியன், தன்னுடைய சத்திர சாலையை அமைத்துக் கொள்ள வேண்டும். மருந்து தயாரிப்பது பலர் முன்னிலையில் நிகழ்தல் கூடாது. அங்கு அயலார் யாரையும் அனுமதித்தல் உசிதமல்ல. மற்றவர்கள் வந்து மருந்து தயாரிப்பவருடன் பேச்சைக் கொடுத்துக் கொண்டிருப்பார்களானால், மருந்துகள் கலப்பதில் கவனப்பிசகு ஏற்பட்டு விடலாம்; கூடுதல் குறைச்சலாக மருந்துகளைக் கலப்பதற்கு ஏதுவுண்டாகலாம். இதனால் நோயாளிகளுக்குப் பலன் கிட்டாது; ஆபத்து உண்டாதலும் கூடும்; வைத்தியனுக்குக் கெட்ட பெயர் ஏற்படும். இவைகளையெல்லாம், தவிர்க்கவே, மருந்துகள் தயாராகும் பகுதி பிரத்தியேகமாக இருக்கவேண்டுமென்ற நியதி நெடுங்காலமாக எல்லா நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வைத்தியனுக்குப் பொறுமை அவசியம். புலனடக்கம் பெற்று விட்டால் பொறுமை தானே வந்தெய்தும். இவனிடம் வரும் நோயாளிகள் பல ரகத்தினராக இருப்பர் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. சிலர், தங்களுடைய நோய் மிகச் சாதாரணமான தாயிருந்தபோதிலும் அதைப் பெரிதாகக் கற்பனை செய்து கொண்டு பதற்றமாகப் பேசுவர்; சிலர், நின்று நிதானித்துச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பர்; சிலர், தங்களை அதி புத்திசாலிகளென்று கருதிக்கொண்டு, தங்களுக்கு இன்ன நோயென்று அதற்கு இன்ன மருந்து கொடுக்க வேண்டுமென்றும், அல்லது இன்னபடி சிகிச்சை செய்தால் போதுமென்றும், வைத்தியனுக்குப் பாடங் கற்பிக் கின்ற முறையில் பேசுவர். இப்படிப் பலர் பல விதமாகப் பேசுவதையும் இவன் பொறுமையுடன் கேட்க வேண்டும். ஆனால் இவர்கள் பேசுவதை யெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தால், மற்ற நோயாளிகளைக் கவனிக்க முடியாது. எனவே நோயின் தன்மை இன்னதென்று, தான் தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்குக் கேட்டுக்கொண்டு, அதிகப்படியாக அவர்களைப் பேசவிடாமல் சாதுரியமாக அவர்களுடைய கவனத்தைத் திருப்ப வேண்டும். இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் ஒரு வைத்தியனுக்கு தினந்தோறும் உண்டாதல் சகஜம். அப்பொழு தெல்லாம் இவன் வெகு சாமர்த்தியமாக, நோயாளிகள் எந்த விதத்திலும் அதிருப்தியடையா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்தில் எந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டுமென்று எப்படி ஒருவிதி வகுத்துக் காட்ட முடியும்? பொதுவாக, வைத்தியன், நோயாளியின் முன்னர், முகத்தைச் சுளித்தாலோ, உதட்டைப் பிதுக்குதலோ, கண்ணைச் சிமிட்டுதலோ, புருவத்தை நெற்றியில் ஏற்றிக் காட்டுதலோ ஆத்திரம் ஆத்திரமாகப் பேசுதலோ கூடாது. இவன் பார்வையில் குளிர்ச்சி நிறைந்திருக்க வேண்டும்; பேச்சிலே நிதானமும் இனிமையும் கலந்திருக்க வேண்டும். நாடிப் பரீட்சை செய்கிற போதாகட்டும், இருதயம், சுவாசப்பை முதலியவைகளைப் பரிசோதனை செய்கிற போதாகட்டும் அவசரப் படுதலே கூடாது; கவனத்தையும் சிதறவிடக்கூடாது. சுருக்கமாக, வைத்தியனுடைய பார்வையிலும் பேச்சிலும், நோயாளிகளுக்கு ஒரு நம்பிக்கை உண்டாக வேண்டும். இந்த நம்பிக்கைக்கு அடிப்படையா யுள்ளது இவன் கையாளும் பொறுமை. எந்த நோயாளி, வைத்தியனிடம் நம்பிக்கை வைத்து அவன் கொடுக்கும் மருந்தை உட்கொள்கிறானோ அல்லது அவன் செய்யும் சிகிச்சைக்கு உட்படுகிறானோ அவன் விரைவில் குணமடைகிறான். வைத்தியன் கொடுக்கிற மருந்தைக் காட்டிலும் அல்லது அவன் செய்யும் சிகிச்சையைக் காட்டிலும், அவன் நோயாளிக்கு ஊட்டுகிற நம்பிக்கை தான் முக்கியமென்று கூடச் சொல்லலாம். இந்த நம்பிக்கையை எப்படி ஊட்ட முடியும்? இவனுக்கே - வைத்தியனுக்கே - தன்னம்பிக்கை நிறைய இருக்கவேண்டும். அதாவது, வியாதியின் கூறு இன்னதென்பதைப் பற்றித் தான் அறிந்து கொண்டிருப்பதிலும், அதற்கு இன்னபடி சிகிச்சை செய்தால் குணமுண்டாகுமென்பதிலும் இவனுக்குத் திட நம்பிக்கை இருக்க வேண்டும். ஊகத்தின் மீது சிகிச்சை தொடங்குதல் கூடாது. அது பரிசோதனையில் தான் கொண்டுபோய் விடும். அதனால் இவனுடைய வைத்தியஞானம் சிறிது அதிகரிக்கலாம். அதுவும் சந்தேகந்தான். ஆனால் நோயாளிகளுக்கு நிரந்தர குணம் உண்டாகாது. இது நிச்சயம். நோயாளிக்கு வைத்தியனிடம் இருந்த நம்பிக்கையும் குன்றிப்போகும். இந்த ஊகம், இதன் மீது பரிசோதனை முறையில் சிகிச்சை இவைகளைக் காட்டிலும், தெரியாததைத் தெரிந்ததாகப் பாவனை செய்து கொண்டு வியாதியை நிர்ணயிப்பதோ சிகிச்சை தொடங்குவதோ மிகவும் ஆபத்து. அது, நோயாளியின் உயிரைப் பணயம் வைத்து விளையாடுவது போலாகும். வைத்தியனுக்கு நடிப்பென்பதே கூடாது. எதைச் சொல்கிறானோ அதைச் செய்ய வேண்டும்; எதைச் செய்ய முடியுமோ அதைச் சொல்லவேண்டும். இதற்கு மேல் செல்வது, வைத்தியத் தொழிலுக்கே இழுக்கு. நோயாளி வைத்தியனிடம் எப்படி நம்பிக்கை கொள்வான்? அவனை நம்பிக்கை கொள்ளுமாறு செய்கிற ஏதோ ஒன்று வைத்தியனிடம் இருக்க வேண்டும். அது தான் மனத்தூய்மை. தூய மனத்திலிருந்து தான் நல் விருப்பம் பிறக்கும். எந்த வைத்தியன், தன்னிடம் சிகிச்சை பெறுகிற நோயாளி விரைவில் குணமடைய வேண்டுமென்று மனப்பூர்வமாக விரும்புகிறானோ அவன் நோயாளியின் நம்பிக்கையை நிச்சயம் பெறுவான். வைத்தியனுடைய நல்லலெண்ணமானது நோயாளியின் இதயத்தைத் தொடாமலிருக்க முடியாது தொட்டுவிட்டால் போதும். வைத்தியனிடம் நம்பிக்கை வைத்து அவன் கொடுக்கும் மருந்தை உட்கொள்கிறான் அல்லது செய்யும் சிகிச்சைக்கு உட்படுகிறான்; குணமடைகிறான். நல்லெண்ணத்தோடு மருந்து கொடுத்தாலும் சரி, சிகிச்சை செய்தாலும் சரி, குணம் காட்டுவது திண்ணம். இதைத்தான் வைத்தியனுக்கு கைராசி இருக்கிறதென்று சொல்வது வழக்கம். நோயாளியை நாடிச் செல்கிற வைத்தியன், அதாவது நோயாளியின் இருப்பிடத்திற்கு அழைக்கப்படுகிற வைத்தியன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? முதலாவது, நோயாளி, தன்னால் வைத்தியனிடத் திற்குப் போக முடியாத நிலைமையில்தான், தன்னிடத்திற்கு வைத்தியனை வரவழைக்கச் செய்கிறான். இதனால் சிறிது பொருட்செலவு ஆகுமென்பது அவனுக்குத் தெரியாம லில்லை. ஆயினும் அவனுடைய வேதனை, வைத்தியனை வரவழைக்குமாறு செய்கிறது. தன் வரவை எவ்வளவு ஆவலோடு அவன் எதிர்பார்க்கிறானென்பதை வைத்தியன் நன்கு உணர்தல் வேண்டும். அந்த ஆவலை எவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேற்று கிறானோ அவ்வளவு இவனுக்குப் பெருமை. அழைத்தவுடன் சென்றால் தன்னுடைய மதிப்புக் குன்றிவிடுமென்று நினைப்பது தவறு. தூக்கக் கலக்கத்திலிருந்தாலுஞ் சரி, சாப்பிட்டுக் கொண்டிருந்தாலுஞ் சரி, சிறிது கூட நிதானமிழக்காமலும், முகஞ்சுளித்துக் கொள்ளாமலும் புறப்பட வேண்டும். முணு முணுத்துக் கொண்டே புறப்படலாகாது. தனக்குக் கொடுக்கப்பட வேண்டிய கட்டணம் இவ்வளவு என்று கண்டிப்புச் செய்து கொண்டும் புறப்படலாகாது. புறப்படுவதற்கு முன்னர், தன்னை அழைக்க வந்திருக்கிறவர்கள் மூலம், நோயாளியின் உடல்நிலை முதலியவைகளைப் பற்றி விசாரித்து ஒருவாறு தெரிந்துகொண்டும், இன்னமாதிரி சிகிச்சை செய்ய வேண்டி யிருக்குமென்று ஒருவாறு ஊகித்துக்கொண்டும், அவைகளுக்கேற்றவாறு மருந்துகள், ஆயுதங்கள் முதலியவைகளைத் தெரிந்தெடுத்துத் தன் வைத்தியப் பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்காகவே, சிறிதுகூட நிதானமிழக்காமல் புறப்பட வேண்டுமென்று மேலே கூறினோம். நிதானந் தவறிய நிலையில் மறதி தோன்றுவது சகஜமல்லவா? வைத்தியர்களிற் சிலர், பற்றி எரிகின்ற நெருப்பை அணைக்க விரைகின்றவனைப்போல் நோயாளியின் அறைக்குள் பிரவேசிக் கிறார்கள். சிலர், குற்றவாளியைக் கண்டுபிடிக்க வருகின்ற ஒற்றனைப் போல் நுழைகிறார்கள். சிலர், பூனையைப் போல் பதுங்கி பதுங்கி வருகிறார்கள். சிலர், முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு மயானம் நோக்கி வருகிறவனைப் போல் பிரவேசிக் கிறார்கள். சிலர், காரண மில்லாமல் உரக்கச் சிரித்துக்கொண்டே நுழைகிறார்கள். உள்ளே வந்த பிறகு சிலர், நோயாளியைக் கவனிக்காமல், சம்பந்தமில்லாமல் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நோயாளியோ ஆறுதலான மொழிக்கோ சிகிச்சைக்கோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பான். சிலர், நோயாளி திகில் படும்படியாக வியாதியை மிகைப்படுத்திக் கூறுவார்கள். நோயாளியோ, கொஞ்ச நஞ்சம் இருந்த தைரியத்தை இழந்துவிடுவான். சிலர், நோயை விரட்டி அடித்து விடுவதாகச் சபதம் கூறுவது போல் கூறி, நோயாளிக்கு அசட்டு நம்பிக்கையை உண்டுபண்ணி விடுவார்கள். சிலர், தாங்கள் மிக அவசரமாக வந்திருப்பதாகவும், இங்கே வந்து போவதால் தங்களுக்கு அநேக கஷ்டங்கள் உண்டென்று சொல்லி, ஏன் இவனை வரவழைத்தோம் என்று நோயாளி சலித்துக் கொள்ளும் படியாகச் செய்துவிடுவார்கள். இப்படியெல்லாம் நோயாளியின் அறைக்குள் பிரவேசித்தலோ அவனிடம் பேசுதலோ கூடாது. நோயாளிக்கு நம்பிக்கையுண்டாகும் படியாகப் பிரவேசிக்க வேண்டும்; அவன் ஆறுதலடையக் கூடிய மாதிரி பேச வேண்டும். நோயாளியிடம் நடந்து கொள்ளவேண்டிய விதத்தை ஒரு கலையாகவே சொல்லியிருக்கிறார்கள் அறிஞர்கள். இந்தக் கலைக்குக் கட்டுப்பாடான விதிகள் எதுவுமில்லை. இன்னாரிடத்தில் இன்னபடி நடந்து கொள்ளவேண்டுமென்று எப்படிச் சொல்ல முடியும்? சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல், நோயாளிக்கு அனு சரணையாகவும், தனது தொழிலின் மதிப்பை உயர்த்திக் கொடுக்கின்ற முறையிலும் வைத்தியன் நடந்து கொள்ள வேண்டுமென்றுதான் பொதுவாகச் சொல்லலாம். பொதுவாக, வைத்தியன் எப்படி எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும்? அவனை முன்வைத்துக் கொண்டே கூறுவோம். வைத்தியனே! நீ அணிந்துகொண்டிருக்கும் உடை, எப்பொழுதும் சுத்தமாயிருக்கட்டும்; ஒழுங்காயிருக்கட்டும்; தேகம் பூராவும் மறைத்துக் கொண்டிருக்கட்டும். உன்னுடைய மதிப்பை உயர்த்திக்கொடுப்பதில், நீ அணிந்து கொண்டிருக்கும் உடைக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை நன்றாகக் கவனத்தில் வைத்துக்கொள். நோயாளிகளின் முன்னிலையில் மலர்ந்த முகத்துடனிரு. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று சொல்கிறார்களே அந்த மாதிரி பேசாதே. கண்டிப்பும், இனிமையும் கலந்து பேசு. நோயாளிகளை அதிகநேரம் காக்கவைக்காதே. எவ்வளவு தொலைவிலிருந்து வந்திருக்கிறார்களோ, என்ன சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ, இவைகளை நேர்முகமாகவோ, மறைமுக மாகவோ ஒருவாறு தெரிந்துகொண்டு உடனுக்குடன் மருந்து கொடுத்தோ, வேறு சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால் செய்தோ அனுப்பு. மருந்துகள் கொடுக்கிற விஷயத்தில், சில மருந்துகள் உன் கைவசமில்லாதிருக்கலாம்; அல்லது தயாரித்துக் கொடுக்க வேண்டி யிருக்கலாம். இதற்காக, நோயாளிகளை மாலை வா, நாளை வா என்று தவணைபோட்டுச் சொல்லாதே. கொடுக்கவேண்டிய மருந்து எப்பொழுது தயாராயிருக்குமென்று நீ கருதுகிறாயோ அப்பொழுது வரச்சொல். அதற்குள் நீ மருந்தைத் தயாரித்து வைத்துக்கொள். மருந்துக்காக அலைக்கழிப்பாயேயானால் உன்மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும். இந்த அவநம்பிக்கைக்கு இடங் கொடாதே. சிகிச்சை செய்கிற விஷயத்தில், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் பாராட்டாதே. எல்லாருக்கும் நோய் ஒன்றுதான்; மன வேதனை ஒன்றுதான்; எதிர்பார்க்கிற சிகிச்சையும் ஒன்றுதான். நீயும் அவர்களுக்கு ஒருவனாகவே இருக்கவேண்டும். அதாவது, பணக் காரர்களுக்கு ஒருவனாகவும், ஏழைகளுக்கு வேறுபட்ட வனாகவும் நடந்து கொள்ளக்கூடாது. இந்த ஏழை பணக்காரன் வித்தியாசம் மட்டுமல்ல, உன்னுடைய பரமசத்துருவாயிருந்தாலும் சரி, சிகிச்சைக்காக உன்னை நாடி வந்துவிட்டால், அப்பொழுது வைத்தியனாக நடந்துகொள்; பகைவனாக நடந்துகொள்ளாதே ஏனோ தானோ என்று சிகிச்சை செய்யாதே; சிரத்தையோடு, அநுதாபத்தோடுசெய். அப்பொழுதுதான், மனிதத் தன்மையில் நீ எவ்வளவு உயர்ந்திருக்கிறாய் என்பது புலனாகும். பெண்களுக்குச் சிகிச்சை செய்கிற காலத்தில் நீ சர்வ ஜாக்கிரதை யுடன் இருக்கவேண்டும். அவர்களை நீ பார்க்கிறபோது, ஒரு தந்தை தன் மகளைப் பார்ப்பது போல், சகோதரன் சகோதரியைப் பார்ப்பது போல், மகள் தாயைப் பார்ப்பது போல் பார்க்கவேண்டும். உன்பார்வையில் அசடுதட்டு மானால், வல்வினைகள் பலவும் உன்னை வந்து சூழ்ந்து கொள்ளும். வைத்தியத் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள வேண்டியது தான். வைத்தியத்துறையில் ஈடுபட்டிருக்கிற காலத்தில் பெயருக் காகவும் புகழுக்காகவும் ஆசைப்பட்டு அரசியல் முதலிய துறையில் பிரவேசிக்காதே. பிரவேசித்தால் வைத்தியத்துறையில் உனக்கு நல்ல செல்வாக்கும் வருமானமும் கிடைக்குமென்று கருதுவாயானால் அது பகல்கனவாகத்தான் முடியும். சிறிது காலம் ஊடாடிப்பார்த்தப் பிறகே பகற்கனவென்பது புலனாகும். மற்றும், உன் சொந்தத் தொழிலிலாகட்டும். ஏற்றுக்கொண்டிருக்கிற பிற தொழில்களிலாகட்டும் பூரணகவனம் செலுத்த முடியாது. கடைசியில் எதிலும் முழுவெற்றி காணமாட்டாய். அரசியல் முதலிய துறைகளில் உனக்கு ஊக்கமும் சிரத்தையும் இருக்குமானால், வைத்தியத்துறையில் ஓரளவு வெற்றி கண்டு ஓய்வு பெற்றபிறகு மற்றத் துறைகளில் ஈடுபடுவதை யாரும் ஆட்சேபிக்க முடியாது. வைத்தியத்துறையில் உனக்கு ஏற்பட்டிருக்கிற அனுபவம் முதலியன, பிற துறைகளில் நீ ஈடுபடுகிறபோது வெகுவாகப் பயன்படும். கடைசியாக, மகாபண்டிதனான சரகன், உனக்கு என்ன உபதேசம் செய்கிறானென்று கேள்:- உன்னிடம் வரும் நோயாளிகளின் ஆரோக்கியத்திற்காக நீ தினந்தோறும் முழுமனதுடன் உழைக்கவேண்டும். உன் உயிருக்கு ஆபத்து நேரிடுவதாயிருந்தால்கூட நீ நோயாளிகளைப் புறக்கணிக்கக் கூடாது பிறருடைய பொருளிலும் பெண்டிர் விஷயத்திலும் கெட்ட எண்ணம் கொள்ளக்கூடாது. நீ அணியும் உடை பகட்டில்லாததாய் இருக்கவேண்டும். குடிப்பழக்கத்தைக் கைக்கொள்ளாதே. பாவம் செய்யாதே. பாவஞ்செய்வாரோடு இணங்காதே. நிதானமாகவும், நயமாகவும், உண்மையாகவும், விஷயத்தோடொட்டியும் நீ பேச வேண்டும். வைத்திய சம்பந்தமான அறிவையும், சிகிச்சைக்கான ஆயுதங் களையும் நீ நாளுக்கு நாள் சேகரித்துக் கொண்டு வரவேண்டும். குணமாகாத வியாதி என்று தெரிந்தால் அதற்கு மருந்து கொடாதே; இறப்பது நிச்சம் என்று தெரிந்தாலும் கொடாதே. ஸ்திரீகளுக்கு மருந்து கொடுப்பதானால், அவர்களைச் சேர்ந்த உறவினர்களை வைத்துக் கொண்டு கொடு அப்படியே, ஸ்திரீகளிடமிருந்து, வைத்தியம் செய்ததற்காக ஏதேனும் கட்டணம் பெறுவதாயிருந்தால், அவர்களுடைய நெருங்கிய உறவினர்களை வைத்துக்கொண்டு பெற்றுக்கொள். நோயாளியின் அறைக்குச் சென்றால், உன் கவனமெல்லாம் நோயாளியிடமே செல்லவேண்டும்; மற்றவை களின் மீது செல்லலாகாது. நோயாளி, தன் நோயைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் சொல்லுகிற எல்லா விஷயங்களையும் நீ பரம ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். நோயாளி இறந்து விடுவான் என்று உனக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தாலும், அதை, நோயாளியோ அவனுடைய உறவினர்களோ திடுக்கிட்டுப் போகும் படியாக நீ வெளியிடக்கூடாது. உன்னுடைய தொழிலில் நீ எவ்வளவு திறமைசாலியா யிருந்த போதிலும் அதைப்பற்றி நீயே பெருமையாகப் பேசிக் கொள்ளாதே. தற்புகழ்ச்சி செய்து கொள்கிறவர்களை உற்றார் உறவினர்கூட வெறுக்கிறார்களல்லவா? வைத்திய சாஸ்திரத்தில் பூரணத்துவத்தை அடைந்து விட்டதாக யாரும் சொல்லிக்கொள்ள முடியாது. ஆகவே வைத்திய சம்பந்தமான அறிவை மேலும் மேலும் விருத்தி செய்து கொண்டு போகவேண்டுமென்ற எண்ணமே உனக்கு எப்பொழுதும் இருக்கவேண்டும். எப்பொழுதும், புத்திசாலியாயிருக்கிறவன், பல இடங்களிலிருந்தும் அறிவைச் சேகரித்துக் கொள்கிறான். அறிவில்லாதவன்தான் பொறாமைப் படுகிறான். புத்திசாலியான ஒரு வைத்தியன், புதிய ஆராய்ச்சிகள் சத்துருக்களிடமிருந்து வந்தாலுஞ் சரி, அவற்றை உலக நன்மையை முன்னிட்டு ஏற்றுக் கொள்கிறான். வைத்தியத் தொழிலினால் ஏற்படக்கூடிய லாப நஷ்டங் களைச் சிறிது கணக்கிட்டுக் காண்போம். லாபங்கள்:- 1. மற்றவர்களுடைய துன்பத்தைத் துடைப்பதனால் உண்டாகக் கூடிய மனமகிழ்ச்சி. ஆனால் இதற்கு நல்ல மனப்பக்குவம் இருக்கவேண்டும். 2. மனிதத் தன்மையை வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப் பங்கள் பல கிடைக்கும். அப்படியே மனிதத் தன்மையை அவ்வப் பொழுது வெளிப்படுத்திக் காட்டுவதற்கான சந்தர்ப்பங் களும் கிடைக்கும். 3. பிறர் துயரைப் போக்கிப் பணஞ்சம்பாதிப்பதற்கு இதைக் காட்டிலும் சிறந்த தொழில் வேறொன்று இருக்கமுடியாது. 4. பணஞ் சம்பாதிப்பதோடு சீக்கிரத்திலே நல்ல பெய ரெடுக் கலாம்; புகழும் அடையலாம். 5. சமுதாயத்தின் பல தரத்தினருடைய நட்பு கிடைக்கும். 6. எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். சோம்பலா யிருப்பதற்கு அவகாசமே கிடைக்காது. இதனால் ஆரோக்கியம் குன்றாது; ஆயுளும் நீடிக்கும். நஷ்டங்கள்:- 1. சதா துன்பத்தைத் தவிர வேறொன்றையும் கேட்க முடியாது. 2. தன்னிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ள வருகிறவர் களைப் பற்றி எப்பொழுதும் ஒரு கவலை இருந்துகொண்டிருக்கும். 3. குறித்த காலத்தில் சாப்பிட்டோம், குறித்த காலத்தில் தூங்கினோம் என்பது இருக்க முடியாது. 4. எவ்வளவு சீக்கிரத்தில் நல்ல பெயரெடுக்கலாமோ அவ்வளவு சீக்கிரத்தில் கெட்ட பெயரும் எடுத்துவிடலாம். ஒரு தடவை கெட்ட பெயர் கிட்டிவிடுமானால் அதை போக்கிக் கொள்வது மிகக் கடினம். 5. பணஞ் சம்பாதிக்கலாந்தான். ஆனால் ஏராளமாக முடியாது. சிகிச்சை செய்து கொண்டவர்களெல்லாமே, உடனுக் குடன் வைத்தி யருணத்தைத் தீர்த்துக் கொண்டுவிடுவார்கள் என்று சொல்ல முடியாதல்லவா? அவர்களை நிர்பந்திக்கவும் முடியாது; நிர்ப்பந்திக்கவும் கூடாது. இது வைத்திய தருமத்திற்கு விரோதம். 6. சொந்த விவகாரங்களில் அதிகமான சிரத்தை கொள்ள முடியாது. 6. வியாபாரி ஒரு நாடு, வாழ்வதும் வியாபாரத்தாலே; அழிவதும் வியாபாரத் தாலே. ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உறவு உண்டாவதும் வியாபாரத்தாலே; பகைமை மூளுவதும் வியாபாரத்தாலே. உலகத்தில் ஆதிகாலத்திலிருந்து நடைபெற்று வந்திருக்கிற பெரும்பற்றான போர்களின் மூலக்காரணத்தை விசாரித்துப் பாருங்கள்; வியாபாரப் போட்டியாகத்தானிருக்கும். வியாபாரமானது, போட்டியாக முற்றுகிறபோதுதான் அதிலிருந்து பகைமை என்னும் நச்சு விதை கிளம்புகிறது. அது கிளம்பாதபடி வரம்பிட்டு வளர்த்துக் காப்பாற்றி வந்தால், வியாபாரம் செய்து கொடுக்கிற அனுகூலங்களை வார்த்தைகளால் வரம்பிட்டுச் சொல்ல முடியாது. தேசங்களுக்கிடையே நிலவுகின்ற நட்பை வலுப்படுத்துகிறது. நாகரிகம், கலை இவைகளின் பரிவர்த்தனைக்குத் துணையாக நிற்கிறது. ஓர் அறிஞன் கூறுகிறான்:- வியாபாரமானது தேசங்களுக்கிடையே ஏற்படக்கூடிய மனக் கசப்புகளை அகற்றுகிறது; ஜனங்களை நல்ல சுபாவமுடையவர் களாக்குகிறது; அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கிற முறையில் அவர்களை ஐக்கியப்படுத்துகிறது. ஒவ்வொரு நாட்டிலும் அமைதி நிலவும்படி செய்கிறது. வியாபாரத்தில் சுயநலமும் பரநலமும் கலந்திருக்கின்றன. லாபத்தைப் பெருக்கப் பார்ப்பது சுயநலம்; ஜனங்களுடைய தேவையைப் பூர்த்தி செய்வது பரநலம். இரண்டையும் சமன் செய்து கொண்டு போகிறவன் தான் உண்மையான வியாபாரி; பிறரையும் வாழ வைத்துத் தானும் வாழ்கிறவன். சுயநலத்தை அடியோடு துறந்துவிட்டு மனநலத்திற் காகமட்டும் வியாபாரத்தில் ஈடுபடு கிறவன் தோல்வியே யடைவான். அதே பிரகாரம் பரநலத்தை அடியோடு புறக்கணித்துவிட்டு சுயநலத்தை மட்டும் நாடுகிறவன், ஒரு நாளில்லாவிட்டால் ஒரு நாள் சீரழிந்து போவான், இவன் அடைகிற செல்வமோ, செல்வாக்கோ மின்மினிப் பூச்சிப் பிரகாசமாகவே இருக்கும். பைசா கணக்கில் வியாபாரம் செய்கிறவனும் வியாபாரி தான். லட்சக்கணக்கில் வியாபாரம் செய்கிறவனும் வியாபாரிதான். தொகை யளவில் வேண்டுமானால் இவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டலாமே தவிர, பொதுவாக இவர்களனைவரும் மேற்கொள்ள வேண்டிய உழைப்பு, செய்யவேண்டிய கண்காணிப்பு, அனுஷ்டிக்க வேண்டிய தருமம் எல்லாம் ஒன்றுதான். ஆதலின், வியாபாரி என்று சொன்னால், இந்தக் கட்டுரையைப் பொறுத்த மட்டில், எல்லாத் தரத்து வியாபாரிகளையும், எல்லாவகை வியாபாரிகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதாகவே கொள்ள வேண்டுகிறோம். ஏனென்றால், இவர்களனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான சில நியதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரஸ்தாபிக்கவல்லவோ இங்கு முன் வந்திருக்கிறோம்? வியாபாரம் என்பது என்ன? தேவையான பொருள்களை ஒரு மதிப்பு வைத்து, கொள்வதும் கொடுப்பதுமே யாம். இந்தக் கொள்வினையும் கொடுவினையும், மனிதன் எப்பொழுது தலைதூக்கி வாழத் தலைப் பட்டானோ அப்பொழுதிருந்தே அவனுக்கு அவசியமாகிவிட்டன. அவன் வசிக்குமிடத்தில் அவனுக்குத் தேவையான எல்லாம் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாதல்லவா? தேவையானவற்றை, தேவைக்கு மிஞ்சின இடத்திலிருந்து பெறுவதும், தன்னிடம், தன்னுடைய தேவைக்கு மிஞ்சி இருப்பனவற்றை, தேவையுள்ள இடத்திற்குக் கொடுப்பதும் அவன் காரியங்களாயின. இந்த காரியங்களில் ஈடுபடாதிருந்தால் தன்னுடைய அன்றாட வாழ்க்கை சரளமாக நடைபெறாதென்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான். ஈடுபட்டான். வியாபாரியானான். ஆதிகாலத்தில் மட்டுமல்ல, இப்பொழுது கூட, இன்றைய சமுதாயச் சூழ்நிலையில் கூட, பிரதியொரு மனிதனும், ஒரு நாளில் சிறிது நேரமாவது, சிறிய அளவிலாவது ஒரு வியாபாரியாயிருக்கிறான் சிறிது யோசித்துப் பாருங்கள், நம்மிலே யாருடைய வாழ்க்கையாவது கொள்ளாமலோ, கொடாமலோ நடைபெறுகிறதா, நடை பெறுதல் தான் சாத்தியமா வென்று. எனவே, வியாபார உணர்ச்சியானது, மனித சுபாவத்திலேயே வேரூன்றியிருக்கிறதென்று முடிவு கட்டினால் அது தவறாகாது. வியாபாரத்தில், பண்டமாற்று வியாபாரமென்ப தொன்றுண்டு. அதாவது, ஒரு பொருளைக் கொடுத்து அதற்குப்பிரதியாக மற்றொரு பொருளை வாங்குவது. பொருளுக்குப் பொருளே மதிப்பாய் நிற்கிறது இந்த வியாபாரத்தில். நாணயப்புழக்கத்திற்கு இதில் இடமில்லை. தற்காலத்த வருக்கு இஃது ஒரு புதிர் போலிருக்கலாம். ஆனால் ஆதிகாலத்தில் இதுதான் - இந்தப் பண்டமாற்று வியாபாரம் - ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் பெருவாரியாக நடைபெற்று வந்தது; இப்பொழுதும் பூர்விகக் குடிகள் வசிக்கும் அநேக பிரதேசங்களில், சிறப்பாக ஆப்பிரிக்காவி லும் தென்னமெரிக்காவிலும் நடைபெற்று வருகிறது. முற்காலத்துப் பண்டமாற்று வியாபாரமாயிருந்தாலும் சரி. நாணயத்தை மையமாகக்கொண்டு தற்காலத்தில் நடைபெறுகின்ற வியாபாரமாயிருந்தாலும் சரி, பொதுவாக வியாபாரம் என்று சொன்னால் அதில் பேச்சும் பேரமும் கலந்திருக்கின்றனவென்றே நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். பேச்சில் வல்லவன்தான் வியாபாரத்தில் வெற்றி பெறமுடியும் என்பது நமது திடமான நம்பிக்கை. அப்படியே பேரம்பண்ணிப் பொருளைப் பெறுகிறவன் தான், அந்தப் பொருளின் மதிப்பை நன்கு அறிந்தவன் என்பது நமது உறுதியான எண்ணம். இந்த நம்பிக்கையிலோ, எண்ணத்திலோ தவறேதுமில்லை. நம்முடைய அனுபவமும் பெரும்பாலும் இப்படித்தானே இருக்கிறது? ஆனால் பேச்சில்லாத வியாபாரமென்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்களல்லவா? ஆம்; முற்காலத்தில் சில பிரதேசங் களில் பண்டமாற்று வியாபாரம் மௌனமாகவே நடைபெற்றது. இந்த வியாபாரத்தில் பேச்சில்லாமற்போனாலும் பேரம் உண்டு. இஃது ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம். ஏனென்றால், பேரம் என்று சொன்னாலே பேச்சுதானே? பேச்சில்லாத பேரம் எப்படிச் சாத்தியம்? இப்படி நீங்கள் கேட்பீர்களானால் அது நியாயமே. ஆனால் இந்த மாதிரி யான வியாபாரம் - மௌனபேர வியாபாரம் - இதனை ஊமை வியாபார மென்றும் அழைப்பர். - முற்காலத்தில் ருஷ்யாவின் வடக்குப்பகுதி, ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி, இலங்கை, இப்படி அநேகபிரதேசங்களில் நடைபெற்றுவந்தது. இந்தியாவிலும் பூர்விகக்குடிகளிடையே இது சர்வசாதாரணமாக நடைபெற்று வந்ததாகத்தெரிகிறது. ஆப்பிரிக்கர்களில் ஒரு பகுதியினருக்கும் 1 கார்த்த ஜீனியர்களுக்குமிடையில் இந்த ஊமை வியாபாரமே நடைபெற்று வந்ததென்று ஹெரோடோட்டஸ் என்ற கிரேக்க சரித்திராசிரியன் கூறுகிறான். சீனயாத்திரிகனான பேஹியானும்2 இதைப்பற்றித் தனது நூலில் பிரஸ்தாபிக்கினான். இந்த ஊமை வியாபாரமென்பது என்ன? பொருள்களைக் கொள்வோருக்கும் கொடுப்போருக்கும் நன்கு பரிச்சயமாயிருக்கிற வழக்கமான ஒரு பொது இடத்தில் ஒரு சாரார். தங்களிடம் மிஞ்சியுள்ள பொருள்களைக் கொண்டுவந்து பேசாமல் வைத்து விட்டு எட்டிப்போய் விடுவர். அங்கிருந்து, தாங்கள் பொருள்களை வைத்து வந்திருப்பதற் கறிகுறியாக ஒருவகை ஒலியை எழுப்புவர்; அல்லது மணியடிப்பர். இதைக் கேட்டு, மற்றொரு சாரார் அந்த இடத்திற்குவந்து, வைக்கப் பட்டிருக்கும் பொருள்களைப் பார்வை யிட்டுவிட்டு, அவைகளுக்கு ஒரு மதிப்புப் போடுவர். போட்டு, அதற்குச் சமதையாகத் தங்களிடம் மிஞ்சியுள்ள பொருள்களைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் பேசாமல் திரும்பிப்போய்விடுவர். இவர்கள் வைத்துப் போயிருப்பதை முதல் சாரார் சமிக்ஞையின் மூலமாகத் தெரிந்துகொண்டு, அந்த இடத்திற்குவந்து, தங்களுடைய பொருள்களுக்குச் சமதையான பொருள்கள் வைக்கப்பட்டிருக் கின்றனவாவென்று பார்ப்பர். பார்த்துத்திருப்தி யடைந்தால், தங்கள் பொருள்களை எடுத்துச் செல்வர். இரண்டாவது சாரார் பிறகு வந்து, தங்களுக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருள்களை எடுத்துச் செல்வர். தங்களுடைய பொருள்களுக்குச் சமதையான பொருள்கள் வைக்கப்படவில்லை என்று எந்த ஒரு சாராரேனும் கருதினால், வைத்த பொருளை எடுத்துச் செல்லாமலே திரும்புவர். மற்றொரு சாரார் வந்து பார்த்து, மேலும் சில பொருள்களைக் கொண்டு வந்து வைப்பர். இரு சாராருக்கும் திருப்தி யுண்டாகும் வரையில் இந்தப் போவதும் வருவதும் நடைபெறும். கடைசியில் பேரம் படிந்ததும் பொருள்கள் இடத்திலிருந்து காலியாகும். இந்த மௌன வியாபாரத்தில், கொள்வோரும் கொடுப்போரும் பேசாமலிருப்பது மட்டுமில்லை; பார்ப்பதுமில்லை. பரஸ்பர நம்பிக்கை இந்த வியாபாரத்தின் பிரதான அமிசமாக விளங்குகிறது. பண்டமாற்று வியாபாரத்தில், நன்கொடை வியாபாரமென்று ஒரு வகையுண்டு. இது நியூஜீலந்து நாட்டின் பூர்விகக் குடிகளான மாவரி1 ஜாதியாரிடையே அதிகமாக நடைபெற்று வந்தது; இப்பொழுதும் ஏகதேசமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இதில், ஒருவன், தன்னிடம் மிஞ்சியுள்ள பொருள்களை, அந்தப் பொருள்கள் தேவைப் பட்டவனுக்கு நன்கொடையாகக் கொடுப்பான். இந்த நன்கொடையைப் பெற்றுக்கொண்டவன், தான் பெற்றுக் கொண்டதற்குப் பிரதியாக, தன்னிடம் மிஞ்சியுள்ள பொருள்களை நன்கொடையாகத் திருப்பி அளிப்பான். இங்ஙனம் திருப்பி அளிக்கிறபோது, தான் பெற்றுக் கொண்ட தற்குச் சிறிது கூடுதலாகவே அளிப்பான். நன்கொடையென்று சொல்லிக் கொடுத்தாலும், பெற்றுக் கொண்டவன் அதற்குப் பிரதியாக ஏதேனும் கொடுப்பான் என்றே எதிர்பார்ப்பான். பெற்றுக்கொண்டவனும், பெற்றுக் கொண்ட பொருள்களுக்குச் சமதையாக, பெரும்பாலும் சிறிது கூடுதலாகத் திருப்பிக் கொடுப்பதுதான் தனக்கு மரியாதை என்று கருதுவான்; அப்படிக் கொடாமலிருந்தால், தன் சுயமரியாதைக்குக் களங்கம் உண்டாகிவிடுமென்று அஞ்சுவான். எனவே, சமுதாயத்தில், தான் ஒரு கண்ணிய புருஷனாகக் கணிக்கப்பட வேண்டுமென்பதற்காக, இவன் பெற்றதைக்காட்டிலும் கொடுத்தது அதிகமாகவே இருக்கும். அதிகமாகப் பெற்றுக்கொண்டவனும், சந்தர்ப்பம் ஏற்படுகிறபொழுது, தான் பெற்றுக்கொண்டதைக் காட்டிலும் சிறிது கூடுதலாகவே திருப்பிக் கொடுப்பான். ஆக, இந்தப் பரஸ்பர நன்கொடை வியாபாரத்தில் நம்பிக்கையும், கண்ணியமும் பிரதான அமிசங்களாக விளங்குகின்றன. மற்றும், இதில் அதிக பேச்சுக்கோ பேரத்திற்கோ இடமில்லை. பண்டமாற்று வியாபாரத்தைச் சேர்ந்த இன்னொரு வகையுண்டு. குறிப்பிட்ட ஒரு பொருளுக்கு ஒரு மதிப்பு வைத்து, அதன் மூலமாக மற்றப் பொருள்களைக் கொள்வதும் கொடுப்பதுமே இந்த வியாபாரம். அதாவது இந்த வியாபாரத்தில், சிலவகைப் பொருள்கள் நாணயமாகக் கருதப்பட்டுப் புழக்கத்தில் இருந்து வந்தன. இவற்றுள் கிடைத்தற்கரிய பொருள்கள், அதிக உழைப்பினால் உருவாகின்ற பொருள்கள் இப்படிப்பட்டவை, உயர்மதிப்புடைய நாணயங்களுக்குச் சமதையாகக் கொள்ளப்பட்டன. சில நாடுகளில், சங்குக்கு அதிக மதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனைச் சில ஜாதியினர் ஆபரணமாகவும் உபயோகித்தனர். இப்பொழுதும், ஆப்பிரிக்காவில் பூர்விகக் குடிகள் வசிக்கும் சில பகுதிகளில், இந்தச் சங்கு, நாணயமாகவும் ஆபரணமாகவும் உபயோகத்திலிருந்து வருகிறது. கல்லுப்பு, விவசாயக் கருவிகள், தேங்காய் இப்படிச் சில பொருள்கள், அநேக பிரதேசங்களில் பொருள் பரிவர்த்தனைக்குரிய நாணயமாகப் புழக்கத்தில் இருந்து வந்தன. காலக்கிரமத்தில், பொருள்களுக்குப் பதில், இரும்பு, வெள்ளி, பொன் முதலிய உலோகங்களும், தோல், காகிதம் முதலியவைகளும் நாணய மதிப்புப் பெற்றுப் புழக்கத்திற்கு வந்தன. இவற்றுள், தோலைத் தவிர, மற்றவை பிற்காலத்தில் அரசாங்கத்தின் அங்கீகார மும் முத்திரையும் பெற்ற நாணயங்களாகச் செலாவணிக்குக் கொண்டுவரப்பட்டு, இப்பொழுது உலகத்தின் பெரும்பாகத்தில் பொருள் பரிவர்த்தனைக்கு இன்றியமையாதனவாயிருந்து வருகின்றன. இந்த நாணயச் செலாவணி முறையைப் பற்றி இங்கு இதற்குமேல் பிரஸ்தாபித்து, வாசகர்களின் கவனத்தை வேறு வழியில் திருப்ப நாம் விரும்பவில்லை. வியாபாரத்தில் உள்நாட்டு வியாபாரமென்றும் வெளிநாட்டு வியாபாரமென்றும் இரு விதமுண்டு. இதனையே ஒரு சமூகத்தா ரிடையே வியாபாரமென்றும், பிற சமூகத்தாருடன் வியாபார மென்றும் பிரித்துச்சொல்லலாம். பின்னதன் மூலமாகத்தான், நாடுகளுக்கிடையே பாஷை, நாகரிகம், கலை முதலியவை பரிவர்த்தனையாகின்றன. இந்த வெளிநாட்டு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் ஆதிகாலத்தில் எத்தனையோ ஆபத்துக்களைக் கடக்கவேண்டியிருந்தது. கடலென்றும், மலையென்றும், பாலை வனமென்றும் பாராமல் ஆயிரக் கணக்கான மைல்கள் சென்றார்கள்; மாதக் கணக்கில், ஏன்? வருஷக் கணக்கில்கூட பிரயாணஞ் செய்யவேண்டிய நிர்பந்தத்திற்குட்பட்டார்கள். கப்பல், கோவேறு கழுதை, காட்டெருமை, ஒட்டகம் முதலியவை இவர்களுடைய பிரயாண சாதனங்களாயிருந்தன. மேல் நாட்டுக்கும், கீழ்நாட்டுக்கும் பெரும்பற்றான முறையில் கடல் வியாபாரத் தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமானவன் என்று கருதப் படுகின்ற வாகோடகாமா1 என்ற போர்த்துகேசியன், லிஸ்பன்2 நகரத்தி லிருந்து புறப்பட்டு கோழிக்கோடு வந்து சேர பத்து மாதங்களுக்கு மேல் பிடித்தது3 இவனுடன் வந்தவர்கள் மொத்தம் நூற்றெழுபதுபேர். ஆனால் திரும்பிச்சென்று லிஸ்பன் நகரத்தையடைந்தவர்கள் ஐம்பத்தைந்துபேரே. இதைக்காட்டிலும், தரைமார்க்க வியாபாரப்போக்குவரத் திற்கு அதிக காலம் பிடித்தது. வருஷக் கணக்கில் என்று சொல்ல வேண்டும். சில சமயங்களில், புறப்பட்டுப் பல மாதங்களாகி யிருக்கும். கூடக்கொண்டு வந்த உணவுப் பொருள்கள் குறைந்து போய்க் கொண்டிருக்கும். மேற் கொண்டு செல்ல ஆகார வகை களைச் சேர்த்துக் கொள்ள வேண்டு மல்லவா? இதற்காக, ஓரிடத்தில் சில மாதங்கள் வரை தங்கி, தேவைப் படும் தானியங்களைப் பருவமறிந்து விளைவித்து எடுத்துக்கொண்டு போவார்கள். இப்படி ஒவ்வோரிடமாகத் தங்கித் தங்கிச் செல்வார்கள். தங்குமிடங்களில் வியாபாரத்தையும் நடத்திக் கொண்டு போவார்கள். புறப்பட்ட இடத்திலிருந்து சேரவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர எவ்வளவு காலம் பிடிக்குமென்பதை வாசகர்களே, ஊகித்துக் கொள்ளுங்கள். உயர்ந்த மலைகளையும் அகன்ற மணற்பரப்புகளையும் கடப்பதென்றால் இன்னும் சிரமம் அதிகம். குறைந்த தூரம் செல்ல அதிக காலம் பிடிக்கும். பசியையும், களைப்பையும் ஆற்றிக் கொண்டு போகவேண்டிய நிர்பந்தம் போகப்போக அதிகரிக்கும். பொருட்சேதத் திற்கும், உயிர்ச்சேதத்திற்கும் குறைவிராது. சீனா முதலிய வடகிழக்குப் பிரதேசங்களிலிருந்து திபேத்து வழியாகவும், மத்திய ஆசியப் பிரதேசங்களிலிருந்து கைபர் கணவாய், போலன் கணவாய் முதலியவை மூலமாகவும் இந்தியா வந்து போவதற்கு முற்காலத்து வியாபாரிகள் எவ்வளவு கஷ்ட நிஷ்டூரங்களை அனுபவித்திருக்கிறார்கள், எவ்வளவு காலம் பிடித்திருக்கிறது என்பவைகளைப் பற்றித் தனிநூலே எழுதலாம். கோபி, ஸஹாரா1 போன்ற பெரிய பாலைவனங்களில் ஆங்காங்குப் பசும்புல் திடல்கள் காணப்படுகின்றனவல்லவா, இவையென்ன? முற்காலத்து வியாபாரிகள் தங்குமிடங்களே. மலைப்பாதைகளிலும் இந்த மாதிரியான வசதிகள் இருந்ததாகத் தெரிகிறது. கடல் மார்க்கத்திலாகட்டும், தரை மார்க்கத்திலாகட்டும், வியாபார நிமித்தம் சென்றவர்கள் ஒருவராகச் சென்றதில்லை. கடல் மார்க்கத்தில், குறைந்த பட்சம் நாலைந்து கப்பல்களாவது ஒன்று சேர்ந்து செல்லும். இதே பிரகாரம் தரை மார்க்கத்தில், ஐம்பது பேர், நூறு பேர் என்று இப்படிச் சேர்ந்தே செல்வார்கள். சிறப்பாக, பாலை வனங்களில் ஒட்டகங்களின் மீது வியாபாரிகள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்வது ஒரு விநோதமான காட்சியாயிருக்கும். சில சமயங்களில், ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒட்டகங்கள் தொடர் சங்கிலிபோல் ஒன்றுக்குப் பின்னொன்றாய்ச் செல்லும். முதலில் செல்லும் ஒட்டகத்தையும், அதற்குப் பின்னால் செல்லும் ஒட்டகத்தையும் இப்படி ஒன்றோடொன்றை ஒரு கயிற்றினால் பிணைத்திருப்பார்கள். எல்லாவற்றிற்கும் முதலில் செல்லும் ஒட்டகம் மட்டும் நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதன் கழுத்தில் ஒரு மணியும் கட்டியிருப்பார்கள். இந்த ஒட்டக வரிசைக்கு முன்னால், சுமை தூக்காத ஒரு கழுதை வழிகாட்டிக் கொண்டு செல்லும். இங்ஙனம் ஒட்டகங்கள்மீது எவ்வளவு சரக்குகள் ஏற்றிக் கொண்டு சென்றிருக்க முடியும், ஏதோ அற்ப சொற்பமாகத்தான் போயிருக்கு மென்று நீங்கள் நினைக்கலாம். அப்படியில்லை. தற்காலத்துப் பெரிய தொரு வியாபாரக் கப்பலில் கொண்டு செல்லப்படுகின்ற சரக்குகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான சரக்குகள் இந்த ஒட்டகக்கூட்டம் கொண்டு சென்றது. இதன் நிருவாகமும் மிகத் திறம்பட்ட முறையில் அமைந்திருந்தது. கிறிஸ்து சகத்திற்குச் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியிருந்தே எகிப்துக்கும் பாபிலோனியாவுக்கும் இத்தகைய வியாபாரம் மிக ஒழுங்காக நடைபெற்று வந்ததென்று சரித்திரம் கூறுகிறது. இங்ஙனமே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நல்ல வியாபாரம் நடைபெற்று வந்தது. வியாபாரிகள், தங்கள் சரக்குகளை ஒட்டகம் போன்ற பிராணிகள் மீது ஏற்றிக்கொண்டு சௌகரியமாகச் செல்வதற்கென்று பனியான பாதைகள் இருந்தன. மகா அலெக்ஸாந்தர் படையெடுத்து வந்த காலத்தில், இத்தகைய பாதைகள் மூன்று இருந்ததாக அறிகிறோம். கடல் வியாபாரத்திற்கு வழிகாட்டிக் கொடுத்தவர்கள் பொனீஷியர் களென்றும்1, கப்பல் கட்டுந்தொழிலில் இவர்கள் கைதேர்ந்தவர்களா யிருந்தார்களென்றும் மேலைநாட்டுச் சரித்திராசிரியர் கூறுகின்றனர். பொனீஷியர்களுக்கிருந்த கைத்திறனை நாம் வியந்து பாராட்டுகிறோம். ஆனால் இவர்களுக்கு முந்தியிருந்தே இந்தியர்களும் சீனர்களும் கடல் வியாபாரத்தைத் திறமையாக நடத்தி வந்திருக்கின்றனர் என்பதை இங்குச் சொல்லிக்காட்ட விழைகிறோம். இந்தியாவுக்கும் எகிப்துக்கும், இந்தியாவுக்கும் ரோமாபுரிக்கும், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கிறிஸ்துவுக்கு வெகுகாலம் முந்தியிருந்தே கடல் வியாபாரத் தொடர்பு எவ்வளவு அதிகமாயிருந்ததென்பதைப் பற்றி நாம் அதிகம் சொல்லத் தேவையில்லை. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெல்லிய துணிகளுக்கும் வாசனைத் திரவியங் களுக்கும் எகிப்தியர்களும் ரோமர்களும் எவ்வளவு ஆசைப்பட்டார் களென்பதைச் சரித்திராசிரி யர்களே சொல்லட்டும். இதே பிரகாரம் நாணயப்புழக்கத்திற்கு வழிகாட்டியவர்கள் கிரேக்கர்கள் என்று மேலைநாட்டு ஆசிரியர்கள் சாதிக்கிறார்கள். மேலைநாட்டைப் பொறுத்தமட்டில் இது சரிதான். ஆனால் இந்தியாவிலும் சீனாவிலும், கிரீஸ் தலை தூக்குவதற்கு வெகுகாலம் முந்தியிருந்தே நாணயப்புழக்கம் சர்வ சாதாரணமாக இருந்து வந்திருக்கிறதென்று சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொள்கிறோம். வியாபாரத்தினால் ஒருநாடு மட்டுமல்ல, நகரம், கடல், ஆறு எல்லாமுமே முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. இவற்றிற்குத் தனிச்சோபையே ஏற்பட்டுவிடுகிறது. வியாபாரம் குன்றிப் போகட்டும், இவை சீந்துவாரற்று பால் மரத்துப்போன பசு போலாகிவிடுகின்றன. ஐரோப்பாவில் போர்த்துகலும் ஸ்பெயினும் எவ்வளவு சிறிய நாடுகள்! முன்னதன் விஸ்தீரணம் 35,490 சதுர மைல்கள் தான்; பின்னதன் விஸ்தீரணம் 1,95,504 சதுர மைல்கள் தான். ஆயினும் இவையிரண்டிற்கும் கி.பி.பதினைந்தாவது நூற்றாண்டில் இருந்த செல்வாக்கை என்னென்று சொல்வது? காரணம் வியாபாரந்தான். இந்த வியாபாரச் செல்வாக்கைக் கொண்டு இவை, தங்கள் அரசியல் ஆதிக்கத்தைச் சில நாடுகளில் திணித்தன. ஆனால் பதினாறாவது பதினேழாவது நூற்றாண்டுகளில் இவ்விரு நாடுகளின் வியாபாரம் குறைந்தது; எனவே இவற்றின் செல்வாக்கும் குன்றியது. ஹாலந்து எவ்வளவு சிறிய தேசம்! 12,712 சதுரமைல் விஸ்தீரணந் தான். என்றாலும் கி.பி.பதினாறாவது நூற்றாண்டில், வியாபாரங் காரணமாக இதற்கு அதிக செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. இரண்டு நூற்றாண்டுகள்தான் இந்த வாழ்வு? பதினெட்டாவது நூற்றாண்டில் இதன் செல்வாக்கு மங்கிவிட்டது. காரணம் வியாபாரக் குறைவுதான். பதினெட்டாவது, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் இங்கிலாந்தும் பிரான்சும் இந்தியாவில் போரிட்டதற்குக் காரணம் என்ன? வியாபாரப் போட்டிதானல்லவா? இறுதியில், ஓங்கியிருந்த பிரான்சின் செல்வாக்கு வீழ்ந்து விட்டது, இங்கிலாந்து, வியாபாரத்தில் உச்சநிலை யடைந்தது; அதனைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், அதனையே முக்கிய காரணமாகக் கொண்டும், தனது அரசியல் ஆதிக்கத்தை இந்தியாவின்மீது திணித்தது. கி.பி.பதினைந்தாவது நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கல் முதலிய நாடுகளின் சரித்திரத்தை நாம் சிறிது நுணுகிப் பார்த்தோ மானால், ஆரம்பத்தில் சொல்லப்பெற்ற ஒரு நாடு வாழ்வதும் வியாபாரத்திலே; அழிவதும் வியாபாரத்திலே என்ற வாசகம் எவ்வளவு உண்மையானது என்பது நன்கு புலனாகும். நகரங்களுக்கு வருவோம். கீழ்நாட்டையும் மேல்நாட்டையும் வியாபாரத்தினால் இணைத்து வைத்துச் செழுமையுடன் திகழ்ந்தது, இத்தலியிலுள்ள வெனிஸ் நகரம்1 கி.பி.பதினைந்தாவது நூற்றாண்டு வரை, இந்தியா, சீனா முதலிய நாடுகளிலிருந்து தரைமார்க்கமாகக் கொண்டு செல்லப்பட்ட விலையுயர்ந்த சரக்குகள் பலவும் இங்கு வந்து தங்கி, இங்கிருந்தே ஐரோப்பாவின் பல பாகங்களுக்கும் விநியோகமாயின. அந்த நூற்றாண்டில் கப்பல் கட்டுந் தொழிலும் இங்கு மிகவும் உன்னத நிலையிலிருந்தது. வருஷத்தில் சராசரி 3,300 கப்பல்கள் இந்தத் துறைமுகத்தை நண்ணின; சரக்குகளை ஏற்றுவதிலும் இறக்குவதிலும் சுறுசுறுப்புக் காட்டிய துறைமுகத் தொழிலாளர்கள் மட்டும் 16,000 பேர் என்று ஒரு கணக்கு கூறுகிறது. வியாபார சம்பந்தமான கணக்குகளை ஒழுங்காக வைத்துக் கொள்வதற்கு, இந்த நகரந்தான், ஐரோப்பிய நாட்டவர் பலருக்கும் வழிகாட்டியது. டெபாசிட், டிஸ்கவுண்ட்2; இந்த மாதிரி வியாபார உலகத்தில் வழங்கப்பெறும் பல சொற்கள், இந்த வெனிஸ் நகரத்தின் வியாபார நிலையங்களிலிருந்து பிறந்தவையே. கி.பி.1488-ஆம் வருஷம் நன்னம்பிக்கை முனை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலமாகக் கீழ்நாட்டுக்கும் மேல் நாட்டுக்கும் கடல் மார்க்க வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு வர வர அதிகரிக்கத் தொடங்கியது; வெனிஸ் நகரத்தின் செழுமையும் செல்வாக்கும் வரவரச் சுருங்கின. நமது தமிழ்நாட்டில் இப்பொழுது இருக்கிற இடமே தெரியாம லிருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு காலத்தில் - சிறப்பாகக் கரிகால்வளவன் காலத்தில் - எவ்வளவு வியாபாரச் செழுமையுடைய நகரமாக இது விளங்கியதென்பதைச் சங்க நூல்கள் வாயிலாக அறிகிறோம். இங்கு வியாபாரம் குன்றியது; இதன் புகழும் மங்கியது. பொதுவாக ஆராய்ந்து பார்த்தோமானால், நகரங்கள் தோன்றியதே வியாபாரத்தினால்தான் என்பது விளங்கும். சரக்குகளைக் கொள்வதற்கும் கொடுப்பதற்கும் எந்த இடம் வசதியா யிருக்கிறதோ அந்த இடமே நகரமாகப் பரிணமித்தது. வியாபாரச் செழுமையுள்ளதும், போக்கு வரவு வசதியுள்ளதுமான இடங் களையே நகரமென்றும், பட்டணமென்றும் நமது புராதனக் கிரந்தங்கள் அழைத்திருக்கின்றன. கடல்களாகட்டும், ஆறுகளாகட்டும், வியாபாரப் போக்கு வரவுக்கு நல்ல மார்க்கங்களாயிருக்கின்ற வரையில் நல்ல செல்வாக்குடையன வாய் விளங்குகின்றன. கிரிஸீம் ரோமாபுரியும் வியாபாரத்தில் தலை தூக்கி நின்ற காலத்தில், மத்தியதரைக் கடலுக்கிருந்த முக்கியத்துவம், பிறகு இல்லாமற் போயிற்று. நன்னம்பிக்கை முனை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அராபியக் கடலுக்கு ஏற்பட்ட முக்கியத்துவம் அதற்கு முந்தி யில்லை. இப்படியே ஒவ்வொரு கடலையும், ஒவ்வொரு சமுத்திரத்தையும் சொல்லலாம். இப்பொழுது பர்மாவில் ஐராவதி நதிக்கு ஏற்பட்டிருக்கிற முக்கியத்துவத்திற்குக் காரணம் என்ன? வியாபாரப் போக்கு வரவு இதன் மூலம் அதிகமாக நடைபெறுவது தான். சீனாவில் ஹோயாங்கோ, யாங்க்ட்ஸீகியாங்1 நதிகளும் ஐரோப்பாவில் டான்யூப், வால்காநதிகளும்2, வியாபாரப் போக்கு வரவுக்குத் தகுதியுடையனவாக இருப்பதனால் தான் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நிற்க. வியாபாரத்திற்கு ஆணிவேர் போலிருப்பது பொருளுற்பத்தி. பொருளுற்பத்தி இல்லையானால் வியாபாரமில்லை. இந்தப் பொருளுற் பத்திமுறை எந்தெந்த விதமான மாறுதலடைகின்றதோ அதற்குத் தகுந்தாற்போல் வியாபார முறையும் மாறுதலடைகின்றது. இரண்டுக்கும் - பொருளுற்பத்திக்கும் வியாபாரத்திற்கும் மூலதனம், மற்றவர்களுடைய ஒத்துழைப்பு இரண்டும் அவசியம். இதே பிரகாரம், வியாபாரத்திற்கு மூத்த சகோதரி போன்றது விவசாயம். மண் வளத்தைப் பயன்படுத்திக் கொள்ளாத மக்களிடையே வாணிபம் வளர்ந்து ஓங்காது. உழுதொழிலில் ஈடுபட்டுள்ளோர், தங்களிடம் மிகுதியாயுள்ள பொருள்களை, அவை தேவைப்பட்டார்க்கு, உரிய விலை பெற்று வழங்காராயின், அவரும், இந்த உழவர்க்குத் தேவைப்படும் பொருள்களை வழங்குவர்கொல்? இங்ஙனம் பரஸ்பரம் வழங்குதல் இல்லை யெனின், வாணிபமும் இல்லையன்றோ? எனவே விவசாயிகளும் ஓரளவு வணிகரே; வணிகராயிருத்தல் அவர் கடமை யாகின்றது. வாணிபஞ் செய்வார்க்கும், விவசாயத்தின் நுட்ப திட்பங்கள் தெரிந்திருப்பது அவசியமாகும். அவர்களின் முன்னேற்றத்திற்கு இந்த அறிவு பெரிதும் துணைசெய்யும். இதனாலேயே, வாணிபத்தில் ஈடுபட்டிருப்போருக்கு, விவசாயத் தொழில் ஓரளவு உரித்தானது என்றனர் பண்டைத் தமிழ் நூலார். வியாபாரத்திற்குப் பரந்த அறிவும் மிகுந்த திறனும் தேவை யில்லையென்று அநேகர் நினைக்கின்றனர். இது தவறு. வியாபாரத் திற்குத்தான் இவ்விரு தகுதிகள் அதிகமாகத் தேவை. இவற்றோடு தீர்க்கதிருஷ்டியும் உலக அனுபவமும் வேண்டும். இந்நான்கினையும் அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்ற வியாபாரத்தின் மீது எப்பொழுதும் வெற்றிக்கொடி அசைந்து ஆடிக்கொண்டிருக்கும். எந்தச் சமுதாயத்தில், வியாபாரத்திற்குச் சாமான்ய அறிவு இருந்தால் போதுமென்ற எண்ணம் நிலவியிருக்கிறதோ அந்தச் சமுதாயம், தன்னுடைய தேவைகளுக்கு மற்றவர்களுடைய தயவையே எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். அதனுடைய பொருளாதார நிலை எப்பொழுதும் தாழ்ந்த தளத்திலேயே நின்று நிலைத் திருக்கும். வியாபாரத்திற்கும் நேர்மைக்கும் சம்பந்தமில்லையென்று சிலர் கருதுகின்றனர். இதுவும் மிகத் தவறு. உண்மையை ஒளித்தல், சொற்புரட்டு, வஞ்சகம், தந்திரம், பணம் ஒன்றிலேயே குறியாயிருத்தல், ஆகிய இவையெல்லாம் வியாபாரத்தினின்று பிரிக்க முடியாதவை யென்றும், இவைகளின்றேல் வியாபாரமில்லை யென்றும் யார் கருதுகின்றார்களோ, அந்தக் கருத்தை அடிப்படை யாகக் கொண்டு யார் வியாபாரம் செய்கிறார்களோ அவர்களை உண்மையான வியாபாரி களென்று சொல்ல முடியாது; சுரண்டு கின்றவர்கள் அல்லது கொள்ளைக் கூட்டத்தினர் என்று தான் சொல்ல வேண்டும். இந்தக் காலத்தில், அரசியல் துறையிலே, சமுதாய வாழ்க்கையிலே, குடும்ப விவகாரங்களிலே, சீலத்திற்கு மேலான ஸ்தானம் கொடுக்க வேண்டுமென்பதைப்பற்றி அறிஞர் பலரும் பிரசாரம் செய்கிறார்கள்; செய்யப்படும் பிரசங்கங்களுக்கும் எழுதப்படும் நூல்களுக்கும் கணக்கு வழக்கில்லை. ஆனால் ஜனங்களுடைய அன்றாட வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள வியாபாரத்திற்குச் சீலம் எவ்வளவு இன்றியமையாத தென்பதை எடுத்துச் சொல்லுவோர், எழுதிக் காட்டுவோர் வெகு சிலராகவே இருக்கின்றனர். இதை வருத்தத்துடன் குறிப்பிட்டுக் காட்டவே வேண்டியிருக்கிறது. சுயநலத்தையும் பரநலத்தையும் சமன் செய்து கொண்டு போக வேண்டிய வியாபாரி, சுயநல அபிவிருத்திக்காக ஒழுங்கையும் பரநல அபிவிருத்திக்காக ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது மிகமிக அவசியமாகும். வியாபார நிலையத்தைத் திறக்கும் நேரம், மூடும் நேரம், கணக்குகளை வைத்துக்கொள்ளல், கடிதப் போக்குவரத்துச் செய்தல் இப்படிப்பட்ட சாதாரண விஷயங்களில் ஒரு வியாபாரி ஒழுங்கை அனுசரிக்காவிட்டால் அவன் நிச்சயம் நஷ்டமே யடைவான். இதே பிரகாரம், பொய்க் கணக்கு எழுதுதல், ஒரு சரக்கைக் காட்டி மற்றொரு சரக்கைக் கொடுத்தல், செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு நேர்மாறாக நடத்தல் ஆகிய இந்த மாதிரி விஷயங்களில் உற்சாகங் காட்டுவானாகில் அவன் என்றைக்காவது ஒரு நாள் தலைக்குனிய வேண்டியதுதான்; அவனுக்குச் சமுதாயத்தில் மதிப்பே இராது. ஒரு வியாபாரியின் ஒழுக்கவீனம், அவன் வாழ்கின்ற சமுதாயத்தையும், அவனோடு வியாபாரத் தொடர்பு கொண்டுள்ள பிற சமுதாயத்தினரையும் பல வகையாகப் பாதித்து விடுகிறது. உதாரணமாக, மளிகை வியாபாரியை எடுத்துக் கொள்வோம். நன்கு சுத்தஞ் செய்யப்பட்ட பொருள்களையே, தம் வாடிக்கைகாரர் களுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக்கின்றி, லாபம் ஒன்றனையே கருதி, சுத்தஞ் செய்யப் படாததும், சத்தில்லாததும், போலிச் சரக்குகள் கலந்ததுமான பொருள் களை வழங்குவானாகில், அவற்றை வாங்கி உபயோகிக்கிற அத்தனை பேருடைய தேகாரோக்கியமும் கெடுமல்லவா? இதனால் அவர்களுக்கு எவ்வளவு கஷ்டம்? எவ்வளவு நஷ்டம்? இதனை, கலப்படச் சரக்குகளை, போலிச் சரக்குகளை விற்பனை செய்கிற பிரதியொரு வியாபாரியும் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். அப்படிச் சிந்தித்துப் பாராமல் தன்னலமே பெரிதாகக் கொண்டு வியாபாரஞ் செய்கிறவன், சமுதாயத் துரோகி. தேசத் துரோகத்திற்கு என்ன தண்டனை உரித்தானதோ அந்தத் தண்டனையைப் பெற வேண்டியவன். ஆகவே, வியாபாரியே ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் இரு கண்கள் போல் போற்றி வளர்த்து வா. அடுத்தபடி வியாபாரியே! நீ எப்பொழுதும் சுறுசுறுப்பா யிருக்க வேண்டும். வியாபாரம் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் பிசினஸ் என்று பெயர். இதை பீசி+னெஸ்1 என்று பிரித்துக் காட்டி, வியாபாரத்திற்குச் சுறுசுறுப்பு எவ்வளவு இன்றியமையாதது என்று எடுத்து காட்டுவர் அறிஞர்! வியாபாரத்தில், உழைக்கிறவனுக்குத்தான் ஊதியம் உண்டு. இந்த உழைப்பிலே சிறுமை பெருமை பார்க்கக்கூடாது. பணம் போட்ட முதலாளி என்று சொல்லிக் கொண்டு எந்த ஒரு வியாபாரி, தன் வியாபார நிலையத்தின் முகப்பிலோ, ஒதுக்கமான ஓர் அறையிலோ உட்கார்ந்த வண்ணம், தனது சிப்பந்திகளை அதிகாரஞ் செய்வதோடு திருப்தியடை கிறானோ அவன், தன் வாழ்நாளிலேயே வீழ்ச்சி காண்பான். அவனுக்கு வியாபார நுணுக்கங்கள் மட்டும் தெரிந்திருந்தால் போதாது; அது சம்பந்தமான சகல காரியங்களையும் தன் கையாலேயே செய்து கொள்ளவும், செய்துகாட்டவும் தெரிந்திருக்க வேண்டும். இதில் கௌரவக் குறைவு ஏதுமில்லை. இதற்கு மாறாக நடந்து கொள்கிறவன் தன் சிப்பந்திகளாலேயே அவமதிக்கப்படுவான். அவன் இடும் உத்தரவுகளுக்கு மதிப்பே இராது. என்றைக்காவது ஒரு நாள் அவன் ஏமாற்றத்தையும் அடைவான். ஆதலின் வியாபாரியே! நீ முதலாளியாக இருக்கத் தெரிந்துகொள்வதற்கு முன், தொழிலாளியாக இருக்கப் பழக்கிக் கொள். உன் அறிவை உபயோகித்து வியாபாரத்தைச் செழிக்கச் செய்ய முற்படு வதுபோல், உன் அங்க அவயவங்களையும் உபயோகப்படுத்து. உன் வியாபாரம் செழிப்பது மட்டுமல்ல, உன் உடலும் உள்ளமும் ஆரோக்கியத்துடன் இருந்துகொண்டிருக்கும். எவ்வித காரணமுமில்லாமல் ஓடி ஆடித் திரிவது உழைப்பாகாது. பயன் தரத்தக்க முறையில் உன் உழைப்பு இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமானால், முதலில், நீயாகச் செய்யக் கூடிய காரியங்கள் யாவை, பிறரைக் கொண்டு செய்விக்கக்கூடிய காரியங்கள் யாவை என்பதை நீ பகுத்தறிந்துகொள்ள வேண்டும். நீ செய்யக்கூடிய காரியங் களைப் பிறரைக்கொண்டு செய்வித்தாயானால், அதனால் உனக்குப் பலவித கஷ்ட நஷ்டங்கள் ஏற்படக்கூடும். அப்படியே, பிறர் செய்யக்கூடிய காரியங்களை நீ செய்ய முற்படுவாயானால், அந்தக் காரியங்களினால் எதிர்பார்க்கிற பலன்கள் கிட்டமாட்டா. ஆதலின் நீ செய்ய வேண்டியதை நீயே செய்; பிறரைக் கொண்டு செய்விக்க வேண்டியதை அவர்களைக் கொண்டே செய்வி. இடைவிடாத உழைப்பை மேற்கொள்வதன் விளைவாக, அவ்வப் பொழுது சில சங்கடங்களை நீ அனுபவிக்க வேண்டியிருக்கும். வேளையில் சாப்பாடு இராது; சரியான தூக்கம் இராது; உன் பொருளாதார நிலைக்குத் தகுந்த வசதிகளை நீ பெறமுடியாதபடி சில தடைகள் ஏற்படலாம். இவைகளையெல்லாம் நீ சகித்துக்கொள்ள வேண்டும். ஆத்திரப்படக்கூடாது நினைத்தது நினைத்தபடி நடக்கவில்லையே யென்று மனச்சோர்வு கொள்ளக்கூடாது. ஆத்திரப்படுவதனாலும் மனச்சோர்வு கொள்வதனாலும் உன் உழைப்புச் சக்தி குன்றும். இதற்கு நீ இடங் கொடுக்கலாமா? வியாபாரத்தில் இடையறா முயற்சி யுடையவன் தான் வெற்றி பெறுகிறான். இதை நீ நன்றாக ஞாபகம் வைத்துக் கொள். ஆரம்ப தசையில் உன் சரக்குகளுக்கு மவுசு இல்லாமல் உன் வாடிக்கைக்காரர்களின் முழுநம்பிக்கையை நீ பெறாமலிருக்கலாம். இப்படி எத்தனை எத்தனையோ இடைஞ்சல்கள் ஏற்படலாம். இவைகளைக் கண்டு மலைக்காதே; முயற்சி செய்வதை நிறுத்தி விடாதே. நல்ல எண்ணத்துடன் நல்ல முறையில் முயற்சி செய்தால் உன் வியாபாரம் வளம் பெறுவது நிச்சயம். உனது உழைப்பிலே, உனது முயற்சியிலே உனது வியாபாரம் விருத்தியாக வேண்டுமே தவிர, அதிருஷ்டத்தை நம்பிக் கொண்டிராதே. அது வருகிறபோது வரட்டும். அது வருமென்பது தான் என்ன நிச்சயம்? உனது உழைப்பின்மையைக் கண்டு, உனது முயற்சியின்மையைப் பார்த்து, உன்னிடம் வரவே அஃது அஞ்சக்கூடும் . உழைக்கிறவனைத் தான், முயற்சியுடையவனைத்தான் அதிருஷ்ட தேவதை கைலாகு கொடுத்து மேலே தூக்கி விடுகிறாள். மற்றவர்கள் யாரும் முன் வந்து எனக்கு உதவி செய்ய வில்லையே யென்று மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிராதே. உதவிக்குத் தகுதியுடையவனாக நீ நடந்து கொள்ளும் பட்சத்தில் நிச்சயம் உனக்கு உதவி கிடைக்கும். ஆனால் அந்த உதவி எவ்வளவு காலத்திற்கு உன்னைத் தாங்குமென்று நினைக்கிறாய்? கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த வார்த்தையும் போலத்தான். உன் உழைப்புதான் உன்னைக் கைதூக்கி விடும். உன் முயற்சி தான் உன்னை முன்னுக்குத் தள்ளிவிடும். சுய உழைப்பினால், சுய முயற்சியினால் முன்னுக்கு வருவதில்தான் உனக்குப் பெருமை. அப்பொழுதுதான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள். பிறர் தள்ளிவிட முன்னேறுவது சிறுமை தான். சகோதரா! உனக்கு அதிகமான பொறுமை இருக்க வேண்டும். எளிதிலே ஒரு பேரம் படியாமலிருக்கலாம்; அல்லது வாடிக்கை காரர்களின் ஏற்றத் தாழ்வான பேச்சுக்கள் உன் செவியிலே விழலாம்; அல்லது உன்னுடைய சிப்பந்திகளே உன் தன்மையை உணராமல் முறை தவறி நடந்து கொள்ளலாம். இவைகள் விஷயத்தில் பொறுமையைக் கையாள்வாயானால், சிறிது காலத்திற்குள் எல்லாம் சரிப்பட்டுவிடும். பொறுமையென்பது வெளிப்படாதது. ஆனால் அதை உன் புன்சிரிப்பினால் வெளிப்படுத்த வேண்டும். உனக்கு எத்தகைய எதிர்ப்பு ஏற்பட்ட போதிலும் அதை இந்தப்புன் சிரிப்பினாலேயே சமாளித்து விடலாம். இதற்கு அவ்வளவு வல்லமை உண்டு. உன்னிடத்திலேயுள்ள மேலான பண்புகளெல்லாம் திரண்டு இந்தப் புன்சிரிப்பாக வெளி வருகிறது. இதற்கு வல்லமையில்லாமற் போகுமா? குறித்த காலத்தில் குறித்த காரியத்தைச் செய்வதென்ற நியதியை ஒரு வியாபாரி நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் வியாபாரம் சீரழிந்து போகும். இன்ன நேரத்தில் உன்னைச் சந்திக்கிறேன் என்று ஒரு வியாபாரி நண்பரிடத்தில் சொன்னால், அந்த நேரத்தில் அவரை அவன் கட்டாயம் சந்திக்கவேண்டும். தவிர்க்கமுடியாத ஏதோ ஒரு காரணத்தினால் அந்த நேரத்தில் அவரைச் சந்திக்க முடிய வில்லை யென்றால், அதை அவருக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். இதே பிரகாரம், வாங்கிய சரக்குகளுக்கு, சொன்ன தவணைப் படி பணம் கொடுத்துவிட வேண்டும். அப்படி முடியவில்லையென்று தெரிந்தால் அதை முன்னாடியே அறிவித்துவிட வேண்டும். ஏனென்றால், அவனுடைய வியாபாரியினுடைய - பணத்தை எதிர்பார்த்து, அவர், தாம் கொடுக்க வேண்டியவருக்கு வாக்குக் கொடுத்திருக்கலாம். இப்படியே ஒருவரை யொருவர் எதிர் பார்த்துக் கொண்டிருக்கலாம். இவர்களில் யாருக்கும் ஏமாற்றம் உண்டாகாதபடி நடந்து கொள்ளவேண்டியது ஒரு வியாபாரியின் கடமையல்லவா? இன்னும், சரக்குகளை வாடிக்கைகாரர்களுக்கும் கொடுக்கிற விஷயத்திலும், ஒரு வியாபாரி, காலத்தைக் கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும். வாடிக்கைகாரர், இன்று வந்து தமக்குப் பிடித்தமான ஒரு சரக்கை அல்லது ரகத்தைக் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சரக்கு அல்லது ரகம் உங்களிடத்தில் கையிருப்பாக இல்லா மலிருக்கலாம். வேறெங்கேனுமிருந்து உங்களால் வாங்கிக் கொடுக்க முடியும். இதற்காக ஒரு தவணை சொல்லி அதன்படி வாருங்கள், சரக்கு தயாராயிருக்குமென்று சொல்லியனுப்புகிறீர்கள். அதன்படி வாங்கி வைத்து தவணைப்படி அவருக்குக் கொடுக்கவேண்டும். அவருக்கு மறு தவணை சொல்லக் கூடாது. மறுதவணை சொல்வது, வாடிக்கைகாரரின் அவ நம்பிக்கையையும் அதிருப்தியைப் பெறுவதாகும். இப்படி வாடிக்கைகாரரின் அவநம்பிக்கையையும் அதிருப்தியையும் சம்பாதிப்பது வியாபார அபிவிருத்தியைத் தடைப்படுத்துமல்லவா? வியாபார நிலையத்தைக் குறித்த நேரத்தில் திறந்து மூட வேண்டும். இது வாடிக்கைக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமா யிருக்கும். முதலாளியும் காலாகாலத்தில் வந்துபோக வேண்டும். அப்பொழுது தான் சிப்பந்திகளும் சரிவர வந்து போவர். வியாபார சம்பந்தமான கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதி யனுப்ப வேண்டும். வியாபாரத்தின் வெற்றி, ஒழுங்கான கடிதப் போக்குவரத்தில் இருக்கிறதென்று சொல்வார்கள். இது மிக மிக உண்மை. வந்த கடிதங்களையெல்லாம் ஒன்று சேர்த்துவைத்துக் கொண்டு ஒருநாள் பதில் எழுதலாமென்று இருக்கவே கூடாது. கடிதம் எழுதுகிறவர்கள், எவ்வளவு ஆவலுடன் பதிலை எதிர்பார்க்கிறார்களென்பதை ஒரு வியாபாரி நன்குணர்ந்திருக்க வேண்டும். தான் எதிர்பார்க்கிற கடிதங்கள், எதிர் பார்க்கிற காலத்தில் வரவில்லையானால் ஒரு வியாபாரிக்கு எவ்வளவு கவலை உண்டாகிறது? அதைப்போலத் தானே பிறருக்கும் என்பதைப் பிரதியொரு வியாபாரியும் தெரிந்திருக்க வேண்டும். முன்னேற்றத்தை நாடிச் செல்கின்ற வியாபாரி, ஒழுங்கான கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும். வரவு செலவு, சரக்குகளின் கொள்முதல் விற்பனை இப்படிப் பலவகைக் கணக்குகளையும் அவ்வப்பொழுது பதிந்துவிட வேண்டும். அன்றாடக் கணக்குகள் அன்றாடம் என்பதைக் கண்டிப்பான விதியாக அனுசரிக்க வேண்டும். நாளைக்கு நாளைக்கு என்று தள்ளிப் போட்டால், அஜாக்கிரதையினாலோ, ஞாபக மறதியினாலோ சில இனங்கள் விட்டுப்போகக் கூடும். இது கடைசியில் லாபநஷ்டக் கணக்கைப் பாதிக்குமல்லவா? தவிர, ஒரே மாதிரியான கணக்கே இருக்க வேண்டும்; பல மாதிரியான கணக்குகள் வைத்துக் கொள்ளக் கூடாது. இதனால் கடைசியில் அபகீர்த்தியே உண்டாகும். ஒரு வியாபாரிக்கு அவசியம் வேண்டப்படுவது நல்ல ஞாபக சக்தி. இந்த ஞாபக சக்தியை அவன் எவ்வளவுக் கெவ்வளவு அதிகப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறானோ அவ்வளவுக் கவ்வளவு அவனுடைய கணக்குப் புத்தகத்தில் வரவு இனம் அதிகப்பட்டுக் கொண்டிருக்கும். ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை போல்தான் மேல்பார்வைக்குத் தோன்றும். ஆனால் அப்படி யில்லை. அனுபவத்தில் பார்த்தால்தான் இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் நன்கு தெரியும். ஒரு நபரிடமிருந்து குறிப்பிட்ட ஒரு தேதியில் பணம் வர வேண்டியிருக்கிறது; அந்தத் தேதியை நாம் மறந்துவிட்டால், அன்று நமக்கு வரவேண்டிய பணம் வராமற்போகுமல்லவா? இன்றைக்கில்லாவிட்டால் நாளைக்கு வருமென்ற நம்பிக்கை நமக்கு இருக்குமானாலும், குறிப்பிட்ட தேதியில் நாம் ஞாபகப்படுத்தாவிட்டால் அந்த நபர் நம்மைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்? வியாபாரத்தில் நாம் அசிரத்தையா யிருக்கிறோ மென்றல்லவோ நினைப்பார்? இந்த ஞாபகசக்தியைப் பெறுவது அதிக கஷ்டமில்லை. தினந்தோறும் மாலை வியாபாரமெல்லாம் முடிந்த பிறகு, வியாபார நிலையத்தில் இருந்த வண்ணமோ அல்லது வீட்டுக்குப் போந்த பின்னரோ, இன்று காலை வியாபார நிலையம் போந்தது முதல் மாலைவரை, என்னென்ன நடைபெற்றது, யாரார் வந்து போனார்கள், என்ன பேசினார்கள், என்ன பதில் சொன்னோம் இப்படி எல்லா வற்றையும் ஒவ்வொன்றாக வரிசைக் கிரமத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படி எண்ணிப் பார்ப்பதில் தினந்தோறும் பத்து நிமிஷநேரம் செலவழிப்போமானால் அதனால் ஏற்படுகின்ற பலன் நாளாவட்டத்தில் தான் தெரியும். உடனடியாக இதன் பலனைக் காண முடியவில்லை யென்பதற்காக இந்தப் பழக்கத்தை எந்த ஒரு வியாபாரியும் கைவிட்டு விடாதிருப்பானாக. ஒரு வியாபாரிக்கு வாய்ப்பாடு நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். கூட்டல், கழித்தல், பெருக்கல் முதலியவைகளை வாயாலேயே சுலப மாகப் போட்டுச் சொல்ல வேண்டும். இதற் கெல்லாம் காகிதத்தையும் பென்சிலையும் தேடிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு கஜம் துணி விலை பதின் மூன்றரையணா. வாடிக்கைக்காரர் ஒருவர் வந்து, தமக்கு அரையே அரைக்கால் கஜம் தேவையென்றும், அதற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டு மென்றும் கேட்கிறார். உடனே தொகையைச் சொன்னால்தான் அவருக்குத் திருப்தியும் நம்பிக்கையும் வியாபாரியிடத்தில் உண்டாகும். கணக்குகள் போடுவதில் சில குறுக்கு வழிகள் உண்டு. அவற்றை ஒரு வியாபாரி நன்கு தெரிந்திருக்க வேண்டும். தற்கால வியாபாரிக்குச் சுருக்கெழுத்து எழுதுவதிலும் டைப் அடித்தலிலும் ஓரளவு பயிற்சி இருத்தல் நல்லது. வியாபாரிக்குக் கண்ணும் காதும் மிகக் கூர்மையாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவன் அநேக விதங்களில் ஏமாற்றத்தை யடைய நேரிடும். வியாபாரமென்றிருந்தால் சரக்குகளை நோட்டம் பார்க்க வேண்டியிருக்கும்; சகோதர வியாபாரிகள் அநேகவித சமிக்ஞைகளால் வியாபார நுணுக்கங்களைத் தெரிவிப்பார்கள்; காதோடு காது வைத்தும் பேசுவார்கள்; இப்படி எத்தனையோ காரியங்களுக்கு இவ்விரு உறுப்புக் களையும் கூர்மைப்படுத்தி வைத்திருத்தல் அவசியமாகும். வியாபாரி, அன்றாட உலக நிகழ்ச்சிகளில் நல்ல பரிச்சயம் பெற்றிருக்க வேண்டும். இது தவிர, பொது அறிவு என்று சொல்கிறார்களே அது நிறைய இருக்க வேண்டும். வியாபாரிகளிலாகட்டும், வாடிக்கைக்காரர்களிலாகட்டும் பலதரப்பட்டவர்கள், பல வகை ருசியுள்ளவர்கள் வந்து பேசுவார்கள்; வியாபாரத்திற்குச் சம்பந்தமில்லாத அநேக பிரச்னைகளைக் கிளத்தி வாதஞ் செய்ய முற்படுவார்கள். இவை களிலிருந்து வியாபாரியால் ஒதுங்கியிருக்க முடியாது; ஒதுங்கி யிருக்கவும் கூடாது. இவைகளிற் கலந்து கொள்ள வேண்டும். இதற்குகந்த விதமாகத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ளுதல் வியாபாரியின் கடமையல்லவா? ஆனால் ஓர் எச்சரிக்கை. இந்தப் பேச்சுக்களில் அல்லது சர்ச்சை களில் ஈடுபடுகிறபொழுது, வியாபாரி, நிதானத்தை இழந்துவிடலாகாது. வார்த்தைகளை அளந்தே வெளியிட வேண்டும். தன்னுடைய திடமான அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதை நாசூக்காக, யாருடைய உணர்ச்சிக்கும் பங்கம் உண்டாகாதபடி தெரிவிக்க வேண்டும். எந்த விதத்திலும் சகோதர வியாபாரிகளுடையவோ வாடிக்கைகாரர் களுடையவோ நல்லெண்ணத்தையும் நன்மதிப்பையும் இழந்து விடக்கூடாது. அவர்களுடைய வாடிக்கைதான் முக்கியம்; அவர் களுடைய அபிப்பிராயங்களல்ல. இதற்காக, சொந்தமான அபிப்பிராயம் இருக்கக்கூடாதென்பது அர்த்தமல்ல. எந்த விதமான அபிப்பிராயமு மில்லாதவன் ஒட்டைப் படகு மாதிரி. எந்த விதமான அபிப்பிராயத் திற்கும் தலையசைக்கிறவன் தன் மதிப்பில்லாதவன். ஆகவே, எந்தப் பிரச்னையைப் பற்றி என்னவிதமான அபிப்பிராயம் நமக்கு இருந்த போதிலும் அதை, என் அபிப்பிராயந்தான் சரி என்ற தன்முனைப் பில்லாமல், பணிவோடு ஆனால் உறுதியுடன் தெரிவிக்க வேண்டும். வியாபாரி, தன்னுடைய ஒவ்வொரு சரக்குக்கும் இவ்வளவு இவ்வளவு விலையென்று நிர்ணயித்து அதன் பிரகாரமே வாடிக்கைக் காரர்களுக்குக் கொடுக்கவேண்டும். முதலில் சொல்லுகின்ற விலை ஒன்றாகவும், கடைசியில் கொடுக்கின்ற விலை வேறொன்றாகவும் இருக்கக்கூடாது. இப்படிக் கண்டிப்பான விலை வைத்து வியாபாரம் செய்யாதனால் ஆரம்பத்தில் சில சங்கடங்கள் உண்டாகலாம். சரக்குகள் சடுதியில் செலவழியாமல் தங்கித் தங்கிப் போகலாம்; வாடிக்கைக் காரர்களும் வரவரக் குறையலாம். ஆனால் நாளாவட்ட திருஷ்டியில் பார்த்தோமானால், கறார் வியாபாரத்தில் தான் அதிகமான சாதகங் களுண்டு. அனுபவ முதிர்ந்த ஒரு வயோதிகர் வந்தாலுஞ் சரி, உலக மறியாச் சிறு குழந்தை வந்தாலுஞ் சரி, ஒரே விலை என்ற இடத்தில்தான் நல்ல வியாபாரம் நடக்கும். வாடிக்கைக்காரர் களுடைய திருப்தியையும், நம்பிக்கையையும் பெறுவதற்கு இதுதான் சிறந்த மார்க்கம். ஒரே விலையைப் போலவே ஒரே சரக்கையே, ஒரு வியாபாரி, வாடிக்கைக்காரர்களுக்கு விநியோகிக்கவேண்டும். காட்டுவ தொன்றாகவும், கொடுப்பதொன்றாகவும் இருக்கவே கூடாது. இப்படிக் கொடுத்து சிறிது அதிகமான லாபத்தைச் சம்பாதிக்கலா மென்பது வாஸ்தவம். ஆனால் எவ்வளவு காலத்திற்கு? சொற்ப காலத்திற்குத் தான். பிறகு நஷ்டமேற்படுவதோடல்லாமல் நாணயமும் போய்விடும். பிறகு என்ன? மானமிழந்து மதிகெட்டுப் போக வேண்டியதுதான். வியாபாரம் தொடங்குகிற ஒருவன் தன் சொந்த முதலைப் போட்டுத் தொடங்குவதே உத்தமம். கூட்டு வியாபாரம் என்றைக்கும் சங்கடந்தான். கூட்டாளிகள் மனமொத்துப் போகிற வரையில் சரி, சிறிது மனவேறுபாடு ஏற்பட்டால்கூட போதும்; வியாபாரம் நசித்துவிடும். மனமொத்துப் போவ தென்பதுகூட எது வரையில்? லாபம் அதிகமாக வராத வரையில். நிகர லாப இனம் பெருகப் பெருக, கூட்டாளிகளின் ஒற்றுமையிலும் பிறவு விரிந்து கொண்டே போகும். பெரும்பாலான கூட்டு வியாபாரங்களில் இதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். கூடிப் பிரிதல் என்றைக்கும் நல்லதில்லையல்லவா? எனவே, சொந்த முதல் வைத்தே, அஃது எவ்வளவுதான் குறைச்சலாயிருந்தாலும் அதைக்கொண்டே ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தல் நல்லதென்று பல தடவை வற்புறுத்திச் சொல்ல விழைகிறோம். சொந்த முதலும் சொந்தப் பணமாகவே இருக்க வேண்டும்; பிறருடைய பணமாயிருக்கக்கூடாது. அதாவது, கடன் வாங்கி ஒரு வியாபாரத்தைத் தொடங்குதலே கூடாது. அது, தலைமீது ஒரு பெரிய பாறாங்கல்லை வைத்துக் கொண்டு நடக்கிற மாதிரி. கடன் கொடுத்தவருடைய தயவிலே வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுவ தோடு, மனக்கவலையும், மானம் போய்விடுமோ என்ற அச்சமும் உயிர்க்கொல்லிகளா யமைந்துவிடும். புத்திசாலியான யாவரும் இதற்கு இடங் கொடுக்கலாகாது. கடைசியாக, வியாபாரத்தினால் ஏற்படக்கூடிய சாதக பாதகங் களை வரிசைப்படுத்திக் கூற விழைகிறோம். சாதகங்கள்:- 1. சுதந்திர மனப்பான்மையை வளர்த்துக் கொடுக்கிறது. 2. சுயமுயற்சிக்கு ஆக்கமளிக்கிறது. 3. பல நிலையிலுள்ளவர்களுடன் பழகி உலக அனுபவத்தை அதிகமாகச் சம்பாதித்துக் கொள்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டாகின்றன. 4. எந்த விதமான நெருக்கடியையும் அலட்சியமாக எதிர்த்து வெற்றி காணும் மனத்திண்மையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. 5. பிறருடைய கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து அநுதாபங் காட்டக் கூடிய, முடிந்தால் அந்தக் கஷ்ட நஷ்டங்களிலிருந்து மீட்க வேண்டுமென்ற மனப்பண்பை உண்டாக்கிக் கொடுக்கிறது. 6. தரும சிந்தனைக்கு ஊக்கமளிக்கிறது. பாதகங்கள்:- 1. மாதம் அல்லது வருஷம் இவ்வளவு வருமானம் என்ற ஒரு நிர்ணயம் இராது. இதனால் வருவாயைப்பற்றிய ஒருவித கவலை எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கும். 2. யாருக்கும் கைகட்டிச் சேவகம் செய்ய வேண்டுமென்ப தில்லை யாயினும், யாருக்கும் இணங்கியே போக வேண்டும். 3. ஓய்வென்பதையே காண முடியாது. 4. கலை, இலக்கியம் முதலியவைகளின் வளர்ச்சிக்கு வியாபாரிகளின் ஆதரவு அதிகம் தேவைப்படுகிறதென்றாலும், அந்த வியாபாரிகளைப் பொறுத்தமட்டில், கலை, இலக்கியம் முதலியவற்றை அவர்கள் நன்கு சுவைத்து அனுபவிக்க முடியாதவர்களாயிருக்கிறார்களென்பதைப் பலரும் ஒப்புக் கொள்வர். 5. நல்ல முறையில் வாழ்க்கையை நடத்துவதற்கான வசதிகள் பல இருந்த போதிலும், அவற்றை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். 6. வாழ்க்கை, எப்பொழுதும் ஒரு பரிசோதனைக் களமாகவே இருக்கும். 7. உத்தியோகஸ்தன் அரசாங்க ஸ்தாபனங்களிலாகட்டும், தனிப்பட்டவர்களால் நடத்தப்பெறும் ஸ்தாபனங்களிலாகட்டும் ஊதியத்திற்காக உழைக் கின்றவர் அனைவரும் உத்தியோகஸ்தர்களே. இவர்களுக்குள் ஏற்றத் தாழ்வு கற்பிக்க நாம் விரும்பவில்லை. மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளம் வாங்கினாலென்ன, ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்கினாலென்ன, அனைவரும் பிறரிடம் பிறருக்காக உழைக்கிறவர்கள் தானே? உடலுக்கு ரத்த நாளங்கள் எப்படியோ அப்படியே ஒரு ஸ்தாபனத்திற்கு உத்தியோகஸ்தர்கள். இவர்களுடைய எழுதுகோல் ஓடாவிட்டால் ஸ்தாபனம் நடவாது. ஆனால் இதையே திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஸ்தாபனம் நடவாவிட்டால் இவர்களுடைய தேகத்தில் ரத்தமும் ஓடாதல்லவா? வாழ்க்கையைச் சூனியம் சூழ்ந்து கொண்டுவிடுமல்லவா? ஆகவே ஸ்தாபனமும் உத்தியோகஸ்தர்களும் பரஸ்பரம் ஒத்துழைக்க வேண்டும். இந்த ஒத்துழைப்பில்தான் ஸ்தாபனத்தின் நலனும் உத்தியோகஸ்தர்களின் நலனும் இருக்கின்றன. இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஸ்தாபனத் தலைவர்களையும் உத்தியோகஸ்தர்களையும் முதலிலேயே கேட்டுக் கொள்கிறோம். எந்த ஒரு ஸ்தாபனத்திலும், மேலதிகாரிகளென்றும் நடுத்தர உத்தியோகஸ்தர்களென்றும், கீழ்த்தரச் சிப்பந்திகளென்றும் மூன்று வகையினராகப் பிரித்துச் சொல்வதுண்டு. இவர்கள் வாங்குகிற சம்பளத்திலும், செய்கிற வேலையிலும் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் பொறுப்பு ஒன்றே. மேலதிகாரி, ஒரு தஸ்தவேஜில் கையெழுத்திடுகிறபோது, பொறுப்புணர்ந்தே கையெழுத்திட வேண்டும். அப்படியே கீழ்த்தர சிப்பந்தி, அதை உரிய இடத்தில் சேர்ப்பிக்கிறபோது, பொறுப்புணர்ந்து சேர்ப்பிக்க வேண்டும். இரண்டும் ஒரே மாதிரியான பொறுப்புடையவைதான். இரண்டினால் ஏற்படக்கூடிய விளைவுகள் வெவ்வேறு விதமாக இருக்கலாம். அந்த விளைவுகள், சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்காமலிருக்கலாம். ஆனால் அவை பிறரைப் பல விதமாகப் பாதிக்கக்கூடுமென்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் நன்குணர்தல் வேண்டும். அப்படியானால் அவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையுடன் தங்கள் கடமைகளைச் செய்துவர வேண்டுமென்பது விளங்குகிறதல்லவா? உலகத்திலேயே, உத்தியோகஸ்தர்களுக்கு முக்கியத்தும் கொடுத்துப் பேசியது, முதன்முதலில் சீனாதான். உத்தியோகஸ்தர் களென்றால், அரசாங்க உத்தியோகஸ்தர்களையே குறிக்கும். பண்டைய சீனாவில், ஜன சமுதாயம் நான்கு முக்கியமான பிரிவினரைக் கொண்ட தாயிருந்தது. முதலில், கல்வியறிவு நிரம்பியவர்கள்; பின்னர், விவசாயிகள்; அடுத்தாற்போல் தொழிலாளர்கள்; கடைசியில், வியாபாரிகள். வியாபாரிகள், சமுதாயத்தின் கடைசி படியில் வைக்கப் பட்டிருந்தார்களென்பது இங்குச் சிறிது சிந்திக்கத்தக்கது. அழிந்துபோகக் கூடிய பொருட் செல்வத்தைத் துச்சமாகக் கருதினார்கள் சீனர்கள். இந்த துச்சமான பொருட் செல்வத்தை மையமாகக் கொண்டு இயங்குவதன்றோ வியாபாரம்? இதனை நடத்துவோர் சமுதாயத்தின் கீழ்ப்படியிலிருக்கவே தகுதியுடையவர்கள். இதுவே முற்காலத்துச் சீனர்களின் கருத்தா யிருந்தது. அறிவுக்கு முதல் ஸ்தானம் கொடுத்துப் போற்றியவர்கள் சீனர்கள். எனவே, அறிஞர்களைச் சமுதாயத்தின் முதற்படியில் வைத்துக் கௌரவித்ததில் ஆச்சரியமெதுவுமில்லை. இந்த அறிஞர்கள்தான் அரசாங்க உத்தியோகஸ்தர்களாக நியமனம் பெற்றார்கள். இதனால் இவர்களுக்குச் சமுதாயத்தினர் அதிக மரியாதை செலுத்தினர்; அப்ப நீ அம்மை நீ என்று இவர்களைப் போற்றினர்; இவர்கள் ஆணையை மீறி நடக்கத் துணிந்திலர். இந்த உத்தியோகஸ்தர்களும், தாங்கள் வகித்த பதவிக்குச் சிறிது கூட களங்கம் ஏற்படா வண்ணம் நேர்மையுடன் நடந்து கொண்டனர். சுய நன்மையென்பது, இவர்களுடைய எண்ணத்திலோ, செயலிலோ எட்டிப் பார்க்க அஞ்சியது. அந்த எண்ணத்திலும், செயலிலும் ஜன நன்மை என்பதொன்றே குடி கொண்டிருந்தது. இதனால்தான் அவ்வப்பொழுது ஆண்டுமாண்டு வந்த மன்னர்களும் இவர்களிடத்தில் மரியாதை செலுத்தினர்; இவர்களைக் கண்ணிய மாகவும் நடத்தினர். உலகத்து மகா மேதையர்களுள் ஒருவனாக இன்றளவும் போற்றப்பட்டு வருகின்ற கன்பூஷியஸ்1 ஓர் அரசாங்க உத்தியோகஸ் தனாகவே இருந்தான். இவன், ஒரு சமயம், தான் வெகு காலமாக அலுவல் பார்த்து வந்த ராஜ்யத்திலிருந்து வேறொரு ராஜ்யத்திற்குச் சென்று சிறிது காலம் வசிக்க வேண்டியிருந்தது. அந்த ராஜ்யத்து மன்னன் இவனுக்கு நல்லதோர் உத்தியோகம் கொடுப்பதாகச் சொன்னான். ஆனால், அவன் தன்னை கண்ணியமாக நடத்தமாட்டானென்று தெரிந்து இவன் அந்த உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். பெறுகின்ற ஊதியம் பெரிதல்ல; நடத்தப்படுகின்ற விதமே பெரிது என்று கருதினான் பிரதியோர் அரசாங்க உத்தியோகஸ்தனும், பண்டைய சீனாவில் உத்தியோகஸ் தர்களின் நேர்மையான நடக்கைக்கும், கண்ணியமான வாழ்க்கைக் கும் வழி காட்டியவன் கன்பூஷியஸ். புராதன எகிப்திலும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மேலான அந்தஸ்து வகித்திருந்தார்கள். சமுதாயத்தில் இவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. இவர்கள் பெரும்பாலும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்களுக்கு ஏற்பட்டிருந்த மதிப்புக்கு இதுவும் ஒரு துணைக்காரணமாகச் சேர்ந்து கொண்டது. ஆனால் இந்த துணைக்காரணத்தைத் துணையாகக் கொண்டு இவர்கள், தாங்கள் வகித்த பதவியை துர் உபயோகப்படுத்தவில்லை; அதிகாரத்தைத் துர் வினியோகம் செய்யவில்லை. இதுதான் விசேஷம். அப்படி, துர்உபயோகப் படுத்தினாலுஞ்சரி, துர் வினியோகஞ் செய்தாலுஞ் சரி, கடுமையான தண்டனைக்குட் படுத்தப் பெற்றார்கள். பாபிலோனியாவிலும் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கே அதிகமான மதிப்பு. இந்த மதிப்புக்குத் தகுந்த பொறுப்பையும் இவர்கள் வகித்து வந்தார்கள். இவர்கள் அநேகமாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். கிரீஸ், ரோம் முதலிய சாம்ராஜ்யங்களிலும் இப்படித்தான். அரசாங்க உத்தியோகமென்றால் தனி மதிப்பு இருக்கவே செய்தது. உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களே இந்த உத்தியோகங்களை வகித்து வந்தார்கள். பொதுவாகவே, பண்டைக் காலத்தில் பெருமையோடு வாழ்ந்து வந்த எந்த நாட்டை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு பாருங்கள். சமுதாயத்தில் மூன்று அல்லது நான்கு பிரிவுகள் அல்லது வகுப்புகள் இருந்ததைக் காண்கிறீர்கள். இந்தப் பிரிவுகளுக்கு அல்லது வகுப்புக்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர் இருந்தது. உதாரணமாக, பாபிலோனியாவில், முதல் வகுப்பினர் அமேலம் என்றும், இரண்டாவது வகுப்பினர் முஷ்கினம் என்றும், மூன்றாவது வகுப்பினர் வார்டம் என்றும் முறையே அழைக்கப்பட்டார்கள். புரோகிதர்கள், அரசாங்க உத்தியோகஸ் தர்கள் இவர்களெல்லாரும் முதல் வகுப்பினர்; வியாபாரிகள், தொழில் நடத்துவோர் இவர்களெல்லாரும் இரண்டாவது வகுப்பினர். அடிமைகள் மூன்றாவது வகுப்பினர். மூன்றாவது வகுப்பினர் அடிமைகளென்றபடியால், முதலிரண்டு வகுப்பினரும் சுதந்திர மக்களென்று ஏற்படுகிறதல்லவா? ஆம்; அப்படித்தான். இவர்களிலும் அந்தஸ்து வித்தியாசம் இருந்தது. இந்த வித்தியாசத்திற்கேற்றாற்போல் இவர்களுடைய உரிமைகளும், கடமைகளும் வித்தியாசப்பட்டிருந்தன. அப்படியே, குற்றஞ் செய்தவர்களுக்குத் தண்டனை யளிப்பதிலும் வித்தியாசம் காட்டப்பட்டது. இங்ஙனமே கிரீஸில், சமுதாயமானது நான்கு தரத்தினருடையதா யிருந்தது. ஆக எல்லா நாடுகளிலும் சமுதாயப் பிரிவினைகள் ஏதோ ஒரு வகையில் இருந்திருக்கின்றன. சமுதாயம் ஒழுங்காக இயங்கிக் கொண்டு வர வேண்டுமென்பதற்காக இந்த பிரிவினைகளே தவிர, உயர்வு தாழ்வு கற்பித்து ஒருவரையொருவர் அடங்கியாள்வதற்காகவல்ல. அவரவர் கடமையை அவரவரும் ஒழுங்காகச் செய்து கொண்டு போதல் எல்லாருக்கும் நல்லது என்று எல்லா நாட்டு நீதி நூல்களும் ஒரே மாதிரியாகக் கூறியிருப்பதை யாரும் பார்க்கலாம். அறிவும் ஆற்றலும் அனுபவமும் மிக்கவர்கள் சமுதாயத்தில் முதல் மரியாதை பெற்று வந்தார்களென்றும், இவர்களே அரசாங்க நிருவாகத்தில் பெரும் பங்கு கொண்டிருந்தார்களென்றும், உலகத்து எல்லா நாடுகளிலும், அனுஷ்டானத்தில் இருந்து வந்த பொதுவான நியதி இது என்றும் நாம் முடிவு செய்து கொள்வது தவறாகாது. அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு மேற்சொன்ன மூன்றும் அறிவு, ஆற்றல், அனுபவம் ஆகிய மூன்றும் - இன்றியமையாதனவன்றோ? நமது நாட்டைப் பொறுத்த மட்டில், முற்காலத்தில் அரசாங்க நிருவாகம் திறம்பட நடைபெற்று வந்ததென்றும், அரசாங்க உத்தியோகஸ் தர்கள் மிகத் திறமைசாலிகளாயிருந்தார் களென்றும் அரசியல் நூல்களி லிருந்து அறிகிறோம். ராஜசேவை, கத்தி முனையைப் போன்றதென்றும், அறிவு மிகப்படைத்தவ ராலேயே அதைச் செய்தல் இயலுமென்றும், அறிவிலார்க்கு அது சாத்தியமில்லையென்றும் சுக்கிர நீதி கூறுகிறது. கௌடில்ய னுடைய அர்த்த சாஸ்திரம், அரசாங்க உத்தியோகஸ்தர்களின் லட்சணங்களையும், கடமைகளையும் அதிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. உத்தியோகஸ்தர்கள், காரியாலயத்தில் வந்து அமர்ந்ததும், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்து வருகிறார்களா என்று அவ்வப் பொழுது கண்காணிக்கப்பட்டு வர வேண்டு மென்றும், மேலதிகாரியின் உத்தரவு மீறிச் செயலாற்றுவோர் தண்டிக்கப்படல் வேண்டுமென்றும், நியாயமற்ற முறையில் சம்பாதிக்கப்பெற்ற சொத்து பற்றுக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டுமென்றும், அப்படிச் சம்பாதிக்கிறவர்களைக் கடுமையாக எச்சரிக்கை செய்து வேறோர் இலாகாவுக்கு மாற்றிவிட வேண்டு மென்றும் இப்படியெல்லாம் கௌடில்யன் திட்டமிட்டுப் போயிருக்கிறான். எந்த ஓர் அரசாங்கத்திலும், நிருவாகம், நீதி பரிபாலனம், ராணுவம் என்ற மூன்று முக்கியமான பிரிவினைகள் உண்டு. இம்மூன்றிலும் அலுவல் பார்க்கிற அத்தனை பேரும் உத்தியோகஸ்தர்களே. இவருள், நிருவாகப் பிரிவில் இருப்போர், பொதுநலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். நீதி பரிபாலனப் பிரிவில் இருப்போர், நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். ராணுவத்திலிருப்போர், நேர்மையும் கண்டிப்புமுடையவர் களாயிருக்க வேண்டும். இப்படிச் சொன்னதனால் நிருவாகத்தி லிருப்போர், பொதுநலன் என்று சொல்லிக் கொண்டு நேர்மையை நழுவ விட்டுவிடலாமென்று அர்த்தம் செய்து கொள்ளக்கூடாது. அப்படியே நீதி பரிபாலனத்தில் இருக்கிறவர்களும் ராணுவத்தில் இருக்கிறவர்களும், நேர்மையுடன் நடந்து கொள்ளு கிறோமென்று சொல்லி பொது நலனை மறந்துவிடலாகாது. முக்கிய லட்சியம் இன்னதாயிருக்க வேண்டுமென்பதை மேலே சுட்டிக் காட்டினோமே தவிர வேறொன்றுமில்லை. இவர்களில், ராணுவ உத்தியோகஸ்தர்கள், மற்ற இரு பிரிவு உத்தியோகஸ்தர்களைக் காட்டி லும் சிறிது அதிகமான ஊதியம் பெறுகிறார்கள். எந்த நாட்டிலும், எக்காலத்திலும் இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இவர்கள் பெறும் சலுகைகளும் அதிகமாகவே இருந்து வந்திருக்கின்றன. ஆனால் இவர்கள் மேற்கொண்டுள்ள பொறுப்பு மகத்தானது. நாட்டின் பாதுகாப்பு இவர்கள் வசத்திலன்றோ இருக்கிறது? இதற்காக இவர்கள், தங்கள் உயிரையே பணயமாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். உண்மையில், ராணுவத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வனும் தேகாபிமான மில்லாதவனாகவே இருக்க வேண்டும். வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம் என்பதை இவன், தனது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் உணர்ந்திருக்க வேண்டும். இன்றேல் அச்சம் இவனை ஆட்கொண்டு இவன் உயிருக்கே முற்றுப்புள்ளி வைத்துவிடும். ராணுவ உத்தியோகஸ்தன், நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சி யிலும் சம்பந்தப்பட்டவனாயிருத்தல் கூடாதென்பது எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நியதி. எந்த நாட்டிலும் இது கண்டிப்பாக அனுஷ்டானத்தில் இருந்து வருகிறது. ஏதேனும் ஓர் அரசியல் கட்சி வசம் அரசாங்க நிருவாகம் இருக்கிற இந்த ஜனநாயக யுகத்தில், இது சாத்தியமாவென்று சிலர் கேட்கலாம். எந்தக் கட்சி அரசாங்க நிருவாகத்தை ஏற்று நடத்தினாலும், நாட்டின் பாதுகாப்பு என்பது எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானது; கட்சிகளுக்கெல்லாம் மேற்பட்டது என்றும் சொல்லலாம். கட்சிக் கொள்கைகளுக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. யுத்தத்தை மூட்டிவிடுவது அரசியல் வாதி களென்றாலும், யுத்தத்தை நடத்துவது ராணுவத்தினரே. இப்படி நடத்துவதும் நாட்டின் பாதுகாப்புக்காகவே. ஆதலின், இந்தப் பாது காப்புக்காகவென்றே இருக்கின்ற ராணுவமானது, அரசியல் கட்சி களுக்கெல்லாம் அப்பாற்பட்டதாயிருக்க வேண்டுமென்ற நியதி நெடுங்காலமாகவே அனுஷ்டானத்தில் இருந்து வருகிறது. இந்தக் காலத்தில் எந்த நாட்டிலும் ராணுவமானது, தரைப் படையென்றும், கடற்படையென்றும், ஆகாயப் படை யென்றும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்கள் அறிவார்கள். இந்த மூன்று பகுதிகளையும் சார்ந்த உத்தியோகஸ்தர் பலருண்டு. இவர் களுடைய அந்தஸ்தைக் குறிப்பதற்கான அடையாளங்கள் உண்டு. இவர்கள் ஒருவருக் கொருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற கண்டிப்பான நியமங்களுண்டு. இந்த உத்தியோகஸ்தர்களின், அந்தஸ்து வரிசையை, வாசகர்களே, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? தரைப்படை 1. பீல்ட் மார்ஷல் - Field Marshal. 2. ஜெனரல் - General. 3. லெப்டினெண்ட் - ஜெனரல் - Lieutenant General. 4. மேஜர் - ஜெனரல் - Major General. 5. ப்ரைகேடியர் - Brigadier. 6. கர்னல் - Colonel. 7. லெப்டினெண்ட் - கர்னல் - Lieutenant Colonel. 8. மேஜர் - Major. 9. காப்டன் - Captain. 10. லெப்டினெண்ட் - Lieutenant. 11. ஸெகண்ட்-லெப்டினெண்ட் - Second Lieutenant. கடற்படை 1. அட்மிரல் ஆப் தி பிளீட் - Admiral of the fleet. 2. அட்மிரல் - Admiral. 3. வைஸ் - அட்மிரல் - Vice Admiral. 4. ரேர் - அட்மிரல் - Rear Admiral. 5. கம்மோடோர் - Commodore. 6. காப்டன் - Captain. 7. கமாண்டர் - Commander. 8. லெப்டினெண்ட் – கமாண்டர் - Lieutenant - Commander. 9. லெப்டினெண்ட் - Lieutenant. 10. சப் - லெப்டினெண்ட் - Sub - Lieutenant. 11. கமிஷன் ஆபிஸர் - Commissioned Officer. ஆகாயப்படை 1. ஆகாயப்படை மார்ஷல் - Marshal of the Royal Air Force. 2. ஏர் சீப் மார்ஷல் - Air Chief Marshal. 3. ஏர் மார்ஷல் - Air Marshal. 4. ஏர் வைஸ் மார்ஷல் - Air Vice Marshal. 5. ஏர் கம்மோடார் - Air - Commodore. 6. க்ரூப் காப்டன் - Group Captain. 7. விங் கமாண்டர் - Wing Commander. 8. ஸ்க்வாட்ரன் லீடர் - Squadron Leader. 9. ப்ளைட் லெப்டினெண்ட் - Flight Lieutenant. 10. ப்ளையிங் ஆபிசர் - Flying Officer. 11. பைலட் ஆபிசர் - Pilot Officer. இவை பிரிட்டிஷ் ராணுவத்திலுள்ள வரிசைக் கிரமம். இந்தியா உள்பட ஏறக்குறைய எல்லா நாடுகளும் இந்த வரிசைக் கிரமத்தையே அனுஷ்டிக்கின்றன. இந்த மூன்று பகுதி உத்தியோகஸ்தர்களின் அன்றாட வாழ்க்கை, கடினமான நியமங்களுக்குட்பட்டது. உடை, உணவு முதலிய எல்லா விஷயங்களிலும் இவர்கள் ஒழுங்கைக் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை கிடைக்கும். பொதுவாக ராணுவத்தைச் சேர்ந்த அனைவரும், தங்கள் உடலை நன்கு பாதுகாத்து வரவேண்டும். எவ்வித கடினமான காரியங்களையும் சாதித்துக்கொண்டு வரக்கூடிய, ஆபத்துகளிலிருந்து மீண்டு வரக்கூடிய உடல் வன்மையும், மனத்திண்மையும் பெற்றிருக்க வேண்டும். நோய்வாய்ப்படுவதோ, அச்சங் கொள்வதோ கேவலமாகக் கருதப்படும். அது மட்டுமல்ல, உத்தியோகத்திற்கே ஊனமுண்டாகும். ராணுவத்தினர், தங்களை, பொது மக்களினின்று தாங்கள் வேறுபட்டவர், அதிகமான ஊதியமும் சலுகைகளும் பெற்று வாழும் தனி வகுப்பினர் என்று கருதிக்கொண்டு விடக்கூடாது. பொதுமக்களின் க்ஷேமத்திற்காகவே தாங்கள் இருப்பதாக அந்தப் பொதுமக்கள் உணரும்படி நடந்துகொள்ள வேண்டும். பொதுமக்களிலே ஒருவராக இருக்கக்கூடாதென்பது வாஸ்தவம். ஆனால் பொதுமக்களுக்கென்றே இருப்பவராக நடந்து கொள்ள வேண்டும். போலீஸ்காரர்களுக்கும் இந்த நியதி பொருந்தும். ஏனென்றால் இவர்களும் ஜனங்களின் அன்றாடப் பாதுகாப்புக்கென்று இருக்கிறவர்களல்லவா? நடையிலே மிடுக்கு; பார்வையிலே கம்பீரம்; பேச்சிலே கண்டிப்பு; செயல் புரிவதிலே ஒழுங்கு; அன்றாட வாழ்க்கையிலே ஒழுக்கம்; பிறருடைய உயிரையோ, பொருளையோ, மானத்தையோ காப்பாற்றிக் கொடுப்பதிலே நேர்மை கலந்த உற்சாகம்; இவை யெல்லாம் ராணுவத்தினரிடம் அவசியமாக இருக்க வேண்டிய பண்புகள். போர் நிகழ்கிறபோது தான் தாங்கள் தேவை, சமாதானம் நிலவுகிற போது தாங்கள் தேவையில்லையென்று ராணுவத்தினர் கருதக்கூடாது. போர்க்காலத்தில் ஜனங்களெல்லாருமே விழிப்புடனிருக்கிறார்கள்; தங்களையறியாமலே ஒரு வித கட்டுப்பாட்டுக்குட் பட்டிருக்கிறார்கள். அமைதி நிலவுகின்ற காலத்தில் அப்படியில்லை. நாட்டின் பாதுகாப்பிலும் பொதுநல விஷயங்களிலும் பாரமுகமே காட்டுகிறார்கள்; தூங்கி வழிகிற மாதிரியாகவே காரியங்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், ராணுவத்தினரும் தூங்கி வழிந்தால் நாடு என்னாகும்? சூனியப் பிரதேச மாகவல்லவோ ஆகிவிடும்? சமாதான காலத்தில்தான், ராணுவத்தினர், பொதுஜனங்கள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்ப வேண்டும்; தங்களுடைய செயல்களின் மூலம் ஜனங்களை விழிப் புற்றிருக்கும்படி செய்யவேண்டும்; தங்களுடைய நடக்கையின் மூலம் ஜனங்களிடையே ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வளர்க்கவேண்டும். மற்றும், ஒரு நாட்டிற்கு எதிர்பாராத ஆபத்துக்கள் சில சமயங்களில் ஏற்படுவதுண்டு. தொத்துநோய், பஞ்சம், வெள்ளப்பெருக்கு, பூகம்பம், பெருங்கலகம் இப்படிப்பட்டவை முன்கூட்டி அறிவித்துவிட்டு வருகின்றனவா என்ன? திடீரென்று ஏற்படக்கூடிய இவைகளைச் சமாளிப் பதென்பது, அன்றாட நிருவாகத்தை நடத்தும் அரசாங்கத்திற்கு அசாத்திய மாகிவிடும். அப்பொழுது ராணுவத்தின் உதவி இன்றியமையாததாகிறது. உயிர்ச்சேதம், பொருட்சேதம் முதலியவை அதிகமாகாதபடி தடுத்து, மக்களின் மனக் கலக்கத்தைப் போக்குவது ராணுவத்தின் முக்கியமான கடமையாகிறது. இந்தக் கடமையில் இது - ராணுவம் - சிறிது கவனப் பிசகாக இருந்தால்கூட போதும்; அரசாங்கமே நிலைகுலைந்து போய்விடும். இனி ராணுவத்தை விடுத்து, அரசாங்கத்தின் அன்றாட நிருவாகம் நடைபெறுவதற்குக் காரணமாயிருக்கும் உத்தியோகஸ்தர் களிடம் வருவோம். முதலாவது, இவர்கள் தங்களைப் பொதுஜன ஊழியர்கள் என்று கருதிக்கொள்ள வேண்டும். பொதுஜனங்களுக்காக இவர்கள் இருக்கிறார் களே தவிர, இவர்களுக்காகப் பொதுஜனங்கள் இல்லை. இந்தக் கண் கொண்டுதான் இவர்கள் தங்கள் அன்றாட அலுவல் களை நோக்க வேண்டும். தாங்கள் வகிக்கும் பொறுப்பு, செலுத்தும் அதிகாரம் யாவும், பொதுஜன நன்மைக்காகவே தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன வென்பதை ஒவ்வொரு கணமும் இவர்கள் உணர்ந்திருத்தல் வேண்டும். இந்த உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இவர்கள், பொது ஜனங்களிடமிருந்து வரும் கடிதங்கள், கோரிக்கைகள், விண்ணப்பங்கள் இப்படிப் பலவற்றையும் உடனுக்குடன் பைசல் செய்யவேண்டும். இதில் சிறிது கூட காலந் தாழ்த்தலாகாது. கடிதங்கள் எழுதுவோர், கோரிக்கைகள் கிளத்துவோர், விண்ணப்பங்கள் விடுப்போர் ஆகியோர், எவ்வளவு ஆவலுடன் பதிலையோ, முடிவையோ எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஒவ்வோர் உத்தியோகஸ்தனும் தெரிந்திருக்கவேண்டும். தன் சொந்தக் கடிதங்களுக்கோ, கோரிக்கைகளுக்கோ, விண்ணப்பங்களுக்கோ, தான் எதிர்பார்க்கிற சீக்கிரத்தில் பதில் கிடைக்காவிட்டால், முடிவு தெரியா விட்டால் எவ்வளவு ஆசாபங்கம் ஏற்படுகிறது. மனக்கவலை உண்டாகிறது என்பதைக் கற்பனையிலேனும் உணர்வானாகில் உடனுக்குடன் பைசல் செய்யவேண்டிய அவசியத்தை உணர்வான். இதற்கு, தன்னைப்போல பிறரை நினைக்கவேண்டுமென்ற மனிதப் பண்பை இவன் வளர்த்துக் கொண்டிருக்கவேண்டும். அன்பு, ஈகை, இரக்கம் இப்படிப்பட்ட மேலான உணர்ச்சிகள் இவனிடத்தில் குடிகொண்டிருக்கச் செய்வதன் மூலந்தான் மேற் சொன்ன மனிதப்பண்பு வளரும். அரசாங்கத்தை, உயிரற்ற, உணர்ச்சியில்லாத ஒரு யந்திரமாக்குவதும், அல்லது ஜனங்களுடைய மனோரதங்களைப் பூர்த்திசெய்து வைக்கின்ற, அவர்களுடைய வாழ்க்கை நிம்மதியாக நடைபெறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்ற சக்திவாய்ந்த ஒரு ஸ்தாபன மாக்குவதும், உத்தியோகஸ்தர்கள் வசமே இருக்கிறது. உத்தியோகஸ் தர்கள் எந்த அளவுக்கு மனிதப்பண்பு நிறைந்தவர்களாயிருக்கிறார்களோ அந்த அளவுக்கு ஜனசமுதாயத்தின் பண்பும் இருக்கும். இதைப் பிரதியோர் உத்தியோகஸ்தனும் நினைவிலிருத்திக்கொள்ளுதல் அவசியமாகும். தங்களுடைய குறை நிறைகளைத் தெரிவிக்க வரும் ஜனங் களிடத்தில் உத்தியோகஸ்தன் இங்கிதமாகப் பேசுதல் வேண்டும். அவர்கள் எவ்வளவோ பயத்துடனும் சங்கோஜத்துடனும் இவனை அணுகு கிறார்கள். அப்படி அணுகுகிறபோது, அவர்களுடைய பயமும் சங்கோஜமும் உடனே விலகி விடும்படியாக இவன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தன்னாலியன்ற அளவு பரிகாரந் தேடிக் கொடுக்க வேண்டும். அப்படிப் பரிகாரந்தேடிக் கொடுக்கிறபோது, எவ்விதமான சுய லாபத்தையும் எதிர் பார்க்கக் கூடாது; அல்லகளால் கிடைக்கக் கூடுமென்ற கருத்துடன் அவர்களுக்குப் பரிகாரந் தேடிக் கொடுக்கக்கூடாது. அவர்களுக்குப் பரிகாரந் தேடிக் கொடுப்பதற்காகவே தான் இருப்பதாக உணர்ந்து, அவசியம் செய்தாக வேண்டிய கடமையைச் செய்வதாகக் கருதிச் செய்ய வேண்டும். இதில் தான் ஓர் உத்தியோகஸ்தனுடைய சிறப்பு இருக்கிறது. ஆனால் இப்படிச் செய்கிறபோது உத்தியோகஸ்தன், நீண்ட காலமாக அனுஷ்டானத்தில் இருந்துவரும் சட்ட திட்டங்களையோ, விதி நியதிகளையோ இம்மியளவும் புறக்கணிக்கக் கூடாது; அவைகளைக் கண்டிப்பாக அனுசரித்தே செய்யவேண்டும். சட்டதிட்டங்களையோ, விதி நியதிகளையோ, பரிகாரந்தேடி வருகிறவர்கள் அதிகமாக அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நிலைமையை அன்பான முறையில் விளக்கிச் சொல்லி, வரம்புக் குட்பட்டு எதையும் செய்து தருவதாகச் சொல்ல வேண்டும்; சொன்ன படி செய்துதர வேண்டும். சட்ட திட்டங்களையோ, விதி நியதிகளையோ புறக்கணித்து விட்டு நன்மை செய்ய முற்படுகிற உத்தியோகஸ்தனை ஜனங்கள் மதிக்கவே மாட்டார்கள்; அவர்கள் விடுகின்ற உத்தரவுகளுக்கோ, செய்கின்ற தீர்மானங்களுக்கோ மதிப்பே இராது. அவனைத்தங்கள் கையாளாக உபயோகித்துக் கொள்ளவே பார்ப்பார்கள், அவனை நாடி வருகிறவர்கள். அது மட்டுமல்ல, அவனுடைய உத்தியோகத்திற்கே ஊறு ஏற்பட்டு விடக்கூடும். அற்பத்திற்கு ஆசைப்படுகிற உத்தியோகஸ்தன், நீடித்த துன்பத்தையே அனுபவிப்பான் என்பது நிச்சயம். உத்தியோகஸ்தன், சாமானிய விஷயமென்று எதையும் அலட்சியப் படுத்தக் கூடாது. உதாரணமாக, குறித்த காலத்தில் காரியாலயம் செல்லவேண்டும். ஐந்து நிமிஷமோ, பத்து நிமிஷமோ முன் பின்ன தாகப் போனால் குடி முழுகிப் போய்விடாது என்ற மனப்பான்மையே கொள்ளக்கூடாது. இது, காலக்கிரமத்தில், சோம்பலிலும் அசிரத்தையிலும் கொண்டுபோய்விடும். இதைப் பிரதியோர் உத்தியோகஸ்தனும் தவிர்க்கவேண்டும். காரியாலயத்திற்குச் சென்றுவிட்டபிறகு, அங்குச் செய்ய வேண்டிய வேலைகளிலேயே இவன் மனம் ஈடுபட்டிருக்கவேண்டும். வேறு விஷயங்களில் மனத்தைச் செல்ல விடுதலாகாது. அப்படிச் செல்ல விடுவானாகில், எந்த ஒரு வேலையையும் இவனால் திருந்தச் செய்ய முடியாது. எதிலும் இவனுக்குத் தோல்வி தான் கிட்டும். காரியாலயத்தில், அன்றாடம் செய்ய வேண்டிய காரியங் களைச் செய்து முடித்த பின்னரே வீடு திரும்ப வேண்டும். குறித்த காலத்தில் காரியாலயத்தைவிட்டு வெளியேறுதல் வேண்டு மென்ற நியதியை இவன் நிரம்பக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கக் கூடாது. அன்றாட அலுவல்களைக் குறித்த காலத்தில் முடித்து விட்டு வீடு திரும்புவதில் யாருக்கும் ஆட்சேபமிருக்க முடியாது. காரியாலயத்திலும் இவன் - உத்தியோகஸ்தன் - தான் அலுவல் பார்க்குமிடத்தை வெகு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேஜையின் மீது காகிதங்களைப் பரப்பிவைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அவை களை, விஷயவாரியாகப் பிரித்தோ, கட்டாகக் கட்டியோ, தேவையான போது சுலபமாகப் பார்த்துக்கொள்ளக் கூடிய முறையில் ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். மேலதிகாரி ஏதேனும் ஒரு தகவல் கேட்டால், அதற்காக, இருக்கிற காகிதங்களையெல்லாம் கிளறிவிட்டுக் கொண்டிருக்கக்கூடாது. இங்ஙனமே, மைக்கூடு, எழுதுகோல் முதலியவைகளையெல்லாம் உரிய இடங்களிலே வைத்திருக்க வேண்டும். உபயோகிக்கிற மற்றச் சாமான்களையும் இடமறிந்து வைத் திருக்கவேண்டும். அப்பொழுதுதான், தேவையான போது தேட வேண்டிய அவசியம் ஏற்படாது. சிலர், சாதாரண, பேனாவிலிருந்தோ, ஊற்றுப் போனாவி லிருந்தோ, சரியாக மைவராவிட்டால், அதை கீழே உதறி உதறி மையைத் தருவிக்கிறார்கள். இதனால், தரையெல்லாம் மை தெறித்து, இடம் அசுத்தமாகிறதே யென்பதை இவர்கள் சிறிதும் கவனிப்பதில்லை. இன்னுஞ்சிலர், வேண்டாத காகிதங்களை கசக்கிச் சுருட்டி உருண்டை யாக்கிக் கண்டவிடங்களிலும் எறிகிறார்கள். இவர்களுடைய நாகரிகக் குறைவையே இது காட்டுகிறது. வேண்டப்படாத காகிதம் முதலியவை களை வாங்கிக் கொள்வதற்கு, இவர்கள் மேஜையின் கீழோ, நாற்காலியின் பக்கத்திலோ குப்பைக் கூடையொன்றிருப்பதை இவர்கள் புறக்கணிப்பார் களானால், ஒழுங்கும் தூய்மையும் இவர்களைப் புறக்கணித்து விட்டு ஓடிவிடும். இவர்களே நாளாவட்டத்தில் ஒரு குப்பைக் கூடையாகி விடுவார்களானால் அதில் ஆச்சரியமில்லை. இந்த நிலைக்கு எந்த உத்தியோகஸ்தனும் இழிந்துவிடாதிருப்பானாக! உத்தியோகஸ்தன், தான் அலுவல் பார்க்குமிடத்தைத் தூய்மை யுடையதாக வைத்துக் கொண்டிருப்பதைப் போல், தானும் தூய்மை யுடையவனாயிருக்க வேண்டும். புறத்தூய்மை, அகத் தூய்மை இரண்டையுந்தான் குறிப்பிடுகிறோம். புறத்தூய்மை எற்றுக்கு, அகத் தூய்மை இருந்தால் போதாதா என்று சிலர் கேட்கலாம். உத்தியோகஸ்தர் களெல்லாரும், உலகத் துறந்த ஞானிகளல்லர். ஞான மார்க்கத்திலே செல்கிறவர்கள், உத்தியோகத்திலே ஈடுபட்டிருக்க மாட்டார்களல்லவா? சிலர் நினைக்கிறார்கள், தினந்தோறும் செல்கின்ற காரியாலயந் தானே, எந்த மாதிரியான உடையணிந்து கொண்டு சென்றாலென்ன வென்று. இப்படி நினைப்பது தவறு. அணியும் உடையிலே ஒழுங்கு இருக்கவேண்டும்; அழகு இருக்க வேண்டும்; எளிமை இருக்கவேண்டும். இம்மூன்றுமில்லாத வகையில் உடையணிந்து செல்கிற உத்தியோகஸ் தன், தன் அதிகாரத்திற் குட்பட்ட சிப்பந்திகளின் சாதாரண மரியாதையைக் கூட பெற மாட்டான்: ஏன்? அவர்களால் அவமரியாதையும் செய்யப் படுவான். இதற்கு எந்த ஓர் உத்தியோகஸ்தனும் இடங் கொடுத்தலாகாது. உத்தியோகஸ்தன், தனது நாட்டில் தயாரிக்கப் படுகிற உடை களையே அணிதல் வேண்டும்; சுதேசப் பொருள்களையே உபயோகிக்க வேண்டும். அந்தஸ்து, கௌரவம் என்று சொல்லிக் கொண்டு, பிறநாட்டுப் பொருள்கள்மீது மோகங் கொள்ளலாகாது. அதிலும், தாய்நாட்டு அரசாங்கத்தின் பிரதிநிதி களாக அயல்நாடுகளுக்குச் சென்று அலுவல் பார்க்கிறவர்கள், தங்கள் சொந்த நாட்டுப் பொருள்களையே உபயோகிக்க வேண்டும். அப்பொழுது தான் அயல்நாட்டார் இவர்களிடம் மதிப்பு வைப்பர். தாய்நாட்டின் மீது பற்றில்லாதவன், தாய்நாட்டு அரசாங்கத்தின் உண்மையான ஊழியனாயிருக்க முடியாது. அரசாங்க ஸ்தாபனங்களிலோ தனிப்பட்டவர் தாபனங் களிலோ உத்தியோகம் பார்க்கிறவர்கள், வருஷத்தில் இத்தனை நாட்கள் விடுமுறை பெற உரிமையுடையவர்கள் என்று நியதியுண்டல்லவா? இந்த நியதி எல்லா நாடுகளிலும் தொன்று தொட்டு உண்டு. உத்தியோகம் பார்க்கிறவர்களுடைய சௌகரியத் திற்காகவே இந்த நியதி ஏற்பட்டது. ஆனால் உத்தியோகஸ்தர்கள், விடுமுறைபெறும் இந்த உரிமையை, அவசியமில்லாதபோழ்துகூட அனுபவிக்க வேண்டுமென்று கருதலாகாது. தாங்கள் பார்க்க வேண்டிய வேலைகள் எவ்வளவு அதிகமாக இருந்தபோதிலும் அவைகளையெல்லாம் அப்படி அப்படியே விட்டு விட்டு, வருஷம் முடியப்போகிறது; விடுமுறை நாட்களை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்; விடுமுறை பெற்று வீட்டில் சோம்பலுடனாவது இருப்போம் என்ற தீர்மானத்துடன் விடுமுறை பெறுகிறவர்கள், தாங்கள் அலுவல் பார்க்கும் ஸ்தாபனத்தின் உண்மையான விசுவாசிகளாயிருக்க முடியாது. உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டிய அவசியமிருந்தாலொழிய, அவசியமான சொந்த அலுவல்களைக் கவனிக்கவேண்டியிருந் தாலொழிய, உத்தியோகஸ்தன் விடுமுறை பெறுதலைப்பற்றி நினைக்கவே கூடாது. உத்தியோகஸ்தர்களிற் சிலர், அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டியவர்களாயிருப்பார்கள். அப்படிச் செல்கிறபோது இவர்களுக்குப் பிரயாணச் செலவும் படிச்செலவும் கொடுக்கப் படுகின்றன. இவற்றை இவர்கள் உரிமையோடு உபயோகித்துக் கொள்ள வேண்டும். சிலர், ரெயிலில் மேல் வகுப்புப் பிரயாணத் திற்குரியவர்களாயிருந்தும், கீழ் வகுப்பில் பிரயாணஞ் செய்துவிட்டு மேல்வகுப்புப் பிரயாணத்திற்காகும் தொகையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களுடைய அற்பத் தனத்தையே, இது காட்டுகிறது. இப்படிப் பிரயாணச் செலவில் மிச்சம் பிடிப்பது, தாங்கள் வகிக்கும் பதவிக்கு இழுக்குத் தேடித் தருவதாகு மென்பதை இவர்கள் சிறிதுகூட உணர்வதில்லை. மற்றுஞ்சிலர், அன்றாடப் படிச்செலவை அப்படியே மிச்சப்படுத்திக்கொண்டு, பிறருடைய செலவிலே காலங் கடத்திவிடுகிறார்கள். இதுவும் மிகக் கேவலம். பிறரைத் துன்புறுத்தி வாழ்தலேயாகுமிது. வெளியூர்ப் பிரயாணத் தில், ஒரு மாதத்தின் பெரும்பகுதியைக் கழிக்க வேண்டிய உத்தியோகஸ்தர்கள், கூடிய மட்டில், செல்லும் இடங் களிலுள்ளவர் களுக்குத் தொந்திரவு கொடாமல் நடந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு அனுகூலஞ் செய்வதற்காக இவர்கள் செல்கிறார்களே தவிர, அவர் களுக்குத் தொந்திரவு கொடுப்பதற்காகவல்ல இந்த உத்தியோகஸ்தர்கள் ஏன் வந்தார்களோ என்று நினைக்கும்படி இவர்கள் நடந்து கொள்ளக் கூடாது; இந்த மட்டிலும் வந்தார்களே என்று மகிழ்ந்து சொல்லும் படியாக நடந்துகொள்ள வேண்டும். மேல் வரும்படி என்ற ஒரு சொற்றொடர், உத்தியோகஸ்தர் களிடையே சர்வ சாதாரணமாக உலவி வருவதைப் பலரும் அறிவர். இந்தச் சொற்றொடர், சிரஞ்சீவியாக இருந்து வருகிறதென்று சொல்ல வேண்டும். ஏனென்றால், உரிய வருமானத்தைக் காட்டிலும் அதிகமாகச் சம்பாதிக்க முயல்கிறவர்கள், இன்னின்ன தண்டனைக் குரியவர்களென்று முற்காலத்து நீதி நூல்கள் பலவும் முழக்கம் செய்திருக்கின்றன. இதனால் உரியதைக் காட்டிலும் அதிகமாகப் பெறவேண்டுமென்ற ஆசை தொன்று தொட்டு இருந்து வருகிறதென்பது நன்கு புலனாகிறது. இந்த ஆசை உத்தியோகஸ்தர்களுக்கு இருக்கக் கூடாதென்பதற்காக அவ்வப்பொழுது அரசாங்கங்கள் என்னென்னவோ நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டுதான் வந்திருக்கின்றன. ஆயினும் இந்த ஆசை அறவே ஒழிந்த பாடில்லை. ஒழியாதோ என்று தோன்றும் படியாகக்கூட இஃது ஊன்றிக் கொண்டிருக் கிறது. இதனை ஒழிக்க உத்தியோகஸ்தர்கள் தான் முன்வரவேண்டும். ஜனங்களிற் சிலர், சீக்கிரத்திலும் சுலபமாகவும் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, மேல்வரும்படி என்ற தகரப் பொம்மையை உத்தியோகஸ்தர்கள் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். உத்தியோகஸ்தர்களும் இந்தப் போலிப் பாவையைக் கண்டு மயங்கி விடுகிறார்கள்; அதற்கு இரையாகி உத்தியோகத்தை இழக்கிறவர் சிலர்; உத்தியோக காலம் முடிந்து, நிம்மதியான வாழ்க்கையை நடத்த முடியாமல் அல்லற்படுகின்றவர் பலர். நியாயமற்ற முறையில் சம்பாதிக்கிறவர்கள், நியாயமற்ற முறையில் செலவழிக் கின்ற அவசியத்திற்குட்படுவதோடு, உடல்நோய், குடும்பக் கவலை இப்படிப் பல சங்கடங்களுக்கும் ஆளாகிறார்களென்பது கண்கூடு. ஆதலின் உத்தியோகஸ்தனே! மேல் வரும்படியில் நாட்டங் கொள்ளாதே. உரியதோடு திருப்தியடை. மற்றும் அன்பனே! உன் சொந்த வாழ்க்கையைப் பொறுத்த மட்டில் கச்சிதமாயிரு. வருமானத்திற்குத் தக்கபடி செலவு செய். வரவுக்கு மிஞ்சி செலவு செய்தாயானால், உன்னைப் பற்றி எல்லாரும் சந்தேகிப்பர். உன் நேர்மையில் எல்லாருக்கும் அவநம்பிக்கை யுண்டாகும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் கடன் வாங்காதே. மாதச்சம்பளம் அல்லது வாரச் சம்பளம் பெறுகிறவர்களுக்கு லேவாதேவிக்காரர்கள் சரளமாகக் கடன் கொடுக்க முன் வருவார்கள். ஏனென்றால், கொடுத்த பணம் நிச்சயமாகத் திரும்பி வருமென்பது அவர்களுக்குத் தெரியுமல்லவா? ஆனால் உத்தியோகஸ்தனே! லேவாதேவிக்காரர்களிடம் சிக்கிக் கொள்ளாதே. ஒரு தரம் சிக்கிக்கொண்டு விட்டாயானால், பிறகு அந்தச் சிக்கல் உன்னை லேசிலே விடாது; அதிலிருந்து விடுபடுதல் அசாத்திய மாகிவிடும். எச்சரிக்கை! வரவுக்கு மிஞ்சி செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்குட் படுவதற்கு அடிப்படையான காரணம், வாழ்க்கையில் ஆடம்பரத்தை மேற் கொள்வதுதான். உன்னுடைய உத்தியோக அந்தஸ்து, நீ உடுத்தும் உடை யினாலும், உபயோகிக்கும் பொருள்களினாலும் வசிக்கும் வீட்டினாலும் கணிக்கப்படுவதில்லை. எவ்வளவு திறமையுடனும் பொறுப்புடனும் உன் உத்தியோகத்தை நிருவாகம் செய்து வருகிறாயென்பதைக் கொண்டுதான் உன் அந்தஸ்து கணிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல; உன்னுடைய உத்தியோகத்தினால் உனக்கு உண்டாகிற மதிப்பு சாதாரணமானது; இருபத்தைந்து அல்லது முப்பது வருஷ ஆயுளையுடையது. உத்தியோகத்திலிருந்து கொண்டு நீ செய்த சேவை, உன் சேவையினால் ஜனங்கள் அடைந்த நன்மை, இவைகளைக் கொண்டு உனக்கேற்படுகிற மதிப்பு இருக்கிறதே அது தான் சாசுவதமானது; புகழுடம்பில் நீ நீடித்து வாழ்வதற்கான யோக்கியதையை அளிப்பது. ஆதலின் சகோதரா! ஆடம்பரமற்ற, தூய்மையான, நேரிய வாழ்க்கையை மேற்கொள். உத்தியோக காலத்தின் ஆரம்பத்தில், அதிலும் வாலிப தசையில் இந்த மாதிரியான வாழ்க்கையை மேற்கொள்வது சிறிது கடினமாயிருக்கலாம். ஏதோ ஒரு பயனற்ற பரிசோதனையில் ஈடுபட்டிருப்பது போன்ற உணர்ச்சியும் உனக்கு உண்டாகலாம். ஆயினும் நீ இவை களை எளிதிலே சமாளித்துவிடலாம். சிறிது காலத்திற்குப் பிறகு இதுவே உன் சுபாவமாகிவிடும். ஆடம்பர வாழ்க்கையில் உன்னை யறியாமலே உனக்கு ஒருவித வெறுப்பு கையில் உண்டாகிவிடும். எளிய, தூய, நேரிய வாழ்க்கை, உனக்குத் தனி மதிப்பைக் கொடுத்து, சமுதாய அந்தஸ்தில் உன்னைத் தூக்கியும் விடும். மேலே சொல்லப்பெற்ற யாவும், அரசாங்க உத்தியோகத்திலி ருக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட ஸ்தாபனங்களில் அலுவல் பார்க்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் பொருந்தும். உத்தியோகஸ்தனாயிருப்பதில் விளையக்கூடிய சாதக பாதகங்கள் வருமாறு:- சாதகங்கள்:- 1. மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் இவ்வளவு பணம் கிடைக்கும் என்ற நிச்சயமுண்டு. நிரந்த வருமானமிருப்பதனால் ஏற்படக்கூடிய மனநிம்மதி, வாழ்நாளை அதிகப்படுத்திக் கொடுக் கிறதல்லவா? 2. தினந்தோறும் குறித்த நேரப்படி வேலை செய்து விட்டு வரலாம். குடும்ப சுகத்தை அனுபவிப்பதற்கான அவகாசம் நிறையக் கிடைக்கும். 3. வருஷத்தில் இவ்வளவு காலம் ஓய்வு பெறலாமென்ற நிச்சய முண்டு. இந்த ஓய்வு பெற்ற காலத்தில், உடல் நலத்தைப் பேணவோ, குடும்ப விவகாரங்களைக் கவனிக்கவோ அதிக வாய்ப்பு உண்டு. 4. உத்தியோகத்திலிருந்து விலகிய பிறகு, தள்ளாத காலத்தில் உபகாரச் சம்பளமாக ஒரு தொகை ஆயுள் பரியந்தம் கிடைத்துக் கொண்டிருக்கும். பாதகங்கள்:- 1. சுயமாகச் சிந்திப்பதற்கோ, சுய முயற்சியினால் ஒரு காரியத்தைச் சாதிப்பதற்கோ வாய்ப்பு கிடைப்பது அரிது. 2. கற்பனா சக்தியுள்ள ஒருவன் உத்தியோகத்தில் அமர்ந்து சிறிது காலங் கழித்து அவனைச் சுண்டிப் பார்ப்பீர் களானால் அவனிடத்திலேயிருந்த அந்தக் கற்பனாசக்தி ஒளி குன்றி, வலுவிழந்து சோர்ந்து கிடக்கும். இதை நன்கு காணலாம். 3. தினந்தோறும் ஒரே மாதிரியான வேலையையே செய்ய வேண்டியிருக்கும்; இன்னும், செய்த வேலையையே திரும்பத் திரும்பச் செய்யவேண்டியிருக்கும். இதனால் செய்கிற வேலையில் உற்சாகமே இராது; காலக் கிரமத்தில் அசிரத்தை ஏற்பட்டுவிடு மானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 4. உலக அனுபவம் பெற அதிகமான சந்தர்ப்பங்கள் கிடைக்க மாட்டா. நான்குபேர் மத்தியில் சரளமாகப் பழகவோ , சமயோசிதம் போல் நடக்கவோ தெரியாத நிலையில் பெரும்பாலோரான உத்தியோகஸ்தர்கள் இருப்பதைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். ஆனால் இஃது இவர்களுடைய குற்றமல்ல. இவர்களுக்கேற்பட்ட சூழ்நிலை அப்படி. 8. விவசாயி விவசாயி ஐயா! உலகினுக்கோர் அச்சாணியாவாய் நீ! உழு தொழிலுக்கு உறுதுணையாய் நிற்பாய் நீ! வையகம் வாழ வாழ்வாய் நீ! வணக்கம் உனக்கு. உனக்கு, நிலமே தாய்; வானமே தந்தை; கால்நடைகளே உற்ற சகோதரர்கள்; செடி கொடிகளே உறவினர்கள். குறையாத ஏரியும், வற்றாத ஆறும், பொங்கி வழியும் கேணியும், தெளிந்த நீரைத் தாங்கிக் கொண்டு நெளிந்து செல்லும் நீண்ட வாய்க்காலும், உனது உள்ளத்திலே உவகையூட்டி, முகத்திலே மலர்ச்சி தந்து, வாழ்க்கையிலே நம்பிக்கையை அளிக்கின்றன. உனக்கு ஒரு நாளும் குறைவில்லை. இயற்கை யன்னையின் அருள் நிழலிலே நீ இருக்கிற வரையில், பஞ்சமும் பிணியும் உன்னை அணுகா. வாழி நீ! நாட்டு மகனான உன்னை, நாகரிகத்திற்குப் புறத்தி என்று கருதிப் பேசுகின்றார் நகரமாந்தர். என்ன பேதமை இது! வெளிப்பகட்டு ஏதும் உனக்கு இல்லையானாலும், அஃதுனக்குத் தேவையில்லை யானாலும், உனது பரந்த மனம், கனிந்த உள்ளம் நகர மாந்தருக்கு உண்டோ? நாகரிக மென்பது என்ன? வேண்டாத உடைகளைச் சுமந்து கொண்டு உலவுவதும், தீண்டுதற்கும் கூசும் பொருள்களை வயிற்றுக்குள் திணிப்பதும், புழக்கத் திற்கு மிஞ்சின பரப்புடைய மாளிகையில் வசிப்பதும், அந்த மாளிகையில் உபயோகமோ அழகோ இல்லாத பொருள்களைக் குவித்து வைத்துக் காண்பதும் நாகரிகமா? இல்லை; நகரவாசிகளே! நிச்சயமாக இல்லை. எளிமையும் இனிமையும் கலந்த தோற்றத்திலே, ஒழுங்கும், ஒழுக்கமும் நிறைந்த வாழ்க்கையிலே நாகரிகம் காட்சியளிக்கிறது. இதை ஒரு கிராமவாசி, தனது அறிவினால் ஆராய்ச்சி செய்து காட்ட முடியா விட்டாலும், தனது அன்றாட வாழ்க்கையினால் நிரூபித்துக் காட்டுகிறான். நகரத்திலே வசிக்கிறவனுக்குத்தான் இதைக் காணக் கண்ணில்லை; காண வேண்டுமென்ற ஆசையுமில்லை. நான், எனது, எனக்கு என்ற முக்கோணத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறா னல்லவா? உண்மை எங்ஙனம் புலனாகும்? உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நிலத்திலிருந்து தான் நாகரிகம் பிறந்தது. மனிதன், நிலத்திலிருந்து எப்பொழுது பொருள்களை உற்பத்தி செய்யத் தொடங்கினானோ அப்பொழுதே நாகரிகம் கண் விழித்துப் பார்க்கத் தொடங்கியது என்று சொல்ல வேண்டும். நாகரிக மென்னும் கட்டடம் சமைவதற்கு உழுபடையும் அதன் துணைக் கருவி களுமே தூண்களாயமைந்தன என்று கூறிகிறான் ஓர் அறிஞன். நாகரிகத் திற்கும் செல்வத்திற்கும் முதல் வித்திட்டவர்கள் விவசாயிகளே என்கிறான் இன்னோர் அறிஞன். எனவே, விவசாயியை, நாகரிகத்தின் தந்தை என்று சொல்ல வேண்டும். நாம் உண்ணுகின்ற உணவும், உடுக்கின்ற உடையும், உபயோகிக் கின்ற பொருள்களும் எல்லாம் எங்கிருந்து பிறக் கின்றன? பூமாதேவியிட மிருந்து, இதனாலேயே பூமியைத் தாயாகப் போற்றிப் பேசி வந்திருக் கின்றனர் எல்லா நாட்டினரும், வெகு காலமாக. நிலமென்னு நல்லாள் என்கிறது வள்ளுவன் வாக்கு. இந்த நல்லாளுடன் நெருங்கிய உறவு பூண்டுள்ளவன் யார்? விவசாயி. இதனால் இவனுக்குத் தாய்மைக் குணங்கள் பலவும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன. பச்சிளம் பயிர்களைக் கண்டு இவன் முகத்தில் புன்முறுவல் பூக்கிறது; அந்தப் பயிர்கள் நெடி தோங்கி வளர, பகலெல்லாம் பாடுபடுகிறான்; அவசியமேற்பட்டால் இரவெல்லாம் கண் விழித்துக்கொண்டு அவற்றின் அருகேயே இருந்து போஷிக்கிறான்; அவை பக்குவமடைந்து நெற்கதிர்களைத் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டு தலைசாய்ந்து நிற்கிற போது ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாயெனத் தோற்றமளிக்கிறான்; பாடுபட்டதன் பயனை நெற்குவியலாகப் பார்க்கிறபோது மகிழ்ச்சியால் பொங்கிப் போகிறான்; எங்கும் நிறைவைக் காண்கிறான். அப்பொழுதும், அந்த நிறைவிலும் நான், எனது, எனக்கு என்ற முக்கூட்டில் சிக்கிக் கொள்ளாமல், தனக்கு உறுதுணையாயிருந்த தெய்வங்களையும் கால்நடைகளையும் பூசிக்கிறான்; தான் கண்ட பயனை எல்லாரும் அனுபவிக்கும்படி செய்கிறான். மாரி பொய்ப்பினும், மண்வளங் குன்றினும், இவன் நம்பிக்கையை இழப்பதில்லை; முயற்சியைக் கைவிடுவதில்லை. இவனல்லவோ நாகரிக புருஷன்? இவனை ஏசுவதும் அலட்சியப்படுத்திப் பேசுவதுந்தான் அநாகரிகம். எவனொருவன் விவசாயத் தொழிலைக் கீழ்நோக்குடன் பார்க் கிறானோ அவன் மனிதன் என்ற பெயருக்கே உரியனல்லன் என்கிறான் ஒரு மேலை நாட்டுப் பண்டிதன். ஒரு தேசத்தில் செல்வ அபிவிருத்தி ஏற்பட வேண்டுமானால், மூன்றே வழிகள் உள்ளன என்று ஓர் ஆசிரியன் கூறிப் பின்வருமாறு விவரிக்கிறான்:- ஒன்று, யுத்தத்தின் மூலமாக. யுத்தத்தில், வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளிலிருந்து பொருள்களைத் திரட்டிக் கொண்டு வருவது. ரோம ஏகாதிபத்தியம் செல்வச் செழுமையுடைய தாயிருந்தது இப்படித்தான். ஆனால் இது கொள்ளை. மற்றொன்று, வியாபாரத்தின் மூலமாக. பொதுவாக இதனை ஒரு வித ஏமாற்றம், அதாவது பிறரை ஏமாற்றிப் பொருள் சம்பாதிப்பது என்றே சொல்லவேண்டும். இன்னொன்று, அதாவது மூன்றாவது வழி, விவசாயத்தின் மூலமாக. இதுதான் நியாயமான வழி. ஒரு விவசாயி பூமியில் ஒரு விதையை ஊன்றினால் பத்து மடங்கு பலனை அடைகிறான். இஃதொரு ஜாலவித்தை போலவே தோன்றுகிறது. ஆனால் ஆண்டவன் இந்த வித்தையை அவனுக்கனுகூலமாகவே செய்து காட்டுகிறான். ஏனென்றால், அவனுடைய கள்ளங் கபடமற்ற வாழ்க்கைக்கும், ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்ட உழைப்புக்கும் பரிசு வேண்டாமா? அதை உள்ளமுவந்து கொடுக் கிறான் ஆண்டவன். விவசாயிகளை, ஆண்டவனின் முழு அன்புக்கும் உரியரா யிருக்கும் நன்மக்கள் என்று அழைப்பதுண்டு. இதனால்தான், இவர்கள் ஆண்டவனிடத்திலே வைத்திருக்கும் நம்பிக்கையின் விளைவாகத் தன்னம்பிக்கை குன்றாதவர்களாயிருக்கிறார்கள்; விவசாயத் தொழில், புனிதமான தொழில் என்று காலம் நெடுகிலும் போற்றப்பட்டு வந்திருக்கிறது. இந்தத் தொழிலில் வஞ்சனைக்கோ, தந்திரங்களுக்கோ, பிற தீய சக்திகளுக்கோ இடமில்லை. உலகத்திலேயே மிகவும் பரிசுத்தமான தொழில் இஃதொன்று தான். மனிதன் சீர்பெற வேண்டு மானால், நாடு சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமானால், உழவுக்கு உரிய மதிப்புக் கொடுக்க வேண்டும்; அது நன்கு நடைபெறுவதற்கான ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப் பட வேண்டும். சீரைத் தேடின் ஏரைத் தேடு என்பது தமிழ் மூதாட்டியின் வாக்கு. உழவுத் தொழிலுக்கு வேளாண்மை என்ற ஒரு பெயருண்டு. இதற்கு ஈகை, உபகாரம் என்று பொருள்கள் கூறுவர் அறிஞர். எவ்வளவு பொருத்தமாயிருக்கின்றன இந்தப் பொருள்கள்! விவசாயிகள், தங்கள் கையாலேயே உழுது உண்பதை இயல்பாக வுடையவர்கள். இதனால் இவர்களுக்கு மற்றவர்களுடைய கஷ்ட நஷ்டங்களை உணரும் சக்தி சுபாவத்திலேயே அமைந்திருக்கிறது. இந்தச் சுபாவத்தின் விளைவாக, பிறர் வருத்தந்தீர, தங்களிடமுள்ள எதையும் அளிப்பர்; இல்லையென்ற சொல் இவர்கள் வாயிலிருந்து வெளிவர மிகவும் கூசும். இங்ஙனம் இவர்கள் பிறருக்குக் கொடுப்பதை அறிவரே தவிர, பிறரிடமிருந்து எதையும் பெறுவதை அறியார். இவர்கள் கரங்கள், கொடுக்கத்தான் முன் வருமே தவிர, வாங்குவதற்கு முன் வரா. இதனை வள்ளுவன் வகையாகச் சுட்டிக் காட்டுகிறான்:- இரவார், இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது, கைசெய்தூண் மாலையவர். எந்த நாட்டில் நேர்மையும் தூய்மையும் நிறைந்த உழவுத் தொழில் பெரும்பற்றாக நடைபெறுகிறதோ, எந்த நாட்டில் ஈகைக் குணம் மிகுந்திருக்கிறதோ, அந்த நாடு நீடித்து வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த நாட்டின் நாகரிகத்தைப் பிறர் எவ்வளவு கறைப்படுத்திக் காண விழைந்தாலும், அதன் அடிப்படையை யாரும் அழித்துவிட முடியாது. உலகத்திலேயே சிரஞ்சீவி நாடுகளாயுள்ளவை இரண்டுதான். ஒன்று, நமது தாய்நாடாகிய இந்தியா; மற்றொன்று, சீனா. இவ்விரண்டு நாடுகளின் மீது எத்தனை எத்தனை அரசியல் அலைகள் வந்துமோதின? படையெடுத்து வந்தவரின் எண்ணிக்கையை எண்ணத்தான் முடியுமோ? பஞ்சம், பிணி, வெள்ளப்பாழ் இவைகளுக்குக் கணக்கேது? இருந்தாலும் இவை அழியவில்லை; இவற்றின் உற்பத்தி சக்தி - பொருளுற்பத்தி, மக்களுற்பத்தி இரண்டையுந்தான் சொல்கிறோம் - குன்றவில்லை. காரணம், இவ்விரண்டும் விவசாய நாடுகளாயிருப்பதுதான். அப்படியிருக் கிறவரை இவைகளுக்கு அழிவே கிடையாது. ஆதிகாலத்தில், பழம்பெருநாடுகள் பலவற்றிலும் விவசாயமே ஜனங்களின் முக்கிய தொழிலாயிருந்து வந்திருக்கிறது; இந்த தொழிலுக்கு ஒரு மதிப்பும் இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும், உழுதொழிலைக் காப்பாற்றிக் கொடுக்கும் ஒரு தெய்வம் உண்டென நம்பப்பட்டும், வழிபாடு செய்யப்பட்டும் வந்திருக்கிறது. முதன்முதலில் மனிதன், தன் உணவுக்கு வேண்டிய தானிய வகைகள், காய்கறி வகைகள் இவைகளை மட்டுமே உற்பத்தி செய்து வந்தான். அதிலும், இவன் வசிக்குமிடத்தைச் சுற்றியிருந்த ஒரு சிறு நிலப்பரப்பில் மட்டுமே இந்த உற்பத்தி நடைபெற்று வந்தது. தனக்கும் தன் குடும்பத்திற்கும் என்ன தேவையோ, எவ்வளவு தேவையோ, அதையே அவ்வளவே உற்பத்தி செய்து திருப்தி யடைந்தான். இந்த உற்பத்திக்கு இவன் உபயோகித்த கருவிகள் ஒரு சிலவே; மிகச் சாதாரணமானவையே. நாளாவட்டத்தில் மனிதனுடைய ஆசை அதிகரித்தது; தேவைகளும் அதிகமாயின. அதிகமாயின என்று சொல்வதைக் காட்டிலும் இவன் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டான் என்று சொல்வது பொருத்தமா யிருக்கும். இந்தத் தேவைகளுக்குத் தகுந்தாற்போல் இவன் உற்பத்தி ஸ்தலத்தை விஸ்தரித்துக் கொண்டான்; இதற்கு ஒரு வரம்பும் அமைத்துக் கொண்டான். தனிச் சொத்துரிமையென்பது உதயமா யிற்று. இஃதெப்படி வளர்ந்து, விரிந்து, பலவித பொருளாதாரச் சிக்கல்களுக்கு இடம் தந்ததென்பதைப்பற்றிச் சொல்லிக்கொண்டு போதல், இங்கு எடுத்துக்கொண்ட விஷயத்திற்குப் புறம்பானதா யிருக்கும். எனவே இதனோடு இங்கு நிறுத்திக்கொள்கிறோம். மனிதன், தன்னிருப்பிடத்திற்குச் சுற்றியுள்ள ஒரு சிறு நிலப் பரப்பில், தன் உணவுக்குத் தேவையான தானிய வகைகளையும் கறிகாய் வகைகளையும் பயிர்செய்து கொண்டானே அதுதான் முதன்முதலாக ஏற்பட்டதோட்டம். ஆண்டவன் படைப்பில் முதலிடம் பெற்றது தோட்டமே என்பது முற்காலத்து மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையா யிருந்தது. இதனால் இவர்கள், தங்கள் வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தை மிக பக்தி சிரத்தையோடு காப்பாற்றி நல்ல பலன் கண்டு வந்தனர். இவர்களில் முதன்மையானவர்கள் இந்தியர்களே என்று ஆராய்ச்சியாளர் முடிவு செய்திருக்கின்றனர். நமது நாட்டுப் புராதன இலக்கியங்களில், தோட்டங்களைப் பற்றிய அழகான வருணனைகள் நிறையக் காணப்படுகின்றன. இந்தத் தோட்டங்களில், காய்கறி வகைகள் மட்டுமல்ல, அழகும் மணமும் செறிந்த மலர் வகைகளும், பசுமை யான செடி கொடிகளும் நிறைந்திருந்தன. ஒவ்வொரு கோயிலுக்கும் நந்தனவனம் உண்டென்பதை நாம் சொல்லத் தேவையில்லை. தோட்டத்தின் காய்கறி வகைகள் விளையும் பகுதி, மனிதனுடைய லௌகிக வாழ்க்கைக்கும், புஷ்பங்களும் பத்திரங்களும் உண்டாகும் பகுதி அவனுடைய பார மார்த்திக வாழ்க்கைக்கும் துணையாய் நின்றன. இவ்விரு வித வாழ்க்கைகளையும் சமன் செய்துகொண்டு நிதானமான போக்கில் சென்றான். நாகரிகம் என்பதற்கும் பண்பாடு என்பதற்கும் இப்பொழுது என்னென்னவோ பொருள்கள் சொல்லுகிறார்களே இவை பலவற்றின் உறைவிடமாயிருந்தான் அவன். அவனைத்தான் வாழ்ந்தவன் என்று சொல்லவேண்டும். இப்பொழுதும் கிராமங்களிலே வசிக்கிறவர்கள், இந்த அர்த்தத்தில் வாழ்கிறவர்களல்லவா? இதே அர்த்தத்தில் நகரங்களில் வசிக்கிறவர்களைச் சொல்ல முடியுமா? உயிர் வைத்துக்கொண்டு இருக்கிறவர்கள் அல்லது உயிரோடு உலவுகின்ற மனிதர்கள் என்று தான் சொல்லவேண்டும். இப்படிச் சொல்லுவதற்காக நகரப் பெருமக்கள் எம்மைக் கோபிக்காதிருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இயற்கையோடு உறவு கொள்ளத் தெரியாத, அதன் அழகையோ இனிமையையோ கற்பனை செய்து பார்க்கவும் தெரியாத இவர்களை நாகரிகர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நகரத்திலே வசிக்கின்ற, காரணத்தினால் இவர்களை நாகரிகர் என்று வேண்டுமானால் சொல்லலாம். உண்மையில், நகர்ப்புறத்தே வசிக்கின்ற நாட்டு மக்கள் தான் நாகரிகர்கள். நகரத்திலிருந்துதான் நாகரிகம் பிறந்த தென்று கூறும் மொழி ஆராய்ச்சியாளர்கள் எம்மை மன்னிப்பார்களாக. இது நிற்க. கிறிஸ்து சகத்திற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முந்தி, எகிப்து நாட்டில் விவசாயத்தொழில் மிகத் திறம்பட நடைபெற்று வந்தது. பூமியி லிருந்து பலன் காண எகிப்தியர்கள் அதிக பாடுபட்டதாகத் தெரியவில்லை. காரணம், மண் மிகவும் வளமுடையதாயிருந்தது. ஹெரோடோட்டஸ் என்ற கிரேக்க சரித்திராசிரியன் கூறுகிறான்:- உலகத்து மற்ற ஜனங்களைக் காட்டிலும் எகிப்தியர்கள், குறைந்த உழைப்பில் பூமியிலிருந்து பலன் பெறுகிறார்கள். எப்படியென்றால், பிறநாட்டு மக்கள், பயிரிடுவதற்கு முன்னர், கலப்பை, மண்வெட்டி முதலிய கருவிகளால் பூமியைச் சீர்படுத்துகிறார்களல்லவா அந்த அவசியம் இவர்களுக்கு – எகிப்தியர் களுக்கு - இல்லை. எகிப்தில் மண் வளம் பெற்றிருந்ததற்கு முக்கிய காரணம் நைல் நதி. இதன் இருமருங்கிலுந்தான் ஜனங்கள் பெரும்பாலோராக வசித்தார்கள். எந்த நாட்டிலுமே ஆதிகாலத்தில் ஜனங்கள் நதிக்கரைகளாகப் பார்த்துத் தான் குடியேறி சமுதாய வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்கள். புராதன நாகரிகங்கள் பலவும் ஆற்றோரங்களில் தான் பிறந்திருக் கின்றனவென்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிந்து கூறியிருக்கிறார்கள். இந்தக் கூற்றை அனுசரித்து, எகிப்திய நாகரிகம் நைல் நதி ஓரத்திலே பிறந்ததென்று சொன்னால் அஃது உண்மையைக் கூறியதேயாகும். நைல் நதியில், சிறிது காலம் ஜலம் நிறைந்து செல்லும்; சிறிது காலம் குறைந்து போகும். குறைந்து போகுங் காலத்தில், இரு பக்கத்துப் படுகைகளிலும் வண்டல் படிந்திருக்கும். இதில் விதைகளைத் தெளித்து விடுவார்கள். இவை வளர்ந்து பலன் கொடுக்குந் தறுவாயிலிருக்கிற பொழுது மாடுகளைக்கொண்டு மிதிக்கச் செய்து தானியங்களை மட்டும் எடுத்துக்கொண்டு விடுவார்கள். இவர்கள் எடுத்து முடிவதற்கும் ஆற்றில் வெள்ளம் திரும்ப நிறைந்து வருவதற்கும் தோதாயிருக்கும். அடுத்த மகசூலுக்கும் பூமி இதே மாதிரி தயாராகிவிடும். இதனால் இவர்களுக்கு நிலத்தில் அதிகம் பாடுபடவேண்டிய அவசியமில்லாம லிருந்தது. குறைந்த உழைப்பில் அதிக பலன் நுகரும் பேறு பெற்றிருந்தார்கள் எகிப்தியர்கள். எகிப்தில், உழவுத்தொழில் சம்பந்தமாக வழங்கப்பட்டு வந்த சில பழமொழிகளைக் கேளுங்கள்:- விவசாயி, எப்பொழுதுமே (தானியங்களை) விற்கிறவனா யிருக்கவேண்டுமே தவிர வாங்குகிறவனாயிருக்கக் கூடாது. * * * கிராமத்தில் ஒருநிலத்தை வாங்கிக்கொண்டாயானால், நகரத்திலுள்ள உன் வீட்டை விற்றுவிடு. * * * இரண்டுநான் தாமதித்து விதைப்பதைக் காட்டிலும் இரண்டுநாள் முன்னதாகவே விதைப்பது நல்லது. * * * குறைவாக விதை; அதிகமாக உழு. * * * குறைந்த விஸ்தீரணமுள்ள நிலத்தில் நன்றாக உழுதலே நல்லது. * * * விவசாயத்தில், பிறர் செய்த மாதிரியே நாம் செய்வதைக் காட்டிலும் நாமே புதிதாகச் சில பரிசோதனைகளையாவது செய்து பார்த்தலே விசேஷம். * * * ஆடு, மாடுகள் கிழமாய்ப் போனால், விவசாயி, அவற்றை உடனே விற்றுவிட வேண்டும். * * * மண்ணைப் புரட்டிப் போட்டு புரட்டிப் போட்டு பூமிக்குக் கோபமுண்டு பண்ணு. மெஸொபொட்டேமியாவில், யூப்ரெட்டீஸ் நதியும், டைக்ரிஸ் நதியும் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாயிருந்தன. இந்தப் பிரதேசத்தில், எத்தனையோ சாம்ராஜ்யங்களும், எத்தனையோ விதமான நாகரிகங்களும் தோன்றி மறைந்தனவல்லவா, இவை பலவும் விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. இங்கு உற்பத்தியான பொருள்கள், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்த தோடல்லாமல், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. விவசாயத்தின் நுட்பமான பலமுறைகளை எகிப்திலிருந்தும் மெஸொபொட்டேமியாவிலிருந்துமே கிரீஸ் கற்றுக் கொண்டது. இந்த நுட்பமான முறைகளை மேலும் மேலும் அபிவிருத்தி செய்து காட்டினார்கள் கிரேக்க அறிஞர்கள். ஹெஸியாட்1 என்ன, ஜெனோபன்2 என்ன, தியோப்ராஸ்ட்டஸ்3 என்ன, இப்படிப்பட்ட மேதையர்கள் விவசாய சம்பந்தமாக அரிய நூல்கள் எழுதி உதவினார்கள். கிறிஸ்து சகத்திற்கு முந்தியும் அதன் ஆரம்ப தசையிலும் கிரேக்க மொழியில் விவசாய சம்பந்தமாகச் சுமார் நாற்பது நூல்கள் வரை வெளியாயிருக்கின்றன வென்று அறிகிறோம். கிரேக்க நாகரிகத்தின் நல்ல அமிசங்களையெல்லாம் அப்படியே தங்களுடையதாக்கிக்கொண்ட ரோமர்கள், விவசாயத் தில் மிகவும் முன்னேறி நின்றார்கள். ரோம ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு ஓங்கி நின்ற காலத்தில், போர்க்களத்தில் வெற்றிகள் பல கண்ட ஒரு சேனாதிபதிக்கு இருந்த மதிப்பைக் காட்டிலும், நல்ல விவசாயிக்கு இருந்த மதிப்பே அதிகம். விவசாயத்தைப்பற்றி ஒரு சிறிதாவது தெரிந்திருப்பதும், தெரிவிப்பதுமே அறிவுடையோரின் லட்சணமாகக் கருதப்பட்டதென்றால் நாம் ஆச்சரியமே பட வேண்டியிருக்கிறது. கவிஞர்களென்றும், சரித்திராசிரியர் களென்றும், தத்துவ சாஸ்திரிகளென்றும் இன்றளவும் அறிஞர் களுடைய மதிப்பிலே வாழ்ந்து வருகின்ற காட்டோ1, வார்ரோ2, வர்ஜில்3, பிளினி4, கொலுமெல்லா5, பல்லேடியஸ்6 இப்படிப் பட்டவர்கள் விவசாயத்தைப் பற்றி அருமையான ஆராய்ச்சிகள் நடத்தி அரிய நூல்கள் எழுதியிருக்கிறார்கள். சிலர் தாங்களே சொந்தப் பயிர் வைத்து நடத்திக்காட்டி அனுபவப் பயிற்சியும் அளித்திருக்கிறார்கள். பாரசீக ஏகாதிபத்தியம் செல்வாக்குடன் திகழ்ந்த காலத்தில், உழவுத் தொழிலுக்கு அதிக மதிப்புக்கொடுக்கப்பட்டு வந்தது. விவசாயிதான் சீலமுள்ளவனாயிருக்க முடியும் என்பது பாரசீகர்களின் உறுதியான நம்பிக்கையாயிருந்தது. மண்வளமோ, பாசன வசதிகளோ அதிகமாகப் பெறாதது பாரசீகம். இதனால் நிலத்திலிருந்து நல்ல பலன் காண வேண்டுமாயின், அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. இந்த உழைப்பை மேற்கொண்டு நல்ல பலன் கண்டு வருகிறவர்களை அரசாங்கம் உற்சாகப்படுத்தி வந்தது. இப்பொழுது நமது நாட்டில் அரசாங்கமானது, நல்ல மகசூல் காட்டும் விவசாயிகளுக்கு கிருஷி பண்டிதன் என்ற பட்டம் அளித்தும், ஒரு தொகையைப் பரிசாகக் கொடுத்தும் உழவுத் தொழிலுக்கு ஊக்கமூட்டி வருகிறதல்லவா, இதே பிரகாரம், கிறிஸ்து சகத்திற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தியே பாரசீகத்தில் நடைபெற்று வந்தது. நல்ல பலன் காட்டிய விவசாயியை அரசனே நேரில் வரவழைத்து கௌரவப்படுத்தினான். பிரதி வருஷமும் இது நடைபெற்று வந்தது. இதைத் தொடங்கிவைத்தவன் ஸைரஸ்7 மன்னன் என்பர். இவன் தான் பாரசீக ஏகாதிபத்தியத்தின் ஆரம்ப கர்த்தனுங்கூட. இவன் அறிவுள்ள அரசனாயிருந்ததோடு திறமையான விவசாயியாகவும் இருந்தான். விவசாயத் துறையில் இவன் அநேக பரிசோதனைகளை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியோ இவன் விவசாயத் தொழிலுக்கு அதிக ஆதரவு காட்டி வந்தான். இவனுக்குப் பின் வந்த அரசர்களும் இவன் வழியைப் பின்பற்றினார்கள். சீனாவில் தொன்றுதொட்டு - கிறிஸ்து சகத்திற்குச் சுமார் இருபத்தேழு நூற்றாண்டுகளுக்கு முந்தியிருந்தே - உழவுத் தொழில் பெரிதும் போற்றப்பட்டு வந்திருக்கிறது. முதல் உழவு முதல் கடைசி அறுவடை வரை ஒவ்வொன்றும் மதச்சடங்குபோலவே கொண்டாடப் பட்டு வந்திருக்கிறது. மன்னனே இந்தச் சடங்குக்குத் தலைமை வகித்து நடத்தி வந்தான். பிரதி வருஷமும் உழவு காலத்தில், அரசன், அரண்மனையிலிருந்து ஊர்வலமாக வந்து, அவனுக்கென்று ஒதுக்கப் பட்டுள்ள நிலத்தில், தங்கத்தினால் தயாரிக்கப்பட்ட ஏர் பிடித்து உழுவான். மந்திரிப் பிரதானிகள் கூடவே இருப்பர். அதாவது, அரசனே உழு தொழிலுக்கு ஆரம்ப கர்த்தன் என்பது ஐதிகம். இங்ஙனம் சிறிது நேரம் உழுதுவிட்டு, தன் கையாலேயே, நெல், கோதுமை, திணையோ சாமையோ இப்படி ஏதோ இரண்டுவித தானியங்களையும் வெள்ளிக் கிழங்கையும் பூமியில் ஊன்றுவான். அதாவது, அரசன் ஐந்து பொருள்களைப் பயிரிட்டுக் காட்டவேண்டுமென்பது கருத்து. இந்தச் சடங்கை முதன் முதலாகத் தொடங்கி வைத்தவன் சென்மிங் என்ற மன்னன்1. இவன் வழிவந்த ஏனைய மன்னர்களும் இந்தச் சடங்கை ஆண்டுதோறும் விடாமல் நடத்தி வந்தனர். வெளிநாடுகளுடன் உறவு கொள்ளும் விஷயத்தில் சீனா எப்பொழுதுமே அதிக விருப்பங் காட்டியது கிடையாது. ஆனால், தான் அதுகாறும் பயிராக்கிக் காணாத செடி கொடிகளையோ, தானிய வகை களையோ வெளிநாடுகளிலிருந்து கொண்டு வந்து பயிராக்கிப் பார்ப்பதில் தயக்கம் காட்டியது கிடையாது. அப்படியே தன்னிடத்தில் உண்டா யிருக்கும் செடி கொடிகளையோ தானிய வகைகளையோ பிற நாட்டவருக்கு வழங்க மறுத்ததும் கிடையாது. கிறிஸ்து சகத்திற்குச் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தி, சாங்-கீன்2 என்ற ஒரு சீன அறிஞன், ஆசியாவின் மேற்குப் பக்கத்திலுள்ள நாடுகளை - அதாவது துருக்கிஸ்தானம், அரேபியா, பாரசீகம் முதலிய நாடுகளை - காண விழைந்து யாத்திரை புறப்பட்டான். சுமார் பத்து வருஷ காலம் யாத்திரை செய்தான். தாய் நாட்டுக்குத் திரும்புகிறபோது, விதவிதமான செடி கொடிகளையும் விதைகளையும் கொண்டு வந்தான்; தாய்நாட்டு மண்ணில் இவற்றைப் பயிராக்கிப் பார்த்துப் பலனும் கண்டான். பீன்ஸ், பட்டாணி, வெள்ளரிக்காய், மஞ்சள், பசலைக்கீரை, சர்க்கரைக் கொம்மட்டி இவற்றின் விதைகள் முதலியவற்றை இவன் கொண்டு வந்ததாகச் சீன சரித்திரம் கூறுகிறது. ஜப்பானியர்களும் ஆதி காலத்திலிருந்து விவசாயத்தில் அக்கரை செலுத்தி வந்திருக்கிறார்கள்; நல்ல பலன் கண்டவர்களை நல்ல விதமாகப் பாராட்டியிருக்கிறார்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, இப்படிச் சில பழ வகைகள் ஜப்பானியர்களுக்கு வெகுகாலம்வரை தெரியாமலேயே இருந்தன. இவை சீனாவிலேயே அதிகம். கி.பி.முதல் நூற்றாண்டில், அப்பொழுது ஆண்டு கொண்டிருந்த ஜப்பானிய சக்கரவர்த்தி, டாஜிமாமோரி1 என்பவனைச் சீனாவுக்கு அனுப்பி, இவற்றின் விதைகளையும் நாற்றுக் களையும் கொண்டுவரச் செய்தான். இந்த டாஜிமாமோரி, சீனாவுக்குச் சென்று திரும்பி வர ஒன்பது ஆண்டுகள் பிடித்தன. இந்தக்காலத்தில் இவன் அனுபவித்த கஷ்டங்கள் அனந்தம். ஆனால் இவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களும் அனந்தம். இவன் மேற்படி பழ வகைகளை ஜப்பானில் பயிராக்கிப் பலன் காட்டினான். சக்ரவர்த்தி முதல் அனைவரும் வியந்து பாராட்டிப் போற்றினர். இவனுக்குப் பிற்காலத்தில், இவன் அடக்கமான இடத்தில் ஒரு ஞாபகச் சின்னம் எழுப்பப்பட்டது. இந்தச் சின்னம், இன்றளவும் புக்குஷோஜி2 என்ற இடத்தில் நன்றாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது. நமது தாய்நாட்டில், வெகு காலந்தொட்டு விவசாயம் எவ்வளவு மதிப்புக்குரியதாய் இருந்து வந்ததென்பதைப் பற்றி நாம் அதிகம் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், அது நம்முடைய பரம்பரை யில் ஊறிப்போன விஷயம். வேத காலத்திலிருந்து கிருஷித் தொழில் வெகுவாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறதல்லவா? வேதங்களி லாகட்டும், புராண இதிகாசங்களிலாகட்டும் விவசாய சம்பந்தமான குறிப்புக்கள் பல காணப்படுகின்றன. நீதி நூல்கள் பலவற்றிலும் உழவுத் தொழிலின் சிறப்பு, பல வகையானும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு நாட்டுக்கு லட்சணங் கூறுகின்ற கௌடில்யன், அது, நல்லொழுக்கமும் விடாமுயற்சியு முடைய விவசாயிகளைக் கொண்டதாயிருக்க வேண்டுமென்கிறான். அவனே, இன்னோரிடத்தில், கடுமையான அபராதங்களிலிருந்து இலவசமான உழைப்பிலிருந்தும், தாங்க முடியாத வரிச்சுமையினின்றும் விவசாயிகளைக் காப்பாற்றவேண்டியது அரசனது முக்கியமான கடமை களுள் ஒன்று எனக் கூறுகிறான். தமிழ் நூல்களிலிருந்தும் விவசாய சம்பந்தமாக அநேக மேற் கோள்களை எடுத்துக் காட்டலாம். திருக்குறளில் உழவு என்ற அதிகாரம் ஒன்றே போதுமல்லவா? இந்த அதிகாரத்திலுள்ள பத்து குறட்பாக்களில் நான்கின் கருத்தை உணர்ந்து அவற்றின்படி ஒரு விவசாயி ஒழுகி வருவானாகில் அவன் எந்த வகையிலும் குறைவில்லாத வனாக வாழ்வான். அவனுடைய நன்மைக்காக மேற்படி நான்கு குறட்பாக்களை மட்டும் கீழே தருகிறாம்:- தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். ஏரினு நன்றால் எருவிடுதல் இட்டபின் நீரினு நன்று அதன்காப்பு. செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். இலமென்று அசைஇ யிருப்பாரைக் காணில் நிலமென்னும் நல்லாள் நகும். இதுகாறும் கூறியவற்றிலிருந்து, விவசாயத்தின் சரித்திரம் வெகு பழமையானதென்பது நன்கு புலனாகும். நாகரிகம் வாய்ந்த மக்கள் இதனையே முக்கிய ஜீவனோபாயமாகக் கொண்டிருந்திருக்கிறார்கள். இப்பொழுது நாம் உபயோகித்து வரும் தானிய வகைகளென்ன, காய்கறி களென்ன, பழ வகைகளென்ன, கொட்டை தினுசுகளென்ன, இவை பலவும், கிறிஸ்து சகத்திற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முந்தியிருந்தே பயிராகி வந்தவைதான். விஞ்ஞான சாஸ்திர அபிவிருத்தியின் விளைவாக, நவீனமானவை என்று சொல்லக்கூடிய செடி கொடி வகை களெல்லாம் மிகச் சிலவே. சென்ற இரண்டாயிர வருஷ காலத்து உலக சரித்திரம் எத்தனையோ புதுமைகளைக் கண்டிருக்கிறது; எத்தனையோ மாற்றங்களை அடைந்திருக்கிறது. ஆனால் தாவர உலகத்தைப் பொறுத்த மட்டில் புதியவை என்று பயிராக்கப்பட்ட செடி கொடிகள் மொத்தம் அறுபத்தேழுதான். இவை யாவும், மனிதனுடைய தினசரி வாழ்க்கைக்குப் பிரயோஜனப்படுகின்றவை என்று சொல்ல முடியாது. ஒரு சிலவே பிரயோஜனமுள்ளவை என்று சொல்லக் கூடியனவாயிருக்கின்றன. பிற நாட்டு விவசாயிகள், இந்த உண்மையை எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறார்களோ நமக்குத் தெரியாது. ஆனால் நமது நாட்டு விவசாயிகள் - அவர்கள் எந்தப் பகுதியினராயிருந்த போதிலுஞ் சரி - இந்த உண்மையை அறியாமலே நன்கு உணர்ந்திருக்கிறார்கள்; ஏனென்றால், இவர்கள், புதுமையென்ற காரணத்திற்காக எந்த ஒன்றையும் உற்சாகத் தோடு வரவேற்கிறவர்களல்லர். பழமையில் மிக நம்பிக்கை கொண்டவர்கள்; பழைய முறைகளில் மிகப் பற்றுடையவர்கள். இதனால் இவர்கள் நவீன ஆராய்ச்சியாளர்களின் பரிகாசத்திற்கும் ஆளாகிறார்கள். ஆயினும் இவர்கள் இதை - இந்தப் பரிகாசத்தை – பொருட் படுத்துவதில்லை. பொதுவாகவே நமது நாட்டு விவசாயிகள், தற்காலப் பள்ளிப் படிப்பு படித்தவர்களில்லையானாலும், நூலேடுகளைப் புரட்டிப் பார்க்கும் ஆற்றல் பெற்றவர்களில்லையானாலும், உலகமென்னும் பள்ளியில் நன்கு பயின்றவர்கள்; உலகத்தை நன்றாக அறிந்தவர்கள்; அனுபவ அறிவு நிரம்பியவர்கள்; தங்கள் மூதாதையர்கள், என்ன மாதிரி வாழ்க்கையை நடத்தி வந்தார்களோ, என்னென்ன பழக்க வழக்கங்களைக் கைக் கொண்டிருந்தார்களோ, சிறப்பாக விவச யத்தைப் பொறுத்த மட்டில், முதல் உழவு முதல், இறுதியாக தானியங்களை வீட்டிலே கொண்டு சேர்க்கிற வரையில் என்னென்ன முறைகளைக் கடைப்பிடித்து வந்தார்களோ, அவைகளையெல்லாம் அப்படியே பின்பற்றுகிறவர்கள். நவீன முறைப்பயிற்சி பெற்றவர்களுக்குக் கடிகாரம் இல்லாமல் மணி சொல்லத் தெரியாது; பருவக் காற்று, பருவ மழை இவைகளைப் பற்றி ஊகமாகக் கூட சொல்லத் தெரியாது; இவ்வளவு விதை விதைத்தால் இவ்வளவு மகசூல் காணும் என்று விளக்கமாகச் சொன்னாலும் புரியாது. இப்படி எத்தனையோ விஷயங்கள். பரம்பரையாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு கிராமவாசியைப் போய்க் கேளுங்கள். எதற்கும் உடனடியாகப் பதில் சொல்லுவான். மணி தெரிய வேண்டுமானால், பகலில் காலால் அளந்து கூறுவான்; இரவில் நட்சத்திரங்களைப் பார்த்துக் கூறுவான். என்னென்ன அறிகுறிகள் இருந்தால் மழை வரும், அல்லது வராது என்பதற்கு அவன் அடுக்கும் சில பழமொழிகளைத்தான் கேளுங்கள்:- தூர மண்டலம் சேர மழை; சேர மண்டலம் தூர மழை. (சூரியனைச் சுற்றிய மண்டலம் தொலைவாயிருந்தால் விரைவில் மழை; நெருங்கியிருந்தால் பிறகு மழை.) * * * அகல் வட்டம் பகல் மழை. * * * காலை செம்மானம் கடுக மழை; அந்தி செம்மானம் அழுதாலும் மழையில்லை. அந்தி மழை அழுதாலும் விடாது. * * * அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும். * * * எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்யும். * * * காய்ந்த வானம் பேய்ந்தால் விடாது. * * * காலை, செல் பூத்தால் அடுத்த மழை அடங்கும் * * * தட்டான் தாழப்பறந்தால் தப்பாமல் மழை வரும். (தட்டான் - தட்டாரப்பூச்சி) * * * பனி பெய்தால் மழை இல்லை; பழம் இருந்தால் பூ இல்லை. * * * புற்றிலே ஈசல் புறப்பட்டாலும் மண்ணிலே கரையான் கூடினாலும் மழை வரவே வரும். * * * மின்னுக்கெல்லாம் பின்னே மழை. * * * வடக்கே கறுத்தால் அவசியம் மழை வரும். * * * கார்த்திகைக்கு மேல் மழையும் இல்லை; கர்ணனுக்கு மேல் கொடையும் இல்லை. * * * விவசாயினுடைய அனுபவ அறிவுக்குச் சான்றாக, இன்னும் ஒரு சில பழமொழிகளை மட்டும் சொல்லிக் காட்ட விழைகிறோம். கண்ணாற் கண்டது பொய்; அகப்பைக் குறிமெய். (நெற்போர்களுக்கு அகப்பையாற் குறியிடுதல் முற்காலத்து வழக்கம்). * * * ஆனி, ஆனைவாலொத்த கரும்பு. * * * காரியும் வெள்ளையும் கருதிப் பயிரிடு. (காரி - எள்; வெள்ளை - பருத்தி.) * * * இளைத்தவன் ஏழு வருஷத்திற்கு எள் விதைக்க வேண்டும். (எள் மகசூல் விரைவில் லாபந்தரத்தக்கதாயிருக்கும்.) * * * வீட்டுக்கு வாய்த்தது எருமை; மேட்டுக்கு வாய்த்தது போர். (போர் - நெற்போர்) இவை மாதிரி இன்னும் எத்தனையோ பழமொழிகள். இவை தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவை என்று வாசகர்கள் கருத வேண்டாம். இந்தியாவின் மற்றப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு இதே மாதிரி பழமொழிகள் பல நல்ல மனப்பாடம் உண்டு. தங்களுடைய அனுபவ அறிவைப் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டுமானால், இந்தப் பழமொழிகளை நினைவுப்படுத்திக் கொள்வார்கள். கடப்பை, கர்நூல் பகுதிகளில் காலமழையைக் காண்பது அரிது. இருந்தாலும் அந்தப் பகுதி விவசாயிகள், கிடைக்கும் நீரைப் போதுமான வரையில் பயன்படுத்தி நிறையப் பயன் காண்பதில் வல்லவர்கள். உழைப்பில் சலிப்பே காட்டமாட்டார்கள். நிலத்தில் ஈரம் காத்து நிற்க வேண்டுமென்பதற்காக, பிரதியொரு விவசாயியும், தன்னுடைய தளையில் ஏதேனுமொரு மரத்தை வைத்துப் பயிராக்குவான்; அதை நன்கு பாதுகாத்து வருவான். மரமில்லாத நிலம், உறவினரில்லாத ஊர் மாதிரி என்பது அவனிடையே சர்வ சாதாரணமாக உலவி வரும் ஒரு பழமொழி. உத்தரப்பிரதேசத்தில் (முந்திய ஐக்கிய மாகாணம்) ரோஹில்கண்ட்1 என்ற ஒரு பகுதியுண்டு. ரோஹில்கண்ட் என்பதற்கு மலைவாசிகளின் இருப்பிடம் என்று பொருள். இங்குள்ள விவசாயிகள், தன்னம்பிக்கை மிகவுடையவர்கள்; விடாமுயற்சிக்கும் சலியாத உழைப்புக்கும் பெயர் போனவர்கள். தங்கள் இருப்பிடம் நாடி யார் வந்தாலுஞ் சரி, அவர்களை இனிய முகத்துடன் வரவேற்று உபசரிப்பார்கள். கோடை காலமா யிருந்தால், வந்தவர்களுக்கு ஷர்பத் கொடுப்பார்கள்; குளிர் காலமாயிருந்தால் சூடாகப் பால் கொடுப்பார்கள். ஒன்றும் கொடாமல் விருந்தினரை வெளியே அனுப்பமாட்டார்கள். இவர்களிடையே வழங்கப்பெறும் சில பழமொழிகள்:- எள்ளும் பருத்தியும் இடைவிட்டு இடைவிட்டு விதைக்கப் பட வேண்டும். ஆனால் இதே மாதிரி கரும்பைப் பயிராக்கிப் பார்க்கலாமென்று எந்த விவசாயி கருதுகிறானோ அவன் ஜீவனத் திற்குக் கஷ்டப்படுவான். * * * உன் பெண்ணுக்கு விவாகம் செய்விக்கப் பணம் வேண்டு மானால், நிலத்தை நன்றாக உழுதுவிட்டு கோதுமையை நெருக்கமாக விதைத்துப் பயிரிடு. * * * நீ பணக்காரனாக வேண்டுமா? உன் வீட்டு முன் முற்றத்தில் குதிரைகள் கட்டப்பட்டிருக்க வேண்டுமா? (அதாவது பணக் காரனுக்கு அடையாளம்.) நெல்லை நெருக்கமாக விதை; பருத்தியை இடைவிட்டு இடைவிட்டு விதை; சோளத்தைத் தவளைப் பாய்ச்சல் தூரத்தில் விதை; கம்பை அதற்கு ஓர் அடி அப்பால் விதை. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில், அதாவது தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியில், ஜாட்1 என்ற ஒரு வகை ஜாதியினர் வசிக்கின்றனர். இவர்கள் போர்த்திறம் வாய்ந்தவர்கள்; விவசாயத் திலும் வல்லவர்கள். நிலத்திலிருந்து கிடைப்பது சொற்பமே யாயினும் அதைக் கொண்டு திருப்தியடைகிறவர்கள். இவர்கள் பொழுது போக்காக, வினா விடை ரூபத்தில் பின்வருமாறு பேசிக் கொள்வார்கள்:- வினா: உலகத்தில் மிகச் சிறந்த மலர் எது? விடை: பருத்தி மலர். ஏனென்றால் அது மனிதர்களுடைய மானத்தைக் காப்பாற்றுவதற்கு உதவுகிறதல்லவா? வினா: உலகத்தில் மிகச்சிறந்த நிறம் எது? விடை: மண்ணின் நிறம். வினா: உலகத்தில் மிகச் சிறந்த குரல் எது? விடை: கையந்திரத்தின் குரல். (அதாவது தானியங்களை யந்திரத்தில் போட்டு அரைக்கிறபோது ஏற்படும் ஓசை). வினா: உலகத்தில் மிகச் சிறந்த மூக்கு எது? விடை: க லப்பையின் மூக்கு. வினாவிடை ரூபமாயுள்ள இந்தச் சம்பாஷணையைக் கொண்டு, ஜாட் ஜாதியினருக்கு விவசாயத்திலிருக்கும் ஈடுபாடு நன்கு புலனாகும். இதே மாதிரி அநேக உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் அது தேவையில்லை. வாசகர்கள் சலிப்புக் கொண்டுவிடக் கூடாதல்லவா? பொதுவாக, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் விவசாயிகள், ஏட்டறிவைவிட அனுபவ அறிவையே மிகவும் பெற்றிருக்கிறவர்கள் என்று சொல்லிக்கொண்டு மேலே செல்வோம். விவசாயிகள், அனுபவ அறிவு மிக்கவர்களாயிருந்த போதிலும், அது காரணமாக அகந்தை கொள்ளத் தெரியாதவர்கள். அறிவுக்கு எல்லை யில்லையென்பதை அவர்கள், புத்தகங்களைப் பாராமலே உணர்ந்திருக்கிறார்கள். பூமியிலிருந்து பலன் காணும் விஷயமாக யார் என்ன ஆலோசனை கூறியபோதிலும் அதைச் செவிகொடுத்துக் கேட்பார்கள். கூறப்படும் ஆலோசனை, ஏற்கனவே தங்களுக்குத் தெரிந்திருந்தபோதிலும். எங்களுக்கு எல்லாம் தெரியுமையா என்கிற மாதிரி முகத்திலடித்தாற் போல் பதில் சொல்லமாட்டார்கள். அப்படிச் சொல்வது அவமரியாதை என்பது, நகரவாசிகளைக் காட்டிலும் கிராம வாசிகளுக்குத்தான் அதிகம் தெரியும். சொல்லப்படும் ஆலோசனையைத் தங்கள் அனுபவத்தோடு ஒட்டி வைத்துப் பார்த்து, ஏற்றுக்கொள்ளக் கூடியதாயிருந்தால் உடனே ஏற்றுக்கொண்டுவிடுவார்கள்; சிறிதுகூடத் தயங்க மாட்டார்கள். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்ற குறளின் கருத்தை அவர்கள் இயல்பாகவே உணர்ந்து நடக்கிறவர்கள். இந்த விஷயத்தில், விவசாயி களை, பரிசோதனை சாலையிலிருக்கும் விஞ்ஞான சாஸ்திரிக்கு ஒப்பிடலாம். அவனுடைய வாழ்க்கை - விவசாயினுடைய வாழ்க்கை - பூராவும் ஒரு பரிசோதனையே. அவன் மண்ணைப் பரிசோதிப்பதுபோல் வானமும் சில சமயங்களில் அவனைப் பரிசோதிக்கிறது. ஆண்டவனுடைய பரிசோதனைக்கும் உட்படுகிறான். ஆனால் அவன் எல்லாப் பரிசோதனைகளிலும் வெற்றியே பெறுகிறான். தோல்வி யென்பதை அவன் அறியான். ஏகதேசமாகத் தோல்வி கிட்டினாலும், அதை அடுத்து வரும் வெற்றிக்கு வழிகாட்டி என்றே கொள்கிறான். இதற்கு அடிப் படையான காரணம், அவனிடத்திலே நிரம்பியுள்ள தன்னம்பிக்கை தான். இந்தத் தன்னம்பிக்கை, அவனுடைய சுயமுயற்சிக்கு ஆக்க மளிப்பதாயிருக்கிறது. சுயமுயற்சியுடையவனாயிருப்பதன் காரண மாக அவன் வாழ்க்கையில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டி யிருக்கிறது; எதிலும் நிதானமுடையவனாயிருக்க வேண்டியிருக் கிறது. சில சமயங்களில், நவீன நாகரிகத்தின் மோதுதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், அவன் சிக்கனப் பாதையிலிருந்து விலகி விடுகிறானென்பது வாஸ்தவம். ஆனால் அதற்காக அவன், பின்னர் இரக்கமேயடைகிறான். விவசாயி சகோதரா! உனது பரம்பரை, உலகத்திலேயே ஆதி பரம்பரை; அரச பரம்பரைக்கும் முந்தியது. அரச பரம்பரை, உதயத்தையும் அஸ்தமனத்தையும் மாறி மாறிக் காண்கிறது. ஆனால் உனது பரம்பரைக்கு எப்பொழுதும் உச்சிப்பொழுதுதான். தவிர, அரசர்களுடைய வாழ்க்கைக்கு மூலாதாரமாயிருப்பவன் நீயே யல்லவோ? நீ வாழாவிட்டால், அரசனுக்கு வாழ்க்கையென்பது ஏது? ஆகவே அன்பனே! உனது பரம்பரையினர், கையாண்டு வந்த முறைகளையோ, அனுஷ்டித்து வந்த பழக்க வழக்கங்களையோ அலட்சியப்படுத்தி விடாதே; காலத்திற்கொவ்வாதவை என்று கருதிவிடாதே. உன்னுடைய மூதாதையர்கள் எத்தனையோ நூற்றாண்டுகள் கணக்கான அனுபவத்தின் மீது சில நியதிகளை வகுத்து வைத்துப் போயிருக்கிறார்கள். அவைகளை உதாசீனப் படுத்திவிடாதே. பார்க்கப் போனால், நவீன நாகரிக வசதிகளென்று சொல்லப் படுகின்றவையெல்லாம், உடனடியான, அதுவும் அற்ப சொற்பமான பலனைக் கொடுத்து உன் மனத்தில் ஒரு வித பிரமிப்பை உண்டு பண்ணலாம். ஆனால் நீண்டகால திருஷ்டியில் அவற்றை வைத்துப் பார்ப்பாயானால், அவற்றால் ஏற்படக்கூடிய பாதகங்கள் தான் அதிகமாகத் தெரியும். இப்படிச் சொன்னதனால், நவீன நாகரிக வசதிகளை அடியோடு நிராகரித்துவிடு என்று நாம் சொல்லுவதாக எண்ணிக் கொண்டுவிடாதே. உனது பரம்பரைக்கும், பழமையாக வந்துள்ள பழக்க வழக்கங்களுக்கும் முரணில்லாதவாறு நவீன நாகரிக வசதிகளை ஏற்றுக்கொள், அதுவும் ஓர் அளவுக்குட்பட்டு ஏற்றுக்கொள் என்று தான் சொல்லுகிறோம். உதாரணமாக, ரசாயண உரம் என்று வெகுவாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறதல்லவா, இதனால் ஆரம்பத்தில், கண்டு முதல் சிறிது அதிகமாகவே இருக்கலாம். ஆனால் நாளாவட்டத்தில், மண்ணின் சத்து மிகவும் குன்றிப் போய்விடுகிறதென்று அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு கட்டியிருக்கிறார்கள். இந்த முடிவை நீ அப்படியே ஏற்றுக் கொண்டுவிட வேண்டுமென்று நாம் சொல்லவில்லை. விஞ்ஞான சாஸ்திரியைப் போல நீ ஒரு பரிசோதகனல்லவா? உன்னுடைய நிலத்தின் ஒரு பகுதியில் பரீட்சார்த்தமாக இந்த ரசாயன உரத்தை உபயோகித்துப் பார். அந்தப் பகுதி, இந்த உரத்தை எப்படி ஏற்றுக் கொள்கிறது. எந்த அளவுக்கு இதன் பலன் அதிகப்படுகிறதென்பதை அறிந்து, இதை நெடுகிலும் உபயோகித்து வரலாமா, கூடாதா வென்பதை நீயே நிர்ணயஞ் செய்துகொள். இதே பிரகாரம், மின்சார சக்தியை உபயோகித்துக் கொள்கிற விஷயத்தில் நீ சர்வ ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். உன் வீட்டு விஷயங்களுக்கு மின்சாரத்தை நீ தாராளமாக உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் நீர்ப்பாசனத்திற்கு இதை நீ அதிகமாக உபயோகித்தால், பூமியிலுள்ள ஊற்றுக் கண்களிலிருந்து நீர் சுரப்பது காலக் கிரமத்தில் குறைந்து போய் விடுகிறதென்றும், இதனால் உன் நிலத்தில் மட்டுமல்ல, அக்கம் பக்கத்திலுள்ள நிலங்களிலும் நீர் வறட்சி ஏற்பட்டுவிடுகிறதென்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே இதனையும் உன் பரிசோதனையில் வைத்துப் பார்த்து நீயே ஒரு தீர்மானத்திற்கு வருதல் நல்லது. பொதுவாக, அந்தந்த நாட்டுச் சீதோஷ்ண நிலைக்குத் தகுந்தாற் போலவே அந்தந்த நாட்டு விவசாய முறைகளும் அமைகின்றன. ஒரு நாட்டில் நல்ல பலனைக் கொடுக்கும் ஒரு முறை, வேறொரு நாட்டில் குறைந்த பலனைக் கொடுக்கலாம். ஆகவே, நீ வசிக்குமிடத்தின் தட்பவெப்ப நிலை, மண்ணின் தரம், நீர்ப்பாசன வசதி, பருவ மழையின் அளவு, இவை பலவற்றையும் பொறுத்தே உனது விவசாய முறைகள் அமையவேண்டும். உனது மூதாதையர்கள் இப்படித்தான் அமைத்திருப்பர். இவைகளைக் கூடிய மட்டில் அப்படியே பின்பற்றுவதுதான் உனக்கு நல்லது. கடன் வாங்கி ஒரு காரியத்தைச் செய்யாதே. ஒரு தடவை, லேவாதேவிக்காரரிடம் கையை நீட்டி விட்டாயேயானால், பிறகு அடிக்கடி அவரிடம் நீட்டவேண்டியே வரும். கடைசியில் உன் ஆஸ்திபாஸ்தி களெல்லாம் கரைந்து போய் நான்கு பேரிடத்தில் கையேந்திப் பிழைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். அதற்கு ஒருபோதும் இடங்கொடாதே. ஊரார் மெச்ச வேண்டுமென்பதற்காக, குடும்பச் சடங்குகளை ஆடம்பரமாகச் செய்தல், தேவையில்லாத போழ்தும் தொழுவத்திற்கு அலங்காரமாக இருக்க வேண்டுமென்பதற்காகவோ, கௌரவத் திற்காகவோ, அதிக விலை கொடுத்து வண்டி மாடுகளை வாங்கிக் கட்டுதல், அனாவசியமான ஆடை ஆபரணங்களில் ஆசை வைத்தல், பொழுது போக்குக்காகச் சூதாட்டங்களில் ஈடுபடுதல், மூதாதையர்கள் வாழ்ந்த இடத்தைப் புறக்கணித்துவிட்டு, தேவைக்கு மிஞ்சின விஸ்தீரணத்தையுடைய வீட்டைப் புதிதாகக் கட்டி அதில் தேவை யில்லாத சாமான்களைக் கொண்டு நிரப்புதல், இவை போன்றவைகளில் நீ சுயமாகவோ, பிறர் தூண்டுதலாலோ ஈடுபடுவாயேயானால், கடன் வாங்கும் நிலைமை ஏற்பட்டுக் கடைசியில் சீரழிந்து போவாய். எச்சரிக்கை. உன் நிலத்திலிருந்து சென்ற வருஷம் எவ்வளவு வருமானம் கிடைத்ததோ அவ்வளவு வருமானம் அடுத்த வருஷமும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, சென்ற வருஷத்து வருமானம் பூராவையும் நடைமுதல் வருஷத்தில் செலவிட்டுவிடாதே. அடுத்த ஆண்டில் பருவ மழை தவறிவிடலாம் எதிர்பாராத விதமாக, பூச்சிகள் வந்து உன் பயிர்களுக்கு நாசமுண்டு பண்ணிவிடலாம். இவைகளினால், நீ எதிர்பார்க்கிற அளவுக்கு உனது நிலம் பலன் கொடாமல் போகலாம். உனது வருமானமும் குறையும். ஆனால் உன் செலவென்னமோ குறையப் போவதில்லை. அப்பொழுது, சென்ற வருஷத்து வருமானத்தில், ஏன் சிறிது மிச்சப்படுத்தி வைக்காமற் போனோமென்று வருந்துவாய். ஆகவே, அப்படி வருந்தும்படி வைத்துக் கொள்ளாதே. எப்பொழுதும் தானியமும் ரொக்கமும் ஓரளவு கையிருப்பாகவே இருக்கட்டும். சேமிப்பு புத்தியென்பதை உன் கூடப் பிறந்த சகோதரியாகப் போற்றிக் காப்பாற்றி வருவாயாக! உனது மூதாதையர்கள் அனுஷ்டித்து வந்த நோன்புகள், சடங்குகள், பண்டிகைகள் முதலியவைகளையெல்லாம் விடாமல் அனுஷ்டித்து வருவாயாக. இவையெல்லாம் அர்த்தமற்றவையென்று அலட்சியப் படுத்திவிடாதே. அர்த்தமுண்டோ, இல்லையோ, உனது மூதாதையர் களுக்குக் கௌரவம் கொடுக்கின்ற முறையிலாவது இவைகளை அனுஷ்டித்துக் கொண்டு வா. காலக்கிரமத்தில் உனக்கு உலக அனுபவம் ஏற்பட ஏற்பட, இவற்றை அனுஷ்டிக்க வேண்டியது அவசியந் தானென்பதை நீயே உணர்ந்துகொண்டு விடுவாய். பிரதி தினமும் முன்னிரவு நேரம் உனக்கு ஒய்வு காலம். அந்தக் காலத்தை வீணாக்காதே. சாப்பாட்டுக்கு முன்னோ, பின்னோ, உனது மூதாதையர்களின் வாழ்க்கை வரலாறுகளை, உனது மக்களுக்கு எடுத்துச் சொல்; உனது பெரியோர்களிடமிருந்து அவற்றைக் கேள். உனக்கும் நல்லது; உனது மக்களுக்கும் நல்லது. தவிர, புராண இதிகாசங்கள் போன்ற நல்ல நூல்களைச் சிறிது சிறிதாகப் படி; அல்லது தக்கார் மாட்டுக்கேள். கற்றலைக் காட்டிலும் கேட்டல் நல்லதென்பது பெரியோர்களின் கருத்து. கேள்வி ஞானம் ஒருவனுக்கு இருக்கும்பட்சத்தில், அவன் வாழ்க்கையில் சந்திக்கும் மேடு பள்ளங்களைச் சுலபமாகத் தாண்டிவிடுவான். கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை என்பது திருக்குறள். இந்த மாதிரி உபயோகமுள்ள காரியத்தில் தான் நீ இந்த முன்னிரவு நேரத்தைச் செலவழிக்க வேண்டுமே தவிர, வம்புதும்புகளில் செலவழிக்கக்கூடாது. இதனால், மாசற்ற உன் உள்ளம் கறைப்பட்டுப் போகும்; மனிதத் தன்மையிலிருந்து இறங்கிவிட்டவனாவாய். இதற்கு ஒரு போதும் இடங்கொடாதே. உன் வீடு நாடி வருகின்றவர்களை நல்ல முறையில் உபசரித்து அனுப்பு பசி என்று வந்தவர்களுக்கு உப்பு போட்ட கஞ்சியாவது கொடு. அதற்கு உன் வீட்டில் எப்பொழுதும் பஞ்சம் இராதல்லவா? உபசரிக்கும் கலையில் விவசாயிதான் கைதேர்ந்தவன் என்பது உலக அறிஞர்களின் ஏகோபித்த அபிப்பிராயம். கிறிஸ்து சகத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே கிரீஸ் தேசத்தில் அக்கீயர் என்ற ஒரு வகை ஜாதியார் வசித்து வந்தனர். இவர்கள் விருந்தோம்புவதில் வல்லவர்கள், பரம சத்துரு வாயிருந்தாலும், வீடேறி வந்து மண்டியிட்டு விடுவானாகில் அவனுக்கு ராஜோபசாரம் செய்வார்கள். இந்தப் பண்பு, உலகத்து எல்லா நாட்டு விவசாயிகளிடத்திலும் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. எனவே, இந்தப் பண்பினை, ஏர் பிடிக்கும் கரத்தினாய்! கைவிட்டுவிடாதே. உன் இயல்பாகவே அஃது எஞ்ஞான்றும் நின்று நிலவட்டும். உன் வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொண்டிரு. இதைக் குறிப்பாகச் சொல்லிக் காட்ட வேண்டிய அவசியமென்ன வென்று நீ கேட்கலாம். உன் வீடும் சுற்றுப்புறமும், சீக்கிரத்திலும் சுலபமாகவும் அசுத்தப்பட்டு விடக்கூடிய வாய்ப்புக்கள் பலஉண்டு. மாட்டுத்தொழுவம் அருகிலேயே இருக்கும். வீட்டுக்குப் பின்புறத்தில், சிறிய அளவினதாகவேனும் ஒரு தோட்டம் இருக்கும். இவைகளிலிருந்து வைக்கோலும் சாணமும், இலை தழைகளும் அடிக்கடி குவிந்துவிடும்; இவைகளை அடிக்கடி அப்புறப்படுத்தி, வீட்டிக்குச் சிறிது தொலைவாயுள்ள ஓரிடத்தில் பள்ளம் தோண்டி அதில் சேமித்துவர வேண்டும். காலக்கிரமத்தில் இவை நல்ல உரமாக உபயோகப்படும். வீட்டுக்கருகிலேயே குப்பை கூளங்களைச் சேர்த்து வைத்தல், கழிநீருக்குச் சரியான போக்குக் காட்டாமை, வீட்டைச் சுற்றி மலஜலங் கழித்தல், இவையெல்லாம் வீட்டிலுள்ளவர்களுடைய ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். இதற்கு நீ ஒருபோதும் இடங் கொடுக்கலாகாது. ஙப்போல் வளை என்று ஔவையார் கூறினதாகக் கூறுவர். இஃது உன்னைப் பார்த்துச் சொன்ன வாசகமே யாகும். உற்றார் உறவினருக்கு, அவர்களுடைய குறை நிறைகளைப் பொருட் படுத்தாமலும், தூஷணை பூஷணைகளை அலட்சியம் செய்து விட்டும் நீ உதவியாயிருக்க வேண்டும். சொல்லினாலோ செயலி னாலோ நீ செய்கிற உதவியை காலத்திற் செய். அதுதான் முக்கியம். மற்றும், செய்கிற உதவியை, இன்முகத்தோடும், இனிய சொல் கூறியும் செய் . அவ்விரண்டிலுமே உன் உதவி பரிமளிக்கிறது. ஊராருடனும் நீ ஒத்து வாழவேண்டும். நீ வசிக்கின்ற கிராமத் திற்கு ஏற்படக்கூடிய நன்மை தீமைகளில் உனக்கும் பங்கு உண்டு என்பதை மறந்துவிடாதே. ஆதலின் கிராம நன்மையை நீ அதிகமாக நாடவேண்டும். அதனால், உனக்கோ உன் குடும்பத்திற்கோ சில அசௌகரியங்கள் ஏற்படுவதாயிருந்தால் அவற்றை நீ பொருட் படுத்தக்கூடாது; சகித்துக் கொண்டுதானிருக்க வேண்டும். கடைசியாகக் கூறுகிறோம். விவசாயி ஐயா! உன் பொறுப்பு மகத்தானது; சமுதாயத்தில் உன் அந்தஸ்து மேலானது. இவ் விரண்டுக்கும் ஏற்றாற்போல் எப்பொழுதும் நடந்து வருவாயாக!  நாடும் bkhÊí« 1. தேச பக்தி இந்தியாவிலே பிறந்த ஒவ்வொருவரும் என்றைய தினம் தங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து எங்களது நாடு, எங்களது சகோதரர்கள் என்று முழக்கஞ் செய்யத் தொடங்கு கிறார்களோ அந்த தினத்தில்தான், நமது சுதந்திர பாதையின் திறப்பு விழாவை நடத்த முடியும். மேற்படி முழக்கத்தைச் செய்கிற சக்தி ஏற்பட்ட பிறகுதான், சுதந்திர பாதையில் செல்லக்கூடிய தகுதி நமக்கு ஏற்படுகிறது. இந்த அடிப்படையான உண்மையை நாம் தெரிந்து கொள்ளாமல், சுயராஜ்யம் என்றும் சுதந்திரம் என்றும் கத்திக் கொண்டிருந்தால், நமது தொண்டைத் தண்ணீர் வற்றிப் போவதைத் தவிர்த்து வேறு பலன் உண்டாகாது. நான் ஒரு தேசபக்தன் என்று சிலர், தங்களது இரண்டு வரிசைப் பற்களையும் தெரியக் காட்டிக் கொண்டு சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது, தங்களினின்று புறம்பா யுள்ள ஒரு குணத்தை, தாங்கள் முயன்று சம்பாதித்து அதைத் தங்களுடைய தாக்கிக் கொண்டிருப்பதாக இவர்கள் பேசுகிறார்கள். தேச பக்தி என்று சொன்னால், அது மனிதராய்ப் பிறந்த எல்லோருக்கும் இயற்கையாகவே அமைந்திருக்கிற ஒரு தன்மை என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்களோ, அல்லது இவர்களுக்குத் தெரியவே தெரியாதோ, நமக்குத் தெரியாது. ஆனால் இவர்களுடைய அபிப் பிராயத்தில், தேச பக்தி என்பது, புறச்சின்னமே தவிர, அகத்தி லிருந்து விகசித்துப் பிரகாசிக்கிற தன்மையல்ல. தேச பக்திக்கு வெளிப்படையான சில அடையாளங்கள் இருக்கவேண்டுமென்று இவர்கள் எதிர் பார்க்கிறார்கள். தேகத்தோடு ஒட்டிய தேச பக்திதான் இவர்களுக்குத் தெரியுமே தவிர, ஆத்மாவோடு இருதயத்தோடு கலந்திருப்பது தேசபக்தி என்பது இவர்களுக்குத் தெரியாது. இப்படிப் பட்டவர்கள் கோடிக்கணக்கில் இருந்த போதிலும், உமி மூட்டைகளைப் போல் கன மில்லாத அதாவது சத்தில்லாத பிறவிகள் தான். துரதிருஷ்ட வசமாக நமது நாட்டில் இத்தகைய உமி மூட்டைகள்தான் அதிகம் இருக்கின்றன. திருநீறும் ருத்ராட்சமும் அல்லது திருமண்ணும் துளசி மாலையும் தரித்துக்கொண்டு, தினந் தோறும் குறைந்தது இரண்டு தடவையாவது தேவாலயத்திற்குச் சென்று, கடவுள் நாமத்தைப் பலர் செவியைத் துளைக்கும் வண்ணம் முழக்கி வழிபடுவோரில் எத்தனை பேருக்குக் கடவுள்பக்தி இருக்கிறதோ, அந்த விகிதாசாரப்படி, நமது நாட்டிலும் தேச பக்தி யென்று வாயால் முழக்கிக்கொண்டு வீதி வலம் வருகிற பெயர் வழிகளுக்கு உண்மையான தேசபக்தி இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் ஓரிடத்தில் அருள்கிறார்:- இருளையே ஒளியெனக் கொள்கிறோம்; துயரத்தையே மகிழ்ச்சியெனக் கருதுகிறோம்; நோயையே ஆரோக்கியமென நினைக்கிறோம்; புதிதாகப் பிறந்த குழந்தையின் அழுகையைக் கேட்டு அது வாழத் தொடங்கிவிட்டதென்று எண்ணுகிறோம். இப்படிப்பட்ட நிலைமையில், சுக சௌக்கியத்தை எதிர்பார்க்க முடியுமா? நமது தாய் நாட்டின் தற்போதைய நிலைமையை, இதை விட அழகாக வருணிக்க முடியாது. இப்படிப்பட்ட நிலைமை ஏன் இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டில் இருந்து கொண்டிருக்கிறது? ஓர் ஆங்கில அறிஞன், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பற்றி எழுதியுள்ள ஒரு நூலில், இருபதாவது நூற்றாண்டு இந்தியா, பதினேழாவது நூற்றாண்டு இங்கிலாந்தில் இருக்கிறதென்று கூறுகிறான். அதாவது, பதினேழாவது நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொழில் அபிவிருத்தி, கல்விப்பெருக்கம், ஜனங்களின் பொருளாதார நிலைமை முதலியன எந்த திதியில் இருந்தனவோ அந்த திதியிலேயே இருபதாவது நூற்றாண்டில் இந்தியாவின் திதியும் இருக்கிறதென்று அர்த்தம். உண்மையான தேச பக்தி நமக்கு இருக்குமாயின் நாம் இந்த நிலைமையில் இருப்போமா? இந்த நிலைமையைச் சகித்துக் கொண்டிருப்போமா? தேச பக்தி யென்று சொன்னால் அஃது அறிவினால் விளக்கப் படுவதல்ல; இருதயத்தினால் உணரப் படுவது. தர்க்கரீதியாக முடிவு செய்யப் படுகிற ஒரு வரம்பிட்ட சட்டமல்ல; உணர்ச்சியினால் நிர்ணயிக்கப்படுகிற ஒரு நம்பிக்கை. வெறும் விவேகத்தினால் மட்டம் அதனைப் பிறருக்கு ஊட்ட முடியாது; தியாகத்தினால்தான் அதைப் பிறருக்கு உணர்த்த முடியும். சில உதாரணங்களினால் இவற்றை விளக்கிக் காட்ட விரும்பு கிறோம். நம்மைச் சுற்றி யடிக்கிற காற்றை எடுத்துக் கொள்வோம். அதனை நாம் பார்க்க முடிவதில்லை; ஆனால் உணரமுடிகிறது. அஃதில்லா விட்டால் நாம் ஒரு நிமிஷங்கூட இந்த உலகத்தில் வாழ முடியாது. அவ்வளவு இன்றியமையாத பொருளாக அஃது இருந்த போதிலும், அதனைக் காணவோ, பரிசிக்கவோ, சுவைக்கவோ முடிவதில்லை. காற்று எப்படி இருக்கிற தென்று வருணித்துக் காட்டுமாறு நமக்கு யாரேனும் கட்டளை யிட்டால் நம்மால் வருணித்துக் காட்ட முடியுமா? காற்றைக் கொண்டுதான் காற்றை உணர்த்த முடியும். காற்றைக் காணவோ, பரிசிக்கவோ, சுவைக்கவோ முடியாவிட்டாலும், அதனால் நாம் இன்பத்தை யடைகிறோம். சக்தி பெறுகிறோம். ஏன்? நாமே காற்றினால் தானே ஆக்கப் பட்டிருக்கிறோம்? காற்றடைத்த பையடா என்பதல்லவா பெரியோர் வாசகம்? இதைப் போலவே, தேச பக்தி என்பதை நாம் காண முடியாது; தொட முடியாது; ருசி பார்க்கவும் முடியாது. ஆனால் இஃதில்லா விட்டால் நாம் வாழவும் முடியாது. வாழ முடியாது என்று சொன்னால், உயிர் வைத்துக்கொண்டிருக்க முடியாது என்று அர்த்தமல்ல. உயிரென்னவோ நம்மிடத்தில் தானிருக்கும்; தாவர வர்க்கங்களும் பிராணி வர்க்கங்களும் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதைப் போல் நாமும் மூச்சு விட்டுக்கொண்டு தானிருப்போம். ஆனால் மனிதர்களாக, விவேகமும் இருதயமும் உள்ள மனிதர்களாக வாழ முடியாது. எப்படி, மனிதனுக்கு மூச்சு விடுவது சுபாவமோ அது போலவே அவன் தேசபக்தி யுடையவனாக இருப்பது, அதாவது தான் பிறந்த நாட்டின் மீது தன்னை யறியாத ஒரு பற்றுக் கொண்டிருப்பது அவனுடைய சுபாவம். அந்தச் சுபாவம் ஒருவனுக்கு இல்லையென்று சொன்னால், அவன் ஒரு ஜட பதார்த்தம். பிராணி என்ற ஒரு கௌரவத்தைக் கூட அவனுக்குக் கொடுக்கக் கூடாது. ஏனென்றால், பிராணிகளுக்குப் பகுத்தறிவுதான் இல்லையே தவிர, உணர்ச்சிகள் உண்டு; மானம், மரியாதை முதலியன உண்டு. தேச பக்தி யில்லாதவன், இந்தப் பிராணிகளிலும் கேவல மானவன்; இயற்கைக்கு மாறுபட்ட பிறவி. மனிதர்களுக்கு இயற்கையான சில சுபாவங்கள் உண்டு என்று சொல்கிறீர்கள்; ஆனால் அதே மூச்சில், அந்தச் சுபாவங்களில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள். இது முரண் பட்ட தாகத் தோன்றவில்லையா? என்று சிலர் கேட்கலாம். இது நியாயமான கேள்வி. தேச பக்தி என்ற சுபாவமானது, எல்லாப் பிராணிகளுக்கும் உண்டு. மனிதனுடைய பக்தி, தேசம் என்கிற விசால எல்லையளவுக்குச் செல்கிறது. பிராணிகளின் பக்தி, ஒரு வீடு அல்லது ஒரு கிராமம் என்கிற குறுகிய எல்லையளவுக்குச் செல்கிறது. நமது வீட்டிலே பூனை, நாய், கிளி முதலிய ஜந்துக்களை வளர்க்கிறோம். நமக்கு இஷ்டமிருக்கிற வரையில் அல்லது சௌகரியமிருக்கிற வரையில், நமது ருசிக்குத் தகுந்த படி அவைகளைப் போஷிக்கிறோம். பின்னர், நமது விருப்பு வெறுப்புகளுக்கு அவைகளை உட்படுத்துகிறோம். வீட்டை விட்டு விரட்டி யடித்து விடுகிறோம். ஆனால் அவை லேசிலே வீட்டை விட்டுப் போகின்றனவா? இல்லவே இல்லை. ஏன்? தாங்கள் வளர்ந்த இடத்திலே, தங்களுக்கு ஆகாரம் உண்பித்த மனிதர்களிடத்திலே அவ்வளவு பற்று. அவை களை வெளியேற்றும் பொருட்டு நாம் அவைகளுக்கு எந்த விதமான ஹிம்சைகளைக் கொடுத்தபோதிலும் அவை வெளியே செல்வ தில்லை. தாங்கள் வளர்ந்த இடத்தைப் பார்த்துக் கண்ணீர் உகுக்கின்றன. வளர்த்த முகங்களைப் பார்த்து வாலைக் குழைக்கின்றன. மகா கொடியவை என்று கருதப்படுகிற காட்டு மிருகங்களை எடுத்துக் கொள்வோமே, அவைகள் கூட, தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்கிற வனப் பிரதேசத்தை விட்டு வேறொரு வனப் பிரதேசத்திற்குச் செல்வதில்லை. மனிதர்கள், அவைகளை எந்த விதமாக வேட்டையாடினாலும், வேறு எந்த இடத்திற்குத் துரத்தினாலும், திரும்பத் திரும்ப அவை பழைய இடத்திற்கே வந்து சேரும். எனவே பிராணி வர்க்கங்களுக்குக் கூட தேச பக்தி என்பது சுபாவமா யமைந்திருக்கிற தென்பது பெறப்படுகிறது. ஆனால் பிராணி வர்க்கங்களின் தேச பக்திக்கும், மனித வர்க்கத்தினரின் தேச பக்திக்கும் அடிப்படையான வித்தியாசம் ஒன்றுண்டு. மனிதன் பகுத்தறிவோடு கூடியவனாதலால், அவன் தன் சுபாவத்திலேயே அமைந்திருக்கிற, அதாவது பிறப்போடவே ஒட்டி வந்திருக்கிற தேச பக்தியைப் பிறருக்கு நன்மை யுண்டாகுமாறு பயன்படுத்தக்கூடிய ஆற்றலையும் செயலாக விகசித்துக் காட்டுகிற சக்தியையும் கூடவே பெற்றிருக்கிறான். அந்த ஆற்றலையும் சக்தியையும் அவன் வளர்த்துக் கொள்ளாமலிருந்தாலுஞ் சரி, அல்லது மற்றவர்களுக்காகப் பிரயோஜனப் படுத்தாமலிருந்தாலுஞ் சரி, அவனிடம் சுபாவமா யமைந்திருக்கிற தேச பக்தியானது முனை மழுங்கி நாளாவட்டத்தில் தேய்ந்து மறைந்து போய்விடுகிறது. அதுமட்டுமல்ல; அதுவே, அதாவது தேய்ந்து மறைந்துபோன அதுவே, மமதையாக உருக் கொண்டு விடுகிறது. மனிதன் அகங்கார புத்தியுள்ள வனாகி விடுகிறான். அவனிடத்தில் மனித சுபாவம் போய், மிருக சுபாவம் குடிகொண்டு விடுகிறது. எனவே பிறவியிலேயே ஒட்டி வருகிற சில சுபாவங்கள்கூட, பழக்கத்திற்குக் கொண்டுவராத காரணத்தினாலும், சகவாச தோஷத்தினாலும் மழுங்கி, இருந்த இடம் தெரியாமலே போய்விடுகின்றன வென்பது பெறப்படுகிறது. இப்படிப்பட்ட மனிதர்களை, சுபாவத்திற்கு விரோதமாக வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களென்று சொல்லாது வேறென்னென்று சொல்வது? இதனை இன்னோர் உதாரணத்தினாலும் விளக்கிக்காட்ட விரும்பு கிறோம். தன்னைப் பெற்ற தாயினிடத்தில் யாருக்கும் அன்பு உண்டு. அந்த அன்பு இயற்கையானது. அந்த அன்பை நாம் சொல்லால் சுட்டிக்காட்ட முடியாது; உணர்ச்சியினால் செய்து காட்டமுடியும். நமது தாயார் ஏதோ ஒரு துன்பத்தினால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிற போதோ, அல்லது அவள் இறந்து போய் விட்டாலோ, அப்படி இறந்துபோனது எத்தனையோ வருஷங்களா னாலுங்கூட நமது அடிவயிற்றிலிருந்து, நம்மால் விவரிக்க முடியாத ஒரு துக்க அலை வந்து நமது இதயத்தைத் தாக்குகிறது; கண்களி லிருந்து சுடு நீர் ஆறாகப் பெருகுகிறது. மற்றவர்களுடைய துன்பத்திற் காகவும் மரணத்திற்காகவும் நாம் அனுபவிக்கிற துக்கம் ஒரு மாதிரி யாகவும், தாயாரின் துன்பத்திற்காகவும் மரணத்திற்காகவும் அனுபவிக்கிற துக்கம் வேறு மாதிரியாகவும் இருப்பதை நாம் உணர்கிறோம். இப்படி யிருந்தும், அதாவது பெற்ற தாயினிடத்தில் அன்பு செலுத்துவது பிரதி மனிதனுக்கும் இயற்கையான சுபாவமாயமைந் திருந்தும், நம்மில் எத்தனையோ பேர், தாயாரைப் பரம சத்துருவாகக் கருதுகிறோம். இப்படிப் பட்டவர்களை என்னவென்று அழைப்பது? மனித சுபாவங்களோடு இவர்கள் பிறந்தவர்களானாலும், அந்தச் சுபாவங்களை இழந்து விட்டவர்கள், அந்தச் சுபாவங்கள் இல்லாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். இப்படிக்கூட இருக்கமுடியுமாவென்று கேட்டால், இப்படியும் இருக்கிறார்களே என்ற உண்மையைத் தான் நாம் முன்னிலைப் படுத்திக்காட்ட வேண்டியவர்களா யிருக்கின்றோம். இது போலவே, தேச பக்தி யென்பது, பிரதி மனிதனோடு ஒட்டிய ஒரு சுபாவமாயிருந்தாலும், அந்தச் சுபாவமில்லாத மனிதர்களையே நாம் அதிகமாகக் காண்கிறோம். இஃதொரு புதிர்தான். ஆனால் இது விடுபடாத புதிரல்ல. ஒரு சில மகான்கள், அவ்வப்பொழுது தோன்றி, தங்களுடைய மகத்தான தியாகத்தி னாலும், சகிப்புத் தன்மையினாலும் இந்தப் புதிரை விடுவிக் கிறார்கள். ஜனங்கள் தங்களுடைய இயற்கையான சுபாவ மின்ன தென்பதை உணர்கிறார்கள். இருந்த பொருளை இழந்து விட்ட ஒருவன், மீண்டும் அந்தப் பொருள் அகப்பட்டால் எப்படி மகிழ்ச்சி யடைவானோ அதைப் போல், மேற்படி மகான்களின் காலத்திலும், அவர்களுக்குப் பின்னர் சிறிது காலம் வரையிலும் ஜனங்கள் ஒருவித உற்சாக முடையவர்களாகவும், தன் மதிப்புடையவர்களாகவும் வாழ்கிறார்கள். சிறிது காலமானதும், மேற்படி புதிரானது இவர்களை வந்து மூடிக்கொள் கிறது. மறுபடியும் ஒரு மகான் அவதரிக்க வேண்டியிருக்கிறது. இதனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதென்ன வென்றால், தேசபக்தி யென்பது தூண்டிவிட்டுக் கொண்டிருக்க வேண்டிய ஒரு விளக்கு மாதிரி. அந்த விளக்கில், எரியும் சக்தி, அதாவது பிரகாசிக்கிற தன்மை என்னவோ இருக்கிறது. ஆனால் அதனை நாம் தூண்டிவிட்டுக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கைங்கரியத்தைச் செய்வதற்காகவே, அவ்வப்பொழுது பல மகான்கள் தோன்றுகிறார்கள். இவர்கள் கவிகளாகவும், வீரர் களாகவும், மதாசாரியர்களாகவும், தியாகிகளாகவும் எப்படி வேண்டு மானாலும் இருப்பார்கள். ஒரு தேசத்தில், ஜனங்களின் தாய் நாட்டுப் பற்று என்னும் விளக்கு அணைந்து போகுந் தறுவாயி லிருக்கையில், அது காரணமாக அடிமை அந்தகாரத்தில் அந்த ஜனங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கப் போகிறார்களே யென்ற பரம கருணையினால், ஒரு சிலர், மகான்களுடைய வருகைக்காகப் பிரார்த்திக்கிறார்கள். வொர்ட் வொர்த்1 என்ற ஆங்கில கவிஞன், மில்ட்டன்2 என்ற மகான் கவிஞனைக் குறித்துப் பின்வருமாறு புலம்புகிறான்:- மில்ட்டனே! இந்த நேரத்தில் நீ வாழ்ந்து கொண்டிருக்க வில்லையே? உன்னுடைய தேவை இப்பொழுது இங்கிலாந்துக்கு அவசியமா யிருக்கிறது. அஃது, இது காலை சக்தி நிறைந்த ஒரு தேக்கமாகி விட்டது. கடவுட் பீடமென்ன, வாளாயுத மென்ன, எழுது கோலென்ன, கணப்புச்சட்டி யென்ன, குபேர சம்பத்துக்களென்ன, இவையெல்லாம் சேர்ந்து, ஆத்ம சந்தோஷம் என்று சொல்கிறார்களே அதற்கு இரையாகி விட்டன. ஆங்கிலேயர் களாகிய நாங்கள் சுயநலக்காரர்களாகி விட்டோம். ஓ! எங்களைக் கைதூக்கி விடு; மீண்டும் எங்களிடத்தில் வா. எங்களுக்கு நல்ல குணங்களை, சீலத்தை, சுதந்திரத்தை, சக்தியை எல்லாவற்றையும் தந்தருள். நினது ஆத்மா, நட்சத்திரம் போல் அலாதியாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. நினது வாக்கு, சமுத்திரத்தைப்போல் கம்பீரமுடைய தாகவும், ஆகாசத்தைப் போல் பரிசுத்த முடையதாகவும் இருந்தது; சுதந்திரமுள்ளதா யிருந்தது. சாதாரண ஜனங்கள் செல்கிற பாதையில் நீ ஒரு தெய்வ புருஷனைப் போல் நடந்து சென்றாய். ஆனால் உனது இருதயம், ஏழை ஜனங்களின் சேவை யிலேதான் படிந்திருந்தது. தேச பக்தி யென்றால் என்ன வென்பதை ஓர் அறிஞன் பின்வருமாறு அழகாக வருணிக்கிறான்:- ஓர் உலோபி பணத்தினிடம் வைத்திருக்கும் ஆசையும், புருஷன் மனைவியிடத்திலும், மனைவி புருஷனிடத்திலும் பரபரம் காட்டுகிற தாம்பத்ய பிரேமையும், ஒரு தாயார் தன் குழந்தையினிடத்தில் செலுத்துகிற அன்பும் ஆகிய மூன்றும் சேர்ந்தால் எதுவோ அதுதான் தேச பக்தி. தேச பக்திக்கு எவ்வளவு மகத்துவம் கொடுக்கிறான் இந்த அறிஞன்? மாசு மறுவற்ற தேச பத்தியானது மற்றவர்களுடைய துன்பங் களைப் பரிகரிப்பதற்காக, தான் எல்லாவித துன்பங்களையும் வலிய ஏற்றுக்கொள்ளும். அப்படி வலிய ஏற்றுக் கொள்வதிலே ஒருவித இன்பத்தை அடையும்; பெருமையுங் கொள்ளும். தனது சர்வத்தையும் தேசத்திற்காக இழந்து விட அது தயாராயிருக்கிறது. இன்னும் இழப்பதற்கு ஒன்றுமில்லையே யென்று வருத்தமும் படுகிறது. 1906-ஆம் வருஷம் ருஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் மகத்தான தொரு யுத்தம் நடைபெற்ற தல்லவா? அப்பொழுது ஜப்பானில் ஒரு வரலாறு வழங்கி வந்தது. இஃதெவ்வளவு தூரம் உண்மை யென்பது நமக்குத் தெரியாது. நாம் கேட்டபடியே இங்கு எடுத்துச் சொல்கிறோம். ஜப்பானியக் குடும்ப மொன்றில் ஆறு குமாரர்கள் இருந்தார்கள். இந்த ஆறு பேரும் யுத்த களத்திற்குச் சென்று மடிந்து விட்டார்கள். ஒரு நாள், இவர்களின் தாயார், தன் வீட்டு வாயிலில் நின்று அழுதுகொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு ராணுவத்தலைவன் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்தான்; .அங்கிருந்தவர்களிடமிருந்து, அந்த திரீக்கு ஆறு குமாரர்கள் இருந்தார்களென்றும், அவர்களனைவரும் யுத்தகளத்தில் மடிந்து விட்டார் களென்றும் தெரிந்து கொண்டான். அவளருகில் சென்று என்ன அம்மா, நீ ஒரு ஜப்பானிய திரீயல்லவா? யுத்த களத்தில் உன் புத்திரர்கள் மடிந்து விட்டார்களென்பதற்காக நீ துக்கப்படலாமா? அதற்காகப் பெருமை யல்லவோ கொள்ளவேண்டும்? என்றான். அதற்கு அந்தத் தாயார் என்ன கூறினாள் தெரியுமா? ஐயோ, ராணுவத் தலைவரே! என்னுடைய ஆறு குமாரர்கள் யுத்தகளத்தில் இறந்து போனார்களென்பதற்காக நான் அழவில்லை; ஜப்பானின் சுதந்திரத்திற்காக, அதனுடைய முன்னேற்றத் திற்காக, போர்க்களத்தில் பலி கொடுக்க இன்னும் நான் அதிகமான மக்களைப் பெறவில்லையே யென்றுதான் அழுகிறேன் என்றாள். இதுதான் தேச பக்தி! கிரேக்க இதிகாசத்திலே இந்த மாதிரி உதாரணங்கள் பலவற்றை நாம் காணலாம். சுமார் இரண்டாயிரத்தைந் நூறு வருஷங்களுக்கு முன்னே கிரீஸில் ப்பார்ட்டா என்ற ஒரு பகுதிக்கு லியோனிதா1 என்ற ஒருவன் அரசனாயிருந்தான். இவன் சுத்த வீரன். பாரசீக மன்னனாகிய ஜெர்க்ஸ2 என்பவன், திரண்ட சேனையுடன் வந்து கிரீஸை தாக்கினான். லியோனிதா இந்த மகத்தான சேனையை, தெர்மாப்பிலே3 என்ற ஒரு கணவாயண்டை எதிர்த்து நின்றான். லியோனிதா பக்கம் இருந்தவர்கள் முந்நூறு பேர்தான். யுத்தம் மிகக் கடுமையாக நடந்தது. லியோனிதாஸும் முந்நூறு போர் வீரர்களும் இறந்து பட்டார்கள். ஆனால் கிரீ தேசம் காப்பாற்றப் பட்டது. லியோனிதாஸின் தேச பக்தியை, தியாகத்தை, வீரத்தை இன்றளவும் கிரேக்கர்கள் தங்கள் யாழிலே இசைத்துப் பாடு கிறார்கள். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர், பாலதீனத்திலே ஜூடா மக்கப்பீய1 என்ற ஓர் அரச வீரன் இருந்தான். இவன் காலத்தில், சுமார் இருபதினாயிரம் போர் வீரர்களைக் கொண்ட சிரியா தேசத்துப் படையொன்று பாலதீனத்தின்மீது படை யெடுத்து வந்தது. மக்கப்பீயஸின் வசத்தில் எண்ணூறு போர் வீரர்களே இருந்தார்கள். தாரதம்மியமில்லாத இந்த இரண்டு படைகளுக்கும் எலாஸா2 என்ற இடத்தில் கி.மு. 160-ஆம் வருஷம் கோர யுத்தம் நடைபெற்றது. ஜூடாஸைச் சேர்ந்தவர்கள், அவனைப் பின் வாங்கிக்கொண்டு விடுமாறும், வீணாக அனைவரையும் யுத்த களத்தில் பலி கொடுக்க வேண்டாமென்றும் ஆலோசனை கூறினார்கள். சத்துருக்களுக்கு முன்னே புறமுதுகிட்டுச் செல்லாதவாறு கடவுள் என்னைத் தடுப்பாராக. அப்படி நம்மால் வெற்றி காண முடியாவிட்டால், நமது தாய் நாட்டுச் சகோதரர்களின் நலனுக்காக யுத்த களத்திலேயே வீர மரணமடைவோம். நமது தேச பக்திக்கு நாமே களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று வீரமுழக்கம் செய்தான் மக்கப்பீய. இதைக் கேட்டு அவனுடைய வீரர்கள் புதிய உற்சாகங் கொண்டவர்களாய் கடுமையாக யுத்தஞ் செய்தார்கள். அந்த எண்ணூறு பேரில் ஒருவர்கூட பாக்கியில்லாமல் யுத்தகளத்தில் அழிந்து பட்டார்கள். ஆனால் அவர்களின் மரணம் வீணாகவில்லை. பாலதீனத்துப் பொது ஜனங்கள் ஒன்று திரண்டு ஆவேசத்துடன் சிரியர்களின் மீது திரும்பினார்கள். அவர்கள் என்ன செய்ய முடியும்? ஓடிவிட்டார்கள். பாலதீனத்தின் சுதந்திரம் காப்பற்றப் பட்டது யூதர்களின் தேச பக்தி களங்கமற்றுப் பிரகாசித்தது. இந்த மாதிரியான உதாரணங்களை நாம் பல நாட்டுச் சரித்திரங் களிலிருந்து எடுத்துக் காட்டலாம். இப்படிப்பட்ட தூய்மையான, பயன் கருதாத தேச பக்தி உணர்ச்சி இந்தியச் சகோதரர்களுக்கு ஏற்படவேண்டுமென்பது நமது பிரார்த்தனை. 2. பாஷை மனிதர்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்துவதற்குக் கருவி யாக யிருப்பது பாஷை. அவர்களுடைய எண்ணம் வளர வளர பாஷையும் வளர்ச்சியடைகிறது. ஆனால் அதே மனிதர்களின் எண்ணப்பெருக்கு வறட்சியடைகிற காலத்தில் அவர்களுடைய பாஷையும் வறட்சி யடைகிறது. மனிதர்களின் எண்ணப் பெருக்கு எப்பொழுது வறட்சி யடைகிறது? அவர்கள், சுதந்திரமற்றவர்களாகி விடுகிற போழ்து. எனவே, சுதந்திரத்திற்கும் பாஷைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதென்பது நன்கு புலனாகும். எந்த ஜனங்கள் சுதந்திரமில்லாதவர்களா யிருக்கிறார்களோ அவர்களுடைய பார்வையிலே ஒரு சூனியம், நடையிலே ஒரு தளர்ச்சி, பேச்சிலே ஒரு தடுமாற்றம், எண்ணத்திலே அந்நிய பாஷா ஞானத்தின் சாயல், இந்த மாதிரியான தன்மைகளைக் காணலாம். அவர்கள் எவ்வளவு ஒழுக்கமுள்ளவர்களாயிருந்தாலும், அல்லது ஆத்மா பரிசுத்தர்களாயிருந் தாலும், அல்லது அதிமேதாவிகளாயிருந்தாலும் அந்த ஒழுக்கத்திற்கும், ஆத்ம பரிசுத்தத்திற்கும், மேதைக்கும், சுதந்திரமாயுள்ளவர்கள் மதிப்புக் கொடுப்பதேயில்லை. நாம் எண்ணுகிற எண்ணம் மதிப்புடையதாயிருக்க வேண்டும் என்றான் ஒரு அறிஞன். அந்த எண்ணம் எப்பொழுது மதிப்புடைய தாயிருக்கும்? சுதந்திரம் என்ற விருதோடு செல்கிறபோது தான். மாஜினியோ1 யாரோ ஒரு சமயம் கூறினான். சுதந்திரமில்லாத வர்கள் ஒழுக்க முடையவர்களா யிருக்கமுடியாது என்று. எவ்வளவு அர்த்த புஷ்டியுடைய வாக்கியம் இது? ஒழுக்கமில்லாதவர்கள், உயர்ந்த எண்ணங்களை எண்ணமுடியாது. உயர்ந்த எண்ணங்களில்லாமல் குறுகிய எண்ணங்களைக் கொண்டு ஒரு பாஷை வளர்ச்சியடைய முடியாது. ஜனங்கள் சுதந்திரமுள்ளவர்களா யிருக்கிறார்களென்று சொன்னால், அவர்களுடைய அரசாங்கத்தின் கீழ் அவர்கள் வாழ்கிறார்கள் என்பது அர்த்தம். அப்பொழுது ஜனங்களுடைய பாஷையே அரசாங்கத் தினுடைய பாஷையாக இருக்கிறது. இதனால் அந்தப் பாஷைக்கு ஒரு கௌரவம் உண்டாகிறது; அது வளர்ச்சியும் அடைகிறது. ரோம ஏகாதிபத்தியம் உச்சதானத்தி லிருந்த போது லத்தீன் பாஷைக்கு ஒரு மகத்துவம் ஏற்பட்டது. அது செழிப்பும் அடைந்தது. அந்த ஏகாதிபத்தியம் மங்கிப்போன காலத்தில் அந்தப் பாஷையும் வழக்குக் குன்றிப்போய் விட்டது. இந்தியாவிலேகூட, ஹிந்து மன்னர்கள் ஆண்ட காலத்தில் சமகிருத பாஷையில் பேசுவதும், அதில் காவியங்களியற்றுவதும் பெருமையென்று கருதப்பட்டன. முலிம்களின் ஆட்சிக் காலத்தில், சிறப்பாக மொகலாயர் ஆட்சிக் காலத்தில், பாரசீக பாஷையில் பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு அத்தாட்சி களாயிருந்தன. ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ், ஆங்கில பாஷைக்கு ஒரு தனிச் சிறப்பு. நமது தமிழ் நாட்டை எடுத்துக்கொள்வோமே; தமிழ் மன்னர்கள் ஆண்ட காலத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தமிழில் புலமையுடையவர் கள்தான், அரச சபைகளில் கௌரவிக்கப்பட்டு வந்தார்கள். அரசர்கள் தமிழர்களா யிருந்தபடியால், தமிழில் சிறந்த காவியங்களை இயற்றுமாறு புலவர்களை ஊக்கினார்கள். இவர்கள் தங்களுடைய மெய்க்கீர்த்தி களையும், தாங்கள் செய்ததான தருமங்கள், திருப்பணிகள் முதலிய வற்றையும், தமிழ்ப்பாஷையில்தான், செப்பேடுகளிலும் கற்பாறை களிலும் எழுதிவைத்தார்கள். புலமைக்காகவோ பதவிக்காகவோ இவர்கள் வழங்கின பட்டங்கள்கூட தமிழ்ப் பட்டங்களாகவே இருந்தன; பிற்காலத்தில் விஜயநகர மன்னர்களின் ஆதிக்கச்சாயல் தமிழ் நாட்டின் மீது படிந்த போது தெலுங்கு பாஷைக்கு ஒரு கௌரவம் உண்டாயிற்று. தமிழர்கள் தெலுங்கிலே சாகித்தியங்கள் இயற்றிக் கடவுளைத் துதிப்பதிலே திருப்தி கொண்டார்கள். இன்றுங்கூட தமிழ் நாட்டுச் சங்கீத சபைகளில் இந்த வாடை அடித்துக்கொண்டிருக்கிறது. விஜயநகர மன்னர் களின் ஆதிக்க காலத்தில், தமிழ் நாட்டில் வெளியான தாமிரப் பட்டயங்கள், சிலா சாஸனங்கள் முதலியன தெலுங்கில் இருப்பதைப் பார்க்கிறோம். பின்னர் மஹாராஷ்டிரர்களின் செல்வாக்கு தமிழ் நாட்டில் பரவின காலத்தில் மஹாராஷ்டிர பாஷைக்கு ஒரு பெருமை ஏற்பட்டது. இப்பொழுது தமிழ் நாட்டில் காலட்சேபங்கள் செய்யப்படுகிறபோது, இடையிடையே, பாகவதர்கள், தங்களுக்குத் தெரியாத, கேட்பவர் களுக்கும் புரியாத மஹாராஷ்டிர பாஷையில் கீர்த்தனங்கள் பாடுவதைக் கேட்டி ருக்கிறோமில்லையா? இது மஹாராஷ்டிர ஆதிக்கத்தின் பரிணா மந்தான். எனவே, எந்தப் பாஷை அரசாங்கத்தின் பாஷையாக இருக்கிறதோ, அதாவது ஆளும் ஜாதியினருடைய பாஷையாக இருக்கிறதோ அந்தப் பாஷைக்குத்தான் எப்பொழுதும் கௌரவம் உண்டு. அந்தப் பாஷைக்குத் தான் வளர்ச்சியடையக் கூடிய சந்தர்ப்பங்களும் அதிகமாகக் கிடைக் கின்றன. தமிழ்ப் பாஷை இன்று இரங்கக்கூடிய ஒரு நிலையிலே யிருக்கிறதென்று சொன்னால், அதற்கு அரசாங்கத்தார் மட்டும் பொறுப்பாளிகளல்லர்; நாம் கூடப் பொறுப்பாளிகள்தான். தமிழுக்கு மட்டுந் தான் இந்தக் கதி ஏற்பட்டிருக்கிறதா? இல்லை; இல்லை. இந்தியாவிலுள்ள எல்லாச் சுதேச பாஷைகளுக்கும் இதே கதிதான். வேண்டுமானால், ஒவ்வொரு பாஷையும் வீழ்ந்து போனதில் சில வித்தியாசங்கள் இருக்கலாம். ஒன்று பொத்தென்று விழுந்திருக்கலாம்; இன்னொன்று படிப்படியாகச் சறுக்கிக்கொண்டு போய் விழுந்திருக்கலாம். ஆக, வீழ்ச்சி யென்னவோ எல்லாப் பாஷைகளுக்கும் ஒன்றுதான். எந்தப் பாஷை அரசாங்க பாஷையாக இல்லையோ அந்தப் பாஷை அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் மாற்றந்தாய்ப் பிள்ளைதான். எந்த அரசாங்கமும் தன்னுடைய பாஷையை, தன்னுடைய மதத்தை, தன்னுடைய கலாசார பரம்பரையை, தான் ஆதிக்கம் செலுத்தும் பிரதேசத்தில் பரப்பவே முயலும். அப்படிப் பரப்புவது அதற்கு அவசிய மாகவும் இருக்கிறது. ஏனென்றால், தனது பாஷை மதம், கலாசாரம் முதலியவற்றை எவ்வளவுக் கெவ்வளவு அதிக மாகவும் ஆழமாகவும் பரப்புகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாகவும் ஆழமாகவும் அதன் ஆதிக்கம் ஊர்ஜிதமடையும். பிரபஞ்ச இதிகாச மேடையிலே தோன்றி மறைந்த எல்லா அரசாங்கங்களும் இந்த முறையைக் கையாண்டிருக் கின்றன. நமக்குக் கூட வேறொரு நாட்டில் ஆதிக்கம் ஏற்பட்டால், அந்த நாட்டில் நமது பாஷையையும் நமது நாகரிகத்தையும் கொண்டு புகுத்த மாட்டோமா? ஆனால் அப்படி எண்ணுவதற்குக்கூட நமக்குச் சக்தியில்லை; யோக்கியதையுமில்லை. நமது நாட்டிலேயே நமக்கு ஆதிக்கமில்லாதிருக்கிற போழ்து, அந்நிய நாடுகளில் சென்று ஆதிக்கஞ் செலுத்த நம்மால் முடியுமென்று எண்ணுவதுகூட நம்மவரிலே பெரும்பாலோருக்குப் புரியாத விஷயம்; எட்டாத பிரச்சனை நடவாத காரியம். நம்முடைய அடிமைத்தனமானது, நம்மையே நாம் தாழ்வு படுத்திக் கொள்ளும்படி செய்துவிடுகிறது; நம்மிடத்திலே இல்லாத குறைகளை யெல்லாம் இருப்பதாக எடுத்துக்காட்டி அவற்றை மிகைப்படுத்தியும் விடுகிறது. நம்முடைய பாஷை, நம்முடைய கலைகள், நம்முடைய மதம், நம்முடைய நாகரிகம் இவைகளுக் கெல்லாம் நம்மைப் புறம்பானவர் களாக்கி விடுகிறது. அவை களிடத்தில் ஒருவித அலட்சிய புத்தியையும் நமக்கு உண்டாக்கி விடுகிறது. jÄœ eh£ony ãwªJ, jÄH®fshŒ ts®ªJ, jÄiH¥ ngá¡bfh©oU¡»w e«ktÇny gy® ‘jÄÊny v‹d ïU¡»wJ? என்றும், தமிழைப் படிப்பது மகா கஷ்டமா யிருக்கிறது என்றும் சொல்வதைக் கேட்கிறோம். இப்படிச் சொல்கிறவர்களுக்கு, அந்நிய பாஷை ஏதேனுமொன்றில் ஞானம் இருந்து, அந்தப் பாஷையைப் படித்தாவது இன்பம் அடைந்திருக்கிறார்களாவென்று பார்த்தால் அதுவு மில்லை. இவர்களுடைய அடிமை மனப்பான்மையானது, இவர்களுடைய தாய்ப் பாஷையைப் பற்றிக் கேவலமாக நினைக்கும்படி செய்து விட்டிருக் கிறது. அவ்வளவுதான். தங்களுக்குப் புரியாத ஆங்கில பாஷையில் வெளியாகும் புத்தகங்களை வாங்கி அலமாரியில் அடுக்கி வைப்பதும், பத்திரிகைகளுக்கு முன் பணமாகச் சந்தா செலுத்தி வரவழைத்து மேஜைமீது பரப்பிவைப்பதும் கௌரவமென்று எத்தனை தமிழர்கள் நினைக்கிறார்கள்? தமிழ்ப் புத்தகங்களையோ, தமிழ்ப் பத்திரிகை களையோ இவர்கள் வாங்கிப் படிக்கிறார்களென்பதை நாம் மறுக்க வில்லை. ஆனால் அப்படி வாங்கிப் படிப்பது, அவற்றைக் கௌரவிக்கும் பொருட்டுத்தான்; அவைகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கிற தோரணையில்தான். இதற்காக இவர்கள் மீது நாம் குற்றஞ் சுமத்தமாட்டோம். இவர்களுடைய அடிமை மனப்பான்மைதான் இவை யனைத்திற்கும் காரணம். அப்படியானால் நமது அடிமை மனப்பான்மை அகலுவதற்கு வழியென்ன? அரசியலிலே ஈடுபடுவது என்ற விடைதான் நமக்கு உடனே கிடைக்கும். அரசியல் என்பதற்கு இப்பொழுது என்ன அர்த்தம் கொள்ளப் பட்டிருக்கிறதென்று சொன்னால், அதிகார மில்லாத சட்டசபை போன்ற தாபனங்களிலே அதிகமான தானங்களை ஆள் மாறாட்டம் செய்வித் தாவது கைப்பற்ற முயலுவதும், மேடைகளிலே ஏறி நின்று ஆழமில்லாத வார்த்தைகளை அலங்காரமாகப் பேசி, தம்மையும் ஏமாற்றிக் கொண்டு பிறரையும், ஏமாற்றுவதும், தனக்கென்றால் ஒருவித விவகாரம், பொதுநலமென்றால் வேறொரு தினுசான விவகாரமென்று அன்றாட வாழ்க்கையையே இரண்டு கூறாகப் பிரித்துக்கொண்டு சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் ஒவ்வொரு கூறை பிரயோகப்படுத்தி அதன் மூலமாகச் சுய திருப்தி காண்பதும், இன்னோரன்ன பிறவும் அரசியலென்று கொள்ளப்படுகின்றன. உண்மையில் இவைதான் அரசியலில்லை. ஏனென்றால் அரசியலென்பது தனியான பொருளில்லை; தனியான சக்தியுமில்லை. பல பொருள் கள் அல்லது சக்திகள் சேர்ந்ததுதான் அரசியல். எப்படி கை, கால் கண், மூக்கு, செவி என்ற பல அங்கங்கள் சேர்ந்து தேகமாகிறதோ அதைப் போல் பாஷை, கலை, சமுதாயம், அந்தச் சமுதாயத்தின் பொருளாதாரம் முதலியன வெல்லாம் சேர்ந்துதான் அரசியலாகிறது. அரசியலிலே ஈடுபடுவதென்று சொன்னால், பாஷை, கலை, சமுதாயம், சமுதாயத்தின் பொருளாதாரம் இவைகளின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவன்பதுதான் அர்த்தம். பராதீனப்பட்டி ருக்கிற ஒரு ஜாதியார், இந்த அர்த்தத்தைத் தவிர வேறு அர்த்தங் கொள்ள முடியாது. கொள்ளவுங் கூடாது. பாஷை வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறவனும், ஓவியம் நாட்டியம் போன்ற கலைத்துறைகளிலே ஈடுபட்டிருக்கிறவனும், சமுதாய சேவை செய்கிறவனும், ஜனங்களின் பொருளாதார வாழ்வைச் சீர்தூக்கிப் பார்த்து மேடு பள்ளங்களைச் சமன்படுத்த வழிகாட்டுகிறவனும், எல்லோரும் அரசியல்வாதிகள் தான். ஒவ்வொருவரும் தனித் தனி துறையிலே வேலை செய்தாலும், எல்லோருடைய வேலைகளும் சேர்ந்துதான் அரசியலாகிறது. எனவே பாஷா பண்டிதர்களும், கவி உள்ளம் படைத்த கவிஞர்களும், தேசத் தொண்டிலே, அரசியல் இயக்கத்திலே ஈடுபட்டிருக்கிறார்களென்று சொன்னால், அவர்களுடைய கடமைகளை அவர்கள் செய்யப் பின்வாங்க வில்லையென்பதே அர்த்தம். ஒரு ஜாதி, உன்னத திதியிலிருக்கிற காலத்தில், அதாவது அது சுதந்திரமாக வாழ்கிற காலத்தில் அதனுடைய பாஷையும் புஷ்டியுடைய தாயிருக்கிறது. அதற்கு அலாதியான ஒரு கௌரவமும் ஏற்பட்டு விடுகிறது. இந்தக் காலத்திலே வெளியாகிற காவியங் களிலும் மற்ற நூல்களிலும் ஜனங்களுடைய மனத் திருப்தி ஒருவாறு பிரதிபலித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். புலவர்கள் தங்கள் பாண்டி யத்தியத்தையும், கவிகள் தங்கள் கற்பனையையும், சர்வ வல்லமை யுள்ளவரும் பரம கருணாநிதியுமான ஒரு கடவு ளிடத்தில் ஒப்புக் கொடுத்து விடுகிறார்கள். தாங்கள் இந்த உயர்ந்த திதியையடைந் திருப்பதற்குத் தங்களுடைய சௌரியமும், கடவுளின் கிருபையும் துணை செய்தனவென்ற தங்களுடைய நம்பிக்கையை, இவர்கள், தாங்களியற்றும் நூல்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். படைமாட்சி, செல்வச் செழிப்பு, இயற்கை யன்னையின் அழகு, காதலின் தெய்வீகத்தன்மை, செங்கோலின் சிறப்பு முதலிய விஷயங்களில் இவர்கள் மனம் வெகு சுலபமாக ஈடுபட்டு விடுகின்றது. அறிவு மேடையிலே ஏறி நின்றுகொண்டு அனந்தகோடி வித்தைகளைச் செய்துகாட்டுகிறார்கள் இவர்கள். ஆசு கவியென்றும், மதுர கவியென்றும் ஏற்பட்டதெல்லாம் உள்ளத்தை உருக்கவா? இல்லை; இல்லை அறிவை மயக்க. ஒரு ஜாதி சுய அந்ததோடிருக்கிறபோது, அந்த ஜாதி யினுடைய பாஷை, மேற்கண்ட விதமெல்லாம் தன்னை விகாசப் படுத்திக்கொண்டு பிரகாசிக்கிறது. ஆனால் அதே ஜாதியானது வீழ்ந்துபட்டிருக்கிற காலத்தில், அந்த ஜாதியைக் கைதூக்கிவிடவும் அந்த ஜாதியினுடைய பாஷை உதவிசெய்கிறது. இங்கேதான் ஒரு பாஷையினுடைய மகத்துவமும், அதன் தன்னலமற்ற சேவையும் நமக்கு வெளியாகின்றன. அதனுடைய தாய்க்குணத்தைக் கண்டு நாம் மெய்மறந்து போகிறோம் பாஷைக்கு, தாய் என்ற முன்மொழி கொடுத்தே பெரியோர்கள் பேசி வந்திருப்பதன் ரகசியம் அப்பொழுது நமக்குப் புலப்படுகிறது. ஒரு தாயானவள், தனது குழந்தைகள் சர்வ சுகத்தோடு வாழ்ந்து வருகிற காலத்தில் அவர்களால் சந்தோஷமடைகிறாள்; அவர்களுடைய சௌக்கி யத்திலே பெருமையடைகிறாள். ஆனந்த பாஷ்பம் அவள் கண் களிலிருந்து பெருகிறது. ஆனால் அதே குழந்தைகள், தங்களுடைய அசிரத்தையினாலும் அசட்டுத்தனத்தினாலும் மேற்படி சௌக்கியத் திலிருந்து விழுந்துபட்டு கஷ்டத்திலே உழன்று கொண்டிருக்கிற போது, அந்தத் தாய் மனந்துடிக்கிறாள்; துக்கக் கண்ணீர் வடிக்கிறாள். அவர்களுடைய தற்கால திதியை எடுத்துக்காட்டி அவர்களுக்கு உணர்ச்சி யுண்டாகும்படி செய்கிறாள். பழைய பெருமைகளை நினைத்துப் பார்க்கும்படி அவர்களைத் தூண்டுகிறாள். இப்படியெல்லம் செய்வது தன் கடமையென்றும், அந்தக் கடமையிலே ஒரு புனிதத்தன்மை இருக்கிற தென்றும் அவள் கருதுகிறாள். இந்தப் புனிதமான கடமையை அவள் செய்து கொண்டு வருகிற காலத்தில், அவளுடைய குழந்தைகள் ஏசவும் பேசவும் படுகிறார்கள். அப்பொழுது அவள், அவர்களைக் கட்டி யணைத்துப் பாதுகாக்கிறாள்; அந்த ஏச்சுக்களையும் பேச்சுக் களையும் தன்மீது ஏற்றுக்கொள்கிறாள். முன்னேற்ற மார்க்கத்தில் செல்லுமாறு அவர்களை உற்சாகப்படுத்திவிட, தன் கண்ணீரிலே பண்ணைக் குழைத்துக் கொடுக்கிறாள்; தன் தேகத்திலிருந்து ரத்தத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் நடக்கிற பாதையிலே அதைத் தெளித்துவிடுகிறாள். தாயி னுடைய ரத்தம் சிந்தி, பூமி கறைப்பட்டுப் போயிருப்பதைக் கண்டு, எப்படிப்பட்ட கல் மனத்தினரும் சும்மாயிருப்பார்களா? ஆர்ப்பரித்து எழுந்து நிற்கிறார்கள். அவர்களுடைய வாழ்வுச் சூரியன் உதயமாகிவிடுகிறது. தலை தெறித்த உற்சாகத்தோடு அதனை நோக்கிச் செல்கிறார்கள். அப்பொழுது கூட அந்தத் தாயார் ஓடிவந்து குழந்தைகளே! உற்சாகத்திலே, புதிய வெளிச்சத்தினாலுண்டாகிற கண் கூசுதலிலே, உங்கள் அறிவையும் இதயத்தையும் சூனியமாக்கிக்கொண்டு விடாதீர்கள் என்று சொல்லி தன் இதயத்தையே அவர்கள் முன்னிலையில் பரப்பிக்கொடுத்து அதன்மீது அவர்களை வழி நடக்கச் செய்கிறாள். ஹா! தாயன்பு! அதற்குச் சமானம் அதுதான்! வாயினால் வருணிக்கமுடியாத அதனை எழுத்தினால் எழுதிக் காட்ட முடியுமா? ஒரு தாய்க்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும் என்ன சம்பந்தம் உண்டோ அதே சம்பந்தந்தான் ஒரு பாஷைக்கும் அந்தப் பாஷையைப் பேசுகிற ஜாதிக்கும் இருக்கிறது. இதனால்தான், நமது சுய பாஷையை தாய்ப் பாஷை என்று அழைக்கிறோம். வாழ்விலும் தாழ்விலும் வழிகாட்டிக் கொண்டு செல்கிறவள் தாயல்லாது வேறு யார்? எந்த ஒரு ஜாதி, தன்னுடைய சௌபாக்கிய திதியில் தன்னை மறந்துவிடப் பார்க்கிறதோ, அந்த ஜாதியைத் தக்க தருணம் பார்த்து ஜாக்கிரதைப் படுத்திவிடும் சேவையைச் செய்கிறது ஒரு பாஷை. ஒரு சில மகா கவிகள் தோன்றி ஜாதியை எச்சரிக்கை செய்து விடு கிறார்கள். அப்படி எச்சரிக்கை செய்கிற அவர்களை, அந்த ஜாதி பல அவதிகளுக்கு ஆளாக்குகிறது. நாகரிக முன்னேற்றத்தினால் மண்டை வீங்கிப் போயிருக்கிற ஒரு ஜாதியாரிடையே விசால திருஷ்டியும், கருணை உள்ளமும் நிறைந்த ஒரு சில மகான்கள் தோன்றி மலைபோன்ற துன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஏன்? அந்த ஜாதியின் மீது மலை வந்து வீழாதிருக்க என்பது ஒரு வாசகம். இவர்கள், தாங்கள் பிறந்த ஜாதியினிடம் எவ்வளவு அதிகமாகக் கருணை வைக்கிறார்களோ, அவ்வளவுக்கதிகமாகத் துயரத்தை அனுபவிக் கிறார்கள். பதினெட்டாவது நூற்றாண்டு இறுதிப் பாகத்திலே தோன்றிய ஆங்கில மகா கவிகளான பைரன், ஷெல்லி, கீட் முதலியவர்கள் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. ஆக நாம் தெரிந்துகொள்ள வேண்டியதென்னவென்றால், ஒரு ஜாதியானது மேன்மையாக வாழ்ந்துகொண்டிருக்கிற காலத்திலும், தாழ்வாக உழன்றுகொண்டிருக்கிற காலத்திலும், அந்த ஜாதியிலே மகா கவிகள் பலர் தோன்றி, பாஷையை வளப்படுத்துகிறார்கள் என்பதேயாகும். மேன்மையான காலத்தில் பாஷை வளம்பெறுகிற விதமெப்படி யென்றால், பருத்துக் கொழுத்துக் கம்பீர நடை நடக்கிற ஒரு காளை மாட்டின் கொம்புக்குச் சாயம் பூசியும், கழுத்துக்கு மணி கட்டியும் அலங்கரித்துப் பார்க்கிற மாதிரி. தாழ்வான காலத்தில் பாஷை வளம் பெறுகிற விதமெப்படியென்றால், வெப்பத்தினால் வாடிப்போயிருக்கிற பயிரைக் களை பிடுங்கி நீர் பாய்ச்சி தலை நிமிரச் செய்கிற மாதிரி. இந்த மாதிரி இரண்டு காலத்திலும் பாஷையானது மகத்தான பணி புரிகிறது. இதனால், தானும் வாழ்ந்து தன் ஜாதியினரையும் வாழ்விக்கிறது. நமது பாரத ஜாதியானது, செல்வத்தோடும் சுயமரியாதை யோடும் வாழ்ந்த காலத்தில், வள்ளுவனும் வால்மீகியும், கம்பனும் காளிதாசனும், பாஸனும், புகழேந்தியும், ஹர்ஷனும் இளங்கோ வடிகளும் மகா காவியங்களியற்றி, பாஷைக்கு அழகும் பெருமையும் அளித்தார்கள். அதே பாரத ஜாதியானது, வீழ்ச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த காலத்தில், அந்த வீழ்ச்சியைத் தடைப்பபடுத்த, ராமதா, துகாராம், கபீர் முதலியவர்கள் தோன்றினார்கள். இவர்கள் மதம் என்கிற திரைச் சீலையை விரித்துக் கொண்டு, அதன்மீது தான் கவிச்சித்திரம் வரைந்தார்கள். இவர்களுடைய முயற்சி எதிர்பார்த்த அளவுக்குப் பயனளிக்கவில்லையாயினும், பாஷை யானது - அஃது எந்தப் பாஷையாயிருந்தாலென்ன? - ஒரு புதிய சக்தி பெற்றதென்பதை மறுக்க முடியாது. ஆனால் இதே காலத்தில் - அதாவது பதினேழாவது பதினெட் டாவது நூற்றாண்டுகளில் - தமிழ் நாட்டையும் தமிழ்ப்பாஷையையும் பொறுத்தமட்டில், ஜாதீய வீழ்ச்சியை எடுத்துக்காட்டிய கவிகளோ, புலவர்களோ தோன்றவில்லையென்பதை நாம் வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளவே வேண்டும். பின்னர், பாரத ஜாதியானது தனது சர்வத்தையும் பராதீனப் படுத்தி விட்டு அடியோடு வீழ்ந்துவிட்ட காலத்தில், அப்படி விழுந்து விட்டோ மென்பதை உணரக்கூட முடியாத அவ்வளவு ஆழத்தில் விழுந்து விட்ட காலத்தில், அதனைத் தட்டியெழுப்ப ஸர் முகம்மது இக்பால் (உருது), ரவீந்திரநாத் தாகூர் (வங்காளி), சுப்பிரமணிய பாரதியார் (தமிழ்), நாராயண வாமன திலகர் (மஹாராஷ் டிரமும் ஆங்கிலமும்), சரோஜினி தேவி (ஆங்கிலம்) முதலிய கவிகள் தோன்றினார்கள். இவர்கள் பல வசன நூல்களையும் எழுதியிருக்கிறார்கள். இவர்கள், பாஷையானது, புழுதி மண்ணிலே புரண்டு வாழும் எளிய குடியானவனுடைய இதயத்தையும் போய்த் தொட வேண்டுமென்ற பெருநோக்கமுடையவர்களாய், பாஷையை ஒரு கட்டுக்குட்படுத்திச் சிங்காரித்துப் பாராமல், அதனைத் தளர்த்திவிட்டு அது காரணமாக அதற்கு ஒரு கம்பீரத்தையும் அளித்தார்கள். இவர்களுடைய பாடல்களும் நூல்களும், சோர்ந்து கிடந்த பாரத ஜாதியின் இருதயத்தில் ஒரு துடிப்பை எழுப்பியது. இந்தமாதிரி துடிப்பை உண்டாக்குகிற சக்தி இவர்களுக்கு எப்படி ஏற்பட்ட தென்றால், இவர்கள் அத்தனை பேரும் மகா கவிகள். கவிதை யென்றால் என்னவென்பதற்கு ஓர் அறிஞன் லட்சணங் கூறுகையில், மனிதனுடைய ஆத்மா இயற்கையோடு உராய்கிற போது உண்டாகிற சப்தம் இருக்கிறதே அதுதான் கவிதை யென்கிறான். இந்தச் சப்தத்தை எந்த அளவைக்கும் நிறுவைக்கும் உட்படுத்தமுடியாது. உராய்கிற வேகத்தைப் பொறுத் திருக்கிறது உண்டாகிற சப்தம். இதனால்தான் இந்தக் கவிஞர்கள், சந்தம், சீர், தளை, அசை என்பன போன்ற வரம்புகளை மீறிச் சென்று விடு கிறார்கள். இவர்கள், தங்களுடைய ஜாதியின் அறிவிலே வாழ்கிறார் களில்லை; இருதயத்திலே வாழ்கிறார்கள். ஏனென்றால், இவர்கள் உள்ளத்திலிருந்து பொங்கி வழிகிற உணர்ச்சிகள்தான் கவிகளாக நமக்குக் காட்சியளிக்கின்றன. இருதயமுடையவர்கள் தானே, மற்றவர்களுடைய இருதயத்தில் துடிப்பை உண்டுபண்ண முடியும். மகா கவிகளுடைய பெருமையெல்லாம், அவர்களுடைய இதய விகாசத்திலேதான் இருக்கிறது. அவர்கள், எதை எப்படிப் பாடினாலும் அஃது அப்படியே நம் இருதயத்தை அசைத்துக் கொடுத்து விடுகிறது. போவாய், வருவாய், புரண்டழுவாய்; நாவாய் குழற நடுங்குறுவாய் என்று புகழேந்தி, எத்தனையோ நூற்றாண்டு களுக்கு முன்னர் சமுத்திரத்தைப் பார்த்துப் புலம்பினான். ஆனால் இன்று, அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு சமுத்திரத்தைப் பார்க்கிறபோது, அதனோடு நாமும் சேர்ந்து அலற வேண்டுமென்ற எண்ணம் நமக்கு உண்டாகவில்லையா? நமக்கு முந்திய தலைமுறையில் சுப்பிரமணிய பாரதியார், செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடிவிட்டுப் போனார். ஆனால் இந்தத் தலைமுறையிலேயுள்ள நாம் அந்த வரிகளைப் பாடுகிறபோது, நம்மையறியாமலே நமது செவிகளில் ஒருவித இன்ப ரசம் வந்து ஊறவில்லையா? இப்படிப் பட்ட உணர்ச்சிகளைக் கிளப்பு கிறவர்கள் தான் உத்தமமான கவிகள். இந்த மாதிரி உணர்ச்சிகள் நம்மிடத்தில் எழுகிறபோதுதான், நமது பாஷையின் எளிமை, செழுமை, கம்பிரம் முதலியனவெல்லாம் நம் கண் முன்னே வரிசையாக வந்து நிற்கின்றன. இந்த மகாகவிகள்தான், நமது பாஷைக்கு, அந்நிய பாஷா பண்டிதர் களிடமிருந்து சன்மானப் பத்திரம் வாங்கிக் கொடுக்கிறார்கள். எந்த ஜாதிக்குமே வாழ்கிற காலமும் உண்டு; வீழ்கிற காலமும் உண்டு. வீழ்ந்திருக்கிற காலத்தில் அதனை எழுப்ப கவிகள் தோன்றி வருவதை ஒவ்வொரு நாட்டுச் சரித்திரத்திலும் காண்கிறோம். சமீப கால சரித்திரத்திலிருந்து ஓர் உதாரணத்தை மட்டும் இங்கு எடுத்துக் காட்டுகிறோம். ஐர்லாந்தில் சுதந்திர இயக்கமானது சென்ற முதல் மகாயுத்தத்தின் போதுதான், பகிரங்கமாக வீறிட்டெழுந்தது; இந்த எழுச்சிக்குக் காரணமாயிருந்தவர்கள் கவிகள்; பாஷைத் தொண்டர்கள். ஐரிஷ் பாஷையில் இவர்கள் கவிதைகள், வசன காவியங்கள்,நாடக நூல்கள் முதலியன எழுதி ஜனங்களை விழிக்கச் செய்தார்கள். தேசீய வாழ்விலே ஏற்பட்டிருக்கிற புரைப் புண்களை யெல்லாம் இவர்கள் கொஞ்சங் கூட கூச்சமில்லாமல் எடுத்துக் காட்டி, அவற்றை அகற்ற வேண்டு மென்பதையும் வற்புறுத்தி னார்கள். அந்நிய ஆதிக்கத்தினால் படுகுழியில் வீழ்த்தப்பட்டிருந்த கெய்லிக் (ஐரிஷ்) பாஷையானது, உறங்கியிருந்த சிம்மம் உதறிக்கொண்டு எழுந்து நிற்பதுபோல், புதிய தேஜஸோடு எழுந்து நின்றது; ஜனங்கள் இதன் திருவடியிலே தலை வணங்கி நின்றார்கள். இதனால் இவர்களுக்குத் தன்னம்பிக்கையும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட்டன. அந்நியர்கள் இவர்களை அங்கீகரிக்கவும், இவர்களுக்கு மரியாதை காட்டவும் தொடங்கினார்கள். சுதந்திரக் கோயில், தன் வாயிலை இவர்களுக்குத் திறந்துவிட்டது. பாஷைக்கும் தேச விடுதலைக்கும் என்ன விதமான அந்நியோந்நியம் உண்டு என்ற உண்மையை, ஐர்லாந்தின் இருபதாவது நூற்றாண்டுச் சரித்திரம் நமக்கு நன்றாக நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இந்தப் பாடத்தை தமிழ் நாட்டார் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டின் இலக்கிய மறுமலர்ச்சியைக் கண்டு நாம் கொஞ்சங்கூட சந்தோஷப்படவோ, பெருமை கொள்ளவோ முடிய வில்லை. இன்றைய தமிழ் நாட்டின் அரசியல், மந்த கதியோடு செல்கிற தென்றால் அதற்குக் காரணம், நமது பாஷைக்கும் நாம் இன்னும் ஜீவ களையை உண்டு பண்ணாமலிருப்பதுதான். தமிழ் பேசுவோர் அத்தனை பேரும் தமிழர்கள் என்ற எண்ணம் இன்னும் நமக்கு உண்டாகவில்லை. தமிழை உய்விக்க வேண்டும்; உய்விக்க வேண்டும், என்று நம்மிலே சிலர் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள், அந்த உய்வுக்காக எவ்வளவு தூரம் தியாகஞ் செய்யச் சித்த மாயிருக்கிறார்களென்று பார்க்கிற போது, மனத்தடுமாற்றத்தையே காண்கிறோம். இருதய சுத்தமில்லாமல் பாஷையோ, தேசமோ, ஜாதியோ முன்னேறவே முடியாது. இந்த இருதய சுத்தத்தை உண்டாக்கி, அதில் ஒரு துடிப்பை உண்டாக்குகிற நூல்கள் பல தமிழில் வெளிவர வேண்டும். மூல நூலோ, வழி நூலோ எதுவா யிருந்தாலும் அது, நமது சிந்தனையை எவ்வளவு தூரம் தூண்டி விடுகிறது என்று நாம் பார்க்கவேண்டும். பொழுது போக்குக்கான நூல்களோ, அலமாரிகளில் அலங்காரமாக அடுக்கி வைக்கிற நூல்களோ நமக்குத் தேவையில்லை. நமது இருதயத்தைத் திறந்துவிடுகிற நூல்களே தேவை. இப்படிப்பட்ட நூல்கள் வெளியாவதற்குப் பணம் படைத்த தமிழர்கள், தங்கள் கைகளைச் சிறிது தாராளமாக நீட்ட வேண்டும். இளந்தமிழர்கள் பலர், தங்கள் அறிவையும் இருதயத்தையும் வறுமையிலே மடக்கி வைத்துக் கொண்டு இருட்டான மூலைகளில் ஒதுங்கிக் கிடக்கிறார்கள். இவர்களை முன்னுக்கிழுத்து நிறுத்தி, இவர்கள் மூலமாகத் தமிழ்ப் பாஷைக்கு ஒரு செல்வாக்கைத் தேடிக் கொடுக்க வேண்டுவது செல்வர்களின் கடமை. 3. தமிழ் நாடு ஒரு நாட்டில் மண்ணும், மலையும், ஆறும் செழித்திருக்கலாம். ஆனால் அவற்றை உபயோகிக்கத் தெரியாத மனிதர்கள் அதில் வசிக்கலாம். அப்படி உபயோகிக்கத் தெரிந்திருந்தாலும், அவர்களுக்கு உபயோகிக்கிற உரிமை இல்லாமலிருக்கலாம். உபயோகிக்கிற உரிமை இருந்தால் மட்டும் போதுமா? இருதய விசாலம் வேண்டாமா? கலை ஞானக் கோயிலைச் சமைக்கும் திறமை வேண்டாமா? எல்லாந்தான் வேண்டும். அறிவு, இருதயம், சுதந்திரம் ஆகிய மூன்றும் ஒரு நாட்டு மக்களுக்கு இருந்தால்தான் அந்த நாட்டை உலகம் மதிக்கும். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்று குறைந்தாலுங் கூட அந்த நாட்டுக்கு ஒரு களங்கந்தான். சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் கூறப்போனால், உயிருள்ள மனிதர்கள் நிறைந்த ஒரு நாட்டுக்குத்தான் மதிப்பு உண்டு. இப்படிப்பட்ட மதிப்பைத் தற்போதைய தமிழ்நாட்டுக்குக் கொடுக்க முடியுமா? வெளியார் பலர் நமக்கு எவ்வளவு அதிகமான மதிப்பைக் கொடுத் தாலும் நமக்குத் திருப்திதான். ஆனால் அந்த மதிப்பு உண்மையான மதிப்பா, போலி மதிப்பா என்று நாம் பரிசீலனை செய்து பார்க்கவேண்டும். மற்றும், பிறர் மதிப்புக்கு நாம் பாத்திரமாக வேண்டுமானால், நாம் அதற்கு எவ்வளவு தூரம் நம்மைப் பக்குவப் படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதையும் பார்க்கவேண்டும். நம்முடைய பக்குவத்தைப் பொறுத்துத் தான் நமக்கு ஏற்படுகிற மதிப்பும் இருக்கும். பக்குவத்திற்குப் பொருத்த மில்லாத மதிப்புக் கொடுக்கப்படுமானால் அந்த மதிப்புக்கு அர்த்தமே கிடையாது. தமிழ் நாட்டிலே ஒரு வள்ளுவன் தோன்றினான்; ஒரு கம்பன் பிறந்தான். ஒரு கரிகாற் பெருவளத்தான் ஆண்டான்; ஒரு ராஜேந்திர சோழன் போர் பொருது புகழ் கொண்டான். வாதவம் ஆனால், இவைகளினால் இப்பொழுது நமக்கு என்ன ஆயிற்று? இப்பொழுது நமது நிலைமையென்ன? பழைய பெருமை என்னும் இடிந்த கட்டடத்தில் எத்தனை நாள் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்? என் தகப்பனார் கலெக்டர் உத்தியோகம் செய்துவிட்டுப் போயிருந்தால் எனக்கென்ன ஆயிற்று? அதில் எனக்கென்ன பெருமை? கலெக்டர் மகன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் வயிறு நிரம்பி விடுமா? அறிவு பண்பட்டு விடுமா? இருதயத்தில் ஈரம் உண்டாகுமா? எந்தத் தேச மாகட்டும், எந்த ஜாதி யாகட்டும், தன் இறந்த காலப் பெருமையிலே நிகழ்கால வாழ்வை நடத்தத் தொடங்குமேயானால், அந்த வாழ்வு மணல் மேட்டில் கட்டின வீடு மாதிரிதான். ஒவ்வொரு தலைமுறையும், தன் உழைப்பைக் கொண்டு தான் ஊதியம் பெற வேண்டும். பழைய தலைமுறையிலே தஞ்சம் புகுந்து கொள்ளப் பார்ப்பது, பிறருடைய தயவிலே வாழ்க்கையை நடத்துவதைப் போலத்தான். இந்த உண்மைகளைத் தமிழ் நாட்டு மகாஜனங்கள் எவ்வளவு விரைவிலே உணர்ந்து கொள்கிறார்களோ அவ்வளவு நல்லது. கம்பன் அயோத்திமா நகரத்தின் சிறப்பைப் பின்வருமாறு வருணிக்கிறான். கல்லாது நிற்பார் பிறரின் மையிற் கல்வி முற்ற வல்லாரு மில்லை யவை வல்லரல் லாருமில்லை எல்லாரு மெல்லாப் பெருஞ் செல்வமு மெய்தலாலே இல்லாரு மில்லை யுடையார்களு மில்லை மாதோ. தமிழ் நாடு இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதை லட்சியமாக வைத்துக்கொண்டு கம்பன் இவ்வாறு பாடி யிருக்கிறான் என்று நாம் ஊகிக்கிறோம். ஆனால் அதே கம்பன் புனர் ஜன்மம் எடுத்துக்கொண்டு வந்து இன்றைய தமிழ் நாட்டைக் காண்பா னாயின், அந்தோ! நான் வாழ்ந்த தமிழ் நாடா இது! நான் கண்ட காவற் கோட்டங்களெங்கே? மள்ளர் உழுபடைக ளெங்கே? தானியக் களங்சியங்க ளெங்கே? மறலியைப் புறங்காணும் ஆற்றல் வாய்ந்த வீரர் படைகளெங்கே? ஆதுலர் சாலைகளும், ஓதுவார் மண்டபங்களும் எங்குப் போயின? என்றெல்லாம் சொல்லி ஏங்குவான். இன்றைய தமிழர் சமுதாயம் உடைந்து, உருக்குலைந்து, எடுப்பார் கைப்பிள்ளையாய் இருப்பதைப் பார்த்து அந்தக் கம்பன் மனமுடைந்து போவான். ஏன் புனர் ஜென்மம் எடுத்தோம் என்ற வெறுப்புக் கூட அவனுக்கு ஏற்பட்டு விடும். அப்படி வெறுப்பு ஏற்பட்டு விடும் என்பதற்காகத்தானோ என்னவோ, மற்றொரு கம்பன் தமிழ் நாட்டில் இன்னும் பிறக்க வில்லை போலும்! இன்றைய தமிழ் நாடு எப்படி இருக்கிறது? இதனை லெனி னுடைய வாசகத்திலேயே கூறிவிட விரும்புகிறோம். ஓர் அடி முன்னே; இரண்டடி பின்னே, தமிழ்நாடு முன்னேறிக்கொண்டு வருகிறதென்பதை நாம் மறுக்கவே யில்லை. ஆனால் அதற்கு இரண்டு மடங்கு பிற்போக்கும் அடைந்து வருகிறது. இப்படி நாம் கூறுவது அநேகருக்குக் கசப்பாயிருக் கலாம். ஆனால் தமிழ் நாட்டின் மீது நமக்குள்ள தணியாத காதலாலும், தமிழர் சமுதாயத்தின் எதிர்காலம் மிகப் பிரகாசமாயிருக்க வேண்டு மென்ற ஆதுரத் தாலுமே நாம் இப்படிக் கூறுகிறோம். புண்ணைக் கீறிவிடுவது அதனை ஆற்றும் நோக்கத்துடன்தான். சம்ஹாரத்திற்குப் பிறகுதான் சிருஷ்டி. துஷ்டர்களை நிக்ரகம் செய்தால்தான் சிஷ்டர்களைப் பரிபாலிக்க முடியும். பயிர்களுக்கு நடுவே விறுவிறுப்பாக முளைக்கும் களைகளைப் பிடுங்கி யெறிந்தால்தான் பயிர் செழிப்பாக வளரும். குழந்தையின் வயிற்றிலிருக்கும் கசு மலங்களைப் போக்கவே, தாயார் அதற்கு விளக்கெண்ணெய் புகட்டுகிறாள். அஃது அழுகிறதே யென்று சொல்லி, தனது அன்புச் சேவையை அவள் செய்யாமல் விட்டு விடுவதில்லை. இந்த திருஷ்டியோடுதான் நமது கருத்துக்களை அன்பர்கள் பார்க்க வேண்டுகிறோம். ஒரு மனிதனை வெளியே பார்த்து மகிழ்ந்து விடாதே; உள்ளே பார் என்றான் ஓர் அறிஞன். இந்தக் கண் கொண்டுதான் ஒரு ஜாதியையும் நாம் பார்க்க வேண்டும். ஒரு ஜாதியினுடைய புற வாழ்க்கை மிகவும் பகட்டாயிருக்கலாம். ஆனால் அதன் அகவாழ்வு அழுகிப்போயிருக்கலாம். அப்படியானால் அந்த ஜாதியை நாம் எப்படிச் சிலாகிக்க முடியும்? ஒரு வீட்டின் வெளிப்புறச் சுவர்களுக்கு மட்டும் சுணணாம்படித்து விட்டுத் திருப்தியடைகிற சுபாவம் நமக்கு இல்லை. உள்ளே யிருக்கிற குப்பை கூளங்களை அப்புறப்படுத்தி விட்டு நடு வீட்டில் நாகரிக விளக்கை ஏற்றி வைப்பதிலே தான் நமக்குத் திருப்தி. அதுதான் நமது லட்சியம். பிரபஞ்ச இதிகாசம் என்னும் தங்கக் கட்டடத்தில் தமிழர் சமுதாயம் என்றும் வைரக் கல்லைப் பதித்து வைத்துப்பார்க்க விரும்புகிறோம். அப்படி யானால் அந்த வைரம் மாசுமறு வில்லாமல் இருக்க வேண்டாமா? ஒரு சிலரோடு சேர்ந்துகொண்டு நாமும் தமிழா! Éʤ bjG! என்றோ, எழுமின்! விழிமின் என்றோ சொல்லத் தயாரா யில்லை. தமிழன் எப்பொழுதோ விழித்துக்கொண்டு விட்டான். அவனைச் சுற்றியிருக்கிற சக்திகள் அவனை விழித்துக்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு உட்படுத்தி விட்டன. ஆனால் அவன் இன்னும் பார்க்கவில்லை. இந்தப் பார்வை யில்லாத காரணத்தினால் தான், ஓர் அடி முன்னுக்குப் போகிறான். ஆனால் உடனே இரண்டடி பின் வாங்கிவிடுகிறான். ஆகாசத்திலே பிரகாசித்துக் கொண்டிருக்கும் சந்திரனைக் கைப்பற்றுவதாக எண்ணிக் கொண்டு அவன் தன் கைகளை விரித்து நீட்டுகிறான். ஆனால் அதே சமயத்தில் அவன் கால்கள் சொருகு மணலில் இழுத்துக்கொண்டு போகின்றன. தற்போதைய தமிழர் சமுதாயத்திற்குக் கண் உண்டு; ஆனால் பார்வையில்லை. காதுண்டு; கேள்வியில்லை. காலுண்டு; நடை யில்லை. நெற்றியுண்டு; திலகமில்லை. தலையுண்டு; திரமில்லை. இப்படியே விட்டு வைக்கலாமா? இதற்கு ஒரு பரிகாரம் தேட வேண்டாமா? தமிழ் நாட்டின் அரசியல் துறைக்கு முதலில் சென்று பார்ப் போம். கிராம மகாநாடுகளென்ன, தாலுகா மகாநாடுகளென்ன, ஜில்லா மகாநாடுகளென்ன, எல்லாம் ஊருக்கு ஊர், இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் கூடுகின்றன. இந்த மகாநாடுகளில் அநேக தீர்மானங் களும் நிறைவேற்றப்படுகின்றன. இதனோடு இந்த மகாநாடுகள் சமாப்தியடைந்து விடுகின்றன. மகாநாடுகளில் நிறைவேற்றப்படுகிற தீர்மானங்கள் நடைமுறையில் கொணரப்பட ஏதேனும் முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றனவா? அதற்கென்று ஏதேனும் தாபனங்கள் இருக்கின்றனவா? அல்லது பிரதி வருஷத்து மகாநாட்டிலும் அந்தந்தப் பிரதேசத்தில் என்னென்ன வேலைகள் நடைபெற்றன வென்று பரிசீலனை செய்யப்படுகின்றதா? இல்லவே இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் ருஷ்ய சர்வாதிகாரியான டாலின், ஒரு மகாநாட்டில் நிறைவேற்றப்படுகிற தீர்மானங்களைப் பற்றிக் கூறிய வாசகங்கள் நமது ஞாபகத்திற்கு வருகின்றன:- ஒரு கட்சித் திட்டத்தை பொதுப்படையான வாசகங் களினால் வகுத்து, அதனைத் தீர்மான ரூபமாக வரைந்து, ஏகமனதாக நிறைவேற்றி, உரத்த குரலில் அந்தத் தீர்மானங்கள் சம்பந்தமாகப் பேசிவிடுவதனால் மட்டும் வெற்றி ஏற்பட்டு விடுமென்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. அப்படி நினைக்கிறவர்கள் தவறான காரியத்தைச் செய்தவர்களாகிறார்கள். . . . வெற்றி தானாக நம்மை வந்து அடைவதில்லை. நாம் அதனைக் கையினால் பிடித்திழுத்தால் தான் வரும். நல்ல தீர்மானங்கள் நிறை வேற்றுவதும், பிரதிக்ஞைகள் எடுத்துக்கொள்வதும் ஆரம்ப நிலைதான். வெற்றிபெற வேண்டு மென்ற ஆவல் நமக்கு இருக்கிறதென்பதையே இவை காண்பிக் கின்றன. ஆனால் இதுவே இந்த ஆவலே வெற்றியாகாது. சரியான திட்டம் வகுத்துக்கொண்டு விட்ட பிறகு, நமது பிரச்சனைகளுக்குச் சரியான பரிகாரம் கண்டுபிடித்து விட்ட பிறகு, நமது வேலைத் திட்டத்தை நடைமுறைக்குக் கொணர வேண்டும். கண்டுபிடிக்கப் பட்ட பரிகாரங்களைப் பெற போராடவேண்டும். சரியான தொண்டர்களைத் தெரிந்தெடுத்து அவர்களிடமிருந்து வேலை வாங்கவேண்டும். நமது கட்சி தாபனங்கள் ஒழுங்காக வேலை செய்கின்றனவாவென்று கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும் இந்த மகாநாடுகள் நிரந்தர தாபனங்களாக அமைந்து கொள்ளாமல் நாடோடி வாழ்க்கையை நடத்திக் கொண்டி ருப்பதிலேதான் திருப்தி கொள்கின்றன. இதற்காக ஆயிரக்கணக்கில் பணச் செலவு! இதில் பெரும் பகுதி - பெட்ரோல், ப, மோட்டார், காகிதம் முதலிய பல சில்லரைச் செலவினங்கள் - அந்நிய நாடு களுக்குச் செல்கின்றன. மகாநாட்டுக்குப் போய்வந்த யாரொரு வரையேனும் பார்த்து நாம் மகாநாடு எப்படி? என்று கேட்டால், மகாநாடு மிக நன்றாக நடைபெற்றது; சாப்பாட்டு விமரிசை. மகா அற்புதம் என்று உடனே பதில் கிடைக்கிறது. அல்லது அந்தத் தீர்மானத்தை எதிர்த்து இன்னார் பேசியது எவ்வளவு அழகா யிருந்தது? கொஞ்சம் கூடப் பதறாமல் கையிலே எவ்விதக் குறிப்புக்களும் வைத்துக் கொள்ளாமல் ஒன்றரைமணி நேரம் வாசாமகோசரமாகப் பேசினார். என்றாவது கேள்விப்படுகிறோம். மகாநாட்டின் பலன்கள் இவ்வளவோடு தான் முடிந்துவிடுகின்றன. இந்த மகாநாடுகளில் செலவழிக்கிற பணத்தைக் கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தாலுகா தலைநகரத்திலும், ஒவ்வொரு ஜில்லா தலைநகரத்திலும் சாசுவதமான கட்டடங்கள் கட்டி அதில் ஓர் அரசியல் தாபனத்தை ஏன் நிறுவக்கூடாது? ஒரு பிரதேசத்தைச் சபையென்று சொன்னால், அஃது அந்தப் பிரதேசத்தின் பிரதிநிதிச் சபையாகக் கௌரவிக்கப்பட வேண்டும். அந்தந்தப் பிரதேசத்தில் வசிக்கும் ஜனங்களுடைய அரசியல் அபிலாஷையைப் பிரதிபலிக்கிற கழகமாக இந்தக் கட்டடங்கள் இருக்கவேண்டும். ஒரு பிரதேசத்தின் நியாயாலயம் எங்கே இருக்கிறது, கலை பயில் கழகம் எங்கேயிருக்கிறது, உடற் பயிற்சி சாலை எங்கேயிருக்கிறது; நூல் நிலையம் எங்கேயிருக்கிறது, நடன சாலை எங்கேயிருக்கிறது என்று யாரேனும் கேட்டால் எல்லாவற்றிற்கும் இந்தக் கட்டடமே சுட்டிக் காட்டப்பட வேண்டும். சமுதாயத்தைச் சேர்ந்த பல படியினருடைய அறிவுக்கும் இதயத்திற்கும் உணவு ஊட்டும்படியான குறையாத களஞ்சியமாக இந்தக் கட்டடம் இருக்கவேண்டும். இங்ஙனமெல்லாம் அமைத்துக்கொள்வது ஒரு பெரிய காரியமல்ல. கிராமப்பற்று அல்லது தாலுகா பற்று அல்லது ஜில்லா பற்று உடைய ஒரு பணக்காரர் மனம் வைத்தால் அவரவருடைய பிரதேசத்தில் மேலே சொன்ன வகையில் ஒரு கட்டடத்தை எழுப்பிவிடலாம். அல்லது அவ்வப் பொழுது கூடிக் கலைகிற மகாநாடுகளுக்கு வசூலிக்கப்படுகிற நன்கொடை களை மட்டும், வேறெக்காரியத்திற்கும் உபயோகப்படுத்தாமல் இந்தக் கட்டடத்தைச் சமைக்க உபயோகித்தால், அதுவே போதும். இதுவும் முடியாமற் போய்விட்டால், அந்தந்தப் பிரதேச வாசிகள் ஒவ்வொருவரும், தங்களுடைய மாதாந்தரச் சாப்பாட்டுச் செலவு என்ன ஆகிறதென்று கணக்குப் போட்டுப் பார்த்து, அதில் ஒருநாள் சாப்பாட்டுச் செலவுத் தொகையை, இந்தக் கட்டட தாபனத் திற்காகக் கொடுக்குமாறு செய்ய வேண்டும். இந்தத் தியாகத்தை எல்லா ஜனங்களிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாதென்பதை நாம் அறிவோம். ஆனால் ஓர் அரசியல் தாபனத்தின் அங்கத்தினர்களா யுள்ளவர்கள், லட்சியத்தில் அநுதாபமுடையவர்கள் முதலியோர் களிடமிருந்தாவது இந்தத் தியாகத்தை எதிர்பார்க்கக் கூடாதா? தியாகஞ் செய்யாமல் நமது லட்சியத்தையடைய முடியாது. உழைப் பில்லாமல் இன்பங் காணமுடியாது. வாய்ப் பேச்சுக் களினாலேயோ, காகிதத் தீர்மானங்களினாலேயோ ஒரு தேசம் சுதந்திரம் அடைந்து விட்டதாக, ஒரு ஜாதி முன்னுக்கு வந்து விட்டதாக உலக சரித்திரம் நமக்குச் சாட்சி சொல்லவில்லை. நான் இன்ன தாபனத்தைச் சேர்ந்தவன். ஒரு தொகையைச் சந்தாவாகச் செலுத்தி அங்கத்தினனாயிருக்கிறறேன் என்று சொல்லிக் கொள்வதினால் மட்டும், ஒருவனுடைய பொறுப்பு கழிந்துவிட வில்லை; அவனுடைய கடமை முடிந்துவிடவில்லை. அப்படிக் கூறுவானாயின் அவன் அந்த தாபனத்திற்குச் சொந்தமான வனல்லன்! இன்ன தாபனத்தைச் சேர்ந்தவன் என்றால் ஒ அவனா மற்றவர்களுடைய குறைகளைக் கவனிக்கிறவனல்லவோ? அந்தக் குறைகளுக்குப் பரிகாரந் தேடுகிற வனல்லவோ? கடமையைச் செய்வதில் தாட்சண்யம் பாராத வனல்லவோ? என்று தான் மற்றவர்கள் சொல்லவேண்டுமே தவிர நம்மைப் போல் அவனும் சாதாரணப் பெயர் வழி என்று நினைக்கவே கூடாது. சுருக்கமாகக் கூறப் போனால், ஒவ்வொரு தாபனக்காரனும், சமுதாயத்தின் தர்மகர்த்தனாக இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் ஜீவநாடி ஒழுங்காக அடித்துக்கொண்டிருக்கிறதென்று சொன்னால், அந்தத் துடிப்புக்குத் தேவையான சக்தியை ஒழுங்காக அளித்துக் கொண்டிருக்கும் டைனமோ (யந்திரமாக)வாக ஒவ்வொரு தாபனக் காரனும் இருக்கவேண்டும். சமுதாய வாழ்க்கையின் கண்ணாடிபோல் பிரதி தாபனக்காரனுடைய வாழ்க்கையும் இருக்வேண்டும். ருஷ்யாவில், ஒருவன் கம்யூனிட் கட்சி அங்கத்தினனாகவேண்டுமானால், அவன் அதற்கு முன் அநேக பரீட்சைகளில் தேறவேண்டும். யாராவது ஒருவன் அசட்டுத்தனமானதொரு காரியத்தைச் செய்துவிட்டால் இஃதென்ன? சோவியத் காரியமாக இல்லையே என்று சுட்டிக் காட்டுவார்கள். என்ன ஜாதீய அபிமானம் பார்த்தீர்களா? ஜாதீய கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பதிலே எவ்வளவு ஆவல் பார்த்தீர்களா? ஒவ்வொரு தாபனமும், தான் போடுகிற திட்டங்களை நடை முறையில் கொணரும் பொருட்டு அநேக தொண்டர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். எல்லா அங்கத்தினர்களும், தங்களுடைய பூரா நேரத்தையும் தாபனத் திருப்பணியிலே செலவிட முடியாதல்லவா? இதனால்தான் அங்கத்தினர்களிலிருந்தே சில தொண்டர்களைப் பொறுக்கி யெடுத்துக் கொள்ள வேண்டுமென்று கூறுகிறோம். ஆனால் இத்தனை வருஷம் அங்கத்தினராயிருந்தவர்கள்தான் தொண்டர் பதவிக்கு லாயக் குள்ளவர்களென்று ஒரு கண்டிப்பான விதி ஏற்படுத்திவிட வேண்டும். இந்தத் தொண் டர்கள், தாபனம் என்கிற பெரிய நீர்த்தொட்டியிலிருந்து புறப் படுகிற அநேக குழாய்கள் மாதிரி. இவர்கள் கௌரவ உத்தியோ கதர்களாக நியமிக்கப்படக் கூடாது. கௌரவ சேவையிலே நமக்கு நம்பிக்கை கிடையாது. வயிற்றிலே ஈரத் துணியை மடித்துப் போட்டுக்கொண்டு, காற்றை ஆகாரமாக உட்கொண்டு தொண்டு செய்; தியாகம் செய் என்று சொல்வது மகா பாவம். கார்ல் மார்க் சொன்ன மாதிரி, ஒருவன் சம்பாதிக்கிறதற்காக உழைக்க வேண்டாம்; ஆனால் உழைப்பதற்காக சம்பாதிக்க வேண்டும். ஒருவனுக்குக் குடும்பக் கவலையில்லாம லிருந்தால்தான், அவன் தன் சக்தி யனைத்தையும் சமுதாய நன்மைக்காக உபயோகிக்க முடியும். குடும்பப் பற்றில்லாதவர்கள்தான் தொண்டர்களாக நியமிக்கப் பட வேண்டும் என்று சிலர் கூறலாம். குடும்பப்பற்று எனக்கில்லை யென்று ஒருவன் சொன்னால், அவன் ஒரு சந்தேகப் பேர்வழி யென்றுதான் நாம் கொள்கிறோம். அவனைச் சந்தேகப் பார்வையுடன்தான் நாம் பார்க்கிறோம். குடும்பப் பற்றில்லாதவன் சமுதாயத்தின் மீது எப்படிப் பற்றுடையவனாயிருக்க முடியும்? குடும்பப் பற்றிலிருந்து கிராமப் பற்று; கிராமப்பற்றிலிருந்து தாலுகா பற்று; தாலுகா பற்றிலிருந்து ஜில்லா பற்று; ஜில்லா பற்றிலிருந்து மாகாணப் பற்று; மாகாணப் பற்றிலிருந்து தேசப் பற்று; தேசப் பற்றிலிருந்து உலகப் பற்று. இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்றிலிருந்து மற்றொன்று ஆரம்பிக்கிறது. இவை யெல்லாவற்றையும் துறந்து விட்டு, நான் உலக சேவை செய்கிறேன் என்று ஒருவன் சொல்வானாகில் அவன், நுனிக்கிளையிலிருந்து அடிமரத்தை வெட்டுகிறவன். அவன் கீழே விழுவது நிச்சயம். ஆனால் இதற்குப் புறநடையாக, அவ்வப்பொழுது உலகத்தில் சில மகான்கள் தோன்றுகிறார்கள் என்பதை நாம் அறியாமலில்லை. இவர்கள் குடும்பப் பற்றில்லாமலே உலக சேவை செய்கிறார்கள். இவர் களையே ஹிந்து தர்மம், சந்நியாசிகள் என்று அழைக்கிறது. சுவாமி விவேகானந்தர் போன்றவர்கள் துறவியாயிருந்து மகத்தான உலக சேவை செய்திருக் கிறார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள், இந்தப் பிரபஞ்சத்தையே தங்கள் குடும்பமாகக் கருதிக் கொள்கிறார்கள். உலகமாகிற பெரிய வட்டத்தைக் குடும்பமாகிற சிறிய மையத் திலிருந்து பார்ப்பதிலேதான் இவர்கள் திருப்தி கொள்ளுகிறார்கள். இத்தகையவர்களும் தாபனங்களுக்குத் தேவை. இவர்களை ஜில்லா தாபனங்களின் தலைவர்களாக, அல்லது மாகாண தாபனங்களின் தலைவர்களாக நியமித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இத்தகையவர்கள் தோன்றுவது அபூர்வம். பதினா யிரத்திற்கு அல்லது லட்சத்திற்கு ஒருவராகவே தோன்றுவார்கள். எனவே, ஒவ்வொரு தாபனத் தொண்டருக்கும் குடும்பக் கவலை யில்லாமல் செய்துவிட வேண்டும். அவர்களுடைய மாதாந்த ஜீவனத் திற்குக் குறைந்த பட்சம் எவ்வளவு தேவையோ அது மாதச் சம்பளமாகக் கிடைக்குமாறு ஏற்படுத்தி விடவேண்டும். பிரதி தொண்டருடைய சம்பள நிர்ணய விஷயத்திலும், அவர்களுடைய உழைப்பு, தேவை யென்பவைகளே முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். இத்தொண்டர்களுக்குச் சில தகுதிகள் வேண்டும். இதற்காக ஆங்காங்குத் தொண்டர் பயிற்சி தாபனங்கள் நிறுவப்பட வேண்டும். தொண்டர்களாகப் பொறுக்கியெடுக்கப் படுகிறவர்கள், முதலாவது திடகாத்திரமுடையவர்களாக இருக்க வேண்டும். எவ்வித கடின உழைப்புக்கும் சலிப்படையக் கூடாது. இயற்கை வாழ்வை நடத்தக் கூடியவர்களாக இருக்கவேண்டும். சத்திரத்திலே போஜனம், மடத்திலே நித்திரையென்று சொல்வார்களே, அந்த மாதிரி காலங் கழிக்கும் மனப்பான்மை யுடையவர்களாயிருக்கவேண்டும். தம்முடைய சுகத் திற்கு, தம்முடைய தேவைகளுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. பிறருடைய நல்வாழ்வுக்குத் தான் நாம் தொண்டர் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே தவிர, நமது ஜீவனோபாயமாக இதனை ஏற்றுக்கொள்ள வில்லை யென்ற சங்கல்பம் ஒவ்வொரு தொண்டருடைய மனத்திலும் ஊர்ஜிதமாகிவிட வேண்டும். இரண்டாவது, தொண்டர்கள், அரசியல் ஞானமுடையவர் களா யிருக்க வேண்டும். தாங்கள் வசிக்கும் பிரதேசத்தைப் பற்றிய பூகோள ஞானம், சரித்திர ஞானம் இவர்களுக்கு இருந்தால் தான், அந்தப்பிரதேச வாசிகளுடன் இவர்கள் நெருங்கி உறவுகொள்ள முடியும். உலகத்திலுள்ள அரசியல் அமைப்புகள் எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றன வென்பதை இவர்கள் தெரிந்து கொண்டால் தான், தங்கள் நாட்டு அரசியல் விவகாரங்களில் தீவிரமாகக் கலந்து கொள்வதற்கு அனுகூலமா யிருக்கும். மூன்றாவது, தொண்டர்களுக்கு நாவன்மை வேண்டும். நா வசைந்தால் நாடசையும் என்பார்கள். ஜனங்களுடைய மனத்தில் பதியக்கூடிய மாதிரி பேசும் ஆற்றல் இருந்தால் தொண்டர்கள் வேலை சுலபமாகி விடும். நான்காவது, தொண்டர்களுக்கு நிர்மாண சக்தியும் நிருவாக சக்தியும் வேண்டும். எந்த தாபனத்தையும் சுலபமாக ஆரம்பித்து விடலாம். அப்படி ஆரம்பிக்கிற காலத்திலேயே அதற்குப் பலமான அதிவாரம் போட்டு ஆரம்பித்துவிட்டால், அது நீடித்து நடைபெறும். ஒரு தாபனம், அது நிருவகிக்கப்படுகிற திறமையி லேயே பெருமையடைகிறது. ஐந்தாவது, தொண்டர்கள் ஆரம்ப வைத்தியப் பயிற்சியுடைய வர்களாகவும், சுகாதார ஞானமுடையவர்களாகவும் இருக்க வேண்டும். ஜனங்கள், நோய்களினின்று தப்பித்துக்கொள்ளும் உபாயங்களை இவர்கள் கையாள வேண்டும். இப்படி, பலபட்ட தகுதிகளைக் கொண்ட தொண்டர்களைப் பிரதேச வாரியாக நியமித்து, இவர்களைக் காலாகாலத்தில் மேற்பார்வை செய்யச் சில அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். இந்த மாதிரியான வேலைகளையே நமது அரசியல் தாபனங்கள் செய்யவேண்டும். பிரதி ஜில்லா தாபனங்களும், அந்தந்த ஜில்லாவில் உற்பத்தி யாகிற விளைபொருள்கள் என்ன, அந்த ஜில்லாவாசிகளின் ஆகாரத் தேவைகளை இந்த விளை பொருள்கள் எவ்வளவுக்குப் பூர்த்தி செய்கின்ற என்பன போன்ற விவரங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு, பஞ்சத்தினாலும், வெள்ளத்தினாலும் அதிகமான பாதகம் உண்டாகாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேசத்தின் பொருளாதார வாழ்வும் அரசியல் வாழ்வும் பிரிக்க முடியாத பின்னல்கள். ஆகையால், ஜனங்களின் பொருளாதார அந்ததை உயர்த்துவதும் இந்த தாபனங்களின் நோக்கமாயிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் எத்தனையோ வீரர்களும், ராஜதந்திரிகளும், கவிஞர் பெருமான்களும், அடியார்களும் தோன்றி மறைந்திருக் கிறார்கள். இவர் களை நாம் மறந்துவிடலாமா? இவர்கள், நமக்கு எத்தனையோ வகை களில் வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்த வழிகளை நாம் பின் பற்ற வேண்டுமானால், இவர்களை அடிக்கடி ஞாபகப் படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக இவர்களுடைய ஜன்ம தினங்களை அல்லது இறந்த நாட்களைத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டும். அப்பர், சம்பந்தர் போன்ற அடியார்களும், கம்பர், திருவள்ளுவர் போன்ற கவி திலகங்களும், கரிகாலன், ராஜேந்திர சோழன் போன்ற அரசர்களும், அரியநாயக முதலியார், தளவாய் ராமப்பையன் போன்ற ராஜ தந்திரி களும், தமிழர் வாழ்க்கையோடு ஐக்கியப்பட்டுப் போயிருக்கிறவர்கள். இப்படிப்பட்டவர்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இவர்களுடைய ஜாபிதா ஒன்றைத் தயாரித்து, இன்னின்னாருடைய திருநாட்களை இன்னின்ன தேதிகளில் கொண்டாட வேண்டு மென்று நிர்ணயப்படுத்தி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இங்ஙனம், தமிழ் நாட்டுப் பெருமக்களுடைய திருநாட்களைக் கொண்டாடுவது, சர்வ இந்தியாவுக்கும் அகில உலகத்திற்கும் பொதுவாயுள்ள மகான்களின் திருநாட்களைக் கொண்டாடுவதற்கு எவ்விதத்திலும் முரண்படக் கூடாது. உதாரணமாக, கிருஷ்ணன், ராமபிரான், கிறிதுநாதர், முகம்மது நபி முதலியோருடைய ஜன்ம தினங்களை எல்லாத் தமிழர்களும் கொண்டாட வேண்டும். இவை தவிர, தமிழ் வருஷப்பிறப்பு, பொங்கல், சரவதி பூஜை போன்ற பண்டிகை நாட்கள், நமது சமுதாய வாழ்க்கையைப் பண்படுத்தக் கூடிய விதமாக ஒரேமாதிரி கொண்டாடப்பட வேண்டும். இந்தப் பண்டிகை நாட்களில் அந்தந்தப் பிரதேசத்துப் பொது தலங்களில் சந்தைகள் கூடலாம்; நாடகங்கள், சங்கீதக் கச்சேரிகள் முதலியன நடத்தலாம்; பண்டிதர் மகாநாடுகள் கூட்டுவிக்கலாம். இவையெல்லாம் கிளை தாபனங்கள் செய்ய வேண்டிய வேலைகள். அப்படியானால், தேசத்திலே காங்கிர தாபனங்கள் மட்டும்தான் இருக்கவேண்டுமா, மற்ற தாபனங்களுக்கு இட மில்லையா என்று சிலர் கேட்கலாம். தேசம் சுதந்திரம் பெறுகிறவரை, மற்ற தாபனங்களுக்கு இடமேயில்லை என்று நாம் கூறுவோம். ஒருவன், தன் முகச் சாயலைப் பார்த்துக்கொள்ள வேண்டுமானால் ஒரே ஒரு கண்ணாடியில்தான் பார்த்துக்கொள்ள முடியும். ஒரே சமயத்தில் பல கண்ணாடிகளில் பார்த்துக் கொள்ள முடியாது. அதுபோல், ஒரு தேசத்தின் பூரண அபிலாஷை களையும் பிரதி பிம்பித்துக் காட்டுவதற்கு ஒரே ஒரு தாபனந்தான் இருக்க முடியும். சென்ற அரை நூற்றாண்டுக்கு மேலாக எல்லா மாகாணங் களிலும் தன் நிழலைப் பரப்பிக்கொண்டு அகில இந்திய அரசியல் விருட்சமாக வளர்ந்திருப்பது காங்கிர ஒன்றுதான். நாம் எதிர் பார்க்கிறபடி இது வேகமாக வளர்ச்சியடையாமலிருக்கலாம்; அல்லது இதனுடைய வளர்ச்சியில், மொண்டு மொரடுகள் ஏற்பட்டிருக்கலாம்; அல்லது இந்த விருட்சத்தின் பாலிய தசைகளில் பூத்த மலர்களை, விட்ட பிஞ்சுகளைப் பறித்துக்கொண்டு சிலர் வெளியேறியிருக்கலாம். காங்கிரஸில் குறைகளே இல்லையென்று நாம் சொல்லவில்லை. ஆனால் இஃதொன்று தான் அகில இந்திய தாபனமாகவும், உலகத்தின் பார்வையை இந்தியா மீது திருப்பி யிருக்கிற தாபனமாகவும் இருக்கிறது. மற்றும், அநேக அரசியல் இயக்கங்களை நடத்தி அனுபவமும் பெற்றிருக்கிறது. இத்தியாதி காரணங்களினாலேயே காங்கிரசுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக் கிறோம். தமிழ் நாட்டின் கலைத்துறைக்குச் சிறிது செல்வோம். ஒரு புயற்காற்று வந்து ஊரைச் சூறையாடிவிட்டுப் போனபிறகு அந்த ஊர் எப்படி அலங்கோலமாயிருக்குமோ அதைப்போல் தற்போதைய தமிழ் நாட்டின் கலைத்துறை இருக்கிறது. முதலாவது, நாடகக்கலையை எடுத்துக்கொள்வோம். சென்ற சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடகங்கள் என்ற பெயரால் சில காட்சிகள் நடைபெற்று வந்தன. இப்பொழுது அதுகூட இல்லை. சினிமா ஏற்பட்ட பிறகு, நாடகங்களே இல்லாமற் போய்விட்டன. ஒரு சிலர், இன்னும் அந்த நாடகத் தொழிலைப் பிடிவாதமாகப் பின்பற்றிக்கொண்டு வருகின்றனர் என்பதை நாம் அறிவோம். இவர் களுக்கு நமது வாழ்த்து. ஆனால் இது போதுமா? நமது மூதாதையர்கள் நாடகக் கலையில் எவ்வளவு ஆர்வமுடையவர்களா யிருந்தார்களென் பதையும், அதில் எவ்வளவு பண்பட்டிருந்தார்களென்பதையும், சிலப்பதி காரம், மணிமேகலை முதலிய காவியங்களைக்கொண்டு தெரிந்து கொள்கிறோம். ஒரு நாடகமேடை எப்படி நிர்மாணிக்கப் பட வேண்டு மென்பது முதல், ஒரு நடிகன் நவரஸ உணர்ச்சிகளை எப்படி எப்படி தன் முக பாவனைகளால் வெளிப்படுத்த வேண்டுமென்பது வரையில் எல்லா நுண்ணிய விஷயங்களும் இந்தக் காவியங்களில் கூறப்பட்டிருக் கின்றன. ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்தக் காவியங்கள் புலவர்களின் பொக்கிஷப் பெட்டிகளாயிருக்கின்றன. எல்லா ஜனங்களும் சுவைக்கக் கூடியமாதிரி இவை இன்னும் கொண்டு வரப்பட வில்லை. நாடகத் தொழிலில் ஈடுபட்டி ருந்தவர்களும், அதை ஒரு ஜீவனோபாயமாகத்தான் கொண்டிருந் தார்களே தவிர, நாடகங்கள் மூலம் ஜனங்களின் அறிவைப் பண் படுத்தி, இருதயத்தைச் சுத்தப்படுத்தலாமென்பதைத் தெரிந்து கொள்ளவே யில்லை. நாடக மேடை ஒரு தவச்சாலை மாதிரி. மனிதர், தன்னை மறந்த நிலையிலே சிறிது நேரமாவது இங்கு வாழ்கிறான். ராமனாகவோ, கிருஷ்ணனாகவோ நடிக்கிறவன், தனது தனித்து வத்தை இழந்துவிட்டு, ராமனாகவும் கிருஷ்ணனாகவும் ஆகிவிடு கிறான். அப்படி ஆனால் தான் அவன் நடிப்புக்கு மதிப்பு உண்டு; பலனும் உண்டு. அப்படிப் பட்டவனுடைய அன்றாட வாழ்க்கையில் ராமனுடைய தன்மைகளும், கிருஷ்ணனுடைய தன்மைகளும் தாமாகவே வந்து படிகின்றன. இதனால் அவன் உயர்வடைகிறான்; மற்றவர்களுடைய வாழ்வையும் உயர்த்து கிறான். சாதாரண ஜனங்களுக்கு உயர்ந்த கருத்துக்களைச் சுலபமாகத் தெரிவிக்க வேண்டுமென்பதற்காகவே நாடகங்கள் ஏற்பட்டன. ஜனங் களிடையே பிரசாரஞ் செய்வதற்கு இவை சிறந்த சாதனம். ஐர்லாந்தில் சுதந்திரப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஜனங் களிடையே தேசீய எண்ணத்தைப் பரப்புவதற்கு, நாடகங்களையே சிறந்த சாதனமாகக் கையாண்டார்கள். ஜனங் களுடைய இன்றைய வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது, வருங்கால வாழ்க்கை எப்படி இருக்கவேண்டு மென்பதை நாடகங்களின் மூலம் வருணித்துக் காட்டினார்கள். அதிருஷ்ட வசமாக, அந்த நாட்டின் அரசியல் தலைவர்களிற் பலர் சிறந்த கவிகளாகவும், நாடகாசிரியர்களாகவும் இருந்தார்கள். நாடகப் பிரசாரம் அவர்களுக்கு நல்ல பலனைத் தந்தது. தமிழ் நாட்டிலும், புதிய முறையில் நாடகங்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட வேண்டும். சிறந்த மேதாவிகள் இதில் ஈடபடவேண்டும். தமிழ் நாகரிகத்தைப் பிரதிபிம்பித்துக் காட்டு வதாக இந்த நாடகங்கள் அமைய வேண்டும். பழைய கதைகளுக்குப் புதிய ஆடைகள் அணிவித்துக் காட்ட வேண்டும். ஜனங்களுடைய அக வாழ்வையும் புற வாழ்வையும் தூய்மைப்படுத்தும் சக்தி நாடக மேடை களுக்கு உண்டு. ஆதலின் ஆங்காங்கு நல்ல முறையில் தமிழ் நாடகங்கள் நடித்துக் காட்டப்பட வேண்டும். சென்ற இருபது ஆண்டுகளுக்கு மேலாக சினிமா, தமிழ் நாட்டின்மீது உக்கிரமாகப் படையெடுத்து வந்து தாக்கியிருக்கிறது. சினிமா, ஒரு கலையாகக் கௌரவிக்கப்பட வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். அந்த அந்ததை அதற்குக் கொடுக்க நமது மனம் துணிவு கொள்ளவில்லை. எவ்வளவு உயரிய கலையாயிருந்தாலும், எப்பொழுது அஃது அந்நிய சாதனங்களைக் கொண்டுதான் பிரகாசிக்க முடியும் என்ற நிலைமையில் இருக்கிறதோ, அப்பொழுது அது, தன் கலைத் தன்மையை இழந்து விட்டது என்பது நமது கருத்து, ஒரு சினிமா படத்தைத் தயாரிக்க எவ்வளவு பணம் செலவழிக்கப்படுகிறதோ, அதில் பெரும்பகுதி, யந்திரங்கள், சுருணைகள் முதலியவற்றின் மூலமாய் அந்நிய நாடுகளுக்குச் சென்று விடுகின்றன. கலை வளர்ச்சி யென்று சொல்லிக் கொண்டு அந்நிய நாடுகளுக்குப் பணத்தைக் கொட்டிக் கொடுக்க நமக்கு மனமொப்ப வில்லை. தவிர, எந்த ஒரு கலையானது யந்திரத்தின் துணைகொண்டு இயங்குகிறதோ அஃது உயிருள்ள கலையாகாது. உயிரில்லாத ஓர் உடம்பானது சாமுத்திரிகா லட்சணங்களெல்லாம் பொருந்தி யிருந்தாலும் அது மனிதனா காதல்லவா? ரோபோட் என்ற மின்சார யந்திரம், மனிதர் செய்யக்கூடிய எல்லா வேலைகளையும் செய்தபோதிலும், அதனை யந்திரம் என்றுதான் அழைக்கிறோமே தவிர மனிதர் என்று கூப்பிடுகிறோமில்லை. அப்படி ஒரு கலை அந்ததை சினிமாவுக்கு நாம் கொடுக்க முடியா விட்டாலும், பிரசாரத்திற்குத் தேவையான சாதனங்களில் இஃதொன்று என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் பாக்கிய வீனமாகத் தமிழ்ச் சினிமா படங்களில் பெரும்பாலன, தமிழர் களுடைய ரச உணர்ச்சிக்குப் பங்கம் விளைவிப்பதாயிருக்கின்றன. உயரிய கருத்துக்களை வெளியிடா மலிருக்கட்டும்; நடிப்பே இல்லாமலிருக்கட்டும்; சந்தர்ப்பப் பொருத்தம் இல்லாமல் பாட்டுக்களை உதிர்த்து தொலைக்கட்டும்; பார்ப்பவர் களுடைய கீழான உணர்ச்சிகளைக் கிளப்பி விடாமலாவது இருக்கக் கூடாதா இந்தப் படங்கள்? இப்படிப்பட்ட படங்கள் திரைக்குக் கொண்டு வரப்படாமலே இருப்பது நல்லது. தமிழர்களுடைய மானத்தைக் காப்பாற்றிய மாதிரியாகவாவது இருக்கும். பிற பாஷைகளில் வெளியாகும் படங்களைத் தமிழர்கள் கும்பல் கும்பலாகச் சென்று பார்க்கிறார்கள்; ரசிக்கவும் செய்கிறார்கள். ஆனால் தமிழ்ப் படங்களை, பிறபாஷையினரில் எத்தனை பேர் சென்று பார்த்து அனுபவிக்கிறார்கள்? விரல் விட்டாவது எண்ண முடியுமா? இதற்குக் காரணமென்னவென்பதை அன்பர்கள் சிந்திக்கவேண்டும். தமிழ்ப் பாஷா ஞானம் இல்லாத காரணத்தினாலேயே, பிற பாஷையினர் சென்று பார்ப்ப தில்லை யென்று சமாதானம் கூறப்படுமானால், அந்தச் சமாதானத்தை நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை. தமிழர்கள் அத்தனை பேரும் பிற பாஷைப் படங்களை அந்தந்த பாஷா ஞானத்தோடுதான் சென்று பார்க்கிறார்களா? தமிழர்களுடைய தேசீய வாழ்வைப் புனிதப்படுத்தக் கூடிய மாதிரி படங்கள் பல தயாரிக்கப்பட வேண்டும். இவைகள் பிரசாரத்திற்குரிய கருவிகளாக உபயோகப்படுத்தப் பெற வேண்டும். தமிழ் நாட்டுக்கு நல்ல காலம் உண்டு என்று நாம் நம்பக் கூடிய விதமாக, இப்பொழுது காந்தியடி களின் ஜீவிய சரிதம் படமாக எடுக்கப் பட்டு தமிழில் காட்டப்பட்டு வருகிறது. இந்தப் படம் ஒரு புதுமை மட்டுமல்ல; தமிழ் நாட்டுக்கே ஒரு பெருமை. தமிழன் பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, வெகு பிரயாசைப் பட்டு, ஏராளமான பொருட் செலவில் இந்தப் படத்தை முதன் முதலாகத் தமிழ்ப் பாஷையில் கொண்டு வந்திருக்கிறார்களென்பதைக் கொண்டு, ஒவ்வொரு தமிழனும் கொஞ்சமாவது பெருமை கொள்ள வேண்டும். தமிழர்களுக்குக் கிரியா சக்தி உண்டு என்பதை இந்தப் படம் நிரூபித்துக் காட்டிவிட்டது. இது போன்ற படங்கள் இன்னும் பல தமிழ் நாட்டில் வெளியாக வேண்டு மென்பது நமது பேராவல். தமிழ் நாட்டின் பல பாகங்களில் அடிக்கடி சங்கீதக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. பாடுகிறவர்கள் தமிழர்கள்; கேட்பவர்களும் தமிழர்கள்; ஆனால் தமிழ்ப் பாடல்கள் மட்டும் பாடப்படுவது கிடையாது. என்ன வெட்கக் கேடு? எவ்வளவு காலம் தமிழர்கள் இதனைச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்? கச்சேரி முடிகிற தருணத்தில் ஓரிரண்டு தமிழ்ப் பாட்டுக்களைச் சின்னா பின்னப்படுத்திப் பாடிவிடுகிறார்கள் வித்துவான்கள். தமிழ்ப் பாஷையில் பாடல்களே இல்லை யென்று இவர்கள் கருது கிறார்களா? அல்லது நமது மனோபாவத்தைத் தமிழ்ப் பாடல் மூலம் சரியாக வெளிப்படுத்த முடியாது என்று நினைக்கிறார்களா? பண்ணிசைத்துப் பரம்பொருளைக் கண்டிருக்கிறார்கள் தமிழர்கள். இதற்குத் தேவராம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம் முதலியனவே சாட்சி. அருணாசலக் கவிராயருடைய ராம நாடகமும், பாரத கீர்த்தனைகளும், கவி குஞ்சர பாரதியாரின் பதங்களும், தமிழ்ச் சங்கீதக் களங்சியங்கள். இவை யெல்லாவற்றையும் எங்கேயோ ஒரு மூலையில் புதைத்து விட்டு, பாடகர்களுடையவும் கேட்பவர் களுடையவும் பாஷை யில்லாத ஒரு பாஷையில் சங்கீதக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. இந்த முறை மாற்றப்பட வேண்டும். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். சித்திரக்கலை தமிழ் நாட்டில் மிகவும் பிற்போக்கடைந் திருக்கிறது. வர்ணப் படங்கள் தீட்டும் ஆற்றல் வாய்ந்த தமிழர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களா யிருக்கின்றனர். இதனால், பிறருடைய சித்திரங் களைத் தாங்கித் தமிழ் இல்லங்களும், தமிழ்ப் பத்திரிகைகளும் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றன. தமிழ் நாட்டிலுள்ள கோயில்களைப் பார்த்து எந்த ஓவிய நிபுணனும் பிரமித்துப் போகாமலிருக்க மாட்டான். ஆயிரக் கணக்கான வருஷங்களுக்கு முன்னர் இவை சிருஷ்டிக்கப்பட்ட போதிலும், இப்பொழுது கூட இவை அழியாத யௌவனத்துடன் இருக்கின்றன. அப்படிப்பட்ட தமிழ்நாடு, இப்பொழுது சிறந்த சித்திர நிபுணர் களை சிருஷ்டிக்க முடியாமலிருக்கிறது. இந்த குறையை அகற்ற வேண்டுவது ஒவ்வொருவருடைய கடைமையுமாகும். இங்கே இன்னொரு விஷயம். நமது பண்டிகை நாட்களிலும், விரத தினங்களிலும் கடவுளர் பலருடைய படங்களையோ அல்லது உருவங்களையோ வைத்துப் பூஜை செய்து நமது சம்பிரதாயமாயிருக்கிறது. இதற்கு அந்நிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட படங்களையோ உருவங்களையோ உபயோக்கிறோம். இஃதொரு கேவலமான செயல் என்பதை நாம் இன்னும் உணரவில்லை. நம் நாட்டுக் கடவுளர்கூட, சுதேச மன்னர்கள் மாதிரி, தேகாரோக்கிய நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறி விட்டார்களா? அவர்களைப் பூஜை செய்ய வேண்டுமானால் வெளி நாடுகளிலிருந்துதான் அவர்களை இறக்குமதி செய்துகொள்ள வேண்டுமா? பூஜை காலங்களில் உபயோகிக்கிற உருவங்கள், நம் நாட்டுப் பொருள்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது ஒவ்வொரு தமிழருடைய கடமையுமாகும். இனி, தமிழ்நாட்டு இலக்கியப் பூஞ்சோலையில் சிறிது உலாவிப் பார்ப்போம். உலகத்தில், எல்லா இலக்கிய உத்தியான வனங்களிலும் மகத்தான புரட்சிகள் ஏற்பட்டுக்கொண்டு வருகிற இந்த இருபதாவது நூற்றாண்டில், நமது தமிழ் நாட்டு இலக்கியப் பூஞ்சோலை வறட்சி யடைந்திருப்பதை நாம் பார்க்கிறபோது, தமிழன் உயிரோடிருக்கிறானா வென்று நாம் ஏங்கிப் போகிறோம்; நமது நெஞ்சம் புலம்பத் தொடங்கி விடுகிறது. தமிழ் நாட்டிலே அறிவுக்குக் குறைவில்லை யென்பதை நாம் அறிவோம். அப்படியிருந்தும் ஏன் இந்த இலக்கிய வறட்சி? இதய சூனியந்தான் இதற்குக் காரணமாயிருக்குமா? தமிழர்கள் இதனைச் சிறிது சிந்திக்க வேண்டுகிறோம். படித்தவர்கள் என்று சொல்லப்படுகிற தமிழர்களிற் பெரும் பாலோர் தமிழிலே சிந்திப்பதில்லை; தமிழிலே எழுதுவதில்லை. அப்படிச் சிந்திப்பதும் எழுதுவதும் தங்களுடைய கௌரவத்திற்குக் குறைவென்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆங்கிலம் முதலிய பாஷைகளில் இரண்டொரு சொற் கோவைகளை மட்டும் தெரிந்து கொண்டுள்ள தமிழர்கள் கூட, தங்கள் சம்பாஷணைகளில் இடையிடையே ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவதிலே தான் பெருமை கொள்கிறார்கள். பிற பாஷையினரிடத்தில், இந்தக் குறை பாட்டை நாம் அதிகமாகக் காண்கிறோமில்லை. தமிழர்களிடத்தில் தான் இஃது அதிகமாகக் காணப் படுகிறது. புருஷன் மனைவிக்கும், தந்தை மகனுக்கும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள்! நமது குடும்பப் பெருமைகூட நமக்குள்ள ஆங்கில பாஷா ஞானத்தைப் பொறுத்திருக்கிறது! இவை யெல்லாம் ஒழிய வேண்டும். தமிழர்கள், தமிழிலேயே சிந்திக்க வேண்டும்; தமிழிலேயே சம்பாஷிக்க வேண்டும்; தமிழிலேயே கடிதப் போக்குவரத்து முதலியனவற்றை வைத்துக்கொள்ள வேண்டும். தழுவல்களென்றும், தர்ஜுமாக்கள் என்றும் பெயர் தாங்கிக் கொண்டு தமிழில் அநேக புதிய நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை மொழி பெயர்க்க வேண்டியதுதான். ஆனால் அவை, நம் நாட்டு அறிவுப் பயரைச் செழிக்க வல்ல உரமாயிருக்க வேண்டும்; நமது இலக்கிய சிருஷ்டிக்குத் துணைக் கருவிகளாயிருக்க வேண்டும்; நமது ஆதுநிக ஞானத்தை விருத்திசெய்யக் கூடியனவா யிருக்கவேண்டும். இந்தத் தராசுகளில் ஏதேனும் ஒன்றில்கூட நிறுவைக்கு வராத தழுவல்களும், தர்ஜுமாக்களும் பயனற்றவை யென்றுதான் நாம் கூறுவோம். பிற பாஷைகளிலிருந்து தமிழில் அநேக நூல்கள் மொழி பெயர்க்கப் பட்டு வருகின்றன. ஆனால் தமிழிலிருந்து எத்தனை நூல்கள் மற்றப் பாஷைகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன? தேவாரம், திருவாசகம், திருக்குறள், நாலடியார், தாயுமானவர் பாடல் முதலிய பழைய கிரந்தங்கள் சில ஆங்கிலத்திலும் இன்னும் இரண்டொரு பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக் கின்றன வென்பது வாதவம். ஆனால், ஆதுநிக சிருஷ்டிகளில் எத்தனை, பிற பாஷைகளில் கௌரவ தானம் பெற்றுப் பிரகாசிக்கின்றன? சில சிறு கதைகள் ஹிந்தி பாஷையில் இடம் பெற்றிருக்கின்றன என்ற ஓர் உதாரணத்தை வைத்துக்கொண்டு மட்டும் நாம் பெருமை யடைய முடியுமா? இதனால் என்ன தெரிகிறது? தமிழில் ஆதுநிக இலக்கியங்கள் இன்னும் சிருஷ்டி யாகவில்லை யென்பது தெரிகிறது. அப்படி சிருஷ்டிக்கப் பட்டிருந்தால் அவை மற்றவர்களுடைய கவனத்தைக் கட்டாயம் இழுத்திருக்கும். தமிழர்கள் புத்திசாலிகள். இதனால் இவர்கள் சுலபமாக மற்ற பாஷைகளைக் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்; அதில் புலமையும் பெறுகிறார்கள். ஆனால் துரதிருஷ்ட வசமாக இவர்கள், பிற பாஷைப் புலமை என்கிற தெப்பத்தின் மீது உல்லாசமாகச் செல்கிற போது, தாய்ப்பாஷை என்கிற துடுப்பை எடுத்துச் செல்ல மறந்து விடுகிறார்கள். இதனால் தமிழிலக்கிய வளர்ச்சி குன்றுகிறது. ஆங்கிலம் படித்த தமிழர் களிற் பெரும்பாலோருக்கு வ பாஷாபிமானம் மிகக் குறைவு என்பதை நாம் கொஞ்சம் பட்ட வர்த்தனமாகச் சொல்ல வேண்டி யிருக்கிறது. தமிழர்களிடையே அதிகமாகக் காணப்படுகிற இந்தக் குறை, பிற பாஷையினரிடத்தில் அவ்வளவாகக் காணப்படவில்லை. திலகர் தமது கீதா ரகசியத்தை மஹா ராஷ்டிர பாஷையில் எழுதினார். காந்தியடிகள் தமது கருத்துக்களை முதலில் குஜராத்தி பாஷையில்தான் வெளியிடு கிறார். பங்கிம் சந்திர சட்டர்ஜி, மைக்கேல் மகுசூதன தத்தர், துவி ஜேந்திரலால் ராய், ரமேச சந்திர தத்தர், ரவீந்தரநாத் தாகூர் முதலிய புலவர் மணிகள் அத்தனைபேரும் ஆங்கில பாஷையில் பூரண ஞானம் படைத்தவர்கள். ஆயினும் அவர்கள் வங்க பாஷையில் தான் தங்கள் நூல்களை எழுதியிருக்கிறார்கள். கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி முதலிய பாஷைகளிலும், இந்தப் புது மலர்ச்சி எண்ணம் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் தமிழர்கள், இன்னும் தமிழ்ப் புத்தகங் களுக்கு ஆங்கிலத்தில் முகவுரை எழுதிக்கொண்டி ருக்கிறார்கள்! ஆரியமா, திராவிடமா என்று பூசலிட்டுக் கொண்டி ருக்கிறார்கள்! இந்த ஆரிய திராவிடவேற்றுமை ஒரு கற்பனை. ஒரு சிலருடைய சௌகரியத்திற்காக இது கிளப்பிவிடப்பட்டிருக்கிறது. இந்தச் சம்வாதத் தினால், தமிழ்ப்பாஷை அணுவளவும் முன்னேறப் போவதில்லை. தமிழைத் தாய்ப்பாஷையாகக்கொண்டுள்ள அத்தனை பேரும் தமிழர்கள் தான். அப்படிப்பட்ட தமிழர்களுடைய உன்னதியை லட்சியமாக வைத்துக் கொண்டு நாம் தமிழை வளர்க்க வேண்டும். இந்த வளர்ச்சி துரிதமாக நடைபெறுவதற்கு என்னென்ன சாதனங்களுண்டோ அவற்றையெல்லாம் நாம் தாரளமாகக் கையாளவேண்டும். நமது எண்ணங்களையும், மனோ உணர்ச்சி களையும் தாராளமாக வெளியிடுவதற்கு பாஷை ஒரு கருவி. அந்தக் கருவி எவ்வளவு லேசாய் இருக்கிறதோ அவ்வளவு லாகவமாக அதனை உபயோகிக்கலாம். தமிழை வளர்க்கவேண்டுமென்று பாடுபடுகிறவர்கள் இஃதொன்றையே குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும். காந்தியடிகள் ஒருசமயம் கூறியமாதிரி, நமது இலக்கியங்கள் சாதாரண ஜனங்களோடு நெருங்கிய உறவு கொள்வதாயிருக்க வேண்டும். ஒரு ஜனத் தலைவன், தான் எடுத்துக் கொண்ட காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்றால் அவன் ஜனங் களுடைய பாஷையிலே பேச வேண்டும். அப்பொழுதுதான் அவன் ஜனங்களுடைய எண்ணத்திலே ஐக்கியப்பட முடியும். ஒரு ஜாதியினருடைய சீலத்தையும், சுபாவத்தையும் வெளிப்படுத்துவது அவர்களுடைய பாஷைதான் என்று ஒரு புலவன் கூறுகிறான். ஆகையால் நமது ஜனங்களுடைய சீலத்தையும் சுபாவத்தையும் நாம் தெரிந்துகொண்டு அதனை தேசீய நன்மைக்குப் பயன்படுத்த வேண்டுமானால், அவர்களுடைய பாஷையில் பேச வேண்டும். எல்லா நாட்டு அரசியல் தலைவர்களும் இந்த முறையையே கையாண்டிருக்கிறார்கள். பாஷாபிமானம் இல்லாமல் தேசாபிமானம் இருக்கவே முடியாது. வ பாஷையைப் புறக்கணிக்கிறவன், தேசத்துக்குத் துரோகம் செய்யக் கொஞ்சங்கூட அஞ்சமாட்டான். ஒரு ஜாதி, தன்னுடைய பாஷை வளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறதென்று சொன்னால், அது சுதந்திரத்திற் காகத் துடிதுடித்துக் கொண்டி ருக்கிறது என்பது அர்த்தம். ஜாதியினுடைய இந்தத் துடிப்பைத் தூண்டிவிட்டு செயல்மார்க்கத்திலே கொண்டு விடத்தான் கவிஞர்கள் தோன்றுகிறார்கள். இவர்கள், தூக்கு மேடைக்கும் நரக வேதனைக்கும் ஜனங்களைத் தயார்ப்படுத்தி விடுகிறார்கள். தங்களுடைய நிகழ்கால வாழ்வைத் துச்சமாகத் தூரத் தள்ளிவிட்டு, ஜனங்களுடைய எதிர்கால வாழ்வுக்குப் பாடு படுகிறார்கள். இவர் களுடைய எதிர்காலத்தில் பாஷா சமுத்திரம் கோர கர்ஜனை செய்கிறது. யாப்பு, அணி முதலிய எவ்வித கட்டுப்பாட்டுக்கும் உட்படாத இவர் களுடைய கவிகள், ஜனங்களுடைய கட்டை அவிழ்த்து விடுகின்றன. இத்தகைய கவி திலகமாகவே தமிழ் நாட்டில் சுப்பிரமணிய பாரதியார் பிரகாசித்தார். ஆனால் அவருடைய வாழ்வு மின்னல் வாழ்வாக முடிந்து விட்டது. அவருக்குப் பிறகு, தமிழ் நாட்டிலே ஒரு கவி கூடத் தோன்ற வில்லை. தமிழ் நாட்டின் புது மலர்ச்சிக்கு மணம் அளிக்க அவரைப்போல் பல கவிகள் இனி யேனும் உதயமாக வேண்டுமென்பது நமது பிரார்த்தனை. தமிழ் நாட்டின் மறு மலர்ச்சி இயக்கத்திற்குப் பாடுபடும் பொருட்டு அநேக தாபனங்கள் புதிதாகத் தொடங்கப்பெற வேண்டும். இப்பொழு திருக்கிற சில தாபனங்கள் இது விஷயத்தில் சரியாக வேலை செய்ய வில்லை யென்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. மதுரைத் தமிழ்ச் சங்கம், வித்துவான்களுக்கான சில பரீட்சைகளை நடத்திவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு விடுகிறது. மடாதிபதிகளோ பெரும் பொருட் குவியலின் மத்தியில் ஆடம்பர வாழ்க்கையை நடத்து கிறார்கள். இவர்களைத் துதிபாடிக் கொண்டுவரும் ஒரு சில வித்துவான் களுக்கு, பீதாம்பரம், சால்வை முதலிய சன்மானங்களளித்து அதன் மூலமாகத் தமிழை வளர்த்து வருகிறார்கள். இந்த மடாதிபதிகள், ஆங்காங்கு, தமிழ்மொழி வளர்ச்சிக்கென்று குருகுலங்கள் காண வேண்டும். அவைகளிலிருந்து, புதிய இலக்கியங்களைச் சிருஷ்டிக்கக் கூடிய இளைஞர்களைத் தயார்செய்ய வேண்டும். இந்த மாதிரியான நோக்கங்கள் பலவற்றை வைத்துக் கொண்டுதான் காலஞ்சென்ற வ. வே. ஸு. ஐயர், சேரமாதேவி குருகுலத்தை ஆரம்பித்தார்; பால பாரதி பத்திரிகையைத் தொடங்கினார். ஆனால், தமிழர் சிலர், எதனையோ வியாஜமாக வைத்துக்கொண்டு மேற்படி குரு குலத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து, அது தீவிரமாக வளர விடாதபடி செய்து விட்டனர். ஐயரோடு அதுவும் மாண்டுவிட்டது. இது தமிழ் நாட்டின் துரதிருஷ்டம். இனியேனும், ஜாதித் துவேஷம் முதலியவைகளைப் பொருட்படுத்தாமல், தமிழ் வளர்ச்சி என்ப தொன்றையே லட்சியமாக வைத்துக்கொண்டு புதிய குருகுலங்களை தாபிக்க எல்லாத் தமிழர்களும் பாடுபட வேண்டுகிறோம். இந்தக் குருகுலங்களிலிருந்து புதிய தமிழ் ஜாதி யொன்று தோன்ற வேண்டும். அப்பொழுதுதான், தமிழ் நாட்டிற்கு நல்லகாலம் பிறந்திருக்கிற தென்று நாம் கருதுவோம். ஒரு ஜாதி, சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமானால், அதனுடைய புராதன சம்பிர தாயங்கள், இலக்கியம், கலை முதலியன பத்திரமாகக் காப்பாற்றப்பட வேண்டு மென்ற உண்மையை ஒவ்வொரு தமிழரும் தெரிந்து கொள்வாராக. 4. இன்றைய தேவை எது? ஆழ்ந்த நூலா? நீண்ட நூலா? பாரத தேசத்து மத புருஷர்களான சங்கராச்சாரியார், விவேகானந்தர் போன்றவர்களுடைய வாழ்க்கை நீண்ட வாழ்க்கை யென்று சொல்ல முடியாது. ஆனால் ஆழ்ந்த வாழ்க்கை. அவர்களுடைய ஜீவிய காலம் சொற்பமாக இருந்த போதிலும், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, செய்தருளிய உபதேசங்கள் முதலியன, வருங்கால சந்ததியாருடைய இருதயத்தில் ஆழ்ந்த முத்திரையை யிட்டு விட்டிருக்கின்றன. இந்தக் காரணத்திற்காகவே இவர்கள் மகான்களென்று போற்றப்படுகிறார்கள். இதைப்போலவே ஒரு நூலும் இருக்கிறது. நாம் படிக்கிற நூல்கள் நீளமாக மட்டும் இல்லாமல் ஆழமாகவும் இருக்கவேண்டும். ஆழமான ஒரு நூல் வெளிவந்தாலும், அது யுகக் கணக்கில் வாழ்ந்து ஜனங்களைப் பரிசுத்தப் படுத்திக் கொண்டிருக்கும். நூறு நீண்ட நூல்களை ஒரு தட்டிலும், ஓர் ஆழ்ந்த நூலை மற்றொரு தட்டிலும் வைத்து நிறுத்துப் பார்ப்போமானால், பிந்திய ஒரு நூல்தான் அதிக எடையினால் தாழ்ந்து நிற்கும். இங்ஙனம் வெளியாகிற ஆழ்ந்த நூல் ஒன்றாக இருந்தாலும் அது சிரஞ்சீவியாகி விடுகிறது. அதன் ஆசிரியன், மண்ணோடு மண்ணாகி மறைந்து விட்டாலும், அவன் அந்த நூலின் மூலம் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். கம்பன் ஒரு ராமாயணத்தைப் பாடிவிட்டுச் சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றுவிட்டான். திருக்குறள் ஒன்றைத்தான் இயற்றினார் திருவள்ளுவர். ஆனால் 1,800 வருஷ காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். காளிதாசன், புகழ்பெற்றதெல்லாம் ஒரு சாகுந்தல நாடகத்தைக் கொண்டுதான். மேனாட்டுக் கவி திலகங்களான வர்ஜிலும், தாந்தேயும், கெதே1 யும், சில்லரை நூல்கள் சிலவற்றை இயற்றியிருக் கிறார்களாயினும் மகா காவியமாக இயற்றியது ஒவ்வொரு நூல்தான். அவர்கள் அந்த ஒரு நூலைக்கொண்டே சாகாவரம் பெற்றுவிட்டார்கள். மில்ட்டன் என்ற ஆங்கிலக் கவிஞன் குருடன். ஆனால் தனது ஒப்பில்லாத, இழந்து போன வானுலகம் என்ற ஒரு காவியத்தின் மூலம் எத்தனை பேருடைய அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டிருக்கிறான்? எத்தனை பேருடைய இதயத்தை மலரச் செய்திருக்கிறான்? இனி மற்றொரு பக்கத்தைக் கவனிப்போம். பெயின் தேசத்துப் பெரும் புலவனான லோபே-டி-வேகா1 என்பவன். 1,200 நாடகங்கள் எழுதியிருக்கிறான். ஆனால் அவனை எத்தனை பேர் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்? மார்ட்டின் லூதர்2 என்பவன் சுமார் 450-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறான். ஆனால், ஒரு சிறந்த மதச் சீர்திருத்த வாதியாகத்தான் போற்றப்படு கிறானே தவிர, பிரபல நூலாசிரியனாகப் போற்றப்படவில்லை. இவை களினால் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதென்னவென்றால், நீளமான நூறு நூல்கள் வெளியாவதைக் காட்டிலும் ஆழமான ஒரு நூல் வெளியாவதே சிறப்பு என்பதாகும். 5. கவியும் நாடும் சாதாரணமாக ஒரு நாட்டுக்கு மூன்று விதமான நிலைமைகள் ஏற்படுவதுண்டு. முதலாவது, ஜீவ சக்தியோடு துடித்துக்கொண்டிருக்கிற நிலைமை. இரண்டாவது, ஜீவகளை யிழந்து சோர்வுற்றுக் கிடக்கிற நிலைமை. மூன்றாவது, தனக்கு ஜீவ சக்தி இல்லை; அதனால் தன் முகத்தில் சோபை இல்லை. அந்தச் சோபை யில்லாமையினால் தன்னைச் சீந்துவார் யாருமில்லை யென்பதைத் தெரிந்துகொள்ளாமலே, தனக்கு ஜீவசக்தி இருக்கிறது. தன் முகம் சோபையுடன் பிரகாசிக்கிறது, தன்னைப்பற்றியே எல்லோரும் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு, அது காரணமாக ஆழந்தெரியாத படுகுழியில் அழுந்திக் கிடக்கிற நிலைமை. முதலாவது சுதந்திரம்; இரண்டாவது அடிமைத்தனம். மூன்றாவது பிரமை. முதல் இரண்டு நிலைமைகளையும் நாம் சுலபமாகத் தெரிந்துகொண்டு விடுகிறோம். எப்படியென்றால் சுதந்திர நிலைமையில் நாம் இருக்கிறபோது அந்தச் சுதந்திரம் எப்பொழுதும் நம்மிடத்திலேயே இருக்க வேண்டுமென்பதற்கான எல்லா பந்தோப களையும் செய்துகொள்கிறோம். இந்த பந்தோ பதுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிற வகையில் நாடு அல்லது ஜாதி சதா விழிப்புடன் இருக்கிறது; இருக்க வேண்டி யிருக்கிறது. இந்த விழிப்பிலே கொஞ்சம் அசதி உண்டாகிற தருணத் தில்தான், இரண்டாவது நிலைமை ஏற்படுகிறது. அதாவது அடிமைத்தனம். இதிலிருந்து விடுதலை யடைந்து, மீண்டும் முதல் நிலைமை யடைவதற்கான முயற்சிகளை யெல்லாம் ஒரு நாடு செய்யவேண்டியிருக்கிறது. அப்படிச் செய்கிறபோது, முதல் நிலைமையிலிருந்த மாதிரியே சதா விழிப்புடனேயே இருக்க வேண்டி யிருக்கிறது. தனது ஒரு சிறிது கால உறக்கத்தினால் அல்லது அசதி யினால் அல்லது அசிரத்தையினால், சுதந்திர நிலையிலிருந்து அடிமை நிலைக்கு வந்திருக்கிறோமென்பதை எந்த நாடு அல்லது எந்த ஜாதி உணர்ந்து கொண்டு விடுகிறதோ, அதற்கு விமோசனம் ஏற்படுவது நிச்சயம். மூன்றாவது நிலைமை இருக்கிறதே அதுதான் மோசமான நிலைமை. இதிலிருந்து விடுதலை பெறுவது சிரம சாத்தியமான காரியம். இதற்கு அசாதாரணமான முயற்சிகள் வேண்டும். ஏனென்றால், இந்த நிலைமையிலிருக்கிற நாடு, தனக்கு விடுதலை தேவையென்பதைக் கூட உணர முடியாததாயிருக்கிறது. சாக்கடைச் சேற்றில் நெளிந்து கொண்டிருக்கும் புழுவானது எப்படி அதிலேயே தன் தேக முழுவதையும் நெளித்து நெளித்துக் கொடுத்தும், அந்த அழுக்கையே உண்டும், தான் சாக்கடையில் வசிக்கிறோமென்பதைத் தெரிந்து கொள்ளாமலே வாழ்ந்தும் வருகிறதோ, அதைப்போல் அடிமைத்தனத்திலே தான் இருப்பதை உணராத நாட்டின் நிலைமையும் இருக்கிறது. இது, தன் அடிமைத்தனத்திலே இன்பத்தையும் சௌக்கியத்தையும் கண்டு வருவதோடு கூட, தன் அடிமைத்தனத்தை யாராவது சுட்டிக் காட்டி னாலும், அல்லது அந்த நிலையிலிருந்து கைதூக்கி விட முயற்சி செய் தாலும் அவர்கள்மீது சீறி விழுகிறது. அவர்களை இல்லாத இம்சை களுக்குட்படுத்துகிறது; வறுமைக் குழியில் அல்லது சிறைக் கம்பி களுக்குப் பின்னால் அவர்களைத் தள்ளி விடுகிறது. இருந்தாலும், இவைகளை யெல்லாம் பொருட்படுத்தாமல் அவ்வப்பொழுது சிலர், இந்த மூன்றாவது நிலைமையிலுள்ள ஜாதியினர் மத்தியில் தோன்றுகிறார்கள். மகான்க ளென்றும் கவிக ளென்றும் பிற்கால சமுதாயம் இவர்களைப் போற்றுகிறது; ஆனால் நிகழ்கால சமுதாயம், இவர்களை உதாசீனப் படுத்துகிறது. மேலே சொன்ன மூன்று நிலைமைகளில் எந்த நிலைமையில் ஒரு நாடு இருக்கிறதென்று நாம் தெரிந்து கொள்ளவேண்டுமானால், அந்த நாட்டின் இலக்கிய சிருஷ்டிகளைப் பார்த்தாலே போதும். நாட்டின் உத்வேகம் அல்லது சோர்வு அல்லது மடமை ஆகிய யாவும் முறையே அவ்வக்காலத்து வெளியாகும் நூல்களில் பிரதிபலித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். இதனால்தான் ஒரு நாட்டின் வாழ்வை நிறுத்துக்காட்டுவது இலக்கியம் என்று அறிஞர்கள் கூறு கிறார்கள். இலக்கியத்திற்குத் தாய் யார்? கவிஞன். இதனாலேயே ஒரு சமுதாயத்தின் வாழ்வு பூரணத்துவம் பெறு வதற்குக் கவிஞன் இன்றியமையாதவனாயிருக்கிறான். இத்தாலிய அறிஞனாகிய மாஜினியின் கருத்துப்படி, கவிஞன், சமுதாயத்தின் புரோகிதன். அவன் ஓரிடத்தில் கூறுகிறான். எந்த ஒரு சமுதாயம் சந்தேக மனப்பான்மை யிலும் கீழான இச்சைகளிலும் அழுந்திக் கிடக்கிறதோ, அந்தச் சமுதாயத்தைக் கை தூக்கி விட வேண்டியது ஒரு கவிஞனுடைய முதற்கடமை. அவன், ஜனங்களுக்குக் கடமை களை வலியுறுத்த வேண்டும்; அன்பை உபதேசிக்கவேண்டும். அநித்யமான விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் ஜனங்களை நித்திய மான விஷயங்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டும் இன்னோ ரிடத்தில் அவன் புலம்புகிறான்: ஐயோ! நமது வாழ்க்கையிலிருந்து கவிதையைப் பிரஷ்டம் செய்து விட்டோம். அதனோடு நமது உற்சாகமும் நம்பிக்கையும் போய்விட்டன. அன்பு, தியாக உணர்ச்சி, மகான் தன்மையைப் போற்றுதல் முதலிய வற்றையும் இழந்து விட்டோம். கவிஞனா யிருக்கப்பட்டவன், தன் கவிதையின் மூலம் ஒரு ஜாதியைப் படம் பிடித்துக் காட்டுகிறான். அந்தப் படத்தில் தன்னைப் பார்த்துக்கொள்ளும் அந்த ஜாதி, தன் நிலைமையைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகிறது. உடனே அந்த ஜாதியைப் பார்த்து மேற்படி கவிஞன், கவலை கொள்ளாதே; இப்படி இப்படிச் செய் என்று அந்த ஜாதிக்கு வழிகாட்டி விடுகிறான். எனவே ஒரு கவிக்கு இரண்டு வித கடமைகளிருக் கின்றன. குறைகளை அகற்றுவதோடு அவன் சும்மாயிருக்கக்கூடாது. நிறைவும் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட கவிஞர்களைத்தான், மானிட சமுதாயம் எப்பொழுதும் வழிபட்டுக் கொண்டிருக்கிறது. சரித்திரத்தில் புனிதமான சம்பவமாகப் போற்றப்படுவது யாதெனில் அதுதான் ஒரு கவியின் பிறப்பு என்கிறான் எமர்ஸன்1 என்னும் மேனாட்டு அறிஞன். அரிட் டாட்டல்2 என்னும் கிரேக்க அறிஞன் கூட, சரித்திரத்திலிருப்பதைக் காட்டிலும் கவிதையிலேதான் அதிகமான உண்மை இருக்கிறது என்கிறான். அப்படியானால் கவிஞனின் தானம் எவ்வளவு சிரேஷ்ட மானது! கவிஞர்கள் யார்? அவர்களுடைய லட்சணமென்ன? இவை களை இங்கு வரிசைப்படுத்திக்கூற விரும்புகிறோம். 1. யாராலும் எடுத்துச் சொல்லப்படாத விஷயத்தை எல்லோருடைய உபயோகத்திற்காகவும் எவனொருவன் எடுத்துக் கூறுகிறானோ அவன் கவிஞன். 2. கண்ணுக்குக் காணாமல் பூமியில் புதைந்துக் கிடக்கும் பொன், வைரம் முதலிய பொருள்களை வெளியில் கொணர்வ தற்காக எப்படி ஒரு சுரங்கத் தொழிலாளி பூமியை ஆழமாகத் தோண்டுவானோ, அதைப் போல் இயற்கையென்னும் சுரங்கத்தில் புதைந்து கிடக்கும் அநேக நுண்ணிய பொருள்களை, ஜனங் களுடைய க்ஷேமத்திற்காக மேலுக்குக் கொணர்ந்து காட்டுகிறவன் கவிஞன். 3. மரண மடைவதற்காகப் பிறவாமல், வாழ்வதற்காகவே பிறந்திருப்பதாக எவனொருவன் கருதுகிறானோ அவன் கவிஞன். 4. எவனொருவன் இயற்கையை உருவப்படுத்திக் காட்டுவ தோடு மட்டுமல்லாமல் அந்த இயற்கையாகவே தான் ஆகி விடு கிறானோ அவன் கவிஞன். 5. எவனொருவன் அழகைச் சிருஷ்டித்து, அதற்குப் பெயரிட்டு அதன் பிரதிநிதியாகவும் இருக்கிறானோ அவன் கவிஞன். 6. ஞானி, கர்ம வீரன், உபதேசகன் ஆகிய மூன்று தன்மைகளும் எவனிடத்தில் ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ அவன் கவிஞன். 7. சமுதாயத்தின் நோய்கள் இன்னவை யென்று கண்டு பிடித்து அவைகளுக்குப் பரிகாரந் தேடிக் கொடுக்கிறவன் எவனோ அவன் கவிஞன். 8. இறந்த கால ஏட்டில், நிகழ்கால எழுதுகோலைக் கொண்டு, வருங்காலத்தை எவனொருவன் எழுதுகிறானோ அவன் கவிஞன். 9. எவனுடைய உணர்ச்சிகள் மற்றவர்களுடைய உணர்ச்சி களைத் தூண்டும் தாற்றுக்கோல் போலிருக்கிறதோ அவன் கவிஞன். 10. ஒருவனுடைய எலும்புகள் சாம்பலாகிக் காற்றில் பறந்து போய்விடுகின்றன; அவனுடைய சவக் குழிகூட சூனியமாகி விடுகிறது. அவன் பிறந்த ஊர், தலைமுறை, ஜாதி முதலியனவும் மறந்து போகின்றன. ஆயினும் அவன் பாடி வைத்துப்போன கவிதைகளை மட்டும் எல்லோரும் பாடி வருகிறார்கள். அப்படிப் பட்டவன் கவிஞன். 11. செல்வமும் அதிகாரமும் சேர்ந்து எவனொருவனை விலை கொடுத்து வாங்க முடியாதோ அவன் கவிஞன். இப்படிப்பட்ட கவிஞர்கள் எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் தோன்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்கள், தலை முறைக்குத் தலைமுறை தோன்றுகிறார்கள் என்று சொல்ல முடியாது; யுகத்திற்கு யுகம் தோன்றுகிறார்கள் என்று சொல்ல வேண்டும். ஏதோ ஏகதேச மாகத்தான் ஒரே தலைமுறையில் ஒரே தேசத்திலிருந்து பல கவிஞர்கள் தோன்றுவதை நாம் பார்த்தி ருக்கிறோம். அப்படித் தோன்றுவது, அந்தத் தேசத்திற்கு அவர் களுடைய தேவை அவ்வளவு அத்தியாவசிய மாயிருந்ததென்பதையே காண்பிக்கிறது. உதாரணமாக, பைரன், கீட், ஷெல்லி1 என்ற மூன்று ஆங்கிலக் கவிஞர்களும் ஒரே தலைமுறையில் தோன்றியவர்கள். அதாவது கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டின் கடைசி பகுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இவர்கள் வாழ்ந்தவர்கள். இவர்கள் காலத்தில் ஆங்கில ஜாதியார் ஆளும் ஜாதியினராக ஊர்ஜிதமாகி விட்டனர். உலகத்தின் பல பாகங்கள் இவர்கள் ஆதிக்கத்துக்குட்பட்டன. இங்கிலாந்தில் செல்வம் குவியத் தொடங்கியது. இப்படிப்பட்ட நிலைமையில் தங்களுடைய நாட்டு மக்கள் தலைதெறிக்க நடந்துகொள்ளக் கூடாதென்று எச்சரிக்கை செய்வதுபோலவே மேற்படி மூன்று கவிஞர்களும் தோன்றினார்கள்; ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் பரிந்து பேசினார்கள்; அதிகார சக்தியின் அநித்தியத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்கள். சுதந்திர சக்தியின் அமர வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். இதனால்தான் இவர்கள், எல்லா நாட்டுச் சுதந்திர பக்தர்களாலும் போற்றப்படுகிறார்கள். ஆங்கிலக் கவிஞனாகிய பைரன், கிரேக்கர் களால் பாராட்டப்படுகிறான். 1924-ஆம் வருஷத்தில் அவனுடைய நூற்றாண்டு விழாவை, கிரேக்கர்கள் மிக விமரிசையாகக் கொண்டா டினார்கள். கீட்ஸும், ஷெல்லியும் இத்தாலியர்களுடைய இருதயத்திலே திர வாசம் செய்துகொண்டிருக்கிறார்கள். சிறந்த கவிஞர்கள் சொற்பகாலமே ஜீவியதசையில் இருக் கிறார்கள். ஆனால், அவர்கள் எந்த ஜாதியின் மத்தியில் பிறந்தார்களோ அந்த ஜாதியின் நீண்ட கால வாழ்வுக்கு அடிகோலி விடுகிறார்கள். உதாரணமாக, கீட் இறக்கிற போது 24 வயது; ஷெல்லிக்கு 30 வயது; பைரனுக்கு 37 வயது; சுப்பிரமணிய பாரதியாருக்கு 39 வயது. ஆயினும் இவர்களத்தனை பேரும், எத்தனை பேருடைய இருதயத்தில் சாசுவதமான ஒரு முத்திரையை இட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்? இவர்கள் அனைவரும் கடவுளால் அனுப்பப்பட்ட கடவுட் பித்தர்கள். சுதந்திரப் பித்துப் பிடித்தவர்களாகவே வாழ்ந்தார்கள். இளமையிலேயே கடவுளால் அழைத்துக்கொள்ளப்பட்டார்கள். கடவுளால் விரும்பப்படு கிறவர்கள் பாலியத்திலேயே இறந்துவிடுகிறார்கள் என்று ஹெரோடோட்ட 1 என்னும் கிரேக்க அறிஞன் கூறுவது எவ்வளவு உண்மையாயிருக்கிறது! சாதாரணமாகக் கவிஞர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் படித்துப் பார்த்தோமானால் அவர்கள் குரூபிகளாகவும், விநோதமான பழக்கவழக்கங்களை யுடையவர்களாகவும் இருப்பதைக் காண்கிறோம். ஏன் இவர்கள் குரூபிகளாக இருக்கிறார்க ளென்பதற்கு டால்ட்டாயோ2 யாரோ ஓர் அழகான காரணம் கூறுகிறான். கவிகள் தங்களிடத்திலேயுள்ள அழகையெல்லாம், உலகத்திற்காகக் கொட்டிவிடுகிறார்கள். இதனால் அவர்கள் அழகற்றுக் கிடக்கிறார்கள். இந்தக் காரணம் நமக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறது. சில கவிஞர்கள், இயற்கையிலே ஈடுபட்டுத் தங்களை மறந்து விடுகிறார்கள். இன்னுஞ் சிலர், ஏதோ ஒரு லட்சியத்தை வைத்துக்கொண்டு அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு விடுகிறார்கள். வேறுசிலர்; தங்களுடைய சூழ்நிலை காரணமாக மனங் கொதித்துப் போய் அந்தக் கொதிப்பிலே தங்களை இழந்துவிடுகிறார்கள். இத்தகைய காரணங்களினால்தான், இவர் களுடைய நடை, உடை, பாவனைகளில் ஒரு வித விபரீதம் காணப் படுகிறது. சமுதாயமானது எவை எவற்றைத் துர்ப்பழக்கங்கள் என்று தள்ளிவைத்திருக்கின்றனவோ அந்தப் பழக்கங்களிலே கூட இவர்கள் ஈடுபட்டுவிடுகிறார்கள். இவர்கள், சமுதாயத்தின் கண்டனங் களைப் பொருட்படுத்துவதேயில்லை. சூரியோதயத் திலும் சூரியாதமனத்திலும் சாதாரண ஜனங்கள் எவ்வித விசேஷத்தையும் காண்பதில்லை. ஆனால், கவிஞர்கள் இவைகளைப் பார்த்து நாட்டியமாடுகிறார்கள். மலையுச்சி, ஆற்றோட்டம், பனித்துளி ரோஜா மலர் முதலியவைகளில் நமக்குப் புலனாகாத அழகும் அருமையும் இவர்களுக்குப் புலனாகின்றன. அப்படியே இவர்கள், மற்றவர் களின் கண்ணீரைக் கண்டு, கண்ணீர் விடுகிறார்கள். அது மட்டுமல்ல; தங்கள் கண்ணீரைக் கொண்டு மற்றவர்களுடைய துயரத்தைக் கழுவு கிறார்கள். இப்படி இவர்கள் கழுவுகிறபோது உண்டாகிற ஓசைதான் நமக்குக் கவியாகக் கேட்கிறது. இவர்கள் உலகத்தில் செல்வம் நிரம்பி யிருக்க வேண்டு மென்பதற்காகத் தங்களை வறுமையினால் நிரப்பிக் கொண்டு விடுகிறார்கள். பூதலத்தின் அழகிலே தங்கள் அழகைப் பறி கொடுத்து விடுகிறார்கள். தங்கள்நாட்டு மக்கள் பிரகாசமயமான சுதந்திர மைதானத்திலே தோள் தட்டி விளையாடிக் கொண்டிருக்க வேண்டு மென்பதற்காக இவர்கள், இருட்டுச் சிறையிலே, இரும்புச் சங்கிலிகளின் இறுக்கத்திலே, ஒற்றர்களின் அச்சுறுத்தலிலே, சூம்பிய தோளும், குழிந்த கண்ணும், ஒட்டிய தாடையும், வளைந்த முதுகு முடையவர்களாய் வாழ்கிறார்கள். இப்படி வாழ்கிறபோது கூட, இவர்கள் கலகலத்துத்தான் சிரிப்பார்கள். இவர்களுடைய பார்வையானது கூர்மையான அம்புபோல் நம்மை வந்துதாக்கும். இவர்களுடைய இருதயத்தில், உணர்ச்சியானது ஜ்வாலை விட்டு எரிந்துகொண்டிருக்கும். அந்த ஜ்வாலையை, கவி பாடித் தணித்துக் கொள்வார்கள். பெயின் தேசத்தில் ஸெர்வாண்ட்டெ1 என்ற ஒரு கவிஞன் இருந்தான். இவன் வாழ்நாளின் பிற்பாகம் வறுமையின் உருவமா யமைந்து விட்டது. போதாக் குறைக்குச் சிறை வாசமும் ஏற்பட்டது. இந்தச் சிறைவாசத்தின் போதுதான், உலகத்தின் பல பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிற டான் க்விக்ஸோட்2 என்ற பிரபல கிரந்தத்தை எழுதினான். இவனுடைய கடைசி நாட்களில், இவனுக்கு எழுதுவதற்குக் காகிதங்கூட கிடைக்கவில்லை. அவ்வளவு தரித்திரம். ஆனால், தன் எண்ணங்களை இவனால் அடக்கிவைக்க முடியவில்லை. எனவே, அவ்வப்பொழுது அகப்பட்ட தோல் துண்டுகளின் மீதெல்லாம் கிறுக்கி வைத்தான். இவனுடைய பரிதாப நிலையைப் பார்த்து, ஒரு சிலர் இவனுக்கு உதவி செய்யுமாறு ஒரு பிரபுவைக் கேட்டார்கள். அப்பொழுது அந்தப் பிரபு கூறினான்: ஓ! ஸெர்வாண்ட்டெஸின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமலே இருக்கவேண்டும். ஏனென்றால் அவனுடைய வறுமை தான், இலக்கிய உலகத்தைச் செழுமையாக்கிக் கொண்டு வருகிறது. கவிஞர்கள், சிறையிலே வசித்தாலும் அவர்கள் அதனைச் சிறையாகக் கருதுவதில்லை. அவர்களுடைய சுதந்திர உணர்ச்சியானது, சிறையின் இருட்டைப் பிரகாசமயமாக்கி விடுகிறது. கி.பி. பதினேழாவது நூற்றாண்டின் மத்தியில் ரிச்சர்ட் லவ்லே1 என்ற ஓர் ஆங்கில கவிஞன் இருந்தான். அவனைச் சிறையிலே போட்டுவிட்டார்கள். அப்பொழுது அவன் பாடுகிறான். கற்சுவர்களால் ஒரு சிறை ஆவதில்லை; இரும்புக் கம்பி களால் ஒரு கூடு ஆவதில்லை. தூய்மையும் சாந்தமும் உடையவர்கள் சிறையை ஆசிரமமாகக் கருதுகிறார்கள். மனித வாழ்க்கையிலே கவிஞனுடைய தானம் என்ன? அவன், லட்சியவாதியாக மட்டும் இருக்கவேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். இல்லை, அவன் கர்ம வீரனாகவும் இருக்க வேண்டுமென்று வேறு சிலர் கூறுகிறார்கள். இந்த இரண்டு கட்சிக்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் நாமறிந்த வரையில், உலகத்தின் பெரும்பாலான கவிகள், லட்சிய வாதிகளாகத்தான் இருந்திருக்கிறார்களே தவிர, கர்ம வீரர்களாக இல்லை. இதற்குப் புற நடையாகச் சிலர் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். உதாரணமாக , ஐர்லாந்தின் சுதந்திர இயக்கத்திற்குத் தலைமைபூண்டு நடத்தியவர்களில் பலர் சிறந்த கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். கார்க் நகரத்து மேயராக இருந்தவனும், சிறையிலே சுமார் எழுபத்திரண்டு நாட்கள் பட்டினி கிடந்து இறந்தவனுமான டெர்ரென் மாக் வீனி 2 ஒரு கவிஞன். 1916-ஆம் வருஷத்து ஈடர் புரட்சியில் தலைமை பூண்டு நடத்தியவர்களில் ஒருவனும், அது காரணமாக அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவனுமாகிய பாத்ரெய்க் பியர்3 ஒரு கவிஞன். ஏ. இ என்ற புனைபெயரால் அழைக்கப்படுகிற ஜார்ஜ் ரஸல்4 என்னும் பிரபல ஐரிஷ் கவி, விவசாயத்தின் மேன்மையைப் பற்றியும், கூட்டுறவு முறையில் தாபனங்கள் பல நடைபெறவேண்டு மென்பதைப் பற்றியும், ஐர்லாந்து முழுவதும் சைக்கிளில் சுற்றிப் பிரசாரஞ் செய்தான். இப்பொழுது குடியரசின் பிரசிடெண்டாயிருக்கும் டக்ள ஹைட்5 என்பவன் ஒரு கவிஞன். இந்த மாதிரியான பல உதாரணங்களை ஐரிஷ் சுதந்திர இதிகாசத்தில் நாம் காண்கிறோம். ஆனால் இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்கவேண்டும். அதாவது இவர்களத்தனை பேரும், லட்சிய உலகத்திலே ஒரு காலும், குறைகள் நிறைந்த இந்த நிலவுலகத்திலே ஒரு காலுமாக வைத்துக் கொண்டு வாழவில்லை. பூவுலகத்திலே வந்து தீவிரமான வேலை செய்வதற்காகக் கற்பனை உலகத்தை அடியோடு துறந்து விட்டார்கள். யாருமே, ஏதோ ஓர் இடத்தில்தான் வசிக்க முடியுமே தவிர இரண்டு இடங்களிலும் ஒரே சமயத்தில் வசித்துக் கொண்டிருக்க முடியா தல்லவா? இதனால் தான் கவிகள், கவிகளாக இருந்துகொண்டு கர்ம க்ஷேத்திரத்திற்கு வருகிறபோது தவறி விடுகிறார்கள். அப்படிக் கர்ம க்ஷேத்திரத்தில் பிரவேசித்து வினை யாற்ற முன்வருகிற போது, கவி யுலகத்தை அடியோடு மறந்துவிட வேண்டும். ஐர்லாந்தின் கவிஞர்களில் பலர் இப்படித்தான் செய்தி ருக்கிறார்கள். மேலே சொல்லப் பட்ட பாத்ரெய்க் பியர் என்ற கவிஞன், கர்ம க்ஷேத்திரத்தில் பிரவேசிப்பதற்கு முன்னர் பின் வருமாறு சங்கல்பம் செய்துகொள்கிறான்:- லட்சியமே! ஓ அழகின் அழகே! உன்னை நிர்வாணமாகப் பார்த்தேன். என் கண்களைக் குருடாக்கிக் கொண்டேன். ஏன்? பின் வாங்கி விடுவேனோ என்ற அச்சத்தினால். ஓ! இனிமையின் இனிமையே! உன் இசையைக் கேட்டேன். என் செவிகளை மூடிக்கொண்டேன். ஏன்? தவறிவிடுவேனோ என்ற அச்சத்தினால். ஓ! இனிப்பின் இனிப்பே! உன் அதரத்தை முத்தமிட்டேன். என் இருதயத்தைக் கல்லாக்கிக் கொண்டேன். ஏன்? அழிந்து போவேனோ என்ற அச்சத்தினால். கண்களைக் குருடாக்கிக் கொண்டுவிட்டேன். செவிகளை மூடிக்கொண்டு விட்டேன். இருதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு விட்டேன். பிரேமையைத் தணித்துக் கொண்டு விட்டேன். நான் வகுத்துக்கொண்ட கனவுக்குப் புறமுதுகு காட்டி விட்டேன். இதோ, என் முன் செல்லும் பாதையின் பக்கம் என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். இதோ, என் முன் செல்லும் பாதை பக்கம், இதோ, நான் பார்க்கிற கடமையின் பக்கம், இதோ, நான் சந்திக்கப் போகிற மரணத்தின் பக்கம், என் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். நம்முடைய அபிப்பிராயத்தில், கவிகள், கவிகளாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, கர்ம வீரர்களாக இருக்கக் கூடாது; இருக்கவும் முடியாது. கர்ம க்ஷேத்திரத்திற்கும் கவி உலகத்திற்கும் வெகு தூரம். இரண்டும் அலாதி அலாதியாக இருக்கவேண்டியவை. அப்படி யிருந்தால் தான் இரண்டும் செழிப்புற்று வளரும். அப்படிக்கில்லாமல், யாரொருவர் இரண்டிலும் பிரவேசித்து வெற்றிகாண வேண்டுமென்று விழைகிறார் களோ அவர்கள் இரண்டிலும் தோல்வியடைகிறார்கள். எப்படி ஒரு சிலர், அரசியலில் மதத்தைக் கொண்டு புகுத்தி, அதன் பயனாக மதத்தின் புனிதத் தன்மையையும் கெடுத்து அரசியலின் பிரயோஜனத்தையும் அடையாமல் போகிறார்களோ, அப்படிப் போல, கவிகள், செயலாற்றும் துறையில் இறங்குவார்களானால், அந்தத் துறையும் கலங்கிப் போகிறது; அவர் களுடைய கவியும் ரோபோட் என்ற உயிரில்லாத யந்திர மனிதனைப் போலாகிவிடுகிறது. சுப்பிரமணிய பாரதியார், ஸர் முகம்மது இக்பால், ரவீந்திரநாத் தாகூர் முதலியவர்கள் சிறந்த கவிகள். இவர்கள் கவி உலகத்திலே மட்டுந்தான் சஞ்சரிக்கிறார்கள். அதனால்தான் இவர் களுக்குப் பொன்றாத புகழ் ஏற்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி ஒரு பெரிய கவி என்பது நம்முடைய அபிப்பிராயம். அவர் எவ்வித கவிகளையும் இயற்றவில்லையாயினும் அவருடைய உரைநடையில் கவி மணம் கமழ்கிறது. இதற்கு ஓர் உதாரணத்தை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். அவர், பசுவை, இரக்கத்தின் பாட்டு என்று வருணிக்கிறார். கவி உள்ளம் படைத்த யாரும் இந்த வாசகத்தைப் படித்து மெய்மறந்து போகாமலிருக்க முடியாது. ஒரு நாள் காலை வேளையில், உங்கள் வீட்டுப் பசுவைக் குளிப்பாட்டி மஞ்சள் குங்குமமிட்டு உங்கள் எதிரில் நிறுத்திக் கொள்ளுங்கள். மேற்படி இரக்கத்தின் பாட்டு என்ற வாசகத்தை மனத்தில் வாங்கிக்கொண்டு, மேற்படி பசுவின் கண்களைப் பாருங்கள். உங்களையறியாமல் உங்களுக்கு அதன்மீது ஒரு வித இரக்கம் உண்டாகிறதா இல்லையாவென்று சொல்லுங்கள். அப்பொழுது காந்தியடிகளின் கவித்துவம் உங்களுக்கு நன்றாக விளங்கும். அவர் அரசியலிலே பிரவேசியாமலிருந்தால், அவரை ஒரு மகா கவியாக உலகம் போற்றியிருக்கும். பண்டித ஜவஹர்லால் நேருவும் ஒரு கவிஞர்தான். இவருடைய சுய சரித்திரத்தை ஒரு கவிக் கடல் என்று சொல்லவேண்டும். இவரும் காந்தியடிகளைப் போல் எவ்வித கவியும் பாடினாரில்லை. ஆனால் இவ்விருவருடைய உரைநடைகளும், நமது உணர்ச்சிகளைக் கிளப்பி விடுகின்றன. இப்படி உணர்ச்சிகளைக் கிளப்பி விடுகிறவர்கள்தான் கவிகள். எமர்ஸன் என்ற ஆங்கில அறிஞன், கெதே என்ற ஜெர்மானியக் கவிஞனை உரைநடைக் கவிஞன் என்று குறிப்பிடு கிறான். அதைப் போல காந்தியடிகளும் ஜவஹர்லாலும் உரை நடைக் கவிகள். கவிகள், கர்ம வீரர்களைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, அவர்களே கர்ம வீரர்களாகி விடக் கூடாது. ஒரு ஜாதிக்கு தாய் மாதிரி இருக்கின்றான் கவிஞன். தந்தை மாதிரி இருக்கின்றான் கர்ம வீரன். தாயே தந்தையாகிவிட்டால் தாய்மை ஏது? தாய்மையின்றி உலகம் ஏது? கவிஞனின் சிருஷ்டிகளைக் கர்ம வீரன் காப்பாற்ற வேண்டும். இதுதான் நியதி. மாஜினியின் அபிப்பிராயப் படி, செயலுக்குத் தூண்டுகிற கவிஞர்கள் தான் உண்மையான, உயர்ந்த கவிஞர்களே தவிர, மற்றவர்கள், அதாவது இயற்கையோடும் கடவுளோடும் உறவாடுகிற கவிஞர்கள் உயர்ந்த கவிஞர்களல்ல. அப்படி இயற்கையோடும் கடவுளோடும் உறவாடினாலும், அந்த உறவு, மனித வாழ்க்கையை ஒட்டியதாக இருக்க வேண்டும். அவன் கூறுகிறான்:- கலையானது உலக வாழ்க்கையில் தான், தன் வாழ்வைக் காண்கிறது. உலகத்தின் சட்டந்தான் கலையின் சட்டம், ஒரு கவிஞன், தன் கற்பனைக்கு ஊற்று எங்கே யிருக்கிறதென்று கண்டு பிடிக்க வேண்டுமென்றால், தன்னுடைய அபூர்ணமான, சிதைந்துபோன சிந்தையிலல்ல; ஜன சக்தியின் இயக்கத்திலும், அவர்களுடைய ஆவல்களிலும், ஏற்கனவேயுள்ள, ஆனால் உறங்கிக் கிடக்கிற அவர்களுடைய ஜீவ சக்தியிலும் கண்டு பிடிக்க வேண்டும். எந்த எண்ணங்கள், ஜனங்களுடைய இருதயத்தில் பொங்கிக் கொண்டிருக் கின்றனவோ அந்த எண்ணங்களோடு தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு, அவர்களைச் செயலாற்றும்படி பிடர் பிடித்து உந்துகிறவன் எவனோ அவன்தான் கவிஞன்; அவனுடைய கவிதைகள் தான் கவிதைகள். ஷ்லீகல்1 என்ற ஜெர்மானிய அறிஞனுடைய சித்தாந்தம் கூட இதுதான். கவிதையானது தேசீயமாயிருக்க வேண்டும்; சமுதாயத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமுடையதாயிருக்க வேண்டும்; இரண்டுக்கும் உபயோகமுள்ளதாயிருக்கவேண்டும் என்பது ஷ்லீகலின் கருத்து. எனவே, எந்த ஒரு கவிஞனும் அல்லது எந்த ஒரு காவிய கர்த்தனும், தேசத்தையும் சமுதாயத்தையும் பயன்படுத்தக் கூடியவனாகவும் உயர்த்தக் கூடியவனாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட வர்களை, ஜனங்கள் பகிரங்கமாகக் கை கூப்பித் தொழா விட்டாலும், தங்கள் இருதயக் கோவிலிலே வைத்து ஆராதிக் கிறார்கள். ஏனென்றால், இவர்களுடைய தேவையையும், ஆவலையும் அந்தக் கவிஞனால்தான் உணர முடிகிறது. அந்தத் தேவையையும் ஆவலையும் அவன் பூர்த்தி செய்து வைக்கிறான். எமர்ஸன் கூறுகிறான்:- பலமுறை ஏமாற்றப்பட்டிருந்தாலும், மனிதன், உண்மையைத் தன்னுடையதாக்கிக் கொள்கிறவரையில் அதனோடு தன்னைச் சேர்த்து வைக்கும் ஆற்றல் பெற்ற ஒருவனுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறான் அவன்தான் கவிஞன். அவன்தான் சத்தியத்தின் பிரதிநிதி. ஓர் அறிஞன் கூறுகிற மாதிரி அவனுடைய உயர்ந்த பாட்டே சத்தியம் அப்படிப்பட்ட உண்மைக் கவிஞர்களை ஜனங்களால் மறந்துவிட முடியுமா? மானிட சமுதாயத்தின் சரித்திரத்தை நாம் ஒரு தொகுப்பாக எடுத்துக் கொண்டு பார்த்தாலுஞ் சரி, அல்லது ஒவ்வொரு நாட்டின் இதிகாசத்தைத் தனித்தனியாக எடுத்துக்கொண்டு பார்த்தாலுஞ் சரி, ஜனங்கள் மன நிம்மதியுடன் வாழ்ந்து வருகிற ஒரு காலமோ, அல்லது அதிருப்தி யுடனேயே இருந்து வருகிற ஒரு காலமோ தொடர்ந்திருந்ததாகத் தெரியவில்லை. இந்த நிம்மதியும் அதிருப்தியும், அந்தந்த ஜாதி யாருடைய அரசியல் அந்தது, சமுதாய நிலைமை இவைகளை யொட்டி மாறி மாறி வந்திருக்கின்றன. நிம்மதியான காலம் என்று சொல்லப்படுகிற காலத்தில், வாழ்க்கையின் எல்லாச் சிக்கலான பிரச்சனைகளுக்கும் பரிகாரந் தேடிவிட்டதாக ஜனங்கள் சுய திருப்தியடைந்து விடுகிறார்கள். முக்கியமான பிரச்சனைகைளப் பற்றி எல்லா ஜனங்களுக்கும் ஒரே விதமான அபிப்பிராயம் இருந்து வருகிறது. ஜனங்கள் இந்த உலகத்தைக் கனவாகக் கருதாமல் நனவாகக் கருதுகிறார்கள்; உணர்ச்சிக்கு இடங் கொடாமல் அறிவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காவிய கர்த்தர்களின் இருதயத்திலும் அந்தக் காவியங்களை ரசிக் கிறவர்களுடைய இருத யத்திலும் ஒரே விதமான எண்ணப் போக்கு ஓடிக் கொண்டி ருக்கிறது. இதனால் கவிஞர்களுக்கு எண்ணம், உணர்ச்சி என்ற சுரங்கங்களைத் தோண்டிப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படு வதில்லை. ஜனங்களிடத்தில் எந்த விதமான எண்ணங்களும் உணர்ச்சி களும் நிலவி யிருக்கின்றனவோ அவற்றை உருவப் படுத்தியோ அல்லது மெருகிட்டோ காட்ட வேண்டியதுதான் இவர்கள் வேலை. இதனால்தான் இவர்களுடைய கவிதைகளில் அதிகமான வருணனைகளையோ, கற்பனைகளையோ காண்கிறோமில்லை. ஜனங்களுடைய தேவை களையும் ஆவல்களையும் இந்தக் காலத்துக் கவிஞர்கள் அப்படியே எடுத்துச் சொன்னார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும், சமுதாயத்தின் ஒழுங்கான சலனத்திற்குத் தங்களுடைய தேவை இனி அவசியமில்லை யென்பதை உணர்ந்து, ஜனசஞ்சாரத்தினின்றும் ஒதுங்கிப் போயிருந்து கொண்டு பரம் பொருளைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்கள் எந்தப் பரம் பொருளானது, ஜனங்களுடைய பயத்தின் பரிணாமமாயிருந்து வந்ததோ அது சத்தியமானதென்றும், அன்பு மயமான தென்றும், சர்வ வியாபக மாயுள்ள தென்றும், அஃதின்றி மனிதர்களில்லை, மனிதர்களின்றி அஃதில்லை யென்றும், பல வகையாகச் சித்தாந்தப் படுத்தினார்கள். இப்படி இவர்கள் ஒதுங்கினாற் போலிருந்து பரம் பொருளாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரே ஒரு சமயம், சமுதாயமானது தனது நிம்மதியில் மெய் மறந்து போய் எங்கே நெறி பிசகிவிடப் போகிறதோ யென்பதற்காக அதனை எச்சரிக்கை செய்துமிருக்கிறார்கள். வேத மந்திரங்களும் உபநிஷத வாக்கியங்களும் பாரத ஜாதியின் நிம்மதியான காலத்தில் தோன்றியவை. கிரேக்க ஜாதியின் கல்மஷ மற்றதும், எளிமை நிறைந்ததுமான நாகரிக காலத்தில் ஹோமர்1 என்பவனால் இலியத் என்னும் மகா காவியமும் ஒடிஸே என்னும் மகா காவியமும் எழுதப்பட்டன. ரோம ஏகாதிபத்தியமானது தனது கழுகுக் கொடியை ஐரோப்பா வெங்கணும் பறக்க விட்டுக்கொண்டிருந்த போது தான் வர்ஜில் என்ற மகாகவி, ஏனீத் என்ற மகா காவியத்தை எழுதினான். இந்த அனைத்திலுமே, வாக்கு நயமும் கம்பீர நடையும் கலந்திருப்பதைக் காண்கிறோம். வீரம், தேஜ, வெற்றி, செழுமை, இன்பம் முதலிய வற்றை ஜனங்கள் கோரினார்களென்பதும், தங்கள் கோரிக்கைப்படி அடைந்து நிம்மதியாக வாழ்ந்து வந்தார்களென்பதும் இந் நூல் களிலிருந்து தெரி கின்றன. குடும்ப வாழ்க்கை, யுத்த களம் ஆகிய இரண்டினையும் மைய மாகக் கொண்டே இந்தக் காலத்து நூல்கள் எழுந்தனவென்று பொதுப் படையாகச் சொல்லலாம். தேஜோமயமாயிருக்கும் நீ எனக்குத் தேஜஸைக் கொடு! வீரிய மயமாயிருக்கும் நீ எனக்கு வீரியத்தைக் கொடு! பலயமா யிருக்கும் நீ எனக்குப் பலத்தைக் கொடு! சக்தி மயமாயிருக்கும் நீ எனக்குச் சக்தியைக் கொடு! தைரிய மயமாயிருக்கும் நீ எனக்குத் தைரியத்தைக் கொடு! பொறுமை மயமாயிருக்கும் நீ எனக்குப் பொறுமையைக் கொடு! யஜுர் வேதம் 19-9. என்று கடவுளைப் பார்த்து நமது முன்னோர்கள் செய்த பிரார்த் தனையில் அவர்களுடைய கோரிக்கை நன்கு வெளியாகிறது. இங்ஙனமே உபநிஷத காலத்துக் கவிஞர்கள், பரம் பொருளை எந்தக் கோலத்துடன் நம் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்க ளென்பதைப் பாருங்கள். யாரொருவர் கடவுளர்களைச் சிருஷ்டித்தும் காப்பாற்றியும் வருகிறாரோ யாரொருவர் உலக நாயகராயிருக்கிறாரோ, யாரொருவர் தீமைகளைச் சம்ஹரிக்கிறவராகவும் சர்வக்ஞராகவும் இருக் கிறாரோ, யாரொருவர் பூர்வத்தில் ஹிரண்ய கர்ப்பரைப் படைத் தனரோ அவர் நம்மை நற்புத்தியுடையவர்களாகச் செய்யட்டும்! வேதாச்வதர உபநிஷதம் 3-4 நீயே திரீ; புருஷன்; குமாரன்; குமாரி; கிழவன்; கழியால் வஞ்சிக்கிறாய்; பல தோற்றங்களை யுடையவனாயிருக்கிறாய் வேதாச்வதர உபநிஷதம் 4 -30 எதற்காக இவைகளை உதாரணங்களாகச் சொல்கிறோ மென்றால், நமது முன்னோர்களின் கல்மஷமற்ற சிந்தனை, அமைதியான நாகரிக வாழ்க்கை ஆகிய இவைகளை எடுத்துக் காட்டுவதற்குத்தான். இங்ஙனம் வேதங்களையும் உபநிஷதங்களையும் பிற நாட்டுக் காவியங்களோடு ஒப்பிட்டுக் காட்டுவது ஹிந்து மதப் பற்றுடைய பலருக்கு விருப்ப மில்லாதிருக்கலாம். ஆனால் இங்கே நாம் வேதங்களையோ உபநிஷதங்களையோ பாரமார்த்திகக் கண் கொண்டு பார்க்கவில்லை; காவியக் கண் கொண்டுதான் பார்க்கிறோமென்பதை பஷ்டமாகச் சொல்லிவிட விரும்புகிறோம். இனி மற்றொரு காலத்தை, அதாவது ஜனங்களின் மனத்தில் நிம்மதியேற்படாமல், அது காரணமாகச் சமுதாயமானது அசையத் தொடங்குகிற காலத்தைக் கவனிப்போம். இந்தக் காலத்தில் ஜனங்கள், தங்கள் முன் நிற்கும் இந்தப் பிரபஞ்சமானது நீண்ட உறக்கத்திலிருந்து திடீரென்று விழித்துக் கொண்டு விட்டதாக உணர்கிறார்கள். இதுகாறும் இவர்களுக்குத் தெரியாத பல பொருள்கள், பிரச்னைகள் முதலியன இவர்களுக்குத் தென் படுகின்றன. தங்களுடைய சூழ் நிலையில் ஏதோ ஒரு விதமான துடிதுடிப்பு, அசைவு முதலியன இருப்பதாகவும், அந்தத் துடிப்பும், அசைவும் தங்களை வந்து தாக்குவதாகவும் உணர்கிறார்கள். இந்தத் துடிப்பினாலும் அசைவினாலும், உலகத்திலும், தங்களிடத்திலும் ஒரு விதமான மாற்றம் உண்டாகுமென்று இவர்களுக்குப் படுகிறது. அரசியலிலே ஒரு சலசலப்பு, சமுதாய வாழ்க்கையிலே ஒரு புரட்சி, தங்கள் எண்ணப் போக்கிலே ஒரு சலனம் முதலியவற்றை இவர்கள் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பட்டதொரு காலத்தில் தோன்றுகிற கவிஞர்களின் இருதய ஆழத்திலிருந்து நவ நவமான எண்ணங்களும் கற்பனைகளும் உற்பத்தியாகின்றன. அந்த எண்ணங் களும் கற்பனைகளும், ஜனங்களுடைய ஆவல்களுக்கும் கனவுகளுக்கும் எதிரொலி கொடுப்பது போல இருக்கின்றன. அவர்களுடைய கவிதை களில் இருதய பாவம் நிறைய இருக்கிறது. அதாவது அவைகளைப் படிக்கிற போது, நமது அறிவு தெளிவு பெறுவதோடு, இருதயத்தில் சந்தர்ப்பங்களுக்கேற்ற உணர்ச்சிகளும் நிரம்பி விடுகின்றன. எந்தச் சம்பவத்தை அவர்கள் எடுத்துச் சொன்னாலும் அதிலே ஒரு காம்பீர்யமும், நம்மை ஈடுபடுத்தி விடுகிற தன்மையும் இருக்கின்றன. சுருக்கமாகச் சொல்லப் போனால், அலங்கரிக்கப்பெற்ற ஒரு காளை மாடு எப்படி அலட்சிய பாவத் தோடும் ஆனால் ஜீவகளையோடும் கம்பீரமாகச் செல்லுமோ அதைப் போல, இந்தக் காலத்துக் கவிஞர்களின் சிருஷ்டிகள் இருக்கின்றன. இப்படி இந்தக் காலத்தில் மகா கவிகள் பலர் தோன்றினாலும், இவர்களுக்கு மத்தியில் எப்படி செழுமையான நெற்பயிர்களுக்குப் பக்கத்தில் உயரமான புற்கள் யதேச்சையாக வளர் கின்றனவோ அப்படிப் போல இரண்டாந் தரத்து அல்லது தரமே இல்லாத கவிஞர்கள் பலர் தோன்றிவிடுகிறார்கள். இஃது எந்த நாட்டிலும் எந்தப் பாஷையிலும் எந்தக் காலத்திலும் உண்டாகிற சாதாரண சம்பவந்தான். இவர்களைப்பற்றி யாரும் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. சிற்றரசர் களுக்கு ஆதான கவிகளாக இருந்து அவர்களுடைய பொருளுக்காக அவர் களுடைய புகழைப் பாடி விட்டு அவர்களோடேயே மறைந்து விடுகிறார்கள்இவர்கள். இனி, மேற்படி இலக்கிய சலன காலத்திற்கு வருவோம். இந்தக் காலமானது, ஓரிரண்டு தலைமுறையுடனோ, அல்லது ஓரிரண்டு நூற்றாண்டுகளுடனோ முடிந்து விடுகிறதென்று சொல்ல முடியாது. அநேக நாடுகளில் இந்த இலக்கிய சலன காலம் நூற்றாண்டுகள் கணக்காகத் தொடர்ந்து சென்றுகொண்டிருப்பதைக் காண்கிறோம். அப்படிச் செல்கிறபோது இடையிடையே சில தட்டுத் தடுமாற்றங்கள் ஏற்படலாம்; அல்லது தற்காலிகமான சோர்வு ஏற்படலாம். அது வேறு விஷயம். பொதுவாக இந்த இலக்கிய சலனம் நிற்பதில்லை. இந்தியாவில் சுமார் ஆயிர வருஷ காலம், இந்த இலக்கிய சலனம் இருந்து கொண்டிருந்தது. வால்மீகி, வியாசன், வள்ளுவன், கம்பன், காளிதாசன், பவபூதி, பாஸன், ஹர்ஷன், கல்ஹணன், பில்ஹணன், பர்த்ருஹரி, சைவ சமய குரவர்கள், வைஷ்ணவ ஆழ்வார்கள், சேக்கிழார், பரஞ்சோதியார் முதலியவர்கள் இந்தக் காலத்திலே தோன்றிய மகா கவிகள். இந்தியா உள்ள வரையில் இவர்களுடைய காவியங்கள் இருந்து கொண்டிருக்கும். கம்பனுடைய ராமாயணத்தையும், காளிதாசனுடைய ரகு வமிசத்தையும், இன்று நாம் படித்தாலும், நமது இருதயம் அந்தக் கவிஞர்களின் திருப்பாத கமலங்களில் நம்மை யறியாமலே சரணடைந்து விடுகின்றன. இங்ஙனமே ஆங்கில இலக்கிய இதிகாசத்திலும் ஒரு புது மலர்ச்சி ஏற்பட்டுச் சுமார் இருநூறு வருஷ காலம் அநேக கவிஞர்களையும், காவியங்களையும் சிருஷ்டித்துக் கொடுத்தது. இதனையே எலிஜபெத் காலம் என்று ஆங்கில இலக்கிய கர்த்தர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் கி.பி. 1533-ஆம் வருஷத்திலிருந்து கி.பி. 1603-ஆம் வருஷம் வரை வாழ்ந்த இங்கிலாந்தின் அரசியாகிய எலிஜபெத்தின் காலத்தில்தான் இந்தப் புது மலர்ச்சி ஏற்பட்டது. இதற்குப் பின்னர் சுமார் இருநூறு வருஷ காலம் தொடர்ந்து வந்த இலக்கிய இயக்கத்தை எலிஜபெத் காலம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இந்தக் காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மானது பல துறைகளிலும் செழுமையும் செல்வாக்கும் அடைந்துவந்தது. பிரிட்டிஷார் பல புதிய நாடுகளைக் கண்டுபிடித்து ஆங்காங்குத் தங்கள் வெற்றிக் கொடியை நாட்டினர். விஞ்ஞான அபிவிருத்தியும், இதனால் பொருளுற்பத்தித் தொழில்களில் அநேக விதமான மாறுதல்களும் ஏறபட்டன. இங்கிலாந்தின் செல்வம் மேலும் மேலும் குவிய ஆரம்பித்தது. ஜனங்களுடைய வாழ்க்கை அந்தது உயர்ந்தது. இப்படிப்பட்டதொரு காலத்தில் உண்டாகும் இலக்கிய சிருஷ்டிகளில் ஒரு புதுமாதிரியான உத்வேகம், பெருமை, தன் மதிப்புணர்ச்சி முதலியன பிரதிபலித்துக் காட்டுவது சகஜந்தானே. எட்மண்ட் பென்ஸர், ஸர் வால்ட்டர் ராலே, (இவன் தனது பதின்மூன்று வருஷ சிறைவாசத்தின் போது உலக சரித்திரத்தைத் தொகுத்து எழுதியவன்) ஷேக்பியர், பென் ஜான்ஸன், பிரான்சி பேக்கன், மில்ட்டன், ஜான் ட்ரைடன் 1 முதலிய பலரும் இந்தக் காலத்து இலக்கிய கர்த்தர்கள்; கவிஞர்கள். இவர்களுடைய சொல் லாழம், நடை, மிடுக்கு முதலியன எல்லாப் பாஷையினராலும் ரசிக்கப்பட வேண்டியவை. தமிழ் மொழியில் இவர்களுடைய நூல்களை மொழி பெயர்த்து வெளியிடுதல் பெரிய இலக்கியத் தொண்டு என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்ச் செல்வர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இந்த மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் இலக்கிய சலன காலம் ஏற்பட்டிருக்கிறது. இப்படிச் செழுமையுற்று கம்பீரப் பிரவாகமாகச் சென்று கொண்டிருக்கும் இலக்கிய ஆறானது, ஒவ்வொரு நாட்டிலும் திடீரென்று நின்றுவிட்டிருந்திருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? நாம் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் வகுத்துக் காட்டின மூன்று விதமான நிலைமைகளில், மூன்றாவதான பிரமை நிலைமை ஏற்பட்டுவிட்டது தான். எந்த நாட்டு ஜனங்கள், எந்த நிமிஷத்தில் தங்களுடைய அசிரத்தை காரணமாகவும் அறியாமை காரண மாகவும், அந்நிய ஆதிக்கத்திற்கு இடங்கொடுத்துவிடுகிறார்களோ அந்த நாட்டு இலக்கிய இதிகாசமானது அந்த நிமிஷத்திலேயே வறட்சியடைய ஆரம்பிக்கிறது. அவைகளுடைய தானத்தில் ஜனங்களின் கீழான இச்சைகளைத் தூண்டிவிடக்கூடிய கதைகள், பாடல்கள், நாடகங்கள் முதலியன தோன்றுகின்றன. புலவர்கள், யாரோ ஒரு பிரபுவின் நன்கொடையை எதிர்பார்த்து பாலைவன மாயிருக் கிற இடங்களையெல்லாம் புண்ணிய க்ஷேத்திரங்களாக வருணித்துப் பாடுகிறார்கள். அடிமைத்தனம் காரணமாக, ஜனங்களின் அறிவு சூனிய மாகியும், இதயம் அழுகிப் போயும் விடுவதால், அவர்களுடைய கேவல உணர்ச்சிகளை, தங்களுடைய ஜீவனோபாயத்திற்குச் சாதகமாக உபயோகித்துக்கொள்வது இந்தக் காலத்துக் கவிஞர்களுக்குச் சுலபமாகிவிடுகிறது. கண்ணில்லாத கட்டழகர்களைப் போல் இவர் களெல்லாரும் கவித்துவமில்லாத கவிஞர்கள். தாங்கள் கபோதிகளாக இருப்பதனால்தான் ஜனங் களையும் கபோதிகளாக்கிவிட வேண்டு மென்று பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட காலத்தில், ஒரு சில மகா கவிகள் ஏகதேசமாகத் தோன்றுகிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள ஜனங்களின் இழிவான நிலைமையைப் பார்த்து இவர்கள் மனம் கொதிக்கிறது. தங்களுக்கு ஏற்படுகிற துன்பங்கள், அவமானங்கள் முதலியவற்றைப் பொருட் படுத்தாமல், ஜனங்களுக்குச் சாட்டையடி கொடுப்பதுபோல் கவிதைகள் இயற்றுகிறார்கள். இவர்களைச் சுற்றியிருக்கும் இலக்கியக் கருமேகத்தின் மத்தியில் இவர்களுடைய கவிதைகள் மின்னல்போல் பளிச் பளிச்சென்று பிரகாசிக்கின்றன. நம்மைப் பொறுத்தமட்டில், இப்படிப்பட்ட கவிஞர்களுக்குத்தான் மகத்துவம் கொடுக்கிறோம்; மகான் கவிகளென்று போற்றுகிறோம். ஏனென்றால் முதலில் சொல்லப்பட்ட காலத்திலும் இலக்கியசலன காலத்திலும் தோன்றிய மகா கவிகள், சாதகமான ஒரு சூழலிலிருந்து கொண்டு கவிதைகள் இயற்றினார்கள். ஆனால் இவர்களோ, தங்களைச் சுற்றியுள்ள எல்லாச் சக்திகளும் தங்களுக்கு இடையூறு செய்துகொண்டிருக்க, அவைகளைப் பொருட் படுத்தாமல் கவித் தொண்டு செய்கிறார்கள். தவிர, நமது பாரத நாட்டுக்குத் தற்போது, இத்தகைய மகான் கவிகள் உடனே தேவை. அதனால்தானோ என்னவோ, இவர்களுக்கு மகத்துவம் கொடுக்கு மாறு நமது மனச்சாட்சி நமக்கு ஆணையிடுகிறது. ஒவ்வொரு நாட்டுச் சரித்திரத்திலும் இந்த மாதிரியான அடிமைத் தனம், அறியாமை முதலியன ஏற்பட்டிருக்கின்றன. அவ்வப்பொழுது சில மகான் கவிஞர்களும் தோன்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு சில நாடுகளை இங்கு உதாரணங்களாக எடுத்துக்காட்டுகிறோம். கி. பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற் பகுதிக் காலத்தில், இத்தலியானது பல குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. ஆதிரிய ஏகாதி பத்தியத்தின் ஆதிக்க நிழல் இந்த நாட்டின் மீது பூரணமாகப் படிந்திருந்தது. ஜனங்களிடத்தில் அறியாமையும், சோர்வும் நிரம்பி யிருந்தன. இந்தக் காலத்தில்தான் மாஜினி, காரிபால்டி, காவர்1 ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, அந்நிய ஆதிக்கத்தினின்று இத்தலியை விடுதலை செய்யப் பகீரதப் பிரயத்தனங்கள் செய்தார்கள். இந்தக் காலத்திலே தோன்றின லியோபார்டி2 என்ற கவிஞன், தன் நாட்டைப் பார்த்து எப்படிக் கதறுகிறான் என்பதைக் கேளுங்கள். ஓ! இத்தலியே! நினது சென்ற காலத்துக் கோபுரங்களையும், தம்பங்களையும், சுவர்களையுந்தான் காண்கிறேன். நினது புகழையும், நமது முன்னோர்களின் ஆயுதங்களையும் காண்கிறே னில்லை. இப்பொழுதோ நீ நிராயுதபாணியாகிவிட்டாய்! நினது மார்பகம் திறந்திருக்கிறது! நினது சிரத்தில் மகுடத்தைக் காணோம்! ஹா! நினது தேகத்தில் எத்தனை காயங்கள்! எவ்வளவு ரத்தம்! ஓ! அழகான வடிவமே! நீ எப்படி விழுந்துவிட்டாய்? வானுலகை நோக்கிக் கதறுகிறேன்; பூவுலகைப் பார்த்துப் புலம்புகிறேன். சொல்லுங்கள், சொல்லுங்கள்! யார் இவளை இந்த திதிக்குக் கொண்டுவந்து விட்டது? இவளுடைய இரண்டு கைகளையும் சங்கிலியால் பிணைத் திருக்கிறார்கள்; இவளுடைய கூந்தல் கலைந்து கிடக்கிறது; முகம் திறந்து கிடக்கிறது; துக்காக்கிரந்தையாய் இவள் உட்கார்ந் திருக்கிறாள். இவள் எல்லோராலும் மறக்கப்பட்டுவிட்டாள். இவள் தனது தலையை இரண்டு முழங்கால்களுக்கு நடுவே புதைத்துக் கொண்டு அழுகிறாள். ஹா! எனது இத்தலியே! நன்றாக அழு!! நீ அழுவதற்கு நியாயம் இருக்கிறது. ஆளவே நீ பிறந்தாய். ஆனால் இப்பொழுது இந்த அந்தகார நிலையையடைந் திருக்கிறாயல்லவா? ஒளியிழந்த நினது இரண்டு கண்களும், கண்ணீரின் ஊற்றுக் களாயிருக்கின்றன. நினது துயரத்தையும் அவமானத்தையும் இந்தக் கண்ணீர் துடைக்கவில்லை. அரசியாயிருந்த நீ இப்பொழுது அடிமையாகி விட்டாய்! உன்னைப் பற்றி யார் இப்பொழுது பேசுகிறார்கள்? நினது புராதனப் பெருமை அறிந்த ஒரு சிலர், அவளா? ஒரு காலத்தில் புகழ் படைத்திருந்தாள் என்கிறார்கள். அப்படியா? இனி அவள் புகழோடு வாழமுடியாதா? ஏன்? ஏன்? இத்தலியே! நினது வலிமையெங்கே? நினது புராதன வீரமெங்கே? தோள் வலியெங்கே? மனவுறுதி யெங்கே? யார் உன் வாளாயுதத்தை உன் பிடியினின்றும் அகற்றிவிட்டது? யார் உனக்குத் துரோகம் செய்தது? எந்த நய வஞ்சகம், எந்த முயற்சி, எந்த அதிகாரம் நினது மேலாடையையும் மணி மகுடத்தையும் பறித்துக்கொண்டு விட்டது? அம்மா! மகத்தான உயரத்திலிருந்து இந்தக் கீழான நிலைக்கு நீ எப்படி வந்தாய்? எப்பொழுது வந்தாய்? உனது மக்களில் யாரும் உன்னைக் காப்பாற்றமாட்டார்களா? உனக்காகப் போர் புரிய மாட்டார்களா? ஆயுதங்கள் எங்கே? எங்கே ஆயுதங்கள்? உன்பொருட்டு நான் தன்னந்தனியாகப் போர்புரிவேன்; உன்பொருட்டுத் தன்னந்தனியாக வீழ்வேன். என்னுடைய ரத்தம், குளிர்ந்துபோன இருதயங்களுக்குச் சூடு உண்டாக்கட்டும் இந்த லியோபார்டியைப் போலவே இத்தலியில் சென்ற ஒரு நூற்றாண்டில் பல மகான் கவிஞர்கள் தோன்றி ஜனங்களை கர்ம க்ஷேத்திரத்தில் கொண்டு சேர்ப்பித்தார்கள். இவர்களில் சிறப்பாக ஜியோஸி கார்டூஷி, டி, அனன்ஸியோ, ஜியோவன்னி பாபினி1 முதலியவர்களைக் குறிப்பிடலாம். ஐர்லாந்தானது, கி. பி. பதினாறாவது நூற்றாண்டிலிருந்து இருபதாவது நூற்றாண்டு முற்பகுதி வரையில் தனது சுதந்திரத் திற்காக அநேக போராட்டங்களை நடத்தியிருக்கிறது; அநேக தியாகங்களைச் செய் திருக்கிறது. அந்நிய ஆதிக்கத்தின் மோகத் தினின்று ஜனங்களை விடுதலை செய்யவும் அவர்களுக்குத் தன்னம் பிக்கையை ஊட்டவும் இந்தக் காலத்தில் அநேக மகான் கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள். கி.பி. பதினாறாவது நூற்றாண்டில் வாழ்ந் திருந்த ஒரு மகான் கவி, ஐர்லாந்தின் வீழ்ச்சியைக் கண்டு எப்படித் துடிக்கிறான் என்று பாருங்கள்:- எனது இருதயம் துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறது; எனது ஆத்மா துன்பத்தில் வீழ்ந்து கிடக்கிறது; கீழானவர்களெல்லோரும் மேலானவர்களாயிருக்கிறார்கள்; பெரிய மனிதர்களெல்லோரும் இழிவடைந்து போயிருக்கிறார்கள். கால் (ஐர்லாந்து) தேசத்து மக்கள் தங்கள் நாட்டிலேயே பிரஷ்டர் களாயிருக்கிறார்கள். துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாத்திரையி லிருந்து திரும்பி வரும் சோர்ந்துபோன, முகம் வெளுத்துப் போன பிரயாணிகளைப் போல, யுத்த களத்திலிருந்து புறமுதுகிட்டு ஓடி வருகிறவர்கள், இரைவைப் பார்த்து நீ சீக்கிரம் வரக்கூடாதா, வென்று பிரார்த்திப்பது போல, கப்பலிலே செல்லும் பிரயாணிகள் இடையிலே கப்பலுடைந்து போக, கடலிலே விழுந்து தத்தளிப்பதுபோல, மரண சூசகம் கொடுக்கிற மனிதர்களைப் பார்த்து அஞ்சுவது போல நமது பந்தத்தில் நாம் இழிவுபட்டுக் கிடக்கிறோம். நமது அச்சந்தான் நமக்கு வீரம்; இழிதகைமைதான் நமக்குப் பெருந்தகைமை; நிராசைதான் நமக்கு நம்பிக்கை; அசுத்தந்தான் நமக்குத் தூய்மை. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஒரு மகான் கவிஞன் பாடியுள்ள கவிதைகளில் சில வரிகளை இங்கு எடுத்துக் காட்டுகிறோம்:- ஓ! என் நாடே! என் அன்பே! நினது மரணம் எனது ஆத்மாவில் எவ்வளவு ஆழமான துன்பத்தை மூட்டி விட்டு விட்டது? கடவுள்தான், உயர்ந்த கடவுள்தான், உன்னை உறக்கத்திலிருந்து எழுப்ப முடியும்; உன்னைப் பந்தத்தினின்றும் பிச்சைக்காரத் தனத்தினின்றும் விடுதலை செய்ய முடியும். வளர்ந்து கொண்டு வருகிற ஒரு மரம் கோடரியால் வீழ்த்தப் படுவது போல ஓ! துரதிருஷ்டவசமான நாடே! நீ வீழ்த்தப்பட்டாய். காலப் போக்கிலே யல்ல. உனது குற்றத்திற்காக வல்ல. உனக்கு இந்த அதிர்ச்சி ஏற்பட்டது; வீழ்ச்சி உண்டாக்கியது. துரோகிகளின் கரங்களினால் நீ வீழ்த்தப்பட்டு விட்டாய். உனது சிங்காதனம் பறிக்கப்படுகிறது; நீயோ பராதீனையா யிருக்கிறாய். இதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே, அதுதான் என்னுடைய துயரத்திற்கெல்லாம் துயரமாயிருக்கிறது. மற்ற நாடுகள், தங்கள் தங்கள் பிரபுக்களையும் அரசர்களையும் கொண்டி ருக்கிறது. நீ மட்டுந்தான் எல்லோருக்கும் மனைவியாயிருக்கிறாய்; அதிலும் விதவையாயிருக்கிறாய். இனியும் இப்படியெல்லாம் இருக்க முடியாது. நமது இருதயங்கள் சில்லிட்டு போகாமலிருக்கையில், நமது இந்த இழிநிலையைக் கண்டு துக்கப்படாமலிருப்போமாக! அப்படித் துக்கப்பட்டுக் கொண்டிருப்பது நமது பலவீனம். நமது மீட்சிக்காகக் கடவுளின் திருக்கரங்கள் உயர்த்தப்படுகிற காலம் விரைவில் வரும். அப்பொழுது நமது துயரமெல்லாம் சந்தோஷமாக மாறிவிடும். இப்பொழுது சீனா, ஜப்பானை எதிர்த்துச் சென்ற நான்கு வருஷ காலமாக மகத்தான யுத்தம் நடத்திக் கொண்டு வருகிற தென்று சொன்னால் அதற்கு இப்படிப் பட்ட மகான் கவிகள்தான் காரணம். இவர்கள், சாதாரண ஜனங்களும் புரிந்துகொள்கிற எளிய நடையில், உணர்ச்சி தரும் கவிதைகளைச் செய்து எல்லோரையும் பாடும்படி செய்தார்கள். இதற்கென்று ஒழுங்கான பிரசாரம் நடைபெற்றது. ஜனங்களிடையே இந்தப் பாடல்கள் பரவிக் கொண்டு வருவதை ஜப்பான் விரும்பவில்லை யென்ற ஒரு விஷயத்தைக் கொண்டு, இவை, எந்த மாதிரியான உத்வேகத் துடையவை என்பதை நாம் ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம். இந்த நவயுக மகான் கவிகளில் ஒருவனுடைய வரலாற்றை மட்டும் இங்குச் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறோம். நீஹ்எர்ஹ்1 என்ற இவன் ஓர் ஏழைக் கூலி. பின்னர் ஒரு படையில் சேர்ந்து போர்ச் சேவகனானான். இவனுக்குக் குழலூத நன்றாகத் தெரியும். இவன் 1933-ஆம் வருஷம் ஷாங்காய் நகரத்திலுள்ள ஒரு சினிமா கம்பெனியில் வாத்தியம் வாசிக்கிறவனாகச் சேர்ந்து கொண்டான். இவன் பெயர் பிரபலமாயிற்று. கவி புனையும் ஆற்றலும் இவனுக்கு இருந்தது. எனவே தேசீய கீதங்கள் சிலவற்றை இயற்றினான். தேசீயப் போர் வீரர்கள் படை வகுத்துச் செல்கிறபோது, இவனுடைய பாடல்களைப் பாடிக் கொண்டு சென்றார்கள். இவனுடைய படை யெழுச்சிப் பாட்டுகள்1 மகா பிரசித்தமானவை. இவற்றில் பெரிய பாதை என்ற ஒரு பாடலில் காணப்படும் சில வரிகள் இங்கு எடுத்துத் தருகிறோம். ஒன்று சேர்ந்து, ஒன்று சேர்ந்து நமது சுமைகளை இழுத்துக் கொண்டு செல்வோம். நாம் ஒன்று சேர்ந்திருந்தால், இரும்புச் சங்கிலிகளுக்கோ, மற்றத் துன்பங்களுக்கோ பயப்பட வேண்டிய தில்லை எல்லோரும் ஒன்று சேர்ந்து முன் செல்லுங்கள். ஏனென்றால், நாம் நடத்துகிற யுத்தம் எல்லோருக்கும் பொதுவானது. சுதந்திர மகா பாதையில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து செல்வோம். ஆனால் இந்த நீஹ் எர்ஹ், தனது பாடல்களை ஜனங்கள் பாடிக் கேட்கும்படியான பாக்கியத்தைப் பெறவில்லை. இவனுடைய பாடல்கள் ஜனங்களிடையில் பரபரப்பை உண்டு பண்ணி வருகிறதென்பதைத் தெரிந்த அதிகாரிகள் இவனைக் கண்காணிக்க ஆரம்பித்தார்கள். எனவே, இவன், தனது சங்கீத ஞானத்தை அபிவிருத்தி செய்துகொள்ளும் பொருட்டு ஜப்பானுக்குச் சென்றான். அங்குச் சில காலம் தங்கிவிட்டுப் பின்னர் ருஷ்யாவுக்குப் போக வேண்டுமென்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தான். இப்படியிருக் கையில், ஒருநாள் (ஜப்பானிலுள்ள) குகநூனா என்ற ஊரிற்குச் சென்று, அங்குக் கடல் நீராடிக் கொண்டிருந்தான். அப்பொழுது திடீரென்று முழுகிப் போய்விட்டான். இவன் எப்படி முழுகிப் போனான் என்பது இன்னும் பரம ரகசியமாகவே இருக்கிறது. இப்படி இவன் இறக்கிறபோது என்ன வயது தெரியுமா? இருபத்து நான்கு! இருபத்து நான்கு!! ஆனால் இவன் சீனர்களின் இருதயக் கோயிலில் மூர்த்திகரித்துக்கொண்டு சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட மகான் கவிகள், இந்தியாவில் சென்ற அநேக நூற்றாண்டுகளாகத் தோன்றவேயில்லை யென்பது நம்முடைய அபிப்பிராயம். நம்முடைய அடிமைத்தனம், நம்முடைய தரித்திரம், நம்முடைய அறியாமை இவைகள்தான், இப்படிப்பட்ட மகான் கவிகள் தோன்றாமலிருப்பதற்குக் காரணமா? அல்லது மகான் கவிகள் தோன்றி மேலே காட்டப்பட்ட நமது குறைகளை அகற்றவில்லையா? எப்படியும் மகான் கவிகளும் தோன்றவில்லை; நமது குறைபாடுகளும் நீங்க வில்லை. இவை யிரண்டும் நமக்கு பஷ்டமாகத் தெரிகின்றன. எப்படியோ ஏகதேசமாக ஒரு சுப்பிரமணிய பாரதியார் தோன்றிவிட்டார். பாலை வனத்தில் காணப்படும் பசும் புற்றரைபோல, காரிருளில் தோன்றும் தீவெட்டி வெளிச்சம் போல, கற்பாறையின் நடுவே நெற்கதிர் உற்பத்தி யாவது போல அவர் தோன்றினார்; மின்னல் வாழ்வு நடத்தி விட்டு மறைந்து விட்டார். அவருடைய மகான் தன்மையெல்லாம், அவர் சாதாரண ஜனங்களின் இதயத்தைத் தொட்டுத் தட்டி விட்டதிலேதான் இருக்கிறது. இஃதொன்றினாலேயே அவர், துருவ நட்சத்திரம் போல் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரொருவரைக் கொண்டு மட்டும் நாம் திருப்தியடைந்து விடலாமா? அந்தத் திருப்தி நமக்கு விடுதலை அளிக்குமா? பாரத நாடே! பழம் பெருமையில் மங்கிக் கிடக்கும் பாரத நாடே! நின் உதரத்தில் எப்பொழுது மகான் கவிகள் தோன்றப் போகிறார்கள்? தமிழ் நாடே! கம்பனையும் வள்ளுவனையும் கண்டு களிகூர்ந்த தமிழ் நாடே! உனக்கு இலக்கிய விமோசனம் எப்பொழுது ஏற்படப் போகிறது? அதன் மூலமாக உனது அரசியல், சமுதாய வாழ்வை எப்பொழுது காணப் போகிறாய்? சுதந்திரமும் Ó®âU¤jK« 1. சுதந்திரம் பிரதி வருஷமும் ஜனவரி மாதம் இருபத்தாறாந் தேதியைச் சுதந்திர தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்தக் கொண்டாட்டத்தை நாம் கொண்டாட ஆரம்பித்து ஏறக்குறைய பன்னிரண்டு வருஷங்களுக்கு மேலாகின்றன1. சுதந்திரத்தை ஏற்கனவே பெற்று அதனைப் பந்தோபஸ்தாக வைத்துப் பாதுகாத்து அனுபவிக்கிறவர்கள், தாங்கள் எந்த நாளில் அடிமைத் தனத்தி னின்று விடுதலை பெற்றார்களோ அந்த நாளைச் சுதந்திர நாளாகக் கொண்டாடி வருவதுதான் உலகத்திலுள்ள எல்லா நாட்டாரும் அனுஷ்டிக்கிற முறை. உதாரணமாக, அமெரிக்கர்கள், ஜூலை மாதம் நான்காந் தேதியைச் சுதந்திர தினமாகக் கொண்டாடு கிறார்கள். அதாவது 1776-ஆம் வருஷம் ஜூலை மாதம் நான்காந் தேதி அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நாள். அன்று தான், அமெரிக் காவின் உரிமைச் சாஸனமும் பகிரங்கப்படுத்தப்பட்டது. இதே மாதிரி ஒவ்வொரு நாட்டாரும் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இந்தியாவில் நாம் சுதந்திரம் பெறவேண்டுமென்கிற நமது சங்கல்பத்தைத் தெரிவித்துக் கொள்கிற நாளையே சுதந்திர நாளாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில் நாம், நமது மனோவாக்கு காயங்களினால், சுதந்திரம் பெற வேண்டுமென்கிற நமது உறுதியை ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறோம். எனவே சுதந்திரப் பிரதிக்ஞை என்பதை யாருமே சொல்லடுக்குகள் நிறைந்த வாக்கியக் கோவை என்றோ, நமது மதச் சடங்குகளில் அர்த்தம் தெரியாமல் ஓதப்படுகிற மந்திரங்கள் போலவே எண்ணிவிடக்கூடாது. இப்படிப்பட்ட மனோ உறுதியுடன் தான் இந்த வருஷத்துச் சுதந்திர தினத்தை எல்லோரும் கொண்டாடி யிருப்பார்களென்று நம்புகிறோம். பிரெஞ்சு அறிஞனாகிய ரூஸ்ஸோ2 சமுதாய ஒப்பந்தம் என்ற நூலை, மனிதன் சுதந்திரத்தோடு பிறக்கிறான்; ஆனால் எங்கும் கட்டுண்டு கிடக்கிறான் என்ற வாக்கியத்தோடு தொடங்குகிறான். அதாவது, மனிதன் பிறக்கிற போதே, அவனுடன் சில உரிமைகளும் பிறக்கின்றன. அந்த உரிமைகளை அரசியல் காரணங்களினாலும், பொருளாதார காரணங் களினாலும் நாளாவட்டத்தில் அவன் இழந்துவிடுகிறான். இழந்து விட்டதை மீண்டும் பெற அவன் முயற்சி செய்கிறானே அதைத்தான் சுதந்திர முயற்சி என்றும், சுதந்திரப் போராட்டம் என்றும், சுதந்திரப் புரட்சி என்றும் பல பெயர்களிட்டு அழைக்கிறோம். சுதந்திரமில்லாமலிருப்பது இயற்கைக்கு விரோதமான நிலை. சுதந்திரத்தோடு இருப்பதுதான் இயற்கை நிலை. மனிதன் இயற்கை வாழ்வு வாழ வேண்டுமென்று சொன்னால், சுதந்திர வாழ்வை அவன் நடத்தவேண்டுமென்பது தான் அர்த்தம். உலக மேதாவிகளில் ஒருவரும், தத்துவ சாஸ்திர நிபுணருமான ஸர்.எஸ். ராதாகிருஷ்ணன், சுதந்திரம் என்பதற்குப் பின்வருமாறு வியாக்கியானம் செய்கிறார்:- மனிதனுடைய சுபாவத்தைச் சில நிர்ப்பந்தங்கள் உள்ளும் புறமுமாக மூடிக் கொண் டிருக்கின்றன. அந்த நிர்ப்பந்தங்களினின்று அவனை அப்புறப் படுத்தி விடுவது தான் சுதந்திரத்தின் நோக்கம். இதனால் என்ன தெரிகிறதென்றால், அடிமையாயிருப்பது மனித சுபாவத்திற்கு விரோதம். அப்படிச் சில செயற்கை நிர்ப்பந்தங்கள் அவனை அந்த அடிமைத்தனத்தில் அழுத்தி வைத்திருக்குமானால், அதனின்று மீள முயற்சி செய்வது அவன் கடமை. இந்தக் கடமையை மறந்து, விதி, கர்மம் என்ற சொற்களில் தஞ்சம் புகுந்து கொள்ளப் பார்க்கிறானே அவன் கானல் நீரிலே ஸ்நானம் செய்கிறவன்; உளுத்துப் போன மரத்திலிருந்து தன் வாகனத்திற்கு அச்சாணி செய்ய முயலுகிறவன். அடிமைத்தனமாகிய செயற்கை நிலையிலிருந்து சுதந்திர மாகிய இயற்கை நிலைக்குச் செல்வது பிரதி மனிதனுடைய கடமை மட்டுமல்ல; தருமமுங்கூட. சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதுதான் தருமம்; அப்படிப் பாடுபடாமலிருப்பது அதருமம். யுத்தத்திலேகூட தரும யுத்தம் என்றும், அதரும யுத்தம் என்றும் இரண்டு விதமுண்டு. தற்காப்பு நிமித்தம், அதாவது தன் சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்கிற நிமித்தம் ஒரு ஜாதியோ, ஒரு தேசமோ யுத்தம் செய்யுமானால் அது தரும யுத்தம் ; பிற நாடுகளை ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கோடு, அதாவது மற்றவர்களை அடிமைப்படுத்தி ஆள வேண்டுமென்ற நோக்கோடு செய்யப்படுகிற யுத்தம் அதரும யுத்தம். இதைப் போல் சுதந்திரத்திற்காகப் போராட்டம் நடத்துவது தருமம்; அப்படி நடத்தாமல், அடிமை வாழ்க்கையின் இன்பத்தில் திருப்தியடைவது அதருமம். ஆனால் இதில் ஆச்சரியப்படத்தக்க தென்னவென்றால், இந்த அதருமமே நமக்குள் சில சமயங்களில் தருமமாகக் காண்பிக்கப்படுவதுதான், அடிமை வாழ்க்கை யென்னும் பாத்திரத்தில் இன்பமாகிய தேனை நிறைய ஊற்றி வைத்து, அதனைப் பருகி மயங்கிக் கொண்டிருக்கு மாறு நம்மை பலவந்தப்படுத்து கிறார்களே அவர்கள் எப் பொழுதுமே நமது நன்மைக்குத்தான் அந்த மாதிரி செய்து கொண் டிருப்பதாகச் சொல்வார்கள். இலக்கிய பண்டிதனும், அரசியல் நிபுணனுமான லார்ட் மார்லி1 ஒரு சமயம் கூறிய மாதிரி பிறருக்குத் தீமை செய்து கொண்டிருக்கிறவர்கள், அவர்களுக்கு நன்மை செய்வதாகச் சொல்லிக் கொண்டே செய்வார்கள். ஆனால் இதற்கு நாம் மயங்கிவிடக்கூடாது. இந்த மயக்கத்திற்கு அடிமைப்படாம லிருப்பதே ஒரு பெரிய பிரயத்தனம். அடிமைத்தனம் என்கிற வலையை, பதவி பட்டம் என்கிற இரண்டுவித ஆகாரங்களை உள்ளே வைத்து நம்மீது வீசுகிறார்கள். ஆகாரத்தின்மீது ஆவல் கொண்டு நாம் அந்த வலையில் விழுந்து விடுகிறோம். ஆகாரம் கிடைக்கிறது. ஆனால் ஆத்மாவை இழந்து விடுகிறோம். இப்படிப் பட்டவர்களுக்கு விமோசனம் எது? நாம் சுதந்திரத்திற்காக முயற்சி செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். நம்மில் எத்தனைப்பேர் நம் நாடு சுதந்திரமில்லாத நாடு என்பதை உணர்ந் திருக்கிறார்கள்? நமது வாழ்க்கை ஒரு சிலருக்குப் பகட்டாகவும் ஆடம் பரமாகவும் இருந்த போதிலும், பெரும் பாலோருக்குக் கசப்பாயிருக்கிற தென்பதற்குக் காரணம் என்ன என்பதைப்பற்றி எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள்? நாம் எந்த நிமிஷத்தில் இயற்கைக்கு விரோதமான நிலையில் இருக்கிறோமென்பதை உணர்ந்து விடுகிறோமோ, அதாவது சுதந்திர மல்லாமல் இருப்பதாக உணர்கிறோமோ அந்த நிமிஷத்திலேயே அந்த நிலைமையிலிருந்து வெளியேறி விட முயலுவோம். உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட எந்த முயற்சியையும் யாராலும் தடை செய்ய முடியாது. ஒரு ஜாதி சிந்திக்கத் தொடங் காத வரையில் அஃது உயிரில்லாத ஒரு பிண்டம் மாதிரி. சிந்தனை என்கிற ஜீவதாது அந்தப்பிண்டத்திற்குள் புகுந்த கணத்திலேயே அது துடிக்க ஆரம்பித்து விடுகிறது. அந்தத்துடிப்பின் வேகத்தை எந்த அதிகார சக்தியும் அடக்க முடியாது. இதனால்தான் நாம் அடிக்கடி நமக்குச் சிந்தனை வேண்டும் என்று கூறுகிறோம். சுதந்திர ஆவலானது மனிதனுக்கு மட்டுமல்ல; எல்லா ஜீவராசி களுக்கும் சுபாவத்திலேயே இருக்கிறது. வானத்திலே பறக்கிற பட்சியைக் கூட்டிலே சிறிதுநேரம் அடைத்து வைத்துப் பாருங்கள். அஃது எவ்வளவு வேகமாகத் தன் சிறகுகளை அடித்துக் கொள்கிறது! ஏன்? தான் விடுதலையடைய வேண்டுமென்பதில் அவ்வளவு ஆவல். பொன்னால் கூடு கட்டி, அதில் பஞ்சணை போட்டு அதனை இருத்தி வைத்துப் பாருங்கள். அதற்கு நீங்கள் பாலும் சோறும் ஊட்டலாம்; பட்டினால் அதனைப் போர்த்து வைக்கலாம். இருந்தாலும் இவைகளின் மீது அஃது இச்சை கொள்வதேயில்லை. தன் இஷ்டம் போல ஆகாயத்திலே பறக்கவும் , விருப்பமுள்ள சமயத்தில் தேவையான உணவைச் சாப்பிடவுமே அது விரும்புகிறது. பொற் கம்பிகளின் கட்டுப்பாட்டிற்கு அது தன் தலையை வணங்கிக் கொடுக்க மறுக்கிறது. ஆனால் எல்லையே இல்லாத அதாவது எவ்விதக் கட்டுப்பாடுமில்லாத ஆகாயத்தில் இஷ்டப்படி சஞ்சரிக்கவே அது முயலுகிறது. காட்டு ராஜன் என்ற பெயர் தாங்கிக் கொண்டு கம்பீரமாகத் திரியும் சிங்கத்தை ஒரு கூட்டிலே அடைத்து விட்டதும், அது தன்னைச் சுற்றிப் போடப் பட்டிருக்கும் இரும்புக் கம்பிகளைத் தன் பாதங்களால் எவ்வளவு உக்கிரமாக அறைகிறது! தனக்கு வேண்டிய ஆகாராதிகள் தன்னுடைய சிரமம் எதுவும் இல்லாமல் அந்தக் கூட்டிலேயே கிடைத்து விட்டபோதிலும்கூட அதனை இன்பத்தோடு உண்ண அது மறுக்கிறது. இதனால் அடிமைத் தனத்திலே இருக்கிற இன்பத்தைக் காட்டிலும் சுதந்திரத்திலே இருக்கும் துன்பத்தைத் தான் பிராணி வர்க்கங்கள் விழைகின்றன என்பது தெரிகிறது. பகுத்தறிவு இல்லாத பிராணிகள், சுதந்திரத்தில் இவ்வளவு வேட்கையுடையனவாய் இருக்குமானால், பகுத்தறிவுள்ள மனித னுடைய நிலைமை என்ன? கடமை என்ன? லோகமான்ய திலகர், அடிக்கடி சுதந்திரம் எனது பிறப் புரிமை என்று கூறுவார். இதன் உட்பொருளை அந்தக் காலத்தில் எத்தனை பேர் அறிந்திருந்தார்களோ நமக்குத் தெரியாது. ஆனால், எந்த மனிதனுடைய சுதந்திரத்தையும் பறிக்க யாருக்கும் உரிமை யில்லை யென்பதையும், அடிமையாயிருந்த மனிதன் உரிமை பெறவில்லை யென்பதையும் மேற்கண்ட ஒரு வாக்கியம் தெள்ளிதின் விளக்குகிறது. அமெரிக்காவின் சுதந்திர சாஸனத்திலுள்ள சில வாக்கியங்கள் ஈண்டுக் கவனிக்கற்பாலன. மனிதர்கள், பிறக்கிறபோதே, ஆண்டவனால் அளிக்கப் பட்டிருக்கிற பராதீனப்படுத்த முடியாத சில உரிமைகளுடன் பிறக்கிறார்கள். இந்த உரிமைகளிற் சில, உயிர்வாழும் உரிமை, சுதந்திரமாயிருக்க உரிமை, சந்தோஷத்தை அனுபவிக்கிற உரிமை முதலியனவாம். இந்த உரிமைகளை மனிதர்கள் அனுபவிக்குமாறு செய்யவே, மனிதர் களிடையில் அரசாங்கங்கள் நிறுவப் படுகின்றன. இந்த அரசாங்கங்கள் செலுத்துகிற நியாயமான அதிகாரங்கள், ஆளப் படுவோரிடமிருந்து-அதாவது ஜனங்களிடமிருந்து-கிடைப்பவை. இந்த மாதிரி நிறுவப் படுகிற அரசாங்கங்கள் மேலே சொன்ன உரிமைகளை அழிக்க முற்படுமானால், மேற்படி அரசாங்கங்களை மாற்றவும் அழிக்கவும் ஜனங்களுக்கு உரிமையுண்டு. அப்படி மாற்றியோ, அழித்தோ ஆன பிறகு, தங்களுக்குப் பாதுகாப்பையும் சந்தோஷத்தையும் அளிக்கக்கூடிய ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்த அவர்களுக்கு உரிமையுண்டு. இதனால் தெரிவதென்ன? மனிதன், எந்த உரிமைகளோடு பிறக் கிறானோ, அந்த உரிமைகளை அவன் வைத்துப் பாதுகாக்க வேண்டும்; அப்படிப் பாதுகாக்கும் முயற்சியில் அவன் தடைப் படுத்தப் படுவானாகில், அந்தத் தடைகளை அகற்றிச் செல்வது அவனது கடமை. ஒரு மனிதன் மற்றொரு மனிதனை ஆள உரிமை கிடையாது. இதே மாதிரி தேசமும். ïªj¡ fU¤ij, m¥uAh« ȧ¡f‹1' ã‹tUkhW mHfhf É°jÇ¡»wh‹.:- எந்த ஒரு மனிதனும் மற்றொரு மனிதனை ஆளக்கூடியவ னல்ல. அப்படியே ஒரு ஜாதி மற்றொரு ஜாதியை ஆளக்கூடியதல்ல. ஒரு மனிதன் தன்னைத்தானே ஆண்டு கொள்வானாகில் அதுதான் சுதந்திரம். அப்படியே, ஒரு ஜாதி தன்னைத் தான் ஆண்டு கொள்ளு மானால் அதுதான் சுதந்திரம். ஒரு ஜாதியை மற்றொரு ஜாதி ஆள்வது கொடுமை. ஒரு தேசம், மற்றொரு தேசத்தின் சுதந்திரத்தை அபகரிக்கு மானால், அது - அபகரித்துக் கொள்கிற தேசம்- சுதந்திரத்தோடு இருக்க லாயக்கில்லை. சென்ற 1914-ஆம் வருஷ மகா யுத்தத்தின் போது அந்த யுத்தத் தின் நோக்கங்களை விஸ்தரித்து பிரசிடெண்ட் வில்சன்2 சொல்லிக் கொண்டு போகையில் பின் வருமாறு குறிப்பிட்டான்:- உலகத்திலுள்ள எல்லா ஜனங்களுடைய விடுதலைக்காகவும் நாம் போராடுகிறோம். சிறியதும் பெரியதுமான எல்லாத் தேசங்களி னுடைய சுதந்திரத்திற்காகவும் போராடுகிறோம். எல்லா ஜனங்களும், அவரவர் இஷ்டப்படி வாழ்க்கையை நடத்தக்கூடிய விதமான உரிமைகளை அடையவும் நாம் போராடுகிறோம். எனவே சுதந்திரமென்பது, மனிதனிடமிருந்து பிரிக்க முடியாத ஒன்றென்பது பெறப்படுகிறது. அப்படிப் பிரிக்க முடியாத ஒன்றை - பிறருக்குப் பராதீனப்படுத்த முடியாத ஒன்றை-பிரித்துக் கொடுத்தோ, பராதீனப்படுத்தியோ விடுவானாகில், அவன் - அந்த மனிதன் - எப்படி மனிதன் என்று அழைக்கப்படுதற்குரியன்? இதனை நண்பர்கள், சிந்திக்க வேண்டுகிறோம். சுதந்திர உணர்ச்சி என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. மனிதன் எப்பொழுது தனிச் சொத்து பாத்தியதை கொண்டாட ஆரம்பித்தானோ அன்றிலிருந்தே அவனுடைய எதிரில் இந்தச் சுதந்திர உணர்ச்சி உதயமாயிற்றென்பதே அறிஞருடைய அபிப் பிராயம். ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முந்தியிருந்த அறிஞர் கள் கூட, சுதந்திரம் என்றால் என்ன வென்பதை நிர்ணயித்து வைத்துப் போயிருக்கிறார்களென்று சொன்னால், அதைக் குறித்து இப்பொழுது நாம் ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது. உதாரண மாக சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னர் எபிக்ட் டீட்டஸ்3 என்ற ஓர் அறிஞன் இருந்தான். அவன் சுதந்திரத்தைப் பற்றி எவ்வாறு வருணிக்கிறான் பாருங்கள்:- எவனொருவன் தன்னிஷ்டப்படி வாழ்க்கையை நடத்துகி றானோ, எவன் கட்டாயத்திற்கும், நிர்ப்பந்தத்திற்கும், பலாத்காரத் திற்கும் உட்படுத்தப்படாமலிருக்கிறானோ, எவனுடைய போக்குகள் தடைப் படுத்தப்படாம லிருக்கின்றனவோ, எவனுடைய ஆசைகள் பூர்த்தியடை கின்றனவோ, எவனுடைய துவேஷங்கள் சேகரிக்கப்பட ஏதுவில்லாமற் போகிறதோ அவன் தான் சுதந்திர புருஷன். பிறருக்கு எவ்விதத்திலும் துன்பம் ஏற்படாதவாறு பிரதி மனிதனும் அவனவன் இச்சைப்படி எண்ணவும், எழுதவும், பேசவும், நடக்கவும் உரிமையுடையவனாயிருக்க வேண்டும். இது தான் உண்மையான சுதந்திரம்; பரிபூரண சுதந்திரம். இப்படிப்பட்டதொரு சுதந்திரத்திற்காகப் பாடுபடுவது தான் ஒவ்வொரு மனிதனுடைய கடமையுமாகும். 2. சீர்திருத்தம் இது சீர்திருத்த காலம். சீர்திருத்தத்தைப் பற்றிப்பேசுவதும் எழுதுவதும் இப்பொழுது ஒரு நாகரிகமாகப் போய்விட்டது. நண்பர்கள் ஒருவர்க்கொருவர் சந்திக்கிறபோது என்ன, நீ இன்னும் சீர்த்திருந்த வில்லையா? என்று கேட்கிறார்கள். உடைச் சீர்திருத்தம், உணவுச் சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம், ஆசார சீர்திருத்தம்- ஆக எல்லாத் துறைகளிலும் இப்பொழுது சீர்திருத்தந்தான். இந்தச் சீர்திருத்த மனப்பான்மை இருப்பது நல்லதுதான். வீட்டில் அலமாரியில் வைத்திருக்கிற பொருளை நாம் அடிக்கடி எடுத்துப் பார்த்துத் துடைத்து வைக்காமற் போனால் அது சீர்கெட்டுப் போகிறது. அதைப்போலவே, ஒரு ஜாதியின் பல சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், அந்த ஜாதியினர் அடிக்கடி பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். இடத்திற்கும் காலத் திற்கும் தகுந்த மாதிரி அந்தப் பிரச்சினைகளைத் திருத்தியமைத்துக் கொள்ள வேண்டும். உலக சரித்திரத்தை நாம் பார்க்கிற போது வளர்ச்சி யடைந்துகொண்டு வந்திருக்கிற ஒவ்வொரு ஜாதியும், இப்படியே செய்து வந்திருக்கிறது. ஆனால் இப்படி வளர்ந்து கொண்டு வந்திருக்கிற ஒவ்வொரு ஜாதியும், சீர்திருத்தத் துறையிலே ஸ்நானஞ் செய்துவிட்டு மட்டும் வளர்ச்சியடையவில்லை; சிருஷ்டிக்கிற துறையிலும் தீவிரமாக வேலை செய்து வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. இது முக்கியமான விஷயம். இதை நாம் அலட்சியமாகக் கருதிவிடக்கூடாது. பாரத ஜாதியின் தற்போதைய ஸ்திதியில் அது சிருஷ்டிக்க முடியாதென்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். ஏனென்றால் அடிமை ஜாதிக்கு, சிருஷ்டிக்கிற சக்தியே இல்லாமற் போய் விடுகிறது. எனவே, இருக்கப்பட்டதை நாம் ஒழுங்காகச் சீர்திருத்தி யமைத்துக்கொள்ள வேண்டும். திடகாத்திரமுள்ள ஒருவன்தான் பிரஜா உற்பத்தி செய்ய முடியும். நோய்வாய்ப்பட்டுள்ள ஒருவன், சிருஷ்டிக்கிற தொழிலைப்பற்றி நினைக்கவே முடியாது. அப்படி நினைப்பதற்கு முன்னர் அவன், பல ஔஷதங்களைச் சாப்பிட்டு உடலிலே படிந்து கிடக்கும் நோய்களை அகற்றிக் கொள்வதோடு தன் தேக பலத்தையும் விருத்தி செய்து கொள்ள வேண்டும். இதைப் போலவே அடிமை நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒரு ஜாதியும் நடந்துகொள்ள வேண்டும். நாம் அனுஷ்டிக்கிற சீர்திருத்த முறை கள், நம்முடைய வியாதிகளைப் போக்குவது மட்டுமல்லாமல், நமது ஜீவசத்தையும் விருத்தி செய்து கொடுக்கக்கூடியதாயிருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்ட வசமாக இப்பொழுது நமது நாட்டிலே அனுஷ்டிக்கப்பட்டு வருகிற சீர்திருத்த முறைகளெல்லாம், கீழிருந்து தொடங்கப்படாமல் மேலிருந்தே தொடங்கப்படுகின்றன. விருட் சத்தின் அடியிலுள்ள ஆணிவேரில் அரித்துக் கொண்டிருக்கும் புழுக்களை அகற்ற நாம் பாடுபடுகிறோ மில்லை; உச்சாணிக் கிளையிலுள்ள இலையின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் புழுக் கூட்டை அப்புறப்படுத்த முயல்கிறோம். அவ்வப்பொழுது சேரும் இந்தப் புழுக்கூடுகளை அவ்வப்பொழுது நாம் அப்புறப்படுத்தி விடுவதனால், மரம், மேற்பார்வைக்குச் சிறிது காலம் வரையில் அழகாகத் தான் இருக்கிறது; ஆனால், உள்ளுக்குள்ளே, அடி வேரிலிருந்து மரமானது பட்டுக்கொண்டு வருவது யாருக்கும் தெரிவ தில்லை. திடீரென்று தெரிகிறபோது, யாருமே பிரமித்துப் போகிறார்கள்; தாங்கள் அனுஷ்டித்த பரிகார முறைகள் தவறென்று உணர்கிறார்கள். தீவிரமான முறை ஒன்றைக் கையாள வேண்டு மென்ற ஆத்திரம் அப்பொழுது இவர்களுக்கு உண்டாகிறது. ஆனால் அந்த நேரத்தில் என்ன செய்ய முடியும்? மனோ திடமுள்ள யாரோ ஒரு வைத்தியன் தோன்றி, கடைசி பட்சமான சிகிச்சை செய்தாலொழிய, மரம் உயிர்த்து எழுவ தில்லை. இதைப்போல் ஒரு ஜாதியும், அரசியல் அடிமைத் தனம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக சச்சரவு, குறுகிய மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு போகிற மதக் கட்டுப்பாடுகள் முதலிய புரைப்புண்களால் அழுகிக் கொண்டு வருகிற போது, தீவிரமான ஒரு முறையைத் தான் கையாள வேண்டும். இந்தத் தீவிர முறையையே, அரசியல் பரி பாஷையில் புரட்சி என்று சொல்வார்கள். வைத்திய பரிபாஷையில் இன்ஜஷன் என்பார்கள். ஆனால் எந்தத் தேகத்திலும் கொண்டு போய் திடீரென்று இஞ்ஜக்ஷன் செய்ய முடியாது. `இன்ஜக்ஷன் செய்யப் படுவதற்குகூட தேகம் தகுதியுடைய தாயிருக்க வேண்டும். அதைப் போலவே ஒரு ஜாதியினிடத்திலும் திடீரென்று புரட்சியை ஆரம்பித்துவிட முடியாது. அப்படி ஆரம்பித்தால் அஃது ஏமாற்றத் தில் தான் கொண்டு போய் விடும். ஆனால் இந்தப் புரட்சி ஏற்படாத படியே ஒரு ஜாதியினுடைய ஜீவ களையை விருத்தி செய்யலாம். அதற்கு, அடிப்படையிலிருந்து சீர்த்திருத்தங்கள் செய்து கொண்டு போக வேண்டும். இந்த அமிசத்தை வற்புறுத்துவதுதான் இந்தக் கட்டுரையில் நமது நோக்கம். இப்பொழுது நமது நாட்டில் எழுந்துள்ள சீர்த்திருத்த இயக்கங் களிற் பெரும்பாலான, பிறர் பார்த்து மெச்சவேண்டு மென்னும் நோக்குமுடையனவாயிருக்கின்றனவே தவிர, அந்தரங்க சுத்தத்தை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை யென்று நாம் கொஞ்சம் பட்ட வர்த்தனமாகவே சொல்லி விடவேண்டி யிருக்கிறது. நமது சமுதாயத்தின் தற்போதைய நிலைமை என்ன, அதன் ஜீவநாடி எந்த வேகத்தில் துடித்துக் கொண்டிருக்கிறது. அதனை முன்னுக்குப் போக விடாமல் என்னென்ன தளைகள் அதனைப் பின்னிக் கொண் டிருக்கின்றன, அதனுடைய தேவைகள் என்னென்ன என்பவை களைச் சரிவரத் தெரிந்து கொள்ளாதவர்களும், போதிய ஆராய்ச் சியும் உலக அனுபவமும் இல்லாதவர்களும் சீர்த்திருத்த ஸ்தாபனங் களை ஆரம்பித்து ஜனங் களுக்கு நன்மை செய்யப் போவதாகக் கச்சை கட்டிக் கொண்டு முன் வருகிறார்கள். இவர்களால், இவர்களுக்கு நன்மையுண்டாகிறதோ என்னவோ நமக்குத் தெரியாது; நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் லவலேசமும் நன்மை உண்டாவதில்லை யென்பது மட்டும் நமக்குத் தெரிகிறது. அரசியல் சீர்திருத்தத்தை எடுத்துக் கொள்வோம். நமது அரசியல் அபிலாஷைகளைப் பிரதிபலித்துக் காட்டுங் கண்ணாடி யாகத் தற்போது அமைந்திருப்பது காங்கிரஸ். இந்தக் காங்கிரஸிலே அங்கத்தினராகச் சேர்வதற்கு விசேஷமான நிபந்தனை எதுவும் கிடையாது. வயது வந்த யாரும் நான்கணா சந்தா செலுத்தினால் இதில் அங்கத்தினர்தான். அப்படிச் சேர்ந்த பிறகு இவர்களுக்கு விசேஷமான ஒரு கட்டுப்பாடோ, வேறு நியமங்களோ கிடையாது. அப்படி நியமங்கள் ஏதோ ஒன்றிரண்டு இருந்தாலும் அவை ஒழுங்காக அனுஷ்டிக்கப்படுகின்றனவாவென்று பரிசீலனை செய்ய எவ்வித ஏற்பாடுகளும் இல்லை. மற்றும் காங்கிரஸில் அங்கத்தினர் களாகச் சேர்ந்தவர்கள் இன்னின்ன வேலைகளைச் செய்யவேண்டு மென்பதைப்பற்றி எவ்வித நிபந்தனையும் கிடையாது. எத்தனையோ சங்கங்களில் அங்கத்தினரா யிருப்பதுபோல் காங்கிரஸிலும் அங்கத்தினராயிருக்கலாம். காங்கிரஸ் அங்கத்தின ராயிருப்பதற் கென்று விசேஷ பொறுப்பு ஒன்றும் இல்லை. இந்த வகைகளில் காங்கிரஸானது அதிகமாகச் சீர்திருத்தமடைய வேண்டும். தவிர, காங்கிரஸ் அங்கத்தினரா யிருப்பவர்களில் எத்தனை பேருக்கு நமது தேசத்தின் அரசியலைப்பற்றியோ, உலக அரசியல் அமைப்புக்களைப்பற்றியோ தெரியும் என்று கேட்கிறோம். இந்தத் துறையில் காங்கிரஸானது எவ்வித வேலையும் செய்யவில்லை. காங்கிரஸானது ஜனங்களுக்கு ஓரளவு அரசியல் உணர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறதே தவிர, அரசியல் அறிவை ஊட்ட வில்லை. காங்கிரஸ் பிரசாரகர்களுக்கென்றாவது ஆங்காங்கு அரசியல் போதனைப் பள்ளிக்கூடங்கள் ஸ்தாபிக்க வேண்டும். காங்கிரஸ் ஸ்தாபனங்கள் என்னென்ன வேலைகளைச் செய்து வருகின்றன, இனி என்னென்ன செய்யப் போகின்றன என்பவை களைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கச் செய்ய வேண்டும். ஆசார சீர்த்திருத்தத்தை எடுத்துக் கொள்வோம். நமது பழைமை களை யெல்லாம் பரிகசித்துப் பேசுவதைத்தான் ஆசார சீர்த்திருத்த மென்று பலர் நினைக்கிறார்கள். இது மிகத் தவறு. எந்த ஒரு சீர்த் திருத்தமுமே, நமது தேசீய தனித்துவத்தை, நமது கலை ஞான பரம்பரையைப் போக்கடித்து விடுவதாயிருக்கக்கூடாது. எனவே, நமது புராதனக் கிரந்தங்களையும் நமது பூர்விக ஆசார விவகாரங்களையும், அவைகளின் ஆழ்ந்த கருத்துக்களைத் தெரிந்து கொள்ளாமல் அவற்றை இகழக்கூடாது. இங்ஙனம் பழைமையை அடியோடு உதறித் தள்ளு கிறவர்கள், புதுமையான முறைகள் என்னென்னவற்றைக் கையாண்டிருக் கிறார்கள் என்று பார்த்தால் அஃதொன்றுமில்லை. இவர்களுடைய நிலைமை திரிசங்கு சொர்க்க மாகவே இருக்கிறது. பழைமையை, புதிய காலத்திற்குத் தகுந்தாற் போல் மாற்றியமைத்துக்கொள்வது தான் புத்திசாலித்தனமேதவிர, ஜாதீய கௌரவத்தைவிட்டுக் கொடுக்கிற மாதிரியான முறைகளைச் சீர்த்திருத்தம் என்ற பெயரால் அனுஷ்டானத் திற்குக் கொண்டுவரப் பார்ப்பது நம்முடைய வீழ்ச்சியை நாமே தேடிக் கொள்வதாகும். பெண் சீர்த்திருத்தமென்று சொல்லிக்கொண்டு ஆண்கள் பேச முன்வருவதுதான் நமக்கு விநோதமாயிருக்கிறது. பெண்களை நாம் பரம்பரை அடிமைத்தனத்தில் ஆழ்த்தி வைத்திருப்பதாகவும், அவர்களை அடுப்பங்கரைப் பொம்மைகளாக ஆக்கிவிட்டிருப்ப தாகவும், இந்தக் கோரமான நரகத்திலிருந்து அவர்களை விடுதலை செய்ய வேண்டு மென்றும் இன்னும் பலவகையாக ஆண் சிங்கங்கள் கர்ஜித்து வருகின்றன. பாரத ஜாதியானது எப்பொழுதுமே பெண்மைக்கு மகத்தான கௌரவம் கொடுத்துப் போற்றி வந்திருக்கிறது. சமுதாயம், அரசியல், கலை ஞானம் முதலிய எல்லாத் துறைகளிலும் அவர்கள் ஆண்களுக்கு நிகரான அந்தஸ்து பெற்று, முன்னேற்ற மார்க்கங்களில் சென்றிருக்கின்றனர். இந்தப் பரம்பரை வாசனை, பாரத ஜாதியை இன்னும் விட்டகலவில்லை. இப்படிப் பட்ட நிலைமையில் பெண்களைக் கைதூக்கி விடுகிறோமென்று செய்யப்படுகிற முயற்சிகள் யாவையும், அவர்களைக் கீழே இறக்கி விடுகிற முயற்சிகளாகவே நாம் கொள்கிறோம். உதாரணமாக பெண்களுக்குக் கல்வி ஞானத்தைப் புகட்ட வேண்டுமென்று ஆண் மக்கள் பரிந்து பேசுகிறார்கள். எத்தகைய கல்வி ஞானத்தை? எந்தக் கல்வி முறையானது ஆண்மக்களை ஆழமான அடிமைத்தனத்தில் இழுத்துக்கொண்டு போகிறதோ, எந்தக் கல்வி முறையானது சுயமாகச் சிந்தனை செய்கிற சக்தியைச் சூனியமாக்கி விட்டதோ, எந்தக் கல்வி முறையானது நமது தேசத்தைப் பற்றியும். ஜாதியைப் பற்றியும் தாழ்வாக எண்ணும்படி செய்துவிட்டிருக்கிறதோ அந்தக் கல்வி முறையையே பெண்களுக்கும் புகட்ட வேண்டுமென்று சொல்கிறார்கள். தற்போது பெண்கள் அவர்கள் அறிந்தோ அறியாமலோ, நமது தேச கலாசார வாழ்க்கையில் ஒரு மதிப்பும் சிரத்தையும் காட்டி வருகிறார்கள். பாரதக் கதை யென்றாலும் ராமாயணக் கதை யென்றாலும், அதற்கு ஒரு பெண்ணின் உள்ளம் உடனே இசைந்து கொடுக்கிறது. பெண் மக்கள், இப்பொழுதுள்ள அளவுக்கேனும் தமது தேசீய கலாசாரத்தில் ஒரு வித பக்தி செலுத்தி வருவதனால்தான், பாரத ஜாதி வாழ்ந்து கொண்டிருக்கிற தென்று பெருமையோடு கூறுகிறோம். இவைகளையெல்லாம் போக் கடித்துக் கொள்ள வேண்டுமானால்,தற்போதைய கல்வி முறையை அவர்களுக்குப் புகட்டலாம். ஆனால் உண்மையான இந்தியன் இதை விரும்புவானா? தற்காலக் கல்வி முறை ஆண் மக்களுக்கு உரித்தானதல்ல வென்று நாம் பலமாகக் கண்டித்து வருகிறோம். அப்படியிருக்க இதே கல்வி முறையைப் பெண் மக்களுக்கும் புகட்ட வேண்டுமென்று சீர்த்திருத்தப் பாட்டு பாடுவதில் என்ன அர்த்த மிருக்கிறது? நமது நாட்டுச் சங்கீதம்,சிற்பம், காவியம், இதிகாசம் முதலிய துறைகளில் நமது சகோதரிகளுக்குக் கல்விப் பயிற்சி அளிக்க வேண்டுமென்று சொன்னால் அதில் அர்த்தமிருக்கிறது. அப்படிப் போதிக்கப்படுகிற கல்வியும் தாய்ப் பாஷையின் மூலமாக இருக்க வேண்டும். இவைகளை யெல்லாம் விடுத்து, எந்தக் கல்வி ஆண் மக்களுக்கு வேண்டாமென்று சொல்லிக் கொண்டு வருகிறோமோ, அதே கல்வியைப் பெண்களுக்குப் போதிக்க வேண்டுமென்று சொல்வது நுனிக்கிளையிலிருந்து அடிமரத்தை வெட்டுவது போலத்தான். தவிர, ஆண் மக்களே அரசியல் அடிமைத் தனத்தில் உழன்று கொண்டிருக் கிறபோது, அவர்கள், பெண் மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்வது எப்படி முடியும்? மற்றும், அடுப்பூதும் தொழிலை மிகக் கேவலமாகக் கருதிச் சில ஆண் மக்கள் பேசுகின்றனர். இது பெரிதும் வருந்தத்தக்கது. மனிதன் இந்த உலகத்தில் படாதபாடுகளெல்லாம் படுவது இந்த ஒரு சாண் வயிற்றுக்கே. இந்த ஒரு சாண் வயிற்றை நிரப்புவதே மனித வாழ்க்கையின் முக்கிய லட்சியமில்லாவிட்டாலும், இதன் அவசியத்தை யாரும் மறுக்கமுடியாது. உலகத்திலே நடக்கிற பல புரட்சிகளும், எல்லா மக்களுக்கும் தேவையான உணவு போதுமான அளவு கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டே நடைபெறுகின்றன. இப்படிப்பட்ட முக்கியமான தேவையைப் பூர்த்தி செய்யும் விஷயத்தில் பெண் மக்களுக்குத்தான் முக்கியமான பங்குண்டு. அப்படியிருக்க நமது தேவையைப் பூர்த்தி செய்கிற இந்த அமிசத்தை நாம் பரிகசித்தல் பொருந்துமா? இப்படி நாம் கூறுவதனால் பெண் மக்களை அடுப்பங் கரையிலேயே இறுத்தி வைத்துவிட வேண்டு மென்பது அர்த்தமல்ல. அதனை அலட்சியப்படுத்தி விடக்கூடா தென்பதுதான் நமது கோரிக்கை. ஏனென்றால் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், ஒழுங்கான குடும்ப வாழ்க்கையை நடத்தத் தெரியா விட்டால், அந்தச் சமுதாய அமைப்பு நாளாவட்டத்தில் கட்டுத் தளர்ந்து விடுகிறது; அதனுடைய ஜாதீய கௌரவமே போய்விடுகிறது. சீனாவில், குடும்பத்திற்கு எப்பொழுதுமே ஒரு தனி கௌரவமும் மதிப்பும் கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. சீன நாகரிகத்தின் முக்கியமான அமிசம் இது. இந்தியாவிலும் இல்லற வாழ்க்கைக்கு நமது முன்னோர்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பேசி வந்திருக்கிறார்கள். வேதங்களிலும், உபநிஷதங்களிலும் ஒரு கிரகஸ்தனுடைய கடமைகள் மிக அழகாக வற்புறுத்தப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கிரகஸ்த தர்மம் இனிதாக நடைபெற பெண்ணின் துணை அவசியம். அந்தப் பெண்ணோ சீல சுபாவ முடையவளாயும், பாரம்பர்யப் பெருமையிலே பக்தி கொண்டவளாயும் இருக்க வேண்டும். தற்காலக் கல்வி முறை இவைகளையெல்லாம் பூரணமாக அளிக்கின்றனவாவென்று நாம் கேட்கிறோம். பொதுவாகவே, நம்முடைய அபிப்பிராயமென்னவென்றால், ஆண்களுக்குக் கொடுக்கப் படுகிற கல்வி மாதிரியே, பெண்களுக்கும் கொடுக்கப்படக்கூடாது என்பது தான். மற்றும் ஆண்களும் பெண்களும் ஒரேவகுப்பில் ஒரே மாதிரியாகப் படித்தல் என்ற உடன் பயிற்சி முறை யென்கிற நவீன முறையையும் நாம் பலமாக ஆட்சேபிக்கிறோம். ஆங்கிலம்பயின்ற அறிஞர்கள் சிலர், இவற்றையெல்லாம் சீர்த்திருத்தங்களென்று சொல்லிக் கைகொட்டி ஆரவாரித்து வரவேற்றபோதிலும், இவை நமது ஜாதியின் கட்டுக் கோப்பை வெகுவிரைவில் குலைத்துவிடு மென்று அஞ்சுகிறோம். தவிர, நாம் அனுஷ்டிக்கிற எந்தச் சீர்த்திருத்த முறைகளும் அந்நிய ஆதிக்கத்தை வலுப்படுத்துவதாயிருக்கக் கூடாது. உதாரண மாக, உடைச் சீர்திருத்தமென்றும், உணவு சீர்த்திருத்தமென்றும் சொல்கிறோம். இந்தச் சீர்த்திருத்தங்கள், அந்நியப் பொருள்களின் இறக்குமதியை அதிகப்படுத்து மானால், இவற்றினால் தேசத்திற்குத் தீமையே தவிர நன்மை இல்லை. நமது நாட்டுப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிற உடைகளை நமது நாட்டுச் சம்பிரதாயப்படி அணிந்து கொள்வதுதான் சீர்திருத்தமே தவிர, மேனாட்டு மோஸ்தரில் உடையணிந்து சீர்திருத்தம் பேசுவது நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதாகும். எளிய வாழ்க்கையென்று சொல்லிக்கொண்டு கதராடை அணிகிறோம். இந்த அளவுக்கு நல்லது தான். ஆனால் இந்தக் கதராடை மீது, மேனாட்டு உயர்தர வாசனைத் திரவியங்களை உபயோகிக்கிறோம். இஃதென்ன எளிய வாழ்க்கை? இஃதென்ன சீர்த்திருத்தம்? சீர்த்திருத்தமானது, அடிப்படையில் ஆரம்பிக்க வேண்டுமென்று மேலே கூறினோம். இது முக்கியமான விஷயம். ஆனால் நமது சீர்திருத்த வாதிகள் அதை அலட்சியமேபடுத்தி யிருக்கிறார்கள். உதாரணமாக, நமது சீர்திருத்த வாதிகள், ஏழை ஜனங்களடங்கிய ஒரு கூட்டத்தில் சகோதரர் களே! நீங்களெல்லாரும் சுத்தமாக இருக்கவேண்டும். கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கி உடுத்து என்பது பழமொழி. சுத்தமாயிருப்பதே தெய்விகத் தன்மை என்று பலவிதமான உபதேசங் களைச் செய்து விட்டு வருகிறார்கள். வாஸ்தவம். குளித்துவிட்டுக் கூழைக் குடிக்க வேண்டியது தான். ஆனால் அந்தக் கூழ், அந்த ஏழைக்கு ஒழுங்காகக் கிடைக்கிறதா? ஒரு சாண் அகலமுள்ள கந்தைத் துணி, மானத்தை மூட அவனுக்குக் கிடைக்கிறதா? இவைகளை அவனுக்கு முதலில் கிடைக்கும்படி செய்து விட்டு, பிறகு அவனுக்குச் சீர்திருத்த உபதேசங்களைச் செய்தால் அதில் பயனும் உண்டு; அர்த்தமு மிருக்கிறது. சேரிகளுக்குச் சென்று அங்குள்ளவர்களைப் பார்த்து தினந்தோறும் நீங்கள் ஸ்நானஞ் செய்ய வேண்டும் என்று நமது நண்பர்களிற் பலர் உபதேசித் திருப்பதை நாம் பல முறை கேட்டிருக்கிறோம். ஆனால் அந்தச் சேரியில், குடிக்கவோ, குளிக்கவோ என்ன வசதிகள் இருக்கின்றனவென்பதை இவர்கள் கவனிப்பதேயில்லை. அந்த வசதிகளைச் செய்து கொடுக்க இவர்கள் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை. இதனால், இவர்களுடைய சீர்த்திருத்த உபதேசங்களெல்லாம் விழலுக்கிறைத்த நீராகி விடுகின்றன. ஆகவே, நம்முடைய எந்தச் சீர்திருத்த முயற்சியும், நமது ஜாதீய கௌரவத்தை உயர்த்திக் கொடுப்பதாயிருக்க வேண்டு மென்கிற ஓர் அமிசத்தை மட்டும் இதன் மூலம் சீர்திருத்த அன்பர் களுக்கு வற்புறுத்த விரும்புகிறோம். 3. மதம் மதம் என்ற சொல்லுக்கு இன்னதுதான் பொருள் என்று யாருமே நிர்ணயித்தோ வரையறுத்தோ கூற முடியாது. அங்ஙனம் கூற முயற்சி செய்தோர், ஏதோ ஒரு லட்சியத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் பொருள் வகுத்திருக்கின்றனர். அவ்வாறு துணிந்து முடிபு கட்டுதல் சரியா தவறாவென்று கூறுவது நமது கடமையன்று. மதம், ஆகாயத்தைப் போல் விரிந்தது; கடலைப்போல் ஆழ்ந்தது. மனிதனுடைய அக வளர்ச்சிக்கும் புற வளர்ச்சிக்கும் சாதனமா யமைந்திருப்பது;அறிஞர் ஜான் டீவே1 கூறுகிறபடி, தான் கொண்ட ஒரு லட்சியத்தை யடைவதற்கு, இடையூறாக எவையேனும் குறுக்கிடுமானால் அவற்றை மகிழ்ச்சியுடன் சமாளித்துக் கொள்ளும் ஆற்றலை அளிப்பது; மானிட சமூகமானது, நல்ல வழியில் செல்ல வேண்டுமென்ற எண்ணத்தை மனிதனுடைய இருதயத்திலே சதா தூண்டிவிட்டுக் கொண்டிருப்பது; அந்த எண்ணத்தைச் செயலில் கொணரும் பொருட்டு, காற்றாடி போல் சுழன்று சுழன்று உழைப் பதற்குத் தேவையான சக்தியைத்தருவது. இதனைத் தருமமென்று அழைப்போர் அழைக்க! மதமென்று கூறுவோர் கூறுக. எல்லாம் ஒன்றாகவே முடிகிறது. இந்த விரிந்த நோக்கோடுதான் ஆதி காலத்தில் மதாசாரியர்கள், தங்களுக்கு நன்மை என்றுபட்ட மாதிரியில் புதிய புதிய மதங்களைத் தோற்று வித்திருக்கிறார்கள். இவர்கள் கோலிய வழிகள், பிற்காலத்தில் கரடு முரடான பாதைகளாக மாறி விட்டிருக்கலாம். அஃது அவர்க ளுடைய தவறன்று. அவர்களுடைய நோக்கமெல்லாம், மனித சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டு மென்பதாகவே இருந்தது. மதத்தின் ஆதிகர்த்தர்களுடைய நோக்கப்படி இப்பொழுது மதங்கள் இருந்து வருகின்றனவா? அவர்களுடைய திருவாக்கி லிருந்து வெளியான உபதேசங்களை, அவர்களைப் பின்பற்றுவதாகச் சொல்லும் மக்கள் அப்படியே ஏற்று, தங்கள் வாழ்க்கையில் நடத்திக் காட்டி வருகிறார்களா? இல்லை, இல்லை, இல்லை யென்று தான் நாம் விசனத்துடன் கூற வேண்டியிருக்கிறது. மதமானது, இப்பொழுது புறச் சடங்குகள் நிறைந்த ஒரு கூடு என்ற அளவில்தான் நிற்கிறது. மதத்தின் மூல புருஷர்கள் கூறிப் போந்த உபதேசங்களுக்கு விபரீத வியாக்கியானஞ் செய்து கொண்டு, அதையே மதம் என்று சொல்லி வருகிறோம். மதத்தின் - அஃது எந்த மதமாயினும் சரி - உண்மையான கருத்துக்களை நாம் மனத்தால் கிரகித்துக் கொண்டிருப்போமானால், இப்பொழுது உலகத்திலே காண ப்படுகிற மனஸ்தாபங்களும் சில்லரைப் போராட்டங்களும் தோன்றிக் கொண்டிருக்க மாட்டா. மதத்தின் பெயரால் மண்டை கள் தான் உடைபடுமா? குறித்த ஒரு மதம், நமக்குத்தான் சொந்த மென்றும், அந்த மதத்திற்குப் புறம்பானவர் அனைவரும் நமது வெறுப்புக்கோ கண்டனத்திற்கோ உரியவராகிறார் என்றும் நினைக்கிற போதுதான் மதச் சண்டைகள் முளை கிளம்பத் தொடங்குகின்றன. இங்ஙனம் பிற மதத்தைப் பற்றி இழிவாக நினைக்கிறவர், தம் மதத்தையே இழிவு படுத்திக் கொள்கிறார். இதை அநேகர் அறிவதே யில்லை. ஆனால் இப்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் நடை பெறுகிற மதச் சண்டைகள், இந்த சுய மதப்பற்றின் காரணமாக எழுகின்றனவோ என்று பார்த்தால் அப்படியுமில்லை. சில சந்தர்ப் பங்களில், பொருளாதார நிலைமை காரணமாயிருக்கிறது; இன்னும் சில சமயங்களில், மதத்தின் பெயரால் ஒரு சிலரையோ, ஒரு சமூகத்தினரையோ பயமுறுத்திக் கொண்டே யிருக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு ஒரு சிலர் செய்கிற சேஷ்டையாகவு மிருக்கிறது. இதனால் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏராளமாக உண்டாகின்றன. துரதிருஷ்டவசமாக இங்ஙனம் நஷ்டமடைவோர் மதமென்பது இன்னதென்று அறியாதவர்களாகவோ அல்லது அதைப்பற்றிக் கவலைப்படாதவர்களாகவோ இருக்கின்றனர். உலகம் எப்படி இடத்தில் சுருங்கியிருக்கிறதோ அப்படியே மனத்தில் விரிந்திருக்கிறதென்றும், மனிதரை மனிதர் அறிந்து கொள்ளக்கூடிய நிலைமை இப்பொழுது ஏற்பட்டிருக்கிற தென்றும் ஒரு சிலர் கூறுகின்றனர். வாஸ்தவம். இந்த நிலைமை ஏற்பட் டிருப்பது உண்மைதான். ஆனால் இந்த நிலைமையை நாம் எவ்வளவு தூரம் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இப்பொழுதைய பிரச்சினை. அப்படி உபயோகித்துக் கொண் டிருந்தோமானால், சிறிய சிறிய காரணங்களுக்காக, பெரிய பெரிய கலகங்கள் உண்டாக மாட்டா. புற நிகழ்ச்சிகளான இந்தக் கலகங்கள் ஒரு புறமிருக்கட்டும். மத போதனையினாலோ, அல்லது மதத்தை அனுஷ்டிப்பதனாலேயோ, மனிதனுடைய உள்ளம் எவ்வளவு தூரம் விரிந்திருக் கிறது, அதில் அகில ஜீவராசிகளுக்கும் எவ்வளவு தூரம் இடம் கொடுத்திருக்கிறான் அந்த மனிதன் என்று நாம் பார்க்கிறபோது சூனியந்தான் நமக்குப் புலப்படுகிறது. தற்போது மதங்கள், வெறும் சடங்குகளாகவும், சம்பிரதாயமாகச் செய்ய வேண்டிய காரியங் களாகவுமே ஆகிவிட்டன. வியர்வை நாற்றத்தை மறைக்க வாசனைத் தைலங்களைத் தெளித்துக் கொள்வதுபோல, நம் உள்ளத்திலே நிறைந்திருக்கும் கல்மஷங்களை மறைத்துக் கொள்ள மதத்தை ஒரு கருவியாகவே உபயோகிக்கிறோம். அந்த மாசுக்களைத் துடைக்கக் கூடிய அல்லது எரிக்கக்கூடிய ஒரு விளக்காக இதனை உபயோகிக்க மறுக்கிறோம். இந்த நிலையில் மதத்தின் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக் கிறார்களென்று நாம் கேட்கிறோம். பரம்பரைப் பெருமையிலேயோ, அல்லது தங்களுக்கு அனுபவ பாத்தியமாகக் கிடைத்திருக்கிற சொத்துரிமை எங்குபோய் விடப்போகிறதோ வென்ற கவலையிலேயோ அவர்கள் எவ்வளவு காலந்தான் மூழ்கி யிருக்கப் போகிறார்கள்? அவர்கள் கறங்கு போல் சுற்ற வேண்டாமா? பஞ்சு போல் அலைய வேண்டாமா? இந்த ஆகாய விமான காலத்திலே, பல்லக்கிலே ஊர்ந்து சென்று கொண்டிருப்பது பொருந்துமா? நமது சந்நிதானங்களையும், ஜகத் குருக்கள்களையும் நாம் பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்:- ஐய, சென்ற காலப் பெருமையிலே இதுகாறும் கழித்து விட்டீர். இனியும் அங்ஙனம் முடியுங்கொல்? குரு பூஜையிலோ, பாத பூஜையிலோ மட்டும் உங்கள் கடமையைக் கழித்து விட்டீர்களானால், நீங்கள் பிரதிநிதி யாக இருக்கும் மதம் போகிற வழிதான் என்ன? பஞ்சுத் திண்டிலும், காஷாய உடையிலும் சிரமபரிகாரம் செய்து கொள்ளக்கூடிய காலமா இது? நாடு நாடு தோறும் சென்று, மேடை தோறும் ஏறி உங்களுடைய மதத்தின் புனிதத் தன்மையைப் பிரசாரம் செய்ய வேண்டாமா? நாட்டின் ஜீவ நாடி உங்கள் கையிலல்லவோ இருக்க வேண்டும்? அதை யாரிடத்திலோ விட்டு விட்டு ஒதுங்கி ஒதுங்கி வாழ்வதிலேயே விருப்பங் கொண்ட உங்கள் பாதுகாப்பில் மதம் எத்தனை நாட்கள் தான் காப்பாற்றப் பட்டிருக்கப் போகிறது? மதமின்றி மனிதன் வாழ முடியும் என்ற எண்ணம் நமக் கில்லை. ஆனால் அந்த எண்ணம், நம்மவர் பலரிடையே பரவி வருவதை நாம் மறுக்க முடியாது. இதற்குக் காரணம் நமது மடாதி பதிகள், ஆசாரியர்கள் முதலியோருடைய அசிரத்தைதான். இவர்கள், எதுவரை, தங்களுடைய மடங்களை விட்டு வெளிக் கிளம்பாமலிருக்கிறார்களோ, எதுவரை தேசப் பொது வாழ்வில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்களோ, எதுவரை தங்களுடைய ஆடம்பர வாழ்க்கையை விடுத்து, இயற்கை வாழ்வை மேற் கொள்ளாமலிருக் கிறார்களோ அதுவரை நமது மதம் இருந்த நிலையிலேயே இருக்கும்; அல்லது இன்னும் அழுகிக்கொண்டு போகும். இந்த விஷயத்தில் ராம கிருஷ்ண பரமஹம்சர், ஸ்வாமி விவேகானந்தர் முதலியோரை மதத்தலைவர்கள் பின்பற்ற வேண்டு மென்பது நமது எண்ணம். மேலே சொன்ன வாக்கியங்கள், எல்லா மதத் தலைவர் களுக்கும் பொருந்தும் என்று மட்டும் இங்குச் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறோம். மதத்தின் பெயரால் நடைபெறுகிற பலாத்காரச் செயல்களுக் கெல்லாம் பரிகாரந் தேடிக் கொடுக்குமாறு அரசாங்கத்தின் துணை நாடுவதும், அரசாங்கம் சரியாக நடந்து கொள்ளவில்லை யென்று அதனைக் குறைகூறுவதும் அவ்வளவு அறிவுடைமையாகாது. நாட்டின் பொதுஜன அமைதிக்கு அரசாங்கம் பொறுப்புடைய தென்பதை நாம் ஒத்துக் கொள் கிறோம். ஆனால் அதற்காக, மதத் தலைவர்களின் பொறுப்பு ஒன்றுமே யில்லை யென்று அவர்களைப் புறக்கணித்து விடவும் நாம் தயாராயில்லை. இந்தியாவிலே அடிக்கடி ஹிந்து- முஸ்லிம் கலகங்கள் ஏற்பட்டு, செழுமையான மண்ணைச் செந்நிறமாக்கி வருகின்றன. இவற்றில் சமரஸம் காண அரசியல் தலைவர்கள், அவ்வப்பொழுது ஏதேனும் முயற்சி செய்கிறார்களே தவிர, இரண்டு மதங்களின் தலைவர்களும் ஏன் ஒன்று சந்திக்கக்கூடாதென்று நாம் கேட்கிறோம். அப்படிச் சந்தித்து, ஒரு முடிவு கண்டு பின்னர் மதத்தின் பெயரால் ஜனங் களிடத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கை உபயோகிப்பார்க ளானால், நாட்டில் புற அமைதி ஏற்படுவதுடன், ஜனங்களுக்கும் அக அமைதி ஏற்படுமென்று நாம் உறுதியாக நம்புகிறோம். 4. பிரசாரம் இந்தியர்கள் விரைவில் சுயராஜ்யம் பெற வேண்டி நாடெங்க ணும் சுய ராஜ்ய தாகத்தை எழுப்ப இது காலை பிரசாரம் செய்யச் செல்வோரிற் பலர் சுய நலமற்றவராய், பாரத தேவியின் திருவடியில் தங்களுக்குள்ள அனைத்தையும் அர்ப்பணம் செய்தவராய் இருக்கின்றனர் என்பது வெளிப்படை. இக்கூட்டத்தார் செய்து வரும் தியாகத்திற்காக இவரை, இந்தியாவின் நலத்தை நாடுவோர் அனைவரும் வணங்கக் கடமைப் பட்டிருக்கிறார். இச்சமயத்தில் பிரசார வரலாற்றைப் பற்றியும், பிரசாரம் செய்வோர் எத்தகையரா யிருத்தல் வேண்டும் என்பதைப்பற்றியும் ஈண்டுச் சுருக்கமாகக் கூறுதல் பொருத்தமாக இருக்குமென நினைக் கிறோம். இந்தியாவில் தோன்றியிருக்கும் ஒவ்வொரு வஸ்துவுக்கும் மூலாதாரம் மேலைநாடே என்று கூறும் அறிஞரில் சிலர், நம் நாட்டவர் பிரசாரம் செய்ய மேலைநாட்டாரிடமிருந்தே கற்றுக் கொண்டனர் என்று கூறுகின்றனர். சரித்திர உண்மை அறிந்தார் இதை அங்கீகரிக்க மாட்டார். அசோக மௌரியன் காலத்தில் அவனுடைய ஆதரவில் பௌத்த மதப் பிரசாரம் ஒழுங்காக நடந்ததைப்போல் எப்பொழுதும் நடைபெறவில்லை யென்று துணிந்து கூறலாம். பௌத்த தர்மத்தைப் பரவச் செய்வதற்காக அசோகன் செய்திருந்த பிரசார ஏற்பாடுகளைப் போல் நாம் இப்பொழுது செய்திருந்தோமானால் பல ஆண்டுகளுக்கு முன்னரேயே நாம் சுய ராஜ்யத்தைப் பெற்றிருக்கலாம். அந்த ஏற்பாடு அல்லது ஒழுங்கு நம்முடைய தற்போதைய பிரசாரத்தில் இல்லாதது பெருங்குறையே யாகும். அசோகன் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பிரசாரக் கூட்டத் தாரை அனுப்பி அங்குப் பௌத்த தர்மத்தை விருத்தி செய்வது அவருடைய கடமை யெனச் செய்து விட்டான். தன் கீழிருக்கும் உத்தியோகஸ்தர்கள், அவர்களுக் கென்றுள்ள இயற்கையான உத்தியோகத்தைச் சரிவரப் பார்ப்ப துடன், பௌத்த தர்மத்தை விருத்தி செய்வதையும் உத்தியோகத்தின் ஓர் அமிசமாகக் கொள்ள வேண்டு மென்று உத்தரவு செய்தான். இவர் தவிர, தன் நாட்டில் பௌத்த தர்மத்தைப் பற்றிப் பிரசாரம் செய்வதற்கென்றே சில உத்தியோகஸ்தர் களை நியமித்திருந்தான். இவர்கள், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வீட்டிலும் சென்று பௌத்த தர்மத்தின் மேன்மையைச் சொல்லி அதன்படி நடக்க வேண்டுமென்று வற்புறுத்தும்படி கட்டளையிடப்பட்டிருந்தார் கள். இன்னின்ன ஜாதியாரிடத்தில் இன்னின்ன விதமாக நடக்க வேண்டு மென்றும் இவர்கள் கூறப்பட்டிருந்தார்கள். இவ்வளவு ஒழுங்கான ஏற்பாடு களினாலேயே பௌத்த மதம் மிக உயரிய நிலைக்கு வந்தது. இங்ஙனமே கனிஷ்கனும் பௌத்த மதத்தைப் பிரசாரம் மூலமாக விருத்தி செய்து வந்தான் என்று சொல்லப்படு கிறது. முகம்மதியர் ஆட்சியிலும் இத்தகைய பிரசார வேலைகள் நடைபெற்றன வென்று தெரிகிறது. தென்னாட்டில் தமிழ் மன்னர் ஆட்சியிலும், சிவனடியார்களும் வைணவ பாகவதர்களும் ஆங்காங்குத் தத்தம் சமயத்தின் பெருமையைப் பற்றிப் பிரசாரம் செய்து வந்தார்கள் என்பதில் ஐயமில்லை. சமய குரவர்கள், தம் அடியார் குழாத்துடன் ஊர் ஊராகச் சென்று ஈசனைத் தொழுது வந்தனர் என்பதனால் அறியக் கிடப்ப தென்னை? வங்காளத்தில் கிருஷ்ண சைதன்யர் தம்முடைய சிஷ்ய கோஷ்டியுடன் இடம் இடமாகச் சென்று பக்தி மதத்தைப் பரவச் செய்வதைப் பிரசார வேலை என்று கூறாது வேறென்ன வென்று கூறுவது? எனவே, இந்தியாவுக்குப் பிரசார வேலை புதிதல்ல வென்பதும், குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகள் முதல் இப்பிரசாரம் ஏதேனும் ஒரு துறையில் நடந்து வந்திருக்கிற தென்பதும், இப்பொழுது நாம் செய்யும் பிரசார வேலை மேனாட்டாரிடமிருந்து கற்றுக் கொண்டதல்லவென்பதும் நன்கு விளங்கும். பிரசாரம் செய்வது என்பதற்கு, குறித்த ஓரிடத்தில் குறித்த ஒரு விஷயத்தைப் பற்றி உபந்நியாசம் செய்வது என்று மாத்திரம் பொருளல்ல. எந்த நோக்கத்தோடு ஒருவன் பிரசாரம் செய்கிறானோ அந்த நோக்கத்தை அனைவருக்கும் விளக்க வேண்டுவது பிரசார கனின் கடமையாகும். சுய ராஜ்யப் பிரசாரகன் ஒருவன், ஓர் ஊரில் சென்று பொதுவான ஓர் இடத்தில் சிலரைக் கூட்டி, சுயராஜ்யம் வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அழகாக உபந்நியாசம் புரிந்து வந்து விடுவானாகில் அவன் தன் கடமையைச் செய்தவனாகக் கருதப்படமாட்டான். இங்ஙனம் உபந்நியாசம் செய்து திரும்பி விட்டானேயாகில் அதனால் அவ்வூரில் உண்மையான உணர்ச்சி ஏற்படாது. அக்கூட்டத்திற்கு எத்தனைப் பேர் வந்திருப்பர்? அக்கூட்டம் நடைபெற்றதே பலருக்குத் தெரியாமலிருக்கலாம். அல்லது அக்கூட்டத் திற்கு வந்திருந்தோரில் பலருக்குப் பலவிதமான சந்தேகங்கள் தோன்றி அவைகளைத் தீர்த்துக்கொள்ள வழியறியாது இடர்ப்படலாம். அல்லது சுயராஜ்யக் கட்சிக்கு மாறுபட்டோர், உபந்நியாசம் செய்தவரோடு நியாய வாதம் புரிந்து பல உண்மை களைத் தெரிந்து கொள்ள விரும்பலாம். இத்தகையோருடைய ஆவல்களை உபந்நியாசம் ஒன்றினால் மட்டும் தீர்த்து வைக்க முடியுமா? ஆதலின் சுய ராஜ்யப் பிரசாரகர் ஒவ்வொருவரும் தாம் செல்லும் ஊர்களில் முதலில் ஓர் உபந்நியாசம் செய்துவிட்டு, பிறகு அவ்வூரி லிருக்கும் செல்வாக்குள்ள சிலரைக் கண்டு பேச வேண்டும். அவ்வூராருக்கு என்னென்ன குறைகள் இருக்கின்றன என்பதை விசாரித்துத் தம்மால் கூடுமானவரை குறைகளைத் தீர்த்து வைக்க முயற்சி செய்ய வேண்டும். நாட்டில் தற்போது எத்தகைய அரசாங்கம் நடைபெறுகிற தென்பதையும், இவ்வாட்சி முறையில் ஜனங்களுக்கு உண்டாகும் நன்மைகளையும் தீமைகளையும், சுயராஜ்யம் வந்தால் இந்தியர்கள் எந்நிலையில் இருக்கலாம் என்பதையும் ஒவ்வொரு வருக்கும் தம் சக்திக் கியன்றவாறு விளங்கக்கூற வேண்டும். தேசீய மகா சபையார் எத்தகைய வழிகளில் பிரசாரம் செய்ய வேண்டுமென்று கட்டளை யிட்டிருக்கின்றனரோ அதன்படியே நடக்கவேண்டும். பொதுவாக இவ்வளவே கூற முடியும். ஏனெனின் சுயராஜ்யப் பிரசாரம் செய்வோர் அனை வருக்கும் பொதுவாக இருக்கும்படியே இவ்வியாசம் எழுதப் பட்டதாதலின், இன்ன பிரசாரகர் இன்ன மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்று ஈண்டுக் குறிப்பிடுதல் அசாத்தியமாகும். பிரசாரம் செய்வோர் தாங்கள் கூறுகிற வண்ணமே அனுஷ் டித்துக் காட்டவேண்டும். அஃதன்றி அந்நிய ஆடைகளைப் பகிஷ்கரிக்க வேண்டு மென்று பிரசாரம் செய்வோன் ஒருவன், அந்நிய ஆடைகளை உடுத்திக் கொண்டிருப்பானாகில், அவன் பிரசாரத்தினால் என்ன நன்மைகள் விளையும்? அவனுடைய வார்த்தைகளுக்கு ஜனங்கள் என்ன மரியாதை கொடுப்பார்கள்? காந்தியடிகளுக்கு இப்பொழுதுள்ள பெருமை எங்ஙனம் ஏற்பட்டதென்பதை ஒவ்வொருவரும் இவ்விஷயத்தில் ஆராய்தல் அவசியம். கற்றபடி நிற்றலே அறிஞர்க்கு அழகு. பிறருக்கு வழிகாட்ட விரும்புவோன் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜனங்களின் மனத்தை நல்ல நிலையில் நிறுத்துவதோ தீய வழியில் செலுத் துவதோ பிரசாரகருடைய வசத்தில் இருக்கின்றதால் அவர் தம்முடைய கருமத்தில் கண்ணுங் கருத்துமா யிருக்க வேண்டும். பிரசாரம் செய்வோர் சுயநலப் போர்வையைக்கழற்றி எறிந்து வெளி வருதல் வேண்டும். ஊர்வலங்களுக்கும் பூ மாலைகளுக்கும் கை கொட்டுதலுக்கும் அவர் ஆசைப்படக் கூடாது. உபந்நியாசம் செய்வதிலேயே தேச சேவை அடங்கி யிருக்கிறதென்று பிரசாரகர் எண்ணுவாரானால் அது பேதமை யாகும். தேசசேவை செய்வோர் எவ்வளவுக் கெவ்வளவு குறைவாகப் பேசுகின்றனரோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது என்று அறிஞர் அபிப்பிராயப்படுகின்றனர். பிரசாரகர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் கூடாது. அக வாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் அவர் தூயராக இருத்தல் வேண்டும். பிரசங்கங்கள் செய்யும் போதும், பிரசாரம் செய்யச் செல்லும் போதும், பரிசுத்தர் போல் பாசாங்கு செய்தலும், மிகக் கம்பீரமாக நடந்து கொள்வது போல் காட்டிக் கொள்ளுதலும், பிற இழி துறைகளில் இறங்கி நடமாடுதலும் பொருந்தாவாம்; எப் பொழுதும் ஒரே படித்தாய் இருத்தல் வேண்டும். பிரசாரகர், அனைவரிடத்திலும் சம உணர்ச்சி பாராட்ட வேண்டும். இன்னார் உயர்ந்தவர், இன்னார் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை எண்ணம் தேச ஊழியம் புரிவோரிடத்தில் இருக்கு மாயின் அவர் தேசத்திற்குத் தீங்கு செய்தவராகவே கருதப்படுவார். ஆண்டவன் படைப்பில் இன்ன மனிதர் உயர்ந்தவர் இன்ன மனிதர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை கிடையாது. ஆதலின் பிரசாரம் செய்வோர், நற்குண முள்ளோர் - அவர் பஞ்சமராயினும் அந்தண ராயினும் வேறு எவராயினும் - அனைவரிடத்திலும் சமமாகப் பழகி அவர்களுடைய குறைகளை விசாரித்தறிய வேண்டும். தம்மாலி யன்ற நன் மதியை அவர்களுக்குப் புகட்ட வேண்டும். எவரையும் குளிர்ந்த பார்வையுடன் நோக்க வேண்டும். இன்ப வசனங்களால் பேச வேண்டும். தமக்கே தேசாபிமானம் இருக்கிற தென்று எந்தப் பிரசாரகரும் இறுமாப்படையாமலிருக்கக் கடவர். எப்பொழுதும் எவரிடத்திலும் தாய் மொழியையே பேச வேண்டுமென்ற விதியை ஒவ்வொரு பிரசார கரும் கட்டாயமாய் அனுசரிக்க வேண்டும். பாஷாபிமானம் இல்லாதார் தேசாபிமானிகளென்று வெளி வருதல் போலியே யாகும். பிரசாரம் செய்யச் செல்வோர் எல்லா விதத்திலும் சாதாரண மனிதர் போலவே நடந்து கொள்ள வேண்டும். உண்பதி லாவது, உடுப்பதிலாவது, ஊர்தியின் மேலேறிச் செல்வதிலாவது, வேறெதிலாவது எவ்வித பெருமிதத்தையும் காட்டிக் கொள்ளக் கூடாது. பிரசாரம் செய்யச் செல்வோர் ஏறக்குறைய எல்லா விஷயங் களையும் தெரிந்து கொண்டிருப்பவராய் இருக்க வேண்டும். இரண்டொரு நூல்களை மேற்போக்காகப் பார்த்துவிட்டு எல்லா வற்றையும் அறிந்த மாதிரி பேசும் வழக்கம் இக்காலத்தில் - முக்கிய மாகத் தமிழ் நாட்டில் - மிகுந்து கிடக்கின்றது. தினசரிப் பத்திரிகை களைப் படித்து விடுவதனால் ஒருவனுக்கு எல்லாவித ஞானமும் கை கிட்டிவிடாது. அத்தகையோர் பிரசாரம் செய்ய அருகர் அல்லர். குறித்த ஒரு விஷயத்தைப் பற்றி நன்கு ஆராய்ச்சி செய்து பிறகு அதனைப்பற்றிப் பேசுதலே அழகுடைத்தாம். அஃதன்றி, எனக்குப் பேசத் தெரியாத விஷயமும் உண்டோ என்று சொல்லி, புல்லறிவுடையோர் கைகொட்டி நகைக்கும் வண்ணம் கண்டபடி உளறிப் பொது ஜனங்களின் உள்ளத்தை ஆபாசப்படுத்துதல் அழகன்று. தாம் எடுத்துக்கொண்ட முயற்சியின் அளவுக்காவது விஷயங்களை அறிந்து கொள்ள ஒவ்வொரு பிரசாரகரும் கடமைப் பட்டிருக் கிறார். தேச சேவை செய்வோர் உபந்நியாசங்களிலாவது சம்பா ஷணை களிலாவது வேறெக் காலத்திலாவது எவரையும் தூஷித்தல் கூடாது; கடுமையான பதங்களை உபயோகித்தல் கூடாது; பிரசாரம் செய்வோருடைய நோக்கத்துக்கு மாறுபட்டவருடைய அபிப் பிராயங் களைத் தருக்க ரீதியாக எடுத்துக்காட்டவேண்டுமே யன்றி எவ்விதத் திலும் அவர்களைத் திட்டக் கூடாது. ஆள் மீது பாய்வது எக்காலத்திலும் கீழான செயலாகும். இந்தக் கொடுமை தமிழ் நாட்டுப் பிரசாரகர்களிடத்தில் அதிகமாக இருந்து வருகிற தென்ற குறை எங்கணும் இருக்கிறது. அஃது ஒழிய வேண்டும். அப்பொழுதே பிரசாரகருடைய பெருமையும் உண்மையான நோக்கமும் நன்கு புலப்படும். சுய ராஜ்யப் பிரசாரகர் அனுஷ்டிக்க வேண்டியவை அனைத்தும் மேலே கூறப்பட்டன வற்றுள் அடங்கி விட்டன என்று எவரும் எண்ணக் கூடாது. அவரவர் மனச்சாட்சிக்கு மாறுபடாத படி கடவுள் ஒருவர் இருக் கிறார் என்று அஞ்சி நடக்க வேண்டும். இடம் பொருள் ஏவல் என்ற மூன்றனையும் முன்னிட்டு அவரவர் சௌகரியப்படி நடந்து கொள்வதை எவரும் ஆட்சேபிக்க மாட்டார். மேற்கூறப்பட்ட சில முறைகளின்படி தேச பக்தர்கள் பிரசாரம் செய்து வருவார்களானால், நாம் எதிர்பார்ப்பதைவிட விரைவாகச் சுய ஆட்சி பெறலாம் என்பதற்கு என்ன தடை? 5. சுலபமா? உலகத்தில் சரித்திர காலந் தொட்டு அதிகார சக்திக்கும் சுதந்திர சக்திக்கும் எப்பொழுதுமே போராட்டம் நடைபெற்றுக் கொண்டு வந்திருக் கிறது. இந்த இரண்டு சக்திகளுக்குமிடையே எத்தனையோ பிண மலைகள் குவிந்திருக்கின்றன. ஆயினும் இந்தப் போராட்டத்திற்கு ஓய்வு ஏற்பட வில்லை. எத்தனையோ பெரிய மனிதர்கள் இந்த இரண்டு சக்திகளையும் சமரஸப் படுத்தி வைக்க முயன்றிருக்கிறார்கள்; இன்னமும் முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமல்ல; உபய கட்சிகளும், இவர்களுக்கு ஒரு மகானுக்குரிய மதிப்பைக் கொடாமல் இவர்களை அவமதித்திருப்பதோடு கூட மறந்தும் விட்டிருக்கின்றன; ஏன்? அநேக சந்தர்ப்பங்களில் இவர் களைத் துரோகிகளாகக் கருதித் தூக்கு மேடையில் ஏற்று வித்துமிருக் கின்றன. பதினெட்டாவது நூற்றாண்டில் உண்டான பிரெஞ்சுப் புரட்சியைத் தீ மூட்டி வளர்த்ததாகக் கருதப்பெறும் டாண்ட்டனும்1 ரோபெஸ்பியரும்2 அதிகார சக்தியைத் தழுவிக் கொள்ள முயன்றதனாலல்லவோ மேற்படி புரட்சித் தீயிலேயே வீழ்த்தப்பட்டு விட்டார்கள்? ஓய்வு கொள்ளாமல் இந்த இரண்டு சக்திகளும் போராடிக் கொண்டிருப்பதற்குக் காரணந்தானென்ன? ஏதோ காரணம் இருக்கத்தானே வேண்டும்? அஃதென்னவென்று சிறிது துருவிப் பார்ப்பதில் இன்று நமது சிந்தனையைச் செலுத்துவோமா? 1. அதிகார சக்திக்கு அறிவு நிரம்ப உண்டு; ஆனால் இதய மில்லை. சுதந்திர சக்தியின் இதயம் விசாலமானது; ஆனால் அதன் அறிவு எப்பொழுதுமே தடுமாறி நிற்கிறது. 2. அதிகார சக்திக்கு, தன் அறிவு பலத்தைக்கொண்டு சுதந்திர சக்தியை அடக்கப் பார்க்கிறது. சுதந்திர சக்தியோ, விசாலமான தனது இருதய ஊற்றிலே அந்த அதிகார சக்தியை ஸ்நானஞ் செய்விப்பதன் மூலமாக அதனை அசைத்துக் கொடுக்கப் பார்க்கிறது. 3. அதிகார சக்தி, ஆயுத பலத்தைத் தன் முன்னே தள்ளிக் கொண்டு முன்னேறப் பார்க்கிறது. சுதந்திர சக்தியோ, ஆன்ம பலத்தைத் தன் பக்கத் துணையாகக் கொண்டு சாந்தி கீதத்தைப் பாடிய வண்ணம் உலகத்தை வலம் வருகிறது. 4. அதிகார சக்தி, பிறருடைய துன்பத்தில் தன் இன்பத்தை நுகர்கிறது. சுதந்திர சக்தியோ, தான் துன்பத்தை அனுபவித்து மற்றவர்களுக்கு இன்ப மூட்டுகிறது. 5. அதிகார சக்தியை யாரும் போற்றுகிறார்களில்லை; ஆனால் எல்லோரும் பின்பற்றுகிறார்கள். சுதந்திர சக்தியை எல்லோரும் போற்றுகிறார்கள். ஆனால் யாவரும் பின்பற்றுகிறார் களில்லை. 6. அதிகார சக்தி, கடவுளைத் தன் கருவியாக உபயோகித்துக் கொள்கிறது; சுதந்திர சக்தி, தான் கடவுளின் கருவி யென்று கருது கிறது. 7. அதிகார சக்தி, ராஜ தந்திர மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு உலகத்தை ஆளப் பார்க்கிறது; சுதந்திர சக்தியோ, சத்திய பீடத்தில் தலை வணங்கி நின்றுகொண்டு உலகத்திற்குத் தொண்டு செய்ய முயல்கிறது. 8. அதிகார சக்தி, உலகம் தனக்கு உழைக்கும் பொருட்டு இருக்க வேண்டுமென்று விரும்புகிறது. சுதந்திர சக்தி, உலகத்திற் காகத் தான் உழைத்து, உலகத்தை வாழ்விக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறது. இந்த மாதிரியான முரண்பாடுகள் இந்த இரண்டு சக்தி களுக்கும் அடிப்படையிலேயே இருப்பதனால்தான், இவைகளுக் கிடையே ஓயாத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை, சுதந்திரப் போராட்டத்திலே ஈடுபட்டிருக் கிறவர்கள் தெளிவுபட உணர்ந்து கொள்ளுதல் நல்லது. சுதந்திரம் என்பது ஏதோ ஒரு ஸ்தூல வஸ்து போலவும் அது மரத்திலிருந்து பழம் பறிப்பது போல சுலபமாகப் பறிக்கப்படலா மென்றும் நம்மிலே சிலர் இப்பொழுதுகூட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பட்டவர்கள் பாவம், அரசியல் சம்பந்தமான வாதப் பிரதிவாதங் களில் ஆரவாரத்தோடு கலந்தும் கொள்கிறார்கள். இந்த மாதிரியான காட்சிகளைப் பொதுவாக நமது பாரத தேசத்திலும், சிறப்பாகத் தமிழ் நாட்டிலும் அடிக்கடி காண்கிறோம். சுதந்திரம் அவ்வளவு எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளாயிருந்தால் அதனை அமிர்தத்திற்கு ஒப்பிட்டிருக்க மாட்டார் பாரதியார். தேவர்கள் லேசாக அமிர்தத்தைப் பெற்று விடவில்லை. அசுரர்களுடன் அவர்கள் நடத்திய போர் புராணப் பிரசித்தி பெற்றதல்லவா? பாற்கடலில் அமிர்த கலசம் தோன்றுவதற்கு முன்னர், தேவர் களுக்கு எத்தனையோ இடையூறுகள் ஏற்பட்டன; எத் தனையோ பொய்த் தோற்றங்கள் அவர்களுக்குத் தோன்றின; ஆயினும் அவர்கள் சலித்துப்போகவில்லை; தங்கள் லட்சியத்திலே தான் குறியாயிருந் தார்கள். இவ்வளவு சிரமப்பட்ட பிறகுதான் அவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது. இதனால் அந்த அமிர்தத்திற்கு அதிகமான மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிரமப் பட்டுப் பெறுகிற ஒரு பொருளுக்குத்தான் அதிக மதிப்பு; அதற்குத் தனிப் பெருமையும் உண்டு. சாதாரணமாக மார்க்கெட்டு களில், கையினால் செய்யப் படுகிற பொருள்களுக்கு விலை அதிகமா யிருப்பதையும், யந்திர சாதனங்களைக் கொண்டு செய்யப்படுகிற பொருள் களுக்கு விலை குறைவாயிருப்பதையும் பார்க்கிறோம். இதற்குக் காரணம் என்ன? கையினால் செய்யப்பட்ட பொருள் என்றால், அது கஷ்டப்பட்டுச் செய்யப்பட்டது என்று தெரிந்து கொள்கிறோம். அதாவது அந்தப் பொருளில் உழைப்புச் சக்தி அதிகம் அடங்கி யிருக்கிறது. உழைப்பி லன்றோ உயிர் இருக்கிறது? உயிருக்கு நாம் பெருமை கொடுக் கிறோமா? உடலுக்குப் பெருமை கொடுக்கிறோமா? உயிருக்குத் தானே? கஷ்டப் படாமல் சுதந்திரம் கிடைத்து விடுவதாயிருந்தால் அஃது உயிரில்லாத உடல்போலத்தான். உயிரில்லாமல் எப்படி உடல் இராதோ அதைப் போல் கஷ்டப்படாமல் சுதந்திரமும் கிடைக்காது. இந்த உண்மையையும் சுதந்திரப் போராட்டத்திலே ஈடு பட்டிருக் கிறவர்கள் உணர்ந்து கொள்ளுதல் நல்லது. கஷ்டப்படாமல் சுதந்திரம் பெறவேண்டுமென்று நினைப் போர் ஒரு புறமிருக்கட்டும். பிறர் கஷ்டப்பட்டு நமக்குச் சுதந்திரம் சம்பாதித்துக் கொடுத்துவிட வேண்டுமென்று சுதந்திரம் சம்பாதித்துக் கொடுத்துவிட வேண்டுமென்று கூட நம்மிலே சிலர் நினைக்கிறார்கள். தினசரிப் பத்திரிகைகளை மட்டும் படித்து விட்டுப் பூரண அரசியல் ஞானம் பெற்று விட்டதாகக் கருதிக்கொண்டு அதே தோரணையில் பேசுகின்ற சிலர் என்ன கூறுகிறார்களென்று கேட்டுப் பாருங்கள். அட, இவ்வளவு சங்கடமான நிலையில் பிரிட்டன் இருக்கிறபோது கூட, இந்தியாவுக்குச் சுய ராஜ்யம் கொடுக்க மாட்டேனென்கிறதே என்று நம்மவரிலே எத்தனைபேர் பேசவில்லை? இப்படிப் பேசுகிறவர்கள் பிரிட்டனிடமிருந்து எந்தவிதமான சுயராஜ்யத்தை எதிர் பார்க்கிறார்கள்? அல்லது இந்தியாவுக்கு எந்த விதமான சுயராஜ்யம் தேவையென்று நிர்ணயித்திருக்கிறார்கள்? அதாவது இப்படிப் பேசுகிறவர்கள், தாங்கள் பேசுவது இன்னதென்று தெரியாமலேயே பேசுகிற கோஷ்டியுடன் தான் சேர்க்கப்பட வேண்டும். பிறர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், அந்தக் கஷ்டத்தை நமக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிற மனப்பான்மை இருக்கிறதே அது நைந்துபோன மனப்பான்மை. பிரிட்டனுடைய கஷ்டத்தை நமக்கு நன்மையாக உப யோகித்துக் கொள்ளப் பார்க்கிறோம். நாம் கஷ்டப்பட்டுச் சுதந்திரத்தைச் சம்பாதிக்க வேண்டு மென்ற எண்ணமே நமக்கு இல்லை. மற்றவர்களுடைய உழைப்பிலே ஊதியம் பெறப் பார்ப்பது, பாரத தேசத்து நாகரிகத்திற்கே விரோதமானது. தான் வருந்திப் பிறர்க்குதவும் தயை பிறந்த நாட்டாராகிய நாம், நாம் உழைத்துச் சம்பாதிக்கிற எண்ணத்தையும் விட்டு விட்டு, பிறருடைய கஷ்டத்தை நமக்கு அனுகூலமாக உபயோகித்துக் கொள்ளவும் பார்க்கிறோம். என்ன விந்தை! நாம் எவ்வளவு கீழான நிலைக்கு வந்து விட்டோம்! சுதந்திரம் சுலபமாகப் பெறப் படுவதுமில்லை; சுலபமாகக் கொடுக்கப் படுவதுமில்லை. ஒரு சிறிய உதாரணத்தை இங்குத் தருகிறோம். கி.பி. பதினான்காவது பதினைந்தாவது நூற்றாண்டு களில் இத்தலி தேசம், பல பல மாகாணங்களாகப்பிரிந்திருந்தது. ஒவ்வொரு மாகாணத்தையும் தனித்தனிச் சிற்றரசர்கள் சுயேச் சாதிகாரத்துடன் ஆண்டு வந்தனர். இந்தச்சிற்றரசர்களுக்குள் அடிக்கடி போர்கள் நடை பெற்று வந்தன. ஜனங்கள் பலவித இன்னல்களை யடைந்தார்கள். அவர்களுக்குச் சுதந்திரம் என்றால் இன்னதென்றே தெரியாமலிருந்தது. மேற்படி சிற்றரசர்கள், தங்க ளுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக ஜனங்களுடைய பொருளையும் உயிரையும் விளையாட்டுக் கருவிகள் போல் உபயோகித்து வந்தனர். இந்த மாதிரியான நிலைமையில் ப்ளாரென்ஸ் என்ற மாகாணத்தை லோரென்ஸோ-டீ- மெடிஷி1 என்பவன் ஆண்டு வந்தான். இவன் தன் சத்துருக்களைத் தேசப் பிரஷ்டம் செய்து அடக்கி விட்டான். தன் குடி ஜனங்களை, அடிக்கடி கேளிக் கூத்துகள் நடத்தித் திருப்தி செய்வித்தான். ஜனங்களோ இவன்மீது விரோதங் கொள்ளாதபடி தங்கள் கவனத்தை வீணான பொழுது போக்குகளில் செலுத்தினர். இந்தச் சமயத்தில் ஸவோனரோலா2 என்ற ஒரு மகான் தோன்றி ஜனங்களுக்கு நற்போதனைகள் செய்ய ஆரம்பித்தான். அவர்க ளுடைய சுதந்திரம் பறிக்கப் பட்டிருப்பதையும், அது காரணமாக அவர்களுடைய வாழ்க்கை நிலை கீழாகப் போயிருப்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டினான். இவையெல்லாம் லோரென் ஸோவுக்குப் பிடிக்க வில்லை. எப்படிப் பிடிக்கும்? ஸவோனரோ லாவை நயத்தினாலும் பயத்தினாலும் தன் பக்கம் திருப்பப் பார்த்தான். முடிகிற காரியமா? இப்படியிருக்கிறபோது, லோரென் ஸோவுக்கு நோய் கண்டது. மரணப் படுக்கையில் கிடந்தான். வைத்தியர்கள் யாராலும் அவனைச் சொஸ்தப் படுத்த முடிய வில்லை. கடைசியில் கடவுளின் துணையை நாடினான். தனக்குப் பாவ மன்னிப்பு அளிக்குமாறு செய்ய ஸவோனரோலாவை அழைத்து வருமாறு ஏவினான். அந்தப் புனித ஆத்மாவான ஸவோன ரோலாவும், கல்மஷமற்ற மனத்துடன் லோரென்ஸோவிடம் வந்து அவனுக்குச் சில இதோபதேசங்கள் செய்துவிட்டுப் பிறகு லோரென்ஸோ, நீ மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும் என்றான். ‘Iand, mitba‹d? என்றான் லோரென்ஸோ. முதலாவது, கடவுளின் திருக்கருணையில் நீ பூரண நம்பிக்கை கொள்ள வேண்டும். அஃதெனக்குப் பூரணமாக இருக்கிறது என்று உடனே கூறிவிட்டான் லோரென்ஸோ. இரண்டாவது, நீ அநியாயமாகப் பிறரிடமிருந்து பறிமுதல் செய்து கொண்ட சொத்துக்களை உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுமாறு செய்ய வேண்டும் என்றான் ஸவோனரோலா. இது லோரென்ஸோவுக்கு ஆச்சரியத்தையும் துக்கத்தையும் கொடுத்தது. ஆயினும், தன்னைச் சிறிது சமாளித்துக் கொண்டு அப்படியே ஆகட்டும் என்ற பாவனையில் தலையசைத்தான். மூன்றாவது, ப்ளாரென்ஸ் ஜனங்களுக்கு நீ சுதந்திரம் அளிக்க வேண்டும்என்று கம்பீரமாகக் கூறினான் ஸவோனரோலா. இதைக் கேட்ட லோரென்ஸோ வெறுப்பும் சலிப்பும் கொண்டவனாய் முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டு விட்டான்; அப்படியே பிராணனையும் விட்டு விட்டான். ஸவோனரோலாவும் அவனுக்குப் பாவ மன்னிப்புக் கொடாமலே திரும்பி விட்டான். சுதந்திரமானது ஜனங்களிட மிருந்து பறிக்கப்பட்டு, பின்னர் அதிகாரமாக இறுக்கி வைத்துக் கொள்ளப்படுகிறது. அந்த அதிகாரத்தை விட்டுக் கொடுக்க யாருமே, எப்பொழுதுமே சம்மதிக்க மாட்டார்கள். மரணப் படுக்கையிலே கூடத்தான்! ஆனால் இதற்காக, சுதந்திர தேவதையை ஆராதிக்கிறவர்கள், தங்கள் ஆராதனையை நிறுத்துவார்களா? தங்கள் முயற்சியில் சலிப்புக் கொள்வார்களா? மாட்டார்கள். சுதந்திரத்திற்காகத் துன்பம் அனுபவிப்பதையே ஓர் இன்பமாக இவர்கள் கொண்டு விடுகிறார்கள். ஏனென்றால், தாங்கள் அனுபவிக்கிற துன்பம் தங்களுக்காக வல்ல; சுதந்திரத்திற்காக என்பதை இவர்கள் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். சுதந்திரந்தான் இவர்கள் லட்சியம்; மற்றவையெல்லாம் வழிப் பிரயாணந்தான். நடை வழியில் எத்தனையோ கல்லும் முள்ளும் தட்டுப்படுவது சகஜந்தானே. அவைகளைக் கண்டு கோபித்துக்கொண்டிருந்தால் மேலே நடக்க முடியுமா? இந்த உண்மையையும் சுதந்திரத்திற்காகப் போராடுகிறவர்கள் தெரிந்து கொள்ளுதல் நல்லது. இவ்வளவெல்லாம் கூறிய நாம் சுதந்திரம் என்றால் என்ன வென் பதைத் தெரிவிக்க வேண்டாமா? சுதந்திரம் என்றால் என்ன வென்பதைப் பற்றி வியாக்கியானஞ் செய்து அறிஞர்கள் பலர் எழுதியிருக்கிறார்கள். இவர்களிற் பெரும்பாலோர் சுதந்திரத்தை ஒரு தத்துவமாக விளக்கிக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர், தங்கள் சுதந்திர எண்ணத்தை அனுஷ்டான பூர்வமாகக் கொண்டு வந்து காட்டியிருக்கின்றனர். இவர்களில் ஒருவனும், அமெரிக்கக் குடியரசின் பதினாறாவது பிரசிடெண்ட்டா யிருந்தவனுமான அப்ரஹாம் லிங்கன்1 என்பவன், சுதந்திரத்தைப் பின்வரும் வாசகத்தால் விவரிக்கிறான்:- தனிப்பட்ட மனிதன் ஒவ்வொருவனும், தன்னிஷ்டப்படி காரியங் களைச் செய்யவும், தன் உழைப்பின் பலனை அனுபவிக்கவும் உரிமை யுடை யவனாயிருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படிக் காரியங்களைச் செய்வதும், உழைப்பின் பலனை அனுபவிப்பதும், மற்றவர் களுடைய உரிமைகளுக்குப் பாதகமில்லாமல் இருக்க வேண்டும். இப்படியே ஒவ்வொரு சமுதாயமும், ராஜ்யம் என்ற தோரணையில், மற்றொரு ராஜ்யத்தின் உரிமைகளில் தலையிடாதபடி, தன்னிஷ்டப் பிரகாரம் காரியங்களைச் செய்யும் உரிமை பெற வேண்டும். இப்படியே ஒரு பொது அரசாங்கமானது, பொதுவாக எல்லாரையும் பாதிக்கக் கூடிய விஷயங் களில் தலையிடலாமே தவிர, ஜனங்களுடைய மற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. இதைவிடச் சுருக்கமாக சுதந்திரத்தைப்பற்றி வேறு யாரும் கூறியிருக்க முடியாது. இந்தச் சுதந்திரத்தைப் பற்றி நாம் நினைக்கிறபோது, நமது தாய் நாட்டைப்பற்றியும் நினைக்காமலிருக்க முடியவில்லை. அப்படி நினைக்கிற போது மகாகவி தாந்தே2 இத்தலியைப்பற்றிப் பாடிய சில அடிகள் நமது ஞாபகத்திற்கு வருகின்றன. ஹா! அடிமை இத்தலியே! துயரத்தின் தாயகமே! மாலு மியில்லாமல் புயற்காற்றில் அகப்பட்டுக் கொண்டு தத்தளிக்கின்ற கப்பலே! நீ மாகாணங்களின் தாயாயில்லை; விபசார விடுதியின் பெண்ணாயிருக்கின்றாய்! 6. எண்ணம் கண்ணாயிரம் படைத்தவனும் எண்ணித்தான் ஆக வேண்டும். புந்தி நிரம்பி விட்டாலும், சிந்தனை என்பது கடுகளவும் இல்லாவிட்டால், அவன் நடை பிணம் போன்றவனே. ஏனென்றால், எண்ணந்தான் மனித சக்திகளின் ஊற்று; காரிய சாதனையின் விளை நிலன்; லட்சியத்திலே நம்மைக் கொண்டு சேர்ப்பிக்கிற கைகாட்டி மரம். ஆகவே, முதலில் நாம் எண்ணவேண்டும்; அந்த எண்ணம் வலுவடைந்து அதில் நமக்கு நம்பிக்கை விழ வேண்டும். அந்த நம்பிக்கை, தானாகவே நம்மை ஒரு காரியத்தில் இறங்குமாறு அழைத்துக்கொண்டு போகும். இறங்குகிற காரியத்தில் வெற்றி யேற்படுமா, தோல்வி யுண்டாகுமாவென்ற கேள்வி அப்புறமிருக் கட்டும்: காரியத்தைச்செய்ய வேண்டியதுதான் நமது கடமை. அதன் பலாபலனைப் பற்றிக் கவலைப்பட நமக்கு உரிமையில்லை. கர்ம க்ஷேத்திரத்திலே பிரவேசித்து அங்கு வெற்றிகாண வேண்டுமென்று விரும்புகிற ஒரு தனி மனிதனுக்கே, சிந்தனாசக்தி மிகவும் அவசியமா யிருக்கிறபோது, சுதந்திரமில்லாத ஒரு தேசத்திற்குச் சிந்தனா சக்தி எவ்வளவு அவசியமானது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. தெரியாமலா ஓர் ஆங்கில அறிஞன், ஒரு தேசம் சிந்திக்கத் தொடங்கி விடுமானால் அதனைத் தடுக்க யாராலும் முடியாது என்று கூறினான்? எண்ணத்திற்கு, சிந்தனைக்கு எவ்வளவு சக்தியிருக்கிற தென்பதை நாம் உணர்ந்து கொண்டு விட்டோமானால், நாம் உடனே எண்ணத் தொடங்கி விடுவோம்; சிந்தனை செய்ய ஆரம்பிப்போம். அப்படியானால், இந்தியர்களாகிய நாம் எண்ணுவ தேயில்லையா, சிந்திப்பதேயில்லையா வென்று சிலர் நம்மைப் பார்த்துக் கேட்கக்கூடும். இந்தக் கேள்விக்கு இல்லை என்று தான் நாம் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. நமக்கு இன்னும் சுயமாக எண்ணுந்திறனே ஏற்படவில்லை என்பதற்கு அத்தாட்சி, இன்னும் நாம் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இருப்பதுதான். நாம் எண்ணு கிறோம்;நமக்குச் சிந்தனை யில்லாமலில்லை. எண்ணுவதும், சிந்திப்பதுந்தான் நமது பரம்பரைச் சொத்துக்களாயிற்றே. இல்லாமலா, எண்ணாத எண்ண மெல்லாம் எண்ணி எண்ணி என்று பாடிப் போயினர் பக்தர் கூட்டத்தினர்? ஆனால் உளுத்துப் போன மரத்தைக் கொண்டு வீடு கட்டுவது போல, செல்லரித்துப் போன, கிழட்டுத்தனம் வாய்ந்த எண்ணங் களைக் கொண்டு சுயராஜ்யக் கோட்டையைப் பிடிக்கப் பார்க்கிறோம். நடக்கிற காரியமா இது? எண்ண வேண்டும் என்று சொன்னால் முற்போக் கான எண்ணங்களை எண்ண வேண்டுமென்பது தான் இங்கே பொருள். எதற்காக இவ்வளவு தூரம் கூறுகிறோம்? நமது எண்ணத் திலே புரட்சி ஏற்பட வேண்டுமென்பதற்குத்தான். புரட்சி என்ற சொல்லைக் கேட்டவுடன், சிலருக்கு, ஆயுத மலை, ரத்த ஆறு, போலஷ் வெஸம் முதலிய கனவுகள் தோன்றி அவர்களை அலக்கழிக்கின்றன! பாவம்! இப்படிப் பட்டவர்கள் நமது இரக்கத்துக்குத் தான் உரியவர்கள். ஒவ்வொரு நாளும், நமது தனிப்பட்டவாழ்க்கையிலாகட்டும், நமது குடும்ப வாழ்க்கை யிலாகட்டும், நமது சமுதாய வாழ்க்கையிலாகட்டும் எத்தனையோ புரட்சிகள் நடைபெற்றுக் கொண்டு தான் வருகின்றன. இவைகளை நாம் அனுபவித்து விடுகிறோம்; கண்ணால் காண்பதில்லை. இதனால் இவை நமக்குப் புரட்சிகளாகத் தோன்றுவதில்லை. பரம்பரையாகக் குடுமி வைத்துக்கொண்டிருந்தவர்கள் என்ன காரணத்தினாலோ க்ராப் வைத்துக் கொள்கிறார்கள். இஃதொரு நாகரிகப் புரட்சியல்லவா? கட்டை வண்டியிலேறிச் சென்ற நாம் இப்பொழுது ஆகாய விமானத்தில் பறந்து செல்கிறோம். இது விஞ்ஞானப் புரட்சி யல்லவா? முற்காலத்தில் நமது மூதாதையர்கள், தங்கள் எண்ணங்களைக் கவிதைகளாகவே வெளிப்படுத்திக் கொண்டு வந்தார்கள். இப்பொழுது நாம் வசன நடைக்குத்தான் மதிப்புக் கொடுக்கிறோம். இது கலைப் புரட்சியல்லவா? இதுபோலவே, மனத்திலே புரட்சி நிகழலாம்; வாக்கிலே புரட்சி உண்டாகலாம்; காயத்திலே புரட்சி தோன்றலாம். இப்படியே, அரசியல் புரட்சி யென்றும் சமுதாயப் புரட்சி யென்றும் பலபடப் பகுத்துக் கூறலாம். ஆக, புரட்சி என்றால் என்ன? புரளுதல், ஒரு நிலையினின்று மற்றொரு நிலைக்கு மாறுதல் என்று அர்த்தம். அரசியலில் மாறுதல் வேண்டுகிறபோது புரட்சி என்று சொல்லு கிறோம். கலை வளர்ச்சி சம்பந்தப்பட்ட மாறுதலை மறு மலர்ச்சி யென்கிறோம். விஞ்ஞானத்தைப் பொறுத்த மாற்றத்தை ஆராய்ச்சி என்கிறோம். ஆக எல்லாம் புரட்சிதான். அப்படியிருக்க, புரட்சி என்ற வார்த்தையைக் கேட்டு ஏன் மதிமயங்கிக் கதிகலங்க வேண்டுமோ தெரியவில்லை. நமது எண்ணத்திலே புரட்சி ஏற்பட வேண்டுமென்று மேலே சொன்னோமல்லவா? அதனைச் சற்று விரிவுபடுத்திக் கூற விரும்பு கிறோம். மனிதர்களெல்லோரும் மனிதத் தன்மையோடு கூட நடக்க வேண்டும். அப்படியானால் அந்த மனிதர்கள் வசிக்கும் சமுதாய மானது ஒழுங்காக இயங்குதல் வேண்டும். சமுதாய ஒழுங்குக்கு அரசியல் சுதந்திரம் இன்றியமையாதது. எனவே, அரசியல் சுதந்திரமே நமது லட்சியமல்ல; லட்சியத்தை யடைவதற்குரிய மார்க்கந்தான். ஒழுங்கான சமுதாயத்தை அமைத்துக் கொள்வதற்குத்தான் நாம் அரசியல் சுதந்திரம் வேண்டுகிறோம். பின்னதை அடையாவிட்டால், முன்னதை அடைய முடியாது. அரசியல் சுதந்திரம் பெறுவது மேலானபடி; அதற்கும் மேலானபடி லட்சியம் வாய்ந்த சமுதாயத்தை அமைப்பது. ஆனால் இவை களுக்கெல்லாம் முதற் சோபானமாயிருப்பது என்ன? எந்த அரசியலானது, நம்மைச் சுதந்திரம்பெற விடாமல் தடை செய்து நிற்கிறதோ அந்த அரசியலைப் பற்றியும், எந்தச் சமுதாயப் பழக்க வழக்கங்கள், நம்மை உண்மையான பிரஜைகளாகவும் மனிதத் தன்மையோடு கூடிய மனிதர்களாகவும் ஆக விடாமல் தகைந்து நிற்கின்றனவோ அந்தச் சமுதாயப் பழக்க வழக்கங்களைப் பற்றியும் நாம் கொண்டிருக்கும் எண்ணங்கள் மாற வேண்டும். அவைகளை எந்தப் பார்வையால் பார்க் கிறோமோ அந்தப் பார்வையையே திருப்ப வேண்டும். அதாவது, தற்போதைய அரசியலைப்பற்றியும் சமுதாயத்தைப்பற்றியும் நாம் கொண்டிருக்கிற எண்ணத்தில் புரட்சி ஏற்படவேண்டும். இருப்பதைச் சீர்த்திருத்த வேண்டுமென்ற எண்ணந்தான் இப்பொழுது இந்தியாவில் பெரும்பாலும் குடிகொண்டிருக்கிறதே தவிர, இருப்பதை மாற்றி யமைக்க வேண்டுமென்ற எண்ணம் இன்னும் உண்டாகவில்லை. உள்ள பொருளுக்கு வியாக்கியானந்தான் செய்கிறோமே தவிர, புதிய சிருஷ்டி யொன்றையும் செய்யவில்லை. நமது தேசீய ஸ்தாபனமாகிய காங்கிரஸிலும், அதன் அங்கங்களாகிய அ.இ.கா.கமிட்டி, காரிய கமிட்டி இவைகளிலும் நிறைவேற்றப்படுகிற தீர்மானங்களே தேசம் சீர்த்திருத்த மனப்பான்மையில் தோய்ந்து கிடக்கிறதென்பதற்குத் தகுந்த சாட்சிகளாகும். இந்தத் தீர்மானங்கள், இதுவரை, யாரையும் அசைத்துக் கொடுக்கவில்லை. நம்மையே, அவை, கண்ணைத் திறந்து பார்க்குமாறு செய்யவில்லையென்றால், யாரைக்குறித்து இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றனவோ அவர்களையா அவை அசைத்துக் கொடுக்கப் போகின்றன? தவிர, இந்தச் சீர்த்திருத்த மனப்பான்மை இருப்பதனால்தான், நம்முடைய அரசியல் வாதங்களும் முன்னுக்குப் பின் முரணாயிருக்கின்றன. மகத்தான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தோடு, இருப்பதா இறப்பதா என்று போராடிக் கொண்டிருக்கிற நாம் என்று ஓரிடத்திலே தீர்மானத்தை நிறைவேற்றுகிறோம்; ஆனால் தேசம் இப்பொழுது போராட்டத்திற்குத் தயாராயில்லை யென்று மற்றோரிடத்தில் கூறுகிறோம். இதனால் நமது நிலை இன்னதென்று தெரியாத ஒரு திகைப்பு ஏற்படுகிறது. இதற்குக் காரணம், நமது மனப் பான்மையிலுள்ள கோளாறுதான். இதனாலேயே, இந்த மனப்பான்மை மாறவேண்டுமென்று கூறுகிறோம். எண்ணத்தில் புரட்சி ஏற்பட வேண்டுமென்று சொல்வதெல்லாம் இதுதான். உலக சரித்திரத்தை நாம் ஆராய்ந்து பார்க்கிறபோது, மானிட ஜாதியின் எண்ணமானது, ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு விதமாகப் பண்பட்டு வந்திருக்கிறது. ஒரு மனிதன், என்ன நிலையில், எந்தவிதமான சுற்றுப்புறத்தின் நடுவில் வைக்கப்பட்டிருக்கிறானோ, அவைகளைப் பொறுத்தே அவனுடைய எண்ணமும் அமைகிறது. அந்த எண்ணம் வளர்வதும், தேய்வதும் அந்தச் சுற்றுப்புறத்தைப் பொறுத்ததே. இப்படியே தான் ஒரு சமுதாயமும், நமது இந்திய ஜன சமுதாயத்தை எடுத்துக் கொள்வோம். நம்முடைய வாழ்வின் எந்த அமிசத்தை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் அதற்கு அடியிலே ஒரே விதமான நீரோட்டந்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அதுதான் மதம். எதற்கெடுத்தாலும் மதத்தின் துணையை நாடுகிறோம். அறிந்தே இப்படிச் செய்கிறோமா என்றால் அப்படியில்லை. நம்மையறியாமலே, நம்மை அந்த மத உணர்ச்சி தன்னிடத்தில் அடைக்கலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது, மதத்தைப் பற்றிய எண்ணம், மதப்பற்று, மத நம்பிக்கை அவ்வளவு ஆழமாக நம்மிடத்திலே பதிந்து போயிருக்கிறது. அரசியல் பிரசாரத்தில், நம் கருத்துக்கு மாறுப்பட்டவர்களைப் பரிகசிக்கிறபோதும், நம்மைச் சேர்ந்தவர்களைத் தூக்கிவைத்துக் பேசுகிற போதுங்கூட, மதத் தொடர்பு கொண்ட புராண இதிகாசங்களிலே வரும் பேர்வழி களை உதாரண புருஷர் களாக இழுத்துப்போட்டுக் கொள்கிறோமே தவிர, சரித்திரத்திலே வந்த, நமது நிகழ்கால வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடிய புருஷர்களின் பெயர் களை உபயோகிக்கிறோ மில்லை. காவிரியையும் கங்கையையும் இணைக்கவேண்டுமென்று யாராவது சொன்னால், உடனே பகீரதனுடைய பெயர்தான் நமக்கு ஞாபகம் வருகிறதே தவிர, காவிரியைத் திருப்பி அணைபோட்ட கரிகாற் பெருவளத்தான் என்னும் தமிழ்நாட்டு மன்னனுடைய நினைவு வருவதேயில்லை. பண்டித ஜவஹர்லால் நேரு, இலங்கைக்குப் போய் திரும்பி வந்தால், ஹனுமானைப்போல் திரும்பி வந்தார் என்று ஸ்துதி பாட ஆரம்பிக்கிறோம். உபமான உபமேயம் எவ்வளவு தூரம் பொருத்தமான தென்பதைக்கூட நாம் ஆலோசிப்ப தில்லை. அறிவு நிறைந்த தலைவர்களுடைய நிலைமையே இப்படி யிருக்கிறதென்றால், சாதாரண ஜனங்களின் நிலைமையைக் கேட்க வேண்டியதில்லை. ஊரிலே காலரா மும்முரமாக இருக்கிற தென்றால், தெய்வத்திற்குத் திருவிழா நடக்கிறது. வீட்டிலே யாருக்காவது ஜூரம் வந்து படுத்துக்கொண்டிருந்தால், திருப்பதி ஏழுமலையானுக்கு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துப் பிரார்த்தணை செய்கிறோம்; கூலிக்கு உழைக்கப்போன இடத்திலே, வேலை கிடைக்காமற் போனால் கடவுள் கண் திறக்கவில்லை என்று சொல்லி நாம் கண்மூடிப் படுத்து விடுகிறோம். நாம் பணம் ஜமால் செய்து வைத்திருந்த பாங்கி முறிந்து விட்டதே யானால் இந்தப் பாழாய்ப்போன கடவுள் நம்மைத்தானா பரிசோதிக்க வேண்டும் என்று கடவுளைச் சபிக்கிறோம். அன்றாட அலுவல்களில் நாம் உபயோகித்து வரும் பழமொழிகளை ஆராய்ந்து பாருங்கள். கடவுள், மதம், புராண இதிகாசங்கள் முதலியன நம்மை எவ்வளவு தூரம் இறுக்கிப் பிடித்து வைத்து கொண்டிருக்கின்றன வென்பது நன்கு தெரியும். கடவுளிடத்திலேயோ, மதத்தினிடத்திலேயோ நமக்குத் துவேஷ மில்லை. அதற்கு மாறாக கடவுட்பக்தியும் மதப்பற்றும் நமக்கு நிரம்ப உண்டு. ஆனால் கடவுட் பக்தியோ, மதப்பற்றோ நமது பார்வையை மறைத்துவிடக் கூடாதென்பதுதான் நமது கட்சி. மதம், மனிதனுடைய சொந்த விஷயம். ஆத்ம சாந்திக்காகவோ, மனத் திருப்திக்காகவோ ஒருவன் மதம் சம்பந்தப்பட்டமட்டில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளட்டும். அதைப்பற்றி யாருக்கும் எந்தவிதமான ஆட்சேபமும் இருக்க முடியாது. ஆனால் மதத்தை அரசியலிலே கொண்டு புகுத்தி, அதன் விளைவாகச் சமுதாயமானது பண்பட்ட பாதையில் செல்ல வொட்டாத படி தகைந்து விடக் கூடாதென்றுதான் நாம் கூறுகிறோம். மதத்தோடு பிணைந்து போயிருக்கிற இந்த மனப்பான்மை இந்தியாவுக்கு மட்டுந்தான் விசேஷமானதா என்று சிலர் கேட்கக் கூடும். அப்படியில்லை. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலத்தில் இந்த மாதிரியான மனப்பான்மை ஏற்பட்டிருக்கிறது. உதாரணமாக ஐரோப்பாவில், கி.பி.பதினாறாவது நூற்றாண்டுவரை, மதத்தின் செல் வாக்கு சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் பரவியிருந்தது. இந்த உலகத்திலே நடக்கிற ஒவ்வொரு சம்பவத்தையும், கடவுள் சித்தம் என்றுதான் ஜனங்கள் சொல்லி வந்தார்கள். ஆனால் பிற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட ஏற்பட மனிதனுடைய எண்ணமும் மாற்ற மடைந்தது. இயற்கைச் சக்திகளோடு போராடிப் போராடிப் பெறுகிற அனுபவந்தான், மனிதனுடைய மனோபரிபக்குவத்தை அளந்துகாட்டும் கருவியா யமைகிறது. இந்தப் போராட்டத்தின் பரிணாமந்தான் விஞ்ஞானம். நாகரிகம் வரவர அபிவிருத்தியடைந்து கொண்டு வருகிறதென்று நாம் சொல்கிறோமே, அதன் பொருள்தானென்ன? மனிதன் இயற்கையோடு போராடி அதன் மீது வெற்றி கொள்வதோ, அல்லது அதனைத் தனது பணியாளனாக வைத்துக் கொள்வதோதான் நாகரிக வளர்ச்சியின் சரித்திரமாயிருக்கிறது. இயற்கையின் மீது மனிதனை வெற்றி கொள்ளச் செய்வது எது? விஞ்ஞானம். விஞ்ஞான அறிவு பெருகப் பெருக, மனிதன், இயற்கையின் அந்தரங்கங்களையெல்லாம் பரிசோதனை செய்து பார்க்க ஆரம்பிக் கிறான். அப்பொழுது அவன் அறிவு விசாலப் படுகிறது; மனம் விரிகிறது. மதக்கட்டினின்றும் விடுதலையடைய விழைகிறான். அப்படியே விடுதலைபெற்று சுதந்திர புருஷனா கிறான். இப்படிச் சுதந்திர புருஷனாக வந்த நிலையில் இவனுக்கு ஒரு மகத்தான பரிசோதனை நடக்கிறது. இவன் தான் அடைந்த இந்தச் சுதந்திரத்தை தன்னலத்திற்காகவல்லாமல் பிறர் நலத்திற்காகப் பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தாமல் போனால், அந்தச் சுதந்திரமே இவனை அழித்து விடுகிறது. தற்போழ்து, மேனாட்டார், மேலே சொன்ன பரிசோதனை யில் தேறாமல் போய்தான், பரஸ்பர அழிவுக்கு அடி கோலிக் கொண்டிருக் கிறார்கள். இந்தியர்களாகிய நாம் இதிலிருந்து ஒரு பாடங்கற்றுக் கொள்வது அவசியம். அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்வதற்கு முன்னர், அட்சராப்பியாசம் போன்றது எண்ணப் புரட்சி. இந்த ஆரம்ப பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்று தான் நாம் கூறுகிறோம். அதாவது, ஐரோப்பா கண்டத்தில் சுமார் நானூறு வருஷங்களுக்கு முன்னால் ஏற்பட்ட எண்ணப் புரட்சி, மனோ விகாசம், மறுமலர்ச்சி ஆகியவை இப்பொழுது நமது நாட்டிலே ஏற்பட வேண்டுமென்று கூறுகிறோம். இதைச் சிறிது விண்டு சொன்னால், நானூறு வருஷங்களுக்கு முன்னால் ஐரோப்பா இருந்த நிலையில் இப்பொழுது - இந்த இருபதாவது நூற்றாண்டில்- நாம் இருக்கிறோம். அந்தோ! நாம் எவ்வளவு வேகமாக முன்னேற வேண்டியிருக்கிறது! தெய்வத் திருவருள்தான், இந்தியாவையும் இங்கிலாந்தையும் ஒன்று கூட்டுவித்தது என்ற கொள்கையில் நமக்கு நம்பிக்கையில்லை. அப்படியே, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு அந்தத் தெய்வத் திருவருளின் துணைதான் தேவை என்ற நம்பிக்கையிலும் நமக்கு நம்பிக்கையில்லை. நமது முயற்சியிலேதான் நமது விடுதலை இருக்கிறது. அப்படி முயற்சி செய்வதற்கு முன்னர் சரியான அஸ்திவாரம் போட வேண்டும். அதுவே நமது எண்ணத்திலே மாற்றம்; புரட்சி. 7. நாடும் நகரமும் இயற்கையின் இன்பத்தை நுகராது செயற்கையின் சேற்றில் மயங்கி நிற்கும் இக்காலத்தில், நகர வாழ்வைவிட நாட்டு வாழ்வே சிறந்த தென்று கூறுவோமானால் அதனைப் பலர் எள்ளி நகையாடுவர் என்பதில் ஐயமில்லை. ஆயினும் நமது நிலையைக் குறித்துப் பிறர் பரிதாப மடையக்கூடிய தன்மையில் நாம் இப்பொழுது இருக்கிறோம். இதனை நாம் அறிந்து கொள்ளவில்லை. இதனால் பிற்காலத்தில் நமது சமூகத் திற்கு எவ்வளவு தீமைகள் உண்டாகுமென்பதை நாம் சிறிது சிந்தித்துப் பார்ப்போமானால் எவருக்கும் மனம் உருகாமலிராது. மேனாட்டு நாகரிக வெள்ளம் இப்பொழுது இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் பாய்ந்து வருகிறது. இச்சமயத்தில் அதனை எதிர் கொண்டழைத்துப் போற்றுவதே கௌரவமாக எண்ணப் படுகிறது. இந்த வெள்ளச் சுழலில் அகப்பட்டுத் தத்தளிப்போர் பலர்; இதனுடைய வேகத்திலும் ஆரவாரத்திலும் முதலில் ஈடுபட்டு அதனோடு சென்று பிறகு தெய்வாதீனத்தாலோ சுய முயற்சியி னாலோ கரையேறியவர் பலர். நாத்திகம், டம்பம், உலகத்தின் உண்மை நிலையறியாமை, பொருளாசை, சுய நலம் முதலிய பல பொருள்களைத் தன்னோடு கூட்டிக் கொண்டு வரும் இவ்வெள்ளத்தின் மீது பலருக்கு மோகம் ஏற்பட்டிருக்கும் இக்காலத்தில், நமது புறத்தையும் அகத்தையும் தூய்மைப்படுத்தி நமக்கு எல்லா நலன்களையும் கொடுக்கக்கூடிய தூய ஊற்று நீர் இருக்கிற தென்று கூறினால் அதன் உண்மையை எவரும் சந்தேகிக்காதிருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நமது மூதாதையர்களுக்கிருந்த தேகபலம் நமக்கு இருக் கிறதா? அவர்களுடைய மனோ உறுதி நமக்கு உண்டா? அவர்க ளுடைய அஞ்சாமை முதலிய நறுங்குணங்கள் நம்மிடம் காணப்படு கின்றனவா? அவர்களுடைய ஞாபக சக்தியில், அறிவு விளக்கத்தில், ஒழுக்கத்தில், நாம் இன்னும் எவ்வளவு பங்கை வைத்துக் கொண்டிருக்கிறோம்? கையைத் தான் விரிக்கலாமே தவிர வேறு பதிலிறுக்க முடியாது. அங்ஙனமாயின், நம்மில் நூற்றுக்கு எத்தனை பேர் இதற்குக் காரணம் என்ன என்பதை விசாரிக்கின்றனர்? தேக பலத்தை எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு தலை முறையிலும் தேக பலம் குறைந்து கொண்டு வருவதை ஒவ்வொரு குடும்பத்திலும் காணலாம். பாட்டனார் இருநூறு பவுண்டு நிறையுள்ள வராயிருந்தால், அவர் குமாரன் நூற்றைம்பதோடு நின்று விடுகிறான்; அவன் மகன் நூறு பவுண்டுக்கும் குறைந்து விடுகிறான். இவனுக்குத் தோன்றும் சந்ததிகள் எத்தகைய உடல் வலிமை பெற்றிருக்கும் என்பதை நாம் கூற வேண்டுமோ? இந்தியாவில் ஒருவருடைய சராசரி வயது இருபத்து மூன்று என்பது அனைவருக்கும் தெரிந்ததொன்றே. நமது மூதாதையர் எண்பது வயதாயினும் தலை நரையின்றி, பல் வீழ்ச்சி யுறாமல், பார்வைக் குறைவின்றி, நரம்புகள் தளர்ச்சியுறாமல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தார்கள். மூதாதையர்கள் எனின் சரித்திரங்கடந்த பழைய காலத்து மனிதர்களைப் பற்றி கூறவில்லை. சென்ற நூற்றாண்டிலிருந்த மனிதர்களை எடுத்துக் கொண்டாலும் இந்தக் கூற்று பொருந்தும். ஒவ்வோர் ஆண்டும் மேற் கூறப்பட்ட அமிசங்கள் குறைந்து வருவதை எவரும் காணலாம். தற்காலத்திலோ, இருபத்தைந்து வயதிலேயே நரையும் மூப்பும் அதற்குரிய பிறவும் தோன்றி விடுகின்றன. முப்பது வயதிலேயே ஊன்று கோலையும் மூக்குக் கண்ணாடியையும் நாடுகின்றவரைக் காண்டல் அரிதன்று. தேக பலமின்மையால் மனோபலம் குறைந்து விடுகிறது. இதனால் நாளாவட்டத்தில் உண்டாகும் விளைவுகளைப் பற்றி நாம் அதிகமாகக் கூற வேண்டுவதில்லை. நாட்டில் நூல்கள் பெருகி விட்டமையால், ஞாபக சக்தியும் குறைந்து வருகிறதென்று கூறவேண்டும். நமது நாட்டின் வறுமை பெருகிக்கொண்டு வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். மேற்கூறப்பட்ட குறைகளுக்கெல்லாம் காரணம் என்ன என்பதைச் சிறிது ஆலோசிக்க வேண்டும். இது காலை ஜனங்களுக்கு நகர வாழ்க்கையில் அதிக மோகம் விழுந்திருக்கிற தென்பதை எவரும் மறுக்க முடியாது. இதுவே, மேற்கூறப்பட்ட குறைகளுக் கெல்லாம் மூல காரணம் என்று பொதுவாகக் கூறலாம். கிராமங் களில் ஆடம்பரமற்ற வாழ்க்கையை நடத்துவது இழிவு என்றும், நகரங்களில் துர்நாற்றங்களைச் சகித்துக்கொண்டு, காற்றும் வெளிச்சமுமில்லாத இடங்களில் வருவாய்க்கு அதிகமான குடிக்கூலி கொடுத்து வாழ்வதே நாகரிக மென்றும் நாம் நினைக்கின்றோம். அந்தோ! இஃதென்ன கொடுமை! பிழைக்க வழியில்லாதவன், பிழைக்க வழியுள்ளவன், பூஸ்திதியுள்ளவன், பூஸ்திதி இல்லாதவன் ஆகிய யாரும் நகரங்களுக்குச் சென்றால் கௌரவ மாகவும் நாணயமாகவும் வாழ்க்கையை நடத்தலாம் என்று கருதுகிறோம். இதனால் பலவித கஷ்டங்கள் உண்டாகின்றன. முதலில் விவசாயத் தொழிலை நெடுங் காலமாக நடத்தி வந்தவர், இப்பொழுது அத்தொழிலை விடுத்து வருவதால் நாட்டின் விளை பொருள் அளவு குறைந்து விடுகிறது. விளைவு குறைவாயிருக்க தேவை அதிகமாயிருந்தால், விளைபொருள் களின் விலை அதிக மாவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? நமது நாட்டின் விளை பொருள்கள் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன வென்றும், அதைக் குறைத்தால் விளைபொருள்களின் விலையும் குறையும் என்றும் சிலர் கூறலாம். அஃதுண்மை. அதற்கும் முயற்சி செய்ய வேண்டியதே. ஆனால் அதற்காக, விவசாயத் தொழிலை விருத்தி செய்யக் கூடாதென்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? நாட்டு வாசத்தை இழிவாகக் கருத வேண்டுமென்று எங்கே கூறப்பட்டிருக்கிறது? நாட்டு வாசத்தினால் உண்டாகும் நன்மைகளைப் பலர் கவனிப்ப தில்லை. மனிதனுடைய சுக வாழ்க்கைக்கு இன்றியமை யாது வேண்டற் பாலது சுத்தமான காற்று. அக்காற்று நகரங்களில்- உதாரணமாகச் சென்னையில் - கிடைக்கிறதா? நல்ல காற்று ஒன்றை உத்தேசித்துக் கிராமங்களில் சென்று இருப்பதா என்று சிலர் கேட்கலாம். நல்ல வெளிச்சமும் தூய காற்றும் ஒருவனுடைய நல்வாழ்க்கைக்கு இன்றி யமையாதவை. நகரங்களில் இவ்விரண்டுக் கும் ஜனங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்? குப்பை மேடுகளி லும், சாக்கடையோரங்களிலும், வீதிக் கோடிகளிலும் பல துன்பங்களிடையே அடிமை ஊழியம் செய்தேனும், பிறருடைய திட்டு, அடி இவைகளைப் பொறுத்துக் கொண்டேனும் நகரங்களில் வசிக்க தற்காலத்தில் பலர் விரும்புகின்றனர். அதிக பணச் செலவில்லாமல், எளிய வாழ்க்கையை கிராமங்களில் நடத்த விரும்புகிறாரில்லை. கிராமங்களில் நாம் வேண்டிய மட்டும் காற்றையும், வெளிச்சத்தையும் அனுபவிக்கலாம். இவைகளுக்கு நாம் பணம் செலுத்த வேண்டுவதில்லை. மற்றும் கிராமங்களில் ஆசைக்கு அடிமையாகி சுய நலப் பிரியர்களாவதற்கு வழியில்லை. ஏனெனில் நகரங்களில் - முக்கியமாகச் சென்னையில் - வீதிகளில் போக்குவரவு சாதனங்கள் அதிகம். ஆங்காங்கு காப்பி ஹோட்டல்கள் இருக்கின்றன. நகரவாசி ஒருவன் சிறிது தூரம் செல்லவேண்டு மென்றாலும் ஓர் ஊர்தியின் உதவியையே நாடுகிறான். அதனோடு நில்லாமல், காப்பி ஹோட்டல் களைப் பார்த்தவுடன் அங்கு நுழையும்படி இவன் மனம் இவனைத் தூண்டுகிறது. உடனே உள்ளே சென்று நான்கணாவுக்குக் குறையாமல் தின்று விடுகிறான். ஹோட்டல்களுக்குச் செல்லாதிருப்பதும், வீதிகளில் நடந்து செல்வதும் மிகுந்த அகௌரவமென்று நகரங்களில் கருதப்படும் போது, இவன் அவைகளை எங்ஙனம் நிராகரித்திருக்கக்கூடும்? இவை களினால் இவனுக்குப் பணம் அதிகமாகச் செலவழிகிறது. எனவே, பணத்தைச் சம்பாதிக்கப் பல வழிகளிலும் முயல்கிறான். மானம், ஒழுக்கம் முதலியனவற்றைப் பறக்க விடுகிறான். பொருள் சம்பாதிப்பதிலேயே இவனுடைய உழைப்பு பூராவும் செலவாகிறது. இதே நோக்கம் பலருக்கிருப்பதால் போட்டி ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு வனும் சுயநலப் பிரியனாகி விடுகிறான், தன் தேகம், தன் வீடு, தன் பொருள் என்ற எண்ணம் மேலோங்கி நிற்க, இவன் அவ்வெண்ணத்தைப் பூர்த்திசெய்து கொள்ள எல்லா முறை களையும் கையாளுகிறான். மனித தேகம் எடுத்தது உண்பதற்கும் உறங்குவதற்குமே என்ற முடிவுக்கு வந்து விடுகிறான். இவைகளை விட மேலான நோக்கங்கள் அல்லது வேலைகள் மனிதனுக்கு இருக்கின்றன என்பது இவனுக்குத் தெரிவதே யில்லை. இதனால் இவன் பிறந்த தேசத்திற்கு என்ன நன்மை? எளிய ஆடம்பரமற்ற வாழ்க்கையிலேயே இன்பமிருக்கிறது. இவ்வாழ்க்கையிலேயே மனிதனுக்கு மன நிம்மதி உண்டாகும். கிராமங்களிலேயே இத்தகைய வாழ்வை நடத்த முடியும். இயற்கை தேவியின் அருளாட்சிக்குட்பட்டு இயற்கை மயமாய் இலங்கும் இறைவனை அடையலாம். இங்ஙனம் கூறுவதால் மூக்கைப் பிடித்துக் கொண்டு மரத்தடியில் உட்கார வேண்டுமென்று கூறப் படுவதாக யாரும் நினைக்க வேண்டாம். கிராமத்திலே வசிப்பது ஒருவன் பிறந்த நாட்டிற்கு உபகாரமாய் இருத்தல் வேண்டும். சுதந்திர ஆவல் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் உண்டாவதற்குக் கிராம வாசமே சிறந்த வழியென்பது அறிஞர் பலருடைய அபிப்பிராயம். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர் என்ற குறள் ஈண்டுக் கவனிக்கற்பாற்று. உத்தியோகம் செய்வதே கௌரவமென்று நினைப்பதைப் போன்ற அறியாமை வேறொன்றில்லை. மாதம் இருபது ரூபாய்க்கும் முப்பது ரூபாய்க்கும் தன் தேகத்தையும் அறிவையும் உழைப்பையும் அடகு வைத் திருப்பது போலவன்றோ உத்தியோகம் செய்வது? இஃதென்ன கௌரவம்? இவைகளெல்லாம் அனுபவத்தில் முடியாது என்று சிலர் கூறக்கூடும். இக்கூற்று ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று. காலமழை இல்லாமையால் சரியான சாகுபடி செய்ய முடிவதில்லை யென்றும், இதனால் மகசூல் குறைந்து போகிற தென்றும், எனவே வயிறு பிழைக்க ஜனங்கள் நகரங்களுக்கு வந்து விடுகிறார்களென்றும் சிலர் கூறக்கூடும். கால மழை சரியாக இல்லை யென்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அதனால் ஓரளவு மகசூல் குறைந்து மிருக்கலாம். ஆனால் இஃதொன்றே முக்கியமான காரணமா என்பதே கேள்வி. நிலங்களை விருத்தி செய்யும் வழியில் தற்காலத்தவர் அதிக உழைப்பு எடுத்துக் கொள்வதில்லை. நிலங் களுக்கு நேராகச் சென்று கவனிப்பதும், விதை விதைக்குங் காலத்தும் அறுவடை காலத்தும், கூட இருந்து பார்வை யிடுவதும் அகௌரவ மென்று கிராமவாசிகளிலேயே பலர் நினைக்கிறார்கள். இதனால் விளைவு குறைகிறது. மற்றும் விவசாயத்தை நூதன முறைகளில் அபிவிருத்தி செய்ய நம்மவர்கள் விரும்புவதில்லை. முதலிற் சிறிது பணஞ் செலவழிக்கத் தயங்கிக் கொண்டு அதனால் எப்பொழுதுமே தங்கள் வருவாயைக் குறைத்துக் கொள்கிறார்கள். கிராம வாசத்தை இழிவாக எண்ணியதன் பயனாகக் குடிசைத் தொழில்கள் பல நாசமாய் விட்டன. இதனால் சாதாரணமான சாமான் களுக்கும் அந்நிய நாடுகளை எதிர்பாக்க வேண்டியிருக்கிறது. முற்காலத்தில் அவசியமாக வேண்டப்படுகிற குடும்ப சாமான்கள் பலவற்றை கிராம வாசிகளே செய்துகொண்டு வந்தார்கள். உடுக்கும் உடைக்கும் மற்றச் சில்லரை வசதிகளுக்கும் இப்பொழுது நாம் அந்நிய நாட்டின் தயவை எதிர்பார்க்க வேண்டி யிருக்கிறது. கிராம வாழ்க்கையில் வெறுப்பும் நகரவாசத்தில் விருப்பும் நமக்கு ஏற்பட்டது. மேனாட்டு நாகரிகத்தின் பயனேயாம். இதனால் வறுமையும் நோயும் அதிகமாயின. ஆதலின் இவைகளை ஒழித்து, இன்ப வாழ்க்கையை நடத்த வேண்டுமானால் கிராம வாழ்க்கையை நாடுதலே நலம். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் செல்வாக்குப் பெற்றிருந்த கிராமங்கள் இப்பொழுது சீர்கெட்டிருக்கின்றன. வீடுகள் பாழாகக் கிடக்கின்றன. ஒருவர் இருவர் இருந்தாலும் அவர்கள் மூடர்களாய் அறியாமைச் சேற்றைப் பூசிக்கொண்டிருக்கிறார்கள். உத்தியோகம் செய்ய வேண்டுமென்ற ஆசையுடன் படிப்பிற்காக வீட்டையும் வாசலையும் தோற்றுப் பரிதவிப்போர் எத்தனை பேர்? நகரத்தில் ஒரு வீடு அல்லது பங்களா குடிக்கூலிக்கு எடுத்துக் கொண்டு கிராமத்தி லிருந்து வரும் வருவாயை வைத்துக் கொண்டு இருக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்து, வந்த பிறகு தங்களுடைய ஆடம்பரமான வாழ்க்கையினால் ஆஸ்தி அனைத்தையும் தோற்றுத் தவிப்போர் எத்தனை பேர்? ஆதலின் செல்வாக்குள்ளவர், படித்தவர், எளிய ஆடம்பர மற்ற வாழ்க்கையில் விருப்பமுள்ளவர் கிராமங்களுக்குச் சென்று வாசஞ் செய்ய வேண்டும். அதனுடன் நில்லாமல் அங்குள்ளவர் களைச் சீர்திருத்தி, நாட்டுக்கு உபயோகமாகும்படி நடந்து கொள்ளுமாறு அவர் களைத் தூண்ட வேண்டும். இதற்காகப் பிரசார வேலைகள் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமமும் தனது தேவைகளைத்தானே பூர்த்தி செய்து கொள்ளுமானால் அதைவிட வேறென்ன சுய ராஜ்யம் நமக்கு வேண்டும்? இந்த நோக்கத்தையே பிரசாரகரும் கிராம வாசஞ் செய்யப் புகுவோரும் முக்கியமாகக் கொண்டு உழைப்பாரானால் நம் நாடு விரைவில் சீரடையும் என்பதில் என்ன ஐயம் இருக்கிறது 8. கிராம வேலை அரசாங்கமென்னும் உயரிய கட்டடத்துக்குக் கிராமங்களே அடிப்படையானவை என்ற தத்துவமும், கிராம வாழ்க்கையின் பெருமையும் , கிராம வாசிகளே நாட்டு குடிகளிற் பெரும்பான்மை யோர் களாக இருக்கிறார்கள் என்ற உண்மையும் சென்ற ஒன்றரை நூற்றாண்டாக மறக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்தியர்கள் சிறுமை யுற்றதற்கு இஃதொரு காரணம் என்று கூறாமலிருத்தற் கில்லை. இதுகாலை, பண்டை இந்தியாவைக் கிராமங்களிலேயே காணலாம்; பாரத தேவியின் இயற்கை அழகைப் பட்டணத்திற்குப் புறம்பான இடங் களிலேயே பார்க்கலாம். ஹிந்து மதத்தின் உண்மை, கிராமங்களி லிருக்கும் சிறு குடிசைகளில் இன்னும் விளக்க முற்றிருக்கிறது. பண்டை நாகரிகம், பண்டை ஆசாரம், பண்டை ஒழுக்கம் இவையாவற்றையும் இப்பொழுதும் கிராமங்களிலுள்ள நதியோரங்களிலும், வயற் புறங்களிலும், வீட்டுத் திண்ணைகளிலும் பரக்கக் காணலாம். அத்தகைய சிறந்த வாழ்க்கை - இயற்கை அரசியின் ஆட்சிக்குட்பட்ட வாழ்க்கை - இப்பொழுது அநாகரிக மாகக் கருதப்படுகிறது. நகரங்களில், நெருக்கமான இடங்களில், சாக்கடையோரங்களில் குப்பை மேடுகளுக்கு அருகில் வசிப்பதே நாகரிகம் எனக்கருதும் காலம் இப்பொழுது நடைபெற்று வருகிறது. பவ்வீச்சாலையும் போஜன சாலையும் ஓரிடத்தில் அமைக்கப் பட்டிருத்தலே சால்புடைத்து எனக்கருதி நாம் மகிழ்கிறோம். கிராம வாசிகள் காலையில் எழுந்து, சிறிது வெளிப் புறமாகச் சென்று கைகால் சுத்தம் செய்து கொண்டு வந்தால், அதனைக் கண்டு நகைக்கும் நகரவாசிகள் கணக்கிலர். இங்ஙனம் நகைக்கும் நகரத்தாரை ஒரு தராசிலும் நாட்டாரை ஒரு தராசிலும் நிறுத்துப்பார்த்தால் பல உண்மைகள் புலனாகும். பின்னவர் ஒருவர் ஒரு தட்டில் நின்றால், அதற்குச் சரியாக முன்னவர் இருவர் நிற்க வேண்டும். அந்தோ! பரிதாபம்! நடைபிணங்களாக இருந்து நகரத்தில் வாழ்வதையே பேரின்பமாகக் கொண்டிருக்கும் இந்தக் காலம் மாறும்நாள் எந்நாளோ? ஆரியர்கள், ஆற்றோரங்களிலும், மலையடி வாரங்களிலும், மர நிழலிலும் இருந்தே வேதத்தைப் பாடினார்கள். தமிழ் முனிவராகிய அகத்தியர் பொதிய மலையையே தம் இருப்பிடமாகக் கொண்டார். சிவாஜி என்னும் சீரிய வரசனின் வீரம் வெளிப் பட்டதற்கு அவன் வனங்களிலும் மலைகளிலும் குகைகளிலும் வாசஞ் செய்து வந்ததும் ஒரு காரணமாகும். எனவே, அறிவின் பெருக்கத்திற்கும், ஞான உதயத்திற்கும், ஆண்மையின் முதிர்ச்சிக்கும் இன்றியமையாதது இயற்கை வாழ்க்கையே என்பது தெள்ளிதிற் புலனாகிறது. கவிஞர், உயர்ந்த மாடிகளில், மின்சார விசிறி களின் கீழிருந்து, அழகிய ஆசனத்திலமர்ந்து, தந்தப் பேனாவைப் பிடித்து, தம்கவிகளை எழுதினார்களில்லை. புலவர்களின் பெருமை நகரங்களினின்று வெளியாகவில்லை. அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் இயற்கையில் ஈடுபட்டு விட்டார்களானால், அவர்க ளுடைய அறிவு, புலமை, கவிதை உடனே உள்ளத்தினின்று அவர்களை அறியாமலே கிளம்புகின்றன. ஆனால் செயற்கை வாழ்க்கை அவர்களுடைய அறிவையும் ஆற்றலையும் அமிழ்த்தி விடுகிறதென்பதைப் பலர் அனுபவத்தில் கண்டிருக்கின்றனர். இந்தியர்கள், சிறிது காலமாக இயற்கையில் வெறுப்புற்று, செயற்கையில் விருப்பமுற்று வருகிறார் களாதலின் அவர்களுடைய அறிவு, ஆண்மை முதலிய உயரிய குணங்கள் குறைந்து கொண்டு வருகின்றன. இதற்காக நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. தற்கால நாகரிகத்திற்கு உட்படாத கிராமங்கள் இன்னும் இந்தியாவில் எண்ணில இருக்கின்றன: பிற்கால இந்தியா நல் வாழ்வையடைய வேண்டுமானால், அதற்கு இந்தக் கிராமங்களே உதவி செய்ய வேண்டும். தற்கால நாகரிகக்காற்று இந்தக் கிராமங்களையும் அலக் கழித்துக் கொண்டு வருகிறது. பண்டைக்காலத்தில் இருந்ததைப் போல், கிராமங் களில் ஒற்றுமை, சகோதர உணர்ச்சி, விருந்தினரை இன்முகத்துடன் ஏற்றல், கிராம காரியங்களை கிராமத்தவரே நிருவகித்துச் செல்லுதல் முதலியன இப்பொழுது அதிகமாகக் காணோம். முற்காலத்தில் கிராமங்கள் மிக்க அழகுற அமைக்கப் பெற்றிருந்தன. அந்த அழகே இப்பொழுது காணோம். வீடு, நிலம் முதலியன உள்ளோர், அனைத்தையும் குத்தகைக்கோ, வாரத்துக்கோ விடுத்துவிட்டு வீட்டையும் பூட்டிக் கொண்டு நகரங்களில் ஒன்றுக்கு இரண்டு குடிக்கூலி கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் கிராமங்களில் முக்கியமாக, அந்தணர் வசிக்கும் வீதிகளில், பாழ் மனைகளையும் காலி வீடுகளையும் அதிகமாகக் காணலாம்; வீதியின் இயற்கை அழகை இவைகள் முதலில் கெடுத்து விடுகின்றன. மற்றும் கிராமங்களில் குடும்பச் சச்சரவுகளும், நீதி ஸ்தல வழக்குகளும் இப்பொழுது பெருகிக் கொண்டு வருகின்றன என்று கூற வேண்டும். கிராமங்களில் வசிக்கும் பல ஜாதிக்குள்ளும் ஒற்றுமை உணர்ச்சி சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டு வருகிறது. இவைகள் யாவும் சீர்படுத்தப்பட வேண்டும். முற்காலத்தில் கிராமங்களில் அநேக பஞ்சாயத்துக்கள் இருந்தன. ஒவ்வொரு பஞ்சாயத்தும் குறித்த சில வேலைகளைச் செய்து கொண்டு போயிற்று. இதனால் கிராமவாசி களுக்குள் எவ்வித பிணக்கும் இல்லாமலிருந்தது; கிராமத்தில் வளமை விருத்தியடைந்து கொண்டு வந்தது. முற்காலத்தில் ஒவ்வொரு கிராமமும் சுயராஜ்யத்தைப் பெற்றிருந்தது என்று கூறலாம். இப்பொழுது...? ஆதலின் கிராமங்களைச் சீர்திருத்தி அவைகளிடையே சென்று அரசியல் பிரசாரம் செய்ய வேண்டுவது ஒவ்வொரு தேச ஊழியருடைய முக்கிய கடமை. கிராமங்களைத் தட்டி எழுப்பினா லன்றி நம்முடைய அரசியல் நோக்கம் நிறைவேறாது. பட்டணத்துப் பெரு மக்களை முன்னே கொண்டு ஆரவாரத்துடன் பேசினால், அவர்கள் கைகொட்டு வதனாலுண்டான சப்தமே நமக்குப் பிரதிப் பிரயோஜனம். ஆனால் கிராமங் களில் சென்று அமைதியாக வேலை செய்தால் அரசியல் துறை செழுமை யுறும்; ராஜீய வாழ்வு பண்படும். பட்டணத்தாரைச் சீர்திருத்த வேண்டு மானால் முதலில் கிராமத் தாரை நம் வசப்படுத்த முயல வேண்டும். ஆதலின் அரசியற்காரர், முதலில் தங்கள் கவனத்தைக் கிராமங்களின் மீது செலுத்துவாராக. அதற்கான சில யோசனைகள் வருமாறு:- மாகாண காங்கிரஸ் சபை, தங்கள் மாகாணத்தைப் பல தொகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பிரசாரகர் வீதம் நியமனம் செய்ய வேண்டும். இங்ஙனம் நியமிக்கப் படும் சிறு பகுதி உத்தியோகஸ்தர்களுக்கு மேற்பார்வை செய்ய, பல தொகுதி உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர் களுக்கு மேலாக மாகாணாதிகாரியும் அவருக்கு உதவியாகச் சில உத்தியோகஸ்தர்களும் இருக்க வேண்டும். இந்த முறையல்லாது வேறு முறையாக உத்தியோகஸ்தர்களை நியமித்தாலும் சரியே. ஒவ்வொரு சிறு பகுதி உத்தியோகஸ்தர் வசமும் சுமார் இருபத்தைந்து அல்லது முப்பது கிராமங்கள் இருக்கலாம். இந்தக் கிராமங்கள் நல்லுணர்வு பெற்று தேச வாழ்வில் ஈடுபடுவதற்கு அந்த உத்தி யோகஸ்தரே பொறுப்பாளியா யிருக்க வேண்டும். இங்ஙனம் கிராமங்களில் சென்று உழைக்கும் உத்தியோகஸ்தர் மாகாண காங்கிரஸ் நிதியிலிருந்து பெறும் ஊதியத்தைத் தவிர வேறெவ்வித வருவாயையும் எதிர்பார்க்கக் கூடாது. பூமாலையையும், ஊர் வலத்தையும், கரகோஷத்தையும் இவர்கள் அறவே வெறுத்து விடவேண்டும். கிராமப் பிரசாரகர் சாந்தமாயும், அமைதியாயும், பொறுமையாகவும் இருந்து வேலை செய்ய வேண்டும். இவர் முதலில் கிராமத்தார்களுக்குள் ஒற்றுமை உணர்ச்சியை உண்டாக்க வேண்டும்; ஜாதிப் பகைமை, சமயப்பகைமை, வகுப்புப் பகைமை முதலியன அடியோடு ஓடும்படி செய்ய வேண்டும்; கிராமத்தில் ஏற்படும் சில்லரைச் சச்சரவுகளைக் கிராமத்தாரைக் கொண்டே நீக்க வேண்டும். கிராமத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள், துணிமணிகள் முதலியவற்றை அந்தக்கிராமத்திலேயே செய்து கொள்ளும்படியான சக்தி கிராமத்தாருக்கு உண்டாகும்படி பிரயத்தனப்பட வேண்டும். உதாரணமாக, சுதேசியம் வலுவடைய வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். ஒவ்வொரு கிராமத்தாரும் தங்களுக்கு வேண்டிய ஆடை களைத் தாங்களே நெய்து கொள்வார்களானால், நாட்டில் துணிப்பஞ்சமே உண்டாகாது. இங்ஙனமே, அந்தக் கிராமத்தார் தங்களுக்கு வேண்டிய பொருள்களைத் தாங்களே உற்பத்தி செய்து கொண்டார்களானால், பொருள்களின் விலை இவ்வளவு அதிகமாக உயர்ந்து விடாது. இவை களை யெல்லாம் செய்து கொள்ளும்படி மேற் கூறப்பட்ட கிராமப் பிரசாரகர் கிராம ஜனங்களைத் தூண்ட வேண்டும். பிரசாரம் என்றால் ஆங்கில அரசாங்கத்தாரையும் அதிகார வர்க்கத்தினரையும் தூஷிப்ப தென்று கொள்ளற்க. ஒவ்வொரு கிராமத்து ஜனங்களும் பிறருதவியை எவ்விதத்திலும் நாடாமல் தம் கையே தமக்குதவி யெனக்கொண்டு வாழ வேண்டியதற்குரிய வழிகளைச் செய்ய வேண்டுவது இந்தக் கிராமப் பிரசாரகரின் முக்கிய கடமையாகும். முதலிற் கூறப்பட்டவாறு, கிராமப் பஞ்சாயத்துக்கள் ஏற்படுத்தி, அந்தப் பஞ்சாயத்துக்களைப் பல பிரிவு களாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவாருக்கும் சில வேலைகளைப் பொறுப் பாகக் கொடுத்து நடத்திவரும்படி செய்ய வேண்டும். இந்த விஷயங்களில் முற்காலத்து கிராம நிருவாக முறையைத் தற்காலத்திற்கேற்றவாறு சிறிது மாற்றம் செய்து கொண்டு அனுசரிக்கலாம். பண்டைக் காலத்துக் கிராம நிருவாக முறையைச் சாஸனங்களில் பரக்கக் காணலாம். கிராமப் பிரசாரகர், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளிக் கூடத்தையும், ஒரு வாசக சாலையையும், புத்தக சாலையையும் ஏற்படுத்த முயல வேண்டும். முதன் முதலாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவைகளேயாகும். கிராமப் பள்ளிக்கூடங் கள் தேசீய முறையிலேயே நடத்தப்பெற வேண்டும். பிற்காலத்தில் மாணவர்கள் உண்மையான இந்தியர்களாக வாழ்வதற்குரிய படிப்பையே அவர் களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். வாசகசாலைகளிலும் புத்தக சாலைகளிலும் உயர்ந்த பத்திரிகை களும் சிறந்த நூல்களும் சேமித்து வைக்கப்பட வேண்டும். மேற்கூறப் பட்டவைகளுக்குப் பணம் வேண்டுமே என்று சிலர் வினவலாம். தங்கள் கிராமத்துச் செலவுகளுக்கு வேண்டிய பணத்தை அந்தந்தக் கிராமத்தாரே பங்கு போட்டு வசூலித்துக் கொள்ள வேண்டும். இது முதலில் சிறிது கஷ்டமாகவே தோன்றும். ஆனால் இவைகளினால் ஏற்படும் நன்மைகளைப் பிரசாரகர், கிராம ஜனங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். கிராம ஜனங்களுக்கு, இந்த வரியினால் அதிக கஷ்டம் உண்டாகாது. அவர்கள் தற்கால நாகரிகப் பழக்கத்தினால் உண்டாகும் சில கொடுமைகளுக்கு உட் படா திருப்பார்களானால், இந்த வரியைச் செலுத்துவது அவர்களுக்குக் கஷ்டமாகத் தோன்றாது. கிராமப் பிரசாரகர், மேற்கூறியவாறு ஒவ்வொரு கிராமத் திலும் ஏற்பாடு செய்து விட்டு, தமது அதிகாரத்திலுள்ள கிராமங் களைத் தின மொன்றுக்கு ஒரு கிராமமாகச் சுற்றுப் பிரயாணம் செய்துவர வேண்டும். இங்ஙனமே மாதத்துக்கொருமுறை ஒவ்வொரு கிராமத்தையும் மேற்பார்வை செய்துகொண்டு போனால் கிராமங்கள் எளிதில் பண்பட்டு விடும் என்பதில் ஐயமில்லை. இந்தக் கிராமப் பிரசாரகரின் வேலையை மேற்பார்வை செய்வது, தொகுதி உத்தியோகஸ்தருடைய கடமையாகும். இந்தத் தொகுதி உத்தியோகஸ்தர்கள், தாங்கள் விஜயம் செய்யும் கிராமங்களில் ஏதேனும் குறைகளிருந்தால் அவைகளைப் பரிகரிப்பதுடன், அவ்வப்பொழுது ஏற்படும் ராஜீய சம்பவங்களையும் பிரசங்கங்கள் மூலமாகத் தெரிவிக்க வேண்டும். இங்ஙனம் தொகுதி உத்தியோகஸ்தர்களின் வேலையை மாகாணாதிகாரி, தம் உதவி உத்தியோகஸ்தர்களைக் கொண்டு மேற் பார்வை செய்து வர வேண்டும். ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு தலைவர் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்தத் தலைவருக்கு ஆலோசனை சொல்ல, ஒரு நிருவாக சபை இருத்தல் வேண்டும். இந்த நிருவாக சபை அங்கத்தினர், மாகாணத்தின் பொதுப்படையான வேலைகளைப் பல இலாகாக்க ளாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வோர் இலாகாவையும் ஒவ்வோர் அங்கத்தினர் மேற்பார்வை செய்து வர வேண்டும். உதாரணமாகச் சுதேசிய வேலையை ஓர் அங்கத்தினரும், தீண்டாமை விஷயத்தைப் பற்றிக் கவனிக்க ஓர் அங்கத்தினரும் இருக்கலாம். இங்ஙனமே மற்ற அங்கத்தினர்களுக்கும் வேலைகளைப் பகிர்ந்து கொடுக்க வேண்டும். 9. சுய ராஜ்யம் ‘eh« V‹ Ra uh{a« nf£»nwh«? என்ற கேள்வியை இப்பொழுது ஒரு பொது மேடையிலோ, அல்லது நண்பர்களின் கூட்டத்திலோ ஒருவன் எழுப்பினால் அவனை அனைவரும் பரிகசிப்பர்; கை கொட்டிச் சிரிப்பர்; அட பேதாய்! காங்கிரஸ் சென்ற ஐம்பத்திரண்டு வருஷங்களாக அரிய தொண்டாற்றி வந்திருக்கிறது; காந்தியடிகளின் சத்தியாக்கிரக இயக்கமோ சென்ற இருபது வருஷங்களுக்கு மேலாக தேசத்திலேயே ஒரு மாறுதலை உண்டு பண்ணி வந்திருக்கிறது. இங்ஙனமெல்லாமிருக்க, இந்த இருபதாவது நூற்றாண்டில் - அதிலும் 1939-ஆம் வருஷத்தில்-நீ, நாம் ஏன் சுயராஜ்யம் கேட்கிறோம் என்ற கேள்வியைக் கேட்கிறாயே; உன்னைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கன்றோ அனுப்ப வேண்டும் என்று கூசாது கூறவும் செய்வர். இந்த மாதிரியாகப் பேசுவோரைத் தான் நாம் இப்பொழுது பெரும்பாலோராகக் காண்கிறோம். ஆனால், உண்மையில் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு யார் அனுப்பப்பட வேண்டுமென்ற பிரச்சினையை ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தோமானால், பெரும்பான்மை யோரைத்தான் என்ற முடிவுக்கு வருவோம். உலகம் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியாக மாறிக் கொண்டு வருகிறது என்று யாரோ ஒரு மேனாட்டுப் புலவன் கூறியது இந்தச் சமயத்தில் நமது நினைவுக்கு வருகிறது. பைத்தியக் கார ஆஸ்பத்திரிக்கு யார் போவது என்பது இப்பொழுது முக்கிய பிரச்சினையல்ல. ஆனால் நம்மிலே எத்தனை பேர், நாம் ஏன் சுய ராஜ்யம் கேட்கிறோம் என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொண் டிருக்கின்றனர் என்பது தான் முக்கியப் பிரச்சினை. jiyt®fis¤ jÇá¡»nwh«; mt®fSila ãur§f§fis¡ f© _o bksÅahÆUªJ brÉkL¡ »nwh«; ‘Ah!ஹா! v‹d mUik ahd j¤Jt§fis bašyh« TW»wh®? என்று அவர்கள் சென்ற பிறகு வாயாரப் பேசுகிறோம். ஆனால் இதயம் மட்டும் எப்பொழுதும் போல் சூனியமாகவே இருக்கிறது. அதில் எவ்வித மாற்றமும் ஏற்படக் காண்கிறோமில்லை. இதற்குக் காரணமா யிருப்பது என்னவென்றால், நமது அபிப்பிராயத்தில் நாம் ஏன் சுய ராஜ்யம் கேட்கிறோம்? அது நமக்கு ஏன் தேவை? என்பதை அறிந்து கொள்ளாமலே, நாம் சுயராஜ்ய இயக்கத்தில் ஈடுபட்டிருப்பது தான். சட்டத்தை அறிந்து கொள்ளாமலே சட்டத்தோடு போராடுகிற பேர் வழிகளைப் போல், சுய ராஜ்யத்தின் தேவையை உணராமலே நாம் சுய ராஜ்ய சேனையில் சேர்ந்திருக்கிறோம். இதனாலேயே நமது முன்னேற்றம் மிக மெதுவாக இருக்கிறது. நமது தியாகங்கள், உதய கால சந்திரனைப் போல் பிரகாசம் மழுங்கிப் போகின்றன; மெதுவாகச் செல்லுகிற நாம் வேகமாக ஓடிக் கொண்டிருப்பதாக மயக்கங் கொள்கிறோம். இது காரணமாகவே ஒருவர்க்கொருவர் முட்டிக் கொள்ளவும், மோதிக் கொள்ளவும் ஏது வுண்டாகிறது, பிரிட்டனுக்கு ஆறு மாதத் தவணை கொடுத்து நமது கோரிக்கைகளைக் கிளத்த வேண்டும் என்று யாராவது சொன்னால் ஹா என்று மருள்கிறோம். நாம் ஏன் சுயராஜ்யம் கேட்கிறோம்? உலக நன்மைக்கு என்ற ஒரே வார்த்தையில் சுருக்கமாக இதற்கு விடை கூறி விட விரும்பு கிறோம். மேல் பார்வையாகப் பார்க்கிற போது, இஃதென்ன பைத்தியக்காரத்தனம்? இவனுடைய நன்மைக்கே இவனால் வழி தேடிக்கொள்ள முடியவில்லை; உலக நன்மைக்காக வழி தேடப் போகிறானாம் என்று தான் பரிகாசமாகத் தோன்றும். ஆனால் இதனைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்க்க வேண்டும். பாரமார்த்திகத் துறையிலே உலகத்தை முன்னேற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இல்லை. நாம் பட்டினி கிடந்து, உலகத்தின் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்க வேண்டும் என்ற தாராள மனப்பான்மையும் நமக்குக் கிடையாது. இவையெல்லாம் நமது மூதாதையரின் உரிமைப் பொருள்களென்று மதிப்புக் கொடுத்து, ஒரு மூலையில் தற்காலிகமாக ஒதுக்கி வைக்க விரும்புகிறோம். உலகியலிலே- அதாவது ரூபா, அணா, பைசா கணக்கில்- உலகம் செம்மையாக வாழ வேண்டுமென்பதற்காகத் தான் நாம் வாழ விரும்புகிறோம்; அதாவது சுயராஜ்யம் தேவையென்று கதறுகிறோம். இதைச் சிறிது விளக்கிக் கூறி விடுதல் நல்லதல்லவா? உலகத்தின் மொத்த ஜனத் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு ஜனங்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். இந்த ஐந்தில் ஒரு பங்கு ஜனங்களில், பத்தில் ஒன்பது பேர், இறந்து போகாமல் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, உலகத்தின் மொத்த ஜனத் தொகையில் ஏறக்குறைய ஆறில் ஒரு பங்கு ஜனங்கள், உயிர் இவர்களை விடமாட்டே னென்கிறதா, அல்லது இவர்கள்தான் உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்களா என்ற சந்தேகக் கேள்விக்கிடையே, வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மரணத்தைவிட இந்த வாழ்க்கை கொடுமையானதல்லவா? இதுதான் இவர்களுடைய தலை விதி, இதுதான் இவர்களுடைய சாசுவதமான வாழ்க்கையென்று யாரும் துணிந்து கூற முடியாது. இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு வித பிரகாசத்தை மேலே கூறப்பட்ட ஒரு பங்கினர் புகுத்த முயல வேண்டும். அப்படி இவர்கள், வாழ்க்கையில் ஒரு பிரகாசத்தைக் காண்பார்களானால், அது காரணமாக உலகத்திலே அபரிமிதமாக உற்பத்தியாகி விநியோகத் திற்கு இடமில்லாமல் குவிந்து கிடக்கும். பொருள்கள் அனைத்தும் ஒரு கணக்கில் கரைந்துவிடும். ஏழை மக்கள் எப்பொழுதுமே நன்றி யுடையவர்கள். அவர்களுக்கு ஒரு நன்மை செய்யப்படுமானால் அதற்குப் பதிலாக அவர்கள் பத்து நன்மை களைச் செய்து, கரையாத மனத்தைக்கூட கரையச் செய்வார்கள். உலகத்தின் தற்போதைய பொருளாதார தத்துவமானது எதனை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதென்றால், நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்திருப்பவர்களுக்கே அதிகமான உணவு வழங்கப்படுகிறது. ஆடம்பரமான உடைகள் அணிவோருக்கு ஏற்றதான ஆடைகள் தான் உற்பத்தி செய்து விநியோகத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த அடிப்படை மாறாமல் இருக்கிற வரை, உலகத்தில் அடிக்கடி வியாபார மந்தம் ஏற்படத்தான் செய்யும்; பொருளாதாரச் சிக்கல்களும், ஒருவரை யொருவர் சுரண்டுகிற மனப்பான்மையும் இருக்கவே செய்யும்; ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையே சுங்கவரிச் சுவர்கள் நாளுக்கு நாள் உயரமாக எழும்பிக் கொண்டுதானிருக்கும். பசியுள்ளவர் களுக்கு உணவு வழங்கப்படட்டும்; அப்பொழுது முதலாளிகள் குவித்து வைத்திருக்கும் உணவுப் பொருள்க ளெல்லாம் எவ்வாறு நாலா பக்கங்களுக்கும் பரவ வேண்டுமோ அவ்வாறு பரவி விடும். கேட்பாரில்லையே யென்று கூக்குரலிட்டுக் கொண்டு, கானடா விலுள்ளவர்கள் அதிகமாக விளைந்துவிட்ட கோதுமையை எரித்துவிட வேண்டாம்; தென்னமெரிக்கா விலுள்ளோர், காப்பிக் கொட்டையைச் சமுத்திரத்தில் எறியவும் வேண்டாம். பெருவாரியாகப் பொருள்களை உற்பத்தி செய்வோரை நாம் கேட்டுக்கொள்வதெல்லாம், ஐயா! நிர்வாண மாயிருப்பவர் களுக்கு உடை வழங்குங்கள்; அழகுக் கலைக்குத் தொண்டு செய்தவர்களாவீர்கள். இந்தியாவில் தேவையுள்ளவர்கள் பெரும் பாலோராக இருக்கிறார்கள்; அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். மற்ற நாடுகளிலுள்ள தேவையில்லாதவர்களுக்கு உங்கள் பொருள்களைக் கொண்டு திணிப்பதில், தீர்க்க முடியாத பொருளாதாரப் பிரச்சினைகளின் ஜாபிதாவை இன்னும் அதிகப் படுத்திக்கொண்டு போகிறீர்கள் என்பதுதான். உலகத்தின் வியாபாரச் செழிப்புக்காகவும், பொருளாதார க்ஷேமத்தை முன்னிட்டும், இந்தியாவின் பொருளாதார அஸ்திவாரம் பலமாக்கப்பட வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம், உலகப் பொருளாதாரத் தோடு பின்னிக்கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் சிலர்க்கு ஒரு சந்தேகம் உண்டாகலாம். ஏன் இந்தியாவின் பொருளாதாரத் தேவையை மட்டும் கவனிக்க வேண்டும்? மற்ற நாட்டிலுள்ளோர்க்கும் தேவைகள் பல இல்லையா? இந்த மாதிரியான சந்தேகங்கள் உண்டாவது இயற்கைதான். ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஜனங்களின் வாழ்க்கை அந்தஸ்து, எவ்வளவு உச்ச நிலைக்கு வரவேண்டுமோ அவ்வளவு உச்ச நிலைக்கு வந்துவிட்டது. ஜனங்களின் வாங்கும் சக்தியானது அதிகப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர்களுடைய சராசரி வருமானமும் மிக அதிகம். அவர் களுடைய வாங்குஞ் சக்தியையோ, சராசரி வருமானத்தையோ இன்னும் அதிகப்படுத்திக்கொண்டு போவதென்பது முடியாத காரியம். அதனால் விளையும் பயன் ஏதும் இல்லை. இந்தியாவிலோ பெரும்பான்மையான ஜனங்களுக்கு வாழ்க்கை யென்பதே தெரியாது. வாழ்க்கை அந்ததென்பது தெரிய எங்கே இடமிருக் கிறது? ஆகையால், இவர்களுடைய - இந்திய ஏழை ஜனங்களுடைய - இருளடர்ந்த வாழ்க்கையிலே ஒரு பிரகாசத்தைப் புகுத்தி இவர்களுடைய வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்துவோ மானால் உலகத்தின் பொருளாதார நிலை உயர்வடையும்; பொருளுற்பத்தி செய்வோ ருடைய ஏக்கமும் குறையும். இந்தியாவிலே இப்பொழுது சராசரி ஒரு நபர் ஒரு வருஷத் திற்குச் சுமார் பத்தரை கஜம் துணி உடுத்துகிறார். இந்தச் சராசரியில் வருஷத் திற்கு ஒரு கஜம் அதிகப்படுமானால், உலகத்திலுள்ள துணி மில்களின் சக்கரங்கள் எப்பொழுதும் சுழன்று கொண்டே யிருக்கும். ஒவ்வொர் இந்தியனும், தன்னுடைய தினசரி உணவில் ஒரு சிட்டிகை சர்க்கரையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டானானால் - அந்தோ! ïªâahÉš v¤jid ViH k¡fS¡F¢ r®¡fiu ïÅ¥ghd bghUŸ v‹gJ bjÇí«?-க்ôgh தேசத்திலும் ஜாவா தீவிலும் உற்பத்தியாகிற சர்க்கரை போதுமா? ஆகவே உலகத்தின் பொருளாதார க்ஷேமத்தை முன்னிட்டு இந்தியாவின் பொருளா தாரத்தில் ஒரு க்ஷேமம் ஏற்பட வேண்டும். அதற்கு அரசியல் சுதந்திரம் அவசியமில்லையா? இதனாலேயே இந்தியாவின் விடுதலை, உலகத்தின் விடுதலை யென்று நாம் கூறுகிறோம். இங்கு ஓர் ஆட்சேபம் கிளப்பப்படலாம். அதாவது, மேலே நீங்கள் கூறிவந்த வாதத்தைப் பார்த்தால் உலகத்திலுற்பத்தியாகும் பொருள்களை இந்தியாவில் கொண்டு திணிக்கப் பார்க்கிறீர்களே தவிர, இந்தியாவின் பொருளுற்பத்தி சக்தியை அதிகபடுத்த மாட்டீர்கள் போலிருக்கிறதே என்று கூறலாம். இந்தியாவின் பொருளுற்பத்தி சக்தியை அதிகப்படுத்து வதற்குத்தான் அரசியல் சுதந்திரம் வேண்டுமென்கிறோம். இந்தியாவி லிருந்து வருஷந் தோறும் ஏராளமாக வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கும் மூலப் பொருள்களை நிறுத்தி, அவற்றை முழுப்பொருள் களாக - அதாவது ஜனங்களின் உபயோகத்திற்கு ஏற்ற பொருள்களாக - மாற்றி இந்தியாவிலே விநியோகிக்கச் செய்ய வேண்டுமென்பதற் காகவே. அரசியல் சுதந்திரம் அவசியமாயிருக்கிறது. ஆக, நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட பிறகுதான் மிகுதிப் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம். நம்மிடம் இல்லாத, நம்மால் உற்பத்தி செய்ய முடியாத பொருள்களையே வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்வோம். சுதந்திர நிலையில்தான், இந்த உரிமை நமக்கு ஏற்பட முடியும். மற்றும், நாம் எப்பொழுதுமே பொருளாதாரத் துறையிலாகட்டும், அரசியல் துறையிலாகட்டும் தனித்து வாழ முடியாது. நமது தனித்துவத்தை இழந்து விடாமல், உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டும். அந்த நிலையில், நமது பொருளாதார க்ஷேமத்தை உலக க்ஷேமத்தோடு இணைத்துத்தான் பார்க்க முடியும். எனவே, உள்நாட்டுப் பொரு ளுற்பத்தி சக்தியை அழித்துவிட்டு, அதன் மீது உலகப் பொருளா தாரக் கட்டடத்தை கட்ட வேண்டுமென்று யாருமே கூற மாட்டார்கள். இந்த ஆட்சேபம் அல்லது சந்தேகம் எழ வேண்டிய காரணமுமில்லை. இந்தியா சுய ராஜ்யம் பெறுவதற்கு உலகத்தார் எந்த விதத்தில் உதவி செய்ய முடியும் என்று சிலர் கேட்கலாம். யாருடைய தயவிலும் வாழ நாம் விரும்பவில்லை. அப்படி வாழ்வது என்றைக்கும் ஆபத்துதான். நமது முயற்சிலேயே நாம் சுதந்திரம் பெற முடியும். நாம் கூறுவதெல்லாம் என்னவென்றால் நாங்கள் சுதந்திரம் பெற்றால் உங்களுக்குத் தான் நன்மை என்று உலகத்தாரைப் பார்த்துக் கூறுகிறோமே தவிர, உங்களுடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறவே யில்லை. ஓர் ஆலோசனையை மட்டும் நாம் உலகதாருக்குக் கூறுவோம். அதாவது ஏகாதிபத்திய சக்திகளோடு, பாஸிஸ சக்திகளோடு சேர்ந்து கொண்டு, சுதந்திரமில்லாத எங்களையும், எங்களைப்போன்ற நாடு களையும் அழுத்தப் பார்க்காதீர்கள் என்பது தான். சுய ராஜ்யம் ஏன் தேவை யென்ற பிரச்சினையை இன்னொரு பார்வையிலிருந்து நோக்குவோம். உலகத்தில் மொத்தம் ஏழு அதிசயங்கள் உண்டென்று சொல்வர். ஆனால் இப்பொழுது இந்தியாவோ, அதன் நிலைமையோ எட்டாவது அதிசயமா யிருக்கிறது. இங்ஙனம் அதிசயப் பொருள்களில் ஒன்றாக இருக்க நாம் விரும்பவில்லை. எப்படி நமது புராதனக் கலைகளும், நமது மூதாதையர்களின் நாகரிக வாழ்க்கையும் பொருட் காட்சியில் வைத்துப் பார்க்கப்படுகிற பொருள் களாகி விட்டனவோ, அதைப்போல் சதையும் ரத்தமும் கலந்த நாம், பொருட்காட்சியின் உயிரற்ற பொருள் மாதிரி ஆகிவிட விரும்பவில்லை. நாம் எந்தெந்த விதமான அதிசய நிலையில் இருக்கிறோம் என்பதை வரிசைக் கிரமமாகச் சிறிது கவனிப்போம். 1. உலகத்தின் மொத்த ஜனத் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு பேர் வசிக்கிற விஸ்தீரணமான ஒரு நாடு- நீர் வளமும் நிலவளமும் நிறைந்த நாடு- சுதந்திரமில்லாமல் இருக்கிற அதிசயத்தை வேறெங் கேனும் பார்த்திருக்கிறீர்களா? 2. அப்படிச் சுதந்திரமில்லாமலிருந்தும், அதை அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையோர், உணராமலிருக்கிற - அல்லது உணர்த்தப்படா மலிருக்கிற- விந்தையை வேறெங்கேனும் காண இயலுமா? 3. தேசத்தின் கல்வி முறையானது , அந்த நாட்டுக் கலைஞானப் பெருக்கத்திற்கும் நாகரிக உன்னதிக்கும் வழி கோலாமல் அதனைத் தூர்த்து விடுகிற மாதிரி அமைக்கப்பட்டிருக்கிற அதிசயத்தை வேறெங்கே பார்க்க முடியும்? 4. அப்படிப்பட்ட கல்வியைப்பயின்று, அதிலேயே ஊறிப்போய், தேசீயம் வேறு, கலை வளர்ச்சி வேறு என்று பிரித்துக் கொண்டு திரிசங்கு ஸ்வர்க்க த்திலே வாழ்கிற பேர் வழிகளை, அறிஞர்களென்று போற்றுகிற விநோதத்தை வேறெந்த தேசத்திலேனும் பார்க்க முடியுமா? 5. தேசத்தின் கல்வியானது அந்நிய பாஷை மூலமாகப் போதிக்கப் படுகிற அதிசயம் வேறெங்கேனும் உண்டு கொல்? 6. தேசத்திற்கென்று சொந்தமான கடற்படையோ, தரைப் படையோ, ஆகாயப் படையோ இல்லாமலிருக்கிற போது, அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் ஏறக் குறைய பாதி அளவு, ராணுவச் செலவுக்கென்று ஒதுக்கப்படுகிற விந்தை வேறெங்கு உண்டு? இந்த மாதிரி அதிசயங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் நமது மனம் புண்பட்டுப் போகிறது. இந்த அதிசயங்களெல்லாம் நம்மினின்று விலகிப் போக வேண்டு மென்பதற்காக நாம் அரசியல் சுதந்திரம் தேவை யென்கிறோம். இதற்காகவே, சென்ற ஐம்பத்திரண்டு வருஷங்களாகக் காங்கிரஸ் வேலை செய்து வருகிறது. ஆனால் இதன் முயற்சி, இதன் உழைப்பு, இதன் தியாகம் போதாதென்பது தான் நமது குறை. சிறப்பாகக் காங்கிரஸின் பிரசார இலாகா வலுப்படுத்தப்பெற்று அதிகமான வேலை செய்ய வேண்டுமென்பது நமது கோரிக்கை. இப்பொழுது தேசத்திலே நாம் என்ன காண்கிறோம்? அற்ப விஷயங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு தலைவர்கள் மன மாற்றங்கொண்டு விடுகிறார்கள். இவர்களுடைய மனமாற்றங் காரணமாக, ஜனங்கள் இன்ன வழி போவதென்று தெரியாமல் திகைக் கிறார்கள். உலகத்தில் சமரஸ உணர்ச்சி பரவி வருவதாகச் சொல்லப்பட்ட போதிலும், ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சமூக வாரியாகவும் ஜாதி வாரியாகவுமே நினைக்கிறார்கள். இதைவிட தேசத்திற்கு ஏற்படுகிற சாபக்கேடு வேறொன்றும் இருக்க முடியாது. உதாரணமாக, பாஷை வாரியாக மாகாணங்களைப் பிரிக்க வேண்டுமென்ற கொள்கையில் நாம் பரிபூரணமாகக் கலந்தவர்கள். ஆனால் நமது ஆந்திர சகோதரர்கள் இதற்காகச் செய்கிற கிளர்ச்சிகள் கொஞ்சம் வரம்பு மீறிப் போயிருக் கின்றனவென்று நாம் அஞ்சுகிறோம். இங்ஙனமே நமது முஸ்லிம் சகோதரர்களும் வகுப்புக் கண்கொண்டே தான் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் நோக்கு கிறார்கள். இந்தக் காமாலைப் பார்வையானது எங்கே கொண்டு போய் விடுமென்று சொல்ல முடியாது. ஆனால் இவை யெல்லாம் தேச முன்னேற்றத்திற்குப் பெருந்தடைக் கற்களாகும் என்பதை மட்டும் சுருக்கமாகச் சொல்வோம். ஆக, நாம் ஏன் சுயராஜ்யம் கேட்கிறோம் என்பதைப் பற்றிப் பொது ஜனங்களிடையே இன்னும் அதிகமான பிரசாரம் செய்யப்பட வேண்டும். இதற்கான துண்டுப் பிரசுரங்களையும் நூல்களையும் அறிஞர்கள் எழுதி வெளியிட வேண்டும். படித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பட்டதாரிகள், தேசீய இயக்கத்திலிருந்து ஒதுங்கி பபபபபயிருத்தல், அவர்கள் வருந்திக் கற்ற கல்விக்கே துரோகம் செய்வதாகும். இதைவிடக் கடினமான பாஷையை நாம் உபயோகிக்க விரும்பவில்லை. காங்கிரஸின் பிரசார இலாகா இந்தத் துறையில் அதிகமான கவனத்தைச் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறோம். 10. தேவை நானும் என் மனைவியும் அடிக்கடி அரசியல், கலை, நாகரிகம், பொருளாதாரம் இவைகளைப் பற்றிப் பேசுவோம். எங்களுடைய தாய்ப் பாஷை, தமிழ், விஷயம் முதலியன எங்கள் சம்பாஷணையில் புகுந்து விட்டதானால் அஃது எங்களுடைய வெகு நேரத்தை எடுத்துக் கொண்டு விடும். ஒரு நாள் இரவு எட்டு மணியிருக்கும். ஆகாயம் நிர்மலமா யிருந்தது. நல்ல நிலவு. நானும் என் மனைவியும் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்தோம். வழக்கம் போல் எங்கள் பேச்சு ஆரம்பமாயிற்று. அன்று நான் ஆங்கிலத்தில் பொருளாதார சம்பந்தமாய்ப் படித்த ஒரு புத்தகத்திலுள்ள விஷயங்களை அவளிடம் சொன்னேன், தமிழில் இப்படிப் புத்தகங்களே வெளி வரக் காணோமே? ஏன் ஒருவரும் எழுத மாட்டேனென்கிறார்கள்? என்று அவள் என்னைக் கேட்டாள். நான் என்ன பதில் சொல்வது? பதில் கூறாமலுமில்லை. ஏதோ சில விஷயங்களைச் சொன்னேன். புத்தகங்கள் வெளி வராததற்கான காரணங்களை அவளும் நன்கு அறிவாள். ஆனதால் மௌனம் கொள்வதில் அவள் அதிகம் சிரமப்படவில்லை. நம்முடைய பாஷையிலே உன்னதமான பல இலக்கியங்கள் இருக்கின்றன. அவை புராதனப் பெருமை வாய்ந்தவை; நாகரிகத்திற் கும் உயர்ந்த கொள்கைகளுக்கும் எடுத்துக்காட்டாயிருப்பவை. அந்நூல் களிலுள்ள பொருள்களைக் கொஞ்சம் கவனித்தோ மானால் அவற்றிலே மிளிரும் சம்பாஷணைகளும் அலங்காரங் களும் அப்படியே நம் மனத்தைக்கவ்வி விடுகின்றன. கையேட்டுப் பிரதிகளிலே கிடந்த நம்முடைய இந்த இலக்கியங்களைச்சில குறிப்பிடத்தக்க பெரியார்களும், இரண்டொரு ஸ்தாபனங்களும் புத்தக வடிவில் கொணர்ந்ததற்குத் தமிழர்கள் நன்றி செலுத்து கிறார்கள்; அவர்களை வாழ்த்துகிறார்கள். சமீபத்தில் நான் கலித்தொகை எனும் நூலைப் பார்த்தேன். புத்தக வடிவில் ஏற்கனவே இது வெளியாகி யிருந்ததுதான். ஆனால் நான் பார்த்தது, மிகவும் குறைந்த விலையில் நல்ல முறையில் வெளியிடப் பட்டிருப்பதாய் எண்ணினேன். கனவானும் தனவானுமாகிய ஒருவர் முழுப் பொறுப் பேற்றுக் கொண்டு இந்நூலை இம்முறையில் வெளியிட்டிருப்பது தெரிந்து என் மனம் மகிழ்ந்தது. இவ்வித எண்ணம் எல்லோருக்கும் உதிப்பதில்லை. சில பேருக்குத் தானிருக்கும். அச் சில பேரும் நிறைய இருக்க வேண்டும். தமிழ் வளர்ச்சிக்குத் தேவை அது. நம்முடைய புராதன இலக்கியங்கள், பல பெருமைகளுக் கிலக்காயிருப்பினும் அவற்றைத் தமிழர்கள் யாவரும் படித்து ரசிக்க முடியாது; அனுபவிக்க முடியாது. ஏன்? தற்காலத் தமிழ்நாடு அந்த நிலைமையிலில்லாததே அதற்குக் காரணம். நன்றாகப் படித்திருக்கும் பண்டிதர்கள் தான் அவற்றை நயம்பட ரசிக்க முடியும்; அனுபவிக்க முடியும். கட்டை வண்டியிலேறி ஒரு மணிக்கு நான்கு மைல் தூரம் பிரயாணம் செய்த காலம் ஒன்றிருந்தது எனக்கு நன்றாக ஞாபகமிருக் கிறது. எங்களுடைய கிராமத்திற்கு நான்காவது மைலில் அப்போதுதான் போடப்பட்டிருந்த ரோட்டில் ரெயில் வண்டி ஓடியது. அந்த ரெயில் ரோட்டிற்குப் பக்கத்தில் எங்களுடைய ஒரு புன்செய் நிலமிருக்கிறது. நானும் என் சகோதரியும் அந்தப் புன் செய்க்குப் போயிருந்தோம். அதற்கு முன்னே ரோட்டுக்கு மண் வெட்டிப் போட்டு நீள நீளமான இரும்புகளை அதன்மேல் போடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். பிறகு அதன் மீது மாடோ, குதிரையோ பூட்டாமல், வண்டி, புகையை விட்டுக் கொண்டு ஓடி வந்ததைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப் பட்டோம். எங்களால் அந்த வண்டியைத் தொடர முடிந்தால் தானே! ஆனால் இப்போது அந்த வண்டியைப் பார்த்து நான் ஆச்சரியப்படுவதில்லை. நானே பல முறை அந்த வண்டியிலேறிப் பிரயாணம் செய்திருக்கிறேன். ஐம்பது மைலுக் கப்பால் இருக்கிற என்னுடைய பெரிய தகப்பனார் ஊருக்கு இரண்டு நாள் பகல் பூராவும் நடந்து போய்ச் சேர்வார்களாம். பின்னர் மூன்று மணி நேரத்தில் நானே அந்த ஊருக்குப் பல தடவை போய் வந்திருக்கிறேன். இவையெல்லாங்கூடப் பழைய காலமாகி விட்டது. மணிக்கு இருநூறு முன்னூறு மைல் பறந்து செல்கிற ஆகாய விமானங்களை நாம் பார்க்கிறோம். இயற்கையிலே புதைந்து கிடந்த இந்தச் சக்திகளை யெல்லாம் கண்டு பிடித்தவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்பதை நினைக்கும் போது நம்மை அறியாமலே நாமும் பெருமை கொள்கிறோமில்லையா? பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகம் நம் கண் எதிரே கிடப்பது போலிருக்கிறது. கனவிலும் நினைக்க முடியாத எத்தனையோ புதுமைகள் நம் கண் முன்னே நடக்கின்றன. அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், ரசாயனம் முதலிய எல்லாத் துறைகளிலும் தினேதினே பல புதுமைகள், பல புரட்சிகள் நடைபெற்று வருவதை நாம் பார்க்கிறோம்; கேட்கிறோம். இந்த வகையிலே மேனாட்டார் வெகு தூரம் முன்னேறி யிருக்கிறார்கள்; அறிவு சம்பந்தப்பட்ட அநேக நன் கொடைகளை இந்த உலகத்திற்கு அளித்திருக்கிறார்கள். இதற்காக உலகம் அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது. இவ்விதம் கண்டு பிடிக்கப்பட்ட பொருள்களின் உபயோகம் மாறுபட்டதாயிருக்கலாம். அது வேறு விஷயம். அதை இங்குப் போட்டுக் குழப்பக் கூடாது. மனிதர்களாலே சாத்தியப்படாத காரியங்கள் இவ்வுலகத்தில் ஒன்றுமே யில்லை யென்பது பிரத்தியட்சமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆனதால் இந்த உலகத்திலே நாமும் வாழ வேண்டுமானால் நாமும் முன்னேறிச் செல்ல வேண்டும். முன்னேறிச் செல்பவர்க ளுடைய காலடிச் சத்தம் நம்முடைய அடைத்துக் கிடக்கும் வீட்டு வாசற் கதவைத் தட்டும் போது நாம் நம்முடைய கண்களை மூடிக்கொள்ள முடியாது. பராமுகமாயிருந்தோமானால் முன் னேறிச் செல்லும் அந்தக் கால்களால் நாம் நசுக்கப்பட வேண்டியது தான். ஆனால் நம்முடைய நிலைமையும் அப்படித் தானிருக்கிறது. நாம் அந்தக் கால்களுக்குக் கீழே தான் கிடக்கிறோம். அவர்களோடு நாமும் முன்னேறிச் செல்லவேண்டுமானால் நம்முடைய தூக்கத் தைத் தொலைக்க வேண்டும். நம்முடைய ஊனக்கண்களைத்திறந்து கொண்டால் மட்டும் போதுமா? நம்முடைய அறிவுக் கண்களும் திறக்க வேண்டாமா? இதற்குத் தற்கால நூல்கள்-புத்தகங்கள் தேவை. இந்நூல்கள் நம்முடைய தமிழ்ப்பாஷையில் எழுதி வெளியிடப்பட வேண்டும். நம்முடைய தமிழ் நாட்டில் எத்தனையோ அறிஞர்களிருக் கிறார்கள். மேற்கண்ட விஷயங்களில் திறமையோடு நூல்கள் எழுது பவர்களுக்குப் பஞ்சங் கிடையாது. ஆனால் தங்களுடைய அறிவை, ஆராய்ச்சித் திறனை, தமிழ் மக்களின் முன்னே சமர்ப்பிப்பதற்கு அவர்களுக்கு வசதியில்லை. பாசி படிந்த குளம்போல் எங்கேயோ மூலைகளிலே வாழ்க்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். மற்றும் சொற்ப வசதியுள்ளவர்கள், தங்களுடைய கையிலிருப்பதையும் போட்டுப் புத்தகம் வெளியிட்டால் விற்பனை யாகுமா? அறிவு தரும் நூல்களாயிற்றே. விலை போகுமா? என்று அஞ்சுகிறார்கள். அவர்கள் அஞ்சுவதற்குக் காரணமில்லாமலு மில்லை. இந்தியா பல மாகாணங்களையுடையது. ஒவ்வொரு மாகாணத்தையும் ஒவ்வொரு நாடு என்று கூறலாம். அந்தந்த நாட்டாரும் தங்கள் பிறந்த நாடு, தங்களுடைய தாய் மொழி இவற்றில் அளவற்ற காதல் கொள்வது இயல்பு. ஆனால் நமது தமிழ் நாடு இதற்கு நேர் விரோதமாயிருப்பது மாதிரி தோன்றுகிறது. நமக்கு நம்முடைய நாட்டின் மீதோ, நம்முடைய தமிழ் மொழியின் மீதோ ஆழ்ந்த பற்று இருக்கிறதா? வங்காளிகள், தங்களுடைய நாட்டையும் பாஷையையும் பொன்னே போல் போற்றுகிறார்கள். என்னுடைய காண்டீபத்தையும், என்னையும் அவமதிப்பவர்கள் யாராயிருந்தாலும் சரி; அவர்களுடைய சிரத்தைக் கொய்து விடுவேன் என்று அருச்சுனன் சொன்னதாகப் படித்திருக்கிறோம். இந்தப் பிரதிக்கினையுள்ளவர்கள் வங்காளிகள். மகாராஷ்டிரம், குஜராத் மாகாணங்களும் இதற்குப் பின் தங்கியவையல்ல. காலஞ் சென்ற நமது தலைவர் திலகருடைய ஆராய்ச்சித் திறனையும், புலமையையும் உலகத்தார் அறிந்து கொள்வதற்குக் காரணமா யிருந்தது அவர் எழுதிய கீதாரகஸ்யம் என்னும் நூல். பர்மாவில் மாந்தலே ஜெயிலிலிருக்கும் போது அதை அவர் எழுதியிருக்கிறார். அதை எந்த பாஷையில் அவர் எழுதினார் தெரியுமா? தம்முடைய சொந்த மகாராஷ்டிர பாஷையில் எழுதினார். பின்னர் அந்நூல் பல பாஷைகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது. ஆங்கில ஞானம் நிறைய உள்ளவர் அப்பெரியார் என்பதை நாம் அறிவோம். ஆங்கிலத்திலே அந்நூல் எழுதி வெளியிடப்பட்டிருந்தால் அவருக்கு நிறையப் பொருளும் கிடைத்திருக்கும். ஆனால் அவர் அறிஞ ரல்லவா? மகாத்மா காந்தியடிகள் சத்திய சோதனை யென்னும் நூல் எழுதினார். ஆங்கிலத்திலே அழகுபட எழுதுவதில் நிபுணர் என்று பிரசித்தி படைத்தவர் காந்தியடிகள். ஆனால் அந்த நூலை தம்முடைய குஜராத்தி பாஷையில் தான் எழுதினார். 1938-ஆம் வருஷத்தில் காங்கிரஸ் மகா சபையின் வருஷக் கூட்டம் ஹரிபுரா என்னும் ஊரில் நடைபெற்றதல்லவா? இவ்வூர் குஜராத் மாகாணத்தைச் சேர்ந்தது. காங்கிரஸ் விழா நடக்கும் போது வரும் பத்திரிகைப் பிரதிநிதிகளில், குஜராத்தி பாஷைப் பத்திரிகைப் பிரதிநிதி களுக்குத் தான் முதல் ஸ்தானம் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதாய் பத்திரிகையில் படித்தேன். இதற்காக நான் ஆச்சரியப்படவில்லை. சமீப காலம் வரை தமிழ் நாட்டு நிலையிலேயே ஐக்கிய மாகாணமும் இருந்தது. இப்பொழுதோ அங்கு ஹிந்தி பாஷையில் பல துறைகளிலும் அரிய பல நூல்கள் வெளியிடப்படுகின்றன; இன்னும் சிறந்த முறையில் வெளி வருவதற்கு நல்ல முயற்சிகள் செய்யப் படுகின்றன. குறிப்பிட்ட சில தனவந்தர்கள் இம்முயற்சிக்கு நிறைய உதவி செய்து வருகிறார்கள். நம்முடைய மொழியின் மீது நமக்கு ஆழ்ந்த பற்று இல்லை யென்று சொன்னால் தமிழ்ச் சகோதரர்கள் நம்மீது கோபித்துக் கொள்ளக்கூடாது. சாதாரண கதைகளைப் படித்துப் பொழுதைப் போக்குகின்றோம். நம்முடைய வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய விஷயங்களைப்பற்றி சிந்திப்பதுகூட இல்லை. நம்முடைய அறிவு பிரகாசிப்பதற்கானதைச் செய்கின்றோமில்லை; அதை நசுக்கு கின்றோம். நம்முடைய இதயத்தை அழுக வைத்துவிடுகிறோம். புழுக்கள் நுழைவதற்குக் கேட்பானேன்? ஒரு காலத்தில் மேனாட்டார் விஷயங்களைத் தேடி அலைந் தார்கள். இதற்காக அவர்கள் பட்ட சிரமம் மிக அதிகம். பலதேச பாஷை களைக் கற்றார்கள். பல தேச சரித்திரங்களை ஆராய்ந்தார்கள். ஏன்? அவர்களுக்கு எண்ணங்கள் தேவையாயிருந்தன. அதை உணர்ந்தார்கள் அவர்கள் நம்முடைய தேசத்தில் பிறந்து சிறப்புற்றிருந்த சாணக்கி யனையும் சந்திர குப்தனையும் நாம் இப்போது தெரிந்து கொள்ள வேண்டுமானால் கிரீஸ்தேசத்தார் எழுதி வைத்துப் போன நூல்கள் தான் நமக்கு ஆதாரங்களா யிருக்கின்றன. ஆகையால் மேனாட்டார் அப்பொழுது செய்த காரியத்தை நாம் இப்போதாவது செய்ய முற்படு வோம். பிற பாஷைகளில் உள்ள பழைய, புதிய நூல்களை வெளியிடு வோம். வேண்டியது நமக்குச் சிந்தனை தான்; எண்ணந்தான். சிந்திக்கத் தொடங்கி விட்டால் காரியத்தில் பாதி முடிந்த மாதிரி யல்லவா? சுருக்கமாக, பழமையான தமிழில் புதுமையான நூல்கள் பல வெளி வர வேண்டும். இதுவே இன்றைய தேவை. 