ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 9  வாழ்க்கை வரலாறு ஆசிரியர் முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 17. நூற் குறிப்பு நூற்பெயர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 9 (வாழ்க்கை வரலாறு) ஆசிரியர் : அ.ம.சத்தியமூர்த்தி பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 16 + 160 = 176 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 165/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் 116 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு தோற்றம் : 15.08.1892 - மறைவு : 02.01.1960 தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு உலக அரங்கில் உயர்வும் பெருமையும் ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு... தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு... ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு... பத்தாம் வகுப்பு வரை தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு.... தலைமைச் செயலக ஆணைகள் தமிழில் மட்டுமே வரவேண்டும் என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு... தமிழ்மண் அறக்கட்டளை நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறது. பதிப்புரை கோ. இளவழகன் நிறுவனர் தமிழ்மண் அறக்கட்டளை தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் எனும் சிற்றூரில் 15.8.1892ல் பிறந்தார். இவர் 68 ஆண்டுகள் வாழ்ந்து 02.01.1960ல் மறைந்தார். பண்டாரம் என்னும் சொல்லுக்குக் கருவூலம் என்பது பொருள். புலமையின் கருவூலமாகத் திகழ்ந்த இம்முதுபெரும் தமிழாசான் இலக்கியத்தையும் வரலாற்றையும் இருகண்களெனக் கொண்டும், கல்வெட்டு ஆராய்ச்சியை உயிராகக் கொண்டும், அருந்தமிழ் நூல்களைச் செந்தமிழ் உலகத்திற்கு வழங்கியவர். இவர் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து 10 தொகுதிகளாக தமிழ் கூறும் உலகிற்கு வைரமாலையாகக் கொடுக்க முன்வந்துள்ளோம். சங்கத் தமிழ் நூல்களின் எல்லைகளையும் , அதன் ஆழ அகலங் களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள் உமாமகேசுவரனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமையில் தமிழ்ப்பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர். திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்றூர்; திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வராலும், திருத்தொண்டர் புராணம் படைத்தளித்த சேக்கிழாராலும், தேவாரப் பதிகத்தாலும் பாடப்பெற்ற பெருமை மிக்க ஊர்; கல்வி, கேள்விகளில் சிறந்த பெருமக்கள் வாழ்ந்த ஊர். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த வளம் மிக்க ஊர்; சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். பண்டாரத்தாரின் ஆராய்ச்சி நூல்களான சோழப் பெருவேந்தர்கள் வரலாறு - பாண்டியப் பெருவேந்தர்கள் வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறு - ஆகிய நூல்கள் எழுதப்பட்ட பிறகு அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டுதான் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி - சாண்டில்யன் - செகசிற்பியன் - விக்கிரமன் - பார்த்தசாரதி - கோவி.மணிசேகரன் ஆகியோர் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் உலகில் புகழ் பெற்றனர். பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சியும் , வரலாற்று அறிவும் , ஆராய்ச்சித் திறனும், மொழிப் புலமையும் குறைவறப் பெற்ற ஆராய்ச்சிப் பேரறிஞர். பிற்கால வரலாற்று அறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் முன்னோர் எழுதிய நூல்களைக் கொண்டுதான் பெரும்பாலும் வரலாறு எழுதுவது வழக்கம். ஆனால், பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டுக்கள் உள்ள ஊர்களுக்கெல்லாம் நேரில் சென்று அவ்வூரில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்து முறைப்படி உண்மை வரலாறு எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார். புலமை நுட்பமும் ஆராய்ச்சி வல்லமையும் நிறைந்த இச் செந்தமிழ் அறிஞர் கண்டறிந்து காட்டிய கல்வெட்டுச் செய்திகளெல்லாம் புனைந் துரைகள் அல்ல. நம் முன்னோர் உண்மை வரலாறு. தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, பண்டாரத்தார் நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து வெளியிடுகிறோம். பல துறை நூல்களையும் பயின்ற இப்பேரறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களில் மிகச் சிறப்பிடம் பெற்றவர்.இவர் எழுதிய ஊர்ப் பெயர் ஆய்வுகள் இன்றும் நிலைத்து நிற்பன. இவரது நூல்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஊற்றுக்கண்ணாய் அமைவன. வரலாறு, கல்வெட்டு ஆகிய ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பல வரலாற்று உண்மைகளைத் தெளிவு படுத்தியவர். பண்டாரத்தார் நூல்களும், கட்டுரைகளும் வட சொற்கள் கலவாமல் பெரிதும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் வரலாறு - தமிழ்ப் புலவர்கள் வரலாறு - தமிழக ஊர்ப்பெயர் வரலாறு - தமிழ் நூல்கள் உருவான கால வரலாறு ஆகிய இவருடைய ஆராய்ச்சி நூல்கள் அரிய படைப்புகளாகும். தாம் ஆராய்ந்து கண்ட செய்திகளை நடுநிலை நின்று மறுப்பிற்கும் வெறுப்பிற்கும் இடமின்றி, வளம் செறிந்த புலமைத் திறனால், தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும்பங்காற்றிய இவரின் பங்களிப்பு ஈடுஇணையற்றது. தென்னாட்டு வரலாறுதான் இந்திய வரலாற்றுக்கு அடிப்படை என்று முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களே. தமிழரின் மேன்மைக்கு தம் இறுதிமூச்சு அடங்கும் வரை உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு உழைத்த பெருமக்கள் வரிசையில் வைத்து வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் தமிழர் தம் பெருமைக்கு அடையாளச் சின்னங்கள். நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் வெளியீட்டு விழா கடந்த 29.12.2007இல் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் - தமிழர் நலங்கருதி தொலைநோக்குப் பார்வையோடு தமிழ்மண் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடக்கத்தின் முதல் பணியாக தென்னக ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முதன்முதலாக தமிழ் மண் அறக்கட்டளை வழி வெளியிடுகின்றன. இப்பேரறிஞரின் நூல்கள் தமிழ முன்னோரின் சுவடுகளை அடையாளம் காட்டுவன. அறிஞர் களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை பொற்குவியலாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளோம். இவர் தம் நூல்கள் உலக அரங்கில் தமிழரின் மேன்மையை தலைநிமிரச் செய்வன. பண்பாட்டுத் தமிழர்க்கு நான் விடுக்கும் விண்ணப்பம்; சதாசிவத்துப் பண்டாரத் தார்க்கும்; ஒரு மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள் கொண்டாடும் சோமசுந் தர பாரதிக்கும், நம் கொள்கை தோன்றக், கண்டார்க்க ளிக்கும் வகை உருவக்கல் நாட்டுவது கடமையாகும். எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். இப்பேரறிஞர் எழுதிய நூல்களில் சைவசிகாமணிகள் இருவர் என்னும் நூல் மட்டும் எங்கள் கைக்கு கிடைக்கப்பெறா நூல். ஏனைய நூல்களை பொருள்வாரியாகப் பிரித்து வெளியிட்டுயுள்ளோம் தமிழினப் பெருமையை தம் ஓய்வறியா உழைப்பால் தமிழ் உலகுக்குத் தந்தவரின் வாழ்க்கைச் சுவடுகளை வருங்காலத் தமிழ் தலைமுறைக்குத் தந்த முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.தமிழர் இல்லந்தோறும் பாதுகாத்து வைக்கத்தக்கச் செந்தமிழ்ச் செல்வத்தை பிற்காலத் தலைமுறைக்கு வாங்கி வைத்து தமிழர் தடயங் களை கண்போல் காக்க முன்வருவீர். ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வு நூல்களுக்கு மதிப்புரை அளித்து மணம் கமழச் செய்த தமிழ்ச் சான்றோர்கள் பெரும்புலவர் இரா. இளங்குமரனார் கோ. விசயவேணுகோபால் பி. இராமநாதன் முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி க.குழந்தைவேலன் ஆகிய பெருமக்கள் எம் அருந்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது. நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் அச்சுக்கோப்பு முனைவர் கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா மெய்ப்பு க.குழந்தைவேலன், சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு, ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . உள்ளடக்கம் வாழ்க்கை வரலாறு முகவுரை 3 1. வாழ்க்கை வரலாறு 7 2. கல்வெட்டாய்வு 28 3. வரலாற்றாய்வு 42 4. ஊர்கள் பற்றிய ஆய்வு 64 5. இலக்கிய வரலாற்றுப் பணி 93 6. இலக்கிய ஆய்வு 114 7. பொதுநிலை ஆய்வுகள் 122 இணைப்பு 1 134 இணைப்பு 142 ஆராய்ச்சியாளர் சதாசிவப் பண்டாரத்தார் 145 தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கைக் குறிப்புக்கள் தோற்றம் : 15.8.1892 பெற்றோர் : திரு.வைத்தியலிங்கப் பண்டாரத்தார் திருமதி. மீனாட்சி அம்மையார் ஊர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் கல்வி கற்ற இடங்கள் : திருப்புறம்பயம் திண்ணைப் பள்ளி, புளியஞ்சேரி உயர்தரத் தொடக்கப்பள்ளி, குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் நான்காம் படிவம் முதல் மெட்ரிகுலேசன் முடிய (1910) ஆசிரியர்கள் : பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்,வலம்புரி அ.பாலசுப்பிரமணியப்பிள்ளை முதலானோர் திருமணம் : 1914-இல் தையல்முத்து அம்மையாரை மணந்தார். இவர் 1921இல் காலமாகவே 1922இல் சின்னம்மாள் என்பவரை மணந்தார். பணி விவரங்கள் : பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் ஒன்றரை ஆண்டுக் காலம் எழுத்தர் பணி குடந்தை நகர உயர்நிலைப்பள்ளியில் ஒரு மாதக் காலம் தலைமைத் தமிழாசிரியர் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் (1917-1942) அண்ணாமலைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் (1942-53, 1955- 1.1.1960) மறைவு : 02.1.1960 பெற்ற சிறப்புக்கள் : 29.3.1956 இல் மதுரைத் திருவள்ளுவர் கழகம் ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டம் வழங்கியது. 7.4.1956 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேடயம் வழங்கியது. வழித்தோன்றல் : பேராசிரியர் ச.திருஞானசம்பந்தம் (ஒரே மகனார்) பண்டாரத்தார் அவர்கள் எழுதிய நூல்கள் 1. சைவ சிகாமணிகள் இருவர் (அ.பாலசுப்பிரமணியப் பிள்ளை யுடன் இணைந்து எழுதியது) 2. தொல்காப்பியப் பாயிரவுரை 1923 3. முதற்குலோத்துங்க சோழன் (1930) 4. பாண்டியர் வரலாறு (1940) 5. திருப்புறம்பயத் தல வரலாறு (1946) 6. பிற்காலச் சோழர் சரித்திரம் - மூன்று பாகங்கள் (1949, 1951, 1961) 7. தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600) - 1955 8. தமிழ் இலக்கிய வரலாறு ( 13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) - 1955 9. செம்பியன் மாதேவித் தல வரலாறு - 1958 10. காவிரிப்பூம்பட்டினம் - 1959 11. இலக்கிய ஆராய்ச்சியும், கல்வெட்டுக்களும் - 1961 12. கல்வெட்டுக்களால் அறியப் பெறும் உண்மைகள் 1961 வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் தொகுதி 1 1) முதற் குலோத்துங்க சோழன் 1930 2) திருப்புறம்பயத் தல வரலாறு 1946 3) காவிரிப் பூம்பட்டினம் 1959 4) செம்பியன் மாதேவித் தல வரலாறு 1959 தொகுதி 2 5) பாண்டியர் வரலாறு 1940 தொகுதி 3 6) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1 1949 தொகுதி 4 7) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2 1951 தொகுதி 5 8) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 1961 தொகுதி 6 9) தமிழ் இலக்கிய வரலாறு ( கி.பி.250-600) 1955 10) தமிழ் இலக்கிய வரலாறு ( 13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) 1955 தொகுதி 7 11) இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் 1961 12) கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் 1961 தொகுதி 8 13) சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் 1998 14) தொல்காப்பியமும் பாயிரவுரையும் 1923 தொகுதி 9 15) தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு 2007 தொகுதி 10 16) சான்றோர்களின் பார்வையில் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் , தமிழ்ப்பொழில் இதழ்களில் சதாசிவப் பண்டாரத்தார் எழுதி வெளிவந்த கட்டுரைகளை சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக்கட்டுரைகள் என்ற தலைப்பில் 8ஆம் தொகுதியாகவும், பண்டாரத்தார் வாழ்க்கை வரலாற்றை 9ஆம் தொகுதியாகவும், சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார் 10ஆம் தொகுதியாகவும் பேரா.அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் தொகுத்தளிக்க வெளியிட்டுள்ளோம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரைகளில் பல்வேறு இடங்களில் கிடைக்காமல் இருந்த தொல்காப்பியமும் பாயிரவுரையும் சேர்த்து 8ஆம்தொகுதியில் வெளியிட்டுள்ளோம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், சேகர் பதிப்பகத்தார்க்கும் எம் நன்றி. *** தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு முகவுரை தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ள சிற்றூரான திருப்புறம்பயத்தில் நடுத்தர விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் வரலாற்றுப் பேரறிஞர் திரு.தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். பள்ளிப் படிப்பு மட்டுமே பயின்ற இவர், தமது ஆய்வுத் திறத்தால் பிற்காலத்தில் பல்கலைக் கழக அறிஞர்கள் எல்லாம் வியக்கும் வகையில் இமயமாக உயர்ந்தவர். இவர், தமது பள்ளிப் பருவம் முதற்கொண்டே கல்வெட்டுக்களை ஆய்வு செய்யத் தொடங்கினார். கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் இணைத்து ஆய்வு செய்து நாட்டு வரலாறு, இலக்கிய வரலாறு, சமுதாய வரலாறு ஆகியன வற்றை எழுதிய காரணத்தினால் இவ்வறிஞர் பிற ஆராய்ச்சியாளர் களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறார். கல்வெட்டுக்கள் இவரோடு பேசியிருக் கின்றன என்றுதான் கூற வேண்டியுள்ளது. அந்த அளவிற்கப் பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்களைப் படித்தறிந்த இவர், தமது ஒவ்வோர் ஆராய்ச்சிக் குறிப்பிற்கும் கல்வெட்டுச் சான்றுகளை மேற்கோள்களாகத் தந்திருக்கிறார். இவரது இந்தக் கல்வெட்டுப் பயிற்சியை இன்று நினைத்தாலும் வியப்பாகவே உள்ளது. தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்த இப்பெருமகனார் அமைதியாய், அன்புருவாய், அழுத்தந் திருத்தமாய் இருந்து ஆய்வு செய்தவர், சுய விளம்பரம் செய்து கொள்ளத் தெரியாதவர். தாம் கண்ட அனைத்தையும் வரலாற்றுக்கண் கொண்டு இவர் நோக்கினார். வரலாற்றுச் செய்திகளைத் கதை கூறுவதுபோல் இனிய, எளிய நடையில் எழுதிச் சென்றமையானது இவரது தனிச்சிறப்பாகும். அதே நேரத்தில், சான்றுகளோடு மட்டுமே இவரது ஒவ்வொரு சொற்களும் ஆய்வில் நகர்ந்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற இந்த அறிஞர் பெருந்தகைக்கு 15.8.1991 அன்று நூற்றாண்டுத் தொடங்கியது. எனது ஊருக்குப் பக்கத்து ஊரில் பிறந்த இவ்வறிஞரின் பணிகளைப் போற்றும் வகையில் எனது துணைவியார் திருமதி.பானுமதி சத்தியமூர்த்தியை அமைப்பாளராகக் கொண்டு வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் நூற்றாண்டு விழாக்குழு என்ற அமைப்பை நான் உருவாக்கினேன். விழாக் குழுவானது அன்று தொடங்கி ஓர் ஆண்டு முழுமையும் அறிஞர் பெருந்தகையின் நூற்றாண்டு விழாவைக் கருத்தரங்குகள், உரையரங்குகள், மாணவ, மாணவியர்களுக்கு இடையேயான போட்டிகள், நூல்கள் வெளியீடு என்று பல நிகழ்வுகளைப் பரவலாகப் பல இடங்களில் நடத்தியது. நிறைவு விழாவில் இந்நூலாசிரியனாகிய நான் எழுதிய தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் வாழ்வும் பணியும் (1992) என்ற நூலும், நான் பதிப்பித்த ஆய்வுலகில் பண்டாரத்தார் பணிகள் (1992) என்ற நூலும் வெளியிடப்பட்டன. தனியார் அமைப்புக்களும், பள்ளிகளும், கல்லூரி களும், பல்கலைக் கழகங்களும், தமிழ்நாட்டரசும் இவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடின. அறிஞர் பண்டாரத்தார் பல்வேறு நேரங்களில் எழுதி இதழ்களில் மட்டும் வெளிவந்து நூல் வடிவம் பெறாத ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் நான் தொகுத்தேன். இந்த அரிய தொகுப்பு நூலை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் (1998) என்னும் பெயரில் நூலாக வெளியிட்டு அறிஞர் பெருமகனாரைச் சிறப்பித்தது. மேலும் அந்த நிறுவனம் இவ்வறிஞரின் பெருமையை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் 23.7.2003 அன்று ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றை நடத்திப் பின்னர் அக்கருத்தரங்கக் கட்டுரைகளை ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் (2004) என்னும் பெயரில் நூலாகவும் வெளியிட்டது. எனது மேற்பார்வையில் பேராசிரியர் அரங்க.மாயவன் என்பவர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தாரின் தமிழாய்வு என்னுந் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்ப் பட்டம் பெற்றுள்ளார். பண்டாரத்தார் என்ற மாமனிதர் நிகழ்த்தியுள்ள சாதனைகள் குறித்துத் தமிழுலகிற்கு எளிய முறையில் அறிமுகம் செய்யும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. மைய அரசு நிறுவனம் ஒன்றின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதப்பட்ட இந்த நூலை அந்த நிறுவனத்திடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அளித்து விட்டேன். ஆயினும், இதுநாள் வரை அஃது அச்சு வடிவில் வெளி வந்ததாகத் தெரியவில்லை. இச்சூழலில் அறிஞர் பண்டாரத்தாரைப் பற்றித் தமிழுலகம் முழுமையாகத் தமிழுலகம் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக என்னுடைய முழு ஒப்புதலோடு இந்த நூலை வெளியிட முன் வந்த தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனர் ஐயா கோ.இளவழகனார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடந்தை 28.12.2007 அ.ம.சத்தியமூர்த்தி 1. வாழ்க்கை வரலாறு தமிழ் வளர்த்த சான்றோர்கள் எண்ணற்றோர் தமிழுலகில் காணப்படுகின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் எனப்படுபவர். கல்வெட்டுக் களையும் இலக்கியங்களையும் இணைத்து ஆய்வு செய்து இலக்கிய வரலாறு, நாட்டு வரலாறு, சமுதாய வரலாறு ஆகியனவற்றை எழுதிய அறிஞர் பண்டாரத்தாரின் வாழ்வு, பணி ஆகியன குறித்துத் தொடர்ந்து நோக்கலாம். தோற்றம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு வடக்கே கொள்ளிடம் ஆற்றிற்குத் தெற்கே மண்ணியாற்றின் வடகரையில் இயற்கை வளத்தோடு அமைந்த ஊர் திருப்புறம்பயம் என்னும் ஊராகும். இந்த ஊரில் கி.பி.880 இல் பல்லவ, பாண்டிய வேந்தர்களுக்கு இடையே நடைபெற்ற போர்தான் பிற்காலச் சோழப் பேரரசு வீறுகொண்டு எழுவதற்குக் காரணமாக அமைந்தது. அவ்வூர், சைவசமய நால்வரால பாடப்பெற்ற தலமாகும். அவ்வூரிலுள்ள கோயில் ஆதித்த சோழனால் கற்றளியாக எடுக்கப் பெற்ற காரணத்தினால் ஆதித்தேசுவரம் என வழங்கப் படுகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புக்களைப் பெற்ற திருப்புறம் பயத்தில் 15.08.1892 அன்று திரு.வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும் திருமதி.மீனாட்சி அம்மையாருக்கும் ஒரே மகனாராகத் தோன்றியவர் திரு.தி.வை.சதாசிவப் பண்டாரத்தார். பண்டாரத்தார் அவர்களின் பரம்பரையானது உடையார் பாளையம் பரம்பரை எனக் குறிப்பிடப் பெறுகிறது. இற்றைக்கு ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உடையார் பாளையத்திலிருந்து கிளம்பிய இவரது முன்னோர், அவ்வூருக்கு அண்மையிலுள்ள தத்தனூரில் தங்கினர். அதன் பின்னர்தான் அவர்கள் திரும்புறம்பயத்தில் வந்து தங்கியுள்ளனர். பண்டாரத்தார் அவர்களின் குடும்பத்தினர் இன்றும் உடையார்பாளையம் வட்டம் கச்சிபெருமாள்நத்தத்திலுள்ள ஐயனாரைத்தான் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். பண்டாரத்தார் என்பது உடையார்பாளையம் பகுதியில் வன்னியர்களுக்கு வழங்கிவரும் பட்டப் பெயர்களுள் ஒன்றாகும். கல்வி தமது சொந்த ஊரான திருப்புறம்பயத்தில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய பண்டாரத்தார், பின்னர்ப் புளியஞ்சேரி உயர்தரத் தொடக்கப் பள்ளியிலும், அதனைத் தொடர்ந்து நான்காம் படிவம் முதல் குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியிலும் பயின்று 1910இல் பள்ளிப் படிப்பை முடித்தார். ஆசிரியர்கள் அறிஞர் பண்டாரத்தாருக்குத் திருப்புறம்பயத்தில் தொடக்கக்கல்வி கற்பித்த ஆசிரியர் திரு.தோண்டுராயர் எனப்படுபவர். பின்னர் அவர் குடந்தையில் பயின்றபோது திரு.ஆர்.சாமிநாத ஐயர் என்பவர் தலைமை யாசிரியராக இருந்தார். நகர உயர்நிலைப்பள்ளியில் நற்றிணைக்கு உரைகண்ட பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தஞ்சை வலம்புரி அ.பாலசுப்பிரமணியப் பிள்ளை ஆகியோரிடம் தமிழ் பயிலும் வாய்ப்பினை இவர் பெற்றார். சிறந்த தமிழாசிரியர்களிடம் பயின்றதால் தமிழின் மீது இவருக்கு ஆர்வம் உண்டாயிற்று. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் கல்வெட்டுக்களின் வரலாறு பற்றியும், அவற்றை ஆராய்வதன் பயன்களைப் பற்றியும் வகுப்புக்களில் அடிக்கடிக் கூறி வந்தமையானது கல்வெட்டாராய்ச்சியில் இவரை ஈடுபடச் செய்தது. தமது ஈடுபாட்டிற்குக் காரணமான இந்த ஆசிரியரை அவர் தமது இறுதிக் காலம் வரை நன்றியோடு நினைவு கூர்ந்து வந்தார். திருப்புறம்பயத்திலுள்ள ஆதித்தேசுவரத்தில் ஆதித்த சோழன் காலம் முதற்கொண்டு விசயநகர வேந்தர் காலம் வரையிலான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. தமது ஆசிரியர் தந்த ஊக்கத்தின் காரணமாக இந்தக் கல்வெட்டுக்களைப் பண்டாரத்தார் ஆராயத் தொடங்கினார். தமது பள்ளிப் படிப்பு முடிந்ததும் இவ்வறிஞர் தனிப்பட்ட முறையில் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைத் தமது ஆசிரியரான பாலசுப்பிர மணியப் பிள்ளை உதவியுடன் பயின்றார். தமக்கு ஏற்பட்ட ஐயங்களை யெல்லாம் தமது தமிழாசிரியரிடம் இவர் அவ்வப்போது தீர்த்துக் கொண்டார். பண்டாரத்தார் அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, வரலாற்றறிஞர் து.அ.கோபிநாதராயர் எழுதிய சோழ வம்சசரித்திரச் சுருக்கம் என்ற நூலைக் கண்ணுறும் வாய்ப்பினைப் பெற்றார். அந்த நூலைப் பயின்றபோது சோழர் வரலாற்றை விரித்தெழு வேண்டும் என்ற எண்ணம் இவர் மனத்தில் ஏற்பட்டது. தமது தொடக்கக் காலக் கல்வெட்டு ஆராய்ச்சியில் இவர் தெளிவு பெறுவதற்கு அந்தச் சோழ வம்ச சரித்திரச் சுருக்கம் இவருக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. பண்டாரத்தார் அவர்கள் விரைந்து செய்யுள் இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்தார். அவர், தமது இளமைக் காலத்தில் மிகுதியான பாடல்களை எழுதியுள்ளார். ஆராய்ச்சித் துறையில் அவர் மிகுதியான கவனம் செலுத்திய காரணத்தினால், தொடர்ந்து செய்யுட்கள் இயற்றுவதில் அவரால் ஈடுபட இயலவில்லை. திருமணம் தமிழ்மொழிப் பயிற்சியில் பண்டாரத்தார் ஈடுபட்டிருந்தபோது அவருக்குத் திருமண ஏற்பாடு நடைபெற்றது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அண்மையிலுள்ள குறுக்கை என்னும் ஊரைச் சேர்ந்த ஆத்மலிங்கராயர் என்பவரது ஒரே மகளாரான தையல்முத்து அம்மையார் என்பவரை 1914-இல் இவர் மணம் புரிந்து கொண்டார். அறிஞர் பண்டாரத்தார் தமது திருமணத்திற்கு முன்பாகவே 1914-ஆம் ஆண்டின் தொடக்கம் முதற்கொண்டு மதுரையிலிருந்து வெளிவரும் செந்தமிழ் என்ற இதழில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது கருதத் தக்கதாகும். இளமைக்கால நண்பர்கள் அறிஞர் பண்டாரத்தோடு பல ஆண்டுகள் தொடர்ந்த பழகி, அவருடன் தமிழ் பயின்ற இனிய நண்பராக விளங்கியவர் திரு.சிவபாக்கியம் பிள்ளை என்பராவார். அதுபோன்றே, திருப்புறம்பயத்துக்குக் கிழக்குக் கோடியில் உள்ள யாழ்ப்பாணத்துச் சாமிகள் மடத்தில் அவ்வப்போது வந்த தங்கிய புலமை மிக்க பிரும்மானந்த சுவாமிகள், முத்தானந்த சுவாமிகள் ஆகியோருடன் நெருங்கிப் பழகும் நல்வாய்ப்பும் பண்டாரத்தார் அவர் களுக்கு இளமையிலேயே ஏற்பட்டது. அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாருடன் தொடர்பு திருமணம் ஆன பிறகு வாழ்க்கைக்கு ஒரு வேலை தேட வேண்டும் என்ற நிலை பண்டாரத்தார் அவர்களுக்கு ஏற்பட்டது. செந்தமிழில் கட்டுரை எழுதத் தொடங்கிய இவரை, இவரது நண்பர் ஒருவர் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழாசிரியராய் இருந்த ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களைச் சென்று காணுமாறு ஆற்றுப்படுத்தினார். அறிஞர் பண்டாரத்தாரும் நாட்டார் அவர்களைச் சந்தித்தார். அப்பொழுது வந்த செந்தமிழில் இருவர் கட்டுரைகளும் இடம் பெற்றிருந்தன. ஒருவர் கட்டுரையை மற்றொருவர் படித்து இன்புற்றனர். நாட்டாரவர்கள் அறிஞர் பண்டாரத்தாரின் பிறந்தநாட் குறிப்பைப் பார்த்து, இவர்கட்குத் தமிழினால்தான் வாழ்க்கை சிறப்புறும் என்றும், தற்காலிகமாக ஓர் அலுவல் பார்க்கலாம் என்றும் கூறித் தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்கட்குக் கடிதம் தந்திருக்கிறார்கள். இதன் பின்னர்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தோடு இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. தமிழ்ச் சங்கத் தொடர்பு நாட்டாரவர்களின் அறிமுகத்தால் உமாமகேசுவரம் பிள்ளையவர் களின் நட்பினைப் பெற்ற அறிஞர் பண்டாரத்தார் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் அறிஞர் எல்.டி. சுவாமிக் கண்ணுப் பிள்ளை அவர்கள் தலைமையில் கல்லாடமும் அதன் காலமும் என்னும் தலைப்பில் உரையாற்றினார். இளம் வயதிலேயே பண்டாரத் தவர்கள் பெற்றிருந்த ஆராய்ச்சித் திறனைக் கண்டு அவரை, விழாத் தலைவரும் சொற்பொழிவாளர்களாக வந்திருந்த அறிஞர்பா.வே.மாணிக்க நாயக்கர், 1800 ஆண்டுகட்கு முந்திய தமிழர் என்னும் நூலை எழுதிய âU.கி.É. கனகசபைப் பிள்ளை முதலானோரும் வெகுவாகப் பாராட்டினர். இந்தத் தொடக்கக் காலத்து உரையானது பண்டாரத்தாருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது. இதன்பிறகு இவருக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் இடையேயான தொடர்பு நன்கு வளர்ந்து வந்தது. பணி அறிஞர் பண்டாரத்தார் முதன்முதலாகத் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வட்டாட்சி அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் அமர்த்தப்பட்டார். அங்கு வட்டாட்சியராக இருந்து அழகிரிசாமிப் பிள்ளை என்பவரது அன்பினைப் பெற்ற பண்டாரத்தார் அந்த அலுவலகத்தில் ஒன்றரை ஆண்டுக்காலம் பணியாற்றினார். அதன் பின்னர்க் குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்த இவரது ஆசிரியர் வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை விடுமுறையில் இருந்த போது அப்பள்ளியில் ஒரு மாதக் காலம் தலைமைத் தமிழாசிரியராக அறிஞர் பண்டாரத்தார் பணியாற்றினார். அதனையடுத்து 1917-இல் இருந்து 1942-வரையிலான இருபத்தைந்து ஆண்டுக் காலம் குடந்தையிலுள்ள வாணாதுறை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும், தலைமைத் தமிழாசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். பண்டாரத்தார் அவர்கள் வாணாதுறைப் பள்ளியில் பணியில் சேர்ந்த பொழுது அவரது ஆசிரியரான பி ட்டி.நடேச சாதிரி என்பவர் அங்குத் தலைமை ஆசிரியராக இருந்தார். அவராலும், அவரைத் தொடர்ந்து அங்குப் பணியாற்றிய டி.ஆர்.ரங்கசாமி ஐயங்கார், nf.vÞ.கிUZzrhÄ ஐயங்கார் ஆகியோராலும் நன்கு மதிக்கப்பெற்ற பெருமைக்குரியவர் இவ்வறிஞர். இவர், பள்ளி நிர்வாகியாகிய வி.ஆர்.சீனிவாச ஐயங்காராலும் நன்கு மதிக்கப் பெற்றார். பண்டாரத்தார் அவர்கள் குடந்தையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்பொழுது 1921-இல் அவரது மனைவியார் காலமானார். அதற்கு முன்னரே அவரது பெற்றோர்களும் காலமாகிவிட்டனர். எனவே, 1922-இல் அவரது உறவினர் திரு.டி.எ.சிவானந்தம் பிள்ளை என்பவரது முயற்சியால் சீர்காழி வட்டம் எலத்தூரில் வாழ்ந்த சைவப் பெரியார் சதாசிவக் குருக்கள் என்பவரது இரண்டாம் மகளாராகிய சின்னம்மாள் என்பவரை இவர் இரண்டாம் மணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பொருளாதார முன்னேற்றமும் படிப்படியாக ஏற்பட ஆரம்பித்தன. ஆராய்ச்சிப் பணி அறிஞர் பண்டாரத்தார் தமது தொடக்கக் காலத்திலேயே செந்தமிழில் எழுதிய கட்டுரைகளைக் கண்டு, ‘தமிழ்ப் புலவர்களிலும் ஒருவர் வரலாற்றுப் புலவராகி ஆராய்ச்சி உலகில் மைல் கற்கள் நாட்டப் போகிறாரே!’ என்று அதிசயமும் ஆனந்தமும் ஒருங்கே அடைந்திருக்கிறார் தமிழறிஞரான பி.ஸ்ரீ. அதற்கேற்ப இவரது தொடக்கக்கால ஆய்வுகளே ஆழமுடையனவாக அமைந்தன. குடந்தை வாழ்க்கையில் ஓய்வு நேரங்களில் எல்லாம் தமிழாராய்ச்சியும் கல்வெட்டாராய்ச்சியும் செய்து வந்த பண்டாரத்தார் அவர்களுக்குக் குடந்தை அரசினர் கல்லூரி நூலகம் பெரிதும் பயன்பட்டது. அரசினர் கல்லூரியாதலால் அரசாங்கத்தினரால் வெளியிடப் பெறும் கல்வெட்டுத் தொகுதிகளும், கல்வெட்டுத் துறையினரின் ஆண்டறிக்கை களும், எபிகிராபிக இண்டிகா போன்ற வரலாற்று ஆய்வு இதழ்களும் இங்குத் தொகுத்து வைக்கப் பெற்றிருந்தன. இவற்றை அறிஞர் பண்டாரத் தாரைத் தவிர வேறு எவரும் அக்காலத்தில் பயன் படுத் தினாரில்லை. மேலும் தமக்கு ஓய்வு கிடைத்தபோதெல்லாம் குடந்தை வட்டத்தி லுள்ள பல ஊர்களுக்கும் சென்று கோயில்களிலுள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து வந்து, ஆய்வு செய்து, அந்த ஆய்வில் கண்ட முடிவுகளை அவ்வப்போது இதழ்களில் எழுதிவரும் பணியை அவர் மேற்கொண்டார். ஆரம்பத்தில் செந்தமிழில் எழுதத் தொடங்கிய அறிஞர் பண்டாரத்தார், அதனைத் தொடர்ந்து தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி ஆகிய இலக்கிய இதழ்களில் இடைவிடாமல் கட்டுரைகள் எழுதி வந்தார். தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் பண்டாரத்தார் அவர்களுக்கு அடிக்கடிக் கடிதம் எழுதித் தமிழ்ப்பொழிலுக்குக் கட்டுரை எழுதுமாறு தூண்டுவார்கள். பிள்ளையவர்கள் தமது கடிதங்களில் அடிக்கடிக் கடிதம் எழுதித் தொந்தரவு தருகிறேன் என்பது பற்றிச் சினவாதிருக்க என்றெல்லாம் எழுதியதாக அறிய முடிகிறது. எனவேதான் தம்மை ஆதரித்த உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் காலமானபோது, ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானகத்தே யிருப்போ ரெல்லாம் சாவாத புலவரெனச் சார்ந்தனையோ மற்றவர்க்குத் தமிழன்பு உண்டோ ஓவாது பணிபுரிந்தாய் உமாமகே சுவரப்பேர் உற்றார் நின்னை ஆவாவின் றிழந்தனமால் ஐயகோ விக்கொடுமை அறையற் பாற்றோ என்று இரங்கற்பா எழுதி அறிஞர் பண்டாரத்தார் ஏங்கித் தவித்தார். தத்தம் கல்வெட்டு ஆய்வுகளைப் பற்றி அறிஞர் பண்டாரத்தார், தஞ்சை எல்.உலகநாத பிள்ளை, திருவாரூர் இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர் ஆகியோர் அவ்வப்போது ஒன்றுகூடி விவாதித்து முடிவுகளை மேற்கொண்டமையும் உண்டு. ஆராய்ச்சி நெறிமுறைகளுள் இது மிகமிக இன்றியமையாத ஒன்றாகும். பல தமிழறிஞர்கள் ஆண்டுதோறும் பண்டாரத்தார் அவர்களின் இல்லத்திற்கச் சென்று அங்குத் தங்கிச் செல்வதை வழக்க மாகக் கொண்டிருந்திருக்கின்றனர். அறிஞர் பண்டாரத்தார் விருந்தோம்பும் பண்பினைத் தமது அடிப்படை உயிர்நாடியாகக் கெண்டிருந்தார். கல்வெட்டுத்துறை அதிகாரிகளாக இருந்த இராமநாதையர், வேங்கடசுப்பையா ஆகியோர் குடந்தை வட்டத்திலுள்ள கோவில்களில் கல்வெட்டுக்களைப் படியெடுக்க வருங்கால் இவருடன் தொடர்பு கொள்வர். குடந்தையில் அறிஞர் பண்டாரத்தாருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த பேராசிரியர் சுந்தரராம ஐயர், பாஷா பாரத துரந்தரர், மகாமகோபாத்யாய ம.வீ.இராமானுசா சாரியார், வலம்புரி அ.பாலசுப் பிரமணியப் பிள்ளை, சீநிவாசய்யர், ஏ.எம்.சடகோபராமாநுசாசாரி, பண்டித அ.கந்தசாமிப் பிள்ளை, யதார்த்தவசனி இதழாசிரியர் கோவிந்தசாமிப் பிள்ளை, சிவசேனாபதி ப.தி.சோ.குமாரசாமி செட்டியார், பண்டித செ.முத்துரத்தின முதலியார், குமார வீரய்யர், தஞ்சைமணி ஆசிரியர் எ.கணபதி முதலானோர் இவரது ஆய்வினை ஊக்கப்படுத்தியுள்ளனர். குடந்தையில் அறிஞர் பண்டாரத்தார் பணியாற்றிக் கொண்டிருந்த போது 1933 முதல் 1938 வரை யதார்த்தவசனி என்ற இதழின் துணை ஆசிரியராக இருந்து எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். சுதேசமித்திரன் என்ற இதழில் சென்னை உலகநாத நாயக்கர் என்பவர் துணை ஆசிரியராக இருந்தபொழுது, அவரது உதவியோடு அறிஞர் பண்டாரத்தார் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி அவ்விதழில் வெளி யிட்டார். அதனைத் தொடர்ந்து கலைக்களஞ்சியம் போன்ற நூல்களிலும் பல்வேறு மாநாட்டு மலர்களிலும் இவரது கட்டுரைகள் மணம் பரப்பின. கட்டுரைகள் அறிஞர் பண்டாரத்தார் தாம் ஆய்ந்து கண்ட ஒவ்வொரு செய்தி களையும் அவ்வப்போது இதழ்களில் பதிவு செய்து வந்திருக்கிறார். 1914 - செந்தமிழில் இவரெழுதிய சோழன் கரிகாலன் என்னும் கட்டுரை இவரது முதல் கட்டுரையாகும். அதனைத் தொடர்ந்து தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி முதலான இதழ்களில் எண்ணற்ற கட்டுரைகளை அவர் எழுதி யுள்ளார். அவரது தொடக்கக் காலக் கட்டுரைகளுள் குறிப்பிடத் தக்கவை என்னும் வகையில் சோழர்குடி, சோழன் செங்கணான், திருவிளையாடற் புராணம் 64-வது படல ஆராய்ச்சி, அதிகமான் நெடுமான் அஞ்சி, இளங்கோவடிகள் குறித்துள்ள பழைய சரிதங்கள், ஓரி, கல்லாடமும் அதன் காலமும், கல்வெட்டுக்களால் அறியப்படும் சில தமிழ்ப் புலவர்கள், திருவள்ளுவரும் ஞானவெட்டியும், துடிக்குறி, தொண்டைமான் சாசனம், புறநாட்டுப் பொருள்கள், பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி, மழவர் வரலாறு, முதற் கண்டராதித்த சோழதேவர் முதலானவற்றைக் குறிப்பிடலாம். இவ்வனைத்தும் இவரது முதல் நூல் வெளிவருவதற்கு முன்பே வெளிவந்தவையாகும். அறிஞர் பண்டாரத்தார் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளுள் சில அவர் காலமான பிறகு அவரது மகனார் பேராசிரியர் ச.திருஞானசம்பந்தம் அவர்களால் தொகுக்கப் பெற்று 1961-இல் இலக்கியமும் கல்வெட்டுக் களும், கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள் என்னும் தலைப்புக்களில் நூல்களாக வெளிவந்துள்ளன. ஆயினும் இந்த இரண்டு நூல்களிலும் இடம்பெறாது இதழ்களில் மட்டும் வெளிவந்துள்ள கட்டுரைகளும் உண்டு. இதுவரை நூல் வடிவம் பெறாத அந்தக் கட்டுரைகள் இந்நூலாசிரியரால் தொகுக்கப்பெற்று, அவற்றைச் சென்னையிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 1998-இல் சதாசிவ பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் என்னும் பெயரில் நூலாக வெளியிட்டுள்ளது. முதற் குலோத்துங்க சோழன் என்னும் முதல் நூல் அறிஞர் பண்டாரத்தார் தமது ஆசிரியரான வலம்புரி பாலசுப்பிரமணியப் பிள்ளை அவர்களுடன் இணைந்து சைவ சிகாமணிகள் இருவர் என்னும் நூலை எழுதியுள்ளதாக அறிய முடிகிறது. ஆயினும் அந்த நூல் இப்பொழுது கிடைக்க வில்லை. இவர் குடந்தையில் கருணாகரத் தொண்டைமான் என்ற நூலை எழுதத் தொடங்கியிருக்கிறார். இந்த நூல் 1922-23இல் முடிவெய்தியது. ஆயினும் இந்த நூல் வெளிவர வில்லை. அத்தொண்டைமான் முதற் குலோத்துங்க சோழனின் படைத் தளபதிகளுள் ஒருவனாகையால், பின்னர் அவனது வரலாற்றை உள்ளடக்கி முதற்குலோத்துங்க சோழன் (1930) என்ற நூலை அறிஞர் பண்டாரத்தார் எழுதினார். இந்த நூல்தான் பண்டாரத்தார் எழுதி வெளிவந்த அவரது முதல் நூலாகும். பண்டாரத்தார் அவர்களின் இந்த நூல் கல்வெட்டாய்வாளர் திரு.வி.ரெங்காச்சாரியார், டாக்டர் உ.வே.சாமிநாதையர், தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனார் முதலான அறிஞர் பெருமக்களாலும், இந்து, செந்தமிழ், நவசக்தி முதலான இதழ்களாலும் வெகுவாகப் பாராட்டப் பெற்றது. பண்டாரத்தார் அவர்களின் இந்த நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தல் இன்டர்மீடியேட் வகுப்பிற்குப் பாடமாக வைக்கப் பெற்றிருந்தது. இவ்வறிஞர் வாணாதுறையில் பணியில் சேர்ந்தபொழுது மாத ஊதியமாக ரூபாய் இருபத்தைந்து மட்டுமே பெற்றிருக்கிறார். இவர் அப்பணியி லிருந்து விலகியபோது பெற்ற மாத ஊதியம் ரூபாய் முப்பத்தைந்து ஆகும். இவ்வாறு குறைந்த ஊதியம் மட்டுமே பெற்று வந்த இவர், முதற் குலோத்துங்க சோழன் என்ற நூல் பாட நூலாக்கப்பட்ட போது தமது பொருள் முட்டுப்பாடு நீங்கப் பெற்றார். இது பற்றி அறிஞர் பண்டாரத்தார், முதற் குலோத்துங்கன் கலிங்கத்தை வெற்றி கொண்டபோது ஆசிரியர் சயங்கொண்டார் அவன்மீது கலிங்கத்துப்பரணி பாடி மகிழ்வித்தார். மன்னர் பெருமானும் அந்நூல் அரங்கேற்றப் பெற்றபோது ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பொன் தேங்காய் ஒன்றை உருட்டித் தந்து புலவர் பெருமானை மகிழ்வித்தான் என்பர். யான் அப்பேரரசனது வரலாற்றை எழுதினேன். அதுமுதல் எனது வாழ்க்கையில் பொருள் முட்டுப்பாடு நீங்கியது. கடன் வாங்க வேண்டிய நிலையும் ஒழிந்தது எனக் குறிப்பிட்டதாகச் சுட்டுவர். இவர் குடந்தையில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட பிறிதொரு நூல் பாண்டியர் வரலாறு (1949) எனப்படுவதாகும். முதற் குலோத்துங்க சோழன், பாண்டியர் வரலாறு என்னும் இரண்டு நூல்களுமே தமிழ்ப்பொழில் வெளிவந்து, பின்னர் நூல் வடிவம் பெற்றன. நீதிக்கட்சியின் கருத்துக்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அக்கட்சி நடத்திய ஒவ்வொரு மாநாட்டிலும் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் குடந்தை வந்தபோ தெல்லாம் அவர்மீது அறிஞர் பண்டாரத்தார் வாழ்த்துப் பாக்கள் பாடி அவரிடம் வழங்கியிருக்கிறார். பெரியாரும் இவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அறிஞர் பண்டாரத்தாரின் உடையார்குடிக் கல்வெட்டு ஆய்வு குறித்து அறிந்த தந்தை பெரியார், தாம் சிதம்பரம் வந்தபோது இவரை அழைத்துப் பாராட்டியதோடு, இவரது ஆய்வை ஊக்கப் படுத்தவும் செய்திருக்கிறார். தமிழ் மறவர் பொன்னம்பலனார் இவரது நெருங்கிய நண்பராவார். குடந்தையில் திரு.சிவானந்தம் பிள்ளை, பொம்மலாட்டம் அப்பாசாமி பிள்ளை ஆகிய இருவரிடமும் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை இவர் பெற்றிருந்தார். இத்தகைய பெரும்புலவரான அறிஞர் பண்டாரத்தார் குறைந்த ஊதியத்தில் குடந்தையில் பணியாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு வேதனையுற்ற அவரது நண்பர்கள் சிலர் வாய்ப்புக்கள் நேர்ந்த போதெல்லாம் அவரைத் திருவையாறு அரசர் கல்லூரி, திருப்பதி தமிழ்க் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் (தமிழகராதி) ஆகிய இடங் களுக்கு விண்ணப்பிக்குமாறு தூண்டினர். பல காரணங்களால் மேற்கூறிய இடங்களுக்கு விண்ணப்பிப்பதை பண்டாரத்தார் அவர்கள் தவிர்த்து வந்தார்கள். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பணி 1942-இல் சர்.கே.வி.ரெட்டி நாயுடு என்பவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தபொழுது அப்பல்கலைக் கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையானது விரிவுபடுத்தப்பட்டது. அந்த நேரத்தில் அறிஞர் பண்டாரத்தார் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரை யாளராகப் பணியில் சேர்ந்தார். அவர் அப்பணியில் சேர்வதற்குக் கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை, புதுக்கோட்டை வழக்கறிஞர் நாகராச ஐயர் ஆகியோர் மேற்கொண்ட முயற்சி அடிப்படைக் காரணமாக இருந்திருக்கிறது. பண்டாரத்தார் அப்பணியில் சேர்ந்த நேரத்தில் பண்டித மணி மு.கதிரேசஞ் செட்டியார் ஆராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தார். மிக உயர்ந்த பதவியில் இருந்திருக்க வேண்டிய அறிஞர் பண்டாரத்தார், தமக்குக் கிடைத்த பதவியைச் சிறந்ததாகக் கருதி மகிழ்ச்சி யோடு வாழ்ந்தார். அதற்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சூழலும் அவருக்குப் பேருதவியாக அமைந்தது. பல்கலைக் கழகத்தின் நல்ல நூல்நிலையம் அவருக்குப் பெரிதும் பயன்பட்டது. அங்கு அறிஞர் ஔவை சு.துரைசாமிப் பிள்ளை, பேராசிரியர் கோ.சுப்பிரமணிய பிள்ளை, அறிஞர் க.வெள்ளைவாரணனார் முதலான நல்ல நண்பர்களும் அவருக்குக் கிடைத்தனர். இதனை மகிழ்ச்சியோடு பொன்னி இதழுக்குத் தாம் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் அறிஞர் பண்டாரத்தார் குறிப்பிடு கிறார். அறிஞர் பண்டாரத்தார், அறிஞர் வெள்ளைவாரணனார், அறிஞர் துரைசாமிப் பிள்ளை ஆகிய மூவரும் எப்பொழுதும் அண்ணாமலையில் ஒன்றாக இணைந்தே காணப்படுவர் என்றும், அவர்களது அந்தக் காட்சி தேவார மூவரே நேரில் வந்தது போன்று காணப்படும் என்றும் அவர்களைப் பற்றி அறிந்தோர் குறிப்பிடுகின்றனர். அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்ததும் அவரது வேண்டுகோளுக்கு ஏற்பப் பிற்காலச் சோழர் வரலாற்றை எழுதுவதற்குப் பல்கலைக் கழக நிர்வாகம் அவருக்கு அனுமதி வழங்கியது. அங்கு அவரது ஆய்விற்குப் பல்கலைக் கழக நூலகத்திலிருந்த கல்வெட்டு ஆய்வு நூல்கள், வரலாற்று நூல்கள், இலக்கியங்கள் முதலியன பேருதவியாக அமைந்தன. அதன் விளைவாக அவரெழுதிய பிற்காலச் சோழர் சரித்திரத்தின் முதல் பாகம் 1949-இலும் இரண்டாம் பாகம் 1951-இலும் பல்கலைக் கழக வெளியீடு களாக வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகத்தை அவர் எழுதத் தொடங்கியதும், பல்கலைக் கலைக் கழகத்தின் திட்டத்திற் கிணங்கக் களப்பிரர் காலத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதும் பணியை அவர் மேற்கொண்டார். அதன் பயனாக அவரெழுதிய தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600) என்னும் நூல் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே பல்கலைக் கழகத்திடம் அளிக்கப் பட்டது. தமக்கு அளித்த பணியை முன்கூட்டியே அவர் முடித்து விட்டதால், தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15-ஆம் நூற்றாண்டுகள்) என்னும் பிறிதொரு நூலையும் எழுதி முடித்தார். இந்த இரண்டு நூல்களும் 1955-இல் பல்கலைக் கழக வெளியீடுகளாக வெளிவந்தன. தமது வயதின் காரணமாக அறுபதாம் வயது நிறைவுற்ற 1953-இல் இவர் பல்கலைக் கழகப் பணியிலிருந்து முறையாக ஓய்வு பெற்றார். பிற்காலச் சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம் எழுதப்படாமல் நின்றது. பண்டாரத்தாரின் திறமையைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணிய பல்கலைக் கழகம் மீண்டும் அவரை 1955-இல் பணியில் அமர்த்தியது. அறிஞர் பண்டாரத்தார் மீண்டும் பணியில் சேர்வதற்குப் பயணவியல் அறிஞர் சோமலெ போன்றவர்கள் பேருதவியாக இருந்திருக்கின்றனர். இது குறித்து அறிஞர் சோமலெ, பண்டாரத்தார் அவர்களைப் பற்றித் துணைவேந்தர் திரு.நாராயணசாமி பிள்ளை அவர்களிடம் தெரிவித்தேன். உடனே அப்பெருமகனார் பண்டாரத்தார் அவர்கள் வீட்டிற்கு என்னை அனுப்பி, தமது காரிலேயே ஓய்வு பெற்றிருந்த புலவர் பெருமானை அழைத்துவரச் செய்து, அவரை மீண்டும் வேலையில் நியமித்தார்கள். என எழுதுவதன் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இதன் மூலம் தகுதி உள்ளவர்களைத் தேடி மதித்ததோடு அவர்களைப் பல்கலைக் கழக வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்ட பெருமை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு என்பது தெளிவாகிறது. அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலையில் மீண்டும் பணியில் சேர்ந்த பொழுது சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம் அவரால் எழுதப்பெற்று 1959-இல் அச்சுக்குச் சென்றது. பின்னர் அந்நூல் 1961-இல் பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்தது. அறிஞர் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் வரலாறு தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியதாகும். வரலாற்றைக் கதை கூறுவது போன்று எளிய நடையில் ஆசிரியர் கூறி யிருப்பது இதன் மற்றுமொரு சிறப்புக் கூறாகும். இந்த நூல் வெளிவந்த பிறகுதான் பிற்காலச் சோழர்களின் பெருமைகளைத் தமிழுலகம் அறிய ஆரம்பித்தது. அந்நூற் செய்திகளின் சிறப்பிற்கு ஒரு சான்றாக, அவரைப் பற்றி அறிஞர் சோமலெ, பிறர் குறைகாணாப் பெருந்தகையராக அவர் வாழ்ந்தார். அவரிடம் தமிழன்பர்கள் வலிந்து கண்ட ஒரே குறை சோழர்களின் புகழை உச்சிமேல் ஏற்றி விட்டாரே என்பதுதான். என்று குறிப்பிட்டதனை எடுத்துக் காட்டுவது மிகவும் பொருத்தமுடையதாக அமையும். பண்டாரத்தார் அவர்களின் சோழர் சரித்திரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர்களுக்குச் சிறிது காலம் பாடநூலாகவும் வைக்கப் பெற்றிருந்தது. நம்பகத் தன்மையோடு அறிஞர் பண்டாரத்தார் தமது நூல்களை எழுதிய காரணத்தினாலேயே அவரது பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களது சரித்திர நாவல்களைப் படைத்தனர். இந்த அரிய நூலைப் படைத்த காரணத்தினால் பண்டாரத்தாருக்குத் தாமும் தமிழுலகும் பெரிதும் கடமைப்பட்டிருப்பதாகக் கல்வி uh.கிUZz_®¤â நன்றியுணர்வோடு குறிப்பிடுகிறார். மேலும், இவர், திருப்புறம்பயத் தல வரலாறு (1946), செம்பியன் மாதேவித் தல வரலாறு (1958), காவிரிப்பூம்பட்டினம் (1959), திருக்கோவலூர் புராணம் -(பதிப்.1984) என்னும் நூல்களையும் எழுதியுள்ளார். இவர், தொல்காப்பியி பாயிரவுரை என்றதொரு நூலையும் எழுதியுள்ளதாக அறிய முடிகிறது. ஆயினும் அந்த நூல் கிடைக்கவில்லை. மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றிய எ.கோவிந்தசாமிப் பிள்ளை, கல்வெட்டு ஆராய்ச்சியாளர் தி.நா.சுப்பிரமணியம், கரந்தைக் கல்லூரியில் பணி யாற்றிய சி.கோவிந்தராசன், டி.எம்.வீரையன், ஆர்.கண்ணுசாமி, காங்கேயன் பேட்டை இராமச்சந்திரன், திருவைகாவூர் கோ.பிச்சை முதலானோர் இவரது மாணவர்களுள் குறிப்பிடத் தக்கவர்களாவர். இவர் குடந்தையில் இருந்தபொழுது பிற்காலத்தில் கல்வெட்டு ஆய்வாளராகத் திகழ்ந்த வை.சுந்தரேச வாண்டையார், வீராசாமி நாயுடு, கோவிந்தசாமி நாயுடு முதலானோருக்குத் தனியே தமிழ்ப்பாடம் சொல்லித் தந்தார். நண்பர்கள் தமிழறிஞர்கள் பலரோடு தொடர்ந்து தொடர்புகள் வைத்துக் கொண்டவர் அறிஞர் பண்டாரத்தார். அவரது நெருங்கிய நண்பர்கள் என்னும் வகையில் தமிழறிஞர்களான தஞ்சை கே.எ.சீனிவாச பிள்ளை, நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள், திரு.வி.கலியாண சுந்தரனார், டாக்டர் உ.வே.சாமிநாதையர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, எ.வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், அ.மு.சரவண முதலியார், திருமணம் செல்வகேசவராய முதலியார், கா.நமச்சிவாய முதலியார், சிந்தாதிரிப்பேட்டை கா.மு.சின்னப்பா பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி, கு.கோதண்டபாணி பிள்ளை ஆகியோரைக் குறிப்பிடலாம். ஆய்வியல் சிறப்பு தமது உடல் நோயுற்ற காலத்திலும் கல்வெட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடும் நினைவாற்றலும் கொண்டவராக அறிஞர் பண்டாரத்தார் காணப்பட்டார். இவ்வறிஞர் தம்மைப் பற்றித் தாமே சுய விளம்பரம் செய்து கொள்ள விரும்பாதவர். இவர் தானுண்டு, தன் வேலையுண்டு என்ற நிலையில் அடக்கமாகப் பணியாற்றி வந்தவர். அறிஞர் பண்டாரத்தார் தமது இறுதிக் காலத்திலும் தொடர்ந்து ஆய்வுப் பணி செய்து வந்தார். தமிழ் நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டியன நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்பவில்லை என்று அவர் தமது இறுதிக் காலத்தில் குறிப்பிட்டமையானது அனைவரும் எண்ணி யெண்ணி வியக்கத் தக்க ஒன்றாக அமைகிறது. தமிழோடு தொடர்புடைய பல மாநாடுகளிலும் அறிஞர் பண்டாரத்தார் கலந்து கொண்டிருக்கிறார். தமிழகப் புலவர் குழுவானது முதன்முதலாகத் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் கூடிய பொழுது அதன் முதல் கூட்டத்திற்கு இவர் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். தஞ்சையில் ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை இராசராசன் விழாவை முதன் முதலாக ஆரம்பித்த பொழுது, மாவட்ட நீதிபதியாக இருந்த இராமலிங்கம், ஐ.சி.எ என்பவர் அவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார். அறிஞர் பண்டாரத்தார் அக்கூட்டத்தில் முதல் சொற்பொழிவு நிகழ்த்திச் சிறப்பித்தார். ஆராய்ச்சியின் போக்கு அறிஞர் பண்டாரத்தார் நடுநிலையோடு தமது ஆய்வினைச் செய்து வந்ததன் காரணத்தினாலே அவரது ஆராய்ச்சித்திறன் மேனாட்டு அறிஞர் களாலும் பாராட்டப் பெற்றுள்ளது. என்று மாணிக்கவாசகத் தம்பிரான் சுவாமிகள் குறிப்பிடுகிறார். ஆய்வுலகில் பலராலும் ஏற்கத் தக்க வகையில் தமக்கென்று ஓர் ஆராய்ச்சி நெறிமுறையை வகுத்துக் கொண்டு செயல் பட்டவர் பண்டாரத்தார். தாம் ஆய்வு செய்ய எடுத்துக் கொண்ட கருத்துக்கள் ஒவ்வொன்றையும் மிகுந்த விழிப்புடன் ஆராய்ந்து உரைத்தார். சில கருத்துக்களில் சரியான முடிவிற்கு வர இயலாத நிலையில், இது மேலும் ஆராய்தற்குரியது. ஒரு சார்பாகத் துணிய இயல வில்லை. என்றெல்லாம் கூறி இவர் நெகிழ்ச்சியோடு நடந்துகொண்டார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அறிஞர் பண்டாரத்தார், தாம் ஆய்ந்த கண்டவற்றை விரைந்து வெளி யிடவில்லை. அவர் தமது முடிவினைப் பல்வேறு சான்றுகளின் மூலம் உறுதிப்படுத்திய பிறகே வெளியிட்டார். எனவேதான், அவரது ஆய்வின் முடிவுகள் பல இன்றும் அசைக்க முடியாதவையாக அமைந்துள்ளன. சான்றாக, குலோத்துங்கனைச் சைவம் சார்ந்தவன் என்று பலரும் கருதிக் கொண்டிருந்த நேரத்தில், பல்வேறு கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் அவனைச் சமயப்பொறை உடையவனாகக் காட்டி நிறுவிய பண்டாரத்தாரின் முடிவை இன்றும் எவரும் மறுக்க இயலாத நிலையில் உள்ளமையினை எடுத்துக் காட்டலாம். சமயப்பற்று அறிஞர் பண்டாரத்தார் சிறந்த சிவபக்தி உடையவர். இவ்வறிஞர் தமது வாழ்க்கையின் முற்பகுதியில் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான பெரியபுராணம் ஓதிய பின்னரே உணவு உண்பது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் 1928- முதல் தாம் இறக்கும் வரை தமது பிறந்த ஊரான திருப்புறம்பயத்திலுள்ள கோயிலில் சைவ சமய நால்வர்க்கும் ஆண்டுதோறும் குருபூசை செய்து வந்துள்ளார். அது தொடர்ந்து நடப்பதற்கு இவர் ஏற்பாடுகள் செய்திருந்தபோதும், இப்பொழுது அது நின்றுவிட்டது. 1953-இல் திருப்புறம்பயக் கோயில் குடமுழுக்கு நடந்தபொழுது அறிஞர் பண்டாரத்தார் தமது சொந்தச் செலவில் முதற் பிரகாரத்தில் நடராசர் சந்நிதிக்கு நேர் எதிரே சைவ சமய நால்வர்க்கு மண்டபம் கட்டித் தந்துள்ளார். பிற செய்திகள் அறிஞர் பண்டாரத்தார் மிகவும் அமைதியான இயல்புடையவராக இருந்த அதே நேரத்தில் உலக நடப்புக்களையும் அறிந்து வைத்திருந்தார். நாள்தோறும் செய்தித் தாள்களை முறையாகப் படிக்கும் இயல்பினை உடைய இவர், அரசியல் வரலாறுகளைக் கேட்டோர் வியக்கும் வண்ணம் கூறும் இயல்புடையவர் என்று இவரைப் பற்றி அறிந்தோர் குறிப்பிடுவர். மேலும் இவர், ஒரு சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்திருக்கிறார். தம் கையில் எந்தவிதக் குறிப்புக்களும் இன்றி நீண்டநேரம் சொற் பொழிவு ஆற்றும் இயல்புடையவர் இவ்வறிஞர். சமுதாய அறிவாற்றல் அறிஞர் பண்டாரத்தார் ஆராய்ச்சியோடு மட்டுமே தொடர்புடையவர் என்பது போன்று இன்று தோன்றலாம். அவரது அரசியல் ஈடுபாட்டை மேலே காண முடிந்தது. இன்றையச் சமுதாயச் சூழல் பற்றியும் அவர், தமது கருத்துக்களை வெளியிடத் தயங்கவில்லை. அவ்வகையில், தமிழ் வளர்ச்சியில் இன்றிருக்கும் மடங்கள் செய்தவை மிகக் குறைவு; செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளன என எடுத்துரைக்கிறார் இவ்வறிஞர். தமிழ் மீது அவருக்கிருந்த பற்றின் காரணமாக, தமிழே தாய்மொழியாக, தமிழர் நலமே தன்னலமாகக் கொள்ளும் அரசாங்கந்தான் இந்த நாட்டிற்குத் தேவை என்ற கருத்தையும் அவர் வெளியிடக் காணலாம். இவ்வாறு கருத்துக்களைக் கூறியதோடு மட்டும் நின்று விடாமல், கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு முழுமையானதும், முறையானதுமான ஆய்வு செய்து, அந்த ஆய்வின் பயனையே தம் வாழ்க்கையின் முழு வெற்றியாகக் கருதிப் பெருமிதம் கொண்டார் அறிஞர் பண்டாரத்தார். இதுதான் அவரது தனிச் சிறப்பாகும். பொறுப்புக்கள் அறிஞர் பண்டாரத்தார் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட தமிழ்க் கலைக் களஞ்சியப் பதிப்பாசிரியர் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்து பணியாற்றியுள்ளார். மேலும், தமிழ்ப்பொழில் இதழாசிரியர் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்து இவராற்றிய பணிகள் மிகுதி. பெற்ற சிறப்புக்கள் அறிஞர் பண்டாரத்தாரது ஆய்வுத் திறமையைக் கண்ட மதுரைத் திருவள்ளுவர் கழகம் 29.3.1956-இல் அவருக்கு ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இராசா சர்.முத்தையா செட்டியார் அறிஞர் பண்டாரத்தாருக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்ததோடு அவரது ஆராய்ச்சித் திறமையைப் பாராட்டிப் பேசினார். அதனைத் தொடர்ந்து அறிஞர் ஆ.கார்மேகக் கோனார் கழகச் சார்பாகப் பண்டாரத்தாருக்கு ஆராய்ச்சிப் பேரறிஞர் என்ற பட்டம் பொறிக்கப் பெற்ற பொற்பதக்கத்தை வழங்கிச் சிறப்பித்தார். சென்னை எழுத்தாளர் சங்கத்தின் நான்காம் ஆண்டு விழா 7.4.1956 அன்று சென்னையில் நடைபெற்றபோது, அப்போதைய கல்வி அமைச்சர் திரு.சி.சுப்பிரமணியம், பண்டாரத்தார் அவர்களுக்குக் கேடயம் வழங்கிச் சிறப்பித்தார். விழாவிற்குத் தலைமை தாங்கிய திரு.மகாதேவன் மற்றும் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் முதலானோர் அறிஞர் பண்டாரத்தாரின் பெருமைகளைப் பாராட்டிப் பேசினர். இந்தப் பாராட்டுகளுக்குப் பிறகுதான் பண்டாரத்தார் அவர்களின் பெருமை வெளியுலகிற்கு தெரிய ஆரம்பிக்கிறது. இதனை அறிஞர் சோமலெ, இந்த விழாக்களுக்குப் பின்னர்தான் தமிழ்நாட்டிலுள்ள சாதாரண மக்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் முற்றிலும் ஈடுபட்டுள்ள செல்வர்களும் பண்டாரத்தார் என்ற ஒருவர் இருப்பதை அறியலாயினர். ஏன் எனில், பண்டாரத்தார் ஒதுங்கி வாழ்ந்தவர், கூட்டங்களில் கலந்து கொள்ளாதவர். அரசியல் சார்பில்லாதவர், சிபாரிசுக்கு ஆள் பிடிக்காதவர். பல்கலைக் கழகத்து மேலாரை இடையிடையே போய்ப் பார்த்து வைக்கும் பழக்க மின்றிப் பல்லாண்டுகள் கழித்த போதிலும் பண்டாரத்தார் தமக்குரிய பணி களை மிகத் திறமையாகவும் முழு மனத்தோடும் செய்து, அரிய நூல் களைத் தந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குப் பெரும்புகழ் ஈட்டித் தந்தார் என்று நயத்தோடு எழுதுகிறார். குடும்பம் அறிஞர் பண்டாரத்தார் அவர்களின் ஒரே புதல்வரான பேராசிரியர் ச.திருஞானசம்பந்தம் எனப்படுபவர் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தென்னிந்திய வரலாற்றில் ஆழ்ந்த பயிற்சியுடைய இப்பேராசிரியர், தமது தந்தையாரின் பெருமைகளைப் போற்றும் வகையில் தமது பிள்ளைகளுள் ஒருவருக்குச் சதாசிவம் என்று பெயர் வைத்துள்ளார். மண்ணுலகை நீத்தல் 1959-ஜூலையில் உடல் நலங் குன்றிய அறிஞர் பண்டாரத்தார் 2.01.1960 சனிக்கிழமையன்று காலை 5 மணியளவில் இம்மண்ணுலக வாழ்க்கையை நீத்தார். அவரது இழப்புத் தமிழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். பண்டாரத்தார் அவர்களின் இழப்பைத் தாங்கிக் கொள்ள இயலாத அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம், கரு.முத்து தியாகராயர், அறிஞர் மு.இராசாக்கண்ணனார், கரந்தைத் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள், மயிலை சிவ.முத்து, பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் மொ.அ. துரைஅரங்கனார், டாக்டர் வ.சுப.மாணிக்கம், பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.சம்பந்தம், அறிஞர் சோமலெ, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ட்டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார், அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, திருப்பனந்தாள் வித்துவான் வெங்கட்ராமையா, வித்துவான் ந.சேதுரகுநாதன், ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை, இ.மு. சுப்பிரமணிய பிள்ளை முதலான எண்ணற்ற பெருமக்கள் இரங்கல் செய்தி விடுத்தனர். டாக்டர் மா.இராசமாணிக்கனார் தாம் விடுத்த இரங்கற் செய்தியில், கல்வெட்டு ஆராய்ச்சி அதன் முதல்வரை இழந்துவிட்டது. ஆராய்ச்சி அறிஞர் தங்கள் அண்ணாவை இழந்துவிட்டனர். தமிழ் ஆராய்ச்சி என்னும் தாய் தம் செல்வ மகனை இழந்து விட்டாள். உலகம், எதைக் கேட்டாலும் சொல்ல வல்ல பேரறிஞரை இழந்துவிட்டது எனக் குறிப்பிட்டிருந் தமையானது அனைவரது நெஞ்சையும் உருக்கும் வகையில் அமைந்தது. பண்டாரத்தார் அவர்கள் இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருந்தால் ஓர் இதழாசிரியர் சரித்திரப் புலிக்கு ஒரு வேண்டுகோள் என்ற தலைப்பில் சேரர் வரலாற்றை எழுதித் தருமாறு அறிஞர் பண்டாரத்தாரைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் அதனையும் செய்து முடித்திருப்பார் என்றுதான் குறிப்பிட வேண்டியுள்ளது. அந்தத் தலைப்பில் அவர், தமிழக சரித்திரத்தை மிக அருமையான முறையில் ஆராய்ந்து, பாண்டியர் வரலாறு என்றும், சோழர் வரலாறு என்றும் சோழ சரித்திரம் என்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகச் சரித்திரப் பேராசிரியர் ஸ்ரீ சதாசிவப் பண்டாரத்தார் வெளியிட்டு இணையற்ற சேவை புரிந்திருக்கிறார். இரண்டும் அருமையான புத்தகங்கள், தமிழகத்தின் மூவேந்தர்களில் இருவரைப் பற்றித் தீர்க்கமாகப் பேசும் புத்தகங்கள். மூன்றாவது மாவேந்தர்களான சேரர்களைப் பற்றி அத்தகைய புத்தகம் எதுவும் பூரண ஆராய்ச்சியுடன் வெளிவரவில்லை. ஆங்கில ஆராய்ச்சியாளர்களும் தமிழில் ஆராய்ச்சி செய்திருக் கிறவர்களும் ஐயப்பாடுகள் நிறைந்த விஷயங்களைக் கொண்டு சில புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். அவைகளினால் ஏற்படுகின்ற குழப்பம் சொல்லி முடியாது. குறைகள் இல்லாமலும் நடுவுநிலை உள்ளதுமான ஒரு நூலை ஸ்ரீ பண்டாரத்தார் எழுத முடியும். ஸ்ரீ பண்டாரத்தார் இதை அவசியம் செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் தமிழர்களுக்கு அன்புரிமை உண்டு எனக் குறிப்பிடுவது பண்டாரத்தாரின் அயராத உழைப்பையும், அவரது நடுநின்ற ஆய்வுத் திறத்தையும் எடுத்துக் காட்டும் பகுதியாகும். முடிவுரை இதுகாறும் கண்ட செய்திகளையெல்லாம் தொகுத்து நோக்கு மிடத்து, முழுமையான நாட்டுப்புறமாக இருந்த சிற்றூர் ஒன்றில் பிறந்து, தமது ஆசிரியர்களின் தூண்டுதலால் ஆர்வம் பெற்றுத் தமது சொந்த முயற்சியில் கல்வெட்டுக்களை ஆராய்ந்து, மறைந்து கிடந்த வரலாற்று உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தியதன் மூலம் தாம் பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்த பெருமகனார் அறிஞர் பண்டாரத்தார் என்பது தெளிவாய் விளங்கும். 2. கல்வெட்டாய்வு தமது கல்வெட்டாய்வின் மூலம் தமிழ்நாட்டு வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கிய ஆராய்ச்சி, பண்பாட்டு வரலாறு முதலான வற்றிற்கு வளம் சேர்த்தவர் அறிஞர் பண்டாரத்தார். தாம் காணும் ஒவ்வொன்றையும் வரலாற்றுக் கண் கொண்டு அவர் நோக்கினார். அவரது அந்த நோக்கம் நிறைவேறுவதற்கு அவர் படியெடுத்துப் பதிப்பித்த கல்வெட்டுக்கள், அரசாங்கத்தின் கல்வெட்டு ஆய்வுத் துறையினர் வெளி யிட்டுள்ள கல்வெட்டுக்கள் முதலியன பெரிதும் உதவின. இது குறித்துத் தொடர்ந்து நோக்கலாம். கல்வெட்டுக்களில் குறிக்கப்பெறும் செய்திகள் தமிழர்களின் தொன்மை இலக்கணமான தொல் காப்பியத்திலேயே நடுகல் வழிபாடு பற்றிய செய்திகள், காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று வகையிற் கல்லொடு புணர என்னும் வரிகளின் மூலம் சுட்டப்படுவதைக் காணலாம். போரில் இறந்த வீரர்களுக்காக நடப்பட்ட இந்த நடுகற்களில் அவ்வீரர்களின் பெயர்களையும் சிறப்புக்களையும், பொறித்து வைத்தனர் என்பதனை அகநானூறு (67), புறநானூறு (264) ஆகியனவற்றின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இந்த வரலாற்றைத் தமது கல்வெட்டாய் வோடு தொடர்புபடுத்தி நோக்கிய அறிஞர் பண்டாரத்தார், இறந்த வீரர்களின் நடுகற்களின் மேல் வரையப்பெற்ற அவர்களுடைய பெயரும் பீடுமே தமிழ்நாட்டில் முதன்முதல் தோன்றிய தமிழ்ச் சாசனங்கள் என்று ஐயமின்றிக் கூறலாம் என ஆய்ந்து உரைக்கிறார்.1 களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சமயம் பரப்பி வந்த சமண முனிவர்கள் நோன்பியற்றி உயிர்துறந்த இடங்களில் அவர்களைப் பற்றிய செய்திகளை அவர்களது மாணவர்கள் கல்லில் பொறித்து வைத்தனர் என்றும், அத்தகைய கற்களுக்குச் சமாதிச் சாசனம் என்று பெயர் என்றும் அறிஞர் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். இந்தச் சமாதிச் சாசனங்கன் செஞ்சிக்கடுத்த திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கழுகுமலையிலம், மதுரை மாவட்டம் ஆனைமலையிலும், திருச்சிராப்பள்ளிக் குன்றிலும் இன்றும் காணப்படுகின்றன என அவர் எடுத்துரைக்கிறார். கல்வெட்டுக்கள் எனப்படுபவை அரசர்களது பெருமைகளைப் பேசுபவை என்பது போன்ற ஒரு கருத்து, பரவலாக இருந்து வருகிறது. ஆயினும் அவற்றில் நாட்டு வரலாறு பற்றியும் சமுதாய வரலாறு பற்றியும் பல செய்திகள் காணப்படுகின்றன. கோயில்களில் நாள்தோறும் நிகழும் வழிபாடுகளும் விழாக் காலங்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சி களும், கோயில்களில் பணிபுரிவோரின் பணிகள் பற்றிய செய்திகளும் கல்வெட்டுக்களில் இடம் பெறக் காணலாம். இவ்வாறு கோயில்களில் நடைபெறும் கோயிலோடு தொடர்புடைய செய்திகள் கோயில் கல்வெட்டுக்களில் காணப்படுவது மட்டுமின்றி, அரசர்கள் பற்றிய செய்தி களும் அக்கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. கல்வெட்டுக்களால் அறியப்படும் நாட்டு வரலாறு, இலக்கிய வரலாறு மட்டுமின்றி மொழி, சமுதாயம், பண்பாடு முதலான அனைத்தையும் ஆய்ந்துரைக்கும் வகையில் பண்டாரத்தாரின் கல்வெட்டு ஆய்வுப் பணியானது அமைந்துள்ளது. எனவே, அவரது கல்வெட்டு ஆய்வுப் பணிகள் குறித்துத் தனி ஒரு தலைப்பின்கீழ் விளக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. பண்டாரத்தாரின் கல்வெட்டு ஆய்வுப் பணியை இரண்டு நிலைகளில் பிரித்து நோக்கலாம். அவற்றுள் ஒன்று, கல்வெட்டுக்களை அவரே நேரில் சென்று படியெடுத்து ஆய்வு செய்தமை, மற்றொன்று, அரசாங்கம் படியெடுத்து வெளியிட்டிருந்த கல்வெட்டுக்களை அவர் ஆய்வு செய்தமை என இரண்டு வகைப்படும். கல்வெட்டுக்களைப் படியெடுத்தல் குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் பயின்ற காலத்தில் தமது ஆசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் வகுப்புக்களில் கல்வெட்டுக்களின் அருமை பெருமைகள் குறித்துக் கூறிய செய்திகளால் ஈர்க்கப்பட்ட பண்டாரத்தாரின் உள்ளத்தில் அக்கால முதல் கோயில் களிலுள்ள கல்வெட்டுக்களைப் படித்தறிய வேண்டும் என்ற விருப்பமும் தமிழ் வேந்தர் வரலாறுகளை உணர வேண்டும் என்ற ஆர்வமும் மிகுந்து கொண்டே வந்தது. இந்தச் சூழலில் அவரது ஊரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புறம்பயக் கோயில் அவருக்குப் பெரிதும் பயன்பட்டது. அக்கோயிலில் ஆதித்த சோழன் காலம் முதற்கொண்டு விசய நகர வேந்தர்கள் காலம் வரையிலான கல்வெட்டுக்கள் ஏராளம் காணப்படு கின்றன. அவற்றுள் பலவற்றை அரசாங்கத்தின் தென்னிந்தியக் கல்வெட்டுத் துறையினர் படியெடுத்துத் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி ஆறு, பதின்மூன்று ஆகியனவற்றில் வெளியிட்டுள்ளனர். அறிஞர் பண்டாரத்தார் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் திங்கள் வெளியீடான தமிழ்ப்பொழில் 12-கல்வெட்டுக்களைப் படியெடுத்து வெளியிட்டுள்ளார். பண்டாரத்தார் அவர்களின் கல்வெட்டாய்விற்கு அவர் வாழ்ந்த பகுதியைச் சுற்றி அமைந்த கோயில்கள் பெரிதும் பயன்பட்டன. கும்பகோணம்நகர் கோயில் நகரம் என்ற பெருமைக்குரியது என்பது யாவரும் அறிந்ததே. தமது பள்ளிப்பருவம் தொடங்கி வாணாதுறையில் அவர் பணியாற்றி முடித்த 1942-வரை கும்பகோணத்தை மையமாகக் கொண்டே அவரது வாழ்க்கை அமைந்தது. அதனால் குடந்தைக் கோயில்கள் மற்றும் திருநாகேச்சுரம், திருவிடைமருதூர், திருபுவனம், ஏரகரம், இன்னம்பர், தாராசுரம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் முதலான இடங்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று தமது கல்வெட்டாய்வின் மூலம் வரலாற்றாய்வு, இலக்கிய வரலாறு, இலக்கிய ஆய்வு பண்பாட்டாய்வு முதலானவற்றிற்கான தரவுகளை அவர் நாள்தோறும் திரட்டி வந்தார். இதனை அவர், தமது பிற்காலச் சோழர் வரலாற்றின் முன்னுரையில் யான் கும்பகோணம் வாணாதுறை உயர்தரக் கலாசாலையில் தமிழாசிரியனாய் அமர்ந்த பிறகு ஓய்வு கிடைத்த போதெல்லாம் வரலாற்றாராய்ச்சி செய்து வந்தமையோடு சில ஊர்களுக்குச் சென்று கல்வெட்டுக்களைப் படியெடுத்துக் கொண்டு வந்தேன் என எழுதுவதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம். பண்டாரத்தாரின் ஏக்கம் வரலாற்று உண்மைகளைத் தாங்கிக் கொண்டு நின்ற கல்வெட்டுக் களும், செப்பேடுகளும் அந்நியர் படை யெடுப்பால் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டனவே என்ற ஏக்கம் பண்டாரத்தாரிடம் மிகுதியாகவே இருந்தது. இது குறித்து அவர், நம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அந்நியர்களால் கோயில்களிலிருந்த மூல ஆதரவுகளாகிய பல செப்பேடுகள் கவர்ந்து கொள்ளப்பட்டும் அழிக்கப்பட்டும் போயின. எஞ்சி யிருந்த செப்பேடுகளும் அவற்றின் அருமையறியாத கோயிலதிகாரியின் கையில் அகப்பட்டுப் பற்பல பண்டங்களாக மாறி அழிந்தொழிந்தன. அந்நியரான புறச் சமயத்து அரசர்களது ஆட்சிக்கு நம்நாடு உட்பட்டிருந்த காலத்தில் இடிபட்ட கோயில்கள் பல என்பது பலரும் அறிந்ததேயாகும். அக்கோயில்களில் இருந்த ஆயிரக் கணக்கான கல்வெட்டுக்களும் சிதைந்து அழிந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இடிபடாமல் நன்னிலையில் உள்ள கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் காலப்போக்கில் உதிர்ந்துபோன பகுதிகளும் உண்டு. பிற்காலங்களில் அமைக்கப்பட்ட புதிய சுவர்களால் மறைக்கப் பெற்றொழிந்த பகுதிகளும் உண்டு. மாயூரத்திற்கு அண்மையிலுள்ள பல்லவராயன்பேட்டையிற் காணப்படும் உதிர்ந்த கல்வெட்டொன்றால், எத்தனை வரலாற்றுண்மைகள் பின்னுள்ளோர் அறிந்த கொள்ள முடியாதவாறு மறைந்து போயின என்பதைச் சரித்திர ஆராய்ச்சி செய்துவரும் அறிஞர் பலரும் நன்கு உணர்வர். ஆங்கிலேயர் சோழர்களின் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தை இடித்துக் கொணர்ந்து திருப்பனந்தாளுக்கு வடக்கே மூன்று மைலில் கொள்ளிடப் பேராற்றிற்கு அணையும் பலமும் அமைத்த ஞான்று உபயோகித்த கருங்கற்களில் அகப்பட்டுக் கொண்டு பயனின்று கழிந்த கல்வெட்டுக்கள் எத்தனையோ பல. கொள்ளிடத்திற்கு அமைக்கப் பெற்றுள்ள அப்பெரும் பாலத்தின் கீழே சில கருங்கற்களில் கல்வெட்டுக்கள் சிறுசிறு துணுக்குகளாக இருத்தலை இன்றும் காணலாம் எனக் குறிப்பிடுகிறார். அதுபோன்றே கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து செயங்கொண்டம் செல்லும் வழியில் புதுச்சாவடி என்னும் ஊரில் உள்ள குளத்தில் காணப்படும் கல்வெட்டைப் பார்த்து அவர் ஏக்கப் பெருமூச்சு விட்டிருக்கிறார். இன்னும் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் பார்த்தால் பலர் வீடுகளில் கருங்கற்கள் புழக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அக்கற்கள் அனைத்தும் ஆங்கிலேயர்கள் கங்கை கொண்ட சோழபுரம் கோயில்கள் இடித்த நேரத்தில் சிதறிக் கிடந்த கற்களைக் கவர்ந்து சென்றவற்றின் பகுதியாகும் என்பதை ஐயமின்றிக் கூறலாம். பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கற்கள் அனைத்தும் கட்டுமானக் கற்களாகக் காணப்படுகின்றன என்பது கருத்தில் கொள்ளத் தக்கதாகும். இந்த வேதனை உணர்வோடுதான் எஞ்சியிருக்கின்ற கல்வெட்டுக் களையாவது படிக்கவும் படியெடுக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தோடு அறிஞர் பண்டாரத்தார் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தார். திருவிசயமங்கைக் கல்வெட்டுக்கள் ஒரு சிவராத்திரியன்று தமது ஊரான திருப்புறம்பயத்திற்கு வடக்கே கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்த கோவிந்தபுத்தூரிலுள்ள சிவபெருமான வணங்குவதற்காகச் சென்ற இவ்வறிஞர், பழமை வாய்ந்த அக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களைக் கண்டு அவற்றைப் படியெடுக்க வேண்டுமென்று விரும்பினார். அதனடிப்படையில் அந்த ஊரில் ஒருநாள் முழுமையும் தங்கிச் சில கல்வெட்டுக்களைப் படியெடுத்து வந்ததோடு, வரலாற்று ஆய்வாளர்களுக்கு அவை பயன்படும் வகையில் அவற்றுள் ஏழு கல்வெட்டுக்களைத் தமிழ்ப்பொழில் (1931-32) என்னும் இதழில் வெளியிட்டார். இவற்றுள் ஆறு கல்வெட்டுக்கள் மதுராந்தக சோழன் காலத்தவை என்றும், ஏழாவது கல்வெட்டு மூன்றாம் இராசராச சோழன் காலத்தது என்றும் இவர் ஆய்ந்துரைக்கிறார். கோவிந்தபுத்தூரும் திருவிசயமங்கையும் வெவ்வேறு தலங்கள் என்று பலரும் கருதிக் கொண்டிருந்த நேரத்தில் பண்டாரத்தாரின் இந்தக் கல்வெட்டு ஆய்வின் மூலம் கோயிலுக்கு விசய மங்கலம் அல்லது விசய மங்கை என்பன பெயர்கள் என்றும், கோயில் உள்ள ஊர் கோவிந்தபுத்தூர் என்றும் தெரியவந்தது. இந்தக் கல்வெட்டுச் செய்தியை உறுதிப் படுத்து வதற்குத் தேவாரப் பதிகங்களும் பெரியபுராணமும் அறிஞர் பண்டாரத் தாருக்குத் துணைபுரிந்தன. இக்கல்வெட்டுக்களை அவர் ஆய்வு செய்ததன் மூலம் மதுராந்தக சோழனுக்கு விக்கிரமசோழன் என்னும் ஒரு பெயரும் வழங்கிற்று என்பது வெளிப்பட்டது. மேலும் அவர், இவ்வேந்தனது ஆட்சியின் பத்தாம் ஆண்டாகிய கி.பி.980-க்கு முன்னரே, கோவிந்த புத்தூரிலுள்ள திருவிசயமங்கை என்னும் திருக்கோயில் கற்றளியாக அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதை நான்காம் கல்வெட்டு உணர்த்துகிறது. எனவே, இது முதலாம் இராசராசசோழனால் தஞ்சை மாநகரின்கண் எடுப்பிக்கப் பெற்ற இராசராசேச்சுரம் என்னும் ஆலயத்தினும் பழமை வாய்ந்த கற்றளியாகும். மதுராந்தகச் சோழன் காலத்துக் கோயிலமைப்பு எங்ஙனம் இருந்தது என்று ஆராயப் புகுவார்க்கு இக்கற்றளி பெரிதும் பயன்படும் என்று எழுதுகிறார். பண்டாரத்தார் அவர்கள் கோவிந்தபுத்தூருக்குச் சென்று திருவிசயமங்கை கல்வெட்டுக்களைப் படியெடுத்து ஆய்வு செய்யாது இருந்திருந்தால் மேற்கண்ட வரலாற்று உண்மைகள் வெளியுலகிற்கு தெரிந்திருக்குமா என்பது ஐயமே. ஏரகக் கல்வெட்டுக்கள் அறிஞர் பண்டாரத்தார் தமது ஊருக்கு அண்மையிலுள்ள ஏரகரம் என்ற ஊர் வழியாக ஒருமுறை சென்றபோது அவ்வூரில் இடிந்து விழக் கூடிய நிலையிலிருந்த சிவன்கோயில் ஒன்றைக் கண்டார். அக்கோயில் அருகில் மண்ணில் புதைந்த நிலையில் எழுத்துக்களோடு கூடிய கருங்கல் ஒன்றை அவரால் காண நேர்ந்தது. அதனைத் தமது நண்பர்கள் சிலர் உதவியோடு தோண்டி எடுத்துப் பார்த்தபோது அக்கல்லில் காணப்பட்ட இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்மடி சோழமங்கலம் என்னும் தொடரைக் கண்ட பண்டாரத்தார் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று கூறலாம். கல்வெட்டில் தாம் கண்ட அந்தத் தொடரை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி செய்த இவ்வறிஞர் ஏர் என்னும் வைப்புத்தலம் என்னும் கட்டுரையை எழுதி வெளியிட்டார். தாம் அடைந்த மகிழ்ச்சிக் கான காரணத்தினை அக்கட்டுரையில் இவர், அத்திருக்கோயிலுக்கு யான் சென்று பார்த்தபோது அது பழமை வாய்ந்த ஒரு சிவாலயம் என்று துணிதற்குரியதாக இருந்தது. அதன் கருப்பக்கிரகத்தின் தென்புறத்தில் பெரியதோர் கல்வெட்டும் காணப்பட்டது. அக்கல்வெட்டு மிகச் சிதைந்தும் நிலத்தில் புதைந்தும் இருந்தமையின் அதனை முழுதும் படித்தற்கு இயலவில்லை. ஆயினும் அஃது எவ்வரசன் காலத்தில் வரையப் பெற்றது என்பதையும் அத்திருக்கோயில் அமைந்துள்ள ஊரின் உண்மைப்பெயர் யாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் உண்டாயிற்று. ஆகவே, நிலத்திற் புதைந்திருந்த பகுதியைச் சில நண்பரது உதவிகொண்டு தோண்டிப் பார்த்தபோது அது கி.பி.1120 முதல் 1136 வரையிற் சோழ மண்டலத்திற் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஆட்சிபுரிந்த விக்கிரமசோழன் காலத்துக் கல்வெட்டு என்பது நன்கு வெளியாயிற்று. விக்கிரம சோழனது நீண்ட மெய்க்கீர்த்தியில் ஐம்படைப் பருவத்து வெம்படைத் தாங்கியும் என்பது முதலாகவுள்ள பகுதியும் காணப்பட்டது. பின்னர் அக்கல்வெட்டின் எஞ்சிய பகுதியையும் இயன்றவரையில் முயன்று படித்துக்கொண்டு வருங்கால், இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்மடி சோழ மங்கலம் என்னும் தொடர்மொழிகள் அத்திருக்கோயில் அமைந்துள்ள அவ்வூரின் பெயர் யாது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்தி மகிழ்வூட்டின என எழுதும் பகுதியின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். அந்தக் கல்வெட்டை இவர் ஆய்வு செய்ததன்மூலம், கல்வெட்டு இருந்த அவ்வூருக்கு ஏர் என்பது பழைய பெயர் என்றும், அவ்வூர் தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று என்றும், அந்த ஊர்தான் இன்று ஏரகரம் என்று வழங்குகிறது என்றும், பிற்காலச் சோழராட்சியில் அந்த ஏர் மும்மடி சோழ மங்கலம் என வழங்கப்பட்டதென்றும், மும்மடி சோழ மங்கலம் என்னும் அந்த ஊர் இன்னம்பர் நாட்டைச் சேர்ந்தது என்றும், இன்னம்பர் நாடு இராசேந்திர சிங்க வளநாட்டைச் சேர்ந்த ஓர் நாடு என்றும், மும்மடி சோழன் என்னும் பெயர் முதலாம் இராசராசனுக்கு உரியது என்றும், முதலாம் இராசராசன் காலத்தில்தான் ஏர் என்னும் தலம் மும்மடி சோழ மங்கலம் என்னும் பெயரை எய்தியிருத்தல் வேண்டும் என்றும் பல முடிவுகளை அறிஞர் பண்டாரத்தார் ஏர் என்றும் வைப்புத் தலம் என்ற தமது கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு கள ஆய்வின்மூலம் கல்வெட்டுக்களைப் படியெடுத்து ஆய்வு செய்ததோடு மட்டுமின்றிக் கல்வெட்டுத் துறையினர் வெளியிட்ட கல்வெட்டுத் தொகுதிகள் பலவற்றையும் கூர்ந்து நோக்கி ஆய்வு செய்தவர் அறிஞர் பண்டாரத்தார், என்பது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பியரின் கல்வெட்டுப் பணி தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் பலவற்றை வெளிக் கொணர்ந்ததில் ஐரோப்பியர்களுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதனைப் பண்டாரத்தார் நன்றியோடு நினைவு கூறவும் தவறவில்லை. அந்நியர் ஆட்சியினால் நம் நாட்டில் பல தீமைகள் ஏற்பட்டிருத்தல் உண்மையெனினும் அதனால் சில நன்மைகளும் கிடைத்துள்ளமையை நாம் மறந்துவிட முடியாது. அத்தகைய நன்மைகளுள் நமது பழைய வரலாற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு அரசாங்கத்தினர் கல்வெட்டிலாகா மூலம் செய்து வந்த அரிய செயல்கள் குறிப்பிடத் தக்கனவாகும் என அவர் எழுதும் பகுதியினால் இதனை விளங்கிக் கொள்ளலாம்.8 ஆயினும் பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச் சோழர் வரலாறு வெளிவந்த காலத்தில் (1949) நமது நாட்டின் வரலாற்றை அறிவதற்குப் பேருதவியாக இருந்து வந்த தென்னிந்தியக் கல்வெட்டுத் துறையின் ஆண்டறிக்கை வெளியிடும் செயலானது நின்று போயிற்று. இச்செயல் பெரிதும் வருத்தத்திற்கு உரியதாகும் என்ற கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். கல்வெட்டாய்வில் தோய்தல் தமது பள்ளிப்படிப்பு நிறைவுற்ற காலம் முதற்கொண்டு கல்வெட்டுக்களை ஆய்வு செய்யத் தொடங்கியவர் அறிஞர் பண்டாரத்தார். அவரது தொடக்கக் காலத்தில் அவர் கல்வெட்டுக்களில் மூலம் ஆய்ந்து கண்ட செய்திகளை உறுதிப்படுத்துவதற்கு அப்பொழுது வெளிவந்திருந்த சோழ வம்ச சரித்திரச் சுருக்கம் என்ற நூல் அவருக்குப் பெரிதும் பயன்பட்டது. அவ்வாறு ஆய்ந்து கண்ட செய்திகளை 1914 முதற்கொண்டு இதழ்களின் வழியாக இவ்வறிஞர் வெளிப்படுத்தி வந்தார். அது குறித்து இவர், யான் கல்வெட்டுக்களைப் படித்துப் படியெடுக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவற்றை ஆராய்ச்சி செய்து உண்மை உணர்தற்கு அந்நூல் (கோபிநாதராயரின் சோழவம்ச சரித்திரச் சுருக்கம்) பெரிதும் உதவியது எனலாம். பிறகு, கல்வெட்டுக்களையும், அரசாங்க கல்வெட்டிலாக்கா ஆண்டறிக்கைகளையும் தமிழ் நூல்களையும் ஆராய்ந்து யான் கண்ட வரலாற்று உண்மைகளை 1914-ஆம் ஆண்டு முதல் மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடாகிய செந்தமிழில் வெளி யிட்டு வந்தேன் என எழுதும் பகுதியின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். பண்டாரத்தார் அவர்கள் எழுதிய அனைத்து ஆய்வுரைகளுக்கும் அவரது கல்வெட்டுப் பயிற்சி முழுமையாகப் பயன்பட்டிருக்கிறது. வரலாற்றுச் செய்திகளை உறுதிப்படுத்துவதற்கு அவரது கல்வெட்டுப் பயிற்சியும் இலக்கியப் பயிற்சியும் பயன்பட்டன. அதுபோன்றே அவரது இலக்கிய ஆய்விற்கும் இலக்கிய வரலாற்றுக்கும் அவரது கல்வெட்டாய்வு உதவி புரிந்தது. கல்வெட்டுக்களின் மூலம் பண்டாரத்தார் அவர்கள் கண்டறிந்த செய்திகளை உறுதிப்படுத்துவதற்கு இலக்கியச் செய்திகள் உதவின. இப்படி இவரது ஆய்வானது ஒன்றோடு ஒன்றுபின்னிப்பிணைந்து அமைந்தது. கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் இணைத்து ஆய்வு செய்த இவரது இந்த ஆய்வுமுறைதான் இவரைப் பிற ஆய்வாளர் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. கல்வெட்டாய்வின் மூலம் தமிழ் கண்ட சிறுசிறு செய்திகளை யெல்லாம்கூடப் பதிவு செய்தல் வேண்டும் என்பதில் பண்டாரத்தார் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார். நாட்டு வரலாறு, இலக்கிய வரலாறு ஆகியனவற்றைத் தொடர்புபடுத்தி முறையாக எழுதுவதற்கு இவர் கல்வெட்டுச் செய்திகளைப் பயன்படுத்தியமை போக, பல்வேறு பொருள்கள் குறித்தும் பல்வேறு நேரங்களில் இவரெழுதிய ஆய்வுக் கட்டுரைகள் இலக்கியமும் கல்வெட்டுக்களும், கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள், சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் என்னும் தலைப்புக்களில் மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன என்று முதல் இயலிலேயே சுட்டப்பட்டுள்ளது. அவற்றில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் பலவற்றில் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியப்பெறும் பல புதிய செய்திகள் இனம் பிரித்து விளக்கப்பட்டுள்ளன. இதற்குச் சான்றாகக் கரந்தைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட திருபுவனமாதேவிச் செப்பேட்டின் மூலம் அறியப்படும் புதுச் செய்திகளாக இவர் குறிப்பிடுவனவற்றை எடுத்துக் காட்டலாம். அஃதாவது, இக்காலத்தில் கம்போடியா என வழங்கப்பெறும் காம்போச நாட்டின் மன்னன் நம் இராசேந்திரனுக்குத் தன் நாட்டிலிருந்து அழகிய தேர் ஒன்றை அன்பின் கையுறையாக அனுப்பி இவனது பேராதரவு பெற்றுத் தனது நாட்டைப் பாதுகாத்துக் கொண்டமையும், இவ்வேந்தன் மேலைச் சாளுக்கியர் தலைநகராகிய மான்யக் கேடத்தைக் கைப்பற்றித் தன் தந்தை யாகிய இராசராசசோழனது கருத்தை நிறைவேற்றியமையும் இச்செப்பேட்டினால் அறியப்படும் புதிய செய்திகளாகும் என்னும் பகுதி இதற்குச் சான்றாகும்.10 வடமொழிக் கல்வெட்டுக்களையெல்லாம் ஆய்வு செய்து அவற்றில் காணப்படும் புதிய செய்திகளை எடுத்துக் காட்டுவது இவரது பிறிதொரு சிறப்புக் கூறாகும். மூன்றாம் குலோத்துங்கனின் வரலாற்றை இவ்வறிஞர் எழுதும்போது திருபுவனத்தில் காணப்படும் அவனது வடமொழிக் கல்வெட்டொன்று அவன் புரிந்துள்ள சிவன்கோயில், திருத்தொண்டுகளை இனிது உணர்த்துகின்றன என எழுதும் பகுதியினை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்த முடையதாகும். பண்டாரத்தார் அவர்கள் தாம் பெற்றிருந்த வடமொழிப் பயிற்சியின் காரணத்தினால்தான், வடமொழிக் கல்வெட்டுக்களை ஆய்வு செய்து கருத்துரைக்க அவரால் முடிகின்றது. இருபெருங் கிணறுகள் பற்றிய ஆய்வு கல்வெட்டுக்களின் மூலம் அறியப்படும் இரண்டு கிணறுகள் குறித்துத் தமிழ்ப்பொழில் இதழில் பழைய காலத்திய இருபெருங் கிணறுகள் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை இவர் எழுதியுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அண்மையிலுள்ள திருவெள்ளறையில் காணப்படும் மாற்பிடுகு பெருங்கிணறு, செங்கல்பட்டு மாவட்டம் உக்கல் என்ற ஊரில் காணப்படும் இராசராசன் பெருங்கிணறு ஆகியனவற்றைப் பற்றி ஆய்வு செய்து இவரெழுதியது பழைய காலத்திய இருபெருங்கிணறு என்னும் கட்டுரையாகும். அந்த இரண்டு கிணறுகளை வெட்டியவர்கள், அவர்கள் காலத்து அரசர்கள், அக்கிணறுகளில் காணப்படும் கல்வெட்டுக் களால் அறியப்படும் பிற வரலாற்றுக் குறிப்புக்கள் முதலானவை குறித்து இக்கட்டுரையில் அவர் விளக்கியுள்ளார். அறிஞர் பண்டாரத்தார் இக்கட்டுரையில் மாற்பிடுகு பெருங் கிணற்றை வெட்டிய கம்பன் அரையன் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பதும், அந்த நூற்றாண்டின் கம்பன் என்ற பெயர் இயற் பெயராக வழங்கி வந்தது என்பதும் ஆய்வின்மூலம் தெரியவருகிறது என உரைக்கிறார். இராசராசன் பெருங்கிணறு பற்றிய கல்வெட்டில் காணப்படும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கிணறு பற்றிய வரலாற்றைக் கூறியதோடு, சோழ மண்டலம் முதலாம் இராசராசனது ஆட்சிக் காலத்திற்கு முன்னர்ப் பல நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்ததே யன்றி வள நாடுகளாகப் பிரிக்கப்படவில்லை எனவும், இராசராசன் காலத்திலிருந்த வளநாடுகள் இவையிவை எனவும் ஆய்ந்து உரைக்கிறார். அதுபோன்றே இராசராசன் கிணறு பற்றிய கல்வெட்டில் காணப்படும், பெருவழி ( Road ), பணிமகன் (Servant), புதுக்குப்புறம் (Cost for Repairing) என்ற செந்தமிழ்ச் தொடர்மொழிகள் நமது உள்ளத்தைப் பிணிக்குந்த தமையனவாய் இருக்கின்றன என்று அறிஞர் பண்டாரத்தார் பெருமிதம் அடைகிறார். மொழி வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைந்த இவைபோன்ற தனித்தமிழ்ச் சொற்களைக் கல்வெட்டுக்களிலிருந்து கண்டறிந்து எழுதும் பண்டாரத்தார் அவர்களின் திறம் வியப்பிற்குரிய தாகவே அமைந்துள்ளது. கல்வெட்டுத் தொடர்களை எளிமையாக விளக்குதல் கல்வெட்டுத் தொடர்களை அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளிலிருந்து சான்றுகள் தந்து எளிமையாக விளக்குவது அறிஞர் பண்டாரத்தாருக்குக் கைவந்த கலையாகும். இதற்குச் சான்றாகச் சோழர்கள் காலத்திலிருந்த அதிகாரிகள் குறித்து அவர் விளக்கும் பகுதியினை எடுத்துக் காட்டலாம். அஃதாவது பிற்காலச் சோழர் காலத்து அதிகாரிகளுள் பெருதரம், சிறுதரம் என்றும் பெயருடைய அதிகாரிகள் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் யார் என விளக்க வந்த இவ்வறிஞர் பெருந்தரம், சிறுதரம் அல்லது பெரு தனம் சிறுதனம் என்று இருவகை அதிகாரிகளைப் பற்றி நாம் அறிந்து கொள் வதற்கு இக்காலத்தரசியலில் பணிபுரியும் கெசட்டெட் உத்தியோகததர், நான் கெசட்டட் உத்தியோகதர் ஆகிய இருவகை , அதிகாரிகள் நிலை பெரிதும் துணைபுரியும் என எழுதக் காணலாம். இதுபோன்றே தமது ஆய்வுகளில் பரவலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும் அரிய தொடர்கள் பலவற்றை இவர் எளிமையாக விளக்கியுள்ளார். இதற்குச் சான்றாகக் கல்வெட்டுக்களில் இடம்பெறும் தொடர்களான அஞ்சவண்ணம் எனப்படுவது வணிகர் குழுவைச் சுட்டுவது எனவும், திருக்கைக்கோட்டி எனப்படுவது திருமுறைகள் வைத்துப் பூசிக்கப் பெற்ற மண்டபம் எனவும் இவர் விளக்கும் பகுதிகளை எடுத்துக்காட்டலாம். இலக்கிய வரலாற்றுக்கு உதவுதல் தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு உதவும் வகையில் கல்வெட்டுக் களால் மட்டுமே அறியக்கூடிய புலவர்கள், இலக்கியங்கள் ஆகியன பற்றிய செய்திகளையும் பண்டாரத்தார் ஆய்ந்துரைத்துள்ளார். அவ்வகையில் இவர் 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல்களாக அரும்பாக்கத்து அறிநிலை விசாகர் இயற்றிய பாரதம் என்ற நூலையும், பெரியான் ஆதிச்சதேவன் என்ற புலவர் இயற்றிய காங்கேயன் பிள்ளைக் கவி என்ற நூலையும் கட்டுவதோடு கல்வெட்டுக்களால் அறியப்படும் மூன்று தமிழ் நூல்கள் என்னும் கட்டுரையில் எல்லப்ப நயினார் இயற்றிய திருப்பாலைந்தல் உலா, திருமலை நயினார் சந்திரசேகரர் இயற்றிய இறைசைப் புராணம், திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தர் இயற்றிய ஓங்குகோயிற் புராணம் ஆகியனவற்றைச் சுட்டும் பகுதியையும் இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமுடையதாகும். இந்த ஐந்து நூல்களும் கல்வெட்டுக்களால் மட்டுமே அறியப்படுபவையாகும். மேலும் கல்வெட்டுக்களால் மட்டும் அறியப்படும் வேம்மை பயர்கோன் நாராயணன் இயற்றிய சிராமலை அந்தாதி போன்றவற்றின் பாடல்கள் சிலவற்றையும் இவ்வறிஞர் பதிவு செய்துள்ளார். கூர்ந்தாய்வு அறிஞர் பண்டாரத்தார் இலக்கியச் செய்திகளைப் போன்றே கல்வெட்டுச் செய்திகளுக்கு முன்னுரிமை தந்து தமது ஆய்வை நிகழ்த்திய போதும், கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகளையெல்லாம் அப்படியே வரலாற்றுச் செய்திகள் என்று எடுத்துக்கொள்ளவில்லை. அவர் கல்வெட்டுக்களில் காணப்படும் அனைத்தையும் கூர்ந்து ஆய்வு செய்து அவற்றில் காணப்படும் புகழுரைகளையெல்லாம் ஆய்விற்குப் பயன் படாதவை என்று ஒதுக்கித் தள்ளினார். இதற்குச் சான்றாக, இரண்டாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்திகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டிய பண்டாரத்தார் அவையெல்லாம் இவ்வேந்தனது ஆட்சியை புகழ்ந்து கூறுகின்றனவேயன்றி வரலாற்றுச் செய்திகளை உணர்த்துவனவாயில்லை. எனவே, இவன் ஆட்சிக் காலத்தில் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அரிய நிகழ்ச்சிகள் எவையும் நிகழவில்லை என்பது தேற்றம் என எழுதும் பகுதியினை எடுத்துக் காட்டலாம். அதுபோன்றே இரண்டாம் இராசாதிராசனின் மெய்க்கீர்த்தி பற்றிக் குறிப்பிடும் பண்டாரத்தார், அம்மெய்க்கீர்த்திகள் இவன் ஆட்சியின் சிறப்பை அழகுறக் கூறுகின்றனவேயன்றி இவன் வரலாற்றுச் செய்தி களை உணர்த்துவனவாயில்லை. எனினும் இவன் கல்வெட்டுக்களுள் சில, இவன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பாண்டிய நாட்டுப் போர் நிகழ்ச்சி களை நன்கு புலப்படுத்துகின்றன என எழுதுவது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். இவைபோன்ற பகுதிகளின் மூலம் விருப்பு வெறுப்பற்ற நிலைகளில் தமது கல்வெட்டாய்வினை நிகழ்த்தியவர் அறிஞர் பண்டாரத்தார் என்பதனை விளங்கிக் கொள்ள முடிகிறது. முடிவுரை இதுகாறும் கண்ட செய்திகளையெல்லாம் தொகுத்து நோக்கு மிடத்து, தமது கல்வெட்டாராய்ச்சியின் மூலம் நாட்டு வரலாற்றையும், இலக்கிய வரலாற்றையும், சமுதாய வரலாற்றையும் ஆராய்ந்து எழுதிய பெருமைக்குரியவர் அறிஞர் பண்டாரத்தார் என்பது தெளிவாகிறது. இலக்கியங்களையும் கல்வெட்டுக்களையும் இணைத்து ஆய்வு செய்ததன் மூலம் பிற ஆராய்ச்சியாளர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் இவர், தாம் பிறந்த மண்ணின் வரலாற்றை எழுதுவதற்கு அம்மண்ணிலேயே காணப் பட்ட கல்வெட்டுக்களை மிகவும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பது இவரது தனிச்சிறப்பாகும். 3. வரலாற்றாய்வு பண்டாரத்தாரது ஆய்வுகளுள் மேலோங்கி நிற்பது அவரது வரலாற்றாய்வாகும். சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, தல வரலாறு முதலியன குறித்துத் தனித் தனியாக நூல்கள் எழுதிய பண்டாரத்தார், பல்வேறு வரலாற்றுக் குறிப்புக்கள் குறித்துப் பல கட்டுரைகளையும் எழுதி யுள்ளார். அவரது வரலாற்றாய்வுகள் குறித்துத் தொடர்ந்து நோக்கலாம். வரலாற்று ஆர்வம் பண்டாரத்தாருக்கான கல்வெட்டு ஆர்வம் அவரது ஆசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயரால் அவரது பள்ளிப் பருவத்திலேயே ஏற்பட்டது என்று முதல் இயலிலேயே சுட்டப்பட்டது. அப்பொழுது வரலாற்றறிஞர் து.அ.கோபிநாதராயர் எழுதி வெளியிட்டிருந்த சோழ வம்ச சரித்திரச் சுருக்கம் என்ற நூலைப் பயின்ற பண்டாரத்தாருக்கு நம் தமிழகத்தில் பண்டைக் காலத்தில் அரசாண்ட சேர, சோழ, பாண்டியர்களது வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வத்தின் அடிப்படையில் கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் ஆராயத் தொடங்கிய அவர், தமது ஆராய்ச்சியில் கண்ட உண்மைகளை 1914 முதற்கொண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ் இதழில் எழுதி வெளியிடத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப்பொழில், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் செந்தமிழ்ச் செல்வி முதலான இதழ்களிலும் அவர் கட்டுரை எழுதி வந்தார். வரலாற்று நூல்களின் இன்றியமையாமை ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு வரலாற்று நூல்கள் இன்றியமை யாதவை என்பதனை நன்கு உணர்ந்திருந்தவர் பண்டாரத்தார். எனவேதான் அவர், முன்னோர் ஒழுகிக் காட்டிய உயர்ந்த நெறிகளையும் அன்னோர் கொண்டிருந்த சிறந்த பண்பினையும் நினைப்பூட்டி, அவர்களை நல்வழிப் படுத்துவன நாட்டின் பழைய சரிதங்களே எனலாம். அது பற்றியே உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர், தம் நாட்டின் உண்மை வரலாறுகளை ஆராய்ந்து அவற்றை மக்கள் எளிதில் அறிந்து கொள்ளுமாறு பலப் பல நூல்களை வெளியிட்டு வருகின்றனர் என எழுதுகிறார். அயல்நாடுகளில் வரலாற்று நூல்கள் மிகுதியாக எழுதப் படுவதோடு அவை அவர்களது தாய்மொழியில் வெளிவந்து பயன் நல்கிக் கொண்டிருக்கும்போது தமிழ்நாட்டில் அதற்கு மாறுபட்ட நிலை காணப்படுவது குறித்து ஆதங்கப்படும் பண்டாரத்தார், மேனாடுகளைப் பார்ப்போமாயின் அங்கே ஆண்டுதோறும் எத்தனையோ வகையில் சரித்திர நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றை மக்கள் ஆர்வத்தோடு படித்து உணர்ச்சியும் ஊக்கமும் எய்தி முன்னேற்றத் திற்குரிய வழியிற் செல்லுகின்றனர். மேனாட்டு மக்கள் அத்துணை நலங் களையடைந்து சிறப்புறுவதற்குக் காரணம், அந்நாட்டின் சரித்திரங்கள் அன்னோர் படித்துணர்ந்து கொள்ளுமாறு அவர்களது தாய்மொழியில் வெளியிடப்பட்டிருப்பதேயாம். ஆகவே, ஒரு நாட்டின் சரித்திரம் அந்நாட்டு மக்களது தாய்மொழியில் எழுதி வெளியிடப் பெற்றால் அஃது அன்னோரது அறிவு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவிபுரியும் என்பது தேற்றம் எனக் குறிப்பிடக் காணலாம். இந்த உணர்வோடுதான் தமது வாழ்நாள் முழுமையும் வரலாற்று ஆய்வில் அவர் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார். தமது ஆய்வின் முடிவுகளைத் தமது தாய்மொழியான தமிழ்மூலம் அவர் வெளிப் படுத்தினார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். வரலாற்று மூலங்கள் அயல்நாடுகள் போன்று தமிழகத்தில் மிகுதியான வரலாற்று நூல்கள் தோன்றாமைக்குக் காரணம், தக்க ஆதாரங்கள் இன்மையே என்று ஒரு சிலர் கூறிய கருத்தை அறிஞர் பண்டாரத்தார் ஏற்கவில்லை. அவர்கள் அவ்வாறு கூறுவதற்குக் காரணம் உண்மையான தாய்நாட்டுப் பற்றும் ஊக்கமும் உழைப்பும் இல்லாமையேயாம் எனக் குறிப்பிடும் இவ்வறிஞர், நாகரிகம் பெற்ற ஒரு நாட்டினர் தம் பழைய சரிதங்களை இவ்வாறு புறக்கணித்து விட்டால் அன்னோர்தாம் பண்டைப் பெருமையை இழந்த வராகக் கருதப்படுவர் எனவும் எழுதுகிறார். தமிழ்நாட்டு வரலாற்றை எழுதுவதற்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று கூறுவோரின் கருத்தை மறுத்துரைக்கும் பண்டாரத்தார், பண்டைத் தமிழ் வேந்தர்கள் எடுப்பித்த கோயில்களில் காணப்படும் பல்லா யிரக்கணக்கான கல்வெட்டுக்களும், அவ்வரசர்கள் வழங்கிய கொடைத் திறங்களைக் கூறும் செப்பேடுகளும், அவர்கள் கட்டியுள்ள கோயில்களின் சிற்ப அமைதியும், அன்னோர் ஆட்சியில் வழங்கிய நாணயங்களும், அம்மன்னர்களின் பேராதரவினால் வெளிவந்துள்ள தமிழ் நூல்களும், தமிழ் நாட்டைச் சுற்றிப் பார்த்துச் சென்ற அயல்நாட்டார் எழுதி வைத்துள்ள குறிப்புக்களும், தமிழகத்தோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்த புறநாட்டு வரலாறுகளும், ஆதிச்ச நல்லூர், அரிக்காமேடு, மொஹஞ்சதாரோ, ஹரப்பா முதலான இடங்களில் நிலத்தில் அகழ்ந்தெடுத்த புதை பொருள் களும் வரலாற்றை எழுதுவதற்குப் பெரிதும் பயன்படுபவை எனச் சுட்டிக் காட்டியுள்ளார். தாய்மொழிவழி வரலாறு அனைத்து நிலைகளிலும் தாய்மொழிவழிக் கல்வியின் தேவையானது அறிஞர் பெருமக்களால் இன்று பரவலாக வற்புறுத்தப்பட்டு வருகிறது. இது குறித்துத் தமது இளம் வயதிலேயே சிந்தித்தவர் பண்டாரத்தார். அவர் ஆய்வுகள் செய்து கொண்டிருந்த காலத்தில் பெரும்பாலான ஆய்வுகள் ஆங்கிலத்தில் வெளிவந்தன. இது குறித்து அவர் பிற்காலச் சோழர் வரலாறு என்னும் நூலின் முகவுரையில், நம் முன்னோரின் சரித்திரங்களையும் அரசியல் முறைகளையும் நாகரிகங்களையும் நம் தாய்மொழியில் படித்தறிந்து கொள்வதைக் காட்டிலும் நமக்கு மகிழ்ச்சியையும் ஊக்கமும் அளிக்கத் தக்கது வேறொன்றுமில்லை. ஆனால், ஆராய்ச்சி முறையில் எழுதப் பெற்ற அத்தகைய நூல்கள் நம் தமிழ்மொழியில் மிகுதியாக வெளிவர வில்லை என எழுதுகிறார். இந்தக் கருத்தை அவர் 1930-இல் வெளிவந்த தமது முதல் நூலான முதற் குலோத்துங்க சோழன் என்ற நூலின் முகவுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறார் என்பது எண்ணி மகிழ்தற் குரியதாகும். ஐரோப்பிய அறிஞர்களின் ஆராய்ச்சி முறையைப் பின்பற்றி நம் நாட்டறிஞர்கள் சிலர் பண்டைய வரலாற்றை ஆராய்ந்து ஆங்கில மொழியில் நூல்கள் எழுதினார்.அவ்வாறு எழுதப்பட்டதுதான் கே.ஏ.நீலகண்ட சாதிரியாரின் “The Colas” என்னும் நுல். இதுபோன்ற நூல்கள் நமது வரலாற்றைப் பிற நாட்டவர்கள் அறிந்து கொள்வதற்கு உதவக் கூடியவையாகும். ஆயினும தமிழொன்றே கற்ற நம் மக்களுக்கு அவை பயன்படமாட்டா. எனவேதான், பண்டாரத்தார் தமது நூல்களைத் தாய்மொழியாகிய தமிழில் எழுதி வெளியிட்டார். இதனை அவர், தமிழொன்றே கற்ற நம்மனோர் இன்னும் அறிந்து கொள்ள முடியாத நிலையில்தான், நம் நாட்டின் பழைய வரலாறு உள்ளது. ஆகவே, அத்தகைய வரலாற்று நூல்களை நம் தமிழ்மொழியில் ஆராய்ந்து வெளியிடுவது எல்லா மக்களுக்கும் நலம் புரியும் நற்றொண்டாகும். இக்கருத்தினையுட்கொண்டே பிற்காலச் சோழர் சரித்திரம் என்ற இந்நூல் நம் தாய்மொழியாகிய தமிழில் எழுதப்பெற்றது என்பது யாவரும் அறியற்பாலதாகும் என்று அந்நூல் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்த அடிப்படையில்தான் அவரது அனைத்து நூல்களும் தமிழில் எழுதப் பட்டன. வரலாற்று ஆய்வுகள் பண்டாரத்தார் ஆய்வு செய்து கொண்டிருந்த காலத்தில் தமிழில் முறையாக எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் குறைவாகக் காணப்பட்டன. இருந்த ஒரு சிலவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையாகும். அக்குறை யினை நீக்கும் வகையில் அவர், முதற் குலோத்துங்க சோழன் (1930), பாண்டியர் வரலாறு (1940), திருப்புறம்பயத் தல வரலாறு (1946), பிற்காலச் சோழர் சரித்திரம் - மூன்று பாகம் (முறையே 1949, 1951, 1961), செம்பியன் மாதேவித் தல வரலாறு (1958), காவிரிப்பூம்பட்டினம் (1959) என்றும் நூல்களை எழுதினார். இவற்றுள் முதற் குலோத்துங்க சோழன், பாண்டியர் வரலாறு, திருப்புறம்பயத் தல வரலாறு ஆகிய மூன்று நூல்களும் இவர் கும்பகோணத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது எழுதி வெளி யிட்டவையாகும். பாண்டியர் வரலாறானது தமிழ்ப்பொழில், செந்தமிழ் ஆகிய இதழ்களில் தொடர் கட்டுரையாக வெளிவந்து பின்னர் நூல் வடிவம் பெற்றது. இவையன்றி, வரலாறு தொடர்பாகச் சோழர்குடி, சோழன் கரிகாலன், சோழன் செங்கணான் முதற் கண்டராதித்த சோழர், சோழர்களும் இராஷ்டிரகூடர்களும், சோழர்களும் தமிழ்மொழியும், அதிகமான் நெடுமானஞ்சி, ஓரி, இளங்கோவடிகள் குறித்துள்ள பழைய சரிதங்கள், சம்புவராய மன்னர், அறந்தாங்கி அரசு முதலான பல கட்டுரைகளைப் பண்டாரத்தார் பல்வேறு இதழ்களில் எழுதியுள்ளார். 1961-இல் இவரது கட்டுரைகளின் தொகுப்புக்களாக வெளி வந்துள்ள இலக்கியமும் கல்வெட்டுக் களும், கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள் என்னும் இரண்டு நூல் களிலும் வரலாறு தொடர்பான சில கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டு ஊர்களின் வரலாற்றுச் சிறப்புக்களை விளக்கும் வகையில் பண்டாரத்தார் எழுதியுள்ள கட்டுரைகள் பற்றிய செய்திகள் ஊர்கள் பற்றிய ஆய்வு என்னும் தலைப்பின் கீழ் விரிவாகப் பேசப் பட்டுள்ளன. அவருடைய ஊர்கள் பற்றிய ஆய்வினை இந்த வரலாற்றாய் வோடு இணைத்துப் பார்ப்பது பொருத்தமுடையதாயினும், அது குறித்து விரிவாக எழுதப்பட வேண்டியிருந்தால், அது தனி ஒரு தலைப்பின்கீழ் விளக்கப்படுகிறது. சோழர் வரலாற்று ஆய்வுகள் சோழர் வரலாற்றை எழுதுவதில் பண்டாரத்தார் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார். அதற்குக் காரணம் அவர் பிறந்து, வளர்ந்த சோழ நாட்டுப் பகுதியில் எண்ணற்ற கோயில்களையும், கலைகளையும் அவர் கண்டு மகிழ்ந்ததே ஆகும் எனக் குறிப்பிடுவது பொருத்தமுடையது. சோழ வேந்தர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆர்வத்தோடு இருந்த அவருக்கு அவ்வேந்தர்கள் பற்றிக் காணப்பட்ட அளவுகடந்த கல்வெட்டுக்கள் பெரு வியப்பைத் தந்தன. இது குறித்து அவர், செப்பேடுகளுக்கும் கல்வெட்டுக்களுக்கும் இத்தகைய இன்னல்கள் நேர்ந்தும் சோழர் வரலாற்றையும் அவர்களுடைய அரசியல் முறை களையும் உணர்த்தவல்ல கல்வெட்டுக்கள் பல்லாயிரக் கணக்கில் நம் நாட்டில் இக்காலத்தும் இருத்தல் மகிழ்தற்குரியது. இமயம் முதல் குமரி முனை வரையில் பரவிக் கிடக்கும் இப்பெருநில வரைப்பில் அமைந்துள்ள நாடுகள் எல்லாவற்றிலும் பேரசர்களாகவும், சிற்றசர்களாகவும் வீற்றிருந்து முற்காலத்தில் ஆட்சிபுரிந்த வேறு எந்த அரச குடும்பத்தினருக்கும் அத்தனை கல்வெட்டுக்கள் இல்லையென்ற ஐயமின்றிக் கூறலாம் எனக் குறிப்பிடுவதன்மூலம் விளங்கிக் கொள்ளலாம். முதல் கட்டுரை கி.பி.1914-இல் தமது 22-ஆம் வயதில் பண்டாரத்தார் செந்தமிழ் இதழில் எழுதிய சோழன் கரிகாலன் என்னும் கட்டுரை அவரது முதல் கட்டுரையாகக் கருதப்படுகிறது. அக்கட்டுரையின் தொடக்கத்திலேயே அவர், பண்டைக் காலங்களிற் சோழ நாட்டை மிக்க நீதியுடனும் சிறப்புடனும் ஆண்டு வந்த சோழ அரசர்களுட் சிலர் சரிதத்தை யான் அறிந்தவரை நம் நாட்டார்க்குத் தெரிவிப்பது என் கடமையாதலின், ஈண்டுச் சோழன் கரிகாலன் சரிதத்தை ஒருவாறு சுருக்கி எழுதப் புகுந்தேன் எனக் குறிப்பிடுவதன் மூலம் சோழர் வரலாற்றை எழுத வேண்டும் என்பதில் இவருக்கிருந்த ஆர்வம் விளங்குகிறது. இக்கட்டுரையில் அவர் கரிகாலனை இளஞ்சேட்சென்னியின் அருமைப்புத்திரன் எனவும், மன்னர் பெருமான் எனவும் மனமாரக் குறிப்பிடுகிறார். இதே நிலையில்தான் புலவர் பெருமக்களையும் அரசர்களையும் தமது இறுதிக்காலம் வரை மரியாதையோடு வியந்து எழுதி வந்துள்ளார். அறிஞர் பண்டாரத்தார், கரிகாலன் பற்றிய இக்கட்டுரைக்குப் பழைய செய்யுட்கள், மணிமேகலை, பழமொழி நானூறு, பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம், பெரியபுராணம், 1800 ஆண்டுகட்கு முந்திய தமிழர் முதலான நூல்களிலிருந்து சான்றுகள் தந்திருப்பதை நோக்குமிடத்து, இளமைக் காலத்திலேயே இவர் பெற்றிருந்த பன்னூற் பயிற்சி விளங்குகிறது. இலக்கியச் சான்றுகள் வரலாற்று ஆய்வாளர்கள் பலர் இலக்கியம் கூறும் செய்தி களைப் புனைந்துரை என ஒதுக்கிவிட்டுக் கல்வெட்டு ஆதாரங்கள் மட்டுமே உண்மையானவை எனக் கருதி வரலாறு எழுதி வந்த நேரத்தில் இலக்கியங்களையும் கல்வெட்டுக்களையும் ஆதாரங்களாகக் கொண்டு வரலாறு எழுதியவர் பண்டாரத்தார். அந்த இரண்டையும் இணைத்து எழுதும்போதுதான் வரலாறு உறுதிப்படும் என்று அவர் உறுதியாக நம்பினார். இது குறித்து அவர், வரலாற்று ஆராய்ச்சியாளர் கல்வெட்டுக் களையே தக்க சான்றுகளாகக் கொண்டு ஆராய்ந்து உண்மை காண்பா ராயினர். அன்னோர் இலக்கியங்களைச் சிறந்த சான்றுகளாக மதித்து ஏற்றுக் கொள்வதில்லை. இலக்கியச் செய்திகளுள் சில புனைந் துரையாக இருத்தல் ஒப்புக் கொள்ளத் தக்கதேயாயினும் அவற்றை அத்துணை எளியவனாகக் கருதி ஒதுக்கித் தள்ளிவிடுதல் எவ்வாறா யினும் ஏற்புடையதன்று. கி.பி. 2-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவாய்ப் புறநானூற்றில் காணப்படும் செய்திகள் செப்பேடுகளாலும் கல்வெட்டுக் களாலும் தாங்கப்பட்டு உறுதியெய்துகின்றன. அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் நாம் எங்ஙனம் தள்ளுதல் கூடும்.. என எழுதும் பகுதியால் விளங்கிக் கொள்ள முடிகிறது. முதற் குலோத்துங்க சோழன் அறிஞர் பண்டாரத்தார் தாம் எழுதிய முதற் குலோத்துங்க சோழன் என்னும் நூலில் பிற்காலச் சோழர்களின் எழுச்சி, திருப்புறம்பயப் போர், விஜயாலயன் முதன்முதலாகத் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யத் தொடங்கியமை, முதலாம் பராந்தகன் தில்லையம்பலத் திற்குப் பொன் வேய்ந்தது, கண்டராதித்தரால் அமைக்கப்பட்ட கண்டாரதித்த சதுர்வேதி மங்கலம், செம்பியன்மாதேவியாரின் திருப்பணி, இராசராசனின் சமயப்பொறை, இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய நகரை உருவாக்கியமை மற்றும் முடிகொண்டி சோழப் பேராற்றை வெட்டுவித்தமை, பண்டைச் சோழ மன்னர் மரபு அதிராசேந்திர சோழனோடு முடிவுற்ற வரலாறு முதலான செய்திகளைக் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் அடிப்படையாகக் கொண்டு இவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து குலோத்துங்கன் சோழ மண்டலத்தில் முடி சூடிய வரலாறு, இவனது அரசாட்சியின் சிறப்பு, போர்ச் செயல்கள், சமயப்பொறை, பண்பு நலன், புலமைத் திறன், குடும்பச் சிறப்பு, ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்கள், அவைக்களப் புலவர், அரசியல் அமைப்பு ஆகிய செய்திகள் விரிவாக முதற்குலோத்துங்க சோழன் என்ற நூலில் பேசப்பட்டுள்ளன. இந்த நூலின் பிற்சேர்க்கையில் இடம் பெற்றுள்ள முதற் குலோத்துங்க சோழனின் மூன்று மெய்க்கீர்த்திகளும் கல்வெட்டு ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படக் கூடியவையாகும். அதுபோன்றே தஞ்சை மாவட்டம் திருவைகாவூரில் முதற் குலோத்துங்க சோழன் ஆட்சிக்காலத்தில் கற்றளியாக எடுக்கப்பெற்ற அவ்வூர்ச் சிவன் கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றையும் பின்னிணைப்பில் பண்டாரத்தார் தந்துள்ளார். இக்கல்வெட்டு அவ்வூர்க் கோயில் குலோத்துங்கள் காலத்தில் கற்றளியாக எடுக்கப் பெற்ற செய்தியை உணர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிற்காலச் சோழர் வரலாறு முதற் குலோத்துங்க சோழன் வரலாற்றை எழுதி முடித்த பண்டாரத்தார், அதனைத் தொடர்ந்து பிற்காலச் சோழர் வரலாற்றை விரிவாக எழுத வேண்டுமென்று எண்ணினார். அந்த எண்ணத்தின் அடிப்படையில் தொடர்ந்து இலக்கிய ஆய்வையும் கல்வெட்டாய்வையும் நிகழ்த்தி வந்த இவர், தமது ஆய்வின் முடிவுகளை அவ்வப்போது கட்டுரை களாக வெளியிட்டுக் கொண்டடே வந்தார். அதுபோன்றே தாம் படியெடுத்த கல்வெட்டுக்களுள் சிலவற்றை வெளியிட்டு வந்தார். ஆயினும் சோழர் வரலாற்றைக் குடந்தையில் இருக்கும்போது அவரால் எழுதி வெளியிட இயலவில்லை. 1942-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அவர் பணியில் சேர்ந்ததும் அவரது விருப்பத்திற்கேற்பப் பிற்காலச் சோழர் வரலாற்றை எழுதுவதற்குப் பல்கலைக் கழகம் அவருக்கு அனமதி வழங்கியது. அங்கு அவரது ஆய்விற்கு மீனாட்சி கல்லூரியின் தலைவராக இருந்த பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாதிரியார் காலம் முதல் தொகுத்து வைக்கப் பெற்றனவாகிய கல்வெட்டுப் பெரு நூல்களும் கல்வெட்டிலாகா ஆண்டறிக்கைகளும், எபிகிராபிகா இன்டிகா, எபிகிராபிகா கர்னாடிகா போன்ற கல்வெட்டாய்விதழ்களின் தொகுதிகளும் பேருதவியாக இருந்தன. அதன் பயனாக 1949-இல் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தின் முதல்பாகமும் 1951-இல் இரண்டாம் பாகமும் வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகத்தை அவர் எழுதத் தொடங்கிய போதும், பல்கலைக்கழகத் திட்டத்திற்கிணங்கத் தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600) தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி. 13,14,15-ஆம் நூற்றாண்டுகள்) என்னும் இரண்டு நூல்களை அவர் எழுத வேண்டியதாயிற்று. இந்த நூல்கள் இரண்டும் 1955-இல் வெளிவந்தன. பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்து தமது வயதின் அடிப்படையில் 1953-இல் முறையான ஓய்வு பெற்றார். சிறப்பு அனுமதியின் அடிப்படையில் 1955-இல் மீண்டும் அப்பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். இந்த நேரத்தில்தான் பிற்காலச் சோழர் சரித்திரத்தின் மூன்றாம் பாகம் அவரால் எழுதப் பெற்று 1959-இல் அச்சுக்குச் சென்றது. பின்னர் அந்த நூல் 1961-இல் பல்கலைக் கழக வெளியீடாக வெளிவந்தது. பண்டாரத்தார், தமது காலம்வரை அச்சிட்டு வெளிவந்த கல்வெட்டுக்களையும், தாம் நேரில் சென்ற படியெடுத்து வந்த கல்வெட்டுக்களையும், கல்வெட்டுத் துறையினரின் ஆண்டறிக்கை களையும், பண்டைத் தமிழ் நூல்களையும், வரலாற்றுப் பேராசிரியர்களின் நூல்களையும் ஆராய்ந்து அவரால் உருவாக்கப்பட்டது பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் நூலாகும். இந்த நூலில் அவர் ஆராய்ந்து உரைத்துள்ள வரலாற்று உண்மைகள் மிகுதி. இருள் கவ்விக் கிடந்த தமிழ்நாட்டின் வரலாற்றுப் பாதைகளைச் செம்மையாகக் காட்டிடும் ஒளி விளக்காகவும், உலக நாடுகளை ஆண்ட அரசர்களோடு நம் தமிழர்களையும் இணைத்து ஏற்றமுறக் காட்டிடும் கண்ணாடியாகவும் இப்பதிப்பு விளங்குகிறது என்பதனை இந்நூலைக் கற்பார் எளிதில் உணர்வர். என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீட்டுத் துறையினரின் கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பல வரலாற்று உண்மைகளை இந்த நூலில் பண்டாரத்தார் வெளிப்படுத்தியுள்ளார். சோழர்கள், படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வரும் தொல் குடியினர் என்பதற்குப் பரிமேலழகர் உரைக் குறிப்பிலிருந்து சான்று தரும் பண்டாரத்தார், அசோகரது கல்வெட்டுக்கள், தாலமி எழுதி வைத்த குறிப்புக்கள், பெரிப்புளூ என்ற நூல் முதலானவற்றில் சோழர்களின் தொன்மை பற்றிய குறிப்புக் காணப்படுவதாகச் சுட்டுகிறார். சங்க காலத்தில் இருந்த சோழர்கள், சங்க காலத்திற்குப் பிறகு உறையூர்ப் பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டுமென்று சிலரும், கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் வாழ்ந்து வந்தனர் என்று சிலரும் கூறி வந்தனர். அவர்களது இக்கருத்துக்களை மறுத்துரைக்கும் பண்டாரத்தார், கொடும்பாளூரில் இருந்தவர்கள் கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த இருங்கோவேள் மரபினர் என்றும், கொடும்பாளூரில் இருவேறு குறுநில மன்னர் ஆட்சி புரிந்து கொண்டிருந்தனர் எனக் கொள்வது ஏற்புடைத்தன்று என்றும், சோழர் குறுநில மன்னராய் இருந்த காலத்தில் கொடும்பாளூரில் இருந்திலர் என்றும் ஆய்ந்து உரைக்கிறார். மேலும், பழையாறை நகரில் பல்லவர்கள் காலத்தில் சோழர்கள் குறுநில மன்னராய் இருந்து வாழ்ந்து வந்தனர் எனவும் இவர் எடுத்துக் காட்டுகிறார். தஞ்சைக்கு அண்மையிலுள்ள வல்லத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களின் வரலாற்றையும் சோழர் வரலாற்றில் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். முத்தரையர்களிடமிருந்து தான் விசயாலயன் தஞ்சையைக் கைப்பற்றியிருக்க வேண்டும் என்பது பண்டாரத்தார் ஆய்வின் முடிவாகும். திருப்புறம்பயப் போர் பிற்காலச் சோழர் வரலாற்றின் திருப்பு மையமாக அமைந்த திருப்புறம்பயப் போரைப் பற்றிப் பண்டாரத்தார் குறிப்பிடுகையில், இப்பெரும் போருக்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் இளமையில் வென்ற தலையானங்கானப் போரையும் ஆங்கிலேயர் வென்ற பிளாசிப் போரையும் ஒப்பாகக் கூறலாம் என எழுதுகிறார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போர் குறித்துப் பிற்காலச் சோழர் வரலாற்றில் விரிவாக எழுதியுள்ளார். மேற்கெழுந்தருளிய போர் பிற்காலச் சோழர் அரசர்களுள் ஒருவனான கண்டராதித்தனைக் காட்டுமன்னார்குடி வட்டம், உடையார்குடியில் காணப்படும் கல்வெட் டொன்று மேற்கெழுந் தருளிய தேவர் எனக் குறிப்பிடுகிறது. இத்தொட ரானது கண்டராதித்தன் மேற்றிசையில் பகைவரோடு போரிட்டு இறந்த செய்தியைக் குறிப்பதாகும் என்று ஒரு சிலர் எழுதினர். ஆயினும் இதற்குரிய பொருள், சோழ நாட்டிற்கு மேற்கேயுள்ள நாடுகளுக்கு இவ்வரசன் தல யாத்திரை சென்று திரும்பி வராமையை ஒருகால் குறிப்பினும் குறிக்கலாம். சிவஞானியாக நிலவிய இம்முடி மன்னன், தன் அரசைத் துறந்து அங்ஙனமே போயிருத்தல் இயல்பேயாம் என எழுதும் பண்டாரத்தார் மைசூர் நாட்டோடு கண்டராதித்தருக்கு உள்ள தொடர்பை அங்குக் காணப்படும் அரசர் படிமம் ஒன்றை எடுத்துக் காட்டி விளக்குகிறார். கங்கைகொண்ட சோழபுரம் பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் முதலாம் இராசேந்திர சோழன் காலம் முதற்கொண்டு சோழர்கள் ஆட்சியின் இறுதிக்காலம் வரை ஏறத்தாழ 260 ஆண்டுகளுக்கும் மேலாகச் சோழர்களின் தலைநகராகத் திகழ்ந்த கங்கைகொண்ட சோழபுரம் குறித்தும் அதனை ஆட்சி புரிந்த முதலாம் இராசேந்திர சோழன் குறித்தும் பண்டாரத்தார் விரிவாக எழுதியுள்ளார். சோழ கங்கம் தனது நீர்வளத்தால் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் சில பகுதிகளை வளப்படுத்தி வந்த பொன்னேரி கங்கை கொண்ட சோழபுரத்தில் இராசேந்திர சோழனால் அமைக்கப் பெற்றதாகும். இதன் பெருமையைப் பண்டாரத்தார், ..... மாளவ தேசத்து மன்னனாகிய போசனால் வடநாட்டில் இரு குன்றுகளுக்கு இடையில் அமைக்கப்பெற்ற போசபுரத்து ஏரியினும் சோழநாட்டின் மலைகளே இல்லாத நிலப்பரப்பில் மிக்க வலிமை வாய்ந்த பொருங்கூரைகளுடன் நம் இராசேந்திர சோழனால் அமைக்கப் பெற்ற சோழ கங்கம் என்னும் ஏரி சிறப்பும் தொன்மையும் வாய்ந்தது என்பது உணரற்பாலது என எழுதுகிறார். அதிராசேந்திர சோழன் இறப்பு சோழ அரச மரபினரின் இறுதி வேந்தனாகிய அதிராசேந்திர சோழன் தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற ஓரிரு திங்களிலேயே இறந்து போனான். அவ்வாறு அவன் இறந்தமைக்கு ஆய்வுலகில் சில காரணங்கள் கூறப் பட்டபோது, அவற்றை ஆராய்ந்து உண்மை காணும் முயற்சியில் பண்டாரத்தார் ஈடுபட்டார். மேலைச் சாளுக்கிய வேந்தனாகிய ஆறாம் விக்கிரமாதித்தனின் வரலாறு எழுதிய வடமொழிப் புலவரான பில்ஹணர் எனப்படுபவர் சோழ நாட்டில் நடந்த உள்நாட்டுக் கலகத்தில் அதிராசேந்திரன் கொல்லப்பட்டான் என எழுதினார். இது குறித்து அதிராசேந்திரனின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்த பண்டாரத்தார், இவற்றையும் இவை போன்ற இவனுடைய பிற கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து பார்க்குமிடத்து, இவன் ஆட்சியில் அரசாங்க அலுவல்கள் எல்லாம் மிக அமைதியாகவே நடைபெற்று வந்தன என்பதும் படைத்தலைவர்களும் மற்ற அரசியல் அதிகாரிகளும் இவன் பால் பேரன்புடன் ஒழுகி வந்தனர் என்பது வெளியாகின்றன. எனவே, பில்ஹானல் கூறியுள்ளவாறு உள்நாட்டில் குழப்பமும் அமைதி யின்மையும் ஏற்பட்டமைக்குச் சிறிதும் ஆதாரமின்மை காண்க. ஆகவே, சோழநாட்டில் நிகழ்ந்த குழப்பத்தில் அதிராசேந்திரன் கொல்லப்பட்டான் என்று அவர் கூறியிருப்பது உண்மையன்று என்பது உணரற்பாலதாம் என எழுதுகிறார். அதுபோன்றே வைணவ ஆசாரியராகிய இராமானுசரின் மனம் சோகும் செயல்களைச் செய்தமையால் கிடைத்த சாபத்தினால் அதிராசேந்திரன் இறந்துபட்டான் என்று சிலரும், முதற் குலோத்துங்கன் சோழநாட்டு ஆட்சியைக் கைப்பற்றும் பொருட்டு இவனைக் கொன்றிருத்தல் வேண்டும் என்று சிலரும் கூறியபோது, அக்கருத்துக் களை ஆதாரங்களோடு மறுத்துரைத்த பண்டாரத்தார், நோய்வாய்ப் பட்டதன் காரணமாகவே அதிராசேந்திரன் இறந்துபட்டான் என ஆய்ந்து உரைத்துள்ளார். முதற் குலோத்துங்க சோழனின் சிறப்புக்கள் பண்டாரத்தாரின் மனங்கவர்ந்த சோழ அரசர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவன் முதற் குலோத்துங்க சோழன் ஆவான். எனவேதான் அவரது முதல் நூலே அச்சோழ அரசன் பற்றியதாக அமைந்தது. குலோத்துங்கன் பற்றிய தமது ஆய்வில், திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டம் புனைந்து ஆட்சி புரிந்த சோழ மன்னருள் இவனது முதல்வன் என அவர் சுட்டுகிறார். இவனைத் தொடர்ந்து ஆட்சி புரிந்த இவனது வழித்தோன்றல்களுள் ஒவ்வொருவரும் இப்பட்டம் புனைந்தே ஆட்சி செய்து வந்தனர் என்பதும், திரிபுவன சக்கரவர்த்தி என்னும் தொடர்மொழி சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் ஆகிய மூன்றுக்கும் சக்கரவர்த்தி என்ற பொருளை உணர்த்துவதாகும் என்பதும் இவரது ஆய்வின் முடிவாகும். இச்சோழனைக் கரிகாற் பெருவளத்தான், முதலாம் இராசராசசோழன், கங்கைகொண்ட சோழன் ஆகியோரோடு ஒப்பிட்டு இவர் எழுதுவதும் இங்குக் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். அறிஞர் பண்டாரத்தார், தமது ஆய்வில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு செய்திகளையும் விளக்கி எழுத வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார். இதற்குச் சான்றாகக் குலோத்துங்கனின் படை கலிங்கம் நோக்கிச் சென்றபோது தென்னாட்டிலும் வட நாட்டிலும் கடந்து சென்ற ஆறுகளின் இருப்பிடம் குறித்து விளக்கும் பகுதியினை எடுத்துக் காட்டலாம். அஃதாவது, கலிங்கப் போருக்குச் சோழர் படை தென்னாட்டில் கடந்து சென்ற நான்கு ஆறுகளைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், பாலாறு இப்போது காஞ்சிமா நகருக்குத் தெற்கே ஓடுகிறதென்றும, குசைத்தலை என்பது இப்போது குசதலீ என்னும் பெயரில் செங்கற்பட்டு மாவட்டத்தில் ஓடுகிறதென்றும், பொன்முகரி எனப்படுவது திருக்காளத்தி பக்கத்தில் ஓடுகிறதென்றும், பெண்ணையாறு எனப்படுவது நெல்லூர் மாவட்டத்தில் காணப்படும் வடபெண்ணையாறு என்றும் குறிப்பிடும் இவர், குலோத்துங்கன் படை வடநாட்டில் கடந்து சென்ற நதிகளுள் கோதமை நதி என்பது ஒன்று எனவும், அஃது இன்று கௌதமி என்று வழங்குகிறது எனவும் குறிப்பிடுகிறார். கிராம சபை சோழர் காலத்திலிருந்த கிராம ஆட்சி குறித்தும் பண்டாரத்தார் விரிவான ஆய்வு செய்துள்ளார். உத்தரமேரூர், திருநின்றவூர், தலை ஞாயிறு, ஐயம்பேட்டை, இராப்பட்டீச்சுரம், காமரவல்லி, செம்பியன் மாதேவி, சேய்ஞலூர் ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுக்களில் கிராம சபை குறித்துக் காணப்படும் செய்திகளை ஆராய்ந்த பண்டாரத்தார், அக்கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகளை உறுப்பினர் ஆதற்கு உரிமை உடையோர், உரிமை இழந்தவர்கள், உறுப்பினரைத் தெரிந் தெடுக்கும் முறை, சபை கூடும் இடம், சபை கூட்டும் முறையும் காலமும், சபைக்குரிய பணி மக்கள், கிராம சபைக்குரிய வருவாய், கிராம சபைக் குரிய கடமைகள் என்னும் தலைப்புக்களில் விளக்கியுள்ளார். சான்று காட்டும் திறன் தாம் கூறவந்த கருத்தைப் பல சான்றுகள் காட்டி நிறுவுவது பண்டாரத்தாரின் ஆய்வு நெறிமுறைகளுள் குறிப்பிடத்தக்க ஒரு கூறாகும். அவ்வாறு சான்றுகள் தரும்போது கூறியுள்ள செய்தியானது மேலும் வலுப் பெறும். இதற்குச் சான்றாகச் சோழர் காலத்து நில வரி குறித்துப் பண்டாரத்தார் எழுதும் பகுதியை எடுத்துக் காட்டலாம். சோழர் காலத்தில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது என்பதனை விளக்க வந்த இவ்வறிஞர், இந்த ஆறில் ஒரு பங்கு என்பது வழிவழி வந்த மரபாகும் எனச் சுட்டுகிறார். இதற்குத் திருக்குறள் பரிமேலழகர் உரையிலிருந்து மூன்று சான்றுகள் எடுத்துத் தருகிறார். இந்த இலக்கியச் சான்றுக்கு மேலும் வலிவூட்டும் வகையில் முதற் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் செங்கற்பட்டு மாவட்டம் சோழசிங்கபுரத்தில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டில் குறிக்கப்பெறும் அறு கூறினால் புரவு மாயதியும் பொன்னும் பெறுமாறு சோழகோன்... என்னும் தொடரை எடுத்துக் காட்டுகிறார். இந்தக் கல்வெட்டுத் தொடரில் காணப்படும் புரவு எனப்படுவது விளைநிலம், நிலவரி என்னும் பொருள்களைக் குறிக்கும் என விளக்க வந்த பண்டாரத்தார் கல்வெட்டு, புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகியன வற்றில் காணப்படும் குறிப்புக்களைக் கொண்டு உறுதிப்படுத்துகிறார். இவ்வாறு சிறு சிறு சொல்லையுங்கூட வரலாற்றுப் பார்வையோடு ஆய்ந்து உரைத்தமையானது பண்டாரத்தாரின் தனிச் சிறப்பாகும். நாட்டு வரலாற்றில் இலக்கிய வரலாறு அறிஞர் பண்டாரத்தார் தமது வரலாற்று நூல்களில் அரசர்கள் குறித்து எழுதும் போதெல்லாம், அவ்வரசர்கள் காலத்தில் இலக்கியம் எவ்வாறு இருந்தது என ஆய்வு செய்து எழுதுவதற்குத் தவறவில்லை. இந்த அடிப்படையில் நோக்கியதன்விளைவாகத்தான், உலாக் கொண்ட மூன்று சோழ மன்னர்கள், சோழர்களும் தமிழ்மொழியும் என்னும் இவரது கட்டுரைகள் பிறந்தன. இலக்கிய வரலாறு எழுதிய பலரும் குலோத்துங்க சோழன் காலத்தில் புகழேந்திப் புலவர், சேக்கிழாரடிகள், கம்பர் ஆகிய புலவர்கள் இருந்தனர் என்று எழுதினர். இது குறித்து ஆய்வு செய்த பண்டாரத்தா, அன்னோர் கருத்து உறுதி பெறுவதற்குத் தக்க சான்றுகள் இன்மையின் அதனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை என எழுதியதோடு, அப்புலவர் பெருமக்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள் என்பதனையும் சான்றுகள் தந்து விளக்குகிறார். இந்தப் புலவர்கள் பற்றிக் கருத்துரைத்தவர்களின் பெயர் களைச் சுட்டாமல் ஆராய்ச்சியாளருள் சிலர் எழுதியுள்ளனர் என்று இவர் ஆய்வு நாகரிகத்தோடு குறிப்பிடுகிறார். அடிக்குறிப்பில்கூட நூலாசிரியரின் பெயரைக் குறிப்பிடாமல் நூலின் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கும் இவரது பண்பு இங்கு நினைக்கத்தக்கதாகும். கருத்து வேறுபாடுகளை வரவேற்றல் தமது ஆய்வின் முடிவுகள் குறித்த கருத்து வேறுபாடுகளை மனம் உவந்து வரவேற்றவர் பண்டாரத்தார். இதனை அவர் பிற்காலச் சோழர் வரலாற்றின் முகவுரையில், எனக்கும் பிற ஆராய்ச்சியாளர்க்கும் கருத்து வேறுபாடுகள் நிகழும் இடங்களில் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்து என் முடிவுகளை நிறுவியுள்ளேன். இதுபோன்ற சரித்திர நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டாதலும் எதிர்காலத்தில் புதியன வாகக் கிடைக்கும் ஆதாரங்களால் சில செய்திகள் மாறுபட்டுப் போதலும் சில நிகழ்ச்சிகளின் காலக் குறிப்புக்கள் மாறுபடுதலும் இயல்பேயாம் எனக் குறிப்பிடும் பகுதியால் விளங்கிக் கொள்ளலாம். மறுக்க வேண்டியவற்றை மறுத்தல் பண்டாரத்தாரின் சோழர் வரலாற்று ஆய்விற்கு கோபிநாதராயர், நீலகண்ட சாதிரியார் ஆகியோரது நூல்கள் பெரிதும் உதவியுள்ளன. இவர் அதனை நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார். அதே நேரத்தில் வரலாற்றில் தவறு என்று தாம் அறிந்த செய்திகளை மறுத்துரைக்கவும் இவர் தவற வில்லை. நீலகண்ட சாதிரியார் செய்த ஆய்வு முடிவுகளிலிருந்து பல இடங்களில் பண்டாரத்தார் வேறுபட்டுள்ளார். இராசராச சோழனின் உடன் பிறந்தவனான ஆதித்த கரிகாலன் சிலரால் கொலை செய்யப்பட்டு இறந்தான் என்று பேராசிரியர் நீலகண்ட சாதிரியார் குறிப்பிடுகிறார். ஆயினும் உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டினைச் சான்றாகக் காட்டி ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சில பிராமண அதிகாரிகளே என ஆய்ந்து உரைக்கிறார் பண்டாரத்தார். அதுபோன்றே ஒரு சோழன் தமது தந்தையார் கட்டிய கோயிலுக்கு விழா எடுக்கும்போது ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கியமை பற்றி நீலகண்ட சாதிரியார் எழுதும் செய்தி இங்குக் கருதத் தக்கதாக அமை கிறது. அஃதாவது அந்த ஆயிரம் பேரும் பிராமணர்கள் என்று எழுதுகிறார் சாதிரியார். ஆயினும் அந்த ஆயிரம் பேர்களில் ஐந்நூறு பேர் பல சமயத்தவர். முந்நூறு பேர் சிவனடியாகள், இருநூறு பேர் பிராமணர்கள் என்ற பாகுபட்டை எடுத்துரைக்கிறார் பண்டாரத்தார். இவ்வாறு வரலாற்றில் அவர் தெளிவுபடுத்திய பகுதிகள் மிகுதியாக உள்ளன. கல்வெட்டு மூலத்தைத் தருதல் பிற்காலச் சோழர் வரலாற்றில் தேவைப்படும் இடங்களி ளெல்லாம் கல்வெட்டு மூலத்தையோ அதன் பகுதியையோ அப்படியே எடுத்துத் தருவதை இவர் ஒரு நெறிமுறையாகவே கொண்டுள்ளார். இதற்குச் சான்றாக, கிராம சபை பற்றி இவர் எழுதுகையில் உத்தரமேரூரில் வரையப் பெற்றுள்ள இரண்டு கல்வெட்டுக்களை அப்படியே நூலின் மூலப் பகுதியில் இவர் எடுத்துக் காட்டியுள்ளமையினைச் சுட்டலாம். சோழர் வரலாற்றில் பின்னிணைப்புக்கள் பண்டாரத்தார் தமது நூல்களின் பின்னிணைப்புப் பகுதியில் முக்கிய மான கல்வெட்டுக்களின் மூலப் பகுதியை இணைப்பதில் தொடர்ந்த கவனம் செலுத்தி வந்திருக்கிறார். அவை ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்ற அடிப்படையில் இணைக்கப்பட்டவையாகும். அந்த இணைப்பில் சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள், முதற் குலோத்துங்க சோழ மன்னர் களின் மரபு விளக்கம், சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கியருக்கும் ஏற்பட்டிருந்த மணத்தொடர்பு விளக்கம், இரண்டாம் இராசாதிராச சோழனது பல்லவராயன்பேட்டைக் கல்வெட்டு, மற்றும் திருவாலங் காட்டுக் கல்வெட்டு, மூன்றாம் குலோத்துங்க சோழனது திருபுவனம் கல்வெட்டு, மூன்றாம் இராசராசசோழனது திருவயிந்தீபுரக் கல்வெட்டு, உத்தரமேரூர்க் கல்வெட்டு, மூன்றாம் இராசராசசோழனது திருச்சேய்ஞ லூர்க் கல்வெட்டு ஆகியன இடம் பெற்றுள்ளன. இவரது பாண்டியர் வரலாறு, திருப்புறம்பயத் தல வரலாறு, காவிரிப்பூம்பட்டினம் முதலான நூல்களிலும் இதுபோன்ற இணைப்புக்கள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தமது நீண்ட அனுபவத்தின் விளைவாகப் பண்டாரத்தார் எழுதிய பிற்காலச் சோழர் வரலாறு என்னும் நூலில் ஆய்ந்துரைத்த முடிவுகள் சிலவற்றை அந்நூலுக்கு முன்னுரை எழுதிய கோ.சுப்பிரமணிய பிள்ளை பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார். 1. சோழர் ஆட்சியில் அமைச்சர் குழுவும் முதன் மந்திரியும் இருந்தமை இலக்கியச் சான்று கொண்டு வலியுறுத்தப் பெற்றுள்ளது. 2. புரவுவரித் திணைக்களம் என்ற நிலவரி ஆட்சிக் குழுவினைப் பற்றி இவ்வாசிரியர் தரும் விளக்கம் இதுவரை பிற வரலாற்றா சிரியர்களால் விளக்கப்படாத தனிச் சிறப்புடைய தாகும். 3. ஊராட்சி மன்றங்களின் அமைப்பும், செயல்முறையும் ஆகிய வற்றைச் சிறந்த சில கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு தெளிவாக விளக்கியிருத்தல் குறிப்பிடத் தக்கதாகும். ஊராட்சி மன்ற நடைமுறை பற்றி இதுவரை வெளியிடப் பெறாத சேய்ஞலூர்க் கல்வெட்டு இந்நூலில் ஈடுத்துக் காட்டி விளக்கம் பெற்றுள்ளது. 4. சோழர் ஆட்சியில் கிராமசபை, நாட்டுச்சபை ஆகியவற்றின் தலைமைப் பேரவையாக இவற்றிலிருந்து தேர்ந்துகொண்ட உறுப்பினர்களைக் கொண்ட மண்டலப் பேரவை ஒன்று இருந்தது என்பதனை இந்நூலால் நன்கு உணரலாம். 5. சில ஊர்களில் ஒரு பகுதி தேவதானமாகவும், மறு பகுதி பிரமதேயமாகவும், வேறு சில ஊர்களில் ஒரு பகுதி தேவதான மாகவும், மற்றொரு பகுதி பிற வகுப்பினர்களுக்குரிய வெள்ளான் வகை நிலமாகவும் அமைந்த செய்தி இந்நூலில் நன்கு விளக்கப் பெற்றுள்ளது. 6. கடைச்சங்க காலத்தில் பெருவேந்தனாக விளங்கிய சோழன் கரிகாற் பெருவளத்தான் காவிரிக்கு முதன்முதல் கரை அமைத்தான் என்பதனை இந்நூலாசிரியர் தக்க சான்று காட்டி நிறுவியிருப்பது அவ்வேந்தன் வாழ்ந்த கடைச்சங்க காலம் இதுவென்று திட்டமாகத் தெரிந்து கொள்வதற்குச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது. 7. கி.பி.1063 முதல் 1070 வரை ஆட்சி புரிந்த வீரராசேந்திர சோழன் என்பான் திருவரங்கத்திற்குக் கிழக்கே பத்துமைல் தூரத்தில் கோயிலடிக்கு அருகில் காவிரியில் கல்லணை அமைத்த செய்தியை ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். 8. இரட்டபாடி ஏழரையிலக்கம் எனவும், கங்கபாடி தொண்ணூற் றாயிரம் எனவும் வழங்கும் தொகைக் குறிப்புக்கள் அங்கு வாழும் மக்களது குடிமதிப்புப் பற்றியன அல்லவென்றும், அந்நாட்டின் நில அளவு பற்றியன என்றும் இந்நூலாசிரியர் புதியவொரு விளக்கம் தந்தமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். 9. சோழர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் குலப் பிரிவுகள் சில நிலைபெற்றிருந்தனவாயினும், நாட்டு மக்களிடையே அப்பிரிவு காரணமாக எத்தகைய வேற்றுமையும், பூசலும் நிகழாத முறையில் தமிழ் மக்களது சமுதாய வாழ்வு அமைதியாக நடைபெற்று வந்தது என்பதனை இந்நூல் நன்கு வலியுறுத்துகின்றது. 10. இனி, சோழராட்சியில் காணப்படும் ஊராட்சி மன்றங்கள், வடநாட்டா தொடர்பால் ஏற்பட்டனவென்று வரலாற்றாசிரியர்கள் சிலர் எழுதியுள்ளனர். இக்கருத்து சிறிதும் பொருந்தாது என்பதனையும், இம்மன்றங்கள் தொல் காப்பியனார் காலந்தொட்டே தமிழ்நாட்டில் வழிவழியாக நிலவி வரும் பேரவைகளே என்பதனையும் தக்க சான்றுகள் தந்து இந்நூலாசிரியர் நிறுவியுள்ளமை பாராட்டத் தக்கதாகும். 11. சோழர் ஆட்சியில் அதிகாரிகளுக்குத் திங்கள்தோறும் ஊதியம் கொடுக்கப்படவில்லையென்றும், அவர்கள் பதவிக் கெனச் சீவிதமாக (அவர்தம் வாழ்நாள் வரை) நிலங்கள் வழங்கப் பெற்றன என்றும் இந்நூலில் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். 12. சோழர் ஆட்சியில் விதிக்கப் பெற்றனவாகப் பலவகை வரிகள் குறிக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் இக்காலத்தில் அரசினரால் வாங்கப்பெறும் தொழில்வரி என்ற ஒன்றிலேயே அடங்கும் என்பதனை இந்நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். இப்படிப்பட்ட ஆய்வு முடிவுகளோடு தமது நூலை உருவாக்கியதன் காரணமாகவே பலரது பாராட்டையும் இந்த நூல் பெற்றது. இந்த நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகங்களில் சிறிது காலம் பாட நூலாகவும் வைக்கப் பெற்றிருந்தது. இந்த நூல் பிற்காலச் சோழர் வரலாறு குறித்துத் தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல் நூல் என்னும் பெருமைக்குரிய தாகும். வரலாற்றைக் கதை கூறுவது போன்ற எளிய நடையில் ஆசிரியர் கூறியிருப்பது இதன் மற்றுமொரு சிறப்புக் கூறாகும். இந்த நூல் வெளிவந்த பிறகுதான் பிற்காலச் சோழர்களின் பெருமைகளை வெளியுலகம் அறிய ஆரம்பித்தது. பண்டாரத்தார் நம்பகத் தன்மையோடு தமது நூல்களை எழுதிய காரணத்தினாலேயே இவரது பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களது வரலாற்று நாவல்களைப் படைத்தனர். பாண்டிய வேந்தர்கள் பற்றிய ஆய்வு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரன் பிள்ளையவர்களின் வேண்டுகோளுக்கும் தூண்டு தலுக்கும் இணங்கி அறிஞர் பண்டாரத்தாரால் எழுதப்பட்டது பாண்டியர் வரலாறு என்னும் நூலாகும். இந்த நூலானது கடைச் சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, கி.பி.17-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவதாகும். இந்த நூலில் அறிஞர் பண்டாரத்தார் களப்பிரர் எனப்படுவோர் வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் என்றும், மாறவர்மன் அவனி சூளாமணி என்பவனே மாறவர்மன் என்ற பட்டம் புனைந்து ஆட்சி புரிந்த முதல் பாண்டிய மன்னன் என்றும், முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டின்மீது படையெடுத்து வென்றபோது, கடியலூர் உருத்திரங்கண்ணனாருக்குக் கரிகாற் பெருவளத்தானால் அளிக்கப்பட்ட பதினாறுகால் மண்டபத்தை மட்டும் இடிக்காமல் விட்டு வைத்தான் என்பதனைத் திருவெள்ளறைப் பாடல் கல்வெட்டொன்று தெரிவிக்கிறது என்றும், பாண்டியர்களின் இயற்பெயர்களும் சிறப்புப் பெயர்களுமே வளநாடுகளின் பெயர்களாக அமைந்திருப்பது அறியத்தக்கது என்றும் ஆய்ந்து எழுதியுள்ளார். இந்த நூலின் எட்டாம்பதிப்பின் பின்னிணைப்பில் ஆய்வாளர் களுக்குப் பயன்படும் வகையில் பாண்டிய அரசர்களின் மிக நீண்ட நான்கு செப்பேடுகள், ஏழு மெய்க்கீர்த்திகள், மாறன் சடையவர்மனின் மானூர்க் கல்வெட்டு, கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ள பாண்டியர்களைப் பற்றிய சில பாடல்கள், இடைக்காலப் பாண்டியர் மரபு விளக்கம் ஆகியன இடம் பெற்றுள்ளன. இவை பாண்டிய வேந்தர்களைப் பற்றி மேலும் விளங்கிக் கொள்ள உதவக் கூடியவையாகும். குறுநில மன்னர்கள் பற்றிய ஆய்வு பேரரசர்களின் ஆளுகைக்குட்பட்டவர்களாகவும், பின்னர் சமீன்தார் களாகவும் இருந்த குறுநில மன்னர்கள் குறித்தும் இவர் ஆய்வு செய் துள்ளார். அவ்வகையில் இவர், அதியமான், ஓரி, மழவர், சம்புவராயர், அறந்தாங்கி அரசர்களான தொண்டைமான்கள் முதலானோர் குறித்து எழுதியுள்ளார். மேலும், சிதம்பரம் பிச்சபுரம் சமீன்தார்கள் சோழ மரபினரின் வழித்தோன்றியவர்கள் எனவும், அரியலூர் சமீன்தார்கள் சேர அரசர்களின் வழியினராகிய மழநாட்டு மழவராயர்களின் வழித் தோன்றியவர்கள் எனவும், உடையார்பாளையம் சமீன்தார்கள் பல்லவ அரச மரபினரின் வழித்தோன்றியவர்கள் எனவும், சிவபுரி, ஏழாயிரம் பண்ணை, அளகாபுரி ஆகிய நகரங்களில் வாழ்ந்த சமீன்தார்கள் பாண்டியர் மரபில் தோன்றியவர்கள் எனவும் 27.2.1939 அன்று தேப்பெருமாள்நல்லூர் மாநாட்டு வரவேற்பில் அறிஞர் பண்டாரத்தார் ஓர் ஆய்வுரை நிகழ்த்தி யுள்ளார். ஊர்கள் பற்றிய வரலாறு தல வரலாறு என்னும் வகையில் திருப்புறம்பயத் தல வரலாறு, செம்பியன்மாதேவித் தல வரலாறு என்னும் நூல்களையும், ஊர் வரலாறு என்னும் வகையில் காவிரிப்பூம்பட்டினம் என்ற நூலையும் பல கட்டுரை களையும் அறிஞர் பண்டாரத்தார் எழுதியுள்ளார். இவை பற்றிய செய்தி களை ஊர்கள் பற்றிய ஆய்வு என்னும் இயலில் விரிவாகக் காணலாம். முடிவுரை அறிவின் அடிப்படையில் வரலாற்றார்வம் பெற்ற அறிஞர் பண்டாரத்தார். தமது இடைவிடாத முயற்சியினால் கல்வெட்டுக் களையும் இலக்கியங்களையும் அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு ஆய்வு செய்து நாட்டு வரலாற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் தமது தாய்மொழியில் எழுதியவர் என்பதனை இந்த இயலின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. தாம் வாழ்ந்த சோழ நாட்டு வரலாற்றை ஆராய்ந்து எழுதுவதில் இவர் தோய்ந்து போனவர் என்பதும் இந்த இயலின்மூலம் தெளிவாகிறது. 4. ஊர்கள் பற்றிய ஆய்வு பிற்காலச் சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு ஆகியனவற்றை முறையாக ஆராய்ந்து எழுதிய பண்டாரத்தார் தமது ஆய்வுப் பணியின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக் களைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார். அவ்வாறு அவர் கண்டறிந்த ஊர்கள் பல இக்காலத்தில் தமது பழம்பெருமையை இழந்து நிற்பதையும் அவரால் காண முடிந்தது. அந்த ஊர்களின் வரலாற்றுச் சிறப்பு களை விளக்கும் வகையில் கட்டுரைகளாகவும் ஆய்விற்கிடையே வரலாற்றுக் குறிப்புக்களாகவும் அவர் எழுதிய செய்திகள் குறித்து விளக்கி உரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். ஊர்கள் பற்றிய ஆய்வு தமிழகத்தின் ஊர்கள் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டு தமிழகம் ஊரும் பேரும் என்னும் நூலை எழுதிய பெருமைக்குரியவர் ரா.பி.சேதுப்பிள்ளை என்னும் தமிழறிஞர். இவரது இந்த நூல் தமிழக ஊர்கள் பற்றிய ஒரு சிறந்த அறிமுக நூலாகும். கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் அடிப்படையாகக் கொண்டு வரலாற்று நோக்கோடு தமிழக ஊர்கள் சிலவற்றைத் குறித்து ஆய்வு செய்தவர் அறிஞர் பண்டாரத்தார். ஊர் வரலாறு பற்றி இவரெழுதியுள்ள தனி நூல்கள் என்னும் வகையில் திருப்புறம்பயத் தல வரலாறு, செம்பியன்மாதேவித் தல வரலாறு, காவிரிப்பூம்பட்டினம் என்னும் நூல்கள் அமைகின்றன. பண்டாரத்தார் தமது ஆய்வின் மூலம் ஆய்ந்துரைத்த ஊர்களின் தனிச்சிறப்புகள் குறித்துத் தொடர்ந்து நோக்கலாம். காவிரிபூம்பட்டினம் பட்டினப்பாலையையும் சிலம்பையும் பெற்ற காவிரிப் பூம்பட்டினம் சோழர்களின் தலைநகராமாக இருந்து அடைந்த பெருமைகள் ஏராளமாகும். இந்த நகரைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் தமது பட்டினப்பாலையில், முட்டாச் சிறப்பின் பட்டினம் எனக் குறிப்பிடுகிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரிப்பூம்பட்டினம் குறித்து வரலாற்று நோக்கில் தமிழில் நூல்கள் எதுவும் எழுதப்படாத நிலையில் பூம்புகார் மாதவி மன்றத்தினரின் வேண்டுகோளுக்கிணங்கப் பண்டாரத் தாரால் காவிரிப்பூம்பட்டினம் என்னும் நூல் எழுதப்பட்டது. இந்த நூலில் காவிரிப்பூம்பட்டினத்தின் வரலாற்றுச் சிறப்புகளை ஆசிரியர் விளக்கி உரைப்பதுடன் இக்காலத்தில் நம் தழிகத்தின் தலைநகராகத் திகழும் சென்னை நகரத்தினையொத்த பரப்பும் செல்வ வளமும் மக்கட் பெருக்கமும் வாய்ந்த மூதூர் அக்காலத்தில் சோழர் தலைநகராக விளங்கிய நம் காவிரிப்பூம்பட்டினம் எனக் கூறுதல் பொருந்தும் எனக் குறிப்பிடுகிறார். மேலும் அவர் இந்நகரின் சிறப்பைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலண்டன் மாநகரம் எப்படி விளங்கியதோ அதைவிட ஆயிரம் மடங்கு சிறப்பாகப் பூம்புகார் நகரம் விளங்கியதாக நாம் கூறலாம் என எழுதக் காணலாம். கரையப்பார் காவிரிப்பூம்பட்டினம் குறித்து ஆய்வு செய்த பண்டாரத்தார் கலிக்காமூர்த் திருக்கோயிலுக்குச் சொந்தமான கரையப்பார் என்னும் ஊர் கடல் கொண்ட பகுதியாக இன்று காணப்படுகிறது என்பது விளங்குவ தோடு, அப்பகுதியைச் சென்னை அரசும் இந்திய அரசும் புதைபொருள் ஆராய்ச்சித் துறையின் வழியாக ஆய்வு செய்தால் பழைய கட்டடங்கள் சிலவற்றைக் கண்டு மகிழலாம் எனவும் எழுதுகிறார். திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளியின் பழைய வரலாற்றை ஆய்ந்து உரைப் பதற்கென்றே பண்டாரத்தார் தனி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையை இவர், நம் அரசாங்கத்தார், சுதந்தர இந்தியாவில் ஊர்களெல்லாம் தம் பழைய பெயர்களோடு நின்று நிலவவேண்டுமென்ற கருத்தினராய் இப்போது சில ஊர்களின் பெயர்களை மாற்றியுள்ளனர். அவற்றுள் திருச்சிராப்பள்ளி என்பது ஒன்றாகும். அப்பெருநகரின் பண்டைப் பெயர் யாது என்பது ஈண்டு ஆராய்வோம் எனத் தொடங்குகிறார். பல்லவ வேந்தன் முதலாம் மகேந்திர வர்மன் சிராப்பள்ளிப் பெருங்குன்றைக் குடைந்து அங்கே சிவபெருமானுக்குத் திருக்கோயில் ஒன்றை அமைத்தான். சம்பந்தரும் அப்பரும் பாடிய பதிகங்களில்தான் முதன்முதலாகச் சிராப்பள்ளி என்ற பெயர் காணப்படுகிறது என்றும், கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் அக்குன்றில் வாழ்ந்த முனிவர்களின் தலைவராகிய சிரா என்பவரது பெயரில் அந்த இடம் சிராப்பள்ளி என வழங்கப் பட்டதென்றும் பண்டாரத்தார் ஆய்ந்து உரைக்கிறார். மகேந்திரவர்மன் சிராப்பள்ளியில் சிவன்கோயில் கட்டிய போது அக்கோயில் சிராப்பள்ளி என வழங்கப்பட்டதென்றும், அக்கோயில் இருந்த இடம் சிற்றம்பர் என்னும் பெயரை உடையதாக இருந்தது என்றும், அதன் பின்னர் அக்கோயிலின் பெயர் நகரின் பெயராக வழங்கி வருகிறது என்றும், காலப்போக்கில் சிற்றம்பர் என்னும் அந்நகரின் பெயர் மறைந்து விட்டது என்றும் கல்வெட்டாய்வின் மூலம் பண்டாரத்தார் விளக்குகிறார். அவர் ஆய்விற்கு எடுத்துக்கொண்ட முதல் வரகுண பாண்டியன் ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டில் அக்கோயிலில் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டொன்றில் சிற்றம்பர் என்னும் ஊர் சிற்றம்பர் நகர் எனவும், சிற்றம்பர் பதி எனவும் குறிக்கப்ட்டிருப்பதை இவ்வறிஞர் எடுத்துக் காட்டுகிறார். கோயிலின் பெயர்கள் ஊர்களின் பெயர்களாக வழங்கி வருவதற்குப் பட்டீச்சுரம், திருவாவடுதுறை என்னும் கோயில்களின் பெயர்களை இவர் சான்றாகக் காட்டுகிறார். அந்த அடிப்படையில்தான் சிராப்பள்ளி என்ற கோயிலின் பெயர் ஊருக்கும் திரு என்னும் அடை சேர்த்து திருச்சிராப் பள்ளி என்னும் பெயராயிற்று என்பது பண்டாரத்தார் கூற்றாகும். தஞ்சாவூர் பிற்காலச் சோழர்களின் தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கிய தஞ்சை மாநகரின் வரலாற்றுச் சிறப்புக்களை உணர்த்தும் இவ்வறிஞரால் எழுதப்பட்டது தஞ்சாவூர் என்னும் கட்டுரையாகும். பழமை வாய்ந்த இந்த நகரம் அப்பர் சுவாமிகளால் பாடப்பட்டது என்றும், எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் முத்தரையர்களின் தலைநகராக இருந்தது என்றும், பிற்காலச் சோழர்களின் அரசாட்சியை நிறுவிய விஜயாலய சோழன் முதன்முதலாக முத்தரையர்களிடமிருந்து இந்த நகரைக் கைப்பற்றித் தமது தலைநகராக ஆக்கிக் கொண்டான் என்றும், முதற்பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தேதான் தஞ்சை மாநகரின் வடபால் ஓடும் வடவாறு வெட்டப்பெற்றது என்றும், முதலாம் இராசராச சோழன் காலத்தே தஞ்சை மாநகர் பல்வகைச் சிறப்பை ஒருங்கே எய்தியது என்றும், நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களில் அந்த நகர் மேலும் சிறப்புற்றது என்றும் இக்கட்டுரையில் பண்டாரத்தார் ஆய்ந்து உரைக்கிறார். பழையாறை மாநகர் கும்பகோணத்திற்குத் தென்மேற்கே மூன்று கல் தூரத்தில் பழையாறு என்னும் பெயரில் இன்று ஒரு சிற்றூ உள்ளது. அது முற்காலத்தில் ஒரு பரந்துபட்ட மாநகராக இருந்திருக்கிறது. காலப் போக்கில் அந்நகர் சிதைந்து, இன்று பல சிற்றூர்களாகக் காட்சியளிக்கிறது. பிற்காலச் சோழர்கள் காலத்தில் ஒரு தலைநகரமாக விளங்கிய இந்தப் பழையாறை நகர் குறித்து ஆய்வாளர்கள் எவரும் விளக்கி எழுதாத நிலையில், எழுதத் தலைப்பட்டவர் பண்டாரத்தார். இந்தப் பழையாறை நகர் கி.பி. ஏழாம் நுற்றாண்டிலேயே சிறந்து விளங்கியது எனவும், கி.பி.எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவன் இந்த நகரில் ஓர் அரண்மனையையும் நந்திபுர விண்ணகரம் என்னும் ஒரு திருமால் கோயிலையும் கட்டினான் என்று இவர் குறிப்பிடுகிறார். அதற்கும் மேலாக அவன் இந்நகரை, மாமல்லபுரமும் காஞ்சியும் போலத் தனக்குரிய சிறந்த நகராக வைத்துக்கொண்டதோடு, நகரின் பெயரை நந்திபுரம் என்று மாற்றிவிட்டான் என எழுதுகிறார். இந்த நந்திபுரம் பிற்காலத்தில் சோழர் ஆட்சிக் காலத்திலும் பழையாறையாகிய நந்திபுரம் என்று வழங்கப்பட்டிருக்கிறது. பழையாறை மாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு அரசாட்சி செய்தவன் சுந்தர சோழன் என்பதனைக் கல்வெட்டுச் சான்றுகளுடன் விளக்கும் பண்டாரத்தார், அந்நகர், கும்பகோணத்திற்குத் தென்மேற்கே மூன்று மைல் தூரத்தில் பழையாறை என்னும் பெயருடன் இந்நாளில் ஒரு சிற்றூராக உள்ளது. அச்சிற்றூரையும் அதனைச் சூழ்ந்துள்ள முழையூர், பட்டீச்சரம், திருச்சக்திமுற்றம், சோழமாளிகை, அரிச்சந்திரபுரம், ஆரியப் படையூர், பம்பப்படையூர் புதுப்படையூர், மணப்படையூர், கோணப் பெருமாள் கோயில், திருமேற்றளி, தாராசுரம், நாதன்கோயில் என்று வழங்கும் நந்திபுர விண்ணகரம் ஆகிய ஊர்களையும் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் பெரிய நகரமாக அஃது அமைந்திருந்தது என்பதைத் தேவாரப் பதிகங்களாலும் அவ்விடங்களில் காணப்படும் கல்வெட்டுக்களாலும் அறியலாம் என எழுதுகிறார். மேலும், அவ்வூர்களின் பழைய பெயர்களையும் அவற்றின் இன்றைய வழக்கையும் ஒப்பிட்டு நோக்கிய பண்டாரத்தார் திருமத்தடி என்பது திருமேற்றளி என்பதன் மரூஉ எனவும், சோழ மாளிகை என்பது சோழ மன்னர்களின் அரண்மனை இருந்த இடம் எனவும், தாராசுரம் என்பது இராசராசபுரம் என்பதன் மரூஉ எனவும், நாதன்கோயில் என்பது நந்திபுர விண்ணகரம் அமைந்துள்ள இடம் எனவும், இராசேந்திரப் பேட்டையில் சோழர்களின் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன எனவும், கோணப்ப பெருமாள் கோயில் கோபிநாதப் பெருமாள் கோயில் என்பதன் மரூஉ எனவும், பம்பைப்படை, ஆரியப்படை, புதுப்படை, மணப்படை என்னும் நான்கு படைவீடுகள் இருந்த இடங்கள் அப்பெயர்களோடு நான்கு சிற்றூர்களாக இன்றும் உள்ளன எனவும் ஆய்ந்து உரைக்கிறார். மேலும் அவர், ...... அம்மாநகர் வெவ்வேறு அரசர் காலங்களில் வெவ்வேறு பெயர்களை எய்திச் சிறப்புற்றிருந்தது என்பது வெறும் புனைந்துரையன்று. அது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பழையாறை நகர் எனவும், எட்டாம் நூற்றாண்டில் நந்திபுரம் எனவும், பதினொன்றாம் நூற்றாண்டில் முடிகொண்ட சோழபுரம் எனவும், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இராசராசபுரம் எனவும் வழங்கப்பெற்றது என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களும் கல்வெட்டுக்களும் நன்கு உணர்த்தும்..... எனவும் எழுதுகிறார். பழையாறை மாநகர் பற்றிய இதுபோன்ற வரலாற்றுச் செய்திகளைப் பண்டாரத்தார் ஆய்ந்து வெளியிடாமல் இருந்திருந்தால் அந்த மாநகரின் பெருமை வெளியுலகிற்குத் தெரிந்திருக்குமா என்பது ஐயம். பழையாறை பற்றிய இவரது இந்த விரிவான ஆய்விற்கு இவர் மேற்கொண்ட கள ஆய்வானது பேருதவியாக அமைந்தது. திருப்புறம்பயம் பண்டாரத்தாரது கல்வெட்டு ஆய்விற்குத் தொடக்கக் காலத்துக் களமாக அமைந்தது அவர் பிறந்த ஊரான திருப்புறம்பயத்தில் அமைந் துள்ள புறம்பயநாதர் கோயிலாகும். அக்கோயிலானது தேவாரப் பாடல் பெற்ற தலமாக இருப்பதால் அதன் தொன்மையை விளங்கிக் கொள்ள முடிகிறது. விஜயாலய சோழனின் மகன் ஆதிதத சோழனால் அக்கோயில் கற்றளியாக்கப்பட்டது. அதனால் அக்கோயிலுக்கு ஆதித்தேசுவரம் என்ற பெயரும் உண்டு. இவ்வாறு காலந்தோறும் விரிவடைந்த வந்த காரணத் தினால் அக்கோயிலில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் இன்றும் காணப்படுகின்றன. பிற்காலச் சோழர்களின் வரலாற்றில் திருப்பு மையமாக அமைந்த திருப்புறம்பயப் போர் கி.பி.880-இல் திருப்புறம்பயத்தில் நடைபெற்றது. இந்த ஊரின் கொள்ளிடக்கரையில் அமைந்த பறந்தலை என்ற இடத்தில் வரகுண பாண்டியனுக்கும் பல்லவ வேந்தன் அபராஜிதவர்மனுக்கும் நடைபெற்ற போரில் விஜயாலய சோழனின் கட்டளைக்கிணங்க ஆதித்த சோழன் பல்லவனுக்குத் துணையாகப் போர் புரிந்தான். போரில் தாம் பெற்ற வெற்றியின் அடையாளமாக பல்லவன் சோழநாட்டுப் பகுதிகளைச் சோழனுக்கே வழங்கினான். இதன் காரணமாக சோழர்களின் ஆட்சி மீண்டும் மலர ஆரம்பித்தது. இந்த வரலாற்றை அறிஞர் பண்டாரத்தார் தமது பிற்காலச் சோழர் வரலாற்றில் மிகத் தெளிவாக ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளார். திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊராக இருந்ததோடு, அது பண்டாரத்தாரின் சொந்த ஊராக இருந்த காரணத்தினாலும் திருப் புறம்பயத் தல வரலாற்றைத் தனி ஒரு நூலாக அவர் எழுதியுள்ளார். அந்த நூலில் திருப்புறம்பயத்திற்கு அண்மையில் ஓடும் மண்ணியாற்றிற்குக் குஞ்சரமல்லன் என்ற பெயர் வழங்கிற்று என்பது அக்கோயில் கல்வெட்டுச் செய்தியாகும் என்று பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். மேலும், திருப்புறம்பயம் என்னும் கிராமம் சோழ மண்டலத்தில் இராஜேந்திர சிங்க வன நாட்டில் அண்டாட்டுக் கூற்றத்தில் நின்று நீங்கிய தேவதானம் என்பது கல்வெட்டுச் செய்தியாகும் என்பது போன்ற திருப்புறம்பயம் தொடர்பான பல வரலாற்றுச் செய்திகளை இவர் ஆய்ந்து உரைத்துள்ளார். செம்பியன்மாதேவி ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள ஒரு சிவத்தலம் செம்பியன்மாதேவி என்னும் ஊராகும். கண்டராதித்த சோழன் மனைவியும் சோழப் பேரரசியுமான செம்பியன் மாதேவியின் பெயரில் வழங்கப்படும் இந்த ஊருக்கு வரலாற்றுச் சிறப்புக்கள் உண்டு. அந்தச் சிறப்புக்களையெல்லாம பண்டாரத்தாரால்தான் சரியாக எழுத இயலும் என்று அக்கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்து, அதனைப் பண்டாரத்தாரிடம் வேண்டுகோளாக விடுத்தபோது, அவ்வேண்டு கோளை ஏற்றுச் செம்பியன்மாதேவித் தல வரலாறு என்னும் நூலை அவர் எழுதித் தந்தார். அந்த நூலைச் செம்பியன்மாதேவித் தல வரலாறு, கல்வெட்டுக் களால் அறியப்படும் செய்திகள், செம்பியன்மாதேவியார் வரலாறு என்னும் மூன்று பகுதியாகப் பிரித்துக் கொண்டு அவர் எழுதியுள்ளார். நூலின் செறிவினைக் கண்டு வியந்து போன கோயில் நிர்வாகத்தினர், நூல் பதிப்புரையில் இதுகாறும் வெளிவந்துள்ள தல வரலாறுகள் பல ஆராய்ச்சியுரை ஏதுமின்றிப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு அப்படியே எழுதப்பட்டன. அக்குறையை நீக்கவே அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறை விரிவுரையாளரும் ஆராய்ச்சிப் பேரறிஞருமாகிய டி.வி.சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் நுண்மாண் பொருள் மிக்க இவ்வரலாற்றை வரலாற்று அடிப்படையில் செந்தமிழ்ச் சுவை விஞ்சும்படி எழுதஉவினார்கள் என்று குறிப்பிடக் காணலாம். கங்கைகொண்ட சோழபுரம் கங்கைகொண்ட சோழனாகிய முதலாம் இராசேந்திரனால் அமைக்கப்பட்டது கங்கைகொண்ட சோழபுரம் என்னும் பெருநகரமாகும். இம்மாநகரமானது கங்காபுரி என்று கலிங்கத்துப்பரணி, விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்களிலும், கங்கை மாநகர் என்று வீர ராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியிலும் கங்காபுரம் என்று தண்டியலங்கார மேற்கோள் பாடலிலும் குறிக்கப்பட்டுள்ளமையினைப் பண்டாரத்தார் எடுத்துக் காட்டுகிறார். மேலும் இவர், கங்கைகொண்ட சோழபுரத்தின் பகுதிகள் இப்போது உட்கோட்டை, மாளிகைமேடு, ஆயிரக்கலம், வாணதிரையன்குப்பம், கொல்லாபுரம், வீரசோழநல்லூர், சுண்ணாம்புக்குழி, குருகைபாலப்பன் கோயில் என்னும் சிற்றூர்களாகக் காணப்படுகின்றன என்ற ஆய்வுக் குறிப்பை முன் வைக்கக் காணலாம். மாமன்னன் இராசேந்திர சோழன் வெட்டிய ஏரிக்குச் சோழகங்கம் என்னும் பெயர் வழங்கப்பட்டதைத் திருவாலங்காட்டுச் செப்பேட்டின் துணைகொண்டு இவர் விளக்குகிறார். மலைகளே இல்லாத சோழநாட்டுப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏரியின் பெருமையினை வியந்து பேசும் பண்டாரத்தார், அரசியலார் இவ்வேரியைச் சீர்படுத்தினால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விளைந்து பயன் தருமென்பது திண்ணம் என்ற ஆதங்கத்தையும் முன் வைக்கக் காணலாம். மண்ணி நாடு சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சோழ நாடானது பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதும், சோழ மண்டலம் பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதும், வளநாடுகளின் உட்பிரிவு நாடு அல்லது கூற்றம் எனக் குறிப்பிடப் பெற்றது என்பதும் வரலாற்றுச் செய்திகளாகும். இராசேந்திர சிங்க வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றான மண்ணி நாடு எனப்படுவது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காவேரியாற்றிற்கு வடக்கே மண்ணியாற்றுக்குத் தெற்கே அமைந்த ஒரு நிலப்பகுதியாகும் என்பதனைப் பண்டாரத்தார் ஆய்வின்மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இது குறித்து அவர், கும்பகோணத்திற்கு வடகிழக்கேயுள்ள திருவியலூர், வேப்பத்தூர், திரைலோக்கி, திருக்குடித்திட்டை, இடையா நல்லூர், திருப்பனந்தாள் முதலான ஊர்கள் மண்ணி நாட்டில் உள்ளவை என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகிறது எனக் குறிப்பிடும் பகுதியால் விளங்கிக் கொள்ளலாம். இடவை ஆய்வுலகில் பலராலும் தவறாக மேற்கொண்ட முடிவுகள் பலவற்றைத் தமது ஆய்வின் மூலம் தெளிவுபடுத்தியவர் பண்டாரத்தார். இதற்கு எடுத்துக்காட்டாக அமைவதுதான் இவரது இடவையும் இடை மருதும் என்னும் கட்டுரையாகும். இடவை எனப்படுவது மண்ணி நாட்டிலிருந்து ஓர் ஊராகும். ஆயினும், திருவாசகத்தின் திருவார்த்தை என்ற பதிகத்திற்கு உரை எழுதிய ஒருவரும், திருப்பதியிலிருந்து வெளிவரும் கீழ்த்திசைக் கலைக் கழக இதழில் மாணிக்கவாசகர் காலம் பற்றிக் கட்டுரை எழுதிய மற்றொருவரும் இடவை என்பது சோழ நாட்டிலுள்ள திருவிடை மருதூராகும் என்று எழுதியுள்ளதைக் கண்ட பண்டாரத்தார், இடவையும் இடைமருதூர் ஒன்றா அல்லது வெவ்வேறு ஊர்களா என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டார். அதன் விளைவாக, இடவை எனப்படுவது காவிரியாற்றின் வடக்கே இராசேந்திர சிங்க வளநாட்டில் மண்ணி நாட்டிலுள்ள ஓர் ஊர் என்பதும், அப்பேராற்றிற்குத் தெற்கே உய்யக்கொண்டார் வளநாட்டில் திரைமுர் நாட்டிலுள்ள ஓர் ஊர் இடைமருது என்பதும் இவரது ஆய்வின் முடிவாக அமைந்தது. இடைமருது எனப்படுவது திருவிடைமருதூராகும். மேலும், இடவை என்ற ஊர் எங்கு உள்ளது என்று ஆய்வு செய்யும் முயற்சியையும் இவ்வறிஞர் மேற்கொண்டார். இறுதியாக, அவ்வூர் இருந்து அழிந்து போயிருக்க வேண்டும் அல்லது அஃது இன்று வேறு பெயரில் வழங்கிக் கொண்டிருத்தல் வேண்டும் என்ற முடிவிற்கு அவர் வருகிறார். திருப்பனந்தாளுக்கு அண்மையில் மண்ணியாற்றிலிருந்து பிரிந்து சென்ற வாய்க்கால் ஒன்று இடவை வாய்க்கால் என்ற பெயரைப் பெற்றிருந்ததாக அவ்வூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுவதாகவும் இவர் எடுத்துக் காட்டுகிறார். மிழலை நாடு சோழர் காலக் கல்வெட்டுக்களிலும் இலக்கியங்களிலும் மிழலை நாடு, மிழலைக் கூற்றம் என்னும் இரண்டு தொடர்கள் காணப்படுகின்றன. ஆராய்ச்சி வல்லுநர்கள் சிலர் இவ்விரண்டும் ஒன்றே என்று கருதிய நிலையில் பண்டாரத்தார் இது குறித்த ஆய்வினை மேற்கொண்டார். அதன் விளைவாக இவர், மிழலை நாடு எனப்படுவது சோழ மண்டலத்தில் இருந்த ஒன்பது வளநாடுகளுள் ஒன்றாகிய இராசேந்திர சிங்க வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்று என்று விளக்குகிறார். மேலும் இவர், இராசேந்திர சிங்க வளநாடு என்பது காவிரியாற்றின் வடகரையிலிருந்த ஒரு பெரு நிலப்பரப்பாகும் எனவும் குறிப்பிடுகிறார். இந்த வளநாடு இருபத்திரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது என்பதனை இவரது கல்வெட்டு ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. அவற்றுள் ஒன்றே மிழலைநாடு எனவும் இவர் ஆய்ந்துரைக்கிறார். மிழலைநாடு எனப்படுவது சோழகேரளபுரம், சேய்ஞலூர், திருவாப்பாடி, மிழலை, திருந்துதேவன்குடி முதலான ஊர்களைத் தன்னகத்துக் கொண்டதாகும் எனக் குறிப்பிடும் பண்டாரத்தார், இந்த மிழலை நாட்டின் வரலாற்றுச் சிறப்பை உணர்த்தியதோடு நின்றுவிடாமல் மிழலை நாட்டு ஊர்களின் சிறப்பையும் விளக்குகிறார். அவ்வகையில், மிழலை நாட்டில் உள்ளதாகக் கல்வெட்டில் உணர்த்தப்படும் சோழகேரளபுரம் என்பது இக்காலத்தில் சோழபுரம் என வழங்குவதாகவும், சண்டேசுவரநாயனார் தோன்றிய சேய்ஞலூர் என்பது இன்று சேங்கனூர் என வழங்குவதாகவும் இவர் குறிப்பிடுகிறார். மேலும், சேங்கனூருக்கு அண்மையிலுள்ள திருவாப்பாடி எனப்படுவது சண்டேசுவரர் பூசித்த சிவலிங்கப் பெருமாள் உள்ள தலமாகும் என்று இவர் சுட்டுகிறார். மிழலை எனப்படுவது சோழ புரத்திற்குத் தெற்கே ஒன்றரை மைலில் உள்ள ஓர் ஊர் எனவும், அது மிழலை நாட்டின் தலைநகரம் எனவும் இவர் அடையாளம் காட்டியுள்ளார். இந்த மிழலையானது பழங்காலத்தில் பெருழிலை என வழங்கப் பெற்றது. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான பெரு மிழலைக் குறும்ப நாயனா வாழ்ந்து வீடெய்தியது நன்னிலத்தற்க அண்மையிலுள்ள திருவீழிமிழலை என்று பலர் கருதி வந்தனர். ஆயினும் சுந்தரர் மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலை என்று இருவிதமான மிழலையைக் குறிப்பிடுவதையும், சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் குறும்ப நாயனாரது ஊர் மிழலை நாட்டு மிழலை எனக் குறிப்பிடுவதையும் கண்ட இவ்வறிஞர் குறும்ப நாயனாரது மிழலை திருவீழிமிழலையி லிருந்து வேறுபட்டது என்ற முடிவிற்கு வருகிறார். இது குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்காக மிழலைக்குச் சென்ற அவர், யாம் நேரிற் சென்று அதனைப் பார்த்தபோது அழிவுற்ற நிலை யிலுள்ள ஒரு பழைய சிவாலயம் அங்கே காணப்பட்டது. அவ்வூரினர் அதற்கருகிலுள்ள களம்பரம் என்ற ஊரில் குடியேறியுள்ளனர். மிழலையும் அதிலுள்ள சிவாலயமும் பழைய நாளில் நல்ல நிலையில் இருந்திருத்தல் வேண்டும். அழிவுற்ற அவ்வாலயத்திலுள்ள படிமங்கள் அதில் ஒரு புறத்தில் புதிதாக அமைக்கப் பெற்றுள்ள ஒரு சிறு அறையுள் வைக்கப் பெற்று வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன. அவ்விடத்தில் பெருமிழலைக் குறும்ப நாயனாரது படிமம் இன்றும் உள்ளது. ஆகவே, புலவர் பெருமானாகிய சேக்கிழார், குறும்பநாயனாரது திருப்பதியாகக் கூறியுள்ள பெருமிழலை மிழலை நாட்டிலுள்ள இம்மிழலையேயாதல் அறிந்து கொள்க என எழுதுகிறார். இதற்கு ஆதாரமாகப் பல கல்வெட்டுச் சான்றுகளையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். மிழலைக்கு அண்மையிலுள்ள திருந்து தேவன்குடி என்னும் ஊர் பாடல் பெற்ற தலமாகும். மிழலைக் கூற்றம் எனப்படுவது பாண்டி மண்டலத்தில் இருந்த உள்நாடுகளுள் ஒன்று என்பது இவரது ஆய்வு முடிவாகும். சேங்கனூர் முற்காலத்தில் சேய்நல்லூர் எனப்படுவது சேய்ஞலூர் என வழங்கப் பெற்றிருக்கிறது. இங்குள்ள மாடக்கோயில் கோச்செங்கட் சோழனால் எடுப்பிக்கப் பெற்றது எனவும் இக்கோயிலில் வரையப்பெற்றுள்ள மூன்றாம் இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டொன்று மிழலை நாட்டு சேய்ஞலூருடையார் வாசுவேசுவர தேவர் கோயில் என்று கூறுவதால் இவ்வூர் மிழலை நாட்டிலுள்ளது என்பது உறுதியாதல் காண்க எனவும் அறிஞர் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். இந்தச் சேங்கனூர் குடந்தையி லிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊராகும். சேங்கனூரில் தான் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சண்டேசுவர நாயனார் பிறந்து வாழ்ந்தார். மேலும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு இருபத்து நாலாயிரப்படி என்னும் உரையெழுதிய பெரியவாச்சான்பிள்ளை பிறந்தது இவ்வூரேயாகும் எனவும் இவர் எழுதுகிறார். பிற்காலச் சோழர்களின் உயிர்நாடியாக விளங்கியது அவர்களது கிராம ஆட்சி முறையாகும். அதுகுறித்து விரிவாகப் பேசும் கல்வெட்டுக் களுள் குறிப்பிடத்தக்க ஒன்று சேய்ஞலூரில் காணப்படும் கல்வெட்டாகும். அக்கல்வெட்டை அப்படியே தமது பிற்காலச் சோழர் வரலாற்றில் படியெடுத்துத் தந்ததோடு, கல்வெட்டுச் செய்திகளைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்த அறிஞர் பண்டாரத்தார், சேய்ஞலூரில் காணப்படும் கல்வெட்டானது, அவ்வூரில் வாரியம் அமைப்பது பற்றியும் கடமை முதலிய வற்றை வசூலிப்பது பற்றியும் சபா விநியோகம் என்னும் வரி வாங்கிச் செலவிடுவது பற்றியும் அவ்வூர்க் கோயில் சபையார் செய்து முடிவுகளைத் தெரிவிக்கிறது... என எழுதுகிறார். பண்டாரத்தார் எடுத்துக்காட்டிய இந்த ஆய்வுக் குறிப்புக்கள் அவ்வூரிலுள்ள படித்த மக்களுக்கே தெரியுமா என்பது கேள்விக் குறியாகும். கடம்பங்குடி சேங்கனூருக்கு வடக்கே கொள்ளிடக்கரையை ஒட்டி அமைந்த ஊர் கடம்பங்குடி எனப்படுவதாகும். அவ்வூர் இப்பொழுது கடமங்குடி என மருவி வழங்குகிறது. அவ்வூரானது சோழமண்டலம் விருதராச பயங்கர வளநாட்டு மண்ணி நாட்டைச் சேர்ந்தது என்பதும், அவ்வூரைச் சேர்ந்த வேளான்மாதவனாகிய இராச வல்லபப் பல்வரையன் என்பவன் முதற் குலோத்துங்கனின் அமைச்சரவையில் ஒருவனாக இருந்திருத்தல் வேண்டும் என்பதும் பண்டாரத்தாரின் ஆய்வு முடிவாகும். இராசராசன் ஆட்சிக் காலத்தில் மண்ணி நாடு இடம்பெற்ற வளநாடு இராசேந்திர சிங்க வளநாடு எனக் குறிப்பிடப்பெறுகிறது. ஆயினும் மேற்கண்ட பகுதியில் கடம்பங்குடியானது விருதராச பயங்கர வளநாட்டில் இடம் பெற்ற ஓர் ஊர் எனச் சுட்டப்படுகிறது. ஆளுகின்ற அரசர்களுக்கேற்ப வளநாடு, நாடு, ஊர் முதலானவற்றின் பெயர்கள் அவ்வப்போது மாறிமாறி வழங்கி வந்திருப்பதை வரலாறு உணர்த்துகிறது. அதனடிப்படையில் தான் இராசேந்திர சிங்க வளநாடு காலப்போக்கில் விருதராச பயங்கர வளநாடு என மாற்றம் பெற்றிருக்கிறது. சூரியனார் கோயில் தஞ்சை மாவட்டம், ஆடுதுறைக்கு வடகிழக்கே அமைந்திருப்பது சூரியனார் கோயில் என்னும் ஊராகும். முதற் குலோத்துங்க சோழன் சூரியனுக்குக் கோயில் கட்டி வழிப்பட்ட இவ்விடமே சூரியனார் கோயில் என வழங்கப் பெறுகிறது. இந்த வழிபாட்டு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கன்னோசி நாட்டுத் தொடர்பு குலோத்துங்கனுக்கு இருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இதைப் பண்டாரத்தாரும் ஏற்கிறார். ஆயினும் சூரியனுக்குத் தனிக்கோயில் கடைச்சங்க காலத்திலேயே நம் தமிழகத்தில் இருந்தது என்று குறிப்பிடும் பண்டாரத்தார், அவ்வழிபாடு தொன்மை வாய்ந்தது என்பது சிலப்பதிகாரத்திலுள்ள மங்கல வாழ்த்துப் பாடலாலும் கனாத்திறமுரைத்த காதையாலும் நன்கறியக் கிடத்தல் உணரத்தக்கது என்றும் குறிப்பிடக் காணலாம். இதனால் தமிழகத்தில் சூரிய வழிபாட்டின் தொன்மையை உணர்ந்து கொள்ள முடிகிறது. இவ்வூர் அக்காலத்தில் சோழமார்த்தாண்டாலயம் என வழங்கப் பெற்றது எனவும் இவர் சுட்டுகிறார். திருமணஞ்சேரி மயிலாடுதுறைக்கு மேற்கே குற்றாலத்திற்கு வடக்கே அமைந்தள்ள திருமணஞ்சேரி என்னும் ஊர் அசல் உட்கிராமமாகும். அவ்வூர் அக்காலத்தில் கரிகால் சோழ சதுர்வேதி மங்கலம் என வழங்கப் பட்டதெனவும், கி.பி.1138-இல் அவ்வூர்ச் சபையார் மேற்கொண்ட செயல்கள் சிலவற்றை அவ்வூர்க் கோயிலுள்ள கல்வெட்டு உணர்த்துகிறது எனவும் பண்டாரத்தார் சுட்டுகிறார். இதன்மூலம் திருமணத்திற்கான தெய்வ வழிபாட்டோடு மட்டும் தொடர்புடையதாக மக்களால் இன்று கருதப்பட்டு வரும் அந்த ஊருக்குரிய வரலாற்றுச் சிறப்பு வெளிப்படுவதற்குத் காரணமானவர் பண்டாரத்தார் என்பதனை விளங்கிக் கொள்ள முடிகிறது. நடார் திருவிடைமருதூர் வட்டம் திருநாகேவரத்திற்குத் தென் கிழக்கே உள்ளது நடார் என்னும் சிற்றூராகும். இவ்வூரில் வாழ்ந்த ஓர் அரசியல் தலைவனாகச் சேனாபதி இராசராசன் பருநிருப இராக்கத வீரசோழ இளங்கோ வேளான் என்பவனைப் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். கல்வெட்டு ஆதாரத்தை அடிப்படையாகக்கொண்டு இவனை அதிராசேந்திர சோழனின் படைத்தலைவர்களுள் ஒருவனாக இவர் குறிப்பிடக் காணலாம். இவன் காஞ்சி மாநகரத்திலிருந்து கோயில் கணக்குகளை ஆராய்ந்த அதிகாரிகளுள் ஒருவன் என்ற குறிப்புக் காணப் படுகிறது. இந்த வரலாற்றுக் குறிப்பு எதுவும் நடார் மக்களுக்கே தெரியவில்லை என்பதுதான் எனது கள ஆய்வின்போது நான் அறிந்த செய்தியாகும். வண்ணக்குடி திருவிடைமருதூருக்குக் கிழக்கே கோவிந்தபுரத்திற்குத் தெற்கே அமைந்திருப்பது வண்ணக்குடி என்னும் ஊராகும். விக்கிரம சோழன் என்பவன் தமது ஆட்சியின் ஏழாம் ஆண்டில் திருவிடைமருதூருக்கச் சென்றிருந்தபோது, அவ்வூரைச் சேர்ந்த திருவண்ணக்குடி என்ற ஊரினைத் தியாக சமுத்திர சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றித் திருவிடைமருதூர்க் கோயிலுக்கு இறையிலி தேவதானமாக அளித்தான் என்று திருவிடைமருதூர்க் கோயில் கல்வெட்டுக் குறிப்பிடுவதாக அறிஞர் பண்டாரத்தார் சுட்டுகிறார். இந்த வரலாற்றுச் சுவடு கொஞ்சம் கூடத் தெரியாமல் சாதாரண ஒரு குக்கிராமமாக இன்று வண்ணக்குடி காணப்படுகிறது என்பதுதான் வேதனைக்குரிய செய்தியாகும். கதிராமங்கலத்திற்கு மேற்கேயுள்ள திருக்கோடிகா சிவாலயத்தி லுள்ள சண்டேசுவர நாயனார் கோவில் அக்காலத்தில் தியாகசமுத்திரம் என்றும், சுவாமிமலைக்கு நேர் மேற்கே உள்ள ஓர் ஊர் தியாக சமுத்திரம் என்றும் குறிக்கப்பெறுவது ஆய்விற்குரியதாகும். நாலூர் திருவிடைமருதூர் ஒன்றியம் திருச்சேறைக்குத் தெற்கே அமைந்துள்ளது நாலூர் என்னும் ஊராகும். இந்த நாலூரைச் சேர்ந்தவனாக முதற் குலோத்துங்க சோழனின் படைத்தளபதிகளுள் ஒருவனான சேனாதிபதி ஞானமூர்த்திப் பண்டிதன் ஆகிய மதுராந்தக பிரமாதிராஜன் என்பவனைப் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். கிராமசபைப் பெருமக்கள் கூடிக் காரியங்களை நடத்துவதற்குப் பல ஊர்களில் தனியாக மாளிகைகள் அமைக்கப்பட்டிருந்தன. எனினும் இவர்கள் கோயில் மண்டபங்களிலும் மன்றங்களிலும் கூடுவதும் உண்டு. தஞ்சாவூர் ஜில்லாவில் குடவாசலுக்குப் பக்கத்தே உள்ள நாலூர் சபை முதல் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் அவ்வூர்க் கோயிலில் கண்டராதித்தன் மண்டபத்திலும், இராசராசன் மண்டபத்திலும், வண்ணக் கனார் அம்பலத்திலும் கூட்டம் நடத்தியுள்ளமை அங்குக் காணப்படும் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது என்று பண்டாரத்தார் குறிப்பிடு வதனை நோக்க, கிராம ஆட்சியானது சோழர் காலத்தில் நன்கு வேரோடியிருந்தமையினை அறிந்துகொள்ள முடிகிறது. சாத்தனூரும் திருவாவடுதுறையும் சோழ மண்டலத்தில் ஆடுதுறைக்குக் கிழக்கே வீரசோழன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது சாத்தனூர் என்னும் ஊராகும். இவ்வூருக்குப் பக்கத்தில் உள்ளது திருவாவடுதுறை என்னும் ஊர். ஆயினும் பழங்காலத்தில் சாத்தனூரில் இருந்த சிவன்கோயிலே திருவாவடுதுறை என்று வழங்கப் பெற்றது என்பதனைக் கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்று கொண்டு அறிஞர் பண்டாரத்தார் நிறுவியுள்ளார். காலப்போக்கில் கோயிலின் பெயர் அதனைச் சூழ்ந்துள்ள இடங்களுக்கு ஊர்ப்பெயராக மாறிய நிலையையும் இவர் எடுத்துக் காட்டுகிறார். இவ்வாறு மாறுவதால் ஊரின் எஞ்சிய பகுதி மட்டும் பழைய பெயருடன் வழங்கும் நிலை உருவாகும். இதனை அவர், .... பழையாறை நகரிலிருந்த பட்டீச்சரமும் திருச்சக்திமுற்றமும் திருமேற்றளியும் வேறுவேறு ஊர்களாயினமை போலச் சாத்தனூரிலிருந்த திருக்கோயி லாகிய திருவாவடுதுறை என்பதும் ஒரு தனி ஊராகப் பிற்காலத்தில் வழங்கி வருதல் அறியத்தக்கது. திருவாவடுதுறை என்னும் பெயரும் இத்திருக்கோயிலைச் சூழ்ந்துள்ள சாத்தனூரின் ஒரு பகுதிக்கு மாத்திரம் வழங்கப் பெற்றுள்ளமையின், எஞ்சிய பகுதி சாத்தனூர் என்னும் பழைய பெயருடன் இதற்கு அண்மையில் இன்றும் நிலைபெற்றிருத்தல் அறியற்பாலதாகும் எனக் குறிப்பிடும் பகுதியால் அறிந்து கொள்ளலாம். இது குறித்து, அவர் விரிவாகச் சாத்தனூரும் திருவாவடு துறையும் என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். கோனேரிராசபுரம் தஞ்சை மாவட்டம் - ஆடுதுறைக்குத் தென்கிழக்கே அமைந்துள்ள கோனேரிராசபுரம் என்ற ஊர் பழங்காலத்தில் திருநல்லம் என வழங்கப் பெற்றிருக்கிறது. அவ்வூரிலுள்ள சிவபெருமானுக்குச் செம்பியன்மாதேவி என்னும் அரசமாதேவி தமது கணவர் கண்டராதித்தரின் நினைவாகக் கண்டராதித்தம் என்னும் கற்றளியை அமைத்ததோடு, அக்கோயில் வழிபாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் என்பதனை அக்கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஆதாரத்தைக் கொண்டு பண்டாரத்தார் தெளிவுபடுத்தியுள்ளார். சோழர் வரலாற்றில் கோனேரிராச புரம் சிறப்பிடம் பெற்றிருந்தது என்பதனை இவரது இந்த ஆய்வு தெளிவுபடுத்துகிறது. வண்டுவாஞ்சேரி முதற்குலோத்துங்க சோழனின் படைத்தளபதியும் கலிங்கப்போலை முன்னின்று நடத்தியவனுமான கருணாகரத் தொண்டைமான் வாழ்ந்த ஊர் வண்டை நகர் எனப்படுவதாகும். அது திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி எனவும், அதுவே இன்ற வண்டுவாஞ்சேரி என மருவி வழங்குகிறது எனவும் அறிஞர் பண்டாரத்தார் எடுத்துக்காட்டுகிறார். இது வண்டையம்பதி எனவும், வண்டு உலவும் சேரி எனவும், வண்டுலாஞ்சேரி எனவும் பழங்காலத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வண்டுவாஞ்சேரி யானது தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோயிலில் இருந்து திருச்சேறை செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஏரகரம் கும்பகோணத்திற்கு வடமேற்கே இரண்டு கல் தொலைவில் அமைந்துள்ளது ஏரகரம் என்னும் ஊர். அவ்வூரானது இன்று ஏராகரம் என்று பாமர மக்களால் வழங்கப்பெறுகிறது. அவ்வூரின் தென்மேற்கு மூலையில் வயல்களுக்கு இடையில் அழிந்துபோன நிலையில் ஒரு சிவாலயம் உள்ளது. அங்குப் புதையுண்டு கிடந்த ஒரு கல்வெட்டைத் தோண்டி எடுத்ததன்மூலம் மிகப்பெரிய வரலாற்று உண்மைகளை முதன்முதலாகக் கண்டுபிடித்து உரைத்த பெருமை அறிஞர் பண்டாரத்தாரைச் சாரும். அவர் மேற்குறிப்பிட்ட கல்வெட்டை ஆராய்ந்து பார்த்த போது, அது கி.பி.1120 முதல் 1136 வரை சோழ மண்டலத்தில் ஆட்சி செய்த விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டாகும் என்ற முடிவிற்கு வந்தார். மேலும், அக்கல்வெட்டின் ஒரு பகுதியாகிய இன்னம்பர் நாட்டு ஏராகிய மும்மடி சோழ மங்கலம் என்ற தொடரைக் கண்டு அக்கோயில் அமைந்துள்ள அவ்வூரின் பெயர் யாது எனப் புரிந்து கொண்டமையால் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அத்தொடரைக் கொண்டு அப்பர் ஷேத்திரக் கோவையில் குறிக்கப்பெற்ற ஏர் என்னும் தலம் இன்னம்பர் நாட்டு ஏர்தான் என்ற முடிவிற்கு அவர் வருகிறார். அக்கல்வெட்டின் அடிப்படையில் இன்னம்பர் நாடு, ஏர் என்னும் பகுதிகளின் சிறப்புக்களைத் தேடி வெளியிடும் முயற்சியினையும் பண்டாரத்தார் மேற்கொண்டார். இன்னம்பர் நாடு பழங்காலத்தில் சோழ மண்டலத்தில் காவிரிக்கு வட கரையிலிருந்த நாடுகளுள் ஒன்றாகும் எனவும் இன்னம்பர் அதன் தலைநகராகும் எனவும் அவ்வூர் இன்று இன்னம்பூர் என வழங்கப்படுகிறது எனவும் இவர் ஆய்ந்துரைக்கிறார். கல்வெட்டுக்களின் சான்றுகளைக் கொண்டு, நோக்குமிடத்து, கும்பகோணம் வட்டத்திள்ள கொட்டையூர், மேலக்காவேரி, கருப்பூர், அசுகூர், ஏரகம் முதலான ஊர்களையும், பாவநாசம் வட்டத்திலுள்ள ஆதனூர், மருத்துவக்குடி முதலான ஊர்களையும் தன்னகத்துக் கொண்டு விளங்கியது இன்னம்பர் நாடு என இவர் எடுத்துரைக்கிறார். மேலும் இவர், அவ்வூர் முதலாம் இராசராசன் காலத்திலிருந்து மும்மடி சோழ மங்கலம் என்ற பெயரில் வழங்கப்பட்டது எனவும் தெளிவுபடுத்துகிறார். ஆவூர் செங்கற்பட்டு மாவட்டல் உக்கல் என்னும் ஊரிலுள்ளது இராசராசன் கிணறு என்னும் கிணறாகும். இக்கிணற்றின் வரலாற்றை அவ்வூரிலுள்ள கோயில் ஒன்றில் காணப்படும் ஒரு கல்வெட்டு விளக்குகிறது. அதன் ஒரு பகுதியில் இராசராசன் கிணற்றைத் தோண்டியவன், ஸ்ரீ ராஜராஜ தேவர் பணி மகன் சோழ மண்டலத்து தென்கரை நாட்டு நித்த விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான் கண்ணணாரூரான் என்னும் குறிப்புக் காணப்படுவதாக இவர் எடுத்துக் காட்டுகிறார். இந்த ஆவூர் குறித்து ஆய்வு செய்த பண்டாரத்தார், ஆவூர்க் கூற்றத்து ஆவூர் என்பது தற்காலத்தில் தஞ்சை ஜில்லா பாவநாசந் தாலுக்காவில் உள்ளதும் சைவ சமயாச்சாரியார்களால் பாடப்பெற்ற சிறப்புடையதும் பசுபதீச்சரம் என்னும் திருக்கோயிலைத் தன்னகத்துக் கொண்டு விளங்கு வதுமாகிய ஆவூரேயாகும். ஆவூர்க் கூற்றம் என்பது இவ்வாவூரைத் தலைநகராகக் கொண்டு இதனைச் சூழ்ந்திருந்த ஒரு சிறு நாடாகும். இரும்புதலை, விளத்தூர் முதலான ஊர்கள் இக் கூற்றத்திலிருந்தன எனக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன என எழுது கிறார். இந்த ஆவூர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தரால் சிறப்பித்துப் பாடப்பெற்றுள்ளது. இராசகிரி தஞ்சை மாவட்டம் பாவநாசத்திற்கு மேற்கே உள்ளது. இராசகிரி என்னும் ஊராகும். அவ்வூரில் இப்பொழுது முகம்மதியர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். அவ்வூரானது ஆதித்த சோழன் பெயரால் இராசகேசரிச் சதுர்வேதி மங்கலம் என்று அக்காலத்தில் வழங்கப்பெற்று வந்தது என்பதனைக் கோயில் தேவராயன்பேட்டை என்னும் ஊரில் காணப்படும் கல்வெட்டுக்களைக் கொண்டு அறிஞர் பண்டாரத்தார் ஆய்ந்துரைக்கிறார். கருந்தட்டான்குடி தஞ்சையிலிருந்து குடந்தைக்குச் செல்லும் சாலையில் தஞ்சையை ஒட்டி அமைந்துள்ளது கருந்திட்டைக்குடி என்னும் ஊராகும். அஃது இன்று கருந்தட்டான்குடி என வழங்கப்பெறுகின்றது. முதற் குலோத்துங்க சோழன் முதன்முதலாக சோழநாடு முழுமையும் சுங்க வரியை நீக்கினான். அதன் காரணமாகச் சோழ நாடு சுங்கமில்லாச் சோழ நாடு என்னும் பெயரைப் பெற்றது. சுங்கம் வசூலிக்கப்பட்ட இடங்களுள் ஒன்றான கருந்திட்டைக்குடியானது சுங்கத் தவிர்த்த சோழ நல்லூர் என்னும் பெயரைப் பெற்றது என்று அறிஞர் பண்டாரத்தார் ஆய்ந்துரைக் கிறார். செந்தலை தஞ்சைக்கு வடமேற்கே அமைந்து இன்று செந்தலை என வழங்கும் ஊர் முத்தரையர்களின் ஆட்சிக்காலத்தில சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் என வழங்கப்பட்ட தெனவும், அதனைத் தலைநகராகக் கொண்டே அக்காலத்தில் முத்தரையர்கள் அதனைச் சுற்றியுள்ள பகுதியை அரசாண்டனர் எனவும் பண்டாரத்தார் எடுத்துக் காட்டுகிறார். இவ்வூர் ஓர் அரச வம்சத்தினருக்குத் தலைநகராக அக்காலத்தில் இருந்திருக்கிறது என்பது ஊர் மக்களுக்குப் பெருமை சேர்க்கும் செய்தியாகும். நாகப்பட்டினம் சோழ மண்டலத்தைச் சேர்ந்த நாகப்பட்டினத்திற்கச் சோழ குல வல்லிப் பட்டினம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு என்பது லெய்டன் சிறு செப்பேடுகளால் அறியப்படுகின்றது என்பதும், அவ்வூரிலிருந்த இராசராசப் பெரும்பள்ளி சோழர்கள் காலத்தில் கடாரத்து அரசனால் எடுப்பிக்கப் பெற்றது என்பதும் பண்டாரத்தார் தரும் செய்தியாகும். மணக்குடி மணக்குடி என்னும் ஊர் திருவாரூரில் இருந்து திருத்துறைப் பூண்டிக்குச் செல்லும் இருப்புப் பாதையிலுள்ள பொன்னறை என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து எட்டுக்கல் தொலைவில் உள்ள ஓர் ஊராகும். அகநானூற்றின் உரையாசிரியரான வில்லவதரையன் என்பவரது ஊர் இடையள நாட்டு மணக்குடி என்ற ஒரு குறிப்புக் கிடைக்கிறது. அந்த மணக்குடி எங்கு உள்ளது என்ற ஆய்வினை மேற் கொண்ட பண்டாரத்தார் இடையள நாடு குறித்தும், அந்நாட்டைச் சேர்ந்த ஊர்கள் குறித்தும் தமது ஆய்வில் விரிவாக விளக்குகிறார். அவ்வகையில் மணக்குடியானது சோழ மண்டலத்திலுள்ள தொன்மையான ஊர்களுள் ஒன்று என்பதும், இராசேந்திர சோழன் காலத்தில் அவனது அரசியல் தலைவன் ஒருவன் அவ்வூரில் வசித்து வந்தான் என்பதும், சோழர்கள் காலத்தில் அவ்வூர் பெருமை மிக்க ஒன்றாக இருந்தது என்பதும் இவர் தரும் ஆய்வுக் குறிப்பாகும். மேலும் இவர், ஐந்குறுநூற்றில் (56) குறிக்கப்பெறும் சோழரது ஆமூர் இந்த மணக்குடிக்கு அண்மையில உள்ள ஓர் ஊர் என்ற குறிப்பினையும் தருகிறார். கண்டி ராச்சியம் உடையார்பாளையம் வட்டம், கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் திருமழப்பாடிக்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது கண்டிராச்சியம் என்னும் சிற்றூராகும். இவ்வூரானது கண்டராதித்தன் என்னும் சோழ மன்னனால் கண்டராதித்த சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரில் அமைக்கப்பட்டது என்று ஆனைமங்கலச் செப்பேட்டைச் சான்றாகக் கொண்டு அறிஞர் பண்டாரத்தார் விளக்குகிறார். கோவிந்தபுத்தூர் கோவிந்தபுத்தூர் என்னும் ஊர் பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஒரு சிவத்தலமாகும். திருப்புறம் பயத்திற்கு வடமேற்கே மூன்று கல்தூரத்தில் கொள்ளிடப் பேராற்றின் வடகரையில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரிலுள்ள சிவாலயம் திருவிசயமங்கை என அழைக்கப்படுகிறது. இக்கோயில் சம்பந்தராலும் நாவுக்கரசராலும் பாடப்பெற்ற பழமையுடையதாகும். கோவந்தபுத்தூர் எனப் பெயர் பெற்ற இவ்வூர் இன்று கோவிந்தபுத்தூர் என வழங்கப் பெறுகின்றது. ஆயினும் கோவிந்தபுத்தூரும் அவ்வூரிலுள்ள சிவாலயமாகிய திருவிசயமங்கையும் வெவ்வேறு தலங்கள் என்னும் கருத்து உருவாகியுள்ளது. கோவிந்தபுத்தூர் என்பது வைப்புத்தலம் என்றும் திருவிசயமங்கை பாடல் பெற்ற தலம் என்றும் கருதி வந்தனர். இச்சூழலில் ஒரு சிவராத்திரியின்போது கோவிந்த புத்தூரிலுள்ள சிவபெருமானை வணங்கும் பொருட்டு அவ்வூருக்குச் சென்ற பண்டாரத்தார், அவ்வூர்க் கோயிலிலுள்ள இரண்டு கல்வெட்டுக்களைக் காணலுற்றார். அவற்றைப் படித்த பிறகு அக்கோயிலுக்கு விசயமங்கலம் எனவும் விசயமங்கை எனவும் பெயர் வழங்கப்பட்டதை அறிந்த மகிழ்ந்ததோடு தமது ஆய்வை விரிவுபடுத்தவும் செய்தார். அதன் அடிப்படையில் கோவிந்தபுத்தூரிலுள்ள அத்திருக் கோயில் திருவிசயமங்கை என்னும் பெயருடையதென்று முடிவிற்கு வருகிறார். அவரது அந்த முடிவிற்குத் தேவாரப் பதிகங்கள், பெரிய புராணம், அவ்வூர்க் கோயில் கல்வெட்டுக்கள் ஆகியன மூலச் சான்று களாக அமைந்தன. மதுராந்தக சோழன் காலத்தில் அமைக்கப்பெற்ற இக்கற்றளியானது இராசராசனின் தஞ்சை இராசராசேச்சுரத்தைக் காட்டிலும் பழமையானது என்பதனையும் இவர் எடுத்துக் காட்டுகிறார். ஆயினும், இந்தத் திருவிசயமங்கை எனப்படுவது ஓர் ஊரின் பெயராகத் தஞ்சை மாவட்டம் திருவைகாவூருக்குக் கிழக்கே கொள்ளிடப் பேராற்றின் தென்கரையில் விசயமங்கை என்று வழங்கி, பின்னர் அதுவே மருவி வெசமூங்கி என இன்று வழங்குகிறது. இது தவறான வழக்காகும். மழநாடு பழந்தமிழகத்தில் வீரம் செறிந்த அரச வம்சத்தவர்களாய் விளங்கியவர்கள் மழவர்கள். அவர்கள் வாழ்ந்த நாடு மழநாடு எனச் சுட்டப்படுகிறது. அதனை ஆண்ட அரசர்கள்வரலாற்றை ஆராய்ந்த பண்டாரத்தர் ,....ï«kHehL கொள்ளிடத்தின் வடகரையைச் சார்ந்ததய், ஐயன் வாய்க்கால், பெருவள வாய்க்கால் முதலிய கால்வாய்களாற் பாயப் பெற்றுத் திருச்சிராப்பள்ளி சில்லாவில் கீழ்மேல் பலகாத தூரம் நீண்டு கிடந்ததொரு நாடாதல் வேண்டும். இஃது ஆசிரியர் சேக்கிழார் காலத்தில் சோழநாட்டின் உள்நாடுகளில் ஒன்றாக இருந்ததென்பதை அப்பெரியாரின் செந்தமிழ்ப் பாடல்கள் கொண்டு இனிது விளக்கினோம் என எழுதுகிறார். இதன்மூலம் மழநாட்டின் எல்லையை விளங்கிக் கொள்ள முடிகிறது. ஆலம்பாக்கம் மாற்பிடுகு பெருங்கிணறு பற்றிய ஆய்வினை மேற்கொண்ட பண்டாரத்தார் அதனைத் தோண்டுவித்தவன் பற்றிய ஆய்வினையும் மேற்கொண்டார். அவ்வாறு தோண்டுவித்தவன், ஆலம்பாக்க விச நல்லூழான் என்பவனது தம்பி என்ற கல்வெட்டுக் குறிப்பு அவருக்குக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஆலம்பாக்கம் பற்றி விளக்க வந்த அவர், இவ்வாலம்பாக்கம் லால்குடி என்று தற்காலத்தில் வழங்கும் திருத்தவத்துறையிலிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெருவழியில் 12-ஆவது மைலில் உள்ளது. இது பல்லவர்களது ஆட்சிக் காலங்களில் தந்திவர்ம மங்கலம் என்னும் பெயரை எய்தியிருந்தது. சோழ மன்னர்களது ஆட்சிக் காலங்களில் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என வழங்கிற்று. அந்நாளில் சோழ மண்டலத்திலிருந்த ஒன்பத வளநாடுகளில் இராசேந்திர சிங்க வளநாட்டின் உண்ணாடுகளுள் ஒன்றான பொய்கை நாட்டிலுள்ள ஊராக இருந்தது... திருவெள்ளறையிலுள்ள மாற்பிடுகு பெருங் கிணற்றைப் போல இவ்வாலம்பாக்கத்திலும் மாற்பிடுகு ஏரி ஒன்றும் இருந்ததென்று கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது என ஆய்ந்துரைக் கிறார். இப்பகுதியின் மூலம் ஆலம்பாக்கம் பற்றிய பழைய வரலாற்றுச் செய்திகள் தெளிவாகின்றன. திருவரம்பூர் திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே அமைந்துள்ள திருவரம்பூர் என்னும் ஊர் பழங்காலத்தில் மலரி என்று வழங்கப் பெற்றமையினை அவ்வூர்க் கோயில் fல்வெட்டுச்rன்றுbகாண்டுïவர்Éளக்கக்fணலாம்.ïªj மலரியில் பிறந்தவர்தான் ஒட்டக்கூத்தர் என்பதும் இவர் தரும் ஆய்வுக் குறிப்பாகும். காட்டு மன்னார் கோயில் காட்டுமன்னார் கோயிலின் பழைய பெயர் வீரநாராயணச் சதுர்வேதி மங்கலம் என்பதும் அவ்வூரை அமைத்தவன் பராந்தகன் என்பதும் இவர் தரும் வரலாற்றுக் குறிப்பாகும். ஆதனூர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான நந்தனார் பிறந்த ஊர் ஆதனூர் என்ற குறிப்புத் திருத்தொண்டர் திருவந்தாதி, திருத்தொண்டர் புராணம் ஆகிய üல்களில்fணப்படுகிறது.ïªj ஆதனூரின் இருப்பிடம் குறித்துக் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இச்சூழலில் அது குறித்த ஆய்வினை மேற்கொண்ட பண்டாரத்தார், மேற்கா நாட்டிலுள்ள பாடல் பெற்ற தலங்களாகிய ஓமாம்புலியூருக்கும், கடம்பூருக்கும் இடையிலுள்ள ஆதனூரே நந்தனாரது ஊர் என்பது நன்கு துணியப்படும். இனித், திருப்பனந்தாளுக்கு வடக்கேயுள்ள கீழை அணைக்கட்டுக்குக் கிழக்கே, ஏழு மைல் தூரத்தில், கொள்ளிடத்தின் வடகரையிலுள்ளது இவ்வாதனூர் என்று முடிவு செய்கிறார். மேற்கா நாடு எனப்படுவது கொள்ளிடத்தின் வடகரையில் சோழ மண்டலத்திலிருந்த உள் நாடுகளுள் ஒன்றாகும். திருக்கருப்பறியலூர் சோழ நாட்டில் இன்று தலைஞாயிறு என்று வழங்கும் ஊர் பழங்காலத்தில் திருக்கருப்பறியலூர் என்று வழங்கியதோடு பாடல்பெற்ற தலமாக இருந்தது என்றும், பின்னர் அவ்வூர் மூன்றாம் குலோத்துங்கன் பெயரால் தனிநாயகச் சதுர்வேதி மங்கலம் என வழங்கப் பெற்றது என்றும் கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு இவ்வறிஞர் விளக்குகிறார். மட்டியூர் பழங்காலத்தில் வழக்கிலிருந்த ஊர்ப்பெயர்கள் இப்பொழுது மறைந்துபட்ட நிலையில் அந்த ஊர்கள் எங்கு உள்ளன என்று விளக்கும் பணியையும் பண்டாரத்தார் செய்திருக்கிறார். இதற்குச் சான்றாக, மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின்மீது மூன்றாவது முறை யாகப் போர் நடத்திய இடமான மட்டியூரைப் பற்றிக் குறிப்பிடும் பண்டாரத்தார், மட்டியூர் என்பது இராமநாதபுரம் ஜில்லா திருப்புத்தூர்த் தாலுக்காவில் சதுர்வேதி மங்கலம் என்னும் பெயருடன் இக்காலத்தில் உள்ளது என எழுதும் பகுதியை எடுத்துக் காட்டலாம். ஊராத்துறை இரண்டாம் இராசாதிராச சோழன்மீது சிங்கள மன்னன் பராக்கிரம பாகு படை திரட்டிய ஊர்களுள் ஒன்றான ஊராத்துறை என்பது குறித்து அறிஞர் பண்டாரத்தார் விரிவாக எழுதியுள்ளார். ஊராத்துறை என்பது யாழ்ப்பாணத்திற்கு மேற்கே உள்ள ஒரு தீவில் உள்ளது என்றும், பராக்கிரமன் காலத்தில் அது கடற்றுறைப் பட்டினமாக இருந்தது என்றும், ஊர்காவல் துறை என்பது ஊராத்துறை எனச் சிதைந்து வழங்கிற்று என்றும், அஃது இந்நாளில் கயட் என வழங்குகிறது என்றும் விரிவாக எழுதுகிறார். அதுபோன்றே பராக்கிரமன் படை திரட்டிய புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் என்ற ஊர்ப்பெயர்களின் இன்றைய வழக்கு நிலை குறித்தும் இவர் விளக்கியுள்ளார். கருவூர் கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்றாகவுள்ளதும் திருவானிலை என்னும் திருக்கோயிலைத் தன்னகத்துக் கொண்டதுமாகிய கருவூர் அந்நாளில் முடிவழங்கு சோழபுரம் என்னும் பெயரை உடையதாக இருந்தது என்பது கருவூர் பற்றி இவ்வறிஞர் தரும் விளக்கமாகும். நெட்டூர் மூன்றாம் குலோத்துங்கன் படை இரண்டாவது முறையாக வீரபாண்டியன் படையோடு மோதிய இடம் மதுரைக்குக் கிழக்கேயுள்ள நெட்டூர் என்று குறிப்பிடும் பண்டாரத்தார், இந்த நெட்டூர் என்பது இராமநாதபுரம் ஜில்லா, சிவகங்கைத் தாலுக்காவில் இளையான்குடிக்கு அண்மையில் உள்ளது என எழுதுகிறார். கிராமம் தென்ஆர்க்காடு மாவட்டம் பன்ருட்டிக்கு அண்மையில் கிராமம் என்ற பெயரில் ஊர் ஒன்று உள்ளது. நகரங்களும் பட்டினங்களும் தவிர எஞ்சியுள்ள தமிழ்நாட்டுச் சிற்றூர்கள் பெரிதும் கிராமங்களென்றே பொதுவாக வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ஓர் ஊர் மாத்திரம் கிராமம் என்ற சிறப்புப் பெயரால் வழங்கிவருவது பலருக்கும் வியப்பைத் தருவதாகும். அந்த வியப்பு, பண்டாரத்தாருக்கும் ஏற்பட்டது. எனவே, இவ்வூர் எவ்வாறு இப்பெயர் எய்தியது என்ற ஆராய்ச்சியை அவர் மேற்கொண்டார். சைவ சமய குரவர்களுள் திருநாவுக்கரசர், சம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற கோயிலைக் கொண்ட அவ்வூரின் பெயரை அவர்கள் ஓரிடத்திலேனும் குறிப்பிடாமையால், கல்வெட்டுக்களின் துணைக் கொண்டு பண்டாரத்தார் ஆய்வு செய்தார். அக்கோயிலில் காணப்பட்ட பத்தொன்பது கல்வெட்டுக்களுள் முதற் பராந்தக சோழனின் கல்வெட்டு ஒன்றின் வடமொழிப் பகுதியில் அவ்வூர் மௌலி கிராமம் எனவும் தமிழ்ப் பகுதியில் திருமுடியூர் எனவும் சுட்டப்படுவதைப் பண்டாரத்தார் கண்டறிந்தார். தமிழில் திருமுடியூர் என்று இருந்தது காலப்போக்கில் வடமொழியில் மௌலிகிராமம் என மொழி பெயர்க்கப்பட்டதெனவும் பின்னர் அதுவே நிலைத்து நின்று மௌலி என்பது வழக்கொழிந்து கிராமம் என்பது மட்டும் வழங்கி வருகிறது எனவும் இவர் ஆய்ந்துரைக்கிறார். இதனால் திருமுடியூர் என்பதே அவ்வூரின் பழைய பெயராகும் என்பது அறிஞர் பண்டாரத்தார் ஆய்வின் முடிவாகும். ஊர்களின் பழைய பெயர்களைச் சுட்டுதல் இன்று வழக்கிலிருக்கும் சில ஊர்களின் பெயர்கள் பழங் காலத்தில் எவ்வாறு வழங்கி வந்தன என்பதனையும் பண்டாரத்தார் தேவைக்கேற்பத் தமது ஆய்வின் இடையிடையே சுட்டிச் செல்வதையும் காணமுடிகிறது. இதற்குச் சான்றாக, இக்காலத்தில் சிதம்பரம் வட்டம் வீரநாராயணன் ஏரியின் கீழ்கரையின் தென்கோடியில் கலியமலை என்று வழங்கப் பெறும் ஊர் சோழர் காலத்தில் சல்லியூர் மூலை எனவும், தொழுவூர் என வழங்கப் பெறும் ஊர் பழங்காலத்தில் தொழுதகையூர் எனவும், கடலூர் வட்டத்தில் இன்று தொண்டைமானத்தம் என்று வழங்கப் பெறும் ஊர் பழங்காலத்தில தொண்டைமானல்லூர் எனவும் வழங்கப்பெற்றன என்று இவர் சுட்டும் பகுதியினை எடுத்துக்காட்டலாம். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் இன்று சுந்தரம் என்று வழங்கும் ஊர், பழங்காலத்தில் சுந்தர சோழன் பெயரில் ஏற்படுத்தப் பெற்றுச் சுந்தர சோழபுரம் என வழங்கிற்று என அறிஞர் பண்டாரத்தார் சுட்டும் பகுதியும் இங்கு எடுத்துக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். ஊர்களின் இருப்பிடம் சுட்டுதல் தமது ஆய்வின் இடையே தாம் குறிப்பிடும் ஊர்கள் எங்குள்ளன என்பதனை விளக்கும் வகையில் தமது ஆய்வுப் போக்கை அமைத்துக் கொள்வதானது பண்டாரத்தாரின் குறிப்பிடத் தக்க ஓர் இயல்பாகும். இதற்குச் சான்றுகளாக, மண்ணி நாட்டிலுள்ள கடம்பங்குடி, சோழ நாட்டிலுள்ள நாலூர், திருவிடைமருதூரைச் சார்ந்த வண்ணக்குடி, சேலம் சில்லாவில் இக்காலத்தில் தருமபுரி என்று வழங்கும் தகடூர், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காந்தளூர்ச் சாலை, தென்கலிங்கம் என்பது கோதாவரி ஆற்றிற்கும் மகேந்திரகிரிக்கும் நடுவில் வங்காளக் கடலைச் சார்ந்திருந்த ஒரு நாடாகும் என்பன போன்று இவர் குறிப்பிடும் பகுதிகளை எடுத்துக் காட்டலாம். புறநானூறு சுட்டும் நாடுகளும் ஊர்களும் புறநானூற்றில் குறிப்பிடப் பெறும் சில நாடுகள் மற்றும் ஊர்களின் இருப்பிடம் குறித்துக் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு ஆய்வு செய்து இவ்வறிஞர் உரைத்திருக்கிறார். அந்த வகையில் கோனாடு எனப்படுவது புதுக்கோட்டை இராச்சியம் திருமெய்யம், குளத்தூர் வட்டங்களில் அடங்கிய பகுதி என்றும், ஒல்லையூர் நாடு எனப்படுவது திருமெய்யம் வட்டத்தில் இருந்தது என்றும், பறம்பு நாடு எனப்படுவது திருப்பத்தூர் மற்றும் மேலூர் வட்டங்களில் இருந்திருத்தல் வேண்டும் என்றும், மிழலைக் கூற்றம் எனப்படுவது அறந்தாங்கி மற்றும் திருமெய்யம் வட்டங்களில் இருந்த பகுதி என்றும் முத்தூற்றுக் கூற்றம் எனப்படுவது அறந்தாங்கி மற்றும் திருவாடானை வட்டங்களில் இருந்திருத்தல் வேண்டும் என்றும் ஆய்ந்துரைக்கிறார். புறநானூற்றில் குறிப்பிடப்பெறும் ஒல்லையூர் எனப்படுவது இன்று புதுக்கோட்டை இராச்சியம் திருமெய்யம் வட்டத்தில் ஒலியமங்கலம் என வழங்கப்படுகிறது என்றும், அழும்பில் எனப்படுவது ஆலங்குடி வட்டத்தில் அம்புகோவில் என வழங்கப்படுகிறது என்றும், பிடவூர் எனப்படுவது இன்று முசிறி வட்டத்தில் திருப்பட்டூர் என வழங்கப்படுகிறது என்றும், மாநோக்கம் எனப்படுவது தென்பாண்டி நாட்டில் கொற்கைப் பக்கத்திலிருந்த ஓர் ஊராதல் வேண்டும் என்றும், பூங்குன்றம் எனப்படுவது இன்று திருப்பத்தூர் வட்டத்தில் மகிபாலன்பட்டி என வழங்கப்படுகிறது என்றும், வஞ்சிமாநகர் எனப்படுவது குடமலை நாட்டிலுள்ள திருவஞ்சைக்களத்தைத் தன்னகத்துக் கொண்ட கொடுங்கோளூர் ஆகும் என்றும், தகடூர் எனப்படுவது இன்றைய தருமபுரி ஆகுமென்றும் இவர் ஆய்ந்து விளக்கியுள்ளார். முடிவுரை இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள ஊரைக்கூட வரலாற்றுக்கண் கொண்டு நோக்கி, ஆய்வு செய்து அதன் வரலாற்றுச் சிறப்பு, இன்றைய நிலை ஆகியனவற்றைக் கண்டுபிடித்து உரைக்கும் முயற்சியில் பண்டாரத்தார் பெருங்கவனம் செலுத்தியிருக்கிறார் என்பது விளங்குகிறது. அவ்வாறு உரைப்பதானது வரலாற்றில் நமக்குத் தெளிவை ஏற்படுத்து வதுடன் அவ்வூர்ப் பகுதி மக்களின் தன்னம்பிக்கை, பெருமிதம், வரலாற்றுணர்வு முதலானவற்றை வளர்த்தெடுப்பதற்கு உதவும் என்ற நோக்கில் அவர் செயல்பட்டிருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. 5. இலக்கிய வரலாற்றுப் பணி இலக்கியம், கல்வெட்டுக்கள் ஆகியனவற்றின் துணையோடு தமிழ் இலக்கிய வரலாற்றின் சில பகுதிகளை எழுதிய பெருமைக்குரியவர் அறிஞர் பண்டாரத்தார். அறிவியல் நோக்கோடு அவரெழுதியுள்ள இலக்கிய வரலாற்று நூல்கள், கட்டுரைகள் ஆகியனவற்றின் தனித்தன்மைகள் குறித்து விளக்கி உரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். இலக்கிய வரலாறு - ஒரு விளக்கம் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அச்சுப் பொறி அறிமுகமான பிறகுதான் தமிழ்மொழி பல்வேறு நிலைகளிலும் வளர்ச்சியுற ஆரம்பித்தது. 19-ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் பணியும் தொடங்கியது. ஆயினும் அப்பொழுது புலவர்களின் வரலாற்றை எழுதியவர்கள், படிப்போர்க்கு வியப்பையும் விநோதத்தையும் விளைவிக்கும் பொருட்டு ஆதாரமில்லாதனவும் உண்மையில் நிகழாதனவும், பொருத்தமில்லாதனவுமாகிய பல செய்திகளைப் புலவர் வரலாற்றில் கற்பனையாக எழுதி வெளியிட்டு விட்டனர். பின்வந்தோர் அவற்றை ஆராய்ந்து பாராமல் அப்படியே ஏற்றுக்கொண்டு எழுதியும் பேசியும் வருவாராயினர். இந்நிலையில்தான் தமிழ்ப் புலவர் வரலாறு இன்றும் உள்ளது என்ற ஏக்கப் பெருமூச்சுவிடும் அறிஞர் பண்டாரத்தார், நம் நாட்டில் புலவர் வரலாறு எழுதியோர் பலர், தம் புத்தகங்களின் பக்கங்கள் பெருகுதற்பொருட்டும், மேம்போக்காகப் படிப்போர் உள்ளங் களைப் பிணித்தற் பொருட்டும் ஆதாரமற்ற கற்பனைச் செய்திகள் எல்லா வற்றையும் தொகுத்து உண்மையாக நிகழ்ந்த வரலாறுபோல் எழுதி வெளியிட்டிருப்பது வருந்தத் தக்கது என்று அருணகிரிநாதர் வரலாற்றை எழுதும்போது குறிப்பிடக் காணலாம். எனவே, இலக்கிய வரலாறு எழுதுவது என்பது சிலர் கருதுவதுபோல் அத்துணை எளிய செயல் அல்ல. அந்த இலக்கிய வரலாறு சிறந்த முறையில் அமைய வேண்டுமாயின், முதலில் நூலாசிரியர் நிலவிய காலங்களைச் சமயச் சார்பு பற்றி நடுவுநிலை திறம்பாமல் உண்மையை உணரும் உயர்ந்த குறிக்கோளுடன் ஆராய்ந்து வரையறை செய்வது இன்றியமையாததாகும். நூல்களில் கிடைக்கும் மதிப்பிற்குரிய புறச் சான்றுகளையும் தக்க ஆதாரங்களாகக் கொள்வதோடு ஆதாரமற்ற கற்பனைச் செய்திகளை முற்றிலும் விலக்குதலும் வேண்டும். என்னும் கருத்துக்களை மனத்திற்கொண்டு இலக்கிய வரலாறு எழுதியவர் அறிஞர் பண்டாரத்தார். ஓர் இலக்கிய வரலாற்றில் நூல் வரலாறு, நூலாசிரியர் வரலாறு, நூல் இயற்றப்பட்ட காலம், நூலால் நுவலப்படும் பொருள் ஆகியன வற்றை விளக்குதல் வேண்டும். அவ்வாறு விளக்குவதற்கு நூல் தோன்றிய காலத்தில் தோன்றிய சிறப்புப் பாயிரம், நூலில் காணப்படும் அகச் சான்றுகள் மற்றும் புறச்சான்றுகளை இவ்வறிஞர் துணையாகக் கொண்டார். கற்பனை கலவாமல் சான்றுகளின் அடிப்படையில் எழுதப் படும் இந்த இலக்கிய வரலாறு குறித்து அறிஞர்கள் பல்வேறு விளக்கங்களைக் கூறியுள்ளனர். அவற்றுள் அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை கூறும், ஒரு மொழியின் இலக்கிய வரலாறானது அம்மொழி யிலுள்ள சிறந்த நூல்களின் தோற்றத்தையும், தன்மையையும் கால முறைக்கேற்ப எடுத்துக்காட்டி, அம்மொழி பேசும் மக்களது கருத்துக்கள், இலக்கியங்களில் எம்முறையில் அமைந்துள்ளனதென்றும், அவர்களது மணவாழ்க்கையின் வரலாற்றினை அவர்களது இலக்கியம் எவ்வாறு விளக்கிக் காட்டுகிறது என்றும் தெரிந்து இலக்கியம் என்பது மக்கள் வாழ்க்கைப் படம் என்று தெளிவுற அறிவுறுத்தும் கருவி நூலாகும். என்ற விளக்கத்தினை இலக்கிய வரலாறு என்பதற்குரிய ஒரு வரையறையாகக் கொள்ளலாம். தொடக்கக் கால இலக்கிய வரலாற்று நூல்கள் முறையாகத் தமிழில் இலக்கிய வரலாறு எழுதும் பணியானது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் ஆரம்பித்தது. அவ்வகையில் 1929-இல் எம்.எ.பூர்ணலிங்கம் பிள்ளை என்ற அறிஞர் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார். அதனையடுத்து 1930-இல் அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளையின் தமிழ் இலக்கிய வரலாறு இரண்டு பாகங்களாக வெளி வந்தது. இவ்விரண்டு நூல்களும் தொடக்கக்கால நூல்களாக இருப்பதால், இவற்றில் விளக்கம்பெற வேண்டிய பகுதிகள் பல உள்ளன. திரு.பூர்ணலிங்கம் பிள்ளை 1904-இல் இலக்கிய வரலாற்றுப் பால பாடம் போன்று ஒரு நூலைத் தமிழில் எழுதினார். பின்னர் அதனையே விரித்து ஆங்கிலத்தில் எழுதினார். இவர்களுக்கு மூலங்களாக அமைந்தவை கி.பி.17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் நாவலர் சரிதை என்ற நூலும் 19-ஆம் நூற்றாண்டில் சபாபதி நாவலரால் எழுதப்பட்ட திராவிடப் பிரகாசிகை என்ற நூலும் ஆகும். தொடக்கக் கால நூல்கள் என்னும் வகையில் தஞ்சை சீனிவாச பிள்ளையின் தமிழ் வரலாறு - இரண்டு பாகம் (1921), வி.ஆர் இராமச்சந்திர தீட்சிதரின் ‘Studies in Tamil Literature and History’ (1936) என்னும் நூல்கள் குறிப்பிடத் தக்கவையாகும். நூற்றாண்டு அடிப்படையில் முதன்முதலாக இலக்கிய வரலாறு எழுதியவர் திரு.ச.சோமசுந்தர தேசிகர் எனப்படுபவர். அவரது தமிழ்ப் புலவர்கள் வரலாறு - பதினாறாம் நூற்றாண்டு (1936) என்னும் நூல் நூற்றாண்டு வரிசையில் முதல் நூலாகும். அவரைத் தொடர்ந்து நூற்றாண்டு வாரியாகப் பல நூல்களை எழுதியவர் என்னும் வகையில் திரு.மு.அருணாசலத்தின் பணி விரிவாக அமைந்துள்ளது. பண்டாரத்தார் எழுதிய இலக்கிய வரலாறு 1950-வாக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாகத்தினருக்கு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் வரலாற்றுக் குறிப்புக்கள் எவையும் சரியாகக் கிடைக்காத தமிழக வரலாற்றின் இருண்ட காலமாகச் சுட்டப்படும் களப்பிரர் கால இலக்கிய வரலாற்றை எழுதும் பணி பண்டாரத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்கலைக் கழகம் தம்மிடம் ஒப்படைத்த பணியை ஏற்ற பண்டாரத்தார் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600) என்னும் நூலை எழுதி முடித்தார். அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அந்த இலக்கிய வரலாற்று நூலை எழுதி முடித்த காரணத்தினால் 13,14,15-ஆம் நூற்றாண்டுகளின் இலக்கிய வரலாற்றை எழுதும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனையும் அவர் எழுதி முடித்தார். இவ்விரண்டு நூல்களும் அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடுகளாக 1955-இல் வெளிவந்தன. பண்டாரத்தார் அவர்களின் இலக்கியமும் கல்வெட்டுக்களும் என்ற நூல் தமிழறிஞர்கள் பலராலும் பாராட்டப் பெற்ற நூலாகும். இந்நூல் பல்வேறு காலக்கட்டங்களில் அவரெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூலாக அமைந்துள்ளது. இதன்மூலம் கருத்து வேறுபாட்டிற்குரிய சில தமிழ்ப்புலவர்களின் காலம் உறுதிப்படுகிறது. சில இலக்கியங்கள் மேலும் விளக்கம்பெறுகின்றன. ஆயினும் இது முறையாக எழுதப்பெற்ற இலக்கிய வரலாற்று நூல் அன்று. மேலும், இவரெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்கள் என்னும் வகையில் கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள் (1961), சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் (1998) என்னும் இரண்டு நூல்கள் உள்ளன. இவ்விரண்டிலும் பல்வேறு நேரங்களில் இலக்கிய வரலாறு தொடர்பாக இவரெழுதியுள்ள கட்டுரைகள் சில இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு நூல்களிலும் இடம் பெற்றுள்ள இவரது இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகள் என்னும் வகையில் நந்தனாரது ஆதனூர், திருவள்ளுவரும் ஞானவெட்டியும், கல்லாடமும் அதன் காலமும், காளமேகப் புலவரது காலம், வேம்பையர்கோன் நாராயணன் இயற்றிய சிராமலை அந்தாதி, சோழர்களும் தமிழ்மொழியும், தமிழிசை வளர்ந்த வரலாறு, வீர சைவர்களின் தமிழ்த்தொண்டு, இருபெரும் புலவர்கள், ஒட்டக் கூத்தர், தமிழ் இலக்கியச் சரிதச் சுருக்கம், தமிழிசை வளர்ந்த வரலாறு என்பனவற்றைச் சுட்டலாம். கல்வெட்டுக்களை ஆராய்ச்சி செய்து அவற்றைத் துணையாகக் கொண்டு இலக்கிய வரலாறு எழுதியவர் என்ற பெருமைக்குரியவர் திருவாரூர் இலக்கண விளக்கப் பரம்பரையைச் சேர்ந்த சோமசுந்தர தேசிகர் எனப்படுபவர். அறிஞர் பண்டாரத்தார் கல்வெட்டுக்களை ஆராய்ச்சி செய்து வரலாற்றில் தெளிவு கண்ட பிறகே இலக்கிய வரலாற்றை எழுதினார். எனவேதான், இவரது நாட்டு வரலாற்று நூல்கள் முன்னவை யாகவும் இலக்கிய வரலாற்று நூல்கள் பின்னவையாகவும் அமைந்தன. இந்த நேரத்தில், தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய அறிஞர் மு.வரதராசனார் இவரைப் பற்றிச் சதாசிவப் பண்டாரத்தார் கல்வெட்டுக் களை ஆராய்ந்து, வரலாற்றில் தெளிவு கண்டு, அவற்றைத் தமிழ் இலக்கிய வரலாற்றிற்குப் பயன்படுத்தி நூல்கள் எழுதியுள்ளார்5 எனக் குறிப்பிடுவது இங்கு எடுத்துக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இலக்கிய வரலாற்றிற்குரிய ஆதாரங்கள் தொடக்கக் காலத்தில் இலக்கிய வரலாறு எழுதியவர்கள் திராவிடப் பிரகாசிகை, தமிழ் நாவலர் சரிதை ஆகிய நூல்களை ஆதாரங்களாகக் கொண்டு எழுதினர். இந்நூல்கள் கூறும் செய்திகள் சில கர்ண பரம்பரைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. அத்தகைய செய்திகளை இலக்கிய வரலாற்றிற்குரிய ஆதாரங்களாக அறிஞர் பண்டாரத்தார் ஏற்க வில்லை. மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் மொழிப் பயிற்சிக்கு வேண்டு மானால் உதவுமேயொழிய வரலாற்று ஆராய்ச்சிக்கு உதவா என்ற கருத்துடையவர் இவ்வறிஞர். எனவேதான், திருவிளையாடற் புராணம் கூறும் செய்திகளைப் பற்றி அவர் எழுதுமிடத்து, திருவிளையாடற் புராணம் செந்தமிழ் வளஞ் செறிந்த சிறந்த நூலாதலின் தமிழ்மொழிப் பயிற்சிக்குப் பயன்படுமேயன்றி, வரலாற்று ஆராய்ச்சிக்குச் சிறிதும் பயன்படாதென்றுணர்க எனக் குறிப்பிடுகிறார். அறிஞர் பண்டாரத்தார் தமது இலக்கிய வரலாற்று நூல்களையும் கட்டுரைகளையும் இலக்கியம் கூறும் நம்பத் தகுந்த செய்திகளோடு கல்வெட்டுக்கள், அயல்நாட்டார் எழுதி வைத்துள்ள குறிப்புக்கள் முதலான வற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதினார். பொதுவாக வரலாறு எழுதுவோர் இலக்கியம் கூறும் செய்திகளைப் பெரும் பொருளாகக் கொண்டு அப்படியே அவற்றை ஏற்றுக் கொள்வ தில்லை. இக்கொள்கையைத் தவறு என்று கூறிப் புறநானூற்றுச் செய்திகள் பல தமிழக வரலாற்றை எழுதுவதற்கு உதவுகின்றன என்பதனை அறிஞர் பண்டாரத்தார் சான்றுகள் தந்து விளக்குகிறார். அஃதாவது புறநானூற்றில் குறிக்கப்பெறும் அரசர்கள், நாடுகள், ஊர்கள், பழக்கங்கள் முதலியன பற்றிய செய்திகள் கல்வெட்டுக்களிலும் காணப் படுவதை எடுத்துக்காட்டி இலக்கியம் கூறும் செய்திகளின் நம்பகத் தன்மையை இவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்குச் சான்றாக சங்க காலத்து அரசர்கள் பலர் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளமையால் அவர்களைப் பற்றிய புறநானூற்றுச் செய்திகள் உறுதிப்படுகின்றன என்று இவர் சுட்டும் பகுதியினை எடுத்துக் காட்டலாம். அஃதாவது புறநானூற்றில் காணப்படும் கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர்களான பெருநற்கிள்ளி, சோழன் கரிகாலன், சோழன் செங்கணான் என்போர், கி.பி.11-ஆம் நூற்றாண்டில் வரையப்பெற்ற ஆனைமங்கலச் செப்பேடுகள், கன்னியாகுமரிக் கல்வெட்டுக்கள் என்பன வற்றிலும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் வரையப்பெற்ற வேள்விக்குடி செப்பேடுகளிலும், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பான் சின்னமனூர்ச் செப்பேட்டிலும், அதியமான் நெடுமான் அஞ்சி என்பான் வட ஆர்க்காடு கோட்டத் திருமலையில் காணப்படும் கல்வெட்டிலும் குறிக்கப்படுவதால் புறநானூற்றுச் செய்திகள் உறுதி யெய்துகின்றன என இவர் எடுத்துக்காட்டுகிறார். அதனைப் போன்றே பத்துப்பாட்டுச் செய்திகள் பல, கல்வெட்டுக்களால் விளக்கம் பெறுவதைப் பத்துப்பாட்டும் கல்வெட்டுக்களும் என்னும் கட்டுரையில் விளக்கி எழுதியுள்ளார். இலக்கிய வரலாற்று நூல்கள் பண்டாரத்தார் அவர்கள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600) என்னும் நூல் தமிழக வரலாற்றின் இருண்ட காலப் பகுதியில் தோன்றிய இலக்கியங்களின் வரலாறு பற்றிய நூலாகும். இருண்டகால இலக்கியங்கள் குறித்து அறிந்து கொள்வதற்குத் தகுந்த ஆதாரங்கள் இன்மையானது யாவரும் அறிந்ததே. ஆயினும் அக்கால வரலாற்றை அறிந்து கொள்வதற்குக் களப்பிரர் ஆட்சியில் வடமொழியில் எழுதப்பெற்ற சில சைன நூல்களும், பாலி மொழியில் இயற்றப்பெற்ற சில பௌத்த நூல்களும் பிராகிருதத்திலும் வடமொழியிலும் வரையப்பெற்ற சில செப்பேடுகளும் இக்கால நிலையை அறிந்து கொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டன. அன்றியும், கி.பி.ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தமிழ் நூல்களிலும், பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியர் களின் உரைகளிலும் காணப்படும் குறிப்புக்களும், சில தமிழ் நூல் களின் காலங்களை உணர்தற்குத் துணை புரிந்தன என்று அறிஞர் பண்டாரத்தார் எழுதுகிறார். இதனை நோக்க, வடமொழி நூல்களும் செப்பேடுகளும் பண்டாரத்தார் அவர்களின் இந்த இலக்கிய வரலாற்று நூலுக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. கடைச்சங்கத்தின் இறுதிக் காலம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டெனவும, கி.பி. 8ஆம் நூற்றாண்டெனவும் சிலர் கூறி வந்த நேரத்தில் அது குறித்து ஆய்வு செய்த அறிஞர் பண்டாரத்தார் கடைச்சங்கமானது கி.பி.3-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் அழிவெய்தியிருக்க வேண்டுமென்று இந்த இலக்கிய வரலாற்று நூலில் எழுதுகிறார். அதுபோன்று களப்பிரர் படையெழுச்சியினால்தான் கடைச்சங்கம் அழிந்துபட்டது எனவும் ஆய்ந்துரைக்கிறார். பாண்டியர்கள் தமிழ் வளர்த்த மதுரையின் பெருமையானது உலகிற்குக் தெரியாமல் போனதற்கும், காஞ்சிமா நகரானது இந்தியாவின் புண்ணிய நகரங்கள் ஏழனுள் ஒன்றாகக் குறிப்பிடப் பட்டமைக்கும் உரிய காரணத்தை ஆய்வு செய்த பண்டாரத்தார், பல நூற்றாண்டுகள் தமிழ்ச் சங்கம் நிலை பெற்று இருந்ததும், பாண்டி வேந்தர்களின் தலைநகராக விளங்கியதுமாகிய மதுரையம்பதியைச் சிறிதும் அறிந்து கொள்ளாத வட நாட்டு மக்கள், காஞ்சி மாநகரை மாத்திரம் நன்கு அறிந்துள்ளமைக்கும் அதனைப் பரத கண்டத்திலுள்ள ஏழு புண்ணிய நகரங்களுள் ஒன்றாக ஏற்றுக்கொண்டு பாராட்டியுள்ளமைக்கும் காரணம், அந்நகரில் பல்லவ அரசர்கள் அமைத்திருந்த வடமொழிக் கல்லூரியின் பெருமையும் சிறப்பும் அக்காலத்தில் வடபுலம் முழுமையும் பரவியிருந்தமையேயாகும் என எழுதுவது இங்குக் கருதத் தக்கதாகும். களப்பிரர் கால இலக்கிய வரலாறு குறித்த இந்த ஆய்வு நூலில், சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்க தேவரால் இயற்றப்பெற்ற நரி விருத்தம் என்னும் நூல் திருநாவுக்கரசு அடிகளால் கூறப்பெற்ற நரிவிருத்தத்திலும் வேறானதொன்று எனவும் இன்னா நாற்பது பாடிய கபிலரும் இரட்டை மணிமாலைகளும் அந்தாதியும் இயற்றிய கபிலதேவ நாயனாரும் தமிழகத்தில் வெவ்வேறு காலங்களில் விளங்கிய வெவ்வேறு புலவர்கள் எனவும், திருமந்திரம் என்ற நூல் சைவ சித்தாந்தக் கொள்கை களை உணர்த்தும் பழைய தமிழ் ஆகம நூல் என்பதோடு, இதற்கு வடமொழியில் முதல்நூல் இல்லை எனவும், சித்தாந்தம் என்னும் வடசொல் தொடரைத் தமிழ் நூலில் முதலில் எடுத்து வழங்கியவர் திருமூலர் எனவும், முத்தொள்ளாயிரத்தின் காலம் கி.பி.6-ஆம் நூற்றாண் டெனவும் ஆய்ந்து உரைத்துள்ளார். தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15-ஆம் நூற்றாண்டுகள்) என்னும் பெயரில் பண்டாரத்தார் அவர்கள் எழுதிய பிறிதொரு இலக்கிய வரலாற்று நூலும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். தமிழகத்தில் 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழராட்சி வீழ்ச்சியுற்றது. 14-ஆம் நூற்றாண்டானது தமிழகத்தில் உள்நாட்டுக் குழப்பம் மிகுந்த காலப்பகுதியாகும். 15-ஆம் நூற்றாண்டில் அந்நியர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. இப்படிப்பட்ட காலப் பகுதியின் இலக்கிய வரலாறுதான் பண்டாரத்தார் எழுதிய இந்த இலக்கிய வரலாற்று நூல். இந்த நூலில், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியரான பெரும்பற்ற புலியூர் நம்பி எனப்படுபவர்தான் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவராகிய கபிலர் பிறந்த ஊர். பாண்டிய நாட்டிலுள்ள திருவாதவூரேயாமென்று தமிழகத்திற்கு உணர்த்தியவர் என்றும், நளவெண்பாவை இயற்றிய புகழேந்தியும் அல்லியரசாணி மாலை முதலான நூல்களை இயற்றிய புகழேந்தியும் வெவ்வேறானவர்கள் என்றும், மெய்கண்டதேவர் 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிவஞான போதத்தை இயற்றியிருத்தல் வேண்டும் என்றும், கல்வெட்டுக்களால் அறியப்படும் காங்கேயன் பிள்ளைக்கவி என்னும் நூல் ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்கன் பிள்ளைத் தமிழுக்கு அடுத்த பிள்ளைத்தமிழ் நூல் என்றும், தஞ்சைவாணன் கோவை என்னும் நூலை இயற்றிய பொய்யமொழிப் புலவரின் காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றும், இரட்டையர்கள் வரலாற்றில் காணப்படும் கதைகள் ஆதாரமற்ற கற்பனைச் செய்திகள் என்றும், மிகுதியான வடசொற்களைப் பெற்ற முதல் தமிழ் நூல் வில்லிபுத்தூராழ்வார் பாரதம் என்றும் பண்டாரத்தார் ஆய்ந்து எழுதியுள்ளார். இவ்வறிஞர் தமது இந்த இலக்கிய வரலாற்று நூலிலும் புலவர்களின் காலங்களை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டிருக்கிறார். அதற்கு இவருக்கு உதவியாக இருந்தவை கல்வெட்டுக்கள். புகழேந்தியாரால் குறிக்கப்பெற்ற மள்ளுவ நாடு பற்றிய ஆய்வு, சிவஞானபோதம் என்ற நூலை இயற்றிய மெய்கண்ட தேவரின் காலம், தொல்காப்பிய உரையாசிரியரான சேனாவரையர், திருக்குறள் உரையாசிரியரான பரிமேலழகர் ஆகியோர் பற்றிய வரலாற்றுச் செய்திகள், தஞ்சைவாணன் கோவையை இயற்றிய பொய்யாமொழிப் புலவரின் ஊர் மற்றும் அவர் வாழ்ந்த காலம், இரட்டைப் புலவர்களின் காலம், தேசிகப் பிரபந்தம் என்ற நூலை இயற்றிய வேதாந்த தேசிகர் பற்றிய குறிப்புக்கள், கப்பற்கோவை பற்றிய செய்திகள், அருணகிரிநாதர் மற்றும் காளமேகப் புலவர் பற்றிய வரலாற்றுச் செய்திகள் ஆகியன பற்றி ஆய்ந்து உரைப்பதற்கு இவருக்குக் கல்வெட்டுக்கள் பெருந்துணை புரிந்துள்ளன. இந்த மூன்று நூற்றாண்டுகளில் தோன்றியதும், கல்வெட்டுக்களினால் மட்டுமே அறியக் கூடியது மான பாரதம், காங்கேயன் பிள்ளைக் கவி, ஒங்குகோயிற்புராணம் ஆகிய மூன்று நூல்களின் வரலாற்றையும் இவ்வறிஞர் பதிவு செய்துள்ளமையானது குறிப்பிடத் தக்கதாகும். இலக்கிய வரலாறு தொடர்பான கட்டுரைகள் இலக்கிய வரலாற்றில் தெளிவு பெற வேண்டிய பகுதிகள் தொடர்பாக அறிஞர் பண்டாரத்தார் எழுதியுள்ள கட்டுரைகள் அவரது கட்டுரைத் தொகுப்பு நூல்களான மூன்று நூல்களில் காணப்படுகின்றன என்று முன்பே சுட்டப்பட்டுள்ளது. இவர், தமது இலக்கிய வரலாற்று நூல்களின் புலவர்களின் காலம் பற்றி ஆய்வு செய்வதில் தனிக் கவனம் செலுத்தியிருக்கிறார். அதுபோன்றே கால ஆராய்ச்சிக்கென்றே இவரெழுதிய தனிக் கட்டுரைகளும் உண்டு. இலக்கியம் தோன்றிய காலத்தை அறிந்து கொள்ளாமல் அவ்விலக்கியம் கூறும் பொருளை அறிந்து கொள்ள இயலாது என்பதனை இவ்வறிஞர் நன்கு உணர்ந்திருந்தார். கால ஆராய்ச்சியின் இன்றியமை யாமை குறித்து அறிஞர் வையாபுரிப்பிள்ளை, கால ஆராய்ச்சி பயனற்றது என்று கருதுபவர்கள் இன்று சிலர் உள்ளார்கள். நூல் தோன்றிய காலத்தை அறிந்தாலன்றி அந்நூலிலுள்ள கருத்துக்களை நாம் முற்றிலும் அறிந்து கொள்ள முடியாது. இலக்கியச் சரிதமும் அமைக்க முடியாது. இலக்கியச் சான்றுகளால் உணரப்படும் தேச சரித்திரமும் வரையறை எய்த மாட்டாது. தமிழ் மொழியின் சரித்திரமும் அறிதற்கு இயலாததாகும். தமிழ்நாட்டில் உலவிய கருத்துக்களின் வரலாறும் ( History of Tamilian thought) நாகரிகத்தின் வரலாறும் மயக்கத்திற்கிடமாகவே இருக்கும். ஆதலால் கால ஆராய்ச்சி இன்றியமையாததாகும் எனக் குறிப்பிடுகிறார். இதனை நன்கு விளங்கிக் கொள்ளுமிடத்துதான் பண்டாரத்தார் செய்த கால ஆராய்ச்சியின் பெருமை விளங்கும். கால ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்னும் வகையில் பண்டாரத்தார் அவர்கள் எழுதிய கல்லாடமும் அதன் காலமும், சுந்தரமூர்த்திகளது காலம், கம்பர் காலம், நம்பியாண்டார் நம்பி காலம், வாதவூரடிகள் காலம் என்பனவற்றை எடுத்துக் காட்டலாம். தமது இருபத்தைந்தாம் வயதில் பண்டாரத்தார் அவர்களால் எழுதப்பட்டது கல்லாடமும் அதன் காலமும் என்னும் கட்டுரையாகும். கல்லாடத்தை எழுதிய கல்லாடர் சங்க காலத்தவர் என்றும் பிற்காலத்தவர் என்றும் இருவேறுபட்ட கருத்துக்கள் இருந்து வந்த நேரத்தில் அது குறித்து ஆய்வு செய்த பண்டாரத்தார், கல்லாடர் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் இருவர் இருந்துள்ளார்கள் என்பதும், அவர்களுள் இரண்டாம் கல்லாடனாரே கல்லாட மென்ற நூலியற்றியவரென்பதும், இவர் கி.பி.13-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே இத்தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பதும் விளங்கி நிற்கிறது என எழுதுகிறார். தம் மனத்திற்குச் சரி என்று பட்ட கருத்தை அஞ்சாமல் கூறியவர் அறிஞர் பண்டாரத்தார். இதற்கு அவரது கால ஆராய்ச்சியிலிருந்தே சில சான்றுகளைக் காட்டலாம். தமிழக வரலாற்றில் நம்பியாண்டார் நம்பி எனப்படுபவர் முதலாம் இராசராசன் காலத்தில் வாழ்ந்தவர் என்பது பலராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட கருத்தாக இருந்து வருகிறது. இச்சூழலில் அறிஞர் பண்டாரத்தார், நம்பியாண்டார் நம்பி தம்மை ஆதரித்த ஆதித்தன் என்ற சோழ மன்னனைத் திருத்தொண்டர் திருவந்தாதியில் கூறுவதால் அந்த ஆதித்தன் விஜயாலய சோழனின் மகனாகிய முதல் ஆதித்தன் எனவும், அவனது ஆட்சிக் காலமாகிய கி.பி.9-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி எனவும் குறிப்பிடுவதை எடுத்துக் காட்டலாம். மேலும், நம்பியாண்டார் நம்பி முதல் இராசராச சோழனைத் தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் குறிப்பிடாமையொன்றே இவர் அவ்வேந்தன் காலத்தவர் அல்லர் என்பதை நன்கு புலப்படுத்தும் என்றும் அறிஞர் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியராகிய பொய்யாமொழிப் புலவரை ஒரு சாரார் கி.பி.9-ஆம் நூற்றாண்டினர் எனவும், பிறிதொரு சாரார் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் எனவும் மற்றொரு சாரார் கி.பி.16-ஆம் நூற்றாண்டினர் எனவும் கூறிவந்த நேரத்தில் அறிஞர் பண்டாரத்தார் அவர்கள் காட்டிய காரணங்களைப் பொருத்தமில்லை என்று சுட்டியதோடு, புலவரது காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதற்கு ஆதாரங்களைக் காட்டி நிறுவிய பாங்கு அவரது ஆழமான ஆய்விற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். தமிழ் வரலாறு எழுதிய தஞ்சை சீனிவாச பிள்ளையும், வரலாற்று அறிஞர் து.அ.கோபிநாத ராயரும் சுந்தரமூர்த்திகளது காலம் கி.பி.9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என எழுதியுள்ளனர். இது குறித்து ஆய்வு செய்த அறிஞர் பண்டாரத்தார், கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர் சுந்தரமூர்த்திகள் என நிறுவுவ தோடு, இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று சோமாசிமாறர், விறன் மிண்டர், மானக்கஞ்சார், ஏயர்கோன் கலிக்காமர், பெருமிழலைக் குறும்பர், கோட்புலியார், பூசலார், செருத்துணையார் என்னும் சிவனடியார்களைச் சுட்டுகிறார். கி.பி.10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் கம்பர் என்று நிறுவும் வகையில் இவரால் எழுதப்பட்டது கம்பர் காலம் என்னம் கட்டுரையாகும். மாணிக்கவாசகர் தேவாரம் பாடிய மூவர்க்கு முற்பட்டவர் என்று ஒரு சிலர் எழுதி வந்த நேரத்தில் அது குறித்து ஆய்வு செய்து வாதவூரடிகள் காலம் என்னும் கட்டுரையைப் பண்டாரத்தார் எழுதினார். அக்கட்டுரையில், முதல் வரகுண பாண்டியன் ஆட்சிக் காலத்தில் கி.பி.8-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மாணிக்கவாசகர் இருந்திருத்தல் வேண்டும் என்பது புலப்படுதல் காண்க என ஆய்ந்துரைக்கிறார். இதுபோன்றே தாம் வரலாறு எழுதியுள்ள ஒவ்வோர் இலக்கியத்தின் காலத்தையும் ஆய்ந்துரைப்பதில் இவர் கவனம் செலுத்தியிருக்கிறார். தமிழ்ப் புலவர்கள் வரலாறு அறிஞர் பண்டாரத்தார், தமிழுக்கு உழைத்தவர்கள், தமிழ்ப் புரவலர்கள் முதலானோர் வரலாறு சரியாக உணர்த்தப்பட வேண்டும் என்ற கருத்துடையவர். தமிழ் வளர்ச்சிக்குத் தாங்கள் ஏதாவது யோசனை கூறுகிறீர்கள்? என்று செய்தியாளர் ஒருவர் அறிஞர் பண்டாரத்தாரிடம் கேட்ட பொழுது, அறிவியல் நூல்கள் வரவேண்டும் தமிழுக்குழைத்தவர், தமிழ்ப் புரவலர்கள் ஆகியோருடைய வரலாறு சரியான முறையில் எழுதப்பட வேண்டும். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்து சென்ற பெருமக்களான சுந்தரம் பிள்ளை, அரசஞ் சண்முகனார், பாண்டித்துரைத் தேவர், மாணிக்க நாயக்கர் இன்னும் பலரின் வாழ்க்கை வரலாறுகள் விரிவாக எழுதப்பட வேண்டும் என்று பதில் இறுக்கிறார். இதன்மூலம் தமிழ்ப்புலவர்களின் வரலாற்றைத் கவனமாக எழுத வேண்டியது இன்றியமையாதது என்ற அவரது கருத்து விளங்கும். இந்த அடிப்படையில்தான் தமிழிலக்கிய வரலாற்று வளர்ச்சிக்கு உதவும் வகையில் கல்வெட்டுக்களால் அறியப்படும் சில தமிழ்ப் புலவர்கள் என்ற கட்டுரையை எழுதிப் பதினோரு புலவர்களின் வரலாற்றை அவர் வெளியிடுகிறார். இப்புலவர்கள் பற்றிய வரலாறு கல்வெட்டுக்களால் அன்றி வேறு வகையில் நமக்குத் தெரியவில்லை. அறிஞர் பண்டாரத்தார் எழுதிய இரு பெரும் புலவர்கள் என்னும் பிறிதொரு கட்டுரையானது 19-ஆம் நூற்றாண்டில் சென்னை மாநகரில் இருந்து கொண்டு தமிழ்த் தொண்டாற்றிய விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர் என்ற இரண்டு புலவர்களின் வரலாற்றை எடுத்துரைப்பதாகும். இக்கட்டுரையில் அறிஞர் பண்டாரத்தார் தமக்குச் செவி வழியாகக் கிடைத்த செய்திகளையும் காலப்போக்கில் அவை வரலாற்றுக்கு உதவும் என்ற நோக்கோடு அவற்றைக் கட்டுரையில் இணைத்திருப்பது அவரது வரலாற்று உணர்விற்கு ஒரு சான்றாகும். புலவர்களின் வரலாற்றைக் கூறும் இவரது இக்கட்டுரையானது கதை கூறுவது போன்ற அமைப்பைப் பெற்றிருக்கும் அதே நேரத்தில், அஃது ஓர் ஆய்வுக் கட்டுரையாகவும் அமைந்துள்ளது. அஃதாவது, 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களின் தமிழ்த் தொண்டைப் பற்றி அறிஞர் பண்டாரத்தார் குறிப்பிடுகையில் 1. மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது 2) இலக்கியங்களை எழுதியது என வரிசைப்படுத்திக் காட்டுவதும், திருக்குறளை முதன்முதலாக அச்சிட்டவர் சரவணப் பெருமாள் ஐயர் என்பது போன்ற சிறப்புக்களை ஆய்ந்து உரைப்பதும் இவரது ஆய்வுத் திறனுக்குத் தகுந்த சான்றாகும். திருத்தனியில் வாழ்ந்து கொண்டிருந்த வீர சைவ மரபினரான கந்தப்பையர் என்னும் புலவருக்குப் பல ஆண்டுகளாக மகப்பேறு இல்லை. அதனால் தமது மனைவியின் தங்கையையும் அவர் மணந்து கொண்டார். இந்தப் பெண்ணுக்கும் மகப்பேறு இல்லாத நிலையில், வீர சைவக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்கள் இருவரும் தங்களுக்குப் பிள்ளை பிறந்தால் உன் பெயரையே வைத்து வணங்குகிறோம் என்று திருவேங்கடப் பெருமானிடம் வேண்டிக் கொண்டார். அதுபோன்றே சில திங்களில் கருவுற்று இருவரும் ஒரே நாளில் இரண்டு ஆண் மக்களை ஈன்றெடுத்தனர்.ஓராண்டு நிறைவின்போது தங்கள் பிள்ளைகளுக்குச் சரவணன், விசாகன் என்று தந்தையார் பெயரிட விரும்பினார். தாயார் இருவரும் தங்கள் கணவரிடம் தங்கள் வேண்டுதல் குறித்துத் தெரிவித்தபோது வீர சைவரான அவர் மகிழ்ச்சியோடு தங்கள் குழந்தைகளுக்குச் சரவணபெருமாள், விசாகப் பெருமாள் எனப் பெயர் சூட்டினார் என்ற செய்தியை அறிஞர் பண்டாரத்தார் தமது கட்டுரையில் பதிவு செய்துள்ளார். இருபெரும் புலவர்களின் பெயர்க்காரணம் பற்றி அறிஞர் பண்டாரத்தார் கூறியுள்ள இந்தச் செவி வழிச் செய்தியானது சமயப் பொறையை விரும்புகின்ற ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதுபோன்ற அரிய செய்திகள் பலவற்றைத் தமது இலக்கிய வரலாற்று நூல்களிலும் கட்டுரைகளிலும் பண்டாரத்தார் அவர்கள் வெளியிட்டுள்ளதன் மூலம், அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்று வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு ஆற்றியுள்ளார்கள் என்பதனை விளங்கிக் கொள்ள முடிகிறது. கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இவரால் எழுதப்பட்டது ஒட்டக்கூத்தர் என்னும் கட்டுரை யாகும். இக்கட்டுரையில் அறிஞர் பண்டாரத்தார் ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் மலரி (திருவரம்பூர்) எனப்படுவதாகும் என்றும், முதற்குலோத்துங்க சோழனுடைய புதல்வன் விக்கிரம சோழனுக்கு அவைக்களப் புலவராகவும் அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கும் அவன் புதல்வன் இரண்டாம் இராசராச சோழனுக்கும் தமிழாசிரியராகவும் அவைக்களப் புலவராகவும் விளங்கிப் பெருவாழ்வு பெற்று நெடுங்காலம் இருந்தவர் இவரென்றும், இவருக்கு அக்காலத்தில் கௌடப் புலவர், கவிராட்சகன், கவிச்சக்கரவர்த்தி, காளக்கவி, சருவஞ்ஞகவி என்னும் சிறப்புப் பெயர்கள் வழங்கி வந்தன என்றும், இவர் காலத்து இருந்த புலவர்கள் நம்பிகாளியார், குன்றவாண முதலியார், தமிழ்த் தண்டியாசிரியர், தக்கயாகப்ப பரணி உரையாசிரியர், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர் என்றும், கம்பர், புகழேந்தி, சேக்கிழார் ஆகியோர் இவர் காலத்தில் இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றும், இவர் இயற்றியனவாக இப்போது அறியப்படும் நூல்கள் விக்கிரம சோழனுலா, கலிங்கப்பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா, தக்கயாகப் பரணி, காங்கேயன் நாலாயிரக் கோவை என்பனவாம் என்றும் குறிப்பிடுகிறார். இலக்கிய வரலாற்றில் இடம் பெறும் ஊர்கள் இலக்கிய வரலாற்றில் தெளிவு பெற வேண்டிய ஊர்ப் பெயர்கள் பற்றிய ஆய்வினையும் அறிஞர் பண்டாரத்தார் செய்திருக்கிறார். அவ்வகையில் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் இடம் பெற்ற புலவர்களின் ஊர்களை இவர் கண்டறிய முயன்றிருக்கிறார். அது பற்றிய விவரம் கிடைக்கவில்லையென்றால் அதனைச் சுட்டுவதற்கும் இவர் தவறவில்லை. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார் பற்றி இவர் எழுதுகையில், அவரது ஊர் விளம்பி என்று சுட்டுவதோடு விளம்பி என்ற ஊர் யாண்டு என்ளது எனத் தெரியவில்லை எனவும் எழுதுகிறார். அதுபோன்றே திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் பற்றி இவர் குறிப்பிடுகையில் நல்லதனார் என்பார், சேர நாட்டிற்கு அண்மையில் உள்ள தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலியைச் சார்ந்த திருத்துஎன்னும் ஊரினர் என்று பழம்பாடல் ஒன்று கூறுவது பொருத்தமுடையதேயாம் என எழுதுவதும் கருதத் தக்கதாகும். இதுபோன்று ஒவ்வொரு புலவர் ஊரைப் பற்றியும் ஆராய்ந்தவர் அறிஞர் பண்டாரத்தார். இலக்கிய வரலாற்றில் இடம்பெற்ற ஊர்கள் பற்றிய ஆய்விற்கென்று இவரால் எழுதப்பெற்ற தனிக் கட்டுரைகளும் உண்டு. அவ்வகையில் பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி, செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள், அகநானூற்றின் உரையாசிரியரது ஊர், நத்தனாரது ஆதனூர் முதலான கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. இவ்வூர்கள் பற்றிய செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ள ஊர்கள் பற்றிய ஆய்வு என்னும் கட்டுரையில் பேசப் பட்டுள்ளன. வரலாற்று நூல்களில் இலக்கிய வரலாறு அறிஞர் பண்டாரத்தார் தாம் எழுதிய வரலாற்று நூல்களிலும் அவ்வரலாற்றுக் காலத்திற்குரிய இலக்கிய வரலாறு குறித்துப் பேசத் தவறவில்லை. அவ்வகையில் முதற் குலோத்துங்க சோழன் என்ற நூலை அவரெழுதிய காலத்திலேயே, அவனது அவைக்களப் புலவராகிய சயங்கொண்டார் பற்றி அவரெழுதியுள்ள செய்திகள் தனி ஒரு தலைப்பில் தரப்பட்டுள்ளன. மேலும் குலோத்துங்க சோழன் தேவராப் பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்துப் பாதுகாத்தமை, அவனது தமிழ்நூற் பயிற்சி முதலான செய்திகளையும் இவ்வறிஞர் விளக்கியுள்ளார். இவர், தமது பாண்டியர்வரலாறு என்ற நூலிலும் மொழி வளர்ச்சிக்கு அவ்வரசர்கள் ஆற்றிய பணிகளை ஆங்காங்கே சுட்டியுள்ளார். இதே அடிப்படையில்தான் பிற்காலச் சோழர் வரலாற்றிலும் ஒவ்வோர் அரசனைப் பற்றியும் கூறுமிடத்து, அரசர்கள் காலத்து வாழ்ந்த புலவர்கள், அவர்கள் இயற்றிய நூல்கள், அப்புலவர்களை அரசர்கள் போற்றிய பாங்கு, அரசர்களே புலவர்களாகவும் இருந்த நிலை ஆகியன வற்றை இலக்கியம் மற்றும் கல்வெட்டுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு தெளிவுபடுத்துவதற்கு இவ்வறிஞர் தவறவில்லை. இவர் திருப்புறம்பயம், செம்பியன்மாதேவி ஆகியனவற்றில் தல வரலாற்றை எழுதிய போதுங்கூட அவ்வூர்களில் வாழ்ந்த புலவர்கள் அவர்கள் இயற்றிய நூல்கள், அவ்வூர்களைப் பற்றிப் பாடியோர் முதலான அனைத்துத் தகவல்களையும் அந்நூல்களில் திரட்டித் தந்துள்ளார். இவற்றையெல்லாம் நோக்குமிடத்து, ஒரு நாட்டு வரலாறு என்பது அந்த நாட்டின் இலக்கிய வரலாற்றையும் உள்ளடக்கியதாகும் என்பதில் தெளிவான சிந்தனை உடையவர் பண்டாரத்தார் என்பதனை விளங்கிக் கொள்ள முடிகிறது. மறைந்து கிடந்த செய்திகள் மறைந்து கிடந்த பல புதிய செய்திகளை வெளியிடும் வகையிலும் இலக்கிய வரலாறு தொடர்பாக இவர் மேற்கொண்ட ஆய்வுகள் சில அமைந்துள்ளன. இலக்கிய வரலாறு எனப்படுவது மறைந்துபோன நூல்களைப் பற்றியும் அறிந்து எழுதும்பொழுதுதான் முழுமைப் பெறும். அவ்வகையில் கல்வெட்டுக்களின் மூலம் அறியப்பெறும் புலவர்கள் பற்றிய விவரங்களை அறிஞர் மு.இராகவ ஐயங்கார் சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்னும் நூலில் வெளியிட்டார். மிகப்பெரிய அளவில் ஆய்வு செய்து மறைந்து போன தமிழ் நூல்கள் (1959) என்னும் நூலை எழுதிய பெருமைக்குரியவர் அறிஞர் மயிலை.சீனி வேங்கடசாமி எனப்படுபவர். அவரது சாசனச் செய்யுள் மஞ்சரி என்ற நூலும் இங்கு நினைவு கூரத் தக்கதாகும். அறிஞர் பண்டாரத்தாரும் கல்வெட்டாய்விலேயே தோய்ந் திருந்தமையால் கல்வெட்டுக்களின் மூலம் அறியப்பெறும் துரப்பாலைந்தல் உலா, இறைசைப் புராணம், ஓங்குகோயிற் புராணம், பாரதம், காங்கேயன் பிள்ளைக் கவி முதலான நூல்களைப் பற்றிய விவரங் களை வெளியிட்டுள்ளார். கல்வெட்டுக்களின் மூலம் அறியப்பெறும் இலக்கியம் தொடர்பான செய்திகளையும் இவர் தேடித் தொகுத்தார். இதற்குச் சான்றாகப் பரிமேலழகருக்கு வண்துவரைப் பெருமாள் என்று பிறிதொரு பெயர் இருப்பதாகக் கல்வெட்டுக்களின் மூலம் அறிய முடிகிறது என்று இவர் சுட்டுவதனை எடுத்துக் காட்டலாம். முதல் தெலுங்குச் செய்யுள் தமிழறிஞர் ஒருவர் பிறமொழி இலக்கிய வரலாற்றிற்கு உதவும் வகையில் ஆய்வுக் குறிப்புக்களை வெளியிடுவது என்பது பாராட்டிற்குரிய செய்தியாகும். தெலுங்கு நாட்டிலுள்ள விசயவாடையில் காணப்படும் யுத்த மல்லனது கல்வெட்டிலுள்ள தெலுங்குச் செய்யுட்களே இதுகாறும் கிடைத்துள்ள செய்யுட்களுள் பழமையானது என்று தெலுங்கர்கள் கருதி வந்தனர். அதனுடைய காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டாகும். ஆயினும் குண்டூர் மாவட்டம் ஓங்கோல் வட்டத்திலுள்ள ஆதங்கி என்ற ஊரில் ஒரு வயலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றிலுள்ள தெலுங்குச் செய்யுளை எடுத்துக்காட்டி இதுவரை கிடைத்திருக்கும் தெலுங்குச் செய்யுட்களுள் இதுவே பழமையானது என்று அறிஞர் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். மேலும் அவர், தெலுங்கர்களின் தாய்மொழிப் பற்றைப் பற்றிக் குறிப்பிடும்போது, தமிழருக்குத் தாய்மொழிப் பற்று அவசியம் எனவும் எடுத்துரைக்கிறார். இதனை அவர், முதலில் செய்யுள் தோன்றிய காலம் யாதென ஆராய்ந்து காண முடியாத அத்துணைத் தொன்மையும் பெருமையும் வாய்ந்த நம் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள நம்மனோர், கி.பி.9-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இயற்றப் பெற்ற செய்யுட்களே இல்லாத தெலுங்குமொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள ஆந்திரர்பாற் காணப்படும் தாய்மொழிப் பற்றைப் பார்த் தாயினும் தாய்மொழித் தொண்டில் ஈடுபட்டு உண்மைத் தொண்டாற்று வர்களாக எனக் குறிப்பிடுகிறார். சோழர்களும் தமிழ் மொழியும் பொதுவாகத் தமிழ் வளர்ச்சி என்றால், அதனைப் பாண்டியர்களோடு மட்டுமே இணைத்து நோக்குவது வழக்கம். ஆயினும் சோழர்கள் தமிழைப் போற்றுவதில் பாண்டியரின் பிற்பட்டவர் அல்லர் என்பதனை எடுத்துக்காட்டும் வகையில் பண்டாரத்தார் அவர்களால் எழுதப்பட்டது தான் சோழர்களும் தமிழ்மொழியும் என்னும் கட்டுரை. சோழன் நலங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், சோழன் நல்லுருத்திரன் முதலானோரால் பாடப்பெற்ற சங்கப் பாக்கள், கலித்தொகையுள் முல்லைத் திணையைப் பாடிய சோழன் நல்லுருத்திரன், பட்டினப்பாலை பாடிய ஆசிரியருக்குக் கரிகாலன் பதினாறு நூறாயிரம் பொன் அளித்தமை, பொய்கையாரின் பாடலுக்குச் செங்கணான் மதிப்பு அளித்தமை, தேவாரத் திருமுறைகளைக் கோயில் களில் பாடுவதற்கு ஆதித்தனும் பராந்தகனும் வாய்ப்பேற்படுத்தித் தந்தமை, பதினொரு திருமுறைகளை முதலாம் இராசேந்திரன் முறைப் படுத்தியமை, கண்டராதித்தரும் செம்பியன்மாதேவியாரும் சைவத் திரு முறைகளை நாடெங்கும் பரப்பியமை, கங்கை கொண்ட சோழன் காலத்தில் கருவூர்த் தேவர் திருவிசைப் பாவினைப் பாடியமை, வீரராசேந்திரன் காலத்தில் புத்தமித்திரர் வீரசோழியம் என்னும் ஐந்திலக்கண நூலை இயற்றியமை, சயங்கொண்டார் முதற்குலோத்துங்க சோழன்மீது கலிங்கத்துப்பரணி பாடியமை, ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி பாடியமை, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழாரால் பெரிய புராணம் பாடப்பெற்றமை முதலானவற்றை எடுத்துக் காட்டிச் சோழர்கள் காலத்தில் தமிழ் இலக்கியம் வளர்ந்து வந்த வரலாற்றைச் சோழர்களும் தமிழ்மொழியும் என்ற மேற்கண்ட கட்டுரையில் அறிஞர் பண்டாரத்தார் விளக்கி உரைத்துள்ளார். இலக்கிய வரலாற்றில் சில முடிவுகள் இலக்கிய வரலாற்றுலகில் குறிப்பிடத் தகுந்த சில முடிவு களைப் பண்டாரத்தார் வெளியிட்டுள்ளார். இவரெழுதிய தமிழ் இலக்கியச் சரிதச் சுருக்கம் என்னும் கட்டுரை இங்கு நினைவு கூர்தற்குரிய ஒன்றாகும். இக்கட்டுரையில் அவர், தமிழ்மொழிதான் தென்னாட்டிலுள்ள மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகும் எனச் சுட்டுகிறார். மேலும் அவர், தொல்காப்பியத்தின் பழமையைப் பற்றிக் குறிப்பிடுமிடத்துத் தொல்காப்பியம் இயற்றப்பெற்ற காலத்தல் புதிய ஆண்டு ஆவணி மாதத்தில் தொடங்கியிருத்தல் வேண்டும் என்பது அதிலுள்ள சூத்திரத்தால் அறியக் கிடத்தலால், அது பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தோன்றிய பழந்தமிழ் நூலாதல் வேண்டுமென்று அறிஞர்கள் கூறுகின்றனர், என எழுதுகிறார். கார்காலத் தொடக்கமாகிய ஆவணி மாதந்தான் தமிழ் ஆண்டின் தொடக்கமாகும் என்ற இக்கருத்தானது தமிழ்ச் சிந்தனை யாளர்கள் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணரும் திருக்குறள் உரையாசிரியர் மணக்குடவரும் ஒருவரே என்பது பண்டாரத்தாரின் பிறிதொரு ஆய்வு முடிவாகும். இது குறித்து அவரெழுதியுள்ள இளம்பூரண அடிகளும் மணக்குடவரும் என்னும் கட்டுரையில், இந்த இருவருக்கு மிடையேயான மொழி நடையின் ஒப்புமைப் பகுதிகளை எடுத்துக் காட்டி விளக்கியுள்ளார். இந்த ஒப்புமைப் பகுதியானது அறிஞர் பண்டாரத்தாரின் ஆய்வுத் திறம், ஆழ்ந்த இலக்கியப் பயிற்சி ஆகியனவற்றிற்குச் சான்று பகர்வதாக அமைகிறது. இதுபோன்று அறிஞர் பண்டாரத்தார் ஆய்ந்து கண்ட வித்தியாசமான முடிவுகள் பலவற்றை அவரது இலக்கிய வரலாற்று நூல்களிலும் கட்டுரைகளிலும் பரக்கக் காணலாம். நடுநிலை இலக்கிய வரலாறு தகுந்த ஆதாரங்களோடு இலக்கிய வரலாற்றை எழுதிய அறிஞர் பண்டாரத்தார், கருத்து வேறுபாட்டை மனப்பூர்வமாக வரவேற்று ஏற்றுக்கொள்ளும் இயல்புடையவர் என்பது அவரது தனிச்சிறப்பாகும். இத்தகைய நெறிதான் ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கு அடிப்படையாகும். அறிஞர் பண்டாரத்தார், தமக்கு முன்பு பணியாற்றிய தமிழறிஞர் களை நன்றியோடு நினைத்துப் பார்க்கும் பண்பாளராகவும் காணப்படு கிறார். பெரும்பற்ற புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடற்புராணம் பற்றி இவர் எழுதும்போது, டாக்டர் உ.வே.சாமிநாதய்யரைப் பாராட்டும் வகையில், காலஞ்சென்ற தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் உ.வே.சாமி நாதய்யர் அவர்கள் இந்நூலை அச்சிட்டு வெளியிடாமல் இருந்திருப்பின் தேடுவோரும் படிப்போரும் இல்லாமல் இது மறைந்து அழிந்து போயிருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது என்று குறிப்பிடுகிறார். இப்பகுதியின் மூலம் தக்கோரைப் பாராட்ட வேண்டும் என்ற பண்பி லிருந்து விலகாதவர் பண்டாரத்தார் என்பதனை விளங்கிக் கொள்ள முடிகிறது. முடிவுரை இக்கட்டுரையின் மூலம், இலக்கிய வரலாற்று நூல்கள் மிகக் குறைவாக வெளிவந்திருந்த காலத்தில் இலக்கிய வரலாறு எழுதிய பெருமைக்குரியவர் அறிஞர் பண்டாரத்தார் என்பதும், கல்வெட்டுக் களையும் ஆதாரங்களாகக் கொண்டு இலக்கிய வரலாறு எழுதியமையால் இவரது நூல்கள் மிகுந்த நம்பகத் தன்மையைப் பெறுகின்றன என்பதும், தம் மனத்திற்குச் சரி என்று பட்ட கருத்தினை அஞ்சாமல், ஆதாரங்களோடும் நாகரிகத்தோடும் எடுத்துரைத்த பெருமைக்குரியவர் இவரென்பதும் நன்கு விளங்குகிறது. 6. இலக்கிய ஆய்வு கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் ஆய்வு செய்து இலக்கிய வரலாறு மற்றும் நாட்டு வரலாற்றை எழுதிய அறிஞர் பண்டாரத்தார், இலக்கியங்களில் காணப்படும் சில குறிப்பிடத் தகுந்த பகுதிகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். அவர் செய்துள்ள ஆய்வுகளில் புலவர்களின் ஊர்கள், இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள குறிப்பிடத் தகுந்த ஊர்கள் பற்றிய ஆய்வுகள் இலக்கிய வரலாற்றிற்கு உதவும் வகையில் அமைந்த ஆய்வுகள், கல்வெட்டாய்விற்கும் நாட்டு வரலாற்றிற்கும் பயன்பட்ட இலக்கியப் பகுதிகள் குறித்த ஆய்வுகள் நீங்கிய எஞ்சிய இவரது இலக்கிய ஆய்வுகள் குறித்து இக்கட்டுரையில் தொடர்ந்த நோக்கலாம். சங்க இலக்கிய ஆய்வு தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் பரந்துபட்ட பயிற்சி உடையவர் பண்டாரத்தார். சங்க இலக்கியத்தின் மீது இவருக்கு அளவு கடந்த பற்று உண்டு. சங்க இலக்கியத்துள் ஒன்றான புறநானூறானது பழந்தமிழர் வாழ்வியல், தமிழக வரலாறு ஆகியனவற்றை அறிந்து கொள்வதற்குப் பெரிதும் பயன்படுகின்ற நூலாகும். அந்த நூலை ஆய்வு செய்து புறநானூறும் கல்வெட்டுக்களும் என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதிய பண்டாரத்தார், பண்டைக் காலத்தில் இத்தமிழகத்தில் செங்கோலோச்சிய சேர, சோழ, பாண்டியராகிய முடியுடைவேந்தர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர், படைத்தலைவர், கடையெழு வள்ளல்கள், சங்கப்புலவர்கள் முதலானோர் வரலாறுகளையும், பண்டைத் தமிழ் மக்களுடைய கொள்கை, நாகரிகம், கல்வி, வீரம் முதலான வற்றையும் உணர்ந்து கொள்வதற்குப் புறநானூறு என்னும் இச்சீரிய நூல் ஒன்றே போதும் எனக் குறிப்பிட்டதோடு உண்மைத் தமிழராகவுள்ள ஒவ்வொரு வரும் இந்நூல் ஒன்றையாவது கற்றல் வேண்டும் என்பது எனது வேண்டுகோள் எனவும் எழுதுகிறார். புறநானூறு தொடர்பான மேற்கண்ட தமது கட்டுரையில் அறிஞர் பண்டாரத்தார் புறநானூற்றில் குறிப்பிடப்பெறும் சோழ மன்னர்களான பெருநற்கிள்ளி, சோழன் கரிகாலன், சோழன் செங்கணான், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், கடையெழு வள்ளல்களுள் ஒருவனான வேள்ஆய் மற்றும் அதியமான் நெடுமானஞ்சி,வேள் நன்னன், வேள் பாரி முதலானோர் பற்றிப் புறநானூறு கூறும் செய்திகளுள் சில, பிற்காலக் கல்வெட்டுக்களிலும் காணப்படுவதால் அந்த இலக்கியம் கூறும் செய்திகள் உறுதிப்படுவதை ஆய்ந்துரைக்கிறார். அதுபோன்று புறநானூற்றில் குறிப்பிடப்பெறும் கோனாடு, ஒல்லையூர் நாடு, பறம்புநாடு, மிழலைக் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் என்னும் நாடுகள், ஒல்லையூர், அழும்பில், பிடவூர், மாறோக்கம், பூங்குன்றம், வஞ்சிமாநகர், தகடூர் என்னும் ஊர்கள் ஆகியன பற்றிய செய்திகளைக் கல்வெட்டுச் சான்றுகளின் துணையோடு ஆய்வு செய்து இவ்வறிஞர் உறுதிப்படுத்துகிறார். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் காணப்படும் பதிகங்களை ஆய்வு செய்த பண்டாரத்தார், பதிற்றுப்பத்தின் பதிகங்கள் தமிழகத்தின் வரலாற்றா ராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவன என்றும், அப்பதிகங்கள் சோழ மன்னர்கள் தம் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்திகள் வரைவதற்கு ஓர் ஏதுவாக இருந்திருத்தல் கூடும் என்றும், சேர மன்னர்கள் தம்மைப் பாடிய புலவர் பெருமக்களுக்கு அவர்களது மனங்குளிரப் பொன்னும் பொருளும் நிலமும் விருந்தும் அளித்துப் பாராட்டினர் என்றும், பதிகங்களில் காணப்படுவன உண்மைச் செய்திகளேயாம் என்றும், அவற்றை உறுதிப்படுத்தும் செய்திகள் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன என்றும் எடுத்துரைக்கிறார். கல்வெட்டுக்களால் விளக்கமுற்று உறுதியெய்தும் பத்துப்பாட்டுச் செய்திகள் பற்றி ஆய்ந்துரைக்கும் வகையில் பண்டாரத்தாரால் எழுதப்பட்டது பத்துப்பாட்டும் கல்வெட்டுக்களும் என்னும் கட்டுரை யாகும். இக்கட்டுரையில் அவர், குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியரான கபிலர் மறைந்த இடம், கடியலூர் உருத்திரங்கண்ணனார் சோழன் கரிகாற் பெரு வளத்தான் மீது பட்டினப்பாலை பாடிய செய்தி, வேள் நன்னன் மீது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடிய மலை படுகடாம் ஆகியன பற்றிய பத்துப்பாட்டுச் செய்திகள் முதல் இராசராசன், முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன், ஆகியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் மற்றும் திருவண்ணாமலையில் கி.பி.13ஆம் நூற்றாண்டில் வரையப்பெற்ற கல்வெட்டு முதலானவற்றில் காணப் படுவதை எடுத்துக்காட்டி அந்த இலக்கியச் செய்திகள் உறுதிப்படுவதை விளக்கியுள்ளார். தேவாரம் என்னும் பெயர் வழக்கு சைவ சமய குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவரும் பாடிய திருப்பாடல்கள் இன்று தேவாரம் என்று சுட்டப்படுகின்றன. பத்து அல்லது பதினொரு பாடல்களைக் கொண்ட அவர்களுடைய பதிகங்களும் தேவாரப் பதிகங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆனால், தேவாரம் என்ற பெயரை மூவர் பாடல்கள் எப்போது பெற்றன என்பதும், அவை அப்பெயர் பெற்றமைக்குரிய காரணம் யாது என்பதும் பண்டாரத்தார் காலம் வரை ஆய்ந்து அறியப்படவில்லை. ஆயினும் தேவாரம் என்ற சொல்லுக்குரிய பொருள் யாது என்பது குறித்து ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. தேவாரம் குறித்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் அனைத்தும் சொல் கிடந்த முறையில் அவர்கள் கண்ட பொருள் என்ற அளவில் அமைந்தன. இப்படிப்பட்ட சூழலில் தேவாரம் குறித்த ஆய்வினை மேற்கொண்டு தேவாரம் என்னும் பெயர் வழக்கு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதியவர் பண்டாரத்தார். உண்மைப் பொருளை உணர வேண்டின், அது முற்காலத்தில் எப்பொருளில் வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்தல் வேண்டும் என்ற நோக்கில் தமது ஆய்வினைத் தொடங்கிய அவர், சமய குரவர்களாதல், ஒன்பதாந் திருமுறை ஆசிரியர்களாதல், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகிய பெரியோர்களாதல் தேவாரம் என்னும் சொல்லைத் தம் பாடல்களில் யாண்டும் குறித்தாரில்லை. சேக்கிழாரும் தம் பெரியபுராணத்தில் அச்சொல்லை எடுத்தாளவில்லை. ஆகவே, பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஆகிய சைவப் பெரியார் காலங்களில் மூவர் பாடல்கள் தேவாரம் என வழங்கப்படவில்லை என்பது தெள்ளிது என்று எழுதும் பண்டாரத்தார், அப்பாடல்களைத் தேவாரம் என்ற பெயருடன் தமிழில் முதலில் வழங்கியவர்கள் இரட்டையர்களே எனவும் குறிப்பிடுகிறார். எனவே, கி.பி.14-ஆம் நூற்றாண்டு முதல் மூவர் பாடல்கள் தேவாரம் எனச் சுட்டப்படுகின்றன என்பது இவரது ஆய்வின்மூலம் தெளிவுபெறும் செய்தியாகும். கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ள தேவாரம் என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்த பண்டாரத்தார், சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தேவாரம் என்ற சொல் வழிபாடு (பூசை) என்னும் பொருளில் வழங்கி வந்தது என்று முடிவு செய்கிறார். தேவாரப் பதிகங்களிற் குறிக்கப் பெற்ற சில கோயில்கள் தேவார மூவர் பாடிய பதிகங்கள் சிலவற்றில் கோயில் களுக்குப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை, ஈச்சுரம், பெருங் கோயில், ஞாழற்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், ஆலக் கோயில், தூங்கானை மாடம் முதலான பெயர்களில் வழங்கி வந்துள்ளன என்பதனைத் தேவாரப் பாடல்களின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. அவை அப்பெயர்கள் பெற்றமைக்கான காரணம் யாது என்பது குறித்து ஆய்வு செய்து அறிஞர் பண்டாரத்தாரால் எழுதப்பட்டதுதான் தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற சில கோயில்களின் பெயர்க்காரணம் என்னும் கட்டுரையாகும். பல்லவ மன்னன் ஒருவன் திருப்பணி புரிந்து வழிபட்ட கோயில் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சுரம் எனவும் பட்டி, தாடகை என்போர் வழிபட்ட கோயில் முறையே பட்டீச்சுரம், தாடகேச்சுரம் எனவும் வழங்கப்பட்டதென இவர் விளக்குகிறார். இக்கட்டுரையில் அவர், சோழன் கோச்செங்கணானால் எடுக்கப் பெற்ற கோயில்கள் பெருங்கோயில்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன எனவும், இப்பெருங்கோயில்கள் எல்லாம் செய்குன்றுகள் மீது எடுக்கப் பெற்றவை எனவும், அப்பரடிகள் காலத்தில் எழுபத்தெட்டுப் பெருங் கோயில்கள் இருந்தன என்பது அப்பர் வாக்கு எனவும் ஆய்ந்து உரைக்கிறார். அதுபோன்று அப்பரடிகள் குறிப்பிடும் ஞாழற்கோயில் எனப்படுவது ஞாழல் மரத்தடியில் அமர்ந்த பெருமான் கோயில் எனவும், கொகுடிக் கோயில் எனப்படுவது கொகுடி என்னும் ஒரு முல்லைச்செடி நிறைந்த பகுதியில் அமைந்த கோயில் எனவும், இளங்கோயில் எனப்படுவது பழைய கோயிலைப் புதுப்பிக்குங்கால் அதற்கு அண்மையில் இறைவனை எழுந்தருளுவித்து வழிபாடு புரிந்த கோயில் எனவும் ஆலக்கோயில் எனப்படுவது இறைவன் அமர்ந்திருக்கும் கருவறையின் மேல்பகுதி யானை தூங்குவது போன்ற அமைப்புடைய கோயில் எனவும் இவர் விளக்குகிறார். இளம்பூரண அடிகளும் மணக்குடவரும் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரண அடிகள் திருக்குறளுக்கு ஓர் உரையும் பெருங்கதைக்கு ஒரு குறிப்புரையும் எழுதி யுள்ளார் என்பதனை இளம்பூரணரின் உரைப்பாயிரச் செய்யுள் ஒன்றின் மூலம் அறிந்துகொண்ட பண்டாரத்தார், அது குறித்து ஆய்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அறிஞர் பண்டாரத்தார், இளம்பூரணரின் உரைப்பாயிரத்தை அடிப்படையாகக் கொண்டு இளம்பூரணர் தொல்காப்பியத்திற்கு உரை யெழுதுவதற்கு முன்பாகப் பெருங்கதைக்குக் குறிப்புரையும் திருக்குறளுக்கு உரையும் எழுதி முடித்துவிட்டார் என விளக்கு கிறார். உரைப்பாயிரத்தில் இளம்பூரணருக்கு மணக்குடிடையான் என்ற பட்டப்பெயர் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு இதுபோன்ற பட்டப் பெயர்கள் அக்காலத்தில் இருந்ததற்குச் சான்றாக, நாகன்குடையான், அண்டக்குடையான், கடுவங்குடையான், இளையான்குடையான் என்னும் கல்வெட்டுத் தொடர்களைப் பண்டாரத்தார் எடுத்துக் காட்டுவதுடன் மணக்குடையார் என்பது பரிமேலழகரின் குடும்பப் பெயர் எனவும் விளக்குகிறார். மேலும் இளம்பூரணரின் தொல்காப்பிய உரையையும் மணக்குடையாரின் திருக்குறள் உரையையும் ஒப்பாய்வு செய்து இருவரும் ஒருவரே என இவர் நிறுவுகிறார். திருவிளையாடற் புராணம் 64-வது படல ஆராய்ச்சி பரஞ்சோதி முனிவர் மொழி பெயர்த்த திருவிளையாடற் புராணம் 64-ஆவது படலத்தில் திருஞான சம்பந்த சுவாமிகள் திருப்புறம்பயத்தின்கண் ஒரு வணிகப் பெண்ணின் துயரொழிக்கும்வண்ணம் அரவாலிறந்த வணிகனுக்கு ஆருயிர் வழங்கி, அவ்விருவரையும் மணம்புணரும்படி செய்தருளினார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், திருஞானசம்பந்த சுவாமிகள் திருமருகலில் அங்ஙனம் செய்ததாகத் திருத்தொண்டர் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டு கதைகளையும் 19-ஆம் நூற்றாண்டில் ஆய்வு செய்த சிலர், திருவிளையாடற் புராண ஆசிரியர் கூறுவது வரலாற்று ஆய்வில் சிறிதும் நம்பத்தக்க உண்மை ஆக மாட்டாதென்றும், திருத்தொண்டர் புராணத்தில் சொல்லப்பட்டிருப்பதே உண்மையாக இருக்க வேண்டு மென்றும் கூறிச் சென்றனர். வேறு சிலர், மேற்கண்ட இரண்டு புராணங்களிலும் சொல்லப்படும் செய்திகள் இரண்டும் ஒரே செய்தி யாகத்தான் இருக்க வேண்டுமென்றும் கூறினர். இந்தக் கருத்து வேறுபாடு களை ஆராய்ந்த பண்டாரத்தார் திருவிளையாடற் புராணம் 64-வது படல ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தமது 22-ஆம் வயதில் செந்தமிழ் இதழில் கட்டுரை ஒன்றினை எழுதினார். திருவிளையாடற் புராணம் சுட்டும் திருப்புறம்பயம் பண்டாரத்தாரின் சொந்த ஊர் என்ற காரணத்தினால் இது குறித்த அவரது ஆய்வு நாட்டம் மிகுதியாக இருந்தது. தமது ஆய்வின் மூலம் திருத்தொண்டர் புராணத்திலும் திருவிளை யாடற் புராணத்திலும் கூறப்படுவன வெவ்வேறு செய்திகளாகும் என்று அவர் முடிவு செய்கிறார். இவ்விரண்டும் வெவ்வேறானவை என்பதனைப் பெரும்பற்ற புலியூர் நம்பி தமது பழைய திருவிளையாடற் புராணத்தில் கூறியுள்ள செய்திகளின் மூலம் அவர் விளக்குகிறார். இது குறித்த தமது ஆய்வின் முடிவாக அவர், திருவிளையாடற் புராணத்திலும் திருத் தொண்டர் புராணத்திலும் கூறப்படும் சரிதங்களிரண்டும் வெவ்வே றென்பதும், திருஞானசம்பந்த சுவாமிகள் அரவால் இறந்த வணிகனுக்கு ஆருயிரளித்தருளினாரென்று திருவிளையாடற் புராணங் கூறுவது ஆராய்ச்சிற் சிறிதும் பொருந்தவில்லை என்பதும், புறம்பயத்துறை இறைவனே அங்ஙனம் செய்தருளினாரென்று திருப்புறம்பயப் புராணங் கூறுவதே வன்மையுடைத்தென்பதும், மன்றற்குக் காட்டப்பட்ட சான்றுகள் மடைப்பள்ளியுடன் நான்கென்பதும் அவ்வணிக மாது பிறந்த நகரம் காவிரிப்பூம்பட்டினமென்பதும் விளங்கி நிற்றல் காண்க என எழுதுகிறார். திருவள்ளுவரும் ஞானவெட்டியும் அண்மைக்காலத்தில் திருவள்ளுவர் பெயரில் ஞானவெட்டி என்றதொரு நூல் காணப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்த பண்டாரத்தார், ஞானவெட்டி என்ற நூலில் கம்பர், அதிவீரராம பாண்டியர் முதலானோர் சுட்டப்படுவதால் அது பிற்காலத்தே எழுந்த நூல் என்று ஆய்ந்து உரைக்கிறார். மேலும், திருக்குறளைத் தாம் இயற்றியதாகக் கூறும் ஞானவெட்டியின் ஆசிரியர் குறித்து இவர் கடுமையாக விமர்சிக் கிறார். இதனை அவர், இவ்வாசிரியர் திருவள்ளுவர் என்னும் பெயருடைய வராய் இருக்கலாம். ஆனால், திருக்குறளைத் தாமியற்றியதாகக் கூறல் சிறிதும் பொருந்தாது. தம்மைத் தத்துவங்களுணர்ந்த சிறந்த ஞானியென்றும், தம் நூலே உலகிற்குப் பயன்படக் கூடிய சிறந்த நூலென்றும் வாய்ப்பறை சாற்றிச் செல்கின்ற இவ்வாசிரியர் இங்ஙனம் பொய்கூறற்கு எங்ஙனம் துணிவுற்றனரோ அறியேன் என எழுதுகிறார். முடிவுரை தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களில் ஆழ்ந்த பயிற்சியுடைய அறிஞர் பண்டாரத்தார், தமது இலக்கிய ஆய்வின் மூலம் நாட்டு வரலாற்றிற்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் பெருமை சேர்த்தவர் என்பது விளங்கும். அதுபோன்றே தமது கல்வெட்டுப் பயிற்சியின் மூலம் தமிழ் இலக்கியங்கள் கூறும் செய்திகளின் நம்பகத் தன்மையை உறுதிப் படுத்தியவர் இவரென்பதும் தெளிவு. 7. பொதுநிலை ஆய்வுகள் கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் ஆதாரங்களாகக் கொண்டு நாட்டு வரலாற்றையும் இலக்கிய வரலாற்றையும் எழுதிய பண்டாரத்தார் தமது ஆய்வின்போது தாம் கண்டறிந்த சிறு சிறு ஆய்வுக் குறிப்புக்களையுங்கூடக் கவனமாகப் பதிவு செய்திருக்கிறார். அவை தனிக் கட்டுரைகளாகவும், என் ஆராய்ச்சிற் கண்ட சில செய்திகள் என்னும் தலைப்பிலும், சில குறிப்புக்கள் என்னும் தலைப்பிலும் பதிவு செய்யப் பட்டுள்ளன. அந்தக் குறிப்புக்கள் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு முதலியன தொடர்பானவையாக அமைந்துள்ளன. அவை பற்றி செய்திகளைத் தொடர்ந்து நோக்கலாம். சொல் வரலாறு பண்டாரத்தார் எழுதியுள்ள கட்டுரைகளும் குறிப்பிடத்தக்க ஒன்று சொல் வரலாறு என்னும் கட்டுரையாகும். அக்கட்டுரையில் மொழியின் தோற்றம் பற்றிய கருத்தை இவர் எடுத்துரைக்கிறார். அஃதாவது சைகைகளாலும் ஒலிக்குறிப்புக்களாலும் மக்களிடையே கருத்துப் பரிமாற்றம் ஏற்பட்ட பிறகுச் சிற்சில காரணம் பற்றிக் குறிப்புச் சொற்களும், முறைச்சொற்களும், தன்மை முன்னிலைப் பெயர்களும், அவற்றின் அடியாகப் பற்பல சொற்களும் உண்டாயிருத்தல் வேண்டும் என்ற மொழி நூலாரின் கருத்தை எடுத்துக் காட்டும் பண்டாரத்தார், முறைப்பெயர்கள் பல்வேறு வகையாக வளர்ந்து வந்துள்ளமைக்குச் சில சான்றுகள் தருகிறார். அவ்வகையில் தந்தையைக் குறிக்கும் அத்தன் என்ற சொல்லும், தாயைக் குறிக்கும் அம்மை என்ற சொல்லும் எவ்வாறு விரிவடைந்தன என இவர் எடுத்துக் காட்டுவதன் மூலம் பழந்தமிழ்ச் சொற்களின் பொருட்சிறப்பை விளங்கிக் கொள்ள முடிகிறது. தந்தையைக் குறிக்கும் அத்தன் என்ற சொல் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடல்களில் இடம் பெற்றுள்ளதை எடுத்துக் காட்டும் இவர், அச்சொல்லின் அடிப்படையில் பல சொற்கள் உருவானதற்குச் சான்றுகள் தருகிறார். அத்தன் மனைவி ஆத்தாள் எனவும், அத்தனுடைய உடன் பிறந்தாள் அத்தை எனவும், அத்தையின் மகன் அத்தான் எனவும், அவ்வத்தையின் கணவர் அத்தையன்பர் (அத்திம்பேர்) எனவும், அத்தையின் மகள் அத்தாச்சி எனவும் விரிவடைந்துள்ளமையை விளக்குகிறார். அதுபோன்றே தாயை உணர்த்தும் அம்மை என்ற சொல் இன்று அம்மா எனவும், அம்மாள் எனவும் வழங்குவதை இவ்வறிஞர் எடுத்துக் காட்டியுள்ளார். இந்த அம்மை என்ற சொல்லின் அடியாக தோன்றிய முறைப் பெயர்கள் பலவாகும். அவ்வகையில் அம்மையின் உடன் பிறந்தான் அம்மான் எனவும், அம்மானுடைய மனைவி அம்மாமி எனவும், அம்மானுடைய மகன் அம்மான்சேய் (அம்மாஞ்சி) எனவும் வழங்கும் நிலையைப் பண்டாரத்தார் எடுத்துக் காட்டியுள்ளார். தந்தையைக் குறிக்கும் தகப்பன் என்ற சொல் எவ்வாறு உருவானது என்பதனையும் பண்டாரத்தார் ஆய்வு செய்துள்ளார். அப்பன் என்ற சொல் இன்று உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் தந்தையை உணர்த்தி வருகிறது. தம் அப்பன் எனப்படுவது தகப்பன் எனவும் தமப்பன் எனவும் பழங்காலத்திலேயே வழக்கில் இருந்ததைக் கல்வெட்டுக்களில் காணலாம் எனக் குறிப்பிடும் இவர், தம் ஆய் என்பது தாய் என மருவியும், தம் அக்கை என்பது தமக்கை எனவும் வழங்கி வருவதை எடுத்துக் காட்டியுள்ளார். மேலும், தமையன், அண்ணன், தம்பி முதலான சொற்களின் தோற்றம் குறித்தும் சொல் வரலாறு என்னும் கட்டுரையில் பண்டாரத்தார் விளக்கியுள்ளார்.இவரது இந்த விளக்கங்களின் மூலம் தமிழ்ச் சொற்கள் அனைத்தும் காரணம் பற்றியே உருவானவை என விளங்கிக் கொள்ள முடிகிறது. காரணம் தெரியாத நிலையில் அச்சொற் களின் பெயர்கள் இடுகுறிப் பெயர்களாக வழங்குகின்றன. தமிழ் எழுத்துக்கள் கல்வெட்டுக்களை அடிப்படையாக் கொண்டு கிடைக்கக் கூடிய தமிழ் எழுத்துக்களை ஆய்வு செய்த அறிஞர் பண்டாரத்தார், தமிழ் மொழிக்குத் தமிழ் எழுத்து, வட்டெழுத்து என்னும் இரண்டு வகையான எழுத்துக்கள் உண்டு என்று குறிப்பிடுகிறார். இது குறித்து விளக்கும் வகையில் தமிழ் எழுத்துக்கள் என்னுந் தலைப்பில் கட்டுரை ஒன்றை இவரெழுதியுள்ளார். இக்கட்டுரையின்கண், தமிழ் எழுத்து எனப்படுவது இந்நாட்களில் வழங்கிவரும் தமிழ்எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களாகும் எனவும், வட்டெழுத்து எனப்படுவது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் வடிவமாகும் எனவும் அவர் குறிப்பிடுகிறார். இவ்வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முதல் 11-ஆம் நூற்றாண்டு வரை பாண்டி மண்டலம், சேரமண்டலம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன என இவர் ஆய்ந்துரைக்கிறார். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப் பெறும் கண்ணெழுத்து எனப்படுவது பழைய காலத்திய வட்டெழுத்தாகும் எனவும், இவ்வட்டெபத்துக்களிலிருந்துதான் பல்லவர்கள், கிரந்த எழுத்துக்களையும், இக்காலத்துத் தமிழ் எழுத்துக்களுக்கு அடிப்படையாக உள்ள பழைய தமிழ் எழுத்துக்களையும் அமைத்துக் கொண்டனர் என்று இவர் எழுதுகிறார். அசோக சக்ரவர்த்தியின் பிராமி எழுத்துக்களிலிருந்து தோன்றி வளர்ந்தவை வட்டெழுத்துக்கள் என்று டாக்டர் பூலர் என்பவரும், பிராமி எழுத்துக்களுக்கு ஆதாரமாகக் கருதப்படும் பீனிஷிய எழுத்துக்களிலிருந்து பண்டைக் காலத் தமிழ் மக்கள் இவ்வட்டெழுத்துக்களை அமைத்துக் கொண்டிருத்தல் வேண்டுமென்று டாக்டர் பர்னல் என்பவரும் குறிப்பிட்டனர். மேற்கண்ட அறிஞர்களின் இரண்டு கருத்துக்கள் குறித்தும் ஆய்வு செய்த பண்டாரத்தார் அசோக சக்ரவர்த்தியின் பிராமி எழுத்துக்கள் தமிழகத்தில் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழிக்குரிய தனி எழுத்துக்கள் இருந்தன என்பது தொல்காப்பியச் சூத்திரங்களால் பெறப்படுகிறது. அவ்வெழுத்துக்கள் வட்டெழுத்துக்களே என்பது தேற்றம். எனவே, பிராமி எழுத்துக்களிலிருந்து வட்டெழுத்துக்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது என முடிவு கூறுகிறார். அது போன்றே, வலக்கைப் புறத்திலிருந்து இடக்கைப் புறமாக எழுதப்பட்ட பீனிஷிய எழுத்துக்களிலிருந்து இடக்கைப் பக்கத்திலிருந்து வலக்கைப் பக்கமாக எழுதப்பட்ட வட்டெழுத்துக்கள் தோன்றியிருக்க முடியாது என்பது திண்ணம் எனவும் அக்கட்டுரையில் இவர் குறிப்பிடக் காணலாம். இந்த ஆய்வின் மூலம் தமிழ் எழுத்துக்கள் தமிழ்நாட்டில் தோன்றிய தனி எழுத்துக்கள் என்பது இவரது முடிவாக அமைகிறது. இலக்கியச் சொற்கள் குறித்த ஆய்வு சங்க இலக்கியங்களுள் ஒன்றான புறநானூற்றை ஆய்வு செய்து, புறநானூறும் கல்வெட்டுக்களும் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதிய பண்டாரத்தார் அந்நூலில் காணப்படும் முதுகண், மண்டை, முடிநாகராயர், கழஞ்சு என்னும் சொற்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். புறநானூற்றுப் புலவர்களுள் ஒருவரான உறையூர் முதுகண்ணன் சாத்தன் என்பவரது பெயரில் காணப்படும் முதுகண் என்பது குறித்த ஆய்வினை மேற்கொண்ட பண்டாரத்தார், முதுகண் என்பது தமது நெருங்கிய கிளைஞராயுள்ள இளைஞர்க்கும், பெண்டிர்க்கும் அவர்கள் பொருள்களுக்கும் பாதுகாவலராய் நிலவிய, ஆண்டில் முதிர்ந்த ஆண்மக்களுக்குரிய பெயராக முற்காலத்தில் வழங்கியுள்ளது என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது எனக் குறிப்பிடுவதோடு அதற்கு இரண்டு கல்வெட்டுச் சான்றுகளையும் தந்துள்ளார். எனவே, முதுகண் எனப்படுவது ஆங்கில மொழியில் குறிப்பிடப் பெறும் கார்டியன் என்பதற்கு இணையான சொல் என்பதும், பிறருக்குப் பாதுகாவலாக இருப்பவன் முதுகண்ணன் என்பதும் பண்டாரத்தார் ஆய்வின் முடிவாகும். சங்க காலத்தே பாணர்களிடமிருந்ததாகப் புறநானூற்றின் வழி அறியப்படும் மண்டை என்னும் உண்கலம் பிற்காலச் சோழர்கள் காலத்திலும் வழக்கிலிருந்தது என்பதை இக்கட்டுரையில் கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் இவர் விளக்கியுள்ளார். புறநானூற்றில் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனைப் பாடியவராகக் குறிப்பிடப் பெறும் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பவரது பெயரில் காணப்படும் ராயர் என்னும் சொல் சங்க காலத்தில் வழக்கில் இல்லை எனச் சுட்டும் பண்டாரத்தார், பிற்காலச் சோழர் காலத்தில்தான் கச்சிராயர், காலிங்கராயர், சம்புவராயர், காடவராயர், சேதிராயர் என்னும் பெயர்கள் வழங்கி வந்தன என எடுத்துக் காட்டுகிறார். எனவே, முடிநாகராயர் என்பது முடிநாகனார் என்று இருந்திருக்குமோ என்ற ஐயப்பாடு உண்டாவதால் இது குறித்து அறிஞர்கள் ஆய்வு செய்து விளக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறார். புறநானூற்றுப் பாடல்களில் பயின்று வரும் கழஞ்சு என்ற சொல் குறித்து ஆய்வு செய்த இவர், கழஞ்சு என்பது மணி, பொன், வெள்ளி முதலானவற்றை நிறுப்பதற்குப் பயன்படும் ஓர் எடை எனக் குறிப்பிடுவதுடன் நாற்பது குன்றி கொண்டது அல்லது ஒன்றேகால் வராகன் எடை கொண்டது ஒரு கழஞ்சு எனவும் விளக்குகிறார். திருக்கைக் கோட்டி பிற்காலச் சோழர் காலக் கல்வெட்டுக்களில் காணப்படும் ஒரு தொடர் திருக்கைக்கோட்டி எனப்படுவதாகும். இதுகுறித்து ஆய்வு செய்த பண்டாரத்தார், பழங்காலத்தில் தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூசிக்கப் பெற்ற கோயில் மண்டபம் திருக்கைக்கோட்டி என வழங்கப் பெற்றது என்ற முடிவினை வெளிப்படுத்துகிறார். சீகாழியிலுள்ள திருஞான சம்பந்த மூர்த்திகள் கோயில் கருப்ப கிரகத்தின் தென்புறத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றில் காணப்படும் தொடர்களை எடுத்துத் காட்டிய பண்டாரத்தார், சீகாழிக் கோயிலிலுள்ள திருக்கைக் கோட்டியில் தேவாரத் திருமுறைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தன என்பதும், அத்திருமுறை ஏடு பழுதுற்ற போது, அவற்றைப் புதுக்குதற்கு ஒரு தமிழ் விரகர் இருந்தனர் என்பதும், அவ்வூர்ச் சபையார் அவற்றின் வழிபாடு முதலியனவற்றிற்கு இறையிலி நிலம் அளித்துப் போற்றி வந்தனர் என்பதும் இக் கல்வெட்டினால் நன்கு அறியக் கிடக்கின்றன என எழுதுகிறார். அஞ்சு வண்ணம் கடற்கரை நகரங்களில் அஞ்சு வண்ணம் என்ற குழு ஒன்று இருந்தது என்பது கோட்டயச் செப்பேடுகளால் அறியப்படும் செய்தியாகும். அன்றியும் பழைய இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தின் கடற்கரையிலுள்ள தீத்தாண்டதானபுரத்தில் காணப்படும் கல்வெட்டிலும் இக்குழுவின் பெயர் பயின்று வருகிறது. இது குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் அஞ்சு வண்ணம் எனப்படுவது சேர நாட்டில் யூதர்கள் வாழ்ந்து கொண்டிருந்த இடமாக இருத்தல் வேண்டும் எனவும், ஐவகை உரிமைப் பட்டங்களை உணர்த்தும் தொடர் எனவும், ஒரு வகையில் சயேட்சை பெற்றிருந்த வணிகர் குழு எனவும், ஓர் ஊரின் பெயர் எனவும், ஐவகைச் சாதியாரைக் குறிக்கும் எனவும், அஞ்சுமான் என்ற உருதுமொழியின் திரிபு எனவும் பல்வேறு விளக்கங்களை அவரவர் ஆய்வுப் போக்கிற்கேற்பத் தெரிவித்துள்ளனர். ஆயினும், அதன் உண்மைப் பொருள் சரியாக விளக்கப் படவில்லை என உணர்ந்த பண்டாரத்தார், கல்வெட்டில் காணப்படும் இத்தொடரின் பொருளைக் கண்டறிவதற்குப் பல்சந்தமாலை, தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் காணப்படும் பழைய பாடற்றிரட்டு என்னும் இலக்கியங்களில் காணப்படும் பாடல்களைத் துணையாகக் கொண்டார். அவற்றின் மூலம் அஞ்சுவண்ணம் என்னும் தொடர் முற்காலத்தில் நிலவிய முலீம் வணிகர் குழுவைக் குறிப்பதாகும் என்று அவர் முடிவு செய்கிறார். இப்பகுதியின் மூலம் கல்வெட்டுச் செய்திகளை உறுதிப் படுத்துவதற்கு இலக்கியச் செய்திகள் இவருக்குப் பயன்படுவதை விளங்கிக் கொள்ள முடிகிறது. கொல்லம் ஆண்டின் தொடக்கம் இக்காலத்தில் கிறித்துவ சகாப்தமும், முற்காலத்தில் சகாப்தமும் கலியப்தமும் நம் நாட்டில் வழங்கி வந்தமை போன்று மலையாள நாட்டில் கொல்லம் ஆண்டு என்பது வழங்கி வந்தது. கொல்லம் ஆண்டின் தொடக்கம், தோற்ற வரலாறு ஆகியன குறித்து ஆய்வு செய்தோர் சேரமான் நாயனார் தம் ஆட்சியை விட்டு நீங்கிக் கைலாயம் சென்ற ஆண்டாகிய கி.பி.825 முதற்கொண்டு கொல்லம் ஆண்டு தொடங்கியது என்று கூறினர். ஆயினும் அந்நாட்டிலுள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்த பண்டாரத்தார், அன்னோர் கூற்றானது கொல்லம் ஆண்டின் தொடக்கம் பற்றிய காரணத்திற்கு முரணாக அமைந்ததை அறிந்தார். அக்கல்வெட்டுக் களில் பழையகொல்லம் அழிந்து புதிய கொல்லம் தோன்றிய நாளே கொல்லம் ஆண்டின் தொடக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டிய பண்டாரத்தார், புதிய கொல்லம் அமைக்கப்பட்ட கி.பி. 825-ஆம் ஆண்டே கொல்லம் ஆண்டின் தொடக்கம் எனச் சுட்டுகிறார். தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் இன்று பரவலாகப் பலராலும் நடத்தப் பெறும் வழிபாடுகளுள் குறிப்பிடத் தக்க ஒன்று விநாயகர் வழிபாடாகும். தமிழகத்தில் அவ்வழிபாடு எப்பொழுது தோன்றியது என்பது குறித்து ஆய்ந்து உரைப்பதுதான் இவ்வறிஞரின் விநாயகர் வழிபாடும் தமிழ்நாடும் என்னும் கட்டுரையாகும். அக்கட்டுரையில் இவர், சங்க காலத் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இருந்ததாகச் சங்க இலக்கியத்திலோ சிலப்பதிகாரத்திலோ எந்த இடத்திலும் குறிப்புக்கள் காணப்படவில்லை என்று சுட்டுவதுடன், விநாயகர் வணக்கத்தை முதலில் கொண்டுள்ள நூற்கள் பலவற்றுள்ளும் மிகத் தொன்மை வாய்ந்தவை புறப்பொருள் வெண்பாமாலை, நந்திக் கலம்பகம் என்பனவேயாம் எனவும் ஆய்ந்துரைக்கிறார். அயல் நாடுகளின்மீது படையெடுத்துச் செல்லும் படைத் தலைவர்கள் தாங்கள் பெற்ற வெற்றியின் அடையாளமாக அந்நாடுகளி லிருந்து கடவுள் படிமங்களைத் தங்கள் நாட்டிற்குக் கொண்டு வருவது வழக்கம். அவ்வாறு கொண்டு வந்தவர்களுள், சேர மண்டலத்தின் மீது படையெடுத்துச் சென்ற இராசராச சோழனின் படைத்தளபதி கம்பன் மணியனாகிய விக்கிரம சிங்க மூவேந்த வேளான் அங்கிருந்து மரகத தேவரைக் கொணர்ந்தமை, கங்கைகொண்ட சோழன் மகனாகிய விஜயராசேந்திர சோழன் மேலைச் சாளுக்கிய நகரமாகிய கலியாண புரத்தை வென்று அங்கிருந்த துவாரபாலகர் படிமம் ஒன்றைக் கொண்டு வந்தமை என்பன போன்றதுதான் விநாயகர் படிமம் தமிழ்நாட்டிற்கு வந்ததாகும் என்று பண்டாரத்தார் எடுத்துரைக்கிறார். அஃதாவது முதல் நரசிம்ம வர்மன் படைத்தளபதியான பரஞ்சோதி முனிவர் மேலைச் சாளுக்கிய நாட்டின் அரசனான இரண்டாம் புலிகேசியை அவனது நாட்டின் வாதாபி நகரத்தில் வென்றதன் அடையாள மாகக் கி.பி. 642-இல் வாதாபியிலிருந்து விநாயகர் படிமம் ஒன்றை எடுத்து வந்து ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அண்மை யிலுள்ள திருசெங்காட்டங்குடியில் வைத்து வழிபாடு செய்தார். அந்த விநாயகருக்கு வாதாபி விநாயகர் என்பது பெயர். அது முதற் கொண்டு தான் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு தொடங்கியது என்றும், விநாயகர் தொடர்பான புராணக் கதைகள் அனைத்தும் இதற்குப் பின்னர்த் தோன்றியவை என்றும் பண்டாரத்தார் ஆய்ந்துரைக்கிறார். திருவிழாக்கள் நடைபெற்ற நாட்கள் இக்காலத்தில் மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மகாமகம், பங்குனி உத்தரம் முதலான திருவிழாக்கள் ஒவ்வொன்றும் பத்து நாட்கள் முடிய நடைபெறுகின்றன. ஆயினும் பழந்தமிழகத்தில் இத்திருவிழாக்கள் எத்தனை நாட்கள் நடைபெற்றன என்பது குறித்து ஆய்வு செய்த பண்டாரத்தார், குளத்தூர் வட்டம் குடுமியான்மலைக் கல்வெட்டுக்கள், திருவிளாங்குடியிலுள்ள கல்வெட்டு ஆகியனவற்றில் காணப்படும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு மாசித் திங்களில் நடத்தப்பெறும் மக விழாவும், பங்குனித் திங்களில் நடத்தப் பெறும் உத்தர விழாவும், சித்திரைத் திங்களில் நடத்தப்பெறும் சித்திரை விழாவும், மார்கழித் திங்களில் நடத்தப் பெறும் திருவாதிரை விழாவும் முற்காலத்தில் எவ்வேழு நாட்கள் நடந்தன, என உரைக்கிறார். திருவாளர் என்னும் சொல்லாட்சி இக்காலத்தில் மரியாதைக்கு அடையாளமாகப் பெயருக்கு முன்னால் குறிப்பிடப் பெறும் திருவாளர் என்னும் வழக்கானது நமது பழைய வழக்கமாகும் என்பதனைக் கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் பண்டாரத்தார் ஆய்ந்து உரைத்துள்ளார். முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனது ஆட்சிக் காலத்தில் வரையப்பெற்ற கல்வெட்டு ஒன்றில் திருவாளன், திருவன், திருவுடையான் என்னும் தொடர்கள் இடம் பெற்றுள்ளதைப் பண்டாரத்தார் எடுத்துக் காட்டுகிறார் எனவே, இன்று வழங்கும் திருவாளர் என்னும் சொல் பழைய வழக்கு என்பது தெளிவாகிறது. இச்சொல்லினை இக்காலத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர் வழக்கிற் கொணர்ந்து நிலைபெறச் செய்துள்ளனர் என்பதனையும் இவர் நன்றியுணர்வோடு நினைவு கூர்ந்துள்ளார் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். புடவை இந்நாளில் புடவை என்பது பெண் மக்கள் உடுத்தும் உடையைக் குறிக்கும் என்பது யாவரும் அறிந்ததே. ஆயினும் உத்தமசோழனின் செப்பேடு ஒன்றில் காணப்படும் ....ntjபிராமணன் ஒருவனுக்கு நெல் பதக்கம் இவனுக்கு புடவை முதல் (44) ஓராட்டை நாளைக்குப் பொன்ஐங் கழஞ்சும்... நந்தவன உழைப்(48)பார் இருவர்க்கு நிகதம் நெல் குறுணி நானாழியும், இவர்களுக்குப் புடவைக்குப் பொன் கழஞ்சும்... என்னும் தொடரின் மூலம் அக்காலத்தில் ஆண்மக்கள் உடுத்திய உடையும் புடவை என்றே வழங்கி வந்தது என அறிய முடிகிறது எனப் பண்டாரத்தார் விளக்குகிறார். காயம் இந்நாளில் காயம் என்னும் சொல் பெருங்காயம் என்ற பொருளில் வழங்கி வருகிறது. ஆயினும் பழந்தமிழ் நூல்களில் அச்சொல் இப்பொருளை உணர்த்தவில்லை. நாலடியார், பரிமேலழகர் உரை ஆகியனவற்றில் காயம் என்னும் சொல் பயின்று வருவதை எடுத்துக் காட்டும் பண்டாரத்தார், அவை உணர்த்தும் காயம் என்பதன் பொருள் யாது என்பதனை நெல்லை மாவட்டம் திருச்செந்தூர்க் கல்வெட்டுத் தொடர் ஒன்றின் மூலம் விளக்கம் பெறச் செய்கிறார். அக்கல்வெட்டில் காயம் என்பது மிளகு, சீரகம், மஞ்சள், சிறுகடுகு, கொத்தமல்லி ஆகிய ஐந்தனுள் ஒவ்வொன்றையும் சுட்டும் சொல்லாகக் குறிப்பிடப்பட்டள்ளதை அவர் எடுத்துக் காட்டுகிறார். எனவே காயம் என்னும் சொல் முற்காலத்தில் மேற்கண்ட ஐந்து பொருள்களையும் தனித்தனியே குறித்திருக்கிறது என்பது தெளிவு. துடிக்குறி சோதிடங்களின் மூலம் முக்கால நிகழ்வுகளையும் நம்மனோர் அறிந்து வருவது நாமறிந்ததே. அதுவன்றிக் கண், தோள், மார்பு முதலிய உறுப்புக்கள் துடித்தலினாலும் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் இன்ப துன்பங்களை அறிந்து கொள்ளலாம் என்பதனை இலக்கியங்களில் காணப்படும் சான்றுகளின் மூலம் ஆய்ந்துரைப்பதுதான் துடிக்குறிஎன்னும் அவரது கட்டுரையாகும். கம்பராமாயணத்தில் சீதாபிராட்டிக்கும், மகாபாரத்தில் பாண்டுவின் மகனாகிய பார்த்தனுக்கும், சிலம்பில் கண்ணகி மற்றும் மாதவிக்கும் உடலுறுப்புக்கள் துடித்ததை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்த பண்டாரத்தார், ஆண்பாலர்க்குக் கண் தோள் முதலியன இடத் திற்றுடித்தால் தீமையும் வலத்திற்றுடித்தால் நன்மையு முண்டாகு மென்பதும் பெண்பாலர்க்கு இடத்திற்றுடித்தால் நன்மையும் வலத் திற்றுடித்தால் தீமையுண்டாகுமென்பதும் நன்கு விளங்கும் என்று எழுதுகிறார். புறநாட்டுப் பொருள்கள் அறிஞர் பண்டாரத்தார் புறநாட்டுப் பொருள்கள் என்னும் தலைப்பில்தாம்எழுதியுள்ளகட்டுரைஒன்றில்,அயல்நாடுகளிலிருந்துநம்நாட்டிற்குஅறிமுகப்படுத்தப்பட்டபொருள்களாகவெற்றிலை,சர்க்கரை, Äளகாய்,f¤தரிக்காய்,கh¥பி,தேÆலை,உருiளக்கிழங்கு,புfயிலைஎன்gவற்றைக்குறி¥ãடுகிறார். வெறு + இலை என்பது வெற்றிலையாயிற்று எனக் குறிப்பிடும் இவர், சமைத்தற்குப் பயன்படாத இலை என்பது இதன் பொருள் எனவும் எழுதுகிறார். இது, மலேயாவிலிருந்து இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டிற்குக் கொண்டுவரப் பட்டதாகக் குறிப்பிடுகிறார். மிளகாய் என்னும் பொருள் 400 ஆண்டுகளுக்கு முன்பாகத் தென் அமெரிக்காவிலுள்ள சில்லி என்ற மாகாணத்திலிருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதென்றும், சுவையில் இது மிளகைப் போல் உறைப்பாய் இருத்தலால் தமிழ் மக்கள் இதனை மிளகுகாய் என வழங்கத் தொடங்கினர் என்றும் பண்டாரத்தார் எழுதுகிறார். இராசராசன், குலோத்துங்கன் முதலான சோழ மன்னர்கள் சர்க்கரை, மிளகு, சீரகம், புளி முதலியவற்றை வாங்குவதற்குத் திருக்கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டிருந்தும் அவற்றில் மிளகாய் மாத்திரம் காணப்படாமைக்குக் காரணம், அந்நாளில் நம் தமிழகத்தில் அஃது இல்லாமையேயாகும் என்று இவர் குறிப்பிடுவது கருதத் தக்கதாகும். கத்தரிக்காய் என்னும் காய் அமெரிக்காவிலிருந்து மரக் கலத்தின் வழியாய் வங்காளத்திற்குக் கொண்டு வரப்பட்டுப் பிறகுத் தெலுங்கு நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் வந்தது என்று இவர் எழுதுகிறார். அதுபோன்றே காப்பி எனப்படுவது அரேபியாவிலிருந்து பிரெஞ்சு தேயத்திற்கும் பின்னர்ப் பிரெஞ்சு தேயத்திலிருந்து தமிழ் நாட்டிற்கும் வந்தது என்றும், தேயிலை எனப்படுவது சீன தேயத்திலிருந்து ஆங்கில நாட்டிற்கும் பின்னர் ஆங்கில நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தது என்றும் இவர் எழுதுகிறார். உருளைக்கிழங்கு என்னும் பொருளானது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கும் பின்னர் ஐரோப்பாவிலிருந்து 100 ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழகத்திற்கும் கொண்டு வரப்பட்ட பொருளாகும் என்று எழுதுகிறார். அதுபோன்றே புகையிலை என்பதுங்கூட அமெரிக்காவின் பிரேசில் என்ற நாட்டிலிருந்து கி.பி.1617-இல் நம் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட பொருளாகும் என அவர் குறிப்பிடக் காணலாம். அறிந்த செய்தியைப் பதிவு செய்தல் தாம் கேட்டறிந்த முக்கியமான செய்திகளைப் பதிவு செய்தல் வேண்டும் என்பதிலும் பண்டாரத்தார் மிகுந்த கவனம் செலுத்தியிருக் கிறார். இதற்குச் சான்றாக வழுக்கி வீழினும் என்னும் தலைப்பில் அவரெழுதியுள்ள கட்டுரையை இங்கு எடுத்துக் காட்டலாம். அக்கட்டுரை யின்கண் இடம் பெற்றுள்ள செய்தியானது ஒரு கதையைப் போன்று அமைந்துள்ளது. அஃதாவது, தமது ஆசிரியரான வலம்புரி பாலசுப் பிரமணியப் பிள்ளை கூறிய ஒரு நிகழ்வை அந்தக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். மனத்தை ஒருமுகப்படுத்துவது என்பது யாது என்பது குறித்து விளக்குவது அக்கட்டுரையாகும். முடிவுரை தமிழ்ச் சொற்களின் தோற்றம், வளர்ச்சி, கல்வெட்டுக்களின் மூலம் அறியப் பெறும் தமிழ் எழுத்துக்களின் தோற்றம், வளர்ச்சி, இலக்கியத்தில் விளக்கம் பெற வேண்டிய சில சொற்கள், விளக்கம் பெற வேண்டிய கல்வெட்டுச் சொற்கள் மற்றும் தொடர்கள், தமிழர் வழிபாட்டில் விளக்கம் பெற வேண்டிய பகுதிகள், தமிழரின் அன்றாட வாழ்வியலோடு தொடர்புடைய விளக்கம் பெறவேண்டிய சில செய்திகள் முதலானவற்றை வரலாற்று நோக்கில் பண்டாரத்தார் ஆய்ந்து உரைத்துள்ளமையினை இக்கட்டுரையின் மூலம் விளங்கிக் கொள்ள முடிகிறது. மேலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் என்று தாம் அறிந்த அனைத்தையும் பதிவு செய்தவர் பண்டாரத்தார் என்பதும் இக்கட்டுரையின் முடிவாகும். இணைப்பு 1 அறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய நூல்கள் தொல்காப்பியப் பாயிரவுரை சைவ சிகாமணிகள் இருவர் (வலம்புரி அ.பாலசுப்பிரமணியப் பிள்ளையுடன் இணைந்து எழுதியது) முதல் குலோத்துங்க சோழன் பாண்டியர் வரலாறு பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1 திருப்புறம்பயத் தல வரலாறு இலக்கியஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் கல்வெட்டுக்களால் அறியப் பெறும் உண்மைகள் காவிரிப்பூம்பட்டினம் செம்பியன் மாதேவித் தல வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு ( கி.பி.250-600) தமிழ் இலக்கிய வரலாறு ( 13, 14, 15 ஆம் நூற்றாண்டுகள்) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2 பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் (அ.ம.சத்திய மூர்த்தி - தொகுப்பு) கட்டுரைகள் அகநானூற்றின் உரையாசிரியரது ஊர் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 19, பரல் 7 , 1941-42 அஞ்சு வண்ணம் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 22 பரல் 12 ஆகடு 1948 அதிகமான் நெடுமானஞ்சி செந்தமிழ்த் தொகுதி தொகுதி 13, பகுதி 9 மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை ஜூலை - ஆகடு 1914 அறந்தாங்கி அரசு, தமிழ்ப்பொழில் துணர் 16 மலர் 5, கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர் அன்பைப் பற்றிய பாடல்கள், செந்தமிழ்த் தொகுதி 14, பகுதி 3, ஜனவரி-பிப் 1916 இடவையும் இடைமருதும் செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 24, பரல் 3, நவம்பர் 1949 இரங்கலுரை, செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 28, 1953-54 ( பண்டிதமணி மறைவின்போது எழுதியது) இருபெரும்புலவர்கள் தமிழ்ப்பொழில் துணர் 34, மலர் 11, பிப்-மார்ச் 1959 (விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர் பற்றியது) இளங்கோவடிகள் குறித்துள்ள பழைய சரிதங்கள், செந்தமிழ்த் தொகு 13, பகுதி 6, ஏப்-மே, 1915 இளம்பூரண அடிகளும் மணக்குடவரும் செந்தமிழ் .............. உலாக் கொண்ட மூன்று சோழ மன்னர்கள் தமிழ்ப்பொழில், துணர் 5, மலர் 11, 12, 1929-30 எழுத்து-தமிழ் எழுத்துக்கள் கலைக்களஞ்சியம் - தொகுதி 2, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை - 1955 எனது ஆராய்ச்சியற் கண்ட சில செய்திகள், தமிழ்ப் பொழில் துணர் 7, மலர் 12, பங்குனி - பிரஜோத்பத்தி எனது ஆராய்ச்சியிற் கண்ட சில செய்திகள் தமிழ்ப் பொழில் துணர் 12, மலர் 8, 1936-37 ஏர் என்னும் வைப்புத் தலம் தமிழ்ப் பொழில் துணர் 10, மலர் 6, 1934-35 ஏர் என்னும் வைப்புத் தலம் செந்தமிழ்த் தொகுதி 41, பகுதி 6, 7, 8 ஏப்-ஜுலை 1944 ஒட்டக்கூத்தர் கலைக்களஞ்சியம் தொகுதி 2 , தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை 1955 ஓரி தமிழ்ப்பொழில், துணர் 1, மலர் 10, தை, குரோதன கணம்புல்ல நாயனாரது திருப்பதி செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 21, 1942-43 கம்பர் காலம் ... கரந்தைத் தமிழ்ச் சங்கச் செப்பேடுகள் தமிழ்ப்பொழில் , துணர் 33, மலர் 3, சூன்-சூலை 1957 கலிங்கத்துப் பரணி கலைக்களஞ்சியம் தொகுதி 3. தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை 1956 கல்லாடமும் அதன் காலமும் செந்தமிழ்த் தொகுதி 15, பகுதி 3, ஜன - பிப்ர 1917 கல்வெட்டுக்களால் அறியப்படும் சில தமிழ்ப் புலவர்கள் தமிழ்ப் பொழில், துணர் 5, 1929-30 கல்வெட்டுக்களால் அறியப்படும் சில தமிழ்ப் புலவர்கள் தமிழ்ப் பொழில் , துணர் 5 , 1929-30 கல்வெட்டுக்களால் அறியப்படும் சில தமிழ்ப் புலவர்கள் செந்தமிழ்த் தொகுதி 29, பகுதி 9, ஜூலை- ஆகடு 1931 கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று தமிழ் நூல்கள் செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 21, 1942-43 கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று தமிழ் நூல்கள் செந்தமிழ்த் தொகுதி 43 காளமேகப் புலவரது காலம் தமிழ்ப்பொழில், துணர் 7, மலர் 12, 1931-32 கிராமம் செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 28, 1953-54 கும்பகோணம் நாகேச்சுரரது திருக்கோயிலிலுள்ள சில கல்வெட்டுக்கள் தமிழ்ப்பொழில், துணர் 6, மலர் 6,7,8 1930-31 கூத்தராற் குறிக்கப் பெற்ற சில தலைவர்கள், தமிழ்ப்பொழில், துணர் 14... கோவிந்தபுத்தூரிலுள்ள திருவிசயமங்கைக் கல்வெட்டுக்கள் தமிழ்ப்பொழில் துணர் 7, மலர் 7 ஐப்பசி -பிரஜோத்பத்தி சம்புவராய மன்னர், தமிழ்ப்பொழில், துணர் 2, மலர் 3, 4 கார்த்திகை - அட்சய சாசனவியல் - தமிழ் சாசனங்கள் கலைக்களஞ்சியம் - தொகுதி 4, தமிழ் வளர்ச்சிக் கழகம் , சென்னை 1956 சுந்தரமூர்த்திகளது காலம் தமிழ்ப்பொழில் துணர் 3, மலர் 6, 7, 8 1927-28 செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள் தமிழ்ப்பொழில், துணர் 12, மலர் 4, 1936-37 செருத்துணையாரும் புகழ்த்துணையாரும் அவதரித்த திருப்பதிகள் செந்தமிழ்த் தொகுதி 48, 1950-52 சொல் வரலாறு செந்தமிழ்ச் செல்வி , சிலம்பு 23, பரல் 6 சோழர்களும் இராஷ்டிரகூடர்களும் சோழர்களும் தமிழ் மொழியும் தமிழ்ப் பொழில் துணர் 14, மலர் 7 சோழர்குடி , செந்தமிழ்த் தொகுதி 13, பகுதி 5, ஏப்.1915 ‘nrhH‹ fÇfhy‹’ brªjÄœ¤ bjhFâ12, gFâ 2, or«.-1913-1914 (இதுவே அவரெழுதிய முதல் கட்டுரையாக இருத்தல் வேண்டுமூ என்று கருதப்படுகிறது) சோழன் செங்கணான் செந்தமிழ்த் தொகுதி 12, பகுதி 5, மார்ச் - ஏப் 1914 தஞ்சாவூர் -(திருச்சி வானொலியில் ஆற்றிய உரை) தமிழிசை வளர்ந்த வரலாறு தமிழிசைச் சங்கம் ...1948-49 தமிழ் இலக்கியச் சரிதச் சுருக்கம், பாரதி - ஆறாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர், தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை -1958 தமிழ் எழுத்துக்கள் தமிழ் முனிவர் அகத்தியர் தமிழ்ப்பொழில், துணர் 33, மலர் 8, நவம்-டிசம்.1957 திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டுகள் தமிழ்ப்பொழில், துணர் 5, 1929-30 திருக்கைக் கோட்டி, தமிழ்ப்பொழில், துணர் 16... திருச்சிராப்பள்ளி (திருச்சி வானொலியில் ஆற்றிய உரை) திருப்புறம்பயத்துக் கல்வெட்டுக்கள் தமிழ்ப்பொழில், துணர் 1, மலர் 4, ஆடி - குரோதன திருப்புறம்பயத்துக் கல்வெட்டுக்கள் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 3, பரல் 1, 1925 -26 திருப்புறம்பயம் செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 26, 1951-52 திருமலை வெண்பா தமிழ்ப்பொழில் , துணர் 5, மலர் 7, 8, 1929 -30 திருவள்ளுவரும் ஞானவெட்டியும் செந்தமிழ்த் தொகுதி 14, பகுதி 47, பிப்-மார்ச் 1916 திருவிளையாடற் புராணம் 64-ஆவது படல ஆராய்ச்சி செந்தமிழ்த் தொகுதி 12, பகுதி 7, மே=சூன் 1914 திருவெள்ளறைக் கல்வெட்டு, செந்தமிழ்த் தொகுதி 41 திருவைகாவூர்ச் சாசனம் செந்தமிழ்த் தொகுதி 15, பகுதி 5, மார்ச் - ஏப். 1917 துடிக்குறி செந்தமிழ்த் தொகுதி 12, பகுதி 5, மார்ச் - ஏப்.1914 தூங்கானை மாடம் தமிழ்ப்பொழில், துணர் 34, மலர் 1, ஏப்.மே.1958 தேவாரப் பதிகங்களிற் குறிக்கப் பெற்ற சில கோயில்களின் பெயர்க் காரணம் தமிழ்ப்பொழில், துணர் 15 தேவாரம் என்னும் பெயர் வழக்கு செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 23, பரல் 8, 1948-49 தொண்டைமான் சாசனம் செந்தமிழ்த் தொகுதி 12, பகுதி 11, செப்-அக்.1914 நந்தனாரது ஆதனூர், தமிழ்ப்பொழில், துணர் 16 நம்பியாண்டார் நம்பி காலம் செந்தமிழ் பதிற்றுப்பத்தும பதிகங்களும் பதிற்றுப்பத்து மூலமும் உரையும், கழகம், சென்னை ஆ.ப.1923 (ஔவை சு.துரைசாமிப் பிள்ளை உரை) பத்துப்பாட்டும் கல்வெட்டுகளும் செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 26 1951-52 பரணி கலைக்களஞ்சியம் - தொகுதி 6, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை - 1959 பழைய காலத்திய இரு பெருஞ் கிணறுகள் தமிழ்ப் பொழில், துணர் 8, மலர் 10, 1932-33‘giHahiw நகர், செந்தமிழ்த் தொகுதி 43, பகுதி 4, 5 பாண்டியர் வரலாறு ஐ ஐஐ தமிழ்ப்பொழில், துணர் 4, மலர் 3, 4 1928-29 ( இந்த இதழிலிருந்துதுன் பாண்டியர் வரலாறு தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து வெளிவருகின்றன. அதனைத் தொடர்ந்து செந்தமிழ்த் தொகுதி 32, 33 ஆகியவற்றிலும் பாண்டியர் வரலாறு தொடர்பான கட்டுரைகள் வெளிவந்துள்ளன) ‘òweh£L¥ bghUŸfŸ’ jÄœ¥bghÊš, Jz® 4, ky® 10, 11.,12 1928-29 புறநானூறும் கல்வெட்டுக்களும் புறநானூற்றுச் சொற் பொழிவுகள், கழகம், சென்னை - 1944 பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி செந்தமிழ்த் தொகுதி 21, பகுதி 10, ஆகடு - செப். 1923 பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி தமிழ்ப்பொழில் , துணர் 4, மலர் 3, 4 , 1928-29 பெருமிழலைக் குறும்ப நாயனாரது திருப்பதி செந்தமிழ்ச் செல்வி , சிலம்பு 8, பரல் 4, ஏப்-மே- 1930 மழவர் வரலாறு தமிழ்ப்பொழில் துணர் 1, மலர் 1 சித்திரை - குரோதன மழவர் வரலாறு தமிழ்ப்பொழில் துணர் 2, மலர் 1,2, மாற்பிடுகு பெருங்கிணறு செந்தமிழ்த் தொகுதி 43, மிழலை நாடும் மிழலைக் கூற்றமும் செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 23, பரல் 11.... முதற் கண்டராதித்த சோழ தேவர் செந்தமிழ்த் தொகுதி 21, பகுதி 8, ஜூன் - ஜூலை 1923 முதற் குலோத்துங்க சோழ தேவன் தமிழ்ப்பொழில், துணர் 2..... ( இக் கட்டுரையின் தொடர்ச்சியினைத் தொகுதி 3 பகுதி 2.3 தொகுதி 3 பகுதி 4,5 ஆகிய இதழ்களிலும் காண முடிகிறது.) முதுகண்ணும் தலைக்கோலும் தமிழ்ப்பொழில் துணர் 9 வரவேற்புரை வன்னிகுல ஷத்திரிய மாநாடு, தேப்பெருமாள் நல்லூர், 27.2.1939 வழுக்கி வீழினும் தமிழ்ப்பொழில் துணர் 33, மலர் 1 ஏப்-மே -1957 வாதவூரடிகள் காலம்.............. விநாயகர் வழிபாடும் தமிழ்நாடும் தமிழ்ப்பொழில துணர் 15 விரையாக் கலியும் விடேல் விடுகும் தமிழ்ப்பொழில் துணர் 10, மலர் 10 1934-35 வீர சைவர்களின் தமிழ்த்தொண்டு சிவஞான பாலய சுவாமிகள் மணிவிழா மலர், மணி விழாக் குழு மயிலம், 12.8.1954 வேம்மையர் கோன் நாராயணன் இயற்றிய சிராமலை அந்தாதி தமிழ்ப்பொழில், துணர் 11, மலர் 1, 1935-36. இணைப்பு இரங்கற் பாக்கள் மொண்டார மாணவர்கள்பருகுவதோர் முத்தமிழின் பொய்கை! யாவும்கொண்டாரும் கொளவிரும்பும்அருங்குணங்கள் தமிழ்ப்பற்றும் கொண்ட மேலோர் ,.....அன்பினொடு குழைந்துவர இனிது பேசும் பண்டாரத் தார்போன்றார் பண்டில்லை இன்றில்லை இனியும் அஃதே - குயில் பண்டாரத் தாரென்று பாவலரும் நாவலரும் கண்டாரத் தாரணியிற் கற்றவர்க்கே - தண்டாரத் தின்புதல்வர் நட்பயலார் ஏங்கத் திருக்கூத்தின் அன்புதவ நல்கடியுற் றார். நல்லெழுத்துச் சொல்லழுத்தம் நல்லமுடி வாராய்ச்சிக் கல்லெழுத்தும் உச்சியயன் கையெழுத்தும் - பொல்லெழுத்து பெற்ற சதாசிவனாம் பேராசான் போலுலகில் உற்ற புலவர் ஆர்? ஓது - முத்து சு.மாணிக்கவாசக முதலியார், தருமையாதீனம் திருக்கோயிற் கல்வெட்டைப் படித்தாய்ந்தே தெள்ளுதமிழ் மொழியினிலே பெயர்த்தெழுதி இருண்டகா லம் போன்ற நூலாலே இன்றமிழ் அறிஞரினைக் கவர்ந்தேதான் உருவிற்கெளி தானசதா சிவப்பெரியோய்! உண்மைவடி விறைவனிடம் விரைந்தாயோ? விருப்புடனே உள்ளவரார் இனியிங்கே திருக்கோயிற் கல்வெட்டை எழுதிடவே! -பொ.திருஞானம், வெண்பாவூர் (இப்பாடல்கள் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 34, பரல் 6, பிப் - 1960 என்னும் இதழில் இடம் பெற்றவை) 1. முழங்குகடல் சூழ்குமரி நாட்டினிலே முகிழ்த்தறிவு மொய்ம்பு தாங்கி வழங்குமொழி யாவினுமுன் வளம்படைத்து வயங்குமெழில் மாட்சி ஏந்தித் தழங்குநறுஞ் செந்தமிழிற் சமைந்தவர லாறிலெனும் சழக்கு நீங்க ஒழுங்குபெற ஓதியுல கொப்பவர லாறுரைத்த ஒருவ! அந்தோ! 2. மறைந்ததனால் மறைத்ததனால் வண்டமிழின் மாட்சியெல்லாம் மறந்து சீர்த்தி குறைந்திருந்த தமிழரெலாம் குமுறிஎழத் தமிழர்பழங் கோளெ டுத்து நிறைந்தபெரும் புலமையறி வாய்வுரையால் வரலாற்றின் நிலைமை யாவும் அறைந்ததமிழ் அறிஞ! சதாசிவப்பெரியோய் மறைந்தனையோ அந்தோ! அந்தோ! 3. தேவேந்தி அறம்புரிந்த செப்பேடு கல்வெட்டுச் செலவு நூல்கள் பாவேந்தர் உரைத்ததொகைப் பாக்களொடு பைந்தமிழ்நூற் பரப்பில் நீந்தி மூவேந்தர் ஆட்சிபிறர் முயற்சியெலாம் உரைத்ததமிழ் முதல்வ! உன்னைச் சாவேந்திச் சென்றதெனில் தமிழர்படுந் துயரெடுத்துச் சாற்றப் போமோ. 4. தகுதியறிந் தெந்தமிழவேள் நினது பெருஞ் சால்புணர்த்தத் தமிழ்ப்பொ ழிற்கண் பகுதிபெறப் பாண்டியர்தம் பண்டைவர லாறெழுதப் பணித்து நட்பின் மிகுதியினால் மேம்படுத்த மேலோய்சொல் லெளிமையறம் மேவி ஆன்றோர் தொகுதியிலே விளங்கியநற் றோன்றலுனை இழந்ததுயர் சொல்லப் போமோ 5. முருகியசெந் தமிழ்அண்ணா மலையரசர் முயன்றமைக்க முறையால் நாளும் பெருகியபல் கலைக்கழகத் தாராய்ச்சித் துறையிலரும் பேரா சானாய்ப் பரவுநறும் புகழ்வளர்க்கும் பண்டாரத்தார் எனவே பாரோர் போற்ற அரியபல தொண்டாற்றி அமைந்தபுகழ் அண்ணால்நீ மறைந்தாய் அந்தோ! - ச.பாலசுந்தரம் கரந்தைத் தமிழ்ச் சங்கம் (இப்பாடல்கள் தமிழ்ப்பொழில் துணர் 35, மலர் 10, ஜன-பிப் 1960 என்னும் இதழில் இடம் பெற்றவை) ஆராய்ச்சியாளர் சதாசிவப் பண்டாரத்தார் பேட்டிக் கட்டுரை: மு.அண்ணாமலை அண்ணாமலை நகர் பண்டிதர் குடியிருப்பிலிருந்து ஒரு வயதான மனிதர் கையில் ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு தொப் தொப் பென்று மெதுவாக அடியெடுத்து வைத்து நூல் நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருப்பார். ஒட்டி உலர்ந்த உடல் - வழுக்கையான தலை - அதிலே ஒன்றிரண்டு மயிர்கள் - ஆராய்ச்சியாளர் சதாசிவப் பண்டாரத்தாரின் தோற்றத்தைப் பற்றி வர்ணிப்பதென்றால் இப்படித்தான் எழுதலாம். வட இந்தியாவின் வரலாறே இந்தியாவின் வரலாறாகக் கொண்டு, தென்னாட்டின் சரித்திர உண்மைகளைக் கைவிட்ட நாளிலே, தமிழர்களின் வரலாறு ஆராய்வாரின்றி மறைந்து கிடந்த வேளையிலே, சிலர் கல்வெட்டுக்களின் துணைகொண்டு வரலாறுகளை எழுதத் தொடங்கினார்கள். அவ்வாறு எழுந்த நீண்ட வழியிலே சதாசிவப் பண்டாரத்தார் சென்றார். குறிப்பிடத்தக்க புகழை அடைந்தார். அவரைப் பேட்டி காணுவதற்காக நான் - அவரது இல்லத்தை அடைந்தேன். என்னுடன் நண்பர் அங்கப்பன் வந்தார். ஆன்றமைந்த அந்த முதியார் இதழிலே புன்னகை சேர்த்து, கைகூப்பி வரவு காட்டினார். அவர் தோற்றம் தமிழின் அமைதிக்கு எடுத்துக்காட்டாக நின்றது. நான் : பிள்ளையார் சுழியோடு சைவர்கள் எதையும் தொடங்குவார்கள் அல்லவா? அதைப்போல நானும் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? என்ற கேள்வியுடன் இந்தப் பேட்டியைத் தொடங்கு கிறேன். அவர் : (சிரித்துக் கொண்டு) உண்டு நான் : மதத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் : மதம் மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்ற கருத்தைத்தான் கொண்டிருக்கிறேன். நான் : கடவுள் நம்பிக்கை இல்லாதவனைப் பற்றி நீங்கள் கருதுவதென்ன? அவனை நீங்கள் வெறுப்பதுண்டா? அவனிடம் திறமையிருந்தால் மெச்சி வரவேற்பீர்களல்லவா? அவர் : ஒருக்காலும் வெறுக்கமாட்டேன். எப்பொழுதும் திறமைக்கு மரியாதை செய்வேன். அறிவுடைமை பொதுவாயிற்றே! நான் : இப்பொழுதிருக்கும் ஸ்ரீலஸ்ரீ சன்னிதானங்கள் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கு நன்மை விளைவித் திருப்பதாக நினைக்கிறீர்களா! அவர் : இப்பொழுதிருக்கும் சன்னிதானங்களைத்தானே கேட்கிறீர்கள்! ஓரளவு.... நான் : ஓரளவு என்றால் அவர்கள் செய்ததில் அவ்வளவு திருப்தியில்லை என்றுதானே பொருள்? அவர் : செய்தன குறைவு, இன்னும் நிறைய அவர்கள் செய்ய வேண்டும். நான் : பழம் பண்டிதர்களால் தமிழுக்கு வளர்ச்சி ஏற்படுமா? புதுமையாளர்களால் தமிழ் வளர்ச்சியுறுமா? அவர் : இரு வகையினராலும், ஆக்கிய பழைய இலக்கியங் களைப் பண்டிதர்கள் காக்கிறார்கள். புதுமையாளர்கள் ஆக்குகிறார்கள். குற்றமற்ற மொழி நடையோடு கூடிய புதுமை நோக்கைத்தான் ஆதரிக்க வேண்டும். நான் : பழைமை - புதுமை; இவ்விரண்டில் உங்களை எந்த வகையில் சேர்க்கிறீர்கள்? அவர் : எல்லாப் பழமையும் நல்லனவென்றும் நான் சாதிப் பதில்லை. புதுமையே வேண்டாம் என்ற பிடிவாதமும் என்னிடம் இல்லை. இரண்டிலுமுள்ள நன்மையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் : பொதுவாக மனிதர்கள் வயதான பின்னர்ப் பெரும் பாலும் சமயத்துறையில் உள்ளத்தை ஈடுபடுத்துகிறார்கள்; அரசியல், இலக்கியம் ஆகியவற்றினின்று விடுதலை பெற்று ஒதுங்கி விடுகிறார்களே! அதுபோல் தாங்கள்........ அவர் : தமிழ்நாட்டிற்கும், தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டியன இன்னும் நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்பவில்லை. நான் : சரி, சமயத்தில் நீங்கள் எந்த நெறியைத்தான் கடைப் பிடிக்கிறேன். அவர் :நான்தானே! சமயத்துறையில் அன்பு நெறியைத்தான் கடைப்பிடிக்கிறேன். நான் :சமயத்தில் சீர்திருத்தம் நுழைவது சரிதானா? அவர் :புகத்தான் வேண்டும். சமயத்தில் சீர்திருத்தம் புகுந்து கொண்டுதான் வந்திருக்கிறது. அது வரலாற்று உண்மையாயிற்றே! நான் :கல்வெட்டு, சாசனங்கள், பண்டைய சிற்பங்கள் முதலிய வற்றைக் கண்டுபிடித்து, வரலாற்று முறையை ஆராய்வதற்கு அரசாங்கம் நிறையத் துணையும் வழியும் செய்திருக்கிறதா? அவர் :அரசாங்கம் என்றால் இப்பொழுதிருக்கும் அரசாங் கத்தையா குறிப்பிடுகிறீர்கள்? நான் :ஆமாம். இல்லையென்றால் நீங்கள் எதைக் குறிப் பிடுகிறீர்கள்? அவர் :அப்பொழுதிருந்த அரசாங்கம் இந்தப் பழைய ஆராய்ச்சி சாதனங்களிலும், கலைப்பொருள் காப்பிலும் அதிகம் கருத்தூன்றியது. தென்னாட்டைப் பொறுத்தமட்டில் இப்பொழுதுள்ள அரசு வாளாதிருந்து வருகிறது. சகல ஆராய்ச்சியும் வடநாட்டில்தான் நடக்கிறது. நான் :தங்களின் வாழ்க்கையை ஒரு வெற்றியாகக் கருது கிறீர்களா அல்லது தோல்வியாக மதிப்பிடுகிறீர்களா? அவர் :முழு வெற்றியாக.... நான் : வாழ்வில் அடைய வேண்டிய அனைத்தையும் தாங்கள் அடைந்து விட்டதாகத் திருப்பித அடைகிறீர்களா அல்லது அடைய வேண்டுவன இன்னும் எஞ்சி இருப்பதாக நினைக்கிறீர்களா? அவர் : பெரும்பாலும் அடைந்துவிட்டதாகவே கருதுகிறேன். நான் : நீங்கள் செய்த தமிழ்த் தொண்டுகளுக்குத் தமிழ்நாடு தக்கதொரு வரிசை செய்திருக்கிறதா? முதலில் தமிழ்நாடு புரிந்து கொண்டாவது இருக்கிறதா? அவர் : தமிழ்நாடு புரிந்த கொள்ளவில்லை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. நான் : தாங்கள் இப்பொழுது அடைந்திருக்கும் பணி தங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அவர் : பிடிக்காமலென்ன? மகிழ்வாகவே இருக்கிறேன். சூழ்நிலை; இந்தப் பல்கலைக் கழகத்துக்கென அமைந்த பெரிய நூல்நிலை யம்; நல்ல நண்பர்கள் எல்லாம் வாய்க்கப் பெற்றிருக்கும்போது என்ன குறைக்கு இடமிருக்கிறது? நான் : நண்பர்களின் பெயர்களைக் குறிப்பிடுவீர்களா? அவர் : இதோ, என்னருகே இருக்கும் இந்த வெள்ளை வாரணர், ஔவை சு.துரைசாமிப்பிள்ளை, ஜி.சுப்பிரமணியப் பிள்ளை நான் : இதைவிடப் பெரிய பதவி கிடைத்தால் என்ன செய்வீர்கள்? அவர் : அதை நான் எதிர்பார்த்தால்தானே! நான் : இப்பொழுது இயங்குகின்ற அரசியல் கட்சிகளில் தமிழ் மொழிக்கு நன்மை செய்யக் கூடிய கட்சியாக எக்கட்சியைக் குறிப்பிடு கிறீர்கள்? அவர் : (சிரித்துக்கொண்டே) மறுமொழி கூற முடியாதபடி கேட்டு விட்டீர்களே. எக்கச்சக்கமான கேள்வி. நான் : வரப்போகும் தேர்தலில் எத்தகைய கொள்கையுடைய அரசாங்கம் வெற்றிபெற வேண்டுமென்று விரும்புகிறீர்கள்? அவர் : தமிழ் தாய்மொழியாக, தமிழர் நலமே தன்னலமாகக் கொள்ளும் அரசாங்கம்தான் தேவை. நான் : தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் தமிழுக்கு ஆக்கம் தானே? அவர் : அதிலே சந்தேகம் என்ன? நான் : தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தாங்கள் ஏதாவது யோசனை கூறுகிறீர்களா? அவர் : அறிவியல் நூல்கள் அதிகம் வரவேண்டும். தமிழுக் குழைத்தவர்கள் தமிழ்ப் புரவலர்கள் ஆகியோருடைய வரலாறு சரியான முறையில் எழுதப்பட வேண்டும். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இந்த நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்து சென்ற பெருமக்களான சுந்தரம் பிள்ளை, அரசஞ் சண்முகனார், பாண்டித்துரைத் தேவர், மாணிக்க நாயகர் இன்னும் பலரின் வாழ்க்கை வரலாறுகள் விரிவாக எழுதப்பட வேண்டும். நான் : தமிழ் இலக்கியத் துறைக்குத் தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொண்டு என்ன? அவர் : எல்லாத் தமிழ்ப் புலவர்களின் காலத்தையும் சரியாக வரையறுத்துக் கூற முயன்று கொண்டிருக்கிறேன். நான் : இதுவரை.... அவர் : வரலாற்று நோக்கோடு ஆராய்ந்தபோது சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியவர்களின் காலத்தைத் தெளிந்தறிய வாய்ப்புக் கிடைத்தது. இதுவரையிலும் ஆராய்ச்சியாளர்கள் சுந்தரர் காலத்தை ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்று கூறினார்கள். நான் ஏழாம் நூற்றாண்டின் இறுதியும் எட்டாம் நூற்றாண்டின் முதலும் எனக் காட்டியிருக்கிறேன். மற்ற ஆய்வாளர் நம்பியாண்டார் நம்பிகளை முதல் இராசராசன் காலமெனவும், சேக்கிழாரை இரண்டாம் குலோத்துங்கள் காலமெனவும் கூறினர். நான் நம்பியாண்டார் நம்பிகளது காலம் ஆதித்தன் காலமெனவும், சேக்கிழார் காலம் மூன்றாம் குலோத்துங்கனின் காலமெனவும் கூறியிருக்கிறேன். நான் : தாங்கள் எழுதிய நூல்கள்......... அவர் : முதலாம் குலோத்துங்கன், பாண்டியர் வரலாறு, சோழர் வரலாறு - இரண்டு பகுதிகள் இவற்றை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்டுள்ளனர். மூன்றாம் பகுதி அச்சாகிக் கொண்டிருக் கிறது. பல்கலைக்கழகம் வெளியிடவிருக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருண்ட காலமாகக் கொள்ளப்படும் களப்பிரர் காலத்து இலக்கியங்களின் வரலாற்றை ( மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டு வரை) எழுதியிருக்கிறேன். அது பேராசிரியரின் பார்வைக்குச் சென்றிருக்கிறது. நான் : தமிழ்நாட்டு அரசர்களின் வரலாற்றை எழுதிய நீலகண்ட சாதிரியார் முடிவுகளினின்று தாங்கள் பல இடங்களில் வேறுபடுகிறீர்கள் அல்லவா? அவர் : ஆம். நீலகண்ட சாதிரியாரும் மற்ற வரலாற்று ஆராய்ச்சி யாளர்களும் தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் நல்லதொரு பயிற்சி பெறாமை காரணமாகக் கல்வெட்டுக்களில் பல இடங்களைப் பிழைபடப் புறக்கணித்துவிட்டுத் தாங்களே முடிவிற்கு வந்தனர். இராசராச சோழனுக்கு ஆதித்த கரிகாலன் என்னும் ஒரு சகோதரன் இருந்தான். அவன் கொலை செய்யப்பட்டு இறந்தான். அவன் உத்தம சோழனின் சூழ்ச்சியால் இறந்தான் என்று முடிவு செய்தனர். அவர்கள் கல்வெட்டு ஆதாரங்களைச் சரியாக நோக்கவில்லை. ஆதித்த கரி காலனைக் கொன்றது சில பிராமண அதிகாரிகள்என அறியக் கிடக்கிறது. ஒரு சோழன் தன் தந்தையின் கோயிலுக்கு விழா எடுக்கும்போது ஆயிரம் பேர்களுக்கு உணவளித்தான். அவ்வாயிரம் பேரில் ஐநூறு பேர் பல சமயத்தார், முந்நூறு சிவனடியார்கள், இருநூறு பிராமணர்கள் இருந்தார்கள். நீலகண்ட சாதிரியார் ஆயிரம் பேர்களும் பிராமணர் களென்று எழுதிச் செல்கிறார். ஆயிரம் பேர்களிலுள்ள பாகுபாட்டை அவர் எடுத்துக் காட்டவில்லை. நான் : இன்னும்..... அவர் : இலக்கியங்களில் பொருள் காணுதற்கு மயக்க இருந்த பல இடங்களுக்குக் கல்வெட்டுக்களின் உதவியைக் கொண்டு சரியான பொருள் இன்னதுதான் என்று துணிந்திருக்கிறேன். நான் : அரசாங்கம் இப்பொழுது செய்திருக்கும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் : எழுத்துச் சீர்திருத்தம் தேவைதான். வரலாற்று முறையைக் கொண்டு பார்த்தால் கூடத் தமிழ் எழுத்துக்களின் வடிவம் அவ்வப்போது மாறிக்கொண்டேதான் வந்திருக்கிறது. ஆனால் அவை தாமாக ஏற்பட்டவை. இப்பொழுது அரசியலார் செய்யும் சீர்திருத்தம் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. கொஞ்சம் மெதுவாக எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்த லாம். என்றாலும சீர்திருத்தம் வரவேற்கத் தக்கதுதான். நான் : இத்துறையில் தங்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கியவர் யார்? அவர் : நான் உயர்நிலைப்பள்ளியில் நான்காவது படிவத்தில் படித்துக்கொண்டிருந்தபோது நற்றிணைக்கு உரைகண்ட பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் எனக்குத் தமிழாசிரியராயிருந்தார். அவரே எனக்கு முதன்முதலில் இத்துறையில் ஆர்வத்தை உண்டாக்கியவர். இவ்வார்வத்தைப் பின்னர் ஊக்கி வளர்த்தவர் தமிழவேள் உமாமகசுவரம் பிள்ளையாவர். நான் : சோழர் வரலாற்றைத் தாங்கள் விரிவாக எழுதிய அளவுக்குப் பாண்டியர் வரலாற்றை, சேரர் வரலாற்றையும் எழுதவில்லையே! ஏன்? அவர் : சோழநாட்டில் எங்குப் பார்த்தாலும் கோயில்கள். அதனால் நிறைய கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. ஆனால் பாண்டிய நாட்டில் கல்வெட்டுக்கள் மிகக் குறைவு. சேர நாட்டில் அதுதானுமில்லை. இவர் கும்பகோணம் தாலுக்காவிலுள்ள திருப்புறம்பயம் என்னும் ஊரின்கண் வைத்தியலிங்கப் பண்டாரத்தார் என்பாருக்கு ஒரே புதல்வராகத் தோன்றினார். இவருக்கும் ஒரே புதல்வர் உண்டு. அவரது புதல்வரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சரித்திரத்தில் எம்.ஏ.பட்டம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இப்போது சதாசிவப் பண்டாரத்தார் அவர்கட்கு அறுபதாவது ஆண்டு நடந்து கொண்டிருக் கிறது. ஒன்பது ஆண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டு அரசர்களின் வரலாற்றை வரன்முறையாகத் தொகுத்துத் தந்த இவருக்குத் தந்த தமிழ்நாடு என்றும் கடப்பாடுடையது. இப்பேட்டிக் கட்டுரை பொன்னி (மலர் 5 இதழ் 15, 10.10.1951) என்னும் இதழில் இடம் பெற்றதாகும்.