வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு - 2 பண்டித மோதிலால் நேரு, லோகமான்ய பாலகங்காதர திலகர், காந்தி யார்?, காந்தியும் ஜவஹரும், காந்தியும் விவேகானந்தரும் ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 2 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2005 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 20 + 212 = 232 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 145/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : வளவன் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையை தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன். அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம் வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தன்னே நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப் பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய தேச பக்தன் நாளேட்டிலும், பன்னிரெண்டு ஆண்டுகள் நவசக்தி கிழமை இதழிலும், இரண்டாண்டுகள் சுயராஜ்யா நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணியாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான பாரதியில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது குமரி மலர் மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி.க. மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப் பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையை தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் அவள் பிரிவு என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் ஜோதி மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ஜோதி. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ஜோதியில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் விபரீத ஆசை முதலான கதைகள் ஜோதியில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ஜோதியில் வருணன், சரித்திரக்காரன், மௌத்கல்யன், தேவதேவன், வ.பார்த்த சாரதி முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ஜோதி அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட் களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் பிளாட்டோவின் அரசியல் என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்று விக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடு களின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதிய வரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரன வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை? முதலான நூல்களைப் படித்தவர் களுக்கு இது நன்கு விளங்கும். காரல் மார்க் வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘The Essentials of Gandhism’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய லெட்சுமிகாந்தன், உத்தியோகம், பாணபுரத்து வீரன், அபிமன்யு ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக வளவன் பதிப்பகம் மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ஞானாலயா பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்! என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக் கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய் மொழியாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது. தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர் களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலை முறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும், வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகிறது. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை சர்க்கரைப் பொங்கலாக தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடித் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கி யங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்த காலமாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழிநடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். அடிமை உணர்வையும், அலட்சியப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம். பதிப்பாளர் நுழையுமுன்... மோதிலால் நேரு  பண்டித நேருவின் தந்தை. வீரத்தின் விளைநிலம். தியாகத்தின் திருவுருவம். காந்தியடிகளையும், நேருவையும் வெளிஉலகுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைக் குரியவர். இந்திய விடுதலை வரலாற்றை வளர்த்தெடுத்து பண்படுத்தியவர்களில் இவரின் பங்கு அளப்பரிது.  இந்திய விடுதலை இயக்கத்திற்கு மூளையாகத் திகழ்ந்தவர். இந்திய அரசியல் வாழ்வில் தோன்றிய அரசியல் விற்பன்னர் களில் முதன்மையானவர். ஏற்றுக் கொண்ட இலக்கிற்கு உருவமும், அழகும் கொடுத்தவர். தனது அழகு மாளிகை யாம் ஆனந்த பவனத்தை இந்திய விடுதலை வேள்விக்கு ஈகம் செய்தவர்.  இளமையில் செல்வ செழிப்பில் வாழ்ந்த சீமான். முதுமையில் இந்திய நாட்டின் விடுதலை வேள்விக்குத் தன்னையும் தன் குடும்பத்தையும் ஒப்புவித்தவர்;  சீரோடும் செல்வச் செழிப்போடும் கூடிய வாழ்வை உதறித் தள்ளியவர். தரையை மெத்தையாகவும், கையைத் தலை யணை யாகவும் கொண்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.  பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்த இந்தியத் தலைவர் களில் ஒருவராகத் திகழ்ந்தவர். இன்னும் என்ன? உள்ளே படியுங்கள்; உள்ளத்தை உருக்கும் செய்தியை நெஞ்சில் நிறுத்துங்கள்.  இந்திய விடுதலை என்னும் இலக்கை அடைவதற்கு இளையருக்கும், முதியவர்க்கும் சிறந்த அணுகுமுறையைக் காட்டிச்சென்ற தொலை நோக்குச் சிந்தனையாளர்.  இந்திய விடுதலையாளர்களின் பார்வையில் சிற்பியாய்ப் போற்றிப் புகழப்பெற்றவர்.  சேர்த்த பெரும் செல்வத்தை நாட்டுக்காக செலவிட்டவர். தம் அருமருந்தன்ன ஒரே மகனாம் பண்டித நேருவையும், தம் குடும்பத்தையும் நாட்டுக்காக விட்டுச் சென்றவர்.  உள்ளும் புறமும் ஒத்த சிந்தனையாளரின் உறுதியையும், அஞ்சாநெஞ்சம் உள்ள பெருமகனின் அருங்குணங்களையும் படியுங்கள்; படிப்பினைப் பெறுங்கள். பாலகங்காதர திலகர்  சுய ஆட்சி எனது பிறப்புரிமை; அஃதெனக்கு வேண்டும் என்று ஒவ்வொரு இந்திய மக்களின் உள்ளத்திலும் விடுதலை விதையை ஊன்றியவர்.  மராட்டிய மண்ணில் பிறந்த இவர். இந்திய விடுதலைப் போருக்கு அணிகலனாக இருந்து அழகு சேர்த்தவர். மராட்டிய மண்ணில் இந்திய விடுதலைப் போருக்காகப் போராடி மடிந்த வீரமறவர்கள் பற்றி விழாக்கள் எடுத்து விடுதலைப் போருக்கு உணர்ச்சியூட்டி இளங்காளை களைப் போருக்குத் தூண்டியவர்.  மராட்டிய மக்களுக்கு அரசியல் அறிவை ஊட்டியவர். பகட்டு ஆரவாரம் அற்றவர். மாந்தப் பிறப்பின் நோக்கம் பிறருக்கு உதவு வதற்கே என்ற மனப்போக்கு உடையவர்.  இளமைத்தொட்டு நாட்டுப்பற்றும் இந்துசமயப்பற்றும் மிக்கவராய் இருந்தவர். கணிதத்தில் பேரறிவு பெற்றவர்.  இந்தியர்கள் மேன்மையுற ஒழுக்கக் கல்வியை அறிவுறுத் தியவர். உழைப்பாளிகளின் தலைவர்.  போர்க் குணம் மிக்க தலைவர்களுள் ஒருவர். தம் வாழ்நாள் முழுவதும் அந்நிலையிலிருந்து பிறழாது வாழ்ந்தவர்.  இந்தியா முழுவதும் - தமிழகத்தில் பாரதியார் உட்பட ஒரு பெரும் அறிவுப் பட்டாள இளைஞர்களை இந்திய விடுதலை வேள்விக்காகச் செதுக்கியவர்.  தலை சிறந்த இதழாளர்; பாடம் சொல்லிக் கொடுப்பதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்; சமசுகிருத மொழியாராய்ச்சி யாளர்; சட்ட நுணுக்கங்களை இந்திய வழக்குரைஞர் களுக்குக் கற்றுத் தந்தவர்.  இந்திய விடுதலை வரலாற்றில் திலகரின் இடம் பெரிது. அதை இந்தச் சிறிய நூல் அழகு மணிகளாகத் கோத்துத் தருகிறது.  திலகரின் வீர வாழ்க்கை என்ற அணையா விளக்கை நூலுள் சென்று காணுங்கள் - படியுங்கள். காந்தி யார்?  காந்தி - அவர் ஒரு ஞானிபோலிருக்கிறார். ஆனால் உலகமெல்லாம் அவருக்கு குடும்பமாயிருக்கிறது. அவர், பொன்னும் பொருளும் வேண்டு மென்று பிச்சை கேட்கி றார், ஏன்? இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான ஏழை மக்கள் கையேந்திப் பிச்சை கேட்காமலிருக்கும் பொருட்டு. அவர் அடிக்கடி உபவாசம் இருக்கிறார். ஏன்? லட்சக்கணக்கானவர் களுடைய நிரந்தர உபவாசத்தை தடுப்பதற்காக. அவர் ஒற்றை ஆடை அணிந்து கொண்டிருக்கிறார். ஏன்? மற்றவர் களுக்கு முழு ஆடை வழங்குவதற்காக. அவர் ஊன்று கோலுடன் நடக்கிறார். ஏன்? மற்றவர்களுக்குத் தாம் ஓர் ஊன்று கோலாயிருக்க வேண்டுமென்ற ஆவலினால். அவர் கோடிக்கணக்கான மக்களால் வணங்கப் படுகிறார். ஆனால் அவர் சத்தியமாகிற ஒரே பொருளைத்தான் வணங்குகிறார்.  இந்திய மக்களுக்குத் தந்தையாக இருந்து இந்திய விடுதலைப் போரை வென்றெடுத்தவர் மகாத்மா காந்தி. இந்தப் பெயர் இன்று உலகெங்கும் போற்றிப் புகழப் பெறும் பெயராக உள்ளது.  வீரர்களுக்கும், மகான்களுக்கும் உள்ள திண்மையும், தண்மையும் காந்தியடிகளிடத்து மிகுந்து காணப்படுகிறது.  தம்மைச் சுற்றியிருந்த எளியமாந்தர்களையும், வீரர்களாக வும் மகான்களாகவும் ஆக்கிய வியக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்.  இந்தியப் பெரு நிலத்தின் அரசியல் ஆசான் கோகலே அவர்களால் காந்தியடிகள் என்று புகழப் பெற்றவர்.  நாட்டின் நலனில்தான் தம் நலன் அடங்கி இருக்கிறது என்பதைப் பலமுறை தம் செயல்களால் காட்டியவர்.  உலக நாடுகளில் நடைபெற்ற அமைதிவழிப் போராட்டத் திற்குக் காந்தியடிகள்தான் முதன்மையானவர் என்று இந்நூல் பதிவு செய்கிறது.  தாய்மொழி மூலம்தான் ஒருநாட்டின் பெருமையையும், தன் மதிப்பையும் உயர்த்திக்காட்ட முடியும் என்பதில் காந்தியடிகள் அழுத்தமாக இருந்தார் என்பது தெரிகிறது.  இவருடைய வாழ்க்கை வீர வாழ்க்கை; விதியை எதிர்த்துப் போராடிய வாழ்க்கை; வலிமைப்படைத்த ஆங்கில வல்லாண்மையை எதிர்த்துப் போராடிய வாழ்க்கை.  மாந்தத் தன்மையின் உச்சியில் இருந்தவர். ஒழுக்கம் இவரின் உயர்நிலைக்கு அடித்தளம்.  தீண்டாமை எதிர்ப்புக் கொள்கையை உயிரினும் மேலாகக் கொண்டவர். அதற்காக உழைத்தவர்.  தம் பொது வாழ்க்கையில் கொள்கைகளுக்கு மாறாக குடும்பம் இருந்தால் குடும்ப உறவையே துண்டித்துக் கொள்ளும் அளவிற்கு மனஉறுதி உடையவராகத் தம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டவர்.  பாமரமக்களையும் அரசியலுக்குக் கொண்டு வந்து அவர் களுக்கும் அரசியலில் உரிமை உண்டு என்பதை இந்திய நாட்டு மக்களுக்குக் கண்டு காட்டியவர்.  வெளிநாட்டுப் பொருள்களைப் புறம்தள்ளி, உள்நாட்டுப் பொருள் களுக்கும், உள்நாட்டுத் தொழில்களுக்கும் முன்னுரிமை அளித்தவர்.  இந்திய மக்களுக்கு அச்சம் விலக்கி அரசியல் உணர்வு களைத் தூண்டியவர்.  உறங்கிக் கிடந்த இந்திய மக்களைத் தட்டி எழுப்பி உலக அரசியல் அரங்கில் ஒளிவிட வைத்தவர்.  காந்தியின் வாழ்க்கை வளமுடைய அகன்ற காவிரி. நட்ட நாற்று ஒவ்வொன்றும் ஆற்று நீர்ப் பாய்ச்சலால் ஓராயிரம் நெல்மணி களைக் கொண்டுவருவதைப்போல, காந்தி போன இடமெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய விடுதலைக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்டனர்.  மாந்தனின் வரலாறு மகானின் வரலாறாகப் மாறிய தெப்படி? படிப்பதற்காக - பாதுகாப்பதற்காக இந்நூல் உங்கள் கைகளில்! காந்தி - சவகர்  சவகர்லால் நேரு, மோதிலால் நேரு பெற்றெடுத்த பெருமகன்; இந்தியப் பேரரசின் முதல் தலைமை அமைச்சர்.  இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதொரு அடித்தளம் அமைத்தவர்; விடுதலைப்பெற்ற இந்தியாவின் முதல் அரசியல் சிற்பி. காந்தியடிகள் ஒரு வித்து-வித்திலிருந்து தோன்றிய முளை சவகர்லால் நேரு.  இருவரும் ஆங்கில வல்லாண்மையின் சட்டத்தை மீறிய வர்கள். இருவரும் சட்ட வல்லுநர்கள். இருவரும் ஈகத் தீயில் வெந்தவர்கள். இருவரும் அன்னையரின் வளர்ப்பால் பொதுவாழ்வில் புடம் இட்ட பொன்னாகத் திகழ்ந்த வர்கள். காந்தியடிகள் நீறு பூத்த நெருப்பு-சவகர்லால் நேரு கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு.  இருவரும் இந்திய நாகரிகத்தின் உண்மைத் தொண்டர்கள். இவ்விருவரின் மனைவியரும் கணவன்மார்களின் முன் னேற்றத்திற்குத் துணை இருந்தவர்கள்; துன்பங்களைத் தூக்கிச் சுமந்தவர்கள்.  தம் சொந்தத் துன்பங்களை மறந்து நாட்டு மக்களின் விடிவிற்கு இவர்கள் விதைத்த விதைதான் இன்றளவும் இந்தியப் பெருநிலத்திற்குக் குன்றாத பெருமையைத் தந்து கொண்டுள்ளது.  நைனிடால் சிறையிலிருந்து மகள் இந்திராவுக்கு சவகர் எழுதிய கடிதம் உலக வரலாற்றில் இடம் பெற்றது. தமிழில் இவரின் கடிதங்கள் இந்திய சரித்திரம் எனும் நூலாக வெளிவந்துள்ளது. வளரும் இளந்தமிழ் மறவர்கள் படிக்க வேண்டிய உலக வரலாற்றுப் பெட்டகம்.  கத்தூரிப்பாயின் கணவர், இந்திராவின் தந்தை என்ற தொடர்களின் மூலம் காந்திக்கும் நேருவுக்கும் உள்ள வேற்றுமையைக் காட்டியுள்ளார் ஆசிரியர் சர்மா. மேலும் படியுங்கள்.  பொன்னைத் தொட்ட கை; இந்திராவைத் தூக்கிச் சுமந்த இனிய தோள்; கடப்பாரையைத் தூக்கிக்கொண்டு மண் வெட்டிய கைகள் என்ற தொடர்கள் நேருவின் பெருமைக்குப் புகழ் சேர்க்கும் வரிகளாகும்.  சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு முழக்கங்கள் தொடர்பான வற்றிலும் குமுகாயக் கொடுமைகளைக் களைவதிலும் இருவருக்கும் உள்ள வழிமுறை களும் வேறு வேறானவை என்பது இந்நூல் வழி அறியும் செய்தி யாகும்.  வாழ்க்கையில் இருவரும் குருதியும், குருதி நாளமுமாகத் திகழ்ந் தார்கள். தலைமைப் பண்பாளர்களாதலால் தம் கருத்து வேற்றுமையால் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாது வாழ்ந்தார்கள்.  அதனால்தான் இன்றைக்குக் காந்தியச் சிற்றூரும் இருக்கிறது. நேருவின் கனவாம் தொழில்நுட்ப பெரு வளர்ச்சியும் இருக்கிறது.  இந்நூல் இருவரின் பண்புகளையும் துலாக் கோலின் இரு தட்டு களிலும் கலைநயத்தோடு நிறுத்து துல்லியமாக அளவிடுகிறது.  விடுதலை வெளிச்சமில்லாத ஒரு நாட்டின் மக்கள் வெளி நாடுகளில் எவ்வளவு கீழ்நிலையில் கருதப்படுகிறார்கள் என்ற உள்ளத்தை உறுத்தும் செய்திகள் தமிழர்கள் எண்ணத்தக்கன; சிந்திக்கத்தக்கன.  பண்டித மோதிலால் நேரு திரட்டி வைத்த தங்கக் கட்டியை ஈகம் என்னும் தீயில் வைத்துச் சுட்டு சவகர் என்னும் அணிகலனாக இந்தியத் தாய்க்குச் சூட்டியுள்ள பொற் கொல்லர் காந்தியின் பெருமையையும், அணியாக அமைந்த சவகரின் பெருமையையும் படியுங்கள். தாய் நாட்டுக்குச் செய்ய வேண்டியவை எவை என்பதை நினையுங்கள். காந்தியும் விவேகானந்தரும்  செம்பொன் மேனி, சிறிய உருவம், உடைந்த பல், உரத்த சிரிப்பு, ஒற்றையாடை, மூப்படைந்த இளைஞர், ஓய்வறியா உழைப்பாளி - இவர்தான் காந்தி.  நெடிய உருவம், அகன்ற நெற்றி, பரந்த கண்கள், ஒளிவீசும் பார்வை, மிடுக்கான நடை, அரசாளவேண்டியவர், ஆனால், துறவாடை அணிந்த துறவி. உலகத்தைத் துறக்காது உலகத்துக்காக வாழ்ந்தவர் இவர்தான் விவேகானந்தர்.  முன்னவர் கரும யோகி- பின்னவர் ஒரு ஞான வீரர்; முன்னவர் ஒரு காட்டுத் தீ - பின்னவர் பொறிகிளம்பாத அனல் பிழம்பு; முன்னவர் கோடைக்காலத்து இடி- பின்னவர் கார்காலத்து மழை; முன்னவர் உறுமும் அரிமா- பின்னவர் கூவும் குயில்.  முன்னவர் தொண்டுச் செய்ய பிறந்தவர் - பின்னவர் சமயத்தால் மக்களை ஆளப்பிறந்தவர்; முன்னவர் சிறையைத் புனிதப் படுத்தியவர் - பின்னவர் துறவைப் பெருமைப் படுத்தியவர்.  இருவரும் அரண்மனைகளில் கொண்டாடப்பட்ட போதும் குடிசையிலேயே வாழ்ந்தவர்கள்.  இருவரும் இந்திய நாட்டுப் பெருமையைக் காப்பாற்றி யவர்கள்; இருவரும் மேலைநாட்டாரால் பாரட்டப் பட்டவர்கள்.  முன்னவர் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டவர். பின்னவர் வாழ்க்கையைத் துறந்து சென்றவர். இன்னும் எவ்வளவு ஒற்றுமையும் வேற்றுமையும்! நூலைப் படியுங்கள்.  முன்னவர் ஒரு வழக்கறிஞர் - பின்னவர் ஒரு துறவி; முன்னவர் இந்தியர்களுக்குத் தன்மதிப்பு உணர்ச்சியை ஊட்டியவர் - பின்னவர் இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்.  முன்னவர் அறத்தை அடிப்படையாகக் கொள்ளாத அரசியலை வெறுத்தவர் - பின்னவர் அரசியல் இல்லா விட்டால் அறவாழ்வு வெற்றிபெறாது என்றவர்.  இருவரும் இந்து மதப்பற்றாளர்கள். மதம் குமுகாயத்தின் உயர்வுக்கு தேவை என்று விரும்பியவர்கள். ஆனால் இன்று இந்தியாவில் மதவெறியின் கொடுமை அரங்கேறியுள்ளது. இதனை அகற்றுவதற்கு இந்தச் சூழலில் காரல்மார்க்சும், தந்தைப் பெரியாரும் இல்லையே என்ற கவலை மேலோங்கி யுள்ளது.  விவேகானந்தர் பண்படுத்திய அஞ்சாமை என்னும் நிலத்தில் காந்தியடிகள் அமைதி என்னும் விதையை ஊன்றினார். தீண்டாமை என்னும் கொடிய நோயைத் தீர்க்கும் மருத்துவர் களாக இருவரும் இருந்தனர்.  விவேகானந்தரின் உலகப் பெருமைக்கு இராமநாதபுரம் மன்னர் பாகர சேதுபதியும், காந்தியடிகள் ஒற்றை யாடை அணிவதற்குச் சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணும் காரணம் என்பதும் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.  கிழக்கில் பேரோசை செய்யும் வங்காள விரிவிகுடா ஓரத்து வங்க மாநிலத்தில் பிறந்த நரேந்திரன் என்ற இயற் பெயருடைய விவேகானந்தர் ஒருபுறம்.  மேற்கில் அரேபிய குதிரைகளைப் போல பேரலைகளைக் கொண்ட குசராத் மாநிலத்தில் பிறந்த கரம்சந்த் காந்தி என்ற இயற்பெயருடைய மகாத்மா மற்றொரு புறம்.  இப்பொழுது படிப்பாளர்களை இவர்களின் இடையே நிறுத்தி யிருக்கிறது இந்நூல். நூலுள் நுழையுங்கள். இரு பெரும் மா மாந்தர்களை நினைவில் கொள்ளுங்கள்! * * * நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெ.சு. மணி, ஞானாலயா கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், புலவர் கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், குட்வில் செல்வி, கீர்த்தி கிராபிக் பட்டு, விட்டோ பாய் மெய்ப்பு வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மபிரியா, நா. இந்திரா தேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . தியாகமூர்த்தி பண்டித மோதிலால் நேரு முந்தைய பதிப்பாசிரியரின் முன்னுரை எங்கள் மாதப் பத்திரிகையாகிய விவேக போதினி சென்ற 23 ஆண்டு களாகத் தமிழுலகிற்குச் செய்துவரும் தொண்டு, தமிழன்பர்கள் ஒருவாறு அறிந்த விஷயமேயாகும். சமீபத்தில் வெளிவந்த நவசக்தி பத்திரிகையில் அதன் ஆசிரியர் எழுதியுள்ள முக்கியமான பாகத்தைக் கீழே தருகிறோம்:- *விவேக போதினி தோன்றிய நாள் தொட்டு எல்லாக் கூறுகளி லும் அது நன்கு நடைபெற்று வருதலைப் பற்றி நாம் பன்முறை எழுதி யிருக்கிறோம். 23ஆம் தொகுதியின் முதல் பகுதி, புற அமைப் பினும் உள்ளுறையினும் நமது கண்ணையுங் கருத்தையும் கவர்ந்தது. பற்பல துறைக் கட்டுரைகள் அதன்கண் மிளிர்கின்றன. *ஆணுலகுக் குரிய கட்டுரை களும் பெண்ணுலகுக்குரிய கட்டுரைகளும் நாட்டுக்குப் பல வழியிலும் நலஞ்செய்யு மென்பதில் ஐயமில்லை. தமிழ் நலமும், பொருள் பொதிந்த பல திறக் கட்டுரைகளும் தாங்கி வெளிவரும் பத்திரிகைகளே நாட்டை நல்வழியில் ஓம்பவல்லன. அவைகளுள் விவேக போதினி ஒன்றாகத் திகழ்கிறது. விவேக போதினியை நன்முறையில் நடாத்தும் அதன் ஆசிரியருக்கு நமது நன்றி உரியதாக. எங்களால் வெளியிடப்பட்ட பல அரிய தமிழ் நூல்கள் இலட்சக் கணக்குப் பிரதிகளாகச் செலவழிந்திருப்பதே அன்பர்கள் எம்பால் காட்டும் நன்மதிப்புக்கு ஓர் அத்தாட்சியாகும். இதுகாறும் நாங்கள் அறிவைப் பரவச் செய்யும் பல நன்னூல்களையே வெளி யிட்டு வந்தோம். இப்போது, தேசத்தில் மிகுதியும் வேண்டப்படும் தேசபக்தி புகட்டக்கூடிய நூல் களையே வெளியிடத் துணிந்திருக் கிறோம். இதற்குத் தமிழன்பர்கள் ஆதரவைப் பூரணமாக எதிர்பார்க் கிறோம். இப்போது முதன் முதலாக வெளியிடப்படும் பண்டித மோதிலால் நேருவின் திவ்ய சரித்திரத்தை அப்பெரியாருக்குச் செய்யவேண்டிய கடமைப்படி, மிகவும் உயர்ந்த காகிதத்தில் 33 அழகிய போடோ படங்களுடன் வெளியிட்டுள்ளோம். படங்கள் தருவித்து பிளாக்குகள் தயாரிப்பதில் எமக்கு மிக்க செலவேற்பட்ட தன் காரணமாக புத்தகத்தின் விலையை எமது விருப்பப்படி குறைத்து வைக்கக்கூடவில்லை. ஆயினும் ஜவஹர்லால் நேரு, லோகமான்ய பால கங்காதர திலகர், தாதாபாய் நெளரோஜி, சித்தரஞ்சன தாஸர் முதலிய தேச பக்தர்களின் சரிதங்களை சிறந்த முறையில் வெளியிட்டு, குறைந்த விலையில் தமிழ் நாட்டன்பர் களுக்கு உதவத் தீர்மானித்து அதற்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். தமிழ் நாட்டாரின் பூரண ஆதரவு எமக்கு இருக்கு மென்று உறுதியாக நம்புகிறோம். இந்நூலுக்கு ஓர் அழகிய சிறப்புரை கொடுத்துதவிய சிறந்த தேசபக்தரும், தேசபக்தியை ஊட்டிவரும் தமிழ்நாடு பத்திரிகை யின் ஆசிரியர் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். முந்தைய பதிப்பின் சிறப்புரை அதிக நாள் ஜீவித்திருந்து, தேசத் தொண்டாற்றியவர்களில் காலஞ் சென்ற பண்டித மோதிலால் நேருவே முதன்மையானவ ராவர். அறிவிலும், ஆற்றலிலும், செல்வத்திலும் படிப்பிலும் சிறந்த பண்டிதர் செய்துள்ள தேசீய கைங்கர்யத்தை இந்தியா ஒருநாளும் மறக்க முடியாது. இந்தியன் என்ற ஒருவன் உள்ளளவும், பண்டிதரின் திருநாமம் பிரகாசித்துக் கொண்டிருக்கும். பழங்காலத்து ஹரிச்சந்திரன் வரலாறு ஒரு கதையேயாகும். ஆனால் மோதிலாலின் ஹரிச்சந்திர தியாகம், யாவருமே கண்ணாரக் கண்டு காதாரக் கேட்டுக் களிப்பதாயிருக்கின்றது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மோதிலாலும் அவருடைய பெண்டு பிள்ளைகளும்செய்துள்ள அரிய சேவை, பொற்பாறையில் வைரங் களால் பதிக்கத்தக்கதென்று கூறுவது மிகையாகாது. இந்திய தேசீய தர்மத்தை நிலைநிறுத்த, உடல், பொருள், ஆவி, செல்வம், பதவி, பெண்டு பிள்ளைகள் ஆகிய யாவற்றையும் துறந்து, சிறைப்பட்ட நேரு பண்டிதரின் பெருமையைப் புகழ்ந்து பாட, கம்பர் போன்ற கவிகளாலேயே முடியும். சென்ற பத்து வருஷங்களில், இந்தியாவின் விடுதலைக்காக சர்வத்தியாகம் செய்தவர்களில் தேசபந்து சித்தரஞ்சன தாஸரும், பண்டித மோதிலால் நேருவும் முதல் பங்கு பெற்றவர்களாவர். ஸ்ரீ தா ஏழையாயிருந்து தனவந்தராகி, பிறகு யாவற்றையும், தேசத் திற்கு அர்ப்பணம் செய்தார் பாரம்பர்யமாக பணக்காரராய் இருந்து முற்றும் துறந்தவர் பண்டித மோதிலால் நேரு. பண்டிதரிடம் நேரில் நெருங்கிப் பழகியவருக்கே, அவருடைய பெருந்தன்மையும், உதார குணமும், அறிவின் தெளிவும் நன்கு புலப்படும். சிறுமையும், சிறு புத்தியும் அவரிடத்தில் கடுகளவும் கிடை யாது. உயர்ந்த நோக்கமும், கம்பீர நடையுமே அவரது வாழ்க்கை யின் உயிராயிருந்தனவென்று கூறலாம். 1920ஆம் வருஷத்தில் மிதவாதியாக இருந்த பண்டிதர், இந்திய தேசீயப் படையின் தளபதியாக மாறியது உலக அதிசயங்களில் எட்டாவதென்றே கூறலாம். 150கோடி மக்கள் உலகில் இருந்த போதி லும், அவர்களில் உயர்ந்தோர் வெகு சிலரேயாவர். எண்ணத்தால் மட்டும் ஒருவர் உயர்ந்துவிட முடியாது. கூரிய அறிவும் தெளிந்த நோக்கமும், உள்ளும் புறமும் ஒரே விதமாக சீலமும், தர்ம சிந்தையும், எதையும் சாதிக்கும் திறமையும், அஞ்சாநெஞ்சமும், அரசனாகவோ ஆண்டியாகவோ இருப்பதற்கான மனோ நிலைமையும் போன்ற அரிய குணங்களைப் பெற்றவர்களே உயர்ந்தோராவர். அவர் களுக்கே புருஷோத்தமர்களென்று பெயர். இவ்வரிய குணங்கள் யாவற்றையும் மோதிலால் பெற்றிருந்தா ரென்பதை அவருடைய விரோதிகளும் மறுக்க மாட்டார்கள். இந்திய அரசியல் போராட்டத்தில் மிகவும் சங்கடமான நிலைமையில் அறிவுச் சுடரான பண்டிதரின் பிரிவு இந்தியாவின் துர்ப்பாக்கியமேயாகும். அவருக்கு ஆண் குழந்தை ஒன்றுதா னென்பதையும் அவரே ஜவஹர்லால் நேரு என்பதையும் நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. மோதிலால் பண்டிதரைப் போல், அவரது திருக்குமாரரும் தேச சேவையில் சிறந்த வீரராக விளங்குகின்றார். தந்தையைப்போல் பலவிதத்திலும் ஜவஹர்லாலும் சிறந்து விளங்குவதை ஈண்டுக் குறிப்பிடுதல் அவசியமாகும். பெருமை வாய்ந்த பண்டிதரின் ஜீவிய சரித்திரத்தையும், மற்றும் பண்டிதர் சம்பந்தமான பல விஷயங்களையும், பண்டிதரின் வீரமொழி களையும், புத்தக வடிவமாக சென்னை, மயிலாப்பூர், விவேக போதினி காரியாலயத்தார் நன்கு வெளியிட்டிருப்பது மிகவும் பாராட்டக்கூடியது. இப்புதகத்தில் அநேக ஆப்டோன் படங்கள் சேர்த்திருப்பதுடன் புதகமும் உயரிய கிளே காகிதத் தில் அச்சிடப்பட்டடிருக்கிறது. தேசீயத்துறையில் புதிதாக நூல் களை வெளியிட முன்வந்துள்ள விவேக போதினி காரியாலயத் தாருக்குத் தமிழ் நாட்டார் தகுந்த ஆதரவும் ஊக்கமும் அளிப்பார் களாக. தமிழ்நாடு ஆபீ, சென்னை. பி. வரதராஜுலு 6-4-1931 தியாகமூர்த்தி பண்டித மோதிலால் நேரு ரத மாதாவின் அருந்தவப் புதல்வரும் இந்திய தேசீயத் தலைவர்களில் ஒருவருமான பண்டித மோதிலால் நேரு 1931ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் ஆறாந்தேதி காலை 6-40 மணிக்கு இலட்சுமணபுரியில் ஆண்டவன் திருவடி நீழலடைந்தனர். வீரம் எங்கெங்கு தாண்டவம் செய் கிறதோ, தியாகம் எங்கெங்கு உரு வெடுத்து உலவுகிறதோ, அங்கெல்லாம் அவருடைய மரணச்செய்தி துக்கத்தைக் கொடுத்துவிட்டது. அவர், ஏராளமான வருமானத்தை அளிக்கக்கூடிய வக்கீல் தொழிலை விடுத்த தற்காகவோ, ஆடம்பர ஆடைகள் அணிவதினின்றும் விலகி முரட்டுக் கதர் உடையை அணிய முற்பட்டதற்காகவோ, தேச சேவை காரணமாகச் சிறை புகுந்ததற்காகவோ, முதுமை, நோய் இவை களின் தொந்தரவுகளை யும் பொருட்படுத்தாது, தேச விடுதலைப் போராட்டத்தில் முன் வைத்த காலைப் பின்வாங்காது, உயிர் போமளவும் போராடி யதற்காகவோ, தமது அழகிய திரு மாளிகையைத் தேசத் திற்கு அளித்து விட்டதற்காகவோ, தேசத்தார், அவரவர் மனோபாவத்திற்குத் தகுந்தபடி, அப் பெரியாரைப் போற்று வர். ஆனால் அவர் செய்துள்ள மற்றொரு மகத்தான தியாகத்திற்கு முன்னால், மேற்கூறப் பட்ட தியாகங்கள் யாவும் மிகச் சாதாரண மானவைகளாகவே நமக்குப் புலப்படுகின்றன. தமது ஆத்மாவின் பிரதி பிம்பத்தை, உயிருக்குமினிய ஏக புத்திரனை, பண்டித ஜவஹரிலால் நேருவை அவர் தேசத்திற்காக அர்ப்பணஞ் செய்து விட்டார். இதைவிட வேறு சிறந்த தியாகம் என்ன இருக்கிறது? அழகு, கல்வி, ஒழுக்கம் முதலிய அனைத்திலும் பூரணத்துவம் பெற்றுள்ள செல்வக் குமரன், தியாகத்தினாலும் பணிவோடு கூடிய வீரத்தினாலும் தேசத்தாரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று, அவரால் அளிக்கக்கூடிய சிறந்த கௌரவமாகிய காங்கிர தலைமைப் பதவியை ஏற்க, லாகூரில் தேவரும் கண்டு களிக்கத்தக்க ஊர்வலத்தில் அழைத்துச் செல்லப்படுவதைக் கண்டு பண்டித மோதிலாலின் இதயம் எவ்வளவு ஆனந்தக் கூத்தாடியிருக்கும்! தமக்குக் காங்கிர பதவி கிடைத்த போதோ, அல்லது பண்டித ஜவஹரிலால் நேரு பிறந்தபொழுதோ ஏற்பட்டிருந்த ஆனந்தத்தைவிட, பண்டித ஜவஹரிலால் நேருவுக்கு ஜய என்ற ஜனங்களின் ஆரவாரமன்றோ அவருக்கு அளப்பரிய ஆனந்தத்தை அளித்திருக்கும்! லாகூர் காங்கிர மேடையில், தலைமைப் பதவியேற்றதும், பண்டித ஜவஹரிலால், அன்னையின் ஆசிபெற அடிபணிந்து நின்றார். அப்பொழுது அந்தத் தாயாரின் உள்ளம் இருந்திருக்கவேண்டிய நிலைமையை எதற்குத்தான் ஒப்பிடுவது! இங்ஙனம் தன் மகனைச் சான்றோனெனக்கேட்டுப் பொங்கிக்களித்த அந்தப் பெற்றோரின் இதயம், தமது அருமை மகனார் காராக்கிருகத்தில் வாசஞ் செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் கேட்டு என்ன பாடுபட்டிருக்கும்! எவ்வளவு துடித் திருக்கும்! இதைச் சகித்துக் கொண்டிருந்ததன்றோ தியாகம்! இதுவன்றோ வீரம்! இந்தத் தியாகத்திற்காகவும், இந்த வீரத்திற் காகவுமே நாம் பண்டித மோதிலாலைப் போற்றுகிறோம். ஆனந்தபவனம்! அழகிய மாளிகை! பண்டித மோதிலால் நேரு கடுநோயால் படுக்கையில் கிடக்கிறார். அவருடைய ஆலோ சனையைக் கேட்கவும் அவருக்கு ஆறுதல் கூறவும் பலர் வந்து கொண்டும் போய்க் கொண்டுமிருக்கிறார். மனைவியாரும் மூத்த பெண்ணும் அருகிலிருந்து வேண்டிய உபசாரங்கள் செய்து கொண் டிருக்கிறார். மற்றொரு பக்கத்தில், திருமகனாரின் செல்வக் குழந்தை ஸ்ரீமதி இந்து நேரு தாதா தாதா என்று கொஞ்சி நிற்கிறது. ஆனால் வயோதிகப் போர்வையைப் போர்த்துக் கொண்டுள்ள அந்தப் பண்டித மோதிலால் நேருவின் இளமை மனதானது, என்னுடைய ஜவஹர் எங்கே? எங்கே? என்று கேட்கிறது. பதில் சொல்வார் எவரையும் காணோம். அந்த மனதின் மற்றொரு மூலையிலிருந்து, எங்கே? எங்கே? என்ற எதிரொலியே கேட்கிறது. உடனே ஒரு பெரு மூச்சுடன் அந்த எதிரொலி லீனமாகிவிடுகிறது. ஆனந்த பவனத்திலே அரசர் திருமகனென உலவிக்கொண்டிருக்க வேண்டிய பண்டித ஜவஹரிலால் காராக்கிருகத்தின் ஒரு மூலையிலே ஒடுங்கி யிருக்கிறார். தமது குடும்பத்திற்குத் திருமகளாம் என வந்த நாட்டுப் பெண் ஸ்ரீமதி கமலா நேரு, அரிச்சந்திரனைப் பின் தொடர்ந்த சந்திர மதியைப்போல், தமது கணவனாரின் அடிபற்றிக் காராக்கிருகம் சென்றுவிட்டாள். மகனுக்கு மறுமகனாயிருந்த மருமகனாரும் சிறையில் கிடக்கிறார். உறவினரிற் பலரும், தேசத்தின் தற்போதைய நிலையில் ஆனந்த பவன வாசத்தைவிட காராக்கிருக வாசமே சிறந்த தென மதித்து அங்குச் சென்றிருக்கின்றனர். இத்தகைய நிலைமை யில் பண்டித மோதிலால் நேரு, மேற்கூறிய அனைத்தையும் மறந்து தேச விடுதலையொன்றிலேயே நாட்டஞ் செலுத்தி வந்தார் என்றால் அந்தத் தியாகத்தை என்னென்று சொல்வது? பீஷ்மருடைய வைராக்கியத்திற்கன்றோ ஒப்பிடவேண்டும். பண்டித மோதிலால் நேருவின் தியாகம் நமக்கு வழிகாட்டி நிற்கிறது! அவருடைய வீரம் நமக்குத் துணை செய்து கொண்டிருக் கிறது! அப்படி யிருக்க, அவருடைய பிரிவுக்கு நாம் ஏன் துக்கப்பட வேண்டும்? ஏன் பின்னடைய வேண்டும்? பாரதியாருடன், பல்லவி ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று - ஆடு. சரணம் எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம் எல்லோரும் சமமென்பதுறுதி யாச்சு சங்கு கொண்டேவெற்றி யூதுவோமே - இதைத் தரணிக்கெல்லா மெடுத்தோதுவோமே - ஆடுவோ. சரித்திரச் சுருக்கம் பண்டித மோதிலால் நேரு காஷ்மீர் தேசத்து பிராமண குலத்தில் தோன்றியவர். பொதுவாக வட இந்தியாவில், அதிலும் குறிப்பாகப் பஞ்சாப் மாகாணத்தில் பிராமணர்களுக்குப் பண்டிதர் எனப் பெயருண்டு. பிற மாகாணங்களிலுள்ள பிராமணர்கள் ஒவ் வொரு ரிஷியின் வழியாக தங்கள் பரம்பரை வந்ததெனக் கூறுவது போல், வடதேசத்தி லுள்ளவர் களும் கூறுகின்றனர். முற்காலத்தில் தனுர் வேதத்தில் நிபுணரெனக் கொண்டாடப்பட்டு வந்த துரோணா சாரியாரின் வழியாக பண்டித நேருவின் பரம்பரை வந்ததெனக் கூறப் படுகிறது. இம்மரபினர் க்ஷத்திரிய பிராமண வம்சத்தவர்களென அழைக்கப்படுகின்றனர். இவ்வம்சத்தவர் களிடம் ஜனங்களுக்குப் பொதுவாக நல்ல மரியாதை உண்டு. முதலாவது சீக்கிய யுத்தத் திலும், இரண்டாவது சீக்கியயுத்தத்திலும் நேருவின் வம்சத்தார் ஆங்கிலேயருடன் கொடிய போர்புரிந்து தேச சேவை செய்தார்க ளெனக் கூறப்படுகிறது. பஞ்சாப் மாகாணத்தை ஆண்ட மகாராஜா ரணஜித் சிங்கால் இவ்வம்சத்தார் போர் புரிவதில் மிக்க தீரர்களெனக் கருதப்பட்டனர். மோதிலால் நேருவின் தகப்பனார் பண்டித கங்காதர நேரு டெல்லிப்பட்டணத்தில் கொத்தவால் உத்தியோகத்தி லிருந்தார். கொத்தவால் உத்தியோகமானது தற்காலம் மாஜிட்ரேட்டுக்குச் சமமானது. கொத்தவால் உத்தியோகத்தில் கங்காதரர் இருந்த பொழுது ஆங்கிலேயர்களுக்கு அவரிடத்தில் மிக்க மதிப்புண்டு. கங்காதரரின் மூத்தகுமாரர் நந்தலால் பிறந்து ஏழு ஆண்டுகள் ஆனவுடன், அவருக்கு ஒரு நாள் திடீரென்று ஜுரம் கண்டு விண்ணுலக மெய்தினர். அப்பொழுது மோதிலாலின் தாயார் கர்ப்பவதியா யிருந்தாள். கங்காதரர் மாண்ட நான்கு மாதங்கள் கழிந்த பிறகு மோதிலால் 1861ஆம் வருடம் மே 6 தேதி பிறந்தார். இளமைப் பருவம் பிறப்பதற்கு முன்னரே தகப்பனைப் பறிகொடுத்த துர்ப்பாக் கியன் என்று மோதிலாலைப் பலரும் ஏசினர். ஆனால் தாய்மட்டும் அவ்வசை மொழிகள் குழந்தையின் காதில் விழாவண்ணம் வெகு ஜாக்கிரதை யுடன் காப்பாற்றிவந்தாள். மூத்த குமாரர் நந்தலால் வரவர முதிர்ந்து காளைப்பருவ மடையவே, தம்பி மோதிலாலைக் கல்வி கற்பிப்பதிலும் போஷிப்பதிலும் வெகு கவலை செலுத்தி வந்தார். மோதிலால் நேருவின்படிப்புக்கு நந்தலாலே காரணமாவர். தம்பி, கல்வி கேள்விகளில் பாண்டித்தியம் பெற்று நல்ல அந்ததுக்கு வரவேண்டுமென்ற எண்ணம் நந்தலாலுக்கு அதிகரிக்கவே, மோதிலாலுக்கு வேண்டிய சகல காரியங்களையும் தாமே முன் நின்று செய்துவந்தார். கல்வி மோதிலால் டெல்லியிலேயே பன்னிரண்டு வயதுவரை முகம்மதியப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தமையால் பிற்காலத்தில் அவர் பாரசீக பாஷையிலும் அராபி பாஷையிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவரானார். அரபி பாஷையைக் காட்டிலும் மோதிலாலுக்குப் பாரசீக பாஷையில் வெகு விருப்பமுண்டு. பின்னர் கான்பூரிலுள்ள அரசாங்க பாடசாலையில் பிரவேசப் பரீட்சைக்குப் படித்துவந்தார். பிரவேசப் பரீட்சையில் தேறினவுடன், மோதிலால் உயர்தர வித்தைக்காக அலகாபாத்திலுள்ள மூயிர் செண்ட்ரல் கலாசாலையில் படித்துவந்தார். அப்பொழுது இவருக்குச் சகபாடிகளா யிருந்தவர்கள் பண்டித மதனமோகன மாளவியாவும், ஸர் சுந்தரலாலும் ஆவர். கலாசாலைத் தலைவர் ஸ்ரீமான் ஹாரிசன் துரைக்கு மோதிலால் மிக்க வேண்டியவ ரானார். கலாசாலையில் இருக்கும் பொழுதே, பரீட்சையில் தேறவேண்டு மென்ற எண்ணம் இவருக்கு அதிகமாக உண்டாகவில்லை. ஞான விருத்திக்குப் படிப்பே யன்றி, பரீட்சைக்காகப் படிப்பல்ல வென்பதே இவருடைய நோக்கம். இதனால் மேற்படிப்புப் படித்து பட்டதாரி யாக வேண்டுமென்ற விருப்பம் இவருக்கில்லை. ஆயினும் ஆங்கில பாஷையில் நல்ல தேர்ச்சியடைந் திருந்தார். வேடிக்கைப் புத்தகங் களைப் படிப்பதில் அதிக காலத்தைக் கழிப்பார். ஷேக்பியரும் மில்டனுமே இவருக்குத் துணைக் கருவிகள். இறுதியாக பிளீடர் பரீட்சைக்குப் படித்து அதில் சிறப்பாகத் தேறிவிட்டு கான்பூரில் வக்கீலாக வந்தார். கான்பூரில் தக்கபடி முன்னேற்றத்திற்கு வழி யில்லை யென்பதைக் கண்டு உடனே தம் தமையனார் நந்தலால் நேரு அலகாபாத்தில் வக்கீலாயிருந்ததனால் அவரிடத்திலேயே போய்ச் சேரவேண்டுமென்று கான்பூரை விட்டு அலகாபாத்துக்கு வந்தார். மோதிலால் வந்த மூன்று மாதங்களுக்குள் தமையனார் நந்தலால் நேரு மரணமடைந்தார். உலக வாழ்க்கை வக்கீல் தொழிலை நடத்தத் தொடங்குவதற்கு ஒரு வருஷம் முன்னர், அதாவது 1882ஆம் வருஷம், ஸ்ரீமதி வரூப ராணி தேவியை மணஞ் செய்து கொண்டார். இவ்விவாகத்தின் பயனாக இவருக்கு ஜவஹரிலால் நேரு என்ற ஒரு குமாரரும், ஸ்ரீமதி விஜய லட்சுமி தேவி, ஸ்ரீமதி கிருஷ்ணாதேவி என்ற இரண்டு குமாரத்திகளும் பிறந் தார்கள். தமையனார் காலஞ்சென்ற பிறகு மோதிலால், மனதைத் தேற்றிக்கொண்டு வக்கீல் தொழிலை வெகு ஜாக்கிரதையுடன் தொடங்கலானார். இவருடைய சுறுசுறுப்பையும் வியாச்சியங்களை நடத்தும் சாமர்த்தியத்தையும் கண்ட அநேகர் தங்கள் வியாச்சியங் களை மோதிலாலிடமே கொடுக்க முன் வந்தார்கள். தமையனார் கட்சிக்காரர்கள் பலரும் இவரையே ஏற்பாடு செய்துகொண் டார்கள். வரவர வழக்குகள் அதிகமாக வந்தன. முன்னிலும் பன்மடங் கதிகமாகச் சுறுசுறுப்புக்காட்டினார். மாதம் ஒன்றுக்கு மூவாயிர ரூபாய்க்கு அதிகமாக வரும்படி வரலாயிற்று. இம்மாதிரி உழைத்து வந்ததால் அலகாபாத்தில் ,இவரினும் சிறந்த வக்கீல் வேறு எவரு மில்லை என்று ஜனங்கள் எண்ணலானார்கள். ஜனங்கள் வரவர இவரிடத்தில் கௌரவமும் மரியாதையும் காண்பித்து வந்தார்கள். மோதிலாலுக்கும் ஜனங்களிடத்தில் வரவரப் பிரேமை உண்டா யிற்று; ஜனங்களின் விஷயத்தில் ஊக்கம் காண்பிக்கத் தலைப் பட்டார். இவர் நான்கு தடவை மேனாட்டுக்குச் சென்றிருக்கிறார். குடும்ப சகிதம் இருமுறை இங்கிலாந்திற்குச் சென்றார். இவர் குமாரர் ஜவஹரிலால் நேரு கேம்பிரிட்ஜ் சர்வ கலாசாலையில் பட்டம் பெற்றவர். மோதிலால் நேருவின் மூத்த குமாரத்தி தகப்பனா ருடன் இங்கிலாந்து சென்றிருக் கிறார். இங்ஙனம் இவர் குடும்பத்தார் மேனாட்டிற்குப் போயிருந்தமையால் இவருடைய மாளிகையில் புராதன அநுஷ்டானங்கள் மறைந்து தற்கால நாகரிக சம்பிரதாயங் களே முன்னணியிலிருந்தன. இங்கிலாந்திற்குச் சென்றதில் மேனாட்டு சம்பிரதாயம் ஒருவாறு குடியிருந்தபோதிலும் இவர்களுடைய மனத்தில் தேசாபிமானம் மட்டும் கொழுந்துவிட்டு எரிந்து வந்தது. பண்டித நேருவின் வீட்டில் சதாதேசீய விஷயங்களின் பேச்சே நடைபெற்றுக்கொண் டிருக்கும். குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் நல்ல திடமான தேசா பிமானமுள்ளவர்கள். பண்டித நேரு முதன் முதலில் தேசீயப் போராட் டத்தில் அதிகமாகத் தலை யிடவில்லை. 1906 - 7ஆம் வருஷங்களில், அதாவது வங்காளப் பிரிவினையால் உண்டான சுதேசியக் கிளர்ச்சி காலங்களில், பண்டித நேரு மிதவாதியினும் மிதவாதியாயிருந்தார். இவருக்குக் காலஞ்சென்ற கோபால கிருஷ்ண கோகலேயிடம் மிக்க அன்பு உண்டு. அக்காலங்களில் பலருடைய மனதைக் கவர்ந்து கொண்டிருந்த பகிஷ்கார விஷயத்தைப் பண்டித நேரு வெகு தைரியமாகக் கண்டித்தவர். ஆயினும் நாட்டின் பொது விஷயங்களில் அக்கரை காட்டியே வந்தார். இவர் வெகு கால மாகவே காங்கிரஸைப் பற்றியிருந்தார். 1907ஆம் வருஷத்தில் அலகா பாத்தில் நடந்த மாகாண மகா நாட்டுக்கு இவர் அக்கிராசனரா யிருந்தார். 1909ஆம் வருஷத்தில் இவர் அகில இந்திய காங்கிர கமிட்டிக்கு அங்கத்தினராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஆக்ரா நகரில் நடந்த ஆசார சீர்திருத்த மகாநாட்டுக்கும் இவர் தலைவராயிருந்தார். ஆசார சீர்திருத்த விஷயங்களில், பல மேடைப் பிரசங்கிகளைப் போலல்லாமல், அனுஷ்டானத்திலேயே இவர் காண்பித்து வந்தார். புருஷர்களுக்குரிய சுதந்திரம் திரீகளுக்கும் சகல வழிகளிலும் இருக்க வேண்டுமென்னும் தீவிர கொள்கையை இவர் கொண்டவராவார். பகவத் சிருஷ்டியில் இருவர்களும் சுகம், துக்கம், பயம், காமம் முதலிய விஷயங்களில் சமத்துவத்தைக் கொண் டிருக்க, உலக விஷயங்களில் மட்டும் திரீகள், புருஷர்களுடன் சமத்துவத்தை ஏன் அடையக் கூடாதென்பதே பண்டித நேருவின் கொள்கை. திரீகளின் முன்னேற்றத்தினாலேயே புருஷர்கள் முன்னேற்றமடைவார்களென்றும், திரீகளின் பலமே நாட்டிற்குப் பலமென்றும் இவர் அடிக்கடி கூறுவர். இத்தகைய மனோ நோக்கத் தினாலேயே படேலின் விவாக மசோதாவைப் பற்றி வெகு சிறப்பாகக் கூறினதுமன்றி, டெல்லியில் நடந்த சர்வ இந்திய படேலின் விவாக மசோதா மகாநாட்டின் அக்கிராசனராயிருந்து நாட்டின் முன்னேற் றத்திற்கு இம் மசோதா இன்றியமையாததெனக் கூறினார். பண்டிதர் 1909ஆம் வருஷத்திலிருந்து ஐக்கிய மாகாணச் சட்டசபையில் அங்கத்தினராக இருந்து வந்தார். சட்ட சபையிலுள்ள அங்கத்தினர் களுக்கு இவரிடத்தில் அதிக பிடிப்பு உண்டு. ஆங்கிலேயே அங்கத் தினர்கள் பண்டித நேருவின் கண்டிப்பான பதிலைக்கண்டு அதிச யிப்பர். பொது விஷயங்களைப் பற்றிய பிரேரணைகள் வந்தால் பண்டித நேரு, மித்திரர் என்றும் பாராமல் வெகு கண்டிப்பாய் ஜனங்களின் தரப்பில் நின்று வாதாடுவார். அலகாபாத் நகர சபைக்கு இவர் ஓர் அங்கத்தினராக ஜனங்களால் தெரிந்தெடுக்கப் பட்டார். ஆனால் இவர் அதில் நீடித்திருக்க வில்லை. அலகாபாத் நகர சபையார், வகுப்புப் பிரதிநிதித்துவத்திற்கு ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தார்கள். இத்திருத்தத்திற்கு ஜீஹாங்கீர் பாத் முனிசிபல் திருத்தம் என்று பிரசித்த பெயர் உண்டு. இதைப் பண்டித நேரு அங்கீகரித்தார். டாக்டர் தேஜ் பகதூர் ஸாப்ருவும் பண்டித நேருவின் பக்கம் சேர்ந்துகொண்டார். ஆனால் பண்டித மாளவியாவும் ஸ்ரீமான் சிந்தாமணியும் இத்திருத்தத்தைத் தாக்கினார்கள். பொதுவாக இத் திருத்தத்தினால் முகம்மதியர்களுக்குத் தனியே சில புதிய தானங்கள் நகரசபையில் உண்டாகும். இதைப் பண்டித மாளவியா பிரசங்கங்களினாலும், ஸ்ரீமான் சிந்தாமணி லீடர் பத்திரிகையின் வாயிலாகவும் இடைவிடாது தாக்கிவந்தார்கள். ஆனால் பண்டித நேரு சற்றேனும் சலியாமல் போராடி வந்தார். பொது ஜனங்கள் பலர் பண்டித நேருவைக் கண்டித்தனர். பலர் இகழ்ந்தனர். இங்ஙனம் பொது ஜனங்களின் அபிப்பிராயத்திற்கு மாறாக நடந்த போதிலும் முகம்மதியர்கள் மட்டும் இவரைத் தங்கள் தலைவராகக் கருதினார்கள். உண்மையில், இத்திருத்தத் தினால் ஹிந்து - முகம்மதிய ஒற்றுமை பலப்படுமென்பதே பண்டித நேருவின் அபிப்பிராயம். பொது ஜனங்களுக் குரிய தானங்களைச் சரிவரப் பாகுபாடு செய்யாமையைப்பற்றி அபிப்பிராய பேதம் பலமாக ஏற்படவே, பண்டித நேரு நகரசபையினின்றும் விலகிக் கொண்டார். இவர் விலகினதைக் கண்ட பொதுஜனங்கள் மன அமைதி குன்றிவருந்தினார்கள். அலகாபாத்திலுள்ள பொது ஜன தாபனங்களில் பண்டித நேரு வகியாத பதவியில்லை. ஒவ்வொரு தாபனத்திலும் தக்க பொறுப்பு வகித்துவந்தார். அலகாபாத்தி லுள்ள சேவா சமிதிக்கு உப அக்கிராசனராக இருந்துவந்தார். நாட்டில் பஞ்சம், பலமான தொத்து வியாதி, பெருங்கலகம் முதலிய உற்பாதங்கள் விளையுமிடங்களிலெல்லாம் சேவா சமிதையார் சென்று உதவிபுரிவர். இத்தகைய பரோபகார சங்கத்திற்குப் பண்டித நேரு உபதலைவராயிருந்தார். இச்சமிதையார் 1919இல் பஞ்சாபில் நடந்த பெருங் கலகத்தில் அவதிப்பட்ட ஜனங்களுக்குப் பலவாறு உதவிகள் செய்துவந்தார்கள். இச்சங்கத்திற்குப் பண்டித நேரு பண உதவி செய்தது இவ்வளவெனக்கூற இயலாது. கல்வி விஷயத்தில் இவருக்குள்ள ஊக்கம் ஒருவருக்கும் இல்லையென்றே சொல்லலாம். அலகாபாத்தில் பலவிடங்களில் இவருடைய பேராதரவினால் இராப்பள்ளிக் கூடங்களும், பகற் பள்ளிக்கூடங்களும் விசேஷமாக நடந்து வருகின்றன. அலகாபாத்தில் பெண் பாடசாலைக்கு வேண்டிய திரவியங் கொடுத்திருக் கிறார். அலகாபாத்திலுள்ள வித்தியா மந்திர கல்விச் சாலையின் நிர்வாக சபைக்கு இவர் அக்கிராசனராயிருந்துவந்தார். இக்கல்விச்சாலை வெகு தாழ்ந்த நிலைமையிலிருந்த காலத்தில் அதற்குப் பண உதவி தந்து பிரகாசிக்கச் செய்தார். அலகாபாத்திலுள்ள ஐகோர்ட்டு வக்கீல் சங்கத் திற்கும் இவர் தலைவரா யிருந்துவந்தார். இவையல்லாமல் அகில இந்திய சுய ஆட்சி சங்கத்தின் அலகாபாத் கிளைக்கும் இவர் தலைவராக இருந்து வந்தார். அரசியல் விஷயங்களில் பண்டித நேரு ஒரு காலத்தில் மிதவாதக் கொள்கையாளர் வகுப்பில் இருந்தாலும், 1917ஆம் வருஷத்தில் ஸ்ரீமதி பெசண்டு முதலியோர் காப்பில் வைக்கப் பட்டதனாலும், இன்னும் அடிக்கடி அரசாங்கத்தார் செய்துவரும் திருவிளையாடல்களினாலும் மனம் மாறி மிதவாதக் கொள்கையை ஒழித்து அதி தீவிரக் கட்சியைச் சேர்ந்துகொண்டார். தீவிர கட்சியில் லோகமான்ய திலகர் முதலானவர் களுக்கு இவர் எவ்வளவும் பின் வாங்காதவர். மாண்டேகு - செம்போர்ட் சீர் திருத்தத்தைப்பற்றி இவர் பலவிதமாகக் கண்டனஞ் செய்துள்ளார். இந்தியர்களின் இலட்சியத்திற்குச் சீர்திருத்தம் போதாதென்பதே இவருடைய நோக்கம். 1919இல் அமிர்தசர காங்கிரசில் இவர் தலைமை வகித்து அதை விரிவாக விளக்கினார். ரௌலட் சட்டத்தைப் பற்றிக் கண்டனஞ் செய்தவர்களுள் பண்டித நேரு முதன்மை யானவர் என்று சொல்லவேண்டும். ஏனெனில் ரௌலட் சட்டத்தை, இவர் அலகாபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வெகு பலமாய்க் கண்டித்ததுடன், ஐக்கிய மாகாணத்திலுள்ள பல பாகங்களில் அச் சட்டதைப்பற்றிப் பொது ஜனங்களுக்குக் கூறப் பல துண்டுப் பிரசுரங்களை எழுதியனுப்பினார். அலகாபாத்தில் ஸ்ரீமான் சிந்தாமணியால் நடத்தப்பெறும் லீடர் பத்திரிகைக்கும் இவர் தலைமை வகித்துவந்தார். ஆனால் லீடர் பத்திரிகை மிதவாதக் கொள்கையை அவலம்பித்ததனால் அது தமக்குச் சரிப்படா தென்று கண்டு, அதை விட்டு விலகி தேசீயக் கட்சியாரின் கொள்கைக்குரிய பத்திரிகை யொன்று வேண்டுமென் பதையறிந்து உடனே இண்டிபெண்டெண்ட் என்னும் பத்தி ரிகையைத் தொடங்கினார். இப்பத்திரிகையின் நோக்கம் யாவரும் அறிந்ததே. இப்பத்திரிகை தேசீயக் கட்சியின் கொள்கையைப் பல மாகப் பிரசாரஞ்செய்து அரசாங்கத்தாரால் பல அடக்கு முறைகளுக் குள்ளாகி, கையெழுத்திட்ட பிரதிகளாக வந்தன. பண்டித நேரு கைத் தொழில் விஷயங்களிலும் பேரவாக் கொண்டவர். அலகாபாத் திலுள்ள சில பாங்கிகளுக்கு முக்கியத் தலைவராயிருந்துவந்தார். ஐக்கிய மாகாணத்திலுள்ள பயிரிடுங் குடிகளின் பரிகாரத்திற்கு இவர் பெரிதும் உழைத்திருக்கிறார். அலகாபாத்தில் பயிரிடுங் குடி களின் சங்கம் ஒன்று முதலில் தாபித்து அதற்குக் கிளைச் சங்கங் களைப் பலவிடங்களில் தாபித்தார். இச்சங்க தாபனத்திற்குப் பண்டித நேருவே முக்கியதராவர். இவையல்லாமல் அரசாங்கத் தாரால் ஏற்படுத்தப்பட்டிருந்த பிரசார சங்கத்திற்கு இவர் ஓர் அங்கத்தினராகவு மிருந்தார். யுத்த காலத்தில் அரசாங்கத்தாருக்கு உதவியாக இந்தியப் பாதுகாப்புப் படைக்கு ஆட்களைச் சேகரிக்கப் பாடுபட்டார். அரசாங்கத்தாருடன் கலக்குங் காலத்தில் கலந்து வேலை செய்வது; கண்டிக்குங் காலத்தில் பலமாய்க் கண்டிப்பது என்பதான நோக்கத்தையே இவர் எப்பொழுதுங் கொண்டிருந்தார். அரசாங்க அக்கிரமச் செயல்களை பண்டித நேருவைப்போல் அவ்வளவு பலமாகக் கண்டிப்பவர்கள் வெகு சிலரே. சத்தியாக்கிரக விரதத்திற்குரிய இரண்டு பகுதிகளில் முதல் பகுதியையே இவர் ஆதரித்தார். இரண்டாவது பகுதியை ஆதரிக்கமாட்டேன் என்று மகாத்மாவுடன் நேரே சொன்னார். என்றாலும், சத்தியாக்கிரக நிகழ்ச்சியில் இவர் பாடுபடாமலில்லை. பஞ்சாப் சம்பவத்தில் துன்புற்றவர்களுக்குப் பண்டித நேரு நேரிலிருந்து உதவி புரிந்ததைப் பற்றி இங்கு எழுத முடியாது. அச்சம்பவத்தால் புண்பட்ட குடும்பங் களுக்கு நேரில் சென்று அவ ர்களுக்குப் பலவிதங்களிலும் பரிகாரஞ் செய்தார். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை செய்ய சிகிச்சால யங்கள் ஏற்படுத்த முன் வந்தார். ஏழைக் குடும்பங்களுக்குப் பண உதவி புரிந்து ஆதரித்தார். அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் களின் தொகையையும் கணக்கெடுக்கப் பலரை நியமித்தார். பஞ்சாப் வாசிகளுக்குச் சகல வழிகளிலும் பண்டித நேரு உதவிபுரிந்தார். இங்ஙனம் ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு தந்து, பொது ஜனங்களைக் காப்பாற்றி வந்த பண்டிதமோதிலால் நேரு சிறைப்பட்டார். மகாத்மா காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் படிகளில் முதல் முதல் இவருக்கு அவ்வளவு நம்பிக்கை யில்லாமலிருந்தது. இவரது குமாரர் ஜவஹரிலால் நேருவின் விடாமுயற்சியால் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் தலைவராக வந்தார். இதனால் தந்தை மீது மகனாருக்கு இருந்த செல்வாக்கு நன்கு புலனாகும். அரிய தியாகம் ஒத்துழையாமை இயக்கத்தில் வந்திறங்கின நாள் தொடங்கி,இவர் வாழ்க்கை புதிய ஒளி பெற்றது. ஐரோப்பிய நாகரிகம் தாண்டவ மாடின இவரிடத்தில், பண்டை இந்திய நாகரிகம் நர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தது. அம்சதூளிகா மஞ்சத்திற்குப் பதிலாக வெறுந் தரையே மெத்தையாகவும் கையே தலையணையாகவும் ஆயின. நல்ல மேனாட்டு திராட்ச ரஸங்களுக்குப் பதிலாக சுத்த ஜலம் பானமாக ஆயிற்று. மேனாட்டி லிருந்து பதினைந்து நாளைக்கொரு முறை நல்ல உடுப்புகள் வருவ தொழிந்தது. கரடு முரடான கதர் உடைகளை இவர் அணியலானார். மாளிகையில் வாசஞ் செய் வதைத் தவிர்த்துக் குடிசையில் வாசஞ்செய்ய இவர் மனங் கொண்டார். உண்மையில் இவர் சிறந்த தியாகியானார். இத்தகைய மகான், அரசாங்கத்தாரால் ஆறு மாத தண்டணை யடைந்து சிறையில் இருந்தார். அராஜகக் கூட்டத்தில் சேர்ந்தா ரென்றும், அராஜகக் கூட்டத்திற்கு உடந்தையாயிருந்தாரென்றும் கூறி இவருக்கு ஐக்கிய மாகாண அரசாங்கத்தார் தண்டனை விதித்தனர். இவருடன் இவர் குமாரரான ஜவஹரிலால் நேருவுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. இவருடைய நெருங்கிய உறவினரான பண்டித மோகனலால் நேருவும் பண்டித சியாமலால் நேருவும் சிறை வாசத்தை ஏற்றனர். இதனால் மோதிலால் நேருவுக்கு அவர் குடும்பத் தில் எவ்வளவு செல்வாக்கு இருந்ததென்பது புலனாகும். நேருவின் வம்சத்தார் இந்த இயக்கத்தில் தண்டனை யடைந்தது இந்தியா வுக்கே ஒரு புதிய சக்தியை உண்டு பண்ணியது என்று கூறலாம். பார்தோலியில் மகாத்மா காந்தி சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தி விடுவதென்று முடிவு செய்த பிறகு, அவர் கைது செய்து தண்டிக்கப்பட்டது யாவருமறிந்ததே. அதற்குப் பிறகு சட்ட மறுப்புவிசாரணைக் கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டது. அக் கமிட்டியார் நாடெங்கும் சென்று விசாரணை செய்து ஒரு யாதாதை அனுப்பினர். அக்கமிட்டி அங்கத்தினர்களில் பண்டித மோதிலால் நேருவும் ஒருவர். அக்கமிட்டி அங்கத்தினர்களுக்குச் சட்டசபைப் பிரவேச விஷயமாக அபிப்பிராய பேதமேற்பட்டது. பிறகு அவ்வருஷ முடிவில் கயாவில் நடந்த காங்கிரசில் தலைமை வகித்த தேசபந்து தா சட்ட சபைப் பிரவேசத்தை ஆதரித்தார். அதை அந்தக் காங்கிர ஒப்புக்கொள்ளாததால் அவருடைய தலைமையில் அந்தக் காங்கிர முடிவில் சுயராஜ்யக் கட்சி காங்கிரசுக்குள் ஏற்பட்டது. தேசபந்து தா இருந்த வரையில் பண்டித மோதிலால் நேரு அக்கட்சியின் காரிய தரிசியாக இருந்து வந்தார். அந்தக் கட்சி ஏற்பட்டதன் பயனாக, 1923ஆம் வருஷத்திய பொதுத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நாடெங்கும் மாகாண சட்டசபைகளுக்கும், மத்திய சட்ட சபைக்கும் அபேட்ச கர்கள் நிறுத்தப்பட்டனர். பண்டித மோதிலால் நேரு இந்தியா சட்ட சபைக்கும், தேச பந்துதா வங்காள சட்ட சபைக்கும் அபேட்சகர்களாக நின்று வெற்றி பெற்றனர். அப்பொழுது இந்தியா சட்ட சபையில் சுயராஜ்யக் கட்சியினருக்குப் பெரும்பான்மையான தானங்கள் கிடைக்காத போதிலும் அக்கட்சியினரே இந்தியா சட்ட சபையில் அதிக தானங்களை அடைந்திருந்தனர். ஆகை யால் பண்டித நேருவே எதிர்க்கட்சியின் தலைவராகத் தெரிந்தெடுக் கப்பட்டு அந்த தானத்தை வகித்து வந்தார். 1924ஆம் வருஷத்தில் தேசீய கோரிக்கைகளைக் குறிப்பிட்டு, அவைகளைப்பற்றி வாதிப் பதற்காகச் சர்வ கட்சி மகா நாடொன்றைக் கூட்டிவைக்க வேண்டு மென்று இவர் இந்தியா சட்ட சபையில் ஒரு தீர்மானங் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் இந்தியா சட்டசபையில் நிறைவேறியும் அரசாங்கத்தார் அதைக் கவனிக்கவில்லை. தேசபந்து தா காலமான பிறகு, பண்டித மோதிலால் நேரு சுயராஜ்யக் கட்சியின் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். பிறகு 1926ஆம் வருஷத்திய தேர்தலிலும் நாடெங்கும் சுயராஜ்யக்கட்சியின் சார்பாகப் பல சட்ட சபைகளுக்கும் அபேட்சகர்கள் நிறுத்தப்பட்டார்கள். இந்தத் தேர்தலிலும் இந்தியா சட்ட சபையில் சுயராஜ்யக் கட்சியினருக்குப் பெரும்பான்மை தானங்கள் கிடைக்காத போதிலும் அவர்களே அதிகத் தொகை அடங்கிய கட்சியினராக விருந்ததால் அம்முறை யும் பண்டித மோதிலால் நேருவே எதிர்க் கட்சியின் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டு அந்த தானத்தை வகித்துவந்தார். அக் காலத்தில் சர்வ கட்சிக் கமிட்டி யொன்று ஏற்படுத்தப்பட்டு அதனால் ஓர் அரசியல் அமைப்பும் தயாரிக்கப் பட்டது. அந்தக் கமிட்டியில் பண்டித நேருவே முக்கியதராக இருந்து வந்தார். மகா ஜனங்களில் பெரும்பாலோருடைய ஆதரவைப் பெற்ற அந்த யாதாது இவருடைய பெயராலேயே வழங்கிவருகிறது. 1928ஆம் வருஷத்தில் கல்கத்தாவில் நடந்த காங்கிரசில் இவர் தலைமை வகித்தார். பிறகு 1929ஆம் வருஷத்தில் லாகூரில் கூடிய காங்கிர, பூரண சுயேச்சை தீர்மானத்தை நிறைவேற்றி அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளு வதற்காக இன்னின்ன காரியங்களைச் செய்யவேண்டு மென்று நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பூரண ஆதரவு அளித்தவர்களில் பண்டித மோதிலால் நேரு முக்கியதர். அந்தத் தீர்மானத்தை அனுசரித்துக் கிரியாம்சையிலும் இவர் நடந்து கொண்டு வந்தார். 1930ஆம் வருஷம் ஏப்ரல் மாதத்தில் இவருடைய குமாரரும் லாகூர் காங்கிரசின் தலைவருமான பண்டித ஜவஹரிலால் நேரு, உப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு ஆறுமாத தண்டனை விதிக்கப்பட்டதும், பண்டித மோதிலால் நேரு, தமது மகனாருக்குப் பதிலாகக் காங்கிர தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு அலகாபாத்தில் கைது செய்யப்படும் வரை அந்த தானத்தை வகித்துவந்தார். இவர்மீது அரசாங்கத்தார் தொடர்ந்த வழக்கில் இவருக்கு ஆறுமாதம் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனையை இவர் அநுபவித்து வருங்காலத்தில் இவருடைய தேக திதி கவலைக் கிடமாகிவிட்டது. இவரைப் பரிசோதனை செய்த இவருடைய சொந்த வைத்தியர்களும் அவ்விதமே கருதியதால் அரசாங்கத்தார், வைத்திய நிபுணர்களிற் சிலரை நியமித்து அவர் களைக் கொண்டு இவரைப் பரிசோதனை செய்வித்து அவர்க ளுடைய யாதாதின்மேல் இவரை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்தனர். இவர் விடுதலை யடைந்த சிறிது காலத்திற்குப் பிறகு தேக சௌக்கியத்தை உத்தேசித்து முசௌரிக்குச் சென்றிருந்த சமயத்தில் இவருடைய குமாரர் பண்டித ஜவஹரிலால் நேரு ஆறுமாத தண்டனையை அநுபவித்துவிட்டு விடுதலை யடைந்து வந்தார். அவர் சென்றவிடங்களிலெல்லாம் அவருக்கு கி.பு.கோ. 144வது பிரிவின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வந்தது. அவரை மீண்டும் அரசாங்கத்தார் கைது செய்து விடுவார்களென்று நினைப்பதற்குப் போதிய காரணமிருந்தது. பண்டித மோதிலால் நேரு முசௌரியிலிருந்து அலகாபாத்துக்குத் திரும்பிவந்தார். இவர் வந்த தினத்திலேயே பண்டித ஜவஹரிலால் நேரு, ஒரு கூட்டத்தி லிருந்து திரும்பி வருகையில், தகப்பனாரைப் போய்ப் பார்ப்பதற்கு முன் வழியிலேயே போலீஸார் அவரைக் கைது செய்துகொண்டு போய்விட்டனர். அது பண்டித மோதிலாலின் தேக திதியை வெகு வாகப் பாதித்திருக்க வேண்டுமென்று அக்காலத்தில் எல்லோரும் கருதினர். அதற்குப் பிறகு இவர் கல்கத்தாவுக்கும் இதர இடங்களுக் கும் சென்று தகுந்த வைத்தியர்களைக் கொண்டு சிகிச்சை செய்து கொண்டு வந்தார். ஆயினும் இவருடைய தேகதிதியில் அபி விருத்தி ஏற்படவில்லை. லண்டன் சர்வகட்சி மகாநாட்டு முடிவு களைப் பற்றியும் பிரதமமந்திரி ஸ்ரீமான் ராம்ஸே மாக்டோனால்ட் வெளியிட்ட அறிக்கையைப் பற்றியும் காங்கிர தலைவர்கள் வாதிப்பது சாத்தியமாகும் பொருட்டு, காரியக் கமிட்டி அங்கத்தினர் களை இராஜப்பிரதிநிதி விடுதலை செய்ததன் மூலமாக பண்டித ஜவஹரிலால் விடுதலை யடைந்தது இவருடைய அந்திய காலத்தில் சிறிது ஆறுதலை அளித்திருக்கலாம். ஆயினும் இப்பொழுது தேச மிருந்து வரும் நெருக்கடியான நிலைமையிலும், தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பல முக்கியமான விஷயங்களைப் பற்றி வாதித்து முடிவு செய்ய வேண்டி யிருக்கையிலும் மகாத்மா காந்திக்கு அடுத்தபடியாக நாட்டினில் எல்லோராலும் மதிக்கப்பட்டு வந்த தலைவரான பண்டித மோதிலால் நேரு காலகதியடைந்துவிட்டது தேசத்தின் பரம துர்பாக்கிய மென்றே சொல்லவேண்டும். பண்டி தரின் வரலாறானது சில முக்கியமான விஷயங்களைக் குறிப்பிடா விடின் சம்பூரணமானதாக இராது. முடிவுரை பண்டித மோதிலால் நேரு, தாம் எந்தவர்ணத்தோடுகூடிய உடைகளை அணிந்து கொண்டிருக்கிறாரோ அதற்கியைந்தாற் போலவே இவருடைய மோட்டார் வண்டியின் நிறமும் இருக்கும். இப்படிப் பல மோட்டார்களை வைத்து உபயோகித்தார். தற்கால நாகரிக சம்பிரதாயத்தில் ஈடுபட்டவர்கள், இவரையே தங்களுக்கு முன் மாதிரியாக வைத்து நடந்து கொண்டார்கள். இவர், கோடை காலத்தில் மலை வாசத்திற்குச் செல்லும் போது, இவருடன் ஒரு பெரிய பரிவாரம் செல்லும். இவருடைய மாளிகையில் விருந் துண்பதே ஒரு சிறந்த அநுபவ மென்று கூறப்படுகிறது. தேசத்தில் சுகபோகங்களை இவரைப்போல் அநுபவித்தவரில்லை. தேசத்திற் காக சமதத்தையும் இவரைப்போல் தியாகம் செய்தவர்களு மில்லை. தினசரி ஆயிரம் ரூபாய் வீதம் ஏராளமான வருவாய் வந்து கொண்டிருந்த வக்கீல் தொழிலை, இவர் தேச சேவையை உத்தே சித்து நிறுத்தினார். தம்முடைய ஒரே குமாரன் தேச சேவையில் பன் முறை சிறைசெல்ல விட்டார். தாமும் இருமுறை சிறை சென்றார். இவருடைய மருமகளும், பண்டித ஜவஹரிலால் நேருவின் மனைவி யுமான ஸ்ரீமதி கமலா நேருவும் சிறை சென்றார். ஸ்ரீமதி கமலா நேருவின் தாயாரும் சிறை சென்றார். இவருடைய மருமகனான ஸ்ரீமான் ஆர்.எ. பண்டிதரும், இளைய குமாரியான ஸ்ரீமதி கிருஷ்ண குமாரி நேருவும் சிறை சென்றனர். இவருடைய குடும்பத்தில் இவ ருடைய மனைவியும் இவருடைய மூத்த குமாரியுமே சிறை செல்லா தவர்கள். அதற்கும் இவர்கள் பின் வாங்கியது காரணமில்லை. அரசாங்கத்தாரே இவர்களைத் தீண்டவில்லை. தவிரவும், தமது சிறந்த மாளிகையான ஆனந்த பவனத்தை காங்கிரஸுக்கு இவர் விடுதியாகக் கொடுத்து சுயராஜ்ய பவன மென்று அதற்கு நாமகரணமுஞ் சூட்டினார். சமீபத்தில் ஒரு நண்பருக்குப் பேட்டி அளித்தபோது தமது தேகதிதி கவலைக்கிடங் கொடுக்கக் கூடியதாக விருந்தாலும் இந்தியா சுயராஜ்ய மடைவதைப் பார்த்து விட்டே தாம் இறக்கப் போவதாக இவர் சொல்லியது பலிதமடையு முன், இவர் காலகதி அடைந்துவிட்டது. இவருடைய மனதுக்கு ஒரு பெரிய குறையாக இருக்கலாமாயினும், அந்தச் சுயராஜ்ய தினம் நெருங்கிவரும்படி செய்வதற்குப் பலவித தியாகங்களைச் செய்திருக் கிறார். ஆகவே இவருடைய ஆசை பூர்த்தியடைவதற்குமுன் இவர் காலகதியடைந்து விட்டாராயினும், அந்த இலட்சியத்தை இந்தியா அடைவதற்கு இவரும் இவருடைய குடும்பமும் செய்துள்ள சேவையும் தியாகமும் முக்கிய காரணங்களாக இருந்தன வென்பவை இந்தியாவின் இக்கால சரித்திரத்தைப் பின்னால் எழுதுபவர்கள் ஒப்புக்கொள்ளுவ ரென்பதில் சிறிதும் சந்தேகமில்லை. பண்டிதரின் கடைசி வார்த்தை பண்டித மோதிலால் படுக்கையிலிருந்து கொண்டு பின்வரும் வாத்தை களைக் கூறினார் என்று சொல்லப் படுகிறது. இந்தியாவின் தலை விதி இன்னதென்று சுய ராஜ்ய பவனத்தில் முடிவு செய்யுங்கள். அதை என் முன் னிலையிலேயே முடிவு செய்யுங்கள். என்னுடைய தாய்நாட்டின் தலைவிதியைப் பற்றிச் செய்யப்படும் முடிவில் எனக்கும் ஒரு பங்கு இருக்கட்டும். நான் இறக்க வேண்டுவது அவசியமானால் , சுதந்திர இந்தியாவின் மடிமீது மரணமடைவேனாக; சுதந்திர நாட்டில் நான் எனது கடைசி நித்திரையைச் செய்வேனாக; தகனக் காட்சி தகுந்த சிகிச்சை செய்யப்பட வேண்டுமென்ற காரணத்திற்காக வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் பண்டித மோதிலால் நேரு, 4-2-31இல் அலகாபாத்திலிருந்து இலட்சுமணபுரிக்கு மோடார் வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டார். இவருடன் மகாத்மா காந்தி, பண்டித ஜவஹரிலால் நேரு, அவர் குடும்பத்தினர், ஸ்ரீமதி சரோஜனி தேவி முதலியோரும் சென்றனர். இவர்கள், இலட்சுமண புரியில் கலகங்கர் அரசரின் அரண்மனையில் தங்கினர். பிரயாண காலத்திலும்,அதற்குப் பின்னரும் பண்டித மோதிலால் நேருவுக்கு அதிகதொந்தரவு ஏற்பட வில்லை. ஆனால் இலட்சுமணபுரி போய்ச் சேர்ந்த மறுநாள், அதாவது 5-2-31இல், இவருக்கு முகத்திலும் கழுத்திலும் வீக்கம் தோன்றியது. அன்று இராத்திரியும் இவர் ஒருவாறு நிம்மதியாகவே கழித்தார் என்று சொல்ல வேண்டும். ஆனால் பொழுது விடியுந் தறுவாயில் நாக்குழற ஆரம் பித்து விட்டது. ஆயினும் பிரக்ஞை இருந்தது. பிரக்ஞை இருக்குமளவும் காயத்திரி மந்திரத்தை பண்டித மோதி லால் விடாமல் ஜெபித்துக் கொண்டிருந்தார். பண்டித ஜவஹர்லால் நேரு, 5-2-31 இரவு முழுவதும், தந்தையார் அருகில்இமை கொட்டாமல் இருந்து, வேண்டிய சிச்ருஷை களைச் செய்து வந்தார். விடியற்காலையில் மகாத்மா காந்தியும், ஸ்ரீமதி சரோஜினி தேவியும் படுக்கைக்குப் பக்கத் திலேயே இருந்தனர். காலை ஐந்தரை மணிக்கு, பண்டித மோதிலால் நேரு, குடிக்கத் தண்ணீர் வேண்டு மென்று கேட்டார். ஆனால் அதை உட்கொள்ள முடியவில்லை. உடனே பிரக்ஞை தவறிவிட்டது. சரியாக 6-40 மணிக்கு உடலினின்று உயிர் பிரிந்து விட்டது பண்டித மோதிலால் மரணமடைந்த செய்தி, இலட்சுமணபுரி நகர முழுவதிலும் உடனே பரவி விட்டது. ஆயிரக்கணக்கான ஜனங்கள், கலகங்கர் மாளிகையின் முன்னர் வந்து குழுமினர். ஜனக்கூட்டத்திற்குப் போதிய இடம் அங்கில்லாமையாலும், வேறு ஜனக்கூட்டம் வந்து நெருக்கிக் கொண்டிருந்ததாலும், பிரேதத்தை உள்ளேயிருந்து வெளியே கொண்டு வந்து ஜனங்களுக்குக் காட்டப் பட்டது. இதனால் ஜனக்கூட்டத்தில் பாதி கழிந்து மற்றொரு பாதிக்கு, பிரதேத்தைத் தரிசனம் செய்ய இடம் ஏற்பட்டது. பகல் பதினோரு மணிக்குப் பிரதேம் தேசீயக் கொடியினால் மூடப்பட்டு அலகாபாத் செல்வதற்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு மோட்டார் காரில் வைக்கப்பட்டது. இதனை மகாத்மா காந்தி, டாக்டர் பிதன் சந்திரராய் முதலியோர் தூக்கிக் கொண்டு வண்டி யில் வைத்தனர். இந்த வண்டியில் பண்டித ஜவஹரிலால் நேருவும், பாபுமோகன்லால் சாக்ஸேனாவும், ஸ்ரீமான்ஆர்,எ.பண்டிதரும் உட்கார்ந்திருந்தார்கள். இதற்குப் பின் வண்டியில் பண்டித மோதிலால் நேருவின் தர்ம பத்தினியார் ஸ்ரீமதி வரூப ராணி நேருவும், மகாத்மா காந்தியு ம், ஸ்ரீமதி மீராபாயும் அமர்ந் திருந் தார்கள். லட்சுமணபுரி நகர எல்லைப் புறம்வரை ஏராளமான ஜனங்கள் மோட்டார் வண்டியைச் சூழ்ந்து கொண்டு வந்தார் கள். அலகாபாத்துக்கும், லட்சுமணபுரிக்கும் 138 மைல் தூரம் உண்டு. பிற் பகல் மூன்று மணிக்கு பண்டித மோதிலால் நேரு வின் இரண்டு குமாரத்தி களும், பேத்தியும் அழுத வண்ணம் மோட்டாரி லிருந்து இறங்கி ஆனந்த பவனத் திற்குள் சென் றார்கள். சரியாக நான்கு மணிக்கு பிரதேத்தைக் கொண்ட மோட்டார் ஆனந்த பவனம் வந்து சேர்ந்தது. அப்பொழுது கூடியிருந்த ஜனங்கள் இறந்து போன வீரரைத் தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் கொண்டனர். அந்த ஆவலின் மிகுதியால் ஒருவருக்கொருவர் தள்ளப்பட்டு அதனால் பலருக்குக் காயம் ஏற்பட்டது. பிரேதத்தின் மீது பலர் மலர்மாரி பொழிந்தனர். பிறகு சவம் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே காஷ்மீரப் பிராமணர்களால் சடங்குகள் யாவும் செய்யப்பட்டன. சரியாக ஐந்து மணிக்கு பிரதே ஊர்வலம் தொடங்கியது. அப்பொழுது கூடியிருந்த ஜனங்களுக்குக் கணக்கே யில்லை. ஆறரை மணிக்குக் கங்கையும், யமுனையும் சேரும் சங்கமத்திற்கு ஊர்வலம் வந்து சேர்ந்தது. மாக மேளத்தின் போது எவ்வளவு ஜனத்திரள் காணப்படுமோ அவ்வளவு கூட்டம் இச் சமயத்தில் இருந்தது. பண்டித மோதிலால் நேருவிடத்தில் ஜனங்கள் எவ்வளவு அன்பு வைத்திருந்தார்களென்பது இதனின்றும் நன்கு புலனாகும். தகனம் செய்ய வேண்டிய இடத்திற்குப் பிரேதம் வந்து சேர்ந்தவுடன் இன்கிலாப் ஜிந்தபாத் என்ற ஜனங்களின் ஆரவாரம் வானைப் பிளந்தது. பலர் புகைப்படமெடுத்தனர். பின்னர், வைதிகச் சடங்குகள் செய்யப்பட்டு, சவம் சந்தனக்கட்டைக ளாலாயச் சிதையின் மீது வைக்கப்பட்டது. அதற்கு நெருப்பு வைக்கப் பட்டதும், மகாத்மா காந்தியும், பண்டித மதன மோகன மாளவி யாவும் இறந்து போன தலைவரின் தியாகத்தைப் பற்றி உருக்கமாகப் பேசினார்கள். காந்தியடிகள் பேச்சு மகாத்மா காந்தி பின்வருமாறு பேசினார்:- இன்று உங்கள் முகத்தில் நான் துக்கக் குறியைக் காணவில்லை. அதற்கு மாறாக ஆனந்தம் தாண்டவம் செய்வதையே காண்கிறேன். அதுவே நியாயமானது. தாய் நாட்டின் உத்தமப் புதல்வர் களும் தலைவர் களுமான பலர், ஒருவர் பின் ஒருவராக, அவர்கள் சேவை அவசியமான சமயத் திலே, மறைந்து கொண்டிருக் கின்றனர். இதோ இந்த அழகிய ஆத்மாவை தன்னகத்தே வைத்துக் கொண்டிருந்த மண் தேகத்தை அக்கினி பகவானுக்கு அர்ப்பணம் செய்கிறோம் என்று நீங்கள் கருதவேண்டாம். அதற்கு மாறாக, இந்த உயரிய ஆத்மா, தேசத்திற்காகத் தன்னை தியாகம் செய்து கொண்டது. என்பதற்கு நீங்கள் சாட்சிகளாயிருக்கிறீர்கள். இது சுதந்திர தேவிக்கு முதல் ஆகுதியன்று. லோகமான்ய திலகருடைய தியாகம் இன்னும் உங்கள் மனதை விட்டு அகலவில்லை. அவர் காலஞ் சென்றபொழுது நான் இருந்தேன். அப்பொழுதும் இன்றைய காட்சியையே கண்டேன். திலகர் மரணமடைந்தது அவருடைய தியாகத்திற்கு முடி சூட்டியது போலிருந்தது. தேசபந்து தாஸர் காலஞ்சென்ற போதும் இதே காட்சியை நான் கண்டேன். லாலா லஜபதிராய் இறந்தபோது நான் கூடவில்லை யாயினும் இத்தகைய காட்சிகளே அப்பொழுதும் இருந்தனவென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பின்னர் ஹகீம் அஜ்மல்கான் காலஞ்சென்றார். மௌலானா முகம்மது அலி அவரை உடனே பின் தொடர்ந்தார். மௌலானா முகம்மதலி தேச சேவையிலேயே தமது பிராணனை அர்ப்பணஞ் செய்து விட்டார். அவருடைய மரணமானது, ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் பெரிய உணர்ச்சியைக் கொடுத்து விட்டது. இது துக்கப்படுவதற்குக் காலமல்ல; மகிழ்ச்சியோ டிருக்கவேண்டிய காலம். தற்போதைய நிலைமையின் முக்கிய தத்துவத்தை உணர்ந்து நீங்கள் சந்தோஷம் பாராட்டுவீர்களாயின் அது மிகவும் சிறப்புடையதாகும். அதற்கு மாறாக தத்துவத்தை அறியாமல் நீங்கள் இப்பொழுது நடந்து கொள்வீர்களாயின், உலகத்தார் நம்மை மிருகங்களென்று மதிப்பார். இப்பொழுது நாம் ஒரு பெரிய தேசீய யக்ஞத்தைச் செய்து கொண்டிருக்கிறோமென்று நீங்கள் உண்மையில் நம்புவீர்களாயின், அந்த யக்ஞத்தில் நம்மாலானதை அர்ப்பணம் செய்யவே வந்திருக்கிறோம். என்று உறுதியாகக் கருதுவீர் களாயின், இங்கே வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு விரதமெடுத்துக் கொண்டு இந்த இடத்தை விட்டு அகல வேண்டும். அந்த விரதம் என்ன? பூரண சுயராஜ்யமடைவதற்காக, நம்மால் கூடிய அனைத்தையும் நாம் செய்ய முற்படுவோம் என்று உறுதி பூண்பதே அவ்விரதமாகும். சகோதரர்களே! பண்டிதர் காலஞ் சென்று விட்டார். அவர் ஒரு வீர புருஷர்; அவர் ஒரு சிம்மம்; அவர் இயமதர்ம ராஜனுட னேயே போராடினார். அப் போராட்டத்தில் அவர் தோல்வி யுற்றாரா? இல்லை. வைத்தியர்கள் மிகுந்த ஊக்கத்துடன் அவருக்குச் சிகிச்சை செய்து வந்தார்கள். மரணத்தோடு அவர் தைரியத்துடனும் உறுதியுடனும் போராடியதைக் கண்டு வைத்தியர்கள் கூட அவர் விரைவில் குணமாகி விடுவார் என்று நம்பினார்கள். அதனாலேயே, இறந்து போவதற்கு முன்னாள் அவர் இலட்சுமணபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சுகமைடந்துவிடுவார் என்று அனைவரும் நம்பினர். நீங்கள் குணமடைந்து விட்டீர்களே யானால் சுயராஜ்யம் கிடைத்தது போலவே யாகும். என்று பண்டித மோதிலால் நேருவிடம் நான் கூறினேன். நாம் ஏற்கெனவே சுயராஜ்யம் பெற்று விட்டோமே என்று அவர் உடனே பதிலளித்தார். தேசத்தார் செய்துள்ளத் தியாகம் சுயராஜ்யம் பெற்று விட்டோம் என்ற நம்பிக்கையை அவருக்கு உண்டு பண்ணியிருந்தது. இந்த நம்பிக்கை யுடனேயே அவர் இறந்து போனார். ஆதலின் சுயராஜ்யம் பெறுவது அஹிம்சை, சத்தியம் இவைகளைக் கடைப் பிடித்து நடப்பது என்ற விரதத்தை மேற்கொள்வோமாக. மத விஷயங்களில் குருட்டுத்தனமாகப் பின் பற்றி நடப்பதில் பண்டிதருக்கு விருப்பமில்லை. சில சமயங்களில் அவர் மத விஷயங் களைப் பற்றிக் கேலி செய்வார். ஏனென்றால், மத விஷயங்களில் புகுந்து கொண்ட தவறான கொள்கைகள் அவருக்குப் பிடிப்ப தில்லை. ஆனால் அவருக்குக் கடவுள் நம்பிக்கை பூரணமாக உண்டு. அவர் இறந்து போன இரவன்று இராம மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். ஐயோவென்று அவர் ஒரு தரங்கூட சொல்ல வில்லை. உண்மையான மதப்பற்றுடையவர் களுக்கு இஃதொரு பாடமாகும். அவர் தியாகத்தினால் தம்மைப் பரிசுத்தப் படுத்திக் கொண்டார். அவரால் பேச முடியாமல் நாக் குழற ஆரம்பித்து விட்டபோதிலும், காயத்திரி மந்திரம் தமக்கு நன்றாக ஞாபகம் இருப்பதாகக் கூறி அதை விடாமல் சொல்லிக் கொண்டு வந்தார். பண்டித மாளவியாவின் பேச்சு பிறகு பண்டித மதன் மோகன மாளவியா மிகுந்த துக்கத்துடன் பின்வருமாறு பேசினார்:- பண்டித மோதிலால் நேருவும் நானும் ஏழு வயதுப் பிள்ளை களாகப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்தது முதல், சிநேகிதர்கள். அவர் வக்கீல் தொழிலில்இறங்கி ஏராளமான பொருள் சம்பாதித்தார்; இராஜ போகத்தை அநுபவித்தார். ஆனால் தமது வாழ்க்கையின் பிற்காலத்தில், தேசத்திற்காக எல்லாவற்றையும் அர்ப்பணஞ் செய்துவிட்டார். அவர் சிறந்த போர்வீரர். ஆன்ம சக்தியில் அவருக்குப் பூரண நம்பிக்கை இருந்தது. அவருடைய தேசாபிமானம் அளவு கடந்தது. சுயராஜ்யம் பெறவேண்டுமென்ற ஒரே ஆவல் அவரை ஆட்கொண்டிருந்தது. சுயராஜ்யம் பெறாமல் தாம் மரண மடையப் போவதில்லை என்று அவர் கூறிக் கொண் டிருந்தார். இப்பொழுது அவர் இறந்து விட்டார். ஆனால் அவருடைய ஆன்மா நம்மிடையே இருந்து கொண்டு எப்பொழுதும் போல் வேலை செய்துகொண்டுதானிருக்கும். அன்பர்களே! பூரண சுயராஜ்யம் அடைய வேண்டிய அவசியத்தைப் பற்றி உங்களுக்கு நான் விரிவாகக் கூற வேண்டிய தில்லை. பூரண சுயராஜ்யத்தில் ஒர் அரிசியளவு குறைந்திருந்த போதிலுங்கூட அது பூரண சுயராஜ்யமாகாது. பூரண சுயராஜ்யத்திற் காகவே பண்டித மோதிலால் போராடினார்; அதற்காக அவர் சிறைக்கனுப்பப்பட்டார். அதன் பயனாக அவருக்கு நோய் முற்றி, சீக்கிரம் மரணமடையும்படி நேரிட்டது. இலட்சுமணபுரி செல்வதற் காக (4-2-31)ல் அவர் மோட்டார் வண்டியில் அமர்ந்ததும், நான் இலட்சுமணபுரி செல்வதன் பயனாக என் வியாதி குணமாவதோ, அல்லது நான் இறப்பதோ ஒன்று நடைபெறவேண்டும் என்று அவர் கூறினார். தேசத்தார் செய்துள்ள போராட்டத்தின் பயனாக 1930ஆம் வருஷத்தில் சுயராஜ்யம் தாபிதாமாகிவிட்டது. தங்க ளுடைய கருத்துக்கு மாறாக அரசாங்கத்தார் ஆண்டு கொண் டிருக்க முடியாது என்பதை ஜனங்கள் காட்டிக் கொண்டுவிட் டார்கள். பண்டித மோதிலால் நேருவின் ஆன்மா இன்னும் நம்மிடையே உலாவிக் கொண்டிருக்கிறது. பண்டித ஜவர்ஹர்லால் நேருவுக்கு, அவர் தகப்பனாருக்கு இருந்த பலமும் உறுதியும் அருள வேண்டுமென்று நாம் ஆண்டவனைப் பிரார்த்திப் போமாக. சுயராஜ்யம் பெறும் வரையில் சும்மாயிருக்க முடியாது என்று நாம் ஒவ்வொருவரும் விரதம் எடுத்துக் கொள்வோமாக. தேசீயமே சுயராஜ்யத்திற்கு அதி வாராமாகும். நாம் வகுப்பு வேற்றுமை களை மறந்துவிட்டு, எல்லாச் சமூகத்தாரிடையும் ஒற்றுமையை நாட்டு வோமாக. பண்டித மோதிலால் நேருவின் மரணத்தினால் இந்தியா முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. இதனால், தேசீய உணர்ச்சியில் இந்தியா எவ்வளவு முன்னேற்ற மடைந்திருக்கிறதென்பது நன்கு புலப்படும். சுயராஜ்யம் பெறு வதற்காக என்னென்ன தியாகங்கள் அவசியமோ அவை களையெல்லாம் செய்ய நாம் சித்தமாயிருக்கவேண்டும். அந்நியத் துணி பகிஷ்காரம், நாம் செய்ய வேண்டிய தியாகங்களை உத்தேசிக்கையில் மிகச் சாதாரணமானதேயாகும். பூரண சுயராஜ்யத்தை உத்தேசித்து, நாம் நமது உயிரையும் தியாகஞ் செய்யச் சித்தமாயிருக்க வேண்டும். இந்தப் புனித கங்காநதி தீரத்தை விட்டு அகலு முன்னர், இந்த விரதத்தைப் பூண்போமாக. கடைசி காட்சி பண்டித் மோதிலால் நேருவின் பூத உடலை அக்கினி பகவான் வீகரித்துக் கொண்ட காட்சியை, அங்கிருந்த ஜனங்கள், மிகுந்த அமைதியாய், துக்கத்தோடுகூடிய மௌனத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு நடைபெற வேண்டிய வைதிகச் சடங்குகள் யாவும் முடிய இரவு எட்டு மணியாயிற்று. அன்று பூராவும் அலகாபாத் நகரம் துக்கக்கடலில் ஆழ்ந்திருந்தது. ஒரு கடை கூடத் திறக்கப்படவில்லை. வண்டிப் போக்கு வரவும் நின்றிருந்தது. அலகாபாத் உயர்தர நீதி மன்றத்தில் பறந்து கொண் டிருந்த ஐக்கியக் கொடியும் துக்க அறிகுறியாகத் தாழ்த்தப்பட்டது. ஆனந்த பவன மாளிகையில் பறந்து கொண்டிருந்த தேசியக் கொடியும் தாழ்த்தப்பட்டது. தலைவர்கள் அபிப்பிராயம் பண்டித மோதிலால் நேரு மரணமடைந்ததைக் குறித்து, தலைவர் பலர் தங்கள் கருத்தை வெளியிட்டிருக்கின்றனர். அவரிற் சிலருடைய அபிப்பிராயங்களைக் கீழே தருகிறோம்:- இராஜப் பிரதிநிதி லார்ட் இர்வின் பண்டித மோதிலால் நேருவின் மனைவியாருக்கு இராஜப் பிரதிநிதியின் அந்தரங்கக் காரியதரிசியிடமிருந்து பின்வரும் தந்தி கிடைத்தது:- தங்களுடைய கணவனார் மரணமடைந்த துக்கச் செய்தியைக் கேட்டு, இராஜப்பிரதிநிதி தம்பதிகள் பெரிதும் வருந்துகிறார்கள். அவர் களுடைய அநுதாபம் தங்களுடைய குடும்பத்தாருக்கு உரியதாகு மென்று தெரிவிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தி என்னுடைய நிலைமை, மங்கலமிழந்த மங்கையர் திலகத்தின் (ஸ்ரீமதி வரூபராணி நேரு) நிலையைவிடக் கேவலமானது. தூய வாழ்வு நடத்தி அவ்வம்மையார், தமது கணவனாரின் நற்குணங் களையெல்லாம் வீகரித்துக் கொள்ளலாம். நானோ எதையும் வீகரித்துக் கொள்ள முடியாது. பண்டித மோதிலால் நேருவின் மரணத்தால் எனக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் நிரந்தரமானது. டாக்டர் ரவீந்திரநாத் டாகூர் தன்னுடைய சிறந்த புதல்வரான பண்டித மோதிலால் நேரு இறந்து போனதனால் பாரத நாட்டுக்கு ஏற்பட்டுள்ள துக்கமானது, அந்த நாட்டின் வாழ்க்கை இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும் விதத்தில் பரிணமிக்குமாக. பாபு விபினசந்திரபாலர் நம்முடைய தற்போதைய அரசியல் வாழ்வில் ஒரு பெரிய சக்தியைப் பண்டித மோதிலாலின் மரணத்தின் மூலமாக நாம் இழந்து விட்டோம். டாக்டர் அன்சாரி தம்முடைய தேக நிலைமை சீர்கெட்டிருக்கிற தென்பது பண்டித மோதிலால் நேருவுக்குச் சில கால மாகவே தெரிந்திருந்தது. சென்ற வருஷம் பிப்ரவரி மாதம் அவருக்கு நான் சிகிச்சை செய்த போது, அவ ருடைய தேகதிதி கேவலமாய் இருக்கிறதென்று அவருக்கும் பண்டித ஜவஹரிலால் நேருவுக்கும் நான் எச்சரிக்கை செய்தேன். ஆனால் பண்டித மோதிலால், தம்மால் சும்மாயிருக்க முடியாதென்றும்., அவசியமானால் சிறையிலேயே இறந்து போகத் தயாராயிருப்பதாக வும் கூறினார். மகாத்மா காந்தியும் பண்டித ஜவஹரிலால் நேருவும் சிறையில் இருந்து விட்டதால் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தும் பொறுப்பனைத்தையும் பண்டித மோதிலால் நேருவே ஏற்றுக் கொள்ளும்படியாக நேர்ந்தது. இந்த அதிக உழைப்பினாலேயே அவர் விரைவில்மரணமடையும்படி நேரிட்டது. தாய் நாட்டுக்கென்று அவர் தம்மை வேண்டுமென்றே தியாகஞ் செய்து கொண்டார். கனம் ஸ்ரீநிவாச சாதிரியார் ஒரு பெரிய வாழ்க்கை முடிந்துவிட்து. தேசத்தின் தற்போதைய நெருக்கடியான நிலைமையில் அவர் பெரிய வழி காட்டியாயிருப்பார் என்று பலரும் நம்பியிருந்தனர். எதிர் காலத்திற்கு தக்கபடி இந்தியா சம்பந்தப்பட்ட விஷயங்களை, அவர் தமது அநுபவத்தினாலும் திறமை யினாலும் ஒழுங்குபடுத்தி யிருப்பார். அவருக்குப் பின்னால் வருவோர், அவருடைய தலைமையின்றி இனி வரப்போகும் மகத்தான காரியங்களை எதிரிட்டுச் சமாளிக்க முடியாததை நன்குணர்வர்;. ஸ்ரீமான் வி.ஜே. படேல் பண்டித மோதிலால் நேருவை அவருடைய தேசத்தார் அன்பாகப் பாராட்டி வந்தார்கள்; அவருடைய எதிரிகளும் அவரிடம் மரியாதை செலுத்தி வந்தார்கள். அவர், ஒரு சுதந்திர நாட்டில் பிறந்திருந்தால், பிரதம மந்திரிப் பதவியைத் திறமையுடன் வகித்திருப்பார். தேசத்திற்கு இப்பொழு தேற்பட்டுள்ள நஷ்டம் மகத்தானது. முக்கியமாக அவருடைய ஆலோசனை வேண்டப் படும் இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அவர் இறந்து போனது சகிக்க முடியாதது. ஸ்ரீமான் சென்குப்தா பண்டித மோதிலால் நேருவின் மரணத்தால், தேசத்தில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியும், துக்கமும் அளவிடற்பாலன வல்ல. இந்தியாவின் சுதந்திரத் திற்காக, அவர் தமது படுக்கையிலிருந்து கொண்டும், கடைசி மூச்சிருக்கும் வரை யுத்தம் செய்யும் சேனாதி பதியைப்போல் அவர் போராடினார். அவருடைய மரணகாலம் வரை அவருடைய ஆலோசனையின்றி தேசீய தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்பட்டதில்லை. அந்தத் தீர்மானத்தை அமுலுக்கு கொண்டு வரும் விஷயத்திலும் அவர் முன்னின்று அதை நடத்திக் காட்டினார். ஜனாப் ஜின்னா இந்திய அரசியல் வாழ்வில் பண்டித மோதிலால் நேரு ஒரு பிராதன புருஷராயிருந்தார். அவர் சட்ட வரம்புக்குட்பட்டு கிளர்ச்சி செய்யும். மனோபாவமுடைவராயிருந்தும், பிரிட்டிஷ் அரசாங்கத் தாரின் முறைகளினால் 1924ஆம் வருஷத்திலிருந்து அதி தீவிரக் கொள்கையினராக மாறிவிட்டார். பிரிட்டீஷார் இனியும் தாமதி யாமல் தங்களுடைய நல்லெண்ணத்தை இந்தியர்களுக்குக் காண்பியா விட்டால் அங்கு அமைதி ஏற்படாதென்பதை பண்டித மோதிலால் நேருவின் வாழ்க்கை நிதர்சனமாகக் காட்டுகிறது. ஸர் அலி இமாம் இந்தியாவிற்குத் தற்போது ஏற்பட்டுள்ள துக்கமும் நஷ்ட மும் மகத்தானவை. எவரிடத்தில் எல்லாரும் நம்பிக்கை வைத்திருந் தனரோ அவர் பண்டித மோதிலால் நேரு இப்பொழுது இறந்து விட்டார். நான் பண்டிதருடன் 40 வருஷகாலமாக நெருங்கிப் பழகி யுள்ளேன். தேசத்தின் பொருட்டு அவர் சொல்லரிய தியாகத்தைச் செய்திருக்கிறார். ஜனங்களுக்கு அவரெப்பொழுதும் நன்மையே செய்து கொண்டு வந்தார். தேசபிமானத் திற்குப் பல உதாரணங்கள் காட்டிவிட்டு அவர் சென்றிருக்கிறார். அவை நமக்கு இப்பொழுது பாடங்களாக விளங்குகின்றன. சிக்கலான பல பிரச்சனைகள் தீர்க்கப் பட வேண்டிய இக்காலத்தில். அவருடைய ஆலோசனை அதிகமாக வேண்டியிருந்தது. ஆனால் அவர் மறைந்து விட்டார். அவருடைய ஞாபகார்த்தமாக அவருடைய வேலைகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டு போக வேண்டும். இந்தியாவின் சரித்திரம் நிரந்தர மாக ஏற்படும் பொழுது பண்டிதருடைய தியாகங்கள் பொன் னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பது திண்ணம். ஸ்ரீமான் ச.ராஜகோபாலச்சாரியார் பெரிய ஆன்ம வெற்றி ஏற்படும் தறுவாயில் இப்பொழுது நாம் இருக்கிறோம். இச்சமயத்தில் நமக்கு எங்குக் கர்வம் ஏற்பட்டு விடுகிறதோ என்று கருதி. அக்கர்வத்தைக் குலைக்க ஆண்டவன் நமக்கு ஒரு பெரிய கஷ்டத்தை யளித்திருக்கிறார். காந்தியடிகள் ஒரு பெரிய மகான் என்பதில் ஐயமில்லை. ஆனால் நீ யாரை அரசனாகத் தேர்ந்தெடுப்பாய் என்று யாராவது என்னைக் கேட்டால், பண்டித மோதிலால் நேருவையே குறிப்பிடுவேன். கவிராஜர் தியான வித்தியாபதி பண்டித மோதிலால் நேரு கல்கத்தாவிலிருந்த காலை அவருக்குச் சிகிச்சை செய்து வந்தமேற்படி கவிராஜரின் அபிப் பிராயம் வருமாறு:- அவருக்குச் சிகிச்சை செய்ய வேண்டிய நிமித்தம் நான் சமீபத்தில் சென்றிருந்தபோது அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. காங்கிர காரியக்கூட்ட நடவடிக்கைகளில் அவர் கலந்து கொண்டு பேசியதை நான் கண்டித்து, இவ்வளவு நீண்ட நேரம் சிரமப்படுத்திக் கொண் டிருக்கக் கூடாதென்று நான் கூறிய போது நான் தேசத் தொண்டு செய்வதினின்று தடுக்கப்பட்டு சும்மா இருக்கும்படி செய்யப் படுவேனாகில், அதைவிட மரணத்தையே பெரிதெனக் கருதுவேன். என்று பண்டிதர் கூறினார். அவர் பெரிய கர்மயோகி. உயிருள்ள மட்டும் தேச சேவையிலேயே காலங் கழித்தார். இன்னும் சிறிது காலத்திற்குள் என்னுடைய சிகிச்சைக்குட்படுவதாக அவர் கூறியிருந்தார். அதற்கு அவகாசம் ஏற்படாமலும்., அவருக்கு நான் சேவை செய்ய முடியாமலும் போனதைக் குறித்து வருந்துகிறேன். ஸ்ரீமான் வல்லபாய் படேல் பண்டிதரின் மரணத்திற்காகத் தேசம் முழுவதும் துக்கத்தி லாழ்ந்திருக் கிறது. தேச விடுதலைக்காக அவர் ஆற்றிய தொண்டும், செய்த தியாகமும் தேசத்தினரால் என்றும் மறக்கப்படாதனவாகும். தற்போது அவருடைய பிரிவு, இந்தியாவுக்கு பெரிய நஷ்டமாகும். ஸ்ரீமான் ஏ. அரங்கசாமி ஐயங்கார் பண்டிதரைக் காண்பதற்காக இலட்சுமணபுரிக்குச் சென்று கொண்டிருந்த ஸ்ரீமான் அரங்கசாமி ஐயங்கார், இடை வழியில் பண்டிதரின் மரணச் செய்தியைக் கேட்டு அப்படியே தம்பித்து விட்டார். உடனே பண்டித ஜவஹரிலால் நேருவுக்குப் பின்வரு மாறு தந்தி கொடுத்தார்:- தகப்பனாருக்குத் தகுந்த திருக்குமாரரான தாங்கள், இந்தப் பெரிய துன்பத்தைச் சகித்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். முக்கியமாக, பண்டிதரின் தேசீய அபிலாஷைகள் இப்பொழுது பயனளிக்குந் தறுவாயிலிருக்கின்றன. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் துக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறன். டாக்டர் அன்னை பெசண்டு இந்தியர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான சிறந்த தலைவர் இப்பூவுலகத்தினின்று பிரிந்து விட்டார். அவர் இல்லாது அவர் குடும்பம் எப்படி சூநியமாகத் தென்படுமோ, அப்படியே இந்தியாவும், ஒரு தேச பக்தரை, சிறந்த தலைவரை, அன்பரை இழந்து நிற்கும். சூட்சுமமாகப் பார்க்கப் போனால் அவர்நம்மை விட்டுப் பிரிந்து போகவில்லை. நமக்கு ஊக்க மூட்டவும், வழிகாட்டவும் அவருடைய ஆன்மா நம்முடனேயே இருக்கிறது. அவர் பூதவுடல் நமது பார்வையினின்று மறைந்து விட்ட போதிலும் அவர் சூட்சும சரீரத்தில் நம்முடனேயே இருந்து கொண்டிருக் கிறார். ஜனாப் அப்துல் ஹமீத்கான் தலைவர்களின் ஆலோசனை மிகவும் அவசியமாக வேண்டப்படும் சமயத்தில் அவரில் ஒருவர்பின் னொருவராக மறைந்துக் கொண்டு வருவது இந்தியாவின் துர்ப்பாக்கியமேயாகும். பண்டித மோதிலால் நேருவும், அவருடைய குடும்பத்தாரும் தேசத் தின் பொருட்டு எவ்வளவு அரிய தியாகங்களைச் செய்திருக்கின் றனர் என்பது, அக்குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகினவர்க்கே நன்கு தெரியும். தமது கடைசி பிராணன் இருக்கும் வரை பண்டிதர் தேசத் தொண்டில் ஈடுபட்டிருந்தார். அவருடைய பிரிவால் அவர் குடும்பத்தாருக்கு எவ்வளவு துக்கம் ஏற்பட்டிருக்கிறதோ அவ்வளவு துக்கம் தேசத்தாருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஸர்.சி.பி. இராமசாமி ஐயர் இந்திய அரசியல் உலகத்தினின்றும் ஒரு வீர புருஷர் மறைந்து விட்டார். அவர் சிறந்த சீமானாயிருந்த போதிலும் அன்பும் மரியாதையும் அவரிடத்தில் குடிகொண்டிருந்தன. ஜனங் களின் தலைவராக இருப்பதற்காகவே அவர் பிறந்தார் என்று கருது மாறு அவரிடத்தில் எல்லாக் குணங்களும் பொருந்தியிருந்தன. இந்தியா சட்ட சபையில் அவர் செய்த ஊழியம் தற்கால இந்திய சரித்திரத்தின் ஒரு பாகமாகும். சமரஸ முயற்சிகளில் அவர் கைதேர்ந்தவர். இந்தியாவின் வருங்கால அரசியல் திட்டம் உருப்பட வேண்டிய தருணத்தில் அவர் மரணமடைந்தது பெரிய நஷ்ட மாகும். சபைகளின் அநுதாபம் இந்தியா சட்டசபை 9-2-31இல் புதிய டெல்லியில் கூடிய இந்தியா சட்ட சபைக் கூட்டத்தில், பண்டித மோதிலால் நேரு மரணமடைந்ததைக் குறித்து ஸர் ஜார்ஜ் ரெயினி பின்வருமாறு பேசினார்:- பண்டித மோதிலாலின் முறையையும், அவர் செய்து முடித்த காரியங்களையும் பற்றிச் பேசுவதற்கு இன்று நாளல்ல; அவர் சம்பந்தப் பட்ட மட்டில்அவரது சரிதம் முடிந்து விட்டது. அவரைப் பற்றிய ததாவேஜுகள் முத்திரை வைக்கப்பட்டுப் போயிருக் கின்றன. சரித்திராசிரியர்களே அவற்றைப் பற்றித் தீர்ப்புச் சொல்ல வேண்டும். இந்நாட்டுச் சரித்திரப் புத்தகத்தில்அவரைப் பற்றி வெகு வாக எழுதப்படும் என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. இந்தியா விஷயத்தில் அவர் கொண்டிருந்த பற்று சொற்பமல்ல. நாட்டுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர் பாடு பட்டு வந்தார். அவர் வக்கீல் தொழிலிலும், பிரசங்கியாகவும் சிறந்த அரசியல் தலைவராகவும் முன்னணியிலிருந்து விளங்கினார். இந்த சபையிலும் சரி மற்றவிடங்களிலும் சரி, அவர் முதன்மையாகவே இருந்தார். அபிப்பிராய பேதம் நேர்ந்த போது, அவரது உறுதியும், வன்மையும் வாதம் செய்யும் தன்மையும் அவருக்குப் பெருமதிப்பை அளித்து வந்தன. இந்தச் சாமர்த்தியம் வெளிப்படையாகத் தெரிந்து கொண் டிருந்தது. வெளியில் அவர் கருணையுடனும் துவேஷ மில்லாமலும் நடந்து கொண்டார். இதைத் தான் நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. அவர் கல்வி அறிவு மிகுதியால் சிநேகத்துக்கு ஏற்றவ ராயிருந்தார். அவரை இனி நாம் இங்குக் காண முடியாது. ஆனால் அவரது உருவம் எப்போதும் மனதில் நிலைத்திருக்கும். இந்தியா அரசாங்கத்தின் சார்பாக எங்கள் மனதிலுள்ளதை நான் என்னால் கூடியவரை சொல்லிவிட்டேன். இந்தியா மந்திரியும் எங்களோடு கலந்து பண்டிதரின் மரணத்துக்காக வருந்துவாக இங்கு அறிவிக்கும் படி எங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். காலஞ் சென்ற வரின் குடும்பத்தாருக்கு இச்சபையினரின் அநுதாபத்தை அறிவிக்கும் படி நான் கேட்டுக் கொள்கிறேன். ஐக்கிய மாகாண சட்ட சபை 11-2-31இல் இலட்சுமணபுரியில் கூடிய ஐக்கிய மாகாண சட்ட சபையில் பண்டித மோதிலால் நேரு, மௌலானா முகம்மதுஅலி ஆகிய இருவரும் மரணமடைந்துவிட்டதைக் குறித்து வருந்தி பலரும் பேசினர். மாஜி மந்திரி ராய் ராஜேவரி பலியும், வரவு செலவு அங்கத்தினர் ஸ்ரீமான் ஜே.சி மித்தும், ஹோம் அங்கத்தின ராகிய சத்ரி நவாபும் மந்திரிகளில் ஒருவராகிய நவாப் யூசப்பும் பண்டித மோதிலால் நேருவின் குணங்களைச் சிலாகித்துப் பேசி னார்கள். சபைத் தலைவராகிய லாலா சீதாராம் பண்டிதரின் அரிய தியாகத்தைப் பற்றிப் பெரிதும் வியந்து பேசி, சபையின் நடவடிக்கை களை மறுநாள் வரை தள்ளிவைத்தார். பம்பாய் சட்ட சபை 25-2-31இல் கூடிய பம்பாய்ச் சட்ட சபை, பண்டித மோதிலால் நேரு இறந்து போனதைக் குறித்து வருந்துவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. சென்னைச் சட்ட சபை 24-2-31இல் கூடிய சென்னை மாகாணச் சட்டசபைக் கூட்டத்தில் பண்டித மோதிலால் நேரு இறந்து போனதைக் குறித்து இந்தச் சபை பெரிதும் வருந்துவதாகவும், சபையின் துக்கத்தை பண்டித ஜவஹரிலால் நேருவுக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் டாக்டர். பி. சுப்பராயன் ஒரு தீர்மானங் கொண்டு வந்துபேசுகையில், இந்திய தேசீய உலகத்தில் பண்டித மோதிலால் நேரு பிரதான புருஷரென்றும், இந்தியாவின் வருங்கால அரசியல் திட்டத்தைப் பற்றி சமாதானப் பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அவர் இறந்து போனது பெரிதும் விசனிக்கத் தக்கதென்றும் கூறினார். அரசாங்க ஹோம்அங்கத்தினராகிய ஸர்முகம்மது உமான் தீர்மானத்தை ஆதரித்துப் பேசுகையில், பண்டிதர் இறந்து போனதைக் குறித்து சென்னை அரசாங்கத்தார் பெரிதும் வருந்துகின்றனரென் றும், அவர் இப்பொழுது உயிருடனிருந்தால் தேசத்தின் தற்போதைய நெருக்கடியான நிலையில் பெரிதும் உபகாரமாயிருந்திருக்கு மென்றும் கூறினார். பிரதம மந்திரி ஸ்ரீமான் பி. முனுசாமி நாயுடு பேசுகையில், பண்டித மோதிலால், தேச சேவையையே பிரதான மாகக் கொண்டிருந்தா ரென்றும் அவர் செய்துள்ள தியாகத்திற்கு இணை வேறெதுவுமில்லையென்றும், இப்பொழுது நமது கவனத்தைக் கவர்ந்து கொண்டிருக்கும் பல சிக்கலான பிரச்சனைகள் அவர்இருந்திருந்தால் சுலபமாகத் தீரும் என்றும் கூறினார். அனைவரும் நின்று கொண்டிருக்கையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பம்பாய் நகரசபை 6-2-31இல் கூடிய பம்பாய் நகர சபைக் கூட்டம் பண்டித மோதிலால் நேரு இறந்து போனதை உத்தேசித்து, எவ்வித நடவடிக்கைகளையும் நடத்தாமல் கூட்டத்தைத் தள்ளி வைத்தது. நகர சபைத் தலைவராகிய ஸ்ரீமான் ஹுசேன்பாய் லால்ஜி பேசுகை யில், பண்டித மோதிலால் நேரு, மனிதர் களில் அரசரென்றும், அவரிடத்தில் வீரம், உண்மை, பக்தி ஆகியயாவும் குடி கொண்டிருந் தனவென்றும், தேசத்திற்காக அவர் செய்துள்ள தியாகமானது எப்பொழுதும் பிரகாசம் பொருந்தியதா யிருக்குமென்றும், அரசியல் வானம் சிறிது வெளுத்துக் கொண்டு வரும் இந்தச் சமயத்தில் அவ்வானத்தில் மிகவும் பிரகாசித்துக்கொண்டிருந்த இந்த நட்சத்திரமானது திடீரென மறைந்து விட்டது வருந்தத்தக்க தென்றும், கௌரவத்தோடு கூடிய சமாதானத்திற்குப் பண்டிதர் உழைத்தாரென்றும், இந் நாட்டை நல்வழிப்படுத்திச் செல்ல அவருடைய ஆன்மா இன்னும் முன்னிற்கு மென்று தாம் நம்புவ தாகவும் கூறினார். சென்னை நகர சபை 10-2-31இல் கூடிய சென்னை நகர சபைக் கூட்டத்தில் ஸ்ரீமான் கத்தே அரங்கைய நாயுடு பிரேரணை செய்ய, ஜனாப் ஷாபி முகம்மது ஆமோதிக்கக் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:- தமது வாழ்நாளையும் சொத்தையும் தேசத்திற்காக அர்ப்பணஞ் செய்த பண்டித மோதிலால் நேருவின் அகால மரணத்திற்காக இந்த நகர சபை பெரிதும் வருந்துகிறது. இறந்து போனவருடைய மரியாதைக்காக இந்தச் சபை யின் கூட்டத்தைத் தள்ளிவைப் பதுடன், நகர சபை காரியா லயத்தையும் 11-2-31இல் மூட வேண்டுமென்றும் தீர்மானிக் கிறது. இந்தத் தீர்மானத்தைப் பண்டித ஜவஹரிலால் நேருவுக்கு அனுப்ப வேண்டு மென்றும், அவருடைய குடும்பத்தாருக்குத் தனது அநுதாபத்தைத் தெரிவிப்ப தாயும் இந்தச் சபை தீர் மானிக்கிறது. சென்னை இந்திய மாதர் சங்கம் சென்னையிலுள்ள இந்திய மாதர் சங்கத்தினர் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றனர்:- தேசீய இயக்கத்திற்குத் திறமையாகத் தலைமை வகித்ததுடன், திரீகளின் முன்னேற்றத்திற்கும், எல்லா ஆசார சீர்திருத்த விஷயங்களுக்கும் ஆதரவு அளித்து வந்த பண்டிதமோதிலால் நேரு, தேசத்தினின்று மறைந்து போனதைக் குறித்து இந்திய மாதர் சங்கத்தினர் பெரிதும் வருந்து கின்றனர். அவர், தமது குடும்பத்தி லுள்ள தீரிகளுக்குச் சுதந்திரம் அளித்த தானது, பிறரும் அவரைப் பின்பற்றுவதற்கு வழி காட்டியாயிருந்தது. ஸ்ரீமதி மோதிலால் நேருவுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் இச்சங்கத்தார் தங்கள் அநுதாபத்தைத் தெரிவிக்கின்றனர். லண்டன் இந்தியர்கள் கூட்டம் இந்திய மாதர் சங்கத்தின் ஆதரவில் லண்டனில் 12-2-31-ல் ஜனாப் ஜின்னாவின் தலைமையில் ஒரு பொதுக் கூட்டம் நடை பெற்றது. அது போழ்து, பண்டித மோதிலால் நேருவின் அநுபவம் வாய்ந்த புத்திமதி நமக்கு அவசியமாக வேண்டப்படும் இச் சமயத்தில் அவர் இறந்து விட்டார். அவருக்கு இணையான தேச பக்தர் கிடை யாது. அவர் சுத்த வீரர், பெரிய மனிதர் என்று ஜனாப் ஜின்னா பேசினார். டாக்டர் மூஞ்சே பேசுகையில், இந்திய அரசியல் வாழ்வை தெய்விகமாக்கிய பெருமை மகாத்மா காந்திக்கு உண்டு. அப்படியே அநுபவ சாத்தியமான இராஜ தந்திரம் பண்டித மோதிலால் நேரு விடமிருந்து உற்பத்தியாயிற்று. அவர் இறந்து போனதற்காக நாம் துக்கங் கொண்டாடுவதோடு நின்று விடக்கூடாது. ஆனால் அவர் எந்த இலட்சியத்திற்காகத் தமது பொருளையும் ஆயுளை யும் பறி கொடுத்தாரோ அந்த இலட்சியத்தையடை வதற்காக நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். என்று குறிப்பிட்டார். பிறகு ஸர் ஆல்பியன் பானர்ஜி, டாக்டர் பராஞ்சபே முதலிய பலர் பேசினர். ஜனங்களின் துக்கம் சென்னை பண்டித மோதிலால் நேரு இறந்து போன செய்தி, அவர் இறந்து போனவன்று காலையிலே, அதாவது 6-2-31 காலையிலேயே இந்தியாவின் பல பாகங்களிலும் காட்டுத் தீ போல் பரவி விட்டது. சென்னையில் பகல் பதினோரு மணிக்குள் இத் துக்கச் செய்தி தெரிந்தது. வியாபார தலங்களிலுள்ள முக்கியமான கடைகள் பலவும் மூடப்பட்டன. கதர் வதிராலயங்களில் தேசீயக் கொடியுடன் கறுப்புக் கொடியும் பறக்க விடப்பட்டன. மாணாக்கர்களும் தங்கள் பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியே வந்து தங்கள் துக்கத்தைக் காட்டிக் கொண்டார்கள். மாலையில் கடற்கரையில் ஸ்ரீமான் கே. நாகேசுவர ராவ் பந்துலு அவர்களின் தலைமையின் கீழ் பெரிய பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. திவான் பஹதூர் ஆர் .என்.ஆரோக்கியசாமி முதலியார் பேசுகையில் பண்டித மோதிலால் நேரு, சிறந்த இராஜ போகத்தில் வாழ்ந்திருந்தா ரென்றும், தேசத்தின் பொருட்டு தமது பெரு வருவாயை உதறித் தள்ளி விட்டு தேசீயப் போரில் கலந்து கொண்டாரென்றும், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் அவருடைய தானத்தில் ஆயிரக்கணக்கான பேர் வருவர் என்று தாம் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். அரசாங்க அட்வகேட் ஜெனரலாகிய ஸ்ரீமான் அல்லாடி கிருஷ்ண சுவாமி ஐயர் பேசுகையில், இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்கள் இந்தியாவின் சிறந்த அமிசங்கள் அனைத்தையும் தம் அகத்தே அடக்கிக் கொண்டிருக்கின்றன ரென்றும், இதனாலேயே அவர்கள் மதத் தலைவர்கள் போல் கௌரவிக்கப் படுகிறார்க ளென்றும், கடமையை உத்தேசித்து, துறவு கொள்ளல் இந்தியர் களின் சகஜ தர்மமாகுமென்றும், இதற்குப் பண்டித மோதிலால் நேருவின் தியாகமே சிறந்த உதாரணமாகுமென்றும், சமீபத்தில் நற்காலம் ஏற்படப்போகிறதென்று நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இச் சமயத்தில் அவர் இறந்து விட்டது. இந்தியா வின் துர்ப்பாக்கியமென்றும் குறிப்பிட்டார். பிறகு வேறு பலர் பேசியதும் கூட்டம் கலைந்தது. பம்பாய் பண்டித மோதிலால் நேருவின் மரணத்தை உத்தேசித்து பம்பாயில் இரண்டு நாள் வரை கடையடைப்பு முதலியன நடை பெற்றன. மில்களில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலரும் வேலைக்குப் போகாமல் நின்று விட்டனர். 6-2-31இல் மாலை அஸாத் மைதானத்தில் ஸர்தார் வல்லபாய் படேல் அவர்கள் தலைமையின் கீழ் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது அவர் பேசுகையில், பண்டித மோதிலால் நேரு சிறந்த சேனாபதி என்றும் அவர் தலைமையின் கீழ்தாம் ஒரு சாதாரண போர்வீரர் என்றும், அவர் கீழ் பணி செய்வது பெரிதும் சந்தோஷமாகு மென்றும், அவர்விட்டு வைத்துப் போன வேலையைப் பூர்த்தி செய்வதே நாம் அவருக்குச் செய்ய வேண்டிய நன்றியாகுமென்றும் கூறினார். ஸர் . புருஷோத்தமதாஸ் தாகூர் தாஸ், டாக்டர் ஸையத் முகம்மத் முதலிய பலரும் பேசிய பின்னர்., அநுதாபத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு கூட்டம் கலைந்தது. கல்கத்தா கல்கத்தா சிரத்தானந்தர் நந்த வனத்தில் ஸ்ரீ ஜே.எம். சென் குப்தா தலைமையில் கூடிய ஆயிரக்கணக் கான தீரிபுருஷர்களடங்கிய பொதுக் கூட்டத்தில் பண்டித மோதிலாலின் மரணத்தைக் குறித்து வருந்துவதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டாக் எக்சேஞ்ஜ், கல்கத்தா நகர சபை, ஹௌரா நகர சபை, அலிபூர் ஸிவில் கோர்ட்டுகள் முதலிய தாப னங்களும் மூடப்பட்டன. வேறு பல இடங்கள் டெல்லி, லட்சுமணபுரி, காசி, நாகபுரி, லாஹுர், பாட்னா முதலிய பல ஊர்களிலும் பொதுக் கூட்டங்கள் கூட்டப்பட்டன. ஆங்காங்குள்ள தலைவர்கள், இறந்துபோன பெரியாரின் அரிய தியாகத்தைப் பற்றிப் பேசினார்கள். இந்தத் துக்கக் கொண் டாட்டத்தில் இந்தியாவிலுள்ள மாணாக்கர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. பத்திரிகைகளின் புகழுரைகள் லண்டன் டெயிலி ஹெரால்ட் பண்டித மோதிலால் நேருவும் அவருடைய சகபாடிகளான தலைவர்களும் அநுசரித்த முறைகள், அவர்களை பிரிட்டிஷ் அரசாங்கத்தோடும் இந்தியா அரசாங்கத்தோடும் எதிர்த்து நிற்கும் படியான நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டன. பண்டித மோதி லால் நமக்கு ஒரு சத்துருவானால், அவரிடத்தில் நமக்கு மரியாதை யும் அன்பும் இருந்தன. சமீபத்தில் நிறைவேறக் கூடியன என்று அவர் நம்பிக் கொண்டிருந்த எண்ணங்கள் கைகூடுவதைப் பார்க்க வியலாமல் அவர் இறந்து போனது பெரிதும் வருந்தத்தக்கது. அலகாபாத் லீடர் பண்டித மோதிலால் நேரு, தமது வாழ்நாள் முழுவதும் ஒரு போர்வீரராகவே இருந்தார். அவருக்கு இயற்கையாயுள்ள உறுதி யுடன், இயமனுடனும் அவர் போராடினார். அவருடைய ஆன்மா, பூதவுடலினின்று பிரிந்து விட்ட போதிலும், தேச விடுதலைக்காக அவர் செய்துள்ள தியாகம், தமது இலட்சியத்தில் வைத்த நம்பிக்கை, இணையிலாத உறுதி, சலியா உழைப்பு, சீரிய தேசாபிமானம் முதலியன இந்தியர்களுக்கு உற்சாக மூட்டத் தூண்டு கோலா யிருக்கும். இந்திய தேசீய இயக்கத்திற்கு அவர் ஒரு தூண் போலிருந் தார். ஆனால், அவருடைய அநுபவத்தோடு கூடிய ஆலோசனை, கூர்த்தமதி முதலியன, தேசத்தின் எதிர்கால வாழ்வை நிர்ணயிப்ப தற்குத் துணை செய்ய அவசியமாக வேண்டப்பட்டபோது, அவர் மறைந்து விட்டார். அவருடைய பிரிவு மகாத்மா காந்திக்கு பெரிய நஷ்டம் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தியும் பண்டித மோதிலால் நேருவும் பரபரம் துணைக் கருவிகள் போல் இருந்தார்கள். இந்திய தேசீய இயக்கத்திற்கு மகாத்மா காந்தி ஆன்மா போலவும், பண்டிதர் மூளை போலவும் இருந்தார். பண்டிதருக்கு எழுபது வயதான போதிலும் அவருடைய தேகபலமும் மனோபலமும் சிறிது கூடக் குறையவில்லை. இதை நினைக்கும் போது பெரிதும் வருத்தமாயிருக்கிறது. இந்தியாவின் அரசியல் நிலையை நிர்ணயிக்கும் சக்தியைப் பெற்ற அரசாங்கத் தாருக்கு, பண்டிதரின் அரசியல் வாழ்வு ஒரு பாடமாகும். அரசாங் கத்தார், தங்களுடைய குறுகிய நோக்கதினாலும், பொதுஜன அபிப்பிராயங்களை நிராகரித்து வந்ததனாலும், தேசத்தாருடைய அதிருப்தியைப் பெற்று விட்டதோடு கூட, பல சிறந்த தலைவர் களுடைய அநுதாபத்தையும் இழந்து விட்டனர்; தங்கள் தவறுகளை உணராமல், தேசத்தின் அதிருப்திக்குக் காரணத்தை, படித்த வகுப்பார் மீது சுமத்தினர். பண்டித மோதிலால் நேருவின் வாழ் நாளை ஆதிமுதல் ஆராய்ந்து பார்த்தால், அவர் அவ்வப் பொழுது வெளியிட்டுள்ள அபிப்பிராயங்களைக் கூர்ந்து கவனித்தால், அவர் மாறுதலுக்கு யார் காரணர் என்பது நன்கு புலப்படும். பண்டித ரிடத்தில் ஒருதலைவருக்கு வேண்டிய குணங்கள் யாவும் காணப் பட்டன. இவைகளுடன் தியாகபுத்தியும் அவருக்கு இருந்தது. இதனால் ஜனங்கள், அவரை ஒரு தெய்வம்போல் கொண்டாடினர் என்பதில் ஆச்சரியமில்லை. இரண்டு முறை அவர் காங்கிரசுக்குத் தவைராகத் தெரிந்தெடுக்கப்பட்டார். சென்னை காங்கிரசில் சுயேச்சை தீர்மானத்தைப் பற்றி அவர் பேசுகையில் பூரண சுயேச்சை பெறவேண்டுமென்பதே என் நோக்கம். ஆனால் குடியேற்ற நாட்டந்தது இப்பொழுது இந்தியாவுக்குக் கிடைத்தால், அதன் மீதுள்ள மோகம் நீங்குவதற்குமுன் கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாயிருக்கிறேன் என்று கூறினார். சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் தொடங்கியதும், தேச அழைப்புக்கிணங்கி, அவர் போராட்டத்தில் கலந்து கொண்டார்.; உடனே சிறைப் பட்டார். சிறையிலிருந்து விடுதலையானதும் தேகதிதி கேவல மாகிவிட்டது; சுதந்திரப் போரின் முன்னணியிலிருந்த அவர், இப் பொழுது மறைந்து விட்டார். ஆனால், சுதந்திர இந்தியாவைப் பார்க்க அவர் கொடுத்து வைக்கவில்லை. அவருடைய ஆன்மா சாந்தியடைவதாக. கல்கத்தா முனிசிபல் கெஜட் தற்காலஇந்தியாவின் சிறந்த தலைவர்களில் ஒருவரான பண்டித மோதிலால் நேரு காலஞ் சென்றதைக் கேட்டு நாம் பெரிதும் துயரப்படு கிறோம். மனிதர்களில் அரசரெனத்தகும் அவர் மறைந்து விட்டார். அவருடைய சுதந்திர ஆவல், அவர் பூதவுடலை விழுங்கி விட்டது. உழைப்பு முடியுமுன், அவ்வுழைப்பாளி சென்று விட்டார். நமது விதியைக் கட்டுப்படுத்தும் ஆண்டவனே, இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதென்பதை அறிய வல்லான். எந்த இலட்சியத்தை அவர் மனதில் கொண்டாரோ, அவ்விலட்சியம் நிறைவேறுவதற்காக அவர் எந்த உழைப்பையும் தியாகத்தையும் பெரிதெனப் பொருட்படுத்தவில்லை. சுதந்திர இந்தியாவின் சாயலை அவர் கண்டு மரித்து விட்டார். அவர் வாழ்ந்திருந்த ஒவ்வொரு நாளும் சுதந்திரத்தையே நினைத்தார்; அதையே மூச்சுவிட்டார். மனிதர்கள் பொறாமைப் படக் கூடிய மரணத்தை அவர் அடைந்துவிட்டார். ததீசி முனிவரைப் போல், பண்டித மோதிலால் தமது எலும்புகளையும் தேசத்திற்கு அர்ப்பணஞ் செய்து விட்டார். நாம், அந்த எலும்புகளிலிருந்து வச்சிராயுதங்கள் செய் வோமானால், அவ ருடைய உழைப்பும் தியாகமும், வீணாக மாட்டா. அவருடைய ஆத்மாவுக்குப் பண் முறை வணக்கஞ் செலுத் துகிறோம். அமரர்களின் மத்தியில் வசிக்கும் அவருடைய ஆத்மா, நமக்கு வழி காட்டுவதோடு இப் பொழுது தேசத்திலேற் பட்டுள்ள அந்தகாரத்தி லிருந்து நமக்கு நல்லொளியும் காட்டுமாக. கல்கத்தா லிபர்டி கொடிது! பண்டித மோதிலாலின் மரணம் மிகக் கொடிது! இயமதர்ம ராஜன், இதைவிடச் சிறந்த காணிக்கையைப் பெற்றிருக்க முடியாது. ஜனங்களுக்கு இதைவிட துக்ககரமான ஆபத்து ஏற்பட் டிருக்க முடியாது. அச்சத்தையும் தோல்வியையும் துச்சமாகக் கருதிய அந்த உறுதியான உள்ளம் ஒடுங்கிவிட்டது. பண்டித மோதிலாலை இனிப் பார்க்க முடியாது. ஆத்மாவானது, பலமாயும், வெற்றியடையும் சக்தியோடும் இருந்தது. ஆனால் பூதவுடல் பலஹீனமாய் இருக்கும் பொழுது,அதை இயமன் விழுங்கிவிட்டான். சரித்திரத்தை உற்பத்தி செய்து அதைப் பண்படுத்தியவர் பலர். அவரில் பண்டித மோதிலால் நேருவும் ஒருவர். அவர் , தம்மைச் சுற்றியுள்ளவர்களை, பெருந்தன்மை என்னும் வார்ப்படத்தில் வார்த்து, அவர்களை ஒழுங்குபடுத்துவதிலேயே வாழ்நாளைக் கழித்தார். அவர் கொண்ட இலட்சியமும் அவர் மனோபாவமும் விசாலமானவை; பெருமை யானவை. அவருடைய கூர்த்த மதி யானது, அவ்விலட்சியத் திற்கும் மனோ பாவத்திற்கும் ஒர் உருவத்தை யும் அழகையும் கொடுத்தது. பண்டித மோதிலால் நேருவிடத்தில் வழவழப்பு சமாசாரமே கிடையாது. அவர் எதிலும் கண்டிப்பா யிருப்பார். அவர் பூரணமான, சுதந்திர, கட்டுப்படாத வாழ்க்கையைப் பெரிதும் விரும்பினார். வாழ்க்கையின் பூரணத் துவத்திலிருந்து, அதன் வளமையிலிருந்து, தமது ஜனங்களை ஒழுங்குபடுத்த அவர் விரும்பினார். மனதிற்கும் அறிவுக்கும் இயைந்த தாகவே அவர் தேசாபிமானம் இருந்தது. இரத்தம் தோய்ந்த பஞ்சாப் மாகாணத்தில், அதி காரம் துர்ப் பிரயோகப் படுத்தப்பட்டபோது, அதைக் கண்டு சீறிப் பொங்கியெழுந்த பண்டித மோதிலால் நேருவின் கோபத்தை யார் மறக்க முடியும்? அநியாய அதிகாரத்தைக் கண்டு, அதை நிர்த்தாட் சண்யமாகத் தாக்கிய பண்டிதரின் போர்த் திறமையை யார் மறக்க முடியும்? பலஹீனத்தை - அஃது எந்த இடத்தி லிருந்து தோன்றிய போதிலும் அவர் வெறுத்துத் தள்ளினார். தமக்கு விசேஷ சலுகை காட்டப்பட்டால் அதையும் அவர் வெறுத்தார். தமது கொள்கையில் அவர் பூரண நம்பிக்கை கொண் டிருந்தார். அதனால் அவருக்கு ஒருவித கர்வமும் ஏற்பட்டிருந்தது. இதனோடு, படிப்பினால் ஏற்பட்ட ஒரு பெருந் தன்மையும் சேர்ந்தது. எனவே, அதிகாரத்தின் பயனாக ஏற்பட்ட சுகங்களையும், சுகத்தின் பயனாக ஏற்பட்ட அதிகாரங்களையும் அவர் வெறுத்துத் தள்ளினார். அவர் உரிமையை விரும்பினார். ஏன்? உரிமையாயிருக்க தமக்கு உரிமையுண்டு என்பது அவருடைய கொள்கை. பெருந் தன்மையோடு வாழ வேண்டுமென்றால் உரிமையோடிருக்க வேண்டு மென்பது அவர் நம்பிக்கை. தயவு சம்பாதிப்பது, பிறருக்குச் சலுகை காட்டுவது, வாழ்க்கையில் சூனி யத்தைக் காணல் முதலியவை களை அவர் வெறுத்துத் தள்ளினார். தமது வாழ்நாளிலேயே, சுதந்திர இந்தியாவின் உருவத்தைத் தரிசிக்க வேண்டுமென்று அவர் விரும்பி னார். அஃது அவர் கைக்கு அகப் படவில்லை. ஆனால் அந்த உரு வத்தை, அவருடைய பிரிவினால் துக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்கள் பார்க்கும்படி அவர் விட்டு வைத்துச் சென்றிருக்கிறார். இப்பொழுது அமரர்களாயிருக்கும் லோகமான்யர், தேசபந்து இவர் களுடன் பண்டிதர் சேர்ந்து விட்டார். எந்தப் போராட்டத்தை அவர் ஏற்பாடு செய்து, அதற்குத் தலைமை வகித்து நடத்தி, அதில் ஏறக்குறைய வெற்றியும் அடைந்து விட்டாரோ, அந்தப் போராட்டத்தில், துக்கத்தி லாழ்ந்து கிடக்கும் இந்தியர்கள் பூரண வெற்றியடையும்படி அவர் அங்கிருந்து ஆசீர்வாதம் செய்து கொண்டிருப்பார். கல்கத்தா அட்வான் பண்டித மோதிலால் நேரு சிறந்த வாழ்க்கையை நடத்தினார்; பெரிய போராட்டத்தைச் செய் தார்; உயரிய மரணத்தையும் அடைந்தார். அவர் தலைவரா யிருக்கவே பிறந்தார். அதனால் அவரெங்குச் சென்ற போதி லும் தலைவராகவே தோன்றி னார். நீதிமன்றங்களிலாக, சட்ட சபையிலாக, காங்கிரஸிலாக, சுயராஜ்யக் கட்சி கூட்டத்தி லாக, எங்கும் அவர் தமது திறமையின் அடையாளத்தை வைத்து விட்டுச் சென்றார். அவரிடத்தில் உண்மை திகழ்ந்தது. எதையும் அவர் நேர் முக மாகத் தாக்குவார். இதனால் அவரோடு கருத்து வேற்றுமை கொண்டவர்களும் அவரிடத் தில் மரியாதை செலுத்தி வந்தனர். அவரிடத்தில் நகைச்சுவையூட்டும் சக்தி இருந்தது. எனவே, சலித்துப் போனவர்களையும் அவர் உற்சாகப்படுத் தினார். அவர் கருமமே கண்ணா யினார். அவர் அமைதி யான உழைப்பாளி. ஆதலின் சந்தேகத்தால் விழுங்கப் பட்டவர்களை ஒரு நெறிப் படுத்தும் சக்தி அவருக் கிருந்தது. சுதந்திர பலி பீடத்தில் அவர் தம்மை அர்ப்பணஞ் செய்து கொண்டார். ஆனால் தேசத்திற்கு அவர் தமது விலையில்லாப் பொக்கி ஷத்தை - புத்திர ரத்தி னத்தை - பண்டித ஜவஹரி லால் நேருவை - விட்டு வைத்துச் சென்றிருக்கிறார். லாகூர் டிரிப்யூன் இந்தியர்கள் ஒற்றுமையுடன் செய்த பிராத்தனைகள் யாவும் வீணாகிவிட்டன. நமது தலை முறையில், இந்தியர்களில் மிகக் கியாதி வாய்ந்த ஒரு தலைவரை, நம்மிடையிலிருந்து ஆண்டவன் விலக்கி விட்டான். இந்த விஷயத்தில், பிரும்மன், இந்தியா சம்பந்த மாகக் கருணையற்ற விதமாகவே நடந்து கொண்டிருக்கிறான் என்று கூற வேண்டும். ஒத்துழையா இயக்கம் தொடங்கப் படுவதைப் பற்றித் தீர்மானிக்க விசேஷ காங்கிர கூட்டப்படுந் தறுவாயில், லோகமான்ய திலகர் மரணமடைந்து விட்டார். காங்கிர கொள்கையை ஒரு புதிய முறையில் திருப்ப வேண்டு மென்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டு தேசபந்து தாஸர் காலஞ் சென்று விட்டார். சுயராஜ்யப் போராட்டம் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கையில் லாலா லஜபதிராய் மறைந்து போனார். பண்டித மோதிலால் நேரு, ஒரு விதத்தில் அதிருஷ்டசாலி யென்று சொல்ல வேண்டும். அவர் எந்த நோக்கத்திற்காகப் போராடினாரோ அந்த நோக்கம் சித்தி பெருந்தறுவாயில் அவர் வானுலகு சென்று விட்டார். மேற்கூறப்பட்ட தலைவர்களில், பண்டிதரே, தேசத் தாரின் இலட்சியம் கைகூடுமென்ற நம்பிக்கையுடன் இறந்து போனார். இஃது அதிர்ஷ்ட மென்றே சொல்ல வேண்டும். ஆனால் அந்த இலட்சியத்திற்காகத் தமது பொருளையும் உடலையும், உழைப்பையும் அளித்துவிட்டு, அந்த இலட்சியத்தை அடைய முடியாமற் போகிறதெனின், இதைவிட மனதுக்கு வருத்தத்தைத் தரக்கூடிய விஷயம் வேறென்ன இருக்கிறது? காங்கிரசிலும், இந்திய தேசீய வாழ்க்கையிலும் பண்டித மோதிலால் நேரு வகித்திருந்த தானத்தை வேறெ வரும் வகிக்க முடியா தென்பது திண்ணம். அவர் பழமையையும் புதுமையையும் ஒன்று சேர்த்து வைக்கும் ஒரு பாலம் போல் இருந்தார். முதலில் திலகருடைய தேசீயத் திற்கும் காந்தியடிகளின் தேசீயத்திற்கும் ஒற்றுமை உண்டாக்கினார். பிறகு காந்தியடிகளின் ஒத்துழையா இயக்கத்திற்கும், தமது அருமை மகனாரின் சமூகவாதக் கொள்கைக்கும் ஒற்றுமைப்படுத்தினார். மகாத்மா காந்தியினால் துவக்கப்பட்ட ஒத்துழையா இயக்கக் கொடியின் கீழ் வந்து சேர்ந்த பழமைத்தலைவர்களில் பண்டித மோதிலால் நேருவே முதன்மை யானவர். அந்த இயக்கத்தினால் தேசத்திற்கு நன்மை ஏற்படவில்லை யென்பதைக் கண்டவுடன் அவரே அதனின்று முதலில் பிரிந்தார். ஒத்துழையா இயக்கம் மீண்டும் விசாலமாக்கப்பட்டபோது, அவரே மீண்டும்வந்து சேர்ந்தவர்களில் முதன்மையானவர். நேரு அறிக்கையைத் தயாரித்த பெருமை எப்பொழுதும் அவர் விஷயத்தில் அழியாதிருக்கும். காங்கிர தலைவர்களில் அவர் ஒருவரே, பிறகட்சியாருடையவும் அரசாங்கத் தாருடையவும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். மற்ற அரசியல் தலைவர் களைப் போல், பண்டித மோதிலால் நேருவும், தெய்விகத் தன்மையிலாவது, பிறரை ஆகர்ஷிக்கும் சக்தியிலாவது, ஒழுக்க சக்தியிலாவது,ஆத்ம சக்தியிலாவது காந்தியடிகளைக் காட்டிலும் தாழ்ந்தவரேயானாலும், இராஜ தந்திரத்தில் அவரை விட இவர் மேலானவர். பண்டிதர் சிறந்த இராஜதந்திரி என்பதை அவருடைய எதிர்க் கட்சியாரும், மறுக்கவில்லை. பண்டிதரிடத்தில் எவ்வித வகுப்பு வேற்றுமையும் கிடையாது. பஞ்சாப் மாகாணத் திற்கு அவர் செய்த உதவியினால் அவரை பஞ்சாப் வாசிகள் தெய்வமாகப் போற்றி வந்தார்கள். அவர்கள் சார்பாக நேரு குடும்பத் தாருக்கு நமது அநுதபத்தைத் தெரிவிக்கிறோம். லாகூர் சிவில் அண்ட் மிலிடரி கெஜட் 1920ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் ஒன்பதாந் தேதி மகாத்மா காந்தி ஒத்துழையா இயக்கத்தைத் தொடங்கினார். சட்டசபை பகிஷ்கார இயக்கமும் தொடங்கப்பட்டது. அது முதல் காங்கிர சரித்திரமும், காந்தியடிகளின் கிளர்ச்சியுமே பண்டித மோதிலாலின் அரசியல் சரித்திரமாகும். அலகாபாத் உயர்தர நீதி மன்றத்தில் வக்கீல் களின் தலைவராயிருந்தவரும், மிகுந்த போகத்துடன் வாழ்க்கையை நடத்தி வந்தவருமான பண்டித மோதிலால், தமது நியாயவாதித் தொழிலை நிறுத்திக் கொண்டு, கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்துகொண்டார். என்பதைக் கேட்டுப் பலரும் ஆச்சரியப்பட்டனர். அமிருதசர சம்பவத்தி னால், இந்த மாறுதல் இவ ரிடத்தில் ஏற்பட்டதென் பதை அறிய, அந்த ஆச்சரி யம் சிறிது குறைந்தது. பிறகு, இவர் கைது செய்யப்பட் டார். பின்னர், சட்ட சபைக் குள் சென்று கிளர்ச்சி செய்ய வேண்டுமென்ற இயக் கத்தைத் தோற்றுவித்தவர் களில் பண்டித மோதிலால் நேருவும் ஒருவர். காங்கிர தலைவர்களுள், பண்டித மோதிலால் நேரு மிகுந்த நியாயமானவர் என்று சொல்ல வேண்டும். மகாத்மா காந்தியையும், பண்டித ஜவஹரிலால் நேருவையும் சகஜமான, நியாயமான வழிக்குக் கொண்டுவந்த பெருமை பண்டித மோதிலால் நேருவுக்கு உரியது. அலகாபாத் பயோனீர் பண்டித மோதிலால் நேருவின் மரணத்திற்காக இந்தியாவி லுள்ள எல்லாச் சாதியாரும், எல்லா வகுப்பாரும் வருந்துவர் என்பதில் ஐயமில்லை. இதைக் கொண்டு, அவர் அனைவராலும் எவ்வளவு நன்கு மதிக்கப்பட்டார். என்பது நன்கு புலப்படும். பண்டித மோதிலாலின் அரசியல் வாழ்க்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. முதலில், பிரிட்டிஷ் ஆட்சி முறையை அவர் வியந்து பாராட்டினார். ஆனால், அவர் தமது தாய் நாட்டின்மீது சிறந்த அன்பு செலுத்தினார். தமது கொள்கையை நிலை நிறுத்துவதற் காகவும், அதை அநுபவத்தில் கொண்டு வருவதற்காகவும். அவர்பல தியாகங்களைச் செய்திருக்கிறார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத் தார் இந்தியாவுக்குப் பல வழிகளிலும் நன்மை செய்ய உத்தேசித் திருக்கையில், விரிவான ஒரு சீர்திருத்தத்தை அமுலுக்குக் கொண்டு வந்திருக்கையில், அவர் ஏன் கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து கொண்டார் என்று பலரும் ஆச்சரியப் பட்டனர். இந்த நெருக்கடி யான சமயத்தில் அவர் இருந்திருந்தால், காங்கிர வாதிகளிடத்தில் நிதான புத்தியை உண்டுபண்ணியிருப்பார். கல்கத்தா மாடர்ன் ரெவியு பண்டித மோதிலால் நேரு ஒர் அரசனைப் போல் சம்பா தித்தார். அரசனைப் போலவே செலவழித்தார். அவர், தமது வாழ் நாளின் பின் பாகத்தில் ஏற்றுக்கொண்ட எளிய வாழ்க்கையின் நுண்ணிய தத்துவத்தை நாம் அறிய வேண்டுமானால், அவர், முதலில் நடத்திவந்த இந்திர போக வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். காலஞ்சென்ற ராஷ்விகாரி கோஷ் பெரிய பணக்காரர் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அவர் தர்மத்திற்காக மட்டும் நாற்பது லட்சம் ரூபா செலவழித் திருக்கிறார். தமது ஆயுட் காலத்தில் டாம்பீக வாழ்க்கையை நடத்தினார். ஒரு சமயம் பண்டித மோதிலால் நேரு, கல்கத்தாவுக்கு வந்தபோது ஸர் ராஷ்விகாரி கோஷின் விருந்தினராக இருக்கும்படி நேர்ந்தது. அப்பொழுது , ஸர் கோஷ், பண்டித மோதிலால் நேருவுக்கு என் வீட்டில் சௌகரியம் செய்து கொடுக்க முடியாதே என்று வருத்தத் துடன் கூறினார். இதைக் கேட்டு, பக்கத்திலிருந்தவர்கள் சிரித் தார்கள். அதைக் கண்டு ஸர் ராஷ்விகாரி கோஷ், அலகாபாத்தில் பண்டித மோதிலால் நேரு எத்தகைய வாழ்க்கையை நடத்துகிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. அதனால் நீங்கள் சிரிக்கிறீர்கள் என்று கூறினார். பண்டித மோதிலால், தம்முடைய சுகத்திற்காகவும், தமது குடும்பத்தாருடைய சுகத்திற்காகவும் மட்டும் செலவழிக்க வில்லை. தம்முடன் எவ்வகையிலாவது சம்பந்தப்பட்டவர்கள் கூட, சௌக்கியமாயிருக்கவேண்டுமென்று அவர் விரும்பினார். அலகா பாத்தில் இண்டிபெண்டெண்டு பத்திரிகை தொடங்கப்பட்ட போது ஒரு கனவானைத் தந்தி மூலமாக, அப்பத்திரிக்கைக்கு ஆசிரிய ராக இருக்கும்படி பண்டிதர் கேட்டுக் கொண்டார். உங்களுக்குத் தேவையான சம்பளம் எவ்வளவு என்று அதில் அவர் கேட்டிருந் தார். இதிலிருந்து அவர் பெருந்தன்மை நன்கு புலனாகும். பண்டி தருக்கு நகைச்சுவை நிரம்ப உண்டு என்பதற்குப் பல உதாரணங்கள் காட்டக் கூடும். இலட்சுமணபுரி சிறையில். சில இளைஞர்களுடன் அவர் வாசஞ் செய்து கொண்டிருந்த போது, அவ்விளைஞர்கள் அதிகமாக உண்பதைக் கண்டு பண்டிதர், அதிமாகச் சாப்பிட்டு அரசாங்கத்தாருக்கு அதிக செலவு வைத்தீர்களானால், மறுபடியும் உங்களைச் சிறைக்கு அனுப்பமாட்டார்கள் என்று கூறினார். பண்டிதர், சுதந்திர இந்தியாவில் மரிக்க வேண்டுமென்று பெரிதும் ஆவல் கொண்டார். ஆனால், இந்தியாவுக்கு ஆத்ம வெற்றி ஏற்பட்ட பிறகு அவர் மறைந்தார். அதுவே நமக்கு ஆறுதல். பம்பாய் கிரானிகில் பண்டித மோதிலால் நேரு இறந்துவிட்டார். நமக்கேற் பட்டுள்ள துக்கத்தினால், அவர் இறந்து விட்டார் என்று உண்மை யில் நம்பக்கூட வில்லை. இந்தியாவின் சரித்திரத்தில் சென்ற பத்து வருஷத்தில் நடை பெற்ற சம்பவங்கள் மிகவும் முக்கியமானவை. இவைகளில் பண்டித நேரு முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். சென்ற பத்தாண்டுகளில், திலகர், தாஸர், அஜ்மல்கான்., லஜபதி, முகம்மதலி முதலிய பல தலைவர்கள் மறைந்துவிட்டார்கள். இவர் களுடன் பண்டித நேரு எவ்வாற்றானும் ஒப்பிடத்தக்கவர். அவரிடத் தில் தன்னல மறுப்பு, போர் புரியுந் திறமை சிறந்த இராஜதந்திரம், ஏழைகளிடத்தில் அன்பு முதலிய யாவும் குடி கொண்டிருந்தன. அவருடைய தியாகத்தை, நமக்குப் பின்னால் வரும் பரம்பரையினர் எப்பொழுதும் மறக்க மாட்டார். சட்ட மறுப்பு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கியதும், அவருக்குப் பண்டித மோதிலால் நேரு பெரிதும் துணையாயிருந்தார். தமது தேசத்தினர் செய்துள்ள தியாகத்தினால், சுதந்திரம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை யுடன் அவர் இறந்து போனார். பண்டிதர் வயோதிகரான பிறகுகூட இளைஞர் களால் பாராட்டப்பட்டு அவர்களின் தலைவராகவும் இருந்தார். அவர், தேகம் மரித்துவிட்டபோதிலும், அவருடைய உயரிய குணங்கள், இந்தியாவின் கோடிக்கணக்கான திரீ புருஷர் களின் மனதில் குடிகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. சென்னை ஹிந்து பண்டித மோதிலாலின் மரணம், இந்தியாவிலுள்ள ஒவ் வொரு வீட்டிலும் துக்கத்தைக் கொடுத்திருக்கிறதென்பதில் ஐயமில்லை. மோதிலால் இந்தியா வின் வயோதிகத் தலைவர்களில் ஒருவர். அது மட்டுமன்று. அவ ருடைய சாமர்த்தியமான தலைமை, இப்போது தேசத்திற்கு அவசியம் வேண்டியிருந்தது. தேசத்திற்காக அவர் எல்லாக் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டார். இயமதர்மராஜனை தாம் வென்று விடப் போவதாக அவர் கூறிக்கொண்டிருந்தார். ஆனால் கடைசியில் அந்தோ! இயமனே வெற்றியடைந்துவிட்டான். இந்தியாவின் நெருக்கடியான சமயங்களில் அதன் சிறந்த தலைவர்களில் ஒருவர் பின் ஒருவராக மறைந்து கொண்டே வருகின்றனர். இஃது இந்தியாவின் துரதிருஷ்டமே யாகும். பண்டித மோதிலால் வாழ்க்கையில் பல இன்பங்களை அநுபவித்தார். எவ்வளவு ஆனந்தத்துடன் அவ்வின்பங்களை அநுப வித்தாரோ அந்த ஆனந்தத்துடனேயே அவ்வின்பங்களை யெல்லாம் துறந்தார். அவர் வாழ்க்கையில் எப்படி சிறந்திருந்தாரோ, அப்படியே மரணத்திலும் சிறந் திருந்தார். பண்டிதரிடத்தில் ஒரு தலைவருக்கு வேண்டிய எல்லாக் குணங்களும் பொருந்தியிருந்தன. லோகமான்ய திலகரைப் போல்,தேசத்திலுள்ள எல்லாக் கட்சியாருடைய நன் மதிப்பையும் அவர் பெற்றிருந்தார். அவரிடத்தில் சர்வ சகோதரத் துவமானது இருந்தது. ஐரோப்பியருடைய மனோபாவங்களை அவர் செவ்வனே உணர்ந்தார். அப்படியே ஐரோப்பியரும் பண்டித ருடைய மனோபாவங்களை நன்கு அறிந்திருந்தனர். இந்தியாவில் தோன்றிய இராஜதந்திரிகளில் அவர் மிகச்சிறந்தவர் என்பதை எவரும் மறுக்க வில்லை. தேசத்திற்காக அவர் பல நன்கொடைகளை அளித்திருக்கிறார். அவைகளில் மிக முக்கியமானது அவருடைய சிறந்த புத்திரனே யாகும். சென்னை சுயராஜ்யா தேசத்தின் தற்போதைய நெருக்கடியான நிலையில் பண்டித மோதிலால் மறைந்து விட்டார். அவருடைய தானத்தைப் பூர்த்தி செய்வது சுலபமல்ல. தேசபந்து தரஸரைப் போல் அவரும் பெரிய தியாகியானார். இந்திர போகத்தில் வாழ்ந்து வந்தவர்களையெல் லாம், சிறந்த தியாக வீரர் களாக மாற்றிய பெருமை காந்தீயத்திற்கு உண்டு. பண்டித மோதிலாலின் வாழ்க்கையில் இந்தத் தியாகமே சூளாமணியாக விளங்குகிறது. அவர் சிறந்த நியாயவாதியா யிருந்தார். சிறந்த அரசியல் கட்சித் தலைவராக விளங்கினார். ஆனால். இவைக ளெல்லாவற்றையும் விடச் சிறந்தது, காங்கிரசைத் தன்மதிப்புக் கொண்ட ஒருசபையாக மாற்றியதே யாகும். தேசீயத் தன்மதிப்புக் கொடியை பண்டித மோதிலால் நேருவே தாங்கி நின்றார். பஞ்சாப் சம்பவங்கள் அவரை முன்னணியில் கொண்டு வரச் செய்தன. சைமன் கமிஷன் வந்த போதும் அவர் எதிர்த்து நின்றார். சுயராஜ்யப் போராட்டத்திற்கு அவர் பெரிய சக்தியை யூட்டினார். அவருடைய குணங் களும், செய்த தியாகங்களுமே இப்பொழுது அவர் ஞாபகர்த்தமாக விளங்கு கின்றன. மதரா மெயில் உண்மையினாலும் தியாகத்தினாலும் ஜனங்களின் நன் மதிப்பைப் பெற்ற பண்டித மோதிலால் மறைந்து விட்டார். அவருடைய எழுபது வருஷ வாழ்க்கையில்., இந்திய அரசியல் அமைப்பில் பலவித மாறுதல்களைக் கண்டார். ஆனால் இன்னொரு மாறுதலைக் காண்பதற்கு முன் அவர் உலகத் தினின்று பிரிந்து விட்டார். அவருடைய எழுபது வருஷ வாழ்க்கையில் அடைந்த அநுப வங்களை வேறெவரும் அடைய வில்லை. அவரைப் போல் அவருடைய தேச மக்களுக்கு உபகாரம் செய்தவர்களும் இல்லை. அவருடைய மரணம், தேசீய துக்கமேயாகும். சமா தானப் பேச்சுகள் நடத்துவதில் அவர் கை தேர்ந்தவர். இச்சமயத் தில் அவர் இறந்து போனது, காங்கிரஸுக்குப் பெரிய நஷ்டமேயாகும். எல்லாச் சமூகத்தா ருடைய அநுதாபமும், அவருடைய குடும்பத்தாருக்கு இச்சமயத்தில் உரியதாக. சென்னை ஜடி ஒரு பெரிய தலைவர் மறைந்து விட்டார். பண்டித மோதிலால் நேரு இறந்து விட்டார். இச் செய்தியைக் கேட்டுத் துக்கப்படாத வர்கள் இருக்க மாட்டார்., தங்களுடைய உழைப்பினாலும் தியாகத்தினாலும், இந்தியாவின் தலையெழுத்தை எழுதியவர்களுள் பண்டித மோதிலால் நேரு தலை சிறந்தவர். அவருடைய கருத்துக்கு மாறுபட்டவர்களிடத்தில் கூட அவர் ஒரு மரியாதையை உண்டு பண்ணி வந்தார். நேரு அறிக்கைக்கு அவர் முக்கிய காரணரா யிருந்தார். அந்த அறிக்கையில் என்ன குறைகள் இருந்தபோதிலும் இந்தியாவின் அறிவு அதில் மிளிர்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. அவருடைய தேசபக்தி, உழைப்பில் இருந்த ஆர்வம், தேச விடுதலையில் அவருக்கிருந்த ஆவல், இவை யாவும் தேசத்திற் காகவே பயன்பட்டன. ஒரு இலட்சியத்திற்காக அவர் எல்லா நலன்களையும் துறந்தார். அது மாத்திரமல்ல; தமது மகனாரையும், குடும்பத்தாரையும்அந்த இலட்சியத்திற்காக அர்ப்பணஞ் செய்தார். அவர், மனிதாபிமானத்தைவிட தேசாபிமானத்தையே பெரிதெனக் கருதினார். சுதேச மித்திரன் விசேஷ அநுபவமும் பொது ஜனங்களுடைய பூரண நம்பிக்கை யும் பெற்றுள்ள பண்டித மோதி லால் நேரு போன்ற அரிய தலைவரை நாம் இந்த சந்தர்ப்பத்தில் இழப்பதற் கில்லை, இருந்தாலும், அவர் செய்து வந்த முயற்சிகள் பலிதமாகும்படி செய்வதற்கு அவருடைய அரிய ஊழியம் அவசியமாக விருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவரை இந்தியா இழக்க நேர்ந்தது. பரம துர்ப்பாக்கி யமே யாகும். இந்தியாவை அவர் வெகுவாக நேசித்தார், இந்தியா தனக்குரிய அந்ததை யடையும்படி செய்வதற்காகத் தம்மையே அவர் பாரத மாதாவுக்கு அர்ப்பணம் செய்து கொண்டார். இம்மட்டோ? தமது சொத்து சுதந்தரங்களைத் துறந்தார்; தாம் அருமையாக நேசித்தவர்களையும் தேச சேவைக்கு அர்ப்பணம் செய்தார். இரு முறை தாம் சிறை சென்றார்; தமது அருமைக் குமாரன், மருமகள், மருமகன் குமாரத்தி எல்லோரும் தேச சேவையிலீடுபட்டுச் சிறை செல்ல அனுமதித்தார். இதுவன்றோ தியாகம்! தேசத்தில் மிகவும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருந்த 1919ஆம் வருஷத்தில் அமிர்தசரஸில் காங்கிர கூடிய போதும், 1929ஆம் வருஷத்தில் கல்கத்தாவில் கூடியபோதும், தங்களுக்குச் சரியான வழியைக் காட்டுவதற்காக அவரை இரண்டு தடவை களிலும் மகா ஜனங்கள் காங்கிரஸின் தலைவராகத் தெரிந்தெடுத்ததி லிருந்தே அவரிடத்தில் அவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்து வந்த தென்பது வெளிப்படுகிறது. இவ்விதம் தலைமைப் பதவியை வகிப்பதற்கு அவருக்குச் சுபாவமாகவே இருந்த யோக்கியதையைப் பரீஷிக்க இந்தியா சட்ட சபையில் இருமுறை அவர் எதிர்க் கட்சியின் தலைவராக இருந்த போது நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. அந்தக் காலங்களில் அவர் தமது திறமையினாலும் சாமர்த்தியத்தினாலும் உத்தியோகதர்கள் உத்தியோகதர் களல்லாதவர்கள் ஆகிய இருதரத்தினுடைய நன்மதிப்பையும் பெற்றார். தேசத்திற்கு அவர் செய்திருக்கும் அரிய ஊழியத்தின் தன்மையை இன்று நாம் மதிப்பிடுவது சாத்தியமில்லை. அவருடைய மரணச் செய்தியானது நம்மை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியிருப்பதால் இப்பொழுது அதை விவரிப்பதும் சாத்தியமில்லை. ஆயினும் சரித்திரக்காரர்கள் இக் காலத்திய வரலாற்றை எழுதுகையில் இந்தியர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக இந்தியாவைச் செய்வதற்காக பாடுபட்டவர்களில் பண்டித மோதிலால் நேருவுக்கு அவர்கள் முதன்மை தானத்தைக் கொடுப்பார் களென்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை. பாரத மாதா தனது அருமைப் புதல்வருள் ஒருவரை இழந்துவிட்டாரென் றும் இந்தியா முழுவதும் அவருடைய மரணத்திற்காக வருந்துகிற தென்றும் மட்டில் இன்று நாம் சொல்லித் நிறுத்திக் கொள்ளு கிறோம். அவருடைய குடும்பத்தினருக்கு நமது மனப்பூர்வமான அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் நாடு பண்டிதரின் மரணத்தால், இந்தியாவுக்கு ஏற்பட்ட நஷ்டங் களுக்கு ஈடு செய்யவே முடியாது. டில்லி சட்ட சபையிலும் காங்கிர சபைகளிலும் பண்டிதருடைய அரசியல் அறிவும், பேச்சு வன்மையும், அஞ்சா நெஞ்சமும், தேசபக்தியும் பிரகாசித்ததை இத்தேச மக்கள் ஒருநாளும் மறக்க முடியாது. பண்டித மணியின் தியாகத்திற்கு ஈடாக எடுத்துக் காட்டுவதற்கு வேறொன்று மில்லாம லிருப்பதே அவருடைய கீர்த்திக்குக் கீரிடமாகின்றது. ஏழையின் துறவில் சிறப்பொன்றுமில்லை. குபேரனுடைய சந்நியாசமே, உலகத்தைக் கவரக் கூடியது. உலக மக்கள் உத்தாரணத் திற்காக, ராஜ்யத்தைத் துறந்தார். புத்தர்; இந்திய தேசீய சுதந்திரத்திற்காக இந்திர போகங்களையும் விட்டொழித்தார் பண்டித மோதிலா.ல் நேரு, அவருடைய மரணத்தால் இந்திய மக்கள் படும் துயரத்தைப் பார்க்கும் துர்ப்பாக்கியம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. 1920ஆம் ஆண்டில் இந்திய தேசீயப் போரில் மோதிலால் இறங்கினார். சென்ற 10 வருஷங்களாகத் தளராமல் போர் புரிந்தார். போர்களத்திலேயே பண்டிதர் உயிர் விட்டா ரென்றால், அவருடைய உள்ளத்தில் குடி கொண்டிருந்த தேசீய தர்மத்தின் வலிமையை என்னென்று சொல்வது! மகாபாரதத்தில் பீஷ்மாச்சாரிக்குக் கிடைத்ததை விட பெரும் பாக்கியம் பண்டித நேருவுக்குச் சித்தித்தைக் கண்டு நமது மனம் ஒருவாறு திருப்தியடைகின்றது. பண்டித ஜவஹர்லாலுக்கும்., அவருடைய குடும்பத்தினருக்கும் நமது துக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். நவசக்தி பண்டிதர் நுண்ணுடல் நற்பேறு பெற்றது. ஆனால் பருவுடல் மறைந்தது. அம்மறைவு உற்றார் உறவினர்களையும், நண்பர்களை யும், மற்றவர்களையும் நைந்து நைந்து உருகச் செய்கிறது. காந்தியடிகளின் அறப் போருக்கு இரண்டு புயங்களாக நின்றவர் தேசபந்து தாஸரும், பண்டித மோதிலால் நேருவுமாவர். ஒற்றைப் புயம் முன்னரே போயிற்று; மற்றைப் புயம் இற்றை போயிற்று. காந்தியடிகளின் துயரை அளக்க வும் போமோ? பண்டித மணி நாட்டு நலங் கருதி நாட்டுக்களித்த பேறுகள் பலப்பல. அவைகளுள் ஒன்று தலைசிறந்தது; அஃதென்னை? தந்தையே மைந்தன் தந்தையறிவுமகனறிவு என்பன பழ மொழிகள். பண்டித மோதிலாலின் மைந்தர் பண்டித ஜவஹர்லால், தந்தையார் காலத்திலேயே தந்தைபோல் பல்லாற்றானும் விளங்கி யது நேயர்கட்குத் தெரியும். பண்டிதர் மோதிலால் எங்கே மறைந் தார்? அவர் தம் மைந்தர் பண்டிதர் ஜவஹர்லால் நேருவில் நிற்கிறார். பண்டித மோதிலால் நேருவின் கல்வி, செல்வம், உழைப்பு, தியாகம், திறம், திடம்,ஆண்மை, விடுதலை வேட்கை முதலிய யாவும் பண்டித ஜவஹர்லால் நேருவாகப் பரிணமித்து நிற்கின்றன. இவ்வுருவைப் பெரும் பேறாக நாட்டுக்கு நல்கிச் சென்றார். பண்டித மோதிலால் நேரு. இதுவே மோதிலால் நாட்டுக்கு நல்கிய தலையாய பேறு. இஃதொரு வழியில் ஆறுதலளிக்கிறதெனினும், அவர் பருவுடல் மறைவு உள்ளத்தை உருகச் செய்யாமலில்லை. பண்டிதரின் கம்பீரத் தோற்றமும்,சிங்க நோக்கும் பீடு நடை யும் அஞ்சா நெஞ்சும் மறை வுற்றன. அவைகளை என்றே காண்போம்! மோதிலால்நேருவின் பிரிவுகுறித்து வருந்தும் மைந்தர்க்கும் மற்றவர்க்கும் நமது அநுதாபத்தை தெரி வித்துக் கொள்ளுகிறோம். உயிர் துறக்கும் வரை நிஷ்காமிய கருமத்தி லீடுபட்டிருந்த பண்டித மோதிலால் நேருவின் ஆன்மா அமைதி யென்னும் ஆண்டவன் பேரொளியில் நிலைத்து நிற்பதாக. லோகோபகாரி பண்டிதர் மோதிலால் நேரு பிறக்கும் பொழுது பெருஞ் செல்வக் குடியில் பிறக்கவில்லையாயினும் மிக நல்ல குடியில் தோன்றி தமது வல்லமையாலும் மதியூகத்தாலும் மிகப் பெருஞ் செல்வரானார். அவர் பெரிய வக்கீல்; சட்ட நிபுணராக விளங்கி னார். லட்சக்கணக்காகப் பொருளீட்டினார். ஆயிரக் கணக்கில் தானம் செய்தார். ஆனந்த பவனம் என்ற மாளிகையில் அவர் உண்மையில் ஆனந்த வாழ்க்கை நடத்தி வந்தார். அவரது ஆடைகள் மாதம் ஒருமுறை ஐரோப்பாவில் நாகரிகத்திற் சிறந்த நகரான பாரிசிலிருந்து வெளுத்து வந்தனவென்றால், அவரது ஆடம்பர வாழ்க்கை எவ்வாறு நடந்ததென்பதை நாம் சொல்ல வேண்டிய தில்லை. ஆனால் மகாத்மா காந்தியின் கூட்டுறவும், பஞ்சாப் படு கொலையும் பண்டிதர் மோதிலாலை அடியோடு மாற்றிவிட்டன. மகாத்மாவின் காந்தம் அவரை முற்றிலும் மாற்றிவிட்டது. பெரிய மிதவாதியா யிருந்த அவர், பெரிய அமிதவாதியாக மாறிவிட்டார். சென்ற பத்து ஆண்டுகளாக அவரது வாழ்க்கை பெருந் தியாக வாழ்க்கையாகவும், தீர வாழ்க்கையாகவும் விளங்கி வந்தது. அவரது குடும்பமே தியாக குடும்பமாக மாறியது. ஆனந்த பவனத்தில் அரச போகத்தில் வாழ்ந்திருந்த மோதிலால் நேரு, தேசத்திற்காக இரு முறை சிறை புகுந்தார். அவரது தனிப் புதல்வரான ஜவஹரிலால் நான்கு முறை சிறைசென்றார். அவர் மருமகள்,மருமகன், மகள், மகன், மாமியார் எல்லோரும் சிறை புகும் பாக்கியம் பெற்றவர்களே. பண்டித மோதிலால் இறப்பதற்குச் சுமார் இரண்டு மாதத்திற்கு முன்வரை சிறையில் இருந்து அவரது முடிவுக்குக் காரணமாக இருந்த நோய் காரணமாகவே விடுதலை பெற்றார். அவரது மகனும் மருமகளும், மருகரும், அவர் மரணத்திற்குச் சுமார் ஒரு வாரத்திற்கு முன்னரே விடுதலையடைந்து அவரது இறுதிக் காலத்தில் அருகி லிருந்து தொண்டு செய்யும் பாக்கியம் பெற்றார்கள். சிராத்தச் சடங்குகள் அலகாபாத் மகாத்மா காந்தியின் ஆணைப்படி 1931ஆம் வருஷம், பிப்ரவரி மாதம் 15ந் தேதி, பண்டித மோதிலால் நேருவின் சிராத்த தினம் இந்தியா வெங்கும், மிகுந்த அமைதியுடனும்அந்த தினத்திற்குரிய ஒரு பெருமையுடனும் கொண்டாடப்பட்டது. அன்று அலகாபாத் தில் பூரண வேலை நிறுத்தம் ஏற்பட்டிருந்தது. அன்று சிவராத்திரி புண்ணிய தினமும் சேர்ந்ததாகலின், ஹிந்துக்கள் பலரும் சிராத் தத்தையும் சிவராத்திரியையும் உத்தேசித்து உண்ணாவிரதம் இருந் தார்கள். காலையில், கங்கையும் யமுனையும் கூடும் சங்கமம் என்னு மிடத்தில் பண்டித ஜவஹரிலால், வைதிகச் சடங்குகளை நடத்தி னார். பகல் பன்னிரண்டரை மணிக்கு ஒரு பெரிய ஊர்வலம் புறப் பட்டு ஆற்றங்கரை சேர்ந்தது. ஊர்வலத்தில் கம்பீரமான ஒருவித அமைதி நிறைந்திருந்தது பெரிதும் குறிப்பிடத்தக்கதாயிருந்தது. ஊர்வலத்தைச் சேர்ந்தவர் அனைவரும் கதரே அணிந்திருந்தனர். சரியாக மூன்று மணிக்கு மகாத்மா காந்தி, பண்டித ஜவஹரிலால் நேரு, ஸ்ரீமதி சரோஜினி தேவி முதலியோர் கூட்டத்திற்கு வந்தனர். மௌலானா அபுல்கலாம் அஸாத் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். பூரண சுயராயம் அடைவதற்காக அனைவரும் விரதம் எடுத்துக் கொள்ள வேண்டு மென்பதைப் பற்றி மகாத்மா காந்தி வகுத்த உறுதிமொழியை, தலைவர் ஜனங்களுக்குப் படித்துக் காட்டி னார். அது வருமாறு:- காலஞ் சென்ற பண்டித மோதிலால் நேரு செய்த தியாகங்களை ஞாபகப்படுத்திக் கொண்டு அவைகளை நிலைநிறுத்துவதற்காக இங்குக் கூடியிருக்கும் நாங்கள் பூரண சுய ராஜ்யம் ஏற்படுவதற்காக, தேசத்தின் பொருட்டு இதுவரை செய்து வந்த தியாகங்களைவிட அதிகமான தியாகங்களைச் செய்ய உறுதி கொள்கிறோம். ஜனங்களனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பிறகு மகாத்மா காந்தி பின் வருமாறு பேசினார்.:- ஆத்மாவுக்கு அழிவில்லை யென்பதை எல்லா மதத்தினரும் நம்புகின்றனர். உடலினின்று பிரிந்து போன ஆத்மாவுக்குச் சாந்தி யளிப்பதற்காகவே சிராத்தங்கள் செய்யப்படு கின்றன. ஆத்மா வானது நிராசையுடன் தேகத்தினின்று பிரிவதில்லை. ஏதோ ஒருவித ஆசை பூர்த்தியாகாமலே ஆத்மாவானது பிரிந்து போகிறது. பண்டித மோதிலால் நேருவுக்கு, சுயராஜ்யம் பெறவேண்டுமென்ற ஆசை பூரணமாக இருந்தது. தேச முழுவதும் விடுதலையடையவேண்டு மென்பதும், ஆட்சி முறை இந்தியர்கள் வசம் இருக்க வேண்டு மென்பதும், நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கும் - அவர்கள் ஹிந்துக் களாக, முலிம்களாக, கிறிதவர்களாக, பார்சிகளாக, சீக்கியர்களாக - நியாயம் வழங்கப்பட வேண்டுமென்பதும் அவர் முழு விருப்பமா யிருந்தது. இந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்விக்கக்கூடிய ஒரு காரியத்தை, அல்லது சிராத்தத்தை, நாம் செய்ய வேண்டுமென்று எனக்குத் தோன்றியது, அதனாலேயே, இன்று நாடெங்கணும் கூட்டங்கள் நடைபெற வேண்டுமென்று நான் அறிக்கை வெளியிட்டேன். கங்கா நதியில் நானம் செய்வது சிராத்தம் செய்வதாகாது. நானத்தினால் தேகம் சுத்தமாகும் என்பதை நான் மறுக்க வில்லை. ஆனால் அந்தக் கரணம் தூய்மை யடையவேண்டுமானால் மனப் பூர்வமான சில காரியங்களைச் செய்ய வேண்டும். இந்தக் காரியங்களைச் செய்வதாகவே நாம் இப்பொழுது உறுதி கொண்டோம். உறுதி கொள்வதோடு நாம்நின்றுவிடாமல் அதைக் காரியத் திலும் செய்து காட்ட வேண்டும். சுயராஜ்யம் ஏற்படுவதற்கு நாம் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் பயனில்லை. அப்படிச் செய்தால் தான், பண்டித நேருவின் ஆத்மா சாந்தியடையும். தாங்கள் எடுத்துக் கொண்ட விரதத்தினின்று மீறக் கூடாதென்ற ஆவலினால் பலர் உயிர் துறக்கச் சித்தமாயிருக்கின் றனர் என்பதை நான் அறிவேன். இப்பொழுது நீங்கள் எடுத்துக் கொண்ட விரதப்படி உறுதியாக நடப்பீர்களென்று நான் நம்பு கிறேன். ஹிந்து-முலிம் ஒற்றுமைக்காக நாம் பாடுபட வேண்டும். இந்த ஒற்றுமையை உண்டாக்க வேண்டுமென்பதையும் பண்டித நேரு தமது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தார். இந்த ஒற்றுமை ஏற்பட்டு விட்டால், சுயராஜ்யம் அடைவது மிகச் சுலபமென்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு பிரிவாருக்கு மட்டும் நன்மை செய்யக்கூடிய சுயராஜ்யம் எனக்கு வேண்டியதில்லை. ஹிந்துக்களுக்கென்றோ, முஸல்மான்களுக் கென்றோ தனியான சுயராஜ்யம் வேண்டுமென்பது, பண்டித மோதிலால் நேருவின் கொள்கையுமன்று; என்னுடைய கொள்கையுமன்று. இரு பிரிவாரும் ஒற்றுமைப்பட்டு வாழக் கூடிய சுயராஜ்யமே எனக்குத் தேவை. ஆதலின் ஒரு பிரிவார், மற்றொரு பிரிவாரைத் தாக்குவ தென்பது எனக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை. ஆதலின் சமூக ஒற்றுமையை உண்டாக்க நாம் அனைவரும் முற்படுவோமாக. பிறகு மௌலானா அபுல்கலாம் அஸாத் பேசுகையில் சுய ராஜ்யம் பெறவேண்டுமென்ற ஆவல் நமக்குப் பூரணமாக இருக்கிற தென்பதை, இப்பொழுது நாம் நீரூபித்து விட்டோம் என்றும், நாம் எடுத்துக் கொண்ட உறுதிமொழிப் படி நடந்து கொள்ள வேண்டு மென்றும், அதன்படி நடந்தால் பண்டித மோதிலாலின் விருப் பத்தைப் பூர்த்தி செய்து விடலாமென்றும் குறிப்பிட்டார். பம்பாய் காந்தியடிகளின் கோரிக்கைப் படி, பம்பாயில் பண்டித நேருவின் சிராத்ததினம் மிக்க விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. ஜனங்களில் பெரும்பாலோர், காலையில் சமுத்திர நானம் செய்து விட்டு, அன்று பூராவும் உண்ணாவிரதமிருந்தார்கள். எங்கும் வேலை நிறுத்தம் ஏற்பட்டிருந்தது. காலையில் காங்கிர தொண்டர்கள் வீதிகள் தோறும் கதர் விற்றார்கள். மாலை மூன்று மணிக்கு, அஸாத் மைதானத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடை பெற்றது. காந்தியடிகளால் வகுக்கப்பட்ட உறுதிமொழிப்படி நடந்து கொள்வதற்காக அனைவரும் விரதமெடுத்துக் கொண்டனர். சென்னை மோதிலால் சிராத்ததினக் கொண்டாட்டம், சென்னையில் , காலை கோகலே ஹாலில் மாணாக்கர்கள் கூட்டத்துடன் தொடங் கப்பட்டது. மோதிலாலின் தியாகத்தைப் பாராட்டிப் பலர் பேசினர். இக்கூட்டத்திற்கு ஸ்ரீமதி காமேசுவரி அம்மாள் தலைமை வகித்தார். மாலையில் ஒரு பெரிய ஊர்வலம் புறப்பட்டு ஹைகோர்ட் கடற்கரைக்குச் சென்றது. அங்கு ஒரு பொதுக்கூட்டம் நடை பெற்றது: அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்கத்தா சிராத்த தினத்தன்று கல்கத்தாவில், பூரண வேலை நிறுத்தம் நடைபெற்றது. நகரத்திலுள்ள ஒவ்வொரு தோட்டத்திலும், தேசீயக் கொடி களின் கீழ் பண்டித மோதிலால் நேருவின் உருவப்படம் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஜனங்கள் ஆங்காங்கு கும்பல் கும்பலாகக் கூடியிருந்தார்கள். பண்டித நேருவின் உருவப்படத் திற்கு பூமாலைகள் போட்டு அனைவரும் வணக்கஞ் செலுத்தினர். பிறகு பெரிய ஊர்வலம் ஒன்று புறப்பட்டுச் சென்று ஆக்டர்லனி உருவச்சிலையின்கீழ்ச் சேர்ந்தது. அப்பொழுது நடை பெற்ற பொதுக் கூட்டத்திற்கு ஸ்ரீமான் சென் குப்தா தலைமை வகித்தார். அனைவரும் மௌனமாக இருந்தனர். ஸ்ரீமான் சென் குப்தா உறுதி மொழியைப் படித்துக் காட்டினார். கூட்டத்தினர் அதை அங்கீ கரித்துக் கொண்டனர். பிறகு கூட்டம் அமைதியாகக் கலைந்தது. இதே மாதிரி கூட்டங்கள் இந்தியாவின் பல பாகங்களிலும் நடை பெற்றன. பண்டித ஜவஹரிலால் நேருவின் நன்றி பண்டித மோதிலால் நேருவின் மரணத்திற்குத் துக்கப் பட்டு, உலகத்தின் பல பாகங் களிலிருந்து பண்டித ஜவஹரி லால் நேருவுக்குத் தந்திகளும் கடிதங்களும் ஆயிரக்கணக்காக வந்தன. அமெரிக்கா, ஜர்மனி, பிரான், இங்கிலாந்து, ருஷியா முதலிய பல இடங்களிலிருந்தும் தந்திகள் வந்தன. இவைகளுக்குப் பதிலாக, பண்டித ஜவஹரிலால் நேரு பின்வரும் செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பி னார்.-எங்களுடைய துக்ககர மான இந்தச் சமயத்தில் எங்க ளுடைய துக்கத்தில் கலந்து கொண்ட இலட்சக் கணக்கான என் நாட்டாருக்கும் எங்களிடத்தில் அநுதாபங்கொண்டு, இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் உலகத்தின் பலபாகங்களிலிருந்தும் செய்திகள் அனுப்பிய பலர்க்கும், துக்கத்தில் மூழ்கியிருக்கும் என் தாயார், என் சகோதரிகள், என் மனைவி ஆகிய இவர்கள் பொருட் டும், என் பொருட்டும் என் நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்துகிறேன். தனித் தனியாக ஒவ்வொருவருக்கும் நன்றியைத் தெரிவிக்க அசக்தனாயிருக் கிறேன். என் தந்தையாருக்கு அன்போடு சிகிச்சை செய்து வந்த பிரபல வைத்தியர்களுக்கும்என் நன்றியைத் தகுந்தபடி தெரிவிக்க முடியாது. எங்களுடைய நண்பரும், தலைவரும், தேசத்தின் துன்பத்தையும் சுதந்திர ஆவலையும் தாங்கிக் கொண்டிருப்பவரும், அப்படித் தாங்கிக் கொள்வதன் மூலமாகப் பிறருடைய சுமையைக் குறைக்க முயல்பவருமான பெரியாருக்கு (மகாத்மா காந்திக்கு) எந்த வார்த்தைகளால் என் உணர்ச்சியைத் தெரிவித்துக் கொள்வேன்? பண்டிதரின் மணிவாக்கு பண்டித மோதிலால் நேரு அவ்வப்பொழுது எழுதிய கட்டு ரைகள், செய்த உபந்நியாசங்கள் முதலியவற்றிலிருந்து, முக்கியமான சில பாகங் களைத் திரட்டி கீழே தருகிறோம்:- தன் கையே தனக்குதவி என்ற கொள்கையில் நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம். நடந்து போன சம்பவங்களைக் குறிக்கும் சரித்திரங் களின்று பாடங் கற்றுக் கொள்ளாத அரசாங் கங்கள் துக்கத்தை அநுபவிக்கின் றன. இங்கிலாந்தின் இராஜ தந்திரத்தினால் சாதிக்க முடியாத காரியங்களை இந்தியர்கள் சாதித்து, வீழ்ந்து போன அரசாங்கங் களுடன் மற்றோர் அரசாங்கத்தையும் சேர்ப்பர் என்பதில் எனக்கு ஐயமில்லை. * * * கலகம் என்ற பதத்திற்கு. சாதாரண அகராதியில் காணப் படும் பொருளை விட விசேஷ பொருள் எதுவுமில்லை. அஃதொரு சாதாரண வார்த்தை. நாங்களும் சமாதானத்தோடு கூடிய கலகக் காரர்கள். நாங்களும் கலகத்தையே விரும்புகிறோம். ஆனால் அஹிம்சா தர்மத்தோடு கூடிய கலகத்தையே விரும்புகிறோம். இரத்தம் சிந்தாத கலகமே வேண்டும் என்று நாங்கள் பன்முறை கூறியுள்ளோம். * * * ஜனங்களுடைய விருப்பத்தைக் கவனியாத அரசாங்கங்கள் பல வீழ்ந்து போயின. இப்பொழுது பிரிட்டிஷ் அரசாங்கமும் ஜனங்களுடைய விருப்பத்தை மதியாம லிருக்கிறது. * * * ஆளப்படுவோரிடத்தில் ஆள்வோருக்கு ஒருவித கடமை இருக்கிறதென்பதை நான் அங்கீகரிக்கிறேன். அப்படியே ஆளப்படு வோருக்கும் ஒரு வித கடமை உண்டு. உலக மனைத்தினாலும் அங்கீகரிக்கப் பட்ட முறைகள்படி தங்களுக்குரிய நியாயமான அரசாங்கம் வேண்டு மென்று பாடுபடவும், அதற்காக எவ்வித தியாகத்தையும், எவ்வித முயற்சியையும் செய்யவும் ஆளப்படு வோருக்கு உரிமை உண்டு. * * * நாம் நமது இலட்சியத்தை எவ்வளவு உயர்வாக வைத்துக் கொண்டிருந்த போதிலும், அந்த இலட்சியத்தை அடைவதற்காக, அநுபவ சாத்தியமான முறைகளையே கையாளவேண்டும். * * * ஒவ்வொரு மனிதனுக்கும், தனது தாய் நாட்டை வசிப்பதற்குத் தகுதியானதாகச் செய்ய, தன்னாலான முயற்சியைச் செய்ய வேண்டும். ஆனால் இந்த முயற்சியைச் செய்வதில், ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு விதமான வழியுண்டு. * * * மனிதனுக்குக் கல்வி புகட்டுவதன் நோக்கம், அவன் ஒத்துவாழ வேண்டுமென்பதேயாகும்; அயலானோடு கூடிவாழ வேண்டு மென்பதே யாகும். தான் நன்னடத்தையுடன் நடந்து கொள்வதே சமூகத்தின் நன்மை யாகப் பரிணமிக்கும். ஆனால் இப்பொழுது, நாட்டில் அநுசரிக்கப்படும் மதமானது, பிரிவினையையே உண்டாக்குவதாயிருக்கிறது. * * * உலகத்திலுள்ள எந்த இரண்டு சமூகத்தாரும், ஒரே இடத்திலிருந்து புறப்பட்டதில்லை; ஒரே வழியையும் பின்பற்றிச் சென்றதில்லை. அது மாத்திரமன்று. ஒரே வழிச் செல்வோரும் அடிக்கடி தங்கள் வழியையும், சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி மாற்றிக் கொள்ளவும் வேண்டியிருக்கிறது. * * * நமது காப்பாளர் என்று கூறிக் கொள்வதில் மகிழ்ச்சியடை யும் பிரிட்டிஷ் அரசாங்கத்தார், உலகத்திலுள்ள எல்லா நாடுகளைக் காட்டிலும் அதிக செலவுள்ள உத்தியோக வர்க்கங்களை வைத்துக் கொண்டிருப்ப தோடு, இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள், இந்தியாவில் விலையாவதற்கு வழி தேடுவதிலேயே கண்ணுங் கருத்துமாயிருக் கின்றனர். * * * ஒரு சமூகத்தைச் சேர்ந்த பல பிரிவினர், ஒற்றுமைப் பட்டிருப்பதிலேயோ அல்லது பிரிந்திருப்பதிலேயோ அச்சமூகத்தின் பலமோ பலஹீனமோ தங்கியிருக்கிறது. * * * பாமர ஜனங்களுடைய அறியாமைக்கும் வறுமைக்கும் அரசாங்கத்தார் காரணர் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் தம்மைப் போல் எவ்விதத்திலும் நல்லவர்களாயுள்ள லட்சக்கணக் கான பேரைத் தீண்டாதார் என்று சொல்லி ஒதுக்கிவைத்திருக்கும் நமது சமூக ஏற்பாடு களுக்கு நாமே காரணர். இது மாத்திரமன்று. நம்மிடையேயுள்ள பல சமூக வேற்றுமை களுக்கு அரசாங்கத்தார் எவ்விதத்திலும் பொறுப்பாளிகள் அல்லர். * * * எவ்வித நிபந்தனையுமின்றி, எவ்வித கட்டுப்பாடுமின்றி, சுதந்திரமா யிருக்க வேண்டுமென்றே மனித ஆன்மா விரும்புகிறது. சுதந்திரத்தை விரும்பாத அல்லது அதை அடைய வேண்டுமென்ற ஆவலில்லாத ஒர் இந்தியன் கூட இல்லையென்றே கருதுகிறேன். * * * பூரண சுயேச்சை கண்ணுக்கெட்டிய தூரத்திலிருக்கும் போதுதான் அதிகாரத்திலுள்ளவர்கள், நம்முடன் சமாதானப் பேச்சுக்கு வரத் தொடங்குவர். அதற்குச் சலியா உழைப்பும், பின்னடையாத் தியாக புத்தியும் இன்றியமையாதன. * * * சுயேச்சை என்றால் உலகத்தினின்று வெளிக் கிளம்பி விடுவதல்ல, இந்த உலகத்தில் நாம் வாழ வேண்டுமானால், அதில் வாழும் பிறரையும் நாம் சந்திக்கவே வேண்டி வரும்., தற்கால உலகத்தில், சுயேச்சையாக இருக்க வேண்டிய ஓர் அரசாங்கம், பிற அரசாங்கங்களுடன், அரசியல் பொருளாதார சம்பந்தங்கள் வைத்துக் கொள்ளாமலிருக்க முடியாது. எவ்வளவுக் கெவ்வளவு நாம் அதிக சுயேச்சை யடைகிறோமோ அவ்வளவுக் கவ்வளவு நாம் வெளியுலகத்துடன் அதிக சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். * * * நம்முடைய உண்மையான சக்தியைக் காட்டினாலன்றி, இங்கிலாந்திடமிருந்து நாம் எதையும் பெற முடியாது. அந்தச் சக்தியைப் பெறுவதற்கு நாம் ஒற்றுமைப்பட்டு ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். கோஷா முறையை நாம் ஒழிக்க வேண்டும். அது நம்மீதுள்ள ஒரு சாபமாகும். புருஷர்களுக்குத் துணை செய்யவே தீரிகள் ஏற்பட்டிருக் கிறார்கள் என்று நாம் கூறு கிறோம். அப்படியானால் தேச வேலையில் அவர்களும் சரி பங் கெடுத்துக் கொள்ளும்படி நாம் ஏன் செய்யக் கூடாது? * * * நமக்குப் பொறுமையும் பொறுமையின்மையும் இரண்டும் வேண்டும் நம்முடன் கருத்து வேற்றுமை கொண்டவர்களுடன் பொறுமை காட்ட வேண்டும். நம்முடைய குறைகளைத் களைந்து கொள்வதில் பொறுமையற்ற தன்மை காட்ட வேண்டும். * * * இளைஞரும் முதியவரும் தேசத்திற்காகச் செய்ய வேண்டிய வேலை ஒன்றுதான். ஆனால் இருவருடைய மனோபாவம் மட்டுமே வேறாயிருக்கிறது. இதற்காக தேசத்தில் வேற்றுமையை யுண்டாக்க வேண்டாமென்று இரு தரத்தினரையும் கேட்டுக் கொள்கிறேன்.  லோகமான்ய திலகர் லோகமான்ய திலகர் உலகம் எப்பொழுதும் ஒரே நிலையில் இருந்ததில்லை; மாறுதலடைந்து கொண்டேயிருக்கும். அம்மாறு தலுக்குக் காரணமா யிருப்பவர் பெரியோரெனப் போற்றப்படுவர். இதை நாம் அநுபவ சித்த மாய்க் காண்கிறோம். இப்பொழுது இந்தியாவின் தலைவரெனப்போற்றப்படுவோர் திலகர். இந்தியா, நாட்டு உணர்ச்சியைப் பெற்றதற்கு இவர் காரணமா யிருந்தவர்; இந்தியாவின் பல பாகங்களிலுமுள்ள பாமரஜனங்கள் அரசியலறிவு பெற்றது இவராலேயே என்று கூறுதல் மிகையாகாது. இவருடைய சரித்திரத்தை ஒவ்வொருவரும் அறிய வேண்டுவது அவசியமாதலின், சுருக்கமாக ஈண்டு எழுதுகின்றோம். பாரத புத்திரர்கள் இதைப்படித்து, திலகரைப் பின் பற்றுவார்களாக. பிறப்பு திலகர், மஹாராஷ்டிர சரித்திரத்தில் பேரும் புகழும் பெற்ற சித்பாவன் பிராமணவமிசத்தில் பிறந்தவர். இந்தச் சித்பாவன் பிராமண வமிசத்திலேயே இந்தியாவின் விக்ரஹம் என்று போற்றப்பட்ட காலஞ் சென்ற கோபால கிருஷ்ணகோகலே பிறந்தது; இந்த வமிசத்திலேதான் மஹாராஷ்டிர மணியாகிய காலஞ்சென்ற மஹாதேவ கோவிந்த ரானடே பிறந்தது; மஹா ராஷ்டிர தேசத்தை அலங்கரிக்க வந்த உத்தம வீரர்கள் யாவரும் இவ்வமிசத்திலேயே பிறந்தவர். பாலகங்காதர திலகர், 1856ஆம் வருஷம் ஜூலை மாதம் 23-ந் தேதி இரத்தினகிரியில் பிறந்தனர். இவருடைய தகப்பனார் கங்காதர இராமச்சந்திர திலகர். இவர் இரத்தினகிரியிலேயே சிறிதுகாலம் உதவி உபாத்தியாயரா யிருந்து பிறகு தானாவிலும் பூனாவிலும் கல்வி இலாகா உதவி இன்பெக்டராக இருந்தார். கங்காதரபண்ட் என்கிற கங்காதர இராமசந்திர திலகர் இலக்கணத்திலும் திரிகோணமிதி (Trignometry) என்கிற கணித சாதிரத்திலும் பேரறிவுபடைத்தவர். இவைகள் சம்பந்தமாகப் பல நூல்களும் வெளியிட்டுள்ளார். இப்பெரியார், தமது புத்திரனின் ஆற்றலையும் அறிவையும் கண்டு மகிழாது 1872ஆம் வருஷம் ஆகட் மாதம் ஈசன் அடியிணை சேர்ந்தனர். அன்னையையும் ஆதியிலேயே இழந்ததால் இளந்திலகர் பதினாறுவயதில் பெற்றோரற்ற பிள்ளையாயினர். இளமையும் தேசபக்தியும் திலகர், தகப்பனார் இறந்த நான்கு மாதத்திற் கப்புறம் மெட்ரி குலேஷன் பரீட்சையில் தேறினர். பிறகு டெக்கான் காலேஜில் சேர்ந்து 1876ஆம் வருஷத்தில், பி.ஏ. பரீட்சையில் தேறினார். 1879ஆம் வருஷத்தில், சட்டப் பரீட்சைக்குப் படித்ததின் பயனாய் எல். எல். பி. பட்டத்தைப் பெற்றனர். இதனால் 1879ஆம் வருஷத்தில் திலகர் பெருமான், பாலகங்காதர திலகர் பி.ஏ.எல்.எல்.பி. என்றழைக்கப்பட்டனர். இவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் போதே பெயர் பெற்ற அகர்க்கரைச் சிநேகம் செய்து கொண்டார். ஸ்ரீமான் அகர்க்கர் என்பவர், பூனா பெர்குஸன் காலேஜுக்குப்பல காலம் பிரின்சிபால் என்கிற தலைமை தானத்தை வகித்திருந்தார். திலகரும் அகர்க்கரும் 1877ஆம் வருஷ முதல் இணைபிரியா நண்பரா யிருந்தனர். இவ்விருவரும், அது முதற்கொண்டே, தேசத்திற்கு எவ் விதமாய் உழைக்கலாம் என்று ஆலோசிக்கத் தொடங்கினர். இந்த ஆலோசனைக்காக இவர் அநேக இரவுகள் தூங்காமலிருந்தனர் என்றும் சொல்வதுமுண்டு. கடைசியில், அரசாங்க உத்தியோகத்தில் என்று அமர்வதில்லை என்று இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்; சிறிய பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியைக் கற்றுக் கொடுக்க ஒரு பள்ளிக் கூடம் தாபிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்தனர். இவ்விருவருடைய எண்ணங்களைக் கண்டு பலர் எள்ளி நகையாடி னர்; இவ்விளைஞரால் இப்பெரிய காரியம் முடியுமோ என்று ஏசினர். ஆனால் இவர் எதற்கும் மனந்தளரவில்லை. இச்சமயத்தில், ஸ்ரீமான் விஷ்ணு கிருஷ்ணசிப்ளங்கர் என்கிற விஷ்ணு சாதிரி இவருடன் வந்து சேர்ந்தனர். இவர் பல காலம் அரசாங்க உத்தி யோகத்தில் அமர்ந் திருந்தவர்; ஆனால், அரசாங்கத்தாரின் கீழ் உத்தி யோகம் பார்த்தலை வெறுத்த வராய்த் தனிமையாக ஒரு பள்ளிக் கூடம் தாபிக்க வேண்டு மென்று பூனாவிற்கு வந்தனர். திலகரும் அகர்க்கரும் இவரைச் சிநேகம் செய்து கொண்டனர். இம்மூவரும் சேர்ந்து, பள்ளிக்கூட தாபனத்தைப் பற்றி யோசனை செய்து கொண்டிருக்கையில், பேரறிஞரும், அஞ்சா நெஞ்சு படைத்தவரு மான ஸ்ரீமான் எம்.பி. நாம் ஜோஷி என்பவர் இவருடன் சேர்ந்து கொண்டார். ஆகவே ஸ்ரீமான்கள். திலகர், விஷ்ணு சாதிரி, நாம் ஜோஷி ஆகிய இம்மூவரும் சேர்ந்து, 1880ஆம் வருஷம் ஜனவரி மாதம் இரண்டாந் தேதி பூனாவில் புதிய இங்கிலீஷ் பள்ளிக்கூடம் என்ற பள்ளிக் கூடத்தை ஆரம்பித்தனர். அதே வருஷத்து ஜூன் மாதத்தில், வடமொழி நிபுணரான வி. எ. ஆப்ட், எம்.ஏ. என்பவர் இவருடைய முயற்சியில் கலந்து கொண்டார். அதே வருஷக் கடைசி யில், அகர்க்கரும் எம்.ஏ., பரீட்சையில் தேறிவிட்டு இவருடன் கூடினர். ஆக இவ்வைவரும் சேர்ந்து தேச சேவைக்குத் தம் காலத்தைச் செலவழிப்பதாக நிச்சயித்தனர். இவர்களைப் பூனாவின் பஞ்ச பாண்டவர்கள் என்று சொல்வதுமுண்டு. இந்த ஐவருக்குமுள்ள ஆற்றலும் அறிவும் அப்பள்ளிக்கூட முயற்சிக்கு மேல் விரிந்து பரந்து நின்றன. ஆகலின் வேறு துறையில் இறங்கி உழைக்க முற்படலாயினர். மஹாராட்டா என்ற ஆங்கில வாராந்தப் பத்திரிகையையும் கேசரி என்ற மஹாராஷ்டிர வாராந்தப் பத்திரிகையையும் நடத்த வாரம்பித்தனர். இவ்விரு பத்திரிகைகளும் வெகு பிரபலமாயின. இன்றும் இவ்விரு பத்திரிகைகளும் மஹாராஷ்டிர தேசத்தில் தலை சிறந்து நிலவுகின்றன. இவைகளுடன் ஸ்ரீமான் விஷ்ணுசாதிரி மேற்படி பத்திரிகை களை அச்சிட ஆரியபூஷணம் என்ற ஓர் அச்சுக்கூடத்தையும், சித்திரத்தில் யாவருக்கும் ஊக்கங்கொடுக்க ஒரு சித்திரச் சாலையை யும் ஏற்படுத்தினார். இந்த ஐவரும் மேற்குறித்த வேலைகளைக் கொண்டு சில காலம் கழித்து வந்தனர். நல்ல விஷயத்திற்கு நாலாயிரம் தடைகள் உண்டாகலின் இவ்வை வருக்கும் சில கஷ்டங்கள் உண்டாயின. கோல்ஹாபூர் மஹாராஜாவை, அச்சமதானத்துக் கார்பாரி என்ற உத்தி யோகதர் தகாத விதமாய் நடத்தியதைக்குறித்து மஹாராட்டா கேசரி பத்திரிகைகள் தைரியமாய்க் கண்டித்து எழுதின. அதனால் மேற்படி கார்பாரி உத்தியோகத்தை வகித்த மிடர் எம். டப்ளியு. பார்வ் என்பவர் மஹாராட்டா பத்திரிகையின் ஆசிரியராகிய திலகர் மீதும் கேசரி பத்திரிகையின் ஆசிரியராகிய அகர்க்கர் மீதும் மான நஷ்டத்திற்கென வழக்குத் தொடுத்தனர். வழக்கு, திலகர் முதலாயினோருக்கு விரோதமாகவே முடிந்தது. திலகரும் அகர்க்கரும் நான்கு மாதகாலம் சிறை வாசம் செய்ய உத்தரவு செய்யப்பட்டனர். திலகர் சிறையைக் கண்டது இதுதான் முதல் தடவை. இவர்களுக்கு நேர்ந்த மற்றொரு கஷ்டம் என்னவென்றால், இவர்களுடைய வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது விஷ்ணு சாதிரி இறந்து போயினர். இதனால் இவருக்கு நேர்ந்த கஷ்டம் அளவிடுதற்குரியதல்ல. திலகரும் அகர்க்கரும் சிறையிலடைபட்டதால் இவர்களுடைய கீர்த்தி அதிகமாயிற்றேயன்றிக் குறையவில்லை. பல பாகங்களினின்றும் இவர்களுக்கு உதவி வந்தது. சிறையிலிருந்த இவர்கள் பொருட்டுப் பூனாவில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது. அதில், திலகருடன் பிற்காலத்தில், அரசியல் விஷயங்களில் மாறு பட்ட கோகலேகூட வேடம்பூண்டு நடித்தனர். இதனால் மஹா ராஷ்டிர தேசத்தில் உள்ள யாவருக்கும் இவரிடத்தில் எத்தகை மதிப்பு இருந்தது என்பது நன்கு விளங்கும். விஷ்ணு சாதிரி இறந்ததும், திலகருடைய பொறுப்பு அதிகமாயிற்று. தேசத்தின் பொருட்டுத் தம் உடல், பொருள், ஆவி மூன்றையுமே தியாகம் செய்த சிறிய கூட்டத்திற்குத் தலைவராய்த் திலகர் விளங்கினார். நாம்ஜோஷி, இவருக்கு வலது கண்போல் விளங்கினார். போதகாசிரியர் பிறகு 1884ஆம் வருஷத்தில், திலகர் அகர்க்கர் நாம் ஜோஷி, ஆப்ட் ஆகிய இவர்கள் தக்ஷிணக்கல்விச் சங்கம் என்ற ஒரு சங்கத்தை தாபித்தார்கள். இந்தச் சங்கத்தில் மேற்சொன்ன நால்வரும் தம் உயிருள்ள வரை அங்கத்தினராயிருப்பதாகத் தீர்மானித்துக் கொண்டனர். சிறிது காலத்திற்கப்புறம் இச்சங்கத்தில் ஸ்ரீமான்கள் வி.பி. கெல்கார், டாராப், எம்.எ. கோல் என்பவரும், இன்னும் சிறிது காலத்திற்கப்புறம் ஸ்ரீமான்கள் கோகலே, பானு, படங்கர் முதலியோரும் சேர்ந்து கொண்டனர். பிறகு 1885ஆம் வருஷத்தில் மேற்சொன்ன, தக்ஷிணக் கல்விச் சங்கத்தின் ஆதரவின் கீழ் ஒரு காலேஜ் ஏற்படுத்தப்பட்டது. அதற்குப் பேர்க்குஸன் காலேஜ் என்று பெயர். மேற்படி தக்ஷிணக் கல்விச் சங்கத்தில் உயிருள்ளளவும் அங்கத்தினர்களாக இருப்பதாய் வாக்குறுதி செய்தவர்கள் இந்தப் பெர்குஸன் காலேஜில் இருபது வருஷகாலம் போதகாசிரியர்களாக இருப்பதாக ஒப்புக்கொண்டார்கள். இந்தக் காலேஜ் பிறகு வெகு பிரபலமாயிற்று. காலேஜுக்கு வேண்டிய பல இடங்கள் வாங்கப் பட்டன. பம்பாய்க் கவர்ன்மெண்டாரும் சில உதவிகள் செய்தனர். எனினும் 1890ஆம் வருஷத்தில் திலகர் காலேஜினின்றும் நீங்கிவிட வேண்டியதாயிற்று. இதற்குக்காரணம் பலவாறு கூறுப. 1888ஆம் வருஷத்தில் அகர்க்கருக்கும் திலகருக்கும் ஜனாசார சீர்திருத்தச் சம்பந்த மாகவும், மதசம்பந்தமாகவும் சில அபிப்பிராய பதேங்கள் உண்டாயின. இஃதொரு காரணம், மற்றும், தக்ஷிணக் கல்விச் சங்கத்தில் ஆயுள்வரை அங்கத்தினர்களாக இருப்பதாக ஒப்புக் கொண்டவர்கள், அவர்கள் ஆயுள் வரை பெர்க்குஸன் காலேஜில் போதகாசிரியர்களாகவே இருக்கவேண்டு மென்பது திலகருடைய அபிப்பிராயம். இந்த அபிப்பிராயம் இவருக்கு நெடுநாளாகவே இருந்தது. சில அங்கத்தினர்கள் இவருக்கு மாறுபாடான அபிப் பிராயங் கொண்டிருந்தார்கள். இஃது இங்ஙனமே இருந்தது. 1889ஆம் வருஷத்தில் கோகலே பூனா சர்வஜனிக் சபையின் காரிய தரிசியாய் வந்ததும் இவ்வபிப்பிராய பேதம் வளர்ந்தது. அதனால் திலகர் 1889ஆம் வருஷம் நவம்பர் மாதம் காலேஜ், தக்ஷிணக்கல்விச் சங்கம் இவை களினின்றும் விலகிக் கொண்டர். அகர்க்கருக்கும் இவருக்கும் ஏற்பட்டிருந்த அபிப்பிராய பேதத்தின் பலனாக அகர்க்கர், கேசரி பத்திரிகையினின்றும் பிரிந்து சுதாரக் என்னும் பத்திரிகையை நடத்த வாரம்பித்தார். சித்திரச் சாலை விஷ்ணு சாதிரி உயிருடன் இருக்குங் காலத்திலேயே அவருக்குச் சொந்தமாயிற்று. ஆக, ஆரியபூஷண அச்சுக்கூடமும், கேசரி மஹாராட்டா என்ற விருபத்திரிகைகளும் திலகர், கெல்கார், எச். என். கோகேல் இம் மூவருக்கும் சொந்தமாயின. கணிதசாதிரத்தில், திலகர்பேரறிவு படைத்தவர். காலேஜில் கணித போதகாசிரியராகவே இருந்தனர். சில சமயங்களில் சமகிருத போதகாசிரிய ராகவும் பூத பௌதிக தத்துவ சாதிர போதகாசிரிய ராகவும் வேலை பார்த்து வந்தார். காலேஜ் மாணவர்களுக்கு இவரிடத்தில் அபிமானம் நிரம்பி இருந்தது, கணித சாதிரப் பயிற்சியில் இவருக்கு நிகராக வேறொருவரு மில்லையென்று சொல் வதுமுண்டு. இவர் நீங்கியது காலேஜுக்குப் பெருத்த நஷ்டமாகவே இருந்தது. பொதுஜன ஊழியம் திலகர், காலேஜினின்று நீங்கியதும், பொது விஷயங்களில் அதிகமாய்த் தலையிட்டுழைக்க ஆரம்பித்தார். இச்சமயத்தில் இராஜப் பிரதிநிதிச் சட்டசபையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு விவாககால நிர்ணயமசோதா என்று பெயர். பெண்கள், விவாகம் செய்து கொள்ளும்படியான வயது வந்த பிறகே, விவாகம் செய்யப்பட வேண்டும் என்பது அம்மசோதாவின் கருத்து. இம்மசோதாவைத் திலகர் எதிர்த்து நின்றார். ஆசார சீர் திருத்தம் வேண்டுமெனினும், அரசாங்கத்தார் ஹிந்து மதாசாரத்தில் தலையிடக் கூடாதென்பது இவர் கொள்கை. இவரைப் பலர் ஆசார சீர்திருத்தக்காரர் அல்லர் என்றும், பழைய சம்பிரதாயங்களையே கைக்கொண்ட வைதிக ரென்றும் நிந்திப்பதுண்டு. அங்ஙனமன்று, இவர் ஆசார சீர்திருத்தத்தை விரும்பினவரே. ஆனால், ஆசார சீர்திருத்தத்தை அநுஷ்டிக்கும் முறையையே வெறுப்பவர். இதனால், பூனாவில் இரண்டு கட்சிகள் உண்டாயின. இவருடைய எதிர்க் கட்சியார் இவரைப் பலவாறு நிந்திக்கலாயினர். எனினும் இவர் எதற்கும் அஞ்சாது தம் கொள்கையையே நிலை நிறுத்தினார். பிறகு திலகர், ஹைகோர்ட்டிலும் ஜில்லாகோர்ட்டுகளிலும் வக்கீல்களாக வேலைபார்க்க விரும்புவோர்க்குச் சட்டசம்பந்தமாகப் பாடங்கள் சொல்லிக் கொடுத்தார். இத்தகைய பள்ளிக்கூடம், பம்பாய் இராஜதானிக்கு அப்பொழுது நூதனமாகவே இருந்தது. சட்டப் பரீட்சைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது கேசரி பத்திரிகைக்கும் ஆசிரியரானார். மஹாராட்டா பத்திரிகைக்குக் கெல்கார் ஆசிரியராயிருந்தார். இங்ஙனம் ஒருவருஷங் கழிந்தது. பிறகு கெல்காருக்குக் காலேஜ் வேலையுடன் பத்திரிகை வேலையையும் பார்த்துக் கொள்ள முடிய வில்லை. ஆகையால் மஹாராட்டா பத்திரிகைக்கும் கேசரி பத்தி ரிகைக்கும், திலகர் சொந்தக்காரரும் ஆசிரியருமாய் விளங்கினார். ஆரிய பூஷண அச்சுக் கூடத்திற்குக் கெல்காரும் எச்.என். கோகே லும் சொந்தக்காரராயினர். திலகர், பத்திரிகைகளுக்கு விஷயதானம் செய்வதோடு நிற்கவில்லை. பகவத்கீதையையும் ருக் வேதத்தையும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். இவ்விரண்டு நூல்களிலும் இவருக்கு அதிக விருப்பமுண்டு. ருக் வேதத்தை ஆராய்ச்சி செய்ததின் பயனாக ஒரு வியாச மெழுதி 1892ஆம் வருஷத்தில் லண்டனில் கூடிய கீழ்த்திசை நூலா ராய்ச்சிச் சங்கத்தாருக்கு அனுப்பினார். அடுத்த வருஷத்தில் அவ் வியாசத்தைச் சில சீர்திருத்தங் களுடன் வேதங்களின் தொன்மையைப் பற்றி ஓர் ஆராய்ச்சி என்ற பெயருடன் புத்தக ரூபமாய் வெளி யிட்டார். ருக்வேதம், கிரேக்கர்கள் ஹிந்துக்களினின்றும் பிரிந்து போவதற்கு முன்னரே எழுதப்பட்டது; அதாவது கி.மு. 4000 வருஷங் களுக்குமுன் ருக்வேதம் எழுதப்பட்டது என்பதே இந்நூலிலுள்ள சாராம்சம். இந்நூலைக்கண்டு புகழாத மேனாட்டு வடமொழி நிபுணர் ஒருவருமில்லை. மாக்முல்லர், வெபர், ஜாகோபி, விட்னி, டாக்டர் ப்ளும் பீல்ட் முதலாயினோர் திலகரின் ஆராய்ச்சித் திறத்தைக் குறித்துப் பலவாறு வியந்து பேசியிருக்கின்றனர். அவை களையெல்லாம் ஈண்டு எடுத்து எழுத இடமில்லை. 1894ஆம் வருஷத்தில், பரோடா சமதானத்தில் செட்டில் மெண்டு இலாகாவிற்கு அதிகாரியாயிருந்த மிடர் பாபட் என்பவர் மீது ஒருவழக்கு கொண்டு வரப்பட்டது. மிடர் பாபட் என்பவர் திலகருக்கு அன்பார்ந்த நண்பர். ஆகலின் அவர் பக்கமாக நின்று உழைத்தார். மிடர் பாபட்டுக்கு எதிராகக் காலஞ் சென்ற பிரோஸிஷா மேட்டாவும், மிடர் பிரான்ஸனும் வழக்கை நடத்தி னார்கள். பாபட் பக்கமாகத் திலகரின் பேருதவியைக் கொண்டு எம்.இ. ஆப்டும், எச்.ஏ. கேரும் வழக்கை நடத்தினார்கள். அச்சமயத் தில் திலகர் பேசியதைக் கண்டு நியாயாதிபதிகள் யாவரும் வியப் படைந்தனர். திலகர், இந்திய அந்நியரால் ஆளப்பட்டுவரும் முறை ஒழுங் கானதல்ல வென்று கண்டு அரசியல் விஷயங்களில் அதிகமாகத் தலையிட்டு உழைத்து வந்தார். இவர், காங்கிர மஹா சபையின் தக்ஷிண கமிட்டிக்கு அநேக வருஷம் காரியதரிசியாயிருந்தார். ஆனால் அக்காங்கிர நடக்கும் இடத்திலேயே ஆசாரச் சீர்திருத்தக் கான்பரென்சு நடக்கும் என்று சொல்லப்பட்டதால், இவர் அவ் வேலையினின்றும் விலகிவிட்டார். இன்னும் பம்பாய் மாகாணக் கான்பரென்சுக்கும் பல காலம் காரியதரிசி யாயிருந்து உழைத்தனர். முதல் ஐந்து கான்பரென்சுகள் இவருடைய பெரு முயற்சியாலேயே நடந்தன. 1893ஆம் வருஷத்தில் இந்துக்களுக்கும் முஸல்மான் களுக்கும் பெரிய கலகம் உண்டாயிற்று. உடனே திலகர் முன் வந்து இருகட்சியாரையும் சமாதானம் செய்தனர். லார்ட் டப்ரினால் உண்டாக்கப்பட்ட பிரித்து வாழ் என்ற கொள்கையை அநுசரிக்கும் ஆங்கிலோ இந்திய உத்தியோகதர்களாலேயே இச்சச்சரவுகளெல் லாம் உண்டாகின்றன என்று இவர் அபிப்பிராயப்பட்டார். அக் கொள்கையை ஒழிப்பதே இவருடைய நோக்கம். அதற்காகவே இவர் பாடுபட்டு வந்தார்; வருகிறார். பம்பாய் யூனிவர்சிடியாரால் இவர் இரண்டு முறை பம்பாய்ச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1895ஆம் வருஷத்தில் பம்பாய்க் கார்பொரேஷனில் ஒரு கமிஷனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பல அரிய வேலைகளைச் செய்தார். ஜனங்களுக்கு நாட்டு உணர்ச்சியை உண்டாக்கச் சில வழி களைத் தேடினார். இறந்துபோன உத்தம வீரர்களைப் பூசிப்பதும், அவர்கள் பொருட்டு விழாக்கள் கொண்டாடுவதும் தேசாபிமானம் உண்டாவதற்குக் காரணமாயிருக்கும் என்பது இவருடைய அபிப் பிராயம். ஆகலின், மஹாராஷ்டிர வீரனாகிய சிவாஜிக்கு விழாக்கள் கொண்டாட வேண்டு மென்றும், அவனை யாவரும் வணங்க வேண்டுமென்றும் தம் பத்திரிகை களில் அடிக்கடி எழுதிக்கொண்டு வந்தார். ராய் கஞ்ச் என்ற இடத்திலுள்ள சிவாஜியின் உருவச்சிலையைப் பழுதுபார்க்க வேண்டுமென்று தம் கேசரி பத்திரிகையில் எழுத ஏறக்குறைய 20,000 ரூபாய் இவருக்குக் கிடைத்தது. அதைக் கொண்டு மேற்படிக் கோட்டையைப் பழுதுபார்த்து, உற்சவங்கள் கொண்டாடினார். தற்காலக் கல்வி, தேசாபிமானம் முதலியவைகளை உண்டாக்கு வதில்லை யென்பதைப் பற்றி இவர் அடிக்கடி மஹாராட்டா பத்திரிகையில் எழுதி வந்தார். இந்தியர்கள் மேன்மையுற வேண்டு மானால் ஒழுக்கக் கல்வி அவசியம் யென்பதை யாவருக்கும் வற் புறுத்தி வந்தார். இந்துக்கள், இந்து மதத்தையும், இவர்களுடைய முன்னோர்களையும் போற்றி வந்தால், உலகத்திலுள்ள எல்லாரை யும்விட மேன்மையடைவார்கள் என்பது திலகருடைய கொள்கை. இங்ஙனமே இவர் அநுசரித்து வந்தார். தம்மதத்திலும் முற் காலத்துப் பெரியோரிடத்திலும் இவருக்கிருக்கும் பக்தி அளவிட முடியாது. திலகர், ஒன்று சொல்லி அதற்கு மாறாக நடப்பவரென்றும் இன்னும் பற்பல விதமாகவும் பலரால் குறை கூறப்பட்டனர். பெண்களுக்குச் சாதிரங் களில் எத்தனை வயதுவரைக்கும் விவாகம் செய்துவையாமல் இருக்கலாம் என்று சொல்லியிருக்கிறதோ அதுவரைக்கும் தம் பெண்ணுக்கு விவாகம் செய்வியாமல் வைத் திருந்து, பிறகே விவாகம் செய்வித்தார். இதனால் இவர் எத்தகைய ஆசார சீர்திருத்தக்காரர் என்பது நன்கு விளங்கும். 1896ஆம் வருஷத்தில் பம்பாய் மாகாணத்தில் பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது இவர் பட்ட கஷ்டங்களுக்கு அளவே இல்லை. தானியக் கடைகள் பல ஏற்படுத்தி, ஏழைகளுக்கு விலை சரசமாகச் சாமான்களைக் கொடுத்து வந்தார். நாகப்பூரிலும் ஷோலாம்பூரிலும் நெசவுக்காரர்கள் பஞ்சத்தினால் அதிக துன்பப் படுவதைக் கண்டு, அவர்களுடைய துன்பத்தைப் போக்கினார். பஞ்ச காலத்தில் குடிகளின் துன்பத்தை எங்ஙனம் போக்குவ தென்பதைப் பற்றிப் பம்பாய் கவர்ன்மெண்டுக்கு யோசனைகள் சொன்னார். ஆனால் கவர்ன்மெண்டார் அவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. 1897ஆம் வருஷத்தில், பம்பாய் மாகாண முழுவதும் பிளேக் நோய் பரவிற்று. அதற்காக இவர் பூனாவில் பல இடங்களில் ஆபத்திரிகள் ஏற்படுத்தினார். பூனாவில் உள்ள பெரிய மனிதர் களெல்லாரும் ஊரை விட்டு வெளியில் ஓடிப்போக இவர் மாத்திரம் அவ்வூரிலேயே இருந்து பிளேக் நோயால் வருந்தியவர்களுக்கு உதவி புரிந்தார். கவர்ன்மெண்டாரிடம், குடிகள்படும் துன்பத்தை அடிக்கடி எடுத்துச் சொன்னார். உயிருக்கும் அஞ்சாது ஏழைகளின் பொருட்டு இவர் பாடுபட்டார். இவ்வளவு நற்காரியங்களை இவர் செய்திருந்த போதிலும், கவர்ன்மெண்டார் இவர் மீது மறக்கருணை செலுத்தாமலிக்கவில்லை. எங்கேயோ இருவர் கொலையுண்டனராம். அதற்காக இவர் சிறையிலடைக்கப்பட்டனர். அந்தோ! அதைப் பற்றி எழுதவும் கை நடுங்கு கின்றது. 1895ஆம் வருஷம் ஜூன் மாதம் 13ந்தேதி சிவாஜியின் உற்சவம் கொண்டாடப்பட்டது. 15ந் தேதி கேசரி பத்திரிகையில் அவ் வுற்சவத்தைப் பற்றி ஒரு வியாசம் வெளி வந்தது. 22ந் தேதி மிடர் ராண்ட் என்பவரும் லெப்டினென்டு அயெர்ட் என்பவரும் கொலை செய்யப்பட்டனர். இவரைக் கொலை செய்தவர் யாவ ரென்று தெரியவில்லை. இக்கொலையானது பம்பாய்க் கவர்ன் மெண்டுக்கும் ஆங்கிலோ இந்தியருக்கும் பெரிய சந்தேகத்தை விளைவித்தது. மேற்படி வருஷம் ஜூலை மாதம் 26-ந் தேதி, பம்பாய்க் கவர்ன்மெண்டார் திலகரைச் சிறையிலடைக்கும்படி உத்தரவு செய்தனர். 27-ந் தேதி இரவு பம்பாயில், திலகர் கைதி யாக்கப்பட்டார். 28-ந் தேதி மாஜிட்ரேட்டின் முன் கொண்டு வரப்பட்டார். தம்மை ஜாமீனில் விடவேண்டுமென்று திலகர் கேட்டுக்கொண்டார். அது மறுக்கப்பட்டது. ஹைகோர்ட்டுக்கு மனு செய்து கொண்டார். அங்கும் மறுக்கப்பட்டது. பிறகு இவ ருடைய வழக்கு ஆகடு மாதம் இரண்டாந் தேதி ஹைகோர்ட் செஷன்ஸுக்குக் கொண்டு வரப்பட்டது. ஜட்ஜாயிருந்தவர் பத்ருதீன் டயாப்ஜி. அப்பொழுது திலகருடைய வக்கீலாயிருந்த மிடர் தேவர், திலகரை ஜாமீனில்விட வேண்டுமென்று மனு செய்து கொண்டார். கவர்ன்மெண்ட் தரப்பில் வாதப்புரிந்த அட்வோகேட்- ஜெனரல் ஜாமீனில் விடக்கூடா தென்று எதிர்த்துப் பேசினார். ஆனால் ஜட்ஜி, திலகரை ஜாமீனில் விட்டு விட்டார். 1897ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி திலகருடைய வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜடி ட்ராசி ஜட்ஜியாயிருந்தார். ஜூரிகள் மொத்தம் ஒன்பதுபேர். அவரில் ஆறுபேர் ஐரோப்பியர். மூன்றுபேர் இந்தியர். விசாரணை முடிந்தது. ஆறு ஐரோப்பியர், திலகர் குற்றவாளியென்று சொன்னார். மூன்று இந்தியர் குற்றவாளி அல்லவென்று சொன்னார். ஆகலின், திலகர் 18 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். பிறகு, திலகர் பிரிவிகௌன்சிலுக்கு அப்பீல் செய்து கொண்டார். பலவருஷம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரதம மந்திரியாயிருந்த மிடர் ஆகுவித் திலகர் பக்கம் வாதம் புரிந்தார். எனினும், சில அசம்பாவிதங் களினால் திலகர் வழக்குத் தோற்றுப் போயிற்று. திலகர் சிறையிலடைக்கப் பட்டதை மேனாட்டிலுள்ள மேதாவிகள் கேட்டு மனம் பொறாதவர்களானார்கள். சர்வில்லியம் ஹண்டரும் மாக் முல்லரும் விக்டோரியா மஹாராணியாருக்குத் திலகரை விடுதலை செய்யவேண்டுமென்று மனு செய்து கொண்டனர். அங்ஙனமே சில நிபந்தனைகளுக்குட்பட்டுத் திலகர் 1898ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 6-ந் தேதி செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டார். சிறைவாசம் செய்ததால் இவர் அதிக பலஹீனராய்ப் போய்விட்டார். சிலமாதகாலம் சிங்க்ஹாட் என்ற இடத்தில் காலங்கழித்தார். பிறகு 1898ஆம் வருஷம் டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த காங்கிரஸைப் பார்த்து விட்டு இலங்கை முதலிய இடங்களுக்குச் சுற்றுப்பிரயாணம் செய்தார். இவர் சிறையிலிருந்த போதும் பேசாமல் இருக்கவில்லை. ருக்வேத ஆராய்ச்சி செய்து வந்தார். அதன் பயனாக, சிறையினின்று வெளிவந்ததும் 1898ஆம் வருஷம் சிங்க் ஹாட்டிலிருந்தபோது வடதுருவத்தில் வேதத்தின் இடம் என்ற பெயர் கொண்ட புதகத்தை எழுதி முடித்தார். ஆனால் அதை சிலகாலம் வெளிப் படுத்தாமலேயிருந்தார். பிறகு 1903ஆம் வருஷம் மார்ச்சு மாதம் அதை வெளிப்படுத்தினார். அந்நூலைப் போற்றாதார் ஒருவரு மில்லை. இஃதிங்ஙன மிருக்கும்போதே, மறுபடியும் இவர் பம்பாய்க் கவர்ன்மெண்டின் அதிருப்திக்குப் பாத்திரமாயினர். இவருடைய நண்பர் ஒருவர் இறந்து போகுந்தறுவாயில் தமது ஆதிக்கெல்லாம் திலகரைத் தலைவராக நியமித்துவிட்டுச் சென்றார். ஆனால் இறந்து போனவருடைய மனைவியார் சில பேருடைய தூண்டுதலினால் திலகர்மீது வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கு 1901ஆம் வருஷ முதல் 1904ஆம் வருஷம்வரை நடந்தது. இந்த வழக்கினால் திலகருக்கு அநேக ஆயிரம் ரூபாய் நஷ்டம். கடைசியில் இவ்வழக்குச் சம்பந்த மாய், மாஜிட்ரேட் திலகருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தார். ஜில்லா செஷன் கோர்ட்டுக்கு இவர் அப்பீல் செய்து கொள்ளத் தண்டனை ஆறுமாதத்திற்குக் குறைக்கப்பட்டது. பிறகு ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய்து கொள்ள இவர்மீது விதிக்கப் பட்ட தண்டனை அடியோடு ரத்து செய்யப்பட்டது. 1904ஆம் வருஷம் மார்ச்சு மாதம் 4-ந் தேதியுடன் இவ்வழக்கு முடிந்தது. இவ்வழக்குக்கு டைமஹாராஜ் கே என்று பெயர். 1905ஆம் வருஷம் திலகர் தமது சொந்த விவகாரங்களைக் கவனிக்க வேண்டியதாயிற்று. இவ்வருஷ முதற்கொண்டே இவர் அரசியற் கிளர்ச்சி களில் அதிகமாகத் தலையிட்டுக் கொண்டார். வங்காளப் பிரிவினையானது அப்பொழுது யாவருக்கும் மன உறுத்தலாயிருந்தது. ஜனங்களெல்லாம் ஒரே மனக்கொதிப்புடைய வர்களாயிருந்தார்கள். அப்பொழுது இவர் அரசாங்கத்தாரின் செய்கையை நியாயமுறையால் கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தார். இவருடைய போக்குச் சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் நாட்டில் இருகட்சிகள் உண்டாயின. 1905-1906ஆம் வருஷங்களில் இவ்விருகட்சிகளுக்குள்ள அபிப்பிராய பேதங்கள் வெளிப்படாமலிருந்தன. 1907ஆம் வருஷம் சூரத்தில் காங்கிர சபை நடைபெற்ற போது இவ்விரு கட்சியாருக்கும் இருந்த அபிப் பிராய பேதம் முருகி எழுந்தது. திலகர் தலைவராயிருந்த கட்சி அமிதவாதக் கட்சி என்றும் கோகலே தலைவரா யிருந்த கட்சி மிதவாதக் கட்சி யென்றும் அழைக்கப்பட்டன. சூரத் காங்கிரஸில் இவ்விரு கட்சியாருக்கும் பெரிய சச்சரவு உண்டாயிற்று. அதன் பயனாக அவ்வருஷத்திய காங்கிர கலைந்து போயிற்று. திலகரைப் பலர் குறை கூறுவாராயினர். ஆனால் இவருடைய நோக்கத்தை ஆய்ந்தோய்ந் தறியாதாரே அங்ஙனம் கூறினர் என்றே நாம் கூறுவோம். திலகர், பிரிட்டிஷார் சம்பந்தத்தை இந்தியாவினின்றும் நீக்கிவிட வேண்டுமென்று சொல்கின்றனர் என்று மிதவாதக் கட்சியார் கூறிவந்தனர். அங்ஙனமன்று. இந்தியாவின் க்ஷேமத்திற்குப் பிரிட்டி ஷார் சம்பந்தம் அவசியம் இருக்க வேண்டுமென்று இவர் பல இடங் களில் வற்புறுத்திப் பேசியிருக்கிறார். இப்பொழுதுள்ள ஆட்சி முறையை மாற்ற வேண்டும் என்பதுதான் இவருடைய நோக்கம். இதையறியாது இவரைக் குறை கூறியது பேதமையேயாகும். சூரத் பிரிவினையைக் குறித்து ஈண்டெழுதப் புகின் பெரிய பாரதமாய் முடியும். ஆகலின் அதை அடியோடு விடுகின்றோம். ஒன்று மாத்திரம் கூறவேண்டியதாயிருக்கிறது. அது சூரத் பிரிவினைக்குக் காரணம் திலகர் அல்லர் என்பதுதான். சூரத் பிரிவினைதொட்டு, அரசங்கத்தார் திலகர் மீது மறக் கருணையே பாராட்டலாயினர். சூரத் பிரிவின் போது இந்தியா முழுவதும் ஒரு கொதிப்புண்டாயிற்று. ஏனெனில், மாட்சிமை தங்கிய கர்சன் பிரவு வங்காளத்தை இருபிரிவாகச் செய்துவிட்டுச் சென்றார். அதனால் இந்தியர் யாவரும் கோபமடைந்திருந்தனர். இதன் காரணமாக வங்காளத்தில் சில இடங்களில் சில்லரைக் குழப் பங்கள் நேர்ந்தன. இவைகளை அரசாங்கத்தார் அடக்குமுறைச் சட்டங்களினால் அடக்க வாரம்பித்தனர். இதனால் இந்தியா முழுதும் கிளர்ச்சி உண்டாயிற்று. எங்கும் ஒரே கலக்கமாய் இருந்தது. இதுவே அக்காலத்துண்டான கொதிப்புக்குக் காரணம். 1908ஆம் வருஷத்தில் முசவர்பூர் என்ற இடத்தில் இரண்டு ஐரோப்பிய திரீகள் பாம் என்ற வெடிகுண்டினால் கொல்லப் பட்டார்கள். இஃது அரசாங்கத்தாருக்குப் பெரிய அச்சத்தை விளை வித்தது. அப்பொழுது ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகளெல்லாம் அடக்கு முறைச் சட்டங் களினாலேயே இவைகளை அடக்கவேண்டு மென்று கூறின. இந்தியப் பத்திரிகைகளெல்லாம், சமாதானமாகவே இவைகளை அடக்க வேண்டு மென்று கூறின. ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் அப்பொழுது செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. பயோனீர் பத்திரிகை. ஒரு பட்டணத்திலோ அல்லது ஒரு ஜில்லாவிலோ உள்ள கலகக் காரர்களைக் கைது செய்து யாராவது ஒருவர் கொல்லப்பட்டால், அக்கலகக் காரர்களில் பத்துப் பேர் சுடப்பட வேண்டும். இம்மாதிரி செய்தால் இக்குழப்பங்களெல்லாம் நின்றுவிடும் என்று எழுதியது. இந்தப் பாம் விஷயத்தைப் பற்றித் திலகர் தமது கேசரி பத்திரிகையில் அடிக்கடி எழுதி வந்தார்; இத்தகைய குழப்பங்களை ஒழிப்பது அடக்குமுறைச் சட்டங்களினால் அல்ல வென்றும், இந்தியாவின் உண்மை நிலையை அதிகாரவர்க்கத்தினர் அறிய வில்லையென்றும், இன்னும் அதிக அடக்குமுறைச் சட்டங் களினால் அதிக குழப்பங்களே உண்டாகும் என்றும், அரசாங்கத் தார் அமைதியுடனும் கருணையுடனும் இவைகளைக் கவனிக்க வேண்டுமென்றும் தம் பத்திரிகையில் வற்புறுத்தி எழுதி வந்தார். இவர் எழுதிய வியாசங்கள் கவர்ன்மெண்டாருக்குப் பிடிக்க வில்லை. ஆகலின் திலகரைக் கைதிசெய்து விசாரணைக்குட்படுத்தினர். இச் சமயத்தில் இவர் பம்பாயில் இருந்தார். சிறையிலடைக்கப்பட்டதும், தம்மை ஜாமீனில் விடும்படி பன்முறை விண்ணப்பம் செய்து கொண்டார். பயன் விளையவில்லை. இதனால் இவருடைய தேக பலம் குன்றியது மன்றி, தம் வழக்குக்கு வேண்டிய விஷயங்களைச் சித்தப்படுத்திக் கொள்வதற்கும் அவகாசமில்லாமற் போயிற்று. இவருடைய வழக்குக்கு நியாயாதிபதியாயிருந்தவர் ஜடிதேவர் என்பவர். இவரே, 1897ஆம் வருஷத்தில் திலகர்மீது கொண்டுவரப்பட்ட வழக்கில் திலகர் பக்கம் வக்கீலாயிருந்து வாதித்தவர். இப்பொழுது திலகரை ஜாமீனில் விட முடியாது என்று சொல்பவர் இவரே. வழக்கு 1908ஆம் வருஷம் ஜூலை மாதம் 13-ந் தேதி திங்கட் கிழமை தொடங்கிற்று. திலகர் பக்கம் வக்கீல் ஒருவருமில்லை; தாமே வாதித்தார். இவ்வழககிற்கு ஜூரிகள் ஒன்பது பேர். இவரில் ஏழு பேர் ஐரோப்பியர்; இரண்டு பேர் பார்சிகள். வழக்கு எட்டுநாள் நடந்தது. நியாயாதிபதிக்கும் ஜுரிகளுக்கும் மஹாராஷ்டிர பாஷை தெரியாதென்றும் இவ்வழக்கிற்குக் காரணமாயுள்ள தம் பத்திரிகை யில் பிரசுரமான விஷயங்களையொட்டிக் கவர்ன்மெண்டார் ஆங்கிலத்தில் செய்த மொழி பெயர்ப்புத் தவறென்றும், அம்மொழி பெயர்ப்பை நம்பி ஒருவரும் ஒருவிதமான முடிவுக்கு வரக்கூடா தென்றும், இராஜத் துரோகமான விஷயங்கள் ஒன்றும் தாம் எழுத வில்லையென்றும் திலகர் வாதம்புரிந்தார். இதைப் பற்றியே ஐந்து நாள் பேசினார். ஜுரிகளுக்கு எல்லவாற்றையும் விளக்கமாய் எடுத்துக் காட்டினார். ஜுரிகளைப் பார்த்து, ஒவ்வொரு வகுப்பாரும் ஒவ்வொரு விதமான அபிப்பிராயங் களைக் கொண்டிருக்கின்றனர்; ஒவ்வொரு வகுப்பாரும் அவரவ ருடைய அபிப்பிராயங்களை வெளியிட இடங்கொடுக்கப்பட வேண்டும். நான், உங்களுடைய தயவைச் சம்பாதிக்க இங்கு வர வில்லை. என்னுடைய செய்கையினால் உண்டான நஷ்டங்களுக்கு நான் பாத்தியப்படச் சித்தமாயிருக்கிறேன். அதைப் பற்றி இப்பொழுது ஒன்றுங் கேள்வி யில்லை. எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும்போது இவ்வியாசங்களை எழுதினேனென்று உங்களுக்கு நான் இப்பொழுது சொல்லப் போவதில்லை. நான் ஒரு பைத்தியக்காரனல்ல. பொது ஜனங்களின் நன்மைக்கு இவை களை எழுதுவது என் கடமை என்ற நம்பிக்கை கொண்டுதான் இவ்வியாசங் களை எழுதினேன். என்னுடைய சமூகத்தாரின் எண்ணம் இவைகளே என்று எனக்குத் தெரியும். எனது சமூகத்தாரின் நன்மைகளைக் காப்பதற்கே இந்த எண்ணங்களை வேண்டு மென்றே வெளிப்படுத்தினேன். ஜனங்களுடைய நன்மைக்கும், அரசாங்கத்தாரின் நன்மைக்கும் இவை களை வெளிப்படுத்தினேன் என்று யான் கூறுவதை நீங்கள் நம்புங்கள். என்னைப் பற்றி நீங்கள் எந்த விதமான அபிப்பிராயம் வேண்டுமென்றாலும் கொண்டிருக் கலாம்; என்னை நீங்கள் உங்கள் மனதார வெறுக்கலாம். ஆனால் நீங்கள் நல்லெண்ணத்துடன் (கௌரவமாக) இவ்விஷயத்தை ஆராய்ந்து பார்த்தீர்களானால் என்னைக் குற்றவாளி அல்ல என்றே தீர்மானிப்பீர்கள். என்று கூறினர். இவர் அந்த ஐந்து நாளும் யாதொரு ஆராய்ச்சியு மின்றிப் பேசியதைக் கண்டு வியப்படையாதவரில்லை. கவர்ன்மெண்ட் தரப்பில் அட்வோகேட் ஜெனரலான மிடர் பிரான்சன் வாதித்தார். திலகர் தருக்க முறையாக வாதித்துவர மிடர் பிரான்சன் திலகரையே தம் மனம்போனவாறு பேசினார். வழக்கு ஆரம்பித்த எட்டாநாள் (1908ஆம் வருஷம் ஜுலை மீ 22 புதன்கிழமை) பகல் 12-மணிக்குத் திலகர் பேசிமுடித்தார். பிறகு அட்வோகேட் ஜெனரல் பேச ஆரம்பித்து அன்று மாலை ஐந்து மணிக்கு முடித்தார். பிறகு நியாயாதிபதியான ஜடி தேவர், வழக்கின் சாராம்சத்தைத் தொகுத்து ஜுரிகளுக்குச் சொன்னார். இரவு 8-3 மணிக்கு ஜுரிகள் பிரத்தியேக அறைக்குச் சென்று ஆலோசனை செய்தார்கள். 9-20 மணிக்குத் திரும்பி வந்து திலகர் குற்றவாளியே என்று ஏழு ஐரோப்பிய ஜுரிகளும் குற்றவாளி அல்ல என்று இரண்டு பார்சி ஜுரிகளும் சொன்னார்கள். ஏழு பெயருடைய அபிப்பி ராயத்தையே ஒப்புக்கொண்டு, நியாயாதிபதி இரவு பத்து மணிக்குத் தீர்ப்புச் சொன்னார். 1897ஆம் வருஷத்தில் திலவர் பக்கம் வக்கீலா யிருந்து பேசிய மிடர் தேவர், 1908ஆம் வருஷத்தில் திலகர் வழக்கில் நியாயாதிபதியாக அமர்ந்து தீர்ப்புச் சொல்லும்போது திலகரைப் பார்த்துப் பின் வருமாறு கூறினார்:- நீர், எவரும் சந்தேகிக்க வொண்ணாத திறமையும், சக்தியும் செல்வாக்கும் பெற்றுள்ளீர் என்பதிற் சந்தேகமில்லை. அந்தச் சக்தியையும் செல்வாக்கையும் உம்முடைய தேசத்தின் நன்மைக்குச் செலவழித்தால், நீர் இப்பொழுது எந்த ஜனங்களின் குறைகளை எடுத்துச் சொல்ல வந்தீரோ அந்த ஜனங்களுக்கு அதிக நன்மையும் சந்தோஷமும் உண்டாகும். *** அரசியற் கிளர்ச்சிகளில் பாம் என்ற குண்டுகளை உபயோகிப்பது சரியானது என்று மாறுபாடானதும் வியாதியுள்ளதுமான மனதே எண்ணும். இத்தகைய மனதுடையோரே நீர் எழுதின வியாசங்கள் சரியானவை என்று சொல்வர். *** உம்முடைய வயதையும் பிற விஷயங்களையும் ஆலோசித்தால், நீர் எந்த நாட்டிற்கு நன்மை செய்கிறதாக முன் வந்திருக்கிறீரோ அந்நாட்டின் சமாதானத்தின் பொருட்டும் க்ஷேமத்தின் பொருட்டும், இத்தேசத்தை விட்டு வெளியேயிருப்பது நலம் என்று தோன்றுகின்றது. என்ன பெருமை பொருந்திய வார்த்தைகள்! கடைசியில் திலகர் பெருமான் ஆறுவருஷம் தீபாந்தர சிக்ஷையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டார். தீர்ப்புச் சொன்ன அன்றிரவு பம்பாயில் உண்டான குழப்பத் திற்கு அளவேயில்லை. திலகர் பொருட்டு, நீதி தலம் (ஹைகோர்ட்டு) இரவு பத்துமணிவரைக்கும் இருக்கும் என்று ஒருவரும் நினைக்க வில்லை. மறுநாள் கடைகளெல்லாம் மூடப்பட்டன. தொழிற்சாலை களின் வேலைக்காரர் யாவரும் வேலைநிறுத்தம் செய்தனர். எங்கும் கலகமும் கலக்கமும் உண்டாயின. உடனே திலகர் பர்மாவிலுள்ள மாண்டலேவுக்குக் கொண்டு போகப்பட்டனர். திலகரின் ஆயுள் இந்தத் தண்டனையோடு முடிவு பெற்றது என்று பலர் அஞ்சினர். உற்றார் உறவினரையும், நண்பர்களையும் அவர் பாராத படி தடுக்கப்பட்டனர் ஆனால் திலகர் எதற்கும் அஞ்ச வில்லை. வழக்கு முடியுந்தறுவாயில், நியாயாதிபதி திலகரைப் பார்த்து, நீர், சொல்ல விரும்புவது ஏதேனும் உண்டோ என வினவ; திலகர் நான் கூற விரும்புவது ஒன்றே. ஜுரிகள் என்னைக் குற்றவாளி என்று தீர்மானித்தபோதிலும், நான் குற்றத்தை அறியாதவன் என்றே உறுதி கூறுகிறேன். விதியை நடத்தும் சக்திகள் மிகப் பெரியவை. சுயேச்சையாய் இருப்பதைவிடக் கஷ்டமனுபவிப்பதனாலேயே என் நோக்கம் கை கூட வேண்டுமென்பது கடவுளின் திருவுளம் போலும். என்று எந்த மன உறுதியுடன் கூறினரோ அந்த மன உறுதியுடன் தான் சிறை புகுந்து காலங்கழித்தார். சிறையில் இவர் வீணாகக் காலங்கழிக்க வில்லை. தாம் என்றும் போற்றும் நூலாகிய பகவத் கீதையை ஆராய்ச்சி செய்தார். சிறையினின்று வெளி வந்ததும் தாம் ஆராய்ச்சி செய்ததை கீதாரகயம் என்ற பெயர் கொடுத்துப் புதக ரூபமாய் வெளியிட்டனர். அப்புதகத்தின் பிரதிகள் ஒரு வாரத்தில் அநேக ஆயிரம் செலவாயின என்று சொல்லப்படுகின்றது. 1914ஆம் வருஷம் சிறையினின்று வெளி வந்ததும் மறுபடியும் அரசியல் விஷயங்களில் தலையிடத் தொடங்கினார். சிறைபுகுவ தற்குமுன் அரசியல் விஷயங்களைப் பற்றித் தாம் என்ன அபிப் பிராயம் கொண்டிருந்தாரோ அதே அபிப்பிராயத்தையே அப் பொழுதும் கொண்டிருந்தார். பிறகு இவரைக் காங்கிர மஹா சபையில் கொண்டு வர இந்தியர் யாவரும் பிரயத்தனப்பட்டனர். கடைசியில் 1916ஆம் வருஷம் லக்நௌவில் பாபு அம்பிகாசரன் மஜும்தாரின் தலைமையின் கீழ்க் கூடிய காங்கிர சபையில் திலகரும் அவரைச் சார்ந்தோரும் வந்து பேசினர். திலகரும் கோகலேயும் திலகருக்கும் கோகலேவுக்கும் அரசியல் விஷயங்களில் அபிப்பிராய பேதம் உண்டு. அபிப்பிராய பேதம் உண்டாவது இயல்பே. ஆனால் நேரான பகை ஒருவருக்கும் கிடையாது என்றே சொல்லலாம். 1915ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் கோகலே இறந்து போனார். அப்போது, திலகர் பெருமான், சுடுகாட்டில், கோகலே யின் சவம் ஒருபுறம் கிடக்க, அவர் அருகு நின்றவராய், யாவர் உள்ளமும் உருக உடல் நடுங்கப்பின் வரும் வார்த்தை களை கூறினார். சந்தோஷப்படுவதற்கு இது காலமல்ல; இது கண்ணீர் விடுங் காலம்; மிடர் கோகலே இறந்துபோன நஷ்டத்தினால் நாம் கொண்டிருக்கும் விசனத்தை வெளிப்படுத்துங்காலம். இந்த இந்தியாவின் மாணிக்கம் - மஹாராஷ்டிரத்தின் ஆபரணம் - உழைப்பாளிகளின் தலைவர், இப்பொழுது இடுகாட்டில் நீண்ட சிரமபரிகாரம் செய்து கொண்டிருக்கிறார். அவரைப் பாருங்கள்; அவரைப் பின்பற்றப் பிரயத்தனப்படுங்கள். மிடர் கோகலே, யாவருக்கும் திருப்தியாகத் தம் வேலையைச் செய்துவிட்டு இப்பொழுது நம் மத்தியினின்றும் நீங்கிவிட்டார். இங்குள்ள யாராவது அவருக்குப் பதிலாகத் தேசத்திற்கு நன்மை செய்ய முன்வருவீரா? அவருடைய பெயர் என்றும் அழியாதிருக்கும்படி செய்துவிட்டு, இப்பொழுது ஒரு வெற்றி வீரனைப்போல் வெளிச் செல்கின்றார். இங்குக் கூடியிருப்பவர்கள் மாத்திரம் அல்ல - இந்தியாவிலுள்ள எந்த மனிதனும், தன் தாய் நாட்டிற்குச் செய்ய வேண்டியவைகளைச் சரியாகச் செய்ததாக அடுத்த உலகத்தில் கடவுள்முன் திருப்தியாய்ச் சொல்ல முடியாது. இது காறும் ஒரு சிலரே தாங்கள் செய்த உண்மை உழைப்பைப் பற்றிக் கடவுள் முன் சொல்லும் படியான பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றனர். மிடர் கோகலேயை அவருடைய இளைமை முதற்கொண்டு யான் அறி வேன். ஆரம்பமுதல் அவர் சாதாரண மனிதனாகவே இருந்தவர் அவர் இனாம் தாராயில்லை; ஜாகீர்தாராயில்லை; ஒரு தலைவரா யில்லை. இங்குக் கூடியிருக்கும் நம்மெல்லோரையும் போல் அவர் சாதாரண மனிதராக இருந்தார். அவர் முன்னுக்கு வந்த தெல்லாம் அவருடைய அறிவினாலும், திறமையினாலும், உழைப் பினாலுமே. மிடர் கோகலே நமது மத்தியினின்றும் இப்பொழுது நீங்கிவிட்டார். ஆனால் அவரிடம் இன்று நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பல அமிசங்களை விட்டுச் சென்றிருக்கிறார். இங்குள்ள ஒவ்வொருவரும் அவரையே வழிகாட்டியாய்க் கொள்ள வேண்டும். அவரைப் பின் பற்றி நீங்கள் நடந்து ஒழுகுவீர்களா னால், அவர் அடுத்த உலகத்திலும் சந்தோஷமுற்றிருப்பார். திலகரின் இம்மொழிகளைக் கேட்டக் கல்லும் கரைந்துருகியிருக்கும். பிறகு, திலகர், சுய ஆட்சிப் பிரசார வேலையில் அதிக ஊக்கங் காட்டினார். மஹாராஷ்டிர தேச முழுவதிலும் பல சுய ஆட்சிச் சங்கங்கள் தாபித்தார். 1916ஆம் வருஷம் மே, ஜூன் மாதங்களில் பல இடங்களில் பிரயாணம் செய்து உபந்நியாசங்கள் புரிந்து பாமர ஜனங்களுக்கு அரசியலறிவை ஊட்டினார். இவர் இங்ஙனம் உபந்நியாசங்கள் புரிவது அரசாங்கத்தாருக்குப் பிடிக்கவில்லை. 1916ஆம் வருஷம் ஜூலை மாதம் திலகர் பூனா மாஜிட்ரேட்டால் 40000 ரூபாய் நன்னடக்கை ஜாமீனாகக் கேட்கப்பட்டார். ஜில்லா ஜட்ஜும் பூனா மாஜிட்ரேட்டின் தீர்மானத்தை உறுதிப்படுத் தினார். உடனே திலகர் பம்பாய் ஹைகோர்ட்டுக்கு அப்பீல் செய்து கொண்டார். இந்த ஒரு முறையே திலகர் பக்கம் நியாயம் ஏற்பட்டது. ஹைகோர்ட்டு ஜட்ஜிகள் திலகர் இராஜத்துரோகமான உபந்நியாசங்கள் புரியவில்லை யென்றும் நன்னடக்கை ஜாமீன் கேட்பது தவறென்றும் தீர்ப்புச் செய்து விட்டார்கள். பூனா மாஜிட்ரேட், திலகர் நன்னடக்கை ஜாமீன் கட்ட வேண்டுமென்று உத்தரவு செய்த நாள் திலகரது 61-வது வருஷ நாள். அன்று அவரைச் சார்ந்தோர் அவர் மாட்டுள்ள அன்பின் அறிகுறி யாக ஒரு லட்சம் ரூபாய் காணிக்கையாகக் கொடுத்தனர். பிறகு திலகர் பஞ்சாப் மாகாணத்திலும் டெல்லி மாகாணத்தி லும் பிரவேசிக்கக் கூடாதென்று தடுக்கப்பட்டார். இன்னும் அவ் வுத்தரவு நீங்கினபாடில்லை. ஆனால் இந்தியா மந்திரியான மிடர் மாண்டேகு 1917ஆம் வருஷம் டிசம்பர் மாதம் டில்லியிலிருக்கும் போது அவரைக் காணுமாறு திலகர் டெல்லிக்கு வந்தனர். அப்பொழுது மாத்திரம் அரசாங்கத்தார் திலகருக்குப் பிரத்தியேக உத்தரவு கொடுத்தனர். 1916 - 1917ஆம் வருஷக் காங்கிர சபைகளில் இவர் சுய ஆட்சித் தீர்மானத்தைப் பற்றி வெகு விரிவாகவும் அழகாகவும் பேசி யிருக்கிறார். சுய ஆட்சி வேண்டாமென்று கூறுபவர் இவருடைய பேச்சுகளை வாசித்துத் திருந்துதல் அவசியம். 1917ஆம் வருஷம் நவம்பர் மாதம் இந்தியா மந்திரியான மிடர் மாண்டேகு இந்தியாவிற்கு வந்து இந்தியாவின் சீர்திருத் தத்தைக் குறித்து விசாரித்து வந்தார். இஃது இங்ஙனம் இருக்க. இங்கிலாந்தில் சில தேசத் துரோகிகள் இந்து பிரிட்டிஷ் சங்கம் என்ற ஒரு சங்கத்தை தாபித்துக் கொண்டு இந்தியா சுய ஆட்சி பெறாவண்ணம் வேண்டிய இடையூறுகளைச் செய்து கொண்டு வருகின்றார்கள். அவர்களுடைய சொற்களைக் கேட்டுப் பிரிட்டிஷ் குடிமக்கள் மயங்காவண்ணம் இந்தியாவிலிருந்து சில பிரதிநிதிகள் செல்ல வேண்டியதாயிற்று. ஆகவே இந்தியாவிலிருந்து ஹோம் ரூல் டெபுடேஷன்கள் சில சென்றன. முதல் டெபுடேஷனில் ஸ்ரீமான்கள் சேலம் நரசிம்மையர், மஞ்சேரி இராமய்யர், ஜோசப் சென்றனர். இம்மூவரும் சென்னை இராஜதானியைச் சேர்ந்தவர். இவர் மார்ச்சு மாதம் 10-ந் தேதி பம்பாயினின்றும் இங்கிலாந்திற்குப் புறப்பட்டார். இரண்டாவது கூட்டத்தில் பம்பாயில் பிரசுரமாகும் பம்பாய் கிரானிகல் என்ற ஆங்கிலப்பத்திரிகையின் உபபத்திராதி பராகிய ஸ்ரீமான் சையத் உசேனும், ஸ்ரீமான் இக்பல் நாராயன் குர்த்துவும் சேர்ந்து சென்றனர். இவர் மார்ச்சு மாதம் 17ந்தேதி பம்பாயை விட்டுப் புறப்பட்டனர். மூன்றாவது கூட்டம் மார்ச்சு மாதம் 27ந் தேதி திலகரின் தலைமையின் கீழ்ப் பம்பாயினின்றும் புறப்பட்டது. இக்கூட்டத்தில் சேர்ந்தவர் லோகமான்ய திலகர், விபின சந்திரபாலர், நரசிம்மசிந்தாமணி கெல்கார், ஆர்.பி. காந்திகார், ஜி. எ. கபார்தே ஆகிய இவர்கள். இவர்கள் இலங்கையிலுள்ள கொழும்புத் துறை முகத்தில் கப்பல் ஏறி இங்கிலாந்து செல்வதாய் நிச்சயஞ்செய்திருந்தனர்; அதற்குச் சென்னை வழியாகச் செல்ல வேண்டியிருந்ததால் மார்ச்சு மாதம் 30.ந் தேதி சனிக்கிழமை காலை 9-50 மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தனர். பெரிய ஊர்வலம் வந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை திலகருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் உபசாரப்பத்திரம் ஒன்று வாசித்துக் கொடுக்கப் பட்டது. அப்பொழுது சுமார் இரு பதினாயிரம் ஜனங்கள் கூடி யிருந்தனர். இதனால் சென்னைவாசிகளுக்குத் திலகரிடத்தில் எவ்வளவு மரியாதையும் பக்தியும் இருந்தனவென்பது நன்கு விளங்கும். பிறகு தென்னாட்டு வழியாக இலங்கைக்குச் சென்றனர். வழியில் திலகருக்கு நடந்த உபசாரங்கள் சொல்லமுடியாதன. இலங்கையிலுள்ள கொழும்பு நகரம் சென்று கப்பலில் ஏறுமுன்னர், இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் யுத்த சபையார் சுயஆட்சி டெபு டேஷன்கள் இங்கிலாந்திற்கு வரக்கூடாவென உத்தரவு செய்து விட்டனர். திலகர் இராஜப்பிரதிநிதி முதலாயினோருக்குத் தந்திகள் பல கொடுத்தும் பயனடையவில்லை. சர்வாலண்டைன் சிரால்மீது இவர் தொடுத்திருந்த வழக்குச் சம்பந்தமாகவும் செல்லக்கூடாதெனத் தடுக்கப் பட்டார். கடைசியில் இங்கிலாந்திலுள்ள யுத்த சபையார், யுத்தம் அதிக தீவிரமாய் நடக்கும்போது சுய ஆட்சிக் கூட்டத்தார் ஒருவருமே இங்கிலாந்திற்கு வரக்கூடாதென உத்தரவு செய்தனர். இந்த உத்தரவு வெளியாகு முன் முதலிரண்டு டெபுடேஷனைச் சார்ந்த ஸ்ரீமான் நரசிம்மையர் முதலாயினோர் ஜிப்ரால்டர் துறை முகத்திற்குச் சென்று விட்டனர். யுத்த சபையின் உத்தரவால் இவரும் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று. யுத்த சபையாரின் இந்த உத்தரவால் இந்தியா முழுவதும் துயரக்கடலில் அழுந்தியது. கடைசி சமயத்தில் இத்தகைய அதரும உத்தரவை யுத்தசபையார் கொடுத்தது இந்தியாவைக் கலங்கச் செய்தது. திலகர், இங்கி லாந்திற்குச் செல்லக் கூடாதெனத் தடுக்கப் பட்டதால் மறுபடியும் சென்னை நகர் மூலமாகப் பூனா சென்றனர். 1918ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 27ந் தேதி டெல்லியில் யுத்த மஹாநாடு ஒன்று கூடியது. அதற்கு முக்கியமான ஜனத் தலைவர் வரவழைக்கப்படவில்லை. யுத்தத்திற்கு இந்தியா எந்த விதமாக உதவி செய்யலாமென்பதைப் பற்றியே இக்கூட்டத்தில் யோசிக்கப்பட்டது. டெல்லி மஹா நாட்டை யொட்டி, மாகாணந்தோறும் யுத்தக் கான்பரென்சுகள் கூடின. பம்பாய் மாகாண யுத்தக் கான்பரென்சு மேமாதம் 10ந் தேதி கூடியது. அதற்குத் திலகர், கெல்கார் முதலா யினோர் வரவழைக்கப் பட்டிருந்தனர். சுய ஆட்சிக்காரர் யாவரை யும் வரவழைத்து லார்ட் வில்லிங்க்டன் அவரை வசை மொழியால் அலங்கரித்தனர். பிறகு அக்கான்பரன்சில் திலகர் இராஜபக்தி தீர்மானத்தைப் பற்றிப் பேச இடங் கொடுக்கப்பட்டார். திலகர், பேச ஆரம்பித்ததும், சுயஆட்சியைப் பற்றிப் பேசுவதாகக் கூறி லார்ட் வில்லிங்க்டனால் வாயடக்கப்பட்டார். உடனே திலகர் சபையினின்றும் நீங்கி வெளிவந்துவிட்டார். பிறகு ஸ்ரீமான்கள் கெல்கார், ஜம்னாதாதுவாரகதா, ஹாரனிமான், பொமான்ஜி முதலியவர் களும் சபையினின்றும் நீங்கினார்கள். இதனால் இந்தியா முழுதும் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. இப்பொழுது, அரசியற் சம்பந்தமாக ஐரோப்பாவில் பேசக் கூடாதென்ற நிபந்தனையுடன் சர்வாலன்டைன் சிரால் மீது தொடுத் திருக்கும் வழக்கு சம்பந்தமாக மாத்திரம் இங்கிலாந்து செல்லலாமென்று இராஜப் பிரதிநிதியால் உத்தர விடப்பட்டார். திலகர் இந்த நிபந்தனைக்குட்பட்டுச் செல்வாரோ? திலகரின் குணங்கள் திலகர் படாடோபமில்லாதவர்; பெருமைக்கு உழைப்பவ ரல்லர்; பிறர்க்குபகாரம் செய்யும் பொருட்டு மனிதன் இப்பூவுலகில் பிறப்பிக்கப் பட்டான் என்ற கொள்கையையுடையவர். இவர், பாமர ஜனங்களும் எப்படிப்பட்ட சிக்கலான விஷயங்களையும் அறியு மாறு விளக்கமாகப் பேசுபவர். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும திறன் இவருக்கு அதிகமாக உண்டு. சிலரைப் போல் ஆடம்பரமான பேச்சுகளைப் பேசவே மாட்டார். எந்த விஷயத்தையும் ஒளியாமல் சொல்லுவர். அரசாங்கத் தாருக்கு அஞ்சியேனும் குடிகளுக்கு அஞ்சியேனும் தம் மனதிலிருப்பதைச் சொல்லாமலிருக்கமாட்டார். இவர் உறுதிகொண்ட மனதுடையவர். யுத்த காலத்தில் சமுத்திர யாத்திரை அபாயமானது என்று சொல்லப்படுகிறது. அதையும் பொருட்படுத்தாது கிழவயதில் இங்கிலாந்திற்குச் செல்ல முற்பட்டதைக் கொண்டு இவருடைய ஆத்ம சக்தியை நன்கு அறியலாம். இங்கிலாந்திற்குச் செல்லச் சென்னை வழியாய்த் திலகர் வந்த போது, தேசபக்தன் பத்திரிகாசிரியர் ஸ்ரீமான் திரு. வி. கலியாணசுந்தர முதலியார், திலகரின் நறுங்குணங்களைப் புகழ்ந்து சில செய்யுட்கள் யாத்திருக் கின்றார். அவைகளினால் திலகரின் அருங்குணங்கள் நன்கு புலப்படும். அவைகளை ஈண்டு எடுத்துக்காட்டுகிறோம். பனிவரையே முடியாகப் பலநதியே அணியாகக் கனைகடலே உடையாகக் கருணையதே வடிவாகக் கொண்டுலகை வளர்த்துவருங் குணமுடைமை எவரெவருங் கண்டவுடன் தொழுதேத்துங் கருதரிய பரதமெனும் அன்னையவள் சிறப்பிழக்க அதையளிக்க இந்நாளில் அன்னவள்தன் திருவயிற்றில் அவதரித்த ஒருமுனியே! திலகமென உலகினுக்குத் திகழொளிசெய் பெருமையதைத் திலகரெனு மியற்பெயரால் திருமுறவே நிறுத்தினையே செந்தண்மை உயிர்களுக்குச் செயநாளும் பரதமதில் அந்தணனா யவதரிக்க அருளினதும் ஆண்டவனே ஆரியர்தம் வரலாற்றை அறிவிக்கும் ஒரு நூலின் சீரியலைப் புகழாத சிறப்புடையோர் செகத்துளரோ? கண்ணபிரான் திருவார்த்தை கலியுகத்தில் மணம்பெறவே வண்ணவுரை வகுத்திங்கு வழங்கியதெம் புண்ணியமே இளமைதொட்டே அடிமைதனை எவரெவரும் வெறுத்தொழிக்க அளவில்லா உரையதனை அகிலமெலாம் பரப்பினையே உடல்வாழ்க்கை பிறர்க்கென்னும் உறுதிமொழிச் செழும்பொருளைக் கடைப்பிடித்துச் செயல்வழியே கண்டதுவுஞ் சிறையன்றே பிறப்புரிமை சுயஆட்சி; பெறவேண்டும் எனுமரிய அறமொழியை உரைசெய்த அருள்முனிவ ரெவரேயோ? உலகமெலாங் கலக்குறினும் உறுதிநிலை கலங்காத திலகமுனி யென்றுன்னைத் தேவர்களுஞ் செப்புவரே சிந்தியா உளம் உளதோ செப்பாத நாவுளதோ இந்தியா முழுவதுமே இயங்குவதும் உருவன்றே தம்பொருட்டு வாழாத தகைமையுள ஒருநாடே எம்பொருட்டுக் கிழவயதில் எழுகின்றாய் பெருமானே! சுயஆட்சிக் கொடிதாங்கிச் சுகமளிக்கத் திரும்பிவரச் சுயமாக விளங்குமொளி சுகப்பொருளை வழுத்துவமே. திலகர் பெருமான் இன்னும் அநேக காலம் தேசத்தொண்டு செய்யச் சுகசரீரியாய் வாழுமாறு எல்லாம் வல்ல இறைவனை மனமொழி மெய்களால் இறைஞ்சுகின்றோம்.  காந்தி யார்? பிரசுராலயத்தின் வார்த்தை இரங்கூனில் சிறந்த முறையில் நடந்துவந்த ஜோதி பத்திரிகையின் ஆசிரியர் எங்கள் சர்மாஜீ தமிழனின் சிந்தனையைத் தூண்டும் பல தலையங்கங்களை அதில் எழுதி வந்தார்கள். அவை களில், ஒவ்வொரு வருடமும் காந்தியைப் பற்றி எழுதியவைகளை மட்டும் தொகுத்து இந்நூலாக வெளியிட்டிருக்கிறோம். இவற்றுள் காந்தி யார் என்ற முதல் அத்தியாயம் ஏற்கனவே முதற் பதிப்பாக வெளிவந்தது. இப்பொழுது புதிதாகச் சேர்த்திருக்கிற ஐந்து அத்தியாயங்களில், கடைசி அத்தியாயம் ஆசிரியரால் மொழி பெயர்க்கப்பட்டு ஜோதியில் வெளிவந்ததாகும். அவ்வப் பொழுது எழுதிய இந்தத் தலையங்கங்களை வாசகர்கள் படிக்கும் பொழுது ஆசிரியரின் அரசியல் தீர்க்கதரிசனத்தையும் இந்தியாவின் தேவை களையும் உணர சாத்திமாயிருக்குமென நம்புகிறோம். காந்தியடிகள் உயிரோடிருந்த காலத்தில் இவை எழுதப் பட்டன வென்பதை நினைவில் கொண்டு இந்நூலைப் படிக்குமாறு அன்பர்களை வேண்டுகிறோம். பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் காந்தி யார்? எழுபத்திரண்டு சதுர மைல் விதீரணமுள்ள வாழ்க்கை யென்னும் யுத்த மைதானத்தில், அன்பு, அஞ்சாமை என்ற இரண்டு ஆயுதங்கள் தரித்துக் கொண்டு, முகத்திலே புன்சிரிப்புத் தவழ, கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கிற ஒரு போர் வீரனாகக் காட்சி யளிக்கிறார் காந்தியடிகள் இன்று நமக்கு. இந்த எழுபத்திரண்டு வருஷ காலத்தில், அவர் எத்தனையோ போர்களை நடத்தி யிருக்கிறார்; எத்தனையோ பேரைத் தாக்கியிருக்கிறார்; எத்தனையோ பேரால் தாக்கப்பட்டுமிருக்கிறார். ஆனால் அவர், தமது முகத்தில் சலிப்புக் காட்டியதோ, அகத்தில் வன்மம் கொண்டதோ கிடையாது. யுத்தத்தில் சகஜமாக ஏற்படக் கூடிய அநேக காயங்களை அவர் பட்டிருக்கிறார். ஆனால், எல்லாம் மார்பிலே தான். அவருடைய முதுகிலே ஒரு வடுவைக் கூடக் காண முடியாது. அப்படியே, எதிரி களைத் தாக்குகிறபோதும், அவர் களுடைய மார்பிலேதான் காய முண்டுபண்ணினாரே தவிர, அவர்களுடைய முதுகுப்பக்கம் ஓர் அடி கூடக் கொடுத்ததில்லை. மற்றும், சத்துருக் களின் தனிமையையோ, அசதியையோ, அசட்டு அகங்காரத்தையோ அவர், தமது வெற்றிக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்டதில்லை. எதிரிகளுடைய பலவீனத்தின் மீது வெற்றிக் கொடி நாட்டிவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் சந்தர்ப்பவாதி யாக இருக்கவில்லை; இருக்க மறுத்துவிட்டார். ஒரு யுத்த வீர னுடைய லட்சணத்தினின்று அணுவளவு பிறழவும் அவர் சம்மதிக்க வில்லை. இப்படிப்பட்ட யுத்த வீரனாகிய அவர், இன்று, தமது ஜீவன யாத்திரையின் எழுபத்து மூன்றாவது மைற்கல்லையடைந் திருக்கிறார். அவரை நாம் வாழ்த்தி வணங்குவோமாக. காந்தியடிகளின் வாழ்க்கையைச் சதுரமைல் கணக்கில் தான் மேலே நாம் வருணித்திருக்கிறோம். ஏன் தெரியுமா? அவருடைய வாழ்க்கை, எவ்வளவுக்கெவ்வளவு நீளமாகிக் கொண்டு போகிறதோ, அவ்வளவுக் கவ்வளவு அகலமாகியும் கொண்டுபோகிறதினால்தான். உலகத்திலே தோன்றிய மகான்கள் பலருடைய வாழ்க்கை வரலாறு களை நாம் பரிசீலனை செய்து பார்த்தோமானால், ஒன்று நீளமாக வாவது இருக்கும்; அல்லது அகலமாகவாவது இருக்கும். இரண்டும் ஒன்று சேர்ந்திருக்கக் காண்பது அரிது. சங்கராச்சாரியாரென்ன, விவேகானந்தரென்ன, இப்படிப்பட்டவர் களுடைய வாழ்க்கை யெல்லாம் நீளமான வாழ்க்கையல்ல; அகன்ற வாழ்க்கை. ஆனால், புத்தர் பிரானுடைய வாழ்க்கை, நீளமும் அகலமும் சேர்ந்த சதுர வாழ்க்கை. அது போலவே காந்தியடிகளுடைய வாழ்க்கையும் சதுர வாழ்க்கையாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே யாருடைய சதுர வாழ்க்கையும், தனித்துவமும் மகத்துவமும் பொருந்திய தாகவே இருக்கும். இன்று காந்தியடிகளுடைய திரு நாமம் உலகத்தில் எதிரொலியுடன் முழங்கிக் கொண்டிருக்கிற தென்று சொன்னால், அஃது அவருடைய புனித வாழ்க்கைக்குத் தானே தவிர, அவருடைய தளர்ந்த உடலுக்காகவல்ல; குறுகிய உருவத்திற்காகவல்ல. அவர், மகா மேதாவியுமல்ல; அவரைவிடச் சிறந்த அறிஞர்கள், உலகத்தின் நானா பாகங்களிலும் ஆயிரக்கணக் காக இருக்கிறார்கள். அல்லது அவருடைய உறுதியான கடவுள் நம்பிக்கை, அவரை இந்த உன்னத பதவியில் கொண்டுவைத்திருக்கிற தென்றும் சொல்ல முடியாது. அறுபத்துமூன்று நாயன்மார்களை யும், சூரதாஸையும், கபீரையும், மீராபாயையும் இவர்கள் போன்ற நூற்றுக்கணக்கான பேரையும் கண்ட பாரத தேசத்திற்கு, காந்தியடி களின் கடவுள் நம்பிக்கை ஒரு புதுமையுமல்ல; விசேஷமுமல்ல. எத்தனையோ பக்தர்களைப்போல் அவர் ஒருவர். அவ்வளவுதான். இப்படி அவர் ஒரு சாதாரண மனிதராகக் காணப்பட்ட போதிலும், உலகத்திலுள்ள அறிஞர்களெல்லோரும் அவருக்கு வணக்கஞ் செலுத்துகிறார்கள்; பக்தர்களெல்லோரும் அவரைப் பூஜிக்கிறார்கள்; பயில்வான் களெல்லோரும் அவர்முன்னே, நூற்றுப் பன்னிரண்டு பவுண்ட் நிறையுள்ள அவர் முன்னே, கைகட்டி நிற்கி றார்கள்; அழகுத் தெய்வங்களெல்லாம், அவருடைய பொக்கை வாய்க்கு முன்னே வாய்பொத்தி நிற்கின்றன; நாவலர்களெல்லோரும் அவருடைய மௌனத்திற்கு முன்னே நாவடங்கி நிற்கிறார்கள்; ஆனால், அவர் நாவசைந்தால் நாடு அசைகிறது. இவை மட்டுமா? மேற்படி அறிஞர்களும், பக்தர்களும், பயில்வான்களும், நாவலர் களும், இன்னோரன்ன பலரும் அவருடைய திருமுன்னர், தங்கள் தங்கள் கலைத்திறமை, தொழில் திறமை முதலியவைகளைக் காட்டி அவருடைய ஆசிர்வாதத்தைப் பெறப் போட்டி போடுகிறார்கள்; அந்த ஆசிர்வாதத்தைக் கொண்டு பிரகாசிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்; அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுப் பிரகாசிக்கிற பிரகாசந்தான் உண்மையான பிரகாசமென்று, சாசுவதமான பிரகாச மென்று நம்புகிறார்கள். இஃதென்ன வேடிக்கை! 1927ஆம் வருஷம், மகாத்மா காந்தி, தேக அசௌக்கியங் காரணமாக, பெங்களூருக்கு வந்திருக்கிறார். குமாரா பார்க் என்ற மாளிகையில் மைசூர் அரசாங்கத்தார் அவருக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து உபசரித்து வருகிறார்கள். ஒரு நாள் காலை நேரம். அடிகளார், தமது அறையில் கட்டிலொன்றின் மீது சாய்ந்த வண்ணம் படுத்திருக்கிறார். அவருடைய புகழொளியைக் கண்டு வெட்கப்பட்டோ என்னவோ, சூரியன், ஜன்னல் வழியாக அவரை எட்டி எட்டிப் பார்க்கிறான். அடிகளின் முகம் மலர்ந்திருக் கிறது. அப்பொழுது ஆறரை அடி உயரமுள்ள ஒரு கம்பீர உருவம் உள்ளே நுழைந்தது. நரைத்த தாடி மீசை. முற்காலத்து முனிவர்கள் போன்ற முகத் தோற்றம். அந்த முகத்தில் அறிவும் சாந்தமும் குலவிக் கொண்டிருக்கின்றன. உள்ளே நுழைந்த அந்த வடிவம், சாய்ந்து படுத்திருந்த உருவத்தை மூன்று முறை வலம் வந்தது. பின்னர் சாஷ்டாங்கமாக நமகாரஞ் செய்துவிட்டு, கூப்பிய கையோடு, பக்தி மேலீட்டால் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிக் கொண்டிருக்க, இமய பர்வதம்போல் அசையாது நின்று கொண்டிருந்தது. ஆஜானுபாகு வான அந்த உருவத்தைப் பார்த்துக் காந்தியடிகள் என்னை இப்படிப் பரிகசிக்கலாமா? தங்களுடைய அறிவுக் கோயிலின் நுழைவாயிலில் கையேந்தி நிற்கும் ஒரு பிட்சுகன் அல்லவா நான்? என்றார். அப்படிச் சொல்லக்கூடாது. தாங்கள் ஒரு சமுத்திரம். அதிலிருந்து தெறிக்கும் ஒரு திவலை நான். ஆத்ம சக்திக்கு முன்னே அறிவு எம்மாத்திரம்? சூரியன் முன்னே மின்மினிப்பூச்சி மாதிரி. என்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள நான் இங்கு வந்தேனேயன்றி, தங்களைத் தொந்தரவு படுத்துவதற்காக வல்ல என்றது வேத ஒலியின் எதிரொலி போன்ற அந்தக் குரல். இந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், காந்தியடிகளின் கண்களில் நீர் ததும்பியது. வணங்கி நின்ற அந்த உருவமும், மௌனமாக விடை பெற்றுக் கொண்டு, அறையை விட்டு வெளியே சென்று விட்டது. இந்தக் காட்சியை நாம் எத்தனை தரம் நமது அகக்கண்ணால் தரிசித்தாலும் அத்தனை தரமும் நமது உள்ளத்தில் ஊறாத அமிழ்து ஊறி நம்மைப் பரவசப்படுத்து கின்றது. வணங்கிய அவர் யார்? அப்பொழுது மைசூர் சர்வ கலா சாலையின் வைசான்ஸலராக இருந்த ஸர் வ்ருஜேந்திர நாத சீலர்; உலக அறிஞர்களிலே ஒருவர். சகல கலைகளிலும் அவருக்குள்ள புலமையைப் பாராட்டு முகத்தான் அவரைச் சாதாரணமாக நடக்கும் அகராதி என்று நண்பர்கள் அழைப்பார்கள். ஸர் ஜகதீஸ சந்திரபோ, ஸர் பிரபுல்ல சந்திர ரே, ஸர் அஷுடோஷ் முக்கர்ஜி முதலிய அறிவு அரசர்களெல்லோரும், வ்ருஜேந்திரநாதசீலரை, தங்க ளுடைய அறிவுச் சக்ரவர்த்தியாகப் போற்றி வந்தார்கள். ஆனால், இந்த அறிவுச் சக்ரவர்த்தி, அந்தச் சத்தியாத்மாவுக்கு முன்னே அடங்கி ஒடுங்கி நின்றார். இப்படி இந்திய நாட்டு அறிஞர்கள் மட்டுமல்ல, மேல்நாட்டு அறிஞர்களான ஆல்பர்ட் ஈன்டீன், கில்பர்ட் முர்ரே, சி.இ.எம். ஜோட், பெர்ரிடேல் கீத், கவுண்ட் ஹெர்மான் கெய்ஸர்லிங் முதலிய பலரும் அவருக்குத் தங்களாலான காணிக்கையைச் செலுத்திய வண்ணமிருக்கிறார்கள்.1 இஃதென்ன புதிர்! இங்கிலாந்தில் மி மாட் ராய்டன் என்ற ஓர் அம்மையார். கிறிதுவ ஞானிகளின் கூட்டத்திலே இவருக்கு அதிக மதிப்பு உண்டு. காந்தியடிகள், 1931ஆம் வருஷம் வட்ட மேஜை மகா நாட்டை முன்னிட்டு லண்டனுக்குச் சென்றிருந்த போது, ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு மண்டபத்திற்கு வெளியே வந்தார். பிறகு நடைபெற்றதை மேற்படி மாட் ராய்டனே வருணிக்கட்டும்:- அவரை ஏராளமான ஜனங்கள் சூழ்ந்து கொண்டுவிட்டார்கள். என்னுடைய மோட்டார் எங்கேயிருக்கிறதென்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவருக்கு எதிரில் ஒவ்வொரு வண்டியும் வந்துவந்து போகிறது. தங்களுடைய வண்டியில் மகாத்மா ஏறிக்கொள்ள வேண்டு மென்ற ஆசை அந்த ஒவ்வொரு மோட்டார் சொந்தக்காரருக்கும். அன்று நிரம்பக் குளிர். அதிகமான உடை களையும் மகாத்மா தரித்துக் கொண்டிருக்க வில்லை. அவரை அதே இடத்தில் அதிக நேரம் தாமதித்து வைத்திருக்கக் கூடாதென்று எண்ணினேன். அகப்பட்ட வண்டியில் போய்விடுங்கள் என்று அவரிடம் சொன்னேன். இல்லை; உங்களுடைய வண்டிக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். ஹா! அந்த வார்த்தைகள் எனக்கு மகுடாபிஷேகம் செய்தது போலிருந்தன. அவருக்கென்று ஒன்றுமில்லை; ஆனால் எல்லாம் அவருடை யனவே என்ற யேசுநாதரின் சிஷ்யர் ஒருவருடைய வாசகம் எனக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. காந்தியடிகளுக்கென்று ஒரு மோட்டார் கிடையாது. ஆனால், அவரைச் சுற்றி எத்தனை மோட்டார்கள்! ரகுபதி ராகவ ராஜாராம் - பதிதபாவன சீதா ராம் என்ற நாமாவளியை எல்லோர் இதயத்திலும் ஊன்றி விட்டுச் சென்றவரும், புனா கந்தர்வ மஹாவித்யாலயம் என்ற சங்கீத தாபனத்தின் தந்தையும், ஏறக்குறைய ஒவ்வொரு காங்கிர மகா சபையின் போதும், தம் சிஷ்யர்களுடன் விஜயஞ் செய்து பாரதமாதாவின் மீது இசையமுதைப் பொழிந்து, அனைவருடைய இதயத்தையும் குளிர்வித்துக் கொண்டிருந்த வருமான காலஞ்சென்ற பண்டித விஷ்ணு திகம்பரர், தமது சங்கீதப் புலமை, தெய்விகத் தன்மை யடைய வேண்டுமென்பதற்காக, சங்கீதமே அறியாத, ஆனால் சங்கீதத்தின் இங்கிதத்திலே தம்மை இழந்துவிடும் ஆற்றல் வாய்ந்த காந்தியடிகளின் தலையசைவையும், அருட்பார்வையையும் எதிர் பார்த்தாரே தவிர, வர, சுருதி, தாளபேதங்களைப் பற்றிச் சச்சர விட்டு அந்தச் சச்சரவில் சங்கீதத்தையே இழக்கும் சாமர்த்திய முடைய சங்கீத வித்துவான்களின் கரகோஷத்தை எதிர்பார்த்தா ரில்லை. காந்தியடிகள், லண்டனில் பாரிடர் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தபோது மேல்நாட்டு நடனத்தைக் கற்றுக்கொண்டார் என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டிருந்தோ என்னவோ, இப் பொழுது பால் ரோபெஸன்1, என்ற நீக்ரோ நடிகர், அவர் முன்னிலை யில், தமது நடிகத் திறமையைக்காட்ட விழைகிறார். உலகப் பிரசித்தி பெற்ற காமா என்கிற பயில்வான், தமது தேக வலிமைக்கு அவருடைய ஆசீர்வாத முத்திரை தேவை என்று விழை கிறார். காந்தியடிகள், சிறு பையனாகப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, தேகப் பயிற்சி விஷயத்தில் சிறிது கூடக் கவலை செலுத்தாமலிருந்ததும், ஒரு நாள் தேகப் பயிற்சி வகுப்புக்குச் செல்லாமலிருந்ததற்காக இரண்டணா அபராதம் செலுத்தியதும் காமாவுக்கு ஞாபகமில்லை போலும்! கீளார் கோவண முடுக்கும் காந்தியடிகளின் கையைப் பிடித்துக் குலுக்கிப் பெருமையடைய அரச குடும்பத்தினர் அநேகர் ஆவல் கொள் கிறார்கள். இங்கிலாந்திலும் இத்தாலியிலும் அரச குடும்பத்தினர் அவருக்கு அளித்த உபசாரங்களை யார் மறக்க முடியும்? காந்தியடிகள் சிறந்த ஓர் அரசியல்வாதியென்றோ, ராஜதந்திரி யென்றோ சொல்ல முடியாது. தாம் அந்த மாதிரி அழைக்கப் பட்டால், அதை அவர் விரும்புவதுமில்லை. தம்மை ஒரு சாதாரண விவசாயி என்று சொல்லிக் கொள்வதில்தான் அவர் பெருமையும் திருப்தியுமடைகிறார். ஆயினும், உலகத்தையே ஆட்டிவைக்கும் சாமர்த்தியமுள்ள அரசியல் வாதிகளும் ராஜ தந்திரிகளும் அவரைக் காணவும் பின்வாங்குகிறார்கள். பிடிவாதமுள்ள ராஜ தந்திரியான ஸ்ரீ வின்டன் சர்ச்சிலும், தந்திர அரசியல் வாதியான லார்ட் வில்லிங்டனும் அவரைக் காணக்கூட மறுத்து விட்டார்கள்! இவைகளையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு பார்க்கிற போது, காந்தியடிகள் ஒரு புதிர் என்ற முடிவுக்குத்தான் யாரும் வரக்கூடும். இந்தப் புதிரை விடுவிக்க, அநேக அறிஞர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களிற் பெரும்பாலோர் இந்தப் புதிரிலேயே சிக்கிக் கொண்டு விட்டார்கள். உண்மையிலேயே அவர் ஒரு புதிரா? இதற்கு விடை ஆம் என்றும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம். அரசியல் பீடத்தில் அவரை வைத்திருத்திப் பார்க்கிறபோது, அவருடைய சொற்களிலும் செயல்களிலும் அநேக முரண்பாடுகளிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், மகான் தன்மை என்னும் பரிசுத்த ஆகாயத்தில், அதாவது மேலான நிலையில், அவர் எவ்விதக் களங்கமுமில்லாத ஒரு சந்திர னாகவே பிரகாசிக்கிறார். அவர் ஒரு மகான்; வீரன்; இவையிரண் டினைக் காட்டிலும் மேலாக அவர் ஒரு மனிதன். இந்த அமிசங் களைப் பற்றிச் சிறிது விதரித்துக் கூறுவது இந்தக் கட்டுரையின் நோக்கம். காந்தியடிகளை, மகாத்மா வென்று பட்டஞ் சூட்டியே நாம் போற்று கிறோம். மகாத்மாவென்றால் என்ன அர்த்தம்? இதை ரவீந்திரநாத் தாகூர் ஓரிடத்தில் பின்வருமாறு விளக்குகிறார்: தனி மனிதனிடத்திலுள்ள நான் என்பது விடுதலை பெற்று, எல்லோரிடத்திலும் தான் ஆகப் பரிணமிக்கிற போது, மகாத்மா வாகிறது. உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளையும், யாரொருவர், தாம் ஆகப் பார்க்கிறாரோ அவர்தான் மகாத்மா. சாதாரண விவகார பாஷையில் இதைச் சொல்லப் போனால், யாரொருவர் உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்து கிறாரோ, எல்லோருடைய துன்பத்தைத் தமது துன்பமாகவும், எல்லோருடைய இன்பத்தைத் தமது இன்பமாகவும் ஏற்றுக் கொள்கிறாரோ அவரே மகாத்மா. இப்படிப் பட்டவர்களை மகான்களென்றும், மகா புருஷர்களென்றும், தீர்க்கதரிசிகளென்றும், பரம ஞானிகளென்றும், லட்சியத்திற்காக உயிரைத் துரும்பென மதிக்கும் மகா வீரர்களென்றும் பல பட அழைப்பது வழக்கம். இவர்கள் தங்களுக்காக வாழ்வதில்லை; பிறருக்காகவே வாழ்கிறார்கள். பணிசெய்து கிடப்பதுதான் இவர்கள் கடன். இத்தகைய மகான்களின் வாழ்க்கை வரலாறுகளை நாம் சிறிது ஊன்றிப் பார்த்தோமானால், துன்பமும் துயரமுமே இவர் களுடைய வாழ்க்கையின் நியதிகளாயிருக்கின்றன. இவர்கள், அநேக சமயங்களில் தாங்களே வலிய, துன்பத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்; சில சமயங்களில் பிறரால் துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அந்தத் துன்பங்களை யெல்லாம் பொருட் படுத்துவதே யில்லை. அவற்றைப் பார்த்து இவர்கள் பரிகசிக்கிறார்கள்; புன் சிரிப்புச் சிரிக்கிறார்கள். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஹென்ரி தோரூ1 என்ற ஓர் அமெரிக்க ஞானி இருந்தான். அவன் சிறைவாசத்தை அனுபவித்தான். அப்பொழுது கூறுகிறான்:- என்னைச் சுற்றியிருக்கும் இந்தச் சிறைச்சாலைச் சுவர்களைக் கட்டு வதற்காகச் செலவழிக்கப்பட்ட கல்லும் சுண்ணாம்பும் வீண்தான். சிறையதிகாரிகள், என் தேகத்தை எவ்வளவு பத்திர மாகப் பூட்டி வைக் கிறார்கள்! ஆனால், என்னுடைய மனம், எவ்விதத் தங்கு தடையுமில்லாமல் அவர்களோடேயே உலவிக் கொண்டிருக்கிறதே! பாவம்! சிறு பிள்ளைகள், தங்களுக்கு வேண்டாதவர்கள் யாராவது எதிர்ப்பட்டால், அவர்களை நேராக எதிர்க்கத் தைரியமில்லாமல், தங்களுடைய நாயைப்பிடித்துத் திட்டு வார்கள். அதைப் போலிருக்கிறது இந்தச் சிறையதிகாரிகள் என்னைப் பூட்டி வைத்திருப்பது! இதைப்போல் மகான்கள் சிறையையோ சங்கிலியையோ லட்சியஞ் செய்யமாட்டார்கள். மகான்களின் புனிதத் தன்மை யானது, அதாவது தூயமனமானது, தூக்கு மரத்தில்தான் இன்பம் நுகர்கிறது என்ற வாசகப்படி, இவர்கள் உலக வாழ்க்கையிலே எவ்வளவு துன்பங்களையனுப வித்தாலும், அவைகளைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குவதில்லை; சலிப்புக் கொள்வதில்லை. அதற்கு மாறாக, இவர்களுடைய மகான் தன்மையானது, மேற்படி துன்பங் களை இன்னும் தீவிரமாக எதிர்த்துப் போராடும்படி இவர்களைத் தூண்டுகிறது. இப்படிப் போராடிப் போராடி இவர்கள் உலகத் துக்குச் சாந்தியை வாங்கிக் கொடுக்கிறார்கள். இவர்களுடைய துன்பத்தினால் உலகம் இன்புறுகிறது. இவர்கள் ஏன் வலிய இப்படித் துன்புறுகிறார்கள்? எல்லா ஜீவராசிகளிடத்திலும் இவர்கள் கொண்டுள்ள அன்புதான் இதற்குக் காரணம். அன்பும் துன்பமும் இணைபிரியாத இரட்டைச் சகோத ரர்கள் மாதிரி. இவையிரண்டும் மனிதனுடைய இரண்டு கண்கள் போலிருக்கின்றன என்கிறார் அறிஞர் ராதாகிருஷ்ணன். கண்க ளில்லாதவன் மனிதனாக மாட்டான். அதைப்போல் அன்பு செலுத் தாதவர்களும் துன்ப மனுபவியாதவர் களும் மனிதர்களாகமாட் டார்கள். துன்பத்திற்குப் பயந்து அன்பு செலுத்த மறுக்கிறவன் மனிதனல்ல; அவன் ஒரு ஜடவது; எதற்கும் உதவாத ஒரு பிண்டம். தாந்தே என்ற இத்தாலிய மகா கவிஞன் கூறிய மாதிரி உலகத்தி னிடம் அன்பு செலுத்துகிற மகான்கள் எந்த யுகத்தில் அவதரித்த போதிலும் அவர்கள் மகத்தான துயர மென்னும் மகுடத்தையே அணிந்து கொண்டிருக் கிறார்கள் எவனொருவன் உண்மையாகவே அன்பு செலுத்துகிறானோ அவன் துன்பமனுபவிப்பதினின்று தப்ப முடியாது. எவ்வளவுக் கெவ்வளவு ஒருவன் மற்றவர்கள்மீது அதிக மாக அன்பு செலுத்துகிறானோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அவன் துன்பத்தை அனுபவிக்கிறான். ஒரு தாய், தன் குழந்தையின் இன்பத்திற்காக எத்தனையோ விதமான துன்பங்களை அனுபவிக்கி றாள். அப்படி அனுபவிப்பதிலே ஒரு திருப்தி கொள்கிறாள். அந்தத் திருப்தியே அவள் அடைகிற இன்பம். அதைப் போலவே, மகான் களுடைய அன்பும் இருக்கிறது. தாய், தன் குழந்தை யினிடத்தில் அன்பு செலுத்தாமல் எப்படி இருக்க முடியாதோ, அப்படியே மகான் தன்மையுடையவர்களும், மற்றவர்களிடத்தில் அன்பு செலுத் தாமலிருக்க முடியாது. தாய் எப்படி, அந்த அன்பின் மூலமாகத் துன்பத்தை மனமகிழ்ச்சியுடன் வரவேற்கிறாளோ அப்படியே மகான்களும் துன்பத்தை வலிய ஏற்றுக் கொள்கிறார்கள். இங்ஙனம் இவர்கள் அன்பையும் துன்பத்தையும் ஒரு கண் கொண்டு பார்ப்பதினால்தான் இவர்களுடைய செயல்களில் அநேக முரண்பாடுகள் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், இவர்கள், தங்களைப் பொறுத்தமட்டில் அன்பெனும் உயர்ந்த சிகரத்தில் இருக்கிறார்கள். ஆனால், கீழே அதாவது உலகத்திலே, அறியாமை, வறுமை முதலிய துன்பங்கள் நிறைந்திருப்பதைப் பார்க்கிறார்கள். இவர்கள் இதயம் துடி துடிக்கிறது. பரம கருணை யினால், தங்கள் உச்சநிலையிலிருந்து கீழே இறங்கு கிறார்கள். மேலான உண்மைகளை உபதேசிக்கிறார்கள். அவைகளை அறிந்து கொள்ளக் கூடிய தகுதி ஜனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா வென்பதை இவர்கள் பார்ப்பதில்லை. ஏனென்றால், அந்த ஜனங்கள் தங்க ளுடைய துன்ப நிலையை இன்ப நிலையாகக் கருதிக் கொண்டிருக்கி றார்கள். அப்படிப்பட்டவர்களிடம் சிறந்த உண்மைகளை உபதேசிக் கிறபோது, அவை அவர்களுக்கு முரண்பாடாகவே தெரிகின்றன. இரண்டு கடல் நீர்கள் ஒன்று சேர்கிறபோது, இரண்டுக்கும் வேறுபாடு நன்றாகத் தெரிகிறதுபோல், மேலான தன்மையும் கீழான தன்மையும் ஒன்று சேர்கிறபோது, சில மாறுபாடுகள் இருக்கவே செய்யும். அடிப்படையில் ஒன்றுதான். எல்லாம் நீர்தான். நீரின் நிறத்தில், கனத்தில், கலப்பில், வித்தியாசங்கள் இருக்கக் கூடும். ஆனால், இப்படிப்பட்ட முரண்பாடுடையவர்களாலேயே உலகத்திற்கு நன்மை செய்ய முடியும். இவர்கள் தான் உலகத்திற்கு நன்மை செய்திருக் கிறார்கள். பிரபஞ்ச இதிகாசம், இந்த உண்மையை நமக்குச் சதா அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகத்திலே தோன்றின எந்தப் புரட்சியை வேண்டு மானாலும் எடுத்துக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள். தங்களுடைய சுற்றுச் சார்பைக் கண்டு அதிருப்தி கொண்டவர்கள்தான், புரட்சிகளுக்கெல்லாம் காரணர் களாயிருக்கிறார்கள். இவர்களுடைய சமகாலத்தவர் இவர்களைக் கிளர்ச்சிக்காரரென்றும், கலகக்காரரென்றும், புரட்சிக்கார ரென்றும் சொல்லி, இவர்களைப் பலவிதமாக இம்சிக்கிறார்கள். ஆயினும் இவர்கள், புதிய கொள்கை களை, புதிய இயக்கங்களை விதைத்து விட்டு மறைந்து விடுகிறார்கள். வருங்கால சந்ததியார், இந்த விதையிலிருந்து கிடைத்த மகசூலை அனுபவிக்கிறார்கள். அப்பொழுதுதான் இவர்களுடைய பெருமை தெரிகிறது. மகான்க ளென்று இவர்கள் போற்றப்படுகிறார்கள். புத்தர்பிரான், தமது காலத்தில் நிறைந்திருந்த மூட நம்பிக்கைகளையும், வெற்றுச் சடங்கு களையும் எதிர்த்துப் போராடினார். பலபேருடைய பரிகாசத்திற்கும் எதிர்ப்புக்கும் ஆளானார். யேசுநாதர், தம்மைச் சுற்றியிருந்த ரோம ஏகாதிபத்தியத்தின் போலித் தனத்தையும் ஆடம்பரத்தையும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார். ஆனால், ஜனங்கள் அவர்மீது கல்லெறிந்தார்கள்; சிலுவையிலே அறைந்தார்கள். ஸாக்ரடீ என்ன, மார்ட்டின் லூதர் என்ன, பிரெஞ்சுப் புரட்சிக்கு விதை யூன்றின ரூஸோ என்ன, கார்ல் மார்க் என்ன, லெனின் என்ன, இப்படிப்பட்டவர்கள் புரட்சிக்காரர்களென்று முத்திரையிடப் பெற்று அநேக அவதிகளுக் குட்படுத்தப் பட்டார்கள். ஆனால், இவர் களெல்லோரும் மகான்கள். இவர்கள் வெளிப்பார்வைக்கு அநாகரிகர்கள் போலவும் பித்தர்கள் போலவும் நடந்து கொள்ளலாம். ஆனால், உலகத்தை நாகரிகப்படுத்தவும், உலகத்தின் பித்தத்தைத் தெளிவிக்கவுமே இவர்கள் பாடுபடுகிறார்கள். நாம் இப்பொழுது நம்மை நாக ரிகர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் நாம் நாகரிகத்தை யடைந்திருக்கிறோமா? நாகரிக வாழ்க்கையின் அடிப்படை யென்ன வென்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு அதற்குப் பதில் சொல்லு முகத்தான் ஓர் அறிஞன் கூறுகிறான்:- ஒரு சமுதாயத்தில், வலியார், எளியாருடைய சுமையை எவ்வளவுக் கெவ்வளவு குறைக்கிறார்களோ அவ்வளவுக் கவ்வளவு அந்தச் சமுதாயத்தின் வாழ்க்கையானது நாகரிகமடைகிறது. இந்த அளவு கொண்டுதான் மகான்கள் உலகத்தைப் பார்க்கி றார்கள். உள்ள நிலையைக்கண்டு இரங்குகிறார்கள்; அதிருப்தி கொள்கிறார்கள். விளைவது என்ன? புரட்சி; இவர்களுக்குச் சிறைவாசம், அல்லது தூக்கு மேடை. ஆயிரம் பேரில் ஒருவர்தான் நன்றாகப் பேசமுடியும். நன்றாக பேச முடிந்த ஆயிரம் பேரில் ஒருவர்தான் தெளிவாகச் சிந்திக்க முடியும். தெளிவாகச் சிந்திக்கிற ஆயிரம் பேரில் ஒருவர்தான், வாழ்க்கையில் தங்களுடைய லட்சியம் இன்னதென்பதைத் தெரிந்து கொள்ள முடியும். தெரிந்து கொண்டு விட்டால் மட்டும் போதுமா? அதனை அடைய வேண்டாமா? தெரிந்து கொண்ட ஆயிரம் பேரிலே ஒருவர்தான், தங்கள் லட்சியத்தை அடைய வேண்டுமென்ற ஆவல் கொண்டு, அதனை நோக்கிப் பிரயாணஞ் செய்யமுடியும். அப்படிச் செல்வோரில் எத்தனையோ பேர், வழியில் களைப்பினால் பின்தங்கிவிடலாம்; வேறுசிலர் வேறு ஆசைகளினால் தூண்டப் பட்டு வேறு பாதைகளுக்குச் சென்றுவிடலாம்; இன்னுஞ் சிலர் லட்சியப் பிரகாசத்தினால் கண் கூசிக் குருடர்களாய் மேல் நோக்கிச் செல்லாமலேயே பின் தங்கிவிடலாம். இங்ஙனம் லட்சியப் பாதை யானது மகா கடினமான பாதையா யிருந்தபோதிலும், யாரொருவர் அந்தப் பாதையில் அடி எடுத்து வைக்கிறார்களோ, அடியெடுத்து வைக்கக் கூடிய ஆற்றலையும் துணிச்சலையும் பெறுகிறார்களோ, அவர்களெல்லோரையுமே பொதுப்படையாக மகான்களென்று உலகம் அழைக்கிறது. மகான் தன்மைக்குரிய இந்த மாதிரியான லட்சணங்களைக் கொண்டு காந்தியடிகளை நாம் நோக்கிறபோது, அவர் ஒரு மகானென்பது நன்கு தெரியும். சிலருடைய வாழ்க்கையில், இளமையிலேயே இந்த மகான் தன்மை விகாசமடைகிறது. இன்னுஞ் சிலரிடத்தில், வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே விகாச மடைகிறது. எப்படி, எப்பொழுது விகாசமடைந்தாலும், சிறு பிராயத்திலேயே இதற்கு முளை தோன்றி விடுகிறது. ஆனால், இந்த முளையை ஒரு சிலரால்தான் அறிய முடிகிறது; பெரும்பாலோரால் அறிய முடிவ தில்லை. காந்தியடிகளின் சுய சரித்திரத்தை ஊன்றிப் படிப்போர்க்கு இந்த உண்மை புலனாகும். காந்தியடிகள் ஒரு மகானென்பதை இந்திய மகாஜனங்கள் தெரிந்துகொள்ள ஆரம்பித்த தெல்லாம், அவர் இந்தியாவில் ரெளலெட் சத்தியாக்கிரகம் தொடங்கி நடத்திய பிறகுதான். ரவீந்திர நாத் தாகூர் 1921ஆம் வருஷம் சபர்மதி ஆசிரமத் திற்கு விஜயம் செய்திருந்த போது, காந்தியடிகளுக்கு மகாத்மா பட்டஞ் சூட்டினார். அது முதற் கொண்டே அந்தப் பெயர் உலகத் தில் முழங்கிக் கொண்டு வருகிறது. ஆனால், இந்த மகாத்மா தன்மை, காந்தியடிகளிடத்தில் இருப்பதை அவருடைய அரசியல் குரு வான கோபால கிருஷ்ண கோகலே, 1912-ஆம் வருஷத்திலேயே தெரிந்துகொண்டு விட்டார். அவர் கூறுகிறார்:- வீரர்களும் மகான்களும் எந்தத் தன்மைகளைக் கொண்டு தயாரிக்கப் படுகிறார்களோ அந்தத் தன்மைகளெல்லாம் காந்தி யடிகளிடத்தில் இருக்கின்றன. இதில் சந்தேகமில்லை. இது தவிர, தம்மைச் சுற்றியுள்ள சாதாரண மனிதர்களை வீரர்களாகவும் மகான்களாகவும் ஆக்கிவிடக் கூடிய அபாரமான ஆத்ம சக்தியும் அவரிடத்தில் இருக்கிறது. இந்த மகான் தன்மை அவருக்கு எப்படி ஏற்பட்டது? அவரை ஏன் ஜனங்கள் மகாத்மா வென்று போற்றுகிறார்கள்? அவரைக் காட்டிலும் அறிவு, அனுபவம், வயது முதலியவைகளில் சிறந்த வர்கள் பலரிருக்க, அவருக்கு மட்டும் ஏன் இந்தத் தனி மதிப்பு? இதைச் சிறிது விளக்குவோம். அல்டோ ஹக்லி1 என்ற நமது சமகாலத்து மேனாட்டு அறிஞன் ஓரிடத்தில் கூறுகிறான்:- அரசியல் பரம்பரை இருக்கிறதே அது மகா அயோக்கியத்தனமான பரம்பரை. உலகத்தில் இரண்டுவிதமான தர்மங்கள் இப்பொழுது அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன. தனிப்பட்ட நபர்களுக்கென்று ஒரு தர்மம்; ஜாதிக்கென்று அதாவது தேசத்திற்கென்று வேறு தர்மம். ஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் யோக்கியனாகவும், கருணை நிறைந்தவனாகவும், மற்றவர் களுடைய குறை நிறைகளைப் பாராட்டுகிறவனாகவும் இருக்கிறான். ஆனால், அதே மனிதன், ஒரு ஜாதியின் பிரதிநிதியாகவோ, அல்லது ஏதோ ஒரு கட்சியின் பிரதிநிதியாகவோ வருகிறபோது, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தக் காரியங்களைச் செய்தால் இழிவு என்று கருது கிறானோ அதே காரியங்களைக் கூச்சமின்றிச் செய்கிறான். அப்படிச் செய்வது தான் நியாயமென்றும் சாதிக்கிறான். இதனால் என்ன ஏற்படுகிற தென்றால், ஒரு ஜாதிக்கு, சக்தியும் புகழும் இருக்கிறதென்றும், ஆனால் அதற்கு ஒழுக்கம் அல்லது தர்மம் என்பதே கிடையாதென்றும் நாம் கருதிக் கொள்வதாக ஏற்படுகிறதல்லவா? ஜாதி என்ற முறையில் நாம் கேவலமாக நடந்து கொள்வது சரியென்று நம்புகிறோம். காந்தியடிகள், அரசியலை ஒரு பாரமார்த்திக நிலைக்கு உயர்த்தி யிருக்கிறார் என்று சொல்வதின் தாத்பரியமெல்லாம் இதுதான். அதாவது, நாம் நமது சொந்த விவகாரங்களில் எந்த நியாயத்தை, எந்த தர்மத்தை அனுசரித்து நடக்கிறோமோ அதே நியாயத்துடனும் தர்மத்துடனும் பொது விவகாரங்களிலும் நடந்துகொள்ள வேண்டும். சொந்த வாழ்க்கையில் நம் சகோதரர்களுடனும், உற்றார் உறவினர்களுடனும் எப்படி கண்ணியமாகவும் பொறுப்பறிந்தும் நடந்து, அதன் மூலமாக அவர்களுடைய அபிமானத்தையும் நன் மதிப்பையும் பெறவேண்டுமென்று ஆவல் கொள்கிறோமோ அதைப்போல், தேசீய விவகாரங்களிலும் நாம் நடந்து கொள்ள வேண்டும். அதாவது, நாம் வேறே, தேசம் வேறே என்று பிரிக்கக் கூடாது. தேசீய வாழ்க்கையில் நமது வாழ்க்கையை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிக்கின்றி நமக்கென்று ஒரு வாழ்க்கை யும் தேசத்திற்கென்று ஒரு வாழ்க்கையுமாக, வாழ்க்கையை இரண்டு கூறுபடுத்திக்கொண்டு நடப்போமானால் நாமும் அபிவிருத்தி யடைவதில்லை; தேசமும் பாழடைகிறது. நம்முடைய அரசியல் தலைவர்களிற் பெரும்பாலோர், வாழ்க்கையை, இங்ஙனம் இரண்டு கூறுபடுத்தியே பார்க்கிறார்கள். பொதுஜன அபிப்பிராயம், அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை யென்று சொன்னால், அஃது அதனுடைய குற்றமா? ஆனால், காந்தி யடிகள், தமது வாழ்க்கையை ஒரு மொத்தத் தொகுப்பாகவே பார்க் கிறார். நாம் வேறே, தேசம் வேறே என்று பார்ப்பதில்லை. தேசத்தின் க்ஷேமத்திலே தான் தம்முடைய க்ஷேமம் இருக்கிற தென்பதை அவர் பல முறை தம் செயல்களால் நிரூபித்துக் காட்டியிருக் கிறார். தேசத் திற்காக அவர் இருக்கிறாரே தவிர, அவருக்காக தேசம் இல்லை. இந்த மாதிரியான விரிந்த மனப்பான்மையை, எல்லா அரசியல் தலைவர்களிடத்திலும் நாம் காண்கிறோமா? இல்லையே. இந்தியா விலே மட்டுமல்ல, உலகத்திலுள்ள எல்லா அரசியல் வாதிகளிடத் திலும் இந்த இரண்டுவித வாழ்க்கைத் தோற்றங்கள்தான் காணப்படு கின்றன. போரும் பகைமையும் உலகத்திலே இது போழ்து மலிந்திருப்பதற்கெல்லாம் காரணம், அரசியல் வாதிகள் இங்ஙனம் இரண்டுபட்ட வாழ்க்கையை நடத்துவதுதான். மகாத்மா காந்தியி னிடத்தில் இந்த இரண்டுபட்ட தன்மை இல்லாததினாலேயே அவர் உலகத்தினரால் போற்றப்படுகிறார். தூலமாகப் பார்க்கிறபோது, இன்றைய மனிதன் வாழ்க்கை யின் எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருக்கிறான். அவனுடைய அறிவு, திறமையின் கோபுரத்தின் மீது கொலுவிருக்கிறது. நமக்கு விவசாய நிலங்களும், போக்குவரவு சாதனங்களும் அதிகப்பட்டிருக் கின்றன. ஒவ்வொருவர் வீட்டிலும் ரேடியோ இருக்கிறது. பிரதி யொருவனும் சொந்தமாக ஓர் ஆகாயவிமானத்தை வைத்துக் கொண்டிருக்கக் கூடிய காலம் விரைவிலே வரக்கூடும். உலகத்தில் வியாதியே இல்லாதபடி செய்யப்பட்டு விடலாம். தொழிலாளர் களுக்கு வயோதிகச் சம்பளம் கொடுத்து அவர்களைக் கவலைக் கடலினின்று கரையேற்றிவிடலாம். இவையெல்லாம் நடைபெற்று விட்டாலும், மனிதன் சாந்திபெறக் கூடுமா? அவன், தன் வாழ்க்கை யில் ஆறுதல் காண்பானா? மாட்டான். வாழ்க்கை யென்பது என்ன? வயிறு நிறைய ஆகாரம் உண்பதா? அல்லது அறிவுக் கடலில் மட்டும் மிதந்து கொண்டிருப்பதா? இல்லை; இல்லை. எவனொரு வன் தன் அந்தரங்கத்தில் இன்பத்தை யடைகிறானோ, அதாவது இதய சாந்தி பெறுகிறானோ அவன்தான் வாழ்க்கையை நடத்து கிறவன். இந்தத் தூய வாழ்க்கையைப் பொதுவாக உலக மக்களுக்கு, சிறப்பாக இந்திய மகா ஜனங்களுக்கு அளிக்கவேண்டுமென்பது தான் காந்தியடிகளின் ஆவல். இதற்காகவே அவரை எல்லோரும் போற்றுகிறார்கள். எல்லாத் தலைவர்களிடத்திலும் இந்த ஆவல் இருக்கிறதா? இல்லையே. அரசியல் தலைவர்களிற் பெரும்பாலோர், மனிதனுடைய புறத் தேவைகளை மட்டும் கவனித்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் காந்தியடிகள், மனிதனுடைய அகத் தேவை யொன்று இருக்கிற தென்பதை உணர்ந்து அதனைப் பூர்த்தி செய்ய விழை கிறார். இதற்காக அவர், புறத்தேவைகளைப் புறக்கணிக்கவில்லை. ஒரு செடியானது செழிப்பாக வளர வேண்டுமானால் அதற்கு எப்படி நல்ல உரம் போட்டு, ஒழுங்காக நீர் பாய்ச்சிக் கொண்டு வர வேண்டுமோ, அதைப் போல், மனிதனுடைய அக வளர்ச்சியானது, அவனுடைய புற வளர்ச்சியை ஒட்டியிருக்கிறது. ஏதோ ஏகதேசமாக ஒரு சில மகான்கள்தான், புறத்தைப் பொருட்படுத்தாமல் அக வாழ்க்கையில் முன்னேற்ற மடைந்திருக்கிறார்கள். ஆனால் சாதாரண ஜனங்களைப் பொறுத்தமட்டில், அவர்களுடைய புறத்தேவை களைப் பூர்த்தி செய்து கொடுத்தால் தான், அவர்களுடைய அக வளர்ச்சிக்கு நாம் வழி காட்ட முடியும். காந்தியடிகளின் உறுதியான நம்பிக்கை இதுதான். மனிதனுடைய வயிற்றுப் பசியைத் தீர்ப்பதைக் காட்டிலும் அவனுடைய ஆத்மப் பசியைத் தீர்ப்பதுதான் சிரேஷ்ட மென்று ஒரு சமயம் ரவீந்திர நாத் தாகூர் கூறியதற்குக் காந்தியடிகள் என்ன விடையளிக்கிறார் பாருங்கள்! கவிஞர் தமது கவிதா உணர்ச்சிக்குப் பொருத்தமாக எதிர்காலத்தின் பொருட்டு வாழ்கிறார். நம்மையும் அந்த மாதிரி வாழுமாறு சொல்கிறார். காலை நேரத்திலே, பட்சிகள் ஆகாயத்தில் குதூகல மாகப் பறப்பதை அவர் நமக்கு வருணித்துக் காட்டுகிறார். வாத வம். இந்தப் பட்சிகளுக்கு வயிறு நிறைய ஆகாரம் கிடைத்து விட்டது. முந்திய நாள் இரவு ஓய்வு கொண்டதினிமித்தம் அவை களின் தேகத்தில் நல்ல ரத்தம் ஓடிக் கொண்டிருக்க, ஆகாயத்தில் சிறகு விரித்துப் பறக்கின்றன. ஆனால் நான் காண்கிற பட்சிகள் சிறகுகளை அசைக்கக்கூட முடியாத பலவீனத்தோடிருக் கின்றன. என் ஆசை வார்த்தைகள், அந்தச் சிறகுகளுக்குப் பலத்தை அளிக்க வில்லை. இந்திய ஆகாயத்தின் கீழ் வாழும் மனிதப் பறவை யானது, முன்னாளிரவு எவ்வளவு பலவீனத்துடன் படுக்கச் சென் றதோ அதைவிட அதிக பலவீனமாக மறுநாள் காலையில் எழுந் திருக்கிறது. லட்சக் கணக்கான இந்திய மக்களுக்கு, எப்பொழுதும் விழிப்பு நிலையிலேயே இருக்கவேண்டியிருக்கிறது; அல்லது மெய் மறந்த நிலையில் இருக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், இந்த நிலையை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும். நோய்வாய்ப்பட்டுக் கதறும் நோயாளிகளை ஒரு பாட்டுப்பாடி என்னால் குணப்படுத்த முடிய வில்லை. பசி நோயால் அவதியுறும் லட்சக் கணக்கான இந்திய மக்கள் ஒரே ஒரு பாட்டைத்தான் கேட்கிறார்கள். அஃதென்ன? பலத்தை அளிக்கக் கூடிய ஒரு கவளச் சோறு. பொதுவாக உலகத்திலுள்ள ஏழை மக்களும், சிறப்பாக இந்திய மக்களும் காந்தியடிகளை ஒரு தெய்வமாகக் கொண்டாடு வதின் ரகசியம் இதுதான். அவர், ஜனங்களுடைய தேவைகளைத் தெரிந்து கொண்டு மட்டும் இருக்கவில்லை; உணர்ந்து, அந்த உணர்ச்சியைச் செயல் மூலமாக வெளிப்படுத்துகிறார். மற்றத் தலைவர்கள், ஜனங்களுடைய தேவைகளைத் தெரிந்து கொண் டிருப்பதோடு மட்டும் திருப்தியடைகிறார்கள். சாத்வீக எதிர்ப்பு முறையை முதன் முதலாகக் கையாண்டவர் காந்தியடிகளேயென்றும், இந்த ஆயுதத்தைக் கண்டுபிடித்தவர் அவரே யென்றும், இதற்காகவே உலகம் அவரைப் போற்றுகிற தென்றும் சிலர் சொல்லுகிறார்கள். இதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது. இதற்காக, காந்தியடிகளை உலகம் போற்றுகிறதென்று சொன்னால், அது மலிவான போற்றுதல் என்றுதான் நாம் கொள்கிறோம். அதாவது அவருடைய உயர்நிலைக்கு இது தக்க மதிப்பல்ல. இதைச் சிறிது விதரித்துக் கூற விரும்புகிறோம். சாத்வீக எதிர்ப்பு அல்லது ஒத்துழையாமை யென்பது, காந்தியடி களால் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப் பட்டதுமல்ல; இந்தியாவின் சரித்திரத்திற்குப் புறம்பானதுமல்ல; புதிதுமல்ல; தீங்கிழைத்த வருடைய வாசற்படியில் உட்கார்ந்து, அந்தத் தீங்குக்குப் பரிகாரம் தேடிக்கொடா விட்டால் இறந்து போவதென்று நிச்சயப் படுத்திக் கொள்வது, மரணம் வரையில் பட்டினி கிடப்பது, சட்டங் களை மறுப்பது, தேசத்தினின்று வெளியேறுவது, அரசனைத் திரகாரஞ் செய்வது, அரசனைப் பகிரங்கமாகக் கண்டிப்பது முதலியவைகளெல்லாம் அஹிம்ஸா தர்ம முறையில் அனுஷ்டிக்கப் படக்கூடிய ஆயுதங்களென்று நம் புராதன நூல்களில் கூறப்படு கின்றன என்ற பாபு பகவான் தாஸின் வாசகம் இங்குக் கவனிக்கத் தக்கது. ஜடப் பொருளின் ஆராய்ச்சியில் அதிகமான நம்பிக்கை வைத்து, அதிலேயே வாழ்க்கை பூரணத்துவம் பெறுகிறதென்று முடிவுகட்டுகிற மேனாட்டார் கூட இந்தச் சாத்வீக எதிர்ப்பு முறையைக் கையாண்டிருக் கிறார்கள். சென்ற சில நூற்றாண்டுகளில் மேனாட்டிலும் இந்தியாவிலும் எந்தெந்தச் சந்தர்ப்பங்களில் இந்தச் சாத்வீக எதிர்ப்பு முறை அனுஷ்டிக்கப் பட்டிருக்கிறதென்பதைச் சுருக்கமாக எடுத்துக் காட்டுகிறோம். 1. ஆதிரிய ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த ஹங்கேரியின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவன் கோஸுத் என்ற அறிஞன் என்றுதான் எல்லோருக்கும் சர்வ சாதாரணமாகத் தெரியும். ஆனால், இவனால் ஹங்கேரிக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கப் படவில்லை. உண்மையில் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தவன் பிரெங்க் டீக்1 என்பவன். இவன் ஆதிரிய ஏகாதிபத்தியத் திற்கு விரோதமாகச் சாத்வீக முறையில் ஒத்துழையா இயக்கத்தை நடத்தி 1867ஆம் வருஷம் வெற்றி பெற்றான். இவனால்தான், ஹங்கேரி யின் தனி அரசியல் அமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. 2. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி காலத்தில் ஜெர்மனி யில், பிமார்க் கொண்டு வந்த சில திட்டங்களை எதிர்த்து, முக்கியமாக இரண்டு ஒத்துழையா இயக்கங்கள் நடைபெற்றன. ஓர் இயக்கம், கத்தோலிக்க கிறிதுவர்களால் நடத்தப் பெற்றது. மற்றொன்று, தொழிலாளர்களால் நடத்தப்பெற்றது. இவை யிரண்டும் வெற்றி பெற்றன. 3. ருஷ்ய ஆதிக்கத்தின் கீழிருந்த பின்லாந்து வாசிகள், தங்களுடைய துன்பங்கள் சிலவற்றிற்குப் பரிகாரந் தேடிக்கொள்ளும் பொருட்டு 1901ஆம் வருஷத்திலிருந்து 1905ஆம் வருஷம் வரை சாத்வீக ஒத்துழையா இயக்கத்தை நடத்தி வெற்றிபெற்றார்கள். 4. இந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பாகத்தில், புகையிலை உரிமையை எதிர்த்து பர்ஷியர்களும், பிரிட்டிஷ் ஆதிபத்தியத்தை எதிர்த்து எகிப்தியர்களும், அந்நியர்களுடைய பொருளாதார ஆதிக்கத்தை எதிர்த்துச் சீனர்களும் சாத்வீக முறையில் போராடியது அனைவருக்கும் நினைவிருக்குமல்லவா? 5. 1812ஆம் வருஷம், பாரத நாட்டின் புண்ணிய க்ஷேத்திரமாகிய காசியில், அரசாங்கத்தார் சில புதிய வரிகளை விதித்தனர். இதனை ஜனங்கள் சாத்வீக முறையில் எதிர்த்தார்கள். எல்லா கடைகளும் மூடப்பட்டன. ஜனங்கள் எவ்வித வேலையிலும் ஈடுபடவில்லை. தலைவர்கள் சொற்படி ஜனங்கள் நடந்தனர். இயக்கம் வெற்றி பெற்றது. அரசாங்கத்தார் வரியை ரத்து செய்தனர். 6. 1830ஆம் வருஷம் மைசூர் சமதானத்தில் சில அட்டூழியங்கள் நடை பெற்றன. இவைகளை அஹிம்சா முறையில் எதிர்த்து ஜனங்கள் போராடினார்கள். ஜனங்கள் கிராமங்களை விட்டு வெளியேறிவிட்டார்கள். நிலங்களில் யாரும் வேலை செய்ய வில்லை. வரி செலுத்த மறுத்து விட்டார்கள். கடைசியில் அரசாங்கம் பணிந்தது. 7. வங்காளப் பிரிவினையை எதிர்த்து 1907ஆம் வருஷம் இந்தியா வெங்கணும் சாத்வீக முறையில் நடைபெற்ற இயக்கத்தை யாருமே அறிவர். இங்ஙனம் சாத்வீக எதிர்ப்பு இயக்கங்கள், பல நாடுகளில் பல காலங் களில் பலவாக நடைபெற்றிருக்கின்றன. ஆதலின் காந்தி யடிகள்தான் இந்த இயக்கத்தின் சிருஷ்டிகர்த்தர் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்த இயக்கத்தைப் பொறுத்தமட்டில் காந்தி யடிகளின் முக்கியத்துவம் எதிலிருக்கிறதென்றால், விதீரணமான ஒரு தேசம் பூராவுக்குமாக இந்த இயக்கத்தைப் பிரயோகம் செய்து பரீட்சை பார்த்ததில்தான். குறிப்பிட்ட ஒரு பிரிவார், குறிப்பிட்ட ஒரு குறைக்குப் பரிகாரந் தேடிக்கொள்ளும் பொருட்டு இந்த முறை இதுகாறும் எங்கும் கையாளப்பட்டதே தவிர, தேசப் பொதுவில் இதனை யாரும் கையாளவில்லை. இதில் காந்தியடிகள் தான் முதன்மையானவர். அவர், இந்தப் பரீட்சையில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார், இதனால் அந்நிய ஆதிக்கத்தின் பிடிப்பு எவ்வளவு தூரம் தளர்ந்திருக்கிறது. ஆயுத பலத்தையும், மனோ பலத்தையும், ஜாதீய உணர்ச்சியையும் இழந்து அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு ஜாதியாரை அஹிம்சைப் பரீட்சைக்குட்படுத்துவது சரியா, ஆத்மீக சோதனையை அரசியல் களத்திலே கொண்டுவந்து நடத்தலாமா என்பன போன்ற பிரச்னைகளில் கருத்து வேற்றுமை களிலிருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால், வெற்றியோ தோல்வியோ, பலனோ, நிஷ்பலனோ, ஒன்றையுமே பொருட் படுத்தாமல் இந்தப் பரிசோதனையில் இறங்கிய துணிச்சல் இருக்கிறதே அது யாருக்கும் உண்டாகாது; இது வரை யாருக்கும் உண்டாகவுமில்லை. இஃது அசாதாரணமான துணிச்சல் மட்டு மல்ல; அமானுஷ்யத்தன்மையுள்ள துணிச்சலுங்கூட. கடமையைச் செய்ய வேண்டுமென்ற ஆவலினால் ஏற்பட்ட துணிச்சல் இது. இந்தத் துணிச்சலின் மற்றொரு பக்கந்தான் மகான் தன்மை. இந்தத் துணிச்சலுக்கும் மகான் தன்மைக்கும்தான் காந்தியடிகள் போற்றப் படுகிறாரே தவிர, அவர் அடைந்த வெற்றி தோல்விகளுக்காக வல்ல. சாத்வீக எதிர்ப்பு, ஒத்துழையாமை என்று பல பெயரிட்டு அழைக்கப் படுகிற இந்த அஹிம்ஸை இயக்கம், லட்சியத்தை அடைவதற்கான ஒரு சாதனமே தவிர. இதுவே லட்சியமல்ல. ஒழுங்கும் தன்னலத் தியாகமு மில்லாமல் எந்த ஒரு ஜாதியும் உண்மையான முன்னேற்றத்தையடைய முடியாததால், இந்த ஒழுங்கும் தன்னலத் தியாக உணர்ச்சியும் இந்திய தேச மக்களிடையே ஏற்பட வேண்டுமென்பதற்காகவே ஒத்துழையா இயக்கம் தொடங்கப் பட்டிருக்கிறதென்று 1920ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் லாலா லஜபதிராயின் தலைமையில் கூடிய விசேஷ காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட ஒத்துழையாத் தீர்மானம் கூறுவதை இங்கு நேயர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். பாரத ஜாதியானது எல்லாவகையிலும் சுபிட்சமாயிருக்க வேண்டு மென்ற உன்னத லட்சியத்தை அடைவதற்கு இந்த ஒத்துழையா இயக்கம் சரியான சாதனமா வென்பதைப்பற்றி, மேலே நாம் கூறிய வாறு அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால் இந்தச் சாதனத்தைக் கையாண்டதினால் இந்திய தேசீய வாழ்வைப் பொறுத்தமட்டில் சில நன்மைகள் உண்டாயிருக் கின்றன வென்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நன்மைகள் காலவேகத்தை யொட்டி யனவாயில்லாமலிருக்கலாம்; நாம் அடைய வேண்டிய லட்சியத்தை உத்தேசிக்கையில், மிகச் சொற்பமாயிருக்கலாம். அதுவேறு விஷயம். ஆனால், நன்மைகள் உண்டாயிருக்கின்றன வென்பதை நாம் ஒப்புக் கொள்ளவே வேண்டும். அவை யாவை? 1. ஒத்துழையா இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து, அதாவது காந்தியடிகள் காங்கிரசின் மேலாதிக்கம் பெற்ற காலத்திலிருந்து, அரசியலில் எல்லா ஜனங்களுக்கும் ஒரு சிரத்தை ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் அறிந்தார்க்கு மட்டும் அடைக்கலம் அளித்துவந்த இந்த அரசியலில் நமக்கும் உரிமையுண்டு, இதனை யறிவது நமது கடமையென்று, பாமர ஜனங்களென அர்த்தமில்லாமல் அழைக் கப்படுகிற சாதாரண ஜனங்கள் கருதலானார்கள். 2. இப்படி இவர்கள் சிரத்தை எடுத்துக் கொண்டதனால் ஏற்பட்ட பகிரங்கமான பலன் என்ன வென்றால், பொதுக்கூட்டங்களில் ஆங்கில பாஷையில் பேசி, ஜனங்களின் கரகோஷத்தையும் அதிகாரிகளின் கைகுலுக்குதலையும் பெறுவதுதான் சிலாக்கிய மென்றிருந்த போலி கௌரவம் போய் விட்டது. அவரவர்களுடைய தாய் மொழியில் பேசுவது நல்லதென்றும், தாய்மொழியின் மூல மாகவே ஒரு தேசத்தின் தன்மதிப்பு வளருமென்றும் ஆங்கிலமறிந்த அரசியல்வாதிகள் எண்ணி அதனை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தார்கள். பொதுவாக தேச பாஷைகளுக்கு ஒரு கௌரவம் ஏற்பட்டது. 3. இந்தியாவிலே யுள்ளவரனைவரும் ஒரே ஜாதியினர் என்ற உணர்ச்சி லேசாக ரேகை விட ஆரம்பித்தது. 4. ஆடம்பர வாழ்விலிருந்த மோகம் போய், எளிய வாழ்வு என்று சொல்லப்படுகிற இயற்கை வாழ்விலே ஒரு பற்றுதல் உண்டா யிற்று. 5. அன்றாட வாழ்க்கையின் தேவைகளை அந்நியப் பொருட் களைக் கொண்டு பூர்த்தி செய்வதென்ற பழக்கம் குறைந்தது. சுய தேசத்தில் உண்டாகிற பொருள்களை உபயோகிக்க வேண்டு மென்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் சுதேசத் தொழில் முயற்சிகள் பல தொடங்கப் பட்டன. 6. தமக்கென்று ஒரு நாகரிக பரம்பரை உண்டு என்பதை, அடிமைத் தனத்தின் காரணமாக அடியோடு மறந்திருந்த இந்தியர்கள், அப்பொழுதிருந்து அந்தப் பரம்பரையைப் பற்றிச் சிறிது சிந்திக்கப் தலைப்பட்டார்கள். 7. ஆளப்படும் நாட்டைப்பற்றி அது காறும் அசட்டை மனப் பான்மை கொண்டிருந்த ஆளும் சாதியினர், இப்பொழுது அதன் அரசியல் துடிப்புக்களை அறிந்த கொள்ள ஆவல் கொண்டார்கள். 8. இந்திய மகாஜனங்களிடத்தில் குடி கொண்டிருந்த அச்சம் விலகத் தலைபட்டது. அதன் தானத்தில் அஞ்சாமை குடிகொள்ள ஆரம்பித்தது. இவற்றில் சிரேஷ்டமானவை இரண்டு. ஒன்று, பாரத ஜாதிக்கு அதன் நாகரிக பரம்பரையை உணர்த்தியது; மற்றொன்று, இந்திய மகாஜனங் களுக்கு அளித்த அஞ்சாமை யென்னும் ஆயுதம். காந்தியடிகளின் மகத்தான இந்த இரண்டு நன்கொடைகளுக்காக வுமே அவரை நாம் என்றும் நன்றியுடன் போற்றவேண்டும். எப்படி அன்பும் துன்பமும் இணைபிரியாச் சகோதரர்களோ அதைப் போல் அடிமைத்தனமும் கோழைத்தனமும் இணைபிரியா சகோதரர்கள். எதனால் எது ஏற்பட்டது, அதாவது அடிமைத்தனத் தினால் கோழைத்தனம் ஏற்பட்டதா, அல்லது கோழைத்தனத்தி னால் அடிமைத்தனம் ஏற்பட்டதா வென்பதை நாம் பாகுபடுத்திக் கூறமுடியாது. ஒன்றொழிந்தால் மற்றொன் றொழியும்; ஒன்றிருந் தால் மற்றொன்றிருக்கும். அவ்வளவு தான் நமக்கும் தெரியும். இவ்விரண்டும் ஒரு ஜாதியை, பனிபோல் மூடிக் கொண்டு விட்டால், அந்த ஜாதி இருக்கிற இடமே தெரிவதில்லை. அஃது இருந்தும் இல்லாமலேயே இருக்கிறது. இதனாலேயே நமது பெரியோர்கள் அஞ்சாமையைப்பற்றி அதிகமாக வற்புறுத்திப் பேசியிருக்கிறார்கள். அஞ்சாமை யல்லாற் றுணை வேண்டா வெஞ்சாமை யெண்ணி யிடத்தாற் பெயின் என்ற வள்ளுவர் வாக்கு முதல் அச்சமில்லை; அச்சமில்லை யென்ற பாரதியாரின் வாசகம் வரையில், எந்த மகா புருஷர்களுடைய திருவாக்கு களைப் பரிசீலனை செய்து பார்த்தோமானாலும் அவற்றிற்கு அடிப்படையில் அஞ்சாமையென்ற ரேகை ஒளிவிட்டுக் கொண்டிருக் கிறதைக் காண் கிறோம். அஞ்சாமை என்கிற ஆயுதத்தைத் தரித்துக் கொண்டிருந்ததினால் தான், திருநாவுக்கரசர், நாமார்க்கும் குடியல்லோம்; நமனை யஞ்சோம்; நரகத்திலிடர்ப் படோம்; நடலையில்லோம்; ஏமாப்போம்; பிணியறியோம்; பணி வோமல்லோம்; இன்பமே என்னாளுந் துன்பமில்லை என்று வீறு கொண்டு பேசினார். அஞ்சாமையுடையவர்கள்தான் மனிதத் தன்மை யில் சுலபமாக வளர்ச்சி பெறக்கூடும். இந்தியர்கள், மனிதர்களாக மதிக்கப்படுவ தில்லை யென்று சொன்னால், அதற்கு அவர்களிடத் திலே குடிகொண்டிருக் கிற அச்சந்தான் காரணம். சுவாமி விவே கானந்தர் ஓரிடத்தில் கதறுகிறார்: நான் மனிதர்களை உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறது. ஏனென்றால், இந்தியா வில் திரீகளும் பேடிகளுந்தான் இருக்கிறார் களென்பது எனக்குத் தெரியும். விவேகானந்தர் செய்துகொண்ட இந்தச் சங்கல்பத்தை காந்தியடிகள் செயலில் கொண்டுவந்து காட்டியிருக்கிறார். காந்தியடிகளை ஒரு வீரன் என்று முதலில் குறிப்பிட்டோம். வீரமென்பது புறத்தோற்றத்திலே இல்லை. சீலத்திற்கும் சாந்தத் திற்கும் இடங்கொடுத்து அவைகளைப் பத்திரமாகக் காப்பாற்றி வருகிற எந்தத் திண்ணிய நெஞ்சமுண்டோ அந்த நெஞ்சத்திலேதான் வீரத்திற்கு இடமுண்டு காந்தியடிகள் இத்தகைய நெஞ்சுடையவர். ஆனால், இந்த நெஞ்சத்திலிருந்து, இமயம் போன்ற உறுதியான இந்த இருதயத்திலிருந்து, கருணையானது சதா பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தான் அவருடைய அரசியல் விரோதிகளும் அவரைக்கண்டு அஞ்சவும் அஞ்சு கிறார்கள்; அதே சமயத்தில் பக்தியும் செலுத்துகிறார்கள். ஜான் குந்தர்1 என்ற பிரசித்த பிரயாண நூலாசிரியன், காந்தியடிகளைப் பின்வருமாறு மதிப்பிடு கிறான்:- காந்தியடிகளின் வாழ்க்கை முழுவதும் வீர வாழ்க்கை யாகவே இருக்கிறது... அவர் விதியை எதிர்த்துப் போராடினார். அது மட்டுமல்ல, அந்த விதியைக் காட்டிலும் வலிமையுள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே எதிர்த்துப் போராடினார். காந்தியடிகளிடத்தில் அஞ்சாமை குடிகொண்டிருக்கிற தென்று சொன்னால், அதற்குக் காரணம் என்ன? இதனைச் சிறிது சுருக்கமாக இங்கு எடுத்துக்காட்ட விழைகிறோம். யாரொருவர், தமக்கென்று ஒன்றையும் வைத்துக் கொள்ளாமல், எல்லாம் பிறருக் காகவே என்று வாழ்க்கையை நடத்துகிறாரோ அவர், யாருக்கும் அச்சப்பட வேண்டியதில்லை. உலகத்திற்கு எவனொருவன் அடிமைப் பட்டுக் கிடக்கிறானோ அவன் தான் அஞ்சி அஞ்சி வாழ்க்கையை நடத்துகிறான். உலகத்தை எவனொருவன் அடிமைப் படுத்திக் கொள்கிறானோ, அவன் யாருக்கும் அஞ்சவேண்டுவ தில்லை. உலகத்திலே தோன்றிய ஒவ்வொரு ஜீவராசியும் ஏதோ ஒரு விதமான அச்சத்துடன் தான் வாழ்கின்றது; அதனால் துன்பத்தை யும் அடைகிறது ஸர் எட்வின் ஆர்னால்ட்1 என்ற ஆங்கில அறிஞன் தனது ஆசிய ஜோதி என்ற நூலில், இதை மிக அழகுபடக் கூறி யிருக் கிறான். துறவுத் தத்துவத்தின் ரகசியமே இதுதான். அதாவது, எவனொருவன், தனக்கு, தனக்கு என்று எல்லாவற்றையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு எல்லாரையும் ஆளப் பார்க்கிறானோ அவன் எல்லாவற்றையும் இழந்து எல்லாருக்கும் அடிமையாகி விடுகிறான். அதே பிரகாரம் எவனொருவன், தன்னுடைய சர்வத்தையும் பிற ருடைய நலனுக்காக அர்ப்பணம் செய்கிறானோ அவன் சர்வத்தை யும் அடைகிறான்; சர்வமான பேருக்கும் எஜமானனாகிறான். அப்படித் தன்னுடைய தியாகத்தினால் எஜமான பதவியை அடை கிறவன், யாருக்கு அஞ்ச வேண்டும்? அஞ்ச வேண்டிய அவசியமே அவனுக்கு இல்லையே. அஞ்சவும் அவனுக்குத் தெரியாதே. அச்ச மில்லாதவிடத்தில் அன்பு குடிகொள்வது இயற்கை யல்லவா? இதனாலேயே அஞ்சாமையும் அன்பும் ஒரே மரத்திலிருந்து பிரிகிற இரண்டு கிளைகள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அந்த மரம் யாது? அதுதான் துறவு. துறவு என்று சொன்னால், தன்னையே இழந்து விடுவது என்று அர்த்தமல்ல. தன்னுடைய தென்று சொல்லி எதனெதன் மீது பற்று வைத்துக் கொண்டிருக்கிறோமோ அந்தப் பற்றைத் துறந்து விடுவது என்பதுதான் அர்த்தம். அந்தத் துறவானது மனிதத் தன்மையிலே வளர்ந்து சேவையாகப் பரிணமிக்க வேண்டும். தன்மீது வைத்திருக்கும் பற்றைத் துறக்கிறவன் பிறர் மீது காதல் கொள்கிறான். இந்தக் காதலுக்கு பிரேமை என்று பெயர். எனவே, துறவு, அஞ்சாமை, அன்பு, சேவை என்பன ஒன்றை யொன்று பிணைத்துக் கொண்டிருக்கும் சங்கிலி மாதிரி. பர்த்ருஹரி என்ற வடமொழிப் புலவன், தனது வைராக்கிய சதகம் என்ற நூலில், துறவையும் அஞ்சாமையையும் எப்படிப் பொருத்தப் படுத்திக் கூறுகிறான் பாருங்கள்: செல்வத்திலே வறுமை பயம், அறிவிலே அறியாமை பயம், அழகிலே வயோதிகம் என்ற பயம், புகழிலே புறங் கூறுகிறவர் களைப் பற்றின பயம், வெற்றியிலே பொறாமை என்கிற பயம், தேகாபிமானத்திலே மரண பயம், இப்படி உலகத்திலுள்ள எல்லா வற்றிலும் பயம் குடிகொண்டிருக்கிறது. எவனொருவன் எல்லா வற்றையும் தியாகஞ் செய்து விடுகிறானோ அவன்தான் பயப்படா தவன். இத்தகைய அஞ்சாமை காந்தியடிகளிடத்தில் நிரம்பியிருக் கிறது. இதனாலேயே, அஹிம்சை என்பது அவருக்குச் சர்வ சாதாரணமான ஓர் ஆயுதமாயிருக்கிறது. உத்தம வீரர்களுடைய லட்சணம் என்னவென்றால், அவர்கள் ஆபத்துக்குப் புறமுதுகு காட்டமாட்டார்கள்; ஆனால் ஒரு கொசுவி னிடத்திலும் இரக்கங் காட்டுவார்கள். அவர்கள் ராட்சத பல முடையவர்கள்; அந்தப் பலத்தைத் தமது நலத்திற்காக உபயோகிக் கவே மாட்டார்கள். அவர்களுடைய ஒவ்வொரு செயலிலும் மனிதத்தன்மை குடிகொண்டிருக்கிறது. சுமார் ஒரு தலைமுறைக்கு முன்னர் காந்தியடிகளுக்கு எதிரியாயிருந்த தளபதி மட்1 அவருடைய (அதாவது காந்தியடிகளுடைய) எந்தக் காரியத்திலும் ஒருவித மனிதத் தன்மை குடிகொண்டிருந்ததையே இங்கு வற்புறுத்திக் கூற விரும்புகிறேன். அவர் தென்னாப்பிரிக்காவில் சிறையிலிருந்த போழ்து என்னுடைய உபயோகத்திற்கென்று ஒரு ஜதை மிதியடி களைத் தயாரித்து, விடுதலையானவுடன் எனக்குச் சன்மானமாக அளித்தார்! என்று பாராட்டிச் சொல்லியிருப்பதை இங்கு வாசகர் களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். காந்தியடிகளின் ஒவ்வொரு செயலிலும் மனிதத் தன்மை ஒளிவிட்டு வீசுவதாலேயே அவரை ஒரு மனிதர் என்று அழைக் கிறோம். வெளிப் பார்வைக்கு அவர் எல்லோரையும் போல் ஒரு சாதாரண மனிதராகவே காணப் படுகிறார். எல்லா மகான்களும், எல்லா வீரர்களும், எல்லாத் தியாகிகளும் இப்படித்தான் காணப்படு கிறார்கள். ஆனால், அவர்கள் உள்ளமானது, எவ்வித சஞ்சலத்திற்கும் இடங்கொடாமல் சாந்தமாக இருக்கிறது. ரோமெய்ன் ரோலந்து,2 காந்தியடிகளைப் பற்றிக் கூறும் ஒரு வாக்கியம் இங்குக்கூர்ந்து நோக்கத்தக்கது:- அவருடைய அறிவு, அமைதியாகவும் தெளிவாகவும் இருக் கிறது. அவருடைய இருதயம், தான் என்ற அகங்காரமில்லாமல் இருக்கிறது. மற்றெல்லா மனிதர்களைப் போல அவரும் ஒரு மனிதரே. மகா புருஷராகவும், வீரராகவும், மனிதராகவும் முக்கோணத்திலிருந்து நமக்குக் காட்சியளிக்கிற காந்தியடிகள் இன்று எழுபத்து மூன்றாவது வயதையடைந்திருக்கிறார். அவருடைய வயது முதுமை யாகிக் கொண்டு போகிறது; ஆனால் அவருடைய வாழ்வு இளமை யாகிக் கொண்டு வருகிறது. வயதாக ஆக, வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ள வேண்டு மென்று சொல் வார்கள். ஆனால், அவருடைய வாழ்க்கை, வயதாக ஆக விரிந்து கொண்டு போகிறது. அவர் ஒரு ஞானி போலிருக்கிறார். ஆனால் உலக மெல்லாம் அவருக்குக் குடும்பமாயிருக்கிறது. அவர், பொன்னும், பொருளும் வேண்டு மென்று பிச்சை கேட்கிறார். ஏன்? இந்தியாவிலுள்ள கோடிக்கணக் காண ஏழைமக்கள் கையேந்திப் பிச்சை கேட்காமலிருக்கும் பொருட்டு. அவர் அடிக்கடி உபவாசம் இருக்கிறார். ஏன்? லட்சக் கணக்கானவர்களுடைய நிரந்தர உபவாசத்தைத் தடுப்பதற்காக. அவர் ஒற்றை ஆடை அணிந்து கொண்டிருக்கிறார். ஏன்? மற்றவர் களுக்கு முழு ஆடை வழங்குவதற்காக. அவர் ஊன்றுகோலுடன் நடக்கிறார். ஏன்? மற்றவர்களுக்கு தாம் ஓர் ஊன்றுகோலாயிருக்க வேண்டுமென்ற ஆவலினால். அவர், கோடிக் கணக்கான மக்களால் வணங்கப்படுகிறார். ஆனால், அவர் சத்தியமாகிற ஒரே பொருளைத் தான் வணங்குகிறார். அவருடைய லட்சியத்திலே, அதாவது பாரத ஜாதியின் மகோன்னத வாழ்விலே நமது பார்வையைத் திருப்பி, அந்த நல்வாழ்வுக்காக நமது வாழ்வை அர்ப்பணம் செய்வதன் மூலம் அவரை வணங்குவோமாக. மகா புருஷன் தேச மக்களிடத்திலே யாகட்டும், தற்காலிகமாகவாவது அரசாங்க உத்தியோகதர்களிடத்திலே யாகட்டும், ஒரு நம்பிக்கை யையும், நற்காலத்தை எதிர்பார்க்கும் ஆவலையும் உண்டுபண்ணிய மகா புருஷனை இச் சமயத்தில் நாம் நினைக்கத்தான் வேண்டியிருக் கிறது. ஷ்வேகான் கிராமத்தில் ஒரு சிறு குடிசையில் ஆண்டியாக அவர் வசித்தாலும், ஒவ்வோர் இந்தியனுடைய இதயக் கோயிலிலே அவர் ஆண்டவனாகப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். அவ ருடைய 69-வது ஜனன விழாக் காலத்தின் போது1 நமது கடமை என்ன? அவருடைய படத்தை வைத்து ஊர்வலம் வருவதா? அவர் பெயரைச் சொல்லி பிரசாதங்கள் தின்பதா? இல்லை; இல்லை. இந்தியாவின் பரிபூரண சுதந்திரம் என்ற லட்சியத்திலே அவருடைய பார்வை இருக்கிறது. அவ்வழியிலேயே நமது பார்வையையும் திருப்ப வேண்டும். காந்தியடிகள் எப்படி, தம்மைத் தேசீய வாழ்க்கை யோடு பிணைத்துக் கொண்டு விட்டாரோ அது போலவே நாமும் நமது வாழ்க்கையை, தேசத்தோடு பிணைத்து விட வேண்டும். நம்மால் தேசம் ஆக்கப்பட வேண்டுமே தவிர, தேசத்தினால் நாம் ஆக்கப்பட வேண்டிய காலம் மலையேறிவிட்டது. இந்த ஆக்க வேலையில் இன்றே இறங்குவோமாக! அந்தகாரத்தினிடையே ஒளி இந்த அடர்ந்த யுத்த அந்தகாரத்தினிடையே, ஆடாமல் அசையாமல் ஜ்வலித்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு பிரகாசந்தான் நமக்கு ஒருவித ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. அந்தப் பிரகாசந்தான், சாந்த மயமெனயிலங்கும் காந்தியெம் பெருமான். அவருடைய எழுபதாவது பிறந்த தினத்தை 02.10.38இல்1 கொண்டாடும் படியான பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. யுத்த வெறிபிடித்து மேலைநாடுகள் அலைந்து கொண்டிருக்கிற இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் அஹிம்சா தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசீயப் படையை வகுக்க ஏற்பாடு செய்து கொண் டிருக்கிறார். இதற்கு எவ்வளவு ஆன்ம பலமும் மனோ உறுதியும் தேவை யென்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை. ஆயுத பலம் பயன் பெறாமையை நாம் அபிசீனியாவிலும், பெயினிலும், சீனா விலும் கண்டு விட்டோமென்றும், இந்தியாவும் அந்தமார்க்கத்தில் பின்பற்றிச் செல்லாது, உலகத்திற்குச் சமாதான பாதையைத் திறந்து விடும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறியிருப்பது நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது? அவ ருடைய அஹிம்சைப் படையின் திட்டங்கள் இன்னும் நம் கைக்குக் கிட்டவில்லை. ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ், காங்கிரஸே ஒரு பெரிய மாறுதலடையுமென்பது நிச்சயம். 1920ஆம் வருஷத்தில், காந்தியடிகளின் மேற்பார்வையில் எப்படி காங்கிர மஹாசபை பெரிய மாறுதலையடைந்ததோ அதைப் போன்று இப்பொழுது - பதினெட்டு வருஷங்கள் கழித்து - காங்கிர ஒரு பெரிய மாறுதலை யடைகிறது. இந்த மாறுதலின்படி, காங்கிரஸின் எண்ணிக்கை சுருங்கலாம்; ஆனால் சக்தி அதிகரிக்கும் என்பதில் ஐயமேயில்லை. இதைக் காந்தியடிகள் வற்புறுத்திக் கூறுகிறார். இப்படிப்பட்ட அருமையான சந்தர்ப்பத்தில், நமக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே, காந்தியடிகளின் சேவை மிகவும் அவசியமாயிருக்கிறது. ஆக, உலகத்தினரனைவரும் உச்ச வரத்தில் காந்தியடிகள் நீடூழி வாழ்க என்று மனமார வாழ்த்துவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? பின்பற்றுவோர் தேவை பூரி என்பது ஒரிஸா மகாணத்திலுள்ள ஒரு க்ஷேத்திரம். இதற்கு ஜகந்நாதம் என்றும் பெயர். உலக சகோதரத்துவம் இங்கே பரிபூரணமாக நிரம்பியிருப்பதாக ஐதிகம். ஆனால் இங்குள்ள கோயிலுக்குள் ஹரிஜனங்கள் விடப்படுவதில்லை. kfh¤kh fhªâ, jkJ gÇthu§fSl‹ rÛg¤âš eilbg‰w fhªâ nrth r§f kfh eh£oš fyªJ bfhŸS« bghU£L xÇÞ[hî¡F¢ br‹¿Uªjhušyth? அப்பொழுது ஜகந்நாத க்ஷேத்திரத்திலுள்ள கோயிலுக்குள் ஸ்ரீ கதூரிபாய் காந்தியும், ஸ்ரீ மகாதேவ தேசாயின் பத்தினியும், இன்னும் சிலரும் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்தார்கள். இதுதான் சுருக்கமாக நடைபெற்ற விஷயம். ஆனால் இது காந்தியடிகளுக்கு ரத்தக் கொதிப்பு உண்டாக்கிவிட்டது. அவருடைய மனத்தில் ஒரு பெரிய சமுத்திரம் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டது. இது வேடிக்கையாக இல்லையா? மகாத்மா காந்தி, ஹரிஜனப் பணிசெய்து கொண்டு வருகிறார். ஹரிஜன இயக்கத்தின் தலைவர் அவர். ஹரிஜனங்களுக்கு எங்கு உரிமைகள் மறுக்கப் படுகின்றனவோ, அங்கு அவரோ, அவரைப் பின்பற்றுவதாகச் சொல்லும் அவருடைய சிஷ்யர் களோ சென்று உரிமைகளை அனுபவிக்கலாமா? அப்படியானால் அவர், உண்மை யாகவே ஹரிஜன இயக்கத்திற்குத் தலைவராக இருந்து நடத்த முடியுமா? சங்கடமான கேள்வி. ஆனால் முக்கியமானது. இந்த ஒரு சிறிய சம்பவம், காந்தியடிகள் ஒழுக்கத்திற்கு எவ்வளவு மதிப்புக் கொடுத்திருக்கிறார் என்பதை நன்கு காட்டுகிறது. ஒழுக்கம் என்பது என்ன? கற்ப நிலை கெடாமலிருப்பது மட்டுந் தானா? எதிர்மறையிலே இதற்கு இந்தப் பொருளைச் சொல்லி திருப்தியடையவில்லை பெரியோர்கள். மனிதத் தன்மைகள் என்று எவைஎவைகளை நாம் கொண்டாடுகிறோமோ அவை யனைத்தை யும் ஒரு தொகுதியாகச் சேர்த்து, அத்தொகுதிக்கு ஒரு சிகரம் அமைப்போமானால் அதுதான் ஒழுக்கம். இதனாலேயே உயிரினும் சிறந்ததாக ஒழுக்கத்தைக் கூறினார் திருவள்ளுவர். ஒழுக்கம் என்பது இருதய சுத்தத்தின் பூரணத்துவம்; மானிட வாழ்க்கையின் ஜீவ நாடி; உலகத்தை ஒழுங்காகச் செலுத்திக் கொண்டு போகும் ஒரு சக்தி. இந்த உயர்ந்த நிலையிலிருந்து தான் ஒவ்வொரு சம்பவத்தையும் காந்தியடிகள் கவனிக்கிறார். 1922ஆம் வருஷம் சௌரி-சௌரா சம்பவம் நடைபெற்று அதன் விளைவாகச் சத்தியாக்கிரக இயக் கத்தை நிறுத்தியது முதற் கொண்டு, இந்தியாவின் அரசியல் வளர்ச்சியை நாம் கவனித்துப் பார்த் தோமானால், ஒழுக்கமென்ப தனை அரசியலில் கொண்டு புகுத்த காந்தியடிகள் எவ்வளவு முயன்றிருக்கிறார் என்பது நன்கு தெளிவாகும். மகான்கள் யார்? பிறருக்காக உபதேசிப்பவரா? இல்லை. பிறருக்காக வாழ்பவர்; மற்றவர்களுடைய நலத்திலே தன்னலத்தைக் காண்கிறவர். இவர்களால் தான் உலகத்தைச் சீர்திருத்த முடியும். இவர்களுடைய சொல்லுக்குத்தான் மதிப்புண்டு. அப்படிப்பட்டவர் தான் இந்தியாவுக்குத் தேவை. நார்மன் மாக்லியாட் என்ற ஓர் ஆங்கில அறிஞன் கூறுகிறான்:- உயிருள்ள மனிதர்கள் நமக்குத் தேவை. அவர்களுடைய அறிவோ, அவர்களுடைய செல்வமோ நமக்குத் தேவையில்லை. அவர்களே நமக்குத் தேவை. அவர்களுடைய கண்களில் வழியும் அருளை, ஏழைகள், உணவில்லாதவர்கள், உடையில்லாதவர்கள், தீண்டாத வர்கள், மன முடைந்துபோனவர்கள் முதலியோர் பார்க்க வேண்டும்; உணர வேண்டும்; அதிலே சாந்தியடைய வேண்டும். இந்த வாக்கியங்கள், காந்தியடிகளைப் பார்த்துச் சொல்லப் பட்டன போலில்லையா? இத்தகைய மகான்கள், தம்மைப்போல், தம்மைச் சுற்றியிருப் போரையும் ஆக்க வேண்டுமென்பதிலே முனைந்து நிற்கிறார்கள். இதற்காகப் பல இன்னல்களை அனுபவிக்கத் தயாரா கவும் இவர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால், இவர்களுடைய லட்சிய மெல்லாம் சத்தியத்திலும் அஹிம்சையிலும் தோய்ந்து நிற்கிறது. காந்தியடிகள் அரசியலில் இறங்கியதும் இந்த லட்சியத்திற் காகத்தான். இனி காந்தியடிகளின் வாக்கைச் சிறிது கேட்போம்:- நாம் செய்து வருகிற நிர்மாண வேலைத் திட்டங்கள் யாவும் சத்தியம், அஹிம்சை இவற்றின் புற விகாசங்கள்தான். இந்த நிர்மாண திட்டங்களை எவ்வளவு தூரம் நிறைவேற்றுகிறோமோ அவ்வளவு தூரம் அஹிம்சை பாதையிலும் சத்திய மார்க்கத்திலும் சென்றவர்களாகிறோம். இது கடைசியில் சுதந்திரத்தில் நம்மைக் கொண்டு சேர்ப்பிக்கிறது. அஹிம்சையின் பூரண விகாசங்களுள் தீண்டாமையும் ஒன்று. தீண்டாமை ஒழியா விட்டால் ஹிந்து மதமே அழிந்து விடுதல் நல்லது என்பது என்னுடைய பிரார்த்தனை. அதுவே உங்களுடைய பிரார்த்தனையுமா யிருக்கவேண்டும். ஹரிஜனங் களுக்குக் கோயில்களைத் திறந்துவிட வேண்டுமென்ற நோக்கத் துடன் நான் ஹரிஜனயாத்திரை செய்து இந்த உண்மையைக் கண்டேன். தீண்டாமை விலக்கில் நம்பிக்கையுள்ளவர்கள், ஹரி ஜனங்களுக்கு அனுமதி மறுக்கிற கோயில்களுக்குள் செல்லக்கூடா தென்று நான் வலியுறுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். அப்படி யிருக்க என் மனைவியும் என் புத்திரிகளும் அப்படிப்பட்ட கோயில் களுக்குச் செல்வார்களானால் அதை நான் எப்படிப் பொறுப்பேன்? அத்தகைய கோயில்களுக்கு செல்ல வேண்டாமென்று அவர் களோடு மன்றாடிப் பார்ப்பேன். முழந்தாளிட்டு அவர்களைப் பணிந்து கேட்பேன். என்னுடைய இந்த முறையீடுகள் பலிக்கா விட்டால், அவர்களோடு நான் வைத்துக் கொண்டிருக்கும் உறவை அறுத்துக் கொள்வேன். இந்தக் கொள்கையின் படியே இத்தனை வருஷங்களாக என் வாழ்க்கையை நடத்த முயற்சி செய்து வந்திருக் கிறேன். அப்படி யிருக்க, என் மனைவியும், என்னால் என்னுடைய புத்திரிகளென்று கருதப் பெறும் வேறு இரண்டு ஆசிரம வாசிகளும் பூரி கோயிலுக்குச் சென்றார்கள் என்று நான் கேள்விப்பட்ட போழ்து, அவமானத்தினால் தலைகுனிந்தேன். நான் வீழ்ந்துபடுவ தற்கு இந்தத் துன்பம் போதுமானதாயிருந்தது. வைத்தியர்களின் பரிசோதனை யந்திரம், என் தேகத்தில் ரத்தக் கொதிப்பு அதிகமாக ஏறியிருப்பதாகக் காட்டியது. ஆனால் யந்திரத்தை விட என் நிலைமையை நான் நன்றாக அறிந்து கொண்டேன். யந்திரம் காட்டியதை விட நான் கேவலமான நிலைமையில் இருந்தேன். பற்றில்லாமல் இருக்கவேண்டு மென்று கீதை கூறுகிறது. ஆனால் இப்படிப்பட்ட அதிர்ச்சிகளிலிருந்து, நம்மிடத்தில் நெருங்கியவர்கள் அவர்கள் கடமைகளைச் செய்யாமலிருப்பதால் ஏற்படும் அதிர்ச்சிகளி லிருந்து பாராமுகமாக இருக்க வேண்டுமென்பது அதன் அர்த்தமல்ல. பூரி கோயிலுக்குச் சென்றவர்களை நான் குறை கூறமாட்டேன். அவர்கள் அறியாமையினால் சென்றார்கள். ஆனால் அவர்களுடைய தர்மம் இன்னது என்பதை எடுத்துச் சொல்லாமல் இருந்த என்னுடையவும் மஹா தேவ தேசாயினுடையவும் குறை அது. (என்னிடத்தில் நெருங்கிய உறவு பூண்ட அவர்கள்) இங்ஙனம் கோயிலுக்குச் சென்றதனால் சமூகத்தில் என்ன விதமான கொந்தளிப்பு ஏற்படும் என்பதை மஹாதேவ் உணர்ந் திருக்க வேண்டும் பூரி கோயிலுக்குள் சென்றுவருமாறு அவர்களுக்கு நான் கூறவில்லை. ஹரிஜனங்கள் எதுவரையில் அனுமதிக்கப் படுகிறார்களோ அது வரையில் சென்று, அதற்கு மேல் போக மறுத்துத் திரும்பி வந்திருந் தால் அது, ஹரிஜன இயக்கத்திற்குப் பெரிய பிரசாரமாக இருந் திருக்கும்; ஹரிஜனத் தொண்டு செய்ததாகவும் இருக்கும். குப்பை கூட்டுவதோ, ஹரிஜனங் களோடு சேர்ந்து உண்பதோ, அல்லது அவர்களுக்கு ஆகாரமளிப்பதோ போதாது. ஹரிஜனங்களுடைய உபயோகத்திற்கு இடம் பெறாத கோயில் முதலியவற்றிற்கு நாம் செல்ல மறுக்க வேண்டும். இந்த வாக்கியங்களிலிருந்து காந்தியடிகள் செயலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்பது நன்கு புலனாகிறது. இதுவே இந்தியாவின் புராதன லட்சியமாயிருக்கிறது. அந்த லட்சியத்தை மீண்டும் நிலை நிறுத்தவே அவர் பாடுபட்டு வருகிறார். ஒரு தேசத்தின் பெருமையை எப்படி அளந்து பார்ப்பது? அதன் விதீரணத்தினாலா? அதன் ஏற்றுமதி இறக்குமதிப் பெருக்கத்தினாலா? இல்லை; இல்லை. அஃது உற்பத்தி செய்கிற மகா புருஷர்கள் செய்யும் அரிய காரியங்களினாலேயே அது பெருமை யடைகிறது. இந்தியாவை இப்பொழுது வெளிநாட்டார் அறியத் தொடங்கியிருக்கின்றனரென்றால் அது மகாத்மா காந்தியி னால்தான். காந்தியின் இந்தியாவே தவிர, இந்தியாவின் காந்தியல்ல. வெளிநாடுகளிலே சுற்றுப்பிரயாணம் செய்கிறவர்களுக்குத்தான் இந்தச் சொற்றொடரின் முழு அர்த்தம் தெரியும். இந்த ஒரு சிறிய சம்பவம் இந்தியாவின் பொது வாழ்விலே ஈடுபட்டிருக்கிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையிலே ஒருவிதமாகவும் பொது வாழ்க்கை யிலே வேறொரு விதமாகவும் இருந்து நடிக்கிறவர்கள் இனி அப்படிச் செய்யமுடியாது. அப்படிப் பட்டவர்களால் இந்தியா முன்னேற் றத்தை அடைய முடியாது. காங்கிரஸுக்கு இப்பொழுது அதிக மான மதிப்பு இருக்கிறதென்றால் அதற்குக் காரணம், உள்ளும் புறமும் ஒத்த உண்மையாளர்கள் பலர் அதில் இருக்கிறார்கள் என்பதே. எனவே, அரசியல் வாதிகளின் பொறுப்பு அதிக மாகிற தென்று மட்டும் சுருக்கமாக இங்கு எச்சரிகை செய்ய விரும்புகிறோம். மகாத்மா காந்தி, அஹிம்சா தர்மத்தின் மூலமாகத்தான் உலகம் நல்வழிப்பட முடியும் என்று இருதய பூர்வமாக நம்புவ தால்தான் அவரை உலகம் போற்றுகிறது. போற்றுவதோடு நில்லா மல் அவரைப் பின்பற்றக் கூடிய காலம் விரைவிலே வரப் போகிறது. மேலைநாட்டு வல்லரசுகள் ஆயுத பலத்தைக் கொண்டுதான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற பொய் நம்பிக்கை யில் ஈடுபட்டு, தலை கால் தெரியாமல் அழிவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. அதற்கும் ஓர் எல்லையுண்டல்லவா? அந்த எல்லையை அவை அடையும் பொழுதுதான், ஆயுத பலத்தின் பயனற்ற தன்மையும், அஹிம்சா தர்மத்தின் சிறப்பும் நன்கு தெரியப் போகின்றன. அன்றுதான், காந்தியடிகள் உலக சிரேஷ்டராகப் போற்றப்படுவார். உலகத்து ராஜ தந்திரிகள் அவர் அடியின் கீழ்ப் பணிந்து நிற்கப் போகிறார்கள். அந்தக்காலம் வெகுதூரத்தில் இல்லை யென்பதை மட்டும் நாம் நன்கு உணர்கிறோம். இப்படி நாம் உணர்வதற்கு ஆதாரங்களில்லாமல் இல்லை. மத்திய மாகாண அரசாங்கத்தினர் தொடங்கியிருக்கும் வித்தியா மந்திரத் திட்டப் படி வார்தாவில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கூடம் 21.04.38இல் திறக்கப் பட்டது. அப்பொழுது காந்தியடிகள் பேசி யிருப்பதை அன்பர்கள் கவனிக்க வேண்டும். ஹிட்லர், கத்தி பலத்தைக் கொண்டு தன் லட்சியத்தை அடையப் பார்க்கிறார். நானோ ஆத்ம பலத்தைக் கொண்டு என் லட்சியத்தை அடையப் பார்க்கிறேன். மேலைநாட்டு எண்ணங்களை அறவே விட்டு ஒழியுங்கள். கிராமவாசிகளுடன் ஒன்று படுங்கள். அவர்கள் வாழ்க்கையை வாழுங்கள். மேலைநாட்டார் அழிவு தரத்தக்க பயிற்சியையே அளித்துக்கொண்டிருக் கிறார்கள். நாம் அஹிம்சா தர்மத்தின் மூலம் பயன் பெறத்தக்க பயிற்சியை அளிப்போம். இந்தச் சில வாக்கியங்களிலிருந்து நமது நம்பிக்கை வலுப் படுகிறது. தேசங்கள், தனிமனிதர்களைப்போல் தங்கள் புராதனப் பெருமையிலே பலம் பெறுகின்றன. அந்தப் பெருமை அழிந்து படாமல் காப்பாற்றப்பட வேண்டுமென்ற உறுதியிருந்தால்மட்டும் அந்த நாடு வாழ முடியும். அப்படிப்பட்ட பெருமையிலே நாம் ஒரு காலத்தில் திளைத் திருந்தோம். ஆனால் இடைக் காலத்தில் எவ்வளவோ சிறுமைகள் பட்டோம். அவற்றை நிகழ்கால அனுப வங்களாகக் கொண்டு நாம் எதிர்காலத்தில் எவ்வளவு ஜாக்கிரதை யுள்ளவர்களாயிருக்க வேண்டு மென்பதை நாம் சொல்லத் தேவை யில்லை. நமது புராதனப் பெருமையை நிலை நிறுத்தி அதன் வாயி லாக உலகத்திற்கு வழி காட்ட காந்தியடிகள் முயன்று வருகிறார். அவரை உண்மையிலே பின்பற்றுவோர் இப்பொழுது தேவை. அந்தத் தேவையை நாம் எவ்வளவு விரைவிலே அறிந்து பூர்த்தி செய்கிறோமோ அவ்வளவு நமது நாட்டிற்கும் நல்லது; உலகத் திற்கும் நல்லது. பாரத ஜாதியின் ஆத்மா காந்தியடிகள், இந்தியாவின் வாழ்க்கையைப் பிரதி பலிக்கிறவ ராயிருக்கிறார்.1 அவருடைய சேவையில் இந்தியா நம்பிக்கை வைத் திருக்கிறது. ஏனென்றால் இந்தியாவின் அழியாத வாழ்விலே அவருக்கு நம்பிக்கை உண்டு. யாரொருவருக்குத் தன்னம்பிக்கை அதிகமாயிருக் கிறதோ, அவரைத்தான் எல்லா ஜனங்களும் நம்பு வார்கள். காந்தியடிகளின் மகத்தான செல்வாக்குக்கு இதுவே காரணம். காந்தியடிகளின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகளில் அபிப்பிராய வேற்றுமைகள் இருக்கலாம். நவயுகத்தின் நாடித் துடிப்பின் மீது அவர் கை வைக்கவில்லையென்று இளைஞர்கள் கருதலாம். ஹரிஜன இயக்கத்தைத் தோற்றுவித்து, அது காரணமாக ஹிந்து மதத்திற்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்று சநாதன தர்மம் கூச்சல் போடலாம். ஆனால், அருவமாயுள்ள பாரத ஜாதியின் ஆத்மாவின் உருவமாயிருக்கிறார் காந்தியடிகள் என்பதை யாருமே மறுக்க முடியாது. பாரத ஜாதியின் ஆத்மா எங்கேயிருக்கிறது? துறவிலே; தியாகத்திலே; எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்று மறியாத எண்ணத்திலே. பாரதஜாதி அழியாமலிருப்பதற்கு இதுவே காரணம். நமது பாரத மாதாவின் பேரன், பேர்த்திகளெனத் தகும் ராஜ்யங்களும், நாகரிகங் களும் அழிந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் நமது தாய் இன்னும் கன்னிப் பருவத்தினளாகவே இருக்கிறாள். அவள் மீது மாசுமறுக்கள் படர்ந்திருக்கின்றன வென்பது உண்மை. தற்போது, அவளை எல்லோரும் திரகரிக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். ஆயினும் அவளுடைய அந்தராத்மா சிதைக்கப் படாமலே இருக்கிறது. இதனாலேயே அவள் வற்றாத ஊற்றாகவும், வாடாத மலராகவும் காட்சியளிக்கிறாள். இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? பாரத ஜாதியின் துறவு மனப் பான்மைதான். துறவு பூண்டவர்களே பாரத நாட்டின் தலைவர்களாகக் கௌரவிக்கப் பட்டு வந்திருக்கிறார்கள். துறவு என்றால் புறத் துறவு அல்ல; அகத் துறவையே குறிப்பதாகும். காந்தியடிகளின் கோலம் இந்தியாவின் கோலமாகும். அவருடைய உள்ளம், புராதன இந்தியாவின் பிரதிநிதியாகவும், அவருடைய வெளித் தோற்றம், தற்கால இந்தியாவின் பிரதிநிதி யாகவும் விளங்குகின்றன. அதனாலேயே பழைய வாசனையிலேயே தோய்ந்துகிடக்கும் பணக்காரர் களும், புதிய வாசனையை நுகர வேண்டுமென்ற ஆவல் கொண்ட ஏழைகளும் அவரைப்பின் பற்று கிறார்கள். அவருடைய வார்த்தையில் பெருமையும் நம்பிக்கையும் முறையே கொள்கிறார்கள். மகாத்மா காந்தி ஒரு சிறந்த கர்மயோகி. அவர் உழைப்பிலே தான் இன்பங் காண்கிறார். உழைப்பின் பலனைப் பற்றி அவர் கவலைப் படுவதில்லை. லட்சியத்திற்கு எந்த விதமான புனிதத் தன்மை இருக்க வேண்டு மென்று கருதுகிறாரோ, அதே விதமான புனிதத் தன்மை அந்த லட்சியத்தை அடைவதற்குரிய சாதனங் களுக்கும் இருக்க வேண்டு மென்று கருதுகிறார். இதனாலேயே எல்லாருடைய அன்பையும் மரியாதையும் பெறுகிறார். நமது பூர்விக ரிஷிகளின் மகோன்னதமான வாழ்க்கையும் இத்தகைய தாகவே இருந்தது. எப்படி கடவுள் ஒருவர்தானோ, அப்படிப்போல எல்லா மதங் களுக்கும் அடிப்படையான மதம் ஒன்றுதான் என்ற உண்மையை, மகாத்மா காந்தி தமது அன்றாட வாழ்க்கையின் மூலமாக நிரூபித்துக் காட்டி வருகிறார். இதனாலேயே எல்லா மதத்தினரும் அவரை ஓர் ஆசாரிய புருஷனாகக் கொண்டாடுகிறார்கள். ஸத்தியம் வத; தர்மஞ் சர என்ற அருமையான வாக்கியந்தான், எல்லா மதக் கோட்பாடுகளுக்கும் அதிவாரமாயமைந்திருக்கிறது. இந்த அடிப்படையின் மீதே, காந்தியடிகள் தமது வாழ்க்கையாகிற வீட்டை அமைத்துக் கொண்டு விட்டார். இதனாலேயே, இந்த வீடு எல்லாருக்கும் நிழல் கொடுக்கிறது; எல்லாரும் இதில் இன்பங் காண்கிறார்கள். பகைவனுக்கு அருளும் நெஞ்சம் திண்ணிய நெஞ்சமாக இருக்க வேண்டும். அந்த உள்ளத்தில் எவ்விதமான கறைகளும் இருக்க முடியாது. கடவுள் எங்கும் அன்பு மயமாய்த் திகழ்கிறார் என்ற தளராத நம்பிக்கை தான், சத்துருக்களிடத்திலும் அன்பு காட்டும் மனப் பான்மையை நல்கும். இந்த அன்பானது, ஜாதி, மதம், நாடு, மொழி, காலம், திணை, பால் முதலிய அனைத்தையும் கடந்து நிற்பது. இதுவே விசுவப் பிரேமை என்று சொல்லப்படுவது. நமது முந்தையோர் மொழிந்த நூல்கள் பலவற்றுள்ளும் இந்த உண்மை தான் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மனித வாழ்க்கையின் லட்சியம் இதுவாகவே இருக்க வேண்டுமென்று நமது பெரி யோர்கள் ஒரே குரலுடன் முழக்கம் செய்து விட்டுப் போயிருக்கி றார்கள். இந்த முழக்கத் திற்கு எதிரொலி கொடுப்பது போலவே, காந்தியடிகளின் வாழ்க்கையும் உபதேசங்களும் இருக்கின்றன. இதனாலேயே, அவரை உலகம் தீர்க்கதரிசி யென்று போற்றுகிறது. இதே மாதிரி அவரை இன்னும் பல்லாண்டுகள் உலகம் போற்றிக் கொண்டிருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ரவீந்திரநாத் தாகூரின் அஞ்சலி மகான்கள் செய்து விட்டுப்போகிற காரியங்கள் யாவும், காலத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவைகளா யிருக்கின்றன. ஆனால் அவர்கள் செய்கிற காரியங்களுக்கு அடிப்படையா யிருக்கிற தியாகம், எத்தகைய அளவு கோலாலும் அளக்க முடியாது. மகாத்மா காந்தியின் தொண்டுகள் உலக மறிந்தவை. ஆனால் அவர் காரியங்களுக்கு அடிப்படையாயுள்ள ஆன்ம சக்திதான் நமக்கு முக்கியமானது. அவர், சத்தியத்திற்குத் தம்மை அர்ப்பணஞ் செய்து விட்டார். அசைக்காத உறுதி பூண்டவர் அவர். எதற்கும் அஞ்சா தவர். தாம் செய்கிற காரியங்களுக்குப் பயன் கருதாதவர். அவ ருடைய வாழ்க்கையில் இவைதான் முக்கிய அமிசங்களாய் விளங்கு கின்றன. காலத்திற் கொத்தாற்போல், அரசியலைப்பற்றி நாம் கொண் டுள்ள கொள்கைகளும் மாறுபடுகின்றன. இதே மாதிரி சமூக வாழ்விலும் நாம் காலத்திற்குத் தகுந்தபடி நம்மை நாம் மாற்றி யமைத்துக் கொள்கிறோம். ஆனால் மகாத்மா காந்தியினால் பொது வாழ்க்கையில் - அதாவது அரசியல் வாழ்க்கையில் - புகுத்தப் பெற்ற சத்தியம் என்றும் நிலைத்து நிற்கும். ஒழுங்கான வஞ்சக முறைகள் அரசியலில் கையாளப்பட்டு வருங்காலத்தில், மகாத்மா காந்தி, அரசியல் சமரஸப் பேச்சுக்களில், சத்தியப் பாதையிலேயே சென்றார். சில்லரை வேலைத் திட்டங்களும் நபர்களின் அபிப்பிராயங்களும் அவர் கவனத்திற்கு வருவதேயில்லை. ஆரம்பத்திலிருந்து அவர் ஒழுக்கத்தைத்தான் குறிக்கோளாகக் கொண்டார். தேசத் தொண்டு செய்யும் விஷயத்தில் மகாத்மா காந்தி இந்த சத்திய மார்க்கத்தைக் கடைப் பிடித்தார். நமது நாட்டுக்கு எப் பொழுதுமே மனிதத் தன்மையில் அதிக நம்பிக்கை யுண்டு. அத னுடன், மகாத்மா காந்தியின் உண்மை கடைப் பிடிக்கிற முறையும் சேர்ந்து இப்பொழுது சோபிக்கிறது. நமது கிராமங்களிலே வசிக்கிற ஜனங்களுக்கு மகாத்மா காந்தி, தமது பூராவையும் கொடுத்திருக்கிறார்; அப்படியே ஒடுக்கப்பட்ட ஜாதியாருக்கும் அளித்திருக்கிறார். நமது தேசீய வாழ்வுக்கு அதிவாரமாயமைந்திருப்பது, அரசியலையே தொழிலாகக் கொண்ட ஒரு சில அரசியல்வாதி களல்ல; பொது ஜனங்களே என்ற உண்மையை அவர் உணர்த்தினார். காங்கிர ஆரம்ப காலத்தில், பாட்னாவில் நடைபெற்ற ஒரு மாகாண மகாநாட்டிற்கு நான் தலைமை வகிக்கும்படி நேரிட்டது. கிராம ஜனங் களுக்கு அவர்களுடைய வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ளக்கூடிய ஓர் உரிமையை அளிக்க வேண்டு மென்று நான் கூறினேன். அப்பொழுது ஓர் அரசியல் நண்பர், என்னுடைய இந்த அபிப்பிராயத்தைக் கண்டு சிரித்தார். அந்தக் காலத்தில் நமது முகமெல்லாம் மேற்குப் பக்கம் திரும்பிக் கொண்டிருந்தது. படித்த வகுப்பினர் என்று சொல்லப் படுவோர், தங்களுடைய எஜமானர்களை சதா பூஜித்துத் திருப்தி செய்வதிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்தனர். இப்பொழுது அந்த நிலைமையெல்லாம் மாறிவிட்டன. இப்பொழுது அந்த மகான் - மகாத்மா காந்தி - நமக்குப் புகட்டிய அன்பு முறையில் நம்மவர்கள் பெருமை கொள்கிறார்கள். நம்மிடத்திலே இதுகாறும் உறங்கிக் கிடந்த சிருஷ்டி சக்தி இப்பொழுது திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணராயிருந்தவர் மகாத்மா காந்தி என்பதைச் சொல்ல வும் வேண்டுமோ? கீளார் கோவணமுடுத்து நிற்கும் இந்த மகாத்மாவுக்கு, அவ ருடைய பிறந்த தினத்தன்று நம்முடைய வணக்கத்தைத் தெரிவிக்கக் கூடிய பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. சாந்திநிகேதன ஆசிரமவாசிகளின் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும், இந்த மகானுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  காந்தியும் ஜவஹரும் இருவரும் வாழ்க! கதையை அருளிய கண்ணனாகக் காந்தியடிகளை நாம் கற்பனை செய்து கொண்டோமானால், அர்ஜுனன் வடிவமாக ஜவஹர் நமது மனக்கண் முன்னர் உடனே தோன்றி விடுகிறார். வெண்ணெய் திருடி ஆய்ச்சியரை வேடிக்கை காட்டிய கிருஷ்ணனையோ, கள்ள மணம் புரிந்த பார்த்தனையோ நாம் இங்குக் குறிப்பிடுகிறோமில்லை. சில காலம் வரை, அதாவது நமது தேசம் சுதந்திரம் அடையும் வரை, இவர்களை மறந்துவிட்டால் கூட நல்லதுதான். நாடு கொள்ள வேண்டுமென்ற ஆசைநோய் பற்றி, சுயநலப்புழுவினால் அரிக்கப் பெற்று, ஆங்காங்கு ரத்தக்கறை படிந்திருந்த பாரத சமுதாயத்தைச் சத்தியத்தினாலும், தர்மத்தி னாலும், தியாக சிந்தனையினாலும் தட்டி எழுப்பிய கர்ம வீரர் களல்லவா கிருஷ்ணார்ஜுனர்கள்? கிருஷ்ணனுடைய சங்க நாதத்தையும் அர்ஜுனனுடைய காண்டீபத்தின் நாணொலியையும் நாம் கேட்க மறந்துவிட்டோம். அதற்குப் பதிலாக அவர்களைப் படத்திலே, கற்சிலையிலே ஏற்றி தூப தீபங்காட்டித் திருப்தி யடைந்து விடுகிறோம். அவர்களுடைய வீர உணர்ச்சியை நமது ரத்தத்திலே பாய்ச்ச முற்படு கிறோமில்லை. வீழ்ச்சி ஏற்பட்டு விட்டதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? கடைசிவரை சமாதானத்தை நாடுவோம், ஒத்துழைத்துப் பார்ப்போம் என்ற கருத்துக் கொண்டே, கௌரவரிடம் தூது நடந்தான் கண்ணபிரான்; முணு முணுத்தான் பாண்டவவீரன். காந்தி - இர்வின் ஒப்பந்த காலத்தில் இந்தக் காட்சியை அப்படியே கண்டோமில்லையா? காந்தி - இர்வின் சம்பாஷணையைக் கேட்ட செவிகள் ஜவஹரின் முணு முணுப்பையும் கேட்டன. கண்ணபிரானின் அருள்வலி முன்னர், அர்ஜுனனின் புயவலி பணிந்து நின்றது. காந்தியடிகளின் ஆன்ம சக்தி முன்னர் ஜவஹரின் வீரம் வணக்கம் செலுத்தியது. ஆனால் முணுமுணுப்புடன்தான். கண்ணனின் இனிய தோழன் காண்டீபன். காந்தியடிகள் கண்ணிலும் இனியவன் ஜவஹர். இருவருக்குமுள்ள தொடர்பு சொல்ல முடியாதது. ஆனால் கண்டனுபவிக்கக் கூடியது. கருத்துதொருமித்த காதலரிடையே சில சமயங்களில் ஊடல் நிகழ்ந்த போதிலும், இருவருடைய மனமும் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறதல்லவா? இந்தச் சம்பாஷணையை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர, பிறருக்கு எடுத்துச் சொல்ல முடியாது. அது போலவே தான் காந்தி - ஜவஹர் உறவும். காந்தியடிகள் எங்கே செல்கிறார், எந்த லட்சியத்தை நாடிச் செல்கிறார் என்பது ஜவஹருக்குச் சில சமயங்களில் தெரிவதில்லை. ஆனால் அவரைப் பின்பற்றிச் செல்வதிலே அபார நம்பிக்கை இருக்கிறது. லட்சியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல். அந்த ஆவலைப் பூர்த்தி செய்து கொள்ளாமலே அந்த லட்சியத்தை நாடிச் செல்லுதல். இதற்கு எத்தகைய மனோ உறுதியும் தியாக புத்தியும் வேண்டும் தெரியுமா? பதினான்கு வருஷங்களாக நான் தங்களிடம் நெருங்கிப் பழகிக் கொண்டு வந்தபோதிலும், என்னால் அறியக்கூடாத ஒரு தன்மை - அல்லது சக்தி - தங்களிடம் மறைந்திருக்கிறது. அதை நினைக்க எனக்கு அச்சமா யிருக்கிறது என்று காந்தியைப் பார்த்து ஜவஹர் ஓரிடத்திலே குறிப்பிடு கிறார். காந்தியின் தத்துவங்கள் பலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால் அவரைப் பின்பற்றுதல் எல்லோராலும் முடியும் என்று பிறிதோ ரிடத்தில் கூறுகிறார். கிருஷ்ணன் - அர்ஜுனன் சம்பாஷணைகளில் இந்தக் கருத்துக்கள் தொனிக்கவில்லையா? காந்தி ஒரு வித்து. அதிலிருந்து தோன்றிய முளை ஜவஹர். காந்தியின்றேல் ஜவஹர் எங்கே? ஜவஹர் தோன்றாவிட்டால், காந்திக்குத் தான் என்ன பெருமை? வித்து, மண்ணிலே இருக்கிறது. அதில் வாழ்க்கையும் காண்கிறது. தன்னினின்றும் பிறந்த மரத்துக்கு வாழ்வை நல்கி இன்பம் நுகர்கிறது. வித்தினின்று உண்டான முளையோ, அதனின்று வேறு படாத தாய் ஆனால் அதனின்று பெரிதாய் வானுறவோங்கி வளர்ந்து, இருக்க நிழலும் உண்பதற்குப் பழங்களும் அளிக்கிறது. வித்து பெரிதா? மரம் பெரிதா? இந்தக் கேள்வியே தவறு. காந்தியடிகள் மண்ணிலே வேலை செய்யும் விவசாயியாக - ஏழை மக்களிலே ஒருவராக இருக்கிறார். அவர் களுடைய ஆசாபாசங்களின் பிரதிபிம்பமாக, சுக துக்கங்களின் வடிவமாக, வாழ்வு தாழ்வுகளின் பிரதிநிதியாக அவர் விளங்குகிறார். தன்னை ஒரு விவசாயி என்று அவர் சொல்லிக் கொள்வதன் ரகசியமும் இதுதான். காந்தி வேறு, இந்தியா வேறு என்று பிரிக்க முடியாது. காந்தியின் அபிலாஷை இந்தியாவின் அபிலாஷை. காந்தியின் உணர்ச்சி இந்தியாவின் உணர்ச்சி. பொதுவாகச் சொல்லும் போது, காந்தி இந்தியாவின் கண்ணாடி; இந்தியாவின் நாடி ஓட்டத்தை அளந்து கூறும் கருவி. காந்தி வித்தினின்று தோன்றிய ஜவஹர் விருட்சமோ, பாமர ஜனங்களிடத்திலிருந்து வேறுபட்டவராய், அவர்களிடத்தில் அன்பு காட்டுகிறார். அவர்களுக்கு இடமும் உணவும் வழங்க முயல்கிறார். அதிலே பெருமையும் கொள்கிறார். அவருடைய வாழ்வும் அதுதான். பாமர ஜனங்களின் உள்ளத்தோடு, தமது உள்ளத்தை ஒன்று படுத்த அவரால் முடியவில்லை. ஆனால், அந்தப் பாமர ஜனங்களின் உள்ளத்திலே ஒரு சக்தி பொருந்திய மூர்த்தியாகக் கோயில் கொண்டு விட்டார். காந்தி நீறுபூத்த நெருப்பு. அதிலே கொழுந்து விட்டெரியும் ஜ்வாலை ஜவஹர். காந்தியடிகளின் எஃகு போன்ற மனோ உறுதியை, ஆளை மயக்கும் அந்தப் புன்சிரிப்பு கவிந்து கொண் டிருக்கிறது. அவருடைய அன்பான வார்த்தைகளிலே அதிகார தோரணை அடங்கியிருக்கிறது. அவருடைய அடக்கத்திலே, எதற்கும் அஞ்சாத வீரம் அடைக்கலம் புகுந்து கொண்டிருக்கிறது. சத்துருக்களின் கோபாவேசமெல்லாம், அவருடைய பணிவிலே கரைந்து விடுவதை எத்தனை முறை நாம் பார்த்திருக்கிறோம்? இந்த நீறு பூத்த நெருப்புத் தன்மையே இந்தியாவின் நாகரிகம். இதனாலேயே காந்தியடிகள் இந்தியா வாகப் பிரதிபலிக்கிறார். உலகம் அவரையே இந்தியாவாகக் கருதுகிறது. ஜவஹர் ஜ்வாலை, எட்டி நின்றோர்க்கு வெளிச்சம் கொடுக் கிறது. கிட்டச் சென்று தட்டிப் பார்ப்போரைச் சுட்டு விடுகிறது. இந்த ஜ்வாலையின் வெளிச்சத்தினால் நமக்குத் தெரியாத வழி களெல்லாம் தெரிகின்றன. அவைகளூடே செல்லவேண்டுமென்ற தைரியம் பிறக்கிறது. நமது தேசத்தின் தாழ்ந்த நிலையை இந்த ஜ்வாலை கொண்டு பார்க்க முடிகிறது. நம்மிடத்திலே ஊறிக் கிடக்கும் கோழைத் தனத்தை இந்த ஜ்வாலை சுட்டெரிக்கிறது. உலகமும் இப்பொழுது, இந்த ஜ்வாலையின் பிரகாசத்தைக் கொண்டு இந்தியாவைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. நெருப்பி னின்று பிறந்த ஜ்வாலைக்குப் பெருமையா? ஜ்வாலையை உண் டாக்கிய நெருப்புக்குப் பெருமையா? பண்டித மோதிலால் நேரு திரட்டி வைத்த ஏகபுத்திரனான தங்கக் கட்டியை, காந்தி என்னும் பொற்கொல்லன், தியாகம் என்னும் தீயிலே வைத்துச் சுட்டு, ஜவஹர் என்னும் ஆபரணமாகப் பாரத மாதாவுக்குச் சூட்டி விட்டான். தாய்க்கு அணிபூட்டிய பொற்கொல்லனுக்குப் பெருமையோ? அல்லது அணியாக அமைந்த பொன்னுக்குப் பெருமையோ? காந்தி வாழ்க ! ஏன்? ஜவஹரை வாழ்விக்க. இருவரும் வாழ்க! ஏன்? இந்தியா வாழ வேண்டுமல்லவா? சில ஒற்றுமைகள் காந்தி ஒரு லட்சிய புருஷன். ஜவஹரும் அப்படித்தான். உலகத்தில் இந்தியாவின் தானம் எங்கே என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டுதான் இருவரும் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். இந்தியாவின் பரம்பரைப் பெருமையை இருவரும் நன்கு உணர்ந்தவர்களாதலால், தற்போதைய வீழ்ச்சியை இவர்களால் நன்கு உணர்ந்துகொள்ள முடிந்தது. இதனாலேயே, இந்தியாவின் வருங்காலம் எப்படியிருக்க வேண்டுமென்பதை நிர்ணயிக்கும் சக்தி இவர்களுக்கு உண்டாயிற்று. எவனொருவன் இறந்த காலத்தை அறிந்திருக்கிறானோ அவன்தான் நிகழ் காலத் திலே வாழ முடியும்; எதிர் காலத்தையும் தீர்க்கமாக தரிசனம் செய்ய முடியும்; இஃது இயற்கை நியதியல்லவா? காந்தி ஓரிடத்திலே கூறுகிறார்:- உலகத்தாருடைய நன்மைக்காக, உயிர் விடுவதற்கு முன்னர், உலகத்தாருடைய நன்மையை முன்னிட்டு உயிர் வாழவும் இந்தியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவின் பழைய நூல்கள்,மற்றச் சரித்திர சம்பவங்கள் முதலியன, இந்தத் தத்துவத்தை வலியுறுத்தியே பேசுகின்றன. இதன் செயல்வடிவினராகவே காந்தியும் ஜவஹரும் இருக்கிறார்கள். இரண்டு தலைவர்களும், நியாயவாதிகளாகவே தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். ஆனால் இருவருக்கும் ஆரம்பத்தி லேயே இந்தத் தொழிலில் அதிக வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த வெறுப்பு, தேசத்தின்மீது கொண்ட விருப்பமாக மாறியது. காந்தி, தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலை நடத்திக் கொண்டிருந்த போது, ஒரு கட்சிக்காரரின் சார்பாக ஆஜராக வேண்டியிருந்தது. அந்தக் கட்சிக்காரருடைய வழக்கில் சில தவறுகள் இருக்கின்றன வென்று இவருக்கு, வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தெரிந்தது. உடனே அத்தவறுகளைக் கோர்ட்டாருக்கு இவரே தெரிவித்துவிட்டார். இவர் வழக்கு வெற்றி பெற்றது. பண்டித ஜவஹர்லால் நேரு, 1912ஆம் வருஷம் வக்கீல் தொழிலைத் தாம் ஆரம்பித்தபோதே அஃது எவ்வித உற்சாகத்தை யும் கொடுக்க வில்லையென்று கூறுகிறார். ஒருசமயம், கல்கத்தாவின் பிரபல நியாய வாதியும், 1908ஆம் வருஷத்துச் சென்னைக் காங்கிர தலைவராயுமிருந்த ஸர் ராஷ்விகாரி கோஷ், ஜவஹர்லாலிடம் அன்பு பூண்ட வக்கீல் தொழிலில் மேன்மையடைவதற்குரிய சில வழிகளைச் சொன்னார். சிறப்பாக, சட்ட சம்பந்தமாக ஒரு நூல் எழுதினால், அது நல்ல பழக்க மாயிருக்கும் என்றும் இதற்கு வேண்டிய உதவி களைத் தாம் செய்வ தாகவும் கூறினார். ஆனால் பண்டிதருக்கு அதில் விருப்பமேயில்லை. சட்ட சம்பந்தமான நூல்களை எழுதுவது காலத்தை யும் உழைப்பையும் வீணாக்குவதாகுமென்று இவர் கருதினார். ஜவஹர் எப்பொழுதும் தமது பேச்சுக்களிலாகட்டும், எழுத்துக்களி லாகட்டும், வக்கீல் மனப்பான்மையைக் கண்டித்தே வந்திருக்கிறார். மற்றொரு விநோதமான ஒற்றுமையும் காந்தியினிடத்திலும் ஜவஹரிடத்திலும் காணப்படுகிறது. இருவரும் சட்ட நிபுணர்கள். ஆனால் இருவரும் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். அதற்காகப் பல கஷ்டங் களையும் அனுபவித்திருக்கிறார்கள். மனிதனிடத்திலே யுள்ள மனிதத் தன்மையை வளர்ப்பதற்குச் சட்டம் ஒரு துணைக் கருவியாக இருக்க வேண்டும். அதற்கு மாறாக அந்தத் தன்மையை நசுக்குவதற்கு ஒரு சட்டம் முற்படுமானால் அது சட்டமாகா தென்பது இவர்கள் கருத்து. வாழ்க்கைக்காகச் சட்டமே தவிர, சட்டத்திற்காக வாழ்க்கையல்லவே. சரித்திர புருஷர்கள் பலரும் மனிதனுடைய ஜீவாதாரமான உரிமைகயைக் காப்பாற்றுவதற் காகச் சட்டங்களை மீறி யிருக்கிறார்கள். காந்தியும் ஜவஹரும் சரித்திர புருஷர்கள்தானே. இரண்டு தலைவர்களும், தியாகத்திற்காகத் தங்கள் தேகத்தை நன்கு பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார்கள்: அப்படியேதான் மனத்தையும், இதற்கிசைந்தாற்போலவே, இவர்களுடைய பாலிய வாழ்க்கையும் அமைந்திருப்பதைக்காண நமக்கு மகா ஆச்சரியமா யிருக்கிறது. இவர்களுடைய தாய்மார்களை இந்தச் சமயத்தில் நினைவு படுத்திக் கொள்ளாமலிருக்க முடியாது. காந்தி, பாரிடர் பரீட்சைக்குப் படிக்க லண்டனுக்குச் சென்றபோது, இவருடைய தாயார் - புத்திரிபாய் அம்மையார் - தமது மகனிடத்தில் மூன்று உறுதிமொழிகள் வாங்கிக் கொண்டார். இந்த மூன்று உறுதிமொழி களுந்தான், காந்தியின் பிற்காலப் பெருமைக்குச் சோபானங்களா யமைந்தன. இவருடைய உடலும் உள்ளமும் ஒழுங்கான வளர்ச்சி யடைய வேண்டுமென்பதில் புத்திரிபாய் கண்ணுங் கருத்துமா யிருந்தார். ஜவஹரின் வாழ்க்கையமைப்பில், இவருடைய தாயாரின் பங்கு என்னவென்பதை நிர்ணயித்துக் கூற முடியவில்லையாயினும், தகப்பனாருடைய தொடர்பைக் காட்டிலும் தாயாரின் தொடர்பு. இவருக்கு அதிகமாயிருந்ததென்று நன்கு தெரிகிறது இஃதொன்றே போதுமான தல்லவா? கனவிலே கூட தகப்பனாரிடத்தில் கூற முடியாத விஷயங் களையெல்லாம் தாயாரிடத்தில் நான் தாராள மாகச் சொல்வேன் என்கிறார் ஜவஹர். பிற்காலத்திலேகூட - அதாவது ஜவஹர் பொது வாழ்க்கையிலே ஈடுபட்டு ஒரு தலைவராக வந்து பிறகுகூட - தாயார் என்றால் தனிமதிப்பு வைத்துத்தான் நடந்துகொண்டுவந்திருக்கிறார் ஜவஹர். ஆம்; வரூபராணி நேருவின் - இதுவே ஜவஹரின் தாயார் பெயர் - வாழ்க்கையெல்லாம் இந்த ஒரு மகனுடைய பெருமையிலன்றோ நிற்கிறது. இதற்குத் தகுந்தபடி மகனும் நடந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறா ரல்லவா? ஜவஹரின் தியாகமும் சிறைவாசமுந்தான், வரூபராணி யின் உள்ளத்தை உருக்கித் தேசத்தொண்டில் ஈடுபடச்செய்தன. தமது தள்ளாத வயதில் அருமைக் கணவனாரை இழந்துவிட்ட பிறகு கூட தொண்டர் படையிலே சேர்ந்து மறியல் செய்திருக்கிறார்; தடியடி பட்டிருக்கிறார். எல்லாம் தேசத்திற்காக. இளமையிலே, தாய்மார்கள் செய்து வைக்கிற பழக்கம், பிள்ளைகளின் பிற்காலப் பொதுநல வாழ்க்கையில் ஆழ்ந்த முத்திரையிட்டு விடுவதை காந்தியிடத்திலும் ஜவஹரிடத்திலும் நன்றாகக் காண்கிறோம். காந்தியும் ஜவஹரும், உடலை உள்ளத்திற்கும், உள்ளத்தைத் தங்களுக்கும் அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே இவர்களிடத்தில் செயலாற்றுந் திறன் அதிகமாகக் காணப்படுகிறது. ஒரு தலைவனுக்கு முக்கியமாக அமைந்திருக்க வேண்டிய லட்சணம் இதுதான். சிறைவாசம், இவர்களுடைய தேகத்தையோ, மனத்தையோ சிறிது கூட அசைத்துக் கொடுப்ப தில்லை. அதற்கு மாறாக, சிறையில் இவர்கள் நிம்மதியைக் காண்கிறார்கள். இந்தக் காலத்தில்தான் இவர் களுடைய தனித்த அறிவும் ஆற்றலும் உலகத்திற்கு உபகாரமாய் வெளிப் படுகின்றன. காந்தியடிகள் சிறையிலிருந்த போது கீதைக்கு வியாக்கி யானம் எழுதினார்; இன்னும் பல உபதேச மொழிகளை வெளியிட்டார். ஜவஹரும் அப்படித்தான் உலக சரித்திரத்தையும், சுய சரித்திரத்தையும் எழுதியது சிறையில்தானே? லோக மான்ய திலகர், சிறையிலிருந்து கொண்டுதான் கீதா பாஷ்யம் எழுதினாரென்பதை யும், சுப்பிரமணிய பாரதியார் புதுச்சேரியில் அஞ்ஞாதவாசம் செய்துகொண்டிருந்த காலத்தில் தான் புதுக்கவிகள் பல எழுந்தன வென்பதையும் நினைத்துப் பார்க்கிற போது, இத்தகைய தலைவர்களை அடிக்கடி சிறைக்கு அனுப்புவதன் மூலம் அரசாங்கத் தார் நமக்கு ஒரு விதத்தில் நன்மையையே செய்கின்றனர் என்று ஆறுதல் கொள்ள முடிகிறதல்லவா? இங்ஙனம் இவர்கள் மனத்தைத் தங்கள் வசப்படுத்திக் கொண்டிருப்பதனால்தான், எத்தகைய துக்கம் ஏற்பட்டபோதிலும் அதில் சிறிதுகூடச் சோர்வு கொள்ளாமலிருக்கிறார்கள். காந்தி பாரிடர் பரீட்சையில் தேறிவிட்டு இந்தியாவுக்குத் திரும்பி வந்தபோது, இவருடைய தாயார் இறந்துவிட்டிருந்தார். இந்தச் செய்தியை மெதுவாக இவருக்குத் தெரிவித்தார்கள். ஆனால் நான் இதுபற்றி அழுது புலம்பத் தொடங்க வில்லை. கண்ணீரைக்கூட தடுத்து நிறுத்திவிட என்னால் முடிந்தது. ஒன்றும் நிகழாதது போலவே வாழ்க்கையில் இறங்க ஆரம்பித்தேன் என்று தம் அனுப வத்தை காந்தி கூறுகிறார். இந்த அனுபவத்தை நேரில் பாராதவர்கள் இருக்கலாம். ஆனால் இப்பொழுது, ஜவஹரின் சலியாத மனோ உறுதியைக் கண்கூடாகப் பார்க்கிறோம். மனைவியையிழந்து, மகளைத் தனியே விட்டுவிட்டு, தாய் நாட்டு மண்ணை மிதித்ததும், தேசத் தொண்டிலே எவ்வளவு தீவிரமாக ஈடுபட்டார்? கண்ணீர் விட்டுக் கலங்கிக் கொண்டிருந்தாரா? தம்முடைய சொந்தத் துக்கங் களையெல்லாம், தேச மக்களின் துயரத்திலே கலக்க விட்டுவிட்டார். மனத்தைத்தான் இவர்கள் இப்படி வசப்படுத்திக் கொண்டிருக் கிறார்கள் என்றால், இவர்கள் தேகம் இவர்கள் சொல்கிறபடி உழைக்கவும், துன்பங்களைச் சகித்துக்கொள்ளவும் தயாராயிருக்கிற தென்பதைச் சில உதாரணங்களைக் கொண்டு தெரிவிப்போம். மகாத்மா காந்தி 1924ஆம் வருஷம் அப்பெண்டிஸைட் என்ற குடல் நோயினால் அவதைப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டார் என்பது அன்பர்களுக்கு ஞாபகமிருக்கும். அந்தச் சமயம், குளோரோபாரம் என்ற மயக்கமருந்து கொடுக்கப்படாமலே காந்திக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. பின்னர்கூட, இவர் இந்த நோய் காரணமாக உரத்துச் சப்தம் போட்டது கிடையாது. உடல் நோயை மறந்தே இவர் இருந்தார். கடவுள் அருள்பெற்ற அடியார் களுக்குத்தான் இந்த நிலை ஏற்படுவதுண்டு என்று சிலர் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. இது தவிர, காந்தியடிகள், தென் னாப்பிரிக்காவிலாகட்டும், இந்தியாவிலா கட்டும், எத்தனையோ முறை சிறைபுகுந்திருக்கிறார். சிறையில் எத்தனையோ விதமான கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார். தனிமனிதர் களின் அடி உதை களையும் பட்டிருக்கிறார். இவற்றிற்கெல்லாம் இவருடைய தேகம் ஈடுகொடுத்துக்கொண்டு வந்திருக்கிறது. காந்தியடிகள், விரும்பிய போது தூங்குவார். இத்தனை மணி நேரத்தில் எழுந்திருக்க வேண்டுமென்று சங்கற்பித்துக்கொண்டு படுத்தாரானால் அதே மணி நேரத்தில் சரியாக எழுந்துவிடுவார். இங்ஙனம் தேகத்தைத் தம் வசப்படுத்திக்கொண்டிருப்பதனால்தான் இவரால் அதிகமாக உழைக்க முடிகிறது. அந்த உழைப்பிலே இவர் இளைப்பையும் காணவில்லை. உப்பு சத்தியாக்கிரகம் செய்வதற்காக இவர் தொண்டர் படையுடன் தண்டிக்கு நடந்து சென்று கொண்டிருந்த காலத்தில், இரவில் எல்லாரும் படுத் துறங்கும்போது, இவர் மட்டும் தனியாக இருந்த நிலவு வெளிச்சத்தில் தமக்கு வந்துள்ள கடிதங் களுக்குத் தாமே பதிலெல்லாம் எழுதுவார். இத்தகைய உதாரணங் கள் பலவற்றை இன்னும் எடுத்துக்காட்டலாம். ஜவஹரும் இப்படித்தான். என்ன உழைப்பு! எத்தனை மைல் தூரம் சுற்றுப் பிரயாணம்! எத்தனை கூட்டங்களில் பேச்சு! எத்தனை பேருக்குப் பேட்டி! சிறிதேனும் சலிப்புக்கொள்வாரா? இன்னும் ஏதேனும் நான் செய்யவேண்டிய வேலையிருக்கிறதா? வென்ற கேள்வியை அடிக்கடி கேட்பார். இத்தகைய பெரியபொறுப்புக்கும், சலியாத உழைப்புக்கும் தகுந்த படியே இவர் தமது தேகத்தை 1920ஆம் வருஷத்திலிருந்தே பக்குவப் படுத்திக்கொண்டு வந்திருக் கிறார். அந்தவருஷத்தில் ஐக்கிய மாகாணத்திலுள்ள கிராமவாசி களின் நிலையைப்பற்றித் தெரிந்து கொள்ள இவர் கிராமங்களில் சுற்றுப் பிரயாணம் செய்துவந்தார். அப்பொழுது ஜூன் மாதம். நல்ல கோடை வெயில். இந்த வெயில் காலத்தில் இவர் மலை வாசம் செய்யச் செல்வது வழக்கம். அந்த வருஷம், தலைமீது ஒரு சிறிய துண்டைப் போட்டுக் கொண்டு, கிராமங்களில் சுற்றித் திரிந்தார். கிராம வாசிகளின் வறுமையிலே, அந்த வறுமையிலே கூட அவர்கள் காட்டிய அன்பிலே இவர் தம்மை மறந்து சுற்றுப் பிரயாணம் செய்தார். உண்மை இந்தியா எங்கேயிருக்கிற தென்பதைத் தெரிந்து கொண்டு, அலகாபாத்திலுள்ள தமது ஆனந்த பவனத்திற்கு வந்தார். கண்ணாடியிலே முகத்தைப் பார்த்தார். ஒரே கருமை. திருப்தி கொண்டார். எந்தக் கஷ்டத்தையும் சமாளித்துக்கொள்ள தம் தேகம் இடங்கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். தேசப்பணிக்கு இது முதற்படி. காந்தியும் ஜவஹரும், மேனாட்டிலேயே படித்தவர்கள். மேனாட்டு நாகரிகத்தை நன்றாக அறிந்து அனுபவித்தவர்கள். ஆனால் இந்திய நாகரிகத்தின் உண்மைப் பிரதிநிதிகளாக இப் பொழுது இருக்கிறார்கள். இஃது ஓர் ஆச்சரியம். இந்தியா பூரண சுதந்திரம் பெறவேண்டுமென்று இவர்கள் கொண்டிருக்கிற நோக்கங்கூட இந்த இந்திய நாகரிகம் உலகெங்கும் பரவவேண்டு மென்பதற்காகத்தான். உலகெலாம் இன்புற வேண்டுமென்பதன்றோ இந்திய நாகரிகத்தின் லட்சியம். இந்த இரண்டு மகா புருஷர்களுடைய பொது வாழ்க்கை யிலே, இவர்களுடைய மனைவிமார்களின் பூரண ஒத்துழைப்பும் கலந்திருப்பதைக் காண்கிறோம். இந்திய நாகரிகத்தின் அழியாத சின்னம் இந்தக் குடும்ப ஒற்றுமைதான். கதூரிபாயும், கமலா நேருவும், தங்கள் கணவன்மார்களுடைய வாழ்க்கை மாற்றங்க ளுக்குச் சரியாகத் தங்களைச் சரிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிற அருமையை இந்திய நாட்டிலேதான் காண முடியும். இந்த இரண்டு தாய்மார்களும், தங்களை மாற்றிக் கொண்டதோடு நில்லாமல், கணவன்மார்களுடைய முன்னேற்றத்திற்கு எவ்வளவு துணை செய்திருக்கிறார்கள்? எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக் கிறார்கள்? காந்தியடிகளின் கீர்த்தி, இவ்வளவு உச்சநிலைக்கு வந்த தென்றால் அதற்கு கதூரிபாய் என்ற திருவிளக்குதான் காரணம். இதை இவர், பல முறை தமது சுயசரிதத்தில் கூறியிருக்கிறார். இவர் தென்னாப் பிரிக்காவில் சக்தியாக்கிரக இயக்கம் தொடங்கிய காலத்தில் பலர் சிறை புகுந்தனர். திரீகள் பலரும் இதில் சேர்ந்தனர். அவர்களில் கதூரிபாய் அம்மையாரும் ஒருவர். அம்மையார், தாமே வலியச் சிறை சென்றது இங்குக் குறிப்பிடத்தக்கது. கணவனா ருடைய வழியைப் பின்பற்ற வேண்டுமே என்ற கட்டாயத்திற்காக இவர் சிறைசெல்லவில்லை. சிறை செல்லுமுன்னர் காந்தியடிகள், இவரைப் பன்முறை எச்சரித்தும் இருக்கின்றனர். சிறைக் கொடுமைகள் தாங்காமல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெளியே வருவேனாகில் என்னைத் தாங்கள் அடியோடு திரகரித்து விடலாம். தாங்களும், தங்களுடைய குழந்தைகளும் துன்பங்களை அனுபவிக்கிறபோது நான் ஏன் அனுபவிக்கக் கூடாது? நான் எப்படியும் இந்தப் போராட்டத்தில் சேர்ந்தே தீருவேன்என்று கதூரிபாய் அம்மையார் கூறிய வீரவாசகம், காந்தியடிகளின் புகழிலே என்றும் ஒலித்துக் கொண்டிருக்குமல்லவா? ஜவஹரின் குடும்ப வாழ்க்கையைச் சிறிது கவனிப்போம். கமலாநேரு, ஜவஹரின் கைகளைப் பிடித்துக்கொண்டு எந்த வருஷம் சம்சார சாகரத்தில் இறங்கினாளோ, அந்த வருஷத்தி லிருந்தே அந்தச் சாகரத்தில் கொந்தளிப்பு அதிகமாகத் தொடங் கியது. அதில் ஜவஹர் ஈடுபட்டுவிட்டார். இதனால் கமலா தனியே மிதக்க வேண்டியவளானாள். எந்தச் சமயத்திலே என்னுடைய பூரண உதவியும் அவளுக்குத் தேவையாயிருந்ததோ, அந்தச் சமயத் திலேதான், அவளைப் புறக் கணிக்கும் படியான நிலைமையில் நான் பொது வாழ்வில் ஈடுபட்டு விட்டேன் என்று ஜவஹர் குறிப்பிடு கிறார். அவள் தனியே மிதந்தாள். பொது வாழ்விலே தீவிரமாகக் கலந்து கொண்டாள். அதனால் உண்டான துன்பங்களை அவள் பொருட்படுத்தவேயில்லை. அதற்குப் பதிலாக ஜவஹருக்குத் தன் சேவையினால் பலங்கொடுத்து வந்தாள்; தைரிய மூட்டி வந்தாள். தன்கணவன்,தன்னைக் கவனிக்கவில்லை யென்று அவள் வருந்தவே யில்லை. எவ்வளவுக்கெவ்வளவு ஜவஹர் அவளைக் கவனியாமலிருந் தாரோ அவ்வளவுக்கவ்வளவு அவளுடைய காதல் வளர்ந்தது. தன் கணவனிடத்தில் தேசத்தைக் கண்டாள். தேசத்திற்காகத் தன்னை அர்ப்பணம் செய்து விட்ட புருஷனிடத்தில் தன்னை ஒப்புவித்தாள். இந்த நிலையிலேதான் இருவருக்கும் பரிசோதனை காலம் ஏற்பட்டது. கணவன் ஒரு சிறையிலே; மனைவி மற்றொரு சிறையிலே; ஆனால் இருவருடைய மனமும் தேசத்தினிடத்திலே. 1931ஆம் வருஷம் நைனி சிறையிலிருந்து, ஜவஹர், தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் என்ன கூறுகிறார்:- உன் தாயார் மலாக்கா சிறையிலிருந்து லட்சுமணபுரி சிறைக்கு மாற்றப்பட்டிருப் பதாகக் கேள்விப்படுகிறேன். அஃது ஒருவிதத்தில் நல்லதுதான். ஏனென்றால் அங்கே அவளுக்குப் பொழுதுபோகும். அவளுக்கு உடல் நலம் கெட்டிருப்பதாகத் தெரிந்து வருந்துகிறேன். அவளுக்கு ஒரு பெண் சிங்கத்தைப் போன்ற மனோ உறுதி உண்டு என்பதை நான் அறிவேன். ஆனால் உறுதியுள்ள அந்த உள்ளத்தை மூடிக் கொண்டிருக்கும் உடல், வலிவுள்ளதாக இருக்க வேண்டாமா? மற்றொரு சமயம் எழுதுகிறார்:- உன் தாயார் நான் இருக்கும் சிறைக்குச் சமீபத்தில் உள்ள ஒரு சிறைக்குக் கொண்டுவரப் பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு சிறிது சந்தோஷப்படுகிறேன். அவள் அருகேயிருக்கிறாள் என்று தெரிந்தால் அதுவே ஓர் ஆறுதல் அல்லவா? ஆனால் இருவருக்கும் மத்தியில் உயர்ந்த சிறைச்சாலைச் சுவர்கள் நிற்கின்றன! எனவே அவள் எங்கிருந்தால் தானென்ன? இந்த கடிதத்தை எழுதியபோது ஜவஹர், எத்தகைய நீண்ட பெருமூச்சு விட்டிருக்க வேண்டும்? ஆனால் எல்லாம் தேசத்திற்காக! 1934ஆம் வருஷம் கமலா படுத்த படுக்கையிலே கிடந்தாள். யமனோடு போராட்டம். இதனைக் கண்ட அரசாங்கத்தார் கருணைகூர்ந்து, டேராடூனில் வைக்கப்பட்டிருந்த ஜவஹரை, தற்காலிகமாக - ஆம்; பதினோரு நாட்களுக்குத்தான் - விடுதலை செய்தனர். அலகாபாத்திற்கு வந்தார் ஜவஹர். படுக்கையிலே துரும்பாய்க் கிடக்கிறாள் கமலா. பார்த்தார். எங்கே தம்மை விட்டுப் பிரிந்துவிடப் போகிறாளோ என்று கலங்கினார். பதினெட்டு வருஷ இல்லற வாழ்க்கை! ஆனால் இதில் எத்தனை நீண்ட வருஷங்களை நான் சிறைச்சாலையிலே கழித்திருக் கிறேன்! கமலா, ஆபத்திரிகளிலும் ஆரோக்கிய தலங்களிலும் எவ்வளவு காலம் கழித்திருக்கிறாள்! இப்பொழுதும் நான் சிறை யிலே தான் இருக்கிறேன். சில நாட்களுக்குத்தான் வெளியே வந்திருக்கிறேன். கமலாவோ நோயாகப் படுத்துக் கொண்டிருக் கிறாள். அவள் தன் உடம்பைச் சரியாகப் பார்த்துக் கொள்ளாததற்காகச் சிறிது வருத்தமே பட்டேன். ஆனால் அவள் மீது நான் எப்படி குற்றஞ் சொல்ல முடியும்? தன்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லையே யென்றும், தேசீயப் போராட்டத்தில் தன்னுடைய பங்கை எடுத்துக் கொள்ள இயலவில்லையே யென்றும் அவளுடைய ஆத்மா துடிதுடித்துக் கொண்டிருந்தது. இதனால் அவள் வேலையும் செய்ய வில்லை; சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை. அவள் உள்ளத்திலே கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த தீயே அவளைத் தின்றுவிட்டது. அவள் என்னை விட்டுப் பிரிந்து போய் விடுவாளா? அவளுடைய தேவை அதிகமாக எனக்கு வேண்டி யிருக்கும் சமயத்தில் அவள் என்னை விட்டு அகன்று விடுவாளா? மாட்டாள். இப்பொழுதுதான் (பதினெட்டு வருஷங்கள் கழித்து) நாங்கள் ஒருவருக்கொருவர் சேர்ந்து நடத்தும் வாழ்க்கை இனியே ஆரம்பமாகப் போகிறது. நாங்கள், ஒருவருக்கொருவரை அதிகமாக நம்பி யிருந்தோம். இருவரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன. ஐயோ! கமலா அகன்று விட்டாள். ஜவஹர் தன்னந் தனிய ராகத்தான் நிற்கிறார். எத்தனையோ தலைமுறையாக வளர்ந்துவந்த நேரு வமிசக் கொடி வாடி வீழ்ந்துவிட்டது. அதில் அரும்பிய இந்திரா மலர் ஒன்று தான் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்திராதான், ஜவஹரின் பலம்; ஆறுதல்; எல்லாம். கமலா, ஜவஹரின் வீர பத்தினியாக மட்டும் இல்லை. அவருடைய மனிதத் தன்மையின் ஆணிவேராகவும் இருந்தாள். 1934ஆம் வருஷம் ஜூலை மாதம் பதினோரு நாட்கள் வெளியி லிருந்து மீண்டும் சிறைக்கு வந்தாரல்லவா? வந்த சில தினங்களுக்குள் கமலாவின் உடம்பு கேவல மாகிவிட்டது. கணவனின் சிறை வாசம் தான் அவள் உடம்புக்குக் காரணம். ஜவஹரோ சிறையில் மனம் புழுங்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு உலகமே சூனியமாகி விட்டது. படுக்கையிலே கிடக்கிற கமலா, அவர் அகக் கண்முன்னே அடிக்கடி தோன்றினாள். அவள் உடம்பு எந்த நிலையில் இருக்கிற தென்று அவருக்குத் தெரியப்படுத்த அரசாங்கத்தார் மனங் கொள்ள வில்லை. 1934 ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் முழுவதும் இப்படி கவலையால் தவித்து நின்றார் தனியே சிறையில். அப்பொழுது, ஏதேனும் நிபந்தனை கொடுத்துவிட்டு, சிறையிலிருந்து விடுதலை பெறலாமே என்று ஜவஹருக்குச் சிலர் யோசனை கூறினர். நிபந்தனையுடன் விடுதலையா? தாம் கொடுத்த வாக்கு, கொண்ட லட்சியம், எல்லாம் என்னாவது? தம்மைப்போல் சிறை சென்ற சகோதரர்களின் நிலைமை என்னாவது? அப்படி விடுதலை யடைவது, என்னுடைய மனிதத்தன்மையின் ஆணி வேருக்கும், நான் எதை எதைத் தெய்விகமாகக் கருதி வந்திருக்கிறேனோ அவற்றிற்கும் தீங்கு உண்டு பண்ணியதாகும். நான் அப்படி நிபந்தனையுடன் விடுதலையடைந்து வந்திருக்கிறேன் என்று கமலா கேள்விப்படுவாளாயின், அவள் திடுக்கிடுவாள். என்னைக் கண்டிப் பாள்; இதனால் அவளுக்குத் தீங்கு உண்டாகும். அக்டோபர் மாதம், கமலாவைக் காண்பிப்பதற்காக ஜவஹரைச் சிறையிலிருந்து சிறிது நேரம் அழைத்து வந்தார்கள் அதிகாரிகள். மரணையற்றுப் படுத்துக் கொண்டிருக்கிறாள் தேவி. நல்ல ஜுரம். தன் பக்கத்திலே ஜவஹர் இருக்க வேண்டுமென்ற ஒரே ஆவல். ஆனால் அஃது எப்படி முடியும்? பக்கத்திலே சிறை அதிகாரிகள் காத்துக்கொண்டிருக் கிறார்களே. என்ன செய்வது? சிறைக்குத் திரும்பிப்போக எழுந்தார் ஜவஹர். அப்பொழுது கண் விழித்தாள் கமலா. பார்த்தாள் எழுந்து நிற்கும் ஜவஹரை. முகத்திலே புன்சிரிப்பை வருவித்துக்கொண்டாள். தன் முகத்தருகே வந்து தலைகுனியுமாறு சைகை செய்தாள் கணவனுக்கு. ஜவஹர் மண்டி யிட்டு உட்கார்ந்து, கமலாவின் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு போனார். அப்பொழுது கமலா சொன்னாள்:- என்ன இது! ஏதோ தாங்கள் அரசாங்கத்தாரிடம் நிபந்தனை எழுதிக் கொடுத்துவிட்டு விடுதலையடையப் போகிறீர்களாமே அப்படி ஒன்றும் செய்யாதீர்கள். ஜவஹரை ஏற்றிக்கொண்டுவந்த சிறைச்சாலை வண்டி அவருடன் திரும்பிச் சென்றுவிட்டது. ஜவஹரின் மனிதத் தன்மைக்கு யார் ஆணி வேர் என்பது இப்பொழுது தெரிகிறதா? மனிதன் வேறு; மனிதத் தன்மை வேறு. ஜவஹர் மனிதத்தன்மை நிறைந்த மனிதராயிருக்கிறார். இதனாலேயே, இந்தியாவிலுள்ள மனித உருவினராகிய நமக்கு மனிதத் தன்மையை ஊட்ட முயற்சிக்கிறார். சில வேற்றுமைகள் காந்தியையும் ஜவஹரையும் ஒன்றுபடுத்திக் கூற முடிகிறதோ அப்படியே இருவரையும் வேறுபடுத்தியும் சொல்லலாம். இரண்டு பேருடைய வாழ்க்கையும் இப்படித்தான் பின்னிக் கொண்டிருக் கிறது. ஜவஹர், தனித்தியங்கும் ஆற்றல் பெற்றவர். மற்றொரு வருடைய வெளிச்சத்திலே அவர் பிரகாசிக்கிறார் என்று சொல்வது நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதாகும். பூமியானது எப்படி தன்னைத்தானே வலம் வந்துகொண்டு கூடவே சூரியனையும் சுற்றி வருகிறதோ அப்படியே ஜவஹரும் தனித்துவம் வாய்ந்தவராய், ஆனால் காந்தியடிகளின் ஆன்ம சக்தியிலே ஈடுபட்டவராய் விளங்கு கிறார் என்று இந்த இரண்டு பேருடைய தொடர்பையும் சுருக்கிக் கூறலாம். ஓர் அறிஞர் இந்த இரண்டு தலைவர்களுக்குமுள்ள சம்பந் தத்தைப் பின்வரும் வாக்கியத்தால் வருணிக்கிறார்:- ஜவஹரின் அறிவு, காந்தியோடு போராடுகிறது. ஆனால் அவருடைய இதயம், காந்தியைச் சுற்றிச் சுற்றி வலம் வருகிறது. காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்தில் அதில் சில அமிசங்கள் ஜவஹர்லாலுக்குப் பிடிக்கவில்லை. அவர் செய்த வியாக்கியானம் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆனால் அவருடைய பேச்சிலே நான் சாந்தியடைந்தேன். திடீர் திடீரென்று சில ஆச்சரியமான நிகழ்ச்சிகளை எங்களுக்கு முன்னால் கிளத்துவது எங்களுக்கு அச்சத்தைத் தருகிற தென்றும் சொன்னேன். அவரோடு பதினான்கு வருஷங்களாக நெருங்கிப் பழகியும் அவரிடத்தில் ஏதோ ஓர் அறிய முடியாத சக்தி இருக்கிறதென்றும் அதற்கு அஞ்ச வேண்டியிருக்கிறதென்றும் கூறினேன். எவராலும் தெரிந்து கொள்ள முடியாத ஒரு சக்தி தம்மிடத்திலே இருக்கிறதென்றும் ஆனால் அஃது என்ன, பிற்காலத்தில் அஃது எங்கே கொண்டு போய் விடும் என்பவைகளைப் பற்றித் தமக்கே தெரியவில்லை யென்றும் அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று ஜவஹர்லால், தமது சுய சரிதத்தில் அடிகளிடத்தில் தாம் ஈடுபடுகிற விதத்தை ஒருவாறு புலப்படுத்தி யிருக்கிறார். அரசியலினின்று மதத்தைத் தனியாகப் பிரிக்க முடியா தென்றும் இரண்டும் மனிதனுடைய வாழ்க்கையில் பின்னிக் கிடக்கின்றனவென்றும் மகாத்மா அபிப்பிராயப்படுகிறார். மதமின்றி மனிதன் வாழமுடியாது. சிலர் தங்களுடைய குதர்க்க புத்தியைக் கொண்டு மதத்திற்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்று சாதிக்கிறார்கள். இஃது எப்படி யிருக்கிற தென்றால் நான் மூச்சு விடுகிறேன். ஆனால் எனக்கு மூக்கு இல்லை என்று சொல்வதைப் போலிருக்கிறது........... சத்தியத்தின் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே, நான் அரசியல் துறையில் இறங்கினேன். மதத்திற்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்று சொல்லுகிறவர்கள், மதம் என்றால் என்ன வென்பதை அறியாதவர்கள் என்று நான் நிச்சயமாக, ஆனால் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவை காந்தியடிகளின் வாக்கியங்கள். மதத்தின் துணை கொண்டுதான், தாம் தமது வாழ்க்கையில் முன்னேற முடிந்த தென்பதைப் பல இடங்களிலும் அடிகள் ஒப்புக் கொள்கிறார். ஆனால் இவர் மதம் என்பதற்குக் கொண்டுள்ள பொருளுக்கும், மதம் என்ற பெயரால் இப்பொழுது உலகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கும் நிரம்ப வேற்றுமை உண்டு. இதையே பண்டித ஜவஹர் கண்டிக்கிறார். இதனால் பண்டிதரைச் சிலர் நாதிகர் என்று கருதுகின்றனர். இது தவறு. இவர், தமது சுய சரிதத்தின் ஓரிடத்தில் கூறுவதாவது:- இப்பொழுது இந்தியாவிலும் மற்ற இடங்களிலும் மதத்தின் பெயரால் நமது முன்னர்த் தோன்றும் காட்சிகள் உண்மையில் அச்சத்தை அளிக்கின்றன. இதை நான் அடிக்கடி கண்டித்திருக் கிறேன். இதனை அடியோடு தொலைத்து விடவும் நான் விரும்பு கிறேன். குருட்டு நம்பிக்கை, பிற்போக்கு, சாரமற்ற கொள்கை, துவேஷம், மூடப் பழக்கம், பிறரைச் சுரண்டுதல், உரிமையாளர் களை நிலைக்கச் செய்தல் ஆகிய இவற்றின் பிரதிநிதியாகவே மதம் உபயோகிக்கப் பெறுவதை நான் காண்கிறேன். ஆனால் மனித சமூகத்தின் ஆன்மார்த்த கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அமிசங்களும் இந்த மதத்தின்பால் இருக்கின்றன வென்பதை நான் அறிவேன். இந்த அமிசங்கள் இல்லாவிட்டால், துன்புறுத்தப் பெற்ற எண்ணிறந்த ஆன்மாக்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு சக்தியாக இந்த மதம் எங்ஙனம் அமைந்திருத்தல் கூடும்? குருட்டு நம்பிக்கைகளின் ஒதுக்கிடந்தானா இந்த ஆறுதல்? துறைமுகத்திற் குள்ளே ஏற்பட்டிருக்கிற அமைதிதானா இந்த ஆறுதல்? இல்லை. இதை விடச் சிறந்த அமிசங்கள் இதில் அடங்கியிருக்கின்றன. தற்காலத்தில் மதமானது, அதன் பழைய சரித்திரம் எப்படியிருந்த போதிலும், சாரமற்ற ஒரு சூனிய உருவமாகவே இருக்கிறது. மேனாட்டு மதங்களிலும் இந்த நிலைமைதான் ஏற்பட்டிருக்கிறது அப்படியானால் மதம் என்பது என்ன? இது பெரிய கேள்வி. இதற்கு இன்னதுதான் பொருள் என்று எவரும் ஒருமுகமாக அபிப்பிராயம் சொல்லி விட முடியாது என்று கூறிவிட்டு மேலும் எழுதுகிறார் ஜவஹர்:- மனிதனுடைய அகவளர்ச்சியைக் குறிப்பதாகவும் அவனுடைய ஞானத்தை, நல்லது என்று கருதப்படுகிற ஒரு வழியில் செலுத்து வதாகவும் இருக்கிறது போலும் இந்த மதம். அஃது எந்த வழி என்பது வாதத்திற்குரிய விஷயமே யாகும். எனக்குத் தெரிந்த வரை, மதமானது, இந்த அகவளர்ச்சியைத்தான் வற்புறுத்துகிற தென்றும் புறத்தில் நிகழும் மாற்றங்களெல்லாம் இந்த வளர்ச்சியின் தோற்றங் களேயென்று கருதுகிறதென்றும் நினைக்கிறேன். உண்மைதான்; இந்த அகவளர்ச்சி, புறமாற்றங்களுக்கு முக்கிய தூண்டுகோலா யிருக்கிறதென்பது சரிதான். ஆனால் புற நிகழ்ச்சிகளும், அக வளர்ச்சியை அதிகமாகப் பாதிக்க வில்லையா? பரபரம் இரண்டும் நெருங்கிய தொடர்புடையவை. மேனாடுகளில் தற்போது, புறவளர்ச்சி மிகவும் அதிகமாயிருக்கிற தென்பது எல்லாரும் அறிந்த விஷயம். இதனால் மேனாட்டாருக்கு ஆன்ம பரிபக்குவம் இன்னும் ஏற்படவில்லை யென்றும், கீழ் நாட்டாராகிய நாம், கைத்தொழில் விஷயங்களில் பிற்போக்குடையவர்களாயிருப்ப தனால் ஆன்ம பரிபக்குவம் அடைந்து விட்டோமென்றும் நம்மில் சிலர் கருதுவது தவறு. நம்மை நாம் திருப்தி செய்து கொள்வ தற்கும், நமது தாழ்மையை மறப்பதற்கும் இஃது ஓர் ஏமாற்றமான வழி. புற நிகழ்ச்சிகளைப் புறக்கணித்துவிட்டு ஒரு சிலர் மேலுக்கு வரலாம். ஆனால் பெரும்பான்மையான ஒரு ஜன சமூகத்திற்கு, அகவளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னால், புறவளர்ச்சி அவசியம் தேவையாகவே இருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளுக்கு இரையாகியுள்ள ஒருவன், வாழ்க்கைக்காக சதா போராடிக் கொண்டிருக்கும் போது, குறிப்பிடக்கூடிய அளவு அகவளர்ச்சியை யடைய முடியாதல்லவா? நசுக்கப்பட்டு சுரண்டப் படுகிற ஒரு சமூகம், ஆன்மார்த்தத் துறையில் எங்ஙனம் முன்னேற்ற மடைய முடியும்? எனவே, ஆன்ம வளர்ச்சிக்குப் புற சுதந்திரமும், தக்க சூழலும் வேண்டியே இருக்கிறது. ஆன்ம வளர்ச்சி எவ்வளவு முக்கிய மென்று காந்தியடிகள் கருதுகிறாரோ அவ்வளவு முக்கியமாகவே மனிதனுடைய புற சாதனங் களும் வளர்ச்சியடைய வேண்டுமென்று பண்டித ஜவஹர் லால் கருது கிறார். எல்லாருக்கும் நன்மை பயக்கக்கூடிய சாசுவத மான ஒரு லட்சியத் திற்காக, எல்லாத் தடைகளையும் மீறி, எல்லாத் துன்பங்களையும் சகித்துக் கொண்டு செல்லும் பாதைதான் மதம் என்று ஓர் ஆங்கில அறிஞர் கூறும் கருத்துக்கு ஏற்றதாகப் பண்டித ரின் கருத்தும் இருக்கிறது. நிலச்சுவான்தார்கள், ஜமீன்தார்கள், சுதேசமன்னர்கள் முதலிய பரம்பரைப் பாத்தியமுடையவர்களை, பொது ஜன நன்மைக்காகத் தங்கள் சொத்துக்களையும் உரிமைகளையும் உபயோகப்படுத்து மாறு மெதுவாகத் தூண்டித் திருப்ப வேண்டுமென்று காந்தியடிகள் கருதுகிறார். பணக் காரர்கள், பொது ஜனங்களின் டிரடிகளாக இருக்க வேண்டு மென்றும், இந்த நிலைமைதான் பழைய இந்தியா வில் இருந்ததென்றும் மகாத்மா கருதுகிறார். ஆனால் பண்டிதர், இது செயல் முறையில் நடவாதென்றும், இந்தப் பரம்பரை உரிமை முதலியவற்றையெல்லாம் மாற்றியமைக்க வேண்டுமென்றும் அபிப்பிராயப் படுகிறார். காந்தியடிகள் தற்கால நாகரிகத்தை வெறுக்கிறார். அனை வரும் எளிய வாழ்க்கை நடந்த வேண்டுமென்று விரும்புகிறார். வறுமையையும் துறவு நிலையையும் போற்றிப் பல முறை கூறியிருக்கிறார். மனிதன், துன்பத்தை வலிய ஏற்று, அதனைச் சகித்துக் கொள்வதன் மூலம், பிறரை வசப்படுத்தி, நல்ல வழிக்குத் திருப்ப முடியும் என்பது அடிகள் கருத்து இவற்றையெல்லாம் பண்டிதர் மறுக்கிறார். தமது சுய சரிதத்தின் ஓரிடத்தில் பின் வருமாறு கூறுகிறார்:- வறுமை, துன்பம் சகித்தல் முதலியவற்றைப் போற்றுவது எனக்குப் பிடிக்கவில்லை. இவை அனாவசியமென்று நான் கருது கிறேன். இவை விரைவில் ஒழிக்கப்பட வேண்டுமென்றும் விரும்பு கிறேன். தனிப்பட்ட ஒரு சில பேருக்குத் துறவு நிலை பொருத்தமே யாயினும்,அதனை ஒரு சமூக லட்சியமாகக் கொள்ளுதலை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. எளிமை, சமத்துவம், தன்னடக்கம் ஆகிய இவை சரிதான்; வேண்டியது தான். ஆனால் தேகத்தை ஏன் துன்பத்திற்குள்ளாக்க வேண்டும்?....... ஒருவன் நல்ல ஒழுக்க நிலையில் இருக்க வேண்டுமானால், அவனுடைய தேகமும் நல்ல முறையில் அமைந்திருக்க வேண்டாமா? மற்றும், குடியானவர்களின் எளிய வாழ்க்கையைப் பாராட்டி காந்தியடிகள் அடிக்கடி பேசுவதை நான் விரும்பவில்லை. குடியான வர்களின் வாழ்க்கையைக் கண்டாலே எனக்குப் பயமாயிருக்கிறது. நான் இந்த வாழ்க்கைக்கு உட்படுவதற்குப் பதிலாக, குடியானவர் களை மேலுக்குக் கொண்டுவர வேண்டுமென்பதே என் விருப்பம். இதற்காக, கிராம வாசிகளையெல்லாம் நகர வாசிகளாக்கி விட வேண்டுமென்று நான் சொல்லவில்லை. ஆனால் நகர வசதிக ளெல்லாம் கிராம ஜனங்களுக்குக் கொடுக்கப் பெறவேண்டு மென்றுதான் கோருகிறேன். இந்தக் குடியானவர்களின் வாழ்க்கை, உண்மையான சந்தோஷத்தை எனக்கு அளிப்பதற்குப் பதிலாக என்னைச் சிறை வைத்தது போலவேயாகும். தலைமுறை தலை முறையாக நசுக்கப் பட்டும் சுரண்டப்பட்டும் வருகிற குடியான வன், அவனோடு கூட இருந்து பழகுகிற மிருகங்களின் நிலையி னின்று சிறிது விலகினவனாயிருக்கிறானே தவிர வேறொன்று மில்லையே. இவனுடைய வாழ்க்கையை லட்சியமாகக் கொள்வ தெப்படி?.................... தற்கால நாகரிகத்தில் தீய அமிசங்கள் இருக்கின்றன. ஆனால் அதில் பல நல்ல அமிசங்களும் இருக் கின்றன. தீமைகளை அகற்றும் சக்தியும் இந்த நாகரிகத்திற்கு உண்டு. இந்த நாகரிகத்தை அடியோடு அழித்து விடுவதென்பது, தீமையைப் போக்கக் கூடிய இந்தச் சக்தியையும் அழித்துவிட்டு, உயிரற்ற ஒரு வாழ்க்கை நிலைக்குத் திரும்பிச் செல்வதாகும். ஒருகால் இந்தத் தற்கால நாகரிகத்தை அழிப்பதாயிருந்தாலும் அது முடியாத காரியமாயிற்றே! காலப் போக்கை நாம் எப்படி மாற்ற முடியும்? அல்லது அதனின்று நாம் ஒதுங்கித்தான் இருக்க முடியுமா? இத்தகைய கருத்துக்களை ஜவஹர் கொண்டிருப்பத னாலேயே, கதரும் கைராட்டினமும், தற்காலிகத் தேவையைப் பூர்த்தி செய்யலாமே தவிர, இவற்றினால் நிரந்தரமான நன்மை ஏற்படாதென்று கருதுகிறார். கைத் தொழில் அபிவிருத்தி இந்தியா வில் பூரணமாக ஏற்படவேண்டு மென்றும், அப்படி முன்னேற்ற மடைந்த நாடுதான் சுதந்திரமாக இருக்க முடியுமென்றும் பண்டிதர் வலியுறுத்திப் பன் முறைபேசியிருக்கிறார். காந்தியடிகள் எளிய வாழ்க்கையில் பற்றுள்ளம் கொண்டவ ராதலின் கட்டை வண்டியையும் கால் நடையையும் அதிகமாக விரும்புகிறார். ஆனால் பண்டிதரோ ஆகாய விமான வேகம் போதா தென்று பறக்கிறார். உலகமானது, தற்போது மிக வேகமாக மாறுத லடைந்து வருகிற தென்றும், அதற்கிசைய நாம் நடந்து கொள்ளா விட்டால், படுகுழியில் விழ வேண்டியதுதானென்றும் ஜவஹர் கருதுகிறார். சாதாரணமாக இவர் மோட்டாரில் ஏறிச் செல்லுகை யில், அஃது எவ்வளவுக் கெவ்வளவு வேகமாகச் செல்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு இவருக்கு மகிழ்ச்சி. ஆண் பெண் சம்பந்தத்தைப் பற்றியும் காந்தியும் ஜவஹரும் கருத்து வேற்றுமை கொண்டிருக்கின்றனர். பிள்ளைப் பேறு என்ற ஒரு காரணத்திற்காகத் தான் ஆணும் பெண்ணும் கூடலாமே தவிர, மற்றபோது கூடுவதெல்லாம் குற்றமேயாகுமென்றும், கர்ப்பத் தடை முறைகள், மனிதனைக் கீழே வீழ்த்தி விடுகின்றனவென்றும், புலனடக்கம் மிகவும் அவசிய மென்றும் அடிகள் கருதுகிறார். ஆணும் பெண்ணும் சந்திக்கிறபோது, அந்தச் சந்திப்பு, சகோதர சகோதரி சந்திப்பாகவும் தாய் மகன் சந்திப்பாகவும், தந்தைமகள் சந்திப்பாகவும் இருக்கவேண்டுமே தவிர, வேறெம்முறையிலும் இருக்கக்கூடாது. இது முடியாத காரியமுமல்ல. சட்டப்படி விவாகம் செய்துகொண்ட தம்பதிகள் கூட, புருஷன் மனைவி என்ற மனப்பான்மையில் சந்திப்பது இயற்கை நியதிக்கு விரோதமானது தான் என்கிறார் கதூரி பாயின் கணவனார். இது விபரீதமான தத்துவம் என்கிறார் இந்திராவின் தந்தை. என்னைப் பொறுத்தமட்டில் காந்தியடிகளின் கொள்கை தவறு என்று நினைக்கிறேன். ஒரு சிலருக்கு இந்த அவருடைய உபதேசம் பொருந்தலாம். பொதுவாக இந்தக் கொள்கையை அனுஷ்டிக்கு மாறு கூறுவது உடல் நோய்கள் பலவற்றை வருவித்துக் கொள்வ தாகும். புலனடக்கம் நிரம்பவும் தேவைதான். ஆனால் காந்தியடி களின் தத்துவத்தைப் பொது வாக ஏற்றுக்கொள்ள முடியுமா வென்பது சந்தேகம். இந்தத் தத்துவம் மிகக் கடுமையானதென்றும், இதன்படி தங்களால் நடக்க முடியாதென்றும் சொல்லி, பலர் தங்கள் வழக்கப்படியே நடந்து வருகின்றனர். அல்லது புருஷ னுக்கும் மனைவிக்கும் சச்சரவு ஏற்படுகிறது. கர்ப்பத்தடை முறை களை அனுஷ்டிப்பதன் காரணமாக ஆண் பெண் சம்பந்தம் அதிகப் படுகிறதென்றும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இயற்கை யாகவுள்ள வசீகர சக்தியை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோ மானால், திரீகள் புருஷர்களையும் புருஷர்கள் திரீகளையும் விரட்டிச் செல்வார் களென்றும் காந்தியடிகள் கருதுகிறார் போலும். இந்த இரண்டு நம்பிக்கை களும் தவறு....... அவருடைய கொள்கை, உலகத்தைத் துறந்த ஒரு சந்நியாசிக்குப் பொருத்தமானதாயிருக் கலாம். ஆனால் அன்றாட உலக வாழ்க்கையிலே ஈடுபட்டுள்ள சாதாரண மக்களுக்கு இது பொருந்து மாவென்பது கேள்வி. ஒரு துன்பத்திற்குப் பரிகாரந் தேடப்போய் இன்னும் பல துன்பங்களை ஏற்றுக்கொள்கிறோ மல்லவா? இவை ஜவஹரின் வாக்கியங்கள். இங்ஙனம் வாழ்க்கையின் பொதுவான சில விஷயங்களில் இந்த இரண்டு தலைவர்களுக்கும் அடிப்படையான அபிப்பிராய வேற்றுமைகள் இருக்கின்றன. இவை தவிர, அவ்வப்பொழுது நடைபெற்ற பல முக்கிய சம்பவங்களைப் பற்றி இரண்டு பேரும் வெவ்வேறாக நினைத்திருக்கிறார்கள். 1934ஆம் வருஷம் ஜனவரி மாதம் பீகாரில் பெரிய பூகம்பம் ஏற்பட்டதல்லவா? இந்தக் காலத்தில் பண்டித ஜவஹர் ஆற்றிய தொண்டுகள் சரித்திர நிகழ்ச்சிகள். பொன்னைத் தொட்ட கையிலே, பூவைப் பிடித்த கையிலே, கட்டப்பாரையை ஏந்திக் கொண்டு, இந்திரா நேருவை எடுத்து மகிழ்ந்த இனிய தோளிலே மண்வெட்டி தாங்கிக் கொண்டு, தொண்டர்களுக்குத் தலைவனாய், ஆனால் தலைவர்களுக்கு முதல்வனாய்ச் சென்ற காட்சியை, இந்தியாவின் வருங்கால சந்ததியாருக்குச் சித்திரித்துக்காட்ட, ஏ! ரவிவர்மா! நீ கூட இல்லையே. இந்தப் பூகம்பத்தைப் பற்றிக் காந்தியடிகள் விடுத்த ஓர் அறிக்கையில், தீண்டாமைப் பாவத்திற் காகவே, கடவுள் இந்தத் தண்டனையை அருளினார் என்று கூறினார். இதை அப்பொழுதே கவியரசர் ரவீந்திரரும் மறுத்தார். இந்த முடிவு, விஞ்ஞான ஆராய்ச்சிக்கு முற்றிலும் முரணானது என்பது பண்டிதரின் கருத்து. நம்முடைய பாவத்திற்குக் கடவுள் தண்டனையாக இந்தப் பூகம்பம் ஏற்பட்டதென்றால் எந்தப் பாவத்திற்காக இஃது ஏற்பட்டதென்று எப்படி தெரிந்துகொள்வது! அந்தோ! நாம் இரக்கப்படவேண்டிய பாவங்கள் எத்தனையோ செய்திருக்கிறோமே. ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் எண்ணம் தோன்றலாம். அந்நிய ஆட்சிக்கு நாம் உட்பட்ட பாவத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம். ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த சமூக வாழ்வை ஆதரித்து வருவதற்காக நமக்கு இந்தத் தண்டனை ஏற்பட்டிருக்கலாம். இந்தப் பூகம்பத்தினால் தர்பங்கா மகாராஜா - இவருக்கு பீகாரில் ஏராளமான பூதிதிகள் உண்டு - அதிக நஷ்டமடைந்தார். எனவே, ஜமீன்தாரி முறையின் மீது விதிக்கப்பட்ட தண்டனை என்று இந்தப் பூகம்பத்தைச் சொல்ல லாமே. தீண்டாமைப் பாவத்திற்காக இந்தப் பூமியதிர்ச்சி ஏற்பட்ட தென்றால் தீண்டாமை வழக்கம் அதிகமாக அனுஷ்டானத்தில் இருக்கும் தென்னிந்தியாவுக் கன்றோ இது வந்திருக்க வேண்டும். அல்லது சட்ட மறுப்பு முதலிய இயக்கங்களில் பீகார் மாகாணம் அதிகமான பங்கெடுக்துக் கொண்டதற்காக கடவுள் இந்தத் தண்டனையை அதற்கு விதித்தார் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தார் கூட நினைக்கலாமே. இந்தத் தோரணையில், காந்தியடிகளின் கொள்கையைப் பண்டிதர் பரிகசிக்கிறார். இதேமாதிரி, பொதுஜன சட்டமறுப்பியக்கம் கடைசிமுறை யாக 1934ஆம் வருஷம் நிறுத்தப்பட்டதல்லவா? அதைப்பற்றிக் காந்தியடிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், சபர்மதி சத்தியாக்கிரக ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர், ஒரு சத்தியாக்கிரகிக் குரிய கடமைகளைச் செய்யவில்லை என்றும், இவர்களுடைய குற்றம் தமது குற்றமே யாகுமென்றும் காரணங்கள் சொல்லி யிருந்தார். இது ஜவஹருக்குப் பிடிக்கவில்லை. ஒருவன் தவறு செய்துவிட்டதற்காக ஆயிரக்கணக்கான பேரை நேர் முகமாகவும் லட்சக்கணக்கான பேரை மறைமுகமாகவும் சம்பந்தப் படுத்திக் கொண்டிருக்கிற ஒரு தேசீய இயக்கத்தை நிறுத்திவிடலாமா என்று இவர் கேட்கிறார். காந்தியடிகள் சட்ட மறுப்பியக்கத்தை நிறுத்தி யது சரியென்று இவருக்குப் பட்டபோதிலும் அதற்காக அவர் கூறிய காரணங்களை இவர் கண்டித்து விட்டார். இன்னும் சில வேற்றுமைகளைப் பற்றி கவனிப்போம். காந்தி, பேசுகிற போது அவருக்குள்ளே அந்தர்யாமியாக இருக்கும் ஒரு சக்திபேசு கிறதாகவே தோன்றும். ஜவஹர் பேசினால் ஓர் எரிமலை அக்கினிக் குழம்பைக் கக்குவதுபோல இருக்கும். மகாத்மாவின் சந்நிதானத்தில் நிற்கிற எவனுக்கும், உண்மையைத் தவிர வேறொன் றையும் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுவிடுகிறது. பண்டிதரின் பார்வை பெற்றோர், மனிதத் தன்மை நிறைந்த கம்பீரத்தினால் ஆட்கொள்ளப் படுகிறார்கள். காந்தியப்பெருமான் உலகத்திற்கே ஒரு புதிய தத்துவத்தைச் சிருஷ்டி செய்து கொடுத் திருக்கிறார். அதுவே அஹிம்ஸா தத்துவம்; சத்தியாக்கிரகக் கொள்கை. இதனால், இவர் உலக மகா புருஷர்களின் வரிசையில் வைத்துப் போற்றப்படுகிறார். இத்தகைய மகான்களுக்குத் தான், எவருக்கும் தோன்றாத சில புதிய கருத்துக்கள் தோன்றும். அக் கருத்துக்களை ஜன சமூகத்தின் மத்தியில் திடீர் திடீரென்று இவர்கள் கொண்டு வந்து போடுவார்கள் விளைவு என்ன? அறிவுத் துறையிலே ஒரு கலக்கம். மானஸிக உலகத்திலே ஒருபரபரப்பு. இந்த மகான்கள் சொல் வனவும், செய்வனவும் ஒரு சமூகத்தின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி விடுதலும் கூடும். இத்தகைய சொல்லையும் செயலையும் காந்தியடி களிடத்தில் பலமுறை கண்டிருக்கிறோம். இவர் செல்லுகின்ற பாதையில், அடுத்த படி என்ன வென்பதை நம்மால் நிர்ணயித்துக் கூற முடிவதில்லை. அப்படி நாம் எதிர்பாராத ஒரு படியில் இவர்காலடி எடுத்து வைத்துவிட்டு, அதற்குச் சமா தானங்கள் சொல்கிறபோது, நமது அறிவு அவற்றை அங்கீ கரிப்பதுமில்லை. ஆனால் இவர் செய்தது சரியென்று மட்டும் நமது இதயம் கூறிக் கொண்டு இவரைப் பின்தொடர்ந்து செல்கிறது. இதுவே மகான்களுக்கு இயற்கையாயமைந்துள்ள சக்தி. இந்தச் சக்தி யனைத்தும் அப்படியே காந்தியடிகளிடத்தில் பிரதிபலிப்பதைக் காண்கிறோம். இவர் இந்தியாவின் தேசீயத் தலைமைப் பதவியை வகிப்பது உலக நாயகத்துவத்தின் ஓர் அமிசந்தான். இந்த இரண்டு வேலைகளையும் ஒருவரே சேர்ந்து பார்க்க முடியுமா வென்பது சிலர் கேள்வி. அதாவது, உலகமெல்லாம் ஒன்றெனக் கருதும் பெருந் தலைவர்களின் தலைமையின் கீழ், ஒரு நாடு முன்னேற்றமடைய முடியுமா வென்பது இவர்கள் சந்தேகம். தேசீயமும் உலக சகோதரத்துவமும் ஒன்று சேரமுடியாதென்பது இவர்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கை சரியா, தவறா என்ற ஆராய்ச்சியில் நாம் இங்கு இறங்காமல் தேசீயம், உலக சகோதரத்துவம் என்ற இரண்டு தன்மைகளும் ஒருங்கே காந்தியடிகளிடத்தில் அமைந்திருக் கின்றன வென்பதை மட்டும் இங்குக் குறிப்பிடுவோம். ஜவஹர்லால் நேருவுக்கு இன்னும் உலக நாயகப் பதவி ஏற்படவில்லை. அப்படி ஏற்படாமலிருக்க வேண்டுமென்பதே சிலருடைய பிரார்த்தனை. அப்பொழுதுதான் இவரால் நமது தாய் நாட்டுக்கு அதிகமான நன்மை செய்ய முடியுமென்பது அவர்கள் எண்ணம். ஆனால் ஜவஹர், தேசீயத்தின் தலைவர் என்ற முறையில் சுருங்கிய காலத்தில் பெரிய மனப்புரட்சியை இந்தியாவில் உண்டு பண்ணியிருக்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மானிட சமூகம் அவ்வப்பொழுது கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருந்தால், அதனைக் கைதூக்கிவிட சில அவதார புருஷர்கள் தோன்றுவது வழக்கம். அப்படி தோற்றுவிக்கும் பெருமை இந்தியாவுக்குத் தான் உண்டு. அத்தகைய உபதேசகர்களில் ஒருவராகவே காந்தியடிகளை உலகத்தார் போற்றுகின்றனர். இதனால்,ஹிந்துவாகப் பிறந்த காந்தியை, ஹிந்து வாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் காந்தியை, கிறிதுவர்களும், பௌத்தர்களும் வேறு பல சமயத்தினரும் வணங்குகிறார்கள்; வாழ்த்து கிறார்கள். இந்தக்கண் கொண்டுதான் இந்திய அரசியல்வாதிகளும் இவரைப் பின்பற்றுகிறார்கள். பண்டித ஜவஹரோ, சுதந்திர லட்சியத்திற்காக எல்லாத் துன்பங்களையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு, முன்னோக்கிப் பார்க்கும் வீரர் பரம்பரையினரை நமக்கு நினைவுபடுத்துகிறார். காந்தியடிகள், இறந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒன்று பிணைக்கும் சங்கிலி. பழமைப் பலகணியின் மூலமாகத்தான் இவர் புதுமை வெளிச்சத்தைப் பார்க்கிறார். இறந்தகாலத்திலிருந்து கொண்டு தான், நிகழ்காலத்திலே வாழ்கிறார். ஜவஹரோ நிகழ்காலத்திலே வாழும் நம்மை எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும் ஏணியாக இருக்கிறார். இவர் ஒரு சமயம் சாந்தி நிகேதனத்திற்குச் சென்றார். ரவீந்திரர் இவரை வரவேற்று உபசரிக்கையில் தமது கையை இவர் கைமீது வைத்துக் கண்களிலே நீர் தளும்ப தழதழத்த குரலில் இந்தியாவின் வருங்காலம், இளைஞரேறே! உன்னிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார். அந்தப் பொறுப்பை ஏற்கும் பாவனையாக ஜவஹரும் தலைகுனிந்தார். இந்தக் காட்சியை நினைத்துப் பார்க்கிற பொழுது நம்மை அறியாமலே நமது கண்களில் நீர் பெருகு கிறதல்லவா? மகாத்மா சபர்மதி நதிக்கரையிலேயிருந்த சத்தியாக்கிரக ஆசிரமத்திற்கு 1921ஆம் வருஷம் கவியரசர் ரவீந்திர நாத் தாகூர் விஜயஞ் செய்தார். காந்தியடிகளின் கீர்த்தி சந்திரன் அப்பொழுதுதான் கலைவிரித்துப் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கிறான். கவிஞர், கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறவர். காந்தியோ மண்ணுலகத்தில் கால் வைத்து நடக்கிறவர். இருவருடைய சந்திப்பிலே ஏதேனும் பயன் விளையுமா வென்று அக்காலத்தில் நினைத்தவர் பலர். ஆனால் குரு தேவன் - ரவீந்தரரின் பட்டப்பெயர் - அப்பொழுது காந்திக்கு மகாத்மா வென்று பட்டஞ் சூட்டிச் சென்றான். அது முதல், மகாத்மாவென்ற எதிரொலி உலக மெங்கணும் பரவியது. பட்ட தாரிக்குத்தான் பட்டஞ்சூட்ட உரிமையுண்டு. கர்மயோகிக்கு மகாத்மா பட்டங் கொடுத்தான் கவிதிலகன். சரியாகப் பதினைந்து வருஷங் கழித்து, அந்த மகாத்மா பட்டதாரி பெய்பூரில் ஒரு கர்ம வீரனுக்கு ராஷ்ட்ரபதி பட்டஞ் சூட்டினான். வாழ்க ஜவஹர்! காந்தியடிகளின் ஆன்ம சக்திக்கு முன்னர், தாஸரின் செல்வம், மோதிலாலின் மிடுக்கு, அஜ்மல்கானின் பரம்பரைப் பெருமை, சரோஜனியின் இன்னிசை முதலியன யாவும் அடங்கிவிட்டன; ஆனால் புனிதமும் பெற்றன. காந்தி, தமது ஆன்ம வளர்ச்சிக்காக மட்டும் பாடு பட்டுக் கொண்டிருந்திருப்பாரானால் இவருக்கு இந்தப் பெருமை ஏற்பட்டே இராது. மேற்கூறப்பட்ட தலைவர்களும் இவருடைய புன்சிரிப்புக்கு வசியப் பட்டிருக்கமாட்டார்கள். பண்டித மோதிலால் ஒருசமயம் கூறினார்:- நான் ஞானிகளைப் பற்றியும் அமானுஷிகர்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர்களைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றேனில்லை. அவர்கள் உண்மையிலேயே இருக்கி றார்களா வென்ற சந்தேகமும் எனக்கு உண்டு. நான் மனிதர்களை யும் மானிட சக்தி களையுமே நம்புகிறவன். காந்தியின் சொல்லும் செயலும் மனிதத் தன்மை நிறைந்தவை..... ïªj¢ சிறிய உருவம், அசைக்க முடியாத நம்பிக்கையின் மீது, வெற்றி கொள்ள முடியாத உறுதியின் மீது நிமிர்ந்து நின்று கொண்டு, தாய் நாட்டுக் காகத்தான் செய்யும் தியாகங்களாகிற செய்திகளை விடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் செய்திகள், லட்சக் கணக்கான இதயங் களில் எதிரொலி செய்து கொண்டிருக்கின்றன. காந்தி, ஒரு மகாத்மா வென்பதற்காக மோதிலால் இவருக்குப் பணியவில்லை; மனிதத்தன்மை நிறைந்தவர் என்பதற்காகவே பணிந்தார். வணங்கா முடிமன்னனாக வாழ்ந்த அவர், காந்தியின் ஆன்மசக்தி முன்னர் tணங்கினார். இந்த ஆன்மசக்தியை, ஜவஹர் லால் தமது சுய சரிதத்தில் பின் வருமாறு உருவகப்படுத்திக் காட்டுகிறார்:- மெலிந்த, குறுகிய இந்த மனிதனிடத்திலே எஃகு போன்ற உறுதியும், எத்தகைய பெரிய தூல சக்திகள் வந்த போதிலும் எதிர்த்து நிற்கவல்ல கற்பாறைத் தன்மையும் இருக்கின்றன வென்பது வெளிப்படை. வசீகரத் தன்மையில்லாத அவயவங்கள்; இடுப்பிலே ஒற்றைத்துணி; திறந்துள்ள தேகம். ஆனால் இவரிடத் தில் ஒரு ராஜகளை இருக்கிறது; மற்றவர்களை ஆட்படுத்தும் அரசதன்மை பிரகாசிக்கிறது. இவர் அறிந்தே அடக்கமாயிருக் கிறார். ஆனால் அதிகாரஞ் செய்வதில் அதிசூரர். சில சமயங்களில், எப்படி யாவது கீழ்ப்படியவேண்டியதுதான் என்று நம்மைக் கட்டாயப்படுத்தக் கூடியமாதிரி, உத்திரவுகள் போடும் மிடுக்கு இவரிடம் நிரம்பியிருக்கிறது. இவருடைய சாந்தி நிறைந்த ஆழமான கண்கள், நம்மை அப்படியே தம்பிக்கச்செய்து பின்னர் நம்மிலே மெதுவாக நுழைந்து பார்க்கின்றன. நிதானமாகவும் தெளிவாகவும் உள்ள இவரது வார்த்தைகள், நமது தெளி வாகவும் உள்ள இவரது வார்த்தைகள், நமது இதயத்தைப் பீறிச் சென்று, நமது உணர்ச்சிகளைத் தட்டி எழுப்புகின்றன. இவருடைய பிரசங்கத்தைக் கேட்க வந்தவர்கள், ஒருவராயிருந்தாலும் சரி, ஆயிரம் பேராயிருந்தாலும் சரி, இவருடைய இனிமையும் வசீகர சக்தியும் அனைவரிடத்திலும் ஊடுருவிப் பாய்ந்து இவரோடு ஜனங்களைக் கலக்க விடுகின்றன. இந்த உண்மையை, 1920ஆம் வருஷத்திலிருந்து தொடங்கப் பெற்ற ஒத்துழையா இயக்கம், சட்ட மறுப்பியக்கம் முதலியவற்றில் நாம் நன்றாகக் கண்டோம். இவரிடத்திலே தேசம் வைத்திருந்த அபார நம்பிக்கை காரண மாகவே, இவர், காங்கிர சர்வாதிகாரி யாக நியமிக்கப் பட்டார். அந்த நிலையில் இவரைப் பற்றிப் பல திறத்தினரும் ஒருமுகமாக நினைக்க முடியாதல்லவா? எனவே, ஜவஹர்லால் நேரு கருத்துப்படி இவர் சில சமயங்களில் ஆச்சரியமான பிற்போக்குள்ள லட்சியத்தைக் கொண்டிருந்தார். ஆனால், செயலிலோ பெரிய புரட்சிக்காரரா யிருந்தார். எனவே, சாதாரண தர்க்க ரீதியைக்கொண்டு இவருடைய செயல்களைக் கவனிக்க முடியாம லிருக்கிறது. அடிப்படையில் இவர் புரட்சிக் காரரா யிருப்பதனாலும், இந்தியாவின் அரசியல் சுதந்திரத்திற்குத் தம்மை அர்ப்பணம் செய்து விட்டிருப்பதாலும், அந்தச் சுதந்திரத்தை இந்தியா பெறுகிறவரையில், எவராலும் மறுக்க முடியாத ஓர் உன்னத தானத்தை இவர் வகிப்பார். மகாத்மா, இந்தியாவின் உண்மையான பிரதிநிதி என்பதைப் பின்வரும் வாக்கியங்களினால் பண்டிதர் சித்திரித்துக் காட்டுவது, எவ்வளவு பொருத்த மாயிருக்கிறது:- காந்தியடிகள் ஜனநாயக வாதியா இல்லையா என்பது கேள்வி யல்ல. இவர் இந்திய விவசாயிகளின் பிரதிநிதி; கோடிக்கணக்கான மக்களினுடைய தன்னம்பிக்கையின் வடிவம். இவர் வெறும் பிரதி நிதியாக மட்டும் இல்லை; இந்திய மக்களின் லட்சிய புருஷனாக வும் இருக்கிறார். இவரைச் சாதாரண குடியானவனென்று சொல்லிவிட முடியாது. இவர் கூரிய அறிவு படைத்தவர். நுண்ணிய உணர்ச்சிகள் நிரம்பிய ரஸிகர். விசால நோக்குடையவர். தமது ஆசைகளையும் கோப தாபங்களையும் அடக்கி அவற்றைத் தூய்மைப்படுத்திப் பாரமார்த்திகத் துறையிலே செலுத்தினவர். மின்சார சக்தி போல் அனைவரையும் தன் வசம் இழுக்கும் சிறந்த தன்மையர். இந்தக் குணங்களெல்லாம், ஓர் ஏழை விவசாயிக்குப் புறம் பானவை. ஆனாலும் இவர் ஒரு பெரிய விவசாயிதான் மானிட வாழ்க்கையை ஒரு விவசாயி எந்தக் கண்கொண்டு பார்க்கி றானோ, அந்த நோக்கோடுதான் இவரும் வாழ்க்கையை நோக்கு கிறார். அந்த விவசாயியின் கண்மூடித் தனமும் இவரிடம் இருக் கிறது. ஆனால் இந்தியா, விவசாய இந்தியா. இவர் இதனை நன்கு அறிந்திருக்கிறார். அதன் சாதாரண துடிப்பைக் கூட கவனிக் கிறார். அதனால் ஏற்படும் நிலைமையைத் தமது இயற்கையறிவி னால் நுணுக்கமாகக் கவனிக்கிறார். தாம் கவனித்ததைத் தக்க சமயத்தில் செயலில் கொணர்கிறார். மகாத்மா, தேசீய சேனைத் தலைமைப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, இந்திய அரசியல் உலகத்தில் ஒரு புனிதக் காற்று வீசத் தொடங்கியது. அதுவரை, அரசியலானது, ஒரு பொழுதுபோக்கு வேலையாகவே கருதப்பெற்று வந்தது. இதை அடியோடு மாற்றி, அரசியலுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து அதில் ஒழுக்கத்தையும் புகுத்திய பெருமை காந்தியடிகளுக்குத்தான் உண்டு. காந்தியடிகள் பெரிய விஷயங்களிலே ஈடுபட்ட வராயிருந்தும், சிறு விஷயங்களைக் கூட கூர்மையாகக் கவனிக்கும் ஆற்றல் பெற்றவர். 1932ஆம் வருஷம் இவர் உண்ணாவிரதமிருந்த காலத்தில், சிறையிலே இருந்த ஜவஹர்லாலுக்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தார். அதில், இந்தத் துன்பமான நாட்களில், என் மனக்கண் முன்னர் நீங்கள்தான் நிற்கிறீர்கள். உங்கள் (உபவாசத்தைப் பற்றி?) கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்பு கிறேன். உங்கள் அபிப்பிராயத்தை எவ்வளவு மதிக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். இந்திராவையும் உங்கள் சகோதரி குழந்தைகளையும் இன்று பார்த்தேன். இந்திரா, சந்தோஷமாயிருக்கிறாள். சிறிது பருத்தும் இருக்கிறாள். நான் சௌக்கியமாய் இருக்கிறேன். பதில் தந்தி கொடுங்கள். என் அன்பு என்று குறிப்பிட்டிருந்தார். தம்முடைய உபவாச காலத்திலே, என் மகள் வந்ததையும் அவள் தேகம் பருத்திருக்கிறதென்பதையும் இவர் எப்படி கவனித்தார்? என்று ஜவஹர் ஆச்சரியப்படுகிறார். காந்தி யார்? இவர் ஒரு வசீகர சக்தி; ஆழ்ந்த அதிவார முடைய தாபனம்; எல்லா மதங்களும் ஒன்று கூடும் தனிமதம். ஆனால் இவரை ஒரு தெய்வமாக வழிபட்டு நின்று விடுவதோடு நாம் திருப்தியடையலாமா? இல்லை. இவர் வாழ்க்கை, நமது தினசரி வாழ்க்கையில் ஐக்கியமாக வேண்டும். இதை அடிகளே ஓரிடத்தி பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார்:- என்னுடைய நண்பர்கள் எனக்குச் செய்யும் சிறந்த கௌரவ மானது நான் எந்தெந்த வேலைத் திட்டங்களின் பிரதிநிதியாக இருக்கின்றேனோ அந்த வேலைத் திட்டங்களைத் தங்கள் வாழ்க்கை யில் கொண்டு வருவதே யாகும். அவர்களுக்கு அதில் நம்பிக்கை யில்லாவிட்டால், தங்கள் முழு பலத்துடன் அவற்றை எதிர்க்க வேண்டும். இது செயல் காலம். இந்தக் காலத்தில் குருட்டுத்தனமாக எதனையும் பின்பற்றுவது கூடாது. அதனால் பயனில்லை. ராஷ்ட்ரபதி ராஷ்ட்ரபதி. தேசத் தலைவன், இந்தப் பட்டத்தைப் பெற்றது யார்? கொடுத்தது யார்? பெற்றது ஜவஹர்; கொடுத்தது காந்தி. கொடுத்தவர் கொடையாளி; பெற்றவர் பாக்கியசாலி. காந்திதான் இந்தப் பட்டத்தை வேறு யாருக்காவது கொடுத்திருப்பாரா? அப்படி கொடுத்தாலும் வேறு யாராவது வாங்கிக் கொள்ளத்தான் துணிவாரா? ராஷ்ட்ரபதி என்ற பட்டம் ஜவஹருக்கு ஏன் கொடுக்கப் பட்டது? ஏனென்றால் ஜவஹர், காலத்தின் எதிரொலி; தேசத்தின் அபிலாஷை; வருங்கால நம்பிக்கையின் உதயசூரியன். ஆனால் எல்லாவற்றையும் விட கமலாதேவியின் கணவன். கோடை வெயிலிலே, புழுதி மண்ணிலே, கால் கொதிக்க நடந்து சென்று, கூப்பிய கையோடும் நின்று, ஐய, சுதேசியத்தை ஆதரியுங்கள் என்று பிரசாரம் செய்ததன் பயனாகச் சிறை புகுந்து, உடல் மெலிந்து, நோயுற்று, அந்நிய நாட்டில் மரணப்படுக்கையிலே கிடந்த காலத்தில்கூட, அருகிருந்த கணவனைப் பார்த்து நாயக! என் பதியாக இங்கிருந்து லட்சியத்திலே பார்வையுடைய தங்கள் கண்களிலே கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், தாய் நாட்டுக்குச் சென்று ராஷ்ட்ரபதியாக இருந்து லட்சக்கணக் கான மக்களின் கண்ணீரைத் துடையுங்கள் என்று கணவனின் உள்ளங்கையைத் தன் கண்களிலே ஒற்றிக்கொண்டு விடை கொடுத்த வீராங்கனை கமலா நேருவின் இருதய மூர்த்தியல்லவா ஜவஹர்! அணையாத அமரஜோதியை ஏற்றியவரல்லவா ஜவஹர்! தூக்கு மேடையிலே கூட காந்தியோடு சேர்ந்து நிற்கத் தயாராயிருக்கும் ஜவஹர் - ஆ! அந்தக் காலம், தேவி! ஒரு நாளும் வரவேண்டாம். - எங்களுடைய ஜவஹர் எங்களுக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும். எங்களுக்கெட்டதாக ஒரு தெய்வமாக இருப்பதைக் காட்டிலும் எங்களிலே ஒருவராக இருக்க வேண்டும் ஜவஹர். இதுதான் பாரத மக்களின் நித்தியப் பிரார்த்தனை. காங்கிர தலைமைப்பதவி, இதுவரை எவருக்கும் அடுத் தடுத்து இரண்டு வருஷமும் தொடர்ந்தாற் போல் வழங்கப்பட்டதே யில்லை. ஜவஹருக்குத்தான் இந்தக் கௌரவம் கிடைத்திருக்கிறது. இன்னமும் கிடைக்கலாம். எனவே ஜவஹர் ராஷ்ட்ரபதியானதில் என்ன விநோதம்! தலைவனாக ஒருவன் வரவேண்டுமானால் அவன் எத்தனையோ படிகளைத் தாண்ட வேண்டும்; எவ்வளவோ பயிற்சிகளைப் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் சொல்லுக்கு மதிப்பு உண்டு; செயலுக்குப் பயனுண்டு. ஜவஹர் சிறை சென்றார். ஒரு முறையா? பல முறை. நான் எங்குச் சுற்றி வந்தாலும் சிறையிலேதான் என்னைக் கொண்டு போய் விடுகிறது என்று துக்கத்திலே நகைச்சுவையைப் புகவிட்டு கூறவில்லையா? உபவாசம் இருந்தார்; தடியடிபட்டார்; கைகளிலே விலங்கிடப்பெற்று வீதி களிலே அழைத்துச் செல்லப்பட்டார். இன்னும் எத்தனையோ அனுபவங்களையெல்லாம் பெற்றார்; ராஷ்ட்ரபதியானார். ஜவஹர் தேசீயக்கண் மட்டும் படைத்தவரல்லர்; உலகக் கண் படைத்தவர். உலகம் உய்வதற்கு இந்தியா சுதந்திரமடைய வேண்டு மென்று இவர் கோருகிறார். இந்தியா, ஆள் பலத்திலும் ஆன்ம பலத்திலும் சிறந்தது. இவை யிரண்டினையும் ஒழுங்குபடுத்தி சுதந்திர பாதையிலே விட்டு விடுவோமானால் உலகத்திலே பரவி யுள்ள அடிமைத்தனம், வறுமை, அஞ்ஞானம் முதலிய யாவும் அற்று வீழும் என்பது நிச்சயம். ஆனால் இந்தச் செயற்கரும் செயலைச் செய்ய யாருக்குத் திறலுண்டு? ராஷ்ட்ரபதி ஜவஹருக்குத்தான். இந்தச் சூட்சுமம் காந்திக்குத் தெரிந்திருக் கிறது. சத்துருக்களையும் பணிய வைக்கும் ஆற்றல் எவனுக்கு உண்டோ அவன் தான் உன்மையான வீரன்; உண்மையான தலைவன். இந்த அபூர்வமான சக்தி ஜவஹரிடத்திலே இருக்கிறது. இந்தச் சக்தி நிரம்பப் பெற்றுள்ள காந்தி இதனை உணர்ந்தார். ஜவஹரை ராஷ்ட்ரபதியாக்கினார். தலைவனுக்கன்றோ தலைவனின் லட்சணம் தெரியும்! தலைவர்களா யிருப்போர்க்கு எப்பொழுதும் போராட்டந் தான். முன்னே செல்வோரை இழுத்துப் பிடிக்க வேண்டும். பின்னே வருவோரை இழுத்துக் கொண்டு போகவேண்டும் என்று ருஷ்யா வின் சர்வாதிகாரி டாலின் கூறினான். ஜவஹர், இந்த இரண்டு அரிய செயல்களைச் செய்வதோடு, பக்கத்திலே வருவோரைத் தட்டிக் கொடுத்துக் கொண்டும் போகிறார். ராஷ்ட்ரபதியாகவே இவர் பிறந்தார் என்பதில் என்ன சந்தேகம்? ஜவஹர் ராஷ்ட்ரபதியாகிவிட்டார். மன்னுபுகழ் வரூப ராணியின் மணி வயிறு வாய்த்த மதலை கொடிதூக்கி விட்டார். பாரதமாதா கண் திறந்து பார்க்கிறாள். ஆடுவோமே பள்ளு பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று நாமும் பாரதியாருடன் சேர்ந்து கொள்ளலாமா? காந்தியும் விவேகானந்தரும் முந்தைய பதிப்பின் பதிப்புரை செம்பொன் மேனி; சிறிய உருவம்; பெரிய ஆத்மா; உடைந்த பல்; உரத்த சிரிப்பு; ஒற்றையாடை; மூப்படைந்த இளைஞர்; ஓய்வுகாணாத உழைப்பாளி. இவர் காந்தி. ஆஜானுபாகு; அகன்ற நெற்றி; பரந்த கண்கள்; ரிஷப நடை; அரசனாக ஆளவேண்டியவர்; துவராடை யுடுத்த துறவியானார். உலகத்தைத் துறந்து விட வில்லை; உலகத்திலே வாழ்ந்தார்; உலகத்திற்காக வாழ்ந்தார். இவர் விவேகானந்தர். இருவரும் பாரத ஜாதியின் பிரதிநிதிகள்; அதன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொடுத்தவர்கள்; இந்திய மக்களின் இருதயத்தில் என்றும் வாழ்ந்து கொண் டிருப்பார்கள். இந்த நூல், சுவாமி விவேகானந்தருடைய சிகாகோ பிரசங்கத்தின் ஐம்பதாவது வருட நினைவு மலராக வெளியிடப்பெறுகிறது. 11.09.1943 சென்னை சக்தி காரியாலயத்தார் 1. ஐம்பது வருஷங்களுக்கு முன் ஐம்பது வருஷங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம். இரண்டு பேர், பம்பாய்த் துறைமுகத்திலிருந்து கப்பலேறி னார்கள். கப்பலேறியபோது இவர்களை உபசரித்து வழியனுப்பிய வர்கள் யார்? நெருங்கிய நண்பர் களும் உறவினர்களுமாகிய ஒரு சிலர்தான். இவ்விருவரையும் பற்றிப் பொது ஜனங்களுக்கு ஒன்றுமே தெரியாது. இந்தப் பெரிய மனிதர் அந்த ஊருக்குப் பயணமானார், அந்தப் பெரிய மனிதர் இந்த ஊருக்கு வந்திறங் கினார் என்று இப் பொழுதைய பத்திரிகைகள் வெளியிடுகின்றனவே, அதைப்போல் அந்தக் காலத்தில் இவ்விருவரும் கப்பலேறியதை எந்தப் பத்திரிகை யும் வெளியிடவில்லை. இவ்விருவரும், எந்தப் பத்திரிகை நிருபர் களுக்கும் பேட்டிகொடுத்து, தாங்கள் போகிற இடங்களில் சாதிக்கப் போகிற காரியங்களைச் சவிதாரமாகச் சொல்லிவிட்டுப் போகவு மில்லை. ஆனால் திரும்பி வந்தபோது இவர்கள் கழுத்திலே எத்தனை மாலைகள் விழுந்தன! என்ன பலமான கைகொட்டு முழக்கம்! இவர்கள் நடக்கிற மாதிரி, பார்க்கிற பார்வை, இவைகளையெல் லாங்கூட பத்திரிகை நிருபர்கள் நுட்பமாகக் கவனித்து எழுதி னார்கள். என்ன மாறுதல் பார்த்தீர்களா? இவர்கள் போனபோது யாரும் இவர்களைக் கவனிக்கவில்லை. திரும்பி வருகிறபோது எல்லோருடைய கவனமும் இவர் களிடமே சென்றது. உலகத்தில் இது சாதாரண சம்பவந்தான் போலும்! ஆலம் வித்து, எப்பொழுது பூமியில் விழுந்தது என்பதை யாரேனும் கவனிக்கிறார்களா? இல்லை. ஆனால் அதுவே பிற் காலத்தில் பெரிய விருட்சமாகிக் கனியும் நிழலும் கொடுத்து உதவு கிறபோது, அந்த விருட்சத்தை அனைவரும் அண்ணாந்து பார்க்கி றார்கள்; சுற்றிச்சுற்றி வருகிறார்கள்; வியந்து வியந்து பாராட்டு கிறார்கள். அதன் நிழலிலேயே இருந்துவிட வேண்டு மென்று கூடச் சிலர் தீர்மானிக்கிறார்கள்! 1893ஆம் வருஷம். மேற்சொன்ன இருவரில் ஒருவர், ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவுக்குப் பயணமானார்; இன்னொருவர், மே மாதம் அமெரிக்காவுக்குப் பயணமானார். ஒருவர், வாழ்க்கையைத் தொடங்கச் சென்றார்; இன்னொருவர் வாழ்க்கையைத் துறந்து சென்றார். முன்னவர், சாதாரண ஒரு பாரிடர்; பின்னவர், சாதாரண ஒரு சந்நியாசி. அப்பொழுது பாரிடர் காந்திக்கு வயது இருபத்து நான்கு; சந்நியாசி விவேகானந்தருக்கு வயது முப்பது. இரண்டு பேரும் பிரமுகர்களல்ல; முன் பின் தெரியாத நாடு களுக்குப் புறப் பட்டார்கள். அந்த நாடுகளிலோ, நிறத் துவேஷம் நிறைய. கறுப்பு நிறத்தவர், காட்டுமிராண்டிகளாகக் கருதப்பட்டார்கள்; நடத்தவும் பட்டார்கள். அப்படிப்பட்ட நாடுகளுக்குச் சென்ற இவர்கள், சிறிது காலங் கழித்துத் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிய போது, அந்த நாட்டு மக்களின் பிரியா விடைபெற்றுத் திரும்பினார்கள்: தங்கள் தாய்நாட்டு மக்களின் ஆனந்தக் கண்ணீரினால் அபிஷேகம் செய்யப் பட்டார்கள். சென்றார்கள், திரும்பினார்கள் என்று சுருக்கமாக இங்கே சொல்லி விட்டோம். ஆனால் சென்று திரும்பிய இந்த இடைக்காலத்தில் இவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்! என்னென்ன விதமான அவமானங் களுக்குட் பட்டிருக்கிறார்கள்! ஏன் என்று கேட்கிறீர்களா? எல்லாம் தாய் நாட்டின் பொருட்டே! காந்தி, தென்னாப்பிரிக்கா போந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை. டர்பனிலிருந்து ஜொஹான்னபர்க் என்ற நகரத்திற்கு ஒரு வழக்கு நிமித்தம் போக வேண்டியிருந்தது. எனவே முதல் வகுப்புப் பிரயாணியாக ரெயிலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தார். ரெயில், மாரிட்பர்க் என்ற டேஷனை அடைந்தது. அங்கே திடீரென்று ரெயில்வே அதிகாரிகள் தோன்றி, இவரை வண்டியி லிருந்து கீழே இறங்குமாறு கூறினார்கள்; இறக்கியும் விட்டு விட்டார்கள். இவருடைய படுக்கை முதலிய சாமான்களெல்லாம் வண்டிக்கு வெளியே வீசி எறியப்பட்டன. வண்டியோ, கூவிக் கொண்டு வேகமாகப் போய்விட்டது. பிளாட்பாரத்திலே ஒண்டி யாக நிற்கிறார் காந்தி. அப்பொழுது இரவு ஒன்பது மணி. குளிர் நடுக்குகிறது. ஊரோ புதிது. பிளாட்பாரத்தில் போவோர் வருவோ ரெல்லோரும் இவரை முறைத்து முறைத்துப் பார்க்கிறார்கள். என்னசெய்வது? இவ்வளவுக்கும் காரணம் என்ன? ஒரு கூலி1 முதல் வகுப்பில் பிரயாணம் செய்யலாமா வென்பது தான். இங்கிலாந்து சென்று பாரிடர் பட்டம் பெற்றாலென்ன? இந்தியன் இந்தியன்தானே? கூலி பாரிடர் தானே? காந்தி, சிந்தனையிலாழ்ந்து விட்டார். எனது உரிமைகளுக்காக நான் போராடுவதா? அல்லது இந்தியாவுக்குத் திரும்பி விடுவதா? இந்த அவமானங்களை யெல்லாம் பொருட்படுத்தாமல், எந்த வழக்கை உத்தேசித்து வந்தேனோ அந்த வழக்கை முடித்துக் கொண்டு இந்தியாவுக்குத் திரும்புவதா? என்னுடைய கடமையை முடிக்காமல் திரும்புவதென்பது கோழைத்தனம். இங்கே ஆழ்ந்து பரவியுள்ள நிறத் துவேஷம் என்கிற வியாதியின் வெளிச்சின்னந்தான் நான் அனுபவிக்கிற இந்தச் சங்கடம். இந்த வியாதியை அடியோடு தொலைப்பதும் அதற்காகக் கஷ்டங்களை அனுபவிப்பதும் எனது கடமை. இருள் நிறைந்த அந்த இடத்திலிருந்துகொண்டு இவ ருடைய அன்பு நிறைந்த உள்ளம் இந்தமாதிரியாகச் சங்கற்பித்துக் கொண்டது. மறுநாள் ரெயிலேறி சார்ல டவுன் என்ற ஊரை அடைந்தார். இதற்குப் பிறகுதான் எத்தனை அவமானங்கள்! சார்ல டவுனிலிருந்து ஜொஹான்னபர்க்குக்கு ஒரு கோச் வண்டியில் தான் போகவேண்டும். அந்தக் காலத்தில் ரெயில் கிடையாது. காசு கொடுத்து டிக்கட் வாங்கியிருந்தார் காந்தி. ஆனால் மற்றப் பிரயாணி களுடன் இவர் வண்டிக்குள் உட்கார வைக்கப்படவில்லை. வெள்ளையர் பக்கத்தில் ஒரு கறுப்பன் உட்காரலாமா? எனவே, வழக்கமாக கண்டக்டர் உட்காருகிற இடத்தில், அதாவது வண்டியோட்டுகிறவன் பக்கத்தில், உட்கார வைக்கப்பட்டார். கண்டக்டர் பிரயாணிகளுடன் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டான். வண்டி, சில மைல் தூரம் சென்றது. சென்ற பிறகு, கண்டக்டருக்கு வெளியிலே வந்து, காற்றுவாட்ட மாக உட்கார வேண்டுமென்று ஆசை தோன்றியது. உடனே வண்டியை நிறுத்தி, வண்டியில் ஏறுவதற்குப் படி யிருக்குமே, அந்தப் படியின் மீது அழுக்கடைந்த ஒரு கோணிப்பையைப் போட்டு சாமி! இப்படிவந்து உட்கார் என்று சொன்னான். முடியா தென்றார் காந்தி. அவ்வளவுதான்: கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விழுந்தது. அறைந்ததோடு மட்டுமல்லாமல் அந்த துராத்மா, இந்த வருங்கால மகாத்மாவை , கையைப் பிடித்திழுத்துக் கீழே தள்ள ஆரம்பித்தான். இவரோ, தமது மணிக்கட்டு எலும்புகள் முறிந்து போனாலும் போகட்டுமென்று, வண்டியின் கம்பிகளைக் கெட்டி யாகப் பிடித்துக்கொண்டார். அவன் பலசாலி; முரடன். இவரோ தேகபல மில்லாதவர்; ஆனால் பொறுமைசாலி. இருவருக்கும் நடைபெறுகிற இந்தக் கைப்பிடிச் சண்டையை உள்ளேயிருந்த வெள்ளைப் பிரயாணிகள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் களுக்குக்கூட மனம் இரங்கிவிட்டது. காந்தி எங்களுடன் உள்ளே வந்து உட்காரட்டும் என்று சொன்னார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த கண்டக்டர் தோல்வி யடைந்தவன் போலானான்; சண்டை போடுவதை நிறுத்திக்கொண்டான். ஆனால் உன்னை ஒரு கை பார்த்துக்கொள்கிறேன் என்று உருட்டி மிரட்டிக் கொண்டே சென்றான். வண்டியும் சென்று கொண்டிருந்தது. இன்னொரு சம்பவம். அப்பொழுது தென்னாப்பிரிக்கா யூனியன் தலைநகரான பிரிட்டோரியாவில் காந்தி இருந்தார். அங்கே விநோதமான இரண்டு சட்டங்கள் அமுலில் இருந்தன. ஒன்று, இந்தியர்கள், இரவு ஒன்பது மணிக்குமேல் வெளியில் எங்கும் நடமாடக் கூடாதென்பது. மற்றொன்று, ரோட்டுகளின் இருபக்கங் களிலுமுள்ள நடைபாதையின் மீது இந்தியர்கள் செல்லக் கூடாதென்பது. ஒரு நாள், அரசாங்கத் தலைவரான க்ரூகர் என்பவர் வசித்துக் கொண்டிருந்த பிரசிடெண்ட் வீதி என்ற தெருவில் நடை பாதையின்மீது சென்று கொண்டிருந்தார் காந்தி. பிரசிடெண்ட் க்ரூகர் வீடு வந்தது. வீட்டின் முன்புறத்தில் ஒரு காவற் சேவகன் நின்றுகொண்டிருந்தான். இந்தியர்கள் நடைபாதையில் நடந்து செல்லக் கூடாதல்லவா? இவர் நடைபாதையில் வந்து கொண் டிருப்பதை அந்த முரடன் பார்த்தான். அதுவும் பிரசிடெண்ட் வீட்டு முன்னே இப்படிச் சட்டத்தை மீறி நடந்து செல்லலாமா? இவரைக் காலால் எட்டி உதைத்து ரோட்டுக்குத் தள்ளிவிட்டான்! அப்பொழுது அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த காந்தியின் ஆங்கிலேய நண்பர் ஒருவர், அந்தக் காவற் சேவகனின் செயலைக் கண்டு ஆத்திரமடைந்து, அவன் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு காந்தியிடம் கூறினார். காந்தி மறுத்துவிட்டார். அவனுக்கென்ன தெரியும்? பாவம்! எல்லாக் கறுப்பர்களும் அவனுக்கு ஒன்றுதான். என்னுடைய சொந்த அவமானத்திற்குப் பரிகாரந் தேடிக் கொள்ளும் பொருட்டு நான் எந்தக் கோர்ட்டுக்கும் செல்லத்தயாராயில்லை என்றார். விவேகானந்தருடைய அனுபவங்களென்ன? அமெரிக்காவைப் போயடைந்த சில நாட்களுக்குப் பிறகு, சர்வதேச சமய மகாநாட்டை முன்னிட்டு ஒருநாள் சிக்காகோ நகரம் சென்றார். சென்ற இடத்தில், மேற்படி மகாநாட்டுக் காரியாலயத்தின் விலாசத்தை எங்கேயோ மறதியாக விட்டுவிட்டார். எனவே, மகாநாட்டின் காரியாலயம் எங்கே, எங்கேயென்று பல இடங்களிலும் தேடியலைந்தார். யாரும் இவருக்குச் சரியான தகவல் சொல்லவில்லை. கறுப்பு மனிதன் தானே? சுயராஜ்ய மில்லாத ஒரு தேசத்தின் மக்கள், அந்நிய நாடுகளில் எவ்வளவு கேவல மாகக் கருதப்படுகிறார்கள் என்பதை இவர் அப்பொழுதே தெரிந்துகொண்டு விட்டார். வீதிகள்தோறும் அலைந்தார் விவேகானந்தர். ஹோட்டல் களுக்குச் சென்று தங்குவதற்கு இடங்கேட்டால், கறுப்பு மனிதனுக்கு இடமில்லையென்பதைச் சொல்லாமல் சொல்லி வெளியே அனுப்பி விடுகிறார்கள். என்ன செய்வார்? கைகால்கள் சோர்ந்துபோயின. இரவு வந்துவிட்டது. நிறத் திமிர் பிடித்தவர்களுடைய இருதயம் போல் எங்கும் இருள் சூழ்ந்துகொண்டது. சில்லென்று காற்று வேறே அடிக்கிறது. குளிரோ தாங்க முடியவில்லை. நேரே ரெயில்வே டேஷனுக்குச் சென்றார். அங்கே ஒரு மூலையில் பெரிய காலி மரப்பெட்டி யொன்று இருந்தது. அதற்குள் சென்று படுத்துக் கொண்டார். படுத்ததுதான் தெரியும் இவருக்கு. ஒரே தூக்கம். காலையில் எழுந்தார். தேகத்திலே சோர்வு. வயிற்றிலே பசி. மறுபடியும் நகரவலம் வந்தார். ஏதேனும் ஆகாரம் கிடைக்குமா வென்று வீடுதோறும் நுழைந்து நுழைந்து பார்த்தார். ஆகாரம் கிடைக்கவில்லை; பரிகாசப் பேச்சுகளும் அவமானங்களுமே கிடைத்தன. சிக்காகோ பட்டணத்திலே, கோடிக்கணக்கில் செல்வம் புரளுகின்ற அந்தக் குபேர புரியிலே, நமது விவேகானந்தருக்கு, உலகத்திலுள்ள சர்வமான பேருடைய வயிற்றுப் பசியை மட்டுமல்ல, ஆத்மப் பசியையும் தீர்த்துவைக்க வேண்டு மென்ற ஒரே லட்சியத் திற்காக வாழ்ந்த மகானுக்கு, ஒரு பிடி சோறு கிடைக்கவில்லை; ஒரு துண்டு ரொட்டி கொடுப்பாரில்லை. இந்தியா, அடிமை நாடாயிருப் பதற்கு இந்த ஒரு தண்டனை போதாதா? கடைசியில், மெய் சோர்ந்து வேறோர் சொல்லும் கூறாமல் பாதையோரமாகப் போய் ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டார் விவேகானந்தர். கடவுளே! இதுவும் உன் திருவுளச் சம்மதமோ என்று இவருடைய தூய உள்ளம் ஏங்கிநின்றது. அப்பொழுது, திடீரென்று, இவர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிரே, ஒரு மாளிகையின் வாயிற்கதவு திறந்தது. அங்கிருந்து ஒரு பெண்ணரசி இவர் அருகே வந்து ஐயா! தாங்கள் சர்வசமய மகாநாட்டுக்குப் பிரதிநிதியாக வந்திருக்கிறீர்களா? என்று கேட்டார். ஆம் என்றார் இவர். உடனே அந்த அம்மையார், இவரைத் தமது மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போய் உபசாரம் செய்தார்; ஆகாரம் அளித்தார். அந்த அன்னபூரணி வாழ்க! இங்ஙனம் இருவரும் அந்நிய நாடுகளில் அநேக விதமான கஷ்ட நிஷ்டூரங்கள் பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இவர்களைப்பற்றி நாம் யாரும் நினைக்கக் கூட இல்லை. ஆனால் இவர் களென்னவோ, தங்கள் தாய்நாட்டு மக்களின் நினைவுடையவர் களாகவே இருந்தார்கள். ஒரு சமயம், விவேகானந்தருக்கு சிக்காகோ நகரில் ஒரு தனவான் மாளிகையில் ஆடம்பரமான விருந்தொன்று நடை பெற்றது. விருந்தன்று இரவு இவர் அங்கேயே தங்கினார். இவருக் கென்று தனியான அறை, மெத்தென்ற படுக்கை முதலிய எல்லாச் சௌகரியங்களையும் அந்தப் பெரிய மனிதர் செய்துகொடுத்தார். விவேகானந்தரும் அந்த அறைக்குச் சென்று பஞ்சணைமீது படுத்துக்கொண்டார். ஆனால் அஃது இவருக்கு முள் படுக்கையாக இருந்தது. தூக்கமே வரவில்லை. தமது தாய் நாட்டு மக்களின் வறியகோலம் இவர் முன்னே வந்துநின்றது. கண்கள் நீர் பெருக்கின; கதறினார்: தாயே! எனது ஜன்மபூமி, சொல்லொணாத வறுமையிலே அழுந்திக் கிடக்கிறபோது, எனக்குப் பெயர் எதற்கு? புகழ் எதற்கு? இவைகளைப்பற்றி எனக்காவதென்ன? இந்தியாவின் பாமர மக்களை யார் கைதூக்கிவிடப் போகிறார்கள்? அவர்களுக்கு யார் சோறு கொடுக்கப் போகிறார்கள்? மாதா! அவர்களுக்கு நான் எப்படி உதவி செய்வதென்று எனக்கு வழிகாட்டு. விவேகானந்தரின் உள்ளம் எந்த நிலையிலே நின்றது பார்த்தீர் களா! இவர் எதற்காக அமெரிக்கா சென்றார்? இவரே, ஒரு கடிதத் தில் காரணங் கூறுகிறார். என்னுடைய ஆவலைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகவோ அல்லது புகழுக்காகவோ நான் இந்த நாட்டுக்கு வரவில்லை. இந்தியாவிலுள்ள ஏழை மக்களைக் காப்பாற்றுவதற்கு இங்கே ஏதேனும் வழி ஏற்படுமா வென்று பார்ப்பதற்காகவே வந்தேன். ஆனால் இதை அப்பொழுது - ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் - நாம் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை. காந்தியும் விவேகானந்தரும் முறையே தென்னாப்பிரிக்கா வுக்கும் அமெரிக்காவுக்கும் சென்ற விஷயத்தில் ஒரு வித்தியாசம் உண்டு. இருவரும் போகிறபோது, சிறிது காலம் அங்கு தங்கிவிட்டுத் திரும்பிவிட வேண்டுமென்ற எண்ணத்துடனேயே போனார்கள். ஆனால் விவேகானந்தருக்குத்தான் அது சாத்தியமாயிற்று. காந்திக்கோ, தென்னாப்பிரிக்காவிலேயே சுமார் இருபது வருஷ காலத்திற்கு மேல் நிரந்தரமாகத் தங்கும்படி நேரிட்டது. விவேகானந்தர், வெளி நாடுகளுக்குச் சென்று இந்தியர்களின் பரம்பரைக்கும் நாகரிகத் திற்கும் ஒரு பெருமையை வாங்கிக் கொடுத்தார். காந்தியோ, வெளிநாடுகளுக்கு வயிற்றுப் பிழைப்பு நிமித்தம் சென்றிருந்த இந்தியர்களுக்குத் தன் மதிப்புணர்ச்சியை ஊட்டினார். காந்தி, தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்னர், அங்கிருந்த இந்தியர்கள், அடிமைகளைப் போலவே நடத்தப்பட்டார்கள். இந்தியர்களும் அப்படியே நடந்து கொண்டார்கள். லட்சக்கணக்கில் பணஞ் சம்பாதித்த வியாபாரிகள் கூட, ‘பணஞ் சம்பாதிக்க வந்த இடத்தில் மானத்தைப் பார்த்தால் முடியுமா? என்கிற மாதிரியாகக் கேட் டார்கள். காந்தியின் மனித உள்ளம் இதைக் கேட்டு வெகுண்டு எழுந்தது. மானமிழந்து வாழாமை முன்னினிதே என்பது சத்திய வாசகமல்லவா? அங்கிருந்த இந்தியர்களின் மானத்தைக் காப்பாற் றும் பொருட்டு முதலில் ஒரு வருஷ ஒப்பந்தத்தின் பேரில் வக்கீலாகச் சென்ற காந்தி, அங்கேயே இருபது வருஷ காலம் தங்கினார். சென்றபோது ஒரு வக்கீலாகச் சென்றார். அங்கே, இந்தியர்களின் கட்சியை எடுத்துச் சொல்லும் வக்கீலாக வாழ்ந்தார். இந்தியாவுக்குத் திரும்புகிறபோது ஒரு வெற்றி வீரராகத் திரும்பினார். காந்தியும் விவேகானந்தரும் வெளி நாடுகளுக்குச் சென்று வெற்றிச் சங்கு ஊதிய பிறகுதான் அவர்களுடைய பெருமையை நாம் உணர்ந்து கொண்டோம். அவர்கள் திரும்பி வந்தபோது ஜே கோஷம் போட்டோம். இதற்கு நமது அறியாமை காரணமென்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்வது ஒரு சிலருடைய சம்பிர தாயமும்கூட. ஆனால் உண்மையில் நமது அடிமைத்தனந்தான் காரணம். எந்த ஜாதி, அடிமைக் குழியிலே விழுந்துகிடக்கிறதோ, அது தன்னையே மறந்து கிடக்கிறது. ஆள்வோரின் பாதுகாப்பிலே அது தன் சுய உணர்வை இழந்து கிடக்கிறது. அந்த நிலையிலே, தன்னைப் பற்றிய ஒரு தாழ்வான எண்ணம், அந்நியர் களுடைய நாகரிகத்திலே ஒரு மோகம், எப்பொழுதும் ஒருவித அச்சம், புதுமை போலித்தனம் பகட்டு முதலியவைகளிலே மேலெழுந்த வாரியான ஒரு நம்பிக்கை ஆகிய இந்தத் தன்மைகளெல்லாம் அதனிடத்தில் குடிகொண்டு விடுகின்றன. இவைகளிலிருந்து அந்த ஜாதியைக் கைதூக்கி விட்டு அதற்குச் சுய உணர்வை உண்டுபண்ணுவதென்பது லேசான காரியமா? அந்தக் காரியத்தை யார் செய்ய முடியும்? அயலார் வந்து செய்ய முடியுமா? அயலார், அதிலும் நல்லெண்ணமுடைய வர்கள், எட்டி யிருந்து அநுதாபம் காட்டலாம். ஆனால் யார், அந்த ஜாதியிலேயே ஒருவராகப் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிறார் களோ, யாருக்கு, தன்னுடைய ஜாதி இப்படி கேவலமான திதியி லிருக்கிறதே யென்று இருதயத்திலிருந்து ரத்தம் வடிகிறதோ, யார், விருப்பு வெறுப்பில்லாமல், பலனை எதிர்பாராமல் செய்ய வேண்டிய கடமையைச் செய்துகொண்டு போவதிலேயே திருப்தி யடைகிறார்களோ அவர்கள்தான் அந்த ஜாதியைக் கைதூக்கிவிட முடியும். அப்படிக் கை தூக்கி விடுகிற முயற்சியில் அவர்கள் ஈடு பட்டிருக்கிற போது, அவர்களுடைய சுயஜாதியினரே அவர் களை எள்ளி நகையாடலாம்; எண்ணிறந்த இம்சைகளுக்குட்படுத்தலாம். ஆனால் அவர்கள், இவைகளையெல்லாம் லட்சியம் செய்வதில்லை; செய்யவும் மாட்டார்கள். தூங்கிக் கொண்டிருப்பவர்களைத் தட்டி எழுப்பு வதற்காகச் சதா விழித்துக் கொண்டிருப்பதும், சுமந்து செல்கிறவர்களின் சுமையை இறக்கி வைப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பதும், தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்து கொண்டிருப்பதும் அவர்களுடைய அன்றாட வேலைகளாயிருக் கின்றன. அவர்களைத்தான் மகான்களென்று கொண்டாடுகிறோம்; பெரியார்களென்று போற்றுகிறோம். காந்தியும் விவேகானந்தரும் மகான்களல்லரோ? பெரியார்க ளல்லரோ? 2. இளமையில் இருவரும் விவேகானந்தர், ஒரு ஞானவீரர்; காந்தி, ஒரு கர்மயோகி. அவர், காட்டுத் தீ; இவர், பொறிகிளம்பாத அனற் பிழம்பு. அவர், கோடைகாலத்து இடி; இவர், கார்காலத்து மழை. அவர், கர்ஜிக்கும் சிங்கம்; இவர், கூவும் குயில். அவர், பேச்சிலே, பார்வையிலே, நடை யிலே எல்லாவற்றிலுமே க்ஷத்திரியர்; இவர், கருத்திலே, பேச்சிலே, செயலிலே எல்லாவற்றிலுமே அந்தணர். அவர், கர்மத்திலே அகர் மத்தைக் கண்டவர்; இவர், அகர்மத்திலே கர்மத்தைக் கண்டவர்;1 அவர், துறப்பதற்காகவே பிறந்தார்; இவர், இல்லறத்திலிருந்து கொண்டே துறவியானார். மேலே சொன்ன இந்தத் தன்மைகளெல்லாம், இரண்டு பேருடைய இளம்பிராயத்திலேயே துளிர் விட ஆரம்பித்தன. இதனைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். ஆயிரம் வருஷத்திலே வாழவேண்டிய வாழ்க்கையைச் சுமார் நாற்பது வருஷத்துக்குள்ளேயே வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார் விவேகானந்தர் என்று கூறினார் ஓர் அறிஞர். இது மிகவும் உண்மை. விவேகானந்தருடைய வாழ்க்கையைப் பாலியத்திலிருந்து நாம் கவனித்துப் பார்த்தோமானால், ஒரு துடி துடிப்பு, ஒரு வேகம், எதையும் சீக்கிரமாகச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஓர் ஆத்திரம் இவைகளை யெல்லாம் காண்கிறோம். இவர், அடிக்கடி தமது சிஷ்யர்களிடம் நான் நாற்பது வரையில் இருக்க மாட்டேன் என்று சொல்வார். அதனாலேயோ என்னவோ, அந்த வயதுக்குள் தாம் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்துவிட வேண்டும் என்ற ஓர் ஆவல் இவரிடத்தில் பூரண மாகக் குடிகொண்டிருந்தது. கிழிந்துபோன சட்டையைக் கழற்றி எறிவது போல், இந்த உடலை விட்டெறிந்துவிட்டு நான் போகலாம். ஆனால் வேலை செய்து கொண்டிருப்பதை யென்னவோ நிறுத்த மாட்டேன் என்று ஒரு சமயம் இவர் கூறினார். உடலைவிட்டு உயிர் பிரிந்த பிறகு கூட சேவை செய்து கொண்டிருப்பேன் என்று உறுதியோடு சொன்ன ஒரு மகானைப் பெற்றது நம் தாய் நாடு! சேவையிலே எவ்வளவு ஆர்வம்! விவேகானந்தர், செல்வமான குடும்பத்திலே பிறந்தார்.1 சீராகவே வளர்க்கப்பட்டார். ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்தே மகாதுடுக்கு. சதா சேஷ்டை. பிடிவாதம் பிடித்து எப்படியாவது காரியத்தைச் சாதித்துக் கொள்வார். தான் நினைத்த காரியம் கைகூடவில்லையென்றால் கூவென்று உரக்கக் கத்துவார். இவரைச் சமாதானப்படுத்துவ தென்பது குடும்பத்தினருக்கு ஒரு பெரிய காரியம். மூன்றாவது வயது. குழந்தை செய்கிற விஷமமோ சகிக்க முடிய வில்லை. பார்த்தாள் தாயார். மிரட்டினாள்; அடித்தாள்; ஒன்றும் பயனில்லை. கடைசியில் ஒரு நாள், தன்னையும் மிஞ்சிப் போய், குழந்தையைப் பரபரவென்று இழுத்துக்கொண்டு போய் குழாயின் கீழ் உட்கார வைத்துக் குழாயைத் திறந்து விட்டாள். தண்ணீர் தலையில் வேகமாக விழவே, நரேந்திரன்2 சேஷ்டை அடங்கியது. சரியான பரிகாரம் கண்டுபிடித்து விட்டதாகத் தாயார் திருப்தி கொண்டாள். அது முதற்கொண்டு நரேந்திரன் எப்பொழு தாவது தொந்திரவு செய்ய ஆரம்பித்தால் உடனே குழாயின் கீழே கொண்டு போய் உட்காரவைத்து விடுவாள். புவனேசுவரி மாதா, தவங்கிடந்து பெற்றாள் இந்தக் குழந்தையை. ஆனால் ஒரு சமயம், குழந்தையின் உபத்திரவம் பொறுக்க முடியாமல் நான் ஒரு குழந்தையைக் கொடுத்தருளுமாறு சிவபிரானைப் பிரார்த்தனை செய்தேன்; ஆனால் அவர் தமது பூத கணங்களில் ஒன்றை என்னிடம் அனுப்பிவிட்டார் என்று கூறினாள். ஒரு தாய் இப்படி வாய்விட்டுச் சொல்லி யிருக்க வேண்டு மானால் அந்தக் குழந்தை எவ்வளவு சேஷ்டை செய்திருக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலா மல்லவா? தாயார், குழந்தையைச் சாந்தப்படுத்துவதற்கு, குழாயின் கீழ் உட்கார வைப்பதைத் தவிர, வேறோர் உபாயத்தையும் கையாண் டாள். இப்படி எல்லாம் நீ உபத்திரவம் பண்ணுவாயானால், ஒழுங்காக நடந்துகொள்ளா விட்டால், சிவபெருமான் உன்னைக் கைலாசத்திற்கு அழைத்துக்கொள்ள மாட்டார் என்று பயமுறுத்து வாள். உடனே சாதுவாகிவிடும் குழந்தை. ஐயோ! என்ன வாக்கு! தாயே! உனது பயமுறுத்தல் பேச்சிலே ஏன் இப்படி உன்னையறி யாமல் ஒரு மரண அழைப்பைக் கொண்டு புகுத்திவிட்டாய்? இப்பொழுது எங்கள் விவேகானந்தர் இருந்திருந்தால், அவருடைய எண்பதாவது வயதுக் கொண்டாட்டத்தை எவ்வளவு பெருமை யோடு கொண்டாடியிருப்போம்! மகான்களென்போர், சர்வ ஜீவராசிகளிடத்திலும் தயை பூண்டவர்கள். இந்தத் தயாவிதையானது அவர்களுடைய சிறு பிராயத்திலேயே ஊன்றி விடுகிறது. குழந்தை நரேந்திரனின் பாலிய சினேகிதர்கள் யாரார் தெரியுமா? ஒரு குரங்கு, ஓர் ஆடு, ஒரு மயில், இரண்டு மூன்று வெள்ளைச் சுண்டெலிகள், சில புறாக்கள் முதலியன. இவையெல்லாவற்றிற்கும் மேலாக, வீட்டிலே வளர்ந்த பசு. அந்தப் பசுவை நரேந்திரர், தம் சகோதரிகளுடன் சேர்ந்து குளிப்பாட்டுவார்; புஷ்பங்களால் அலங்கரிப்பார். அதற்கும், மற்றப் பிராணி சினேகிதர்களுக்கும் தம் கையாலேயே ஆகாரம் கொடுப்பார். இந்தப் பிராணி தயை விவேகானந்தருக்குக் கடைசி காலம் வரையில் இருந்தது. நரேந்திரருடைய துறவு மனப்பான்மையைப் பாருங்கள். விசுவநாத தத்தருடைய வீட்டுக்கு அடிக்கடி சாதுக்கள் வருவது வழக்கம். அந்தச் சாதுக்களைப் பார்த்தால் இவருக்குத் தனியான ஓர் ஆனந்தம். அவர்களுக்கு எதையும் கொடுத்துவிடுவார். இதனால் குடும்பத்தினர்பாடு தர்ம சங்கடமாகி விடும். ஒருநாள், பட்டும் சரிகையும் கலந்த ஒரு புதிய துண்டை இவர் இடுப்பிலே கட்டி விட்டார்கள். அதைக் கட்டிக்கொண்ட சிறிது நேரத்திற்குள், தெருவாயிலில் நாராயண ஹரி, நாராயண ஹரி என்ற சப்தம் கேட்டது. நரேந்திரர் உடனே தெருப்பக்கம் ஓடினார். ஒரு சந்நியாசி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்தச் சந்நியாசி, எனக்குக் கட்டிக்கொள்ள ஒரு துணி கொடுப்பாயா? என்று கேட்டார். நரேந்திரன் அப்பொழுது ஒரு குழந்தையாக இருக்கவில்லை; கொடையாளியாக விளங்கினார். உடனே தம் இடுப்பிலிருந்த புதுத்துணியை அவிழ்த்து அவர் கையிலே கொடுத்து விட்டார்! ஆச்சரிய மடைந்த அந்தச் சந்நியாசி, அதை, தன் தலைப்பாகையாகச் சுற்றிக்கொண்டு போய்விட்டார்! நரேந்திரருக்கு, சாதுவென்றும், சந்நியாசியென்றும் சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் அவர்களிடத்திலே ஒரு விசேஷ பக்தி, சிறு வயதிலிருந்தே ஏற்பட்டிருந்தது. விசுவநாத தத்தர், தம் வீட்டுக்குத் துறவியாக யார் வந்தாலும் அவரே நேரில் உபசரிப்பார். இதனை, குழந்தை நரேந்திரன் கவனித்துக் கொண்டிருப்பார். பொதுவாகவே, கல்கத்தாவில் தத்தர் குடும்பத்து வீடு என்று சொன்னால் அது துறவிகளின் அடைக்கல தானமாக இருந்தது. இந்த வாசனை, பாலிய நரேந்திரன் மீது வீசாம லிருக்குமா? எல்லாப் பிள்ளைகளையும் போல் நரேந்திரன், பள்ளிக்கூடத் திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் அங்கே வகுப்பில் ஒரு கண மாவது அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டுமே, கிடையவே கிடையாது; அப்படியே ஒரு சிறிது நேரமாவது நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டுமே, அதுவும் இவரால் முடியவில்லை. எப்பொழுதும் ஒருவித அமைதியற்ற தன்மை, ஒரு துடிதுடிப்பு இவரிடம் இருந்தது. ஆசிரியர்களிடத்தில் பாடஞ் சொல்லி கொள்கிற விஷயத்தில் தானா கட்டும், ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால் பத்தைக் கிரகித்துக் கொண்டு விடுவார். உபாத்தியாயர் ஒருமுறை உரக்கப் படித்தால் போதும். அதை உடனே திருப்பி ஒப்புவிப்பார். ஞாபக சக்தி அவ்வளவு அதிகம். ஏழாவது வயதில் ராமாயணம் பாரதம் முதலிய காவியங்களிலிருந்து அநேக சுலோகங்களை எடுத்துச் சொல்லும் சக்தி இவரிடம் இருந்தது. இவை யெல்லாம், இவருடைய பிற்கால வாழ்வின் சூசகங்களாயிருந்தன. இனி, காந்தியின் பாலிய பருவத்திற்குள் பிரவேசித்துச் சிறிது பார்ப்போம். விவேகானந்தர், செல்வமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்ததைப் போல் இவர் - மோகனதா கரம்சந்த் காந்தி - செல்வாக்குள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தார்.1 இவர் பாட்டனார் சத்திய சீலர். போர்பந்தர் சமதானத்தில் மந்திரியாயிருந்தார். பின்னர், சில பிணக்குகள் காரணமாக அங்கிருந்து விலகி வந்து ஜுனகாட் நவாப்பினிடம் அடைக்கலம் புகுந்தார். நவாப்புக்கு இடது கையால் சலாம் செய்தார். அவமரியாதை செய்ததாக அங்குள்ளவர்கள் முணுமுணுத்தார்கள். அவமரியாதை ஒன்று மில்லை. வலது கையை போர்பந்தர் மன்னருக்கு ஏற்கெனவே கொடுத்து விட்டிருக்கிற படியால் இடது கையால் சலாம் செய்தேன் என்று அந்த உத்தமர் கூறினார். அவர் பெயர் உத்தம சந்த் காந்தி. அவருடைய மகன்தான் நமது காந்தியின் தகப்பனார். செல்வத்தைக் குவித்து வைக்க வேண்டுமென்ற ஆசை யில்லாதவர். அதைப்போல அதிகமான படிப்பும் இல்லாதவர். ஆனால் அனுபவம் நிறைந்தவர். அப்படியே அற நெறியில் வாழ வேண்டு மென்ற ஆசையுடையவர். மதத்தைப் பற்றிய நுணுக்கமான ஆராய்ச்சி களை அறியமாட்டார். ஆனால் மதப் பற்று நிரம்பியவர். இந்த மாதிரியான பரம்பரைச் செல்வத்துடன் பிறந்த மோகனதா காந்தி, சிறுவயதில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப் பட்டார். ஆனால் படிப்பிலே அவ்வளவு சூடிகையாக இல்லை. கொஞ்சம் நிதானமென்றே சொல்ல வேண்டும். பெருக்கல் வாய்ப்பாட்டை மனப் பாடஞ் செய்வதே இவருக்குப் பெரிய சிரமமாயிருந்தது. தவிர ஞாபக சக்தியும் குறைவு. வயதாகி மேல் வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்த காலத் தில் கூட, படிப்பிலோ, விளையாட்டிலோ எவ்வித சுறு சுறுப்பும் காட்டவில்லை. கூடப் படிக்கிற மாணாக்கர்களோடு கூடிப் பழக மாட்டார். நிரம்ப சங்கோஜம், புதகமுண்டு, தானுண்டு என்ற அளவோடுதான் இருப்பார். சிறு பிராயத்திலிருந்தே பொய் சொல்லி அறிய மாட்டார். ஒரு சமயம், பள்ளிக்கூடத்துக்கு இன்பெக்டர் வந்திருந்தார். பிள்ளைகளின் அறிவையும், ஆசிரியர்களின் போதனா சக்தியையும் ஒரே சமயத்தில் சோதிக்க வேண்டியது அவருடைய கடமை யல்லவா? எனவே, சில வார்த்தைகளைச் சொல்லி அவற்றைச் சரியானபடி எழுதுமாறு பிள்ளைகளுக்குக் கூறினார். அதில் ஒரு வார்த்தையை மோகனதா தவறாக எழுதினார். இதைப் பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த வகுப்பு ஆசிரியர், அடுத்த பையன் சரியாக எழுதியிருக்கிறான் பார்; அதைப் பார்த்துச் சரியாக எழுது என்று இவரிடம் சைகையினால் கூறினார். அப்படிச் செய்ய இவர் மனம் ஒப்பவில்லை அந்தச் சிறு வயதிலேயே, பிள்ளைகள், காபி அடிக்காமல் பார்த்துக் கொள்வ தற்காக ஆசிரியர் இருக்கிறாரே தவிர, காபி செய்யுமாறு தூண்டு வதற்காக அல்லவே என்று இவருடைய மனச்சாட்சி இவரைக் கேட்டுக் கொண்டே இருந்தது. மோகனதாஸின் இளமையில் இரண்டு நாடகக் காட்சி களைப் பார்த்தார். இவை, இவருடைய வாழ்க்கை நாடகத்தின் பீடிகை யென்று சொல்லலாம். ஒன்று, சிரவணன் என்ற ஒரு சிறுவனுடைய கதை. இவன், வயதான, கண்ணில்லாத தனது தாய் தந்தையரைக் காவடியில் தூக்கிக் கொண்டு காசியாத்திரை போகி றான். வழியில், எதிர்பாராத விதமாக மரணத்தை யடைகிறான். இதைக் கண்டு அந்தப் பெற்றோர்கள் புலம்பிப் புலம்பி புத்திர சோகத்தினால் இறந்து போகிறார்கள். மற்றொன்று, அரிச்சந்திர நாடகம். இவ்விரண்டும் மோகனதாஸின் மனதில் நன்றாக பதிந்து விட்டன. ஒவ்வொருவரும் ஏன் சிரவணனைப் போல் பெரியோர் களிடம் பக்தி செலுத்தக் கூடாது? mÇ¢rªâuid¥ nghš r¤âa rªjdhf ïU¡f¡ TlhJ? என்று அடிக்கடி தம்மையே கேட்டுக் கொள்வார். அரிச்சந்திரனைப் போல், சத்தியத்தைக் காப்பாற்றும் பொருட்டு எல்லாவித கஷ்டங்களையும் அனுபவிக்கத் தயாரா யிருக்க வேண்டும் என்று அப்பொழுதே இவருடைய களங்கமற்ற பசிய உள்ளம் சங்கற்பித்துக் கொண்டது போலும்! காந்தி, எப்பொழுதுமே வெறும் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வரல்லர்; சீலத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுக் கிறவர். என்னுடைய அறிவுக்கு நான் அதிகமாக மதிப்புக் கொடுத்த தில்லை. எனக்கு, பரிசோ, உபகாரச் சம்பளமோ கிடைத்தால் நான் ஆச்சரியமே அடைவேன். ஆனால் என்னுடைய சீலத்தை மட்டும் நான் மிகுந்த ஜாக்கிரதையுடன் காப்பாற்றி வந்தேன். என்னிடத்தில் ஏதேனும் ஒரு சிறிது களங்கம் இருப்பதாகத் தெரிந்தால்கூட நான் அழுது விடுவேன். இது காந்தியின் சுய வாக்கு. விவேகானந்தரும் காந்தியும், தங்கள் தாய்மார்களைப் பொறுத்த மட்டில் மகா பாக்கியசாலிகள். தன் மகனைச் சான் றோன் எனக் கேட்க இரு தாய்மார்களும் ஆவல் கொண்டார்கள். அதன்படியே தங்கள் புத்திரர் களை வளர்த்து வந்தார்கள். சிவாஜி மகாராஜனுக்கு எப்படி ஜீஜாபாய் தாயாக வாய்த்தாளோ அப்படியே விவேகானந்தருக்கு புவனேசுவரியும், காந்திக்கு புத்ரி பாயும் தாய்மார்களாக வாய்த்தார்கள். தாயின் மடியே இவர் களுக்குப் பாடசாலை. அவர்கள் சொல்லிக் கொடுத்த ராமாயண பாரதக் கதைகளே மந்திரோபதேசம். இவ்விருவரும், தங்கள் பிற்கால வாழ்க்கையில், பெண்மையிலே தெய்வத் தன்மையைக் கண்டார்கள். இதற்குக் காரணம் இவர்களுடைய தாய்மார்களின் நல்லுபதேசந்தான். புவனேசுவரி மாதா, தமது மகனுக்கு உபதேசம் செய்வாள்: மகனே! மரணம் வந்தெய்தினாலும் சரி, உண்மையாக நடந்துகொள். ஒழுக்கமுடையவனாயிரு. எப்பொழுதும் பெருந் தன்மையோடு நடந்துகொள். மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதித்து நட. பிறருடைய உரிமைகளில் தலையிடாதே. எல்லோ ரிடத்திலும் கருணையோடு நடந்து கொள். ஆனால் உறுதி யோடிரு. சந்தர்ப்பம் என்று சொல்லிக் கொண்டு உறுதியினின்று பிறழாதே, அசைந்து; கொடாதே. பிற்காலத்தில் இருவரும் தியாக மூர்த்திகளாக விளங்கியதற்கு இவர்களுடைய தாய்மார்களின் தூய வாழ்க்கையே காரணம். இருவரும் தம் தம் தாய்மாரிடத்தில் அத்தியந்த விசுவாசம் வைத் திருந்தார்கள். எவனொருவன் பெற்ற தாயை பக்தி சிரத்தையோடு போற்றாமலிருக் கிறானோ அவன் பெரிய மனிதனாகான் என்பது விவேகானந்தரின் வாக்கு. தங்கள் தாய்மார்களுடைய மனதை எந்த விதத்திலும் புண்படுத்தக் கூடாதென்ற ஒரு நோக்கம் இருவருக்கும் இருந்தது. காந்தி, லண்டனுக்கு பாரிடராகப் பயிற்சி பெறச் செல்வதற்கு முன்னர், புலாலுண்ணேன், மதுபானம் செய்யேன், அந்நிய திரீ களைக் கண்ணெடுத்துப் பாரேன் என்று தாயாரிடம் வாக்குக் கொடுத்து விட்டுச் சென்றார். பாரிடர் பரீட்சையில் தேறி விட்டுத் திரும்பி வந்தார். பம்பாய் துறைமுகம் வந்திறங்கியவுடனே, விரை வில் தாயாரைக் காண வேண்டுமென்ற ஆவல் இவருக்கு அதிகமாக இருந்தது, ஏன் தெரியுமா? கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டேன் என்று தாயாரிடம் பெருமையோடு சொல்வதற்காக. ஆனால் புத்திரிபாய், இவர் வருகைக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்டாள். அந்தோ! காந்தியின் ஆவல் வெள்ளம், துக்கக் கண்ணீராக வடிந்தது. புவனேசுவரி மாதாவும் புத்திரிபாயும் தாங்கள் நல்ல பிள்ளை களைப் பெற்றதற்காக மகிழ்ச்சியடையலாம்; பெருமை கொள்ள லாம். மகிழ்ச்சியடையவும் பெருமை கொள்ளவும் அவர்களுக்குப் பூரண உரிமை யுண்டு; தகுதியுண்டு. ஆனால் அவர்கள், உண்மை யில், பாரத மாதாவின் தவத்தினையே இரண்டு திருவுருவங்களாகப் பெற்றெடுத்தார்கள் என்று சொல்ல வேண்டும். அவ்விரு அன்னைமாரும் வாழ்க! விவேகானந்தர், இளமையிலிருந்தே உடல் உறுதியுடைய வராக இருந்தார். உடற் பயிற்சிப் போட்டிகளில் அநேக பரிசுகளும் பெற்றிருக் கிறார். தமது வீட்டிலேயே உடற் பயிற்சிசாலை யொன்றை அமைத்து, அதில் தமது தோழர்கள் எல்லோருக்கும் அநேக விளையாட்டுகளைக் கற்றுக் கொடுத்தார். சிலம்பம் பயிலுதல், படகோட்டுதல், மல் யுத்தம் செய்தல் முதலிய எல்லா வித்தைகளும் இவருக்கு நன்றாகத் தெரிந்தி ருந்தன. காந்தி, இளமையில் இதற்கு நேர் மாறாகவே நடந்து கொண்டார். பள்ளிக்கூடத்தில் படித்த போது, உடற் பயிற்சி வகுப்புக்குப் போவது இவருக்கு வேம்பாகவே இருந்தது. ஒரு சமயம் இந்த வகுப்புக்குப் போகாமலிருந்ததற்காக ஓர் அணாவோ இரண்டணாவோ அபராதம் கூடச் செலுத்தியிருக்கிறார்! இங்ஙனம் இருவரும் இளமையில் உடலோம்புகின்ற முறையில் மாறுபட்டவர்களாக நடந்து வந்தபோதிலும், பிற்காலத்தில், இருவரும், எல்லாவித கஷ்டங்களையும் சகித்துக் கொள்ளக் கூடிய உடல் உரம் பெற்றவர்களாகவே இருந்தார்கள். ஓயாமல் உழைப்பதற்கும், அடிக்கடி சுற்றுப் பிரயாணம் செய்வதற்கும் இருவருடைய தேகமும் இடங் கொடுத்தன. காந்தி, லண்டனுக்கு வட்டமேஜை மகா நாட்டை முன்னிட்டுச் சென்ற போது, குளிரிலும் பனியிலும்கூட, தமது இயற்கையான உடை யுடன்தான் இருந்தாரே தவிர, வேறு அதிகமான உடைகளை உபயோகிக்க வில்லை. இதற்கு இவருடைய மனோசக்தி காரணமென்று சிலர் கூறலாம். இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் எவனொருவன் புலனடக்கம் பெற்றிருக்கிறானோ, தனது அன்றாட வேலைகளைச் செய்வதில் ஒருவித ஒழுங்கை அனுசரிக்கிறானோ, உணவு, உடை, தூக்கம் முதலிய விஷயங்களில் மிதமாயிருக்கிறானோ அவனை நோய்கள் சுலபமாக அண்டுவதில்லை. அப்படி அண்டினாலும் அவைகளினால் அவன் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. அவன், உழைப்பிலே சோர்வு காணமாட்டான். அவன் அறிவிலே ஒரு தெளிவு இருக்கும். விவேகானந்தரும், காந்தியும் தங்களுடைய வாழ்க்கையில் ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடித்து வந்தார்களாதலி னாலேயே அவர்களால் அதிகமான வேலையைச் செய்ய அவர் களுடைய உடல் இடங்கொடுத்தது. சுருக்கமாகச் சொல்ல வேண்டு மானால், இருவரும், தங்கள் உடலைத் தங்களுக்கு அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருந் தார்களே தவிர, உடலுக்குத் தாங்கள் அடிமையாயிருக்கவில்லை. விவேகானந்தர், பரம்பரையான வக்கீல் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் வக்கீல் தொழிலை இவர் அறவே வெறுத்து வந்தார். தம் நண்பரொருவருக்குப் பின்வருமாறு புத்திமதி கூறுகிறார்: எனது தகப்பனார் ஒரு வக்கீல்தான். ஆனால் என் அன்புக்குரியவர் யாரும் வக்கீலாவதை நான் விரும்பவில்லை. எனது குருநாதர் வக்கீல் தொழிலுக்கு விரோத மாயிருந்தார். எந்தக் குடும்பத்தில் அதிகமான வக்கீல்கள் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் நிச்சயம் துக்கத்தை யடையும் என்பது என் நம்பிக்கை. நமது தேசத்தில் இப்பொழுது வக்கீல்கள் நிரம்பியிருக்கிறார்கள். காந்தி, மந்திரி பரம்பரையிலே பிறந்தவர். இவர் பாட்டனாரும் தகப்பனாரும் ராஜபக்தர்களாக இருந்து காலங் கழித்து விட்டார்கள். ஆனால் இவர், தம்மை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதிலே திருப்தியடைகிறார். இவருடைய முன்னோர்கள் அரசர்களுக்கு மந்திரிகளா யிருந்தார்கள். இவரோ, தொட்டிலிலே உதைத்து விளையாடும் குழந்தை முதல், முக்காலால் நடந்து செல்லும் முதியோர் வரை எல்லோருக்கும், அவரவர்களுடைய நிலைமையிலிருந்து, வரும் பொருளுரைக்கும் மந்திரியாயிருக்கிறார். எல்லோரும் எல்லா விஷயங்களைப் பற்றியும் இவரிடம் யோசனை கேட்கிறார்கள். உலகத்து ராஜ தந்திரிகள், அரசாங்கத்து மந்திரிகள் ஆகிய எல்லோரும், காந்தி என்ன சொல்கிறாரென்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இவருடைய முன்னோர்கள், ஒரு சிறிய பிரதேசத்திற்கு மட்டும் மந்திரிகளா யிருந்தார்கள். இவரோ உலகத்துக்கெல்லாம் மந்திரியாயிருக்கிறார். விவேகானந்தர் ஆளப்பிறந்தார். காந்தி தொண்டு செய்யப் பிறந்தார். இருவருடைய பாலிய வாழ்க்கையிலும் இந்த அறிகுறிகள் காணப்பட்டன. விவேகானந்தருடைய முக்கியமான சிறு பிள்ளை விளையாட்டுகளிலே ஒன்று என்னவென்றால், தமது வீட்டு முற்றத்தில், தம்மோடு விளையாட வரும் எல்லாப் பிள்ளைகளை யும் ஒன்று கூட்டி வைத்துக் கொள்வார். ஒரு தர்பார் நடக்கும். அதில் விவேகானந்தர் அரசன்; ஓர் உயர்ந்த தானத்தில் கொலு வீற்றிருப்பார். அவருக்கு எதிரே இரு பக்கங்களிலும் ஆதானிகர்கள் இருப்பார்கள். பிரஜைகள் வேறே. யாராவது ஒரு பையன் குற்றவாளியாக விசாரணைக்கு கொண்டு வரப்படுவான். அவனை அரசன் விசாரிப்பார்; தண்டிப்பார். இந்த மாதிரியான விளை யாட்டுகளிலேதான் விவேகானந்தருக்கு அதிகமான விருப்பம். பள்ளிக்கூட மைதானத்திலே யாகட்டும், வேறு எங்கேயாகட்டும், விவேகானந்தர்தான், மற்றப் பிள்ளைகளுக்குத் தலைமை வகித்து அவர்களை நடத்திச் செல்வாரே தவிர, மற்றவர்களைப் பின்பற்றி இவர் செல்லமாட்டார். வீட்டிலே கூட, பெற்றோர்களும் மற்ற உறவினர்களும், இவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டே நடப்பார்கள். இவர் பேசுவதும் அதிகார தோரணையிலேயே இருக்கும். காந்தியோ, சிறு பிராயத்திலிருந்தே, மற்றவர்களுக்கு எந்த விதத்தில் உதவி செய்யலாம், பெரியோர் மனம் புண்ணாகாமல் எப்படி எப்படி நடந்து கொள்ளலாம் என்ற கருத்துடையவராக இருந்திருக்கிறார். பள்ளிக் கூடத்தில் படிக்கிற போது, உடற்பயிற்சி வகுப்புக்குக்கூட இவர் செல்ல விரும்பவில்லை. அங்குச் சென்று கழிக்கிற நேரத்தை, தகப்பனாருக்குப் பணிவிடை செய்வதில் கழிக்கலாமே யென்று கருதுவார். அப்படியே பணிவிடையும் செய்வார். உடற் பயிற்சி விஷயத்தில் எனக்கு ஏற்பட்டிருந்த அருவருப்புக்குக் காரணம், எனது தகப்பனாருக்குத் தாதி போல் இருந்து சிசுருஷை செய்ய வேண்டுமென்ற அதிகமான ஆவல்தான். பள்ளிக்கூடம் விட்டவுடனே, வேகமாக நேரே வீட்டுக்கு வந்து அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்குவேன் என்று இவர் தமது சுய சரித்திரத்தில் கூறுகிறார். 3. இருவரும் மகான்கள் தர்மம் குன்றி அதர்மம் ஓங்கி நிற்கின்ற காலத்தில், அந்த அதர்மத்தை வீழ்த்தி தருமத்தை தாபிக்கும் பொருட்டு கடவுள் அவதரிக்கிறார் என்று கீதையைக் குறிப்பிட்டுக் காட்டிப் பெரி யோர்கள் நமக்கு உபதேசிக் கிறார்கள். இதன் தாத்பரியம் என்ன? தர்மம் குன்றி விட்டது, அதர்மம் ஓங்கிவிட்டது என்று சொன்னால் அதற்கு அளவுகோல் என்ன? இதனைப் பற்றி நம்மில் அநேகர் சிந்திப்பதே இல்லை. இந்தப் பிரச்னை, நமது அன்றாட வாழ்க்கை யோடு ஒட்டியதன்று, நமது வாழ்க்கைக்குப் புறம் பானது என்று கருதி, இதனை நாம் புறக்கணித்து விடுகிறோம். இப்படிப் புறக் கணித்து வந்ததன் பயன்தான் இப்பொழுது நாமிருக்கும் நிலை: அதுதான் அடிமை வாழ்வு. மனிதன் பிறக்கிறபோது சுதந்திரமாகவே பிறக்கிறான் என்று பிரெஞ்சு அறிஞனாகிய ரூஸோ என்பவன் இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னர்தான் சொன்னான். இது, நமது முன் னோர்கள் கண்ட உண்மையின் ஒரு மெல்லிய எதிரொலிதான். மனிதனுடைய ஆத்மா பந்தமற்றது, அப்படி இருப்பதுதான் அத னுடைய இயற்கை நிலையென்று பாரத நாட்டு முனிவர்கள் நமக்கு எத்தனையோ வகைகளில் வலியுறுத்திச் சொல்லிவிட்டுப் போயிருக் கிறார்கள். மனிதன், தனது அறியாமை காரணமாக, இந்த இயற்கை நிலையிலிருந்து இறங்கி விடுவானாகில் அவனை அநேக பந்தங்கள் வந்து சூழ்ந்து கொள்கின்றன. இயற்கைக்கு எஜமானனா யிருப்பது போய், அவன் அதற்கு அடிமையாகி விடுகிறான். இந்த அடிமை நிலையிலே அவனை அநேக துன்பங்கள், துயரங்கள், பிணிகள் முதலிய எல்லாம் வந்து சூழ்ந்து கொள்கின்றன. இவைகளி னின்று அவனை விடுதலை செய்ய யாரோ ஒரு மகான் தோன்று கிறான். அந்த மகானிடத்தில் அசாதாரணமான திறமையும் சக்தியும் இருக்கின்றன. அவன் எந்தவித பந்தங்களினாலும் பிணிக்கப்படாமலிருக் கிறான். அப்படி பிணிக்கப்படாமலிருப்பதனால் தான், அவனால் மற்றவர்களைக் கைதூக்கி விட முடிகிறது. தங்களைவிட வலிய னாகவும் முன் யோசனையுடைய வனாகவும் அந்த மகான் இருப் பதைப் பார்க்கிற ஜனங்கள், அவனிடத்தில் ஒரு தெய்வத்தன்மை குடி கொண்டிருக்கிறதென்று நம்பி, அவனை ஒரு தெய்வாமிசம் என்றும், கடவுளின் அவதாரமென்றும் கொண்டாடு கிறார்கள். ஏனென்றால், எந்தச் சக்திகள், கடவுளிடத்தில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார் களோ அந்தச் சக்திகளில் ஒரு சிலவேனும் தங்களிடத்தில் இல்லாம லிருப்பதையும், அந்தச் சில சக்திகள் மேற்படி மகானிடத்தில் இருப் பதையும் அவர்கள் பிரத்தியட்ச மாகப் பார்க்கிறார்கள். இதனா லேயே அவனை அவதார புருஷ னென்று கொண்டாடுகிறார்கள். கடவுளிடத்திலே சில சக்திகள் இருப்பதாக மனிதன் நினைக் கிறானே, அந்தச் சக்திகள் யாவும் அவனிடத்திலும், பிரதியொரு மனிதனிடத்திலும் இருக்கின்றன. இதை அவன் உணர்வதுதான் இல்லை. தான், பரம்பொருளென்னும் செந்தழலிலிருந்து கிளம்பின ஒரு பொறி என்பதை அறவே மறந்து விடுகிறான். இதற்குக் காரணம், அவன் தனது இயற்கை நிலையை, உணராததுதான்; அந்த நிலையி லிருந்து இழிந்துபட்டதுதான். இயற்கை நிலையை அதாவது பந்தமற்ற வாழ்வை, உணர்கிறவன்யாரோ, உணர்த்தவல்லவன் யாரோ, அவன்தான் மகான்; கடவுளின் அவதார புருஷன். மனித னுடைய அறிவும் இதயமும், பொருளாதார ஆதிக்கத்திற்கோ, அரசியல் ஆதிக்கத்திற்கோ, சமுதாய ஆதிக்கத்திற்கோ, மத ஆதிக்கத் திற்கோ ஏதோ ஒருவித ஆதிக்கத் திற்குட்பட்டு அடிமையாகிவிடுமே யானால் அதுதான் இருள் படர்ந்த யுகம். அதாவது எங்கே அடிமைத்தனம் நிலவியிருக்கிறதோ அங்கே அறியாமை குடி கொண்டு விடுகிறது. இந்த அஞ்ஞான இருளைப் போக்கவரும் ஞான சூரியனே மகான். அடிமைத்தனமும் அறியாமையும் கலந்திருக்கிற கலப்புக்குத் தான் அதர்மம் என்று பெயர். அப்படியானால் தர்மம் என்பது என்ன? இதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசிய மல்லவா? தர்மம் என்பதற்கு அறிஞர் ராதாகிருஷ்ணன் பின்வருமாறு ஓர் அழகான வியாக்கியானம் செய்கிறார்: தனிப்பட்ட ஒரு வியக்தியாகவும், சமுதாய அங்கத்தினனாகவும் பிரதியொரு மனிதனையும் பண்படுத்திக் கொடுக்கிற லட்சியங்கள், சக்திகள், நோக்கங்கள், தாபனங்கள் முதலிய யாவற்றிற்கும் பிரதிநிதியாக இருப்பது எதுவோ, அது தான் தர்மம். இதனுடைய சாரம் என்னவென்றால், மனிதனுடைய அற வாழ்க்கையையும் அரசியல் வாழ்க்கையையும் ஒழுங்குபடுத்திக் கொடுப்பது எதுவோ அதுதான் தர்மம். இந்த இரண்டுக்கும், அதாவது அற வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைக்கும், என்று முரண்பாடு ஏற்படுகிறதோ அன்றே, தர்மம் குலைந்து அதர்மம் மேலோங்கி விட்டதென்பது அர்த்தம். முரண் பட்ட இந்த நிலையை மாற்றி ஒழுங்குபடுத்தவே அவ்வப்பொழுது மகான்கள் தோன்றுகிறார்கள். காந்தியும் விவேகானந்தரும் இந்த மகான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இந்த மகான்களின் பரம்பரையானது இந்திய நாகரிகத்தின் அடிப்படையான அமிசத்தை மட்டும் எப்பொழுதும் விடாமல் காப்பாற்றி வந்திருக்கிறது. அந்த அடிப்படைதான் என்ன? இந்தியாவில் எப்பொழுதும் வாழ்க்கையை லௌகிக வாழ்க்கை யென்றும் பாரமார்த்திக வாழ்க்கையென்றும் இரண்டு கூறாக்கி யாரும் பேசியதே கிடையாது. வாழ்க்கையை ஒரு தொகுப்பாகவே நமது முன்னோர்கள் பார்த்தார்கள். வாழ்க்கை, பூரணத்துவம் அடையவேண்டு மானால் லௌகிகமும் தேவை, பாரமார்த்திகமும் தேவையென்றுதான் சொன்னார்களே தவிர இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடுடையவை என்று அவர்கள் சொல்லவில்லை. வாழ்க்கையை மதத்தோடு பிணைத்தே அவர்கள் பேசியிருக்கிறார்கள். அறிஞர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்: இந்தியாவின் பாரமார்த்திக ஞானம், எங்கோ தனியாகவுள்ள குகைகளில் வாசஞ்செய்யவில்லை; மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது. கீதையும் உப நிஷதங்களும், பொது ஜனங் களுடைய நம்பிக்கையோடு ஒட்டினாற் போலவே இருக்கின்றன. அவை, தேசத்தின் சிறந்த இலக்கியங்களாக இருப்பதோடு, ஜனங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் கருவி களாகவும் இருக்கின்றன. உயர்ந்த உண்மைகள் சாதாரண ஜனங் களுக்குச் சுலபமாக விளங்கவேண்டு மென்பதற்காக அவைகளைப் புராண இதிகாசக் கதைகளினால் அலங்கரித்து அந்த உயர்ந்த உண்மைகளைப் புகட்டியிருக்கிற விஷயத்தில் இந்தியர்களே பெரிய வெற்றி யடைந்திருக்கிறார்கள். பிரதியொரு மனிதனும் இரண்டு கடமைகளுடையவனாய் இருக்கிறான். ஒன்று தனக்கு அல்லது தனது குடும்பத்திற்கு; மற்றொன்று தனது சமுதாயத்திற்கு. ஒன்றைப் புறக்கணித்து விட்டு மற்றொன்றை அவன் செய்ய முடியாது; செய்யவும் கூடாது. முன்னதை அற வாழ்க்கை யென்றும் பின்னதை அரசியல் வாழ்க்கை யென்றும் சொல்கிறோம். இந்த இரண்டு விதமான வாழ்க்கை களையும் அவன் ஒன்றுபடுத்தி நடத்திச் சென்றால்தான் அவன் பிரயோஜனமான வாழ்க்கையை நடத்தியவனா கிறான். குழந்தைக்குத் தகப்பனாகவும், குடும்பத்திற்கு எஜமானனாகவும், சமுதாயத்திற்கு நல்ல பிரஜையாகவும் பிரதியொரு மனிதனும் இருக்க வேண்டு மென்பதே நமது முன்னோர்களின் உபதேச சாரம். இதனையே காந்தியும் விவேகானந்தரும் புதிய பாஷைகளில் வலியுறுத்தியிருக் கிறார்கள். காந்தி, அரசியல் என்று சொல்லிக்கொண்டு ஆன்ம உபதேசம் செய்கிறார். விவேகானந்தர், ஆன்மா என்று சொல்லிக்கொண்டு அரசியலைப் போதித்தார். ஆனால் இருவருடைய நோக்கமும், இந்தியாவானது ஆன்மார்த்த விஷயத்திலும் அரசியல் விஷயத்தி லும் பூரண சுதந்திரம் பெற்றிருக்கவேண்டுமென்பதுதான். காந்தி, பலமுறை, தாம் அவசியத்தை முன்னிட்டே அரசியலில் பிரவேசிக்க வேண்டியிருந்ததென்றும், ஆனால் உண்மையில் அது மெய்ப் பொருளைக்காணும் முயற்சிகளிலே ஒன்றென்றும் கூறியிருக்கிறார். அறிஞர் ராதாகிருஷ்ணன், இந்தியா ஏன் தற்போது அரசியலில் தீவிர மாக ஈடுபட்டிருக்கிறதென்பதன் காரணத்தைப் பின்வரும் இரண்டு வாக்கியங்களினால் அழகுபடத் தெரிவித்திருக்கிறார்: ஆத்மாவைக் காத்துக் கொள்ளவேண்டு மென்ற ஆவலின் பகிரங்க ஓசை தான், சுயராஜ்யம் என்ற முழக்கம். எனவே, அரசியல் அடிமைத்தனத்தி னால் ஆன்ம வளர்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டு விடுமென்பதற் காகவே காந்தி, அந்த அடிமைத்தனத்திலிருந்து மீளும் முயற்சியிலே ஈடுபட்டுடிருக் கிறார். விவேகானந்தர் ஓர் அரசியல்வாதியல்ல. தாம் அரசியல் வாதியென்று சொல்லப்பட்டதையும் அவர் கண்டித்து வந்தார். ஆனால் அரசியல் பிரயோஜனம் எதுவோ அதற்காகவே அவர் பாடுபட்டு வந்தார். அரசியலின் பிரயோஜனம் என்ன? எல்லா ஜனங்களும் இன்ப வாழ்வு நடத்த வேண்டுமென்பது, பிரதியொரு மனிதனும், தனது அறிவுக்கும் திறமைக்கும் இயன்றவாறு வளர்ச்சி பெறுவதற்கு என்னென்ன சாதனங்கள் வேண்டுமோ அந்தச் சாதனங்களை யெல்லாம் தேடிக் கொடுப்பதுதான் அரசியலின் நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுகிற அளவுக்குத்தான் பிரதியொரு மனித னுடைய ஆன்ம வளர்ச்சியும் இருக்கிறது. பட்டினி கிடக்கும் வயிற்றில் ஞானத்தை, அஃது எவ்வளவு உயர்ந்த பண்டமாயிருந் தாலும், கொண்டு திணிக்க முடியுமா? காலியா யுள்ள வயிற்றுக்கு மதம் இல்லை என்றார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். இதனாலேயே விவேகானந்தர், பாமர ஜனங்களின் வாழ்க்கையில் படர்ந்து கிடக்கும் வறுமைப் பிணியையும் அறியாமை இருளையும் போக்க வேண்டுமென்று பல இடங்களிலும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார். பாமர மக்களென்று அழைக்கப்படுகிற சாதாரண ஜனங் களை நாம் புறக்ணித்து விட்டோம். இது நமது தேசமே சேர்ந்து செய்த பெரும் பாவம். நாம் இப்பொழுது வீழ்ந்துபட்டிருப்பதற்கு இதுதான் காரணம். நமது சகோதரர்களுக்கு நல்ல கல்வி கொடுத்து, நல்ல உடை வழங்கி, நன்றாகக் கவனிக்கப் படாதவரையில், நாம் அரசியலைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அதனால் எவ்வித பயனும் ஏற்படாது. நாம் பெறும் கல்விக்கு அவர்கள் பணம் கொடுக்கிறார்கள்; நமது கோயில்களை அவர்கள் கட்டுகிறார்கள்; இவைகளுக்குப் பிரதியாக நம்மிடமிருந்து உதை பெறுகிறார்கள். அனுபவ ரீதியாகப் பார்க்கப் போனால் அவர்கள் நம்முடைய அடிமைகளாகவே இருக்கிறார்கள். இந்தியாவைப் புனருத்தாரணம் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கமானால், முதலில் நமது பாமர சகோதரர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும். இது விவேகானந்தர் வாக்கு. அறத்தை அடிப்படையாகக் கொள்ளாத அரசியல் தேவை யில்லை யென்கிறார் காந்தி. அரசியல் இல்லாவிட்டால் அற வாழ்வு சோபிக்காது என்கிறார் விவேகானந்தர். இரண்டும் ஒன்றுதான். இரண்டு பேருடைய உபதேசங்களிலும், அறத்தையும் அரசியலை யும், கடவுளையும் மனிதனையும், தூல உடலையும் சூட்சும ஆன்மாவையும் ஒன்று படுத்திக் காட்டி யிருப்பதையே நாம் நன்றாகப் பார்க்கிறோம். இந்தியாவில் நெடுங்காலமாக உபதேசிக்கப் பட்டுவந்ததை அனுசரித்தே இவர்கள் இம்மாதிரி உபதேசிக்கி றார்கள். காந்தியும் விவேகானந்தரும் ஹிந்து மதத்தின் உண்மையான பிரதி நிதிகள். அப்படித் தங்களை அழைத்துக் கொள்வதில் இவர்கள் பெருமை கொள்கிறார்கள். ஆனால் ஹிந்து மதத்தின்மேலே படிந்து மூடிக்கொண்டிருக்கும் காலங் கடந்த தூசுகள், குப்பைகள் முதலியவைகளை இவர்கள் நிர்த் தாட்சண்யமாக அப்புறப்படுத்தி யிருக்கிறார்கள். இதனால், ஹிந்து மதத்தைச் சேர்ந்த அநேகருடைய கோபதாபங்களுக்கும் ஆளாகியிருக் கிறார்கள். இன்றைய ஹிந்து ஜாதி எப்படியிருக்கிறது? இதை அரவிந்தர் வாக்கால் எடுத்துச் சொல்ல விரும்புகிறோம்: உபநிஷத காலத் திலோ அல்லது பௌத்த காலத்திலோ அல்லது இதிகாச காலத்திலோ பிறந்து வாழ்ந்த ஓர் இந்தியன், தற்கால இந்தியாவிற்கு வந்து பார்ப்பானாயின், அவன் தன்னுடைய ஜாதி, புராதனத்தின் உருவத்தையும் மேல் மூடியையும், நைந்துபோன கந்தல்களையும் விடாமல் பற்றிக்கொண்டிருப்பதையும், அந்தப் புராதன உபதேசங் களின் உயர்ந்த கருத்துக்களில் பத்துக்கு ஒன்பது மடங்கை இழந்து விட்டிருப்பதையும் பார்த்துத் திகைத்துப்போவான். இன்னும், மனோபலமின்மை, தேக்கம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், விஞ்ஞானத்தின் ஒடுக்கம், கலை ஊற்று வற்றிபோயிருத்தல், சிருஷ்டி சத்தியின் குறைவு முதலியவைகளையும் கண்டு ஆச்சரியமடை வான். இன்றைய ஹிந்து, ஒரு கோழையாயிருக்கிறான். வேதமென்றும் புராணமென்றும் அவன் வாய் நிறையச் சொல்லிக் கொள்கிறான். உபநிஷதத்தையும் பகவத் கீதையையும் பாராயண புத்தகங்களாகப் பூஜையிலே வைத்திருக்கிறான். கடவுளை நம்பித் தன்னம்பிக்கை இழந்து நிற்கிறான். ஒரு காலத்தில் ஞான கோபுரத்தின் மீது ஏறி நின்ற அவன் இப்பொழுது அறியாமைக் குழியிலே விழுந்து உழன்று கொண்டிருக்கின்றான். அவன் உருவத்தைப் போற்றிக் கொண்டே உயிரை இழந்து விட்டான். ஒரு காலத்தில் அவன், தான் ஹிந்து என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை கொண்டான். அந்தப் பெருமையோடு தன் கடமையையும் நன்கு உணர்ந்துகொண்டிருந்தான். இதற்குக் கீதையிலிருந்தே ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்ட விரும்பு கிறோம். போர்க்களத்தில் கௌரவ சேனையைப் பார்த்து விட்டு அர்ஜுனன் சோர்வடைகிறான். அவனுடைய வாய் உலர்ந்து போகிறது. உடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது. அவனுடைய காண்டீவம் கூட கையிலிருந்து நழுவுகிறது. இவைகளை யெல்லாம் பார்த்தான், பார்த்தனுக்கு ரதம் ஓட்டி வந்த கண்ணன், என்ன சொல்லுகிறான்? இஃது ஆரியருக்குத் தகாது என்கிறான். இதைச் சொல்லிவிட்டுப் பிறகுதான், பேடித்தன்மை யடையாதே என்பன போன்ற உபதேசங்களைச் செய்கிறான். ஆரியருக்குத் தகாது என்கிற ஒரு வாக்கியத்திலே நமது ஜாதீய தர்மத்தை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறான் கண்ணன்? இதையே காந்தியும் விவேகானந்தரும் பல வழிகளில் எடுத்துச் சொல்லுகிறார்கள். காந்தி, யங் இந்தியா பத்திரிகையில் எழுது கிறார்: ஹிந்துக்களாகிய நாம் பயத்தையும் கோழைத்தனத்தையும் விட்டுவிட வேண்டும். பிறரை நம்பக்கூடிய தைரியம் நமக்கு வேண்டும். எல்லாம் சரிப்பட்டுவிடும். அச்சமும் அறியாமையுந்தான் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தளைகள். இவற்றை அறுத்தெறிய வேண்டும். ஹிந்து என்று சொல்லிக் கொள்வதில் ஒவ்வொருவனும் பெருமை கொள்ள வேண்டும். விவேகானந்தர் முழங்குகிறார் கேளுங்கள்: ஹிந்து என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், உங்க ளுடைய தேகத்தில் ஒரு சக்தி உண்டாக வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் ஹிந்துக்கள். ஹிந்து என்று சொல்லிக்கொண்டு எந்த நாட்டிலிருந்து எவன் வந்தாலும் சரி, அவன் எந்த பாஷையைப் பேசினாலும் சரி, அவனை நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவின னாகக் கருத வேண்டும். ஒரு ஹிந்து, துன்பத்திலே உழன்றுகொண் டிருந்தால், உங்கள் வயிற்றிலே பிறந்த பிள்ளையே அம்மாதிரி அவதைப்படுகிறான் என்று நீங்கள் கருத வேண்டும். உங்களுடைய சகோதர ஹிந்துக்களின் நலனுக்காக நீங்கள் எல்லாத் துன்பங்களை யும் குருகோவிந்த சிம்மனைப்போல் சகித்துக்கொள்ள வேண்டும். அவன் - அந்த குருகோவிந்தன் - கொடியர்களிடமிருந்து தனது நாட்டைக் காப்பாற்றினான். ஆனால் அந்த நாட்டிலிருந்தே விரட்டப்பட்டு விட்டான். ஹிந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காகத் தனது ரத்தத்தைச் சிந்தினான். யுத்த களத்தில் தனது பிள்ளைகள் கொல்லப்படுவதைக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான். யார்பொருட்டுத் தன் ரத்தத்தையும், தனது நெருங்கியவர்களுடைய ரத்தத்தையும், பிரியமானவர்களுடைய ரத்தத்தையும் சிந்தினானோ அவர்களாலேயே கைவிடப்பட்டுவிட்டான். கடைசியில் அவன் காயமடைந்த சிம்மம்போல் தனது நாட்டிலிருந்து அமைதியாக வெளியேறி தெற்கு நோக்கிச் சென்றான். ஆனால் அவன் வாயி லிருந்து, யார் அவனைக் கைவிட்டு விட்டார்களோ அவர்களுக்கு விரோதமாக ஒரு வார்த்தைகூட வெளிவரவில்லை! உங்கள் நாட்டுக்கு நீங்கள் நன்மை செய்யவேண்டுமானால் நீங்கள் ஒவ் வொருவரும் ஒவ்வொரு குருகோவிந்த சிம்மனாயிருக்கவேண்டும். உங்கள் நாட்டு மக்களிடத்தில் நீங்கள் ஆயிரக்கணக்கான குறை களைக் காணலாம். ஆனால் அவர்களுடைய தேகத்தில் ஹிந்து ரத்தம் ஓடுகிறதென்பது உங்கள் நினைவிலிருக்கட்டும். அவர்கள் உங்களுக்கு என்ன தீங்கிழைத் தாலும் சரி, அவர்களைத்தான் உங்களுடைய முதற் கடவுளர்களாக நீங்கள் வணங்கவேண்டும். அவர்களில் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஒவ்வொரு சாபமிட்டா லும் சரி, நீங்கள் அவர்களுக்கு அன்பான வார்த்தைகளையே சொல்லவேண்டும். அவர்கள் உங்களை வெளியே துரத்திவிடுவார்க ளானால், அந்த கோவிந்த சிம்மத்தைபோல் மௌனமாக மரித்துப் போக எங்கேயாவது செல்லுங்கள். அப்பொழுதுதான் ஹிந்து என்னும் பெயருக்கு நீங்கள் தகுதியுடையவர்கள். அப்படிப்பட்ட லட்சியம்தான், நமக்கு முன்னே எப்பொழுதும் இருந்து கொண் டிருக்கவேண்டும். நம்முடைய பிணக்குகளையெல்லாம் புதைத்து விடுவோமாக! நம்மைச் சுற்றி எங்கணும் இந்த அன்பு வெள்ளத்தைப் பாய்ச்சுவோமாக! இங்ஙனம் இருவரும் ஹிந்துக்களுக்கு அன்பையும் அஞ்சாமையையும் குழைத்து ஊட்டியிருக்கிறார்கள். இன்று இந்தியாவில் சிறிது நிமிர்ந்து நடக்க வேண்டுமென்ற எண்ணம் மக்களுக்கு உண்டாகி யிருக்கிறதென்றால் அதற்கு இவ்விருவருமே காரணம். விவேகானந்தர் பண்படுத்திய அஞ்சாமை நிலத்தில்தான், காந்தி, அஹிம்ஸை விதையை ஊன்றினார். தாங்கள் சநாதன ஹிந்துக்களென்று சொல்லிக் கொள்வதில் காந்தியும் விவேகானந்தரும் பெருமை கொள்கிறார்களென்றாலும், இருவரும் சமரஸ ஞானிகள். இதில்தான் இவர்களுடைய பெருமை இருக்கிறது. என்னுடைய தாயை எப்படி நான் நேசிக்கிறேனோ அப்படியே என்னுடைய மதத்தை நான் நேசிக்கிறேன். ஆனால் அதே சமயத்தில் மற்றத் தாய்மார்களிடத்தில் நான் எப்படி பக்தி சிரத்தையோடு நடந்து கொள்கிறேனோ அப்படியே மற்ற எல்லா மதங்களின் விஷயத்திலும் நடந்து கொள்கிறேன். இந்தமாதிரியான கருத்துடையவரே காந்தி. எனது மதத்திற்குப் பூகோள எல்லையே கிடையாது. என்று ஓரிடத்தில் கூறுகிறார். உலகத்திலே ஒரு மதம் உண்மையானதாயிருந்தால் எல்லா மதங்களும் உண்மையானவை யாயிருக்கவேண்டும். அடிப்படையான அமிசங்களில் எல்லா மதங்களும் ஒன்றுதான். எனக்கு ஐந்து விரல்கள் இருப்பது உண்மை யானால், மற்றவர்களுக்கும் ஐந்து விரல்கள் இருப்பது உண்மை தானே? என்று விவேகானந்தர் கேட்கிறார். இருவரும், புத்தருடைய கருணையையும், யேசுநாதரின் தியாகத்தையும், நபிகள் நாயகத்தின் சகோதர நேயத்தையும் அப்படியே தங்கள் வாழ்க்கை யில் அனுஷ் டித்துக் காட்டியிருக்கிறார்கள். காந்தியும் விவேகானந்தரும் தீண்டாமைக்குப் பரம விரோதிகள். ஹிந்து மதத்திற்கு இஃதொரு பெரிய களங்கம் என்று கருது கிறார்கள். ஹிந்து சாதிரங்களிலே தீண்டாமைக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. அப்படி ஆதாரம் இருப்பதாகக் காட்டி, தீண்டாமையை ஹிந்து மதம் அங்கீகரிக்கிறதென்று யாராவது சொன்னால், நான் ஹிந்து மதத்தைத் துறந்துவிடச் சிறிதும் தயங்க மாட்டேன் என்று கூறுகிறார் காந்தி. எல்லா ஜீவராசிகளிடத்திலும் ஒரேவிதமான கடவுட் தன்மையைக் காணும் மகா புருஷர்கள், மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருப்பதைக் கொஞ்சங் கூட சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அந்த ஏற்றத் தாழ்வுகளைச் சமன்படுத்திக்கொண்டுபோக அவர்கள், மகத்தான தியாகங்களை யும் செய்வார்கள். தீண்டாதவன் என்று கருதப்படுகிற ஒருவன் இருக்கிற வரையில் நானும் ஒரு தீண்டாதவனே என்று காந்தி மனம்பொங்கிக் கூறுகிறபோது, அவருடைய தியாகத்தின் எல்லையை நாம் ஒருவாறு எட்டிப்பார்க்கிறோம். விவேகானந்தரும் இங்ஙனமே தீண்டாமையை பலபடக் கண்டித்திருக்கிறார். தீண்டாமை என்பது ஹிந்து மதமல்ல. நமது கிரந்தங்களில் அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அந்தத் தீண்டாமைக் கறையானது, நம்முடைய தேசீய சக்தியைக் குன்றச் செய்திருக்கிறது என்று ஆத்திரப்படுகிறார். தேசீய திருஷ்டியில் தான் இவர் இந்தத் தீண்டாமைப் பிரச்னையை நோக்குகிறார். ஏனென்றால் நமது தேசம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்பது இவர் நோக்கம். வாழ்வு எங்கேயிருக்கிறது? அன்பிலே இருக்கிறது. எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துகிறவன்தான் உண்மையான வாழ்க்கையை நடத்தியவனா கிறான். அப்படியிருக்க, நம்மிலே ஒரு சிலரைமட்டும் ஒதுக்கிவைத்து விட்டு, அதாவது கடவுளின் குழந்தை களான ஒரு சிலரை ஒதுக்கி வைத்து விட்டு, நாம் மட்டும் அவருடைய குழந்தைகளென்று சொல்லிக்கொண்டு அந்தக் கடவுளிடம் போக முயலலாமா? அப்படிப் போனால்தான், கடவுளின் ஆசீர்வாதம் நமக்குக் கிடைக்குமா? தம் சிஷ்யரொரு வருக்கு விவேகானந்தர் எழுதுகிறார்: எல்லா ஜீவ சிருஷ்டிகளையும் உன்னைப் போலவே பார் என்ற உபதேசம் நூலோடுதான் நிற்க வேண்டுமா? பசியோடு புலம்பும் வாய்க்கு ஒரு துண்டு ரொட்டி கொடாதவர்கள், மற்றவர்களுக்கு எப்படி விமோசனம் அளிக்கப் போகிறார்கள்? மற்றவர்களுடைய மூச்சுப்பட்ட மாத்திரத்தில் அசுத்தர்களாகிவிட்டதாகக் கருதுபவர்கள், மற்றவர்களை எப்படி பரிசுத்தப்படுத்தப் போகிறார்கள்? தீண்டாமை யென்பது ஒரு மனோ வியாதி. எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துகிற வாழ்க்கைதான் விரிந்த வாழ்க்கை. சுய நலம் என்பது சுருங்கிய வாழ்க்கை. ஆகையால் எல்லோரிடத்திலும் அன்பு செலுத் துவதுதான் வாழ்க்கையின் ஒரே விதமான சட்டம். எவனொருவன் அன்பு செலுத்துகிறானோ அவன் வாழ்கிறான். அப்படியே எவனொருவன் தன்னலத்தை மட்டும் கவனித்துக் கொண்டிருக் கிறானோ அவன் இறந்து போனவனாகி விடுகிறான். எப்படி வாழ்வதற்கு மூச்சுவிட வேண்டியது அவசியமாகிறதோ அப்படியே அன்புக்காக அன்பு செலுத்துவதும் அவசியமாகிறது. காந்தியும் விவேகானந்தரும் கீதையின் போதனையிலே பெரிதும் ஈடுபட்டவர்கள். உலகத்திற்கேற்ற ஒரு பொதுக் கிரந்தமாக இருவரும் இதனைக் கருதுகிறார்கள். காந்தி, பாரிடர் பரீட்சைக்குப் படிக்க இங்கிலாந்து சென்றாரல்லவா? அங்குதான் இவருக்குக் கீதையின் பரிச்சயம் உண்டாயிற்று. இந்தக் கிரந்தம் விலை மதிக்கவொண்ணாதது என்று எனக்குப்பட்டது. அந்த எண்ணம் எனக்கு வர வர வலுத்துக்கொண்டு வருகிறது. மெய்ப் பொருளை அறிவதற்கு அது மிகவும் ஏற்றது. உயர்ந்தது என்பது என் அபிப்பிராயம். நான் மனச் சோர்வு அடைந்திருக்கிற காலங் களில் அஃதெனக்குப் பெரிதும் உதவியாயிருக்கிறது என்று கூறுகிறார். பின்னர் தென்னாப்பிரிக்கா சென்று அங்கே பல போராட்டங் களில் ஈடுபட்டிருந்த காலத்தில் இவருக்கு சாந்தியைக் கொடுத்தது இந்த பகவத் கீதைதான். இந்தக் காலத்தில்தான் இவர் கீதை முழுவதையும் மனப்பாடம் செய்தார். மனப்பாடம் செய்வதற்கு இவர் தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவில்லை. காலையில் பல் துலக்குகிற போதும், நானஞ் செய்கிற போதும், சுவரில் ஒரு சுலோகத்தை எழுதி வைத்துவிட்டு அதைப் பார்த்து மனப்பாடஞ் செய்துகொண்டே பல் துலக்குவார்; நானஞ் செய்து முடிப்பார். இப்படியே தினம் ஒரு சுலோகமாக, கீதை பூராவையும் மனப் பாடஞ் செய்துவிட்டார். கீதையை ஆழ்ந்து ஆராய்ச்சி செய்த பிறகுதான் தமக்குத் துறவு மனப்பான்மை ஏற்பட்டதென்று இவர் கூறுகிறார். இதன் பயனாக இவர் இன்ஷ்யூரென் கட்டிக்கொண்டு வந்ததைக் கூட நிறுத்திவிட்டார். என்னையும் என் மனைவி மக்களையும் படைத்த கடவுள் அவர்களைக் காப்பாற்றுவார் என்ற உறுதி இவருக்கு ஏற்பட்டது. அது வரையில் தாம் சம்பாதித்துச் சேர்த்து வைத்திருந்ததையெல்லாம் தமது சகோதரருக்குக் கொடுத்து விட்டார். கீதை, இவரை ஒரு மகா தியாகியாக்கிவிட்டது. கீதையின் நோக்கமும் இதுதானே? விவேகானந்தர், சிக்காகோ சர்வ சமய மகா நாட்டில் முதன் முதலாகப் பிரசங்கம் செய்தபோது யாவர் என்னை எங்ஙனம் வேண்டு கிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா! மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள் என்ற கீதா சுலோகத்தை எடுத்துச் சொல்லி, ஹிந்து மதத்தின் சமரஸத் தன்மையை விளக்கிக் காட்டினார். கீதையை எல்லோரும் பயில வேண்டுமென்பது இவர் விருப்பம். ஏனென்றால் இது மனிதனுக்குக் கடமை இன்னதென்பதைத் தெரிவிக்கிறது; வீரத்தை ஊட்டுகிறது. இந்த இரண்டுந்தான் இன்றைய இந்தியாவுக்கு அவசியம் தேவை. இதனை இந்தியர்கள் எல்லோரும், எந்தக் கவனத் துடன் படிக்கவேண்டுமோ அந்தக் கவனத்துடன் படிக்கவில்லை யென்பதற்காக இவர் அடிக்கடி வருத்தப்பட்டதுண்டு. கீதையென்பது, மோட்ச லோகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஓர் ஏணியென்று சிலர் கருதுகிறார்கள். இது மிகத் தவறு. கீதை, நமது அன்றாட வாழ்க்கைக்கு உறுதுணை; மன அமைதி கொடுக்கும் அருமருந்து; பற்றில்லாமல் சேவை செய்துகொண் டிருப்பதிலேதான் உண்மையான இன்பம் இருக்கிறதென்பதை நமக்கு உணர்த்துகிறது. இப்படிப்பட்ட பொக்கிஷத்தை நாம் பெற்றிருந்தும் அதனை உபயோகத்திற்குக் கொண்டு வராமல் இருக்கிறோம். என்ன ஆச்சரியம்! இனியேனும் நமது இளைஞர்கள், காந்தியைப் பின்பற்றுவதாகச் சொல்லால் முழக்கும் இளைஞர்கள், அவரைப் போல் தினந்தோறும் ஒரு சுலோகத்தை மனப்பாடஞ் செய்வார்களா? நிச்சயம் அது நம்மைச் சுயராஜ்ய பாதையில் சீக்கிரம் கொண்டுவிடும். காந்தியும் விவேகானந்தரும் சிறந்த பக்தர்கள்; கடவுளின் புகழைப் பாடி அதில் மெய் மறந்து நிற்கும் ஆற்றல் பெற்றவர்கள். இதனாலேயே இவர்களுடைய மனம் எவ்வித சஞ்சலத்திற்கும் உள்ளாகாமல் எப்பொழுதும் ஒரு சாந்த நிலையில் நிற்கிறது. இவர்கள் கடவுள் புகழைப் பாடுகிறார்கள்; கடவுள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்; கடவுள் ராஜ்யத்தை இந்தப் பூலோகத்தில் தாபிக்க வேண்டுமென்பதற்காக ஓயாமல் உழைக்கிறார்கள்; அந்த உழைப்பிலே இன்பம் நுகர்கிறார்கள். 4. விவேகானந்தர் ஏன் அமெரிக்கா சென்றார்? 1892ஆம் வருஷக் கடைசி. குமரிமுனையிலுள்ள ஒரு சிறிய பாறையின் மீது விவேகானந்தர் ஆழ்ந்த தியானத்திலிருக்கிறார். அவர் முதத்திலே ராஜகளை; உதட்டிலே புன் சிரிப்பு. முந்தைய பாரதத்தின் பெருமையும் இன்றைய பாரதத்தின் ஆவலும் ஓர் உருவாகத் திரண்டு வந்து அன்னையே! நின் சரணம் என்று பாரதத் தாயின் திருவடியின் கீழ் அமர்ந்திருப்பதைப் போலிருக்கிறது அந்தத் திருக்காட்சி. சிறிது நேர தியானத்திற்குப் பிறகு விவேகானந்தருடைய மெய் சிலிர்த்தது. கண்கள் நீர் பெருக்கின. எனது தாய்நாடு? எனது தாய் நாடு என்ற வார்த்தைகள் வாயிலிருந்து வெளி வந்தன. தாய்நாட்டு மக்களை நினைத்துக் கொண்டு விட்டார். அதுதான் இவைகளுக் கெல்லாம் காரணம். கன்னியாகுமரியை வந்தடைவதற்கு முன்னர் விவேகானந்தர் இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்தார். வேடிக்கை பார்க்கச் செல்லும் பிரயாணியைப் போலல்ல; மெய்ப் பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மெய்ஞ் ஞானியைப் போல. முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று ஒரு காலத்தில் பெருமையோடு அழைக்கப்பட்டு வந்த இந்திய மக்கள் இப்பொழுது உதிர் சருகு களைப் போலிருக்கிறார்கள். ஒரு காலத்தில் இவர்கள் மூச்சை அடக்கினார்கள். இப்பொழுது மூச்சு விடுவதற்குக் கூட இவர் களுக்குத் திராணியில்லை. இந்தியாவில் எத்தனையோ அரசர்கள் ஆண்டார்கள்; ஞானமென்றும் மோனமென்றும் எத்தனையோ பேர் உபதேசம் செய்தார்கள். அநித்தியமான இந்த உலகத்தைத் துறந்துவிட்டு நித்தியமான வாழ்வை நாடிச் சென்ற சந்நியாசிகள்தான் எத்தனை பேர்? ஆனால் இவர்களெல்லோரும் பாமர ஜனங்களுக்குச் செய்தது என்ன? அவர்களுக்குத் தத்துவ ஞானத்தை உபதேசித் தார்கள்! என்ன பைத்தியக்காரத்தனம்! லட்சக்கணக்கான இந்த அந்த ஏழை மக்கள், வயிற்றுச் சோற்றுக்கு வழியில்லாமல் அலைகிற போது அவர்கள் ஆன்மார்த்தமாக மேல் நோக்கிச் செல்வதெப்படி? இகலோகத்தில் வாழ்வதெப்படி என்பதை அவர்கள் தெரிந்து கொண்டாலல்லவோ, பரலோகத்தைப் பற்றிய எண்ணம் அவர் களுக்கு உண்டாகும்? எனவே, முதலில் அவர்களுக்குக் கவலையின்றி வாழக்கூடிய சௌகரியங்களைச் செய்து கொடுக்க வேண்டும். பின்னர், அவர்கள், தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். இதற்குத் தொண்டர்களும் பணமும் தேவை. விவேகானந்தர், தம்முடைய சுற்றுப் பிரயாணத்தின் போது இந்தத் தேவையை நன்கு உணர்ந்து கொண்டார். ஆனால் தாம் என்ன செய்ய முடியும்? கையிலே காசில்லை; முற்றுந் துறந்த துறவி. அடிக்கடி ஏக்கங் கொள்வார்; இந்திய மக்களுக்கு ஏதேனும் விமோசனம் ஏற்படுமாவென்று தம்மைத் தாமே கேட்டுக் கொள்வார். இந்த மாதிரியான ஒரு மனோ நிலைமையில்தான் இவர், மேலே சொன்ன பிரகாரம் தியானத்திலே அமர்ந்தார். சில மணி நேரங் கழித்து, தமது தேகத்தை உதறிக் கொண்டு எழுந்து நின்றார், கண் மூடிக் கொண்டிருந்த சிம்மம் தேகத்தை உதறிக்கொண்டு எழுந்து நிற்பதைப் போல. ஆரம்பத்தில் இவரிடமிருந்த ஏக்கம், என்ன செய்வது என்ற கேள்வி ஆகிய எல்லாம் பறந்துவிட்டன. அவைகளை யெல்லாம் உதறித் தள்ளி விட்டதைப் போலவே தம் தேகத்தை உதறிக் கொண்டார். முக் கடலையும் நோக்கினார்; தமது தாய்நாட்டைத் திரும்பிப் பார்த்தார். மனதில் ஓர் ஒளி உண்டாயிற்று. புதிய சக்தி பெற்றவர் போலானார். சங்கல்பம் செய்து கொண்டார்: எனது குருநாதரின் திருவருளால் இந்தக் காரியத்தைச் செய்து முடிப்பேன். அவருடைய ஆசீர்வாத பலத்தினால், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு நகரத்திலிருந்தும், ஏழை மக்களின் பரிதாப நிலையைக் கண்டு துடிதுடிக்கிற, அவர்களுடைய நல்வாழ்வுக்காகத் தங்களுடைய வாழ்வையே அர்ப்பணம் செய்யக் கூடிய இருபதுக்கணக்கான தொண்டர்கள் தோன்றுவார்கள். ஆனால் பணத்திற்கு என்ன செய்வது? இந்தக் கவலையுடனும் ஏதேனும் செய்ய வேண்டுமே யென்ற எண்ணத்துடனும் இந்தியாவின் எல்லாப் பாகங்களிலும் சுற்றி வந்தேன். பணக்காரர்களுடைய மாளிகைகளுக்குச் சென்றேன்; அரசர் களுடைய அரண்மனை களுக்குச் சென்றேன். எதற்கு? உதவி பெறும் பொருட்டு. ஆனால் கிடைத்தது என்ன? உதட்டளவிலே அநுதாபம்! ஹிந்துதானத்தி லுள்ள யாருடைய ஆதரவையும் இனி நாடமாட்டேன். இந்தியாவி லுள்ள லட்சக்கணக்கான ஜனங்களின் சார்பாகக் கடலைக் கடந்து மேனாடுகளுக்குச் செல்வேன். என் அறிவுத் திறமையினால் பணம் சம்பாதித்துக் கொண்டு வருவேன். வந்து, இந்த ஏழை ஜனங்களின் புனருத்தாரணத்திற்காக நான் வகுத்திருக்கிற திட்டங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருவேன்; அல்லது அந்த முயற்சி யிலே இறந்து போவேன். விவேகானந்தர், இந்தமாதிரி சங்கற்பித்துக் கொண்டது எங்கே? கன்னியாகுமரியில்! தமிழ்நாட்டில்! தமிழ்நாடே! நீ என்ன பாக்கியம் செய்தாய்! இந்தப் பாக்கியம் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த தற்கு மற்றொரு முக்கிய காரண புருஷராயிருந்தவர் அப்பொழுதைய ராமநாதபுரத்து அரசர் பாகர சேதுபதி அவர்கள். விவேகானந்த ருடைய பெருமையை அவர் நன்கு உணர்ந்திருந்தார். தம்முடைய விருந்தினராக சுவாமிகள் இருந்தபோது, அமெரிக்காவுக்குச் சென்று ஹிந்து மதத்தை பிரபலப்படுத்த வேண்டு மென்று அடிக்கடி வற்புறுத்தி வந்தார்: அதற்கான உதவிகளையும் தாம் செய்வதாக வாக்களித்தார். தமிழ் மரபிலே வந்த தமிழ் மன்னரல்லவா? கன்னியாகுமரியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தார் விவேகானந்தர். அப்பொழுது சென்னையில் ஆங்கில வாடை வேக மாக வீசிக் கொண்டிருந்தது. ஆங்கிலத்தைப் படிப்பதும் ஆங்கிலத் தில் பேசுவதும் கௌரவமென்று இளைஞர்கள் கருதிக்கொண் டிருந்தார்கள். ஆனால் இந்த இளைஞர்கள்தான், விவேகானந்தரைச் சந்தித்த சிறிது காலத்திற்குள் இவருடைய அத்தியந்த சிஷ்யர்களாகி விட்டார்கள்! உலகத்தினரெல்லோரும் விவேகானந்தரைப் போற்றினார்க ளென்று சொன்னால் அதற்கு முதன் முதல் வழி காட்டியது சென்னைதான். ஆசார சீர்திருத்தமென்ற பெயரால் ஹிந்து மதத்தை ஏளனம் செய்து வந்த இளைஞர்கள் பலர், விவேகானந்தரின் முதற் சிஷ்யர்களானது சென்னையில்தான். விவேகானந்தர் அமெரிக்கா செல்லுவதற்கென்று முதன் முதலாக ஒரு நிதி திரட்டப்பட்டது சென்னையில்தான். விவேகானந்தரின் உணர்ச்சி ததும்பும் பிரசங் கங்கள் நிகழ்ந்தது சென்னையில்தான். ஆங்காங்கு மடங்களை தாபித்தல், நூல்களை வெளியிடுதல் ஆகிய விவேகானந்தருடைய திட்டங்களை முதன் முதலாக நிறைவேற்றி வைத்தது சென்னை தான். விவேகானந்தர், மேனாடுகளுக்குச் சென்றிருந்தபோது அவருடைய உபதேசங்கள் இந்தியா வெங்கணும் பரவுவதற்குத் தீவிர முயற்சி எடுத்துக்கொண்டார்கள் சென்னை வாசிகள்தான். வாழியரோ சென்னையர்! விவேகானந்தர் சென்னையில் தங்கியிருந்த காலத்தில் ஒரு நாள் காற்றுவாங்கக் கடற்கரைக்குச் சென்றிருந்தார். அங்கே செம்பட வர்களின் வாழ்க்கை நிலையைக் கண்டார். கண்கலங்கினார். வாய்விட்டுப் புலம்பினார்: ஓ! கடவுளே! மகா கேவலமான இந்த மனித ஜென்மங்களை ஏன் படைத்தாய்? இவர்களைப் பார்ப்ப தற்குக்கூட என்னால் சகிக்க முடியவில்லையே. எவ்வளவு காலம் இப்படி? கடவுளே! எவ்வளவு காலம் இப்படி? இவர் கண்களி லிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. பக்கத்திலிருந்தவர்கள் இதைப் பார்த்தார்கள். அவர்களும் குழந்தைகள் மாதிரி கூடவே அழ ஆரம்பித்து விட்டார்கள். ஏழைகளைக் கண்ட மாத்திரத்தில் விவேகானந்தரின் உள்ளம் புழுப்போல் துடித்தது; மெழுகுபோல் உருகியது. விவேகானந்தர், அமெரிக்கா செல்லவேண்டிய அவசியத்தைச் சென்னையிலேயே அதிகமாக உணர்ந்தார். வரவர இந்த ஓர் எண்ணமே இவர் உள்ளத்தை நிரப்பிக்கொண்டு வந்தது. இவருடைய ஆவலை அறிந்த இவருடைய சிஷ்யர்கள், ஒரு தொண்டர்படையை அமைத்துக்கொண்டு நிதி வசூலிக்கப் புறப்பட்டார்கள். வீடு தோறும் சென்று பணம் தண்டினார்கள். இவர்கள், பணக்காரர்கள் வீட்டுக்கு அதிகமாகச் செல்லவில்லை; மத்திய வகுப்பாரிடமே சென்றார்கள். ஏனென்றால் விவேகானந்தர், இவர்களுக்குப் பிறப்பித்திருந்த ஆணையென்னவென்றால் நான் அமெரிக்கா செல்ல வேண்டுமென்பது ஜகதீசுவரியின் விருப்பமானால், அதற்காக நான் ஜனங்களிடமிருந்தே பணம் பெறவேண்டும். ஏனெனின் இந்திய மகாஜனங்களுடைய நன்மைக்காகவே நான் மேனாட்டுக்குச் செல்கிறேன். அவர்களுக்காகவே, அந்த ஏழை ஜனங்களுக்காகவே செல்கிறேன் என்பதாகும். இங்ஙனம் அமெரிக்கா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தனவென்றாலும், விவேகானந்தர், உடனே துணிந்து புறப்படவில்லை. உலகத்தை ஈன்று புரக்கும் ஜகன் மாதாவின் ஆணை தமக்குக் கிடைக்கவில்லை, அது கிடைத்த பிறகுதான் புறப் படவேண்டும் என்கிற மாதிரியான ஓர் எண்ணம் இவர் மனதில் இருந்து கொண்டிருந்தது. அப்படியே ஒருநாள், ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸர் தோன்றி தம்மைச் சமுத்திரத்தின்மீது அழைத்துச் செல்வதாக ஒரு கனவு கண்டார். குருவின் ஆணை பிறந்துவிட்டதாக உணர்ந்தார். பின்னரே பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் சுறுசுறுப்பாகச் செய்யப் பட்டன. அதே சமயத்தில், குரு பத்தினியான ஸ்ரீ சாரதாமணி தேவியின் ஆசீர்வாத மும் கிடைத்தது. கடைசியில் 1893-ஆம் வருஷம் மே மாதம் 31-ஆம் தேதி சிஷ்யர்கள் அடிபணிந்தார்கள்; நண்பர்கள் கண்ணீர் பெருக்கி னார்கள் மாதா! வணக்கம் என்று சொல்லிக் கொண்டு கப்பலேறி னார் விவேகானந்தர். கப்பலும் நகர்ந்தது. துறவுக்கு முக்கியத்துவம் கொடுத்த நாட்டிலிருந்து போகநாட்டிற்குச் செல்கிறேன் என்ற வார்த்தைகள் விவேகானந்தருடைய வாயிலிருந்து வெளிவந்தன. போக நாட்டிற்கு ஏன் சென்றார் விவேகானந்தர்? போகத்தை அனுபவிப்பதற்கா? அபசாரம்?! அபசாரம்! போகத்திற்கும் இவருக்கும் எவ்வளவு தூரம்? அல்லது சிக்காகோவில் கூடப் போகிற சர்வ சமய மகாநாட்டிற்குச் சென்று ஹிந்து மதத்தின் புராதனத்தையும் பெருமையையும் எடுத்துச் சொல்வதற்காகவா? ஆம்; அஃதொரு காரணந்தான். ஆனால் அதுவே காரியமில்லை. சென்னையில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் பின்வருமாறு கூறுகிறார்: தேசபக்தி, தேசபக்தி என்று சொல்கிறார்கள். நான்கூட ஒரு தேசபக்தன் தான். எனக்குக்கூட தேச பக்தியிலே நம்பிக்கையுண்டு.... ஆனால் சகோதரர்களே! நீங்கள் மனப்பூர்வமாக உணர்கிறீர்களா? கடவுளர்களின் வழித் தோன்றல் களென்றும் ரிஷி பரம்பரையினர் என்றும் சொல்லப்படுகிற லட்சக் கணக்கான பாரதநாட்டு மக்கள், இப்பொழுது மிருகங்களுக்கு அடுத் படியான வாழ்க்கையை நடத்து கிறார்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர் களா? லட்சக்கணக் கானபேர் இன்றைய தினம் பட்டினி கிடக்கிறார்கள், லட்சக்கணக் கானபேர் நாட்கள் கணக்காகப் பட்டினி கிடந்து வருகிறார்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? கருமேகம்போல் நமது நாட்டை அறியாமை சூழ்ந்துகொண்டிருக்கிறதென்பதை நீங்கள் உணர்கிறீர் களா? இதனால் உங்கள் மனம் பதை பதைக்கிறதா? இரவில் தூக்கம் வராமலிருக்கிறதா? இந்த உணர்ச்சி உங்களுடைய ரத்தத்திலே ஊறி, நரம்புகளிலே புகுந்து, இருதயத் துடிப்போடு ஒன்றாகி விட்டதா? இந்த உணர்ச்சி உங்களை ஒரு பித்துபோல் ஆக்கி விட்டதா? பெயர், புகழ், மனைவி, மக்கள், சொத்து, தேகாபிமானம் முதலிய எல்லா வற்றையும் மறந்து இந்த ஏழை மக்களின் துயரம் ஒன்றையே நீங்கள் கெட்டியாகப் பற்றிக்கொண்டிருக்கிறீர்களா? இந்த நிலையை நீங்கள் அடைந்தீர் களானால் அதுதான் உங்கள் தேசபக்திக்கு முதல்படி. சர்வ சமய மகாநாட்டை உத்தேசித்து நான் அமெரிக்கா செல்லவில்லையென்பது உங்களிற் பலருக்குத் தெரியும். மேலே சொன்ன இந்த உணர்ச்சிதான், என்னிடத்தில் ஊறியிருந்தது; என்னுடைய ஆத்மாவைப் பற்றிக் கொண்டிருந்தது. இந்தியா முழுவதிலும் பன்னிரண்டு வருஷகாலம் சுற்றுப்பிர யாணம் செய்தேன். என் தாய்நாட்டு மக்களுக்கு எப்படித் தொண்டு செய்வ தென்பதற்கு எனக்கு வழி புலப்படவில்லை. அதனாலேயே நான் அமெரிக்கா சென்றேன். என்னை அறிந்தவர்களுக்கு இது தெரியும். சர்வ சமய மகாநாட்டைப்பற்றி யார் கவலைப்பட் டார்கள்? என்னுடைய சதையும் ரத்தமும் தினந்தோறும் குன்றிக் கொண்டு வர, அவைகளைப்பற்றி - மகாநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களைப்பற்றி - யாருக்கு என்ன கவலை? எனவே, விவேகானந்தர் எந்த நோக்கோடு அமெரிக்கா சென்றார் என்பது இதிலிருந்து நன்கு புலனாகிறது. சர்வ சமய மகாநாடென்பது ஒரு சந்தர்ப்பந்தானே தவிர அதுவே இவருடைய நோக்கமில்லை. இந்தியாவின் ஏழைமக்களைக் கை தூக்கிவிட வேண்டுமென்பதுவே இவர் நோக்கம். அதற்காகவே இவர் தமது சர்வத்தையும் தியாகம் செய்தார்; உணர்ச்சி வசப்பட்டு அநேக சமயங்களில் தன்வசமிழந்தும் நின்றார். அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு, இந்தியாவிலுள்ள தமது சிஷ்யர்களுக்கு ஒரு கடிதத்தின்மூலம் எப்படி உணர்ச்சி ஊட்டுகிறார் பாருங்கள்: எனது இளைஞர்களே! மடி கட்டிக்கொள்ளுங்கள். நான் உங்களிடத்திலேதான், அடக்கமுள்ள, கீழானவர்களென்று கருதப் படுகின்ற, ஆனால் தன்னம்பிக்கையுள்ள உங்களிடத்திலேதான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். கடவுளிடத்தில் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். கொள்கை, கொள்கையென்று கட்டிக்கொண்டு அழாதீர்கள். அஃதொன்று மில்லை. ஏழை மக்களுக்கு இரக்கங் காட்டுங்கள். உங்களுக்கு நிச்சயம் உதவி கிடைக்கும்... ரத்தம் வடிகிற உள்ளத்தோடு, உலகத்தின் பாதி பாகத்தைக் கடந்து இந்தப் புதிய நாட்டுக்கு வந்திருக்கிறேன். எதற்கு, உதவி பெறும் பொருட்டு. கடவுள் எல்லாம் வல்லவர். அவர் எனக்கு உதவி செய்வார். அஃதெனக்கு நன்றாகத் தெரியும். நான் இந்த நாட்டிலே குளிரினாலும் பட்டினியினாலும் இறந்து போகலாம். ஆனால் இளைஞர்களே! ஏழை மக்களிடத்திலே, பாமர ஜனங்களிடத்திலே, ஒடுக்கப் பட்டவர்களிடத்திலே நான் செலுத்துகிற அநுதாபத்தை, அவர்களுக்காக நான் நடத்துகிற போராட்டத்தை உங்களிடம் ஒப்படைத்துவிட்டுப் போவேன். கடவுள் முன்னிலையில் தைரிய மாகச் செல்லுங்கள். பாரதநாட்டு முப்பதுகோடி மக்களுக்காக, (இப்பொழுது நாற்பதுகோடி )நாளுக்குநாள்கீழேபோய்க்கொண்டிருக்கும்இந்தஏழைஜனங்களின்விமோசனத்திற்காக,எங்களுடையவாழ்க்கைமுழுவதையும்அர்ப்பணம்செய்கிறோம்என்றுபிரதிக்ஞை செய்துகொள்ளுங்கள் கடவுட் கிருபையால் நாம் வெற்றியடைவோம். நமது போராட்டத்தில் நூற்றுக் கணக்கானவர் வீழ்ந்து படலாம். ஆனால் நூற்றுக் கணக்கான பேர் அந்த இடத்தைப் பூர்த்திசெய்ய முன்வருவர். நான்இங்fவெற்றி யடையாமல் இறந்து போகலாம். ஆனால் என்னுடைய வேலையை வேறொருவர்மேல் போட்டுக் கொண்L நடத்துவர். உங்களுக்கு வியாதி இன்னதென்று தெரியும்; அதற்குப்பரிகாரமும்தெரியும். உங்களுக்கு வேண்டியது நம்பிக்கைதான்...வாழ்வா, சாவா, பட்டினியா, குளிரா, இவையெல் லாம் என்ன அவ்வளவு பிரமாதமான விஷயம்? இவைகளைப் பொருட்படுத்தவ படுத்தாதீர்கள். கடவுளைநம்ãமுன்dசெல்லுங்கள். அவரே, அந்தக் கடவுளே, நமக்குத் தலைவர். அப்படிச் செல்லுகிற போது, யாரார் வழியில் விழுந்து விட்டார்க ளென்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு செல்லாதீர்கள். முன்னோக்கியே செல்லுங்கள். முன்னோக்கிக் கொண்டு போவீர்கள். இங்கே ஒரு விஷயம். விவேகானந்தர், அமெரிக்காவுக்குச் சென்றது, இந்தியாவுக்கு உதவி தேடிக் கொண்டு வரும்பொருட்டு மட்டுந்தான் என்று நினையாதீர்கள். மகான்கள், எப்பொழுதுமே பிறருடைய தயவை எதிர் பார்க்கமாட்டார்கள். சிறிய ஒன்றை மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டால், அவர்கள், பெரிய ஒன்றைக் கொடுத்துவிட்டுத்தான் அந்தச் சிறிய ஒன்றைப் பெறுவார்கள். விவேகானந்தர் ஒரு சமயம் மைசூர் மன்னரிடம் சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், இந்தியாவினுடைய ஆத்ம ஞானத்தை அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டு அதற்குப் பதில், இந்தியர் களுடைய லௌகிக வாழ்க்கைக்காக ஏதேனும் உதவி தேடிக்கொண்டு வரலா மென்பதற்காகவே தாம் அமெரிக்கா செல்ல வேண்டுமென்று விரும்புவதாகத் தெரிவித்தார். இன்னும் அமெரிக்காவிலிருந்து இந்தியா விலுள்ள தமது நண்பரொருவருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: நமது தேசத்தில் சமுதாய நற் குணங்கள் (அதாவது சமுதாயத்தைச் சேர்ந்த எல்லோரும் நன்றாக வாழவேண்டும், அதற்காக நாம் பாடுபடவேண்டும் என்கிற எண்ணம் முதலியன) குறைவாயிருக் கின்றன. இங்கே, அமெரிக்கா வில், பாரமார்த்திக வாழ்வென்பது சூனியமா யிருக்கிறது. இந்தியா வின் பாரமார்த்திக ஞானத்தை நான் இவர்களுக்குக் கொடுக்கிறேன். இவர்கள் எனக்கு (இந்தியாவுக்காக)ப் பணம் கொடுக்கிறார்கள். எனவே, விவேகானந்தர் அமெரிக்காவுக்குச் சென்றாரென் றால் அங்கிருந்து இலவசமாக உதவி பெற்றுக்கொண்டு வருவதற் காக அல்ல. ஆத்ம ஞானத்தை அவர்களுக்கு அளித்துவிட்டு, அதற்கு ஒரு சிறு பிரதியாகவே, இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கான சில உதவிகளைப் பெற்றுக் கொண்டு வந்தார். ஆம், அழியாச் செல் வத்தைக் கொடுத்துவிட்டு அழியுஞ் செல்வத்தை வாங்கிக் கொண்டு வந்தார். 5. காந்தி ஏன் ஒரு விவசாயி? காந்தி, மேனாட்டு நடனம் முதற்கொண்டு எல்லாம் தெரிந்தவர். நியாயவாதியாக இருந்து ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர். இன்றைய நாகரிகம் என்று எதைச் சொல்லுகிறோமோ அதன் பல கூறுகளையும் நன்றாக அனுபவித்தவர். ஆங்கில பாஷையை, அதன் கம்பீரமும் அழகும் குன்றாமல் எழுதுவதிலும் பேசுவதிலும் இவருக்கு ஒப்பாரும் மிக்காரும் உலகத்திலேயே ஒரு சிலர்தான் இருக்கின்றனர் என்பதை ஆங்கில அறிஞர்கள் அனைவரும் அங்கீ கரித்துக் கொண்டிருக்கின்றனர். உலகத்திலேயே மிகச் சிறந்த கிறிதுவராக ஒரு ஹிந்து இருக்கிறார்: அவர்தான் காந்தி என்று கிறிதுவர்கள், தங்களிலே ஒருவராகக் காந்தியைக் கொண்டாடு கிறார்கள். நான், ரோமெய்ன் ரோலாந்தைப் பற்றி நினைக்கிற போது டால்டாயின் ஞாபகம் வருகிறது: லெனினைப்பற்றி நினைக்கிற போது நெப்போலியனுடைய ஞாபகம் வருகிறது: ஆனால் காந்தியைப் பற்றி நினைக்கிறபோது யேசுகிறிதுவின் ஞாபகம் வருகிறது என்று அமெரிக்கப் பாதிரியான ஜே. எச். ஹோம் என்பவர் கூறுகிறார். இங்ஙனம் எல்லாம் தெரிந்த, எல்லோராலும் தங்கள் தங்களுடையவரென்று கொண்டாட்டப் பெறுகின்ற காந்தி, தம்மை என்னவென்று அழைத்துக் கொள்கிறார்? நான் ஒரு விவசாயி; எனது தொழில் நெசவுத் தொழில் என்று சொல்லிக் கொள்கிறார். இங்ஙனம் இவர் தம்மை ஒரு விவசாயி என்றும் நெசவுத் தொழிலாளி என்றும் சொல்லிக்கொள்வதன் நோக்கமென்ன? உலகத்திலே மற்றவர்களுக்காக வாழ்கின்ற மகா புருஷர்கள் அத்தனைபேரும் எவ்விதமான கட்டுப்பாடுகளுக்கும் தங்களை உட்படுத்திக் கொள்ளச் சம்மதிக்கிறார்களில்லை; சுதந்திரமான வாழ்க்கையை நடத்தவே விரும்புகிறார்கள். தங்களுடைய ஜீவனோபாயத்திற்காக, சுதந்திரமாயுள்ள ஒரு தொழிலில் ஈடுபடு கிறார்கள். அப்படி ஈடுபடுகிற போது ஏதேனும் கஷ்ட நிஷ்டூரங்கள் ஏற்பட்டால் அவற்றைப் பொறுமையோடு சகித்துக் கொள் கிறார்கள். அவர்களுக்கு முக்கியமான தேவை சுதந்திர வாழ்க்கையே. உலக ரீதியாகப் பார்க்கிறபோது சுதந்திர வாழ்க்கை நடத்து கிறவர்களுக்கு அதிகமான செல்வம் கிடைக்காமலிருக்கலாம்; பட்டம் பதவி முதலியன கிட்டாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளத்திலே வீரமும் ஈரமும் எப்பொழுதும் நிறைந்திருக்கும். அவர்கள் நமனுக்கஞ்சார்; தம்பிணியறியார்; யாருக்கும் பணியார். ஆனால் பொய்மைக்கு அஞ்சுவார்; பிறர் பிணிகளை நன்கறிவார். அடக்கமே அவர் அணிகலன். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் உலகத்திற்கு அடிமைகளல்லர்; உலகத்தை அடிமையாகக் கொண்ட வர்கள். சுதந்திர வாழ்க்கை நடத்துகிறவர்களால்தான் நல்ல சிருஷ்டி களைச் செய்ய முடியும். தங்களுடைய சந்தோஷத்திற்காக அவர்கள் ஏதொன்றினையும் சிருஷ்டிப்பதில்லை; மற்றவர்களுடைய நன்மைக் காகவே சிருஷ்டி செய்கிறார்கள். அந்தச் செய்கையில்தான் அவர்கள் இன்பம் நுகர்கிறார்கள்: அதன் பலனில் அல்ல. அவர்கள் ஆடம் பரத்தை வெறுக்கிறார்கள்; இயற்கை வாழ்விலே இனிமையைக் காண்கிறார்கள்; இவைகளுக்கெல்லாம் அனுகூலமாயிருக்கிற முறையிலேயே தங்கள் ஜீவனோபாயத்தைத் தேடிக்கொள்கிறார்கள். சாதாரணமாக நாம் பார்க்கலாம், மானிட ஜாதியின் எண்ணப் போக்கில் யாரார் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணியிருக்கிறார்களோ அவர்களெல்லோரும் ஏதேனும் சுதந்திரமான ஒரு தொழிலைத் தங்களுடைய ஜீவனோபாயமாகக் கொண்டிருப்பதை. அந்தத் தொழில் பிறருக்கு உபகாரமாக இருக்கிற தொழிலாக இருக்குமே தவிர யாரையும் சுரண்டுவதாயிராது; யாருடைய தயவையும் எதிர்பார்ப்பதாயிராது. தாங்கள் செய்கிற சிருஷ்டிக்கோ அல்லது மற்ற நற்காரியங்களுக்கோ, தாங்கள் மேற்கொண்டிருக்கிற தொழில் ஒரு சாதனம் என்றே அவர்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்குத் தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; அதில் ஈடும்படு கிறார்கள். தனது அறியாமையை அறிந்து கொண்டிருந்த அறிஞனாகிய ஸாக்ரடீ (கி.மு. 470-399) ஒரு சிற்பி. அரிடாட்டல் (கி.மு. 384-322) ஒரு வைத்தியன். கலீலியோ (1564-1642) என்ற வான சாதிரி ஒரு கணித ஆசிரியன். கார்ல் மார்க் (1818-1883) ஒரு பத்திரிகாசிரி யன். திருவள்ளுவர் நெசவுத் தொழில் நடத்தி ஜீவனம் செய்து வந்தார். ராம நாடகம் பாடிய அருணாசலக் கவிராயர் மளிகைக் கடை வைத்திருந்தார். மனிதனுக்கு முதல் தேவை உணவு. இரண்டாவது உடை. பிறகுதான் அறிவு, ஆத்மா முதலியனவெல்லாம். உலகத்திற்கு உணவை வழங்கு கிறவன் விவசாயி; உடையை வழங்குகிறவன் நெசவுத் தொழிலாளி. முன்னவன், பட்டினியைப் போக்குகிறான்; பின்னவன் மானத்தை மூடுகிறான். இவை இரண்டுமே உலகத்தில் சிறந்த தொழில்கள் என்பது அறிஞர்கள் துணிபு. இந்த இரண்டு தொழில்களிலும் அடிமை நாற்றமே கிடையாது; சுதந்திர மணம் எப்பொழுதும் கமழ்ந்து கொண்டிருக்கிறது. உழுதுண்டு வாழ்வதுதான் உயர்ந்த வாழ்வு; சுதந்திர வாழ்வு. உழவரையொட்டியே உலகம் இயங்குகிறது. உழுவார் உலகத் தார்க்கு ஆணி அஃது ஆற்றாது, எழுவாரையெல்லாம் பொறுத்து என்பது திருக்குறள். உலகமென்னும் தேருக்கு அச்சாணி போன்ற வர்கள் விவசாயிகள். இவர்களைத்தான், ஒரு ராஜ்யத்தின் உரிமை யுள்ள பிரஜைகள் என்று சொல்லவேண்டும். இந்தியா ஒரு விவசாய நாடு என்றும், இந்திய நாகரிகம், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் சொல் கிறார்கள். இதன் கருத்து என்ன? இந்தியர்கள் சுதந்திரமான ஒரு தொழிலை தங்கள் ஜீவனோபாயமாகக் கொண்டிருந்தார்க ளென்பதும், சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நாகரிகமே இந்தியர்களுடைய நாகரிக மென்பதுமே அர்த்தம். இன்றைய யந்திர நாகரிகத்தின் கீழ், முதலாளி நாகரிகத்தின் கீழ், விவசாயத்திற்கு மதிப்பு இல்லாமல் போயிருக்கலாம்; இதன் சுதந்திரத் தன்மையை யாரும் உணராமலிருக்கலாம். ஆனால் உலகத்தில் நிரந்தரமான சாந்தி நிலவ வேண்டுமானால், விவசாயத்தை யாரும் கௌரவித்தே ஆகவேண்டும். விவசாய நாகரிகந்தான் இயற்கை நாகரிகம். இந்த நாகரிகத்தின் கீழ்தான் மனிதனாகப் பிறந்தவன், மனிதனாக வாழ முடியும். இந்த விவசாய நாகரிகத்தின் பிரதிநிதியாகவே இன்று காந்தி விளங்குகிறார். இதனாலேயே இவரைத் தங்களுடைய பிரதிநிதி என்று இந்திய மகாஜனங்கள் கொண்டாடுகிறார்கள். படித்தவர்களென்ற அகந்தையோடிருக்கிறவர்கள், விவசாய ஜனங் களைப் பார்த்து, பாமர மக்களென்றும், படிப்பு வாசனை யில்லாதவர் களென்றும் அலட்சியமாகப் பேசுகிறார்கள்; அவர் களைக் கை தூக்கிவிடப் போவதாகச் சொல்லிக் கொண்டு முன் வருகிறார்கள். என்ன பேதமை! பாமர ஜனங்களாகிய விவசாயிகள் கள்ளங்கபடில்லாதவர்கள்; விசாலமன முடையவர்கள்; அனுபவ ஞானம் நிறைந்தவர்கள். அவர்கள், தங்களிலே ஒருவராகக் காந்தியைக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் தெரியுமா? அவர்களிலே ஒருவராகத் தம்மை கருதிக் கொண்டிருக்கிறார் காந்தி. படித்தவர்கள் என்று மேலே சொன்னோமே அவர்கள், காந்தி உபதேசிக்கிற சத்தியம் அஹிம்ஸை முதலியவைகளைப் பற்றி வாய் நிறையப் பேசுகிறார்கள்; கணக்கற்ற நூல்களைப் படிக்கிறார்கள். அவ்வளவு தான். ஆனால் பாமர ஜனங்களென்று அநுதாபத்தோடு அழைக்கப்படுகிற இந்த விவசாயிகளோ, சத்தியத்தையும் அஹிம் ஸையையும் வாழ்ந்து காட்டுகிறார்கள். இவர்களைப் பின்பற்றி நடக்க வேண்டுமென்று, நகரவாசி களுக்கு, அதாவது படித்தவர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கிறவர்களுக்கு, காந்தி உபதேசம் செய்கிறார்: இளைஞர்கள், நகரவாசத்தைவிட கிராம வாசத்தையே தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும். இந்தியர் களாகிய நாம் கிராம நாகரிகத்தின் வார்சுதாரர்கள். நமது நாட்டின் விதீரணம், அதிக ஜனத் தொகை, சீதோஷ்ண திதி முதலிய நிலைமைகள் யாவும் சேர்ந்து நம்மைக் கிராம நாகரிகத்திற்கே தகுதியுடையவர்களாக்கியிருக்கின்றன. இந்த நாகரிகத்தில் சில குறைபாடுகள் இருக்கின்றனவென்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். இவைகளைக் களைய நாம் முயல வேண்டுமே தவிர, இந்த நாகரிகத்தையே அடியோடு தவிர, இந்த நாகரிகத்தையே அடியோடு அப்புறப்படுத்தி விடுவதென்பது அசாத்தியமான காரியம். இன்னொரு விஷயம். நாம் யாரை கைதூக்கிவிட வேண்டு மென்று ஆசைப்படுகிறோமோ அவர்களை, அவர்களுடைய நிலைமையிலிருந்தே அணுக வேண்டும். உள்ளத்திலும் சரி, உடை யிலும் சரி, அப்பொழுதே அவர்கள் நம் வயப்படுவார்கள்; நாம் சொன்னதைக் கேட்பார்கள். அவர்களை நாம் முன்னேற்ற மார்க்கத் தில் அழைத்துச் செல்ல முடியும். காந்தி, செல்வாக்குப் பெற்றிருப் பதன் ரகசியம் என்னவென்றால் இவர், ஏழை நெஞ்சோடு ஏழை களை அணுகுகிறார். விவசாயிகளுக்கு இவர் ஒரு விவசாயி; தொழி லாளர்களுக்கு ஒரு தொழிலாளி. அவர்களுடைய கல்மஷமற்ற மனமும், காந்தியின் அன்பு நிறைந்த உள்ளமும் ஒன்றுகூடிப் பேசுகின்றன. இவரை, அந்த விவசாயிகளும் தொழிலாளிகளும் நம்புகிறார்கள்; இவர் காட்டுகிற வழியைப் பின்பற்றிச் செல்லச் சித்தமா யிருக்கிறார்கள். விவசாயத்தையும் நெசவுத் தொழிலையும் இந்தியர்களாகிய நாம் புறக்கணித்து விடுவோமானால் இந்திய ஜாதியே அழிந்து போய்விடும் என்பது காந்தியின் கருத்து. வேத காலத்திலிருந்து இந்தியர்கள் இந்த இரண்டு தொழில்களையும் அதிகமாகப் போற்றி வந்திருக்கிறார்கள். விவசாயத்திற்கு எவ்வித இடையூறும் ஏற் படாமல் அதனைப் பாதுகாத்து வருவது அரசனுடைய முக்கிய மான கடமைகளில் ஒன்று என சாணக்கியன் தனது அர்த்த சாதிரத்தில் குறிப்பிடுகிறான். இப்படிப் பரம்பரையாக வந்து கொண்டிருக்கிற இந்த ஜீவனோபாயத்தை நாம் அலட்சியப்படுத்தி விட்டோமானால் நம்முடைய நாகரிகத்தையே நாம் அலட்சியப் படுத்தியவர்களாவோம். அது, நம்மையே நாம் அலட்சியப்படுத்திக் கொண்டதாகுமல்லவா? தன் மதிப்பு இழந்தவன், உலகத்தில் மதிப்புடன் வாழ முடியாதென்பது வெள்ளிடை மலை. இதையே காந்தி பல சமயங்களிலும் வற்புறுத்திக் காட்டுகிறார். நூல் நூற்றலும் நெசவு நெய்தலும், விவசாயத்தைப் போலவே நமது நாகரிகத்தின் முதற் குழந்தை. இதனாலேயே காந்தி, விவசாயத்தையும் நெசவையும் ஒன்றோடொன்று ஐக்கியப்பட் டிருக்கிற இரட்டைத் தொழில்கள் என்று குறிப்பிடுகிறார். முற் காலத்தில், அந்நிய ஆதிக்கம் நமது நாட்டில் ஊர்ஜிதமாவதற்கு முன்னர், ஒவ்வொரு வீட்டிலும் கைராட்டினம் இருந்து கொண் டிருந்தது. பெண்கள் நூற்பார்கள்; ஆண்கள் நெய்வார்கள். அது மட்டுமல்லாமல், கைராட்டினமானது, மனதைத் தூய்மைப் படுத்துவதற்கும் ஒரு முகப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த சாதனம் என்று காந்தி அடிக்கடி வற்புறுத்தி வருவதைக் கேட்டுச் சில இளைஞர்களுக்குச் சலிப்புக் கூடத் தட்டியிருக்கலாம். ஆனால் இவர், அதன் மூலமாகக் கடவுளையும் காண முடியும் என்ற உறுதியோடு பேசுகிறார்; உலகத்திற்கு உயர்வு அளிக்கப்போவது இந்தக் கைராட்டினந்தான் என்று கூறுகிறார். மகா யுத்தத்திற்குப் பிறகு உலகம் சலித்துப் போயிருக்கிறது. இன்றைய தினம் இந்தியா வுக்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருக்கிற இந்தக் கைராட்டினம், நாளைய தினம் உலகத்திற்கே ஆறுதலையளிக்க கூடும். ஏனென்றால் இஃது அதிகமான பேருக்கு அதிகமான நன்மையைச் செய்வ தென்பதில்லாமல், எல்லாருக்கும் அதிகமான நன்மையைச் செய்யக் கூடியதாயிருக்கிறது.....பிரகலாதன் எப்படி ராமனை எங்குமே பார்த்தானோ, துளசி தாஸர் எப்படி கிருஷ்ண விக்ரகத்தில் கூட ராமனையே பார்த்தாரோ, அப்படியே சர்க்காவின் தத்துவங்களை அறியக் கூடிய வழியிலேயே உங்கள் படிப்பெல்லாம் செல்லட்டும் என்று மாணக்கர்களுக்கு ஒரு சமயம் உபதேசித் திருக்கிறார். இலங்கை இளைஞர்களுக்குச் செய்த ஒரு பிரசங்கத்தில், கைராட்டினத்தில் கடவுளின் திருக்கரம் வேலை செய்வதை நான் காண்கின்றேன். ஏனென்றால் மனிதவர்க்கத்திலே மிக மிகச் சாதாரணமா யுள்ளவர்களுடைய தேவைகளையும் இந்தக் கை ராட்டினம் பூர்த்தி செய்விக்கிறது. இதனாலேயே எப்பொழுதும் இதில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இதனைப் பிரார்த் திக்கிறேன்; இதனைப் பற்றி எங்கும் பேசுகிறேன் என்று கூறுகிறார். கடவுள் நெறியில் கைகாட்டி அழைத்துச் செல்லும் கருவி யாகக் கைராட்டினம் இருக்கிறதென்று சொல்லும் விஷயத்தில் காந்தியே முதல்வரல்ல. இவருக்கு முன்னாடியே விவேகானந்தர், இந்தக் கைராட்டினத்தைப் பற்றி என்ன கூறியிருக்கிறார் என்பதைக் கேளுங்கள்: கைராட்டினம் சுழற்றும் கிராமப் பெண் என்ன சொல்கிறாள்: என்னிடத்தில், கடவுள் வேறு நான் வேறு என்ற துவைத பாவனையில் பேசாதீர்கள். ஏனென்றால் நான் சுழற்றிக் கொண்டிருக்கிற இந்தக் கைராட்டினம், ஸோஹம், ஸோஹம், அதாவது அவனே நான், அவனே நான் என்று சொல்லிக்கொண்டே யிருக்கிறது. இந்த யந்திரங்கள், இந்த விஞ்ஞான சாதிரங்கள் முதலியவற்றினால் என்ன பிரயோஜனம்? இவைகளினால் அறிவு பரவுகிறதே அஃதொன்றுதான். ஜனங்களுடைய தேவையை இன்னும் நீங்கள் பூர்த்தி செய்யவில்லை. அதற்குப் பதிலாக அந்தத் தேவைப் பிரச்னையை இன்னும் அதிகமாக்கி விட்டீர்கள். யந்திரங் களினால் வறுமை தீரவே தீராது. அதற்கு மாறாக மனிதர்கள், அந்த யந்திரத்தின் காரணமாக, இன்னும் அதிகமாகப் போராடவே வேண்டியிருக் கிறது. போட்டி அதிகமாகிறது. ஒரு பொருள், எந்த அளவுக்குக் கடவுளைப் பிரத்தியட்சப் படுத்திக் காட்டுகிறதோ அந்த அளவைக் கொண்டே அதன் மதிப்பை நிர்ணயிக்க வேண்டும். எனவே, மனிதனுடைய புற வாழ்வு செம்மையுற நடைபெறு வதற்கு விவசாயமும், அகவாழ்வு பண்புற அமைவதற்கு நூற்றலும் நெசவும் துணை செய்கின்றன. இதனாலேயே இவையிரண்டையும் நாகரிகச் சின்னங்களாகக் கொண்டார்கள் நமது முன்னோர்கள். காந்தி, நமது நாகரிகத்தின் பிரதிநிதி. இதனாலேயே மேற்சொன்ன இரண்டையும், அதாவது விவசாயத்தையும் நூல் நூற்றலையும், அதிகமாக வற்புறுத்துகிறார். தம்மை ஒரு விவசாயி என்றும் நெசவாளி என்றும் சொல்லிக் கொள்கிறார். இந்திய மகாஜனங்கள் இவரைப் போற்றிப் பின்பற்றுவதில் என்ன ஆச்சரியம்? உலகத்திலுள்ள சர்வ மகா ஜனங்களும், காந்தியை, தங்களிலே ஒருவராக, தங்களுக்கு வழி காட்டும் நாயகராகக் கொண்டாடுவதன் ரகசியமும், இவர், தம்மை ஒரு விவசாயி என்றும் தொழிலாளி என்றும் சொல்லிக்கொள்வதுதான். எப்படியென்றால், உலகத்தில் பெரும்பான்மை யோர் விவசாயிகளும் தொழிலாளிகளுமாவர். இவர்கள், உழைத்துப் பிழைக்கிறவர்கள்; அற்ப சொற்பமான வருமானத்தைக் கொண்டு அன்றாட ஜீவனத்தை நடத்துகிறவர்கள். இவர்களுடைய சுக துக்கங்களை யார் தங்களுடைய சுக துக்கங் களாகக் கருதுகிறார்களோ அவர்களையே இவர்கள் தங்கள் தெய்வமாகப் போற்றுகிறார்கள். தங்களால் எட்டிப்பிடிக்க முடியாத தெய்வத்தை இவர்கள் எட்டவிருந்து பார்த்துவிட்டு, தங்களோடு உறவாடுகிற, தங்களுடைய உணர்ச்சிகளிலே கலக்கிற வர்கள் யாரோ அவர்களையே இவர்கள் பின்பற்றுகிறார்கள். இந்த மனப்பான்மையிலே இருக்கும் இவர்கள், காந்தியை, அவருடைய உடையினாலும், உணவு கொள்ளுதல் முதலிய பழக்க வழக்கங் களினாலும் தம்மிலே ஒருவராகக் கருதிக்கொண்டுவிடுகிறார்கள். காந்தி, வட்டமேஜை மகாநாட்டை முன்னிட்டு 1931ஆம் வருஷம் லண்டன் சென்றிருந்த காலத்தில், ஏழை மக்கள் வசிக்கும் கிழக்குப் பகுதியிலேயே தங்கியிருந்தார். அங்கு வசித்தவர்கள் அத்தனை பேரும் தங்களிலே ஒருவர் வந்திருப்பதாக உணர்ந்தார்கள். அவர்கள் மத்தியில் காந்தியும் மனோ நிம்மதியுடன் இருந்தார். உலகத்திலே கீழான வகுப்பு என்று ஒரு வகுப்பு இருக்கு மானால் அதில் நான் ஒருவன்; குற்றவாளி என்று மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்களானால் அந்தக் குற்றவாளிகளில் நான் ஒருவன்; சிறையில் ஓர் ஆத்மா இருக்கிறவரையில் நான் சுதந்திர புருஷனல்ல என்று மேனாட்டு அறிஞன் ஒருவன் கூறுகிறான். காந்தி, இந்த வாசகத்தை வாழ்ந்து காட்டுகிறார். 6. இரண்டு சக்திகள் காந்தியும் விவேகானந்தரும் சாதாரண இரண்டு மனிதர்களாக நமக்குக் காட்சியளிக்கிறார்கள் என்பது வாதவம். ஆனால் உண்மையில் இவர்கள் இரண்டு சக்திகள்; இரண்டு தாபனங்கள். இருவரிடமிருந்து இரண்டு இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. ஒன்று காந்தீயம்; மற்றொன்று ராமகிருஷ்ணர் இயக்கம். இரண்டும் இந்தியாவிலே தோன்றி, உலக முழுவதிலும் பரவியிருக்கின்றன. இந்த இயக்கங்களில் சம்பந்தப்பட்டவர்கள், வாழ்க்கையை ஒரு புதிய கோணத்திலிருந்து பார்க்கிறவர்கள்; தங்களுக்கென்று ஒன்று மில்லாதவர்கள்; ஆனால் உலகத்தையே தங்கள் குடும்பமாகக் கொண்டவர்கள். இவர்கள் வாழ்க! காந்தி, ஒரு மகாத்மா. யாரொருவருடைய இருதயத்தி லிருந்து ஏழைகளுக்காக ரத்தம் வடிகிறதோ, அதாவது, யார் ஏழை களுடைய துன்பத்தைத் தங்களுடைய துன்பமாகக் கருதுகின் றனரோ அவர்தான் மகாத்மா; இல்லாவிட்டால் அவர் துராத்மா என்பது விவேகானந்தர் வாக்கு. விவேகானந்தர் ஒரு துறவி. துறவு என்பது என்ன? காந்தி கூறுகிறார்: செயலில், செயலின் மூலமாகத் துறவு காண வேண்டும். செயலைத் துறந்து விடவேண்டுமென்பதல்ல. ஏனென்றால், உயிர் வாழ்க்கைக்குச் செயல் இன்றியமையாதது. எனவே, எவ்வித பற்றுமின்றி, செயல் செய்து கொண்டிருப்பது தனது கடமை யென்று கருதிச் செயலைச் செய்து கொண்டு போகிறவனே துறவி. மகாத்மா தன்மைக்குத் துறவி லட்சணங் கூறியிருக்கிறார். அப்படியே துறவுக்கு மகாத்மா லட்சணங் கூறியிருக்கிறார். இருவரும் சேர்ந்து இந்தியாவின் லட்சியம் என்னவென்பதை உலகத்திற்கு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இருவரும் இந்தியாவை ஒரு தொகுப்பாகவே பார்க்கிறார்கள். பாஷை வித்தியாசம், மாகாண வித்தியாசம் முதலிய வித்தியாசங்கள் இவர்கள் மனத்தில் எழுவதேயில்லை. அப்படியே இவர்கள் மதம் வேறு, வாழ்க்கை வேறாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. மனிதர்களி லும், ஏழையென்றும் பணக்காரரென்றும், உயர்ந்தவரென்றும் தாழ்ந்தவ ரென்றும் வித்தியாசம் பார்ப்பதில்லை. இவர்கள் எல்லாவற்றையும் கடவுள் மயமாகவே காண்கிறார்கள். இருவரும் வெளிப்பார்வைக்குச் சுலபத்தில் அணுக முடியாத வர்கள் போல் காணப்படுகிறார்கள். ஆனால் குழந்தைகள் கூட இவர்களிடத்திலே தாராளமாகப் பழகுகின்றன. ஏனென்றால் இவர்கள் குழந்தை உள்ளம் படைத்தவர்கள். அதனால் கபடமின்றி உரக்கச் சிரிக்கிறார்கள்; கலகலத்துப் பேசுகிறார்கள். இவர்கள் பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வது சகஜம். துறவி பேசுகிறபோது, அணையை உடைத்துக் கொண்டு ஆற்று வெள்ளம் புரண்டோடுவதைப் போலிருக்கும். மகாத்மா பேசுகிற போது, அடங்கியிருக்கும் ஓர் எரிமலை, தன் உள்ளிருந்து நிதான மாக நெருப்புத் துண்டங்களை மேலே வீசி எறிவது போலிருக்கும். இருவருடைய பேச்சுக்களும் கேட்பவர்களுடைய உள்ளத்தைத் திறந்துவிடும். அந்த உள்ளத்திலிருக்கும் கோழைத்தனம், மந்தம் முதலிய மாசு மறுக்கள் யாவற்றையும் கரைத்தும் எரித்தும் விடும். இருவரும் பகைவருக்கு அருளும் நெஞ்சமுடையவர்கள். அந்த நெஞ்சத்தில் வன்மம் என்பது இம்மியளவும் காண முடியாது; அன்புதான் துளிர்த்துக் கொண்டிருக்கும். காந்தி, தென் னாப்பிரிக்காவில் சத்தியாக் கிரகப் போர் நடத்திக் கொண்டிருந்த போது அரசாங்கச் சார்பில் இவருக்கு எதிரியாயிருந்தவர், தளபதி மட் என்பவர். இவர், சட்டத்தையும் அமைதியையும் காப்பாற்றுகிற தமது பொறுப்பை முன்னிட்டுக் காந்தியைச் சிறையிலே வைத்தார். தம்மைச் சிறையிட்டவருக்கு காந்தி என்ன பிரதி செய்தார்? சிறையிலிருந்த போழ்து என்னுடைய (மட்ஸி னுடைய) உபயோகத்திற்கென்று ஒரு ஜதை மிதியடிகளைத் தயாரித்து, விடுதலையானவுடன் அவற்றை எனக்குச் சன்மானமாக அளித்தார்! அதனை அநேக காலம் வரை நான் உபயோகித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த மகானால் தயாரிக்கப்பட்ட மிதியடிகளின்மீது நான் நிற்கத் தகுதியுடையவனல்லன் என்ற உணர்ச்சி மட்டும் எனக்கு இருந்து கொண்டேயிருந்தது. இந்த இடத்தில் காந்தியின் சான்றாண்மைக் குணம் சிறந்து விளங்குகிறது. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு! விவேகானந்தருடைய சுபாவமும் இப்படித்தான். இவர் உள்ளத்தில் வன்மம் என்பது அணுவளவும் கிடையாது. இவரை யாராவது தூஷித்தால் சிவ, சிவ என்பார். உடனே முகத்தில் புன்சிரிப்புத் தவழும். அப்படி என்னைத் தூஷித்ததும் கடவுள் வாக்குத் தானே என்பார். பக்கத்திலிருக்கிற சிஷ்யர்களுக்கு, இவருடைய இந்த சாந்த சுபாவத்தைக் கண்டு சிறிது கோபங்கூட உண்டாகும். அப்பொழுது இவர் சிஷ்யர்களுக்கு தூஷிக்கிற வனும் தூஷிக்கப்படுகிறவனும், புகழ்கிறவனும் புகழப்படுகிறவனும் எல்லோரும் ஒன்றே என்று உணர்ந்து கொண்டு விட்டோமே யானால் நமக்குக் கோபமே வராது என்று சாந்தமாகப் பதிலளிப்பார். எவ்வளவு உயர்ந்த மனோ நிலை! இருவரும் குழந்தை உள்ளம் படைத்தவர்களானாலும், தமக்கு ஊறு செய்ய வந்தவர்களை மன்னித்துவிடுகிற கருணை யுடையவர் களானாலும், பொய்மை, போலித்தனம், கோழைத்தனம் முதலியவை களைக் கண்டிக்கிற விஷயத்தில் சிறிது கூடத் தயை தாட்சண்யம் காட்டாதவர்கள். உள்ளதை உள்ளபடி சொல்வதில் சிறிதும் பின் வாங்கார்; யாருக்கும் அஞ்சார்; எதற்கும் அஞ்சார். ஒரு சமயம் விவேகானந்தர், மைசூர் மன்னரான ஸ்ரீ சாம ராஜேந்திர உடையாரின் விருந்தினராகத் தங்கியிருந்தார். அமெரிக்கா சென்று பிரசித்தியடையாத காலம் அது. ஒருநாள் மன்னர், தமது ஆதானிகர் களுடன் அத்தாணி மண்டபத்தில் கொலுவீற்றிருந் தார். விவேகானந்தரும் கூட இருந்தார். அரசர், இவரைப் பார்த்து சுவாமி! என்னுடைய ஆதானிகர்களைப் பற்றித் தங்களுடைய அபிப்பிராயம் என்ன? வென்று கேட்டார். விவேகானந்தர் பதில் கூறினார்: நல்லது அரசே! உங்களுக்கு நல்ல மனம் இருக்கிறது. ஆனால் துரதிருஷ்ட வசமாக உங்களை ஆதானிகர்கள் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதானிகர்கள் எங்கும் ஆதானிகர்கள் தானே? இதைக் கேட்ட அரசர் திகைத்துப் போனார்; ஆதானி கர்கள் ஆத்திரமடைந்தார்கள். ஆயினும் யார் என்ன செய்ய முடியும்? பின்னர், மகாராஜா, விவேகானந்தரைத் தமது தனியறைக்கு அழைத்துக்கொண்டு போய் சாந்தமாகச் சில வார்த்தைகள் கூறினார்: சுவாமி! இந்த மாதிரி கொஞ்சங்கூட ஒளிமறைவின்றி மனதில் தோன்றியதை அப்படி அப்படியே சொல்வீர்களாயின் தங்களுடைய உயிருக்கே ஆபத்து உண்டாகக் கூடும். தங்களை விஷமிட்டுக் கொன்றுகூட விடுவார்கள். இந்த மாதிரி அநேக சாதுக் களுக்கு நடந்திருக்கிறது. உடனே விவேகானந்தர், என்ன, என்ன! யோக்கியமான ஒரு சந்நியாசி, உண்மையைச் சொல்ல பயப்படுவான் என்று நினைக்கிறீர்களா? அதனால் அவனுக்கு என்ன தீங்குகள்தான் நேரிடட்டுமே, உயிர்தான் போகட்டுமே, சத்தியத்தினின்று பிறழவே மாட்டான். நாளைய தினமே உங்களுடைய மகன் என்னிடம் வந்து ‘என்னுடைய தகப்பனாரைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது, உங்களிடத்திலே யில்லாத நற்குணங்களெல்லாம் உங்களிடத்திலே இருப்பதாகச் சொல்லலாமா? நான் அப்படிப் பொய் சொல்வதா? முகதுதி செய்வதென்பது ஆதானிகர்களுடைய வேலை. உண்மையைப் பேசுவது சந்நியாசிகளின் வேலை என்று கர்ஜித்தார். அரசர் ஒன்றும் சொல்ல முடியாமல் அடங்கிவிட்டார். ஆனால் இதே அரசரைப் பற்றிப் பிற்காலத்தில் விவேகானந்தர் எவ்வளவு புகழ்ந்திருக்கிறார்! எவ்வளவு மரியாதை கொடுத்துப் பேசியிருக்கிறார்! இன்னோர் உதாரணம். விவேகானந்தர் வடஇந்தியாவிலுள்ள ஆள்வார் சமதானத்தில் யாத்திரை செய்துகொண்டிருந்தபோது, அரசருடைய தொடர்பு ஏற்பட்டது. அரசனும் ஆண்டியும் நெருங்கிப் பழகினார்கள். ஒருநாள் அரசர், சுவாமி! தாங்கள் பெரிய பண்டிதர் என்று கேள்விப்படுகிறேன். மாதந் தோறும் நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டு சுகமாக இருக்கலாமே! ஏன் இப்படி பிட்சை யெடுத்துக்கொண்டு அலைய வேண்டும்? என்று கேட்டார். உடனே விவேகானந்தர், மகாராஜா! நீங்கள் ஏன் ராஜ்யத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விட்டு உங்களுடைய நேரத்தையெல்லாம் வெள்ளைக்காரர்களுடன் கூடிக்கொண்டு வேட்டை யாடுவதில் கழிக்கிறீர்கள்? என்று பதில் கேள்வி கேட்டார். பக்கத்திலிருந்தவர்கள் பிரமித்துப் போனார்கள். ஆனால் மகாராஜா அந்த வார்த்தைகளைப் புன்சிரிப்போடு வாங்கிக் கொண்டு நிதானமாக ஏன் இப்படிச் செலவழிக்கிறேன் என்பதற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால் இப்படிச் செலவழிப்பதை நான் விரும்புகிறேன் என்றார். நான் கூட அதே காரணத்திற்காகத்தான் சந்நியாசியாகத் திரிகிறேன் என்றார் விவேகானந்தர். இந்த ஆள்வார் மன்னருக்கும் விவேகானந்தருக்கும் இன்னொரு நாள் விக்கிரக ஆராதனையைப் பற்றி விவாதம் நடைபெற்றது. மகாராஜா, மண்ணையும் கல்லையும் உருவங்களாகச் சமைத்து அவைகளிலே கடவுள் இருப்பதாகச் சொல்லிக் கும்பிட்டு விழுவதை ஏளனம் செய்து, விக்கிரக ஆராதனையில் தமக்குச் சிறிதுகூட நம்பிக்கையில்லை யென்று தெரிவித்துக் கொண்டார். இதை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் விவேகானந்தர். அங்கே சுவரில் அரசருடைய பெரிய படம் ஒன்று மாட்டப் பட்டிருந்தது. அந்தப் படத்தை எடுத்துக் கொண்டு வரும்படிச் சொன்னார் விவேகானந்தர். அப்படியே படம் கொண்டுவரப்பட்டது. பக்கத்திலிருந்த திவானைக் கூப்பிட்டார் விவேகானந்தர். இது யாருடைய படம்? எங்கள் அரசருடைய உருவம் வரைந்திருக்கிற படம். இதன் மீது காரி உமிழுங்கள். இங்குள்ளவர் யார் வேண்டு மானாலும் இதன்மீது எச்சில் துப்பலாம். இஃதென்ன ஒரு காகிதந் தானே? உங்களுக்கென்ன ஆட்சேபம்? அரசருக்கும் அவர் பரிவாரங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. மறுபடியும் வற்புறுத்தினார் விவேகானந்தர். திவான் சொன்னார்: என்ன சுவாமி இது? எங்களுடைய மகாராஜாவின் உருவமல்லவோ இதில் இருக்கிறது என்றார். விவேகானந்தர், வாதவம். ஆனால் மகாராஜர், சதையும் ரத்தமுமான உடலோடு இதில் இருக்கவில்லை. இதில் அவருடைய நிழல்தான் இருக்கிறது. மகாராஜாவைப் போல் இது பேசுவதுமில்லை; அசைவது மில்லை. ஆனாலும் இதன் மீது எச்சில் துப்பினால், உங்கள் மகாராஜாவை அவமானப்படுத்தியதாக நீங்கள் நினைக்கிறீர்கள். இதைப் போல்தான் விக்கிரக ஆராதனையும். கடவுளின் சாயல், அவரவர் வழிபடும் உருவங்களில் இருப்ப தாக பக்தர்கள் நினைக்கிறார்கள் என்று சொல்லி முடித்தார். என்ன தைரியம்! துறவிக்கு வேந்தன் துரும்பு! 1916ஆம் வருஷம் ஸ்ரீ காசியில் ஹிந்து சர்வ கலாசாலையின் கால் கோள் விழா நடைபெறுகிறது. ராஜப் பிரதிநிதியான லார்ட் ஹார்டிஞ்சும், மற்றச் சுதேச மன்னர்களும் ஆடம்பர கோலத்துடன் வீற்றிருக்கிறார்கள். அப்பொழுது காந்திக்குப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்ன சொன்னார்? நேற்றைய தினம் நமது கூட்டத்திற்குத் தலைமை வகித்த மகாராஜர், இந்தியாவின் ஏழ்மை நிலையைப் பற்றிக் கூறினார். மற்றவர்களும் இதை வலியுறுத்திச் சொன்னார்கள். ஆனால் இங்கே நாம் என்ன காண்கிறோம்? ஆடம்பரமான காட்சி! பாரிஸிலிருந்து ஒரு நகை வியாபாரி வந்தால், அவனுடைய கண்களுக்கு விருந் தளிக்கக் கூடிய மாதிரி, எல்லோரும் சிறந்த ஆபரணங்கள் அணிந்து கொண்டிருக்கிற காட்சி! இந்தப் பிரபுக்களோடு, இந்தியாவின் லட்சக்கணக்கான ஏழை மக்களை ஒப்பிட்டுப்பார்க்கிறேன். அப் பொழுது இந்தப் பிரபுக்களைப் பார்த்து இந்த நகைகளையெல் லாம் கழற்றி, இந்திய மக்களின் சார்பாக இவைகளைப் பத்திரப் படுத்தி வையுங்கள்; அப்படிச் செய்யாவிட்டால் இந்தியாவுக்கு விமோசனமே கிடையாது என்று சொல்லவேண்டுமென்கிற ஆத்திரம் எனக்கு உண்டாகிறது. அப்பொழுதுதான், தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வுக்கு வந்திருக்கிறார் காந்தி. இந்திய அரசியல் அரங்கத்தில் இவருக்கு இன்னும் ஒரு தலைமை தானம் ஏற்படவில்லை. ஆயினும், தமது வருங்காலப் பெயர், புகழ் எல்லாவற்றையும் கவனியாமல், தமது உள்ளத்தில் தோன்றியதை அப்படியே சொல்லிவிட்டார். அந்தக் காலத்தில் இவருடைய இந்தப் பேச்சு எவ்வளவு பரபரப்பை உண்டு பண்ணியது! வெளிநாட்டுக்குச் சென்று திரும்பி வருகிற இந்தியர்கள் பலரும், தங்களோடு என்ன கொண்டு வருகிறார்கள்? பணம், பட்டம், பதவி முதலியன. இவையொன்றும் அதிகமாக இல்லா விட்டாலும் மேனாட்டு மனைவியர்! காந்தியும் விவேகானந்தரும் இந்தியாவுக்குத் திரும்புகிற போது என்ன கொண்டு வந்தார்கள்? கீர்த்தி! மேனாட்டுச் சிஷ்யர்கள்! சுக போகத்திலே வாழ்ந்த பலர், இந்த இருவருடைய எளிய வாழ்க்கையிலும் மகத்தான சக்தியிலும் ஈடுபட்டு இவர்களுக்குச் சிஷ்யர்களாகி இவர்களைப் பின் தொடர்ந்து வந்தார்கள்; இந்தியாவின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தார்கள். இங்ஙனம் அர்ப்பணம் செய்தவர்களிலே சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள் பெண்களே! காந்தியும் விவேகானந்தரும் பெண்மைக்குப் பெருமை கொடுக் கிறவர்கள். உலகத்திலேயே தாயின் நிலைதான் மிகச் சிறந்தது. தன்னலமின்மையை, இந்த ஓர் இடத்திலிருந்துதான் கற்றுக் கொள்ள முடியும்; அனுஷ்டிக்க முடியும். கடவுளன்புக்கு அடுத்தபடியாகவுள்ளது தாயன்பு; மற்றவையெல்லாம் இதற்குக் கீழ்ப்பட்டதுதான் என்று தாய்மைக்குப் பக்தி செலுத்துகிறார் விவேகானந்தர். இப்படிப்பட்ட தாய்மார் பலரையும் தங்களுடைய சிஷ்யர்களாகக் கொண்டார்கள், ஒரு மகாத்மாவும் ஒரு சந்நியாசி யும். விவேகானந்தருக்கு சகோதரி நிவேதிதை அமைந்ததைப் போல் காந்திக்கு மீராபாய்! இவர்கள் போன்ற இன்னும் பலர். இவர்கள் தங்கள் குருமார்களுக்கு என்னென்ன விதங்களில் பணி விடைகள் செய்திருக்கிறார்கள்! துணி துவைத்திருக்கிறார்கள்; பாத்திரங் களைக் கழுவி இருக்கிறார்கள். இவர்கள் சிஷ்யைகளாக இருந்த போதிலும், கூடவே தங்கள் குருமார்களுக்கு சிசுருஷை செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்கள்; தாய்மார்களாக இருந்து அவர்களைக் காப்பாற்றி வந்தார்கள்! இந்த இரண்டு குருமார்களும் தங்களுடைய சிஷ்ய வருக்கத் தினரிடத்தில் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள்! தங்கள் கையினாலேயே சமைத்துப் போட்டிருக்கிறார்கள்; அவர்கள் நோயுற்ற போது சிகிச்சை செய்திருக்கிறார்கள்; பொதுவாக அவர் களுடைய சுயமதிப்பு உணர்ச்சிக்குப் பங்கம் ஏற்படாதபடி அவர் களை நடத்தி வந்திருக்கிறார்கள்; அவர்களுக்குத் தந்தையாக நடந்து வந்திருக்கிறார்கள். இருவரும் பரம்பொருளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டவர் களேயானாலும், உலக ஞானம் நிறையப் பெற்றவர்கள். இயற்கை யழகையும் செயற்கை வாழ்க்கையையும் ஒரே மாதிரியாக அனுப விக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இருவரும் ஆசிரமங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஆசிரமங்கள் கர்ம க்ஷேத்திரமாகவும், யோக பூமியாகவும் விளங்கு கின்றன. இந்தியாவின் பிற்கால சரித்திரத்தில், இந்த ஆசிரமங்கள் செய்து வருகிற வேலை முக்கிய இடம் பெறும். ஏனென்றால் இந்தியாவின் எதிர்கால வாழ்வைப் பண்படுத்துவன அல்லவோ இவை? துறவைப் பெருமைப்படுத்திவிட்டார் விவேகானந்தர். சிறையைப் புனிதப்படுத்திவிட்டார் காந்தி. இருவரும் அரண்மனை களில் கொண்டாடப்படுகிறார்கள்; குடிசைகளில் வாழ்கிறார்கள். முன்னவர் இறந்து வாழ்கிறார்; பின்னவர் இருந்து வாழ்கிறார். இந்தியா என்ற பெயர் உள்ள வரையில் இப்பெரியார் இருவரும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்! 7. மனிதனாயிரு! அரிது அரிது மானிடராதல் அரிது என்றார் நமது நாட்டுப் பெரியார் ஒருவர். எவ்வளவு ஆழ்ந்த கருத்துடைய வாசகம் இது? மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று அவர் சொல்லவில்லை; மானிடர் ஆதல் அரிது என்றே சொன்னார். மனிதனாகப் பிறந்து விட்டால் மட்டும் போதுமா? மனிதனாக இருக்க வேண்டும், மனிதனாக வாழவேண்டும். இதற்குத் துணை செய்வதுதான் மதம். இந்த மதத்தையே விவேகானந்தர் வலியுறுத்துகிறார். இந்தியாவிலே நான் மனிதர்களைச் சிருஷ்டிக்க வேண்டும் என்று ஓரிடத்தில் கூறு கிறார். பகுத்தறிவு படைத்த மனிதன், தனது சக்திகளைப் பிறர்க்குப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாகத்தான் அவன் வளர்கிறான். இந்த வளர்ச்சிக்கான ஒரு சாதனமே மதம். அப்படியிருக்க இந்த மதத்தை, வாழ்க்கையிலிருந்து எப்படிப் பிரிக்க முடியும்? நாட்டைவிட்டுக் காட்டுக்கு ஓடிவிடுவது மதமாகாது. மூக்கைப் பிடித்துக்கொண்டு மூலையிலே உட்கார்ந்திருப்பது மதமாகாது. இவை களினால் கடவுளைக் காணவும் முடியாது. நம்மைச் சுற்றி எங்கும் கடவுள் இருக்கிறார், ஒவ்வொரு ஜீவ ராசியி னிடத்திலும் இருக்கிறார், விளையாட்டிலும் வினையிலும் இருக் கிறார், அழுகையிலும் சிரிப்பிலும் இருக்கிறார், இப்படி எங்கும் இருக்கிறார், எதிலும் இருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். இந்த நம்பிக்கையிருக்கிறவன்தான், உலகத்தில் மேலான காரியத்தைச் செய்ய முடியும். இந்த நம்பிக்கையை யூட்டுவதுதான் மதம். மதத்தின் மேற்பரப்பிலுள்ள சில அமிசங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அவைகளையே மதமாகக் கொண்டுவிட்டது இந்தியா சில நூற்றாண்டுகளாக. இந்த எண்ணத்தைத் தொலைத்து, மதத்தின் உண்மையான தத்துவங்களை வெளிக்கொணர்ந்து காட்டினார் விவேகானந்தர். பரலோகத்தை நம்பி இகலோகத்தை விட்டுவிடக் கூடாதென்று போதித்தார். உடல் வலிமையும் வேண்டும், உள்ளத்துறவும் வேண்டுமென்று கூறினார். இந்தியா வுக்கு இலாமிய தேகமும் வேதாந்த மூளையும் தேவை என்று இவர் கூறியதன் தாத்பரியம் இதுதான். நடமாடுங் கோயில்கள் நலிந்து கிடக்க, படமாடுங் கோயில்களுக்குச் சென்று பூஜை போடு வதில் யாருக்கு என்ன நன்மையென்று கேட்கிறார். இவருடைய உபதேசங்களிலிருந்து சில மணிகளைப் பொறுக்கியெடுத்துக் கீழே தருகிறோம்: மிருகத்தை மனிதனாக்குவதும், மனிதனைத் தெய்வ மாக்குவதும் மதம். * * * மனிதன், இயற்கையை வெல்வதற்காகப் பிறந்தானேயொழிய, அதனைப் பின்பற்றிக்கொண்டு செல்வதற்காக அல்ல. * * * உலகமென்பது ஓர் உடற்பயிற்சி சாலை. அதில் நாம், நம்மைப் பலசாலிகளாக்கிக்கொள்ளவே வந்திருக்கிறோம். * * * கடவுள் மனிதனாகிவிட்டார்; மனிதன், மறுபடியும் கடவு ளாகக் கூடும். * * * கடவுளிடத்தில் நம்பிக்கை கொள்ளாதவனையே நாதிகன் என்று பழைய மதங்கள் கூறின. தன்னம்பிக்கை இல்லாதவனே நாதிகன் என்று இந்தக் காலத்து மதம் கூறுகிறது. * * * உண்மைக்காக நாம் எதையும் தியாகம் செய்துவிடலாம்: ஆனால் எதற்காகவும் நாம் உண்மையைத் தியாகஞ் செய்யக்கூடாது. * * * எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு செலுத்து. துன்பத்திலே உழன்றுகொண்டிருக்கிறவர்களுக்கு இரக்கங்காட்டு. யாரிடத்திலும் பொறாமை கொள்ளாதே. மற்றவர்களிடத்தில் என்ன குற்றங்கள் இருக்கின்றன வென்பதைப் பாராதே. * * * எவனுடைய மனமெனும் புத்தகம் திறக்கப்பட்டுவிட்டதோ அவன் வேறு நூல்களைப் பயில வேண்டியதேயில்லை. * * * உங்களுடைய முப்பத்து மூன்றுகோடி தேவர்களிடத்திலும் உங்களுக்கு நம்பிக்கையிருக்கலாம்; இன்னும் அந்நியர்கள் புகுத்தி யுள்ள மற்ற எல்லாத் தெய்வங்களிடத்திலும் உங்களுக்கு நம்பிக்கை யிருக்கலாம். ஆனால் உங்களிடத்திலேயே உங்களுக்கு நம்பிக்கை யில்லாவிட்டால் உங்களுக்கு விமோசனமே கிடையாது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள்; அதன் மீது நில்லுங்கள். * * * உன்னுடைய விமோசனத்தைமட்டும் நீ தேடிக் கொள்வா யானால் உனக்கு நரகந்தான் கிடைக்கும். * * * எனது நாட்டில் பட்டினியோடு ஒரு நாய் இருக்கிறவரையில், அதற்கு உணவளிப்பதுதான் என்னுடைய மதம். * * * உண்மையான மதத்தில், புதகப் படிப்புக்கு இடமேயில்லை. * * * ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு தேசமோ தன்னம்பிக்கை யிழந்து விடுமானால் மரணம் சம்பவிப்பது நிச்சயம். முதலில் உங்களை நம்புங்கள்; பிறகு கடவுள் நம்பிக்கை கொள்ளுங்கள். * * * இந்தியாவை இனி யாரும் அடக்க முடியாது. இனியும் அது தூங்கப்போவதில்லை. அந்நிய சக்திகள் எவையும் இனி அதனைப் பின்னுக்கு இழுக்காது. காலங்கடந்த இந்தியா, இப்பொழுது எழுந்து நிற்க ஆரம்பித்துவிட்டது. * * * நீ ஏதாவது தீங்கு செய்யவேண்டுமென்று ஆசைப்பட்டால், அதை உன்னைவிட மேலானவர்கள் முன் செய். * * * இந்தியாவின் விமோசனம், இந்தியன் ஒவ்வொருவனும் தன்னுடைய பலத்தை உணர்வதிலே, தன்னிடம் தெய்வசக்தி இருக்கிறதென்பதை உணர்வதிலே இருக்கிறது. * * * மானிட சமூகத்திற்கு நன்மை செய்யவேண்டுமென்று ஆசைப்படுகிறவர்கள், தங்களுடைய சொந்த சுக துக்கங்களையும், பெயரையும் புகழையும், மற்றச் சுயநலங்கள் யாவற்றையும் ஒரு மூட்டையாகக் கட்டிச் சமுத்திரத்திலே எறிந்துவிட்டுக் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கவேண்டும். * * * எனக்கு நானே நன்மையைச் செய்துகொண்டு ஒரு மோட்சத்தை அனுபவிப்பதைக் காட்டிலும், மற்றவர்களுக்கு நன்மைசெய்து அது காரணமாக ஆயிரம் நரகங்களுக்குச் செல்ல நான் தயாராயிருக்கிறேன். கடவுள் ஒருவர்தான் கொடுக்கக்கூடியவர்; உலகமெல்லாம் சந்தைக்கடை. அவரிடமிருந்து செக்கைப்பெற்றுக் கொள்ளுங்கள். அஃது எங்கும் மாறும். * * * உலக சரித்திரம் என்பது என்ன? தன்னம்பிக்கை கொண் டிருந்த ஒரு சிலருடைய சரித்திரந்தான். அந்தத் தன்னம்பிக்கை, மனிதனிடத்திலேயுள்ள தெய்வசக்தியைத் தூண்டிவிடுகிறது. அப்பொழுது எது வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். * * * கடவுளைத் தேடிக்கொண்டு நீ எங்கே போக வேண்டும்? ஏழைகள், துன்பப்படுவோர், பலவீனர் இவர்களெல்லோரும் கடவுளர்களல்லவா? அவர்களை முதலில் வணங்கக்கூடாதா? கங்கைக் கரையில் ஏன் கிணறு வெட்ட வேண்டும்? ஜன சமுதாயமே உன்னுடைய கடவுள். ஜனங்களைப் பற்றி நினை; அவர்களுக்காக வேலை செய்; அவர்களுடைய நலனுக்காக இடைவிடாது பிரார்த் தனை செய். கடவுள் உனக்கு வழி காட்டுவார். * * * ஓ இந்தியாவே! மற்றவர்களுடைய குரலுக்கு எதிரொலி கொடுத்துக் கொண்டிருக்கிறாய்; மற்றவர்களைப் பார்த்து நடிக்கிறாய்; பிறரைச் சார்ந்து நிற்கிறாய்; அடிமைத்தனமான பலவீனம் உன்னிடம் இருக்கிறது; கீழ்த்தரமான கொடிய பழக்க வழக்கங்களை அனுஷ்டிக்கிறாய். இவைகளைக் கொண்டு, இந்தச் சாதனங்களைக் கொண்டு நாகரிகத்தின் பெருமையை எப்படி அடையப் போகிறாய்? வீரர்களுக்கே உரியது சுதந்திரம். அப்படிப் பட்ட சுதந்திரத்தை, உன்னுடைய கேவலமான கோழைத்தனத் தினால் எப்படியடையப் போகிறாய்? ஓ இந்தியாவே! உனது பெண்மையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறவாதே; நீ வணங்குகிற கடவுள், துறவிகளுக்கெல்லாம் பெரிய துறவி, சர்வ சங்க பரித்தியாகியான சங்கரன், உமாபதி என்பதை மறவாதே; உனது விவாகம், உனது செல்வம், உனது வாழ்க்கை எல்லாம் சிற்றின்ப சுகத்திற்காக அல்ல, உன்னுடைய சொந்த சந்தோஷத்திற்காக அல்ல என்பதை மறவாதே; ஜகன்மாதாவின் பலி பீடத்திலே பலியாவதற்காக நீ பிறந்திருக்கிறாய் என்பதை மறவாதே; உனது சமுதாய அமைப்பு, எல்லையற்ற உலகத் தாய்மையின் பிரதிபலிப்பு என்பதை மறவாதே; தாழ்ந்த ஜாதியினர் என்று அழைக்கப்படுகிற அறிவில்லாதவர்கள், ஏழைகள், பாமரர்கள், சக்கிலி, தோட்டி முதலிய எல்லோரும் உன்னுடைய சதையும் ரத்தமுமானவர்கள், உன்னுடைய சகோதரர்கள் என்பதை மறவாதே! ஓ வீரனே! தைரியங்கொள்; துணிவு கொள்; நீ ஓர் இந்தியன் என்பதற்காகப் பெருமை கொள். நான் ஓர் இந்தியன், ஒவ்வோர் இந்தியனும் என்னுடைய சகோதரன் என்று பெருமை யோடு முழக்கம் செய்! பாமர இந்தியன், ஏழை இந்தியன், நிர்க்கதியாயுள்ள இந்தியன், பிராமண இந்தியன், பறைய இந்தியன் ஆகிய ஒவ்வொருவனும் என்னுடைய சகோதரன் என்று சொல்லு. நீ கூட இடுப்பிலே ஒரு கந்தைத் துணியைக் கட்டிக்கொண்டு உரத்த குரலெடுத்து ஒவ்வோர் இந்தியனும் என்னுடைய சகோதரன், ஒவ்வொர் இந்தியனும் என்னுடைய உயிர், இந்தியாவின் தெய்வங் களெல்லாம் என்னுடைய கடவுள், இந்திய ஜன சமுதாயம் எனது குழந்தைப் பருவத்தின் தொட்டில், இளமையின் உத்தியானவனம், புனிதமான மோட்சலோகம், முதுமைப் பருவத்தின் காசி க்ஷேத்திரம் என்று சொல்லு. சகோதரா! இந்தியாவின் மண் என்னுடைய மேலான மோட்சலோகம்; இந்தியாவின் நன்மையே என்னுடைய நன்மை என்று சொல்லு; அடிக்கடி சொல்லு. தினந்தோறும், இரவு பகலாகப் பின்வருமாறு பிரார்த்தனை செய்: ஓ! கௌரீநாதா! ஜகன்மாதா! எனக்கு ஆண் தகைமையைக் கொடு! ஓ! வலிமையின் தாயே! எனது பலவீனத்தை எடுத்துக் கொண்டு விடு; எனது அபௌருஷத்தை எடுத்துக் கொண்டு விடு; என்னை ஒரு மனிதனாக்கு! 8. தொண்டு செய்! உண்மையென்றால் என்ன? எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் வேற்றுமையற்று ஒன்றாகிவிடுமானால் அதற்கு ஒரு தனிப் பெயருண்டல்லவா? அது தான் உண்மை. உண்மையுள்ள இடத்திலே ஆடம்பரமில்லை; ஆரவாரமில்லை; அச்சமில்லை; அறியாமையில்லை. காந்தி, இந்த உண்மையை நாடிச்செல்லும் ஒரு பிரயாணி. பிரயாணமாவது யாது? அதுதான் தொண்டு; பற்றற்ற சேவை. அந்தத் தொண்டு மௌனமானது. அதற்கு வாயில்லை; மனமுண்டு. அதன் உடலிலே நகையில்லை; ஆனால் முகத்திலே நகையுண்டு. அதற்கு அடக்கத் தெரியாது; அடங்கத் தெரியும். அது செயலிலே ஓய்வைக் காணும்; பிறர்துன்பத்தைப் பரிகரிப் பதிலே இன்பம் நுகரும். அது ஜாதி, மத, நிற வேற்றுமைகளைக் கடந்தது; கடமையிலே கண்ணுங் கருத்து முடையது. காந்தியின் வாழ்க்கை, உண்மையைக் குறிக்கோளாகக் கொண்டது. சேவையை, அதனையடையும் மார்க்கமாகவுடையது. தொண்டு செய், தொண்டு செய் என்றே அவர் உபதேசிக்கிறார். சேவையின் கீதமாகவே அவருடைய கைராட்டினம் ஒலிக்கிறது. அவரது மணிமொழிகளில் சில வருமாறு: இரும்பு விலங்குகளைக் காட்டிலும், பொன் விலங்குகள்தான் கேவலமானவை யென்பது என் கருத்து. ஏனென்றால், இரும்பு விலங்கு களின் உபத்திரவத்தை நாம் உணர்கிறோம். பொன் விலங்குகளோ, நமது நிலையை உணராமற் செய்துவிடுகின்றன. * * * சந்தோஷமாகச் செய்கிற தியாகத்திற்குத் தான் மதிப்பு உண்டு. முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு தியாகம் செய்வதில் அர்த்தமே யில்லை. தன்னுடைய தியாகத்திற்கு எவனொருவன் அநுதாபத்தை எதிர்பார்க்கிறானோ அவன் வெகு சாதாரண மானவன். உண்மையைக் கடைப்பிடிப்பதென்பது ரோஜாப்பூக்கள் பரப்பிய படுக்கையாயிருந்தால், அதனாலே எவ்வித சிரமமும் இல்லையென்றால், சுகமாகவும், சுலபமாகவும் இருந்தால், அதில், அந்த உண்மையைக் கடைப்பிடிப்பதில், அழகேயிராது. * * * நீங்கள் தேசபக்தர்களாக வேண்டுமானால், ஏழைகளின் நலத்திற்குப் பாடுபடவேண்டுமானால், முதலில் உங்களை நீங்கள் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். * * * வானிடிந்து வீழ்ந்தபோதிலும் நாம் உண்மையைப் பின்பற்ற வேண்டும். * * * நமது சகோதர மக்களுக்குத் தொண்டு செய்யவே நாம் பிறந்திருக்கிறோம். அதற்கு நாம் எப்பொழுதும் விழிப்புடையவர் களாக இருக்க வேண்டும். இருளும் ஒளியும் சதா மனிதனுடைய இருதயத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டத்தில், இருளின் வலிமைக்கு மனிதன் இரையாகாம லிருக்க வேண்டுமானால் அவன் பிரார்த்தனையிலேயே அடைக்கலம் புக வேண்டும். * * * மனிதத்தன்மையென்பது வீண் பேச்சிலோ, அதிகார தோரணை யிலோ இல்லை. சமுதாயத்துறையிலோ, அரசியல் துறையிலோ, பிறதுறைகளிலோ, எது சரியென்று தோன்றுகிறதோ அதனை, அதன் பலாபலன்களை எதிர்பாராமல் செய்கிற துணிவிலே தான் இருக்கிறது. மனிதத்தன்மையென்பது சொல்லிலே இல்லை; செயலிலேயே இருக்கிறது. எவன், தனக்குத்தானே சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனே சுதந்திர புருஷன். சுயராஜ்யம், கோழைகளுக்கல்ல; சிரித்துக் கொண்டே தூக்கு மேடையில் ஏறத்தயாராயிருக்கிறவர்களுக்குத்தான். * * * சாசுவதமான ஏதோ ஒன்றை நாம் சாதிக்க வேண்டுமானால், முதலில் நமக்குத் தேவையானது அஞ்சாமை. மத உணர்ச்சி யில்லாமல் இதனை நாம் அடையமுடியாது. கடவுளுக்கு அஞ்சு வோம்; மனிதனிடத்தில் நமக்குள்ள அச்சம் தானாகவே போய்விடும். * * * லட்சியத்தை முன்னிட்டு நடைபெற்றிருக்கிற எந்தப் போராட்டத் திலும் இதுவரை எண்ணிக்கை முக்கியமாகக் கருதப் படவில்லை. போராட்டத்தின் தன்மைதான், அதன் முடிவை நிர்ணயிக்கிறது. உலகத்து மகாபுருஷர் பலரும் தனிப்பட்டு நின்றே போராடியிருக்கிறார்கள். * * * சிலர், தங்களுக்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லையென்று சொல்கிறார்கள். இஃது எப்படியிருக்கிறதென்றால் நான் மூச்சு விடுகிறேன்; ஆனால் எனக்கு மூக்கு இல்லை என்று சொல்வதைப் போலிருக்கிறது. * * * தன்னிடத்திலேயுள்ள தெய்வசக்தியை அறிய வேண்டுமென்ற ஆவலுடையவன் கட்டாயம் பிரார்த்தனையில் ஈடுபடவேண்டும். * * * பிரார்த்தனையின் போது, இருதயமில்லாத வார்த்தைகளைக் காட்டிலும், வார்த்தையில்லாத இருதயமே தேவை. * * * நம்பிக்கையும் தெய்வப் பிரார்த்தனையும் கலவாத வேலை, வாசனையில்லாத செயற்கை மலர் மாதிரி. மற்றவர்களிடத்தில் நீ அன்பு செலுத்துகிறாய் என்றால் அதை நீ எப்படிக் காட்ட வேண்டும்? அவர்களைப் புகழ்வதனாலேயல்ல; அவர்களுக்குத் தொண்டு செய்வதனால். * * * எவன், ஜனங்களுக்குத் தொண்டு செய்வதில் தலை சிறந்தவனாயிருக்கிறானோ அவனே உண்மையான அரசன். ஒரு ராஜ்யத்திற்கு ஜனங்களே உண்மையான எஜமானர்கள். * * * விழித்துக் கொண்டிருக்கிறவர்களுக்குத்தான் சுயராஜ்யம்; தூங்கிக்கொண்டிருக்கிறவர்களுக்கும் அறியாமையில் ஆழ்ந்து கிடக்கிறவர்களுக்கு மல்ல. * * * ஜனங்களுக்குத் தன்னலமற்ற தொண்டு செய்வதிலேயே அஹிம்ஸை விகாசமடைகிறது. அந்த விகாசத்தின் அடையாளமே கைராட்டினம். * * * மதமானது, கடவுளோடு மனிதனையும், மனிதனோடு மனித னையும் பிணைக்குஞ் சக்தியுடையது. * * * நம்முடைய கடமைகளை நாம் செய்து கொண்டு போனால் உரிமைகள் தாமாகவே வந்து சேரும். * * * அஹிம்ஸை யென்பது ஒரு சாதிரம். அதில் தோல்வி என்பதற்கு இடமேயில்லை. உலகத்தில் யாராரை நாம் இப்பொழுது மகான்களென்று கொண்டாடுகிறோமோ அவர்களெல்லோரும் தங்கள் சேவையி னாலேயே அந்த மகான் பதவியையடைந்திருக்கிறார்கள். 