ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1 முதற்குலோத்துங்க சோழன் திருப்புறம்பயத் தல வரலாறு காவிரிப் பூம்பட்டினம் செம்பியன் மாதேவித் தல வரலாறு ஆசிரியர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 17. நூற் குறிப்பு நூற்பெயர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1 ஆசிரியர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 24 + 216 = 240 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 225/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11, குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் 116 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு தோற்றம் : 15.08.1892 - மறைவு : 02.01.1960 தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு உலக அரங்கில் உயர்வும் பெருமையும் ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு... தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு... ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு... பத்தாம் வகுப்பு வரை தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு.... தலைமைச் செயலக ஆணைகள் தமிழில் மட்டுமே வரவேண்டும் என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு... தமிழ்மண் அறக்கட்டளை நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறது. நுழைவுரை முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி தமிழ் இணைப் பேராசிரியர் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருப் புறம்பயம் என்னும் ஊரில் திரு.வைத்தியலிங்கப் பண்டாரத்தாருக்கும் திருமதி மீனாட்சி அம்மையாருக்கும் 15.8.1892 அன்று ஒரேமகனாராகப் பிறந்தவர் சதாசிவப் பண்டாரத்தார். பள்ளிப் படிப்பு மட்டுமே பயின்ற இவருக்கு இவருடைய ஆசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வகுப்பறைகளில் கல்வெட்டுகள் பற்றிக் கூறிய செய்திகள் கல்வெட்டாய்வின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வரலாற்றறிஞர் து.அ.கோபிநாதராயர் எழுதிய சோழ வமிச சரித்திரச் சுருக்கம் என்ற நூலைக் கண்ணுற்ற பண்டாரத்தார், சோழர் வரலாற்றை விரிவாக எழுத வேண்டுமென எண்ணினார். இதன் காரணமாகப் பண்டாரத்தார் அவர்கள் தம்முடைய 22ஆம் வயது முதற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட ஆரம்பித்தார். 1914 - செந்தமிழ் இதழில் இவரெழுதிய சோழன் கரிகாலன் என்னும் கட்டுரை இவருடைய முதல் கட்டுரையாகும். அதன்பிறகு அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நாட்டார் அவர்களின் பரிந்துரைக் கடிதத்தோடு கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்களைச் சந்தித்த பண்டாரத்தாருக்குத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அதனால் சங்கத்தின் தமிழ்ப்பொழில் இதழில் இவர் தொடர்ந்து எழுதி வந்தார். இதற்கிடையில் 1914ல் தையல்முத்து அம்மையார் என்னும் பெண்மணியைப் பண்டாரத்தார் மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவ்வம்மையார் இயற்கை எய்தவே சின்னம்மாள் என்னும் பெண்மணியை இரண்டாந் தாரமாக ஏற்றார். இவ்விணையர் திருஞானசம்மந்தம் என்னும் ஆண்மகவை ஈன்றெடுத்தனர். அறிஞர் பண்டாரத்தார் தம்முடைய தொடக்கக் காலத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகவும், குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் ஒரு சில மாதங்கள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1917 முதல் 1942 வரை 25 ஆண்டுகள் குடந்தை வாணா துறை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் மற்றும் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், 1942 முதல் 2.1.1960 இல் தாம் இயற்கை எய்தும் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். குடந்தையில் இவர் பணியாற்றியபோது, அந்நகரச் சூழல் இவருடைய கல்வெட்டாய்விற்குப் பெருந்துணையாக அமைந்தது. குடந்தையைச் சுற்றியுள்ள கோயில்களையும் குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரி நூலகத்தையும் தம் ஆய்விற்கு இவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைத் தனியாகக் கற்றறிந்த அறிஞர் பண்டாரத்தார் 1930இல் முதற் குலோத்துங்க சோழன் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இஃது இவரெழுதிய முதல் நூலாகும். பலருடைய பாராட்டையும் பெற்ற இந்த நூல், அந்தக் காலத்தில் சென்னைப் பல்கலைக் கழக இண்டர்மீடியேட் வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தப் பெருமைக்குரியதாகும். இந்த நூல் வெளிவருவதற்கு முன்பாகத் தம்முடைய ஆசிரியர் வலம்புரி அ.பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுடன் இணைந்து சைவ சிகாமணிகள் இருவர் என்ற நூலை இவரே எழுதியிருக்கிறார். அது போன்றே இவர் தனியாக எழுதியதாகக் குறிப்பிடப் பெறும் பிறிதொரு நூல், தொல்காப்பியப் பாயிரவுரை என்பதாகும். இவ் விரண்டு நூல்களும் இவருடைய மகனாருக்கே கிடைக்கவில்லை. இவர் குடந்தையிலிருக்கும் போது 1940இல் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதினார். அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இவருடைய ஆய்வுகள் பல வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தன. அவ்வகையில் இவருடைய தலைசிறந்த ஆய்வாக அமைந்த பிற்காலச் சோழர் சரித்திரம் மூன்று பகுதிகளாக முறையே 1949, 1951, 1961 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக் கழக வெளியீடுகளாக வெளிவந்தன. அதுபோன்றே இவருடைய தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) என்னும் இரண்டு நூல்களையும் 1955இல் அப்பல்கலைக் கழகம் வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது. தாம் பிறந்த மண்ணின் பெருமைகள் பற்றித் திருப்புறம்பயத் தலவரலாறு (1946) என்னும் நூலை இவரெழுதினார். இவருடைய செம்பியன்மாதேவித் தல வரலாறு (1959) என்ற நூலும் இங்குக் கருதத் தக்க ஒன்றாகும். பூம்புகார் மாதவி மன்றத்தினரின் வேண்டு கோளை ஏற்று இவரெழுதிய காவிரிப்பூம்பட்டினம் (1959) என்ற நூல் அம் மாநகர் பற்றிய முதல் வரலாற்று ஆய்வு நூல் என்னும் பெருமைக்குரியதாகும். அறிஞர் பண்டாரத்தார் தம் வாழ்நாள் முழுமையும் உழைத்துத் திரட்டிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பலவாகும். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்து அவர் இயற்கை யெய்திய பிறகு அவருடைய மகனார் பேராசிரியர் ச.திருஞானசம்மந்தம் இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் , கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் என்னும் தலைப்புகளில் 1961இல் நூல்களாக வெளிவர வழிவகை செய்தார். பின்னர், இந்த நூல்களில் இடம்பெறாத அரிய கட்டுரைகள் பல வற்றைப் பண்டாரத்தார் அவர்களின் நூற்றாண்டு விழா நேரத்தில் காணும் வாய்ப்பைப் பெற்ற நான், அவற்றைத் தொகுத்து அதன் தொகுப்பாசிரியராக இருந்து 1998இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் என்னும் பெயரில் நூலாக வெளிவருவதற்கு உதவியாக இருந்தேன். மிக்க மகிழ்ச்சியோடு அந்த நூலை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச் சோழர் சரித்திரம் என்ற நூல் சோழர் வரலாறு குறித்துத் தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியதாகும். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களுடைய வரலாற்று நாவல்களைப் படைத்தனர். உத்தம சோழனின் சூழ்ச்சியால் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான் என்ற திரு.கே.ஏ.நீலகண்ட சாத்திரியாரின் கருத்தை அறிஞர் பண்டாரத்தார் உடையார்குடி கல்வெட்டுச் சான்றின் மூலம் மறுத்துரைத்ததோடு அவனது கொலைக்குக் காரணமாக அமைந்தவர்கள் சில பார்ப்பன அதிகாரிகளே என இந்த நூலில் ஆய்ந்து உரைக்கிறார். இந்த ஆய்வுத் திறத்தைக் கண்ட தந்தை பெரியார் இவரைப் பாராட்டியதோடு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். அறிஞர் பண்டாரத்தார், தானுண்டு தன் வேலை உண்டு என்ற கருத்தோடு மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பணியாற்றியவர்; விளம்பர நாட்டம் இல்லாதவர். எனவேதான், இவரால் இவ்வளவு பெரிய வேலைகளைச் செய்ய முடிந்தது. தம் வயது முதிர்ந்த நிலையில் செய்தி யாளர் ஒருவருக்கு அளித்த நேர்காணலில், தமிழ் நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டியன நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட பெருமைக்குரியவர் பண்டாரத்தார். இப்படிப்பட்ட காரணங் களால்தான் தமிழுலகம் அவரை ஆராய்ச்சிப் பேரறிஞர், வரலாற்றுப் பேரறிஞர், சரித்திரப் புலி, கல்வெட்டுப் பேரறிஞர் எனப் பலவாறாகப் பாராட்டி மகிழ்ந்தது. இன்றைய தலைமுறையினருக்குப் பண்டாரத்தாரின் நூல்கள் பல அறிமுகங்கூட ஆகாமல் மறைந்து கொண்டிருந்தன. இச்சூழலில்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் பண்டாரத்தார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, தமிழ்த் தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வரலாற்றறிஞர் வெ. சாமிநாதசர்மா, நுண்கலைச் செல்வர் சாத்தன் குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலான பெருமக்களின் நூல்களையெல்லாம் மறுபதிப்புகளாக வெளிக் கொண்டாந்ததன் மூலம் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றிக் கொண்டிருக்கும் தமிழ்மொழிக் காவலர் ஐயா கோ.இளவழகனார் அவர்கள் வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்களைத் தமிழ்மண் அறக் கட்டளை வழி மறு பதிப்பாக வெளிக்கொணர்வது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அறிஞர் பண்டாரத்தாரின் நூல்கள் அனைத்தையும் வரலாறு, இலக்கியம், கட்டுரைகள் என்னும் அடிப்படையில் பொருள்வாரியாகப் பிரித்து எட்டுத் தொகுதிகளாகவும், அவரைப்பற்றிய சான்றோர்கள் மதிப்பீடுகள் அடங்கிய இரண்டு தொகுதிகள் சேர்த்து பத்துத் தொகுதி களாகவும் வடிவமைக்கப்பட்டு தமிழ் உலகிற்கு தமிழ்மண் அறக் கட்டளை வழங்கியுள்ளனர். தொகுதி 1 1) முதற் குலோத்துங்க சோழன் 1930 2) திருப்புறம்பயத் தல வரலாறு 1946 3) காவிரிப் பூம்பட்டினம் 1959 4) செம்பியன் மாதேவித் தல வரலாறு 1959 தொகுதி 2 5) பாண்டியர் வரலாறு 1940 தொகுதி 3 6) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1 1949 தொகுதி 4 7) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2 1951 தொகுதி 5 8) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 1961 தொகுதி 6 9) தமிழ் இலக்கிய வரலாறு ( கி.பி.250-600) 1955 10) தமிழ் இலக்கிய வரலாறு ( 13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) 1955 தொகுதி 7 11) இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் 1961 12) கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் 1961 தொகுதி 8 13) தொல்காப்பியமும் பாயிரவுரையும் 1923 14) சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் 1998 தொகுதி 9 15) தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு 2007 தொகுதி 10 16) சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார் 2007 அறிஞர் பண்டாரத்தார் அவர்களின் நூல்களை நாட்டுடைமை யாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், நூல் களை மறுபதிப்பாக வெளிக் கொணர்ந்து தமிழுலகில் வலம் வரச் செய் திருக்கும் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனர் ஐயா கோ.இளவழகனார் அவர்களுக்கும், தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நன்றியுடையதாக இருக்கும் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை. தமிழ்மண் அறக் கட்டளையின் இந்த அரிய வெளி யீட்டைத் தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் வாழ்த்தி வரவேற்கும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு. அணிந்துரை கோ.விசயவேணுகோபால் முதுநிலை ஆய்வாளர் பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப் பள்ளி புதுச்சேரி. 1950-60 களில் தமிழ்நாட்டு வரலாற்றைத் தமிழில் எழுதிய தமிழ்ப் பேராசிரியர்கள் திருவாளர்கள் மா.இராசமாணிக்கனார், அ.கி.பரந்தாமனார், மயிலை.சீனி.வேங்கடசாமி, கா.அப்பாத்துரையார் போன்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் திரு தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். பேராசிரியர் க.அ.நீலகண்ட சாத்திரியாரின் சோழர் வரலாறு வெளிவந்தபின் அதில் சில கருத்துக்கள் மறுபார்வைக் குரியன என்ற நிலையில் முனைந்து ஆய்வு மேற் கொண்டு சில வரலாற்று விளக்கங்களை மாற்றிய பெருமைக்குரியவர் இவர். தமது இடைவிடா உழைப்பாலும் நுணுகிய ஆய்வினாலும் புதிய கல்வெட்டுக்களைக் கண்டறிந்த சூழ்நிலையில் சிறு நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி மற்றையோர்க்கு வழி காட்டியாய் விளங்கிய பெருமகனார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற காலை என்னைப் போன்ற மாணவர்கட்குக் கல்வெட்டியலில் ஆர்வமூட்டியவர். எதிர்பாராத நிலையில் அவர் மரண மடைந்தபோது யான், தமிழர் தலைவர் பழ.நெடுமாறன், அ.தாமோதரன் போன்றோர் அவரது பூதவுடலைச் சுமந்து சென்றது இன்றும் நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாகும். எளிமையான தோற்றம், கூர்மையான பார்வை, ஆரவாரமற்ற தன்மை, அன்புடன் பழகுதல் அவரது சிறப்புப் பண்புகளாகும். திரு தி.வை.சதாசிவப்பண்டாரத்தாரால் எழுதி ஏற்கனவே வெளி வந்த நூல்கள் சில தற்போது ஒரு தொகுப்பாகத் தமிழ்மண் அறக்கட்டளை யினரால் வெளியிடப்படுகின்றன. முதற் குலோத்துங்க சோழன், திருப்புறம்பயத் தல வரலாறு, காவிரிப்பூம்பட்டினம், செம்பியன்மாதேவித் தல வரலாறு ஆகியன இதில் அடங்கும். முதற் குலோத்துங்க சோழன் 1930 இல் வெளியிடப்பட்டது. இது சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாகவும் விளங்கியது. ஆசிரியரே கூறுவதுபோலத் தமிழகத்தையும் பிற பகுதிகளையும் முதற் குலோத்துங்கன் திறம்பட ஆண்ட ஐம்பதாண்டு நிகழ்ச்சிகளை விளக்குவது இந்நூல். தமிழில் வரலாற்று நூல் எழுதுவதற்கான முன் மாதிரிபோல் அமைந்துள்ளது இந்நூல். அடிக்குறிப்புக்கள், பிற்சேர்க்கை கள், படங்கள் என ஆய்வு நூல்களில் காண்பன அனைத்தும் இந்நூலின் கண் உள்ளன. இத்தகைய ஆராய்ச்சி நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடு நிகழ்தலும், கிடைக்கும் கருவிகளால் சில செய்திகள் மாறுபடுதலும் இயல்பு என ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது அவருடைய ஆய்வு மனப்பான்மையையும், நேர்மையையும் எடுத்துக் காட்டுவன ஆகும். திருப்புறம்பயம் ஆசிரியரது ஊர். புகழ்பெற்ற சிவத்தலம். இதனைச் சுற்றி இன்னம்பர், ஏகரம், திருவைகாவூர், திருவிசயமங்கை, மிழலை, சேய்ஞலூர், திருப்பனந்தாள் போன்ற சிறப்புமிக்க திருத்தலங்கள் உள்ளன. ஆசிரியர், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முறைமையில் இத்தலத்தின் சிறப்புக்களை எடுத்துக்காட்டுகின்றார். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், இத்தலம் தொடர்பான உலா, மாலை போன்ற சிற்றிலக்கியங்கள் ஆகியன இத்தலம் பற்றிக் குறிப்பனவற்றை விளக்கியுள்ளார். ஒவ்வொரு வரும் குறைந்தது தாம் வாழும் ஊரினது வரலாற்றையாவது அறிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலை ஸ்ரீ திருப்புறம்பயத்தலவரலாறு ஏற்படுத்துகிறது. மிகத்தொன்மையானதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான காவிரிப் பூம்பட்டினம் பற்றிய நூலுள் இது சோழர்தம் பழைய தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கியமையைக் குறிப்பிடுவதோடு சிலப்பதிகாரம் போன்ற பழைய இலக்கியங்கள் சுட்டும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இம்மாநகரை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றுள்ளார். கண்டராதித்த சோழரின் இரண்டாம் மனைவி செம்பியன் மாதேவி. வாழ்நாள் முழுவதும் இறைப்பணிகள் பல செய்த பெருமை யுடையவர். சோழமன்னர் அறுவர் காலத்திலும் வாழ்ந்த பெரு மூதாட்டி. மாதேவடிகள் எனப் போற்றப்படுபவர். பழைய செங்கற் கோயில்கள் பலவற்றைக் கற்றளி களாக்கியவர். இத்தகு சிறப்புக் கொண்ட இவ்வம்மையாரின் பெயரி லமைந்த ஊரில் விளங்கும் திருக்கோவிலின் வரலாற்றை விளக்குவது செம்பியன்மாதேவித் தல வரலாறு. மறைந்த கம்பனடிப்பொடி காரைக் குடி சா.கணேசன் அவர்களின் விமர்சனப் பாங்கோடு கூடிய முன்னுரையுடன் கூடியது இச்சிறு நூல். கோயிலின் பெருமை, வருவாய், நிருவாகம், கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் தரும் செய்திகள் எனத் திறம்பட அமைந்துள்ளது. நூலின் இறுதியில் பிற்சேர்க்கைகள், விளக்கக் குறிப்புக்கள் என்பவற்றோடு ஆங்காங்கே நல்ல புகைப்படங்களும் இணைக்கப்பட்டு ஆய்வுப் பொலிவோடு விளங்குகின்றது. இத்தொகுப்பினை வெளியிடும் தமிழ்மண் அறக்கட்டளை யினர்க்கு, குறிப்பாகத் திரு கோ.இளவழகனார் அவர்கட்குத் தமிழ்கூறு நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. இவை முன்பு வெளியிடப்பட்டபோது தமிழ்மக்கள் பெருமளவில் வாங்கிப் பயன்பெற்றதுபோல இப்போதும், குறிப்பாக வரலாறு கற்கும் தமிழ் மாணவர்கள், வாங்கிப் படித்து இவை போலத் தாமும் எழுதத் தூண்டுதல் பெறுவர் என நம்பு கின்றேன். இவர்தம் தொண்டு மேலும் சிறப்பதாக, திரு தி.வை. சதாசிவப் பண்டாரத்தாரின் புகழ் ஓங்குவதாக. பதிப்புரை கோ. இளவழகன் நிறுவனர் தமிழ்மண் அறக்கட்டளை தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் எனும் சிற்றூரில் 15.8.1892ல் பிறந்தார். இவர் 68 ஆண்டுகள் வாழ்ந்து 02.01.1960ல் மறைந்தார். பண்டாரம் என்னும் சொல்லுக்குக் கருவூலம் என்பது பொருள். புலமையின் கருவூலமாகத் திகழ்ந்த இம்முதுபெரும் தமிழாசான் இலக்கியத்தையும் வரலாற்றையும் இருகண்களெனக் கொண்டும், கல்வெட்டு ஆராய்ச்சியை உயிராகக் கொண்டும், அருந்தமிழ் நூல்களைச் செந்தமிழ் உலகத்திற்கு வழங்கியவர். இவர் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து 10 தொகுதி களாக தமிழ் கூறும் உலகிற்கு வைரமாலையாகக் கொடுக்க முன்வந்துள்ளோம். சங்கத் தமிழ் நூல்களின் எல்லைகளையும் , அதன் ஆழ அகலங் களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள் உமா மகேசுவரனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமையில் தமிழ்ப்பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர். திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்றூர்; திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வராலும், திருத்தொண்டர் புராணம் படைத்தளித்த சேக்கிழாராலும், தேவாரப் பதிகத்தாலும் பாடப்பெற்ற பெருமை மிக்க ஊர்; கல்வி, கேள்விகளில் சிறந்த பெருமக்கள் வாழ்ந்த ஊர். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த வளம் மிக்க ஊர்; சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். பண்டாரத்தாரின் ஆராய்ச்சி நூல்களான சோழப் பெருவேந்தர்கள் வரலாறு - பாண்டியப் பெருவேந்தர்கள் வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறு - ஆகிய நூல்கள் எழுதப்பட்ட பிறகு அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டுதான் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி - சாண்டில்யன் - செகசிற்பியன் - விக்கிரமன் - பார்த்தசாரதி - கோவி.மணிசேகரன் ஆகியோர் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் உலகில் புகழ் பெற்றனர். பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சியும் , வரலாற்று அறிவும், ஆராய்ச்சித் திறனும், மொழிப் புலமையும் குறைவறப் பெற்ற ஆராய்ச்சிப் பேரறிஞர். பிற்கால வரலாற்று அறிஞர்களுக் கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் முன்னோர் எழுதிய நூல்களைக் கொண்டுதான் பெரும்பாலும் வரலாறு எழுதுவது வழக்கம். ஆனால், பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டுக்கள் உள்ள ஊர்களுக்கெல்லாம் நேரில் சென்று அவ்வூரில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்து முறைப்படி உண்மை வரலாறு எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார். புலமை நுட்பமும் ஆராய்ச்சி வல்லமையும் நிறைந்த இச் செந்தமிழ் அறிஞர் கண்டறிந்து காட்டிய கல்வெட்டுச் செய்தி களெல்லாம் புனைந் துரைகள் அல்ல. நம் முன்னோர் உண்மை வரலாறு. தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, பண்டாரத்தார் நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து வெளியிடுகிறோம். பல துறை நூல்களையும் பயின்ற இப்பேரறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களில் மிகச் சிறப்பிடம் பெற்றவர்.இவர் எழுதிய ஊர்ப் பெயர் ஆய்வுகள் இன்றும் நிலைத்து நிற்பன. இவரது நூல்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஊற்றுக் கண்ணாய் அமைவன. வரலாறு, கல்வெட்டு ஆகிய ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பல வரலாற்று உண்மைகளைத் தெளிவு படுத்தியவர். பண்டாரத்தார் நூல்களும், கட்டுரைகளும் வட சொற்கள் கலவாமல் பெரிதும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் வரலாறு - தமிழ்ப் புலவர்கள் வரலாறு - தமிழக ஊர்ப்பெயர் வரலாறு - தமிழ் நூல்கள் உருவான கால வரலாறு ஆகிய இவருடைய ஆராய்ச்சி நூல்கள் அரிய படைப்புகளாகும். தாம் ஆராய்ந்து கண்ட செய்திகளை நடுநிலை நின்று மறுப்பிற்கும் வெறுப்பிற்கும் இடமின்றி, வளம் செறிந்த புலமைத் திறனால், தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும்பங்காற்றிய இவரின் பங்களிப்பு ஈடுஇணையற்றது. தென்னாட்டு வரலாறுதான் இந்திய வரலாற்றுக்கு அடிப்படை என்று முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களே. தமிழரின் மேன்மைக்கு தம் இறுதிமூச்சு அடங்கும் வரை உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு உழைத்த பெருமக்கள் வரிசையில் வைத்து வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் தமிழர் தம் பெருமைக்கு அடையாளச் சின்னங்கள். நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் வெளியீட்டு விழா கடந்த 29.12.2007இல் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் - தமிழர் நலங்கருதி தொலைநோக்குப் பார்வையோடு தமிழ்மண் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடக்கத்தின் முதல் பணியாக தென்னக ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முதன்முதலாக தமிழ்மண் அறக்கட்டளை வழி வெளியிடுகின்றன. இப்பேரறிஞரின் நூல்கள் தமிழ முன்னோரின் சுவடுகளை அடையாளம் காட்டுவன. அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை பொற்குவியலாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளோம். இவர் தம் நூல்கள் உலக அரங்கில் தமிழரின் மேன்மையை தலைநிமிரச் செய்வன. பண்பாட்டுத் தமிழர்க்கு நான் விடுக்கும் விண்ணப்பம்; சதாசிவத்துப் பண்டாரத் தார்க்கும்; ஒரு மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள் கொண்டாடும் சோமசுந் தர பாரதிக்கும், நம் கொள்கை தோன்றக், கண்டார்க்க ளிக்கும் வகை உருவக்கல் நாட்டுவது கடமையாகும். எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். இப்பேரறிஞர் எழுதிய நூல்களில் சைவசிகாமணிகள் இருவர் என்னும் நூல் மட்டும் எங்கள் கைக்கு கிடைக்கப்பெறா நூல். ஏனைய நூல்களை பொருள்வாரியாகப் பிரித்து வெளியிட்டுயுள்ளோம். தமிழர் இல்லந்தோறும் பாதுகாத்து வைக்கத்தக்கச் செந்தமிழ்ச் செல்வத்தை பிற்காலத் தலைமுறைக்கு வாங்கி வைத்து தமிழர் தடயங்களை கண்போல் காக்க முன்வருவீர். ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வு நூல்களுக்கு மதிப்புரை அளித்து மணம் கமழச் செய்த தமிழ்ச் சான்றோர்கள் பெரும்புலவர் இரா. இளங்குமரனார் கோ. விசயவேணுகோபால் பி. இராமநாதன் முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி க.குழந்தைவேலன் ஆகிய பெருமக்கள் எம் அருந்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது. நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் அச்சுக்கோப்பு முனைவர் கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா மெய்ப்பு க.குழந்தைவேலன், சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு, ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . உள்ளடக்கம் முதற்குலோத்துங்க சோழன் 1. சோழரும் சளுக்கியரும் 5 2. குலோத்துங்க சோழன் முன்னோரும் பிறப்பும் 9 3. வேங்கிநாட்டில் குலோத்துங்கன் முடிசூடுதல் 16 4. குலோத்துங்கன் சோழமண்டலத்திற்கு வருதல் 19 5. குலோத்துங்கன் சோழமண்டலத்தில் முடிசூடுதல் 24 6. குலோத்துங்கனது அரசாட்சி 27 7. குலோத்துங்கனுடைய போர்ச் செயல்கள் 31 8. குலோத்துங்கனது சமயநிலை 45 9. குலோத்துங்கனது குணச்சிறப்பு 47 10. குலோத்துங்கனுடைய மனைவியரும் மக்களும் 50 11. குலோத்துங்கனுடைய அரசியல் தலைவர்கள் 54 12. குலோத்துங்கனுடைய அவைக்களப்புலவர் 58 13. குலோத்துங்கனது அரசியல் 62 14. முடிவுரை 77 சேர்க்கை - 1 79 சேர்க்கை - 2 83 சேர்க்கை - 3 84 திருப்புறம்பயத் தல வரலாறு சிவலிங்க வழிபாட்டின் தனிச்சிறப்பு 89 திருப்புறம்பயத் தலவரலாறு 92 காவிரிப்பூம்பட்டினம் அணிந்துரை 121 முகவுரை 123 காவிரிப்பூம்பட்டினம் 129 முடிவுரை 176 பிற்சேர்க்கை I 177 பிற்சேர்க்கை II 179 பிற்சேர்க்கை III 186 செம்பியன் மாதேவித் தல வரலாறு அணிற்துரை 191 செம்பியன்மாதேவித் தலவரலாறு 197 கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்திகள் 201 செம்பியன்மாதேவியார் வரலாறு 209 முதற்குலோத்துங்க சோழன் திருப்புறம்பயத் தல வரலாறு காவிரிப் பூம்பட்டினம் செம்பியன் மாதேவித் தல வரலாறு முதற்குலோத்துங்க சோழன் உ சிவமயம் முகவுரை திருவாங்கூர் இராச்சியத்தின் கல்வெட்டுப் பரிசோதகர் காலஞ் சென்ற திரு. T.A. கோபிநாதராயர் அவர்கள், M.A. எழுதிய சோழவமிச சரித்திரச் சுருக்கம் என்ற நூலை நான் படித்தபோது நம் தமிழகத்தில் பண்டைக் காலத்தில் அரசாண்ட சேர சோழ பாண்டியரது வரலாறு களை இயன்றவரையில் விரிவாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பம் உண்டாகவே, கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் சில ஆண்டு களுக்கு முன்னர் ஆராயத் தொடங்கினேன். எனது ஆராய்ச்சி யிற் புலப்பட்ட சரித்திர உண்மைகளை மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், இவற்றின் திங்கள் வெளியீடுகளாகிய செந்தமிழ் தமிழ்ப்பொழில் என்ற இரண்டிலும் அவ்வக் காலங்களில் நான் வெளியிட்டு வந்ததை அன்பர் பலரும் அறிவர். நம் தமிழகத்திலும் பிறநாடுகளிலும் தன் ஆணை செல்லச் செங்கோல் செலுத்திய சக்கரவர்த்தி யாகிய முதற் குலோத்துங்கசோழன் வரலாற்றை விரித் தெழுதுவதற்குரிய கருவிகள் எனக்குக் கிடைத் தமையின் காலக் குறிப்புக்களுடன் இந் நூலை ஒருவாறு எழுதி முடித்தேன். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அந்நாட்டின் உண்மைச் சரித்திரம் தாய்மொழியில் வெளிவருதல் பெருந் துணையாகும் என்பது அறிஞர் களது துணிபு. ஆதலால், இது, முதலில் தமிழ்ப்பொழில் இரண்டு மூன்றாம் துணர்களில் வெளியிடப்பட்டது; பிறகு 1930-ஆம் ஆண்டில் தனி நூலாக வெளிவந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தார் (Madras University) இதனை நன்கு மதித்து இண்டர்மீடியேட் (Intermediate) பரீட்சைக்குரிய பாடங்களுள் ஒன்றாக அமைத்தமைபற்றிப் பெரிதும் மகிழ்ச்சியுறுவதோடு அக்கழகத் தார்க்கு என்றும் நன்றி பாராட்டுங் கடமையுமுடையேன். இதனைப் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சித் துறையில் ஊக்கம் பிறக்குமாறு உரிய இடங்களில் பல மேற்கோள்கள் ஆங்காங்குக் கீழ்க் குறிப்புக்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன. சரித்திர ஆராய்ச்சியில் எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் முதலில் உண்டுபண்ணியது திரு. T.A. கோபிநாதாரயர் அவர்கள் M.A. எழுதிய சோழவமிச சரித்திரச் சுருக்க மாதலின் அப் பெரியார்க்கும் எனது நன்றியுரியதாகும். இத்தகைய ஆராய்ச்சி நூல்களில் சில இடங்களில் கருத்து வேறுபாடு நிகழ்தலும், இனி கிடைக்கும் கருவிகளால் சில செய்திகள் மாறுபடுதலும் இயல்பு என்பது அறிஞர்கள் நன்கறிந்ததேயாகும். இந்நூலைத் திருந்திய முறையில் வெளியிட்டுதவிய சென்னை சாது அச்சுக்கூடத்தாரது பேரன்பு பாராட்டுதற் குரியதாகும். T.V. சதாசிவ பண்டாரத்தார் 1. சோழரும் சளுக்கியரும் நம் தமிழகம்1 சேரமண்டலம், சோழமண்டலம் பாண்டி மண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளையுடையதாக முற்காலத்தில் விளங்கிற்று.2 இவற்றுள் சோழமண்டலம் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு முதலான ஜில்லாக்கள் அடங்கிய ஒரு நாடாகும். இது குணபுலம்3 எனவும் வழங்கப்பெறும். இதனைப் பண்டைக் காலமுதல் ஆட்சிபுரிந்து வந்தோர் தமிழ் வேந்தர்களுள் ஒருவராகிய சோழமன்னர் ஆவர். இவர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய தலைநகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பன. பிற்காலத்துச் சோழ மன்னர் களது ஆட்சிக் காலங்களில் தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் தலைநகரங்களாகக் கொள்ளப்பட்டன. சோழர்களுக்குரிய அடையாள மாலை ஆத்தியாகும்; கொடியும் இலச்சினையும் புலியாம்.4 வடவேந்தரையொப்ப இன்னோர் சூரியகுலத்தினரென்றும் காசிபகோத்திரத்தினரென்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.5 பரசுராமர் அரசகுலத்தினரை அழித்தொழிப்பதையே தம் பெரு நோன்பாகக் கொண்டு இப்பரத கண்டம் முழுவதும் சுற்றிவந்த நாட்களில், காவிரிப்பூம்பட்டினத்தில் காந்தமன் என்ற சோழமன்னன் ஒருவன் அரசாண்டுவந்தான். அவன் பரசுராமரது வருகையைக் கேட்டுப் பெரிதும் அஞ்சி, பூம்புகார்த் தெய்வமாகிய சம்பாபதிபாற் சென்று, தான் உய்யும்வழி யொன்றுணர்த்து மாறு பணிவுடன் வேண்டினன். அஃது அவனது காதற் கணிகையின் புதல்வனாகிய ககந்தனுக்கு முடிசூட்டிவிட்டு அவனைக் கரந்துறையுமாறு அறிவுறுத்திற்று.1 அவனும் அங்ஙனமே கரந்துறைதலும் சோணாடு சென்ற பரசுராமர் அரியணையில் வீற்றிருந்து அரசாளுவோன் அரசகுலத்தினன் அல்லன் என்பதை யறிந்து கணிகையின் புதல்வனாகிய அவனைக் கொல்லுதல் தம் நோன்பிற்கேற்றதன்று எனக் கருதி அந்நாட்டை விட்டகன்றனர். பரசுராமருக்குப் பயந்து கரந்துறைந்த இக் காந்தமன் என்பவனே காவிரியாற்றைக் கொணர்ந்த பெருந்தகையாளன் என்று பழைய தமிழ் நூலாகிய மணிமேகலையின் பதிகம் கூறுகின்றது.2 பிற்றைநாளில், அப்பரசுராமர் இராமபிரான் திருமணஞ்செய்து கொண்டு மிதிலை மாநகரிலிருந்து திரும்புங்கால் அவரை எதிர்த்துத் தோல்வியுற்று, அரச குலத்தினரை வேருடன் களைதற் கெண்ணிய தமது எண்ணத்தை முற்றிலும் ஒழித்து, மலைச்சாரல் சென்று தவம்புரிந்தனர் என்பது இராமாயணத் தால் அறியக் கிடக்கின்றது. இனி, இராமயண காலத்தில் சோழ மன்னருள் ஒருவன் மலைய மலையிலிருந்த அகத்தியமா முனிவரது ஆணையால் மக்களது இன்னலைப் போக்குமாறு, வானத்தின் கண் அசைந்து கொண்டிருந்த மூன்று மதில்களை அழித்தனன்; அக்காரணம் பற்றியே சிலப்பதிகாரமும் புறநானூறும் அவனைத் தூங்கெயி லெறிந்த தொடித் தோட் செம்பியன் என்று புகழ்ந்து கூறுகின்றன.1 பாரதப்போர் நிகழ்ந்த நாட்களில் ஒரு சோழ மன்னன் போர் முடியும் வரையில் தருமன் படைக்கு உணவளித்து உதவிபுரிந்தனன் என்று கலிங்கத்துப் பரணி யுரைக்கின்றது.2 ஆகவே, இராமாயண பாரத காலங்களிலும் அவற்றிற்கு முந்தியநாட் களிலும் சோழகுலத்தினர் மிகச் சிறப்புற்று விளங்கினர் என்பது இனி துணரப்படுகின்றது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், மகதநாட்டில் செங்கோல் செலுத்திய அசோகனது ஆணையையுணர்த்துங் கல்வெட்டு களிலும் சோழரைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டில், மேனாட்டினின்றும் தமிழ்நாடுபோந்த யவன ஆசிரியனாகிய தாலமி என்பானது வரலாற்றுக் குறிப்பிலும், மேனாட்டு வரலாற்று ஆசிரியன் ஒருவனால், அப்பழைய காலத்தில் எழுதப்பெற்ற பெரிப்ள என்ற நூலிலும் சோழரைப்பற்றிய உயரிய செய்திகள் காணப்படு கின்றன. எனவே, கிரேக்கரும் உரோமரும் மிக உயர்நிலையிலிருந்த நாட்களில் நம் சோழரும் அன்னாருடன் வாணிபத் தொடர் புடையராய்ப் பெருமையோடு வாழ்ந்து வந்தனர் என்பது பெறப்படுகின்றது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து உண்மை காணுமிடத்து, சோழகுலத்தினர் நம்மனோரால் ஆராய்ந்து அளந்து காண முடியாத அத்துணைப் பழங்காலமுதல் நம் தமிழ்நாட்டின் கீழ்ப்பகுதியாகிய சோழ வளநாட்டில் வீற்றிருந்து, அதனைச் சிறப்புடன் ஆண்டுவந்த அரச குலத்தினர் ஆவர் என்பது நன்கு விளங்குதல் காண்க. இனிச் சளுக்கியர் என்பார், வடநாட்டினின்றும் போந்து, பம்பாய் மாகாணத்தின் தென் பகுதியிலுள்ள இரட்டபாடி நாட்டை, வாதாபி நகரம்,1மானியகேடம், கலியாணபுரம் முதலான நகரங்களில் வீற்றிருந்து அரசு புரிந்துவந்த ஓர் அரசகுலத்தினர் ஆவர். சீன தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த வழிப் போக்கனாகிய யுவான் சுவாங் என்ற ஆசிரியன், சளுக்கியரது போர்வன்மையைத் தன் நூலுட் புகழ்ந்திருத்த லோடு வடவேந்தனாகிய ஹர்ஷவர்த்தனனைத் தென்னாட்டிற்குச் செல்லாதவாறு போர்புரிந்து விலக்கிய இரண்டாம் புலிகேசி என்பவன் இச்சளுக்கிய குலத்தில் தோன்றிய மன்னன் என்று பாராட்டிக் கூறியுள்ளான்.2 இரண்டாம் புலிகேசியின் தம்பியாகிய குப்ஜ விஷ்ணு வர்த்தனன் என்பான் கிருஷ்ணை, கோதாவரி என்ற இருபேராறு களுக்கும் இடை யிலுள்ள வேங்கி நாட்டின் மேற் படையெடுத்துச் சென்று அதனைக் கைப் பற்றிக் கீழைச்சளுக்கிய நாடொன்றை அமைத்தான்.3 இது நிகழ்ந்தது முதல், சளுக்கியர் கீழைச்சளுக்கியர் மேலைச் சளுக்கியர் என்ற இரு கிளையினராயினர். இன்னோர் சந்திரகுலத்தினர் என்றும் மானவிய கோத் திரத்தார் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவர்களுக்குரிய கொடியும் இலச்சினையும் பன்றி என்பர். பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளிற் சோழருக்கும், மேலைச் சளுக்கியருக்கும் அடிக்கடி பெரும் போர்கள் நடைபெற்றன; ஆனால், கீழைச் சளுக்கியர் சோழ மன்னரது பெண்களை மணஞ்செய்து கொண்டு அன்னோர்க்கு நெருங்கிய உறவினராய் நட்புற்று வாழ்ந்து வந்தனர். இவ்வுண்மையை அடுத்த அதிகாரத்தில் நன்கு விளக்குவாம். 2. குலோத்துங்க சோழன் முன்னோரும் பிறப்பும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னர், தென் மதுரையில் நடைபெற்ற தமிழ்ச் சங்கத் திறுதிக் காலத்தில் நிலவிய சில சோழ மன்னருடைய பெயர்கள் அச்சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள பாடல்களாலும் நூல்களாலும் தெரிகின்றன. அவர்களுள் சோழன் கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி, செங்கணான் முதலானோர் சிறந்தவராவர். இன்னோருள் சோழன் கரிகாலன் என்பான் காவிரிப் பூம்பட்டினத்தைச் சிறந்த துறைமுகப்பட்டினமாகக் கட்டி, அதனை வாணிபத்திற்கேற்ற வளநகராக்கியவன்; காவிரியாற்றின் இருமருங்கும் கரையெடுப்பித்துச் சோணாட்டை வளம்படுத்திச் சோறுடைத்து என்று அறிஞர்கள் புகழுமாறு செய்தவன்.1 இது பற்றியே இவ்வேந்தர் பெருமானைக் கரிகாற் பெருவளத்தான் என்றும் திருமாவளவன் என்றும் மக்கள் பாராட்டிக் கூறுவாராயினர். பத்துப்பாட்டிலுள்ள பொருநராற்றுப் படையும், பட்டினப்பாலையும் இம்மன்னன் மீது பாடப் பெற்ற நூல் களேயாம். இவற்றுள் பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு இவ்வேந்தன் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் அளித்து அந்நூலைக் கொண்டான் என்று கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகியசயங் கொண்டார் கூறியுள்ளார் இதனால் இவன் நல்லிசைப் புலவர் பால் கொண்டிருந்த பெருமதிப்பு நன்கு விளங்கும். இம்மன்னன் இமயமுதல் குமரிவரையில் தன் வெற்றியையும் புகழையும் பரப்பிய பெருவீரன் என்பது ஈண்டு அறியத்தக்க தொன்றாம். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தமிழ்ப் புலமையிற் சிறந்தவன்; புலவர்க்கும், இரவலர்க்கும் வேண்டியாங்களித்த பெருங் கொடை வள்ளல்; தமிழகத்தில் தன் வெற்றியைப் பரப்பி வீரனாய் விளங்கியவன். பெருநற்கிள்ளி என்பான் உறையூரிலிருந்து சோழ வளநாட்டை ஆட்சிபுரிந்து கொண்டிருக்கும் நாளில், புகார் நகரத்து வணிகனாகிய கோவலனது மனைவி கண்ணகிக்கு உறையூரின்கண் பத்தினிக் கோட்டம் எடுப்பித்து விழா நிகழ்த்தினன்.1 பொய்கையார் என்ற நல்லிசைப் புலவரால் பாடப் பெற்ற களவழி நாற்பது2 என்னும் நூல்கொண்டவன் சோழன் செங்கணான் ஆவன். 3 இங்ஙனம் பெருமையுடன் வாழ்ந்துவந்த சோழரது நிலையும் கி.பி. நான்காம் நூற்றாண்டில் தளர்வுற்றது. அக்காலத்தில் போர் விருப்பம் வாய்ந்த பல்லவர் தமிழ்நாட்டில் புகுந்து தொண்டை மண்டலத்தையும் சோழ மண்டலத்தையும் கைப்பற்றிக் காஞ்சிமாநகரையும் மாமல்ல புரத்தையும் தலை நகரங்களாகக் கொண்டு ஆட்சிபுரியத் தொடங்கினர். இவர்களது ஆளுகையும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதிவரையில் சோழ மண்டலத்தில் நிலைபெற்றிருந்தது. பல்லவரது ஆட்சிக் காலத்தில் சோழரின் வழியினர் குறுநில மன்னராகி அன்னோர்க்குத் திறை செலுத்தி வந்தனர். கி.பி. 849ல் விசயாலயன் என்ற சோழ மன்னன் ஒருவன் பல்லவர்களோடு போர் புரிந்து சோழ மண்டலத்தின் ஒரு பகுதியைப்பற்றிக் கொண்டு தஞ்சாவூரில் வீற்றிருந்து முடிமன்னனாக அதனை அரசாளத் தொடங்கினான்.4 இவனையே தொண்ணூற்றாறு புண்கள் மார்பில் கொண்ட வீரன் என்று தமிழ் நூல்கள் புகழ்ந்து கூறுகின்றன என்பர். இவன் காலத்தேதான் தஞ்சாவூர் சோழமண்டலத்திற்குத் தலைமை நகரமாயிற்று. இவனது புதல்வன் முதலாம் ஆதித்த சோழன் எனப்படுவான். இவன் தன் நண்பனாகிய பல்லவ மன்னனைத் துணையாகக் கொண்டு பாண்டிய னோடு பலவிடங்களில் பெரும் போர்கள் புரிந்தனன். இறுதியில் கி.பி. 880-ஆம் ஆண்டிற் கணித்தாகத் திருப்புறம்பயத்தில் நிகழ்ந்த போரில் பாண்டியன் முற்றிலும் தோல்வியுறவே ஆதித்தன் வெற்றியெய்தினன். இப்போரின் பயனாகச் சோழமண்டலம் முழுவதும் ஆதித்தனுக்கு உரித்தாயிற்று. பிறகு தொண்டை மண்டலமும் அவனது ஆட்சிக் குள்ளாயிற்று. பல்லவரும் குறுநிலமன்னராய்ச் சோழமன்னர் கட்குத் திறை செலுத்தும் நிலையை அடைந்தனர். ஆதித்தனும் 27 ஆண்டுகள் அரசாண்டு கி.பி. 907-ல் இறந்தான். இவ்வாதித்தனது புதல்வன் முதலாம் பராந்தக சோழன் என்பான். இவன் காலத்தில் சோழரது ஆட்சி உயர்நிலையை யடைந்தது. இவன் பாண்டிய நாட்டையும் ஈழநாட்டையும் வென்று தன்னடிப்படுத்தியவன்; இவனை மதுரையும் ஈழமுங்கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன.1 இவன் தில்லையம்பலத்தில் பொன் வேய்ந்து அதனை உண்மையில் பொன்னம்பலமாக்கிய செய்தி யொன்றே இவனது அளப்பரிய சிவபத்தியை நன்கு விளக்குகின்றது. 2 இவன் கி.பி. 907 முதல் கி.பி. 953 வரை அரசாண்டனன். இவ்வேந்தனுக்குப் பின்னர் இவனது புதல்வராகிய கண்டராதித்த சோழர் கி.பி. 957 வரைஆட்சி புரிந்தனர். இவரது ஆளுகையில் குறிக்கத்தக்க நிகழ்ச்சிகள் இல்லையாயினும் இவரது சிவபக்தியின் மாண்பும் செந்தமிழ்ப் புலமையும் பெரிதும் போற்றற்குரியனவாம். சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்றாகிய ஒன்பதாந் திருமுறையில் தில்லைச் சிற்றம்பலத்தெம்பெருமான் மீது இவர் பாடியருளிய திருப்பதிகம் ஒன்றுளது. எனவே, ஒன்பதாந் திருமுறை யினை யருளிச் செய்த நாயன்மார் ஒன்பதின் மருள் இவ்வரசர் பெருமானும் ஒருவர் ஆவர்.1 கொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருமழபாடி என்னுந் தலத்திற்கு மேற்கே ஒருமைல் தூரத்திலுள்ள கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலம் என்ற நகரம் இவர் அமைத்ததே யாகும். இவரது மனைவியராகிய செம்பியன் மாதேவியாரது சிவபத்தியும் அளவிட்டுரைக்குந் தரத்ததன்று. இவ்வம்மையார் திருப்பணி புரிந்து நிபந்தங்கள் அமைத்துள்ள சிவன் கோயில்கள் நம் தமிழகத்தில் பல உள்ளன.2 கண்டராதித்த சோழரது படிமம் இவரது மனைவியாரால் கட்டுவிக்கப் பெற்ற கோனேரி ராசபுரம் சிவன்கோயிலில் இன்றும் உள்ளது. இவ்வரசருக்குப் பின்னர் இவரது தம்பியாகிய அரிஞ்சயன் என்பான் சில மாதங்கள் ஆண்டனன். பிறகு இவனது புதல்வனாகிய இரண்டாம் பராந்தகன் கி.பி. 957 முதல் கி.பி 970-வரைஅரசு செலுத்தினான். இவனைச் சுந்தரசோழன் என்றும் வழங்குவர். அன்றியும், இவனைப் பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. இவனது மனைவி வானவன் மாதேவி என்பாள்.3 இவ்வரசனுடைய படிமமும் இவன் பட்டத்தரசி வானவன் மாதேவி படிமமும் தஞ்சாவூரிலுள்ள இராசராசேச்சுரத்தில் இவனது மகளாகிய குந்தவையால் எழுந்தருளு விக்கப் பெற்றுப் பூசனைக்கு நிபந்தங்களும் விடப்பட்டுள்ளன.4 இவ்வேந்தனது ஆட்சிக் காலத்திறுதியில் இவன் முதல் மகன் ஆதித்த கரிகாலன் இளவரசுப் பட்டங் கட்டப் பெற்றான். இவன் பெருவீரன்; பாண்டியனைப் போரில் வென்றமை பற்றி வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன் எனப் பாராட்டப் பெற்றனன். சில ஆண்டுகளுக்குள் இவன் பகைவரது சூழ்ச்சியாற் கொல்லப் பட்டனன். பின்னர், கண்டராதித்தரது திருமகனாகிய உத்தம சோழன் கி.பி. 970-ல் பட்டத்திற்கு வந்தான். இவனுக்கு மதுராந்தகன் என்ற பெயரும் உண்டு. கி.பி. 985-ல் உத்தம சோழன் இறக்கவே, இரண்டாம் பராந்தகசோழனது இரண்டாவது மகனாகிய முதலாம் இராசராசசோழன் அரியணை ஏறினான். சோழமன்னருள் பல்வகையானும் பெருமையுற்றுப் பெருவீரனாய் விளங்கியவன் இவ்வேந்தனே என்று கூறுவது சிறிதும் புனைந் துரையாகாது. இவனது ஆளுகையில் சோழ மண்டலம் மிக உயரிய நிலையை எய்திற்று. திருநாரையூரில் வாழ்ந்த; ஆதிசைவராகிய நம்பி யாண்டார் நம்பி என்னும் பெரியாரைக் கொண்டு சைவ சமய குரவர்களது திருப்பதிகங் களைத் திருமுறைகளாகத் தொகுப்பித்தவன் இம்மன்னனே யென்பர். இவனுக்கு அக்காலத்தில் இட்டு வழங்கிய சிவபாத சேகரன் என்ற பெயரொன்றே இவன் சைவ சமயத்தில் எத்துணை ஈடுபாடுடையவனாயிருந்தனன் என்பதை நன்கு விளக்கு கின்றது. ஆயினும் இவன் பிறமதத்தினரை என்றும் துன்புறுத்திய வனல்லன்; அன்னோருக்கு மிக்க ஆதரவுகாட்டி யொழுகிவந்தனன் என்பதற்கு எத்துணையோ ஆதாரங்கள் உள. சோழ மன்னர்களது பெருமைக்கும், புகழுக்கும் அக்காலத்திய சிற்ப நுட்பத்திற்கும் ஓர் அறிகுறியாய் இப்போது தஞ்சைமாநகரின் கண் விளங்கு கின்ற இராசராசேச்சுரம் என்ற பெரியகோயிலை எடுப்பித்தவன் இம் மன்னர்பெருமானே யாவன் என்பது ஈண்டு அறியத் தக்கது. இவ்வேந்தன், வேங்கி, கங்கபாடி, நுளம்ப பாடி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கம், ஈழம், இரட்ட பாடி முதலான நாடுகளை வென்று தன்னடிப் படுத்திப் புகழெய்தியவன். இவற்றுள் வேங்கி என்பது கிருஷ்ணை கோதாவரி என்ற இருபேராறுகளுக்கு மிடையில் கீழ் கடலைச் சார்ந்துள்ளதொரு நாடு என்பதை முன்னரே கூறியுள்ளோம். இது கீழைச்சளுக்கியரது ஆட்சிக்குட்பட்டது. கி.பி. 972-முதல் 989-வரை இஃது உள்நாட்டுக் கலகங்களால் அல்லலுற்றிருந்தது. முதலாம் இராசராசசோழன் அச்சமயமே அந்நாட்டைக் கைப் பற்றுதற்குத் தக்கதெனக் கருதிப் பெரும் படையுடன் அவன் மகனாகிய முதலாம் இராசேந்திர சோழனை அவ்வேங்கிநாட்டிற்கு அனுப்பினான். அவன் அந்நாட்டை வென்றதோடு அமையாமல் கீழைச்சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனையும் சிறைபிடித்துக் கொண்டு தஞ்சைக்குத் திரும்பினான். விமலாதித்தனும் தஞ்சைமாநகரில் பல ஆண்டுகள் தங்கியிருந்தான். பிறகு, முதலாம் இராசராசசோழன் தன் மகள் குந்தவையை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்ததோடு வேங்கி நாட்டையாட்சி புரியும் உரிமையும் அளித்து அந்நாட்டிற்கு அவனை திரும்ப அனுப்பினான்.1 விமலா தித்தனும் அந்நாட்டைக் கி.பி. 1015-முதல் 1022-வரை அரசாண்டான். அவனுக்கு இராசராச நரேந்திரன், விசயாதித்தன் என்ற இருமக்கள் இருந்தனர். அவர்களுள் இராசராசநரேந்திரன் என்பவனே விமலாதித்தன் இறந்த பின்னர்க் கி.பி. 1022-ல் முடிசூட்டப் பெற்றான். முதலாம் இராசராச சோழனது மகனாகிய முதலாம் இராசேந்திரசோழன் தன் மகள் அம்மங்கைதேவியைத் தன் உடன் பிறந்தாளது மகனும் வேங்கிநாட்டு வேந்தனுமாகிய இராசராச நரேந்திரனுக்கு மணம்புரிவித்தான். மணமக்கள் இருவரும் வேங்கி நாட்டில் வாழ்ந்துவந்தனர். அந்நாளில் பட்டத்தரசியாகிய அம்மங்கைதேவி கருப்ப முற்றுத் தன் பிறந்தகமாகிய கங்கைகொண்ட சோழபுரஞ் சென்று அங்குக் கி.பி. 1044-ஆம் ஆண்டில் பூசநாளில் ஒரு தவப்புதல்வனைப் பெற்றாள்.2 திருமகன் பிறந்த நாளிலே நன்னிமித்தங்கள் காணப்பட்டன. அவற்றைக் கண்ட நகரமாந்தர் எல்லோரும் இறும்பூதுற்று, முன்னாளில் இலங்கையை யழித்துப் பின்னாளில் பாரதப் போர் முடித்த திருமாலே இப்புவியின்கண் மறம் நீங்க அறம் வளருமாறு இந்நாளில் அம்மங்கைதேவியின் ஆலிலை போன்ற திருவயிற்றில் தோன்றியுள்ளார் என்று கூறிப் பெருமகிழ்வுற்றனர். முதலாம் இராசேந்திர சோழனது பட்டத்தரசியும் இவற்றையெல்லாம் கண்டு களிப்பெய்தித் தன் காதற்பேரனைக் கைகளில் ஏந்திப் பாராட்டிய போது சில திங்களுக்கு முன் காலஞ்சென்ற தன் நாயகனுடைய அடை யாளங்கள்பல அக்குழந்தையின் பாலிருத்தல் கண்டு இவன் எமக்கு அரு மகனாகி எங்கள் இரவிகுலத்தைத் தளராது தாங்குவானாக என்றுரைத்து அம்மகவிற்கு இராசேந்திர சோழன்1 என்று பெயரிட்டாள்.2 இவ்வரசிளங் குமரனும் அங்கேயே வளர்ந்து வந்தான். இராசேந்திரனும், இளமையில் கல்வி கற்றுப் பலகலைகளிலும் தேர்ச்சியுற்று அறிஞர் யாவரும் கற்றுத் துறைபோய நற்றவக் குரிசில் என்று புகழ்ந்து பேசுமாறு கல்வியில் உயர்நிலையை யடைந்தான். பிறகு இவ்வரசிளங்குமரன், உலகங் காக்கும் கடமை பூண்ட தன் குலத்திற்குரிய படைக்கலப் பயிற்சியும் பெற்று, யானையேற்றம் குதிரையேற்றங்களும் பயின்று, தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றித் திகழ்ந்தனன். இவனது அம்மான்மார் களாகிய இராசாதி ராசசோழன், இரண்டாம் ராசேந்திர சோழன், வீரராசேந்திரசோழன் முதலானோர் இவனிடத்து மிக்க அன்புடையவர்களாக நடந்து வந்தனர். இவனது ஆற்றலையுணர்ந்த சான்றோர் தந்தையின் சந்திர குலத்தையும் தாயின் சூரியகுலத்தையும் ஒருங்கே பெருமையுறச் செய்து, அவற்றைப் புகழுக்கு நிலைக்களமாக்க வந்த உபய குலோத்தமன் என்று இவனைப் பெரிதும் பாராட்டிப் பேசுவாராயினர். 3. வேங்கிநாட்டில் குலோத்துங்கன் முடிசூடுதல் நம் இராசேந்திரன் பல கலைகளிலும் வல்லவனாய்ப் பல்லோரும் புகழுமாறு கங்கைகொண்ட சோழபுரத்தில் வாழ்ந்துவரும் நாட்களில், வேங்கிநாட்டில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த தன் தந்தையாகிய இராசராச நரேந்திரன் நோயுற்று வருந்திக் கொண்டிருக் கின்றனன் என்று ஒரு திருமுகம் வரப்பெற்றனன். இதனைக் கண்டதும் அவன் பெருங் கவலை யுற்றுத் தன் மாமன்மாரிடம் விடை பெற்றுக்கொண்டு விரைவில் வேங்கி நாட்டை யடைந்தான்; அங்குப் பிணியுற்றுக் கிடந்த தன் தந்தையின் நிலைமையைக்கண்டு பெரிதும் மனமுடைந்து, அவனை விட்டகலாது அணுக்கத்தொண்டனாயமர்ந்து வேண்டியன புரிந்துவந்தான். அந்நாளில் சளுக்கிய இராசராசனும் தனக்குக் கடவுள் அமைத்த வாழ்நாள் முடிவுற்றமையின் கி. பி. 1062 ஆம் ஆண்டில் வானுலகஞ் சென்றனன்.1 தந்தையின் பெரும் பிரிவிற்காற்றாது வருந்திய இராசேந்திரனும் மகன் தந்தைக்கு ஆற்றவேண்டிய தீக்கடன் நீர்க்கடன் முதலியவற்றை முடித்து, அம்மான் மாரும் ஆன்றோரும் ஆறுதல் கூற, ஒருவாறு அத் துன்பத்தினின்று நீங்கினான் பின்னர், அமைச்சரும் சுற்றத்தினரும் அவனுக்கு முடிசூட்டுவிழா நடத்தற்குத் தக்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர். இஃது இங்ஙனமாக, கீழைச் சளுக்கியரது தாயத் தினரான மேலைச்சளுக்கிய மன்னர்களுள் ஆறாம் விக்கரமாதித்தன் என்ற ஓர் அரசன் இருந்தான். அவன் பெரிய போர்வீரன். அவனுக்கும் சோழருக்கும் அடிக்கடி பெரும்போர்கள் நிகழ்ந்துவந்தன. சோழர்கள் தெற்கேயுள்ள பல மன்னர்களைவென்று தம்மடிப் படுத்தித் தாம் முடிவேந்தர்களாய் மேன்மையுற்று விளங்கினர். அங்ஙனமே மேலைச்சளுக்கியரும் தக்கணத்தின் வடபாகத்தில் பெருமையுடன் நிலவினர். இதனால் பேராண்மையும் பெரு வீரமும் படைத்த இவ்விரு அரசகுலத்தினரும் ஒருவரை யொருவர் வென்று கீழ்ப்படுத்த வேண்டுமென்ற எண்ணமும் முயற்சியும் உடையவராகவே இருந்தனர். இதற்கேற்ப, முதலாம் இராசராச சோழன் காலமுதல் சோழர்கள் கீழைச்சளுக்கிய மன்னர்களுக்குத் தம் பெண்களை மணஞ்செய்து கொடுத்து அன்னோரைத் தமக்கு நெருங்கிய உறவினராகச் செய்துக்கொண்டதோடு தம் ஆட்சிக்குட் பட்டிருக்கு மாறும் செய்துவந்தனர். இதனால் கீழைச்சளுக்கியரது உதவி மேலைச்சளுக்கியருக்குக் கிடைக்காமற் போயிற்று. அன்றியும் சோழர் களது வலிமையும் பெருமையும் வளர்ச்சியுறலாயின இதனை யுணர்ந்த மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் தன் தாயத்தினரான கீழைச்சளுக்கியரைச் சோழர்களினின்று பிரித்துத் தன்பால் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்ற கருத்துடையவனாய் காலங்கருதிக் கொண்டிருந்தான். அதற்கேற்ப அவன் வேங்கியின் மன்னனாகிய இராசராசநரேந்திரன் இறந்ததை யறிந்து, அதுவே தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கோடற்குத் தக்க காலம் என்று கருதித் தன் தண்ட நாயகனான சாமுண்டராயன் தலைமையில் ஒரு படையை வேங்கி நாட்டிற்கனுப்பினான்.1 இச்செய்தியை யறிந்த வீரராசேந்திரசோழன் தன் முன்னோர்கள் காலமுதல் நெருங்கிய உறவினால் பிணிக்கப் பட்டிருந்த வேங்கி வேந்தரையும், தங்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த வேங்கிநாட்டையும் இழப்பதுதன் ஆண்மைக்கும் வீரத்திற்கும் இழிவையே பயக்குமென்று துணிந்து ஒரு பெரும்படையோடு அந்நாட்டை நோக்கிச் சென்றான். அங்குக் கடும்போர் நடைபெற்றது. அப்போரில் மேலைச்சளுக்கியரது தண்ட நாயகனான சாமுண்டராயன் என்பான் கொல்லப்பட்டான். அவனது படைகள் எல்லாம் சிதறுண்டு நாற்றிசையிலும் ஓடியுய்ந்தன. வெற்றி யெய்திய வீரராசேந்திரசோழன் தன் மருமகனாகிய இராசேந்திரனுக்கு வேங்கிநாட்டில் ஒருநன்னாளில் முடிசூட்டி, அந்நாட்டிலுள்ள மக்கள் எல்லோரையும் மகிழ்வுறச் செய்தான். அக்கீழைச் சளுக்கிய நாட்டின் ஒழுகலாற்றின் படி, நமது இராசேந்திரன் ஏழாம் விஷ்ணுவர்த்தனன்1 என்னும் பெயரை முடிசூட்டுநாளில் எய்தித் தந்தையினும் சதமடங்கு தனயன் என்ற ஆன்றோர் உரைக்கு இலக்காக அரசு செலுத்தி வந்தான். அக்காலங்களில் அவனுக்கு உசாத்துணையாயிருந்து அவனது பேரன்பிற்குரியவனாய் ஒழுகி வந்தவன் விசயாதித்தன் என்ற அவனது சிறியதந்தையே யென்பர். அவனது ஆட்சிக் காலத்தில் வேங்கிநாடு மிகச் செழிப்புற்றிருந்தது. குடிகளும் இன்புற்று வாழ்ந்துவந்தனர். 4. குலோத்துங்கன் சோழமண்டலத்திற்கு வருதல் சோழநாட்டில் முதலாம் இராசராசசோழன் கி.பி. 1014-ல் விண்ணுல கெய்திய பின்னர் அவனது புதல்வனாகிய முதலாம் இராசேந்திரசோழன் அரியணை ஏறினான். இவனைக் கங்கை கொண்ட சோழனென்றும் வழங்குவர். இவனது ஆளுகையில் சோழமண்டலம் ஈடும் எடுப்புமற்ற நிலையை யடைந்தது. மற்றைச் சோழமன்னர்களது ஆட்சிக்காலங்களில் இச்சோழ மண்டலம் இத்தகையதொரு சிறப்பும் பெருமையும் எய்தவில்லை யென்றே கூறலாம். இவ்வேந்தன் மண்ணைக்கடக்கம், ஈழம், இரட்டபாடி, கோசலநாடு, உத்தரலாடம், தக்கணலாடம், வங்காளம், கடாரம், பப்பாளம், இலாமுரி தேசம் முதலான நாடுகளையும், கங்கை யாற்றைச் சார்ந்த சில பகுதி களையும் வென்று பெரும் புகழுடன் விளங்கினான். இவனைப் பூர்வ தேசமுங் கங்கையுங் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று கல்வெட்டுக்கள் கூறும். இவன் வடநாட்டு வேந்தர்களை வென்று கங்கைநீர் நிரம்பிய குடங்களை அவர்களுடைய தலைகளில் ஏற்றிச் சோழமண்டலத்திற்குக் கொண்டுவரச் செய்து, திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் பெரியதோர் ஏரி வெட்டு வித்து1 அக்கங்கை நீரை அதில் ஊற்றி அதற்குச் சோழ கங்கம் எனப் பெயரிட்டான். இந்த ஏரியின் பக்கத்துள்ளோர் இதனைப் பொன்னேரி என்று இப்போது வழங்கு கின்றனர். இதனருகில் இவ்வேந்தன் தான் வடநாட்டில் அடைந்த வெற்றிக்கு அடையாளமாக ஒரு நகர் அமைத்து அதற்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயரிட்டனன். இவன்காலமுதல் இப் புதிய நகரமே சோழர்களுக்குத் தலைநகரமாயிற்று. இங்கு இம்மன்னனால் எடுப்பிக்கப் பெற்ற கங்கைகொண்ட சோழேச்சுரம் என்ற சிவன் கோயில் ஒன்றுளது. இஃது ஒன்பதாம் திருமுறை யாசிரியருள் ஒருவராகிய கருவூர்த்தேவரால் பாடப்பெற்றது. பழையாறை என்று தற்காலத்து வழங்கும் முடிகொண்ட சோழபுரத்தும்1 இவ்வேந்தனுக்குப் பெரியதோர் அரண்மனை இருந்தது. முடிகொண்டான் என்ற பெயருடன் தஞ்சாவூர் ஜில்லாவில் இப்போதுள்ள முடிகொண்ட சோழப் பேராற்றை வெட்டுவித்தவனும் இவ்வரசனே யாவன். இவ்வேந்தன் கி.பி. 1044-ஆம் ஆண்டில் இறந்தான். பிறகு இவனுடைய மக்களுள் முதல்வனாகிய முதலாம் இராசாதி ராசசோழன் பட்டத்திற்கு வந்தான். இவன் தன் தந்தையைப் போன்ற பெருவீரன். இவன் மேலைச் சளுக்கிய ரோடு அடிக்கடி போர்புரிந்து இறுதியில் சளுக்கியமன்னனான ஆகவமல்லனோடு புரிந்த கொப்பத்துப் போரில் கி.பி. 1054ல் உயிர் துறந்தான். இவனைக் கலியாணபுரமும் கொல்லாபுரமும் கொண்டருளி ஆனை மேல் துஞ்சியருளிய பெருமாள் விசய ராசேந்திரசோழன் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. பின்னர், இவனது தம்பியாகிய இரண்டாம் இராசேந்திரசோழன் பொருகளத்தில் முடிகவித்து, அப்போரை நடாத்தி வெற்றி பெற்றான். இவன் தன் தந்தையையும் தமையனையும் போலவே சிறப்புடன் அரசாண்டுவந்தான். இவனும் மேலைச்சளுக்கிய ரோடு தொடர்ந்து போர் செய்துவந்தான். இவன் சளுக்கிய ரோடு நிகழ்த்திய போரொன்றில் உயிரிழந்தனன் போலும். பின்னர், இவனது இளவலாகிய மும்முடிச்சோழன் என்பான் இராசமகேந்திரன் என்ற பெயருடன் பட்டம் பெற்று அரசாளத் தொடங் கினான். இவன் சோழ மண்டலத்தின் ஆட்சியை அடைவதற்குமுன் தன் தந்தையாகிய கங்கைகொண்ட சோழனது ஆணையின்படி சேரமண்டலத் திற்கும் பாண்டி மண்டலத்திற்கும் அரசப் பிரதிநிதியா யிருந்து சோழ பாண்டியன் என்ற பட்டத்துடன் அவ்விரண்டையும் ஒருங்கே ஆண்டவன். இவன் தன் காலத்தில் சோழமண்டலத்திலுள்ள மக்கள் எல்லோரும் அமைதியாக வாழ்ந்துவருமாறு நன்னெறி வழாது செங்கோல் செலுத்தினான். இத்தகைய பெருங்குணவேந்தனும் சில ஆண்டுகளில் துஞ்சினான்: பிறகு, இவனது தம்பியாகிய வீரராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் கி.பி. 1063-ஆம் ஆண்டில் அரசு கட்டிலேறினான். இவ் வேந்தன் பேராற்றலும் பெருவீரமும் படைத்தவன். இவன் முடிமன்னர் களான தன் தமையன் மார்ளுக்கும், அன்னோரது மக்களுக்கும் மேலைச் சளுக்கியர் களால் நேர்ந்த ஆற்றொணா இன்னல்களை மனத்திற் கொண்டு, பெருஞ் செற்ற முடையவனாய் அவர்களைப் பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு பெரும்படையைத் திரட்டிக் கொண்டு அவர்களது இரட்டபாடி நாட்டின் மேற் சென்றான். இவன், இங்ஙனம் ஐந்துமுறை படையெடுத்துச்சென்று மேலைச் சளுக்கியரது நாட்டைப் பல விடங்களிற் கொள்ளையிட்டும் சிலவிடங்களில் அழித்தும் பாழ்படுத் தினான். இம்மானக் கேட்டைப்பொறாத மேலைச் சளுக்கியர் தம் படையைத் திரட்டிக்கொண்டு இவனோடு பலவிடங்களில் போர் புரிந்தனர். இறுதியில் கிருஷ்ணையும் துங்கபத்திரையும் கூடும் இடமாகிய கூடல்சங்கமத்தில் கி.பி. 1064ல் இருபடைகளும் கைகலந்து பெரும் போர்செய்தன. அப்போரில் மேலைச்சளுக்கிய மன்னர் களாகிய ஆகவமல்லன், விக்கிரமாதித்தன் முதலானோர் தோல்வி யுற்றுப் புறங் காட்டி ஓடி ஒளிந்தனர். சளுக்கிய சாமந்தர்களுட் பல்லோர் போர்க் களத்தில் உயிர்துறந்து புகழ் கொண்டனர். வீரராசேந்திரசோழனும் தன்னுடன் பிறந்த முன்னவர் எண்ணம் முடித்து வெற்றித்திருவை மணந்து, தனது தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மகிழ்வுடன் சென்று இனிது செங்கோல் ஓச்சுவானாயினன். இங்ஙனம் சோழருக்கும் மேலைச்சளுக்கியருக்கும் நிகழ்ந்து வந்த போர்களில் சோழகுலத்துதித்த முடிவேந்தர் சிலரும் அரசிளங் குமரர் பலரும் இறந்தொழிந்தனர். இறுதியில் எஞ்சியவர் வீரராசேந்திர சோழனும் இவனது மைந்தனான அதிராசேந்திர சோழனுமேயாவர். வீரராசேந்திர சோழனது ஆட்சியில் கி.பி. 1067ல் இளவரசுப் பட்டங் கட்டப்பெற்ற அவன் புதல்வன் அதிரா சேந்திரனுடைய கல்வெட்டுக்களில் வீர ராசேந்திரனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு வரை ஆண்டு குறிப்பிடப்பட்டிருத்தலால் வீரராசேந்திரன் கி.பி. 1070-ஆம் ஆண்டின் முற்பகுதி வரை உயிர் வாழ்ந்திருந்தனன் எனத் தெரிகிறது. பிறகு அவன் மகன் அதிராசேந்திர சோழன் முடிசூட்டப் பெற்றுச் சில திங்கள் அரசு புரிந்தான். தஞ்சாவூர் சில்லா கூகூரில் காணப்படும் கல்வெட்டொன்று அதிரா சேந்திரன் தன் ஆட்சியின் மூன்றாமாண்டில் கொடிய நோய்வாய்ப்பட்டுத் துன்புற்றானென்றும் அவன் நோய் நீங்கி நலம் பெறுதற் பொருட்டுக் கூகூர்க்கோயிலில் இறைவன் திருமுன்னர் நாள் தோறும் இருமுறை தேவாரப் பதிகங்கள் ஓதப்பெற்று வந்தன வென்றும் கூறுகின்றது. இவனது ஆட்சியின் மூன்றாமாண்டு இரு நூறாம் நாளுக்குப் பின் இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்பட வில்லை. எனவே நோய்வாய்ப் பட்டிருந்த அதிராசேந்திரன் அந் நாட்களில் உயிர் துறந்தனனாதல் வேண்டும். அதி ராசேந்திரனுக்குப் புதல்வன் இல்லாமையாலும் சோழ நாட்டில் முடிசூட்டப் பெறுவதற் குரிய வேறு சோழ அரச குமாரனொரு வனும் அத்தொல் பெருங்குடியில் இல்லாமையாலும் புகழும் பெருமையும் வாய்ந்த விசயாலயசோழன் காலமுதல் சோழநாட்டில் தொடர்ந்து ஆட்சிபுரிந்து வந்த பண்டைச் சோழமன்னர் மரபு அதிராசேந்திர சோழனோடு முடிவெய்துவதாயிற்று. இந்நிலையில் கங்கைகொண்ட சோழனது மகள் வயிற்றுப் பேரனும் வீரராசேந்திர சோழனது தங்கையின் மகனும் கீழைச் சளுக்கிய வேந்தனு மாகிய இராசேந்திர னென்பான் வடபுலத்துப் போரில் ஈடுபட்டிருந்தனன். இவன் மத்திய மாகாணத்திலுள்ள வயிராகரம் என்ற ஊரில் எண்ணிறந்த யானைகளைக் கைப்பற்றிக் கொண்டு அவ்வூரையும் எரியூட்டினான்;1 பின்னர் அம்மாகாணத் திலுள்ள சக்கரக்கோட்ட மண்டலத்தை ஆண்டுவந்த தராவர்ஷன் என்னும் வேந்தனோடு போர்புரிந்து அவனைத் தனக்குத் திறைசெலுத்தும்படி செய்தான்.1 இங்ஙனம் இராசேந்திரன் வடபுலத்தில் பெருவீரத்துடன் போர் செய்து கொண்டிருக்கும் நாட்களில் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தில் அதிராசேந்திரசோழன் விண்ணுல கெய்தி யதை யறிந்து சோழநாட்டிற்கு விரைந்து வந்தனன். 5. குலோத்துங்கன் சோழமண்டலத்தில் முடிசூடுதல் அதிராசேந்திரசோழன் இறந்தபிறகு சோழநாடு அரசனின்றி அல்லலுற்றது. குறுநிலமன்னரது கலகம் ஒருபுறமும் உண்ணாட்டுக் குழப்பம் மற்றொருபுறமும் மிக்கெழவே, சோழ நாட்டு மக்கள் எல் லோரும் அமைதியான வாழ்வின்றி ஆற்றொணாப் பெருந் துன்பத்துள் ஆழ்ந்தனர். கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார், மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித் துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்க மோய்ந்தே சாதிக ளொன்றோ டொன்று தலைதடு மாறி யாரும் ஓதிய நெறியி னில்லா தொழுக்கமு மறந்து போயே ஒருவரை யொருவர் கைமிக் கும்பர்தங் கோயில் சாம்பி அரிவையர் கற்புச் சோம்பி யரண்களு மழியவாங்கே1 கலியிருள்பரந்தது என்று இக்குழப்பத்தை அந்நூலிற் கூறியுள்ளார். அன்றியும் சோழநாடு அக்காலத்தில் அரசனின்றி அல்லலுற்றிருந்த செய்தியை, அருக்க னுதயத் தாசையி லிருக்கும் கமல மனைய நிலமகள் தன்னை முந்நீர்க் குறித்த அந்நாள் திருமால் ஆதிக் கேழ லாகி யெடுத்தன்ன யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத் தன்குடை நிழற்கீ ழின்புற விருத்தி எனவும், தென்றிசைத் தேமரு கமலப் பூமகள் பொதுமையும் பொன்னி யாடை நன்னிலப் பாவை தனிமையுந் தவிரவந்த புனிதத் திருமணி மகுடம் உரிமையிற் சூடி எனவும் வரும் முதலாங் குலோத்துங்கசோழன் மெய்க் கீர்த்திகளாலும் உணரலாம். சோழநாடு அரசனின்றி நிலைகுலைந்திருந்த செய்தியை யறிந்து வடபுலத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு விரைந்துவந்த இராசேந்திரனைக் கண்ட அமைச்சர் படைத்தலைவர் முதலான அரசிய லதிகாரிகள் எல்லோரும் இவ்வரசகுமாரன் தக்க சமயத்தில் வந்தமைக்குப் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள். சோழர் மரபில் முடி சூடுதற்குரிய அரசகுமாரர் எவருமில்லாமையாலும் கங்கை கொண்ட சோழனுடைய மகள் வயிற்றுப் பேரனாம் உரிமை இவனுக் கிருத்தலாலும் இவ்விராசேந்திரனே சோழ நாட்டின் அரசனாக முடிசூடும் உரிமை யுடையோன் எனவும் உறுதிசெய்தனர். அங்ஙனமே இவனுக்கு முடி சூட்டுதற்குத்தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கி.பி. 1070-ஆம் ஆண்டு சூன்திங்கள் 9-ஆம் நாளில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இவன் முறைப்படி முடிசூட்டப்பெற்றான். அந்நன்னாளில் இவன் குலோத்துங்க சோழன் என்னும் அபிடேகப் பெயரும் எய்தினான். உடனே உண்ணாட்டுக் குழப்பமும் கலகமும் ஒழியவே, சோழமண்டல மெங்கும் அமைதி நிலவிற்று அப்பொழுது சிற்றரசர்கள் இவன் அடிமிசை அறுகெடுத்திட்டு வணங்கினர்; அந்தணர் அரசர் பெருமான் நீடு வாழ்க என்று வாழ்த்தினர்; மனுநெறி எங்கும் தலையெடுக்கவே இவன் புகழ்யாண்டும் பரவுவதாயிற்று. இவனது பேராற்றலையும் இவனால் சோணாடு அடைந்த நலங்களையும், நிழலிலடைந்தன திசைகள் நெறியிலடைந்தன மறைகள் கழலிலடைந்தனர் உதியர் கடலிலடைந்தனர் செழியர். பரிசில் சுமந்தனர் கவிஞர் பகடுசுமந்தன திறைகள் அரசு சுமந்தன இறைகள் அவனிசுமந்தன புயமும். எனவரும் கலிங்கத்துப்பரணி தாழிசைகளால் உணரலாம். குலோத்துங்கன் சோழநாட்டு ஆட்சியைப் பெற்றமை பற்றி வரலாற்றாராய்ச்சியாளர்க்குள் கருத்து வேறுபாடு உண்டு. அதிராசேந்திரசோழனைக் கொன்றோ அல்லது கொல்வித்தோ இவன் சோழநாட்டாட்சியைக் கைப்பற்றினன் என்பர் சிலர். வைணவர்களை அதிராசேந்திரன் துன்புறுத்தினமையால் அன்னோர் நிகழ்த்திய கலகத்தால் அவன் கொல்லப்பட்டா னென்றும் அச்சமயத்தில் குலோத்துங்கன் சோழ நாட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டா னென்றும் கூறுவர் வேறு சிலர். கங்கைகொண்ட சோழன் மனைவி, தன்பேரனாகிய இவனை சுவீகாரம் எடுத்துக் கொண்டாள் என்பர் மற்றுஞ் சிலர். அதிராசேந்திரசோழன் நோய்வாய்ப் பட்டிறந்தமைக்குக் கல்வெட்டில் ஆதாரமிருத்தலாலும் நம் குலோத்துங்கன் சோழநாட்டை யடைந்த போது அந்நாடு அரசனின்றி அல்லலுற்ற நிலையில் இருந்த தென்று கல்வெட்டுக்களும் கலிங்கத்துப் பரணியும் ஒருங்கே கூறு வதாலும் அதிராசேந்திரன் ஆட்சியில் திருமால் கோயில் கற்றளியாக ஆக்கப்பட்டிருத்தலை நோக்குங்கால் அவன் வைணவசமயத்தில் வெறுப்புடையனல்ல னென்பது நன்று புலனாத லாலும் அவன் ஆளுகையில் சோழநாடு கலகமின்றி அமைதியாகவே இருந்தமைக்கு அவன் காலத்துக் கல்வெட்டுக்களில் போதிய ஆதாரங்கள் கிடைத் தலாலும் அவர்கள் கூறுவனவெல்லாம் சிறிதும் பொருந்தாமை காணலாம். கங்கைகொண்ட சோழனுக்குப் புதல்வர் ஐவர் இருந்தன ரென்பது கல்வெட்டுக்களால் தெளியக்கிடத்தலால் அவன் மனைவி தன் பேரனாகிய குலோத்துங்கனைச் சுவீகாரப் புதல்வனாகக் கொண்டன ளென்பதற்கும் இடமில்லை. 6. குலோத்துங்கனது அரசாட்சி நம் இராசேந்திரன் சோழமண்டலத்தின் ஆட்சியைக் கி.பி. 1070-ஆம் ஆண்டில் எய்தி பின்னர், ஐந்தாண்டுகள் வரை இவனுக்கு இப்பெயரே பெரும்பாலும் வழங்கிவந்தது. அதற்கு முன்னர் இவன் வேங்கி நாட்டை யாண்டுவந்தபோது அந்நாட்டின் ஒழுகலாற்றின்படி, இவனுக்கு விஷ்ணு வர்த்தனன் என்ற பெயரும் வழங்கிற் றென்பதை முன்னரே கூறியுள்ளோம். ஆயினும் சோணாட்டரசுரிமையை அடைந்த பிறகு கி.பி 1075 முதல் குலோத்துங்கன் என்ற பெயரே இவனுக்கு வாணாள் முழுமையும் நிலைபெற்று வழங்கலாயிற்று. குலோத்துங் கன் என்ற பெயருடைய சோழமன்னருள் இவனே முதல்வனாதலின், இவனை முதலாங் குலோத்துங்கன் என்று வழங்குதலே அமை வுடைத்து. இனி, நாமும் இவனைக் குலோத்துங்கன் என்றே எழுதுவோம். இப்பெயரேயன்றி இவனுக்கு வழங்கிய வேறு பெயர்களும் சில உள. அவை, அபயன், விசயதரன், சயதுங்கன், விருதராச பயங்கரன், கரிகாலன், இராச நாராயணன், உலகுய்ய வந்தான் என்பன. இப்பெயர்கள் இவனைக் குறித்தலைக் கல்வெட்டுக்களிலும் கலிங்கத்துப்பரணியிலும் தெளிவாகக் காணலாம். சோழ அரசர்கள் தத்தம் ஆட்சியின் தொடக்கத்தில் ஒருவர்பின் ஒருவராகப் புனைந்துகொண்டு வந்த இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங்களுள்,1 நம் குலோத்துங்கன் இராசகேசரி என்ற பட்டம் பெற்றவன் ஆவான். இவ்வேந்தன் காலத்து நிகழ்ந்த போர்களுள்ளே ஒன்றிரண்டொழிய எஞ்சியன வெல்லாம் இவனது ஆட்சியின் பதினான்காம் ஆண்டிற்கு முன்னரே முடிவெய்தின. போர் களெல்லாம் ஒருவாறு முடிவுற்ற பின்னர், கி.பி. 1084 ஆம் ஆண்டில் இவன் சக்கரவர்த்தி என்ற பட்டமும்1 1090-ல் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டமும் புனைந்து கொண்டு பல்வகை யாலும் பெருமையும் புகழும் எய்தி இனிது வாழ்ந்துவந்தான். திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டம் புனைந்து ஆட்சி புரிந்த சோழ மன்னருள் இவனே முதல்வன் ஆவான். இவனுக்குப் பின்னர் ஆட்சிபுரிந்த இவனது வழித்தோன்றல்களுள் ஒவ்வொரு வரும் இப்பட்டம் புனைந்தே அரசாண்டுவந்தனர். திரிபுவன சக்கரவர்த்தி என்ற தொடர்மொழி சேரமண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் ஆகிய மூன்றுக்கும் சக்கரவர்த்தி என்ற பொருளை யுணர்த்துவதாகும். இங்ஙனம் பெருமையுடன் வாழ்ந்துவந்த குலோத்துங்கன் நாட்டிற்கு நலம்புரியக் கருதி முதலில் ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் அரசர்க்கு நெடுங்காலமாகச் செலுத்திவந்த சுங்கத்தை நீக்கினான். ஓர் அரசன் தன் நாட்டிலுள்ள எல்லா மக்கட்கும் இனிமை பயப்பனவாகப் பொதுவாகச் செய்யக்கூடிய நலங்களுள் இதனினும் சிறந்தது வேறு யாதுளது? இதனால் மக்கள் எல்லோரும் இவனை வாயாரவாழ்த்திச் சுங்கந்தவிர்த்த சோழன் என்று வழங்குவாராயினர். தவிராத சுங்கந்தவிர்த் தோன்2 என்று புலவர் பெருமக்களும் இவனைப் புகழ்ந்து பாராட்டினர். தஞ்சாவூரைச் சார்ந்த கருத்திட்டைக் குடி இவனது ஆட்சிக்காலத்தில் சுங்கந்தவிர்த்த சோழனல்லூர் என்ற பெயரும் எய்திற்று. பின்னர், சோழமண்டலம் முழுவதையும் அளந்து நிலங்களின் பரப்பை உள்ளவாறு அறிந்தாலன்றி நிலவரியை ஒழுங்குபடுத்தல் இயலாது என்று கருதி, அதனை முற்றிலும் அளக்குமாறு ஆணையிட்டான். அவ்வேலையும் இவன் பட்டமெய்திய பதினாறாம் ஆண்டாகிய கி.பி. 1086ல் தொடங்கப் பெற்று, இரண்டு ஆண்டுகளில் முடிவுற்றது.3 பிறகு, இவன், குடிகள் எல்லோரும் ஆறிலொரு கடமை நிலவரி செலுத்திவருமாறு ஏற்பாடு செய்தான். இங்ஙனமே இவனது பாட்டனுக்குத் தந்தையாகிய முதலாம் இராசராச சோழன் காலத்தும் சோழமண்டலம் ஒருமுறை அளக்கப்பெற்றதோடு ஆறிலொருகடமை வரியும் விதிக்கப்பெற்றது. குலோத்துங்கனது ஆளுகையில் வரி விதிக்கப்படாமல் ஒதுக்கப்பெற்ற நிலங்களும் உள. அவை, ஊர்நத்தம், குளம், கம்மாளச்சேரி, வெள்ளான் சுடுகாடு, பறைச்சுடுகாடு, ஊர்நிலத்தூடறுத்துப்போன வாய்க் கால், சீகோயில், ஐயன்கோயில், பிடாரிகோயில், கழனிக் குளங்கள், பறைச்சேரிநத்தம், நந்தவனம், குடியிருக்கை, ஊரிருக்கை, ஓடை, ஈழச்சேரி, வண்ணாரச்சேரி, பெருவழி, திருமுற்றம், ஊருணி, கொட்டகாரம், களம், தேவர் திருமஞ்சனக் குளம், கன்றுமேய்பாழ், சுடுகாட்டுக்குப் போகும்வழி, மனை, மனைப் படப்பை, கடை, கடைத்தெரு, மன்று, கிடங்கு, புற்று, காடு, உவர், ஆறு, ஆறிடு படுகை, உடைப்பு, மீன்பயில்பள்ளம், தேன்பயில் பொதும்பு என்பனவாம்.1 வரி விதிக்கப்பெறாத மேலே குறித்துள்ள இடங்களை ஆராயுங்கால், அந்நாளில் விளைநிலங் களுக்கு மாத்திரம் நிலவரி வாங்கப்பெற்று வந்ததேயன்றி மற்றை நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை என்பது நன்கு அறியக்கிடக்கின்றது. நம் குலோத்துங்கன் தன் நாட்டிலுள்ள குடிகளது உழவுத் தொழில் வளர்ச்சியுறுமாறு ஆங்காங்குப் பல ஏரிகளையும் குளங்களையும் வெட்டுவித்தான்; காடுகளை யழிப்பித்து மக்கள் வாழ்தற்கேற்ற பல ஊர்களும் நகரங்களும் அமைத்தான்; மக்களது தெய்வபக்தி ஓங்குமாறு ஊர்கள் தோறும் சிவ பெருமானுக்கும் திருமாலுக்கும் பல புதிய கோயில்கள் எடுப்பித்ததோடு அவற்றின் பூசை, திருவிழா முதலிய வற்றிற்கு நிபந்தங்களும் விட்டான்; அன்றியும் நகரங்களிலுள்ள பழைய செங்கற் கோயில்களை இடித்து அவற்றைக் கற்றளிகளாக எடுப்பித்தான். இங்ஙனம் இவனது ஆட்சிக் காலத்தில் மக்கட்குண்டான நன்மைகள் பலவாகும்; விரிப்பிற்பெருகும். இக்குலோத்துங்கனது ஆட்சியின் 50-ஆம் ஆண்டில் வரையப் பெற்ற கல்வெட்டுக்கள், திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார்பாளையந் தாலூகாவிலுள்ள காமரச வல்லியிலும், தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடித் தாலுகாவிலுள்ள கோட்டூரிலும் காணப்படுகின்றன. ஆதலால் இவன் சோழமண்டலத்தை ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆண்டிருத்தல் வேண்டும். இவன் தன் பாட்டனாகிய கங்கைகொண்ட சோழனாலும், மாமன்மார் களாகிய இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் முதலானோராலும் அரும்பாடுபட்டு உயரிய நிலைக்குக் கொண்டுவரப்பட்ட சோழ மண்டலத்தை, அதன் பெருமையுஞ் சிறப்பும் ஒரு சிறிதுங் குறையாதவாறு யாண்டும் அமைதி நிலைபெறச் செங்கோல் செலுத்திய பெருந்தகை ஆவன். இவனுக்கு முன்னர் அரசாண்ட சோழன் கரிகாற் பெருவளத்தான், முதலாம் இராசராச சோழன், கங்கை கொண்ட சோழன் முதலான பேரரசர்களை இவனுக்கு ஒப்பாகக் கூறலாமேயன்றி ஏனையோரைக் கூறுதல் சிறிதும் பொருந்தாது. இவன் காலத்திற்குப் பின்னர் இவனுக்கு ஒப்பாகக் கூறத்தக்க சோழமன்னன் ஒருவனும் இலன் என்றே கூறிவிடலாம். எனவே, நம் தமிழகம் தன்னைப் புகழுக்கும் பெருமைக்கும் நிலைக்களமாக்கிக் கோடற்குச் சிற்சில காலங் களில் அரிதிற்பெறும் பெருந்தவப்புதல்வர்களுள் ஒருவனாகவே இவனைக் கருதல் வேண்டும். இவனது ஆட்சிக்காலத்தில் சோழநாடு வடக்கேயுள்ள மகாநதி முதல் தெற்கேயுள்ள குமரிமுனை வரையிற் பரவியிருந்தது. அந்நாளில் சோழநாட்டிற்கு வடவெல்லையாகவும் மேலைச்சளுக்கிய நாட்டிற்குத் தென் னெல்லையாகவும் அமைந் திருந்தது இடையிலுள்ள துங்க பத்திரையாறே ஆகும். இப்பெருநில வரைப்பில் நம் குலோத்துங்கன் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஐம்பது யாண்டுகள் அமைதியாக ஆட்சிபுரிந்தது மக்களாகப் பிறந்தோர் பெறுதற்குரியனவும் அரியனவு மாகிய பெரும்பேறுகளுள் ஒன்றேயாம் என்று கூறுதலில் தடை யாதுளது. 7. குலோத்துங்கனுடைய போர்ச் செயல்கள் நம் குலோத்துங்கன் நடத்திய போர்களுள் ஒன்றிரண் டொழிய ஏனையவெல்லாம் இவனது ஆட்சியின் முற்பகுதி யிலேயே நிகழ்ந் துள்ளன என்று முன்னரே கூறியுள்ளோம். அப்போர் நிகழ்ச்சிகளைத் தற்காலத்தே வெளிவந்துள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு ஒருவாறு ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம். அவை :- 1. மேலைச்சளுக்கியருடன் நடத்திய முதற்போர் 2. நுளம்ப பாண்டியருடன் நடத்தியபோர் 3. மேலைச்சளுக்கியருடன் நடத்திய இரண்டாம் போர் 4. பாண்டியருடன் நடத்தியபோர் 5. சேரருடன் நடத்தியபோர் 6. தென் கலிங்கப்போர் 7. வடகலிங்கப்போர் என்பன. இப்போர் நிகழ்ச்சிகளின் காரணத்தையும் இவற்றின் முடிவையும் கல்வெட்டுக்களும் முன்னூல்களும் உணர்த்தும் குறிப்புக் களைக் கொண்டு சிறிது விளக்குவாம். 1. மேலைச்சளுக்கியருடன் நடத்திய முதற்போர்:- இது குலோத்துங்கன் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிர மாதித்தனோடு கி.பி. 1076-ஆம் ஆண்டில் நடத்தியபோர் ஆகும். தன் மைத்துனனாகிய அதிராசேந்திர சோழன் நோய் வாய்ப்பட்டு இறந்த பின்னர், சோழ வளநாட்டில் குலோத்துங்க சோழன் முடிசூடியதை யுணர்ந்த சளுக்கிய விக்கிரமாதித்தன் வேங்கிநாடும் சோணாடும் ஒருங்கே ஓர் அரசனது ஆட்சிக்குட் பட்டிருப்பது தன் ஆளுகைக்குப் பெரியதோர் இடுக்கண் விளைவதற்கு ஏதுவாகும் என்று கருதிக் குலோத்துங்கனது படை வலிமையையும் வீரத்தையும் குலைத்தற்குப் பெரிதும் முயன்றான். அவன், அம் முயற்சியில் வெற்றியுறும் வண்ணம் ஐந்து ஆண்டுகளாகப் படைசேர்த்தும் வந்தான். இந்நிலைமையில் விக்கிரமாதித்தனுக்கும் அவனது தமையனாகிய இரண்டாம் சோமேச்சுரனுக்கும் ஒற்றுமை குலைந்து மனவேறுபாடு உண்டாயிற்று. உண்டாகவே, விக்கிரமாதித்தன் தன் தம்பியாகிய சயசிங்கனை அழைத்துக்கொண்டு மேலைச்சளுக்கியரது தலை நகராகிய கல்யாணபுரத்தை விட்டுச்சென்றான்.1 பிறகு மேலைச் சளுக்கியரது இரட்ட மண்டலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சோமேச்சுரனாலும் விக்கிர மாதித்தனாலும் தனித்தனியாக ஆளப்படும் நிலையை அடைந்தது. இதனை யுணர்ந்த குலோத்துங்கன் சோமேச் சுரனைத் தன்பாற் சேர்த்துக் கொண்டான். பின்னர், விக்கிரமாதித்தன் தான் சேர்த்துவைத் திருந்த படைகளைத் திரட்டிக் கொண்டு குலோத்துங் கனோடு போர் புரியப் புறப்பட்டான். திரிபுவனமல்ல பாண்டியன், கதம்பகுலத்துச் சயகேசி முதலானோர் விக்கிரமாதித் தனுக்குப் பேருதவி புரிந்தனர். அவனது தம்பி சயசிங்கனும் அவன் பக்கல் நின்று வேண்டி யாங்கு உதவினான். சோமேச்சுரன் குலோத்துங் கன் பக்கத்திருந்து போர் புரிந்து உதவுவதாக உறுதியளித்திருந்தான். இறுதியில் குலோத்துங்கனது படையும் விக்கிரமாதித்தனது படையும் துங்கபத்திரை யாற்றங்கரையில் எதிர்த்துப் போர் செய்தன. விக்கிரமாதித்தன் தன் தமையனாகிய சோமேச்சுரன் குலோத்துங் கனோடு சேர்ந்து தன்னுடன் போர் செய்ய இயலாதவாறு ஓர் சூழ்ச்சிசெய்து இடைநின்று தடுத்தான். இப்போரிற் குலோத்துங்கன் வெற்றியாதல் தோல்வியாதல் எய்தினான் என்று கூறுதற்கிடமில்லை. ஆயினும் நம் குலோத்துங்கனுக்கு உதவி புரிதற்குத் துணைப்படை கொணர்ந்த சோமேச்சுரன் தோல்வியுற்றுத் தன் தம்பி யாகிய விக்கிர மாதித்தனாற் சிறைபிடிக்கப் பட்டு நாட்டையும் இழந்தான்.2 குலோத்துங்கனைச் சோழநாட்டினின்று துரத்துவதற்கு விக்கிரமாதிதன் ஐந்து ஆண்டுகளாகச் சேர்த்து வந்த பெரும் படையானது அவன் தன் தமையனைத் துங்கபத்திரைப் போரில் இங்ஙனம் தோல்வியுறச் செய்து இரட்டமண்டலத்துள் தன் தமையன் பாலிருந்த நாட்டைக் கைப்பற்றிக் கொள்வதற்குப் பெரிதும் பயன்பட்டது. விக்கிரமாதித்தனும் மேலைச் சளுக்கிய நாடாகிய இரட்டபாடி ஏழரையிலக்கம் முழுமைக்கும் முடிமன்னன் ஆயினான். முதலாம் மேலைச்சளுக்கியப் போர் இவ்வாறு முடிவெய்தியது. இதனை முதலாம் துங்கபத்திரைப் போர் என்றும் கூறலாம். 2. நுளம்ப பாண்டியருடன் நடத்தியபோர் :- இது நம் குலோத்துங்கனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டில் நிகழ்ந்த மற்றொரு போராகும். இப்போரைப் பற்றிய செய்திகள் இப்போது நன்கு புலப்பட வில்லை. குலோத்துங்கனது மெய்க்கீர்த்தியும் இதனை விளக்கிற்றில்லை. ஆயினும், இது, விக்கிரமாதித்தனுக்குத் துணையாக நின்று போர்புரிந்த நுளம்ப பாண்டியனாகிய திரிபுவனமல்ல பாண்டியனுடன் குலோத்துங்கன் நடத்திய போராய் இருந்தல் வேண்டுமென்பது ஊகிக்கப் படுகிறது. இப்போர் நிகழ்ச்சியில் நம் குலோத்துங்கன் வெற்றி பெற்றான். இவனது பகை வனாகிய பாண்டியன் கொல்லப் பட்டான். இது குலோத்துங்கன் நுளம்ப பாண்டியரோடு நடத்திய போராதலின், இதனை நுளம்ப பாண்டியப் போர் என்று கூறுதல் பொருத்தமுடையது. 3. மேலைச்சளுக்கியருடன் நடத்திய இரண்டாம் போர்:- இது, குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டாகிய கி.பி. 1081-ல் நிகழ்ந்தது; விக்கிரமாதித்தன் அவன் தம்பி சயசிங்கன் ஆகிய இருவரோடும் நம் குலோத்துங்கன் நடத்தியதாகும். இச்சண்டைக்குரிய காரணம் நன்கு புலப்படவில்லை. குலோத்துங்கன் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்று விக்கிரமாதித்தனது தம்பியாகிய சயசிங்கன் என்பான் அரசப்பிரதிநிதியாகவிருந்து ஆண்டுகொண்டிருந்த வன வாசியைக் கைப்பற்றிக் கொண்டு, தன்னை வந்தெதிர்த்த விக்கிரமாதித்த னோடு கோலார் ஜில்லாவிலுள்ள நங்கிலி என்னுமிடத்தில் பெரும்போர் புரிந்தனன்.1 இப்போரில், குலோத்துங்கன் வெற்றி எய்தியதோடு விக்கிரமாதித்தனைத் துங்கபத்திரை யாற்றிற்கப்பால் துரத்தியுஞ் சென்றான். அங்ஙனந் துரத்திச் சென்றவன் இடையிலுள்ள மணலூர், அளத்தி முதலான இடங்களில் மீண்டும் அவனைப் போரிற் புறங் கண்டான்.1 அளத்தியில் நிகழ்ந்த போரில், இவன் மேலைச் சளுக்கியர் களுடைய களிறுகளைக் கவர்ந்து கொண்டான். அன்றியும், இவன் மைசூர் நாட்டிலுள்ள நவிலையில் சளுக்கிய தண்ட நாயகர்களால் காக்கப்பெற்ற ஆயிரம் யானை களையும் கைப்பற்றிக் கொண்டனன் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.2 இறுதியில் துங்கப்பத்திரைக் கரையில்3 இரண்டாம் முறை நடைபெற்ற போரில் விக்கிரமாதித்தனும் சயசிங்கனும் தோல்வியுற்று ஓடி ஒளிந்தனர். கங்கமண்டலமும் கொண் கானமும் நம் குலோத்துங்கன் வசமாயின. இங்ஙனம் போரில் வாகை சூடிய குலோத்துங்கன் எண்ணிறந்த யானைகளையும் பொருட்குவியலையும் பெண்டிர்களையும் கவர்ந்து கொண்டு சோணாட்டையடைந்தான்; அவற்றுள், யானைகளையும் பொருட்குவியலையும் தான் போரில் வெற்றிபெறுவதற்குக் காரணமாயிருந்த போர் வீரர்களுக்கும் படைத் தலைவர் களுக்கும் பகுத்துக் கொடுத்து அவர்களுக்கு மகிழ்ச்சியை யுண்டுபண்ணினான்; சிறை பிடிக்கப்பட்ட மகளிரைத் தன் அரண்மனை யிலுள்ள தேவிமார்களுக்கு வேலை செய்து வருமாறு வேளம் புகுவித்தான். நம் குலோத்துங்கன் மேலைச் சளுக்கியரோடு நடத்திய இரண்டாம் போரும் இவ்வாறு வெற்றியுடன் முடிவுற்றது. 4. பாண்டியருடன் நடத்தியபோர் :- குலோத்துங்கன் நடத்தியதாக அறியப்படும் இந்தப் பாண்டியப் போரும் இவனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி.பி. 1081-ன் தொடக்கத்தில் நடைபெற்றது. வடக்கேயுள்ள நுளம்பபாடிப் பாண்டியனோடு கி.பி. 1076ல் இவ்வேந்தன் புரிந்த போரும் தெற்கேயுள்ள செந்தமிழ்ப்பாண்டி நாட்டின் அரசர்களுடன், கி.பி. 1081-ல் இவன் நிகழ்த்திய இப்போரும் வெவ்வேறு போர்களாம். முதலாம் பராந்தகசோழன், முதலாம் இராசராச சோழன் ஆகிய இரு வேந்தர்களின் காலங்களில், பாண்டியர் தம் நிலைகுலைந்து சோழர்களுக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர் ஆயினர். ஆனால் அவர்கள் சிறிது படை வலிமை எய்தியவுடன் அடிக்கடி சோழர்களுடன் முரண்பட்டுத் தாம் முடி மன்னராதற்கு முயன்றுவந்தனர். அவர்கள், அங்ஙனம் முரண்பட நேர்ந்தமையின் சோழ மன்னர்களுள் ஒவ்வொரு வரும் தம் தம் ஆட்சிக்காலங்களில் பாண்டி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லல் இன்றியமையாததாயிற்று. இதனால் நேரும் துன்பங்களையுணர்ந்த கங்கைகொண்ட சோழன் எனப்படும் முதலாம் இராசேந்திரசோழன் பாண்டியரை அரியணையினின்று இறக்கித் தன் மக்களுள் ஒருவனுக்குச் சோழபாண்டியன் என்னும் பட்டம் அளித்துப் பாண்டி நாட்டின் தலை நகராகிய மதுரையில் அரசப்பிரதிநிதி யாயிருந்து அந்நாட்டையாண்டு வருமாறு ஏற்பாடு செய்தான். அங்ஙனமே அவன் மக்களுள் இருவரும் பேரன் ஒருவனும் சோழபாண்டியன் என்னும் பட்டத்துடன் அம் மதுரைமா நகரிலிருந்து ஆட்சி புரிந்தனர். வீரராசேந்திரன் காலத்திற்குப் பின்னர் அதிராசேந்திரன் சோழ வளநாட்டை ஆண்டு வந்தபோது பாண்டியர் தாம் முடிமன்னராதற்கு அதுவே தக்க காலமெனக் கருதித் தம் நாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஐந்து அரசர்களாகவிருந்து அவற்றை ஆளத் தொடங்கினர். அவர்களது ஆளுகையும் கி.பி. 1081-வரை நடைபெற்று வந்தது. குலோத்துங்கன் வடக்கே நடத்திய போர்கள் எல்லாம் ஒருவாறு முடிவெய்திய பின்னர், தெற்கேயுள்ள பாண்டி நாட்டையும் தன்னடிப் படுத்த எண்ணி, இப்பாண்டியர் ஐவர்மீதும் தும்பை சூடிப் போர்க்கெழுந்தனன்.1 இதனை யுணர்ந்த பாண்டியர் ஐவரும் ஒருங்கு சேர்ந்து பெரும்படை யோடு வந்து இவனை எதிர்த்துப் போர் புரிந்தனர். இப்போரில் பெருவீரனாகிய நம் குலோத்துங்கனே வெற்றியடைந்தான். பாண்டியர் ஐவரும் புறங்காட்டி ஓடி ஒளிந்தனர்.2 குலோத்துங்கன் பாண்டி நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றியதோடு அவ்விடங் களிலெல்லாம் வெற்றித் தூண்களும் நிறுவினான். இப்போரில் குலோத்துங்கன் கைப் பற்றிய நாடுகளுள் முத்துச் சலாபத்திற்குரிய மன்னார்குடாக் கடலைச் சார்ந்த நாடும் பொதியிற் கூற்றமும் கன்னியாகுமரிப் பகுதியும் சிறந்தவை களாகும். 5. சேரருடன் நடத்தியபோர் :- இது நம் குலோத்துங்கன் குடமலை நாட்டில் சேரரோடு நடத்திய போராகும். இதுவும் குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரும் சேரரைத் தனக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர் களாகச் செய்யும் வண்ணம் குலோத்துங்கனால் தொடங்கப் பெற்றது. திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் மேலைக் கடற்கோடியிலுள்ள விழிஞத்திலும், திருவனந்த புரத்தைச் சார்ந்த காந்தளூர்ச்சாலையிலும் குமரி முனைக்கு வடக்கிலுள்ள கோட்டாறு என்ற ஊரிலும் சேரநாட்டு வேந்தனுக்கும் நம் குலோத்துங்கனுக்கும் பெரும்போர்கள் நடந்தன ;3 சிறிதும் அஞ்சாது எதிர்த்துப் போர் புரிந்த மலைநாட்டாருள் பலர் போர்க் களத்தில் உயிர் துறந்தனர். குலோத்துங்கன் காந்தளூர்ச் சாலையிலுள்ள சேரமன்னது கப்பற்படையினை இருமுறை யழித்துப் பெருமை எய்தினான்.1 கோட்டாறும் எரிகொளுத்தப் பெற்று அழிக்கப் பட்டது. சேரமன்னனும் குலோத்துங்கனுக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர்களுள் ஒருவனாயினன். சேரரும் பாண்டியரும் தம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் தன்னுடன் முரண்பட்டுத் தீங்கிழைக் காதவாறு கோட்டாறு முதலான இடங்களில் சிறந்த தலைவர்களின்கீழ் நிலைப்படைகள் குலோத்துங்கனால் அமைக்கப்பெற்றன; அவ்வாறு கோட்டாற்றில் நிறுவப் பட்ட படைக்குக் கோட்டாற்று நிலைப்படை. என்று பெயர் வழங்கிற்று.2 6. தென்கலிங்கப்போர்:- இது குலோத்துங்கனது ஆட்சியின் 26-ஆம் ஆண்டாகிய கி.பி. 1096ல் நிகழ்ந்தது. இப்போர் வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாயிருந்த அரசிளங் குமரன் விக்கிரமசோழன் என்பான் தன் இளமைப்பருவத்தில் தென் கலிங்கநாட்டின் மன்னனாகிய தெலுங்க வீமன் மேற்படையெடுத்துச் சென்று அவனை வென்றதையே குறிக் கின்றது. இதனை விக்கிரமசோழனது மெய்க்கீர்த்தி, தெலுங்க வீமன் விலங்கல்மிசை யேறவும் கலிங்க பூமியைக் கனலெரி பருகவும் ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி வேங்கை மண்டலத் தாங்கினி திருந்து வடதிசை யடிப்படுத் தருளி என்று தெளிவாக விளக்குதல் காண்க. இப்போர் குலோத்துங்கனது மகனாகிய விக்கிரமனால் நிகழ்த்தப் பெற்றதாயினும் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்திலே நடை பெற்றதாதலின் மகனது வென்றிச் சிறப்பு தந்தைக் கேற்றியுரைக்கப் பட்ட தென்றுணர்க. 7. வடகலிங்கப்போர் :- இது குலோத்துங்கனது ஆட்சியின் 42-ஆம் ஆண்டாகிய கி.பி. 1112-ஆம் ஆண்டிற்கு முன்னர் நடைபெற்ற போராகும்;1 வடகலிங்க வேந்தனாகிய அனந்தவன்மன் என்பானோடு குலோத்துங்கன் நடாத்தியது.2 வடகலிங்கத்திற்கு நேரிற்சென்று இப்போரை வெற்றியுற நடாத்தித் திரும்பியவன் குலோத்துங்கனது படைத்தலைவர்களுள் முதல்வனாகிய கருணாகரத் தொண்டைமானே யாவன். இவனோடு வாண கோவரையன், முடிகொண்ட சோழன் என்ற இரண்டு படைத் தலைவர்களும் அங்குச் சென்றிருந்தனர்.3 குலோத்துங்கனது ஆட்சியில் நடந்த போர்களுள் இதுவே இறுதியில் நடந்தது. வடகலிங்கத்தில் நடந்த இப்போர் நிகழ்ச்சியை விரித்துக் கூறும் நூல் கலிங்கத்துப் பரணி என்பது. அந்நூல் இப்போரைப் பற்றி யுணர்த்தும் செய்திகளை அடியிற் காண்க. ஒருநாள் நம் குலோத்துங்கன் காஞ்சி மாநகரிலுள்ள அரண் மனையில் ஓவியமண்டபத்து வீற்றிருந்தபோது, வாயில் காப்போரில் ஒருவன் ஓடிவந்து அரசனது அடிகளை முடியுற வணங்கி, எம்பெரு மானே, வேந்தர் பல்லோர் திறைப்பொருள் கொணர்ந்து கடைவாயிலின் கண் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றனன். அதனைக் கேட்ட அரசன் அன்னாரை விடுக என, தென்னவர் வில்லவர் கூவகர் சாவகர் சேதிபர் யாதவரே கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே கங்கர் கடாரர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் நுளும்பர்களே வங்கர் இலாடர் மராடர் மவிராடர் யிந்தர் சயிந்தர்களே சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவர் ஐயணரே கொங்கணர் கொங்கர் குலிங்கர் அவந்தியர் குச்சரர் கச்சியரே வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே குத்தர் திகத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே. என்ற மன்னர்கள் அம்மன்னனை யணுகிப் பணிந்தெழுந்து மன்னர் மன்ன அடியேம் நினக்கு இறுக்கக் கடவதாய திறைப் பொருள் கொணர்ந்துளேம் என்றுரைத்துத் தாம் கொண்டு வந்துள்ள பொற்கலம் மணித்திரள் முதலான பொருள்கள் அனைத்தையும் அரசன் திருமுன்னர்க் காட்டிக் கைகுவித்து ஒருபுடை நின்றனர். அப்போது அரசன் இவர்களொழியத் திறை கொடாதார் இன்னும் உளரோ என்று வினவினான். அச்சமயத்துக் கடகர் முன்றோன்றி, பெருமானே, எங்கள் திறையும் கொண்டு வந்து விட்டோம் என்றுரைத்து அவன் கழல் வணங்கினர். அப்போது, வட கலிங்கத் தரசன் இருமுறை திறை கொணர்கிலன் என்று அமைச்சன் கூற, அதனைக் கேட்ட அரசன் பெரிதும் வெகுண்டு அங்ஙனமாயின் அவனது வலிய குன்றரணம் இடிய வென்று அவனையும் அவனது களிற்றினங்களையும் பற்றி ஈண்டுக் கொணர்மின் என்றனன். அரசன் அங்ஙனம் கூறலும், ஆண்டு அருகிருந்த பல்லவர்கோனாகிய கருணாகரத் தொண்டைமான் அடியேன் கலிங்க மெறிந்து வருவல்; அடியேற்கு விடை கொடுக்க வென, அரசனும் அங்ஙனமே செய்க என்றனன். குலோத்துங்கனிடத்து விடைபெற்ற கருணாகரன் நால்வகைத் தானையோடும் போர்க்கெழுந்தனன்; எங்கும் முரசங்கள் முழங்கின; வளைகள் கலித்தன; நாற்படையும் சூழ்ந்து நெருங்கி வெள்ளத்தைப் போல் திரண்டெழுந்தன. அவற்றைக் கண்டோர் பலரும் வியப்பெய்தி, இவை கடலைக் கலக்குங் கொலோ? ஒன்றும் அறிகிலம்; இவற்றின் எண்ணம் யாதோ? என்று ஐயுற்று நடுக்கமுற்றனர். நாற்றிசை களும் அதிர்ந்தன. தூளிப்படலம் பிறந்தது. பல்லவர் கோனாகிய கருணாகரன் வளவர் பெரு மானோடு களிற்றின் மீது இவர்ந்து இரைவேட்ட பெரும்புலிபோற் பகைமேற் சென்றனன். பாலாறு, பொன் முகரி, பழவாறு, கொல்லி யெனும் நாலாறுந் தாண்டிப் பெண்ணை யாற்றை யும் கடந்து தொண்டைமான் படைகள் சென்றன; அதன் பின்னர், வயலாறு, மண்ணாறு, குன்றியென்னும் ஆறுகளையுங் கடந்து கிருட்டினை நதியும் பிற்படுமாறு போயின; பிறகு, கோதாவரி பம்பாநதி, கோதமை நதி யென்னும் இவற்றையுங்கடந்து கலிங்கநாட்டை யடைந்து, சில நகரங்களில் எரிகொளுவிச் சில ஊர்களைச் சூறையாடின. இத்திறம் நிகழ்வனவற்றைக் கண்ட குடிகளெல்லோரும், ஐயோ, மதில்கள் இடிகின்றனவே வீடுகள் எரிகின்றனவே; புகைப்படலங்கள் சுருண்டு சுருண்டு எழுகின்றனவே; அரண் எங்குளது? நமக்குப் புகலிடம் யாண்டுளது? இங்குத் தலைவர் யாவர்? படைகள் வரு கின்றன; அந்தோ நாம்கெடுகின்றனம்மடிகின்றனம்!! என்று ஓலமிட்டுக் கொண்டு நாற்புறமும் ஓடி அலைந்தனர். அவ்வாறு ஏங்கித் துணுக்குற்ற குடிகளெல்லாம் ஐயோ! நம் மன்னன், குலோத்துங்க சோழற்கு இறுக்கக் கடவதாகிய திறை கொடாது உரைதப்பினான்; ஆதலின் எதிரே தோன்றியுள்ளது அம்மன்னனது படையே போலும்; அந்தோ! இனி என் செய்வது! என்றலறிக் கொண்டு உரைகுழறவும் உடல் பதறவும் ஒருவருக்கொருவர் முன்னாக அரையிற் கட்டிய துகில் அவிழ ஓடித் தம் அரசனது அடிமிசை வீழ்ந்தனர். அங்ஙனங் குடிகள் தன்னடியில் வீழ்ந்து அலறி ஓலமிடுதலைக் கண்ட கலிங்கர் கோமானாகிய அனந்தவன்மன் வெகுளியினால் வெய்துயிர்த்து, கைபுடைத்து வியர்த்து, அன்னாரை நோக்கி ‘யான் அபயனுக்கே யன்றி அவன் தண்டினுக்கு மெளியனோ? என்றுரைத்துத் தடம்புயங் குலுங்குற நகைத்தனன். பின்னர், நமது நாடு கானரண், மலையரண், கடலரண் இவற்றாற் சூழப் பெற்றுக் கிடத்தலை அறியாது, அவன்படை வருகின்றது போலும்; நல்லது, சென்று காண்போம் என்று கூறினான். அம்மன்னன் கூறியவற்றைக் கேட்ட எங்கராயன் என்னும் அமைச்சர்தலைவன், அரசர் சீறுவரேனும் அமைச்சனாகிய தான் உறுதியை யுரையாதொழியின் அது தன் கடமையினின்று தவறியதாகு மென்பதை நன்குணர்ந்தவனாய், அரசனை நோக்கி, மன்னர் பெருமானே, அடியேன் கூறுவனவற்றை யிகழாது சிறிது செவி சாய்த்துக் கேட்டருளல் வேண்டும். வேற்றரசர் களைப் புறங்கண்டு வெற்றி கோடற்குச் சயதரன் படை போதா தோ! அவனே நேரில் வருதல் வேண்டுமோ? அவனுடைய படையினாற் பஞ்சவர் ஐவருங் கெட்ட கேட்டினை நீ கேட்டிலை போலும்; முன்னொருநாள் அவனது படையுடன் பொரு வானெழுந்த சேரர் செய்தி நின் செவிப்பட்ட தில்லையோ? அவன் விழிஞமழித்ததும், காந்தளூர்ச் சாலை கொண்டதும் தன் படையினைக் கொண்டன்றோ? தண்டநாயகராற் காக்கப் பெற்ற நவிலையின் கண் ஆயிரம் யானைகளை அவன் கைப்பற்றிக் கொண்டதை நீ யறியாயோ? அபயன் படையினால் ஆரஞருற்றுத் தம் மண்டலங்களை இழந்தவேந்தர் இத்துணைய ரென்றுரைத்தல் சாலுமோ? ஆதலால் அத்தண்டின் முன்னர் நின் புயவலி எத்தன்மைத்தாகுமென்பதை எண்ணித் துணிவாயக; இன்று என்னைச் சீறினும், நாளை அச்சேனைமுன் நின்ற போழ்தினில் யான் கூறிய துண்மையென்பதை நன்குணர்வாய் என்று நன்மதி நவின்றனன். அமைச்சர் தலைவன் கூறியவற்றைக் கேட்ட கலிங்க மன்னன் அவனை நோக்கி, யாம் கூறியவற்றை மறுத்துரைப்ப தெனின் இமை யோரும் எம் முன்னர்ப் போதரற்குப் பெரிதும் அஞ்சுவர். பன்னாட்களாகச் செருத் தொழில் பெறாது எம் தோட்கள் தினவுற்றிருத்தலை நீ அறியாய் போலும். முழைக்கண்ணுளதாய அரியேற்றின் முன்னர் யானை யொன்று எளிதென் றெண்ணிப் பொருதற்குக்கிட்டி வருதல் உண்மையாயினன்றோ அபயனதுபடைஎம்முடன் பொருதற்கெழும்1 எமது தோள்வலியும், வாள்வலியும் பிறவலியும் இத்தன்மையன வென்றுணராது பிறரைப் போல் ஈண்டுக் கூறலுற்றாய். இது நின்ப தமையன்றோ? நன்று! நமது நாற்படையு மெழுந்து அபயன் ஆணையாற் போதரும் படையுடன் போர் தொடங்குக என்றுரைத்தனன். அப்பொழுதே பண்ணுக வயக்களிறு பண்ணுக வயப்புரவி பண்ணுக கணிப்பில் பலதேர் நண்ணுக படைச்செருநர் நண்ணுக செருக்களம் நமக்கிகல் கிடைத்த தெனவே’ என்று எழுகலிங்கத்தினும் முரசறையப்பட்டது. உடனே, கலிங்கர் கோமானது படைகள் போர்க்குப் புறப் பட்டன; வரைகள் துகள்பட்டன; கடலொலிபோல் முரசங்கள் மொகுமொகென் றொலித்தன; இடைவெளியரிதென ஒரு வருடலினில் ஒருவர் தம் உடல்புக நெருங்கிச் சென்று, கலிங்கப் படைகள் கருணாகரன் படைகளின் முன்னுற்றன. பின்னர் இருதிறத்தார்க்கும் போர் தொடங்கலாயிற்று; ‘படை எடும் எடும்’ என்ற ஓசையும், ‘விடும் விடும்’ என்ற ஓசையும், கடலொலி போன்றிருந்தன; சிலை நாண்தெறிக்கும் ஓசை திசைமுகம் வெடிப்ப தொக்கும். இருதிறப்படைகளும் எதிர்நிற்றல், இருபெருங் கடல்கள் எதிர்நின்றாற்போன்றிருந்தது. பரியொடுபரி மலைவது கடற்றிரைகள் தம்முள் இகலி மலைந்தாற் போன்றிருந்தது. யானை யொடு யானை பொருவது வரையொடு வரை பொருதாற்போன்றிருந்தது; முகிலொடு முகில் எதிர்த்தது போல் இரதமும் இரதமும் எதிர்த்தன. புலியொடு புலி யெதிர்த் தாற்போல் வீரரொடு வீரரும் அரி யோடு அரி எதிர்த்தாற்போல் அரசரொடு அரசரும் எதிர்த்துப் பொருவாராயினர்; வீரர்களின் விழிகளிலே சினக்கனல் தோன்றிற்று. அக்கனல் மின்னொளி வீசின; அன்னார் கையிற் கொண்ட சிலைகள் உருமென இடித்துக் கணை மழைபொழிந்தன; அதனாற் குருதியாறு பெருகலாயிற்று. அவ்வாற்றில் அரசர்களது நித்திலக்குடைகள் நுரையென மிதக்கலுற்றன; போரில் துணிபட்ட களிற்றினங்களின் உடல்கள் அவ்யாற்றின் இருகரையென இருமருங்குங் கிடந்தன. குருதிவெள்ளத்திற் பிளிற்றிவீழுங் களிற்றினங்கள் வேலை நீருண்ணப் படிந்த மேகங்கள் போன்றிருந்தன; அவ்யானை களின் கரங் களை வாளாற்றுணித்துத் தம் புயத்திட்ட வீரர்கள் தோற்பைகளைத் தோளின் கண்ணே கொண்டு நீர்விடுந் துருத்தியாளரைப் போன்றி ருந்தனர்; அம்புகள் தைக்கப் பெற்றுச் சுருண்டு விழும் யானைகளின் கைகள் வளையங்கள் போன்றிருந்தன. இருதொடையும் துணிபட்டுக் கிடந்த மறவர் தம் முன்னர்ப் பொருவா னெழுந்த வாரணத்தின் வலிகெட ஒரு தொடையைச் சுழற்றி அதன் மீதெறிவர்; மற்றொன்றை இனி எறியுமாறு எடுத்துவைப்பர்; சில வீரர் தம் உரத்தின் மீது பாய்வான் எழுந்த இவுளியை ஈட்டியாற்குத்தி எடுத்துத் திரிவது வெற்றிமங்கைக்கு எடுக்கப்பெறும் வெற்றிக் கொடி போன்றி ருந்தது. அன்னார் யானைகளின் மத்தகங்களைப் பிளக்குங்கால் வீழும் முத்துக்கள் அவ்வெற்றி மங்கைக்குக் சொரியப் பெறும் மங்கலப் பொரிகளை யொப்பனவாகும்; மாற்றார் சிலையில் அம்பைத் தொடுக்கு மளவில் தம்மிடத்து அம்பில்லாத வீரர்கள் தங்கள் மார்பினிற் குளித்த பகழியைப் பற்றியிழுத்துச் சிலையிற் றொடுத்து விடுவர். குறை யுடலங் கூத்தாட, அவற்றின் பின்னர்க் களிப்போடாடும் பேயினங்கள் ஆடல் ஆட்டுவிக்கும் ஆடலாசிரியன் மாரையொக்கும். சடசடவெனும் பேரொலியாற் செருக்களம், தீவாய்மடுக்கும் கழைவனம் போன் றிருந்தது. இவ்வாறு போர் நிகழுங்கால் களப்போரினை விரைவில் முடித்து வாகை சூடுமாறு வண்டையர் அரசனாம் கருணாகரத் தொண்டைமான் தன் வேழ முந்துறச் சென்றனன். அவனது படையும் முன்னர்ச் செல்ல லுற்றது. அங்ஙனஞ் செல்லவே கலிங்கப்படையின் மதயானைகள் துணி பட்டன; துரக நிரையொடு தேர்கள் முறிபட்டன. குடர்கள் குருதியின் மேல் மிதந்தன; அவற்றைக் கழுகுகளும் காகங்களும் உண்டுகளித்தன; ஆயிரம் யானைகளைக்கொண்டு பொருவம் எனவந்த கலிங்கவீரர்கள், தங்கள் அரசன் உரைசெய்த ஆண்மையுங்கெட அமரில் எதிர் நிற்கமாட்டாது ஒதுங்கினர்; இப்படைமாயையோ மறலியோ வென்றலறிக்கொண்டு நிலை குலைந்து விழுந்து ஓடினர்; அபயம் அபயம் என்றலறிக்கொண்டு ஒருவர் முன்னர் ஒருவர் ஓடினர்; அங்ஙனம் ஓடிய கலிங்க வீரர் பதுங்கியது கன்முழையின் கண்ணோ! மறைந்தது அரிய பிலத்தினுள்ளோ! கரந்தது செறிந்த அடவியிலேயோ! இவற்றை முழுதுந் தெரிந்து கோடல், அரிதாகும். அவ்வாறு கலிங்கரோடப் பலப்பல யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், தேர்கள், மணிக்குவியல்கள், மகளிர்கள் ஆகிய எல்லா வற்றையும் கருணாகரனது படை வீரர்கள் கைப்பற்றினர். கைகொண்ட அன்னோரே அவற்றின் அளவைக் கணித்துரைப்பது அருமை யெனின், மற்றையோர் அவற்றைக் கணித்துரைத்தல் எங்ஙனம் கூடும்! இவற்றைக் கவர்ந்தபின் இனி கலிங்க மன்னனையும் கைக்கொண்டு பெயர்குதும்; அவனிருக்கின்ற இடத்தையறிக என்றனன் கருணாகரன். அவன் சொற்கள் பிற்படுமாறு சில வீரர்கள் விரைந்து சென்று வரை களிலும் வனங்களிலும் தேடிக் காணப்பெறாது, முடிவில் ஒரு மலைக்கு வட்டிற் கரந்திருந்த கலிங்கர் கோனைக் குறுகி நமது அடற்படையைக் கொணர்க வென்றனர். எனலும் அவனைக் கொணருமாறு கருணாகரன் தன் படைஞரை ஏவினன். அவர்கள் சென்று வெய்யோன் அத்தகிரியை அடையுமளவில் கலிங்க மன்னன் கரந்திருந்த வெற்பினையெய்தி வேலாலும் வில்லாலும் வேலிகோலி விடியளவுங் காத்து நின்றனர். பின்னர், செங்கதிரோன் உதயகிரியையடையு முன்னர் அம் மன்னனைக் கைப்பற்றித் திரும்பினர். அன்னாரது வழியில் எதிர்ப்பட்ட சில கலிங்கர்கள் தங்கள் உடல்முழுவதும் மாசேற்றித் தலைமயிரைப் பறித்தெடுத்து அரை யிலுள்ள கலிங்கத்தைக் களைந்தெறிந்துவிட்டு, ஐயா! யாங்கள் சமணர்கள்; கலிங்கரல்லேம்: எனக் கூறிப் பிழைத்துச் சென்றனர். சிலர் சிலையின் நாணை மடித்து முப்புரி நூலாக அணிந்துகொண்டு ஐயா! யாங்கள் கங்கை நீராடப் போந்தேம். விதிவலியால் இங்கு அகப் பட்டுக் கொண்டோம்; கரந்தவரல்லேம் எனச் சொல்லி உயிர் பிழைத்தனர். குருதி தோய்ந்த கொடித்துணிகளைக் காவி யுடையாக வுடுத்துக் கொண்டு தலையினை முண்டிதஞ் செய்து கொண்டு ஐயா, எங்கள் உடையைக் கண்டவளவில் எங்களைச் சாக்கிய ரென்று அறிகிலிரோ? என்றியம்பி யுய்ந்தனர் சிலர். சிலர் யானைகளின் மணிகளை அவிழ்த்துத் தாளமாகக் கையிற் பிடித்துக்கொண்டு கும்பிட்டு, ஐயா, யாங்கள் தெலுங்கப் பாணர்கள்; சேனைகள் மடிகின்ற செருக்களங் கண்டு திகைத்து நின்றேம்; இத்தே யத்தினரல்லேம் என்றுரைத்துப் பிழைத்துப் போயினர். இவ்வாறு பிழைத்துச் சென்றவர்கள் தவிர, கலிங்க நாட்டில் உயிர் பிழைத்தவர்கள் வேறு ஒருவருமிலர். கலிங்கமெறிந்து வாகைமாலைசூடிய கருணாகரத் தொண்டைமான் களிற்றினங்களோடு நிதிக்குவியல்களையும் பிறவற்றையுங் கவர்ந்து கொண்டுவந்து குலோத்துங்க சோழன் திருமுன்னர் வைத்து வணங்கினான். நேரியர்கோன் பெரிதும் மகிழ்ச்சியுற்றுத் தொண்டை மானது போர்வீரத்தைப் பலபடப் பாராட்டி அவற்குத் தக்க வரிசைகள் செய்தனன். 8. குலோத்துங்கனது சமயநிலை நம் குலோத்துங்கன் கொண்டொழுகியது பொதுவாக வைதிகசமயம் என்பது முந்நூல் பெருமார்பிற் சிறந்தொளிரப் பிறப்பிரண்டாவது பிறந்து சிறந்த பின்னர்1 வேதங்கள் நான்கினையும் வேதியர்பாற் கேட்டருளி2 னான் என்று ஆசிரியர் சயங்கொண்டார் கலிங்கத்துப்பரணியிற் கூறி யிருத்தலால் நன்கு விளங்குகின்றது. ஆனால் இவன் வைதிக சமயத்தின் உட்பிரிவுகளாகிய சைவ வைணவசமயங்களுள் சைவசமயத்தையே சிறப்பாகக் கொண்டொழுகியவன்; சிவபெருமானிடத்து அளவுகடந்த பத்தி செலுத்தியவன். இவன் காலத்திற்கு முற்பட்ட சோழ மன்னர்கள் எல்லோரும் சைவராகவே இருந்திருப்பதோடு தில்லையில் எழுந்தருளி யுள்ள திருச்சிற்றம்பலநாதரைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டும் வந்துள்ளனர். ஆதித்தன், முதற்பராந்தகன் முதலானோர் தில்லைச் சிற்றம்பலத்திற்குப் பொன்வேய்ந்து அதனைச் சிறப்பித்திருக் கின்றனர். நம் குலோத்துங்கனும் தன் முன்னோரைப் போலவே திருச்சிற்றம் பலத் தெம்பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபாடு புரிந்துவந்தான். ஆயினும், தாம் மேற்கொண்ட சமய மொழிய மற்றைச் சமயங்களைக் கைக்கொண்டொழுகும் தம் நாட்டு மக்களை வெறுத்துப் பல்லாற்றானும் துன்புறுத்தும் அரசர் சிலர்போல இம் மன்னர் பெருமான் புறச்சமயங்களில் சிறிதும் வெறுப்புக் காட்டியவன் அல்லன். இதற்குச் சில சான்றுகள் எடுத்துக்காட்டிச் சிறிது விளக்குவாம். சோழ இராச்சியத்திலுள்ள பல வைணவ சமண பௌத்தக் கோயில்கள் தோறும் இவனுடைய கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. தஞ்சாவூர் ஜில்லாவைச் சார்ந்த மன்னார் குடியிலுள்ளதும் இப்போது இராச கோபாலசாமி கோயில் என்று வழங்கப் பெறுவதுமாகிய திருமால் கோட்டம் இவன் பெயரால் எடுப்பிக்கப் பெற்ற தொன்றாம். குலோத்துங்க சோழ விண்ணகரம் என்பது அதற்குரிய பழைய பெயர். அன்றியும் நாகப்பட்டினத்தின் கண் கடார1த்தரசனாகிய சூடாமணிவர்மனால் கட்டத் தொடங்கப்பெற்று அவனது மகனாகிய மாற விசயோத்துங்கவர் மனால் முடிக்கப்பெற்ற இராசராசப் பெரும்பள்ளி என்னும் புத்தவிகாரத்திற்கு நம் குலோத்துங்கன் விளைநிலங்களை நிபந்தமாக விட்டிருக்கிறான் கி.பி. 1090-ல் இக்கோயிலுக்கு இவ்வேந்தன் விட்ட நிபந்தங்களை யுணர்த்தும் செப்பேடுகள்2 ஹாலண்டு தேயத்திலுள்ள லெய்டன் நகரத்துப் பொருட் காட்சிச் சாலையில் வைக்கப் பட்டிருத்தலை இன்றுங் காணலாம். இத்தகைய செய்திகளை யாராய்ந்து உண்மை காணுமிடத்து, இவன் தன் காலத்து வழங்கிய எல்லாச் சமயங்களிடத்தும் பொதுநோக்குடையவனாய் அவற்றை அன்புடன் ஆதரித்து வந்தவன் என்பது இனிது பெறப்படு கின்றது. ஆயினும், இவன் சிவபிரானிடத்து ஆழ்ந்த பத்தியுடை வனாய்ப் பெரிதும் ஈடுபட்டிருந்தான் என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். இவன் எய்தியிருந்த திருநீற்றுச்சோழன் என்ற அருமைத் திருப்பெயரொன்றே இதனை நன்கு வலியுறுத்தும். ஆகவே இவனைச் சிறந்த சைவர் தலைமணி என்று கூறுதல் எவ்வாற்றானும் பொருத்தமுடையதேயாகும். 9. குலோத்துங்கனது குணச்சிறப்பு நம் குலோத்துங்கன் ஒரு செங்கோல் வேந்தனுக்குரிய எல்லா நற்குணங்களையும் ஒருங்கே படைத்தவன். இவன்பாற் காணப்படும் உயர்குணம் பலவுள் முதலாவதாக வைத்துப் பாராட்டத் தக்கது இவனது கடவுள் பத்தியேயாகும். சிறப்பாகச் சிவபெருமானிடத்து இவன் ஒப்பற்ற பத்தியுடைவனாய் ஒழுகிவந்தவன் என்பது முன்னர் விளக்கப்பட்டது. அன்றியும், தன் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தினின்று புறப்பட்டுக் காஞ்சிமா நகரை நோக்கிச் செல்பவன், தில்லையம் பதிக்குப் போய்ப் பொன்னம்பலத்திலே நடம்புரியும் முக்கட் பெருமானை வணங்கி, அவரது இன்னருள் கொண்டு வடதிசை ஏகினான் என்று கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங் கொண்டார் கூறியிருப்பது இவனது சிவ பத்தியின் மாண்பை இனிது விளக்குகின்றது.1 இனி, அடுத்துப் புகழ்தற்குரியதாய் இவனிடத்து அமைந்திருந்த சிறந்த குணம் இவனது வீரத்தன்மையேயாம். இவன் இத்தமிழகம் முழுமையும் இதற்கப்பாலுள்ள கங்கம், கலிங்கம், கொண்கானம், சிங்களம், கடாரம் முதலான பிறநாடு களையும் தன்னடிப்படுத்திப் புகழுடன் ஆண்டுவந்த பெருவீரன் என்பதை முன்னரே கூறியுள்ளோம். ஆகவே, இவனை இப்பரதகண்டத்தின் பெரும்பாகத்திலும் இதனைச் சூழ்ந்துள்ள பிறவிடங்களிலும் தன் வெற்றிப் புகழைப் பரப்பிய வீரர்தலை மணி என்றுரைத்தல் சிறிதும் மிகைபடக் கூறியதாகாது. இவனது படைத் தலைவர்களும் அமைச்சர்களும் இவனைப் போலவே வீரத்தன்மை வாய்ந் தவர்களாய் இவனுக்கு உசாத்துணையாய் அமர்ந்து இவனது வென்றி மேம்பாடு யாண்டும் பரவுதற்குக் காரணமா யிருந்தனர் என்பது ஈண்டு அறியத்தக்கது. அன்னோருள் சிலரது வரலாற்றை மற்றோர் அதிகாரத்திற் காணலாம். இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த வேந்தன் ஆவன்; சங்கத்துச் சான்றோர் நூல்களையும் பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலாய நூல்களையும் நன்கு பயின்றிருந்தான். ஆசிரியர் சயங் கொண்டாரும் இவனைப் பண்டித சோழன் என்று கலிங்கத்துப் பரணியில் ஓரிடத்தில் குறித்துள்ளார்.1 இவன் புலவர்களது கல்வித் திறத்தை அளந்து கண்டறி தற்குரிய பேரறிவு படைத்தவனா யிருந்தமையின் அன்னாரிடத்துப் பெருமதிப்பும் அன்பும் வைத்திருந் தான். அன்றியும், அவர்கட்கு வேண்டியன அளித்துப் போற்றியும் வந்தான். எனவே இம்மன்னன் புலவர்களைப் புரந்துவந்த பெருங் கொடை வள்ளல் ஆவன். இவன் கலையினொடுங் கவிவாணர் கவியினொடும் இசையி னொடும்2 பொழுது போக்கி வந்தனன் என்பர் கவிச்சக்கர வர்த்தியாகிய சயங்கொண்டார் இவன், செந்தமிழ்ப் புலமை யுடையவனாயிருந்தமையோடு வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந் தான். அன்றியும், இவன் வேங்கிநாட்டில் ஆட்சி புரிந்த போது அந்நாட்டு மொழியாகிய தெலுங்கே அரசாங்கமொழி யாக அமைந் திருந்தது. வேங்கி நாட்டிலுள்ள இவனது கல்வெட்டுக்களும் தெலுங்கு மொழியில் காணப்படுகின்றன. எனவே, இவன் தெலுங்கு மொழியை யும் கற்றவனாதல் வேண்டும். ஆகவே, தமிழ், ஆரியம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இவ்வேந்தன் நல்ல பயிற்சி யுடைய வனாயிருந் தனன் என்பது நன்கு புலப்படுகின்றது. அன்றியும் இவ்வேந்தன் இசைத் தமிழ் நூல் ஒன்று இயற்றி யுள்ளனன் எனவும் அந்நாளில் இசைவாணர்களாகிய பாணர்கள் இவ்வேந்தனது இசை நூலைப் பயின்று நன்கு பாடி வந்தனரெனவும் இவன் தேவிமார்களுள் ஒருத்தியாகிய ஏழிசைவல்லபி என்பாள் தன் கணவன் இயற்றிய இசை நூலைப் பயின்று நன்கு பாடி வந்தனள் எனவும் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் கூறியுள்ளார். நம் வளவர்பெருமான் நூலறிவு எய்தியிருந்ததோடு இயற்கையில் நுண்ணறிவும் அமையப்பெற்றிருந்தான்; நல்லறிஞர் களோடு அளவளாவி அறிய வேண்டியவற்றை நன்கறிந்து பேரறிஞனாய் விளங் கினான். ஆசிரியர் சயங்கொண்டார் இவனை அறிஞர் தம்பிரான் அபயன்1 என்று கலிங்கத்துப் பரணியில் கூறியிருத்தலும் இச்செய்தியை இனிது வலியுறுத்தும். இனி, இவ்வேந்தனது செங்கோற் பெருமையும் பெரிதும் மதிக்கத் தக்கதாகும். இவன் குடியுயரக்கோல் உயரும் என்பதை நன்குணர்ந்த வனாதலின் தன் நாட்டிலுள்ள குடிகள் எல்லோரும் வளம் பெறுதற் கேற்ற செயல்களைச் செய்து அவர்களது பேரன் பிற்குரியவன் ஆயினன், இவன், தன் குடிமக்கள் பண்டைக்கால முதல் அரசர்க்குச் செலுத்தி வந்த சுங்கத்தைத் தவிர்த்து அவர்களது வாழ்த்திற்கும் புகழுரைக்கும் உரிமை பூண்டு விளங்கிய செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இவனது செங்கோற் சிறப்பை அபயன் இமயத் தினைத் திரித்தகோலில் வளைவுண்டு - நீதிபுனை செய்ய கோலில் வளைவில்லையே2 என்று பாராட்டிக் கூறியுள்ளனர் புலவர் பெருமானாகிய சயங்கொண்டாரும். அன்றியும், இவன் அஞ்சாமை, ஈகை, ஊக்கம், சுற்றந்தழுவுதல், காலமறிந்து கருமமுடிக்கும் ஆற்றல் முதலான அருங் குணங்கள் படைத்த பெருந்திறல் வேந்தனாய் அந்நாளில் நிலவினான். சுருங்க வுரைக்குமிடத்து, இம்மன்னர் பெருமான், தன்னடிவந்து பொருந்தினோர் எவரேயாயினும் தண்ணளி சுரந்து அவர்களை வாழ்விக்கும் வண்மையும், எதிர்த்தோர் கூற்று வெகுண்டன்ன ஆற்றலுடைய வராயினும் அன்னோரைப் போரிற் புறங் காணும் வீரமும் உடையவனாய் விளங்கிய பெருந்தகையாவன் என்று கூறி இவ்வதி காரத்தை ஒருவாற்றான் முடிக்கலாம். 10. குலோத்துங்கனுடைய மனைவியரும் மக்களும் குலோத்துங்கனது பட்டத்தரசியாக விளங்கியவள் மதுராந்தகி என்பாள். இவளே இவ்வேந்தனது முதல் மனைவி. இவளுக்குத் தீன சிந்தாமணி என்ற பெயரும் உண்டு. இவ்வரசி இவனது அம்மானாகிய இரண்டாம் இராசேந்திர சோழனது மகள். இவனுக்கு வேறு இருமனைவியரும் இருந்தனர். அவர்கள் ஏழிசை வல்லபி, தியாகவல்லி என்ற இருவருமேயாவர். பட்டத்தரசியாகிய மதுராந்தகி என்பாள் குலோத்துங்கனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டில் இறந்துவிட்டனள். பின்னர், இவனது மற்றொரு மனைவியாகிய தியாகவல்லி என்பவள் பட்டத்தரசியாயினள். இவளே இவ்வரசனது ஆட்சியின் பிற்பகுதி முழுமையும் பட்டத்தரசியாக விருந்து வாழும் பேற்றை எய்தியவள். பொன்னின்மாலை மலர்மாலை பணிமாறி யுடனே இனி காவலர்கள் தேவியர்கள் சூழ்புடைவரச் - சென்னி துணை யுடனாணையை நடத்து முரிமை தியாகவல்லி நிறைசெல்வி யுடன் சேர்ந்துவரவே1 என்னுங் கலிங்கத்துப்பரணிப் பாடலால் பட்டத்தரசி யாகிய தியாக வல்லியின் பெருமையும் அரசன் அவள் பால் வைத்திருந்த மதிப்பும் நன்கு விளங்கும். இவள் சிவனிடத்துமையெனத் தியாகவல்லி - உலக முழுதுடையாள் என்று நம் குலோத்துங்கனது மெய்க்கீர்த்தியிலும் புகழப் பட்டுள்ளாள். இனி, ஏழிசைவல்லபியை ஏழிசை வளர்க்க வுரியாள்2 என்று ஆசிரியர் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் கூறியிருத்தலால் இவள் ஏழிசையிலும் புலமை யெய்தி அவற்றை இனிது வளர்த்து வந்தனள் என்பது நன்கு புலப்படுகின்றது. நம் குலோத்துங்கனது மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கிய வளைப் புவனமுழுதுடையாள் அல்லது அவனி முழுதுடையாள் என்றும், மற்றையோரை ஏழுலகுமுடையாள், திரிபுவனமுடையாள், உல குடையாள் என்றும் அக்காலத்தில் வழங்கிவந்தனர் என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவர்களது இயற்பெயர் களோடு இப்பெயர் களையும் சேர்த்துச் சிறப்பிப்பது அந்நாளில் பெருவழக்கா யிருந்தது. இவ்வுண்மையை அக்காலத்துக் கல்வெட்டுக் களைக் கொண்டறியலாம்.1 மதுராந்தகி என்பவள் பட்டத்தரசியாக நிலவிய நாட்களில் புவனி முழுதுடையாள் என்றும் அவனி முழுதுடையாள் என்றும் வழங்கப் பட்டனள். அப்போது, ஏழிசைவல்லபி, தியாகவல்லி என்ற மற்ற மனைவியர் இருவரும் ஏழுலகுமுடை யாள் உலகுடையாள் என்னும் சிறப்புப் பெயர்களை எய்தி வாழ்ந்தனர் மதுராந்தகி வானுல கடைந்த பின்னர்த் தியாக வல்லி பட்டத் தரசியாயினள் என்று முன்னரே கூறி யுள்ளோம். அவள் அந்நிலையை எய்தியவுடன் அக்கால வழக்கம் போல் புவனி முழு துடையாள் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றனள். நம் குலோத்துங்கனது முதல் மனைவியாகிய மது ராந்தகிக்கு மக்கள் எழுவர் இருந்தனர். அவர்களுள் முதல் மகன் விக்கிரம சோழன் எனப்படுவான். இரண்டாம் மகன் இராசராசன் என்னும் பெயரினன். மூன்றாம் மகன் வீரசோழன் என்பான். மற்றைப் புதல்வர் களது பெயர்கள் இக் காலத்துப் புலப்பட வில்லை. அன்றியும், அம்மங்கைதேவி என்ற ஒரு மகளும் இருந்தனள். இவர்களுள் முதல்வனாகிய விக்கிரமசோழன் கி.பி. 1108-ஆம் ஆண்டில் சோழ மண்டலத்திற்கு இளவரசுப் பட்டங் கட்டப் பெற்றுத் தன் தந்தையிடம் அரசியல் நுட்பங்களைக் கற்றுவந்தான். இவன், தென் கலிங்க மன்னனாகிய தெலுங்க வீமன்மேல் ஒரு முறை படை யெடுத்துச் சென்று அவனைப் போரிற்புறங்கண்டு வெற்றித்திருவுடன் திரும்பினான்.2 கி.பி. 1120-ல் நம் குலோத்துங்கன் விண்ணுல கெய்தியபின்னர் அரியணை யேறிச் சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொண்டு ஆட்சி புரிந்தவன் இவ்விக்கிரம சோழனேயாவன். இவனுக்குத் தியாக சமுத்திரம் அகளங்கன் முதலான வேறு பெயர்களும் உண்டு.1 புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் இவ்வேந்தன் மீது விக்கிரம சோழனுலா என்று ஓர் உலாப் பாடியுள்ளனர். இம் மன்னன் இப் புலவர் பெருந் தகையைப் பெரிதும் பாராட்டி ஆதரித்து வந்தான். இரண்டாம் மகனாகிய இரண்டாம் இராசராசன் என்பான் கி.பி. 1077 முதல் 1078 வரை ஓராண்டு வேங்கி நாட்டில் அரசப் பிரதிநிதியாய மர்ந்து அதனை அரசாண்டனன்; பின்னர், தன் தந்தையிடத்தமர்ந்து அணுக்கத் தொண்டுகள் புரிதல் வேண்டு மெனச் சோழ மண்டலத்திற்குத் திரும்பிவந்து விட்டான்.2 மூன்றாம் மகனாகிய வீரசோழன் என்பவன் தன் தமையனாகிய இரண்டாம் இராசராசனுக்குப் பின்னர் வேங்கி நாட்டிற்கு அரசப் பிரதிநிதியாக அமர்ந்தான்.3 அங்கு அவனது ஆட்சி பல ஆண்டுகள் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. குலோத்துங்கனது மற்றை மக்களைப் பற்றிய வரலாறு இப்போது புலப்படவில்லை. குலோத்துங்கன் சுற்றத்தினர் : 1. தந்தையைப் பெற்ற பாட்டன் ... விமலாதித்தன். 2. தந்தையைப் பெற்ற பாட்டி ... குந்தவ்வை II. 3. தந்தை ... கீழைச்சளுக்கியனாகிய இராசராசநரேந்திரன் 4. தாய் .... .... அம்மங்கைதேவி I. 5. உடன் பிறந்தாள் .... குந்தவ்வை III. 6. மனைவியர் ..... மதுராந்தகி, ஏழிசைவல்லபி, தியாகவல்லி, 7. மக்கள் .... விக்கிரமசோழன், இராசராசன், வீரசோழன், அம்மங்கைதேவி II 8. சிறிய தாதை ... விசயாதித்தன் VII. 9. தாயைப்பெற்ற பாட்டன் ... கங்கைகொண்ட (சோழன் என்னும் இராசேந்திரசோழன் I. 10. அம்மான்சேய் ... இராசாதிராசன் I. (இரண்டாம் ராசேந்திரசோழன், மும்முடிச் சோழன், வீரராசேந்திரசோழன். 11. அம்மான்சேய் ... அதிராசேந்திரன். 12. முதல் மனைவியின் தந்தை ... இரண்டாம் ராசேந்திரன். 11. குலோத்துங்கனுடைய அரசியல் தலைவர்கள் குலோத்துங்கனது ஆளுகையில் அமைச்சர்களாகவும் படைத் தலைவர்களாகவும் திருமந்திர ஓலைநாயகமாகவும் திருமந்திர ஓலை யாகவும் திருவாய்க் கேள்வியாகவும் புரவுவரித்திணைக்களத்தி னராகவும் அமர்ந்து அரசாங்கத்தை இனிது நடத்திய அரசியல் அதிகாரிகள் எத்துணையோ பலர் ஆவர். அவர்களுட் சிலருடைய பெயர்கள் மாத்திரம் கல்வெட்டுக் களால் தெரிகின்றன. அன்னோருள் மூவரது வரலாற்றைச் சிறிது விளக்குதற்குரிய கருவிகள் கிடைத்துள்ளமையின் அவர்களைப் பற்றிய செய்திகளும் ஈண்டுச் சுருக்கமாக எழுதப்படுகின்றன. 1.கருணாகரத்தொண்டைமான்:- இவனது வரலாற்றைக் கலிங்கத்துப்பரணி ஒன்றே சிறிது கூறுகின்றது. அந்நூல் ஒன்றில தேல் தமிழகத்தில் அக்காலத்தே பெருவீரனாய்ப் பெரும் புகழ் படைத்து விளங்கிய இக்குறுநில மன்னனது பெயரே பின்னுள்ளோர் தெரிந்து கொள்ளாதவாறு மறைந்தொழிந் திருக்கும் என்பது திண்ணம். இவன் பல்லவர் குலத்தில் தோன்றிய ஒரு சிற்றரசன். இவன், நுண்ணறி விலும் கல்வி கேள்விகளிலும் சிறந்தவனாயிருந்தமையின் நம் குலோத்துங் கனது அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாக முதலில் அமர்த்தப் பட்டான். பின்னர், தன் சீரிய ஆற்றலாற் படிப்படியாக உயர்நிலையை எய்தி இறுதியில் வேந்தனது அமைச்சர் தலை வனாகவும் படைத்தலைவர் களுள் முதல்வனாகவும் ஆயினான். இவனே, வடகலிங்கப் போர்க்குத் தலைமைப் படைத்தலை வனாகச் சென்று, போர் நடத்தித் தன் அரசனாகிய குலோத் துங்கச் சோழற்கு வாகைமாலை சூட்டியவன். குலோத்துங்கன் எய்திய பெரும் புகழுக்குச் சிறந்த காரணமா யிருந்தோருள் இவன் முதன்மை யானவன் என்று சிறிதும் ஐயமின்றிக் கூறலாம். கவிச்சக்கர வர்த்தியாகிய சயங் கொண்டாரும் இவனை வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி - உலகுபுகழ் கருணாகரன்1 எனவும், கலிங்கப் பரணி நம் காவலனைச் சூட்டிய தோன்றல்2 எனவும் புகழ்ந்துள்ளார். இவனது அரிய அரசியல் ஊழியத்தைப் பெரிதும் பாராட்டி அதற்குரிய அறிகுறியாக வேள் தொண்டை மான் ஆகிய பட்டங்கள் குலோத்துங்க சோழனால் இவனுக்கு வழங்கப் பட்டன. இவன் இத்தகைய சிறப்பினை எய்திக் குலோத்துங்கனது அரசியலைப் பெருமையுறச் செய்தது இவ்வேந்தனது ஆட்சியின் பிற்பகுதியிலே யாகும். இவன், குலோத்துங்கனது மகனாகிய விக்கிரம சோழனது ஆளுகையிலும் இருந்துள்ளான் என்பது விக்கிரமசோழ னுலாவினால் அறியப் படுகின்றது.3 இவன் வாழ்ந்த ஊர் வண்டை என்பர் ஆசிரியர் சயங் கொண்டார். அவ்வூர், சோழமண்டலத்தில் குலோத்துங்க சோழவள நாட்டைச் சார்ந்த திருநறையூர் நாட்டிலுள்ள வண்டாழஞ் சேரியகும் என்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.4 அஃது இப்போது வண்டுவாஞ்சேரி என்ற பெயரோடு தஞ்சாவூர் ஜில்லாவில் கும்பகோணம் தாலூகாவிலுள்ள நாச்சியார் கோயிலிலிருந்து குடவாசலுக்குச் செல்லும் பெரு வழி யிலுள்ளது. வண்டாழஞ் சேரி என்பது வண்டுவாஞ் சேரி என்று பிற்காலத்தில் மருவி வழங்கிவருகின்றது. இவன், சிவபெருமானிடத்தில் அளப்பரிய பேரன் புடையவனாய் திருவாரூரில் அரிய திருப்பணிகள் செய்துள்ளனன். இவன் இறுதியில் திருவாரூரில் தியாகேசரது திருவடிகளிற் கலந்தனன் என்றும் தியாகேசரது திருப்பெயர்களுள் கருணாகரத் தொண்டைமான் என்பதும் ஒன்று என்றும் திருவாரூர் உலாக் கூறுகின்றது. இதனால் இவன் அப் பெருமானிடத்துக் கொண்டிருந்த அன்பின் முதிர்ச்சி ஒருவாறு விளங்கும். 2. அரையன் மதுராந்தகனான குலோத்துங்க சோழ கேரளராசன் :- இவன் சோழமண்டலத்தில் மண்ணி நாட்டிலுள்ள முழையூரின் தலைவன் : குலோத்துங்க சோழனது படைத் தலைவர்களுள் ஒருவன். அரசனால் கொடுக்கப் பெற்ற குலோத்துங்க சோழ கேரளராசன் என்ற பட்டம் எய்தியவன்; குலோத்துங்கன் சேரர்களோடு நடத்திய போர்க்குப் படைத் தலைமை வகித்துச் சென்று அதில் வெற்றிபெற்றவன்; இவ்வேந்தனால் சேரமண்டலத்தில் கோட்டாற்றில் நிறுவப் பெற்ற நிலைப் படைக்குத் தலைவனாயிருந்தவன். இவன் கோட்டாற்றில் தங்கிய நாட்களில் அங்கு இராசேந்திர சோழேச்சுரம் என்ற கோயில் எடுப்பித்துள்ளான்.1 அதற்கு நிபந்தங்களுக்காகத் தேவதான இறை யிலியும் குலோத்துங்க சோழனால் விடப்பட்டுள்ளது. இதனால், இவன் சிவ பெருமானிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனாய் இருந்தனன் என்பது நன்கு விளங்குகின்றது. 3. மணவிற் கூத்தனான காலிங்கராயன் :- இவன் தொண்டை மண்டலத்திலுள்ள இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற்கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவன்; குலேத் துங்கனது ஆட்சியின் பிற்பகுதியில் படைத்தலைவனாய மர்ந்து பெரும் புகழ் எய்தியவன்; குலோத்துங்கன் வேணாடு, மலைநாடு, பாண்டி நாடு, வடநாடு முதலியவற்றோடு நிகழ்த்திய போர்களில் படைத்தலைமை வகித்து வெற்றியுற்று அதனால் தன் அரசனுக்கு என்றும் நிலை பெறத்தக்க புகழை யுண்டு பண்ணியவன்.2 இவனது போர்வன்மை யையும் பெருமையையும் நன்குணர்ந்த குலோத்துங்கன் இவனுக்குக் காலிங்க ராயன் என்ற பட்டம் அளித்தான். இவன், தில்லையம்பலத்தில் நடம்புரியும் இறைவனிடத்துப் பேரன்பு பூண்டொழுகி, ஆண்டு இயற்றிய திருப்பணிகள் பல; அவற்றுள் தில்லையம்பலம் பொன் வேய்ந்தமையும், அங்கு நூற்றுக்கால் மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவாரம் ஓதுதற்குரிய மண்டபம், சிவகாம கோட்டம் முதலியவற்றைக் கட்டுவித்தமையும் சிறந்தனவாம். அன்றியும், இவன் தியாகவல்லி முதலான ஊர்களைப் பொன்னம்பலவாணருக்குத் தேவதான இறையிலியாக விட்டிருக் கின்றனன். சமயகுரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகளை ஆட்கொண்டருளிய திருவதிகை வீரட்டானேச்சுரர் திருக்கோயிலில் இவன் செய்துள்ள அருந் தொண்டுகள் பலவாகும். அங்குக் காமகோட்டம் எடுப்பித்தும், பொன்வேய்ந்தும், ஆடரங்கும் வேள்விச் சாலையும் அமைப்பித்தும், தேவதான இறையிலி விடுத்தும் செய்த அருந்தொண்டுகள் அளவிறந்தன என்பர். இவற்றால் இவனது சிவபத்தி யின் மாட்சி இத்தகையதென்று நன்கு புலப்படுகின்ற தன்றோ? இனி, இவன் சைவசமயத்திற்குப் புரிந்துள்ள அரும் பணி களுட் சிறந்தது மூவர் அருளிய தேவாரப் பதிகங்களைச் செப்பேடு களில் எழுதுவித்துத் தில்லையம்பதியிற் சேமித்து வைத்தமையே யாகும்.1 இவன் இவ்வாறு ஆற்றிய அரும் பெருந் தொண்டுகளை விளக்கக்கூடிய பல வெண்பாக்கள் தில்லையம்பதியிலும் திருவதிகை யிலும் உள்ள கோயில்களில் வரையப்பட்டுள்ளன.2 இவன், விக்கிரமசோழன் ஆட்சியிலும் இத்தகைய உயர் நிலை யிலே இருந்தனன் என்பது விக்கிரமசோழன் உலாவடி களால் புலனாகின்றது.3 12. குலோத்துங்கனுடைய அவைக்களப்புலவர் இனி, குலோத்துங்கன் காலத்துச் சிறந்து விளங்கிய புலவர் பெருமான் கலிங்கத்துப் பரணியின் ஆசிரியராகிய சயங் கொண்டார் ஆவர். இவரது வரலாற்றை அடியிற் சுருக்கி வரைவாம். இப்புலவர் பெருந்தகையார் சோழமண்டலத்திலே கொரடாச்சேரி புகைவண்டி நிலையத்துக்கு அண்மையிலுள்ள தீபங்குடி என்னும் ஊரின்கண் பிறந்த நல்லிசைப் புலவராவர். இவரது குலமும் சமயமும் நன்கு புலப்படவில்லை. இவர் பெரும் புலமை படைத்தவராய் நம் குலோத்துங்க சோழனைக் காண வேண்டி அவனது அவைக்களத்தை அடைந்தபோது அவ்வரசன் நுமது ஊர் யாது? என்று வினவ, செய்யும் வினையும் இருளுண் பதுவும் தேனும் நறவும் ஊனும் களவும் பொய்யும் கொலையும் மறமுந் தவிரப் பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர் கையும் முகமும் இதழும் விழியும் காலும் நிறமும் போலுங் கமலம் கொய்யும் மடவார் கனிவா யதரங் கோபங் கமழும் தீபங் குடியே என்று தம்புலமைக்கேற்பப் பாடலால் விடைகூறினர். இச்செய்தி, தமிழ் நாவலர் சரிதையால் அறியப்படுகின்றது. அரசன் இவரது புலமைக்கு வியந்து தன் அவைக்களப்புலவராக இவரை இருக்கச் செய்தனன் என்று தெரிகிறது. இவர் அரசனுக்கு விடைகூறிய பாடலில், பொய் கொலை முதலியன நீக்குதலையும், சமணர்க்குச் சிறந்த இரவுண்டல் தவிர் தலையும், தமதூர் சைனக்கடவுளின் தலமாயிருக்கும் சிறப்பையும் எடுத்துரைத்துப் புகழ்ந் திருத்தலால் இவர் சைனமதப் பற்றுடைய வராயிருத்தல் வேண்டு மென்பது நன்கு புலப்படுகின்றது. இவர் தாம் பாடியுள்ள கலிங்கத்துப் பரணியில் கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் சிவபெருமான், திருமால், நான்முகன், சூரியன், கணபதி, முருகவேள், நாமகள், துர்க்கை, சத்த மாதர்கள் என்ற இன்னோர்க்கு வணக்கங் கூறியிருத்தலாலும் இவர்களுள் சிவபெருமானுக்கே முதலில் வணக்கங் கூறியிருத்தலாலும் இவர் பரணிபாடியகாலத்தில் சைவமதப் பற்றுடையவராக மாறி இருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்கு கின்றது. ஆகவே, இவர் முதலில் சைனமதப் பற்றுடையவராயிருந்து சைவமதத் தினனாகிய குலோத்துங்க சோழனையடைந்து அவனது அவைக்களப் புலவராயமர்ந்து பின்னர், சைவமதப் பற்றுடையவ ராயினார் போலும். இனி, இப்புலவர் தம்முடன் வாதம்புரிவான் போந்த தென்னாட்டுப் புலவர் சிலரை வென்ற காரணம் பற்றி, சயங் கொண்டார் என்ற ழைக்கப் பெற்றனர் என்பர். ஆயின் இவரது இயற்பெயர் யாதென்பது இப்போது தெளியக்கூடவில்லை. கலிங்கரைத் தொலைத்து வாகைமிலைந்த குலோத்துங்கன் இப்புலவரை நோக்கி, புலவீர்! யானுங் சயங் கொண்டானாயினேன் என்றனன். உடனே புலவர், அங்ஙனமாயின், சயங்கொண்டானைச் சயங்கொண்டானைச் சயங்கொண்டன் பாடுதல் மிகப் பொருத்த முடைந்தன்றோ! என உரைத்துப் போய், சின்னாட்களில் கலிங்கத்துப் பரணி என்ற ஓர் அரிய நூலை இயற்றிவந்து அரசனது அவைக் களத்தே அரங்கேற்றினர். அப்போது அப்பரணி நூல் பாடல்களைப் பரிவுடன் கேட்டுக் கொண்டு வீற்றிருந்த வேந்தர் பெருமான் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும், பரிசிலாகப் பொற்றேங்காய் களை ஒவ்வொன்றாக உருட்டித்தந்து இவரையும் இவரியற்றிய நூலையும் பெரிதும் சிறப்பித்தனன். இக்கதை எவ்வாறாயினும், இப்புலவர், தாம் அரசன் பாற்கொண்ட பேரன்பின் பெருக்கத்தால் அவனது கலிங்க வெற்றியைச் சிறப்பிக்க கருதி, கலிங்கத்துப் பரணி என்ற நூல் பாடினரெனக் கோடலில் இழுக்கொன்று மில்லை. பரணி நூல் கேட்ட வளவர் பெருமானும் புலவர்க்குத் தக்கவாறு பரிசில் அளித்துப் பாராட்டி யிருத்தலும் கூடும். இனி, இவரியற்றிய பரணி சொற்பொருள் நயங்கள் நன்கமையப் பெற்று நிலவுதலால், இவரைப் பரணிக் கோர் சயங்கொண்டான் என்று முற்காலத்திய அறிஞர் புகழ்ந்துரைப் பாராயினர். சிலப்பதிகார உரையா சிரியராகிய அடியார்க்கு நல்லாரும் இப்பரணியிலுள்ள சில பாடல்களைத் தம் உரையில் மேற்கோளாக எடுத்து ஆண்டிருத்தலோடு இதன் ஆசிரிய ராகிய சயங்கொண்டாரைக் கவிச்சக்கரவர்த்தி என்றும் புகழ்ந்துள்ளார். புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர் விக்கிரமசோழன் மகனும் தம்பால் தமிழ் நூல்களைக் கற்றுத் தெளிந்தவனுமாகிய இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது தாம் பாடிய பிள்ளைத் தமிழில் பாடற் பெரும்பரணி தேடற் கருங்கவி கவிச்சக்கர வர்த்தி பரவச் செஞ்சேவகஞ்செய்த சோழன் திருப்பெயர செங்கீரையாடியருளே1 என்று கூறி நம் கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டாரைக் கவிச்சக்கரவர்த்தி என்று மனமுவந்து பாராட்டியிருத்தல், ஈண்டு அறியத்தக்க தொன்றாம். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசசோழன் ஆகிய மூன்று மன்னர் களாலும் பெரிதும் பாராட்டப் பெற்றுக் கவிச்சக்கர வர்த்தி என்ற பட்டமும் எய்தி மிக உயரிய நிலையில் வீற்றிருந்த நல்லிசைப் புலவராகிய ஒட்டக்கூத்தர், ஆசிரியர் சயங் கொண்டாரிடத்து எத்துணை மதிப்பும் அன்பும் உடைய வராயிருந்தன ரென்பது மேற்கூறியவற்றால் இனிது விளங்காநிற்கும். இனி, இப்பரணியில் பண்டைச் சோழவேந்தர்களின் வரலாறுகள் கூறப்பட்டிருத்தலால் சோழரைப் பற்றி ஆராய் வார்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம். அன்றியும், பண்டைக் கால வழக்க ஒழுக்கங்களுள் பலவற்றை இந்நூலிற் காணலாம். நமது சயங்கொண்டார் வணிகர்மீது இசையாயிரம் என்ற நூலொன்று பாடியுள்ளனரென்று தமிழ் நாவலர் சரிதை உணர்த்து கின்றது. அந்நூல் இது போது கிடைக்கப் பெறாமையின் இறந்ததுபோலும். அன்றியும் விழுப்பரையர் என்ற ஒரு தலைவர் மீது உலாமடல் என்னும் நூலொன்று பாடியுள்ளனர் என்று தெரிகிறது. சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் நமது சயங்கொண்டாரேயாவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இனி, கவிகுமுதசந்திர பண்டிதராகிய திருநாராயண பட்டரென்பார் கி.பி. 1097-ல் குலோத்துங்க சோழ சரிதை என்று நூலொன்று இவ்வேந்தன் மீது இயற்றி, புதுச்சேரியைச் சார்ந்த திரிபுவனியென்ற ஊரில் இறையிலி நிலம் பரிசிலாகப் பெற்றிருப்பது ஈண்டு அறியத்தக்கதாகும்.1  13. குலோத்துங்கனது அரசியல் நம் குலோத்துங்கனது அரசியல் முறைகளை இனி விளக்குவாம். பொதுவாக நோக்குமிடத்துப் பழைய தமிழ் நூல்களாலும் கல்வெட்டுக் களாலும் செப்பேடுகளாலும் அறியப்படும் அரசாங்க முறைகள் எல்லாம் நம் மன்னர் பெருமானாகிய குலோத்துங்கனுக்கும் உரியவை யென்றே கூறலாம். அவற்றை எல்லாம் ஆராய்ந்து ஒன்றையும் விடாது எழுதப்பு கின் அவை ஒரு தனி நூலாக விரியும் என்பது திண்ணம். ஆதலால், அவ்வரசியல் முறைகளை மிகச் சுருக்கமாக எழுதி விளங்க வைத்தலே எமது நோக்கமாகும். 1. இராச்சியத்தின் உட்பிரிவுகள் :- நமது வேந்தர் பெருமானது ஆணையின்கீழ் அடங்கியிருந்த சோழ இராச்சியம் அக்காலத்தில் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள், சோழமண்டலம், சயங் கொண்ட சோழமண்டலம், இராசராசப் பாண்டிமண்டலம், மும்முடி சோழ மண்டலம், வேங்கைமண்டலம், மலை மண்டலம், அதிராசராசமண்டலம் என்பன சிறந்தவை. இவற்றுள், சோழமண்டலம் என்பது தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களையும் தென்னார்க் காடு ஜில்லாவின் தென் பகுதியையும் தன்னகத்துக் கொண்டுள்ள நிலப்பரப்பாகும்; சயங்கொண்ட சோழமண்டலம் என்பது தென்னார்க்காடு ஜில்லாவின் பெரும் பகுதியையும் செங்கற்பட்டு, வடவார்க்காடு, சித்தூர் ஜில்லாக்களையும் தன்னகத்துக் கொண்டது; இராசராசப் பாண்டிமண்டலம் என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களைத் தன்னகத்துக் கொண்டது; மும்முடி சோழமண்டலம் என்பது ஈழமாகிய இலங்கையாகும்; வேங்கை மண்டலம் என்பது கீழைச்சளுக்கிய நாடாகும்; மலைமண்டலம் என்பது சேர நாடாகும்; இது திருவாங்கூர் இராச்சியத்தையும் மலையாளம் ஜில்லாவையும் சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது; அதிராசராசமண்டலம் என்பது கொங்கு நாடாகும்; இது கோயம்புத்தூர் ஜில்லாவையும் சேலம் ஜில்லாவின் ஒரு பகுதியையும் தன்னகத்துக் கொண்டது. இனி, ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது, முதல் இராசராச சோழன் காலத்தில் சோழமண்டலம், இராசேந்திர சிங்கவளநாடு, இராசாசிரய வளநாடு, நித்தவிநோத வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, உய்யக் கொண்டார் வளநாடு, அருமொழிதேவ வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசராச வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு என்னும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.1 பெரும்பான்மையாக நோக்குமிடத்து ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கு இடையில் அமைந்திருந்த நிலப்பரப்பாகும். உதாரணமாக, உய்யக் கொண்டார் வள நாட்டை எடுத்துக்கொள்வோம். அஃது அரிசிலாற்றுக்கும் காவிரியாற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பு ஆகும் என்பது தஞ்சையிலுள்ள இராசராசேச்சுரத்திற் காணப்படும் ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.2 இங்குக் குறிக்கப்பெற்றுள்ள வளநாடு களின் பெயர்கள் எல்லாம் முதல் இராசராசசோழனுடைய இயற்பெயரும் பட்டப் பெயர்களுமேயாகும். நம் குலோத்துங்க சோழன் தன் ஆட்சிக் காலத்தில் இவ் வள நாடுகளுக்குரிய பெயர்களை நீக்கிவிட்டுத் தன் பெயர்களை அவற்றிற்கு இட்டனன். க்ஷத்திரிய சிகாமணி வளநாடு என்பது குலோத்துங்க சோழ வளநாடு என்னும் பெயருடையதாயிற்று. இராசேந்திர சிங்க வளநாடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது; அவற்றுள் மேற்கிலுள்ள பகுதி உலகுய்யவந்த சோழ வளநாடு எனவும் கிழக்கிலுள்ள பகுதி விருதராச பயங்கர வளநாடு எனவும் வழங்கப் பட்டன. உலகுய்யவந்தான், விருதராசபயங்கரன் என்பன நம் குலோத்துங்கசோழனுடைய சிறப்புப் பெயர்கள் என்பது கலிங்கத்துப் பரணியால் அறியப்படுஞ் செய்தியாகும்.1 பிற மண்டலங்களும் இங்ஙனமே பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழ மண்டலம் மாத்திரம் முன்போலவே இருபத்து நான்குகோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இனி, ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளாகப் பகுக்கப் பட்டிருந்தது. வளநாட்டின் உட்பகுதிகளாகிய நாடுகளுள் சில, கூற்றங்கள் எனவும் வழங்கிவந்தன. ஒவ்வொரு நாடும் சில தனியூர்களாகவும் பல சதுர்வேதி மங்கலங்களாகவும் பிரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு சதுர்வேதி மங்கலமும் சில சிற்றூர்களைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று. 2. அரசனும் இளவரசனும் :- இங்ஙனம் வகுக்கப் பட்டிருந்த சோழ இராச்சியத்திற்குச் சோழ அரசனே தலைவன் ஆவன். அரசியலில் தலைமை வகித்து எவற்றிற்கும் பொறுப்புடைய வனாய் நீதி தவறாது ஆட்சிபுரியும் கடமை இவ்வேந்தனுக்கே யுரியதாகும். சோழமன்னர்கள் பட்டத்திற்குரிய தம் புதல்வர்க்கு இளவரசுப் பட்டம் கட்டி அவர்களை அரசியல் முறைகளில் நன்கு பழக்கிவருவது வழக்கம். இதற்கேற்ப, நம் குலோத்துங்கன் தனது மூத்தமகனாகிய விக்கிரம சோழனுக்குத் தன் ஆட்சிக் காலத்தில் இளவரசுப் பட்டம் கட்டி அரசியல் நுட்பங் களை யுணர்ந்து வன்மை யெய்துமாறு செய்தான். இவ்விக்கிரம சோழனே குலோத்துங்கனுக்குப் பின்னர் முடிசூடியவன் என்பது முன்னரே யுணர்த்தப் பட்டது. 3. உடன் கூட்டம் :- அரசன், தான் விரும்பிய வாறு எதனையும் நடத்தற்குரிமையுடையவனெனினும் பல அதிகாரி களுடனிருந்து ஆராய்ந்தே காரியங்களை நடத்துவது வழக்கம்.2 இவ்வதிகாரிகளை உடன் கூட்டத்ததிகாரிகள் என்று கல்வெட்டுக் களும் செப்பேடுகளும் கூறுகின்றன. இவர்கள் அரசனால் அளிக்கப் பெற்ற பலவகைச் சிறப்புக்களையும் எய்திப் பெருமை யுற்றவர்கள். 4. அரசியல் அதிகாரிகளும் அவர்கள் கடமைகளும்:- நம் குலோத்துங்கனது ஆளுகையில் பல்வகைத் துறைகளிலும் தலைவர் களாக அமர்ந்த அவனது ஆட்சி நன்கு நடைபெறச் செய்தோர், அமைச்சர், படைத்தலைவர், நாட்டதிகாரிகள், நாட்டையளப்போர், நாடு காவலதிகாரி, புரவுவரித்திணைக் களம், வரிப்புத்தகம், பட்டோலைப் பெருமான், விடையிலதிகாரி, திருவாய்க் கேள்வி, திருமந்திரஓலை, திருமந்திர ஓலைநாயகம் என்ற அரசியல் அதிகாரிகள் ஆவர்.1 இவர்களுள், படைத்தலைவர் அரசனது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை இவற்றிற்குத் தலைமைவகித்துப் போர் நிகழுங்கால் அதனை வெற்றியுற நடத்துவோர். நாட்டதிகாரிகள் ஒவ்வொரு உள் நாட்டிற்கும் தலைவர்களாய் விளங்குவோர்; இவர்கள் தம்தம் நாட்டைச் சுற்றிப் பார்த்துக் குடிகளின் நலங்கள், அறநிலையங் கள், நியாயம் வழங்குமுறை முதலானவற்றைக் கண்காணித்து வருவது வழக்கம். நாட்டையளப் போர் ஒவ்வொரு நாட்டையும் கூறுபட அளவிடுவோர். நாடு காவலதிகாரி என்போன் நாட்டிலுள்ள ஊர்களில் களவு, கலகம் முதலான தீச்செயல்கள் நிகழாமல் காத்து வந்த ஒரு தலைவன் ஆவன். புரவுவரித் திணைக்களம் என்பது நிலவரி சம்பந்த முடைய அதிகாரிகள் பலரை உறுப்பினராகக் கொண்ட நிலவரிக் கழகமாகும். இஃது ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தது. வரிப்புத்தகம் என்போர் அரசனுக்கு ஒவ்வொர் ஊரினின்றும் வருதற்குரியனவும் நீக்கப் பட்டனவுமாகிய அரசிறைக்குக் கணக்குவைப்போர். பட்டோலைப் பெருமான் நாள்தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக்குறிப்பில் எழுதி வைப்போன். விடையிலதிகாரி என்போர், கிராமசபை களினின்றும் பிற அதிகாரிகளிடத்திருந்தும் வரும் ஓலைகளைப் படித்துப் பார்த்து அவற்றிற்குத் தக்கவாறு விடையெழுதியனுப்பு வோர்; அன்றியும் அரசனது ஆணைத்திரு முகத்தை ஊர்ச் சபைகளுக்கும் பிற அதிகாரிகளுக்கும் முறைப்படி பணிமக்கள் வாயிலாக அனுப்புவோரும் இவர்களேயாவர். திருவாய்க் கேள்வி என்போர் அரசன் திருவாய் மலர்ந்தருளியவற்றைக் கேட்டு வந்து திருமந்திர ஓலையிடம் அறிவிப்போர். திருமந்திர ஓலை என்போர் அரசனது ஆணையை எழுதுவோர். இவர்களுக்குத் தலைவராயிருப்போர் திருமந்திரவோலை நாயகம் எனப்படுவார். இனி, இவர்களேயன்றி அரச காரியங்களை முட்டின்றி நடத்தும் கரும மாராயம் என்போரும் தலைநகரிலிருந்து வழக்காராய்ந்து நீதி செலுத்தும் அறங் கூறவையத்தாரும் அந்நாளில் இருந்தனர். ஆங்கிலேயராட்சியில் அரசாங்க அதிகாரிகளுள் சிறந்தோர்க்கு அவர்களது ஆற்றலையும் அரசியல் ஊழியத்தையும் பாராட்டி, ராவ்பகதூர் திவான்பகதூர் சர் ‘C.I.E.’ முதலான பட்டங்கள் அளித்து அரசாங்கத்தார் அவர்களை மகிழ்வித்தது போல, பதினொன்றாம் நூற்றாண்டில் நம் தமிழகத்தில் முடி மன்னனாக வீற்றிருந்து செங்கோல் ஓச்சிய நம் குலோத்துங்கனும் தன் அரசியல் அதிகாரி களுக்குப் பல பட்டங்கள் வழங்கி அவர்களைப் பாராட்டியுள்ளான் என்பது ஈண்டு உணரத்தக்கது. அங்ஙனம் அரசனால் அளிக்கப் பெற்ற பட்டங்கள், மூவேந்த வேளான் கேரளராசன், காலிங்கராயன், தொண்டைமான், வாணகோவரையன், பல்லவராயன், இளங்கோவேள், காடவராயன் கச்சிராயன், சேதிராயன், விழுப்பரையன் முதலியன வாகும். இப்பட்டங்களை அரசன் பெரும்பாலும் தன் பெயர்களோடு இணைத்தே வழங்குவது வழக்கம். இதன் உண்மையைக் குலோத்துங்க சோழ கேரள ராசன், இராசேந்திர சோழ மூவேந்தவேளான், விருத ராசபயங்கர வாணகோவரையன், வீர சோழப் பல்லவ ராயன், சனநாதக் கச்சிராயன் என்று வழங்கப்பெற்றுள்ள பட்டங்களால் நன்குணரலாம். அன்றியும் பெருந்தரம், சிறுதரம் என்ற இரண்டு பட்டங்கள் இருத்தலைக் கல்வெட்டுக்களில் காணலாம். இவை அதிகாரிகளது உயர்வு தாழ்வுகளாகிய வேறுபாடுகள் குறித்து இக்காலத்தில் வழங்கப்பெறும் Gazetted and Non Gazetted officers போன்ற இருபிரிவுகளாகும். 5. அரசிறை:- அக்காலத்தில் குடிகள் தம் அரசனுக்குச் செலுத்தி வந்த நிலவரி காணிக்கடன் என்று வழங்கப்பெற்றுள்ளது. இக் காணிக்கடன் விளையும் நெல்லின் ஒரு பகுதியாகவாதல் பொன்னும் காசுமாக வாதல் செலுத்தப் பெறுவது வழக்கம்.1 இக்காணிக் கடனை ஊர்ச்சபையார் குடிகளிடத்திலிருந்து ஆண்டு தோறும் வாங்கி அரசனது தலைநகரிலுள்ள அரசாங்கக் கருவூலத்திற்கு அனுப்புவர். மூன்றாம் ஆண்டு தொடங்கியும் கடந்த ஈராண்டிற்கும் நிலவரி கொடாதவர் நிலங்கள் ஊர்ச் சபையாரால் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்படுவது வழக்கம்.2 அங்ஙனம் விற்றமை யால் கிடைத்தபொருள் அரசாங்கத்தில் சேர்ப்பிக்கப் பெறும். இனி, நிலவரியேயன்றிக் கண்ணாலக்காணம், குசக்காணம், நீர்க்கூலி, தறியிறை, தரகு, தட்டாரப்பாட்டம், இடைப்பாட்டம், (இடைப் பூட்சி) ஓடக்கூலி, செக்கிறை, வண்ணாரப்பாறை, நல்லா, நல்லெருது, நாடுகாவல், உல்கு, ஈழம்பூட்சி முதலான பலவகை வரிகளும் இருந் துள்ளன.3 எனவே, அந்நாளில் பற்பல தொழில்களுக்கும் வரிகள் ஏற்பட்டிருத்தல் அறியத்தக்கது. வரிகளின் பெயர்கள் மிகுந்துள்ளமைபற்றி அரசாங்கவரிகள் அக்காலத்தில் மிகுந்திருந்தன என்று கருதற்கு இடமில்லை. ஒவ்வொரு தொழிலின் பெயரையும் சுட்டி வரிப்பெயர் குறிக்கப் பெற்றிருத்தலின் வரிப் பெயர்கள் மிகுந்து காணப்படுகின்றன வேயன்றி வேறில்லை. இந்நாளில் தொழில்வரி என்ற பொதுப் பெயரால் எல்லாத் தொழிலாளரிடத்தும் வரி வாங்கப்படு கின்றது. ஆகவே, இற்றைநாள் தொழில் வரி ஒன்றே எல்லாத் தொழில்களுக்குமுரிய பல்வகைத் தொழில் வரிகளையும் தன்னகத்து அடக்கிக் கொண்டு நிற்றல் காணலாம். கடன், கூலி, இறை, பாட்டம், பூட்சி என்பன வரிகளை யுணர்த்தும் மொழிகளாம். கண்ணாலக்காணம் என்பது கல்யாண வரி என்றும் அது திருமணநாளில் மணமகனும் மணமகளும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அரைக்கால் பணமேயாம் என்றும் ஈரோட்டிலுள்ள முதற் பராந்தகசோழன் கல்வெட்டு ஒன்று உணர்த்துகின்றது.1 நாடுகாவல் என்னும் வரி பாடி காவல் எனவும் வழங்கும். இஃது ஊர்களைக் காத்தற்கு வாங்கிய ஒரு தனிவரியாகும். உல்கு என்பது சுங்க வரியாகும். ஈழம்பூட்சி என்பது கள் இறக்குதற்குச் செலுத்த வண்டிய வரியாகும். 6. நில அளவு:- ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர்களை முறையாக அளந்தாலன்றி அங்கு விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன என்பதும் அவற்றிற்குரிய நிலவரியாகிய காணிக்கடன் குடிகளிடத்திலிருந்து அரசாங்கத்திற்கு எவ்வளவு வரவேண்டும் என்பதும் நன்கு புலப்பட மாட்டா. ஆதலால், சோழ இராச்சியம் முழுமையும், முதல் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் ஒரு முறையும், முதல் குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையும், மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும் அளக்கப்பட்டது.2 இவை முறையே கி.பி. 1001, கி.பி. 1086, கி.பி. 1216-ஆம் ஆண்டு களில் நிகழ்ந்தவையாகும். நிலம் அளந்தகோலை உலகளந்தகோல் என்று வழங்குவர். இக்கோல் பதினாறுசாண் நீளமுடையது. நிலங்களை நீர்நிலம், கொல்லை, காடு என்று வகுத்துள்ளனர். இவற்றுள், நீர்நிலம் கொல்லை என்பன முறையே நன்செய் புன்செய்களாகும். நிலங்கள் நூறுகுழிகொண்டது ஒருமா ஆகவும் இருபதுமா கொண்டது ஒரு வேலியாகவும் அளக்கப் பெற்றன. வேலி ஒன்றுக்கு நூற்றுக்கல விளைவுள்ளதும் அதற்குக் கீழ்ப் பட்டதுமென நிலங்கள் இருதரமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அந்நாளில் நிலத்தின் எத்தணைச் சிறுபகுதியும் விடாமல் நுட்பமாக அளக்கப் பெற்றுள்ளது என்பது இறையிலி நீங்கு நிலம் முக்காலே இரண்டுமாக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் அரையே இரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்குமாவினால் இறைகட்டின காணிக்கடன் என்பதனால் நன்கு விளங்கும். நிலத்தையளந்து எல்லை யறிந்து அங்குப் புள்ளடிக்கல் நடுவது வழக்கம் என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. 7. இறையிலி :- நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் வரி விதிக்கப்பெறாமல் ஒதுக்கப்பெற்ற நிலங்கள் யாவை என்பது முன்னரே விளக்கப்பட்டது. சைவ வைணவ திருக்கோயில்களுக்கு இறையிலி யாக அளிக்கப்பட்ட நிலங்கள் தேவதானம் எனவும், சைன பௌத்த கோயில் களுக்கு அளிக்கப்பெற்றவை பள்ளிச் சந்தம் எனவும், பார்ப்பனர்க்கு விடப்பெற்றவை பிரமதேயம் பட்ட விருத்தி எனவும், அறநிலையங்கட்கு விடப்பெற்றவை சாலா போகம் எனவும் வழங்கப்பெற்றன. புலவர்க்கு அளிக்கப்பெற்றது புலவர் முற்றூட்டு எனப்படும். 8. நாணயங்கள் :- நம் குலோத்துங்கன் காலத்தில் பொன்னாலுஞ் செம்பாலுஞ் செய்யப் பெற்ற காசுகள் வழங்கி வந்தன. இக்காசுக்களுள் சில இக்காலத்தும் சிற் சில விடங்களிற் கிடைக்கின்றன. அக்காலத்துச் சோழ மன்னர்களது நாணயங்கள் எல்லாம் ஒரே எடையுள்ளனவாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்று பழைய நாணயங்களை ஆராய்ந்து அரியநூல் ஒன்று எழுதி யுள்ள டாக்டர் கன்னிங்காம் என்ற துரைமகனார் வரைந்துள்ளனர். காய்ச்சி உருக்கினும் மாற்றும் நிறையும் குன்றாதது என்று அதிகாரிகளால் ஆராய்ந்து உறுதி செய்யப்பட்டதற்கு அடையாள மாகத் துளையிடப் பெற்ற துளைப்பொன்னும் அந்நாளில் வழங்கிற்று.1 9. அளவைகள் :- அக்காலத்தில் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்கு வகைப்பட்ட அளவைகளும் வழக்கில் இருந்தன. இவற்றுள் எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். மணி, பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள், கழஞ்சு, மஞ்சாடி, குன்றி என்னும் நிறை கல்லாலும், செம்பு, பித்தளை, வெண்கலம், தரா முதலான தாழ்ந்த பொருள்கள் பலம் கஃசு என்னும் நிறைகல்லாலும் நிறுக்கப்பட்டு வந்தன. அரசாங்க முத்திரையிடப்பெற்ற நிறைகல் குடிஞைக்கல் எனப்படும். பொன்னின் மாற்றறிதற்குரிய ஆணியும் அப்போது இருந்தது என்பது ஈண்டு உணர்தற்குரிய தாகும். இனி, செம்பு, பித்தளை முதலியவற்றால் செய்யப் பெற்றவை, இரண்டாயிரம் பலம், மூவாயிரம் பலம் என்று நிறுக்கப்பட்டுள்ள செய்தி, கல்வெட்டுக்களால் வெளியா கின்றது.1 ஆகவே, அந்நாளில், சேர், வீசை, தூக்கு, மணங்கு ஆகியவற்றால் நிறுக்கும் வழக்கமின்மை நன்கு புலப்படு கின்றது. நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர் முதலியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலம் என்னும் முகக்குங் கருவிகளால் அளக்கப்பட்டன.2 சர்க்கரை, மிளகு, கடுகு, புளி முதலியன பலத்தால் நிறுக்கப்பட்டன. அரசாங்க முத்திரை இடப் பெற்ற மரக்காலும் இருந்தது. தோரை, விரல், சாண், முழம் என்பவற்றால் நீட்டல் அளவை நடைபெற்றது. எடுத்தல் அளவை 2 குன்றி = 1 மஞ்சாடி 20 மஞ்சாடி = 1 சுழஞ்சு முகத்தல் அளவை :- 5 செவிடு, = 1 ஆழாக்கு 2 ஆழாக்கு = 1 உழக்கு 2 உழக்கு = 1 உரி 2 உரி = 1 நாழி 8 நாழி = 1 குறுணி 2 குறுணி = 1 பதக்கு 4 குறுணி = 1 தூணி 12 குறுணி = 1 கலம் 10. கிராமசபை :- நம் குலோத்துங்கன் காலத்தில் ஊர்கள் தோறும் சபைகள் இருந்தன. இச்சபையினரே அங்கு நடைபெற வேண்டிய எல்லா வற்றையும் நிறைவேற்றி வந்தனர். சுருங்கச் சொல்லுமிடத்து அந்நாளில் கிராம ஆட்சி முழுமையும் இச்சபையாரால் தான் நடத்தப் பெற்று வந்தது எனலாம். இச்சபையின் உறுப்பினர் எல்லோரும் கிராமத்திலுள்ள பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்றவர் ஆவர். அக்காலத்தில் தனியூர்களும் பல சிற்றூர்களடங்கிய சதுர்வேதி மங்கலங்களும் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதியையும் குடும்பு (Ward) என்று வழங்கினர். ஒவ்வொரு குடும்பிற்கும் பிரதிநிதியாக ஒவ்வோர் உறுப்பினரே தேர்ந்தெடுக்கப் பெற்றனர். செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உத்தரமேரூர் முப்பது குடும்புகளை யுடையதாகவும் தஞ்சாவூர் ஜில்லாவில் செந்தலை என்று தற்காலத்து வழங்கும் சந்திரலேகைச் சதுர்வேதிமங்கலம் சற்றேறக்குறைய அறுபது குடும்புகளையுடைய தாகவும் இருந்தன. எனவே, உத்தரமேரூரிலிருந்த சபை முப்பது உறுப்பினரை யுடையதா யிருந்தது என்பதும் சந்திரலேகைச் சதுர்வேதி மங்கலத்திருந்த சபை அறுபது உறுப்பினர்களையுடைய தாயிருந்தது என்பதும் நன்கு விளங்குகின்றன. ஆகவே சபையின் உறுப்பினரது எண் அவ்வவ்வூரின் பெருமை சிறுமைக்கு ஏற்றவாறு குறிக்கப்பெறும் எனத் தெரிகிறது. இனி, சபையின் உறுப்பினராகத் தேர்தெடுக்கப் பெறும் உரிமை யுடையோர் காணிக்கடன் செலுத்தற் கேற்ற கால்வேலி நிலமும் சொந்த மனையும் உடையவராகவும் சிறந்த நூல்களைக் கற்ற அறிஞ ராகவும் காரியங்களை நிறைவேற்றுவதில் வன்மையுடையவராகவும் அறநெறியில் ஈட்டிய பொருளைக் கொண்டு தூயவாழ்க்கை நடத்து வோராகவும் முப்பத்தைந்துக்கு மேல் எழுபத்தைந்துக்குட்பட்ட வயதின ராகவும் மூன்று ஆண்டு கட்கு உள்பட்டு எந்த நிறைவேற்றுக் கழகத் திலும் உறுப்பினராக இருந்திராதவராகவும் இருத்தல் வேண்டும் என்பது கல்வெட்டு களால் அறியப்படுகின்றது. இனி, எந்தச் சபையிலாவது உறுப்பினராகவிருந்து கணக்குக் காட்டாதிருந்தவரும், ஐவகைப் பெரும்பாதகங்கள் புரிந்தோரும், கிராம குற்றப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டவரும், பிறர்பொருளைக் கவர்ந்தோரும், கள்ளக் கையெழுத்திடலாகிய கூடலேகை (Forgery) செய் தோறும், குற்றங்காரணமாகக் கழுதை மீது ஏற்றப்பட்டவரும், எத்தகைய கையூட்டுக் (Bribe) கொண்டோரும், கிராமத் துரோகி என்று கருதப் பட்டோரும், இங்குக் குறிக்கப்பெற்றோர்க்கு உறவினரும் தம் வாழ்நாள் முழுமையும் கிராமசபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெறுதற்குத் தகுதியற்றவராவர்.1 பொதுமக்கள், கிராம சபையின் உறுப்பினரை ஆண்டு தோறும் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுப்பது வழக்க மாகும். தேர்ந்தெடுத் தற்குக் குறிக்கப்பெற்ற நாளில் அரசாங்க அதிகாரி ஒருவர், சபை கூடுதற்கு அமைக்கப்பட்டுள்ள மாளிகையில் அவ்வூரிலுள்ள இளைஞர் முதல் முதியோர் ஈறாகவுள்ள எல்லோரையும் கூட்டுவர். அக்கூட்டத்தின் நடுவில் ஒரு குடம் வைக்கப்பெறும். அங்குள்ள நம்பிமாருள் வயது முதிர்ந்தார் ஒருவர் அக்குடத்தை எடுத்து அதனுள் ஒன்றும் இல்லை என்பதை எல்லோரும் அறியக்காட்டிக் கீழேவைப்பர். உடனே, அவ்வூரில் ஒவ்வொரு குடும்பிலுள்ளாரும் தமக்குத் தகுதியுடை யார் என்று தோன்று வோர் பெயரைத் தனித்தனி ஓலையில் எழுதி, அவ்வோலைகளை ஒருங்குசேர்த்து, அவை எக்குடும்பிற் குரியவை என்பது நன்கு புலப்படுமாறு அக்குடும்பின் பெயர் வரையப் பெற்ற வாயோலை யொன்றைச் சேர்த்துக் கட்டி அக்குடத்தில் இடுவர். இங்ஙனமே எல்லாக்குடும்பினரும் குட வோலை இடுவர். பின்னர், அம்முதியார் அங்கு நடை பெறுவதை யுணராத ஓர் இளைஞனைக் கொண்டு அக்குடத்தினின்றும் ஓர் ஓலைக்கட்டை எடுப்பித்து, அதனை அவிழ்த்து வேறு ஒரு குடத்திலிட்டுக் குலுக்கி, அவற்றுள் ஓர் ஓலையை அச்சிறுவனைக் கொண்டு எடுக்கச் செய்து, அதனைத் தாம் பெற்று, அங்குள்ள கரணத்தான் (கணக்கன்) கையிற் கொடுப்பார். அவன் தன் ஐந்து விரல்களையும் விரித்து உள்ளங்கையில் அதனை வாங்கி, அவ்வோலையில் எழுதப்பெற்றுள்ள பெயரை அங்குள்ளோர் யாவரும் உணருமாறு படிப்பான். பின்னர் அங்குள்ள நம்பிமார் எல்லோரும் அதனை வாசிப்பர் அதன் பிறகு, அப்பெயர் ஓர் ஓலையின் கண் வரைந்து கொள்ளப்படும். அவ்வோலை யிற் குறிக்கப் பெற்ற பெயருடையவரே அக்குடும்பிற்குரிய கிராமசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் ஆவர்.1 இங்ஙனமே மற்றைக் குடும்புகளுக்குரிய உறுப்பினரும் தேர்ந் தெடுக்கப் பெறுவர். ஊரிலுள்ள எல்லாக் குடும்புகளுக்கும் உரிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தபின்னர், அவர்களுள் வயதிலும் கல்வியிலும் அறிவிலும் முதிர்ந்தோர் பன்னிருவரைச் சம்வத்சர வாரியராகத் தேர்ந்தெடுப்பர். மற்றையோருள் சிலர் தோட்ட வாரியராகவும், சிலர் ஏரிவாரியராகவும், சிலர் பொன்வாரியராகவும், சிலர் பஞ்சவாரவாரியராகவும் ஏற்படுத்தப் படுவர். எனவே, கிராமசபை, சம்வத் சரவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்ற ஐந்து உட்கழகங்களைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று. சபையின் உறுப்பினர் ஏதேனும் குற்றம் பற்றி இடையில் விலக்கப் பட்டாலன்றி ஓராண்டு முடிய எவ்வகை ஊதியமும் பெறாது தம் வேலைகளை நடத்துவதற்கு உரிமைபூண்ட வராவர். இவர்களை ஆளுங்கணத்தார் எனவும் பெருமக்கள் எனவும் கூறுவர். இவர்கள் கூடுதற்கு ஊர்தோறும் மாளிகைகள் அமைக்கப் பட்டிருந்தன. இவர்களுள் நியாய விசாரணை செய்வதும் அறநிலையங் கள் நன்கு நடைபெறுகின்றனவா என்று பார்த்துக் கொள்வதும் சம்வத்சரவாரியரது கடமையாகும். ஏரி குளம் ஊருணி முதலிய நீர்நிலைகளைப் பாதுகாத்தலும் விளைவிற்கு வேண்டும் நீரைப் பாய்ச்சுவித்தலும் ஏரிவாரியரது கடமையாகும். நிலத்தைப் பற்றிய எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுதல் தோட்டவாரியரது கடமையாகும். பல்வகையாலும் வாங்கப்பட்ட பொற்காசு செப்புக்காசு களை ஆராய்வது பொன் வாரியரது கடமை யாகும். விளைவில் ஆறிலொரு கடமை அரசனுக்காகவும் ஏனை ஐந்து கூறு நிலமுடையார்க்காகவும் பிரித்துக் கொடுப்போர் பஞ்சவார வாரியராவர். இச் சபையார் பணித்தவற்றைச் செய்பவன் கரணத்தான் எனப்படுவான். இவனை மத்தியதன் எனவும் கூறுவதுண்டு. நல்வழியில் ஈட்டியபொருளும் நல்லொழுக்கமும் உடையவனையே கரணத்தானாக அமைப்பர். இவன் கணக்கு எழுதல்வேண்டும். எழுதிய கணக்கைச் சபையார் விரும்பியபோது, தானே நேரில் காட்டவேண்டும். இவன் சபையாரது நன்கு மதிப்பைப் பெறாவிடின் அடுத்த ஆண்டில் இவனுக்கு அவ் வேலை கொடுக்கப்படமாட்டாது. ஒரு நாளைக்கு ஒரு நாழி நெல்லும் ஓராண்டிற்கு ஏழுகழஞ்சு பொன்னும் இரண்டு கூறையும் கணக்கனுக்குச் சம்பளமாகக் கொடுக்கப் படுவது வழக்கம். கணக்கன் தான் எழுதிய கணக்கைச் சபையாரிடம் ஆராய்ந்து பார்த்தற்குக் கொடுக்கும் போது கையில் காய்ச்சிய மழுவை (Red Hot Iron) ஏந்தி உறுதிமொழி கூறிக் கொடுத்தல் வேண்டும். அங்ஙனம் கொடுக்குங்கால் கையில் ஊறுபாடு நேராதாயின் கணக்கனுக்கு எழுகழஞ்சிற்குமேல் காற்பங்குபொன் சேர்த்துக் கொடுக்கப்படும். ஊறுபாடு நேருமாயின் பத்துக்கழஞ்சு பொன் தண்டமும் வேறு தண்டமும் சபையாரால் விதிக்கப்படும்.1 இனி, நியாய விசாரணை நடத்தும் சம்வத்சரவாரியர் கொலை செய்தவனுக்குக் கொலைத் தண்டம் விதித்தலும், பிறவற்றிற்குச் சிறையிடுதலும், தளையிடுதலும், பொன் தண்டம் விதித்தலும் வழக்கம். அறியாமையால் தற்செயலாக நேர்ந்த சாவிற்கெல்லாம் அவ்வவற்றிற்கு ஏற்றவாறு திருக்கோயில்களில் விளக்கிடுவதற்குக் குற்றவாளிகள் பொன் கொடுக்குமாறு சபையார் தீர்ப்புக் கூறுவர். வேட்டைக்குச் சென்றோன் ஒருவன் எய்த அம்பு, குறி தவறி ஓர் உழவன்மேற் பட்டு அவன் இறந்ததற்கும், ஒருவன், தன் மனைவியைத் தள்ள, அவள் விழுந்து இறந் தமைக்கும், ஒருத்தி, தன் மகள் மீது எறிந்த கோல்பட்டு அண்மையில் நின்ற வேறொருபெண் மாண்டதற்கும் திருக்கோயில்களில் விளக்கிடு மாறு தீர்ப்புக் கூறினரே யன்றி அன்னோர்க்குக் கொலைத்தண்டம் விதித்திலர். ஏற்றுக்கொண்ட கடமைகளை நிறைவேற்றா தொழிந்தவர் களுக்குப் பொன் தண்டம் விதித்தல் வழக்கம் என்பதும் அவர்கள் அதனைக் கொடாது ஓடி விட்டால் அன்னோரது வீடு, காணி முதலியவற்றை அரசனது ஆணை யின் படி விற்று ஊர்ச்சபையார் ஒழுங்கு செய்தல் வழக்கம் என்பதும் பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றன. 11. ஆவணக்களரி:- அந்நாளில் ஊர்கள் தோறும் எழுதப் படும் ஆவணங்களைக் (பத்திரங்கள்) காப்பிட ஆவணக் களரியும் (Registration Office) இருந்தது. நிலத்தை விற்போரும் வாங்குவோரும் ஆவணத்துடன் அங்குச் சென்று நிலத்தின் விலையையும் நான்கெல்லையையும் தெரிவித்துத் தம் உடன் பாட்டிற்கும் உறுதி மொழி கூறி ஆவணம் காப்பிடப்பெற்ற பின்னர்த் திரும்புவர். இவ்வாவணம் என்றும் பயன்படக் கூடிய தாயிருப்பின் அவ்வூரிலுள்ள கோயிற்சுவரில் அதனைப் பொறித்து வைப்பது வழக்கம். 12. படை :- நம் குலோத்துங்கன் பால் யானைப் படையும் குதிரைப் படையும் காலாட்படையும் மிகுதியாக இருந்தன. இவன் காலத்தில் தேர்ப்படை ஒரு தனிப்படையாகக் கருதப்பட வில்லை. வில், வேல், வாள், அம்பு, தடி முதலியன அக்காலத்தில் வழங்கிய படைக்கலங்கள் ஆகும். குலோத்துங்கனும் அவனது முன்னோர்களும் நிலத்திலும் கடலிலுஞ் சென்று போர்புரிவதில் சிறந்த ஆற்றல் வாய்ந்த வர்கள் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. எனவே, நம் குலோத்துங்கனிடத்துப் பல கப்பற்படைகளும் இருந்திருத்தல் வேண்டும். இருமுடி சோழன் தெரிந்த வில்லிகள் என்பதனால் ஒவ்வொரு படைக்கும் வெவ்வேறு பெயரிடும் வழக்கம் உண்டு என்ற செய்தி புலனா கின்றது. படைஞர் போர் நிகழாத காலங்களில் உழுது பயிரிட்டுக் கொண்டு இருப்பது வழக்கம். வென்றுகொண்ட நாடுகளில் நிலைப்படை அமைத்தலும் உண்டு. குலோத்துங்கன் சேர மண்டலத்தை வென்றபோது அங்குள்ள கோட்டாற்றில் ஒரு நிலைப்படை ஒருபடைத் தலைவன் கீழ் நிறுவப் பெற்றது என்பது முன்னரே விளக்கப்பட்டது. 13. கோயில்கள் :- அந்நாளில் நம் தமிழகத்தில் பல கோயில்கள் இருந்தன. செங்கற்கோயில்களாக விருந்த இவற்றைக் கற்றளிகளாக அமைப்பித்தவர்கள் சோழமன்னர்களும் அன்னோரது அதிகாரிகளுமே யாவர். பல புதிய கோயில்களும் இவர்களால் கட்டுவிக்கப் பெற்றன. தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள நீடூர், திருவைகாவூர்1 முதலான தலங் களிலுள்ள கோயில்கள் நம் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் கற்றளி களாக்கப்பட்டன. சூரியனார் கோவில் என்ற ஊரிலுள்ள சூரியனது ஆலயமும், மன்னார் குடியிலுள்ள குலோத்துங்க சோழவிண்ணகரமும் மேலப்பழுவூரிலுள்ள குலோத்துங்க சோழேச்சுரமும் இவ்வேந்தன் காலத்தில் கட்டப் பெற்றனவேயாம். கோயில்கள் எல்லாம் அரசர்களாலும் பிற அன்பர்களாலும் அளிக்கப் பெற்ற பெரும் பொருளும் நிலமும் உடையனவாய் அக்காலத்தில் விளங்கின. திங்கள்தோறும் பூரணையில் கோயில்களுக்கு விழா நடைபெற்றது. உச்சியம் போதில் கோயில்களில் மாகேச்சுரர்க்கு நாள் தோறும் அன்னம் இடுவது வழக்கம். தேவாரப் பதிகங்கள் நாள்தோறும் திருமுன்னர் விண்ணப்பஞ் செய்தற்கு நிபந்தங்கள் விடப் பட்டிருந்தன.2 கோயிற் காரியங்களை எல்லாம் அவ்வூரிள்ள ஒரு சபையார் நன்கு நடத்தி வந்தனர். அரசனும் அரசாங்க அதிகாரிகளும் நாட்டைச் சுற்றிப் பார்த்து வருங்கால் கோயில்கள் திட்டப்படி நடத்தப்பட்டு வருகின்றனவா என்று ஆராய்ந்து வருவது வழக்கம்.3 கோயிற்குரிய செலவு போக எஞ்சிய பொருளின் ஒரு பகுதியைக் கல்வி வளர்ச்சிக்குச் செலவிட்டு வந்தனர் என்பது தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள எண்ணாயிரம் என்ற ஊரிலுள்ள கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.4 ஒரு பகுதி மருத்துவ நிலையத்திற்கும் செலவிடப் பட்டது என்பது செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள திருமுக்கூடல் கோயிற் கல்வெட்டால் அறியப் படுகின்றது.5  14. முடிவுரை இதுகாறும் எழுதியுள்ள பல அதிகாரங்களால் பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் சோழமண்டலத்தில் சக்கர வர்த்தியாக வீற்றிருந்து நம் தமிழகத்தையும் இதற்கப்பாலுள்ள பிறநாடுகளையும் ஆட்சி புரிந்த முடிமன்னனாகிய முதற் குலோத்துங்க சோழனது வரலாற்றை ஒருவாறு நன்குணரலாம். அன்றியும் சற்றேறக்குறைய ஐம்பது ஆண்டுகள்வரை நம் தமிழகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இவ்வரலாற்று நூல் இயன்ற வரை இனிது விளக்கா நிற்கும். நல்வினை முதிர்ச்சியால் அறிவு திருவாற்றல்களுடன் நிலவிய நம் வேந்தர் பெருமான் கடைச்சங்க நாளில் சிறப்புடன் விளங்கிய சோழன் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலான முடிமன்னர்களோடு ஒருங்கு வைத்து எண்ணத்தக்க பெருமையும் புகழும் உடையவன் என்பதில் சிறதும் ஐயமில்லை. இத்தகைய பெருவீரன் அரசு வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடைநகரம் கங்கைகொண்ட சோழபுரம் ஆகும். நம் குலோத்துங்கனது தாய்ப்பாட்டனாகிய கங்கை கொண்ட சோழனால் அமைக்கப்பெற்ற இப்பெருநகரம் அவ்வேந்தன் காலத்திலேயே சோழ மண்டலத்திற்குத் தலை நகராகும் பெருமை எய்திற்று. அவனுக்குப் பின்னர், சோழர்களது ஆட்சியின் இறுதிவரை இந்நகரமே எல்லாச் சோழமன்னர்களுக்கும் தலைநகராக இருந்தது. எனவே, இது தஞ்சையினும் சிறந்த அரணுடைப் பெருநகரமாக அந்நாளில் இருந்திருத்தல் வேண்டும். இந்நகர், கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணியிலும் விக்கிரமசோழனுலாவிலும், கங்கைமாநகர் என்று வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியிலும், கங்காபுரம் என்று தண்டியலங்கார மேற்கோள் பாடலிலும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைவாய்ந்த இந்நகரம் இதுபோது தன் பண்டைச் சிறப்பனைத்தும் இழந்து திருப்பனந்தாளுக்கு வடக்கில் கொள்ளிடத் திற்குக் கட்டப் பெற்றுள்ள லோயர் அணையிலிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெரு வழியில் ஒரு சிற்றூராக உள்ளது. ஆயினும் இவ்வூரின் பழைய நிலையை நினைவு கூர்தற்கும் சோழச்சக்கர வர்த்திகளின் பெருமையையுணர்தற்கும் ஏதுவாக இன்றும் அங்கு நிலை பெற்றிருப்பது கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் சிவாலயமேயாகும். இந்நகரில் நம் குலோத் துங்கனுக்குப் பின்னர் வீற்றிருந்து ஆட்சி புரிந்தோர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் என்போர். இவர்கள் எல்லோரும் புகழாலும் வீரத்தாலும் நம் குலோத்துங்கனது பெருமையைப் பின் பற்றியவர்கள் என்று ஐயமின்றிக் கூறலாம். சோழமன்னர்களுள் இறுதியானவன் மேற் கூறிய மூன்றாம் இராசேந்திரனே ஆவன். அவனுக்குப் பின்னர், சோழநாடு பாண்டியரது ஆட்சிக்குள்ளாயிற்று. சோழர்களும் பாண்டியர்க்குத் திறைசெலுத்தும் குறுநில மன்னர்களாயினர். இவர்களது தலைநகராகிய கங்கைகொண்ட சோழபுரமும் பகையரசர்களால் முற்றிலும் அழிக்கப் பெற்றுச் சிறுமை எய்திற்று. படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வந்த தமிழ் வேந்தர்களான சோழர்கள் தங்கள் ஆட்சியும் வீரமும் இழந்து தாழ்வுற்றனரெனினும் அவர்களது ஆதரவினால் வெளிவந்த தமிழ் நூல்களும், அவர்களால் எடுப்பிக்கப்பெற்ற திருக்கோயில்களும், வெட்டப் பெற்ற பேராறுகளும், கட்டப் பெற்ற அணைகளும் இன்றும் நிலைபேறுடை யனவாய் அன்னோரது பெருமையனைத்தும் நம்மனோர்க்குணர்த்தும் கலங்கரை விளக்கமென நின்று நிலவுதல் ஒருவகையால் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பது திண்ணம். முற்றும் சேர்க்கை - 1 முதற் குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகள் (முதல் மெய்க்கீர்த்தி) 1. திருமன்னி விளங்கு மிருகுவ டனையதன் தோளும் வாளுந் துணையெனக் கேளலர் வஞ்சனை கடந்து வயிரா சரத்துக் குஞ்சரக் குழாம்பல வாரி யெஞ்சலில் சக்கரக் கோட்டத்துத் தாரா வரசனைத் திக்கு நிகழத் திறைகொண் டருளி அருக்க னுதயத் தாசையி லிருக்குங் கமல மனைய நிலமக டன்னை முந்நீர்க் குளித்த வந்நா ளாதிக் கேழ லாகி யெடுத்த திருமால் யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத் தன்குடை நிழற்கீ ழின்புற விருத்தித் திகிரியும் புலியுந் திசைதொறும் நடாத்திப் புகழுந் தருமமும் புவிதொறு நிறுத்தி வீரமுந் தியாகமும் மானமுங் கருணையும் உரிமைச் சுற்ற மாகப் பிரியாத் தலநிகழ் சயமுந் தானும்வீற் றிருந்து குலமணி மகுட முறைமையிற சூடித் தன் கழல் தராதிபர் சூடச் செங்கோல் நாவலம் புவிதொறும் நடாத்திய கோவிராசகேசரி வன்மரான உடையார் ஸ்ரீ ராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு (இரண்டாவது மெய்க்கீர்த்தி) 2. புகழ்சூழ்ந்த புணரி யகழ்சூழ்ந்த புவியிற் பொன்மேனி யளவுந் தன்னேமி நடப்ப விளங்குசய மகளை யிளங்கோப் பருவத்துச் சக்கரக் கோட்டத்து விக்ரமத் தொழிலாற் புதுமணம் புணர்ந்து மதவரை யீட்டம் வயிரா கரத்து வாரி யயிர்முனைக் கொந்தள வரசர் தந்தள மிரிய வாளுறை கழித்துத் தோள்வலி காட்டிப் போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி வடதிசை வாகை சூடித் தென்றிசை தேமரு கமலப் பூமகள் பொதுமையும் பொன்னி யாடை நன்னிலப் பாவையின் தனிமையுந் தவிரப் புனிதத் திருமணி மகுட முரிமையிற் சூடித் தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத் தொன்னில வேந்தர் சூட முன்னை மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச் செங்கோல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை இருநில வளாக மெங்கணுந் தனாது திருநிழல் வெண்ணிலாத் திகழ வொருதனி மேருவிற் புலிவிளை யாட வார்கடற் றீவாந் தரததுப் பூபாலர் திறைவிடு கலஞ்சொரி களிறுமுறை நிற்ப விலங்கிய தென்னவன் கருந்தலை பருந்தலைத் திடத்தன் பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப விந்நாட் பிற்குலப் பிறைபோல் நிற்பிழை யென்னுஞ் சொல்லெதிர் கோடிற் றல்லது தன்கை வில்லது கோடா வேள்குலத் தரசர் அளத்தியி லிட்ட களிற்றின தீட்டமும் பட்டவெம் பரியும் விட்டதன் மானமும் கூறின வீரமும் கிடப்ப வேறின மலைகளு முதுகு நெளிப்ப விழிந்த நதிகளுஞ் சுழன்றுடைந் தோட விழுந்த கடல்களுந் தலைவிரித் தலமரக் குடதிசைத் தந்நா ளுகந்து தானும் தானையும் பன்னா ளிட்ட பலபல முதுகும் பயத்தெதிர் மாறிய சயப்பெருந் திருவும் பழியிகந்து கொடுத்த புகழின் செல்வியும் வாளா ரொண்கண் மடந்தைய ரீட்டமும் மீளாது கொடுத்த வெங்கரி நிரையும் கங்கமண் டலமும் சிங்கண மென்னும் பாணியிரண்டு மொருவிசைக் கைக்கொண் டீண்டிய புகழொடு பாண்டி மண்டலங் கொள்ளத் திருவுளத் தடைத்து வெள்ளம் வருபரித் தரங்கமும் பொருபரிக் கலங்களும் தந்திர வாரியு முடைத்தாய் வந்து வடகடல் தென்கடல் படர்வது போலத் தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர் ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி வெரிநளித் தோடி யரணெனப் புக்க காடறத் துடைத்து நாடடிப் படுத்து மற்றவர் தம்மை வனசரர் திரியும் பொற்றை வெஞ்சுர மேற்றிக் கொற்ற விசயத் தம்பந் திசைதொறு நிறுத்தி முத்தின் சலாபமு முத்தமிழ்ப் பொதியிலு மத்தவெங் கரிபடு மய்யச் சையமும் கன்னியுங் கைக்கொண் டருளித் தென்னாட் டெல்லை காட்டிக் கடன்மலை நாட்டுள சாவே றெல்லாந் தனிவிசும் பேற மாவே றியதன் வரூதினித் தலைவரைக் குறுகலர் குலையக் கோட்டா றுட்பட நெறிதொறு நிலைகளிட் டருளித் திறல்கொள் வீரசிம் மாசனந் திரியவிட் டருளி வடதிசை, வேங்கை மண்டலங் கடந்து தாங்கலர் கலிங்க மேழுங் கனலெரி பரப்ப விலங்கல் போல விலங்கிய வேந்தர் விட்டவெங் களிற்றோடு பட்டுமுன் புரளப் பொருகோ பத்தொடு போர்முக மதிர வருகோ மட்டையன் மாதவ னெதிர்பட எங்க ராய னிகலவ ரேச்சணன் மாப் பிறளா மதகரி யிராசணன் தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி மண்டலிக தாமய னெண்மர்த் திசைமுகன் போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி என்றிவ ரனைவரும் வெற்றவே ழத்தொடு பட்டு மற்றவர் கருந்தலை யொடுவெண் ணிணங்கழு கோடு பருந்தலைத் தெங்கணும் பாப்ப வுயர்த்துக் கருங்கட லடையத் தராதலந் திறந்து கலிங்க மேழுங் கைக்கொண் டலங்கல் ஆரமுந் திருப்புயத் தலங்கலும் போல வீரமும் தியாகமும் விளங்கப் பார்தொழச் சிவனிடத் துமையெனத் தியாக வல்லி உலக முடையா ளிருப்ப வவளுடன் கங்கைவீற் றிருந்தென மங்கையர் திலதம் ஏழிசை வல்லபி யேழுலகு முடையாள் வாழி மலர்ந்தினி திருப்ப வூழியுந் திருமா லாகத்துப் பிரியா தென்றும் திருமக ளிருந்தென வீரசிம் மாசனத்து வீற்றிருந் தருளின கோவிராசகேசரி வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு - (மூன்றாம் மெய்க்கீர்த்தி) 3. புகழ்மாது விளங்கச் செயமாது விரும்ப நிலமக ணிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடி சூடி மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனை மன்னவ ரிரியலுற் றிழிதர விக்கலன் சிங்கணன் மேல்கடற் பாயத் திக்கனைத் துந்தன் சக்கர நடாத்தி விசயாபி டேகம்பண்ணி வீரசிம் மாசனத்துப் புவனமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளிய கோவி ராச்கேசரி வன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு- சேர்க்கை - 3 திருவைகாவூர்க் கல்வெட்டு (1) ஸவதிஸ்ரீ புகழ்மாது விளங்க ஜெயமாதுவிரும்ப நாமகள்நிலவ மலர்மகள்புணர உரிமையிற்சிறந்த மணிமுடிசூடி மீன்வர்நிலைகெட வில்லவர்குலை(2)தர ஏனைமன்னவர் இரியலுற்றிழிதரத் திக்கனைத்துந்தன் சக்கரநடாத்தி வீரசிங்காசனத்து அவனிமுழுதுடையாளோடும் வீற்றிந் தருளிய கோவிராஜ (3) கேசரிவர்மரான திரிபுவன சக்கர வர்த்திகள் ஸ்ரீகுலோத் துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பதாவது ராஜராஜ வளநாட்டுப் பாவைசுற்றுப் பூண்டி (4) பூண்டி உடையார் சூரியன் பவழக் குன்றினாரான வன நாடுடையார் உலகுய்யவந்த சோழவளநாட்டு அண்டாட்டுக் கூற்றத்து உடையார் திருவைகாவுடை (5)ய மகாதேவர் கோயில்முன்பு இஷ்டிகை யாய் ஜீரணித்தமையில் இக்கோயில் இழிச்சித்திருக் கற்றளியாகச் செய்கைக்கு யாண்டு முப்பத்திரண்டாவ(6) து விண்ணப்பஞ்செய்து இஷ்டிகை இழிச்சி வித்துத் திருக்கற்றளியும் திருவிடைக்கட்டும் திருமண்டபமும் செய்வித்து இத்தேவர் பழந்தேவதானமான (7) நிலத்து நெல்லுதிருப்படிமாற்றுக்கும் நிபந்தத் திற்கும் போதாமையில் தேவதானம் பெறுகைக்கு விண்ணப்பஞ் செய்து உலகுய்ய வந்த சோழவள (8) நாட்டு விறை கூற்றத்துக்களப்பாக்குடி பொத்தகப்படி நிலம் இருபதே சிந்நத்தால் நெல்லு. ஆயிரத்து இருநூற்றுச் சிந்நமும் தேவதானமா (9) க இடுவித்து நிவந்தஞ் செல்லப்பண்ணுவித்தார் ராஜராஜ வளநாட்டுப் பாவை சுற்றுப் பூண்டி பூண்டி உடையார் சூரியன் பவழக்குன்றினாரான (10) வளநாடுடையார் - இவர் சொல்ல இத்திருப்பணி செய்வித்தார் இக்கோயிலில் ஸ்ரீமாயேவரர் திருவெண்காடுடை யான் திருச்சிற்றம்பல முடையானான தந்தைவிரத முடித்தார்:-  திருப்புறம்பயத் தல வரலாறு சிவலிங்க வழிபாட்டின் தனிச்சிறப்பு மெய்யன்பர்களே! பலவிதமான தெய்வ வழிபாடுடைய இந்துக்களில் பலருக்கும், எந்த மூர்த்தியை வழிபட்டால் எல்லா மூர்த்தி களையும் வழிபட்ட பலனைப் பெறலாம் என்பது தெரியா திருக்கிறது. அதைப் பலரும் அறியும்படி தெரிவிக்கவே. சிவன் கோவில்களில் மூலதானத்தில் சிவ லிங்கத்தைத் தவிர வேறு பிரதிஷ்டை ஒன்றுமின்றி அமைத்துக்காட்டி இருக்கின்றனர் நமது முன்னோர்கள். 1. சிவலிங்கத்தில் பிரம்ம, விஷ்ணு, சிவ பாகங்கள் ஆகிய மூன்றும் அமைந்திருப்பது. சிவலிங்கம் மூன்று கூறுகளுடையன. அடிப்பாகம் நாற்கோண வடிவமாய் பூமிக்கு அதிபதியான சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம பாகத்தை உணர்த்துவதாகும். மத்தியபாகம் எட்டுப் பட்டமுடைய அட்டகோண வடிவமாய், வாமை, சேஷ்டை, ரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரதமனி, சர்வ பூத தமனி என்னும் மகாவிஷ்ணுவின் எட்டு சக்திகளும். அதனோடுபொருந்த இருக்கும் ஆவுடை எனப்படும், மனோன் மணியாகிய ஒன்பதாவது சக்தியும் சேர்ந்து மகா விஷ்ணுவின் நவசக்தி களாகி, நீருக்கு அதிபதியான காத்தல் எனப்படும் திதி கர்த்தரான விஷ்ணு பாகத்தை உணர்த்துவ தாகும். அரன் என்பதன் பெண்பாலே அரி என்ப தாகும். அதனாலேயே அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயாரனார்க்கே என்று திருநாவுக்கரசு நாயனாரும், திருமழிசையாழ்வார் தமது இயற் பாவிலே மாதாயமாலவனை மாயவனை, என்றும் அருளிச் செய் திருக்கின்றார்கள். அதனால்தான் நமது அப்பனாகிய சிவபெருமானது இடப் பாகம். நமது அம்மையாக விளங்கும் மகா விஷ்ணுவின் பாகமாகவும், மாதொருபாகன், உமாமகேவரன், அர்த்தனாரி, சங்கர நாராயணன், என்ற ஆணும் பெண்ணும் சேர்ந்த அபூர்வ மூர்த்தங் களாகவும், அமைந்து திகழ்கின்றன. அதற்கு மேலுள்ளபாகம் நெருப்பிற்கு அதிபதியும், அழித்தல் எனப்படும் சம்ஹாரம், மறைத்தல் எனப்படும் த்ரௌபவம், அருளல் எனப்படும் அனுக்கிரஹம் ஆகிய முத்தொழில்களுக்கும் அதிபதியான சிவபாகமாகும். பூமிக்கு அதிபதியான பிரம்ம பாகம் பூமிக்குள்மறைந்து ஒடுங்கி நிற்கும், நீருக்கு அதிபதியான விஷ்ணுபாகம் அபிஷேக நீரைத் தாங்கி விரிந்துநிற்கும். நெருப்புக்கதிபதியான சிவபாகம் மேலோங்கி ஜோதிபோன்று ஜொலித்துக்கோண்டிருக்கும். இம் மூன்றும் சேர்ந்த அருவமும், உருவமுமற்ற ஆதியும், அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி வடிவே சிவலிங்கம் ஆகும் .ஆகவே சிவலிங்கத்தை வழிப்பட்டால் பிரம்மாவை வழிபட்ட பலனும், மாகவிஷ்ணுவின் பத்துத்திரு அவதாரங் களை வழிபட்ட பலனும், சிவபெருமானின் 25 மூர்த்தங்களை வழிபட்ட பலனும் ஒருங்கே கிடைக்கக் கூடிய தாகவும், இருக்கிறதென்பதை வேதாக மங்கள் வலியுறத்துகின்றன. புராண இதிகாசங்களும், அனுபூதிமான்களது அனுபவங்களும் அந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. அரசமரம் சுற்றிவரும் அன்பர்கள், சைவர்களாக இருந்தாலும், வைணவர்களாக இருந்தாலும், எல்லோரும் ஒன்றுபோல சொல்லி வரும் மூலதோ பிரஹ்மரூ பாய, மத்தியதோ விஷ்ணுரூபிணி, அக்ரஹ்த சிவரூபாய, விருக்ஷராஜாயதே நம, என்ற மந்திரமும் சிவலிங்க தத்துவத்தின் உண்மையை நன்றாக வலியுறுத்துகிறதல்லவா? அல்லாமலும் உலகிலுள்ள எல்லா மரங்களும் அவற்றின் விதைகளும், கனிகளும், எல்லா வகையான முட்டைகளும், ஜீவராசிகளின் தலைகளும், பிண்டங் களும், பூமியும், சந்திரனும் சூரியனும், நட்சத்திரங்களும், அண்டங்கள் பலவும், ஆகாயமும், சிவலிங்க வடிவின் மேல்பாகம் போல அமைந் திருப்பது சிந்திக்கத்தக்கது. 2. சிவலிங்க வழிபாட்டினாலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதாகும். மேலும் பாவங்களிலெல்லாம் மிகவும் கொடியது பிரம்மஹத்தி தோஷம் எனப்படும். மனிதரைக் கொன்ற கொலைப்பாவம். அதை நீக்க வேண்டுமானால் தனியாக எந்த மூர்த்தியையும் வழிபட்டு, நீக்கிக்கொள்ள முடியாது என்பது வேதாகம விதி. அதை நீக்க வேண்டுமானால் சிவலிங்க பூஜையே செய்தாக வேண்டும் அதனாலேயே திருவிளையாடல் புராணத்தில் பஞ்சமாபாதகம் செய்தவனுக்கும் மதுரை மீனாஷிசி சுந்தரேசுவரர், அவன் பாவங்களை மன்னித்து, நற்கதி கொடுத்ததாகக் காண் கிறோம். காஞ்சிபுரத்தில் அம்மையார் சதாவும் இலிங்க பூஜை செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. மகா பாரதத்தில் பஞ்சபாண்டவர் களும் சிவபூஜா துரந்தரர்களாக இருக்க, அர்ஜுனன் சிவபெருமானிட மிருந்து பாசுபதம் பெறுவதற்கு விசேஷத் தவம் புரிந்தது யாவரும் அறிந்ததே. இராமாயணத்தில் இராவண சம்ஹரத்திற்குப் பிறகு, ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்தில் இராமநாதரை சிவலிங்கத்தில் பிரதிஷ்டை செய்து வழி பாடாற்றியதும் ஹனுமார் தனியாகக் காசியிலிருந்து இலிங்கம் கொண்டு வந்து பிரிதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் காணலாம். கந்த புராணத்தில் சூரசம்ஹாரத்திற்குப் பிறகு ஸ்ரீசுப்ரமணியப் பெருமான் திரிச்செந்தூரில் சிவபூஜை செய்து கொண்டிருப் பதைக் காணலாம். கஜமுகா சூரனைச் சம்ஹாரம் செய்த பிறகு ஸ்ரீ விநாயகப் பெருமான் திருச்செங்காட்டங் குடியில் சிவலிங்க பூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். மேலுலகத்தில் அதிகாரம் பெற்ற சகலருமே சிவபூஜை செய்தே அவ்வப் பதவிகளைப் பெற்றிருப்பதாக, நமது நாயன்மார்களும் மாணிக்கவாசகரும் அருளிச் செய்திருக்கிறார்கள். சிவமயம் மதுரை ஸ்ரீதிருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்திற்குச் சொந்தமான திருப்புறம்பயத் தலவரலாறு இருப்பிடம்; திருப்புறம்பயம் என்பது தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணம் தாலுகாவிலுள்ள ஒரு சிவத்தலம் ஆகும். இது கும்ப கோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையில் இருக்கின்றது. கும்பகோணம் புகைவண்டி நிலையத்தில் இறங்கி காவேரியாற்றின் வடகரை வழியாக மேற்கே சுவாமிமலைக்குச் செல்லும் கற்சாலையில் இரண்டு மைல் சென்று புளியஞ்சேரி என்ற ஊரைஅடைந்து, அங்கிருந்து வடக்கே கொள்ளிடத்திற்குச் செல்லும் சாலையில் ஒருமைல் சென்று இன்னம் புருக்குப் போய்ப் பிறகு இரண்டு மைல் சென்றால் இத்தலத்தையடையலாம். இத்தலத்திற்குத் தெற்கே இரண்டு மைலில் திரு இன்னம் பரும் தென்கிழக்கே இரண்டு மைலில் ஏரகரம் என்ற வைப்புத்தலமும், மேற்கே மூன்று மைலில் திருவைகாவூரும், வடமேற்கே மூன்று மைலில் கொள்ளிடத்தின் வடகரையில் கோகரந்த புத்தூர் என்று வழங்கும் திருவிசய மங்கையும், கிழக்கே நான்கு மைலில் பெரிமிழலைக் குறும்ப நாயனாது ஊராகிய மிழலையும் எட்டு மைலில் சண்டேசுர நாயனாராது திருச்சேய்ஞலூரும் திருப்பனந் தாளும் உள்ளன. சைவ சமயாசாரியர்களால் பாடப் பெற்றனவாய்ச் சோழ வளநாட்டில் காவிரியாற்றிற்கு வடக்கேயுள்ள அறுபத்து மூன்று சிவத்தலங்களுள் இத்திருப்புறம்பயமும் ஒன்றாகும். இதற்கு கல்யாணமாநகர், புன்னாகவனம் என்ற பெயர்களும் உண்டு. கோயில் ஊரின் நடுவில், திருக்கோயில் கிழக்கு நோக்கிய திரு வாயிலுடையதாக இருக்கின்றது இதற்கு ஆதித்தேச்சுரம் என்ற பெயர் முற்காலத்தில் வழங்கிவந்தது என்பது கல்வெட்டு களால் புலப்படு கின்றது இப்பெயர் பிற்காலத்தில் வழங்கவில்லை திருக்கோயில் கிழமேல் 391 அடி நீளமும், தென்வடக்கு 232 அடி அகலமும் உடையது. எனவே கோயிலின் பரப்பு சுமார் 90712 சதுர அடியாகும் கோயிலில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. முதற்பிரகாரம் திருச்சுற்று மாளிகையுடன் அமைந்துள்ளது. முதற் பிரகாரத்தின் திருவாயிலை திருமாளிகைத் திருவாயில் என்று வழங்குவது முற்கால வழக்கம். ஓர் அழகிய சிறு கோபுரம் இங்கு இருக்கின்றது. இரண்டாம்பிரகாரத் திருவாயிலாகிய திருத்தோரண வாயிலில் ஐந்து நிலைக் கோபுர மொன்று எழிழுடன் விளங்குகின்றது. இது சுமார் 81 அடி உயரம் உடையது. மூர்த்திகள் திருக்கோயிலில் மூலத்தானத்தில், எழுந்தருளியுள்ள இறை வனுக்குச் சாட்சிநாதர், சாட்சீசுவரர் என்ற பெயரும், அம்பிகைக்குக் கரும்படு சொல்லி என்ற பெயரும் வழங்கி வருகின்றன. கல்வெட்டு களில் திருப்புறம்பயமுடைய நாயனார், திருப்புறம்பயமுடைய மகாதேவர், திருப்புறம்பயமுடைய பட்டாலகர், திருப்புறம்பயமுடைய தம்பிரானார் என்ற பெயர்களே காணப்படுகின்றன. திருஞான சம்பந்த சுவாமிகள் தாம் அருளிய தேவாரத் திருப்பதிகத்தில் புறம்பயமமர்ந்த இறையோன் எனவும் புறம்பயமமர்ந்தஉரவோன் எனவும் குறிப்பிட் டுள்ளனர். அன்றியும், திருஞானசம்பந்த சுவாமிகளது திருப்புறம்பயப் பதிகம் ஐந்தாம் பாட்டில் கரும்பொடுபடுஞ் சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் என்ற பகுதியில் அம்பிகையின் பெயர் குறிக்கப் பெற்றுள்ளது. அம்பிகைக்குக் குறைவிலா அழகி என்ற பெயரும் உண்டு என்பது திருப்புறம்பயப் புராணத்தால் அறியப் படுகின்றது. ஒரு வணிக மங்கையின் திருமண நிகழ்ச்சி பற்றி மதுரைமா நகரில் சான்று கூறி அவள் துன்பம் நீக்கிய காரணத்தால், சாட்சிநாதர் என்ற பெயர் புறம்பயத் தெம் பெருமானுக்கு வழங்கி வரலாயிற்று. இவ் வரலாற்றைத் தலபுராணத்தில் விரிவாகக் காணலாம். கோயிலின் மகாமண்டபத்திற்கு வெளியே தென்கிழக்கில் பிரளயங் காத்த பிள்ளையார் கோயில் ஒன்று உளது இப்பிள்ளை யார் திருவுருவம், சந்தனநிறம் பொருந்திய ஒருவகைக்கல்லால் அமைந் திருக்கிறது இது சுயம்புமூர்த்தி என்று சொல்லப்படுகிறது. இதன் திருமேனியில் சங்கும், இப்பியும் காணப்படுகின்றன. இம்மூர்த்தியை இப்பொருள்களைக் கொண்டு, வருணன் வழிபட்டதாகத் தலபுராணம் உரைக்கின்றது. இராகு அந்தர கற்பத்தில் உண்டான ஒரு பிரளயத்தில் இவ்வூர் அழியாதவாறு காத்தருளினமை பற்றி இப்பிள்ளையார் பிரளயங்காத்தவர் என்ற பெயர் அடைந்தனர். இதனைத் தல புராணத்தில் விளக்கமாகக் காணலாம். முதற்பிரகாரத்தில் சைவ சமயாசாரிய சுவாமிகள் நால்வர் திருவுரு வங்களும், மேலைத் திருச்சுற்றுமாளிகையில், அகத்தியர், புலத்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர், இமயாசலவேந்தன், விந்தாசல வேந்தன் ஆகிய பெரியோர்கள் சிவலிங்கங்களை. எழுந் தருளுவித்து வழிபாடு புரிந்தனர் என்று தலபுராணத்தில் சொல்லப் பட்டுள்ள சிவலிங்கங்களும் இருக்கின்றன. (இச் சிவலிங்கங்களுள் இரண்டைப்பற்றிய உண்மை வரலால்றைப் பின்வரும் கல்வெட்டுச் செய்திகள் என்ற பகுதியிற் காணலாம்.) இரண்டாம் பிரகாரத்தில் வடகிழக்குப் பகுதியில் அம்பிகைக்குத் தனிக் கோயில் இருக்கின்றது. இரண்டாம் பிரகாரத்திற்கு வெளியே ஐந்துநிலைக் கோபுர வாயிலுக்குக் கீழ்ப்புறத்தில் திருக்குளத்தின் தென்கரையில் தக்ஷிணா மூர்த்தி (அறமுரைத்த நாயனார்) கோயிலும் கீழ வீதியில் மேற்கு நோக்கிய மிகப்பெரிய விநாயகர் கோயில் ஒன்றும் இருக்கின்றன. நால்வர்க்கறம் பயனுரைத்தனை புறம் பயமமர்ந்தோய் என்ற திருஞானசம்பந்தசுவாமிகள் திருவாக்கும் புறபயமதனில் அறம் பல அருளியும் என்ற மணிவாசகப் பெருமான் திருவாக்கும் அன்பர் ஒருவர் உள்ளத்தைக் கவர்ந்து, அறமுரைத்த நாயனார்க்குத் தனிக்கோயில் எடுப்பித்து வழிபாடு செய்யும் படி செய்துவிட்டன என்று தெரிகிறது. இதனைக் கல்வெட்டுச் செய்திகள் என்ற பகுதியால் உணரலாம். தல விருட்சமும், தீர்த்தங்களும் இத்தலத்திற்குரிய விருட்சம் புன்னையாகும் அதுகோயிலின் முதற்பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது. அது மிகப் பழமைவாய்ந்தது என்பது பார்ப்போர்க்கு நன்கு புலப்படும். இரண்டாம் பிரகாரத்தில் தென்கிழக்குப் பகுதியில் மடைப் பள்ளிக்கு மேற்புறத்தில் ஒரு வன்னிமரம் இருக்கிறது. அது தல விருட்சமன்று. ஆயினும், வணிகமாதின் திருமண நிகழ்ச்சிக்குச் சான்றுகளாக இருந்தவற்றுள் வன்னிமரமும் ஒன்றாதலால் அதற்கறிகுறியாக அம்மரம் நிற்கின்றது. திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணத்திலும், தல புராணத் திலும் . இவ்வரலாறு கூறப்பட்டுள்ளது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதி காரத்தில் வன்னிமரமும் மடைப்பள்ளியுஞ் சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய் குழலாள் என்று இச்செய்தி சொல்லப் பெற்றிருக்கிறது. கோயிற் கருகில் வடகிழக்கில் பிரம தீர்த்தம் என்ற திருக்குளம் உளது தல புராணத்தில் இதன் பெருமை கூறப்பட்டிருக்கிறது. இத்திருக் குளத்தின் கீழ்கரையில் சத்தசாகர தீர்த்தம் என்ற எழுகடற் பெருங்கிணறு ஒன்றும் இருக்கிறது. உலகைப் பிரளய காலத்தில் அழித்தற்குப் பொங்கி எழுந்த ஏழுகடல்களும் இறைவன் ஆணையால் அடங்கி அதனுள் தங்கியிருக்கிறது என்று தல புராணம் கூறும். கோயிலின் மேற்புறத்தில் ஒரு பொய்கையும், ஊரின் வடகிழக்கில் பொன்னியம்மன் குளமும் இருக்கின்றன. இவை முறையே சந்திர புட்கரணி என்றும், சூரியபுட்கரணி என்றும், தலபுராணத்தில் கூறப்படு கின்றன. ஊருக்குக் கிழக்கே மண்ணியாறு தெற்கு வடக்காக ஓடும் பகுதியில் பூசத்துறை என்ற தீர்த்தச் சிறப்பு வாய்ந்த துறை ஒன்றும் உளது. கோயிலுக்கு வடக்கே ஒரு மைலில் கொள்ளிடப் பேராறும் ஓடுகின்றது. பிரமோற்சவத்தின் இறுதிநாளிலும், கார்த்திகைமாதத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், இறைவன் இடபாரூடராய் பரிவார தேவர் களுடன் எழுந்தருளி, பிரம தீர்த்தத்தில் தீர்த்தம் அருளுவது வழக்கம். அமாவாசை தோறும் சத்த சாகர கூபத்திற்கு இறைவன் எழுந்தருளித் தீர்த்தம் வழங்குவது பழைய வழக்கம். இது பல ஆண்டுகளாக நின்றுவிட்டது. பிற தீர்த்தங்களில் ஆண்டிற்கு ஒருமுறை சில விசேடநாட்களில் தீர்த்தம் வழங்கியருளுவதும் உண்டு. தலப்பெருமை இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்திகள், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமய குரவர் நால்வராலும் பாடப்பெற்ற பெருமையும் பழமையும் வாய்ந்தது. பெரிய புராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் புராணத்தின் ஆசிரியராகிய சேக்கிழார் திங்கள் சூடிய செல்வர் மேவு திருப்புறம் பயம், எனவும், திசையுடையாடையர் திருப்புறம் பயம் எனவும் இத்தலத்தைப் பாராட்டியுள்ளனர். ஆளுடைய நம்பிகளாகிய சுந்தரமூர்த்திகள் தம் தேவாரப் பதிகத்தில் செங்கண் சேவுடைச் சிவலோகனூர் எனவும் எங்கள் சங்கரன் வந்து தங்குமூர் எனவும் இத்தலத்தைச் சிறப்பித்துள்ளனர். அன்றியும், அப்பெரியார், மடையெலாங் கழுநீர் மலர்ந்து மருங்கெலாங் கரும்பாடத் தேன் -புடை யெலாமண நாறுஞ் சோலைப் புறம்பயம் எனவும், கங்கைநீர் புலமெலாமண்டிப் பொன் விளைக்கும் புறம்பயம் எனவும் இவ்வூரின் நில வளத்தையும் நீர்வளத்தையும் தேவாரப் பதிகத்தில் கூறியிருப்பது அறியத்தக்கது. அடிகள் திருவாக்குப் பொய்யாதவாறு பல வளங்களும் நிறைந்து இவ்வூர் விளங்குவதை இப்போதும் பார்க்கலாம். கல்வி கேள்விகளில் சிறந்த பெருமக்கள் பலர் இவ்வூரில் வாழ்ந்துள்ளார்கள். வீர சைவராகிய பாலசரசுவதி சுப்பிரமணியக் கவிராயர், பரமேசுவர உபாத்தியாயர் ஆகியோர் சென்ற நூற்றாண்டில் இடைப்பகுதியிலும், பிற்பகுதியிலும் இவ்வூரில் வாழ்ந்து பலருக்குத் தமிழிலக்கியங்கள் கற்பித்தும், திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நடத்தியும் சிறப்புற்றார்கள். இவர்களுள் முதல்வர் உடையார்பாளையம் குறுநில மன்னராக கி.பி1801 முதல் 1835 வரைவிளங்கிய கச்சிரங்கப்ப உடை யாரால் ஆதரிக்கப் பெற்றவர் ஆவார். மேற்குறித்தவர்களைத் தவிர பல அறிஞர்களும் அண்மைக் காலத்தில் இவ்வூரில் வாழ்ந்துள்ளனர் தெற்கு வீதி, வடக்குவீதி ஆகியவற்றை இணைக்கும் சந்து சென்ற நூற்றாண்டு வரை இராமப்பையன் அக்கிரகாரம் என்று வழங்கப் பட்டதாகத் தெரிகிறது. இராமப்பையர் என்பவர் தஞ்சை மராட்டிய மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த ஓர் உயர்நிலை அலுவலராக இருக்கலாம். திருவிழாக்கள் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் பிரமோற் சவம் நடைபெறுகின்றது, இதுவே இக்கோயில் திருவிழாக்களுள் பெரியது, ஐந்தாம் நாள் தன்னைத்தான் அருச்சிக்கும் சிறப்பும், ஏழாம்நாள் திருக் கலியாணமும், எட்டாம் நாள் சந்திர சேகரர் விழாவும், ஒன்பதாம் நாள் திருத்தேர்விழாவும், பத்தாம்நாள் மகத்தில் இறைவன் இடபாரூடராய் பரிவார தேவர்களோடு பிரமதீர்த்தத்திற்கு எழுந்தருளித் தீர்த்தம் வழங்கியருளும் காட்சியும் நிகழ்ந்து வருகின்றன. இக்கோயிலுக்குரிய தேர் பழுதுற்றமையால் திருப்பனந்தாள் மடத்தின் தலைவர்ஆக இருந்த ஸ்ரீசாமிநாத தம்பிரான் சுவாமிகள் அளித்த தேரில்தான் இறைவன் பிரமோற்சவத்தின் ஒன்பதாம் நாளில் எழுந்தருளிக் காட்சியளித்து வருகின்றனர். அன்றியும், அவர்கள் கைலாய வாகனம் ஒன்றும், பல்லக்கு ஒன்றும், யாளி வாகனம் ஒன்றும், இக்கோயிலுக்கு வழங்கியுள்ளனர். ஆவணி மாதத்தில் பிரளயங் காத்த விநாயகருக்கு ஐந்து நாள் விழா சில அன்பர்கள் துணைகொண்டு தொடங்கி முன்போல் நடைபெற்று வருகிறது. இப்பிள்ளையார்க்கு ஆவணிச் சதுர்த்தியில், ஆண்டு தோறும் ஓர் ஆடம் தேன்அபிஷேகம் செய்யப் பட்டு வருக்கின்றது. இது தொன்று தொட்டு நடை பெற்றுவரும் சிறப்புடைய விழாவாகும். மற்ற மாதங் களிலும் சிவாலயங்களில் நிகழ வேண்டிய விழாக்களும் குறைவின்றி நடைபெற்று வருகின்றன. நாள் தோறும் நான்கு கால வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இத்தலத்தைப் பற்றிய நூல்கள் (1) தேவாரம் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய பதிகம் ஒன்று; இது பதினொரு பாடல்களையுடையது. திருநாவுக்கரசு சுவாமி கள் அருளிய திருத்தாண்டகப்பதிகம் ஒன்று; இது பத்துப் பாடல் களைக் கொண்டது . சுந்தரமூர்த்திகள் அருளிய பதிகம் ஒன்று; இது பதினொரு பாடல்களை உடையது. (2) மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்தில் கீர்த்தித் திரு வகவலில் புறம்பயமதனில் அறம் பல வருளியும் என்று கூறி யுள்ளனர். (3) பட்டினத்தடிகள் திருவேகம் பமுடையார் திருவந்தாதியில், நினைவார்க்கருளும் திருச்சோற்றுத் துறைநியமம் புனைவார் சடையோன் புகலூர் புறம்பயம் பூவணநீர் புனைவார் பொழில் திருவெண்காடு பாச்சில் அதிகையென்று நினைவார் தருநெஞ்சினீர் கச்சி ஏகம்பம் நண்ணுமினே என்ற பாடலில் புறம்பயத்தைக் குறித்திருக்கின்றனர். 4. பெரிய புராணம்; திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் புராணத்தில் அப் பெருமான் புறம்பயத்திற்கு எழுந்தருளி இறைவனை வணங்கித் திருப்பதிகம் பாடிய வரலாற்றைக் சேக்கிழாரடிகள் கூறுமிடத்து, விசயமங்கையினிடம் அகன்று மெய்யர்தாள் அசைவில் வைகாவினில் அணைந்து பாடிப்போந் திசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார் திசையுடை ஆடையர் திருப் புறம்பயம். (240) புறம்பயத் திறைவரைவணங்கிப்போற்றிசெய் திறம்புரி நீர்மையிற் பதிகச் செந்தமிழ் நிறம்பயில் இசையுடன் பாடி நீடிய அறந்தரு கொள்கையார் அமர்ந்து மேவினார். (241) என்றுரைத்துள்ளனர். ஏயர் கோன் கலிக்காம நாயனார் புராணத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் புறம்பயத்திற்கு எழுந்தருளிய வரலாற்றை உரைக்குங் கால், ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்தர இறைவர் கழல்வணங்கி ஆரும் அன்பிற் பணிந்தேத்தி ஆரா அருளால் அங்கமர்வார் போரின் மலியுங் கரியுரித்தார்மருவும் புறம்பயம் போற்றச் சேரும்உள்ளம் மிக்கெழமெய்ப் பதிகம் பாடிச் செல்கின்றார் (95) அங்கம் ஓதியார் ஆறைமேற்றளி என்றெடுத் தமர்காதலில் பொங்கு செந்தமிழால் விரும்பு புறம்பயந் தொழப்போதுமென் றெங்கும் மன்னிய இன்னிசைப் பதிகம் புனைந்துமே எய்தினார் திங்கள் சூடியி செல்வர் மேவு திருப்புறம் பயஞ்சேரவே (96) அப்பதிக்கண் அமர்ந்ததொண்டரும் அன்றுவெண்ணைநல்லூரினில் ஒப்பருந்தனி வேதியன் பழ ஓலைகாட்டிநின் றாண்டவர் இப்பதிக்கண் வந்தெய்த என்னதவங்கள் என்றெதிர் கொள்ளவே முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார் (97) நீடுகோபுர முன்பிறைஞ்சி நிலாவு தொண்ட ரொடுள்ளளைந் தாடல் மேவிய அண்ணாலாரடி போற்றி அஞ்சலிகோலிநின் றேடுலாமலர் எட்டி னோடைந்து மாகும் என்னும் உறுப்பினால் பீடு நீடு நிலத்தின்மேற் பெருகப் பணிந்து வணங்கினார் (98) என்று சிறப்பித்துக்கூறியுள்ளனர். 5. பரஞ்சோதியார் திருவிளையாடற் புராணம்; இதில் அறுபத்து நான்காவது படலத்தில் சொல்லப்பட்டுள்ள வன்னியுங் கிணறும், இலிங்கமும் அழைத்த வரலாறு திருப்புறம் பயத் தலபுராணத்தில் செட்டிப் பெண் சருக்கத்தில் காணப்படு கின்றது. ஆனால் சரித நிகழ்ச்சியில் இருபுராணங்களும் சில இடங்களில் வேறுபடுகின்றன. இவ்விரண்டு புராணங்களையும் ஆராய்ந்து யான் கண்ட முடிபுகளை மதுரைத் தமிழ் சங்கத்துச் செந்தமிழ்ப் பத்திரிகை 12-ஆம் தொகுதி 7-ஆம் பகுதியில் 1914-ஆம் ஆண்டில் வெளி யிட்டுள்ளேன். 6.வேம்பற்றூர் நம்பி திருவிளையாடற் புராணம்; இதில் சான்றழைத்த திருவிளையாடல் என்ற பகுதியில் திருப்புறம் பயம் புராணத்தில் காணப்படும் செட்டிப் பெண் வரலாறு கூறப்பட்டிருக் கிறது. 7. சிவஞான முனிவர் பாடிய சோமேசர் முதுமொழி வெண்பாவிலும் சென்ன மல்லையர் சிவசிவ வெண்பாவிலும் இத்தலத்தில் நடந்ததாகத் தல புராணத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சி உதாரணமாக எடுத்துக் காட்டப் பெற்றிருக்கிறது. அப்பாடல் களை அடியிற்காணலாம் குற்றொருவர் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல் சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான் மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன்கேடு (சோ மு .வெ தீவினையச்சம்) புறம்பயத்து மின்னையுயிர் போக்கவந்தான் பட்ட திறந்தெரி யாதோ சிவ சிவா = அறந்தார் பிறர்க்கின்னா முற்பகல் செய்யில் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் 8. தல புராணம் இத்தலத்திற்கு வடமொழியில் ஒரு புராணமும், தமிழ் மொழியில் ஒரு புராணமும் இருக்கின்றன, இரண்டும் அச்சிடப் பெற வில்லை. தமிழ்ப் புராணத்தில் இறுதியிலிருந்த இரண்டு சருக்கங்கள் காணப்படவில்லை. அவை இறந்தன போலும். இதில் 396 செய்யுட்கள் இருக்கின்றன. நூலாசிரியர் யாவர் என்பது புலப்படவில்லை. திருப்புறம்பயத்தில், அந்நாளிலிருந்த சாமிநாதபிள்ளை, சங்கரமூர்த்தி பிள்ளை, வைத்தியநாத பிள்ளை என்போர் கேட்டுக்கொண்டவாறு தல புராணத்தைத் தமிழ்மொழியில் தாம் பாடியதாக நூலாசிரியர் கூறியிருக்கிறார். இது சுமார் 160 ஆண்டு கட்கு முன்னர் எழுதப் பெற்ற புராணமாக இருக்கலாம். இப்புராணம் பதின்மூன்று சருக்கங்களை உடையது. 9. திருப்புறம்பயம் உலா : புராணம் பாடிய ஆசிரியரே இவ்வுலாவையும் பாடியிருக் கிறார் என்பது இந்நூலிலுள்ள சில குறிப்புக்களால் தெரிகிறது. இவ்வுலா முழுவதும் இந்நாளில் கிடைக்கவில்லை. சிதைந்து கிடந்த ஒரே ஏட்டுப் பிரதியிலிரிந்து பேதைப் பருவம் வரையில் எழுத முடிந்தது; எஞ்சிய பகுதி அழிந்து விட்டது. இஃது இனிய நடையில் அமைந்த தோர் நூலாகும். இதில் தல வரலாறு சுருக்க மாகச் சொல்லப் பட்டிருக்கிறது. 10. புறம்பயமாலை. இது புறம் பயத் திறைவன் மீது பாடப்பட்ட 32 செய்யுட் களையுடய ஒரு நூல்; அச்சிடப்படவில்லை. 11. கரும்புமை மாலை; இது அம்பிகை மீது படப்பட்ட 32 செய்யுட்களையுடைய ஒரு நூல்; அச்சிடப்படவில்லை இவ்விரண்டு மாலைகளையும் இயற்றியவர் பெயர் தெரிய வில்லை. சாட்சிநாதர் வெண்பா என்ற நூல் ஒன்றிருந்த தாகக் சொல்லுகின்றனர், அஃது இக்காலத்தில் காணப்பட வில்லை. 12. கி.பி.14ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களும் கலம்பகத்திற்கு இரட்டையர்களென்று அறிஞர்களால் பாராட்டப்பட்டவர்களாகிய இரட்டைப் புலவர்கள் தாம் பாடிய தில்லைக் கலம்பகத்தில், நன்றென மகிழ்ந்தொரு சிதம்பர நடம்புரியு நம்பர்பானார் குன்றென உயர்ந்தவர் விரும்பிய பெரும்பதி குடந்தை கடவூர் தென்குடி வலஞ்சுழி புறம்பயம் எறும்பிமலை செம்பியனலூர் அன்பில் புறவம் பழனம் வஞ்சிகளம் இஞ்சிகுடியம்பர் நகரே என்ற பாடலில் புறம்பயத்தைக் கூறியுள்ளனர். 13. அருணகிரிநாதர் தம் திருப்புகழில் திருந்செந்தூர் பாடலில் புறம்பயம் அமர்வோனே என்று புறம்பயத் தெழுந்தருளியுள்ள முருகக் கடவுளை குறித்துள்ளனர். 14. தலபுராணச்சுருக்கம் 1. பிரளயங்காத்த சருக்கம்; இராகு அந்தரத்தில் நிகழ்ந்த ஒரு பிரளயம் சிவபெருமான் ஆணையின்படி விநாயகரால் அடக்கப்பெற்றமையும், அப்போது வருணன் கடல்படுபொருள்கள் கொண்டு அவ்விநாயகரை வழி பட்டமையும், அதுபற்றி அவர் பிரளயங்காத்த விநாயகர் என்று பெயர் எய்தியமையும் இச்சருக்கத்தில் சோல்லப் பட்டிருக்கின்றன. 2. அரித்துவசச் சருக்கம்; மகத நாட்டு மன்னன் அரித்துவசன் என்பான் துருவாச முனிவர் சாபத்தினால், முயலகநோயுற்றுப் பெருந்துன்பம் எய்தி இறுதியில் புறம்பயத் திரைவன்பால் வந்து வழிபட்டு அந்நோயைப் போக்கி கொண்ட வரலாறு அதில் கூறப்பட்டிருக் கிறது. 3. தீர்த்தச் சருக்கம் : இதில் பிரம தீர்த்தம், சத்தசாகர கூபம், சந்திர புட்கரணி, சூரிய புட்கரணி என்பவற்றின் சிறப்புரைக்கப்பட்டிருக்கிறது. 4. தட்சிணாமூர்த்தி சருக்கம். புறம்பயத் தெம்பெருமான் பிரம தீர்த்தத்தில் தென்கரையில் ஆலின் கீழ் எழுந்தருளிச் சனக முதலான முனிவர் நால்வர்க்கும், அக்கினிதபசு என்ற முனிவர்க்கும் மெய்ப்பொருள் உணர்த்திய வரலாறு இதில் விளக்கப் பட்டுள்ளது. 5. திருவிழாச் சருக்கம் : மாசித் திங்களில் நடைபெறும் மக விழாச் சிறப்பும் தேர்ச் சிறப்பும் இதில் காணலாம். 6. செட்டிப்பெண் சருக்கம் : காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து மதுரைக்குச் சென்ற வணிகன் ஒருவன் அரவினால் உயிர் துறக்க அவனோடு வந்த வணிக மங்கையின் வேண்டு கோட்கிரங்கிப் புயம்பயத்தெம் பெருமான் அவனுக்குயிரளித்த தோடு அவ்விருவருக்கும் மணம் புரிவித்தமையும், பின்னர் மதுரையில் அம்மாதை இழித்துப் பழித்துரையாடிய அவள் சக்களத்தியாகிய மூத்தாள் உண்மையை உணர்ந்து கொள்ளுமாறு வன்னி, கிணறு, மடைப் பள்ளியோடு அப்பெருமான் சான்று கூறினமையும், அது பற்றி அவர் சாட்சி நாதர் என்ற பெயர் அடைந்தமையும் இதில் கூறப்பட்டிருக்கின்றன. 7. கலைபிங்கன் சருக்கம் : இது நாள் தோறும் திருக்கோயிலுக்கு விறகு கொணர்ந்த கோவந்த புத்தூர் புலைஞர் குல அன்பர் ஒருவர்க்கு இறைவன் வீடுபேறு அருளியதை உணர்த்துகின்றது. 8. வசந்த கலிகைச் சருக்கம் : ஆதனூரிலிருந்த தன் காதலன் பால் சென்ற கோயிற் பணிமகள் ஒருத்தியின் அணிகலன்களைக் கவர்ந்து கொண்டு அவளைக் கொன்று மண்ணியாற்றில் தள்ளிய கொடியோனும், தவறி அவ்வாற்றில் வீழ்ந்து இறக்கவே அவ்விருவருக்கும் இறைவன் நற்கதி அருளிய வரலாற்றை இதில் காணலாம். 9. விந்தாசலச் சருக்கம் : விந்தாசல வேந்தன் அகத்தியர் பாற் பெற்ற சாபத்தைப் புறம்பயத் திறைவனை வழிபட்டு தீர்த்துக் கொண்டமை இதில் சொல்லப் பட்டுள்ளது. 10. அசுவத் தாமச் சருக்கம்: துரோணர், தம் தீர்த்த யாத்திரையில் புறம்பயத் தெம் பிரானைப் பூசித்து அசுவத்தாமா என்ற புதல்வனை அடைந்தமை இதில் உரைக்கப் பெற்றுள்ளது. 11. இமயமால் வரைச் சருக்கம் : மகப்பேரின்றி வருந்திய இமயபருவதராசன் அகத்திய முனிவர் கூறியவாறு புறம்பயத் திறைவனுக்கு வழிபாடாற்றிப் பார்வதி தேவியைப் புதல்வியாகப் பெற்ற வரலாற்றை இது கூறுகின்றது. 12. விசுவாமித்திரச் சருக்கம் : வசிட்டரோடு மாறுபட்ட விசுவாமித்திரர் பிரம இருஷி யாதற்குப் பல நாட்கள் தவம்புரிந்தும் அப்பேற்றைப் பெறாது இறுதியில் புறம்பயமமர்ந்த பெருமானை வழிபட்டு அச்சிறப்பை யடைந்த சரிதம் இதில் உள்ளது. 13. சுக்ரீவச் சருக்கம் : வாலியால் துன்புறுத்தப் பெற்ற சுக்ரீவன் மதங்கமுனிவர் ஏவலால் புறம்பயத்தை யடைந்து தவம்புரிந்து, இறைவன் திருவருள் துணைகொண்டு தன் பகைவனாகிய வாலியை வென்று கிட்கிந்தையை ஆட்சி புரியும் பேற்றை அடைந்தமை இதில் சொல்லப்பட்டிருக்கிறது. கல்வெட்டுச் செய்திகள் : இத்திருக் கோயிலில் பல கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று விஜயநகர வேந்தன் காலத்தியது. மற்றவை எல்லாம் சோழ மன்னர் காலத்தியன ஆகும். அரசாங்கக் கல்வெட்டுத் துறையினர் கி.பி. 1897ஆம் ஆண்டில் 12 கல்வெட்டு களும் 1927-ஆம் ஆண்டில் 35 கல்வெட்டுகளும் 1931-ஆம் ஆண்டில் 16 கல்வெட்டுகளும் படி எடுத்துப் போயிருக்கின்றனர். அவற்றைப் பற்றிய சுருக்கமான செய்திகள், தென்னிந்தியக் கல்வெட்டுத் துறையினரின் 1927, 1932 ஆம் ஆண்டு அறிக்கைகளில் வெளிவந்துள்ளன. (Inscriptions 323 to 357 of 1927 and 146 to 162 of 1932) பல கல்வெட்டுக்களை தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் ஆறாம் தொகுதி. பதின்மூன்றாம் தொகுதி களில் காணலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் திங்கள் வெளியீடான தமிழ்ப் பொழிலில் 12 கல்வெட்டுகள் நான் வெளியிட்டிருக்கிறேன். எல்லாக் கல்வெட்டுகளும் அருமையான வரலாற்றுண்மைகளை அறிவிக்கும் தகுதியுடையன வாய் இருக்கின்றன. அவை நம் தமிழகத்தில் பண்டைக் காலத்தில் சிறப்புடன் ஆட்சிபுரிந்த செங்கோல் வேந்தர்களான சோழர்களது வரலாறு, ஆட்சி முறை ஆகியவற்றை அறிதற்குப் பெரிதும் பயன்படும் என்பது திண்ணம், அன்றியும், திருக்கோயில், ஊர், இவற்றைப் பற்றிய பழைய செய்திகளையும் அவற்றால் அறியலாம். இப்போதுள்ள கருங்கற் கோயில் கி.பி. 870 முதல் 907 வரையில் தஞ்சையிலிருந்து ஆட்சி புரிந்த முதலாம் ஆதித்த சோழனால் கட்டப் பெற்றது என்று தெரிகிற. கி.பி. 880-ல் திருப்புறம்பயத்தில் நிகழ்ந்த போரில் வெற்றிபெற்ற ஆதித்த சோழன், புறம்பயத் திறைவன்பால் ஈடுபட்டுச் செங்கற் கோயிலாகவிருந்த இதனைக் கருங்கற் கோயிலாக அமைத்து, இதற்கு ஆதித்தேசுவரம் என்ற பெயரும் வழங்கியுள்ளனன். இக்கோயிற்கு ஆதித்தேசு வரம் என்றபெயர் உளது என்பது அதிலுள்ள இரண்டு கல்வெட்டுகளால் புலப்படுகின்றன. ஆதித்தன் புதல்வனாகிய முதற் பராந்தக சோழன் (கி.பி. 907-கி.பி. 953) ஆட்சியின் 16-ஆம் ஆண்டு கல்வெட்டு, அவன் பாண்டி நாட்டையும், ஈழ நாட்டையும், வென்ற செய்தியை உணர்த்து கின்றது. ஒன்பதாம் திருமுறையிலுள்ள ஒரு பதிகம் பாடிய முதற் கண்டராதித்த சோழன் மனைவியார் செம்பியன் மாதேவியார், தம் புதல்வன் உத்தம சோழன் நலன் குறித்துப் புறம்பயமுடைய பெருமானுக்குத் திருமஞ்சன நீராடியருள வெள்ளிக் கலசம் ஒன்று அளித்துள்ளனர் என்பது ஒரு கல்வெட்டால் தெரிகிறது. இரண்டாம் பராந்தக சோழன் முதல் மகன் ஆதித்த கரிகாலன் ஆட்சிக் காலத்தில் இருந்த இருமடி சோழப் பெரும்படையினர் திருப்புறம் பயத்தில் நந்தவனம் ஒன்று அமைத்து அதனைப் பாதுகாத்தற்கு ஆறுமா நிலம் இறையிலியாக விட்டனர் என்பதை ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. முதல் இராஜராஜ சோழன் அதிகாரிகளில் ஒருவனாகிய வானவன் மூவேந்த வேளான் என்பான், திருக்கோயிலில் அஷ்ட பரிவார தெய்வங்களை எழுந்தருளு வித்து அவற்றிற்கு நாள் வழி பாட்டிற்கு நிபந்தங்களும் விட்டான் என்பது ஒரு கல்வெட்டால் அறியப் படுகிறது. எனவே, கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரையில் நடைபெற்ற முதல் இராஜஇராஜ சோழன் ஆட்சியில் தான் அம்பிகைக்குத் தனிக்கோயில் அமைக்கப்பெற்றது என்பது வெளியா கின்றது. இந்த வானவன் மூவேந்த வேளான், புறம் பயத்திறைவனிடத்தில் அளவற்ற பக்தியுடையவனாக விருந்தனன் என்பது தெரிகிறது. இவன் 150 கழஞ்சில் மூன்று பொற்பட்டமும், 5 கழஞ்சில் பொற்பூவும், 8 கழஞ்சில் வெள்ளி வட்டிலும், செய்து அப்பெருமானுக்கு அளித்த செய்தி ஒரு கல்வெட்டால் புலனாகின்றது. முதல் இராஜராஜ சோழன் காலத்தில், ஒரு தலைவனால் ஸ்ரீ பலிக்குப் பொன் வட்டில் செய்தளிக்கப் பட்டுள்ளது. இராஜ ராஜ சோழன் பணிமகன் குவலய சுந்தரன் என்பவனால், நாள்தோறும் இறை வனுக்குத் தும்பைப்பூ சாத்துவதற்கு நிபந்தமாகப் பொன் கொடுக்கப் பட்டுள்து. முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியின் 43ஆம் ஆண்டில் கி.பி. 1113ல் பங்குனித் திருநாளுக்கும், திரு வேட்டைக்கும், நிபந்தமாகத் திருவெள்ளறை நல்லூரில் அரசனால் நிலம் விடப்பட்டிருக்கிறது. அரிவாள் தாயன், சிறுத்தொண்டன், வன்றொண்டன், சண்டேசுவரன், இயற்பகை, கோட்புலி, விறன்மிண்டன், அணுக்க நம்பி என்ற பெயருடையவர்கள் ஐப்பசித் திருவிழ, பங்குனித்திருவிழா, திருவேட்டை தீர்த்தங்கட்கு நிபந்தமாக நிலம் விட்டிருக்கின்றனர். விக்கிரம சோழன் ஆட்சி காலத்தில், முடிகொண்ட சோழப் பல்லவரையன் என்பவன், சைவ சமயாச்சார்யார் மூவர்க்கும் நாள்வழிபாட்டிற்கு நிலம் கொடுதுள்ளான். இரண்டாம் இராஜஇராஜன் ஆட்சியில் (கி.பி. 1173ல்) ஆண்டவர் கடியாபரணர் யாத்திரிகர் கட்கு உணவளிப்பதற்கு 40 பொன் கொடுத் துள்ளார். மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் ஆலங்குடையான் அடிகள் புறம்பயனும், திருச் சிற்றம்பல முடையானும், சோமாகந்தர், அம்பிகை கூத்தாடுந்தேவர், பிராட்டியார், பிள்ளையார், முத்துமுளைக்கன்று, அறம்பயந்த பிள்ளையார் இவர்கட்கு அமாவாசைதோறும், திருமஞ் சனத்திற்கும், திருவமுதுக்கும் நிலம் விட்டிருக்கின்றனர். இவ்வேந்தன் ஆட்சியில் கி.பி. 1215-ல் வீதிவிடங்க விழுப்பரையனும், அவன் தம்பி அகிலநாயக விழுப்பரையனும் திருக்கோயில் முதற் பிராகாரத்தில் திருச் சுற்று மாளிகையில், திருவலஞ்சுழிப் பெருமானையும், புற்றிடம் கொண்ட பெருமானையும், மூன்றாம் பிராகாரத்தில் கோபுர வாயிலின் பக்கத்தில் அறமுரைத்த நாயனாரையும் (தக்ஷிணாமுர்த்தி) எழுந்தருளுவித்து கி.பி. 1235 பூசைக்கு நிலம் விட்டுள்ளனர். மூன்றாம் இராஜ ராஜா சோழன் ஆட்சியில் கி.பி. 1239ல் குந்தவை நல்லூர்ச் சபையார் புறம்பயத் திறைவனுக்கு நாள் வழிபாட்டிற்கு நிலம் கொடுத் திருக்கின்றனர். மூன்றாம் இராஜேந்திர சோழன் ஆட்சியில் நிலம் அளித்து செங்கழுநீர் மலர் இறைவனுக்குச் சாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விஜயநகர வேந்தன் விருபாட்சராயன் ஆட்சியில் கி.பி. 1485-ல் புறம்பயத் திறைவற்கு பலஊர்களிலு முள்ள நிலங்கட்கெல்லாம் அரசாங்க வரி தள்ளிக் கொடுக்கப் பட்டு அப்பொருள் கொண்டு மகவிழா நடத்துமாறு மகா மண்டலேசுவரன் கோனேரி தேவமகாராஜா வினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பல கல்வெட்டுகள் கோயிலில் நுந்தா விளக்குகளும், சந்திவிளக்குகளும் வைப்பதற்குக் கொடுக்கப்பட்ட நிபந்தங்களைத் தெரிவிக்கின்றன. அக்காலத்தில் திருப்புறம் பயத்தில் சங்கரப்பாடியார், என்ற ஒரு வகை வணிகர்களும் வளஞ்சியர் என்ற ஈழநாட்டு வணிகர் களும் இருந்தனர் என்பதும், இவ்வூரிலுள்ள ஒரு தெருவிற்கு விரையாக் கலிப்பெருந்தெரு என்ற பேர் இருந்தது என்பதும், தாமோதர விண்ணகரம் என்ற பெருமாள் கோயில் ஒன்று இருந்தது என்பதும், கடியாபரணர் மடம் என்றதோர் மடம் இருந்தது என்பதும், திருக்கோயிற்கு மூன்று பிரகாரங்கள் இருந்தன என்பதும், சோழ மன்னர்களது சேனாதிபதி, அமைச்சர், முதலானோரில் சிலர் இவ்வூரில் அக்காலத்தில் இருந்தனர் என்பதும் அந்நாளில் பங்குனி மாதத்தில் கோயிலில் திருவிழா நடைபெற்றது என்பதும், மண்ணியாற்றிற்குக் குஞ்சரமல்லன் என்றபெயர் வழங்கிற்று என்பதும் மற்றுஞ் சில செய்திகளும், இக்கோயிலிலுள்ள கல்வெட்டு களால் வெளியாகின்றன. *இத்திருக்கோயிலின் சிறப்பியல்புகள் முற்காலச் சோழர்காலம் என்னும் ஆங்கிலம் தமிழ் இவற்றில் எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்டுள்ளன. திருப்புறம்பயம் என்னும் கிராமம் சோழ மண்டலத்தில் இராஜேந்திர சிங்கவள நாட்டில் அண்டாடுக் கூற்றத்தில் நின்று நீங்கிய தேவதானம் என்று கல்வெட்டுகள் எல்லாம் உணர்த்துவ தால், கிராமம் முழுவதும் புறம்பயமுடைய பெருமானுக்கு உரியதாக இருந்தது என்று தெரிகிறது. திருப்புறம்பயத்தில் உட்சுற்று மனைகளில் குடியிருப்போர் தென்னை மரம் ஒன்றிற்கு இருபது தேங்காய்கள் திருக்கோயிலுக்கு தருதல் வேண்டும் என்று மூன்றாம் இராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட உத்தரவு ஒன்று கல்வெட்டுகளில் காணப்படுவதும் இச்செய்தியை வலியுறுத்துகின்றது. அன்றியும் கண்ணங்குடி கீழக்கண்ணங்குடியில் வீடு நிலம், சேர்வையாம் நிலம், கோயிற்பற்று, ஆலத்தும்மேடு, மேல்காவேரிப் பற்று, கருப்பூர், சீலசிந்தாமணி, வேம்பற்று பத்தாங்கட்டளை, ஏறுபாடி யான பேட்டை, சிற்றாமூர் சிதடக்குடி ஆகிய ஊர்கள் புறம்பயத் திறைவனுக் குரியனவாயிருந்தன என்பது ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது. கருப்ப இல்லைச் சுற்றியுள்ள மாடிகளில் இறைவனுடைய பல திருவுருவங்களையும் அகத்தியர் படிமத்தையும் காணலாம். பழமையான ஓவியங்கள் சிலவற்றையும், புன்னை மரத்தை அடுத்துள்ள மேற்பகுதியில் காணலாம். பிற குறிப்புகள் முன்னாளில் அம்பிகையின் திருக்கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதியுடையதாக இருந்தது என்று தெரிகிறது. நாகூர் செட்டியார் ஒருவர், அம்பிகையைத் தம்குல தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வரும் நாட்களில் அக்கோயிலைத் தெற்கு நோக்கிய சந்நிதியுடையதாக மாற்றி யமைத்து விட்டாராம். அவர் படிமம் ஒன்று அம்பிகையின் திருக் கோயிலுள் கூப்பிய கைகளுடன் நின்ற கோலத்தில் இருப்பதை இன்றுங் காணலாம். திருப்புறம்பயத்திலிருந்து கும்பகோணத்திற்குக் கோடை காலத்தில் போவதற்குரிய குறுக்கு வழியில் ஏரகரத்திற்குத் தென்புறத்தில் வயல்களுக்கு நடுவில் உள்ள பெருங்குளத்தை வெட்டுவித்தவரும் சிவநேசச் செல்வராகிய அச்செட்டியாரே யாவர். சுமார் நூறு வருடங் களுக்கு முன்னர், கோயில் மகா மண்டபம் முதலானவற்றை உயரத் தூக்கிக்கட்டியவர் மதுரைத் திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் அடியார் குழாங்களுள் ஒருவராகிய ஸ்ரீ சிதம்பரநாதத் தம்பிரான் சுவாமிகள் ஆவர். அவர்கள் படிமத்தை அம்பிகையின் சந்நிதிக்கு வெளியேயுள்ள பெரிய மண்டபத்தின் கற்றூணில் இன்றும் பார்க்கலாம். திருக்கோயில் சந்நிதியில் கிழக்கே ஒருமடம் உளது. இம்மடம் திருக்கோயிலின் பரம்பரை அறங்காப்பாள ராகவுள்ள மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்திற்கு உரியதாகும். இதற்கு மேற்கே ஒரு மடம் இருந்தது என்றும், அது மேற்குறித்த நாகூர்ச் செட்டி யாரால் கட்டப்பெற்றது என்றும் வயதுமுதிர்ந்த பெயரிவர்கள் கூறுகின்றனர். அந்த மடம் இந்நாளில் காணப்பட வில்லை. திருமாலுக்குப் புதிய தாகக் கட்டப் பெற்ற கோயில் ஒன்று தெற்குத் தெருவில் உளது. அன்றியும், மாரியம்மன், ஐயனார், பொன்னியம்மன் (பிடாரி), திரௌபதியம்மன் ஆகிய கிராம தெய்வங்கட்கும் கோயில்கள் இருக்கின்றன. ஊருக்கு வடகிழக்கில் மண்ணியாற்றுக்கு அண்மையில் யாழ்ப்பாணத்து ஸ்ரீ ஆறுமுகதேசிக சுவாமிகள் மடம் இருக்கின்றது. அது சுமார் 80 ஆண்டுகட்கு முன்னர் வேதாந்த சாதிரங்களில் வல்லுநராகவும் சிவாநுபூதிச் செல்வராகவும் விளங்கிய அவ்வடிகள் சமாதி கொண்டெழுந் தருளிய இடம் ஆகும். அவர்கள், திருஷ்டாந்ததாஷ்டாந்த விளக்கம், நவநீத சாரம் முதலான வேதாந்த நூல்கள் அருளிய பெரியார் ஆவர். மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் 290ம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த தலைவர் அவர்கள் 1945ல் திருப்புறம்பயத்தில் தேவார பாட சாலை ஒன்று அமைத்து நடத்திவருவதோடு, நாள் தோறும் புறம் பயத்தெம் பெருமான் திரு முன்னர் தேவாரப்பதிகங்கள் இன்னிசையோடு ஓதி வருதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்தார்கள். சைவ சமய முதற் பரமாச்சாரியராகிய திருஞானசம்பந்த சுவாமிகள் திருமடாலயத்தில் அவ்வடிகளின் ஞான மரபில் எழுந்தருளியுள்ள ஆதீனத் தலைவர் அவர்களின் சைவ சமயத்தொண்டு மிகமிகப் பாராட்டற் பாலதாகும். சென்ற நூற்றாண்டின் இறுதியில் 1891ம் ஆண்டில் திருப்பணிகள் நிகழ்ந்தபின் குடமுழுக்கு நடந்துள்ளது என்று ஆண்டில் முதியவர்கள் கூறியுள்ளனர். அதன்பின் சுமார் 22 ஆண்டுகட்கு முன் கோயில் நிர்வாகப் பொறுப்பையேற்ற மதுரை மடத்து தம்பிரான் ஆகிய திருப்பெருந்திரு மாணிக்க வாசக ஞான தேசிய சுவாமிகள் ஆதீனத்தின் ஊக்கத்தினால் அரும்பாடுபட்டு திருப்பணிகள் பல செய்து கோயில் சிறப்புறச் செய்தனர். அம்பிகை கோயில் உட்பட பல சந்நிதிகள் புது உருவம் பெற்றன. பள்ளியறை யொன்று புதிதாக அம்மன் கோயிலில் அமைக்கப்பட்டது. இம் முயற்சியில் நகரத்தார் உதவி இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்வூரினராகிய ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் புதிதாக நால்வர் சந்நிதி கட்டுவதற்குப் பொருளுதவி புரிந்தார்கள். திருப்பணிகள் நிறைவேறிய பின் 25-6-1953ல் கோயில் குடமுழுக்கு விழா சிறப்புடன் நிகழ்ந்தது. சென்ற ஆண்டில் ஊரினர் சிலரின் பொருளுதவியுடன் தேவாரப் பதிகங்கள் சலவைக் கல்லில் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளன. 1959ல் திருக்குளம் திருப்பணி மதில்சுவர் முதலியவைகளை பெருநிலக் கிழார் காலஞ் சென்ற K.S. முத்தையன் செட்டியார் அவர்களால் நிறை வேற்றப்பட்டது. தற்போது மதுரை ஆதீனத்தில் எழுந்தருளியுள்ள. 291-வது குருமகா சந்நிதானம் திருவருள் தவயோக ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பிறருடைய பொருள் உதவி யாதுமின்றி ஆலய வருமானத்தைக் கொண்டு சகல திருப்பணிகளையும் செய்வித்து பரீதாபி- ஆவணி- 29 (14-9-1972) வியாழனன்று அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடைபெறச் செய்திருக் கின்றார்கள். ஏழாம் நூற்றாண்டில் விபூதி பூசாமலும், ஆலயங்களுக்குச் செல்லாமலும் இருந்த பௌத்த சமணர்களை வாதில் வென்று, சற்குரு திருஞானசம்பந்த சுவாமிகள் திருநீறுபூசவும், ஆலயங் களுக்குச் சென்று வழிபடவும், மனம் மாறவும், மதம் மாறவும், வெற்றியுடன் எவ்வாறு செய்து வந்தார்களோ, அதேபோல வேறு எந்த சந்நிதானமும் செய்யாத மதமாற்றங்களைச் செய்து, கிறிதவர்களையும், மகமதியர்களையும், வெள்ளைக்காரர் களையும், விபூதி பூசவும், ஆலயவழிபாட்டில் ஈடுபடவும், அதி அற்புதமாகவும், புரட்சிகரமாகவும் ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்து வருகிறார்கள். இந்துக்களுக்கு சமய, விசேட, நிர்வாண தீட்சை களும், தகுதியுடையவர்களுக்கு சிவபூஜையும் எடுத்துக் கொடுத்து அருளு கிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் பிறந்து 1921ம் வருஷம் கடல் கடந்து இலங்கை சென்று வியாபாரத்தில் ஈடுபட்டு, வெள்ளைக் காரர்களோடு தொடர்பு கொண்டு, 5 லட்சம் மூலதனத்தில் சுந்தரம் லிமிட்டெட் என்னும் தொழிலை நிறுவி. அதற்கு மானேஜிங் டைரெக்டராக இருந்து, ரூபாய் 20 லட்சம் வரை நேர் வழியில் திருவருளால் சம்பாதித்து, பொருள் துறையில் ஈடுபடுவதை விட்டு, அருள் துறையில் முழுதும் ஈடுபட தன்னை அர்ப்பணம் செய்து, 1953ல் 290வது குருமகா சந்நிதானம் அவர்களது அழைப்பின் பேரில் இளவரசுப் பட்டம் பெற்று, 1957ம் வருஷம் ஜனவரி மாதம் 7ம் தேதி அவர்கள் பரிபூரணம் அடைந்த பின், மதுரை ஆதீனத்தின் பேரரசாகத் திகழ்ந்து, நற்பணிகள் பல புரிந்து, மேன்மை கொள் சைவ நீதி உலகெங்கணும் விளங்க அல்லும் பகலும் அயராது பிரார்த்தித்து வருகிறார்கள். இலங்கையில், கூட்டுப்பிரார்த்தனை இயக்கத்தை 1948ம் வருஷம் தொடங்கி, வானொலியில் சைவசமய சம்பந்தமாக நல்லுரை பல நவின்று, எங்கும் ஆதிக உணர்ச்சியை உண்டு பண்ணியவர்கள். மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திலும், ஆதீனத்திலும் கூட்டுவழிபாடு தொடர்ந்து நடத்தி சைவ சித்தாந்தப் பாடம் சொல்லி வருபவர்கள். இறந்தவர்கள் வாழும் நிலையைப் பற்றியும், அவர் களுடன் பேசும் முறைகளைப் பற்றியும், சமய சாதிர, விஞ்ஞான முறையில் ஆராய்ச்சியும், அனுபவமும் உடையவர்கள். தமிழில் 20 அரிய நூல்கள் வெளியிட்டிருக்கிறார்கள். சுவாமிகள் நிறுவி, நடைபெற்றுவரும் நிலையங்களாவன:- 1. திருவருள் தொண்டர் சபை, குலசேகரன்பட்டினம். 2. திருவருள் உயர்நிலைப்பள்ளி, குலசேகரன்பட்டினம். 3. திருவருள் தவநெறி மன்றம், மதுரை. 4. இந்து தர்மப் பிரசார சங்கம், சென்னை & மதுரை. 1946-ல் டெல்லியில் கூடிய அகில இந்திய தத்துவப் பேராசிரியர் மாநாட்டில் உயிர்களும் உள் உடம்பும் (The Soul and the Spiritual Body) என்பது பற்றியும், 25-3-71ல் கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் சாதம் கோட்டாவில் நடைபெற்ற உலக மத மகாநாட்டில் இந்து மதத்தில் கடவுளும், சிருஷ்டியும் (The God & Creation Hinduism) என்பது பற்றியும், 19-11-71ல் கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டம் எழுமலை தீவில் உள்ள ராமன் - தளியில் நடைபெற்ற உலக சமாதான மகாநாட்டில் உலக சமாதானத்திற்குரிய ஒரே வழி (The only solution for world peace) என்பது பற்றியும் ஆராய்ச்சி உரைகளை ஆங்கிலத்தில் நிகழ்த்தி பல்லோரால் பாராட்டப் பெற்றவர்கள். கோயில் நிர்வாகம் :- மதுரை ஸ்ரீ திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் தலைவர் அவர்கள், இத்திருக்கோயிலுக்கும் பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார்கள். 1940ம் ஆண்டிலிருந்து இந்து மத அறநிலையப் பாதுகாப்புக் கழகத்தார் ஆதீனத் தலைவர் அவர்களுடன் கலந்துகொண்டு நிர்வாக அதிகாரியை நியமித்து வருகிறார்கள். இதற்குச் சுமார் 230-94 ஏக்கர்கள் நன்செய் புன்செய் தோப்புகள் இருக்கின்றன. தொன்மையான சிறப்புடைய இத்திருக்கோயில் சோழப்பேரரசு காலத்தில் மிக நல்லநிலையில் விளங்கி யுள்ளது. இதில் உள்ள பல செப்புப் படிமங்கள், கல்படிமங்கள் சிற்பங்கள் ஆகியவை காணத் தக்கவையாகும். திருப்புறம்பயப் பாடல்கள். திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் திருவிராகம் பண் - இந்தளம். திருச்சிற்றம்பலம். மறம்பய மலைந்தவர் மதிற்பரி சறுத்தனை நிறம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க் கறம்பய னுரைத்தனை புறம்பய மமர்ந்தோய். விரித்தனை திருச்சடை அரித்தொழுகு வெள்ளம் தரித்தனை யதன்றியு மிகப்பெரிய காலன் எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம் பொருத்துதல் கருத்தனை புறம்பய மமர்ந்தோய் விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும் பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகு மயானம் புரிந்தனை மகிழ்ந்தனை புறம்பய மமர்ந்தோய். வளங்கெழு கடும்புன லொடுஞ்சடை யொடுங்கத் துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு புளங்கொள விளங்கினை புறம்பய மமர்ந்தோய். பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகம் கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய் சுரும்புண வரும்பவிழ் திருந்தியெழு கொன்றை விரும்பினை புறம்பய மமர்ந்த இறையோனே. அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும் நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப் புனற்படு கிடக்கையை புறம்பய மமர்ந்தோய். மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம் அறத்துறை பொறுத்துன தருட்கிழமை பெற்றோர் திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும் புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய். இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க உழங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி வலங்கொள வெழுந்த வனலங்கவின வஞ்சு புலங்கொள விலங்கினை புறம்பய மமர்ந்தோய். வடங்கெட நுடங்குண விடந்தவிடை வல்லிக் கிடந்தவ னிருந்தவ னளந்துணர லாகார் தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப் புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய். விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென உடற்குறை களைந்தவ ருடம்பினை மறைக்கும் படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம் அடக்கினை புறம்பயம் அமர்ந்த உரவோனே. கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தம் தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன் சுரும்பவிழ் புறம்பய மமர்ந்ததமிழ் வல்லார் பெரும்பிணி மருங்கற வொருங்குவர் பிறப்பே. திருநாவுக்கரசு நாயனார் திருத்தாண்டகம். திருச்சிற்றம்பலம். கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண்வளவி கண்டி வூரும் நடமாடு நன்மருகல் வைகி நாளும் நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப் படுமாலை வண்டறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட் டிந்நாள் பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப் புறம்பயநம் மூரென்று போயி னாரே முற்றொருவர் போல முழுநீ றாடி முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு ஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை ஒளிவளையை ஒன்றொன்றா எண்ணுகின்றார் மற்றொருவ ரில்லைத் துணை எனக்கு மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப் புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப் புறம்பயநம் மூரென்று போயினாரே ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர் ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல் ஏகாச மாவிட்டோ டொன்றேந்தி வந் திடுதிருவே பலியொன்றார்க் கில்லே புக்கேன் பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார் பாவியேன் கண்ணுளே பற்றி நோக்கிப் போகாத வேடத்தர் பூதஞ் சூழப் புறம்பயநம் மூரென்று போயி னாரே பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப் பனிமுகில் போல் மேனிப் பவந்த நாதர் நென்மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடுர் பாச்சில் கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றம் கடனாகைக் காரோணம் கைவிட் டிந்நாள் பொன்மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயநம் மூரென்று போயி னாரே செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச் சிரமாலை சூடிச் சிவந்த மேனி மத்தகத்த யானை யுரிவை மூடி மடவா ளவளோடு மானொன் றேந்தி அத்தவத்த தேவ ரறுப தின்மர் ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப் புத்தகங்கைக் கொண்டு புலித்தோல் வீக்கிப் புறம்பயநம் மூரென்று போயி னாரே நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி நல்லபுலி யதண்மே னாகங் கட்டிப் பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப் பராய்த்துறையே னென்றோர் பவள வண்ணர் துஞ்சிடையே வந்து துடியும் கொட்டத் துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன் புன்சடையின் மேலோர் புனலும் சூடிப் புறம்பயநம் மூரென்று போயி னாரே மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச் செறியிலங்கு திண்டோண்மேல் நீறு கொண்டு திருமுண்ட மாவிட்ட திலக நெற்றி நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப் பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப் புறம்பயநம் மூரென்று போயினாரே நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு கொல்லேறுங் கொக்கரையும் கொடுகொட் டியுங் குடமூக்கி லங்கொழியக் குளிர்தன் பொய்கை நல்லாளை நல்லூரே தவிரே னென்று நறையூரிற் றாமுந் தவிர்வார் போலப் பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப் புறம்பயநம் மூரென்று போயி னாரே. விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு வெண்டோடு பெய்திடங்கை வீணை யேந்தித் திரையேறு சென்னிமேற் றிங்க டன்னைத் திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர் அரையேறு மேகலையாள் பாக மாக வாரிடத்தி லாட லமர்ந்த வையன் புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப் புறம்பயநம் மூரென்று போயி னாரே கோவாய விந்திரனுள் ளிட்டா ராகக் குமரனும் விக்கினவி நாய கன்னும் பூவாய பீடத்து மேல யன்னும் பூமியளந் தானும் போற்றி சைப்பப் பாவாய இன்னிசைகள் பாடி யாடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றிப் பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப் புறம்பயநம் மூரென்று போயி னாரே. சுந்தரமூர்த்தி நாயனார் பண்-கொல்லி திருச்சிற்றம்பலம் அங்கமோ தியோ ராரைமேற்றளி நின்றும் போந்துவந் தின்னம்பர்த் தங்கினோமையு மின்னதென்றில ரீசனாரெழு நெஞ்சமே தங்குலேமங்கள் கொண்டு தேவர்க ளேத்தி வானவர் தாந்தொழும் பொங்குமால் விடையேறி செல்வப் புறப்பயந் தொழப்போதுமே. பதியும் சுற்றமும் பெற்றமக்களும் பண்டையாரலர் பெண்டிரும் கதியிலிம்மனை வாழும் வாழ்க்கையு நினைப்பொழி மடநெஞ்சமே மதியஞ்சேர் சடைக்கங்கையானிட மகிழுமல்லிகை செண்பகம் புதியபூமலர்ந் தெல்லிநாறும் புறம்பயந்தொழப் போதுமே. புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்துநீ யுரையாற் றளர்ந் தறம்புரிந்து நினைப்பதாண்மை யரிதுகாண தறிதியேல் திறம் யாதெழு நெஞ்சமே சிறுகாலை நாமுறு வாணியம் புறம்பயத்துறை பூதநாதன் புறம்பயத்தொழப் போதுமே. நற்றொருவகைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம் செற்றொருவரைச் செய்ததீமைகள் இம்மையேவரும் திண்ணமே மற்றொருவரைப் பற்றிலேன் மறவாதெழு மடநெஞ்சமே ஆற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயம் தொழப் போதுமே. அள்ளிநீ செய்த தீமையுள்ளன பாவமும்பறையும்படி தள்ளிதாஎழு நெஞ்சமே செங்கண் சேவுடைச் சிவலோகனூர் துள்ளிவெள்ளிள வாளைபாய்வயற் றோன்றுதாமரைப் பூக்கண் மேல் அள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம்தொழப்போதுமே. படையெலாம் பகடார வாளிலும் பௌவஞ்சூழ்ந்தர சாளிலும் கடையெலாம் பிணைத்தேரைவால் கவலாதெழு மடநெஞ்சமே மடையெலாங் கழுநீர் மலர்ந்து மருங்கெலாங் கரும்பாடத்தேன் புடையெலா மணநாறு சோலைப் புறம்பயம்தொழப் போதுமே. முன்னைச் செய்வினை இம்மையின் வந்து மூடுமாதலின முன்னவே என்னைநீ தியக்காதெழு மடநெஞ்சமே எந்தை தந்தையூர் அன்னச் சேவலோ டூடிப்பேடைகள் கூடிச்சேரு மணிபொழில் புன்னைக் கன்னிகளக்கரும்பு புறம்பயம்தொழப் போதுமே. மலமெலாமறு மிம்மையே மறுமைக்கு வல்வினை சார்கிலா சலமெலாமொழிநெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்குமூர் கலமெலாங்கடன் மண்டு காவிரி நங்கையாடிய கங்கைநீர் புலமெலா மண்டிப் பொன்விளைக்கும் புறம்பயந்தொழப் போதுமே பண்டரீயன செய்ததீமையும் பாவமும் பறையும்படி கண்டரீயன கேட்டியேல் கவலாதெழு மடநெஞ்சமே தொண்டரீயன பாடித்துள்ளிநின் றாடிவானவர் தாந்தொழும் புண்டரீக மலரும் பொய்கை புறம்பயந்தொழப் போதுமே. துஞ்சியும் பிறந்துஞ் சிறந்துந் துயக்கறாத மயக்கிவை அஞ்சியூரன் திருப்புறம்பயத் தப்பனைத்தமிழ்ச் சீரினால் நெஞ்சினாலே புறம்பயந்தொழ துய்துமென்று நினைந்தன வஞ்சியா துரைசெய்ய வல்லவர் வல்லவானுல காள்வரே. திருவாசகம் கீர்த்தித்திருவகவல் 90. புறம்பய மதனில் அறம்பல அருளியும். மாணிக்கவாசகர். முற்றிற்று. காவிரிப்பூம்பட்டினம் அணிந்துரை தமிழ் வேந்தர் மூவருள்ளும் சோழ மன்னர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் . வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் பெரு வளமும் பொதியிலும் இமயமும் போலத் தவ ஞானிகளுக்கு உறை யுளாக விளங்கும் பூம்புகார் நகரமுமே அவர்கள் சிறப்பு மிகுவதற்குக் காரணமானவை என்று கூறல் மிகையாகாது. சோழகங்கம் ஏரி, வீரநாராயணன் ஏரி போன்ற ஏரிகளை அமைத்தும் காவிரி நதிக்குப் பல கிளை நதிகளை வெட்டுவித்தும் காவிரிக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அணை அமைத்தும் சோழ நாட்டைத் தென்னாட்டின் நெற் களஞ்சியமாகச் செய்தவர்கள் சோழ மன்னர்களே. தவிரவும் வீரச்செருக்காலும் கொடைத் திறத்தாலும் தமிழ் ஆர்வத்தாலும் சமய உணர்வினாலும் அவர்கள் நம் நாட்டிற்குச் செய்துள்ள தொண்டுகள் அளவிட முடியாதவை. அன்னையும் பிதாவும் எனச் சோழ வளநாட்டையும் சோழ மன்னர்களையும் நாம் ஒவ்வொருவரும் போற்றக் கடமைப்பட்டுள்ளோம். பூம்புகார் நகரத்தைத் துறைமுகப்பட்டினமாக அமைத்துக் கொண்ட சோழமரபினர், நாளடைவில் அதன் இயற்கை அழகில் ஈடுபட்டவர்களாகி அதனைத் தலைநகரமாகவே அமைத்தும் போற்றிவந்தார்கள். அசைந்து அசைந்து செல்லும் காவிரிநங்கையும், அந்நங்கையைப்பேரார்வத்தோடு தனது அலைக்கரங்களால் அணைத்துத் தழுவிக் கொள்ளும் குணகடலும் இன்றும் கண்கொள்ளாக் கவின்பெறு காட்சியாய் விளங்கு வதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட பூம்புகார் நகரத்தின் பழைய அமைப்பினையும் சிறப்பினையும் எல்லோரும் அறிந்து மகிழ்தற் பொருட்டுக் காவிரிப் பூம்பட்டினம் என்ற இச்செந்தமிழ் நூலை எனது உழுவலன்பரும் வரலாற்று ஆராய்ச்சித் துறைப் பேரறிஞருமாகிய திருவாளர் டி.வீ. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் அழகிய தமிழ் நடையில் எழுதியுள்ளார். அவர்களுடைய ஆராய்ச்சித் திறன் மேனாட்டு அறிஞர்களாலும் பாராட்டப் பெற்றுள்ளது. இந்நூல் வெளிவருவதற்குக் காரணமாக இருக்கும் செந்தமிழ்ச் செல்வர் திருவாளர் என். தியாகராசன் அவர்களது பேரார்வமும் உலையாத ஊக்கமும், பொருட் செலவையும் கருதாது கருமமே கண்ணாகச் செய்து வரும் தமிழ்த்தொண்டும் அறிஞர்கள் உணர்ந்து பாராட்டத்தக்கவையாகும். இந்நூலை எழுதி உதவிய பேரறிஞர் திருவாளர் டி.வீ. சதாசிவ பண்டாரத்தார் அவர்களும் இந்நூலை வெளியிட்ட இளைஞர் திரு. என். தியாகராசன் அவர்களும் நீடு வாழ்ந்து செந்தமிழ்க்கும் பூம்புகார் நகரத்திற்கும் மேலும் மேலும் பெருந்தொண்டு செய்து சிறக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் திருவருளைச் சிந்தித்து வாழ்த்து கிறேன். குருபூசை மடம் , பூம்புகார், 12-5-1959 மாணிக்கவாசகத் தம்பிரான் சுவாமிகள். முகவுரை பண்டைக்காலத்தில் நம் தமிழ் நாட்டை ஆட்சிபுரிந்த தமிழ் வேந்தர் மூவருள் சோழமண்டலத்தைச் சிறப்பாக அரசாண்டவர்கள் சோழ மன்னர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அப்பெரு வேந்தர்கள் கடைச்சங்க காலத்தில் (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்) தம் தலைநகர் களாகக் கொண்டு வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடை நகரங்கள் உறையூரும் பூம்புகார் எனப்படும் காவிரிபூம்பட்டினமு மேயாம். அவற்றுள், உள்நாட்டுத் தலைநகராகிய உறையூரைக் காட்டிலும் பல்வகை யாலும் சிறப்புற்று விளங்கியது கடற்கரைத் தலைநகராகிய காவிரிப் பூம்பட்டினம் என்பது அறிஞர் பலரும் ஆராய்ந்துணர்ந்த முடிபாகும். இக்காலத்திலுள்ள பம்பாய், கல்கத்தா, சென்னை முதலான பெரு நகரங்களைப்போல முற்காலத்தில் நிலவிய இம்மாநகர், காலச் சக்கரத்தின் சுழற்சியினால் சிதைந்து போய். கடலில் ஒரு பகுதியாகவும் பல சிற்றூர்களாகவும் இப்போது காட்சி அளிக்கின்றது. எனினும், அவ்விடங்களில் இதன் பழைய வரலாறுகளை யுணர்த்தும் சின்னங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அன்றியும் சங்க நூல்களாலும் இதன் ஒப்பற்ற பழைய நிலையை நன்குணரலாம். இத்தகைய சான்றுகள் எல்லாவற்றையும் துணையாகக் கொண்டு காவிரிப்பூம்பட்டினம் என்ற ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதித்தர வேண்டும் என்று மேலப்பெரும் பள்ளம் மாதவி மன்றச் செயலாளரும், அருங்கலை களிலும் வரலாற்றாராய்ச்சியிலும் பெரிதும் ஆர்வமுடையவரும், சிறந்த பண்புடையவரும் ஆகிய அன்பர் திரு. என். தியாகராசன் அவர்கள் சில தினங்களுக்கு முன் கேட்டுக் கொண்டனர்; அன்றியும் அடிக்கடி வந்து தம் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் புலப்படுத்திக்கொண்டும் இருந்தனர். உண்மையான அன்பர்களின் நேர்மையான விருப்பத்தை மறுக் காமல் நிறைவேற்றும் இயல்புடைய யான், தக்க சான்றுகளுடன் இந்நூலை ஒருவாறு எழுதி முடித்தேன். இதுகாறும் யான் எழுதியுள்ள ஆராய்ச்சி நூல்கள் எல்லா வற்றையும் தமிழகம் பெரிதும் மதித்து ஏற்றுக் கொண்டமை போல இந்நூலையும் ஏற்றுக் கொள்ளுமென்று நம்புகிறேன். இம்முயற்சியில் என்னை ஈடுபடுமாறு செய்து அணிந்துரை வரைந்தருளிய மேலையூர் அறுபத்துமூவர் திருமடத்து அருட்பெருந் திரு. மாணிக்கவாசகத் தம்பிரான் சுவாமிகள் அவர்களுக்கும், அன்பர் திரு. என். தியாகராசன் அவர்களுக்கும் முறையே என் வணக்கமும் நன்றியும் உரியவாகும். இதனை எழுதி வெளியிடுங்கால் உறுதுணையாயிருந்து உதவி புரிந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறை விரிவுரையாளர் அன்பர் திரு. க. வெள்ளைவாரணர் அவர்களை என்றும் மறவேன். இங்ஙனம். T.V. சதாசிவ பண்டாரத்தார். திங்களைப் போற்றுதும் திங்களை போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான்சுரத்த லான். பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக லான். காவிரிப்பூம்பட்டினம் சோழமன்னர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் தமிழ் நாட்டை ஆண்டு வந்தனர். அம்மூவருள் சோழ மன்னர்கள் ஆண்ட பகுதி சோழ நாடு எனப்படும். அந்நாட்டில் வளங் கொழித்தோடுவது காவிரியாறு, காவிரி வளத்தால் சோழ நாடு பொருட் செல்வத்தில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் கலைச் செல்வத் தாலும், அருட் செல்வத்தாலும் கூடப் பொலிவு பெற்று விளங்கியது. உலகம் முழுவதும் நாகரிகமே இல்லாமல் மக்களும் விலங்குகளும் ஒரு தன்மையாக வாழ்ந்த காலத்திலேயே சோழ மன்னர்கள் காவிரி யாற்றுக்குக் கரையெடுத்தும் அணையிட்டும் கால்வாய்கள் செப்பனிட்டும் உணவுப் பெருக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்பது அறிஞர்கள் அறிந்ததே. அதுமட்டுமன்றி வீரச்செருக்கால் அயல்நாடுகளை வென்றும், வாணிபத் துறையில் உலக நாடு களோடு தொடர்பு கொண்டும் கலைச் செல்வத்தால் நாட்டு மக்களுக்கு இன்ப வாழ்க்கையை வழங்கியும், சோழ மன்னர்கள் சிறப்புற்றார்கள். பூம்புகார் சோழ மன்னர்க்குரிய தலைமை நகரங்களுள் ஒன்றாகவும் இந்நாட்டு வாணிக வளர்ச்சிக்குரிய கடற்றுறைப் பட்டின மாகவும் விளங்கியது காவிரிப் பூம்பட்டினம் என்ற பேரூர் ஆகும். இவ்வூர் சோழ நாட்டினைத் தாய்போற் பேணிக் காக்கும் நன்னீர்மை வாய்ந்த காவிரியாறு கடலொடு கலக்கும் நிலப்பகுதியில் அமைந்தமையால் புகார் எனவும், காவிரிப்பூம்பட்டினம் எனவும் வழங்கப் பெறுவதாயிற்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி புரிந்த கரிகால்வளவன் காலத்தில் இந்நகரம் முழுப் பெருமையோடு வீறு பெற்று விளங்கியது. சுருக்கச் சொல்லின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலண்டன் மாநகரம் எப்படி விளங்கியதோ அதைவிட ஆயிரம் மடங்கு சிறப்பாகப் பூம்புகார் நகரம் விளங்கியதாக நாம் கூறலாம். பண்டைக் காலத்தில் சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய இந்நகரத்தின் பரப்பினையும் செல்வ வளத்தினையும் பிற சிறப்புக்களையும் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பண்டைத் தமிழிலக்கியங்களால் நன்குணரலாம். கி.பி. முதல் நூற்றாண்டில் மேனாட்டினின்றும் தமிழ் நாட்டிற்கு வந்த யவன ஆசிரியராகிய தாலமி என்பவர் எழுதிய வரலாற்றுக் குறிப்பிலும்1 அக்காலத்திலே மேனாட்டு வரலாற்று ஆசிரியர் ஒருவரால் எழுதப்பட்ட பெரிப்ளூ என்ற நூலிலும்2 காவிரிப்பூம் பட்டினமாகிய இந்நகரத்தைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கரிகாலன் அமைத்த மண்டபம் உரையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆட்சி புரிந்த கரிகால்வளவன், தனது நாட்டில் உணவுப் பொருளை நிறைய விளைவிக்க வேண்டும் என்ற நன்னோக்கத் தால் காவிரியாற்றிற்குப் பெரிய கரை யினை அமைத்தான். தனது நாடு வாணிகத் துறையிலும் வளம் பெறுதல் வேண்டும் என்ற பெருவேட்கையால் காவிரி கடலோடு கலக்கு மிடத்தில் இயற்கைத் துறைமுகமாகவுள்ள இக் காவிரிப்பூம்பட்டினத்தைத் தான் அரசு வீற்றிருத்தற்குரிய தலைமை நகரங்களுள் ஒன்றாக அமைத்துக் கொண்டான். இவ்வேந்தர் பெருமான் இமயம்வரை படை யெடுத்துச் சென்று பகைவர்களை வென்று இமயமலை முகட்டில் தன் அரசியல் அடையாளமாகிய புலி இலச்சினையைப் பொறித்துத் திரும்பியபோது, பகையும் நட்பும் இல்லாத அயலானாகிய வச்சிரநாட்டு மன்னன் தன்பால் உள்ள முத்துப்பந்தரைக் கப்பமாகக் கொடுத்தான். பகைமேற்கொண்டு வாட்போரில் எதிர்த்த மகதநாட்டு மன்னன் தோல்வியுற்றுத் தன்பால் உள்ள அழகிய பட்டிமண்டபத்தைத் திறையாகக் கொடுத்தான். முன்னமே நட்பினனாகிய அவந்தி வேந்தன் தன்னிடம் உள்ள தோரணவாயிலை உவப்புடன் கொடுத்தான். பொன்னினாலும் மணிகளாலும் நுண்ணிதின் அமைக்கப்பட்ட முத்துப்பந்தர், பட்டிமண்டபம், தோரணவாயில் ஆகிய இம் மூன்றையும் பெற்று வந்த கரிகால்வளவன் இவற்றைக் காவிரிப் பூம்பட்டினத்தில் நிலைபெற வைத்தான் எனச் சிலப்பதிகாரம் கூறும். அந்நூலில். இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச் செருவெங் காதலின் திருமா வளவன் ... ...... ..... ......... ......... ......... .......ïikat® உறையுஞ் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் கோனிறை கொடுத்த கொற்றப் பந்தரும் மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும், அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும், பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும் நுண்வினைக் கம்மியர் காணா மரபின துயர் நீங்கு சிறப்பினவர் தொல்லோர் உதவிக்கு மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம் ஒருங்குடன் புணர்ந்தாங் குயர்ந்தோ ரேத்தும் அரும்பெறல் மரபின் மண்டபம்- (சிலப். 5.89-110.) என இளங்கோவடிகள் கூறுதல் இங்கு அறியத்தக்கதாகும். கொடைத் திறன் வேந்தர் பெருமானாகிய கரிகால் வளவனது உலையா வூக்கம், வீரருள் வீரனாகிய அம்மன்னன் குமரி முதல் இமயம்வரை படை யெடுத்துச் சென்று பெற்ற வெற்றித் திறம், அவ்வரசனால் அணிபெற அமைக்கப்பெற்ற காவிரிப்பூம்பட்டின மாகிய இந்நகரத்தின் செல்வப் பெருக்கம், தொழிற் சிறப்பு, மக்களது வாழ்க்கை முறை ஆகிய நலங் களைப் பாராட்டும் முறையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர் பெருமான் பட்டினப்பாலை என்னும் அழகிய பாடலைப் பாடி அம்மன்னனது பேரவையில் அரங்கேற்றினார். தேனினும் இனிய செந் தமிழ்ப் பாட்டாகிய அதன் சுவை நலத்தில் திளைத்த சோழ மன்னன் தான் இமயத்திற் புலியிலச்சினை பொறித்து மீண்ட காலத்து மகதநாட்டு மன்னன்பால் திறையாகப் பெற்று வந்த பட்டிமண்டபத்துடன் பதினாறு நூறாயிரம் பொன்னையும் கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்குப் பரிசிலாகத் தந்து பாராட்டினான் என்பது வரலாறு. இச்செய்தியினைக் கவிச் சக்கரவர்த்தியாகிய சயங் கொண்டார். தத்துநீர் வரால் குருமி வென்றதும் தழுவு செந்தமிழ் பரிசில் வாணர்பொன் பத்தோ டாறு நூறாயிரம் பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும் (இராச. 21.) எனக் கலிங்கத்துப் பரணியிற் குறித்துள்ளார், புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர். அன்று கவிக்கு வியந்து நயந்து தரும்பரிசிற் கொருபோர் ஆழியில் வந்து தராதலம் நின்று புகாரி லனைத்துலகும் சென்று கவிக்கு மகத்தது தூண் வயிரத்தினு முத்தினுமெய் செய்ததொர்பொற்றிரு மண்டபம் நல்கிய செயகுல நாயகமே நாவலனே கிடையா நவமணி மண்டபம் நின் பாவலனே கவரப் பண்டு பணித்தவனே எனக் குலோத்துங்கன் பிள்ளைத் தமிழில் உளமுவந்து பாராட்டி யுள்ளார். சிதையாத பதினாறுகால் மண்டபம் காவிரிப்பூம் பட்டினத்தைச் சிறப்பித்து உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலை என்ற நூல் அரங்கேறிய சிறப்புடையதும் அப்பாடலின் பரிசிலாக உருத்திரங் கண்ண னார்க்கே உரிமைசெய்யப் பெற்றதும் ஆகிய பதினாறுகால் மண்டபம். உருத்திரங்கண்ணனாரது புலமைத் திறத்தையும் அப்புலவர் பெருமானை ஆதரித்துப் போற்றிய கரிகால் வளவனது கொடைத் திறத்தையும் அறிவுறுத்தும் அறிவுச் சின்ன மாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் நிலை பெற்றிருந்தது. கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.பி. 1216-1238) வாழ்ந்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பான். சோழநாட்டிற் படை யெடுத்து வந்து சோழர்க்கு உரிய அரண்மனை முதலியவற்றைத் தகர்த்து அழித்து வருபவன், இப்புகார் நகரத்தில் முன் கரிகால்வளவன் உருத்திரங் கண்ணனார்க்கு உரிய பரிசிலாக விட்ட பதினாறுகால் மண்டபத்தை மட்டும் இடிக்காமல் விட்டுச் சென்றான் என்பது வரலாறு. இச்செய்தி, வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்ட தொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன் செய் பட்டினப் பாலைக்கன்று நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே என அம்மன்னன் காலத்தில் திருவெள்ளைறையிற் பொறிக் கப்பெற்ற கல்வெட்டுப் பாடலால் இனிது விளங்கும். சித்திர மண்டபம் எங்கே? மேற்குறித்த பதினாறுகால் மண்டபத்தைச் சித்திர மண்டபம் என்றும் குறிக்கின்றார் இளங்கோ அடிகள். செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க வேந்தன். (சிலப்-நடுகற், 85-87.) என்பது சிலப்பதிகாரம். பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் கொடுமையான படையெடுப்பு ஏதும் தமிழ்நாட்டில் நடந்ததாகச் சரித்திரம் கூறவில்லை. ஆதலால் அம்மண்டபம் பிறரால் அழிக்கப்பட்டிருக்க முடியாதென்பது உறுதி. அவ்வாறாயின் மண்டபம் என்ன ஆயிற்று? என்ற கேள்வி எழுவது இயல்பே. நாளடைவில் ஏற்பட்ட கடற் கொந்தளிப்பால் விழுங்கப்பட்டோ அல்லது மக்களது கவனக் குறைவால் பாதுகாப் பாரின்றிச் சிதைவுற்றோ அம்மண்டபம் அழிந்திருத்தல் வேண்டும், எனக் கருதவேண்டி யுள்ளது. இன்றும் புகார் நகரத்தையொட்டிய கடற்பரப்பில் நான்கு ஐந்து கல் தொலைவுவரை கட்டிடங்களும் நீண்ட சுவர்களும் தட்டுப்படு வதாலும் இப்பொழுதுள்ள ஊர்ப்பகுதியில் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயுள்ள நிலப்பகுதிகள் பல காணப்படு வதாலும் அவ்விடங்களை ஆராய்ந்தால் இம்மண்டபம் கடலுக்குள்ளேயோ அன்றி ஊர்ப்பகுதி யிலேயோ கண்டுபிடிக்கப்பட்டு விடலாம் என்று உறுதியாகக் கூறலாம். தமிழ் ஆட்சி நிலவிவரும் இந்நாளில் நமது அரசாங்கம் முயன்றால் தான் இவ்வுண்மையைச் சோதித்து அறியமுடியும். நாளங்காடி சோழ மன்னர்க்குரிய தலைமை நகரமாகவும் வாணிக வளர்ச்சிக் குரிய துறைமுகப் பட்டினமாகவும் அமைந்த இப்புகார் நகரம், அரசர் பேரூர் ஆதற்கு வேண்டிய அரண் முதலிய அங்கங்களைக் குறைவறப் பெற்று, மேற்பகுதி பட்டினப்பாக்கம் எனவும், கடல் வாழ்நர் ஆகிய பரதவர்களும், வெளிநாட்டு வணிகர்களும் பிறரும் கலந்து வாழ்தற் குரிய வகையில் கடற்கரையை யொட்டி அமைந்த கிழக்குப் பகுதி மருவூர்ப்பாக்கம் எனவும் முற்காலத்தில் இருபெரும் பிரிவுடையதாய் விளங்கியது. பட்டினப்பாக்கத் திற்கும் மருவூர்ப் பாக்கத்திற்கும் இடையே இருபெரு வேந்தர் முனை யிடம் போன்று அமைந்த நிலப்பரப்பு மரங்கள் செறிந்த சோலையாக விளங்கியது. இச்சோலை பட்டினப் பாக்கத்திலுள்ளவர்களும் மருவூர்ப் பாக்கத்திலுள்ளவர் களும் தமக்கு வேண்டிய உணவு முதலிய நுகர் பொருள்களைப் பகற் காலத்தே பெற்றுச் செல்வதற்குரிய கடைவீதியாக அமைந் தமையால் நாளங்காடி என்ற பெயரால் குறிக்கப் பெற்றது. இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபாற் பகுதியின் இடைநிலம் ஆகிய கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி- (சிலப் 5-59-63) என்பது சிலப்பதிகாரம். பட்டினப்பாக்கம் நாளங்காடிக்கு மேற்கே சோழ மன்னர் அரசு வீற்றிருக்கும் திருநகரமாக அமைந்த பகுதி பட்டினப்பாக்கம் என்பதாகும். இதன்கண் பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக் குரிய திருக் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும், நீலமேனி நெடியோனாகிய திருமால் கோயிலும், வால்வளைமேனி வாலி யோனாகிய பல தேவன் கோயிலும், மாலைவெண்குடை மன்னவன் வாழும் அரண்மனையும் அதனைச் சூழ அமைந்த இராசப் பெருந்தெருவும் அமைச்சர் படைத் தலைவர் முதலிய அரசியலதிகாரிகளின் இருப்பிடங்களும் பெருங்குடி வணிகர் வாழும் மாடவீதிகளும் உழுவித்துண் போராகிய வேளாண் மாந்தர் வாழும் பெருந்தெருக்களும் தாம் தாம் வல்ல நுண்கலைத் திறங்களால் மன்னரையும் நாட்டு மக்களையும் மகிழ்விக்க வல்ல கலைச்செல்வர் உறைவிடங்களும் அமைந்திருந்தன. கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர் மாடமறுகும் மறையோ ரிருக்கையும், வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும், திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும், சூதர் மாகதர் வேதா ளிகரொடு நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர் காவற் கணிகையர் ஆடற் கூத்தியர் பூவிலை மடந்தையர் ஏவற் சிலதியர் பயில்தொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர் நகைவே ழம்பரொடு வகைதெரி யிருக்கையும் கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர் நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர் இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பா யிருக்கையும் பீடுகெழு சிறப்பிற் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கம். (சிலப். 5-40-58) என்பது சிலப்பதிகாரம். மருவூர்ப்பாக்கம் நாளங்காடியாகிய சோலைக்குக்கிழக்கே கடற்கரையை யொட்டி யமைந்த நகர்ப்பகுதியாகிய மருவூர்ப்பாக்கத்தில் கப்பல் மூலமாக வாணிகம் புரியும் வெளிநாட்டு வணிகர்கள் தம்முள் வேறுபாடின்றித் தங்கி வாழ்தற்குரிய இருப்பிடங்களும், வண்ணம், சுண்ணம், சாந்தம், நறும்புகைக்குரிய மணப் பொருள்கள், நறுமலர் முதலியவற்றை விற்போர் விலைகூறித் திரியும் பெருந் தெருக்களும், பட்டுநூலாலும், நுண்ணிய மயிராலும், பருத்தி நூலாலும் அழகிய ஆடைகளை நெய்யவல்ல பட்டுச் சாலியர் முதலியோர் இருக்குமிடங்களும், பவளமும் ஏனைய மணிகளும் பொன்னும் ஆகிய இவற்றைப் பொன் அணிகலங்களுடன் வைத்து ஒப்பு நோக்கி மதிப்பிட வல்லார் வாழும் வளம் மலிந்த வீதிகளும், நெல்வரகு முதலிய தானியங்களை நிறையக் குவித்து வைத்துள்ள கூலக்கடைத் தெருவும், பிட்டு அப்பம் முதலிய சிற்றுண்டிகளைச் செய்து விற்போர், கள், மீன், உப்பு, நிணம் முதலியவற்றை விற்போர், இலையமுதிடுவோர், பஞ்சவாசம் விற்போர் முதலியவர்களும், வெண்கலத் தொழில் செய்யும் கன்னார், மரங்கொல் தச்சர், செம்பினாற் கலங்கள் செய்வோர், இரும்பினால் தொழில் புரியும் கொல்லர், ஓவியர், சிற்பாசிரியர், பொற்கொல்லர், மணிகளிழைப்போர், தையல் வினைஞர், நெட்டி துணி முதலிய வற்றால் பறவை பூங்கொத்து முதலிய உருவங்களை அமைப்போர், குழல் முதலிய துளைக்கருவியாலும் யாழ் முதலிய நரம்புக் கருவியாலும் பண்ணும் திறமும் ஆகிய இசையினை வளர்க்கும் குழலர் பாணர் முதலியோர் ஆகிய பல்வகைத் தொழிலாளர்கள் வாழ்தற்குரிய இடங்களும் அமைந்திருந்தன. வேயா மாடமும் வியன்கல இருக்கையும் மான்கட் காலதர் மாளிகை யிடங்களும் கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவனர் இருக்கையும், கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும், வண்ணமும் சுண்ணமும் தண்ணறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும். பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும் தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோ டளந்துகடை யறியா வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும், பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும், காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர் மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர் பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த ஊன்மலி யிருக்கையும், கஞ்சகாரரும் செம்புசெய் குநரும் மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப் பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும் குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும் வழுவின் றிசைத்து வழித்திறம் காட்டும் அரும்பெறல் மரபிற் பெரும்பா ணிருக்கையும் சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் (சிலப் 5-7-39.) என்பது சிலப்பதிகாரம். இந்திரவிழாவெடுத்தல் மேற்குறித்த பட்டினப்பாக்கத்திற்கும் மருவூர்ப் பாக்கத்திற்கும் இடைநிலமாயமைந்த நாளங்காடியிலே பலி பீடம் ஒன்று அமைந் திருந்தது. முசுகுந்தன் என்னும் சோழமன்னன், வானோர் தலைவனாகிய இந்திரனுக்குப் போர்த் துணையாகச் சென்று அசுரருடன் போர் செய்த பொழுது, அம்மன்னனுக்கு அசுரர்களால் நேர இருந்த பெரிய இடை யூற்றைப் போக்கிய பூதமானது, இந்திரனது கட்டளையால் தேவரு லகத்தினின்றும் இக்காவிரிப் பூம்பட்டினத் திற்போந்து மேற்குறித்த பலிபீடத்தில் இந்நகரத்தார் தரும் பலியை யேற்று அவர்களுக்கு மேன்மேலும் வெற்றியைத் தந்து விளங்கிய தெனவும், சோழன் மரபினர் முற்காலத்தில் அசுரரால் தேவர்கட்கு உண்டாகிய துன்பங்களை நீக்கி வானோர் நகராகிய அமராபதியைக் காத்தமையால் அவர்களுக்கு இந்திரனால் மகிழ்ந்தளிக்கப் பெற்ற தெய்வத் தன்மை வாய்ந்த ஐவகை மன்றங்கள் இப்புகார் நகரத்தே கொண்டுவந்து அமைக்கப்பெற்றிருந்தன எனவும், இங்ஙனம் தம் நாட்டு வேந்தராகிய சோழர்க்குப் பலவகையாலும் உதவி புரிந்த இந்திரனை நன்றியுடன் போற்றுமுகமாகப் புகார் நகர மக்களால் இந்திர விழா நெடுங் காலமாகக் கொண்டாடப் பெற்றதெனவும், அவ்விழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்துச் சித்திரை விண்மீன் கூடிய பூரணை நாளில் தொடங்கி இருபத்தெட்டு நாள் நிகழ்வதெனவும், சேர முனிவராகிய இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலப்பதிகாரத்திற் குறித்துள்ளார். பெயர்க் காரணம் பரதகண்டத்தை யுள்ளடக்கிய நாவலந் தீவினைக் காக்கும் தெய்வமாய் மேருமலையின் உச்சியில் தோன்றிய சம்பு என்ற தெய்வம், முற்காலத்தில் அரக்கர்களால் இந்நிலத்தார்க்கு உளவாகும் துயரத்தினைக் கேட்டு அங்கிருந்து தென்றிசைக்குப் போந்து இந்நகரத்தே தவஞ் செய் திருந்தமையால் இவ்வூர்க்குச் சம்பாபதி என்ற பெயர் உண்டாயிற்று எனவும், சூரிய குலத்திலே தோன்றிய காந்தன் என்ற மன்னன் தன் நாட்டிற்குத் தண்ணீர் வேண்டும் என்ற பெரு வேட்கையால் வேண்டினா னெனவும், அவன் விருப்பத்தை நிறைவேற்றும் முறையில் குடமலையிலுள்ள அகத்திய முனிவர், தம் கையிலுள்ள கமண்டல நீரைக் கவிழ்த் தமையால், நேர் கிழக்கே ஓடிவந்த காவிரியாறு, இந்நகரத்தின் அருகேயுள்ள கடலொடு பொருந்தித் தோன்றியதெனவும், அந்நிலையில் இம்மூதூரில் தவஞ் செய்திருந்த சம்பாபதியாகிய தெய்வம், காவிரியை மகிழ்ச்சியுடன் வரவேற்றுத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டு, படைப்புக் காலத்தே சம்பாபதி என என் பெயரால் அமைந்த இம்மூதுரை நின் பெயரால் வழங்கச் செய்தேன் நீ நீடுவாழ்க எனக் காவிரியை வாழ்த்திய தெனவும் மணிமேகலைப் பதிகம் கூறும். இக்குறிப்பினை நோக்குங்கால் காவிரியாறு இந்நகரத்தின் நடுவே சென்று கடலொடு கலப்ப தென்பதும் அதன் தெற்கும் வடக்கும் ஆக அமைந்த நிலப் பகுதியே காவிரிப் பூம்பட்டினம் என முற்காலத்தில் வழங்கப் பெற்ற தென்பதும் நன்கு புலனாதல் காணலாம். புகாரின் நிலப்பரப்பு சங்க காலத்தில் சோழ நாட்டின் உள் நாடாகிய புகார் நாடு என்ற நாட்டிற்குத் தலையூராக விளங்கியது காவிரிப்பூம் பட்டினம். இவ்வூர் 1800 ஆண்டுகளுக்கு முன் நான்கு காவதம் (சுமார் முப்பது மைல்) பரப்புடைய பேரூராய் விளங்கிய தெனச் சிலப்பதிகாரம் கூறும். இப்பொழுது கருவேந்த நாதபுரம், கடாரங்கொண்டான் என வழங்கும் ஊர்கள் இந்நகரத்தின் மேற்புறவெல்லையாகவும், திருக்கடவூர் தெற் கெல்லையாகவும் கலிக்காமூர் (அன்னப்பன்பேட்டை) வடக்கெல்லை யாகவும் கடல் கிழக் கெல்லையாகவும் அமைய, இந்நாற்பே ரெல்லைக்குட்பட்ட சிற்றூர்கள் அனைத்தையும் தன் அங்கமாகக் கொண்ட நிலப்பகுதியே முற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினமென ஒரு பெருநகராக விளங்கியது. புகார்நகரத்துக் குடிகள் இப்பெருநகரத்தில் முற்காலத்தில் அறுபதினாயிரங் குடிகள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள் எனத் தெரிகிறது. சிலப்பதிகார ஏடொன்றில் மனையறம் படுத்தகாதைத் தொடக்கத்தில் உரை சால் சிறப்பின் அரசுவிழை திருவின் என்ற அடிக்கு முன்னர், திருவின் செல்வியொடு பெருநில மடந்தையை ஒருதனி யாண்ட செருவடு திண்டோள் கரிகாற் பெரும்பெயர்த் திருமா வளவனைப் பாலை பாடிய பரிசிலன் றெடுத்த மாலைத் தாகிய வளங்கெழு செல்வத்து ஆறைந் திரட்டியும் ஆயிரங் குடிகளும் வீறுசால் ஞாலத்து வியலணி யாகி உயர்ந்தோ ருலகிற் பயந்தரு தானமும் இல்லது மிரப்பு நல்லோர் குழுவும் தெய்வத் தானமும் திருந்திய பூமியும் ஐயர் உறையுளும் அறவோர் பள்ளியும் விண்ணவர் உலகின் நண்ணிடு நகரமொடு எண்ணுவரம் பறியா இசையொடு சிறந்த என வரும் அடிகள் காணப்படுதலைச் சிலப்பதிகாரப் பதிப்பாசிரியராகிய பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதையர வர்கள் அடிக் குறிப்பிற் குறித்துள்ளார்கள். காவிரிப் பூம்பட்டினத்தின் பண்டைக் கால அமைப் பினை விளக்கும் இத்தொடர்களை இளங்கோவடிகள் வாக்கெனத் திட்ட மாகக் கொள்ள முடியவில்லை. எனினும், இவற்றிற்குறிக்கப்பட்டுள்ள செய்திகள் இப்புகார் நகரத்தின் பழைய அமைப்பினை உள்ளவாறு விளக்கும் முறையில் அமைந்திருத்தல் அறிந்து மகிழத்தக்கதாகும். அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் அறுபதினாயிரம் குடும்பங்கள் வாழ்ந்தன என்றால் அந்நகரத்தின் மக்கள்தொகை ஏறக்குறைய முந்நூறாயிரத்திற்கு மேலிருக்குமெனக்கருதுதல் பொருந்தும். சுருங்கக் கூறுவோமானால், இக்காலத்தில் நம் தமிழகத்தின் தலைநகராகத் திகழும் சென்னை நகரத்தினை யொத்த பரப்பும் செல்வ வளமும் மக்கட் பெருக்கமும் வாய்ந்த மூதூர் அக்காலத்தில் சோழர் தலைநகராக விளங்கிய நம் காவிரிப்பூம்பட்டினம் எனக் கூறுதல் பொருந்தும். கடல்கோளால் சிதைந்த மருவூர்ப்பாக்கம் இவ்வாறு கடைச்சங்க காலத்தில் நாற்காதப் பரப்புடையதாய் விளங்கிய இப்புகார் நகரம் கிள்ளி வளவன் காலத்தில் இந்திர விழாக் கொண்டாட மறந்தமையால் கடல் கோளாற் சிதைவுற்ற தென மணிமேகலை கூறுகிறது.1 இக்கடல் கோளால் இந்நகரம் முழுவதும் அழியவில்லை யென்பதும் இதன் கிழக்குப்பகுதியாக விருந்த மருவூர்ப் பாக்கமே கடலாற் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டு மென்பதும் பட்டினப் பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழந்தமிழிலக்கியங் களையும் இந்நகரப் பகுதியில் அமைந்த ஊர்ப் பெயர்களையும் பிற வரலாற்றுக் குறிப்புக்களையும் ஒப்பு நோக்குங் கால் நன்கு விளங்கும். செந்நெலஞ் செறுவின் அன்னந்துஞ்சும் பூக்கெழுபடப்பைச் சாய்க்காட்டன்ன - அகம், 73 எனவும், நெடுங்கதிர்க் கழனித் தண்சாய்க்கானம் - அகம், 220 எனவும் சங்கச் செய்யுட்களில் குறிக்கப்பெற்ற பழம்பதி யாகிய சாய்க்காடு என்பது இப்புகார் நகர எல்லையுள் அமைந்த தேயாகும். இவ்வூர் புகார் நகரத்தின் ஒரு பகுதியே என்பதனை, தண்புகார்ச் சாய்க்காட் டெந்தலைவன் எனவும், காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி எனவும் வரும் திருஞானசம்பந்தர் திருப்பதிகத் தொடர் களால் நன்குணரலாம். சாய்க்காட்டிலுள்ள திருக்கோயிலின் தெற்கே கால் மைல் தூரத்தில் புகார் நகரத் தெய்வமாகிய சம்பாபதி கோயில் அமைந் திருத்தலை இன்றும் காணலாம். சம்பாபதி கோயிலுக்குக் கிழக்கே காவிரியின் கரையோரம் அமைந்த பூவனம் மணிமேகலையிற் குறிக்கப் பட்ட பழைய உவவனமாகும். சாய்க்காட்டினை யடுத்து இக்காலத்தில் வெள்ளையனிருப்பு என வழங்கும் இடம் சிலப்பதிகாரத்திற் குறிக்கப்பட்ட வால்வளை மேனி வாலியோனாகிய பலதேவன் கோயில் இருந்த இடமாகும். இதனையொட்டிப் பல்லவனீச் சரத்திற்குக் கிழக்கே கால்மைல் அளவிலுள்ள திருமால் கோயில் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்ட மணிவண்ணன் கோட்டமாகும். காவிரியின் தென்கரையில் திருவலம்புரத்திற்குக் கிழக்கேயுள்ள வாணகிரி என்ற ஊர், பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பட்டினப் பாலையில் இரு காமத்திணையேரி என்ற தொடர்க்கமைந்த உரைப்பகுதியில் நச்சினார்க்கினியர் பிற வுரையா சிரியர்கள் கூறும் உரை விகற்பமாகக் குறித்த வளகாமரேரி வணிகாமரேரி என்னும் இரண்டனுள் வணிகாமரேரியாக இருத்தல் கூடும். அவ்வூரின் மேற்கிலும், திருவலம்புரத்தின் தெற்கிலும் அமைந்த சங்கந்தங்குளம் என்ற இடம் மேற்குறித்த உரைப்பகுதியில் நச்சினார்க்கினியர் மற்றொரு சாரார் கூற்றாகக் குறித்த சங்கிராமகாமம் வணிக்கிராமகாமம் என்னும் இரண்டனுள் சங்கிராமகாமம் என்ற ஏரியாக இருத்தல் கூடும். திருவலம் புரத்தின் வடக்கே காவிரியின் வட கரையில் உள்ள மணிக்கிராமம் என்ற ஊர் இப்புகார் நகரத்திலிருந்து வெளிநாடுகளிற் சென்று வணிகம் புரிந்த வணிகர் குழுவினர் வாழ்ந்த இடமாகும். கடலுள் மூழ்கிய கோயில் காவிரி கடலிற் கலக்குமிடத்தில் அமைந்த கடற்பகுதியில் இங்கு வாழும் பரதவர்கள் கப்ப கரப்பு என ஒரு இடத்தைக் குறிக்கின்றனர். இப்பகுதியில் ஒரு காலத்தில் துறைமுகம் அமைந்திருந்ததாகவும் பெரும் புயலடித்தபொழுது அப்புயலிற் சிக்கிய கப்பலொன்று அவ்விடத்தில் அமிழ்ந்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். நெய்தலங்கானல் நெடி யோய் என இளஞ்சேட் சென்னிக்குரியதாகப் புறநானூற்றிற் குறிக்கப்பட்ட ஊர், இப்பொழுது காவிரிப்பூம்பட்டினத்தின் வடக்கே கடற்கரையை யடுத்து நெய்தவாசல் என வழங்குகிறது. கைதைவேலி நெய்தலங்கானல் என இளங்கோவடிகளாற் குறிக்கப்பெற்ற இப்பகுதி, அடிகள் காலத்தில் சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய தீர்த்தங்களையும், காமவேள் கோட்டத்தையும் தன்பாற்கொண்டு விளங்கியது. இந்நெய் தலங்கானலை உள்ளிட்ட மருவூர்ப்பாக்கமாகிய கிழக்குப்பகுதி, கிள்ளிவளவன் காலத்தில் கடல் கோளால் அழிந்து மறைந்தமை யால் அக்கடற் கரையிலுள்ள குறைப்பகுதியே இன்று நெய்தவாசல் எனப் பெயரளவில் ஓரூராக வழங்குகிறது. இப்பொழுது நெய்தவாசலுக்கும் காவிரிப்பூம்பட்டினத் திற்கும் நடுவே கீழ்த்திசையில் ஏழுமைல் அளவில் அமைந்த கடற் பகுதியை அங்கு வாழும் பரதவர்கள் கரையப்பார் எனக் கூறுகின்றனர். இப்பகுதியில் தான் முற்காலத்தில் கடல் கொண்ட புகார் நகரத்தின் கிழக்குப் பகுதியிலிருந்த கட்டிடங்களும் காமவேள் கோட்டம் முதலிய கோயில்களும் இருந்தன என்பதற்குரிய அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன. இக்கடற் கரைப்பகுதியிற் படகிற்சென்று மீன் பிடிக்கும் போது முற்காலத்திலிருந்த கோயில் முதலிய கட்டிடப் பகுதிகளுட் சில இன்னும் தட்டுப்படுகின்றன என இங்குள்ள பரதவர்கள் தெளிவாகக் கூறுகின்றார்கள். கடலிடையேயுள்ள இப்பகுதியில் சிலவாண்டுகளுக்கு முன் பரதவர்கள் மீன் பிடித்தபோது, வெண்கலத்தாலமைந்த கலியாண சுந்தரர் திருவுருவமும் கருங்கல்லிற் செதுக்கப்பட்ட அழகம்மையின் திருவுருவமும் மீன் பிடிக்கும் வலையிற் சிக்கிய நிலையில் அத்திரு வுருவங்கள் அவர்களால் மூழ்கி யெடுக்கப்பெற்றன. அத்திருவுருவங்கள் அன்னப்பன்பேட்டையென வழங்கும் கலிக்காமூர்த் திருக்கோயிலில் வைக்கப்பெற்றுள்ளமை காணலாம். திருச்சாய்க் காட்டுத் திருக்கோயிலிலுள்ள வில்லேந்திய முருகன் திருவுருவமும் இவ்வாறே சில ஆண்டுகளுக்கு முன் புகார்த் துறைமுகத்தே கடலிலிருந்து கிடைத்ததேயாகும். நிலமகழ்ந்த போது அதனிடைக் கிடைக்கப்பெற்ற திருவுருவங்களும் சிலவுண்டு. திருவெண்காடு என்ற ஊரின் கிணற்றி லிருந்து எடுக்கப்பட்ட 5 திருவுருவங்கள் இப்பொழுது தஞ்சைக் கலைக் கூடத்திற் பார்ப்பவர் மகிழ வைக்கப்பெற்றிருப்பதைக் காணலாம். உறைக் கிணறுகளும், பெரும் பெரும் கிணறுகளும், நிலத்தினின்றும் தோண்டி எடுக்கப்பெறுவன கணக்கிலடங்கா. முதுமக்கள் தாழிகள் பலவும் இங்கு கிடைக்கின்றன. பழைய பொற்காசுகளும் கிடைக்கின்றன. ஆராய்ச்சிக்குரிய பகுதி கரையப்பார் என்ற இவ்விடத்தில் மீன் பிடிக்கும் உரிமை மேற்குறித்த கலிக்காமூர்த் திருக்கோயிலுக்குரியதாகும். இக்கடற் பகுதி பழைய கட்டிடங்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டதாய் பாசி படிந்திருத்தலால் இங்கே மீன்கள் நிறையத் தங்குகின்றன எனப் பரதவர் கூறுகின்றனர். கரையிலிருந்து ஏழுமைல் அளவில் இக்கடற் பகுதியில் கட்டுமரத்திற் சென்று பார்த்தால் பழைய கோயிற் கோபுரத்தின் உச்சி நான்குபாக அளவில் தட்டுப்படுவதாகவும் பதினேழுபாக அளவில் அடித்தளம் தட்டுப்படுவதாகவும் இவ்விடத்தை யடுத்துச் சுமார் நூறடி அளவில் கோயிலின் சுற்றளவு தெரிவதாகவும் இங்கே மீன் பிடிக்கும் பரதவர்கள் அடையாளத்துடன் காட்டுகின்றனர். அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்திற் சென்று ஆராய்ந்தால் கடல்கொண்ட காவிரிப் பூம்பட்டினத்தில் முற்காலத்திலிருந்த கட்டிடங்களில் ஒருசிலவற்றை யேனும் நாம் இக்காலத்தில் கண்டு மகிழ முடியும். சென்னை யரசும் இந்திய அரசும் புதை பொருளா ராய்ச்சித்துறையின் வழியாக இதற்கான ஆராய்ச்சித் திட்டங்களை வகுத்து நிறைவேற்றுதல் வேண்டும். இணைந்த ஏரிகள் இம்மையிலும் மறுமையிலும் உண்டாகிய காம இன்பத்தினைக் கொடுத்தற்குரிய இணைந்த ஏரிகளாகப் பட்டினப்பாலையிற் குறிக்கப்பட்ட இரு குளங்களும் கடலொடு காவிரி கலக்கும் இடமாகிய சங்கமுகத் துறையில் நெய்தலங் கானல் என்ற சோலையில் காமவேள். கோயிலுடன் அமைந்தன வாக இளங்கோவடிகளாற் குறிக்கப் பட்ட சோமகுண்டம் சூரியகுண்டம் என்னும் பெயருடைய இரண்டு தீர்த்தங்களே என்பது நச்சினார்க் கினியர், அடியார்க்கு நல்லார் ஆகிய பழைய உரையாசிரியர்களின் துணிபாகும். நீராடினார்க்கு இம்மை மறுமை இன்பங்களை அளிக்கும் பெருமை வாய்ந்தனவாகிய இவ்விரு குளங்களும் அடுத்துள்ள காமவேள் கோட்டத்துடன் கடலால் கொள்ளப்பட்டு மறையவே, அக்காலத்துள்ள புகார் நகர மக்கள் இவற்றை நினைவு கூர்ந்து நீராடிப் பயன் பெறுங் கருத்துடன் இம்மை மறுமைக்குரிய இவ்விரு குளங்களுடன் அம்மை யாகிய வீடு பேற்றினையளிக்கவல்ல அக்கினி தீர்த்தம் என்ற மற்றொரு தீர்த்தத்தையும் சேர்த்துத் திருவெண்காட்டுத் திருக்கோயிலில் முக் குளங்களாக அமைத்தனர். இதனால் இவ்வுலக மக்கள் மேற்குறித்த மூன்று குளங்களிலும் நீராடி இறைவனை வழிபட்டு இம்மை மறுமை யாகிய இருமையின் பங்களுடன் ஈறிலாவின்பமாகிய வீடு பேற்றினையும் ஒருங்கு பெறுதற்குரிய நல்வாய்ப்பினையும் வழங்கி யுள்ளார்கள் எனக் கருதவேண்டியுள்ளது. கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில் மடலவிழ் நெய்தலங் கானல் தடமுள சோமகுண்டஞ் சூரியகுண்டத் துறை மூழ்கிக் காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு தாமின் புறுவ ருலகத்துத் தையலார் போகஞ்செய் பூமியினும் போய்ப் பிறப்பர் (கனாத்திரம் - 57-62) எனத் தேவந்தி கண்ணகிக்குக் கூறுவதாக அமைந்த இவ்வடிகளில், இளங்கோவடிகள் குறித்த இவ்விரு தீர்த்தங்களின் சிறப்பையும் நன் குணரலாம். கடலொடு காவிரி சென்று சேரும் இடத்திலமைந்த இத் தீர்த்தங்களை நன்னெடும் பெருந் தீர்த்தம் எனப் போற்றுவர் சேக்கிழார்.1 இவை கடலாற்கொள்ளப்பட்ட நிலையில் திருவெண் காட்டிலுள்ள முக்குளங்களில் மூழ்கி இறைவனை வழிபட்டோர் அடையும் பயன்களை உலக மக்களுக்கு அறிவுறுத்துவன பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா வொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்த் தோய்வினை யாரவர் தம்மைத் தோயாவாந்தீவினையே எனவும், தண்முத்தரும்பத் தடமூன்றுடையான் தனையுள்கிக் கண்முத்தரும்பக் கழற்சேவடி கைதொழுவார்கள் உண்முத்தரும்ப உவகைதருவான் ஊர்போலும் வெண்முத்தரும்பிப் புனல்வந்தலைக்கும் வெண்காடே எனவும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் அருளிய திருப்பாடல்கள். இளங்கோவடிகளும் திருஞானசம்பந்தரும் குறித்த இத் தீர்த்தங்களின் சிறப்பை ஒப்புநோக்கிச் சிந்திப்போ மானால் முற்காலத்தில் கடலுள் மறைந்த சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய இரு தீர்த்தங் களுக்கும் இக்காலத்தில் திருவெண் காட்டுத் திருக்கோயிலிலுள்ள சோமதீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி தீர்த்தம் என்ற முக்குளங்கட்கும் உள்ள ஒற்றுமைத் திறம் நன்கு விளங்கும். புகாரில் அமைந்த கோயில்கள் அமரர் தருக்கோட்டம், வெள்யானைக்கோட்டம். புகர்வெள்ளை நாகர்தம்கோட்டம். பகல்வாயில் உச்சிக்கிழான்கோட்டம், ஊர்க்கோட்டம், வேற்கோட்டம் வச்சிரக்கோட்டம், புறம்பணையான் வாழ்கோட்டம். நிக்கந்தக்கோட்டம், நிலாக்கோட்டம் (கனாத்திறம் - 9-13) எனவும், மணிவண்ணன் கோட்டம் இந்திர விகாரம் (சிலப். நாடுகாண்) எனவும் குறிக்கப் பட்ட இக்கோயில்கள் யாவும் காவிரிப்பூம்பட்டினத்தே அமைந்திருந்தன என இளங்கோவடிகள் குறிப்பிடுவர். இவற்றுள் அமரர் தருக்கோட்டம் என்பது தேவருலகத்திலுள்ள கற்பகத்தருவை வழிபடும் நிலையில் அமைந்த கோயிலாகும். இதனைச் சாந்திகரைக்கோட்டம் எனினும் ஆம் என அரும்பதவுரையாசிரியர் குறிப்பிடுதலால், இக்கோயில் கடற்கரை யருகே அமைந்திருந்ததெனத் தெரிகிறது. வெள்ளைநாகர் என்பது பலதேவர்க்குரிய பெயராகும். பல தேவர்க்குரிய கோயில் இருந்த இடம் இக்காலத்தில் வெள்ளை யனிருப்பு என வழங்குகிறது. பகல்வாயில்-பகல் (கதிரவன்) தோன்றுகின்ற வாயில்; அதாவது கீழ்த்திசை. உச்சிக்கிழான்-சூரியன். இந்நாட்டை ஆட்சிபுரிந்த சோழ மன்னர்க்குக் குல முதல்வனாகிய சூரியனை வழி படுதற்கமைந்த திருக்கோயில். உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு எனத் திருமுருகாற்றுப்படையில் அமைந்த தெய்வக் காட்சியைப் புலப் படுத்தும் முறையில் சோழர் தலைநகராகிய இக்காவிரிப்பூம் பட்டினத்தின் கீழ்த்திசையில் கடலோரத்திலே நிலைபெற்றிருந்த தென்பது அடியார்க்கு நல்லார் உரையால் நன்கு விளங்கும். ஊர்க்கோட்டம் என்பது இறைவன் எழுந்தருளிய ஸ்ரீகைலாயம் நிற்கும் கோயில் என அரும்பதவுரை யாசிரியரும், அடியார்க்கு நல்லாரும் தெளிவாகக் குறித்துள்ளார்கள். எனவே பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்குரிய திருக்கோயில் காவிரிப்பூம் பட்டினமாகிய இம்மூதூரில் நடுநாயக மாக அமைந்திருந்ததென்பது நன்கு புலனாதல் காணலாம். கடல் கொண்டெஞ்சிய நிலையில் இப்போதுள்ள காவிரிப் பூம்பட்டினம் என்ற பெயர்க்குச் சிறப்புரிமையுடையதாக விளங்கும் நிலப் பகுதியில் நடுநாயகமாகத் திகழ்வது சிவபெருமான் வீற்றிருந்தருளும் பல்லவனீச்சரம் என்ற திருக்கோயிலேயாகும். வேற்கோட்டம் என்பது முருகப்பெருமான் எழுந்தருளிய திருக்கோயில். இது முற்காலத்தில் தனிக் கோயிலாக இருந்து மறைந்த நிலையில் அறுமுகப்பெருமான் வழிபாடு சிவபெருமான் திருக்கோயில்களில் இடம் பெறுவதாயிற்று. வச்சிரக்கோட்டம் என்பது, இந்திரனது படைக்கலமாகிய வச்சிராயுதத்தை வைத்து வழிபடும் கோயிலாகும். இக்கோயிலில் வெற்றி முரசம் ஒன்று வைக்கப்பெற்றிருந்த தென்றும், இந்திர விழாச் செய்யக் கருதிய இவ்வூர் மக்கள் நாளங்காடியிலும் ஐவகை மன்றங்களிலும் பலியிட்டு வச்சிராயுதம் நிற்கும் கோயிலாகிய இவ்விடத்திலுள்ள முரசினைப் பட்டத்து யானையின் மேலேற்றிக் கொண்டு ஐராவதமாகிய வெள்ளை யானையின் கோயிலிற் சென்று இந்திரனுக்குச் செய்ய விருக்கும் விழாவின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவித்துக் கற்பகத்தருநிற்கும் கோயிலின் முன்னர் அட்டமங்கலத்தொடு ஐராவதம் எழுதிய கொடியை யேற்றுவித்து ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் சூழ்ந்துவரச் சங்கமத்துறையிற் குளிர்ந்த தீர்த்தநீரை ஆயிரத்தெட்டு அரசர்களது முடிபொறிக்கப்பட்ட பொற்குடத்திற் கொணர்ந்து விண்ணவர் தலைவனாகிய இந்திரனை நீராட்டி விழாக் கொண்டாடினரென்றும் சிலப்பதி காரம் கூறும். தங்கள் நாட்டை ஆட்சி புரியும் சோழ மன்னர் மேன்மேலும் வெற்றியுடன் விளங்குதல் வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் இப்புகார் நகரமக்களால் அக்காலத்திற் கொண்டாடப் பெற்ற இந்திர விழா, ஒவ்வோராண்டிலும் சித்திரைத்திங்களில் சித்திரை விண்மீனும் பூரணையும் கூடிய நாளிற் கொடி யேற்றி இருபத்தெட்டுநாள் விழா நடந்து கொடியிறக்கி வைகாசி மாதம் அனுட நாளில் கடலாடலாகிய தீர்த்தத்துடன் நிறைவுபெறும் என்பதும், ஆடல்பாடல் ஆகிய பல்வகைக் கலைத் திறங்களுடன் ஆண்டுதோறும் இப்புகார் நகரத்தில் நிகழும் இந்திரவிழாவைக் கண்டு மகிழ நாவலந்தீவிலுள்ளார் பலரும் வருவார் என்பதும் சிலப்பதிகாரத்திலும் அதன் உரையிலும் விரிவாகக் கூறப் பட்டிருத்தல் காணலாம். புறம்பணையான் என்பது மாசாத்தனாராகிய ஐயனார்க்குரிய பெயராகும். ஒவ்வொரு நகரத்தின் எல்லையிலும் இருந்து அவ்வந்நகரங் களைக் காவல் புரியும் எல்லைத் தெய்வங்களுள் ஐயனாரும் ஒருவர். அவர்க்குரிய திருக்கோயில் காவிரிப்பூம் பட்டினமாகிய இந்த நகரத்தின் புற எல்லையில் அமைந்திருந்த தாகத் தெரிகிறது. இந்த ஐயனாரே கண்ணகியின் தோழியாகிய தேவந்தியை மணந்து தன் மூவா இளநலங் காட்டி மறைந்தார் என இளங்கோவடிகள் கூறுவர். நிக்கந்தக்கோட்டம் என்றது நிக்கந்தத் தேவரான அருகக் கடவுள் எழுந்தருளிய கோயிலாகும். உலக உயிர்களுக்கு வெப்பமும் தட்பமுமாகிய ஒளி வழங்கி உய்விக்கும் ஆற்றல் வாய்ந்த சூரியனையும், சந்திரனையும் தெய்வமாக வைத்துப் போற்றும் முறை நம்நாட்டில் தொன்று தொட்டு வரும் மரபென்பது, திங்களைப் போற்றுதும் எனவும் ஞாயிறு போற்றுதும் எனவும் இளங்கோவடிகள் தாம் இயற்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகார நூன்முகத்தே பரவிப் போற்றுதலால் நன்கு புலனாகும். கோவலன் சென்ற வழி கடற்கரைச் சோலையிலே தன் காதற்கிழத்தி மாதவி பாடிய கானல்வரிப் பாடலை ஊழ்வினை வயத்தால் மாறுபட்ட பொருளுடைய தாக எண்ணி அவளை வெறுத்துப் பிரிந்த கோவலன், தன் வாழ்க்கைத் துணைவியாகிய கண்ணகியை அடைந்து தன் துயர் நிலையைப் புலப்படுத்திய பொழுது, கற்புடைச் செல்வியாகிய கண்ணகி, என் காற்சிலம் புள்ளன அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள் என அவனிடம் கொடுக்க, அதனைப் பெற்ற கோவலன், இச்சிலம்பினை முதற்பொருளாகக் கொண்டு வேற்று நாட்டிற் சென்று பெரும் பொருள் ஈட்டுதல் வேண்டும் என்ற ஊக்கத்துடன் கண்ணகியையும் உடனழைத்துக் கொண்டு தன் சுற்றத்தாரெவருக்கும் தெரியாத நிலையில் மதுரைக்குச் செல்ல வைகறைப் பொழுதிலேயே தன் வீட்டைவிட்டுப் புறப்பட்டான்; அங்ஙனம் புறப்பட்டவன், அரவணைமீது அறிதுயில் கொள்ளும் மணிவண்ணனாகிய திருமால் எழுந்தருளிய திருக்கோயிலை வலஞ்செய்து, அதனையடுத்து ஏழரங்குகளாக இந்திரனால் நிருமிக்கப் பெற்ற பௌத்தப் பள்ளியாகிய இந்திர விகாரங்கள் ஏழினையும் முறையே கண்டான்; புலவூண் துறந்து அறநூல் முதலியவற்றை நன்குணர்ந்து ஐம்புலனடக்கிய அறவோர் குழுமிய ஐவகையாக அமைந்த அருகத்தானமாகிய ஐஞ்சந்தியின் நடுவேயமைந்த மன்றத்திலே அசோக மர நிழலில் நல்லறங்களைக் கூறுதற்கெனச் சமணரில் இல்லறத்தாராகிய சாவகர் களால் அமைக்கப் பட்டிருந்த ஒளி வளர் கற்பீடத்தைத் தொழுது வலங் கொண்டான்; ஊர் வாயிலைக் கடந்து, வேந்தனும், அவன் சுற்றத்தாரும் வேனிற்காலத்தில் தங்கியிருத்தற்குரிய இளமரச் சோலையாகிய இலவந்தி கையைச் சூழ்ந்த மதிலோரமாக அமைந்த வழியே சென்றான்; காவிரித்துறையில் நீராடச் செல்வோர் தடையின்றி நேரே செல்லுதற்கென அமைந்த திருமஞ்சனப் பெருவழியைக் கடந்து, மேற்றிசை நோக்கித் திரும்பிக் காவிரியின் வடகரையிலமைந்த பொழில் வழியாக நடந்தான்; இவ்வாறு ஒரு காததூரம் சென்ற பிறகு சமண்சமயத் தவமுது மகளாகிய கவுந்தியடிகள் தங்கியிருந்த தவப் பள்ளியை அடைந்தான் என இளங்கோவடிகள் தெளிவாகக் குறித்துள்ளார். இக்குறிப்புக்களைக் கூர்ந்து நோக்கினால் சோழ நாட்டின் துறைமுகப் பட்டினமாகிய இந்நகரத்தி லிருந்து உள் நாட்டிற்குச் செல்லும் வழியில் எதிர்ப்படும் இந்நகரத்தின் தோற்றம் நன்கு புலனாதல் காணலாம். ஐந்து வகை வனங்கள் இந்நகரத்தையொட்டி முற்கூறிய இலவந்திகைச்சோலை, உய்யானம், கவேரவனம், சம்பாதி வனம், உவவனம் எனும் ஐந்து வனங்கள் இருந்தன. அவற்றுள் இலவந்திகை என்பது, வேந்தன் தன் பரிவாரங்களுடன் வேனிற் காலத்தில் தங்கியிருத்தற்கேற்ற வண்ணம் குளிர்ந்த நிழலும் நீர் நிலையும் கொண்டு சுற்றிலும் மதிலாற் சூழப் பெற்றுள்ள காவற்சோலையாகும். உய்யானம் என்பது தெய்வ வழிபாட்டிற் குரிய நறுமலர்களைத் தரும் நந்தவனமாகும். கவேரவனம் என்பது, காவிரியின் தந்தையாகிய கவேரன் தவம் புரிந்த இடமாகும். சம்பாதிவனம் என்பது, சூரிய கிரணத்தாற் சிறையிழந்த கழுகரசனாகிய சம்பாதி தவம் புரிந்த வனமாகும். உவவனம் என்பது, புத்த தேவரது பாதபீடிகையைத் தன்பாள்கொண்ட பளிங்கு மண்டபத்தை அகத்தேகொண்டு பல வகை நறுமலர்களைத் தரும் மரங்களுடன் திகழும் மலர் வனமாகும். இவ்வனத்தின் மேற்குத்திசையில் அமைந்த சிறிய வாயில் வழியே சென்றால் இப்புகார் நகரத்தின் ஈமப்புறங்காடாகிய சக்கரவாளக் கோட்டத்தை யடையலாமென்றும், மேற்குறித்த உவவனத்திற்கும் சக்கர வாளக்கோட்டத்திற்கும் இடையே உலக அறவி என்னும் பொது அம்பலம் அமைந்திருந்ததென்றும், அதன்கண் இந்நகரத் தெய்வமாகிய சம்பாபதி கோயிலும் இவ்வம்பலத்திலுள்ள தூணொன்றிற் கந்திற்பாவை என்ற தெய்வத்தின் உருவமும் இருந்தன என்றும் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை யிற் குறித்துள்ளார். இக்காலத்தில் வைத்தீசுவரன் கோயில் என வழங்கும் புள்ளிருக்குவேளூரில் முற்காலத்தில் சம்பாதி, சடாயு என்னும் கழுகரசர் இருவர் சிவபெருமானை வழிபட்டிருந்தனர். இவ்விருவருள் சம்பாதி என்பார் நாள்தோறும் இத்தலத்துக்கு ஒரு யோசனை (சுமார் ஒன்பது மைல்) அளவு சென்று நறுமலர்களைப் பறித்துவந்து இறைவனை அருச்சித்துப் போற்றினர் என்பது புராண வரலாறு. இச்செய்தியினைக் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த திருஞானசம்பந்தப் பிள்ளையார் கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம் உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடம் தள்ளாய சம்பாதி சடா என்பார் தாமிருவர் புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே எனவும், யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே எனவும் வரும் திருப்பாடல்களிற் குறித்துப் போற்றி யுள்ளார்கள். நான்கு குரோசம் கொண்ட தூரம் ஒரு யோசனை என்றும், ஒரு குரோசம் என்பது இரண்டேகால் மைல் என்றும் கூறுவர். எனவே, சுமார் ஒன்பது மைல் தூரம் ஒரு யோசனை யெனக் கொள்ளலாம். இக்கணக்கினைக்கொண்டு சிந்தித்தால் சம்பாதி என்ற பெரியார் புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைப் பூசித்தற்பொருட்டு நாள்தோறும் நறுமலர் பறித்துவந்த நந்தவனம் இப்புகார் நகர எல்லையை அடுத்திருந்ததென்பது நன்கு விளங்கும். அது இப்பொழுது பெருந்தோட்டம் என வழங்கும் ஊரினைக் குறிக்கலாம். திருஞானசம்பந்தப் பிள்ளையார் பதிகத்திற் குறிக்கப்படும் இக்குறிப்புக்குப் பொருந்த சம்பாதி யிருந்த சம்பாதிவனம் இப்புகார் நகரத்தில் இருந்ததென மணிமேகலை கூறும் குறிப்பு அமைந்திருத்தல் காணலாம். ஐந்துவகை மன்றங்கள் முற்காலத்தில் அசுரர்களால் தேவர்களுக்கு உண்டாகிய துன்பங் களைப் போக்கி வானோர் தலைவனாகிய இந்திரனுக்குச் சோழ மன்னன் ஒருவன் உதவி புரிந்தமையால் மகிழ்ச்சியடைந்த இந்திரன், அம்மன்னனுக்குத் தெய்வத்தன்மை வாய்ந்த ஐவகை மன்றங்களை உவந்து அளித்தான் என்பதும், அவ்வாறு அளிக்கப்பட்ட சிறப்புடைய மன்றங்கள் ஐந்தும் சோழர் தலைநகராகிய இப்புகார் நகரத்தே நிலை பெற்றிருந்தன என்பதும் முன்னர்க் கூறப்பட்டன. அம்மன்றங்களுள் வெள்ளிடை மன்றம் என்பது, புகார் நகரத் துறைமுகத்தை யொட்டிய பெருவெளியில் அமைந்திருந்தது. கடல்முற்றமாகிய இவ்விடத்திலே வெளிநாடுகளிலிருந்து கடல் வழியாக வந்து இறங்கிய பல பண்டங்களும் இந்நாட்டிலிருந்து புறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தற்கெனக் கொணரப் பட்ட பல பண்டங்களும் தனித்தனி மூடைகளாகக் கட்டப்பட்டு அவற்றின் அளவும் நிறையும் எண்ணும் எழுதப்பெற்று அரசனது புலியிலச்சினை பொறிக்கப்பெற்றனவாய்க் குவிந்து கிடந்தன எனவும், கதவும் காவலும் இன்றி வெறு வெளியிற் குவித்து வைக்கப்பெற்றுள்ள பண்டங்களை இவ்விடத்தின் உண்மை நிலையுணராது எவரேனும் களவினாற் கவர்ந்து செல்லமுயன்றால் அப்பண்டப் பொதியினை அன்னோர் கழுத்து நடுங்கும் படி அவரது தலையிற் சுமத்தி அவர்களை அவ்விடத்திலேயே சுற்றித் திரியும்படி தண்டித்து வருத்தும் தெய்வம் ஒன்று இவ்விடத்தில் நிலை பெற்றிருந்தது எனவும் கூறுவர். வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇய வாகிக் கட்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக் கொட்பி னல்லது கொடுத்த லீயாது உள்ளுநர்ப் பனிக்கும் வெள்ளிடை மன்றமும் (சிலப். 5. 111-117) என்பது சிலப்பதிகாரம். இலஞ்சி மன்றம் என்பது, கூனர் தொழு நோயாளர் முதலிய பிணியாளர்கள் தன்கண் முழுகியநிலையில் அவர்தம் நோயினைப் போக்கி அவர்களது உடம்பு நல்ல நிறம் பெற்று விளங்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்த பொய்கையைத் தன்னகத்தேகொண்டு விளங்குவதாகும். கூனும் குறளும் ஊமும் செவிடும் அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப் பழுதில் காட்சி நன்னிறம் பெற்று வலஞ்செயலாக் கழியும் இலஞ்சி மன்றமும் (சிலப். 5. 118-121) என்பர் இளங்கோவடிகள். வஞ்சனையால் மருந்தூட்டப்பட்டோர், நஞ்சு உண்டு வருந்துவோர், பாம்பினால் தீண்டப்பட்டோர் முதலியோர் தன்னை வலம்வந்த அளவில் அவர்தம் துயரத்தைத் தன்னொளி யாற் போக்க வல்லது நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமாகும். வஞ்சம் உண்டு மயற்பகை யுற்றோர் நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர் அழல்வாய் நாகத் தாரெயி றழுந்தினர் கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர் சுழல வந்து தொழத்துயர் நீங்கும் நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும் (சிலப். 5, 122-127) என்பது சிலப்பதிகாரம். தவ மறைந்து அல்லவை செய்யும் பொய் வேடத்தார், அரசனுக்கு உடனிருந்தே கேடுசூழும் தீய அமைச்சர்கள், பொய்ச்சான்று கூறுவோர் பிறர் மனை நயப்போர் முதலிய கொடியோர் எவரேனும் இந்நகரத்துள் நுழைவாராயின் அவர்கள் என் கையிலுள்ள பாசக் கயிற்றாற் பிணிக்கப்பட்டு என்கையிற் சிக்கிக்கொள்வார்கள் என்ற இவ்வொலி இந்நகரத்தின் நாற்காதவட்டகை எல்லைவரை சென்று கேட்கும்படித் தனது கடிய குரலால் உணர்த்தி அத்தகைய கொடியோர்களைத் தன் கையிலுள்ள பாசத்தாற் பிணித்துவரச்செய்து நிலத்திற் புடைத் துண்ணும் பூதமானது நிலை பெற்றுள்ள இடம் பூதசதுக்கம் எனப்படும். தவமறைந் தொழுகும் தன்மையிலாளர் அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர் பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென் கைககொள் பாசத்துக் கைப்படு வோரெனக் காதம் நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் பூடைத்துண்ணும் பூதசதுக்கமும் (சிலப், 5. 128-134) என்பர் இளங்கோவடிகள். அரசனுடைய செங்கோன்முறையாகிய நீதி சிறிது பிறழ்ந்தாலும், அறங்கூறும் அவையத்தாராகிய சான்றோர் நடுவுநிலை திறம்பினாலும், அன்னோரது குற்றத்தை நாவாற் கூறாது தன் கண்களில் கண்ணீர் மல்கி வழிய அழுங் குறிப்பினால் நகர மாந்தர்க்குப் புலப்படுத்தவல்ல தெய்வத் தன்மை வாய்ந்த பதுமையின் உருவம் அமைந்த அம்பலம் பாவை மன்றம் எனப்படும். அரைசுகோல் கோடினும் அறங்கூ றவையத்து உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும் நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப் பாவைநின் றழூஉம் பாவை மன்றமும் (சிலப், 5. 135-138) என்பது சிலப்பதிகாரம். இவ்வாறு உண்மையுணர்ந்த பெருமக்களாற் போற்றத்தக்க தெய்வத்தன்மை வாய்ந்த ஐந்து மன்றங்கள் இந்நகரத்திலே இருந்தன வாக இளங்கோவடிகள் கூறியவற்றைக் கூர்ந்து நோக்குங்கால், அவ்வடிகள் காலத்தில் இந்நகரத்தே வாழ்ந்த பெருமக்கள் அரச நீதிக்கு அடங்கி அறநெறியிலும் பொருள் வளத்திலும் குறைபாடின்றி வானுலக வாழ்வினை யொத்த இன்ப வாழ்க்கையில் திளைத்திருந்தார்கள் என்ற உண்மை நன்கு புலனாதல் காணலாம். கடல் வாணிகச் சிறப்பு காவிரிப்பூம்பட்டினமாகிய இவ்வூர் முற்காலத்தில் கடல் வழியே வரும் மரக்கலங்கள் கரையளவும் வந்து பண்டங்களை யேற்றிச் செல்லுதற்கேற்ற இயற்கைத் துறைமுகமாக விளங்கியது. பல நாட்டுப் பண்டங்களை நிறைய ஏற்றிக் கொண்டு இத்துறைமுகத்தை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் பாய்மரங்களைத் தாழ்த்தாமல் இந்நகரத்தின் கரையை அணுகிச் சரக்குகளை எளிதில் இறக்கின என்ற செய்தி, ... ... ... கூம்பொடு மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம், தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடல்பல் தாரத்த நாடுகிழவோயே (புறம். 30) எனச் சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய பாடலிற் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். இவ்வாறு கடல் வாணிகத்துக் கேற்ற முறையில் இயற்கைத் துறைமுகமாக விளங்கிய இந்நகரம், கரிகால் வளவன் முதலிய பெரு வேந்தர்களின் உலையாவூக்கத்தாலும், வெற்றித் திறத்தாலும் மேலும் பல செயற்கை வசதிகளையும் கடல் நடுவே இரவில் திசை அறியாது செல்லும் மரக்கலங்களை அழைக்கும் கலங்கரைவிளக்கம் முதலிய சாதனங்களையும் பெற்றுத் தமிழ்நாட்டின் வாணிகவளர்ச்சிக்கேற்ற பேரூராகத் திகழ்வதாயிற்று. பல்பொருள் வளங்கள் கடல் வழியாகக் கப்பலில் வந்த குதிரைத் திரள்களும், கரியமிளகுப் பொதிகளும், வடமலையிற் பிறந்த ஒளிமிக்க நன்மணிகளும், பொதியின் மலையிலே பிறந்த சந்தனமும், தென்றிசைக் கடலிற் பிறந்த பவளமும், கங்கையாறு பாயும் வடநாட்டிலுண்டாகிய விளைபொருள்களும், காவிரிநதி பாயும் சோழ நாட்டில் விளைந்த நெல் முதலியனவும், ஈழநாட்டிலிருந்து வந்த நுகர் பொருள்களும், கீழ்நாடாகிய கடாரத்திலுண்டாகிய பொருள்களும், சீன தேயம் முதலியவற்றிலிருந்து வந்த பச்சைக் கர்ப்பூரம் முதலிய அரும்பொருள்களும் இப்புகார்த் துறை முகத்தில் மலைபோற் குவிந்திருந்த தோற்றத்தைப் பட்டினப் பாலையில், நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்துங் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின் (பட்டினப்பாலை, 185 - 193) என உருத்திரங்கண்ணனார் உள்ளவாறு விரித்துக் கூறி யுள்ளார். கடல் வாணிகத்தால் இந்நகரத்தில் வந்து குவிந்துள்ள செல்வ வளத்தை நேரிற் கண்டுணர்ந்த சேர முனிவராகிய இளங்கோஅடிகள். முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும் வழங்கத் தவா வளத்த தாகி அரும்பொருள் தரூஉம் விருந்திற் றேஎம் ஒருங்கு தொக்கன்ன உடைப்பெரும் பண்டம் (சிலப். மனையறம். 3-6) என இவற்றைச் சிறப்பித்துப் பாராட்டுகின்றனர். பண்டை நாளில் இந்நகரத்தில் வாழ்ந்த வணிகப் பெருமக்கள் தம்முள் ஒற்றுமையுடைய வராய்க் கடல் கடந்து கடாரம், சாவகம், சீனம் முதலிய புறநாடுகளுக்குச் சென்று வாணிகம் புரிந்து பொருளீட்டியதுடன் தாம் சென்று தங்கிய புறநாடுகளிலும் தமது தாய்நாடாகிய தமிழ்நாட்டிலும் நல்லறங்கள் பலவற்றை விரும்பிச் செய்து புகழுடன் வாழ்ந்தமை பண்டை இலக்கியங் களாலும் அவர்கள் அறஞ்செய்த ஊர்களிற் காணப்படும் அறநிலையங்கள் கல்வெட்டுகள் முதலிய வரலாற்றுச் சான்று களாலும் நன்கு தெளியப் படும். வேந்தர்களும் புலவர்களும் இந்நகரத்தில் வீற்றிருந்து செங்கோலோச்சிய பெருவேந்தர் களுள், நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, கரிகால்வளவன், சேட்சென்னி நலங்கிள்ளி, கிள்ளிவளவன் என்போர் குறிப்பிடத் தக்கவராவர். இவர்களது ஆட்சித் திறத்தையும் பிற நலங்களையும், பத்துப்பாட்டு, புறநானூறு முதலான பழந் தமிழிலக்கியங்களால் நன்குணரலாம். கடைச்சங்க காலத்தில் இந்நகரத்தில் தோன்றிச் செந்தமிழ் வளர்த்த பெரும்புலவர்கள். காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார், காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார். காவிரிப்பூம்பட்டினத்துச்சேந்தன் கண்ணனார், காவிரிப்பூம்பட்டினத்துச்செங்கண்ணனார், காவிரிப்பூம்பட்டினத்துப்பொன்வாணிகனார்மகனார் நப்பூதனார் என்போராவர். இவர்களுள் நப்பூதனார் என்பார் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய முல்லைப்பாட்டு என்னும் அழகிய பனுவலைப் பாடிய புலமைச் செல்வராவர். கரிகால்வளவனது வெற்றித் திறத்தையும் கொடைச் சிறப்பையும் அவன் அரசு வீற்றிருக்கும் திருவுடை நகராகிய பூம்புகாரின் பெருமை யினையும் பாராட்டுமுகமாகப் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பட்டினப்பாலையைப் பாடி இந்நகரத்தில் கரிகால் வளவன் பேரவையில் அதனை அரங்கேற்றிப் பதினாறுநூறாயிரம் பொன்னுடன் பட்டிமண்டபத்தையும் பரிசிலாகப்பெற்ற பெரும் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாராவர். இவரால் பட்டினப்பாலையிற் சிறப்பிக்கப் பெற்ற பெருமை வாய்ந்தது, காவிரிப்பூம்பட்டினமாதலால் பட்டினம் என்ற பெயர் இந்நகருக்கே தொன்று தொட்டு வழங்குவதாயிற்று. சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிற் பட்டினப்பெருவழி எனக் குறிக்கப்பட்டது, காவிரிப்பூம் பட்டினத்திற்குச் செல்லும் பெருவழியே யாகும். கரிகால்வளவனால் ஆதரிக்கப்பெற்ற இப்பெரும்புலவர் அவனுக்குப் பின் நெடுங்காலம் உடல்நலத் துடன் வாழ்ந்திருந்தார்; பிற்காலத்தில் காஞ்சியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சோழர்கிளையினனாகிய தொண்டை மான் இளந்திரையனது பெருமையினையும் கொடைத் திறத்தையும் பாராட்டு முகமாகப் பெரும்பாணாற்றுப்படை என்ற பாடலைப் பாடியுள்ளார். கரிகால்வளவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பொரு நராற்றுப்படை என்ற பனுவலைப் பாடிய முடத்தாமக் கண்ணியார், அவ்வேந்தர் பெருமானது வீரத்தினைப் புகழ்ந்து போற்றிய வெண்ணிக் குயத்தியார், கருங்குளவாதனார் என்ற புலவர் பெருமக்களும், அம்மன்னன் அரசு வீற்றிருந்த இப்புகார் நகரத்தில் தங்கியிருந்து தமிழ் வளர்த்த சான்றோர் எனக் கொள்ளுதல் பொருந்தும். கற்புடைமகளிர் கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன் கணவனை உணவு முதலியவற்றால் பேணி, தம் இருவர் வாழ்விலும் நற்புகழ் பெருக நற்குண நற்செய்கைகளில் உறுதியுடையவளாய் நடப்பவளே பெண் என்றும், தனக்குத் தெய்வமாவான் தன் கணவனே என எண்ணி வைகறையில் துயிலெழும் பொழுதே அவனைத் தொழுதுகொண்டு எழுமியல் புடைய பெண், உலக நன்மை கருதி மேகத்தை நோக்கி மழை பெய்க என்று சொன்ன அளவில் அது பொழியும் என்றும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் கற்புடைப் பெண்டிரது சிறப்பைப் புலப்படுத்தியுள்ளார். இவ்வாறு தன் கற்பின் திறத்தால் தெய்வத்தையும் ஏவல்கொள்ளவல்ல பத்தினிப் பெண்டிர் வாழும் நாடு பருவகாலந் தோறும் மழையினைப் பெற்றுக் குறையாத விளைவை யுடையதாய்த் தன்னை ஆளும் வேந்தர்க்கு மென்மேலும் வெற்றியைத் தந்து விளங்கும் என்பர் பெரியோர். தமிழின் தவக்கொழுந்து கண்ணகி இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன் இப்புகார் நகரத்திலே வாழ்ந்த மாநாய்கன் என்னும் பெருங்குடி வணிகனுக்கு மகளாய்த் தோன்றி, மாசாத்துவான் மகன் கோவலன் என்பானுக்கு வாழ்க்கைத் துணைவியாய் அமைந்த கண்ணகி என்னும் கற்புடை நங்கை, தன் துயர் காணாது கணவனோடு மதுரைக்குச் சென்ற நிலையில், அங்கே தனது காற் சிலம்பினை விற்கச் சென்ற தன் கணவன் வஞ்சனையால் கொல்லப் பட்டது கேட்டுச் சீறியெழுந்து பாண்டியனது பேரவையில் தன் கணவன் கள்வனல்லன் என மெய்பித்ததும், தன் கற்பின் திறத்தால் மதுரை மூதூரைத் தீக்கிரை யாக்கியதும், பின்னர் சேரநாட டைந்து வேங்கை மர நீழலில் இருந்தபொழுது தன் கணவனொடு வானோர் வந்தழைக்க விண்ணக மாந்தர்க்கு விருந்தாய்ப் புக்கதும், அதனைக் கேட்டறிந்த சேரன்செங்குட்டுவன் என்னும் வேந்தர் பெருமான் தனது நாட்டிற் புகுந்த பத்தினிக் கடவுளாகிய அவ்வன்னைக்கு இமயத்திலிருந்து கற்கொணர்ந்து திருவுருவமைத்து வஞ்சிமா நகரிற் கோயில் கட்டிக் கடவுள் மங்கலஞ் செய்ததும், அவ்விழாவிற்கு வந்திருந்த மன்னர்களாகிய குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும், கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் கண்ணகி தேவியை வேண்டித் தத்தம் நாட்டில் கோயில் கட்டி வழிபாடியற்றியதும், இவற்றையெல்லாம் நேரிலுணர்ந்த சேர முனிவ ராகிய இளங்கோவடிகள் பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குச் செந்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் என்னும் செஞ்சொற் கோயில் அமைத்து வழிபட்ட திறம் ஆகியவை தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த பழைய வரலாற்று நிகழ்ச்சிகளேயாகும். இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணி (சிலப். வேட்டுவவரி, 47-50) எனக் கொற்றவையாகிய தெய்வமும், என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் தனக்கு நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித் தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி இன்துணை மகளிர்க் கின்றி யமையாக் கற்புக்கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால் (சிலப். அடைக்கலக், 137-144) எனக் கவுந்தியடிகளாகிய தவச் செல்வியும் உளமுவந்து பாராட்டிப் போற்றிய கண்ணகி என்னும் கற்புடைத் தெய்வம் தமிழ்நாடு செய்த தவப்பேறாக இப்புகார் நகரத்திற் பிறந்தமை யொன்றே இம்மூதூரின் பழம் பெருமைக்குச் சிறந்த சான்றாகும். இவ்வாறு கற்புடைத் தெய்வமாகப் போற்றப்படும் கண்ணகி இந்நகரில் தோன்றுவதற்கு முன்னரே தம் கற்பின் திறத்தால் நாட்டினை உய்விக்கவல்ல பத்தினிப் பெண்டிர் பலர் இப்புகார் நகரத்திற் பிறந்து சிறப்புடைய நல்வாழ்வு நடத்தியுள்ளார்கள். பாண்டியன் பேரவையில் வழக்குரைத்து வென்ற கண்ணகியார் பாண்டியனோடு உயிர் துறக்கும் நிலையிலுள்ள கோப்பெருந்தேவியை நோக்கித் தான் பிறந்த ஊராகிய புகார் நகரத்தில் வாழ்ந்த பத்தினிப் பெண்டிர் எழுருவடைய வரலாறுகளைத் தொகுத்துக் கூறி, மட்டார் குழலார் பிறந்த அப்பதியிற் பிறந்த யானும் நிறையுடையேன் என்பது உண்மையானால் மதுரையை அரசோடு ஒழிப்பேன் என வஞ்சினங் கூறுவதாக அமைந்தது சிலப்பதிகாரத்திலுள்ள வஞ்சினமாலை என்ற கலிவெண்பாட்டாகும். கண்ணகியாற் பாராட்டப் பெற்ற கற்புடை மகளிர் எழுவர் இப்புகார் நரகத்திற் பிறந்து வாழ்ந்தார்கள் என்ற இவ்வரலாறு இந்நகரத்துக்கேயன்றி இந்த நாடு முழுவதற்கும் சிறப்பளிப்பதாகும். கலைச்செல்வி மாதவி நாடகக் கணிகை மரபிற்பிறந்து ஆடல் பாடல் அழகு மூன்றும் ஒருங்கே வாய்க்கப்பெற்று நாடக நன்னூலை நன்கு பயின்று மன்னன் பேரவையிலே ஆடிக்காட்டி ஆயிரத்தெண் கழஞ்சு நிறையுள்ள பசும்பொன்மாலையைப் பரிசாகப் பெற்ற கலைச் செல்வியாகிய மாதவி, தன் காதற் கொழுநனாகிய கோவலன் மதுரையிற் கொலையுண்டமை கேட்டு ஆற்றாது இவ்வுலக இன்பங்களை வெறுத்து அறவண அடிகள் அறவுரைப்படி புத்த சமயத்தைப் பின் பற்றித் துறவடைந்ததும், கோவலனுக்கு மகளாய் அவள் வயிற்றிற் பிறந்த மணிமேகலை தன் இளம் பருவத்திலேயே துறவுபெற்றுத் தவக்கோலமுடைய வளாய்ப் புகார் நகரத்தும், இலங்கையிலும், வஞ்சி நகரத்திலும் சென்று புத்தசமய அறவுரைகளை எடுத்துரைத்து ஏழைகளின் பசிதீர அமுதளித்துக் காஞ்சி நகரத்தை யடைந்து அங்கே பேரின்ப நிலையாகிய வீடுபேறெய்தியதும் ஆகிய வரலாற்றுச் செய்திகள் கற்புடைப் பெண்டிர் பலர் வாழ்ந்த இப்புகார் நகரத்தின் உயர்ந்த மக்கட்பண்பினை நன்கு புலப்படுத்து வனவாகும். பொதுவறு சிறப்பிற் புகார் முடியுடை வேந்தர் மூவருள்ளும் தொடி விளங்கு தடக்கைச் சோழர்குலத்துதித்த பெரு வேந்தர்களுடைய செங்கோல் முறையாகிய அறநெறியும், இமயம்வரை படை யெடுத்துச் சென்று அம்மலைமீது புலியிலச்சினையைப் பொறித்த அன்னோர்தம் பெருமைமிக்க வீரச் செயலும், செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்கவல்ல அவர்தம் பேராற்றலும் அவர்கீழ் வாழ்ந்த சோழநாட்டுக் குடிமக்களது நற்பண்புகளும் அன்னோரது உலையா உழைப்பினாலும் இயற்கை வளத்தாலும் அந்நாட்டிலுளவாம் உணவுப் பெருக்கமும், அந்நாட்டை வளப்படுத்தும் தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும், மக்கள் மேற்கொண்டு செய்த பல்வகைத் தொழில் நலமும், வாணிக வளர்ச்சியும், இயல் இசை நாடகம் சிற்பம் ஓவியம் முதலிய கலைத் திறங்களும் இவையனைத்தும் ஒருங்கே கண்டு களித்தற்குரிய நிலைக்களமாய்த் திகழ்ந்த காவிரிப் பூம்பட்டினமாகிய இம்மூதூர், தமிழ்மக்களது தீவினைப் பயனால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிறப்குதியில் ஏற்பட்ட கடற்பெருக்கால் சிதை வுற்றழிந்தமை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை யென்னும் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளும் மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது அவ்விரு காப்பியங்களின் முகப்பில் அமைந்த பதிகங்களால் நன்கு விளங்கும். எனவே காவிரிப்பூம்பட்டினம் கடல்கோளாற் சிதைவுற்றமை சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகட்குத் தெளிவாகத் தெரிந்த செய்தியேயாதல் வேண்டும். சேரன் செங்குட்டுவனும் அவன் தம்பியாகிய இளங்கோவடிகளும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் நற்சோணை வயிற்றிற் பிறந்த சகோதரர் களாவர். தம் இளம் பருவத்திலேயே தன் தாய்ப்பாட்டன் ஆட்சிபுரிந்த சோழ நாட்டின் தலைநகரமாகிய இப்புகார் நகரத்திற் பல்வேறு இடங்களையும் சென்று கண்டு இந்நகரப் பெருமக்களுடன் நெருங்கிப் பழகியவர் இளங்கோ அடிகள். புலமைச் செல்வராகிய அம்முனிவர் இறைவன் எழுந் தருளிய இமயமலை, அகத்திய முனிவர் இருப்பிடமாகிய பொதியமலை என்னுந் தெய்வத் தலங்களுடன் தவச் செல்வர்கள் வாழும் இப்புகார் நகரத்தையும் இணைத்துப்போற்று முகத்தால் இப்புகார் நகரம் நெடுங்காலம் அழியாது நிலை பெறுக என வாழ்த்துவதல்லது இந் நகரத்திற்கு ஒடுக்கங்கூறுதல் ஒண்ணாது எனச் சிலப்பதிகார நூன்முகத்தே மங்கலவாழ்த்துப் பாடலில் தம் மனக் கருத்தைப் புலப்படுத்தியுள்ளார். ஆங்கு, பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும் நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே (சிலப். மங்கல, 13-19) எனவரும் மங்கல வாழ்த்துப் பகுதியில் செந்தமிழ்ப் புலமை நலம் வாய்ந்த முனிவராகிய அவ்வடிகளாற் போற்றி வாழ்த்தப் பெற்ற இப்புகார் நகரம், கடல் கோள் முதலிய இயற்கை மாற்றங்களால் மேலும் சிதைவுறாது அதன் ஒரு பகுதியை யேனும் நம்மனோர் கண்டு மகிழும் நிலையில் நிலை பெற்றிருப்பது, நம் தமிழ் மக்களது தவப்பேறேயாகும். கடல் கோளுக்குத் தப்பிய நிலையில் எஞ்சியுள்ள இந்நகரப் பகுதியும் பிற்காலத்தில் ஏற்பட்ட போர் முதலிய அரசியல் மாறுபாடுகளாலும் உரிமையிழந்த நிலையில் நாட்டுமக்களது விழிப்பின்மையாலும் தன்கண் அமைந்த அரண்மனைகளும் கோயில்களும் மாடமாளிகைகளும் சிதைந்தொழியப் பிற்காலத்தில் தனது தொன்மையுருவம் மாறிப் பொலிவிழந்து காணப்படுவதில் வியப்பொன்றுமில்லை. புகாரிலமைந்த பௌத்தப்பள்ளி (கி.பி. 4-ஆம் நூற்றாண்டு) கி.பி. நான்காம் நூற்றாண்டில் சோழநாட்டுத் தலை நகராகிய உறையூரிற் பிறந்து வளர்ந்த புத்ததத்தன் என்பான், இருமுறை இலங்கைக்குச் சென்று பௌத்த சமய நூல்களை நன்கு பயின்று பின்னர்ச் சோழ நாட்டிற்குத் திரும்பி வந்து அபிதம்மாவதாரம், விநயவிநிச்சயம் என்ற இரு நூல்களையும் பாலி மொழியில் எழுதி வெளியிட்டனன். அவற்றுள் அபிதம்மா வதாரம் என்ற நூலை அரண்மனைகளும் பூஞ்சோலைகளும் செல்வம் நிறைந்த வணிகர் களும் உள்ள காவிரிப்பூம் பட்டினத்தில் கணதாசனால் அமைக்கப் பட்டிருந்த பௌத்தப் பள்ளியில் தான் தங்கியிருந்த பொழுது சுமதி யென்ற மாணவன் வேண்டிக் கொண்ட வாறு எழுதி முடித்த செய்தியை அந்நூலின் இறுதியிற் புத்ததத்தன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 1இக்குறிப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் காவிரிப் பூம்பட்டின மாகிய இம்மூதூர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் வளமார்ந்த சோலைகளையும் சிறந்த அரண்மனை களையும் செல்வப் பெருக்க முடைய வணிகர் குழுவினையும் புத்தவி காரம் முதலிய சமய நிலையங்களையும் தன்பாற்கொண்ட திருவுடை நகர மாகத் திகழ்ந்த செய்தி நன்கு புலனாம். தேவார ஆசிரியர்கள் (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு) கி.பி. ஏழாம் நூற்றாண்டில் செந்தமிழும் சிவநெறியும் வளரத் திருவவதாரஞ் செய்தருளிய அருளாசிரியர்களாகிய திருஞான சம்பந்தப் பிள்ளையாரும் திருநாவுக்கரசடிகளாரும் இப்புகார் நகரப் பகுதியில் அமைந்த பல்லவனீச்சரம், திருச்சாய்க்காடு, திருவலம்புரம், திருக்கலிக் காமூர் முதலிய திருக்கோயில்களை யிறைஞ்சித் தேவாரத் திருப்பதிகங்களாகிய பாமாலை களைப் பாடிப் போற்றியுள்ளார்கள். பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரம் பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரம் காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெல்லா முணரப் பாரரக்கம் பயில்புகாரிற் பல்லவனீச்சரம் எனவரும் ஆளுடைய பிள்ளையார் திருப்பாடற் றொடர்களால் இப்புகார் நகரத்தில் உயர்ந்தோர் உண்மையும் இந் நகர்க்கு ஒடுக்கங் கூறாமையும் போற்றப்படுதல் காணலாம். போரார் வேற்கண்மாதர் மைந்தர் புக்கிசை பாடலினாற் பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே எனவும், தண்டுடுக்கை தாளம்வீணை சாரநடம் பயில்வார் பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே எனவும் வரும் தேவாரத் தொடர்கள் சிலப்பதிகார காலத்து இசை நாடக வளர்ச்சியையொட்டித் திருஞானசம்பந்தப் பிள்ளையார் காலத்தும் இந்த நகரத்தில் இசையும் நாடகமும் ஆகிய கலைத் துறைகள் வளர்க்கப்பெற்ற திறத்தை நன்கு அறிவுறுத்தல் காணலாம். புகாரில் பிறந்த அருட்செல்வர்கள் தேவார ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்தை யொட்டி இப்புகார் நகரத்தில் அருட்செல்வர் பலர் தோன்றி இறைவனது திருவருட்டிறத்தை உலக மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராய், இல்லையே யென்னாத இயற்பகைக்கும் அடியேன் எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளாற் போற்றப் பெற்ற இயற்பகை நாயனார் என்னும் பெரியார் இப்புகார் நகரத்திலே செல்வம் நிறைந்த வணிகர் குடியிற் பிறந்து சிவனடியார் வேண்டுவன வெல்லாம் இல்லையென்னாதளித்துத் தம் வாழ்க்கைத்துணைவியாருடன் சிவபெருமானது திருவடி நீழலெய்தி இன்புற்ற வரலாறு திருத் தொண்டர் புராணமாகிய பெரிய புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இப்புகார் நகரத்தில் செல்வம் நிறைந்த வணிகர் குடியிற்பிறந்த திருவெண்காடர் என்னும் பெரியார் இறைவனது திருவருட்டிறத்தினை உள்ளவாறு உணர்ந்து, பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆருந்துறக்கை யரிதரிது எனச் சான்றோர் வியந்து போற்றும் வண்ணம் தம்பாலுள்ள பெருஞ் செல்வத்தைத் துறந்து பதினோராந் திருமுறையிலுள்ள கோயில் நான்மணிமாலை முதலிய அருட்பனுவல்களைப் பாடி இறைவனது திருவருட்பண்பையும், அவனுக்கு ஆட்பட்ட மெய்யடியார்களது பெருமையினையும் புலப்படுத்தி இறைவன் திருவடிநீழலிற் கலந்த வரலாறு யாவரும் அறிந்ததேயாகும். கல்வெட்டுக் குறிப்புகள் கி.பி.பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு முடிய அமைந்த பிற்காலச் சோழராட்சியிலும் இந்நகரத்தின் பழம் பெருமை ஓரளவு பேணப்பெற்று வந்தமையறியலாம். இந்நகரிற் பிறந்த வணிகர்கள் மணிக் கிராமத்தார்என்ற பெயருடைய ஒரு குழுவினராய்த் தம்முள் ஒன்றுகூடிக் கடல் கடந்து சென்று கீழ்த் திசையிலுள்ள கடாரம், சாவகம் முதலிய புறநாடுகளில் வாணிகம் புரிந்து பொருளீட்டி அறம்பல செய்து வந்தமை, அப் புறநாடுகளிலும் நம்நாட்டு ஊர்களிலும் காணப்படும் கல்வெட்டு முதலிய வரலாற்றுச் சான்றுகளாலும் இந்நகரத்தில் அவ்வாணிகக் குழுவினர் வாழ்ந்த இடம் மணிக்கிராமம் என்ற பெயருடன் இந்நாளிலும் வழங்கப் பெறுதலாலும் நன்கு துணியப்படும். கடைச்சங்க காலத்தில் புகார் நாட்டின் தலையூராக விளங்கிய காவிரிப்பூம் பட்டினம் மூன்றாங் குலோத்துங்க சோழன் முதலிய சோழ மன்னர் ஆட்சிக் காலத்தில் இராசாதிராச வளநாட்டு நாங்கூர் நாட்டுக் காவிரிப்பூம்பட்டினம் எனக் கல்வெட்டுகளிற் குறிக்கப் பெற்றுள்ளது. தென்னிந்திய கல்வெட்டாராய்ச்சித்துறையினரால் 1911-ஆம் ஆண்டில் இப்புகார் நகரத்திலுள்ள திருச்சாய்க்காட்டுத் திருக்கோயிலில் பதினொரு கல்வெட்டுக்களும் பல்லவனீச்சரத் திருக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்களும் படியெடுக்கப் பெற்றுள்ளன. திருச்சாய்க்காடு 1. எண் 271. விக்கிரமசோழனது ஆட்சியில் மூன்றாம் ஆண்டில் சாயாவனக்கோயிலிற் பொறிக்கப்பெற்றுள்ள கல்வெட்டு சிதைந் துள்ளது. அதன் கண் திருச்சாய்க்காடுடை யார் கங்கைகொண்ட சோழ அரையன் என்ற தொடர்கள் மட்டும் தெளிவாகக் காணப்படுகின்றன. 2. எண். 269. செய்யுள் வடிவிலுள்ள இக்கல்வெட்டு விக்கிரம சோழனது ஆட்சியில் ஐந்தாம் ஆண்டில் பொறிக்கப் பெற்றதாகும். இதன் கண் சாய்க்காடு புகார் நகரத்துச்சாயை எனக் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். விக்கிரம சோழனுடைய அமைச்சருள் ஒருவனாகிய முகுந்தையர் அதிபதி திருச்சிற்றம் பலவன் என்பான் திருச்சாய்க்காட்டில் ஒரு திருமடம் அமைத்து அந்தணர் ஐம்பதின்மர்க்கு உணவளிப்பதற்கு நிலம் வழங்கிய செய்தியைக் குறிப்பது இக்கல் வெட்டாகும். 3. எண். 367. விக்கிரம சோழனது ஆட்சியில் ஒன்பதாம் ஆண்டில் வரையப்பெற்ற இக் கல்வெட்டில் அவனது மெய்க்கீர்த்தி மட்டும் சிதையாதுளது. 4. எண். 270. செய்யுள் வடிவில் அமைந்த இக் கல்வெட்டு விக்கிரமசோழன் காலத்தில் பொறிக்கப்பட்டதாக இருக்கலாம். குணாகரன் என்பான் சாயாவன நாயகர்க்கு வழிபாட்டுப் புறமாக நிலமளித்த செய்தியைத் தெரிவிப்பது இச்செய்யுளாகும். 5. எண். 265. மூன்றாங் குலோத்துங்கன் ஆட்சியில் ஐந்தாம் ஆண்டில் வரையப்பெற்ற இக்கல்வெட்டின் கற்கள் முறை பிறழ்ந்து அடுக்கப் பட்டுள்ளமையால் இதில் குறித்த செய்தியைப் புரிந்துகொள்ள முடிய வில்லை. இதன்கண் ராஜாதி ராஜ வளநாட்டு நாங்கூர் நாட்டுக் காவிரிப் பூம்பட்டினம் என்ற தொடர் காணப்படுகிறது. 6. எண். 264. இவ்வேந்தனது ஆட்சியில் 18ஆம் ஆண்டில் வரையப் பட்ட இக்கல்வெட்டில் திருச்சாய்க்காட்டுத் திருக்கோயில் நிலத்தைப் பயிரிட்டு வந்த தேவதானக் குடிகள் இம்மன்னனது ஆட்சியின் 17-ம் ஆண்டு முடியவுள்ள நிலவரிப் பாக்கியைக் கொடாமையால் 18-ஆம் ஆண்டில் வாணகோ வரையன் தெரிவித்துக் கொண்டவாறு குடியுரிமையை இக்கோயிலுக்கே மாற்றியமைத்ததாக இராசநாராயண மூவேந்த வேளான் என்ற திருமந்திரவோலை அதிகாரியின் கையெழுத் திட்ட ஆணை வந்தமையைத் தெரிவிப்பது இக்கல்வெட்டாகும். 7. எண். 268. இம்மன்னனது ஆட்சியில் 27-ஆம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற இக்கல்வெட்டில் சாய்க்காட்டுத் திருக்கோயிலில் உச்சிக்காலத்தில் அந்தணர்க்கு உணவளிப்பதற்கு நிலம் வழங்கிய செய்தி குறிக்கப் பட்டுள்ளது. 8. எண். 262. இம்மன்னனது ஆட்சியில் 35-ஆம் ஆண்டில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டில் காலிங்கராயன் என்பான் திருச்சாய்க்காட்டுத் திருக் கோயிலுக்கு ஆண்டுதோறும் கிடைக்கக் கூடிய நெல்லில் நாள் வழிபாட்டிற்கும் திருப் பணிக்கும் பிற செலவுகளுக்கும் இவ்வளவு இவ்வளவு கொடுக்கவேண்டுமென அனுப்பிய உத்தரவு இடம் பெற்றுள்ளது. 9. எண். 266. மூன்றாங்குலோத்துங்கனது ஆட்சியில் 35-ஆம் ஆண்டில் வரையப்பெற்ற இக்கல்வெட்டு சிதைந்து காணப் படுகிறது. இது, திருச்சாய்க்காட்டு வேளானாகிய உத்திராபதி நாயகன் என்பான் சாயாவன நாழியால் நாள் ஒன்றுக்கு எட்டு நாழி மிளகு கோயிலுக்கு அளந்து வருவதற்கு அவனிடம் குத்தகையாகக் கோயிலார் நிலமும் வீடும் அளித்த செய்தியைக் கூறுவதாகும். 10. எண். 263. மூன்றாம் இராசராச சோழனது ஆட்சியில் 5-ம் ஆண்டிற் பொறிக்கப் பெற்ற இக்கல்வெட்டு இராசாதிராச வளநாட்டுத் திருவிந்தளூர் நாட்டு மருதமங்கலமுடையான் மலைமேல் மருந்து ஆகிய வானவன் விழுப்பரையன் என்பான் பெரிய தேவரது (மூன்றாங் குலோத்துங்கனது) ஆட்சியில் ஏழாம் ஆண்டில் திருச்சாய்க்காட்டுக் கோயிலுக்கு 1½ நுந்தா விளக்கு எரிப்பதற்கென நிலம் அளித்தவன், அதனோடு மேலும் 1½ விளக்கு எரிப்பதற்கென நிலம் விட்ட செய்தியைக் கூறுவதாகும். 11. எண். 261. மூன்றாம் இராசராச சோழன் தனது ஆட்சியின் எட்டாம் ஆண்டில் பிடாரன் நாயகன் வேண்டிக் கொண்டவாறு பராதீனப்பட்டுக் கிடந்த தேவதான நிலங்களை வாங்கி இராசராசன் திருநந்தவனம் அமைக்கும்படி கூறிய கட்டளையினைத் திருமந்திர வோலை பண்டித சோழ மூவேந்த வேளாண் அறிவித்த உத்தரவாக அமைந்தது இக்கல்வெட்டு. பல்லவனீச்சரம் 1. எண். 272. முதல்மாற வர்மன் சுந்தர பாண்டியனது ஆட்சியில் 17-ஆம் ஆண்டிற் பல்லவனீச்சரத் திருக்கோயிலிற் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டு சிதைந்துள்ளது. இது கோயிலுக்கு நிலம் அளித்த செய்தியைக் கூறுவதாகும். 2. எண். 273. பிற்காலத்தில் வரையப்பெற்ற இக்கல்வெட்டு சாலிவாகன சகம் கலி 4775 ஜய வருடம் ராயரவுத்தமிண்ட நாயனார் முதலியோர், திருச்சாய்க்காட்டூர்ச் சீமை காவிரிப் பூம்பட்டினம் மாகாணம் காவிரிப்பூம்பட்டினம் பல்லவனீச்சுரர் கோயிலுக்கு வழிபாட்டுக்கும், திருவிழாவிற்கும், திருப்பணிக்கும் ஆக நிலம் வழங்கிய செய்தியைத் தெரிவிப்பதாகும்.  முடிவுரை இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் சோழர் தலைநகராய் விளங்கிய இக்காவிரிப்பூம்பட்டினத்தின் தொன்மையும் பெருமையும் ஒருவாறு சுருக்கமாக விளக்கப் பெற்றன. பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பண்டைத் தமிழ் நூல்களிலும் பிறவற்றிலும் இப்புகார் நகரத்தின் அமைப்பினைப்பற்றிய பலவகைக் குறிப்புக்களையும் இவ்வூரில் நெடுங்காலமாக வழங்கி வரும் செவிவழிச் செய்திகளையும் இக்காலத்தில் வழங்கும் இடப்பெயர் முதலிய வரலாற்றுக் குறிப்புக் களையும் அடிப்படையாகக் கொண்டு காவிரிப்பூம்பட்டினமாகிய இப்பழம் பதியிலும் இதனைச்சூழ அமைந்த ஊர்களிலும் வரலாற்றுப் பழமை யுடையனவாகத் தென்படும் குறிப்பமைந்த சில இடங்களைப் புதை பொருளா ராய்ச்சித் துறையின் துணைகொண்டு அகழ்ந்து ஆராய்ந்தால் இந்நகரத்தின் தொன்மை யமைப்பினையும் பிற சிறப்புக்களையும் இக்காலத்தார் உணர்ந்து மகிழ்வதற்குரிய பலவுண்மைகள் வெளியாகும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. நம் நாட்டின் வரலாற்றையுணர்ந்து கொள்ளுதற்கு இன்றிமையாத இக்கலைப் பணியினை சென்னையர சினரும் இந்திய அரசினரும் மேற்கொண்டு நிறைவேற்றும்படி தூண்டுதல் தமிழ் மக்களின் நீங்காக் கடமையாகும்.  பிற்சேர்க்கை I கழாஅர் முன்றுறை கழாஅர் முன்றுறை என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் மேற்கே அமைந்த காவிரித்துறையாகும். இப்பெயர் இக்காலத்தில் கழுதகாரன் துறையென மருவி வழங்குகிறது. புகார் நகர மக்கள் நீராட்டு விழாவினைச் சிறப்புற நடத்தும் வாய்ப் புடையதாக அமைந்தது இக்கழா அர்த் துறையேயாகும். புகார் நகர மக்கள் இத்துறையில் நீராடச் செல்லுதற்கென அமைந்த திருமஞ்சனப் பெருவழியைத் தண்பதப் பெருவழி எனக் கூறுவர் இளங்கோவடிகள். காவிரிக்குக் கரையெடுத்த கரிகால் வளவன் முதன் முதல் புதுப் புனலாட்டு விழாவை இத்துறையி லேயே நிகழ்த்தினான் என்றும், இவன் மகள் ஆதிமந்தியை மணந்த ஆட்டனத்தி என்னும் சேர அரச குமாரன் இப்புதுப் புனலாட்டு விழாவிற் கலந்துகொண்டு காவிரியில் நீராடிய பொழுது காவிரி வெள்ளத்தால் இழுக்கப்பட்டுக் கடலை யடைந்தான் என்றும் இத்துன்ப நிலையிற் காதலனைக் காணாத ஆதிமந்தி அழுதரற்றிக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்து சென்றாள் என்றும் அந்நிலையில் அவளது பெருந்துயரைக் கண்டு உளம் இரங்கிய மருதி யென்னும் நங்கை ஆட்டனத்தியை ஆதிமந்திக்குக் காட்டி விட்டுத் தான் நெஞ்சத் துணிவுடன் கடலிற் குதித்து உயிர் துறந்து புகழ் பெற்றாளென்றும் வழங்கும் வரலாறு சங்கச் செய்யுட்களிற் பல இடங்களிலும் பாராட்டிப் பேசப்பெற்றுள்ளது. கல்லா யானை கடிபுனல் கற்றென மலிபுனல் பொருத மருதோங்கு படப்பை ஒலிகதிர்க் கழனிக் கழாஅர் முன்றுறைக் கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத் தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரளக் கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று இரும்பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப் புனனயந்தாடும் அத்தி அணிநயந்து காவிரி கொண்டொளித் தாங்கு மன்னோ- - பாணர் : அகம். 376 முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண் கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும் ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின் ஆட்டனத்தி நலனயந் துரைஇத் தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின் மாதிரந் தழைஇ மதிமருண்டலந்த ஆதிமந்தி காதலற் காட்டிப் படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர் சென்மோ வாழி தோழி- - பரணர் : அகம். 222. என்பன அகநானூற்றுப் பாடல்களாகும். காவிரி வெள்ளத்தால் இழுக்கப்பட்டுக் கடலிற்புக்க ஆட்டனத்தியை ஆதிமந்திக்குக் காட்டிக் கடலிற்புக்கு மறைந்த மருதி யென்னும் மாண்புடை நங்கையின் தன்னலமற்ற தீரச் செயலை வெளிப்படுத்தும் நிலையில் அமைந்த இடமாக இக்காலத்து விளங்குவது மருதம்பள்ளம் என்ற பகுதியாகும். மருதிப்பள்ளம் என்ற பெயரே பிற்காலத்தில் மருதம்பள்ளம் என மருவி வழங்குகிறது. இப்புகார் நகரில் சிவபெருமானுக்குரியனவாக அமைந்த பல திருக்கோயில்களில் ஆலமுற்றம் என்பதும் ஒன்றாகும். முக்கட்செல்வர் எழுந்தருளிய ஆலமுற்றம் என்ற இக்கோயிலைப் பற்றி அகம் 181ல் பரணர் குறித்துள்ளமை காணலாம். பிற்சேர்க்கை II கடற்கரையில் கோவலன் பாடியது 1. கரியமலர் நெடுங்கட் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக் காட்டி அரியசூள் பொய்த்தார் அறனிலரென் றேழையம்யாங் கறிகோ மைய விரிகதிர் வெண்மதியு மீன்கணமு மாமென்றே விளங்கும் வெள்ளைப் புரிவளையு முத்துங்கண் டாம்பல் பொதியவிழ்க்கும் புகாரே எம்மூர். 5 2. காதலராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார் ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப் போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர். 6 3. மோது முதுதிரையான் மொத்துண்டு போந்தசைந்த முரல்வாய்ச் சங்கம் மாதர் வரிமணல்மேல் வண்டல் உழுதழிப்ப மாழ்கி யைய கோதை பரிந்தசைய மெல்விரலாற் கொண்டோச்சும் குவளை மாலைப் போது சிறங்கணிப்பப் போவார்கண் போகாப் புகாரே எம்மூர். 7 - சிலப், கானல்வரி. கடற்கரையில் மாதவி பாடியது 4. தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும் வாங்குநீர் முத்தென்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய வீங்கோதந் தந்து விளங்கொளிய வெண்முத்தம் விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர். 28 5. மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங் கறிகோம் ஐய நிறைமதியு மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த பொறைமலிபூங் கொம்பேற வண்டாம்ப லூதும் புகாரே எம்மூர். 29 உண்டாரை வெல்நறா ஊணொளியாப் பாக்கத்துள் உறையொன் றின்றித் தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதியாங் கறிகோம் ஐய வண்டால் திறையழிப்பக் கையான் மணல்முகந்து மதிமேல் நீண்ட புண்தோய்வேல் நீர்மல்க மாதர் கடல்தூர்க்கும் புகாரே எம்மூர். 30 - சிலப், கானல்வரி. உள்வரி வாழ்த்து 7. பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணான்டான் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால். சிலப். ஆய்ச்சியர்குரவை. 8. எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகாரென் பதியே. சிலப். வழக்குரை 51-56. 9. காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும் பூவிரி கூந்தல் புகார்; வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; 16 சிலம்பு;வாழ்த்துக்காதை தேவந்தி சொல் 10. முடிமன்னர் மூவருங் காத்தோம்புந் தெய்வ வடபே ரிமய மலையிற் பிறந்து கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த தொடிவளைத் தோளிக்குத் தோழிநான் கண்டீர் சோணாட்டார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்; 2 காவற்பெண்டு சொல் 11. மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப்பற்றிக் குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த தடம்பெருங் கண்ணிக்குத் தாயர்நான் கண்டீர்; தண்புகார்ப் பாவைக்குத் தாயர்நான் கண்டீர்; 3 அடித்தோழி சொல் 12. தற்பயந்தாட் கில்லை தன்னைப் புறங்காத்த எற்பயந் தாட்கும் எனக்குமோர் சொல்லில்லை கற்புக் கடம்பூண்டு காதலன் பின் போந்த பொற்றொடி நங்கைக்குத் தோழிநான் கண்டீர் பூம்புகார் பாவைக்குத் தோழிநான் கண்டீர்; 4 13. புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்கா ணம்மானை காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை; 17 14. கடவரைக ளோரெட்டுங் கண்ணிமையா காண வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்யா ரம்மானை வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்றிக் கெட்டுங் குடைநிழலிற் கொண்டளித்த கொற்றவன்காணம்மானை கொற்றவன்றன் பூம்புகார் பாடேலோ ரம்மானை; 18 15. அம்மனை தங்கையிற் கொண்டங் கணியிழையார் தம்மனையிற் பாடுந் தகையேலோ ரம்மானை தம்மனையிற் பாடுந் தகையெலாந் தார்வேந்தன் கொம்மை வரிமுலைமேற் கூடவே யம்மானை கொம்மை வரிமுலைமேற் கூடிற் குலவேந்தன் அம்மென் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; 19 சிலப், வாழ்த்துக்காதை. 16. கரிகாலன் பெருவளவன் மகள்கேள்வன் கடல்புக்கான் திருவேயோ எனவழைத்துத் திரைக்கரத்தால் தரக்கொண்டாள் வரைகேள்வன் கலநோக்கி வருமளவுங் கல்லானாள் புரைதீரப் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. 1 17. வன்னிமடைப் பளியோடு சான்றாக வரவழைத்தான் பன்னியகா விரிமணல்வாய்ப் பாவையைநுன் கேள்வனென்றும் கன்னியர்க ளொடும்போகாள் திரைகரையா வகைகாத்தாள் பொன்னனையாள் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. 2 18. கூவலிற்போய் மாற்றாள் குழவிவிழத் தன்குழவி ஆவலின்வீழ்த் தேற்றெடுத்தாள் அயனோக்கம் வேறென்று மேவினாள் குரக்குமுகம் வீடுடையோன் வரவிடுத்தாள் பூவின்மேற் பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. 3 பட்டினத்தார் புராணம். பும்புகார்ச்சருக்கம். 19. முற்றாத முலையிருவர் முத்துவண்ட லயர்விடத்துப் பெற்றாற்றா மாண்பெண் பிறர்மணஞ்செய் யாவண்ணம் சொற்றார்கள் பிறந்தபெண் ணாயகனைத் தலைசுமந்தாள் பொற்றாலி பிறந்தபதி பூம்புகார்ப் பட்டினமே. பட்டினத்தார் புராணம். பும்புகார்ச்சருக்கம். 20. நாகநீள் நகரொடு நாகநாடதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார் நகர். - சிலப், மங்கல வாழ்த்து. 21. தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர். சிலப். வாழ்த்துக்காதை. 26 22. பூவிரி அகன்துறைக் கனைவிசைக் கடுநீர்க் காவிரிப் பேரியாற்று அயிர்கொண்டு ஈண்டி எக்கர் இட்ட குப்பை வெண்மணல் வைப்பின் யாணர் வளங்கெழு வேந்தர் ஞாலம் நாறும் நலங்கெழு நல்லிசை நான் மறைமுது நூல்முக்கண் செல்வன் ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய பொய்கை சூழ்ந்த பொழின் மனை மகளிர் கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் மகர நெற்றி வான்தோய் புரிசைச் சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லில் புகாஅர் நன்னாட் டதுவே. 23 -பரணர்: அகம் 18 கனவினுள் காண்கொடா கண்ணும் கலந்த நனவினுள் முன்விலங்கும் நாணும் - இனவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல் வடுவடுப்பச் சென்று - முத்தொள்ளயிரம், 38 24. வெளிலிளக்குங் களிறுபோலத் தீம்புகார்த் திரைமுன்றுறைத் தூங்குநாவாய் துவன்றிருக்கை மிசைக்கூம்பி னசைக்கொடியும் -பட்டினப்பாலை, 172 - 175 25. பல்லாயமொடு பதிபழகி வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற் சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம். - பட்டினப்பாலை, 212- 218 26. முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப் போக அன்னைக் குரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப் பேருந் தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தந் தயங்கு கானற் புன்னையரும் பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே யெம்மூர். - தண்டியலங்காரம், இன்பம், மேற்கோள் பாடல். 27. பூவிரி நெடுங்கழி நாப்பண் பெரும்பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன செழுநகர் ... ... ... - நக்கீரர் : அகம், 205. 28. கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ் சூள் தருகுவன் நினக்கே - போந்தைப்பசலையார் : அகம் 110 29. காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற் புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை - அரிசில்கிழர் : பதிற்றுப்பத்து 73.  பிற்சேர்க்கை III காவிரியாற்றின் வடபுறத்துக் கழிமுனைமருங்கே அமைந்திருந்த காவிரிப்பூம்பட்டினம், சோழரின் தலைமைத் துறைமுகமாகத் திகழ்ந்தது. இதன்கண் அழகிற் சிறந்த மாளிகையொன்றை அரசர் எடுப்பித்துக் காத்துவந்தனர்; மேலும், அயல் நாட்டு வணிகர் இதனை இனிமையும் பயனும் அளிக்கும் உறைவிடமாகக் கருதுவாராயினர். ஒருகால், செல்வச் சிறப்புடையதாய் மிளிர்ந்த இந்த வளநகர் அழிந்தொழியவும், அவ்விடம் இன்று உயர்ந்த மணற்குவியலின் கீழ்ப் புதைந்து கிடக்கிறது. - மித். காவிரியாற்றின் கழிமுகத்தின் கண் இடம் பெற்ற புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினம், ஒரு காலத்தில் செல்வச் சிறப்பும் செழுமை நலமும் வாய்ந்த துறைமுகமாகக் துலங்கியது. சோழர்கள் நிகழ்த்திய நீர்வாணிபத்தில், பருத்தி நூலாடை முதற்பொருளாக மிளிர்ந்தது. இதற்கென இவர்கள் வைத்து நடாத்திய சுறுசுறுப்புள்ள கடற்படை, ஐராவதி கங்கைக் கழிமுகங்கள் மட்டுமேயன்றி மலேயத்தீவத் தொகுதிவரை பாய் விரித்தேகவும் அஞ்சிற்றில்லை. - மித். கிழக்குக் கடற்கரையிலே, காவிரியாற்றின் வடகிளை கடலொடு கலக்கும் இடத்தில் அமைந்த தொழிற் செறிவுள்ள துறைமுகமாகிய காவிரிப் பட்டினம் அல்லது புகாரில் பிறிதொரு உறைவிடம் வகுத்துக் கொண்டனர். அயல்நாட்டு வந்தேறு குடியினர். நெடுங்காலத்திற்கு முன்னர் மறைந்தொழிந்த அந்நகரும், நகரின் துறைமுகமும், இன்று பரந்த மணல்மேட்டின் கீழ்ப் புதையுண்டு கிடக்கின்றன. யவன நாட்டு முந்திரிச்சாற்று வகைகள், விளக்குகள், ஏனங்கள் இவைகளின் இறக்குமதியைப் பற்றிச் செய்யுள்கள் (காப்பியங்கள்) பரக்கக் கூறுகின்றன. - மித். உறையூர் (பழைய திருச்சிராப்பள்ளி) சோழ நாட்டின் தலை நகராகவும் காவிரிப்பூம்பட்டினம் இதன் துறைமுகப் பட்டினமாகவும் விளங்கின.1. - பர்னெட். காலை யரும்பி மலருங் கதிரவனும் மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை அகழால் அமைந்த அவனிக்கு மாலைப் புகழால் அமைந்த புகார். காலையில் உதித்து ஒளிவிரியும் பரிதியும், மாலையில் உதிக்கும் வளருமியல்புடைய திங்களும் போல, வாழ்வதாக; கடலாகிய அகழோடு அமைந்த புவனிக்கு, மாலையெனப் படும் புகழோடு பொருந்திய காவிரிப் பூம்பட்டினம். செம்பியன் மாதேவித் தல வரலாறு அணிந்துரை (காரைக்குடி சா. கணேசன்) இராசகேசரி கண்டராதித்தன் என்பவன் சோழப் பேரரசரில் ஒருவன். கி.பி. 953 முதல் 957 வரை சோழ மண்டலத்தை ஆண்டவன். கண்டராதித்த தேவர் என்றும், மும்முடிச் சோழ தேவர் என்றும் மக்கள் மிகுந்த அன்புடன் இவனை அழைப்பர். செந்தமிழ்ப் புலமையும், சிவஞானத் தெளிவும் உடையவன். தில்லைக் கூத்தன்பால் எல்லையிலாப் பக்தி பூண்டவன். சைவத் திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில், திரு விசைப்பாவில் உள்ள கோயிற் பதிகம் இவன் பாடியதாகும். தில்லைப் பெருமானிடம் இவனுக்குள்ள ஆராத காதலையும், அம்பலத்தாடி தன் அடிமலரைக் கூட வேண்டும் என்னும் தீராத ஏக்கத்தையும் அப் பதிகத்தை மேற்போக்காகப் பார்ப்பவர்களும் நன்கு புரிந்து கொள்ள முடியும். கண்டராதித்தனுக்கு இரு மனைவிமார்கள். முதல் மனைவி வீரநாரணி என்னும் பெயரினள். இளையவள் பெயர் செம்பியன் மாதேவி. கண்டர் ஆதித்தன் பட்டத்திற்கு வருமுன்னரே வீரநாரணி இறந்துவிட்டாள். எனவே செம்பியன் மாதேவி தான் பட்டத்து அரசியாக வீற்றிருந் திருக்கிறாள். கண்டர் ஆதித்தன் சுமார் நான்கு ஆண்டுகளே அரியணையில் இருந்திருக்கிறான். அவன் காலமான பின்னர் சுமார் 45 ஆண்டுகள் செம்பியன் மாதேவி உயிர் வாழ்ந்திருக்கிறாள். தன் வாழ்நாள் எல்லாம் சிவனடி மறவாச் சிந்தையளாய், தெய்வத் திருப்பணியே செய்து சோழர் வரலாற்று ஏட்டிலே ஒப்பு உரைக்க ஒண்ணாதபடி நிலை பெற்று விளங்கு கிறாள். சிவப் பணிக்கே தன்னை அற்பணித்துக் கொண்டு பெரு வாழ்வு வாழ்ந்தமையால் இவள் மாதேவடிகள் என்று பாராட்டப் பெற்றிருக்கிறாள். தன் மாமனார் முதற் பராந்தக சோழன் 1, அவன் பின் தன் கணவன் கண்டர் ஆதித்த சோழன் 2, அவன் பின் தன் கொழுந்தன் அரிஞ்சய சோழன் 3, அவன் பின் மேற்படி கொழுந்தன் மகன் இரண்டாம் பராந்தகன் ஆகிய சுந்தர சோழன் 4, அவன் பின் தன் அருமை மகன் மதுராந்தகன் ஆன உத்தம சோழன் 5, அவன் பின் தன் கொழுந்தன் பேரன் அருள் மொழி வர்மன் ஆன இராசராச சோழன் 6, ஆகிய ஆறு பேர் ஆட்சியையும் கண்டு களித்த பெரு மூதாட்டியார் செம்பியன் மாதேவியார். அறுபது ஆண்டுகள் சிவப்பணி செய்திருக்கிறாள். கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளாவது நில வுலகில் வாழ்ந்திருக்க வேண்டும். அந்தக் காலம் கி.பி. 920-1001 என்று துணியலாம். பண்டைச் சோழர் பணிகளான செங்கற் கோயில்கள் பலவற்றைக் கற்றளியாக எடுப்பித்தும், நித்திய நைமித்தியங் களுக்கு நிவந்தங்கள் ஏற்படுத்தியும், இறை திருவுருவங்களுக்கு அணி கலன்கள் அளித்தும், திருவுண்ணாழியில் நந்தா விளக்கு எரிய முதல் ஈய்ந்தும், நந்தவனம் ஏற்படுத்தியும் பல்லாற்றானும் சிவத்தொண்டு புரிந்திருக்கிறாள். செம்பியன் மாதேவியார் கற்றளியாக எடுப்பித்த கோயில்கள் பலவற்றுள் 1. திருநல்லம், 2. தென் குரங்காடுதுறை, 3. திருவக்கரை, 4. திருகோடிக்கா, 5. திருத்துருத்தி, 6. திருமுதுகுன்றம், 7. திருவாரூர் அரநெறி, 8. திருமணஞ் சேரி, 9. செம்பியன் மாதேவி ஆகிய ஒன்பதைப் பற்றி உறுதியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இவற்றுள் திருநல்லம் என்னும் கோனேரி ராசபுரத்தில் செங்கலாற் கட்டப் பெற்றிருந்த கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து, அக்கோயிலில் கண்டர் ஆதித்தன் சிவலிங்கத்திற்குப் பூசை செய்வது போல ஒரு ஓவியம் சமைப்பித்துள்ளாள். அந்தத் திருக்கோயிலுக்குத் தன் கணவன் பெயரான ஸ்ரீ கண்டராதித்தர் என்ற பெயரையே சூட்டி மன நிறைவு கொண்டிருக் கிறாள். அச்சிற்பத்தின் அடியில் காணப்பெறும் கல்வெட்டைப் படித்துப் பார்த்தால் செம்பியன் மாதேவிக்கு உள்ள சிவ பக்தியின் ஊற்றமும், பதிபக்தியின் ஏற்றமும் தெள்ளிதிற் புலனாகும். அது வருமாறு- வதி ஸ்ரீ கண்டராதித்த தேவர் தேவியார் மாதேவடிகளாரான ஸ்ரீ செம்பியன் மாதேவியார் தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான ஸ்ரீ உத்தம சோழர் திருராஜ்யஞ் செய்தருளா நிற்க தம்முடையார் ஸ்ரீ கண்டராதித்த தேவர் திருநாமத்தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எ(ழுந்)(டுத்) தருளிவித்து இத் திருக்கற்றளிலே(ய்) திருநல்லமுடையாரைத் திருவடி(த்) தொழுகின்றாராக எழுந்தருளுவித்த ஸ்ரீ கண்டராதித்த தேவர் இவர் - (S.I.I.III-146) பதி பக்தியும், சிவ பக்தியும் நிறைந்த இப்பிராட்டியார் தான் செம்பியன் மாதேவி என்ற பெயருடன் இன்று விளங்கும் இவ்வூர்த் திருக்கோயிலையும் கற்றளியாக எடுப்பித்தவர். ஆனால் இக்கோயிலை புதிதாகக் கட்டிக் கடவுண் மங்கலம் செய்தார் என்று கொள்வது பொருத்த மில்லை என்பது என் கருத்து. இங்குள்ள திருக்கோயில் பழமையான தாகவே இருக்கவேண்டும். சமய குரவர்களின் பாடலும் இதற்கு இருந்திருக்கலாம். ஆகவேதான் அப் பெருமாட்டிக்கு இதைக் கற்றளியாக எடுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். அதன் பின்னர் இவ் ஊரைச் சார்ந்த நிலபுலங்களை இறையிலியாக ஆக்கி அவற்றை அந்தணர்கட்கு அளித்துக் காத்திருக்கிறாள். அதன் காரணமாக இவ்வூருக்கு செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. இப் பெருமாட்டி கற்றளியாக எடுப்பித்திருக்கும் மற்ற திருக்கோயில்கள் யாவும் பாடல் பெற்ற பழம் பெரும் திரு க்கோயில்களே, இராசராசன் எடுப்பித்த தஞ்சைப் பெருவுடை யார் கோயிலும் தஞ்சைத் தளிக்குளம் என்னும் பாடல் பெற்ற கோயிலேயாகும். இவற்றை எல்லாம் மனத்துட்கொண்டு பார்த்தால் இக் கோயிலும் பாடல் பெற்ற ஒரு பழங் கோயிலாகவே இருக்க வேண்டும் என்பது தெளிவு. அன்றியும் செம்பியன் மாதேவி புதிதாக எடுப்பித்த கோயிலாக இருந்தால் செம்பியன் மாதேவீச் சுரம் என்று இதன் பெயர் அமைந்திருக்கக் கூடும். ஆனால், ஸ்ரீ கயிலாயம் என்று பெயர் கொண்டிலங்கு கிறது. பெருமான் பெயரும் ஸ்ரீ கயிலாச முடைய மகா தேவர், திருக்கயிலாயமுடையார் என்றே காணப்பெறுகிறது. இக்கோயிலுக்கு ஸ்ரீ கயிலாயம் என்ற பெயர் எப்பொழுது ஏற்பட்டது? காரணம் என்ன? இத்தலம் பழமையானதா? அப்படியானால் வேறு பழம் பெயர் உண்டா? அப் பெயர் என்ன? அப்பெயர் தேவாரம் முதலிய திருமுறைகளில் எங்கேனும் காணப்பெறுகிறதா? இவற்றை எல்லாம் முயன்று கண்டறிய வேண்டும். ஆண்டவன் அருளும், அறிஞர்கள் ஆராய்ச்சியும் அதற்குத் துணை புரியட்டும். அருமையும் பெருமையுமுள்ள இத்தலத்தின் உண்மை வரலாற்றை எழுதி வெளியிட, தேவதானத்தார் ஆர்வம் கொண்டனர். எல்லா வகை யாலும் தக்கார் ஒருவரை இசையச் செய்தனர். அவர் தான் சைவத் திருவாளர் திரு.வை.சதாசிவப் பண்டாரத்தாரவர்கள். வரலாற்று நூலறிவும், கல்வெட்டு ஆராய்ச்சியும், இலக்கியப் புலமையும், சரித்திரத் தேர்ச்சியும் சமய ஒழுக்கமும், சீரியபண்பாடும் நிரம்பிய நுண்மான் நுழை புலம் உடையவர். பன்னூல் எழுதிப் பழுத்தவர். இப்பணியை நிறைவேற்ற அவர்களைத் தேர்ந்தெடுத்த ஒன்றே போதும் தேவதானத்தார் கொண்ட உண்மை ஆர்வத்தைப் பலப்படுத்த. இம்மலர் சிறிதே. சுறுக்கமாக இருப்பினும் விளக்கம் தருகிறது. இச்சிறு மலரிலும் ஆசிரியரின் அறிவு ஒளிர்கிறது. அனுபவம் மணக்கிறது. மேலும் கல்வெட்டுப்படிகள் அனைத்தை அப்படியே வெளியிடலாம். கோயிலின் வரைப் படத்தை விளக்கக் குறிப்புடன் இணைக்கலாம். இப்படி எல்லாம் சொல்வதைக் குறை கூறுவதாகக் கருதி விடப்படாது. நல்லார்வத்துடன் விடுக்கும் வேண்டுகோள் தான் இது. இந்தப் பவித்திரமான பணியை ஏற்றுச் செவ்விய முறையில் எழுதி உபகரித்த பெரியார்க்கும், இந்த நல்ல முயற்சியில் அக்கறை காட்டிய செம்பியன் மாதேவித் திருக்கோயில் அறங்காவலர்களுக்கும், இறைபணி யாளருக்கும் அம்மையப்பன் திருவருள் பெருகுவதாக, அவர்களுக்கு நம்முடைய வணக்கமும் பராட்டுக்களும் உரிய தாகுக. இத்தகைய முறையில் தலவரலாறு எல்லாப் பெருங்கோயில் களுக்கும் எழுதி வெளியிட மாநில அறநிலையினர் ஏற்பாடு செய்தால் அறிவும் பயனும் பெருகும். ஆண்டவன் அருள்க.  செம்பியன்மாதேவித் தலவரலாறு 1 இருப்பிடம் : செம்பியன் மாதேவி என்பது தஞ்சாவூர் ஜில்லா நாகப் பட்டினம் தாலுகாவிலுள்ள ஒரு சிவத்தலமாகும். திருவாரூரிலிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லும் இருப்புப் பாதையில் கீழ்வேளூர் புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே இரண்டு மைல் சென்று, தேவூர் என்ற பாடல் பெற்ற சிவத்தலத்தை அடைந்து அவ்வூரிலிருந்து தென் கிழக்கே போகும் பெரு வழியில் நான்கு மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். இத்தலத்திற்குத் தெற்கே ஐந்து மைலில் குண்டையூரும், ஆறு மைலில் திருக்குவளை என்று வழங்கும் திருக்கோளிலி என்ற பாடல் பெற்ற தலமும், எட்டு மைலில் திருப்புகழ் பெற்ற எட்டுக்குடி என்ற தலமும், தென்மேற்கே ஆறு மைலில் வலிவலம் என்ற பாடல் பெற்ற தலமும், மேற்கே நான்கு மைலில் திருவிசைப்பா பெற்ற சாட்டியக்குடி என்ற தலமும், ஐந்து மைலில் கன்றாப்பூர் என்ற பாடல் பெற்ற தலமும், வடக்கே ஆறுமைலில் சிக்கல் என்ற பாடல் பெற்ற தலமும், வடகிழக்கே எட்டு மைலில் நாகைக்காரோணம் என்ற பாடல் பெற்ற தலமும் இருக்கின்றன. திருக்கோயில் : இவ்வூரிலுள்ள கோயில் ஸ்ரீ கயிலாசம் என்ற பெயருடையது; இக்காலத்தில் கயிலாசநாத சுவாமி கோயில் என்று வழங்குகின்றது. இது கிழக்கு நோக்கிய திருவாயிலையுடையது; கீழ் மேல் 298 அடி நீளமும் தென்வடல் 267 அடி அகலமும் உடையது. ஆகவே, கோயிலின் பரப்பு எறத்தாழ 79,566 சதுர அடிகள் உடையது எனலாம். கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. முதற்பிராகாரம் திருச்சுற்று மாளிகையுடன் அமைந்தது. முதற்பிராகாரத்தின் திரு வாயிலைத் திருமாளிகைத் திருவாயில் என்று பெரியோர் வழங்குவர். இதில் மூன்று நிலைக்கோபுரம் ஒன்று இருத்தல் காணலாம். இரண்டாம் பிராகாரத்தில் திருவாயிலைத் திருத்தோரணவாயில் என்று கூறுவது வழக்கம். இதில் முடிவு பெறாத இரு நிலையுடனுள்ள ஒரு கோபுரம் உளது. இக்கோயிலிலுள்ள மண்டபம் ஒன்று செம்பியன் மாதேவியார் பெருமண்டபம் என்ற பெயருடையது என்பதும் அதில் கிராம சபையார் கூட்டம் நடத்திவந்தனர் என்பதும் அறியத்தக்கனவாகும். மூர்த்திகள் : திருக்கோயிலில் மூலத்தானத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் கயிலாச நாதசுவாமி என்று இந்நாளில் கூறப்பெறுவர். கோயிலிலுள்ள கல்வெட்டுக்களில் அப்பெருமான் ஸ்ரீ கயிலாசமுடைய மகாதேவர் என்று குறிக்கப்பட்டுள்ளனர். முதற்பிராகாரத்தில் சோமாகந்தர், நடராசர், தட்சிணாமூர்த்தி, சண்டேசுவரர், விசுவநாதர், சூரியன், வயிரவர் ஆகிய மூர்த்திகளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கோயில்கள் இருக்கின்றன. இரண்டாம் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய திருவாயிலுடன் அம்பிகையின் கோயில் உள்ளது. அதற்குத் தனிப் பிராகாரமும் இருக்கின்றது. அம்பிகையின் திருப்பெயர் பிருகத்நாயகி (பெரிய நாயகி) என்று வழங்குகின்றது. இரண்டாம் பிராகாரத்தில் சுப்பிரமணியர்க்கு ஒரு கோயிலும் நந்திதேவர்க்கு ஒரு மண்டபமும் இருக்கின்றன. தலவிருட்சமும் தீர்த்தமும்: இத்தலத்திற்குரிய விருட்சம் அரசமரமாகும். சதுர்வேத புஷ்கரணி (நான்மறைக்குளம்) என்ற பெயருடைய திருக்குளம் இத்தலத்திற்குரிய தீர்த்தமாக உள்ளது. திருவிழாக்கள்: ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் பிரமோற்சவமே பெரிய திருவிழா ஆகும். மார்கழி மாதத்தில் திருவாதிரை விழாவும் சிறப்பாக நடந்து வருகின்றது. அன்றியும், ஆனியில் திருமஞ்சனமும், ஆடியில் பூரமும், ஆவணியில் பிள்ளையார் சதுர்த்தியும், புரட்டாசியில் நவராத்திரி யோடு விசயதசமியும், ஐப்பசியில் சூரசங்காரமும், கார்த்திகையில் கார்த்திகை தீபமும், தையில் பூசமும், மாசியில் மகமும் அவ்வம் மாதங்களில் நடந்து வரும் திருவிழாக்கள் ஆகும். இக்கோயிலுக்குரிய இரண்டு தேர்களும் பழுதுற்ற நிலையில் உள்ளன. கோயிலின் வருவாயும் நிர்வாகமும் : இக்கோயிலுக்கு நன்செயில் 279 ஏக்கர் 81 செண்டும், புன்செயில் 115 ஏக்கர் 10 செண்டும் நிலங்கள் உண்டு. ஆண்டுதோறும் அவற்றிலிருந்து கிடைத்து வரும் சராசரி மொத்த வருவாய் ஏறத்தாழ ரூ. 25,000 ஆகும். இக்கோயில் நிர்வாகம் சென்னை இந்து அறநிலையப் பாதுகாப்புக் கழகத்தின் தலைவர் 1947-ல் உத்தரவிட்ட ஒரு திட்டத்தின்படி (Scheme) நடந்து வருகின்றது. மூன்று பேருக்குக் குறையாத டிரடிகளும் மேற்படி இலாகாவினால் நியமனஞ் செய்யப் பெற்ற ஒரு நிர்வாக அதிகாரியும் இக்கோயிலைப் பரிபாலித்து வருகிறார்கள். நிர்வாகம், இந்து அறநிலையப் பாதுகாப்பு இலாகாவின் 1951-ஆம் ஆண்டின் சட்டங் களுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு நிகழ்ந்து வருகின்றது. சில சிறப்புக் குறிப்புகள்: (1) சென்னை அறநிலைய இலாக்கா ஆணையர் விரும்பியபடி நிர்வாக அதிகாரியால் சோழர் பேரரசியார் செம்பியன் மாதேவி யாருக்குக் கோயிலில் ஒரு தனி மண்டபம் கட்டப்பெற்றுள்ளது. (2) ரூ. 40,000 -க்குத் திருப்பணி நடைபெற்று வருகிறது. (3) தஞ்சை ஜில்லா போர்டு மருத்துவ நிலையத்திற்கு ஒரு கட்டிடம் கட்டிக் கொடுக்கப் பட்டிருக்கிறது. (4) பொது மக்களுக்குப் பயன்படுமாறு ஒரு குளம் வெட்டிப் படித்துறைகள் கட்டப் பெற்றுள்ளன. (5) ரூ. 6,150-க்கு ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. (6) 30 ஏழை பள்ளிச் சிறார் களுக்கு மதிய உணவு வழங்க வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இக்கோயிலார் பொதுமக்கள் நலத்தின் பொருட்டும் பல்வகைத் தொண்டுகள் புரிந்து வருவது பலரும் அறிந்து மகிழத்தக்க தொன்றாம். 2 கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்திகள் இக்கோயிலில் இருபத்து மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றை அரசாங்கக் கல்வெட்டிலாகா அறிஞர்கள் படி எடுத்து, அவற்றின் சுருக்கத்தைத் தென்னிந்திய கல்வெட்டிலாகாவின் 1925-26-ஆம் ஆண்டறிக்கையில் வெளியிட்டிருக்கின்றனர். அக்கல் வெட்டுக்களின் துணைகொண்டு ஊர், கோயில் இவற்றின் பழைய வரலாற்றை ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம். சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளுள்,1 ஒன்றாகிய அருமொழிதேவ வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய அளநாட்டில் உள்ளது செம்பியன் மகாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர். இவ்வூரைப் புதிதாகத் தம் பெயரால் அமைத்துச் சதுர்வேதிகளான அந்தணப் பெரு மக்களுக்குப் பிரமதேயமாக வழங்கியவர் செம்பியன் மகாதேவி என்ற அரசியார் ஆவார். இவ்வம்மையார், முதற்பராந்தக சோழரின் இரண்டாம் புதல்வரும், சோழ இராச்சியத்தில் சக்கர வர்த்தியாக வீற்றிருந்து கி.பி.950 முதல் 957 வயில் ஆட்சி புரிந்தவரும், தில்லைச் சிற்றம்பலவாணர் மீது திருவிசைப்பாப் பதிகம் ஒன்று பாடியவரும் ஆகிய கண்டராதித்த சோழரின் மனைவியார். இவ்வூரில் ஸ்ரீ கயிலாசம் என்ற பெயருடைய திருக்கோயிலைக் கட்டியவரும் இம்மகாதேவியாரேயாவர். இச்செய்திகள் கோயிலிலுள்ள கல்வெட்டுக் களால் நன்கு புலப்படுகின்றன. இவ்வரசியார்க்கு உத்தம சோழர் என்ற புதல்வர் ஒருவர் இருந்தனர். அவ்வேந்தர் பெருமான் கி.பி.970 முதல் 985 வரையில் அரசாண்டவர். அவரது ஆட்சிக் காலத்தில்தான் இவ்வூரும் திருக்கோயிலும் செம்பியன் மாதேவியாரால் அமைக்கப் பெற்றன என்று தெரிகிறது. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களுள் உத்தம சோழரது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டாகிய கி.பி. 981-ல் வரையப் பெற்ற கல்வெட்டே மிக்க பழமை வாய்ந்ததாகும். எனவே, இக்கோயில் கி.பி.981 ஆண்டிற்கு முன்னர்க் கட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இனி, உத்தம சோழர் காலமுதல் ஒவ்வோர் அரசரது ஆட்சிக் காலத்தும் நிகழ்ந்தவற்றைக் காண் போம். 1. உத்தம சோழர் காலம் : கி.பி. (970-985) இவ்வேந்தர் காலத்துக் கல்வெட்டுக்கள் எட்டு உள்ளன அவற்றுள் ஒன்று, இம்மன்னர் பெருமானுடைய மனைவி மாருள், பட்டன் தானதுங்கியார், மழபாடித் தென்னவன் மாதேவியார், இருங்கோளார் மகளார் வானவன்மாதேவியார், விழுப்பரையர் மகளார் கிழானடிகள், பழுவேட்டரையர் மகளார் என்ற ஐவரும், தம்மாமியார் செம்பியன் மாதேவியார் பிறந்த நாளாகிய சித்திரைத் திங்கள் கேட்டை நாளில் திருக்கயிலாசமுடைய மகாதேவர்க்கு ஆண்டுதோறும் சிறப்பு வழி பாடும் விழாவும் நடத்துவதற்கு முதற்பொருள் கி.பி. 981-ம் ஆண்டில் வழங்கியதை உணர்த்துகின்றது.1 கி.பி 984-ல் உத்தம சோழருடைய பட்டத்தரசியார் திரிபுவன மாதேவியார் என்பார், திருக்கயிலாசமுடையார்க்கு நாள் வழிபாட்டிற்கு அளித்த இறையிலி நிலங்களையும் திங்கள் தோறும் முதல்நாளில் கோயிலில் நிகழவேண்டிய சிறப்பு வழிபாட்டிற்குரிய பொருள்களையும் அவ்வழி பாட்டிற்கு அவ்வரசியார் அளித்த நிபந்தத்தையும் இரு கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.2 கி.பி. 984-ல் உத்தம சோழருடைய மனைவியருள் பட்டன் தான துங்கியாரும் பஞ்சவன் மாதேவியாரும் திருக்கயிலாச முடைய மகாதேவர்க்கு முறையே நெற்றிப் பொற்பட்டமும் பொன்னால் அமைந்த கைப்பிடியுடைய வெண்சாமரையும் அளித்தமையை இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன.1 கி.பி 984ல் சொன்னமாதேவியார் என்ற கண்ணப்பரசியார் என்பார், சித்திரைக் கேட்டை நாளில் கோயிலில் நடைபெறும் செம்பியன் மாதேவி யாரின் பிறந்தநாள் விழாவிற்கு 507½ கழஞ்சு பொன் அளித்ததையும், தொண்டை மண்டலத்துப் பங்கள நாட்டினர் ஒருவர் விழாவில் ஆண்டு தோறும் அடியார்களுக்கு உணவளித் தற் பொருட்டு 150 பொன் முதற் பொருளாகக் கொடுத்துள்ள தையும் இரு கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.2 முதல் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற சொன்ன மாதேவியார் உத்தம சோழரின் மனைவிமாருள் ஒருவராயிருத்தல் வேண்டும். கி.பி. 985-ல் பட்டத்தரசியார் திரிபுவனமாதேவியார் ஆண்டு தோறும் சித்திரைக் கேட்டையில் கோயிலில் நிகழும் தம் மாமியாரின் பிறந்தநாள் விழாவிற்குப் பொருள் வழங்கியதையும், அவ்வாண்டி லேயே உத்தம சோழருடைய மற்றொரு மனைவியார் ஆரூரன் அம்பலத்தடிகளார் என்பார், அவ்விழா விற்கு 590 கழஞ்சு பொன் அளித்ததையும் ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.3 2. முதல் இராசராச சோழர் காலம் : (கி.பி. 985-1014) உத்தம சோழர்க்குப் பின்னர் அரசாண்ட முதல் இராசராச சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் நான்குள்ளன. அவற்றுள், கி.பி. 987-ல் வரையப்பெற்ற கல்வெட்டு, செம்பியன் மாதேவியார் திருக்கயிலாச முடைய மகாதேவர்க்கு வழங்கிய நெற்றிப் பட்டம், பொற்பூக்கள், பொற் கலசம் முதலானவற்றையும் அவற்றின் நிறையையும் அறிவிக்கின்றது.4 கி.பி.990-ல் வரையப் பெற்ற கல்வெட்டொன்று சிதைந்த நிலையில் உள்ளது. அது, செம்பியன்மாதேவிச் சதுர்வேதிமங் கலத்துக் கிராம சபையார் தம் செயற்குழுவினரான ஊர்வாரியப் பெருமக்களுக்கு அனுப்பிய ஓர் உத்தரவின் படியாகத் தோன்று கிறது.1 அரசாங்க உத்தரவுகள், கிராமசபையாரின் முடிபுகள் ஆகிய இவற்றுள் இன்றியமை யாதனவாய் என்றும் வைத்திருத்தற் குரியவற்றைக் கோயில் கருங்கற்சுவர்களில் யாவரும் பார்க்கக் கூடிய வெளிச்ச முள்ள இடங்களில் பொறித் துவைப்பது அக்கால வழக்கமாகும். அத்தகைய கல்வெட்டுக்கள் பல கோயில் களில் இருத்தலை இக்காலத்தும் காணலாம். கி.பி. 990-ல் திருக்கயிலாசமுடையார் கோயில் நிலங்கள் சில வற்றிற்குக் கிராம சபையார் வரி நீக்கியதை ஒரு கல்வெட்டு உணர்த்து கின்றது.2 கி.பி. 992-ல் உத்தம சோழரின் பட்டத்தரசியார் திரிபுவன மாதேவியார் சித்திரைக் கேட்டையில் கோயிலில் நடத்தப் பெறும் தம் மாமியாரின் பிறந்தநாள் விழாவிற்கு முதல் பொருளாக நூறு பொற்காசு அளித்ததை ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது.3 3. முதல் இராசேந்திர சோழர் காலம் : (கி.பி. 1012-1044) முதல் இராசராச சோழர்க்குப் பிறகு ஆட்சிபுரிந்த முதல் இராசேந்திர சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் நான்கு உள்ளன. அவற்றுள், ஒரு கல்வெட்டு, நந்தவனத்தின் பாதுகாப்பிற்குக் கொடுக்கப்பட்ட நிலத்திற்குக் கிராம சபையார் வரிதள்ளியதையும், முதல் இராசேந்திர சோழர், கி.பி. 1019-ல் இடபவாகன தேவரையும், செம்பியன்மாதேவியாரையும், கோயிலில் எழுந்தரு ளுவித்த செய்தியையும், அவர்களின் நாள் வழிபாட்டிற்கு அளிக்கப்பெற்ற நிலங்களுக்குக் கிராம சபையார் வரி நீக்கியதையும் தெரிவிக்கின்றது.4 மற்றொரு கல்வெட்டு, கிராம சபையார் கோயிலிலுள்ள செம்பியன் மாதேவியார் பெரிய மண்டபத்தில் கூட்டம் நடத்தித் தம் ஊர்க்கு மேற்பிடாகையாயுள்ள மோகனூர் ஆதித்தேசுர முடையமகாதேவர் தேவதான நிலங்களிலிருந்து கிடைத்துவரும் வெள்ளான் வெட்டி என்ற வரிப்பொருளைக் கொண்டு அக்கோயிலில் நாள் தோறும் சந்திவிளக்கு ஏற்றிவரவேண்டு மென்று செய்த ஒருமுடிபினை உணர்த்து கின்றது.1 இது வேறொரு கோயிலைப் பற்றிய கல்வெட்டாகும். கி.பி. 1035-ல் பொறிக்கப்பெற்ற இரண்டு கல்வெட்டுக்கள்2 சுவரால் மறைக்கப்பட்டு முதல் இராசேந்திர சோழரின் மெய்க்கீர்த்தியோடும் நாட்டின் பெயரோடும் நின்றுவிட்ட மையால், அவற்றில் கோயிலைப் பற்றிய செய்திகள் ஒன்று மில்லை. 4. முதல் இராசாதிராச சோழர் காலம் : (கி.பி. 1044-1054) முதல் இராசேந்திர சோழர்க்குப் பின்னர் அரசாண்ட முதல் இராசாதி ராச சோழர் காலத்துக் கல்வெட்டொன்றால் திருவேழிருக்கை மகாதேவர் கோயில் நிலங்கள் சிலவற்றிற்கு அரசர்பெருமான் வரி தள்ளிய செய்தி அறியப்படுகின்றது.3 திருஏழிருக்கை என்பது திருச்சாட்டியக்குடியிலுள்ள திருக் கோயிலின் பெயர். கருவூர்த் தேவர் பாடிய திருச்சாட்டியக்குடி திருவிசைப்பாப் பதிகம் முழுதும் சாட்டியக்குடியார்.... ............. ஏழிருக்கையிலிருந்த ஈசனுக்கே என வருதல் காண்க. 5. மூன்றாம் இராசராச சோழர் காலம் : (கி.பி. 1216-1256) மூன்றாம் குலோத்துங்க சோழரின் புதல்வர் மூன்றாம் இராசராச சோழர் காலத்தில் கி.பி. 1233-ல் வரையப் பட்ட கல்வெட்டொன்று, சண்டேசுவர நாயனார் கோயிலில் உள்ளது.4 இதில் கிராம சபையார், கிராம காரியங்களைப் பார்ப்பதற்குப் பகலிலேயே தம் கூட்டங்களை நடத்த வேண்டுமென்றும், இரவில் நடத்தக் கூடாதென்றும், முன்னர் உறுப்பினராக இருந்தவர்களை ஐந்து ஆண்டுகள் வரையில் மீண்டும் தேர்ந் தெடுக்கக் கூடாதென்றும் செய்த முடிபுகள் காணப்படுகின்றன. 6. சடையவர்மர் வீரபாண்டியர் காலம் : (கி.பி. 1253-1268) சடையவர்மர் சுந்தர பாண்டியர் சோழ மண்டலத்தைக் கைப்பற்றித் தம் ஆட்சிக்கு உட்படுத்திய காலத்தில் அங்குப் பிரதிநிதியாயிருந்து அரசாண்ட வீரபாண்டியர் நாளில் பொறிக்கப் பெற்ற இரண்டு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.1 அவை, பெரிய நாட்டார் உத்தமவேதப் பெருமாள் என்ற கல் தச்சனைக் கொண்டு கோயிலைப் புதுப்பித்ததையும், தம் தம் கிராமங்களில் வேலி ஒன்றுக்குக் கல நெல் வீதம் கோயிலுக்குக் கொடுத்து வர ஏற்பாடு செய்ததையும், திருப்பணியை நிறைவேற்றிய அக்கல் தச்சனுக்குக் கோயில் அதிகாரிகள் கி.பி. 1262-ல் எல்லா உரிமைகளோடும் ஒரு வீடு அளித்ததையும் கூறுகின்றன. 7. அரசரின் பெயரும் ஆண்டும் காணமுடியாத மூன்று கல்வெட்டுக்கள் : சுவரால் மறைக்கப் பெற்ற அக் கல்வெட்டுக்களுள் ஒன்று, திருக்கயிலாசமுடைய மகாதேவர்க்குத் திங்கள் தோறும் முதல் நாளில் சிறப்பு அபிடேகம் நிகழ்த்துவதற்கும் நுந்தா விளக்கு வைப்பதற்கும் உத்தராயண தட்சிணாயன நாட்களில் கோயிலில் நூறு அந்தணர்களை உண்பித்தற்கும் செம்பியன்மாதேவியார் நிலம் வழங்கியதை உணர்த்து கின்றது.2 மற்றொரு கல்வெட்டு, சித்திரைக் கேட்டையில் கோயிலில் நடைபெறும் விழாவிற்கு அருமொழி அரிஞ்சிகைப் பிராட்டியாரும் குந்தவையாரும் 220 கழஞ்சு பொன் அளித்ததை அறிவிக்கின்றது.3 குந்தவையார் முதல் இராசராச சோழரின் தமக்கையார் ஆவர். பிறிதொரு கல்வெட்டு, கோயிலுக்கு வழங்கப்பெற்றுள்ள அணிகலன்கள் எல்லாவற்றையும் தெரிவிக்கின்றது.1 செம்பியன்மாதேவிக் கோயிலிலுள்ள கல்வெட்டுக்களில் ஒன்று. (கர்ப்பக்கிரகத்தின் தென்புறத்திலுள்ளது.) (1) வதி ஸ்ரீ கோ (2 இராஜகேசரிபந்ம (3) ற்கு யாண்டு ஆவது (4) தென்கரை அளநா (5) ட்டு பிரம தேயம் ஸ்ரீ (6) செம்பியன்மாதேவிச் (7) சதுர்வேதிமங்கலத்து (8) ஸ்ரீ கைலாசமுடையமகா (9) தேவற்கு ஸ்ரீ உத்தமசோழ (10) தேவர் தங்களாச்சி ஸ்ரீ பிராந்த (11) கன் மாதேவடிகளாரான ஸ்ரீ செம் (12) பியன்மா தேவியார் இவ்வாண்டு மீ (13) ன நாயிற்றுக்குடுத்தள பொன் க (14) லசம் ஒன்று இது இவ்வூர்க் கல்லால் (15) பொன்னூற்றுத் தொண்ணூற்றுக்கழ (16) ஞ்சு பொன்னின் பட்டம் இரண்டினால் (17) மேற்படி கல்லா(ல்) நிறை தொண்ணூற் (18) று கழஞ்சும் பொற்பூ ஒன்றுபொ (ன்) (19) (முக்) கழஞ்சே முக்காலாகப் பொற்பூமூ (20) (ன்றுக்கு) மேற்படி கல்லா(ல்) நிறைபதி (21) னொரு கழஞ்சேகாலும் பொற்பூ ஒன் (22) ........... முக்கழஞ்சே முக்காலேமஞ் (23) சாடியாகப்பொற்பூ இருபத்தொன்றி (24) னால் மேற்படி கல்லால் நிறை எழுபத்தொ (25) ன்பதின் கழஞ்சே முக்காலே மஞ்சா (26) டியும் பொற்பூ....... (27) ழஞ்சே முக்கால் இரண்டு மஞ்சாடியாக (28) பொற் பூ இரண்டினால் மேற்படி கல் (29) லானிறை ஐங்கழஞ் சரையே நாலு (30) மஞ்சாடியும் ஆக இவை இத்த (31) னையும் பன்மாகேவர ரக்ஷை (32) 11  3 செம்பியன்மாதேவியார் வரலாறு செம்பியன்மாதேவி என்ற இந்த ஊரையும் இதிலுள்ள திருக்கோயிலாகிய ஸ்ரீ கயிலாசத்தையும் அமைத்த செம்பியன் மாதேவியார், சேரமன்னர்களுள் ஒரு கிளையினரான மழவர் பெருங் குடியில் பிறந்தவர்; சோழச் சக்கரவர்த்தியாகிய முதற் பராந்தக சோழரின் (கி.பி. 907-953) இரண்டாம் புதல்வரும், சிவபத்தியும் செந்தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப்பெற்ற சிவஞானச் செல்வரும் ஆகிய முதற்கண்டராதித்த சோழரின் பட்டத்தரசியாராக விளங்கியவர்; உத்தம சோழரை (கி.பி. 970-985) த்தம் திருமகனாராகப் பெற்றவர்; தம் கணவரைப் போல எல்லையற்ற சிவபத்தியுடையவர்; அறிஞர்களால் மாதேவடிகளார் என்று பாராட்டப்பட்டவர். இவற்றை, மழவரையர் மகளார் ஸ்ரீ கண்டராதித்த பெருமாள் தேவியார் ஸ்ரீ செம்பியன்மாதேவியார் எனவும், ஸ்ரீ உத்தமசோழ தேவரைத் திருவயிறு வாய்த்த ஸ்ரீ செம்பியன்மாதேவிப் பிராட்டியார் எனவும் காணப்படும் கல்வெட்டுத் தொடர்களாலும், கோராச கேசரிவர்மர்க்கு யாண்டு மூன்றாவதனிற் பேராளர் வெண்காடர் தங்கோயில் மேலொரு பைம்பொற்குடம் ஓராயிரத் தொடைஞ்ஞூற்றுக் கழஞ்சினால் வைத்துகந்தாள் சீரார் மழவர்கோன் பெற்றநம் செம்பியன் மாதேவியே (S.I.I.Vol. XIII No. 144) என்ற கல்வெட்டுப் பாடலாலும் நன்கு அறியலாம். இவ்வரசியார் முதலில் செய்த அறம், தம் மாமனார் முதற் பராந்தக சோழர் ஆட்சியில் கி.பி. 941-ஆம் ஆண்டில் திருச் சிராப்பள்ளிக்கு அண்மை யிலுள்ள உய்யக் கொண்டான் மலையில் திருக்கற்குடி மாதேவர்க்கு ஒரு நுந்தாவிளக்கு எரிப்பதற்குத் தொண்ணூறு ஆடுகள் அளித்தமையேயாகும். இவர்கள் தம் பேரனார் முதல் இராசராச சோழர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1001-ல் தென்னார்க்காடு ஜில்லா, விழுப்புரம் தாலுகாவிலுள்ள திருவக்கரைக் கோயிலைக் கருங்கற்கோயிலாக அமைத்தமையே தம் வாழ்நாளில் இறுதியில் செய்த திருப்பணி என்று தெரிகிறது. அவ்வாண்டிற்குப் பிறகு இவர்கள் புரிந்த அறங்கள் எங்கும் காணப் படவில்லை. எனவே, அவ்வாண்டில் தான் இவர்கள் சிவபெருமான் திருவடியை எய்தி யிருத்தல் வேண்டும். ஆகவே, இவர்கள் சற்றேறக் குறைய அறுபது ஆண்டுகள் திருக்கோயில்களுக்குத் திருப்பணிகளும் பல்வகை அறங்களும் செய்து சைவ சமயத்திற்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளனர் என்று கூறலாம். எனவே, இவர்கள் எண்பத்தைந்து ஆண்டுகள் வரையில் இருந்தவர்களாதல் வேண்டும். இவர்கள் காலத்தில் சோழ இராச்சியத்தில் சக்கர வர்த்திகளாக வீற்றிருந்து அரசாண்ட சோழ மன்னர்கள் அறுவர்; அவர்கள் முதற் பராந்தக சோழர், முதற்கண்ட ராதித்த சோழர், அரிஞ்சயசோழர், சுந்தர சோழர், உத்தம சோழர், முதல் இராசராச சோழர் என்போர். அப்பெரு வேந்தர்கள் இவ்வரசியார் புரிந்த அறச் செயல்களுக்கு உளம் உவந்து துணை நின்றமை குறிப்பிடத்தக்கது. இதுகாறும் ஆராய்ந்து கண்ட அளவில், இவ்வரசியார் நம் தமிழகத்தில் பத்துச் செங்கற் கோயில்களைக் கருங்கற்கோயில் களாகக் கட்டியுள்ளனர் என்று தெரிகிறது. அவை, திருநல்லம், செம்பியன்மாதேவி, விருத்தாசலம், திருவாரூர் அரநெறி, திருமணஞ்சேரி, தென்குரங்காடு துறை (ஆடுதுறை புகைவண்டி நிலைய முள்ள ஊர்) திருக்கோடிகா, ஆநாங்கூர், திருத்துருத்தி (குற்றாலம் புகைவண்டி நிலையமுள்ள ஊர்), திருவக்கரை என்ற ஊர்களிலுள்ள சிவாலயங்களே யாகும். அன்றியும், பல கோயில்களுக்கு நாள் வழிபாட்டிற்கும், திரு விழாக்களுக்கும், மூவர் திருப்பதிகங்கள் பாடுவோர்க்கும் நுந்தா விளக்குகளுக்கும், நந்தவனங் களுக்கும் பல பல நிவந்தங்கள் அளித்துள்ளனர்; பல கோயில்களுக்கு விலை உயர்ந்த அணிகலன்களோடு பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட பல்வகைக் கலங்களும் வழங்கி யுள்ளனர். இவ்வாறு இவர்கள் செய்துள்ள அறங்கள் மிகப் பலவாகும். இவ்வரசியார் புரிந்த தொண்டுகளுள் முதலில் வைத்துப் பாராட்டற்குரியது தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரி ராசபுரம் என்று இந்நாளில் வழங்கும் திருநல்லம் என்ற ஊரிலுள்ள திருக்கோயிலைக் கருங்கற்கோயிலாகக் கட்டி, அதற்குநாள் வழிபாடு, திருவிழா முதலான வற்றிற்கு நிவந்தமாக இறையிலி நிலங்கள் அளித்திருப்பதேயாம். அக்கோயிலைத்தம் ஒப்புயர்வற்ற கணவனார் கண்டராதித்த சோழர் பெயரால் அமைத்து, அதில் அவ்வரசர் பெருமான் சிவலிங்க வழிபாடு செய்வதாகத் திருவுருவம் ஒன்று வைத்திருப்பது உணரற்பாலது. இவ்வரசியாரின் ஆணையின்படி அக்கோயிலை அமைத்தவன் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிய ஆலத்தூருடையான் சாத்தன் குணபத்தன் அரசரண சேகரன் என்பவன். அவனது தொண்டினைப் பாராட்டி அரசாங்கத்தார் அவனுக்கு இராசகேசரி மூவேந்தவேளான் என்ற பட்டம் வழங்கியிருத்தல் அறியத்தக்கது. இவ்வம்மையார் தமக்குப் பணி செய்யும் பணி மகள் இலச்சியன் மழபாடியின் நலங்கருதித் திருவெண் காட்டுச் சபையாரிடம் 125 கழஞ்சு பொன்னுக்கு நிலம். வாங்கி அவ்வூர்க் கோயிலில் அந்தணர்க்கு அமுதளித்தலாகிய அறத்தினைச் செய்திருப்பது, எளியோர்பால் இவர்கள் கொண்ட பேரன்பினைப் புலப்படுத்துவதாகும். முதல் இராசராச சோழருடைய புதல்வரும் பேரரசரும் ஆகிய முதல் இராசேந்திர சோழர் என்ற கங்கை கொண்ட சோழர் செம்பியன் மாதேவியிலுள்ள திருக்கயிலாச முடையார் கோயிலில் கி.பி. 1019-ஆம் ஆண்டில் இவ்வரசியாரின் திருவுருவத்தை எழுந்தருளுவித்து வழி பாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்க அரிய நிகழ்ச்சி யாகும். செம்பியன்மாதேவிக் கோயிலில் செம்பியன் மாதேவிப் பெரு மண்டபம் அமைக்கப்பட்டிருத்தல் போல் செங்கற்பட்டு ஜில்லா திருமுக் கூடல் வேங்கடேசப் பெருமாள் கோயிலிலும் இவ்வரசியாரை நினைவு கூர்தல் காரணமாகச் செம்பியன் மாதேவிப் பெரு மண்டபம் என்ற மண்டபம் ஒன்று முதல் இராசராச சோழரால் கட்டப் பெற்றுள்ளது. அப்பெரு மண்டபம், ஊர்ச் சபையார் கூடித் தம் கடமைகளை நிறைவேற்றப் பயன்பட்டு வந்தது என்பது ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது. திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள திரு மழபாடிக் கண்மையில் செம்பியன் மாதேவிப் பேரேரி என்ற ஏரி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தமை ஒரு கல்வெட்டால் தெரிகின்றது. அச்செயல்கள் முதல் இராசராச சோழர், முதல் இராசேந்திர சோழர் முதலான பேரரசர்கள் இவ்வரசி யாரிடத்தில் எத்துணை அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர் என்பதை நன்கு புலப்படுத்துவனவாகும். அவ்வரசர் பெருமான்கள் சிவபத்தி, சமயப் பொறை முதலான உயர் குணங்கள் பலவும் ஒருங்கே அமையப்பெற்றுச் சமயத் தொண்டுகள் பல புரிந்து, ஒப்புயர்வற்ற பெரு வேந்தர் களாக விளங்கியமைக்குக் காரணம் இவ்வரசியாரால் இளமையில் வளர்க்கப் பெற்றமையே என்பது உணரற்பாலது. அறப் பெருஞ் செல்வியராகிய இவ் வரசியாரது புகழ் நம் தமிழகத்தில் என்றும் நின்று நிலவுவதாக. கல்கியில் வந்த கடிதம் பொன்னி எனப்படும் காவிரி நதியின் புனலால் செந்நெல் வளம் கொழிக்கும் பாக்கியம் பெற்றது சோழநாடு. அவ் வளநாட்டிலே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றி மூத்தகுடியாகவும், படைப்புக் காலந் தொட்டு மேம்பட்டு வரும் பழங் குடியினராகவும் போற்றப்படும் சோழ அரசர்களால் கட்டுவிக்கப்பட்ட பெருங் கோயில்கள் பற்பல. சிவ பக்தியிற் சிறந்த செம்பியன்மாதேவியார் தன் பக்தியின் சின்னமாக நாகையை அடுத்த ஓர் சிற்றூரை விலைக்கு வாங்கி ஸ்ரீ கைலாச நாதருக்கு ஒரு கோயில் எடுப்பித்து அவ்வூருக்கும், கோயிலுக்கும் செம்பியன் மாதேவி என்ற பெயரைச் சூட்டினர் என்பது தென் இந்திய அரசாங்கக் கல்வெட்டு ஆராய்ச்சி இலாக்காவினரின் 1925-26 ஆம் ஆண்டு அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது. இத் தலம் நாகைக்குத் தென் மேற்கில் சுமார் எட்டு கல் தொலைவில் அமைந்துள்ளது. கீழ்வேளூர் புகைவண்டி நிலையத்தி லிருந்து சுமார் ஆறு கல் தொலைவிலும், தேவூர் என்ற பதியிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் மூன்று கல் தொலைவிலும் உள்ளது. இத் திருக்கோயில் மிக மிகத் தொன்மையான முறையில் காட்சியளிக்கிறது. கோயிலின் இராசகோபுரம் ஓர் அடுக்கு மட்டும் கட்டப்பட்டுப் பூர்த்தி செய்யப் படாத நிலையில் விடுப்பட்டுள்ளது. முதல் பிரகாரத்தில் சுப்பிரமணியர், அம்பிகை கோயில்கள் கிழக்கு முகமாக அமைந்துள்ளன. இரண்டாவது கோபுரம் மூன்று அடுக்குக் கொண்ட தாய்ப் பூர்த்தி செய்யப் பட்டுள்ளது. கர்ப்பகிரகத்துக்குப் பின்புறமாக கோஷ்டத்தில் மகாவிஷ்ணு உருவம் அமைக்கப் பெற்றுள்ளது. இத்தலத்திற்கருகில் சோழ வித்தியாபுரம் என்ற புகழ் பெற்ற ஊர் அமைந்துள்ளது. இந்தச் சரித்திரப் பிரசித்திப் பெற்ற கோயிலுக்குப் பற்பல நிவந்தங்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. குந்தவையும் முதலாம் இராச ராசனுடைய மனைவியும், செம்பியன்மாதேவியின் திரு நட்சத்திர மாகிய சித்திரை கேட்டையில் ஸ்ரீ கைலாசநாதருக்கு நிவேதனம் செய்யப் பல நிவந்தங்களை ஏற்படுத்தியுள்ளனர். உத்தம சோழர் ஆட்சியில் அன்னாரது மனைவியாராகிய திரிபுவன மாதேவியாரால் தன் மாமியார் செம்பியன் மாதேவியின் திரு நட்சத்திரத்தில் ஸ்ரீகைலாசநாதருக்கு நிவேதனம் செய்யப்பல நிவந்தங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மேலும், ஜடாவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி பாண்டியர் காலம் வரையில் இக்கோயிலுக்கும் ஏற்படுத்தப் பட்டிருக்கிற பல நிவந்தங்கள் பற்றித் தென் இந்தியக் கல்வெட்டு ஆராய்ச்சி இலாக்காவினரின் 1925-26 ஆம் ஆண்டு அறிக்கையில் 479-501 வரை உள்ள 22 கல்வெட்டுகளைப் படி எடுத்துள்ளார்கள். இக்கோயில் செம்பியன்மாதேவியார் காலத்தில் கட்டப்பட்ட தாகத் தெரிகிறபடியால் இது கி.பி. 985 ஆம் ஆண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இராஜ ராஜன் (கி.பி. 985-1012) இராஜேந்திரன் முதலியவர்களால் தொடர்ந்து கட்டப் பட்டிருத்தல் வேண்டும். இராஜேந்திரன் காலத்திய கல்வெட்டு ஒன்றில் இடபவாகன தேவருக்கும் செம்பியன் மாதேவி உள்ளிட்ட வேறு சில விக்கிரங் களுக்கும் நிவேதனத்துக்கு விடப்பட்ட நிலங்களின் வரியை கிராமப் பெருமக்கள் சபை தள்ளுபடி செய்து விட்டதாகத் தெரிய வருகிறது. இதைப் பார்க்க, செம்பியன் மாதேவியாருக்கு உருவச்சிலை இருப்பதாகக் தெரிகிறது. அது இப்பொழுது கோயிலின் மேற்குப் பிரகாரத்தில் பக்த முறையில் காட்சியளிக்கும் நல்லம்மை என்ற உருவமாக இருத்தல் வேண்டும். கோயிலுக்குச் சொந்தமாகச் சுமார் 250 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அரசர்களால் இனாமாக அளிக்கப்பட்ட இனாம் நிலங்களில் சுமார் நாற்பது ஏக்கர் இனாம் ஒழிப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. செம்பியன்மாதேவி, என்.கோவிந்தசாமி, 27-3-54. நிர்வாக அதிகாரி. *** இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் - சிலப்பதிகாரம் - அரங்ககேற்றுகாதை 37. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்- தொல் - பொருள் - செய்யுளியல் - சூத் - 79. தண்பனை தழீஇய தளரா விருக்கைக் குணபுலங் காவலர் மருமான் - சிறுபாணாற்றுப்படை - 78 , 79. நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே - புறநானூறு -45. புலிபொறித்துப் புறம்போக்கி - பட்டினப்பாலை 35. கலிங்கத்துப்பரணி - தாழிசைகள் 173, 174. விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 1, 2, 3. இராசராசசோழனுலா - 1, 2, 3. மணிமேகலை - சிறைசெய்காதை 25-40 செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்குங் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் றனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை மணிமேகலை - பதிகம் 9-12. புறநானூறு 39 உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை சிலப்பதிகாரம் - வாழ்த்துக்காதை. கலிங்கத்துப்பரணி 181. The Modern Badami in the Bijapur District. Mysore Gazetter, Volume II Part II, Pages 708, 709 & 710. Mysore Gazetteer Volume II, Part II Pages 707 & 708. கலிங்கத்துப்பரணி - தா. 181. தத்து நீர்வராற் குருமி வென்றதுந் தழுவு செந்தமிழ் பரிசில் வாணர்பொன் பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும். - க. பரணி - தா. 185. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கலிங்கத்துப்பரணி - தா. 182. The Tiruvalangadu Plates of Rajendra Chola I South Indian Inscriptions Vol. III No. 205; Kanyakumari Inscription of Vira Rajendra Deva Epigraphia Indica Vol. XVIII No. 4. Ins. 331 of 1927. கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங் காதலாற் பொன்வேய்ந்த காவலனும் -விக்கிரமசோழனுலா - கண்ணி 16. ஒன்பதாம் திருமுறையின் ஆசிரியர்களுள் ஒருவராகிய இவ்வரசர் பெருமானது வரலாற்றைச் செந்தமிழில் யான் எழுதியுள்ள முதற் கண்டராதித்த சோழதேவர் என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம். திருவாரூர் அரனெறி, செம்பியன்மாதேவி (நாகபட்டினம் தாலூகா), தென்குரங்காடுதுறை (S.I.I. Vol. III. No. 144) திருநல்லம் (கோனேரி ராஜபுரம் S.I.I. Vol. III, No. 146, 147 and 151); திருமணஞ்சேரி; விருத்தாசலம். சுந்தர சோழனது பட்டத்தாசியாகிய வானவன் மாதேவி தன் நாயகன் இறந்த போது உடன்கட்டை ஏறினாள் என்றும் அதுபோது அவ்வம்மைக்கு ஓர் இளங் குழந்தையிருந்ததென்றும் திருக்கோவிலூரிள்ள முதல் இராசராசன் கல்வெட்டு உணர்த்துகின்றது. (செந்தமிழ் - தொகுதி 4 பக். 232.) South Indian Inscriptions Vol. II. No. 6. Mysore Gazetteer Vol. II, Page 947. S.I.I.i Vol. Vi. No. 167. இந்த இராசேந்திர சோழனே நம் வரலாற்றுத் தலைவனாகிய முதலாங் குலோத்துங்கசோழன். இப் பெயர் இவனுக்கு அபிடேகப் பெயராக வழங்கத் தொடங்கிற்று. க, பரணி - தா. 223, 224, 225. S.I.I.Vol.I.No.39. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம், பக் - 26. S.I.I.Vol. VI.No. 201. S.I.I.Vol. III, No 205; Kanyakumari Inscription of Virarajendra Deva - Epi.Ind. Vol. XVIII. No. 4 Inscription No. 271 of 1927. S.I.I.Vol. III, No. 68; க.பரணி தா. 239. வயிராகரத்தில் யானைகளும் வைரச்சுரங்கங்களும் முற்காலத்தில் மிகுதியாக இருந்தன என்று அயினி அக்பரி கூறுகின்றது. இது சக்கரக்கோட்டத்திற்கு அண்மையிலுள்ளது. (Epi. Ind. Vol. X. No. 4) S.I.I. Vol. III, No. 68; க. பரணி - தா. 241. சக்கரக்கோட்டம் என்பது மத்திய மாகாணத்திலுள்ள வத்ஸராச்சியத்தில் உள்ளது.(Baster State) இஃது இது போது இந்திராவதி ஆற்றின் தென்கரையில் இருக்கிறது; சித்திரக்கூடம் (Chitrakut) என்று வழங்கப்படுகின்றது; தற்காலத் தலைநகராகிய ஜகதல்பூருக்கு மேற்கே 25 மைல் தூரத்தில் உள்ளது. (Epi. Ind. Vol. IX. page 178) இதனைத் தலைநகராகக் கொண்டது சக்கரக் கோட்ட மண்டலம் ஆகும். குருபால் என்ற விடத்திலுள்ள ஒரு கல்வெட்டு சக்கரக்கூடாதீவரனாம்.... தாராவர்ஷநாமோ நரேவரா என்று கூறுகின்றது. இதனால், சக்கரக்கோட்ட மண்டலத்தை ஆட்சி புரிந்தவன் தாராவர்ஷன் என்பது உறுதி எய்துகின்றது. (Do - pages 161 & 179). க.பரணி - தா. 245, 246, 247. சோழவமிச சரித்திரம் பக். 7. S.I.I. Vol. III. page 131. குலோத்துங்கசோழனுலா - வரி 52. 3. The Historical Sketches of Ancient Dekhan, page 358. The Historical Sketches of Ancient Dekhan, pages 358 & 359. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் - பக். 30. சளுக்கிய விக்கிரமாதித்தன் சரித்திரம் பக் - 34. சோழவமிச சரித்திரச் சுருக்கம் - பக். 31. (a) தளத்தொ டும்பொரு தண்டெழப் பண்டொர்நாள் அளத்திபட்ட தறிந்திலை யையநீ. க. பரணி - தா. 372. வில்லது கோடா வேள்குலத்தரசர் அளத்தியி லிட்ட களிற்றின தீட்டமும் முதற்குலோத்துங்கசோழன் மெய்கீர்த்தி. தண்ட நாயகர் காக்கு நவிலையிற் கொண்ட வாயிரங் குஞ்சர மல்லவோ க. பரணி - தா. 373 க. பரணி - தா. 89. வடகடல் தென்கடல் படர்வது போலத் தன்பெருஞ் சேனையை யேவிப் பஞ்சவர் ஐவரும் பொருத போர்க்களத் தஞ்சி வெரிநளித் தோடி அரணெனப் புக்க காடறத் துடைத்து நாடடிப் படுத்து முதற்குலோத்துங்கசோழன் மெய்க்கீர்த்தி. விட்ட தண்டெழ மீனவர் ஐவரும் கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ க. பரணி - தா. 368. வேலை கொண்டு விழிஞ மழித்ததுஞ் சாலை கொண்டதுந் தண்டுகொண் டேயன்றோ க. பரணி - தா. 370 விக்கிரமசோழனுலா - கண்ணி 24. S.I.I.Vol.III.No. 73. Do. page 144 Foot note. S.I.I.Vol. IV, page 136 Epi. Ind. Vol. III, page 337. Indian Antiquary Vol. 18, pages 162 & 166. க. பரணி - தா. 352. க.பரணி - தா. 229. 239 கடாரம் மலேயாவின் மேல்கரையில் தென்பக்கத்தில் கெடா என்னும் பேருடன் உள்ளது. The Smaller Leiden Grant. க. பரணி - தா. 286 க.பரணி - தா. 519 264. க. பரணி - தா. 86 க. பரணி - தா. 260. க. பரணி - தா. 273. க. பரணி - தா. 272. S.I.I. Vol. III, page 177. போர்த்தொழிலால் ஏனைக் கலிங்கங்கள் ஏழினையும் போய்க் கொண்ட தானைத் தியாக சமுத்திரமே விக்கிரமசோழனுலா - கண்ணி - 331 விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 59, 152, 182, 209, 216, 256, 284. S.I.I. Vol. I. No. 39-A Grant of Virachoda. Do. Do. க.பரணி - தா. 430 522. விக்கிரமசோழனுலா - கண்ணி - 69. வதிஸ்ரீ கோ இராசகேசரிவன்மரான திரிபுவன சக்கர வர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று, ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்துஎயில் நாட்டுத் திருவத்தியூராழ்வார்க்குச் சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ் சேரியுடையான் வேளான் கருணாகரனாரான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு. (S.I.I. Vol. No. 862) S.I.I. Vol. III, No. 73. S.I.I.Vol. IV, No. 225. S.I.I. Vol. VI, No. 225. Ins. No. 369 of 1921; M.E.R. 1922; செந்தமிழ்த் தொகுதி 23 விக்கிரமசோழனுலா - கண்ணிகள் 78, 79. தமிழ்ப் பொழில் - துணர் 4-பக் - 320. Ins. 198 of 1919. S.I.I.Vol. II Introduction pages 24 to 27 அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்டார் வளநாட்டுத் திரைமூர் நாட்டுப் பள்ளிச் சந்தம் இறக்கின நெற்குப்பை அளந்தபடி நிலம் - S.I.I. Vol. II,Ins, No. 4; கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் நடுவிலுள்ள நிலப்பரப்பு, விருதராசபயங்கர வளநாடு என்று வழங்கிற்று என்பது மாயூரந்தாலூகா இலுப்பைப் பட்டிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது. க. பரணி - தா. 134, 243, 582. சோழவமிச சரித்திரச் சுருக்கம், பக். 48, 49. The Historical Siketches of Ancient Dekhan, pages 371, 372 & 374. S.I.I. Vol. II. Nos. 4 & 5. S.I.I. Vol. III, No. 9. S.I.I. Vol. II, Nos. 98 & 99. The Historical Sketches of Ancient Dekhan, page 348. Do. pages 357 & 358. (a) S.I.I. Vol. III, No. 96. (b) Do. page 229 Foot - note. S.I.I. Vol. II, Ins. Nos. 36, 41, 85. S.I.I. Vol. II, Ins Nos. 35, 51, 84. சோழவமிச சரித்திரச் சுருக்கம் பக். 53, 55. சோழவமிச சரித்திரச் சுருக்கம் பக். 54. Annual Report on Epigraphy of the Southern Circle for the year ending 31st March 1916, pages 115 & 116. திருவைகாவூரிலிருந்து எடுக்கப்பெற்றதும் அவ்வூரிலுள்ள திருக்கோயில் முதர் குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் கற்றளியாக அமைக்கப்பெற்ற செய்தியை யுணர்த்துவதும் ஆகிய ஒரு கல்வெட்டு இப்புத்தகத்தின் இறுதியில் சேர்க்கப்பெற்றுளது. (a) S.I.I. Vol. III, INs. 139, 51-A (b) Do. Vol. II, Ins. No. 65. S.I.I. Vol. III, Nos. 49, 57 & 66. Ins. 333, 335 & 343 of 1918 (Madras Epigraphical Report). The Historical sketches of Ancient Dekhan page 336. Annual Report on South Indian Epigraphy for 1918-19, part II, para 2. Foreign Notices of South India, p. 59. பாண்டியன் வரலாறு. பக்கம் 116 மணிமேகலை. 25. 176 - 200 1. சென்னிவெண்குடை நீடநபாயன் திருக்குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல் வளந்தர இயல்பினிலளித்துப் பொன்னி நன்னதி மிக்க நீர்பாய்ந்து புணரிதன்னையும் புனிதமாக்குவதோர் நன்னெடும் பெருந்தீர்த்தமுன்னுடைய நலஞ் சிறந்தது வளம் புகார் நகரம். (பெரிய - இயற்பகை - 1) தமிழிலக்கிய வரலாறு. இருண்டகாலம். பக். 20.21