வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு - 6 ரூசோ, ரூசோவின் சமுதாய ஒப்பந்தம் ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 6 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2005 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 12 + 228 = 240 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 150/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையை தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்துவிட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டு டைமையாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடு களாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தன்னே நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. f.; மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப் பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர் விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப் பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல் களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒரு போதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘ãsh£nlhÉ‹ muáaš’, ‘uh#jªâu í¤jfs¥ ãur§f§fŸ’, %Þn[hÉ‹ ‘rKjha x¥gªj«’, khÍÅÆ‹ ‘kÅj‹ flik’, ï§f®rhÈ‹ ‘khÅl rhâÆ‹ Rjªâu«’, r‹ah£br‹Å‹ ‘Rjªâu¤â‹ njitfŸ ahit? முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜி யினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்று தலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது. தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர் வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகிறது. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத்தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கி யங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கியுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். அடிமை உணர்வையும், அலட்சியப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம். பதிப்பாளர் நுழையுமுன்... ரூசோ  ஐரோப்பாக் கண்டத்தில் 18ஆம் நூற்றாண்டில் தோன்றிய விடிவெள்ளி; அறியாமைச் சேற்றில் மூழ்கிக் கிடந்த மக்களைத் தம் ஓய்வறியா உழைப்பால் தூக்கி நிறுத்தியவன்.  பழைமைக்கும் புதுமைக்கும் நடந்த போராட்டத்தில் புதுமையின் பக்கம் நின்ற தூயவன். மக்களுக்கும் ஆளும் உரிமை உண்டு என்று ஊரறிய முழக்கமிட்ட மூதறிஞன்.  மக்களின் ஆற்றலை - அவ்வாற்றலின் பெருமையை - முதன் முதலில் உலகுக்கு எடுத்துச் சொன்னவன். எளிய மக்களைத் தலைநிமிர வைத்த பேரறிஞன்; பிரஞ்சுப் புரட்சிக்குப் பெரு நெருப்பு மூட்டியவன்.  எந்த மக்கள் விடுதலையை நேசிக்கிறார்களோ அவர்களே விடுதலைக்குத் தகுதியானவர்கள் என்ற விடுதலைச் சிந்தனையை உலக அரங்கில் முதன்முதலில் விதைத்தவன்.  உலக வரலாற்றில் இவன் எழுதிய சமுதாய ஒப்பந்தத்தை போல் மக்கள் நெஞ்சில் ஆளுமை செலுத்திய நூல் இதுவரை யிலும் எழுதப் படவில்லை.  உலக அறிஞர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட இவன் குண மென்னும் குன்றேறி நின்றவன். இவன் வாழ்க்கை துன்பம் நிறைந்தது. துயரம் சூழ்ந்தது. நீங்களும் படியுங்கள்.  அமெரிக்க விடுதலைப் போருக்கும், பிரஞ்சுப் புரட்சிக்கும் அடித்தளம் அமைத்தவன். சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் ஆகிய முப்பெரும் முழக்கங்களைத் உலகுக்குத் தந்தவன். அறிவுலகச் செம்மல்; உலகச் சிந்தனை யாளர்களின் ஒருவனாக போற்றப்பட்டவனைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.  அறிவுக்கு உரைகல்லாகவும், மாபெரும் சிந்தனை ஆற்ற லுக்குச் சான்றாகவும் வாழ்ந்தவன். இவன் மூளையில் பிறந்தெழுந்த எண்ணங்கள்தாம் மாந்த நாகரிகப் பண்புகளை உலகில் மாற்றி அமைத்தன.  இவனின் முழக்கங்களும், சிந்தனைகளும் நாகரிகத்தின் தளர்ச்சிகளை எடுத்துச் சொல்லி வளர்ச்சிக்கான பண்பு களை வளர்த்தெடுத்தன. உலகுக்குத் தேவை யானதைத் தம் சிந்தனைகளின் எண்ணங்களாக தந்தவன்.  காலத்தின் தேவை அறிந்து இவனின் வரலாற்றையும் இவனின் அறிவுப் பெட்டகத்தையும் உங்கள் முன் தந்துள்ளோம். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெ.சு. மணி, ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், புலவர் கோ. njtuhr‹, Kidt® ïuhFyjhr‹, Kidt® ïuhk FUehj‹, K¤jÄœ¢ bršt‹ f.K., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . ரூஸோ வாசகர்களுக்கு ஐரோப்பாவில், பதினெட்டாவது நூற்றாண்டில், பழமைக்கும் புதுமைக்கும் பெரிய போராட்டம் நடைபெற்றது. தெய்விக சக்தியில் நம்பிக்கை, அந்தச் சக்திக்கு அடங்கி நடக்க வேண்டுமென்ற கொள்கை. அப்படி நடந்தால் மறுவுலகத்தில் நித்திய வாழ்வு கிடைக்க வேண்டுமென்ற ஆசை ஆகிய இவையெல்லாம் பழமைக்கும், சகோதர மக்களிடம் அன்பு காட்டல், மனிதனுடைய உயர்ந்த தன்மை களில் நம்பிக்கை கொள்ளுதல், எல்லோருக்கும் நீதி கிடைக்கக் கூடிய வழியைக் கோலுதல், எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு நிகழ்காலத்தில் ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பதிலே திருப்தி யடைதல் ஆகிய இவையெல்லாம் புதுமைக்கும், முறையே கட்டியங் கூறிக்கொண்டு நின்றன. புதுமையின் பிரதிநிதியாகத் தோன்றியவன் ரூஸோ. ஜனங் களுக்கு ஆளும் உரிமையுண்டு என்று முதன்முத லாக, பகிரங்கமாகச் சொன்னவன் இவன். ஓர் அறிஞன் கூறியுள்ள மாதிரி, ஏழை மக்களைத் தலை நிமிரச் செய்தவன் இவன் சொத்துடையவர்கள், உயர் குலத்திலே பிறந்தவர்கள் ஆகிய இவர்கள் மட்டுமே அரசியல் நிருவாகத்தில் பங்கெடுத்துக் கொள்ள உரிமையுடையவர்கள் என்ற பழைய கொள்கையைத் தகர்த் தெறிந்து, உழைத்துப் பிழைக்கிறவர்களுக்கும் அந்த அரசியல் நிருவாகத்தில் பங்குண்டு என்று கோஷமிட்டவன் இவன். இவன் எழுதிய சமுதாய ஒப்பந்தம், பிரெஞ்சுப் புரட்சியின் வேத புத்தகம். இந்தப் புரட்சியில் சம்பந்தப் பட்டிருந்தவர்கள், மேற்படி சமுதாய ஒப்பந்தத்தி லிருந்து மேற்கோள்கள் எடுத்துக் காட்டுவதிலே பெருமை கொண்டார்கள். இப்படிப்பட்ட ரூஸோவினுடைய வாழ்க்கை வரலாறு, இங்குச் சுருக்க மாகத் தரப்பட்டிருக்கிறது. இஃது, இவனுடைய நூல்களைப் படிப்பதற்கு ஒரு தூண்டுகோலா யிருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இதற்காகவே, இவன் எழுதிய முக்கியமான நூல்களிலிருந்து சில பகுதிகளை, கடைசியில் அனுபந்தமாகக் கொடுத்திருக்கிறேன். வெ. சாமிநாதன் பிரசுராலயத்தின் வார்த்தை ரூஸோவின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழன்பர்கள் விரும்பிக் கேட்பது எமக்குப் பெருமகிழ்ச்சி யளிக்கிறது; பெருமை யாகவும் இருக்கிறது. உலகத்துச் சிந்தனையாளர்களில் ஒருவனென்று போற்றப் படுகிற இவனுடைய வாழ்க்கையைப் படிக்கிற யாவருக்கும், இவனிடத்தில் ஒருவித அனுதாபம் உண்டாகும்; இவன் எழுதிய சமுதாய ஒப்பந்தத்தை மனம் வைத்து படிக்க வேண்டுமென்ற ஆவலும் ஏற்படும். நல்ல நூல்களைப் படிக்கவேண்டுமென்ற ஆவல் தமிழ்நாட்டில் மேன் மேலும் அதிகரிப்பதாக! பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் 1. தாயை இழந்த குழந்தை என்னுடைய துன்பங்களில் முதன் துன்பம், நான் பிறந்தது தான் என்று மனம் புழுங்கி எழுதுகின்றான் ரூஸோ ஓரிடத்தில். அவனுடைய வாழ்க்கை முழுவதும் இந்த ஒரு வாக்கியத்தில் அடங்கிவிட்டது. ஆனால் இதன் ஒவ்வோர் எழுத்திலும் எவ்வளவு துயரம்; எவ்வளவு மனோ வேதனை, எத்தனை பேருடைய சூழ்ச்சி, எத்தனை பேருடைய துரோகம் எல்லாம் அடங்கியிருக்கின்றன! எவன், ஆடம்பரத்தின் பகட்டுக்கும் அதிகாரத்தின் உறுமலுக்கும் மத்தியில் இருந்துகொண்டு ஏழைகளுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தானோ, எவனுடைய எழுத்துக்கள் பிரெஞ்சுப் புரட்சியென்று சொல்லப்படுகிற மகத்தான நெருப்பை மூட்டி விட்டனவோ, எவனுடைய நூலான சமுதாய ஒப்பந்தத்தை1 படிப்பது ஒரு கௌரவமென்று பதினெட்டாவது நூற்றாண்டு ஐரோப்பாவில் கருதப் பட்டதோ, அவன் அந்த ரூஸோ, உயிரோடிருந்த காலத்தில் பித்தனென்று பரிகசிக்கப்பட்டான்! ஓநாயைப்போல் வேட்டை யாடப்பட்டான்! அதிகார சக்திகளும் ஏகபோக ஜனங்களுடைய அறியாமையும் அவனை ஓரிடத்தில் நிலைத்து நிற்கவொட்டாதபடி விரட்டியடித்தது! என்ன வேடிக்கை பார்த்தீர்களா? அறியாமைச் சேற்றிலே உழன்று கொண்டிருக்கிற ஜனங் களை மேலே தூக்கிவிட எவனொருவன் தன் கையைக் கொடுக்கி றானோ, அந்தக் கையையே, அவனையேகூட, அந்த அறியாமை இழுத்துக்கொண்டு விடுகிறது! ஆயினும் அவன் துணிந்து கையைக் கொடுக்கிறான். ஏன்? அவர்களோடே விழுந்து, உழன்று, எப்படி யாவது அந்த அறியாமைக் குட்டையைக் கொஞ்சம் கலக்கி விடுவோம் என்ற எண்ணந்தான். கலக்கம் ஏற்பட்டால் தெளிவு உண்டாகுமல்லவா? இப்படி வலியக் கை கொடுக்கிறவன் நிகழ் காலத்திலேயே இறந்துவிடுகிறான்; ஆனால் எதிர் காலத்திலே வாழ்கிறான். நிகழ்காலம், அவனைத் தூற்றுகிறது; கல்லாலும் கழியாலும் அடிக்கிறது. குகை போன்ற சிறையிலே கொண்டுபோய்த் தள்ளுகிறது; கடைசியில் தூக்கு மேடையிலேகூட ஏற்றிவிடுகிறது. ஏற்றி விட்டுச் சும்மா இருக்கிறதா? இல்லை, இல்லை; கைகொட்டி ஆரவாரம் செய்கிறது. அட நிகழ்காலமே! மகான்கள் விஷயத்தில், மகா கவிஞர்களின் விஷயத்தில், தீர்க்கதரிசிகளின் விஷயத்தில் நீ ஒரு துரோகி; பாபி; நன்றி கெட்டவன். ஆனால் அந்த மகான்களை, மகா கவிஞர்களை, தீர்க்கதரி களை, எதிர்காலம், எவ்வளவு அன்புடன் வரவேற்கிறது! எத்தனை பேருடைய இருதயத்தில் அவர்களுக்கு இடம் ஏற்படுத்திக் கொடுக்கிறது! இந்த எதிர்கால சாந்தியை எதிர்பார்த்துத்தான் மகான்கள், நிகழ்காலத் துன்பங்களைப் புன்சிரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்! ஐரோப்பாவில் மிக அழகான இடம் விட்ஜர்லாந்திலுள்ள ÍÜth(Geneva) நகரம். இது கடிகாரத் தொழிலுக்குப் பெயர் போனது; அப்படியே அண்டினோரை ஆதரித்துக் காப்பாற்றும் நல்லியல்பு வாய்ந்தது. எப்படியென்றால், கி.பி. பதினாறாவது நூற்றாண்டில், ஐரோப்பாவில் கிறிதுவ மதத்தின் புனிதத் தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்ற பெயரால் அநேக கொடுஞ்செயல்கள் நடைபெற்றன. இவற்றினின்று தப்ப முயன்றவர் பலர் இந்த ஜினீவாவிலேதான் அடைக்கலம் புகுந்தனர். இங்ஙனம் ஐரோப்பாவின் பல பாகங்களி லிருந்தும் வந்து தஞ்சம் புகுந்தவர்கள். பாஷையிலும், பரம்பரை யிலும், பழக்க வழக்கங்களிலும் வித்தியாசப்பட்டவர்களாயிருந்த போதிலும் நாளாவட்டத்தில் ஒரு நாட்டுப் பிரஜைகளாகிவிட் டார்கள். கி.பி. பதினேழாவது நூற்றாண்டில் இவர்களிடத்தில் நிலவிய நாட்டுப்பற்றும், ஒற்றுமை உணர்ச்சியும் வியக்கத் தக்கனவாயிருந்தன. இந்த இரண்டு தன்மைகளும் இவர் களிடத்தில் சுலபமாக அமைந்து விட்டதற்குக் காரணம் இவர்களுடைய பரம்பரைதான். அதாவது, மத வேற்றுமை காரணமாக வெளிநாடு களிலிருந்து வந்த இவர்கள் அனைவரும் கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; நுண்ணறிவுடையவர்கள். இவர்களுடைய வருகைக்குப் பின்னரே, ஜினீவாவில் கடிகாரத் தொழில் சிறப்புற்ற தென்று சொல்ல வேண்டும். இங்ஙனம் ஜினீவாவிலே வந்து குடியேறினர்களிற் பலர் பிரெஞ்சுக் காரர்கள். இவர்களுடைய செல்வாக்குதான், விட்ஜர் லாந்தின் பிற்காலத்திய சமுதாய வாழ்க்கையில் அதிகமாகப் பிரதிபலித்தது. 1712ஆம் வருஷத்தில் ஜினீவாவின் ஜனத்தொகை சுமார் 18,500. இவர்கள் அனைவரும் பிரெஞ்சு பாஷையே பேசினார்கள். இவர்களுடைய கலைப் பண்பு பிரெஞ்சு மயமாகவே இருந்தது. பாதிரிமார்கள், பிரெஞ்சிலேயே உபதேசம் செய்தார்கள். கிறிதுவ மதத்தின் கத்தோலிக்கப் பிரிவினருக்கு எப்படி ரோமாபுரி மைய தானமாயிருந்ததோ அப்படியே புராட்டெட்டெண்ட் பிரிவினருக்கு ஜினீவா மைய தானமாயிருந்தது. இந்தப் பிரெஞ்சுக் காரர்களில் ரூஸோ குடும்பத்தினரும் ஒருவர். இவர்கள் 1529ஆம் வருஷத்திலேயே பாரிஸிலிருந்து ஜினீவாவுக்கு வந்து குடியேறிவிட்டார்கள். இவர்களுடைய வழித்தோன்றல் தான் நமது கதாநாயகனான ழேன் ழக்கே ரூஸோ.1 இவனுடைய தந்தையின் பெயர் ஐஸக் ரூஸோ.2 இந்த ஐஸக் ரூஸோவோடு கூடப் பிறந்தவர்கள் மொத்தம் பதினைந்து பேர். ஆனால் இவன் ஒருவன் தான் ழேன் ழக்கேயைப் பெற்றுச் சிறப்புப் பெற்றான். இவன்- ஐஸக் ரூஸோ - கடிகாரத் தொழிலைத் தனது ஜீவனோபாயமாகக் கொண்டிருந்தான். இவனுக்குப் பொருட் செல்வம் அதிகம் இல்லை; ஆனால் கல்விச் செல்வம் நிரம்ப இருந்தது. வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஓயாமல் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பான். இவன், சூஸன்னே பெர்னார்ட்3 என்ற பெண்ணொருத்தியை விவாகம் செய்து கொண்டான். இவள் பாதிரி குடும்பத்திலே பிறந்தவள்; நல்ல பழக்க வழக்கங்களும் சீல சுபாவமும் உடையவள். இவள் விவாகத்தின்போது, பிறந்த வீட்டி லிருந்து கொஞ்சம் பணத்தையும் சில நல்ல புத்தகங் களையும் சீதனமாகப் பெற்றாள். தம்பதிகள் இருவரும் குடும்பத்தை இனிது நடத்தி இன்பம் நுகர்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் பெயர் பிராங்க்காயி ரூஸோ4 இளையவன் தான் ழேன் ழக்கே ரூஸோ. மூத்தவன் பிறந்த ஏழு வருஷங் கழித்து 1712ஆம் வருஷம் ஜூன் மாதம் 28ஆம் தேதி இளையவன் பிறந்தான். இவன் பிறந்த பத்தாவது நாள் தாயார் இறந்துவிட்டாள். பிறந்த காலத்திலிருந்தே இவனைத் துன்பம் தொடர்ந்துவிட்டது! ஜஸக் ரூஸோவுக்கு விவாகமாகாத ஒரு சகோதரி இருந்தாள். இவள், சூஸன்னே பெர்னார்ட் இறந்த பிறகு, ஐஸக் ரூஸோவின் குடும்ப நிருவாகமனைத்தையும் ஏற்றுக்கொண்டாள். சிறுவர்கள் இருவரும் இவளுடைய பராமரிப்பிலேயே வளர்ந்தார்கள். இளைய வனைப் போஷித்துக் காப்பாற்றுவதென்பது சிறிது கடினமாகவே இருந்தது. பிறந்த வுடனேயே தாயாரைப் பறிகொடுத்துவிட்டவ னல்லவா? இருக்குமோ போகுமோ என்ற திதியிலே தான் இவன் - ழேன் ழக்கே ரூஸோ - பிறந்த சிறிது காலம் வரை இருந்தான். ஆனால் அத்தையினுடைய அன்பான போஷணை இவனைக் காப்பாற்றியது; தாயாரில்லாத குறையை உணராமலே வளர்ந்தான். இந்த அத்தை, பிற்காலத்தில் அதிக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது தன்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லையே என்று இவன். தன் சுய சரிதத்தில் வாய்விட்டு அலறியிருக் கிறான்:- என் அன்புள்ள அத்தையே, என்னைச் சாகவிடாமல் காப்பாற்றியதற்காக உன்னைத் தாராளமாக மன்னித்துவிடுகிறேன். ஆனால், எனது வாழ்க்கையின் உதய காலத்தில் நீ என் மீது எவ்வளவு அன்பையும் ஆதரவையும் சொரிந்தாயோ, அதே அன்பையும் ஆதரவையும் உனது வாழ்க்கை யின் அதமன காலத்தில் உன் விஷயத்தில் செலுத்த முடிய வில்லையே என்று நான் வருந்துகிறேன். இப்படி வருத்தப்பட்ட போதிலும் இவன், தன் அத்தைக்கு அவளுடைய கடைசி காலத்தில் ஒரு சிறு தொகையைத் தவறாமல் அனுப்பிக் கொண்டு வந்தான். இப்படி அத்தையினுடைய போஷணையில் சிறுவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக வளர்ந்து வந்தபோதிலும், மூத்தவனான ப்ராங்க்காயி மட்டும் சிறு வயதிலிருந்தே குடும்பத்திற்குப் புறம்பானவனாகவே இருந்தான். யார் சொன்ன வார்த்தையையும் கேட்க மாட்டான். வீட்டிலே தங்காமல் வெளியில் சுற்றுவது அவன் சுபாவமாகிவிட்டது. இதனால் இரு சகோதரர்களும் நெருங்கிப் பழகக் கூடிய சந்தர்ப்பங்கள்கூட ஏற்படவில்லை. ஆனாலும் இளையவன், மூத்தவனிடத்தில் அதிக விசுவாசம் வைத்திருந்தான். தந்தையோ அத்தையோ அவனைக் கடிந்து கொண்டால் அவனுக்காக அவர்களிடத்தில் பரிந்து பேசுவான். ஒருநாள், தந்தை, ப்ராங்க் காயிஸை நன்றாக அடிப்பதை இவன் பார்த்துக் கொண்டிருந்தான். உடனே தன் சகோதரனைக் கட்டித் தழுவிக் கொண்டான். அவன் மீது விழ வேண்டிய அடிகள் இவன்மீது விழுந்தன. அடி தாங்கமாட் டாமல் கண்ணீர் விட்டுக் கதறினானே தவிர, அண்ணனை விட்டு அப்புறம் நகரவேயில்லை. பார்த்தான் தந்தை. அடிப்பதை நிறுத்திக் கொண்டான். சிறியவனுடைய அன்புக்காகப் பெரியவனுடைய குற்றத்தை மன்னித்துவிட்டான். ஆனாலும் பெரியவனுடைய துர்நடத்தைகள் வரவர அதிகமாயின. கடைசியில் ஒருநாள், வீட்டில் யாருடனும் சொல்லிக் கொள்ளாமல் எங்கேயோ ஓடிப்போய் விட்டான். பிறகு அவனைப் பற்றி ஒரு சமாசாரமும் தெரியவில்லை. மூத்த பையன் இப்படியாகி விட்டதனால் இளைய பையனிடத் தில் அத்தையும் தந்தையும் அதிக நம்பிக்கை வைக்கலானார்கள். அத்தையானவள், ழேன் ழக்கேயினிடத்தில் வைத்த பரம விசுவாசத்தி னாலும், தாயாரில்லாத குறையை இவன் உணரக் கூடாதென்னும் எண்ணத்தினாலும், இவனை எங்கும் வெளியே போகவிடாமலும், எவ்வித துணிச்சலான காரியத்தைச் செய்ய விடாமலும் அதிக பாதுகாப்புடன் வளர்த்து வந்தாள். இதனால் ழேன் ழக்கேக்கு எதையும் பார்த்து மனமிளகிப் போகக்கூடிய தன்மையும், கஷ்டத்தை உறுதியுடன் சகித்துக்கொள்ள முடியாத ஒரு மென்மைச் சுபாவமும் உண்டாகிவிட்டன. ஆனால் இவனுடைய தந்தையான ஐஸக் ரூஸோ இவனை வேறு விதமாக வளர்த்து வந்தான். ழேன் ழக்கே ரூஸோ - இனி இவனை வெறும் ரூஸோ வென்றே அழைப்போம் - எந்தவிதமான பள்ளிக்கூடத்திற்கும் ஒழுங்காகச் சென்ற வனில்லை. ஆனால் ஏழாவது வயதை எட்டிப் பார்ப்பதற்கு முன்னரே எழுதவும் படிக்கவும் தெரிந்துகொண்டு விட்டான். எப்படித் தெரிந்து கொண்டானென்பது யாருக்கும் தெரியவில்லை. தனக்கே இது தெரியாதென்று இவன் கூறுகிறான். பள்ளிக்கூடத்திற்குப் போகாமலே தன் மகன் படிப்பிலே ருசி காட்டி வருவதைக் கண்டு ஐஸக்குக்குப் பரம சந்தோஷம். மகனைத் தனக்குச் சமதையாகவே நடத்தி வந்தான். தந்தையும் மகனும் சேர்ந்துகொண்டு அநேக நூல்களைப் படிப்பார்கள். இரண்டு பேருக்கும் பொழுது போவதே தெரியாது. சில நாட்களில் இரவு முழுவதும் படித்துக் கொண்டிருப்பார்கள். விடியற்காலை, பட்சிகளின் கிலகில சப்தத்தைக் கேட்டு உதயமாகிற தருணம் என்று அறிந்து படுக்கப் போவார்கள். கிரேக்க இதிகாசம், ரோம சரித்திரம் இவைகளை யெல்லாம் தந்தை உற்சாகத்தோடு படித்துக் காட்ட, மகன் கவனத்தோடு கேட்பான். சில சமயங்களில் மகனே உரக்கப் படிப்பான். கேட்டு மகிழ்வான் தந்தை. அந்தக் கிரேக்க ரோம வீரர்களைப்போல் தானும் ஒருவனாக வேண்டு மென்ற எண்ணம் ரூஸோவுக்கு இந்தச் சிறு வயதிலிருந்தே உதித்தது. இதற்கனுசரணையாகவே ஐஸக்கும் இவனுக்குத் தேசபக்தி உணர்ச்சியை ஊட்டி வந்தான். பிற்காலத்தில் ரூஸோ, தான் பிறந்து வளர்ந்த ஜினீவாவைப் பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டதற் கெல்லாம் காரணம், இந்தச் சிறு வயதில் தகப்பன் போதித்த போதனைகள்தான். ரூஸோ, தன் பெயரை எழுதுகிறபோது, ழேன் ழக்கே ரூஸோ - ஜினீவாவின் பிரஜை என்றுதான் எழுதுவான். நான் சுதந்திர ராஜ்யத்தின் பிரஜையாகப் பிறந்தவன்; அந்த ராஜ்ய அமைப்பிலே நான் ஓர் அங்கத்தினன் என்றும், பற்பல அரசாங்க அமைப்புகளைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்யச் செய்ய, என் தாய் நாட்டை நான் ஏன் இன்னும் அதிகமாக நேசிக்க வேண்டுமென்பதற் கான காரணங்களும் அதிகமாகிக் கொண்டு போகின்றன என்றும் இவன் தனது சமுதாய ஒப்பந்தம் என்னும் நூலில் கூறுகிற வாக்கி யங்களில் இவனுடைய நாட்டுப்பற்று ஒளிவிட்டுப் பிரகாசிக்கின் றது. இவன் மேற்படி நூலில், ஜினீவாவின் அரசியல் அமைப்பையே நல்ல அரசாங்கங்களுக்கு உதாரணமாக எடுத்துக் காட்டுகிறான். இவ்வளவு தூரம் இவன் ஜினீவாவின் மீது பற்றுக் கொண் டிருந்தான், ஆனால் அந்த ஜினீவா, இவனுக்கு என்ன பிரதிசெய்தது? இவனுடைய நூல்களைப் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொளுத்தியது! இவனைத் தேசப் பிரஷ்டம் செய்தது! நன்றிகெட்ட தன்மை என்பது ஒன்றிருக்குமானால் அஃது இதுதான். ஆனால் எல்லா மகா புருஷர்களுக்கும் இதே மாதிரி கதி ஏற்பட்டிருக்கிறதென்பதைக் கொண்டு நாம் ஆறுதல் பெற வேண்டியிருக்கிறது. இத்தலியிலே பிறந்த மகாகவி தாந்தே1க்கு இத்தலியிலே இடமில்லை! ஜெர்மனி யிலே பிறந்த கார்ல் மார்க்ஸுக்கு2 ஜெர்மனியிலே இடமில்லை! ஜினீவாவிலே பிறந்த ரூஸோவுக்கு ஜினீவாவிலே இடமில்லை! மனிதர்களுடைய எண்ண உரிமைக்கும், எழுத்துரிமைக்கும், பொருளுரிமைக்கும் போராடுகிற எல்லா மகான்களுக்கும், சமு தாயத்தின்மீது படிந்துள்ள அழுக்குகளைத் துடைக்க முன்வருகிற எல்லோருக்கும் இதே கதிதான். ஜான் ஹ3 என்ன, ஸவனரோலா4 என்ன, ஜியார்டானா ப்ரூனோ5 என்ன, கலீலியோ6 என்ன, இங்ஙனம் நூற்றுக்கணக்கான பேர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? ஆயினும் கடமையை முகமலர்ச்சியுடன் செய்துகொண்டு போயிருக் கிறார்கள்; உள்ளத்தில் தோன்றியதை வெள்ளையாகச் சொல்லி யிருக் கிறார்கள். 2. பிறருக்காகப் பரிந்து பேசுதல் ரூஸோவுக்குப் பத்து வயது ஆயிற்று. இவனுடைய வாழ்க்கை யில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அதாவது இவன் தந்தையான ஐஸக், சில அதிகாரிகளோடு சண்டை போட்டு விட்டதன் காரணமாக ஜினீவாவை விட்டு வேற்றூருக்குப் போய்விட்டான். அப்படிப் போவதற்கு முன்னர், குடும்பத்தைக் கலைத்துவிட்டும், ரூஸோவை, அவனது அம்மான் bg®dh®£(Bernard) என்பவனிடத்தில் ஒப்பு வித்து விட்டும் சென்றான். பெர்னார்ட், ராணுவத்தில் ஓர் இஞ்சினீர், ஜினீவாவிலேயே வசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு மகனுண்டு. அவனும், ரூஸோவும் இணைபிரியாத நண்பர்களாகிவிட்டார்கள். இருவரை யும் படிப்பிக்க பெர்னார்ட் ஏற்பாடு செய்தான். ஜினீவாவுக்கு நான்கு மைல் தூரத்தில் nghÞn[(Bossey) என்ற ஓர் ஊர் உண்டு. இயற்கை யழகு செறிந்த இடம் இது. இங்கே வசித்துக் கொண்டிருந்த லாம் bg®Ìa®(Lambercier) என்ற ஒரு புராட்டெட்டெண்ட் பாதிரியி னிடத்தில், கல்வியறிவு பெற, இரு சிறுவர்களும் அனுப்பப்பட் டார்கள். இருவரும், லாம்பெர்ஸியர் குடும்பத்துடனேயே தங்கி யிருக்க வேண்டுமென்பது ஏற்பாடு. இந்த ஏற்பாட்டின் பேரில் இருவரும் மேற்படி பாதிரியினிடத்தில் சுமார் இரண்டு வருஷ காலம் கல்வி பயின்றார்கள். என்ன மாதிரியான கல்வி? லத்தீன் பாஷையையும், அதைத் தொடர்ந்தாற்போல் சில பினத்தல்களையும் சேர்த்து கல்வி என்ற பெயரால் எங்களுக்குப் போதிக்கப்பட்டது என்று ரூஸோவே, தான் கல்வி கற்ற விந்தையைப் பற்றிக் கூறுகிறான். ஆனால் மேற்படி இரண்டு வருஷ காலத்தையும், தான் இன்பகரமாகக் கழித்தாகவும் தனது வாழ்நாளிலேயே இந்த இரண்டு வருஷந்தான் சந்தோஷமான பாகமென்றும் இவன் சொல்கிறான். இதற்கு முதல் காரணம் கிராம வாழ்க்கை; மற்றொரு காரணம் லாம்பெர்ஸியர் குடும்பத்தினர் இவன்மீது பட்சமாக நடந்துகொண் டது. அவர்கள் இவனை மாணாக்கனாக மட்டும் நடத்தவில்லை; குடும்பத்திலே ஒருவனாகக் கருதி நடத்தி வந்தார்கள். இப்படியிருக்கையில், ரூஸோவினுடைய பசுமனத்தை அசைத்துக் கொடுக்ககூடிய ஒரு சம்பவம் நடைபெற்றது. ஒருநாள், பாதிரியினுடைய மனைவியின் தலைவாரிக்கொள்ளும் சீப்பு உடைந்துவிட்டது. ரூஸோ தான் இதை உடைத்துவிட்டான் என்று அந்த அம்மாள் குற்றஞ்சாட்டினாள். நல்ல அடி கொடுத்தான் பாதிரி. இந்த அடி, ரூஸோவின் உள்ளத்தில் அடையாளம் வைத்துவிட்டது. தான் அடிப்பட்டதற்காக இவன் வருந்த வில்லை; ஆனால், தான் அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டதற்காகவே வருந்தினான். நல்ல மனிதர்கள்கூட, சில சமயங்களில் எவ்வளவு கொடூர மாக நடந்து கொள்கிறார்கள்? மனிதனிடத்தில் தெய்வத்தன்மை குடி கொண்டிருக்கிறதென்பதெல்லாம் வெறும் ஏமாற்றம். பிரதி தினமும், சில நிமிஷ நேரமாவது அவன் மிருகமாகிறான்; அல்லது ஜடவதுவாகிறான். அவன் தெய்வத்தன்மையோடு கூடியிருப்ப தெல்லாம் எப்பொழுதோதான்; ஏகதேசமாகத்தான்; ரூஸோவின் பசுமனம் இங்ஙனம் பலவகையாகச் சிந்திக்கத் தொடங்கியது. சந்தோஷம் என்பது இவனைவிட்டு அகன்று விட்டது. இந்தக் காலத்திலிருந்து என் குழந்தைப் பருவத்தின் அமைதி என்னை விட்டுப் போய்விட்டது. கலப்பற்ற சந்தோஷம் என்று சொல்லு கிறார்களே, அதை இந்தக் காலத்திலிருந்து நான் அனுபவித்ததே கிடையாது. அந்த அமைதி, அந்த சந்தோஷம், இன்னும் சிறிது காலமேனும் என்னைப் பற்றிக் கொண்டிருக்கக் கூடாதாவென்று இப்பொழுது ஏங்குகிறேன். மேலே சொன்ன சம்பவம் நடந்தபிறகு, நானும் பெர்னார்ட்டின் மகனும், சில மாதகாலம் பாதிரியின் வீட்டில் தங்கியிருந் தோம் என்பது வாதவம். பூமியில் முதன் முதலாகச் சிருஷ்டிக்கப்பட்ட ஆதாம் என்ற மனிதன், எப்படி பூலோகத்திலே இருந்தும் பூலோக சுகத்தை அனுபவிக்க முடியாமல் இருந்தானோ1 அதைப்போல நாங்கள் வீட்டில் தானிருந்தோம்; ஆனால் வீட்டின்பத்தை அனுபவிக்கவில்லை. வெளிப் பார்வைக்கு எல்லாம் பழைய மாதிரியே நடந்துவந்தன. ஆனால் வீட்டிலுள்ள வர்கள் எல்லோரும் புதியவர்களாகவே எங்களுக்குத் தென்பட் டார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பரபர இணக்கம், நெருக்கம், மனஒற்றுமை முதலிய ஒன்றுமே இல்லை. எங்களுடைய இருதய உணர்ச்சிகளை வாசித்தறியக் கூடிய தெய்வங் களாக பெர்ஸியர் தம்பதிகளை நாங்கள் இதுகாறும் போற்றி வந்தோம். இனி - ? இந்தக் காலத்திலிருந்து விஷமம் செய்வதற்கு நாங்கள் வெட்கப் படவில்லை. ஆனால் பழி சுமத்திவிடப் போகிறார்களே என்ற அச்சம் மட்டும் எங்களுக்கு அதிகமாகிக் கொண்டு வந்தது. ஒளிவுமறைவாகக் காரியங்களைச் செய்யத் தொடங்கினோம்; பொய் சொல்லத் துணிந்தோம்; கட்டுக்கடங்காதவர்களானோம். எங்க ளுடைய விளையாட்டுக்களிலே எங்களுக்கிருந்த உற்சாகம் போய் விட்டது. எங்களுக்கு அமிருத பானமாயிருந்த இயற்கையழகு, அது முதல் கசப்பாகப் போய்விட்டது. அந்த இயற்கை, எங்களை உறுத்துப் பார்ப்பதாகத் தோன்றியது. முன்னர், தோட்டம் பயிரிடுவோம்; செடி வளர்ப்போம்; மலர் பறிப்போம். எல்லாம் இப்பொழுது நின்று விட்டன. பூமியைக் கீறினாலும் பூமியிலிருந்து ஒரு முளை கிளம்பி னாலும் முன்னர் எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா யிருந்தது! இப்பொழுது எல்லாம் மண்மயமாகவே தென்பட்டது. நாங்கள் எங்களுடைய வாழ்க்கையைச் சுவைக்க முடியவில்லை. பிறருக்கும் நாங்கள் சுவையாக இல்லை.... எங்களை பெர்னார்ட் அம்மான், பாதிரி குடும்பத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய்விட்டார். இந்தப் பிரிவுக்கு நாங்கள் வருந்தவேயில்லை. சிறிய விஷயந்தான். ஆனால், இது ரூஸோவின் மனத்தை எவ்வளவு புண்ணாக்கிவிட்டது? சாதாரணமாகவே குடும்பங்களில், பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அலட்சியப்படுத்தி அநேக காரியங் களைச் செய்கிறார்கள். அவை, அந்தக் குழந்தைகளின் இருதயத்தில் எந்தவிதமான முத்திரை இடுகின்றன என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை. அநேக சந்தர்ப்பங்களில் ஒரு சிறிய சம்பவம், பிற்காலத்தில் நமது ஞாபகத்திற்குக்கூட வராத அவ்வளவு சிறிய சம்பவம், ஒரு குழந்தையினுடைய எதிர்கால வாழ்க்கையை அடியோடு மாற்றி விடும் என்பதைப் பெற்றோர்கள் தெரிந்துகொணடிருந்தால், குடும்பங் களில் சர்வ சாதாரணமாக ஏற்படுகிற அநேக துயரங்களுக்கு வழியே இராது. குடும்பங்களில் துயரமில்லாமலிருந்தால், தேசமும் துயர மில்லாமல் இருக்கு மல்லவா? இதனால் குழந்தைகளை வளர்ப்பதென்பது எவ்வளவு பொறுப்புடைய காரியம் என்பது தெரியவரும். பாதிரி குடும்பத்தை விட்டகன்ற ரூஸோவும் இவனுடைய சகபாடியும், பெர்னார்ட் அம்மான் வீட்டில் சிறிது காலம் வசித்துக் கொண்டிருந்தார்கள். ரூஸோ, இந்தக் காலத்தை, வர்ணக் காகிதங் களினால் அநேக உருவங்களைச் செய்வது, காற்றாடி விடுவது, படங்கள் ஒட்டுவது முதலிய விளையாட்டுகளில் கழித்தான். இவனும், சகபாடியான அம்மான் சேயும், வீதியில் மற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடு வார்கள். சில பிள்ளைகள் அம்மான் பிள்ளையைப் பரிகசித்து அவனைப் பல தொந்தரவுகளுக்குட்படுத்துவார்கள். அவர்களோடு சண்டைக்குப் போவான் அவன். அடிபடுவான். அவனுக்குப் பரிந்துகொண்டு ரூஸோ செல்வான். இவனுக்கும் அதேகதிதான். பிறருக்காகப் பரிந்து பேசுவது பிறர் கஷ்டங்களைப் போக்குவதற்காகத் தன்னாலானவரை முயல்வது முதலிய சுபா வங்கள் இந்தச் சிறு வயதிலிருந்தே ரூஸோவுக்கு அமைந் திருந்தன. இந்தக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சிறு சம்பவத்தை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறோம். ரூஸோவினுடைய அத்தை புருஷன் ஒருவன், ஜினீவாவுக்கு அருகில் சீட்டித் துணிகள் தயார் பண்ணும் ஒரு சிறிய தொழிற் சாலையை நடத்திவந்தான். ஒருநாள், இந்தத் தொழிற்சாலைக்கு ரூஸோவும் அவனது அத்தை மகனான ngÌ(Fazy) என்பவனும் போனார்கள். போய், தொழிற்சாலை முழுவதையும் சுற்றிப் பார்த்தார்கள். ஒரு யந்திரத்தின் உருளை தகதகவென்று பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதனைத் தடவிப் பார்த்தான் ரூஸோ. அந்தச் சமயத்தில், கூட இருந்த பேஸி, இன்னது செய்தால் இன்னது விளை யும் என்று தெரியாமல் மேற்படி யந்திரத்தை முடுக்கிவிட்டான். உருளை சுழல ஆரம்பித்தது. ஓவென்று அலறினான் ரூஸோ. பேஸி, யந்திரத்தை நிறுத்திவிட்டு அருகில் ஓடி வந்து பார்த்தான். ரூஸோவின் இரண்டு விரல்கள் நசுங்கிக் கிடந்தன; ரத்தம் பீறிட்டு வந்து கொண்டிருந்தது. பேஸி, பயந்துவிட்டான்; யாரிடமும் சொல்ல வேண்டா மென்று ரூஸோவைக் கேட்டுக் கொண்டான்; சொன்னால் தனக்குத் தண்டனை கிடைக்குமென்பதையும் தெரி வித்துக் கொண்டான். அந்த க்ஷணத்திலிருந்து ரூஸோ, தன் நோயை வாய்விட்டுச் சொல்லவில்லை. எப்படியோ பொறுமையாக அடக்கிக் கொண்டுவிட்டான். மூன்றுவாரம் படுக்கையிலேயே கிடந்தான். சுமார் இரண்டு மாத காலம் தன் கையை உபயோகப் படுத்த முடியாதவனாயிருந்தான். ஆனாலும், தன் அத்தை புருஷனுடைய தொழிற்சாலையில் தன் விரல்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதென்று யாருக்கும் சொல்லவில்லை. யாராவது கேட்டால் ஒரு கல் விழுந்து இப்படி ஆகிவிட்டதென்றுதான் சொல்லி வந்தான். பிறருடைய நலத்திற்காகத் தன்னலத்தைப் பொருட்படுத்தாதிருப் பதிலே எவ்வளவு சிரத்தை இந்தச் சிறு வயதிலேயே! எவ்வித வேலையுமில்லாமல் ரூஸோவை எவ்வளவு காலம் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பது? பெர்னார்ட் அம்மான், சில இடங்களில் பிரயத்தனப்பட்டுக் கடைசியில் இவனை, கோர்ட் சம்பந்தமான ததவேஜுகளை எழுதிக் கொடுத்துப் பிழைக்கும் மாஸ்ஸரான்(M. Masseron) என்பவனிடம் கையாளாகக்கொண்டு சேர்ப்பித்தான். ரூஸோ, சில நாட்கள்தான் இங்கே இருந்தான். இவனுக்கும் மேற்படி மாஸரானுக்கும் பொருந்தவில்லை. முதலா வது இவன் - ரூஸோ - அந்த உத்தியோகத்தையே வெறுத்தான். அவனோ - அந்த எஜமானனோ - இவனை ஓர் உதவாக்கரை யென்று கருதினான். இவனால் சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியவில்லையென்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந் தான். கடைசியில் ஒருநாள் வேலையினின்று விலக்கிவிட்டான். பின்னர், சித்திரம் செதுக்குந் தொழிலையாவது இவன் கற்றுப் பிழைக்கட்டுமென்று சொல்லி மேற்படி பெர்னார்ட் அம்மான், இவனை, செதுக்குத் தொழில் நிபுணனான ஆபெல் ^nfhk‹(Abel Ducommon) என்பவனிடம் ஐந்து வருஷ ஒப்பந்தத்தின் பேரில் கொண்டுபோய் அமர்த்தினான். அதாவது மேற்படி டூகோமனிடம் ஐந்து வருஷம் வேலை கற்றுக்கொள்ள வேண்டுமென்பதும், இந்த ஐந்து வருஷ காலமும் அவனுடன் கூடவே இருந்துவர வேண்டு மென்பதும், இதற்காக அவனுக்கு ஒரு தொகை செலுத்திவிட வேண்டுமென்பதும் ஏற்பாடு. ஆனால் சுயேச்சையாக நடந்து கொள்ளும் சுபாவமுடைய ரூஸோவுக்கும் டூகோமனுக்கும் பிடிக்கவில்லை. டூகோமன், எஜமான தோரணையில் ரூஸோவைக் கடுமையாக நடத்தினான். இரண்டு வருஷ காலம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வேலை பழகிவந்தான் ரூஸோ. அதற்குமேல், டூகோமனுடைய கொடூரத்தை இவனால் பொறுக்க முடியவில்லை. எப்படியாவது வெளியேறி விடுவதென்று தீர்மானித்தான். ஜினீவாவைச் சுற்றி உயர்ந்த மதிற்சுவர்கள் உண்டு. நான்கு திக்கிலும் நான்கு நுழை வாயில்கள். நகரத்திற்குள்ளே வருவோரும், வெளியே போவோரும் இந்த நுழைவாயில்களின் மூலமாகத்தான் செல்ல வேண்டும். இராக்காலங்களில் இவைகளை மூடிவிடுவார்கள். குறிப்பிட்ட ஒரு நேரத்திற்குள் உள்ளே வந்துவிட்டால் சரி, இல்லா விட்டால் இரவு முழுவதும் நகரத்திற்கு வெளியே கிடக்க வேண்டி யதுதான். ரூஸோ, மேற்படி டூகோமனிடம் வேலை பழகிக் கொண் டிருந்த காலத்தில் மாலை நேரங்களில் ஓய்வு கிடைக்கிறபோது, நகரத்திற்கு வெளியே உலாவச் செல்வான். இப்படிச் சென்று கொண்டிருந்த காலத்தில், இரண்டு முறை, குறித்த நேரத்தில் நகரத் திற்குள் வரமுடியாமல் நுழைவாயிலுக்கு வெளியே தங்கிவிட்டான். மறுநாள் காலையில் வீடுவந்து சேர வேண்டிய நிலைமை ஏற் பட்டது. இரண்டுமுறையும், டூகோமன், இவனை நன்றாக அடித்து விட்டான். மூன்றாவது முறையாக ஒரு சமயம், இவன் வெளியே சென்று திரும்பி வருவதற்கு முன்னரேயே நுழைவாயிற் கதவுகள் மூடிக்கொண்டு விட்டன. மூடிக்கொள்கிற சப்தமும் இவன் காதில் விழுந்தது. இனி நீ நாடோடியாகத்தான் வாழவேண்டும் என்று இவனுக்குச் சொல்வது போலிருந்தது அந்தச் சப்தம். அவ்வளவு தான். முந்திய தடவைகளைப்போல், இரவு அங்கேயே தங்கி மறுநாள் காலையில் சென்றால், டூகோமன், முன்னைவிடக் கடுமையான தண்டனை விதிப்பான் என்பது இவனுக்குத் தெரியும். எனவே, அவன் முகத்தில் மறுபடியும் விழிப்பதில்லை யென்று தீர்மானித் தான். அதாவது நுழைவாயிலைக் கடந்து நகரத்திற்குள் பிரவேசிப்ப தில்லையென்று உறுதிகொண்டான். மறுநாள் காலை, நண்பர் களின் மூலம், தான் கொண்டுள்ள தீர்மானத்தைப் பற்றித் தன் அம்மான் சேய்க்குச் சொல்லியனுப்பினான். அவனும் சில தின்பண்டங்களை யும், துணிமணிகளையும், ஒரு சிறிய கத்தியையும் எடுத்துக்கொண்டு வந்தான். இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள்; கண்ணீர் விட்டார்கள். ரூஸோ விடைபெற்றுக் கொண்டான். புறப்பட்டு விட்டான். எங்கே? இவனுக்கே தெரியாது. உடம்பை மறைக்கும் சிறிய சொக்காய்; முழங்கால் அளவு வரும் கால் சராய்; அதன் கீழ் இறுகக் கட்டின பட்டி; காலில் கெட்டியான பூட்; இடுப்பிலே அம்மான் சேய் கொடுத்த சிறு கத்தி. இந்தக் கோலத்துடன் யாருக்கும் தெரியாத இந்தப் பதினாறு வயது இளைஞன், முன்பின் அறியாத உலகத்தை நோக்கி நடந்தான். அன்று திங்கட்கிழமை. 1728ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 15ஆம் தேதி. 3. மத மாற்றமும் ஊர் சுற்றுதலும் சில நாட்கள் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தான் ரூஸோ. கடைசியில் இத்தலியைச் சேர்ந்த nrthŒ(Savoy) என்ற ஊரை அடைந்தான். அங்கு மதமாற்றம் வெகு மும்முரமாக நடைபெற்று வந்தது. அதாவது கிறிதுவ மதத்தில் புராட்டெட்டெண்ட் பிரிவைச் சேர்ந்த பலர், ரோமன் கத்தோலிக்கப் பிரிவில் சேர்க்கப் பட்டனர். ரூஸோ, புராட்டெட்டெண்ட், பிரிவைச் சேர்ந்தவ னல்லவா? இவன், சேவாய் சென்றதும் ஒரு கத்தோலிக்கப் பாதிரியின் தயவில் இருக்க வேண்டியதாயிற்று. அவர் இவனை நல்வழிப் படுத்தத் திருவுளங் கொண்டார். இனிய மொழிகள் பல புகன்றார். பாவத்தினின்று விலக வேண்டுமானால் புராட்டெட்டெண்ட் பிரிவினின்று விலகி, கத்தோலிக்கப் பிரிவைத் தழுவ வேண்டு மென்று போதனை செய்தார். நல்ல சாப்பாடு போட்டு வயிற்றுக் கொடுமையைத் தீர்த்தார். அவ்வளவுதானே. வயிற்றுப் பசியைத் தீர்ப்பது எதுவாயிருந் தாலும் அதனை நமது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டியதுதானே? ரூஸோ, கத்தோலிக்கப் பிரிவில் சேரச் சம்மதித்தான். உடனே அந்தப் பாதிரியார், சமீபத்தில் அன்னெஸி (Annecy) என்ற ஊரில் வசித்துக் கொண்டிருந்த வாரென் Ókh£o¡F(Madam de Warens) ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்து ரூஸோவை அவளிடம் அனுப்பினார். அந்த அம்மாள் ஒரு பணக் காரி; அழகி; அநேகம் பேரை மதம் மாற்றியிருக்கிறாள்; மனமும் மாற்றியிருக்கிறாள். அவளிடத்தில் போய்ச் சேர்ந்தான் ரூஸோ. அவளைச் சந்தித்தான். இருபத்தெட்டு வயதான அவளுடைய அழகிலே, புன்சிரிப்பிலே இனிய உபசரணையிலே ஈடுபட்டான். இவளுக்காக நூறு தடவை வேண்டுமானாலும் மதம் மாறலாமே என்று சொல்லிக் கொண்டான். நல்ல எண்ணத்தினாலோ, கெட்ட எண்ணத்தினாலோ நமக்குத் தெரியாது. எப்படியும் அவளுடைய முயற்சியாலும் ஆதரவி னாலும் பரிசுத்த கத்தோலிக்கனாகிவிட்டான். இப்படி ஆனது 1728-ம் வருஷம் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி. மதம் மாறினால் ஜீவனத்திற்கு வழி ஏற்பட்டுவிடுமா? பாதிரிமார்கள், எல்லோருக்கும் ஞானநானம் செய்வித்ததுபோல இவனுக்கும் செய்வித்தார்கள். ஆண்டவனுடைய திருவருளை எதிர்பார்த்து நல்ல கிறிதுவனாக நடந்துகொள் என்று உபதேசித்து, ஆபத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஒரு நோயாளியை வெளியேற்றுவது போல், இவனை தேவாலயத்தி னின்று வெளியே அனுப்பிவிட்டார்கள். இவனுக்குப் பின்னால் ஆலயக்கதவு மூடிக்கொண்டுவிட்டது. முன்னாலே? வாழ்க்கையின் சூனியம்! அதுதான் இவனை வரவேற்றது. இவன் கையிலே அப்பொழுது இருபது காசுகள் இருந்தன. இந்த இருபது காசுகளும் எப்படிக் கிடைத்தன? மதமாற்றுச் சடங்கின்போது ஆஜராகியிருக்கிற பலரும் மதம் மாறுகிறவனுக்கு ஏதேனும் காசு போடுவார்கள். இங்ஙனம் காசு போடுகிறவர்களுக்கு நல்ல கதி கிடைக்குமாம்! இந்த விதமாகவே ரூஸோவுக்கு இருபது காசுகள் சேர்ந்தன. இந்தத் தொகையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அப்பொழுதிருந்த தன் மனோ நிலையை ரூஸோ பின்வருமாறு வருணிக்கிறான்: என்னுடைய உயர்ந்த நம்பிக்கைகளெல்லாம் சிதறிப்போய் விட்டன. மதம் மாறினால் ஏதோ நல்ல அதிருஷ்டம் வந்துவிடு மென்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் மகத்தான துன்பக் குழியிலே விழுந்து விட்டதாகத் தெரிந்துகொண்டேன். மதமாற்றுச் சடங்கு நடைபெற்ற தினத்தன்று காலையில், நான் அன்றிரவு ஒரு பெரிய அரண்மனையில் நித்திரை செய்யப் போவதாக எண்ணிக் கொண்டு எழுந்தேன். ஆனால் அன்று ராத்திரி, தெருவிலே தூங்கும் படியான நிலைமை ஏற்பட்டது. எனினும் நான் மனமுடைந்து போகவில்லை; கண்ணீர் விடவில்லை; புதிய நம்பிக்கையும் புதிய உற்சாகமும் கொண்டேன். ஊர் முழுவதும் சுற்றிப் பார்த்தான். எத்தனை நாட்கள் இப்படிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருப்பது? சில தினங்களில் கையிலே இருந்த காசுகள் செலவழிந்துவிட்டன. தான் கற்றுக் கொண்ட சித்திரம் செதுக்கும் வித்தை எங்கேனும் உபயோகப் படுமாவென்று ஒவ்வோரிடமாக நுழைந்து நுழைந்து பார்த்தான். எங்கும் இவனை வேண்டுவாரில்லை. கடைசியிலே இவனுடைய பரிதாபகரமான நிலையைப் பார்த்து மனமிரங்கி, யாரோ ஒரு சீமாட்டி இவனுக்குச் சாப்பாடு போட்டுச் சில தினங்கள் வரை இவனைக் காப்பாற்றி வந்தாள். அவளுடைய சிபார்சின் பேரில் வேறொரு சீமாட்டியிடம் எடுபிடி ஆளாகப் போய்ச் சேர்ந்தான். நல்ல உடுப்பு! நல்ல ஆகாரம்! அவ்வளவுதானே தேவை? ஆனால் இவனுடைய துரதிருஷ்டம், மூன்று மாதத்திற்குள் அந்தச் சீமாட்டி இறந்துவிட்டாள். மறுபடி யும் ஊர் சுற்றிதான்! உத்தியோகத்திற்கு அலைச்சல்தான்! சில வாரங்கள் கழித்து வேறொரு பிரபுவின் வீட்டில் கையாளாக அமர்ந்தான். சில நாட்களே இங்கும் உத்தியோகம். இப்படியாகச் சுமார் ஒரு வருஷ காலம் பல இடங்களில் அலைந்துவிட்டுக் கடைசியில் வாரென் சீமாட்டியிடமே திரும்பவும் வந்து அடைக்கலம் புகுந்தான். அவ ளுடைய ஆதரவில் சுமார் பத்து வருஷத்திற்கு அதிகமாகக் காலங் கடத்தினான். இந்தக் காலத்தில் பாதிரியாக முயன்றான்; பயனில்லை. சங்கீதம் கற்றுக்கொண்டு சங்கீத ஆசிரியனானான்; ஆனால் பலருடைய பரிகாசத்திற்கும் ஆளானான். ஒரு கிரேக்கப் பாதிரியினுடைய அந்தரங்கக் காரியதரிசியாயிருந்தான். ஒரு ராணுவ உத்தியோகத னால் சிபார்சு செய்யப்பட்டு முதன்முதலாகப் பாரிஸுக்குச் சென்று அங்கு ஒரு ராணுவ உத்தியோகதனிடம் காரிய தரிசியாயிருந்தான். ஆனால் எங்கும் இவன் நிலைத்து நிற்கவில்லை. இங்ஙனம் இவன் பாராத வேலைகள் இல்லை; அலையாத இடங்களும் இல்லை. அநேக சந்தர்ப்பங்களில் இவன், இராக் காலத்தை சாலையோரத்திலே, மரத்தடியிலே, வயற்காட்டிலே, மணல்மேட்டிலே கழித்திருக்கிறான். இவையெல்லாம் தனக்குச் சிறந்த அனுபவங் களாயிருந்தனவென்று இவன் பிற்காலத்தில் கூறுகிறான். இத்தனை உத்தியோகங்களுக்கிடையே, இவ்வளவு அலைச்சல்களுக்கிடையே இவனுக்கு, வாரென் சீமாட்டியி னுடைய ஆதரவு மட்டும் இருந்து கொண்டே இருந்தது. இதனால் தான், எனதன்புள்ள தாய் என்று அவளை அழைக்கிறான். ஆனால் ரூஸோ, யாரிடத்திலும் சௌஜன்யமாக இருந்தது கிடையாது; எப்பொழுதும் சந்தோஷமாக இருந்ததும் கிடையாது. இவனைப் போன்ற மனப்பான்மையுடையவர்கள் இப்படித்தான் இருக்க முடியும். ஏனென்றால் இவர்களெல்லோரும் கற்பனை உலகத்தில் வாழ்கின்றவர்கள். சாதாரண பிடிக்கு அகப்படாத ஒரு லட்சியத்தை அடைய வேண்டுமென்றே ஆவலுடையவர்கள். அந்த லட்சியத்திற்குக் குறைவாயுள்ள எந்தப் பொருளின் மீதும் இவர்களுக்கு வெறுப்புத்தான்; எந்த மனிதரோடும் சண்டைதான். இஃது இவர்களுக்கு சகஜம். புறத்தோற்றம் எதுவும் இவர்களைத் திருப்தி செய்யாது. அநேக சந்தர்ப்பங்களில் இவர்களுக்கே தெரியா திருக்கலாம், தாங்கள் அடைய வேண்டிய பொருள் இன்னதென்று. ஆனால் ஏதோ ஒன்றை அடைய வேண்டும். அதுவும் மற்றச் சாதாரண மனிதர்களால் அடையப்படாததாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இவர்களை உள்ளூர அரித்துக் கொண்டிருக்கும்; ஆம். எரித்துக்கொண்டுமிருக்கும். ரூஸோவே கூறுகிறான் ஓரிடத்தில், ஏதோ ஓர் ஆசை என்னை எரித்துக் கொண்டிருந்தது. ஆனால் எதைப்பற்றி அந்த ஆசை என்பது எனக்குத் தெரியாது. ரூஸோவைப் போன்றவர்கள். தங்களுடைய கற்பனை உலகத்தில் என்ன சிருஷ்டிக்கிறார்களோ அவைகளிடத்தில்தான் சாந்தி பெறுகிறார்கள்; அல்லது இயற்கையிலே ஒன்றுபட்டு அதில் தங்கள் சுகதுக்கங்களை இழந்து விடுகிறார்கள். அப்படி இழப்பதிலேதான் இவர் களுடைய இன்பம் இருக்கிறது. ரூஸோ இப்படிப் பட்டவர்களில் ஒருவன். வாரென் சீமாட்டிக்கு லெ சார்மெட்டிஸ் (Les Charmettes) என்ற ஓர் ஊரில், இயற்கைத் தோற்றத்தின் நடுவில் அழகானதொரு பங்களா இருந்தது. இந்தப் பங்களாவில் மேற்படி சீமாட்டியி னுடைய ஆதரவில் ரூஸோ, சுமார் இரண்டு வருஷ காலம் தனியாக வசித்துக் கொண்டிருந்தான். இந்த இரண்டு வருஷ காலத்தில் இவன் அனுபவித்த இயற்கைக் காட்சிகளும் படித்த நூல்களும் பல. நான் தினந்தோறும் சூரியோதயத்தின்போது எழுந்திருப்பேன். உடனே வெளியில் சென்று உலவுவேன். அப்படிச் செல் கிறபோது பிரார்த்தனை செய்து கொண்டே செல்வேன். பிரார்த்தனை யென்று சொன்னால் உதடுகளை அசைத்துக் கொடுப்பதல்ல. எந்த இயற்கை, என்னுடைய கண்களுக்கு முன்னே அழகோடு சோபிக்கிறதோ, அந்த இயற்கையின் ஆசிரியனான கடவுளின் திருவடியிலே என் இருதயத்தைக் கொண்டு வைப்பேன். எப்பொழுதுமே நான், என் அறையிலிருந்து கொண்டு பிரார்த்தனை செய்வதை விரும்புவ தில்லை. கடவுளுக்கும் என் ஆத்மாவுக்கும் மத்தியில், கல்லும் மண்ணும் சேர்ந்த இந்தச் சுவர்கள் குறுக்கிடுவதாக எனக்குத் தோன்று கிறது. தவிர, கடவுளின் சிருஷ்டிகளிலேதான் நான் கடவுளைக் காண விரும்புகிறேன். மற்றும் என்னுடைய பிரார்த்தனைகளெல்லாம் வெறும் கோரிக்கைகளாக இரா. அவருடைய திருவருளை எண்ணி வியப்பதாகவே இருக்கும். இந்த மாதிரியான தெய்வ நம்பிக்கை யுடைய ரூஸோ, பிற்காலத்தில் நாதி கனென்றும் மதத்துவேஷி என்றும் தூற்றப்பட்டான்! உலகம், மகான்களை எவ்வளவு தவறாக மதிக்கிறது! லெ சார்மெட்டிஸில் வசித்த இரண்டு வருஷ காலமும், ரூஸோவைப் பொறுத்த மட்டில் மிகவும் நிம்மதியான காலம். அநேக நூல்களைப் படித்து அவற்றிலே ஆறுதல் கண்டான்; சில நூல்களை மனப்பாடமும் செய்தான். அப்படிச் செய்தான பிறகு, அந்த நூல்களைப் பத்திரப்படுத்தி வைக்கமாட்டான். மரத்தடி களிலோ, படுக்கையின் கீழோ, வேலி ஓரத்திலோ, எந்தெந்த இடத்தில் படித்துக் கொண்டிருந்தானோ அந்தந்த இடத்திலேயே அவை கிடக்கும். இந்த மாதிரி அநேக புத்தகங்கள் பாழாகிவிட்டன. ஆனால் இதைப் பற்றி ரூஸோ சிறிதுகூடக் கவலைப் படமாட்டான். இப்படியிருக்கிறபோது, வாரென் சீமாட்டிக்கும், ரூஸோ வுக்கும் இருந்த தொடர்பு மெது மெதுவாகக் குறைந்துகொண்டே வந்தது. எல்லா வகைகளுக்கும் மேற்படி சீமாட்டியினுடைய ஆதரவை, ரூஸோ எதிர் பார்த்துக் கொண்டிருந்ததுதான் இதற்குக் காரணமாயிருக்கலாம். கடைசியில் வேறொரு குடும்பத்தில் பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்கிற வேலையைத் தேடிக் கொடுத்தாள் ரூஸோவுக்கு அந்தச் சீமாட்டி. சுமார் ஒரு வருஷ காலம் இந்த வேலையைச் செய்து வந்தான் ரூஸோ, அரைகுறையான மனத் துடன். இவனுடைய போதனையில், மேற்படி குடும்பத்தினருக்குத் திருப்தி உண்டாகவில்லை. இவனுக்கும் அந்த வேலையில் இஷ்ட மில்லை. கடைசியில் வேலையே வேண்டாமென்று உதறித் தள்ளி விட்டு வெளியே வந்துவிட்டான். அப்படியே வாரென் சீமாட்டியி னுடைய ஆதரவையும் உதறித் தள்ளிவிட்டான். கிளம்பினான் பாரி மாநகரை நோக்கி, அப்பொழுது இவனுக்கு வயது முப்பது. 4. அறிஞர்களின் தொடர்பு பாரி மாநகரம் ரூஸோவுக்குப் புதிதல்ல. ஏற்கனவே ஒருமுறை 1731ஆம் வருஷம் - இந்த அழகிய பட்டணத்திற்கு வந்து சிறிது காலம் தங்கியிருக்கிறான். முதல் தடவை வந்தபோது, இவனுக்கு நகரத்தின் கெடுதலான பாகந்தான் புலப்பட்டது. இப்பொழுதோ, நகரத்தின் சிறப்பான அமிசங்களை நோக்கினான். எந்த மனப்பான்மையோடு உலகத்தை நாம் நோக்குகிறோமோ அந்த மனப்பான்மைக்குத் தகுந்தாற் போலவே உலகமும் நமக்குக் காட்சி அளிக்கிறது. இது சகஜந்தானே? பாரிஸுக்கு வந்தபோது ரூஸோவின் ஆதி, பதினைந்து பொற் காசுகள், தான் எழுதிய இசை நாடகமொன்றின் கையெழுத்துப் பிரதி, சங்கீதத்தைச் சுலபமாகப் பயிலுவதற்காகத் தான் கண்டு பிடித்த ஒருமுறை, சில பெரிய மனிதர்களுக்கு அறிமுகக் கடிதங்கள் ஆகிய இவைதான். கையிலே சிறிது பணம் இருந்தபடியால் இவன் முதலில் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படவில்லை; புதிய உத்தியோக மெதற்கும் பிரயத்தனப்படவில்லை. சில முக்கியதர்களைப் பார்த்து அவர்களுடைய சிநேகத்தைச் சம்பாதித்துக் கொண்டான். அவர் களும் இவனிடம் அன்பு பாராட்டி இவனை ஓர் உத்தியோகத்தில் அமர்த்த முயன்றனர். ஆனால் இவன், அப்பொழுது தனக்கு எவ்வித உத்தியோகமும் வேண்டாமென்று சொல்லி விட்டான். பணக்காரப் பிரபுக்களின் மாளிகைக்குச் செல்வதும், அங்குள்ள சீமாட்டிகளுடன் விருந்துண்பதும், அவர்களுக்குத் தனது புதிய சங்கீத முறையைப் பற்றிச் சொல்வதும், தனது இசை நாடகத்தை அவர்களுக்கு வாசித்துக் காட்டுவதுமாகக் காலங்கழித்தான். பாரிஸில், அறிஞர் கழகமொன்று இருந்தது. இந்தக் கழகத்தின் காரியதரிசி, ரூஸோவுக்குத் தெரிந்தவன். அவன், தன் கழகத்தின் கூட்ட மொன்றைக் கூட்டுவித்து அதில் ரூஸோவின் புதிய சங்கீத முறையை அரங்கேற்றுவித்தான். இதன் மூலமாக ரூஸோவின் பெயர் பிரபலமாகும் என்று அந்த நண்பன் கருதினான். கழக அறிஞர்கள், ரூஸோவின் சங்கீத முறையைக் கேட்டார்கள்; இவனைப் பாராட்டினார்கள். பின்னர் மூன்று நிபுணர்கள் அடங்கிய ஒரு சிறு கமிட்டியை நியமித்து, இவனுடைய முறையைப் பரிசீலனை செய்து ஓர் அறிக்கை தயாரிக்குமாறு கூறினார்கள். அந்தக் கமிட்டியினரோ, இவனுடைய முறை புதிதுமல்ல, இதனால் பயனும் இல்லையென்று தங்கள் அறிக்கையின் மூலம் தெரிவித்து விட்டார்கள். ஆயினும் மேற்படி கழகத்தினர் இவனுக்கு ஒரு சன்மானப் பத்திரம் அளித்தனர். கழகத்தினர், தன் முறையை அங்கீகரிக்கவில்லை யென்பதற் காக ரூஸோ மனச்சோர்வு கொள்ளவில்லை. தனது முறையைப் பற்றி ஆராய்ச்சி பூர்வமாக ஒரு கட்டுரை எழுதி அதனை ஒரு புதக மாக வெளியிடச் செய்தான். புதகத்தைக் கவனிப்பார் யாரு மில்லை. பிறகு ஓர் அமெரிக்க திரீக்கு அந்த முறையை இலவச மாகச் சொல்லிக் கொடுத்தான். அவள் மூன்று மாதத்தில் கற்றுக் கொண்டு அந்த முறையைப் பின்பற்றி ஒரு கச்சேரி செய்தாள். எல்லோரும் பாராட்டினார்கள்; ஆனால் பின்பற்றுவார் ஒருவரு மில்லை. இந்த மாதிரி தோல்விமேல் தோல்வி ஏற்பட்டதும், ரூஸோ வுக்கு ஒருவித அசட்டை மனப்பான்மை உண்டாகிவிட்டது. நடக்கிற படி நடக்கட்டும் என்று தன் வாழ்க்கையை அதன் போக்கிற்கே விட்டுவிட்டான். ஒன்றுவிட்டு ஒருநாள் ஹோட்டலுக்குப் போவது, வாரத்திற்கொருமுறை நாடகக் கொட்டகைக்குச் செல்வது, இப்படியாகச் சிறிது காலம் கழித்தான். பெரிய மனிதர்களின் சல்லாபத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டான். ஓய்வு நேரங் களில், பழைய காவியங்களிலிருந்து சில முக்கியமான பாகங்களை நெட்டுருச் செய்தான். முக்கியமான சில அறிஞர்களை மட்டும் அடிக்கடி சந்தித்து அவர்களுடைய அன்பையும் ஆதரவையும் பெற்று வந்தான். இங்ஙனம் இவனிடம் அன்பு செலுத்திய முக்கிய அறிஞர்களில் ஒருவன் டிடெரோ1 என்பவன். டிடெரோவும் ரூஸோவும் ஏறக்குறைய ஒரே வயதினர்; ஒரே மனப்பான்மையுடையவர். கலை, இலக்கியம், தத்துவம் முதலிய எல்லாத் துறைகளையும் பற்றி இன்றைய தினம் பிரெஞ்சுப் பாஷையில் ஒரு பேரகராதி இருக்கிறதென்று சொன்னால் அதற்கு இந்த டிடெரோவின் சலியாத உழைப்புத்தான் காரணம். இவனும், டிஅலெம்பர்ட்2 என்பவனும் சேர்ந்துதான் இந்த அகராதியைத் தயாரித்தார்கள். இந்த அகராதியிலே வகுக்கப்பட்ட சில கொள்கை களைப் பின்பற்றித் தனியாக ஒரு கட்சியினரும் பிற்காலத்தில், அதாவது பிரெஞ்சுப் புரட்சியின்போது, தோன்றிவிட்டார்கள். இவர்களுக்கு அகராதிவாதிகள்3 என்று பெயர். இந்த டிடெரோ ஒரு மகா மேதாவி; கற்பனா சக்தி நிரம்பியவன்; அநேக நூல்களின் ஆசிரியன். ஆனால் இவனுடைய வயோதிக காலம், வறுமைக் கோலமாகவே இருந்தது. சொல்ல முடியாத கஷ்டங்களைப் பட்டான். கடைசியில் இவனுடைய அறிவை வியந்து பாராட்டி வந்த ருஷ்ய சக்ரவர்த்தினியான இரண்டாவது காதரைன்1 இவன் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களையெல்லாம் அப்படியே விலை கொடுத்து வாங்கிக் கொண்டாள். இவனை, அந்தப் புத்தகசாலைக்கு அதிகாரியாக நியமித்து, ஐம்பது வருஷ சம்பளத்தை முன் பண மாகவே கொடுத்து விட்டாள். இப்படிப்பட்ட டிடெரோவி னுடைய சிநேகம் ரூஸோவுக்குக் கிடைத்தது. டிடெரோ மூலமாக வேறு பலருடைய தொடர்பும் இவனுக்கு உண்டாயிற்று. ஆனால் பெரிய மனிதருடைய சிநேகம் இருந்தால் வயிறு நிரம்பிடுமா? எவ்வளவு காலம் இப்படிச் சும்மா இருந்து கொண்டிருப்பான் ரூஸோ? கையிலிருந்த பணம் முழுவதும் கரைந்துவிட்டது. ஏதே னும் ஓர் உத்தியோகத்தைத் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நல்ல வேளையாக இந்தச் சமயத்தில் இவனுக்கு வயிற்றுணவு அளித்து, இவனிடமிருந்து செவியுணவு பெற்றுவந்த சில சீமாட்டிகள், இவனுக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுக்கிற விஷயத்தில் சிறிது சிரத்தை எடுத்துக்கொண்டனர். இவர்களுக்குத் தெரிந்த பிரபு வமிசத்தைச் சேர்ந்த ஒருவன், இத்தலியிலுள்ள வெனி நகரத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தின் தானீகனாக நியமிக்கப்பட்டான். அவனுக்கு இத்தாலிய பாஷை தெரிந்த ஒரு காரியதரிசி தேவையாயிருந்தது. மேற்படி சீமாட்டிகள், ரூஸோவின் பெயரைச் சிபாரிசு செய்தார்கள். அந்த தானீகனும் இவனைக் காரியதரிசியாக நியமித்துக் கொண்டான். ரூஸோவும் பாரிஸைவிட்டு வெனி நகரம் சென்று மேற்படி உத்தியோகத்தை ஏற்றுக்கொண்டான். சுமார் ஒன்றரை வருஷ காலம் வேலை பார்த்தான். இந்தக் காலத்தில், காரியாலயத்தில் அநேக சீர் திருத்தங்கள் செய்தான். இதற்கு முன்னர், இத்தாலிக்குப் பிரயாணி களாகவோ, வயிற்றுப் பிழைப்பு நிமித்தமாகவோ வந்துபோகும் பிரெஞ்சுப் பிரஜைகளுக்கு அதிக கஷ்டங்கள் இருந்தன. ரூஸோ, தனது நிருவாக சாமர்த்தியத்தினால் இவைகளையெல்லாம் தீர்த்து வைத்தான்; பிரெஞ்சுக் காரர்களுக்கு அநேக சௌகரியங்கள் செய்து கொடுத்தான். ஆனால் தானீகனுடைய காரியாலயத்தில் சிப்பந்தி களாயிருந்தவர் களுக்கு இவையெல்லாம் பிடிக்கவில்லை. ஏனென் றால் அவர்கள் எல்லோரும் இத்தாலியர்கள். ரூஸோவின் சீர் திருத்தத்தினால், அவர்கள் இதுகாறும் அனுபவித்து வந்த சலுகைகள் யாவும் போய்விட்டன. இதனால் அவர்கள் ரூஸோவின்மீது வருத்தங்கொண்டார்கள். இந்த வருத்தமானது, தானீகனுக்கும் இவனுக்கும் மனதாபமாக முற்றிவிட்டது. தானீகனும் இவனைச் சில சந்தர்ப்பங்களில் மரியாதைக் குறைவாக நடத்தினான். இவை களையெல்லாம் ரூஸோவினால் சகித்துக் கொண்டிருக்க முடிய வில்லை. பதவியை ராஜீனாமா செய்துவிட்டான். வெனிஸிலேயே சிறிது காலம் தங்கி வேறு ஏதாவது உத்தியோகம் அகப்படுமாவென்று சுற்றிப் பார்த்தான். வெனி நகரத்தின் அழகை அனுபவித்தானே தவிர, உத்தியோகம் ஒன்றையும் சம்பாதித்துக்கொள்ள முடிய வில்லை. மறு படியும் பாரி வந்து சேர்ந்தான். சுயமாகச் சிந்தித்துச் சுயமாக நடக்க ஆவல் கொள்கிறவன், உலக வாழ்விலே எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக் கிறது! ரூஸோ, பாரி வந்து சேர்ந்ததும், செயிண்ட் குவெண்ட்டின் (Hotel Saint-Quentin) என்ற ஒரு ஹோட்டலில் ஜாகை வைத்துக்கொண் டான். m§nf bjnun[ by thê®!(Therese Le Vasseur) என்ற ஒரு பரிசாரிகை இருந்தாள். அவளுக்கும் இவனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் சட்ட ரீதியாக விவாகம் செய்து கொண்டதாகத் தெரிய வில்லை. ஆனால் இருவரும் சுமார் முப்பது வருஷத்திற்கதிகமாகப் புருஷனும் மனைவியுமாக வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் மொத்தம் ஐந்து. இந்தக் குழந்தைகளை ரூஸோ, தன் குடும்பத்திலே வைத்துக் கொள்ள வில்லை. அநாதைகள் விடுதியில் விடுத்து அவைகளின் போஷணைக்கு ஏற்பாடு செய்தான். தெரேஸேவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அவளைப் படிப் பிக்க ரூஸோ எவ்வளவோ முயன்றான். பயனில்லை. இருந்தாலும் அவளுக்கு உலக விவகாரங்கள் தெரிந்த மாதிரி யாருக்கும் - படித்த குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் - தெரியாதென்றுதான் சொல்ல வேண்டும். விட்ஜர்லாந்து, இங்கிலாந்து, பிரான் முதலிய பிரதேசங்களில் நான் வசித்துக் கொண்டிருந்தபோது எனக்குப் பல துன்பங்கள் ஏற்பட்டன. அந்தக் காலங்களில் எனக்குப் புலப்படாத விஷயங்கள் பல அவளுக்குப் புலப்படும். அவள், எனக்கு நல்ல புத்தி மதிகளைச் சொல்வாள்; இன்னபடி செய்ய வேண்டுமென்று எனக்கு வழி காட்டுவாள். பிரபுக்கள், பணக்காரச் சீமாட்டிகள் முதலியோர் முன்னிலையில் அவள் மரியாதை தெரிந்து நடந்துகொள்வாள். இங்ஙனம் நடந்துகொண்டதன் மூலமாக அவள் பலருடைய மதிப்பையும் பெற்றாள். பலர் அவளைப் பாராட்டினார்கள் என்று தெரேஸையைப் பற்றி ரூஸோ தன் சுயசரிதத்தில் குறிப்பிடுகிறான். சுருக்கமாகச் சொல்லுமிடத்து, இந்தத் தெரேஸேதான், ரூஸோ வுக்குக் கடைசிகாலம் வரையில், மரண பரியந்தம், உற்ற துணைவி யாக இருந்து ஆறுதல் கொடுத்துக்கொண்டு வந்தாள். செயிண்ட் குவெண்ட்டின் ஹோட்டலில் ஜாகை வைத்துக் கொண்டு, தெரேஸே லெவாஷீருடன் காதல் நாடகம் நடித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை நடைபெறுவதெப்படி? ஏதேனும் பிழைப்புக்கு வழி தேட வேண்டுமல்லவா? எனவே இவன் - ரூஸோ - ஒரு சிறிய இசை நாடகம் எழுதினான். இதனை நடிக்கச் செய்து சிறிது பணம் சம்பாதிக்கலாமென்று பார்த்தான். அப்படியே நடித்துக் காட்டப்பட்டது. ஆனால் இவன் எதிர்பார்த்த படி வருமானம் கிடைக்கவில்லை. அற்ப சொற்பமாகச் சம்பாதித்த பணமும் அவ்வப்பொழுது லெவாஷீர் குடும்பத்திற்குச் செலவாகிக் கொண்டு வந்தது. தெரேஸேயின் தாயார் ஒரு கொடுமைக்காரி; வன்னெஞ்சம் படைத்தவள். தன் மகளுக்கும் ரூஸோவுக்கும் கள்ள நட்பு உண்டாகியிருப்பது தெரிந்து, ரூஸோவினிடமிருந்து எவ்வளவு பணம் பறிக்க முடியுமோ அவ்வளவு பணத்தையும் பறித்து வந்தாள்; தெரேஸேயையும் அடிக்கடி துன்புறுத்தி வந்தாள். இவையெல்லாம் ரூஸோவுக்கு அதிக மனவேதனையை அளித்தன. இவனுக்குத் தெரிந்த பிராங்குவெயில் (M. de Francueil) என்ற ஒரு சீமான், ரசாயன சாதிர சம்பந்தமாகச் சில ஆராய்ச்சிகள் செய்து அவைகளை ஒரு புதக ரூபமாக வெளியிட வேண்டுமென்று முயன்றுகொண்டிருந்தான். அவன், ரூஸோவின் உதவியை நாடினான். ரூஸோவும், ஒரு சிறுதொகையைப் பெற்றுக்கொண்டு அவனுக்கு உதவி செய்து வந்தான். இதே சமயத்தில் வேறொரு சீமாட்டி - ரூஸோவுக்கு ஏற்கனவே பரிச்சயமாகி இருந்தவள் - தான் ஏதோ புதகம் எழுதப் போவதாகச் சொல்லி ரூஸோவின் உதவியைக் கோரினாள். இதற்காக இவனுக்கு ஒரு சிறு தொகையை யும் கொடுத்து வந்தாள். இவைகளைக் கொண்டு இவன் ஜீவனத்தை நடத்தி வந்தான். இடையிடையே தன் மனச் சாந்திக்காகச் சில கவிதைகள் புனைந்தான்; வேடிக்கை நாடகமொன்று இயற்றினான். ஒருவிதமாகக் காலம் கழிந்துகொண்டு வந்தது. 5. பரிசு பெற்ற கட்டுரை 1749-ஆம் வருஷம் கோடை காலத்தில் ஒரு நாள், பாரிஸுக்குச் சமீபத்திலுள்ள வின்கென்னெ1 என்ற இடத்திற்குச் சாலை வழி யாக நடந்து சென்று கொண்டிருந்தான் ரூஸோ. ஏன்? இவனுடைய நண்பனான டிடெரோ, குருடர்களைப் பற்றின ஒருகடிதம் என்ற தலைப்பிட்டு ஒரு நூலை எழுதி வெளியிட்டதற்காக அரசாங்கத்தா ரால் மேற்படி வின்கென்னெஸிலுள்ள சிறையில் வைக்கப்பட்டிருந் தான். அவனை அடிக்கடி சென்று பார்ப்பது ரூஸோவின் வழக்கம். இந்த வழக்கப்படி மேற்படி தினத்தன்று, புழுதி நிறைந்த அந்தப் பாதையிலே போய்க் கொண்டிருந்தான். போகும்பொழுது ஒரு பிரெஞ்சுப் பத்திரிகையைப் படித்துக் கொண்டே சென்றான். அதில், டிஜோன் இலக்கியக் கழகத்தார்2, கலைகளும் விஞ்ஞானமும் விருத்தியடைந்திருப்பதால், மனிதனுடைய ஒழுக்கம் உயர்வடைந்திருக்கிறதா? என்பதைப் பற்றிக் கட்டுரை எழுதுகிறவர்களுக்குப் பரிசு அளிக்கப்படும் என்று ஓர் அறிக்கை வெளியிட்டிருப்பதைக் கண்ணுற்றான். அதைக் கண்ணுற்றதும் இவனுடைய சரீரம் முழுவதும் ஒரு குலுங்கு குலுங்கியது. புதிய உணர்ச்சியும் புதிய சக்தியும் பெற்றவன் போலானான். ஆயிரக் கணக்கான எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அலைகள் போல் வந்து இவன் உள்ளத்தை மோதின. புதியதோர் உலகத்தைக் கண்டான். அந்தப் புதிய உலகத்தில், தான் ஒரு புதிய மனிதனாக இருப்பதைப் பார்த்தான். மார்பு படபடத்தது. மூச்சுத் தடுமாறியது. உடனே மரத்தடியில் உட்கார்ந்து விட்டான். சுமார் கால்மணி நேரம் இப்படி உட்கார்ந்திருந்தான். பிறகு சாந்தி ஏற்பட்டது. இந்தப் பதினைந்து நிமிஷ நேரத்தில் என் உள்ளத்தில் தோன்றின பல எண்ணங்களைத்தான் இலக்கியம், கலை இவைகளைப் பற்றிய விரிவுரை என்ற நூலிலும், மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டதற்குக் காரணமென்ன என்ற நூலிலும் எமிலி என்ற கல்வியைப் பற்றிய நூலிலும் அப்படியும் இப்படியுமாகத் தெளித் திருக்கிறேன் என்று ரூஸோ, தன் சுயசரிதத்தில் கூறுகிறான். பிறகு வின்கென்னஸுக்குச் சென்று இந்த விஷயத்தை டிடெரோவிடம் சொன்னான். அவசியம் நீ இந்தப் போட்டிப் பரிசுக்கு முயற்சி செய்ய வேண்டும் என்று அவனும் ரூஸோவை வற்புறுத்தினான். ரூஸோவும் அப்படியே சில தினங்களில் இந்தக் கட்டுரையை எழுதி டிஜோன் கழகத்திற்கு அனுப்பிவிட்டான். அதனோடு தனது துயரம் நிறைந்த வாழ்க்கையையும் அனுப்பி விட்டான்; புதிய வாழ்வு பெற்றான். டிஜோன் கழகத்திற்கு, மேற்படி விஷயத்தைப் பற்றி மொத்தம் பதினைந்து பேர் கட்டுரைகள் எழுதி அனுப்பியிருந்தார்கள். இந்தப் பதினைந்து கட்டுரைகளிலும் ரூஸோ எழுதிய கட்டுரைதான் சிறந்ததென்று கழகத்தினர் ஒப்புக்கொண்டு இதற்குப் பரிசு வழங்கினர். கட்டுரையும் அச்சாகி புத்தக வடிவமாக வெளிவந்தது. அவ்வளவுதான், இலக்கிய உலகத்திலே ரூஸோவுக்கு ஒரு முக்கிய தானம் உண்டாகிவிட்டது. பெயர், புகழ், பணம் எல்லாம் ஒன்றாக வந்தன. இந்தக் காலத்தில் டிடெரோ இவனுக்கு நிரம்ப உதவியாக இருந்தான். ரூஸோ, தனக்குப் பரிசு அளித்த டிஜோன் இலக்கியக் கழகத்தாருக்கு நன்றி பாராட்டி அருமையானதொரு கடிதம் எழுதினான். அது வருமாறு; கனவான்களே, எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல் நான் எந்தப் பரிசுக்குப் போட்டியிட்டேனோ அந்தப் பரிசை எனக்கு வழங்கி என்னைக் கௌரவப்படுத்தியிருக்கிறீர்கள். நான் எதிர்பாராம லிருக்கையிலே இந்தப் பரிசு எனக்குக் கிடைத்தமையாமல், இஃது எனக்கு மிகவும் பிரியமுடையதாயிருக்கிறது. உங்களுடைய பரிசைக் காட்டிலும் உங்களுடைய மதிப்பைத்தான் நான் முக்கியமாகப் போற்றுகிறேன். எது உண்மையென்று நான் கருதினேனோ அதனையே நான் எழுதினேன். அதற்குப் பரிசு என்னும் மகுடஞ் சூட்டியிருக்கிறீர்கள். கனவான்களே, எனக்குப் புகழ் தருவித்துக் கொடுத்தீர்கள். அதன் மூலமாக உங்களுடைய புகழையும் அதிகப் படுத்திக் கொண்டீர்கள். இதற்கு முன்னர் நீங்கள் அளித்த பல தீர்ப்பு களும், உங்களுடைய விவேகத்திற்குப் பெருமை அளிப்பதா யிருக்கலாம். ஆனால் இப்பொழுது நீங்கள் அளித்திருக்கிற பரிசு உங்களுடைய நேர்மைக்குப் பெருமை அளிப்பதாயிருக்கிறது. இங்ஙனம், மிகவும் பணிவுள்ள ரூஸோ ரூஸோவின் சுதந்திர மனப்பான்மையும், நன்றி பாராட்டுந் தன்மையும் இந்தக் கடிதத்தின் மூலம் எவ்வளவு அருமையாக வெளியாகின்றன? ரூஸோ, மேற்படி கட்டுரையில் என்ன கூறியிருக் கிறான் என்பதை முதலாவது அனுபந்தத்தில் காண்க. மேற்படி கட்டுரை, நூல் வடிவமாக வெளிவந்ததும், ஐரோப்பிய ஜனசமுதாயத்திலே ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. சம்பிரதாயம் என்னும் அதிவாரத்தின் மீது கட்டப்பெற்றிருந்த சமுதாயம் என்னும் மணல் வீட்டின் மீது ஒரு கல்லைத் தூக்கிப்போட்டது போல் இருந்தது. இந்த மாதிரி ஒரு கல்லைத் தூக்கிப்போட வேண்டுமென்ற எண்ணம் பலருக்கு இருந் திருக்கலாம். ஆனால் யார் போடுவது? இதற்குத் துணிச்சல் வேண்டுமே? இந்தத் துணிச்சலுக்காகத்தான் அன்று ரூஸோ கௌரவப் படுத்தப் பட்டான். பரிசுத்தொகை கிடைத்துவிட்டது. நூல் வெளியீட்டின்மூலம் வருமானம் வேறே. அவ்வளவுதான், செலவழிக்கத் தலைப்பட்டு விட்டான் ரூஸோ. இந்தக் காலத்தில் இவன் கொஞ்சம் நன்றாகவே வாழ்ந்தான் என்று சொல்லவேண்டும். இவனும் தெரேஸேயும் அடிக்கடி உலாவச் செல்வார்கள். நல்ல ஹோட்டல்களில் சாப்பிடு வார்கள். எங்கெல்லாம் இயற்கைக் காட்சிகள் காணப்பட்டனவோ அங்கெல்லாம் சென்று மேற்படி காட்சிகளை அனுபவித்தார்கள். இரண்டு பேரும் இந்தக் காலத்தில் ஒன்று சேர்ந்து குடும்பமொன்றை யும் ஏற்படுத்திக் கொண்டார்கள். ரூஸோ, இந்தக் காலத்தில், தனது உடைகளை அணிந்துகொள்ளும் முறையைக் கூட மாற்றிக் கொண்டு விட்டான். தன் கைக்கடிகாரத்தை விற்றுவிட்டான். உலக சம்பிரதாயங்களை யொட்டி வாழ்க்கையை நடத்த வேண்டுமென்ற கட்டாயம் என்ன என்பது இவன் கேள்வி. சாதாரணமாகவே, மகான்களென்று வருங்காலத்திலே அழைக்கப்படுகிற நிகழ்காலப் பித்தர்கள், சம்பிரதாயங்களை மீறிச் செல்கிற சுபாவமுடையவர்கள். இவர்களால் பணத்தின் அருமையைக் கொஞ்சம் கூடத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இவர்களுக்குச் சம்பாதிக்கத் தெரியாது; ஆனால் செலவழிக்க நன்றாகத் தெரியும். இவர்கள் பெறுவதை அறியார்; கொடுப்பதையே அறிவார். இறுக்கிப் பிடிப்பதிலே, குவித்து வைப்பதிலே, ஒடுக்கிப் பார்ப்பதிலே இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. திறந்த வெளிதான் இவர் களுடைய வாசதலம்; விசால மனந்தான் இவர்களுடைய ஆபரணம்; சேவைதான் இவர்கள் அடைகிற இன்பம். ரூஸோ இத்தகைய வரில் ஒருவனல்லனோ! இங்ஙனம், வந்த பணத்தையெல்லாம் சீக்கிரமாக, சுலபமாகச் செலவழித்துவிட்டான் ரூஸோ. குடும்ப பாரம் ஒன்றைப் புதிதாக ஏற்றுக் கொண்டிருந்தானல்லவா? இதனை எப்படியாவது சமாளித்துக்கொண்டு போகவேண்டுமே. எனவே, மறுபடியும் உத்தியோகத்தை நாடி ஓடலானான். ஏற்கனவே இவன், பிராங்க்குவெயில் என்ற ஒரு சீமானுடைய ரசாயன சாதிர ஆராய்ச்சி விஷயத்தில் உதவி செய்து கொண்டிருந் தான் என்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும். அந்தச் சீமான், இப்பொழுது பிரெஞ்சு அரசாங்கத்தின் பொக்கிஷ இலாகா தலைவ னாயிருந்தான். அவனுக்குக் கீழ் பொக்கிஷதாரனாக அமர்ந்து சிறிது காலம் உத்தியோகம் பார்த்தான். உத்தியோகத்தின் நடுவில் இவனுக்கு நரம்புத் தளர்ச்சி சம்பந்தமான ஒரு நோய் தோன்றிவிட்டது. சுமார் ஆறு வார காலம் படுக்கையிலே கிடந்தான். அப்பொழுது இவனுக்குச் சிகிச்சை செய்துகொண்டு வந்த ஒரு வைத்தியர், இவன் இன்னும் ஆறுமாத காலந்தான் ஜீவித்திருப்பான் என்று சொல்லிவிட்டார். இதை யாரோ இவன் காதில் போட்டுவிட்டார்கள். உயிரோடிருக்கிற வரையில் சுதந்திரத்தோடு இருப்பதென்று தீர்மானித்து விட்டான்; உலக ஆசைகளைத் துறந்துவிட வேண்டுமென்று முடிவு செய்து கொண்டான். இவற்றின் விளைவு என்ன? மேற்படி பொக்கிஷதாரர் உத்தியோகம் போய்விட்டது. பின்னர் இசைப் பாடல்களை நகல் செய்து கொடுத்துச் சம்பாதித்தான். சங்கீதப் பிரியர்கள் சிலர், ஒரு பக்கத்திற்கு இவ்வளவென்று ஒரு திட்டம் போட்டு அதன் பிரகாரம் இவனுக்குக் கொடுத்து வந்தார்கள். இந்தத் தொழில் இவனுக்கு நிரம்பப் பிடித்திருந்தது. இந்தத் தொழிலோடு கூட, நடிப்பதற்குத் தகுதியுடையதான இசை நாடகமொன்று எழுதினான். இது நடித்துக் காட்டப்பட்டது. அனைவரும் பாராட்டினர். ஆனால் இவன்மீது பலரும் பொறாமை கொள்ளத் தொடங்கினர். 1753ஆம் வருஷம் நவம்பர் மாதம், டிஜோன் கழகத்தார், மற்றொரு பரிசுக்கான கட்டுரையை விளம்பரப்படுத்தியிருந்தனர். மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகள் உண்டானதற்குக் காரண மென்ன? இவற்றை இயற்கைச் சட்டங்கள் அங்கீகரிக்கின்றனவா? என்ற வினாவைக் கொடுத்து விடை அளிக்கும்படி கேட்டிருந்தனர். ரூஸோ, இந்தப் போட்டியில் கலந்து கொள்வததென்று தீர் மானித்தான். இதற்காக - கட்டுரை எழுதுவதற்காக - தெரேஸே யுடன், இயற்கையழகு செறிந்திருந்த ஓர் இடத்திற்குச் சென்றான். அங்கு சில காலம் தங்கி, கட்டுரையை எழுதி முடித்தான்; கழகத்திற்கு அனுப்பினான். ஆனால் இந்தத் தடவை இவனுக்குப் பரிசு கிடைக்கவில்லை. வேறொரு பாதிரிக்குக் கிடைத்தது. பரிசு கிடைக்கவில்லையே என்பதற்காக ரூஸோ மனமுடைந்து போகவில்லை. இவனுக்குப் பரிசு கிடைக்கவில்லையே யாயினும், மேற்படி கட்டுரை, நூல் வடிவமாக வெளிவந்ததும் இவனுடைய புகழ் முன்னிலும் பன் மடங்கு அதிக மாயிற்று. இந்தக் கட்டுரையின் சாரத்தை இரண் டாவது அனுபந்தத்தில் குறிப்பிட்டுள்ளோம். 6. தாய்நாட்டுப் பற்று இரண்டாவது கட்டுரையை எழுதி டிஜோன் கழகத்திற்கு அனுப்பிவிட்டு, ஜினீவா போகவேண்டுமென்ற எண்ணம், ரூஸோ வுக்கு உண்டாயிற்று. ஆனால், தான் ஒரு கத்தோலிக்கனாகி விட்ட படியால் அங்கே உரிமையுள்ள ஒரு பிரஜையாகச் செல்ல முடியா தென்பது இவனுக்குத்தெரியும். உரிமையுள்ள ஒரு பிரஜையாகவே தன் தாய் நாட்டில் சென்று இருக்க இவன் விரும்பினானே தவிர, சாதாரண ஒரு மனிதனாகச் சென்று இருக்க விரும்பவில்லை. எனவே ஜினீவா சென்றதும், கத்தோலிக்க மதத்தைத் துறந்தான்; பழைய புராட்டெட்டெண்ட் மதத்தைத் தழுவிக் கொண்டான்; பிரஜா உரிமையைப் பெற்றான். ஜினீவா குடியரசின் சுதந்திரக் காற்று இவன் தேகத்திலே பட்டு, உள்ளத்திலே புதிய சக்தியை உண்டு பண்ணியது. பிரஜா உரிமையோடு வாழ வேண்டு மென்பதற்காக இவன் மதத்தைக் கூடத் துறந்துவிட்டான். சுதந்திரம் பெரிதா? மதம் பெரிதா? ஜினீவா வாசிகள் இவனை ஆடம்பரமாக உபசரித்தார்கள். தங்களிலே ஒருவன், டிஜோன் இலக்கியக் கழகத்தாரால் சன்மானிக்கப் பட்டதும், இலக்கிய உலகத்திலே இவனுக்கு நிரந்தரமானதொரு தானம் கிடைத்திருப்பதும், தங்கள் அனைவருக்கும் ஒரு பெருமையென்று கருதினார்கள். இவர்களுடைய அன்பான உபசரிப்பிலே சுமார் நான்கு மாத காலம் ரூஸோ ஜினீவாவில் தங்கி னான். பின்னர் பாரிஸுக்கு வந்தான். அப்பொழுது இவனுடைய இரண்டாவது கட்டுரை நூல் வடிவமாக வெளிவந்தது. இதுவும், முதல் கட்டுரையைப் போல் ஐரோப்பிய ஜன சமுதாயத்திலே ஓர் அதிர்ச்சியை உண்டு பண்ணியது. இந்த இரண்டு கட்டுரைகளும் சேர்ந்து உலகத்தையே அசைத்துக் கொடுத்துவிட்டன என்று ஓர் ஆங்கில ஆசிரியன் கூறுகிறான். தனக்கு உபகாரம் செய்தவர்களை ரூஸோ எப்பொழுதும் மறந்ததாகத் தெரியவில்லை. ஏன் இதை இங்குக் குறிப்பிட வேண்டி யிருக்கிறதென்றால், இவனுடைய ஜீவிய சரித்திரத்தை எழுதியுள்ள சில ஆசிரியர்கள், இவனை ஒரு நன்றிகெட்ட மனிதனாக வரு ணித்துத் திருப்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவனை ஓர் எதிர்கால புருஷனாகக் கருதிக்கொண்டு, அந்த நிலையில் இவனை வைத்து, இவனுடைய நடவடிக்கைகளைப் பொருத்திப் பார்த்தால் தான், இவன், மனித குணங்களுடைய ஒரு மனிதன் என்பது நன்கு தெரியவரும். இவன் அநேக சந்தர்ப்பங்களில், தன்னை ஆதரித்த நண்பர்களுடன் சண்டை போட்டிருக்கிறான் என்பது உண்மை. அவர்களிற் சிலரைத் தனது எழுதுகோலினால் தாக்கியிருக்கிறான் என்பதும் உண்மை. ஆனால் எவ்வித காரணமும் இல்லாமலா? அநியாயமாகவா? இல்லவே இல்லை. யார் இவனுடைய ஆத்மாவின் அதிவாரத்தையே தாக்கியிருக்கிறார்களோ அவர்களை இவன் திருப்பித் தாக்கியிருக்கிறான்; நன்றாகவும் தாக்கி யிருக்கிறான்; ஆனால் கண்ணியமாகத்தான். இவன், தன் அந்திய காலத்தில், தனது சுயசரிதத்தை எனது குற்றங்களின் m§Ñfhu«”(My Confessions) என்ற பெயர் கொடுத்து எழுதியிருக்கிறான். இதில் தன்னை ஓர் அந்நியனாகக் கருதிக்கொண்டு தனது குற்றங்களையெல்லாம் ஒளிவு மறைவின்றி எடுத்துக் காட்டியிருக்கிறான். இஃது இவனுடைய பெருமையைக் காட்டுகிறதே தவிர சிறுமையைக் காட்டவில்லை. ஆனால், ஜாதிப் பற்று நிரம்பிய சில ஆசிரியர்கள், ரூஸோவின் சுயசரிதத்தை ஆதார மாக வைத்துக்கொண்டே ரூஸோவைத் தாக்கியிருக்கிறார்கள்! ரூஸோவின் நன்றி விசுவாசத்திற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை மட்டும் இங்குக் குறிப்பிட்டுவிட்டு மேலே செல்வோம். டிஜோன் இலக்கியக் கழகத்திற்கு இரண்டாவது கட்டுரையை எழுதி அனுப்பிவிட்டு, ரூஸோ, பாரிஸிலிருந்து ஜினீவாவுக்குப் புறப்பட்டுச் சென்றானல்லவா? போகிற வழியில் ஷாம்பெர்ரி (Chamberry) என்ற இடத்திற்குச் சென்ற, அங்கு வசித்துக் கொண்டிருந்த வாரென் சீமாட்டியைப் பார்த்தான். ஏற்கனவே அவள், இவனைப் பிழைக்கத் தெரியாதவன் என்று கருதி அலட்சியப்படுத்தியிருந்தாள். இவ னுடைய சிநேகம் அவ்வளவு சிறப்புடையதல்லவென்றும் நினைத் திருந்தாள். ரூஸோவுக்கு இது நன்றாகத் தெரியும். ஆயினும், தன்னை ஆதரித்தவள் என்ற ஒரே காரணத்திற்காகவும், தான் இப்பொழுது ஒரு சௌகரியமான நிலைமையில் இருப்பதனால், அவளுக்கு, தன்னால் முடிந்த உதவியைச் செய்யவேண்டுமென்ற நோக்கத்துடனும் அவளைப் பார்க்கச் சென்றான். அவள் பழைய சோபையையும் செல்வாக்கையும் இழந்து கிடந்தாள். வறுமையும் முதுமையும் அவளை மூடிக்கொண்டு வந்தன. அவளைப் பார்த்து ரூஸோ மிகவும் துக்கித்தான். தன்னோடு வந்திருக்கும்படியும், அவளுக்கு வேண்டிய எல்லாச் சௌகரியங்களையும் தன் சொந்தப் பொறுப்பில் செய்து கொடுப்பதாகவும் சொன்னான்; பன்முறை வேண்டிக் கொண்டான். ஆனால் அந்த வாரென் சீமாட்டி, ரூஸோவின் ஆதரவில் வாழ்வது தனது கௌரவத்திற்குக் குறை வென்று கருதினாள்; இவனுடைய வேண்டுகோளுக்கு இசைய மறுத்துவிட்டாள். என்ன செய்வான் ரூஸோ? ஜினீவாவிலிருந்து பாரிஸுக்கு வந்து சேர்ந்ததும், ரூஸோ வின் இரண்டாவது கட்டுரை நூல் வடிவமாக வெளிவந்ததல்லவா? இதற்குப் பிறகு, இவனுக்குப் புதிய புதிய சீமான்கள், சீமாட்டிகளுடைய நட்புக் கிடைத்தது. இவனோடு நெருங்கிப் பழகுவது தங்களுக்கு ஒரு கௌரவ மென்று அவர்கள் கருதினார்கள். இவனும் அவர்களோடு நெருங்கிப் பழகினான். இங்ஙனம் பழகியவர்களுள் டிஎப்பினே (DE pinay) குடும்பத்தினர் ஒருவர். இவர்கள் பெரும் பணக்காரர்கள். இவர்களுக்குப் பாரிஸைச் சுற்றிப் பல பங்களாக்கள் இருந்தன. பாரிஸுக்குச் சமீபத்தில் kh©£ மோரென்ஸி (Montmoreey) என்பது ஓர் இடம். அஃது இயற்கைக் காட்சிகள் நிறைந்தது. அங்கு மேற்படி டிஎப்பினே தம்பதிகளுக்கு ஓர் அழகிய மாளிகை இருந்தது. அஃது அப்பொழுதுதான் புதுப்பிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்தது. ஒருநாள் ரூஸோ, எப்பினே சீமாட்டியுடன் அந்த இடத்தின் வழி யாக உலாவச் சென்றான். அப்பொழுது மேற்படி மாளிகையையும் அதைச் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளையும் பார்த்து ஆனந்த பரவசமடைந்தான். அந்த ஆனந்தப் பெருக்கிலே, ரூஸோ, அந்தச் சீமாட்டியிடம் இதுதான் என் மனதுக்குப் பிடித்த இடம் என்று கூறினான். குறிப்பறிந்த அந்தச் சீமாட்டி, மேற்படி மாளிகையை, ஒரு கவிஞன் வசிப்பதற்குரிய இடமாகச் சீர்திருத்தி யமைத்துக் கொடுப்ப தாகவும், அதில் சென்று வசிக்கும்படியும் வேண்டிக் கொண்டாள். ரூஸோவினிடத்தில் அவ்வளவு பிரேமை அவளுக்கு. அங்கே ரூஸோவை வசிக்கும்படி சொன்னதோடல்லாமல், அந்தச் சீமாட்டி, உன்னால் தெரிந்தெடுக்கப்பட்ட இந்த இடம் உன்னுடையது தான் என்று சொல்லி அதை இவனுக்குச் சுவாதீனப்படுத்தியும் கொடுத் தாள், ஆனால் ரூஸோ, இந்த நன்கொடையைச் சுலபமாக ஏற்றுக்கொண்டு விடவில்லை. ஏனென்றால், தனக்குச் சில வாழ்க்கைக் சௌகரியங்களை ஏற்படுத்திக்கொண்டு விட்டு, தன் தாய்நாடாகிய ஜினீவாவிலேயே போய் நிரந்த வாசம் செய்ய வேண்டுமென்பது இவன் விருப்பம். தாய் நாட்டிலே இவ்வளவு சௌகரியங்களும், இத்தனை சீமான் சீமாட்டி களுடைய ஆதரவும் அன்பும் இல்லாமலிருக்கலாம். ஆயினும் அது தன் தாய்நாடு; தான் பிறந்த பூமி. அந்நிய நாட்டிலே ஓர் அரசனாக இருப்பதைக் காட்டிலும் சொந்த நாட்டில் ஒரு குப்பை கூட்டுவோ னாக இருப்பது மேலல்லவா? இந்த மாதிரியான மனப்பான்மை யுடையவன் ரூஸோ. எனவே, டிஎப்பினே தம்பதிகள் மேற்படி மாளிகையில் சென்று வசிக்குமாறு இவனை அதிகம் வற்புறுத்த வேண்டியதா யிற்று. அவர்களுடைய விசுவாசத்தையும் வேண்டுகோளையும் இவனால் மறுக்க முடியவில்லை. கடைசியில் தன்னுடைய நாற்பத்து நான்காவது வயதில், அதாவது முதன் முதலாக மேற்படி மாளிகையைப் பார்த்த அடுத்த வருஷம் - 1756-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி - அதில் சென்று குடியேறினான். அதற்கு ஆசிரமம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. அந்த ஆசிரமத்தில் ஒரு துறவி போல் இருந்து தன் வாழ்நாளைக் கழித்துவிட வேண்டுமென்று ரூஸோ தீர்மானித்தான். இந்த எண்ணத்தோடுதான் அங்குச் சென்று குடி யேறினான். ஆனால் விதி, இவனை வேறு வழியாக இழுத்துக் கொண்டு போகக் காத்துக்கொண்டிருந்தது. ஆசிரமத்தில் ரூஸோவுடன், டிஎப்பினே தம்பதிகளும் இன்னும் இரண்டொரு குடும்பத்தினரும் சென்று வசித்தார்கள். சிறிது காலம் எல்லோரும் சர்வசாதாரணமாகப் பழகி வந்தார்கள். இப்படி யிருக்கையில், டிஎப்பினே சீமாட்டிக்கு, நூல்கள் எழுத வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. ரூஸோவினுடைய காற்று வீசியதோ என்னவோ தெரியவில்லை. எந்த மாதிரியான நூல்களை எழுத அவள் ஆசை கொண்டாள்? நாவல்கள்! காதற் சித்திரங்கள்! தினந்தோறும் தான் எழுதுவதை ரூஸோவுக்குப் படித்துக் காட்டுவாள். அவளுடைய எண்ணமென்னவென்றால், நாம் ரூஸோவுக்கு இவ்வளவு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறோமே, அவன் ஏன் நம்மை ஒரு பிரபல நூலாசிரியையாக்கக்கூடாது என்பது தான். தான் சொல்வதையெல்லாம் ரூஸோ கேட்க வேண்டுமென்று எதிர்பார்த்தாள் அந்தப் பணக்காரச் சீமாட்டி. பணக்காரர்களுடைய மனப்பான்மையே இப்படித்தான். ஒருவனுக்கு அற்ப சௌகரியத்தைச் செய்துகொடுத்துவிட்டு, அவனைத் தங்கள் சுய நன்மைக்காக எவ்வளவு தூரம் உபயோகித்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு தூரம் உபயோகித்துக் கொள்ளப் பார்ப்பார்கள். ரூஸோ, சுயமரியாதையும் தன்னம்பிக்கை யுமுள்ளவன், தனிமையிலே, இயற்கையன்னையின் திருவடிகளிலே தன் பொழுதை நிம்மதியாகப் போக்க வேண்டுமென்பதற்காகவே இவன் ஆசிரமத்திற்கு வந்தான்; டிஎப்பினே சீமாட்டியினுடைய காதல் நாடகங்களைக் கேட்பதற்காக அல்ல. ஆயினும் பல மாதங்கள் வரை, ரூஸோ, இந்த தொந்தரவைப் பொறுமையோடு சகித்துக் கொண்டிருந்தான். கடைசியில், டிஎப்பினே சீமாட்டிக்கும் இவனுக்கும் மன தாபம் ஏற்பட்டுவிட்டது. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. ரூஸோ, தன்னொருத்திக்கே உரியவனென்று டிஎப்பினே சீமாட்டி கருதினாள். வேறு சில சீமாட்டிகள் ரூஸோவிடம் வந்து போவதை அவள் விரும்பவில்லை. ரூஸோவின் நடவடிக்கைகளில் சந்தேகங் கொண்டாள். ரூஸோவும் அவள் மீது சந்தேகங் கொண் டான். சந்தேகம் சந்தேகத்தைத் தானே உண்டுபண்ணும்! டிஎப்பினே சீமாட்டியும் வேறு சிலரும் சேர்ந்துகொண்டு தனக்கு விரோதமாகச் சூழ்ச்சி செய்து வருவதாக ரூஸோ கருதிவிட்டான்; தன் நல்ல பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டு விடுமென்று அஞ்சி னான். இந்தச் சந்தேகம், இந்த அச்சம் இரண்டும் சேர்ந்து ரூஸோ வின் பிற்பாதி வாழ்க்கையை மிகவும் பரிதாபகரமாக்கி விட்டன. டிஎப்பினே சீமாட்டியினுடைய ஆதரவில் இனியும் இருக்க முடியாதென்று சொல்லிவிட்டு 1757-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி, மாண்ட்மோ ரென்ஸியிலேயே வேறோரிடத்தில் சென்று குடியேறி விட்டான் ரூஸோ. ஆசிரமத்தில் சுமார் இருபது மாத கால வாசந்தான்! கடைசியில் நான் சுதந்திரம் பெற்றேன். இயற்கையினால் எனக்களிக்கப் பட்ட நேர்மையோடும் சுயேச்சை யோடும் இனி நான் இருக்கலாம் என்று கூறினான் ரூஸோ, வேறிடத்தில் வந்து குடியேறின பிறகு. ஆனால், ரூஸோ ஆசிரமத்தில் வசித்துக் கொண்டிருந்த காலத்தில் உலகத்திற்கு ஒரு நன்மை ஏற்பட்டது. எப்படியென்றால், இந்தக் காலத்தில்தான் இவன் சமுதாய ஒப்பந்தம் என்ற நூலையும், எமிலி என்ற கல்வியைப் பற்றிய நூலையும் எழுதவேண்டுமென்று திட்டம் போட்டு இவைகளுக்கான சில குறிப்புக்களையும் எடுத்து வைத்தான். மற்றும் இந்தக் காலத்தில் ஜுலி அல்லது புதிய ஹெலாய்ஸே என்ற ஒரு காதல் கதையையும் எழுதினான். மாண்ட்மோரென்ஸியில், ரூஸோ, புதிதாகக் குடியேறின இடம் இருக்கிறதே அது மகாமோசமான இடம். சிறிய, பழைய வீடு. காற்றோட்டமில்லாத அறைகள். வெளிச்சமே கிடையாது. சுவர் களிலும் தரையிலும் ஒரே ஈரம், வீட்டுக்குள் நுழைந்தாலே ஒரு துர்நாற்றம் வீசும். போதாக்குறைக்கு எலிகள் வேறு இங்கே இல்லற தர்மத்தை ஒழுங்காக நடத்தி வந்தன. ரூஸோ, இந்த வீட்டில் குடியேறின சமயம், நல்ல கடுமையான குளிர்காலம், பேனா முனையிலிருந்து மைகூட உறைந்துபோய்விட்டது என்று இவன் கூறுகிறான். இதனோடு இவனுக்கு நோய் வேறே; வயிற்றுக் கோளாறு, சாதாரணமாக சிந்தனா சக்தி யுடையவர்கள் அஜீரண ரோகத்தினால் அவதைப் படுவது வழக்கம். இந்தப் பாக்கியம் ரூஸோவுக்கும் இருந்தது. ஆனால் இருட்டறையிலே, பனிக்கட்டி யின் மத்தியிலே, நோயினால் அவதைப்பட்டுக் கொண்டாவது சுதந்திரமாயிருக்கத்தான் இவன் விரும்பினானே தவிர, கழுவப் பெறாத உணவுக் கலயங்களுக்கு மத்தியிலே, அகத்திலே அணுவள வும் அன்பில்லாத பிரபுக்களின் தயவிலே, ஒழுக்கத்தை, பிறப்பித்த கடவுளிடத்திலேயே ஒப்படைத்து விட்டு உலவுகின்ற சீமாட்டி களின் அணைப்பிலே வாழ இசைந்தானில்லை. உலகம், இவனைப் பைத்தியக் காரனென்று ஏன் சொல்லாது? இந்தப் பைத்தியக்கார வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தபோது தான், இந்தத் தரித்திர தசையிலேதான், இந்த அஜீரண ரோகத்தினால் அவதைப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலேதான், ஆம், இருட்டும் அழுக்கும் நிறைந்த இந்த வீட்டிலே இருந்துகொண்டு தான், ரூஸோ, அடிமைத்தனம் என்னும் அந்தகாரத்திலே ஆழ்ந்து கிடந்த ஐரோப்பிய மகா ஜனங்களுக்கு வெளிச்சம் போலிருந்து வழிகாட்டிய, ஐரோப்பிய ஜன சமுதாயத்தின் மீது படிந்திருந்த மாசுக்களைத் துடைப்பதற்கு ஏதுவாயிருந்த சமுதாய ஒப்பந்தம் என்ற நூலை எழுதினான். எமிலி என்ற கல்வியைப் பற்றிய நூலும் இங்கிருந்த போதுதான் எழுதப்பட்டது. ரூஸோ, இந்த மாதிரி ஒரு கேவலமான வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்த போதிலும், ஒரு பிரபல எழுத்தாளன் என்ற முறையில் பலர் இவனை வந்து பார்த்து விட்டுப் போனார்கள். மனங்கலந்து பழகிய நண்பர்கள் யாரும் இந்தக் காலத்தில் இவனுக்கு இல்லை; ஆனால் அறிமுகமானவர்கள் அதிகமாயினர். பிரபுக்கள், நாடகாசிரியர்கள், நாவலர்கள், அரசியல்வாதிகள் முதலிய பலர் இவனுடைய நட்பைப் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டு, இந்த பாழடைந்துபோன வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். பிரெஞ்சு அரச குடும்பத்தினரும் இங்ஙனம் வந்து கொண்டிருந்தவர்களில் சிலர். ரூஸோ குடியிருந்த இடத்திற்கு அருகில் லக்ஸம்பர்க் தம்பதிகள்1 வசித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; பிரபு வமிசத்தினர். லக்ஸம்பர்க் பிரபு, சிறந்த போர் வீரன் என்று புகழ்படைத்திருந்தான். அப்பொழுது பிரான்ஸை ஆண்டு கொண்டிருந்த பதினைந்தாவது லூயி2 மன்ன னுடைய நெருங்கிய நண்பன். இப்படிப்பட்ட ஒரு பிரபுவினுடைய சிநேகம் ரூஸோவுக்கு வலியக் கிடைத்தது. ஒரு நாள் ரூஸோ, தன் வீட்டில் ஏதோ அலுவல் பார்த்துக் கொண்டிருக்கையில், மேற்படி லக்ஸம்பர்க் சீமான், தன் பரிவாரங்களுடன் திடீரென்று காட்சியளித்தான். ரூஸோ திகைத்துப் போய், தன் எளிய வாழ்க்கையை, ஒரு பிரபு, நேரில் பார்க்க நேரிட்டு விட்டதே என்று வருத்தப்பட்டான். ஆனால் அந்த லக்ஸம்பர்க் பிரபு கொஞ்சம் இளகிய மனம் படைத்தவன், ரூஸோவைப் போன்ற ஒரு தத்துவ ஞானி, இந்த மாதிரி கேவலமாக வாழ்ந்து கொண்டிருப்பது பிரெஞ்சு மக்களுக்கே கேவலம் என்று கருதி, தன் மாளிகையிலேயே ஒரு தனியான இடத்தை ஒதுக்கி அதில் வந்து வசிக்கும்படி ரூஸோவை வற்புறுத்தினான். ரூஸோவும் இதனை மறுக்க இயலாதவனாய், மேற்படி இடத்திற்குத் தன் வாசதலத்தை மாற்றிக் கொண்டான். இதிலிருந்து, லக்ஸம்பர்க் தம்பதிகளுக்கும் ரூஸோவுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. லக்ஸம்பர்க் தம்பதிகள் மூலம் வேறு பல சீமான் சீமாட்டிகளும் ரூஸோவிடம் வந்து போக ஆரம்பித்தார்கள். அவர்கள் இவனுக்கு அளித்த காணிக்கைப் பொருள்களும் பாராட்டு மொழிகளும் எண்ணிறந்தன. ஆனால் ரூஸோ, இவைகளையெல்லாம் கண்டு மயங்கிப் போய்விட வில்லை; தன் வாழ்க்கை அந்ததையும் உயர்த்திக் கொள்ளவில்லை. எப்பொழுதும் போல் இவன் அக்கம் பக்கத்திலுள்ள கிராமவாசி களிடம் சென்று பழகிக் கொண்டிருந்தான்; அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவையானால் உடனே சென்று செய்வான். பணக்கார கோஷ்டியினர் எனக்குக் காட்டிய தூப தீபங்களினின்று எழுந்த புகையானது என் மண்டைக்குள் ஏறி என் அறிவை மயக்கிவிட வில்லை என்று இவன் ஓரிடத்தில் கூறுகிறான். இன்னோரிடத்தில் சொல்கிறான். பெரிய மனிதர்களென்று சொல்லப் படுகிறார்களே அவர்களை நான் வெறுக்கிறேன். அவர்களுடைய ஆடம்பரம், கல்நெஞ்சம், விருப்பு வெறுப்புகள், அற்பத்தனம், மற்ற துர்க் குணங்கள் ஆகிய எல்லாவற்றையுமே வெறுக்கின்றேன். அவர்களை நான் அதிக கேவலமாகக் கருதாமலிருந்தால் அவர்கள் மீது இன்னும் குறைவாக துவேஷம் பாராட்டியிருப்பேன். இந்த மாதிரி மனப் பான்மையுடன்தான் நான் மாண்ட்மோரென்ஸி மாளிகையில் சென்று வசித்தேன். அந்த மாளிகையின் சொந்தக்காரர்களைப் பார்த்தேன். அவர்களிடம் நேசங் கொண்டேன். ஆம், அவர்களை நேசித்தேன். என் உயிருள்ள வரையில் முழு மனத்துடன் முழு பலத்துடன் அவர்களை நேசிப்பேன். அவர் களுக்காக நான் உயிரைக் கொடுப்பேன் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால், என் னுடைய தற்போதைய திதியில் அது மிகவும் அற்பமான கொடை யாகும். ஆனால் என் மனப்பூர்வமாக நான் எதை விரும்பு கிறேனோ அதை, அதாவது வருங்கால சந்ததியாரிடம் நான் எதிர்பார்க்கிற நன் மதிப்பைக் கொடுப்பேன். எதிர்கால சந்ததியார் எனக்கு நிச்சயம் நன்மதிப்பைக் கொடுப்பர். அவர்கள் கொடுக்கத்தான் வேண்டும். ஏனென்றால் அந்த நன்மதிப்பைப் பெற நான் உரியவன். வருங் காலத்தார், எப்பொழுதுமே, நிகழ்காலத்தைப் பற்றி நியாயமாக நடந்து கொள்வார் களாதலால், எனக்குரிய மதிப்பை எனக்கு அளிப்பர் என்பது நிச்சயம். லக்ஸம்பர்க் தம்பதிகளும் ரூஸோவை முழு மனத்துடன் நேசித்து இவனுக்கு வேண்டிய எல்லாச் சௌகரியங்களையும் செய்து கொடுத்தார்கள். இங்ஙனம் இருசார்பினரும் பரபரம் பிரீதியுடன் நடந்து கொண்ட போதிலும், ரூஸோ, எப்பொழுதுமே தன் சுயமரியாதையை இழந்து விடுகிற மாதிரி நடந்து கொண்டது கிடையாது. பணக்காரர்கள் முன்னிலையில் பல்லிளிக்கவோ, இறந்து போன ஜீவகளையை உயிர்ப்பித்து முகத்தில் கொண்டுவந்து காட்டவோ இவனுக்குத் தெரியாது. லக்ஸம்பர்க் தம்பதிகள் இவனை நேரில் சாப்பிடக் கூப்பிட்டாலொழிய அவர்களுடன் சென்று சாப்பிடமாட்டான். ஒரு சமயம் தெரியாத் தனமாகவோ அல்லது வேறு ஜோலிகள் காரணமாகவோ இவனைச் சாப்பாட்டுக்கு வரும்படி ஒரு வேலைக்காரன் மூலம் சொல்லி அனுப்பினார்கள். போகவே இல்லை ரூஸோ. காத்துப் பார்த்தார்கள் லக்ஸம்பர்க் தம்பதிகள். காரணத்தைத் தெரிந்து கொண்டார்கள். மறுநாள் ரூஸோவிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கூடவே போஜனத் திற்கும் அழைத்துக் கொண்டு போனார்கள். இஃதொரு சிறிய விஷயந்தான். ஆனால் ரூஸோ, இதில் தன் மனிதத்தன்மை யோடு பிரகாசிக் கிறானில்லையா? லக்ஸம்பர்க் தம்பதிகளின் ஆதரவில் வசித்துக் கொண்டிருந்த போதுதான், இவனுடைய ஜூலி என்ற காதல் கதையும், எமிலி என்ற கல்வியைப் பற்றிய நூலும், சமுதாய ஒப்பந்தம் என்ற அரசியல் நூலும் வெளியாயின. இவற்றின் வெளியீட்டுக்கு லக்ஸம்பர்க் சீமாட்டி பெரிதும் துணை செய்தாள்.1 7. கல்வியைப் பற்றிய அரிய நூல் எமிலி என்ற நூலில், சிறுவர் சிறுமியர்களுக்கு எத்தகைய கல்வி போதிக்கப்பட வேண்டுமென்பதைப் பற்றிச் சவிதாரமாக எழுதியிருக் கிறான் ரூஸோ. இவனுடைய காலத்தில் போதிக்கப் பட்ட கல்வியானது, ஜனங்களை மனித நிலைக்குக் கொண்டு போகாமலிருப்பதைப் பார்த்து மனம் புழுங்கிப் போய்தான் இவன் இந்த நூலை எழுதினான். இதனைக் கையெழுத்துப் பிரதியாக ஒழுங்குபடுத்துவதற்கு மட்டும் இவனுக்கு மூன்று வருஷங்கள் பிடித்தன. கல்வியைப் பற்றிப் பொதுவாக ரூஸோ கொண்டுள்ள அடிப்படையான சில கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, இந்த நூலிலிருந்து சில பகுதிகளை மூன்றாவது அனுபந் தத்தில் சுருக்கித் தந்திருக்கிறோம். எமிலி வெளியானபோது ரூஸோவுக்கு வயது ஐம்பது. தனது அனுபவங்களையெல்லாம் திரட்டியே இதில் கொடுத்திருக் கிறான். அப்படித் திரட்டிக் கொடுப்பதற்கான அனுபவமும் தகுதி யும் இவனுக்கு இருந்திருக்கின்றன என்பதை மட்டும் நாம் இங்கு ஒப்புக் கொள்ள வேண்டும். எமிலி, பிற்காலத்திலே, அதாவது பத்தொன்பதாவது நூற்றாண்டிலே ஐரோப்பாவிலே வகுக்கப்பட்ட பல கல்வித்திட்டங் களுக்கெல்லாம் அதிவாரமாயிருந்தது. அநேக நாட்டு அரசாங் கங்கள், இதில் கூறப்பட்டுள்ள கல்வி முறையை ஏறக்குறைய அப்படியே பின்பற்றின. கல்வியைப் பற்றிப் பிற்காலத்திலே எழுதி யுள்ள பல அறிஞர்களும் இவனுடைய நூலிலிருந்து அநேக கருத்துக் களை யெடுத்துக் கையாண்டிருக்கின்றனர். ருஷ்ய அறிஞனாகிய டால்ட்டாய்1 இந்த எமிலியில் கூறப்பட்டுள்ள திட்டப் படியே, தன் குழந்தைகளுக்குக் கல்வி போதிக்க ஏற்பாடு செய்தான் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் இந்த நூல் இவ்வளவு பிரபலமடைந்த போதி லும், இது வெளியான காலத்தில் இதன் ஆசிரியனான ரூஸோ மீது அறிஞர்கள் எவ்வளவு பொறாமைப்பட்டார்கள்! சம்பிரதாயத்திலே தோய்ந்து கிடந்த சமுதாயமானது இவனை எவ்வளவு துன்புறுத்தி யது! கடவுளுக்கும் மனிதர்களுக்கும் தரகர்களாயிருந்து கொண்டு பொருள் சம்பாதித்த புரோகிதர்கள், இந்த எமிலியில் கூறப்பட்ட புதிய கருத்துக்களைக் கண்டு எவ்வளவு நடுங்கிப் போனார்கள்! இவனைப் பழிதீர்க்க வேண்டுமென்று எவ்வளவு பாடுபட்டார்கள்! எமிலி வெளியான இரண்டாவது வாரம். பிரெஞ்சு பார்லி மெண்ட், பாரிஸில்கூடி, இந்த நூலைப் பகிரங்கமாக எரிக்க வேண்டு மென்றும், இதனை யாரும் படிக்கவிடக் கூடாதென்றும், இதன் ஆசிரியனான ரூஸோவை உடனே கைது செய்யவேண்டுமென்றும் உத்தரவு போட்டது. இதன் பிரகாரம் 1762ஆம் வருஷம் ஜூன் மாதம் 11ஆம் தேதி - அதாவது புத்தகம் வெளியான இருபத்தோராவது நாள் - பாரிஸிலுள்ள நீதிமன்றத் திற்கு முன்னால் எமிலி பகிரங்கமாகத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. லக்ஸம்பர்க் தம்பதிகள், பிரெஞ்சு பார்லிமெண்ட் உத்தரவை ரூஸோவுக்கு உடனே தெரிவித்து பிரெஞ்சு எல்லையிலிருந்து வேறெங்கேனும் சென்று விடும்படி யோசனை கூறினார்கள். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்தார்கள். அப்படியே ரூஸோ, என்றைய தினம் பாரிஸில் எமிலி எரிக்கப்பட்டதோ அன்றைய தினம் - 1762ஆம் வருஷம் ஜூன் மாதம் 11ஆம் தேதி - லக்ஸம்பர்க் தம்பதிகள் முதலிய எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டு விடியற்காலை நான்கு மணிக்கு அரசாங்க அதிகாரிகள் எவருக்கும் தெரியாமல் மாண்ட்மோரைன்ஸியை விட்டு வெளியேறிவிட்டான். மறுநாள் காலை விட்ஜர்லாந்து எல்லையை மிதித்தான்; கீழே குனிந்தான்; மண்ணை முத்தமிட்டான்! என் சுதந்திர நாடே! அடைக்கலம் என்று கதறினான். கண்ணீர் தாரை தாரையாகப் பெருகியது. ஆனால், சுதந்திர விட்ஜர்லாந்து இவனைச் சும்மா விட வில்லை. பாரிஸைப் பின்பற்றி விட்ஜர்லாந்திலுள்ள ஜினீவா, பெர்ன், நியூஷாட்டெல் (Berne, Neuchatel) முதலிய ஊர்களும் எமிலியைத் தீயிட்டுக் கொளுத்தின; தங்கள் தங்கள் நகர எல்லைக்குள் ரூஸோ வரக் கூடாதென்று தடை உத்தரவும் விதித்தன. ரூஸோவைச் சித்த சுவாதீன மில்லாதவன் என்று சொன்னவர்கள், தங்கள் சித்தத்தையே இழந்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை. ஐரோப்பா முழுவதிலும் எனக்கு விரோதமான ஒரு சாபக்குரல் எழுந்தது. எவ்வளவு ஆக்ரோஷத் துடன் அஃது எழுந்தது தெரியுமா? இதற்குமுன் எப்பொழுதுமே இந்த மாதிரி உண்டானது கிடையாது. என்னை ஒரு மதத் துவேஷியாக, நாதிகனாக, பைத்தியக்காரனாக, காட்டு மிருகமாக, ஓநாயாகக் கருதிவிட்டார்கள் ஜனங்கள். என்னை வேட்டையாடித் தீர்த்துவிட வேண்டுமென்று உலகத்திற்கு ஓர் ஆசை தோன்றிவிட்டாற் போலிருக்கிறது என்று புண்பட்ட மனத்தோடு கூறுகிறான் ரூஸோ. கடைசியில் பாய் டி லா ^®(Boy de la Tour) என்ற ஒரு சீமாட்டி யினுடைய ஆதரவின் பேரில் ப்ருஷ்யா தேசத்தின் எல்லையிலுள்ள nkh£oa®Þ(Motiers) என்ற ஊரை அடைந்து அங்கே ஒரு சிறிய வீட்டில் குடியேறினான். சுமார் முப்பத்தெட்டு மாதகாலம் இந்த வீட்டிலே வாசஞ் செய்து கொண்டிருந்தான். இங்கே பல பேருடைய நட்பு இவனுக்குக் கிடைத்தது. எந்தெந்த ஊர்களில் இவனுடைய நூல் நெருப்புக் கிரையாயிற்றோ அந்தந்த ஊர்களிலிருந்தே அநேகர் வந்து இவனைக் கண்டு பேசிப் போனர்கள். அவர்களுடைய ஆதரவும் அன்பும் இவனுக்குக் கிடைத்தன. இங்ஙனம் வந்து இவனுக்கு மரியாதை செலுத்திவிட்டுப் போனவர்களில் ஜேம் பாவெல்1 என்பவனும் ஒருவன். இவன் ஆங்கிலப் பேரறிஞனாகிய ஸாமியல் ஜான்ஸன்2 என்பவனுடன் கூடவே இருந்து பழகியவன்; அவனைப் பற்றி ரசமான ஒரு நூலும் எழுதியிருக்கிறான். இப்படிப் பட்டவன் ரூஸோவை மோட்டியர்ஸில் வந்து பார்த்து, தன் வாழ்வைப் பண்படுத்திக் கொள்வதற்கான பல யோசனைகளை இவனிட மிருந்து கேட்டுக்கொண்டு போனான். மோட்டியர், இயற்கை வளம் நிறைந்த ஒரு கிராமம். ரூஸோ, இங்குப் பலவாறு சுற்றித் திரிந்தான். செடி கொடிகளைப் பற்றித் தான் கொண்டிருந்த அறிவை விருத்தி செய்து கொண்டான். உணவு விஷயத்திலும், உடை விஷயத்திலும், பிரதியொரு மனிதனுக்குப் பரிபூரண சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தன் சொந்த விஷயத்தில் அனுஷ்டானத் திற்குக் கொண்டு வந்தான். ஓர் அர்மீனி யனைப் போல் உடை உடுத்திக்கொண்டான். இந்த உடை மாற்றத் திற்குத் தகுந்தாற்போலவே பேச்சு வார்த்தைகளைக் கூட மாற்றிக் கொண்டான். அர்மீனிய சம்பிரதாயப் படி, யாரையாவது நண்பர் களை முதன் முதலாகச் சந்திக்கிறபோது ஸலாம் அலைகும் என்றே சொல்வான். கற்பனை உலகத்திலே வாழ்கிறவர்கள் இந்த நில வுலகத்தைப் பொறுத்தமட்டில் விநோத புருஷர்களாகவே இருக்கி றார்கள்! 8. அதமன வாழ்க்கை ரூஸோ இரண்டு புரட்சிகளுக்கு விதை போட்டவன் என்று சொல்வதுண்டு. ஒன்று, அமெரிக்கப் புரட்சி; மற்றொன்று பிரெஞ்சுப் புரட்சி. 1776-ஆம் வருஷம் ஜூலை மாதம் 4-ஆம் தேதி அமெரிக்கா - அதாவது இன்று அமெரிக்கா ஐக்கிய நாடுகள் என்று எந்தப் பிரதேசத்தை அழைக்கிறோமோ அஃது - இங்கிலாந்தினின்று பிரிந்து சுதந்திரக் கொடி நாட்டியது. அப்பொழுது அது, தன் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அந்தப் பிரகடனத்தில் பின்வரும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன:- எல்லா மனிதர்களும் பிறக்கிறபோது சமமாகவே பிறக்கிறார்கள். அப்படிப் பிறக்கிற போதே சிருஷ்டி கர்த்த ரான கடவுள், அவர்களுக்குப், பிறரிடம் பராதீனப்படுத்த முடி யாத உரிமைகளை அளிக்கிறார். இந்த உரிமைகளில், உயிர் வாழ்தல், சுதந்திரமாயிருத்தல், சந்தோஷகரமான வாழ்க் கையை நாடிச் செல்லுதல் ஆகியவை சேர்ந்திருக்கின்றன. இங்ஙனமே பிரெஞ்சுப் புரட்சியின்போது - 1789-ஆம் வருஷம் ஆகட் மாதம் 4-ஆம் தேதி - பிரெஞ்சு தேசீய சபை கூடி, மனித உரிமைகளைப் பற்றிய சாஸனத்தை வெளியிட்டது. அதன் முதல் மூன்று பிரிவுகள் வருமாறு:- 1. மனிதர்கள் பிறக்கிறபோது உரிமையோடும் சமமாக வும் பிறக்கிறார்கள். அப்படியே உரிமையோடும் சமமாகவும் தொடர்ந்து வாழ்கிறார்கள். ஆதலால் அவரவர்களுடைய உபயோகத்தைப் பொறுத்தே சமுதாயத்தில் வேற்றுமைகள் இருக்கலாம். 2. மனிதனுடைய இந்த இயற்கையானதும் மாற்ற முடியாததுமான உரிமைகளைக் காப்பாற்றுவதுதான் எல்லா அரசியல் சேர்க்கைகளின் நோக்கமாகும். சுதந்திரம், சொத்து, பாதுகாப்பு, அடக்கு முறையை எதிர்த்து நிற்றல் ஆகிய இவையே இயற்கையான உரிமைகளாகும். 3. அரசுக்கு மூல காரணமாயிருப்பது ஜனசக்தியே. இந்த ஜனசக்தியிலிருந்து தெளிவாகப் பிறவாத எந்தவிதமான அதிகாரத்தையும், எந்த தனிப்பட்ட மனிதரோ, அல்லது தனிப்பட்ட மனிதர்களடங்கிய ஒரு சங்கமோ பிரயோகஞ் செய்யக்கூடாது. இந்த இரண்டு சுதந்திரப் பிரகடனங்களிலும் காணப்படுகிற மேற்கண்ட வாசகங்கள், ரூஸோ எழுதிய சமுதாய ஒப்பந்தத்தி லிருந்து எடுக்கப்பட்டவை. இதனாலேயே இரண்டு புரட்சிகளுக்கு விதை போட்டவன் என்று இவன் அழைக்கப்படுகிறான். எமிலி எந்தச் சமயத்தில் வெளியாயிற்றோ ஏறக்குறைய அதே சமயத்தில்தான் சமுதாய ஒப்பந்தமும் வெளியாயிற்று. இது வெளி யானதும், ஐரோப்பிய ஜன சமுதாயத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. உலக சரித்திரத்திலேயே ஓரிரண்டு நூல்களைத் தவிர, ரூஸோ வின் சமுதாய ஒப்பந்தத்தைப் போல் வேறெந்த நூலும் ஜனங்களின் இருதயத்தில் ஆதிக்கஞ் செலுத்தவில்லையென்று ஒருவன் கூறு கிறான். இதன் ஆரம்ப வாசகமே எவ்வளவு கம்பீரமாயிருக்கிறது பாருங்கள்; மனிதன் சுதந்திர முள்ளவனாகவே பிறக்கிறான்; ஆனால் பிறகு அவன் எங்கும் கட்டுண்டு கிடக்கிறான். இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இந்த நூலில் அடங்கியுள்ள சில கருத்துக்களைச் சுருக்கமாக நான்காவது அனுபந்தத்தில் எடுத்துக் காட்டியுள்ளோம். சமுதாய ஒப்பந்தம் வெளியானதும், அஃது, எமிலியைப் போன்ற கதியையே அடைந்தது. எந்த ஜினீவாவை ரூஸோ தன் மனப்பூர்வமாக நேசித்தானோ அந்த ஜினீவாவே, இந்தச் சமுதாய ஒப்பந்தத்தை எரித்ததென்று சொன்னால் அதனை இவனால் தாங்க முடியுமா? தவிர, இவனைப் பகிஷ்கரித்தும் விட்டது அது. இதனால் ரூஸோ, ஜினீவாவின் பிரஜா உரிமையை நிராகரித்துவிட்டான். தன் விஷயத்தில் இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, ஜினீவா அரசாங்கத்தை நோக்கியும் அதன் செயலை ஆதரித்து வந்த பிரபுக் களை நோக்கியும் அநேக கடிதங்கள் எழுதினான்: காரசாரமான இந்தக் கடிதங்கள் மலைக் கடிதங்கள்1 என்ற பெயருடன் 1764-ஆம் வருஷம் - அதாவது ரூஸோவின் ஐம்பத்திரண்டாவது வயதில் - நூல் வடிவமாக வெளியாயிற்று. இஃது இன்னும் அதிகமான விரோதிகளை இவனுக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. ரூஸோ, மோட்டியர்ஸில் இருந்த காலத்தில் லக்ஸம்பர்க் சீமானும் வாரென் சீமாட்டியும் இறந்து போனதாகச் செய்தி கிடைத்தது. இஃது இவனுக்கு இன்னும் அதிகமான பயத்தை உண்டு பண்ணிவிட்டது. தனக்கு ஆறுதல் சொல்வார் எவருமில்லை யென்பதையும், தன் தனிமையையும் இன்னும் அதிகமாக உணர்ந் தான். தவிர, இந்தச் சமயத்தில், இவனுடைய நூல்களில் சொல்லப் பட்டிருந்த சில வாக்கியங்களைத் தனித்தனியாகப் பிய்த்தெடுத்து அவைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு இவனைத் தாக்கினர் சிலர். இவனுக்கு எதிர்ப்புக் காட்டுகிற முறையில் அநேக நூல்கள் வெளியாகத் தலைப்பட்டன. இவனுடைய சமகாலத்தவனும் பிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணர்களென்று கருதப்படுகிற இருவர் களுள்1 ஒருவனுமான வால்ட்டேர்2 இவனைப் பகிரங்கமாகத் தாக்க ஆரம்பித்தான். இருவரும் சமுதாய ஊழல்களைக் களைய வேண்டுமென்கிற ஒரே லட்சியமுடையவர்களாயிருந்த போதிலும், ஆரம்பத்திலிருந்தே இருவருக்கு மிடையில் பரபரம் பொறாமையும் பகைமையும் நிலவி யிருந்தன. வால்ட்டேர், பணக்காரர்களோடு கை குலுக்கிக் கொண்டிருப்பதை ரூஸோ விரும்பவில்லை; ரூஸோ, ஏழை களுக்கு மத்தியில் உழன்றுகொண்டிருப்பதை வால்ட்டேர் விரும்ப வில்லை. ஆனால் நடுநிலைமையோடு பார்க்கிறபோது, ஆரம்பத்தில் சிறிது காலம் வரையிலாவது வால்ட்டேரை, ரூஸோ மதிப்புட னேயே பேசிவந்திருக் கிறான்; வால்ட்டேர்தான், ரூஸோவைப் பரிகாச தோரணையிலே நடத்தி வருந்திருக்கிறான். 1755-ஆம் வருஷம் நவம்பர் மாதம், போர்த்துகல் தேசத்திலுள்ள லிபன் நகரத்தில் பெரிய பூகம்பம் உண்டாயிற்று. ஆயிரக்கணக்கான பேர் மாண்டுபோயினர். இது கடவுளின் திருவுளத் திற்குச் சம்மதமோ என்கிற மாதிரியான கருத்துக்களைப் புகுத்தி, வால்ட்டேர், 1756-ஆம் வருஷம் ஒரு கவிதை இயற்றி வெளியிட்டான். இதனைத் தாக்கி எழுதினான் ரூஸோ. இதிலிருந்து இருவரும் அதிகமாகத் துவேஷிக்கத் தலைப்பட்டனர். இஃதொரு வருந்தத்தக்க சம்பவம். ஒரு சமுதாயத்தின் சிந்தனாசக்தியைத் தூண்டிவிட்ட மகான்கள் என்று யாராரை நாம் போற்றி வருகிறோமோ அவர்களுடைய சொந்த வாழ்க்கையைச் சிறிது உட்பிரவேசித்துப் பார்த்தோமானால், பொறாமைத் தீ என்பது அணையாமலிருந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம், இவர்களிற் பலர் ஒரே காலத்தில், ஒரே நாட்டில், ஒரே லட்சியத்திற்காகப் பாடுபடுகிறார்கள்; ஆனால் ஒருவருக்கொருவர் பகைத்துக்கொண்டே வாழ்ந்து வருகிறார்கள். என்ன ஆச்சரியம்? ரூஸோவுக்கும் வால்ட்டேருக்கும் பகைமை! இத்தலியின் மேன்மைக்காக ஒரே காலத்தில் பாடுபட்ட மாஜினி, காரிபால்டி, காவர்3 ஆகிய மூவருக்குள்ளும் பகைமை! பலரும் பல முகங்களிலிருந்து தாக்கத் தொடங்கிவிட்டதைக் கண்டு ரூஸோவின் உள்ளம் கலங்கிவிட்டது. தன்னைச் சுற்றிச் சூழ்ச்சிகள் நடைபெறுவதாக இவன் மருண்டு போய்விட்டான்; எல்லோரையும் தன் எதிரிகளாகக் கருதிவிட்டான்; போதாக் குறைக்கு இவனுடைய எளிய தன்மையைக் கண்டும், இவனுடைய சத்துருக்கள் சிலருடைய போதனையினாலும் இவனை, மோட்டி யர்வாசிகள், அடிக்கடி பரிகசிக்கத் தொடங்கினார்கள்; இவன் வசித்துக்கொண்டிருந்த வீட்டிலே கல்லெறிந்து வேடிக்கை பார்த் தார்கள்; சுருக்கமாகச் சொல்லப்போனால் இவனை ஒரு பைத்தியக் காரனாகக் கருதி நடத்தினார்கள். இனி, மோட்டியர்ஸில் இருக்கக் கூடாதென்று ரூஸோ தீர்மானித்துவிட்டான். சில நண்பர்களுடைய உதவியின் பேரில், சமீபத்திலிருந்த செயிண்ட் பீரே1 என்ற இயற்கையழகு நிரம்பிய ஒரு தீவில் சென்று வசித்தான். இங்குச் சுமார் ஆறு வார காலம் மன நிம்மதியுடன் தங்கினான். மனோரம்மியமான இந்த இடத்திலேயே என் வாழ்நாளை முடித்துவிடத் தீர்மானித்தேன். ஆனால் என் நண்பர்கள் என்னை இங்கு நிம்மதியாக விட்டு வைப்பார்களா என்ற பயம் மட்டும் எனக்கிருந்தது. ஏறக்குறைய இரண்டு மாத காலந்தான் இந்தத் தீவில் நான் கழித்தேன். சுயேச்சையாக என்னை விட்டிருந் தால் இங்கே இரண்டு வருஷமல்ல, இரண்டு நூற்றாண்டுகளல்ல, சாசுவதமாகவே வசித்துக் கொண்டிருப்பேன். ஒரு க்ஷணங்கூட எனக்குச் சலிப்புத் தட்டியிராது.......... இந்தக் காலத்தில் உலக நன்மைக் காக எந்த நூலையும் எழுத எனக்கு உத்தேசமில்லை. ஆனால் என் சொந்த சந்தோஷத்திற்காக, ஐரோப்பாவிலுள்ள செடி கொடிகளை யெல்லாம் பற்றி விதரித்து, தாவர நூலொன்று எழுத வேண்டு மென்று ஆசைப்பட்டிருந்தேன். ஆசைப் பட்டேனே தவிர என் எண்ணம் நிறைவேறவில்லை. இங்கே நான் கழித்த இரண்டு மாத காலமுந்தான், என் வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோஷகரமான பாகம் என்று இந்தக் காலத்தை வருணிக்கிறான் ரூஸோ. ரூஸோ பயந்தபடி, இந்த இடத்திலே நிம்மதியாக விட்டு வைக்க விரும்பவில்லை இவனுடைய அரசியல் விரோதிகள் இவனை. இந்தத் தீவிலே இனி இவன் வசிக்கக் கூடாதென்று பெர்ன் நகரசபை - இந்த நகரசபை எல்லைக்குள்தான் மேற்படி தீவு இருந்தது - தடை உத்தரவு போட்டுவிட்டது. இனி என்ன செய்வது? எங்கே போவது? ஏற்கனவே டேவிட் ஹ்யூம்2 என்பவன் இங்கிலாந்திலே வந்து தங்கியிருக்கும்படி இவனுக்கு அழைப்பு அனுப்பியிருந்தான். ஹ்யூம் பிரசித்திபெற்ற ஒரு தத்துவ ஞானி; சரித்திராசிரியன்; ரூஸோவின் எழுத்து வன்மையில் ஈடுபட்டவன். இதன் காரண மாக இருவருக்கும் கடிதப் போக்குவரத்து நடந்துகொண்டிருந்தது. ரூஸோவின் பரிதாப நிலைமையைக் கேள்வியுற்று ஹ்யூம் எப்படியாவது இங்கிலாந்துக்கு வந்துவிட வேண்டு மென்றும், தான் எல்லாச் சௌகரியங்களையும் செய்து கொடுப்பதாகவும் இவனுக்கு எழுதியிருந்தான். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு இங்கிலாந் துக்குச் செல்லுமாறு நண்பர்கள் ரூஸோவை வற்புறுத் தினார்கள். அப்படியே ரூஸோ பாரி வழியாக இங்கிலாந்துக்குச் சென்றான். பாரிஸில் தங்கியிருந்த ஓரிரண்டு நாட்களும் இவனுக்கு ராஜோபசாரங்கள் நடைபெற்றன. ரூஸோவை ஒருமுறை கண்ணால் பார்த்துவிடவேண்டுமென்று எத்தனையோ பேர் வந்து பார்த்துப் போனார்கள். இவனை அழைத்துக்கொண்டு போக டேவிட் ஹ்யூமே நேரில் பாரிஸுக்கு வந்திருந்தான். இருவரும் 1766-ஆம் வருஷம் ஜனவரி மாதம் 13ஆம் தேதி லண்டன் அடைந்தனர். அப்போது ரூஸோவுக்கு வயது ஐம்பத்து நான்கு. சிறிதுகாலங் கழித்து தெரேஸேயும் வந்து இவனுடன் சேர்ந்து கொண்டாள். ரூஸோ லண்டனுக்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்வி யுற்ற ஆங்கில அறிஞர்கள் பலர் சந்தோஷப்பட்டனர். பத்திரிகைகள் இவன் வரவைப் பற்றி விதரித்து எழுதின. அரச பரம்பரை உள்ளிட்ட பிரபலதர் பலர் சென்று இவனைப் பார்த்துப் பேசினர்; வியந்து பாராட்டினர். ஆனால் ஒரு சிலர் இவனைத் தாக்க ஆரம்பித்தார்கள். இவர்களில் முக்கியமானவர் எட்மண்ட் பர்க்கும்1 ஸாமியல் ஜான்ஸனுமாவார்கள். ஜான்ஸன், ரூஸோ மீது கொண்ட பொறாமையின் காரணமாகவோ என்னவோ இவனை இழிவாகவே பேசிவந்தான். மனிதர்களிலே மிகக் கேவலமானவன் இந்த ரூஸோ. இவன் ஒரு போக்கிரி. இவனைச் சமுதாயத்திலிருந்து விரட்டியடிக்கவேண்டும். மூன்று நான்கு தேசத்தினர் இவனைப் பிரஷ்டம் செய்துவிட்டனர். இப்படிப்பட்டவன் நம் நாட்டில் பாதுகாப்புப் பெறுவது நமக்குப் பெரிய அவமானம் என்று ஜான்ஸன் கூறுகிறான் ஓரிடத்தில். படித்த அறிஞர்களின் மனப் பான்மையைப் பார்த்தீர்களா? டேவிட் ஹ்யூமினுடைய முயற்சியின் பேரில் டாபோர்ட் ஷைரிலுள்ள ஊட்டன்2 என்ற ஊரில் ரூஸோ தன் துணைவியாகிய தெரேஸேயுடன் ஒரு சிறு வீட்டில் வசிக்கத் தொடங்கினான். ஆனால் துரதிருஷ்டவசமாக ஹ்யூமுக்கும் இவனுக்கும் பெரிய மனதாபம் ஏற்பட்டுவிட்டது. கொலை செய்துவிடவே ஹ்யூம், தன்னை இங்கிலாந்திற்கு அழைத்து வந்திருப்பதாகக் கருதிவிட்டான் ரூஸோ. இதற்கு இவனுடைய சித்தப்பிரமைதான் காரணமென்று சிலர் சொல்லு கிறார்கள். இவனுக்கும் ஹ்யூமுக்கும் சமரஸம் செய்து வைக்கச் சில நண்பர்கள் முயற்சி செய்தார்கள். பலனில்லை. மன தாபம் முற்றிவிட்டது. இருவரும் தங்கள் தங்கள் பேனாமுனைகளின் மூலம் தாக்கிக் கொண்டார்கள். இப்படி அறிஞர்கள் பரபரம் தாக்கிக் கொள்வது ஆங்கில இலக்கிய உலகில் பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணிவிட்டது. கடைசியில் ரூஸோ தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற பிரமை பிடித்தவனாய் 1767-ஆம் வருஷம் மே மாதம் கடைசி வாரத்தில் பிரான் வந்து சேர்ந்தான். சுமார் பதினைந்து மாத காலத்தோடு இவனுடைய இங்கிலாந்து வாழ்வு முடிந்தது. பிரான்ஸிற்கு வந்த பிறகு, சுமார் பத்து வருஷ காலத்திற்கு மேலாக பாரி மாநகரில் தெரேஸே சகிதம் வசித்துக் கொண்டிருந் தான். இந்தக் காலத்தில் சம்பாஷணைகள் என்ற நூலையும் சிந்தனைகள் என்ற நூலையும் எழுதினான். சம்பாஷணைகள் என்ற நூலில் தான் ஒரு நிரபராதி என்று ருஜுப்படுத்திக் காட்டு கிறான். ஏனென்றால், தன்னைச் சுற்றி ஒரு பெரிய சூழ்ச்சி நடை பெறுவதாக இவன் மருண்டு கிடந்தான். இதற்கேற்றாற்போல் இவனுக்கு ஆதரவு அளித்து வந்த பழைய நண்பர்கள், ஒருவர் பின் ஒருவராகப் பின்வாங்கிக் கொள்ள ஆரம்பித்தார்கள். யாரைப் பார்த்தாலும் ஒரு சந்தேகம், ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது இவனுக்கு. யோக்கியப் பொறுப்பும் நாணயமுமுடைய ஒரு மனிதனை நான் தேடித்தேடிப் பார்க்கிறேன்; விளக்கு எடுத்துக்கொண்டு மூலை முடுக்கு களெல்லாம் தேடிப் பார்க்கிறேன். ஒரு மனிதனை, ஒரு மனித ஆத்மாவைக்கூடக் காண முடியவில்லை. நண்பர்களென்று சொல்லிக் கொண்டு அருகே வந்து என்னைத் தடவிக்கொடுக்கிறார்கள்; ஆனால் மனத்திற்குள் என்னைத் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் களுடைய இருதயத்திலே ஒளிந்துகொண்டிருக்கும் துவேஷத்தை நான் நன்றாகப் பார்க்கிறேன். குற்றத்தை மன்னித்து விடலாம்; ஆனால் துரோகத்தை மன்னிக்க முடியுமா? பட்சிகளைப் பிடிக்க வேண்டுமானால் அவைகளுக்கு ஆசை வார்த்தைகள் சொல்லி அருகே அழைப்பார்கள். அதைப் போல் என்னை ஏமாற்றக் கருதி என்னருகே வந்து என்னைப் போற்றிப் பேசுகிறார்கள் சிலர். அவர்கள் என்னைப் பகிரங்கமாகத் தாக்கினார்களானால், அதற் காக அவர்களைப் பாராட்டுவேன்; அல்லது அவர்களுக்காக இரக்கப்பட்டிருப்பேன். ஆனால் அப்படி இல்லையே. இதனால் என் புத்திக்கெட்டாத ஒரு தலைமுறையில் நான் வசிக்கிறேன் என்றுதான் முடிவு கட்டவேண்டியிருக்கிறது. இங்ஙனம் தன் நிகழ்கால மனோ நிலைமையை வருணிக்கிறான் ஓரிடத்தில். சிந்தனைகள் என்ற நூலில், சில இயற்கை வருணனைகளும், விரக்தி பாவனையில் சொல்லப்பட்ட சில கருத்துக்களும் இருக் கின்றன. என்னைப் பொறுத்த மட்டில் எல்லாம் முடிந்துவிட்டன. இந்த உலகத்தில் நான் இனி எதிர்பார்ப்பது ஒன்றுமில்லை; யாருக்கும் அஞ்சவேண்டியது மில்லை. நான் ஓர் ஏழை. துரதிருஷ்டக்காரன்; எங்கோ பாதாளத்தில் அழுந்திக்கிடக்கிறேன். ஆனால் கடவுளைப் போல் ஆசாபாசங்களற்ற வனாய் இருக்கிறேன். ............ நான் தனியனாய் என் படுக்கையில் படுத்துக் கிடக்கிறேன். ஒருநாள் நான் பட்டினியாலோ, குளிராலோ, வறுமை யினாலோ இறந்து போய் விடக்கூடும். யாருக்கும் இதனால் தொந்தரவு இராது. ஆனால் இதைப் பற்றி நானே கவலைப்படாதிருக்கும் போழ்து மற்றவர் களுக்கு என்ன கவலை இருக்கப் போகிறது? இந்த வயதிலே நான் சாவையும் வாழ்வையும், நோயையும் ஆரோக்கியத்தையும், புகழ்ச் சியையும் இகழ்ச்சியையும் சரிசமானமாகவே பார்க்கிறேன். இந்தப் பாரி வாசத்தின் போது தனது சுயசரிதத்தின் கடைசி பாகத்தையும் எழுதி முடித்தான் ரூஸோ. ஏற்கனவே மோட்டி யர்ஸில் வசித்துக் கொண்டிருக்கையில் மேற்படி சுயசரிதத்தை எழுதத் தொடங்கி யிருந்தான். மோட்டியர்வாசிகள் தன் விஷயத்தில் காட்டி வந்த விரோத மனப்பான்மைக்கு மத்தியிலேயே, மன ஆறுதலுக்காக இந்தச் சுயசரிதத்தை எழுதத் தொடங்கினான் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ரூஸோ இங்ஙனம் சுயதிருப்திக்காக நூல்கள் எழுதி வந்த தோடு, தன் ஜீவனத்துக்காகப் பாடல்களை நகல் செய்து கொடுத்து வந்தான். இதன் மூலமாகவும், ஏற்கனவே வெளியாகியிருந்த இவனுடைய நூல்களி லிருந்தும், ஒரு சிறு தொகை இவனுக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த வருமானத்தைக் கொண்டு இவன் திருப்திகரமான வாழ்க்கையை நடத்தி வந்தான். நான் எப்பொழுதும் பணக்காரனாயிருந்த தில்லை; ஆனால் எனக்கு எப்பொழுதும் குறைவில்லை என்று கூறுகிறான். இந்தக் காலத்தில் இவனுடன் கூடவேயிருந்து பல வகை யிலும் உதவி புரிந்தவர்களில் முக்கியமானவன் பெர்னார்டின் டி செயிண்ட் பீர்ரே1 என்பவன். இருவரும் மனங்கலந்து பழகினார்கள். ஒன்றாக உண்பார்கள்; ஒன்றாக உலாவப் போவார்கள்; அநேக விஷயங்களைக் குறித்து அருமையான சம்பாஷணைகள் நடத்தி இன்பம் நுகர்வார்கள். இப்படி அந்நியோந்நியமாக இருவரும் சுமார் ஆறு வருஷ காலம் பழகிக் கொண்டிருந்தார்கள். ஆனால் திடீ ரென்று ஒருநாள் - 1778ஆம் வருஷம் மே மாதக் கடைசியில் - இந்த நட்பு முறிந்துபோய்விட்டது. என்ன காரணம் என்பது விளங்க வில்லை. பதினெட்டாவது நூற்றாண்டின் கடைசி பாகத்தில் போலந்து நாட்டைச் சின்னாபின்னப்படுத்திப் பங்குப் போட்டுக் கொள்ளும் முயற்சியில், ருஷ்யா, ப்ருஷ்யா, ஆதிரியா முதலிய நாடுகள் முனைந் திருந்தன. போலந்து மக்களோ, தங்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு மகத்தான தியாகங்களைச் செய்து வந்தார்கள். இந்தக் காலத்தில், வீல்க்கோர்க்கி1 என்ற ஒரு போலிஷ் தேசாபிமானி, பாரிஸுக்கு வந்து ரூஸோவை அணுகி, துரதிருஷ்டமுள்ள தன் நாட்டுக்கு, அதனை அந்நியர்கள் பங்கு போட்டுக்கொள்ள முடியாத வகையில், ஓர் அரசியல் திட்டம் வகுத்துத் தருமாறு கேட்டான். போலந்து மக்கள் ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம், எமிலி முதலிய நூல்களைப் படித்து, இவ னுடைய அரசியல் அறிவிலே அபார நம்பிக்கை வைத்திருந்தார்கள். இந்த நம்பிக்கைக்கறிகுறியாகவே, மேற்படி தேசபக்தன், ரூஸோ விடம் வந்து ஓர் அரசியல் திட்டம் வகுத்துத் தருமாறு கேட்டான். அரசியலைப் பற்றி எழுதிவிட்டு, தான் பட்ட பாடு ரூஸோவுக்கு நன்றாகத் தெரிந் திருந்தது. ஆயினும் வீல்க்கோர்க்கியின் வேண்டு கோளை இவனால் மறுக்க முடியவில்லை. எனவே, 1771-ஆம் வருஷம் அக்டோபர் மாதத்தி லிருந்து 1772-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் வரை சுமார் ஆறுமாத காலம், போலந்தைப் பற்றிப் பரிபூர்ணமாக ஆராய்ச்சி செய்து ஓர் அரசியல் திட்டம் வகுத்துக்கொடுத்தான். இதற்காக எவ்வித சன்மானத்தையும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான். வீல்க்கோர்க்கி, இவனுக்கு ஒரு தொகையைக் கொடுக்க வேண்டுமென்று எத்தனையோ வகைகளில் முயன்று பார்த் தான். முடியவில்லை. மேற்படி அரசியல் திட்டத்தின் ஆரம்ப வாசகங் களில் சில வருமாறு:- போலந்து மக்கள்தான் தங்கள் நாட்டுக்கேற்ற ஒரு நல்ல அரசியல் திட்டத்தை வகுக்க முடியும்..... ஐரோப்பாவிலுள்ள மற்ற நாடுகள் யாவும் அழிவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கையில், போலந்து மட்டும், அழிக்கப் பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகையில் கூட, எப்படி இளமையோடு, உற்சாகத் தோடு இருக்கிறதென்பது தெரியவில்லை. போலந்து மக்கள் சுதந்திரத்தைக் காதலிக்கிறார்கள். இதனால் சுதந்திரத்திற்கு அவர்கள் தகுதியானவர்கள். ரூஸோ மேற்படி திட்டத்தைத் தயாரித்துக் கொடுத்த அடுத்த மாதத்திலேயே, போலந்து, அதன் சுற்றுப்புறமிருந்த வல்லரசு களினால் பங்கு போட்டுக் கொள்ளப்பட்டுவிட்டது. இதைக்கூட ரூஸோ தன்னுடைய மேற்படி திட்டத்தில் சுட்டிக் காட்டியிருக் கிறான். போலந்துக்கு அடிக்கடி ஏற்பட்டுவரும் தொந்தரவுகளுக் கெல்லாம் அடிப்படையான காரணம் அதனுடைய விதீரணந் தான் என்பது இவனுடைய நம்பிக்கை. போலந்து வாசிகளே? உங்கள் நாட்டின் எல்லைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்........ ஒருகால், உங்களைச் சுற்றியுள்ள நாட்டார், உங்களுக்காக இந்தச் சேவையைச் செய்ய நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போலும் என்று இவன் கூறியிருக்கிறான். ரூஸோவுக்கு வரவர பாரி வாசத்திலே ஒரு வெறுப்பு உண்டாகி விட்டது. ஏற்கனவே இவனுக்கு நகர வாழ்க்கை பிடிக்காது. எனவே பாரிஸுக்கு முப்பது மைல் தூரத்திலுள்ள எர்மெனான் வில்லே1 என்ற ஒரு சிற்றூருக்கு, கிரார்டின்2 என்ற ஒரு பிரபுவின் அழைப்புக்கிணங்கச் சென்று அங்கே வசிக்கத் தீர்மானித்தான். பாரிஸை விட்டு வேறேங்கேனும் சென்று வசிப்பதைப்பற்றி ரூஸோ யோசித்துக்கொண்டிருக்கிறானென்பதை அறிந்த சிலர், இவனைத் தங்கள் தங்கள் விருந்தாளியாக வரவேற்று உபசரிக்கத் தயாராயிருப்பதாகத் தெரிவித்தார்கள். இங்ஙனம் தெரிவித்தவர்கள் அரச வமிசத்தைச் சேர்ந்தவர்கள்; பிரபுக்கள்; பொதுவாக இவனிடம் விசேஷ மதிப்பு வைத்தவர்கள். உதாரணத்திற்காக இவனுக்கு வந்த அழைப்புக் கடிதம் ஒன்றை இங்குத் தருகிறோம். அழைப்பு அனுப்பி யவன் அரச வமிசத்தைச் சேர்ந்த ப்ரின் டி லிக்னே3 என்பவன். ரூஸோவினிடம் எவ்வளவு மதிப்பு வைத்து எழுதுகிறான் பாருங்கள்:- ஐயா, அன்றொரு நாள் நான் உங்களைக் காண வந்தேன். உங்களை மறுபடியும் காணவேண்டுமென்ற ஆவல் எனக்கு இருந்த போதிலும். உங்களைத் தொந்தரவுபடுத்த எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால் உங்களைப் பலரும் அடிக்கடி வந்து பார்த்துத் தொந்தரவு கொடுப்பதை நீங்கள் விரும்பவில்லை யென்பது எனக்குத் தெரியும். என்னுடைய ஏற்பாட்டை (அதாவது என்னுடைய விருந்தாளி யாக வந்திருக்க வேண்டுமென்ற ஏற்பாட்டை)ப் பற்றி யோசித்துப் பாருங்கள். என்னுடைய நாட்டில் ஜனங்களுக்கு வாசிக்கத் தெரியாது. இதனால் உங்களைப் போற்றுவோரும் இருக்கமாட்டார்கள்; உங்களைத் துன்புறுத்துவோரும் இருக்க மாட்டார்கள். என்னுடைய புதகங்கள், தோட்டம் முதலிய அனைத்தை யும் உங்களிடம் ஒப்புவித்து விடுகிறேன். உங்களுக்கு விருப்ப மிருந்தால் உங்களை வந்து அவ்வப்பொழுது பார்க்கிறேன்; இல்லா விட்டால் பாராமலே இருக்கிறேன். என்னுடைய இருப்பிடத்திற்குச் சிறிது தொலைவில் உங்களுக்கென்று தனியாக ஒரு வீடு அமைத்துக் கொடுக்கிறேன். அங்கே நீங்கள் பயிரிடலாம்; விதைக்கலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உங்களைப் போலவே எனக்கும் சிங்காதனங்கள், ஆதிக்கங்கள் முதலியன பிடிக்கா. நீங்கள் யார் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டாம்; உங்கள் மீதும் யாரும் ஆதிக்கம் செலுத்தமாட்டார்கள். என் வேண்டு கோளுக்கு நீங்கள் இசைந்தால், நான் நேரில் வந்து உங்களை அழைத்து வருகிறேன். நீங்கள் வசிப்பதற்கென்று பிரத்தியேகப் படுத்தப்பட்டிருக்கும் வீட்டிற்கு சீல மந்திரம் என்று பெயர் கொடுப்பேன். ஆனால் இந்தப் பெயரை பகிரங்கப்படுத்த மாட்டேன். ஏனென்றால் உங்களுடைய அடக்கத்திற்கு நான் மதிப்புக் கொடுக்கிறவன். இந்த என்னுடைய ஏற்பாடு உங்களுக்குப் பிடிக்கவில்லை யென்றால் இதைப்பற்றி நான் எங்கும் பிரதாபிக்காமலே இருந்து விடுகிறேன். ஆனால் உங்களுக்குச் சொல்லாமலே உங்களுடைய நூல்களைப் படித்து வருவேன்; உங்களைப் போற்றியும் வருவேன். 1778ஆம் வருஷம் மே மாதம் ரூஸோ, தெரேஸே சகிதம், எர்மெனான்வில்லேயில் வந்து குடியேறினான். சுமார் இரண்டு மாத காலமே இங்கு வசித்துக்கொண்டிருந்தான்; ஆம்; உயிர் வைத்துக் கொண்டிருந்தான். நோய், மூப்பு, கவலை, மருட்சி முதலியன, வெகு வேகமாக இந்தக் காலத்தில் வந்து இவனை மூடிக்கொண்டன. ஜூலை மாதம் இரண்டாந்தேதி வழக்கம்போல் ரூஸோ காலை ஐந்து மணிக்கு எழுந்து சிறிது தூரம் உலாவச் சென்றான். இயற்கை அன்னையைக் கடைசி முறையாகத் தரிசித்துக்கொண் டான். ஏழு மணிக்குத் திரும்பி வந்து காபி குடித்தான். அவ்வளவு தான். தலை சுற்றியது; கீழே விழுந்தான். மூச்சு நின்றுவிட்டது. அப்பொழுது ரூஸோவுக்கு அறுபத்தாறு வயது. 9. சீல புருஷன் ரூஸோ இறந்துவிட்டான். இந்தச் செய்தி பிரான்ஸின் பல பாகங்களுக்கும் உடனே பரவியது. திரள் திரளாக ஜனங்கள் வந்து அவனுடைய தேகத்தைத் தரிசித்துவிட்டு போனார்கள். சிற்ப நிபுணர்கள் பலர் வந்து அவனுடைய உருவத்தை வரைந்து கொண் டார்கள். ஒரு பொருளின் மதிப்பு, அஃது இல்லாத போழ்துதான் தெரிகிறது என்பது சத்திய வாசகமல்லவா? ரூஸோ, தான் இறந்த பிறகு எந்த இடத்தில் புதைக்கப்பட வேண்டு மென்று விரும்பினானோ அந்த இடத்திலேயே - எர்மெனான் வில்லேயிலுள்ள தோட்டத்திலேயே - புதைக்கப்பட்டான். ஆனால் பதினாறு வருஷங் கழித்து - 1794ஆம் வருஷம் அக்ட்டோபர் மாதம் 11ஆம் தேதி பிரெஞ்சுப் புரட்சி. உத்வேகத்துடன் ஜ்வாலை விட்டு எரிந்து கொண்டிருக்கிறபோது - ரூஸோவின் சவம் மீண்டும் தோண்டி யெடுக்கப்பட்டு மிகுந்த ஆடம்பரத்துடன் பாரி மாநகருக்குக் கொண்டு வரப்பட்டு, பெரிய மனிதர்கள் புதைக்கப் படுகிற இடத்திலே புதைக்கப் பட்டது. அந்தப் பிரேத ஊர்வலத்திற்கு முன்னால் எந்தச் சமுதாயம் ஒப்பந்தம் பாரி மாநகரில் எரிக்கப் பட்டதோ அதே சமுதாய ஒப்பந்தம் ஒரு மதக் கிரந்தம்போல் மரியதையாக எடுத்துச் செல்லப்பட்டது. பிரெஞ்சுப் புரட்சியின் போதுதான் ரூஸோவின் எழுத்துக்களை ஜனங்கள் உணர்ந் தார்கள்; அவனிடம் மதிப்புக் காட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் அவனுடைய சத்துருக்கள் - எல்லோரும் படித்த அறிஞர்கள்தான் - அவன் இறந்தபிறகுகூட அவனை விடவில்லை. அவனுடையப் பெயர், எதிர்காலத்தில் எங்கே ஒலித்துக் கொண்டிருக்கப் போகிறதோ என்று அஞ்சி அவனைப் பற்றியும் அவன் இறந்து போனவிதத்தைப் பற்றியும் இல்லாத பொல்லாத கதைகளை யெல்லாம் கட்டிவிட்டார்கள். ரூஸோவுக்கு அடிக்கடி சித்தப் பிரமை ஏற்படுவதுண்டென்றும், இப்படிப் பட்டதொரு தருணத்தில் அவன் தற்கொலை செய்து கொண்டுவிட்டானென்றும் வதந்திகளைக் கிளப்பி விட்டார்கள். இந்த வதந்திகளை ஊர்ஜிதம் செய்ய அநேக நூல்கள் தோன்றின! ரூஸோவின் எழுத்துக்களி லிருந்தே இந்த வதந்திகளுக்கு ஆதாரம் எடுத்துக் காட்டத் தொடங்கினார்கள் சில அறிஞர்கள்! ஐயோ, அறிவானது எவ்வாறு துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறது! பிரெஞ்சு அரசாங்கத்தார், இந்த வதந்திகளுக்கெல்லாம் ஒரு மூடிபோட்டு மூடிவிட வேண்டுமென்று தீர்மானித்து 1897-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி - இறந்த சுமார் நூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகு - ரூஸோவின் தேகத்தைச் சவக்குழியிலிருந்து எடுத்துப் பரிசோதனை செய்து பார்த்தனர். அவன் தற்கொலை செய்துகொண்டதற்கு அடையாளம் ஒன்றுங் காணப்படவில்லை! ரூஸோவிடம் ஆதியில் யாரார் நெருங்கிப் பழகினார்களோ அவர்களே அவனுடைய பிற்காலத்தில் பரம சத்துருக்களாகி விட்டார்கள். டிடெரோ என்ன, டிஎப்பினே சீமாட்டி என்ன, டேவிட் ஹ்யூம் என்ன, இவர்களெல்லோரும் சேர்ந்து, ரூஸோவைப் பற்றிப் பொது ஜனங்கள் தப்பபிப்பிராயம் கொள்ளுமாறு அவதூறான செய்திகள் பலவற்றைப் பரவச் செய்தனர். இவைகளுக்கெல்லாம் மூலகாரணம் ரூஸோவின் சுதந்திர மனப்பான்மைதான். மற்றவர் களுடைய தயவிலே வாழ்வதென்பதை அவன் அறவே வெறுத்து வந்தான். அவனிடத்தில் அரசர்கள் அன்பு செலுத்தினார்கள்; பிரபுக்கள் பெருமதிப்புக் காட்டினார்கள். பணக்காரச் சீமாட்டிகள் அவன் சொன்ன வேலையைச் செய்யக் காத்துக் கொண்டிருந் தார்கள். அவன் இஷ்டப்பட்டிருந்தால் மாளிகைகளிலே வசித்திருக் கலாம்; அரச போகங்களைத் துய்த்திருக்கலாம். ஆனால் அவன் இவைகளை யெல்லாம் துச்சமாகக் கருதினான். ஒரே ஓர் உதா ரணத்தை மட்டும் இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறோம். ரூஸோ பாரிஸில் வசித்துக்கொண்டிருந்த காலத்தில் - அதாவது 1752-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் - அவன் எழுதிய இசை நாடக மொன்று பிரெஞ்சு சக்ரவர்த்தி தம்பதிகளின் முன் னிலையில் நடித்துக் காட்டப்பட்டது. எல்லோரும் அதனைப் புகழ்ந்து பேசினார்கள். அரச தம்பதி களும் பாராட்டினார்கள். தங்களுடைய பாராட்டுதலுக்கறிகுறியாக ரூஸோவுக்கு ஒரு தொகையைச் சன்மானமாக அளிக்க வேண்டுமென்று கருதி அவனை மறுநாள் அரண்மனைக்கு வந்து போகும்படி சொல்லி யனுப்பி னார்கள். ரூஸோ போக மறுத்துவிட்டான். போனால் அரச தம்பதி களைப் புகழவேண்டியிருக்கும். அனாவசியமாக ஒருவரைப் புகழ்ந்து பேசுவது அவனுடைய சுபாவத்திற்கு விரோதம். தவிர, அவர்கள் ஏதேனும் சன்மானம் கொடுத்தால் அதை மறுக்க முடி யாது. பெற்றுக் கொண்டாலோ தன்னுடைய சுதந்திரம் போய்விடும். இப்படியெல்லாம் யோசித்து, கடைசியில் அரச தம்பதிகளைப் பார்க்கவேயில்லை. எனக்களிப்பதாகச் சொன்ன சன்மானத்தை - உபகாரச் சம்பளத்தை - நான் இழந்து விட்டேன் என்பது வாதவம்; ஆனால், உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டிருந்தால் நான் எந்தத் தளைகளுக்கு உட்பட்டிருப்பேனோ அந்தத் தளைகளிலிருந்து விடுதலையடைந்து கொண்டுவிட்டேன். உபகாரச் சம்பளத்தை ஏற்றுக் கொண்டிருப்பேனாயின், நான் உண்மைக்கும், சுதந்திரத் திற்கும், வீரத்திற்கும் விடைகொடுத்தனுப்பியிருக்க வேண்டியது தான். பிறகு, சுதந்திரத்தைப் பற்றியும், நியாய புத்தியைப் பற்றியும் பிறருக்கு நான் எப்படி எடுத்துச் சொல்ல முடியும்? எப்பொழுதும் முகதுதி செய்து கொண்டிருக்க வேண்டியதுதான்; அல்லது வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்று சொல்லி அரண்மனைக்குப் புறமுதுகு காட்டினான் ரூஸோ. இதற்காக அவனுடைய நண்பர்கள் அவனைக் கண்டித்தார்கள். ஆனால் சுதந்திர வாழ்ககை பெரிதா? நண்பர்களுடைய கோபம் பெரிதா? ரூஸோ எப்பொழுதும் ஆடம்பரம், பகட்டு இவைகளின் முன்னர் தலை குனிந்தது கிடையாது. இச்சகம் பேசி யாருடைய மெச்சுதலையும் எதிர்பார்த்ததில்லை. மனத்தில் என்ன தோன்றியதோ அதை அப்படியே சொல்லிவிடுவான். இஃது எல்லோருக்கும் பிடிக்குமா? ரூஸோவின் வாழ்க்கையிலேயே, எவ்வித மாறுபாடும் அடையாமல் துருவ நட்சத்திரம் மாதிரி திரமாகக் குடிகொண் டிருந்த தன்மைகள் இரண்டு. ஒன்று சுதந்திர மனப்பான்மை; மற்றொன்று சமத்துவ எண்ணம். இந்த இரண்டு தன்மைகளும் அவனுடைய நூல்களின் ஒவ்வொரு வரியிலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்றன. மானிட ஜாதிக்கு இந்த இரண்டு தன்மைகளையும் புகுத்த வேண்டுமென்பதே அவனுடைய வாழ்க்கையின் நோக்கமா யிருந்து வந்திருக்கிறது. இந்த நோக்கம் உடையவனாய் இருந்ததற்காகவே அவன் பல துன்பங்களையும் அனுபவித்திருக்கிறான். ஓர் அறிஞன் சொல்கிறான்:- மானிட ஜாதிக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர் களில் முக்கியமானவன் ரூஸோ. அவன், மனிதர்களின் பந்தத்தை அறுத்தெறிய உதவி செய்தவன் மட்டுமல்ல; அவர்களுடைய எண்ணப் போக்கில் ஒரு சக்தியையும் புதுமையையும் ஊட்டியவன். சிதிலமாகிக் கொண்டு வருகிற ராஜ்யங் களின் உலர்ந்துபோன ஞாபகச் சின்னங்களினூடே அவன் தீயைப் போல் பிரவேசித்துச் சுட்டெரித்தான். அப்படிச் சுட்டெரிக்கப்பட்ட இடத்தில், கம்பீர மான கட்டடங்கள் எழும்புவதற்குத் துணைசெய்தான். நல்லெண்ண முடைய மனிதர்களுக்குச் சமாதானம், சகிப்புத் தன்மை, சுதந்திரம் ஆகிய மூன்றையும் கொண்டுவந்து கொடுத்தான். இந்தச் சுதந்திர மனப்பான்மையும் சமத்துவ எண்ணமும் இருந்தபடியினால்தான் ரூஸோ, பிறர் விஷயத்திலே மட்டுமல்ல, தன் விஷயத்திலேகூட குணதோஷங்களை அலசிப் பார்ப்பதில் சிறிதும் பின்வாங்கவில்லை. தன்னிடத்திலேயுள்ள குற்றங் குறை களை ஒளிமறைவின்றி எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவனுடைய சுய சரிதத்தை நடுநிலைமையோடு வாசித்துப் பார்ப்ப வர்களுக்கு அவனுடைய நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடு நிலைமை நன்கு புலனாகும். உதாரணமாக அவன், தன்னை எப்படி வருணித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பாருங்கள்:- ழேன் ழக்கே ஓர் அழகான புருஷன் என்று சொல்ல முடியாது; நிச்சயமாகச் சொல்ல முடியாது. அவன் குள்ளமானவன். அவன் முதுகு கூனிட்டுக் கிடப்பதால், பார்வைக்கு இன்னும் அதிக குள்ளமாகக் காணப்படு கிறான். தூரப்பார்வை அவனுக்குச் சரியாகத் தெரியாது. அவ னுடைய கண்கள் குழிவிழுந்து கிடங்கும்; பற்கள் பார்வைக்குக் கோரமாயிருக்கும். அவனுடைய அங்க அமைப்பு, வயதான காரணத் தாலோ என்னவோ ஒழுங்காக இராது. ஆனால் அவனுடைய பார்வை, குரல், சம்பாஷணை, நடை முதலியன ஒரு ராட்சத னுடையவை களைப் போலிரா இன்னோரிடத்தில் தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றித் தானே தீர்ப்பளித்துக் கொண்டிருக்கிறான்;- நான் இறந்து போய்விட்ட பிறகு என்னை ழேன் ழக்கே ரூஸோ என்ற கவிஞனாகப் போற்றுவார்கள் என்பது நிச்சயம். ரூஸோ ஒரு மனிதன் என்று யாரும் என்னைப் போற்ற மாட்டார்கள். ரூஸோ இயற்கையோடு உறவு கொண்டாடி அதில் இன்பம் துய்த்தவன். இதனால்தான் அவன் சுதந்திர புருஷனாகவும் கள்ளங் கபடமற்றவனாகவும் இருந்தான். ஆனால் பித்தனென்று ஏசவும் பேசவும் பட்டான். இயற்கை வாழ்விலே இன்பம் நுகரும் ஆற்றல் பெற்றவர்கள் செயற்கை உலகத்தினால் அவமதிக்கப்படுவது சகஜந்தானே! ரூஸோ, சமுதாயத்தின் சம்பிரதாயங்களை அப்படியே அனுசரித்து அதன் மூலமாக, ஒரு கௌரவத்தை அல்லது பெருமையை அடையவேண்டுமென்று விரும்பியவனல்ல. மோட்டியர்ஸில் வசித்துக் கொண்டிருந்தபோது ஓர் அர்மீனியன் மாதிரி உடை உடுத்திக்கொண்டது போன்ற செயல்களுக் கெல்லாம் அடிப்படை யான காரணம் இந்த மனப்பான்மைதான். ரூஸோ எப்பொழுதும் தனிமையையே விரும்பினான்; அந்தத் தனிமையில்தான் ஆறுதல் கண்டான். எல்லாம்வல்ல பரம் பொருளிடத்தில் நான் ஐக்கியப் பட்டு நின்றது இந்தத் தனிமையின் போதுதான் என்று கூறுகிறான் ஓரிடத்தில். வெளியே உலாவச் சென்றால் ஏதோ ஓரிடத்தில் திடீரென்று நின்று கொண்டு ஒரு செடியையோ, அல்லது புஷ்பத்தையோ, அல்லது சூரியோதை யத்தையோ அல்லது சூரியாத மனத்தையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான்; அதிலேயே தன்னை மறந்துவிடுவான். அப் பொழுது தானே சிரிப்பான். இந்த நிலையில் பார்த்தவர்கள் அவனை ஒரு பைத்தியக்காரனென்று அழைத்ததில் என்ன ஆச்சரியமிருக் கிறது? ஆனால் உண்மையில் ரூஸோ பிரகிருதி தேவதையின் குழந்தை; சர்வ ஜீவராசிகளின் தோழன்; கவிதையின் கணவன்; எதிர் காலத்தின் தந்தை. இங்ஙனம் அவன் எதிர்காலத்தின் தந்தையாக அமைந்துவிட்ட காரணத்தினால்தான், அவனுடைய சமகாலத்தவர், அவன் சொன்ன சொல்லிலும், செய்த செயலிலும் முரண்பாடு இருப்பதாகக் கருதினார்கள்; அவன்மீது வெறுப்புக் காட்டினார்கள். ஒரு சிலர் இரக்கமும் பட்டார்கள். கற்பனா சக்தி நிரம்பிய ரூஸோ, தன் கருத்துக்களை ஒருவித திடத்தோடு தெரிவித்தான். இதைக் கொண்டு, தான் என்ற மமதை கொண்டவன் என்று அவன்மீது, அவனுடைய சமகாலத்தவர் சிலர், அநேக கதைகள் கட்டிவிட்டார்கள். உண்மையில் இதற்குக் காரணம், அதாவது தன் கருத்துக்களை ஒரு திடத்தோடு தெரிவித்ததற்குக் காரணம், அவனுடைய மனத்தூய்மைதான்; அவனுடைய சீல சுபாவந்தான். எப்பொழுதுமே மனத்தூய்மையும், சீலமும் ஒரே தட்டின் இரண்டு பக்கங்கள் போல்வன. எந்த இடத்திலே சீலம் உண்டோ அந்த இடத்திலே அஞ்சாமை உண்டு. அஞ்சாமையை அணிகலனாகப் பூண்டவர்கள் சுதந்திர புருஷர்களாகவே காட்சி யளிக்கிறார்கள். ரூஸோவை ஒரு பெரிய மனிதன் என்று அழைப்பதைக் காட்டிலும் சீல புருஷன் என்று அழைப்பதுதான் பொருந்தும். இப்படித்தான் அவனுடைய சமகாலத்தவர் அழைத்திருக்கிறார்கள். ரூஸோவும் வால்ட்டேரும் ஒரே காலத்தில் ஒரேவிதமான பிரசித்தி அடைந்தவர்கள். ஆனால் ரூஸோவை ஜினீவாவின் சீலமுள்ள பிரஜை என்றும் சீல புருஷன் என்றும், வால்ட்டேரைப் பெரிய மனிதன் என்றும் அவர்களுடைய சமகாலத்தவர் மதிப்பிட்டிருக் கின்றனர். ரூஸோவின் கடைசி காலத்தில் அவனோடு நெருங்கி பழகிய பெர்னார்டின் டி செயிண்ட் பீர்ரே என்பவன் பின்வருமாறு கூறுகிறான்:- அவனுடைய மனோசக்தி, அவனுடைய நடவடிக்கை, அவனுடைய எழுத்து ஆகிய எல்லாம் அவனுடைய சீலத்தினால் முத்திரையிடப்பட்டிருக்கின்றன. தன் லட்சியத்திற்கு மாறுபடாமல் வாழ்நாள் முழுவதும் நடந்துகொண்ட ரூஸோவைப்போல் வேறொருவனைக் காணமுடியாது. பிரெஞ்சுப் புரட்சியில் பெரும் பங்கு எடுத்துக் கொண்ட வனும் சிறந்த ராஜதந்திரியுமான மீராபோ1 ரூஸோவைத் தன் ஆசிரியன் போலவே கருதிப் பேசியிருக்கிறான். சிறு வயதிலிருந்தே மீராபோவுக்கு ரூஸோவினிடம் ஒரு பக்தி சிரத்தை ஏற்பட்டிருந் தது. தனது இருபத் தொன்பதாவது வயதில், ரூஸோ, தனக்கு எவ்விதமாகத் தோன்றினான் என்பதைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறான்: அந்த அசாதாரணமான மனிதன்மீது நான் பொறாமைப்படுவதற்கெல்லாம் காரணம் அவனுடைய திறமை யல்ல; அவனுடைய ஒழுக்கந்தான். அவனுடைய சொல்லுக்கு அதி வாரமாகவும், எழுத்துக்கு ஆத்மாவாகவும் இருந்தது இந்த ஒழுக்கந் தான். ஒழுக்கத்திற்கு உயர்வு கொடுத்தார் உலகத்திலே உயர்ந்தார். உயிரினும் சிறந்த ஒழுக்கத்தைப் போற்றுகிறவர்கள் உலகத்தினரால் போற்றப்படுகிறார்கள். நான் எல்லோரையும் நேசிக்கிறேன். இதனால் மனிதர்களுக் குள்ளே என்னால் வித்தியாசம் பாராட்ட முடிவதில்லை என்கிறான் ரூஸோ ஓரிடத்தில். இப்படி அவனைக் கூறச் செய்தது எது? அவனுடைய ஒழுக்கந்தான். அவனை உலக மக்கள் நேசிக்கிறார்கள் என்பதில் என்ன ஆச்சரியம்? ஏனென்றால் அவன் உலகத்திற்காகவே வாழ்ந்தவன்; உலகம் உய்யவேண்டுமென்பதற்காகப் பாடுவட்டவன். எனக்குத் தெரிந்ததை நான் சொன்னேன்; உண்மை யென்றும், நன்மை என்றும், உபயோகமென்றும் எவை எவைகளை நான் கருதினேனோ அவைகளையே நான் கூறினேன் என்று கூறுகிறான் ஓரிடத்தில். ரூஸோ இயற்கை வாழ்க்கையை நடத்தினான்; ஏழை மக்களின் உயர்வுக்காக வாழ்ந்தான். இதனால்தான் உலக சரித்திரத் தில் நிரந்தரமானதொரு தானத்தை அடைந்தான். ரூஸோ வுக்கும் அவனுடைய சகபாடியான வால்ட்டேருக்கும் என்ன வித்தியாசம் என்றால் ஜனங்கள் என்ன நினைத்தார்களோ அதை எடுத்துச் சொன்னான் வால்ட்டேர். ரூஸோவோ, ஜனங்கள் என்ன உணர்ந்தார்களோ அதைத் தெளிவான வாசகத்தில் உறுதியாகச் சொன்னான். ரூஸோவைப் பற்றி ஒரு நிபுணன் தீர்ப்புக் கூறுகிறான்:- ரூஸோ என்றால் பொதுஜனம் என்று அர்த்தம். உரிமை இழந்தவர்கள், உடைமை இல்லாதவர்கள், பலவீனர்கள், பட்டினி கிடப்போர் ஆகிய இப்படிப் பட்டவர்களுடைய திருஷ்டி யிலிருந்துதான், அவன், வாழ்க்கையையும் சமுதாயத்தையும் நோக்கி னான். அவன், அரசியல் வேற்றுமைகளுக்கு மேலாக, சமுதாய வேற்றுமைகள் இருப்பதை நோக்கினான். அவன் பணக்காரர்களைத் தாக்கவில்லை; பணத்தையே தாக்கினான். சுதந்திரத்தைப் போலவே சமத்துவத்தையும் அவன் விலை மதிப்புடையதாகக் கருதினான். மனிதர்களை அடிமை களாக்குகிற சுயேச்சாதிகாரிகளை அவன் வெறுத்தது போலவே மனிதர் களை ஏழைகாளக்குகிற முதலாளி களையும் அவன் வெறுத்தான். சமுதாய அநீதியும் அரசியல் நீதியும் பரபரம் ஒன்றிலே மற்றொன்றாக வாழ்ந்து கொண்டிருக் கின்றனவென்பது அவனுடைய அபிப்பிராயம். ரூஸோ, உயிரோடிருந்த காலத்தில், அவன் மீது பொறாமை கொண்ட சிலர், அவனைக் கண்டபடி தூற்றினர் என்பது உண்மை. ஆனால் ஒரு சிலர்தான் இந்தக் கீழ்த்தரமான கைங்கரியத்தைச் செய்தனரே தவிர, நடுநிலைமையில் நின்று விஷயங்களை நோக்கிய அறிஞர்கள் பலர், ரூஸோவின் நேர்மையையும், கூரிய அறிவையும் கண்டு பிரமித்துப் போயினர்; அவனுடைய நூல்களைப் படித்துப் படித்து அவற்றில் கூறப்பட்ட கருத்துக்களிலே லயித்துப் போயினர். காண்ட்1 என்பவன் ஒரு பிரபல ஜெர்மானிய தத்துவஞானி; ரூஸோவினிடம் பெருமதிப்பு வைத்திருந்தான். இவன், ஒழுங்கின் உருவம் அதாவது உண்பது, உறங்குவது, உலாவுவது, அலுவல் களைக் கவனிப்பது எல்லாம் இவன் விஷயத்திலே ஒழுங்காக நடைபெறும். குறித்த நேரத்தில் குறித்த காரியம் நடைபெற்றே தீரும். இவன் 1763-ஆம் வருஷம், கோனிக்பெர்க்2 என்ற ஊரிலிருந்த ஒரு புத்தக சாலைக்கு அதிபனாக இருந்தான். அப்பொழுது இவன் தினந்தோறும் பிற்பகலில் வெளியே உலாவப் போவான். உலாவப் புறப்படுகிற நேரத்தைப் பார்த்துக்கொண்டு கோனிக்பெர்க் வாசிகள் தங்கள் கடிகாரங்களைச் சரிப்படுத்தி வைத்துக்கொள்வது வழக்கம். குறித்த மணிப்பிரகாரம் இவன் உலாவப் புறப்படுவான். இப்படியிருக்கையில் ஒரு நாள் காண்ட், குறித்த மணிக்கு வெளியே உலாவப் புறப்படவில்லை. தங்கள் கடிகாரங்களைச் சரிப்படுத்தி வைத்துக்கொள்ள முடியாமல் கோனிக்பெர்க்வாசிகள் திகைத் தார்கள். காரணம் என்னவென்று விசாரித்தார்கள். ரூஸோ எழுதி எமிலி என்ற நூலை, காண்ட் கவனத்தோடு படித்துக்கொண் டிருந்தான். மணி போனது தெரியவே யில்லை! இதுதான் காரண மென்று தெரிந்து கோனிக்பெர்க்வாசிகள் ஆச்சரியப்பட்டார்கள். ரூஸோவின் எழுத்துவன்மைக்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? ]ஷில்லர்3 என்பவன், ஜெர்மன் இலக்கிய வானிலே பிரகாசமய மான ஒரு நட்சத்திரம். கெதே4 என்ற பிரபல கவிஞனுக்கு அடுத்தபடி யாக இவனுக்குக் கௌரவம் கொடுத்துப் பேசுகிறார்கள் ஜெர்மானிய அறிஞர்கள். இவன் ரூஸோவின் அறிவுக் கோயிலிலே வணங்குகிற ஒரு பக்தன். ரூஸோ இறந்த நான்காவது வருஷம் - அதாவது 1782- ஆம் ஆண்டு - எர்மெனான்வில்லே சென்று அங்கு எந்த இடத்தில் ரூஸோ புதைக்கப்பட்டானோ அந்த இடத்தில நின்று புலம்பு கிறான்:- ரூஸோ, உயிர் வாழ்ந்துகொண்டிருந்த போது, துஷ்டர் களிடமிருந்து ஓய்வு பெறவும், துன்பத்திலிருந்து அமைதி காணவும் விரும்பினான். இந்த இரண்டும் அவனுக்கு இந்தச் சவக்குழியிலே தான் கிடைத்தன ...Ãaha¤â‰கு விரோதமாfத் தொடுக்கப் படு»ற யுத்தங் களெல்லhம் எப்பொGது முடிவடையு«? அறிஞர்கள், அறியாமையோடு போரிட்டுப் போரிட்டுச் சாகிறார்கள். உண்மையைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு, முன்னர் கிரேக்கர்கள், ஸாக்ரட்டீஸை5க் கொன்று விட்டார்கள். இப் பொழுது கிறிதுவர்கள் ரூஸோவைத் தாக்கினார்கள். இந்த மகானைப் பற்றித் தீர்ப்புக் கூறத் துணிந்தவர்கள் யார்? அரை குறை அறிவுடையவர்கள்! குறுகிய மனமுடையவர்கள்! ரூஸோவின் கூரிய அறிவு என்கிற ஒளி இவர்கள்மீது வீசுகிறபோது இவர் களுடைய சிறுமை புலப்பட்டுவிடுகிறது... ருஷ்ய ஞானி டால்ட்டாய், ரூஸோவின் எழுத்துக்களி லும் கருத்துக்களிலும் பெரிதும் ஈடுபட்டவன். தன்னுடைய சிறு வயதிலேயே, ரூஸோ எழுதிய எல்லா நூல்களையும் படித்து இன்புற்றதாக கூறுகிறான். ரூஸோ விஷயத்தில் நான் வெறும் உற்சாகியாக மட்டும் இல்லை; பரம பக்தனாகிவிட்டேன். என் னுடைய பதினைந்தாவது வயதில், அவனுடைய உருவம் பொறித்த ஒரு பதக்கத்தை நான் அணிந்து கொண்டிருந்தேன். அவனுடைய நூல்களில் அநேக பக்கங்கள் என்னோடு ஒட்டியவை யாயிருக் கின்றன. நானே அவற்றை vழுதியிருப்பேனோ vன்கிற kதிரியான vண்ணம் vனக்கு cண்டாகிறது vன்பது lல்ட்டாயின் tக்கு. ரூÞn[h, எல்லோருக்கும் நிறைந்த வாழ்க்கையை நல்க வேண்டுமென்று பாடுபட்டான். ஆனால் அவனை வாழவொட்டா மல் விரட்டியடித்துக் கொண்டிருந்தார்கள் அவனுடைய சம காலத்தவர். அவன் உயிரோடிருந்தபோது அவனை இழந்து விட்டிருந்தார்கள் ஜினீவா வாசிகள்; இப்பொழுது அவனுடைய உருவச்சிலையை வழிபடுகிறார்கள். அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! ஆனால் ரூஸோ, எந்த உருவச்சிலையிலும் இல்லை; எந்த அறிஞருடைய பாராட்டுதலிலும் இல்லை. பின்னர் எங்கே இருக்கிறான்? ஏழை மக்களின் இனிய வாழ்க்கையிலே, அவர்கள் விடுகிற சுதந்திர மூச்சிலே, சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அனுபந்தம் 1 கலைகளும் விஞ்ஞானமும் விருத்தியடைந்திருப்பதால், மனிதனுடைய ஒழுக்கம் உயர்வடைந்திருக்கிறதா? கலை, விஞ்ஞானம் முதலியன அபிவிருத்தி யடையாமலிருந்த தற்கு முன்னர், மனிதன் முரட்டுச் சுபாவமுடையவனாக இருந்தான் என்பது வாதவம். ஆனால் அப்பொழுது அவன் இயற்கையாக இருந்தான். அவன் நடந்து கொள்கிற மாதிரியைக்கொண்டு அவ னுடைய சுபாவம் இன்னதென்று தெரிந்துகொள்ள முடிந்தது. மேற்படி கலை, விஞ்ஞானம் முதலியன அபிவிருத்தியடைந்த பிறகோ, மனிதனுடைய நடவடிக்கை களில் ஒரு நாகரிகத்தன்மை புகுந்துகொண்டது; அவனுடைய பேச்சு வார்த்தைகள் நீண்டு விட்டன. இப்பொழுது எந்த மனிதனுடைய நடவடிக்கைகளைப் பார்த்தாலும் எல்லாம் ஒரே வார்ப்படத்தில் வார்த்த மாதிரியாக இருக்கின்றது. இதனால் இப்பொழுது நாம் எந்த மாதிரியான மனித னோடு பழகுகிறோம் என்பது தெரியாமலே போய்விடுகிறது. தெரி யாமல் பழகுவதன் பயன் என்னவென்றால், பரபர சந்தேகங்கள், அவநம்பிக்கைகள், துரோகங்கள் முதலியன, மனிதர்களுடைய நடவடிக்கைகளுக்கு மத்தியில் தோன்றுகின்றன; பிடிவாதம், தூஷணை, பக்தியின்மை முதலியவைகளை நாகரிக வார்த்தைகளி னால் மூடி வைக்கிறோம். இந்த மாதிரியான விபரீதங்களைத்தான் இப்பொழுது பார்க்கிறோம். இந்த விபரீதங்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? கலையும் விஞ்ஞானமும் அபிவிருத்தியடைந் திருப்பதுதான் இதற்குக் காரணம். உலக சரித்திரம் இதையே நிரூபிக் கிறது. எகிப்தை எடுத்துக் கொள்ளுங்கள். அஃது ஒரு காலத்தில் வல்லமை பொருந்தியதாக இருந்தது. பின்னர் தத்துவ ஞானத்திற்கும் நுண்கலைகளுக்கும் தாயகம் என்ற பெயரைப் பெற்றது. பயன் என்ன? அந்நிய நாடுகளுக்கு அடிமையாகிவிட்டது. கிரேக்கர்கள் என்ன, ரோமர்கள் என்ன, அராபியர்கள் என்ன, துருக்கியர்கள் என்ன, இப்படி ஒருவர் பின் ஒருவராக வந்து அதன் சுதந்திர வாழ்வைக் குலைத்துவிட்டனர். இங்ஙனமே கிரீ, ரோம், சீனா முதலிய எல்லா நாடுகளின் கதியும் ஆகியிருக்கின்றன. கடவுளின் தூதர்களாக வந்தவர்கள், விஞ்ஞான சாதிரத்தில் தேர்ச்சி பெற்றவர்களாயிருக்கவில்லை. ஏசுநாதர், படித்தவர்களுக்குத் தமது உபதேசத்தைச் செய்யவில்லை; வலைஞர்கள், தொழிலாளர்கள் முதலியவர்களுக்கே செய்தார். ஃ ஃ ஃ ஆனந்தமான அறியாமையிலிருந்து நித்தியமான ஞானத்தை யடைவதற்கு நாம் செய்கிற முயற்சிகளெல்லாம் நமக்குத் துக்கத்தையே கொடுத்திருக்கின்றன. சில சில விஷயங்களை, இயற்கையானது, நம்மிடமிருந்து மறைத்து வைத்திருக்கின்றது. நம்மை அநேக தீமைகளிலிருந்து காப்பாற்றுவதற்குத்தான் அஃது - அந்த இயற்கை - அப்படிச் செய்திருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதில்லை. ஃ ஃ ஃ விஞ்ஞானமும் ஒழுக்கமும் முரண்பட்டவைகளா என்று கேட்கலாம். இப்படி ஒற்றுமைப்படுத்தியும் வேற்றுமைப்படுத்தியும் பார்ப்பதே வெறும் ஏமாற்றம். ஏனென்றால் எந்த விஞ்ஞான வளர்ச்சியைப் பற்றி நாம் பெருமையாகப் பேசிக் கொள்கிறோமோ அந்த விஞ்ஞான வளர்ச்சியின் பயனைப்பற்றி நாம் சிறிது ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், ஏமாற்றத்தையே அடைவோம். உதாரணமாக, வான சாதிரம் என்பது மூட நம்பிக்கைகளிலிருந்து பிறந்தது; க்ஷேத்திர கணித சாதிரம் என்பது, லாபம் சம்பாதிக்க வேண்டுமென்னும் ஆசையினின்று எழுந்தது; பௌதிக சாதிரம் என்பது, வெறும் ஆவலினின்று தோன்றியது; பொதுவாக எல்லாம், தர்ம நியாயங்கள், ஒழுக்க முறைகள் முதலியவை எல்லாம்கூட, மனிதனுடைய கர்வத்தினின்று உண்டானவைதான். வெறும் வார்த்தைகளை வைத்துக்கொண்டு நாம் ஏமாந்து போவதா? விஞ் ஞானம், தத்துவஞானம் முதலிய பகட்டான பெயர்கள் எல்லாம் உயர்ந்த உண்மைகளை, பலன் தரக்கூடிய உண்மைகளைக் காட்டு கின்றனவென்று நாம் நம்பிவிடலாமா? அப்படி இல்லவே இல்லை. உண்மையை நாடிச் செல்கிற நமது பாதையிலே எத்தனையோ பொய்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பொய்களோ உண்மையைவிட ஆயிரம் மடங்கு ஆபத்தானவை. இருக்கட்டும். உண்மையைக் கண்டுபிடித்ததாக நினைத்துக்கொண்டுவிட்டால் அதன் லட்சணங்களென்ன? அடையாளங்களென்ன? அடையாளங் களோடு உண்மையை ஒருவன் கண்டுபிடித்து விட்டானென்று வைத்துக் கொள்வோம். அதனை அவன் நல்ல வழியில் உபயோகப் படுத்துவான் என்பது என்ன நிச்சயம்? சிறந்த மேதைகள்தான் விஞ்ஞான சாதிரத்தைப் பயிலவேண்டும் என்றிருந்தால் அந்தப் பயிற்சியின் பயனாக நன்மையே உண்டாகும்; ஸாக்ரட்டீ போன்ற மேதாவிகளுக்கு இந்தப் பெருமையை அளிக்கலாம். அவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாகவே பிறந்தார்கள். ஆனால் எல்லா மனிதர்களும் மேதைகளல்லர்; ஸாக்ரட்டீகளுமல்லர். கலைகளின் விஷயத்தில் சிரத்தை உண்டாகுமானால், அந்த சிரத்தையானது ஆடம்பரத்திலே கொண்டுபோய்விடுகிறது. எந்த ஜாதிக்கு ஆடம்பரத்திலே பற்று உண்டாகிவிடுகிறதோ அந்த ஜாதி, தனது போர்த் தன்மையை இழந்துவிடுகிறது. சரித்திரம், இந்த உண்மையை நமக்குப் போதித்திருக்கிறது. போர்க்குணமுள்ள ஒரு ஜாதிதான், தன் சுதந்திரத்தைக் காப்பாற்றி வைத்துக்கொண்டிருக்க முடியும். அந்த ஜாதிக்கு ஒழுக்கமிருந்தால்தான் அது சுதந்திரத்தோடு கூடியிருப்பதற்குத் தகுதியுடையது. உங்களுடைய குழந்தைகள் ஆடம்பரமான தாபனங் களுக்குச் செல்கிறார்கள். அங்கே அவர்கள், தங்கள் கடமைகளைத் தவிர, மற்றெல்லாவற்றையும் கற்றுக் கொள் கிறார்கள். அவர்கள் தங்கள் தாய்மொழியை மறந்துவிடுகிறார்கள்; ஆனால் உலக வழக்கிலே இல்லாத பாஷையைப் பேசுவதிலே நிபுணர்களாயிருக்கிறார்கள். பாட்டிசைக் கிறார்கள்; ஆனால் பாட்டின் அர்த்தம் தெரியாது. உண்மைக்கும் பொய்க்கு முள்ள வித்தியாசம் அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவை வேறு பட்டவையல்ல என்று அழகாக எடுத்துப் பேசுகிறார்கள். தாராள புத்தி, நிதானம், தைரியம், கருணை இவைகளைப்பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. கடவுள் வாக்கு என்று சொல்லக் கேட்டால் அவர்களுக்கு அச்சம் உண்டாகிவிடுகிறது. இந்தத் தீமைகளுக்கெல்லாம் காரணம் என்ன? மனிதர்கள், திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒழுக்கத்தை மலிவுபடுத்தி விட்டது தான். சாதாரணமாக இப்பொழுது ஜனங்கள் ஒருவனைப் பார்த்து அவன் சீல புருஷனா என்று கேட்கிறார்களில்லை; அவன் புத்திசாலியா என்றுதான் கேட்கிறார்கள். ஒரு புத்தகத்தைப் பார்த்து அஃது உபயோகமுள்ள புத்தகமா என்று கேட்கிறார்க ளில்லை; அது நன்றாக எழுதப்பட்டிருக்கிறதா என்றுதான் கேட்கி றார்கள். இறுதியாகப் பார்க்கப் போனால், இந்தத் தத்துவஞானம் என்பது என்ன? இதனால் நாம் என்ன பாடத்தைக் கற்றுக் கொள்கி றோம்? சாசுவதமான புகழை அளிக்கக்கூடிய பெருமை இதில் என்ன இருக்கிறது? எல்லாம் வெறும் ஏமாற்றந்தான். தத்துவ ஞானிகள் என்று புகழப்படுகிறவர்கள் அனைவரும், கடைத் தெருவிலே உட்கார்ந்து கொண்டு என்னிடம் வாருங்கள்; நான் உங்களை ஏமாற்றமாட்டேன்; சரியான சாமான்களை ஒழுங்காக அளந்து உங்களுக்குக் கொடுப்பேன் என்று கூவுகிற வியாபாரிகளைப் போன்றவர்களே. ஒருவர் சித்து பெரிதென்கிறார். இன்னொருவர் ஜடம் பெரிதென்கிறார். இப்படிப் பலரும் பலவிதமாகச் சொல்கி றார்கள். இப்படிப்பட்டவர்களை உலகம் புகழ்கிறது. இவர் களுடைய உபதேசங்களைச் சாசுவதமாக்கி வைக்க, அச்சடிக்கிற முறையும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. இந்த அச்சுத் தொழிலின் அபிவிருத்தியினால் ஐரோப்பாவில் அதிகமான குழப்பம் உண்டாகி யிருக்கிறது. இந்தக் குழப்பம் இன்னமும் அதிகப்படாமலிருக்க வேண்டுமானால், ஆதியில் அச்சுத் தொழிலுக்கு அவர்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக ஆதரவு கொடுத்தார்களோ அவ்வளவு சுறுசுறுப்பாக அதற்கு அநாதரவு காட்டவேண்டும்; அப்படியே அநாதரவு காட்டு வார்கள் என்று நம்புகிறோம். யாரோ ஒருவர் இருவருக்கு விஞ்ஞான ஆராய்ச்சி நடத்த அனுமதி கொடுக்கலாம். அப்படி அனுமதி பெறுகிறவர்களும், தங்க ளுடைய ஆராய்ச்சியை நடுநிலையோடு நடத்தக்கூடிய ஆற்றல் பெற்ற வர்களாக இருக்கவேண்டும். விஞ்ஞானமென்னும் கோட்டைக்குள் நுழைய அனைவரையும் அனுமதிக்கக்கூடாது. அப்படி அனுமதித்தோ மானால், தகுதியற்றவர்களெல்லோரும் உள்ளே பிரவேசித்து விடுவார்கள். உலகத்தில் தத்துவ ஞானிகள் இருக்க வேண்டியது தான்; ஆனால் எல்லா ஜனங்களும், அந்தத் தத்துவ ஞானத்திலே பிரவேசித்து அதனைக் கலக்கிவிடக்கூடாது. அனுபந்தம் 2 மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டானதற்குக் காரணமென்ன? இவற்றை இயற்கைச் சட்டங்கள் அங்கீகரிக்கின்றனவா? ஆதியில் மனிதன் இயற்கை வாழ்வு நடத்திக் கொண்டிருந்த போது, அவனவனும் தனித்தனியாக வாழ்ந்துகொண்டிருந்தான். ஒருவனுடைய தயவு மற்றொருவனுக்குத் தேவையாயிருக்கவில்லை. அவனவனும் தனக்குத் தேவையான ஆகாராதிகளைச் சம்பாதித்துக் கொண்டான். இஷ்டப்படி இருந்தான்; திரிந்தான். இதனால் தேக பலம் என்கிற விஷயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருந்தது. அதாவது ஒருவன் பலசாலியாகவும் மற்றொருவன் பலவீனனாகவும் இருக்கவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி பலசாலிகளாயிருந் தார்கள். பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து, சீதோஷ்ண மாறுபாடு முதலிய பல காரணங் களினால், மனிதன், தன்னுடைய ஜீவனத்திற்கு மற்றொரு மனிதனுடைய உதவியை நாடவேண்டியதாயிற்று. இதனால் பலர் சேர்ந்து வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனிதர்களிடையே போக்குவரத்தும், மற்ற விவகாரங்களும் அதிக மாயின. நாளாவட்டத்தில் உலோகப் பொருள்கள் உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. விவசாய உற்பத்திமுறை கண்டுபிடிக்கப் பட்டது. அவனவனும், தான் உழுது பயிரிட்ட நிலத்தைத் தனக்குச் சுவாதீனப்படுத்திக் கொண்டான். எந்த மனிதன் முதன்முதலாக ஒரு துண்டு நிலத்திற்கு நான்கு புறமும் வேலிபோட்டு, இஃது என்னுடை யது என்று சொல்லிக் கொண்டானோ, எவன் தன்னுடைய இந்த வார்த்தையை எல்லோரும் நம்பிவிட்டார்கள் என்று தெரிந்து கொண்டானோ அவன்தான், சமுதாய அமைப்பு என்பதற்கு முதன் முதலாக அதிவாரம் போட்டவன். ஆனால் அவன் போட்ட இந்த முதல் வேலியை மற்றொருவன் பிடுங்கி எறிந்துவிட்டு, பள்ளங்களை நிரப்பிவிட்டு, கூட இருக்கிறவர்களைப் பார்த்து இந்த மோசக் காரனைப் பாருங்கள்; பூமியிலிருந்து உண்டாகிற பொருள்கள் யாவும் எல்லோருக்கும் சொந்தமானது; எந்த ஒருவனும் தனது என்று இவைகளைச் சொல்லிக்கொள்ள முடியாது; இந்த உண்மையை நீங்கள் மறந்துவிட்டீர்களானால், உங்களுக்கு அழிவு நிச்சயம் என்று கூச்சல் போட்டிருந்தால், இந்த உலகத்தில் எத்தனை குற்றங்கள் நடைபெறாம லிருக்கும்? எத்தனை யுத்தங்கள் நிகழாம லிருக்கும்? எவ்வளவு துன்பங்கள் ஏற்படாமலிருக்கும்? இந்தச் சொத்துரிமை ஏற்பட்டதும், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் உண்டாயின. மனிதனுடைய தேக பலம் முதல் எல்லா வற்றிலும் கூடுதல் குறைச்சல்கள் தோன்றின. இவற்றினால் விபரீத பலன் விளைந்தது. பணக்காரன் - ஏழையென்று சமுதாயத்தில் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. இந்தப் பிரிவினைகள் பின்னர் சட்டத்தின் மூலம் ஊர்ஜிதம் செய்யப் பட்டுவிட்டன; நிரந்தர மாக்கப்பட்டும் விட்டன. பணக்காரர்கள் ஏழை களைச் சுரண்டுவ தென்பது புனிதத் தன்மை பெற்றுவிட்டது. சுருக்கமாகச் சொல்லப்போனால், தனிச் சொத்துரிமைதான் மானிடசமுதாயத்தின் சீரழிவுக்கெல்லாம் மூலகாரணம் என்பதை இந்தக் கட்டுரையின் மூலம் ரூஸோ அழகாக நிர்த்தாரணம் செய்து காட்டுகிறான். அனுபந்தம் 3 எமிலி அல்லது கல்வி கடவுள் எல்லாப் பொருள்களையும், நல்லவைகளாகவே சிருஷ்டிக்கிறார். ஆனால் மனிதன் அவற்றில் தலையிட்டு அவை களைத் தீயனவாக்கிவிடுகிறான். ஒரு மண்ணிலே உற்பத்தியாகக் கூடிய பொருளை, மற்றொரு மண்ணிலிருந்து உற்பத்தி செய்யப் பார்க்கிறான்; ஒரு மரத்தில் உண்டாகக்கூடிய பழத்தை மற்றொரு மரத்திலிருந்து எதிர்பார்க்கிறான். அவன், இடம், காலம், இயற்கை நிலைமை எல்லாவற்றையுமே ஒன்றுபோட்டுக் குழப்புகிறான். அவன், தன் நாய், குதிரை, அடிமை எல்லாரையும் அங்கச்சிதைவு படுத்திவிடுகிறான். அவன் எல்லாப் பொருள்களையும் அழித்துவிடு கிறான்; அல்லது விகாரப்படுத்தி விடுகிறான். உருவங்குலைந்தவை, விகாரமுள்ளவை முதலியவற்றை அவன் நேசிக்கிறான். எதனையும் அதனுடைய இயற்கைத் தோற்றத்திலே பார்ப்பதற்கு அவன் விரும்புவதில்லை. மனிதனைக்கூட இப்படி இயற்கையற்ற நிலையிலே பார்க்கத்தான் அவன் விரும்புகிறான் ................. ஆயினும் கல்வி,மனிதனுக்குஅவசியமானது. இந்தக் கல்வி இல்லா விட்டால் மனிதனைப் பொறுத்த விஷயங்கள் இன்னும் கேவலமாக இருக்கும். ஃ ஃ ஃ மனிதன், பிறந்த காலத்தில் எந்த நிலையில் இருந்தானோ அந்த நிலையிலேயே அவனை விட்டுவிட்டால் அவன் ஒரு ராட்சதனாகவே ஆகிவிடுவான்; அவனுடைய சூழ்நிலையானது அவனிடத்திலேயுள்ள இயற்கைத் தன்மையைச் சீரழித்துவிடும். பலபேர் நடக்கிற ஒரு பாதையிலே ஒரு செடியை வளரவிட்டால் அஃது எப்படி பலபேரால் மிதிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடுமோ அதைப்போல் அவன் - அந்தக் கல்வியில்லாத மனிதன் - அழிபட்டுப் போவான். ஃ ஃ ஃ குழந்தைகளுக்கு முதன்முதலாகக் கல்வி போதிக்கிறவள் தாய்தான். ஆகையால் அவள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் முதலியவை களினின்று குழந்தைகளைக் காப்பாற்றி அவைகளுக்குச் சரியான முறையில் கல்வி போதிக்கவேண்டும். ஃ ஃ ஃ ஒரு செடி நன்றாக வளர வேண்டுமானால், மண்ணைக் கிளறிக் கொடுக்கிறோம்; காலாகாலத்தில் நீர் இறைக்கிறோம்; புழு, பூச்சி முதலியன அணுகாதபடி காப்பாற்றுகிறோம். அதைப்போல், மனிதன் பண்பாடு பெறவேண்டுமானால், அவனுக்குக் கல்வி அவசியமானது. ஒரு மனிதன் உயரமுள்ளவனாகவும் பலசாலியாக வும் பிறக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்த உயரத்தையும் தேக பலத்தையும் எப்படி உபயோகிப்பது என்பதை அவன் தெரிந்துகொள்ளாத வரையில் அவை களினால் அவனுக்கு என்ன பிரயோஜனம்? அவைகளினால் அவனுக்குக் கெடுதல்கூட. எப்படி யென்றால், அவன்தான் திடமுள்ளவனாயிற்றே என்று சொல்லி அவனுடைய ஆபத்துக் காலத்தில் மற்றவர்கள் யாரும் அவனுக்கு உதவி செய்ய முன்வரமாட்டார்கள்; தன்னுடைய தேவைகள் இன்னவையென்று உணராமலேயே அவன் இறந்து போவான். ஃ ஃ ஃ நாம் பிறக்கிறபோது பலத்துடன் பிறக்கவில்லை. பிறகு நமக்குப் பலம் தேவையாயிருக்கிறது. அப்படியே மற்றவர்களுடைய உதவி, பகுத்தறிவு எல்லாம் நமக்குத் தேவையாயிருக்கின்றன. ஆகவே பிறக்கிறபோது நம்மிடத்தில் என்னென்ன இல்லையோ, மனிதனான பிறகு நமக்கு என்னென்ன தேவையோ, அவை எல்லாவற்றையும் கல்வியானது நமக்கு அளிக்கிறது. இந்தக் கல்வியை நாம் மூன்று வழிகளிலிருந்து பெறுகிறோம். ஒன்று, இயற்கையிலிருந்து; மற்றொன்று, சகோதர மனிதர்களிடமிருந்து; இன்னொன்று, சுற்றுப் புறமுள்ள பொருள்களி லிருந்து. நமது புலன்கள், அங்க அவய வங்கள், நம்மிடத்தில் இயற்கையா யுள்ள சக்திகள் முதலியனவெல் லாம் வளர்ச்சி பெறுகின்றனவல்லவா, இந்த வளர்ச்சியே இயற்கை யின் மூலமாகப் பெறுகிற கல்வி; இந்த வளர்ச்சியை எப்படி உபயோகிப்பது என்பதைப்பற்றித் தெரிந்து கொள்கிறோமே அது மனிதர்களால் போதிக்கப்படும் கல்வி; நமது சூழ்நிலையிலிருந்து நாம் பெறுகிற பலவித அனுபவங்கள் இருக்கின்றனவே அவை நமது சுற்றுப்புறமுள்ள பொருள்களிலிருந்து பெறுகிற கல்வி, ஆகவே பிரதியொரு மனிதனுக்கும் கல்வி போதிக்கிற ஆசிரியர்கள் மூன்று பேராகிறார்கள். இந்த மூன்று பேருடைய போதனை களில் ஏதேனும் மாறுபாடு நிகழ்கிறபோதுதான், மனிதனுடைய வளர்ச்சி குன்றுகிறது. வாழ்க்கையில் அமைதி என்பது அவனுக்கு உண்டாவதில்லை. இந்த மூன்று விதமான போதனைகளில், இயற்கையின் போதனையும், சுற்றுப்புறமுள்ள பொருள்களின் போதனையும், நம்முடைய ஆதிக்கத்துக்குப் புறம்பானவை. மனிதன் போதிக்கிற போதனையைத்தான் நாம் கட்டுதிட்டப்படுத்த முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே இதுகூடப் பெரும்பாலும் மயக்கந்தான். ஏனென்றால் கல்வியில் பரிபூரண வெற்றி காண்ப தென்பது இயலாத காரியம். வெற்றியை ஓரளவுக்கு எட்டிப் பார்க்க லாம்; வெற்றியை அடைவதென்பது அவரவருடைய அதிருஷ் டத்தைப் பொறுத்தது. வெற்றியடைவதென்று சொல்கிறோமே, அப்படியென்றால் என்ன? அதுதான் இயற்கையின் லட்சியம். இயற்கையென்று எதைச் சொல்கிறோ மென்றால் நமக்கேற்படுகிற பழக்க வழக்கத்தைத்தான். இயற்கையோடு ஒட்டிப் போகிற பழக்க வழக்கங்களும் உண்டல்லவா? உதாரணமாக, ஒரு செடியை நேராக நிமிர்த்தி வளர்த்தோமானால் அது நேராகவே வளர்கிறது; குறுக்கே படுக்க வைத்து வளர்த்தோ மானால் அப்படியே வளர்கிறது. அஃது எப்படி வளர்ந்தாலும் அதனுடைய தன்மைகள் மாறுபடுவதில்லை யல்லவா? அதைப் போல ஒரு மனிதனுடைய நிலைமையை யொட்டியே அவனுடைய பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. நிலைமையை மாற்றுங்கள்; பழக்க வழக்கங்களும் மாறுபடுகின்றன. கல்வியென்பது கூட என்ன? அதுவும் ஒரு பழக்கந்தானே? சிலர், தாம் கற்ற கல்வியை மறந்து அல்லது இழந்துவிடுகிறார்கள்; வேறு சிலர் அதை அப்படியே வைத்துப் போற்றுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? அவரவர் களுடைய பழக்க வழக்கந்தான் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இதனையே அவர் களுடைய இயற்கை என்றும் சொல்கிறோம். இயற்கையைப் பொறுத்தமட்டில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே. அப்படியே எல்லா மனிதர்களுடைய தொழிலும், மனிதத்தன்மையோடு வாழ்வதுதான். இந்த மனிதத் தன்மையோடு கூடிய எந்த மனிதனும் எந்தத் தொழிலில் பிரவேசித்தபோதிலும் அதில் அவன் சிறந்து விளங்குவான். ஒருவன் எந்தத் தொழிலிலாவது பிரவேசிக்கட்டும்; அப்படிப் பிரவேசிப்பதற்கு முன்னர் அவனை, இயற்கையானது மனிதத் தன்மை என்கிற தொழிலில் பயிலுவித் திருக்கிறது. அவன் எந்த உத்தியோகத்திற்குச் சென்றாலும் சரி, ஓர் உத்தியோகத்திலிருந்து மற்றோர் உத்தியோகத்திற்கு எத்தனை தடவை மாறினாலும் சரி அவன் மனிதனாகவே இருப்பான். கல்வியின் நோக்கம் என்ன? மனிதனையும் அவனுடைய சூழ்நிலையையும் தெரிந்து கொள்வதுதான். வாழ்க்கையின் சுக துக்கங்களை ஒரே மாதிரியாகப் பார்க்கிறவர்கள் யாரோ அவர்கள் தான் சிறந்த முறையில் கல்வி பயின்றவர்கள் என்பது என்னுடைய கருத்து. எனவே கற்றலில் சிறந்தது நிற்றல்தான். நாம் எப்பொழுது வாழ ஆரம்பிக்கிறோமோ அப்பொழுதே கல்வி கற்கவும் தொடங்கு கிறோம். குழந்தைகளுக்கு எளிய பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கவேண்டும். ஆடம்பரமான, பகட்டான உடைகளால் அவர்களை அலங்கரித்துக்கொண்டு வருவோமானால் நாளா வட்டத்தில் அவர்கள் சீர்கெட்டுப் போவார்கள். குளிர் காலத்தி லாகட்டும், கோடை காலத்திலாகட்டும் ஒரே மாதிரியான உடை களில் இருக்குமாறு அவர்களைப் பழக்கப்படுத்துங்கள். சிலர் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு வேலை செய்யக்கூடிய நிலையிலே இருப்பார்கள். இன்னும் சிலர் வெளியே சென்று வேலை செய்யக்கூடிய நிலையிலேயே இருப்பார்கள். பிந்தியவர்கள் எளிய முறையிலேயே உடை அணிந்துகொள்ளக்கூடிய பழக்கத்தைப் பெறுதல் வேண்டும். ஏனென்றால் காலநிலை மாறுபாட்டுக்கேற்ற வாறு இவர்கள் உடையணிந்துகொள்ள முற்படுவார்களானால் அதனால் அசௌகரியமே உண்டாகும். எல்லாச் சீதோஷ்ண நிலைகளையும் சகித்துக்கொள்ளக் கூடிய உடைகளையே இவர்கள் அணிந்துகொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால் கடினமாக உழைக்கிறவர்கள் லேசான உடைகளைத் தரித்தல் வேண்டும். பிரபல விஞ்ஞான சாதிரியாகிய ஸர் ஐஸக் நியூட்டன்1 இப்படித்தான் செய்துகொண்டு வந்தான். பலன் என்ன? எண்பது வயது வரையில் வாழ்ந்தான். இங்ஙனமே குழந்தைகள், வருஷம் பூராவும் தலையிலே ஏதேனும் ஒன்றை அணிந்து கொண்டிருக்கும் பழக்கத்தையும் விட்டுவிட வேண்டும். ஒன்றுமே போட்டுக் கொள்ளாதிருத்தல் நல்லது. அது முடியவில்லை யென்றால் ஏதோ அற்பசொற்பமாகப் போட்டுக் கொள்ளுதல் வேண்டும். பூர்விக எகிப்தியர்கள் தலை யிலே ஒன்றும் போட்டுக்கொள்ளா திருந்தார்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. சிலர், சிறு குழந்தைகளை எல்லாவிதமான ஆடைகளையும் போட்டு உருத்தெரியாமல் மூடிவிடு கிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் நாளாவட்டத்தில் மெலிவுற்று எளிதாக நோய் வாய்ப்பட்டுவிடுகின்றன, குழந்தைகள் தாகமென்று கேட்டால் குளிர்ந்த நீரைக் கொடுங்கள். வேறுவிதமான பானங் களைக் கொடுத்துக் கெடுத்துவிடவேண்டாம். இங்ஙனமே, குழந்தை களைக் கடினமான பழக்க வழக்கங்களில் பயிலுவிப்பதுதான் நல்லது. ஃ ஃ ஃ தங்களுடைய குழந்தைகளின் உயிரைமட்டும் காப்பாற்றிக் கொடுத்தால் போதுமென்று சிலர் நினைக்கின்றனர். இது போதாது. அந்தக் குழந்தைகள் பெரியவர்களான பிறகு, தங்களுடைய உயிரைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வதெப்படி என்பதையும் அவர் களுக்கு - அந்தக் குழந்தைகளுக்கு - கற்றுக் கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல; சுகத்தையும் துக்கத்தையும், செல்வத்தையும் வறுமையையும், உஷ்ணத்தையும் குளிரையும், ஒரே மாதிரியாகத் தாங்கிக் கொள்ளக்கூடிய மனப்பான்மையையும் அவர்களுக்சூ உண்டுபண்ண வேண்டும். குழந்தையைச் சாகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பது சிலர் கவலை, இது வீண். குழந்தையைச் சாவினின்று பாதுகாக்க இவர்கள் யார்? என்றைக்காவது ஒரு நாள் அந்தக் குழந்தை சாகத்தான் போகிறது. சாவினின்று தடுத்துக் கொள்ள அதற்குக் கற்றுக் கொடுப்பதைக் காட்டிலும், வாழ்வ தெப்படி என்பதை அதற்குக் கற்றுக்கொடுங்கள். வாழ்வு என்றால் என்ன அர்த்தம்? மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதா? இல்லை; இல்லை. நமது இந்திரியங்களை, நமது மனத்தை, நமது சக்திகளை எல்லாவற்றையும் உபயோகத்திற்குக் கொண்டு வருவதுதான் வாழ்க்கை. இந்த உலகத்தில் நமக்கென்று ஒரு தனித்துவம் உண்டு என்று எப்பொழுதும் நம்மை உணரும்படி செய்துகொண் டிருப்பது எதுவோ அதுதான் வாழ்க்கை. நீண்ட நாட்கள் உயிரோ டிருப்பது வாழ்க்கையல்ல; ஒவ்வொரு நிமிஷமும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்துகொண்டு வாழ்கிறோமே அதுதான் வாழ்க்கை. ஒரு மனிதன் நூறு வருஷம் உயிரோடிருந் திருக்கலாம். ஆனால் அவன் வாழாமலே மரித்துப் போயிருக்கலாம். அப்படி நூறு வருஷம் உயிரோடிருந்ததைவிட அவன் இளமையி லேயே இறந்துபோயிருக்கலாம். மனிதனிடத்தில் வேரூன்றியிருக்கிற விருப்பு வெறுப்புக்களை யெல்லாம் திரட்டி ஞானம் என்றும், கட்டுப்படுத்துவது, கட்டாயப் படுத்துவது முதலியவைகளையெல்லாம் சேர்த்துப் பரம்பரைப் பழக்கம் என்றும் பெயர் கொடுத்துத் திருப்தி கொள்கிறோம். நாகரிக மனிதன் அடிமையாகப் பிறந்து அடிமையாகவே இறந்து போகின் றான். பிறந்த குழந்தையைத் துணிபோட்டுப் பந்தப்படுத்துகிறார்கள்; அப்படியே இறந்த மனிதனை சவப்பெட்டிக்குள் போட்டு மேலே ஆணி அடித்துவிடுகிறார்கள். சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் ஆகிய சிறைக்கம்பிகளுக்குள்ளேயே மனிதன் தன் வாழ்நாள் முழுவதையும் கழித்துவிடுகிறான். ஃ ஃ ஃ தாய் எப்படியோ அப்படித்தான் குழந்தையும் இருக்கும் என்று சொல்வார்கள். இதன் பொருள் என்னவென்றால், தாயின் குணங்கள் யாவும் அவள் குழந்தைக்குப் படிகின்றனவென்பதுவே யாம். எனவே, ஒரு தாயார், தன் குழந்தையின் போஷணையில் ஜாக்கிரதையாக இருப்பதோடு தனது சுய வளர்ச்சியிலும், சர்வ ஜாக்கிரதையுடனிருக்க வேண்டும். சில தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் போஷணையை, சம்பளம் பெறும் தாதிமார்களிடத் தில் ஒப்புவிக்கிறார்கள். இது தவறு. யாரோ சில முடியாதவர்கள் தான் இங்ஙனம் பிறர் வசத்தில் தங்கள் குழந்தைகளை ஒப்புவிக்க லாமே தவிர, பொதுவாக வேறு எந்தத் தாயாரும் இப்படிச் செய்யக் கூடாது. சில தாய்மார்கள், இப்படிக் குழந்தைகளைத் தங்கள் நேரான போஷணையில் வைத்துக் கொள்ளாமல் புறக்கணித்து விடுகிறார்கள். வேறு சில தாய்மார்கள், தங்கள் குழந்தைகளை மிகுந்த அக்கறையுடன் காப்பாற்றுவதாக நினைத்துக்கொண்டு அவைகளைக் கெடுத்து விடுகிறார்கள். இயற்கையின் பரிசோதனை களுக்கு அவை களை உட்படுத்திப் பண்படுத்தாமல், இயற்கையி னின்று அவைகளைக் காப்பாற்றிக் காப்பாற்றிக் கடைசியில் விபரீதமான ஆபத்துக்களுக் குட்படுத்தி விடுகிறார்கள். ஆபத்துக் களைச் சமாளிக்கக்கூடிய திண்மையே அவைகளுக்கு இல்லாமற் போய்விடுகின்றது. இப்படிச் செய்யக் கூடாது. உண்மையுள்ள தாயார், தன் குழந்தைகளுக்கு எல்லா வகை அனுபவங்களிலும் பழக்கப்படுத்த வேண்டும். கஷ்ட நிஷ்டூரங்களை அனுபவிக்கச் செய்ய வேண்டும். அப்பொழுதுதான், அந்தக் குழந்தைகள் பெரியவர் களான பிறகு வாழ்க்கையைச் சுவைக்க முடியும். ஃ ஃ ஃ தங்கள் பாதுகாப்பின்கீழ் வரும் பிரதியொரு மாணாக்க னுடைய தேக பலத்தையும் விருத்தி செய்ய வேண்டியது ஆசிரியர் கடமை. வலிமையுள்ள உடலுக்குள்தான் திண்ணிய மனம் இருக்க முடியும். சிலர், தேக புஷ்டிக்காக மருந்துகளைக்கொண்டு திணிக்கி றார்கள். இது தவறு. தங்களுடைய அருமையான காலத்தை எப்படிச் செலவழிப்பதென்று தெரியாத சோம்பேறிகள்தான், தங்களுடைய தேகத்தைப்பற்றிக் கவலைப் படுவதிலேயே காலத்தைக் கழிக்கி றார்கள். இதற்காக என்னென்னவோ ஆதாரங்களையெல்லாம் எடுத்துக் காட்டுகிறார்கள். ஒரு சிலருக்கு மருந்து தேவைதான். ஆனால் பொதுவாக மானிட சமுதாயத்திற்கு அதனால் தீமையே தவிர நன்மை இல்லை. ஒரு வீர புருஷனை, தைரியசாலியை எங்கே பார்க்கலாம்? எங்கே வைத்தியர்கள் இல்லையோ, எங்கே வியாதிகளின் விளைவு களைப் பார்க்க முடியாதோ, எங்கே மரணத்தைப்பற்றி யாரும் அதிகமாகக் கவலைப் படுவதில்லையோ அங்கேதான் பார்க்கலாம். மனிதன், சுபாவத்திலேயே நோயைத் தாங்கக் கூடியவன்; அமைதி யாக இறந்து போகும் ஆற்றலுடையவன். ஆனால் வைத்தியர்கள் தங்களுடைய விதிகளாலும், தத்துவ ஞானிகள் தங்களுடைய சித்தாந்தங்களினாலும், புரோகிதர்கள் தங்களுடைய உபதேசங்களி னாலும் மனிதனுடைய மனத்தைக் களங்கப்படுத்தி, மரணத்தைக் கண்டு அஞ்சுமாறு அவனைச் செய்துவிடுகிறார்கள். ஃ ஃ ஃ பெரியோர்களே! உங்கள் சகோதர மனிதர்களிடம் நேசம் பாராட்டுங்கள். இதுதான் உங்களுடைய முதற் கடமை. எவ்வளவு வயதுடையவர்களானாலும் சரி, எந்த அந்ததிலே இருக்கிறவர் களானாலும் சரி, எல்லாரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். அன்பைவிடச் சிறந்த ஞானம் வேறெது உண்டு இவ்வுலகத்தினில்? இளமையின்மீது அன்பு காட்டுங்கள்; அதனுடைய விளையாட்டுக் களில், வேடிக்கைகளில் கலந்து கொள்ளுங்கள். முதுமையடைந்த பிறகு, இந்த இளமையை நீங்கள் அனுபவிக்க முடியாது. ஃ ஃ ஃ நம்முடைய சக்திகளுக்கும் ஆவல்களுக்கும் மத்தியில் அதிக வித்தியாசமில்லாமல் கூடியவரையில் சமன் வயப்படுத்திக்கொண்டு செல்வதிலேதான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது. ஃ ஃ ஃ தன்னால் முடிந்ததைச் செய்ய வேண்டுமென்று எவன் ஆவல் கொள்கிறானோ, எவன், தான் கொண்ட ஆவலின்படி காரியங் களைச் செய்கிறானோ அவன்தான் உண்மையான சுதந்திர புருஷன். ஃ ஃ ஃ உங்கள் குழந்தைகளுக்கு எளிய, சாதாரண உணவுகளையே பழக்கப்படுத்தி வையுங்கள். தேவையான அளவு அவர்கள் சாப்பிடட்டும்; நன்றாக விளையாடட்டும். ஃ ஃ ஃ அரசியல் வேறே, ஒழுக்கம் வேறே என்று கருதுகிறவர்கள், இரண்டையும் அறியாதவர்கள். ஃ ஃ ஃ ஒரு மனிதனைப் பற்றி நீ நன்கு தெரிந்துகொள்ள வேண்டு மானால் அவனுடைய செயலைக் கொண்டுதான் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதனும் சமுதாயத்தில்-அதாவது நான்கு பேர் மத்தியில்-பேசிப்பேசி தனது செயலை மூடி வைத்துக்கொண்டு விடுகிறான். ஆனால் சரித்திரமோ, பிரதியொரு மனிதனையும், அவனுடைய செய்கையைக் கொண்டுதான் நிதானிக்கிறதே தவிர பேச்சைக்கொண்டு அல்ல. ஃ ஃ ஃ சிந்தனை செய்யத் தொடங்குவதென்பது சுலபமான விஷய மல்ல. ஆனால் ஒருவன் சிந்தனை செய்யத் தொடங்கிவிட்டால் அதனை விடவே மாட்டான். ஃ ஃ ஃ எவனொருவன் தன்னுடைய செல்வத்தைக்கொண்டு ஓய்வு, சுதந்திரம், அரோக திடகாத்திரம் ஆகிய மூன்றையும் பெறுகிறானோ அவன்தான் உண்மையான பணக்காரன். ஃ ஃ ஃ நான் ஓர் அரண்மனையிலே வசிக்க விரும்பமாட்டேன். அரண்மனையிலே வசித்தாலும் எனக்குத் தேவையானது ஓர் அறைதானே? கீழ்நாட்டார், எளிய முறையில் கட்டப்பெற்ற வீடு களிலேயே வசிப்பதற்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக் கின்றனர். அவர்கள் வாழ்க்கையை ஒரு வழிப் பிரயாணமாகவும், தாங்கள் வசிக்கிற வீட்டை ஒரு சத்திரமாகவும் கருதி நடந்து வருகிறார்கள். ஆனால் நம்மிலே சில பணக்காரர்கள், தாங்கள் சாசுவதமாக வாழப்போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்! ஃ ஃ ஃ பெண்களைப் பெண்களாகவே வளர்க்க வேண்டும். அவர் களை ஆண்களாக வளர்ப்பது அவர்களுக்கும் கெடுதல்; வளர்க்கிற நமக்கும் கெடுதல். ஃ ஃ ஃ அறிவைச் சம்பாதித்துக் கொள்வதற்குப் பிரயாணம் அவசிய மானது. ஆனால் ஒரு நாட்டை வேகமாகச் சுற்றி வந்துவிட்டால் மட்டும் அந்த நாட்டைப் பற்றிய அறிவையோ, பொது அறிவையோ சம்பாதித்துக் கொண்டுவிட முடியாது. ஒவ்வொரு விஷயத்தையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதற்காக நமது கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டிருக்க வேண்டும். ஃ ஃ ஃ நகரங்களிலே வசிப்பதை நான் ஆதரிக்கமுடியாது. மற்றவர் களுக்கு எவனொருவன் உதாரண புருஷனாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறானோ அவன் கிராம வாழ்வையே நாடவேண்டும். நமது உள்ளம் கறைப்படாதிருக்க வேண்டுமானால் அதற்குக் கிராம வாசந்தான் சிறந்தது. அனுபந்தம் 4 சமுதாய ஒப்பந்தம் மனிதன் ஆதியில் தன் பிழைப்புக்காக அதிகம் உழைக்க வேண்டி யிருந்தது. அப்படி உழைக்கிறபோது அநேக தடைகள்அவனுக்குக் குறுக்கிட்டன. இந்தத் தடைகளைச் சமாளித்துக்கொண்டு வாழ்க்கையை நடத்த ஒரு தனி மனிதனுடைய சக்தி போதாமல் இருந்தது. எனவே பலர் சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது. எல்லோருடைய க்ஷேமமும் இந்த ஒற்றுமை யிலேயே இருக்கிற தென்பதைப் பிரதியொரு மனிதனும் உணர்ந் தான். இங்ஙனம் உணர்ந்த தோடு மட்டுமல்லாமல், பிரதியொரு மனிதனுடைய பலத்தையும், அந்தப் பலத்தை உபயோகிக்கும் உரிமையையும் பொறுத்தே பிரதியொரு மனிதனுடைய க்ஷேமமும் இருக்கிறதென்பதையும் தெரிந்துகொண்டான். இந்த இரண்டு நிலைமைகளையும்-அதாவது எல்லோருடைய க்ஷேமத்தையும் நாடவேண்டும், அதே சமயத்தில் தனிப்பட்டவர்களுடைய உரிமை யும் பாதுகாக்கப்பெறவேண்டும் என்கிற இரண்டு நிலைமைகளை யும் - பொருத்திக்கொண்டு செல்வது எப்படி? இந்த மாதிரியான ஒரு பிரச்னை, மானிட சமுதாயம் வளர்ச்சியடைந்துகொண்டு வருகிற காலத்தில் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த பலருக்குள்ளும் ஏற்பட்டது. இந்தப் பிரச்னைக்கு ஒரே ஒரு பரிகாரந்தான் உண்டு. என்ன வென்றால் பிரதியொரு மனிதனும், தன்னை, எல்லோருடைய சுவாதீனத்திற்கும் ஒப்புக் கொடுத்துவிட வேண்டும்; அந்த எல்லோ ரும் சேர்ந்து செய்கிற ஒரு காரியம், பிரதியொரு மனிதனுடைய க்ஷேமத்தையும் நாடுவதாயிருக்க வேண்டும். பரபர சம்மதத்தின் பேரில் நடைபெறுகிற இந்த விவகாரத்திற்குத்தான் சமுதாய ஒப்பந்தம் என்று பெயர். இதனால் அனைவருடைய பலம் தனிப்பட்டவர் களுடைய சாதகமாகிறது. அதாவது எந்த ஒரு மனிதனும், மற்றவர் களுடைய நன்மைக்கு விரோதமான ஒரு காரியத்தைச் செய்ய மாட்டான். ஏனென்றால், அப்படிச் செய்வது தன்னையே வந்து பாதிக்குமென்பதை அவன் உணர்ந்துகொள்கிறான். இங்ஙனம் பரபர நலனை நாடுதல் என்கிற ஒரே நோக்கமுடைய ஒரு சமுதாயம் அமைகிறது. இந்தச் சமுதாயத்தில், சம உரிமையுடைய பலர் அங்கத்தினர்களாகிறார்கள். சமுதாயம் தனிப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கிறது. தனிப்பட்டவர்கள், சமுதாயத்தின் க்ஷேமத்தை நாடுகிறார்கள். இப்படிப் பட்டதோர் ஏற்பாடு இருந்தபோதிலும், மனித சுபாவம் எப்படிப்பட்டதென்றால், ஒரு கடமையைச் செய்தால் என்ன சாதகங்களை அடைய முடியுமோ அந்தச் சாதகங்களை, அந்தக் கடமையைச் செய்யாமலே அடையப் பார்க்கிறது. இங்ஙனம் கடமையைச் செய்யத் தவறுகிறவர்களைக் கட்டாயப்படுத்திக் கடமையைச் செய்யுமாறு வற்புறுத்துகிற ஒரு நிபந்தனையும் மேற்படி சமுதாய ஒப்பந்தத்தில் கூடவே கலந் திருக்கிறது. இந்தச் சமுதாய ஒப்பந்தம் அனுஷ்டானத்தில் வந்த பிறகு, மனிதனுடைய நிலைமையிலும் தன்மையிலும் ஒரு மாறுதல் உண்டாயிற்று. இதுகாறும் அவன் ஓர் ஆவலினாலும் சுய உணர்ச்சி யினாலும் தூண்டப்பட்டுத் தன் காரியங்களைச் செய்து வந்தான். இப்பொழுது-இந்தச் சமுதாய ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு-நியாயம், கடமை என்பவைகளினால் உந்தப்பட்டுக் காரியங்களைச் செய்கி றான். மற்றவர்களுடைய நலனை நாடவேண்டுமென்ற எண்ணம் இவனுக்கு உண்டாகி விடுகிறது. இதுவரையில் அவன் இயற்கை யான சுதந்திரத்தை - அதாவது தனது சக்திக்கு இயன்ற அளவு சுதந்திரத்தை - அனுபவித்துக்கொண்டு வந்தான். இப்பொழுது சமுதாய சுதந்திரத்தை-அதாவது எல்லோரும் சேர்ந்து நிர்ணயிக்கிற சுதந்திரத்தை அனுபவிக் கிறான். முந்திய சுதந்திரத்திற்கு எல்லை யில்லை; பிந்திய சுதந்திரத்திற்கு எல்லையுண்டு. சமுதாய ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முந்தி, மனிதனுடைய சக்தியைப் பொறுத்தே அவ னுடைய உடைமைகள் இருந்தன. சமுதாய ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, தனிப்பட்ட ஒரு மனிதன், உடைமைகளுக்குச் சொந்தக்கார னாக வேண்டுமானால், என்னென்ன முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்பதைச் சமுதாயமே நிர்ணயித்தது. சமுதாயமானது, தனிப்பட்ட மனிதனுடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொடுக் கிறது; ஆனால் அந்தச் சொத்துக்களையும் அந்தத் தனி மனிதனை யும்கூட தன் சுவாதீனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படிச் சொல்லி விட்டதனால், தனி மனிதனுடைய சொந்த உரிமையைச் சமுதாயமானது பறிமுதல் செய்துவிடுகிறது என்பது அர்த்தமில்லை. அதற்கு மாறாக, பாரமார்த்திக விஷயமாகவும், தேக பல விஷயமாக வும் இருந்த ஏற்றத் தாழ்வான உரிமைகளைச் சட்டபூர்வமாகச் சமன்படுத்தி ஒரே நிதானத்துக்குட்படுத்துகிறது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான நலன்களுண்டு என்கிற அடிப்படையான சித்தாந்தம் அங்கீகரிக்கப்படுகிற நிலைமையில் தான் சமுதாயம் என்பது அமைவது சாத்தியமாகிறது. இந்தப் பொதுநலன் என்னவென்பதை நிர்ணயிப்பது யார்? பொதுஜனம்; அதாவது சமுதாயம். இந்தப் பொதுஜனத்தின் அல்லது சமுதாயத்தின் அபிப்பிராயத்தைப் பிரதிபலிப்பது அரசு. இந்த அரசு, சமுதாயப் பொதுவானது; எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் உரியதன்று. இதனை யாருக்கும், எந்த ஒரு தனி மனிதனுக்கோ அல்லது சமுதாயத்தின் எந்த ஒரு பகுதியினருக்கோ பராதீனப்படுத்த முடியாது. இந்த அரசினுடைய, அல்லது சமுதாயப் பொதுவினுடைய அபிப்பிராயந் தான் சட்டமாகப் பரிணமிக்கிறது. அரசானது, சமுதாயத்தின் நலனையே நாடுகிறது. ஏனென்றால் சமுதாயப் பொதுவினுடைய, அபிப்பிராயத்தைத்தானே அது பிரதி பலிக்கிறது? அந்த அரசினால் இயற்றப்படுகிற சட்டங்களுக்குப் பிரதியொரு மனிதனும் சம்மதம் கொடுக்கிறான். அந்தச் சட்டங்கள் தன் விஷயத்தில் மட்டுமல்ல, எல்லோர் விஷயத்திலும் பிரயோகிக் கப்படும் என்பதை, சமுதாயத்தின் ஒவ்வோர் அங்கத்தினனும் உணர்ந்திருக்கிறான். மேற்படி சட்டங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிற விஷயத்தில் ஒருவன் தவறு செய்யலாம்; ஆனால் பிறருக்குத் தீங்கு செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தோடு அந்தத் தவறைச் செய்யமாட்டான். எனவே, சமுதாயப் பொதுவினால் நிர்ணயிக்கப்படுகிற எதுவும் சமுதாய நன்மைக்காகவே இருக்கும். அரசானது சமுதாய அங்கத்தினர்கள்மீது பரிபூரணமான ஆதிக்கம் செலுத்துகிறது என்று சொன்னோமல்லவா? ஆதிக்கம் செலுத்தும் உரிமை அதற்கு இருந்தாலும், அனாவசியமான சுமை களை அங்கத்தினர்கள்மீது அது சுமத்துவதில்லை; சமுதாயத்தின் தேவையையும் நன்மையையும் அனுசரித்தே அது, தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. அப்படி ஆதிக்கம் செலுத்துகிறபோது, சமுதாய அங்கத்தினர்களுக்கு அவர்களுடைய கடமைகளையும் உணர்த்து கிறது. ஒரு சமுதாய அமைப்பிலே, சட்ட நிர்மாணகன் ஓர் உயர்ந்த தானத்தை வகிக்கிறான். எந்தச் சட்டதிட்டங்களை அவன் வகுக்கிறானோ அந்தச் சட்ட திட்டங்களுக்கு அவன் மேற்பட்டவன். அவன் அதிகாரத்தைச் சிருஷ்டி செய்து கொடுக்கிறானே தவிர, அவனே அதிகாரியாயிருப்ப தில்லை. இப்படிப் புத்திசாலியான ஒரு சட்ட நிர்மாணகனால் வகுக்கப்படுகிற சட்டதிட்டங்கள் உடனே அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரப்படக் கூடாது. அவைகளை ஜனங்கள் அங்கீகரித்த பிறகே அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டும். அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிற தாபனத்திற்கு அரசாங்கம் என்று பெயர். அரசு வேறே; அரசாங்கம் வேறே, ஒன்றுக்கு மற்றொன்றைப் போட்டுக் குழப்பிக் கொண்டுவிடக் கூடாது. ஃ ஃ ஃ அரசாங்கம் என்று சொன்னால் அதில் பலவகைகளுண்டு. ஆள்வோர் பெரும்பாலோராகவும் ஆளப்படுவோர் சிறுபான்மை யோராகவும் இருந்தால் அதற்கு ஜனநாயக அரசாங்கம் என்று பெயர். ஆள்வோர் சிறுபான்மையோராகவும், ஆளப்படுவோர் பெரும்பான்மையோராகவும் இருந்தால் அதற்கு சுயேச்சாதிகார அரசாங்கம் என்று பெயர். ஓர் அரசாங்கத்தின் அதிகாரங்கள் யாவும் ஒரு தனி மனிதனிடத்திலே போய்ச் சேர்ந்து, பின்னர் அவனிடத்திலிருந்து அந்த அதிகாரங்கள் மீண்டும் அரசாங்க அதிகாரிகளின் மூலமாக ஜனங்களிடத்திலே பிரயோகிக்கப்படு மானால், அதற்கு முடியரசாங்கம் அல்லது கோனாட்சி என்று பெயர். இந்த அரசாங்க வகைகளிலே பல தரா தரங்களும் பல கலப்புகளும் இருக்கலாம். அந்தந்த ஜன சமுதாயத்தின் பரி பக்குவத்தையொட்டி இந்த அரசியல் அமைப்புகள் ஏற்படுகின்றன. ஃ ஃ ஃ சமுதாயத்தின் க்ஷேமத்தை நாடுகிற விஷயத்தில் பிரதியொரு பிரஜைக்கும் உரிமை இருக்க வேண்டும். அதுதான் உண்மையான சுதந்திரம்; அதாவது பிரதியொரு பிரஜையும், சமுதாயத்தைச் சேர்ந்துள்ள மற்றவர்களுக்குப் பயனுடையவனாயிருக்க வேண்டும். இப்படிப்பட்ட நோக்கமுடைய பிரஜைகளைக் கொண்ட ஒரு சமுதாயத்தை அழிக்க முடியாது. இவர்களுக்கு அதிகமான சட்டங் களும் தேவையில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால், ரூஸோதான், ஜனசக்தியின் மகத்துவத்தை முதன்முதலாக எல்லாருக்கும் எடுத்துச் சொன்னவன்; அதன் மகத்துவத்தைப் புலப்படுத்தியவன். இதற்கு முக்கிய காரணமா யிருந்தது சமுதாய ஒப்பந்தம். இன்று ஜனநாயகத்தின் பெயரால் செய்யப்படுகிற முழக்கங்களுக்கெல்லாம் மூல காரணமா யிருப்பது இந்தச் சமுதாய ஒப்பந்தந்தான். ரூஸோ வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் வருஷம் சம்பவம் 1712 - ரூஸோ பிறந்தது. 1728 - ஜினீவாவைவிட்டு நாடோடியாகப் புறப்பட்டது. கத்தோலிக்கனானது. 1720-1740 - வாரென் சீமாட்டியின் ஆதரவில் இருந்து கொண்டு பல தொழில்களைப் பார்த்துப் பார்த்து விட்டது. 1741 - உத்தியோகத்தை நாடி பாரிஸுக்குச் சென்றது. 1743 - வெனிஸில் பிரெஞ்சு தானீகனுடைய காரியா லயத்தில் வேலை பார்த்தது. தெரேஸே லெவாஷீர் என்ற பெண்ணின்மீது காதல் கொண்டது. 1744-1749 - பாரிஸில் பல உத்தியோகங்கள் பார்த்தது. 1749-1756 - டிஜோன் கழகத்திற்குக் கட்டுரைகள் எழுதியது. ஜினீவாவுக்குச் சென்று கௌரவத்துடன் திரும்பி யது. 1756 - ஆசிரமத்தில் வாசம். டிஎபினே சீமாட்டியுடன் சிநேகம். 1757 - மாண்ட்மோரென்ஸியில் வாசம். 1762 - எமிலி, சமுதாய ஒப்பந்தம் என்ற இரண்டு பிரபல நூல்கள் வெளியாயின. மோட்டியர்ஸில் வாசம். 1765-1766 - செயிண்ட் பீரே தீவு, பாரி முதலிய இடங்களில் வாசம். 1766 - இங்கிலாந்துக்குச் சென்றது. 1767 - இங்கிலாந்தினின்று திரும்பிவிட்டது. 1768-1777 - பாரிஸில் அதமன வாழ்வு. 1778 - மரணம். ரூஸோ எழுதிய நூல்கள் பெயரும் காலமும் 1. இலக்கியம், கலை இவைகளைப் பற்றிய விரிவுரை Discourse on Arts and Sciences (1749) 2. கிராமத்துக் குறி சொல்வோன் (1753) The Village Soothsayer 3. மனிதர்களிடையே ஏற்றறத் தாழ்வுகள் ஏற்பட்டதற்குக் காரணம் என்ன? (1753) Discourse on the Origin of Inequality 4. பிரெஞ்சு சங்கீதத்தைப் பற்றிய கடிதம் (1753) Letters on the French Music 5. நாடக மேடையைப் பற்றிய கடிதம் Letter to D’ Alembert on the Theatre 6. அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய விரிவுரை (1758) Discourse on Political Economy 7. ஜூலி அல்லது புதிய ஹெலாய்ஸே (1761) Julie or the New Heloise 8. எமிலி அல்லது கல்வி Emile or Education 9. சமுதாய ஒப்பந்தம் (1762) The Social Contract 10. மலைக் கடிதங்கள் (1764) Letters from the Mountain 11. குற்ற அங்கீகாரம் (1765-1770) The Confessions 12. சம்பாஷணைகள் (1775-1776) Dialogues 13. சிந்தனைகள் (1777-1778) Reveries இந்நூல் எழுதுவதற்குத் துணையாயிருந்த சில நூல்கள் 1. The Confessions of Rousseau - Autobiography 2. Early Life and Adventures of Rousseau - A.R. Sells 3. Rousseau - C.E. Vulliamy 4. Jean Jacques Rousseau - R.B. Mowat 5. Rousseau-The Child of Nature - John Charpentier 6. Rousseau-2 vols - John Morley 7. Living Thoughts of Rousseau - Romain Rolland 8. Jean Jacques Rousseau-A New Study in Criticism 2 vols - Frederika Macdonald  சமுதாய ஒப்பந்தம் முதல் பதிப்பின் பதிப்புரை உலக மேடையில் எத்தனையோ தலைவர்கள், பேராசிரியர்கள் தோன்றி யிருக்கிறார்கள். ஆனால், சிந்தனையாளர்கள் தோன்றுவது அபூர்வம். ரூஸோ, சிறந்த சிந்தனையாளன் என்று அறிஞர்களால் புகழப் பட்டவன், புகழப்படுகிறவன். இன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து பேசுகிறார்கள் அல்லவா? இந்த ஜனநாயக தத்துவத்திற்கு முதன்முதல் விதை போட்டவன் ரூஸோ என்பது அரசியல் மேதைகளின் கருத்து. ஜனநாயகத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்கிற பலருக்கும் பிரெஞ்சு அறிஞனான ரூஸோவைப்பற்றி நன்கு தெரியும்.... அரசியல் தத்துவங்களைப் பற்றி நடைபெற்று வந்திருக்கிற ஆராய்ச்சிகளிலே, ரூஸோவின் கொள்கைகளுக்கு எப்பொழுதும் ஒரு முக்கிய தானம் உண்டு. இவனுடைய ஆராய்ச்சியானது சமுதாய ஒப்பந்தம் என்ற ஒரு சிறந்த நூலாகப் பரிணமித்தது என்று சீன மக்களின் சிறந்த தலைவர், காலஞ்சென்ற சன் - யாட் - ஸென் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயக சித்தாந்தத்தின் தலைசிறந்த இந்நூலை நாங்கள் எங்கள் கழகத்தின் மூன்றாவது நூலாக 1941-ம் வருஷம் அக்டோபர் மாதம் கடைசியில் இரங்கூன் (பர்மா) நகரிலிருந்து வெளியிட் டோம். அதே வருஷம் டிசம்பர் மாதத்திலிருந்து பர்மாவுக்கு ஏற் பட்ட யுத்த நெருக்கடி எல்லோருக்கும் தெரிந்ததே. அச்சாகி முடிந்த இந்நூல், விற்பனைக்காக எங்கும் அனுப்ப இயலாது அங்கேயே கிடந்து போயிற்று. ஆகையால் இப்பொழுது இந்நூலை மறுமுறை வெளியிடுகிறோம். தமிழர்களுக்கு, இத்தகைய நூல்களைப் படிக்கக் கொடுக்க வேண்டுமென்ற எங்களுடைய ஆவல் இப்பொழுதே நிறைவேறி இருக்கிறது. இந்த நூலைப் படியுங்கள் என்று நாங்கள் வாசகர்களுக்கு உபதேசிக்க முன்வரவில்லை. அந்தக் காலமும் ஒன்று இருந்தது வெட்கப்படும் படியான காலம்! அது இறந்து மறைந்தது. நல்ல நூல்களைப் படிக்க வேண்டும், சிறந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆவலுறும் நாள் இது. இந்த நெருக்கடியான காலத்தில் இந்நூல் வெளிவருவதற்கு எல்லா வகையிலும் உதவி செய்த ஸ்ரீ வை. கோவிந்தன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. காரியதரிசி, புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம். முகவுரை மேனாடுகளைப் பொறுத்தமட்டில் கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டைப் புரட்சி நூற்றாண்டு என்று சொல்வது ஒரு சம்பிரதாயம். ஏனென்றால் இந்த நூற்றாண்டில், தொழிற் புரட்சி, அமெரிக்கர்களின் சுதந்திரப் புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி ஆகிய மூன்று மகத்தான புரட்சிகள் நடைபெற்றன. இவற்றில் பிரெஞ்சுப் புரட்சிக்குத்தான், சரித்திரக்காரர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகிறார்கள். ஏனென்றால், இந்தப் புரட்சியின் பய னாக மன்னர்களின் சிங்காதனங்கள் ஆடின; ஏகபோக உரிமைகள் அலறின; மத பீடங்கள் சரிந்து வீழ்ந்தன; சமுதாயத்தின் மேல்படியி லிருந்தவர்கள், கீழ்ப்படியிலிருந்தவர்களும் மனிதப் பிறவிகள் தான் என்பதைப் பரம கருணையோடு, ஆனால் வேறு வகையின்றி ஒப்புக்கொண்டார்கள். கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டில், பிரெஞ்சு அரச பீடத் திற்கு, ஐரோப்பாவெங்கணும் ஒரு விசேஷ மதிப்பு இருந்தது. பிரெஞ்சு அரச சபையை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு, மற்ற ஐரோப்பிய அரசர்கள், தங்கள் ஆதான சபைகளை அமைத்துக் கொண்டார்கள். பொதுவாக, நாகரிகம் என்ற சீட்டை ஒட்டிக் கொண்டு கிளம்பின யாவும், பிரெஞ்சு அரச சபையிலிருந்தே கிளம் பின. இப்படி மேற்பார்வைக்கு எல்லாம் சந்தோஷப்படக்கூடிய மாதிரியாகவும் பெருமைப் படக்கூடிய மாதிரி யாகவும் இருந்த போதிலும், பிரெஞ்சு சமுதாயத்தின் உட்புறம் அழுகிக் கொண்டு வந்தது. ஒழுக்க ஹீனங்கள் மலிந்தன. பணக்காரப் பிரபுக்களும், புரோகிதர்களும், அரச பரிவாரத்தோடு சேர்ந்து கொண்டு ஏழை களை நசுக்கிப் பிழிய ஆரம்பித்தார்கள். ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? பிச்சை எடுத்தார்கள்! பிரபுக்களிடம் பல்லைக் காட்டினார்கள்! கிடைத்த பலன் என்ன? அதிக வரி! அநேக போர் முனைகளுக்குச் சென்று தங்கள் உயிரைக் கொடுத்து, அரசுக்குப் புகழை வாங்கிக் கொடுத்தார்கள்! என்ன பெற்றார்கள்? அடக்கு முறை! இவைகளையெல்லாம் எவ்வளவு காலம் சகித்துக் கொண் டிருப்பது? நாட்டிலே நாளுக்கு நாள் தரித்திரம் அதிகப்பட்டு வந்தது. 1777ஆம் வருஷத்தில், அதாவது புரட்சி ஏற்படுவதற்குப் பன்னி ரண்டு வருஷங்களுக்கு முன்னர், பிரான்சில் பதினோரு லட்சம் பிச்சைக்காரர்கள் இருந்தார்கள்! இப்படிப்பட்ட நிலைமைதான், பிரெஞ்சுப் புரட்சி ஏற்படுவ தற்குக் காரணமா யிருந்தது. பண்டித ஜவஹர்லால் நேரு கூறுகிறார்:- சில எண்ணங்களும், பொருளாதார நிலைமையும் சேர்ந்து புரட்சிகளை உண்டு பண்ணுகின்றன. அதிகார பதவியிலிருக்கும் முட்டாள்கள், சில கிளர்ச்சிக் காரர்களே புரட்சிக்குக் காரணமென்று குருட்டுத்தனமாகக் கருதுகிறார்கள். இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் யார்? ஜனங்களுடைய அதிருப்தியிலிருந்தும் ஆத்திரத்திலிருந்தும் தோன்றினவர்கள். ஆனால் இந்தக் கிளர்ச்சிக்காரர் களுடைய வார்த்தைகளைக் கேட்டு மட்டும் ஜனங்கள் புரட்சிக்குக் கிளம்பி விடுகிறார்களென்று சொல்ல முடியாது. ஜனங்கள், எப்பொழுதுமே தங்கள் சொந்த க்ஷேமத்தைக் கோரும் சுபாவமுடையவர்கள். தாங்கள் வைத்திருப்பது சொற்பமா யிருந்தாலும் அதனை இழந்துவிடச் சம்மதப்பட மாட்டார்கள். ஆனால், நாளுக்கு நாள் துன்பம் அதிகரித்து, வாழ்க்கையே ஒரு சுமையாகி விடுகிறபொழுதுதான் ஆபத்தை ஏற்றுக் கொள்ளக் கிளம்பி விடுகிறார்கள்; கிளர்ச்சிக் காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால், அடைய வேண்டிய லட்சியம் இன்னதென்று தெரியாத காரணத்தினால் அநேக புரட்சிகள் தோல்வியடைந்து போகின்றன. ஒழுங்கான எண்ணங்களும் பொருளாதாரச் சீர்கேடும் ஒன்று சேர்ந்தால் தான் உண்மையான புரட்சி ஏற்படும். இத்தகைய புரட்சி ஒரு சமுதாயத் தின் அரசியல், பொருளாதாரம், மதம் முதலிய எல்லாத் துறைகளை யுமே பாதிக்கிறது. பதினெட்டாவது நூற்றாண்டின் இறுதியில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி இந்த மாதிரியான உண்மைப் புரட்சி1 கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டை, புரட்சி நூற்றாண்டு என்று சொல்வதைப்போல ரூஸோ - வால்ட்டேர் நூற்றாண்டு என்று சொல்வதும் வழக்கம். இந்த இரண்டு பேருடைய எழுத்துக்கள் தான், அந்த நூற்றாண்டு வாசிகளின் எண்ணத்தில் ஆழமான முத்திரையிட்டன. இந்த இருவரில் ரூஸோ சூரியன்; வால்ட்டேர் சந்திரன். வால்ட்டேர் அரசர்களின் நண்பன், விருந்தினன். ஆடம்பர வாழ்க்கையிலும் ஓய்வு கொள்வதிலும் பிரிய முள்ளவன். கலை, இலக்கியம் இவைகளில் ருசி யுடையவன். ஆனால் ரூஸோவோ ஜனங்களின் மனிதன். அவர்களுடைய சுக துக்கங்களிலே கலந்து கொண்டவன். அதனால் அவர்களுடைய அநுதாபத்தைப் பெற்ற வன். அது மட்டுமல்ல; படித்தவர்களென்றும், பணக்காரர்களென் றும் சொல்லிக்கொண்டு இவனிடம் யாரேனும் அநுதாபங் காட்டி னால், அந்த அநுதாபத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தான். மனத் தூய்மை, நீதி, மனிதத் தன்மை முதலியனவற்றைக் குடிசைகளிலே தான் காணமுடியுமென்று இவன் நம்பினான். ஜனங்களுக்காக ஜனங்களுடைய அரசாங்கம் நிலவ வேண்டு மென்பதுவே இவ னுடைய அரசியல் லட்சியம்.1 ஒரு யுகத்தின் எண்ணத்தில் பூரண ஆதிக்கம் செலுத்தும் மகா புருஷர்களிலே ரூஸோ ஒருவன்.... பழமையை அழிக்கப் பிறந்தவர்கள் வால்ட்டேர் முதலிய வர்கள். ஆனால் புதுமையைச் சிருஷ்டிக்கப் பிறந்தவன் ரூஸோ ஒருவன் தான் என்பது ரோமெய்ன் ரோலாந்தின் அபிப்பிராயம்.2 ரூஸோவின் நூல்களில் சமுதாய ஒப்பந்தம் என்பது தான் முக்கியமானது. பிரெஞ்சுப் புரட்சியை நடத்துகிறவர்களுக்கு இது வேத புத்தகமாயிருந்தது. புரட்சியைத் தூண்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் ரூஸோ எந்த நூலையும் எழுதவில்லை. ஆனால் சமுதாய ஒப்பந்தம், இரண்டு மகத்தான புரட்சிகள் நடைபெறுவ தற்குக் காரணமா யிருந்திருக் கிறது. ஒன்று, 1774ஆம் வருஷத்து அமெரிக்கப் புரட்சி; மற்றொன்று 1789ஆம் வருஷத்துப் பிரெஞ்சுப் புரட்சி. இந்த இரண்டு புரட்சிகளின் விளைவாகத் தோன்றின சுதந்திரப் பிரகடனங்களில் சமுதாய ஒப்பந்தத்தின் வாசகங்கள் கையாளப்பட்டிருக்கின்றன. பதினெட்டாவது நூற்றாண்டின் இறுதிப் பாகத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இந்தச் சமுதாய ஒப்பந்தத்திற்கிருந்த செல்வாக்கு அபரிமிதமானது. இதனைப் படிப்பதும், இதன் வாசகங்களைக் கையாள்வதும் ஒரு பெரிய கௌரவமென்று அநேகர் கருதினர். உலக சரித்திரத்தி லேயே ஓரிரண்டு நூல்களைத் தவிர, ரூஸோவின் சமுதாய ஒப்பந்தத்தைப் போல் வேறெந்த நூலும் ஜனங்களின் இருதயத்தில் ஆதிக்கஞ் செலுத்தவில்லை யென்று ஓர் அறிஞன் கூறுகிறான்.3 இந்தச் சமுதாய ஒப்பந்தம் ஏன் இப்படி ஜனங்களின் மனதைக் கவர்ந்த தென்பதற்கு ஜோஸப் ஷேனியர்4 என்ற ஒரு பிரெஞ்சு அறிஞன் ஓர் அழகான காரணங் கூறுகிறான். மானிட ஜாதி, தன் உரிமைச் சாஸனத்தை எங்கேயோ போக்கடித்து விட்டது, அதைத் தேடிக் கொடுத்தான் ரூஸோ. இழந்த பொருளைத் தேடிக்கொடுத்த ரூஸோவை மானிட ஜாதி மறந்து விடுமா? ரூஸோ இருந்த காலத்தில் எப்படி அவன் அநேக எதிர்ப்பு களைச் சமாளிக்க வேண்டி யிருந்ததோ அதைப்போல், அவன் இறந்தபிறகு, அவனுடைய சமுதாய ஒப்பந்தம் அநேக எதிர்ப்பு களைச் சந்திக்க வேண்டியிருந்தது; இன்னமும் சந்தித்துக்கொண் டிருக்கிறது. ஒருவன் இந்த நூலை கலப்புள்ள பிராந்தி யென் கிறான். அநேகர், ரூஸோவை ஒரு ராட்சதனாகக் கற்பனை செய்து கொண்டு அவனைக் கண்டபடி திட்டியிருக்கின்றனர். நடுநிலைமை யோடு பார்த்தால் ரூஸோ ஒரு ராட்சதனுமல்ல; ஞானியுமல்ல. மனிதத்தன்மையோடு கூடிய ஒரு மனிதன்.1 இந்தக் கண் கொண்டு தான் நாம் இந்தச் சமுதாய ஒப்பந்தத்தைப் படிக்கவேண்டும். ஒரு நாட்டின் அரசியலிலே ஜனங்களுக்குப் பங்கு உண்டு என்று சொல்வதுதான் ஜனநாயகம். இந்த ஜனநாயக தத்துவத்தை முதன் முதலாக பகிரங்கப்படுத்திச் சொன்னவன் ரூஸோ. அரசியல் உலகத்தில், ஜனநாயகத்தை ஓர் உயிருள்ள தத்துவமாக முதல் முதல் கொண்டு புகுத்தியவன் ரூஸோ.2 இன்றைய ஜனநாயக அரசாங்க முறைக ளெல்லாம், சமுதாய ஒப்பந்தத்தின் பல்வேறு தோற்றங்கள் தான். இப்படிச் சொல்லி விட்டதினால், இந்த நூலிலுள்ள எல்லாக் கருத்துக்களும் இந்தக் காலத்துக்கு ஏற்றவை யென்பது அர்த்தமல்ல. தவிர, ரூஸோ சொல்வதெல்லாம் சரியென்று ஒப்புக் கொள்ள முடியாது. பழைய காலத்து கிரேக்க நகர ராஜ்யங்களையும், அழிந்து போன ரோம சாம்ராஜ்யத்தையும், ஆதிரிய ஆதிக்கத்தினால் நிலை குலைந்துபோன வெனி, ஜினீவா முதலிய குடியரசுப் பிரதேசங் களையும் முன்மாதிரியாக வைத்துக்கொண்டு அநேக இடங்களில் தன் அரசியல் தத்துவங்களை இவன் விதரிக்கிறான். விஞ்ஞான அபிவிருத்தி காரணமாக இடமும் காலமும் சுருங்கிப் போயிருக் கின்ற இந்த இருபதாவது நூற்றாண்டுக்கு இவை பொருந்துமா? ஆனால், ரூஸோவின் தர்க்க முறையையும், அவன் ஆங்காங்கு எடுத்துக் காட்டுகிற உதாரணங்களையும், மற்றவர்களுடைய கொள்கைகளைக் கண்ணியமாகவும் நகைச்சுவை படவும் தாக்கு வதையும் பார்த்து யாரும் பிரமிப்படையாமலிருக்க முடியாது. தவிர இந்தச் சமுதாய ஒப்பந்தம் சிந்தனைக்கு ஒரு தூண்டுகோல்; அறிவுக்கு ஒரு சாணைக்கல். இந்த இரண்டு வகையிலும் இந்த நூல் தமிழ்நாட்டுக்குப் பயன்பட வேண்டு மென்பது என் பிரார்த்தனை. நான் ஒரு வக்கீலல்ல. அதனால்தான் இந்த நூலைத் தமிழில் கொடுக்க வேண்டு மென்ற துணிச்சல் உண்டாயிற்று. ரூஸோ எழுதியது பிரெஞ்சு பாஷையில். அதனைப் பல அறிஞர்கள் ஆங்கி லத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். அந்த மொழி பெயர்ப்புக் களை வைத்துக் கொண்டு, நான் இந்த நூலைத் தமிழ்ப்படுத்தியிருக் கிறேன். தமிழில் மொழி பெயர்க்கிறபோது, நான் ரூஸோவின் கருத்துக்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேனே தவிர, எழுத்துக்களுக்கல்ல. இதனால் அனேக இடங்களில் கூடுதல் குறைச்சல்கள் இருக்கின்றன. இஃதெனக்கு நன்றாகத் தெரிந்திருக் கிறது. ஆனால் என்னுடைய நோக்கம், தமிழ் நாட்டு மகா ஜனங்கள் இதனைக் கூடியவரையில் சலிப்பின்றிப் படிக்க வேண்டு மென்பது தான். சலிப்பின்றிப் படித்தவர்கள் சிந்தனை செய்யத் தொடங்கி விடுவார்களல்லவா? வெ. சாமிநாதன் சமுதாய ஒப்பந்தம் முதற் பாகம் வாழ்க்கைச் சுகங்கள் அதிகமாக ஆக, கலைகள் பூரணத்துவமடைய அடைய, ஆடம்பரம் பெருகப் பெருக, உண்மையான வீரம் தேய்ந்து போகிறது. ஒழுக்கங்கள் மறைந்து போகின்றன. - ரூஸோ பீடிகை இப்பொழுது ஜனங்கள் எந்த மாதிரி இருக்கிறார்களோ அந்த மாதிரியே அவர்கள் இனி எப்பொழுதும் இருப்பார்களென்று வைத்துக் கொள்வோம். இவர்களுக்கநுகூலமாக எவ்வளவு நல்ல முறையில் சட்டங் களை இயற்றிக் கொடுக்கலாமோ அவ்வளவு நல்ல முறையில் சட்டங்கள் இயற்றிக் கொடுக்கப் படுவதாகவும் வைத்துக் கொள்வோம். இப்படிச் செய்து கொடுத்தால், இந்த ஜனங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், இப்படி இப்படித்தான் ஒழுங்காக வும் நியாயமாகவும் நிருவாகம் செய்யப்பட வேண்டுமென்று கண்டிப்பான விதிகள் ஏற்படுத்துவது சாத்தியமா? இதைப் பற்றித் தான் நான் இங்கே ஆராய்ச்சி செய்யப்போகிறேன். இப்படி ஆராய்ச்சி செய்கிறபோது, ஜனங்களுக்கு என்ன உரிமைகள் அநுமதிக்கப்படு கின்றனவோ அவை, அவர்களுக்கு நன்மை பயப்பதாகவும் இருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இரண்டையும், அதாவது உரிமை களையும் நன்மைகளையும் ஒன்றுபடுத்திக் கொண்டே செல்வேன். ஏனென்றால் ஜனங்களுக்கு வழங்கப்படுகிற நீதி, அவர்களுக்குப் பயனுடையதாக இருக்கவேண்டுமானால், நீதி வேறாகவும் பயன் வேறாகவும் பிரிந்துவிடக் கூடாதல்லவா? இந்த ஆராய்ச்சி எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி நான் இங்கு வற்புறுத்திக் காட்ட வேண்டுவதில்லை, அரசியலைப் பற்றி எழுதுவதற்கு நீ என்ன அரசனா, அல்லது சட்ட நிரூபணம் செய்கிறவனா என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்கலாம். நான் அரசனுமில்லை; சட்ட நிரூபணம் செய்கிறவனுமில்லை. இதனா லேயே நான் அரசியலைப்பற்றி எழுதத் துணிந்திருக்கிறேன். நான் ஓர் அரசனாகவோ, சட்ட நிரூபணம் செய்கிறவனாகவோ இருந்தால், அரசியல் சம்பந்தமாக என்னென்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றிச் சொல்லி என் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்க மாட் டேன். என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்; அல்லது ஒன்றுஞ் செய்யாமல் சும்மா இருந்து விடுவேன். நான் ஒரு சுதந்திர ராஜ்யத்தின் பிரஜையாகப் பிறந்தவன். அந்த ராஜ்ய அமைப்பிலே நான் ஓர் அங்கத்தினன். பொதுஜன விவகாரங் களைப் பற்றி நான் சொல்கிற அபிப்பிராயத்திற்கு அதிக மதிப் பில்லாமலிருக்கலாம். ஆனால் அபிப்பிராயஞ் சொல்ல எனக்கு உரிமையுண்டு. அந்த உரிமை ஒன்றே, பொதுஜன விவகாரங்களைப் பற்றி நான் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற என் கடமையை வற்புறுத்துகிறது. பற்பல அரசாங்க அமைப்புகளைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்யச் செய்ய, என் தாய்நாட்டை நான் ஏன் இன்னும் அதிகமாக நேசிக்க வேண்டுமென்பதற்கான காரணங் களும் அதிகமாகிக் கொண்டு போகின்றன. அதாவது என்னுடைய இந்த ஆராய்ச்சி, என்னுடைய தாய்நாட்டை இன்னும் அதிகமாக நேசிக்கும்படிச் செய்கிறது.1 1. மனிதன் சுதந்திர முள்ளவன் மனிதன், பிறக்கிறபோது சுதந்திரமுள்ளவனாகவே பிறக் கிறான். ஆனால் பிறகு, அவனுடைய நிலைமையைப் பார்க்கிற போது, அவன் எங்குப் பார்த்தாலும் அடிமைப்பட்டவனாகவே கிடக்கிறான். ஒவ்வொரு மனிதனும், தானே மற்றவர்களுக்கு எஜமானன் என்று எண்ணுகிறான். ஆனால் உண்மையில், இவன்தான், மற்றெல்லோரைக் காட்டிலும் பெரிய அடிமையாயிருக்கிறான். என்ன வேடிக்கை! இப்படிச் சுதந்திரத்தோடு பிறந்த மனிதன் அடிமையாகிவிட்டிருக்கிறானே, இந்த மாறுதல் எப்படி உண்டா யிற்று? அஃது எனக்குத் தெரியாது. சரி, இஃது உனக்குத் தெரியா விட்டால் போகட்டும்; இந்த மாறுதல் நியாயமென்று சிலர் சாதிக்கி றார்களல்லவா; அதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கு நான் ஒருவாறு சமாதானம் கூறமுடியும் என்று கருதுகிறேன். பலாத்காரம், அந்தப் பலாத்காரத்தைப் பிரயோகம் செய்வத னால் உண்டாகிற விளைவுகள் ஆகிய இவற்றை மட்டும் முதலில் எடுத்துக்கொண்டு பேசுகிறேன். பலாத்காரத்தை உபயோகப்படுத்தி, ஒரு ஜாதியாரை நீங்கள் அடக்கியாள்கிறீர்கள்; அந்த ஜாதியாரும் உங்களுக்கு அடங்கி நடக்கிறார்கள். இப்படி நீங்கள் அடக்கியாள் வதும், அவர்கள் அடங்கி நடப்பதும் நியாயமென்றுதானே நீங்கள் கருதுகிறீர்கள்? சரி. ஆனால் அதே ஜாதியார், உங்களுடைய பந்தத்தி னின்று தங்களை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்து, அப்படியே விடுவித்தும் கொண்டு விடுகிறார்களென்று வைத்துக் கொள்வோம். அதுவும் நியாயமே. எந்த நியாயத்தைக் கொண்டு நீங்கள் அவர்க ளுடைய சுதந்திரத்தை எடுத்துக்கொண்டீர்களோ, அதே நியாயத்தைக் கொண்டு அவர்கள் மீண்டும் தங்கள் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். அவ்வளவுதான். நீங்கள் செய்தது நியாய மானால் அவர்கள் செய்ததும் நியாயம்.1 ஆனால் சமுதாய ஒழுங்கு என்று சொல்கிறார்களே, அதாவது ஜனாசார நியமம், அஃது ஒரு தெய்விக உரிமை. அந்த உரிமைதான், மற்றெல்லாம் உரிமைகளுக்கும் அதிவாரம் போலிருப்பது. ஆனால் இந்த உரிமையோ, இயற்கை யாக, அதாவது தானாக ஏற்படுவதில்லை; சம்பிரதாயங்களின் மீதுதான் ஏற்படுகிறது. அப்படியானால் இந்தச் சம்பிரதாயங்கள் என்னவென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், மேலே நான் சொன்ன சித்தாந்தத்தை, அதாவது எந்த நியாயத்தைக் கொண்டு ஜனங்களுடைய சுதந்திரம் பறிமுதல் செய்யப்பட்டதோ அதே நியாயத்தைக் கொண்டு அந்த ஜனங்கள், மீண்டும் தங்கள் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிற சித்தாந்தத்தை நிர்த்தாரணம் செய்துகாட்ட விரும்புகிறேன். 2. ஆதி சமுதாயம் உலகத்திலேற்பட்டிருக்கிற எல்லாச் சமுதாயங்களைக் காட்டிலும் மிகப் பழமையான சமுதாயம் குடும்பம்.2 இதுதான் இயற்கையான சமுதாயமுங்கூட. ஆயினும் ஒரு குடும்பத்திலே பிறந்த குழந்தைகள் தங்கள் தகப்பனிடத்தில் எதுவரையில் அன்பு செலுத்துகின்றனவென்று பார்த்தால், தங்கள் க்ஷேமத்திற்கு அந்தத் தகப்பன் தேவையாயிருக்கிற வரையில்தான். இந்தத் தேவை முடிந்தவுடனே, தகப்பனுக்கும் குழந்தை களுக்கும் இயற்கையாக ஏற்பட்டிருந்த உறவானது நீங்கிப் போகிறது. குழந்தைகள், தங்கள் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய அவசியத்தினின்றும் விடுதலையடைகிறார்கள். அப்படியே, தகப்பனும், குழந்தைகளுக் காகப்படுகிற கவலைகளினின்று விடுதலையடைகிறான். இப்படி விடுதலையடைந்த இரண்டு பேரும், அதாவது குழந்தைகளும் தகப்பனும் சுதந்திர புருஷர்களாகி விடுகிறார்கள்; சம அந்தது அடைந்து விடுகிறார்கள். இப்படிச் சுதந்திரமும் சம அந்ததும் பெற்றுவிட்ட பிறகு, தந்தையும் மக்களும் ஒரே குடும்பத்தில் சேர்ந்து வாழ்வார்களானால், அஃது இயற்கையான உறவாகாது; பரபரம் ஒருவர்க்கொருவர் வலிய ஏற்படுத்திக் கொண்டிருக்கிற உறவாகும். ஏதோ ஒரு சம்பிரதாயத்தின் பேரில்தான், இந்தக் குடும்பம், ஏக குடும்பமாக இருக்கிறதென்று சொல்ல வேண்டும். தகப்பனாரிடமிருந்து குழந்தைகள் பிறந்தவர்களாயிருந்தா லும், பின்னர், தந்தையும் குழந்தைகளும் ஒரே விதமான சுதந்திரத் துடன் வாழ்கிறார்களல்லவா, இஃதெப்படி என்று நீங்கள் கேட்க லாம். இது மனித சுபாவத்தின் விளைவு. சாதாரணமாக, மனித னுடைய சுபாவம் என்னவென்றால், தான் க்ஷேமமாயிருப்பதற்கு என்னென்ன தேவையோ அவைகளை மட்டும் கவனித்துக் கொள் வதுதான். அதற்காக என்னென்ன கவலைகள் படவேண்டுமோ அவைகளை மட்டுமே படுகிறான். நன்மையிது, தீமையிது என்று பாகுபடுத்திப் பார்க்கிற சக்தி இவனுக்கு உண்டாகிறது. தன்னுடைய க்ஷேமத்திற்காக என்னென்ன சாதனங்களைக் கையாளலாம் என்பதை இவனே நிர்ணயித்துக் கொள்கிறான். இப்படிப்பட்ட நிலைமையை அடைந்ததும் இவன் - இந்த மனிதன் - தானே, தனக்கு எஜமானனாகிறான். குடும்பம் என்பது ஒரு நமூனா. வேண்டுமானால் இதை ஒரு பழைய காலத்து நமூனா என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த நமூனாவைக் கொண்டுதான் அரசியல் சமுதாயங்கள் அமைக்கப்படு கின்றன. அதாவது, அரசியல் காரணங்களினால் ஏற்பட்ட சமுதா யங்கள் யாவும் குடும்பத்தையே ஒரு முன் மாதிரியாகக் கொண்டு அமைந்திருக்கின்றன வென்று அர்த்தம். இதனால் என்ன தெரிகிற தென்றால், குடும்பமும் சமுதாயமும் ஒரேமாதிரி அமைப்புடை யவை என்று தெரிகிறது. குடும்பத்திற்கு எஜமானன் தந்தை; சமுதாயத் திற்கு எஜமானன் அரசன். குடும்பத்தின் பிரஜைகள் குழந்தைகள்; சமுதாயத்தின் பிரஜைகள் ஜனங்கள்.1 தந்தையாகட்டும், பிள்ளைக ளாகட்டும், அரசனாகட்டும், பிரஜைகளாகட்டும் எல்லோருமே, சுதந்திரத்துடனும் ஒரேமாதிரியாகவும் பிறக்கிறார்கள். இப்படிச் சுதந்திரத்துடனும் ஒரே மாதிரியாகவும் பிறந்திருக்கிற இவர்கள், ஏன் தங்கள் சுதந்திரத்தை பரபரம் பராதீனப்படுத்தி விடுகிறார்கள் என்று கேட்டால் எல்லாம் தங்களுடைய சொந்த நன்மையை முன்னிட்டுத்தான். அப்படியானால் ஒரு குடும்பத்திற்கும் ராஜ்யத் திற்கும், ஒரு தகப்பனுக்கும் அரசனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? குடும்பத்திலே தகப்பன், தன் குழந்தைகள் விஷயத்தில் அதிகமான அக்கறை செலுத்துகிறான். எந்த பிரதிப் பிரயோஜனத்தை எதிர் பார்த்து அவன் இந்த அக்கறையைச் செலுத்துகிறான்? குழந்தைகள் மீது அவன் அன்பு பாராட்டுகிறானே அதுதான், அந்த அன்புதான், அவன் அடைகிற பிரதிப் பிரயோஜனம். அதாவது, அன்பு காரண மாகத்தான் அவன் அக்கறை செலுத்துகிறான். ஒரு ராஜ்யத்திலே, அரசன் தன் பிரஜைகளின் மீது பரிபூரணமாக அன்பு செலுத்துகிறா னென்று சொல்ல முடியாது. ஆனால் ஜனங்களை ஆள்கிறோமென்ற சந்தோஷம் அவனுக்கு உண்டாகிறது. அதாவது, தகப்பன், அன்பி னால், குழந்தைகளின் விஷயத்தில் அக்கறை செலுத்துகிறான். அரசன், ஆள்கிறோமென்ற சந்தோஷத்தினால், பிரஜைகளின்மீது அக்கறை செலுத்துகிறான். ஜனங்களுடைய நன்மைக்காகவே எல்லா அதிகாரங்களும், எல்லாச் சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டிருக்கின்றனவென்று சொன்னால், அப்படி யொன்றுமில்லை யென்கிறான் க்ரோஷிய. தன் கட்சிக்கு ஆதாரமாக இவன் அடிமை வழக்கத்தை எடுத்துக் காட்டுகிறான்.1 ஏற்கெனவே நடந்து போயிருக்கிற ஏதேனும் ஒரு சம்பவத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு, தன் கட்சியை நிலை நாட்டப் பார்ப்பது க்ரோஷியஸின் வழக்கம். இதைக் காட்டிலும் வேறுவிதமான முறையை இவன் அநுசரித்திருக்கலாம். ஆனால் அது கொடுங்கோலர்களுக்குச் சாதகமாயிராதல்லவா? அப்படியானால், க்ரோஷியஸின் கட்சிப்படி மானிட ஜாதி யானது ஒரு நூறு பேருக்குச் சொந்தமா, அல்லது இந்த நூறு பேரும் மானிட ஜாதிக்குச் சொந்தமானவர்களாவென்பது சந்தேகாபத மான விஷயம். அவனுடைய நூலைப் பூராவும் படித்துப் பார்த்தால், மானிட ஜாதியானது, ஒரு நூறு பேருக்குச் சொந்தமானது என்ற கொள்கையையே அவன் ஆதரிக்கிறான் என்று தோன்றுகிறது. ஹாப் என்பவனுடைய கொள்கையும் இதுதான்.1 இதன்படி பார்ப்போமானால், மானிட சமுதாயத்தை ஒரு மாட்டு மந்தைக்கு ஒப்பிட வேண்டும். ஆடு மாடுகள், மேய்ச்சலுக்கு, எப்படித் தனித்தனி மந்தைகளாகப் பிரித்துவிடப் படுகின்றனவோ, அதைப்போல் மானிட சமுதாயமும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படு கிறது. ஒவ்வொரு மந்தைக்கும் ஒவ்வோர் எஜமானன் இருப்பது போல், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வோர் அரசன் இருக்கிறான். எஜமானன் தன் மந்தை யிலுள்ள கால் நடைகளையும், அரசன் தன் பிரிவிலுள்ள ஜனங்களையும் மிகவும் அக்கறையோடு முறையே கண்காணித்து வருகிறார்கள். ஏன் தெரியுமா? கொன்று தின்பதற்கு! எப்படி ஆடு மாடுகளை மேய்க்கிற எஜமானன், அந்த ஆடுமாடு களைவிட இயற்கையிலேயே உயர்ந்தவனாயிருக்கிறானோ, அப்படியே மனிதக் கூட்டத்தின் எஜமானனாகிய அரசனும், தனது ஜனங்களைவிட இயற்கையிலேயே மேம்பட்டவனாயிருக்கிறான். கலிகுலா2 என்ற ரோம சக்ரவர்த்தியானவன் இந்த உவமையை ஆதாரமாகக் கொண்டோ என்னவோ, அரசர்களெல்லோரும் கடவுளர்கள், அல்லது ஜனங் களெல்லோரும் மிருகங்கள் என்று வாதஞ் செய்ததாக, பிலோ3 என்பவன், தான் எழுதி வைத்துப்போன சரித்திரத்தில் குறிப்பிடுகிறான். கலிகுலாவின் இந்தத் தர்க்க நியாயத்தை அநுசரித்துத்தான், க்ரோஷிய, ஹாப் ஆகியோர் தங்களுடைய கொள்கைகளை நிர்த்தாரணம் செய்தார்கள் போலும்! ஆனால் இவர்களெல் லோருக்கும் முன்னரேயே, அரிடாட்டல் என்பவன், இதேமாதிரி தான் சொல்லிவிட்டுப் போயிருக் கிறான். அதாவது, மனிதர்களிற் சிலர் அடிமைத் தொழில் செய்வதற் காகவே பிறந்திருக்கிறார்க ளென்றும், இன்னுஞ் சிலர் ஆதிக்கஞ் செலுத்து வதற்காகவே பிறந் திருக்கிறார்களென்றும் அரிடாட்டல்1 கூறுகிறான். அரிடாட்டல் சொன்னது சரிதான். ஆனால் அவன், காரி யத்தைக் காரணமென்று தவறாகக் கருதி விட்டான். அடிமைத்தனத் திலே பிறந்தவர்கள், அதாவது அடிமைத்தனமாகிற சூழ்நிலையி லிருந்து பிறந்தவர்கள், அடிமைகளாகத்தானே வாழ்க்கையை நடத்துவார்கள். இது சகஜந்தானே. இந்த அடிமைகள், தங்கள் பந்தத்தில் தங்களுடைய எல்லா வற்றையும் இழந்து விடுகிறார்கள். தங்களுடைய பந்தத்தினின்று விடுதலையடைய வேண்டுமென்ற ஆசையைக்கூட இழந்து விடுகிறார்கள். அதாவது அந்த ஆசைகூட இவர்களுக்கில்லாமற் போய் விடுகிறது. எப்படி யுலிஸெ என்பவனுடைய துணைவர்கள், மிருகத் தனமாக நடந்து கொள் வதிலே விசேஷப் பிரீதி காட்டினார்களோ2 அப்படிப் போல், இந்த அடிமைகளும் தங்கள் அடிமைத்தனத்தைப் பெரிதும் விரும்பு கிறார்கள். சிலர், இயற்கைக்கு விரோதமாக அடிமைகளாக யிருக் கிறார்களேயென்று சொன்னால் அதற்குக் காரணம், இயற்கைக்கு விரோதமாக ஏற்கெனவே சிலர் அடிமைகளாயிருந்ததுதான். ஆரம்பத்தில் ஒருசிலர் பலாத்காரத்தினால் அடிமைகளாக்கப் பட்டார்கள். அவர் களுடைய கோழைத்தனமானது, அவர்களை அந்த அடிமைப் பந்தத்திலேயே வைத்து விட்டது. ஆதாம் அரசனைப் பற்றியோ, அல்லது இந்தப் பூலோகத்தைத் தங்களுக்குள்ளேயே மூன்று பிரிவாகப் பகிர்ந்து கொண்ட மூன்று அரச குமாரர்களின் பிதாவான நோவா என்ற சக்ரவர்த்தியைப் பற்றியோ இங்கு நான் ஒன்றுஞ் சொல்லவில்லை. இப்படி நான் அடக்கமும் ஒடுக்கமுமாகப் பேசுவது பலருக்குத் திருப்தியளிக்கு மென்றே நம்புகிறேன்.1 ஏனென்றால், மேலே சொன்ன மூன்று அரச குமாரர்களில் மூத்த அரச குமாரனின் நேர் சந்ததியைச் சேர்ந்தவன் நான். எனது வமிசாவளியை நான் பரிசோதித்துப் பார்ப்பேனாகில் மானிட ஜாதியின் நியாயமான அரசனாக நான் ஏன் இருக்கக் கூடாது? இஃது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ராபின்ஸன்2 எப்படி, தான் வசித்த தீவில் தானே அரசனாயிருந்தானோ அப்படியே ஆதாமும் - இந்த உலகத்தில் அவன் ஒருவன் மட்டுமாயிருந்தபோது - இந்த உலகத்திற்கு அரசனாயிருந்தானென்பதை மறுப்பதற்கில்லை. அப்படிப்பட்ட அரசன், தன் சிங்காதனத்தின் மீது திரமாக உட்கார்ந்திருந்ததோடு, எந்தவிதமான கலகங்கள், யுத்தங்கள், சூழ்ச்சிகள் முதலியவைகளினால் பயப்படாதவனாகவு மிருந்தான் என்றால், அவனுடைய ஏகாதிபத்தியத்தின் நிலைமை திருப்தி தரத்தக்க விஷயந் தானே? 3. ஒரு பலசாலியின் உரிமை ஒரு மனிதன் பலசாலியா யிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன், தன்னுடைய பலத்தின் உதவியைக் கொண்டே எப்பொழுதும் எஜமானனாக இருந்து பிறர்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்க முடியுமா? முடியாது. அப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால், தன்னுடைய ஆதிக்கத்தை உரிமையாக்கிக் கொள்ள வேண்டும்; மற்றவர்கள் தனக்கு அடங்கி நடப்பதை அவர் களுடைய கடமையாகச் செய்துவிட வேண்டும். அதாவது, பிறர் மீது ஆதிக்கஞ் செலுத்தத் தனக்கு உரிமையுண்டு என்று எஜமானன் கருத வேண்டும். அதைப்போல், அந்த எஜமானனுக்கு அடங்கி நடப்பது தங்கள் கடமையென்று மற்றவர்கள் கருத வேண்டும். அப்பொழுது தான், பலசாலியான மனிதனுடைய பலத்துக்கு அர்த்தமிருக்கிறது. இப்படிப் பலசாலிகள், வலிந்து பெற்றுக்கொண்ட இந்த உரிமையே, பின்னர் ஒரு தத்துவமாகக் கொள்ளப்பட்டுவிட்டது. இதனை நாம் விளக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டாமா? பலாத்காரமென்பது தூல சக்தி. நான் ஒருவனைப் பலவந்தப்படுத்தி வேலை வாங்குகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் விஷயத்தில் நான் உப யோகிக்கிற பலாத்காரம் இருக்கிறதே, அஃது, என்னுடைய தேக பலத்தைப் பொறுத்திருக்கிறது; அதாவது என் தூல சக்தியைப் பொறுத்திருக்கிறது. அப்படியானால், அந்தப் பலாத்காரத்தின் விளைவுகளிலிருந்து என்னவிதமான தர்ம நியாயங்கள் உதிக்கும்? ஒரு பலாத்கார சக்திக்கு நான் தலைவணங்கிக் கொடுக்கிறேனென் றால், அஃது அவசியத்தை முன்னிட்டுத்தான். என் இருதயபூர்வமாக நான் அந்தச் சக்திக்கு வணங்கிக் கொடுக்கவில்லை. தெளிவாகச் சொல்லப்போனால், அப்படி நான் வணங்கிக் கொடுப்பதுதான் புத்திசாலித்தனம். அப்படியானால், அது - தலை வணங்கிக் கொடுப் பது - என் கடமையென்று எப்படிச் சொல்ல முடியும்? பலாத்கார சக்தி கொண்டு பிறர் மீது ஆதிக்கஞ் செலுத்தத் தங்களுக்கு உரிமையுண்டு என்று சொல்லிக் கொள்கிறார்களே அவர்களுடைய உரிமைகளினின்று விளைவது தீமைதான். gyh¤ fhunk cÇikah» ÉLkhdhš, mªj¥ gyh¤fhu r¡âia k‰bwhU gyh¤fhu r¡â tªJ jh¡» ml¡»ÉL»w bghGJ m¥go ml¡FtJ, mªj k‰bwhU gyh¤fhu r¡âÆ‹ cÇik jhnd?1 ஜனங்கள், ஒரு சட்டத்தை, பிறருக்கு எவ்வித தீங்கும் இல்லாத முறையில் மீறி நடப்பார்களானால் அப்படி அவர்கள் செய்வது நியாயமாகவும் இருக்க முடியுமல்லவா? பலசாலிகள் செய்யும் எந்தக் காரியமும் நியாயம் என்று கருதப்படுகிறபோது, யாருமே, தாங்கள் பலசாலிகளா யிருக்கும்படிக்கே காரியங்களைச் செய்வர். ஆனால் அந்த நியாயமானது, பலாத்காரத்தின் துணையில்லாதபோது வலிவிழந்து போகிறது. அப்படிப்பட்ட நியாயம் என்ன நியாயம்? ஒருவனைப் பார்த்து, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று நான் சொல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். அவனும், என் கட்டாயத்திற்காக எனக்கு அடங்கி நடக்கிறான். அப்படி அவன் அடங்கி நடப்பது அவன் கடமையென்று சொல்ல முடியுமா? முடியாது. ஆகையால், இந்த உரிமை அல்லது நியாயம் என்ற வார்த்தைக்கும் பலாத்காரம் என்ற வார்த்தைக்கும் சம்பந்தமே யில்லை. இங்கு இதற்கு அர்த்தமேயில்லை. அதிகார வர்க்கங்களுக்குக் கீழ்ப்படிந்து நட என்று சொல்கி றார்கள். அப்படி யென்றால் என்ன அர்த்தம்? பலாத்காரத்திற்குத் தலை வணங்கு என்பது தானே? இந்தத் தத்துவம் நல்லதுதான். ஆனால் இதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியதும் அவசிய மில்லை. ஏனென்றால் இந்தத் தத்துவத்தை யாருமே மீறி நடக்க மாட்டார்கள். எல்லா அதிகாரங்களும் கடவுளிடமிருந்தே வருகிற தென்று சொல்லுகிறார்கள். நிரம்ப சரி. ஆனால் எல்லா வியாதி களுங் கூட கடவுளிடத்திலிருந்துதான் வருகின்றன. அதனால் நாம் ஒரு வைத்தியரைக் கூப்பிடாமல் இருக்கிறோமா? ஒரு காட்டிலே நான் போய்க் கொண்டிருக்கிற போழ்து, ஒரு கொள்ளைக்காரன் வழிமறித்து என் பணப்பையைப் பறித்துக் கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய பலாத்கார சக்திக்கிணங்கி நான் அந்தப் பையைக் கொடுத்து விடுகிறேன். ஆனால் அந்தப் பையை நான் ஒளித்து வைத்துக் கொள்ள முடிகிற போதும், அவனுடைய பலாத்கார சக்திக்குப் பயந்து அதைக் கொடுத்து விட வேண்டுமா? எப்படியும் அந்தக் கொள்ளைக்காரன் வைத்துக் கொண்டிருக்கிற துப்பாக்கியானது, என்னைவிட பலாத்கார சக்திமிகுந்தது. ஆகையால், பலாத்காரமே உரிமையும் நியாயமும் ஆகாது என் பதை நாம் ஒத்துக் கொள்வோமாக. சட்ட ரீதியான அதிகாரிகளைத் தவிர மற்றவர்களுக்கு நாம் கீழ்ப்படியக் கட்டுப்பட்டவர்களல்ல. 4. அடிமைத்தனம் எந்த மனிதனுக்கும் தன் சகோதர மனிதர்கள்மீது ஆதிக்கஞ் செலுத்த இயற்கையான அதிகாரம் கிடையாது. அதுபோல், பலாத்காரத்தினின்று உரிமை பிறப்பதில்லை. எனவே, மனிதர்கள் ஒருவர்மீது ஒருவர் அதிகாரஞ் செலுத்துகிறார்களென்றால் எல்லாம் சம்பிரதாயத்தின் மீது தான்.1 ஒரு தனிப்பட்ட மனிதன் தன்னுடைய சுதந்திரத்தை ஓர் எஜமானனுக்குப் பராதீனப் படுத்திவிட்டு, அவனுடைய அடிமை யாகிவிடுவது சாத்தியமானால், ஒரு ஜாதி, தன்னுடைய சுதந்திரத்தை ஓர் அரசனுக்குப் பராதீனப் படுத்திவிட்டு ஏன் அவனுடைய அடிமையாகக் கூடாது? க்ரோஷிய இப்படித்தான் கேட்கிறான். இங்கே விளக்சிச் சொல்லவேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. பராதீனப்படுத்தி விடுவது என்ற ஒரு வார்த்தையை மட்டும் எடுத்துக் கொள்வோம். பராதீனப் படுத்தி விடுவது என்று சொன்னால் கொடுத்து விடுவது அல்லது விற்று விடுவது என்று அர்த்தம். ஒரு மனிதன், மற்றொருவனுக்கு அடிமையாகி விடுகிறானென்று சொன் னால், அவன் தன்னையே அவனுக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறா னென்பது அர்த்தமில்லை. குறைந்த பட்சம் பார்த்தால், தன் ஜீவனத் திற்காக அவன் தன்னை விற்கிறான். ஆனால் ஒரு ஜாதி ஏன் தன்னை விற்க வேண்டும்? நியாயமாக ஓர் அரசன், தன் பிரஜைகளுக்கு, அவர்களுடைய ஜீவனத்திற்குத் தேவையான பொருள்களை உதவ வேண்டும். அதற்குப் பதிலாக, அரசனே தன் ஜீவனத்திற்காக வேண்டிய பொருள்களை ஜனங்களிடமிருந்து பெறுகிறான். ராபெலே1 என்பவ னுடைய கட்சிப்படி அரசன், சொற்பத் தேவைகளைக் கொண்டு வாழ்வதில்லை. அப்படியானால், பிரஜைகள், தங்களை அரசனுக்கு ஒப்புக் கொடுக்கிறபோது, தங்கள் சொத்துக்களையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையின் மீதுதான், தங்களையும் ஒப்புக் கொடுக்கிறார்களா? அப்படியானால் அவர்களிடத்தில் வாழ்க்கையை நடத்துவதற்காக மிஞ்சியிருப்பதுதான் என்ன? இதற்குப் பதில் கூறலாம், சுயேச்சாதிகாரியான அரசன், தன் பிரஜைகளுக்குச் சமாதானத்தை வழங்குகிறானென்று.2 அதாவது, தன்னுடைய ஜனங்கள் சமாதானமாக வாழும்படி ஓர் அரசன் ஏற்பாடுகள் செய்து வைக்கிறானல்லவா? இருக்கலாம். ஆனால் இந்தச் சமாதானத் தினால் பிரஜைகள் அடைகிற லாபமென்ன? அரசனுடைய பேராசை காரணமாக ஏற்படுகிற யுத்தங்கள், ஜனங் களை வந்து தாக்குகின்றன. மற்றும், அவனுடைய தணிக்க முடியாத ஆசைகளும், நிருவாக ஊழலினால் ஏற்படுகிற சில்லரைத் தொந்திரவு களும் சேர்ந்து ஜனங் களைப் பாதிக்கின்றன. ஜனங்களுக்குள்ளேயே எத்தனையோ மனமாற் சரியங்கள் இருக்கலாம். இவைகளினால் அவர்கள் அவதியும் படலாம். ஆனால், இந்த அவதிகளை விட, அரச னுடைய செயல்களினால் ஏற்படுகிற பாதகங்களின் விளைவுகள் அதிகமல்லவா? அரசன், தன் பிரஜைகளுக்காக ஏற்படுத்திக் கொடுக் கிற அமைதியே, அவர்களுடைய துன்பங்களில் ஒன்றாயிருந்தால், அந்தப் பிரஜைகள், இந்த அமைதியினால் அடைகிற லாபந்தா னென்ன? மனிதர்கள், குகைகளில் அமைதியாகத்தான் வாழ்கி றார்கள். அப்படி வாழ்வதே அவர்களுக்குத் திருப்தியளித்துவிட முடியுமா? கிரேக்கர்கள், ஸைக்ளோப்பியர்களுடைய1 குகையில் அமைதியாகவே வாழ்ந்து வந்தார்கள். எதுவரையில்? கடைசிமுறை யாக அழிக்கப்படுகிற வரையில்! ஒரு மனிதன், எவ்விதப் பிரதிப் பிரயோஜனமும் இல்லாமல் தன்னைப் பிறருக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறானென்று சொல்வது சுத்த அபத்தம். இப்படி நினைக்கக் கூட முடியாது. அப்படி ஒப்புக் கொடுப்பது நியாயமற்றதுங்கூட. அது செல்லுபடியும் ஆகாது. ஏனென்றால் அப்படி ஒப்புக் கொடுக்கிறவன், சித்த சுவாதீன மில்லாதவனாகத்தான் இருக்க வேண்டும். இதே பிரகாரம், ஒரு ஜாதியானது, எவ்விதப் பிரதிப் பிரயோஜனமுமில்லாமல் தன்னைப் பிறருக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறதென்று சொன்னால், அந்த ஜாதி முட்டாள்கள் நிறைந்த ஜாதியாகத்தான் இருக்க வேண்டும். பைத்தியக்காரத்தனம், உரிமையை அளிப்பதில்லை. தன்னைப் பிறருக்குப் பராதீனப்படுத்திக் கொடுக்கிற ஒவ்வொரு மனிதனும், தன்னைத்தான் பராதீனப் படுத்தலாமே தவிர, தன் சந்ததியாரைப் பராதீனப் படுத்த முடியாது. அந்தச் சந்ததியார் சுதந்திரத் துடனேயே பிறக்கின்றனர். அவர்களுடைய சுதந்திரம் அவர்களுக்கே சொந்தமானது. அவர்களைத் தவிர, வேறு யாரும் அவர்களுடைய சுதந்திரத்தை விக்கிரயஞ் செய்ய முடியாது. அவர்கள், தக்க வயதடை வதற்கு முன்னர் வரையில், அவர்களுடைய தகப்பனார் அவர்கள் பெயரால், அவர்களுடைய பாதுகாப்புக்கும் நன்மைக்கும் உகந்த முறையில் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஆனால் அவர் களைத், திரும்பப் பெற்றுக் கொள்ள முடியாதபடியும், எவ்வித நிபந்தனை யின்றியும் பிறருக்கு ஒப்படைத்து விடக்கூடாது. அப்படி ஒப்படைப்பது, இயற்கைக்கு விரோதம்; ஒரு தகப்பனுக்குரிய உரிமையினின்று மீறியதுமாகும். ஆதலின், ஒரு சுயேச்சாதிகார அரசாங்கம் தர்ம நியாய மான அரசாங்கமாக இருக்க வேண்டுமா னால், அந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிரா கரிக்கவோ ஒவ்வொரு தலைமுறை யினருக்கும் உரிமை அளிக்க வேண்டும். இந்த உரிமை ஒவ்வொரு தலைமுறையினருக்கும் இருக்கு மானால் அரசாங்கம் சுயேச்சாதிகார அரசாங்கமாயிருக்க முடியாது. ஒரு மனிதன், தன்னுடைய சுதந்திரத்தைத் துறந்துவிட்டா னென்று சொன்னால், அவன், தன்னுடைய மனிதத் தன்மையையும் துறந்து விட்டானென்பது அர்த்தம். அது மட்டுமல்ல; மானிட ஜாதி யின் ஓர் அமிசத்தினன் என்ற முறையில் அவனுக்கு ஏற்பட்டிருக்கிற உரிமை களையும், கடமைகளையுங்கூடத் துறந்து விட்டான் என்று கொள்ள வேண்டும். அவன் எல்லாவற்றையும் துறந்து விட்டவனாகி றான். அவனிடத்தில் எந்தவிதமான நற்குணங்களையும் கொண்டு புகுத்தி அவனுடைய மனிதத் தன்மையை நிரப்ப முடியாது. (சுருக்க மாகச் சொல்லப் போனால் அவன் மனிதனேயல்ல.) தவிர, அப்படித் துறப்பது மனித சுபாவத்திற்கு முரண்பட்டது. ஒரு மனிதனுடைய இச்சா சக்தியி லிருந்து - அதாவது ஒரு மனிதன் தன் இச்சைப்படி காரியங்களைச் செய்வதிலிருந்து - அவனுடைய சுதந்திரத்தை எடுத்து விடுவதென்று சொன்னால், அவன் செய்கிற செயல்களி லிருந்து எல்லாத் தருமங் களையும் எடுத்து விடுவது என்பதுதான் அர்த்தம்.1 ஒரு பக்கம் பூரண சுயேச்சாதிகாரம்; மற்றொரு புறம் எல்லையில்லாத கீழ்ப்படியுந்தன்மை. இப்படி ஒரு சம்பிரதாயம் நமக்கு விதிக்குமானால் அது வியர்த்தமான சம்பிரதாயம்; முரண் பட்ட சம்பிரதாயம். ஒரு மனிதனிடமிருந்து நமக்குத் தேவையான வற்றையெல்லாம் பெற்றுக்கொள்ள நமக்கு உரிமையிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால், அந்த மனிதனுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோமென்று சொல்வது எப்படிப் பொருந்தும்?2 அப்படி நாம் கடமைப்பட்டிருக்கக் கட்டுப்பட்ட வர்கள் என்று ஒரு நிபந்தனை விதிக்கப்படுமானால், கொடுப்பதும் பெற்றுக் கொள்வதுமாகிற செயலே, அர்த்தமற்ற செயலாக வல்லவோ ஆகிவிடுகிறது. உதாரணமாக, என்னிடத்தில் ஓர் அடிமை இருக்கிறா னென்று வைத்துக் கொள்ளுங்கள் அவன் உடைமை யெல்லாம் என்னுடைய உடைமை. அப்படியிருக்கிறபோது, என்னிடத்திலிருந்து அவன் எந்த விதமான உரிமையை எதிர்பார்க்க முடியும்? அவனுடைய உரிமைகளெல்லாம் என்னுடைய உரிமைகள். எனவே, என்னுடைய உரிமைகளிடமிருந்தே நான் உரிமைகளை எதிர்பார்க்கிறேனென்று சொல்வது அர்த்தமற்ற வார்த்தை. ஒரு மனிதனை, மற்றொரு மனிதன் அடிமைப்படுத்தி வைத்துக் கொள்ள உரிமை யுண்டு என்ற கொள்கையானது, யுத்தத்தினின்று பிறந்தது என்று க்ரோஷிய முதலாயினோர் சாதிக்கின்றனர். இவர் களுடைய கட்சிப்படி, யுத்தத்தில் ஜெயித்தவர்கள், தோற்றவர்களைக் கொல்லும் உரிமையுடையவர்கள். அந்த உரிமையை ஜெயித்த வர்கள் உபயோகியாமல், தோற்றவர்களுடைய சுதந்திரத்தைப் பறிமுதல் செய்து, அவர்களுக்கு உயிரைக் கொடுக்கிறார்கள். அதாவது தோற்றவர்கள், தங்கள் சுதந்திரத்தை விற்று உயிரை வாங்கிக் கொள்கி றார்கள். ஒன்றைக்கொடுத்து மற்றொன்றை வாங்கிக் கொள்வ தென்கிற இந்த ஒப்பந்தமானது, நியாயமாகவும் ஆகிவிடுகிறது; உபயகட்சியினருக்கு நன்மையையும் அளிக்கிறது. இதுதான் க்ரோஷிய முதலாயினோரின் வாதம். ஆனால் யுத்தத்தில் தோற்றவர்களைக் கொல்வதென்கிற இந்தப் போலி உரிமை இருக்கிறதே, இது, யுத்தத்தின் விளைவாகத் தோன்றின உரிமையல்ல. மனிதர்கள் பரபரம் சத்துருக்களல்லர். மனிதர்களுடைய பரபர சம்பந்தமானது, நிரந்தரமான ஒரு சமாதான நிலைமையையோ, அல்லது ஒரு யுத்த நிலைமையையோ ஏற்படுத்தி வைக்கக் கூடிய அவ்வளவு பலம் பொருந்தியதாயில்லை.1 யுத்தம் ஏற்படுவதற்கு மனிதர் களின் பரபர சம்பந்தம் காரணமல்ல; விஷயங்களின் சம்பந்தந்தான் காரணம். மனிதர்களுடைய பரபர சம்பந்தத்தினால் யுத்தம் ஏற்படுவ தில்லை யென்ற முடிவுக்கு நாம் வந்து விட்டோமானால், மனிதனுக்கும் மனிதனுக்கும் இயற்கை யாகவே யுத்தம் ஏற்படக் காரணமில்லை யென்ற முடிவுக்கும் வந்து விடுவோம். அதாவது தனிச் சொத்துரிமையில்லாம லிருப்பதுதான் இயற்கை. எங்குத் தனிச் சொத்துரிமை யில்லையோ அங்கு யுத்த மில்லை. அல்லது எந்த ராஜ்யத்தில், சமுதாயத்தின் சட்ட திட்டங் களுக்குட்பட்ட அரசாங்கம் நடைபெறுகிறதோ அந்த ராஜ்யத்தி லும் சண்டைகள் ஏற்படக் காரணமில்லை. ஆகையால் மனிதனுக்கு மனிதன் சண்டை போட்டுக் கொள்கிறானென்று சொல்வது இயற்கைக்கு விரோதம். இயற்கைக்கு விரோதமான சக்திகள்தான் யுத்தத்திற்குக் காரணமாயிருக்க முடியும். தனிப்பட்ட மனிதர்கள் இரண்டுபேர் சண்டை போட்டுக் கொள்கிறார் களென்று சொன்னால், அது யுத்தமாகாது. பிரான்சின் மன்னனாகிய ஒன்பதாவது லூயியினால் அங்கீகரிக்கப்பட்டு, அவனுடைய பிரபுக்களுக் குள்ளேயே நடைபெற்ற யுத்தங்கள், கடவுளின் சமாதான எச்சரிக்கை யினால் தள்ளி வைக்கப்பட்டன.1 இந்த யுத்தங்களெல்லாம் பிரெஞ்சு பாளையக்காரர்களுடைய ஆட்சி முறையின் துஷ்பிரயோகங்கள். இந்தப் பாளையக்கார ஆட்சிமுறையே, இயற்கை உரிமைகளுக்கும், நல்ல அரசாங்கத் திற்கும் நேர்முரணானது. எனவே, யுத்தம் என்பது மனிதனும் மனிதனும் சம்பந்தப் படுகிற ஒரு பிரச்சினையல்ல; ஒரு ராஜ்யத்திற்கும் மற்றொரு ராஜ்யத்திற்கும் உள்ள சம்பந்தத்தை யொட்டிய பிரச்சினை. இந்த யுத்தத்தில், தனிப்பட்ட மனிதர்கள் சத்துருக்களாகச் சந்திக்கிறார் களென்று சொன்னால், அஃது அகமாத்தான சந்திப்புத்தான். இங்ஙனம் இவர்கள் மனிதர்களுக்கு மனிதர்கள் என்ற முறையிலோ, பிரஜைகளுக்குப் பிரஜைகள் என்ற முறையிலோ சந்திக்கிறார் களில்லை; போர் வீரர்களாகத்தான் சந்திக் கிறார்கள். தங்கள் தங்கள் தாய்நாட்டின் பிரஜைகளாக இவர்கள் சந்திக்கிற தில்லை. தங்கள் தங்கள் தாய்நாட்டைக் காப்பாற்றும் முறையிலேதான் சந்திக்கிறார்கள். சுருக்கமாகக் கூறப்போனால், ஒரு ராஜ்யம் மற்றொரு ராஜ்யத்தைத்தான் சத்துருவாகக் கொள்ள முடியுமே தவிர, தனிப்பட்ட மனிதர்களைச் சத்துருக்களாகக் கொள்ள முடியாது. வித்தியாசப்பட்ட இரண்டு வதுக்களின் சம்பந்தா சம்பந்தத்தை நாம் எவ்விதமாகவும் வரையறுத்து நிர்ணயிக்க முடியாதல்லவா? இந்தச் சித்தாந்தம், எல்லா யுகங்களிலும் அநுசரிக்கப்படுகிற கோட்பாடுகளுக்கும், எல்லா நாகரிக நாடுகளின் அநுஷ்டானத் திற்கும் ஒத்ததாகவே இருக்கிறது. ஓர் அரசாங்கம், மற்றோர் அரசாங்கத்தின்மீது யுத்தந்தொடுக்கப் போவதாக அறிக்கை வெளி யிடுமானால், எந்த அரசாங்கத்தை நோக்கி இந்த அறிக்கை வெளி யிடப்பட்டதோ அந்த அரசாங்கத்திற்குத்தான் எச்சரிக்கையே தவிர, அந்த அரசாங்கத்தின் பிரஜைகளுக்கல்ல. அப்படி முன்னெச்சரிக்கை செய்யாமல், அந்த ராஜ்யத்தின் பிரஜைகளை மற்றோர் அரசன் அல்லது அரசாங்கம் கொள்ளையடிக்கவோ, கொல்லவோ, சிறை வைக்கவோ செய்யுமாகில் அந்த அரசனை அல்லது அரசாங் கத்தைச் சத்துரு வர்க்கத்தில் சேர்க்கக் கூடாது; கொள்ளைக்காரக் கூட்டத்திலேயே சேர்க்க வேண்டும். பகிரங்கமான ஒரு யுத்தத்தில் கூட நியாயமான ஓர் அரசன் என்ன செய்கிறானென்றால், சத்துரு ராஜ்யத்திலுள்ள அரசாங்கச் சொத்துக்களை யெல்லாம் தன் சுவாதீனப்படுத்திக் கொள்கிறானே தவிர, தனிப்பட்டவர்களின் சொத்து சுதந்திரங்களைப் பராமரிக்கவே செய்கிறான். எந்த உரிமை களின் மீது தன்னுடைய உரிமை நிறுவப்படுகிறதோ அந்த உரிமை களுக்கு மதிப்புக் கொடுக்கிறான்.1 யுத்தத்தின் நோக்கமென்ன? சத்துரு நாட்டை அழிப்பது. அப்படியானால் அந்தச் சத்துரு நாட்டைப் பாதுகாக்கிறவர்கள், ஆயுதபாணிகளாக இருந்தால் அவர்களைக் கொலைசெய்ய உரிமையுண்டென்று சொல்லலாம். ஆனால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டுச் சரணாகதி யடைந்து விடுவார் களானால் அவர்கள் சத்துருக்களாகவோ, சத்துருக்களின் கருவிகளாகவோ கருதப்படக் கூடாது. அவர்கள் சாதாரண மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். அவர்களுடைய உயிரின் மீது யாருக்கும் எந்தவிதமான உரிமையு மில்லை. சில சந்தர்ப்பங் களில், ஒரு ராஜ்யத்தின் பிரஜைகளில் ஒருவரைக்கூடக் கொல்லாமல் அந்த ராஜ்யத்தை அழித்து விட முடிவ துண்டு. யுத்தமானது, எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்குத்தான் உரிமையைக் கொடுக்கிறது. இவையெல்லாம் க்ரோஷியஸின் தத்துவங்களல்ல! கவிகளின் திருவாக்கை ஆதாரமாகக் கொண்டு இவை நிர்ணயிக்கப் படவில்லை! இவை இயற்கையினின்றெழுந்தவை; தர்க்க நியாயத்தை அதிவாரமாகக் கொண்டவை. ஒரு பலசாலிக்குத்தான் எல்லா உரிமைகளும் உண்டு என்று சொல்வது எப்படி நியாயமில்லையோ, அப்படியே ஒரு நாட்டை மற்றொரு நாடு வெற்றி கொள்வதும் நியாயமில்லைதான். யுத்தமானது, வெற்றி பெற்றவர்களுக்கு, தோல்வியடைந்தவர்களைக் கொலை செய்யலா மென்ற உரிமையை அளிக்கவில்லை. வெற்றி பெற்றவர் களுக்கு இந்த உரிமையில்லையானால், அவர்களுக்குத் தோல்வி யடைந்தவர்களை அடிமை கொள்ளவும் உரிமையில்லை. ஒரு சத்துருவை நம்மால் அடிமை கொள்ள முடியாதபொழுது அவனைக் கொலைசெய்ய நமக்கு உரிமை யுண்டு என்று சொன்னால், அந்த உரிமையினின்று அவனை அடிமை கொள்ளும் உரிமையும் பிறக்கவில்லை.2 ஆகையால் ஒருவனுடைய சுதந்திரத்தை வாங்கிக் கொண்டு அவனுடைய உயிரைக் கொடுப்ப தென்கிற இந்தப் பரிவர்த்தனையே அநியாயமானது. அடிமை கொள்கிற உரிமையின் மீது மரண தண்டனை விதிக்கும் உரிமையை தாபிக்கப் பார்ப்பதும், மரண தண்டனை விதிக்கும் உரிமையின் மீது அடிமை கொள்ளும் வழக்கத்தை தாபிக்கப் பார்ப்பதும், ஒரு துன்மார்க்கச் சூழலில் சுழன்று கொண்டிருப்பது போலில்லையா? யுத்தத்தில் தோல்வியடைந்தவர்களைக் கொலை செய்ய உரிமை யுண்டென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் யுத்தத்தில் கைது செய்யப் பட்டவர்கள், அல்லது வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளிலுள்ளவர்கள் முதலியோர், தங்கள் எஜமானர்களுக்கு எந்த விதத்தில் கடமைப் பட்டிருக்கிறார்கள்? வேண்டுமானால், கட்டாயத் தின்மீது அந்த எஜமானர் களுக்குக் கீழ்ப்படியக் கடமைப் பட்டிருக் கிறார்கள் என்று சொல்லலாம். அவர்களுடைய உயிரைக் கொடுத்து, அதற்குச் சமமான மற்றொன்றை (சுதந்திரத்தை) எடுத்துக் கொண்டு விடுவதனால், அந்த எஜமானர்கள், தங்களுடைய அடிமைகளுக்கு எந்தவிதமான தயவையும் காட்ட வில்லையே. நஷ்டத்திற்காக அந்த அடிமைகளைக் கொலை செய்யாமல், தங்கள் சுயநன்மைக்காக அவர்களை, அதாவது அவர்கள் சுதந்திரத்தை அழித்து விட்டார்கள். அவ்வளவுதான். ஆகையால், ஓர் எஜமானனுக்குத் தன் அடிமையின் மீது பலாத்காரத்தைத் தவிர வேறு அதிகாரமில்லை. எப்பொழுதும் போல் எஜமானனுக்கும் அடிமைக்கும் மத்தியில் யுத்த நிலைமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த இருவருக்குமுள்ள சம்பந்தம் கூட, இந்த யுத்த நிலைமையின் விளைவுதான். இந்த யுத்த உரிமைகளை, ஓர் எஜமானன், தன் அடிமையின் மீது செலுத்துவா னாகில் இருவருக்கும் சமாதான உடன்படிக்கை ஏற்படாதென்பது நிச்சயம். அப்படியிருந்தும், இருவரும் ஒன்றாக வாழ்ந்து கொண் டிருக்கிறார்களே யென்று சொன்னால் அது சம்பிரதாயத்தின் மீதுதான். ஆனால் இந்தச் சம்பிரதாயமானது, யுத்த நிலைமைக்கு முடிவு காண்பதற்குப் பதிலாக, அதனை நீடிக்கச் செய்கிறது. ஆகையால், இந்தப் பிரச்சினையை நாம் எந்த விதமாகப் பரிசீலனை செய்து பார்த்தாலும், அடிமை கொள்ளும் உரிமை யானது செல்லு படியாகாது. ஏனென்றால் அது நியாயமற்றது; தவிர கேவலமானது; அர்த்த மில்லாதது. அடிமைத்தனம், உரிமை என்ற இந்த இரண்டு சொற் றொடர்களே ஒன்றுக்கொன்று முரண் பட்டவை; தனிப்பட்டு நிற்பவை. ஒரு மனிதன், மற்றொரு மனிதனைப் பார்த்தோ, அல்லது ஒரு ஜாதியைப் பார்த்தோ கீழ்க்கண்டபடி கூறுவானாகில், அஃது எவ்வளவு முட்டாள் தனமானது என்று பாருங்கள்: உனக்குத் தீமை விளைவிக்கக் கூடியதும் எனக்கு நன்மை தரக்கூடியதுமான ஓர் ஒப்பந்தத்தை நாமிருவரும் செய்து கொள்வோம். அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை, நான் விரும்புகிற வரையில் அநுஷ்டிப்பேன்; நீயும் அப்படியே நான் விரும்புகிற வரையில் அநுஷ்டிக்க வேண்டும். 5. முதல் சம்பிரதாயம் இதுவரையில் நான் சொன்னவற்றையெல்லாம் நானே நிராகரித்து விடுகிறேனென்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, மனிதன் சுதந்திரத்தோடு பிறக்கவில்லை, பலாத்காரமே உரிமை யாகும் என்றெல்லாம் முதலிற் சொன்னதற்கு நேர் விரோதமாகச் சொல்கிறே னென்று நினைத்துக் கொள்ளுங்கள். அதனாலாவது, கொடுங்கோன்மையை ஆதரிக்கிறவர்களுடைய கட்சி வலுவடை கிறதா? இல்லையே. பொதுவாகச் சொல்லப் போனால், ஒரு கூட்டத்தை அடக்கி வைப்பது என்பதற்கும், ஒரு சமுதாயத்தை ஆள்வது என்பதற்கும், எப்பொழுதுமே ஒரு பெரிய வித்தியாசம் இருந்து கொண்டுதானிருக்கும். தனிப்பட்ட மனிதர்கள், அவர்கள் எத்தனை பேராயிருந்தாலும், வேறொரு மனிதனுக்குத் தனித்தனி யாகப் பந்தகப்படுவார்களானால், அப்படி பந்தகப் படுவது, ஆண்டான் அடிமை விஷயமாகிறதே தவிர, ஒரு ஜாதி, அந்த ஜாதிக்குமேலே ஒரு தலைவன் என்ற அந்தது ஏற்படுவதில்லை. வேண்டு மானால், முதற் பிரிவினரை, அதாவது ஆண்டான் அடிமை பாத்திய முடையவர்களை, ஒரு கூட்டத்தினர் அல்லது தொகுதியினர் என்று சொல்லலாம். ஆனால், பரபர நன்மையை முன்னிட்டு ஒன்றாகச் சேர்ந்துள்ள ஒரு சங்கத்தினர் அல்லது சமுதாயத்தினர் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், ஒரு சமுதாயத்திற்கு என்னென்ன தகுதிகள் உண்டோ அவையொன்றும் அவர்களிடத் தில் இல்லை. சமுதாயம் என்று சொல்லப்பட வேண்டுமானால், முதலாவது, சமுதாயப் பொது என்று சொல்லக் கூடிய சொத்துக்கள் இருக்க வேண்டும். இரண்டாவது, அரசியல் அந்தது இருக்க வேண்டும். இவையிரண்டும் இல்லாத போழ்து, சமுதாயம் என்று எப்படிச் சொல்ல முடியும்? தனிப்பட்ட மனிதர்களைத் தனக்குப் பந்தப்படுத்திக் கொள்ளும் ஒரு தனிமனிதன், அதாவது மேலே சொல்லப் பட்ட ஆண்டான், இந்த உலகத்தில் பாதி பாகத்தைத் தனக்கு அடிமைப் படுத்திக் கொண்ட போதிலுங்கூட, அவன் ஒரு தனி மனிதனே. வேறெவ்வித அந்ததும் அவனுக்குக் கிடையாது. அவனுக்கென்று விசேஷ மான பாத்தியதைகள் எதுவும் கிடையாது. எல்லோரும் கொண்டாடுகிற பாத்தியதைகளைத்தான் அவன் கொண்டாட முடியும். அப்படிப்பட்டவன் ஓர் ஏகாதிபத்தியத்தை ஆண்டு வந்தால் கூட, அவன் இறந்துவிட்ட பிறகு, அந்த ஏகாதி பத்தியம், நெருப்புப்பட்ட ஒரு மரமானது எப்படிச் சாம்பலாகி உருத்தெரியாமல் போய் விடுகிறதோ அதைப்போல் சிதறி உருத் தெரியாமல் போய் விடுகிறது.1 ஒரு ஜாதி, ஓர் அரசனுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து விடலா மென்று க்ரோஷிய கூறுகிறான். இவனுடைய சித்தாந்தப்படி, ஒரு ஜாதி, ஓர் அரசனுக்குத் தன்னை ஒப்புக் கொடுப்பதற்கு முன்னர் வரையில்தான் ஜாதி யென்று அழைக்கப்படலாமே தவிர, அதற்குப் பின்னர் ஜாதியென்று அழைக்கப்படுவதற்கு யோக்கியதை இல்லை.2 இங்ஙனம் ஒப்புக் கொடுப்பதாகிற செயல், பொதுஜன சம்மதத்தின் பேரில் நடைபெறுகிற செயலாகும். பொது ஜனங்கள் ஒன்றுகூடி இந்த மாதிரியான தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகுதான், மேலே சொன்ன ஒப்புக் கொடுப்பதாகிற செயல் நடைபெறுகிறதென்ப தாகவே நாம் கொள்ள வேண்டும். எனவே, எந்தச் சட்டப்படி ஜனங்கள் ஓர் அரசனைத் தெரிந்தெடுக்கிறார்களோ அந்தச் சட்டத்தைப் பரிசீலனை செய்வதற்கு முன்னர், எந்தச் சட்டப்படி ஒரு ஜாதி, ஜாதியாகிறதோ அந்தச் சட்டத்தைப் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்தச் சட்டந்தான் முதன்முதலாக ஏற் பட்ட சட்டம்; இதுவே சமுதாயத்தின் உண்மையான அதிவாரம். ஏற்கனவே ஏற்பட்டிருக்கிற சில சம்பிரதாயங்களை அநு சரித்து ஓர் அரசன் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அல்லது எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏகமனதாக அந்த அரசனைத் தெரிந் தெடுக்க வேண்டும். இந்த இரண்டும் நடைபெறாமல், பெரும் பான்மையான ஜனங்கள் சேர்ந்து ஓர் அரசனைத் தெரிந்தெடுத்து விட்டால், அந்தத் தேர்தலை அங்கீகரியாத சிறுபான்மையான ஜனங்கள், மேற்படி பெரும்பான்மையோருடைய முடிபுக்குக் கட்டுப்பட வேண்டுமென்று என்ன நியதி இருக்கிறது? பத்துப் பேர் இஷ்டப்படாத போது, நூறு பேர் மட்டும் ஒன்று சேர்ந்து ஓர் எஜமானனைத் தெரிந்தெடுக்கிற உரிமையை எங்கிருந்து பெற் றார்கள்? 6. சமுதாய ஒப்பந்தம் மனிதன், ஒரு காலத்தில் இயற்கை நிலையில் வாழ்ந்து கொண் டிருந்தான். அந்த நிலையிலேயே அவன் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா? முடியாது. ஏனென்றால் அவன் தனது முன்னேற்றத்திற்குத் தடையாயிருந்த முட்டுக்கட்டைகளையெல் லாம் கடந்து செல்லக்கூடிய ஒரு நிலைமையை அடைந்துவிட்டான். அப்படி யிருக்க அவன் ஆதிகாலத்தில் வாழ்ந்து கொண்டிருந்ததைப் போல் இனியும் வாழ்ந்து கொண்டிருப்பானா? மாட்டான். பொது வாகவே, மானிட சமூகமானது, தான் வாழ வேண்டிய விதத்தை மாற்றிக் கொண்டு போகாவிட்டால் அஃது அழிந்துதான் போகும். மனிதர்களால், புதிய சக்திகளைச் சிருஷ்டி செய்ய முடியாது. ஆனால் ஏற்கனவேயுள்ள சக்திகளை ஒன்று கூட்டி, அவற்றைக் கொண்டு செலுத்த முடியும். இதனால் அவர்கள் என்ன செய்ய வேண்டி யிருக்கிற தென்றால், தங்களுடைய ஷேமத்திற்கு விரோத மாக என்னென்ன சக்திகள் உண்டோ அந்தச் சக்திகளை அழித்துப் போட வேண்டியிருக்கிறது. அழித்துப் போடுவது எப்படி? அந்தச் சக்திகளுக்கு விரோதமாயுள்ள சக்திகளனைத்தையும் ஒன்று திரட்டி, அவைகளின் மீது உபயோகிக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை. பல சக்திகளைச் சேர்த்தால்தான் ஒரு புதிய சக்தி உற்பத்தி யாகும். பிரதி மனிதனும் ஷேமமாக வாழ்வதற்கு முக்கியத் துணைக் கருவிகளாயிருப்பன, அவனுடைய சொந்த பலமும், அவன் அநுப விக்கிற சுதந்திரமுந்தான். அப்படியிருக்க அந்த மனிதன், தன் சொந்த பலத்தையும், சுதந்திரத்தையும் பிறருக்கு எப்படி ஒப்புக்கொடுத்து விட முடியும்? அப்படி ஒப்புக்கொடுக்கிறவன் தனக்குத்தானே தீங்கு விளைவித்துக் கொண்டவனாகிறான், தன் கடமையை மறந்தவனா கிறான். சரி; இப்படிப் பிரதி மனிதனும் தன்னுடைய சொந்த க்ஷேமத்தையே நாடுவானாகில் சமுதாயம் என்பது எப்படி ஏற்பட முடியும்? சமுதாயக் கட்டுப்பாடு என்பது எப்படி இருக்க முடியும்? இஃதொரு சிக்கலான பிரச்சினை. இதற்குப் பரிகாரம் காண்பதுதான் என் நோக்கம். பல மனிதர்கள் சேர்ந்ததுதான் ஒரு சமுதாயம். இப்படிச் சேர்ந்துள்ள ஒவ்வொரு மனிதனுடைய சொத்து சுதந்திரங்களைப் பிறர் வந்து தாக்கா வண்ணம் பாதுகாப்பது அந்தச் சமுதாயத்தின் கடமை. இப்படிப் பாதுகாக்க வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் அந்தப் பாதுகாப்பில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பங்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னால், எல்லோரும் ஒன்று சேர்ந்துதானாக வேண்டும். இப்படி ஒன்று சேருகிற போதுதான் சமுதாயம் என்ற பெயர் உண்டாகிறது. ஆனால் இந்த ஒன்றுசேருகிற வகையில், எந்த மனிதனும் தனக்கென்றே சொந்தமாயுள்ள சுதந்திரத்தை இழந்து விடக்கூடாது. மற்றும், தன் மனச் சாட்சிக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும். இப்படி, தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடாமல், சமுதாய சுதந்திரத்தைப் பாதுகாப்பது எங்ஙனம் என்று கேட்டால், பரபர சம்மதத்தின் பேரில்தான். இதனையே சமுதாய ஒப்பந்தம் என்று அழைக்கிறோம். ஒப்பந்தம் என்பது ஏற்பட்டால் அதற்கு ஷரத்துக்களும் இருக்க வேண்டுமல்லவா? இந்த ஷரத்துக்கள் என்ன? இவை, எங்கும் வரை யறுத்து எழுதி வைக்கப்படவில்லை. ஆனால், ஜனங்கள், சமுதாய விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான், இவை ஷரத்துக்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த ஷரத் துக்கள் எங்கும் ஒரே மாதிரியாகவே அநுஷ்டானத்தில் இருக்கின்றன; எல்லோரும் இவற்றை அங்கீகரித்துக் கொண்டுமிருக்கிறார்கள். எல்லாம் ஒரு சம்பிரதாயத்தின் பேரில்தான். இந்தச் சம்பிரதாயத்தை எவனொருவன் மீறி நடக்கிறானோ அவன் இயற்கை நிலையில் இருந்த போது என்னென்ன சுதந்திரங்களை அனுபவித்து வந்தானோ அந்தச் சுதந்திரங்களையெல்லாம் பெற்றவனாகிறான். அதாவது அவன், தன் சுயேச்சைப்படி நடக்கும் உரிமையைப் பெற்றுவிடு கிறான். ஆனால், அதே சமயத்தில் சமுதாயத்தின் ஓர் அங்கத்தினன் என்ற ஹோதாவில் அவனுக்கு என்னென்ன சுதந்திரங்கள் உண்டோ அந்தச் சுதந்திரங்களை யெல்லாம் இழந்து விடுகிறான். ஒரு மனிதன், தன் சொந்த சுதந்திரங் களைப் பெற்றுவிட்டாலும், சமுதாய சுதந்திரத்தை இழந்து விடுவதில்தான் அவனுக்கு அதிகமான பாதகம் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். எப்படி? இந்தக் கேள்விக்குச் சிறிது விதரித்து விடையளிக்க வேண்டியது அவசியம். பிரதி மனிதனும், தன்னுடைய சொந்த உரிமைகளைச் சமுதாய நன்மைக்காகப் பராதீனப்படுத்தி விடுகிறானல்லவா? எல்லோருக்கும் பொதுவான ஓர் ஏற்பாட்டின் பேரில்தான், அல்லது நிபந்தனையின் பேரில்தான், பிரதி மனிதனும் தன் உரிமையைப் பராதீனப் படுத்துகிறான். அதாவது எல்லோரும் ஒரேவிதமான விதி களுக்குட்பட்டுத்தான் இங்ஙனம் தங்கள் உரிமையைப் பராதீனப் படுத்துகிறார்கள். இதனால், யாருமே, இந்த நிபந்தனைகளை, அல்லது விதிகளை, பிறருக்குப் பாதகம் உண்டாகுமாறு உபயோகிக்க மாட்டார்களல்லவா? ஏனென்றால், மற்றவர்களுக்குப் பாதகமாகத் தாங்கள் நடந்து கொண்டால், தங்களுக்குப் பாதகமாக மற்றவர்கள் நடந்து கொள்வார்களென்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். தவிர, தனிப்பட்ட மனிதர்கள், தங்கள் உரிமைகளை மனப் பூர்வமாகவே சமுதாயத்திற்குப் பராதீனப் படுத்துகிறார்கள். இதனால், தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படுகிற கூட்டுறவானது. பரிபூர்ணமானதாக இருக்கும். அதாவது அதில் எவ்வித விகல்பமோ, கல்மிஷமோ இராது. இப்படித் தனி மனிதர்கள், தங்கள் உரிமை களைச் சமுதாயத்திற்கு, (தங்களுடைய நன்மைக்காகவும் சமுதாயத் தின் நன்மைக்காகவும்) பராதீனப்படுத்தி விடுவதால், யாரும், தங்களுக்கென்று விசேஷமான சில உரிமைகள் வேண்டுமென்று கோரமாட்டார்கள்; கோரவும் முடியாது. அப்படி ஒரு சிலருக்கு மட்டும் பிரத்தியேகமான சில உரிமைகள் அல்லது சலுகைகள் கொடுக்கப்பட்டு விடுமானால் நாளா வட்டத்தில் எல்லா உரிமை களும் தங்களுக்கே வேண்டுமென்று அவர்கள் கேட்பார்கள். ஏனென் றால் அவர்களுடைய உரிமைகளையும் பொதுஜன சமுதாயத்தின் உரிமைகளையும் பரிசீலனை செய்து பார்த்துச் சொல்லக் கூடிய பெரியார் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே ஒவ்வொருவரும் தங்களுடைய நியாயத்தைத் தாங்களே பைசல் செய்து கொள்ளக் கூடிய நிலைமைக்கு வந்து விடுவார்கள். அப்பொழுது பழைய இயற்கை வாழ்வு நிலை ஏற்படும்; சமுதாயத்திற்கும் தனி மனித னுக்கும் ஏற்படுகிற சம்பந்தமானது கொடுமையாக இருக்கும்; பயனற்றதாகவும் ஆகிவிடும். ஒவ்வொருவரும் பொதுவுக்குத் தங்களை ஒப்புக் கொடுத்து விடுவதென்று சொன்னால், யாரும் தங்களை யாருக்கும் ஒப்புக் கொடுக்கவில்லையென்றுதான் அர்த்தம். மற்றவர்கள் தன் விஷயத் தில் எந்தவிதமான உரிமைகளோடு நடந்துகொள்ள வேண்டு மென்று ஒருவன் விரும்புகிறானோ, அதேமாதிரி தானும் மற்றவர் களிடத்தில் நடந்து கொள்ள வேண்டியிருப்பதால், ஒவ்வொருவனும் தான் இழப்பதற்குச் சமதையான லாபத்தையும் அடைந்து விடு கிறான். அதுமட்டுமல்ல; தன்னைத்தான் காப்பாற்றிக் கொள்வதற் கான அதிக சக்தியையும் பெற்று விடுகிறான். எனவே சமுதாய ஒப்பந்தம் என்பதைக் கீழ்க்கண்ட வாசகத் தில் சுருக்கிச் சொல்லலாம்: ஜனசக்தியின் மேலான மேற்பார்வைக்குப் பிரதி மனிதனும், தன்னையும் தன்னிடமுள்ள சக்தியையும் ஒப்புக் கொடுத்து விடு கிறான்; அதற்குப் பிரதியாக ஜன சக்தியினின்று பிரிக்கமுடியாத ஒரு பாகமாகப் பிரதி மனிதனையும் (தன் துணையாகப்) பெறுகிறான். இதனால் ஏற்படுவது என்ன? சமுதாய ஒப்பந்தத்திலே சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக இயங்குவது போய், உத்திரவாதமும் ஒற்றுமை உணர்ச்சியுமுள்ள ஒரு ஜன சமுதாயமும் உண்டாகிறது. இப்படிச் சமுதாயமாக அமைகிற செயலே மேற்படி சமுதாயத்தின் ஒற்றுமைச் சின்னமாகவும், அதன் ஜீவநாடியாகவும், அதன் சக்தியாகவுமிருக்கிறது. தனிப்பட்ட நபர்கள் சேர்ந்த இந்தப் பொதுஜன மனிதன்தான் - அதாவது பொது ஜன சமுதாயந்தான் - முன்னர் நகரம் என்ற பெயரால் அழைக்கப் பட்டது; இப்பொழுது குடியரசு அல்லது சமுதாய தாபனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டுறவே - அதாவது மேற்படி பொதுஜன சமுதாயமே - செயலற்றிருக்கிற போது ராஜ்யம் என்றும், காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறபோது அரசு என்றும், மற்ற தாபனங்களோடு ஒப்பிட்டுக் காட்டப்படுகிற போது அதிகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்படி சமு தாயத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள், பொதுவாக அழைக்கப் படுகிறபோது ஜனம் என்றும், தனிப்பட்ட நபர்கள் என்ற ஹோதா வில் நகரத்தார் என்றும், ராஜ்யத்தின் சட்டத்திற்குட்பட்டவர்கள் என்ற முறையில் பிரஜைகள் என்றும் கூறப்படுகிறார்கள். ஆனால் இந்தச் சொல் வழக்குகள் அடிக்கடி குழப்பப் பட்டுத் தவறாகவே உபயோகிக்கப்படுகின்றன. இவைகளை எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் எப்படி எப்படி உபயோகிக்க வேண்டுமென்று தெரிந்து கொண் டால் மட்டும் போதுமானது.1 7. அரசு தனிப்பட்ட நபர்கள் பலர் ஒரு சமுதாயமாகச் சேர்கிறார்க ளென்று சொன்னால், அந்தச் சேர்க்கையாகிற செயலில், சமுதாய விஷயத்தில் தனிப்பட்ட நபர்கள் எப்படி நடந்து கொள்ள வேண் டும், தனிப்பட்டவர்கள் விஷயத்தில் சமுதாயமானது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற முறைகளும் சேர்ந்திருக்கின்றனவென்பது தான் அர்த்தம். சமுதாயத்திலே ஓர் அங்கத்தினனாகச் சேர்ந்து கொள்கிற ஒரு தனிப்பட்ட மனிதன், தானே வலியப் போய்ச் சேர் கிறான். அப்படிச் சேர்வதில் அர்த்தமிருக்கிறது. அப்படி அவனே ஏற்படுத்திக் கொண்ட சம்பந்தத்தை அவனே வலிய ரத்து செய்து கொண்டு விடமாட்டானல்லவா? இப்படிச் சமுதாயத்திலே அங்கத் தினனாகச் சேர்ந்து கொள்கிற ஒரு தனிமனிதன் இரண்டு விதமான சம்பந்தங்களை யுடையவனாகிறான். அரசு என்று சொல்லுகிறோ மல்லவா, அந்த அரசின் ஒரு பாகத்தினன் என்ற முறையில் தனிப் பட்ட நபர்களுடன் வைத்துக் கொண்டிருக்கிற சம்பந்தம் ஒன்று; ராஜ்யத்தைச் சேர்ந்த ஒரு பிரஜை என்ற முறையில் அரசுடன் வைத்துக் கொண்டிருக்கிற சம்பந்தம் மற்றொன்று. இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஒருவன், தனக்குத் தானே சில நிர்ப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிர்ப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவோ அல்லது அவைகளை மீறவோ அவனுக்கு உரிமையுண்டு. அதுபோல ஒருவன், தானே தன் விஷயத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எப்பொழுதும் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று கண்டிப்புச் செய்யமுடியாது. தன் விஷயத்தில் தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தைத் தானே ரத்து செய்ய அவனுக்கு உரிமையுண்டு. இது சமுதாய விஷயமாக ஏற்பட் டிருக்கிற சாதாரண நியதி. இந்த நியதியைக் கொண்டு மேலே சொன்ன சம்பந்தத்தை, அதாவது தனிப்பட்ட நபருக்கும் அரசுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கவனிக்கக் கூடாது. ஏனென்றால் தனி மனிதன் என்ற முறையில் ஒருவனுக்கு ஏற்பட்டிருக்கிற ஹோதா வேறு; அவனே, ஒரு ராஜ்யத்தின் அங்கமாயிருக்கிற போது அவனுக்கேற் பட்டிருக்கிற ஹோதா வேறு. மேலே சொன்ன இரண்டுவித சம்பந்தத்தில், பொது ஜனங் களுக்கும் அரசுக்கும் ஏற்படுகிற சம்பந்தம் ஒன்றல்லவா? இதன்படி அரசுக்கு எல்லாப் பிரஜைகளும் கட்டுப்பட்டவர்களாகிறார்கள். ஆனால் வேறொரு காரணத்திற்காக, அரசானது, தன்னையே தன் கட்டுக்குட்படுத்திக் கொள்ள முடியாது. அரசானது, தன்னை ஒரு நிரந்தரமான கட்டுக்குட்படுத்திக் கொள்கிற மாதிரி ஒரு சட்டத்தைத் தானே தனக்கு விதித்துக் கொள்ளு மென்று எதிர்பார்ப்பது அரசியல் சம்பிரதாயத்திற்கே விரோதமானது. ஒரு மனிதன், தனக்குத் தானே ஒப்பந்தம் செய்து கொள்கிறபோது, அவனுக்கு, இந்த ஒப்பந்தத்தை மீறி நடக்கவும் உரிமையுண்டு என்று மேலே சொன்னோமல்லவா அதைப் போலவே இந்த அரசுக்கும் உரிமையுண்டு. இதனால் ஜன சமுதாயத்தை - சமுதாய ஒப்பந்தத்தைக் கூட - கட்டுப்படுத்தக் கூடிய எந்தச் சட்டமும் இல்லை, இருக்கவும் முடியாது என்பது பெறப் படுகிறது. இப்படிக் கூறுவதனால் மேற்படி ஜன சமுதாயமானது மற்றவர்களுடன் ஒப்பந்தஞ் செய்துகொள்ளக் கூடாது என்பது அர்த்தமல்ல; அந்நியர்களோடு ஒப்பந்தம் செய்து கொள்கிறபோது, அவர்களைத் தனிப்பட்ட நபர்களாகக் கருதி அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட ஜன சமுதாயமோ அல்லது அரசோ, ஜன சமுதாயத்திற்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத் தின் புனிதத் தன்மையினாலே உண்டானவை. இதனால் மேற்படி ஜன சமுதாயமோ அல்லது அரசோ மேற்படி ஒப்பந்தத்திற்கு விரோத மாக ஒன்றையும் செய்யக் கூடாது. உதாரணமாக, தன்னுடையதில், அதாவது தன்னுடைய உரிமைகளில் ஒரு பாகத்தைப் பராதீனப் படுத்துவதென்பதோ அல்லது மற்றோர் அரசுக்குப் பணிந்து விடுவ தென்பதோ கூடாது. எந்தச் சட்டத்தினால் அஃது - அந்தச் சமுதாயம் அல்லது அரசு - தாபிதமாயிற்றோ அந்தச் சட்டத்தையே மீறி நடப்பதென்றால், அது, தன்னைத்தானே அழித்துக் கொள்வதாகும். பொது ஜனங்கள் ஒரே தாபனமாக ஒன்றுபட்டு விடுவார்க ளானால், அதாவது ஒரு சமுதாயமாகத் தங்களை அமைத்துக் கொண்டு விடுவார்களானால், மேற்படி தாபனத்தைத் தாக்குகிற போது தனிப்பட்ட நபர்களுக்குப் பாதகம் உண்டாகிறது. அப்படியே தனிப்பட்ட நபர்களைத் தாக்கினால் அது தாபனத்தைப் பாதிக் கிறது. எனவே உபய கட்சிகளும் - அதாவது மேற்படி தாபனமும் தனிப்பட்ட நபரும் - கடமை, பரபர நன்மை என்பவைகளை முன்னிட்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும். மேலே சொன்ன இரண்டுவித சம்பந்தத்தினால் ஏற்படுகிற அதிக மான நன்மைகளையே மனிதர்கள் தேட முயல வேண்டும். தனிப்பட்ட நபர்களிலிருந்துதான் அரசு உண்டாகிறது. ஆகை யால் அந்தத் தனிப்பட்ட நபர்களாகிய பொது ஜனங்களுடைய நன்மைக்கு விரோதமாக அரசியினுடைய நன்மை இருக்க முடியாது. எனவே, மேற்படி அரசானது, தனது பிரஜைகளுக்கு எவ்வித உறுதி மொழியும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் பல அவயவங்கள் சேர்ந்த தேகமானது அந்த அவயவங்களுக்கு ஊறு செய்ய வேண்டுமென்று நினைக்காது. அதைப்போல் தனிப்பட்ட நபர்கள் என்ற முறையில் யாரையும் மேற்படி அரச சக்தி ஊறு செய்ய முடியாது. இதை இனி வரும் அத்தியாயங்களில் காண்போம். அரசு, அரசாயிருக்கிற வரையில் அதன் தன்மைகள் யாவும் அதில் இருக்கவே செய்யும். ஆனால் பிரஜா சக்திக்கும் அரச சக்திக்கும் உள்ள சம்பந்தம் இப்படியில்லை. இரண்டுக்கும் பொதுவாக உள்ள நலன்கள் ஒன்றே யாயினும் பிரஜா சக்தியானது தனது அன்றாடக் காரியங்களைச் செய்து கொண்டு போக, போதிய பாதுகாப்புகளைத் தேடும். அந்தப் பாதுகாப்புகளை நடைமுறையில் கொணரக் கூடிய சாதனங்களும் தனக்குத் தேவையென்று அஃது எதிர்பார்க்கும். ஒரு ராஜ்யத்தைச் சேர்ந்த பிரதி நபரும், தனிப்பட்ட மனிதன் என்ற ஹோதாவில் ஒருவித அபிப்பிராயங் கொண்டிருக்கலாம். ஜன சக்தியின் ஒரு பாகம் என்ற ஹோதாவில், மேற்படி அபிப்பிராயத் திற்கு விரோதமாக அபிப்பிராயங் கொண்டிருக்கலாம். அவனுடைய சொந்த நன்மையானது பொது நன்மைக்கு விரோதமாக எண்ணச் செய்யலாம். பொது நலத்திற்காகத் தன்னலத்தை ஓரளவு பராதீனப் படுத்திக் கொடுப்பது, தான் மனமுவந்து அளிக்கிற ஒரு நன்கொடை என்றும், அதனால் மற்றவர் களுக்கு அதிக பாதகம் ஏற்படாது என்றும், அவன், தனி மனிதன் என்ற முறையில், அதாவது தன் சொந்த நலனை மட்டும் கருதுகிற மனிதன் என்ற முறையில், நினைக்கலாம். ஒரு ராஜ்யத்தில் ஏகதேச மாக ஒரு சிலர்தான், தங்களுடைய சுதந்திரத்தைச் சமுதாய நன்மைக்குப் பராதீனப் படுத்துவது தங்கள் கடமையென்று நினைக்கக் கூடும். ஆனால் இப்படி எல்லா ஜனங்களும் இருப்பார்களென்று எதிர் பார்த்து ஒரு காரியத்தைத் தொடங்குவது கற்பனை உலகத்தில் வாழ்வதாக முடியும். ஆகையால், எந்த நபருக்கும், ஒரு பிரஜையின் கடமையைச் செய்யாமல், பிரஜா உரிமைகளை மட்டும் அனுபவிக்க வேண்டு மென்ற எண்ணம் வளர்ந்துகொண்டு போனால் அஃது ஆபத்தாகும். அதனால் அரசின் அழிவு ஏற்படுவது நிச்சயம். சமுதாய ஒப்பந்தம் என்பது ஒரு சம்பிரதாய ஒப்பந்தமாக ஆகாதிருக்க வேண்டுமானால், கீழ்க்கண்ட நிபந்தனைகளும் அதில் இருக்க வேண்டும். அதாவது எவனொருவன் ஜன சமூகத்தின் இச்சைக்குக் கீழ்ப்படிய மறுக்கிறானோ அவன் அந்த இச்சைக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறு கட்டாயப்படுத்தப்பட வேண்டும். அப்படி அவன் செய்யாவிட்டால் அவன் சுதந்திரமாயிருக்க முடியாது. இந்த நிபந்தனை யிருந்தால்தான் ஒவ்வொருவனும் தன் தாய்நாட்டோடு ஐக்கியப்படுவான். அவனுக்குப் பிறருடைய தயவை நாடவேண்டிய அவசியம் ஏற்படாது. பிரஜைகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டால்தான் அரசியல் நிருவாகமும் சரியாக நடை பெறும். ஜன சம்பந்தமான விவகாரங்கள் ஒழுங்காக நடைபெறும். இல்லாவிட் டால் ராஜரீகத்தில் அனேக ஒழுங்கீனங்கள் ஏற்படக்கூடும். 8. சமுதாய அரசு மனிதன் இயற்கையான வாழ்க்கை நிலைமையிலிருந்து சமுதாயமாகச் சேர்ந்து வாழக்கூடிய நிலைமைக்கு வந்தவுடனேயே அவனிடத்தில் ஒரு பெரிய மாறுதல் உண்டாகிறது. இயற்கையான வாழ்க்கை நிலைமையிலிருந்தபோது அவன், அவ்வப்பொழுது எழுகிற உணர்ச்சி பாவங்களைக் கொண்டே காரியங்களைச் செய்துவந்தான். இப்பொழுது - அதாவது சமுதாய வாழ்க்கையைத் தொடங்கியதும் - தான் செய்கிற ஒவ்வொரு காரியமும் நியாயமா வென்று பார்த்துத்தான் செய்கிறான். மற்றும் தான் செய்வது தர்மமாவென்றும் பார்த்துச் செய்கிறான். இயற்கையான வாழ்க்கை நிலையிலிருந்து சமுதாய வாழ்க்கை நிலைக்கு வந்தவுடனேயே, மனிதன், தன் தேகபலத்தைக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்வது என்பதற்குப் பதிலாகக் கடமையை முன்னிட்டு அதே காரியத்தைச் செய்கிறான்; விருப்பம் உண்டாகிறபோது ஒரு காரியத்தைச் செய்தல் என்பதற்குப் பதிலாக சட்டரீதி என்கிற வரம்புக் குட்பட்டு அந்தக் காரியத்தைச் செய்கிறான்; தனக்கு எப்படி எப்படி இச்சைகள் போகின்றனவோ அப்படியெல்லாம் காரியங்களைச் செய்யாமல் தன் அறிவுக்கு உகந்தவாறு காரியங்களைச் செய்கிறான்; இதுவரையில் தன்னொருவனையே மையமாக வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்த அவன், இப்பொழுது வேறு சில லட்சியங் களை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்தத் தொடங்கு கிறான். இந்த மாறுபாட்டினால் மனிதன் இயற்கையான வாழ்க்கை நிலையிலிருந்தபோது அநுபவித்து வந்த சில சாதகங்களை இழந்து விடுகிறான் என்பது வாதவம். ஆனால், அவைகளுக்குச் சமதை யான வேறு சில சாதகங்களைத் திரும்பவும் பெறுகிறான். உதாரண மாக, சமுதாயத்தின் மனிதன் என்ற முறையில் அவனுடைய திறமைகள் அடிக்கடி உபயோகப்படுவதற்குச் சந்தர்ப்பங்கள் உண்டாகின்றன; அதனால் அவை விருத்தியடைகின்றன. அவனுடைய எண்ணங்கள் விசாலமடை கின்றன. அவனுடைய உணர்ச்சி பாவங்கள் பெருந் தன்மை யடைகின்றன. அவனுடைய ஆத்மா புனிதத்தன்மையடை கிறது. எனவே புதிய மாறுதலின் காரணமாக - அதாவது இயற்கை நிலையிலிருந்து சமுதாய நிலைமைக்கு வருவதாகிற மாறுதலினால் - ஏற்படுகிற சாதகங்கள் சில சமயங்களில் துஷ்பிரயோகம் அடைந்த போதிலும் அவன் - அந்த மனிதன் - இயற்கை நிலைமைக்கும் கீழாகப் போவதில்லை. அந்த நிலைமை யிலிருந்து விடுதலை யடைந்ததற்காக வும், அறியாமையோடு கூடிய ஒரு மிருகமாக இருந்த தான், அறிவு நிரம்பிய ஒரு மனிதனாகப் பரிணமித்ததற்கும் தன்னைத்தான் ஆசீர்வதித்துக் கொள்கிறான். இந்த மாறுதலை நாம் வேறு விதமாகக் காண்போம். சமுதாய ஒப்பந்தத்தின் காரணமாக, அதாவது சமுதாய நிலைமைக்கு வந்ததன் காரணமாக, மனிதன், தான் இயற்கையாக அனுபவித்து வந்த சுதந் திரத்தை இழந்துவிடுகிறான். அதாவது தன் மனதில் தோன்றியதை யெல்லாம் தன்னிஷ்டப்படிக்கும் தன் சக்திக்கிசைந்தவாறும் வரம்பின்றிச் செய்துவந்த ஓர் உரிமை யிருந்து வந்ததல்லவா அதனை இழந்து விடுகிறான். இதற்குப் பதிலாக, தன் உடைமைகளின் விஷயத்தில் ஒருவித உரிமையையும், மேற்படி உடைமைகளைத் தன் சொந்த ஆதியாக அனுபவிக்கிற சுதந்திரத்தையும் அடைகிறான். இந்தச் சந்தர்ப்பத்தில் மனிதன் இயற்கையாக அனுபவித்து வந்த சுதந்திரத்திற்கும், சமுதாய நிலைமைக்கு வந்த பிறகு அனுபவிக்கிற சுதந்திரத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இயற்கைச் சுதந்திரமென்பது ஒரு தனி மனித னுடைய சக்தியளவோடு நின்றுவிடுகிறது. சமுதாயத்தின் ஒரு பாகத் தினன் என்ற முறையில் மனிதன் அனுபவிக்கிற சுதந்திரமானது ஜன சக்தியின் வரம்புக்குட்பட்டது. தவிர உடைமை என்று மேலே சொன்னோமல்லவா, அந்த உடைமை யென்றால், பலாத்காரத்தின் விளைவாகவோ, முதல் முதலாக ஒருவனுடைய சுவாதீனத்திற்குட் பட்டது என்ற காரணத்தின் விளைவாகவோ அவன் அநுபவிக்கிற சொத்துக்களுக்கே பெயராகிறது. ஆனால், ஆதி என்றாலோ அதனை-அந்த உடைமைகளைத்-தான் உரிமை யோடு அனுப விக்கிற பாத்தியதையை அடிப்படையாகக் கொண்டது.1 மற்றும், மனிதன் சமுதாய வாழ்க்கையை நடத்தத் தொடங்கி யதும் ஒருவித மனோ சுதந்திரம் பெறுகிறான். ஒரு மனிதன் தனக்குத் தானே எஜமானனாக இருக்க வேண்டுமானால் இந்த மனோ சுதந்திரம் அவனுக்கு ஏற்பட்டால் தான் முடியும். விருப்பம்போல் காரியங்களைச் செய்வது என்பது அடிமைத்தனம்; தானே வகுத்துக் கொண்ட ஒரு சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்பது சுதந்திரம். ஆனால் இதைப்பற்றி ஏற்கெனவே நான் அதிகமாகக் கூறி விட்டிருக்கிறேன். சுதந்திரம் என்பதற்குத் தத்துவார்த்தம் என்ன வென்பதைப்பற்றி விளக்கிச் சொல்வது இப்போது நான் எடுத்துக் கொண்டுள்ள விஷயத்திற்குப் புறம்பானதாகும் 9. சொத்து பாத்தியதை2 ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பிரதி அங்கத்தினனும் - அதாவது பிரதி மனிதனும் - அந்தச் சமுதாயம் ஒரு சமுதாயமாக உருவகப் படுகிற சமயத்தில் எப்படி இருக்கிறானோ அப்படியே தன்னையும், தன் அதிகாரங் களையும், தன் சொத்துக்களையும் அந்தச் சமுதாயத் திற்குப் பராதீனப் படுத்தி விடுகிறான். இந்தச் செய்கையினால், அவனுடைய சொத்துக்கள் கைமாறினாலும் அவற்றின் தன்மை மாறுவதில்லை; மற்றும் அவை அரசினுடைய சொத்துக்களாகவும் ஆகிவிடுவதில்லை. ஆனால் ஒரு தனி நபருக்குள்ள அதிகாரத்தைக் காட்டிலும் ஒரு ராஜ்யத்துக்குள்ள அதிகாரம் அதிகமானது. அதைப் போலவே ஒருவனுடைய சொத்து, சமுதாயச் சொத்தாயிருப்பது பத்திரமானது; அதை மாற்றவும் முடியாது. சமுதாயத்திற்குப் புறம் பான அந்நியர்கள் விஷயத்தில் வேண்டுமானால் இது நியாயமற்றதா யிருக்கலாம். ஏனென்றால் ஒரு ராஜ்யத்தில் சம்பந்தப்பட்ட அங்கத் தினர் அத்தனை பேருடைய சொத்துக்களுக்கும் சமுதாய ஒப்பந்தத் தின் மூலமாக அந்த ராஜ்யமே சொந்தக்காரனாகி விடுகிறது. இந்தச் சமுதாய ஒப்பந்தம் என்பதுதான், ராஜ்யத்திலுள்ள எல்லா நபர்களி னுடைய உரிமைகளுக்கும் மூலாதாரமாயிருக்கிறது. மற்ற அதிகாரங் களைப் பொறுத்தமட்டில் அந்த ராஜ்யத்திற்கு என்ன பாத்தியதை யிருக்கிறதென்றால், முதல் ஆக்ரமிப்பு பாத்தியதைதான். இந்தப் பாத்தியதையையும் அது தனிப்பட்ட நபர்களிடமிருந்துதான் பெறுகிறது.1 முதல் ஆக்ரமிப்பு பாத்தியதை இருக்கிறதே அஃது ஒரு பலசாலி யினுடைய பாத்தியதையைக் காட்டிலும் உண்மையான பாத்தியதைதான். ஆனால் ஆதியென்ற தன்மையை அடைந்த பிறகுதான் அந்தப் பாத்தியதை உண்மையான பாத்தியதையாகிறது. பிரதி மனிதனுக்கும் அவனுக்குத் தேவையானவற்றை அடைய இயற்கையாகவே உரிமையுண்டு. ஆனால் குறிப்பிட்ட சில சொத்துக் களுக்குச் சொந்தக்காரனாகிவிட்ட பிறகு, அவன் மற்றப் பொருள் களுக்கு அந்நியனாகி விடுகிறான். அவனுக்கென்று வகுக்கப்பட்ட பாகத்தோடு அவன் இருக்கவேண்டும். பாகமாகாத மற்றப் பொதுச் சொத்துக்களின் மீது பாத்தியங் கொண்டாட அவனுக்கு உரிமை யில்லை. முதல் ஆக்ரமிப்பு பாத்தியதை யிருக்கிறதே அஃது, இயற்கை யில் ஒரு பலஹீனமான பாத்தியதையாக இருந்தபோதிலும், ஒரு ராஜ்யத்தைச் சேர்ந்த பிரதி அங்கத்தினராலும் கௌரவிக்கப்படு கிறது. இந்த முதல் ஆக்ரமிப்பு பாத்தியதையில் மனிதர்கள், மற்றவர் களுடைய பாத்தியதையென்ன வென்பதைப் பற்றிக் கவனிப்ப தில்லை; தங்களுக்குப் பாத்தியதை அல்லாதனவை எவை என்பதைத் தான் கவனிக்கிறார்கள். முதல் ஆக்ரமிப்பு பாத்தியதையைச் சட்டரீதியாக ஊர்ஜிதம் செய்ய வேண்டுமானால், பொதுவாகக் கீழ்க்கண்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப் பட வேண்டுவது அவசியமாகும்: முதலாவது, எந்த நிலத்தை ஒரு மனிதன் முதல் முதலாக ஆக்ரமிக்கிறானோ, அந்த நிலம் அதற்கு முன் வேறெவராலும் வாசம் செய்யப்படாததாய் இருக்கவேண்டும். இரண்டாவது, அந்த மனிதன் தன் ஜீவனத்திற்குப் போதிய அளவு நிலத்தையே சுவாதீனப்படுத்திக்கொள்ள வேண்டும். மூன்றாவது, அந்த மனிதன் ஏதோ வெற்றுச் சடங்கொன்றை நடத்தி மேற்படி நிலத்தைச் சுவாதீனப்படுத்திக் கொள்ளக் கூடாது; அந்த நிலத்தில் உழைக்க வேண்டும்; அதில் சாகுபடி செய்ய வேண்டும். இதுதான் உண்மையான பாத்தியதைக்கு அடையாளம். வேறு சட்ட ரீதியான பாத்தியதை இல்லாவிட்டாலும் இந்தப் பாத்தியதையை எல்லோரும் அங்கீகரிப்பர். தேவையையும் உழைப்பையும் அனுசரித்து முதல் ஆக்ரமிப்புப் பாத்தியதையை நாம் அங்கீகரித்தோமானால், அந்தப் பாத்தியதை எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் அதனை விதரித்துக் கொண்டு செல்கிறோமில்லையா? ஆனால் இந்தப் பாத்தியதைக்கு நாம் ஓர் எல்லை வகுக்க முடியாதா? பொதுவான தொரு நிலத்தில் அடியெடுத்து வைத்துவிட்டு அந்த நிலத்திற்குப் பாத்தியதை கொண்டாடி விட்டாலே போதுமா? மேற்படி நிலத்தில் ஏற்கெனவே குடியிருந்தவர்களைத் தற்காலிகமாக வெளியே துரத்தி விட்டதனாலேயே, அவர்கள் மீண்டும் அந்த நிலத்திற்கு வரக்கூடிய உரிமையை அவர்களினின்று அகற்றிவிட முடியுமா? ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு ஜாதியோ, விசாலமான தொரு பிரதேசத்தை அங்கு வசிக்கும் ஜனங்களுக்கு, அந்தப் பிரதேசத்தின் பாத்தியதை இல்லாமற் செய்து ஆக்ரமித்துக் கொள்ளலாமா? அப்படி ஆக்ரமித்துக் கொள்வது தண்டிக்கப்படக் கூடிய ஆக்ரமிப்பாகுமல்லவா? ஏனென்றால் ஏற்கெனவே அங்கிருந்த ஜனங்கள் வசிப்பதற்கு இடமில்லாமலும் ஜீவனத்திற்கு வகையில்லாமலும் செய்துவிடப் படுகிறார்களல்லவா? ந்யூனெ பால்போ,1 பெயின் தேசத்து மன்னரின் பெயரால் பசிபிக் மகா சமுத்திரத்தையும் தென் அமெரிக்கா முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டு விட்டான். இப்படி ஆக்ரமித்துக்கொண்டு விட்டதினாலேயே, ஏற்கெனவே அந்தப் பிரதேசங்களில் வசித்துக்கொண்டிருந்த ஜனங்களுக்கு அந்தப் பிரதேசத்தின் பாத்தியதை இல்லையென்று சொல்லி விடுவதா? இந்த மாதிரியான உதாரணங்கள் பலவற்றை நாம் எடுத்துக் காட்டலாம். இங்ஙனம் முதல் ஆக்ரமிப்பு உரிமையை நாம் ஏற்றுக் கொண்டோமானால், மேற்படி பெயின் தேசத்து மன்னனும் தனது மந்திரிச் சபையின் மத்தியில் இருந்துகொண்டே, பேனா முனையினால், உலகமனைத்தையும் தன் சுவாதீனப் படுத்திக் கொண்டு விட்டு, பிறகு அந்தந்தப் பிரதேசங்களில் வசித்துக் கொண் டிருந்த அரசர் களுக்கு அவரவர்களுடைய ராஜ்யங்களைத் தானம் கொடுக்கிறமாதிரி அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கலாமல்லவா? தனிப்பட்டவர்களுடைய பூப்பிரதேசங்கள் ஒன்று சேர்ந்து பொதுச் சொத்தாகிறது என்பதையும், அரச உரிமை என்பது, ஜனங் களின் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்திலிருந்து அந்த ஜனங்களின் நிலங்களுக்கு பாத்தியதை கொண்டாடுகிற உரிமை வரையில் சென் றிருக்கிறது என்பதையும், இந்த உரிமைகளே உண்மையான, நேரான உரிமை களென்பதையும் நாம் இதுகாறும் தெரிந்து கொண்டோம். இதனால் அரச உரிமையாது, ஜனங்களுடைய ஆதரவை அதிகமாக எதிர்பார்க்க வேண்டி யிருக்கிறது. அரசர்கள் செலுத்தும் அதிகாரங் களே அவர்களுடைய நன்னடத்தைக்கு ஜாமீன் போலாகிறது. இதனைப் பழைய காலத்து மன்னர்கள் சரியாக அறியவில்லை. ஏனென்றால் அவர்கள் தங்களைப் பாரசீகர்களின் மன்னர்கள், அல்லது கிதியர்களுடைய மன்னர்கள் அல்லது மாஸிடோனியர் களுடைய மன்னர்கள் என்றுதான் அழைத்துக் கொண்டார்கள். அதாவது ஜனங்களின் எஜமானர்களாகவே அவர்கள் இருந்து விட்டார்கள்; தேசங்களின் சொந்தக்காரர்களாக இருக்கவில்லை. இப்பொழுதுள்ள அரசர்கள் புத்திசாலித்தனமாக பிரான்சின் அரசன், பெயினின் அரசன், இங்கிலாந்தின் அரசன் என்று தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். நிலத்தைச் சுவாதீனப்படுத்திக் கொண்டால் அந்த நிலத்திலுள்ளவர்களையும் சுவாதீனப்படுத்திக் கொண்டது போலாகு மென்பதை இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தனிப்பட்ட நபர்களின் சொத்துக்களைச் சமுதாயமானது தன் சுவாதீனப்படுத்திக் கொண்டு விடுவதனால் ஏற்படுகிற விசேஷம் என்ன வென்றால், அந்தத் தனிப்பட்ட நபர்களுக்கு அந்தச் சொத்துக் களின் மீது நியாயமான பாத்தியதை இருக்கிறதென்பதை அங்கீகரிக் கிறது; ஆக்ரமிப்பு பாத்தியதையை உண்மையான பாத்தியதையாக்கு கிறது; அனுபவ பாத்தியதையை எஜமான பாத்தியதையாக்குகிறது. மற்றும், சமுதாயத்தின் பிரதிநிதிகளாக மேற்படி பொதுச் சொத்துக் களை வைத்துக் கொண்டிருப்பவர்கள், மேற்படி பொதுச் சொத்துக் களின் கர்த்தாக்களென்று கருதப்படுகிறார்கள். அவர்களுடைய உரிமைகளை, ராஜ்யத்தைச் சேர்ந்த எல்லா நபர்களும் அங்கீகரிக் கிறார்கள். இதனால் அந்த ராஜ்யமானது தன் சக்தி கொண்டு அந்நியர்களைத் தகைந்து நிற்கிறது. தனிப்பட்ட நபர்கள் தங்கள் சொத்துக்களை ராஜ்யத்தின் சொத்துக்களாக மாற்றி விடுவதனால் அந்த ராஜ்யத்திற்கும் நன்மை செய்தவர்களாகிறார்கள்; தங்களுக்கும் நன்மை செய்து கொண்டவர்களாகிறார்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில், மனிதர்கள் ஏதேனும் சில நிலங் களைச் சுவாதீனப்படுத்திக் கொள்வதற்கு முன்னரேயே ஒன்று சேர்ந்து ஒரு சமுதாயம்போல் வாழத் தொடங்கி விடலாம். பின்னர், தங்களுக்குப் போதுமான அளவு பிரதேசத்தைச் சுவாதீனப்படுத்திக் கொண்டு அதனை எல்லோரும் பொதுவாக அனுபவிக்கலாம்; அல்லது தங்களுக்குள்ளேயே சரிசமானமாகவோ, அல்லது அரசன் விதிக்கிற திட்டப்படியோ பங்கிட்டுக்கொள்ளலாம். எந்த விதமாகச் சுவாதீனப்படுத்திக் கொண்ட போதிலும், ஒரு தனி மனிதனுக்கு அவனுடைய சொத்தின் மீது என்ன பாத்தியதை இருக்கிறதோ அது, சமுதாயமானது, எல்லாருடைய சொத்துக் களின் மீதும் கொண் டுள்ள பாத்தியதைக்குத் தாழ்ந்ததுதான். இந்த ஏற்றத் தாழ்வு இல்லா விட்டால், சமுதாய ஒற்றுமை திரமாயிராது. அரசுரிமையும் ஒரு சக்தியோடு கூடி இயங்க முடியாது. சமுதாய ஒழுங்குக்கு அடிப்படையாக உள்ள ஒரு விஷயத்தை மட்டும் இங்குக் குறிப்பிட்டுவிட்டு இந்த அத்தியாயத்தை முடித்து விடுகிறேன். சமுதாய ஒப்பந்தம் என்பது, மனிதனுடைய இயற்கை யான சமத்துவத்தை அழித்துப் போடுவதற்குப் பதிலாக, தேக பலத்தின் காரணமாக உண்டாகிற சமத்துவ மின்மைக்குப் பதிலாக, ஒழுக்க ரீதியான, சட்ட ரீதியான ஒரு சமத்துவத்தை அளிக்கின்றது. மனிதர்கள் தேக பலத்திலும் அறிவிலும் வித்தியாசப்பட்டவர்களா யிருந்தபோதிலும் சம்பிரதாயத்தின் பேரிலும் சட்ட ரீதியாகவும் சமத்துவ முடையவர் களாகிறார்கள். சமுதாய ஒப்பந்தம் இரண்டாம் பாகம் பலஹீனத்திலிருந்துதான் எல்லாத் தீமைகளும் உண்டாகின்றன. ஒரு குழந்தையைப் பார்த்து, அஃது அகம்பாவம் பிடித்த குழந்தை என்கிறோம். ஏன் அஃது அப்படியிருக்கிறது? அதனுடைய பலஹீனந்தான் காரணம். அந்தக் குழந்தையைப் பலமுள்ள குழந்தை யாக்குங்கள்; அது நல்ல குழந்தையாகிறதா இல்லையா வென்று பாருங்கள். கடவுளை நல்லவர் என்ற அடைமொழி கொடுத்துத்தான் அழைக்கின்றோம். அப்படியானால், அந்தக் கடவுள்தன்மையை நாம் குழந்தைகளுக்குப் புகட்ட வேண்டாமா? - ரூஸோ 10. அரசு பராதீனப் படுத்தமுடியாதது ஒரு ராஜ்யம் தாபிக்கப்படுவது எதற்காக? பொதுஜன நன்மைக்காக. ஆதலின், ஜனசக்திதான் ராஜ்ய சக்திகளைக், கொண்டு செலுத்த முடியும். அதாவது ஜனசக்தியின் இச்சைப்படிதான், ஒரு ராஜ்யத்தின் காரியங்கள் நடைபெற வேண்டும். தனிப்பட்ட நபர்கள் தனித் தனியாகவே வாழ்ந்து வருவார்களானால் தங்கள் சொந்த நலனை உத்தேசித்துச் சண்டை போட்டுக் கொள்வார்க ளென்பதற் காகத்தான், சமுதாயம் என்று ஒன்று ஏற்பட்டது. அதில் எல்லோரும் சேர்ந்து வாழ வேண்டுமென்ற நியதியும் உண்டாயிற்று. இப்படிப் பல பேர்களுடைய நலன்களும் சேர்ந்ததைத்தான் சமுதாயக் கட்டுப்பாடு என்று சொல்கிறோம். ஏதோ சில விஷயங்களில் எல்லா ஜனங்களும் ஒருமுகமான அபிப்பிராயங் கொண்டாலன்றி, அந்த ஜனங்களைக் கொண்ட சமுதாயம் ஏற்படவே படாது. இந்தப் பொது நலத்தை உத்தேசமாகக் கொண்டுதான், ஒரு சமுதாயமானது நிருவாகம் செய்யப்படவேண்டும். ஆகையால் பொதுஜன அபிப்பிராயத்தை எது அநுஷ்டானத் திற்குக் கொண்டு வருகிறதோ அதற்குத்தான் அரசு என்று பெயர். எனவே இந்த அரசை, எந்தத் தனிப்பட்ட நபரும் வேறொருவருக்குப் பராதீனப்படுத்த முடியாது. பல பேருடைய சக்திகளும் சேர்ந்தே இந்த அரசு ஏற்படுகிற படியால், அரசுக்குப் பிரதிநிதியாக இந்த அரசு தான் இருக்கமுடியும். அரச அதிகாரத்தை வேண்டுமானால் வேறொரு வருக்கு மாற்றலாம். ஆனால் அரச சக்தியை மாற்ற முடியாது. தனிப்பட்ட தொரு சக்தி, ஏதோ ஒரு விஷயத்தில் ஜனசக்தி யோடு ஒன்றுபட்டுப் போகிற தென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்த ஒற்றுமை நீடித்திராது. அடிக்கடியும் இந்த ஒற்றுமை ஏற்படாது. ஏனென்றால் தனிச்சக்தியானது எப்பொழுதுமே சில சலுகைகளை நாடி நிற்கிறது. ஆனால் ஜனசக்தியோ சமத்துவத்தையே நாடி நிற்கிறது. தவிர, இந்த ஒற்றுமையானது, நிச்சயமானதாகவும் இராது. அப்படி இது நீடித்திருக்குமானால், ஏதோ சந்தர்ப்ப விசேஷத்தினாலிருக்க முடியுமே தவிர, அரசியல் கலையில் விசேஷத் திறமையினால் இருக்க முடியாது. ஒரு மனிதனுடைய இச்சை யென்னவோ, அல்லது அந்த மனிதன் தன்னுடைய இச்சையென்று எதைச் சொல்கிறானோ அந்த இச்சையே என்னுடைய இச்சை என்று ஓர் அரசன் கூறலாம். ஆனால் அந்த மனிதன் நாளை என்ன இச்சைப்படுகிறானோ, அதன்படியே நானும் இச்சை கொள்வேன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், யாருமே தன் இச்சையை எதிர்காலத்தோடு பந்தகப்படுத்த முடியாது. தவிர ஓர் அரசனானவன், அரச சக்திக்கு எது அடிப்படையா யிருக்கிறதோ அதற்கு விரோத மாகவும் இச்சை கொள்ள முடியாது. ஒரு ஜாதியானது, எவ்வித நிபந்தனையுமில்லாமல் ஒருவனுக்குக் கீழ்ப்படிந்து, நடப்பதாக வாக்குக் கொடுக்குமானால் அது தன் ஜாதீயத் தன்மையையே இழந்து விட்டதா கிறது. எப்பொழுது ஓர் அரசன், தனது அரச சக்தியை இழந்த வனாய் ஓர் எஜமான அந்ததோடு மட்டும் இருக் கிறானோ, அவன் ஆதிக்கத்திற் குட்பட்டிருக்கும் ஜனக்கூட்டத்தை ஜாதி என்று சொல்ல முடியாது. அந்த ஜாதிக்கு அரசியலும் இல்லை. இவ்வளவெல்லாம் கூறிய போதிலும், அரச சக்தியில்லாத ஓர் எஜமானன் விடுக்கிற உத்தரவுகள் பொதுஜன அபிப்பிராயத்தைப் பிரதிபலிக்க வில்லையென்று சொல்வதற்கில்லை. பொதுஜன அபிப்பிராயத்திற்கு அவன் விரோதமாகப் போகாத வரையில், அவன் உத்தரவுகள் செல்லுபடியாகின்றன வென்றே கொள்ள வேண்டும். பொது ஜனங்கள், மேற்படி உத்தரவுகளுக்கு எதிர்ப்புக் காட்டாமல் மௌனமாயிருக்கிற வரையில், அவர்கள் அந்த உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்களென்றுதான் அர்த்தம். 11. அரசு பிரிக்க முடியாதது அரசை, யாரும், யாருக்கும் பராதீனப்படுத்த முடியாது என்ப தற்கு என்னென்ன காரணங்கள் கூறப்பட்டனவோ அதே காரணங் களைக் கொண்டு, அரசைப் பிரிக்க முடியாது என்றும் கூறலாம். எல்லா ஜனங்களுடைய இச்சைகளிலிருந்து பிறப்பதே ஜனசக்தி. அந்த ஜனசக்தி, ஒன்று, எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும்; அல்லது, ஒருசிலருக்கு மட்டுமே உரியதா யிருக்கும். எல்லோருக்கும் பொது வானதாக அந்தச் சக்தி இருக்கிறபோது தான், அதனை அரசு என்று சொல் கிறோம். அந்தச் சக்தி, என்ன செய்கிறதோ அதுவே சட்ட மாகிறது. இந்த ஜனசக்தியின் ஒரு பாகத்தினருடைய அபிப்பிராயம் மட்டுமே நடை முறையில் இருக்கிறதென்று சொன்னால், அதனை ஒரு விசேஷ அதிகாரம் என்றோ அல்லது விசேஷ உத்தரவு என்றோ தான் சொல்ல வேண்டும்.1 ஆனால் நமது அரசியல் தலைவர்கள், அரசைப் பிரிக்க முடியா தென்பதைத் தெரிந்து கொண்டு, அதற்குப் பதிலாக அதன் நோக்கத்தைப் பிரித்துக் காட்டுகிறார்கள். பலாத்காரமென்றும், அரச சக்தி யென்றும், சட்ட மியற்றும் அதிகாரமென்றும், நிருவாகஞ் செய்யும் அதிகாரமென்றும்,1 வரிவிதிக்கிற உரிமை, நீதி வழங்குகிற உரிமை, யுத்தஞ் செய்கிற உரிமை யென்றும், உள்நாட்டு விவகார மென்றும், வெளிநாட்டு விவகாரமென்றும் பலவிதமாகப் போட்டுக் குழப்புகிறார்கள். சில சமயங்களில் இவை யனைத்தையும் ஒன்று சேர்க்கிறார்கள். வேறு சில சமயங்களில் வேறு வேறாகப் பிரிக்கிறார்கள். வேறு வேறு பாகங்களாகச் சேர்ந்த ஒரு விபரீத உருவமாக அரசைச் சிருஷ்டித்து விடுகிறார்கள். ஒரு மனிதனிட மிருந்து கண்கள், இன்னொரு மனிதனிடமிருந்து கைகள், வேறொருவ னிடமிருந்து கால்கள், இப்படியாக ஒன்று சேர்த்து ஒரு புதிய மனிதனைச் சிருஷ்டிக் கிறது போலிருக்கிறது இது. ஜப்பானிலே சில ஜாலவித்தைக் காரர்கள் இருக்கிறார்களாம். அவர்கள், பலபேர் முன்னிலையில் ஒரு குழந்தையைத் துண்டு துண்டாக நறுக்கி, ஒவ்வொன்றாக ஆகாயத்திலே தூக்கி எறிந்து விடுகிறார்களாம். பிறகு, இந்தத் துண்டுகளெல்லாம் ஒன்று சேர்ந்து, பழையமாதிரி உயிருள்ள குழந்தையாகி மீண்டும் ஜனங்கள் முன்னிலையில் வந்து நிற்கிறதாம். நம்முடைய அரசியல்வாதிகள் செய்கிற பிரிவினைகளும் ஏறக்குறைய இதே மாதிரிதான் இருக்கின்றன. பிரிக்க முடியாத சமுதாயத்தை இவர்கள் வேறு வேறாகப் பிரித்துக் காட்டுகிறார்கள். இஃதெப்படி சாத்தியமென்பது யாருக்கும் தெரியாது. இந்தத் தவறு எப்படி ஏற்படுகிறது என்று பார்த்தோமானால், ஓர் அரசின் அதிகாரம் என்னவென்பதைப் பற்றி இவர்கள் சரியாகத் தெரிந்து கொள்ளாததுதான் என்பது புலப்படும். மேற்படி அதிகா ரத்தைப் பிரயோகம் செய்வதனால் என்னென்ன விளைவுகள் உண்டாகின்றனவோ அவை களையே, அந்த அதிகாரத்தின் அமிசங்கள் என்று இவர்கள் எண்ணிக் கொண்டு விடுகிறார்கள். உதாரணமாக, யுத்தம் தொடுப்பதும், சமாதானம் செய்துகொள்வதும், அரச அதிகாரத்துக் குட்பட்ட செயல்கள் என்று சிலர் கருது கிறார்கள். ஆனால் அப்படியில்லை. அதிகாரத்தைப் பிரயோகம் செய் வதனால் உண்டாகிற பரிணாமங்கள் இவை. இவைகளே அதிகாரங் களாகா. இதே பிரகாரம், அரசு என்பதற்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவைகளைப்பற்றியும் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஜனசக்தியினின்று பிறந்த இந்த அரச உரிமைகளை, அரசுக்கென்றே ஏற்பட்ட உரிமைகளென்று இவர்கள் எண்ணிக்கொண்டு விடுகிறார்கள் இதனால்தான், அரசர்களுடைய உரிமைகள் என்ன, குடிகளுடைய உரிமை களென்ன வென்பதைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், அரசியல் அறிஞர்கள் அல்லல் படுகிறார்கள். இந்த அல்லலுக்குட்பட்டவர்களில் க்ரோஷியஸும் ஒருவன். இவன், தன் கொள்கைகளைத் தாராளமாக எடுத்துச் சொல்வதற்குப் பயந்தான். ஏனென்றால், இவன், தன் தாய் நாடாகிய ஹாலந்தின்மீது அதிருப்தி கொண்டவனாய், பிரான்சில் வந்து சரண் புகுந்தான்.1 தனக்கு அடைக்கலம் கொடுத்த பதின்மூன்றாவது லூயி மன்னனைத் திருப்தி செய்யும்பொருட்டு இவன், மிகுந்த சிரமப்பட்டு ஜனங்களுடைய உரிமைகளையெல்லாம் சித்திரவதை செய்திருக்கிறான்; மிகுந்த சாமர்த்தியமாக அந்த உரிமைகளையெல் லாம் அரசர்கள்மீது சுமத்தி யிருக்கிறான். இவனுடைய நூலை ஆங்கில பாஷையில் மொழி பெயர்த்த பார்பேராக்2 என்பவனுடைய போக்கும் இப்படித்தான் இருந்திருக் கிறது. இவன், தன்னுடைய மொழிபெயர்ப்பை இங்கிலாந்து மன்னனாகிய முதலாவது ஜார்ஜுக்கு அர்ப்பணம் செய்திருக்கிறான். இவன், தன் காலத்திய இங்கிலாந்து மன்னர்களுக்கு அதிருப்தி தரத்தக்க வகையில் நடந்து கொள்ளக்கூடா தென்பதற்காக, உண்மையைக் கூட மாற்றி விட்டான். இரண்டாவது ஜேம்3 மன்னன் சிம்மாசனத்திலிருந்து விரட்டியடிக்கப் பட்டான் என்பது உண்மையாக நடைபெற்ற சம்பவம். ஆனால் இவன், அவனே வலிய முடிதுறந்தான் என்று கூறுகிறான். இந்த ஜேம் மன்னனுடைய பதவியை மூன்றாவது வில்லியம்4 அபகரித்துக் கொண்டதை இவன் மழுப்பி விடுகிறான். இந்த க்ரோஷியஸும் பார்பேராக்கும் உண்மையைக் கடைப்பிடித்துத் தங்கள் கொள்கைகளை வெளியிட்டிருப்பார்களானால், அரசியல் சம்பந்தமான பிரச்சினைகளில் இவர்களுக்குக் குழப்பமே ஏற்பட் டிராது. ஒரே மாதிரியான கொள்கைகளை வெளியிட்டிருப்பார்கள். அப்படி இவர்கள் உண்மையைச் சொல்லி யிருப்பார் களானால், ஜனங்களுடைய ஆதரவுதான் கிடைத்திருக்கும். ஆனால், உண்மை யானது, எப்பொழுதுமே மனிதனை, செல்வ நிலைக்கு அழைத்துக் கொண்டு போகாது. அதாவது, உண்மையைச் சொல்கிறவன் பணத்தைக் குவிக்க முடியாது. அப்படி உண்மையைச் சொல்லியிருந் தால் இவர்களுக்கு, மேலே சொன்ன க்ரோஷியஸுக்கும் பார் பேராக்குக்கும் ஜனங்களுடைய ஆதரவு கிடைத்திருக்குமே யென்று கேட்கலாம். ஆனால் ஜனங்களால், தூதர்கள் பதவியையோ, ஆசிரியர்கள் பதவியையோ, உபகாரச் சம்பளத்தையோ கொடுக்க முடியாதல்லவா! 12. ஜனசக்தி தவறு செய்யக்கூடுமா? இதுகாறும் சொல்லி வந்ததைக் கொண்டு, ஜனசக்தியென்பது எப்பொழுதுமே தவறு செய்யாது என்றும், எல்லோருடைய நன்மையையே நாடுவதாயிருக்கு மென்றும் அர்த்தங் கொள்ளலாம். அப்படியில்லை. ஜனங்கள் செய்கிற முடிவுகள் யாவும் எப்பொழுதுமே நேர்மையானதாக இருக்குமென்று சொல்லி விடுவதற்கில்லை. மனிதர்கள் எப்பொழுதுமே தங்களுக்கு நன்மை உண்டாக வேண்டு மென்றுதான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் இதுதான் நன்மை யென்று அவர்கள் பகுத்துப் பார்ப்பதில்லை. சாதாரணமாக ஜனங்களை ஒழுக்க ஹீனர்களாக்கி விடமுடியாது. ஆனால் அவர்களை ஏமாற்றி விடலாம். அப்படி ஏமாற்றப்படுகிற தருணத்தில்தான், அவர்கள் தீய எண்ணங்களை எண்ணுகிறார்கள். பொதுவாகப் பார்க்கப் போனால், ஜனங்களுக்கு எல்லா விஷயங்களையும் தெரிவித்துவிட்டு, பிறகு, அவைகளைப் பற்றி அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்டால், அப்பொழுது அவர்கள் சொல்கிற அபிப்பிராயம் சரியான அபிப்பிராயமா யிருக்கும். அதுவே பொது ஜன அபிப்பிராயம். அப்படிக்கில்லாமல் சமுதாய நன்மைக்கு விரோத மாக ஒரு சமுதாயமானது பல கட்சிகளாகவும் பல சங்கங்களாகவும் பிரிந்து ஒவ்வொரு கட்சியும் அல்லது ஒவ்வொரு சங்கமும் ஒவ் வொரு விதமான அபிப்பிராயத்தை வெளியிடத் தொடங்கு மானால், இந்த ஒவ்வோர் அபிப்பிராயமும் அரசாங்கத்தை வெவ்வேறு விதமாகப் பாதிக்கும். ஜனங்களெல்லோரும் தங்கள் சொந்த அபிப்பிராயத்தை வெளியிட முடியாமல், தாங்கள் எந்தக் கட்சியில் அல்லது எந்தச் சங்கத்தில் சேர்ந்திருக்கிறார்களோ அந்தக் கட்சி அல்லது சங்கத்தின் அபிப்பிராயத்தை வெளியிட வேண்டியவர்களா யிருப்பார்கள். இதனால் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அத்தனை வாக்காளர்கள் இல்லாமல், எத்தனை கட்சிகள் அல்லது சங்கங்கள் இருக்கின்றனவோ அத்தனை வாக்காளர்கள்தான் இருப்பார்கள். இப்படி, கட்சிகட்சியாக அல்லது சங்கம் சங்கமாக வாக்கு (ஓட்) கொடுப்பதனால், ஜனங்களுக்குள் குறைவான அபிப்பிராய பேதங்கள் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், இதனுடைய பலனும் குறைவாகவே இருக்கும். இது கிடக்கட்டும். மேலே சொன்ன பல கட்சிகளில் அல்லது சங்கங்களில் ஏதேனும் ஒரு கட்சி அல்லது சங்கம் மற்றெல்லாக் கட்சிகளையும் அல்லது சங்கங்களையும் விட மேலோங்கி நிற்குமானால், அந்தக் கட்சி அல்லது சங்கத்தின் அபிப்பிராயந்தான் மேலோங்கி நிற்கும். ஆனால் அது பொதுஜன அபிப்பிராயமாகுமோ? ஆகாது; குறிப்பிட்ட ஒரு கட்சி அல்லது சங்கத்தினுடைய அபிப்பிராயமாகவே இருக்கும். அஃது எவ்வளவு வலுவுள்ள கட்சி அல்லது சங்கமாகத்தான் இருக் கட்டுமே. அதனாலென்ன? உண்மையான பொதுஜன அபிப்பிராயம் வெளிப்பட வேண்டு மானால், ஒரு ராஜ்யத்தினுடைய அமைப்பில் ஒரு கட்சி அல்லது சங்கத்தினுடைய ஆதிக்கமே வலுப்பெற்றிருக்கக் கூடாது. ஒவ்வொரு பிரஜையும் தன் தன்னுடைய அபிப்பிராயத்தைத் தாராளமாக வெளி யிட அநுமதிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்டதோர் உத்தமமான ராஜ்ய அமைப்பையே மகானாகிய லிகர்க1 என்பவன் கண்டான். இப்படி ஒரு நாட்டில் பல கட்சிகள் அல்லது சங்கங்கள் இருந்தா லும் அவைகளுக்குள் எவ்விதமான ஏற்றத் தாழ்வுகளும் இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட தாபனங்கள் ஏற்படுவதில் ஆட்சேபணை யில்லையென்று ஸோலோன்2 ந்யூமா3, ஸெர்விய4 என்ற அறிஞர்கள் கருதுகிறார்கள்.5 பொதுஜன அபிப்பிராயம் புத்திசாலித் தனமாக இருக்க வேண்டுமானால் அதற்கு இந்த மாதிரி ஏற்றத் தாழ்வுகளில்லாத தாபனங்களை அமைப்பதுதான் சரியான வழி. இவைகளினால் ஜனங்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள். 13. ராஜ்ய சக்தி ராஜ்யம் என்பது ஒரு சக்தி; வெறும் நிலப்பரப்பல்ல. அற வாழ்க்கையையுடைய ஒரு புருஷனை நாம் எந்த திருஷ்டியில் பார்ப்போமோ அந்த திருஷ்டியில்தான் ஒரு ராஜ்யத்தை நாம் பார்க்க வேண்டும். இந்த ராஜ்யம் என்ற புருஷனுக்கு உயிர் எது? அதன் அங்கத்தினர்களாகிய ஜனங்களின் ஒற்றுமைதான். இந்த ராஜ்யமானது, தன்னுடைய சொந்த க்ஷேமத்தைப் பற்றித்தான் அதிகமாகக் கவலைப் படுகிறது. அப்படிக் கவலைப்பட்டுக் கொண் டிருந்தால் மட்டும் போதுமா? போதாது. தன் க்ஷேமத்திற்கான காரியங் களையும் அது செய்ய வேண்டும். அப்படி அது செய்ய வேண்டு மானால் அவனை ஒரு சக்தி உந்த வேண்டும். அப்பொழுதுதான், அந்த ராஜ்ய சக்தி என்பது அசைந்து கொடுக்கும். மற்றும் எல்லோ ருடைய நன்மையை முன்னிட்டு, தன் ஒவ்வோர் அங்கத்தையும் உபயோகிக்கும். பிரதி மனிதனுக்கும், தன் தேக அவயவங்களின் விஷயத்தில் பூரண ஆதிக்கம் இருக்கிறது. இந்த ஆதிக்கத்தை அவனுக்கு யார் கொடுத்தது? இயற்கை. அதுபோல, ஒரு சமுதாயத் திற்கு அதன் அங்கத்தினர்களாகிய எல்லாப் பிரஜைகளின் மீதும் பூரண அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தை அளித்தது எது? சமுதாய ஒப்பந்தம். இந்தச் சமுதாய ஒப்பந்தமானது, ஜனசக்தியினால், அதாவது பொதுஜனங்களின் ஏகோபித்த அபிப்பிராயத்தினால் விவகார தசைக்குக் கொண்டுவந்து தள்ளப்படுகிறபோது, அரசு அல்லது ராஜ்யம் என்ற பெயரைப் பெறுகிறது. இப்பொழுது நாம் இரண்டு விதமான புருஷர்களைச் சிருஷ் டித்துக் கொண்டிருக்கிறோம். ஒன்று, தனிப்பட்ட மனிதனாகிய புருஷன்; மற்றொன்று, இந்தத் தனிப்பட்ட மனிதர்கள் பலரும் சேர்ந்த சமுதாய புருஷன். தனிப்பட்ட புருஷனுடைய சொத்து சுதந்திரங்கள் முதலியன வேறே; சமுதாய புருஷனுடைய சொத்து சுதந்திரங்கள் முதலியன வேறே. இரண்டும் அலாதியானவை. அப்படியானால் தனிப்பட்ட புருஷனுடைய உரிமைகள் என்ன, சமுதாய புருஷனுடைய உரிமைகள் என்ன வென்பதை நாம் தெளி வாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதே பிரகாரம், மேற்கண்ட தனிப்பட்ட புருஷர்கள், சமுதாயத்தின் பிரஜைகள் என்ற ஹோதாவில் என்னென்ன கடமைகளைச் செய்யவேண்டும், அதே சமயத்தில் மனிதர்கள் என்ற ஹோதாவில் என்னென்ன உரிமைகளை அநுப விக்க வேண்டு மென்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். சமுதாய ஒப்பந்தத்தின் பலனாக, பிரதியொரு மனிதனும் தன் சொந்த சக்தி, சொத்து, சுதந்திரம் முதலியவற்றில் ஒரு பாகத்தைச் சமுதாயத் திற்குப் பராதீனப்படுத்தி விடுகிறானல்லவா? அப்படிப் பராதீனப் படுத்திவிடப் படுகிற அந்தப் பகுதியானது, சமுதாய நன்மைக்கு முக்கிய மான பிரயோஜனத்தை அளிப்பதாயிருக்க வேண்டும். ஆனால் எது முக்கிய மான பிரயோஜனத்தை அளிக்கக் கூடியதென்று நிர்ணயிக்கிற உரிமை சமுதாயத்திற்கே உண்டு. சமுதாயமானது, தனக்குப் பிரஜைகளின் சேவை தேவையென்று எப்பொழுது கேட்கிறதோ அப்பொழுதே, பிரஜைகள், தங்கள் சேவைகளைச் சமுதாயத்திற்கு ஒப்புக் கொடுக்கவேண்டும். ஆனால், சமுதாயமும், பலருக்கும் உபயோகமா யிருக்கிற சேவையைத் தான் பிரஜைகளிடமிருந்து எதிர்பார்க்கலாமே தவிர, முக்கியமில்லாத விஷயங்களுக்கெல்லாம் பிரஜைகளின் சேவையை எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்க்கிற எண்ணமும் அதற்கு இருக்கக் கூடாது. ஏனென்றால் காரணமில்லாமல் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாதல்லவா? தனி மனிதர்கள், சமுதாயத்திற்குச் செய்யவேண்டிய கடமைகள் இருப்பதுபோல், சமுதாயமானது, தனி மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன. இவை பரபர நன்மையை முன்னிட்டு ஏற்பட்டவை. இதனாலேயே, இந்தக் கடமைகளை, முறையே, தனி மனிதர்களும் சமுதாயமும் நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்று சொல்லப்படுகிறது. பரபர நன்மையை முன்னிட்டு என்று சொன்னதினாலேயே, இந்தக் கடமைகளை நிறைவேற்று வதன் மூலமாக நமக்கு நாமே நன்மை செய்து கொண்டவர்களா கிறோம். சமுதாயத்திலே சம்பந்தப்பட்டிருக்கிற ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சொந்த க்ஷேமத்தை முதலில் நாடுகிறார்கள். அந்த நன்மையை நாடுவதன் மூலமாகத்தான் சமுதாயத்தின் க்ஷேமத்தைப் பார்க்கிறார்கள். இதனால் தான், ஜனசக்தியானது அதாவது பொதுஜன அபிப்பிராயமானது அநேக மாகச் சரியாக இருக்கிறது. தங்கள் சொந்த க்ஷேமத்தை முதலில் பார்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டு விடுமானால், ஒவ்வொரு வரும் தங்கள் சொந்த க்ஷேமத்தைப் போலவே மற்றவர்களுடைய க்ஷேமமும் இருக்க வேண்டும் என்று பார்ப்பார்கள். இதனால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் ஏற்பட்டு விடுகின்றன. இந்த ஒரே மாதிரியான உரிமையிலிருந்து எல்லோருக்கும் ஒரே விதமான நீதி கிடைக்கிறது. இப்படி ஒரே விதமான நீதி கிடைத்தல் என்பதுதான், ஜனசக்தியின் சாரம். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டுமென்ற எண்ணம், எல்லோருடைய இருதயத்திலிருந்தும் உதயமாக வேண்டும். அப்பொழுதுதான் அந்த நீதி, எல்லோருக்கும் ஒரே விதமாகக் கிடைக்கும். அப்படிக்கின்றி, அந்த நீதியானது ஏதே னும் குறிப்பிட்ட தொரு நோக்கத்தை வைத்துக் கொண்டு செல்லு மானால், அது, தன் உண்மையான தன்மையை இழந்து விடுகிறது. ஏதோ ஒரு விஷயத்தைப்பற்றி அல்லது ஓர் உரிமையைப் பற்றி அபிப்பிராய வேற்றுமைகள் உண்டாகின்றனவென்று வைத்துக் கொள்வோம். இதைப்பற்றி ஒரு தீர்ப்புக் கூற வேண்டுமானால், ஏற்கனவே யுள்ள ஒரு சம்பிரதாயம் நமக்குத் துணைசெய்ய வேண்டும். அப்படிப்பட்ட சம்பிரதாயம் ஒன்று இல்லாத போழ்து, மேற்கண்ட விஷயம் அல்லது உரிமை, வாதப் பிரதிவாதத்திற்குரிய பிரச்னையாகப் போய்விடுகிறது. இதற்கு இரண்டு கட்சிகள் ஏற்பட்டு விடுகின்றன. ஒரு பக்கத்தில் தனிப்பட்ட நபர்கள். இவர்கள் ஒரு கட்சியாகவோ, சங்கமாகவோ சேர்ந்து கொள்ளலாம். மற்றொரு பக்கத்தில் பொதுஜனம். இப்படி இரண்டு தரப்பினரும் ஒரு பிரச்சினையைப் பற்றி முரண்பட்ட அபிப்பிராயங்களைக் கொள் வார்களானால், இதற்குத் தீர்ப்புக் கூறுவது யார்? ஜனசக்தியா? இல்லை. இந்த இடத்தில் ஜனசக்தியினுடைய தீர்ப்பு என்று சொன்னால், எந்தக் கட்சி வலுவுள்ளதா யிருக்கிறதோ அந்தக் கட்சி யினருடைய தீர்ப்பாகத்தான் இருக்குமே தவிர, எல்லோருடைய ஏகோபித்த தீர்ப்பாயிராது. இதனால் இதனை, நியாயமான தீர்ப்பு என்று சொல்ல முடியாது. இந்தத் தீர்ப்பு, ஒரு சிலருக்குப் பாதகத்தை உண்டு பண்ணுவதாகவே இருக்கும். இதனால் நாம் முடிவு செய்து கொள்ள வேண்டிய தென்னவென்றால், குறிப்பிட்ட ஒரு கட்சி யினுடைய அபிப்பிராயம், பொதுஜன அபிப்பிராயமாக, அதாவது ஜனசக்தியாக ஆகிவிடாது. அதைப் போல், ஜனசக்தியானது, பொது நலத்தை லட்சிய மாகக் கொள்ளாமல் குறிப்பிட்டதொரு லட்சியத்தைக் கொண்டிருக்கு மானால், அது, தன் தன்மையை அல்லது அந்ததை இழந்து விடுகிறது. அப்படி இழந்துவிட்ட பிறகு, அஃது ஒரு தனி நபரைப் பற்றியோ அல்லது ஒரு விஷயத்தைப் பற்றியோ தீர்ப்புக் கூற முன் வருமானால், அது சரியான தீர்ப்பாயிருக்க முடியாது. உதாரணமாக கிரீ தேசத்திலுள்ள ஏதென் நகரவாசிகளிற் சிலர் மட்டும் ஒன்று சேர்ந்து அதிகார பதவியைக் கைப்பற்றிக் கொண்டு, சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் வழங்கியும், வேறு சிலரைத் தேசப் பிரஷ்டம் செய்தும் வருகிறார்களென்று வைத்துக் கொள்வோம். இப்படி இவர்கள் செய்வது, ஜனசக்தியின் செய்கையாகுமா? ஆகாது. ஒருசிலருடைய அதிகார ஆட்சியாகத்தானிருக்கும். எனவே, எல்லோருடைய நன்மையையும் நாடுவதாக உள்ளது எதுவோ அதுதான் ஜனசக்தி யென்பது பெறப்படுகிறது. ஜனங்களுடைய நன்மைகளையும் உரிமைகளையும் நாம் எந்த விதமாக அலசிப் பார்த்தாலும், இரண்டையும் ஒன்றுபடுத்திக் கொண்டு செல்வதற்குச் சமுதாய ஒப்பந்தம்தான் சரியான வழி என்பது தெளிவாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், எல்லா ஜனங்களும் பரபர நன்மையை முன்னிட்டுச் சில நிபந்தனைகளுக்குட்படு கிறார்கள். இங்ஙனம் நிபந்தனை களுக்குட்படுகிற அளவில் எல்லோ ரும் சம அந்ததுடையவர்களா கிறார்கள். இதனால் எல்லோரும் சம உரிமைகளை அநுபவிப்பது சாத்திய மாகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தினால் உண்டாகிற பலன் என்ன வென்றால், ஜனசக்தியின் ஒவ்வொரு காரியமும், எல்லோருக்கும் சாதகமாகவாவது இருக் கிறது; அல்லது பாதகமாகவாவது இருக்கிறது என்பதுதான். ஜன சக்தியானது, சமுதாயத்தை ஒரு தொகுப்பாகத்தான் பார்க்கிறதே தவிர, தனித் தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. ராஜகாரியம் என்று சொல்கிறோம்; அல்லது அரசாங்கம் ஒரு காரியத்தைச் செய்கிறது என்று சொல்கிறோம். அப்படி யென்றால் என்ன அர்த்தம்? மேலந்ததிலுள்ளவர்ளுக்கும் தாழ்ந்த அந்ததி லுள்ளவர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஒப்பந்தமா? இல்லை. ஒரு சமுதாய மாகச் சேர்ந்துள்ளவர்கள் பரபர நன்மைக்காகத் தங்களுக்குள் செய்து கொள்கிற ஓர் உடன்படிக்கை. இது சட்ட சம்மதமானது. ஏனென்றால், இதற்கு அதிவாரமா யிருப்பது சமுதாய ஒப்பந்தம். இந்த உடன்படிக்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்க முடியாது. ஏனென்றால், இஃது எல்லோருக்கும் பொதுவானது. இதில் தீமையே இருக்க முடியாது. ஏனென்றால், இஃது எல்லோருடைய நன்மையையும் நாடுவது. இது திரமா யிருக்கக்கூடியது. ஏனென் றால், இதற்கு, ஜனசக்தி பின் பலமாயிருக்கிறது. ஜனசக்தியின் அதிகாரமே இந்த உடன்படிக்கைக்கு உறுதியளிப்பதா யிருக்கிறது. இந்த மாதிரியான ஓர் உடன்படிக்கைக்கு ஜனங்கள் கீழ்ப்படிகிற வரையில், அவர்கள் வேறெந்த தனிப்பட்ட மனிதனுக்கோ அல்லது சக்திக்கோ கீழ்ப்படிகிறார்களில்லை. தங்களுக்குத் தாங்களே கீழ்ப் படிந்து நடக்கிறார்கள். அவ்வளவுதான். ஒரு ராஜ்யத்தினுடையவும், அந்த ராஜ்யத்துப் பிரஜைகளினுடையவும் பரபர உரிமைகளென்ன வென்று நாம் கேட்பது, ஜனங்கள் தங்களுக்குள் பரபர நன்மையை முன்னிட்டு என்ன ஏற்பாடுகள் செய்து கொள்கிறார்க ளென்பதைப் பொறுத்தே இருக்கிறது. எனவே, ராஜ்ய சக்தி அல்லது அரசாங்க அதிகாரம் என்று எதைச் சொல்கிறோமோ அது பரிபூரண சுதந்திர முள்ளது; மீற முடியாதது. ஜனங்களால் ஏற்படுத்திக் கொள்ளப்பட் டிருக்கிற சம்பிரதாயங்களின் எல்லையைக் கடந்து செல்லாது. எனவே இந்தச் சம்பிரதாயங்களையே ஒரு ஜாமீன் மாதிரி வைத்துக் கொண்டு, பிரதி மனிதனும் தன்னுடைய சொத்து சுதந்திரங்களை, மேற்படி அரசாங்கத்தினிடம் தாராளமாக ஒப்புவிக்கலாம். ஏனென் றால், அரசாங்கமானது, ஒரு பிரஜைக்கு அதிகமான சுமையையும், மற்றொரு பிரஜைக்குக் குறைவான சுமையையும் கொடுக்க முடி யாது. அப்படிக் கொடுத்தால் அஃது, அதாவது அந்த அரசாங்கம், தன் அதிகாரத்தைப் பிரயோகம் செய்வதற்கு லாயக்கில்லாமல் போய்விடுகிறது. மேலே சொன்ன உண்மைகளை நாம் சரியானபடி கிரகித்துக் கொண்டுவிட்டோமானால், சமுதாய ஒப்பந்தத்தின்மூலம் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன வென்பது நன்கு தெரியும். இந்த ஒப்பந் தத்திற்கு உடன்பட்டு விட்டதனால், எந்தத் தனிப்பட்ட மனிதனும் தன்னுடைய உரிமைகளை இழந்துவிடவில்லை. முன்னிருந்ததை விட அதிகமான பாதுகாப்பை ஒவ்வொருவனும் பெறுகிறான். திரமற்றதும் ஆபத்துக்கள் நிறைந்ததுமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்ததற்குப் பதிலாக, பிரதி மனிதனும், மேலானதும் திரமானதுமான வாழ்க்கையை நடத்துகிறான்; உண்மையான சுதந்திரத்தை அடைந்தவனுமாகிறான். ராஜ்யத்தினுடைய க்ஷேமத்திற் காகப் பிரஜைகள் தங்கள் உயிரையே கொடுக்கச் சித்தமாயிருக்கி றார்கள். இதனால் அவர்களுடைய உயிரைப் பாதுகாப்பதில் ராஜ்ய மானது அதிக அக்கறை செலுத்துகிறது. ராஜ்யத்தின் பாதுகாப்புக் காக ஜனங்கள் தங்கள் உயிரையே கொடுக்கிறார்களென்று சொன்னால், அந்த ராஜ்யத்தினால் அளிக்கப்பட்ட உயிரையே அதற்குத் திருப்பிக் கொடுக்கிறார்க ளென்பதுதான் அர்த்தம். இயற்கை நிலையில் ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் என்னென்ன விதமான ஆபத்துக்களுக்கு உட்பட்டிருந்தார்களோ அதைவிட அதிகமான ஆபத்து, ராஜ்யத்தைப் பாதுகாக்கும் முயற்சி யிலே ஈடுபட்டிருக்கிறபோது உண்டாகப் போவதில்லையே. தேவை யான சமயத்தில், எல்லோரும் தேசத்திற்காகப் போராட வேண்டியது தான். ஆனால் அப்படிப் போராடுகிறபோது, யாரும் தனித்தனியாகப் போராடவில்லையல்லவா? இதனால் எல்லோருடைய க்ஷேமத்திற் காகவும் ஒவ்வொருவரும் சிறுசிறு அபாயங்களுக்கு உட்பட்டா லென்ன? 14. மரண தண்டனை விதிக்கும் உரிமை ஒரு தனி மனிதன், சமுதாயத்திலே ஓர் அங்கத்தினனாகச் சேர்ந்து விட்ட பிறகு, தன் உயிரைத் தன்னிஷ்டப்படி விட்டுவிட அவனுக்கு உரிமை கிடையாது. அப்படியிருக்க இந்த உரிமையை, அதாவது தன்னுடைய உயிரை இஷ்டப்படி உபயோகிக்கிற உரிமையை அரசனிடத்திலே அவன் எப்படி ஒப்புவிக்கலாம் என்று கேட்கக்கூடும். இந்தக் கேள்விக்கு விடையளிப்பது கடினமாகத் தோன்றலாம். ஏனென்றால் கேள்வியே சரியானபடி கேட்கப்பட வில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அந்த உயிரை ஆபத்திற்குட் படுத்திக் கொள்ள உரிமையுண்டு. ஒரு வீட்டிலே நெருப்புப்பற்றிக் கொள்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நெருப்பினின்று தப்பித்துக் கொள்ளும் பொருட்டு, அந்த வீட்டிலே யிருக்கும் ஒரு மனிதன் ஜன்னல் வழியாகக் கீழே குதித்து விடுகிறான். அவன்மீது, தற்கொலை செய்து கொள்ள முயன்றான் என்ற குற்றத்தைச் சுமத்தலாமா? கப்ப லோட்டிச் செல்கிற ஒரு மாலுமி, நடு வழியில், பெரிய புயற்காற்றில் சிக்கிக்கொண்டு இறந்து போகிறான். கப்பல் புறப்படுகிறபோது, இந்த மாதிரியான ஆபத்து தனக்கு நேரிடுமென்று அவனுக்குத் தெரியாது. இந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு, அவன் மீது தற்கொலைக் குற்றத்தைச் சுமத்தலாமா? சமுதாய ஒப்பந்தத்தின் லட்சியமென்ன? ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறவர்களுடைய க்ஷேமத்தை நாடுவது. எவனொருவன் லட்சியத்தையடைய ஆவல் கொள்கிறானோ அவன் அதற்குத் தகுந்த சாதனங்களையும் கையாள ஆவல் கொள்கிறான். இந்தச் சாதனங்களைக் கையாளும்போது சில ஆபத்துக்களுக்குட் படத்தான் வேண்டியிருக்கும்; சில நஷ்டங்களையடையத்தான் வேண்டிவரும். ஆபத்துக்கள் அல்லது நஷ்டங்கள் இல்லாமல் சாதனங் களைக் கையாள்வதென்பது முடியவே முடியாது. மற்றவர்களுடைய உயிருக்கு ஆபத்துண்டாக்கியாவது, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்று எவனொருவன் விரும்பு கிறானோ அவன் அவசியமானால், தன் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திக் கொண்டாவது, மற்றவர்களுடைய உயிர்களைக் காப்பாற்றுவதற்குச் சித்தமா யிருக்க வேண்டும். ஒரு தேசம், ஆபத்துக்குட்பட்டிருக்கிற தென்றும் அந்த ஆபத்தைச் சமாளிக்க ஒவ்வொரு பிரஜையும் முன்வர வேண்டு மென அரசன் உத்தரவிடுகிறா னென்றும் வைத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட நிலைமையில், இஃது உண்மையிலேயே ஆபத்தா, இல்லையா வென்பதைப்பற்றி ஒரு பிரஜையானவன் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கக் கூடாது. ராஜ்யத்தினுடைய க்ஷேமத்திற் காக நீ இறக்கவேண்டும் என்று ஓர் அரசன், ஒரு பிரஜையைப் பார்த்து உத்திரவிட்டுவிடுவானாகில், அந்தப் பிரஜை, உடனே இறக்க வேண்டியதுதான். ராஜ்யத்தின் க்ஷேமத்திற்காக, கேட்ட போது உயிரைக் கொடுக்க வேண்டுமென்ற நிபந்தனையின் மீது தான், அவனுடைய உயிர், இதுகாறும், ராஜ்யத்தினால் காப்பாற்றப் பட்டு வந்தது. ஒரு ராஜ்யத்தினுடைய பிரஜையாக அவன் எப் பொழுது சேர்ந்து விட்டானோ, அப்பொழுதே, அவனுடைய உயிர், அவனுக்குச் சொந்தமில்லை; ராஜ்யத்திற்குச் சொந்தமாகி விடுகிறது; ராஜ்ய க்ஷேமத்திற்காகக் கேட்ட போது கொடுக்க வேண்டுமென்ற நிபந்தனையின் மீது, ராஜ்யத்தினால் அளிக்கப்பட்ட ஒரு நன்கொடையாகி விடுகிறது. குற்றவாளிகளுக்கு அரசாங்கமானது, மரணதண்டனை விதிக்கிற விஷயத்தையும் இந்தக் கண்கொண்டுதான் நாம் பார்க்க வேண்டும். கொலை செய்தவன், பிறரால் கொலை செய்யப்படாம லிருக்கும் பொருட்டுத் தான், அவனை, அரசாங்கமானது தூக்கு மேடையி லேற்றுவிக்கிறது.1 தனி மனிதன் என்ற முறையில் அவன், அந்தக் கொலைக்குற்றஞ் செய்தவன், மரண தண்டனை விதிக்கப் பட்டு இறந்து போகிறானென்பது வாதவம். ஆனால் சமுதாயத்தின் அங்கத்தினன் என்ற முறையில், தான் இறந்து போவதன் மூலம், சமுதாயத்தின் மற்ற அங்கத்தினர்களைக் காப்பாற்றினவனாகிறா னில்லையா? தவிர, சமுதாய உரிமைகளைப் பாதிக்கக்கூடிய விதமாக எவனொருவன் நடந்துகொள்கிறானோ அவன் ஒரு குற்றவாளி. அவன், தன் செயல்களினால், சமுதாயத்தில் ஒரு பெரிய கலகத்தை உண்டுபண்ணினவனாகிறான்; தேசத்திற்குத் துரோகம் செய்தவனு மாகிறான். சமுதாயத்தின் சட்டதிட்டங்களை மீறி நடக்கிற அவன், அந்தச் சமுதாயத்தில் ஓர் அங்கத்தினனாயிருக்க லாயக்குடையவ னல்லன். மற்றும், சமுதாயத்தின் சட்ட திட்டங்களை மீறி நடப்பதி னால், அவன், அந்தச் சமுதாயத்தின் மீது போர் தொடுத்தவனு மாகிறான். இப்படிப்பட்ட நிலைமையில் ராஜ்யத்தினுடைய க்ஷேமத் திற்கும் அவனுடைய க்ஷேமத்திற்கும் முரண்பாடு ஏற்படுகிறது. முரண்பாடு கொண்டுள்ள இவற்றில், ஏதாவது ஒன்று அழிய வேண்டுமல்லவா? அதாவது, ராஜ்யமாவது அழிய வேண்டும்; அல்லது அந்தத் தனிப்பட்ட நபராவது அழியவேண்டும். எனவே, ஒரு கொலைஞனை, அரசாங்கமானது தூக்கு மேடையிலேற்றுவிக்கிற போது, அவனை, தனது பிரஜையாகக் கருதித் தூக்குமேடையி லேற்றுகிறதில்லை; சத்துருவாகக் கருதியே தூக்கு மேடையி லேற்றுவிக்கிறது. ஏனென்றால், எப்பொழுது அவன், சமுதாயத்தின் அங்கத்தினனாக உள்ள வேறொருவனைக் கொலை செய்துவிடு கிறானோ அப்பொழுதே அவன், ஒரு பிரஜைக்குரிய அந்ததை இழந்து விடுகிறானல்லவா? சமுதாய ஒப்பந்தத்தை மீறி நடந்து விட்ட வனாகிறானல்லவா? தேசவிரோதியாகி விடுகிறானல்லவா? ஒரு தேச விரோதியை, அந்தத் தேசத்தில் வைத்துக் கொண்டிருக்க லாமா? தவிர, ஒரு ராஜ்யத்தில் அதிகமாக மரணதண்டனைகள் விதிக்கப்படு மானால், அஃது, அந்த ராஜ்யத்தினுடைய பல ஹீனத்தைக் காட்டுகிறது; அல்லது அந்த ராஜ்யத்தினுடைய அசிரத்தையைக் காட்டுகிறது. எந்த ஒரு மனிதனும் ஏதோ ஒரு விஷயத்திற்குப் பிரயோஜனப்படக் கூடிய வனாகவே இருக்கிறான். ஒரு ராஜ்யமானது யாரையும் கூடியவரையில் பிரயத்தனப்பட்டு உபயோகமுள்ள ஒரு பிரஜையாகச் செய்ய வேண்டும். ராஜ்யத்தின் க்ஷேமத்திற்கு யாரார் பாதகமா யிருக்கிறார்களோ அப்படிப் பட்டவர்களைத்தான், அந்த ராஜ்யமானது மரண தண்டனைக் குட்படுத்த வேண்டும். சட்டத்தை அநுசரித்து ஒரு குற்றவாளிக்கு, நீதிபதி, தண்டனை விதிக்கிறாரென்று வைத்துக் கொள்வோம். இந்தத் தண்டனையை அவன் விஷயத்தில் நிறைவேற்றாதபடி செய்ய யாருக்கு அதிகாரம் உண்டு? சட்டத்திற்கும், நீதிபதிக்கும் மேற்பட்ட ஒரு சக்திக்குத்தான் உண்டு. ஆனால் ஓர் அரசாங்கமானது, இந்தமாதிரியான விஷயங் களில் என்னென்ன மாதிரியாக நடந்து கொள்ள வேண்டுமென்பது தெளிவாக எங்கும் சொல்லப்படவில்லை. நல்லமுறையில் ஆளப் படுகிற ஒரு ராஜ்யத்தில், தண்டனைகள் அதிகமாக விதிக்கப்படுவ தில்லை. ஏன்? குற்றஞ் செய்தவர்கள் மன்னிக்கப்பட்டு விடுகிறார்க ளென்பதற்காகவா? இல்லை. குற்றவாளிகளே குறைவு. ஒரு ராஜ்ய மானது சிதைவுபட்டுக் கொண்டிருக்கிற சமயத்தில்தான், அந்த ராஜ்யத்தில் அதிகமான குற்றங்கள் நிகழ்கின்றன. ரோமாபுரியில் குடியரசு முறை செழித்தோங்கி நின்ற காலத்தில், ஸெனட் சபையோ அல்லது அதிகாரிகளோ, குற்றவாளி களுக்கு மன்னிப்பு அளித்ததே கிடையாது. ஜனங்களும் இந்த விஷயத்தில் ஏகதேசமாக எப் பொழுதோ தலையிட்டார்களே தவிர பொதுவாகத் தலையிட வில்லை. அடிக்கடி மன்னிப்புக்கள் அளிப்பது, குற்றங்களை அதிகப்படுத்துகிறது.1 15. சட்டம் சமுதாய ஒப்பந்தத்தின் மூலம், சமுதாயத்திற்கு உயிர் வாழ்க்கையைக் கொடுத்து விட்டோம். இனி, அதற்குச் சட்டத்தின் மூலம் சலன சக்தியையும் இச்சா சக்தியையும் கொடுக்கவேண்டும். எந்தெந்தச் சேர்க்கைகளைக் கொண்டு ஒரு சமுதாயம் அமை கிறதோ, அமைந்த பிறகு ஒன்றுபட்டிருக்கிறதோ, அந்தச் சேர்க்கைகளே, சமுதாயம் க்ஷேமமாயிருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டு மென்பதை நிர்ணயிக்கிறதில்லை. சட்ட திட்டங்களில்லாத ஒரு சமுதாயம் ஒழுங்காக இயங்கிக் கொண்டு வருகிறதென்று சொன்னால், அஃது ஏதோ இயற்கையாக இயங்கிக் கொண்டு வருகிறதே தவிர, மனிதர்கள் ஏற்படுத்தி வைத்த எந்தச் சம்பிரதாயங்களினாலுமல்ல. நீதியின் மூலதானம் கடவுளே யென்று, அதாவது எல்லா நீதிகளும் கடவுளிடமிருந்தே வருகின்றனவென்று சொல்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட மேலான இடத்திலிருந்து நமக்கு நீதி கிடைக்கிற தென்பதை நாம் தெரிந்துகொண்டு விட்டோமானால் நமக்கு அரசாங்கமோ, சட்ட திட்டங்களோ தேவை யில்லை. மனிதனுடைய அறிவிலிருந்து, உலகத்திற்குப் பொதுவான ஒரு நீதி உண்டாகிறதென்பது உண்மை. ஆனால் இந்த நீதி, மனிதர் களிடத்தில் நின்று நிலவ வேண்டுமானால், இதனைப் பரபரம் எல்லோரும் அநுஷ்டிக்க வேண்டும். ஒருவர் அநுஷ்டிக்க, வேறொரு வர் அதற்கு நேர்விரோதமாக நடந்து கொண்டால் என்ன பயன்? அப்பொழுது இஃது, இந்த உலகநீதி, தீயவர்களுக்கு நன்மையும், நல்லவர்களுக்குத் தீமையும் உண்டு பண்ணுவதா யிருக்கும். ஏனென் றால் நல்லவர்களாகிய சிலர், இந்த நீதியை, தீயவர்களாகிய பலர் விஷயத்திலும் அநுஷ்டிக்க, தீயவர்களாகிய பலர், நல்லவர்களாகிய சிலர் விஷயத்தில் அநுஷ்டிக்க மாட்டார் களல்லவா? ஆதலின், மனிதர்களுடைய உரிமைகளோடு கடமைகளும் சேர்ந்து செல்ல வேண்டுமானால், மேற்படி உலக நீதியின் அல்லது கடவுள் நீதியின் நோக்கம் நிறைவேற வேண்டுமானால், சில சம்பிரதாயங்களும் சட்ட திட்டங்களும் தேவை. மனிதன் இயற்கையான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், எல்லாம் எல்லாருக்கும் பொதுவா யிருந்தன. அப்பொழுது மனிதன் யாருக்கும் எதனையும் கொடுக்க வில்லை. இதனால் அவன் யாருக்கும் கடமைப்பட்டிருக்கவில்லை. தனக்கு எது பிரயோஜனமில்லையோ, அது, மற்றவர்களுடையது என்று சொல்வதில் அவன் அப்பொழுது ஆட்சேபம் செய்யவில்லை. ஆனால் அந்த மனிதன், சமுதாயநிலைக்கு வந்துவிட்ட பிறகு, அவனுடைய உரிமைகள், சட்டதிட்டங்களுக் குட்படுத்தப்பட்டன. சமுதாய நிலையில், அவன், தன்னுடைய சொத்து சுதந்திரங்களின் விஷயத்தில் பார்க்கிற பார்வை வேறு. சரி, சட்டம் என்றால் என்ன? இந்தச் சட்டம் என்ற சொல்லுக்கு நாம், நேருக்கு நேரான உதாரணங்களை எடுத்துக்காட்டி வியாக்கி யானஞ் செய்யாமல், வெறுந் தத்துவ ரீதியாக வியாக்கியானஞ் செய்கிற அளவோடு திருப்தியடைந்து விடுவோமானால், நமது வாதத்திற்கு எல்லையே யிராது. நாம் எவ்வித முடிவுக்கும் வர மாட்டோம். இதே பிரகாரம், சட்டமானது, இயற்கையிலிருந்து உண்டானதென்று சொல்லிக் கொண்டிருப்போ மானால், அதனால், ஒரு ராஜ்யத்திற்குத் தேவையான சட்டங்களை வகுத்தவர்களாக மாட்டோம். பொதுஜன அபிப்பிராயம் என்று நாம் எதைச் சொல்கிறோமோ, அஃது, யாரோ குறிப்பிட்ட ஒரு சிலருடைய அபிப்பிராயமாக மட்டும் இராது; இருக்கவும் முடியாது. அப்படி குறிப்பிட்ட ஒருசிலருடைய அபிப்பிராயமாக இருக்குமானால், அஃது, அந்த அபிப்பிராயம், ராஜ்யத்திற்குட்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றியாவது இருக்க வேண்டும்; அல்லது ராஜ்யத்திற்குப் புறம்பான ஒரு விஷயத்தைப் பற்றியாவது இருக்க வேண்டும். புறம்பான விஷயமா யிருந்தால், ராஜ்யத்திற்குள்ளிருக்கும் எல்லோருடைய அபிப்பிராயமாக இராது; ராஜ்யத்திற்குட்பட்ட ஒரு விஷயம் என்று சொன்னால், அது பொதுஜன அபிப்பிராயத்தின், அதாவது எல்லோருடைய அபிப்பிராயத்தின் ஒரு பாகமே. இதனின்று நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தென்னவென்றால், ஒரு சிலருடைய அபிப்பிராயமே, பொதுஜன அபிப்பிராயமாகாது என்பது தான். இந்த ஒரு சிலர் சேர்ந்து ஒரு சட்டம் நிறைவேற்றினால் அஃது எல்லோருடைய சட்டமுமாகாது. எல்லா ஜனங்களும் சேர்ந்து, தங்கள் எல்லோருக்காகவும், அதாவது எல்லா ஜனங்களுக்காகவும் ஓர் உத்தரவை அமுலுக்குக் கொண்டு வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அந்த ஜனங்கள் தங்களுடைய நன்மைக்காகத்தான் அந்த உத்தரவைச் செய்கிறார்கள். எனவே, அந்த உத்தரவும், அதன் நோக்கமும் ஒன் றாகவே இருக்கின்றன. அந்த நோக்கம் எப்படிப் பொதுஜன நன்மைக்கான நோக்கமா யிருக்கிறதோ அப்படியே, அந்த உத்தரவும் பொதுஜன நன்மைக்கான உத்தரவாயிருக் கிறது. இப்படிப்பட்ட உத்தரவைத்தான் சட்டம் என்று சொல்ல வேண்டும்.1 சட்டத்தினுடைய நோக்கம் பொதுப்படையானதாக இருக்க வேண்டுமென்று நான் சொல்கிறேனல்லவா, அதனுடைய தாத் பரியம் என்னவென்றால், ஜனங்களை ஒரு பிண்டமாகவும், நாம் செய்கிற செயல்களை ஒரு தொகுப்பாகவும் வைத்துப் பார்த்துத்தான் சட்டம் செய்யப் படவேண்டும் என்பதுவேயாகும். குறிப்பிட்ட ஒரு நபருக்காகவோ அல்லது செயலுக்காகவோ சட்டம் இயற்றப்படக் கூடாது. உதாரணமாக, ஜனங்களுக்கு இன்னின்ன சலுகைகள் கொடுக்கவேண்டுமென்று சட்டம் இருக்கலாமே தவிர, இன்னின்ன சலுகைகள் இருக்க வேண்டுமென்று இருக்கக்கூடாது. ஜனங்களை, வகுப்புவாரியாகப் பிரிப்பதாக ஒரு சட்டத்தை இயற்றலாம். இந்த வகுப்புகளுக்கு இன்னின்ன யோக்கியதைகள் இருக்க வேண்டு மென்றுகூட அந்தச் சட்டம் நிர்ணயிக்கலாம். ஆனால் இந்த வகுப்பில் இன்னார்தான் இருக்க வேண்டுமென்று வரையறுக்கக் கூடாது. ஒரு ராஜ்யத்தில் கோனாட்சிதான் நிலவ வேண்டுமென்றும், பரம்பரை பாத்தியமுடையவர்களே மன்னர் களாக வரவேண்டுமென்றும் சட்டம் இயற்றலாம். ஆனால், ஒரு தனி நபரை அரசனாக நியமிப்ப தாகவோ, அல்லது குறிப்பிட்ட ஓர் அரச குடும்பத்தை ஏற்படுத்துவ தாகவோ சட்டம் இயற்றக் கூடாது. சுருக்கமாகச் சொன்னால், குறிப்பிட்ட எந்த ஒரு காரியத்திற்காகவும் சட்டம் செய்கிற அதிகாரத்தை உபயோகப்படுத்தக் கூடாது. இதுகாறும் கூறியவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதென்ன வென்றால், ஒரு சிலரால் செய்யப்படுவது சட்டமல்ல; பொதுஜன அபிப்பிராயத்தின் பரிணாமமே சட்டம். அரசன் ராஜ்யத்தின் ஓர் அங்கத்தினனாயிருப்பதால், அவன் சட்டத் திற்கு அப்புறப்பட்டவனல்ல. அதாவது அவனும் மற்றப் பிரஜை களைப் போல் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவனே.1 ஜனங் களால் இயற்றப்படுகிற சட்டம் அநீதமாயிருக்க முடியாது. அப்படி யிருக்குமானால், ஜனங்களே தங்களுக்கு அநீதி இழைத்துக் கொண்டவர்களாகிறார்களல்லவா? சிலர் கேட்கலாம், ஜனங்கள் தங்களுடைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்கிற மாதிரி சட்டங்களை இயற்றிக் கொள்ள அவர்களுக்கு அநுமதியளித்து விட்டு, அதே சமயத்தில் அவர்கள் சுதந்திரமா யிருக்கிறார்களென்று சொல்வது முன்னுக்குப் பின் முரணாயில்லையா வென்று. அப்படி யில்லை. ஜனங்கள், தங்கள் அபிப்பிராயங்களை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்காகவே சட்டங்களை இயற்றிக் கொள்கிறார்கள். அதனால், அவர்கள், தங்களுக்குப் பாதகமான அபிப்பிராயங்களை ஊர்ஜிதம் செய்து கொள்ளமாட்டார்கள். தங்கள் நன்மைக்காகவே அவர்கள் சட்டங்கள் இயற்றிக் கொள்கிறார்கள்; கட்டுத் திட்டங் களுக்குட்படுத்திக் கொள்கிறார்கள். தாங்களே வலிந்து சில கட்டு திட்டங்களுக்குட் படுத்திக் கொள்வது கூட சுதந்திரந்தானே.2 சட்டமும், சட்டத்தின் நோக்கமும் ஒன்றாயிருக்கிறதென்று நாம் தெரிந்து கொண்டோம். அப்படியானால், ஒரு தனிப்பட்ட மனிதன், அவன் எவ்வளவு உயர்ந்தவனா யிருந்தாலும், அரசனா யிருந்தாலுங்கூட, மேற்படி சட்டத்திற்குப் புறம்பாக ஓர் உத்திரவு விடுப்பானாகில், அஃது அரசினின்று பிறக்கிற சட்டமாகாது; ஓர் அதிகாரி, தன் அதிகார தோரணையில் விடுக்கிற உத்திரவுதான். எனவே, சட்டங்களைத் தழுவி நடைபெறுகிற எந்த ஒரு ராஜ்யத்தையும், அஃது எந்த விதமான நிருவாக முறையைப் பின் பற்றி நடந்து வந்தாலும், அதனைக் குடியரசு என்ற பெயரிட்டே அழைக்கிறேன். அப்படிப்பட்ட குடியரசு ராஜ்யத்தில்தான், பொது ஜனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எந்த ஓர் அர சாங்கமும் நியாயமுள்ள அரசாங்கமாக இருக்க வேண்டுமானால், அது, குடியரசு முறையைத் தழுவியதாகவே இருக்க வேண்டும்.3 அரசாங்கம் என்றால் என்ன வென்பதைப் பின்னர் விதரித்துக் கூறுவேன்.1 ஜனங்கள் சமுதாயமாகச் சேர்ந்து வாழ்வதற்கான நிபந்தனை களை விவரிப்பனவே சட்டங்கள். இந்தச் சட்டங்களுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் ஜனங்கள். எனவே, அந்த ஜனங்களுக்குத் தானே சட்டமியற்றும் உரிமை இருக்க வேண்டும்? ஒரு சமுதாய மானது, எந்தெந்த நிபந்தனைகளின் மீது இயங்க வேண்டுமென் பதை நிர்ணயிக்கக் கூடியவர்கள் யார்? சமுதாயமாக ஒன்று சேர்கிறவர்கள்தானே? சரி. அப்படியானால் இந்தச் சட்டங்களை யார் இயற்றுவது? எப்படி இயற்றுவது? ஜனசமுதாயத்தின் அபிப் பிராயத்தை வெளியிட ஏதேனும் ஒரு தாபனம் தேவையா? தேவை யான சந்தர்ப்பத்தில், அந்த தாபனம், எப்படி, சமுதாயத்தின் அபிப்பிராயத்தை வெளியிடுவது? சாதாரண மாகவே, பொது ஜனங்களுக்குத் தங்களுடைய அபிப்பிராயத்தைச் சரியான முறையில் வெளிப்படுத்தக்கூடிய சக்தி கிடையாது. அப்படியிருக்க, தங்களுக்கு நன்மையானது இன்னது என்பதைத் தெரிந்துகொண்டு, அதைச் சட்டப் பூர்வமாக அநுஷ்டானத்திற்குக் கொண்டுவரக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு எப்படி இருக்கும்? இராது. ஜனங்களென்னவோ, தங்களுக்கு நல்லதுதான் வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் எது நல்ல தென்று அவர்களுக்குத் தெரிவதில்லை. தவிர, ஜனங்கள் கொள்கிற முடிபுகள் எப்பொழுதுமே சரியாக இருக்கின்றன. ஆனால் எந்த அடிப்படை களைக் கொண்டு இந்த முடிபுகளுக்கு வருகிறார்களோ அவற்றில்தான் கோளாறுகள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே, ஜனங்களுக்கு ஒழுங்கான பாதையைக் காட்ட வேண்டியது அவசியமாகும். தனிப்பட்ட நபர்களின் அபிப்பிராயங்கள், அவர்கள்மீது திணிக்கப்படாதவாறு, அவர்களைப் பாதுகாக்க வேண்டும். தனிப்பட்ட நபர்கள், தங்களுடைய நன்மை எதில் இருக்கிறதென்பதை நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அதை நிராகரித்து விடுகிறார்கள். பொதுஜனங்களோ, தங்களுடைய நன்மையைக் கோருகிறார்கள்; ஆனால் அதைத் தெரிந்துகொள்கிறார் களில்லை. எனவே, தனிப்பட்டவர்களுக் காகட்டும், பொது ஜனங்களுக் காகட்டும், வழி காட்டவேண்டியது அவசியமா யிருக்கிறது. தனிப்பட்ட நபர்கள், நியாயத்திற் கனுசரணை யாக அபிப்பிராயங் கொள்ளுமாறு செய்யப்பட வேண்டும். அப்படியே பொதுஜனங்கள், தங்களுடைய முடிவு களைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளுமாறு கற்பிக்கப் படவேண்டும். இப்படிச் செய்வதனால், சமுதாயத்தில் ஒருவித அறிவுத்தெளிவு ஏற்படுகிறது; சமுதாயத்தைச் சேர்ந்த பல அங்கத்தினரும் ஐக்கியப்பட்டு வேலை செய்வதற்கு ஏதுவுண்டாகிறது. இத்தகைய காரியங்களைச் செய்யும் பொருட்டு, சட்ட நிர்மாண கர்த்தர்கள், ஒரு சமுதாயத்திற்கு அவசியம் தேவை. 16. சட்ட நிர்மாண கர்த்தன் ஒரு சமுதாயமானது ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டுமானால், அதற்குச் சில விதிகள் இருக்க வேண்டும். இந்த விதிகளை நிர்ணயிப்பவர்கள், சிறந்த அறிஞர்களாயிருக்கவேண்டும். இவர்கள், ஜனங்களுக்கு அவ்வப்பொழுது உண்டாகிற கோப தாபங்கள், ஆசாபாசங்கள் முதலிய மனவெழுச்சிகளை நன்கு தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு எந்தவித மான மனவெழுச்சிகளோ அல்லது மனோவிகாரங்களோ இருக்கக் கூடாது. ஜனங்களுடைய சுபாவங் களை இவர்கள் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கவேண்டும்; ஆனால் அந்தச் சுபாவங்களோடு, தங்க ளுடைய சுபாவங்களைக் கலக்கவிடக் கூடாது. ஜனங்களுடைய சந்தோஷத்தில்தான் இவர்கள் சந்தோஷங் காண வேண்டும். மற்றும், அடுத்த நூற்றாண்டில் சந்தோஷம் அநுபவிப்பதற்காக, இவர்கள் இந்த நூற்றாண்டில் உழைக்க வேண்டும். அதாவது, வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நன்மைகளை உத்தேசித்தே, நிகழ்காலத்தில் இவர்கள் காரியங்களைச் செய்யவேண்டும்.1 சுருங்கச் சொன்னால், மனிதர் களுக்குச் சட்டங்களை வகுத்துக் கொடுக்கக் கடவுளர்களே தேவை யென்று சொல்லலாம்.2 சமுதாயத்தின் பிரதிநிதிகளே தாங்கள் என்பதை உணர்ந்த மனிதர்களோ, அரசர்களோ அகப்படுவது அருமையென்று கலி குலாவும், பிளேட்டோவும் வேறு வேறு திருஷ்டியிலிருந்துகொண்டு முடிவு செய்திருக்கிறார்கள். அரச தன்மையுள்ள மனிதன் அகப்படு வது அருமை யென்றால், சிறந்த சட்ட நிர்மாண கர்த்தன் மட்டும் சுலபமாகக் கிடைத்து விடுவானா? சட்ட நிர்மாண கர்த்தன் வகுத்துக் கொடுத்த திட்டப்படி நடக்க வேண்டியவனே அரசன். யந்திரத்தைக் கண்டுபிடிக்கிறவன் சட்ட நிர்மாணகர்த்தன்; அந்த யந்திரத்தை ஓட்டுகிறவன் அரசன். குடியரசு ராஜ்யங்களின் தலைவர்கள், முதலில் அந்த ராஜ்யத்தின் தாபனங்களை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் பின்னர், அந்த தாபனங்களே, அந்தத் தலைவர்களை உருவகப் படுத்துகின்றன வென்கிறான் மாண்டெகு என்ற அறிஞன்.1 ஜனங்களுடைய நன்மைக்காக தாபனங்களை ஏற்படுத்த முயலுகிறவன், மனித சுபாவத்தை மாற்றுஞ் சக்தியுடையவனா யிருக்க வேண்டும். தனி மனிதனைச், சமுதாயத்தின் ஓர் அமிசத்தின னாக்க வேண்டும். தனி மனிதனாக ஒருவனுக்கு என்னென்ன சக்திகள் உண்டோ அந்தச் சக்திகளை எடுத்துக்கொண்டு, அவைகளுக்குப் பதிலாகச் சமுதாயத்தின் துணை கொண்டு வாழக்கூடிய சக்திகளை அவனுக்கு அளிக்க வேண்டும். அப்பொழுதுதான், நாம் செய்கிற சட்டம் நிறைவுடையதாயிருக்கும். ஒவ்வொரு ராஜ்யத்திலும் சட்ட நிர்மாண கர்த்தர்கள் வசிக்கும் தானம் விசேஷமானது. தங்களுடைய அறிவுத் திறமையி னால் இவர்களுடைய தானம் விசேஷமடைகிறதாயினும், இந்த தானமே தனித்த முறையில் பார்க்கிறபோதுகூட, மகத்துவம் பொருந்தியதாயிருக்கிறது. இவர்கள் நிர்மாணிக்கிற சட்டத்தின் விளைவாக ஒரு ராஜ்யம் அமைகிறது. ஆனால் இவர்கள் அந்த ராஜ்ய அமைப்புக்குட்பட்டவர்களல்லர்; அந்த ராஜ்ய அமைப்பிற்கும் மேலானவர்கள். மனிதர்கள் மீது அதிகாரஞ் செலுத்துகிறவன், சட்டங்களின் மீது அதிகாரஞ் செலுத்தக்கூடாது. அதே பிரகாரம், சட்டங்களின் மீது அதிகாரஞ் செலுத்துகிறவர்கள், மனிதர்கள் மீது அதிகாரஞ் செலுத்தக்கூடாது. ஆள்கிறவர்களே, சட்டங்களியற்ற முற்பட்டு விடுவார்களானால், அவர்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்கள், அந்தச் சட்டங்களுக்குள் வந்து புகுந்து கொள்ளும். அதனால் அந்தச் சட்டங்களின் புனிதத் தன்மை கெட்டுவிடும். கிரேக்க அறிஞனாகிய லிகர்க என்பவன் தனது நாட்டிற்குச் சட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, தனது அரசுரிமையைத் துறந்துவிட்டான். கிரேக்க ராஜ்யங்கள் பல, அந்நியர்களைக் கொண்டுதான் தங்கள் சட்ட திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டன. இத்தலியின் குடியரசு ராஜ்யங்கள், இந்த முறையையே பின்பற்றின. விட்ஜர்லாந்திலுள்ள ஜினீவா குடியரசும் இங்ஙனமே செய்தது. இவைகளுக்கு மாறாக, ரோமாபுரி யானது, உன்னத வாழ்வை யடைந்திருந்த காலத்தில், ராஜ்யாதிகாரத்தை யும், சட்டமியற்றும் அதிகாரத்தையும் ஒருவரிடத்திலேயே ஒப்பு வித்தது. பலன் என்ன? அழிவு; கொடுங்கோலாதிக்கம். எனவே, சட்டத்தை நிர்மாணிக்கிறவர்கள் வேறாகவும், சட்டத்தை நிர்மாணிக்குமாறு சொல்கிற உரிமையுடையவர்கள் வேறாகவும் இருக்க வேண்டுமென்பது பெறப்படுகிறது. மற்றும், சட்ட நிர்மாணஞ் செய்யும் அறிஞர்கள், தங்களுடைய மேலான பாஷையில் எந்த விவகாரத்தைப் பற்றியேனும் எடுத்துச் சொல்வார்களானால், அதனைச் சாதாரண ஜனங்கள் சுலபமாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சாதாரண ஜனங்களுக்கு எத்தனை தரம் எடுத்துச் சொன்னாலும் அவர்களால் தெரிந்துகொள்ள முடியாத விஷயங் களென்னவோ ஆயிரக்கணக்காக இருக்கின்றன. பலாத்காரத்தை உபயோகித்து இந்த விஷயங்களை அவர்களிடம் திணிக்கவும் முடியாது. என்ன செய்வது? தெய்வ சக்தியென்ற எண்ணத்தைக் கொண்டு புகுத்தி, எல்லாம் கடவுள் தந்தருளிய ஞானம் என்று சொல்லி, இந்தச் சட்ட திட்டங் களை ஜனங்க ளிடத்தில் புகுத்தவேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் ஜனங்கள் சுலபமாகக் கீழ்ப்படிகிறார்கள். ஆனால் இதற்காக, சட்ட நிர்மாணஞ் செய்கிறவர்கள் தங்களுடைய சுய அறிவை உபயோகியாமல், எதற்கெடுத்தாலும் தெய்வத்தின் திருவாக்கு என்று சொல்லிக் கொண்டு சட்டங்களைச் செய்யத் தொடங்குவார்களானால், அவர் களைச் சுற்றிச் சில மூடர்களே சேர்வார்கள். இவர்களால் நிரந்தர மான வேலை எதனையும் செய்யமுடியாது. யூதர்களுடைய சட்டங் களும், இலாமியர் களுடைய சட்டங்களும் மகா மேதாவிகளால் இயற்றப்பட்டனவாதலால் அவை இப்பொழுது நின்று நிலவுகின்றன. ஆனால் இடையிலே வந்த ஒரு சிலருடைய தத்துவோபதேசங்கள், தற்காலிகமான நன்மைகளையே செய்துவிட்டுப் போயின. இப்படிக் கூறுவதனால், அரசியலும் மதமும் ஒரே நோக்கமுடையனவென்பது அர்த்தமல்ல; சமுதாயங்கள் ஒழுங்காக அமைகிற தருணத்தில் ஒன்று, மற்றொன்றின் கருவியாயிருக்கிறது. அவ்வளவுதான்.1 17. ஜனங்கள் ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டுவதற்கு முன்னர், சிற்பியான வன் இடத்தை நன்றாகப் பரிசோதித்துப் பார்க்கிறான். கட்டிடத்தின் பளுவைத் தாங்கக் கூடியவிதமாக இடம் இருக்குமா வென்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதைப்போல் புத்தி சாலியான ஒரு சட்ட நிர்மாண கர்த்தன், தான் இயற்றுகிற ஒரு சட்டம் நல்லதா என்று மட்டும் பார்ப்பதில்லை. ஜனங்கள் அதனை ஏற்கத் தகுதியுடையவர்களா வென்றும் பார்க்கிறான். ஆர்க்கேடியர் களுக்கும்1 ஸைரேனியர்களுக்கும்2 பிளேட்டோ, சட்டமியற்றிக் கொடுக்க மறுத்துவிட்டான். ஏனென்றால், இரு ஜாதியினரும் பணக்காரர்களென்பதும், அதனால் எல்லோரும் சம உரிமை யோடு வாழவேண்டுமென்று விரும்ப மாட்டார்களென்பதும் அவனுக்குத் தெரியும். அதே கிரீஸில், கிரேட்3 பிரதேசத்தில், நல்ல சட்டங்களும் கெட்ட மனிதர்களும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். ஏன்? மினோ4 என்பவன், துன்மார்க்கங்களில் ஈடுபட்டிருந்த ஜனங்களிடத்தில் ஒருவித ஒழுங்கை நிலைநாட்டப் பார்த்துதான் இதற்குக் காரணம். உலகத்திலே தோன்றின ஆயிரக்கணக்கான ஜாதியினர், உலக விவகாரங்களில் அதிகமான பிரசித்திகளை அடைந்திருக்கலாம். ஆனால் இவர்களால் நல்ல சட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்படாம லிருக்கலாம். அப்படி ஏதோ சில ஜாதியினர் ஏற்றுக் கொண்டிருந் திருப்பார்க ளானால், இவர்கள் நீண்ட கால சரித்திரப் பெருமை யுடையவர்களா யிருந்திருக்க முடியாது. ஒரு மனிதன் இளமைப் பருவத்தில் அடக்கம் ஒடுக்கமாய் இருக்கிறான். ஆனால் வயதாக ஆக, திருத்த முடியாத அவ்வளவு சீர் கேட்டை அடைந்து விடுகிறான். இதைப்போல்தான் ஒரு ஜாதியினருடைய விஷயமும். ஒரு ஜாதி யாரிடத்தில் சில பழக்க வழக்கங்கள் ஏற்பட்டுவிட்ட பிறகு, சில துரபிமானங்களோ, பொய்புரட்டு எண்ணங்களோ தீவிரமாக நுழைந்துவிட்ட பிறகு, அவர்களைச் சீர்த்திருத்துவதென்பது ஆபத்து; பயனுமில்லை. மூடத்தனமும் கோழைத்தனமும் மிகுந்த நோயாளிகள் எப்படி ஒரு வைத்தியனைக் கண்ட மாத்திரத்தில் கண்டபடி பிதற்றுகிறார்களோ, அதைப்போல ஒரு ஜாதியும், தன்னுடைய குற்றங் குறைகளை யாரேனும் தீர்க்க வந்தால், அவர்களைக் காணவும் வெறுப்புக் கொள்கிறது. மனிதர்களுக்கேற்படுகிற சில நோய்கள், அவர்களுடைய அறிவையே மாற்றி விடுகின்றன. இதனால் அவர்கள், தங்களுடைய பழைய நினைவுகளை யெல்லாங் கூட மறந்து விடுகிறார்கள். அதைப் போல், ஒரு ஜாதியினிடத்தில் நெருக்கடியான நிலைமை களோ அல்லது புரட்சிகளோ ஏற்பட்டால், அவை, அந்த ஜாதிக்கு நன்மையையே உண்டுபண்ணுகின்றன. அந்த ஜாதி, ஆதியில் தனக்கு ஏற்பட்ட பயங்கரமான சம்பவங்களை யெல்லாம் மறந்துவிடுகிறது. உள்நாட்டுக் குழப்பங்களால் அவதியுற்ற பிறகு புதிய பிறப்பெடுக் கிறது; புதிய வாழ்வையும் அடைகிறது. சுருங்கச் சொன்னால், மரணத்தின் வாயிலிருந்து தப்பித்து, மறுபடியும் முன்போல் யௌவன தசையை யடைகிறது. லிகர்க காலத்திலிருந்த பார்ட்டாவை யும்,1 டாக்கினியர்கள்2 காலத்திலிருந்த ரோமாபுரியையும், ஆதிரியர் களைத் துரத்திவிட்டபிறகு விட்ஜர்லாந்து அடைந்த நிலைமை யையும்,3 பானிஷ்காரர்களை விரட்டி விட்ட பிறகு ஹாலந்து அடைந்த நிலைமையையும்4 இதற்கு உதாரணங் களாகச் சொல்ல லாம். ஆனால் இந்த மாதிரியான சம்பவங்கள் நிகழ்வது அரிது. அப்படி நிகழுமானால், அவை விதிக்கு விலக்கானவைகள் தான். இப்படிப்பட்ட சம்பவங்கள் ஏற்படுவதற்குக் காரணம், அந்த நாட்டு அரசியல் அமைப்பில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். தவிர, இந்த மாதிரி அநுபவங்கள், ஒரு ஜாதிக்கு இரண்டு முறை ஏற்படாது. ஒரு ஜாதி, காட்டுமிராண்டி நிலையில் இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்குச் சுதந்திரம் கிடைப்பது அவ்வளவு கஷ்ட மல்ல. ஆனால், எந்த ஜாதி, சமுதாய உணர்ச்சியை இழந்து விடு கிறதோ அந்த ஜாதி சுதந்திரம் பெறுவது மகா கடினம். உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட்டு அந்த ஜாதி அடியோடு அழிந்து போய்விடும். எத்தகைய புரட்சி ஏற்பட்டாலும், அந்த ஜாதி சீர்திருந்த முடியாது. அப்பொழுது, அந்த ஜாதிக்கு, கண்டிதமான, அதனை ஒழுங்கிற்குக் கொண்டு வரக்கூடிய ஓர் எஜமானன் தேவையே தவிர, அதற்கு விடுதலை தேடிக் கொடுக்கிற ஒரு தலைவன் தேவை யில்லை. சுதந்திரத்தைப் புதிதாகச் சம்பாதித்துக் கொள்ளலாம்; ஆனால் இழக்கப்பட்ட சுதந்திரத்தை மீட்க முடியாது என்ற வாசகத்தை, சுதந்திர ஜாதியினர், ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுதல் நல்லது. குழந்தைப் பருவம் வேறு; யௌவன பருவம் வேறு. இரண் டுக்கும் வித்தியாசம் உண்டு. அதைப்போல் ஒரு ஜாதிக்கும், குழந்தைப் பருவம் உண்டு; யௌவனப் பருவமும் உண்டு. ஒரு ஜாதியானது, யௌவன தசையை அடைவதற்கு முன்னர், அதனைச் சட்டங்களுக் குட்படுத்தக் கூடாது. அதாவது, அந்த ஜாதி, இன்னின்ன மாதிரி, தன் விவகாரங்களை நடத்திக்கொண்டு போகவேண்டுமென்று சட்டங்கள் இயற்றக் கூடாது. ஆனால், ஒரு ஜாதி, எப்பொழுது யௌவன தசையை அடைந்திருக்கிற தென்று நாம் சுலபமாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அப்படித் தெரிந்து கொள்ளாத நிலைமையில், இந்த ஜாதி, இன்ன காலத்தில் யௌவன தசையை அடையக்கூடுமென்று எதிர்பார்த்து, காரியங்களைச் செய்வோமானால், அந்தக் காரியங்க ளினால் தீமை உண்டாகுமே தவிர, நன்மை உண்டாகாது. ஒரு ஜாதி, ஆரம்பத்திலிருந்தே ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு நடக்கிறது. இன் னொரு ஜாதி, பத்துப் பன்னிரண்டு நூற்றாண்டு களான பிறகுதான் ஒழுங்குக்கு வருகிறது. உதாரணமாக, ருஷ்யாவை எடுத்துக் கொள் வோம். அஃது உண்மையான நாகரிகத்தை யடையவே முடியாது. ஏனென்றால், அது வெகு சீக்கிரத்திலேயே நாகரிகப்படுத்தப் பட்டு விட்டது. பீட்டர் என்ற மன்னன்1 விவேகிதான். ஆனால் அவ னுடைய விவேகமானது, மற்றவர்களைப் பார்த்து நகல் செய்வதில் தான் சென்றது. அதிவிவேகியானவன் எப்பொழுதுமே சிருஷ்டி செய்துகொண்டு போவான்; ஒன்றுமில்லாதவற்றைப் பூரணமாக்கு வான். இப்படிப்பட்ட அதிவிவேகி யல்லன் பீட்டர். அவன், சில நன்மைகளைச் செய்திருக்கிறானென்ப தென்னவோ உண்மை. ஆனால் அவையெல்லாம் சமயோசித மல்லாதவை. தன்னுடைய ஜனங்கள், காட்டுமிராண்டி நிலைமையி லிருக்கிறார்க ளென்பதைப் பார்த்தானே தவிர, அவர்கள் நாகரிக தசைக்கு வரத் தகுதி பெற வில்லை யென்பதைத் தெரிந்து கொண்டானில்லை. ருஷ்யர்களை, கட்டுத்திட்டப்படுத்தி ஒழுங்குக்குக் கொண்டு வரவேண்டிய காலத்தில், அவர்களை, அவன் நாகரிகப்படுத்தப் பார்த்தான். அவன், ருஷ்யர்களை ஜெர்மானியர்களாகவோ, ஆங்கிலேயர்களாகவோ ஆக்கப் பார்த்தானே தவிர, அவர்களை முதலில் ருஷ்யர்களாக்க வேண்டுமென்று நினைத்தானில்லை. ருஷ்யர்களிடத்தில் என்னென்ன தன்மைகள் இல்லையோ, அவை யாவும் அவர்களிடத்தில் இருப்ப தாகச் சொல்லி, அவர்கள் எப்படியாக வேண்டுமோ அப்படியாகாமற் செய்து விட்டான்.1 பிரான்சிலுள்ள சில ஆசிரியர்கள் தங்கள் மாணாக்கர்களுக்கு இந்தமாதிரி முறையில்தான் பாடஞ் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதாவது, அந்த மாணாக்கர்களை, இளமையில் அறிவோடு பிரகாசிக்கக் கூடியவர் களாகவும், வயதான பிறகு ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் செய்துவிடு கிறார்கள்.2 ருஷ்ய ஏகாதிபத்தியம், ஐரோப்பாவையே வெற்றிகொள்ள வேண்டுமென்று ஆவல் கொள்ளலாம். ஆனால், அதுவே, பிறரால் வெற்றி கொள்ளப் பட்டுவிடலாம்.3 அதன் பிரஜைகளாகவோ அல்லது அதற்கு அந்நியர்களாகவோ உள்ள தார்த்தாரியர்கள், அதற்கும், நமக்குங் கூட எஜமானர்களாக வந்துவிடலாம். இதற்காக, ருஷ்யாவில் ஒரு புரட்சி ஏற்படவேண்டியது அவசியமாகும். அப்படிப்பட்ட புரட்சி சீக்கிரத்தில் வரக்கூடியவிதமாகவே, ஐரோப்பாவிலுள்ள எல்லா மன்னர்களும் ஒன்று சேர்ந்து வேலை செய்து வருகிறார்கள்.4 சாதாரண திடகாத்திரமுள்ள ஒரு மனிதன் இவ்வளவு உயரம் இருந்தால் நன்றாயிருக்கும் என்று நாம் ஏதோ ஓர் அளவு வைத்துக் கொண்டிருக்கிறோ மல்லவா? அந்த அளவுக்கு அதிகமாகப் போனால் அவனை ராட்சதன் என்கிறோம்; குறைவாகப் போனால் குள்ளன் என்கிறோம். அதைப்போல், ஒரு ராஜ்யம் சிறந்த முறையில் நடைபெற வேண்டுமானால் அதற்குக் கூட அளவு இருக்கவேண்டும். நல்ல முறையில் நிருவாகம் நடைபெறக் கூடிய மாதிரியாகவும், தானே தன்னுடைய சுய வருமானத்திலிருந்து தன்னைப் போஷித்துக் கொள்ளக் கூடிய விதமாகவும் ஒரு ராஜ்யத்தின் எல்லை இருக்க வேண்டும். ஒரு ஜன சமுதாயத்தின் பலம், அதிகப்படியாக இவ்வளவு தான் இருக்க வேண்டுமென்ற ஒரு நியதி இருக்கிறது. இந்த நியதிக்கு அப்புறமாகச் செல்லாமலிருத்தலே, எந்த ஜன சமுதாயத்திற்கும் நல்லது. அப்படிக் கின்றி, இந்த நியதியை மீறி, தனது ராஜ்யத்தின் அளவை விதரித்துக் கொண்டு போகுமானால், அந்தச் சமுதாயம் தன்னையே இழந்து விடக்கூடும். சமுதாயத்தின் கட்டுத்திட்டங்கள் எவ்வளவுக் கெவ்வளவு அதிகப்படுகின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு அவை தளர்ச்சி யடைகின்றன. பொதுவாகச் சொல்லப் போனால், ஒரு சிறிய ராஜ்யந்தான், பெரிய ராஜ்யத்தைக் காட்டிலும், விகிதாசாரப்படி, பலம் பொருந்தியதா யிருக்கிறது.1 ராஜ்யங்கள் சிறிது அளவுடையவைகளாய் இருக்க வேண்டு மென்பதற்கு அநேக ஆதாரங்கள் எடுத்துக் காட்டலாம். ஒரு ராஜ்யம், நீண்ட தூரம் விதரித்துக் கொண்டுபோனால், அத னுடைய நிருவாகம் நடைபெறுவது கஷ்டமாகப் போய்விடுகிறது. மற்றும் நிருவாகச் செலவும் அதிகமாகிறது. முதலில் நகர நிருவாகம், பிறகு, ஜில்லா, மாகாணம், இப்படிப் படிப்படியான நிருவாகங்கள் நடைபெற வேண்டியிருக்கிறது. இவைகளுக்கெல்லாம் மேலாக மத்திய அரசாங்கத்தின் நிருவாகம் இருக்கிறது. இத்தனை விதமான நிருவாகங்களுக்கும் செலவுத் தொகை வேண்டுமல்லவா? இவை யெல்லாம் ஜனங்களுடைய தலைமீது தானே வந்து விழுகின்றன. இப்படி நிருவாகங்கள் பல கிளைகளாகப் பிரிவதனால், நிருவாக ஊழல்கள்தான் அதிகப்படுமே தவிர, நிருவாகத் திறமை உண் டாகாது. நிருவாகச் செலவு அதிகமாகிக் கொண்டுபோனால், அவசரத் தேவைக்குப் பணமில்லாமல் போய்விடுகிறது. இப்படிப் பட்ட தருணத்தில்தான், ஒரு ராஜ்யத்தின் சீரழிவு ஆரம்பிக்கிறது. தவிர, விசாலமான ராஜ்யத்தில், ஜனங்கள் சட்டங்களை ஒழுங்காக அநுசரிக்கிறார்களாவென்று கண்காணிக்க முடியாது. சூழ்ச்சிகள், துரோகங்கள், சட்டதுஷ்பிரயோகங்கள் முதலியன ஏற்பட்டால் அவை களைத் தடுப்பது கஷ்டம். மற்றும், ஜனங்கள், ராஜபக்தியுள்ளவர்களா யிருக்கமுடியாது. ஏனென்றால், அவர்கள் தங்கள் அரசர்களைப் பார்க்கிறதேயில்லை யல்லவா? விதவிதமான சீதோஷ்ண திதிகளில், விதவிதமான பழக்க வழக்கங்களுடன் வசிக்கும் ஜனங்களையுடைய பல மாகாணங்களிலும் ஒரே விதமான சட்டங்களை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருவது பொருத்த மற்றதாயிருக்கிறது. இப்படிக்கில்லாமல் ஒவ்வொரு மாகாணத் திற்கும் ஒவ்வொரு விதமான சட்ட திட்டங்களை ஏற்படுத்தினால் அதுவும் பொருத்தமற்றதாகத்தான் இருக்கிறது. மத்திய அரசாங்கம் எந்த இடத்திலிருந்து நடைபெறுகிறதோ அந்த இடத்திற்கு, எல்லா மாகாணத்து அறிஞர்களும் வந்து கூடுகிறார்கள். இவர்களோ, ஒருவரை யொருவர் தெரியாதவர்கள். இதனால் இவர்களுடைய திறமை, சீலம் முதலியன வெளிப்படாமலே போய்விடுகின்றன. அப்படியே இவர்களிடத்திலேயுள்ள ஒழுக்கஹீனங்களும் கண்டிக்கப் படாமற் போய் விடுகின்றன. தலைவர்களா யிருக்கப்பட்டவர்கள், மற்ற அலுவல்களில் ஈடுபட்டவர்களாய், ராஜ்ய விவகாரங்களை நேர்முகமாகக் கவனிப்ப தில்லை. சாதாரண குமாதாக்களே ராஜ்யத்தை ஆளத் தொடங்கி விடுகிறார்கள். தூரப் பிரதேசங்களி லுள்ள உத்தியோகதர்கள், மத்திய அரசாங்கத்திலிருந்து வரும் உத்தரவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவாவது பார்க்கிறார்கள்; அல்லது அந்த உத்தரவுகளை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவர அஞ்சுகிறார்கள். அரசாங்கத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்தும் விஷயத்தில், ஜனங்களுடைய சக்திகள் உபயோகிக்கப்பட்டுப் போகின்றன. இதனால், ஜனங்கள் சந்தோஷமாக வாழ்வதற்கு முடியாமற் போய்விடுகிறது. அந்த ராஜ்யத்திற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அப்பொழுது அதனைத் தடுத்துப் பாதுகாக்க ஜனங் களுக்கு சக்தி இல்லாமல் போகிறது. எப்படி ஒரு பருமனான தேகம், தன் பளுவைத் தாங்கமாட்டாமல் கீழே விழுந்துவிடுகிறதோ, அதைப்போல் ஒரு ராஜ்யமும் தன்னுடைய விதீரணத்தின் பளுவைத் தாங்க மாட்டாமல் சீரழியத் தொடங்குகிறது. மற்றும், ஒரு ராஜ்யத்தினுடைய அதிவாரம் பலமுள்ளதா யிருக்க வேண்டும். அப்பொழுதுதான், அது நீண்ட காலம் திரமாக வாழ முடியும்; அடிக்கடி அதற்கு ஏற்படக்கூடிய அதிர்ச்சிகளைச் சமாளிக்க முடியும்; தனது ஜீவனத்திற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்ய முடியும். சாதாரணமாக, ஜனங்களிடத்தில், மற்றவர்களுடைய கஷ்டத்தின்மீதுதான் வாழ வேண்டு மென்ற எண்ணம் சுபாவத்தி லேயே குடி கொண்டிருக்கிறது. இதனால் ஒருவருக்கொருவர் சச்சரவிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இவைகளை யெல்லாம் சமாளித்துக் கொண்டு போகவேண்டுமானால், ராஜ்யத்தினுடைய அதிவாரம் பலமுள்ளதாயிருக்க வேண்டும். எனவே, ஒரு ராஜ்யத்தை அதிகமாக விதரித்துக் கொண்டும் போகாமல், அதிகமாகச் சுருக்கியும் விடாமல், தன்னுடைய க்ஷேமத்தை அது கவனித்துக் கொள்ளக்கூடிய விதமாக அதனை அமைத்துக் கொடுக்க வேண்டும். அப்படி அமைத்துக் கொடுப்பதில்தான் ஒரு ராஜதந்திரியின் திறமை இருக்கிறது. நமது நோக்கமெல்லாம் ஒழுங்கான முறையில் ராஜ்ய நிருவாகம் நடைபெறக் கூடுமாவென்று பார்ப்பதாகவே இருக்க வேண்டும். விசாலமான ராஜ்யத்திலிருந்து அதிக பணவருவாய் கிடைக்கலாம். ஆனால் அதைவிட, குறுகிய எல்லையுள்ள ராஜ்யத்தி னின்று உண்டாகிற சக்தியே மேலானது. மற்ற நாடுகளின் மீது படை யெடுத்து அவற்றைத் தங்களோடு சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிற மாதிரியாகவே, சில ராஜ்யங்கள் அமைந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ராஜ்யங்கள், தங்களுடைய வாழ்க்கைக்காக, தங்கள் எல்லையைப் பெருக்கிக் கொண்டு போவது அவசியமென்று கருதுகின்றன. இதனால் எல்லையையும் பெருக்கிக்கொண்டு போகின்றன. ஆனால் இப்படிப் பெருக்கிக் கொண்டு போவது, இவைகளுடைய பெருமையின் எல்லையைக் காட்டுகிறதாயினும், ஒரு காலத்தில் இவை வீழ்ந்துபடக் கூடுமென்ற சூசகத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. ஒரு ஜன சமுதாயத்தை இரண்டு விதமாக அளந்து பார்க்க லாம். அந்தச் சமுதாயத்தின் நில விதீரணத்தைக் கொண்டு அளந்து பார்ப்பது ஒருவிதம்; அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த ஜனங்களின் எண்ணிக்கையைக் கொண்டு அளந்து பார்ப்பது மற்றொரு விதம். ஒரு ராஜ்யம், உண்மையிலேயே பெருமையடைவதற்கு, இந்த இரண்டுவித அளவுகளும் பொருந்தவேண்டும். மனிதர்கள் சேர்ந்து, தேசத்தைத் தயாரிக்கிறார்கள்; அந்தத் தேசமானது, மனிதர்களைக் காப்பாற்றுகிறது. எனவே, ஒரு ராஜ்யத்தில் எத்தனை பிரஜைகள் இருக்கிறார்களோ அத்தனை பேருடைய போஷணைக்குப் போது மான விதீரணமுடையதாக அந்த ராஜ்யம் இருக்கவேண்டும். அதே போல், ஒரு ராஜ்யமானது, எத்தனை பேரைக் காப்பாற்ற முடியுமோ அத்தனை பேரே அந்த ராஜ்யத்தில் இருக்கவேண்டும். இந்த விகிதாசாரப்படியுள்ள ஒரு ஜாதியார்தான், தக்க பலமுள்ள வர்களா யிருப்பார்கள். தேவைக்கதிகமான நிலப்பரப்பு ஒரு ராஜ்யத் திற்கு இருக்குமானால், அதனைப் பாதுகாப்பது கஷ்டம். அதில் சரியானபடி விளைபொருள்களை உற்பத்தி செய்ய முடியாது. உற்பத்தியானால் தேவைக்கதிகப்பட்டுப் போகும். இதைப் பாதுகாக்க யுத்தஞ் செய்ய வேண்டியிருக்கும். போதுமான நிலப்பரப்பு ஒரு ராஜ்யத்திற் கில்லாவிட்டால், தன்னுடைய தேவைக்காக அந்த ராஜ்யமானது, தனது அண்டை அயலார்களுடைய உதவியை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த உதவியைப் பெறுவதற்காக அவர்கள் மீது வலிய யுத்தந் தொடுக்க வேண்டியிருக்கிறது. எந்த ஜாதி, அயலார்களுடன் சிநேகப் பான்மையில் வியாபாரஞ் செய்வது அல்லது அவர்கள் மீது யுத்தந் தொடுப்பது என்ற நிர்ப்பந்த நிலைமை யில் வைக்கப்பட்டிருக்கிறதோ அந்த ஜாதியைப் பலஹீனமுள்ள ஜாதியென்று அழைக்க வேண்டும். அதனுடைய வாழ்க்கையானது அயலார்களைப் பொறுத்திருக்கிறது; அல்லது அவ்வப்பொழுது ஏற்படுகிற நிலைமையைப் பொறுத்திருக்கிறது. அதன் வாழ்வு, குறுகிய வாழ்வாகவும், நிச்சயமற்ற வாழ்வாகவுமே இருக்க முடியும். அஃது ஒன்று, மற்றவர்களை வெற்றிகொண்டு தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறது; அல்லது மற்றவர்களால் வெற்றி கொள்ளப் பட்டு, யாராலும் சீந்தப்படாத நிலைமைக்கு வந்து விடுகிறது. ஈன வாழ்க்கை, அல்லது மகத்தான வாழ்க்கை, ஏதோ ஒன்றில்தான் அது ஜீவித்திருக்க முடியும். ஒரு ராஜ்யத்தின் நிலப்பரப்புக்கும், அதன் ஜனத்தொகைக்கும், எந்த விகிதாசாரப்படி சம்பந்தம் இருக்கவேண்டுமென்பதைப்பற்றி எவ்வித நிர்ணயமும் ஏற்படுத்த முடியாது. ஏனென்றால், நிலத்தின் தராதரம், செழுமை, உற்பத்தியாகக்கூடிய பொருள்கள், சீதோஷ்ண திதியின் மாறுபாடு முதலியவைகள், தேசத்திற்குத் தேசம் வித்தியாசப் படுகிறது. அதேபோல், ஜனங்களுடைய சுபாவம் முதலியனவும், தேசத்திற்குத் தேசம் மாறுபடுகிறது. செழுமையான பூமியிலே வசிக்கிற சில ஜனங்கள் பொருளுற்பத்திக்காகக் குறைவான சக்தியையே உபயோகிக்க வேண்டியிருக்கிறது. வறண்ட பூமியிலே வசிப்பவர்கள் அதிகமான சக்தியைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது. ஒரு நாட்டில் பிறப்பு விகிதம் எப்படியிருக்கிறது, எந்த விகிதாசாரப்படி ஜனத் தொகை அதிகப்பட்டுக் கொண்டு வருகிறது அல்லது குறைந்து கொண்டு வருகிறது, சட்ட நிர்மாணத்தின்மூலம் ஏற்படுகிற தாபனங்கள், ஜனங்களிடத்தில் எந்த விதமான செல்வாக்கை யடைந்திருக்கின்றன முதலியவைகளையும் நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். சட்ட நிர்மாணஞ் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண் டுள்ள ஒருவன், தன் கண்ணால் எதைக் காண்கிறானோ அதைக் கொண்டுமட்டும் தன் காரியங்களைச் செய்யக்கூடாது. இதைச் செய்தால் இன்னது உண்டாகும் என்று எதிர்பார்த்தும் தன் காரியங் களைச் செய்யவேண்டும். ஜனங்கள் இப்பொழுது எந்த நிலைமையி லிருக்கிறார்க ளென்பதை வைத்துக்கொண்டு மட்டும் அவன் சட்டங்களை இயற்றக் கூடாது. அந்த ஜனங்கள் எந்த நிலைமைக்கு வரவேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொண்டும் சட்டங்களைச் செய்ய வேண்டும். சில சந்தர்ப்பங்களில், ஒரு ராஜ்யத்திற்குத் தேவைக் கதிகமான பூப்பிரதேசம் வேண்டியிருக்கும்; அந்தப் பிரதேசத்தைச் சுவாதீனப்படுத்திக்கொள்ள வேண்டியதற்காக, எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படும். இன்னும் மலைகள் நிறைந்த ஒரு ராஜ்யமானது, தனது எல்லையை விதரித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் இங்கே, காடு களும் மேய்ச்சல் தரைகளும் இருப்பதால், அதிக உழைப்பில்லாம லேயே பொருள்களை உற்பத்தி செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த மாதிரியான பிரதேசங்களில், சம பூமியானது குறைவாகவே இருக்கிறது. இந்தச் சமதரையில், தாவர வர்க்கங்களைக் குறை வாகவே விளைவித்துக் கொள்ள முடியும். தவிர, மலைப் பிரதேசங் களில் வசிக்கும் திரீகள், அதிகமான பிரஜோற்பத்தி சக்தியுடைய வர்களாயிருப்பதை நாம் அநுபவத்தில் கண்டிருக்கிறோம். கடற்கரை யோரமாயுள்ள ராஜ்யங்கள், தங்கள் நிலப்பரப்பை விதரித்துக் கொண்டு போக வேண்டிய அவசியத்திற் குட்படுவதில்லை. ஏனென்றால், இங்கே, நிலத்திலிருந்து விளைகிற பொருள்கள் குறைவாக இருந்தாலும், கடலில் கிடைக்கிற மீன் வகையராக்கள், ஜனங் களுக்குப் போதிய ஆகாரப் பொருள்களாயிருக் கின்றன. மற்றும், கடற்கரை யோரமாக வசிக்கும் ஜனங்கள், எப்பொழுதும் ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்தே வாழவேண்டிய அவசியத்திற்குட்படு கிறார்கள். ஏனென்றால், கடல் மார்க்கமாக யாரேனும் வந்து தாக் கினால், அவர்களினின்று பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருக்கிற தில்லையா? தவிர, கடற்கரையோரமாக வசிக்கும் ஜனங்கள், சுலப மாக வெளிநாடுகளில் சென்று குடியேறுவதற்கு அதிகமான வசதிகள் இருக்கின்றன. சட்ட நிர்மாணம் செய்கிறவர்கள், மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது, தாங்கள் செய்கிற சட்டத்தின் பலனாக, தேசத்தில் அமைதியும் சுபிட்சமும் உண்டாகுமா வென்பதைக் கவனிக்கவேண்டும். ஒரு சேனை ஒழுங்காக அணி வகுத்துக் கொண்டிருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். அந்தச் சமயத்தில் எதிரிகள் தாக்கினால், அதனைச் சுலபமாகச் சிதற அடித்து விடலாம். அதைப்போல், ஒரு ராஜ்யமானது, தன்னை ஒழுங்கு படுத்திக் கொண்டு வருகிற சமயத்தில் சத்துருக்களால் தாக்கப் பட்டால் அது விரைவாக அழிந்து போகும். தவிர, ஒரு தேசத்தின் ஜனங்கள் ஒற்றுமை குலைந்த வர்களா யிருக்கிற தருணத்தில், வெளியார்களால் தாக்கப்பட்டால் அப்பொழுது, அவர்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபட்டு, சத்துருவை எதிர்க்க முடியும். ஆனால் உள்நாட்டிலேயே குழப்பம், பஞ்சம், துரோகம் முதலியன ஏற்பட்டு விட்டால், அப்பொழுது சத்துருக்களுக்கு லேசாக இரை யாக வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு ராஜ்யத்தில் இந்த மாதிரியாக உள்நாட்டுக் குழப்பங்கள் ஏற்பட்ட சமயத்தில், புதிய அரசாங்கங்கள் தாபிக்கப்பட்டிருக் கின்றன வென்பதை நாம் மறுக்கவில்லை; தாபிக்க முடியாதென் றும் நாம் சொல்லவில்லை. ஆனால் இங்ஙனம் தாபிக்கப்படுகிற அரசாங்கங்களே, அநேகமாக அந்த ராஜ்யத்தை அழித்துவிடுகின்றன. அதிகார பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டு, தாங்களே திரமாக அந்தப் பதவிகளில் இருக்க வேண்டுமென்று கோருகிறவர்கள், பயங்கர ஆட்சி நடத்தியும், அநீதமான சட்டங்களை இயற்றியும் ஜனங்களிடையில் குழப்பத்தை உண்டு பண்ணி விடுகிறார்கள். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில்தான், ஒரு சட்ட நிர்மாணகனுடைய வேலைக்கும், ஒரு கொடுங்கோலனுடைய வேலைக்கும் நன்றாக வித்தியாசம் தெரியும். அப்படியானால், சட்டமியற்றிக் கொடுக்கப்படுவதற்கு எந்த மாதிரியான ஜனங்கள் தகுதியுடையவர்கள்? பரம்பரை, பரபர நலன்கள், சம்பிரதாயங்கள் முதலியவைகள் விஷயமாக ஏற்கெனவே ஒருவிதமாக ஒன்றுபட்டிருக்கிறவர்கள்; சட்டத்தின் உண்மையான தளையை இன்னமும் உணராதவர்கள்; பழக்கவழக்கங்கள் அல்லது மூடநம்பிக்கைகள் முதலியவற்றில் நன்றாக ஊறிப் போகாதவர்கள்; திடீரென்று அந்நியர்கள் படையெடுத்து வந்தால் அந்தப் படை யெடுப்பினால் நாம் அழிந்துபட்டுப் போவோம் என்ற பயமில்லாத வர்கள்; தங்கள் அயலார்களுடைய சண்டை சச்சரவுகளில் தலை யிடாதவர்கள்; அப்படித் தலையிடாமலிருக்கிற சமயத்திலும், அவர்கள் வந்து தாக்கினால், அவர்களைத் தனியாக எதிர்த்து நிற்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள் அல்லது ஒருவருடைய துணை கொண்டு, மற்றொருவரை எதிர்க்குஞ் சக்தி பெற்றவர்கள்; ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோரும் பரபரம் ஒருவரை யொருவர் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறவர்கள்; ஒரு மனிதன் மீது வரி முதலிய சுமை களை எவ்வளவு தூரம் சுமத்த முடியுமோ அதற்கு அதிகமாக அவன் மீது சுமத்த வேண்டிய அவசியத்துக் குட் படாதவர்கள்; மற்ற நாட்டாருடைய உதவியில்லாமல் வாழக் கூடியவர்கள்; அதே பிரகாரம், தங்களுடைய உதவியை மற்றவர்கள் கோராதிருக்கும் நிலையிலுள்ளவர்கள்; அதிகச் செல்வமும் அதிக வறுமையும் இல்லாமல், சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய வர்கள்; பழமையும் புதுமையும் கலந்துள்ள வாழ்க்கையையுடைய வர்கள். இத்தகைய தகுதிகளுடைய ஜாதியினருக்குத்தான், ஒழுங்கான சட்டங் களை இயற்றிக் கொடுத்தல் சாத்தியமாகும். எவை எவை களை தாபிக்க வேண்டு மென்பதைப் பற்றிச் சட்டஞ் செய்வது கடினமல்ல; எவை எவைகளை அழிக்க வேண்டுமென்பதைப் பற்றிச் சட்டஞ் செய்வதுதான் கடினம். இயற்கை வாழ்க்கையை நடத்திக் கொண்டே சமுதாயத் தேவை களையும் பூர்த்தி செய்து கொண்டு போவது ஜனங்களுக்குக் கஷ்டமா யிருப்பதால் தான், பெரும்பாலான சட்டங்கள், கோரிய பலனைக் கொடாமற் போகின்றன. மேலே சொன்ன எல்லாத் தன்மைகளும் ஒரு ஜாதியினிடத்தில் ஒன்று சேர்ந்திருப்பது அபூர்வம். இதனால்தான், அநேக நாடுகளில் ஒழுங்கான அரசியல் அமைப்புகள் ஏற்படுவதில்லை. ஒழுங்கான சட்டங்களியற்றிக் கொடுக்கப் பெறுவதற்கு, ஐரோப்பாவிலேயே ஒரே ஒரு நாடுதான் தகுதியுடையதா யிருக்கிறது. அதுதான் கார்ஸிக்கா. இந்தக் கார்ஸிக்கா வாசிகள், வீரத்தோடும் உறுதியோடும் சுதந்திரப் போராட்டம் நடத்தி, சுதந்திரத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.1 இப்படிச் சம்பாதித்த சுதந்திரத்தைப் பத்திரமாகக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். எப்படிப் பத்திரமாகக் காப்பாற்றுவ தென்பதை இவர்களுக்கு யாரேனும் ஓர் அறிஞன் கற்றுக் கொடுத்தல் அவசியமாகும். இந்தச் சிறிய தீவு - கார்ஸிக்கா - ஒரு காலத்தில் ஐரோப்பாவே ஆச்சரியப் பட்டுப் போகும்படியாக நடந்து கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறேன். 18. பலவகையான சட்ட முறைகள் சட்டத்தின் நோக்க மென்ன? சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோ ருக்கும் அதிகமான நன்மையை அளிப்பது. அப்படி எல்லோருக்கும் நன்மை அளிக்கக்கூடியது எது? சுதந்திரம்; சமத்துவம். ஏனென்றால் எல்லோருக்கும் சுதந்திரம் இருக்குமானால்தான், சமுதாயத்தின் சக்தி அதிகப்படும். சமத்துவம் இல்லாமல் சுதந்திரம் மட்டும் தனித்திருக்க முடியாது. எனவே, சுதந்திரமும் சமத்துவமும் ஜனங்களுக்கு அவசியம் இருக்க வேண்டும். சமுதாய சுதந்திரத்தைப் பற்றி நான் ஏற்கெனவே கூறியுள் ளேன்.1 சமத்துவமென்றால் என்ன? எல்லோரும் ஒரேவிதமான அதிகாரம், செல்வம் முதலியவைகளை அநுபவிக்க வேண்டுமென்பது அர்த்தமா? இல்லை. ஒருவனுக்கு அளிக்கப்படும் அதிகாரமானது, அவனைப் பலாத்காரத்திற்குத் தூண்டக்கூடாது. அதிகாரத்தை உபயோகித்து யாரும் யார்மீதும் ஆதிக்கஞ் செலுத்தக்கூடாது. அதாவது சட்டத்தை அநுசரித்தும், தாங்கள் வசிக்கும் பதவிக் கேற்றாற் போலவும் அவரவரும் தங்கள் அதிகாரத்தை உபயோகிக்க வேண்டும். பொதுவாக, செல்வத்தை எடுத்துக் கொள்வோம். மற்றவர்களை விலை கொடுத்து வாங்கி விடக்கூடிய அளவு பணக் காரனாக எவனொருவனும் இருக்கக்கூடாது. இங்ஙனமே, தன்னைப் பிறருக்கு விற்கக்கூடிய நிலையிலுள்ள ஏழையாக எவனொருவனும் இருக்கக்கூடாது.2 இந்த நிலைமை ஏற்பட்டால்தான், பணக் காரர்கள், சொத்து சேகரிக்கும் விஷயத்திலும், செல்வாக்கை உப யோகிக்கும் விஷயத்திலும் ஓர் அளவோடு இருப்பார்கள்; ஏழைகள், பேராசை கொள்ளாமலும், பிறர் பொருளை அபகரிக்க வேண்டு மென்ற எண்ணமில்லாமலும் இருப்பார்கள். இத்தகைய சமத்துவம் ஏற்படவே முடியாது என்றும், இஃது அநுபவ சாத்திய மற்றதென்றும் சிலர் சொல்கிறார்கள். இப்படிப் பட்ட சமத்துவம் துஷ்பிரயோகம் செய்யப்படலா மென்பதென்னவோ வாதவம். ஆனால் அதற்காக, அந்தச் சமத்துவத்தை ஒழுங்குபடுத்தி விடக் கூடாதென்பது அர்த்தமா? அநேக சந்தர்ப்பங்களில், இந்தச் சமத்துவமானது துஷ் பிரயோகம் செய்யப்படக் கூடுமென்பதற் காகவே, அப்படி துஷ்பிரயோகம் செய்யப்படாமலிருக்கும் பொருட்டும், அஃது அழிந்து போகாமலிருக்கும் பொருட்டும், சட்டத்தின் மூலம், அதாவது சட்டமியற்றி அதனைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. சட்டத்தின் நோக்கம், எல்லோருக்கும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அளிப்பது என்றாலும், அந்தந்த நாட்டின் நிலைமை, ஜனங்களின் மனப்பான்மை ஆகிய இவைகளை அநுசரித்தே சட்டங்கள் இயற்றப்படவேண்டும். இந்தச் சட்டங்களுக் கநுசரணையாக, அரசியல் தாபனங்களும் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு தேசத்தில், விவசாய உற்பத்திக்குத் தகுதியில்லாத நிலப்பரப்பே அதிகமாக இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். அல்லது ஜனங்கள் அதிகமாகவும், நில விதீரணம் குறைவாகவும் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். இத்தகைய தேசத்தில் வசிக்கும் ஜனங்கள், தொழில் முயற்சிகளிலே இறங்க வேண்டும். தங்களால் உற்பத்தி செய்யமுடியாத பொருள்களை மற்ற நாடுகளி லிருந்து வரவழைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு எதிரிடையாக வேறொரு தேசமானது அதிக செழிப்புள்ள பூப்பிரதேசத்தைக் கொண்டதாகவும், ஆனால் குறைவான ஜனத்தொகையுடைய தாகவும் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட தேசத்திலுள்ள ஜனங்கள் விவசாய அபிவிருத்தியிலே அதிகமான கவனத்தைச் செலுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஜனத்தொகை பெருகும். தொழிலுற் பத்தியைக் குறைக்கவேண்டும். தொழிற்சாலைகள் அதிகமாகுமானால், ஜனத்தொகை குறையும்.1 கடற்கரைப் பிரதேசங் களில் வசிக்கும் ஜனங்கள், வியாபாரம், கப்பற் போக்குவரத்து முதலிய விஷயங்களில் கவனஞ் செலுத்த வேண்டும். எனவே, ஒரு சட்டத்தினுடைய அடிப்படை யான நோக்கம் ஒன்றா யிருக்கலாமே தவிர, அந்தந்த தேசத்திற்குத் தகுந்தாற் போலவே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதாவது, ஒரு தேசத்து ஜனங்களுடைய மனப்போக்கு எந்த நிலையில் இருக்கிறதோ அந்த நிலைக்குத் தகுந்தாற் போலத்தான் சட்டங்களும் இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்கமுடியும். உதாரணமாக யூதர்களும், அராபியர் களும், மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிற முறையில் சட்டங்க ளியற்றினார்கள். ஏதென் (கிரீ) வாசிகள் கல்விஞானத்திற்கும், கார்த்தேஜ்1 வாசிகளும் டைர்2 வாசிகளும் வியாபாரத்திற்கும், ரோட்3 வாசிகள் கப்பல் வியாபாரத்திற்கும், பார்ட்டா4 வாசிகள் யுத்தத்திற்கும், ரோமாபுரி வாசிகள் ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துச் சட்டங்க ளியற்றினார்கள். மாண்டெகு என்ற அறிஞன், இவைகள் ஒவ்வொன்றையும் அநுசரித்து எப்படிச் சட்டமியற்ற வேண்டுமென்று விளக்கமாகக் கூறியிருக்கிறான். ஒரு தேசத்தின் ஜனங்களுக்கும் அந்தத் தேசத்தின் அரசுக்கும் ஏதோ ஒருவிதமான சம்பந்தம் இயற்கையாகவே ஏற்பட்டிருக்கிற தல்லவா, அந்த இயற்கைச் சம்பந்தத்திற்குத் துணை செய்யக்கூடிய விதமாகவும், அதனை வலுப்படுத்தக்கூடிய மாதிரியாகவும், அந்தத் தேசத்துச் சட்டங்கள் இருக்க வேண்டும். சட்டமியற்றுகிறவன், நிலைமைகளை அநுசரியாமல், ஏதோ ஒரு லட்சியத்தை வைத்துக் கொண்டு சட்டமியற்றுவானாகில், அல்லது அமைதியை நிலை நிறுத்துவதற்குப் பதில் அடிமைத் தனத்தை ஊர்ஜிதப்படுத்தக்கூடிய மாதிரியாகச் சட்டமியற்றுவானாகில், அந்தச் சட்டம், எவ்வித பிரயோஜனத்தையும் கொடாது. பிரயோஜனமில்லாத சட்டங்களி னால் எந்த அரசாங்க அமைப்பும் திரப்பட்டிராது. திரமில்லாத அரசாங்க அமைப்போடுகூடிய ஒரு ராஜ்யமானது நாளாவட்டத்தில் அழிந்து போகும்; அல்லது அடியோடு மாற்றப்பட்டு விடும். 19. சட்டங்களின் பிரிவினை ஒரு ராஜ்யத்தினுடைய அரசாங்க அமைப்பானது, ஒழுங்காக வும் சிறந்ததாகவும் இருக்க வேண்டுமானால், அரசாங்கம், தன் விஷயத்தில் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஜன சமுதாயத் தினிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், இவைகளுக்குள்ள சம்பந்தா சம்பந்தங்கள் என்ன ஆகிய இவைகளையெல்லாம் கவனித்துப் பார்க்க வேண்டும். இந்தச் சம்பந்தங்களை ஒழுங்கு படுத்திவிடக் கூடியனவற்றிற்கே சட்டங் களென்று பெயர். இந்தச் சட்டங்களை அரசியல் சட்டங் களென்றும், அடிப்படையான சட்டங்களென்றும் சொல்வதுண்டு. ஒழுங்கான சட்டம் அநுஷ் டானத்திற்குக் கொண்டு வரப்படுமானால், அந்தச் சட்டத்தை ஜனங்கள் உறுதியாகப் பின்பற்றி நடப்பார்களென்பதில் சந்தேக மில்லை. ஒரு சட்டம் நல்லதில்லை யென்று சொல்லி அதனை நிராகரிக்க ஜனங்களுக்கு எப்பொழுதும் உரிமையுண்டு. ஆனால் ஒரு ஜாதியார், தங்களுடைய இந்த உரிமையை உபயோகித்து, நல்லதா யுள்ள ஒரு சட்டத்தை மாற்றுவார்களானால், அவர்களை யாரால் தடுக்க முடியும்? அவர்கள், தங்களுக்குத் தாங்களே தீங்கு செய்து கொள்ளத் தீர்மானித்து விட்டால் அதனை யாரும் தடுக்கமுடியுமா? ஒரு ராஜ்யத்துப் பிரஜைகள், ஒருவர்க்கொருவர் பரபரம் எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்பதைப் பற்றியும், சமுதாய விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டு மென்பதைப் பற்றியும் நிர்ணயிக்கிற சட்டங்களுக்குச் சிவில் சட்டங்கள் என்று பெயர். அதாவது ஜன சம்பந்தமான, அல்லது சமுதாய சம்பந்தமான சட்டங்கள் என்று அர்த்தம். தனிப்பட்ட ஒரு பிரஜையானவன், சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுப்பானாகில், அவனுக்கும், அந்தச் சட்டத்திற்கும் எந்தவிதமான சம்பந்தம் இருக்கவேண்டும், அதாவது சட்டத்தைப் பொறுத்தமட்டில் அவன் எவ்வாறு நடத்தப்பட வேண்டுமென்பதை நிர்ணயிக்கிற சட்டங் களுக்கு கிரிமினல் சட்டங்கள், அதாவது குற்றநிர்ணயச் சட்டங்கள் என்று பெயர். இவை, முதலிற் சொன்ன இரண்டு வித சட்டங்களில் ஒரு பிரிவுதான். இந்த மூன்று விதமான சட்டங்களைத் தவிர, நான்காவதான வேறொரு சட்டம் இருக்கிறது. இது, ஜனங்களின் மனத்தில்தான் பதிந்திருக்கிறதென்று சொல்ல வேண்டும். இதுவே ஒழுக்கம்; பரம்பரைப் பழக்கம்; பொதுஜன அபிப்பிராயம். இந்த மூன்றும் சேர்ந்த சட்டம், எழுத்தினால் ஊர்ஜிதம் பெறாதது. ஆனால் மற்றச் சட்டங்கள் ஒழுங்காக அநுஷ்டிக்கப் படவேண்டுமானால், இந்தச் சட்டம் ஒழுங்காக இருக்க வேண்டும். இதைப் பற்றித்தான் ஒரு சட்ட நிர்மாணகன், அந்தரங்கத்தில் அதிகமாகச் சிந்திக்கிறான். ஏனென் றால், வளைவான ஒரு கட்டிடத்திற்கு நெற்றிக்கல் முக்கிய மென்று சொல்வார்களல்லவா, அதைப் போல், மற்றச் சட்டங்களுக்கெல் லாம் முக்கியமானது, இந்த ஒழுங்குச் சட்டம். ஆனால் நான் இங்கே எடுத்துக் கொண்டுள்ள விஷயம், அடிப்படையான சட்டம் என்று சொல்லப்படுகிற அரசியல் சட்டத்தைப் பற்றித்தான். சமுதாய ஒப்பந்தம் மூன்றாம் பாகம் ஓ மனிதனே! நீ எந்த நாட்டைச் சேர்ந்தவனா யிருந்தாலுஞ் சரி, எந்தவிதமான அபிப்பிராயங்களைக் கொண்டவனாயிருந்தாலுஞ் சரி, உனது சரித்திரத்தை நன்றாகப் படித்துப் பார். எங்கே? புதகங்களிலா? பொய்யர்களாகிய உனது சகோதர மனிதர்களால் எழுதப்பட்ட புதகங்களிலா? இல்லை, இல்லை, இயற்கை யிலே, பொய் சொல்லத் தெரியாத இயற்கையிலே, உனது சரித்திரத்தைப் படித்துப் பார். ஏனென்றால், அப்பொழுது தான் உன்னைப்பற்றி நீ உண்மையாக அறிந்து கொள்வாய். - ரூஸோ 20. அரசாங்கம் இந்த அத்தியாயத்தை அதிகக் கவனத்துடன் படிக்க வேண்டு மென்று வாசகர்களுக்கு முன்னாடியே எச்சரிக்கை செய்து விடு கிறேன். கவன மின்றிப் படிப்பவர்களுக்கு, தெளிவுபடச் சொல்லக் கூடிய சாமர்த்தியம் என்னிடம் இல்லை. சுயமாகச் செய்யப்படுகிற எந்த ஒரு காரியமும், இரண்டு காரணங்களின் சேர்க்கையினால்தான் நிகழ்கிறது. ஒன்று சூட்சும மானது; மற்றொன்று தூலமானது. முதலாவது, நான் ஒரு காரியத்தைச் செய்யவேண்டுமென்று மனத்தினால் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்; இரண்டாவது, சங்கல்பித்துக் கொண்டபடி, காரியத்தைச் செய்ய வேண்டும். ஒரு பொருளையோ அல்லது ஒரு மனிதனையோ நோக்கி நான் போகிறேன் என்று வைத்துக்கொள் ளுங்கள். முதலாவது, என் மனம் அங்கே போகத் தீர்மானஞ் செய்து கொள்ள வேண்டும். இரண்டாவது, என் கால்கள் என்னை அங்கே அழைத்துச் செல்லவேண்டும். பாரிச வாயுவினால் அவதிப்படுகிற ஒருவன், ஓரிடத்திற்கு ஓடிப்போக இச்சை கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். திடகாத்திரமுள்ள வேறொரு மனிதன், அந்த மாதிரி ஓடிப்போக இச்சை கொள்வதில்லை. கடைசியில் பார்க்கப் போனால் இரண்டு பேரும் ஒரே இடத்தில் தானிருக்கிறார்கள். முன்னவன் இச்சை கொண்டதும், பின்னவன் இச்சை கொள்ளாம லிருந்ததும், காரியத்தில் ஒரே பலனையே கொடுக்கின்றன. ஓர் அரசியலும் இதே முறையில்தான் நடைபெறுகிறது. அதாவது, அதற்கு, இச்சைப்படுகிற சக்தியும் வேண்டும்; அந்த இச்சையைச் செயலில் கொண்டு வருகிற கிரியா சக்தியும் வேண்டும். இச்சா சக்தி யென்பதுதான் சட்ட நிர்மாண அதிகாரம்; கிரியா சக்தியென்பது தான் நிருவாக அதிகாரம். இந்த இரண்டு அதிகாரங்களும் சேர்ந்து இயங்கினால்தான், எந்த அரசியலும் ஒழுங்காக நடைபெறக் கூடும். சட்டநிர்மாண அதிகாரம் ஜனங்களுக்கே உரித்தானதென் பதை ஏற்கெனவே நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம். ஜனங்களுக்குத் தான் அஃது உரித்தானதா யிருக்கமுடியும். ஆனால் நிருவாக அதிகாரம் அப்படியில்லை. சட்டநிர்மாண அதிகாரமும் அரச அதிகாரமும் ஜனங் களுக்கு உரிமையாயிருப்பதுபோல், நிருவாக அதிகாரம் அவர்களுக்கு உரிமையாயிருக்கமுடியாது. ஏனென்றால், இந்த நிருவாக அதிகாரம், குறிப்பிட்ட சில சில சம்பவங்களை முன்னிட்டுத் தான் பிரயோகிக்கப் படலாம். ஆனால், சட்டநிர்மாண அதிகாரமும் அரச அதிகாரமும் அப்படியில்லை. இவையிரண்டும், பொதுப்படையான, அதாவது எல்லோருக்கும் பொதுவான அதிகாரங்களைத்தான் பிரயோகிக்கலாமே தவிர, குறிப்பிட்ட ஒரு நபருக்காகவோ, அல்லது குறிப்பிட்ட ஒரு செயலுக்காகவோ எந்த அதிகாரத்தையும் உபயோகிக்கக் கூடாது. அரசினால் செய்யப் படுகிற எல்லாச் செயல்களும் சட்டங்கள் என்ற பெயரைப் பெறு கின்றன. இந்தச் சட்டங்களை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருவதற்காக அமைந்த ஒரு கருவியே நிருவாக அதிகாரம். இந்த நிருவாக அதிகாரத்தைச் செலுத்தும் தாபனத்தை அரசாங்கமென்ற பெயரிட்டழைக்கிறோம். எனவே அரசாங்கம் என்பது என்ன? ஒரு தேசத்தின் பிரஜைகளுக்கும், அரசுக்கும் மத்தியிலேயுள்ள ஒரு தாபனம்; ஜனங்களுக்கும் அரசுக்கும் தொடர்பு செய்து வைப்பதற் கான ஒரு கருவி. சட்டங்களை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவருவ தும், ஜனங்களின் சமுதாய சுதந்திரம், அரசியல் சுதந்திரம் முதலிய வற்றைப் பாதுகாப்பதும் இதன் வேலைகளாம். இந்த வேலைகளைச் செய்கிற மனிதர்களையே மாஜிட்ரேட்டுகளென்றும், அரசர்க ளென்றும், கவர்னர்களென்றும் பலவிதப் பெயர்களிட்டு அழைக் கிறோம். இவர்களெல்லோரும், அரசினால், அதாவது ஜனசக்தியி னுடைய விருப்பப்படி தாபிக்கப்பட்ட அரசினால், அளிக்கப்பட்ட அதிகாரங்களை அநுஷ்டானத்துக்குக் கொண்டு வருகிற ஏஜெண்டுகள். இவர்களுடைய அதிகாரங்களை வரையறுப்பதும், அல்லது மாற்றி யமைப்பதும், அல்லது இஷ்டமில்லாதபோது இவர்களிடமிருந்து பறிமுதல் செய்துவிடுவதும் அரசின் உரிமைகளாம். இவைகளி னின்று நாம் தெரிந்துகொள்ளவேண்டிய தென்னவென்றால், அரசு என்பது ஜனங்களின் சிருஷ்டி. அந்த அரசானது, தன் காரியங் களைச் சட்டங் களியற்றுவதன் மூலமாகச் செய்கிறது. அந்தச் சட்டங்களை அநுஷ்டானத் திற்குக் கொண்டு வருவது அரசாங்கம். அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள் ஜனங்கள். எனவே, ஜனங்கள், தங்கள் சிருஷ்டிக்கே தாங்கள் கீழ்ப்படிந்து நடக்கிறவர் களாகிறார்கள். அப்படி நடப்பது பரபர சம்மதத்தின் பேரில்தான். மேலே சொல்லப்பட்ட மூன்று பேருக்கும் அதாவது அரசு, அரசாங்கம், ஜனங்கள் என்கிற மூன்று பேருக்கும் எந்த விகிதாசாரப் படி சம்மந்தம் இருக்க வேண்டுமோ அந்த விகிதாசாரப்படி இல்லா மல், சற்று ஏற்றத்தாழ்வு ஏற்படுமானால், அப்பொழுதுதான் ஒரு ராஜ்யத்தில் அராஜகம், கலகம், குழப்பம் முதலியன ஏற்படுகின்றன. இந்த ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுவதற்கு அநேக சம்பவங்கள் காரணமா யிருக்கலாம். இதனால் ஒரே அரசாங்க அமைப்பானது, வேறு வேறு நாட்டவர்க்கு வேறு வேறு பலன்களை அளிக்கக் கூடியதாயிருக் கிறது. இங்ஙனமே ஒரே தேசத்தில் அமைந்திருக்கிற ஒரே அரசாங்க மானது, ஒரு காலத்தில் நல்ல அரசாங்கமாகவும், இன்னொரு காலத்தில் தீய அரசாங்கமாகவும் மாறுகிறது. இப்படியெல்லாம் ஏற்படுவதற்கு, மேற்சொன்ன ஏற்றத் தாழ்வுகள்தாம் காரணம். ஜன விருப்பத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருப்பதுதான் அரசாங்கம். இப்படிப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிற விஷயத்தில் வேற்றுமைகள் ஏற்படும் பொழுது ஜனங்களுக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பானது தளர்ந்து விடுகிறது. அரசாங்கமானது, அரசின் இச்சையை, அதாவது ஜன விருப்பத்தைப் புறக்கணித்து, சுயேச்சை யாக நடக்கத் துணிந்து விடுமானால் அப்பொழுதுதான், சமுதாய வாழ்வு சீர்குலைந்து போகிறது. இங்ஙனம் அரசாங்கமானது சுயேச்சையாக நடந்து கொள்ளாமலிருக்க வேண்டு மென்பதற்காகத் தான், சபைகள், ஆலோசனை சொல்லும் கழகங்கள், பதவிகள், உரிமைகள், சலுகைகள் என்று பல விதமாக ஏற்படுத்தப்பட்டிருக் கின்றன. அரசாங்கமானது, அரசின் கருவியாக இருந்த போதிலும், அது, கண்டிப்பான தோரணையிலும், காலா காலத்திலும் காரியங்களை நடத்த வேண்டும். திடகாத்திரமுள்ள ஒரு மனிதன் எவ்வாறு கிரமப்படி காரியங்களைச் செய்வானோ அப்படியே, ஒழுங்கான ஓர் அரசாங்கமும் காரியங்களைச் செய்யவேண்டும். 21. பலவித அரசாங்க அமைப்புகள் ஏற்படுவதற்குக் காரணமென்ன? ஓர் அரசாங்கத்தில் அதிகமான உத்தியோகதர்களும் இருக்கலாம்; குறைவான உத்தியோகதர்களும் இருக்கலாம். ஆனால், ஓர் அரசாங்கத்தில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமான உத்தியோகதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு அந்த அரசாங்கத்திற்குப் பலஹீனம். இந்த அடிப்படையான உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. பிரதியோர் அரசாங்க உத்தியோகத னுக்கும் மூன்று விதமான மனப்பான்மைகள் இருக்கின்றன. முதலா வது, அவனுடைய சொந்த மனப்பான்மை. இது, தன்னலத்தையே நாடுகிறது. இரண்டாவது, அரசாங்கத்தின் மனப்பான்மை. இஃது, அரசாங்கத்தின் நலத்தையே நாடுகிறது. மூன்றாவது, ஜனங்களுடைய மனப்பான்மை. இது, பொதுஜனங்களுடைய நன்மையை நாடுகிறது. ஒழுங்கான அரசியல் நடைபெற வேண்டுமானால், அரசாங்க உத்தியோகதர்களுக்கு முதலாவது மனப்பான்மை பூஜ்யமாயிருக்க வேண்டும். அதாவது அவர்கள் சுயநன்மையைக் கருதக் கூடாது. இரண்டாவது மனப்பான்மை குறைவாக இருக்க வேண்டும். அதாவது அரசாங்கத்தினுடைய நன்மையைக் கோரவேண்டியிருந் தாலும், அதுவே முக்கியமானதா யிருக்கக் கூடாது. மூன்றாவது மனப்பான்மையைத்தான் சிறப்பாகக் கொள்ள வேண்டும். அதாவது, ஜன நன்மையைத்தான் ஓர் அரசாங்க அதிகாரி முக்கிய மாகக் கருதவேண்டும். இந்த ஜன நன்மையின் மூலமாக, அவன் மற்ற இரண்டு நன்மைகளையும் அடையப்பார்க்க வேண்டுமே தவிர, அந்த இரண்டு நன்மையின் மூலமாக, ஜன நன்மையை நாடக் கூடாது. ஆனால் பொதுவாக அரசாங்க உத்தியோகதர்களுடைய மனப்பான்மை, சுயநலத்திற்கு முதல் தானமும், அரசாங்க நலத்திற்கு இரண்டாவது தானமும், பொது நலத்திற்கு மூன்றாவது தானமும் கொடுக்கிறது. அதாவது ஓர் அரசாங்க உத்தியோகதன், முதலில் தானாக இருக்கிறான்; இரண்டாவது அரசாங்க உத்தியோகதனா யிருக்கிறான்; மூன்றாவதாகத்தான் ஜனங்களில் ஒருவனாக இருக்கிறான். ஆனால் ஒரு சமுதாயமானது, இதற்கு நேர்மாறாகவே ஓர் அரசாங்க உத்தியோகதன் இருக்க வேண்டுமென்று எதிர் பார்க்கிறது. அதாவது, மேலே சொன்ன மாதிரி முதலில் பொது நலத்தை நாடும பிரஜையாகவும், இரண்டாவது அரசாங்க உத்தி யோகதனாகவும், மூன்றாவது தன்னலமுடைய வனாகவும் இருக்க வேண்டும் மென்று எதிர்பார்க்கிறது. இத்தகைய உத்தியோக தர்கள், ஓர் அரசாங்கத்தில் எவ்வளவுக் கெவ்வளவு குறைவாக இருக் கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு துரிதமாக அந்த அரசாங்கத்தின் வேலை நடைபெறுகிறது; காலா காலத்திலும் நடைபெறுகிறது. அதிகமான உத்தியோகதர்கள் இருந்தால்தான், காரியங்களைத் திறமையாகச் செய்யலாமென்று சொல்லப்படுகிறது. காரியங்கள், திறமையாக நடைபெறலாம்; ஆனால் அதனாலுண்டாகிற நன்மை யென்னவோ கொஞ்சமாகத் தானிருக்கும். மற்றும், அதிகமான உத்தியோகதர் களிருந்தால், அதிகமான ஆலோசனைக்கு இடம் உண்டாகிறது. இதனால், எந்த நோக்கத்துக்காக ஒரு காரியம் செய்யப்படுகிறதோ அந்த நோக்கம் நிறைவேறுவதில்லை. தவிர, ஒரு ராஜ்யமானது விதீரணத்தில் பெரிய தாயிருந்தால், அதற்குத் தகுந்தாற் போல், அரசாங்க உத்தியோகதர்கள் அதிகப்படக் கூடாது; குறைய வேண்டும். குறைவான உத்தியோகதர்களிரு தால்தான், விசாலமான ராஜ்யத்தைக் கண்டிதமாக நிருவாகம் செய்ய முடியும். அதாவது, ஒரு ராஜ்யத்தினுடைய ஜனத்தொகை பெருகப் பெருக, அரசாங்க உத்தியோகதர்களினுடைய எண்ணிக்கை சுருங்க வேண்டும். நான் இங்கே ஓர் அரசாங்கத்தினுடைய நிருவாக சக்தியைப் பற்றித்தான் பேசுகிறேனே தவிர, அதனுடைய நேர்மையைப் பற்றிப் பேச வில்லை. அதிகமான உத்தியோகதர்கள் உள்ள ஓர் அரசாங் கத்தில், பொது ஜன அபிப்பிராயத்திற்கும் அரசாங்க அபிப்பிராயத் திற்கு மிடையில் வெகுதூரம் இருக்கும். அதாவது, பொதுஜன அபிப்பிராயம் சரியாகக் கவனிக்கப்படமாட்டாது. அதற்கு மாறாக ஒருசில உத்தியோகதர்களே இருந்தால், அவர்கள் தங்களுடைய அபிப்பிராயத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து, ராஜ்யத்தைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டி வைக்க முடியும். இதனால் உத்தியோகதர்கள் குறைவாயிருப்பதில் சாதகமும் இருக்கிறது; பாதகமும் இருக்கிறது. இந்தச் சாதகத்தையும் பாதகத்தையும் சமன்வயப் படுத்தி, எந்த விகிதாசாரப்படி அரசாங்க உத்தியோகதர்கள் இருந்தால் அரசாங்க நிருவாகம் ஒழுங்காகவும் பொதுஜன விருப்பத்தைத் தழுவியும் நடைபெறுமோ, அந்தவிதமாகச் சட்டங்களை இயற்றி அநுஷ்டானத் திற்குக் கொண்டுவர வேண்டியது சட்ட நிர்மாணகர் களின் கடமையாகும். 22. பலவகை அரசாங்க அமைப்புகள் ஓர் அரசானது, அரசாங்க நிருவாகத்தை ஜனங்களிடத்தில் அல்லது ஜனங்களிற் பெரும்பான்மையோரிடத்தில் ஒப்புவிக்கிற தென்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது பெரும்பாலான ஜனங்கள் தனிப்பட்ட பிரஜை களா யில்லாமல், அரசாங்க உத்தி யோகதர்களா யிருப்பார்கள். இப்படிப் பட்ட ஆட்சி முறைக்கு ஜன ஆட்சி என்று பெயர்.1 அரசாங்க நிருவாகமானது, ஒருசிலரிடத்தில் மட்டும் இருக்க லாம். அப்பொழுது, அரசாங்க அதிகாரிகள் குறைவாகவும், தனிப் பட்ட பிரஜைகள் அதிகமான பேராகவும் இருப்பார்கள். இதற்கு பிரபுத்துவ ஆட்சி என்று பெயர்.2 அரசாங்க நிருவாகமானது ஒரு தனிமனிதனிடத்தில் ஒப்படைக் கப்படுவது முண்டு. இந்தத் தனிமனிதனிடத்திலிருந்து தான் மற்றவர் களெல்லோரும் தங்கள் அரசாங்க நிருவாக அதிகாரங்களைப் பெறு கிறார்கள். இந்த ஆட்சி முறைக்கு முடியாட்சி அல்லது கோனாட்சி அல்லது மன்னராட்சி3 என்று பெயர். இதுதான் உலகத்தின் பல நாடு களிலும் சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருக்கிறது. இந்தப் பலவகையான ஆட்சிமுறைகளில், சிறப்பாக, ஜன ஆட்சி முறையிலும் பிரபுத்துவ ஆட்சி முறையிலும் அநேக தரா தரங்கள் இருக்கின்றன; வித்தியாசங்களும் இருக்கின்றன. உதாரண மாக ஜன ஆட்சி என்று சொன்னால், எல்லா ஜனங்களும் அந்த ஆட்சியில் பங்கெடுத்துக் கொள்ளலாம்; அல்லது ஜனங்களில் பாதி பேரே பங்கெடுத்துக் கொள்ளலாம். இங்ஙனமே பிரபுத்துவ ஆட்சி என்று சொன்னால், ஜனங்களில் பாதிபேர் முதல், ஒருசிறு தொகை யினர் வரை அந்த ஆட்சியில் பங்கெடுத்துக் கொள்ளலாம். எந்த விகிதாசாரப்படி ஜனங்கள் பங்கெடுத்துக் கொண்டாலும், ஒவ்வோர் ஆட்சி முறையும் அதற்கேற்பட்ட பெயரோடுதான் இருக்கிறது. இதனாலேயே ஒவ்வோர் ஆட்சிமுறையிலும் அநேக தராதரங்கள் இருக்கின்றனவென்று சொல் கிறோம். மன்னராட்சியில் கூட அநேக பிரிவினைகள் ஏற்பட்டிருக்கின்றன. பார்ட்டாவின் ஆட்சி முறையை நாம் கவனித்துப் பார்த்தோமானால் அதில் எப்பொழுதும் இரண்டு மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். ரோமாபுரியில் ஒரேகாலத்தில் எட்டு மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆயினும் ரோம ஏகாதி பத்தியம் பிளவுபடாமல் ஐக்கியத்துடனேயே இருந்தது.1 எனவே, ஒரு ராஜ்யத்தில் எத்தனை பிரஜைகள் இருக்கிறார்களோ அத்தனை விதமான ஆட்சி முறைகளிருக்கின்றன வென்று பொதுப்படை யாகச் சொல்லலாம். இந்த ஆட்சி முறைகளில் எது சிறந்ததென்பதைப்பற்றிப் பலரும் பலவிதமான அபிப்பிராயஞ் சொல்கிறார்கள். ஆனால் இப்படி அபிப்பிராயஞ் சொல்கிறவர்கள் ஒவ்வோர் ஆட்சி முறையும் ஒவ்வொரு விதத்தில் உயர்ந்ததாயிருக்கிற தென்பதையும், ஒவ்வொரு விதத்தில் மட்டமா யிருக்கிற தென்பதையும் மறந்தே விடுகிறார்கள். ஜனத்தொகை அதிகமாயிருக்கிற நாடுகளில் அரசாங்க அதிகாரிகள் குறைவான பேராகவும், ஜனத்தொகை குறைவாயுள்ள நாடுகளில் அரசாங்க அதிகாரிகள் அதிகமான பேராகவும் இருக்கவேண்டு மென்கிற கோட்பாட்டை நாம் அங்கீகரித்துக் கொண்டோமானால், சிறிய நாடுகளுக்கு ஜன ஆட்சி முறையும், அதிகப் பெரிதும் அதிகச் சிறிதுமில்லாமல் மத்தியமா யிருக்கும் நாடுகளுக்குப் பிரபுத்துவ ஆட்சி முறையும், பெரிய நாடுகளுக்கு மன்னராட்சி முறையும், முறையே ஏற்றவையாயிருக்கும். ஆனால் இதனை யொரு பொதுவிதி யாகக் கொள்ளக்கூடாது. இதற்கு விலக்குகளும் உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் நிகழ்கிற சந்தர்ப்பங்களை யொட்டியே அந்தந்த நாட்டின் ஆட்சி முறை அமைய வேண்டும். 23. ஜன ஆட்சி சட்டமியற்றிக் கொடுக்கும் ஒருவனுக்குத்தான், மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக, ஒரு சட்டத்தை எப்படி அநுஷ்டானத் திற்குக் கொண்டுவருவது, அதற்கு எப்படி வியாக்கியானஞ் செய்வது என்பன போன்ற விஷயங்கள் தெரியும். இதனால், இந்த இரண்டு அதிகாரங்களும், அதாவது சட்டமியற்றும் அதிகாரமும் அதனை நிருவாகஞ் செய்கிற அதிகாரமும் எந்த அரசியல் அமைப்பில் ஒன்றுபட்டிருக்கிறதோ அந்த அரசியல் அமைப்பே சிறந்ததென்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் இந்த இரண்டு அதிகாரங்களும் ஒன்றுபட்டிருக்கிற ஒரே காரணத்தினாலேயே ஓர் அரசாங்கத்திற்கு லட்சணக்குறைவு ஏற்பட்டுவிடுகிறது. எப்படி யென்றால் எந்தெந்த அமிசங்களைப் பிரித்துக்காட்டவேண்டுமோ அந்தந்த அமிசங்க ளெல்லாம் ஒன்று கூட்டிக் குழப்பப்படுகின்றன. அரசு வேறே, அரசாங்கம் வேறேயாக இருப்பதுபோய், இரண்டும் ஒன்றாகச் சேர்த்துக் குழப்பப்பட்டால், அரசு, அதனுடைய லட்சணத்தையும், அரசாங்கம் அதனுடைய லட்சணத்தையும் முறையே இழந்துவிடு கின்றன.1 சட்ட மியற்றுகிறவர்களே அந்தச் சட்டங்களை அநுஷ்டானத் திற்குக் கொண்டு வரக்கூடாது. அது நல்லதல்ல. மற்றும், ஜன சக்தி யானது, அதாவது சமுதாயமானது பொது விஷயங்களில்தான் தன் கவனத்தைச் செலுத்த வேண்டுமே தவிர, தனிப்பட்டவர்களுடைய நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கும் விஷயங்களில் தன் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கக் கூடாது. தனிப்பட்ட நபர்கள், பொது விவகாரங்களில் தங்கள் செல்வாக்கை உபயோகிக்கத் தொடங்குவார்களானால் அது மகா ஆபத்தானது. ஓர் அரசாங்கம், சட்டங்களைத் துஷ்பிரயோகம் செய்தால் அது கெடுதல்தான். ஆனால், அதைவிடக் கெடுதலானது ஒரு சட்ட நிர்மாணகனுடைய ஒழுக்கஹீனம். குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக மட்டும் சட்ட நிர்மாணகன் தன் காரியங்களைச் செய்வானாகில் அவன் ஒழுக்க ஹீனன்2 இப்படிப்பட்ட சட்ட நிர்மாணகர்களைக் கொண்ட ஒரு ராஜ்யமானது, அதன் தன்மையையே இழந்து விடுகிறது. அதாவது ஒரு ராஜ்யத்திற்கு என்னென்ன லட்சணங்கள் உண்டோ அந்த லட்சணங் களெல்லாம் அதற்கு இருக்க முடியாது. இப்படிப்பட்ட ராஜ்யத்தைச் சீர்திருத்த முயலுவது அசாத்தியமான காரியம். எந்த ஜனங்கள் அரசாங்க அதிகாரத்தைத் துஷ்பிரயோகஞ் செய்ய மாட்டார்களோ அவர்களால்தான் சுதந்திரத்தைக் காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்க முடியும். எந்த ஜனங்கள், தங்களை நன்றாக ஆண்டு கொள்ளத் தெரிந்து கொண்டிருக் கிறார்களோ அவர்களைப் பிறர் ஆள வேண்டிய அவசியமே ஏற்படாது. ஜன ஆட்சி என்ற சொற்றொடரின் நேரான அர்த்தப்படி, உலகத்தில் எந்த நாட்டிலும் ஒழுங்கான ஜன ஆட்சி நடைபெற்ற தில்லை; நடைபெறவும் முடியாது. ஒரு நாட்டில் பெரும்பான்மை யோர் ஆள்வதும், சிறுபான்மையோர் ஆளப்படுவதுமாயிருப்பது இயற்கை ஒழுங்குக்கு விரோதமல்லவா? பொது விவகாரங்களைக் கவனிப்பதற்கென்று எல்லா ஜனங்களும் எப்பொழுதும் ஒன்று கூடியிருக்கிறார்களென்பது நினைக்கக் கூட முடியாத விஷயம். அதற்குப் பதில், ஒரு விசாரணைக் கூட்டத்தை நியமிப்பது என்று சொன்னால் அப்பொழுது அரசியல் அமைப்பையே மாற்றியாக வேண்டும். எனவே, ஜன ஆட்சிக்குப் பொதுவானதொரு விதியாக நான் சொல்லக்கூடியதென்ன வென்றால், ஒரு நாட்டில், எவ்வளவுக் கெவ்வளவு அதிகமான ஜனங்கள் நிருவாக உரிமையைப் பெறுகி றார்களோ அவ்வளவுக்கவ்வளவு குறைவான அதிகாரிகள் இருக்க வேண்டுவது அவசியமாகிறது என்பதுதான். சரி, எல்லா ஜனங்களும் ஒன்றுகூடியே அரசாங்க நிருவாகத்தை நடத்தவேண்டுமென்று சொன்னால் அதற்கு என்னென்ன நிபந்தனைகள் தேவையா யிருக்கின்றன தெரியுமா? முதலாவது, தேசம், மிகச் சிறிய தேசமாயிருக்க வேண்டும். அந்தத் தேசத்திலுள்ள எல்லா ஜனங்களையும் சுலபமாக ஒன்று கூட்டக்கூடிய வசதிகள் இருக்க வேண்டும். மற்றும், எல்லா ஜனங்களும் பரபரம் ஒருவரை யொருவர் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். இரண்டாவது, ஜனங்கள் எளிய பழக்க வழக்கங்களுடைய வர்களா யிருக்கவேண்டும். இப்படி யிருந்தால் சிக்கலான பிரச்சினைகள் ஏற்படமாட்டா; பிரச்சினைகளும் அதிகப்பட்டுக் கொண்டு போகமாட்டா. மூன்றாவது, எல்லா ஜனங்களும் ஏறக்குறைய சம அந்ததுடையவர் களாகவும், ஒரே விதமான செல்வ நிலையிலுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி யிருந்தால்தான் எல்லோரும் உரிமை, அதிகாரம் முதலியவைகளை உபயோகிக்கிற விஷயத்தில் ஒரேவித மனப்பான்மை கொள்வர். நான்காவது, ஜனங்களிடத்தில் ஆடம்பரமே இருக்கக் கூடாது. ஆடம்பரம் எங்கிருந்து உண்டாகிறது? அதிகமான பணத்தி லிருந்து. அல்லது பணமிருந்தால், ஆடம்பரம் இருக்க வேண்டியது அவசியமாயிருக் கிறது. இந்த ஆடம்பரமானது, பணக்காரர்களை யாகட்டும் ஏழைகளை யாகட்டும் எல்லோரையும் ஒழுக்க ஹீனர்க ளாக்கி விடுகிறது. பணக்காரர்கள், ஆடம்பரத்திற்காக, தங்களுடைய சொத்து சுதந்திரங் களைத் தங்களுடையதாகவே பத்திரப்படுத்திக் கொள்ளப்பார்க்கிறார்கள். ஏழைகள், ஆடம்பர வாழ்க்கையை அநுபவிக்கவேண்டுமென்பதற்காக அந்தச் சொத்து சுதந்திரங்களை அபகரிக்கிறார்கள். ஆடம்பரமானது. தேசத்தைச் சுகவாழ்க்கைக்கும், தற்பெருமைக்கும் விற்றுவிடுகிறது; ஜனங்களை, தேசத்தின் பிரஜைக ளாக்காமல், ஒருவர்க்கொருவரை அடிமைப்படுத்தி விடுகிறது; கடைசியில் எல்லோரையும் சேர்த்து, பொது ஜன அபிப்பிராயம் என்று சொல்லப்படுகிற ஒன்றிற்கு அடிமையாக்கி விடுகிறது. இதனாலேயே, மாண்டெகு என்ற பேரறிஞன், ஒழுக்கமே, ஒரு குடியரசு ராஜ்யத்தின் அதிவாரமாயிருக்க வேண்டுமென்று கூறினான். ஏனென்றால், ஒழுக்கமில்லா விட்டால், மேலே சொல்லப் பட்ட எந்த நிபந்தனைகளும் நிறைவேறாததல்லவா? ஒரு ராஜ்யம் சிறியதா யிருந்தாலும் பெரியதாயிருந்தாலும், ஒழுக்கம் என்பது ஒன்றுதானே. ஒரு நாட்டின் அரசியல் அமைப்புக்குத் தகுந்தாற்போல் அந்த நாட்டின் ஒழுக்க நிலைமையில் தராதரங்கள் ஏற்படலாம். ஆனால் ஒழுக்கமென்ப தென்னவோ, ஒழுங்காக இயங்க வேண்டு மென்ற நோக்கமுடைய எந்த ராஜ்யத்திற்கும் இருக்க வேண்டியது இன்றியமையாதது. ஜன ஆட்சி முறை நிலவியுள்ள தேசங்களில் உள்நாட்டுக் குழப்பங்களும் கிளர்ச்சிளும் உண்டாவதற்கு அதிகமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஏனென்றால், அந்தத் தேசத்து ஜனங்களுக்கு, ஏதேனும் ஒரு மாறுதலைச் செய்து கொண்டிருக்க வேண்டுமென்ற எண்ணந் தான் அடிக்கடி உண்டாகிறது. இந்த எண்ணம் அடிக்கடி உண் டாகாதபடி தடுத்து, நிலையான ஓர் அரசியலை நடத்திக் கொண்டு செல்ல, அதிகமான கண்காணிப்பும் தைரியமும் தேவை. எனவே, ஜந ஆட்சியின்கீழ் வாழும் ஒரு பிரஜையானவன், மன உறுதியோடு, அடிக்கடி, அமைதியோடு கூடிய அடிமைத்தனத்தைக் காட்டிலும் ஆபத்தோடு கூடிய சுதந்திரத்தையே நான் விரும்புகிறேன் என்று சொல்லிக் கொண்டு, தனது அன்றாட வாழ்க்கையை நடத்தவேண்டும். மனிதர்களெல்லோரும் தேவர்களாக (அதாவது தெய்விகத் தன்மையுடையவர்களாக) எந்த நாட்டில் இருக்கிறார் களோ அந்த நாடுதான் உண்மையான ஜன ஆட்சி நாடாக இருக்கமுடியும். அப்படிப்பட்ட நிறைவுள்ள ஆட்சிமுறை, மனிதர்களாகவுள்ள மனிதர் களுக்குச் சரிப்படாது. 24. பிரபுத்துவ ஆட்சி இந்த அத்தியாயத்தில் நாம் இரண்டு விதமான வியக்திகளைப் பற்றி, அதாவது உணர்ச்சியும் சீலமும் உள்ள இரண்டு நபர்களைப் பற்றிக் கவனிக்க வேண்டும். அரசு என்பது ஒரு வியக்தி; அரசாங்கம் என்பது மற்றொரு வியக்தி. இவ்விரண்டும் தனித்தனியாகவுள்ள இரண்டு சீல புருஷர்கள் மாதிரி. அரசு என்பது பொதுஜன மனப் பான்மையைப் பிரதி பலித்துக் கொண்டிருப்பது; அரசாங்கம் என்பது, நிருவாக உத்தியோகதர் களின் மனப்பான்மையைப் பிரதி பலித்துக் கொண்டிருப்பது. ஓர் அரசாங்கம் தனது உள் விவகாரங் களை எப்படி வேண்டுமானாலும் ஒழுங்கு படுத்திவைத்துக் கொள்ள லாம். ஆனால் அது, ஜனங்களிடத்தில் பேசுகிற போது, அரசின் பிரதிநிதி என்ற தோரணையில்தான் பேச வேண்டும். அரசு என்பது ஜனங்களுடைய பிரதிநிதி. எனவே, ஜனங் களுடைய பிரதிநிதியாக இருந்துதான் ஓர் அரசாங்கம் தன் காரியங்களைச் செய்யவேண்டும். இந்த உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. ஆதிகாலத்தில் சமுதாயங்கள் ஒருசில பெரியோரால் ஆளப் பட்டு வந்தன. ஒவ்வொரு குடும்பத்துப் பெரியோர்களும் ஒன்றுகூடி, பொது விவகாரங்களைக் கவனித்துக் கொண்டு வந்தனர். இந்தப் பெரியோர்கள், மிகுந்த அநுபவமுடையவர்களா யிருந்தபடியால் இவர்களுடைய அதிகாரத்துக்கு, இளைஞர்களா யிருந்த மற்றவர்கள் அடங்கி நடந்து வந்தார்கள். இதனால்தான், ப்ரீட், எல்டர், ஸெனெட், ஜெரோண்டெ1 என்ற வார்த்தைகள் உபயோகத்திற்கு வந்தன. அதாவது இந்த வார்த்தைகளுக்கு முதியோர்கள் என்று அர்த்தம். வட அமெரிக்காவிலுள்ள காட்டுமிராண்டி ஜாதியினர் இப்பொழுதும், இதே முறையிலேயே தங்கள் ஆட்சியை நடத்தி வருகின்றனர். அவர்களுடைய நிருவாகம் மிகத் திறமையாகவே இருக்கிறது.2 நாளாவட்டத்தில் ஏற்பட்ட அரசியல், சமுதாய தாபனங்கள் பல, மனிதர்களுக்குள்ளே அநேக விதமான ஏற்றத் தாழ்வுகளை உண்டுபண்ணி விட்டன. இயற்கையிலேயே மனிதர்களுக்குள் சில ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றனவாயினும், மேலே சொன்ன செயற்கை ஏற்றத் தாழ்வு களுக்கு, இந்த இயற்கை ஏற்றத் தாழ்வுகளைக் காட்டி லும் அதிகமான முக்கியத்துவம் பிற்காலத்தில் கொடுக்கப்பட்டு விட்டது. இதனால், வயதுக்கு மரியாதை செலுத்துவதுபோய், பணத்துக்கும் அதிகாரத்துக்கும் மரியாதை செலுத்துவ தென்பது ஏற்பட்டுவிட்டது. பின்னர், ஒரு குடும்பத்தின் எஜமானனாகிய தகப்பன், தன் சொத்துக்களை, தனது சந்ததியாருக்கு ஒப்புக் கொடுத்தது போல், தனது அதிகாரத்தையும் ஒப்புக் கொடுத்தான். இப்படி வழி வழியாக வந்த அதிகாரந்தான் காலக்கிரமத்தில் பரம்பரை அரசாங்கமாகப் பரிணமித்தது. அதாவது, பரம்பரை உரிமை யுடையவர்களே அரசாங்க உத்தியோகத்திற்குத் தகுதி யுடையவர்கள் என்ற நியமம் உண்டாயிற்று. பிரபுத்துவ ஆட்சியில் மூன்றுவகை உண்டு. முதலாவது, இயற்கையானது. இரண்டாவது, தெரிந்தெடுக்கப்படுவது, மூன்றா வது, பரம்பரையாக வந்துகொண்டிருப்பது. முதலாவது வகை, சாதாரண ஜாதியாருக்கும், அதாவது நாகரிக வளர்ச்சி பெறாதவர் களுக்கு ஏற்றது. மூன்றாவது வகை, மற்ற எல்லா ஆட்சி முறை களைக் காட்டிலும் மிகக் கேவலமானது. இரண்டாவது வகைதான் சிறந்தது. பிரபுத்துவ ஆட்சி என்று சொல்லப்படுவதற்குத் தகுதியுடை யது இந்த இரண்டாவது வகைதான். ஜன ஆட்சியில், எல்லா ஜனங்களும் அதிகாரிகள். ஆனால், பிரபுத்துவ ஆட்சியில் ஒரு சிலர்தான் அதிகாரிகள். இந்தச் சிலரும் பொது ஜனங்களால் தெரிந்தெடுக்கப் பட்டவர்களாயிருக்க வேண்டும். இவர்கள் நேர்மையுடையவர்களாகவும், திறமையுடைய வர்களாகவும், அநுபவசாலிகளாகவும் இருப்பார்கள். இப்படிப் பட்டவர்களுக்குத்தான் பொது ஜனங்கள் முக்கியத்துவமும் மதிப்பும் கொடுப்பார்கள். இவர்களால் நடத்தப்படுகிற நிருவாகம் புத்திசாலித்தனமுள்ளதா யிருக்கும் என்பது நிச்சயம். மற்றும், விவரமறியாதவர்களும், இழிவாகப் பேசப்படுபவர் களுமான சாதாரண ஜனங்கள் ஒன்று கூடுவதென்பது அசாத்தியம். அப்படிக் கூடினாலும் அவர்களால் எந்தப் பிரச்சினையையும் ஒழுங்காகப் பரிசீலனை செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வரமுடியாது. ஆனால், வயது முதிர்ந்த அநுபவசாலிகளான அறிஞர்கள் ஒன்று சேர்வது சுலபம். இவர்கள் எந்தப் பிரச்சினையையும் நன்றாகப் பரிசீலனை செய்து பார்ப்பார்கள். இவர்களுடைய நிருவாகத்தின் கீழ், ராஜ்யத்தின் மதிப்பும் அந்நியர்களின் மத்தியில் உயர்ந்திருக்கும். எனவே, பெரும்பாலோராயுள்ள ஜனங்களை, அறிஞர்களாயுள்ள சிலர் ஆள்வதுதான் சிறந்தது; இயற்கையானதுங் கூட. மற்றும், இந்த ஒரு சிலரும் தங்களுடைய சொந்த நலத்திற்காக அல்லாமல் பெரும் பாலோரான ஜனங்களுடைய நலத்திற்காகவே நிருவாகத்தை நடத்து வார்களானால் அது மிகவும் சிறப்புடையதல்லவா? பொறுக்கி யெடுத்த நூறு மனிதர்கள் திறமையாகச் செய்யக்கூடிய ஒரு வேலையை, இருபதினாயிரம் பேரைக்கொண்டு செய்ய வேண்டுமென்ற அவசிய மில்லையல்லவா? இந்த ஒரு சிலரும், பொது நலத்தை முன்னிட்டே தங்கள் அதிகாரத்தை உபயோகிப்பர். இவர்களுடைய நேர்மை யானது, சட்ட துஷ்பிரயோகத்திற்கு இடங் கொடுப்பதில்லை. ஜன ஆட்சியின் கீழ் என்னென்ன நன்மைகளை எதிர் பார்க்க லாமோ அதைவிடக் குறைவாகவே ஒரு பிரபுத்துவ ஆட்சியின் கீழ் எதிர்பார்க்கலாம் என்று சிலர் கூறக்கூடும். இது வாதவம். ஆனால் பிரபுத்துவ ஆட்சியினாலேயே அளிக்கப்படக்கூடிய சில நன்மை களும் உண்டு. ஒரு பிரபுத்துவ ஆட்சிதான், பணக்காரர்கள் பணஞ் சேகரிக்கிற விஷயத்தில் அவர்களை நிதானமுடையவர்களாயிருக்கச் செய்ய முடியும்; அப்படியே ஏழைகளையும் திருப்தி செய்விக்க முடியும். ஏழை யென்றும் பணக்காரனென்றும் வித்தியாசமே இருக்கக் கூடாதென்பது, பிரபுத்துவ ஆட்சியின் கீழ் சாத்திய மில்லை. Þgh®£lhÉnyna ïªj¢ rk¤Jt¤ij mEZo¡f KoaÉšiyna!1 பிரபுத்துவ ஆட்சியின் கீழ், ஏழை பணக்காரரென்ற வித்தி யாசம் இருப்பது நியாயம் என்று நாம் சாதிக்க வேண்டுமானால், யார், தங்களுடைய முழு நேரத்தையும் பொது விஷயங்களுக்காகச் செல வழிக்கத் தயாராயிருக்கிறார்களோ அப்படிப்பட்டவர்களிடம் அரசாங்க நிருவாகத்தை ஒப்புவிக்க வேண்டும். இப்படி ஒப்புவிக்க வேண்டு மென்பதை நாம் கண்டிப்பான ஒரு விதியாகக் கொள்ள வேண்டும். பணக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்க ளிடத்தில் அரசாங்க நிருவாகத்தை ஒப்புவிக்க வேண்டுமென்ற அரிடாட்டலின் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ளவே கூடாது. மனிதர்களுடைய யோக்கியதைகளை உத்தேசித்துத்தான் அவர்களிடத்தில் நிருவாகப் பொறுப்பை ஒப்புவிக்க வேண்டுமே தவிர, அவர்களுடைய பணத்தை உத்தேசித்தல்ல.2 25. மன்னராட்சி சட்டத்தின் சக்திகள் யாவும் எதனிடத்தில் திரண்டிருக்கின் றனவோ, எது, ராஜ்யத்தின் நிருவாக அதிகாரங்களனைத்திற்கும் சேமிப்பு தலமாயிருக்கிறதோ, அஃது, அரசாங்கம் என்ற ஒரு தொகுப்புப் பெயரைப் பெறுகிறது. இதற்குப் புருஷத்தன்மை கொடுத்து, இதனை ஒரு சீல புருஷனாகச் சொல்வதும் ஒரு சம்பிர தாயம். இந்த அரசாங்க அதிகார மானது, ஒரு தனி மனிதனிடத்தில், அதாவது ஒரு நிஜமான மனிதனிடத்தில் ஒப்புவிக்கப் பட்டிருக்கு மானால், அவன், அரசன் அல்லது மன்னன் என்ற பெயரால் அழைக் கப்படுகிறான். அவன்தான், சட்டங்களை அனுசரித்து ராஜ்யாதி காரத்தை உபயோகிக்கும் தகுதியுடையவன்; உரிமையுடையவன். வேறுவிதமான ஆட்சி முறையில், பல சக்திகளின் சேர்க்கை யானது, ஒரு தனி மனிதனுக்குப் பிரதிநிதியாயிருக்கிறது. ஆனால் இந்த மன்னராட்சி முறையில், ஒரு தனி மனிதன், பல சக்திகளின் சேர்க்கைக்குப் பிரதிநிதியாயிருக்கிறான். எனவே, என்னென்ன சக்திகள் சேர்ந்து ஓர் அரசாங்கத்தை அமைத்துக் கொடுக்கின்றவோ அதே சக்திகள் சேர்ந்து ஓர் அரசனையும் சிருஷ்டித்துக் கொடுக்கின்றன. அரசாங்கத்தில் ஐக்கியப் படுகிற தன்மைகள் யாவும், சட்டத்தினால் கொண்டு புகுத்தப்படுகின்றன. அரசனிடத்தில் ஐக்கியப்படுகிற தன்மைகள் யாவும் இயற்கையாகவே போய் அடைகின்றன. எனவே, ஜனசக்தி என்பதும், அதிகார வர்க்கத்தின் சக்திகள் என்பதும், ராஜ்ய சக்தி என்பதும், அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒரு சக்தி என்பதும், ஆகிய எல்லாம் ஒரே சமயத்தில் இயங்குகின்றன வென்றுசொன்னால், அஃது, இந்த அரசனுடைய தூண்டுகோலினால்தான். ஒரு யந்திரத்தி னுடைய விசைகளெல்லாம் எப்படி ஒரே இடத்திலிருந்து உண்டா கின்றனவோ, அப்படிப் போல, மேலே சொன்ன சக்திகள் யாவும் அரசன் என்ற ஒரே இடத்திலிருந்து உண்டாகின்றன. இந்தச் சக்திகள் யாவும், ஒரே நோக்கமுடையன; ஒரே நோக்கத்துடன்தான் இயங்கு கின்றன. மன்னராட்சியின் கீழ், மேலே சொன்ன சக்திகளில் எதுவும், மற்றொரு சக்திக்கு முரணாக இயங்குவதேயில்லை. குறைவான முயற்சியினால் அதிகமான பலனைப் பெறக்கூடியது இந்த மன்ன ராட்சி முறைதான். திறமையுள்ள ஓர் அரசன் எப்படி யிருக்கவேண்டு மென்பதற்கு ஓர் உபமானம் சொல்ல வேண்டுமானால், ஆர்க்கி மிடீ என்ற பிரபல கணித நிபுணனின் நினைவுதான் எனக்கு வருகிறது.1 அந்த ஆர்க்கிமிடீ, ஒரு கடற்கரையில் மௌனமாக உட்கார்ந்துகொண்டு, ஒரு கப்பலை எப்படி சமுத்திரத்தில் மிதக்க விட வேண்டுமென்று சித்திரமாக வரைந்து காட்டுவானோ, அந்தச் சித்திரத்தில் கண்ட முறைப்படி கப்பலை மிதக்க விட்டால் அஃது எப்படி ஓடுமோ, அதைப்போல் ஓர் அரசன், தனது அறையில் உட் கார்ந்த வண்ணம் மேலே சொன்ன சக்திகளனைத்தையும் இயக்கு விக்க வேண்டும். ஆனால் அவன் மட்டும் அசையக்கூடாது. இப்படித் தான் ராஜ்யபாரம் செய்ய வேண்டும். மற்ற ஆட்சி முறைகளைக் காட்டிலும், மன்னராட்சிதான் திடமுள்ள ஆட்சியா யிருக்கு மென்பதென்னவோ வாதவம். ஆனால், மற்ற ஆட்சி முறைகளைக் காட்டிலும், இந்த மன்னராட்சி முறையில்தான், குறிப்பிட்ட தொரு சக்தி அல்லது எண்ணம் அல்லது இச்சை, மற்றெல்லாச் சக்தி, எண்ணம், இச்சை முதலியவை களைக் காட்டிலும் அதிகமான வலுப் பெற்று நிற்கிறது; மற்றவை களின் மீது சுலபமாக ஆதிக்கம் செலுத்துகிறது. மேலே சொன்னபடி, எல்லாச் சக்திகளும், ஒரே நோக்கத்தை நாடிச் செல்கின்றனவென்பது உண்மையே. ஆனால், அந்த நோக்கம், பொதுஜன நன்மையாகத் தான் இருக்கவேண்டு மென்பதென்ன? அரசாங்கத்தின் நிருவாக அதிகாரமானது, ராஜ்ய நன்மைக்கு விரோதமாகச் செல்வதை நாம் பல சந்தர்ப்பங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோ மில்லையா? அரசர்கள் எப்பொழுதுமே தாங்கள் சுயேச்சையாக இருக்க வேண்டு மென்றுதான் விரும்புகிறார்கள். அதாவது, எவ்விதக் கட்டுப்பாடுகளு மின்றி, இஷ்டப்படி ஆளவே ஆசைப்படுகிறார்கள். ஜனங்களோ, தூர இருந்துகொண்டு, நீங்கள் தன்னரசாக ஆள வேண்டுமானால் அதற்குச் சிறந்த மார்க்கம், உங்களுடைய பிரஜை களாகிய எங்களுடைய விசுவாசத்தைப் பெறுவதுதான். என்று கூச்சல் போடுகிறார்கள். இப்படி இவர்கள் கூச்சல் போடுவதிருக் கிறதே, அதாவது பிரஜைகளின் அன்பை அரசர்கள் பெறவேண்டு மென்பது, அது நல்ல கோட்பாடுதான். அநேக சந்தர்ப்பங்களில் இஃது உண்மையாகவும் இருக்கிறது. ஆனால் இந்தக் கோட்பாடு அல்லது இந்த உண்மை, அரச சபைகளில் எப்பொழுதுமே பரிகசிக்கப்படுமல்லவா? ஜனங்களுடைய அன்பிலிருந்து உண்டாகிற அதிகார சக்தி யிருக்கிறதே அது மிகவும் சிறந்ததென்பதில் சந்தேக மில்லை. ஆனால் அது நிச்சயமற்ற தாயிற்றே? சில நிபந்தனைகளுக் குட்பட்ட தாயிற்றே? அரசர்கள் இதைக்கொண்டு திருப்தியடைவார் களா? மாட்டார்கள். திறமையான அரசர்கள் எப்பொழுதுமே, தங்கள் எஜமானத்துவத்திற்குப் பங்கம் நேரிடாமல், தாங்கள் விரும்புகிற போது, தீமை செய்யக்கூடிய ஆற்றல் அல்லது அதிகாரம் தங்களிடத்தில் இருக்கவேண்டுமென்றுதான் பார்ப்பார்கள். அரசியல் அறிஞர்கள், தங்கள் மனம் திருப்தியடையும் வரையில், அவர் களுக்கு, அந்த அரசர்களுக்கு, அநேக நல்லுபதேசங்களைச் செய்ய லாம். அதாவது, ஜனங்களுடைய பலந்தான் உங்களுடைய பலம்; ஜனங்கள் சௌக்கியமாகவும், செழிப்பாகவும், சக்தி பொருந்தியவர் களாகவும் இருக்கப் பார்ப்பதுதான் உங்களுடைய முதற்கடமை என்றெல்லாம் எடுத்துச் சொல்லலாம். ஆனால், அரசர்கள், இந்த உபதேசங்கள் யாவும், தங்களைப் பொறுத்த மட்டில் பொய் யென் பதை அறிவார்கள். ஜனங்கள், பலஹீனர்களாயும், தரித்திரர்களாயும், தங்களை (அரசர்களை) எதிர்க்குஞ் சக்தி யில்லாதவர் களாயும் இருப்பது தங்களுக்கு க்ஷேமம் என்று அரசர்கள் கருதுகிறார்கள். ஜனங்கள் எப்பொழுதும் தங்களுக்குக் கீழ் அடங்கி நடப்பார்க ளென்று தெரிந்தால், அவர்கள் பலசாலிகளா யிருப்பதில் அரசர் களுக்கு ஆட்சேபனையில்லை. ஏனென்றால் அப்பொழுது, ஜனங் களுடைய பலம் தங்களுடைய பலமாகிறது. இந்தப் பலத்தைக் கொண்டு, அந்நிய அரசர்களை இவர்கள் மிரட்டிக் கொண்டிருக்கலா மல்லவா? ஆனால் எந்த அரசனும் தன்னுடைய சுய அதிகாரத்தைத் தான் முதலில் கவனிப்பானே தவிர, ஜனங்களுடைய பலத்தை இரண்டாம் பட்சமாகத்தான் கவனிப்பான். தவிர, ஜனங்கள் பலசாலிகளாகி விட்டால் அவர்கள் அடங்கி நடப்பார் களென்பது என்ன நிச்சயம்? பலமும், அடங்கி நடக்கிற தன்மையும் முரண் பாடுடையனவல்லவா? எனவே, ஓர் அரசன், தனக்கு எது அதிகமான சாதகத்தைத் தரத்தக்க தென்பதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப் பான். இந்த உண்மையை ஸாமியல், யூதர்களுக்கு வலியுறுத்திக் கூறுகிறான்.1 மாக்கியவெல்லி1 என்பவன் இதைத் தெளிவுறக் காட்டியிருக் கிறான். அவன், அந்த மாக்கியவெல்லி, தனது நூலை, இளவரசன் என்ற பெயர் கொடுத்து எழுதினானே தவிர, உண்மையில், அது, குடியரசு வாதிகளுக்காகத்தான் எழுதப்பட்டது.2 பொதுவாகப் பார்த்தால், பெரிய ராஜ்யத்திற்கு மன்னராட்சி பொருந்துந்தான். ஆனால் இதிலும் அநேக சங்கடங்கள் இருக்கின்றன. எப்படி? ராஜ்யம் விசாலமா யிருந்தால், அரசாங்க நிருவாகத்தையும் விசாலிக்க வேண்டியிருக்கிறது. இந்த அரசாங்க நிருவாகம் எவ்வளவுக் கெவ்வளவு பெருகுகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு அதிகாரவர்க்கத் துக்கும் ஜனங்களுக்குமுள்ள தொடர்பு குறைந்து போகிறதென்பதை யும் ஏற்கெனவே தெரிந்து கொண்டிருக்கிறோம்.3 அப்படியிருக்க இந்த அதிகார வர்க்கத்தின் தன்மைகளெல்லாம் ஒரே மனிதனிடத்தில், அதாவது அரசனிடத்தில் சேர்ந்திருந்து, ராஜ்யமும் விதீரணமா யிருக்குமானால், அவனுக்கும் ஜனங்களுக்குமுள்ள தொடர்பு இன்னும் அதிகமாகத் தானே விலகிப்போகும்? இப்படி விலகிப் போகாம லிருக்கும் பொருட்டு அரசனானவன், என்ன செய்ய வேண்டியிருக்கிற தென்றால், தனக்கும் ஜனங்களுக்கும் மத்தியில் அநேக பதவிகளைச் சிருஷ்டிக்க வேண்டியிருக்கிறது; அநேக உத்தியோகதர்களை நியமிக்க வேண்டியிருக்கிறது. இவர்களால் ஜனங்களுக்கு என்ன சாதகங்கள் ஏற்படக் கூடுமென்பதைப்பற்றி நாம் சொல்லத் தேவையில்லை. மன்னராட்சி முறையில் மற்றொரு முக்கியமான குறையுண்டு. குடியரசு முறையோடு இந்த மன்னராட்சி முறையை ஒப்பிட்டுப் பார்க்கிற போதுதான், இந்தக் குறை பஷ்ட மாகத் தெரிகிறது. குடியரசு முறையின் கீழ், சிறந்த அறிஞர்கள், திறமை சாலிகள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பதவிகளை கௌரவத் தோடு வகிக்கக் கூடியவர்கள், ஆகிய இப்படிப் பட்டவர்களைத் தான், பொதுஜன அபிப்பிராயமானது, உயர் பதவிகளில் கொண்டு வைக்கிறது. ஆனால், மன்னராட்சியின்கீழ், சிறு விஷயங்களில் கூட தவறு செய்யக் கூடியவர்கள், வஞ்சகர்கள், சூழ்ச்சி செய்வதில் வல்லுநர் ஆகிய பலரும் மேல் பதவியை அடைந்து விடுகிறார்கள். இவர்கள் பதவியேற்றுக் கொண்டதுமே, இவர்களுடைய திறமையின்மை பொது ஜனங்களுக்குப் புலனாகிவிடுகிறது. சாதாரணமாக உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கிற விஷயத்தில், பொதுஜன அபிப்பிராயம் காட்டுகிற சாமர்த்தியத்தைக் காட்டிலும் அரசன் காட்டுகிற சாமர்த்தியம் குறைவாகவே இருக்கிறது. குடியரசு அரசாங்கத்திற்குத் தலைவனாக ஒரு முட்டாள் இருப்பது எப்படி அரிதோ அப்படியே, ஓர் அரசனுடைய மந்திரிகளில் யோக்கியதை யுள்ளவனை, பதவிக்குத் தகுந்தவனைக் காண்பது அரிது. அப்படி யோக்கியதையும் திறமையுமுள்ள ஒருவன், மன்னராட்சியில் உயர் பதவியை ஏற்றுக்கொள்ளுவானாகில், அவன் தன்கீழ், உபயோகிக்கப் படாத சக்திகள் எவ்வளவு இருக்கின்றன வென்பதைப் பார்த்துப் பிரமித்துப்போவான்; அவற்றை உபயோகத்துக்குக் கொண்டுவரு வான். அவன் பதவி ஏற்றுக்கொண்டது, அந்தத் தேச சரித்திரத்தில் ஒரு புதிய ஏடு திறக்கப்பட்டது போலாகிறது. ஓர் அரசன், தன் ராஜ்யத்தை நன்றாக ஆள்கிறானென்று சொன்னால், அஃது அவனுடைய திறமையைப் பொறுத்திருக்கிறது. பிரதியோர் அரசனும், தனது திறமைக்குத் தக்கபடி தனது ராஜ்யத்தின் விதீரணம், ஜனத்தொகை முதலியவற்றை வரையறுத்துக்கொள்ள வேண்டும். ஒரு தேசத்தை வெற்றிகொள்வது சுலபம். ஆனால் அதனை ஆள்வது கடினம். விசையழுத்தும் கருவியின் துணைகொண்டு, ஒரு விரலினாலேயே உலகத்தை நகர்த்தி விடலாம். ஆனால் அதனைத் தூக்கித் தாங்கிக் கொள்வதற்கு, ஹெர்க்குலீஸின் தோள்பலம் வேண்டும்.1 ஒரு நாடு எவ்வளவு சிறியதாயிருந்தாலும் அதைவிடச் சிறியவனாகவே அதன் அரசன் இருக்கிறான். அதாவது நாட்டின் சிறுமையைவிட, அரசனுடைய திறமை குறைவாக இருக்கிறது. ஏதோ ஏகதேசமாக ஓர் அரசனுடைய திறமை, அவனுடைய நாட்டைக் காட்டிலும் பெரிதா யிருக்குமானால், அப்படி இருப்பது மிகவும் அபூர்வம். அப்பொழுது, அந்த நாடு நன் முறையில் ஆளப் படமாட்டாது. ஏனென்றால், அரசன் திறமையுள்ளவனா யிருந்தால் அவன் சுயநலத்தைத்தான் கவனிப்பானே தவிர, ஜனங் களுடைய நன்மையை நாடமாட்டான். திறமையில்லாத ஓர் அரசன் கீழ் எப்படி சந்தோஷமாய் ஜனங்கள் இருக்க முடியாதோ அப்படியே திறமை யுள்ள ஓர் அரசன் கீழும் ஜனங்கள் சந்தோஷமாய் இருக்க முடியாது. எப்படி யென்றால், திறமையில்லாத அரசனும், திறமையைத் துஷ்பிரயோகம் செய்கிற அரசனும், ஜனங்களுடைய சந்தோஷத்தைப் பொறுத்த மட்டில் ஒன்றுதானே. இதனால் என்ன ஏற்படுகிறதென்றால், ஒவ்வோர் அரசனுடைய காலத்திலும் அவனவனுடைய திறமைக்குத் தகுந்தாற் போல் ராஜ்யமானது குறுகவாவது வேண்டும்; பெருகவாவது வேண்டும். ஆனால், ராஜ்ய நிருவாகமானது, திறமையும் அநுபவமும் நிறைந்த ஒருசிலரடங்கிய சபையினிடத்தில் இருக்குமானால், அப்பொழுது அந்த ராஜ்யத்தின் எல்லை ஒரேமாதிரியாக இருக்கும். அதனைப் பெருக்கவும் குறுக்கவும் அவசியம் ஏற்படாது. மன்னராட்சியில் மற்றொரு விதமான பாதகம் இருக்கிறது. அதாவது ஆட்சி முறையில் ஒரு தொடர்ச்சியைக் காணமுடியாது. ஜன ஆட்சியிலா கட்டும், பிரபுத்துவ ஆட்சியிலாகட்டும், நிருவாகத் தில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. அப்படி யிருப்பது சகஜம். ஆனால் மன்னராட்சியில் இந்தத் தொடர்ச்சி விட்டுவிட்டுப்போக ஏது இருக்கிறது. ஓர் அரசன் இறந்து விட்டால், அவனுடைய தானத்தில் வேறோர் அரசன் தேவையாயிருக் கிறது. பிரதியோர் அரசனையும் ஜனங்கள் தெரிந்தெடுக்க வேண்டு மென்னும் நியதியை அநுஷ்டிப்போ மானால் ஓர் அரசன் இறந்த பின்னரும், மற்றோர் அரசன் தெரிந் தெடுக்கப்படுவதற்கு முன்னரும் உள்ள இடைக்காலத்தில் குழப்பங் களும் கலகங்களும் ஏற்படக்கூடும். இந்த இடைக்காலம், ஜனங் களுக்கு ஆபத்தான காலம். இதில் தேர்தலும் வந்துவிட்டால், பெரிய புயற்காற்று வந்துவிட்ட மாதிரிதான். ஜனங்கள் மகா பரிசுத்தவான் களாயிருந்தாலொழிய, - ஆனால் மன்னராட்சியின் கீழ் ஜனங்கள் பரிசுத்தவான்களா யிருக்க முடியுமா? - இந்த இடைக் காலத்தில் சூழ்ச்சிகளும், பலவித ஒழுக்க ஹீனங்களும் நிறைந்து விடுகின்றன. பண பலமுள்ளவன், தன் பணத்தினால் மற்றவர்களை விலைக்கு வாங்கி, அவர்களுடைய ஆதரவு பெற்று அரசனாகிறான். இப்படி அரசனாக வருகிறவன், தன்னுடைய ஆட்சிக்காலத்தில், அரசபதவிக் காக, தான் செலவழித்த பணத்தைத் திரும்பவும் சம்பாதித்துக் கொள்ளப்பார்க்கிறான். இதனால், பலஹீனர்களாயுள்ளவர்கள் அதாவது ஏழை மக்கள், இம்சிக்கப்படுகிறார்கள். எனவே, புதிய அரசனுடைய ஆட்சி தொடங்கிய காலத்திலிருந்து, நிருவாகத்தின் ஒவ்வோர் அமிசத்திலும், இந்த விலைகொடுத்து வாங்குகிற பழக்கம், அதாவது லஞ்சப் பழக்கம் புகுந்து விடுகிறது. இதனால் மேலே சொல்லப்பட்ட இடைக்காலத்துக் குழப்ப நிலைமையைக் காட்டி லும், அரசன் கீழுள்ள சமாதான நிலைமை மிகவும் கேவலமாயிருக்கிறது. இப்படிப்பட்ட தீமைகள் நேரிடாவண்ணம் என்ன செய்யப் பட்டிருக் கின்றன? ஓர் அரசன் இறந்த பிறகு அவனுடைய இடத் திற்கு யார் வருவது என்பதைப் பற்றிய தகராறு ஏற்படக் கூடாதென்ப தற்காக, அரச பரம்பரை ஏற்பட்டது. அதாவது, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தந்தைக்குப் பிறகு மகன் என்ற முறையில் முடி சூட்டிக் கொள்ளவேண்டுமென்ற நியதி ஏற்படுத்தப்பட்டது. இதனுடைய பரிணாமம் என்னவாகிற தென்றால், புத்திசாலித்தனமான நிருவாகத்திற்குப் பதில் அமைதியான நிருவாகம் ஏற்படுகிறது. ஜனங்கள், நல்ல அரசர்களைப் பொறுக்கியெடுக்கிற சங்கடமான நிலையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, விவரமறியாத குழந்தை களோ, அல்லது ராட்சதப் பிண்டங்களோ, அல்லது ஒன்றுக்கும் உதவாத பேடிகளோ, அரசர்களாகும்படியான நிலைமையை ஏற் படுத்தி விடுகிறார்கள். இப்படிச் செய்வதனால், ஜனங்கள், தங்களுக்கு விரோதமான சக்திகளையெல்லாம் தாங்களே ஒன்று திரட்டி, தங்களுக் கெதிராக நிறுத்திக் கொள்கிற மாதிரியாகிறது. எவனொருவன் சிறு வயதிலிருந்தே, மற்றவர்களை ஆள்வதற் காக வென்றே பயிற்சி செய்விக்கப்படுகிறானோ, அவனிடத்தில் நியாய புத்தியும், விஷயங்களைப் பாகுபடுத்திப் பார்க்கிற சக்தியும் இல்லாமலே போய்விடுகிறது. அரசிளங் குமரர்களுக்கு ஆளும் பயிற்சி இளமையி லிருந்தே போதிக்கப்படுகிற தென்றும், இதற்காக அதிக சிரமம் எடுத்துக் கொள்ளப்படுகிறதென்றும் சொல்லப்படு கின்றன. ஆனால், இந்தப் பயிற்சியினால் அவர்களுக்கு எந்தவிதமான நன்மையும் உண்டான தாகத் தெரியவில்லை. ஆளும் விதத்தைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்குப் பதிலாக, மற்றவர் களுக்கு அடங்கிநடக்கும் பயிற்சியை அவர்களுக்கு அளித்தல் நல்லது. சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற பேரரசர்கள் பலரும், பால்யத்தில் ஆளும் பயிற்சியைப் பெற்றதாகத் தெரியவில்லை. ஆளும் கலையை யாரொருவர் அதிகம் பயிலுகிறார்களோ அவர்க ளிடத்தில் அந்தக் கலை அதிகமாகத் தங்கி நிற்பதில்லை. அதிகாரஞ் செலுத்துவதைக் காட்டிலும் அடங்கி நடப்பதில்தான் ஒருவன் இந்தக் கலையை அதிகமாகப் பயிலுகிறான். நன்மையிது, தீமையிது என்று பாகுபடுத்திப் பார்ப்பதற்குச் சுலபமான வழியென்ன வென்றால், வேறோர் அரசனின்கீழ் நீ பிரஜையாயிருந்தால், அந்த அரசனுடைய செயல்களில் எதை நீ அங்கீகரித்திருப்பாய், எதை நிராகரித்திருப்பாய் என்று பார்க்க வேண்டும் என்று அரசர்களுக்கு உபதேசிக்கப்பட்ட வாசகம் இங்குக் கூர்ந்து கவனிக்கத்தக்கது. மன்னராட்சியில், மன்னருக்கும் பிரஜைகளுக்கும் நேர்முக மான தொடர்பு இருக்க முடிவதில்லையாகையால், மன்னராட்சி யின் கீழுள்ள அதிகார வர்க்கத்தினர் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரும் எந்த ஒரு திட்டத்திலும் ஒருவிதத் திடமின்மை காணப்படு கிறது. அவ்வப்பொழுது ஆளுகையிலிருக்கும் அரசருடைய நோக்கப்படியே காரியங்கள் நடைபெற வேண்டியிருக்கின்றன. அதிகார வர்க்கமும், அந்த நோக்கத்திற்கிசைந்தாற் போலவே காரியங்களை நடத்த வேண்டியிருக்கிறது. சாதாரணமாகவே, அரசர்கள், அந்த அரசர்களின் கீழுள்ள அதிகார வர்க்கத்தினர், ஆகிய இவர்களுடைய எண்ணப் போக்கு, தங்களுக்கு முந்தியிருந்தவர்கள் செய்த காரியங்களை மாற்றி யமைக்க வேண்டு மென்பதில்தான் செல்கிறது. இதனால் ஒரு திட்டத்தைத் தொடர்ந்தாற் போல் செயலில் கொணர்வது என்பது மன்னராட்சியின் கீழ் முடியாமற் போகிறது. ஆனால் குடியரசின் கீழ் இது சாத்தியமாகிறது. மன்னராட்சியின் கீழ் சம்பந்தா சம்பந்தமில்லாமலே, அதாவது ஒருவிதத் தொடர்புமில்லாமலே காரியங்கள் நடைபெறு கின்றன வென்று மேலே நாம் நிரூபித்திருக்கிறோமல்லவா, இந்த நிரூபணம் ஒன்றே மன்னராட்சியை ஆதரித்து எழுதுகிறவர்களுடைய கட்சிக்குச் சரியான விடையாகும். சமுதாய நிருவாகமானது, குடும்ப நிருவாகத்தைப் போன்றதே யென்றும், குடும்பத்திற்குத் தலைவனாக எப்படி ஒரு தகப்பன் இருக்கிறானோ, அப்படிப்போல சமுதாயத் திற்குத் தலைவனாக ஓர் அரசன் இருக்கிறானென்றும் இவர்கள் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இந்தப் பொருத்தம் சரியானதல்ல வென்று முன்னரேயே மறுக்கப்பட்டிருக்கிறது. தவிர, இவர்கள், ஓர் அரசனிடத்தில் என்னென்ன நற்குணங்கள் இருக்கவேண்டுமோ அவைகளெல்லாம் அவனிடத்தில் இருப்பதாகவும், அவன் எப்படிப் பட்டவனா யிருக்க வேண்டுமோ அப்படிப் பட்டவனாகவே இருப்பதாகவும் பாவித்துப் பேசுகிறார்கள். இவர்களுடைய இந்தப் பாவனையைச், சத்தியப் பிரமாணமாக நாம் எடுத்துக் கொண்டு விட்டோமானால், மன்னராட்சிதான் சிறந்ததென்ற முடிவுக்கு வரு வோம். ஆனால், பிளேட்டோ கூறுவதுபோல், அரசத் தன்மையைச் சுபாவத்திலேயே கொண்டுள்ள அரசன் ஒருவனைக் காண்பது அரிது. அப்படியிருக்க, இயற்கையும், அதிருஷ்டமும் சேர்ந்து, எத்தனை அரசர்களைச் சிருஷ்டித்துக் கொடுக்க முடியும்? ஆளும் பயிற்சியைப் பெறுகிறவர்களே, அரசர்களாக வந்த பிறகு ஒழுக்க ஹீனர்களாகப் போய்விடுகிறார்களென்று சொன்னால், சாதாரண மனிதர்களை ஆளும்படி வரிசைக் கிரமமாக நியமித்தோமானால் அவர்களிடமிருந்து என்ன நன்மையை எதிர்பார்க்க முடியும்? எனவே, நல்ல அரசர்களுடைய தலைமையின் கீழ் நடைபெறும் அரசாங்கங்களோடு, பொதுவாக மன்னராட்சி முறையைப் போட்டுக் குழப்பக்கூடாது. அதாவது, மன்னராட்சியின் கீழ் வரும் எல்லா அரசர்களும் நல்லவர்களா யிருப்பார் களென்று நிர்ணயப் படுத்திக்கொள்ள முடியாதல்லவா? மன்னராட்சி முறையின் நிஜமான தன்மையை நாம் பார்க்கவேண்டுமானால், திறமை யின்மையும் கொடுங்கோன்மையும் நிறைந்த அரசர்களின் கீழுள்ள ஆட்சி முறைகளில்தான் பார்க்கவேண்டும். ஒன்று, திறமையற்றவர்களும் கொடுங்கோன்மைச் சுபாவம் வாய்ந்தவர்களுமாவது அரச பதவியை ஏற்றுக் கொள்கிறார்கள்; அல்லது, அரச பதவியானது அவர்களைத் திறமையற்றவர்களாகவும் கொடுங்கோலர்களாகவுமாவது ஆக்கி விடுகிறது. மன்னராட்சியை ஆதரித்துப் பேசுகிறவர்கள், இந்த மாதிரி யான சங்கடங்களையெல்லாம் எதிர்பாராமலில்லை. ஆனால் இந்தச் சங்கட நிலைமையைச் சமாளிப்பதற்கு அவர்கள் எவ்வித கவலையும் பட்டதாகத் தெரியவில்லை. அவர்களுடைய பரிகார மெல்லாம் என்னவென்றால், கொடுங்கோலனான ஒருவன் ஆளும் படியாக நேரிட்டுவிட்டால், மௌனமாக அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்பதுதான். கடவுள் கோபமாயிருக்கிற சமயத்தில் கொடுங்கோல் மன்னர்களைச் சிருஷ்டித்து அனுப்புகிறாரென்றும், எனவே, தெய்வத்தினா லருளப்பட்ட துன்பம் என்று இவர்களுடைய ஆட்சியைச் சகித்துக்கொண்டு போகவேண்டுமென்றும் அவர்கள் சமாதானங் கூறுகிறார்கள். இப்படி யெல்லாம் அவர்கள் பேசுவது நன்றாகத்தானிருக்கிறது; ஞானோபதேசம் செய்கிற மாதிரியாகவும் இருக்கிறது. ஆனால், நன்றாகப் பேசுவதற்கும், ஞானோபதேசம் செய்வதற்கும் ஏற்ற இடம் தேவாலயத்திலுள்ள பிரசங்க மேடையே தவிர, அரசியல் நூல் அல்ல. வியாதியதனை சொதப்படுத்தச் சொல்லி ஒரு வைத்தியனை அழைத்துக் கொண்டு வருகிறோம். அந்த வைத்தியன், நோயாளிக்கு மருந்து கொடுத்து அவனைக் குணப் படுத்துவதை விடுத்து நான் அற்புதங்கள் பல செய்வேன் என்று சொல்லிக் கொண்டுவந்து, நோயாளியைப் பார்த்து, பொறுத்துக் கொள், அப்பா, பொறுத்துக்கொள் என்று கூறுவானாகில், அந்த வைத்தியனைப்பற்றி நாம் என்ன நினைப்பது? கொடுங்கோ லரசாங்கத்தின்கீழ் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறபோது, அதனைச் சகித்துக்கொண்டு போகவேண்டு மென்பது நமக்கே தெரியுமே; பிறர் சொல்லித் தெரிய வேண்டிய தில்லையே. இந்தக் கொடுங்கோ லாட்சிக்குப் பதில் நல்ல அரசாட்சியை எப்படி அமைப்பது என்ப தல்லவோ நாம் கவனிக்கவேண்டிய பிரச்சினை. 26. கலப்பு அரசாங்கங்கள் சரியாகச் சொல்லப்போனால், எளிய அரசாங்கமென்பது, அதாவது எவ்விதச் சிக்கல்களும் இல்லாமல் ஒருவனைக் கொண்டு மட்டுமே நடைபெறுகிற அரசாங்க மென்பது இல்லவேயில்லை. அரசன் ஒருவனாயிருந்தால், அவனுக்குக் கீழ் அநேக உத்தியோ கதர்கள் தேவையா யிருக்கிறது. பொதுஜன அரசாங்கமா யிருந்தால், அதற்கு ஒரு தலைவன் வேண்டியிருக்கிறது. எனவே, நிருவாக அதிகாரத்தை நாம் பகிர்ந்து விநியோகிக்கிறபோது, கீழ்த்தர உத்தியோகதர்கள் பலராகவும், மேல்தர உத்தியோகதர்கள் சிலராகவும், உத்தியோகங்களைத் தரவாரி யாகப் பிரிக்க வேண்டி யிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில், சிறுபான்மை யோராயுள்ள மேல் தர உத்தியோகதர்கள், பெரும்பான்மையோரான கீழ்த்தர உத்தி யோகதர்களையும், வேறு சந்தர்ப்பங்களில் பெரும்பான்மை யோரா யுள்ள கீழ்த்தர உத்தியோகதர்கள், சிறுபான்மையோரான மேல்தர உத்தியோகதர்களையும் பரபரம் சார்ந்தாற்போலிருந்து கொண்டு நிருவாகத்தை நடத்த வேண்டியிருக்கிறது. சில அரசாங் கங்களில் இந்த மேல்தர உத்தியோகங்களும் கீழ்த்தர உத்தியோகங் களும் சமவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட அரசாங்கங்களில் உத்தியோகதர்கள் பரபர ஆதரவு பெற்று நிருவாகத்தை நடத்துகிறார்கள். இது நிற்க, மேலே சொல்லப்பட்ட எளிய அரசாங்கமுறை நல்லதா? அல்லது, ஒவ்வோர் ஆட்சி முறை யிலும் ஒவ்வோர் அமிசமாக எடுத்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்த அரசாங்க முறை நல்லதா? இதைப்பற்றி அறிஞர்களுக்குள் பலவித அபிப்பிராய வேற்றுமைகள் இருந்துவருகின்றன. ஆனால் பொதுவாகச் சொல்லப்போனால் ஒவ்வோர் அரசாங்க முறையிலும் ஒவ்வொருவிதமான குறையிருக்கிறது. எளிய அரசாங்க மென்பது, எளிமையா யிருக்கிறதென்ற காரணத்தினால் நல்லதுதான். ஆனால் அரசுக்கும் அரசாங்கத்திற்குமுள்ள தொடர்பைக் காட்டிலும், அரசாங்கத் திற்கும் பிரஜைகளுக்குமுள்ள தொடர்பு குறைவா யிருக்கும்போது, நிருவாக அதிகாரத்தைச் சமபாகமாகப் பிரித்து விட்டால், யாரும், பிரஜைகளின் மீது அதிகமான ஆதிக்கம் செலுத்த முடியாது; அப்படியே, அரசுக்கு விரோதமாக யாரும் நடந்து கொள்ள முடியாது. வேறொரு முறை என்னவென்றால், சில விசேஷ அதிகாரி களை நியமித்து அரசாங்கமும் பிரஜைகளும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு நடந்து கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளச் செய்ய லாம். இந்த மாதிரியான நிலைமையில், அரசாங்கமானது நிதான மாகவே நடந்து கொள்ள ஏதுவுண்டாகிறது. இதற்கு மாறாக, அரசாங்கமானது, கண்டிப்பில்லாமல் நடந்து கொள்ளத் தொடங்கு மானால், அதற்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்க, சில விசேஷ விசாரணை சபைகளை நியமிக்கலாம். எல்லா ஜனஆட்சி நாடுகளி லும் இந்த முறை கையாளப்படுகிறது. பொதுவாக, எளிய அரசாங்க முறைகளில் அதிகமான பலமோ அல்லது அதிகமான பலஹீனமோ காணப்படுகிறது. கலப்பு அரசாங்கங்கள் ஒரே நிதான பலமுள்ளவை களாக இருக்கின்றன. 27. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான ஆட்சி முறை ஏற்றது சுதந்திரம் என்கிற பழமானது எல்லாச் சீதோஷ்ண திதி களிலும் உண்டாவதில்லை. இதனால் இதனை எல்லா ஜாதியினரும் அடைய முடியாது. மாண்டெகு என்ற அறிஞனால் நிர்ணயித்துச் சொல்லப்படுகிற இந்தச் சித்தாந்தத்தை நாம் எவ்வளவுக் கெவ்வளவு ஊன்றிப் பார்க்கிறோமோ அவ்வளவுக் கவ்வளவு இதன் உண்மை நன்றாகப் புலனாகிறது. இதற்கு மறுப்புகள் ஏற்பட ஏற்பட, இந்தச் சித்தாந்தத்தின் உண்மை இன்னும் அதிகமாக ஊர்ஜிதமடைகிறது. உலகத்திலுள்ள எல்லாவித ஆட்சிமுறைகளின் கீழும், சமுதாய புருஷன் (அதாவது சமுதாயம்) பொருள்களை உட்கொள்கிறானே தவிர, புதியதாக உண்டாக்குவதில்லை. இங்ஙனம் உட்கொள்கிற பொருள்கள் அவனுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன? சமுதாயத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களுடைய உழைப்பிலிருந்து. தனிப்பட்டவர்கள் உபயோகித்து மிஞ்சிப்போகிற பொருள்கனைத்தும், சமுதாயத்தின் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. எனவே, ஒரு சமுதாயத்தின் அங்கத்தினர்கள், தங்களுடைய தேவைக்கு மிஞ்சின பொருள்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிற வரையில்தான் அந்தச் சமுதாய அரசாங்கம் ஜீவித்திருக்க முடியுமென்பது பெறப்படுகிறது. ஆனால், உலகத்திலுள்ள எல்லா நாடுகளிலும் இங்ஙனம் தேவைக்கு மிஞ்சின பொருள்கள் உற்பத்தியாவது ஒரே மாதிரி யில்லை. சில நாடுகளில் அதிகமாகவும், இன்னுஞ் சில நாடுகளில் சுமாராகவும், வேறு சில நாடுகளில் குறைவாகவும், இப்படிப் பல விதமாக உற்பத்தியாகின்றன. சீதோஷ்ண திதி, பூமியின் செழிப்பு, எந்த மாதிரியான பொருள்களை உற்பத்தி செய்யமுடியுமென்பது, ஜனங்களுடைய தேக பலம், அவர்கள் எவ்வளவு பொருள்களை உபயோகிக்கிறார்களென்பது, இன்னும் இவை போன்ற பல விஷயங்களைப் பொறுத்திருக்கின்றது இந்த உற்பத்தி விகிதாசாரம். இதே பிரகாரம் எல்லா ஆட்சிமுறைகளும் ஒரே தன்மை யுடையனவாயில்லை. சில ஆட்சிமுறைகளில் வீண் செலவுகள் அதிக மாக ஏற்படக் கூடியனவா யிருக்கின்றன. ஜனங்கள் செலுத்துகிற வரிப்பணத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலுள்ள தொலைவு எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாயிருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு ஜனங்களுடைய வரிச்சுமை அதிகமாகிறது. இந்த வரிச்சுமையை, தொகையின் அளவைக்கொண்டு, அதாவது எவ்வளவு தொகை, வரியாக விதிக்கப்படுகிற தென்பதைக் கொண்டு, நிதானிக்கக் கூடாது. இந்த வரிப்பணமானது எந்தெந்த வழிகளைச் சுற்றிக் கொண்டு, செலுத்து கிறவர்களிடம் திரும்பி வந்தடைகிற தென்பதைக் கொண்டுதான் நிதானிக்கவேண்டும். இந்தச் சுற்றுப்பிரயாணம் ஒழுங்காகவும் துரிதமாகவும் நடைபெறுமானால், அப்பொழுது குறைவான வரி செலுத்தப் படுகிறதா அல்லது அதிகமான வரி செலுத்தப்படுகிறதா என்பதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், வரி செலுத்து கிறவர்களுடைய வரிப்பணமானது, அவர்களிடமே ஒழுங்காகவும் துரிதமாகவும் திரும்பி வந்து விடுமானால் ஜனங்கள் எப்பொழுதுமே பணக்காரர் களாயிருக்கும்படியான நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. தேசத்தின் பண நிலைமை திருப்திகரமாயிருக்கிறது. அப்படிக்கில்லாமல் ஜனங்கள் கொடுப்பது சொற்பமாயிருந்து அந்தச் சொற்பமும் அவர் களுக்குத் திரும்பி வராவிட்டால், அந்த ஜனங்கள் சீக்கிரத்தில் ஏழைகளாகி விடுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் கொடுத்துக் கொண்டே யிருக் கிறார்கள்; ஆனால் திரும்பப் பெறுவதொன்று மில்லை. அப்படிப்பட்ட ஜனங்கள் பிச்சைக்கார ஜனங்களாகத் தானே இருக்க முடியும்? இதனால் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய தென்னவென் றால், ஜனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வளவுக் கெவ்வளவு தூரம் அதிகமாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு ஜனங்களுடைய வரிச் சுமையும் அதிகமாகிறது என்பது தான். ஜன ஆட்சி நாடுகளில் ஜனங் களுடைய வரிச்சுமை குறைகிறது; பிரபுத்துவ ஆட்சி நாடுகளில் வரிச்சுமை அதிகமாகிறது; மன்னராட்சி நாடுகளில் இந்த வரிச்சுமை யானது மிகமிக அதிகமாகிறது. எனவே, பணக்கார நாடுகளுக்கு மன்னராட்சியும், விதீரணத்திலும் செல்வ நிலையிலும் மத்திய தரமாயுள்ள நாடுகளுக்கு பிரபுத்துவ ஆட்சியும், சிறியதும் ஏழ்மை நிலையிலுள்ளதுமான நாடுளுக்கு ஜன ஆட்சியும் முறையே ஏற்றதாகு மென்பது பெறப்படுகிறது. சுதந்திர நாடுகளில், அதாவது ஜன ஆட்சி நாடுகளில், எல்லாம் பொது நலத்திற்காகவே உபயோகப் படுத்தப்படுகின்றன. ஆனால் மன்னராட்சி நாடுகளில், பொது நலம் வேறாகவும், தனிப்பட்டவர்களுடைய நலம் வேறாகவும் உபயோகிக் கப்படுகின்றன. ஒன்று வலுவிழந்தால் மற்றொன்று வலுவடைகிறது. அதாவது ஜனங்கள், அதிகமான வரி செலுத்திச் செலுத்தி வலு விழந்துபோக, அதற்கு நேராக அரசாங்கமானது வரிப்பணத்தைப் பெற்றுப் பெற்று வலுவடைகிறது. ஆகவே, சுயேச்சாதிகாரத்தின் தன்மை என்ன? ஜனங்களுடைய சௌக்கியத்திற்காக அவர்களை ஆள்வது போய், அவர்களை ஆளும்பொருட்டு அவர்களைக் கேவலமான நிலைமையில் வைத்திருக்கிறது.1 ஒரு நாட்டின் சீதோஷ்ண திதியைப் பொறுத்து அந்த நாட்டின் ஆட்சிமுறை இருக்க வேண்டுமென்பதைப் பற்றியும், ஒரு நாட்டில் எந்த மாதிரியான ஜனங்கள் வசிக்க வேண்டுமென்பதைப் பற்றியும் சிறிது கூறுகிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் பலன் தராத வறண்ட பிரதேசங்களிருக்கின்றனவல்லவா அவை களைச் சாகுபடிக்குத் தகுதியில்லாத பிரதேசங்களாகவே ஒதுக்கிவிட வேண்டும்; அல்லது அந்தப் பிரதேசங்களில் காட்டுமிராண்டிகள் வசிக்கலாம். ஜனங்களுக்கு என்ன தேவையோ அதைமட்டும் உற்பத்தி செய்துகொடுக்கிற நிலப்பிரதேசங்களில் அநாகரிக ஜாதியார் வசிக்க லாம். இவர்களிடத்தில் அரசியலைக் கொண்டு புகுத்துவதென்பது அசாத்தியம். உழைப்புக்கு மிஞ்சின பலனைக் கொடுக்கக் கூடிய பிரதேசங்கள்தான், சுதந்திர ஜாதியினர் வசிப்பதற்குத் தகுதியான இடம். குறைந்த உழைப்பின்மூலம் அதிக பலன் எந்தப் பிரதேசங் களில் உண்டாகிறதோ, அந்தப் பிரதேசங் களில் வசிக்கும் ஜனங்கள் மன்னராட்சி முறையின்கீழ் தாங்கள் ஆளப்படு வதற்குச் சம்மதப்படு கிறார்கள். இந்த ஆட்சி முறையின்கீழ் வாழும் பிரஜைகளின் தேவைக்கு மிஞ்சின பொருள்கள், அரசனின் ஆடம்பர வாழ்க்கையி னால் விழுங்கப்படுகின்றன. ஆனால் இஃதொரு விதத்தில் நல்லது தான். எப்படியென்றால், இந்த மிஞ்சின பொருள்கள், தனிப்பட்ட நபர்கள் சிலரால் வீணாகச் செலவழிக்கப்படுவதைக் காட்டிலும், அரசாங்கத்தினால் விழுங்கப்படுவது நல்லதல்லவா? இதற்குப் புறநடையாகச் சில அரசாங்கங்கள் இருக்கின்றனவென்பதை நான் அறிவேன். ஆனால் புறநடையாக ஓரிரண்டு அரசாங்கங்கள் இருப் பதனாலேயே, பொதுவாக எல்லா அரசாங்கங்களும் மேலே சொன்னமாதிரி இருக்கின்றன வென்பது ஏற்படுகிறதில்லையா? இந்த மாதிரியான அரசாங்கங்களில் புரட்சி உண்டாகி, பின்னர் சமுதாய அமைப்பானது ஒழுங்கான நிலைமைக்கு வருகிறது. பொதுவான சில விதிகளை வகுத்து, அந்த விதிகளினால் இன்ன பலன் உண்டாகு மென்று நிர்ணயித்து விடுகிறோம். வாதவம். ஆனால், இந்தப் பலன்கள், குறிப்பிட்ட சில விசேஷ காரணங்களி னால் மாறிவிடலா மல்லவா? உதாரணமாக, பூமியில் தெற்குப் பாகத் திலுள்ள நாடு களெல்லாம் குடியரசு நாடுகளாகவும். வடக்கேயுள்ள நாடுகளெல்லாம் சுயேச்சாதிகார நாடுகளாகவும் இருக்கின்றன வென்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் சீதோஷ்ண திதியைப் பொறுத்தமட்டில், உஷ்ணப் பிரதேசங்களுக்குச் சுயேச்சாதிகார முறை தகுதியுடைய தென்றும், குளிர்ப்பிரதேசங் களுக்கு அநாகரிக ஆட்சிமுறை சிறந்த தென்றும், சம சீதோஷ்ணப் பிரதேசங்களுக்கு நியாயமான ஓர் அரசியல் முறை சரியானதென்றும் நாம் சித்தாந்தப்படுத்திக்கொண்டு விடுவதா? இந்தச் சித்தாந்தம் சரியாக இருக்கலாம். ஆனால் இதனை அநுஷ்டித்துப் பார்க்கிற போது, பல வேற்றுமைகள் தோன்றக்கூடுமல்லவா? அநுஷ்டானத்தில் கொண்டு வருவதற்கு முன்னர், உழைப்பு, உற்பத்திச் சக்தி, ஜனங்களின் உபயோக சக்தி முதலிய அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டும். விதீரணத்தில் ஒரேமாதிரியாகவுள்ள இரண்டு ஜில்லாக் களை எடுத்துக் கொள்வோம். ஒரு ஜில்லாவில் பத்து கலம் நெல் விளைந்தால் மற்றொரு ஜில்லாவில் ஐந்து கலம் நெல்லே விளை கிறது. ஐந்து கலம் விளைகிற ஜில்லாவில் வசிப்போர் நான்கு கலம் நெல்லையும், பத்து கலம் விளைகிற ஜில்லாவில் வசிப்போர் ஒன்பது கலம் நெல்லையும் முறையே தங்கள் தேவைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள். அப்படி யானால், ஐந்து கலம் விளைகிற ஜில்லா வில், ஜனங்களின் தேவை போக மிஞ்சுகிற பொருள் எவ்வளவு? ஐந்தில் ஒருபங்கு. பத்து கலம் விளைகிற ஜில்லாவில் மிஞ்சுகிற பொருள் எவ்வளவு? பத்தில் ஒருபங்கு. எனவே, குறைவான உற்பத்தி யாகிற பிரதேசத்தில் மிஞ்சுகிற பொருளைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகிறதென்பது ஏற்படுகிறது. ஆனால், உற்பத்தி யானது இரண்டு மடங்கா யிருக்கிறதென்ற ஒரே ஆதாரத்தை வைத்துக் கொண்டு மட்டும், ஒரு பொது விதியை வகுத்துக்கொண்டு விட முடியாது. குளிர்ப்பிரதேசங்களிலும் உஷ்ணப் பிரதேசங்களிலு முள்ள நிலங்கள் ஒரே மாதிரியான பலனைக் கொடுக்கின்றன வென்று சொல்லி, இரண்டு பிரதேசங்களின் விஷயத்திலும் நாம் ஒரேவிதமான முடிவைக் கொண்டு விட முடியுமா? வேண்டுமானால், போலந்து, சிஸிலி முதலிய நாடுகளை எகிப்துடனும், அப்படியே இந்தியாவை ஆப்பிரிக்காவுடனும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒன்றுக் கொன்று எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? சிஸிலியில் மண்ணை சும்மா கீறிக்கொடுத்தால் போதும். ஆனால் இங்கிலாந்திலே எவ்வளவு சிரமப்படவேண்டி யிருக்கிறது? ஒரு பொருளை உற்பத்தி செய்ய, எந்தப் பிரதேசத்தில் அதிகமான உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கிறதோ, அந்தப் பிரதேசத்தில் மிஞ்சுகிற பொருள் குறைவாகவே இருக்கும். தவிர, உஷ்ணப்பிரதேசங்களில் வசிக்கும் ஜனங்களின் தேவைகள் குறைவாகவே இருக்கின்றன. இதனால் இவர்கள் குறைவான பொருள் களையே உபயோகிக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் திடகாத்திரத் துடன் சௌக்கியமாக இருக்கவேண்டுமானால், இவர்களுடைய பழக்க வழக்கங்கள் நிதானமாகவே இருக்கவேண்டியிருக்கின்றன. ஐரோப்பியர்கள், ஐரோப்பாவில் வாழ்ந்துவந்தமாதிரி, உஷ்ணப் பிரதேசங்களிலும் வாழ்க்கையை நடத்திவரத் தொடங்கு வார்களானால், சீதபேதியினாலோ அல்லது அஜீரணத்தினாலோ அவதைப்படுகிறார்கள். சார்டின்1 என்பவன் கூறுகிறான்: ஆசியாக் காரர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, நாம் மாமிச பட்சணிகளான மிருகங்கள், ஓநாய் களென்று தான் சொல்லவேண்டும். பர்ஷியா தேச வாசிகள், ஆகார விஷயங் களில் நிதானமுடையவர்களா யிருக்கிறார்களென்று சொன்னால், அதற்குக் காரணம், அவர்க ளுடைய நாட்டிலே பொருளுற்பத்தி மிகக்குறைவு என்று சிலர் கூறு கிறார்கள். நான் இதை ஒப்புக்கொள்ள முடியாது. அவர் களுடைய நாட்டில் அதிகமான பொருள்கள் காணப்படவில்லையென்று சொன்னால் அதற்குக் காரணம், அவர்களுடைய தேவை மிகக்குறைவு என்பதுதான். தேசம் சுபிட்சமா யில்லாத காரணத்தினால்தான், ஜனங்கள் சிக்கனமாக வாழ்க்கையை நடத்துகிறார்களென்று சொன் னால் ஏழைகள் மட்டுந்தானே அப்படியிருப்பார்கள்! ஆனால், பர்ஷியாவில் எல்லா ஜனங்களும் இப்படிச் சிக்கனமாகவே இருக்கி றார்களே! தவிர, அவர்கள், தாங்கள் இந்தமாதிரி வாழ்க்கையை நடத்துவதில் ஒரு பெருமையுங் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் மேலழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கிறிதவர்களைக் காட்டி லும் உயர்ந்தவர்களாக இருக்கவேண்டுமென்பதில் தான் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். உண்மையில், பர்ஷியர்கள் மிருது வான தோலுடையவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கி றார்கள். ஆனால், அந்த நாட்டிலே வசிக்கும் கிறிதவர்களாகிய அர்மீனியர்களோ ஐரோப்பிய மாதிரியில் வாழ்க்கையை நடத்தி னாலும் கரடுமுரடான தேக முடையவர்களா யிருக்கிறார்கள். பூமத்திய ரேகைக்குச் சமீபத்தில் வசிக்கும் ஜனங்கள், எளிய உணவையே உட்கொள்ளுகிறார்கள். அவர்கள் அநேகமாக மாமிச உணவை ஏற்றுக்கொள்வதில்லை. அரிசி, சோளம், கோதுமை முதலிய பொருள்களையே உபயோகிக்கிறார்கள். இந்தியாவில் லட்சக்கணக்கான ஜனங்களுடைய தினசரி ஆகாரச்செலவு, ஒரு நாளைக்கு அரையணாவுக்கு மேல் போவதில்லை. ஐரோப்பாவிலே கூட நாம் பார்க்கலாமே, வடபாகத்தி லுள்ளவர்களுக்கும் தென் பாகத்திலு ள்ளவர் களுக்கும் ஆகார விஷயத்தில் உள்ள வித்தி யாசத்தை. ஒரு ஜெர்மானியனுடைய ஒரு நாள் உணவு, ஒரு பானிஷ் காரனுக்கு எட்டு நாளைக்குப் போதுமானதாயிருக் கிறது. எந்த நாட்டில் ஜனங்கள் போஜனப் பிரியர்களா யிருக்கிறார்களோ அவர்கள், அதிகமான உணவுப் பொருள்களை உபயோகிக் கிறார்கள். ஆடம்பர வாழ்க்கையென்று சொன்னால், இங்கிலாந்தில் அதிகமான உணவுப் பொருள்களை உபயோகிக்கிறார்கள். ஆடம்பர வாழ்க்கையென்று சொன்னால், இங்கிலாந்தில் அதிகமான மாமிச உணவுகளை உட்கொள்வது என்பதுதான் அர்த்தம். இத்தாலியிலோ சர்க்கரையையும், புஷ்ப தினுசுகளையும் கொண்டு திருப்தியடைந்து விடுகிறார்கள். இதே பிரகாரம் உடை விஷயத்திலும் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் அநேக வித்தியாசங்கள் இருக்கின்றன. எந்த நாடுகளில், அதிகமான குளிரும் அதிகமான உஷ்ணமும் ஒழுங்காக மாறி மாறி வந்து கொண்டிருக்கிறதோ அந்த நாடுகளில், ஜனங்களின் ஆடை, எளிய முறையில் இருக்கிறது. ஆனால் எந்த நாடுகளில் அழகுக்காக ஆடைகளை அணிந்து கொள்கிறார்களோ, அந்த நாடுகளில் ஆடம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே தவிர, உபயோகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதில்லை. நேபில் நகரத்தில் நீங்கள் பார்க்கலாம், ஜனங்கள் சரிகைவேலை செய்யப்பட்ட மேலாடைகள் அணிந்துசெல்வதை. இதே மாதிரிதான் கட்டிடங்கள் விஷயத்திலும். காற்றுக்கோ மழைக்கோ பயப்பட வேண்டிய அவசியமே இல்லாத இடங்களில்கூட, படாடோபமாகக் கட்டிடங்கள் கட்டுகிறார்கள். பாரிசிலும், லண்டனிலும், குளிர் அதிகத்தினால், ஜனங்கள் சௌகரியமான வீடுகளில் வசிக்க வேண்டியதுதான். ஆனால், மாட்ரிட் (பெயின்) நகரத்திலே, ஆடம்பரமான மாளிகைகளைக் கட்டுகிறார்கள். ஆனால் காற்று வசதிக்கென்று ஒரு ஜன்னல்கூட வைப்பதில்லை. குகைகள் மாதிரி இருக்கிற அறைகளில்தான் தூங்குகிறார்கள். மற்றும், உஷ்ணப் பிரதேசங்களில், ஆகார வகைகள் புஷ்டி தரக்கூடியனவா யிருக்கின்றன. இத்தாலியர்கள் காய்கறிகளை அதிக மாகச் சாப்பிடுகிறார்கள். ஏன்? அவை, நல்ல ருசியுடையனவாகவும் புஷ்டி தரக்கூடியனவாகவும் இருக்கின்றன. ஆனால் பிரான்சில், பெரும்பாலான காய்கறிவகைகள் திரவ பதார்த்தங்களாகவே இருக்கின்றன. இவை புஷ்டி தரக்கூடியன வல்ல. தவிர, இவைகளின் உற்பத்திக்கு அதிக உழைப்பும் தேவையில்லை. இப்படியே வடக்கே செல்லச் செல்ல, உணவுப் பொருள் களிலுள்ள புஷ்டித்தன்மையும் குறைகிறது. எனவே, ஒரே விதமான, ஒரே அளவுள்ள உணவுப் பொருளானது, புஷ்டி தரும் விஷயத்தில் வித்தியாசமாயிருப்பது, ஜனங்களுக்கு எவ்வளவு பாதகம் என்பதை நினைத்துப் பாருங்கள். தவிர, குளிர்ப் பிரதேசங்களைக்காட்டிலும் உஷ்ணப் பிரதேசங் களில் குறைவான ஜனங்கள் இருந்தாலே போதுமானது. ஆனால் அந்த உஷ்ணப் பிரதேசங்கள், அதிகமான ஜனங்களைப் போஷித்துக் காப்பாற்ற முடியும். ஜனத்தொகையும் பெருகி, உணவுப் பொருள் களின் உற்பத்தியும் அதிக மானால் இவை, சுயேச்சாதிகாரத்திற்குச் சாதகமான விஷயங்களல்லவா? விதீரணமான ஒரு நாட்டில், ஓர் அளவுக்குட்பட்ட ஜனங்கள் வசிக்கிறார் களென்று சொன்னால், அந்த நாட்டில் ஜனப்புரட்சி முதலியன சுலபமாக நடைபெற முடியாது. ஏனென்றால், ஜனங்களுடைய கலகச் சூழ்ச்சிகளைக் கண்டுபிடித்து அவற்றை முளையிலேயே கிள்ளி விடுவதற்கோ, அல்லது கலகக்காரர்கள் ஒன்று சேராதபடி போக்கு வரத்துக்களைத் தடைசெய்து விடுவதற்கோ அரசாங்கத்தாரால் முடியும். எந்த நாட்டில் ஜனத்தொகை அதிகமாயிருந்து, விதீரணமும் குறைவா யிருக்கிறதோ அந்த நாட்டில், அரசாங்கமானது, அரச அதிகாரத்தைச் சுலபமாகக் கைப்பற்றிக் கொள்ள முடிவதில்லை. ஜனத்தலைவர்கள், ரகசியமாகத் தங்கள் தங்கள் வீடுகளி லிருந்துகொண்டு சூழ்ச்சி செய்தால், அரசனும், தன் சபையில், மந்திரிகளுடனிருந்து, இந்தச் சூழ்ச்சியை எதிர்க்க யோசிக்கிறான். ஜனங்கள் ஓரிடத்தில் ஒன்றாக வந்து கூடினால், அரசனும், அதே இடத்தில், தன் துருப்புகளைக் கொண்டுவந்து நிறுத்துகிறான். எனவே, விசால மானதொரு நாட்டில் தான், சுயேச்சாதிகாரம் சுலபமாக நிலவமுடியும். எந்தெந்த ஆதரவு களைப் பெற்று அந்தச் சுயேச்சாதிகாரம் நிலவுகிறதோ, அதே ஆதரவு களை, அது, தூரத்திலிருந்து ஆட்டி வைத்துக்கொண்டே, தன் தானத்தை திரப்படுத்திக் கொள்ளமுடியும்.1 ஜனங்களுடைய பலம் எப்பொழுது அதிகமாகிறதென்றால் அவர்கள் ஒன்று சேர்ந் திருக்கிற போதுதான். அவர்கள் பிரிந்து, வெவ்வேறு இடங்களில் இருப்பார் களானால், அவர்களுடைய பலமும் சிதறிப் போகிறது. எனவே குறைவான ஜனத்தொகையுடைய நாடுகள், சுயேச்சாதிகாரத் திற்குத் தகுதியுடையவை என்பது பெறப்படுகிறது. கொடிய மிருகங்கள், ஜனநடமாட்டமில்லாத இடங்களில்தான் அதிகமாக வசிக்கின்றன. 28. நல்ல அரசாங்கத்தின் லட்சணங்கள் என்ன? எல்லா வகையிலும் நல்ல அரசாங்கமாக இருக்கக் கூடியது, அதாவது நல்ல ஆட்சி முறையாக இருக்கக் கூடியது எது? என்ற கேள்வியைக் கேட்டால், அதற்குச் சரியான பதில் சொல்லமுடியாது. இப்படிப் பட்டதுதான் நல்ல அரசாங்கம் என்று ஒரு நிர்ணயப் படுத்தியும் சொல்ல முடியாது. அந்தந்த தேசத்தின் நிலைமைகளை யொட்டி, அரசாங்க அமைப்புகளும் இருக்கின்றன; இருக்கவேண்டும். ஆனால், குறிப்பிட்ட ஒரு ஜாதியாரை, அதாவது தேசத்தாரை எடுத்துக்காட்டி இவர்கள் எப்படி ஆளப்படுகிறார்கள்? நல்லவித மாகவா? கெட்ட விதமாகவா? சொல்லுங்கள் என்று கேட்டால், அது வேறு விஷயம். இந்தக் கேள்வி, இருக்கப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்படுகிறதாதலின், இதற்குப் பதில் சொல்லியேயாக வேண்டும். ஆனால், இதற்கு யாரும் சரியான பதில் சொல்வதில்லை. ஏனென்றால், ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நோக்கத்திற்குத் தகுந்த மாதிரி பதில் சொல்லப் பார்க்கிறார்கள். சட்டத்திற்கு அடங்கி நடக்கும் உரிமையை மட்டும் அனுபவிக்கிற பிரஜைகள், தேசத்தில் அமைதியை நிலைநாட்டுகிற அரசாங்கந்தான் சிறந்ததென்று சொல்கிறார்கள். சட்டஞ் செய்யும் உரிமையை அனுபவிக்கிற பிரஜைகள், தனிப்பட்டவர்களுடைய சுதந்திரத்தைப் பாதுகாக்கிற அரசாங்கந்தான் சிறந்ததென்று சொல்கிறார்கள். ஒரு சாரார், தங்கள் உடைமைகளுக்குப் பந்தோபது செய்து கொடுக்கிற அரசாங்கந் தான் மேலான தென்கிறார்கள்; இன்னொரு சாரார், மனிதர்கள் சுயமாக நடமாடிக்கொண்டிருக்கிற உரிமையைப் பந்தோபது செய்து கொடுக்கிற அரசாங்கந்தான் மேலானதென்கிறார்கள். ஒரு பிரிவார், கண்டிப்பான தோரணையில் விவகாரங்களை நடத்தும் அரசாங்கந்தான் விசேஷமான தென்கிறார்கள்; இன்னொரு பிரிவார், சாந்தமாக, நல்லதனமாக நடந்து கொள்கிற அரசாங்கந்தான் விசேஷமான தென்கிறார்கள். ஒரு பகுதியினர், குற்றங்களைத் தண்டிக்கவேண்டுமென்று கூறுகிறார்கள்; மற்றொரு பகுதியினர், குற்றங்களைத் தடுக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். ஒரு பக்கத்தார், அயல் நாடுகள் அஞ்சுமாறு தங்களுடைய அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டுமென்று சொல்கிறார்கள்; இன்னொரு பக்கத்தார், தங்களுடைய அரசாங்கம், அயல் நாடுகளைப் பொருட் படுத்தவே கூடாதென்று சொல்கிறார்கள். ஒரு கட்சியினர், ஒழுங் கான பணப் புழக்கம் இருந்துகொண்டிருந்தால் போதுமானதென்று கருதுகிறார்கள்; வேறொரு கட்சியினர், ஜனங்களுக்குப் போதுமான ஆகாரம் வேண்டுமென்று கோருகிறார்கள். இந்த எல்லா அமிசங் களிலும் ஒற்றுமையான அபிப்பிராயம் ஏற்பட்டு விடுகிறதென்றே வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதாவது அந்த அரசாங்கத்தைச் சிரேஷ்டமான அரசாங்கம் என்று சொல்லிவிட முடியுமா? முடியாது. ஏனென்றால், ஓர் அரசாங்கம், ஒழுக்கமுள்ளதாக இருக்கிறதென்று பார்ப்பதற்கு, மேலே சொன்ன அமிசங்கள் போதுமான கருவிகளாகமாட்டா. ஜனங்கள், ஒரு சமுதாயமாகச் சேர்ந்து வாழ்வதன் நோக்க மென்ன? சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோரும் பாதுகாப்புடனும் க்ஷேமத்துடனும் இருக்க வேண்டுமென்பதுதான். இங்ஙனம் பாதுகாப்புடனும் க்ஷேமத்துடனு மிருப்பதற்கு அடையாளமென்ன? ஜனத்தொகைப் பெருக்கம். அதாவது எந்த நாடு, எவ்வித வெளி உதவியில்லாமலும், அந்நியர்களின் குடியேற்ற மில்லாமலும், குடியேற்ற நாடுகளில்லாமலும், ஜனத்தொகையில் பெருகியிருக் கிறதோ அந்த நாடுதான், அந்த நாட்டு அரசாங்கந்தான் சிறந்தது. இதை ஆட்சேபிக்கவே முடியாது. எந்த ஆட்சி முறையின் கீழ், ஜனத் தொகை குறைந்துகொண்டு வருகிறதோ அந்த ஆட்சி மிகக் கேவல மானது. ஜன கணித நிபுணர்கள் இதைப்பற்றி வேண்டுமானால், ஆராய்ச்சி செய்து பார்க்கட்டும்.1 29. அரசாங்கங்கள் ஏன் சீரழிகின்றன? ஜனாதிக்கமானது வலுவு பெற்றுவிடாதபடி அதனை எதிர்த்து நிற்கும் தன்மை, அரசாங்கத்தினிடத்தில் எப்பொழுதுமே இருந்து கொண்டிருக் கிறது. இந்த எதிர்ப்புச் சக்தி எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகிறதோ அவ்வளவுக் கவ்வளவு துரிதமாக அரசாங்க அமைப்பும் மாறுகிறது. இங்ஙனம் மாறாதபடிக்கும், ஜனாதிக்க சக்தியையும், அரசாங்க சக்தியையும் சமன் வயப்படுத்திக்கொண்டு செல்லக் கூடிய வேறு சக்தி யொன்றுமில்லாத நிலைமையில், அரசாங்கமானது, நாளா வட்டத்தில் ஜனாதிக்கத்தை அடக்கிவிடுவ திலேயே முனைந்து, வெற்றி பெற்று, சமுதாயக் கட்டுப்பாட்டையும் குலைத்துவிடுகிறது. சமுதாயம் என்பது எப்பொழுது ஏற்பட்டதோ அப்பொழுதிருந்தே, இந்தக் குறை, அந்தச் சமுதாயத்தில் இருந்து கொண்டிருக்கிறது. எப்படி ஒரு மனிதனுக்குப் பிறப்பு, வயோதிகம், மரணம் என்பவை தொடர்ச்சியாக ஏற்படுகின்றனவோ அப்படியே ஒரு சமுதாயத்திற்கும் ஏற்படுகின்றன. ஓர் அரசாங்கம் சீரழிவது இரண்டு வழிகளினால். அரசாங்கம் சுருங்கிப் போவது ஒரு வழி; ராஜ்யமே கலைந்து போவது மற்றொரு வழி. அரசாங்கம் எப்பொழுது சுருங்குகிறது? பலருடைய கையி லிருந்து சிலருடைய கைக்குச் சென்றுவிடுகிறபோது. அதாவது ஜன ஆட்சியானது, பிரபுத்துவ ஆட்சியாகி, பிரபுத்துவ ஆட்சியிலிருந்து மன்னராட்சிக்குச் சென்றுவிடுவதைத்தான், அரசாங்கம் சுருங்குகிற தென்று சொல்கிறோம். எந்த ஓர் அரசாங்கத்தினுடைய அல்லது ஆட்சி முறையினுடைய சுபாவமும் இப்படித்தான். ஆட்சி முறை யானது, சிறுபான்மை யோரிடமிருந்து பெரும்பான்மையோர் கைக்கு மாறுகிறதென்று சொன்னால், அஃது, அந்த ஆட்சிமுறை, தன் சுபாவத்தினின்று மாறுகிறதென்றுதான் அர்த்தம். ஆனால் இப்படி ஏற்படுவது அபூர்வம். அரசாங்கமானது, தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சக்தியை யிழந்து பலஹீனமடைந்து போகிற காலத்தில்தான், தன் அமைப்பை மாற்றிக்கொள்கிறது. அதுவரையில் மாற்றிக்கொள்வ தில்லை. இங்ஙனம் பலஹீனமடைந்திருக்கிற காலத்தில்தான், நாம், நமது கவனத்தை அந்த அரசாங்கத்தின்மீது செலுத்தவேண்டும். இல்லாவிட்டால், அந்த அரசாங்க அமைப்பு, எந்த ராஜ்யத்தைக் காப்பாற்றுகிறதோ அந்த ராஜ்யமே அழிந்துபோகும். ஒரு ராஜ்யம், இரண்டு வகையில் சீரழிந்து போதல்கூடும். ஒரு வகை என்னவென்றால், அரசன், அல்லது அரசாங்கம் சட்டங்களின் படி ஆளாமல், ஜனாதிக்கத்தை, தானே ஆக்கிரமித்துக்கொண்டு விடுமானால் அப்பொழுது அந்த ராஜ்யம், கட்டுத் தளர்ந்து போகும். இதனால் மகத்தான ஒரு மாறுதல் உண்டாகிறது. அரசாங்கமல்ல, ராஜ்யமே தேய்ந்து போகும் நிலைமைக்கு வந்துவிடுகிறது; அதிகாரி களைமட்டும் கொண்ட புதியதோர் அரசாங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இந்தப் புதிய அரசாங்கம், ஜனங்களைப் பொறுத்தமட்டில், அவர்க ளுடைய எஜமானனாக அல்லது அவர்களை ஆளும் கொடுங்கோல னாக அமைந்துவிடுகிறது. இப்படி ஜனாதிக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அரசாங்கம் அமைந்துவிடுகிற காலத்தில், சமுதாய ஒப்பந்தம் என்பது ரத்து செய்யப்பட்டதாகிறது. அப்பொழுது, ஜனங்கள், அந்த அரசாங்கத்திற்குப் பயந்து கீழ்ப்படிகிறார்களே தவிர, தாங்களே ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை முன்னிட்டும், கடமையை முன்னிட்டும் கீழ்ப்படிகிறார்களென்று சொல்லமுடியாது. இரண்டாவது வகைச் சீரழிவு என்னவென்றால், அரசாங்க அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து பிரயோகிக்க வேண்டிய அதிகாரத்தை, அவர்கள் தனித்தனியாக இருந்து பிரயோகிப்பார்க ளானால், அப்பொழுது ஒரு ராஜ்யமே சீரழியத் தொடங்குகிறது. இப்படித் தனித் தனியாக அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைப் பிரயோகம் செய்வது, சட்டத்திற்கு விரோதம். தவிர இதனால் தேசத்தில் ஒழுங்கீனமும் பிளவும் உண்டாகி விடுகின்றன. ராஜ்யம் அழிந்து போகிறது, அல்லது உருமாறிப் போகிறது. எப்பொழுது ஒரு ராஜ்யத்தின் கட்டுக்கோப்பு தளர்ந்து போய் விடுகிறதோ, அப்பொழுது அரசாங்கத்தின் அதிகாரங்கள் துஷ்பிர யோகம் செய்யப்படுகின்றன. இந்தத் துஷ்பிரயோகத்திற்கு அராஜகம் அல்லது கலகம் என்று பெயர். அப்பொழுது ஜன ஆட்சியானது, விவரமறியாமல் கூச்சல் போடுகிற ஜனக்கூட்டத்தின் ஆட்சியாகவும், பிரபுத்துவ ஆட்சி யானது, ஒரு சிலருடைய சுயேச்சாதிகார ஆட்சி யாகவும், அரச ஆட்சி யானது, கொடுங்கோலாட்சியாகவும் முறையே மாறிவிடுகின்றன. கடைசி யாகச் சொன்ன இந்தக் கொடுங் கோலாட்சியைப் பற்றிமட்டும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டி யிருக்கிறது. எவனொருவன், சட்டங் களையும், நீதியையும் புறக் கணித்துவிட்டு, பலாத்காரத்தின் துணை கொண்டு ஆள்கிறானோ அவனை ஒரு கொடுங்கோலன் என்று சொல் கிறார்கள் சாதாரண அர்த்தத்தில். ஆனால், அரச அதிகாரத்திற்கு உரிமை யில்லாதவனா யிருந்தும், எவனொருவன், தனிப்பட்ட மனிதன் என்ற முறையில், அந்த அரச அதிகாரத்தைப் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொள்கிறானோ, அவனைத்தான் கொடுங்கோலன் என்று சொல்ல வேண்டும். கொடுங்கோலன் என்ற வார்த்தைக்கு இதுதான் சரியான அர்த்தம். முற்காலத்தில் கிரேக்கர்கள், கொடுங்கோலன் என்ற சொல்லை இந்தப் பொருளில்தான் உபயோகப் படுத்தினார்கள். எவனொருவன், அரச அதிகாரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறானோ அவனை ஒரு கொடுங்கோலன் என்றும், எவனொருவன் ஜனாதிக்க அதிகாரத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறானோ அவனை, ஜனங்களுக்கு ஹிம்சையைச் செய்கிறவன் அல்லது பிரஜா பீடகன் என்றும் பொதுவாகப் பாகு படுத்திக் கூறலாம். கொடுங்கோலன், சட்டத்திற்கு விரோதமாக அதிகாரத்தை ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும், சட்டப்படியே ஆட்சி புரிகிறான். ஆனால் ஒரு பிரஜா பீடகனோ, சட்டங்களுக்கெல் லாம் புறம்பானவனாகத் தன்னைக் கருதிக்கொண்டு காரியங்களை நடத்துகிறான். எனவே ஒரு கொடுங்கோலன், பிரஜா பீடகனாக இருக்கமுடியாது. ஆனால் ஒரு பிரஜா பீடகன் கொடுங்கோலனாக இருப்பதைத் தவிர்த்து வேறுவிதமாக இருக்கமுடியாது. 30. சமுதாயத்தின் சீரழிவு எப்படி மனித தேகமானது, பிறக்கிறபோதே அழிய ஆரம்பிக் கிறதோ, எப்படி அதனுடைய அழிவுக்கு அதுவே காரணமாயிருக் கிறதோ அதைப் போலவே, ஒரு சமுதாயமும் தோன்றுகிறபோதே, தன்னுடைய அழிவுக்குக் காரணமாயுள்ள அமிசங்களைத் தன்னகத் துள் அடக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு தனி மனிதனாகட்டும் அல்லது சமுதாயமாகட்டும் திடகாத்திரமாக இருக்க முயற்சி செய்யலாமல்லவா? இப்படி திடகாத்திரமாக இருப்பதைக் கொண்டுதானே, தனி மனிதனுடையவோ, சமுதாயத்தினுடையவோ நீண்டகால அல்லது குறைந்த கால வாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது? மனித தேக அமைப்பு என்பது, இயற்கை செய்கிற வேலை. சமுதாய நிர்மாணம் என்பது, கலை செய்கிற வேலை1. மனிதர்களுக்குத் தங்கள் ஆயுளை அதிகப்படுத்திக் கொள்ளுஞ் சக்தி கிடையாது. ஆனால், ஒரு ராஜ்யத்திற்கு நல்ல அரசியலை வகுத்துக் கொடுத்து அதனுடைய ஆயுளை நீடிக்கச் செய்கிற சக்தி அவர்களிடத்தில் இருக்கிறது. எவ்வளவு சிறந்த அரசியலோடு கூடிய ராஜ்யமாயிருந்தாலும், அதற்கு ஒரு முடிவுகாலம் உண்டு. ஆனால், மற்ற ராஜ்யங்களைப்போல் சீக்கிரமாக அழிந்து போகாமல், நல்ல அரசியலமைப்போடு கூடியிருக்கிற காரணத்தினால், சிறிது அதிக காலத்திற்கு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும். இடையிலே, ஏதேனும் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் அது வேறு விஷயம். ஒரு சமுதாய புருஷனுடைய (சமுதாயத்தினுடைய) ஜீவனாயிருப்பது ஜனாதிக்கம்; இருதயமா யிருப்பது சட்டநிர்மாண அதிகாரம்; மூளையா யிருப்பது நிருவாக அதிகாரம். தேகத்தினுடைய உறுப்புகள் யாவும் சரியானபடி வேலை செய்வதற்குக் காரணமாயிருப்பது மூளை. அதைப்போல, ஒரு சமுதாயத்தின் எல்லாப் பாகங்களும் ஒழுங்காக இயங்கவேண்டுமானால் அதற்குக் காரணமாயிருப்பது நிருவாக அதிகாரம். ஆனால் ஒரு மனிதனுக்கு, மூளை வேலை செய்யாமல் தம்பித்துப் போய் விடலாம். ஆயினும் அவன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க முடியும். மந்த புத்தியுள்ள ஒருவன், இறந்துபோவதில்லை. ஆனால், இருதயத் துடிப்பு நின்றுவிட்டால், ஒரு பிராணிகூட இறந்து போய் விடுகிறது. அப்படியே ஒரு ராஜ்யமும், சட்டங்களினால் ஜீவித்திருப்ப தில்லை. சட்ட நிர்மாண அதிகாரத்தினால்தான் ஜீவித்திருக்கிறது. சென்ற தலைமுறையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இன்றைய தலை முறையைக் கட்டுப் படுத்தாது. ஆனால், நிகழ்கால சந்ததியார், பழைய சட்டங்களைப் பொறுத்த மட்டில் மௌனஞ் சாதிப்பதனால், அவர்கள் அந்தச் சட்டங்களை அங்கீகரிக்கிறார்களென்று கொள்கிறோம். அரசாங்க மும், வேறு புதிய சட்டங்களை இயற்றுவதன் மூலம் பழைய சட்டங்களை ரத்து செய்யாதவரையில், அந்தப் பழைய சட்டங்களே நடைமுறையில் இருக்குமாறு செய்கிறது. இப்படியிருக்க, ஜனங்கள் ஏன் பழைய சட்டங்களுக்கு அதிகமான மதிப்புக் கொடுக்கிறார்கள்? அவை புராதனமானவை என்ற காரணத்தினால் தான். பழைய காலத்துச் சட்டங்கள், சிரேஷ்டமானவையா யிருக்கின்ற காரணத்தினால்தான், அவை, நீடித்த காலம் நடைமுறையில் இருக்கின்றன. அவை, நல்ல பலனைக் கொடுத்துக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான், ஜன சக்தியானது, அவற்றிற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறது. இல்லாவிட்டால், அவை களை ஆயிரந்தடவை மாற்றி யமைத் திராதா? இதனால்தான், நல்ல அரசியலைக் கொண்ட ஒரு ராஜ்யத்தில், சட்டங்கள், நாளாக ஆக புதிய சக்தியைப் பெறுகின்றன. இவை, பழமையாக ஆக இவற்றின் புனிதத் தன்மை அதிகமாகிறது. எப்பொழுது, பழைய சட்டங் களுக்கு மதிப்புக் கொடுப்பது குறைந்து போகிறதோ, அப்பொழுதே அந்த ராஜ்யத்தினுடைய பலமும் குறைந்து போகிற தென்பது அர்த்தம். 31. அரசு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் விதம் அரசுக்கு, சட்ட நிர்மாண அதிகாரத்தினால் உண்டாகிற சக்தியைத் தவிர வேறு சக்தியில்லை. இதனால் அது, சட்டங்களின் மூலமாகவே தன் காரியங்களைச் செய்ய வேண்டி யிருக்கிறது. சட்டங்கள் என்பவை யாவை? ஜனங்களுடைய இச்சையைச் செய லில் கொணரும் கருவிகள் தாமே. இதனால், ஜனங்களெல்லோரும் ஒன்றுகூடினால்தான், அரசு இயங்க முடியும் என்ற நிலைமை ஏற்படுகிறது. ஜனங்களெல்லோரும் ஒன்றுகூடுவதா? இஃதென்ன பிரமை, என்ன கற்பனை என்று கேட்கலாம். ஆனால் இரண்டா யிரம் வருஷங்களுக்குமுன் அப்படியில்லை. அதற்குப் பிறகு, அதாவது இரண்டாயிரம் வருஷங் கழித்து, இப்பொழுது மனிதர்கள் தங்கள் சுபாவத்தை மாற்றிக் கொண்டு விட்டார்களா என்ன? சன்மார்க்க ரீதியாக இவ்வளவு காரியங்களைத்தான் செய்ய முடியும், இன்னதுதான் சாத்தியம் என்று நாம் ஓர் எல்லை வகுத்துக் கொண்டு விடுகிறோமே, அஃது, அப்படி வகுத்துக் கொண்டு விடுவது நமது பலஹீனம். நமது அனாசாரங்களும், துவேஷ புத்தியும் சேர்ந்து, நம்மால் சாத்தியமானவற்றிற்கு ஒரு வரம்பு கட்டி விடு கின்றன. கீழ் மக்கள், மகான்களிடத்தில் நம்பிக்கை கொள்வதில்லை. அடிமைத் தனத்தில் ஊறிப்போயிருக்கிறவர்கள் சுதந்திரத்தைப் பார்த்துப் பரிகாசச் சிரிப்பு சிரிக்கிறார்கள். அப்படி யிருக்க, மனிதர்கள், தங்களுடைய சக்திக்கு ஒரு முடிவு ஏற்படுத்திக்கொண்டு விடுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ஜனங்களெல்லோரையும் ஒன்றுசேர்க்க முடியுமா வென்னும் விஷயத்தைப்பற்றி ஏற்கெனவே என்ன நடைபெற்றிருக்கிறதென் பதைத் தெரிந்து கொண்டோமானால், இனி, என்ன செய்யக்கூடு மென்பதைக் குறித்து நாம் ஒரு தீர்மானத்திற்கு வரலா மல்லவா? பழைய கிரீஸில் சிறு சிறு குடியரசு நாடுகள் இருந்த வரலாற்றைப் பற்றி நான் இங்கு ஒன்றுஞ் சொல்லவில்லை. ஆனால் ரோம சாம்ராஜ்யத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்கிறேன். எனக்குத் தெரிந்த வரையில், ரோமக் குடியரசு சாம்ராஜ்யம், பெரியதொரு சாம்ராஜ்யமாகவும், ரோமாபுரி பெரிய நகரமாகவும் இருந்தன. ரோமாபுரியில் மட்டும், கடைசி ஜன கணிதப்படி, ஆயுதந் தரித்துக் கொண்டிருந்தவர்கள் நான்கு லட்சம்பேர் இருந்தார்கள். ரோம ஏகாதிபத்தியத்தில், அந்நியர்கள், திரீகள், அடிமைகள் முதலிய வர்களைத் தவிர்த்து, நாற்பது லட்சம் ஜனங்கள் இருந்தார்களென்று ஒரு ஜன எண்ணிக்கைக் கணக்குத் தெரிவிக்கிறது. இத்தனை ஜனங்களையும் ஒன்று கூட்டுவதென்று சொன் னால், அஃது எவ்வளவு கஷ்டமான காரியமென்று சிலர் கேட்கலாம். ஆனால் ரோமர்கள், சில வாரங்களுக்கொருமுறை, ஏன், பல முறைகூட ஒன்று கூடி, தங்கள் அரசுரிமையைச் செலுத்தினார்கள்; அரசாங்க நிருவாகக் காரியத்தையும் நடத்தினார்கள்.1 இவர்கள் பொதுவில் ஒன்றுகூடி எல்லா விவகாரங்களையும் பைசல் செய் தார்கள். இவர்கள் அத்தனை பேரும் பிரஜைகளா யிருந்ததோடு, அரசாங்க அதிகாரிகளாகவும் இருந்து காரியங்கள் செய்தார்கள். இங்ஙனமே, முற்காலத்தில் அநேக நாடுகளில் ஜனங்கள் ஒன்றுகூடி விவகாரங்களை நடத்தி யிருக்கிறார்கள். மாஸிடோனியர்கள், பிராங்குகள் முதலிய ஜாதியினர் இந்த மாதிரியே ஒன்றுகூடிப் பேசி யிருக்கிறார்கள். இத்தகைய உதாரணங்களைக் கொண்டு, நமது வருங்கால திட்டத்தை நிர்ணயித்துக் கொள்ளலா மல்லவா? ஜனங்களெல்லோரும் ஏதோ ஒரு சமயம் ஒன்று சேர்ந்து, தேசத்தின் அரசியல் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கவேண்டு மென்று நிர்ணயித்து விட்டோ, அல்லது இன்னின்ன சட்டங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று தீர்மானித்து விட்டோ, அல்லது நிரத்தரமான ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்தி, அதன்கீழ் வேலை செய்யக்கூடிய உத்தியோகதர்களை நியமித்து விட்டோ கலைந்து விட்டால் போதுமா? போதாது. எதிர்பாராத சம்பவங்கள் எவையேனும் ஏற்பட்டால் அவைகளைப்பற்றித் தீர்மானிக்க விசேஷ கூட்டங்கள் கூட்டுவதைத் தவிர, குறிப்பிட்ட காலங்களில் கூட்டங்கள் கூடவேண்டுமென்றும் ஏற்பாடு செய்வது அவசியம். எந்தக்காரணத்தை முன்னிட்டும், இந்தக் கூட்டங்கள் கூடாமலிருக்கக்கூடாது; அல்லது தள்ளி வைக்கப்படக்கூடாது. ஒரு நாளைக் குறிப்பிட்டு, அந்த நாளில் கட்டாயம் கூட்டம் நடைபெற வேண்டும். இதற்கென்று முன் அறிக்கை எதுவும் தேவை யிருக்கக் கூடாது. இப்படிக் குறிப்பிட்ட ஒரு தேதியில் கூட்டப்படுகிற கூட்டந்தான் செல்லுபடியானது. இதற்கு மாறாக, கூட்டங்களைக் கூட்டுவதற்கென்று என்ன சம்பிரதாயங்கள் உண்டோ அந்தச் சம்பிரதாயங்களை அநுசரியாமல், கூட்டங்களைக் கூட்டி நடத்து வதற்கென்று நியமிக்கப்பட்ட அதிகாரிகள், கூட்டங்களைக் கூட்டு வார்களானால், அவை, செல்லுபடியாகா. ஏனென்றால், கூட்ட மாகக் கூடவேண்டுமென்னும் உத்தரவு, சட்டத்திலிருந்து பிறக்கிற தல்லவா? சட்டரீதியாக தாபிக்கப்பட்டிருக்கும் சபைகள், எப் பொழுது எப்பொழுது கூட்டப்பட வேண்டுமென்பதைப் பற்றி நாம் எந்த விதமான விதியையும் கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள முடியாது. பொதுவாக என்ன சொல்ல முடியுமென்றால், ஓர் அரசாங்கத்திற்கு எவ்வளவு சக்தியுண்டோ அவ்வளவுக்கு, அரசும் தன் சக்தியை விவகார தசைக்குக் கொண்டுவரும். தனிப்பட்ட ஒரு நகரத்திற்கென்று சொன்னால், இந்த விதிக ளெல்லாம் பொருந்துந்தான்; ஆனால், அநேக நகரங்களைக் கொண்ட ஒரு ராஜ்யத்திற்கு இவை பொருந்துமா? அப்படிப் பொருந்து மானால், அரசு, தன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுப்பதா, அல்லது அரச அதிகாரத்தை ஒரு நகரத்திலே மட்டும் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்து, பிறகு, அதனை எல்லா நகரங்களும் அநுஷ்டிக்கு மாறு செய்வதா என்றெல்லாம் என்னை நீங்கள் கேட்கலாம். என்னுடைய பதில் இந்தமாதிரி யெல்லாம் ஒன்றுஞ் செய்ய வேண்டாம்; செய்ய நேரிடாது என்பதுதான். முதலாவது, அரச அதிகாரம் இருக்கிறதே, அது சரளமானது; பிரிக்க முடியாதது. பிரிக்க வேண்டு மானால், அதனை அழிக்காமல் முடியாது. இரண் டாவது, எப்படி ஒரு தேசம், மற்றொரு தேசத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க முடியாதோ அப்படியே ஒரு நகரம் மற்றொரு நகரத்திற்குக் கீழ்ப்பட்டதா யிருக்க முடியாது. மற்றும், ஒரு ராஜ்யத்தின் கீழ் பல நகரங்களை ஒன்று சேர்ப்பதினால், அநேக தீமைகள் உண்டா கின்றன. இந்தத் தீமைகளை நாம் விலக்கிக் கொண்டுவிட முடியு மென்று சொல்வது நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வது போலாகும். ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு ராஜ்யமா யிருப்பது நல்லதுதான். ஆனால், சிலர் கேட்கலாம்: சிறிய நாடுகளா யிருப்பது நல்ல தென்கிறீர்களே; பெரிய நாடுகள் அவைகளைத் தாக்கினால், அவை, தங்களைச் சமாளித்துக் கொள்ள முடியுமா? வென்று, இதற்கு முற் காலத்துச் சம்பவங்கள் தான் தமக்கு வழிகாட்டிகளா யிருக்கின்றன. கிரேக்க நகரக் குடியரசுகள், பர்ஷியர்களை எதிர்த்து நிற்கவில்லையா? ஹாலந்தும் ஸ்விட்ஜர்லாந்தும் சிறிய நாடுகளா யிருந்தாலும், ஆஸ்திரிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கவில்லையா?1 ஒரு ராஜ்யத்தை, குறிப்பிட்ட ஓர் எல்லைக்குட்படுத்த முடியவில்லையென்று நீங்கள் சொல்வீர்களானால், மற்றொரு வழி இருக்கிறது. அதாவது ராஜ்யத்தின் தலைநகரம் இதுதான் என்று, எந்த ஒரு நகரத்தையும் குறிப்பிடாதீர்கள். அரசாங்க நிருவாக தலத்தை, ஊருக்கு ஊர் மாற்றிக் கொண்டிருங்கள். ஒவ்வொரு நகரத்திலும், மேற்படி பொதுஜன சபையை மாறி மாறிக் கூட்டுங்கள். அப்பொழுது, ராஜ்யத்தின் எல்லை விரிவாக இருந்தாலும், அதிகமான பாதகம் ஏற்படாது. தேசத்தின் எல்லாப் பாகங்களிலும் ஜனங்களை ஒரேமாதிரி யாகக் குடியேறச் செய்யுங்கள். அதாவது ஓரிடத்தில் அதிகமான பேரும், மற்றோரிடத்தில் குறைவான பேரும், வாசஞ் செய்யாதபடி ஏற்பாடு செய்யுங்கள். எல்லோருக்கும் ஒரேமாதிரியான உரிமை, எல்லோருக்கும் ஒரேவிதமான நல்வாழ்வு முதலியன இருக்குமாறு செய்யுங்கள். இந்த மாதிரி செய்தால், எந்த ஒரு ராஜ்யமும் வலுவுள்ளதாகவும் இருக்கும்; நன் முறையில் ஆளப்பட்டும் வரும். கிராமாந்தரங்களில், இடிந்துபோன வீடுகளின் செங்கல், சுண்ணாம்பு முதலியவைகளைக் கொண்டுதான், நகரத்தின் சுவர்கள் கட்டப்படுகின்றனவென்பது உங்களுக்கு ஞாபக மிருக்கட்டும். நகரத்தில் ஒரு மாளிகை புதிதாகக் கட்டப்பட்டிருக்கிற தென்று சொன்னால், ஒரு கிராமம் பாழாகி விட்டது என்பதுதான் அர்த்தம். அரச சக்தி யென்பது, ஜனங்களினின்று பிறப்பதல்லவா? அந்த ஜனங்களே, சட்டப் பூர்வமாக ஓரிடத்தில் சபைகூடி விடுவார்களா னால், அப்பொழுது அரச சக்தியினின்று உண்டாகிற அரசாங்கம், அதனுடைய நிருவாக அதிகாரம் முதலியனவெல்லாம் செல்லுபடி யாகாமற் போகின்றன. அந்த இடத்தில், கேவலமான ஒரு பிரஜையி னுடைய தனித்துவமும் புனிதத்தன்மை யுடையது; புறக்கணிக்க முடியாதது. ஒரு மேலதிகாரிக்குள்ள உரிமை, அந்தத் தாழ்ந்த பிரஜைக்கும் அங்கு உண்டு. பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கிற வர்களே ஒன்றுகூடி விட்டால், பிரதிநிதிகள் என்பவர்கள் தனியாக எப்படி இருப்பார்கள்? எனவே, இந்தச் சபையில், மேலதிகாரியும், தாழ்ந்த பிரஜையும் எல்லாரும் ஒன்றுதான். ஆனால், இந்தப் பொதுஜன சபையைக் கூட்டுவதற்கு, அரசாங்க மானது எல்லாத் தடைகளையும் உண்டு பண்ணும்; அநேக சாக்குப் போக்குகளைச் சொல்லும். இந்தக் கூட்டத்தை, எப் பொழுதுமே அரசாங்கமானது ஓர் அச்சத்துடனேயே பார்க்கிறது. இதனைக் கூடாதபடி செய்தால்தான், அரசாங்கமானது, தன் னிஷ்டப்படி ஆள்வதற்குச் சுலபமாயிருக்கும். இங்ஙனம் அரசாங்க மானது நடந்து கொள்ளாதபடி ஜனங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஜனங்களும் பேராசை பிடித்து, கோழைகளாகி, நிச்சய புத்தி யில்லாதவர்களாய், சுதந்திரத்தைக் காட்டிலும் அடிமைத்தனமே பெரிதெனக் கருதுவார்களானால், அரசாங்கத்தின் சூழ்ச்சிகளுக்கு இரையாக வேண்டியதுதான். அரசாங்கத்தின் சக்தி வலுக்க வலுக்க, ஜனாதிக்கம் என்பது நாளாவட்டத்தில் தேய்ந்து போகிறது; ராஜ்யமும் மறைந்து போகிறது. 32. ஜனப் பிரதிநிதிகள் தேசத்திற்குத் தொண்டு செய்ய வேண்டு மென்பதுதான் ஜனங்களின் முக்கியமான வேலை. இதனை முக்கியமாகக் கருதாமல், ஜனங்கள், எப்பொழுது, எங்களுடைய உழைப்புக்குப் பதில் எங்களுடைய பணத்தினால் தேசத்திற்கு உதவி செய்கிறோம் என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களோ, அப்பொழுதே அந்தத் தேசம் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிற தென்றுதான் சொல்ல வேண்டும். சண்டைக்குச் செல்ல வேண்டுமா? துருப்புகளுக்குப் பணத்தைக் கொடுத்து அவர்களை யுத்தகளத்திற்கு அனுப்பிவிட்டு, இவர்கள் (ஜனங்கள்) வீட்டிலே உட்கார்ந்து கொண்டு விடுகி றார்கள். சட்டசபைகளுக்குச் செல்லவேண்டுமா? பிரதிநிதி களைத் தெரிந்தெடுத்துவிட்டு இவர்கள் சும்மா வீட்டில் இருந்து விடுகி றார்கள். தங்களுடைய சோம்பேறித் தனத்தினாலும், செல்வ வாழ்க்கையினாலும் இவர்கள், கடைசியில், தேசத்தை அடிமைப் படுத்தப் போர்ச் சேவகர்களையும், தேசத்தை விற்பனை செய்யப் பிரதிநிதிகளையும் அமர்த்திக் கொண்டு விடுகிறார்கள். வியாபாரச் செழிப்பு, கலை வளர்ச்சி, எதிலும் லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற சுயநலம், சுக வாழ்க்கையிலும் களி யாட்டங்களிலும் இச்சை, முதலியவைக ளெல்லாம் ஜனங்களுக்கு ஏற்பட்டு விடுவதனால், அவர்கள், தேக உழைப்பின் மூலம் தேசத் திற்குச் சேவை செய்வதை விடுத்து, பணத்தின் மூலம் சேவை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். ஜனங்கள் தங்களுடைய லாபத்தில் ஒரு பகுதியைத் தியாகஞ் செய்துவிடத் தயாராயிருக்கிறார்கள். ஏன்? ஓய்வா யிருக்கிற காலத்தில் அதனை இரட்டிப்பு மடங்காக அதிகப் படுத்திக் கொள்ளும் பொருட்டு, பணத்தைக் கொடுத்து பந்தங் களைப் பெற்றுக் கொள்கிறார்கள். பணம் என்ற வார்த்தை இருக் கிறதே அஃது, அடிமையினுடைய வார்த்தை; சுதந்திரப் பிரஜையினுடைய வார்த்தையல்ல. உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் ராஜ்யத்திலுள்ள பிரஜைகள், எதனையும் தங்கள் தேக உழைப்பைக் கொண்டுதான் செய்கிறார்கள்; பணத்தைக் கொண்டல்ல. அவர்கள், பணத்தைக் கொடுத்து, வேலை செய்வதினின்று விலகிக் கொள்ள மாட்டார்கள். அதற்குப் பதில், பணத்தையுங் கொடுத்து வேலையும் செய்வார்கள். கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, மனித சுதந்திரத் திற்கு விரோதமானது என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால் அதைவிடக் கொடுமையானது, உழைப்புக்குப் பதில் பணத்தின் மூல மாக வரி செலுத்தித் தப்புவித்துக் கொள்வதென்பது என்னுடைய அபிப்பிராயம். ஒழுங்கான அரசியலைக் கொண்ட ஒரு ராஜ்யத்தில், ஜனங்கள், சுயநலத்தைவிடப் பொது நலத்தைத்தான் அதிகமாகக் கவனிக்கி றார்கள். ஏனென்றால், தேசத்தில் பொதுவாக ஏற்பட்டிருக்கிற சுபிட்சமானது தனி மனிதர்களுக்கு அதிகமான கவலையில்லாதபடி செய்துவிடுகிறது. தவிர, தேசமெங்கணும் பொதுவாக ஏற்பட்டிருக்கிற செழிப்பின் காரணமாக, தனி மனிதர்கள் அதிகமாக உழைக்க வேண்டிய அவசியமில்லாமற் போய்விடுகிறது. இப்படிப்பட்ட ஒரு தேசத்தில், எல்லாப் பிரஜைகளும், பொதுஜன சபைக்குத் தங்கு தடையின்றிச் செல்வார்கள். ஒழுங்கீனமான அரசாங்கத்தின் கீழ் கூட்டப்படும் ஒரு பொதுஜன சபைக்குப் போக வேண்டுமென்று யாருமே இச்சை கொள்வதில்லை. ஏனென்றால், அங்கு, பொதுஜன அபிப்பிராயத்திற்கு மதிப்பில்லை யென்பதும், அங்குப் போவதி னால் எவ்வித நன்மையும் உண்டாகா தென்பதும் இவர்களுக்குத் தெரியும். இதனால் ஒவ்வொரு பிரஜையும், தனது சொந்த விவகாரங் களில் பொழுதைப் போக்குகிற நிலைமைக்கு வந்துவிடுகிறான். ஒரு நல்ல சட்டம், அதைவிட நல்ல சட்டங்கள் இயற்றப் படுவதற்கு வழி காட்டியா யிருக்கும். ஒரு தீய சட்டம், அதைவிடத் தீய சட்டங் களுக்கு வழிகாட்டியா யிருக்கும். ராஜ்ய விவகாரங்களைப் பற்றி எனக்கென்ன வென்று எந்த நாட்டில் பிரஜைகள் அலட்சியமாகச் சொல்லத் தொடங்குகிறார்களோ, அந்த நாடு இறந்து விட்ட தென்று நாம் நன்றாக உறுதி செய்து கொள்ளலாம். ஜனங்களுடைய தேசபக்திக் குறைவு, சுயநலம், ராஜ்யத்தின் எல்லை விதரிப்பு, பிறநாடுகளை வெற்றிகொள்ளுதல், அரசாங் கத்திலுண்டாகிற ஊழல்கள் முதலியன யாவும் சேர்ந்து ஜனசபைக்கு ஜனங்களே செல்லாமல் பிரதிநிதிகளை அனுப்புவதென்ற ஏற் பாட்டுக்கு மூலகாரண மாயிருந்தன. ஜனப் பிரதிநிதித்துவ முறை, இந்த வகையாகத்தான் ஏற்பட்டது. தேச விவகாரங்களில், ஜனங்கள் இங்ஙனம் அசிரத்தை காட்ட ஆரம்பித்ததனால்தான், ஜனப் பிரதி நிதிகள் அடங்கிய சபைக்கு மூன்றாவது தானம் கொடுக்கப்பட்டு விட்டது.1 அரசை, எந்தக் காரணத்தினால் பராதீனப் படுத்த முடியா தென்று சொன்னோமோ அதே காரணத்தினால், அதை பிரதிநிதி நியமன அதிகார முடையதாக்கவும் முடியாது. அதாவது, அரசுக்கு யாரும் பிரநிதிகளா யிருக்கமுடியாது. ஜன இச்சைதான் அரசு. அந்த இச்சையை யாராவது பிரதிபலித்துக் காட்ட முடியுமா? ஒன்று, ஜன இச்சையாக இருக்க முடியும்; அல்லது அஃதில்லாமலிருக்க முடியும். இடைவழி யொன்றுமில்லை. எனவே, ஜனப் பிரதிநிதிகளென்று நாம் யாரை அழைக்கிறோமோ அவர்கள் உண்மையில் ஜனப் பிரதி நிதிகள் இல்லை; இருக்கவும் முடியாது. அவர்கள் ஜன இச்சையின் காரிய கர்த்தர்களே தவிர, வேறில்லை. இதனால் அவர்கள் எந்தவித மான முடிவுக்கும் வரமுடியாது. ஜனங்களே நேர்முகமாக இருந்து எந்தச் சட்டங்களை அங்கீகரிக்கவில்லையோ அந்தச் சட்டங்கள் செல்லுபடியாகா. அவை சட்டங்களுமல்ல. ஆங்கிலேயர்கள், தாங்கள் சுதந்திரமுள்ளவர்களென்று நினைக்கிறார்கள். அப்படி யில்லை, பார்லிமெண்டுக்கு அங்கத்தினர்கள் தெரிந்தெடுக்கிற போதுதான் அவர்கள் சுதந்திரமுள்ளவர்களா யிருக்கிறார்கள். பிரதிநிதிகள் தெரிந்தெடுக்கப்பட்டு விட்ட பிறகு, அவர்கள் பழைய மாதிரி அடிமைகளாகி விடுகிறார்கள். தேர்தலுக்குப் பிறகு அவர் களைப்பற்றி யாரும் கவனிப்ப தில்லை. சொற்ப காலத்திற்குக் கிடைத்த சுதந்திரத்தை அவர்கள் சரியாக உபயோகிக்கவில்லை யாதலினால், அவர்கள் சுதந்திரத்தை நிரந்தரமாக இழந்து விடுவதற்குத் தகுதி யுடையவர்கள்தான். நிலச்சுவான்தாரர்களுடைய ஆதிக்கத்தின்கீழ் ராஜ்யாதிகாரம் இருந்த காலத்தில்தான் இந்தப் பிரதிநிதித்துவ முறையென்பது ஏற்பட்டது. முந்திய காலங்களில் இல்லை. பூர்வ ரோம ராஜ்யத்தில் ஜனங்களே நேராக ராஜ்ய விவகாரங்களில் கலந்து கொண்டார்கள். இங்ஙனமே கிரேக்கர் களும் அரசியலில் பங்கெடுத்துக் கொண் டார்கள். ஆனால் சிலர் கேட்கலாம், கிரேக்க ராஜ்யத்தில், அடிமைகள், தேக உழைப்புச் சம்பந்தப் பட்ட எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டு போனார்கள்; மற்றவர்கள், அரசியலில் கலந்து கொண்டு, சுதந்திரத்தைக் காப்பாற்றி வந்தார்கள்; இதில் என்ன ஆச்சரியமிருக் கிறது? அடிமைத்தனத்தைக் கொண்டு சுதந்திரத்தைக் காப்பாற்றுவது சரியா? என்று. வாதவம். இயற்கைக்கு மாறுபட்ட யாவற்றிலும் சில அசௌகரியங்கள் இருக்கவே செய்யும். சமுதாயம் என்பது இயற்கைக்கு விரோதமானதுதானே. மற்றவர் களை அடிமைப் படுத்தித் தாங்கள் சுதந்திரமாக வாழக்கூடிய அசந்தர்ப்ப மான நிலைமை, சில ஜாதியினருக்கு ஏற்பட்டுவிடுகிறது. பார்ட்டா தேசத்தின் நிலைமை இப்படித்தான் இருந்தது. இது பழையக் காலத்து விஷயம். ஆனால் தற்காலத்தில், எந்த நாட்டிலும் அடிமைகள் இல்லை. அடிமை வழக்கமும் கிடையாது. அதற்குப் பதில் எல்லா நாடுகளிலுமுள்ள எல்லா ஜனங்களும் அடிமைகளாயிருக்கிறார்கள். அடிமைகளுக்குச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லி இவர்களே சுதந்திரத்தை இழந்து விடுகிறார்கள். இதனை ஜீவ காருண்யம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இதனை நான் கோழைத்தனம் என்று கூறுகிறேன். இப்படிக் கூறுவதனால், அடிமைகள் ஒரு சமுதாயத்திற்கு அவசியமானவர்களென்றோ, அடிமை வழக்கம் நியாயமான தென்றோ நாம் அபிப்பிராயப்படுவதாக யாரும் கருதக்கூடாது. அடிமைத்தனத்திற்கு நான் விரோதி என்பதை ஏற்கெனவே வலி யுறுத்தி யிருக்கிறேன். தற்காலத்திய நாடுகள், ஏன் பிரதிநிதித்துவ முறையைக் கையாளுகின்றன, முற்காலத்திய நாடுகள் ஏன் கையாள வில்லை யென்பதற்கு எடுத்துக் காட்டாகவே இந்த அடிமைத் தனத்தைப் பற்றி இங்குப் பிரதாபித்தேன். எப்பொழுது ஒரு ஜாதி, தனக்கென்று பிரதிநிதிகளை நியமிக்கத் தொடங்குகிறதோ அப் பொழுதே அது சுதந்திரத்தை இழந்து விட்டது. அஃது, அந்த ஜாதி, இல்லவே இல்லை யென்றுதான் சொல்ல வேண்டும். ஒரு ராஜ்யமானது, சிறியதாயிருந்தால்தான், அது, தன் அரசுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற முடிவுக்கே நான் வந்திருக்கிறேன். ஆனால், சிறிய ராஜ்யத்தை, பெரிய ராஜ்யம் அடிமைப் படுத்திக் கொண்டு விடாதா வென்று சிலர் கேட்கலாம். அப்படி நேரிடா தென்பதையும், அந்தப் பெரிய ராஜ்யத்தின் துணை கொண்டு சிறிய ராஜ்ய மானது தனது அரசுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள முடியு மென்பதையும் நான் இனி நிர்த்தாரணம் செய்து காட்டுகிறேன். 33. அரசாங்க தாபனம் ஒரு தேசத்தில், ஜனங்களுக்குச் சட்ட நிர்மாண அதிகாரத்தை திரமாக ஏற்படுத்திக் கொடுத்து விட்ட பிறகு, அங்கு நிருவாக அதிகாரத்தையும் திரமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சட்ட நிர்மாண அதிகாரம் வேறே; நிருவாக அதிகாரம் வேறே. அரசுக்கே, நிருவாக அதிகாரத்தையும் கொடுத்து விட்டோமானால், இருக்கப்பட்ட நிலைமையைக் கொண்டு சட்டமியற்றுவதென்பது அசாத்தியமாகி விடும். எது சட்டம், எது சட்ட மில்லை யென்பது தெரியாமல் குழப்பம் ஏற்பட்டுவிடும். சமுதாயமானது, ஒரு சிலருடைய பலாத்கார சக்திக்கு இரையாகிவிடும். சமுதாய ஒப்பந்தத்தின் பிரகாரம், எல்லாப் பிரஜைகளும் சம அந்ததுடையவர்கள். எனவே, எல்லாருக்கும் நன்மை தரக் கூடியமாதிரி என்ன செய்யலா மென்பதைச் சொல்ல எல்லாருக்கும் உரிமையுண்டு. தான் செய்யாத ஒரு காரியத்தை மற்றவர்கள் செய்ய வேண்டுமென்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. இந்த உரிமை எல்லாப் பிரஜை களுக்கு மிருந்தால்தான், ஒரு சமுதாயமானது ஜீவசக்தியோடு இயங்கிக் கொண்டிருக்க முடியும். இந்த உரிமை எல்லாருக்கும் இருக்குமாறு செய்யும் பொருட்டுத்தான், அரசானது, அரசாங்கம் என்ற ஒரு தாபனத்தை ஏற்படுத்துகிறது. ஆள்வோரும் ஆளப்படுவோரும் சேர்ந்து செய்து கொள்கிற ஓர் ஒப்பந்தத்தின் பலனாகவே இந்த அரசாங்க தாபனம் நிறுவப் படுகிற தென்றும், என்னென்ன நிபந்தனைகளுக்குட்பட்டு ஆளப்படு வோர், ஆள்வோருக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டுமென்ற விவரங் களும் இந்த ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்டிருக்கின்றனவென்றும் சிலர் கூறு கிறார்கள். இந்த மாதிரியான ஒப்பந்தம், உண்மையாகவோ, சம்பிரதாய மாகவோ இருக்கிறதென்று சொன்னால், அது விநோத மான ஒப்பந்தம் என்றுதான் நான் சொல்வேன். இந்தமாதிரி ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடிய நிலைமையே சாத்தியமானதா வென்பதைச் சிறிது ஆராய்ச்சி செய்து பார்ப்போம். இந்த ஒப்பந்தத்தில், ஆளப்படுவோர் என்று அழைக்கப்படுகிற வர்கள் ஜனங்கள். இந்த ஜனங்களினின்று பிறக்கிற ஜனாதிக்கமே மேலான சக்தியென்றும், இதுவே அரசு என்றும் நாம் ஏற்கெனவே தெரிந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட அரசானது, தன்னை விட மேலான சக்தியொன்று இருக்கிறதென்று சொல்லி அதனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறதென்று சொன்னால், அந்த அரச சக்தியை, அதாவது ஜனாதிக்க சக்தியை வரையறுத்து விட்டது போலாகிற தில்லையா? அப்படி அதனை வரையறுக்க முடியுமா? முடியாதே. அரச சக்திக்கு ஓர் எல்லை வகுப்பது என்று சொன்னால், அதனை அழித்து விடுவது என்பதுதான் அர்த்தம். மற்றும், ஜனங்கள், குறிப்பிட்ட ஒரு தலைவனுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம், அதாவது அரசாங்கம் என்கிற தாபனத்தின் மூலம், தங்களை பந்தப்படுத்திக் கொண்டு விடுகிறார் களென்று சொன்னால், அந்தச் செயல் குறிப் பிட்ட ஒரு காரியத்திற்காக எடுத்துக்கொண்ட நடவடிக்கையாகிறது. அரசானது, அதாவது ஜனாதிக்க சக்தியானது, எல்லாருக்கும் பொதுவா யுள்ள காரியங்களைத் தான் செய்யலாமே தவிர, குறிப்பிட்ட ஒரு நபருடன் எவ்வித நடவடிக்கையும் நடத்தக்கூடாது. அப்படிப்பட்ட நடவடிக்கை சட்டரீதியான நடவடிக்கை யாகாது. எனவே ஜனங்கள், அதாவது ஆளப்படுவோர் என்று மேலே சொன்னோமே அவர்கள், குறிப்பிட்ட ஒரு நபருடன், அந்த நபருக்குக் கீழ்ப்படிந்து நடப்ப தாக ஒப்பந்தம் செய்து கொண்டால், அது சட்ட விரோதமானது. தவிர, இந்த மாதிரியான ஒப்பந்தம், இயற்கைக்கு மாறுபட்டது. யாரொருவருக்கு அதிகாரம் இருக்கிறதோ அவர்கள் அந்த அதிகாரத்தைப் பிரயோகிக்கவே பார்ப்பார்கள். இந்த மாதிரி குறிப்பிட ஒரு நபரிடத்தில் எங்களை ஆளுங்கள் என்று சொல்லி அதிகாரத்தைக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஆளாமலிருப்பார் களா? ஜனங்கள்தான் ஆட்படாமலிருக்க முடியுமா? இதற்கு ஒப்பந்தம் என்ற பெயர் எப்படிப் பொருந்தும்? இஃது எப்படியிருக்கிற தென்றால், என்னுடைய ஆதிகளை யெல்லாம் நான் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; உனக்கிஷ்டப் பட்டதை நீ எனக்குக் கொடுக்கலாம் என்று சொல்வதைப் போலிருக்கிறது. எந்த ஒரு ராஜ்யத்திலும், ஒரே ஒருவிதமான ஒப்பந்தந்தான் உண்டு. அஃது, எல்லா ஜனங்களும், சம அந்ததும் சம உரிமையுமுடையவர் களாய் ஒன்று சேர்வதென்பது. இதைத் தவிர்த்து வேறு ஒப்பந்தமே கிடையாது. ஓர் அரசாங்கம், எப்படி தாபிக்கப்படுகிறதென்பதைப் பற்றிச் சிறிது கவனிப்போம். சட்டத்தை இயற்றுவது, சட்டத்தை நிறைவேற்றுவது என்ற இரண்டு செயல்களினால் அரசாங்கம் நிறுவப்படுகிறது. நிருவாகத்தை நடத்த இன்னின்ன மாதிரியான அமைப்பில் அரசாங்கம் இருக்க வேண்டு மென்று திட்டப்படுத்தி, அரசானது ஒரு சட்டத்தை நிறைவேற்றுகிறது. சரி, இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட்டால் மட்டும் போதுமா? இதனை அநுஷ்டானத் திற்குக் கொண்டுவர வேண்டாமா? அதாவது அதிகாரிகளை நிய மிப்பது, இன்னின்ன விஷயங்களைப் பற்றிச் சட்டங்களை இயற்றி நடவடிக்கைக்குக் கொண்டு வருவது முதலிய காரியங்களைச் செய்ய வேண்டாமா? இந்தக் காரியங்கள், சட்டங்களாகா; முதலிற் சொன்ன சட்டத்தினின்று பிறந்தவைகளே. இவையெல்லாம், சாதாரணமாக, ஓர் அரசாங்கம் செய்யவேண்டிய செயல்கள். சிலர் கேட்கலாம், அரசாங்க மென்பதே ஏற்படாதபொழுது, அரசாங்கத்தின் சட்டங்கள் என்பவை எப்படி ஏற்படக்கூடுமென்று; ஜனங்கள், ஒன்று ஆளும் அரசாகவாவது இருக்க முடியும், அல்லது ஆளப்படும் பிரஜைகளாக வாவது இருக்கமுடியும், இவை யிரண்டுமில்லாமல், அவர்கள் அரசாங்கமாக அல்லது அரசாங்க அதிகாரிகளாக எப்படி இருக்க முடியுமென்று. சமுதாய அமைப்பில் ஏற்பட்டிருக்கிற ஒரு புதிர் இது. மேற் பார்வைக்கு முரண்பட்ட மாதிரி தெரிகிற செயல்கள் சில சந்தர்ப்பங் களில் ஒன்று சேர்ந்து, சமுதாயத்தை இயங்கச் செய்கின்றன. குறிப் பிட்ட ஒரு சந்தர்ப்பத்திற்கு, அரசானது, ஜனஆட்சியாக மாறி, ஜனங்கள் நிருவாக அதிகாரிகளாகிறார்கள். ஜனங்கள், அரசு என்ற முறையில், பொதுவான தொரு சட்டத்தை மட்டும் நிறைவேற்றுவ தோடு நில்லாமல், நிருவாக அதிகாரிகள் என்ற தோரணையில், குறிப்பிட்ட சட்டங்களையும் நிறைவேற்றி அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிறார்கள். இப்படிச் சொல்வது வெறும் தத்துவமல்ல. இங்கிலாந்தில் இஃது அநுஷ்டானத்தில் இருக்கிறது. அங்குள்ள காமன்சபை என்பது தான் ஜனசபை. இந்த சபை, குறிப்பிட்ட ஒரு காரியத்தைத் துரிதமாக முடிக்க வேண்டுமானால், தன்னை ஒரு பெரிய கமிட்டியாக மாற்றிக்கொண்டு விடுகிறது. அதாவது ஜன சபையினால் ஒப்படைக்கப்பட்ட ஒரு காரியத்தைச் செய்வதற்கென் றேற்பட்ட ஒரு கூட்டமாகத் தன்னை அமைத்துக்கொண்டு விடுகிறது. இதே கூட்டமானது, பின்னர், ஜனசபைக்கு, தான் செய்த காரியங் களை ஒப்புவிக்கிறது. இதனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தென்ன வென்றால், காமன்சபையே ஒரு சமயத்தில் ஜன சக்தியைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் ஜன சபையாகவும், மற்றொரு சமயத்தில் காரிய நிருவாகஞ் செய்யும் சபையாகவும் இருக்கிறது என்பதுதான். இங்ஙனம், ஜனாதிக்க சக்தியின் ஒரு செயலினால் மட்டும் சுலபமாக தாபிக்கப்படக் கூடியது ஜன ஆட்சி முறையே யாகும். 34. அரசாங்கம், ஆக்கிரமிப்புக் குட்படாமலிருக்க வழியென்ன? முந்தின அத்தியாயத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தென்னவென்றால், அரசாங்க தாபனம் ஓர் ஒப்பந்தமல்ல, அஃதொரு சட்டம்; நிருவாக அதிகாரிகள், ஜனங்களுடைய எஜமானர்களல்லர், அவர் களுடைய காரியதர்கள்; ஜனங்கள், தங்கள் விருப்பம் போல் அந்தக் காரியதர்களை, அதாவது உத்தி யோகதர்களை நியமிக்கவும் விலக்கவும் உரிமை யுடையவர்கள்; உத்தியோகதர்கள், ஜனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிற வர்களல்லர், அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்கள்; அவர்கள், ராஜ காரியத்தை ஏற்று நடத்துகிறார்களென்று சொன்னால், பிரஜைகள் என்ற ஹோதாவில் தங்கள் கடமையைத்தான் நிறை வேற்றுகிறார்களே தவிர, சில நிபந்தனைகளை வகுத்துக்கொண்டு, அந்த நிபந்தனைகளின்படி நடக்கிறார்களில்லை. எனவே, ஜனங்கள், தங்கள் ராஜ்யத்தில், பரம்பரை மன்ன ராட்சி முறையையோ அல்லது பிரபுத்துவ ஆட்சி முறையையோ ஏற்படுத்து கிறார்களென்று சொன்னால், அந்த ஆட்சி முறைக்குத் தாங்கள் கட்டுப்பட்டு நடப்பதாக மேற்படி மன்னர் பரம்பரை யுடனோ அல்லது பிரபுக் களுடனோ ஒப்பந்தம் செய்துகொண்டு விட்டார்களென்பது அர்த்தமல்ல. தங்களிஷ்டப்படி வேறு விதமான ஆட்சிமுறையை ஏற்படுத்திக் கொள்கிற வரையில், தற்காலிகமாக, இந்த ஆட்சி முறை இருக்கட்டும் என்று சொல்லி, அதற்குச் சம்மதம் கொடுக்கிறதாகத்தான் அர்த்தம். ஆனால் ஓர் ஆட்சி முறையிலிருந்து மற்றோர் ஆட்சி முறைக்கு மாறுவதென்பது மகா ஆபத்து என்று சொல்லலாம். உண்மை. ஆனால் அப்படி மாற்றிவிட ஜனங் களுக்கு உரிமையுண்டு. ஜனங்களுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு சிலர், ஏற்கெனவே தாபிதமாயுள்ள அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடப் பார்ப்பார்களானால், அப்பொழுது அந்த அரசாங்கமானது என்ன செய்கிற தென்றால், அந்த ஒரு சிலரை அடக்கிப் போடுவதாகச் சொல்லி, ஜனங் களுடைய உரிமைகளை மெது மெதுவாகப் பறித்து, தன்னுடைய சுவாதீனத்திற்குள் வைத்துக் கொள்ளப் பார்க்கிறது. உலகத்திலுள்ள எல்லா அரசாங்கங்களும் இப்படிச் செய்வதையே நாம் பார்க்கிறோம். இங்ஙனம், அரசாங்கமானது, ஜன உரிமையைப் பறித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வதற்குத்தான், மேலே நான் சொன்னபடி அடிக்கடி ஜன சபை கூட வேண்டும். அப்பொழுது அரசாங்கமானது ஜன சுதந்திரத்தில் பகிரங்கமாகத் தலையிட்டு அதனைச் சீரழிக்க முடியாது. இப்படிக் கூடுகிற சபைகள், இரண்டு விதமான தீர்மானங் களைக் கிளர்த்தி, அவற்றிற்கு முடிவு தெரிந்து கொள்ள வேண்டும். முதலாவது, இப்பொழுதுள்ள ஆட்சிமுறை, அப்படியே யிருக்க லாமா வென்பது. இரண்டாவது, இப்பொழுது நிருவாகத்தை நடத்து கிறவர்களிடத்திலேயே நிருவாக அதிகாரத்தை விட்டு வைக்கலாமா வென்பது. இதனின்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியதென்ன வென்றால், ஏற்கனவே நான் ருஜுப்படுத்திக் காட்டியிருக்கிற மாதிரி, ஜனங்கள் இஷ்டப்பட்டால், எந்த ஒரு சட்டத்தையும் ரத்து செய்ய லாம்; அல்லது மாற்றி யமைக்கலாம். தங்களுக்குத் தேவையில்லை யென்று கருதினால், ஜனங்கள், சமுதாய ஒப்பந்தத்தைக் கூட வேண்டாமென்று சொல்லி விடலாம். இதனை யாரும், நியாயமற்ற தென்று சொல்ல முடியாது. ஒருவன், தனக்கு இஷ்டமில்லை யானால், தன்னுடைய பிரஜா உரிமையைக் கூடத் துறந்து விட்டு, தனக்கு இயற்கையா யேற்பட்டுள்ள சொத்து சுதந்திரங்களை இஷ்டப்படி அநுபவிக்கும் பொருட்டு, தனது நாட்டை விட்டே வெளியேறி விடலாமென்று, க்ரோஷிய என்பவன் கூறுகிறான்.1 ஒரு தனி மனிதனுக்கு இந்த உரிமை இருக்கிறதென்று சொன்னால், எல்லா ஜனங்களுக்கும் இந்த உரிமை, அதாவது தங்களுக்கு இஷ்டப் பட்டதைச் செய்யும் உரிமை இல்லை யென்று சொல்வது, மிகக் கேவலமல்லவா? சமுதாய ஒப்பந்தம் நான்காம் பாகம் ஒருவனை, ஞானியாக்குவது அப்புறமிருக்கட்டும். முதலில் அவனை மனிதனாக்க முயலுவோம். * * * நமக்கு, எவ்வளவுக் கெவ்வளவு குறைவாகத் தெரிந்திருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு அதிகமாகத் தெரிந்திருப்பதாக நினைக்கிறோம். * * * ஆடம்பர வாழ்க்கை யில்லாவிட்டால் கலையேது? அநியாய புருஷர்கள் இல்லாவிட்டால், சட்ட விவகாரங்கள் ஏது? கொடுங் கோலர்களும் யுத்தங்களும் இல்லாவிட்டால் சரித்திரம் ஏது? - ரூஸோ 35. ஜனசக்தி, அழிக்க முடியாதது பல மனிதர்கள் ஒன்று சேர்ந்து தங்களை ஒரு சமுதாயமாக எப்பொழுது ஆக்கிக் கொண்டு விடுகிறார்களோ அப்பொழுது அவர்களுக்கு ஒரே ஓர் இச்சைதான் இருக்கிறது. எல்லோருடைய க்ஷேமத்தையும் சுக சௌக்கியத்தையும் கோருவதுதான் அந்த இச்சை. இப்படி எல்லோருக்கும் ஒரே விதமான இச்சை இருக்கிற காலத்தில், ராஜ்யத்தின் எல்லாச் சக்திகளும் வலுவுள்ளனவாகவும், ஆனால் எளிமையானவையாகவும் இருக்கின்றன; அதன் கொள்கைகள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக் கின்றன. சில்லரை மன மாற்றங் களோ, உரிமைக்கான போராட்டங்களோ அங்கு இருப்பதில்லை. பொதுநல மனப்பான்மைதான் எங்கும் காணப் படுகிறது. நல்லறிவுடையவர்கள் இதனை நன்றாகத் தெரிந்து கொள்ளக் கூடும். அமைதி, ஐக்கியம், சமத்துவம் ஆகியவை, அரசியல் சூழ்ச்சிக்கு விரோதிகள். நேர்மையும், சரள சுபாவமு முடையவர்களை ஏமாற்றவும் முடியாது; அவர்களும் பிறரை ஏமாற்ற மாட்டார்கள். ஒரு நாட்டில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஒரு மரத்தடியில் அமர்ந்து ராஜ்ய விவகாரங் களைக் கவனித்து வருகிறார்களே இவர்கள்தான் உலகத்திலேயே மிகவும் சந்தோஷமான ஜாதியார். இவர்களைப் பார்த்து விட்டு, நாகரிக ஜாதியார் என்று சொல்லிக் கொண்டு மிகவும் கேவலமாக நடந்து வருகிறார்களே அவர்களை நாம் எப்படிப் பாராட்டிப் பேசுவது? நேர்மையும், சரள சுபாவமுமுடைய ஜனங்களால் ஆளப் படுகிற ஒரு தேசத்தில், அதிகமான சட்டங்கள் தேவையில்லை. புதிய சட்டங்கள் ஏதேனும் ஒன்றிரண்டு தேவையா யிருந்து அவற்றை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தால், அந்தத் தேவையை எல்லோரும் உணர்கிறார் களென்பது பெறப்படுகிறது. இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டு மென்று எவன் முதன்முதலாகச் சொல்கிறானோ அவன், மற்றவர்கள் ஏற்கனவே நினைத்திருந்ததை வாய்மொழியால் வெளிப்படுத்துகிறான். அவ்வளவுதான். எல்லாரும் நினைத்திருக்கின்ற ஒன்றை, செயலாகக் கொணர்வதற்கு, யாருடைய விசேஷ நாவன்மையோ வேறெதுவோ தேவையில்லை. தனிப்பட்டவர்கள், தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடி வருவார்களானால், சிறிது சிறிய சங்கங்கள், தங்கள் செல் வாக்கை அரசாங்க நிருவாகத்தில் உபயோகிக்கத் தொடங்குமா னால், அப்பொழுது சமுதாயத்தின் கட்டுப்பாடு குலைகிறது; ராஜ்யம் பலஹீனமடைகிறது; பொதுநலம் பாதிக்கப்படுகிறது. விரோதிகள் பலர் தோன்றிவிடுகிறார்கள். ஜனங்கள்; வாக்கு (ஓட்) கொடுப்பதின் மூலம் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கிற விஷயத்திலே ஒற்றுமை என்பது இல்லாமற் போகிறது. அதாவது பொதுஜன அபிப்பிராயமென்பது இல்லாமலே போய் விடுகிறது. எந்த ஒரு நல்ல யோசனைக்கும் எதிர்ப்பு உண்டாகிறது. ஒருசில சுயநல வாதிகள், அரசாங்க நிருவாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, சட்டங்கள் என்ற பெயரால் சில அநீதமான உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள். அப்படியானால் ஜன இச்சையென்பது, அதாவது பொதுஜன அபிப்பிராயமென்பது அடியோடு அழிந்து போய் விடுகிறதா? இல்லை இல்லை. அஃது அழியாதது; தூய்மையானது. ஆனால், அதனை வேறுசில சுயநல சக்திகள் வந்து மூடிக் கொண்டு விடுகின்றன. அவ்வளவுதான். இந்த மாதிரியான காலங்களில், பிரதியொரு மனிதனும், தனது சுயநலத்தை நாடுவதின்மூலம், தேசத்திற்குச் செய்துவருகிற தீங்கை மறந்து விடுகிறான். இந்த மறதி, அதிகமாக ஆக, இவனுடைய சுயநலமும் அதிக மாகிறது. பணத்திற்காக இவன், தனது வாக்கை (ஓட்) விற்ற போதிலும், பொதுஜனம் என்ற முறையில் இவனுக்குள்ள அபிப்பிராயமானது அடியோடு அழிந்து விடுவ தில்லை. ஆனால் அதனை ஏமாற்றி விட்டு இவன் காரியங்களைச் செய்கிறான். அதாவது தனது வாக்குரிமையைப் பணத்திற்கு விற்கிறான். இவன், தனது வாக்குரிமையை உபயோகப் படுத்துவதன் மூலம், ராஜ்யத்திற்கு நல்லது இது என்று சொல்வதற்குப் பதில் குறித்த ஒரு நபருக்கு அல்லது கட்சிக்கு நல்லது இது என்று சொல்கிறான். ஜனாதிக்கம் பெற்ற நாடுகளில், ஜனங்களுக்கு வாக்குரிமை யென்பது பூரணமாக உண்டு. இந்த உரிமையை யாரும் அவர்களிட மிருந்து எடுத்து விட முடியாது. இந்த வாக்குரிமையைப் பற்றிச் சிறிது விதரித்துக் கூற வேண்டியிருக்கிறது. 36. வாக்குரிமை ஒரு சமுதாயத்தில் பொது விவகாரங்கள் நடத்தப்படுகின்ற விதத்தைக் கொண்டு, அந்தச் சமுதாயம் ஒழுங்காகவும் திடமாகவும் இயங்கிக்கொண்டு வருகிறதா, இல்லையாவென்பதை நாம் நிச்சயமாகத் தெரிந்து கொண்டுவிடலாம். பொதுஜன சபையில் எவ்வளவுக் கெவ்வளவு ஒற்றுமையான அபிப்பிராயம் நிலவி யிருக் கிறதோ, அதாவது எல்லோரும் ஏகோபித்து ஒரு விவகாரத்தைப் பைசல் செய்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு அந்தச் சமுதாயத்தில், பொது ஜன இச்சை மேலோங்கி நிற்கிறதென்பது அர்த்தம். அப்படியில்லாமல், மேற்படி பொதுஜன சபையில் நீண்ட வாதங்களும், அபிப்பிராய வேற்றுமைகளும், கூச்ச லும் குழப்பமும் அதிகமாகுமானால், அவை, சுயநல உரிமைகள் ஆதிக்கம் பெற்றுக் கொண்டு வருவதற்கும், ராஜ்யம் க்ஷீணித்துக் கொண்டு வருவதற்கும் அடையாளமாகும்.1 ஒரு தேசத்தில் இரண்டு அல்லது அதற்கு அதிகமான பிரிவினர் இருக்கின்றனர் என்பதை அங்கீகரித்துக் கொண்டு அதை அநுசரித் தாற்போல் அந்தத் தேசத்தின் அரசியல் வகுக்கப்பட்டிருக்குமானால், அந்த அரசியலின்கீழ் கூடுகிற பொது ஜன சபைகளில் இந்த மாதிரி யான கூச்சல்கள், குழப்பங்கள் முதலியன அதிகமாக ஏற்படுவதற்கு நியாய மில்லை. அப்படிச் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை, தேச நலத்திற்காகத்தான் இருக்குமே தவிர, சுய நலத்திற்காக இரா. உதாரணமாக, ரோமாபுரியில் குடியரசு ஆட்சிமுறை மேலோங்கி நின்ற காலத்தில், சமுதாயத்தில் இரண்டு பிரிவினர் இருப்பதாக அங்கீகரித்துக் கொள்ளப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டே பொதுஜனசபை கூட்டப்பட்டது. ஜனங்களை, கீழ் மக்களென்றும், மேல் மக்களென்றும் பிரித்தார்கள்.2 இந்த இரு சாராரும் சேர்ந்து நடத்துகிற ஜன சபைக் கூட்டங்களில், சண்டை சச்சரவுகள் உண்டாவது சகஜமாகவே இருந்தது. ஆனால் இப்படி ஒரு ஜாதிக்குள்ளேயே இரண்டு பிரிவினர் இருப்பது என்பதும், இவர்கள் சச்சரவிட்டுக் கொள்வது என்பதும் விதிவிலக்கே தவிர, இதுவே பொதுவிதியாக எல்லா நாடுகளிலும் இராது; இருக்கவும் கூடாது. அப்படி இரண்டு பிரிவினரோ அல்லது அதற்கு மேற்பட்ட பிரிவினரோ ஒரு சமுதாயத்திற்குள்ளே யிருந்தால், அத்தனை வேறு வேறு சமுதாயங்கள் இருக்கின்றன என்பதுவே அர்த்தம். பொது ஜன சபைகளில் இங்ஙனம் வாக்குவாதங்கள் நிகழ்ந்தாலும், குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப்பற்றி சர்வஜன வாக்கெடுக்கிறபோது, யாவும் அமைதியாகவே நடைபெற்றன. பெரும்பான்மையோரான ஜனங்கள் சேர்ந்து செய்த முடிவுக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு நடந்தார்கள். ஏனென்றால், ஜனங்களெல்லோருக்கும் ஒரேவிதமான இச்சைதான் இருந்தது. அதுதான் ராஜ்யத்தின் நன்மை. ஜனங்கள் ஒற்றுமையான அபிப்பிராயங் கொள்வதென்கிற இந்த விஷயம் இருக்கிறதே இஃதொரு வட்டம் மாதிரி. இந்த வட்டத்தின் ஒரு கோடியில், சுதந்திர நாட்டுப் பிரஜைகள்; மற்றொரு கோடியில் அடிமை நாட்டு ஜனங்கள். சுதந்திரப் பிரஜைகள், தேச நலனை முன்னிட்டுத் தங்கள் அபிப்பிராயத்தை ஒருமுகமாகத் தெரிவிக்கிறார்கள். அடிமைக்குழியிலே விழுந்துவிட்ட ஜனங் களுக்குச் சுதந்திரமும் கிடையாது; சுய இச்சையும் கிடையாது. இவர் களிடத்தில் அச்சம் குடி புகுந்து கொண்டுவிடுகிறது. இதனால் ஆள்வோரை முகதுதி செய்ய வேண்டியிருக்கிறது. அச்சமும் முகதுதி செய்கிற மனப்பான்மையும் சேர்ந்துவிட்டதனால், இவர்கள் எந்த விஷயத்தைப் பற்றியும் தீர்க்கமாக ஆலோசித்து ஒரு முடிவுக்கு வரமுடியாதவர்களாகி விடுகிறார்கள். இவர்கள் வாக்கு (ஓட்) கொடுப்பதெல்லாம், ஆள்வோரைப் பாராட்டுவதாகவோ அல்லது அவர் களைச் சபிப்பதாகவோ இருக்கிறது. ரோம ராஜ்யம், சக்ரவர்த்திகளின் ஆளுகைக்குட்பட்டிருந்த போது,1 ஸெனேட்டில், இங்ஙனம், ஆள்வோரைப் புகழ்கிற மாதிரியாகவோ அல்லது இகழ்கிற மாதிரியாகவோதான் வாதங்கள் நடைபெற்றன. டாஸிட2 என்ற சரித்திராசிரியன் இதை விதரித்துக் கூறுகிறான். எனவே, ஒரு ராஜ்யம் சீரழிந்து கொண்டு வருகிறதா அல்லது மேன்மையுற்றுக் கொண்டு வருகிறதாவென்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டு மானால், ஜன அபிப்பிராயம் எவ்வளவு தூரம் ஒற்றுமைப்பட்டதா யிருக்கிறதென்பதைக் கொண்டு தெரிந்து கொள்ளலாமென்பது ஏற்படுகிறது. ஜனங்களின் இச்சை ஒருமாதிரியாகவே இருக்க வேண்டு மென்று சொன்னால், அதனை நிறைவேற்றி வைப்பதற்கு இயற்கை யான சட்டம் ஒன்றுண்டு. அதுதான் சமுதாய ஒப்பந்தம். உலகத்தில் பலவிதமான சட்டங்கள் இயற்றப்பட்டாலும், இந்தச் சமுதாய ஒப்பந்தம் ஒன்றுதான், ஜனங்கள், தாங்களே இச்சைப்பட்டுச் செய்துகொள்கிற சட்டம். பூலோகத்திலே பிறக்கிற ஒவ்வொரு மனிதனும் சுதந்திரத்துடனேயே பிறக்கிறான். ஒவ்வொருவனும், தனக்குத்தானே எஜமானன். அப்படிப்பட்ட மனிதனை, யாரும், எந்த முகாந்திரத்தைக் கொண்டும், அவனுடைய சம்மதமில்லாமல் அடிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஓர் அடிமையினுடைய மகன் அடிமையாகவே பிறந்திருக்கிறான் என்று நாம் முடிவு கட்டுவது, அவன் மனிதனாகப் பிறக்கவில்லை யென்று முடிவு கட்டுகிற மாதிரிதான். சமுதாய ஒப்பந்தம் ஏற்படுகிற காலத்தில், சில எதிர்ப்புகள் இருக்கக்கூடும். ஆனால் அந்த எதிர்ப்புக் காரணமாக, ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்று சொல்வதற்கில்லை. அப்படி எதிர்த்த வர்கள், ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள். அவ்வளவுதான். இவர்கள், அந்த நாட்டுப் பிரஜைகளுக்குள்ளேயே அந்நியர்களா யிருப்பார்கள். சமுதாய ஒப்பந்தத்தின் பரிணாமமாக, ராஜ்யம் தாபிதமான பிறகு, இவர்கள், அந்த ராஜ்யத்திலேயே வசித்துக் கொண்டிருப்பார் களானால், மேற்படி சமுதாய ஒப்பந் தத்தை இவர்கள் அங்கீகரித்துக் கொண்டதாகவே கருதப்படுவார்கள். இவர்கள் வசிக்கச் சம்மதித்து விட்டதனாலேயே அந்த ராஜ்யத்தின் அரசியலை ஏற்றுக் கொண்டு விட்டார்களென்பது அர்த்தம்.1 முதலில் ஏற்பட்ட இந்தச் சமுதாய ஒப்பந்தத்தைத் தவிர்த்து, மற்றெல்லா வகையிலும், பெரும்பான்மையோருடைய வாக்கு எல்லாரையும் கட்டுப்படுத்தும். இப்படிக் கட்டுப்படுத்துவது, மேற்படி ஒப்பந்தத்தின் பரிணாமமே. இஃதென்ன வேடிக்கை! ஒரு மனிதன், அவனிஷ்டப்படி அபிப்பிராயங் கொள்ள உரிமையுடை யவன் என்று சொல்லிவிட்டு, அதே சமயத்தில், அவன் பெரும் பான்மையோருடைய அபிப்பிராயத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று சொல்வதும், ஒரு சட்டத்தை எதிர்க்கவும் உரிமை யுண்டு, அதே சமயத்தில் அதற்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என்று சொல்வதும் முன்னுக்குப் பின் முரணாயிருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்வியே தவறு என்றுதான் இதற்கு நான் பதில் சொல்ல முடியும். ஒரு பிரஜை, எல்லாச் சட்டங்களுக்கும் அங்கீகாரம் கொடுத்த வனேயாகிறான். அதாவது, அவனுடைய அபிப்பிராயத்தை மீறி நிறை வேற்றப்படுகிற சட்டங்களுக்கும், சட்ட விரோதமாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றுள்ள சட்டங்களுக்குங்கூட, அவன் சம்மதம் கொடுத்த வனேயாகிறான். ராஜ்யத்தின் எல்லாப் பிரஜைகளினுடைய இச்சைதான் அடிக்கடி மாறுதலடையாமல் ஒரே படித்தாயிருக்கிற ஜனசக்தி யென்பது. இந்தச் சுய இச்சை அல்லது சக்தி இருப்பதனால்தான், ஜனங்கள், சட்ட நிர்மாணஞ் செய்யும் உரிமையுடைய பிரஜைக ளென்று சொல்லப்படுகிறார்கள். இந்த உரிமையுடையவர்கள்தான், சுதந்திர ஜனங்கள். ஜனசபையில், ஒரு சட்டம் கிளத்தப்படுகிற தென்று சொன்னால், இந்தச் சட்டத்தை ஏற்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா? வென்று ஜனங்களைப் பார்த்துக் கேட்பதாக அர்த்தமல்ல. ஜன இச்சையை, இந்தச் சட்டம் அநுசரித்ததாயிருக்கிறதா வென்று கேட்பதாகவே அர்த்தம். ஜன இச்சை என்பது என்ன? சபையில் வந்திருப்போருடைய இச்சைதானே? கிளத்தப் படுகிற அந்தச் சட்டத்தின் மீது ஒவ்வொருவரும், தங்கள் அபிப்பி ராயத்தை வாக்கு (ஓட்) கொடுப்பதன் மூலம் தெரிவிக்கின்றனர். இப்படிக் கொடுக்கப்பட்ட வாக்குகளைச் சேகரித்தால், அதுவே ஜன இச்சையாகிறது. அந்த இச்சை, என்னுடைய சொந்த இச்சைக்கு, அதாவது அபிப்பிராயத்திற்கு விரோதமா யிருக்குமானால், என் னுடைய அபிப்பிராயம் தவறு என்பதையே அது காட்டுகிறது. அதாவது, நான் எந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தேனோ அந்த அபிப்பிராயத்தையே பொது ஜனங்களும் கொண்டிருந்ததாக நான் எண்ணிக் கொண்டிருந்தேனல்லவா, அது தவறு என்று நான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இவைகளினால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தென்னவென்றால், ஜன இச்சையென்பது பெரும்பான்மை யோரிடத்திலேயே தங்கி யிருக்கிற தென்பதுதான். இந்தப் பெரும்பான்மையோர், சிறுபான்மையோருடைய அபிப்பிராயத்தை நாம் எந்த விகிதாச்சாரப்படி ஏற்றுக் கொள்வ தென்பதற்கு இரண்டு வழிகளைக் குறிப்பிடுகிறேன். முக்கியமான ஒரு பிரச்சினை, அதாவது எல்லா ஜனங்களையும் பாதிக்கிற ஒரு பிரச்சினை, ஜனசபை முன்னர் ஆலோசனைக்கு வருகிறதென்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது அதற்கு ஒருமுகமான முடிவு காண்பதுதான் நல்லது. ஓரிரண்டு வாக்குகள் வித்தியாசப்பட்டா லும், மிகப் பெரும்பான்மை யோருடைய அபிப்பிராயம் ஒரே விதமாக இருக்கிறதாவென்று நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், சாதாரண ஒரு பிரச்சினைக்குச் சீக்கிரமான ஒரு முடிவு காண வேண்டுமானால், ஓரிரண்டு வாக்குகள் அதிகப்பட் டிருந்தாலே போதுமானது. அதாவது, ஓரிரண்டு அதிக வாக்குகளைக் கொண்டே, பெரும்பான்மையோரால் நிறை வேற்றப்பட்டதென்று நாம் சொல்லிவிடலாம். ஏனென்றால், பிரச்சினைக்குச் சீக்கிரமான முடிவு காணவேண்டுமென்பதுதான் இங்கு முக்கியம். 37. அரசாங்க அதிகாரிகளின் நியமன விஷயம் அரசாங்க அதிகாரிகளைத் தெரிந்தெடுப்பது ஒரு சிக்கலான விஷயமென்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். இந்த அதிகாரிகளை நியமிப்பதற்கு இரண்டு முறைகளை அநுஷ்டிக்க லாம். நேர்முகமாக நியமனம் செய்வது ஒன்று; திருவுளச் சீட்டுப் போட்டு அதன் மூலமாக நியமனம் செய்வது மற்றொன்று. இந்த இரண்டு முறைகளும் அநேக குடியரசு நாடுகளில் இருந்து வந்திருக் கின்றன. திருவுளச் சீட்டின் மூலமாக அதிகாரிகளை நியமனம் செய்வதுதான், ஜனநாயக முறையைத் தழுவியதா யிருக்கிறதென்று மாண்டெகு என்ற அறிஞன் கூறுகிறான். அதிகாரிகளைத் தெரிந் தெடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பே தவிர, அரசின் பொறுப் பல்ல. இதனை நாம் சரியாகத் தெரிந்துகொண்டு விட்டோ மானால், இந்தத் திருவுளச்சீட்டு முறை, ஜனநாயகத்திற்கு இசைந்த தாயிருக்கிற தென்பதை அங்கீகரித்துக் கொள்வோம். ஜனநாயக முறையைத் தழுவியுள்ள ஓர் அரசாங்கமானது, குறைவான காரியங் களைச் செய்து திறமையான நிருவாகத்தை நடத்துகிறது. அதாவது, குறை வான எண்ணிக்கையுடைய அதிகாரிகள் இருந்தால், திறம்பட நிருவாகத்தை நடத்தலாம். உண்மையான ஜனநாயக அரசாங்கத்தில், அரசாங்க உத்தி யோகம் என்பது ஒரு நபருக்குக் காட்டப்படுகிற சலுகையல்ல; ஒரு நபருக்கு அளிக்கப்படும் பொறுப்புள்ள வேலை. யார் வேண்டுமா னாலும் இந்த உத்தியோகத்தை வகிக்கலாமென்பது முடியாது. யார் நியமிக்கப்படு கிறார்களோ அவர்கள் சட்டப்படியே நடக்க வேண்டும். சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதான். உண்மையான ஜனஆட்சி முறை நிலவுகின்ற ஒரு நாட்டில், திருவுளச் சீட்டின் மூலம் அதிகாரிகளை நியமனஞ் செய்வதென்ப தொன்றே, அதிகமான பாதகத்தை உண்டு பண்ணாமலிருக்கக் கூடியது. ஒழுக்கம், திறமை, கொள்கைகள், பணம் முதலிய விஷயங் களில் எல்லா ஜனங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பது, ஜனஆட்சி முறையைத் தழுவியுள்ள ஒரு நாட்டில்தான் சாத்தியமா யிருக்கும்; இதனால், யார் அதிகாரிகளாகத் தெரிந்தெடுக்கப்பட்டா லும் திறமை, தன்மை முதலிய விஷயங்களைப் பொறுத்தமட்டில் எல்லோரும் ஒன்றாகவே இருப்பர். ஆனால், உண்மையான ஜன ஆட்சி யென்பது, ஏற்கனவே நான் கூறியுள்ளபடி ஒரு லட்சியமாகத் தான் இருக்கமுடியுமே தவிர, அநுபவ சாத்தியமான ஆட்சி முறையா யிருக்க முடியாது. நேர்முகமான நியமனம், திருவுளச் சீட்டின் மூலம் நியமனம் என்ற இரண்டு முறைகளையும் கலந்து, அதிகாரிகள் நியமனம் செய்யப்படுகிறார் களென்று வைத்துக் கொள்வோம். இந்த மாதிரி யான சந்தர்ப்பங்களில் விசேஷத் திறமையைக் காட்டவேண்டிய ராணுவம் முதலிய உத்தியோகங்களுக்கு நேர்முகமான நியமன முறையையும், விவகார ஞானம், நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியம், பொறுப்பை உணரும் தன்மை முதலியன தேவையாயிருக்கிற உத்தியோகங்களுக்கு, அதாவது நீதிபதிகள் முதலிய உத்தியோகங்களுக்கு, திருவுளச்சீட்டு மூலம் நியமன முறையையும் அநுஷ்டித்தல் நல்லது. ஏனென்றால், நல்லவிதமான ஒரு ராஜ்யத்தில், மேலே சொன்ன விவகார ஞானம் முதலிய தன்மைகள் ஏறக்குறைய எல்லாப் பிரஜைகளிடத்திலும் இருக்கும். மன்னராட்சி முறையைத் தழுவியுள்ள ஓர் அரசாங்கத்தில், மேலே சொன்ன இரண்டு முறைகளுக்கும் இடமில்லை. ஏனென் றால், அரசனுக்குத்தான், தன் அதிகாரிகளை நியமித்துக்கொள்ளும் பூரண அதிகாரம் இருக்கிறது. மன்னனிடமிருந்து, இந்த அதிகாரத்தை எடுத்துவிட வேண்டுமென்று சொன்னால், மன்னராட்சி முறையையே மாற்றி யமைக்கவேண்டுமென்று சொல்வதாகும். இனி, ஒரு பொதுஜன சபையில், வாக்குகளைப் பதிவு செய்வது எப்படி, சேகரிப்பது எப்படி என்பவைகளைப் பற்றிச் சிறிது கூற வேண்டியிருக்கிறது. இது விஷயமாக, ரோம ராஜ்யத்தில் என்ன முறை அனுஷ்டிக்கப்பட்டதென்பதை நாம் தெரிந்துகொண்டு விட்டோமானால் அதுவே போதுமானது. இரண்டு லட்சம் பேரடங்கியிருந்த ஒரு சபையில், பொது விவகாரங்கள் எவ்வாறு நடத்தப்பட்டனவென்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது உபயோக கரமானதா யிருக்குமல்லவா? 38. ரோம ஜன சபை புராதன ரோம ராஜ்யத்தைப்பற்றி, நமக்கு ஆதாரமுள்ள ததவேஜுகள் கிடைக்கவில்லை. நமக்குக் கிடைத்தனவற்றுள் பெரும்பாலன, கட்டுக் கதைகளோ என்று கருதவேண்டி யிருக்கிறது. ரோமர்கள், ஆதியில் மூன்று ஜாதியினராகப் பிரிந்திருந்தார்கள். நாளாவட்டத்தில் இந்த மூன்று ஜாதியினரும் முப்பத்தைந்து ஜாதியினராகப் பிரிந்தார்கள். இவர்கள் நகர வாசிகளென்றும் நாட்டு வாசிகளென்றும் இரண்டு பெரும் பகுதியினராகப் பிரிக்கப் பட்டிருந்தார்கள். இதன் மூலமாக, பூர்விக ரோமர்கள், நகர வாழ்க்கையையும் நாட்டு வாழ்க்கையையும் இணைத்துக் கொண்டே வந்தனர். ஒன்றினின்று மற்றொன்றைப் பிரித்துக் காட்டவில்லை. பின்னர் ஸெர்விய1 என்ற ஒரு மன்னன் காலத்தில், ரோமர்கள் ஆறு பிரிவினர்களாகப் பிரிக்கப்பட்டார்கள். இவர்களனைவரும் சேர்ந்து தான் ஒரு ஜன சபையாகக் கூடினார்கள். இந்தச் சபைக்கு கொமி ஷியா2 என்றும், இவர்கள் கூடுகிற இடத்திற்கு போரம்3 என்றும் பெயர். இவர்கள் ஆதியில் எப்படி ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வந்தார்களோ அதைப் போல், ஜன சபையில் இவர்கள் வாக்குக் கொடுக்கிற முறையும் சுலபமாகவே அமைந்திருந்தது. ஒவ்வொரு வரும், தங்கள் வாக்கை உரத்த குரலால் தெரிவிப்பார்கள். இதை உடனே ஓர் அதிகாரி பதிவு செய்து கொள்வான். முதலில் ஜாதி வாரியாக அல்லது பிரிவு வாரியாக இந்த வாக்கு எடுக்கப் பட்டது. பின்னர், ஒவ்வொரு ஜாதியிலிருந்தும் அல்லது பிரிவிலிருந்தும் கிடைத்த பெரும்பான்மையான வாக்குகளைக் கொண்டு அந்த ஜாதி அல்லது பிரிவினுடைய அபிப்பிராயம் தெரிந்து கொள்ளப் பட்டது. இதற்குப் பிறகு எல்லா ஜாதி அல்லது எல்லாப் பிரிவுகளி னுடைய வாக்குகளையும் சேகரித்து, அதுவே, ஜனவாக்காக, அதா வது பொதுஜன அபிப்பிராயமாக வெளியிடப்பட்டது. ஜனங்கள், ஒழுக்க முடையவர்களா யிருந்தவரையில், இந்த முறை சரியாகவே நடைபெற்று வந்தது. ஆனால் ஜனங்களிடத்தில் ஒழுக்கஹீனங்கள் புகுந்து விட்டபிறகு, இந்த முறை சீரழிந்து போய்விட்டது. குடியரசு முறை (ரோமாபுரியில்) வீழ்ச்சி யடைந்த தற்கு இந்த ஒழுக்கஹீனமே காரணமென்று சொல்லப்படுகிறது. இந்த முறையைச் சிறிது மாற்றி யமைத்து ஒழுங்கு படுத்தியிருந்தால், ரோமக் குடியரசுக்கு வீழ்ச்சியே ஏற்பட்டிராது. திடகாத்திரமுள்ள ஒருவன் எந்த உணவைச் சாப்பிடு கிறானோ அதே உணவை ஒரு நோயாளி சாப்பிட முடியுமா? முடியாது. அதைப்போல், நல்ல ஜனங்களுக்காக வென்று ஏற்பட்ட சட்டங் களைக் கொண்டு, ஒழுக்கஹீனமுள்ள ஜாதியாரை ஆளவேண்டு மென்று ஆசைப்படலாமா? இத்தலியிலுள்ள வெனி குடியரசு ராஜ்யம் இதற்குச் சிறந்த உதாரணம் இங்கு, நல்லச் சட்டங்கள், சட்டப் புத்தகத்தில் இருந்தன. ஆனால் ஜனங்கள் கெட்டவர்களாயிருந் தார்கள். என்ன ஏற்பட்டது? குடியரசு வீழ்ச்சி. இதனைத் தடுக்க என் னென்னவோ முயற்சிகள் செய்யப்பட்டன. பயனொன்று மில்லை. 39. சில விசேஷ அதிகாரிகள் பல அமிசங்கள் சேர்ந்து ஒரு ராஜ்யமாகிறது. இந்தப் பல அமிசங்களுக்கிடையே உள்ள சம்பந்தா சம்பந்தங்கள் சரியாக நிர்ணயிக்கப்படாத காலத்திலும், அல்லது இந்தச் சம்பந்தங்கள் அடிக்கடி மாறக்கூடிய விதமான காரணங்கள் எவையேனும் இருந் தாலும், இவைகளையெல்லாம் ஒழுங்குபடுத்தி விடுவதற்கென்று சில விசேஷ அதிகாரிகளை நியமிக்கலாம். அரசாங்கத்திற்கும் ஜனங் களுக்கும் அல்லது அரசுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள தொடர்பை இவர்கள் ஒழுங்கு படுத்திக் கொடுப்பார்கள். இவர்களுக்கு, நான் ட்ரிப்யூன்கள்1 என்று பெயர் கொடுப்பேன்.இவர்கள், சட்டங் களுக்கும், சட்ட நிர்மாண அதிகாரத்திற்கும் பாதுகாப்பாளர்களா யிருப்பார்கள். இவர்கள், சந்தர்ப்பத்திற் கேற்றாற்போல், அரசாங்கத்தி னின்று அரசைக் காப்பாற்றுவார்கள். அல்லது ஜனங்களின் எதிர்ப்பி லிருந்து அரசாங்கத்தைக் காப்பாற்றுவார்கள். இந்த மாதிரியான அதிகாரிகள் ரோமாபுரியிலும் வெனி குடியரசு நாட்டிலும் இருந்தார்கள். ட்ரிப்யூன்கள் என்கிற இந்த விசேஷ அதிகாரிகள் ராஜ்ய அமைப்பின் எந்த ஓர் அமிசத்தைச் சேர்ந்தவர்களுமல்லர். சட்ட நிர்மாண அதிகாரத்திலோ நிருவாக அதிகாரத்திலோ இவர்களுக்கு எவ்வித பங்கும் கிடையாது. இங்ஙனம் பங்கு இல்லாத ஒரு காரணத் தினாலேயே, இவர்களுடைய அதிகாரம் மகத்துவம் பொருந்தியதா யிருக்கிறது. இவர்கள், தாங்களாக எதையும் செய்யமுடியாது. ஆனால் எதையும் தடுத்துவிடலாம். சட்டங்களை இயற்றுகிற அரசைக் காட்டிலும், அந்தச் சட்டங்களை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிற அரசாங்கத்தைக் காட்டிலும், இந்த விசேஷ அதிகாரிகள் புனிதமானவர்கள்; கௌரவத்திற் குரியவர்கள். பூர்விக ரோமாபுரியில் இவர்களுக்கு விசேஷ மரியாதை இருந்து வந்தது. நிருவாக அதிகாரம் கடுமையாக இல்லாமல் நிதானமாக இருக்கும் படிப் பார்த்துக்கொள்வதும், சட்டங்கள் சரியானபடி பிரயோகம் செய்யப் படுகின்றனவாவென்பதைக் கண்காணிப்பதும் இந்த விசேஷ அதிகாரி களின் வேலை. ஆனால் இவர்களே நிருவாக அதிகாரத்தையும் சட்ட அநுஷ்டான அதிகாரத்தையும் ஏற்றுக் கொண்டு விடுவார்களானால், அப்பொழுது இவர்கள் கொடுங் கோலர்களாகி விடுகிறார்கள். இவர் களினால் ஒழுக்க ஹீனங்கள் மலிந்து, ராஜ்யமே சீரழியத் தொடங்குகிறது. மற்றும், இந்த விசேஷ அதிகாரிகள் அதிகமான பேராயிருக்கக் கூடாது. இவர்கள் எண்ணிக்கையில் எவ்வளவுக் கெவ்வளவு குறைவா யிருக்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது. தவிர, இவர்களை நிரந்தர அதிகாரிகளாகவும் நியமிக்கக்கூடாது. ராஜ்யத் தின் பல அமிசங்களையும் ஒழுங்கு படுத்திவிடவேண்டிய சந்தர்ப்பத் தில் மட்டும் இவர்களை நியமித்துக்கொண்டால் போதுமானது. 40. சர்வாதிகாரிகள் இன்னொரு வகையான விசேஷ அதிகாரிகளைப் பற்றிச் சிறிது கூறுவோம். ஒரு சட்டத்தை இயற்றிவிட்டோமானால், அதனை அடிக்கடி மாற்றிக்கொண் டிருக்கமுடியாது. இந்த மாற்ற முடியாத காரணத்தினால் எதிர்பாராத அல்லது ஏதோ ஒரு விசேஷ நெருக்கடி ஏற்படுகிறபோது, அதற்கு மேற்படி சட்டம் பொருத்தமில்லா திருக்கலாம். இதனால் நெருக்கடியைச் சமாளிக்கக் கூடிய சக்தி அந்தச் சட்டத்திற்கு இல்லாமற்போய், கடைசியில் ராஜ்யத்திற்கே கேடு உண்டாகிவிடுகிறது. நெருக்கடியைச் சமாளிப்பதற்கென்று புதியதொரு சட்டத்தை இயற்றி விடலாமேயென்று சொன்னால், அதற்காக எத்தனையோ சம்பிரதாயங் களை அநுசரிக்கவேண்டி யிருக்கிறது. சம்பிரதாய பூர்வமாக ஒரு சட்டத்தை நிறைவேற்றி அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருகிற வரையில், நெருக்கடி நிற்குமா? அதற்குள் ராஜ்யமே அழிந்து போகக் கூடுமே. ஏதோ ஒருசில விஷயங்களை மட்டும் முன்னிலைப் படுத்திக் கொண்டு ஒரு சட்டத்தை இயற்றுகிறோம். ஆனால் அந்தச் சட்டத்தை அநுஷ் டானத்திற்குக் கொண்டு வருகிறபோது, எதிர்பாராத ஆயிரத்தெட்டு சிக்கல்கள் உண்டாதல் கூடும். இவைகளை யெல்லாம், சட்டத்தை இயற்றுகிறபோது, எதிர்பார்க்க முடியாதல்லவா? எனவே, சட்டங் களின் உதவி யில்லாமலேயே ராஜ்ய நிருவாகம் நடைபெற வேண்டிய நிலைமையும் ஏற்படும் என்று எதிர்பார்த்தே, சட்டங்களை இயற்றிக் கொள்ளவேண்டும். பார்ட்டா வாசிகள் கூட, தங்கள் சட்டங்களைத் தூங்க விட்டு விட்டு, ராஜ்ய நிருவாகத்தை நடத்தி யிருக்கிறார்கள். ஆனால், இப்படிச் சட்டங்களை ரத்து செய்துவிட்டு ராஜ்ய நிருவாகத்தை நடத்துவதென்கிற விஷயமிருக்கிறதே அஃது, அடிக்கடி செய்யப்படக் கூடியதல்ல. சட்டங்களினுடைய அதிகாரம் மகா புனித முடையது. இந்தப் புனிதத் தன்மையை நாம் அடிக்கடி கறைப்படுத்திக் கொண்டிருக்கலாமா? ராஜ்யத்திற்கு மகத்தானதோர் ஆபத்து ஏற்பட்டு, சாதாரண சட்டங்களைக் கொண்டு அந்த ஆபத்தைக் கடக்க முடியாத நிலைமையில்தான், அந்தச் சாதாரண சட்டங்களை ஒதுக்கித் தள்ளி வைத்து விட்டு, விசேஷ சட்ட மொன்றை நிறைவேற்றி அதனை அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரும் பொறுப்பை, தக்க ஒரு மனிதனிடமோ அல்லது இரண்டு மூன்று மனிதர்களிடமோ ஒப்படைக்க வேண்டும். அரசாங்கக் காரியங்கள், சாதாரண காலத்தில் எந்த வேகத்துடன் நடைபெறு கின்றனவோ, அந்த வேகத்தைக் காட்டிலும் சிறிது வேகமாக, சிறிது தீவிரமாகக் காரியங்கள் நடைபெற்றாலே, மேற்படி நெருக்கடியைச் சமாளித்துவிடலாமென்று தெரிந்தால், அரசாங்க அதிகாரிகளி லேயே இரண்டு மூன்று பேரைப் பொறுக்கி அவர்களிடத்தில் சாதாரணச் சட்டங்களை யுக்தம் போல் அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரும் பொறுப்பை ஒப்படைக்கலாம். அப்படிக்கின்றி, சட்டசம்பிரதாயங் களை அநுசரித்து ஆபத்தைச் சமாளிக்க முடியா தென்று தெரிந்தால், எல்லாச் சட்டங்களையுமே ரத்து செய்துவிட்டு, மேலே சொல்லப்பட்ட மாதிரி ஒரு விசேஷ சட்டத்தைச் செய்து, அதனை அநுஷ்டானத்திற்குக் கொண்டுவரும் பொறுப்பை ஒரு தலைவனிடம் ஒப்படைக்கலாம். இவனுக்குச் சர்வாதிகாரி என்று பெயர். இவன், எல்லாச் சட்டங்களையும் ஜனாதிக்கத்தையுங்கூட வாயடக்கி விடலாம். ஜனாதிக்கத்தை இவன் அடக்கிவிட்டாலும், ஜன அபிப்பிராயத்தைத் தழுவியே நடக்கிற வனாகிறான்; ஜன விருப்பத்தைப் பூர்த்தி செய்தவனேயாகிறான். எப்படி யென்றால், ராஜ்யத்தை ஆபத்தினின்று காப்பாற்ற வேண்டுமென்பதுதான் ஜன அபிப்பிராயம்; ஜன விருப்பம். இந்த அபிப்பிராயத்தையும், விருப்பத்தையும் சர்வாதிகாரி பூர்த்தி செய்கிறானல்லவா? இப்படி, சர்வாதிகாரத்தையும் ஒருவனிடத்தில் ஒப்படைக்கிறபோது குறிப் பிட்ட இவ்வளவு காலம் வரையில்தான் அவனுடைய சர்வாதிகாரம் இருக்க வேண்டுமென்று நிர்த்தாரணம் செய்துவிடவேண்டும். நெருக்கடி நீங்கிவிட்டால், சர்வாதிகாரப் பதவி ரத்து செய்யப்பட்டு பழைய மாதிரி, சாதாரணச் சட்டங்களைக் கொண்டு நிருவாகம் நடைபெறுமாறு செய்ய வேண்டும். அப்படிக்கின்றி, காலவரை யின்றி ஒருவனைச் சர்வாதி காரியாக நியமித்துவிட்டோமானால், அவனே, பின்னர், கொடுங் கோலனாகி விடுகிறான். அவனால், ராஜ்ய மும் சீரழியத் தொடங்குகிறது. ரோம ராஜ்யத்தில், சர்வாதிகாரிகள் ஆறுமாத காலத்திற்கே நியமிக்கப்பட்டு வந்தார்கள். எந்தக் காரணத்திற்காக ஒருவன் சர்வாதிகாரியாக நியமிக்கப் படுகிறானோ அந்தக் காரணத்தை மட்டும், அதாவது தேசத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை மட்டும், அவன் கவனிக்க வேண்டும். மற்ற விஷயங்களைப் பற்றி அவன் சிந்தனை செய்யக்கூடாது. 41. கண்காணிப்பு அதிகாரிகள் ஜன இச்சையானது, சட்டங்களின் மூலமாகப் பதிவு செய்யப் படுகிறது. அதாவது ஜனங்கள், தங்கள் இச்சையை, சட்டங்களை நிறை வேற்றச் செய்வதன் மூலம் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறார்கள். அது போலவே, பொது ஜன அபிப்பிராயமானது கண்காணிப்பு முறையில் பதிவு செய்யப்படுகிறது. அதாவது, கண்காணிப்பு அதிகாரி யொருவன், பொதுஜன அபிப்பிராயம் இன்னமாதிரி யிருக்கிற தென்று பிரகடனம் செய்கிறான். இவனுடைய கடமை, பொதுஜன அபிப்பிராயத்தைப்பற்றித் தீர்ப்பளிப்ப தல்ல; அதனை வெளிப் படுத்துவதுதான். ஒரு ஜாதி, எதனை உயர்வாகப் போற்றுகிறதோ அதனைக் கொண்டு, அந்த ஜாதியின் ஒழுக்கத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். உலகத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ்வொரு விதமான கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்படி அவர்கள் ஈடுபடுவது அவர்களுடைய அபிப்பிராயமே தவிர அவர்களுடைய சுபாவமல்ல. ஜனங்களினுடைய அபிப்பிராயத்தைச் சீர்திருத்தி விடுங்கள்; அவர் களுடைய பழக்க வழக்கங்களும் சீர்திருந்திவிடும். எது நல்லதோ அல்லது எது நல்லது என்று நம்புகிறார்களோ அதையே ஜனங்கள் விரும்புகிறார்கள். ஆனால் எது நல்லது என்பதைப்பற்றி அபிப் பிராயங் கொள்வதில்தான் அவர்கள் தவறு செய்து விடுகிறார்கள். இந்த அபிப்பிராயத்தை ஒழுங்குபடுத்தி விடவேண்டியது அவசியம். ஜனங்களுடைய அபிப்பிராயத்தை ஒழுங்கு படுத்தி விடுவது, அவர்க ளுடைய ஒழுக்கத்தையும் ஒழுங்குபடுத்தி விடுவ தாகும். சட்டங்களின் மூலம் ஜனங்களுக்கு ஒழுக்கத்தைப் புகுத்த முடியாது. ஆனால், சட்டங்கள் ஒழுங்காக அநுஷ்டானத்திற்குக் கொண்டு வரப்படு மானால், ஜனங்களுடைய ஒழுக்கமும் தானாகவே சீர்திருந்தி விடும். இதனால்தான், சட்டங்கள் ஒழுங்காக அநுசரிக்கப்பட்டு வருகிற காலத்தில், கண்காணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்று நான் சொல்கிறேன். புதியதோர் ஒழுக்கத்தைப் புகுத்துவதற்காக வல்ல, இருக்கப்பட்ட ஒழுக்கத்தைப் பாதுகாத்து வருவதற்காகவே இந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவர்கள், ஜனங்களுடைய அபிப்பிராயங்கள் தவறான பாதையில் செல்லாதபடி தடுப்பார்கள். ஓர் அபிப்பிராயத்தைப் பற்றி ஜனங்களிடையில் திடமின்மை காணப் பட்டால், இதுதான் சரியான அபிப்பிராயமென்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களைத் திடப்படுத்தி விடுவார்கள். ஆனால், இவர்கள், பொதுஜன அபிப்பிராயம் வெளியாகாதபடி அதனை அடக்கிவிடக்கூடாது. 42. மதம் ஆதியில் மனிதர்கள், தங்கள் எஜமானர்களாக அரசர்களை ஏற்றுக் கொள்ளவில்லை; தெய்வங்களைத்தான் ஏற்றுக் கொண் டார்கள். அப்படியே, கடவுள் ராஜ்யத்தைத் தவிர வேறு அரசாங் கத்தை அவர்கள் அங்கீகரித்துக் கொள்ளவில்லை. தேவர்களா யிருக்கப் பட்டவர்கள்தான் அரசர்களா யிருக்க முடியுமென்ற கலி குலாவின் தர்க்க நியாயத்தை அவர்கள் பின்பற்றினார்கள்.1 அப்படி அவர்கள் செய்தது அப்பொழுது சரி. தங்களோடு எல்லா வகையி லும் சமமாக வாழ்ந்து கொண்டிருக்கப்பட்ட ஒருவனை, எஜமான னாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று சொன்னால், அதற்குமுன், ஜனங்களுடைய மனதை எவ்வளவோ பக்குவப்படுத்த வேண்டி யிருக்கிறதல்லவா? ஆதியில், ஒவ்வொரு ஜாதியினரும் ஒவ்வொரு கடவுளைத் தலைவராக ஏற்று வழிபட்டு வந்தனர். இதனால் உலகத்தில் எத்தனை ஜாதியினர் இருந்தனரோ அத்தனை கடவுளர்கள் இருந்தார்கள். இரண்டு ஜாதியினர் சேர்ந்து ஒரே தலைவனை ஏற்றுக் கொண்ட தில்லை. இங்ஙனமே யுத்தக்களத்தில் சந்திக்கிற இரண்டு படையின ரும் ஒரு தலைவனை அங்கீகரித்துக் கொண்டது கிடையாது. இந்த மாதிரி பிரிவினைகளினால்தான், பல தெய்வங்களையும் வழிபடுவது என்ற வழக்கம் ஏற்பட்டது. இந்தப் பல தெய்வ வழிபாட்டின் காரண மாக, மதத்துவேஷம், மதச் சச்சரவுகள் முதலியன உண்டாயின. முற்காலத்தில் அரசியலும் மதமும் ஒன்றாகவே இருந்தன. ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான சட்ட திட்டங்கள் இருந்தது போல் கடவுளர்களும் இருந்தார்கள். அரசியல் சண்டை என்பது மதச் சண்டையாகவே கருதப்பட்டது. தேசங்களுக்கு எல்லை வகுக்கப் பட்டிருந்ததைப் போல, தெய்வங்களுக்கும் எல்லை வகுக்கப்பட்டிருந்தது. ஒரு தேசத்தினர் வணங்கும் தெய்வத்தை, மற்றொரு தேசத்தினர் வணங்கக் கூடாது. எனவே ஒரு ஜாதியினரை, தங்கள் மதத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னால், அவர்களுடைய நாட்டை முதலில் ஜெயிக்கவேண்டியதவசியமா யிருந்தது. தோல்வி யடைந்தவர்கள், வெற்றியடைந்தவர்களுடைய தெய்வத்தை வணங்க வேண்டுமென்று கட்டாயப் படுத்தப்பட் டார்கள். இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில்தான், ஏசுநாதர் தோன்றி, கடவுள் ராஜ்ய மொன்று இருப்பதாக உபதேசம் செய்யலானார். இவர் காலத்தில் அரசியல் வேறாகவும் மதம் வேறாகவும் பிரிந்தன. ஆனால் ராஜ்யத்தின் ஒற்றுமை குலைந்துவிட்டது. கிறிதுவ மதம் பரவின ஒவ்வொரு தேசத்திலும் உட்கலகங்கள் தோன்றலாயின. கிறிதவ தர்மம் பரவாத நாடுகளில் வசித்த ஜனங்கள், கடவுள் ராஜ்யமென்று ஒன்று இருக்கிற தென்பதை நம்பமுடியவில்லை. இவர்களுடைய நம்பிக்கைகளுக்கு இந்த எண்ணம் புதிதாக இருந்தது. இதனால் இவர்கள், கிறிதவர்களை, கலகக்காரர்களென்றும், மதவிரோதிகளென்றும் கருதி அவர்களைத் துன்புறுத்தினார்கள். ஆனால், பின்னர், கிறிதவர்களே, தங்கள் கை வலுத் தோங்கி நின்ற காலத்தில் கிறிதவரல்லாதாரைத் துன்புறுத்தினார்கள். தவிர, கடவுள் ராஜ்யம், பூலோகத்தில் வந்திறங்கி விட்டதற் கறிகுறி யாகவே, கடவுளின் அமிசமாக அரசன் இருக்கிறானென்று சொன்னார்கள். ஆனால் மதத் தலைவர்கள் இதனை எதிர்த்து வந்தார்கள். அரசர்கள், தங்களுக்குத்தான் முக்கியத்துவம் வேண்டுமென்றார்கள்; மதத் தலைவர்கள் தங்களுக்குத்தான் முக்கியத்துவம் வேண்டுமென்றார்கள். இவர்களுடைய போராட்டத்தின் மத்தியில், ஜனங்கள் அகப்பட்டுக் கொண்டு யாருக்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்று தெரியாமல் திகைத்தார்கள். இந்தக் காலத்தில் தான், அரசியலும் மதமும் வேறு வேறாகப் பிரிக்கப்பட வேண்டுமென்றும், இரண்டும் ஒன்றாகவே இருக்க வேண்டுமென்றும் இரண்டு கட்சிகள் தோன்றலாயின. மனிதனுக்குரிய மதமென்றும் தேசத்திற்குரிய மதமென்றும், மதத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மனிதனுடைய மதத் திற்குக் கோயில்கள், பலிபீடங்கள், சடங்குகள் முதலியன ஒன்றுந் தேவை யில்லை. பரம் பொருளாயுள்ள கடவுளை, பக்தி விசுவாசத் துடன் வணங்கு வதென்பதோடு இந்த மதம் முற்றுப்பெறுகிறது. இந்த மதத்தை அநுசரிக் கிறவன், வெளி விவகாரங்களைப் பொறுத்த மட்டில் சீல சுபாவ முடையவனா யிருக்கிறான். இவனுடைய மதந்தான் இயற்கையான மதம்; தெய்விக மதம். தேசத்திற்குரிய மதமென்று சொன்னால் அதற்குச் சில்லரை தேவதைகள் பலருண்டு. ஆரா தனைகள், சடங்குகள், கோட்பாடுகள் முதலிய யாவும் உண்டு. இந்த மதத்தை அநுஷ்டிக் கிறவர்கள், மற்றவர்களுடைய மதங்களை இழிவாகக் கருதுகிறார்கள், முற்காலத்து ஜனங்களால் அநுஷ்டிக் கப்பட்டு வந்த மதங்கள் யாவும் ஏறக்குறைய இந்த மாதிரியாகவே இருந்தன. மூன்றாவது வகை மதமொன்றுண்டு. இது விபரீதமானது. இந்த மதத்தை அநுசரிக்கிறவர்களுக்கு இரண்டு விதமான கோட் பாடுகள், இரண்டு விதமான சட்டதிட்டங்கள், இரண்டு விதமான எஜமானர்கள், இப்படியிருக்கின்றன. இங்ஙனம் இவர்களுக்கு முரண்பட்ட கடமைகள் ஏற்பட்டு விடுவதனால், இவர்கள் நல்ல மத பக்தர்களாகவும் இருப்ப தில்லை; விசுவாசமுள்ள பிரஜைகளாகவும் இருப்பதில்லை. திபேத்தியர், மங்கோலியர், ஜப்பானியர், ரோம கிறிதவர் முதலியோருடைய மதம் இப்படிப் பட்டதாகவே இருக் கிறது. இதனைப் புரோகித மதம் என்று கூறலாம். இந்த மதத்தை அநுஷ்டிப்பதனால் சமுதாயத்திற்கு நன்மை உண்டாவ தில்லை. அரசியல் கண்கொண்டு பார்க்கிறபோது, இந்த மூன்று வகை மதங்களிலும் குறைகள் இருக்கின்றன. இவற்றில் மூன்றாவது சொல்லப்பட்ட மதம் மிகவும் மோசமானதால் அதைப்பற்றி வித ரித்துப் பேச வேண்டிய தேவையேயில்லை. இரண்டாவது சொல்லப் பட்ட மதமிருக்கிறதே, அதாவது தேசத்திற்குரிய மதம், தெய்வபக்தி யோடு சட்டத்திற்கடங்கி நடக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் ஜனங்களுக்கு ஊட்டுவதால், அந்த வகையில் நல்லதுதான். இதனால் ஜனங்கள், தெய்வத்தினிடம் பக்தி செலுத்துவது போல், தேசத்தினிடம் பக்தி செலுத்து கிறார்கள். தேசத்தொண்டே தெய்வத் தொண்டு என்ற எண்ணம் ஜனங் களிடத்தில் வலுக்கிறது. தேசத்தின் பொருட்டு இறப்பது மேலானதென்றும், சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடவாம லிருப்பது தெய்வ நிந்தனையைப் போன்றதென்றும், குற்றமுள்ள மனிதனை ஜனங்களுடைய சாபத்திற் காளாக்குவது, கடவுளர்களின் கோபத்துக் கிரையாக்குவதாகுமென்றும் ஜனங்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்த மாதிரியான மத அநுஷ்டானத் தினால், ஜனங்கள் பொய்யை மெய்யாகக் கொண்டுவிடுகிறார்கள்; மூட நம்பிக்கை யுடையவர்களாகி விடுகிறார்கள்; மனப்பூர்வமாகக் கடவுளைத் தொழுவதென்பது போய்விடுகிறது; அதன் தானத்தில் ஆடம்பர மான சடங்குகள் வந்து புகுந்து கொள்கின்றன. இவைகளினால் ஜனங்களிடத்தில் ஒரு குறுகிய புத்தி ஏற்பட்டு, தங்களுடைய கோட் பாடுகளையும் முறைகளையும் அநுசரியாதவர்களைத் துன்புறுத்து வதும் கொல்வதும் நியாயமென்றும், தெய்வ சம்மதமென்றும் கருதி விடுகிறார்கள். இப்படிப்பட்ட மனப்பான்மை காரணமாக, இவர்கள் எப்பொழுதும் பிறநாட்டாருடன் சண்டை போட வேண்டிய அவசியத்திற்குட்படு கிறார்கள். இதனால் இவர்களுடைய ராஜ்யத்தின் க்ஷேமத்திற்குப் பாதகம் ஏற்படுகிறது. இனி, மனிதனுக்குரிய மதத்தைப்பற்றிச் சிறிது கவனிப்போம். உண்மையான கிறிதவ மதம் இதுதான். இன்றைய தினம் அநுஷ் டிக்கப்படுகிற கிறிதவமதமல்ல; சுவிசேஷத்தில் கூறப்பட்ட கிறிதவ மதம். இந்த உத்தமமான மதத்தின்படி, எல்லா மனிதர்களும் ஒரே கடவுளின் குழந்தைகள்; சகோதரர்கள். மரணபரியந்தம் இந்தச் சகோதர உறவு மனிதர்களைவிட்டு அகலுவதில்லை. இவையெல் லாம் பாராட்டத்தக்க விஷயங்கள்தான். ஆனால், இந்த மதத்திற்கும் சமுதாயத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமற் போய்விடுகிறது. ஜனங்களை, பிரஜைகள் என்ற ஹோதாவில், அவர்களுடைய நாட்டுடன் ஐக்கியப்படுத்தி விடுவதற்குப் பதிலாக, உலக விவகாரங்களினின் றுமே அவர்களை அப்புறப் படுத்திவிடுகிறது இந்த மதம். இந்த மதத் தினர் வசிக்கிற ராஜ்யத்தில், சட்டங்கள், தங்கள் சுயசக்தி கொண்டு தான் இயங்க வேண்டியிருக்கின்றன; ஜனங்களுடைய பிரஜா சக்தி யின் உதவிபெற்று இயங்க முடியாதவனவாகிவிடுகின்றன. இவை யெல்லாம் சமுதாயத்தின் நல்வாழ்வுக்கு விரோதமானவை யல்லவா? உண்மையான கிறிதவ தர்மத்தை அநுசரிக்கும் ஒரு ஜாதி யினர்தான் ஒழுங்கான சமுதாயத்தினராக இருக்க முடியுமென்று சிலர் சொல் கிறார்கள். வாதவம். ஆனால் இதில் ஒரு கஷ்டம் இருக் கிறது. அதாவது, உண்மையான கிறிதவர்களடங்கிய ஒரு சமுதாயம், மனிதர்களைக் கொண்ட சமுதாயமாக இருக்க முடியாது. இந்த உண்மைக் கிறிதவ சமுதாயம் பலமுள்ள சமுதாயமாகவும் இருக்க முடியாது; நீடித்த காலமும் ஜீவித்திருக்க முடியாது. நிறைவுடையது என்ற காரணத்தினாலேயே இந்தச் சமுதாயம் கட்டுக்கோப்பாக இல்லாமல் தளர்ச்சி யடைந்துவிடுகிறது. இதனுடைய நிறைவே, இதற்கு அழிவை யுண்டுபண்ணி விடுகிறது. உண்மையான கிறிதவ மதம் பரவியுள்ள ஒரு நாட்டில், ஒவ்வொரு பிரஜையும் தன் கடமையைச் செய்து கொண்டு போவான்; ஜனங்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள்; முக்கிய தர்கள் நியாயமாகவும் நிதானமாகவும் நடந்துகொள்வார்கள்; அரசாங்க அதிகாரிகள் நேர்மையுடையவர்களாகவும் ஒழுக்க முடையவர்களாகவும் இருப்பார்கள்; போர்ச் சேவகர்களோ, மரணத் திற்கும் அஞ்சாதவர்களா யிருப்பார்கள்; ஜனங்களிடத்தில் கர்வமோ ஆடம்பரமோ இராது. இவையெல்லாம் சரிதான். இஃதொரு பக்கத்துக் காட்சி. இன்னொரு பக்கத்தைப் பார்ப்போம். கிறிதவ மதம், மறு உலக விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக் கிறது. ஓர் உண்மைக் கிறிதவனுடைய தேசம், இந்த உலகத்திலே இருப்பதில்லை. அவன், தன் கடமையைச் செய்கிறானென்பது வாதவம். ஆனால், அந்தக் கடமையைச் செய்வதனால் தனக்கு வெற்றியா தோல்வியா என்பதைப் பற்றி அவன் கவலைப்படுவதே யில்லை. தான் நேர்மையாக நடந்துகொண்டு விட்டால் மட்டும் போதுமென்று அவன் கருதுகிறான். ஆனால், தன்னைச் சுற்றி, நல்லதோ கெடுதலோ எது நேர்ந்தாலும் அவன் கவலைப்படுவ தில்லை. தேசம், செழிப்பாயிருந்தால், அந்தச் செழிப்பில், தான் பங்கு கொள்ள வேண்டு மென்று அவன் விரும்புவதில்லை. ஏனென்றால், தனது தேசம் அடைந் திருக்கும் புகழானது, தனக்குக் கர்வத்தை உண்டு பண்ணிவிடப் போகிறதே யென்ற அச்சம் அவனுக்கு. தேசம், சீரழிந்து கொண்டு போகிறபோது, அதனைத் தடுக்க அவன் முயற்சி செய்யாமல் எல்லாம் கடவுளின் திருவருள் என்கிறான். ஒரு சமுதாயம் அமைதியாகவும் ஒழுங்காகவும் இயங்குவதற்கு, அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த எல்லாப் பிரஜைகளும், ஒருவர்கூடப் பாக்கி யில்லாமல் எல்லாரும் உண்மைக் கிறிதவர்களாக இருக்க வேண்டு மென்பதென்னவோ வாதவம். ஆனால், துரதிருஷ்ட வசமாக, இந்த உண்மைக் கிறிதவர்களுக்கு மத்தியில் ஒரு வஞ்சகன் அல்லது ஒரு பேராசைக்காரன் தோன்றிவிட்டால், அவன் நிச்சய மாக இந்த உண்மைக் கிறிதவர்களின் மீது ஆதிக்கங் கொண்டு விடுவான்; சுலபமாகவும் ஆதிக்கங்கொண்டு விடுவான். கிறிதவ தர்மமானது, மற்றவர்களுக்குத் தீங்கு நினைக்கக் கூடாதென்று நமக்குப் போதிக்கிறது. எனவே, மேலே சொல்லப்பட்ட நபர், தனது தந்திரத்தினால், இந்த உண்மைக் கிறிதவர் களுடைய பொது விவகாரங்களில் பலவந்தமாகப் பிரவேசித்து, ஒரு பங்கு கேட்டு, அதைப் பெற்றும் விடுகிறான். இதனால் அவனுக்கு ஒரு மதிப்பு அல்லது கௌரவம் உண்டாகி விடுகிறது. அவனுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டு மென்பது திருவருள் நோக்கம். உடனே அவன் அதிகாரஞ் செலுத்த ஆரம்பிக்கிறான். அவனுக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்பது கடவுளின் விருப்பம். அவன், தன் அதிகா ரத்தைத் துஷ்பிரயோகம் செய்தால், அது கடவுளால் அருளப்படுகிற தண்டனை. சரி, இங்ஙனம் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கி றானே என்று சொல்லி அவனை விலக்கி விடலாமென்றால், அதற்கு மனம் வருவதில்லை. ஏனென்றால், அவனை விலக்குவதற்கு பொது ஜன அமைதியைக் குலைக்கவேண்டும்; பலாத்காரத்தை உபயோகிக்க வேண்டும்; ரத்தம் சிந்த வேண்டும். இவை யெல்லாம் கிறிதவ சாத்வீகத் தன்மைக்கு விரோதம். கிடக்கட்டுமே, அவன்தான் ஆதிக்கஞ் செலுத்தட்டுமே, துன்பம் நிறைந்த இந்த உலகத்தில் அடிமையா யிருந்தாலென்ன, சுதந்திரமா யிருந்தா லென்ன, எல்லாம் ஒன்றுதான். நாம் அடைய வேண்டியது மோட்சம். எவ்வளவுக் கெவ்வளவு இந்தத் துன்ப உலகத்தினின்று விலகிக் கொள்கி றோமோ, அவ்வளவுக் கவ்வளவு மோட்ச லோகத்திற்குச் சமீபத்தில் செல்கிறோம் என்ற மனப்பான்மை உண்டாகி விடுகிறது. அந்நியர்கள் படை யெடுத்து வருகிறார்கள். உண்மைக் கிறிதவப் பிரஜைகள், அவர்களை எதிர்த்துப் போராட எவ்வித கவலையும் கொள்ளாமல் யுத்த களத்திற்குச் செல்கிறார்கள். புறமுது கிட்டு ஓடிவந்து விடவேண்டுமென்ற எண்ணம் யாருக்குமில்லை. தங்கள் கடமையைச் செய்கிறார்கள். ஆனால் வெற்றி கொள்ள வேண்டுமென்ற திடமான ஆசையில்லாமல். இவர்களுக்கு, வெற்றி பெறுவதைக் காட்டிலும் இறப்பதற்கு நன்றாகத் தெரியும். வெற்றி யடைந்தாலென்ன? தோல்வி யடைந்தாலென்ன? எல்லாம் ஒன்று தானே. கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டுமென்பது? வெற்றிக்கோ, தோல்விக்கோ தகுதியுடையவர் யாரென்பதைத் தீர்மானிக்க வேண்டியவர் அவரல்லவா? இந்த மாதிரி அலட்சிய மனப்பான்மையுடன் யுத்தகளத்திற்குச் செல்கிற ஒரு சேனையினால், துணிச்சலும் உற்சாகமும் நிறைந்த ஒரு சத்துரு, என்னென்ன சாதகங்களைப் பெறக்கூடுமென்பதை நினைத்துப் பாருங்கள். புகழின்மீதும் தேசத்தின்மீதும் பற்றுக் கொண்ட ஒரு படையின் முன்னர், இந்தச் சாது கிறிதவப் படை என்ன செய்யமுடியும்? அடிபட்டு, சிதறி, அழிந்து போகுமல்லவா? சத்துருக்கள், இவர் களைத் துரும்பாக மதித்து, இவர்களோடு சண்டைசெய்வது நமது பலத்திற்குத் தகுதியல்ல என்று கருதி இவர்களை விட்டால், அதில் தான், அந்த விடுதலையில்தான், இவர்கள் தப்பிப் பிழைக்கலாம். பேபிய1 என்பவனுடைய போர் வீரர்கள், போர்க் களத்திற்குச் செல்வதற்கு முன்னர் ஒரு பிரதிக்ஞை செய்து கொண்டு போனார்கள். என்ன பிரதிக்ஞை? மடிவது அல்லது வெற்றியடைவது என்ற பிரதிக்ஞையா? இல்லை. வெற்றி பெறுவது என்ற ஒரே பிரதிக்ஞையைத் தான் செய்து கொண்டு போனார்கள். அந்தப் பிரதிக்ஞையை நிறைவேற்றவும் செய்தார்கள். உண்மைக் கிறிதவர்கள் இப்படிச் செய்திருப்பார்களா? மாட்டவே மாட்டார்கள். கிறிதவக் குடியரசு நாடு அதாவது கிறிதவ சுதந்திர நாடு என்று நான் சொன்னால், அப்படிச் சொல்வதே தவறு. ஏனென்றால் கிறிதவ தர்மத் திற்கும் சுதந்திரத்திற்கும் நேர் விரோதமல்லவா? கிறிதவ மதம் அடிமைத் தனத்தையும் கீழ்ப்படிதலையுந்தான் போதிக்கிறது. கொடுங்கோலாதிக்கம் செலுத்துகிறவர்களுக்கு இந்தக் கிறிதவ தர்மம் மிகவும் சாதகமாயிருக் கிறது. உண்மைக் கிறிதவர்கள் அடிமைகளாக இருப்பதற்குத்தான் சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறார்கள். தாங்கள் அடிமைகளாயிருக்கிற விஷயம் அவர் களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவ தில்லை. ஏனென்றால், இந்த இகலோக வாழ்வு அவர்களுக்கு அற்ப மாக அல்லவோ படுகிறது! இஃதென்ன, இப்படிச் சொல்வது சரியா? கிறிதவத் துருப்புகள் எவ்வளவு வீரத்துடன் சண்டை போட்டிருக்கின்றன வென்று நீங்கள் என்னைக் கேட்கலாம். அப்படி வீரத்துடன் சண்டை போடவில்லையென்று நான் கூறுகிறேன். என்னைப் பொறுத்தமட்டில் கிறிதவத் துருப்புகளே இல்லை யென்றுகூடச் சொல்வேன். சிலுவைப்போர்களை1 உதாரணங் களாக எனக்கு எடுத்துக் காட்டக்கூடும். உண்மை. இவர்களுடைய வீரத்தை நான் குறைத்துப் பேசவில்லை. ஆனால் இவர்கள், கிறிதவர்களில்லையே; மத குருக்கள்மாருடைய போர்ச் சேவகர்களாக அல்லவோ இருந்தார்கள்? இவர்கள், கடவுள் ராஜ்யத்திற்காகத்தான் போர் புரிந்தார்களே தவிர, பூலோக ராஜ்யத்திற்காகவல்ல. இது நிற்க. ஒரு தேசத்தின் பிரஜைகள், பொது நலத்திற்குப் பயனுடைய வர்களா யிருக்கவேண்டும். அப்படி யிருக்கக்கூடிய அளவுக்குத்தான், அவர்கள் மீது ஓர் அரசன் அதிகாரம் செலுத்தலாம். எனவே, பிரஜைகள், தங்களுடைய சொந்த அபிப்பிராயங்களைப் பொறுத்த மட்டில் அரசனுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. தங்களுடைய அபிப்பிராயங்கள், சமுதாயத் திற்குச் சாதகமாயிருக்கின்றனவா அல்லது பாதகமா யிருக்கின்றனவா வென்றுதான் அவர்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு பிரஜையும், தன் கடமையைச் செய்கிற விஷயத்தில் உற்சாக முடையவனா யிருக்குமாறு பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த உற்சாகத்தை அளிக்கக் கூடிய மதத்தை ஒவ்வொரு பிரஜையும் அநுஷ்டிக்குமாறு செய்வது அந்த அரசாங்கத்தின் கடமை. ஆனால், பிரஜைகளின் மதக் கோட் பாடுகள் என்னவென்பதைப் பற்றி அரசாங்கம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அதில் தலையிடவும் கூடாது. ஒவ்வொரு பிரஜை யும், மற்றவர்கள் விஷயத்தில் ஒழுங்காகவும் கடமையை அநுசரித்தும் நடந்து கொள்கிறானா, அந்த மாதிரியான மதத்தை அநுஷ்டிக்கி றானாவென்று பார்க்கும் அளவோடுதான் அரசாங்கம் நின்றுவிட வேண்டும். தனக்கு விருப்பமான அபிப்பிராயங் களைக் கொள்ள யாருக்கும் உரிமை யிருக்க வேண்டும். இவற்றைத் தெரிந்து கொள்வது அரசனுடைய வேலையல்ல. ஏனென்றால், அரசன் இந்த உலகத் திற்குத்தான் அதிகாரியே தவிர மறு உலகத்திற்கு அல்ல. தன்னுடைய ஜனங்கள், அடுத்த உலகத்தில் என்ன கதி யடையப்போகிறார்களோ என்று ஓர் அரசன் கவலைப்பட வேண்டியதே யில்லை. இந்த உலகத்தில் அவர்கள் நல்ல பிரஜைகளா யிருக்குமாறு பார்த்துக் கொள்வதுதான் அவன் பொறுப்பு. ஆனால், அரசன், தன் ஜனங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு மதத்தை வகுத்துக் கொடுத்து, அதை அநுஷ்டிக்குமாறு செய்யவேண்டும். இந்த மதத்தின் முக்கிய தத்துவங்களென்ன வென்பதையும் அரசன் நிர்ணயித்து விடவேண்டும். ஆனால் இந்தக் கோட்பாடுகள் மதக் கோட்பாடு களாயில்லாமல், சமுதாய நலனை நாடுகிற கடமைகளா யிருக்க வேண்டும். அதாவது ஒருவனை, நல்ல பக்தி விசுவாசமுள்ள பிரஜையாக இருக்குமாறு இந்த மதம் செய்யவேண்டும். இந்த மாதிரியான மதத்திற்கு இணங்காதவர்களை, அரசன் தேசப்பிரஷ்டம் செய்துவிடலாம். மத விரோதி யென்பதற்காகவல்ல; சமுதாய விரோதி யென்பதற்காக. இப்படிப் பட்டவனால் சட்டத்தையும் நீதியையும் உண்மையாக நேசிக்க முடியாது. கடமைக்காக உயிரைக் கொடுக்க இப்படிப்பட்டவனால் முடியாது. எவனொருவன் முதலில் இந்தச் சமுதாய மதத்தை ஏற்றுக்கொண்டு, பிறகு இதில் நம்பிக்கையில் லாதவன் போல் நடந்துகொள்கிறானோ அவனுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும். ஏனென்றால் அவன் சட்டத்திற்கு முன்னர் பொய் யாக நடந்துகொண்ட பெருங் குற்றத்தைச் செய்தவனா கிறான். இந்தச் சமுதாய மதத்தின் கோட்பாடுகள் மிகக் குறைவாகவே இருக்கவேண்டும். இவை, எவ்வித வியாக்கியானத்திற்கும் இடமில் லாமல் தெளிவாக இருக்கவேண்டும். சர்வ வல்லமை யுள்ளவராக வும், ஞான விளக்காகவும், கருணா மூர்த்தியாகவும் உள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். மறுபிறப்பு உண்டு. நல்லவர்களுக்குச் சுகமும் கெட்டவர் களுக்குத் தண்டனையும் கிடைக்கும், சமுதாய ஒப்பந்தமும் சட்டங்களும் புனிதமானவை, பிற மதங்களின் மீது துவேஷம் பாராட்டக் கூடாது என்பன போன்ற கோட்பாடுகள் இந்த மதத்தில் இருக்க வேண்டும். ஒரு தேசத்திற்கென்று ஒரு தனியான மதம் இருக்க முடியாது. மற்ற மதங்களிடத்தில் துவேஷம் பாராட்டாத எல்லா மதங்களை யும், பிரஜையின் கடமைகளை வலியுறுத்துகிற எல்லா மதக்கோட் பாடுகளையும் நாம் பாராட்டவேண்டும்; அவைகளிடத்தில் சகிப்புத்தன்மை காட்டவேண்டும். ஆனால் எங்களுடைய மதத்தில் சேராதவர்களுக்கு மோட்சமே கிடையாது என்று சொல்கிறார் களே, அவர்களைத் தேசத்தினின்று வெளியே துரத்திவிடவேண்டும். 43. முடிவுரை அரசியல் உரிமையின் முக்கியமான கோட்பாடுகள் என்ன வென்பதைச் சொல்லி, ஒரு ராஜ்யத்தை, பலமான அதிவாரம் போட்டு, அதன்மீது தாபித்தும் விட்டேன். இனி, அதற்கு வெளித் தொடர்புகள் ஏற்படுத்திக் கொடுத்து அதனைப் பலப்படுத்த வேண்டும். இந்த வெளித் தொடர்புகள் என்ன? சர்வதேசச் சட்டங்கள், வியாபாரப் போக்குவரத்து, யுத்தந்தொடுக்கும் உரிமை, சர்வ தேச ஜன உரிமைகள், சர்வதேச ஒப்பந்தங்கள் முதலியனவாகும். ஆனால் இவையெல்லாம், நான் இங்கே எடுத்துக் கொண்ட விஷயத் திற்குப் புறம்பானவை. என்னுடைய வேலை இதனோடு முடிவு பெறுகிறது.  Social contract. இது தமிழில் வெளியாகியிருக்கிறது. Jean Jacques Rousseau (John James Rousseau), Issac Rousseau, Susanne Bernard, Francoiz Rousseau Dante 1265-1321. தெய்விக நாடகம் என்ற மகா காவியத்திள் ஆசிரியன். Karl Markx 1818-1883. சமதர்மத்தை ஒழுங்கான ஒரு தத்துவமாக வகுத்தவன். காபிடல் என்ற நூலின் பேராசிரியன். இவனுடைய வாழ்க்கை வரலாறு தமிழில் வெளியாகி யிருக்கிறது. John Huss 1369-1415. பொஹீமியா தேசத்து மதச்சீர்திருத்தவாதி. உயிரோடு கொளுத்தப்பட்டான். Savanarola 1452-1498. இத்தலியிலிருந்த பெரிய மதச்சீர்திருத்தவாதி. தன்னுடைய மதக்கொள்கைக்காக மலர்ந்த முகத்துடன் தூக்கு மேடையில் ஏறியவன். Giardano Bruno 1550-1642. இத்தாலிய தத்துவ ஞானி. கிரேக்க அறிஞனாகிய அரிட்டாட்டலின் (Aristotle கி.மு. 384-322.) கொள்கைகள் சிலவற்றை மறுத்து அது காரணமாக அநேக கஷ்டங்கள் பட்டு கடைசியில் உயிரோடு கொளுத்தப்பட்டான். Galileo 1564-1642. பிரபல வான சாதிரி. சூரியனைச் சுற்றி பூமி முதலிய கிரகங்கள் வலம் வருகின்றன என்ற கொள்கையை வலியுறுத்தியவன். இதற்காக அநேக துன்பங்களை அனுபவித்தான். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் என்ற வாசகத்தையும் நீ (ஆதாம்) உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத் தோடே அதன் பலனைப் புசிப்பாய் என்ற வாசகத்தையும் நோக்குக. -ஆதியாகமம் 2, 3 அதிகாரம். 1. Diderot 1713-1784. 2. D’Alembert 1717-1783. என்ஸைக்ளோபீடிட் - 18ஆம் நூற்றாண்டின் பிரபல பிரெஞ்சு ஆசிரியர்களான வால்ட்டேர், ரூஸோ, மாணடெக்கு, டி. அலெம்பர்ட், டிடெரோ முதலியோர் இந்த அகராதி தயாரிப்பதில் பங்கெடுத்துக் கொண்டவர்கள். இஃது, இருபத்தெட்டு பகுதிகளாக வெளி வந்தது. இந்த அகராதிவாதிகளிற் சிலர் பிற்காலத்தில் ரூஸோவுக்கு விரோதமான பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். Catherine II 1729-1796. Vincennes. பாரிஸுக்குக் கிழக்கே ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. Academy of Dijon. டிஜோன் என்பது பாரிஸுக்குச் சமீபத்தில் இருக்கிறது. Marshal and Madame de Luxembourg. Louis XV 1710-1774. இந்த நூல்கள் வெளியான தேதி விவரம்: ஜூலி - பிப்ரவரி 1761. எமிலி - மே 1762 சமுதாய ஒப்பந்தம் - மே 1762. Leo Tolstoy 1828-1910. James Boswell 1740-1795. Samuel Johnson 1709-1784 Letters from the Mountain. ரூஸோவும் வால்ட்டேரும். Voltaire 1694-1778. Mazzini: 1805-1872; Garibaldi: 1807-1872; Cavour: 1810-1861. Saint Pierre Island. David Hume 1711-1776. Edmound Burke 1729-1797. பிரபல பிரிட்டிஷ் ராஜ தந்திரி, பெரிய நூலாசிரியனுங்கூட. Wootton in Staffordshire. Bernardin de Saint Pirre. Count Wielkorski. 1. Ermenonville. 2. M. de Girardin Prince de Ligne. Mirabeau 1749-1791. . Immanuel Kant 1724-1804. . Konigsberg. . Schiller 1759-1805. Goethe 1749-1832. 5. Socrates கி.மு. 470-399. கிரேக்க தத்துவ ஞானி. Sir Issac Newton 1642-1727. Glimpses of World History. Cambridge Modern History Vol. III Living Thoughts of Rousseau by Romain Rolland. Ancient Law by Maine. Chap - IV Joseph Chenier. 1764-1811. Rousseau by A.R. Sells, p.XII. Modern Theories and Forms of Political Organization by G.D.H. Cole. p. 61. ரூஸோ பிறந்தது ஜினீவாவில். இதைப்பற்றி இவன் எப்பொழுதுமே பெருமையாகப் பேசிக்கொள்கிறான். தன் பெயரை எழுதுகிறபோதுகூட ழேன் ழக்கே ரூஸோ, ஜினீவா வின் பிரஜை என்றுதான் எழுதுவான். இப்படி இவனுக்கு இந்த நாட்டுப்பற்று உண்டான தற்கு இவன் தகப்பனே முக்கிய காரணம். ரூஸோ சிறு குழந்தையா யிருக்கிற காலத்தி லிருந்தே ரூஸோ, உன் தேசத்தை நேசி என்று சொல்லிக்கொடுத்து வந்தான். இதில் துக்கப்படக்கூடிய விஷயமென்னவென்றால், எந்த ஜினீவாவை ரூஸோ, அதிகமாக நேசித்தானோ, அந்த ஜினீவாவே, இவனுடைய நூல்களைப் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொளுத்தியது. பலாத்காரத்தின் மூலமாக அதிகாரத்தை அடைவது, ஆக்ரமிப்பு என்றே சொல்லப்பட வேண்டும். இந்த ஆக்ரமிப்பு அதிகாரமானது எதுவரையில் செல்லுபடியாகுமென்றால், எவனொருவன், தன் பலாத்கார சக்தியின் துணைகொண்டு இந்த அதிகாரத்தைச் சம்பா தித்துக் கொண்டானோ அவனித்தில், இந்தப் பலாத்கார சக்தி மேலோங்கியும், அவனுக்கு அடங்கி நடக்கிற ஜனங்களுடைய சக்தி குறைவாகவும் இருக்கிற வரையில்தான். அந்த ஜனங்களே சக்தி பெற்றவர்களாகி, தங்களைப் பந்தத்தினின்றும் விடுதலை செய்து கொண்டு விடுவார் களானால், எந்த நியாயத்தைக்கொண்டு அவர்கள் பந்தத்திற்குட் படுத்தப்பட்டார்களோ அதே நியாயத்தைக் கொண்டுதான் அவர்கள் அந்தப் பந்தத்தி னின்று விடுவித்துக் கொள்கிறார்கள். எந்த நியாயம், ஆக்கிரமிப்பு அதிகாரத்தை அளித் ததோ அதே நியாயம், அந்த அதிகாரத்தை ரத்து செய்துவிடுகிறது. பலமுடையவர்களுக் கேற்பட்ட நியாயமென்றே இதனைச் சொல்லவேண்டும். இது டெனி டிடெராட் (Denis Diderot. 1713-1784) என்ற பிரெஞ்சு அறிஞனுடைய அபிப்பிராயம். இதே கருத்தை அரிடாட்டல் (கி.மு. 384 - கி.மு. 322) என்ற கிரேக்க அறிஞனும். தனது அரசியல் என்ற நூலின் முதற்பகுதி இரண்டாவது அத்தியாயத்தில் தெரிவிக்கிறான். வழி வழியாக வந்துகொண்டிருக்கும் சரித்திரப் போக்கில், குடும்பம் என்பது ஒரு சிறிய அமிசம்; ஜாதி அல்லது சமுதாயம் என்பது பெரிய அமிசம் என்று ஆவால்ட் பெங்க்ளர் என்ற ஜெர்மானிய அறிஞன் கூறுகிறான். (Decline of the West by Oswald Spengler Vol. II. P. 361.) க்ரோஷிய - Grotius. 1583 - 1645. ஹாலந்து நாட்டிலே பிறந்த ஒரு சட்ட நிபுணன். சர்வதேச சட்ட விவகாரங்களைப்பற்றி ஒரு நூலெழுதி இவன் பிரசித்தி பெற்றான். இதற்கு De Jure Belli et Pacis என்று பெயர். இவனுடைய சித்தாந்தப்படி, ஜனங்களுக்கு ஆதிக்கஞ் செத்துகிற அதிகாரமே கிடையாது. அதே பிரகாரம் எல்லா அரசாங்கங்களும் ஆளப்படுவோருடைய நன்மைக்காக மட்டும் ஏற்படவில்லை. ஒரு ஜாதியாரை மற்றொரு ஜாதியார் வெற்றிகொண்டுவிட்டால். வெற்றியடைந்த ஜாதியார், வெற்றி கொள்ளப்பட்ட ஜாதியார்மீது ஆதிக்கஞ் செலுத்தலாம். அல்லது எந்த ஒரு ஜாதியாரேனும், நாங்கள் இன்னாருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறோம் என்று சொல்லித் தாங்களே, வலிய, தங்கள் சுதந்திரத்தைப் பராதீனப்படுத்தினால் அவர்கள்மீதும் ஆதிக்கஞ் செலுத்தலாம். இப்படி இரண்டு வகையாகத்தான் ஆதிக்கம் ஏற்படுகிறது. யாரொருவருக்கு ஆதிக்கம் ஏற்படு கிறதோ, அவர்கள் தங்கள் க்ஷேமத்தை முன்னிட்டுத்தான் அரசாங்கத்தை அமைத்துக் கொள்வார்களே தவிர, ஆளப்படுவோருடைய நன்மையை உத்தேசித்துமட்டும் அமைத்துக் கொள்ளமாட்டார்கள். ஹாப் - Thomas Hobbes. 1588 - 1679. ஓர் ஆங்கிலேய தத்துவ ஞானி, கலீலியோ, ஜான்ஸன், பேக்கன், டேகார்த் முதலிய பேரறிஞர்களின் நண்பன். இங்கிலாந்தில், இரண் டாவது சார்ல மன்னன் இளவரசனாயிருந்தபோது, அவனுக்குக் கணித போதகாசிரிய னாக இருந்தவன். அரசியல் தத்துவங்களை சாதிர ரீதியாக ஆராய்ச்சி செய்த ஆங்கில அறிஞர்களில் இவனுக்குப் பிரதம தானம் உண்டு. இவனுடைய சித்தாந்தப்பபடி, அரசனுக்கு, ஜனங்களைத் தன்னிச்சைப்படி ஆள பரிபூர்ண அதிகாரம் உண்டு. ஆனால் ஜனங்கள், தங்களுக்குள்ளேயே செய்து கொண்ட ஓர் ஒப்பந்தத்தின் மூலமாக அரசனைத் தெரிந் தெடுக்கிறார்கள். எப்படியென்றால், ஜனங்கள் எப்பொழுதுமே, தங்களுடைய க்ஷேமத்தை யும் சௌக்கியத்தையும் நாடுகிறவர்கள். அப்படி நாடுகிறபோது, மற்றவர் களுடைய க்ஷேமத்தையும் சௌக்கியத்தையும் பாதிக்கிறவிதமாக நடந்து கொள்வது அவர்களுடைய சுபாவம். இப்படி பரபரம் பாதகம் ஏற்படாதபடி பாதுகாக்க ஓர் அரசன் தேவை. அதற்காக அவர்கள் பரபர சம்மதத்தின்பேரில் ஓர் அரசனைத் தெரிந் தெடுக்கிறார்கள். அவன் தன்னைத் தெரிந்தெடுத்ததற்கு நன்றியாக, ஜனங்களுக்குச் சில சமுதாய உரிமைகளை வழங்குகிறான். ஆனால் அந்த உரிமைகளை எப்படி வழங்க வேண்டும், எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கிற அதிகாரம் அவனுக்கே. அந்த அரசனுக்கே உண்டு. அதாவது, ஜனங்களுடைய பரபர சம்மதத்தின் பேரிலும், அரசனுடைய பரிபூர்ண அதிகாரத்தின் பேரிலும் ஒரு சமுதாயம் இயங்குகிறது என்பது அவனுடைய கோட்பாடு. கலிகுலா - Caligula. கி.பி. 37லிருந்து 41 வரை, ரோம சக்ரவர்த்தியாயிருந்து ஆண்டவன். ரோமாபுரிவாசிகளைச் சித்திரவதை செய்தான். ஜனங்கள், அவனுடைய கொடுமையைச் சகிக்க முடியாமல், அவனைக் கொலைசெய்து விட்டார்கள். பிலோ - Philo. கிறிதவ சகத்திற்கு முந்தியே பிரசித்தியடைந்த ஒரு யூத ஞானி. கிரீ தேசத்தில் பிறந்தவன். கி.பி. முதல் சகாப்தத்தில் கலிகுலா என்பவன் ரோம சக்ரவர்த்தியாக அரசாண்ட காலத்தில் தன்னைப்போல் ஓர் உருவச்சிலை நிர்மாணிக்கச் செய்து அதனையே யூதர்களனைவரும் வணங்க வேண்டுமென்று உத்திரவிட்டான். இந்த உத்திரவை ரத்துசெய்யுமாறு கேட்டுக்கொள்ள, பிலோ, ஒரு தூது கோஷ்டியின் தலைவனாக கி.பி. 39-40 ஆம் வருஷத்தில் ரோமாபுரிக்குச் சென்றான். ஆனால் இவன் முயற்சி பலிக்கவில்லை. அரிடாட்டல், தன்னுடைய இந்தக் கட்சியை மிக அழகாகவும் தர்க்க ரீதியாகவும் சாதித்திருக்கிறான் அரசியல் என்ற நூலில். Aristotle’s Politics. Book I. Chapters 5-6. யுலிஸெ - Ulysses. கிரேக்கப் புலவனாகிய ஹோமர் என்பவன் எழுதி வைத்துப் போன ஒடெஸே (Odyssey) என்ற காவியத்தின் கதாநாயகன். இவனைச் சிறந்த வீரனாகவும், தேவர்களை விடச் சிறந்த அறிஞனாகவும், ஹோமர், தன் காவியத்தில் சிருஷ்டித்திருக்கிறான். யுலிஸெஸின் நண்பர்கள், ஸர்க்கே என்ற தீவுக்குச் சென்றார்களென்றும், அந்தத் தீவிலிருந்த ஒரு தேவதையினால் இவர்களில் யூரிலோக என்ற ஒருவன் தவிர மற்றவர்களெல்லோரும் பன்றி உருவங்களாக மாற்றப்பட்டு விட்டார்க ளென்றும் யுலிஸெஸின் முயற்சியால் இவர்கள் மறுபடியும் மனிதர்களாக்கப்பட்டார்க ளென்றும் ஒடெஸே என்ற கிரேக்க காவியம் கூறுகிறது. இதனையே ரூஸோ இங்குக் குறிப்பிடுகிறான். Odyssey - Bk. X. பில்மர் (Sir Robert Filmer. 1589-1653) என்ற ஓர் ஆங்கிலேய அரசியல்வாதி, அரசர்கள் தெய்விக உரிமை படைத்தவர்கள் என்ற கொள்கையை நிர்த்தாரணம் செய்து ஒரு நூலெழுதியிருக்கிறான். அந்தத் தெய்விக உரிமையைத்தான் இங்கு ரூஸோ ஜாடை யாகப் பரிகசிக்கிறான். பில்மரின் சிந்தாந்தப்படி, ஆதாம் என்கிற ஆதி மனிதனிடமிருந்து அரசியல் அதிகாரம் பிறந்தது. இந்த அதிகாரத்தை ஆதாமுக்குக் கடவுளே அளித்தார். ஆதாமிடமிருந்து, அரசியல் அதிகாரமானது, தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டிருந்தது. அதனால் அரச உரிமையானது, தெய்விக சம்பந்தமுடையது என்பது பில்மரின் சித்தாந்தம். கிறிதுவ வேதமாகிய பைபிளின்படி, யுகப் பிரளயத்திற்குப் பிறகு, உலகத்தில் நோவா என்ற மன்னனும் அவர் மூன்று மக்களுமே உயிரோடிருந்தார்கள். இந்த மூன்று மக்களுடைய சந்ததியார்தான் அரசர்கள். ஆகையால் அரசர்களுக்கு ஆளும் உரிமை எப்பொழுதும் உண்டு என்றும், மற்ற ஜனங்கள் இந்த உரிமையோடு பிறக்கவில்லை யென்றும் பலவிதமாகத் தன் கட்சியை நிலைநாட்ட முயன்றான் பில்மர். இவன் கொள்கையைக் கண்டித்துப் பல நூல்கள் இவனுக்குப் பிற்காலத்தில் வெளிவந்தன. ராபின்ஸன் க்ரூஸோ - Robinson Crusoe. டேனியல் டீபோ (Deniel Dafoe. 1656 - 1731) என்ற ஆங்கிலப் புலவன் எழுதிய ஒரு நூலின் கதாநாயகன். இவனை ஒரு தனிக்காட்டு ராஜாவாகச் சிருஷ்டித்து, இந்த நூலை டீபோ எழுதியிருக்கிறான். இந்த நூலை ரூஸோ அதிகமாகப் போற்றுகிறான். பலஹீனனான கோபாலனை, பலசாலியான கிருஷ்ணன் தன் பலாத்காரத்தைக் கொண்டு தாக்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படித் தாக்கத் தனக்கு உரிமையுண்டு என்று கிருஷ்ணன் கருதுகிறான். கிருஷ்ணனைவிட பலசாலியான கோவிந்தன், தன் னுடைய பலாத்கார சக்தியைக் கொண்டு கிருஷ்ணனைத் தாக்கினால் அதுவும் அவனுடைய உரிமைதானே. கோபாலனைத் தாக்கத் தனக்கு உரிமையுண்டென்று எப்படி கிருஷ்ணன் நினைக்கிறானோ, அப்படியே, கிருஷ்ணனைத் தாக்கத் தனக்கு உரிமையுண்டென்று கோவிந்தனும் கருதலாமல்லவா? ஒருவனுக்குள்ள உரிமை மற்றொருவனுக்கும் உண்டல்லவா? முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டதே இங்கு விதரித்துக் கூறப்படுகிறது. ராபெலே - Rabelais 1483 - 1553. சமுதாயப் பழக்க வழக்கங்களை நகைச்சுவைபடக் கண்டித்து எழுதிய ஒரு பிரெஞ்சு நூலாசிரியன். பிரான்சில் பதினைந்தாவது லூயி மன்னன் (1710 - 1774) ஆண்ட காலத்தில், ராஜ்யம் மிகவும் அலங்கோலமான நிலைமையில் கிடந்தது. இந்த லூயி மன்னனுடைய காலத்தில் தான், இந்தியாவில், பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் பலத்த வியாபாரப் போட்டி உண்டாயிற்று. பிரான்சில் ஜனங்கள் அதிகமான வரி விதிக்கப்பட்டுத் துன்புறுத்தப் பட்டார்கள். இந்தக் காலத்து ஆட்சிமுறையைப் பற்றியே ரூஸோ இங்குச் சுட்டிக் காட்டுகிறான். கிரேக்கர்கள் என்று இங்கே சொல்லப்படுவது, யுலிஸெஸின் நண்பர்களைக் குறிக் கிறது. ஸைக்ளோப்பியர்கள் (Cyclops) என்போர், கிரேக்க இதிகாசத்திலே சொல்லப்படு கிற ஒருவகை ராட்சதக் கூட்டத்தார். இவர்கள் மலையுச்சிகளிலோ அல்லது குகைகளிலோ வாழ்ந்து வந்தார்களென்றும், ஒற்றைக் கண்ணுடையவர்களென்றும். ஆடுகளை வளர்ப்பது இவர்கள் தொழிலென்றும் சொல்லப் படுகின்றன. இவர்கள் வசித்துவந்த ஒரு குகைக்கு யுலிஸெஸும் அவன் நண்பர்களும் சென்று அகப்பட்டுக் கொள்ள, ஒரு சிலர், மேற்படி ஸைக்ளோப்பியர்களின் தலைவனால் கொன்று தின்னப் பட்டார்கள். இந்த ஸைக்ளோப் பியர்கள், குடும்பம் குடும்பமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்களென்றும், ஒவ்வொரு குடும்பத் திற்கும் ஒவ்வொரு தலைவன் இருந்தானென்றும் தெரிகிறது. Odyssey - Bk. IX. இதன் தாத்பர்யம் என்னவென்றால், ஒரு மனிதன், தன்னிச்சையாகக் காரியங்களைச் செய்ய அநுமதிக்கப்படுகிற வரையில்தான் அவன் தர்ம நியாயமாக நடந்து கொள்வான் என்பது. கொடுக்க வேண்டியது அந்த மனிதன் கடமை; பெற்றுக்கொள்ள வேண்டியது நமது உரிமை. அப்படியிருக்க, நாம் அந்த மனிதனுக்குக் கடமைப்பட்டிருக்கிறோமென்பது எங்கிருந்து வந்தது? அதாவது மானிட சுபாவம், எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிற சுபாவம் இல்லை; அப்படியே எப்பொழுதும் சமாதானமாக வாழுகிற சுபாவமும் இல்லை. Louis IX - இவன் 1226 ஆம் வருஷத்திலிருந்து 1270 ஆம் வருஷம் வரை ஆண்டான். இவனுடைய ஆதிக்கத்துக்குட்பட்டிருந்த பிரபுக்கள், பரபரம் ஒருவருக்கொருவர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந் தனர். இவர்கள் சண்டை போட்டுக் கொள்வதாயிருந்தால், நாற்பது நாட்கள் இடைவிட்டு இடை விட்டுத்தான் சண்டை போட்டுக் கொள்ளவேண்டும் என்று மேற்படி லூயி மன்னன் உத்திரவிட்டான். அப்படி இவன் உத்திரவிட்டது, இவனே அந்த யுத்தங்களை ஆதரித்த மாதிரியில்லையா? இதைத்தான் இங்கு ரூஸோ குறிப்பிடு கிறான். கி.பி. பதினோராவது நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்த பாதிரிமார்கள் ஒன்று சேர்ந்து, பிரபுக்களில் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாதென்று ஒரு திருமுகம் விடுத்தார்கள். இதற்குக் கடவுளின் சமாதான எச்சரிக்கை என்று பெயர். இதைப் பற்றியும் ரூஸோ இங்குக் குறிப்பிடுகிறான். அதாவது பிரஜைகளின் உரிமைகளை அதிவாரமாகக் கொண்டுதான் அரசனுடைய உரிமை நிறுவப்படுகிறது. அதாவது ஒருவனை அடிமைகொள்ள நமக்கு உரிமை யில்லையானால் அவனைக் கொலை செய்யவும் நமக்கு உரிமையில்லை. அப்படியே ஒருவனைக் கொலை செய்ய நமக்கு உரிமை யில்லையானால், அவனை அடிமை கொள்ளவும் நமக்கு உரிமையில்லை. மஹா அலெக்ஸாந்தருடைய கிரேக்க ஏகாதிபத்தியம், அவனுடைய மரணத்திற்குப் பின்னர் சிதறுண்டு போனதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஜாதி (நேஷன் - Nation) என்று சொன்னாலே, அதற்குச் சில உரிமைகளும் அந்தது களும் இருக்கின்றனவென்பது பெறப்படுகிறது. அந்த ஜாதியானது, வேறொருவனுக்கு அடிமைப்பட்டு விட்டதேயானால், அது, தன் உரிமைகளையும் அந்ததுகளையும் இழந்து விட்டதாகிறது. அப்பொழுது அதனை எப்படி ஒரு ஜாதியென்று அழைக்க முடியும்? இங்கு நகரம், குடியரசு, ராஜ்யம், அரசு முதலிய பதங்களுக்கு இப்பொழுது என்ன அர்த்தம் கொள்ளப்படுகிறதோ அந்த அர்த்தத்தில் ரூஸோ உபயோகிக்கவில்லை. இந்தச் சொல் வழக்குகள், ஆதிகாலத்தில் என்ன அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டனவோ அந்த அர்த்தத் திற்கும், இப்பொழுது என்ன அர்த்தம் கொள்ளப்படுகிறதோ அதற்கும் பார்த்தால் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கும். இவற்றை ஒவ்வொன்றாகத் தெரிந்து கொள்ளு தல் நல்லது. நகரம் என்ற இடத்தில் ரூஸோ சிட்டி (City) என்று உபயோகிக்கிறான். இப்பொழுது சிட்டி என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நகரம் என்றுதான் சொல்கிறோம். டவுன் (Town) என்றாலும் நகரந்தான். ஆனால் சிட்டிக்கும் டவுனுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஜனத் தொகையுடைய பிரதேசத்திற்குச் சிட்டி என்றும், ஐயாயிரத்துக்குமேல் ஒரு லட்சத்திற்குட்பட்ட ஜனத்தொகையுடைய பிரதேசத்திற்கு டவுன் என்றும் பெயர். தவிர, சிட்டி என்றும், டவுன் என்றும் இப்பொழுது நாம் சொல்வதெல்லாம், குறிப்பிட்ட ஒரு பூப் பிரதேசத்தைத்தானே தவிர, அதிலுள்ள ஜன சமுதாயத்தையல்ல, ஆனால் முற்காலத்தில் கிரீசிலும் ரோமாபுரியிலும் சிட்டி என்ற சொல்லானது, ஒரு விசேஷ அர்த்ததில் உபயோகிக்கப்பட்டது. சிட்டி என்பது, சிவிட்டா (Civitas) என்ற லத்தீன் மொழியினடியாகப் பிறந்தது. முற்காலத்தில் கிரீஸில், பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் வசித்தன. இந்தக் குடும்பத்தினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்க ளுடைய உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளக்கூடிய அளவுக்குப் பரிபூர்ண சுதந்திரம் பெற்றிருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு ஜன சமுதாயமே சிட்டி என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு சிட்டியும் ஒவ்வொரு ராஜ்யமாக இருந்தது. சிட்டி என்பதற்கு அரிடாட்டல் பின்வருமாறு வியாக்கியானம் கூறுகிறான்: கூடிய வரையில் சந்தோஷமாகவும், சுதந்திரத்துடனும் இருக்கும் பொருட்டு, ஜனங்கள் பலர், தங்கள் குடும்பத்தோடும், குழந்தை குட்டிகளோடும் பரபர சம்மதத்தின் பேரில் ஓரிடத்தில் வசிக்கிறார் களல்லவா? அதற்குத்தான் சிட்டி என்று பெயர். இப்படி இவர்கள் சந்தோஷ மாகவும் சுதந்திரத்தோடும் இருக்க வேண்டுமானால் இவர்களுக்கிடையில் விவாகங்கள் நடைபெற வேண்டும். அதன் மூலமாகப் பரபர உறவு ஏற்படும். இந்த உறவை வலுப்படுத்தும் பொருட்டே எல்லா சிட்டிகளிலும் கூட்டங்கள், திருவிழாக்கள் முதலியன நடைபெறுகின்றன. எனவே ஒரு சிட்டியின் நோக்கம், அதில் வசிக்கும் ஜனங்கள் சந்தோஷமாயிருக்க வேண்டுமென்பதுதான். Aristotle’s Politics - BK. III. நகரம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டதுவே பிற்காலத்தில் குடியரசு, அதாவது ஜனாதிக்கம் பெற்ற நாடு என்று அழைக்கப்பட்டதாக ரூஸோ கூறுகிறான். ஜனம் (People) என்றும், நகரத்தார் (Citizens) என்றும், பிரஜைகள் (Subjects) என்றும் இங்கே கூறப்படுகின்றன. ஒவ்வொரு சொல்லுக்கும் வேறு வேறு அர்த்தம் உண்டு. பலர் சேர்ந்ததல்லவா ஒரு சமுதாயம்! இப்படிச் சேர்ந்த பலரையும் பொதுப்படையாகச் சொல்கிறபோது ஜனம் என்று பெயர், இவர்களையே தனித்தனியாக அழைக்கிறபோது, அதாவது ராஜ்யாதி காரத்தில் ஒரு பங்கு உடையவர்கள் என்று சொல்கிறபோது நகரத்தார் என்று பெயர். (ஆனால் இப்பொழுது இது வேறு அர்த்தத்தில் உபயோகிக்கப்படுகிறது.) ராஜ்யத்தின் சட்டதிட்டங்களுக்கு அடங்கினவர்கள் என்ற அர்த்தத்தில் இவர்களுக்குப் பிரஜைகள் என்று பெயர். உடைமை யென்பதையும் ஆதி யென்பதையும் வேறு வேறு அர்த்தத்தில் உபயோகிக்கிறான் இங்கே ரூஸோ. உடைமை என்பதற்குச் சட்டரீதியான உரிமைகள் ஒன்றுமில்லை. ஆனால், ஆதி என்பதற்கு அந்த மாதிரியான உரிமைகள் உண்டு. ஆதி, சொத்து என்ற இரண்டு சொற்களும் இந்த மொழிபெயர்ப்பில் ஒரே அர்த்தத்தில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. உண்மையான ஆதி எது, தனிச் சொத்துரிமையினால் உண்டாகிற சாதகங்கள் யாவை என்பவைகளைப் பற்றி அரிடாட்டல் தனது அரசியல் என்ற நூலில் விவரமாகக் கூறுகிறான். Aristotle’s Politics. Bk. I-Chap. VIII, and Bk. II-Chap. V. etc. அதாவது ஒருவன் முதன் முதலாகக் காலியாயுள்ள நிலத்தையோ அல்லது வேறிடத்தையோ தன் சுவாதீனப் படுத்திக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்படி அவன் சுவாதீனப்படுத்திக் கொண்டு விடுவதனால்மட்டும் அவன் அந்த நிலத்திற்கோ அல்லது உண்மையான சொந்தக்காரனாக - எஜமானனாக - ஆகிவிடமாட்டான். அப்படி உண்மை யான எஜமானனாக வேண்டுமானால் அதற்குச் சில நிபந்தனைகள் வேண்டுமென்று கூறுகிறான் ரூஸோ இந்த அத்தியாயத்திலே. அந்த நிபந்தனைகளை நிறைவேற்றி அவன் உண்மையான எஜமானனாகிவிட்ட பிறகு, அவன் அனுபவிக்கிற நிலம் அல்லது இடம், அல்லது மற்றப் பொருள்கள் முதலியன எல்லாம் அவனுடைய (ஆதியாக) ஆகின்றன. அதுவரையில் அவற்றின் மீது அவனுக்கு முதல் ஆக்ரமிப்பு பாத்தியதைதான் உண்டு. அதாவது மற்றெல்லோரையும் விட முதன் முதலாக மேற்படி இடத்தைச் சுவாதீனப்படுத்திக் கொண்டான் என்கிற ஒரு பாத்தியதைதான் உண்டு. அந்த முதல் ஆக்ரமிப்பு பாத்தியதை உள்ள காலத்தில் மேற்படி நிலம் அல்லது இடம் அல்லது மற்றப் பொருள்கள் முதலியன வெல்லாம் ஆதி யென்று பெயர் பெறுவ தில்லை; உடைமை (Possession) என்ற பெயரையே பெறுகின்றன. இந்தக் கொள்கையை மையமாக வைத்துக்கொண்டு ரூஸோ இந்த அத்தியாயத்தை விதரிக்கிறான். ந்யூனெ பால்போ (Nunez Balboa) என்பவன் கி.பி. 1513 ஆம் வருஷம், அப்பொழுது பெயின் தேசத்து மன்னனாயிருந்த பெர்டினாந்து என்பவனுடைய பிரதிநிதியாக இருந்து பசிபிக் மகா சமுத்திரத்தைச் சுவாதீனப்படுத்திக் கொண்டான். இதனுடைய தாத்பரியம் என்னவென்றால், ஜனங்களெல்லோரும் ஒன்றுசேர்ந்து ஒருமுகமாக வெளியிடுகிற அபிப்பிராயமே ஜனசக்தி என்ற பெயர் பெறுகிறது. இந்த ஏகோபித்த அபிப்பிராயத்தை. அநுஷ்டானத்திற்குக் கொண்டு வருவது எதுவோ அதுவே சட்டம் என்கிற கௌரவமான பெயரைப் பெறுகிறது. அதாவது, எந்த ஒரு சட்டமும், ஜனங்களின் ஏகோபித்த சம்மதத்தைப் பெற்றிருக்க வேண்டு மென்பது அர்த்தம். அப்படிக்கில்லாமல், ஒரு சிலருடைய அபிப்பிராயங்கள் மட்டும் அநுஷ்டானத்திற்குக் கொண்டுவரப் படுமானால், அவைகளுக்கு அதிகார தோரணையில் வெளியிடப் படுகிற உத்தரவுகள் என்ற பெயர்தான் கொடுக்கப்படலாமே யொழிய சட்டம் என்ற கௌரவமான பெயரைக் கொடுக்கக் கூடாது. இந்தியாவில் முற்காலத்தில் அரசாங்கமானது, தன் காரியங்களை ஒழுங்குபெற நடத்தும் பொருட்டு நியாய விபாகம் (Judicial) என்றும் பிரபந்த விபாகம் (Executive) என்றும் பிரிக்கப் பட்டிருந்தது. ஹாலந்தின் அரச சேவையில் இருந்த க்ரோஷிய, தனக்குக் கிடைத்த உபகாரச் சம்பளத்தைக் கொண்டு சும்மாயிராமல், கிறிதவர்களுக்கிடையே பலவித மத மாற்சரியங் களைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்த ஆர்மீனியர்களுக்கு உதவி செய்துவந்தான். இஃது அந்த நாட்டு மன்னனுக்குப் பிடிக்கவில்லை. இதனால் இவனுக்கு ஆயுள்பரியந்தம் சிறை வாசத் தண்டனை விதித்தான். ஆனால், இவன் தன் மனைவியின் துணை கொண்டு பாரிமா நகருக்கு ஓடிவந்து, அப்பொழுது 1621 ஆம் வருஷத்தில் அரசனாயிருந்த பதின்மூன்றாவது லூயி மன்னனிடம் சரணாகதி யடைந்தான். அந்த அரசன், இவனுக்கு ஓர் உபகாரச் சம்பளம் ஏற்படுத்தி உதவினான். இதற்கு நன்றி பாராட்டுகிற வகையில், இவன் தனது நூலை மேற்படி லூயி மன்னனுக்குச் சமர்ப்பணம் செய்தான். பார்பேராக் - Barbeyrac, 1674-1729. ஒரு பிரெஞ்சு சட்ட நிபுணன். இரண்டாவது ஜேம் - James. II. 1685M« வருஷத்திலிருந்து 1688ஆம்வருஷம் வரையில் ஆண்டவன். மூன்றாவது வில்லியம் - William III. 1689ஆம் வருஷத்திலிருந்து 1694ஆம்வருஷம் வரை ஆண்டவன். லிகர்க - Lycurgus. கி.மு. 825. கிரீஸின் ஒரு பாகமாயிருந்த பார்ட்டா ராஜ்யத்திற்குச் சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தவன். ஸோலோன் - Solon, கி.மு. 550-வது வருஷத்திற்கு முந்தியிருந்தவன். ஏதென் நகரத்தைச் சேர்ந்த ஒரு சட்ட நிபுணன். ந்யூமா - Numa. ரோமாபுரி தாபிக்கப்பட்ட காலத்தில், அதன் இரண்டாவது மன்னனாக இருந்தவன். ஸெர்விய - Servius, கி.மு. 550-வது வருஷத்திற்கு முந்தியிருந்த ரோம ராஜ்யத்து அரசன். ரூஸோவினால் எடுத்துக்காட்டப்படுகிற இந்த அறிஞர்களெல்லாரும் சரித்திர காலத்திற்கு முற்பட்டவர்கள். இவர்கள் உண்மையிலேயே இருந்தார்களா வென்பது சந்தேகிக்கத்தக்க விஷயமென்று இக்காலத்து அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்த இடத்தில் ரூஸோ தர்க்கஞ்செய்து கொண்டு போகிற மாதிரி சிறிது சிக்கலாக இருந்தாலும் மிகவும் வாரயமாயிருக்கிறது. ஆறுமுகத்தை, பழனி யென்பவன் கொலை செய்துவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம், இதில் பழனி என்பவன் கொலைகார னாகி விடுகிறானல்லவா? இவனை அரசாங்கம் சும்மாவிட்டு விடுகிறதென்று எண்ணிக் கொள்வோம். அப்படியானால், கொலை செய்யப்பட்ட ஆறுமுகத்தைச் சேர்ந்தவர்கள், பழனியைச் சும்மா விடுவார்களா? பழிக்குப் பழி தீர்க்க வேண்டுமென்று, பழனியைக் கொலை செய்ய வேலாயுதம் என்பவனைத் தூண்டி எப்படியோ காரியத்தை முடித்து விடுவார்கள். இப்பொழுது வேலாயுதம் கொலைகாரனாகி விடுகிறான். இவனைப் பழிதீர்க்க, வேறொருவன் கிளம்புவான். இப்படிக் கொலைகள், ஒன்றன் பின்னொன்றாக, சங்கிலி போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே போகும். இவைகளைத் தடுக்கும் பொருட்டுத்தான், அரசாங்கமானது, முதன் முதல் கொலை செய்தவனான பழனி என்பவனை, அவனுடைய குற்றம் ருஜீப்படுத்தப்பட்டால் மரணதண்டனைக் குட்படுத்திவிடுகிறது. ரோமாபுரியில் குடியரசு ஆட்சிமுறை நிலவியிருந்த காலம் கி.மு. 509 ஆம் வருஷத்திலிருந்து கி.மு. 28 ஆம் வருஷம் வரை. இந்தக் காலத்தில், ஜனங்களுடைய ஆதிக்கம் மிகுந்திருந்தது. குடியரசுத் தலைவர்களாயிருந்தவர்கள் சர்வாதிகாரிகள் என்று அழைக்கப்பட்டார்கள். அரசனுக்கும் ஜனங்களுக்கும் ஏற்படுகிற ஒப்பந்தந்தான் சட்டம் என்ற பெயரைப் பெறுகிறது என்கிறான் ஸெல்டன் என்னும் அறிஞன். அரசர்கள் தெய்விக உரிமை யுடையவர்கள் என்று சாதித்து வந்தவர்களே, அரசர்கள் சட்டத்திற்குப் புறம்பானவர்களென்று சொல்லிக் கொண்டு வந்தார்கள். இந்த மாதிரியான எண்ணம் ஐரோப்பாவில் 12, 13-வது நூற்றாண்டுகளில் வலுத்தோங்கி நின்றது. அரசன், பூலோகத்தில் வசிக்கும் உயிருள்ள சட்டம் - அரசர்களுக்குச் சட்டத்தை வகுத்துக் கொடுப்பது ஜனங்களுடைய கடமையல்ல; கீழ்ப்படிந்து நடப்பதுதான் அவர்களுடைய கடமை என்பன போன்ற வாசகங்கள் அந்தக் காலத்து ஐரோப்பாவில் சர்வசாதாரணமான வழங்கப்பட்டு வந்தன. இந்த மாதிரியான கொள்கைகளையே ரூஸோ இங்கு மறுக்கிறான். இதே கருத்தை எட்டாவது அத்தியாயத்திலும் தெரிவிக்கிறான் ரூஸோ. குடியரசு என்று நான் இங்கே சொல்வது, சுயேச்சாதிகாரம் அல்லது ஜனநாயகம் போன்ற எந்த ஒரு குறிப்பிட்ட ஆட்சி முறையைப் பற்றியும் கூறவில்லை. பொதுஜன அபிப்பிராயத்தை ஊர்ஜிதம் செய்வதற்காக இயற்றப்படும் சட்டங்களைத் தழுவி நடைபெறுகிற ஆட்சி முறையையே பொதுவாகக் குறிப்பிடுகிறேன். ஓர் அரசாங்கம், நியாயமுள்ள அரசாங்கமாக இருக்கவேண்டுமானால், அரச சக்தியும் அரசாங்கமும் வேறுவேறா யிருக்கவேண்டும். (அதாவது ஜனசக்தியின் மற்றொரு தோற்றந்தான் அரச சக்தி. இந்த அரச சக்தியின் எண்ணங்களைச் செயல் முறையில் கொணருவதுதான் அரசாங்கம். எனவே அரச சக்தி வேறாகவும் அரசாங்கம் வேறாகவும் இங்கே பிரித்துக் கூறப்படுகிறது.) இப்படிப்பட்ட அரசாங்கம் கோனாட்சி முறையைத் தழுவியதாக இருந்தாலும்கூட, குடியரசு என்றுதான் அழைக்கப்பட வேண்டும். - ரூஸோ. இந்த நூலின் மூன்றாம் பாகத்தில் இது விதரித்துக் கூறப்படுகிறது. ஒரு தேசத்தில் எவ்வளவுக் கெவ்வளவு சட்டங்கள் இயற்றப் படுவது குறைவுபடுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு அந்தத் தேசம் புகழடைகிறது என்று ரூஸோ இங்குக் குறிப்புக் கொடுக்கிறான். அதாவது, ஒரு தலைமுறையினரை உத்தேசித்து இயற்றப்பட்ட சட்டங்கள் பிந்திய தலைமுறையினருக்கும் போதுமானதா யிருக்கவேண்டுமென்பதும், புதிய சட்டங்க ளில்லாமல் பழைய சட்டங்களை வைத்துக் கொண்டே ஜனங்கள் ஒழுங்காக நடக்க வேண்டுமென்பதும் கருத்து. அதாவது பரநலத்தையே பெரிதெனக் கொண்ட முனிபுங்கவர் களைப் போன்ற மகான்கள்தான் சட்ட நிர்மாண கர்த்தர்களாக இருக்க வேண்டுமென்று இங்கு ரூஸோ கூறுகிறான். பாரத நாட்டில், மிருதி கர்த்தர்கள் அத்தனை பேரும் இத்தகைய மகான்களா யிருந்தது, இங்குக் குறிப்பிடத்தக்கது. மாண்டெகு - Montesquieu. 1689 - 1755. பிரெஞ்சு அறிஞன், இவனுடைய நூல்களில் சில. பிரெஞ்சுப் புரட்சிக்குத் தூண்டுகோலாயிருந்தன. சட்ட நிர்மான கர்த்தர்கள் எத்தகையவர்களா யிருத்தல் வேண்டுமென்பதைப் பற்றி அரிடாட்டல் தனது அரசியல் என்ற நூலில் விரிவுபடக் கூறுகிறான். சட்ட நிர்மாண கர்த்தர்கள், தேசத்தையும் ஜனங் களையும் குறிக்கோளாகக் கொண்டு சட்ட மியற்றல் வேண்டுமென்றும், சட்டமியற்றுகிறபோது எது நல்லது என்பதைப் பார்த்தால் மட்டும் போதாதென்றும், எது அநுஷ்டான சாத்தியமான தென்பதையும் பார்க்க வேண்டுமென்றும் கூறுகிறான். ஆர்க்கேடியா என்பது, கிரீ தேசத்தின் மத்தியில் உள்ள ஒரு பிரதேசம். இங்கு முற் காலத்தில் இடையர்களும் வேடர்களுமே வாழ்ந்து கொண்டிருந்தார்களென்று சொல்லப் படுகிறது. கிரேக்க இதிகாசத்தில் இந்த ஆர்க்கேடியா ஒரு முக்கிய இடம் பெறுகிறது. ஸைரேன் என்பது ரோம ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த ஒரு பிரதேசமாயிருந்தது. பல அறிஞர்களுடைய பிறப்பிடமாக இது பிரசித்தி பெற்றிருக்கிறது. கிரேட் என்ற தீவு கிரேக்க சாம்ராஜ்யத்திற்குட்பட்டு, பிறகு பல பேருடைய கைமாறி கடைசி யில் 1941ஆம் வருஷம் ஜெர்மனியின் சுவாதீனமாயிற்று. மினோ என்பவன், கிரேட் தீவை ஆண்டு வந்ததாகச் சொல்லப்படும் ஓர் அரசன். மினோ என்பது ஒரு தனி மனிதனுடைய பெயரா அல்லது ஓர் அரசபரம்பரையின் பெயரா வென்பதைப்பற்றி சரித்திராசிரியர்களுக்குள் அபிப்பிராய பேதமிருந்து வருகிறது. பார்ட்டா ஆதியில் மிகக் கேவலமான திதியில் இருந்தது. இதனுடைய ஜனங்கள் அடிமை வாழ்க்கையையே நடத்தி வந்தார்கள். லிகர்க (கி.மு. 825) காலத்தில்தான் இதற்குப் புத்துயிரும் புது வாழ்வும் ஏற்பட்டது. டார்க்கினியர்கள், ஆதி ரோமாபுரியில் வாழ்ந்த ஓர் அரச குடும்பத்தினர். ரோமாபுரியின் ஐந்தாவது மன்னனும் ஏழாவது மன்னனும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஏழாவது மன்னனாகிய லூஷிய டார்க்கின என்பவனுடைய காலத்தில் (கி.மு. 534-510) ரோமாபுரியின் செல்வாக்கு மிகவும் உயர்ந்திருந்தது. கி.பி. பதினான்காவது நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, ஆதிரிய ஆதிக்கத்தின் கீழிருந்த விட்ஜர்லாந்து, கி.பி. 1315ஆம் வருஷம் மார்ட்கார்ட்டென் (Mortgarten) என்ற இடத்தில் ஆதிரியச் சேனைகளைத் தோற்கடித்துச் சுதந்திரம் அடைந்தது. இந்தக் காலத்திலிருந்துதான், விட்ஜர்லாந்தின் தனித்துவம் பிரகாசிக்க ஆரம்பித்தது. கி.பி. பதினான்காவது நூற்றாண்டின் கடைசி காலத்திலிருந்து சுமார் ஒன்றரை நூற்றாண்டுவரை, ஹாலந்து, ப்பெயின் தேசத்து ஆதிக்கத்தின் கீழிருந்தது. ஆனால் இந்தக் காலத்திலிருந்தே, ஹாலந்துக்காரர்கள் சுதந்திரத்திற்காகப் போராடி வந்து, கடைசியில் கி.பி. 1572ஆம் வருஷம் நடைபெற்ற மகா யுத்தத்தில் வெற்றி பெற்றார்கள். இந்தக் காலத்திலிருந்துதான், ஹாலந்தின் சுதந்திர வாழ்வு ஆரம்பிக்கிறதென்று சொல்லலாம். மஹா பீட்டர் (Peter the Great) என்று அழைக்கப்படுகிற இவனுடைய காலம் 1672-1725. இவன் ருஷ்யாவில் அநேக சீர்திருத்தங்களைச் செய்ய முயன்றான். ஐரோப்பிய முறையில் தரைப்படை, கப்பற்படை முதலியவைகளை அமைத்தான். ஜெர்மனி, இங்கிலாந்து முதலிய பல நாடுகளுக்கும் சென்று, தானே சுயமாகச் சில விஷயங்களைக் கற்று, அவற்றை ருஷ்யா வில் அநுஷ்டானத்திற்குக் கொண்டுவரப் பார்த்தான். ஆழச் சிந்தித்து ரசிக்க வேண்டிய இடமாக, இங்கே விதரிக்கிறான் ரூஸோ, பலஹீனமாயுள்ள ஒரு ஜாதிக்கு. அதனுடைய பலஹீனத்தை உணர்த்தி, அதனை அந்தப் பலஹீனத்திலிருந்து மீட்கச் செய்யாமல், மேலும் மேலும் அதற்கு உயர்ந்த தன்மைகளைப் புகுத்தி வந்தால், அந்த ஜாதிக்கு என்ன நன்மையுண்டாகும்? ஒரு தேசத்துச் சிறுவர், சிறுமிகளுக்கு எந்த விதமாகக் கல்வி போதிக்கப்பட வேண்டு மென்பதைப்பற்றி ரூஸோ, எமிலி என்ற பெயருடன் தனியாக ஒரு நூலெழுதியிருக்கிறான். 1917ஆம் வருஷம் நவம்பர் மாதம் ருஷ்யாவில் ஏற்பட்ட புரட்சிவரை, ருஷ்யாவின் நிலைமை இப்படித்தான் இருந்தது. ருஷ்யப் புரட்சி, எந்தப் பின்னணியில் நடைபெற்றதென்பதை, ட்ரோட்கி என்பவன், தனது நூலில் வெகு சுவாரயமாக எழுதியிருக்கிறான். See The History of the Russian Revolution by Leon Trotsky. ருஷ்யப் புரட்சியையே நுணுக்கமாக ஊகித்துச் சொல்கிறான் போலும் இங்கே ரூஸோ? பிளேட்டோ, அரிடாட்டல் முதலியோர், ஒரு ராஜ்யத்தின் விதீரணம் அதிகமாகப் பெருகிக்கொண்டு போகக்கூடாதென்றும், அதனால் அதற்கு ஆபத்துத்தான் ஏற்படு மென்றும் கூறிக் கொண்டு போகிறார்கள். ரூஸோ, இந்தக் கொள்கையைப் பின்பற்றித் தான் இங்கே பேசுகிறான். கார்ஸிக்கா என்பது மத்தியதரைக் கடலிலேயுள்ள ஒரு தீவு. 3,370 சதுரமைல் விதீரண முடையது. கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டில், ஜினோவா ராஜ்யத்தின் ஆதிக்கத்துக்குட் பட்டிருந்த இந்தத் தீவினர், தளபதி பாவோலி (General Paoli) என்பவனுடைய தலைமையில், வெகு தீவிரமாகச் சுதந்திரப் போராட்டம் நடத்தினார்கள். ரூஸோவின் காலத்தில், இவர்களுடைய சுதந்திரப் போராட்டம் ஐரோப்பாவிலேயே மிகப் பிரசித்தி பெற்றிருந்தது. அதையே இங்குக் குறிப்பிடுகிறான். எட்டாவது அத்தியாயத்தில் பார்க்க. 2. ராஜ்யமானது, திரமாக இருக்க வேண்டுமானால், மிதமிஞ்சிய செல்வம், மிதமிஞ்சிய வறுமை என்ற இரண்டினையும் ஒன்றுக்கொன்று சமீபத்திற்குக் கொண்டு வரவேண்டும். அதாவது பணக்காரர்களும் இருக்கக்கூடாது; ஏழைகளும் இருக்கக்கூடாது. ஏனென்றால், இருவரும் பொதுஜன நன்மைக்கு விரோதமானவர்கள். பணக்காரர்கள், கொடுங் கோலர் களாயிருக்கிறார்கள்; ஏழைகள், அந்தக் கொடுங்கோலர்களுக்கு நண்பர்களா யிருக் கிறார்கள். இந்த இரண்டு பேர்களுக்கும் மத்தியில்தான், பொதுஜன சுதந்திரமென்பது ஏலம் போடப்படுகிறது. ஒரு சாரார், அதாவது பணக்காரர்கள், அதனை வாங்குகிறார்கள், இன்னொரு சாரார், அதாவது ஏழைகள், அதனை விற்கிறார்கள். - ரூஸோ. விவசாய நாடுகளில் ஜனத்தொகை அதிகமாவது வழக்கம் என்று சொல்வதுதான் சம்பிரதாயம். இதற்கு உதாரணமாக இந்தியா, சீனா, ருஷ்யா முதலிய நாடுகளை எடுத்துக் காட்டுவதுண்டு. ஆனால் எல்லா நாடுகளுக்கும் இந்த உண்மை பொருந்துவதில்லை. உதாரணமாக இங்கிலாந்தில் தொழிற் புரட்சி ஏற்பட்ட பிறகு, அங்கு ஜனத்தொகை அதிகப்பட்டு வந்திருக்கிறது. கார்ல் மார்க் தனது காபிடல் என்ற நூலில் இதைப் புள்ளி விவரங்களோடு ருஜுப்படுத்துகிறான். See Capital Vol II. Part VII. Chap XXIII. கார்த்தேஜ் (Carthage) என்பது, இப்பொழுது ஆப்ரிக்காவின் வடபாகத்திலுள்ள ஒரு சிறிய நகரமா யிருக்கிறது. இது முற்காலத்தில் பிரசித்தி பெற்ற ஓர் ஏகாதிபத்தியமா யிருந்தது. கிரேக்கர்களோடும் ரோமர்களோடும் அடிக்கடி போர் நடத்தி அதிக புகழோடு விளங்கியது இந்த கார்த்தேஜ் சாம்ராஜ்யம். டைர் (Tyre) என்பது, சிரியாவிலுள்ள ஒரு நகரம். இது முற்காலத்தில் பொனீஷியர்கள் (Phoenicians) என்ற ஜாதியாருடைய பிரபல பட்டினமாயிருந்தது. ரோட் (Rhodes) என்பது மத்தியதரைக் கடலின் கிழக்குப் பாகத்திலுள்ள ஒரு தீவு. மஹா அலெக்ஸாந்தர் போன்ற கிரேக்க மன்னர்கள் காலத்திலேயே இந்தத் தீவு மிகவும் பிரசித்தி யடைந்திருந்தது. பார்ட்டா (Sparta) என்பது, பழைய கிரீஸிலிருந்த ஒரு பிரசித்த நகரம். இது தனி ராஜ்யமாக விளங்கியது. டெமாக்ரஸி (Democracy) என்ற ஆங்கில வார்த்தையானது, டெமா+கிரேடீன் (Demos-People: Kratein-to rule) என்ற இரண்டு கிரேக்க வார்த்தைகளின்படியாகப் பிறந்தது. அதாவது ஜன+ஆட்சி என்று அர்த்தம். ஜன ஆட்சியின் லட்சணங்களென்ன வென்பதைப் பற்றி அரிடாட்டல், தனது அரசியல் என்னும் நூலில் விதரித்துக் கூறுகிறான். (See Aristotle’s Politics Bk III Chap. VII Bk IV. Chap. IV.) ஆனால் பிற்காலத்து ஐரோப்பிய அரசியல் பண்டிதர்கள் பலர், அரிடாட்டலின் ஆட்சிப் பிரிவினை முறையை மறுத்திருக்கிறார்கள். இது அரிடாக்ரஸி (Aristocracy) என்று அழைக்கப்படுகிறது. ஒருசில அறிஞர்கள் சேர்ந்து நடத்துகிற ஆட்சியான இஃது ஆதியில் ஏற்பட்டதாயினும், பின்னாடி இது செல்வ மும் செல்வாக்குமுள்ள ஒருசிலருடைய ஆட்சியாக மாறிவிட்டது. இந்தியாவில், ஆதிகாலந்தொட்டு, ஏறக்குறைய கி.பி. பதினெட்டாவது நூற்றாண்டு வரையில் இந்த மன்னராட்சி (Monarchy) முறையே நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால் இது, குடி தழீ இக் கோலோச்சு மா நில மன்னனுடைய ஆட்சியாக இருந்தது. இதனையே குடிக்கோனாட்சி யென்பர் சிலர். பார்ட்டாவில் இரண்டு அரசர்களும், ரோமாபுரியில் எட்டு அரசர்களும் இருந்தார்க ளென்பது சரித்திர ஊகமே என்று அறிஞர்கள் கருது கிறார்கள். அப்படி இரண்டு பேரும் எட்டுப் பேரும் முறையே இருந்தார் களென்றால், இவர்கள் அரசர்களல்லர்; மாகாண அதிகாரிகளே. அரசு வேறு, அரசாங்கம் வேறு என்று பாகுபடுத்தியே ரூஸோ சொல்லிக்கொண்டு போவதை, வாசகர்கள், இந்த நூலைப் படிக்கிற போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு சட்ட நிர்மாணகனுடைய லட்சியமெல்லாம் பொதுஜன நன்மையை நாடுவதா யிருக்கவேண்டுமே தவிர, குறிப்பிட்ட எந்தத் தனி நபருடைய அல்லது பிரிவினருடைய அல்லது விசேஷ சலுகைகள் வேண்டுமென்று போருகிறவர்களுடைய நன்மையை நாடுவதா யிருக்கக் கூடாது. Priests, Elders, Senate, Gerontes. வட அமெரிக்காவிலுள்ள சுக்சீ, யுக்காகின் என்ற சில புராதன ஜாதியாரைப்பற்றியே இங்கு ரூஸோ குறிப்பிடுகிறான் போலும். லிகர்கஸினால் பார்ட்டாவுக்கு வகுத்துக் கொடுக்கப்பட்ட அரசியல் திட்டமே சிறந்ததென்ற தன் கருத்தை அடிக்கடி வலியுறுத்திக் கொண்டு செல்கிறான் ரூஸோ இந்த நூலில். மற்ற கிரேக்க நாடுகளில் இருந்ததைப்போல் பார்ட்டாவிலும் ஆண்டான் அடிமை வழக்கம் இருந்ததென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அரிடாட்டல், கல்வி ஞானமும் சீல சுபாவமு முடையவர்களே அரசாங்க நிருவாகத்தை ஏற்கத் தகுதியுடையவர்கள் என்றுதான் கூறு கிறானே தவிர, பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டு மென்று சொல்லவில்லை. ஆனால், கல்வியும் சீலமும் இருந்து இவைகளுடன் நற்குடிப்பிறப்பு, சுதந்திர மனப்பான்மை, செல்வம் ஆகியவையும் இருந்தால், அப்படிப்பட்டவர்கள், அரசாங்க உத்தியோகத்திற்கு அதிகமாக விரும்பத்தக்கவர்கள் என்று சொல்கிறான். Aristotle’s politics, Bk. III. Chap. 12-13. M®¡»ÄOÞ-Archimedes. கி.மு. 287-212. சிஸிலி தீவிலுள்ள ஸைரக்யூ என்ற ஊரில் பிறந்த ஒரு கணித நிபுணன்; யந்திர நூல் வல்லான்; இஞ்சினீர். நீரின் மீது எந்தெந்தப் பொருள்களை எப்படி எப்படி மிதக்க விடலா மென்பதைப்பற்றி இவன் பலவகை ஆராய்ச்சிகள் செய்திருக்கிறான். ஸாமியல் என்பவன், யூதர்களால் போற்றப்படும் ஒரு ஞானி. இவன், யூதர்களுக்கு வலியுறுத்திக் கூறுவதாகச் சொல்லும் வரலாறு, கிறிதவ பழைய வேதாகமத்தில் காணப்படுகிறது. அது வருமாறு: அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங் களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளை யெல்லாம் சொல்லி உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்ன வென்றால், தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து தன் ரதசாரதி களாகவும் தன் குதிரை வீரராகவும் வைத்துக் கொள்ளுவான். ஆயிரம் பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர் களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டு களையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக் கொள்வான். உங்கள் குமாரத்திகளைப் பரிமள தைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிற வர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும், வைத்துக் கொள்ளுவான். உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சைத் தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத் தோப்பு களிலும் நல்லவைகளை எடுத்துக்கொண்டு தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான். உங்கள் தானியத்திலும், உங்கள் திராட்சைப் பவனிலும் தசம பாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான். உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக் கொள்வான். உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக் கொள்வான்; நீங்கள் அவனுக்கு வேலை யாட்களாவீர்கள். நீங்கள் தெரிந்து கொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர், அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான். ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல், அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும். சகல ஜாதிகளையும் போல நாங்களும் இருப்போம். எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்த வேண்டும் என்றார்கள். சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான். கர்த்தர் சாமுவேலை நோக்கி, நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார். பழைய வேதாகமம், சாமுவேல், எட்டாவது அதிகாரம், 10-22 மாக்கியவெல்லி - Machiavelli. 1469-1527. இத்தலியிலுள்ள ப்ளாரென் மாகாணத்தைச் சேர்ந்தவன். ப்ளாரென் மன்னர்களின் கீழ் உத்தியோகம் பார்த்தவன். சுயேச்சாதிகாரத்தை சிலாகித்துப் பேசும் ஒரு ராஜதந்திரியென்று இவனைப் பலர் கருதுகின்றனர். ஆனால் மக்காலே போன்ற சில அறிஞர்கள், இவன் உண்மையில் அப்படிப் பட்டவனில்லை யென்று நினைக்கிறார்கள். ரூஸோவின் கருத்துக் கூட, மாக்கிய வெல்லியைப்பற்றித் தப்பபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிற தென்பதுதான். 2. மாக்கியவெல்லி ஓர் ஒழுங்கான மனிதன். நல்ல பிரஜையுங்கூட. ஆனால் (ப்ளாரென் மன்னனாகிய) மெடீஷி என்பவனுடைய ராஜசபையில் உத்தியோகம் செய்து வந்தா னாதலின், தனது தேசம், பல கொடுமைகளுக்குட்பட்டு வருவதைக் கண்ணால் பார்த்தும் தனது சுதந்திர ஆவலை மூடிபோட்டு மறைத்துக் கொண்டு விட்டான். இவன், தனது நூலுக்கு நாயகனாக சீஸர் போர்க்கியா என்ற வெறுக்கத்தக்கவனைப் பொறுக்கி யெடுத் திருக்கிறான். (சீஸர் போர்கியா - Caesar Borgia 1476-1507. இத்தலியிலிருந்த ஒரு பேராசைக் காரன். பாதிரியாவதற்கு முயன்று கொடுங்கோலனாகி அரசாண்டான். இவனை யடக்கி ஒடுக்க, இத்தலி முழுவதும், ஐரோப்பிய மன்னர்கள் பலரும் ஒன்று திரள வேண்டியிருந்தது). இதனால் இவனுடைய, மாக்கிய வெல்லியினுடைய, நோக்கம் இன்ன தென்று தெரிகிறது. இவனுடைய இளவரசன் என்ற நூலுக்கும், இவனுடைய மற்ற நூல் களுக்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கின்றன. இளவரசன் என்ற நூலை மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டு, இவனைப்பற்றித் தவறாகப் பலர் எழுதியிருக் கின்றனர். இவனுடைய மேற்படி நூலை, ரோமாபுரி அரச சபையானது, கண்டிப்பாகப் பகிஷ்கரித்து விட்டது. அப்படிச் செய்யாமல் அஃது எப்படி இருக்க முடியும்? ஏனென்றால், அந்த ரோமாபுரியின் அரசைப் பற்றித்தானே அவன், அந்த மாக்கியவெல்லி, தனது மேற்படி நூலில் வருணிக்கிறான்! - ரூஸோ. 21-வது அத்தியாயத்தைப் பார்க்க. ஹெர்க்குலீ - Hercules. கிரேக்க இதிகாசங்களிலே வரும் ஒரு வீரன். அசாதாரண மான தேக பலத்திற்கு இவனை ஓர் உதாரணமாகச் சொல்வது வழக்கம். மன்னராட்சி என்று சொன்னால் அது சுயேச்சாதிகாரமாகத்தான் இருக்க முடியும் என்று பகிரங்கமாக ஊர்ஜிதப்படுத்துகிறான் இந்த வாக்கியத்தில் ரூஸோ. சார்டின் - Sir John Chardin. 1643-1713. கீழ்நாடுகள் பலவற்றிலும் யாத்திரை செய்த ஒரு பிரெஞ்சு அறிஞன். பர்ஷியாவில் பல வருஷகாலம் தங்கியிருந்தவன். இவன், தனது யாத்திரை அநுபவத்தைப்பற்றி அரிய நூலொன்று எழுதியிருக்கிறான். 1. விதீரணமான ராஜ்யங்களினால் உண்டாகிற பாதகங்களைப் பற்றி நான் பதினெட்டாவது அத்தியாயத்தில் கூறியிருப்பதற்கும், இங்கே நான் கூறுவதற்கும் எவ்வித முரண்பாடும் இல்லை. அந்த அத்தியாயத்தில் ஓர் அரசாங்கம், தன் அங்கத்தினர்கள் விஷயத்தில், அதாவது உத்தியோகதர் களின் விஷயத்தில் எவ்வித அதிகாரத்தைச் செலுத்துவதென்பதைப் பற்றிச் சொல்லப்பட்டது. இங்கு, ஓர் அரசாங்கத்தின் சக்தியானது அதன் பிரஜைகளின் விஷயத்தில் எப்படிப் பிரயோகிக்கப்படக் கூடுமென்பதைப் பற்றிச் சொலலப் படுகிறது. விசால மான ஒரு ராஜ்யத்தில், அரசாங்க மானது, தன் பிரஜைகளின்மீது ஏதேனும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமானால், ஆங்காங்கு நிறுவப்பட்டிருக்கும் உத்தியோகதர் களைக் கொண்டு செய்யலாம். இந்த வகையில் உத்தியோகதர்கள் மூலைக் கொருவரா யிருப்பது, அரசாங்கத்திற்கு நல்லது. ஆனால் அதே உத்தியோகதர்கள், ஏதோ அதிருப்தி காரணமாக, தங்களுடைய அரசாங்கத்தின் மீதே நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டு மென்று பார்ப்பார் களானால் மூலைக்கொருவராயிருப்பதனால் அது முடியாது. ஏனென்றால் அவர்கள் ஒன்றுகூடிப் பேசுவதற்குள், அரசாங்கமே, இவர்கள்மீது திருப்பிக் கொண்டுவிடுமல்லவா? எனவே, ஒரு ராஜ்யம் விசாலமாயிருப்பது. ஒரு விதத்தில் சாதக மாகவும், மற்றொரு விதத்தில் பாதகமாகவும் இருக்கிறது. - ரூஸோ. ஜனப்பெருக்கத்தைக் கொண்டு, ஒரு நாட்டின் செழுமையையும், ஓர் அரசாங்கத்தின் உயர்ந்த லட்சணத்தையும் அளந்து பார்க்க வேண்டு மென்கிற ரூஸோவின் இந்தத் தர்க்க நியாயத்தை, இப்பொழுது அறிஞர்கள் பலமாக மறுக்கிறார்கள். இவர்கள், இந்தியாவையும், சீனாவையும் உதாரணங்களாக எடுத்துக்காட்டி, இந்த இரு நாடு களிலும் ஜனங்கள் அதிகப் பட்டிருந்தாலும், அரசாங்க லட்சண முடைய அரசாங்கங்கள் இருக்கின்றனவாவென்று கேட்கிறார்கள். இது சிந்திக்கவேண்டிய விஷயந்தானே. அரசியல் என்பது ஒரு கலை என்ற வாசகம் இங்கு கவனிக்கத் தக்கது. நான்கு லட்சம் ஜனங்கள், ஒரு முறையல்ல, பலமுறை ஒன்றுகூடி ராஜ்ய விவகாரங்களை நடத்தினார்களென்ற ரூஸோவின் இந்தக் கருத்துக்கு, சரித்திர ஆதாரமில்லையென்று மேனாட்டு இதிகாசப் பண்டிதர்கள் தீர்மானிக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டில் இவையெல்லாம் சாத்தியமாகுமா வென்று அரசியல் பண்டிதர்கள் கேட்கிறார்கள். தவிர, ஆதிரிய ஏகாதி பத்தியத்தை எதிர்த்து நின்ற ஹாலந்தும், விட்ஜர்லாந்தும் பிரான்சின் ஆதரவில் இருந்துகொண்டு எதிர்த்தனவென்பது இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஹாலந்தும், விட்ஜர்லாந்தும், ஆதிரிய ஆதிக்கத்தின் கீழிருந்தது. ஏறக்குறைய கி.பி. பதினான்காவது நூற்றாண்டில். ஒரு ராஜ்யத்தினுடைய க்ஷேமமும் பலமும் மூன்று பிரிவாரைப் பொறுத்திருக்கிறதென்று சொல்வது ஒரு சம்பிரதாயம். முதலாவது பிரிவார், மதபோஷகர்கள். இரண்டாவது பிரிவார் பிரபுக்கள், மூன்றாவது பிரிவார் பொதுஜனங்கள். இந்த மூன்று பிரிவினருடைய ஆதரவும் ஒரு ராஜ்யத்திற்குத் தேவை. ஆங்கிலத்தில் இவர்களை மூன்று எடேட்டுகள் என்று சொல்வதுண்டு. The Three Estates. அதாவது, ராஜ்ய காரியங்களில் சம்பந்த முள்ள பிரிவார் என்று அர்த்தம் தற்காலத்தில், பத்திரிகைகளுக் குள்ள அபாரமான செல்வாக்கி னால், அவற்றை அதாவது பத்திரிகைகளை நான்காவது எடேட் (The Fourth Estate) என்று சொல்கிறார்கள். 1. இப்படிச் சொன்னதினால், யாரும், தங்கள் கடமையைப் புறக் கணித்து விட்டு, தங்களுடைய தேவை, தேசத்திற்கு அவசியமாயிருக் கிற காலத்தில் வெளியேறி விடலாமென்பது அர்த்த மல்ல. இப்படி ஓடிப் போவது, தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இங்ஙனம் ஓடிப்போகிற வனை துரோகியாகக் கருதவேண்டும். - ரூஸோ. ஜன சபைகளில் நீண்ட வாதங்கள் நிகழ்வது, ஜனங்களின் அரசியல் அறிவு அபிவிருத்தி யடைந்து கொண்டு வருகிறதென்பதற்கு அடையாள மென்று இக்கால அறிஞர் சிலர் கருதுகின்றனர். ரோம அரசியல் சம்பந்தமான சில பெயர்கள்: கீழ் மக்கள் - ப்ளெபியன் - Plebeians. மேல் மக்கள் - பாட்ரிஷியன் - Patricians. பொதுஜன சபை - கொமிஷியா - Comitia. சர்வஜன வாக்கு நிர்ணயம் - ப்ளெபிஸிட்டா - Plebicita. மூத்தோர் அல்லது அறிஞர் சபை - ஸெனேட் - Senate or Senatus. அரசாங்க அதிகாரிகள் - ட்ரிப்யூன் - Tribunes. இவர்கள் சாமானிய ஜனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு நியமிக்கப் பட்டவர்கள். இவர்களுக்கு வேறு பல அதிகாரங்களும் பிற்காலத்தில் ஏற்பட்டன. ரோம ராஜ்யம் சக்ரவர்த்திகளின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. கி.மு. 27 ஆம் வருஷத்திலிருந்து கி.பி. 476 ஆம் வருஷம் வரை. டாஸிட்ட - Tacitus. கி.பி. 55-120. பிரபல ரோம சரித்திராசிரியன். 1. சுதந்திரமாயுள்ள ஒரு ராஜ்யத்திற்குத்தான் இந்தச் சித்தாந்தம் பொருந்தும். குடும்பம், சொத்து, வேறு புகலிடமின்மை. தேவை, பலாத்காரம் முதலியவை காரணமாக, ஒருவன், தன் விருப்பத்திற்கு விரோத மாக ஒரு ராஜ்யத்தில் தங்கும்படி நேரிட்டுவிடலாம். இப்படிப் பட்ட நிலைமையில் தங்குகிற ஒருவன், சமுதாய ஒப்பந்தத்தை அங்கீகரிக் கிறானென்றோ நிராகரிக்கிறானென்றோ சொல்ல முடியாது. - ரூஸோ ஸெர்விய - Servius. ரோம ராஜ்யத்தின் ஆறாவது மன்னன். இவனுடைய காலம் கி.மு. 578-534. 2. Comitia. 3. Forum. Tribunes - ஒழுங்கு நிர்ணய அதிகாரிகளென்று இவர்களைச் சொல்லலாம். 213 ஆம் பக்கம் பார்க்க. 96 ஆம் பக்கம் பார்க்க. பேபிய - Fabius. ரோம இதிகாசத்திலே வரும் பிரசித்த தலைவன்; வீரன். ரோமர்களுக்கும் இத்தலியிலே வசித்துக்கொண்டிருந்த ஸாம்னைட்டுகள் என்ற ஒருவகை ஜாதியினருக்கும் அடிக்கடி யுத்தங்கள் நடைபெற்று, இரு கட்சியினருக்கும் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்தன. இப்படிப்பட்ட யுத்தமொன்று கி.மு. 292 ஆம் வருஷம் நடைபெற்றது. அதில் ரோமர்களின் சேனாபதியாக பேபிய நியமிக்கப் பட்டான். இவனுக்கு அப்பொழுது அதிக வயது. ஆயினும் உற்சாகத்துடன், போர் வீரர்களை அழைத்துக் கொண்டு யுத்தகளத்திற்குச் சென்று வெற்றி கண்டான். கி.பி. 11, 12, 13-வது நூற்றாண்டுகளில் நடைபெற்றன.