பண்பாட்டு வரலாறு நூற்களஞ்சியம் - தொகுதி ஐந்து இறைவனின் எண்வகை வடிவங்கள் சாத்தன்குளம் அ. இராகவன் அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் தொகுதி ஐந்து இறைவனின் எண்வகை வடிவங்கள் | சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி | முதல் பதிப்பு : 2006 | தாள் : 18.6 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 12+260 = 272 | நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 255 | படிகள் : 1000 | நூலாக்கம் : சரவணன், மலர் அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 இந்நூலாக்கத்திற்கு உதவியவர்கள் : பேரா. வீ. அரசு மற்றும் ஆய்வாளர், இர. பிருந்தாவதி. பதிப்புரை எம்பதிப்பகம் தமிழ்மொழி, இனம், கலை, நாகரிகம், பண்பாடு, இசை, நுண்கலைகள், தொல்லியல் ஆய்வு தொடர்பான அரிய செய்திகள் அடங்கிய நூல்களைத் தேடியெடுத்து இதுகாறும் வெளியிட்டு வருகிறது. கடந்த காலத்தில் நூலாசிரியர் சாத்தன்குளம் அ.இராகவன் எழுதிய எட்டு நூல்களை அமிழ்தம் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளோம். உங்கள் கைகளில் தவழும் இறைவனின் எண்வகை வடிவங்கள் எனும் இந்நூல் கையெழுத்துப் படியாக நூலாசிரியர் இராகவன் அவர்களின் மகனார் இரா.மதிவாணன் அவர்களிடம் இருந்தது. எங்களுடைய வேண்டுகோளை ஏற்று மனமுவந்து கையெழுத்துப்படியினை கொடுத்து உதவினார். இதனை முதன்முதலாக வெளியிடு கின்றோம். மொழிக்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் அரிய நூல்களை வெளியிட்டுவரும் எங்கள் தமிழ்ப்பணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தோன்றாத் துணையாக இருந்து வருகிறார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் நூலாசிரியரின் இன்னபிற நூல்களும் வெளி வருகின்றன. இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப் போடும் வருவதற்கு பல்லாற்றானும் துணை இருந்து உதவியவர். மேலும், இந்நூலுக்கு முன்னுரை அளித்துச் சிறப்பு செய்துள்ள பி.இராமநாதன் அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரியதாகும். நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் வெளிவந்த நூல்களையும், வெளி வராமல் கையெழுத்துப் படியாக இருந்தவற்றையும் , குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து நூல் களஞ்சியங் களை பொருள் வாரியாகப் பிரித்து பதினாறு தொகுதி களாக உங்கள் கைகளில் தவழவிட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாரே வெளியிட்டுள்ளோம். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர் களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றி யுணர்வோடு பாராட்டுகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்துராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்டபோது பல்லாற்றானும் துணையிருந்த பெருமைக்குரியவர். அவர் அண்மையில் மறைந்து விட்டார். மறைவுக்கு முன்பாக நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாணனிடமும் உரிமையுரை வாங்கி உதவியதோடு இத் தொகுதிகள் வெளிவருவதற்குப் பெரிதும் துணை இருந்தவர். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதிகள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத் தொகையன், செல்வி பிருந்தாவதி, திருமதி கலையரசி, செல்வி கோகிலா, செல்வி அரு.அபிராமி ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த அரங்க. குமரேசன், மு.ந. இராமசுப்ரமணிய ராசா, சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் மலர், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வே. தனசேகரன்,இல.தருமராசு, ரெ. விஜயகுமார் ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். இதனை அனைவருக்கும் பயன்படத் தக்க வகையில் வெளியிட்டுள்ளோம். வாங்கிப் பயன் பெறுவீர். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற சந்தேகத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) நாள் கா. வீரலட்சுமி அம்மையார் 30.12.2005 (அறிஞர் அ. இராகவனின் தங்கை) முன்னுரை சாத்தன்குளம் அ.இராகவன் பண்டைத் தமிழர் தமிழக வரலாறு பற்றியும், அவ் வரலாறு சார்ந்த அரசியல், சமூகம், பொருளியல், பண்பாடு. கலை, சமயம் போன்ற பல்வேறு உட்புலங்கள் பற்றியும் ஆழ்ந்து படித்து ஆராய்ந்து அரிய நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் சிவபெருமானின் எண் வகை எழிற்கோலங்கள் (அட்ட மூர்த்தங்கள்) , அந்தந்தக் கோலச் சிற்ப உருவங்களின் தோற்றம், வளர்ச்சி, அட்ட மூர்த்த வடிவங்களில் முன்னோர் கண்ட அளவிலாத தத்துவங்கள் ஆகியவற்றைப் பற்றி எழுதியுள்ளார். எட்டுக் கோலங்களாவன: தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி) மணவழகர்(கலியாணசுந்தர மூர்த்தி) சோமகந்த சுகாசன மூர்த்தி சந்திரசேகர மூர்த்தி காலசம்மார மூர்த்தி திரிபுர சம்மார மூர்த்தி கசசம்மார மூர்த்தி பிச்சாடனமூர்த்தி என்பவையாம். ஒவ்வொரு கோலத்தையும் -அக்கோலச் சிற்பம் சார்ந்த தொன்மம், ஆகமக்கூற்றுகள், சிற்பநூல் விளக்கம், படிமங்களின் விளக்கம், தத்துவ விளக்கம், இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றுடன், நிரல்பட விளக்கியுள்ளார். இயல்கள் 2-7 இல் சைவசமயம், ஆகமங்கள், இலிங்கங்கள், மூர்த்தங்கள், சிவலிங்க வழிபாடு, படிமங்களின் இலக்கணம், படிமங்களின் அளவைமுறை, அட்டமூர்த்தங்கள் பற்றிய பொதுச்செய்திகள் ஆகியவற்றைத் தருகின்றன. இயல்கள் 8-13 அட்டமூர்த்தங்களைத் தனித்தனியே விளக்குகின்றன. சிவனியக் கொண்முடிவு பற்றிப் பயில்பவர் களுக்கும், தமிழக சிற்ப, படிமக்கலை பற்றி அறிய விரும்பு பவருக்கும் இது சிறந்த கருவி நூலாகும். 2) இந்நூலில் ஆங்காங்கே இராகவன் வலியுறுத்தும் பண்டைத் தமிழர் சமயம் பற்றிய பொதுச் செய்திகளில் முதன்மை யானவை: தமிழர் சமயமே பிற்றைய இந்து சமயத்துக்கு அடிப்படையானது; சிவவழிபாடே இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே காலத்தால் முந்தியது; சிந்துவெளி நாகரிகம் தொல் தமிழ நாகரிகமே - மொழி, பண்பாடு, சமயம் ஆகிய அனைத்துக் கூறுகளிலும்; தமிழரின் தாய்த் தெய்வ வழிபாடும், சிவவழிபாடும் சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்தே (ஏன் அதற்கு முன்னிருந்தே) தொடர்ந்து வருபவை;ஆகமங்கள் தமிழருடையன; முதலில் தமிழில் இருந்த அவைகளும் சிற்ப நூல்களும் பின்னர் சமகிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டன; போன்றவையாம். இக்கருத்துக் களை ஆங்காங்கே இந்நூலில் பல இடங்களில் காணலாம். இவற்றுக்கான ஆதாரங்களுள் இராகவன் எழுதியதற்கு முன்னமே வெளிவந்தவை சில (மார்ஷல், மறைமலையடிகள், கா.சுப்பிரமணியபிள்ளை போன்றோர் கருத்துக்கள்); பின்னர் அண்மைக்காலத்தில் வெளிவந்தவை சில. இவ்விருவகையிலும் முதன்மை வாய்ந்த ஆதாரங்கள் கீழே ஒருசேரத் தரப்படுகின்றன, இந்நூலைப் படிப்பவர் நன்மை கருதி . 3) இன்றைய இந்து சமயக் கடவுளரும் வழிபாட்டு முறைகளும் முற்றிலும் தமிழிய (திராவிட) சார்புடையவையே; ஆரியரிடமிருந்து பெற்றவை அல்ல என்பதை பி.டி.சீனிவாச ஐயங்கார், மறைமலையடிகள் போன்றோரும், சிறந்த மேனாட்டறிஞரும் நிறுவியுள்ளனர். இந்து சமயக் கோட்பாடுகளில் அடிப்படையாகவும் சிறந்தனவாகவும் உள்ளவையெல்லாம் வடநாட்டில் பரவலாக 3000 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழ் மேன்மக்களிடமிருந்து பெறப்பட்டவை என்பதையும், அவற்றை ஆரியருடையவையாகக் கொள்வது அறியாமை என்பதையும் மறைமலையடிகள் தமது முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையிலும் பிற்றை நூல்களிலும் நிறுவியுள்ளார். கா.சுப்பிரமணியபிள்ளை (தமிழர் சமயம் 1940), தேவநேயப் பாவாணர் (தமிழர் மதம் 1972) ஆகியோருக்கும் அக்கருத்து உடன்பாடேயாகும். MÇa ntj§fËÈUªJ khWg£l, mt‰W¡F Kªâa ‘jÄœ eh‹kiwfŸ’ ïUªjdbt‹D« nfh£gh£ilí« fh.R¥ãukÂa ãŸis ( (1927 rdtÇ:Ancient Tamil Scriptures “The Madras Christian College Magazine; Vol VII g¡f§fŸ 7-12), ã.vÞ.fhágh©oa‹,I.V.vÞ.(1996: India, that is Sidd; New Delhi; Allied publishers) முதலியோர் கொண்டிருந்தனர். ரிக் வேத காலத்திலிருந்தே (கி.மு.1000) குடி கொலை மலிந்த ஆரிய வேள்வியின் தீவினைப் பெற்றியுஞ் சிறு தெய்வ வணக்கச் சிறுமையுந் தேற்றி அன்பும் அருளும் பெருகச் செய்த தமிழ்ச் சான்றோரும் உளர். அவர் அருளிச் செய்தனவே; முத்தீ வேள்வியும் உருத்திர வழிபாடுஞ் சிறந்தெடுத்துக் கூறும் இருக்கு, ஏசுர், சாம, அதர்வ தேவப்பதிகங்கள் சில பலவும்; உண்மை வழா உபநிடதங்களும், சாங்கிய, யோக, வைசேடிக, நையாயிக, வேதாந்த சூத்திரங்களும்; மற்சம், வாயு முதலான சில புராணங் களும் பௌட்கரம், மிருகேந்திரம் முதலான சில சிவாகமங் களும் பிறவுமாம் என்பது அடிகள் முடிவு. இம் முடிவுக்கான எடுத்துக் காட்டுகளாக அடிகள் தந்துள்ள பலவற்றுள் முதன்மையான சில வருமாறு: இருக்கு வேதத்திற் பரதர் முதலிய பெயர்களால் வழங்கப்பட்ட பண்டைத் தமிழ் நன்மக்களே ஞாயிறு, திங்கள், தீ என்னும் முத்தீ வடிவில் வைத்து முழுமுதற் கடவுளான சிவ பிரானை வழிபடும் நுட்ப முறையைக் கண்டோராவர் (1930:மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்) விசுவாமித்திரர் என்னும் தமிழரச முனிவரால் செய்து சேர்க்கப்பட்ட இருக்கு வேத மூன்றாம் மண்டிலத்தில் உள்ள காயத்திரி மந்திரமானது ஞாயிற்று மண்டிலத்தின் கண் முளைத்து விளங்கும் பர்க்கன் என்னும் பெயருடைய சிவபிரான் மேற்றாய் விளங்குகிறது (1923:தமிழர் நாகரிகம்) கொல்லா அறத்தை முதன் முதற் கண்டறிந்து அதற்கேற்பத் தமது இம்மை வாழ்க்கையை நடத்தினவர்கள் தமிழரில் மேன் மக்களாய் இருந்த பெரும்பகுதியாரே... மற்றை மக்கட்பிரிவினரி லுள்ள எந்த மேலோரும் இவ்வரு மருந்தன்ன உண்மையினைக் கண்டறிந்திலர்... வடக்கிருந்த சமணர், சாக்கியர், சாங்கியர், யோகர் முதலாயினாருங்கொல்லா வறத்தினை விடாப் பிடியாய்க் கொண்டு ஒழுகினரல்லரோ வெனில்; சமண சாக்கியர் முதலான அவரெல்லாம் ஆரியர் வருதற்கு முன்னமே இமயமலை வரையிற் பரவி நாகரிகத்திற் சிறந்து உயிர் வாழ்ந்த வடநாட்டுத் தமிழ்மேன் மக்களின் மரபில் வந்தவரே (1941 தமிழர் மதம்) சமண, புத்தக் கருத்துக்கள் ஆரியருக்கு முற்பட்ட வடநாட்டுத் திராவிட மெய்யியலில் பிற்கால வளர்ச்சிகளே என்பர் சர் ஜான் மார்ஷலும் (1934 மொகஞ்சொதரோவும் சிந்துவெளி நாகரிகமும்) 4. அடிகளின் மேற்சொன்ன ஆய்வுக் கருத்துக்களின் கருவைப் பின்வருமாறு கா.அப்பாத்துரையார் 1956இல் (1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் தமிழாக்கத்தின் அடிக் குறிப்பில்) சுருங்கக் குறித்தார்: தமிழர் பண்டையச் சமய வாழ்வு இன்றைய பல சமயங் களின் உருவாகா மூலக்கரு முதலைத் தன்னிடமாகக் கொண்ட வாழ்வேயாகும். அதில் எல்லாச் சமய மூலமும்காணலாம்...ò¤j, சமண, சைவ, வைணவக் கருத்துக்கள் உருவாகுமுன்,அ¢சமய¥பெயர்கŸவேறுவேறாக¤தமிழ®நெறியினின்Wபிரியுமுன்,ஆரிய«இlநின்Wதமிழரி‹ஒUநெறியை¥பலவாWபிரிக்குமுன்,அவ்வெல்லhநெறிகளுக்கு«வழிகாட்டிaமிfமுற்பட்lகால¤தமிœஅறிவ®மரòசார்ந்jஅறிஞருŸஒருவuதிருவள்ளுவ®என்பJஉய்த்துணர¤தக்fஉண்மையாகும்” 5(i) இப்பொருள் குறித்து மேலும் சில மேனாட்டறிஞர் கூற்றுக்களும் மனதிற் கொள்ளத்தக்கன:- ஹென்ரிச் சிம்மர்: வட மேற்கிலிருந்து நுழைந்த ஆரியர்களால் மகதம் முதலிய கீழ்த்திசை நாடுகளிலிருந்த ஆரியரல்லாத மேன்மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்திலர். அத்தகைய மேன்மக்கள் குடும்பங்கள் பல தொடர்ந்து இருந்தன. ஆரிய ஆளும் குடும்பங்கள் வலுவிழந்து வீழத் தொடங்கிய பின் முந்தைய உள்ளூர் ஆளும் குடும்பங்கள் மீண்டும் வலுப்பெற்றனர். எடுத்துக்காட்டாக சந்திரகுப்த மௌரியன் இத்தகைய குடும்பத்தைச் சார்ந்தவன். புத்தரும் அவ்வாறே. (The Philosophies of India 1951) லெவின்: இந்து சமயத்தில் யாண்டும் காணப்படும் உருவ வழிபாடு இந்தியாவில் இருந்த ஆரியர் அல்லாதார் வழிபாட்டு முறைகளில் இருந்தே பிராமணீயத்துக்கு வந்தது. (G.M.Bongard Levin/ A complex study of Ancient India 1986) வால்பர்ட்: மொகஞ்சோதரோ முத்திரையில் காணப்படுபவர் போன்ற (ஆரியர்களுக்கு முந்தைய இந்திய) யோகிகள் வந்தேறிகள் மொழியைச் சில காலத்துக்குள் கற்றுக் கொண்டு தமது சமய மறை பொருட்களை (வேதப் பாடல்களை இயற்றிய) பிராமணர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கிவிட்டனரோ? (Stanley Wolpert: A New History of India 1982) வால்பர்ட்: ஆரிய நாடோடிகளின் முரட்டுப் பழக்க வழக்கங்கள், அவர்களுடைய கடுமையான பெரும்போர்கள் ஆகியவற்றுக்கும் அஹிம்சைக்கும் (உயிர்களுக்கு ஊறு செய்யாமை) நெடுந்தொலைவு ஆகையால், யோகம், தாய்த் தெய்வ வழிபாடு போன்றவற்றைப் போல அஹிம்சையும் ஆரியர்களுக்கும் முற்பட்ட (சிந்து வெளித் தமிழ்) மக்களிடமிருந்தே அவர்கள் பெற்றதாக நாம் கருத வேண்டியுள்ளது. சிவன் வழிபாடு வட இந்தியாவை விட தென்னாட்டில் தான் மக்களிடம் முதன்மை பெற்றுள்ளது. தென்னாட்டுத் திராவிட மக்கள் ஆரியர்களுக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே அங்கு நிலைபெற்று இருந்தமையை இது சாட்டுவதாகலாம். தாய்த் தெய்வ வழிபாடும் தென்னாட்டில்தான் மிகுந்து காணப்படுகிறது. ( Wolpert: An Introduction to India 1991) ராபர்ட்: இன்று வழிபடப்படும் இந்துக் கடவுளர்களில் தலைமைச் சிறப்பு வாய்ந்தவர்களில் ஒருவன் சிவன். தொல்பழங்காலத்தில் இருந்தவையும், மக்களினப் பெருக்கம் அவர்கள் செல்வப் பெருக்கம் ஆகியவற்றை நோக்கியவையுமான வழிபாட்டு முறைகள் பல சிவன் வழிபாட்டில் இணைந்துள்ளன. தொன்மையான சிவன் வடிவம் போன்ற ஒன்றை மொகஞ்சோதரோ முத்திரை ஒன்று கொண்டுள்ளது. சிவன் அடையாளமாகக் கொள்ளப்படுவதும் தற்காலக் கோயில்களில் வழிபடப் படுவதும் ஆன லிங்கம் போன்ற கற்கள் ஹாரப்பா நாகரிக எச்சங்களிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இன்று உலகத்தில் நின்று நிலவிவரும் சமயங்களில் சிவன்வழிபாடே அனைத்தையும் விடத் தொன்மை வாய்ந்தது என உய்த்துணர ஓரளவு சான்றுகள் உள்ளன. (J.M.Roberts: History of the World 1992) இதே கருத்தை ஆர்.என். தந்தேகர் ( Vedic. Mythological Tracts 1979) அவர்களும் தெரிவித்துள்ளார். (ii) மேற்கண்டவற்றின் ஆங்கில மூலங்கள் வருமாறு:- Zimmer (1951): The Pre-Aryan nobility of the north-eastern States, therefore were not all swept off their thrones [by the incoming Aryans] Many of the families survived, and when the dynasties of the invading race began to show symptoms of exhoustion the scions of these earlier native lines were able to assert themselves again. Chandragupta Maurya, for example, stemmed from a family of this kind. So did the Buddha”(The Philosophies of India:1951) Levin Bongard (1986): The worship of “images of dieities”- a practice extremely wide-spread in Hinduism-came to Brahministic tradition from local non-Aryan cults. Wolpert (1982) : Had pre-Aryan Yogis (such as the one depicted on the seal from Mohenjodaro) learned by now the language of their conquerors and began teaching their own secrets in turn to Brahmin bards? Wolpert (1991): Non-violence is so remote from the rough and ready mores of Aryan nomads and their epic battles that we assume it has, like yoga and Mother Goddess worship, pre-Aryan roots. xxxx Shiva is more popular in South India than in the North, which may reflect the deeper pre-Aryan roots of Dravidian people in that region where Mother-Goddess worship is also most intense. J.M.Roberts(1992): One of the greatest cult figures of the Hindu pantheon today is Siva, in whose worship many early fertility cults have been brought together. A seal from Mohenjodaro already shows a figure who looks like an early Siva, and stones like the lingam found in modern temples, the phaliic cult-object which is his emblem have been found in the Harappan culture. There is some presumptive evidence therefore for the view that worship of Siva may be the oldest surviving religious cult in the world. 6. சாத்தன்குளம் அ.இராகவன் கையெழுத்துப் படியாக விட்டுச் சென்ற இந்நூலை அரிதின் பெற்றுத் திறம்பட அச்சிட்டு வெளியிட்டுள்ள அமிழ்தம் பதிப்பகம் பாராட்டுக்குரியது. பி.இராமநாதன் பொருளடக்கம் பதிப்புரை iii உரிமையுரை v முன்னுரை vi 1. தோற்றுவாய் 3 2. சமயச் சட்டங்கள் 15 3. உலக உற்பத்தியும் மக்களின் தோற்றமும் 30 4. சிவலிங்க வழிபாடும் அதன் தத்துவமும் 43 5. படிமங்களின் இலக்கணம் 61 6. தச தால இலக்கணம் (அளவை முறை) 81 7. எண்வகை எழிற் கோலங்கள் 105 8. தென்முகக் கடவுள் (வியாக்கியான தட்சணாமூர்த்தி) 116 9. தென்முகக் கடவுள் (தட்சணாமூர்த்தி) 123 10. மண அழகர் (கலியாணசுந்தரமூர்த்தி) 145 11. சோமசு கந்த சுகாசன மூர்த்தி 171 12. சந்திரசேகர மூர்த்தி 186 13. பிச்சாடன மூர்த்தி 200 14. காலசம்மார மூர்த்தி 213 15. இறுவாய் 228 இறைவனின் எண்வகை வடிவங்கள் 1. தோற்றுவாய் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் பல கலைகள் தோன்றிவிட்டன. உலகிலே தமிழகம் கலைகளின் ஊற்றாக ஏற்றமுற்று உயர்ந்து நின்றது. ஆய கலைகள் அறுபத்து நான்கினையும், ஏய உணர்விக்கும் என்னம்மை என்று அரும் பெரும் கலைகள் அறுபத்து நான்கையும் பெற்ற தமிழ்த் தாய்க்கு ஒரு தமிழ்ப் புலவன் வாழ்த்துக் கூறியுள்ளான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் எண்ணற்ற எழிற்கலைகள் எழுவதற்குக் காரணம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலை களை உருவாக்குவதற்குரிய இரும்புக் கருவிகள் அரும்பிவிட்டதே யாகும் என்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். புதிய கற்காலத்தின் இறுதிக்காலத்திலே தமிழகத்தில் இரும்பு ஊழி (iron Age) அரும்பி விட்டது. புதுக் கல்லூழி (Neolithic age) - இல் மக்கள் இரும்புக் கருவிகளை உருவாக்கி, அதைப் பெரும் அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த ஊழிமாற்றத்தின் காலத்தைத் திட்ட வட்டமாகக் குறிப்பிட முடியவில்லை, என்றாலும் தென் இந்தியாவில் இரும்பு ஊழி தொடங்கி, ஏறத்தாழ ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம் என்று அகழ் ஆய்வில் கண்டெடுத்த தொன்மையான பொருள்களைக் கொண்டு ஒரு சில அறிஞர்கள் முடிவுகட்டி யுள்ளனர்.1 இரும்பு ஊழியைக் கண்ட தமிழ் மக்கள் மிகத் தொன்மை யான காலத்திலே எழுத்தாணியை உருவாக்கியுள்ளனர். தம் பட்டறிவால் பயின்ற பலகலைகளையும் பனையோலைகளினால் செய்த ஏடுகளில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் ஆதியில் கண்ட வரிவடிவம் எழுத்து என்று கூறப்பெற்றது. எழுத்து என்ற பதத்திற்கு ஓவியம் என்று நிகண்டுகளில் விளக்கந்தரப் பெற்றுள்ளது. எனவே பண்டைய தமிழர்கள் தம் இலக்கிய நூற்களையும் கலை நூற் களையும் ஓவிய எழுத்து (Pictograph) மூலம் ஏடுகளில் பதிந்து பயின்று வந்தனர் என்று எண்ணப்படுகிறது. இன்ன பலப்பல எழுத்து நிலை மண்டபம் என்று பரிபாடல் குறிப்பிடுகிறது. எழுத்து நிலை மண்டபம் என்பதற்குச் சித்திரமாடம் என்றே உரையாசிரியர்கள் பொருள் விளக்கம் தந்துள்ளனர். இஃதன்றி, சிலப்பதிகாரத்தில் கண்ணெழுத்து என்று குறிப்பிடப்படுவதையும், யாப்பருக்கல விருத்தியில் மேற்கோள் உருவெழுத்து என்று குறிப்பிடப்படுவதை யும், பிற, தமிழ் இலக்கியங்களில் ஒலி எழுத்து, உருவெழுத்து, ஓவிய எழுத்து என்று காணப்படுவதையும் ஆய்ந்தால் பண்டைய தமிழகத்தில் ஓவிய எழுத்தே முதலில் தோன்றியது என்பது நன்கு தெரியலாம். தமிழர் குடியேறிய சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, கிரீட், ஈடர் தீவு போன்ற பல இடங்களில் ஓவிய எழுத்துப் பயிலப் பட்டு வந்தது என்பது நமது கருத்தை அரண் செய்வதாகும். எனவே, ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் ஓவியக்கலை, எழுத்துக்கலை, படிமக்கலை, சிலைக்கலை, கட்டிடக் கலை, மருத்துவக்கலை, ஆடற்கலை, பாடற்கலை, கப்பற்கலை, நெய்தற்கலை, வானியல் கலை, எண்ணியல் கலை, சமையற் கலை இன்னோரன்ன எண்ணிலாக் கலைகளைப் பயின்று அவைகளைத் திறம் பெறப் படைக்கும் அறிவும் ஆற்றலும் பெற்றிருந்தனர். அதற்கு இன்றும் தமிழ் இலக்கியங்கள் சான்று தருகின்றன. பண்டைக் காலத்தில் பல்வேறு கலைகளைப் படைத்த கலைவல்லுநர்களின் மரபு வழியில் வந்த சந்ததிகள் இன்றும் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். பண்டைய கலைஞர்களின் திருக்கோயில்களும், வெண்கலப் படிமங்களும் சிலைவடிவங்களும், இசைத் தூண்களும், சுவர் ஓவியங்களும் பொன் அணிகலங்களும், பொற் கலயங்களும், வெள்ளிக் குடங்களும், வகை வகையான விளக்குகளும், எண்ணற்ற இசைக் கருவிகளும், ஆடைகளும், நகர் அமைப்புகளும் வண்ணந் தீட்டிய மட்பாண்டங்களும், இரும்புக் கருவிகளும், நுண்ணிய வேலைப்பாடுகள் நிறைந்த தேர்களும், நிலைகளும் சாளரங்களும் பொன், வெள்ளி, செம்பு, ஈயம் முதலியவற்றால் செய்த காசுகளும் மூன்று, நான்கு நிலைகளையுடைய வீடுகளும் பத்துக்கு மேற்பட்ட மாடங்களையுடைய விமானங்களும், கத்திகளும், எழுத்தாணி களும், தட்டுமுட்டுப் பொருள்களும், மயிரினையும் வகுத்துப் பிளக்கும் அறுவைக் கருவிகளும், முதுமக்கள்தாழிகளும், எஃகு இழைப்புளிகளும், தச்சு உளிகளும், வாள்களும் பிறவும் இன்றும் உள. ஆனால் கட்டிடக் கலை, படிமக் கலை, ஓவியக்கலை, ஆடற் கலை, இசைக்கலை, மருத்துவக்கலை, கப்பற்கலை, வானியற்கலை, உணவுக் கலை, நெய்தற் கலை, சாயமூட்டும் கலை, ஆகமங்கள், சமயம், தத்துவம் போன்றவைகளை விளக்கிக் கூறும் தமிழ் நூற்கள் மிகவும் குறைவு. தமிழில் ஓவியம், கட்டிடம், சிலைவடித்தல், தாண்டவம் ஆடுதல், இலாசியம் ஆடுதல் போன்றவைகளை எடுத்துக் கூறும் மூல நூற்கள் ஒன்று கூடத் தமிழில் இல்லை. சில அரிய கலைகளுக்கு மூல நூற்கள் வட மொழியில்தான் உள்ளன. வட மொழியில் உள்ள சிற்ப நூற்கள் நாட்டிய நூற்கள் சிவாகமங்கள் போன்றவை கூடத் தமிழில் மொழியாக்கம் செய்யப் பெறவில்லை. தமிழர்களின் ஆகமங்களையும் கலைகளையும் தமிழரல்லாத பிற மொழியாளர்களும் அறிய வேண்டும் என்பதற்காகப் பல கலை நூற்களை பண்டைய தமிழர் வட மொழியில் யாத்தனர். ஆனால், வட மொழியாளர்கள், இதனைத் தமக்குச் சாதகமாக எண்ணித் தமிழர் நெறியும், தமிழர் பண்பாடும், தமிழர் கலைகளும் வட மொழியாளர்களிடமிருந்து இரவலாகப் பெற்றவை என்று இன்று கூற முன்வந்துள்ளனர். இந்தக் கூற்றுக்கு எள்ளளவும் சான்று காட்ட முடியாது. வடவர்களின் வாதம் நிலைத்து நிற்க முடியாது. படிமக்கலை, ஓவியக்கலை, கோலக்கலை, பூத்தொடுக்குங்கலை, ஆடற்கலை, பாடற்கலை போன்றவற்றைத் தமிழர்கள் தங்கள் திருக்கோயிலில் வைத்து வளர்த்து வந்தனர். அந்தக் கலைகளைத் தமிழ் மகளிர் மெய்வந்த தெய்வத் திருப்பணியாகச் செய்து வந்தனர். அது பிற்காலத்தில் பொது மகளிர் கைக்குப் போய்விட்டது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் தென் இந்திய நல உரிமைக் கட்சியின் ஆட்சியின் போது திருக்கோயிலில் மகளிர் ஆடுவதும் பாடுவதும் சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது. அப்பால் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தமிழர் களிடமிருந்து ஆடற் கலையைக் கற்று இன்று பேரும், பெருமையும், பொன்னும், பொருளும் தேடிவருகின்றனர். வாய்க் கொழுப்பு சேலையில் வடிந்தது என்ற முதுமொழிக் கொப்பத் தமிழர்களின் ஆடலும், பாடலும் பயின்ற பார்ப்பன மகளிர் சிலர் இக்கலை வடநாட்டில் வடவர்களால் உருவாக்கி வளர்த்த கலை என்று கூற முற்பட்டது அவர்களின் அறியாமையைக் காட்டுவ தாகும். மேலும் இது நன்றி மறந்த செயலுமாகும். ஆடவல்லானைத் தமிழர்கள் தெய்வமாகக் கொண்டு சிவனின் தாண்டவமும் உமையின் இலாசியமும் தமிழர்களின் தனி உரிமை பெற்ற கலையாகக் கருதிவருகின்றனர். எனவே ஆடற்கலையை எவரும் தங்களுக்கே உரிய கலை என்று சொந்தப்படுத்திவிட முடியாது. அது எளிதான காரியம் அன்று. தமிழர்கள் தங்களின் அரிய ஆடற் கலையை அன்னியர்களுக்குக் கற்பிக்க முன்வந்த பயன் அக்கலையைத் தமிழர் இழக்க நேரிட்டுவிட்டது. இதைத் தமிழர்கள் இன்று நன்கறிந்து விழிப்புற்று எழத் தொடங்கி விட்டனர். தமிழ்க் கலைகளைப் பாதுகாக்கவும் தொடங்கிவிட்டனர். இனித் தமிழ்க் கலையை எவரும் எளிதில் கவர்ந்து விட முடியாது. தமிழ் நாட்டுப் பார்ப்பனப் பெண்கள் தமிழ் நாட்டு அண்ணாவிகளிடமிருந்து ஆடற்கலையைப் பயின்றுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் வட நாட்டு ஆரியர்கள் தமிழர்களின் ஆடலோ, பாடலோ இன்றுவரை அணுவளவும் அறியார்கள். அதோடு, தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களை வட நாட்டு ஆரியர்கள் தம் இனத்தைச் சேர்ந்தவர்களாக மதிப்பதும், ஏற்றுக் கொள்வதும் இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களைப் போல ஆடை அணிகள் அணிந்துள்ளார்கள். தமிழ் நாட்டுச் சைவர்களைப் போல் யாகம் செய்வதும், சோமபானம் செய்வதும் இல்லை. கடல் புஷ்பம் என்று மீன் சாப்பிடுவதும் இல்லை. தமிழர்கள் நாடொறும் நீரிற் மூழ்கித் திருநீறு அணிந்து சிவனை வழிபட்டு வருகிறார்கள். இவர் களின் குருமார்கள் சங்கராச்சாரியர் தமிழ்நாட்டுத் திருமடங்களில் வாழும் சைவ சந்நியதானங்கள் போல் நீறணிந்து செங்காவி ஆடை அணிந்து சிவ சிவ என்று கூறுகின்றார்கள். தமிழர் நாகரிகத்தை தமிழர் பண்பாட்டை இவர்கள் வளர்த்து வருகின்றார்கள். உடல் அமைப்பில் முகத்தோற்றத்தில் தமிழர்களினின்று இவர்களை வேறுபடுத்திக் காண முடியாது என்று வடநாட்டு ஆரியர்கள் கருதுகின்றார்கள். ஆனால், திரு. வி. ஆர் இராமச்சந்திர தீட்சிதர் அவர்கள் கூறுகிறபடி இவர்களிடம் பண்பாட்டு வேற்றுமைகள், சில உண்டு என்பதை மறுப்பதற்கில்லை, நாம் மறப்பதற்கும் இல்லை. நிற்க, மேலும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன் வட இந்தியருக்குத் தமிழர்களின் சிற்பம், நாட்டியம், இசை போன்றவை களைப் பற்றி ஒன்றும் தெரியாது. பரதமுனி1 என்பவன்தான் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பிறந்து, தமிழர்களின் ஆடற் கலையைப் பயின்று வடமொழியில் நாட்டிய நூலைப் படைத்துள்ளான். (பரதனுடைய காலம் மிகப் பிற்பட்டதென்று கூறுவாருமுண்டு) பரதன், தமிழ்நாட்டை திராமிடம் என்றான். நில நூல் புலவன் தாலமியும், திராவிட நாட்டைத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளான். வட நாட்டு ஆரியன், சாரங்கதேவன் தமிழ் இசையை வடமொழியில் சீரிய நூலாக்கம் - மொழியாக்கம் செய்துள்ளான். ஆரியர்கள் என்று எண்ணி நிற்கும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள், தமிழ் இசை கூட காஷ்மீரில் பிறந்தது என்று கூறும் நாள் அண்மையில் வரலாம் என்று தமிழ் அறிஞர்கள் கருதுகின்றார்கள். நான், முப்பது ஆண்டுகளுக்கு முன், பஞ்சாப் வடமொழித் தொகுதி என்னும் பெயரில் சிற்ப சாத்திரக் கொள்கை (Principles of Silpa Sastra) என்னும் நூல் ஒன்றைப்பார்த்தேன்; பயின்றேன். அதில் தமிழர் கட்டிடக் கலை, ஓவியக் கலை, படிமக்கலை ஆகியவைகள் வாது சாதிரா, சித்ரலக்சணம், பிரதிமாலட்சணம் என்னும் பெயர்களில், வடமொழி நூற்களான 1. பிரஹத் சம்ஹிதை, 2. விஷ்ணுதர்மோத்திரம், 3. சுக்கிர நீதி, 4. மச்சய புராணம், 5. அக்கினி புராணம், 6. மாயா சாதிரம், 7. பிரதிமா மான லட்சணம் என்ற நூற்களின் மேற்கோள்களுடன் நன்கு விளக்கி எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. இதைப் படித்தவர்கள் இத்தகைய நூல் ஒன்று கூடத் தமிழில் இல்லை என்பதையும் மூல நூற்கள் வடமொழியில் இருப் பதையும் எண்ணி இக்கலைகள் ஆரியர் கலைகளே என்று மயக்கம் உறுவார்கள். அந்நூற்களைப் படித்ததும் எனக்கு நான் தமிழன் என்ற உணர்வு உந்தி எழுந்தது. நான் இந்தியன் எனது தாய்மொழி தமிழ், எனது சமயம் சிவநெறி, எனக்கென்று ஒரு தனிக் கலையும், பண்பாடும், நாகரிகமும், அற நெறியும், ஒழுக்கமும், உணவும், உடை அணியும் முறையும் உண்டு என எண்ணத்தொடங்கிவிட்டேன். இந்நிலையில் சிந்துவெளி அகழ் ஆய்வு தொடங்கப்பட்டது. சிந்துவெளி அகழ் ஆய்வில் ஈடுபட்டவர்களும், அதைப் பற்றி ஆராய்ச்சியில் புகுந்தவர்களும், இறுதியாக அங்குக்கிடைத்த ஓவிய எழுத்தைப் படித்தவர்களும் இங்கிலாந்து, பெய்ன், பின்லாந்து, ஹாலந்து, உருசியா முதலிய வெளிநாட்டவர்களும் வடஇந்தியர் களுமேயாவர். இந்த அகழ் ஆய்விலோ, இங்குக்கிடைத்த பொருள் களைப் பற்றிய ஆராய்ச்சியிலோ, இங்குள்ள முத்திரைகளிலும் செப்புப்பட்டயங்களிலும் உள்ள ஓவிய எழுத்துகளுக்கு மறைகுறி எழுத்து பொருள் விளக்கம் காண்பதிலோ தமிழர்களோ அல்லது திராவிடர்கள் என்போர்களோ ஈடுபடவே இல்லை. இந்திய மைய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குநரான சர் சாண் மார்சல், அவருக்குப் பின் அப்பதவியை வகித்த சர்மார்ட்டியர் உயிலர், மொகஞ்சதாரோ நகரை அகழ்ந்து ஆய்ந்த பேராசிரியர் ஆர்.டி. பானர்ச்சி, அரப்பாவை அகழ்ந்தாய்ந்த எம். எ. வாட்சு, மேலும் இந்த ஆய்வில் ஈடுபட்ட டாக்டர் மெக்கேய் ஆர். கே. முகர்ச்சி, என்.ஜி.மசுமதார், கே. என் தீக்சித், டாக்டர். ஜி.ஆர். ஹண்டர், எய்ச், ஆர். ஹால் லாங்டன், எல். ஏ. வடல் மாரிவாலா, தந்தை எய்ச் ஹிரா, பின்லாந்து டாக்டர் அகோ பார்போலா, லெனின் கிராட் பேராசிரியர் கெரைசோவ் முதலிய பன்னாட்டு அறிஞர்களும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று முடிவு கட்டினர். இந்தச் செய்தி வெளிவந்ததும் ஆரிய உலகமே கிடுகிடுத்தது. வட இந்தியாவில் உள்ள இந்திய ஆரியர்களும் தென்னிந்தியாவில் உள்ள தமிழக ஆரியக் குருக்களான சங்கராச்சாரி முதல், நைந்தபூணூலைத் தரித்த சாதாரண ஏழைப் பார்ப்பனர் உள்பட அனைவரும் கொதித்தெழுந்தனர். நெஞ்சங்குமுறி அலறினர். பத்திரிகையில் மறுப்பு எழுதினர். இந்திய அரசில் உயர் பதவி வகிக்கும் பார்ப்பனர்கள் மறுப்பு நூற்கள் எழுதி வெளியிட் டுள்ளனர். இராம கிருஷ்ணா மிசனைச் சார்ந்த பார்ப்பனத்துறவிகள் கூட மறுப்புக் கூறினர். சங்கராச்சாரியார், ஆரியர்கள் அயல் நாட்டினின்று இங்கு வந்து குடியேறினதில்லை. ஆரியர்கள் அனாதி காலந்தொட்டு இந்தியாவில் தோன்றி வாழ்ந்து வருபவர்கள் என்று (தூத்துக்குடியில்) பொய்யுரை கூறி வரலாற்றுப் புரட்டர் என்னும் பெயருக்கு இலக்கானார். ஆனால் இந்தியாவின் முதல் அமைச்சரும் இந்திய தேசீய காங்கிரசின் தலைவரும், வரலாற்றறிஞருமான பண்டிதர் சவஹர்லால் நேரு அவர்கள் தனது இந்தியாவின் கண்டுபிடிப்பு என்ற நூலில் (Discovery of India) சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதையும் ஆரியர்கள் அயல்நாட்டினின்று வந்து இந்தியாவில் குடியேறியவர்கள் என்பதையும் ஏற்றுக் கொண் டுள்ளார். சிந்துவெளிப் பண்பாடு: ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்து திராவிட மக்களைக் கொன்று இந்தியாவை ஆக்கிரமித்து, திராவிட நகரங்களை அழித்து, அவர்களின் பழம்பெரும் பண்பாட்டை அழிப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தென்இந்தியத் திராவிட மக்கள் உயரிய கட்டிடங்களை கட்டி எழுப்பி நாடு நகரங்களை நிறுவி உலகிலே ஒப்பற்ற உயரிய பண்பாட்டை உருவாக்கியுள்ளனர் என்று அறிஞர் உலகம் முடிவு கட்டியுள்ளது. இதைக் கண்டு, தமிழர்களோ, திராவிட இனமோ உளம் மகிழ்ந்து, முகம் மலர்ந்து குதித்தெழுந்து விழாவெடுக்கவோ இல்லை மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் ஆரவாரம் செய்யவோ இல்லை. செல்வர்கள் சிந்துவெளி சென்று தமது முன்னோர்கள் வாழ்ந்து முடிந்த அரப்பா, மொகஞ்சதாரோ லொகுஞ்சதாரோ, சங்குதாரோ, லோதல், நால், குல்லி, காளி பங்கன் போன்ற இடங்களைக் கண்டு களிக்கச் செல்லவுமில்லை. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்து வெளியில் வாழ்ந்த சைவவேளாளர் வழிபட்டு வந்த சிவலிங்கத்தை, சிவன் சிலையை, பார்வதி தேவியின் படிமத்தை, ஆடவல்லான் அருள் உருவத்தைத் தெரிசிக்க - திருவாடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம், குன்றக்குடி, மதுரை பெருங்குளம் (செங்கோல் மடம்) போன்ற சைவ மடாதிபதிகள் கண்டுகளிக்க - வழிபாடியற்ற முனைந்துசெல்லவில்லை. தமிழ் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் சிந்துவெளிப் பண்பாட்டைப் பற்றிக் கட்டுரை தீட்டவோ நூல் எழுதவோ முன்வரவில்லை. என்றாலும் சிந்துவெளி அகழ் ஆய்வு 1922-லே என் போன்ற ஒரு சில சின்னஞ்சிறு, அநாமதேய எழுத்தாளர்களை ஈர்த்துள்ளது. ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வை மட்டுமல்ல அரிக்கன்மேடு, செங்கற்பட்டு, கொற்கை, மதுரை அகழ் ஆய்வுகளைப் பற்றியும் சிந்திக்கச் செய்துவிட்டது என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. பண்டைக் காலத்தில் தமிழர்கள் ஆழ்கடல் கடந்து, உபைதியா, எல்லம், சுமேரியா, எகிப்து, கிரீட்தீவு, ஈடர்தீவு, அமெரிக்கா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் குடியேறி பயிர்த் தொழிலை வளர்த்து, கைத் தொழிலை உருவாக்கி கடல் வணிகத்தைப் பெருக்கி சிவநெறியை நிலைநாட்டிப் பண்பாட்டைப் பரப்பிய செய்தியை உன்னிப்பாக உற்றுநோக்கி உணரச் செய்தது. மேனாட்டு ஆசிரியர்கள் பலரால் அமெரிக்காவில் அரனாரின் கோயில், எகிப்தில் ஏறூர்ந்தசெல்வன் திருஉருவம், எல்லம் நாட்டில் எழிற்குன்றில் ஒளிக் கடவுள், கிரீட்டில் நந்தீசன் என்னும் தெய்வவடிவம், சின்ன ஆசியாவில் சிவன் ஒளி, பசிபிக் தீவுகளின் சைவ நெறி என்னும் பெயரால் - வெளி வந்த கட்டுரைகள் இதயத்தை ஈர்த்தன. நம்நாட்டு கோடரிக் காம்புகள் போன்ற சிலர் நமது கலைகளைக் கவர்ந்து ஆரியக் கலையாக்க இடையறாது முயற்சித்துப் பணியாற்றி வருவது என் உள்ளத்திற்கு உணர் வூட்டியது. நாட்டுப் பற்றை மறந்து, சமயப்பற்றைத் துறந்து, தெய்வ பக்தியை இகழ்ந்து, மொழிப் பற்றைப் புறக்கணித்து நின்ற, என்போன்ற சிலர் உள்ளத்தில் நமது நாடு, நமது மொழி, நமது சமயம், நமது பண்பாடு, நமது நாகரிகம் நமது கலை என்ற உணர்வை எழுப்பியது. இதன் விளைவாக எனக்கு, தமிழ் மக்களை அவர்களின் பண்பாடு நாகரிகம், மொழி முதலியவற்றை உணரச் செய்வதோடு அதைக் காக்கவும் தூண்டவும் வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது. அந்த உணர்வே இறைவனின் எண்வகை வடிவங்கள் - சிற்ப உருவங்களின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற இந்நூலை எழுதத் தூண்டியது. இந்நூலுக்கு அடிப்படையான கருத்துக்கள் அனைத்தும் வடமொழியிலுள்ள சிவாகமங்களிலும், சிற்ப நூற் களிலுமிருந்து பெறப்பெற்றன. தெய்வத்திருஉருவங்கள் அனைத்தும் நமது கைவண்ணம் வந்த தபதிகளால் விதிப்படி ஐம்பொன்னாலும், கல்லாலும், வார்க்கப் பெற்றும் செதுக்கப்பெற்றும் திருக்கோயிலில் இடம் பெற்றிருந்த உயரிய ஒப்பற்ற கலைக் கருவூலங்களின் நிழல் உருவப்படங்களேயாகும். ஒன்றிரண்டு வரைபடங்களாகும். சிவாகமம் கண்ட சான்றோர்கள் சிவன் உருவை ஆதியில் - சிற்ப அறிவு அரும்பிய தொடக்க காலத்தில் அம்மை அப்பன் உருவை - சிவலிங்க வடிவில் செய்து வழிபட்டனர். அப்பால் உலோக ஊழியில் சிற்பக் கலை வளர்ச்சி பெற்ற நிலையில் இறைவனின் திருக்கோலத்தை மூர்த்தங்களாக - சிவ பெருமானின் முழு உருவங்களாகச் செய்து வழிபட்டு வந்தனர். ஆதியில் தமிழர்கள் கரடுமுரடான கல்லில் சிவலிங்க உருவைச் செய்து வழிபட்டு வந்தனர். அப்பால் இறைவன் தமிழ்நாட்டில் தென்பாண்டி நாட்டில் உள்ள மந்திரமலையில் (மகேந்திரகிரியில்) கல்லால மரத்தின் கீழ் தமிழ் முனிவர்களாகிய சனகர், சனாதனர், சனற்குமாரர், சனாந்தரர் ஆகியவர்களுக்குக் குருமூர்த்தமாகக் காட்சி அளித்த கோலத்தைத் தட்சணாமூர்த்தி வடிவம் (தென்முகக் கடவுள் உருவம்) என்று முதன்முதலாகச் சிலையிலும் உலோகப்படிமத்திலும் செய்து வழிபட்டு வந்தனர். அப்பால் அட்டமூர்த்தங்கள் எட்டும், மகாதேவ மூர்த்தங்கள் இருபத்தைந்தும் சிவமூர்த்தங்கள் அறுபத்து நான்கும் எழுந்தன. அவைகளின் விளக்கம் அடியில் வருவனவாகும்: சிவமூர்த்தங்கள் 1. வியாக்யான தட்சணாமூர்த்தி 2. கலியாண சுந்தரமூர்த்தி 3. சோமகந்த சுகாசனமூர்த்தி 4. சந்திரசேகரமூர்த்தி 5. காலசம்மாரமூர்த்தி 6. கசசம்மாரமூர்த்தி 7. திரிபுர சம்மார மூர்த்தி 8. பிட்சாடன மூர்த்தி 9. உமாசகித சுகாசனமூர்த்தி 10. அர்த்த நாரீசுரமூர்த்தி 11. சுகாசனமூர்த்தி 12. திரிமூர்த்தி 13. அரியர்த்த மூர்த்தி 14. கங்காளமூர்த்தி 15. சரபமூர்த்தி 16. விஷபாகரணமூர்த்தி 17. இலிங்கோற்பமூர்த்தி 18. ஏகபாதமூர்த்தி 19. பைரவமூர்த்தி 20. இடபாரூடமூர்த்தி 21. கங்காதரமூர்த்தி 22. திரிபாத மூர்த்தி 23. ஆனந்தத் தாண்டவமூர்த்தி 24. காமாந்தமூர்த்தி 25. சலந்தரசம்மாரமூர்த்தி 26. ஞானதட்சணாமூர்த்தி 27. வீணாதர தட்சணாமூர்த்தி 28. யோகதட்சணாமூர்த்தி 29. கேவாலசந்திரமூர்த்தி 30. சதாசிவமூர்த்தி 31. திரிபாத மூர்த்தி 32. வீரபத்திரமூர்த்தி 33. பாசுபதாதரமூர்த்தி 34. சக்கரதானமூர்த்தி 35. பிரமச் சிரச்சேமூர்த்தி 36. விஷ்ணு அனுக்கிரகமூர்த்தி 37. இராவணஅனுக்கிரகமூர்த்தி 38. கிராதமூர்த்தி 39. குருமூர்த்தி 40. அசுவாரூடமூர்த்தி 41. இலகுளேசுவரமூர்த்தி 42. ஆபத்தோத்தாரணமூர்த்தி 43. வடுகமூர்த்தி 44. சேத்திரபாலமூர்த்தி 45. அகோரதிரமூர்த்தி 46. தடசயக்ஞமூர்த்தி 47. கௌரிவரப்தமூர்த்தி 48. கௌரிலீலாமூர்த்தி 49. கருடாந்தகமூர்த்தி 50. பிறார்த்தனாமூர்த்தி 51. இரக்தப்பிட்சாபமூர்த்தி 52. சிஷ்யபாவமூர்த்தி 53. ஜ்வரபக்தமூர்த்தி 54. சார்த்தூவசம்மாரமூர்த்தி 55. புஜங்கலளிதமூர்த்தி 56. புஜங்கத்திராச்மூர்த்தி 57. சந்தியாதாண்டவமூர்த்தி 58. சதாதாண்டவமூர்த்தி 59. முகலிங்கமூர்த்தி 60. சண்டேசுவர அனுக்கிரகமூர்த்தி 61. இலிங்க சொரூபமூர்த்தி 62. கேவாலசந்திரசேகரமூர்த்தி 63. உமாசகிதசந்திரசேகரமூர்த்தி 64. ஆலிங்கனசந்திரசேகரமூர்த்தி இஃதன்றி இறைவனுடைய கோலங்கள் எண்ணில உள. தாண்டவமூர்த்தியின் கோலங்கள் 7என்றும் 16 என்றும் 108 என்றும் 1008-என்றும் கூறப்படுகின்றன. இங்கு எடுத்துக்காட்டப்பெற்ற சிவமூர்த்தங்கள் 64-இல் ஒன்று முதல் 8 வரையுள்ள மூர்த்தங்கள் அட்டமூர்த்தங்கள் என்றும் ஒன்று முதல் 25 எண்வரையுள்ள கோலங்கள் மகாதேவ மூர்த்தங்கள் என்றும் சைவ சமயச்சான்றோர் களால் வகுத்துத் தொகுத்து நமக்கு அளிக்கப் பெற்றுள்ளன. இதுவரை நமக்கு இறைவனின் கோலங்களைப் பற்றி எவரும் நூல் யாத்தளிக்கவில்லை. சிவமூர்த்தங்களைப் பற்றியோ, மகாதேவ மூர்த்தங்களைப் பற்றியோ ஆராயவாய்ப்பில்லை. அட்டமூர்த்தங் களைப் பற்றித் தான் நமக்கு அறிய ஆராய வாய்ப்புக் கிட்டியது. அதுவும் இந்த அட்டமூர்த்தியின் திருஉருவங்களையும் அதன் உறுப்புகளையும், உடைகளையும், கைகளில் தாங்கிய கருவி களையும் அணிகளையும் உடையவரின் காலின் கீழ்க்கிடந்து நைந்து உழலும் முயலகனையும் (அபமார புருசனையும்) சைவசமய தத்துவ ஞானக் கண்ணோடு அலசி ஆராய்ந்து கண்ட உண்மை களையும் உணர்த்தவில்லை. அதற்குரிய நிறைவான ஆன்மஞானத் தெளிவு எனக்கு இல்லை. சிவஞான போத மெய்யறிவும் எனக்குக் கிட்டவில்லை. எனவே எனக்குள்ள மிகக் குறைந்த சமய உணர்வை யும் சிறிய சிற்ப அறிவையும் வைத்தும் - அட்டமூர்த்தியின் வடிவங் களை விளக்கச் சிவலிங்கங்களையும் அதன் பரிணாம வளர்ச்சியை யும் விளக்கியும் - மேற்போந்தவாறாக நான்பெற்ற ஆகம அறிவைக் கொண்டும் இந்நூலை யாத்தளிக்க முன் வந்துள்ளேன். நான் என் பத்து வயதில் - பள்ளிப் பருவத்தில் சாத்தன்குளம் சி.எம்.எ உயர்தரப்பாடசாலைக்கு ஆங்கிலக் கல்வி பயில்வதற்கு என் பெற்றோர்களால் அனுப்பப் பெற்றேன். அங்கு கர்த்தாவே எங்கள் நல்வேந்தனைக் காப்பாற்றுமே என்ற - ஆங்கில கிறித்தவ ஆட்சியைக் காப்பாற்றுமே என்ற - இராச வாழ்த்தும், அப்பால், பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே எங்களைக் காப்பாற்றுமே என்ற கிறித்து நாதரை வழிபடும் ஜெபமும் கற்பிக்கப்பட்டன. அங்கு ஆசிரியர் என்னை அஞ்ஞானப் பிள்ளை என்றே கூறுவார். என்னை அவ்வாறு கூறுமாறும் கற்பித்தார். அப்பால் பைபிள் பாடம் ஆரம்பிப்பார். சிவபெருமான் நிந்திக்கப் படுவார். உமாதேவி இழித்துரைக்கப்படுவார். அங்கு நெற்றியில் திருநீறு பூசியிருக்கும் மாணவர்கள் சாம்பலில் புரண்டு வந்திருக்கும் கழுதை போல்வர் என்று கூறப்படும். கிறித்தவ மறையின் பல பகுதிகள், பாராமல் ஒப்புவிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டது. நாளடைவில் நானும் என்னோடு பயின்ற கிறித்தவரல்லாத சைவப் பிள்ளைகளும் கிறித்துவை காலை மாலை வழிபடத் தொடங் கினோம், கோயிலுக்கும் போனோம். கிறித்தவ சமய பாடப் பரீட்சையில் கிறித்தவப் பிள்ளைகளைவிட நன்கு பயின்று அதிகமான தேர்வு எண்கள் பெற்றுப் பரிசும் பெற்று வந்தோம். காலம் சிந்திக்கத் தூண்டியது. நான் பயின்றிருந்த சிற்ப அறிவு இந்நூலை எழுத பக்கபலமாக, எனது பள்ளித் தோழர் முன்னாள் கலெக்டர் அமரர் தொ.மு. பாகரத் தொண்டமான் பல அட்டமூர்த்தியின் நிழலுருப் படங்களைத் தந்து எனது நன்முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தார். நான் எனது இளவயதில் கிறித்தவப் பள்ளியில் பயின்று வந்தேன். அங்கு நான் கிறித்தவ சமயத்தை அறிந்தேன். இந்து சமய உணர்வை இழக்குமாறு செய்யப் பெற்றேன். நான் பெயரளவில் இந்து என்று அழைக்கப் பெற்றாலும், உள்ளம் கிறித்தவ சமய உணர்வைப் பெற்றுவிட்டது. 1922ஆம் ஆண்டு திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பின்னர் கமாலியா முலிம் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினேன். அப்பொழுது இலாமிய சமயத்தைப் பற்றியறியும் வாய்ப்பைப் பெற்றேன். நான் 1923ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையில் பயிலும்பொழுது சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தோடு தொடர்பு கொண்டேன். அப்பொழுது திருவாளர்கள் கா.சுப்பிரமணியபிள்ளை, திரு.வி.கலியாணசுந்தர முதலியார், ஈ.வெ.இராமசாமி நாயக்கர் முதலியவர்களின் நட்பைப் பெற்றேன். இக்காலத்தில் எனக்குத் தமிழ் பயிலும் ஆர்வமும், ஓவியம் எழுதும் உணர்ச்சியும் எழுந்தன. சிவதீட்சையும் பெற்றுக் கொண்டேன். என்றாலும் 1926ஆம் ஆண்டு பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்களின் பேச்சும் எழுத்தும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவரது சுயமரியாதை இயக்கத்தில் பங்கு கொண்டேன். 1932ஆம் ஆண்டு பெரியாரின் உதவியோடு பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகம் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவி சுமார் 20-க்கு மேற்பட்ட நூற்களை வெளியிட்டேன். நான் சில நூற்களை எழுதினேன். திராவிடன், குடிஅரசு, தாருல்இலாம் போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் பல எழுதினேன். பெரியாரின் பேச்சும் எழுத்தும் பிடிக்காது அவரது தொடர்பை அறுத்துக் கொண்டு காங்கிரசிலும், சோசலிட்கட்சியிலும் பங்கு பெற்றேன். மூன்று திங்கள் சிறைவாசமும் செய்தேன். ஈ.வெ.இராமசாமி அவர்கள் அரசின் எதிர்ப்பையும் கிறித்தவர்கள் முலிம்கள் எதிர்ப்பையும் தாங்க முடியாது சுயமரியாதை இயக்கத்தை வாப பெற்று, அரசிடம் மன்னிப்புப் பெற்று திராவிட இயக்கம் நிறுவினார். பெரியாரின் செயலை வெறுத்து அண்ணாதுரை தி.மு.கழகம் அமைத்துத் தமிழக மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தார். பெரியார் திராவிடர் கழகம் அமைத்து பொருள் திரட்டும் போக்கை மறுத்தார். திராவிட இனத்தின் வரலாறு, திராவிட மொழி, திராவிடர் நெறி, திராவிடர் தெய்வம், திராவிடர் பண்பாடு, திராவிடர் கலைகள், திராவிடர் நாகரிகம் முதலியவற்றை அறியாமல் இருப்பதோடு தமிழர்கள் காட்டுமிராண்டி எனப் பிதற்றி வருவதையும், திராவிட இனத்தில் சாதித் திராவிட இனம், ஆதித்திராவிட இனம் எனப் பிரித்ததையும், திராவிட இயக்கத்தின் பெயரால் நாத்திகப் பிரச்சாரமும், சமய எதிர்ப்புப் பிரச்சாரமும் செய்து - திராவிட மக்களை ஒன்று சேர்த்து ஆங்கில ஆட்சியிடமிருந்து முலிம்கள், பாக்கிதான் பெற்றதைப் போல் திராவிட மக்கள் திராவிடதான் பெற முடியாது - பெரியார் தோல்வியுற்றதையும் கண்டு திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்தார். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் திருமூலர் திருவாக்கைக் கூறித்தமிழர் இனத்தை ஒன்று சேர்த்துத் தமிழக அரசைத் தேர்தலில் கைப் பற்றித் தமிழ் மொழியை வளர்க்கவும், தமிழ்க்கலைகளைப் பேணவும் முன் வந்தார் - அவர் என்னைச் சந்தித்து தமிழகக் கலைகளை வளர்க்க உதவுமாறு அழைத்தார். நானும் ஒருப்பட்டேன். அதோடு அவர் தமது கட்சிக்குப் பெரியாரின் ஆதரவையும் தேடிக் கொண்டார். தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் 1969ஆம் ஆண்டு அண்ணா உயிர் துறந்தார். திரு. மு. கருணாநிதி முதல் அமைச்சரானார். இவர் ஒரு நல்ல திறமை மிக்க அரச தந்திரி என்று பெயர் பெற்றுக் கொண்டார் என்றாலும் அக்கட்சியினரின் நன்மதிப்பைப் பெறவில்லை. தமிழ் வளர்க்க, தமிழ்க் கலை வளர்க்க அண்ணாதுரை அளவு ஆர்வமோ அறிவோ பெறவில்லை. இவர் மீது மக்கள் கூறிய ஊழல் குற்றங்களை மறுக்கும் வலுவும், எதிர்க்கும் ஆற்றலும் பெறவில்லை. பெரியார் ஈ.வெ.ரா, கருணாநிதியின் செயலை ஆதரித்தார். அதனால் கருணாநிதியை எதிர்த்தவர்களைச் சமாதானப்படுத்தி தி.மு. கட்சியைக் காக்கமுடியாது போய்விட்டது. அ.இ.அ.தி.மு.கழகம் தோன்றியது. எம்.ஜி. இராமச்சந்திரன் என்னும் ஒரு மலையாளி அக்கட்சியின் தலைவராகி முதல் அமைச்சர் பதவியையும் பெற்றுள்ளார். இவரது அரசு தமிழ் மொழியைக் காக்கும் என்று கூறிக் கொண்டாலும் இவரால் தமிழ் மொழிகாக்கப்படும், தமிழர் சமயம், தமிழர் பண்பாடு, தமிழர்கலை காக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. தமிழர்களிடையே ஒருமைப்பாடு நிலவும் என்ற நம்பிக்கை கூடஇல்லை. அதற்குரிய ஆற்றலோ, அறிவோ, எண்ணமோ இவரிடம் இல்லை. எனவே தமிழ் இனம் தன்னிடம் உள்ள வேற்றுமைகளை மறந்து - ஒன்று திரண்டு தமிழ் மொழி, தமிழ்ச் சமயம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரிகம் பரவவும், வளரவும் - இனபேதம், கட்சி பேதம், சமய பேதம் முதலியவைகளை மறந்து ஒன்றுபடவேண்டும், ஒற்றுமையுறவேண்டும் என்ற உணர்வோடு இறைவனின் எண்வகை வடிவங்கள் என்ற நூலை எழுத முன்வந்தேன். இவ்வழியில் பல நூற்களும் எழுதியுள்ளேன். அரசியல் கட்சிகளை எதிர்பாராது தமிழ் இனம் ஒன்றுபட்டுத் தன்னைக் காக்கும்; உயர்த்தும்; வாழும் என்று எதிர்பார்க்கின்றேன். நிற்க, தமிழ் நாடு சம்பந்தப்பட்ட மட்டில் இந்த நாட்டில் எந்த வலுப்பெற்ற சமயமும் நமது தேசீய நெறியாகிய சைவத்தை - சிவநெறியை அழித்து விட முடியாது. வரலாறு அதை மெய்ப் பிக்கிறது. தமிழ்நாட்டின் அரசர்களைக் கைவசப்படுத்தி சைவன் என்று ஒருவன் தன்னைக் கூறி நிமிர்ந்து நடக்க முடியாது இந்நாட்டைக் கவர்ந்து நின்ற அனைத்துலக நெறி என்று புகழ்பெற்ற பௌத்தமும், சமணமும் இருந்த இடம் தெரியாது - அது தமிழகத்தில் நிலவி இருந்தது என்று கூறும் ஒரு அடிச்சுவடுகூட காணமுடியாமற் போய்விட்டது. தமிழர் அரசை அழித்து அவர்கள் சமயத்தை உருத் தெரியாது மாற்றி அவர்களது தெய்வத் திரு உருவங்களை - ஐம்பது அடி ஆழத்திற்குக் கீழே புதைக்கப்பட்ட சிவன் உருவங்களும், சிவை உருவங்களும், சிவலிங்கச் சிலைகளும் மீண்டும் வெளியே வந்து வணங்கப்படவும் ஆரிய மக்கள் வழிபடவும் இன்று விண்ணில் உலவும் கோள் ஒன்றுக்கு விண்வெளி ஆய்வாளர் என்று பெயர்பெறவும் ஒரு நிலை எழுந்துள்ளது. சைவ நெறியை உதறித்தள்ளிய என் போன்றவர்கள் - கிறித்தவ சமய உணர்ச்சியும் இலாமிய சமயப்பற்றும், பௌத்த மத பக்தியும் கொண்டவர்கள் - மீண்டும் நாட்டுப்பற்றும் சைவ சமய உணர்வும், சிவபக்தியும் கொண்டு, தமிழர்நெறி, மொழி, பண்பாடு, நாகரிகம் முதலியவைகளை வளர்க்க - பேணிக்காக்க நான் பெற்ற பிற சமய ஆராய்ச்சியும், நாத்திக அறிவும் பயன்படும் நிலைக்கு மாற்றியுள்ளது. இது நமது மொழியின், சமயத்தின், பாரம்பரியத்தின் வலுவையும், ஒளியையும் காட்டுவதாகும் என்று உங்களுக்கு உணர்த்தக் கடமைப் பட்டுள்ளேன். சமயச் சட்டங்கள் இந்துக்கள் என்பவர் யார்? இன்று சைவர், வைணவர், சுமார்த்தர் ஆகிய மூன்று சமயி களையும் இந்துக்கள் என்று அழைக்கின்றனர். இது தவறு. சைவம் சிவபெருமானை முழு முதற் கடவுளாகக் கொண்ட நெறி. உயர்ந்த நன்னெறி. இது இன்றையச் சமயங்கள் அனைத்திலும் பழமையான சமயம். இந்த சமயத்தில் சேர்வதற்கு முதலில் ஒருவர் சிவதீட்சை பெறவேண்டும், திருநீறு இடவேண்டும். சிவபெருமானை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும் இச்சமயத்தின் மறை நூற்களாக தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் முதலியவைகளும் விதி நூற்களாக ஆகமங்களும் உள்ளன. அவைகளை நன்கு பயின்று அதன்வழி நடக்க வேண்டும். இதேபோல் வைணவத்திற்கு திருமால் முழுமுதற் கடவு ளாகவும் நாலாயிரப் பிரபந்தம் முதலியன மறைநூலாகவும் கொள்ளப்படும். இந்த சமயத்திற் புகுவதற்கு முத்திரை தாரணம் செய்யப்படவேண்டும். திருமண் இடவேண்டும் . ஆனால் சைவத் திற்கும் வைணவத்திற்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு. இதே போல் சுமார்த்த சமயத்திற்கு பிரமன், உருத்திரன், விஷ்ணு ஆகியவர்கள் முழுமுதற்கடவுள்கள். இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கும் வேதங்கள். இம்மதத்தில் சேர்வதற்கு காயத்திரி மந்திரம் செபிக்கவேண்டும். பூணூல் தரிக்க வேண்டும். யாகம் புரிதலும் சோமபானம் செய்தலும் அச்சமயத்தின் இன்றி யமையாத கொள்கைகளாகும். சைவத்தின் தனிப்பெரும் சிறப்பு சைவம் தனிப் பெரும் சிறப்புடைய புனித நெறி. இந்நெறி இந்திய மண்ணில் திராவிடப் பெருங்குடிமக்களால் காணப்பட்ட தனித்தன்மை வாய்ந்த நெறி. இந்த சமயம் ஆரியர்களின் சமயமாகிய சுமார்த்தம் கருவில் இடம் பெறுவதற்குமுன்பே துளிர்த்து வளர்ந்த தூய கொள்கைகளையுடைய சமயம். உலகில் உள்ள சமயங்களுக் கெல்லாம் தாய் நெறி என்று கூறினாலும் பொருந்தும். இந்தச் சமயம் வைணவம், பௌத்தம், சமணம், இலாம், கிறித்தவம், யூதர்களின் எகோவாமதம் முதலிய சமயங்களுடன் பெற்றிருக்கும் ஒருமைப் பாடுகூட சுமார்த்த மதத்துடன் பெற்றிருக்கவில்லை. இடைக் காலத்தில் பௌத்த சமயத்தையும் சமணசமயத்தையும் எதிர்க்க சுமார்த்தம், வைணவம், சைவம் ஆகிய சமயங்களில் ஒரு ஐக்கிய முன்னணி நிறுவி அது இந்துமதம் என்று அழைக்கப் பட்டது. அந்த ஐக்கிய முன்னணியின் கோரிக்கை நிறைவேறியதும் சுமார்த்தர், சைவநெறியையும் வைணவநெறியையும் அழித்து சுமார்த்த மதமே (இந்து மதமே) எல்லாருக்கும் தாய்மதம் என்று கூறினர். சுமார்த்த மறைகள் எழுதப்பட்ட வடமொழியே தெய்வீக மொழி என்று கூறினர். அரசினரின் செல்வாக்கில் பிற சமயத்தையும் அவர்களின் தெய்வத்தையும் மறைகளையும், இனத்தையும் மொழியையும் ஒழிக்க முற்பட்டனர். இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலே சைவநெறி உலகிலே உயர்ந்த தனிநெறி. இதற்கெனத் தனித் தெய்வமும், மறையும், மொழியும், பண்பாடும் உண்டு என்று மனோன்மணியம் ஆசிரியர் திரு. சுந்தரம்பிள்ளை, மறைமலை அடிகள், கா. சுப்பிர மணியபிள்ளை போன்றவர்கள் சிவநெறிக்கு மறுமலர்ச்சியளிக்க முன்வந்தனர். சைவர்களின் திருக்கோயில்களின் அமைப்பு முறைகளும் வழிபாடுகளும் ஆகமங்களில் உள்ளன. ஆகமங்கள் வடமொழியில் உள்ளன. உபாகமங்களும் வட மொழியிலே ஆக்கப் பெற்றுள்ளன. ஆகமங்களைப் பற்றி அறிதல் இந்நூலின் உயிரோட்டமாக அமைந்துள்ளது. தமிழில் ஆகமங்களுக்கு நிகராக திருமந்திரம், தேவாரம், திருவாசகம், திருக்குறள் சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற நூற்கள் உள. ஆகமம் ஆகமம் என்பதை ஆ+கமம் என்று பகுத்துப் பொருள் கொள்கின்றனர். உயிர்கள் இன்பம் பெற மலநாசம் செய்விப்பது என்று இதற்கு பொருள் தரப்படும். தோற்றக் காலத்தில் இறைவன், உயிர்கள் ஈடேற்றம் எய்தும் பொருட்டு மக்களுக்காக இந்த ஆகமங்களை அருளிச் செய்தார் என்று நம்பப்படுகிறது. சைவ சமயிகள் சிவாகமங்களை விதிவேதம் என்றும் தேவாரம், திருவாசகம் ஆகியவைகளைத் துதிவேதம் என்றும் கூறுகிறார்கள். ஆகமங்கள் கோயில்களின் அமைப்பு, தெய்வ வடிவங்களின் வகைகள், வழிபடும் முறை போன்ற அனைத்தையும் கூறுவனவாகும். ஆகமங்களே சமயிகளுக்கு முடிவான சட்டநூற்களாகும். ஆகமங்கள் மூன்று வகைப்படும். அதாவது (1) பாஞ்ச ராத்ரா ஆகமங்கள், (2) சிவாகமங்கள், (3) சாக்த ஆகமங்கள் எனப்படும். இந்த மூன்று வகைப்பட்ட ஆகமங்களும் பொதுவான விசயங்களில் ஒருப்போலக் காணப்படுகின்றன. வேறுபட்ட கருத்துக்களும் மாறுபட்ட கொள்கைகளும் இல்லை. ஆனால் பெயரளவில் சில வேற்றுமைகள் உள்ளன. ஆனால் அடிப்படை யான தத்துவங்களில் வேற்றுமைகள் இல்லை. இவைகளின் விவரம் அடியில் வருமாறாகும்: பாஞ்ச ராத்ரா (வைணவ) ஆகமங்கள் பாஞ்சராத்ரா ஆகமங்கள் 108 வகைப்படும். ஆனால் இந்த ஆகமங்கள் அனைத்தும் கிடைப்பது அரிது. இன்று முயன்று பத்து அல்லது பதின்மூன்று ஆகமங்களை அறிஞர்கள் தேடிக் கண்டு பிடித்துள்ளார்கள். இவை ஆதியில் நான்முகன், ஐமுகன், அறுமுகன், கௌதமன், வசிட்டன், நாரதன், கபிலன் ஆகிய ஏழு முனிவர்களால் செய்யப்பட்டன என்று கூறப்படுகின்றன. இந்த 108-வைணவ ஆகமங்களுக்கு நான்குலட்சம் சுலோகங்கள் இருந்தன என்று பல முதுபெரும் அறிஞர்கள் கூறியுள்ளனர். 2. சைவாகமங்கள் (சிவாகமங்கள்) சைவாகமங்கள், சிவாகமங்கள் என்றும் அழைக்கப்படும். சைவ சமயிகளின் கோயில் வகைகள் அதன் அமைப்பு முறை, பூசை (பூசெய்) முறைகள், படிமங்களின் அமைப்பு அதன் தத்துவங்கள் அனைத்தையும் விளக்கமாகக் கூறும் இந்தச் சமய விதிகளைப் பற்றிச் சைவ சமயிகள் இதுவரை அக்கரை காட்டவில்லை. சிவாகமங்கள் அனைத்தும் வடமொழியில் உள்ளன. சிவனை வழிபடும் அடியார்களிற் பலரும் வடமொழியையறியாதவர்கள்; திருக்கோயில்களில் பூசை நடத்தும் ஆதி சைவர்களில் பலர் இந்த ஆகமங்களை வாசிப்பார்கள். சுலோகங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பார்கள். ஆனால் பொருள் தெரிந்தோர் சிலரேயாவர். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் காஞ்சிபுரத்தினின்று திருநெல்வேலி மாவட்டத்தில் குடியேறிய சைவவேளாளர் ஆவர். ஓதுவார் என்றும் ஆகம சைவர் என்றும் கூறப்படும் இவர்களில் குறிப்பிடத்தக்கோர் திருநெல்வேலி முத்தமிழ்ச் சங்கத் தலைமைப் புலமை நடாத்திய திரு சாலிவாடீசுவர ஓதுவார், அவரது மகன் சுந்தர ஓதுவார் அவர்களும் ஆவர். இவர்களின் முன்னோர்கள் பலருக்கு வடமொழிப் பயிற்சியுண்டு. ஆகமங்களை நன்கு கற்றவர்கள்; ஆகமங்களுக்குப் பொருள் கூற வல்லவர்கள். இவர்களை ஆகம சைவர்கள் என்றும் அழைப்பர். இதற்கு சாசனச் சான்றுகள் உண்டு. இவர்களுக்கு - இந்த ஆகம சைவர்களுக்கு மன்னர்கள், ஆதி சைவர்கள், குருக்கள், தேசிகர் முதலியவர்களுக்கு அளித்த மரியாதையைவிட அதிகமான மரியாதை அளித்து மானியங்கள் வழங்கி சிறப்புச் செய்து வந்துள்ளனர். சைவம் போற்றும் சிவாகமங்களும் அதன் பெயர்களும் அடியில் வருமாறாகும்: 1. அசிதம் 2. அனலம் 3. அஞ்சுமான் 4. இரௌரம் 5. இலளிதம் 6. காமிகம் 7. காரணம் 8. கீரணம் 9. சத்திரம் 10. சந்திரஞானம் 11. சந்தானசருவோத்தம் 12. சித்தம் 13. சிந்தியம் 14. சுப்பிரபேதம் 15. சுவாயம்புவம் 16. சூக்குமம் 17. தீபத்தம் 18. பாரமேச்சுரம் 19. புரோற்கீதம் 20. பேதம் 21. மகுடம் 22. யோகசம் 23. வாதுளம் 24. விமலம் 25. விசயம் 26. விசுவாசம் 27. விமபம் 28. வீரம் இவைகள் அனைத்தும் இன்று கிடைப்பது அரிது. இவை களில் சில அச்சேறியுள்ளன. சில தமிழில் மொழியாக்கம் செய்யப் பட்டுள்ளன. அவைகள் செம்மையாகக் காணப்படவில்லை. பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சுக் கழகம் (Institute Francais D’ Indalogie) பெரும் முயற்சி செய்து அசித்தாகமம் (VOL I 1964, Vol II 1967) இரௌரவாகமம் (Vol 1961) மிருகண்டராகமம் (1962) மூலநூற்களை அச்சிட்டுள்ளது. ஏனைய ஆகமங்களையும் அச்சிட்டுப் பின் பிரஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்து அச்சிட்டுப்படித்துப் பயனடைய வேண்டும் என்ற ஆவல் 1972ஆம் ஆண்டு வரை ஒரு சிவபக்தருக்கும் பிறக்கவில்லை. ஆனால் பிரஞ்சு நாட்டில் உள்ள பிரஞ்சுக்காரர் களான கிறித்தவர்களும் நாத்திகர்களும் பல்லாயிரம் ரூபாய் செலவிட்டு பிரஞ்சில் மொழியாக்கம் செய்து படித்து இன்புற்று வருகின்றார்கள். சென்னையில் காமிகாகமம் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளது என்றும் மொழியாக்கம் சிறப்பாக இல்லை என்றும் கூறப்படுகிறது. சிவாகமங்களுக்கு 113 உபாகமங்கள் உண்டு. அவைகளை நாம் கண்டும் கேட்டும் அறியோம். 3. சாக்தாகமங்கள் சாக்தாகமங்கள் 64. இவைகளில் கூட இப்பொழுது எல்லாம் கிடைப்பது அரிது. ஆகமங்கள் நான்கு பிரிவாக உள்ளன. அவைகள் முறையே (1) ஞானபாதம் (2) யோகபாதம் (3) கிரியாபாதம் (4) சரியாபாதம் எனப்படும். 1. ஞானபாதம் ஞானபாதத்தில் தத்வத்திரயம் என்று கூறப்பட்ட முப்பொருள் உண்மை விளக்கப்படுகின்றது. சிவாகமங்களில் பதி, பசு, பாசம் என்பனவும் வைணவாகமங்களில் சித்து, அசித்து, ஈசுவரன் என்பனவும் சாக்தாகமங்களில் சிவம், சக்தி, ஆன்மா என்பனவும் முப்பொருளாய்க் கொண்டு விவரிக்கப்படுகின்றன. இவற்றை விளக்கும் வகையில் உற்பத்தி ஒழுங்கு உரைக்கப்படுகின்றது. உலகம் எப்படித் தோன்றியது என்று தற்கால அறிவியல்வாதிகளும் வியக்கும் முறையில் உற்பத்தி விளக்கம் படிப்படியாய் ஏற்றம் பெற்ற செய்தி விளக்கப்பட்டுள்ளது. சிவாகமங்களின் ஞானபாதம் சந்தான குரவர் என்று சிறப்பித்துக் கூறப்படும் மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச் சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் என்ற நால்வரால் 14 நூல்களாக இயற்றப்பட்டு சைவசித்தாந்த சமயத்தின் அறிவுக் களஞ்சியமாக மிளிர்கின்றது. சைவ நெறிக்கு இப்பதினான்கு நூல்களும் ஆதாரமாகத் திகழ்கின்றன. இந்த நான்கு குரவர்களில் மெய்கண்ட தேவர் சைவ வேளாளர். அருணந்தி சிவாச்சாரியாரும், உமாபதி சிவாச்சாரியாரும் ஆதிசைவர்கள். மறைஞான சம்பந்தர் பிராமணர். இவர் சிவதீட்சை பெற்று சைவர் ஆனது மட்டுமன்றி சந்தான குரவராகவும் உயர்ந்தார். வடமொழி ஆகம நூல்களின் ஞானபாதத்தைப் படிக்க முடியாதவர்கள் இப்பதினான்கு நூற் களையும் படித்துப் பயன் அடையலாம். திருமூலர் இயற்றிய திருமந்திரம் தமிழ்மொழியில் ஆக்கப் பட்ட ஆகமம் என்று கூறப்படுகிறது. இது வடமொழி ஆகமத்தை விட குறைந்த நூலன்று. சில விசயத்தில் உயர்ந்தது என்றும் உரைக்கலாம். 2 யோகபாதம் யோக பாதத்தில் பிராணாயாமம் முதலிய சாதனைகளும் ஆறு ஆதாரங்களின் நிலையும் குண்டலினியின் இலட்சணமும், ஆத்ம சுத்தி, அந்தர் யாகம் முதலியனவும் பேசப்படுகின்றன. சைவ, வைணவ, சாக்த ஆகமங்கள் ஆகிய மூன்றில் சாக்த ஆகமங்களே இந்த யோகப் பயிற்சியை விரிவாய்க் கூறுகின்றன. அதற்காகப் பல நூற்களும் உபாசனா மார்க்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 3 கிரியாபாதம் கிரியாபாதத்தில் கர்ஷணம் முதல் பிரதிஷ்டை வரையுள்ள கிரியைகளும் அவற்றிற்குரிய மந்திரங்களும் உத்சவங்கள், பிராயச் சித்தங்கள், நித்திய நைமித்திய பூசா விவரங்கள், சமய விசேச நிர்வாண தீட்சாக் கிரமங்கள், அதிகாரி பேதங்கள், வர்ணாச்சிரம தர்மங்கள் முதலியன கூறப்பட்டுள்ளன. அவைகள் கிரியாபாத மந்திரம், கிரியை, பாவனை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. மந்திரங்களின் பாகுபாடு அட்சரங்களின் தோற்றம் விவரிக்கப் பட்டுள்ளன. மந்திரங்களை (1) சித்தம் (2) சாத்யம் (3) வசிதம் (4) ரிபு என நாலு பிரிவுகளாகப் பிரித்து (1) சித்தம் என்பதை செபிப்பதாலே பலனைத் தரத்தக்க பஞ்சாட்சரம், சடாட்சரம், அஷ்டாட்சரம், பஞ்சதசி போன்ற மந்திரங்களாக விமர்சிக்கப்படுகின்றன. (2) சாத்யம் என்பவை கிரியையோடு சேர்த்து மந்திரம் ஓதப்பட வேண்டும் இதைக் காரணாகமம், மந்திரம் விநாக்ரியா நாதி கர்ஷணாந் யர்ச்சனா ந்தககா என்று கூறுகிறது. கர்ஷணம் முதல் பிரதிஷ்டை வரை ஒவ்வொரு படியிலும் மந்திரங்கள் ஓதப்பெறல் வேண்டும். கர்ஷணம் என்றால் கிருஷி செய்தல் அதாவது ஆலயம் அமைக்கப்படவேண்டிய இடத்தை உழுதல் என்று பொருள்படும். இந்தப் பகுதியில் கோயில் நிர்மாணங் களுக்கு உரிய நிலத்தின் தன்மை, அளவு, படிமங்களின் பரிணாமம் அமைப்பு முதலியவைகள் பேசப்படுகின்றன. சிலா சந்திர ஹணம் என்ற பகுதியில் உருவம் செய்ய வேண்டிய கல்லின் தன்மை ஆண், பெண், அலி என்ற அதன் பாகுபாடுகள் கூறப்பட்டுள்ளன. மணி ஓசை போன்ற நாதமுடைய கல் பெண் என்றும் அதனால் பெண் உருவங்கள் செதுக்கப்படவேண்டும் என்றும் நாதம் இல்லாத கல் அலி என்றும் அதனால் பீடங்கள் சமைக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இவைகள் சிற்ப நூற்களிலும் இடம் பெற்றுள்ளன. ஆகமங்களே முடிவான நூல்; அதிகார பூர்வமான சட்ட நூல். சிற்பிக்கு வேண்டிய பயிற்சிகள்அளிக்கப்படுகின்றன. மேலும் சிலைகளின் அமைப்பு, அளவை முறை, பாவங்கள் முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆகமங்களில் தெய்வச்சிலை வடிவங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளன. இதன் விளக்கங்கள் சிற்ப நூற்களில் கூறப்பட்டுள்ளன. ஆகமங்களுக்குச் சிற்ப சாத்திரங்கள் முரண்பட்டிருக்க முடியாது. எங்காவது முரண்பாடு காணப்பட்டால் சிற்பநூலைத் தள்ளிவிட்டு ஆகம விதிகளை மேற்கொள்ள வேண்டும். ஆகமங்கள் சிவநெறியாளர்களின் உயர்ந்த கருவூலம், விலைமதிக்க வொண்ணாத கருவூலம். ஆகமங்களைப் பெற்றிருப்பதே சைவர்களின் பெரும்பேறு. சிற்ப நூற்களை விசுவகர்மா போன்ற தெய்வ கம்மியர்களும் மயன் போன்ற அசுர கம்மியர்களும் யாத்துள்ளனர். சிற்ப நூற்கள் 32. அவைகளின் பெயர்கள் அடியில் வருமாறாகும். 1. அனுமான் 2. அரிடிருகம் 3. ஆதிசாரம் 4. இந்திரம் 5. கற்பாரியம் 6. காபிலகாலயூகம் 7. சயித்தகம் 8. சவுமம் 9. சாத்திகம் 10. சிருட்டம் 11. சித்திரம் 12. தரவட்டம் 13. நளம் 14. நாமாங்கிதை 15. பானு 16. பாராசரியம் 17. மயம் 18. மானசாரம் 19. மகததந்திரம் 20. மான பேதம் 21. வது வித்தியா 22. வாது போதம் 23. வச்சிரம் 24. விசுவகர்மம் 25. விச்சுவேசம் 26. விச்சுவசாரம் 27. விருத்தம் 28. விதாரம் 29. விசுவகாசிபம் 30. விசுவபோதம் 31. வெகுசசுருதம் 32. விசாலம் இலிங்கம் இலிங்கம் என்ற பதத்திற்குக் குறி - அடையாளம் என்று பொருள்படும். சைவ ஆகமங்களில் இறைவன் ஆண் பெண் வடிவாக இருக்கிறான் என்று கூறப்படுகின்றது. எனவே சமய நூற்கள் தெய்வத்தை அம்மையப்பன் என்று போற்றுகின்றன. அம்மையின் சின்னமாக பீடமும் அப்பனின் சின்னமாக உருண்டை வடிவிலான சின்னமும் இணைத்து சிவநெறியின் புனிதச் சின்னமாகத் தமிழர்களும் திராவிடர்களும் பிறரும் அவர்களின் முன்னோர் களும் புதிய கற்காலந்தொட்டு வழிபட்டு வருகிறார்கள். புதிய கற்காலத்தில், எஃகு ஆயுதங்கள் இல்லாத காலத்தில் ஒருமுக வட்ட வடிவமான கல்லையும் அதன் மீது நீண்ட குழவிக்கல் போன்ற வடிவத்தையும் வைத்து வழிபட்டனர். இதுவே சிவலிங்கம் எனப் பிற்காலத்தில் எழுந்தது. பிற்கால அறிஞர்கள் அளவிடற்கரிய ஆற்றல் வாய்ந்த ஆண்ட வனுக்கு அடையாளமாக ஓர் அளவையில் வைப்பது இலிங்கம் ஆகும் என்றனர். இன்று இலிங்கம் என்றால் சிவாலயங்களில் உண்ணாழிகையில் இருக்கும் அருவுருவத் திருமேனி தான் குறிப்பாகக் கொள்ளப்படுகிறது. இலிங்கவகைகள் ஆதியில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் புதிய கற்காலத்தில் ஒரேஒரு வகை இலிங்கம்தான் இருந்தது. அப்பால் தாவர இலிங்கம் சங்கமலிங்கம் என இருவகை இலிங்கங்கள் எழுந்தன. தாவர லிங்கம் நிலையாகத் திருக்கோயிலில் இருப்பது, சங்கம இலிங்கம் அன்பர்கள் அகத்தில் இருப்பது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. இதன்பின் இலிங்கங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. 1. வியக்தலிங்கம், 2. அவ்வியக்த இலிங்கம் 3. வியக்தா வியக்த லிங்கம் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. பீடமும் இலிங்கமுமாக இருப்பது அவ் வியக்தலிங்கம். இலிங்கத்திலே முகமும் தோள்களும் வெளிப் படாமல் இருப்பது வியக்தா வியக்தலிங்கம். இறைவனுடைய தத்துவ நிலைகளை விளக்கும் குருமூர்த்தமான வியாக்கியான (ஞான) தட்சிணாமூர்த்தி வடிவங்களை உள்ளடக்கி நிற்கும் அஷ்டமூர்த்தி வடிவங்களும், சிவபெருமானின் அன்பு நெறியை அருள் திறங்களை இருபத்தைந்து எழிற்கோலங்களை விளக்கும் இலிங்கோற்ப மூர்த்தத்தை உள்ளடக்கிய மகேசுவர வடிவங்களும், சிவபெருமா னுடைய படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய தொழில்களைக் காட்டும் ஆடவல்லான் அருள் உருவை அடக்கிய அறுபத்தினான்கு உருவங்களையும் அருட்கோலங்களையும் விளக்கும் சிவமூர்த்தங்களும் வியக்த இலிங்கங்கள் ஆகும் என்று சிவாகமங்கள் செப்புகின்றன. இறைவனின் எண்வகைக் கோலங் களான (அட்டமூர்த்தி வடிவங்களான) தென்முகக் கடவுள் (தட்சணாமூர்த்தி) மணஅழகர் (கலியாண சுந்தர மூர்த்தி), அம்மை அப்பர், மகனுடன் அமர்ந்திருக்கும் கோலத் தெய்வம் (சோமாகந்த சுகாசன மூர்த்தி), சந்திர சேகர மூர்த்தி, காலசம்மார மூர்த்தி, திரிபுராந்தக மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, கசசம்மாரமூர்த்தி, திரிபுரசம்மாரர் மூர்த்தி வடிவங்கள் எல்லாம் வியக்த இலிங்கங்களாகும். இவை சிவபெருமானின் அன்பை, அருளை, ஆற்றலை, இரக்கத்தை, உண்மையை, எழிலை, ஏற்றத்தை, ஒப்பற்ற தன்மையைக் காட்டும் கோலங்களாகும். சில அறிஞர்கள் சிவஇலிங்கத்தை 1. அசலலிங்கம் 2. சலன லிங்கம் 3. சலாசலலிங்கம் 4. அசலசலலிங்கம் என்று நான்கு வகை களாகப் பிரித்துள்ளார்கள். கோபுரம், விமானம் முதலியன அசல லிங்கம். இதயத்தில் கற்பிக்கப்படுவது சலனலிங்கம். வாணலிங்கம், இரத்தின லிங்கம் முதலியன சலாசலலிங்கம். வேதிகையில் மண்டலமிட்டு வழிபடப்படுவது அசலசலலிங்கம் எனவும் கூறப்படும். வாணலிங்கம் முதலியன இஷ்ட லிங்கமாகவும், பரார்த்த பூசையில் சிவசந்நிதியில் அங்கலிங்கமாகவும் பூசிக்கப்பட்டால் அது சலலிங்கம் எனவும், நிற்றலால் சலாசலலிங்கம் எனவும் கூறப்படும். தீட்சைக்குக் கூறியவாறு வேதிகையிலிட்டு வழிபடப்படின் அசலம் எனவும், இஷ்டலிங்கமாக நாடோறும் வழிபடப்பட்டால் சலம் எனவும் நிற்றலால் அசலம் எனவும் கூறப்படும். அசல லிங்கத்தை விமானம் கோபுரம் முதலியவைகள் மூலம் வழிபடலாம். இந்த விமானங்களும் கோபுரங்களும் அடிபெருத்து நுனி சிறுத்து இருக்கவேண்டும். ஆனால் இது கோயில்களில் உள்ள இலிங்கத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. சில விமானங்கள் அரை வட்டவடிவில், ஓர் அரை உருண்டையான கிண்ணத்தைக் கவிழ்த்தி னாற் போன்று விளங்கும். தெளிவாகக் கூறினால் உடைக்கப்பட்ட பாதித் தேங்காய் போன்று காணப்படும். சில விமானங்கள் சதுர வடிவில் இருக்கும். விமானங்கள் பல்வேறு சிற்ப வடிவிலே திகழும். சிற்பத்தில் யானை முதல் எறும்பு ஈறாக விலங்குகள், பறவைகள், ஊர்வன, மக்கள், தேவர், மரம், செடி கொடிகள் அனைத்தும் காணப்படும். எகிப்து, மெக்சிக்கோ, அயர்லாந்து முதலிய நாடுகளில் எடுப்பிக்கப் பெற்ற பண்டைக்காலக் கோயில்களும் பிற்காலக் கிறித்தவக் கோயில்களும் சிவலிங்க வடிவில் அடி பெருத்து நுனி சிறுத்துக் காணப்படும் என்று முனைவர் பவுல் எம்.வெட். பி.எச்.டி அவர்கள் பல்வேறு நாட்டுக் கோயில்களையும் படம் போட்டு விளக்கிக் காட்டியுள்ளார்.1 தமிழ் ஆகமம் எனப்படும் திருமந்திரத்தில், விமானம் தூலலிங்கம் என்றும் விமானத்தின் அடியில் திருஉண்ணாழிகையின் உள்ளே இருக்கும் இலிங்கம் சூக்குமலிங்கம் என்றும் பலிபீடம் பத்திரலிங்கம் என்றும் முனிவர் கூறியுள்ளார்.2 இன்னும் சில சமயச் சான்றோர்கள், இலிங்கத்தை ஐந்து வகையாகப் பிரித்துப் பஞ்சபூத மகாலிங்கங்கள் என்று கூறி யுள்ளார்கள். இவை நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு என்று ஐந்து பூதங்களைப் பிரதிபலிக்கும். பிருதிவி (நிலம்) லிங்கம் (ஏகாம்பர லிங்கம்) அப்பு நீர்லிங்கம் (சம்புகேசுவரலிங்கம்), அக்கினி (நெருப்பு) லிங்கம் (அருணாசல லிங்கம்), வாயு (காற்று) லிங்கம் (சீகாளத்தி லிங்கம்), ஆகாய (விசும்பு) லிங்கம் (திருமூலலிங்கம்) என்று ஐந்து லிங்கங்கள் உண்டென்பர். இவை முறையே காஞ்சிபுரம், திரு வானைக்கா, திருவண்ணாமலை, சீகாளத்தி, சிதம்பரம் போன்ற இடங்களில் உள்ளன. பஞ்ச லிங்கங்களை வழிபடுவது சிறப்பானது. விம்பம், காமிகம், வாதுளம், காரணம், சுவாயம்பு, சந்தானம், சர்வோத்தமம் ஆகிய சிவாகமங்கள் 1. பரார்த்த லிங்கம் 2. சுயம்பு லிங்கம் 3. காரணலிங்கம் 4. தெய்வீக லிங்கம் 5. ஆரிடலிங்கம் 6. மானுடலிங்கம் 7. இச்சணி லிங்கம் என ஏழு இலிங்கங்களை எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஏழு இலிங்கங்களில் உயர்ந்தது மானுட இலிங்கம். அதனினும் உயர்ந்தது தெய்வீக லிங்கம். அதனினும் உயர்ந்தது கரணலிங்கம். அதனினும் உயர்ந்தது சுயம்புலிங்கம். (இயற்கையாய் எழுந்த மலையும், குன்றும், சிறு பாறையுமாகும்) சுயம்பு லிங்கம் தானே தோன்றியது. கருணை கனிந்து அன்பர்களுக்கு இன்பம் அருளும் இறைவன் தானே தன்னை வெளிப்படுத்தும் உயர்ந்த தெய்வீகக் குறியாகும்; சுயம்புலிங்கம் அநாதியானது. சௌராட்டிரத்தில் சோமநாதலிங்கமும் சிரிசைலத்தில் மல்லிகார்ச்சுன லிங்கமும் உச்சினியில் மகாகாளலிங்கம் ஓங்காரத்தில் பரமேசுவரலிங்கமும் இமாசலத்தில் கேதாரலிங்கமும் இடாகினியில் பீமசங்கரலிங்கமும் வாரணாசியில் விசுவேசர லிங்கமும் கோதாவரியில் திரியம்பக லிங்கமும் சிதாபுரத்தில் வைத்திய நாதலிங்கமும் தாருகாவனத்தில் நாகேசுவரலிங்கமும் சேதுவில் இராமேசுவரலிங்கமும் சிவாலயத்தில் குசுமேசலிங்கமும் ஆகப் பன்னிரண்டு சோதிலிங்கமும் உளதென்று கோடிருத்திர சங்கிதை கூறுகிறது. முகலிங்கம் இதுவரை எடுத்துக் காட்டிய இலிங்கங்கள் சிற்பத் தொழில் சிறப்புற்று எழாத காலத்தில் செய்யப்பட்டன. சிற்பத் தொழில் சிறப்புற்று எழுந்ததும் இலிங்கவடிவில் ஒரு புதிய மாற்றம் எழுந்தது. இலிங்க வடிவில் ஒரு மனிதனின் முகம் போன்ற வடிவம் செதுக்கப் பெற்றது. இது முகலிங்கம் எனப்பட்டது. இது சிவபெருமானின் மார்பிற்கு மேற்பட்ட பாகமாகக் காணப்படுகிறது. சிலகாலம் சென்று இறைவன் முன்பக்கம் மட்டும் பார்க்கக் கூடியவன் அல்லன், பின்புறமும் பார்க்கக் கூடியவன் என்று இலிங்கத்தின் தண்டில் முன்புறமும் பின்புறமும் இரு உருவங்கள் தீட்டப்பட்டன. இது துவிமுகஇலிங்கம் என்று கூறப்பட்டது. அப்பால்; மூன்று, நான்கு பக்கங்களிலும் முகங்கள் செதுக்கித் திரிமுகலிங்கம் சதுர்முகலிங்கம் அமைத்தனர். இறைவன் நான்கு திசைகளையும் பார்க்கக் கூடியவன் என்பதை விளக்குவதற்குச் சதுர் முக லிங்கம் அமைத்தனர். பின்னர் இறைவன் நான்கு திசைகளையும் விண்ணையும் பார்க்கக் கூடியவன் என்பதை விளக்கும் பொருட்டுப் பஞ்சமுக இலிங்கத்தை உருவாக்கினர். இலிங்கத்தண்டின் நாற் புறமும் நான்குமுகமும் அதன் உச்சியில் ஒரு முகமாக ஐந்து முகங்கள் அமைத்தனர். இப் பஞ்ச முகலிங்கம் இறைவனின் ஐந்து கோலங் களான வாமதேவ, தற்புருச, அகோர, சடியோசட, ஈசான என்பவை களை விளக்கும் என்று கூறுவர். திருஉண்ணாழிகையில் ஒரு வாயில் இருந்தால் ஏகமுகலிங்கமும், இரு வாயில்கள் இருந்தால் துவி முகலிங்கமும், மூன்று வாயில் இருந்தால் திரிமுகலிங்கமும் நான்கு வாயில்கள் இருந்தால் சதுர்முகலிங்கமும் இருக்கவேண்டும். நான்கு வாயில்கள் உள்ள உண்ணாழிகையில் பஞ்ச முகலிங்கமும் இருக்கலாம். இந்த இலிங்கங்களில் தற்புருட மூர்த்தம் கிழக்கு நோக்கியும் அகோர மூர்த்தம் தெற்கு நோக்கியும் சடியோசட மூர்த்தம் மேற்கு நோக்கியும் வாம தேவமூர்த்தம் வடக்கு நோக்கியும் ஈசான மூர்த்தம் விண்ணை நோக்கியும் இருக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. மக்கள் நாகரிகமுற்று வளர வளரச் சிற்ப அறிவும் ஆற்றலும் வளர்ந்தன. இலிங்க வடிவிலும் மாற்றங்கள் எழுந்தன. தொடக்கத் தில் இருந்த இலிங்க உருவம் முகலிங்கமாகி இலிங்கத்தின் தண்டில் சிவபெருமானின் மார்பிற்கு மேற்பட்ட பகுதி இடம் பெற்றிருந்தது. அப்பால் சிவபெருமானின் முழங்காலிற்கு மேற்பட்ட பகுதி இலிங்கத்தின் மீது செதுக்கப்பட்டது. இந்த வடிவும் இலிங்கோற்ப மூர்த்தியின் உருவம் எனப்படும். அதன்பின்னர் இலிங்கத்தின்மீது சிவபெருமானின் முழு வடிவமும் செதுக்கப்பட்டது. இந்த வடிவம் சிற்பத்துறையினை ஆராயும் அறிஞர்களுக்கு இதுவரை தெரியா திருந்தது. இப்பொழுது அந்த வடிவம் ஆந்திர நாட்டைச் சேர்ந்த குடிமல்லம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னரே சிவபெருமானின் உருவம் தனியாகச் செதுக்கப்பட்டு மூர்த்தங்களாக உருவகப்படுத்தப்பட்டன. முதன் முதலாகச் சிவபெருமான் (தென்முகக்கடவுள் தட்சணாமூர்த்தி) மகேந்திரமலை யில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நான்கு முனிவர்களுக்குக் கல்லால மரத்தின் கீழ் அறமுரைத்த தட்சணாமூர்த்தம் உருவாக்கப்பட்டது. சிற்ப அறிவும் சிற்பிகளின் கலை நுணுக்கமும் ஆற்றலும் சமய அறிவும் வளர வளரப் பல்வேறு மூர்த்தங்களும் இடம்பெற்றன. தமிழ் மக்கள் அறிவின் முதிர்ச்சியிலே சமயத்தைக் கண்டனர். அவர்கள் மிகத் தொன்மையான இனத்தவர்களாய் இருந்ததினால் அவர்களின் சமயத் தொடக்கமும் வளர்ச்சியும் நன்கு காணக் கூடியதாய் இருக்கிறது. மக்களின் சமுதாயம் தொடக்க காலத்திலே சமய உணர்வு பெற்றுத் தெய்வ நம்பிக்கை கொண்டு தெய்வங் களுக்குத் தங்களின் அறிவிற்கேற்ப உருவம் அமைத்து, அப்பால் அறிவுவளர்ச்சியின் நிலைகளுக்கேற்பத் தெய்வங்களின் சின்னமான உருவங்களும் படிப்படியாய் வளர்ச்சி பெற்று வந்துள்ளதற்கு உரிய மெய்ச்சான்றுகளாக இலிங்கங்களும் மூர்த்தங்களும் உள்ளன. உலகில் ஒரு அங்குலந்தொட்டு நூறுஅடி வரை உயரமுள்ள இலிங்கங்களும் உள்ளன. இமயமலையை சுயம்புலிங்கமாக எண்ணி வழிபடலாம். இந்த நீணிலத்தையே இலிங்கமாக எண்ணி வழி படலாம். மிகநுண்ணிய அணுத்தொட்டு பெரிய மலைகள் வரை எல்லாம் இலிங்க வடிவில் உள்ளன என்று ஆகமங்கள் கூறுகின்றன. இந்தப் பிரபஞ்சமே இலிங்க வடிவில் அமைந்துள்ளது. கங்கை முதல் தண் பொருநை - பஃறுளியாறு வரை எல்லா ஆறுகளும் இலிங்கமயமாய் இருப்பதாக எண்ணி வழிபடலாம். உலகில் உறையும் உயிர்களை உய்விக்கும் பொருட்டு உமாபதி இலிங்க வடிவில் திகழ்கிறார். கன்றை நினைத்ததும் பசுவின் மடியில் பால் சுரப்பது போல், பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்கும் இறைவன் உயிர்கள் மீது கருணை கொண்டு இலிங்க வடிவில் தோன்றி அருள்கின்றார் என்று சிவஞான சித்தியார் போன்ற சைவ சமய தத்துவ நூற்கள் கூறுகின்றன. சகல இலிங்கங்களாகக் கருதப்படுவன அறுபத்து நான்கு உருவத்திருமேனிகள் (சிவமூர்த்தங்கள்) என்று ஆகமங்கள் கூறு கின்றன. இவற்றை அஷ்டாட்ட விக்ரஹங்கள் என்றும் இவை யாவும் நிஷ்கள லிங்கத்தினின்று ஆவிர்ப்பவித்தவை என்றும் கூறப் பட்டிருக்கிறது. அஷ்டாட்ட விக்ரகங்களைச் சுருக்கி 25 மகாதேவ மூர்த்தங்களாக காரணாகமம் கூறுகின்றது. மூன்று அட்டமூர்த்தங் களும் ஒரு இலிங்கோற்ப மூர்த்தமும் கூடி மகாதேவமூர்த்தம் என்று கூறப்படுகின்றது. இவைகளைச் சுருக்கியே அட்டமூர்த்தம் - எண்வகை வடிவங்கள் அமைக்கப்பட்டன. I அஷ்டமூர்த்தம் 8 1. தென்முகக் கடவுள் (குருமூர்த்தம்) 2. கலியாணசுந்தரர் 3. சோமசுகந்தசுகாசனர் 4. சந்திரசேகரர் 5. பிட்சாடனர் 6. காலசம்மாரர் 7. கசசம்மாரர் 8. திரிபுரசம்மாரர் எனக் கூறப்படும். II மகாதேவமூர்த்தம் 25 1. தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி) 2. கலியாணசுந்தரர் 3. சந்திரசேகரர் 4. சோமசுகந்தசுகாசன மூர்த்தி 5. பிட்சாடனர் 6. காலசம்மாரர் 7. கசசம்மாரர் 8. திரிபுரசம்மாரர் 9. இலிங்கோற்பவமூர்த்தி 10. உமாமகேசுவரமூர்த்தி 11. அர்த்த நாரீசுவரமூர்த்தி 12. திரிமூர்த்தி 13. அரியர்த்தமூர்த்தி 14. கங்காளர் 15. காமாந்தகர் 16. சலந்தரசம்மாரர் 17. சரபர் 18. விசபாகரணர் 19. ஏகபாதர் 20. திரிபாதர் 21. பைரவர் 22. இடபாரூடர் 23. நடராசர் 24. கங்காதரர் 25. சுகாசனர் III சிவமூர்த்தங்கள் 64 தட்சணாமூர்த்தம் 4 1. வியாக்கியான தட்சணாமூர்த்தி 2. வீணாதரதட்சணாமூர்த்தி 3. ஞானதட்சணாமூர்த்தி 4 யோக தட்சணாமூர்த்தி சுகாசனமூர்த்தி 3 5. சுகாசன மூர்த்தி 6. உமாசகித சுகாசனமூர்த்தி 7. சோமசுகந்த சுகாசனமூர்த்தி சந்திரசேகர மூர்த்தி 3 8. கேவால சந்திரசேகரர் 9. உமாசகிதசந்திரசேகரர் 10. ஆலிங்கனசந்திர சேகரர் தாண்டவ மூர்த்தி 5 11. ஆனந்தத்தாண்டவமூர்த்தி 12. புசங்கலளித மூர்த்தி 13. புசங்கத்திராச மூர்த்தி 14. சந்தியா தாண்டவமூர்த்தி 15. சதா தாண்டவமூர்த்தி இலிங்கமூர்த்தங்கள் 16. முகலிங்கமூர்த்தி 17. இலிங்கசொரூபமூர்த்தி 18. இலிங்கோற்பவமூர்த்தி அனுக்கிரகமூர்த்தங்கள் 19. சண்டேசனுக்ரக மூர்த்தி 20. விஷ்ணு அனுக்ரகமூர்த்தி 21. இராவண அனுக்ரகமூர்த்தி சம்மார மூர்த்தங்கள் 7 22. காமாந்தக மூர்த்தி 23. சலந்தர சம்மார மூர்த்தி 24. பிரமச்சிரச்சேத மூர்த்தி 25. காலசம்மாரமூர்த்தி 26. கசசம்மாரமூர்த்தி 27. திரிபுரசம்மாரமூர்த்தி 28. சார்த்தூவசம்மார மூர்த்தி ஏனைய மூர்த்தங்கள் 29. சதாசிவமூர்த்தி 30. கங்காவிசர்சனமூர்த்தி 31. அர்த்தநாரீசுவரர் 32. அரியர்த்தமூர்த்தி 33. திரிமூர்த்தி 34. கங்காளமூர்த்தி 35. சரபமூர்த்தி 36. ஏகபாதமூர்த்தி 37. திரிபாதமூர்த்தி 38. பைரவர் 39. வீரபத்திரர் 40. இடபாருடர் 41. கங்காதரர் 42. பாசுபதாதிரமூர்த்தி 43. ஏகபாததிரிமூர்த்தி 44. சக்கிரதானமூர்த்தி 45. கிராதமூர்த்தி 46. குருமூர்த்தி 47. அசுவாரூடமூர்த்தி 48. இலகுளேசுவரமூர்த்தி 49. ஆபத்தோத்தாரணமூர்த்தி 50. வடுக மூர்த்தி 51. சேத்திரபால மூர்த்தி 52. அகோரதிரமூர்த்தி 53. தட்சயக்ஞமூர்த்தி 54. கலியாணசுந்தர மூர்த்தி 55. பிட்சாடனர் 56. கௌரிவரப்த மூர்த்தி 57. கௌரிலீலா மூர்த்தி 58. கரூடாந்தக மூர்த்தி 59. பிறார்த்தனா மூர்த்தி 60. இரக்தப்பிட்சாபமூர்த்தி 61. சிஷ்யபாவ மூர்த்தி 62. சுவ்ரபக்த மூர்த்தி 63. இடபாந்தக மூர்த்தி 64. விசபாகரணமூர்த்தி இஃதன்றி இன்னும் சில சிவமூர்த்தங்களும் உண்டு. அவைகளில் சில இந்த அறுபத்து நான்கில் இடம்பெற்றும் மேல் உள்ள சில மூர்த்தங்கள் நீக்கப்படுவதும் உண்டு. இதன் மூலம் தமிழர்கள் வழிபட்டுவந்த இலிங்க வடிவங்கள் ஆண் பெண் குறிகள் என்று பகைவர்கள் கூறிய இழிச் சொற்கள் அடிபட்டுப் போகின்றன. ஆனால் தமிழ் மக்கள் தொடக்க காலமுதல் வழிபட்டு வந்த தாயின் சின்னமும் அப்பால் வழிபட்டு வந்த தந்தையின் சின்னமும் இணைந்து தாய்த் தெய்வத்தின் சின்னமாகவும் தந்தைத் தெய்வத்தின் சின்னமாகவும் சிவலிங்கம் விளங்குகிறது. இறுதியாக மக்களின் அறிவு முதிர்ச்சியில் எழுந்த அம்மையப்பர் அல்லது மங்கை பங்கன் (அர்த்தநாரீசுவரர்) வடிவத்தைப் பிரதி பலிக்கும் சிவலிங்கவடிவம் தோன்றியது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இறைவன் அன்பும் அருளும் உள்ளவன் என்பதை உணர்த்துவதற்கு இலிங்க வடிவம் எழுந்தது என்று கூறுவாரும் உளர். உலகமானது சடம் சக்தி என்ற இரு பெரும் உண்மைகளை அடிப்படையாக் கொண்டு அமைந்து நிற்பது போல இலிங்க வடிவமானது அடியில் ஆவுடையாரும் மேலே இலிங்கமும் பெற்றுள்ளது என்று கூறுவாரும் உளர். இன்னும் இவைகளுக்கு எண்ணற்ற தத்துவங்கள் கற்பிப்பாரும் பலர். இலிங்கத்தின் தத்துவம் சிவபெருமானின் சோதித் தன்மையை விளக்கிக் காட்டுவதற்கு வட்டமாகத் தூண் போன்ற ஒருவடிவைச் சிவலிங்கம் என்று தமிழர்கள் கூறினர். முற்காலத்தில் எகோவாவை வணங்கும் கிறித வர்களின் முன்னோர்களான எபிரேயர்களும் இத்தூண் வணக்கம் புரிந்தனர் என்று கிறிதவ மத நூலான பைபிள் கூறுகிறது.1 முற்காலத் தமிழர்களும் முதன் முதலாக மரங்களின் அடியில் தறி என்னும் கல் தூணை நட்டு வழிபட்டு வந்தனர் என்று நமது பழந்தமிழ் நூற்கள் கூறுகின்றன. இத்தூண் வழிபாடே சிவலிங்க வழிபாடாக மலர்ந்தது. சிவலிங்கம் என்னும் சொல், லிங் - லயம்; கம் - தோற்றம், என்று பொருள் படுவதால் உலகம் தோன்றி ஒடுங்குவதற்கு உரிய இடம் என்று பொருள் கொள்ளப்படும். இலிங்கம் ஒளி என்ற பொருளில் ஐந்து தொழில்களால் உலகுக்கு ஒளி செய்வதால், இலிங்கம் என்ற பெயர் எழுந்தது. இஃதன்றி இலிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள்கொண்டால் இது ஒரு பொருளை உணர்த்துவதற்கு உரிய குறியாகக் கொள்ளலாம். சுட்டிக் காட்டமுடியாத ஒன்றை ஒரு குறியின் மூலம் அது இத்தன்மையுடையது என்று கூறும் வழக்கைப் போல் சிவம் எத்தன்மையுடையது என்று காட்டமுடியாததால் அது கல்தூணைக் கொண்டு சிவலிங்கம் என்ற பெயரால் காட்டப்பட்டது. சிவலிங்கம் பிரணவ சொரூபம். ஞானம் கருவி கரணம் முதற்கொண்டு பல பொருள்களைச் சிவலிங்கம் என்று கூறுவர். ஆசாரலிங்கம் குருலிங்கம் சிவலிங்கம் சங்கரலிங்கம் என்று பல இலிங்க பேதங்கள் உண்டென்று கூறுவர் சைவர். திருமூலர் மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலந்தரும் ஐமுகன் பரவிந்து நாதம் நலந்தருஞ் சத்தி சிவன்வடி வாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே (திருமந்திரம் 1745) என்று கூறியுள்ளார். இதனால் பரசிவத்திற்கு இலிங்கம் ஆதார மன்று. முழுஉருவத்திருமேனி இலிங்கம் என்று கூறப்படுவ தில்லை. இலிங்கம் பீடம் அவ்வியக்தலிங்கம் சந்திரசேகரர் முதலியன மூர்த்தங்கள் - அதாவது வியக்தலிங்கங்கள். உலக உற்பத்தியும் மக்களின் தோற்றமும் உலகின் தோற்றம் நாம் வாழும் இவ்வுலகம், இன்று எப்படிக் காணப்படுகிறதோ அப்படிப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் காணப்பட்டிலது; பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அது பழைய நிலையில் காணப்படவில்லை; பல்வேறு மாற்றங்களை எய்தியுள்ளது. பல்வேறு ஊழிகளில் உந்தியெழுந்த கடற்பெருக்குகளால் நிலப் பரப்பு நீர்ப்பரப்பாகவும், நீர்ப்பரப்பு நிலப்பரப்பாகவும் மாறுதல் அடைந்துள்ளன. இந்த மாபெரும் மண்ணுலகம் பல்வேறு காலங் களில் பெற்றிருந்த வடிவ மாற்றங்களை அறிவியல் அறிஞர்கள் ஆய்ந்து பல அரிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியுள்ளனர். நிலநூல் சான்றுகள் இன்றைய நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த அறிவியல் விற்பன்னர்கள் பழங்காலத்து இப்பாருலகில் பரவியிருந்த கண்டங்களையும் கடல்களையும் அறிவியல் பாங்காக ஆய்ந்து அறிந்து பல உண்மைகளை விளக்கிக் காட்டியுள்ளனர். அவர்கள் ஆய்ந்து கண்ட முடிவின்படி, கிழக்குத் தீவுகள், ஆதிரேலியா (Australia) இந்தியா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகள் உலகில் ஒரு பெரும் நிலப்பரப்பாக நீண்ட காலம் நிலவி நின்றது. அப்பெரிய நிலப்பரப்பு கோண்ட்வானா (Gondwana) என்று கூறப்படும். இம்மாபெரும் கோண்ட்வானாக் கண்டம், 300-கோடி ஆண்டுகள் வரை. இந்தியா, தென்அமெரிக்கா, ஆதிரேலியா, ஆப்பிரிக்கா, அண்டார்ட்டிக்கா முதலிய நிலப்பரப்புகள் ஒன்றிணைந்த ஒரு மாபெரும் நிலப் பரப்பாக நிலவியது. இம்மாபெரும் கண்டம் சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் சிதையத் தொடங்கியது. இத்தொன்மையான கண்டத்தில் சில உயிரினங்கள் தோன்றின. ஆனால் அதில் முதலில் மக்கள் தோன்றவில்லை. மிகத் தொன்மையான இக்கண்டத்தின் வரலாறு, இன்னும் தெளிவாக விளக்கம்பெற வேண்டுமானால் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தினைத் துணைக்கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள் வராத அக்காலத்திலேயே மணிவாசகப் பெருமான் இந்த உள்ளது சிறத்தல் என்னும் அறிவியல் கொள்கையை உலகிற்கு உணர்த்தினார். உள்ளது சிறத்தல் என்ற பரிணாம வாத சித்தாந்தத்திற்குச் சைவ சமய மறுமலர்ச்சிக்கு ஆக்கம் அளித்த நான்கு சமய குரவர்களில் ஒருவராக மதிக்கப்பெறும் மாணிக்கவாசகர் அடிப்படை இட்டார் என்று கூறினால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் (திருவாசகம்) என்று சைவ சமயிகள் மறைநூலாகப் போற்றப் பெற்றுவரும் திருவாசகத்தில் கூறியிருப்பது சிந்திக்கத் தக்கது. நாட்டுப்பற்று மிக்க நாணயமான தலைவரும், தமிழ்ப்புலவரும், சைவ சிந்தாந்த அறிஞரு மான மயிலை முனிவர் திரு. வி. கலியாண சுந்தர முதலியார் உள்ளது சிறத்தல் என்னும் கொள்கை சைவ சமய நெறிக்கு உடன்பாடான கொள்கை என்பதை ஏற்று முருகன் என்ற தம் நூலில்1 அதற்கு விளக்கமும் அளித்துள்ளார். அது அடியில் வருமாறாகும் : வைணவ சமயம், திருமால் ஆதியில் மீனாகவும் (மச்சா வதாரம்) அப்பால் ஆமையாகவும் (கூர்மாவதாரம்) பின்னர் பன்றி யாகவும் (வராக அவதாரம்) பிறகு சிங்கமாகவும் (நரசிம்ம அவதாரம்) பிறகு குள்ள மனிதனாகவும் (வாமன அவதாரம்) இறுதியாக மனிதனாகவும் (பரசுராம அவதாரம்) தோன்றினார் என்று கூறியது. சைவ சமயம், மனித இனம் நீரில் வாழும் உயிர்ப் பிராணியாய்த் தோன்றி நிலத்தில் வாழும் விலங்காகப் பரிணமித்து இறுதியில் மனிதனாக வளர்ச்சி பெற்றுள்ளது என்று குறிப்பிடுகின்றது. எனவே வைணவமும் சைவமும் உள்ளது சிறத்தல் என்ற பரிணாமவாத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டன என்பது நன்கு புலப்படுகின்றது. உயிரினம் நீரில் தோன்றி, அப்பால் நீரிலும் நிலத்திலும் வாழப் பயின்று, பின்னர் நிலத்தில் வாழத் தொடங்கியது. அப்பால் குன்றில் வாழத் தொடங்கியது. புழுவாய்த் தோன்றிய உயிரினம் வளர்ச்சி பெற்று, ஊர்வனவாய், நடப்பனவாய், பறப்பனவாய், படிப்படியாய் குரங்கினமாய் மாறி இறுதியில் மனித இனமாக மாற்றம் பெற்று உயர்ந்தெழுந்துள்ளது! மக்கள் மலைகளில் வாழத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் ஆடையின்றி வாடையில் வதங்கினர். உறையுள் இன்றி, காட்டிலும் மேட்டிலும் உறைந்து வந்தனர். போதிய உணவின்றி அரைப் பட்டினியாய் அவல நிலையில் அவதியுற்றனர். வெய்யிலும், மழையும், காற்றும், பனியும் குளிரும் அவர்களை வாட்டி வதைத்தன. யானையும், பூனையும், எலியும், புலியும், நாயும், நரியும், காட்டு மாடும், கரடியும் மக்களைக் கொன்று குவித்தன. மக்களால், விலங்கு களோடு போரிட முடியவில்லை. அவர்களின் உடலும், உறுப்பு களும் விலங்குகளோடு போராடுவதற்கு ஏற்றதாக இல்லை. எனவே மனித இனம், சிந்தனை செய்ய முற்பட்டது. அறிவைப் பயன்படுத்தத் தொடங்கியது. ‘kÅj ïd« thœtjh - khŸtjh? என்ற சூழ்நிலை அவர்கள் அறிவை வளப்படுத்தியது - வாழ்விற்கு வழிகோலியது; கார் இருளில் காடார்ந்த கல்லும், முள்ளும், புதரும் நிறைந்த மலைப் பகுதிகளில் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வி கண்ட மக்கள் இறுதியில் ஒளியைக் கண்டனர். கல்லையும், வில்லையும் மக்கள் தம் வாழ்க்கைப் போராட்டத்தில் பயன்படுத்தி இறுதியில் விலங்கு உலகை வெற்றி கொண்டனர். நெருப்பை உண்டாக்கப் பயின்று விலங்கினத்தை விரட்டவும், பாம்பு, தேள், போன்ற கொடிய நச்சினங் களைச் சுட்டுப் பொசுக்கவும், உணவுப் பொருள்களை தீயினால் சுட்டு - வேக வைத்து உண்ணவும் தொடங்கினர். ஆனால் மலைகளில் எழுந்த தட்ப வெப்பநிலை, உணவுப் பொருள் தட்டுப்பாடு பெறச் செய்தது. மேலும், மனிதன் கூர்மையான கற் கருவிகளைப் பெறப் பெரிதும் விரும்பினான். எனவே மலையினின்று கீழே இழிந்து வரும் ஆற்றின் கரைகளின் வழியாய்க் கீழே இறங்கி வர மக்களினம் முன் வந்தது. மக்கள் இனத்தின் ஒரு பகுதி மலையை விட்டுக் கீழே இறங்கி வர ஒருப்படவில்லை. ஆனால் பெரும் பகுதி மக்கள் கீழ் நோக்கி வந்து மலை அடிவாரத்தில் உள்ள காடுகளில் தங்கினர். இவர்களின் ஒரு சிலர், ஆற்றின் கரை வழியாக மீண்டும் சென்று கழனிகளும், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளும் நிறைந்த சமவெளிகளில் தங்க முற்பட்டனர். ஒரு சிலர் மீண்டும் நடந்து சென்று கடற்கரையை அடைந்து அங்கு வாழ முற்பட்டனர். மக்கள் ஆதிகாலத்தில் தங்கள் நல்வாழ்க்கைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலங்கள் முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனப்பட்டன. மலை வாழ்க்கையிலே மக்கள் தாய் ஆட்சியைக் கண்டனர். கொற்றவை என்னும் தாய்த் தெய்வமும், பசுபதி என்னும் தந்தைத் தெய்வமும் தோன்றிவிட்டன. மலைமகன், மலைமகள் என்ற பெயரில் தெய்வ வழிபாடு தொடங்கி விட்டது. அப்பால் மகன் தெய்வ வழிபாடும், அண்ணன் தெய்வ வழிபாடும் வந்துவிட்டன. பழம் பெரும் தமிழ் இலக்கண ஏடாக ஏற்றம் பெறும் தொல்காப்பியம் - மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே (தொல்.பொருள்: 252)) என்று கூறிய சூத்திரத்தால், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு திணை நிலங்களும், சேயோன், மாயோன், வேந்தன், வருணன் ஆகிய நான்கு நிலத் தெய்வங்களும் இங்கு குறிப்பிடப் பட்டுள்ளன. பிற்காலத்தில் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடைப் பட்ட பகுதிகள் இயற்கைக் கோளாறுகளினால் வரண்டு பாலை என்றொரு புதிய திணை நிலமும், பழையோள் என்ற நிலத் தெய்வமும் எழுந்தது. பழையோள் என்னும் தாய்த் தெய்வம் எல்லா நிலத்திற்கும் உரிய பெரிய தெய்வமாக எழுந்து பின் பாலை நிலத்தின் தனித் தெய்வமாக மாறியது. மருத நில வளர்ச்சியில் சிவை என்னும் பெயரால் சிவனோடு இணைந்த தெய்வமாக அம்மை அப்பன் என்ற பெயரால் ஒப்பற்ற தெய்வ வழிபாடு எழுந்தது. ஐவகை நிலப்பாகுபாடு தமிழர் பெற்ற சமூக வளர்ச்சிப் பெருக்கால் மக்கள் தங்கள் உணவுப் பிரச்னையைத் தீர்க்கப் பல்வேறு திணை நிலங்களில் குடியேறி, வயிறார உண்டு உவகையுற்று, ஆடிப்பாடி இன்புற்று வாழ முற்பட்டனர். இந்த நானிலப் - பிரிவுகளும், நான்கு நிலங்களுக்கென எழுந்த மரம், பூ, புள், விலங்கு, யாழ், முரசு, தெய்வம் முதலியனவும் நூற்களில் குறிக்கப் பெற்றுள்ளன. ஆரியர் இந்நாட்டிற்கு வந்து சுமார் 4000ஆம் ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள் இந்தியாவில் புகும் பொழுது ஆடுமாடு மேய்த்து மேச்சல் தரைக்காக அலைந்து திரியும் நாடோடி மக்களாய் இருந்தனர். அவர்களுக்கு ஒரு சமயமோ, பெருந்தெய்வமோ, திருந்திய மொழியோ, பொருந்திய எழுத்தோ, கை வந்த கலைகளோ, பாரிய பண்பாடோ, சீரிய மறை நூற்களோ இல்லை. ஆனால் அவர்கள் இந்தியா எனும் புனித பூமியை ஆக்கிரமிப்பதற்கு பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களும் அவர்கள் வழிவந்த திராவிட மக்களும் நானிலத்தை மேனிலமாக்கி விட்டனர். மொழி, எழுத்து, ஒவியம், இலக்கியம், சிற்பம், வீடு, மாளிகை, கோயில், அரசு, சமயம், தெய்வம் மறை நூற்கள், அறநெறி, பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எஃகுப் பண்பாடு எழுந்து விட்டது. ஏரும் சீரும் கலப்பையும் கொழுவும் எழுத்தாணியும் வாள்களும் கத்திகளும் மறை நூல்களும் அறநெறிகளும் நாவாய்களும் கடல்வணிகமும் எழுந்து விட்டன. பொன் அணிகளும், நவமணிகளும் பொற்சரிகைநூல் இழைத்த பட்டாடைகளும் பாலாடையென்ன மெல்லிய ஆடை களும் பச்சை, சிவப்பு வண்ணந்தோய்ந்த பன்னிற ஆடைகளும், பூந்துகில்களும் பட்டாடைகளும் எண்ணற்ற கூலப்பொருள்களும் பல்வேறு கைவினைப் பொருள்களும் அரும்பிவிட்டன. தமிழர்கள் ஆழ்கடலைக் கலங்களின் மூலம் கடந்து ஆயிரக்கணக்கான கல்தொலைவில் உள்ள நாடுகளிலும் தீவுகளிலும் குடியேறி நாகரிகம் பரப்பினர். சைவ நெறியை வளர்த்தனர். உலகனைத்தும் சிவமணங் கமழுமாறு செய்தனர். நானிலங்களிலும் குறிஞ்சி நிலத் தெய்வம் சேயோன், (முருகன்) முல்லை நிலத் தெய்வம் மாயோள், மாயோன், மருதநிலத் தெய்வம் வேந்தன், நெய்தல் நிலத் தெய்வம் வருணன் (வாரணன்) என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால் சிவன் என்னும் பெயரைக் குறிப்பிடவில்லையே என்று பலர் வினவுகின்றனர். தொல்காப்பிய னார், நிலத் தெய்வங்களை மட்டும் இங்குக் குறிப்பிட்டுள்ளாரே யொழிய வேறு தெய்வங்களையோ, அல்லது பெருந்தெய்வங் களையோ குறிப்பிடவில்லை. மேலும் மருத நில வேளாளர் தம் நிலத் தெய்வமாக வேந்தனையே வைத்துப் போற்றி யுள்ளனர். தொல் காப்பியர் காலத்தில் அரசனோடொப்ப, பிறநிலத் தெய்வமாகச் சேயோனும் மாயோனும், வருணனும் வைத்து எண்ணப்பட்டிருக் கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் தொல் காப்பியத்தில் வேறு சில தெய்வங்களும் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் இங்கு மறந்து விட முடியாது. கொடிநிலை கந்தழி வள்ளி என்று வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (தொல்பொருள். புற. 27) என்ற தொல்காப்பியச் சூத்திர உரையால் ஞாயிறு, நெருப்பு, திங்கள் என்ற மூன்றை வாழ்த்துவதும் கடவுள் போலவே எண்ணப்பட்டு வரும் என்று குறிப்பிடப்பட்டு வருவதும் சிந்திக்கத் தக்கது. கொடி நிலை - உச்சியில் நிற்பது : ஞாயிறு (சூரியன்). கந்தழி - பற்றுக் கோட்டை அழிப்பது: நெருப்பு. வள்ளி - குளிர்ச்சியைத் தருவது : திங்கள் (சந்திரன்) எனப் பொருள்படும். இவற்றால் தமிழர்களிடம் நிலத் தெய்வங்களாகிய சேயோன், மாயோன், வேந்தன் (அரசன்), வருணன் (வாரணன்) ஆகிய தெய்வங்கள் தவிர ஞாயிறு, திங்கள், நெருப்பு முதலியவைகளும் கடவுளாகக் கருதப்பட்டு வந்தன என்பது நன்கு தெரியவரும். கடவுள் என்பது எல்லாவற்றையும் கடந்து நிற்பது; குணம் குறியற்று, மனம், மொழி, மெய்களுக்கு எட்டாதது என்று பொருள் கூறப்படுகின்றது. கடவுள் கடந்து நிற்பது. பொருளும் சரியாகத்தான் காணப்படுகிறது. மறங்கடை கூட்டிய துடிநிலை, சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறவே (தொல்.பொ. புற. 4) வெறி அறிசிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் (தொ.பொ.புற. 5) என்ற தொல்காப்பிய சூத்திரங்கள் மூலம் கொற்றவை, வேலன் முதலிய தெய்வங்களும் நானிலத்தில் இருந்து வந்தன என்று தெரிகிறது. சிந்து வெளி முத்திரைகளில் காணப்பெற்ற ஓவிய எழுத்து களுக்கு மறைகுறி எழுத்துப் பொருள் விளக்கம் (Deceipher) தந்த பின்லந்துப் பேராசிரியர் டாக்டர் அகோ பார்போலா சிந்து வெளித் திராவிட மக்கள் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கோள்களை வணங்கி வந்தனர். அப்பால் அவர்கள் ஞாயிற்றைச் சிவனாகவும், திங்களைச் சிவை ஆகவும் தாய்த் தெய்வமாகவும், செவ்வாயை முருகனாகவும், புதனை நான்முகனாகவும், வியாழனைத் திருமாலாகவும், சனியைக் கிருஷ்ண னாகவும் வழிபட்டிருக்கலாம் என்றும் இத்தெய்வங்களுக்கு சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், கருப்பு முதலிய நிறங்கள் கற்பிக்கப் பட்டிருந்தன என்றும் பொருள் விளக்கம் தந்துள்ளனர்.1 இந்த ஆய்வு விளக்கத்தால் தமிழர்களின் மூதாதையர்களிடம் ஆதியில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கோள்வழிபாடு தந்தை, தாய் வழிபாடாகவும் இருந்து அப்பால் சிவன் சக்தி வழிபாடாகவும் மலர்ந்திருக்கலாம் என்று கருத இடம் அளிக்கின்றது. செவ்வாய் முருகன் வழிபாடாகவும், வியாழன் திருமால் வழிபாடாகவும், வெள்ளி வருணன் (வாரணன்) என்னும் கடல் தெய்வ வழிபாடாகவும் பரிணமித்துள்ளது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இக்கருத்துக்களை அரண் செய்தாற்போன்று சைவ சமயமலர்ச்சிக்கும், தமிழ் மொழியின் சிறப்பிற்கும் தமிழ் இனத்தின் தனித்தன்மைக்கும் ஆக்கம் அளித்த சைவ சித்தாந்த வித்தகரும் பன்மொழிப்புலவருமான திரு. கா. R¥ãukÂa ãŸis v«.V., எம்.எல். தம் நூலில் விளக்கம் தந்துள்ளார். அது அடியில் வருமாறாகும். தமிழில் எழுந்த ஐந்து வகை நிலத்திற்கும் உரிய தெய்வங்கள் வெவ்வேறாகக் கூறப்பட்டன. அவ்வவ் நிலத்தில் உள்ளவர்கள் வாழ்க்கைப் பயன்களை விரும்பி அத்தெய்வங்களை வழிபட்டனர். முதலில் மக்கள் இறந்த தாய் தந்தையரைத் தொழத் தொடங்கி அவர்களை அடக்கம் செய்த இடத்தில் கல்லை நாட்டி அக்கல்லின் கண், முன்னோர்கள் உயிரோடிருந்து தங்கள் வணக்கத்தை மகிழ்வுடன் ஏற்று, தங்களுக்கு நலன் தருவதாக நம்பி வழிபட்டனர். நாளடைவிற் கிடைத்த பலனுக்கு ஏற்றவாறு வழிபாடு வளர்ச்சி அடைந்து வந்தது. தமிழ்நாட்டில் பொதுவாக முக்கண் தெய்வ வழிபாடு நிலவி இருந்தது. ... தமிழர் பண்டைய முன்னோர் வடிவைத் தெய்வ வடிவமாகக் கருதினர். முக்கண்ணுடைய தெய்வம், சிவம் என்ற சொல்லால் வழிபடப்பட்டது. சிவம் என்ற சொல் தமிழ்ச்சொல் என்று டாக்டர் கிரையர்சன் கூறியுள்ளார்.1 சிவ என்ற சொல், செம்மை என்பதன் அடியாகப் பிறந்தது. அது சிவப்பு என்றும் நன்மை, மங்கலம் என்றும் பொருள்படும். தமிழ் மக்கள் வேட்டுவ வாழ்க்கை நிலையிலிருந்த போது சிவனை வழிபட்டமையால் தமக்குள் அரிய செயலாய் மதிக்கப்பட்ட புலிக்கொலையையும் பாம்பு வசியத்தையும் அப்பெருமானுக்கு ஏற்றி வணங்கினர் போலும். புலித்தோலாடையும் பாம்பு வணக்கமும் சிவபெருமானுக்கு உரியனவாயின. கூரிய முனையினையுடைய மழு அக்காலத்துச் சிறந்த படைக்கலமாகும். வீரத் தந்தைபால் அச்சமும், அன்புடைய தாயின் பால் நேசமும் சிவனாரது திருவடிவில் கலந்துள்ளன. சிவ வடிவம் பாதி ஆணும் பாதிப்பெண்ணும் கூடிய வடிவமாகும். தாய் ஆட்சியும் தந்தை ஆட்சியும் முதன் முதலாக உலகம் அனைத்திலும் தாய் குடும்பத் தலைவியாய் இருந்து அவள் தன்னந்தனியாக மக்களைப் பெற்று வளர்த்து வரும் நிலையில் முதலில் தாய் ஆட்சியும் தாய்த் தெய்வமும் தோன்றின என்று சமுக இயல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இயற்கை நியதியும் அதற்கு ஏற்புடைத்தாய் அமைந்துள்ளது. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை எனும் பழமொழியும் அம்மை நீ அப்பன் நீ என்று தெய்வ வழிபாட்டில் தாயை முன் வைத்துப் போற்றுவதும் தமிழ் இலக்கியங்களில் பெண்ணை (தாயை) இல்லாள் என்று சிறப்பிப்பதும், தமிழில் இல்லாளுக்கு ஏற்ற எதிர்ப்பதம் இல்லா திருப்பதும் தமிழ்நாட்டில் முதலில் தாய் ஆட்சியும் அப்பால் தாய்த் தெய்வமும் தோன்றிய தற்கான சான்றுகள் எனலாம். பின்னரே தந்தை ஆட்சியும் தந்தைத் தெய்வ வழிபாடும் நிலவியுள்ளது என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் நிலவிய நானிலங்களிலும் நடுநிலமாகிய நன்செய் நிலத்தில் (மருதநிலத்தில்) கல் ஊழியிலே சமூகவளர்ச்சி உயர் நிலையுற்றது. இந்த நிலத்திலேதான், முதன் முதலாக ஆணும் பெண்ணும் இயைந்து இணைந்து இல்லறம் நடத்தும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை உறுதியுற்றது. திருமணம், திருந்திய சமூக வாழ்க்கையாக அரும்பியது. கணவன், மனைவி என்னும் கட்டுக் கோப்பு மலர்ந்தது. அம்மை அப்பன் என்ற பதமே உருப்பெற்றது. குடும்பத் தலைவர்களாய் தந்தை தாய் எழுந்து சமூகவளர்ச்சியில் அரசன் அரசியாய் ஊராளும் முறையும், நாடாளும் முறையும், அரச கட்டிலும் அரண்மனையும், மணி முடியும், செங்கோலும், மலர்த்தாரும் அரண்களும், படைகளும், கொடிகளும், அரசசின்னங்களும் எழுத்தும், எழுத்தாணியும் மொழியும், ஏடுகளும், இலக்கியங்களும், ஓவியங்களும், ஆடல்களும், பாடல்களும், கவிதைகளும், கலை களும் பண்பாடும், சமயமும், தெய்வமும் பிறந்தன. கல்லூழியிலே, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் அரசு எழுந்து விட்டது. தமிழ்ச் சங்கம் தோன்றிவிட்டது. சமயம் நன்கு தலை தூக்கியுள்ளது. அம்மை அப்பன் ஆட்சியில் அமைந்துள்ள அரசு, அரச சின்னங்களான கொடிப்படை, கொடி, குடை, குதிரை, யானை, தார், முரசு முதலியன உடையனவாய் ஐவகைத் தொழிலும் செய்து, ஆறிலொரு கடமையும் பெற்று உயர்ந்து நின்றது என்பதற்குத் தொல்காப்பியம் சான்று தருகின்றது. உருவ வழிபாடு இலிங்க வடிவில் தெய்வத்தை வழிபடும் சிறந்த முறை, பழைய கல் ஊழியிலே, கால் கோலப் பெற்றுள்ளது. அப்பால் அந்த ஆழ்ந்த அரிய பொருள் அடங்கிய வழிபாட்டு முறை, புதிய கல் ஊழியில் நிறைவு பெற்று அரும்பியது. புதிய கல் ஊழியின் தொடக்க காலத் திலே துளிர்த்தெழுந்த இரும்பு ஊழியில் இலிங்க வழிபாடு, ஆழ்ந்த பொருள் அடங்கிய (அர்த்த புஷ்டியுள்ள) தத்துவஞானச் செழுமை யுடன் மறுமலர்ச்சி பெற்று மலர்ந்தது. இலிங்கத்தின் அருகில் கால்களை மடக்கிப் படுத்திருக்கும் காளையின் வடிவம் இடம் பெற்றுள்ளது. பழங்கல் ஊழியில் எழுந்த தாய் ஆட்சி தமிழகத்தில் தனிச்சிறப்புடன் விளங்கியது. தாய் இறந்ததும் அவள் உடலைப் புனித நீராட்டி, மணந்தரும் மலர்களைத் தூவி, மண்ணைத் தோண்டிப் புதைத்து, மேலே தாயின் நினைவுச் சின்னமாக ஒரு கல்லை நாட்டினர். அப்பால் அக்கல்லின் மீது நீர்வார்த்து மலர் சூடி வழிபடும் முறையும் தோற்றமுற்றது. அப்பால் அரும்பிய தந்தை ஆட்சியில் தந்தை இறந்தபின் அவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் அவரது நினைவுச் சின்னமாக ஒரு நீண்ட கல் நடப்பட்டு வழிபடப்பட்டு வந்தது. இரும்பு ஊழி எழுந்ததும் தாய் ஆட்சியும் தந்தை ஆட்சியும் இணைந்தது. திருமண வாழ்க்கை முறை, திட்டமிட்டு எழுந்தது. அம்மையப்பன் வழிபாடு அரும்பியது. தாய் தந்தையர் இறந்ததும் அவர்களின் உடல் அடுத்தடுத்துப் புதைக்கப் பட்டது. தாய் தந்தையர் பெற்றோர்களாக மதிப்பட்டனர். கணவனும், மனைவியும் ஒராவிற்கு இரு கோடு பூத்தாற் போன்று இருவரும் இணை பிரியாது வாழ வேண்டியவர்கள் என்ற உயரிய கருத்து உருப்பெற்றெழுந்தது. இறைவனும் இறைவியும் இணை பிரியாது இணைந்து இலங்குபவர்கள் என்ற தத்துவம் தோன்றியது. எனவே தந்தை சிவன் என்றும், தாய் அவனது ஆற்றல் (சக்தி) என்றும் கருதப்பட்டது. தமிழர் தெய்வம், பாதி ஆணும் பாதி பெண்ணுமாய் பிரிக்க முடியாது இணைந்து பிணைந்து இலங்கும் தத்துவ சோதி யாய்க் காணப்பெற்றது. கதிரவனில் காணும் ஏழுவண்ணங்களில் பாதி செந்நிறமாகவும் பாதி நீலவடிவிலும் காணப்படுவதை ஆய்ந்து, சிவம் செந்நிற வடிவிலும் சக்தி கருநிற வடிவிலும் இருப்பதாய் உணரப்பட்டது. எனவே, சிற்பக்கலை வளர்ச்சி பெறாத பழங் காலத்தில், தாயின் சின்ன வடிவாக - குழிவான ஒரு கல்லை அடியில் வைத்து அதன் மீது குழவிக்கல் போன்ற ஒரு நீண்ட கல்லை வைத்து வழிபடப்பட்டது. இரும்பு ஊழியில் தமிழகத்தில் கல்லைச் செதுக்கும் இரும்பு ஆயுதங்கள் எழுந்ததும், அடியில் ஒரு பீடமும் அதன் மீது அம்மையின் சின்னமாக ஒரு வட்டமான வடிவ அமைப்பும் அதன்மீது வட்டமான ஒரு சிறு தூண் வடிவில் ஒரு அமைப்பும் ஒரே கல்லில் அமைத்து, சிவலிங்கம் உருவாக்கப் பட்டது. இவ்வடிவை என்றும் தமிழர், ஆண் - பெண் குறியாக எண்ணியது இல்லை. ஆண், பெண் குறிகளை வழிபட்டதும் இல்லை. ஆதியில் தாயின் சின்னமாகவும், தந்தையின் சின்னமாகவும் உருவ வழிபாட்டை அமைத்து அப்பால் அச்சின்னம் சிவன் சக்தி வடிவில் வழிபடப்பட்டது. அறிவர்கள் கடவுளின் அருளாகவும், ஆற்றலாகவும் சிவலிங்கத்தைக் கண்டனர் என்பது வரலாற்றுக் காலத்திற்கு முந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை ஆய்ந்து அறிந்து ஏடுகள் எழுதிய அறிஞர்கள் கண்ட உண்மையாகும். வரலாற்றறிவோ தத்துவ ஞானமோ, இறையியலோ அறியாத பழங்கால ஆரியர்கள் தமிழ்மக்களின் இலிங்க வழிபாட்டைப் பார்த்து இது சிசின தேவர் வழிபாடு (ஆண் குறி பெண் குறி வழிபாடு) என்று ஏளனம் செய்தனர். அப்பால் அவர்களே, இலிங்க வழிபாடு ஏற்றம் மிக்கதும்; தத்துவ ஞானம் பொதிந்த உயரிய தெய்வ வழிபாடு என்று கண்டனர். பின்னர் இவ்வழிபாட்டை ஏற்று இன்று வரை இலிங்க வழிபாடு செய்து வருகின்றனர். இவ்வழிபாட்டை ஆதியில் தமிழ்த் திருநாட்டில் வாழ்ந்த மருத நில வேளாளர் கண்டமையால் அவர்கள் வாழ்க்கையின் ஏற்றத்திற்கும், உயிரோம்பும் உழவுத் தொழிலின் வெற்றிக்கும் உறுதுணையாய்க் கொண்ட காளையைச் சிவனுக்கு வாகனமாய் அளித்தனர். சிவலிங்கம் அருகில் கால்களை மடக்கிப் படுத்திருக்கும் காளையின் (நந்தியின்) உருவை இடம் பெறச் செய்துள்ளனர். காளை உருவம் உழைப்பின் சின்னம். உழைப்பவர்க்கே இவ்வுலக வாழ்வு மட்டுமின்றி மறுஉலக வாழ்வும் கிட்டும் என்பதை அது அறிவுறுத்துகிறது. சிவபெருமான் உறையும் கயிலையம்பதியில் காளை முகமும் மனித உடலும் வாய்ந்த நந்தீசன் வாயில் காவல் செய்யும் தெய்வமாக இருக்கிறார். அவர் வாயிலாகச் சிவபெருமான் ஆடற்கலை, பாடற்கலை, ஓவியக்கலை, காவியக் கலை, எண் கலை, எழுத்துக்கலை, மொழிக்கலை, ஒளிக் கலை, விண்கலை, மண்கலை முதலியவைகளை மக்களுக்கு வெளிப் படுத்தியுள்ளார் என்று தமிழ்ப் புராணங்கள் (Myths) மூலம் நாம் அறிகின்றோம். புராணத்துறையில் (Mythology) பல மரபுரைக் கொள்கைகளும், கற்பனைப் பழங்கதைகளும் நிறைந்துள்ளன என்பதை நாமும் பல அகழாய்வுத் துறை வல்லுநர்களும் அறிவோம். என்றாலும் அவற்றில் பல அரிய உண்மைகளை விளக்கப் பல புனைந்துரைகள் புகுத்தப்பட்டுள்ளன என்பதை மறந்து விடக் கூடாது. மேனாட்டறிஞர்கள் ஆய்வுகளில் புராணக்கதைகளுக்கு ஏற்ற இடம் அளித்திருப்பதை நாம் புறக்கணித்துவிடக்கூடாது. புராணக் கதைகளை அடிப்படையாக வைத்தே அனைத்துலகக் கலை மேதையாக விளங்கிய தமிழ்ப் பெருமகன் ஆனந்த கெண்டிஷ் குமாரசாமி, இறைவனுடைய தாண்டவங்களை ஆய்ந்து சிவ நடனம் (Dance of Shiva)” என்ற நூலை எழுதி உலகிற்களித்துப் பெருமையுற்றார். அந்நூல் பிரஞ்சுப் பேரறிஞர் உரோமெய்ன் உரோலண்டு அவர்களின் உள்ளத்தைக் கவர்ந்தது. ஆண்டவனின் தாண்டவ தத்துவம் அவரை ஆட்கொண்டது. உலகப்புகழ் பெற்ற உயர்ந்த விஞ்ஞான மேதை அல்பர்ட் ஈய்ன்டினின் இதயத்தை ஈர்த்தது. பண்டைக் கால மக்களின் சிவலிங்க வழிபாடு பழங்கற்காலத்தில் கல்லைச் செதுக்கும் கவின் கலை உருப்பெறவில்லை. மக்கள் மண்ணைக் குவித்துக் குவிகை வடிவில் (Cone) வழிபட்டதுண்டு. ஒரு பார்ப்பனச் சிறுவன் (சண்டேசுவரர்) மண்ணைக் குவித்துக் கூம்பு உருவில் சிவபெருமானை வழிபட்டு உயர்நிலையுற்ற கதையைச் சைவ நன்மக்கள் அறிவர். சிவலிங்க வடிவின் உற்பத்தியையும் அதன் தத்துவநுட்பத்தையும் அறியாத பழங்கால ஆரியர்கள் பெண்களின், பாலூட்டும் கொங்கையைக் கூட சிவலிங்கம் என்று வழிபட்டு வந்தனர். இப்பெருந்தவற்றை வடமொழிப்புலவன் காளிதாசன் கூடச் செய்துள்ளான் என்று நாம் அறிந்துள்ளோம். இந்திய நாட்டு உரிமைக் கவிஞர் பாரதியார், கொங்கைகளே சிவலிங்கமென்று கூறிக் கோக்கவிஞன் காளி தாசனும் பூஜித்தான் என்று எடுத்துக் காட்டியுள்ளார்1. இதற்குச் சைவ சமயத்தில் ஆதரவு எதுவும் காணப்படவில்லை. சங்க கால வழிபாடு சங்க காலத் தொடக்கத்தில் சுடுமண்ணால் செய்த சிவலிங்க உருவ வழிபாடு, தாய்தந்தைத் தெய்வ உருவ வழிபாடாகத் துளிர்த்து விட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். சங்க நூற்கள் ஆதியில் தறி வணக்கமும், கந்து வணக்கமும் நடைபெற்றன என்று கூறுகின்றன. முற்காலத்தில் ஊர்தோறும் பொது இல் அமைத்து அதில் தெய்வம் உறையும் தறியாகிய தூண் நாட்டப்பட்டு ஆலமுற்றத்தில் வழிபடப்பட்டது. இந்தப் பொது இல் அம்பலம் என்று கூறப்பெற்றது. ஆலமுற்றம் என்று அழைக்கப்படுவதும் உண்டு. மருத நிலத்துச் சைவ மகளிர் நாடோறும் அதிகாலையில் துயில்விட்டெழுந்து புனித நீரில் மூழ்கி உடற்றூய்மை செய்து, உள்ளத் தூய்மை யுடையோராய் ஆலமுற்றத்தை அணுகுவர். அம்பலத்தை மெழுகுவர், கோலந்தீட்டுவர்; மலர் பறித்து வந்து திருஉருவிற்கு தமிழில் அர்ச்சனைபுரிவர். அம்பலத்தில் ஆடிப்பாடி அம்மை அப்பரை வழிபடுவர். இறைவனை மங்கைபங்கன், பாகம் பிரியாள், மாதொருபாகன், சிவசக்தி என்றெல்லாம் புகழ்ந்து வழிபடுவர். அந்தியில் அம்பலத்தில் நந்தா விளக்கேற்றி நறும்புகை யூட்டி, நன்மலர் தூவி இறைவழிபாடு இயற்றுவர். ஆண்களிலும், பெண்கள் இறைவழிபாட்டில் அதிக அக்கரை கொண்டிருந்தனர். பழந்தமிழ் ஏடான பட்டினப்பாலை இதனைப் படம்பிடித்து எடுத்துக் காட்டுவது போல் இன்றும் எடுத்துக்காட்டி நிற்கின்றது. கொண்டிமகளிர் உண்டுறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ வம்பலர் சேக்குங் கந்துடைப் பொழில் (பட்டினப்பாலை) என்று கூறும் பட்டினப்பாலையின் பழம்பாடல் பண்டைய சைவ மகளிரின் வாழ்க்கை வரலாற்றிற்கு நேரான எடுத்துக்காட்டாக மிளிர்கின்றது. ஆலமுற்றமும் கந்து வழிபாடும் தறிவழிபாடும், தமிழர்கள் திருக்கோயில் வழிபாட்டிற்கும், திருஉருவ வழிபாட்டிற்கும் சிவலிங்க வழிபாட்டிற்கும் அடிப்படையாய் அமைந்துள்ளன. வரலாற்றில் சிவலிங்கம் சிவன் தமிழ்மக்களின் பழம்பெரும் தெய்வம். சிவலிங்கம் தமிழர்கள் அம்மையப்பர் வழிபாட்டிற்காக ஆதிகாலத்தில் கண்ட புனிதச் சின்னம். தத்துவப் பொருள் நிறைந்த இறை உருவம். ஆனால் சிவன் என்ற சொல்லை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எவரும் உச்சரித்ததாகத் தெரியவில்லையை; சங்க மருவிய தங்க ஏடுகளில் எதிலும் சிவன் பெயர் காணப்படவில்லையே; தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சிவன் உருவமோ சிவலிங்க உருவமோ காணப்படவில்லையே, என்று சிலர் கேட்கின்றனர். இது நல்ல கேள்விதான். விடை இறுக்கப்பட வேண்டிய கேள்வி என்பதிலும் எவருக்கும் கருத்து வேற்றுமை எழமுடியாது. தமிழ்நாடு பழம்பெரும் நாடு; அதில் வாழும் தமிழர்கள் தொன்மையான குடிமக்கள் என்பதிலும் பலர்க்கு உடன்பாடு உண்டு. ஆனால் இதற்கு இதுவரை நம்மால் வரலாற்றுச் சான்றுகள் காட்ட முடியாதிருந்து வந்தது. ஆனால் சிந்துவெளி அகழ் ஆய்வு இந்திய வரலாறு கி.மு. 4000ஆம் ஆண்டிற்கு முன்னிருந்து தொடங்குகிறது என்ற உண்மையை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் அங்கு நடைபெற்ற அகழ் ஆய்வில் கிடைத்த எண்ணற்ற சிவலிங்கங்களும், சிவன் உருவமும், சக்தி வடிவமும் சிந்துவெளிப் பண்பாடு தமிழர் களின் முன்னோர் கண்ட பண்பாடு; சைவ நெறிவளர்த்த பண்பாடு என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. அங்குச் சிவநெறியை உருவாக்கிய சைவ வேளாண்குடிமக்கள் ஆட்சி நிலவி இருந்தது. கி.மு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அரும்பிய ஆரிய ஆக்கிரமிப்பால் சிந்து வெளியில் சைவர் ஆட்சி அழிக்கப்பட்டது. அது வரலாற்றில் இடம் பெறாது மறைக்கப்பட்டது. சிந்துவெளி அகழ் ஆய்விற்குத் தலைமை தாங்கி நடத்திய இந்திய மைய அரசின் அகழ் ஆய்வுத்துறை இயக்குநர் தளபதி (Director General of Archaeology) சர்.சாண் மார்சல் எழுதிய மொகஞ்சதாரோவும் சிந்துவெளி நாகரிகமும் என்ற நூலில், சிந்து வெளி நாகரிகம் திராவிடர்களின் முன்னோர்களால் கி.மு. 2000ஆம் ஆண்டுகளுக்கு முன் கட்டி எழுப்பப் பெற்ற உலகிலே ஒப்பற்ற நாகரிகமாய் மிளிர்கிறது; அது திராவிட நாகரிகம் என்பதற்கு இன்று தமிழர்கள் தங்கள் திருக்கோயில்களின் திருஉண்ணாழிகை யில் வைத்து வழிபட்டு வரும் சிவலிங்கங்களும் சிவன் உருவமும் தாய்த் தெய்வ உருவமும் ஏராளமாகச் சிந்து வெளியில் கிடைத் திருப்பதே எவரும் மறுக்க முடியாத சான்று களாய் உள்ளன என்று எடுத்துக் காட்டினார்.1 மொகஞ்சதாரோ அகழ் ஆய்வினை முன்னின்று நடத்திய வங்கம் தந்த தங்கப் பேராசிரியர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதித்த நல்லூர் அகழ் ஆய்வில் கண்ட தமிழர்களின் இரும்பு நாகரிகம் அரப்பா நாகரிகத்திற்கு அடிப்படையாய் இருந்தது. சுமேரிய நாகரிகம் எகிப்திய நாகரிகம் போன்றவைகளுக்கு மூலகாரணமாய் இருந்தது என்று உறுதியாய் எடுத்துக் காட்டினார்.2 இவை இன்று உலகப் பேரறிஞர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.3 சிந்துவெளி அகழ் ஆய்வு தமிழ் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை யூட்டியது. ஆதித்த நல்லூர் அகழ்ஆய்வை ஆராய்ந்து, அது இற்றைக்குப் பத்தாயிரம் ஆண்டு பழமை உடையது என்று அறிஞர்கள் கூறும் உண்மையை அறியச் செய்தது.1 வடமொழியில் வான்மீகி எழுதிய இராமாயணத்தைப் பயின்று - இராவணன் சிவபக்தன் என்றும் அவன் அன்புநெறி நின்று சிவலிங்க வழிபாடு செய்யும் தூநெறியாளன் என்றும் அவன் செல்லும் இடங்களுக் கெல்லாம் பொன்னால் செய்த சிவலிங்கத்தைப் பூசைப் பெட்டியில் வைத்துக் கொண்டு சென்றான் என்றும் சிவனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளாத இராமன், இராவணனைக் கொன்ற பாவத்திற்காக இராமேசுவரத்தில் சிவலிங்கத்தை நிலைநாட்டி வழிபட்டான் என்றும் இராமன் வழிபட்ட சிவலிங்கம் இராமலிங்கம் என்றும், அவன் வழிபட்ட இடம் இராமேசுவரம் என்றும் கூறப்படுவது2 சிவன் சங்ககாலத்திற்கு முற்பட்ட தெய்வம் என்பதற்கு நல்ல சான்றாக உள்ளது. சங்க காலத்தில் அடுத்தடுத்து எழுந்த கடற்கோள், தமிழ்நாட்டையும் தமிழ் மக்களிற் பலரையும் தமிழ் இலக்கியங்கள் பலவற்றையும் தின்று ஏப்பம் விட்டு விட்டதால் சிவன் பெயர் குறிப்பிடப்பட்ட பழைய தமிழ் நூல்கள் கிடைக்க ஏதுவில்லாமல் போய் விட்டது. சிந்து வெளியைப் போல் மண்மூடிப் போன தமிழர் நகரம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு அகழ் ஆய்வு செய்யப்படவில்லை என்பதையும் நாம் மறந்து விட முடியாது. இன்று கிடைத்துள்ள சங்க நூற்களில் சிவன் என்ற பெயர் காணப் பெறாவிட்டாலும் சிவனுடைய பல பெயர்கள் சங்க நூற்களில் காணப்படுகின்றன என்பதை ஆராய வேண்டும். பெரியோன் கோயில், கண்ணுதற்கடவுள், முக்கண்ணன், மகேந்திரமலைவாசன், காரியுண்டிக் கடவுள் என்ற பல பதங்கள் சங்க நூற்களில் இடம் பெற்றிருப்பது நமது சந்தேகங்களை அகற்றுவனவாய் உள்ளன. சிவலிங்க வழிபாடும் அதன் தத்துவமும் செம்பொருள் சிவலிங்கம் என்பது சிவம் என்ற செம்பொருளின் சின்னம் என்று பொருள் தரும். இதை விரிவாக விளக்கிக் கூறுவதானால் சிவசக்தி என்னும் அம்மை அப்பர் தன்மையைக் காட்டும் குறியாகும். இறையின் அன்பையும் அருளையும் இணைத்துக் காட்டும் தத்துவப் பொருள் நிறைந்த இந்த உருவத்தைத் தமிழர்கள் தங்கள் கோயிலின் திருஉண்ணாழிகையில் நடுவில் வைத்து தொன்று தொட்டு இன்று வரை வழிபட்டு வருகிறார்கள். சிந்து வெளியில் உந்திய ஒப்பற்ற உயரிய பண்பாடு, கி.மு. 4000ஆம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய வியத்தகு பண்பாடு; வரலாற்றில் இடம் பெறாத அரிய பெரும் நாகரிகம் என்று இன்று உலகம் உணர்ந்துள்ளது. இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளி நந்தாப் பெருமை வாய்ந்த நனி சிறந்த நாடாக விளங்கியது என்று 1920ஆம் ஆண்டிற்கு முன் உலகில் ஒருவரும் உணரார். சிந்து வெளியில், சிறப்பு மிக்க தலைநகர்களாய் விளங்கிய அரப்பாவும் மொகஞ்சதரோவும் விண்முட்டும் வீடுகளும் அழகிய பல மாளிகைகளும் கவினுறு நெற்களஞ்சியங்களும் நீர் நிறைந்த பெருந்தடாகங்களும் (Great Bath) - பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழன் கட்டியிருக்க முடியும் என்று எவனும் எண்ணிப் பார்த்ததே இல்லை. எந்த வரலாற்றாசிரியனும் கனவு கூடக் கண்டதில்லை. ஆனால் சிந்து வெளியில் கிடைத்த சிவன், காளி போன்ற தெய்வ உருவங்களும் ஆடவல்லான் போன்ற காலைத் தூக்கி நிற்கும் அம்பலவாணனின் அருள் உருவமும் திமில் பெருத்த காளை உருவமும் (நந்தி வடிவமும்) குறிப்பாக பல்வேறு பாங்கில் படைத்த சிவலிங்க உருவமும் சிந்து வெளி நாகரிகம் திராவிடர்களின் முன்னோடிகளான தமிழர் நாகரிகம் என்பதை உணர்வதற்கு - உறுதியாக உரைப்பதற்கு உயரிய சான்றாக இருந்தன. சர். சாண்மார்சல், தமிழர்கள் தொன்று தொட்டு இன்று வரை தம் திருக்கோயில் அனைத்திலும் திருஉண்ணாழிகையில் சிவலிங்கமாக வைத்து வழிபட்டு வருவது, சிந்துவெளியில் காணப்படும். திராவிட மக்களின் முன்னோர்கள் உருவாக்கி வழிபட்ட உருவமே என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை; எவர்க்கும் ஐயம்எழ, எந்த விதமான ஏதுக்களும் இல்லை. மேலும் இதை எவரும் எளிதில் பொய்ப்படுத்தி விடவோ மாற்றி விடவோ முடியாது, என்று கண்டார். ஆரியர்கள் நாலாயிரம் ஆண்டிற்கு முன் படையெடுத்து வந்து சிந்துவெளி திராவிட ஆட்சியை வீழ்த்தி நாடு, நகரம், வீடு, காடு, கோட்டை, கொத்தளம், கோயில், குளம், அனைத்தையும் அழித்து மக்களை விரட்டினர். அவர்களைக் கொன்று நாயும் நரியும், கழுகும் காகமும் தின்று களிக்கச் செய்து நாட்டைச் சுடுகாடாக்கி விட்டனர். இல்லை இடுகாடாக்கி விட்டனர். திராவிடர்கள் வழிபட்ட தெய்வத் திருஉருவங்கள் இருபது அடி ஆழத்திற்கும் - அதற்கு அப்பாலும் புதையுண்டு போகும்படி செய்து விட்டனர். இச்சம்பவம் வரலாற்றிலும் இடம் பெறாது இருக்கும்படி செய்து விட்டனர். என்னே, ஆரியர் கொடுமை! என்னே அவரது வஞ்சகம்! ஒரு தமிழ்ப்புலவன் தமிழின் பெருமையைக் கூற எழுந்த பொழுது அடியில் வருமாறு கூறியுள்ளான். ஏ! தெய்வமே சிவபெருமானே ! தமிழின் பெருமையை உலகில் யார் அறிவார்கள் என்று சிலர் வினவுகின்றார்கள். உன்னுடைய மூதூராகிய மதுரையின் கண், தமிழ் ஏட்டை நீரில் போட்டும், நெருப்பிலிட்டும் அவைகளால் அழிக்க முடியாத வலிமையுடையது தமிழ்மொழி என்று மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் நிலத்திற்குள் புதைத்து வைத்தாலும் அழிக்க முடியாத வலிமைவாய்ந்தது தமிழ் என்று மெய்ப்பிக்கப்படவில்லை. நீ நினைத்தால் தமிழை நிலமும் விழுங்க முடியாது என்று பாடியுள்ளான். அவ்வடிகள் பின்வருமாறாகும்: பாரறியும் அறிவினும் இப்பார்மேல் நின்ற பசுஞானத்தாலும் எட்டிப்பார்க்கொணாத பேரறிவே சிற்றறிவோர்க் கிருளை நீக்கும் பேரொளியே அங்கயற்கண் பிரியாதோனே ஆரறிவார் தமிழறிவார் தமிழருமை ? என்கின்றார் நின்மதுரை மூதூர் நீரறியும், நெருப்பறியும், நீயறிவித் தாலறியும் நிலமுந்தானே இப்புலவன் பாடிய பாட்டை இறைவன் செவியுற்றுச் சிந்து வெளியில் 4000ஆம் ஆண்டுகளுக்கு முன் ஆரிய ஆதிக்க வெறியர் களால் புதைக்கப்பட்ட தமிழர்கண்ட ஓவிய எழுத்துக்களும், மதுரையில் குடி கொண்ட மங்கை பங்கனாகிய அந்த இறைவனின் திருஉருவமாகிய சிவன் சிலை உருவங்களும் சிவலிங்கங்களும் மீண்டும் உயரே வந்து உலகம் கண்டு வியப்புறுமாறு செய்துள்ளான், என்று உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கில் ஆத்திகரும் நாத்திகரும் வெள்ளையர்களும், கருப்பர்களும், ஏன் மஞ்சள் நிற மங்கோலியர்களும், செந்நிறச் சிவப்பு இந்தியர்களும், பிற நிறமக்களும் இந்த அற்புதச் செயலைப் பாராட்டி, சீராட்டினர். ஏன்? ஆரியர்களும், சீரியர்களும், நாரியர்களும், கோரியர்களும், வியப்புறும் வண்ணம் தமிழ் மொழியின் ஏற்றமும் சிவலிங்கத் தோற்றமும் உலகம் எதிர்பாராது நிலத்தின் அடியினின்று வெளியே எடுக்கப்பட்டு மீண்டும் போற்றப்படும் நிலை தோன்றியுள்ளது நினைந்து நினைந்து இன்புறத்தக்கது. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட வழிபாடு இலிங்க வழிபாடு மிகத் தொன்மையான காலத்தில் தோன்றிய வழிபாடு. குறிவழிபாடு, தமிழ்நாட்டில் தோன்றிய அம்மை அப்பர் வழிபாட்டின் ஆரம்பநிலை. கல் ஊழியில் சிற்பக் கலை வளர்ச்சி யடையாத காலத்தில் தாயின் சின்னமாக ஒரு வட்ட வடிவமும் (O) தந்தையின் சின்னமாக ஒரு சிறுகோடும் (|) தீட்டி வந்தனர். அப்பால் இக்குறியீடுகள் வளர்ச்சி பெற்று வட்டத்தின் நடுவில் கோடு தீட்டப்பட்டு ( ) அந்தச் சின்னம் பின்னர் ( ) வளர்ச்சி பெற்று அச்சின்னத்தின் அடியில் ஒரு முக்கோணம் பீடம் போல் இணைக்கப் பெற்று இன்றைய சிவலிங்க வடிவாக மாறியிருக்கலாம்( ). இக்குறியை அரபியர் அலிப் என்ற தம் எழுத்தின் முதல் வரிவடிவாக 1 என்றும் கிறித்தவர்கள் ஒரு கோட்டின் மீது மற்றொரு கோட்டை பொருத்தி சிலுவை என்னும் ஒரு குறியையும் சுமேரியர் இந்தச் சிலுவைக் குறிக்குச் சில கால்கள் இணைத்துச் சுவத்திகம் ± போலும் தெய்வ சின்னங்கள் அமைத்துப் போற்றி வருகின்றனர். இவைகள் தமிழர் கண்ட சிவலிங்க வடிவினின்று ( ) அதிக வேற்றுமை யுடையதாகக் காணப்பட முடியாது.1 சிவலிங்க வழிபாடு சீனா, சப்பான், அயர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அசிரியா, சீரியா, யூதாயா, சின்ன ஆசியா (Asia Minor) பபிலோனிய முதலிய நாடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்களிடையேயும் பரவி இருந்தது என்று கிறித்தவ மறைநூலான பழைய ஏற்பாடு சான்று பகர்கின்றது.2 இன்று பபிலோன் நாட்டில் பல சிவலிங்கங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஹோர சராபி இர போன்ற பெயர்களால் எகிப்தில் இலிங்க வழிபாடு, நிலவி யிருந்தது. இலிங்க வழிபாட்டுடன் புலிகளும், பாம்புகளும், வழிபடப்பட்டன. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங்கம் அழகிய வடிவில் தீட்டப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இலிங்க வழிபாடு பரவி இருந்தது. கிறித்தவக் குருமார்கள் அதை அரும்பாடுபட்டு மறைத்து வந்துள்ளனர். இங்கிலாந்திலும், காட்லாண்டிலும் சிவலிங்க உருவங்கள் பல அகழ் ஆய்வில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. உரோமர் நாட்டில் பரவி இருந்த இலிங்க வழிபாடு ஐரோப்பாவின் பல இடங்களிலும் பரவி இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.1 செர்மனி, பிரான்சு, மெக்சிக்கோ பெரு, கைட்டி தீவு (Hijti) முதலிய இடங்களிலும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் இலிங்க வழிபாடு நிலவியது. முதன் முதலாக அமெரிக்காவில் பெய்ன் நாட்டார் கால் வைத்ததும் அங்கு எங்கும் கோயில்களில் சிவலிங்க வழிபாடு பரவி இருப்பதைக் கண்டனர். ஆப்பிரிக்காவில் தகோமி (Dahomi) என்னும் இடத்தில் இலிங்கம் லெங்பா (Lengba) என்னும் பெயரில் வழிபடப்பட்டு வந்தது. இலிங்க வழிபாடு அசீரியாவில் அரும்பி அதன் அண்மையிலுள்ள அயல்நாடுகளில் பரவி இருக்கலாம் என்று பல மேனாட்டறிஞர்கள் கருதுகின் றார்கள். கிரேக்க நாட்டில் பக்க (Bacchus) டயோனிச (Dionysus) என்னும் பெயரால் சிவலிங்கம் வழிபடப்பட்டுள்ளது. கிரீசு நாட்டில் பக்க விழாவில் சிவலிங்கம் சப்பரத்தில் வைத்து நகர் வலம் வந்தது உண்டு. சின்ன ஆசியாவில் இலிங்கம் கெமோ (Khemos) மோலோச் (Moloch) மர்தூக் (Merodock) ஆதோனியி (Adonais) சபாசிய (Sabazius) பக்க பாகேஒ (bagaios) என்னும் பெயர்கள் வழிபடப் பட்டு வந்ததற்கு இலக்கிய சான்றுகளும் அகழ் ஆய்வுச் சான்றுகளும் காட்ட முடியும். ஆப்பிரிக்காவில் உள்ள றொடேசியாவிலும் சிரியாவிலும் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கங்களில் பூமாலைகள் பொறிக்கப்பட்டுள்ளன. பொனிசியர் தயர் நகரில் பகலவன் கோயிலில் மரகதத்தினாலும் பொன்னாலும் செய்த இலிங்கங்களை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். கடவுள் ஆண், பெண் இயைந்த வடிவினன் என்பதன் பெயரிலே பைபிளில் கூறும் எலோகிம் என்னும் தெய்வம் வழிபடப்பட்டது. பைபிள் என்னும் கிறித்தவ மறைநூலின் பழைய ஏற்பாட்டில் தூண் வழிபாடு நடைபெற்றது என்பது நன்கு தெரிகிறது. தூணிற்கு எண்ணெய் அபிசேகம் செய்யப் பட்டு வழிபடப்பட்டது நன்கு எடுத்துக் காட்டப்பட்டது.2 பண்டைக் காலந்தொட்டுப் பார் முழுவதும் பரவிய இலிங்க வழிபாடு, சில முதிராப் பண்புடைய பழங்குடிமக்கள் உயிர்களின் தோற்றத்திற்கு மூலகாரணமாக இருக்கும் ஆண் பெண் குறியாகச் சிவலிங்கத்தை எண்ணி வழிபட்டனர் என்று கூறினால் அதைக் கண்டு நாம் வியப்படைவதற்கில்லை. இலிங்க வழிபாட்டின் விளக்கம் தமிழ்மறை பாடும் இறை வழிபாடு - சிவலிங்க வழிபாடு திராவிட நாட்டிலும், திராவிட மக்கள் குடியேறிய மைய நிலக்கடற் பகுதிகளிலுள்ள பழம் பெரும் நாடுகளிலும், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் சீர்பெற நிலவி இருந்தது என்பதற்குப் பல மேனாட்டறிஞர்கள் முதல் தரமான சான்று காட்டி இலிங்க வழிபாடு ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவி இருந்தது என்ற உண்மையை நிலைநாட்டியுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆரியர்கள் முற்காலத்தில் சிவலிங்க வழிபாட்டை இழித்துரைத்து வந்தனர் என்றாலும் இன்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் திராவிடர்களின் திருக்கோவிலுக்கு வந்து சிவலிங்க வழிபாடு செய்து வருகின்றார்கள். வடமொழி நூற்கள் பலவற்றில் சிவலிங்க வழிபாடு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. சிவலிங்க வழிபாடு ஆரியர்க ளிடையே நிலவ ஆக்கம் அளித்தவன், ஊக்கம் ஊட்டியவன் இராமன் ஆவான். அப்பால் இலிங்க வழிபாடு ஆரியர் உவப்புடன் ஏற்க நன்கு அடிப்படையிட்டவர் ஆதி சங்கரர் எனப்படுபவர் ஆவார். சைவ சமய தத்துவ சாத்திரமாகப் போற்றப்படும் சிவஞான சித்தியார், சிவனரு உருவுமல்லன், சித்தினோ டசித்துமல்லன் பவமுதற் றொழில்களொன்றும் பண்ணிடுவானு மல்லன் தவமுதல் யோகபோகம் தரிப்பவ னல்லன்றானே இவைபெற இயைந்து மொன்றும் இயைந்திடா இயல் பினானே என்று கூறுகிறது. சிவபெருமானின் திருஉருவிற்கு உண்மையான விளக்கம் அளிக்கிறது. அவன் எவ்வித உருவமும் உடையவன் அல்லன் சித்தும் அசித்தும் அல்லன் என்றெல்லாம் உயரிய விளக்கம் தருகிறது. அவன் ஏகனாகவும் எல்லாமாகவும், எங்கும் நிறைந்தும், அரூபியாகவும், நின்மலனாகவும், ஆதியும் அந்தமும் அற்றவ னாகவும் விளங்குகின்றான். முதல், நடு, ஈறு, ஆகிய நிலைகளைத் தன்னுள் கொண்டவன். அனைத்தும் அவனிடமிருந்து அரும்பி, அவனிடமே ஒடுங்குகின்றன என்று சிவஞான சித்தியாரும், சிவஞான போதமும் உலகிற்கு அறிவுறுத்துகின்றன. (இவைகள் சைவ சமய தத்துவஞானங்களை விளக்கும் அதிகாரப் பூர்வமான ஏடுகளாகும்) இலிங்க புராணம், இலிங்கமே அனைத்திற்கும் அடிப்படை யாய், ஆதாரமாய், மூலமாய் முதன்மையாய்த் திகழ்கிறது; ஒலி, உணர்வு, தோற்றம், சுவை, மணம் என்ற பஞ்ச தன்மாத்திரை களற்றதாய் பிரகிருதியாய் (பார்வதியாய்) விளங்குகிறது என்று உட்பொருள் விளக்கம் உரைக்கின்றது. தமிழில் ஆகமம் அருளிய திருமூலர் ஆகமமாகிய திரு மந்திரத்தில் சிவலிங்கத்திற்கு ஒரு அரிய விளக்கம் அளித்துள்ளார். அது அடியில் வருமாறாகும். மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் நலந்தருஞ் சக்தி சிவன்வடி வாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே (திருமந்திரம் - 1745) இதன் பொருள், அயன் மால் உருத்திரன், ஆண்டான், அருளோனாகிய ஐம்முகன் ஆகியவர்களும் மேலாய விந்து நாதங்களும், நன்மை நல்கும் சக்தி சிவன் வடிவங்களும் ஆகிப் பலன் தரும் இலிங்கமே பராநந்தி ஆகும். தெய்வச் சேக்கிழார் திருத்தொண்டர் மாக்கதையில் ஞாயிற்றின் ஒப்பற்ற ஒளியையும், வெப்பத்தையும், வியாபகத் தன்மையையும் நம் கண்ணால் முழுமையாக உணர முடியாது. உற்று நோக்கக் கண் கூசும். மனத்தாலும் சிந்திக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். ஒரு பூதக் கண்ணாடியின் மூலம் கதிரவன் ஒளியை பஞ்சின் மீது படச் செய்தால் அது தீப்பற்றி எரிவதையும் அதினின்று ஞாயிற்றின் தன்மையையும் இயற்கை இயல்பையும் காண முடியும். அதே போன்று அறிவும் ஆற்றலும் ஆன்மீக அனுபவமும் பெற்று விளங்கும் அனுபூதிச் செம்மல்கள் ஆண்டவனிடமிருந்தே அனைத்தும் அரும்பி அவனிடமே ஆகிர்தியில் (இறுதியில்) இலயப் படும் காரணத்தால் சிவபெருமானுக்கு ஒரு தனிப்பட்ட திருஉருவத்தைக் கற்பனை செய்யாமல் இலிங்காகார வடிவத்தில் அமைத்து வழிபடப் பெறுகிறது. சிவலிங்கம் திருமாலும் நான் முகனும் காண முடியாத உருவினனாய் அழற் பிழம்பாய் உளான் என்று விளக்கியுள்ளார். காணாத வருவினுக்கு முருவினுக்குங் காரணமாய் நீணாக மணிந்தார்க்கு நிகர்குறியாம் சிவலிங்கம் நாணாது நேடியமால் நான்முகனும் காணநடுச் சேணாருந் தழற் பிழம்பாய்த் தோன்றியது தெளிந்தாராய் (திருத். மாக் 24. வார் 8.) என்று சிவலிங்கம் தேவர்களால் கூட அதன் அடியும் முடியும் காணமுடியாத அழற்பிழம்பு என்று சேக்கிழார் திருத்தொண்டர் மாக்கதையில் விரித்துரைப்பது சிந்திக்கத் தக்கது. சிவலிங்கம் என்ற சொல்லே நல்ல பொருள் நிறைந்த உயரிய பதமாகும். சிவ என்ற சொல்லுக்கு துக்காதிகளைப் போக்குவது என்றும் இலிங்கம் என்பதற்கு குறி என்றும் பொருள் கொள்ளப் படும். எனவே சிவலிங்கம் என்றால் துக்காதிகளை அகற்றும் மங்கலகரமான நலந்தரும் நற்குறியாகக் கொள்ளப்படும். மேலும் சிவ என்ற பதத்தில் சி கடவுளையும் வ அருள் உருவான சக்தியையும் குறிக்கும். சான்றோர்கள் சிவலிங்கம் என்பது சக்தியும் சிவனும் இணைந்து பிணைந்துள்ளது என்று கூறுகின்றனர். இலிங்கம் என்ற சொல்லுக்குத் தோன்றி ஒடுங்கல் என்று சமயச் சான்றோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். எனவே உலகம் உற்பத்தியாவதற்கும் ஒடுங்குவதற்கும் காரணமான செம்பொருளைக் குறிக்கும் திருஉருவம் இலிங்கமாகும். மேலும் இலிங்கம் என்ற பதம் லிகி என்ற தாதுவின் அடிப்படையிலிருந்து பிறந்தது என்று மொழி இயல் வல்லுனர்கள் கூறுகின்றனர். எனவே, இதற்குச் சித்தரித்தல், அணி செய்தல் என்று பொருள் தருதல் பொருந்தும். இறைவன் உலகைப் படைத்தும் காத்தும் அழித்தும் வருவது ஒரு சிறு திருவிளையாட்டாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். சிவலிங்கத்திற்கு அடி, முடி, நடு என்று மூன்ற பாகங்கள் உண்டு. இவற்றை முறையே பிரம்ம பாகம், உருத்திரபாகம் என்று ஆரிய சமய பக்தர்கள் கூறுகின்றனர். உருத்திரபாகம் என்பது தான் சிவபாகம். ஏனைய இருபாகங்களும் சக்திபாகம் என்றும் கூறுவர். இவ்விரண்டு பாகங்களும் ஆவுடையார் என்று கூறப்படும். இது சங்கரர் வழியில் வழிபட்டு நிற்கும் சிவன் அடியார்கள் கூறும் கூற்றாகும். சிவலிங்கம் சிவாகம விதிகளின் ஆணைப்படி திருக்கோவில் கோபுரத்திற்கு அப்பால் கொடிமரம், பலிபீடம், நந்தி, சிவலிங்கம் என்ற ஒரு ஒழுங்கு - நியதியை அனுசரித்து அமைக்கப்பட்டிருக் கின்றது. திரு உண்ணாழிகையில் தீப ஒளியில் சிவலிங்கத்தைக் கண்டுதெரிசித்த ஒரு பக்தன், தெரிசித்த மாத்திரத்தில் இறைவன் விண்ணும் மண்ணும் அகண்டாகரமாய் வியாபித்திருக்கிறான்; பிரபஞ்சம் அனைத்தும் இலிங்கமயமாய் உள்ளது என்ற உணர்ச்சி அவன் உள்ளத்தில் உந்தி எழும்பக் கூடும். அதோடு சிவலிங்கத்திடம் விவரிக்க முடியாத அபூர்வ சக்தி நிலவச் செய்கிறது; உள்ளத்தை எளிதில் லயிக்கச் செய்து உள்ளத்தை ஒருமுகப்படுத்தி ஏகாக் கிரசித்தம் எழுமாறும் செய்கிறது. இலிங்க வடிவைப் பக்தன் கண்டுதெரிசித்த மாத்திரத்தில் உள்ளம் படிப்படியாக இளகி சிந்தனையற்றுக் குவிந்து சாந்தி அரும்புகிறது. அதனாலன்றோ அறிவர்கள் திருக்கோயிலில் சிவலிங்க வழிபாட்டை ஏற்படுத்தி யுள்ளனர் என்ற உண்மை புலனாகின்றது என்று கூறியுள்ளார். இலிங்க வழிபாடு எல்லா வழிபாட்டிலும் இலிங்க வழிபாடு ஏற்றம் பெற்றது. இலிங்க வழிபாடு இறைவழிபாட்டிற்கு அடிப்படையாய் அமைந் துள்ளது. இறைவனை இலிங்க வடிவில் வழிபடுபவர்கள் எளிதில் இறை உணர்வைப் பெற்று இன்ப நிலையை எய்துவர். திருவருளை அடைவர் என்று சைவ சமயச் சான்றோர்கள் நவின்றுள்ளார்கள். இலிங்க வகைகள் இலிங்கம் பல வகைப்படும். அவைகள் அன்பர்கள் அறிவிற்கும் பக்திக்கும், இடங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்பப் பல விதமாக அமைந்துள்ளன. ஏகலிங்கம் பண்டு தொட்டு வழிபடப் பெற்றுவரும் நிலையான குறியே தாவர லிங்கம் ஆகும். இது ஒன்றே அனைத்து இலிங்க வடிவிலும் மேலானது. இவைகளே திருக்கோயில்களில் திருஉண்ணாழிகையில் இடம் பெற்றிருப்பனவாகும். சிவலிங்கம் என்று அன்பொழுகப் பக்தர்களாலும் சான்றோர்களாலும் ஏற்றப்படுவது : இது ஏக லிங்கம். இலிங்கத்திலே முகமும் தோள்களும் வெளிப்பட்டிருக்கும் தட்சிணா மூர்த்தி உள்பட அட்டமூர்த்தி வடிவான இருபத்தைந்து மகேசுவர வடிவங்களும் பிறவும் வியக்தலிங்கங்களேயாம். இருவகை இலிங்கங்கள் உண்ணாழிகையில் உறைந்திருக்கும் உடையார் உருவத்தை -மூலவர் வடிவைப் பார்த்த இலிங்கம் (தாவர லிங்கம்) என்றும் அடியார்கள் இல்லத்தில் வைத்து வழிபடப்படுவது ஆன்மார்த்த லிங்கம் என்றும் கூறப்படும். இஃதன்றி பக்தர்கள் இதயத்தில் வைத்து வழிபடப்படுவது சங்கரமலிங்கம் என்றும் கூறப்படும். முப்பெரும் இலிங்கங்கள் திருக்கோயிலின் உண்ணாழிகையின் மேல் எழுப்பப் பெற்றிருக்கும் இறைவனின் மகுடம்போல் விளங்கும் விமானம் தூய லிங்கம் என்றும் திருஉண்ணாழிகையின் (கருவறையின்) உட்புறம் காணப்படும் இலிங்கம் சூட்சமலிங்கம் என்றும் அதற் கண்மையில் எதிராக இடம் பெற்றிருக்கும் பலிபீடம் பத்திரலிங்கம் என்றும் கூறப்பெறும். இவை முறையே வியக்த லிங்கம், அவ்வியக்த லிங்கம், வியக்தா வியக்த லிங்கம் என்றும் கூறப்படும். தமிழ்ஆகமம் ஆகிய திருமந்திரத்தில், திருமூலர், தூய விமானமும் தூலம தாகுமா லாய சதாசிவ மாகுநற் சூக்குமம் பாயபலிபீடம் பத்திர லிங்கமா மாய வரனிலை யாய்ந்து கொள்வார்கட்கே (திருமந்திரம். 1689) என்று எடுத்துக்காட்டி விளக்கம் தந்துள்ளார். நால்வகை லிங்கங்கள் சிவலிங்கம் (1) அசலலிங்கம் (2) சலனலிங்கம் (3) சலாசலலிங்கம் (4) அசலசலலிங்கம் என நான்கு வகைப்படும். விமானம் அசலலிங்கம் எனவும் இதயத்திற் கற்பிக்கப்படும் சிவலிங்கம் சலனலிங்கம் எனவும் வர்ணலிங்கம் இரத்தினலிங்கம் முதலியன சலாசல லிங்கம் எனவும் வேதிகையில் மணடலமிட்டுப் பூசிக்கப்படின் அது அசலசலலிங்கம் எனவும் கூறப்படும். பஞ்சபூத லிங்கங்கள் மிகத் தொன்மையும் நன்மையும் வாய்ந்த ஐந்து பூத வடிவான இறைவழிபாடு தமிழகத்தில் உண்டு. இவை தமிழ்நாட்டின் ஐந்து புனித நகர்களில் நடைபெற்று வருகின்றன. அவை அடியில் வருமாறாகும். 1. திருவாரூர் அல்லது காஞ்சியில் அப்புலிங்கம் (மண்வடிவான இலிங்கம்) 2. திருவண்ணாமலையில் தேயுலிங்கம் (நெருப்பு வடிவான இலிங்கம்) 3. திருவானைக்காவில் அப்புலிங்கம் (நீர்வடிவான இலிங்கம்) 4. திருக்காளத்தியில் வாயுவு லிங்கம் (காற்று வடிவான இலிங்கம்) 5. திருச்சிதம்பரம் பாண லிங்கம் (வெளிவடிவான இலிங்கம்) இவை சைவ சமய ஞானிகளால் பஞ்ச பூத தலங்கள் என்று சிறப்பித்துக் கூறப்படும். அறுவகை இலிங்கங்கள் ஆரிடம், இராக்கதம், ஆசுரம், தேவதம், மானிடம், சுயம்பு என்று அறுவகை இலிங்கங்கள் உள என்று சிற்பநூற்கள் சிறப்பித்துக் கூறும். 1. முனிவர்களால் வழிபடப்பட்டது ஆரிடலிங்கம். 2. அசுரர் களால் வழிபடப்பட்டது இராக்கதலிங்கம். 3. நான்முகன் (பிரமன்) இந்திரன் போன்ற தேவர்களால் வழிபடப்பட்டது ஆசுரலிங்கம். 4. காஞ்சியில் காமாட்சி என்னும் தேவியால் நிறுவப் பெற்று வழிபடப்பட்டது தேவதலிங்கம். 5. மண்ணுலகில் மக்களால் நிறுவப்பெற்று வழிபடப் பெற்றது மானிடலிங்கம். 6. கல்தச்சன் உளி கொண்டு செதுக்கப்படாது இயற்கையில் எழுந்தருளிச் சிறு பாறை வடிவிலும் குன்றனைய பெரிய வடிவிலும் தானே தோன்றி நிற்கும் இலிங்கம் சுயம்பு லிங்கம் என்றும் கூறப்படும். ஏழுவகை இலிங்கங்கள் இலிங்க வகைகளில் எழுவகைலிங்கங்கள் சிறப்பானவை எனக் கூறப்படும். சுயம்பு லிங்கம், தேவிலிங்கம், திவ்விய லிங்கம், ஆர்ச லிங்கம், மானுஷ லிங்கம், இராட்சசலிங்கம், ஆசுர லிங்கம் என எழு வகை லிங்கங்கள் உள. தானே தோன்றியது சுயம்புலிங்கம் (இது மலைகளின் தன்மையுடையது); தேவியினால் பூசிக்கப்பட்டது தேவி லிங்கம். தேவர்களால் நிறுவப்பெற்றது திவ்விய லிங்கம் (தெய்வீக லிங்கம்). முனிவர்களால் வழிபடப்பட்டது ஆர்சலிங்கம், இராட்சதர்களால் பூசிக்கப்பட்டது இராட்சசலிங்கம். அசுரர்களால் நிறுவப்பட்டது ஆசுரலிங்கம். பாணம் எனப்படும் நீரிலே உற்பத்தியானதை பாணலிங்கம் என்பர். ஈண்டு பாணாசுரனால் பூசிக்கப்பட்டதே பாணலிங்கம் எனப்படுகின்றது. உபலட்சணையினால் பிள்ளையார், முருகன் போன்றவர் களால் நிறுவப்பெற்றது கரணலிங்கம் எனப்படும்.1 அஷ்டலிங்கங்கள் இலிங்க வகைகளில் அஷ்டலிங்கம் சிறப்புமிக்க இறைவன் எண்குணத்தான் என்று தமிழ்மறை நூல்களில் சிறப்பித்துக் கூறப் படுகின்றான். அட்ட மூர்த்தியானாய் போற்றி - தேவாரம் போன்ற துதிவேதங்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுகின்றன. இறைவ னுடைய எட்டு மூர்த்தங்கள் (அஷ்டமூர்த்தங்கள்) சிவமூர்த்தங்களில் சிறப்பானவை என்று ஏற்றிப் போற்றி வழிபடப்படுகின்றன. நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதவன் (ஆன்மா) என்னும் எண்பொருள் வடிவினன் சிவபெருமான் என்று ஆகமங்கள் அறிவுறுத்துகின்றன. இறைவன் எங்கும் நிறைந்திருப்பது பற்றி எண்டிசையும் சிவனுக்கு எண்கையாகக் கூறப்படுகிறது. அதனால் நிகண்டில் எண்டோளன் என்று புகழ்ந்து கூறப்படுகிறது. ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடரும் சிவபெருமானுக்கு முக்கண்ணாகக் கூறப்படும். இதனால் சிவபெருமான் முக்கண்ணன் என்று அழைக்கப்படுகிறார். இறைவனுக்கு மூன்றாவது கண் நெற்றியில் இருப்பதால் நுதல் விழி நாட்டத்திறைவன் என்று புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். கண்ணுதற் கடவுளும் கழக மோடமர்ந்து என்று மனோன்மணியம் என்னும் நூலில் சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ் வணக்கம் பாடியுள்ளார். இவற்றால் இறைவனுடைய எண் பொருள் வடிவில் அஷ்ட லிங்கங்கள் - எண்வகை இலிங்கங்களாக அமைத்து வழிபடுவது என்பது விளங்கும். பன்னிரு ஜோதி லிங்கங்கள் 1. சௌராஷ்டிரத்தில் (பிரபா பட்டன்) சோமநாதலிங்கம், 2. சிரிசைலத்தில் மல்லிகார்ச்சுன லிங்கம், 3. உச்சயினியில் அவந்தி மகாகாணலிங்கம், 4. ஓங்காரம் (விந்திய ஓங்காரேசுவரர் - அமலேச் சுவரலிங்கம், 5. இமாசலம் - பத்திரிகேதார லிங்கம், 6. டாக்னி திகிளியூர் - பீமாங்கரலிங்கம், 7. வாரணாசி நாசிக் - விவேசுரலிங்கம், 8. கோதாவரி நாசிக் - திரியம்பக லிங்கம், 9. சிதாபுரம் - வைத்தியநாத லிங்கம், 10 சேது இராமேசுவர - இராமலிங்கம், 11. தாருவனம் ஔடா- நாகேசுவரலிங்கம், 12. சிவாலயம் - குலமேசலிங்கம் (எல்லோரா குகையின் அண்மையில் அமைந்துள்ளது) என உள்ளன என்று கோடிருத்திர சம்ஹிதை கூறுகின்றது. பன்னிரு ஒளிக்குறிகளில் ஜோதிலிங்கங்களும் வழிபாட்டிற்கு உயர்ந்தன என்று மறைநூற்கள் கூறுகின்றன. ஜோதிலிங்கத்தின் திருநாமங்களை காலைப் பொழுதில் எழுந்து, நீராடி, உடற்றூய்மை செய்து, புனிதமான ஆடைபுனைந்து, உளத்தூய்மை பெற்றுப் பூசைக்குரிய புனிதப் பூக்களைக் கொய்து, இலிங்க உருவிற்கு அர்ப்பணம் செய்து, தேவாரம், திருமறை கூறும் பாக்களைப் பாடி அர்ச்சனை செய்து, கர்ப்பூரம், சாம்பிராணி முதலிய நறுமணப் புகை காட்டி வழிபட்டால் (பூ செய்புரிந்தால்) உள்ளம் புனிதம் அடையும். சாந்தி நிலவும், பழம்பாவங்களும் போம். எல்லாச் சித்திகளும் பெற முடியும். சிவன் எல்லோர்க்கும் தாயாகவும் தந்தையாகவும் உளான். அந்த உண்மைச் சிவலிங்கத்தின் மூலம் உலகிற்கு உணர்த்தப் பெற்றுள்ளது. அவன் எந்நாட்டினர்க்கும் எந்நிறத்தார்க்கும், எப்பாலார்க்கும் இறைவன். அவன் அன்பு வடிவானவன். அவனை அஞ்சாது சிறுவர்களும், சிறுமிகளும் அணுகலாம். அவர்கள் அனைவரையும் அன்புடன் தழுவி அரவணைத்து அருள்புரியும் அருளாளன்; கருணாகரன். அவனை அப்பர் அடிகள், அம்மை யாகவும், அப்பனாகவும், அம்மானாகவும் அத்தையாகவும் உறவின ராகவும் கண்டார். அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும்நீ ஒப்புடைய மாதரும் நீ ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாயென் நெஞ்சந்துறப்பிப்பாய் நீ இப்பொன் நீ இம்மணிநீ, இம்முத்தும் நீ, இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே என்று அவர் பாடியுள்ளது இறைவனுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பையுணர்த்துவதாகும். சுந்தரர் இறைவனை உற்ற தோழனாகக் கண்டார். ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் என்று கூறியிருப்பது இறைவனுடன் மக்கள் கொள்ள வேண்டிய நெருக்கமான அன்பை தொடர்பை உணர்த்தும். மேலும் மாணிக்க வாசகர் சிவபெருமானை, தாயாய், முலையைத் தருவானே, தாரா தொழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து ... ... என்று உள்ளம் நெகிழ்ந்து உணர்வு உருக இறைவனைத் தாயாக்கி நம்மைச் சேயாக்குகிறார். சிவபெருமானும் ஞானசம்பந்தருக்குத் தாயாகத் தோன்றி, பாலூட்டி, உயிர்களின் மேல் வைத்துள்ள பிள்ளைப் பாசத்தை யுணர்த்தியுள்ளார். சம்பந்தர் சிவபெருமானை தாயவன் உலகுக்கு என்று உள்ளம் உருகப்பாடி அவனுக்கு ஆட்பட்டார். இலிங்க வடிவின் ஏற்றம் சிவலிங்கம் தமிழ்நாட்டில் அரும்பி சிற்சில சிறிய மாற்றங் களுடன் பாரனைத்தும் பரவியுள்ள ஒரு அரிய தெய்வீகச் சின்னமாகும். சிற்பக்கலை வளர்ச்சி பெறுவதற்கு முன் கல் ஊழியில் கரடு முரடான உருவில் தோன்றி ஒரு நிரந்தரமான அமைப்பைப் பெற்றிருந்தது. தமிழ்நாட்டில் அரும்பிய இரும்பு ஊழியில் மலர்ந்த எஃகுப் பண்பாட்டில், எஃகினால் உளிகள் செய்யப்படவே சிவலிங்க வடிவில் பல மாற்றங்கள் எழுந்தன. ஆதியில், அடியில் வட்டவடிவான அமைப்பில் ஆவுடையாரும் அதன் மேற்பகுதியில் வட்டவடிவான தூண் உருவில் சிவ இலிங்கமும் அமைக்கப்பட்டன. சிவலிங்கம் தூண் வடிவிலும் ஆறுபட்டைகள், எட்டுப் பட்டைகள் தீட்டப்பட்டதாய்ப் புத்துருவம் பெற்றெழுந்தது. அப்பால் சிவலிங்கத்தின் மேல் உள்ள நீள் உருவ வடிவிலே பலசிறு இலிங்க உருவங்கள் செதுக்கப் பெற்று பல்வேறு பெயர்களால் வழிபடப் பட்டு வந்தன. அவை அடியில் வருமாறாகும். பலவகை இலிங்க பூசைகள் புறப்பூசையில் பயன்படுத்தப்படும் இலிங்கங்கள் பல திறப்படும். பச்சை மண்ணால் செய்யப்பட்ட இலிங்கத்தினும், சுட்ட மண்ணால் உருவாக்கப்பட்ட வடிவம் பதின்மடங்கு உயர்ந்தது. சுட்டமண் லிங்கத்தினும் தாருலிங்கம் பதின்மடங்கு மேலானது. தாருலிங்கத்தினும், சைலலிங்கம் பன்மடங்கு சிறந்தது. சைல லிங்கத்தினும் தாதுலிங்கம் நூறுமடங்கு மேன்மையானது. அதனினும் இரத்தின லிங்கம் அனந்த மடங்கு அதிகச் சிறப்புடையது. இரத்தின லிங்கத்தினும் மணிலிங்கம் பல்லாயிரம் மடங்கு சிறந்தது. அதனினும் வர்ண லிங்கம் பலகோடி மடங்கு சிறந்தது. அதனின்று இரச லிங்கம் சங்கம் அளவுக்கு உயர்ந்தது. அனைத்தினும் சுயம்பு லிங்கம் ஒப்புயர்வற்றது. பாணாசுரன் ஒரு உழுந்து முதல் முழம் ஈறாக உள்ள இலிங்கங்களைப் பெற்று மந்திரங் கொண்டு பூசித்தமையால் அவ்லிங்கம் பாண லிங்கம் எனப் பெற்றது. இந்த இலிங்கங்களில் ஆவாகனம் வேண்டாது சிவசாந்நித்தியம் உளது என்று நூல்கள் ஓதுகின்றன. பாணாசுரன் மந்திரமலை (மஹேந்திரகிரி) நேபாளம் உள்ளடக்கி அமரேசுவரம், இலிங்காத்திரி, காளிகார்த்தம் சிரிகிரி, கன்னிகாச்சிரமம், கன்னியா தீர்த்தம் முதலிய இடங்களில் பூசித்து நலம் பெற்றான். ஆதியில் நெல்லையில் தோன்றிய சின்னஞ்சிறு சிவலிங்கம் தில்லையிலும் பிற இடங்களிலும் குன்றெனக் காட்சி தரும் சிவலிங்கம் போன்றன - சுயம்பு லிங்கம் ஆகும். கச்சி ஏகம்பத்தில் காமாட்சி அம்மையால் பூசிக்கப்பட்ட ஏகாம்பரநாத மகாலிங்கம் தேவிலிங்கம் எனவும், திருச்செங்காட்டங்குடியில் விநாயகப் பெருமானால் நிறுவப்பெற்று பூசிக்கப் பெற்ற இலிங்கம் கணபதீச்சுர மகாலிங்கம் எனவும், திருச்சேயஞ்ஞலூரில் சுப்பிரமணியர் உருவம் நிறுவி வழிபட்ட சத்திகிரீசுவர மகாலிங்கம் கர்ணலிங்கம் எனவும் நான்முகனால் சீகாழியில் நிலைநாட்டி வழிபடப்பட்டது பிரம புரீமகாலிங்கம் எனவும் - திருமாற் பேற்றில் திருமாலால் பூசிக்கப் பெற்ற மால் வணங்கீசுவர மகாலிங்கமும், விஷ்ணு வாமன அவதாரம் புரிந்து திருமாணிக்குழியில் நிறுவி பூசித்த மாணிக்க வரதேசுவர மகாலிங்கமும் திருக்கண்ணார் கோவிலில் இந்திரன் தாபித்து பூசித்த கண்ணாயிரேசுவர மகாலிங்கமும் (தெய்வீக லிங்கமும்) திருக் குற்றாலத்தில் அகத்தியரால் நிறுவிப் பூசிக்கப் பெற்ற குறும்பலாவீசுர மகாலிங்கமும் (ஆரிடலிங்கமும்) - இடும்பாவனத்தில் இடும்பனால் நிறுவப் பெற்று வழிபடப் பெற்ற சர்க்குண நாதேசுவர மகாலிங்கம் (இராட்ச சலிங்கம்) திருஓண காந்தன்றளியில் ஓணன், காந்தன் என்றும் அசுரரால் பூசிக்கப் பெற்ற ஓணகாந் தேசுவர மகாலிங்கம் (ஆசுரலிங்கம்) ஆகியனவும் வரலாற்றுப் புகழ் பெற்றவை. இலிங்கத்தின் பரிணாம வளர்ச்சி ஆரியர்கள், இந்தியாவில் புகுந்தபொழுது திராவிடர்கள் வழிபட்ட சிவலிங்க வழிபாட்டின் தத்துவத்தை அறியாது அதை அறியும் ஆழ்ந்த தத்துவ அறிவின்றி சிவலிங்க வழிபாடு சிசின்தேவர் வழிபாடு என்றனர். அப்பால் பன்னூறு ஆண்டுகள் சென்று ஆரியர்கள் - சிறப்பாகத் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் - சிவனை முழு முதற் கடவுள் என்பதை ஏற்றுக் கொள்ளாது சிவன் உருத்திரன் என்னும் மும்மூர்த்தியில் ஒருவரே என்று சிவவழிபாடு செய்யும் காலத்தும் சிவலிங்கம் ஆண் பெண் குறி வழிபாடு என்று கூறி வந்தனர். இன்று பார்ப்பனர் சிவலிங்க வழிபாடு இயற்றி வருகின் றனர். திருநீறணிந்தும், சிவனடியார்கள் போல் செங்காவி உடை யணிந்தும், தமிழைத் தாய் மொழியாகப் பயின்றும் வருகின்றனர். எனவே இவர்கள் இயற்றிய நூலைப் பயின்ற வெள்ளையர் சிலர் சிவலிங்க வழிபாடு ஆண்குறி பெண்குறி வழிபாடு என்று எழுதி வந்தனர். ஆரியர்கள் சுமார்த்த சமயத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள் சிவனைப் பெயரளவில் தெய்வமாக சிறு தெய்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களேயொழிய உண்மையில் சிவனை முழு முதற்கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை; சிவ தீட்சை பெறவில்லை. பார்ப்பனராயினும் பள்ளர்களாயினும் சிவதீட்சை பெற்று, சைவ சமய மறைநூற்களை பயின்றவர்களே அந்த சமயத்தைப் பற்றிப் பேச அருகதை உள்ளவர்கள் என்பதை சைவ சமயச் சன்றோர்கள் உறுதியாகத் தெரிவிக்கவேண்டும். ஆரியர்களிற் பலர் சுமார்த்த சமயத்தில் சேர்ந்து பூணூல் இட்டு காயத்திரி மந்திரம் சொல்லி சிவன் (உருத்திரன்) பிரமன், விஷ்ணு, இந்திரன் முதலிய தெய்வங்களை வழிபட்டு வருபவர்கள் என்று உணர்த்த வேண்டும். சைவத்திற்கும் சுமார்த்தத்திற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடாகும். சைவம் இந்து மதத்திற்குள் இணையாது. இணைத்துப் பேசுவது தவறு. மேலும் சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற பலர் சைவம் தழுவி சைவர்களால் சிவனைப் போல போற்றப்பட்டு வருபவர்கள் என்ற உண்மையை நாம் மறப்பதற்கோ மறுப்பதற்கோ இல்லை. சிவலிங்கம் ஆதிகாலத்தில் அரும்பிய நிலையினின்று படிப்படியாய் வளர்ந்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் பழங்காலத்தில் அடியில் உடுக்கை போன்ற வடிவமும் அதன் மீது வட்டமான வடிவில், நீள் உருண்டை வடிவான ஒரு குறியும் அதைச் சுற்றிப் பள்ளமான குழியும், இலிங்கத்தின் மீது நீர்விட்டால் அது வெளியே செல்லத் தக்கதான அமைப்பே சிவலிங்கம் என்ற வடிவமைப்பாக இருந்து வந்தது. புதிய கல் ஊழியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் எழுந்த இரும்பு ஊழியில் எஃகினால் செய்த கூரிய உளிகளும் ஏனைய கல்லைச் செதுக்கும் கருவிகள் பலவும் எழுந்ததின் பயனாக இலிங்கம் எட்டுப்பட்டை வடிவில் செய்யப்பட்டது. எட்டுப் பட்டை வடிவம் பதினாறு பட்டை வடிவமாகி புத்தரலிங்கமாகிப் பின் லிங்கம் என்ற பெயரைப் பெற்றது. பின்னர் சிறு சிறு மாற்றங் களுடன் இலிங்க வடிவங்கள் செதுக்கப்பெற்று அஷ்டோத்திர லிங்கம் என்றும், சகரலிங்கம் என்றும் கூறப்பெற்றன. இவைகள் ஆதியில் மண்ணாலும், பின்னர் சுடுமண்ணாலும் மரத்தாலும், கல்லாலும், பொன்னாலும், படிகத் தாலும், மாணிக்கத்தாலும், மரகதத்தாலும் செய்யப் பெற்றன. அப்பால் இரும்பு ஆயுதங்களின் பெருக்கத்தாலும் மக்களின் அறிவு வளர்ச்சியாலும், சிற்பிகளின் பட்டறிவாலும், இலிங்க வடிவு சிவபெருமானின் மார்பிற்கு மேற்பட்ட முகவடிவமாகச் செதுக்கப் பட்டு ஒருமுகலிங்கம் (ஏகமுகலிங்கம்) என்று திருக்கோயிலில் இடம்பெற்று வழிபடப்பட்டது. அப்பால் துவிமுக லிங்கமும், திரிமுக லிங்கமும், சதுர்முகலிங்கமும் (சதுர்ப்புஜலிங்கமும்) பின்னர் பஞ்சமுகலிங்கமும் உருவாக்கப் பெற்றன. பஞ்சமுகலிங்கம் என்பது இறைவன் நான்கு திசைகளை மட்டுமல்ல விண்ணையும் மண்ணை யும் மண்ணின் அடிப்புறத்தையும் பார்க்கவல்லவன் என்ற முறையில் அமைந்துள்ளது என்று விளக்கம் அளிக்கப் பெற்றது. இவ்வாறே ஒவ்வொரு முகலிங்கத்திற்கும் பொருத்தமான விளக்கம் தரப்பட்டது. பஞ்சமுக லிங்கம் இறைவனின் ஐந்து கோலங்களை அதாவது வாமதேவ, தற்புருச, அகோர, சடியோசட, ஈசான என்னும் திருக்கோலங்களை விளக்கும் திருஉருவகம் என்று கூறப்படும். திருக்கோயிலில் உள்ள திருஉண்ணாழிகையில் (கர்ப்பக் கிரகத்தில்) ஒரு வாயில் மட்டும் இருந்தால் ஏகமுகலிங்கம் இடம் பெறலாம். இருவாயில்கள் இருந்தால் துவிமுக லிங்கமும் (இருமுக லிங்கமும்) மூன்று வாயில்கள் இருந்தால் திரிமுகலிங்கமும் (மும்முக லிங்கமும்) நான்கு வாயில்கள் இருந்தால் சதுர்ப்புஜலிங்கமும் (நான்குமுகலிங்கமும்) இருக்க வேண்டும். நான்கு வாயில்கள் உள்ள கோயில்களில் பஞ்சமுகலிங்கம் இடம் பெறலாம் என்று இறை நூல்கள் கூறுகின்றன. இந்த இலிங்க வடிவங்களில் தற்புருசமூர்த்தம் கிழக்கு நோக்கியும், அகோர மூர்த்தம் தெற்கு நோக்கியும், சடியோசடமூர்த்தம் மேற்கு நோக்கியும், வாமதேவ மூர்த்தம் வடக்கு நோக்கியும் ஈசான மூர்த்தம் விண்ணை நோக்கியும் இருக்க வேண்டும் என்று ஆகமங்கள் அறிவுறுத்துகின்றன. முகலிங்க வளர்ச்சிக்குப் பின் சிற்பவளர்ச்சியால் கை தேர்ந்த சிற்பியால் இலிங்கோற்ப மூர்த்தி வடிவம் ஆகமவிதிப்படி, சிற்பநூல் விதிகளைத் தழுவி இலிங்க வடிவத்தின் மீது சிவபெருமானின் முழங் காலுக்கு மேற்பட்ட உருவம் செதுக்கப்பட்டது. இதன் பொருள் சிவபெருமானின் அடியும் முடியும் தேவர்களும் காணமுடியாதது என்று விளக்கம் தரப்பட்டது. ஒருகாலத்தில் திருமாலும் நான்முகனும் தங்களில் யார் பெரியவன் என்று விவாதத்தை எழுப்பினர். இறுதியாய் சிவ பெருமானிடம் சென்று இதற்கு முடிவு கூறும்படி வணங்கிக் கேட்டனர். சிவன் சிரித்து உங்களில் யார் எனது அடியும் முடியும் கண்டு முதலில் வந்து தெரிவிக்கிறார்களோ அவர்கள் தான் பெரிய வர்கள் என்று கூற, நான்முகன் தன் அன்ன வாகனத்தில் அமர்ந்து விண்ணிற் சென்று சிவபெருமானின் முடியின் எல்லையைக் கண்டுவரச் சென்றார். திருமால் பன்றி வடிவம் தாங்கி மண்ணைக் கிழித்துக் கொண்டு சிவபெருமானின் அடியைக் காணச் சென்றார். பல ஊழிகள் சென்றும் சிவபெருமானின் அடியைக் காணாது அவர் முன்னர்வந்து என்னால் உமது அடியைக் காண முடியவில்லை. தோல்வியுற்றேன் என்று கூறி நின்றார். நான்முகன் விண்ணிற் கேகையில் சிவபெருமானின் திருமுடிமீதிருந்து இழிந்து வீழ்ந்த தாழம்பூவைக் கண்டு நீ எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்க, நான் சிவபெருமான் முடி மீதிருந்து இழிந்து மண்ணை நோக்கிப் பல கோடியுகங்களாய் வந்து கொண்டிருக்கிறேன். அவர் முடியின் உயரம் எவரும் அறிய முடியாதது என்று சொல்லியது. நான்முகன் தாழம்பூவிடம், நான் சிவபெருமானின் முடியைக் கண்டு திரும்பிய தாக, நீ ஒரு பொய் சொல்லி எனக்கு உதவ வேண்டும் என்று கூற, தாழம்பூ இணங்கியது. நான்முகன் சிவபெருமானிடம் சென்று நான் உமது முடியைக் கண்டு திரும்பியுள்ளேன். இதற்கு உமது சடைமுடியி னின்று இழிந்து வரும் தாழம்பூவே சான்று என்று கூறித் தான் திருமாலை விட உயர்ந்தவன் என்றார். சிவபெருமான் சாட்சியை விசாரித்து, பொய்ச் சாட்சி என்று கண்டு பொய்ச் சாட்சி சொன்ன தாழம்பூ இனி எனது சடைமுடியில் இடம் பெற முடியாது அது பூசைக்குரிய மலராக இனி எவரும் கொள்ளார். நான்முகன் என்னிடம் பொய் புகன்று போட்டியில் தோல்வியுற்றதால் இனி அவன் உருவம் எனது கோயிலில் - ஏன் நாட்டினில் எங்கும் இடம் பெறலாகாது என்று கூறியதோடு திருமால் உண்மையை உரைத்து தன் தோல்வியை ஒப்புக் கொண்டதால் அவன் நான்முகனை விடப் பெரிய தெய்வம் என்று தீர்ப்பளித்தார் என்பது புராணக் கதை1. இந்தப் புராணக் கதையை விளக்க எழுந்தது இலிங்கோற்ப மூர்த்தி யின் திருஉருவம் இலிங்கங்களின் பரிணாம வளர்ச்சியில் இறைவனின் தலையாய மூர்த்தமாய் விளங்கும் தட்சணா மூர்த்தத்திற்கும், இலிங்கோற்ப மூர்த்தியின் திருஉருவத்திற்கும், இடைப்பட்ட இலிங்க சொரூப மூர்த்தியின் வடிவம் நீண்ட காலமாய் காண முடியாதிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் சிவபெருமானின் முழுவடிவமும் இலிங்கத்தோடு இணைந்து நிற்கும் திருஉருவம் ஒன்று ஆந்திர நாட்டில் உள்ள குடிமல்லம் என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்திரு உருவம் கிறித்துவ ஊழிக்கு முன் செதுக்கப்பட்ட ஒரு தொன்மையான வடிவம். அது இலிங்க வடிவின் பரிணாம வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதில் ஒரு குறைபாடாக - உண்மையை விளக்கிக் காட்டும் ஒரு சங்கிலித் தொடர்பில் விடுபட்ட வளையமாக (Missing links) எண்ணப் பட்டு வந்ததை நிவர்த்தி செய்துள்ளது. இன்று இலிங்க வடிவத்தின் பரிணாம வளர்ச்சி அறுபடாத சங்கிலித் தொடர்பாக அமைந்துள்ளது மகிழ்ச்சிக்குரிய தாக நிறைவு பெற்றுள்ளது. இந்த இலிங்க வடிவின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையிலே நமது நூலிற்கு அடிப்படையான அஷ்டமூர்த்தியின் வடிவ அமைப்புகள் அமைந்துள்ளன. அஷ்ட மூர்த்தியின் வடிவங்களில் தட்சணா மூர்த்தியின் திருஉருவம் முதலில் இடம் பெற்றுள்ளது. திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச் சிவனெனவே கண்டவர்க்குச் சிவன் உறைவனங்கே உருக்கோலி மந்திரத்தாலென நினையுமவர்க்கும் உளனெங்கு மிலனிங்கு முள னென்பார்க்கும் விருப்பாய வடிவாகி யிந்தனத்தி னெரி போல் மந்திரத்தின் வந்துதித்து மிகுஞ்சுரபிக் கெங்கு உருக்காண வொண்ணாத பான்முலைப் பால் விம்மி யொழுகுவது போல் வெளிப்பட் டருளுவனன் பர்க்கே (சிவஞான சித்தியார்) சிவலிங்கத்தின் தத்துவம் கடவுள் ஒன்று உண்டு. அது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல, அலியும் அல்ல என்று சிவம் என்னும் தெய்வத்திற்கு தத்துவம் தந்த மெய்யறிவு பெற்ற மக்கள் தமிழர். அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் ஆய்ந்து தம்பட்டறிவில் கண்ட தெய்வத்தன்மையை அவர்கள் தத்துவ நூலாகிய சிவஞானபோதம் விளக்குகிறது. தமிழர் கண்ட சிவதத்துவம், சுமார்த்தம், பௌத்தம், சமணம், எகோவாயிசம் கிறித்தவம், இசுலாம் போன்ற சமயங்கள் கருவில் உருப்பெற்று எழுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித சமுகத்தின் தொடக்கக் காலத்தில் தோன்றி இன்றும் பொன்றாது செறிவுற்றுப் பொலிவுடன் திகழ்கிறது. அதனை உணராத இறை அறிவு எள்ளளவு பெற்ற நேற்றுத் தோன்றிய தம் சமயத்தைக் கூட நன்கு பயிலாத சிற்றறிவினர்- சைவ சமய தத்துவ நூலைப் பயிலும் வாய்ப்பும் அறிவும், மொழிப் பயிற்சியும் பெறாது தத்துவ வியாக்கியானம் செய்வது வருந்தற்குரியது. கடவுள் ஒன்று உண்டு. அது பிறவாதது, இறவாதது. அது `அவதாரம் எடுத்து விண்ணினின்று மண்ணிலிறங்கியது என்பது கட்டுக் கதை எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தோன்றிய சான்றோர்கள் தெய்வத்தன்மையில் அருளையும் அன்பையும் கண்டனர். அவற்றை ஆண் பெண் தன்மையதாகக் கொண்டனர். ஆண் பெண் தன்மைகளை விளக்கும் அறிகுறியாக ஆண், பெண் வடிவில் இரு அடையாளங்களை (சின்னங்களை) வைத்து வழிபட்டனர். இது பண்டைய தமிழ் மக்கள் கல் ஊழியில் தாய் தந்தையர் ஆட்சியில் உருப்பெற்ற அம்மை அப்பன் வழிபாட்டில் எழுந்த சின்னம். இவ்விரு சின்னங்களும் இணைந்து ஒரே வடிவிலான அம்மையப்பன் எனும் தெய்வம் பிரிக்க முடியாதது என்று விளக்கம் அளித்தனர். கடவுள் ஆண், பெண் இயல்பினன் என்னும் பண்பில் வழிபாடு இயற்றப் பெற்று வந்தது. உள்ளம் (மனம்) ஒரு எல்லைக்குட்பட்டது. அது சஞ்சலத் தன்மை வாய்ந்தது. அத்தகைய சலனம் நிறைந்த உள்ளத்தால் விண்ணும் மண்ணும் - ஏன் அதற்கப்பாலும் எங்கும் நிறைந்திலங்கும் பேரொளியாய் எண்ணிறத் தெல்லையில்லாத கடவுளின் திருஉருவைச் சிந்திக்க - தியானிக்க - உபாசிக்க உளம் குவிந்து சிந்தனை யற்று ஒருமுகப்பட்டால் தானே சாத்தியமாகும். மனம், மொழி (வாக்கு) மெய்கள் (கரணம்) மூன்றும் ஒருமைப்பட வேண்டும். அவ்வரிய தன்மையை அடைய ஒரு குறியீடு இன்றியமையாதது. அந்தக் குறியீடு தான் சிவலிங்கம். அது (கடவுள்)ள சிவம், அருளாளன், அன்புடையோன் என்பதை அறிவுறுத்துகிறது. பிற்காலத்தில் தாய் (மாயோள்) வடிவிலும் தந்தை வடிவிலும் பிள்ளை வடிவிலும் (முருகன் வடிவிலும்) வழிபட்ட துண்டு. இதனைச் சோமகந்த சுகாசன வடிவம் உணர்த்தும். மாயோளுக்கு ஆண் வடிவம் கற்பித்த பொழுது மாயோன் தோன்றினான். (மாயோன் - திருமால்) படிமங்களின் இலக்கணம் சிற்பக்கலை மக்கள் உலகில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து உணர்ந்த பட்டறிவால் தெள்ளத் தெளிந்த அறிவுச் செறிவும், உள்ளற்கரிய உயரிய உள்ளப் பண்பும், நனிசிறந்த நல்ல நாகரிகமும் பெற்று உயர்நிலையை அடைந்துள்ளனர். மக்கள் உலகில் மகத்தான முன்னோடிகளாக விளங்கும் தமிழர் கற்கண்டாய்க் கண்ட கவினுறும் நுண்கலைகளில் அற்புதமான சிற்பக்கலையும் ஒன்று. இந்தப் பொற்புறும் சிற்பக்கலையில் - கட்டிடக் கலை ஓவியக்கலை படிமக்கலை ஆகிய மூன்றும் அடங்கும். கட்டிடக் கலையில் வீடு, கோயில், மாளிகை, அரண்மனை, மண்டபம், கோட்டை, கொத்தளம் இன்னோரன்ன பலவும் அடங்கும். ஓவியக் கலையில் (சித்திரக்கலையில்) சுவர் ஓவியம், கிழி ஓவியம் - துணிச்சீலை (Canvas) யில் தீட்டும் (சித்திரம்) படம், புனையா ஓவியம் (கோடுகளால் தீட்டப்பட்ட படம்), வண்ண ஓவியம் (Colour painting), நெய்வண்ண ஓவியம் (Oil Painting) எனப் பலவகை உள. படம் என்பது தமிழ்ச்சொல். பண்டைக் காலத்தில் துணியில் தீட்டப்பட்ட ஓவியம் படம், அல்லது படாம் என அழைக்கப்பட்டது. படம் என்பது துணியில் எழுதப்பட்ட ஓவியம் எனப்படும். இன்று படம் என்னும் பதம் தாளிலும் துணியிலும் சுவரிலும் தீட்டப்பட்ட ஓவியத்தைக் குறிக்கும் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. ஓவியம் முற்காலத்தில் எழுத்து என அழைக்கப்பட்டது. ஓவியர், கண்ணுள் வினைஞர் என அழைக்கப்பட்டனர். ஓவியம் மக்கள், தெய்வம், விலங்கு, பறவை, மரம், செடி, கொடி இயற்கைக் காட்சி இன்னோ ரன்ன பல்வேறு தோற்றங்களாகச் சுவர், துணி, தாள் முதலியவைகளில் கரியாலும், மையாலும், வண்ணக் கலவையாலும், நெய்யாலும் இன்று தீட்டப்படுகிறது. நெய்வண்ண ஓவியம் நீண்ட காலம் மறையாது நிலைத்து நிற்கும். படிமக்கலை என்பது தெய்வங்கள், முனிவர்கள், அரக்கர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, மரம், செடி, கொடி போன்றவைகளை மண்ணிலும், மரத்திலும், கல்லிலும் தாதுப் பொருள்களிலும் மணிகளிலும் வடிவமைப்பதாகும். இவைகளில் கல்லில் செதுக்கப்படுவது சிலை (Sculpture) என்று கூறப்படும். செம்பு பொன், வெண்கலம் போன்ற தாதுப் பொருள்களில் (உலோகங்களில்) செய்யப்படுவது படிமம் (Bronze) எனப்படும். கற்களில் சிலைகள் செய்வதைவிடத் தாதுப் பொருள்களில் படிமம் செய்வது சிரமம். ஆனால் நுண்ணிய வேலைப்பாடுகள் அனைத்தும் படிமங்களில்தான் எழிலுற ஏற்றமுறச் செய்ய முடியும். தமிழர்கள் வெண்கலப் படிமங்கள் செய்வதில் தேர்ச்சி வாய்ந்தவர்கள்; கைவண்ணம் வாய்ந்தவர்கள். சிற்பக் கலையின் இலக்கணமாகவே ஆகமங்களும், செய் விதியாகச் சிற்ப நூற்களும் எழுந்தன. சிற்ப இலக்கண விதிப்படி கட்டிடங்களும் படிமங்களும் சிலைகளும் ஓவியங்களும் செய்தால் தான் அவைகள் சிறப்புற்று விளங்கும். விதிப்படி அழகுற அமைந்த படிமங்கள் தாம் கண்ணையும் கருத்தையும் கவர்வனவாய் விளங்கும். அவற்றில் தெய்வத் தன்மை பொலியும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டுச் சிற்பிகள் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே கலைவல்லுநர்களாய் விளங்குகின்றனர். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளிச் சிற்பக்கலை வியத்தகு வேலைப்பாடுடையது. இது திராவிட மக்களின் சிற்ப வேலைப் பாட்டின் நுட்பத்தை எடுத்துக் காட்டுவதாய் இருக்கிறது. தமிழகத் தில் இந்தச் சிற்பக்கலையில் ஈடுபட்டுள்ளவர்கள் தபதிகள் எனப்படுவர். இவர்கள் தலைமுறை தலைமுறையாக இத்தொழிலில் ஈடுபட்டுப் பண்பட்டவர்கள். கைவண்ணம் கைவரப் பெற்றவர்கள். இவர்கள் தந்தையிடமிருந்தும் குருவிடமிருந்தும் இக்கலையைப் பயின்று வருபவர்கள். இவர்கள் ஆகமங்களையும், சிற்பநூற் களையும், செய்முறைகளையும் பழுதறப் பயின்று விதிகளுக்கு இம்மியளவும் மாற்றமின்றி சிற்பங்களை அமைப்பார்கள். சிற்பம் பொடிகள், கல், சுதை (நற்சாந்து), மரம், உலோகங்கள், மண், முதல் தரமான சுக்கான், தந்தம் ஆகிய எட்டுவகைப் பொருள்களால் ஆக்கப்படலாம் என்று மானசாரம் என்னும் சிற்பநூல் கூறுகிறது. கல்லும் உலோகமும் செங்கலும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும் கண்ட சருக்கரையும் மெழுகும் என்றிவை பத்தே சிற்பத் தொழிற் குறுப் பாவன என்று நமது நிகண்டு கூறுகிறது. வழுவறு மரனும் மண்ணும் கல்லும் எழுதிய பாவையும் என்றும், மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும் கண்ணிய தெய்வம் காட்டுநர் வகுக்க என்றும் விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம் பளிக்கறை மண்டப முண்டத னுள்ளது என்றும் மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நமது சிற்ப உருவங்கள் முற்காலத்தில் இருவகையாகச் செய்யப்பட்டன. ஒரு வகை முழுத்திருவுருவங்கள் மற்றொரு வகை புடைச்சிற்பத் திருஉருவங்கள், முழுச்சிற்பத் திருஉருவம் என்பது உருவத்தின் முன்பக்கம் பின்பக்கம் முதலிய எல்லாப் பக்கமும் தெரியும்படி திருஉருவத்தை அமைத்தல். புடைச் சிற்பம்1 என்பது உருவத்தின் ஒரு பக்கம் - அதாவது முன்புறமோ பின்புறமோ மட்டும் தெரியுமாறு பலகைகளிலோ, சுவர்களிலோ, கற்களிலோ, சுண்ணாம்புக் கற்களிலோ, உலோகத் தகடுகளிலோ தந்தத்திலோ செய்யப்படுவது. இவ்விருவகையான சிற்பத் திருஉருவங்களும் நமது திருக்கோயில்களிலே இருக்கின்றன. நமது சிற்பங்களில் கற்பனையில் எழுந்த தெய்வ உருவங்கள் முதல் இடம் பெற்றுள்ளன. மனித தத்ரூப சிற்பஉருவங்கள் மேனாட்டைப் போல் முழுவளர்ச்சி பெறவில்லை. காரணம் நமது முன்னோர்கள் அழிந்து போகும் மனித உடலுக்கு அழியாத கல் அல்லது உலோகத்தில் உருவம் அமைத்து வைப்பதைப் பெரிதும் விரும்பாததேயாகும். உருவ அமைப்பிற்குரிய உபகரணங்கள் நமது தெய்வத் திருஉருவங்களை அமைப்பதற்கு தபதி களுக்கு இன்றியமையாத மூன்று முக்கிய உபகரணங்கள் உள்ளன. அவையாவன: 1. தியான சுலோகங்கள், 2. இலக்கண விதிகள், 3. அளவுப் பிரமாணங்கள் எனப்படும். தியான சுலோகங்கள் தியான சுலோகங்கள் என்றால் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இருக்க வேண்டிய அங்க இலட்சணங்களை விளக்கும் அரிய வடமொழி மந்திரம் ஆகும். இதற்கும் தெய்வங்களைத் துதித்துப் பாடும் பிறமந்திரங்களுக்கும் வேறுபாடு உண்டு. தபதிகள் படிமங்களைச் செய்ய ஆரம்பிக்கும்முன் அவர்கள் உள்ளத்தில் குறிப்பிட்ட தெய்வ உருவைக் கற்பனை செய்து கொள்ளுவதற்கு ஏதுவாக அவர்களால் பயன்படுத்தப்படும் மந்திரமே தியான சுலோகம் எனப்படும். தியான சுலோகங்களை உள்ளத்தில் உருப்போட்டுக் கொள்ளும் பொழுது, தபதி செய்யப் போகும் திருஉருவத்தைத் தம் உள்ளத்தில் முதலில் காண்கின்றார். அதன் பிறகு, அதைத் தம் கையால் தூல வடிவில் உருவாக்குகின்றார். இது சிற்ப நூற்களில், திருஉருவங்களை இயற்றும் சிற்பிகள் அத் திருஉருவங்களின் இலக்கணங்களை (ஆகமங்களிற் கூறியவாறு) தியானிப்பதில் மிகவும் பற்றுடையவராய் இருத்தல் வேண்டும். அத்தியான நெறியால் அன்றிக் காட்சி முதலிய வேறெவ் வழியானும் இத்திருஉருவ இலக்கணங்கள் அமையாது என்று கூறப்பட் டுள்ளது.1 தபதி மறைகளை மதிப்பவராயும், ஆகமங்களை முறைப் படி அறிந்தவராயும், மரம், செங்கல், கருங்கல், உலோகம், மண், சாந்து, சுக்கான்கல், தந்தம், மணிகள் முதலியவைகளில் திருஉருவங் களை அமைக்கும் அறிவு ஆற்றல் உடையவராயும், தர்ப்பைப் புல்மோதிரத்தைத் தரித்தவராயும் தலையில் முடியுடையவராயும் அரையில் பீதாம்பரம் அணிந்தவராயும் சந்தனத்தைப் பூசியவராயும் சிவபூசை புரிகிறவராயும் இருத்தல் வேண்டும். தியான சித்தி கைவரப் பெற்ற சிற்பிகள் அமைக்கும் உருவங்கள் ஆயிரம் ஆண்டுகள் சென்றும் மக்கள் நாகரிக முதிர்ச்சி பெற்ற பின்னரும் அழகுடைய தாய் உள்ளத்தைக் கவர்வனவாய்க் காட்சியளித்துவருவதை மறப்பதற்கில்லை. திருஉருவின் மானமும் திரவியமும், ரேட்டம், மத்திபம், அதமம் என மூன்று வகைப்படும். எல்லாத் திரவியங்களிலும் தெய்வத் தன்மை ஒரே விதமாகக் காணப்படுவதில்லை. களர் நிலம் (ஊசா பூமி), வளநிலம், கிளர் நிலம் (அழுத்த மில்லாத மென்மையான பூமி) ஆகியவைகளில் தனித்தனி நிலத்திற்கேற்ற மரங்களைப் பயிர் செய்தால் நல்ல பலனை நல்கும். பலன்கள் பலவிதமாய் நிலவேற்றுமைகளினால் எழுகின்றன. எனவே மரங்களின் வேற்றுமைகள் மட்டும் பலன்களின் ஏற்றத்தாழ்வுகளை அளிப்பதில்லை; இடங்களின் வேற்றுமைகளுக்கேற்பவே பலன்கள் கிடைக்கின்றன. அதுபோலவே செய்யப் பெற்ற தெய்வ உருவப் பொருள்களுக்கேற்ப உத்தம மத்திப அதமப் பலனைக் கொடுக்கக் காணலாம். எனவே நமது முன்னோர்கள் விருப்பமாகத் தாதுப்படிமங் களையே செய்துவந்தனர். நமது நாட்டில் முற்காலத்தில் அதிகமாக வெள்ளி கிடைக்கவில்லை அதனால் அதிகமான வெள்ளிப் படிமங்கள் செய்யப்படவில்லை. செம்பு ஏராளமாகக் கிடைத்ததால் செம்புப் படிமங்களைச் செய்தனர். செம்பு கிட்டத்தட்ட பொன் போன்ற நிறமும் அதைப் போன்ற குழைவும் உடையதாய் இருந்த தால் செப்பு உருவங்கள் அதிகமாகச் செய்யப்பட்டன. பொற் படிமங்கள் சிறப்பானது என்றாலும் அது அதிக விலையேறப் பெற்றதாய் இருந்ததால் மக்கள் செப்புப்படிமங்களைப் பெரிதும் விரும்பினர். என்றாலும் செப்புப் படிமங்களில் தங்கள் சக்திக்கேற்ற அளவில் பொன்னைக் கலந்து திருஉருவங்களைச் செய்து வந்தனர். அதனால் திருஉருவங்கள் எழில் பெற்றிலங்கின. பெரிய நிலக்கிழார் களும் மன்னர்களும், பொன்னால் திருஉருவங்கள் செய்து வழிபட்டு வந்தனர். இராவணன் பொன்னால் செய்யப் பெற்ற சிவலிங்கத்தைத் தான் போகும் இடங்களுக்கெல்லாம் எடுத்துச் சென்று நாடோறும் வழிபட்டு வந்தான் என்று நமது புராணக் கதைகள் கூறுகின்றன. பொன்னாற் செய்யப் பெற்ற திருஉருவத்தைக் கண்ணால் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதும், அவ்வுருவிற்குக் குடமுழுக்கு செய்யும் நீரையும் பால் பழம் போன்ற அபிசேகப் பொருளையும் நாம் உண்பதும் கண்ணுக்கும் உடலுக்கும் உறுதி அளிக்கின்றன; உள்ளத்திற்கு உவகை ஏற்படுகிறது என்று அறிஞர்கள் கூறுகி றார்கள். இதுபோல் மணிகளாலும், படிமங்கள் செய்து அபிசேகம் செய்து வழிபடுவதில், நற்பயன் விளைகிறது என்று ஆகமங்களில் கூறப்படுகிறது. திருஉருவ அமைப்பு விதிகள் நமது தெய்வத் திருவுருவினைச் செய்வதற்கு மிகப் பழமையான காலத்திலே இலக்கணங்களை ஆக்கியுள்ளனர். படிமங்களை மூன்று பிரிவாக வகுத்து இலக்கணங்களைக் கூறியுள்ளனர். அம் மூவகையாவன : அசலம், சலம், சலாசலம் எனப்படும். மண், மணல், சுதை இவைகளால் உருவாக்கப்படும் உருவங்கள் அசலம் எனப்பட்டன. கல், மணிகள், மரம், தாதுப் பொருள்களால் செய்யப் படும் சிலை சலம் எனப்படும். உலோகங்களால் உருவாக்கப்படும் உருவங்கள் சலாசலம் எனப்படும். இதிலும் அர்த்த சித்திரம், சித்திரம், சித்திராபாசம் என மூன்று பிரிவுகள் உள்ளன. பாதி அங்கங்கள் காணப்படும் திருவுருவை அர்த்த சித்திரம் என்றும் முழு உருவங்களோடு திகழும் உருவைச் சித்திரம் என்றும் துணி, சுவர், பலகை இவைகளில் மேடு பள்ளங் களுடன் கண்ணிற்குக் காட்சி அளிக்கும் உருவைச் சித்திராபாசம் என்றும் கூறுவர். சுதையினால் செய்யப்பட்ட உருவம் அர்த்த சித்திரமாகும். மற்றப் பொருள்களினால் செய்யப்படும் உருவம் சித்திரமாகும். சித்திர கர்ம விதிப்படி தாதுக்களாலே செய்யப்படும் உருவம் சித்திராபாசமாகும். சித்திராபாசம் தேவர்களுக்கு உகந்தது. இவை உத்தமம் மத்தியமம் அதமம் என மூன்று வகைப்படும். செங்கற்களால் செய்யப்பட்ட உருவம் சிறந்தது. அதனினும் உயர்ந்தது அர்த்த சித்திரம். அதைவிடச் சிறந்தது மண்ணாற் செய்யப்பட்ட உருவமாகும். மண்ணாலும் மரத்தாலும் செய்யப் பெற்றது மேலானது. மரத்திற் செய்யப்பட்டதைவிடக் கல்லிற் செய்யப்பட்டது மிக மேலானது கல்லினும் உலோகத்தாற் செய்யப்பட்ட படிமமே மிக மிக உயர்ந்தது. உலோகங்களில் உயர்ந்தது பொன். நடுத்தர உலோகம் வெள்ளி. கடைத்தர உலோகம் செம்பு. இவைகளில் செய்யப்பெற்ற திருஉருவங்கள் முறையே உத்தம, மத்திம, அதமப் பயன்களை நல்கக் கூடியவை என்று ஆகமங்கள் அறிவுறுத்துகின்றன. திருஉருவம் அமைக்கும் சாதகங்கள் மண்ணில் உருவம் அமைத்தல் : ஆதிகாலத்தில் தமிழகத்தில் மண்ணால் திருஉருவம் அமைத் தனர். இரும்புக் காலம் எழுந்த பின் முதன் முதலாக மரத்தால் திருஉருவம் செய்தனர். பின்னர் கல்லில் அழகிய திருஉருவங்களைச் செதுக்கினர். இறுதியில் உலோக காலத்தில் பொன், செம்பு முதலியவைகளால் திருஉருவங்களை வார்க்க முற்பட்டனர். முதன் முதலாக மண்ணால் திருஉருவங்கள் அமைக்கப் பட்டதும் அவை எளிதில் மழை, காற்று முதலியவைகளால் சேதமுறாது அவைகளைச் சூளையில் வைத்துச் சுட்டு வெள்ளை, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் முதலிய வண்ணங்கள் தீட்டி அழகூட்டி வந்தனர். இன்றும் அவ்வுருவங்கள் சிற்றூர்களிலும் நகரங்களில் ஏழைகள் வாழும் இடங்களிலும் தாய்த் தெய்வங் களாகிய காளி, கூளி, பிடாரி, பேச்சி, இசக்கி, எல்லை, நீலி, மாரி முதலிய பெயர்களால் காட்சி அளிக்கின்றன. முற்காலத்தில் பெருந் தெய்வங்கள் கூடச் சுடுமண்ணால் செய்யப்பட்டுள்ளன. மண்ணால் செய்யப்படும் திருஉருவங்களுக்கு நமது சிற்ப நூற்களில் இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. தெய்வ உருவங்கள் செய்யப் பயன்படும் மண் சாங்கலம், அநூபம், மிச்சிரம் என மூன்று வகையாய்ப் பிரிக்கப்பட்டன என்பதை முதலில் நாம் அறிந்திருக்க வேண்டும். நிலத்தினின்று எளிதில் வெட்டி எடுக்க முடியாது உறுதியாக இருக்கும் மண்ணிற்குச் சாங்கலம் என்று பெயர். சிறு மணல் கலந்து அதிகச் சிரமம் இல்லாது வெட்டி எடுக்கப்படும் மண்ணானது மூன்று முழ ஆழம் வரையில் நன்றாக இருந்தால் அம்மண் அநூபம் என்று கூறப்படும். மேற்கூறப்பட்ட இருவகை மண்களும் கலந்த நிலையில் காணப்படும் மண்ணிற்கு மிச்சிரம் என்று கூறப்படும். மண், என்றும் நீர்வற்றாமலும் சுத்தமாகவும் மகிழ்ச்சிகர மாகவும் காணப்படும் ஆறு, குளம் ஆகியவைகளிலிருந்து எடுக்கப் பட வேண்டும். மண், வெளுப்பு, மஞ்சள், சிவப்பு, கருப்பு என நான்கு வகைப் படும். மண்ணை நிலத்தினின்று தோண்டி எடுத்து அதை நீரில் கலக்கிப் புதுத்துணியினால் வடிகட்டி எடுக்க வேண்டும். பின் அதை மட்பாண்டத்தில் நீர் சுண்டும் வரை வைத்திருக்க வேண்டும். அப்பால் அம்மண்ணைப் பத்திரமாகக் காப்பாற்ற வேண்டும். பிறகு நாற்பால் மரப்பட்டையின் சாற்றையும் அல்லது கசாயத்தையும் விட்டு அந்த மண்ணை நல்ல பாத்திரத்திலிட்டுப் பிசைய வேண்டும். அதை உருண்டையாக்கக் கூடிய வகையில் மறுபடியும் நீரைச் சுண்ட வைக்க வேண்டும். அதன் பிறகு திருபலோஷித் நீரை (கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகியவைகளின் தூளினை நீரில் ஊற வைத்து அந்த நீரை) விட்டு மண்ணை நன்றாகப் பிசைந்து அதை மீண்டும் நீர் சுண்டும்படி செய்ய வேண்டும். நீர் முழுதும் சுண்டாமல் உருண்டை பிடிக்கும் அளவிற்கு மண்ணைக்காயவைத்து உருண்டையாகச் செய்யவேண்டும். அம்மண் உருண்டையானது உள்ளங்கையில் வைத்து அழுத்தினால் இரேகைகள் பதியக் கூடிய பக்குவத்தில் இருக்க வேண்டும். அந்த மண்ணை எண் கோண வடிவமான உருண்டையாகக் கையினாலே செய்ய வேண்டும். அந்த உருண்டையின் சுற்றளவானது 11 அங்குலம் இருக்க வேண்டும். இம்மண் ஒரு படி அளவுடையதாய் இருக்க வேண்டும். பின், பொடிமணலையும் கருங்கல் (கூழாங்கல்) பொடியையும் சமஅளவு சேர்த்து அதை ¼ பங்கு எடுத்து மண்ணுடன் கலந்து திருபலா கசாயத்தைவிட்டு நன்றாகப் பிசைந்து 7 முதல் 10 நாள் வரை நாள்தோறும் பிசைந்து வைக்க வேண்டும். அப்பால் ரவை, கோதுமை, உளுந்து, காயாம் பூ அல்லது இலை (அல்லது காயம்பூ நிறமான உளுந்து) இவைகளைத் தூள் செய்து மண்ணில் 1/8 பாகம் எடுத்து மண்ணோடு கலந்து முற்றின தேங்காய் நீரை (மட்டையுடன் இடித்துப் பிழிந்த சாறு அல்லது இளநீரை) விட்டுப் பாத்திரத்தில் போட்டுக் கையினால் நன்றாய்ப் பிசைந்து 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். (அல்லது 10 நாள் நன்றாக மிதித்து வர வேண்டும்) சிரிவேட்டகம் (திருவட்டம் பிசின்) குக்குலம் (குக்கில்) குந்துருக்கம் (பூனைக்கண் குங்குலியம்) சர்ச்சரசம் (குங்குலியம்) இவைகளைப் பொடி செய்து 1/16 பங்கு, மண்ணுடன் கலந்து தயிரைப் பாத்திரத்தில் விட்டு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைய வேண்டும். அதற்குப் பிறகு சுக்கு, மிளகு, திப்பிலி, மஞ்சள் இவைகளின் தூளைச் சமஅளவு சேர்த்து அதை மண்ணில் 1/10 பங்கு கலந்து தேன், பால், நெய் இவைகளை விட்டுப் பாத்திரத்தில் கலக்க வேண்டும். விளாம்பிசின், கோட்டம், கைரிகம் (நற்செங்கல் அல்லது காவிக்கட்டி) தாளகம், சந்தனம், அகில், பச்சைக் கற்பூரம், கோரோசனை ஆகியவைகளைப் பொடி செய்து சமஅளவாகக் கூட்டி மண்ணில் 1/30 பங்கு கலந்து அதசீசு நேகம் (காயாஞ்செடி) அல்லது விதையின் எண்ணெய் அல்லது குழம்பை விட்டுக் கலந்து நன்றாகப் பிசைய வேண்டும். பொன், வெள்ளி ஆகியவைகளின் பொடியைக் கிடைத்த அளவு அந்த மண்ணுடன் சேர்த்துப் பிசைய வேண்டும். புற்று, மலை, ஆறு, வயல், நண்டுவளை, என்றும் நீர்வற்றாத ஏரி, கடல், யானைத் தந்தம், பசு அல்லது காளையின் கொம்பு, கலப்பையின் கொழு ஆகிய பத்து இடங்களிலிருந்து எடுக்கப்படும் மண்ணிற்குத் தசமிருக்கை என்று பெயர். இம்மண்ணைக் கிடைத்த வரையில் சம்பாதித்து அவைகளுடன் நல்ல மணப்பொருள்களைக் கலந்து விளாம்பிசின் அல்லது தேன்விட்டுக் குழப்ப வேண்டும். பிறகு, முதிர்ந்த தேங்காயை மட்டையுடன் இடித்துச் சாற்றை எடுத்துத் தச மிருக்கையில், மேலே 1, 1½ அல்லது, 2, 2½ அங்குலம் நிற்கும்படி 5 நாள் வரை வைத்திருக்க வேண்டும். அந்தத் தசமிருக்கையை மண்ணில் ¼ பங்கு கலந்து குழைத்து அதை இரச்சுபந்தனத்திற்கு மேலே பூச வேண்டும். அதற்கு மேலே மீண்டும் இரச்சுபந்தனஞ் செய்ய வேண்டும். முதல் இரச்சுபந்தனத் திற்கு மேலே மிருல்லேபமை செய்து மீண்டும் செய்யப்படும் இரச்சுபந்தனத்தின் கனமானது உறுப்புகளுக்கு ஏற்றவாறு 1, 2 அல்லது 3 அங்குலம் இருக்க வேண்டும். பின் மண்ணைப் பூசி உலரவைத்து அது உலருமுன் கவனித்து அவசியமான இடங்களில் மெல்ல மெல்ல மண்ணைப் பூச வேண்டும். (இருமுறை இரச்சுபந்தனம் செய்தபின்) சூலத்திற்கு வெளியே யுள்ள கனத்தை நான்கு பங்குகளாகச் செய்து கொள்ள வேண்டும். அந்த நாலு பங்குகளில் ஒரு பங்கு கனம் மண்ணைப் பூசுவதற்கு அநூபம் என்று பெயர். அதற்கு மேலே இரண்டு பங்குக்கனம் மண்ணைப் பூசுவதற்கு மிச்சிரம் என்று பெயர். அதற்கு மேல் ஒரு பங்கு மண்ணைப் பூசுவதற்குச் சாங்கலம் என்று பெயர். இம்மண் பூச்சுக்களைஅந்தந்த வகைமண்ணைக்கலந்து பொருத்தமாகச் செய்விக்க வேண்டும். கீழே கூறப்பட்ட மூன்று பாகத்தை நீக்கி, நாலாவது பாகத்தை (4வது பாகமாகப் பூச வேண்டிய மண்ணுடன்) சணல் முதலியவை (பஞ்சத்துகள்)களைக் கல்கத்துடன் நன்கு கலந்து சேர்த்து அந்தக் கல்கத்தினாலே காலக்கிரமத்தில் இலேபனம் செய்ய வேண்டும். இதனை மிருத் சம்சுகாரம் என்பர். இதன்பின் ஆறு, குளம், ஏரி, வயல் போன்ற இடங்களில் உப்புநீர் இன்றி நல்ல நீருள்ள இடத்தில் நீருடன் கலந்திருக்கும் பெருமணல் அல்லது சுக்கானில் தேறிய சுக்கைப் போன்ற நிறமுள்ளதாகப் பார்த்து எடுத்து அதைக்கழுவி நன்கு உலரவைத்துப் பின் அதை நன்றாய்ப் பொடி செய்ய வேண்டும். பின் அப்பொடியைத் திருபலா கசாயத்தை விட்டுக் கலந்து பிண்டமாகச் செய்து உலர வைக்க வேண்டும். விளாம்பிசின் நீர் மூன்று விதமாகும். அவை முறையே பிசினுக்கு 5 பங்கு அல்லது 5½, 6 பங்கு நீருடன் கூடியவைகளாகும். இவைகளுக்கு முறையே சுருவம், சுவச்சம், சேகம் என்று பெயர் கூறப்படும். முதலில் சுவச்சம், சேகம் ஆகிய இருவித நீரையும் விட்டு மிருத் பிண்டத்தை வெண்ணெயைப் போல் பிசைய வேண்டும். பிறகு பருத்திப் பஞ்சுத் துகள்களை மண்ணுடன் கலந்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கல்கத்தை ஒடித்தால் ஒடித்தவாயானது ஒடித்த வாழைத் தண்டின் ஒடிபட்ட இடத்தைப் போல் இருக்க வேண்டும். இத்தகைய கல்கத்தையே முதலில் பூச வேண்டும். மத்திய பந்தகல்கமானது மூன்று விதப்படும். அவை முறையே பிசினுக்கு 3, 3½ அல்லது 4 பங்கு நீருடன் கூடியவைகளாகும். இவைகளில் பிந்திய இரண்டு நீர் வகைகளை விட்டு மண்ணை நன்றாகப் பிசைய வேண்டும். அப்பால் அம்மண்ணை 2 அல்லது 3 யவைகணத்திற்கு மெல்ல மெல்லப் பூச வேண்டும். சூலத்தில் இடைவெளிவிடாமலும் இடுக்குகள் இல்லாமலும் நன்கு கவனித்துப் பார்த்துச் சுத்தமாகப் பூச வேண்டும். இவ்விதம் மிருத்து லேபனம் செய்தபின் அதை 2, 1½, அல்லது 1 மாதம் காய வைக்க வேண்டும். அப்பால் கூர்ச்சத்தை வைத்து (மண்ணுடன்) அண்ட நீர்வகைகளைக் கலந்து பிசைய வேண்டும். பின் எஞ்சிய நீரைவிட்டுக் கலந்து பிசைந்து அந்தக் கல்கத்தை (கலவையை) உறுப்புக்களில் பிரமாணந்தமாகப் பூச வேண்டும். உறுப்புக்களின் பிரமாணங்களை நன்கு கவனித்துத் தகுந்தவாறு அமைக்க வேண்டும். அங்கம், உபாங்கம், பிரத்தியாங்கம் ஆகியவைகள் எழிலுடன் திகழுமாறு தீட்ட வேண்டும். உறுப்புக்கள் (அங்கங்கள்) நான்கு வகைப்படும். அவை 1. மகா அங்கம், 2. அங்கம், 3. பிரத்தியாங்கம், 4. உபாங்கம் எனப்படும். தலைக்கு மகா அங்கம் என்றும் கழுத்து, இருதயம், வயிறு, மேடரம், அடங்கிய உடற்பகுதிக்கு அங்கம் என்றும், கால், கை ஆகிய பகுதி களுக்கு உபாங்கம் என்றும் அணிகளுக்குப் பிரத்தியாங்கம் என்றும் பெயராகும். இவைகளுடன் சடங்கங்களையும் கல்பிக்க வேண்டும். ஐம்பொறிகளும் கை, கால் முதலிய உறுப்புக்களும் அதனதன் செயல்களை ஆற்றத் தக்கதாய் அமைக்க வேண்டும். விளாம் பிசினுக்கு 2½ அல்லது 3 பங்கு நீர்விட்டு நன்றாகப் பிசைந்து அந்நீரில் புதுத்துணியை நன்றாக நனைத்து அத்துணி யினால் படிமத்தைப் போர்த்த வேண்டும். அதற்கு மேல் கல்கலேபனம் செய்து 10 நாட்கள் வைத்திருக்க வேண்டும். கல்கலேபனமானது யவையில் 1/8 பங்கு கனம் இருக்க வேண்டும். 10 நாட்கள் சென்று கூர்ச்சத்தினால் (கூர்ச்சம் - தூரிகை அதாவது வண்ணந்தீட்டும் கருவியினால்) பிசின் நீரை எடுத்து எல்லா உறுப்புக்களையும் நன்கு கவனித்துப் பார்த்துப் பூச வேண்டும். அதற்கு மேல் அணிபெறச் செய்ய வேண்டும். இன்னும் ஒரு முறை கல்கலேபனம் செய்து அதற்கு மேல் வெள்ளை தீட்ட வேண்டும். இதற்கு மேல் வண்ணங்கள் தோன்றிய விதங்களையும் அவைகளின் பிரிவுகளையும், அதைத் திருஉருவில் தீட்ட வேண்டிய முறைகளையும் விரிவாகக் காசியபம், சிற்பரத்தினம் போன்ற நூற்களில் காணலாம். மக்கள் இன்று சாதாரணமாக வெள்ளை, கருப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா போன்ற நிறங்களைத் தான் அறிவார்கள். ஆனால் ஆங்கிலத்தில் இன்று நூற்றுக்கணக் கான வண்ணங்களின் பெயர்கள் உள்ளன. தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது சிற்பநூற்கள் சுமார் 40க்கு மேற்பட்ட வண்ணங்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பதோடு அந்த வண்ணம் எதைப் போன்று இருக்கும் என்றும் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் நான்கு வண்ணங்களின் பெயர்களைக் கூட அறியார்கள். சிலைகள் அமைத்தல் கல்லிலே அமைக்கும் திருஉருவத்தைச் சிலை என்பர். சிலையை அமைக்கும் சிற்பி மலை, கடல், ஆறு, நகர், காடு ஆகிய இடங்களில் மரங்களின் அருகிலும் கோயில் பக்கங்களிலும் ஆற்றங்கரை, குளத்தங்கரை அருகில் இருக்கும் கற்களைத் தோண்டி எடுத்துச் சிலை அமைப்பார்கள். ஏனைய இடங்களிலுள்ள கற் களைச் சிலா சங்கிரஹணம் செய்யக் கூடாது என்று சிற்பநூற்கள் கூறுகின்றன. சிலை செய்யும் கற்கள் நான்கு வகைப்படும். அவை : 1. வெண்மை, 2. சிவப்பு, 3. மஞ்சள், 4. கருப்பு எனப்படும். 1. வெள்ளைக் கல் வெண்மை நிறக் கல்லானது பசுவின் பால், சங்கு, முல்லைப்பூ, நிலவு, முத்து, பளிங்கு (படிகம்), மல்லிகைப்பூ போன்ற ஏழு பொருள்களுக்கு ஒப்பானதாக இருக்கும். 2. செங்கல் சிவப்பு நிறமான கல், செம்பரத்தம்பூ, புரசம்பூ, பட்டுப்பூச்சி (இந்திரகோபம்), சாதிலிங்கம், முயல் உதிரம், மாதுளம்பூ, பந்தூக மலர் (சிவப்புப் பூவுடன் கூடிய பெருமருந்துப்பூ போன்ற ஏழு விதப் பொருட்களின் வண்ணங்களை ஒத்திருக்கும். 3. மஞ்சள் கல் மஞ்சள் வண்ணக் கல்லானது பொன், சரக்கொன்றை, செண்பகப்பூ, மஞ்சள், மஞ்சள் நிறக்குறிஞ்சிப் பூ1, எலுமிச்சம் பழம், அரிதாரம் ஆகிய ஏழு நிறம் உடையதாய் இருக்கும். 4. கருங்கல் கருங்கல் பூனைக்கண் (மகிசாட்சம்), குங்கிலியம், அஞ்சனக் கல், நீலோத்பலம், கருங்குளவி, மயில்கழுத்து, மசிபத்திரம், இராச வர்த்தம் (கருமையான தேன் நிறம்), கருப்புப் பயிறு, குறும்பயறு போன்ற பத்து வண்ணங்களை ஒத்திருக்கும். வெண்மை, சிவப்பு, மஞ்சள், கருப்பு வண்ணச் சிலைகள் முறையே அந்தணர், அரசர், வணிகர், உழவர் குலங்களுக்கு உரியவை களாகக் கூறப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவைகளை அளிக்கும். அந்தந்த இனத்திற்குரிய சிலைகள் அந்தந்த இனத்திற்கு உயர்ந்ததாகும். அந்தணர்கள் கருப்பு, மஞ்சள் முதலிய நிறச்சிலை களை வணங்கலாம். ஆனால் உழவர்கள் வணிகர்கள் ஆகியோர்கள் உயர்ந்த குலத்திற்குரிய சிலைகளை வைத்துப் பூசிக்கக் கூடாது. ஆசாரியன், சிற்பி ஆகிய இருவரும் வெண்மையான ஆடை களை அணிந்து வெண்சந்தனம் பூசி வெள்ளைப் பூக்களாலான மாலைகளை அணிந்து பஞ்சாங்கப் பூசனங்கள் பூண்டு கோடரி, கடப்பாரை, உளி முதலிய ஆயுதங்களுடன் கல் இருக்கும் இடத் திற்குப் போய் மன அமைதியுடன் அக்கல்லை வலம் வந்து குற்றம் இல்லாத கல்லைக் கண்டு சிறப்பித்து அக்கல்லின் தன்மையை நிச்சயித்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் மழையில் நனைந்து கொண்டிருப்பது அல்லது வெயிலில் காய்ந்து கொண்டிருப்பது, தீயின் நாற்றமுள்ளது, (கல் தீயில் பொசுங்கியது), உப்பு நீர் படிந்தது, கெட்ட இடத்தில் இருப்பது, நீர்க்கரையில் இருப்பது, வேறு காரியத்திற்குப் பயன் பட்டது, மணல் கலந்திருப்பது, சேறு படிந்திருப்பது, சிதைவுற்றது (அழுத்தம் விசிறிப் போனது), பார்க்கப் பயங்கரமானது, கோடுகள், புள்ளிகள், களங்கங்களுடன் கூடியது போன்ற கற்கள் சிலைகள் செய்யக் கூடாதவைகளாகும். குற்றம் உள்ள கற்கள் 1. இரேகை 1. கயிறு விழுந்தது (கல்லின் நடுவே கயிறு போன்ற இரேகை யுள்ளது) அல்லது கயிறு போன்ற தோற்றம் உடையது. 2. பகலவன் (கதிரவன்) கதிர்கள் பாய்ந்தது 3. மழைக்கால் போன்ற உருவம் உடையது என மூன்று வித இரேகைகள் உள்ள கற்கள். 2. பிந்து 1. நாவல்பழம் போன்ற உருவம் உடையது. 2. திராட்சை அல்லது முந்திரிப் பழம் அல்லது காய் போன்ற வடிவம் வாய்ந்தது. 3. வேறு எந்த விதமான வட்ட வடிவமுள்ளது. இம்மூன்றும் பிந்து உடையது எனக் கூறப்படும். 3. களங்கம் 1. இரும்பு நிறம் உடையது. 2. கருங்குளவி போன்ற நிறம் உடையது. 3. மயில் இறகு போன்ற நிறமுடையது எனக் களங்கம் மூன்று விதமாகும். இத்தகைய குறைகள் (தோசங்கள்) உள்ள கற்கள் திருஉருவங்கள் செய்வதற்குத் தக்கவையல்ல. 1. பேரீச்சை இலை போன்ற கோடுடையது. 2. அருகங்கட்டை போன்ற கோடுடையது. 3. மூங்கில் முளை போன்ற கோடுடையது. 4. எட்டுக்கால் பூச்சியின் கால்களைப் போன்ற நீண்ட கோடுகளை யுடையது. 5. வெள்ளை நிறம் இல்லாத ஏனைய நிறமுள்ள கல்லில் வெள்ளை இரேகை உள்ளது ஆகிய ஐந்து வகைக் கற்களால் ஆன சிலைகள் எல்லாச் செல்வங்களையும் நல்கும். (எனவே முதலில் கூறப்பட்ட 4 விதக் கோடுகளும் வெள்ளைக் கற்களுக்குக் கூறப்பட்டவைகளாம்) கருப்புக் கல்லில் கருப்புக் கோடும் வெள்ளைக் கல்லில் கருப்புக் கோடும் அழிவை உண்டு பண்ணும். எனவே அடியிற் கூறப்பட்ட குற்றமற்ற கற்களைக் கொண்டு சிலை செய்வது சிறந்தது. நல்ல கற்கள் கருப்பு நிறமான கல்லும் பச்சை நிறமான கல்லும் (அல்லது இரு நிறமும் கலந்த கல்லும்) கிரகிக்கதக்கதாம். வெள்ளைக் கல் சிறப்புடன் கொள்ளத் தக்கது. பேரீச்சை இலையின் நிறமுடைய கல்லும் அருகங்கட்டையின் நிறமுடைய கல்லும் நல்ல கற்கள். நற்பயன் நல்கத்தக்கன. மிகவும் கருப்பான நிறமுடைய கல் நற்பயனை நல்காது என நூற்கள் நுவல்கின்றன. களங்கம் உள்ள கற்கள் நோயை உண்டாக்கும்; நாடு நலியும். பிந்து (புள்ளி), தோசம் (குற்றம்) உள்ள கற்கள் மக்களுக்கு அழிவையும் செல்வ நாசத்தையும் உண்டாக்கும். எனவே கற்களின் குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து குற்றமுள்ள கற்களை அகற்றிக் குணமள்ள அழகிய வண்ணமுடைய கற்களைத் தேடிக் கண்டுபிடித்துச் சிலைகள் செய்ய வேண்டும். ஒலி, உருவம் இன்னோரன்ன பேதங்களால் பால, யுவதி, விருத்தை என்றும் ஆண்கல், பெண்கல், அலிக்கல் என்றும் சிற்ப விற்பன்னர்கள் கற்களைப் பலவிதமாகப் பிரித்திருக்கின்றார்கள். கல்லை எடுக்க நிலத்தைத் தோண்டும் பொழுது சத்தமும், குட்டையான உருவமும் உடைய கல் கிடைத்தால் அதைப் பாலக்கல் என்று கூறுவர். பனையைப் போன்ற ஓசையும் மணியைப் போன்ற ஒலியும் நீண்ட வடிவமும் வாய்ந்த கல்லைப் பெண் கல் என்று கூறுவர். இரைச்சலான ஒலியைத் தரும் கல் விருத்தக் கல் என்று கூறப்படும். மணியோசையைப் போல் அதிக ஒலிதரும் நீண்ட வடிவம் வாய்ந்த கல் ஆண்கல் என்று கூறப்படும். பளபளப்பின்றி உறுதியின்றிக் கரடுமுரடாய் ஒலியில்லாமல் இருக்கும் கல் அலிக்கல் என்று கூறப்படும். இஃதன்றி உருவபேதத்தைக் கொண்டும் கல்லை ஆண், பெண், அலி, பால, விருத்த என ஐந்து விதமாகப் பிரித்தும் கூறப்பட்டுள்ளன. சதுரமாகவும் எண்கோணமாகவும் உள்ள கல், பெண்கல் ஆகும். நீண்ட சதுரமாகவும் வட்டவடிவமாகவும் பத்துக் கோண மாகவும் பன்னிரண்டு கோணமாகவும் இருப்பது ஆண் கல் எனவும் நல்ல வட்ட வடிவமாக இருப்பது அலிக்கல் எனவும் பத்துக் கோணமாக இருப்பது பாலக்கல் எனவும் பன்னிரண்டு கோணமாக இருப்பது விருத்தக் கல் எனவும் கூறப்படும். பாலக்கல், விருத்தக்கல் ஆகிய இருவிதக் கற்களும் சிலைகள் செய்வதற்கு ஏற்றவையல்ல. ஆண்கல்லில் இலிங்கம் செய்ய வேண்டும். பெண் கல்லால் பீடத்தை (பிண்டிகையை)ச் செய்ய வேண்டும். அலிக்கல்லால் பாதா தாரத்தை (பாதாதாரம் - இலிங்கத்தின் அடித்தலத்தின் ஆதாரம்) செய்யவேண்டும். இந்த விதிகளுக்கு மாறாகச் சிலைகள் செய்தால் சிலைகள் செய்யும் சிற்பிக்கு நாசம் உண்டாகும். தேசிகன், கிழக்கு நுனியாகவோ, வடக்கு நுனியாகவோ இருக்கும் கல்லைக் கண்டுபிடிக்க வேண்டும். கிழக்கு நுனியான கல்லில் மேற்குப் பக்கம் அடிப்பாகமாகும். வடக்கு நுனியான கல்லில் தென்பக்கம் அடிப்பாகமாகும். கிழக்குப் பக்கமும் வடக்குப் பக்கமும் இலிங்கத்தின் நுனிப்பக்கம் (தலைப்பக்கம்) ஆகும். கல்லின் அடிப்பக்கம் முகம் (முன் பக்கம்) ஆகும். மேல்பக்கம் பின்பக்க மாகும். இவ்வாறு கல்லை நன்கு சோதித்துப் பார்த்து அந்தக் கல்லை இருதய மந்திரம் செபித்துப் பசும்பாலினால் நன்றாக அலம்பிச் சுத்தம் செய்ய வேண்டும். பின் அந்தக் கல்லைத் தூக்கி நிறுத்திச் சத்திய மந்திரத்தினாலே சந்தனம் பூ முதலியவைகள் கொண்டு வழிபட வேண்டும். அதன்பின் ஈசானிய திக்கில் சாந்தி ஓமம் செய்ய வேண்டும். அக்கினி, ஆதாநம் முதலிய எவ்வாவற்றையும் முறைப்படி செய்ய வேண்டும். இருதய மந்திரத்தால் சமித்துகளையும் மூல மந்திரத்தால் நெய்யையும் அகோர மந்திரத்தால் கருவையும் (அன்னத்தையும்) புருட மந்திரத்தால் தண்டுலத்தையும் (அரிசையை யும்) ஈசானமந்திரத்தால் எள்ளையும், கவச மந்திரத்தால் கடுகையும் ஓமம் செய்ய வேண்டும். பின் சமித்து நெய், அன்னம், அரிசி, எள், கடுகு ஆகியவை ஒவ்வொன்றையும் முறையே 100, 50 அல்லது 25 தடவை ஓமம் செய்ய வேண்டும். அக்நே மந்திரத்தால் சுவிட்டகிருத ஓமத்தைச் செய்து பின் பூரணா ஹூதி ஓமத்தைச் செய்ய வேண்டும். பின் அக்கினியை உத்வாசனம் செய்து விட்டு, பூசை செய்த நிர்மாலியப்பூ முதலியவைகளை எடுத்துக் களைய வேண்டும். கல்லைச் செதுக்கும் ஆயுதத்தைத் தவிர மற்றவைகளை மந்திரத் தினால் பூசை செய்ய வேண்டும். அபசர்ண மந்திரத்தைச் சொல்லிக் கல்லை உடைக்க வேண்டும். பின் சிற்பி செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும். திருஉண்ணாழிகையின் (கர்ப்பகிருகத்தின்) அளவு, அதன் வாயிற்படியின் அளவு, உண்ணாழிகையின் தூண் மட்டம் (தூண் அளவு), தலமானம் (உண்ணாழிகையின் பூ மட்டத்தின் பக்கத்தின் அளவாகும். வெளிப்பிராகாரத்தின் வெளிப்பக்கத்தின் நீளமும் தலமானமாகக் கூறப்பட்டிருக்கிறது. இதுவே பாதமானம் என்றும் கூறப்பட்டிருக்கிறது) அத்தமானம், தலமானம், அங்குலமானம் என்று இலிங்கமானது ஏழுவித மானங்களால் நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. இந்த ஏழுவித மானங்களிலும் பலவித அளவுகள் கூறப்பட்டிருக்கின்றன. இஃதன்றி உண்ணாழிகையின் அளவில் 3/5 பங்கு உயரம் இருக்கும் திருஉருவம் உத்தமலிங்கம் என்றும், 1/2 பங்கு உயரம் இருப்பது மத்திமலிங்கம் என்றும், இந்த இரண்டு அளவிற்கும் மத்தியில் உள்ள அளவை அதாவது 1/2க்கு மேல் 1-வரையுள்ள மத்தியத்தை 9-பாகங்களாகச் செய்ய வேண்டும். அவைகளில் ஒவ்வொரு அளவும் தனித்தனியே 9 விதமான இலிங்கமானமாகும். இந்த ஒன்பது விதமான இலிங்க மானங்களில் அதிக அளவுள்ள மூன்றும் உத்தமம் என்றும் மத்தியிலுள்ள மூன்றும் மத்தியமமாகும் என்றும் குறைந்த அளவுள்ள மூன்றும் அதமம் ஆகும் என்றும் கூறப்படுகின்றன. இவ்விதமாகத் திருஉண்ணாழிகையின் அளவினால் கிடைக்கும் இலிங்கத்தின் உயரம் ஒன்பது விதமாகும். திருஉண்ணாழிகையின் வாயில் உயரத்திற்குச் சமமான திருஉருவம் உத்தமலிங்கமாகும். 2/3 பங்கு உயரம் உள்ளது அதமலிங்கமாகும். இவ்வாறு பல்வேறு விதமான அளவை முறை களை வகுத்துத் திருஉருவம் சமைக்க வேண்டிய முறைகள் சிற்ப நூற்களில் நன்கு விளக்கப்பட்டுள்ளன.1 அளவை முறை திருஉருவங்களை அமைக்கும் முறைகள் ஆகமங்களிலும் சிற்ப நூற்களிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. படிமங்களைச் செய்யும் தபதிகள் இந்த நூற்களை அனுசரித்து திருஉருவங்களை அமைக்கிறார்கள். சிவன் கோயில்களில் பெரும்பாலும் திரு உண்ணாழிகையில் பிரதிட்டை செய்யப்பட்டிருப்பது இலிங்கமே யாகும்.2 இலிங்கம் 7 வகைப்படும் 1. சுயம்பு, 2. தேவிகம், 3. தெய்வீகம், 4. இராட்சசம், 5. மானிடம், 6. ஆர்சம், 7. பாணம் எனப்படும். இஃதன்றியும் பலபிரிவுகள் உள. இவை ஒவ்வொன்றிலும் பல உட்பிரிவுகளும் உள. ஆனால் படிமங்களைச் செய்பவர்கள் இலிங்கங்களைப் பொதுவாக நிட்களம், சகளநிட்களம், சகளம் என்று பிரித் துள்ளார்கள். இவை நமது படிமங்களின் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டவைகளாகும். நிட்களம் என்பது உருவமின்றி எல்லாக் கோயில்களிலும் விளங்கும் சாதாரண இலிங்கமாகும். சகளநிட்களம் என்று கூறப்படுவது முகலிங்கமாகும். அதாவது ஆவுடையாருக்கு மேல் உருண்டையாகத் தூண்வடிவில் காணப்படும் வடிவத்தில் கண், மூக்குச் செவி, வாய், நெற்றி, தலை, மகுடம் முதலியவைகள் மட்டும் காணப்படுவதாகும். சகளலிங்கம் என்பது முகம், கை, கால், பாதம், மார்பு முதலிய எல்லா உறுப்பு களும் அமைந்த மூர்த்திகளின் உருவமாகும். அதாவது தென்முகக் கடவுள் திருமணமூர்த்தி (கல்யாண சுந்தரர்) பிட்சாடனர் போன்ற முழுஉருவம் ஒளிரும் மூர்த்தமாகும். அட்ட மூர்த்தங்களும் மகாதேவ மூர்த்தங்களும், சிவமூர்த்தங்களும் நிட்களலிங்கத்தினின்றே பரிண மித்தவை என்று சிவாகமங்கள் கூறுகின்றன. மூர்த்திகளின் உருவங்கள் ஆகமங்களை அனுசரித்து அணு வளவும் பிசகாது செய்யப்படும். அளவைகள் சிற்ப நூற்களைத் தழுவிச் செய்யப்படும். தபதிகள் கையாளும் அளவைகள் அங்குலம் தாலம் என்று கூறப்படும். முகத்தின் நீளம் தாலம் எனப்படும். ஒரு தாலத்தின் பன்னிரண்டில் ஒரு பங்கு அங்குலம் என்று கூறப்படும். இந்த அங்குலம் நான்கு வகைப்படும். அவை பேராங்குலம், மானாங்குலம், மாத்திராங்குலம், தேகலப்தாங்குலம் என்பன. பேராங்குலமாவது உருவத்தின் விரல் அகலத்தை அங்குலமாகக் கொள்ளுதலாகும். மானாங்குலம் மட்டப்பலகையில் பொறிக்கப் பட்ட நிலையான அளவாகும். அதாவது 3/4 அங்குலம் 1 இஞ்சு ஆகும். மாத்திராங்குலம் படிமத்தைச் செய்யும் தபதியின் நடுவிரலில் உள்ள இரண்டாவது வெளியின் நீளமாகும். தேகாப்தங்குலம் என்பது படிமத்தின் உருவத்தை 124 அல்லது 120 அல்லது 116 பாகமாகப் பிரித்த ஒரு பகுதியாகும். இது தாலங்களுக்குத் தக்கவாறு மாறுதல் பெறும். தமிழகத்தில் அளவு கோல்கள் 24 விரல்கள் (அங்குலம்) கொண்டவையாக இருக்கின்றன. நூனெறி மரபி ரைங்க மளக்குங் கோலென விருபத்து நால் விரலாக என்று தமிழ் இலக்கியங்களில் கூறப்படுவது நமது கருத்தை வலியுறுத்துவதாகும்.1 இஃதன்றிச் சில அறிஞர்கள் தாலம் என்ற வடமொழிக்கு உள்ளங்கை என்று பொருள் கூறுகிறார்கள். இதனை ஆதரித்து சில தபதிகள் உள்ளங்கையின் குறுக்களவைத் தாலம் என்று கூறுகி றார்கள். ஆனால் அகராதிகளில் தாலம் என்பது ஒரு சாண் அல்லது 9 அங்குலம் என்று கூறப்பட்டுள்ளது. வீடுகளில் சிறு சந்தின் வழியாகக் கதிரவனின் கிரணங்கள் வீட்டிற்குள் வருகின்றன. அவற்றில் மிகச் சிறிய தூசிகள் போன்ற தூளிகள் இருப்பதைப் பார்க்கின்றோம். மிக நுண்ணிய ஒரு தூளி பரமாணு எனப்படும். இந்தப் பரமாணுக்கள் ஒரு தூளி பரமாணு எனப்படும். இந்தப் பரமாணுக்கள் பலசேர்ந்து ஒரு இரேணு ஆகிறது. இவ்வாறு பல இரேணுக்கள் சேர்ந்தால் உரோம்கலி ஆகிறது. இவ்வாறே சீகா, யூகம், யவம் என்று அளவைகள் வளர்ந்து கொண்டே போகின்றன. யவம் என்றால் கோதுமை. ஒரு கோதுமையின் மத்தியின் குறுக்களவிற்கு யவம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. யவம் - அதாவது கோதுமை அரிசியின் குறுக்களவு எட்டுக் கொண்டது ஒரு அங்குலம் ஆகும். பன்னிரண்டு அங்குலம் ஒரு தாலமாகும். இரண்டு தாலங்கள் கொண்டது ஒரு சிஷ்டு - கதம். இருபத்தேழு அங்குலம் கொண்டது ஒரு தனுர்க்கிரஹம். இவ்வாறே முழம் சிஷ்ட்டு, பிரபத்தியம், தனுர் முஷ்ட்டி, தனுர்கிரகம் என்று நான்கு வகையாகச் சிற்ப அளவைகள் கணக் கிடப்படுகின்றன. சயனம், ஆசனம் ஆகியவைகளைச் சிஷ்ட்டு அளவிலும் பிரகாரம், அம்பலம், மண்டபம், இல்லங்கள் முதலியவைகளைப் பிரபத்தியம் என்ற அளவிலும் அரண்மனை, குளம், காளி கோயில் முதலியவைகளைத் தனுர்முஷ்டி அளவிலும் ஆறு, வாய்க்கால், தோண்டுவது, சாலைகள் அமைப்பது போன்றவைகளைத் தனுர்க் கிரக அளவிலும் செய்ய வேண்டும். இந்த முறை மானாங்குலம் என்று கூறப்படும். இது காரணாகமத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இஃதன்றி, எல்லாப் பொருள்களுக்கும் ஒரு பொதுவான அளவை முறையும் சிற்ப நூற்களில் கூறப்பட்டுள்ளது. அது அடியில் வருமாறு : 8 பரமாணு = 1 வாலாக்கிரம் 8 வாலக்கிரம் = 1 இலீக்கியை (இலீட்சை) 8 இலீக்கியை = 1 இயூகை 8 இயூகை = 1 இயவை 8 இயவை = 1 மாநாங்குலம் 24 அங்குலம் = 1 ஷ்ட்டு (2 முழம்) சிற்பியின் வலக்கை நடுவிரலின் நடுக்கணுவின் நீளம் அல்லது அகலமானது மாத்திராங்குலம் எனப்படும். படிமத்தின் உயரத்தை 124 கூறுகளாகச் செய்யது அவைகளில் ஒரு கூறு தேகலப்தாங்குலமாகும். மாத்திரம் - மோட்சம். அம்பரம் - விஷ்ணு - முக்தம் இச் சொற்கள் ஓர் அங்குலத்தின் பெயர்கள். பட்சம் - அட்சி - கோலகம் - அசுவிநீ - விஹகம் - கலா - துவிஜன் - யுகமம் - அத்யுக்தியம் - வாயு சரணம் இப்பதங்கள் 2 அங்குலத்தின் பெயர்களாகும். ஈசாட்சி - மத்தியம் - காலம் - குணம் - அக்கினி ஆகிய பதங்கள் 3 அங்குலத்தின் பெயர்களாகும். கரணம் - ஜாதி - வர்ணம், பிரதிட்டை, வேதம், தோயம், யுகமத்துரியம் - அபஜ ஜானனம், பாகம், முஷ்டி இச்சொற்கள் 4 அங்குலத்தின் பெயர்கள். விசயம் - இந்திரியம், பூதம், இசு, பிருதிவீ, சுப்பிரதிஷ்டிதா (ஈசானனம் - கர்மாங்கம்) இச்சொற்கள் 5 அங்குலத்தின் பெயர் களாகும். சமயானனம், கர்மா, அங்கம், கௌசிகம், இருது, குமாரன், கிருத்திகை, இரசம், காயத்திரி, தூமம் இப்பதங்கள் 6 அங்குலத்தின் பெயர்கள். அம்போநிதி, பாதாளம் லோகம், உஷ்ணிக், உரோஹிணி, நகம், மாதுரு, தாது, தூவீபம், முனிகிச் சொற்கள் 7 அங்குலத்தின் பெயர்களாம். பந்தம் அனுஷ்ட்டுப் வசு, தணம், உரகாதிபர், திக்கசம், லோகபாலர் ஆகிய சொற்கள் 8 அங்குலத்தின் பெயர்களாம். நவ, நந்தர் கிரகம், இரத்தினம், பிருகதி, திரி திரி, சூத்திரகம், மார்க்கம், அத்துவா, கதி ஆகிய பதங்கள் 9 அங்குலத்தின் பெயர் களாகும். பிராதுர்பவம், நாடி, தருமம், பங்கதி, திகருவிதி, சோதனம், சன்மகம் ஆகிய இச்சொற்கள் 10 அங்குலத்தின் பெயர்களாம். திருஷ்ருப், உருத்திரன் ஆகிய சொற்கள் 11 அங்குலத்தின் பெயர்களாம். இயமம், இராசி, முகம், தாலம், விததிர பிரதேசி நீ, திரிபாகம் ஆகிய இச்சொற்கள் 12 அங்குலத்தின் பெயர்களாம். மானம், பிரமாணம், உன்மானம், பரிமாணம், உபமாணம், இலம்பமானம் என மானம் (அளவு) ஆறு வகைப்படும். உருவங்களின் உயரம் அகலம் இரண்டிற்கும் பொதுவாக மானம் என்று சொல்லப்படும். விஷ்கம்பம், விசாலம் என்னும் பதங்கள் பிரமாணத்திற்குப் பயன்படுத்தப்படும். (இவை பொதுவாக அகலத்திற்குப் பயன் படுத்தப்படும் சொற்களாகும்.) உச்சிரயம், துங்கம், உச்சிராயம், உன்னதம், உதயம், உத்செதம், உச்சம், அர்த்தம் ஆகிய பதங்கள் உத்மானம் எனப்படும். (இவை உயரத்திற்குப் பயன்படுத்தப்படும் பதங்கள்) பரிணாமம், நாகம், விருதி, ஆவிருதி, ஆவிருதம் ஆகியவைகள் பரிணாஹம் எனப்படும். (இவை சுத்த அளவிற்குப் பயன்படுத்தப் படும் பதங்கள்.) நீப்பிரம், விவரம், அந்தரம் ஆகிய பதங்கள் உபமானம் எனப்படும். (இவைகள் மத்தியமானத்தை வெலத்தியைக் கூறும் பதங்கள்) உருவங்களின் பக்கங்கள் முன்பக்கம் (பின்பக்கம்) இவை களில் கயிறுகளைத் தொங்கவிட்டு அக்கயிறுகளிலிருந்து உருவங் களை அளவிடுவதற்கு இலம்பமானம் என்று கூறப்படும். அமரம் என்னும் நூலில் பெருவிரலில் இருந்து முறையே சுட்டுவிரல் நடுவிரல் அணிவிரல் வரையுள்ள அளவிற்கு முறையே பிராதேசம், தாலம் கோகர்ணம் என்று கூறப்படுகிறது. சிற்ப ரத்தினம் என்னும் நூல் பெருவிரலில் இருந்து சுட்டுவிரல் முதலிய 4 விரல்கள் வரையுள்ள அளவிற்கு முறையே பிராதேசம், தாலம், கோகர்ணம், விததி என்று கூறுகிறது. ஒரு படிமத்தின் உயரத்தை அந்தந்த வடிவத்திற்குரிய தாலக் கணக்கில் பிரித்து அளவு காண்பதே தேகாங்குலம் எனப்படும். இந்த அளவு முறைகளில் படிமங்களைப் பலவித அளவு முறையில் செய்கின்றார்கள். படிமத்தின் உயரத்தை அளவிடுவது மானம் எனப்படும். சுற்றளவை அளவிடுவது பிரமாணம் எனவும், கன அளவைக் கணக்கிடுவது நாக மானம் எனவும் நெற்றி நாசாக்கரம் தொட்டுப் பாதம் வரை அளவிடுவது இலம்பமானம் எனவும் பிரதிட்டை செய்யப்படும் உருவங்கள், பீடங்கள் முதலியவைகளை அளவிடுவது உள்மானம் எனவும் கூறப்படும். ஒரு படிமம் 7 தா உயரமிருந்தால் வாமனம் எனவும் 8 தாள உயரமிருந்தால் மானுடம் எனவும், 9 தால உயரமிருந்தால் தெய்வீகம் எனவும், 10 தால உயரமிருந்தால் இராக்கதம் எனவும் கூறப்படும். மூர்த்திகளின் அளவைகள் சிற்பிகள் தம் விருப்பப்படி அல்லது மன்னன் அல்லது மக்கள் விருப்பப்படி திருஉருவங்களுக்கு அளவுகள் கற்பிக்கக் கூடாது. அதற்கு ஆகமங்களும் சிற்பநூற்களும் சில விதிகள் கூறுகின்றன. மூர்த்திகளின் உயரத்தை அடியிற் கண்ட பதினொரு வகைகளில் நிர்ணயம் செய்யலாம் என்று சகளாதிகாரம் கூறுகிறது. சில சிற்ப நூற்களில் ஒன்றிரண்டு விதிகள் கூட்டியும் குறைத்தும் கூறியிருக் கலாம். தபதிகள் சிற்ப நூற்களில் ஏதாவது ஒன்றைப் பின் பற்றவேண்டும். அகத்தியம் அருளிய சகளாதிகாரம் என்னும் நூலில் மூர்த்திகளின் அளவைப் பற்றி நன்கு கூறப்பட்டுள்ளது. 1. திருஉண்ணாழிகையில் உள்ள இலிங்கத்தின் அளவைக் கொண்டும். 2. திருஉண்ணாழிகையின் உட்புற அளவைக் கொண்டும் 3. திருஉண்ணாழிகையின் வாயில் அளவைக் கொண்டும் 4. திருஉண்ணாழிகையின் அதிட்டானம் அல்லது அடிப்படை யின் அளவைக் கொண்டும் 5. பாதம் அதாவது அடிப்படையின் மீது கட்டப்படும் பகுதியின் உயரத்தைக் கொண்டும் 6. அத்தம் என்னும் முழு அளவாலும் 7. தாலம் என்னும் சாண் அளவாலும் 8. கோயிலைக் கட்ட முன் வந்துள்ள தலைவனுடைய உயரத்தைக் கொண்டும். 9. மூலப் பேராங்குலம் அதாவது உண்ணாழிகையின் உயரத்தைத் தாலமான விதிப்படி அதற்குரிய அங்குலத் தொகையால் வகுத்துக் கிடைத்த அங்குல அளவாலும் 10. மானாங்குலம் - அதாவது யவை, நெல் முதலிய தானியங் களின் அளவினால் நிர்ணயிக்கப்பட்ட அங்குல அளவாலும் 11. மாத்திராங்குலம் - அதாவது திருக்கோயிலை அமைக்க முன் வந்திருக்கும் தலைவனுடைய விரலின் நடுப்பகுதியின் நீளம் அல்லது அகலமாக நிர்ணயிக்கப்பட்ட அங்குலத்தாலும் முடிவு செய்யலாம். இவை ஒவ்வொன்றும் பல வகைப்படும். எடுத்துக்காட்டாக முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட உண்ணாழிகையில் உள்ள இலிங்கம் அளவைக் கொண்டு மூர்த்தியின் உயரத்தை நிர்ணயம் செய்யும் முறையை ஆராய்வோம். இலிங்கத்தின் பூஜாம்சம் - அதாவது பூசை செய்யும் மேல்பாகத்தின் உதயம் என்று கூறும் உயரம் அல்லது தாரம் என்னும் குறுக்களவு (விட்டம் அல்லது நாஹம்) என்னும் சுற்றளவு ஒன்றைப் பதினாறு பங்கு செய்து, அந்தப் பங்குகளில் 16 - பங்குகளையும் அப்படியே வைத்துக் கொண்டோ அல்லது 3, 5, 7, 9 அல்லது 16 பங்குகளைக் கூட்டியோ குறைத்தோ மூர்த்திகளின் உயரத்தை முடிவு செய்யலாம். 16 பங்குகளோடு 3, 5, 7, 9, 11 பங்குகளைக் கூட்டும் பொழுது 19, 21, 23, 25 அல்லது 27 பங்குகள் உள்ள ஐந்து உயரங்கள் கிடைக்கும். குறைக்கும் போது 13, 11, 9, 7, 5 இந்தப் பாகங்கள் உள்ள ஐந்து உயரங்கள் கிடைக்கும். கூட்டாமலும் குறைக்காமலும் வைத்துக் கொண்டால் 16 பங்குகள் உள்ள உயரம் கிடைக்கும். ஆக 11 - வகை உயரங்கள் கிடைக்கின்றன. இவ்வாறு சுயம்பு லிங்கங்கள் - அதாவது தாமாக உண்டான இலிங்கங்களின் அளவுகளைக் கொண்டும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலிங்கங் களின் அளவுகளைக் கொண்டும் பூசாம்சத்தைக் கொண்டும்1 தாரத்தைக் கொண்ட அளவுகளும் நாகத்தைக் கொண்ட அளவுகளு மாக 33 அளவுகள் கிடைக்கும். இவ்வாறே திருஉண்ணாழிகையின் உட்புற அளவு, திருஉண்ணாழிகையின் வாயில் அளவு ஆகியவைகளை வெவ்வேறு விதமாக கூறு செய்து மூர்த்திகளின் உயரத்தை நிர்ணயிக்கும் முறைகள் சிற்ப நூற்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தச தால இலக்கணம் (அளவை முறை) திருஉருவம் புதிய கல் ஊழி தேய்ந்து மாய்ந்ததும், தமிழகத்தில் இரும்பு ஊழி அரும்பு துளிர்த்தது. மலையைப் பிளந்து சிலைகள் வடிக்கும் கலை புத்துருவம் பெற்று எழத் தொடங்கியது. சிவலிங்கத் திருமேனி யில் சிவபெருமான் முகம்மட்டும் முதலில் உருப்பெற்று படிப்படி யாய் சிவபெருமான் முழுஉருவமும் சிவலிங்கத்தோடு இணைத்துச் செய்யப் பெற்றுப் பின்னர் சிவபெருமானுடைய முழுஉருவம் தனியாக உருவாக்கப் பெற்றது. அவ்வுருவம் சிவபெருமானுடைய அருள் கோலம் எனப்பட்டது. இக்கோலம் மூர்த்தம் எனக் கூறப்படும். மூர்த்தம் (கோலம்) பலவாறாக எண்ணிலாதெழுந்தன. திருஉருவங்கள் ஆதியில் மண்ணால் செய்யப்பட்டுப் பின் அது சூளையிலிட்டு சுடப்பட்டு உறுதியுடையதாய் ஆக்கப் பெற்றது. இன்றும் இசக்கி அம்மன், மாரியம்மன், பேச்சி அம்மன் போன்ற தாய்த் தெய்வ வடிவங்கள் சிற்றூர்களில் சுடுமண்ணால் செய்யப் பட்டு வழிபடப் பெற்று வருகின்றன. அப்பால் தெய்வ உருவங்கள் மரத்தாலும், கல்லாலும், படிகத்தாலும், ஐம்பொன்னாலும் செய்யப் பெற்றுத் திருஉருவமாக்கும் கலை வளர்ச்சி எய்தியது. சிற்ப விதி முறைகள் திருஉருவங்களைப் படைப்பதற்கு ஆகமங்களும், சிற்ப நூல்களும் தோன்றின. அவற்றில் சிலைகள் அல்லது தாதுப் படிவங்களின் உயரம், தோற்றம், முகபாவம், உறுப்புக்கள், கைகளில் இருக்க வேண்டிய ஆயுதங்கள், மற்றும் பொருட்கள், கால்களின் அமைப்பு, பீடங்கள், திருவாசிகளின் அமைப்பு ஆகிய பல அரிய செய்திகள் விளக்கப்பட்டுச் சட்டமாக்கப் பெற்றன. சிற்பநூலில்ன்படி, தெய்வ உருவங்கள் மண்ணால் செய்யப்பட வேண்டுமென்றால் முதலில் சூலதாபனம் செய்யப்பட வேண்டும். சைலஜமானால் முதலில் சிலாசங்கரணம் செய்யப்பட வேண்டும். தாதுப் பொருட்களில் படிமம் செய்யப்பட வேண்டுமானால் முதலில் தேன் மெழுகில் உருவம் அமைக்கப்படவேண்டும். (மதுச் சிஷ்டம் செய்ய வேண்டும்) உலோகங்களில் உருவங்கள் செய்யப்பட வேண்டுமென்றால் முதன் முதலாகத் திருக்கோயிலின் முக மண்டபத்தில் நடுவண் சம்பாநெல்லைப் பரப்ப வேண்டும். அப்பால் அதன் மீது தாமரை மலர்களையும் ஏனைய மலர்களையும் பரப்ப வேண்டும். அதன் மேலாகத் தர்ப்பங்களைப் பரப்ப வேண்டும். பின்னர், பலகையைப் பரப்பின் மீது வைத்து அருகே ஆசாரியன், தபதி, ஆணையாளர் ஆகிய மூன்று பேர்களும் அமர்ந்திருந்து ஆக வேண்டிய மங்கல காரியத்தைக் கணிக்க வேண்டும். உருவாக்க வேண்டிய திருஉருவங்களுக்கு (மானத்திற்கேற்ப) உறுப்புக்களை மண்ணில் அல்லது மரப்பலகையில் தீட்ட வேண்டும். அப்படிச் செய்யப்படும் வடிவம் கிழக்கே தலையும் மேலே முகமும் இருக்கும்படி பலகை மீது வைக்க வேண்டும். இதன் தென்புறம் சிவாக்கினியை வளர்த்து மூல மந்திரத்தை ஓதிக் கொண்டு, அந்த நெருப்பின் நடுவே சமித்து, சோறு, ஆசயம் ஆகியவைகளால் 108 - தடவை ஓமம் செய்ய வேண்டும். பின்னர் வியாகிருதிகளால் ஓமம் செய்து அப்பால் பூரணாஹுதியைச் செய்ய வேண்டும். அந்த நெருப்பின் நடுவே உருவத்தைத் தியானம் செய்ய வேண்டும். அவ்வுருவை இறைவன் திருவடிவாக எண்ணித் தூபம் காட்ட வேண்டும். (இருதய மந்திரம் சொல்லி நெருப்பினின்று ஆத்ம சொரூபத்தைப் பிம்பத்தில் பாவனை செய்ய வேண்டும்.) அக்கிரபாகத்திலிருந்து (அந்த நெருப்பினின்று திரு உருவத்தை) முறைப்படி (அங்கங்களை) அனுசந்தானம் செய்ய வேண்டும். முதலில் ஈசான மந்திரத்தால் உச்சியையும், கவச மந்திரத்தால் மகுடத்தையும் (தலையணியையும்) அத்திர மந்திரத்தால் கை களையும், சத்திய மந்திரத்தால் பாதங்களையும் அனுசந்தானம் செய்ய வேண்டும். அதன்பின் திருஉருவின் எல்லா உறுப்புக்களையும் (அங்கங்களையும்) அனுசந்தானம் செய்து அங்கசம்பூர்த்தியைக் கற்பித்துக் கொள்ள வேண்டும். உறுப்புக்களை நிறைவுடையதாகப் பாவனை செய்தல் வேண்டும். பின்னர் துணை உறுப்புக்களையும் (உபாங்கங்களையும்) அதன் பிறகு பிரத்தியாங்கங்களையும் (உதவி யாக இணைக்கப்பட்ட உறுப்புகளையும்) பாவனை செய்து கற்பித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அட்ட திரிம்சத் (38) காலாந்யாசத்தை அந்தந்த உறுப்புக்களில் வைக்க வேண்டும். ஆடை அணிகள், ஆயுதங்கள், பூணூல் ஆகியவை உபாங்கத் துடன் சேர்ந்தவைகளாகும். அந்தத் திருவுருவங்களுக்கு அடையாள மாக அத்திரமானது (ஆயுதமானது) பிரத்தியாங்கத்தில் சேர்ந்ததாகச் செய்யப்பட வேண்டும்.1 உத்தம தச தாலம் தமிழகத்தில் தெய்வ உருவங்கள், சிற்பநூற்களிலும் ஆகமங் களிலும் கூறப்பட்ட விதிமுறைகளை அனுசரித்து அடியில் கூறப் படும் தால அளவை முறையினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகின்றன. தசதாலம் (10-தாலம்) முதல் திரி (3) தாலம் வரையில் ஒவ்வொருதாலமும் உத்தமம், மத்தியமம், அதமம் என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தம தசதாலம் 124 அங்குலம் ஆகும். மத்தியம தசதாலம் 120 அங்குலமாகும். அதமதசதாலம் 112 அங்குலமாகும். மத்தியம நவதாலம் 108 அங்குலமாகும். அதமநவ தாலம் 104 அங்குலமாகும். உத்தம அட்டதாலம் முதலிய மற்றத் தாலங்கள் யாவும் முறையே 4, 4 அங்குலம் குறைந்த அளவு. உத்தம தசதாலம் என்பது திருஉருவை உச்சி முதல் உள்ளங் கால்வரை நூற்றிருப்பத்து நான்கு பாகங்களாக (தேகாங்குலமாக)ச் செய்ய வேண்டும். நரன், நாராயணன், திருமால், நரசிங்கன், நான்முகன், மகேசுவரன் ஆகியவர்களின் திருஉருவங்களும், வாணாசுரன், மகாபலி, இந்திரன், அருச்சுனன், கங்காளர், தட்சணா மூர்த்தி முதலியவர்களின் திருஉருவங்களும் தசதால (பத்துத்தால) அளவு உயரம் உள்ளதாக இருக்க வேண்டும். மத்தியம தசதாலம் மத்தியம தச தாலம் என்பது உருவம் உச்சி முதல் உள்ளங்கால் வரை நூற்றிருபது தேகாங்குலமாகச் செய்ய வேண்டும். இந்த அளவில் உமாதேவி, உசாதேவி, கலைமகள், பூதேவி, துர்க்கை, திருமகள், சப்தமாதர்கள், சேட்டாதேவி, சண்டிகா தேவி, பைரவர், வேதாளம், வராகம், அயக்கிரிவர், இராமன், வேணு கோபாலன், காளி, உருக்குமணி, முருகன் முதலியோர் உருவங்கள் இத்தால அளவில் செய்யலாம். அதம தச தாலம் இத்தால அளவின்படி உருவங்கள் அடிமுதல் நுனிவரை நூற்றுப் பதினாறு தேகாங்குலமாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவில் முருகன், அருக்கன், சந்திரன், இந்திரன், பன்னிரண்டு ஆதித்தியர்கள், பதினொரு உருத்திரர்கள், நவக்கிரகங்கள், அட்டவசுக்கள் ஆகியவர்களின் திருஉருவங்கள் செய்யலாம். நவதாலம் உத்தம நவதாலம் இவ்வளவுப்படி உருவங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நூற்றுப் பன்னிரண்டு தேகாங்குலமாகப் பிரிக்கப்பட வேண்டும். இந்த அளவில் சிவபெருமானின்அட்ட மூர்த்த உருவங்களும், துவாரபாலகர், பாலகிருட்டினன், வித்தியாதிபர்கள், லோக பாலர்கள், தேவர்கள் பலராமன், சீதை, வள்ளி முதலிய உருவங்களும் அமைக்கலாம். மத்தியம நவதாலம் இந்த அளவுப்படி உருவத்தை நூற்றெட்டுத் தேகாங்குலமாகப் பிரிக்க வேண்டும். இந்த அளவில் யட்சர்கள், அப்சரசுகள், அத்திர மூர்த்திகள், மருத்துகணங்கள் முதலிய உருவங்கள் அமைக்கலாம். அதம நவதாலம் இந்த அளவுப்படி உருவங்களை அடி முதல் முடி வரை நூற்று நாலு தேகாங்குலமாகப் பிரிக்க வேண்டும். அசுரர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், பிதுருக்கள், சிவனடியார்கள் உருவங்கள் இந்த அளவை அனுசரித்துச் செய்யலாம். ஏனைய தாலங்கள் அட்ட தாலத்தால் சாத்தியர்களையும், சப்ததாலத்தால் வேதாளம் பிசாசு முதலியவற்றையும் சஷ்டதாலத்தால் குபஜா (கூனர்)களையும், பஞ்சதாலத்தால் பிள்ளையார், கிருட்டினன் ஆகியவர்களையும் சதுர்த் தாலத்தால் பால பேரத்தையும் திரிதாலத்தால் கின்னரர்களையும் துவிதாலத்தால் கிம்புருடர் களையும் ஏகதாலத்தால் கூர்மத்தையும் செய்ய வேண்டும் என்று சிரிகா சியலசில்ப சாத்திரம் கூறுகிறது. தால அளவைகள் உருவங்களின் உறுப்புக்கள் ஒன்றுக் கொன்று பொருத்தமான அளவில் அமைக்கத் தேகாங்குலங் களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உருவங்களின் உயரம் பின்வரும் அளவை முறைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் படுகிறது. தசதாலப் பிரிவுகள் (படம்) உத்தமம் மத்திமம் அதமம் அங்கு யவம் அங்கு யவம் அங்கு யவம் 1. உட்னீசம் 1 3 1 2 1 0 2. கேசாந்தம் 3 0 3 0 3 0 3. திருச்சூத்திரம் 4 3 4 2 4 2 4. புருடாந்தம் 4 3 4 2 4 1 5. அந்வந்தம் 4 3 4 2 4 1 6. களம் 4 4 4 7. இக்கை 3 7 3 6 3 4 8. இருதயாந்தம் 13 3 12 6 12 4 9. நாபியாந்தம் 13 3 13 0 12 4 10. மேட்ராந்தம் 13 3 13 0 12 4 11. தொடை 26 5 25 6 25 0 12. முட்டு 4 3 4 2 4 0 13. கரண்டைக்கால் 26 5 25 6 25 0 14. பாதம் 4 3 4 2 4 0 ஆக 124 0 120 0 116 0 நவதாலப் பிரிவுகள் 1. உட்னீசம் உயரம் 1 0 1 0 0 6 2. அதினின்று கேசாந்தம் 3 0 3 0 2 4 3. அட்சிசூத்திரம் 4 0 3 6 3 6 4. நாசாபுடம் 4 0 3 6 3 6 5. வந்வந்தம் 4 0 3 4 3 4 6 கழுத்து 4 0 4 0 4 0 7. இருதயம் 12 0 12 0 11 2 8. நாபிசூத்திரம் 12 0 12 0 11 2 9. மேட்ரமூலம் 12 0 11 0 11 2 10. தொடை 24 0 23 0 22 0 11. முழங்கால் 4 0 4 4 4 0 12. ஜங்கைகள் 24 0 23 0 22 0 13. பாதம் 4 0 4 0 4 0 ஆக 112 0 108 0 104 0 பஞ்சதாலப் பிரிவுகள் 1. உச்சி 1 0 1 0 1 0 2. நேத்திராந்தம் 3 0 3 0 3 0 3. புடாந்தம் 3 0 3 0 3 0 4. அநுவந்தம் 3 0 3 0 3 0 5. கண்டம் 3 0 3 0 3 0 6. இருதயாந்தம் 9 0 8 0 7 0 7. நாபியாந்தம் 8 0 7 0 6 0 8. மேட்ராந்தம் 7 0 7 0 7 0 9. ஊரு 12 0 11 0 10 0 10. ஜாநு 2 0 2 0 2 0 11. ஜங்கை 11 0 10 0 9 0 12. பாதம் 2 0 2 0 2 0 ஆக 64 0 60 0 56 0 சூத்திரம் சூத்திரம் என்று கூறப்படுவது ஒருவகை சங்கேதச் சொல். ஓர் உடம்பில் பற்பல இடங்களில் நூல் தட்டினாற்போல் நேர்மையான அமைப்பு இருப்பதாக வைத்து அந்நிலைமையைச் சூத்திரம் என்று கூறுவர். சூத்திரம் என்பது வெறும் கற்பனையேயாகும். படிமங்களின் அங்கங்கள் அழகாகவும் ஒன்றுக்கொன்று பொருத்தமானதாகவும் அமைப்பதற்குரிய அளவை முறைகள் உண்டு. அவைகள் சூத்திரங்கள் (தூக்குகள்) எனவும் (படம் 10) குறுக்கு மட்டங்கள் எனவும் (படம் 11) இருவகைப் பட்டிருக்கின்றன. தூக்குகள் (சூத்திரம்) பிரமசூத்திரம், மத்திய சூத்திரம், பார்சுவ சூத்திரம், கட்ச சூத்திரம் இவம்ய சூத்திரம் என்று கூறப்படும். குறுக்கு மட்டரேகைகள் புருவ சூத்திரம், ஆட்சி சூத்திரம், இக்கா சூத்திரம் (நெஞ்சுக் குழிவரை), நாபிசூத்திரம், கடிசூத்திரம், பிரமசூத்திரம், பார்சுவ சூத்திரம், கட்ச சூத்திரம் எனப்படும். இவைகளில் பிரமசூத்திரம், பார்சுவ சூத்திரம் கட்ச சூத்திரம் ஆகியவை குறுக்கு மட்டரேகைகள் எனப்படும். பிரம சூத்திரம் திருஉருவ அமைப்பின் உடல் நடுவில் மேலிருந்து கீழ்நோக்கி உச்சிமுதல் உள்ளங்கால் வரை செல்லும் ரேகையாகும். அடுத்த இரேகையான பார்சுவ சூத்திரம் தலையின் பக்கத்தினின்று காது, கன்னம் முதலியவைகளை ஒட்டினாற்போல் கணுக்கால் மத்திவரை செல்லும் இரேகையாகும். மற்றது கட்ச சூத்திரம் என்னும் இரேகையாகும். இது கட்கத்தினின்று இடுப்பு வழியாகக் கால் வரை செல்லும் இரேகையாகும். அடுத்தது இலம்ப சூத்திரம் என்னும் இரேகையாகும். இது உருவத்தின் பள்ளங்களையும் மேடுகளையும் அளவிடுவதற்குத் துணையாக இருக்கும் இரேகையாகும். இது மூக்கின் நுனியையும் நாபியையும் தொட்டுச் செல்லும்.1 இந்தச் சூத்திரங்களைப் போலவே குறுக்கு மட்டங்களை அறிவதற்கும் இரேகைகள் உண்டு. அதாவது புருவ சூத்திரம், புருவம், காது ஆகியவைகளின் நுனிகளை ஒட்டிச் செல்லும் மட்ட ரேகையாகும். அட்சிசூத்திரம், கண்களின் மத்திய மட்டரேகை யாகும். இக்காசூத்திரம், தோள்களின் மட்டரேகையாகும். நாபி சூத்திரம், கொப்பூழின் மட்ட ரேகையாகும். கடிசூத்திரம், இடுப்பின் மட்ட இரேகையாகும். நமது தெய்வத் திருஉருவங்களைச் செய்வதற்குமுன் முதலாக ஒரு பலகையை எடுத்து அதில் மேலிருந்து கீழாகச் சில கோடுகளும் குறுக்காகச் சில கோடுகளும் வரைந்து அப்பால் புனையா ஓவியமாக உருவத்தை வரைவார்கள். இதற்குச் சிற்ப நூற்களில் மானசூத்திர விதி என்று கூறப்பட்டுள்ளது. பலகையைப் பிரலம்பப் பலகை என்றும் கோடுகளைச் சூத்திரம் என்றும் கூறுவர். சூத்திரம் என்பதற்கு இங்குக் கயிறு என்று பொருள் கொள்ளப்படும். பிரலம்பப் பலகையில் ஏழு சூத்திரங்களைக் கோத்து அவைகளை அசனம் முடியும் வரை தொங்க விட வேண்டும். உலோகத்தினாலோ,கல்லினாலோ பந்து போன்ற வடிவம் செய்து அதன் நடுவில் துவாரமிட்டுச் சூத்திரத்தின் நடுவில் தொங்க விட வேண்டும். பின் அதைப் பலகையில் கட்ட வேண்டும். இவ்வாறே எல்லாச் சூத்திரங்களுக்கும் குண்டுகள் அடியில் கட்டித் தொங்க விடப்பட வேண்டும். எந்தப் படிமங் களுக்கும் அதன் முன்புறமாகிய பார்சுவங்களில் (பக்கங்களில்) நான்கு சூத்திரங்களையும் உடலில் நடுவில் ஒரு சூத்திரத்தையும் தொங்க விட வேண்டும். இது பஞ்சசூத்திரம் என்று கூறப்படும். முகத்தின் முடிவில் இருபுறங்களிலும் இரண்டு சூத்திரங்களைத் தொங்கவிட வேண்டும். ஆக மொத்தம் ஏழு சூத்திரங்களாகும். முகாந்த சூத்திரங்களுக்குப் பின்புறத்தில் சிரசின் பக்கங்களில் இரண்டு சூத்திரங்களைத் தொங்க விட வேண்டும். இவ்விரண்டுடன் ஒன்பது சூத்திரங்கள் ஆகின்றன. இரண்டு கட்சங்களின் மத்தியில் இரு சூத்திரங்களைத் தொங்க விட வேண்டும். இவ்வாறு மொத்தம் பதினோரு சூத்திரங்கள் கூறப்படுகின்றன. எல்லாம் மத்திய சூத்திரத்தை மையமாகக் கொண்டதாகவே தொங்க விட வேண்டும். ஆகவே நாசாபுட பார்சுவ சூத்திரங்கள் இரண்டு, முகாந்திர சூத்திரங்கள் இரண்டு, கட்ச சூத்திரங்கள் இரண்டு, பரபாகு சூத்திரங்கள் இரண்டு, பார்சுவ (பங்க) சூத்திரங்கள் இரண்டு ஆக மொத்தம் பதினோரு சூத்திரங்களாகும். பரஹத்த சூத்திரங்கள் புடபார்சுவ சூத்திரங்கள் நான்கையும் நீக்கி எஞ்சிய ஏழு சூத்திரங்களையும் உட்கார்ந்த நிலையில் உள்ள திருஉருவங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். நின்ற நிலையில் உள்ள திருஉருவங்களுக்குப் பதினோரு சூத்திரங்களும் ஏற்றவைகளாம். இஃதன்றி ஒவ்வொரு சூத்திரமும் தொங்க விட வேண்டிய இடங்களும், ஒவ்வொரு சூத்திரத்திற்கும் இடையே இருக்கும் அளவுகளும் விளக்கமாகவும் விரிவாகவும் மானசாரம் என்னும் சிற்ப நூலில் கூறப்பட்டுள்ளன. முக்குணங்கள் திருஉருவங்களைப் படைக்கும் தபதிகள் (சிற்பிகள்) அங்குலம், தாலம், சூத்திரம் ஆகிய அளவுகளைக் கொண்டும், பங்கம் ஆகிய அழகு நிலைகளைக் கொண்டும், சிற்ப நூற்களை அனுசரித்து ஆகம விதிகளை உணர்ந்து அவற்றிற்கு முரணாகா வண்ணம் முடிக்க வேண்டும். இத்திருஉருவங்கள் சாத்வீகம், இராஜசம், தாமசம் என்ற முக்குண வடிவமாய் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. உலகில் உள்ள எல்லாப் பிரகிருதிப் பொருள்களும் இந்த முக்குணத் தன்மை வாய்ந்தவைகளாய் இருக்கின்றன என்று நமது தத்துவ நூற்கள் கூறுகின்றன. அந்தத் தத்துவ நூற்களின் விதிகளுக்கேற்ப நமது சிற்ப உருவங்களும் சாத்வீக இராஜச தாமச உருவங்களாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. நமது தெய்வத் திருஉருவங்கள், யோக முத்திரையும் இயற்கை யான சாந்த நிலையும், அன்பர்களுக்கு வேண்டும் அளவு அச்சம் இன்மை அளிக்கும் கைகளும் இந்திரன் முதலியோர்களால் செய்யப் படும் வாழ்த்தும் வணக்கமும் உடையதாய்க் கொண்டு விளங்கினால் அவை சாத்வீகக் குணத் திருஉருவங்கள் என்று கூறப்படும். திருஉருவங்கள் நின்ற நிலையில் ஊர்தியில் ஏறி இருக்கும் பாவனையில் பல்வேறு வகையான அணிகளால் அலங்கரிக்கப்பட்டு அம்பு, வாள் முதலிய படைக்கலங்களைத் தாங்கி அச்சமின்மையும் வேண்டுவனவற்றை அளிக்கும் கைகளும் பொருந்தி விளங்கினால் இராஜச குணத் திருஉருவங்கள் என்று கூறப்படும். திருஉருவங்களின் அமைப்பு, அம்பு, வாள், மழு முதலிய படைக்கலன்களால் அசுரர்களை அழிப்பதாயும் எப்பொழுதும் அச்சுறுத்தும் வடிவினை உடையதாயும் போர்த்தொழிலில் ஆர்வம் உடையதாயும் விளங்கினால் அது தாமச குணத்திருஉருவம் என்று கூறப்படும்.1 அபிநயங்கள் பண்டு தொட்டுப் பைந்தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த முத்தமிழில் உள்ள நாடகத் தமிழில் நாட்டியம் ஒரு சிறந்த அங்கமாகும். நாட்டியத்தில், உள்ள கருத்தை சில சைகைகளின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு முக்கிய அம்சமாகும். கைகள், கண்கள், கால்கள் முதலியவைகளை அசைப்பதிலே நாட்டியத்தின் உயிர் அடங்கியிருக்கிறது. உள்ளக் கருத்தை உடலில் உள்ள உறுப்புக்களை அசைத்து விளக்கும் இந்த நாட்டிய மொழியில் கைகள் முதற் பங்கைப் பெற்றுள்ளன. கைகளில் உள்ள விரல்களைப் பல்வேறு விதமாகப் பிடிப்பதிலே நாட்டியத்தின் உயிர்த் துடிப்புக் காணப்படுகிறது என்று நாட்டிய ஆசிரியர்கள் கூறுகிறார்கள். நாட்டியத்தைப் பார்ப்பவர்கள் உள்ளத்திலே ஒருவித உணர்ச்சி எழும் வண்ணம் கைகளையும் ஏனைய உறுப்புக்களையும் வளைத்தும் அசைத்தும் காட்டுவது அபிநயமாகும். இந்த அபிநயக் கைகளை நாட்டிய நூலில் இருவகையாகப் பிரித்து இருக்கிறார்கள். அதாவது 1. பிண்டிக்கை (ஒற்றைக்கை) என்றும் இணையா விணைக் கை என்றும் கூறுவர். வடமொழியில் அசம்யுத அத்தம் எனப்படும். மற்றது 2. பிணையல் (இரட்டைக்கை) என்றும் இணைக்கை என்றும் கூறுவர். வடமொழியில் சம்யுத அத்தம் எனப்படும். அகக்கூத்தில் ஒற்றைக் கையினால் செய்யப்படும் அபிநயமும் இரட்டைக் கையினால் செய்யப்படும் அபிநயமும் முரண்படா திருக்க வேண்டும் என்று நாட்டிய இலக்கணம் கூறுகிறது. பிண்டியும் பிணையலும் பெரிதும் புறக்கூத்திற்கே உரியன. இந்தப் பிண்டிக்கைகள் 108 என்றும் பிணையல் கைகள் 64 என்றும் நடநாதி வாத்திய ரஞ்சனம் என்னும் நூலில் கூறியிருப்பதோடு அவைகளின் பெயர்களும் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. சில நூற்களில் 33 பிண்டிக்கைகளும் 15 பிணையல் கைகளும் தாம் கூறப்பட்டுள்ளன. ஆனால் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் பிண்டிக்கை 24 என்றும் பிணையல்கை 13 என்றும் கூறுகிறார். இவ்வாசிரியர்கள் முக்கியமாகப் பயன்படும் கைகளை மட்டும் எடுத்துக் கொண்டார்கள் போலும்! நிற்க நாட்டிய நூல் வல்லுநர்கள் இந்தக் கைகளை மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள். அவை 1. நாட்டியக்கை, 2. நிருத்தக்கை 3. முத்திரைக்கை எனப்படும். நாட்டியக்கைகளில் பிண்டிக்கை 33 என்றும் பிணையல் கை 15 என்றும் நிருத்தக்கை 32 என்றும் முத்திரைக்கை 20 என்றும் அறிஞர்கள் பிரித்துள்ளார்கள். இவை களில் முத்திரைக்கையாவன. முத்திரைக்கை 20 1. சுரபி முத்திரை 2. கவுது முத்திரை 3. இரவி முத்திரை 4. பதும முத்திரை 5. பிரசன்ன முத்திரை 6. சந்நிகித முத்திரை 7. சந்நிரோதன முத்திரை 8. யோனி முத்திரை 9. நிர்யாண முத்திரை 10. சகடமுத்திரை 11. ஆவாகன முத்திரை 12. தாபன முத்திரை 13. அவகுண்ட முத்திரை 14. கிரதித முத்திரை 15. சண்முகோன் முத்திரை 16. பாதுகை முத்திரை 17. முசல முத்திரை 18. வித்தார முத்திரை 19. இட்சு முத்திரை 20. கும்ப முத்திரை மகாபரத சூடாமணி என்னும் நாட்டிய நூலில் மேற்கண்ட 20 முத்திரைக் கைகள் கூறப்பட்டுள்ளன. மகாபரதத்தில் சார்ஞிதேவர் 24 காயத்திரி முத்திரைக் கைகளின் பெயர்களைக் கூறுகிறார். சிவபூசைக்குரிய முத்திரைகள் 33 உண்டு என்று முத்திராலட்சணம் என்ற திருவாவடுதுறை ஆதீன வெளியீடு கூறுகிறது. சில பேரறிஞர்கள் சிற்ப முத்திரைகள் பல உள்ளன என்றும் அவைகளில் 18 முக்கியமானவைகள் என்றும் கூறுகி றார்கள். அவை அடியில் வருமாறு : முத்திரா அத்தம் 1. வரத அத்தம் 2. அபய அத்தம் 3. கடக அத்தம் 4. லோல அத்தம் 5. கச அத்தம் 6. அர்த்தசந்திர அத்தம் 7. தமருக அத்தம் 8. சிங்கக் கர்ண அத்தம் 9. திரிபதாக அத்தம் 10. கட்டியவலம்பித அத்தம் 11. அஞ்சலி அத்தம் 12. சூசி அத்தம் 13. ஊருக அத்தம் 14. நித்திரா அத்தம் 15. தனுர் அத்தம் 16. சின்முத்திரா அத்தம் 17. யோகமுத்திரா அத்தம் 18. ஞானமுத்திரா அத்தம் இவ்வாறு பலவித முத்திரா அத்தங்கள் கூறுப்படுகின்றன. இவைகளன்றி இன்னும் பல முத்திரைகளும் உள்ளன. நாட்டிய நூற்களில் காணும் அபிநயக் கைகளுக்கும் சிற்பிகளால் அமைக்கப் படும் திருஉருவங்களில் உள்ள முத்திரைக் கைகளுக்கும் இடையே பல ஒற்றுமைகளும் உள்ளன. அத்தங்களின் விளக்கம். 1. வரதக் கை (வரம் அளிக்கும் கை) இது சமபங்கத் திருஉருவங்களின் இடது கை விரல்களில் காணப்படும் முத்திரையாகும். இந்தச் சிற்ப உருவ முத்திரை மூர்த்தியின் அனுக்கிரக பாவனையைக் காட்டும் அருள் முத்திரை யாகும். இதில் விரல்கள் எல்லாம் கீழ்நோக்கி இருக்கும். 2. அபயக்கை (அடைக்கலம் அளிக்குங்கை) இந்த முத்திரைக்கை, சமபங்கத் திருஉருவங்களில் வலக் கரங் களின் விரல்கள் நேராக நிமிர்ந்து நிற்பதாக அமைந்திருப்பதாகும். இம்முத்திரை இறைவன் உயிர்களுக்கு அபயம் அளிக்கும் இரக்கச் செயலைக் காட்டுவதாகும். 3. கடகக்கை (நண்டுக்கை) இந்த முத்திரைக் கை வலது கை விரல்களைச் சிறிதாக மடித்தும் விரித்தும் வைத்திருப்பதாகும். இது பெரிதும் பெண் தெய்வங்களின் திருஉருவிலும் அடியார் படிமங்களிலும் அதிக மாகக் காணப்படும். சௌகரியமான நிலையில் சாய்வாக நிற்கும் உருவங்களில் இம்முத்திரைக் கை காணப்படும். 4. லோலக் கை : (ஊஞ்சற்கை) இந்த முத்திரைக்கை இரண்டு கைகளையும் பதாகைக் கையாக்கி அகம்புறம் ஒன்றி முன் தாழ்ந்து நிற்பது. தேவிகளின் திருஉருவங்களில் தொங்கும் பாவனையில் இக்கைகள் பெரிதும் காணப்படும். 5. கசக்கை : (யானைக் கை) கை விரல்கள் அனைத்தும் மடித்துத் தொங்கும் முத்திரைக் கையைக் கசக்கை என்பர். ஆடவல்லான் திருஉருவில் இடது கையும் இடது கைவிரல்களும் இந்த முத்திரை உருவில் காணப்படும். 6. அர்த்த சந்திரக்கை : (இளம்பிறைக்கை) பதாகைக் கையில் - அதாவது விரல்களையெல்லாம் ஒன்று சேர்த்துக் கட்டைவிரலை மட்டும் விரித்து இளம் பிறையைப் போல் நீட்டலாகும். ஆடவல்லான் உருவத்தில் நெருப்பைத் தாங்கி நிற்கும் இடது கை இந்த முத்திரை வடிவில் இருக்கும். 7. தமருகக்கை : (உடுக்கைக் கை) இந்த முத்திரைக் கை, நான்கு விரல்களும் ஒன்று கூடிக் கீழ் நோக்கி வளைந்தும் பெருவிரல் மேல் நோக்கி வளைந்தும் தொடுவதாகும். இதுவும் ஆடவல்லான் உருவத்தில் உடுக்கையேந்தி இருக்கும் வலது கையில் காணப்படும் முத்திரையாகும். 8. சிம்மக் கர்ணக் கை : (சிங்கக் காதுக்கை) இந்த முத்திரை எல்லா விரல்களும் மடிக்கப்பட்டுப் பெருவிரலும் சுண்டு விரலும் நிமிர்ந்து நிற்றலாகும். இது தாமரை அல்லது நீலோற்பல மலரை ஏந்தி நிற்கும் கையாகும். இந்த முத்திரை தேவிகளின் திருஉருவில் பெரிதும் காணப்படும். 9. திரிபதாகைக் கை : (முக்கொடிக்கை) வலது கையிலுள்ள இரண்டு நீட்டிய விரல்களில் ஆயுதங் களைப் பிடிப்பதைக் காட்டும். இது பெரிதும் சந்திர சேகரர் திருஉருவிலும் முருகன் திருஉருவிலும் காணப்படும் முத்திரைக் கையாகும். 10. கட்யவலம்பித்க்கை இம்முத்திரை, கையின் விரல்களை இடுப்பில் வைத்துக் கொண்டு இருப்பதாகும். இது பெரும்பாலும் தேவிகளின் திரு உருவங்களில் காணப்படும் முத்திரைக்கையாகும். இது உருவங் களின் சுமுகமான நிலையைக் காட்டுவதாகும். 11. அஞ்சலிக்கை (வணக்கக் கை) ஐந்து விரல்களையும் நேராக நிமிர்த்தி இருகைகளின் உட்புறமும் ஒன்றாகப் பொருந்தும் படி வைத்து இருப்பதாகும். இது பெரிதும் அடியார்களின் திருஉருவங்களில் காணப்படும். இரு கைகளாலும் வழிபடும் மரபு இதனால் உணர்த்தப்படும். 12. சூசி-அத்தம் . . . 13. ஊருகக் கை . . . 14. நித்திராக்கை சுகாசன மூர்த்தியின் பக்கத்தில் அமைக்கப்படும் தேவியின் திருஉருவில் காணப்படும் இடக்கரத்தின் நிலையே நித்திராக்கை யாகும். இதுவும் திருஉருவின் சுமுகமான நிலையைக் காட்டுவதாகும். 15. தனுர் கை . . . 16. சின் முத்திரை வலது கையால் பெருவிரலையும் சுட்டுவிரலையும் ஒன்றாய்ச் சேர்த்தும் மற்ற மூன்று விரல்களை நீட்டியும் காட்டும் அடையாளம் சின்முத்திரைக் கையாகும். இது தட்சணாமூர்த்தியின் திருஉருவில் பெரிதும் காணப்படும் முத்திரையாகும். 17. யோக முத்திரைக் கை . . . 18. ஞான முத்திரைக் கை சுட்டு விரல் நேராக நிமிர்ந்து மேல்பாகம் சிறிது வளைந்து பெருவிரல் அதைத் தொட்டு ஏனைய மூன்று விரல்களும் இணைந்து விலகி இருத்தல். இம்முத்திரை யோகதட்சணாமூர்த்தியின் திருஉருவில் காணப்படும். பங்கங்கள் பங்கங்கள் என்பதை அழகு நிலை என்றால் மிகப் பொருத்த மான பொருள் ஆகும். திருஉருவங்களின் அன்பு, அருள், சாந்தம், கோபம், வீரம் முதலிய குணங்களைக் காட்டுவதற்குத் திருஉருவின் நிலைகளை மூன்று விதமாக அமைக்கின்றார்கள். அதாவது ஆபங்கம், சமபங்கம், அதிபங்கம் எனப்படும். பங்கமானம் என்றால் நெளிந்த நிலையில் ஏற்படும் அளவு என்று பொருள்படும். திருஉருவின் பங்கமானம் (நெளிவினால் எழும் குறைந்த அளவு) முறையே மூன்று, நான்கு, ஐந்து அங்குலங்களாகும். உட்ணீசத்தினின்று பார்சுவத்தில் இருக்கும்படி நெற்றியின் பார்சுவத்திலும் நாசாபுடத்தின் பார்சுவத்திலும் முலைக் காம்பின் மத்தியிலும் நாபி, தொடை கண்டைக் கால்களின் பார்சுவத்திலும் கணுக்காலின் பார்சுவத்திலும் சூத்திரத்தைத் தொடங்க வேண்டும். இதனைச் சமபங்க சூத்திரம் என்பர். சமபங்கமாக நிற்றல் அல்லது இருத்தல் என்பது திருஉருவம் ஒரு பக்கமும் சரியாது நிமிர்ந்து சுகமான நிலையில் இருப்பதோ அல்லது நிற்பதோ ஆகும். அருளும் அமைதியும் கூடி அனுக்கிரக நிலையில் இருக்கும் திருஉரு சமபங்கம் எனப்படும். சந்திரசேகரர், திருமால், முருகன் முதலிய தெய்வத்திரு உருவங்கள் பெரிதும் சமபங்க நிலையிலே காணப்படும். உட்ணீசத்திலிருந்து பார்சுவத்தில் இருக்கும்படி கண்ணின் நடுவிலும் முலையின் பக்கத்திலும் தொடையின் நடுவிலும் முழங்காலிலும், கரண்டைக் காலின் நடுவிலும் சூத்திரத்தைத் தொங்க விட வேண்டும். இதனை அதிபங்கம் அல்லது திரிபங்க சூத்திரம் என்பர். திரிபங்கம் (அதிபங்கம்) என்பது (திரிஉருவம்) மூன்று உள்வளைவுகளை (நெளிவுகளை) உடையதாக இருக்கும். சிவபெருமான், ஆடவல்லான், கோதண்டராமன், ஆடும் கோபாலன் போன்ற தெய்வங்களின் திருஉருவங்கள் திரிபங்க அமைப்பில் உள்ளன. தாண்டவத் திருஉருவங்களும் இரௌத்திர மூர்த்தியின் திருஉருவங்களும் திரிபங்க வடிவில் அமைக்கப்பட வேண்டும் எனச் சிற்ப நூற்கள் கூறுகின்றன. அங்கங்கள் திரிபங்கலட்சணத்துடன் இருப்பதாக வைசாகத் தானம் என்று கூறப்படும் சாரசுவதீய சித்திர கர்மசாத்திரம் கூறுகிறது. அணிகலன்கள் தெய்வத் திருஉருவங்கள் எழில்வாய்ந்து விளங்குவதற்காக அவைகளுக்குப் பல்வேறு விதமான அற்புத அணிகலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை மகுடம், குண்டலம், மாலை (ஆரம்) கேயூரம், வாகுமாலை, கங்கணம், யக்ஞோபவீதம், உதரபந்தனம், சன்னவீரம், கடிபந்தனம், கச்சுபந்தனம், அருணோணமாலை, ஊருமாலை முதலியவைகளாகும். தலைக்கு மேல் வைக்கப்படும் தலையணி, மகுடம் எனப்படும். இது கிரீடமகுடம், கரண்ட மகுடம், சடாமகுடம், கூடமகுடம், சுவாலை மகுடம், சடாமண்டலம், வைசிகபந்தம், சடாதாரம், சடாபந்தம் காண்டகம், இரத்தின மகுடம் (மணி மகுடம்) என்று பல வகைப்படும். கிரீட மகுடமும், இரத்தின மகுடமும் திருமால் முதலிய போகமூர்த்திகளுக்கும் கரண்ட மகுடம், கணபதி, தேவி முதலிய தெய்வங்களுக்கும், சடாமகுடம், கூட மகுடம், சுவாலை மகுடம், சடாமண்டலம், வைசிக பந்தம், சடாதாரம், காண்டகம், சடாபந்தம் ஆகியவைக சிவபெருமானுக்கும் நான்முகனுக்கும் இன்னும் சில தெய்வங்களுக்கும் உரியன வென்று சிற்ப நூற்கள் கூறுகின்றன. காதில் அணியப்பட்டிருக்கும் குண்டலம், சங்க பத்திர குண்டலம், மகர குண்டலம், கேசரி குண்டலம் (வியாள குண்டலம்) பத்திர குண்டலம், இரத்தின குண்டலம் கர்ணிகை எனப் பலவகைப் படும். பத்திர குண்டலம் என்பது ஓலைச் சுருள்; அதாவது இளந்துளிர்களாலான காதணி. மகர குண்டலம் என்பது மகரமீனின் தலையையுடைய காதணி. கேசரி குண்டலம் சிங்கம் போன்ற வடிவமுள்ள காதணி. வியாள குண்டலம் என்பது நவமணிகளாலும் பொன்னாலும் செய்யப்பட்ட காதணி. கர்ணிகை என்பது தாமரை மலரின் நடுவில் இருக்கும் காய் போன்ற வடிவமுள்ள தோடு. கிரீடத்தின் அடியில் முன்பக்கமும் பின் பக்கமும் வலது பக்கமும் இடது பக்கமும் பூரிமம் என்ற அலங்காரத்துடன் கூடி இருக்க வேண்டும். (பூரிமம் என்பது இலை அல்லது பூப்போன்று அழகாகத் தோன்றும் அலங்காரமான அமைப்பு.) மகுடத்தின் இடது பக்கத்தில் இளம்பிறை வடிவமும், வலது பக்கத்தில் நாகத்தினைப் போன்ற வடிவமுள்ள பூவும் அமைக்க வேண்டும். கழுத்தில் மாலை (ஆரம்), மார்பு வரை தொங்க வேண்டும். சங்கவீர பிரலம்பம், யக்ஞோப வீதம், கிரைவேயகம், நாகயஞ்ஞ சூத்திரம், இரத்ன பந்தம், உபகிரீவம், நித்தலாவலி இவைகளாலே கழுத்தும் மார்பும் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஊர்த்துவ காயத்தில் ஆரம் முதலியவைகள் பக்கத்தில் தொங்கும் குஞ்சம் முதலியவைகளுடன் தோள்வளை (கேயூரம்) கடகம், பத்திரபூரிமம் ஆகியவைகளின் நடுவில் தொங்குகின்ற மாலைகள்; இவைகளுக்குப் பொதுவாகச் சன்னவீர பிரலம்பம் என்று பெயர். யக்ஞோபவீதம் - பூநூல் மாலை; கழுத்திலிருந்து மார்பிற்குக் கீழே தொங்கும் முத்துமாலை முதலியனவும் உண்டு. கிரைவேயகம் கழுத்தினின்று மார்புக்கு மேலே தொங்கும் காசுமாலை, காரை அட்டிகை போன்ற உள் கழுத்தணிகள்; நாகயஞ்ஞ சூத்திரம்- படத்துடன் கூடிய பாம்பின் வடிவமுள்ள பூநூல், இரத்ன பந்த முபகிரீவம் - மணிகள் பதித்த உள்கழுத்தணிகள் நித்தலாவணி - இவை கழுத்திலிருந்து இரண்டங்குலம் வரையில் ஒன்றோடொன்று இணைந்திருப்பவைகளாம். கேயூரம் மேற்கையின் மத்தியில் அணியப்படும் அணி. இதைத் தோள்வளை என்றும் கூறுவர். அங்கதம் (வாகுவலயம்) - இதைப் புயவலயம் என்று புகல்வர். கடகத்திரயம் - மூன்று வளையல்கள். இது கணுக்கைக்கு மேல் அணியப்படும் அணி. முத்திரிகை (மோதிரம்) - இது நடுவிரல் நீங்கிய மற்ற விரல்களில் அணியப்படும் அணி. யக்ஞோபவீதம் - இது இடது தோளிலிருந்து வலது பக்கமாக இடுப்பு வரை உடலின் இருபக்கங்களிலும் தொங்கும் நூல். (இது குப்த மன்னர் காலத்திற்கு முன் உள்ள உருவங்களில் இல்லை. சன்ன வீரம் - யக்ஞோப வீதத்திலிருந்து இடப்பக்கமாக இடுப்பு வரை தொங்கும் அணிகலன். உதர பந்தனம் - மார்பிற்கும் வயிற்றிற்கும் இடையில் அணியும் ஓர் அணிகலன். கடிபந்தனம் - இடுப்பில் அணியும் ஒட்டியாணம் போன்ற அணிகலன். இதன் நடுவில் சிங்கம் அல்லது யாளி முகம் வைக்கப்பட்டிருக்கும். அருணோன்மாலை - கடிபந்தனத்திலிருந்து தொங்குவதாகும். ஊரு மாலை - கடிபந்தனத்தி லிருந்து தொடை வரை தொங்கும் மாலை. கச்சுபந்தனம் - பெண் தெய்வங்களின் கொங்கையின் மேல் அணி பெறக் கட்டப்பட் டிருக்கும் சீலைக்கட்டு ஆகும். பத்திரம் - இலைகளின் வடிவமான அலங்காரமாகும். இது வாரில் அலங்காரமாகத் தொங்க விடுவதற் காக அமைக்கப்படுகிறது. ஊருதாமம் - தொடையில் தொங்க விடப்படும் கயிறு அல்லது குஞ்சம். இது ஆடையின் மீது ஒரு பக்கத்திலாவது அல்லது இரு பக்கத்திலாவது தொடை வரையில் தொங்க விடப்படும் அலங்காரம். பாதசாலம் - பாதசரம். இது கரண்டைக் காலைச் சுற்றி அணியப்படும் ஒரு பாத அணி. இடுப்பில் கீர்த்திமாநநத்தால் அழகு பெற்று விளங்கும் அரைஞாண் அல்லது கட்டுவார் அணிந்திருக்க வேண்டும். (கீர்த்தி மாநநனம் - அரை ஞாணின் முகப்பில் சிங்கம் அல்லது யாளியைப் போன்று அமைக்கப்படும் அலங்காரம்) ஆடைகள் திருஉருவங்களுக்கு அணிகள் அணிவிப்பது போன்றே பல்வேறு அழகிய பூவேலைப்பாடுகள் உள்ள விளிம்புகளுடன் கூடிய ஆடைகளையும் அரையில் அணிவிக்க வேண்டும். சில தெய்வ உருவங்களுக்கு அரைக் காற் சட்டையும் அணிவிப்பதுண்டு. தபதிகள் ஆகமங்களிற் கூறியபடியே தெய்வங்களுக்கு ஆடைகளை அமைக்கின்றனர். சில கோயில்களில் பூசை செய்யும் அர்ச்சகர்கள் அதிகம் தெரிந்தவர்கள் போல் திருஉருவங்கள் நிர்வாணமாக இருப்பதாகக் கூறி அரையில் பஞ்சாடைகள், பட்டாடைகள் புனைந்து உருவங்களின் முகத்தைச் சந்தனம், விபூதி முதலியவை களால் மறைத்தும் சிற்ப அழகைக் கெடுத்து விடுகின்றார்கள். திருஉருவங்களைச் சிற்பிகள், நிர்வாணமாய் அமைப்பதில்லை. ஆடைகள், அணிகலன்கள் இலங்க அலங்காரமாகவே அமைக்கின் றார்கள். அந்த அழகைச் சிற்ப ரசிகர்களும், பக்தர்களும் கண்டு களிக்க வேண்டும். அஃது ஆகமவிதிப்படி செய்யப்பட்ட அழகு. அர்ச்சகர்கள், பொருத்தமற்ற - அவசியமில்லாத ஆடை அணிகளை யும் மாலைகளையும் வாசனைத் திரவியங்களையும் கொண்டு சிற்ப அழகு மிக்க நல்ல திருஉருவங்களின் எழில்நலன்களை மக்கள் அறியா வண்ணம் மூடி வைப்பது அறியாமை ஆகும். வேண்டுமானால் ஊர்வலம் வரும் பொழுது ஆடை அணிகலன்கள், மலர்மாலை களால் அலங்கரித்துக் கொள்ளட்டும். ஏனைய காலங்களில் திருக்கோயில் உள்ளிருக்கும் பொழுது திருஉருவங்களின் சிற்ப அழகை மக்கள் கண்டு களிக்கும்படி செய்ய இடம் அளிக்க வேண்டும் என்பது எனது பணிவான விண்ணப்பம். அதற்கு ஆவனவற்றை மக்களும், இந்து அறநிலையப் பாதுகாப்பு ஆணை யாளர்களும் செய்வார்கள் என்று நம்புகிறேன். ஆயுதங்கள் நமது தெய்வத் திருஉருவங்களின் கைகளில் கொடி, கமண்டலம், கபாலம், தாமரை, நீலோற்பலம், நெருப்பு, உடுக்கை, வீணை, யாழ் முதலியவைகளோடு பல்வேறு படைக்கலன்களும் காணப்படுகின்றன. பல்வேறு தெய்வங்களின் கைகளில், 1. அங்குசம், 2. தந்தம், 3. பாசம், 4. கேடயம், 5. வாள், 6. சேவல், 7. மழு, 8. பல விதமான சூலங்கள், 9. தோமரம், 10. வச்சிரம், 11. தீ, 12. டங்கா, 13. கதை, 14. வில், 15. அம்பு, 16. சக்திவேல், 17. கடவாங்கம், 18. தாமரை, 19. கண்ணாடி, 20. உடுக்கை, 21. கிளி, 22. மணி, 23. அக்கமாலை, 24. கமண்டலம், 25. ஏடு, 26. பாம்பு, 27. கபாலம், 28. கொடி, 29. மான், 30. சங்கு, 31. சக்கரம், 32. மோதகம் போன்ற பொருள்கள் உள்ளன. இவை ஆயுதங்கள் என்றும் சின்னங்கள் என்றும் கூறப்படு கின்றன. ஒரு தெய்வத்தினிடம் காணப்படும் ஆயுதங்களும் சின்னங்களும் மற்றொரு தெய்வத்திடம் காணப்படுவதில்லை. மான், மழு, சூலம், கமண்டலம், கட்வாங்கம், தீ, உடுக்கை, திரிசூலம், கேடயம் போன்ற ஆயுதங்கள் சிவமூர்த்தங்களிலும் சங்கு, சக்கரம், கதை போன்ற ஆயுதங்கள் திருமால் வடிவங்களிலும், வச்சிரம் அம்பு, வில், வாள், கேடயம், குக்குடம், கொடி போன்ற ஆயுதங்கள் முருகன் உருவத்திலும், தாமரை, நீலோற்பலம் போன்ற பூக்களும் வாள், ஈட்டி, கேடயம் போன்ற ஆயுதங்களும் சக்தி வடிவங்களிலும், தந்தம், மோதகம், பாசம் போன்ற பொருள்கள் பிள்ளையாரின் உருவங் களிலும் காணப்படுகின்றன. பொதுவாகத் திருஉருவங்களின் கைகளில் காணப்படும் ஆயுதங்களைக் கொண்டே இஃது இன்ன தெய்வம் என்றும் இஃது இன்ன மூர்த்தம் இது இன்னதன்மையது என்றும் அறியக் கூடும். நமது படிமங்களில் காணப்படும் ஆயுதங்களும் மலர்களும் பிற பொருள்களும் தெய்வத்தின் குணங்களையும் தத்துவங்களையும் காட்டுவனவாக இருக்கின்றன. மேலும் மக்களின் நாகரிகத்தையும் காலத்தையும் காட்டுவனவாக இருக்கின்றன. நிலைகளும் கோலங்களும் நமது தெய்வப் படிமங்கள் பல்வேறு நிலைகளில் செய்யப் பட்டுள்ளன. சில நிற்கும் நிலையிலும் சில உட்கார்ந்திருக்கும் நிலையிலும் சில படுத்திருக்கும் நிலையிலும் சில ஆடும் நிலையிலு மாகப் பல்வேறு நிலைகளில் உள்ளன. தெய்வங்களின் சக்திகளை விளக்கவே இவ்வாறு பல நிலைகளிலும் கோலங்களிலும் திருஉருவங்கள் ஆக்கப்பட்டுள்ளன. கடவுளின் ஆற்றலைத்தான் சக்தி என்று கற்பனை செய்யப்பட்டுள்ளது. சிவபெருமான் உருவம் இருந்த கோலமாகவும் நின்ற கோலமாகவும் ஆடுங் கோலமாகவும் போர்க் கோலமாகவும் மணக் கோலமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருமாலின் திருஉருவத்தையும் நின்ற கோலமாகவும் இருந்த கோலமாகவும், கிடந்த கோலமாகவும் உருவாக்கியிருக்கின் றார்கள். மேலும் தெய்வங்களின் ஆற்றலைக் காட்டவே ஒன்று முதல் பத்து வரை தலைகளும், இரண்டு முதல் 20 வரை கைகளும் கற்பித் திருக்கின்றார்கள். காளிக்கும் சிவபெருமானுக்கும் நெற்றிக் கண் உண்டு. மூன்றாவது கண் ஞானக்கண் என்று கூறப்படும். இதனால் காளியை முக்கண்ணி என்று கூறுவர். சிவபெருமானை முக்கண்ணன், நுதல் விழி நாட்டத்திறைவன், கண்நுதலோன், நெற்றிக் கண்ணன் என்றெல்லாம் வழங்குவர். சிவபெருமான், முழுமுதற் கடவுள், பெரியோன், பிறப்பிறப்பற்றவன், உயர்ந்த பெருந்தெய்வம், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிபவன் எல்லாவற்றையும் ஆக்குபவனும் காப்பவனும் அழிப்பவனும் அவனே. எனவேதான் அவனிடம் உடுக்கை, அபயக்கை, நெருப்பு, மான், மழு முதலியவை உள்ளன. மேலும் ஐந்து தலைகளையும் நெற்றிக் கண்ணையும் வரதக்கையையும் அவன் பெற்றிருக்கிறான். தெய்வங்களுக்குப் பலவகையான பீடங்களையும் அமைத் திருக்கிறார்கள். அவை பதுமபீடம், மகாம்புய பீடம், பத்திரபீடம் முதலியனவாகும். மூர்த்திகளைத் தானக மூர்த்தி, சுகாசன மூர்த்தி (போகாசன மூர்த்தி), நிர்த்தன மூர்த்தி, அனுக்கிரக மூர்த்தி, ரௌத்திர மூர்த்தி, சங்கார மூர்த்தி என்றெல்லாம் பிரித்திருக்கின்றார்கள். ஆசனங்கள் நமது தெய்வத்திருஉருவங்கள் பலவிதமான இருக்கைகள் (ஆசனங்கள்) உடையனவாய் அமைக்கப்பட்டுள்ளன. இருக்கைகள்- அதாவது ஆசனங்கள் என்றால் இருக்கைப் பீடம் என்று பொருள் கொள்ளக் கூடாது. ஆசனங்கள் என்றால் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் நிலை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நமது படிமங்களில் அந்த ஆசனவகைகள் முழுமையும் இல்லா விட்டாலும் அவைகளில் பல உள என்பது உண்மையாகும். ஆசனம் என்றால் கால்களும் பாதங்களும் இருக்கும் நிலைகளையும் கைகளும், விரல்களும் இருக்கும் நிலைகளையும் குறிப்பிடுவதாகும். பொதுவாகப் படிமங்கள் நான்கு நிலைகளில் - அதாவது நிற்றல், இருத்தல், ஊர்தல், கிடத்தல் நிலைகளில் தான் உள்ளன. ஆனால் ஆசனங்கள் என்பன இருக்கும் நிலைகளை மட்டும் குறிப்பிடுவ தாகும். இந்த ஆசனங்களுக்குப் பலவிதப் பொருள்கள் உண்டு. ஆசனங்களில் படிமங்களின் தெய்வத் தன்மை புலனாகின்றது. தமிழ் நாட்டுப் படிமங்களைக் கண்ட அறவோர்கள் தம் நுண் ணுணர்வால் வழிபாட்டிற்காகப் பல திருஉருவங்களை நிர்மாணித் திருக்கின்றார்கள். தமிழ்மக்கள் கண்ட வழிபாடுகளின் எல்லா விதமான அமைப்புக்களும் யோக தத்துவ சாத்திர அடிப் படையில் அமைந்திருக்கின்றன என்று இங்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன். யோகங்களைப் பற்றி விளக்கமாகக் கூறும் நமது நூற்களில் அடியில் வரும் முப்பத் திரண்டு வகையான ஆசனங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆசனங்களைப் பற்றிய ஆராய்ச்சி தமிழ்நாட்டில் சுமார் முப்பது ஆண்டுகளாய்ப் பரவி வருகிறது. அதைப் பற்றிப் பல நூற்களும் எழுந்துள்ளன. பலர் பயிற்சி செய்து தமது உடல்களை உறுதியுள்ளதாய் உரம் பெற்றதாய்ச் செய்துள்ளார்கள். ஆசனப் பயிற்சியால் இன்று மக்கள் பல நோய்களை அகற்றி நல்வாழ்வு பெற்றுள்ளார்கள். தமிழர் ஆசனங்கள் அடியில் வருமாறு : ஆசனங்கள் 32 1. சித்தம் - குறைவற்ற ஆசனம் 2. பத்மம் - தாமரை ஆசனம் 3. பத்திரம் - மட்டமைதி ஆசனம் 4. முக்தம் - கட்டற்ற ஆசனம் 5. வச்சிரம் - வைராசனம் 6. சுவத்திகம் - வளமுள்ள ஆசனம் 7. சிமம் - சிங்க ஆசனம் 8. கோமுகம் - பசுவின்வாய் ஆசனம் 9. வீரம் - வீராசனம் 10. தனுர் - வில்லாசனம் 11. மிர்த்தம் - பிணவாசனம் 12. குப்தம் - மறைவான ஆசனம் 13. மத்சயம் - மீன் ஆசனம் 14. மச்செந்துர - 15. கோரக்ச - 16. பச்சி மோ - 17. உட்கடம் - துணிவான ஆசனம் 18. சங்கடம் - ஆபத்தான ஆசனம் 19. மயூரம் - மயில் ஆசனம் 20. குக்குடம் - கோழி ஆசனம் 21. உத்தானமண்டுக - 22. உத்தானகூர்மகம் - 23. விருட்ச - மரஆசனம் 24. மண்டுக - தவளை ஆசனம் 25. கருட - கருடாசனம் 26. இரிசப - எருதாசனம் 27. சலப - வெட்டுக்கிளி ஆசனம் 28. மகர - மகர ஆசனம் 29. உஷடரம் - ஒட்டகாசனம் 30. புசங்கம் - பாம்பாசனம் 31. கூர்ம - ஆமை ஆசனம் 32. யோகம் - யோகாசனம் ஆசனங்கள் நூற்றெட்டு வகைப்படும். அவைகளில் முப்பத் திரண்டு முக்கிய ஆசனங்களின் பெயர்களை மட்டும் மேலே குறிப் பிட்டுள்ளோம். நமது திருஉருவங்களில் பயன்படுத்தப்பட் டிருக்கும் ஆசனங்கள் ஒன்பது ஆகும். அவை முறையே சுவத்திகம், கோமுகம், பதுமம், வீரம், சிங்கம், பத்திரம், முக்தம், மயூரம், சுகம் எனப்படும். அவைகளின் விவரம் அடியில் வருமாறு 1. சுவத்திகாசனம் வலது புறத்துக் கணைக்கால், தொடை இவைகளின் நடுவில் இடப்புறத்துப் பாதமும் இடப்புறத்துக் கணைக்கால், தொடை இவைகளின் நடுவில் வலப்புறத்துப் பாதமும் படுமாறு சேர்த்துச் சமம் பொருந்திய தேகம் உடையவராய் இருத்தல். 2. கோமுகாசனம் இடப்பாகத்து அறையில் வலத்தாளினது பாட்டினையும் வலது பக்கத்திலுள்ள பிருட்டபாரிசத்தில் இடத்தாளினது பாட்டினையும் பொருந்தும்படி சேர்த்து இருத்தல். 3. பத்மாசனம் இடது தொடையின் மேல் வலது தாளையும் வலது தொடை யின் மேல் இடது தாளையும் சேர்த்து இரண்டு அங்குட்டங் களையும் பொருந்த இரண்டு கைகளால் மாறியுறப் பிடித்திருத்த லாம். இது பத்மாசனம்; எல்லாவித நோய்களையும் போக்கும். 4. வீராசனம் இடது பாதத்தின் கரட்டை வலது தொடையின் மேல் வைத்துச் சரீரம் துவளலின்றிச் சமத்துவம் பொருந்த இருப்பது வீராசனம். 5. சிங்காசனம் இடது பாதத்தின் கரட்டை வலது பக்கத்திலுள்ள அண்டத் தின் கீழும் வலது பாதத்தின் கரட்டை இடது பக்கத்திலுள்ள அண்டத்தின் கீழும் வலிமையோடு சேர்த்து இரண்டு கைகளையும் முழந்தாள் இரண்டின் மேல் விரல் நிமிரும்படி வைத்து கண்ணை நாசியின் நுனியை நோக்குமாறு செய்தல் சிங்காசனமாகும். 6. பத்திராசனம் இரண்டு பாதங்களின் கரட்டினையும் இரு பக்கங்களிலு முள்ள அண்டங்களின் கீழ் வைத்து இரு தொடைகளிலும் இரு கைகளை ஊன்றியவராக இருத்தல். இது விசரோகம், பயம் முதலிய துன்பங்களினின்று விடுதலை அளிக்கும். 7. முத்தாசனம் இது இடப் பாதத்தின் கரட்டை அண்டத்தின் கீழே வைத்து அதன் அடியில் வலப்பாதத்தின் கரட்டைப் பொருந்த வைத்திருப் பதாம். குறியின் மேல்பாகத்தில் இடதுதாள் கரட்டினை வைத்து அதன் மேற்றுன்னிட வலது தாள் கரட்டினை வைத்தல் முத்தாசனமாம். 8. மயூராசனம் கூர்ப்பரங்களின் நுனிகள் நாபியைப் பொருந்த இரு கை களையும் நிலத்தில் ஊன்ற அடி, சென்னி, இவைகள் பூமியில் பொருந்தாது மேலே எழும்பி இருத்தலாம். இது சகல பாதகங் களையும் அகற்றும். 9. சுகாசனம் ஒருவனுக்கு எந்த விதத்தில் சுகமும் தைரியமும் உண்டா கின்றனவோ அவ்வாறு உட்கார்ந்திருத்தலாம். இந்த ஆசனத்திற்கு வடமொழி இலக்கியங்களில் நல்ல விளக்கம் அளிக்கப்படவில்லை.1 இதனை அறிஞர் பட்டாச்சாரியாரே ஒப்புக் கொள்கிறார். சுகாசனத்தைப் போகாசனம் என்றும் அறிஞர்கள் புகல்வர். இஃதன்றி முக்கிய ஆசனங்களில் ஞான ஆசனம், யோகாசனம், சோபசுராயாசனம் என்ற ஆசனங்களையும் சில அறிஞர்கள் கூறுகின்றார்கள். மூர்த்திகளைச் சங்கார மூர்த்தி, வீராசன மூர்த்தி, யோகாசன மூர்த்தி, சயனமூர்த்தி என்றெல்லாம் அவர்களின் நிலை ஆசனம் முதலியவைகளை வைத்துக் குறிப்பார்கள். தானக மூர்த்தி, நிற்கும் தோற்றம் உடையவர். சுகாசன மூர்த்தி அல்லது போகாசன மூர்த்தி, ஒரு காலை மடக்கியும் ஒரு காலைச் சரிவாகக் கீழே தொங்க விட்டும் காணப்படுவது. இறைவன் உலகை இயக்குவதோடு, உலகை உருவாக்கிக் காத்து அழிக்கும் ஆற்றல் உடையவன் என்பதை இந்தக் கூத்தாடும் மூர்த்தம் உணர்த்தும். அனுக்கிரகமூர்த்தி, தன்னிடம் அடைக்கலம் புகுந்த உயிர்களுக்கு அவர்களின் பாவங்களைப் போக்கி அருள் பொழியும் மூர்த்தம் ஆகும். சங்காரமூர்த்தம், இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ள உயிர்கள், மரம், செடி, கொடிகள் முதலிய அனைத்தையும் அரைவினாடியில் அழிக்கவல்லவன் என்பதை அறிவுறுத்தும் மூர்த்தமாகும். வீராசன மூர்த்தம், இடது காலைச் சரிவாக நீட்டியும் வலக்காலை உயர்த்தி மடக்கியும் இருக்கும் தோற்றம் உடையது. சுகாசன மூர்த்தி, மக்களின் துன்பம் துடைத்து இன்பம் அருளும் அரிய மூர்த்தமாகும். யோகாசன மூர்த்தி இறைவன் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் தோற்றமாகும். இது உயிர்கள் இறைவனோடு இரண்டறக்கலந்து விட வழி காட்டுவ தாகும். சயனமூர்த்தி, இறைவன் நித்திரை நிலையில் காணப்படுவ தாகும். அனுக்கிரக மூர்த்தி மக்கள் ஐம்பொறிகளையும் அடக்கி இறைவன் மீது பக்தி செலுத்துவதைக் காட்டும் மூர்த்தமாகும். ஆசனங்களைப் போல் திருஉருவங்களின் பாதங்களும் தனிமுறையில் பல்வேறு நிலைகளில் உள்ளன. அதாவது சமபாதம், குஞ்சிதபாதம், அஞ்சிதபாதம், உதஞ்சித பாதம், சூசிபாதம், அக்கிரதலம், சஞ்சரம், உற்கடிதம் போன்று பல விதமான பாதங்கள் கூறப்பட்டுள்ளன. இப்பாதங்களுக்கும் பல்வேறு விதமான தத்துவப் பொருள்கள் உள்ளன. நமது திருஉருவங்களில் காணப்படும் ஒவ்வொரு உறுப்பிற்கும், ஆயுதங்களுக்கும் ஏனைய பொருள் களுக்கும் பலவித உட்பொருள்களும் அதை விளக்க எண்ணிலாப் புராணக்கதைகளும் உள்ளன. அவைகளையெல்லாம் இச்சிறு நூலில் விளக்க முடியாது. ஆடைகள் வடமொழியில் ஆக்கப்பெற்ற நமது சமய நூற்களில், தெய்வங்களின் ஆடைகளைப் பற்றி எவ்விதக் குறிப்புக்களும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. ஆனால் வடமொழிக் காவியங்களிலும் நாடக இலக்கியங்களிலும் அங்கும் இங்குமாக ஆடைகளைப் பற்றி ஒரு சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. முற்காலத்தில் ஆடைகளின் வகைகள் மக்கள் வாழும் நிலத்திற்கும், அவர்கள் ஆற்றும் தொழிலுக்கும் ஏற்ப இருந்தன. குறிஞ்சி நிலமக்கள், மரப்பட்டைகளையும், தோல்களையும் ஆடையாக அணிந்திருந்தனர். முல்லை நிலத்தில் முதன் முதலாகத் தோலாடை இருந்தாலும் பின்னர் பருத்தி ஆடை தோன்றிவிட்டது. மருத நிலத்திலும் ஆதியில் தோலாடை இருந்தது. அப்பால் பருத்தி ஆடைகளும் பட்டாடைகளும் பரவிவிட்டன. மன்னர்களுக் கென்றும் அவர்கள் மனைவிகளுக்கென்றும் தனித்தனியே அரச உடைகள் இருந்தன. உழைப்பாளிகள் குறைந்த அளவில் பருத்தி ஆடைகளை அணிந்து வந்தனர். போர் வீரர்கள் இராணுவ உடை களை உடுத்தி வந்தனர். நமது படிமங்களைப் பற்றி ஆராய்ந்தால் காளி-கொற்றவை புலித்தோலை ஆடையாக உடுத்தியும் யானைத் தோலைப் போர்த்தியும் உள்ளாள். அப்பால் அவள் சிவப்புப் பஞ்சாடையும் அணிந்து வந்திருக்கின்றாள். திருமால் பீதாம்பரம் அணிந்து வந்திருக்கிறார். சிவன் கொற்றவையின் ஆடைகளை அதாவது புலித்தோலை அரையில் அணிந்து யானை உரியைப் போர்த்திருந்தாலும் பிற்காலத்தில் அவர் அரைக் காற்சட்டையை யும் பட்டாடைகளையும் பஞ்சாடைகளையும் அணிந்து வந்துள்ளார். இந்திரன், குபேரன் முதலியவர்கள் அவர்களின் செல்வம், அரசத் தன்மைக்கேற்ப உயர்ந்த அலங்காரமான ஆடை களை அணிந்திருப்பர். சூரியன், முருகன் (சுப்பிரமணியன்) போன்ற தெய்வங்கள் இராணுவ உடைதரித்திருப்பர். கைகளில் படைக் கலன்களை வைத்திருப்பர். கலைமகள், திருமகள் போன்ற பெண் தெய்வங்களின் ஆடைகளும் உயர்தரமானவைகளாய் உள்ளன. சிற்ப நூற்களில் ஆடைகளின் பலவகை வண்ணங்களைப் பற்றிக் கூறப் பட்டுள்ளன. முற்காலத் தெய்வ உருவங்கள் பல்வேறு வண்ணங் களில் இடுப்பில் சிறிய ஆடைகளை மட்டும் அணிந்தவைகளாய்க் காணப்படுகின்றன. நமது நாட்டிலுள்ள பழைய ஓவியங்களில் இது நன்கு தெரிகிறது. ஆடைகளில் காணப்படும் வண்ணங்கள் அழகிற்காக இருக்கவில்லை. தெய்வங்களின் தன்மைகளுக்காகவே ஆடைகளுக்கு வண்ணங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆடைகளின் வண்ணங்களை வைத்துத் தெய்வங்களின் போர்க் குணத்தையும் சாந்த குணத்தையும் அனுக்கிரகத் தன்மையையும் தாய்மைத் தன்மையையும் பிறவற்றையும் உணர்ந்து கொள்ள முடியும். அகத்தியர் பச்சை நிறமானவர்; புலத்தியர் பொன் நிறமானவர், அங்கிரஸா மஞ்சள் நிறமானவர் என்று கூறப்படுகிறது. பகலவன், மாயோன், நான்முகன், மாயோள் போன்றவர்கள் அழகுவாய்ந்தவர் களாகவும் செந்நிறமான ஆடையை அணிந்தவர்களாகவும் இருப்பார்கள். சிவபெருமான் புலித்தோலை அரையில் கட்டியவ ராக இருந்தாலும் அரைக்காற் சட்டையையும் வெள்ளை உடையை யும் உடையவராயும் இருப்பார். தமிழ் நாட்டுத் தெய்வ உருவங் களைப் பற்றி விவரமாகக் கூறும் சிற்ப நூற்களில் இவரது ஆடை களைப் பற்றி என்ன கூறுப்படுகிறது என்று ஆராய்வோம். சிவனார் ஆடை - புலித்தோல் பொதுவாகப் புலித்தோல் இன்று துறவிகளின் ஆடையாகக் கருதப்படுகிறது. முற்காலத்தில் இது வேட்டுவ மக்களின் உடை யாகக் கருதப்பட்டது. சிவபெருமான் புலித்தோலை அரையில் அணிந்திருப்பதாலும் யானைத் தோலைப் போர்த்தியிருப்பதாலும் அவர் வேட்டுவ மக்களின் தெய்வம் போல் காணப்படுகிறார். ஆனால் அவர் வேட்டுவ மக்களின் தெய்வமல்லர். ஆனால் மலைமகளாகிய கொற்றவையை மணந்து கொண்டதால் அவளது ஆடைகளைப் புனைந்து கொண்டு வேட்டுவ ஆடையில் திகழ்கிறார். யானைத் தோல் போர்வை சிவபெருமான் யானை உரியைப் போர்த்தியிருக்கிறார். சிவபெருமான் மனைவியின் போர்வையாகிய யானைத் தோலைப் போர்த்தியிருந்தாலும் அவர் மருத நிலமக்களின் தலைவனாய்ப் பயிர் பச்சைகளை அழித்து வந்த யானைகளைக் கொன்றதையும் கசமுகா சுரனைக் கொன்றதையும் நினைவுப் படுத்தவே யானையுரியைக் கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறே புலித்தோலை உடுத்தியதற்கும் பல புராணக் கதைகள் உண்டு. வெள்ளை ஆடை சிவபெருமான் வெண்மையான ஆடையை அணிந்தவராகச் சிற்ப நூற்கள் கூறுகின்றன. கௌரி, கலைமகள், மனோன்மணி தேவிகளுக்கும் சில சிவமூர்த்தங்களுக்கும் வெள்ளை ஆடை உகந்தது. வெண்மை பரிசுத்தத்தைக் காட்டும். சிவபெருமான் மக்களின் உள்ளத்தெழும் அழுக்கை அகற்றி உயிர்களைத் துப்புரவு படுத்தித் தன்னோடு இணைத்துக் கொள்பவர். பீதாம்பரம் பீதாம்பரம் என்பது பொன்னிறமான ஆடை. திருமாலுக்குப் பீதாம்பரம் உரியது. பீதாம்பரம், மஞ்சள் நிறமான பட்டாடையைக் குறிக்கும் என்பார்கள். உடுசிய வேசா உடுசிய வேசா வடநாட்டு உடையாகும். இது கதிரவனுக்குகந்த ஆடை. கதிரவன் வணக்கம் வட நாட்டில் இருந்து பரவியதாகச் சிலர் கூறுகிறார்கள். கதிரவன் உடை இமயமலைப் பிரதேசத்திலுள்ள மக்களின் உடையைப் போன்று இருக்கும். நீண்ட இரவிக்கையும் பாதங்கள் வரை நீண்டு தொங்கும் முரட்டு உடையும் நீளமான காலணியும் மலை இனத்தவர்களான திபேத்தியர்களின் உடை. இதுவே கதிரவன், கதிரவன் மனைவி ஆகியவர்களின் ஆடையாகக் கருதப்படுகிறது. சோலகா சோலகா என்பது இடுப்பிலிருந்து பாதம் வரை அணியும் ஒரு வகை உடை. கதிரவன் திருஉருவத்திற்குச் சோலகம் என்னும் ஆடை அணிவிக்கப்பட வேண்டும் என்று வடமொழியில் உள்ள சிற்ப நூற்கள் கூறுகின்றன. கிருத்திவாசா கிருத்திவாசா என்பது தோலால் செய்யப்பட்ட ஆடையாகும். இது சிவபெருமானுக்கு உகந்தது. ஏனெனில் அவர் துறவியாக இருக்கும் நிலையில் இந்த ஆடையை அணிவார். உருத்திராணி என்னும் தேவியும் தோலாடை அணிவார். சுக்கிலாம்பரா சுக்கிலாம்பரா என்பது நான்முகன் விரும்பி அணியும் வெள்ளை ஆடை. நான்முகன் மனைவியாகிய கலைமகளுக்கு வெள்ளியாடை, வெள்ளை மலர், வெள்ளை அணி, வெள்ளி இருக்கை முதலியவைகளில் விருப்பம் அதிகம். அவள் பீதாம்பரமும் அணிவாள். மரஉரி மரப்பட்டையாலான ஆடை. இது பழங்கால வேட்டை ஆடை. இவ்வாடை போதனர்களுக்கு உரியது. எண்வகை எழிற் கோலங்கள் சிவ பெருமானின் திருக்கோலங்கள் பல உள்ளன. அவை களைத் தொகுத்தும் வகுத்தும் சைவ சமய அறிவர்கள், அட்ட மூர்த்தம், மகாதேவமூர்த்தம், சிவமூர்த்தம் என்று மூன்று பிரிவாகப் பிரித்துள்ளார்கள். இவைகளில் அட்டமூர்த்தம் சிறப்பானது. அடிப்படையானது. எனவே இந்த மூர்த்தத்தில் உள்ள கோலம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச் சிறப்புடையது. சமயச் சான்றோர் இறைவனின் தொழில் வேறுபாடுகளைக் கொண்டு அவனது கோலங்களை வகைப்படுத்தி விளக்கி நமக்குத் தந்துள்ளனர். போகியாய் இருந்துயிர்க்குப் போகத்தைப் புரிதலோ ஓரார் யோகியா யோகமுத்தி யுதவுத லதுவு மோரார் வேகியா னாற்போற் செய்த வினையினை யீட்டலோரார் ஊகிய மூட ரெல்லா மும்பரி னொருவ னென்பர்1 என்று கூறும் சைவசித்தாந்த தத்துவஞான விளக்கத்தின்படி உயிர் களுக்குப் போகம் அளிப்பான் வேண்டி இறைவன் கோபங் கொண்டால் உயிர்களைத் தண்டித்து அவைகளின் வினையினை வீட்டுதற் பொருட்டும் அவ்வுயிர்களுக்கு இன்பம் அளித்தற் பொருட்டும் கொண்ட திருக் கோலங்களில் சில போகவடிவமும் சில கோரவடிவமும் சில யோக வடிவமும் உடையன என்று சிவாகமங்கள் எடுத்துக்காட்டுகின்றன. யோகியாய் இருக்கும் கோலம் தட்சிணாமூர்த்தி என்பர். போகியாய் இருக்கும் கோலம் கலியாணசுந்தர மூர்த்தி எனப்படும். கோபியாய் இருக்கும் கோலம் காமாந்தக மூர்த்தி, கசசம்மார மூர்த்தி என்றெல்லாம் இறைவ னுடைய எழிற் கோலங்களுக்கு விளக்கம் கூறப்படும். இது சைவசமயச் சான்றோர் கண்ட கருத்து. பொதுவாக, இறைவன் கொண்ட எழிற் கோலங்கள் மூர்த்தங்கள் என்று கூறப்படும். இந்த மூர்த்தங்களை மூன்று வகையாக மூதறிஞர்கள் பிரித்துள்ளனர். அவை:- (1) அனுக்கிரக மூர்த்தம் (2) சங்கார மூர்த்தம் (3) இரௌத்திர மூர்த்தம் என்று பிரிக்கப்படும். வேறு வகையாய்ப் பிரிப்பதும் உண்டு. பொதுவாக, ஆகமங்களிலும் சிற்ப நூற்களிலும் சிவபெருமானின் தோற்றம் அவருடைய மூர்த்தங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளதாய்க் காணப் படுகிறது. மூர்த்தங்களின் தன்மைகளை யொட்டிக் கைகளின் எண்ணிக்கையும் அவைகளில் உள்ள ஆயுதங்களும் முத்திரைகளும் ஆசனங்களும் ஆடைகளும் அணிகலன்களும் பாதக்கிரமங்களும் மாறுபட்டிருக்கின்றன. இஃதன்றி இறைவனின் திருவுருவங்களில் அவர் தம் வீரம், கோபம், மகிழ்ச்சி, சாந்தம், கருணை முதலிய குணங்களைக் காட்டுவதற்கு அவர் தம் உருவங்கள் அபங்கம், அதிபங்கம் அல்லது திரிபங்கமாக அமைக்கப்படுகின்றன. இறைவனின் சாந்தமும் அருளும் அன்பும் அமைந்து அனுக்கிரக நிலையில் நிற்கும் கோலத்தை விளக்கத் திருஉருவங்களைச் சமபங்க நிலையில் - நேராக நிற்கும் நிலையில் உள்ள உருவமாகவும் அபங்க நிலையில் ஒரு பக்கம் சரிந்து நிற்கும் உருவமாகவும் அமைப்பர். ஆடவல்லான் போன்ற தெய்வ உருவங்கள் அதிபங்க நிலையில் இருக்கும். ஒரு பக்கம் சாய்ந்து நிற்கும் தேவியின் திருஉருவம் அபங்கம் என்றே கூறப்படும். கல் வழிபாடு, தூண் வழிபாடு, இலிங்க வழிபாடு முதலிய அம்மையப்பர் வழிபாடு சிறப்புற்றெழுந்த காலத்தில் முகலிங்க வழிபாடு முளைத்தது. முகலிங்க வழிபாடு முனைந்து முகிழ்த்த காலத்திலே முகலிங்க மூர்த்தமும் அப்பால் மூர்த்தமும் தோன்றின. முதலில் எழுந்த ஒரு மூர்த்தம் அப்பால் இரண்டு மூன்று நான்கு ஐந்து எட்டாகப் பரிணமித்தது. உலோக காலம் தோன்றிப் பல்லாண்டு சென்ற பின்னரே சிவ பெருமானுடைய திருவுருவம் முழுவடிவில் மண்ணாலும் சுதை யாலும், மரத்தாலும், சிலையாலும் எழுந்து இறுதியாகச் செம்பு, வெண்கலம், வெள்ளி, பொன் முதலிய தாதுப் பொருளில் வார்க்கப் பட்டது. இதனிடையே மணிகள், பளிங்குக் கற்கள் தந்தம் முதலியவைகளிலும் மூர்த்தங்கள் தோன்றின. உலோக காலத்திலே படிமக்கலை சிறப்புற்றெழுந்தது. சிற்பிகள் மண், மரம், கல் முதலியவைகளை விட உலோகத்திலே தங்கள் கைவண்ணத்தைக் காட்ட முடிந்தது. உலோக உருவத்திலே சிற்பிகள் மிக நுண்ணிய வேலைப்பாடுகளைச் செய்து பேரும் பெருமையும் சீரும் சிறப்பும் எய்தினர். உலோக காலத்திலே செம்புப்படிமங்கள் செய்ய முயன்ற பொழுது சிவபெருமான் திருஉரு மக்களுக்கு அறம் உரைக்கும் குருவின் கோலமாக - அதாவது நால்வர்களுக்கு அறம் உரைக்கும் தட்சணா மூர்த்தமாக உருவாக்கப் பெற்றது. அதுவே மூர்த்தங்களில் முதலாவதாக எண்ணத்தக்கது. அதன் பின்னர்தான் இறைவனின் - ஆணும் பெண்ணும் கூடித் திருமணம் செய்து இல்லற வாழ்விற்கு எடுத்துக்காட்டாக மிளிரும் கலியாணசுந்தரர் கோலம் தோன்றியது. பின் இறைவன் உமாதேவியோடு உட்கார்ந்து கொண்டு நடுவே இளமுருகன் இருக்கும் குடும்பக் கோலம் - அதாவது சோமகந்த சுகாசன மூர்த்தம் எழுந்தது. தன்னிடம் அடைக்கலம் புகுந்தவர் களைப் பாதுகாக்கும் கோலத்திலும் இளம்பிறையைச் சடா மகுடத்தில் சூடி இன்புற்றிருக்கும் கோலத்திலும், இறைவனை எண்ணாது, தம் தவத்தினால் பல சித்திகளைப் பெற்று அதனால் கர்வம் கொண்ட முனிவர்களுக்கு அறிவூட்டிய பிச்சைக்காரக் கோலத்திலும் ஆணவங் கொண்ட அரக்கர்களின் செருக்கடக்கி நின்ற வீரக் கோலத்திலும், அடைக்கலம் புகுந்த அன்பர்களுக்கு அபயம் அளித்து அருள் சுரக்கும் அன்புக் கோலத்திலும் படிப் படியாய்ச் சிவபெருமானின் திருக்கோலங்கள் பல துளிர்த்து எழுந்தன. சமய ஞானிகளின் அறிவிலும் பக்தர்களின் கண்களிலும், அன்பர்களின் கனவிலும் பெருமானின் பேரருட் காட்சிகள் பல தோன்றின. இவைகளையெல்லாம் ஆராய்ந்த அறிவர்கள் பெருமானின் பல நல்ல மூர்த்தங்களை விளக்கி ஆகமங்கள் வாயிலாக எடுத்துக்காட்டினர். அப்பால் சிற்பிகளின் வாயிலாக ஓவியமாகவும் சிலையாகவும் உலோகப் படிமமாகவும் உருவாக்கினர். ஆரம்ப காலத்தில் மண்ணிலும் மரத்திலும் கூட இம் மூர்த்தங்கள் உருவாக்கப்பட்டன. சிற்பிகளின் சிந்தனையில் கூடப் பல மூர்த்தங்கள் சிறப்புற்றெழுந்தன. சிவபெருமானின் முழு உருவங்கள் திகழும் கோலங்களை அறிஞர்கள் மூர்த்தங்கள் என்றனர். ஆதியில் சிவபெருமானுடைய திருஉருவம் மனித உருவிலே ஒரு முகமும் இருகரங்களும் உடையதாய்த் திகழ்ந்தது. அப்பால் அவர் தம் அளவிலா ஆற்றலும் அருளும் அறிவும் மக்கள் உணர உணர அவரது முகம் ஐந்தாக எழுந்தது. அவர் தம் கைகள் இரண்டாக இருந்து பின் நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினான்கு, பதினாறு என வளர்ந்தன. சிவபெருமான் திருஉருவம் இரண்டு கைகளையுடையதாய்க் குடிமல்லம் இலிங்கத்திலும் (கி.பி. முதல் நூற்றாண்டிலும்) இரண்டாம் கட்பீசு என்னும் குசான் மன்னர் வெளியிட்ட காசுகளிலும் (கி.பி 50 ஆம் ஆண்டிலும்) காணப் படுகின்றது. ஆனால் குசான் காசில் சிவபெருமான் உருவம் ஐந்து முகங்கள் அல்லது மூன்று முகங்களைப் பெற்றிருப்பதுபோல் காணப்படுகிறது. ஆதிகாலத்தில் மக்கள் கடவுளை மனித உருவிலே கண்டிருக்கின் றனர். கிறித்தவ மறையாகிய பைபிளில் தேவன் முதன் முதலாக மனிதனைத் தன்னுடைய சாயலாகவே படைத்தான் என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.1 இதன் மூலம் கடவுள் உருவமானது மனித உருவமே என்று கிறித்தவர்களின் முன்னோர்கள் எண்ணியதாக நன்கு தெரிகிறது. ஆம்! மனிதன் கடவுளைத் தன்னைப் போன்ற மனித உருவிலேதான் ஆதியில் கண்டிருக்க முடியும். மனிதன் எவ்வாறு ஆதிகாலத்தில் கடவுளை விலங்கு வடிவிலோ, பறவை வடிவிலோ கண்டிருக்க முடியும்? முற்காலத்தில் தமிழன் தெய்வத்தை வீரமுள்ள தாய் வடிவிலும் அப்பால் தந்தை வடிவிலும் கண்டுள்ளான். முதலில் அவன் கடவுளைத் தன்னைப் போன்ற நிர்வாண கோலத்திலே தான் கண்டுள்ளான். அப்பால் அவன் வேடுவ வாழ்க்கை நடத்திய காலத்திலே தெய்வத்தை வேட்டுவ நிலையிலே கண்டான். தெய்வம் புலித்தோலை அரையில் பிணைத்தும் யானையுரி போர்த்தியும் ஒரு கையில் மழுவைப் பிடித்தும் மற்றொரு கையில் மூவிலை வேல் தாங்கியும் நிற்பது போல் கண்டான். அப்பால் மக்கள் நாகரிகம் பெற்று அறிவிற் சிறந்து விளங்கிய காலத்திலே தெய்வம் சிவந்த மேனியையுடையதாயும் அரையில் பொன்னிறப்பட்டு அல்லது வெண்மையான பருத்தி ஆடையும் அணிந்ததாயும் காதிலும், கழுத்திலும், கைகளிலும் கால்களிலும், பொன் அணிகளும், மணிகள் பதித்த அரிய அணிகலன்களும் பூண்டு, சந்தனம், பன்னீர் முதலிய நறுமணப் பொருள்களைப் பூசி, மணி மகுடத்தோடு இரும்பு வெண்கலம் செம்பு முதலிய உலோகங்களில் செய்த கூரிய ஆயுதங்கள் ஏந்தியிருப்பதாயும் கண்டான். தெய்வத்தின் ஆற்றலைக் காட்டவே அவை ஒன்றிற்கு மேற்பட்ட முகங்களும் இரண்டிற்கு மேற்பட்ட கைகளும், இரண் டிற்கு மேற்பட்ட கண்களும் உடையதாகச் சித்திரிக்கப்பட்டிருக் கின்றன. அல்லது மக்களின் அறிவிற்கும் எண்ணத்திற்கும் ஏற்பவே தெய்வம் காட்சி அளித்திருக்கலாம். சைவ சமயத்தில் பெருந் தெய்வங்களுக்கு அதிகமான முகங்களும் அதிகமான கைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. பௌத்த சமயத்தில் பெருந் தெய்வத் திற்கு ஒரு முகம் இரு கைகளும் சிறு தெய்வங்களுக்கு அதிகமான முகங்களும் அதிகமான கைகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. சைவ சமயத்தை ஒட்டியே சுமார்த்த சமயத்திலும் பெருந்தெய்வங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட முகங்களும் அதிகமான கைகளும் காணப்படு கின்றன. சிறு தெய்வங்களுக்கு ஒரு முகமும் இரு கைகளும் மட்டும் காணப்படுகின்றன. இந்தியாவில் முதன்முதலாகப் புத்தர் பெருமானுக்குத்தான் உருவம் அமைக்கப்பட்டது. அதன் பிறகே மற்ற சமயத்தில் உருவங்கள் உருவாக்கப்பட்டன என்று சில வடநாட்டுக் கலைஞர்கள் கூறுகின்றார்கள். வேறு சிலர் பௌத்தர்கள் தாம் பிறசமயத் தெய்வங் களுக்கு உருவங்களைக் கற்பித்தவர்கள் என்று கூறுகின்றார்கள். ஆதாரமின்றி அறிஞர்கள் கூறிய இந்தக் கூற்றுக்களையெல்லாம், சிந்துவெளி நாகரிகத்தில் கண்ட பசுபதியும் தாய்த் தெய்வமும், ஆடவல்லான் போன்ற தெய்வத் திருவுருவங்களும் பிற உருவங்களும் பொய்ப்படுத்திவிட்டன. மேலும் பௌத்த சமயத்திற்கும் சைவ நெறிக்கும் உருவ அமைப்பின் அடிப்படையிலே வேற்றுமைகள் இருப்பதை நாம் உணர்ந்து பார்க்க வேண்டும். பௌத்தர்கள் பெருந்தெய்வங்களுக்கு மனிதர்களைப்போல் ஒருதலையும் இருகை களும் சிறு தெய்வங்களுக்குப் பல தலைகளும் பல கைகளும் கற்பித்துள்ளார்கள். சைவர்கள் மனிதர்களுக்கும் சிறுதெய்வங் களுக்கும் ஒரு தலையும் இருகைகளும், பெருந்தெய்வங்களுக்கு அவற்றின் ஆற்றலுக்கேற்ப ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து முதல் பல தலைகளும் இரண்டு மூன்று நான்கு ஆறு, எட்டு, பத்து, பதினாறு எனப் பலகைகளும் கற்பித்துள்ளார்கள். சைவ சமயத்தில் . . . இறைவன் எல்லையற்ற ஆற்றலையுடையவன். அவனது சிரிப்பிலே முப்புரம் அழிந்து விட்டது. அவன் நெற்றிக் கண்ணைத் திறந்து விட்டாலே இப்பிரபஞ்சம் அனைத்தும் சாம்பலாய் விடும். எனவே இவ்வுலகத்தை ஆக்கவும் அழிக்கவும் காக்கவும் அதிகமான அங்கங்கள் அவசியமில்லை. ஆனால் சாதாரண மக்களுக்கு இறைவன் மக்களினும் உயர்ந்தவன், வேறுபட்டவன் என்பதையும் - தெய்வங்களின் ஆற்றலை அளவிட்டுக் காட்டவும் அதிகமான உறுப்புக்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது. மேலும் பௌத்தம், கருவில் உருப்பெறுவதற்கு ஆயிரக்கணக் கான ஆண்டுகளுக்கு முன்பே சைவம் தனித் தன்மையோடு தனது சமயக் கருத்துகளுக்கும் பண்பாட்டிற்கும் ஏற்பத் திருவுருவங்களை உருவாக்கிக் கொண்டது. தாய்த் தெய்வம் ஆதியில் இரு கை களையே பெற்றிருந்தது. அப்பால் அத்தாய்த் தெய்வம் சக்திவாய்ந்த தெய்வமாக எழும்பொழுது அவளது கைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வந்ததாகத் தெரிகிறது. காளி இரு கைகளை உடைய தெய்வம்; பத்திரகாளி நான்கு கைகளையுடையவள். கொற்றவை பல்வேறு பெயர்களில் 6, 8, 10, 12, 14, 16 கைகளை யுடையவளாய்த் திகழ்கிறாள் என்பது ஆராய்வதற்குரியது.1 சிவ பெருமானை மக்கள் அவர் தம் அருட்கோலங்கள் பலவற்றில் வழிபட்டாலும் அவரது எண்கோலத் தோற்றம் அதாவது அட்டமூர்த்தம் அதிகச் சிறப்புடையது என்று கூறப்படும். நான்முகன் (பிரமன்), உற்பத்தியைப் பெருக்கும் உபாயம் உணராது மயங்கிச் சிவபெருமானை வழிபட்டுத் தனக்கு வழிகாட்ட வேண்டும் என்று விண்ணப்பித்தபொழுது சிவபெருமான், நான்முகனின் புருவ நடுவில் எட்டு மூர்த்தியாய் எழுந்து அருள் கூர்ந்தார். அம்மூர்த்திகள் முறையே பவன், சர்வன், ஈசானன், பசுபதி, வீமன், உக்கிரன், மகாதேவன், உருத்திரன் எனப்படும். இவர்களின் வடிவம் முறையே (1) நீர், (2) நிலம், (3) காற்று, (4) நெருப்பு, (5) விண், (6) சுகாமன் (7) திங்கள், (8) ஞாயிறு என்று கூறப்படுகிறது. இவர் களுக்கு தேவிகள் (1) உசை, (2) சுகேசி, (3) சிவை, (4) சுவாகா, (5) திசை, (6) தீட்சை, (7) உரோகினி (8) சுவார்ச்சலை ஆகிய எண்மராவர். சிவபெருமானை எட்டு வடிவங்கொண்டோன், எண்கோலத் தெய்வம், அட்டமூர்த்தி என்றெல்லாம் கூறுவர். ஆனால் நாம் இந்நூலில் விளக்கிக் கூறுமுன் வந்தது சிவ பெருமானுடைய எட்டுத் திருக்கோலங்களையேயாகும். சிவ பெருமான் கொண்ட எட்டு கோலங்களைக் கண்டு சமயப் பெரியார்கள் அவரை அட்டமூர்த்தி என்று அழைப்பர். சிவபெரு மானின் சீரிய எட்டுக் கோலங்களை (அட்டமூர்த்தங்களை) வைத்து அவரைத் தட்சணாமூர்த்தி, கலியாணசுந்தரர், சோமகந்த சுகாசன மூர்த்தி, சந்திரசேகரமூர்த்தி, காலசம்மாரமூர்த்தி, திரிபுரசம்மார மூர்த்தி, கசசம்மாரமூர்த்தி, பிச்சாடனமூர்த்தி என்று அழைக் கின்றனர். கற்காலத்திலே வட்டக் கல்வடிவிலும் (O) அப்பால் தறிவடி விலும் (1) பின் இலிங்கவடிவிலும் (O) காட்சியளித்த கபாலமூர்த்தி அப்பால் மக்கள் நாகரிகமுதிர்ச்சிபெற்ற உலோக காலத்திலே அறிவுடைய மக்களுக்கு சமயமும் ஒழுங்கும் கட்டுப்பாடும், கைவரப் பெற்ற மக்களுக்குக் குருவாகவும், மணமகனாகவும், அம்மையப்ப னாகவும் - அருள் ஒழுகும் அனுக்கிரகமூர்த்தி யாகவும் மக்களின் இடையூறு அகற்றி இன்பந்தரும் சங்காரமூர்த்தி யாகவும் சிறந்த கோலங்களில் காட்சி அளிப்பவராகக் காணப் படுகிறார். சைவ சமய குரவர்களில் ஒருவராய் விளங்கிய மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில், அட்டமூர்த்தி அழகன் இன்னமுதாய ஆனந்த வெள்ளத்தான் சிட்டன் மெய்ச்சிவ லோகநாயகன் தென்பெருந்துறைச் சேவக மட்டு வார்குழன் மங்கையாளையோர் பாகம் வைத்த அழகன்றன் வட்ட மாமலர்ச் சேவடிக்கணநம் சென்னி மன்னி மலருமே என்கிறார். மற்றும் அப்பர் பாடல்களில் இச்செய்தி பின்வருமாறு உள்ளது. முட்டாமே நாள் தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து மூன்று போதும் கட்டார்ந்த இண்டைகொண்டடிச் சேர்த்தும் அந்தணர்தங் கருப்பறிய லூர்க் கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் குழகனைக் கொகுடிக் கோயில் எட்டான மூர்த்தியை நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே (தேவாரம்) சைவசமய குரவர்கள் நால்வரிலும் முதியவராயும் சமணர்களும், மன்னனும் இயற்றிய எல்லாக் கொடுமைகளுக்கும் அஞ்சாது எதிர்த்து நின்று வெற்றி பெற்ற வீரராயும் விளங்கி தம் வாணாள் முழுவதும் துறவியாய்ப் பணியாற்றி அப்பர் அடிகள் தேவாரப் பாடலில் மேலும், முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும் மொய்பவளக் கொடியனைய சடையார் போலும் எத்தனையும் பத்தி செய்வார்க் கினியார் போலும் இருநான்கு மூர்த்திகளு மானார் போலும் மித்திரவச் சிரவணற்கு விரும்பம் போலும் வியன் வீழி மிழலையம விகிர்தர் போலும் அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே என்று அட்டமூர்த்தியை இருநான்கு மூர்த்திகளுமானார் என்று போற்றியுள்ளார். மற்றொரு சைவசமய குருவாயும் வயதில் எல்லோர்க்கும் இளையவராயும் விளங்கிய சம்பந்தர் தேவாரத்தில், நட்டத்தோடு நரியாடு கானத்தெரி யாடுவான் அட்டமூர்த்தி யழல்போலுருவன் அழகாகவே இட்டமாக விருக்கும் மிடம்போ லிரும்பைதனுள் வட்டஞ் சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கு மாகாளமே என்று அட்டமூர்த்தியை அழகொளிரப்பாடிப் போற்றியுள்ளார். அட்டமூர்த்தியுருவம் அற்புதமான தத்துவ அடிப்படையில் அமைந் துள்ளதால் சைவ சமய குரவர்கள் நால்வரும் தமது திருப்பதிகங்களில் பல்வேறிடங்களில் அதனைப் போற்றிப் புகழ்ந்து கூறியுள்ளார்கள். அட்டமூர்த்தம் (அதாவது சிவபெருமானுடைய எட்டுத் திருக்கோலங்கள்) அவரது மகாதேவமூர்த்தம் இருபத்தைந்திற்கும் சிவமூர்த்தம் அறுபத்து நான்கிற்கும் அடிப்படையாய் அமைந் துள்ளது. இந்த அட்டமூர்த்தத்திலிருந்தே மகாதேவமூர்த்தம் எழுந்தது. இலிங்கோற்ப மூர்த்தமும் மூன்று அட்டமூர்த்தமும் (அதாவது 24 மூர்த்தமும்) இணைக்கப்பெற்று இருபத்தைந்து மூர்த்தங்களும் மகாதேவமூர்த்தம் எனக் கூறப்பட்டன. எட்டு அட்ட மூர்த்தங்களை அதாவது அறுபத்து நான்கு மூர்த்தங்களை (அட்ட மூர்த்தம் மகாதேவமூர்த்தம் அனைத்தும் உள்ளடக்கி)ச் சிவமூர்த்தம் எனக் கூறினர். தமிழர்கள் - சைவர்கள் ஒரே தெய்வவழிபாட்டைக் கொண்ட வர்கள். அவர்கள் கண்ட ஒரு தெய்வத்தில் தாய்த் தன்மையும் தந்தைத் தன்மையும் விளங்குவதாகக் கண்டு அதனை அம்மையப்ப ராகக் கொண்டு வழிபட்டார்கள். இறைவனுடைய ஆற்றல் அம்மை யாகவும் அவனுடைய அருள் அப்பனாகவும் எண்ணி வழிபடப் பட்டது. உலகமானது சடம், சக்தி என்னும் இருகூறாகக் காணப் பட்டாலும் சடமும் சக்தியும் பிரித்துக் காணமுடியாத ஒரு பரம் பொருள் என்று எண்ணப்பட்டது ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று கூறப்படும் திருமந்திர வாக்கியங்கள் சைவர்களின் மந்திரமாகும். தமிழ் வரிவடிவில் அ என்பது, முதன்முதலாக உச்சரிக்கப் படும் உயிர் எழுத்தாகும். அ என்பதற்குக் கடவுள் என்பதே பொருளாகும். திருமாலையும் சிவனையும் குறிக்கும். அவ்வென் சொற் பொருளாவான் (பாகவதம் சி.சு.பா. 20) அகாரம் அவன் (திருமந்திரம்), அகரம் என அறிவாகி (விநாயகபுராணம்) என்று கூறப்படுதலான் கடவுள் அறிவிற்கும் அது பெயராம். கடவுள் எங்கும் நிறைந்திருப்பது போல் எல்லா எழுத்துக் களிலும் அகரம் உண்டு என்றார்.1 அகரம், உலகில் உள்ள பல்வேறு மொழிகளிலும் முதலிடம் பெற்றுள்ளது. சிவபெருமான் எட்டுக் கோலங்களாக எழுந்தருளியதற்கு எண்ணற்ற காரணங்கள் உள. அவர் கொண்ட கோலங்கள் இரண்டாக மூன்றாக நான்காக இல்லாது எட்டாக இருப்பது மிகச் சிறப்புடையது. எட்டு என்ற எண், மட்டற்ற மாண்புடையது. அந்த எண்ணின் பெருமை எழுத இந்த ஏடு இடந்தராது. எட்டின் பெருமையை எழுதிக் கொண்டே போகலாம். எட்டு என்ற எண் அ என்று எழுதப்பட்டு வருவது தெரிந்ததே. அ, என்பது தமிழ் வரிவடிவங்களில் முதல் எழுத்தாய், உயிர் எழுத்தாய், ஒலிகளுக்கெல்லாம் தாயாகவும் மொழிகளுக் கெல்லாம் தாயகவும் இருப்பதும் சிந்திக்கத்தக்கது. தமிழ் எண்ணின் முதலாவதாக இருக்கும் ஒன்றிற்குத் தமிழர் க என்ற எழுத்தைப் பயன்படுத்தினர். அதிலும் அ என்ற உயிர் எழுத்து ஒலிக்கிறது. க்+அ = க அதாவது க் என்ற மெய் எழுத்தும் அ என்ற உயிர் எழுத்தும் இணைந்தே க என்ற உயிர் மெய் எழுத்தாக எழுந்து ஒன்று என்ற எண்ணின் குறியீடாக வழங்குகிறது. எட்டினை அடிப்படையாக வைத்து மகாதேவ மூர்த்தமும் சிவ மூர்த்தமும் கண்டது போல் எட்டினை அடிப்படையாக வைத்தே இரண்டு எட்டாக அதாவது பதினாறாகச் சோடச உபசாரங்களும் பதினாறு பேறுகளும் பதினாறு சைவமும் முப்பத்திரண்டு அறங்களும் முப்பத் திரண்டு பண்களும் முப்பத்திரண்டு உபநிடதங்களும் முப்பத் திரண்டு சிற்ப நூற்களும் அறுபத்து நான்கு கலைகளும் அரும்பி யுள்ளன. அட்டமூர்த்தி என்பதனால் இறைவன் எட்டு என்று தமிழர்கள் என்றும் எண்ணியதே இல்லை. இறைவன் ஒருவனே அவன் பிறப்பிறப்பற்றவன்; குணம், குறி, ஊர், பேர், உருவம் இல்லாதவன். அவனை இந்நிறத்தன். இவ்வண்ணத்தன் என்று எழுதிக் காட்டமுடியாது என்று தமிழர்கள் பண்டு முதல் அறிவார்கள். அவன் எல்லாத் தேவர்களுக்கும் முதல்வன். அவனே மண்ணையும் விண்ணையும் எண்ணிலா உலகங்களையும் ஞாயிறு, திங்கள் போன்ற கோள்களையும் படைத்தவன். அவனே முடிவில் எல்லாவற்றையும் அழிப்பவன் என்று தமிழ் மக்கள் அறிவார்கள். என்றாலும் அவர்கள் அவனைக் கண்டு அஞ்சவில்லை. அவனை அன்புள்ள அம்மையாயும் அப்பனாயும் மாமனாகவும் மாமியாக வும் - ஏன்? - நல்ல தோழனாகவும் தலைவனாகவும் கொண்டனர். அவன் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா நாட்டிற்கும் எல்லாச் சமயத்திற்கும் இறைவன் என்று நம்பினர். அவன் தென் னாட்டார் கண்ட தெய்வம்; ஆனாலும் எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று கூறினர். அவனை ஏழிசையாகவும் இசைப் பயனாகவும் கண்டனர். அவன் கொண்ட கோலங்கள் எண்ணிலாதன, என்றாலும் எல்லாக் கோலங்களும் இந்த எண்வகைக் கோலத்தில் (அட்டமூர்த் தத்தில்) அடங்கியிருப்பதாக அறிந்தனர். அட்டமூர்த்தி வடிவங் களில் அளவிலாத் தத்துவங்களைக் கண்டனர். அட்டமூர்த்தியை முப்பத்து முக்கோடித் தேவர்களுக்கும் மூவுலகிற்கும் மும்மூர்த்திக்கும் முதல்வனாகக் கொண்டனர். இதனை அப்பர் அடிகள், மூவுருவில் முதல் உருவாய் இருநான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்து மூவர் தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனிச்சிவன் என்று அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். சிவன் என்ற பதத்தை வைத்து இறைவன் ஆண் என்று எண்ணுவாரும் உளர். இறைவன் ஆணுமல்லன், பெண்ணுமல்லன், அலியுமல்லன். அவன் சில சமயங்களில் ஆண் போலவும் சில சமயங்களில் பெண் போலவும் காட்சி அளித்திருக்கலாம். அவன் பிறவாதவன், இறவாதவன்; அவனுக்குத் தாயும் இல்லை; தந்தையும் இல்லை என்று திருவாசகம் பலவிடங்களில் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் காட்டியுள்ளது. உலகில் மக்கள், கடவுளை இசக்கியாகவும் நீலியாகவும், பேச்சியாகவும், மாடனாகவும் ஐயனாராகவும் வீரனாகவும், மனிதனாகவும் எண்ணி சோறு, பழம், கருவாடு, கள்ளு, ஆட்டுக் கறி முதலியன படைத்து வழிபடுகின்றார்கள். சில வேடர்கள் அவனை வேடனாகவும், சில இடையர்கள் அவனை நல்ல மேய்ப்பனாகவும், சில உழவர்கள் அவனை நல்ல உழவனாகவும், சிலவீரர்கள் அவனை நல்ல வீரனாகவும், சில கவிஞர்கள் அவனை நல்ல கவிஞனாகவும், சில மன்னர்கள் அவனை நல்ல மன்னனாகவும் எண்ணி வழிபடு கின்றனர். வேடர்கள் அவனைக் கருப்பனாகவும் மரவுரி பூண்டவ னாகவும் புலித்தோல் உடுத்தியவனாகவும் மழு வேந்தியவனாகவும் எண்ணிப் போற்றுகின்றனர். சில செல்வர்கள் அவனை அழகனாக வும், செந்நிறத்தவனாகவும் பொன்னாடை புனைந்தவனாகவும் பட்டாடை தரித்தவனாகவும் மணிகள் பதித்த பல பொன் அணிகலன்களைப் பூண்டவனாகவும் செல்வம் உடையவனாகவும் காண்கின்றனர். அவன் அன்பர்களுக்குப் பொன்னும் மணியும் பூமியும் ஆடுமாடும் வண்டிகளும் வாழ்வும் அளிப்பான் என்று சிலர் அவனுக்குப் பொன்னும் மணியும் ஆடுமாடுகளும் பிறவும் காணிக்கை யாகப் படைத்து வழிபட்டு வருகின்றனர். இளைஞர்களும் கலைஞர் களும் அவனை இளைஞனாகவும் கலைஞனாகவும் நல்லாடைகள் அணிந்து அணிகள் பூண்டு கையில் இசைக் கருவிகளை ஏந்திப் பாடுபவனாகவும் ஆடுபவனாகவும் போற்றுகின்றனர். போகிகள், இறைவன் இன்பலோகத்தில் இளமையுணர்ச்சியோடு எழிலுற இறைவியை இடப்பக்கத்தில் அமர்த்தி இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்க - மகிழ்ச்சிகரமான என்றும் இளமை குன்றாத தெய்வ மகளிர் ஆடியும் பாடியும் விசிறி கொண்டு வீசியும் வெற்றிலையைச் சுருட்டி வாயிற் கொடுத்தும் பணி விடைகள் புரியும் கோலத்தில் இறைவனை உருவகப்படுத்தியுள்ளனர். சிலர் அவனை மனைவி, மக்கள், மைத்துனர், மாமி, மாமன் முதலியோர்களுடன் கூடி வாழ்பவனாகக் கூறியுள்ளனர். சிலர் அவனை யோகி என்றனர். சிலர் அவனை காமி என்றனர். சிலர் அவனைப் பெண் என்றனர். சிலர் அவனை ஆணும் பெண்ணும் இயைந்த வடிவம் உடையவன் என்றனர். மனிதன் இறைவனைத் தன் அறிவு நிலைக்கேற்பவும் சூழ்நிலைக்கேற்பவும் தட்பவெப்ப நிலைக் கேற்பவும் பண்பாட் டிற்கு ஏற்பவும் உருவகப்படுத்தியுள்ளான். ஆனால், இங்குத் தமிழர்கள் இறைவனை எவ்வாறு உணர்ந்தார்கள் என்பதையே விளக்கமுன் வந்துள்ளோம். தமிழர்கள் ஆதியில் தெய்வத்தைத் தாயாகவும் பின்சேயாகவும் அப்பால் மாமனாகவும் பிறகு தந்தை யாகவும் அப்பால் அம்மையப்பனாகவும் அட்ட மூர்த்தியாகவும் எண்குணத்தானாகவும் பிறப்பிறப்பு அற்றவனாகவும் எல்லாம் வல்லனாகவும் கண்டனர். இறைவன் உலகுயிர்களோடு ஒன்றாகவும் வேறாகவும் உடனாகவும் நிற்கும் உயர்ந்த தத்துவ நுட்பத்தை உணர்ந்தார்கள். இந்த உண்மையை உணர்வதற்குக் காரணமாக இருந்தது அவர்களின் பழம் பெரும் பண்பாடும் நாட்டின் தட்ப வெப்ப நிலையும் அவர்களின் அறிவு வளர்ச்சியுமே ஆகும். ஈறாகி அங்கே முதலொன்றாய் ஈங்கிரண்டாய் மாறாத எண்வகையாய் மற்றிவற்றின் வேறாய் உடனாய் இருக்கும் உருவுடைமை என்றும் கடனாய் இருக்கின்றான் காண் (திருக்களிற்றுப்படியார்-86) என்று எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் இறைவன் ஊழிக் காலத்தில் நிட்களமாயும் உற்பத்திக்காலத்தில் சகலமாயும் அட்டமூர்த்தியாயும் இவைகளுக்கெல்லாம் வேறாயும் உடனாயும் ஒளிரும் அருள்வடிவுடைமையை எக்காலமும் கொண்டிருப்பான் என்பது மேற்கூறியபாடலில் அடங்கி உள்ளது. அப்பர் அடிகள் இறைவன் அட்டமூர்த்தியாய் அருட்பெருங்கடலாய்ப் பிரபஞ்சம் அனைத்தும் நிறைந்து ஒளிரும் பெருமையை வியந்து, இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனா யெறியுங்காற்றுமாகி அருநிலையாய்த் திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகிப் பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமேயாகிப் நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே என்று சிறப்பித்துப் பாடியுள்ளார். தென்முகக் கடவுள் (வியாக்கியான தட்சணாமூர்த்தி) சிவபெருமான் தமிழர்களின் தொன்மையான கடவுள். சிவபெருமானைக் குருவாகக் கொண்டு வழிபடும் வடிவத்திற்குத் தட்சணாமூர்த்தியின் மூர்த்தம் என்று கூறுவர். வடமொழி வாணர்கள் அதனைப் பசுபதி என்றும் பகர்வர். தட்சணாமூர்த்தி யின் வடிவம் அட்டமூர்த்தியின் வடிவங்களில் ஒன்று. சிவபெருமான் அன்பர்களுக்கு அளித்த காட்சிகளில் அட்டமூர்த்தம் (எட்டு வகையான தோற்றங்கள்) மிகச் சிறப்புடையதாக அறிஞர்களால் போற்றப்படுகிறது. தென்முகக் கடவுள் (தட்சணாமூர்த்தி) தமிழர்களின் ஆதித் தெய்வம். அதைத் தமிழகச் சான்றோர்கள் குருமூர்த்தமாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். தட்சணம் என்னும் பதத்திற்குத் தெற்கு, அறிவு (ஞானம்) என்று பொருள் கொள்ளப் படும். சிவபெருமான் அறம், அறிவு, இசை, யோகம் போன்ற கலைகளுக்குக் குருவாக இருப்பதால் அவருக்குத் தட்சணாமூர்த்தி என்ற சிறப்புப் பெயர் அளிக்கப் பெற்றது என்பர் சைவசமய அறிவர்கள். மேலும் சிவபெருமானுக்குத் தென்னாட்டின் மீதும் தமிழ்மொழி மீதும் அதிகவிருப்பு உள்ளதால் அவருக்குத் தென்முகக் கடவுள் என்று பெயர் சூட்டப் பெற்றிருக்கலாம் என்றும் எண்ணப்படுகிறது. மக்கள் விலங்கு நீர்மையில் வாழ்ந்த காலத்தே சிவபெருமான் தென்பாண்டி நாட்டிலுள்ள மகேந்திரமலையில் தென்திசையை நோக்கிக் கல்லால மரத்தின் கீழ் குருமூர்த்தமாக அமர்ந்து நான்கு தமிழ்நாட்டு முனிவர்களான சனகர், சனந்தனர், சநாதனர், சநற்குமாரர் ஆகியவர்களுக்கு அறம் உரைத்தார் என்று கூறப் படுகிறது. அதாவது தமிழர்களுக்கு நான்கு மறைகளைக் கூறினார் என்று விளக்கம் தரப்படுகிறது. இம் மூர்த்தம் ஒரு சிறப்பான மூர்த்தம். இம்மூர்த்தம், தமிழர் வாயிலாக உலகிற்கு அறம் பொருள் இன்பம் எனும் முப்பாலையும் விளக்கத் தோன்றிய அரும் பெரும் மூர்த்தம் என்று அறிஞர்களால் போற்றப் பெறுகிறது. கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதல் கற்றகேள்வி வல்லவர்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம் என்று திருவிளையாடற் புராணம் அருளாளனின் அரிய திருமூர்த்தத்தின் கருத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சைவ சமய குரவர்களில் ஒருவரும், சமய குரவர்களில் நால்வருக்கும் இளையோராய் விளங்கியவரும் சுமார்த்த சமய குருவான சங்கராச்சாரியாரால் திராவிட சிசு என்று கூறப்பட்டவருமான திருஞான சம்பந்தப் பிள்ளையார், ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திகளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை ஓரா னீழ லொண்கழ லிரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி காட்டினை என்று இம்மூர்த்தத்திற்கு விளக்கம் தருகின்றார். சைவப் பெரு நெறிக்கு ஓர் ஒப்பற்ற தத்துவ ஞானத்தை நல்கிய மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில், அருந்தவருக் காலின்கீ ழறமுதலா நான்கனையும் இருந்தவருக் கருளுமது வெனக்கறிய வியம்பேடி யருந்தவருக் கறமுதனான் கன்றருளிச் செய்திலனேற் றிருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ என்று கூறும் அருள் உரைகள் இந்த வியாக்கியான தட்சணா மூர்த்தியின் ஞானத்தோற்றத்திற்கு ஏற்ற விளக்கமாகும். சைவசமயச் சான்றோரும் பல்கலை விற்பன்னருமான திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல் அவர்கள், தென்றமிழ் நாட்டில் மிகப் பழைய காலத்தில் கடவுள் உண்மையை உணர்ந்த நான்கு அறிஞர்கள் பிறப்பிறப்பு அற்று வீடடைவதற்கு ஏதுவாகிய ஒளிநெறியைக் காண முயன்றனர். (அறிவர்களுள் சித்தர் என்பார் உலகிற்குப் பயன்தரத்தக்க மருந்து, மந்திரம் முதலிய பல கலைகளையும் வளர்த்தனர்.) மேற்சொன்ன நான்கு அறிஞர்கள் கடவுளை நினைந்து ஓர் ஆல மரத்தடியில் தவம் இயற்றினர். அவர்களுக்குக் கடவுள் தோன்றி ஒளி நெறியை அறிவுறுத்தினார் என்று சைவசமய குரவர்கள், சைவசமய ஆச்சாரி யர்கள் போன்ற அறவோர்களின் அருள் வாக்குகளையெல்லாம் மேற்கோள்காட்டி விரிவாக எழுதியுள்ளார்.1 மேலும் விளக்கி, முற்காலத்தில் தமிழர்கள் வணங்கிய சிவலிங்கத்தையோ, தட்சணா மூர்த்தியையோ சுமார்த்தர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் பிற்காலத்தில் அன்னார் படிப்படியாகத் தம் கொள்கைகளை மாற்றித் தமிழர்களின் தெய்வங்களைப் போற்றிப் புகழ்ந் துள்ளார்கள். நிருத்தமூர்த்தத்தில் மகிழ்ச்சி எழுவது போன்று இந்தத் தட்சணாமூர்த்தியின் உருவிலும் அமைதி அரும்புகிறது. அருள் சுரக்கிறது; ஞானம் எழுகிறது என்றும் கூறியுள்ளார்: சிவபெருமானது திருமூர்த்தம், சிவமூர்த்தம், மகாதேவ மூர்த்தம், அட்டமூர்த்தம் என்று கூறப்படும். அட்டமூர்த்தம் எட்டில் தலையாயமூர்த்தம் குருமூர்த்தமாகக் கொள்ளப்படும் வியாக்கியான தட்சணாமூர்த்தியின் தோற்றமாகும். தட்சணாமூர்த்தி யின் தோற்றங்களைச் சைவ சமயச் சான்றோர்கள் நான்கு விதமாகக் கண்டிருக்கிறார்கள். அதாவது, 1. வியாக்கியான தட்சணாமூர்த்தி 2. வீணாதர தட்சணாமூர்த்தி 3. ஞானதட்சணாமூர்த்தி 4. யோக தட்சணாமூர்த்தி என்பனவாகும். இந்த நான்கு மூர்த்தங்களில் முதல் மூர்த்த மாகவும் சிறந்த மூர்த்தமாகவும் குருமூர்த்தமாகவும் கொள்ளப் படுவது வியாக்கியான தட்சணாமூர்த்தியின் திருமூர்த்தமாகும். இந்த வியாக்கியான தட்சணாமூர்த்தியின் திருஉருவம் சிவன் கோயில் களில் திருஉண்ணாழிகையின் (கர்ப்பகிரஹத்தின்) தென்புறத்தில் தெற்குமுகம் நோக்கி இடம் பெற்றிருக்கும். வியாக்கியான தட்சணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது ஒரு பாதம் முயலகனை எழுந்திருக்க விடாது மிதித்து அமர்த்திக் கொண்டிருக்கிறது. மற்றொரு பாதம் வீராசனமாக அமைந்திருக்கிறது. திருக்கைகள் நான்கில் வலது பக்கமுள்ள இரு கைகளில் ஒன்று சின்முத்திரை பொருந்தி - மற்றொன்று உருத்திராக்க மணிவடந்தாங்கியதாயும் இருக்கிறது. இடது புறமுள்ள ஒரு கை திருமறையும் மற்றொரு கை அமுத கலயமும் தாங்கி இருக்கின்றது. அவரது இருபுறங்களிலும் சநகாதி முனிவர்கள் இரண்டிரண்டு பேராக நால்வர் அறங்கேட்கும் முறையில் பயபக்தியோடு நிற்கின்றனர். கைகள் காட்டும் சின்முத்திரை இறைவன் குருமூர்த்தமாக இருந்து சநகாதி முனிவர்கள் மூலம் மக்களுக்கு ஐயம் நீக்கி அறம் உரைப்பதை உணர்த்துகிறது. வியாக்கியான தட்சணாமூர்த்தி - பழனி வியாக்கியான பழனிக்கு மூன்று கல் தொலைவில், வடபக்கம் இருக்கும் பெரிய உடையார் கோயிலில் உள்ளது. இத்திரு உருவம் மிகச் சிறப்பான உலோகப் படிமம் போல் மிக அழகாகச் செய்யப்பட்டிருக்கிறது. மற்ற இடங்களில் உள்ள உருவங்கள் பீடத்தின் மீது அமர்ந்து முயலகனை அழுத்தி மிதித்து நிற்பது போல் செய்யப்பட்டிருந்தன. இத்திரு உருவில் முயலகன் காணப்படவில்லை. மூர்த்தி மலைமீதிருப்பது போல் காணப்படு கிறார். அவரது தலைக்குமேலே ஆலமரம் காணப்படுகிறது. அவரது சடை முடிகள் அழகுடன் கீழே தொங்கவிடப்பட்டிருக்கின்றன. தலையில் ஊமத்தமலர், பிறை முதலியவைகள் நன்கு தெரிகின்றன. கண்கள் சுழுமுனையை நோக்குகின்றன. காதில் குண்டலங்கள் தொங்குகின்றன. முகத்தில் இளமை துள்ளுகிறது. அருள் ஒளிர் கிறது. ஒளி துலங்குகிறது. கழுத்தணிகள் அழகுடன் செய்யப்பட்டு நெஞ்சுக் குழிவரை தொங்குகின்றன. மார்பில் பூணூலும் உதர பந்தமும் காணப்படுகின்றன. கைகள் நான்கில் வலதுபுறம் உள்ள முன் கையில் சின் முத்திரையும் இடது புறமுள்ள முன்கையில் ஏடும் காணப்படுகின்றன. பின்புறமுள்ள கை எதையோ பிடித்திருப்பது போல் காணப்படுகிறது. கையில் இருப்பது என்னவென்று தெரிய வில்லை. புயத்தின் கீழ் - முழங்கைக்கு மேல் பல அணிகள் காணப் படுகின்றன. மணிக்கட்டை ஒட்டி அதகடகங்கள் அணி செய் கின்றன. அரையில் ஆடைகள் இறுகப் பிணைக்கப்பட்டுள்ளன. இடது கால் வலதுகால் மீது வீராசனமிட்டும், வலது கால் கீழே தொங்கவிடப்பட்டும் இருக்கின்றன. இருகால்களிலும், தண்டை பாதசரம் போன்ற அணிகள் உள்ளன. இதன் பக்கத்தில் வேறு உருவங்கள் எதுவும் காணப்படவில்லை. இந்தச் சிற்ப உருவம் சோழர் பாணியில் செய்யப்பட்டுள்ளது. இது 11-ஆவது நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாக மதிக்கப்படுகிறது. இந்தச் சிற்பத்தில் அழகு பொலிகிறது. இதன் தோற்றம் மிக்க உணர்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது. முகத்தில் பாவம் தெரிகிறது. இந்தச் சிற்பம் பிற்காலத் திற்குரியதாயினும் பழங்காலச் சோழர் பாணியில் அங்கங்களெல் லாம் நன்றாக, உருட்டித் திரட்டி விட்டாற் போன்று அழகாகச் செய்யப்பட்டுள்ளன. சிற்பத்திறமை மிகவும் பாராட்டற்குரியது. தத்துவ விளக்கம் தட்சணாமூர்த்தியின் திருஉருவின் தத்துவம் இறைவனே, மக்கள், இருள் உலகினின்று விடுபட்டு மீளும் கலங்கரை விளக்கு என்பதை உணர்த்துவதாகும். எனவே அறிஞர்கள் இம்மூர்த்தத்தைக் குருமூர்த்தம் என்று உரைப்பர். சின்முத்திரை சின்முத்திரை என்பது வலது கையால் அதன் பெருவிரலையும் சுட்டு விரலையும் ஒன்றாய்ச் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் நேராக நீட்டி வைப்பதாகும். எப்பொழுதும் தனித்து நிற்கும் கட்டை விரலானது மற்றவிரல்களினின்று சுட்டுவிரலைப் பிரித்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறது. இறைவனைப் (பதியைப்) பெருவிரல் (கட்டைவிரல்) ஆகவும், சுட்டு விரலைப் பசு (ஆன்மா) ஆகவும் ஏனைய மூன்று விரல்களையும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களாகவும் கொண்டு - பதி (இறைவன்) பசுவாகிய ஆன்மாவை மும்மலங்களினின்று பிரித்து தன்னோடு இணைத்துக் கொள்வதை இந்தச் சின்முத்திரை அடையாளம் உலகிற்கு உணர்த்துகிறது. நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தை யும் கடைவிரல் மாயையும் குறிக்கிறது. சுட்டுவிரலை விட நடுவிரல் நீண்டிருப்பது ஆணவத்தின் தன்மையை நன்கு எடுத்துக்காட்டு வதாய் மிளிர்கிறது. இந்த முத்திரையில் பதி பசு பாசம் என்ற சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மை வெளிப்படுத்தப்படுகிறது. கட்டை விரலும் சுட்டு விரலும் இணைவதால் ஏற்படும் வட்ட வடிவம் ஒன்று இரண்டு என்று சொல்ல முடியாத நிலையை - அதாவது அத்துவித நிலையை அழகுற எடுத்துக்காட்டுகிறது. உருத்திராக்க மணிவடம் வலது புறமுள்ள மற்றொரு கையில் உருத்திராக்க மணிவடம் ஒளிர்கிறது. சிவஞானத்தால் நிலைத்து நிற்க ஐந்தெழுத்தைச் செபிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. அமுதகலயம் அமுத கலயம் (கும்பம்) இடது கையில் எழிலுறத் திகழ் கிறது. மலநீக்கம் சிவப்பேறு, என்னும் பயன் இரண்டும் பெறுவதற் குரிய சாதனம் சிவஞானம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. திருமறை இடது புறத்திலுள்ள மற்றொரு கையில் இலங்குவது அறங்காட்டும் மறைஏடு. மூன்று கைகளாலும் இரண்டு திருப் பாதங்களாலும் உணர்த்திய உண்மைப் பொருளை விளக்கி விரிவாய்க் கூறுவது திருமறை என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது. வலது திருவடி மூர்த்தியின் வலது திருவடி முயலகன் எழுந்திரா வண்ணம் அவனை மிதித்து அழுத்திக் கொண்டு இருக்கிறது. ஞானிகள் ஆணவமலம் தலைதூக்கா வண்ணம் அதனை அமிழ்த்துவதற்குரிய சாதனங்களைச் செய்து வரவேண்டும் என்பதை உலகிற்கு இது உணர்த்துகிறது. இடது திருவடி இத்திருவடி வீராசனமாகத் திகழ்கிறது. ஞானிகள் மல நீக்கம் செய்வதற்குரிய சாதனங்களை மேற்கொண்டு வருவதோடு மலம் நீங்கிய சிவனடியார்களோடு உறவாடி இணைந்து வீரமாக இருக்கவேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஆலமரம் இறைவன் அமர்ந்திருப்பது ஆலமரத்தின் ஓர் இனமாகிய கல்லால மரம் ஆகும். ஆலமர நிழல் விருப்பு வெறுப்பு முதலிய வெப்பத்தை நல்கும் இராட்சத தாமத குணங்களைச் சாராது சாந்தத்தைத் தரும் சத்துவ குணத்தைப் பெறவேண்டும் என்பதை நமக்குக் காட்டுகிறது. தென்முகத் தோற்றம் இறைவன் தெற்கு முகமாக விற்றிருப்பது அகோர முகமாய் வீற்றிருக் கிறார் என்று கூறப்படும். அகோரம் என்பது அனுக்கிரகம் என்று பொருள் கொள்ளப்படும். தட்சணாமூர்த்தி அனுக்கிரக மூர்த்தியாய் இருப்பதால் எல்லோரும் இம்மூர்த்தத்தை விரும்பிப் பூசிப்பர். பசுக்கள் பதியைச் சேர்ந்திருக்கும் பொழுது இன்பந்துய்த்து நிற்கும். பசு எப்பொழுதும் துன்பப் பொருளாகிய பாசத்தோடு கூடாது, இன்பப் பொருளாகிய பதியோடு கூடும். பசுக்கள் தாம் செய்த கருமங்களின் பலனைச் சிவலோகத்தில் அனுபவிக்கும். பசுக்கள் - உயிர்கள் ஞான நிலையில் அத்துவித முத்தியை அடையும். அந்த ஞான நிலையாவது எல்லாம் அவன் செயலென்று உணர்ந்து செயலற்றிருந்தலேயாம். அது அறமுணர்ந்து ஒழுகி இறைவனோடு இரண்டறக் கலத்தலாகும் இந்த நிலையைத் தட்சணாமூர்த்தியின் திருஉருவின் தத்துவம் நமக்கு நன்குணர்த்தும். இறைவன் இங்கு நான்கு முனிவர்களுக்கு நாவினால் அறம் உரையாது கைவிரல்களால் அறம் உரைப்பது, மக்கள் உலகில் பேச்சு வழக்கு எழுமுன் இறைவன் மக்களுக்கு அறங்காட்டிய பழம்பெருமூர்த்தமாக விளங்கியமைக்குச் சான்றாகக் கருதப்படுகிறது. துதி விளக்கம் அன்றால நிழற்கீழ் அருமறைக டான் அருளி நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும் நின்றார ஏத்தும் நிறைகழலோன் புனைகொன்றைப் பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ (மாணிக்கவாசகர் - திருவாசகம்) நம்பனை நால்வேதங் கரை கண்டானை ஞானப் பெருங்கடலை நன்மைதன்னைக் கம்பனைக் கல்லால் இருந்தான் தன்னைக் கற்பகமாயடியார் கட்கருள் செய்வானைச் செம்பொன்னைப் பவளத்தைத் திரளுமுத்தைத் திங்களை ஞாயிற்றைத்தீயை நீரை அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே. (அப்பர் - தேவாரம்.) 3. ஆலின்கீழ் நால்வர்க் கன் றறமுரைத்த அங்கணனை நூலின்கட் பொருள்பாடி நூலறிவார்க் கீந்தானைக் காலம்பெற் றினிதிறைஞ்சிக் கைதொழுது புறம்போந்தார் சீலங்கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத (சம்பந்தர் - தேவாரம்.) போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப் பொழில் கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத் தருளி னாய் பண்டு பகீரதன் வேண்ட ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த தீர்த்த னேநின்றன் திருவடி அடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே (சுந்தரர் - தேவாரம்) கல்லாலின் நீழல்தனில் ஒரு நால் வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதுங் கைநாட்டென்றால் சொல்லாலே சொலப்படுமோ சொல்லுந்தன்மை துரும்பு பற்றிக் கடல் கடக்கும் துணிபே யன்றோ (தாயுமானவர்.) தென்முகக் கடவுள் (தட்சணாமூர்த்தி) தமிழர்கள் கண்ட தெய்வத் திருவுருவங்களில் முதன்மையாக வைத்து எண்ணப்படுவது தென்முகக் கடவுளின் வடிவமேயாகும். உலகில் உள்ள தெய்வத்திருவுருவங்களில் இது மிகத் தொன்மை யானது. தமிழர்கள் கண்ட சிவபெருமானுடைய அட்டமூர்த்தி வடிவங்களில், இவ்வடிவத் தோற்றம் முதல் இடத்தைப் பெற் றுள்ளது. காரணம் - இதன் தொன்மை மட்டுமல்ல, இதன் தன்மை யும் - ஏன் - இதன் நன்மையும் முதல் இடத்தைப் பெறுவதற்குரிய நிலையை உணர்த்துவதாக உள்ளது. சிவபெருமானைக் குருவாகக் கொண்டு வழிபடப்படும் இம்மூர்த்தி தம் தென்முகக் கடவுள் (தட்சணா மூர்த்தி) என்று கூறப்படும். தமிழர்கள் பல்லாண்டு தவங்கிடந்து அவர் திருவருளைப் பெற்றதற்கு இம்மூர்த்தம் சான்றாகத் திகழ் கின்றது. தமிழ் மக்கள் பல்லாண்டு செய்த வேண்டுகோளுக்கு இணங்கி சிவபெருமான் உலகில் முதன்முதலாக தென்பாண்டி நாட்டில் உள்ள மந்திர மலை (மகேந்திர கிரி)யில் தமிழ் முனிவர்கள் நால்வர்க்குக் கல்லாலின் கீழே குருமூர்த்தமாக அமர்ந்து அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் விளக்கும் நான்மறைகளை (நான்கு ஆகமங்களை) சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அருளிச் செய்தான். இதற்குச் சைவ சமய நூற்கள் சான்று தருகின்றன. திருவிளையாடற் புராணம், கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதல் கற்ற கேள்வி வல்லவர்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப்பாலாய் எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம் (திருவிளையாடல்) என்று தென்முகக் கடவுள், ஆலின் அடியில் அமர்ந்து தமிழ் நாட்டு நான்கு முனிவர்களுக்கு அருமறைகள் நான்கையும் தமிழில் அருளிச் செய்ததைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. சைவ சமய நாயன்மார்களில் முதியவரும், இறைவனால் என்னப்பன் என்னைப் பாடினான் என்று இன்புற்று ஏற்றிப் புகழப் பெற்றவரும் சைவநெறிவளர்க்க, தியாகாக்கினியில் குதித் தெழுந்த வரும் பன்மொழிப் புலமையும், பல்வேறு சமய ஞானமும், கலை அறிவும் பெற்ற அஞ்சா நெஞ்சம் வாய்ந்தவருமான அப்பர் அடிகள் கல்லாலின் நிழற்கலந்து தோன்றும் கவின்மறையோர் நால்வர்க்கு நெறிகளன்று சொல்லாகச் சொல்லியவா தோன்றும் தோன்றும் சூழரவும் மான்மரியும் தோன்றும் தோன்றும் (தேவாரம்-திருப்பு 4-3) என்றும், திருஞானசம்பந்தப் பெருமான் ஓருரு வாயினை மானாங்காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திகளாயினை இருவரோ டொருவனாகி நின்றனை ஓரா னீழ லொன் கழ லிரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க் கொளி நெறி காட்டினை (தேவாரம்) என்றும், மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் அருந்தவருக் காலின்கீ ழுறமுதலா நான்கினையும் இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ அருந்தவருக் கறமுதனான் கன்றருளிச் செய்திலனேற் றிருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ (திருவாசகம்) என்றும் மன்னுமாமலை மகேந்திர மதனிற் சொன்ன வாகமம் தோற்றுவித்தருளியும் (திருவாசகம்) என்றும் நன்றாக நால்வருக்கு நான்மறையின் உட்பொருளை அன்றாலின் கீழிருந்தங் கறமுறைத்தான் காண் ஏடி அன்றாலின் கீழிருந்தங் கறமுறைத்தா னாயிடினும் கொன்றான் காண் புறமூன்றும் கூட்டோடே சாழலோ மந்திரமாமலை மகேந்திர வெற்பன் அந்தமில் பெருமை அருளுடை அண்ணல் (திருவாசகம்) என்றும் விளக்கந்தந்துள்ளனர். சங்க கால நூலான சாத்தனார் இயற்றிய கூத்த நூலில், மந்திர மாமலை யந்திரத் தவிசில் வடக்குப் பரிதி கிடக்கப் போம்வழி நால்வர்க்குத் தந்திர நான்மறை கூறும் (கூத்தநூல் பாயிரம்) என்றும் நன்கெடுத்தோதப்படுகிறது. இதனால் உலகிற்கு முதன் முதலாக தென்முகக் கடவுள் (தட்சணாமூர்த்தி) தமிழ் நாட்டிலுள்ள மந்திரமலையில் (மகேந்திரகிரியில்) கல்லாலமரத்தின் அடியில் குருமூர்த்தமாக அமர்ந்து சனகர், சனந்தனர், சநாதனர், சனற்குமாரர் ஆகிய தமிழ் முனிவர் நால்வர்க்கு நான்மறைகளை உலகுய்ய உணர்த்தினார் என்று உணரப்படுகிறது. தென்முகக் கடவுளாகிய இம்மூர்த்தி ஞான தட்சாணமூர்த்தி, வியாக்கியான தட்சிணா மூர்த்தி என்றும் கூறப்படும். இறைவன், உலகிலே தமிழ்நாட்டில் உள்ள மந்திரமலையில் தோன்றி மனித குலத்திற்காக மறைநூலை அருளிச் செய்தமையால் இறைவனை மலைக்கடவுளாக உலகிலே முதன் முதலாகத் தமிழர் கொண்டனர். மலைமகன் என்று ஏற்றிப் போற் றினர். தமிழ் நாட்டிலும், ஆந்திர நாட்டிலும் பிறஇடங்களிலும் சிவபெருமானுக்கு மலையின்மீது திருவுருவம் வைத்து வழிபட்டனர். தமிழர் சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துவெளியில் குடியேறியதும் உலகில் உயர்ந்த மலையாகிய இமயமலை மீது சிவபெருமானை ஏற்றுவித்து மந்திரமலையைப் போல் இமய மலையை நோக்கி உலக மக்கள் அனைவரும் வழிபடுமாறு செய்தனர். மலை மீது கடவுள் உறைவதாக உலகெங்கும் குடியேறிய தமிழ்மக்கள், மனிதகுலம் எண்ணுமாறு செய்து விட்டனர். இதனால் சீன மலையில் எல், மோசே முனிவருக்குக் காட்சியளித்தார் என்றும் கல்வாரி மலையில் கிறித்துநாதர் எகோவாவைக்கண்டார் என்றும் ஹிராமலையில் ஜிப்ரயல் என்னும் அல்லா(ஹ்)வின் தூதர் தோன்றி முதன் முதலாகத் திருக்குர்ஆன் என்னும் மறைநூலின் இக்ர என்னும் முதல் ஆயத்தை ஓதுவித்தார் என்றும் உரைக்கப்படுகின்றன. எல்லாச் சமய அறிஞர்களும் தங்கள் கடவுள் மலைகளிலே காட்சி அளித்ததாகக் கூறுவது தமிழர் பாரம்பரிய உணர்ச்சியின் வெற்றியைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று கூறினால் அது ஒரு சிறிதும் மிகையாகாது. பன்மொழிப் புலவரும் சைவ சமய நூலாராய்ச்சி வல்லுநரும் பேராசிரியருமான திரு. கா. R¥ãukÂa ãŸis v«.V., v«.vš., அவர்கள் தென்முகக் கடவுளைப் பற்றித் தமிழர் சமயம் என்னும் நூலில் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். அது சிந்திக்கத் தக்கது; நமது ஆய்விற்கு உரியது; அது அடியில் வருமாறாகும்; சிவன் கோயிலில், மூலதானத்திலுள்ள (கருவறையில் உள்ள) சிவலிங்கம் ஆதித் தமிழர் வழிபாட்டைச் சார்ந்தது. சிவபெருமானைத் தாய் தந்தையாகக் காட்டும் அம்மையப்பர் வடிவம் வடமொழியில் உமா - மகேசுவர வடிவம் எனப்படும். சிவபெருமானைக் குருவாகக் காட்டும் வடிவம் தட்சணாமூர்த்தி (தென்முகக் கடவுள்) வடிவம் ஆகும். தட்சிணம் என்பதற்கு அறிவு (ஞானம்) என்பது பொருள். (தெற்கு என்ற பொருளும் உண்டு). தட்சிணாமூர்த்தியின் திருக் கையடையாளம் பாசப்பற்றைவிட்டு உயிர், கடவுளோடு சேர வேண்டும் என்பதைக் குறிப்பதாகும். நடேச வடிவம் (ஆடவல்லான் வடிவம்) ஐந்தொழிலைக் குறித்ததாக முன்னமே கூறப்பட்டது. இவ்வாறு ஒரு கடவுளின் (சிவத்தின்) பலவடிவங்களே சிவாலயங் களில் இடம் பெற்றுள்ளன. என்றும், தென் தமிழ் நாட்டில் மிகப் பழைய காலத்தில், கடவுள் உண்மையை உணர்ந்த நான்கு தமிழ் அறிவர்கள் பிறப்பு - இறப்பு அற்று, வீட்டை அடைவதற்கு ஏதுவாகிய ஒளி நெறியைக் காண முயன்றனர். அறிவர்களுள், சித்தர் என்பார் உலகிற்குப் பயன் தரத்தக்க அமுதும் மருந்தும், மந்திரமும் தந்திரமும் (ஆகமும்), கலையும் நிலையும், அறிவும் நெறியும் நன்குணர்ந்திருந்தனர். மேற்கூறிய நான்கு அறிவர்கள் கடவுளை நினைந்து மந்திரமலையில் கல்லாலின் அடியில் அமர்ந்து தவம் இயற்றினர். அவர்களுக்குக் கடவுள் தோன்றி அருள் மிகும் இனிய காட்சி அளித்து, ஒளி நெறியை அறிவுறுத்தினர். இந்தக் காட்சி தட்சணாமூர்த்தம் என்றும், பல சைவ சமயச் சான்றோர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி விரிவான விளக்கம் தந்துள்ளார். தமிழ்நாட்டில் ஆலமரத்தின் அடியில் சிவலிங்க வடிவமும் அதன் அண்மையில் தாய்த்தெய்வ வடிவமும் (சின்னமும்) வைத்து வழிபடப்பட்டது. அப்பால் எழுந்த ஊழி மாற்றத்தில் எஃகுப் பண்பாட்டின் பயனாய்ச் சிலைகளும் (Sculptures) வெண்கலப் படிமங்களும் (Bronzes) எழுந்தமையால் திருக்கோயில்கள் பலகட்டப் பட்டுச் சிவலிங்கம் திருஉண்ணாழியிலும் அருகேயுள்ள திருவறை யில் உமாதேவியும் சுற்றுப்புறங்களில் தென்முகக் கடவுள், மணவழகர் (கலியாணசுந்தரர்) சோமகந்த சுகாசனமூர்த்தி முதலிய சிவபெருமானின் திருக்கோலக் காட்சிகளும் சிலை வடிவில் இடம் பெறலாயின. தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்கள் அனைத்தும் சைவசமயம் கண்ட தமிழர்களால் அடிப்படையிட்டு - உண்ணாழிகையில் சிவலிங்கம் வைத்து மூலவர், உடையார் என்னும் பெயரில் தமிழில் மந்திரம் ஓதி வழிபடப்பட்டது. சிவபெருமானும் தாய்த் தெய்வமும் ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர் கண்ட தெய்வமாகும். தென்முகக் கடவுள், தமிழ்மக்கள் வாயிலாகத் தமிழில் நான்மறையை ஓதுவித்து உலகில் சைவநெறி வளர வழிகாட்டினார். தமிழ்நாட்டில் பூசனைமுறை முதலில் தமிழில் இருந்தது. தமிழ் முன்னாளில் சிவபெருமான் உவந்து கேட்கும் இனிய மொழியாக, அழகு மொழியாக, மந்திர மொழியாக இருந்தது. அப்பால் சைவம் உலக நெறியாக மலர்ந்ததும் பூசனைமுறைகள் வடமொழியிலும், பிறமொழியிலும் எழுதப் பட்டன. ஆகமங்கள் வடமொழி ஆக்கம் பெற்றெழுந்தன. சிவபூசை சுமேரியா, எகிப்து, கிரீட், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவ்வவ் நாட்டு மக்களின் தாய் மொழியில் செய்யப்பட்டன. என்றாலும் தமிழில் பூசனைகள் இயற்றுவது சிறப்பாக எண்ணப்பட்டது. திருமுருகாற்றுப்படையில் வேட்டுவ வாழ்க்கையினர் செய்ததாகக் கூறப்படும் பூசை முறையைப் பற்றி ஆய்ந்தால் அதன் விரிவே தற்காலக் கோயில் பூசை முறை என்று நன்கு தெரியும் எனச் சமயச் சான்றோர்கள் கருதுகின்றனர். பண்டைக்காலத் தமிழர் கோயிலில் திருஉண்ணாழிகையும், உயரமான விமானமும் இடம் பெற்றிருந்தன. திருமதில்களும் திருவாயில்களும் இருந்தன. பலிபீடம், கொடி, மரம், நந்தி, இலிங்கம் வரிசையாக அமைக்கும் ஒழுங்கு முறை தமிழர் கோயில் அமைக்கும் நியதி (Order) என்று கூறப்படுகிறது. மண்டபங்கள், சுற்றுகள் (பிரகாரங்கள்), பள்ளியறைகள், உயரமான வாயில் கோபுரங்கள் (இராயர்கோபுரங்கள்) பிற்காலத்தில் திராவிடச் சிற்பமுறையாகப் புகுந்தன. பிற சமய அடியார்களுக்கும், ஆசாரியர்களுக்கும், முற்காலச் சிவாலயங்களில் இடம் இல்லை. திக்குப் பாலகர் வடிவங்கள் கோயிலில் அமைக்கப்படவில்லை. ஒன்பது கோள்களின் (நவக் கிரகங்களின்) வடிவங்கள் பிற்காலத்தில் நமது கோயில்களில் இடம் பெறலாயின. வடமொழி வேதங்களில் கூறப்படும் நான்முகன், இந்திரன், வசுக்கள் போன்ற தெய்வங்கள் தமிழர்களின் திருக் கோயிலில் இடம்பெறவில்லை. சிவதீட்சை பெற்ற சிவாச்சாரியர் களைத் தவிர சிவதீட்சை பெறாத ஆரியப் பார்ப்பனர்களோ அவர் களின் குருவான சங்கராச்சாரியோ சுமார் ஐயர்களோ நமது கோயில் புகுந்து திரு உண்ணாழிகையில் இடம் பெற்றிருக்கும் இறைவன் திருமேனியைத் தொட்டுப்பூசை இயற்றக் கூடாது. ஆகமங்களில் இதற்கு இடம் அளிக்கப்பெறவில்லை. திராவிடர்கள் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்கள் என்று கருதியவர்கள். வேத ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே திராவிடர்கள் வந்து இந்தியாவில் தம்முடைய மொழியையும் நெறியையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் பரப்பினர் என்று கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது. இன்று திராவிடர்கள் இந்தியாவிலே தோன்றியவர்கள்; அவர்கள் சமயமும் இந்தியாவில் தோன்றியது என்று உலகில் ஒப்பற்ற அறிஞர்களால் உறுதியான சான்று காட்டி இறுதி முடிவு செய்யப்பட்டுள்ளது. பண்டைக் கால ஆரியர்கள் சிவலிங்க வழிபாட்டை ஏற்க வில்லை. சிவபெருமான், அம்மையப்பர், தென்முகக்கடவுள் முதலிய திராவிடத் தெய்வங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இவைகளைச் சண்டாளர் தெய்வங்கள் என்று நிந்தித்து வந்தனர். இன்று முழுமுதற் கடவுளான சிவபெருமானை இரண்டாந்தரத் தெய்வமான உருத்திர னாகக் கூறி வழிபட்டு வருகிறார்கள். அஞ்சாது திருநீறணிந்தும் உருத்திராக்கமாலைகள் தரித்தும், காவி ஆடைபுனைந்தும் போலி வேடம் பூண்டு வருகிறார்கள். சிந்தையில் கள் விரும்பிச் சிவ சிவ என்பது போல் வந்தே மாதரம் என்பார் கிளியே மனதில் அதனைக் கொள்ளார் என்று நடிப்புச் சுதேசிகள் பற்றி, பாரதியார் கூறியது போலி ஆரிய சுமார்த்தர்களுக்கும் பொருந்தும். ஆனால் நம்மை சிலர் வகுப்புவாதி, பார்ப்பனப் பகைவர்கள், பிராமணத்துவேசிகள் என்றெல்லாம் கூறுகிறார்கள். இவைகள் வஞ்சகர்களின் வாய்ப்பிதற்றல் என விலக்கித் தள்ளுவோம், ஏகான்ம வாதக் கொள்கையை உதறிவிட்டுச் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்ட பார்ப்பன சமூகத்திற் பிறந்த மாணிக்கவாசகரை சைவப் பெருமக்கள் அனைவரும் தங்கள் தந்தையாகவும் ஞானாசிரியராகவும், அவரது திருவாசகம் எனும் நூலை மறைநூலாகவும் போற்றி வருகின்றோம். சிவனுக்கு ஆட்பட்ட பார்ப்பனப் பச்சிளங் குழந்தையாகிய சம்பந்தனை, எங்கள் தெய்வத்தாய் தம் குழந்தையாக ஏற்றுப் பாலூட்டித் தன் பணிக்கு ஆளாக்கியது கண்டு அகமகிழ்கின்றோம். சம்பந்தர் எங்கள் குலமாணிக்கம். சைவ மூதறிஞர்களில் முதலிடம் பெற்ற அப்பர் அடிகள், சம்பந்தன் சிறுபிள்ளை என்று எண்ணாது, பார்ப்பனச் சிறுவன் என்று உதாசீனம் செய்யாது சிவனாக மதித்து வணங்கியது கண்டு நாங்கள் களிப்படைகின்றோம். சம்பந்தனை, எங்கள் சமயகுரவர்களில் ஒருவராக நம்பி அவரைத் திருஞான சம்பந்தப்பிள்ளையார் என்று போற்றி வருகிறோம். அவரை எங்கள் தந்தை என்று எண்ணி வணங்கி மதித்து வருகின்றோம். உண்மை யாகச் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்ட பார்ப்பனர்களை மட்டுமல்ல பசுத்தோலை உரித்து அதன் ஊனைத் தின்று வாழ்ந்த புலையனாக இருந்தாலும் - அவனை-இல்லை அவரையும் சிவனடியாராக ஏன் - சிவனாகவே எண்ணி வணங்குவோம். பள்ளர், பறையர், புலையர், வேடர் என்ற பல இனத்தவர்களையும் - சிவனெறியைத் தழுவியதற்காக அவர்களை நாங்கள் வரவேற்று ஏற்றிப் போற்றிச் சைவ நாயன்மார்கள் நிலைக்கு உயர்த்தி அவர்கள் திருஉருவங்களை எங்களின் புனிதமான கோயிலில் இடம் பெறச் செய்து அவ்வுருவங்களைச் சப்பரத்தில் வைத்துத் தூக்கி இன்றும் நகர்வலம் வருகின்றோம். போற்று கின்றோம், வழிபட்டு வருகின்றோம். அவர்களின் பெயர்களால் குருபூஜை செய்கின்றோம். இது உலக முழுவதும் உள்ள எல்லாச் சமயத்தார்க்கும் முன்னோடியான எடுத்துக்காட்டு. நிற்க. இத் தென்முகக் கடவுள், தட்சணாமூர்த்தி, வியாக்கியான தட்சணாமூர்த்தி, குருமூர்த்தி என்றெல்லாம் போற்றி வழிபடப் படுவார். ஆடவல்லானின் கோலத்தைப் பலவாறாகக் கண்டு வியந்து வழிபடுவதுபோல் தென்முகக் கடவுளின் திரு உருவிலும் அன்பும், அருளும், பேரொளியும் மக்கள் கண்டு மகிழ்வடைகின்றார்கள். அவர்கள் உள்ளத்தில் அமைதி அரும்புகிறது; இன்பம் பொங்குகிறது. முன்பு கூறப்பட்ட கூறப்படும் நான்கு மூர்த்திகளில் நாம் இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொண்டது வியாக்கியான தட்சிணாமூர்த்தியின் தோற்றமே (கோலமே)யாகும். இது முதலாவதாக வைத்து எண்ணப் படுவதற்கு உரியது. இத்திரு உருவமே பெரிதும் இன்று சிவன் கோயிலில் இடம் பெற்றிருப்பது. இந்த மூர்த்தத்தை ஆதித் தமிழர்கள், மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் மூலாதாரமாக எண்ணி வழிபட்டு வந்தனர். பண்டைய தமிழகத்தில் சரவதி, கலைமகள் என்ற தெய்வம் எதுவும் வழிபடப்பட்டுவந்ததாகத் தெரியவில்லை. கலைமகள் (சரவதியின்) கணவனான பிரமனுக்குத் தமிழர் கோயிலிலே இடம் கிடையாது. சிவன் கோயிலில் அத் தெய்வத்திற்குச் சிறிதும் இடமே கிடையாது என்பது உலகறிந்த உண்மை. நேற்றுவரை பிரமன் (நான்முகன்) ஆரியர் தெய்வம் என்று எண்ணப்பட்டு வந்தது. இப்பொழுது சிந்துவெளி அகழ் ஆய்வு மூலம் நான்முகன் திராவிடர் தெய்வம் என்று கூறப்படுகிறது. தேவாரம் திருவாசகம் முதலிய சைவ சமய நூற்களில் நான்முகன் சிவபெருமானுக்குக் கீழ்ப்பட்ட சிறு தெய்வம் என்றும் பிரமன் (நான்முகன்) மால் இந்திரன் முதலியவர்கள் பிறந்து இறந்து விழும் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் எடுத்துக் காட்டப் படுகின்றன. ஆகமச் சான்று ஆகமம் என்பது இறைவனால் வெளிப்படுத்தப் பெற்ற மறை நூல் என்று நம்பப்படுகிறது. சைவ சமயத்திற்குச் சிறப்பாக உள்ள மறைநூல் சிவாகமம் ஆகும். ஆகமம் என்பது வடமொழிப்பதம். ஆனால் இது சிறப்பாகக் சிவ வழிபாட்டை இரகசியம், மந்திரம், மூர்த்தி, கோயில், திரு உருவம், தெய்வக் கோலம், பூசை முறை, ஆச்சாரியன் கடமை போன்ற துறைகளாக விரித்துக் கூறும் தமிழர் மறைநூல் எனலாம். சிவ வழிபாட்டை விரித்துக் கூறுவது சிவாகமங்கள் ஆகும். இவற்றைத் தமிழர்வேதம் எனினும் பொருந்தும். சிவாகமங்கள் 28 சிவாகமங்கள் இருபத்தெட்டு. அவை முறையே (1) காமிகம் (2) யோகசம் (3) சிந்தியம் (4) காரணம் (5) அசிதம் (6) தீபத்தம் (7) சூக்குமம் (8) சத்திரம், (9) அஞ்சுமான் (10) சுப்பிரபேதம், (11) விசயம், (12) விசுவாசம் (13) சுவாயம்புவம் (14) அனலம் (15) வீரம், (16) இரௌரம் (17) மகுடம், (18) விமலம் (19) சந்திரஞானம், (20) விம்பம், (21) புரோற்கீதம் (22) இலளிதம் (23) சித்தம் (24) சந்தான சருவோர்த்தம். (25) பரமேச்சுவரம் (26) கீரணம்(27) பேதம் (28) வாதுளம் எனப்படும். இவை வடமொழியில் உள. சுமார் 5 ஆகமங்கள் மட்டும் அச்சேறியுள்ளன. மற்றவை பனை ஓலைகளில் எழுதப்பட்டு வடமொழி தெரிந்தவர்களால் பயிலப்பட்டு வரு கின்றன. இவை இருபத்தெட்டும் இன்று கிடைப்பது அரிது. ஒரு சில தமிழாக்கம் பெற்றுள்ளன. தமிழில் உள்ள திருமந்திரம் என்னும் நூல் ஆகமமாகப் போற்றப்படுகின்றது. தென்முகக் கடவுள் உருவம் வியாக்கியான தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று ஆகமங்களில் விளக்கம் தரப்பெற்றுள்ளன. அவை அடியில் வருமாறாகும். வியாக்கியான தட்சிணாமூர்த்தியின் திருவடிவம் கல்லால மரத்தின் அடியில், புலித் தோலாலான ஆசனத்தின் மேல் அறக்கடவுளான மூர்த்தி அமர்ந்திருப்பதுபோல் காணப்படவேண்டும். அவர் ஒரு காலை மடக்கி, கீழே தொங்க விடப்பட்டிருக்கும் மற்றொரு கால் மீது வைத்திருப்பது போல் காணப்படவேண்டும். அதாவது இடது கால் மடக்கப்பட்டு வலது கால் கீழே பீடத்தினின்று தொங்குவது போல் காணப்படலாம். இந்த நிலை வீராசனம் என்று கூறப்படும். அவரது வலது கால் முயலகன் மீது வைக்கப்பட்டிருக்க வேண்டும். முயலகன் (அபமார புருஷன்) மீது வைக்கப்படாமலும் இருக்கலாம். இந்த மூர்த்திக்கு மூன்று கண்களும் நான்கு கைகளும் இருக்க வேண்டும். முன் பக்கத்தில் உள்ள வலதுகை சின்முத்திரை (ஞானமுத்திரை)யாக - அதாவது நிமிர்ந்து நிற்கும் பெருவிரலை, ஆள்காட்டி விரல் (சுட்டு விரல்) வளைந்து தொட்டு நிற்கும் பாவனையில் திகழ வேண்டும். முன்பக்கத்தில் உள்ள இடதுகை வரதஹதமாக (வரதக் கையாக) வும், அல்லது தண்டக் கையாகவும் நேராக நீட்டப் பெற்றதாக இருக்கவேண்டும். முழங்கை இடது தொடையைத் தொட்டு நிற்கும் நிலையில் இருக்கவேண்டும். கைவரதஹதமாக இருக்கும்பொழுது முழங்கை தொடையைத் தொட்டுக் கொண்டிருக்கவேண்டும். ஆனால், கையின் பின்புறம் காலைத் தொட்டுக் கொண்டும் இருக்க வேண்டும். பின்புறம் உள்ள வலதுகை அக்கமாலையைப் பிடித் திருக்கவேண்டும்; இடதுகை நெருப்பை ஏந்தியிருக்கவேண்டும் அல்லது நல்ல பாம்பை வைத்திருக்கவேண்டும். சில ஆகமங்களில் மேலே குறிப்பிடப்பட்டவாறு முன்புறமுள்ள இடதுகை வரத அதமாக அல்லது தண்ட அதமாக இருக்கலாம் என்று கூறப் பெற்றுள்ளன. அந்தக் கை மறைநூலை (ஏட்டை) ஏந்தி இருக்க வேண்டும். பின்புறமுள்ள மற்ற இடக்கை பாம்பு, நெருப்பு, தாமரை மலர் அல்லது நீலோற்பல மலரைத் தாங்கி இருக்கலாம். தட்சிணா மூர்த்தியின் உடம்பில் உள்ள வேறு உறுப்புக்கள் எவ்வித வளைவு களும் குழைவுகளும் இன்றி நேராகக் காணப்படவேண்டும். தென்முகக் கடவுளாகிய தட்சணாமூர்த்தியின் திருவுருவத் தோற்றம் உலகில் உள்ள மக்கள் இனத்தின் குரு என்ற நியதியையும், தலைவர் என்ற கருத்தையும் முழுமுதற் கடவுள் என்ற நிலையில் அன்பையும் அருளையும் வாரிவழங்கும் வள்ளல் தன்மையையும் சீரிய சிந்தனாசக்தியின் சிறப்பையும் பிரதிபலிக்கும் செம்பொருள் நிலைக்கு ஏற்ற எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும். அவரது தலை, சடாபாரம், சடாபந்தம், சடாமண்டலம் அல்லது சடாமகுடம் ஆகிய எவ்வித அமைப்பிலும் அணி செய்யப் பெறலாம். சடையின் புரிகள் பட்டபந்தத்தோடு இணைந்து பிணைந்து எழிலுறத்திகழ வேண்டும். சடைகள் எவ்வாறு அணிகள் செய்யப் பெற்றிருந்தாலும் அதில் தூர்த்துரா (தாட்டுரா) மலர்கள் அல்லது ஏனைய காட்டுச் செடிகளின் மலர்கள் இடம் பெற்றிருக்கவேண்டும். தலையின் இடதுபக்கம் விடப்பாம்பும் (நச்சரவும்) ஒரு சிறு மணியும் கபால ஓடும், வலது பக்கம் இளம்பிறையும் இடம் பெற்றிருக்கவேண்டும். சடாபாரத்தின் மேலே நடுவில் கங்கை புன்னகை பொலிய எழில்மிகு முகத்தோடு தெளிவாகத் தோற்றம் அளிக்கவேண்டும். இந்த மூர்த்தி யின் உடல் வெண்மையாக அல்லது சிவப்பாக இருக்கவேண்டும். மஞ்சள் அல்லது கருப்பாக இருந்தாலும் அவரது உடம்பை அழகு ஒளிரும் அனைத்து அணிகளாலும் அழகு பெறச் செய்யவேண்டும். இடையில் புனிதமான வெள்ளை ஆடையை அணிவித்தும் மேலே புலித் தோல் போர்த்தப் பெற்றும் மார்பில் வெண்மையான பூணூல் இலங்க, எழில் பெறத் திகழவேண்டும். மார்பில் மணம் நல்கும் சந்தனம் பூசப்பட்டிருக்கவேண்டும். அவரது இடது காதில் சங்கபத்திரமும், வலதுகாதில் சர்ப்பகுண்டலமும் அல்லது சங்க பத்திரமும் அணிவிக்கப்படலாம். அல்லது இரு காதுகளிலும் குண்டலங்கள் மட்டும் அணிவிக்கலாம். கழுத்திலிருந்து மார்பு வரை உருத்திராக்கமாலை தொங்க விடப்படவேண்டும். முகத்தில் எழிலும், ஒளியும், களியும் அருளும் காணப்படவேண்டும். எவ்வித மான மனக்கிலேசமும் காணப்பெறும் நிலையில் முகம் அமைந் திருத்தல் கூடாது. கண்கள் கவின்பெற மூக்கின் நுனியை அதாவது சுழிமுனையைப் பார்ப்பது போல் அமைந்திருக்க வேண்டும். காரணாகமத்தில் கண்கள் பெருவிரல்களைப் பார்ப்பது போல் காணப்படவேண்டும். அதாவது விழிகள் கீழ்நோக்கிய நிலையில் இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது நெற்றிக் கண் மூடிய நிலையில் இருக்கவேண்டும். இந்தக் குருமூர்த்தியைச் சூழ்ந்து, அறநெறியை அறிய ஆவல் கொண்ட அருந்தவ முனிவர்களாகிய தமிழ் அண்ணல்கள் அவர் அருகே களிகொண்டு நிற்பர். இம்முனிவர்களான சநகர், சநாதனர், சனந்தனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் ஆலின் அடியில் அருள் ஒளிர அமர்ந்திருக்கும் அறக்கடவுளாகிய தட்சிணாமூர்த்தியை நோக்கிப் பயபக்தியோடு அமர்ந்திருப்பர். தென்முகமாக குருமூர்த்த மாக அமர்ந்திருக்கும் இத்தெய்வத்தை ஆசிரியர் முன் அறவுரை கேட்க அமர்ந்திருக்கும் பண்டைக் காலத் தமிழ் மாணவர்கள் போல் இருந்து அவரது அறவுரைகளைச் செவிமடுத்ததாக ஆகமங்கள் அறிவுறுத்துகின்றன. திருவாசகத்திலும் இதற்கு விளக்கம் தரப் பெற்றுள்ளது. அம்சுமத்பேதாகமத்தில் நாரதர், சமதக்கினி, வசிட்டர், பிருகு, பரத்துவாசர், சநகர், அகத்தியர் முதலிய முனிவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. காமிகாகமத்தில் காசியபர், கௌசிகர், கௌதமர், பரத்துவாசர், அத்திரி முதலிய ஏழு முனிவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. காரணாகமத்தில் அகத்தியர், ஆங்கீசர், புலத்தியர், விசுவாமித்திரர் ஆகியவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இந்த முனிவர்களின் வடிவங்களில், தலையில் சடாமகுடமும், கழுத்தில் உருத்திராக்க மாலைகளும் மார்பில் பூணூல்களும் காணப் படவேண்டும். உடல் மீது திருநீறு திகழவேண்டும். இடுப்பில் (அரையில்) வெண்மையான ஆடைகள் அணிவித்திருக்கவேண்டும். மூர்த்தியின் முன்னர் காணப்படும் முனிவர்களின் உருவம் எந்நிலை யிலும் இறைவனுடைய மார்பின் உயரத்திற்கு மேல் இருக்கக் கூடாது. இதைப்பற்றிக் காமிகாகமம் விரிவான விளக்கம் அளிக்கிறது. மேலும் காசியபர், கௌசிகர் ஆகிய முனிவர்களின் உடல் கருப்பு நிறமாகவும், பெயர் குறிப்பிடாத இரு முனிவர்களின் மெய் மஞ்சள் நிறமாகவும் பரத்துவாசர் மெய் சிவப்பு நிறமாகவும் அத்திரி, கௌதமர் ஆகியவர்களின் மெய்கள் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ண மாகவும் காணப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தென்முகக் கடவுளின் திருவுருவைச் சூழ்ந்து காணப்படும் முனிவர் களின் உருவங்கள் ஒரு பக்கம் இருவரும் மற்றொரு பக்கம் இருவரும் இருப்பதுபோல் காணப்படவேண்டும். இவ்வுருவங்கள் மாறுபட்ட நிலைகளிலும் இருக்கலாம். இம்மூர்த்தியைக் கின்னரர், கிம்புருடர் முதலிய தேவர்கள் பயபக்தியோடு வழிபட்டு நிற்பர். மூர்த்தியின் கால்களின் அடியில் முயலகன் (அபமார புருசன்) தனது வலது கையைப் பாம்புக் கையாக (சர்ப்பஹதமாக) வைத்திருக்க வேண்டும். கைவிரல்கள் மடக்கப்பட்டுப் பாம்பின் படம் போல் தோற்றம் தரவேண்டும். இடக்கை பாம்பைப் பற்றிப் பிடித்திருக்கவேண்டும். தட்சிணாமூர்த்தியின் தகைமை சான்ற திருஉருவ அமைப்பின் தத்துவப் பொருளை நன்கு விளக்கும் அதிகாரப் பாங்கான விதிநூல் ஆகமங்களேயாகும். ஆனால் உபநிடதங்களும், சூதசம்ஹிதையும், சைவசமய சாத்திரங்களும் நல்ல விளக்கங்கள் அளித்துள்ளன. ஆகமங்கள் தட்சிணாமூர்த்தி, முழுமுதற் கடவுளாகிய சிவ பெருமானின் திருவுருவத்தோற்றம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. சிவபெருமான் பிறப்பு இறப்பு அற்றவன். அவன் அவதாரம் எதுவும் எடுக்காதவன்; அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. அவன் ஊரும் பேரும் அற்றவன்; அவன் இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தினன் என்று எவரும் எழுதிக் காட்ட முடியாது, அவன் வேண்டுதல் வேண்டாமையிலான், என்றெல்லாம் கூறப்படுவதை எவரும் என்றும் மறந்துவிடக் கூடாது. அவன் நமது அம்மையை விட அப்பனைவிட அன்புடைய அத்தையைவிட அம்மானைவிட நம்மிடத்தில் அன்பு காட்டுபவன், அருள் அளிப்பவன் என்று ஆகமங்கள் அருள்கின்றன. அவன் ஊழிக்காலத்தில் பிரபஞ்சங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு அழிவில்லாத எல்லை யற்ற இன்பக்கடலில் மூழ்கிக்கிடப்பன். அக்காலத்தில் பொழுது போக்கிற்காகப் படித்து இன்புறத் திருவாசகத்தின் ஒருபடியை எடுத்து வைத்திருக்கின்றான் என்றும் சான்றோர்கள் கண்டனர். இதை உணர்ந்த திருவனந்தபுரம் பேராசிரியர் பி. சுந்தரம் பிள்ளை அவர்கள், கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள் உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே என்று மனோன்மணியம் என்ற தம் நூலில் கூறியிருப்பது சிவ பெருமான் தமிழ் மொழி மீது கொண்ட விருப்பை வெளிப் படுத்துவதாகும். திருவாசகத்தின் பெருமையை விளக்குவதாகும். தட்சிணாமூர்த்தி மனித குலத்திற்காக முதன் முதலாகத் தமிழ் நாட்டில்தான் காட்சி அளித்தான். மறைகளை அருள்வித்தான். முதன்முதலாக அவன் தமிழ் நாட்டில்தான் கோயில் கொண்டான். அவன் தமிழர்களுக்கு மிக நெருக்கமானவன். தமிழ் மக்கள் மீதும் தமிழ் நாட்டின் மீதும், தமிழ் மொழி மீதும், தமிழ்க் கலைகள் மீதும் பற்றும் பாசமும் மிக்கவன். அன்பும் அருளும் கொண்டவன். அரன் எல்லையற்ற ஆற்றலை உடையவன். அவனது நோக்கே அறிவு (ஞான) நோக்காகும். அவனது திருஉருவில் காலின் கீழ் மிதித்துத் துவைத்து நசுக்கப்பட்டுக் கிடக்கும் முயலகன் உயிர் களுடைய அறியாமையின் பிரதிபலிப்பாகக் காணப்படுகிறான். முயலகனாகிய அறியாமையின் தோற்றத்தைத் தட்சிணாமூர்த்தி கால் அடியிலிட்டு மிதித்து அடக்கி ஒடுக்கி அது தலை நிமிர விடாது அழுத்தி வைத்துள்ளார் என்று அறவோர்கள் பொருள் விளக்கம் தந்துள்ளனர். அவர் திருக்கரங்களில் இடம் பெற்றிருக்கும் திருவேடு, (திருவாசகம்) இறைவன் எல்லவன் (பதி), எத்தகையவன்? உயிர்கள் (பசு) எத்தகையது? உயிர்களை மயக்கிக் கவர்ந்து ஈர்த்து நிற்கும் பாசம் (மாயை) எத்தகையது? உயிர்கள் இறைவனோடு இணைந்து இன்புற்று உயர்நிலையுறா வண்ணம் தடுத்து நிற்கும் பாசத்தை அகற்ற உயிர்கள் என்ன செய்ய வேண்டும்? உயிர்கள் (பசுக்கள்) பாசத்தை அகற்றிப் பதியை அடைந்து முடிவிலாத இன்பத்தை எய்த - அதாவது இறைவனோடு இரண்டறக் கலக்க என்ன செய்ய வேண்டும்? - என்பவற்றையெல்லாம் தெள்ளத் தெளிய விளக்குகிறது. ஏடும் அக்கமாலையும் ஆண்டவன் திருக்கரங்களில் காணப்படுவது அவர் அருள் பிழம்பின் பிரதிபலிப்பு என்பதை எடுத்துக் காட்டுவ தாகும். அவரது உடல் அழிவற்ற பேரின்பத்தாலும் எல்லையற்ற ஆற்றலாலும் (சக்தியாலும்) நிரம்பப் பெற்றது என்பதை உணர்த்து கிறது. பரந்து விரிந்து பசுமையான கிளைகளாலும் இலைகளாலும் குளிர் தரும் ஆலமரத்தின் இருண்ட நிழலின் சாயை, மாயையின் சின்னமாகத் திகழ்கிறது. இம்மூர்த்தி, தமிழ் முனிவர்களுக்கு அறம் உணர்த்து நிலையில் அமர்ந்திருப்பது அவர் மனிதர்களின் குரு - வழிகாட்டி, ஆசிரியன் என்பதைச் சுட்டிக் காட்டும். முனிவர்கள் ஆத்ம வித்தையை அறிந்தவர்கள்; பாசத்தை வென்றவர்கள். என்றாலும் செருக்கடங்கி - தாங்கள் அறிந்திராத அறிவும் உண்மையும் இன்னும் எண்ணிலாதன என்று அடங்கி, எல்லையற்ற அறிவுக் கடலாகிய தட்சிணாமூர்த்தியிடம் பல்வேறு பொருள் களைப் பயில ஆர்வங்கொண்டுள்ளார்கள் நிலை என்பதை நமக்கு இம்மூர்த்தம் உணர்த்துகிறது. தன்னேரில்லாத் தனிப்பெரும் தமிழ்க்கடவுள் ஆலின் அடியில் அமர்ந்து புனிதமான மூலாதார மந்திரமாகிய பிரணவத்தின் அடையாளமாகக் காட்சி அளிக்கிறார் என்று சான்றோர்கள் புகன்றனர். இவ்வரும் பெரும் காணற்கரிய கருவூலம் போன்ற செவ்விய கருத்துக்களைச் சிவாகமங்களில் விரிவாக நாம் காண முடியும். சிற்ப நூற்சான்றுகள் சிவபெருமானின் வடிவத் தோற்றத்தை காட்சிப் பொருளாக நமக்குக் காட்டுவது ஓவியங்களும் சிலைகளும் செப்புப் படிமங் களும் ஆகும். இந்தச் சிற்ப உருவங்கள் அனைத்திற்கும் மூலாதார மாக முடிவான சட்ட நூலாக ஆகமங்கள் உள்ளன. ஆகமங்களில் உள்ள கருத்துக்களை விளக்கி தெய்வ உண்மையை உணருமாறு செய்யச் சிற்ப நூற்கள் எழுந்தன. சிற்ப நூற்கள் ஆகமங்களுக்கு உட்பட்டதாகும். ஆகமத்திற்கும் சிற்ப நூலுக்கும் முரண் எதுவும் தோன்றினால் ஆகமத்தையே முடிவான சட்டவிதியாக நாம் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. சிற்பிகளுக்கு உருவங்கள் சமைப்பதில் சில விதி விலக்குகள் உள்ளன. அவர்களுக்குச் சில உரிமைகளும் அளிக்கப்பெற்றுள்ளன. ஆனால், எதுவும் ஆகம மூலக் கருத்துகளுக்கு முரணாக இருக்கக்கூடாது. ஆகமங்கள் இதுவரை வடமொழியில் இருந்ததாலும் அது பல்லாண்டாகத் தமிழர்களின் பாதுகாப்பின்றி சைவ சமயத்திற்கு மாறுபட்ட வடமொழியாளர் களின் கைகளில் பனை ஓலைகளில் எழுதி வைக்கப்பட்டிருத்த தாலும் அவைகளில் ஒரு சில இடைச் செருகல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், அவற்றைத் தமிழ் நாட்டுச் சைவ சமயச் சான்றோர்கள் ஆய்ந்து இடைச் செருகல்களை அகற்றிவிட முடியும். சிற்ப நூற்கள் வடமொழியில் இருந்தாலும் தெய்வத் திருஉருவங்களையும் திருக்கோயில்களையும் ஆகம விதிகளை அனுசரித்துச் சிற்ப நூற்களின் சட்டப்படி திறம்பட வடிக்கும் கைதேர்ந்த சிற்பிகளும், ஆகம விதிப்படி பூசைகள் ஆற்றும் ஆச்சாரியர்களும் தமிழ் நாட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் மறப்பதற்கில்லை. சிற்ப விதிகள் தமிழ் நாட்டுத்திறன் மிக்க தபதிகளின் பட்டறிவில் இன்றும் பொன்றாது நடைமுறையில் இருந்து வருகிறது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை யாகும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது சமயம் ஈழகம், சாவகம், மலையகம், பாலித்தீவகம், கம்போசகம், ஈராக், எகிப்து, அமெரிக்கா முதலிய நாடுகள் வரை பரவியுள்ளது. நமது நாட்டுச் சிற்பிகளும் ஆச்சாரியர்களும் ஆழ் கடல்கடந்து சென்று தமிழர் களின் திருக்கோயில்களை யொப்பப் பெரிய கோயில்களை எழுப்பி யுள்ளனர். தெய்வத் திருஉருவங்களை செதுக்கியுள்ளனர், வெண்கலப் படிமங்களை வார்த்து வழிபாட்டுக்கு உரியதாக்கியுள்ளனர். ஆச்சாரியர்கள் பலதலைமுறைகள் ஆகியும் மந்திரங்களையும் தந்திரங்களையும் திருவாசகம், தேவாரம் முதலிய தெய்வீகப் பாடல்களையும் அரைகுறையாகவாவது இன்று வரை பாடி வழிபட்டுவருகிறார்கள். பௌத்தம், காஷ்மீரச் சைவம், கிறித்தவம் இசுலாம் போன்ற பிற மதங்கள் சிவ நெறி மீது சாடியும், மோதியும் அது சாயாது தலை நிமிர்ந்து நிற்கின்றது. இன்று உலகளாவிய தமிழ் மொழியும் சிவ நெறியும் ஆக்கம் பெற்றெழும் மறுமலர்ச்சி ஊழி அரும்பத்தலைப்பட்டுள்ளது. மேனாட்டு அறிவியல் விற்பன்னர் களும் கலைவல்லுநர்களும் நமது சிற்பச்சிலைகளை வியந்து பாராட்டுகின்றார்கள். சிற்ப நூற்கள் பண்டைய தமிழர்கள் கண்ட சிற்ப நூற்கள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கன: 32. அவை 1. விவ தர்மம் 2. விவேசம் 3. விவசாரம் 4. விருத்தம் 5. தாவட்டம் 6. நளம் 7. மயம் 8. அனுமான் 9. பானு 10. கற்பாரியம் 11. சிருஷ்டம் 12. மானசாரம் 13. வது வித்தியாபதி 14. பாராசரியம் 15. வெகுருதம் 16. மானபேதம் 17. அரிடிகம் 18. சயித்தகம் 19. வாது போதம் 20. விதாரம் 21. இந்திரம் 22. வச்சிரம் 23. சவுமம் 24. விவ காசிபம் 25. மகதந்திரம் 26. விசாலம் 27. சித்திரம் 28. காபில காலயூபம் 29. நாம சங்கிதை 30. சாத்திகம் 31. விவபோதம் 32. ஆதிசாரம் போன்றவைகளாகும். இஃதன்றிப் பல அரிய சிற்ப நூற்களும் உள. சிற்ப நூல் வல்லுநர்கள் சிலர் தங்கள் நாட்டிற்கும் மக்கள் அறிவிற்கும் ஏற்பப் பல சிற்ப நூற்களைத் தேர்ந்தெடுத்து அதன் அடிப்படையில் கோயில்கள் கட்டியும் சிலைகள் செதுக்கியும் உலோகப் படிமங் களை வார்த்தும் வருகிறார்கள். இந்தியாவில் தமிழ் நாட்டின் தபதிகள் சிறந்த சிற்ப நூற்களைத் தேர்ந்தெடுத்துச் சிற்பக் கலையில் உயர் நிலையை அடைந்துள்ளார்கள். அவர்களால் படைக்கப்பட்ட உயரிய சிலைகளும், வெண்கலப்படிமங்களும் இன்று மேனாட்டறிஞர்களால் கூடப் போற்றிப் புகழப்பட்டு வருகின்றன. தமிழ் நாட்டு தபதி ஒருவர் படைத்த ஒரு சிறு செம்பொன் சிலை இன்று ஒரு கோடி ரூபாய் மதிப்புடையதாக எண்ணப்படுகிறது. இச்சீரிய படிமத்தைவிட எழில் மிக்க படிங்கள் தமிழ்நாட்டில் உள. தட்சிணாமூர்த்தியின் படிமம் சிற்ப நூற்களில் சிறந்த நூல்களாகப் பல நூற்களைத் தமிழ் நாட்டு தபதிகள் பயன்படுத்திவருகின்றார்கள். அவைகளில் ஒன்று சில்பரத்தினம் என்னும் நூலாகும். அதில் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் நன்கு விளக்கி எடுத்துக் காட்டப்பெற்றுள்ளது. அது அடியில் வருமாறாகும்: தட்சிணாமூர்த்தியை ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருப்பவராக அமைக்க வேண்டும். அவர் ஆலடியில் அமர்ந்திருக்கும் நிலையில் காட்சி அளிப்பார். அவரது வலது கால் கீழ்நோக்கித் தொங்கவிடப் பட்டிருக்கும், இடது கால் அதன் மீது மடங்கிக் கிடத்தப்பட வேண்டும். இடது காலின் நலகத்தின் நுனி வலது முழங்காலிற்குச் சமமாக அமைக்கப்படவேண்டும். (நலகம் என்பது பாதம் வரையில் கீழ்நோக்கி வரும் நீண்ட எலும்பு. இது கணைக்காலில் முடிவடை யும். இந்த எலும்பின் நுனி வலது முழங்காலின் மேல் பொருந்து மாறு ஒன்றன் மேல் ஒன்றாக அமைக்கவேண்டும்) இவருக்குக் கைகள் நான்கு. வலது புறம் முன்கையில் ஞானமுத்திரையை அமைக்க வேண்டும். வலது புறத்திலேயே மேல் கையில் அக்கமாலையை அமைத்தல் வேண்டும். இடது புறம் முன்கையில் வரதான முத்திரை அல்லது தண்டம் (தடி) இவற்றில் ஒன்றை அமைக்கவேண்டும். தடியை அமைப்பதாயின் இடது முழங்கால் மேல் இடது முழங் கையை வைக்கவேண்டும். இடது புறம் மேல்கையில் நெருப்பு அல்லது மான் இவற்றிலொன்று இடம்பெற வேண்டும். தலைமயிர்கள் நாற் புறமும் சிதறியவாறு அதாவது ஜடை மண்டலமுள்ளவாறு அல்லது சடைகளால் உடலெல்லாம் கட்டப்பட்டவாறு -அல்லது சடைமுடி (மகுடம்) உடையவராக அமைக்கலாம். அவர் புனிதமான பளிங்குக் கல் போன்ற நிறம் உள்ளவராக இருப்பார்.. . . . . தலைமுடியில் ஊமத்த மலரும் பாம்பும் இருக்கும். வலதுபுறம் இளம்பிறை இலங்கும். அணிகலன்கள் அனைத்தும் அணிந்திருப்பார். இடையே வெண்மையான ஆடையும் தோள் மீது மேலாடையும் பூண்டிருப்பார். வெண்மையான பூணூலும் அணிந் திருப்பார். புலித்தோலை ஆடையாக அரையில் உடுத்தியிருப்பார். மூன்று கண்கள் உள்ளவராய் இருப்பார். கிலேசங்கள் (மனக் கவலைகள்) சிறிதும் இல்லாதவராய் இருப்பார். உருத்திராக்க மாலையையும் கண்டமாலையையும் (கழுத்தை யொட்டினாற்போல் அமைந்தது), ஹ்ருன் மாலையையும் (இருதயம் உள்ள இடம் வரையில் மார்பில் தொங்கும் மாலையும், அமைக்க வேண்டும். இவரது வலதுபுறம் நாரத முனியும் ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியவர் களும் இடதுபுறம் பாரத்வாஜரும் ஜனகரும் அகத்தியரும் இருப்பர். கின்னரர், கிம்புருடர் ஆகிய வானவரும் மிகுந்த பயபக்தியுடன் வழிபட்டு நிற்பர். இவருடைய கால்களில் ஒன்று தொங்க விடப் பட்டிருக்கும் என்று முன்பே கூறியுள்ளோம். அந்தக் காலின் அடிப்பாகம் பாதம் (வலது கால்பாதம்) அபமாரனின் மேல் பொருந்துமாறு அமைக்கப்படவேண்டும். இவ்வாறு அமைக்கப் பெற்ற தட்சிணாமூர்த்தியே எல்லோருடைய நன்மையையும் நாடி நலம் நல்கும் தர்ம வியாக்கியான மூர்த்தி எனப்படுவர் (அறம் விரித்துரைக்கும் அறிவுடைய அறக்கடவுள் என்று பொருள்) என்று சில்பரத்தினம் என்னும் சீரிய நூல் விளக்கம் அளித்துள்ளது.1 சகளாதிகாரம் என்னும் சிற்ப நூலில் முன்புறமுள்ள இடக்கை வரத முத்திரையும் இடக்கையில் நெருப்பு அல்லது யோகதண்டமும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அத்தண்டம் 12½ அங்குலம் வரை இருக்கலாம் என்றும் மூர்த்தி நிமிர்ந்து அமர்ந்திருக்கும் நிலையில் கம்பீரமாய் அருள் ஒழுகும் முகப்பொலிவுடன் அமைந் திருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. படிமங்களின் விளக்கம் 1. (அ) வியாக்கியான தட்சிணாமூர்த்தி - திருவலஞ்சுழி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவலஞ்சுழியில் அகழ்ந்து எடுக்கப் பட்டது. இப்பொழுது இப்படிமம் தஞ்சைக் கலைக் கூடத்தில் இருக்கிறது. தென்முகக் கடவுளின் சிலை சுமார் 4 அடிக்கு மேல் இருக்கும். இம்மூர்த்தி ஆல மரத்தின் அடியில் ஒரு சிறு பீடத்தில் அமர்ந் திருப்பது போல் காணப்படுகிறார். இவருடைய முகமும் உடலும் அழகு வாய்ந்ததாயும் உறுதியுள்ளதாயும் திகழ்கின்றன. இவரது தோற்றம் கம்பீரமானதாகக் காட்சி அளிக்கிறது. வலது காலைக் கீழே தொங்கவிட்டு முயலகனை மிதித்துத் துவைக்கும் நிலையில் உள்ளது. இடது காலை மடக்கி வலது தொடையின் மீது வைத்து நிமிர்ந்து நோக்கும் நிலையில் இருக்கிறார். தலையின் மீது சடா பந்தம் அழகுறப் பொலிகிறது. கழுத்தையொட்டி அருன் மாலை யும், கழுத்தினின்று மார்புவரை தொங்கும் உருத்திராக்க மாலையும் நன்கு தெரிகின்றன. வலது புறமுள்ள பின் கையில் அக்கமாலை அணி செய்கிறது. முன்புறத்தில் உள்ள வலது கை உடைக்கப்பட் டிருக்கிறது. இடது புறமுள்ள பின் கையில் நெருப்பும் முன் கையில் ஒரு பாத்திரமும் காணப்படுகின்றன. மார்பில் பூணுலும் வயிற்றின் மீது உதரபந்தமும் உள்ளன. கால்களிலும் கைகளிலும் புயங் களிலும் பல்வேறு அணிகள் காணப்படுகின்றன. அவரது அரையில் அணிந் திருக்கும் ஆடை முட்டுவரை தொங்குகிறது. தலையிலுள்ள சடை யின் நீண்ட புரிகள் தோள்பக்கமாகக் கீழே தொங்குவதுபோல் காணப்படுகின்றன. ஆகமங்கள் அறிவுறுத்தும் அறவிதிகளின் ஆணைகளுக்கேற்ப அணுவளவும் பிறழாது கவினுறு கட்டழகு வாய்ந்ததாய்ப் படிமம் படைக்கப் பட்டுள்ளது. முகத்தில் அமைதி நிலவுமாறு சிற்பி தன் கைவண்ணத் தின் சிறப்பை நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். இரு கண்களும், கீழ்நோக்கிப் பார்க்கும் நிலையில் உள்ளன. இந்த மூர்த்தியின் திருவுருவத்தில் சின்முத்திரை தாங்கிய கை சேதப்படுத்தப்பட்டிருப்பது சிற்ப விற்பன்னர்களின் இதயத்தைப் பெரிதும் புண்படுத்துவதாக இருக்கிறது. முயலகன் மூர்த்தியின் மிதியினின்று விடுபட உடம்பை வளைத்துக் கொண்டு தலையை மேலே தூக்கிக் கண்கள் அவரை நோக்கி இரக்கம் காட்டுமாறு வேண்டிக்கொண்டு எழுவதற்கு முயலும் நிலையில் சிற்பி திறம்பட இச்சிலையைப் படைத்துள்ளார். இச் சிலையின் அருகே அமர்ந் திருக்க வேண்டிய நான்கு முனிவர்களின் உருவங்கள் காணப்பட வில்லை. இந்தச்சிலை பாண்டிய நாட்டுப்பாணியில் செதுக்கப் பட்டதுபோல் காணப்படுகிறது. 1. (ஆ) வியாக்கியான தட்சிணாமூர்த்தி - கியுத்மியூசியம் பாரி (பிரான்சு) இத்திருஉருவம் தமிழ் நாட்டு தபதியால் செய்யப்பட்டது என்பதில் ஐயம் இல்லை என்றாலும் இன்று இத்திருஉருவம் பிரஞ்சு நாட்டில் உள்ள பாரீ நகரில் இடம் பெற்ற கியுத் பழம்பொருள் காட்சி சாலையில் (Museum) உயரிய இடத்தைப் பெற்றுள்ளது. தென்முகக் கடவுளின் இத்திருஉருவம் இறைவன் கல்லால மரத்தின் அடியில் வீராசனமிட்டுச் செவ்வாயில் புன்னகை பொலியப் பெருமிதத்தோடு வீற்றிருப்பதுபோல் சீர்பெறச் செதுக்கப் பெற்றுள்ளதாகக் காணப்படுகிறது. முகத்தில் அன்பு தவழ்கிறது; அருள் ஒழுகுகிறது. இம்மூர்த்தி சிற்ப நூற்கள் கூறுவது போல் ஆல் அடியில் அமர்ந்து அழகு செறியக் காட்சி அளிக்கிறார். அவரது, அழகிய சடைமுடிகள் சரிவரப் புரிபுரியாய் அணி பெறத் திகழ் கின்றன. நெற்றி பெற்றி வாய்ந்ததாய் எழில் பெற்றிலங்குகிறது. அவருடைய விசாலமான மூன்று விழிகளும் அவரது அருள் நோக்கையும் ஞானத்தையும் புலப்படுத்துகின்றன. இடதுகாதில் சங்குக் குண்டலமும் வலது காதில் மகரகுண்டலமும் மின்னுகின்றன. கழுத்தில் கண்டமாலைகளும் இருதய மாலைகளும் கவினுறக் காணப்படுகின்றன. வலது பக்கத்தில் உள்ள முன்புறக் கை சின் முத்திரையைப் பிடித்தும் பின்புறக்கை அக்கமாலையைத் தாங்கியும் இடது புறத் திலுள்ள கடக ஹதமான முன்கை மேல்நோக்கியும், பின்புறத்தி லுள்ள கை நெருப்பைத் தாங்கியும் உள்ளன. படத்தில் பின்புறக் கைகள் தெளிவாகத் தெரியவில்லை. வலது காலின் பாதம் முயலகன் முதுகில் அவன் எழா வண்ணம் அழுத்திக் கொண்டிருக்கிறது. இடதுகால் வலது தொடையின் மேல் குஞ்சிதமாய் இருப்பதுடன் சமபங்க இலட்சணத்துடன் காணப்படுகிறது. இம்மூர்த்தியின் அடிப்புறம் மூன்று முனிவர்கள் அவரிடம் உபதேசம் பெறப் பயபக்தியுடன் காணப்படுகின்றனர். ஒரு முனிவர் உருவம் நமக்கு நன்கு புலப்படவில்லை. அறக்கடவுள் ஆலின் அடியில் அழகுற அமர்ந்திருப்பது சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மூர்த்தி ஆகம விதிகளை அனுசரித்து அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இவரை ஞானமூர்த்தி என்றும் இவரது தோற்றத்தை வியாக்கியான தேவ மூர்த்தம் என்றும் சிற்பவிதி சிறப்பிக்கிறது.. இவர் தமிழ்நாட்டில் மகேந்திரமலையில் சனகாதி முனிவர்களுக்கு நான்மறைகளைத் தமிழில் அருளிச் செய்த வேத நாயகன் ஆவர். இவர் கயிலாசமலையில் காணப்பட்டதாகச் சில சிற்ப நூற்கள் கூறுகின்றன. இத்திருஉருவம் தமிழ்நாட்டில் 9ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பெற்று இன்று பிரான்சு நாட்டில் இடம் பெற்றுள்ளது. 1. (இ) வியாக்கியான தட்சிணாமூர்த்தி - திருக்குறுக்கை தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்குறுக்கை என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலில் உள்ள அழகிய தென்முகக் கடவுளின் திருஉருவம். வியாக்கியான தேவர் என்னும் தென்முகக் கடவுள் சடா மகுடத்துடன் இடது புறம் ஊமத்தமலரும், இளம்பிறையும் தாங்கியவராய் எல்லா விதமான தலை அலங்காரங்களுடன், பளிங்குக் கல் போன்ற புனித வெள்ளை நிறமான முகமும் உடலும் உடையவராய் விளங்குகிறார். அருளும் அன்பும் ஆர்ந்த அவரது அகத்தின் அழகு முகத்தில் நன்கு பிரதிபலிக்கிறது. அவருக்கு முகத்தில் ஒருவாயும் இருகாதுகளும் மூன்று கண்களும் உள. புயத்தில் நான்கு கைகள் உள. வாயில் புன்னகை பொலிகிறது. காதுகளில் குண்டலங்கள் உள. கண்கள் ஒளி வீசுகின்றன. மேலும் இவரது வலது புறத்தில் உள்ள முன்கை வரத ஹதமாகவும் பின்புறக்கை பரசைத்தாங்கியும் இடது புறத்தில் உள்ள முன்கை இடது முழங்காலின் மீதும் வைக்கப்பட்டுள்ளன. பின்புறமுள்ளகை மானைத்தாங்கி இருக்கிறது. கழுத்தில் உருத்திராக்கமாலையும், கழுத்தை யொட்டினாற் போல் கண்ட மாலையும், கீழே ஹ்ருன் மாலையும் இடம் பெற்றுள்ளன. மார்பில் வெண்ணிறமான பூணூல் அணியப்பட்டிருக்கிறது. மணிக்கட்டுகளிலும் புயங்களிலும் முழங்கைகளின் மேலேயும் அணிகலன்கள் அணி செய்கின்றன. இவரது மார்பிற்குக் கீழே உதரபந்தமும் அணி செய்கின்றது. இடுப்பில் ஆடைகள் நன்கு அணிவிக்கப்பட்டுள்ளன. வலது கால் தொங்கவிடப்பட்டுள்ளது. இடதுகால் உத்குடிதமாக (சாய் வாக ஊன்றப்பட்டு) இருக்கிறது. இடதுகால் வலதுமுழங்காலின் மீது வைக்கப்பட்டும் இடது கை இடது முழங்காலின் மீது வைக்கப்பட்டுமுள்ளது. வலது முழங்காலுக்கும் பாதங்களுக்கும் இடையில் ஓர் அணி அணிவிக்கப்பட்டும் இரு கால்களின் அடியில் தண்டையும் பாதங்களில் சிலம்புகளும் அணி செய்கின்றன. மூர்த்தி, பதும பீடத்தின் மீது கம்பீரமாக யோக மூர்த்தியாய் வீற்றிருக் கிறார். காலின் கீழ் முயலகன் காணப்படவில்லை. அவருடைய வலது புறமும் இடதுபுறமும் இரண்டிரண்டு பேராக சனகாதி முனிவர்கள் நால்வர் குருஉபதேசம் பெறும் முறையில் அமர்ந்திருக்கின்றனர். தென்முகக் கடவுளின் வடிவம் ஆகம விதிகளை அனுசரித்தும் சிற்ப விதிகளைத் தழுவியும் சீர்பெற, நேருற அமைக்கப் பெற்றுள்ளது. குருமூர்த்தமாய், யோக நிலையில் காட்சி தரும் இம்மூர்த்தி வழிபடற்குரியவராவர். இந்த மூர்த்தியை வழிபட்டால் எல்லாத் துக்கங்களும் நீங்கும்; அறிவு வளரும்; ஆன்ம இன்பம் பெருகும். சிவபெருமான் குருமூர்த்தமாகக் காட்சி அளிக்கும் தட்சிணா மூர்த்தியின் இக்கோலம் வியக்கத்தக்க ஒரு அரிய தோற்றம் ஆகும். சிவபெருமான் யோகவடிவில் நமக்குக் காட்சி அளிக்கிறார். அவருக்கு இது தவிர, போகவடிவம், வேகவடிவம் என்ற வேறிரு வடிவங்களும் உண்டு என்று சிவஞான சித்தியார் என்றும் சைவ சித்தாந்தத் தத்துவ நூல் கூறுகிறது. இவருடைய மூன்று வடிவங் களில் யோக வடிவமே சிறந்தது என்று கூறப்படுகிறது. சின்முத்திரை அவரது பெருவிரலை, சுட்டுவிரல் மற்றைய விரல்களை விட்டுப் பிரிந்து வளைந்து பற்றி நிற்கிறது. தென்முகம் இறைவன் தெற்கு நோக்கி வீற்றிருப்பதை அகோரமுகம் என்பர். அகோரமுகம் என்பது கோரம் இன்மையை உணர்த்து கிறது. இது ஆண்டவனின் அனுக்கிரகத் தன்மையை அறிவுறுத்தும் அரிய தோற்றமாகும். தென்முகம் என்பதற்கு அறிவு என்பது ஆன்றோர் கண்ட அரும் பொருள் ஆகும். வீராசனம் ஜீவன் முத்தர் மலநீக்கத்திற்குரிய சாதனம் செய்து வருவதோடு, மலம் நீங்கிய சிவனடியாருடன் கூடிச் சிவபக்தரல்லாதாரோடு இணங்காது வீரமாய் இருக்க வேண்டும் என்பதை அறிவிப்பது. அப்பர், ஈசன்பல்கணத்தெண்ணப்பட்டு... இறுமாந்திருப்பன் கொலோ என்று அருளியிருப்பது ஈண்டு நினைவு கூர்தற்குரியது. மறை இது இறைவன் இடக்கரத்தில் இடம்பெற்றிருக்கும் ஏடாகும். இது சிவஞான போதமே என்பர் சான்றோர். இஃது ஏனைய மூன்று கைகளாலும் இரண்டு திருவடிகளாலும் உணர்த்திய உண்மைப் பொருளை இனிது விளக்குகிறது. கல்லால நிழல் இது விருப்பு, வெறுப்பு முதலிய வெப்பந் தருகின்ற இராசத, தாமத குணந் தராது. சாந்தத்தை அளிக்கும் சத்துவ குணத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும். அமுதகும்பம் இஃது இறைவனது இடது திருக்கையில் இடம் பெற்று இருக்கிறது. மலநீக்கம், சிவப்பேறு என்னும் பயன் இரண்டும் வாய்ப் பதற்கு உரிய சாதனம் சிவஞானம் என்பதைச் சீராக உணர்த்தும். உருத்திராக்கம் இறைவனது மற்றொரு கரத்தில் இருக்கும் இம்மாலை சிவஞானத்தில் நிலைத்தற் பொருட்டுத் திரு ஐந்தெழுத்தைக் கணிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. முயலகனை மிதித்த திருவடி சிவஞானிகள் சீவன் முத்தர்களாய் வாழுங் காலத்து ஆணவமலம் தலைதூக்காவண்ணம் அதனை அமிழ்த்துவதற்குச் சாதனம் செய்து வரவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவது. மான் இறைவனது இடது கரத்தில் உள்ள மான் திருமறையைக் குறிப்பதாகும். பட்டினத்தார், வேதம் மான் மறியே என்று கூறி யுள்ளார். மழு மழு வீரத்தை உணர்த்துகிறது. தட்சணாமூர்த்தியின் பின்புறத்திலுள்ள வலது கையில் மழு இடம் பெற்றுள்ளது. இஃது ஆண்மையை உணர்த்துவதாகும். மழுவை விட்டதாக எந்தச் சாத்திரமும் சாற்றவில்லை. மழு, அழிக்கும் தன்மையுடையது. இறைவன் சம்மார கர்த்தா என்பதை மழு உணர்த்தும். எல்லாவற்றையும் அழிப்பவனே அனைத்தையும் ஆக்கவும் வல்லவன். இதுவே, இறைவன் சத்தி. சம்மாரம் ஓய்வு பெறுதல் ஆகும். இது, சிவபெருமானின் அன்பின் பாற்பட்டது. எல்லா உயிர்களையும் ஒரே காலத்தில் ஓய்வுபடுத்துதலே மகா சம்மாரம் எனப்படும். உயிர் (பசு) உடையவனை (பதியை)ச் சேர்ந்திருக்கும் பொழுது பொன்றா இன்பத்தைத் துய்க்கும். இனம் இனத்தோடாதலின் உயிர் என்றும் மலமாகிய சடத்தோடு கூடாது அறிவுப் பொருளாகிய இறைவனோடு கூடும். இப்படிச் சேராத முத்தி, பதமுத்தி எனப்படும். அதாவது உயிர் சிவலோகத்தில் தான் செய்த சரியை கிரியை யோகம் ஆகியவற்றின் பலனைப் பெறும். ஞானநிலையில்தான் அத்துவித முத்திகிட்டும். அந்த அறிவு ஆண்டவன் அனைத்தையும் ஆக்குபவன், ஆட்டுபவன் (இயக்குபவன்) என்பதை அறிந்து செயலற்றிருத்த லாகும். தென்முகக் கடவுள் மகேந்திரமலையில் ஆலடியில் அமர்ந்து அறம் உரைத்ததை அறிந்து சனகாதி முனிவர்கள் சிந்தித்து, சிந்தனையில் தெளிவு கண்டு நிட்டையில் அமர்ந்து முடிவிலாத இன்பத்தைத் துய்த்தனர் என்று அறிகின்றோம். திருக்கோயிலுக்குச் செல்வோர், வலம் வந்து தென்முகக் கடவுளின் திருஉருவின் முன் அமர்ந்து தியானம் செய்து ஐந்தெழுத் தோதி வழிபடல், சைவ சமய நியதி. mJnt ekJ ne® tÊ; j£ázh_®¤âna ekJ jªij; ekJ FU; ekJ tÊ fh£o; V‹?- அவரே நமது முழுமுதற் கடவுளும் ஆவார். பன் முத்திரைச் சமயம் பாழ்படக் கல்லாலடி வந்த சின்முத்திரை அரசைச் சேர்வேனோ பைங்கிளியே என்ற தாயுமானவர் பாட்டு நமது குறிக்கோளை உணர்த்தும். தட்சிணாமூர்த்தியின் துதி அன்றால நிழற்கீழ் அருமறைக டான் அருளி நன்றாக வானவர் மாமுனிவர் நாடோறும் நின்றார ஏத்து நிறைகழலோன் புனைகொன்றைப் பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ (திருவாசகம்) நம்பனை நால்வேதங் கரைகண்டானை ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக் கம்பனைக் கல்லால் இருந்தான் தன்னைக் கற்பகமாயடியாற் கட்கருள் செய்வானைச் செம்பொன்னைப் பவளத்தைத் திரளுமுத்தைத் திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை அம்பொன்னை ஆவடுதண் டுறையுள்மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந்தேனே (அப்பர் - தேவாரம்.) ஆல நீழலார் ஆலவாயிலார் காலகாலனார் பால தாமினே அந்த மில்புகழ் எந்தை யாலவாய் பந்தி யார்கழல் சிந்தை செய்மினே (சம்பந்தர் - தேவாரம்) போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப் பொழில்கொள் ஆலநிழற் கீழறம் புரிந்து பார்த்தனுக் கன்று பாசுப தங்கொடுத் தருளினாய் பண்டு பகீரதன் வேண்ட ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த தீர்த்தனே நின்றன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப் புன்கூர் உளானே (சுந்தரர் தேவாரம்.) உறவா கியயோ கமும்போ கமுமாய் உயிராளி! என்னும் என் பொன்னொரு நாள் சிறவா புறஞ் செற்ற கொற்றச் சிலைகொண்டு பன்றிப்பின் சென்று நின்ற மறவா! என்றும், மணிநீர் அருவி மகேந்திர 1 மாமலைமேல் உறையும் குறவா! என்னும் குணக்குன்றே! என்னும் குலாத்தில்லை அம்பலக் கூத்தனையே - திருமாளிகைத் தேவர் (திருவிசைப்பா) ஆலின் கீழ்இருந் தறநெறி அருளியும் இன்னவை பிறவும் எங்கள் ஈசன் கோபப் பிரசாதம் கூறுங் காலைக் கடிமலர் இருந்தோன் கார்க்கடற் கிடந்தோன் புடமுறு சோலைப் பொன்னகர் காப்போன் - நக்கீரதேவநாயனார் கோபப்பிரசாதம் (11-ஆம் திருமுறை) 1972 கல்லாலின் நிழல்தனில் ஒரு நால் வர்க்கும் கடவுள் நீ உணர்த்துவதுங் கைநாட்டொன்றால் சொல்லாலே சொலப்படுமோ சொல்லுந் தன்மை துரும்பு பற்றிக் கடல் கடக்கும் துணிபே யன்றோ -தாயுமானவர் மண அழகர் (கலியாண சுந்தர மூர்த்தி ) உலகின் இரு கூறுகள் உலகம் அனைத்தும் இருகூறாகப் பிரிந்துள்ளது. இது, இயற்கை நியதி. அறிவர்கள், உலகம் சடம், சத்தி ( Energy and Matter) என்ற இரண்டு பொருளாக இணைந்து பிணைந்து காணப்படு கின்றது என்று கூறுகின்றனர். ஆனால், உலகில் உள்ள பல சமயத்த வர்களும் உலகம் ஒரு கூறாக அமைந்திருப்பதாக் கூறுகின்றனர். உலகைப் படைத்து, உயிர்களை உய்விக்கும் பரம் பொருளைத் தேவன் என்றும் பிதா என்றும், ஆண்டவன் என்றும், அருளாளன் என்றும் கூறுகின்றனர். பாரனைத்தையும் படைத்த பரம்பொருளை, ஆண் என்றே கருதுகின்றனர். எபிரேயர் மறை கூறும் எகோவா (எல்) ஆதியில் தன் சாயலில் ஆதாமை (ஒரு ஆண்மகனை)ப் படைத்தான் என்று கூறுகின்றது. இதினின்று இறைவனை அவர்கள் ஒரு ஆணாகக் கண்டனர் என்று நன்கு புலப்படுகிறது. அப்பால் மோசே கண்ட நான்கு மறை நூல்களிலும் கடவுள் ஆணாகவே கருதப்பட்டுள்ளது. ஆனால் தமிழர், உலகு இரு கூறாகப் பிரிந்திருப்பதாகக் கண்டனர். உலகில் உள்ள கல்லும் மண்ணும், புல்லும் நெல்லும், புழுவும் பூச்சியும், பறவைகளும் விலங்குகளும் மக்களும் இரு கூறாக அதாவது ஆண்-பெண் வடிவாக அமைந்திருப்பதாக அறிந்தனர். மேலும் அவர்கள் உலகைப் படைத்துத் துடைக்கும் பரம்பொருளும் ஆண்-பெண் வடிவாக அமைந்திருப்பதாகக் கண்டனர். மேலும் அப்பரம்பொருள் அன்பும் அருளும் அமைந்ததாக அறிந்தனர். இவை, ஆண்-பெண் தன்மை எனக் கொண்டனர். எனவே தமிழர் கண்ட பழம் பெரும் நெறியாகிய சைவம், கடவுளை அம்மை அப்பனாகக் கருதியது. சமயச் சான்றோர்கள் கடவுளை, சத்தி யாய்ச் சிவமதாகி என்று இறை விளக்கம் அளித்தனர். அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! என்று போற்றி இறைவணக்கம் இயற்றினர். உலகை உருவாக்கி, அதை ஆட்டுவிக்கும் அளப்பெரும் மாசக்தி இயன்முறைக் காரணகாரியத் தொடர்புக்கு அப்பாற் பட்ட சக்தி (Super Natural Power) என்று கூறப்படும். இம் மாசக்தி இருகூறாக இலங்குவதாக அறிவர்கள் கூறுகின்றனர். உலகம் உருவாவதற்குக் காரண பூதமாக இருக்கும் இருபெரும் கூறுகளும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து தனித்தியங்க முடியாது. இவை தனித் திருந்தால் இவ்வுலகம் தோன்றியிருக்க முடியாது. இம்மாபெரும் சக்திகளின் இணைப்பிலே இவ்வுலகம் அரும்பியது - பிரபஞ்சம் (இயலுரு - (Universe) முழுமையும் எழுந்தது என்று அறிவுலகம் கண்டுள்ளது. இதைப் படித்தவர்களும் பாமரர்களும் உணர்ந்து கொள்ளும் வண்ணம் சைவ சமயச் சான்றோர்கள் இவ்வுலகம் இரு கூறாக அதாவது ஆண் பெண் வடிவாக அமைந்துள்ளது என்று கண்டனர். இது சக்தி என்றும் சிவம் என்றும் கூறப்படும். இதில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் உண்டு என்று எவரும் கூறியதில்லை. இதில் இது முந்தியது, இது பிந்தியது என்று எவரும் எண்ணிய தில்லை. சக்தியாய்ச் சிவமதாகி என்று சிவஞானிகள் பாடுவர். சிவனின்றிச் சக்தியும், சக்தியின்றி சிவமும் இல்லை என்று எண்ணப் படுகிறது. சிவமும் சக்தியும் இணைந்து பிணைந்து நிற்பதன் பயனாகவே இப்பிரபஞ்சம் தோன்றியது. இவ்வுலகமும் அதிலுள்ள உயிரினங்களும் இம்மாபெரும் சக்தியால் அரும்பியுள்ளன. ஆக்கம் பெற்றுள்ளன. இன்பம் உறுகின்றன. எழில் எய்தியுள்ளன. வளமும் வாழ்வுமுற்று உயர்ந்துள்ளன. இந்த மகத்தான உண்மையை ஆதியில் தமிழர்களுக்குச் சிவாகமங்கள் உணர்த்தின. அப்பால் சைவசமயத்திற்கு மறுமலர்ச்சி அளித்த அப்பர் அடிகளும் அவர் வழிவந்த சைவ சமயச் சான்றோர் களும் இவ்வுலகைப் படைத்த மகாசக்தியை அம்மை அப்பன் வடிவில் கண்டனர். இந்த அம்மை அப்பர் கோலமே மண அழகர் (கலியாண சுந்தரர்) மூர்த்தமாகும். கலியாண சுந்தர மூர்த்தம் சிவபெருமான், உமாதேவியோடு இணைந்து, அவளது கரம் பற்றிக் களிப்புடன் திருமணக் கோலத் தில் காட்சி அளிப்பதாகும். இக்கோலம், மக்கள் ஆணும் பெண்ணும் இணைந்து மணந்து இல்லறம் நடத்தி இன்புற்று வாழவேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றது. இம்மூர்த்தம், மங்கலகரமானது; அழகொளிர்வது; சைவத்தில் சன்னியாசம் இல்லை என்பதை அறிவுறுத்துவது. இறைவனின் இத்திருக் கோலம் இல்லற இன்பம் பொங்க வழிகாட்டுவதாக எண்ணி இளந்தமிழர் தம் இல்லத்தில் வழிபட்டு வருகின்றனர். புராணக் கூற்று சிவபெருமான் சக்தியுடனின்றித் தனித்த நிலையில் காட்சி அளிக்கின்றார். தாரகன் என்னும் அசுரன் அந்தணர்களுக்கும் அமரர்களுக்கும் ஆற்றொணாத் துயர் விளைத்து வந்தான். அந்த அடங்கா அசுரன் அளப் பெரும் ஆற்றல் பெற்றவன். அவனை அடக்கவோ, அமர்த்தவோ, அழிக்கவோ அவனியில் எவரும் இல்லை. ஆண்டவன் ஒருவன்தான் அவனை அடக்கவல்லவன் என்று தெரிந்தது. ஆண்டவனாகிய சிவபெருமான் சக்தியின்றி யோக நிலையில் செயல்படாதிருக்கின்றார். சிவன் சக்தியோடு கூடி இருந்தால்தான் அரக்கனை அடக்கமுடியும். எனவே முனிவர்கள் சிவபெருமான் சிவையுடன் (தேவியுடன்) கூடிச் செயல்படும் நிலையை - அதாவது திருமணக் கோலத்தைக் காண விழைந்தனர். சக்தியோ இமயமலைக்குத் தலைவனாகிய இமயவானாகிய மலை அரசன் மகளாய்ப் பார்வதி என்னும் பெயருடன் மேருமலையில் வீறுடன் வீற்றிருந்தார், அவர் அம்மாமலையில், இறைவனுடன் இணைந்து வாழ எண்ணி அருந்தவம் ஆற்றி வருகிறார். இந்நிலையில் அமரர்கள் அரனார் யோக நிலையை விடுத்துத் சத்தியோடு கூடிக் காணப்படும் மங்கலகரமான நிலையைக் காண வேண்டினர். சிவபெருமான் தம் யோக நிலையை விட்டுப் போக நிலைக்குத் திரும்பவில்லை. எனவே முனிவர்கள், சிவபெருமானின் யோகத்தைக் கலைக்குமாறு காமனை வேண்டினர். காமன், அவர்கள் விருப்பத்திற்கிணங்கி சிவபெருமானின் யோகத்தைக் கலைக்க ஒப்புக் கொண்டான். உடனே காமன் தன் கரும்புவில்லில் மலர்களை அம்பாக வைத்து ஆயிரக்கணக்கான மலர் அம்புகளை அவர் மீது தொடுத்தான். சிவபெருமான் யோகம் கலைந்து எழுந்தார். எதிரே களிகொண்டு மன்மதன் மலர்க் கணைகளைத் தொடுத்து நிற்பதைக் கண்டார். அவன் செய்த சிறு குறும்புச் செயலைக் கண்டு சினங் கொண்டார். உடனே அவரது நெற்றிக் கண் திறந்தது. காமன் எரிந்து மறைந்தான். ஆனால் அரனார் அவரது யோக நிலையை மாற்றிப் போக நிலைக்கு மாறினார். இறைவன் இறைவியோடு இணைந்து செயல்படும் இயற்கை நிலையை எய்த விழைந்தார். அவர் உடனே தம்மை அடைய ஆர்வங்கொண்டு சிவை, இமவான் மகளாகத் தவம் இயற்றுவதை அறிந்து மகிழ்ந்தார். உடனே, சிவபெருமான் கையில் ஒரு கம்பைத் தாங்கி, எலும்பும் தோலுமாய்த் தோன்றும் ஒரு கிழவன் போல் தள்ளாடித் தள்ளாடித் தவம் புரியும் மலைமகளாம் பார்வதியின் பக்கத்தை அடைந்தார். மலையான் மகள், தன் தவநிலையை விடுத்துத் தன்னை நோக்கும் வண்ணம், மாதேவன் உரத்த குரலில் அம்மா! பசி! அம்மா! பசி! பல நாள் பட்டினியால் வாடி வதங்குகின்றேன்; ஏதாவது உணவு அளித்து உயிர் ஊட்டு என்று பரிதவித்துக் கெஞ்சி நிற்கும் நிலையில் காணப்பட்டார். தவக்கோலம் பூண்டு நிற்கும் தக்கன் மகள் பார்வதி, தவநிலை கலைந்து, தன்முன் நிற்கும் முதியவர் முகம் நோக்கினார்: கிழவரின் பரிதாப நிலை கண்டு இரங்கினார்: உடனே எழுந்து, ஐயா! பெரியவரே! உணவளிக்கிறேன்; உடற் தூய்மை செய்து விட்டு உடனே வாரும் என்றாள். குறிஞ்சி நிலத்தலைவனாகிய மலையரசன் மகளுடைய மதிமுகம் நோக்கிய மாதேவர் மகிழ்ச்சியுற்று அருகில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றார். நீரில் காலை வைத்ததும், அம்மா! m«kh!!, என்று அலறினார். ஒரு முதலை காலைக் கௌவிக் கொண்டு இழுக்கிறது என்று கதறினார். ‘gh®tâ! பார்வதி! என்று பரிதவித்த குரலில் உதவி தேடினார். இமயவரம்பன் மகள் இமைப்பொழுதில் விரைந்து ஓடி நீரோரத்தை அடைந்தாள். முதியவரின் பரிதாப நிலை கண்டு பதறினார்; அவரைக் கண்ணுற்றுக் கவலையெய்திக் கண்ணீர் வடித்தார். ஆனால் அந்த வயது முதிர்ந்த ஆண்மகனின் கையைப் பற்றிக் கரை சேர்த்து முதலையின் பிடியி னின்று விடுவிக்க கால் எழவில்லை; உள்ளம் ஒருப்படவில்லை. தான் நாடும் நக்கனாகிய முக்கண்ணன் கைகளையன்றிப் பிறர் கையைப் பற்றிப் பிடிக்க முடியாத நிலையில் சிரம் குனிந்து மரம் போல் நின்றாள். கன்னி நல்லாள் கலங்கிய உள்ளத்துடன் கானிலுள்ள நீர் நிலையின் கரையில் கால் வினாடி கல்லாய் நின்றார். கிழவர் நீரில் முழுகுவதும் எழுவதுமாய் இறுதிக் கட்டத்தில், கதறிப் பதறிக் காலை உதறித் துடிதுடித்து, முடியும் நிலையை அடைந்தார். சிலையாய் நின்ற மலை மங்கை, ஆபத்திற்குப் பாபம் இல்லை என்று மனந்தேறினார். கிழவரின் உயிரைக் காப்பாற்றுவது தம் தலையாய கடன் என்ற முடிபைக் கொண்டார். உடனே தம் கையால் கிழவரின் கரங்களைப் பற்றி இழுத்துக் கரை சேர்த்தார். கிழவர் உயிர் தப்பினார்; உயிராபத்தினின்று ஒருவரை மீட்டோம் என்று கன்னி நல்லாள் களிப்பெய்தினாள். ஆனால் அவள் அவரைப் பற்றிய முதலையையோ, அவர் உடலில் காயத்தையோ காணவில்லை. ஒரு நொடியில் கிழவரும் மறைந்தார். அவள் அருகே அழகெலாம் ஓருருவாய்த் திரண்டு வந்தாற் போன்ற ஒரு இளங்காளை தம் கையைப் பற்றி நிற்பதைக் கண்டு, பதற்றத்தோடு அவரது முகத்தை நோக்கினாள். அவர், தாம் பன்னாள் தவமிருந்து, அடைய விரும்பிய அரனாக இருப்பது அறிந்து வியந்தார்; உளம் மகிழ்ந்தார்; உடல் பூரித்தார்; தம் தவம் நிறைவேறியது கண்டு களிப்புற்றார்; ஆடினார், பாடினார். தன் உயிரினும் மேலாக நினைத்துள்ள, கற்புக்குப் பங்கம் எழாது காப்பாற்றப் பட்டோம் என்று பெருமித முற்றார். பரமசிவன் பார்வதி தேவியின் மீது அருள் சுரந்தார். மலைமகளை மாதேவன் மணந்து கொண்டார். அரனார் அம்மங்கை நல்லாளைத் தம் இடப் பாகத்தில் இடம் பெறச் செய்தார். மங்கை பங்கன் என்று மக்கள் போற்றவும் ஏற்றவும் இடம் அளித்தார். அரக்கனை அழித்து அமரர் களுக்கும் அந்தணர்களுக்கும் மற்றும் பலருக்கும் அடைக்கலம் அளித்தார். காமன் மனைவி, இரதி தேவி, தன் கணவன் இயற்றிய தவற்றை மன்னித்துத் தன் துணைவனைத் தனக்குத் தந்துதவுமாறு வேண்டினாள். இறைவன் இரங்கி, அவன் இனி உடலோடு உலவ முடியாது. ஆனால் அவனுக்கு, நாம் மீண்டும் உயிர் அளித் துள்ளோம். அவன், இனி எவருக்கும் உடலோடு காட்சி அளிக்க மாட்டான். உனக்கு மட்டும் உடலோடு காட்சி அளிப்பான் என்று வரம் அளித்தார். உலகில் அரக்கர் பயம் ஒழிந்தது. அனைவரும், ஆணும் பெண்ணுமாய் இணைந்து இல்லறம் இயற்றி இவ்வுலகம் இன்ப உலகமாய் இலங்க வழி கண்டனர். காமன் கதை பற்றிப் புராணங்கள் விரித்துக் கூறுகின்றன. காமன் தமிழர் கண்ட தெய்வமா? அல்லது ஆரியர் உறவால் தமிழர் புராணக் கதைகளில் புகுத்தப்பட்ட தெய்வமா என்ற ஐயப்பாடு பலருக்கு எழக்கூடும். அது எவ்வாறு இருப்பினும் அகராதிகளில் சிவன், காமாந்தகன், காமாரி, காமதகனன், காமநாசன் என்று காமனைக் காய்ந்தோன் என்ற பொருளில் விளிக்கப்படுவதாலும், தன்னை அணுகிய காமனின் குறும்புச் செயலை விரட்டி அடித்து ஒழித்தவன் என்ற உயரிய தன்மைக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாலும், கதையின் கருத்து இறைவன் இறைவியோடு இருந்து இல்லறம் இயற்றும் நல்லறத்தை நாட்டில் நிலை நிறுத்த எழுந்ததாக இருப்பதாலும் இப்புராணக் கதையை ஏற்றுக் கொள்வது சைவ நெறிக்கு இழுக்கொன்றும் இல்லை. பழம் பெருஞ் சைவ நெறியின் மறுமலர்ச்சிக்கு கி.பி. 7ஆம் நூற்றாண்டில் அடிப்படையிட்ட தியாகச் செம்மல், சகலகலாவல்லுநர் திருநாவுக்கரசர், காமனை யன்று கண்ணாற் கனலெரி யாக நோக்கித் தூபமுந் தீபங் காட்டி தொழுமவர்க் கருள்கள் செய்து (தேவாரம் 28-திருநெய்- 2) என்று பாடியுள்ளார். இது சைவ நெறி காட்டும் நல்வழி. இதை ஏற்றுக் கொள்வதில் இழுக்கொன்றும் இல்லை. ஆகமம் அறிவுறுத்தும் உண்மை சிவாகமங்கள் சிவநெறியின் - அதாவது சைவ சமயத்தின் அதிகார பூர்வமான ஆதி மறைநூற்கள். அவைகள் அனைத்தும் கடவுள் ஆண்-பெண் வடிவில் தமிழர் கண்ட மெய்ப் பொருள் உண்மையை வலியுறுத்தியுள்ளன. இந்த ஆகம நூற்கள் மலைக் கடவுளாகிய மாதேவனுக்கும் மலை மகளான பார்வதிக்கும் நடை பெற்ற திருமணக் கோலத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றன. குறிஞ்சி நிலக் கடவுளான செய்யோன்- சிவன், கொற்றவை, சேயோன் எனவாகி, மருத நிலத்தில் சிறப்பான இடத்தைப் பெற்று சிவன், மாயோன், முருகன் என்ற பெயரால் வழிபடப் பட்டதோடு, மாயோனாகிய முல்லை நிலத் தெய்வமும் சிவனுடைய மைத்துனனாகவும் எண்ணப்பட்டுத் திருக்கோயிலில் இடம் பெற்று வழிபடப்பட்டு வருவதும் உறுதி செய்யப் பெற்றுள்ளது. திருமணக் கோலத்தில் கை கோர்த்து நிற்கும் சிவபெருமானும் உமாதேவியும் கிழக்குத் திசையை நோக்கி நிற்கவேண்டும். உமா தேவிக்கு அண்மையில் திருமகள் மணப்பெண்ணின் அண்ணிபோல் நிற்கவேண்டும். அவள் அருகே திருமால் உமாதேவியின் அண்ணாக, பெண்ணைத்தாரை வார்த்துக் கொடுக்கும் நிலையில் நிற்க வேண்டும். சிவபெருமான் மணமகன் கோலத்தில் மணமகளை சிவையைக் கைப்பற்றி நிற்கும் நிலையில் காணப்பட வேண்டும். சிவபெருமான் முகத்தில் புன்னகை தவழத் தன் வலது கையால் களிகொண்டு எழிலுடன் நிற்கும் மலைமகளின் வலது கையைப் பற்றிப் பிடித்து நிற்கும் பாவனையில் காட்சி அளிக்கப்பட வேண்டும். அடுத்துத் திருமாலும் திருமகளும் மணமகளைக் கைப்பிடித்து மணமகனிடம் கொடுக்கும் பாங்கில் காணப்பட வேண்டும். திருமால் பொற்குடம் ஒன்றை எடுத்து அதிலுள்ள நீரைத் தாரை வார்த்துக் கொடுக்கும் சடங்கில் நீரை ஊற்றுவதற்குத் தயாராய் நிற்பது போல் காணப்பட வேண்டும். இவர்களின் முன்னணியில் நான்முகன் அமர்ந்து புரோகிதனாக ஓமம் வளர்க்கும் பாங்கில் திகழ வேண்டும். நான்முகன் ஓம குண்டத்தில் அக்கினியை எழுப்பி அதில் ஆவின் நெய்யை அர்ப்பணம் செய்யும் பாவனையில் இருக்க வேண்டும். இவரது பின்னணியில் நாற்புறமும் பல்வேறு அளவில் அஷ்ட வித்தியாசுவரர்கள் (எட்டுக் கல்வித் தெய்வங்கள்) அஷ்டதிக்குப் பாலகர்கள் (எட்டுத் திசைகளின் அதிபர்கள்) அஷ்ட சித்தர்கள் (எட்டுச் சித்திகளும் கைவரப் பெற்றவர்கள்) இயக்கர்கள் (பாதித் தெய்வத் தன்மைவாய்ந்த மனிதர்கள்) இருடிகள் (முனிவர்கள்) கந்தர்வர்கள் (பாதி மனித (தெய்வ) உருவமும் பாதிப் பறவை உருவமும் பெற்றவர்கள்) மந்திரிகர்கள் (எழுவிதத் தாய்மார்கள்) இன்னோரன்ன பல விண்ணவர்களும் மண்ணவர்களும் -ஆணும் பெண்ணுமாக இணை இணையாக நின்று இறைவனையும் இறைவியையும் கை கூப்பி நிற்கும் காட்சி காணப்பட வேண்டும். இந்த மகோன்னதமான மணவிழாவில் காணப்படும் அனை வருடைய அகத்திலும் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கித் ததும்பி நிற்பது போல் காணப் பெறுதல் வேண்டும். இஃதின்றி தனிப்பட்ட சில உருவங்களும் இடம் பெற்றிருக்கலாம். சிவ பெருமானின் திருவடிவம் செவ்வையாகச் சீர்பெறச் செறிவுடனும் பொலிவுடனும் ஒளி பெற்று இலங்குவது போல் காணப்பட வேண்டும். அவரது இடது கால் நிலத்தில் உறுதியுடன் ஊன்றி நிற்பது போலவும் வலது கால் சிறிது வளைந்து நிலத்தின் மீது வைத்திருப்பது போலவும் இருக்கலாம். வலதுகால் நேராக நிலத்தில் உறுதியாய் நிற்பது போலவும் காணப்படலாம். முன்பக்கத்து வலது கை வெளியே நீட்டப்பட்டு மணமகளின் வலது கையைப் பற்றி வரவேற்கத் தயாராய் நிற்பது போலவும் முன்பக்கத்து இடது கை வரதக் கையாகவும் காணப்படவேண்டும். பின்பக்கத்து வலது கையில் பரசும், பின்பக்கத்து இடது கையில் மானும் காணப்பட வேண்டும். சிவபெருமானுடைய அழகிய வடிவம் மூன்று வளைவு வாய்ந்ததாய் அதாவது திரிபங்கமாகத் திகழவேண்டும். அவரது தலையில் சடாமகுடமும் அதன்மீது இளம் பிறையும் இலங்க வேண்டும். அவரது உடம்பில் அனைத்து அணிகலன்களும் அழகுடன் திகழ வேண்டும். மாலை, வாகுவலயம், உதரபந்தம், அரைக்கச்சை - அவர் உடல் மீது காணப்படுவது இன்றியமையாதது. வாசுகி என்னும் பாம்பு அவரது காதில் குண்டலம் போல் பூணப்படவேண்டும். தகஷ்ஹக்கா அரைக் கச்சையாகவும் புடகம் மாலையாகவும் திகழலாம். அவரது உடல் உருண்டு திரண்டு, நல்ல பருவம் வாய்ந்த இளங்காளை போன்று எழிலுடனும் பொலிவுடனும் ஒளிர வேண்டும். அவரது திருமேனி பவளம் போன்று செந்நிறம் வாய்ந்ததாய்ச் செறிவுடன் துலங்கவேண்டும். அவரது நெற்றியில் மூன்றாவது கண்ணாக ஒரு ஞானக் கண் திகழ வேண்டும். சிவனுடைய இடப்பாகத்தில் காடுகிழாள் கட்டழகு வாய்ந்த கன்னி நிலையில் கருப்பு வண்ணம் வாய்ந்தவளாய்க் கவின் பெற நிற்கவேண்டும். அவளது கால்கள் நிலத்தில் நன்றாக ஊன்றி நிற்கும் நிலையில் தோன்ற வேண்டும். அவளது வலது கைமீது சிவ பெருமான் வலது கரம் பொருந்தியதாய் இருக்கவேண்டும். அவளது இடது கையில் நீலோற்பல மலர் காணப்படவேண்டும் புதிய மணப்பெண் தம் மணமகனை முதலில் சந்திக்கும் நிலையில் உடலும் உள்ளமும் பூரிப்புடையதாய் முகத்தில் நாணம் எழத் தலை கவிழ்ந்து புன்னகை பொலியும் பூவை நல்லாளாக நிற்க வேண்டும். அவள் மணப் பெண்ணிற்குரிய எல்லா ஆடை அணிகளும் மலர்களும் அணிந்து அழகுடன் காணப்பட வேண்டும். உமாதேவியின் உருவம் சிவபெருமான் உருவத்தை விடச் சிறிது குறைந்த உயரம் உடையதாக இருக்க வேண்டும். அவள் உயரம் அவரது கண் அளவில் இருக்கலாம். அல்லது நாடி, தோள், மார்பு, அளவு இருக்கலாம். அவள் இரு கைகளை யுடையவளாய் வண்ணப் பட்டாடை புனைந்து திகழ வேண்டும். சில ஆகமங்களில் சிவபெருமானுடைய வலது பக்கத்தில் சிவை நிற்பதாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. எனவே தான் சில இடங்களில் தேவியின் திருவுருவம் இடது பக்கமாகவும் சில இடங்களில் வலது பக்கமாகவும் காணப்படுகின்றது. இதில் தவறு எதுவும் கூறுவதற்கில்லை. சிவபெருமானுக்கு முன்புறத்தில் நான்முகன் அமர்ந்து ஓமம் வளர்ப்பது போலவும், ஓமம் அக்கினிக்கு அர்ப்பணம் செய்வது போலவும் காணப்படவேண்டும். நான்முகன் உருவம், சிவபெருமானின் திருவுருவின் மார்பு அளவிற்குக் கீழே இருக்கவேண்டும். பூர்வ காரணாகமம், திருமால், நான்முகன் ஆகியவர்களின் உருவங் களுக்குப் பல்வேறு வகையான அளவுகளைக் கூறுகிறது. சிவ பெருமான் உருவத்தில் திருமால், நான்முகன் உருவங்கள் பன்னிரண்டில் ஏழுபங்கும், அல்லது பன்னிரண்டில் பதினொரு பங்காகவும் அல்லது நான்கில் மூன்று பங்காகவும் அல்லது மூன்றில் இரண்டு பங்காகவும் இருக்கலாம். நான்முகன் வடிவம் திருமாலின் வடிவத்திற்குச் சமமாக அல்லது ஆறில் ஒன்று அல்லது ஏழில் ஒன்று அல்லது எட்டில் ஒன்றுமாகக் குறைவாக இருக்கலாம். நான்முகன் வடக்கு நோக்கிப் பத்மாசனமிட்டு அமர்ந்திருக்க வேண்டும். அவருக்கு முன்பாக ஓமகுண்டத்தில் நெருப்பு சுவாலை விட்டு எரிய வேண்டும். நான்முகன் அவருக்கு அளிக்கப் பெற்ற நான்கு முகங்களோடு இருந்து ஓமம் வளர்க்க வேண்டும். அவர் தலையில் சடாமகுடமும் உடம்பில் பூணூலும், இடையில் மஞ்சம் என்னும் புல்லால் செய்யப்பட்ட அரைப்பட்டியும் மற்றும் அணி கலன்களும் அரை ஆடையும் மேலாடையும் அணிந்திருக்கவேண்டும். அவரது முன்புறத்து இடக்கையும் வலக்கையும் சருவத்தையும் சுருக்கத்தைத்தையும் பின்புறத்து வலதுகை அக்க மாலையையும் இடதுகை கமண்டலமும் தாங்கி இருப்பது போல் காணப்பட வேண்டும். நான்முகன் சிவப்பு நிறமாகக் காணப்பட வேண்டும். திருமால் ஓம குண்டத்தின் வடக்கே நிற்கவேண்டும். அவருடைய உருவம் சிவ பெருமானுடைய மூக்கு, தோள் அல்லது மார்பு வரை காணப்படலாம். மூக்களவு உயரம் இருப்பது உத்தமம். தோள் அளவு உயரம் மத்திமம்; மார்பளவு உயரம் அதமம் என்று ஆகமங்களில் அறிவுறுத்தப்படுகின்றன. மாயோன் தலையில் கிரீட மகுடம் இருக்கவேண்டும். அவர், அவருக்கு உரிய அனைத்து அணிகளும் பூண்டிருக்க வேண்டும். அவரது பின்புறமுள்ள இடது கையும் வலது கையும் சங்கு, சக்கரம், ஆகியவைகள் தாங்கி இருக்கவேண்டும். முன்பக்கத்து வலதுகையும் இடது கையும் பொற்குடத்தைத் தாங்கித் திருமண வைபவத்தில் தாரை வார்க்கத் தயாராய் நிற்கும் நிலையில் காணப்படவேண்டும். மாயோன் மாயோள் போன்று கரிய வடிவிலே காட்சி அளிக்க வேண்டும். திருமாலின் (மாயோனின்) உருவம், திருமகளின் உருவத்தை விட உயரமாக இருக்கவேண்டும். திருமகள் திருமாலின் நாடி அல்லது தோள் அளவில் இருக்கவேண்டும். அவளது கைகள் யானையின் துதிக்கையைப் போன்று உருண்டு திரண்டு கவினுறக் காட்சி அளிக்க வேண்டும். வாகுவலயங்கள், கங்கணங்கள் முதலிய எல்லா அணிகலன்களும் திருமகள் அணிந்து எழிலுடன் திகழ வேண்டும். திருமகள் இடை சிறுத்தும் தனம் பெருத்தும், முகம் ஒளி பெற்றும், அரையில் அழகிய பூந்துகில் ஆடை அணிந்தும் அழகு பொலிய நிற்க வேண்டும். அம்சுமத்பேதாகமம், உத்தர காமிகாகமம், பூர்வ காரணாகமம் போன்ற ஆகம நூற்களில், சிற்ப வல்லுநர்கள் திருஉருவங்களைச் சீர்பெற அமைக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் இவையே யாகும். இந்த ஆகம விதிகளை அனுசரித்து தபதிகள் திருஉருவங்களை வார்ப் படத்தில் வார்த்தும் அப்பால் நிறைவான அழகு செறிய உளியால் செதுக்கியும், அரத்தால் அராவியும், மெருகுக் கம்பியால் தேய்த்தும் மெரு கூட்டி ஒளியூட்டிக் கவின் பெற்றிலங்கு மாறு செய்வார்கள். ஆனால் தெய்வத் திருவுருவங்களை உலோகங்களால் படிமங் களை உருவாக்குவதிலும் கல்லில் சிலைகளைச் செதுக்குவதிலும் தமிழ் நாட்டு தபதிகள் கைவண்ணம் வாய்ந்தவர்கள். அவர்கள் ஆகம விதிகள் அணுவளவும் பிசகாது, சிற்ப விதிகளை உணர்ந்து தம்பட்டறிவிற்கேற்ப உருவாக்குகின்றனர். திருஉருவங்களை உருவாக்கும் திருப்பணியில் தபதி களுக்குச் சில விதி விலக்குகள் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. என்றாலும் ஆகம விதிகளை அனுசரித்து, முரண்பாடின்றிப் பணி புரிந்து வருகின்றார்கள். சிற்பிகள் சிலைகளைச் செதுக்குவதிலும், ஐம்பொன்னால், வெண்கலத்தால் படிமங்களை வார்ப்பதிலும் பயபக்தியுடன் தொழில் இயற்றி வருகின்றார்கள். எனவே தமிழ் நாட்டுத் திருஉருவங்கள் உலகிலே ஒப்பற்ற கலையழகு வாய்ந்த கருவூலமாகத் தமிழ்நாட்டிற்குப் பேரும் பெருமையும் சீரும் சிறப்பும் ஈட்டித் தந்துள்ளன. சிற்ப நூல் விளக்கம் சிரி குமாரரால் இயற்றப்பட்ட சிற்பரத்தினம் என்னும் அரிய நூலில் கலியாண சுந்தர மூர்த்தியின் படிம இலக்கணம் பாங்குற எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கலியாண சுந்தர மூர்த்தியின் திருஉருவத்தில் இடதுகால் இயற்கையான நிலையில் கீழே ஊன்றப் பெற்றிருக்க வேண்டும். வலது கால் சிறிது வளைந்து அவர் நிமிர்ந்து நேராக நின்ற கோலத்தில் காணப் பெறவேண்டும். அவருக்கு நான்கு கைகள் காணப்படவேண்டும். அவற்றில் வலது முன்கை தேவியின் வலது திருக்கரத்தை நன்கு பற்றிப் பிடித்திருக்கவேண்டும். இடது முன்கை வரத முத்திரையுடன் காணப்படும். பின்புறம் உள்ள இரு கைகளில் வலது கை மழுவையும் இடது கை மானையும் தாங்கி இருக்கும். இந்த மங்கலகரமான மண அழக மூர்த்தியின் தோற்றம், சடை முடியுடன் அணிகலன்கள் அனைத்தும் அணியப்பெற்று எழிலுடன் காணப்படவேண்டும். இவரது திருமேனியில் எழில் தவழும், ஒளி திகழும், செம்பவள வண்ணம் செறிவுற்றிலங்கும். தேவியின் திருமேனி கருமை நிறம் வாய்ந்ததாய்ப் பெருமை தரும் பெண்மை நலம் வாய்ந்ததாய்க் கட்டழகு வாய்ந்த கன்னிப் பருவம் மின்னி ஒளிர்வதாய் மிளிர வேண்டும். உமா தேவியின் உயரம் உடையவரின் உயரத்திற்கு உகந்ததாய்க் காணப்படவேண்டும். அவளது அழகொளிரும் இடது கையில் குவளை மலர் இடம் பெற்றிருக்கவேண்டும். வலது கை சிவபெருமானுடைய வலது கையை நன்றாகப் பற்றிப் பிடித்திருக்க தேவியின் திருமுகத்தில், புதுமணப் பெண்ணிற்குரிய அச்சம், மடம், நாணம் என்னும் பெண்மைக் குணங்கள் நன்கு பொலிதல் வேண்டும். அவர்தம் அழகிய கயலனைய கண்கள் விசாலம் வாய்ந்ததாய், அழகனைத் தழுவி அணைய அவாவுறும் ஆர்வம் நிறைந்ததாய் (மீனாட்சி, விசாலாட்சி, காமாட்சி என்னும் பெயர்களுக்கு உரியதாய்)க் காணப் படவேண்டும். கண்கள் காலின் பெருவிரலை நோக்குவது போல் கீழ் நோக்கிக் காணப்படவேண்டும். தலை சிறிது கவிழ்ந்த நிலையில் இருக்கவேண்டும். திருமகளும், மருமகளும் (கலைமகளும்) தம் கரங்களால் பெருமகள் (பார்வதி) கைகளைக் தொட்டுக் கொண்டு நிற்பார்கள். அவர்கள், பெண்ணின் நெருங்கிய உறவினர் என்ற நிலையில் அனைத்து அணிகலன்களும் அணியப் பெற்றவர்களாய்த் தேவியின் புறமாக நிற்பார்கள். இறைவன் இறைவியின் முன்புறம் நான்முகன் மறையோதி ஓமகுண்டம் வளர்த்து இருப்பார். அவரது உயரம் சிவபெருமான் மார்பு அளவிற்குக் கீழ் உள்ளதாக இருக்க வேண்டும். இவர் வடக்கு முகமாய் இருக்கவேண்டும் - என்று காசியப சிற்ப நூலில் கூறப் பெற்றுள்ளது. சிவனும் சிவனியும் கிழக்கு முகமாக இருக்கவேண்டும். தேவ தேவனின் வலது புறத்தில் தேவி காணப் படுவார். ஓம குண்டத்தின் வட புறத்தில் திருமால் தென்திசையை நோக்கியவாறு காணப்படுவர். சிவபெருமானுடைய நாடி அளவு உயரம் திருமால் இருப்பது சிறந்தது. மார்பு வரையுள்ள உயரம் நடுத்தரமானது. இவ்விரண்டிற்கும் இடையில் உள்ள பகுதியை ஒன்பது விதமாகக் கூறு செய்து, ஒன்பது அளவு உயரத்தில் திருமாலின் உருவத்தை அமைக்கலாம். மால், மாயோனின் மேனியைப் போல் கருப்பு வண்ணம் வாய்ந்தவராய் இருக்க வேண்டும். அவரது கைகள் நான்கில் பின்புறம் உள்ள இரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி இருப்பார். முன்புறம் உள்ள இரு கைகளில் பொன் கெண்டியில் (கமண்டலத்தில்) இருந்து நீரை வரத முத்திரை தாங்கி, வார்த்துக் கொடுப்பது (தாரை வார்த்துக் கொடுப்பது) போல் திருமால் உருவம் திகழ வேண்டும். எட்டு உலோக பாலர்கள் - அதாவது இந்திரன், கல்வித் தெய்வம் பிருகபதி, சித்தர், இயக்கர் (யட்சகர்) கணங்கள், முனிவர்கள், கந்தர்வர், மாத்துரு கணங்கள் (ஏழு) மற்றும் விண்ணவர்கள் அனைவரும் தத்தம் துணைவியர்களோடு (சக்திகளோடு) கூடியவர்களாய், இரு கரங்களையும் கூப்பி மணக்கோலம் பூண்டு நிற்கும் சிவ பெருமானை (கலியாண சுந்தரமூர்த்தியை) யும் பார்வதி தேவியையும் வணங்கி நிற்பவர்களாய் நாற்புறமும் சூழ்ந்து நிற்பார்கள். சரசுவதீய சித்திர கர்ம சாத்திரம் என்ற சிற்ப ஏட்டின்படி- கலியாண சுந்தர மூர்த்தி வடிவம் சடா மகுடத்தில் இளம்பிறையை அணிந்து மங்கலகரமான தோற்றமுடையவராய்க் காட்சி அளிக்கவேண்டும். அவர் இளமையின் எழிலும், விசாலமான ஒரு நெற்றியும், குண்டலங்கள் திகழும் இருகாதுகளும், முக்கண்ணும் நான்கு கரங்களும் உடையவராய், வாகுவலயம், கண்ட மாலை போன்ற பல அணிகலன்கள் பூண்டு இடுப்பில் வெண்பட்டாடை அணிந்து மார்பில் பூணூல் திகழக் கட்டுவார் அணிந்தும் காணப்படுவார். இம்மூர்த்தியின் படிமம் திரிபங்க நிலையில் அழகுறக் காட்சி நல்கும். மேலும் அழகு நிலையை (சிருங்கார ரசத்தை) உணர்த்தும் முகமும், பூரிப்பைக் காட்டும் உறுப்புக்களும் காணப்பட வேண்டும். மணக் கோலத்திற்குரிய எல்லா ஆடை, அணி, மலர்மாலை முதலியவை களும் காணப்படவேண்டும். எல்லாத் தேவர்கள், தேவிகள் உருவங்களும் சூத்திரமானத்தையும் நீப்பிரமாணத்தையும் ஒதுக்கத்தையும் எடுத்துக்காட்டுவனவாய் அமைக்கப் பெற்றுள்ளனவாக இருக்க வேண்டும். உமாதேவியின் வலது கால் கீழே ஊன்றப்பட்டு, இடதுகால் குஞ்சிதமாக (சிறிது வளைந்து) இருக்கவேண்டும். தேவியின் உயரம் தேவ தேவனின் மூக்கு, வாய், அல்லது கழுத்தளவு இருக்கலாம். அவளது தொடைகளும், கொங்கைகளும் பருத்துத் திரண்டு காணப்பட வேண்டும். இரு கைகளும் இரு கண்களும் கவினுறத் தோன்ற வேண்டும். அம்மை அனைத்து அணிகலன்களும் அணிந்து அரையில் வெண்பட்டாடை அல்லது சித்திராம்பரம் (பல நிறமுடைய பட்டாடை) அணிந்து அழகு பொலியத் திகழ்வார். அவரது இடையில் நீலோற்பல மலர் இடம் பெற்றிருக்கும். கை கீழே தொங்கவிடப்பட்டிருக்கும். சிவ பெருமான் வலது கரம் தேவியின் வலது கையைப் பற்றிப் பிடித்திருப்பது போல் காணப் பெறவேண்டும். இடது கையில் நீலோற்பல மலர் இருப்பதால் அக்கை கடக (நண்டு)க் கையாக இருக்கவேண்டும். அந்த நண்டுக் கையின் நுனி, தேவியின் கொங்கையின் உச்சிக்கு மேலே இருக்கவேண்டும். தேவி கேசபந்தம் அல்லது கரண்ட மகுடம் அணிந்திருப்பவராகக் காணப் படவேண்டும். இதில், கர்ணிகை, கர்ணபந்தம் அல்லது மகர குண்டலம் அணிந்திருக்க வேண்டும். அவள் மேலாடை அணிந்து சன்ன வீரம் பூண்டிருப்பார். இறைவன் திருஉருவின் தோற்றத்தின் உயரத்தைக் கொண்டு திருமாலின் திருஉருவின் உயரம் வரையறுக்கப் பெற்றுள்ளது. சிவ பெருமானுடைய படிமத்தைவிட உயரத்தில் திருமாலின் படிமம் குறைந்திருக்கவேண்டும். திருமால், கிரீடமகுடம், வாகுவலயம், கடகம், கடிசூத்திரம், உதரபந்தம், யக்ஞோபவீதம், இலம்ப சூத்திரம் பீதாம்பரம் ஆகியவற்றோடு மார்பில் சிரிவத்சம் காதில் மகர குண்டலம் முதலிய அணிகலன்களை அணிந்திருப்பார். திருமகளின் உயரம், திருமாலின் நெற்றி, மூக்கு, தாடை, முகவாய்க் கட்டை, கழுத்து, மார்பு இவை களுக்குச் சமமான உயரம் உடையதாய் இருக்கவேண்டும். நான்முகன் உயரம் திருமாலின் உயரத்திற்குச் சமமாக இருக்கலாம். அல்லது சிறிது குறைவாக இருக்கலாம். நான்முகன் பொன் போன்ற மேனியும் பொன்னிறப் பட்டாடையும் (பீதாம்பரமும்) பூணூலும், சடை முடியும் தரித்து வலது கையில் செபமாலை சுருக்கு முதலியவை களையும் இடது கையில் சுருவம் பதாகை (குசமுஷ்டி) ஆகியவை களையும் தாங்கி - அல்லது புறமுள்ள கைகளில் சுருவமும் வரதமும் திகழ எல்லாப் பூசணங்களும் பூண்டு ஓம குண்டத்திற்கு எதிரில் தாமரை இருக்கையில் (பத்மாசனத்தில்) காணப்படவேண்டும். ஓமம் செய்யும் கருவியான சுருக்கு (சிற்பக் கரண்டி - முட்டை வடிவில் மரத்தில் செய்யபட்டது) - சுருவத்தை (4, 5 அங்குலமுள்ள மரத்தினாலான சதுரக் கரண்டியை)த் தரித்திருக்கும் வலது கையின் மணிக்கட்டானது கொப்பூழ் மட்டமாக இருக்கவேண்டும். நாபியி லிருந்து வலதுகை மணிக்கட்டு வரையில் நீண்டிருக்க வேண்டும். நெருப்புக்கு அருகே திருமணச் சடங்கிற்கு இன்றியமையாத மலர்கள், பழங்கள், தாம்பூலம் போன்றவை காணப்படவேண்டும். தேவதேவன் மண அழகமூர்த்தி, வலக் கரத்தினாலே தேவியின் வலது கரத்தைப் பற்றிப் பிடித்திருப்பது போல் காணப்பட வேண்டும். மற்றக் கரங்கள் வரதம், மான், மழு போன்றவைகளைத் தாங்கி இருக்கவேண்டும். என்றும் - ஒவ்வொரு உறுப்புக்கும் விளக்கமான அளவை அளிக்கப்பட்டுள்ளது. (அளவை முறைகள் சிற்பிக்கு மட்டுந்தான் பயன்படும். பெரும்பாலான வாசகர்களுக்கு அவை பயன்படாது என்று இங்கு விடப்பட்டுள்ளன). காசியப சிற்ப நூலில் மேற்கூறிய சிற்ப நூற்களைத் தழுவிக் கலியாண சுந்தர மூர்த்தியின் உருவ இலக்கணம் தரப் பெற்றுள்ளது. இம்மூர்த்தி சடாமகுடம் தாங்கி செம்பவள மேனியுடையவராய் - பச்சை வண்ணம் வாய்ந்த பார்வதி தேவியின் பக்கத்தில் நிற்பவராய்க் காணப்படுதல் வேண்டும் என்று கூறப்பெற்றுள்ளது. மேலேயுள்ள இடது கையில் பொற் கலயத்தை வைத்துக் கொண்டு, வலது கையில் தாரையாக விழும் நீரோடு கூடக் கோத்திரம் கூறுவதற்கின்றி - அநாதியாய்த் தோன்றிய ஹேசம்போ! ஹேபரமேசுவர! ஆதி கோத்திரத்தில் உதித்த உமை என்னும் கௌரி தேவியை இப்பொழுது உங்களுக்குப் பெண் தானம் செய்து கொடுக்கிறேன் என்று கூறித் திருமால் சிவபெருமானுடைய வலது கையில் நீரை வார்க்க வேண்டும். (இந்தப் பாவனையில் மூர்த்தி உருவத்தை அமைக்க வேண்டும் என்று நூல்கள் கூறுகின்றன) ஆகமங்களில் திருவுருவங்கள் அமைக்க வேண்டிய விதி முறைகள் அனைத்தும் விரிவாய் விளக்கப் பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் தத்துவ முறையை அடிப்படையாக வைத்தே கூறப் பெற்றுள்ளன. சிற்ப நூற்களில் படிமங்கள் பாங்குற அமைப்பதற்கு ஏற்ற இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளன. சிற்ப நூற்களின் விதி களை மீறித் திருஉருவங்களை தபதிகள் அமைத்தாலும் ஆகம விதிகளை அணுவளவும் அலட்சியம் செய்யக் கூடாது. கால தேச வர்த்தமானங்களை அனுசரித்து தபதிகள் படிமங்களை வார்ப்ப திலும் சிலைகளைச் செதுக்குவதிலும் அவர்களுக்குச் சில விதி விலக்குகள் கொடுக்கப் பெற்றுள்ளன. பொதுவாக, தபதிகள் ஒரு வரம்பிற்குட்பட்டுத் திருஉருவங்களைச் சமைப்பது முறையாகும். சிற்பிகள் தெய்வ உருவங்களை ஆகம விதிகளை அனுசரித்து எழிலுற அமைக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டு செயல்பட வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப் பெற்ற தெய்வ வாக்கான ஆகமங்கள் விதிகளைப் பிழையாது தெய்வத் திருவருள் வாய்க்கப் பெற்ற சிற்ப வல்லுநர்களின் வழிமுறைகளைத் தழுவித் திருஉருவங்கள் சமைக்கப் பெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப் பெற்ற ஆகமங்களையும் சிற்ப ஏடுகளையும் பயின்ற -மிகத் தொன்மையான காலத்தில் வாழ்ந்த சிற்பிகள், மிகப் பழமையான கருவிகளைக் கொண்டு வடித்த சிலைகளும் வார்த்த படிமங்களும் இன்றும் உள. அவைகள் இன்றுள்ள சிற்பக் கலை எட்டிப் பிடிக்க முடியாத உயர் நிலையை எய்தியுள்ளன. ஆனால், நமது படிமக் கலையை நாம் பலதுறைகளில் வளர்க்கத் தவறிவிட்டோம். அதை நாம் எளிதில் மறுப்பதற்கில்லை. நமது படிமங்களில் நல்ல மனிதத் தன்மை இலங்கவில்லை என்று மேனாட்டறிஞர்கள் கூறுகின்றனர். தமிழர் நாடு செய்த தவப் பயனாய்த் தோன்றிய அனைத்துலகக் கலை மேதை ஆனந்தக் குமாரசாமி அவர்களிடம் ஒரு மேனாட்டறிஞர் இந்தக் குறைகளை எடுத்துக் கூறினார். அதற்கு அவர், அமைதியாக இந்தியச் சிற்பிகள் தாம் உருவாக்கும் படிமங்களில் சில தெய்வத் தத்துவங்களை ஒளிரச் செய்ய விரும்புகிறார்களே யொழிய நீங்கள் விரும்புவது போல் தெய்வ உருவங்களில் மனிதனைப் போன்ற சதைப் பிதுக்கம், எலும்பு, நரம்பு, அங்க அமைப்புகள் நன்கு பொலிய வேண்டும் என்று எண்ணியதே இல்லை. ஐரோப்பிய சிற்பிகள் தாங்கள் ஆக்கும் படிமங்களை நல்ல மனித நிலைக்கு உயர்த்தியுள்ளனர். ஆனால் இந்தியச் சிற்பிகள் தாங்கள் உருவாக்கும் படிமங்களைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியுள்ளார்கள். இந்தியச் சிற்பிகள் மனித உருவங்களை உருவாக்குவதில் அதிக அக்கரை காட்டவில்லை. அவர்கள் பெரும்பாலும் வார்த்தது தெய்வ உருவங்களே. அவைகள் அனைத்திலும் உயர்ந்த தெய்வத் தன்மைகள் ஒளி வீசுகின்றன. உயரிய பாவங்கள் திகழ்கின்றன. பல அரிய தத்துவங்களை அடக்கி யுள்ளன. இதை எவரும் மறுத்தற்கில்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள இந்தியச் செம்புப் படிமங்கள் இலட்சக் கணக்கான பொற்காசுகள் விலையுள்ளதாக மதிக்கப்படுவதே இதற்கு நல்ல சான்றாகும். என்றாலும் நமது சிற்பிகள் மேனாடு போந்து அவர்களின் சிற்பக் கலையையும் பயின்று உலகிலே தமிழ் நாட்டுச் சிற்பிகள் படிமங்கள் வார்ப்பதிலும் சிலைகளைச் செய்வதிலும் ஒப்புவமை யற்றவர்கள் என்ற பெயரை ஈட்ட வேண்டும் என்று நாம் விரும்பு கிறோம். படிமங்களின் விளக்கம் கலியாண சுந்தர மூர்த்தி - திருவெண்காடு கலியாண சுந்தர மூர்த்தியின் படிமம் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சீர்காழி வட்டாரத்திலுள்ள திருவெண்காடு என்னும் சிற்றூரில் நிலத்தின் அடியில் புதையுண்டிருந்த படிமம் ஆகும். இப் படிமத்தோடு மாயோள் (உமாதேவி), மாயோன், திருமகள் ஆகிய தெய்வ உருவங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இந்தப் படிமங்களோடு திருமணத்தின்போது புரோகிதம் செய்யும் நான்முகன் உருவமும் இருந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வுருவப் படம் நமக்குக் கிடைக்கவில்லை. இன்று இவை அனைத்தும் தஞ்சைக் கலைக்கூடத்தில் இடம் பெற்றுள்ளன. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள திருவெண்காடு கலியாண சுந்தர மூர்த்தியின் திருஉருவம் நின்ற கோலத்தில் மிகக் கம்பீரமாக நிற்பது போல் காணப்படுகிறது. அவர் அருகே நாணிக் கோணிப் புதுமணப் பெண்ணாய் நிற்கும் உமாதேவியின் திருஉருவமும் அவள் அருகே பெண்ணின் தோழியாய் நிற்கும் திருமகள் உருவமும் அவளுக்கு அண்மையில் அவளது அகமுடையனாய் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்க நிற்கும் மாயோன் (திருமாலின்) உருவமும் காணப்படுவது கண் கொள்ளாக் காட்சியாகும். இத்திருஉருவங்கள் அனைத்தும் பன்னூறு ஆண்டுகள் நிலத்தில் புதையுண்டு கிடந்ததால் மேனியின் பளபளப்பும் மெருகும் முக பாவங்களும், ஆடை அணிகலன்களின் சிறப்பும் நன்றாக நம்மால் காண முடியவில்லை. இப்படிமங்கள் நான்கும் ஆகம விதி களை அனுசரித்து அணிபெறச் செய்யப்பட்டதாகும். படிமங்கள் அங்க அமைப்புக்கள் ஒன்றுக்கொன்று மிகப் பொருத்தமாகக் காணப்படுகின்றன. ஆடைகளும் அணிகலன்களும் நனி சிறந்து விளங்குகின்றன. திருமகள் உருவம் மிகச்சிறிதாகச் சிறு குழந்தையைப் போல் காணப்படுகிறது. திருமால் வடிவம் மணமகளின் உருவத்தை யொப்ப உயரமாக - கெம்பீரமாகக் காணப்படுகிறது. முகப் பொலிவு நன்றாகக் காணப்படவில்லை. கலியாண சுந்தரர் காதலியின் வலது கையைப் பற்றிப் பிடித்து நிமிர்ந்து நிற்கிறார். அவர் நாணிக் கோணி நிற்கும் புதுப் பெண்ணை நோக்கி நின்றால், அவள் மேலும் நாணுவளோ என்றெண்ணி முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டு நிற்பது போல் காணப்படுகிறார். இந்த அழகிய செம்புப் படிமங்களை வார்த்துச் சீர் பெறச் செதுக்கி, மினுக்கிக் கவினுறச் செய்த கம்மியின் கைவண்ணம் புகழ்வதற்குரியதாகும். இப் படிமங்கள் அனைத்தும் சோழர் பாணியில் திறம்படச் செய்யப் பட்டுள்ளன என்பதில் எவருக்கும் ஐயப்பாடு எழ முடியாது. பொதுவாகத் தமிழ் நாட்டுச் சிற்ப வடிவங்கள் முன்புறம் மட்டும் அழகுற எழில் பெற்றிலங்குமாறு அணி செய்யப்பட் டுள்ளன என்று எண்ணப்படுகிறது. அது தவறு. முன்புறம் போன்று திருஉருவங்களின் பின்புறமும் சீர் பெறச் செய்யப்பட்டுள்ளன. சிவபெருமானின், சடா மகுடம், குண்டலம், கழுத்து மாலைகளின் முகப்புகள், பூணூல், உதரபந்தம், பின்புறக்கை, மானின் விலாப்புறம், பரசின் பின்புறம், கைகளில் அணிந்திருக்கும் அணிகலன்கள், இடுப்பில் அணிந் திருக்கும் வார்கள், ஆடை, காலணி போன்றவைகளின் பின்புறத் தோற்றம் ஆகியன எழிலுடன் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று பெருமானின் வலது புறம் புது மணப் பெண்ணாக நாணிக் கோணி நிற்கும் தேவியின் கரண்ட மகுடம் - அவரது தலைமுடிகள் சடையாகப் பின்னப்பட்டும், பிடரிப்பக்கம் வட்ட மாகக் கொண்டை கவினுறக் கட்டப்பட்டும் அதன் அடியில் இரத்ன பந்தம் போன்ற அணிகலன்கள் புனையப் பெற்றும் - காதின் கர்ணிகை, கர்ணபந்தம், சன்னவீரம் போன்ற அணிகளின் பின்புறத் தோற்றம், காலின் தண்டை, கொலுசு, பாதச் சிலம்பும், அவளது வலது கையில், அதாவது தோளுக்குக் கீழே, முழங்கைக்கு மேலேயுள்ள கொந்திக் காய்க் கொலுசு போன்றவை பளிச் சென்று மின்னுகின்றன. அவ்வாறே தேவியின் வலப்புறம் பெண்ணின் தோழியாய்க் கெம்பீரமாய்க் காட்சி அளிக்கும் திருமகளின் கரண்ட மகுடத்தின் பின்புறத் தோற்றமும் முதுகு, இடை, குதிங்கால் வரையுள்ள உடல் அமைப்பும் அணிகலன்கள் ஆடைகளின் அழகும் நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. தாரை வார்த்துக் கொடுக்கத் தயாராய் இருக்கும் மாலவனின் கிரீட மகுடம், கேயூரம் கடகம், உதர பந்தம், குண்டலம், சங்கு சக்கரம், கையில் உள்ள பொன் கெண்டி அரையில் அணிந்திருக்கும் பீதாம்பரம், காலணி ஆகியவைகளின் ஒவ்வொரு பகுதியும் நன்கு சித்திரிக்கப்பட்டுச் சிற்பியின் கைத்திறம் நன்கு தெரியும்படி செய்யப்பட்டுள்ளது. கலியாண சுந்தர மூர்த்தி - திருமணஞ்சேரி தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமணஞ்சேரி, அருவள்ளனாயகர் - யாழின் மொழியம்மை திருக்கோயிலில் உள்ள அழகிய செப்புப் படிமங்களாகும். இவை, இறைவி - இறைவன் திருமணக் கோலத்தை இனிதுற எடுத்துக் காட்டும் நனி சிறந்த சிற்ப உருவங்களாகும். கவினுறக் காணப்படும் கலியாண சுந்தர மூர்த்தியின்செம்புப் படிமம் சுமார் மூன்றடி உயரம் இருக்கும். மூர்த்தி மூன்று கண்களும், நான்கு கைகளும், இரண்டு செவிகளும் உடையவராய் அழகுறக் காணப்படுகின்றார். தலையில் சடா மகுடம் இனிதுறப் பொலி கின்றது. காதுகள் இரண்டும் குண்டலங்களுடன் நீண்டு தொங்கு கின்றன. முன்புற வலதுகை மணப் பெண்ணின் வலது கரத்தைப் பற்றிப் பிடித்து மணக் கோலத்திற்கறிகுறியாய்த் திகழ்கிறது. முன்புற வலது கை மானை ஏந்தி நிற்கிறது. பின்புறத்து வலது கை மழுவைத் தாங்கியும் பின்புறத்து இடது கை அபயகரமாகவும் அமைந் துள்ளன. சிவ பெருமான் கழுத்தில் மாலைகள் தொங்குகின்றன. மார்பில் குறுக்காகப் பூணூலும் இடையில், வார்க்கட்டும், அதன்மீது மேல் உதரபந்தமும், மணிக்கட்டில் கடகமும், முழங்காலுக்கு மேல் வாகுவலயமும் காணப்படுகின்றன. வலது கால் கீழே நன்றாக ஊன்றியும் இடதுகால் சிறிது வளைந்தும் பீடத்தின் மீது பாதங்கள் நன்றாகப் பதிந்தும் இருப்பது போல் உள்ளன. அரையில் அழகிய ஆடையும் காலில் சதங்கைகளும் காணப்படுகின்றன. தேவியின் திருஉருவம், கவின் பெறக் கடைந்தெடுத்த கன்னிப் பெண்ணின் திருஉருவம் என்னக் காட்சி அளிக்கிறது. அவர் தம் கண்கள் நாணத்தினால் பூமியை நோக்குவது போல காணப்படு கின்றன. வலதுகை கலியாண சுந்தரர் வலது கரத்தினால் பற்றிப் பிடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு இடது கை நண்டுக்கை போல் காணப்படுகிறது. தேவியின் தலைமீது கரண்ட மகுடம் கவின் பெறக் காட்சி அளிக்கிறது. மகுடம் பொன்னும் மணியும் சேர்த்து செய்யப் பெற்றதாய் ஒளியுற்றிலங்குகிறது. அவரது கருங் கூந்தல் வாரி அழகுறப் பின்னப்பட்டுப் பின்புறம் நீண்டு தொங்குகிறது. தேவியின் தலையிலும் காதுகளிலும் கழுத்திலும் புயத்திலும் மணிக்கட்டுக்களிலும் இடுப்பிலும் கரண்டைக் கால்களிலும் குண்டலம், மாலை, கேயூரம், கைவளை, மேகலை, தண்டைகால் விரல் மோதிரம் போன்ற பொன் அணிகளும், மணிகள் பதித்த அணிகலன்களும், மணிமகுடமும், அழகுக்கு அழகு செய்தாற் போன்று எழில் பெற்றிலங்குகின்றன. இடுப்பில் பூ வேலைப் பாடுகள் உள்ள பூவாடைகள் எழில் பெற்றிலங்குகின்றன. சிவபெருமானும், சிவனியும், கைகோர்த்துக் கவின் பெறப் புன்னகை பூத்த முகத்துடன் இளமையின் எழில் துள்ளும் காட்சி, அழகும், அறிவும், அன்பும், பண்பும் ஒருங்கு சேர்ந்த காதலர்கள் திருமணக் காட்சிக்கு ஏற்ற எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. இத்திருஉருவம் இணையற்ற இரு காதலர்களின் கவினுறு தோற்றம் என்று கண்டு களிப்பது இதைப் படைத்த சிற்பியின் மாபெரும் வெற்றியாகும். ஓராவிற்கு இரு கோடு பூத்தாற் போன்று விளங்கும் இணையற்ற சோடிகள் என்று தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டிய நிலையில் ஒத்த உயரமும் உருண்டு திரண்ட உடற்கட்டும், புன்னகை தவழும் முகப் பொலிவும் சீரிய ஞான அறிவுச் செறிவினைக் காட்டும் கூரிய விழிகளும் மக்களின் ஐம்பொறிகளையும் ஈர்ப்பதாய் அமைந் துள்ளன. இத்திருஉருவங்களைப் படைத்த சிற்பி, சிற்ப நூல் ஆகம விதி ஆகியவைகளை நன்கு பயின்று, தியான மந்திர சுலோகங்களை உள்ளத்தில் ஆழ்ந்து பதியச் செய்து இப்படிமங்களை உருவாக்கி யுள்ளார். இந்தப் படிமங்கள் சிற்ப நூலைப் படித்தறியாதவர்களும், சாமுத்திரிகா லட்சணங்களைக் கண்டும் கேட்டும் இராதவர்களும் சுவைக்கும் வண்ணம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இப்படிமங்கள் முழுநிறைவான உருவில் அமைந்துள்ளன. மணமக்களின் அருகே பெண்ணின் தோழியாகத் திருமகளும் மணப்பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கும் நிலையில் திருமாலும் நிற்பது அழகுறக் காணப்படுகிறது. ஆனால், ஆகமம் கூறும் புரோகிதம் இயற்றும் நான்முகனும் திருமண வைபவத்தைக் கண்டு களிக்க வந்துள்ள அட்டதிக்கு அதிபர்கள், வித்தியாதரர்கள், யட்சர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸுகள், (ஸப்த மாதாக்கள்) தேவர்கள் முதலியோர் பக்தியுடன் மார்பில் கை கூப்பி வைத்துக் கொண்டிருக்கும் காட்சியும் இடம் பெற்றால் எத்துணை மகத்தான காட்சியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். கலியாண சுந்தர மூர்த்தி - வேள்விக்குடி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த குற்றாலத்தை அடுத்த வேள்விக்குடி என்னும் ஊரிலுள்ள திருஉருவம். சிவபெருமான் சிவனியின் வலது கரத்தைத் தன் வலது கரத்தால் பற்றித் திருமணக் கோலத்தில் களிப்புடனும் செழிப்புடனும் காணப் படுகிறார். இதை உருவாக்கிய சிற்பி ஆகம விதிகளை அனுசரித்து அளவு முறைகள் தவறாது அழகுடன் உருவாக்கியுள்ளார். கலியாண சுந்தரர் களிகொண்டு காமாட்சியின் கரங்களைக் கைப்பற்றிக் கச்சிதமாக நிற்பது போல் காணப்படுகிறார். அவரது மங்கலமான எழில் மிகும் இளந்தளிர் போன்ற திருமேனியின் கவினுறக் காட்சி தரும் தோற்றம் உள்ளத்தைக் கவர்வதாய் அமைந்துள்ளது. அவரது தலையில் சடா மகுடமும் இளம்பிறையும் ஒளிர்கின்றன. விசாலமான நெற்றி வில்லினை யொத்த மூக்கு, கொவ்வைச் செவ்வாய், ஆம்பல் மலரை யொத்த அழகிய உதடுகள், நீண்ட காதுகள், திரண்ட தோள்கள், நீண்டு தொங்கும் நான்கு கைகள், கேயூரம், ஆரம், குண்டலம், கடகம், தண்டை, பாதசரம், விரல் மோதிரம், கால் மோதிரம் போன்ற அணிகலன்கள் அவற்றிற்குரிய அங்கங்களில் பூட்டப்பட்டு அணி செய்கின்றன. அரை வெண்பட்டு அழகுறக் காணப்படுகின்றது. இடது கால் கீழே நேராக ஊன்றப்பட்டும் வலது கால் குஞ்சிதமாகவும் காணப்படும் உருவம் திரிபங்க நிலையில் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது. முன்புற இடது கை வரதஹதமும் வலது கை அபய ஹதமுமாக, பின்புறக் கைகளில் மானும் மழுவும் திகழ்கின்றன. சிருங்கார ரசத்தை உணர்த்தும் மலர் முகமும் பூரிப்பான உறுப்புக்களும் பவள வண்ண மேனியும் அவரது எழிலை ஏற்றமுறச் செய்கின்றன. அவரது கட்டான கவினுறும் உடம்பில் காணப்படும் பொருள்கள் அவரது திருமணக் கோலத்தைச் செவ்வையாக உணர்த்துகின்றன. அவரது குமிழ் சிரிப்பு, அவரது வலது கை விரல்கள் தேவியின் வலது கரத்தின் மீது படிந்துள்ளதால் எழுந்த உணர்ச்சிப் பெருக்கை உணர்த்துவ தாக மிளிர்கின்றது. அவர், கைப்பற்றியதால் எழுந்த உணர்ச்சிப் பெருக்கால் நாணி நிற்கும் நங்கை நல்லாளை நாமும் நோக்கினால் இன்னும் நாணுவளோ என்றெண்ணி அவள் முகம் நோக்கி நேராக நிமிர்ந்து பார்க்கிறார். அம்பாளின் வலது கால் ஊன்றியும் இடது கால் குஞ்சித மாகவும் (சிறிது வளைந்தும்) காணப்படுகின்றன. தேவி, மூர்த்தியின் மூக்களவு உயரம் உள்ளவராகக் காணப்படுகிறார். தேவியின் கொங்கைகள், தொடை, பின்பகுதி (பிருஷ்ட பாகங்கள்) பருத்தும், கண்கள், காதுகள், புயங்கள், கால்கள் அழகுறவும் அமைந்துள்ளன. அவர் தலை, காது, கழுத்து, புயம், மணிக்கட்டுகள், கால்கள், இடைகள் போன்ற உறுப்புக்களில் எல்லாவிதமான பொன் அணி கலன்களையும், மணிகள் பதித்த அணிகலன்களையும் சூட்டிப் பட்டாடை அணிந்து களிப்புடன் தலை கவிழ்ந்து புதுமணப் பெண்ணிற்குரிய பண்புடன் நிற்கிறார். அவரது முகம் மலர்ந் துள்ளது. வாயில் புன்னகை பூத்துள்ளது. அவரது உறுப்புக்கள் அனைத்தும் பூரித்து விம்மி நிற்பது போல் காணப்படுகின்றன. அவரது இடது கையில் நீலோற்பலமலர் இருப்பதால் அது கடக அதகமாக இருக்கிறது. வலது கை மூர்த்தியின் வலது கையைத் தொட்டு நிற்கிறது. அம்பிகை கரண்ட மகுடம் புனைந்து, காதில் கர்ணிகை அணிந்து, தலைமுடி பின்னப்பட்டு, கொண்டையைக் கட்டி வட்டவடிவில் அணிகள் பூண்டு மிகு ஒய்யாரமாக நிற்கின்றார். அவர் உடலில் எல்லா விதமான அணிகலன்களும் பொருந்தியுள்ளன. அழகிய பெண்களின் இடை மிகச் சிறிதாக இருக்கவேண்டும் என்ற தமிழ் நாட்டு மகளிரின் சாமுத்திரிகா லட்சணங்களை அனுசரித்து -- தேவியின் சிற்றிடை அவரது எழிலை ஏற்றமுறச் செய்துள்ளது. சிற்பி இந்த உருவங்களைத் திரிபங்க நிலையில் கண்டோர் வியக்கும் வண்ணம் கனகச்சிதமாக வடித்துள்ளார். நான் இதுவரை கண்ட கலியாண சுந்தர மூர்த்திகளின் திருமணக் கோலங்களில் இந்த வேள்விக்குடி உருவம் மிக மிகச் சிறந்தது. இதற்கு ஒப்பான உருவம் தமிழகத்தில் காண முடியுமா என்பது சிந்திக்கத்தக்கது. இத்திருஉருவம் சோழர் பாணியில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வடித்தெடுத்த வெண்கலப்படிவமாகும். சிற்பியின் கை வண்ணம் என்றும் மறத்தற்குரியதன்று. இவ்உருவம் தமிழ்நாட்டுச் சிற்பக் கருவூலங்களில் தனிப் பெருமையுடன் இலங்கும் பேற்றைப் பெற்றுள்ளது. தத்துவ விளக்கம் கலியாணசுந்தர மூர்த்தியின் திருமணக் கோலம் சைவ சமய தத்துவங்களின் அடிப்படையாய் அமைந்துள்ளது. கடவுள், சக்தியாயும் சிவமாயும் இணைந்து இவ்வுலகை உருவாக்கியுள்ளார் என்பதை இம்மூர்த்தம் உணர்த்துகிறது. இதைச் சைவ சமயச் சான்றோர்கள் இறைவன் ஆணும் பெண்ணும் இணைந்த இருகூறாக இருப்பதாக விளக்கந்தந்துள்ளனர். இந்த உண்மையைப் பாமரரும் உணர்ந்து கொள்ளும் வண்ணம், கடவுள் கலியாண சுந்தர மூர்த்தியாய் உமாதேவியைக் கைப்பற்றித் திருமணக்கோலத்தில் நிற்கும் அரிய படிமங்கள் அறிவுறுத்துகின்றன. அம்மையப்பர் தோற்றம் உலகில் உள்ள எல்லா உயிர்களும் இருகூறாகவே காணப்படு கின்றன. கல், புல், புழு பூச்சி, பறப்பன, நடப்பன ஆகிய அனைத்தும் ஆண் பெண் வடிவிலே உள்ளன. புழு முதல் மனிதன் வரை எல்லா உயிரினங்களும் ஆண் பெண் ஆகிய பால் வேற்றுமைகளை உடையனவாய் இருப்பினும் அவை அணைந்து பிணைந்து கலந்து உடலுறவு கொண்டு இன விருத்தி செய்வதை இலட்சியமாய்க் கொண்டுள்ளன. செடி, கொடி, மரம், புழு, பறவை, விலங்கு போன்ற எல்லா உயிரினங்களும் தனித்தனியாய் இன விருத்தி செய்வதற்கேற்ற உறுப்புக்களும், வண்ணமும், எண்ணமும், மணமும், குணமும், ஒலியும், ஒளியும் பெற்றுள்ளன. ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டு இன விருத்தி செய்வது இயற்கை நியதியாய் அமைந் துள்ளது. ஆதிகாலத்தில் மனித இனமும் இந்த விலங்குகளைப் போல் வாழ்ந்து வந்தது. மக்கள் மலைகளிலும் காடுகளிலும் வாழும் பொழுது மனிதன் ஒரு பெண்ணுடன் கூடி இருந்து விட்டு அவன்தன் உணவைத் தேடி எங்கோ சென்று விடுவான்அவன் உடலுறவு கொண்ட பெண்ணைத் தேடி வருவதில்லை. அவள் கருவுற்றிருக்கும் குழந்தை தன்னுடைய தென்று உரிமை கொண்டாடுவதும் இல்லை. அவன் விலங்குகள் போலவே நடந்து வந்தான். ஆனால், தாயோ, கருவுற்ற நாள் தொட்டுக் குழந்தையைச் சுமக்கவும் அப்பால் தாங்கொணாத வேதனைப்பட்டு மகப்பேறு அடையவும், அவள் ஊனைக் கரைத்து உதிரத்தை மாற்றிப் பாலாக மக்களுக்கு ஊட்டவும் அப்பால் அவர்கள் பசிப்பிணியை நீக்கக் காய்கனி, கிழங்கு, கீரை முதலியவற்றைத் தேடிக் கொடுக்கவும் உடற்பிணியை அகற்றப் பத்தியம் காக்கவும் மருந்து கொடுக்கவும், மக்களைப் பாராட்டிச் சீராட்டித்தூங்க வைக்கவும் நாய், நரி, புலி, கரடி முதலிய கொடிய விலங்குகள் கொன்று தின்று விடாது காக்கவும் கடமைப் பட்டவளாக இருந்தாள். இயற்கை நியதி தாய் மக்களை விட்டுப் பிரிய முடியாததாய் இருந்தது. எனவே சமூகத்தில் தாய் ஆட்சியும், தாய்த் தெய்வமும் முதன் முதலில் அரும்பியது என்று சமூக இயல் ஏடுகள் நமக்கு இன்று எடுத்துக் காட்டுகின்றன. சமூக வளர்ச்சியில் மக்கள் உணவு சேகரிப்பவர்களாய் இருந்த நிலைமாறி உணவு உற்பத்தி செய்பவர்களாய்ப் புதிய நிலை எழுந்ததும் ஆணும் பெண்ணும் இணைந்து உற்பத்தியைப் பெருக்க வேண்டிய இன்றியமையாத சமூக அமைப்புத் தோன்றியது. தமிழ் நாட்டில் மருத நிலத்திலே மக்கள் வேளாண்மைத் தொழிலில் வெற்றி கண்டனர். ஆண்கள் உழவும் பெண்கள் களை பறிக்கவுமாக வேலைகளைப் பகிர்ந்து கொண்டாலும், ஆண் நீர் இறைத்தல், கூலப் பொருள்களைச் சுமத்தல், யானை, புலி, மாடு முதலிய விலங்குகள் அழித்து விடாது இரவும் பகலும் வயல்களில் ஆயுதந்தாங்கி காவல் புரிதல் போன்ற கடினமான தொழில் களைச் செய்ய முன் வந்தான். பெண் இல்லத்தில் இருந்து உணவு சமைத்தல், மக்களைப் பெற்று வளர்த்தல் போன்ற தொழில்களைச் செய்ய வேண்டிய நிலை தோன்றியது. சமூகத்தில் சைவ நெறி தழைத்துத் துளிர்க்கத் தொடங்கியது. தாய்த் தெய்வமும் தந்தைத் தெய்வமும் தோன்றின. சமயம் திருமண வாழ்க்கைக்கு அடி கோலியது; சைவம் மனித சமூகத்தை விலங்கு வாழ்க்கையினின்று பிரித்து ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் இல்லற வாழ்க்கையை இன்றியமையாத தாக்கியது. இதனால் தமிழர் சமூகத்தில், மருதநிலத்தில் தாயும் தந்தையும் குடும்பத் தலைவர்கள் ஆயினர். சமூகம் தாய் தந்தையர் ஆட்சிக்கு அடிகோலியது. இதன் பயனாய்ச் சைவ நெறி அம்மையப்பர் தெய்வத்தைக் கண்டது. மருத நிலம் கண்ட சைவ நெறி குறிஞ்சி நில மக்கள் கண்ட முருகன் என்னும் தெய்வத்தையும் முல்லை நில மக்கள் கண்ட மாயோன், மாயோள் என்னும் தெய்வங்களையும், நெய்தல் நில மக்கள் கண்ட வாரணன் என்னும் தெய்வத்தையும் தன்னோடு இணைத்துக் கோண்டது. குறிஞ்சி, நெய்தல் ஆகிய தமிழர் நிலங் களில் சமயம் எதுவும் எழவில்லை. முல்லை நிலத்தில் மட்டும் திருமாலியம் என்னும் வைணவ சமயம் தோன்றியது. அதையும் சைவம் தன்னோடு இணைத்துத் தமிழர்களின் ஒருமைப்பாட்டிற்கு வித்திட்டது. தமிழர் கண்ட அம்மை அப்பர் என்னும் தெய்வம் மலைமகன் மலைமகள், சிவன், சிவை, மங்கைபங்கன், தெட்சிணாமூர்த்தி, கலியாணசுந்தரர் போன்ற பல பெயர்களால் வழிபடப்பட்டு வந்துள்ளது. சைவ நெறி, பெண்ணைத் துறந்து, சன்னியாச வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பவில்லை. ஆணும் பெண்ணும் கூடி இனிதியற்ற வேண்டிய இல்லற வாழ்க்கையை வற்புறுத்துகிறது. மேலும் சைவம், ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் பேணி நல்லறம் நடத்த உயரிய வழிகாட்டுகிறது. பளிங்கு தன் முன் காணப்படும் வண்ணத்தை நன்கு எடுத்துக்காட்டும். ஆனால் பளிங்கு உண்மையில் தன் இயல்பினின்று எள்ளளவும் மாறுதல் உறுவதில்லை. அது போன்று சிவமும் சக்தியும் தன்னால் பிரியப் படும் பசு பாசம் ஆகியவைகளிடம் நிகழும் காரிய வேறுபாடு பற்றிய பல்வேறு இயல்புடையதாய்ப் பேசப்படினும் உண்மையில் அது எவ்வித மாறுதலும் அடைவதில்லை. ஆயினும் தனது காரிய வேறுபாடு பற்றிப் பரவிந்து, அபரவிந்து, மனோன்மணி, மகேவரி, உமை, திருவாணி எனச் சக்தி பல பெயர்களைப் பெறுகிறது. அப்பொழுது அச்சக்தியை உடையவனாகக் கருதப்படும் முதல் வனும் முறையே பரநாதம், அபரநாதம், சதாசிவன், மகேசுவரன், அயன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றான். சக்தி சிவம் என்ப வற்றின் தன்மையை விளக்கிக் கூறும் பொழுது சூக்கும ஐந்தொழில் இயற்றும் இலய நிலையில் அறிவு விழைவு செயல்படும். அது தனது சக்தியின் வடிவே தனது வடிவாகக் கொண்டு தனது தாரத்தோடு ஒன்றாய் இணைந்து நிற்கும். தூல ஐந்தொழில் நிகழ்த்தத் தொடங்கும் போக நிலையில் மாதொரு பாகனாய் நிற்கும் (நிற்பார்). இந்நிலையில் தான் சிவம் தமது சக்தியோடு உடனாகி நின்று எவற்றி லும் கலந்து நிற்கும். நாதத்தின் முடிவில் உள்ள ஆன்மா, உணர்வில் அம்மை அப்பனாய் இருந்து அறிவைப் பிறப்பிக்கும். உலகை ஆக்கிக் காத்து, அழிக்கும் மூலப் பொருளைத் தமிழ் நாட்டில் பிறந்த சான்றோர்கள் ஆண் பெண் வடிவில் கண்டனர். இதில் எவ்விதத் தவறும் இல்லை; இழிவும் இல்லை. ஆழ்ந்த சமய அறிவும் தத்துவ ஞானப் பயிற்சியுமற்ற சிற்றறிவாளர்களுக்கு இதன் உண்மை புலனாகாது. ஆனால், உலகில் உள்ள தத்துவ ஞானம் பயின்ற பேரறிவாளர்கள் தமிழர்கள் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் சிற்றறிவிற்கெட்டாத பரம் பொருளை (Super Natural Power) இரு கூறாக உணர்ந்து அதற்கு ஆண் பெண் தன்மையை அளித்ததை வியந்து பாராட்டுகின்றனர். உலகம் அனைத்தையும் ஆக்கிக் காத்து அழிக்க வல்ல மூலப் பொருள் இருபெரும் சக்தியாய் இராது தனியாகவோ அல்லது ஆணாகவோ அன்றிப் பெண் ணாகவோ அல்லது அலியாகவோ இருப்பின் இந்த உலகமும் அதன் படைப்புகளும் ஒவ்வொன்றாகவே இருக்கும் விளக்கமாகக் கூறுவதானால் எல்லாம் ஆணாக இருக்கும். அல்லது எல்லாம் பெண்ணாக இருக்கும் அல்லது எல்லாம் அலியாக இருக்கும். உலகம் அனைத்தும் ஆணாக இருந்தால் எவ்வாறு இயங்கும்? எவ்வாறு ஆக்கமுறும்? இந்த உண்மையை விளக்கவே மணிவாசகப் பெருமான் தம் திருவாசகத்தில் தென்பா லுகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ பெண்பா லுகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ (திருவாசகம்) என்று நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். இறைவன் இருகூறாக இன்றி ஒரு கூறாக இருந்து உலகையும் உலகிலுள்ள உயிரினங்களை யும் ஆண் பெண் வடிவில் படைத்திருக்க மாட்டான். அப்படிப் படைத்திருந்தாலும் அவைகள் இணைந்து வாழ்ந்திருக்க முடியாது. மனித உயிர்களாகிய ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் உணர்ச்சியின்றிக் காட்டிலோ மேட்டிலோ மலையிலோ, குகை யிலோ உணர்ச்சியற்ற பொருளாக இருந்து இன விருத்தியின்றி அழிந்தொழிந்து போகும். நமது மூலவர் ஆண் பெண் தன்மை யுடையவராய் இருந்தமையால் நாமும் ஆண் பெண் வடிவில் தோன்றி, இணைந்து வாழும் இயற்கை உணர்ச்சியைப் பெற்று இறைவனோடு இணைந்து வாழும் இன்ப நெறியைக் குறிக் கோளாகக் கொண்டு வாழ்க்கை நடத்தத் தூண்டப் பெற்றுள் ளோம். ஆண், அன்பு நெறியை வளர்ப்பதற்காகவே உலகில் பெண் தோன்றியிருக்கிறாள். இல்லற வாழ்க்கை மக்கள் அன்பு நெறியை வளர்ப்பதற்கு என்றே அமைந்துள்ளது. ஒரு ஆண் தனக்கு என்று எதையும் எண்ணியவன் திருமணத்திற்குப் பின் எதையும் தனக்கு மட்டுமின்றித் தன் துணைவிக்கும் வேண்டும் என்று எண்ணுகிறான். அப்பால் எப்பொருளையும் தனக்கும் தன் மக்களுக்கும் உதவும் என்று எண்ணி வாழப் பயிலுகிறான். நாளடைவில் அவன் தனக்கென்று வாழாது மனித குலத்திற்காகவும் வாழ எண்ணி உயிர்களிடத்து அன்பு செலுத்தப் பயின்று அன்பு வடிவாய் மாறி அன்பு வடிவாகிய சிவத்தை அடைகிறான். இதனால் உலகம் வளர்கிறது. உயிர்கள் வாழ முற்படுகின்றான். மனிதன் அன்பை வளர்த்துத் தன்னலந் துறந்து தெய்வத் தன்மை பெறுகிறான். மனிதன் உள்ளத்தில் எழுந்த தன்னலமற்ற அன்புப் பெருக்கால் அறிவு மலர்கிறது. அறிவுப் பெருக்கால் உலகம் உயர்கிறது. உலகிலே மாட மாளிகைகளையும், கூட கோபுரங்களையும், மண்ணைக் கடக்கும் புகைவண்டிகளை யும், விண்ணைக் கடக்கும் பறவைக் கப்பல்களையும், ஆழ்கடல் அனைத்தையும் கடக்கும் நாவாய்களையும் ஒளி வேகத்தில் ஒலி வேகத்தில் உலகைச் சுற்றும் இராக்கட்டுகளையும், விண்ணை யிடிக்கும் மலைகளையும் உடைத்துத் தூளாக்கும் அணுக்குண்டு களையும், என்றும் அழியாது நிற்கும் கற்றளிகளையும் உள்ளத்திற்கு உவகையூட்டும் இசைகளையும் அரிய பொன் அணிகலன்களையும், அணிதரும் மணிகளையும், எழிலுட்டும் பட்டு, பஞ்சு, சரிகை, கம்பளி ஆடைகளையும் உள நோயையும் உடல் நோயையும் அகற்றும் மருந்துகளையும் மக்கள் வாழ்விற்கும் வளமூட்டும் இலக்கியங்களையும் கவிதைகளையும் ஓவியங்களையும், உணவுப் பொருள்களையும் கலைகளையும் மனிதன் கண்டு பிடித்ததற்கு அடிப்படையாய் அமைந்தது ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் இல்லற வாழ்க்கையே. இல்லற வாழ்க்கைக்கு அடிப்படையாய் அமைந்தது தெய்வம் ஆண் பெண் வடிவில் இணைந்திருப்பதே. இவ்வுலகில் பெண் இல்லாதிருந்தால் உலகம் எவ்வாறு இயங்கும்? வீடு, மாளிகை, அரண்மனை, மண்டபம் எப்படி எழுந் திருக்கும்? ஆடை அணிகள் எவ்வாறு தோன்றியிருக்கும்? மனிதன் எவ்வாறு மனிதனாக வாழ்ந்திருப்பான்? அவன் எவ்வாறு குளிப்பான், ஆடை- அணிகள் புனைவான்? அவன் நிர்வாணியாய், தாடியுடையவனாய், விலங்குகள் போல் நகங்களை வளர்த்துக் கொண்டு சடைமுடியைப் பெற்றுக்குகைகளில் வாழ்ந்து இறப்பான் என்றார் புலால் உணவு நீத்து மரக்கரி உணவின் மேன்மை கண்ட ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷா. எனவே இவ்வுலகம் எய்திய ஆக்கம் அனைத்திற்கும் அடிப்படையாய் இருப்பவள் பெண் என்று கூறினார். சைவம் இந்த உண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டது. கலியாண சுந்தர மூர்த்தி, தேவியோடு நிற்கும் இந்த மூர்த்தம் மக்கள் மணந்து ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் இயற்ற அறிவுறுத்துகிறது. எனவே இம்மூர்த்தம் மங்கலகர மூர்த்தம். இம்மூர்த்தம் எல்லா மக்களும் வழிபட்டு இன்புறுவதற்கு உரியது. சைவ நெறி கடவுளை ஆண், பெண், அது என்று என்றும் கண்டதும் இல்லை; கொண்டதும் இல்லை. ஆனால் தெய்வ அன்பைத் தாய்அன்பாகவும் தெய்வத்தின் அருளைத் தந்தையின் அருளாகவும் எண்ணுவதும் வழிபடுவதும் உண்டு. ஊரும் பேரும், உருவும் திருவும் அருவும் அற்ற சிவம் என்னும் பரம்பொருளை அம்மையப்பனாய், மாமன் மாமியாய்த் தோழனாய் துணைவனாய் ஏற்றிப் போற்றி வழிபடுவது தமிழ்மரபு. நங்கையினால் நாமனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும் நங்கையினாற் செய்தழிக்கும் நாயகனும் நங்கையினும் நம்பியாய்த் தானடுவே நாட்டப் பெறுமிது காண் எம்பெருமானார் தம் இயல்பு என்று திருக்களிற்றுப் படியார் கூறுவது சிந்திக்கத்தக்கது. இதனால் ஆண்டவன் அளவிலாத இன்ப வடிவினன் என்பதையும் அவன் அளப்பெரும் சோதி வடிவினன் என்பதையும் அறியலாம். அப் பெரும்பரஞ்சோதி வடிவினன் பெரிய நாயகி அம்மையோடு கூடி நிற்கின்றான். நாம் நமது கையால் அல்லது நம் நங்கையின் துணை யால் நமது காரியங்களைச் செய்து முடிப்பது போல் இறைவனும் அவனோடு இணைந்து பிணைந்துள்ள கையைப் போன்று பிரிக்க முடியாத சக்தியினால் உலகைப் படைத்துக் காத்து நிற்கின்றான் அவன் தன் சக்தியாகிய நாயகிக்கு நாயகனாக அமைந்துள்ளான். சக்தியே மூர்த்தியாக - அதாவது வடிவாக - ஏன் - முதலாக, உடலில் இணைந்திருக்கும் உயிரைப் போன்று ஒளிர்பவன் என்றெல்லாம் பொருள் கூறப்படுகிறது. எல்லாம் வல்ல இறை, வீட்டு நிலையில் முதல்வனாகவும் முத்தனாகவும், மக்களால் துய்க்கப் பெறும் இன்பப் பிழம்பாகவும் கருதப்படுகிறது. மேலும் அவ்வின்பத்தை அவற்றின் உணர்வில் உணர்த்தும் இன்ப சக்தியாகவும் இருதிறப்பட்டு அமுதமும் சுவையும் போன்று குகுணியாய்க் கூடி நிற்பான் என்று கூறப் படுகிறது. அவன், தானும் தன் அருட்சக்தியாகி இரு திறப்பட்டு இயைந்து உலகைத் தொழிற்படுத்துகின்றான். அவன் அறிவு மாத்திரையாகத் தன் இயல்பில் நிற்கும் நிலையில் சிவன் எனப் பெறுவான். புறப் பொருளை நோக்கி அவற்றை உணர்த்தியும் தொழிற்படுத்தியும் நிற்கும் நிலையில் சக்தி எனப் பெயர் பெறுகின் றான். எனவே சிவனும் சக்தியும் வேறு வேறாகக் கொள்ளுதலோ ஆண் பெண்ணாக எண்ணுதலோ தவறு. இறை, தானும் தன் சக்தியும் கரணமும், கருத்தும் மூர்த்தியும் மூர்த்திமானும், குணமும் குணியும், நாயகனும் நாயகியும்- என - இருதிறப்பட்டு இயைந்து நின்று உலகைத் தொழிற்படுத்தும் ஒப்புயர்வற்ற செம்பொருள் (பரம் பொருள்) என்று அறியப்படுகிறது. துதி விளக்கம் 1 மலையரையன் பொற்பாவை வானுதலாள் பெண்டிருவை உலகறியத் தீவேட்டன் என்னுமது என்னேடி உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்தும் கலைநவின்ற பொருள்க ளெல்லாம் கலங்கிடுங்காண் சாழலோ (திருவாசகம்.) 2 முன்னே உரைத்தான் முகமனேயொக்கு மிம்மூவுலகுக்(கு) அன்னையு மத்தனு மாவா யழல்வணா நீயலையோ உன்னை நினைந்தே கழியுமென்னாவி கழிந்ததற்பின் என்னை மறக்கப் பெறாயெம் பிரானுன்னை வேண்டியதே (அப்பர் தேவாரம்) 3 பண்ணிலா வும்மறை பாடலினானிறை சேரும் வளை யங்கைப் பெண்ணிலாவ வுடையான் பெரியார்கழ லென்றுந் தொழுதேத்த உண்ணிலாவியவர் சிந்தையுணீங்கா வொருவன்னிடமென்பர் மண்ணிலாவும்மடி யார் குடிமைத் தொழின் மல்கும் புகலூரே (சம்பந்தர் தேவாரம்) 4 இடப்பால் வானத் தெழும தியை நீயோர் மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங் கொண்டான் மலைப்பாவை கூறொன்றுங் கண்டவன் காண் கண்டாயோ முக்கண்ணா கண் (சுந்தரர் - தேவாரம்.) 5 இமையோர் பெருமானே போற்றி எழில் சேர் உமையாள் மணவாளா போற்றி - எமை ஆளும் தீயாடி போற்றி சிவனே அடி போற்றி ஈசனே எந்தாய் இறைவா போற்றி (திருக்கைலாய ஞான உலா) 6 மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடு பாடிப் போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் (அப்பர் தேவாரம்) 7 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை கண்ணின் நல் லஃதுறும் கமுமல வளநகர் பெண்ணிநல் லாளொடும் பெருந்தகை இருந்ததே சோமசுகந்த சுகாசன மூர்த்தி சோமசு()கந்த சுகாசன மூர்த்தி என்று கூறப்படும் இந்தச் சிவபெருமானின் திருக்கோலம் அழகானது; சிறப்பு வாய்ந்தது. இறைவனின் இடப்பாகத்தில் இறைவி இடம் பெற்றிருக்கிறார்; இருவருக்கும் இடையே இளமுருகன் இன்முகம் காட்டி நிற்கிறார். இறைவன் பீடத்தின் மீது இடதுகாலை மடக்கியும் வலது காலைக் கீழே தொங்க விட்டுக் கொண்டும் அமர்ந்திருக்கிறார். அருகே உமாதேவி இடதுகாலைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டும் வலது காலை மடக்கிப் பீடத்தின் மீது பாதத்தை வைத்துக் கொண்டும் மகிழ்வோடு இருக்கிறார். இறைவனை முதலில் குருவாகவும் அப்பால் அகமுடையவளொடு இயைந்து நிற்கும் மணவழகனாகவும் இதன் முன் கண்டோம். இப்பொழுது இறைவன் இல்லக் கிழத்தியோடு இன்பந்துய்த்து அதன்பலனாக எய்தும் மக்கட் பேற்றையும் பெற்ற காட்சியைக் காண்கின்றோம். இறைவன் தனியனாய் இன்றிக் கணவனாகவும் தந்தையாகவும் காட்சி அளிக்கும் எழிற் கோலமாய் இம்மூர்த்தம் உள்ளது. இறைவனின் இந்த இணையற்ற இனிய மூர்த்தம் இல்லறத்தார் இன்புறுவதற்கு வழிபடும் எழில் மூர்த்தமாகும். புராணக்கதை மாமேருவில், மாதேவன் மலைமகளை மணந்து மகிழ்வுடன் வீற்றிருந்தார். அவ்வமயம், அரக்கன் சூரமன் ஆட்சியில் அல்லற் பட்டு அவதியுற்ற சுரர்கள் ஒன்றுகூடி இறைவனிடம் போந்து தங்களுக்கு அசுர ஆட்சியால் விளையும் அளவிடற்கரிய அல்லல் களைக் கூறி, அவற்றை அகற்றித் தங்களை ஆதரிக்குமாறு பணி வுடன் கேட்டுக் கொண்டனர். அசுரர்களின் அட்டூழியங்களையும் அமரர்களின் அவதிகளையும் அறிந்த அரனார் உளம் கனிந்தார். அரக்கர்களின் அட்டூ ழியத்தை அடக்க ஆவலுற்றுத் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். அதனால் உலகங்கள் அனைத்தும் நடுநடுங்கின; அனைவரும் பயமுற்றனர். இறைவனுடைய நெற்றிக் கண்ணினின்று தீப்பொறிகள் திமுதிமுவென்று பொங்கி எழுந்தன. அவைகள் நெருப்பையும் காற்றையும் சேர்த்து ஏந்திச் சென்று எழில் மிக்க சரவணப் பொய்கையில் உள்ள தாமரை மலரில் விட்டுச் சென்றன. கமல மலர் கருப்பையாய்க் காட்சி அளித்தது. கண்ணுதலோன் கண்ணினின்று தோன்றிய ஆறு நெருப்புப் பொறிகளும் அமைதியோடு சரவணப் பொய்கையில் உள்ள அழகிய மலரில் வீழ்ந்து அழகிய குழந்தை களாய்த் திகழ்ந்தன. ஆறு கார்த்திகைப் பெண்களும் அங்கு போய் ஆறு அருள் குழந்தைகளையும் எடுத்து அரவணைத்து அன்போடு அமுதப் பாலூட்டி அக மகிழ்ந்தனர். அப்பால் ஆலமர் கடவுளின் ஆணைப்படி அன்னை அருளாம்பிகை சரவணப் பொய்கையை அண்டி ஆறு குழந்தைகளையும் அன்போடு அரவணைத்து எடுத்து அன்னை நிலையில் அன்பு முகங்காட்டி நின்றார். ஆறு குழந்தை களும் ஓருருவாய் ஆறுமுகனாய் மாறி நின்றது. அந்தக் குழந்தையை உலகம் முருகன் என்றும் அரனார் மகன் என்றும் அறுமுகன் என்றும் கந்தன் என்றும் கார்த்திகேயன் என்றும் பலவாறாக அழைத்து வருகின்றது. கந்தன் இறைவனுக்கும் இறைவிக்கும் இடை நடுவே ஓர் இடத்தைத் தேடிக் கொண்டுள்ளார். கந்தன் இளம் பிராயத்திலே சூரனை வென்று சிவகுமாரன் என்னும் பேற்றிற்குரிய வராய்த் திகழ்கின்றார். இந்தச் சுகாசனமூர்த்தம் மூன்று பிரிவாக உள்ளது. ஒன்று இறைவன் இறைவியோடு அமர்ந்திருக்கும் கோலம். அது உமாசகித சுகாசன மூர்த்தி என்று கூறப்படும். மற்றொன்று இறைவன் இறைவியோடு இன்ப நிலையில் தழுவி நிற்கும் உமாசகித ஆலிங்கன மூர்த்தம். அடுத்ததுதான் இந்த உமாகந்த சுகாசன மூர்த்தம். மேற்கூறிய புராணக்கதை இந்த மூர்த்தத்திற்கென்று எழுந்த புராணக் கதையாகக் காணப்படாவிடினும் இந்தக் கோலத்தை ஓரளவு விளக்கும் புராணக் கதையாகக் கொள்ளமுடியும். இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே எழுந்தருளியிருக்கும் இளமுருகன் ஆறுமுகனாய்க் காணப்பட்டால் இந்தப் புராணக் கதைக்கு ஏற்ற மூர்த்தமாய் இதைக் கொள்ள முடியும் என்பது எமது எண்ணம். இதற்கு முன் வந்த ஆசிரியர்கள் எவரும் இந்தப்புராணக் கதை இம்மூர்த்தத்தை விளக்குவதாக இருக்கிறது என்று சிறந்த நூற்கள் எதிலும் எடுத்துக் காட்டியதாக எம்மால் கூற முடியவில்லை என்றாலும் வடமொழி அறிஞர்கள் சிலர் இப்புராணக்கதைதான் இம்மூர்த்தத்தை விளக்குவது என்று உறுதி கூறுகின்றனர். இலக்கியச் சான்றுகள் கல்யாண சுந்தர மூர்த்தமும் அர்த்தநாரீசுவர மூர்த்தமும் (மங்கை பங்கன் தோற்றமும்), உலகில் மக்கள் ஆணும் பெண்ணும் கூடி வாழவேண்டும் என்பதை அறிவுறுத்துவதாகத் திகழ்கின்றன. அதுவே இயற்கை விதி, இறைநியதி என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டாக இம்மூர்த்தங்கள் அமைந்துள்ளன. ஆணும் பெண்ணும் திருமணம் என்னும் ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்டு இன்ப வாழ்வு நடத்துவதின் பயனாக இவர்கள் எம் மக்கள் என்று கூறுவதற்குரிய மக்கட்பேறு எழும் என்பதற்குச் சோமசுகந்த சுகாசன மூர்த்தம் ஒரு முன் மாதிரியாக இருக்கிறது. முதல்வனும் முதல்வியும் இளமுருகனை மகனாகக் கொண்டு அன்பும் அருளும் பொங்கி மகனை வாரி எடுத்துத் தழுவி உவகை பொங்க உச்சி மோந்து மகிழ்ந்து இன்புறுகின்றனர். மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம், அவர்களின் மழலை மொழியைக் கேட்டல் செவிக்கின்பம், அவர்களின் உச்சி முகர்தல் மூக்கிற்கின்பம், அவர்களைக் கண்டுகளித்தல் கண்ணிற் கின்பம் என்பதை உலகிற்கு இம்மூர்த்தம் உணர்த்துகிறது. சிங்கம் சுமந்த செழுமணித் தவிசில் கங்குலும் பகலும் கலந்தினி திருந்தாங்கு இடம் வலம் பொலிந்த இறைவியும் நீயும் நடுவண் வைகும் நாகிளங் குழவியை ஒருவிரின் ஒருவிர் உள்ளம் நெக்குருக இருவிரும் தனித்தனி ஏந்தினிர் தழீஇ, முச்சுடர் குளிப்ப முறைமுறை நோக்கி உச்சி மோந்தும் அப்பச் சிளங் குழவி நாறு செங்குமுதத் தேறலோ டொழுகும் எழுதாக் கிளவியின் ஏழிசை பழுத்த இழுமென் குரல் மழலைத் தீஞ் சொற் சுவையமு துண்ணும் செவிகளுக் கையஎன் பொருளில் புன் மொழி போக்கி அருள் பெற அமைந்தது, ஓர் அற்புதம் உடைத்தே! என்று திருவாரூர் நான்மணி மாலை நவில்கிறது. இவ்வினிய எழில் தரும் கருத்தும் சொல்லோவியமும் காசிக்கலம்பகத்திலும் காணப் படுகிறது. நமது நாட்டின் நற்றவப் பயனாய்ப் பிறந்த சீர்வைகுண்டம் குமரகுருபரஅடிகள் மதுரைக் கலம்பகத்தில் சோமசுகந்த மூர்த்தியின் தோற்றத்தைக் கண்டு களித்துத் தம் களிப்பை ஒரு சொல்லோவியமாக வெளியிட்டுள்ளார். இறைவனையும் இறை வியையும் அம்மை அப்பனாகக் கண்டு அவர்களோடு வாதாடு கின்றார். கச்சியப்பச் சிவாச்சாரியார், பகலுக்கும் இரவிற்கும் இடையே எழும் மாலைக் காலத்தின் இயல்பினை எடுத்துக் காட்டும் பொழுது அம்மையப்பன் நடுவே அழகொளிர நிற்கும் இளமுருகன் காட்சியை அடியில் வருமாறு அழகுற எடுத்துக் காட்டுகிறார். ஏல் வார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் பால னாகிய குமரவேள் நடுவுறும் பான்மை ஞால மேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவாய் மாலை யானதொன் றழிவின்றி வைகுமாறு ஒக்கும் (கந்தபுராணம்) சேக்கிழார் அடிகள் அடியார்க்கு அருள் செய்யும் காலங் களில் ஆண்டவன் அம்மை அப்பன் அருட்கோலத்தில் எழுந்தருளி வந்தனன் என்பதைக் குறிப்பிடும் பொழுது உமா சுகந்த மூர்த்தியின் உயர்வை எடுத்துரைக்கின்றார். -- - - - - - - -- - - - -- - - - --மலை பயந்த தைய லோடும் சரவணத்துத் தாய ரோடும் தாம் அணைந்தார் என்று சிறுத் தொண்டர்க்கு இறைவன் உமாசுகந்த மூர்த்தியாகத் தோன்றி அருள் புரிந்தார் எனக் கூறுகின்றார். மேலும் பெரிய புராணத்தில், கொன்றை வேணி யார்தாமும் பாகங் கொண்ட குலக்கொடியும் வென்றி நெடுவேல் மைந்தருதம் விரைப்பூங் கமலச் சேவடிக்கீழ் நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் என்றும் பிரிய தேயிறைஞ்சி யிருக்க உடன்கொண் டேகினார் (திருத்.மாக். வார் 87) எனக் கூறப்படுகிறது. சங்க இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறு நூற்றில், ஆண்மானும் பெண்மானும் அகமகிழ்ந்து அருகருகே கூடி நிற்க அவை ஈன்றெடுத்த அழகிய மறி நடுவே நின்றாற் போன்று கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மகன் நிற்கும் மகிழ்ச்சி தரும் மாண்பு மிக்க காட்சி பேரின்பம் விளைவிக்கும் பெருங்காட்சியாகும். இதற்கு ஈடான இன்ப நிலை எவ்வுலகிலும் காண முடியாது. இதனை விளக்கி மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வன் நடுவணன் ஆக, நன்றும் இனிது மன்ற அவர் கிடக்கை ! முனிவின்றி நீல நிற வியலகம் சுவை இய ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே (ஐங்குறுநூறு) என்று அழகாக எடுத்துக் காட்டுகிறது. கணவன் மனைவி குழந்தை ஆகியமூன்றுங் கூடிய முப் பொருட்டன்மை (Trinity) ஒரு சேர விளங்கும் ஒப்பிலாக் குடும்ப வாழ்க்கையின் இன்ப நலத்தையும் சிறப்பையும் சீர் பெற எடுத்துக் காட்டும் அடையாளமாக உமாசுகந்த மூர்த்தம் இருக்கிறது. கணவனும் காதலியும் கூடி மகப்பேறு பெற்றுக் களித்து நிற்கும் தெய்வ நெறி - என்பதை உமாசுகந்த மூர்த்தம் கூறுகிறது. இதனை, தொல்லை யுலகம் போற் றெடுக்கும் சோமாசு கந்தர் தமைத்தாளின் நல்ல மகவும் சந்தானத் தொடர்பும் இனிது நல்குவார் என்று பேரூர்ப் புராணம் விளக்கிக் கூறுகிறது. ஆகமச் சான்றுகள் உத்தர காமிகாகமத்தில் சோமசு கந்த சுகாசனமூர்த்தியின் திரு உருவ அமைப்பைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் முருகனின் உருவம், சிவபெருமானுடைய உருவத்தின் உயரத்தில் பத்தில் ஒருபங்கு முதல் பத்தில் நாலு பங்கு வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. காரணாகம விதிகளில் இள முருகனின் உயரம் எட்டில் ஒரு பங்கிலிருந்து எட்டில் நான்கு பங்கு வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முருகனுடைய உருவம் சிறிதாக இருப்பதே சிறப்புடையது; உத்தமமானது. தத்துவ ரீதியிலும் இலட்சண அமைப்பிலும் முருகன் உருவம் சிறிதாக அமைக்கப்படுவது ஏற்றமுடையதாக எண்ணப்படும். முருகன் உருவம் தேவியின் திருவுருவின் மார்பு அளவு அல்லது வளைந்திருக்கும் கை அளவு இருக்கலாம். காரணாகமத்தில் சிவபெருமான் திரு உருவிற்கு எந்தப் பக்கத்திலும் நான்முகன், திருமால் முதலிய தேவர்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விட்டுணு தர்மோத்திரத்தில் இந்த மூர்த்தத்தின் அமைப்பை விளக்கிக் கூறும் பொழுது சிவபெருமானும் உமாதேவியும் ஒருவரை யொருவர் தழுவிக் கொண்டு ஆசனத்தில் அமர்ந்திருப்பது போல் காணப்படலாம் என்று கூறுகிறது. சிவபெருமான் தலையில் சடாமகுடமும் அதன்மீது பிறையும் சித்திரிக்கப்படவேண்டும். வலது கை நீலோற்பலப்பூவைத் தாங்கியும் இடது கை உமாதேவியின் இடது தோளைத் தழுவியும் இருக்கவேண்டும். இடையும் மார்பும் எழிலுற அமைக்கப்படவேண்டும். அவளது வலதுகை சிவபெருமா னுடைய வலது தோளின் மீது வைத்து அவரைத் தழுவி இருப்பது போல் காணப்படவேண்டும். மற்றொரு இடது கையில் கண்ணாடி காணப்படவேண்டும். பொதுவாகச் சிவன் பார்வதி உருவங்கள் அழகாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. உரூப மண்டலம் என்னும் நூலில் - சிவபெருமானுக்கு நான்கு கைகள் இருக்கவேண்டும். அவைகளில் ஒரு கையில் மூவிலை வேலும் மற்றொரு கையில் மாதுளம் பழமும் காணப்பட வேண்டும். இடது கை உமாதேவியின் தோள்மீது இருக்கவேண்டும்; மற்றொரு இடது கையில் பாம்பு காணப்பட வேண்டும். சிவ பெருமானின் திருமேனி செம்பவள நிறமாக இலங்கவேண்டும். அவரது வாகன மாகிய எருது அவரது மகன் முருகன் முதலிய உருவங்கள் மெலி வாகக் காணப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பூர்வ காரணாகமம் - சோமசு கந்த மூர்த்தியின் உருவம் மூன்று கண்களும் நான்கு கைகளும் உடையதாய் உட்கார்ந்திருக்கும் நிலையில் காணப்படவேண்டும். அவரது மேனி சிவப்பாகவும் இரசோ குணத்தைப் பிரதிபலிப்பதாகவும் அழகாயும் பத்திர பீடத்தின் மீது இருக்கவேண்டும். அவர் உருவம் இடது காலை மடக்கி ஆசனத்தின் மீது வைத்து வலது காலைக் கீழே தொங்க விட்டுக் கொண்டு நிமிர்ந்த நிலையில் சுகாசனமாய் அமர்ந்திருக்க வேண்டும். இடுப்பில் புலித் தோலும் பட்டுக் கச்சையும் இடம் பெற்றிருக்க வேண்டும். பின்புறமுள்ள வலது கையில் மழுவும் இடது கையில் மானும் தாங்கி, முன்புறமுள்ள வலது கை அபயக் கையாகவும் இடது கை வரதக் கையாகவும் சிம்மக் கரண நிலையில் இருக்கவேண்டும். வலது காதில் மகர குண்டலம் அல்லது சிம்மக் குண்டலமும் இடது காதில் பத்திர குண்டலம் அல்லது விருத்த குண்டலமும் தலையில் சடாமகுடமும் காணப்படவேண்டும். நான்கு கைகளிலும் நல்ல கங்கணங்கள் அல்லது காப்புகள் இல்லா விடில் பாம்பு போன்ற கைக் கடகங்கள் (பாம்புக் கங்கணங்கள்). -மார்பில் யச்ஞோப வீதம் ஆகியவைகள் காணப்படவேண்டும். இம்மூர்த்தி எழில் மிக்கவராய் எல்லா அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கவேண்டும். அவரது இடது பாகத்தில் உமாதேவியும் இருவருக்கும் இடையில் இளமுருகனும் இன்புறக் காட்சி தரவேண்டும். இத்திரு உருவின் வலது கால் வளைந்து ஆசனத்தில் அமர்ந்து இருப்பதோடு இடது கால் தொங்க விடப் பட்டும் இருக்க வேண்டும். சிவ பெருமான் திருஉருவம் நல்ல சிரித்த முகத்தோடு காணப்பட வேண்டும். உமா தேவியின் முகத்திலும் புன்னகை பொலிய வேண்டும் முருகன் முகத்திலும் மகிழ்ச்சி காணப்படவேண்டும் என்று கூறுகிறது. சிற்ப நூற் சான்றுகள் சுகாசன மூர்த்தம் என்றால் மகிழ்ச்சிகரமாக அமர்ந்திருக்கும் ஆசன நிலை என்றே பொருள் கொள்ளப்படும். இங்கு இறைவன் இன்புற்று எழிற்பீடத்தின் மீது ஒரு காலை மடக்கி வைத்துக் கொண்டு ஒரு காலைக் கீழே தொங்க விட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதைக் காணலாம். இதைத்தான் சுகாசன மூர்த்தம் என்று கூறுவர். இந்தச் சுகாசன மூர்த்தம் சோமசுகந்த சுகாசன மூர்த்தம் என்றும் உமா - கந்த சுகாசன மூர்த்தம் என்றும் கூறப்படும். இஃதன்றி உமா மகேசுவர சுகாசனமூர்த்தம், உமா சகித ஆலிங்கன சுகாசன மூர்த்தம் என்று வேறு இருமூர்த்தங்களும் உண்டு. சோமாசு கந்த சுகாசன மூர்த்தியின் இலக்கணத்தைச் சிற்ப ரத்தினம் என்னும் சீரிய நூல் சித்திரிப்பதாவது:- சுகாசனமூர்த்தியின் உடல் நேராக நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இம்மூர்த்தி மன்னர்களின் மன்னன் (சக்கரவர்த்தி) போன்றவர். இவர் பத்திர பீடத்தின் மீது அமர்ந்திருப்பவராய்க் காணப்படுவார். இடது கால் மடங்கிப் பீடத்தில் கிடத்தப்பட்டும் வலது கால் கீழே தொங்கவிடப்பட்டும் இருக்க வேண்டும். இவ்வாறு நேராக அமர்ந்திருக்கும் மூர்த்திதான் சுகாசனமூர்த்தம் என்று கூறப் படும். முக்கண்ணும் செம்பவளத் திருமேனியும் அருள் ததும்பும் அழகிய முகமும் கருணை பொழியும் கவினுறு கண்களும் இரசோ குணமும் உடையவராப் புலித்தோல் ஆடை, வெண்பட்டாடை புனைந்தவராய் வலது கையில் கோடரியும் இடது கையில் புள்ளி மான் மறியும் ஏந்தியவராயும் இருக்கவேண்டும். அவரது நான்கு கைகளில் மற்றொரு வலது கை அபய முத்திரையும் இன்னொரு இடது கை கடக (நண்டு) முத்திரையும் அல்லது சிங்கக் காது முத்திரையும் (சிம்மக் கர்ணஅதமும்) உடையதாய்க் காணப்பட வேண்டும். வலது காதில் மகரக் குழை அல்லது சிங்கக் குழையும் இடது காதில் வட்டமான ஓலைச் சுருளும் அணிவிக்கப்பட வேண்டும். அல்லது இரு காதுகளிலும் வட்டமான குண்டலங்கள் அணிவிப்பதும் உண்டு. இம்மூர்த்தி சடைமுடியும் பலவித அணி களும் பூணூலும் அணிந்தவராய் இருப்பார். பெரிய பாம்புகளைக் கை வளைகளாகப் பூண்டிருப்பார். இடது புறத்தில் இறைவி உவகையுடன் உட்கார்ந்திருப்பார். அவரது வலது கால் பீடத்தின் மீது மடங்கியவாறு கிடத்தப் பெற்றும் இடது கால் கீழே தொங்கவிடப்பட்டும் இருக்கும். இடது கை வரத முத்திரையும் வலது கை குவளை மலரும் உடையதாய் விளங்கும். பார்வதியின் நிறம் பச்சை. அவர் அழகிய அணிகலன்கள் அனைத்தையும் அணிந்து அன்பு தவழும் முகத்துடன் அமர்ந் திருப்பார். அவரது ஆடை சிவப்பு நிறம் உடையதாக இருக்கும். அவர் தலையில் மகுடம் பூண்டிருப்பார். கழுத்தில் முத்துமாலை அணிந்திருப்பார். அவரது இடது தொடைக்கு வெளிப்புறம் பீடத்தின் மேல் இடது கையை வைத்தவாறு தேவியின் கையை அமைக்கலாம். இறைவனுக்கும் இறைவிக்கும் இடையில் இள முருகன் இடம் பெறவேண்டும். முருகன், தலையில் முடிகளுக்கு மேல் (கேசாந்தத்தில்) பேழை வடிவம் போன்ற மகுடம் அணிந் திருப்பார். இரு கைகளிலும் மலர்களை ஏந்தி இருப்பார். அல்லது இடது கையில் வரத முத்திரையும்,1 வலது கையில் கடக முத்திரை யும் அல்லது சிங்கக் காது முத்திரையும் இருக்கலாம். வலது கையில் ஏடும் இடது கையில் வரத முத்திரையும் இருப்பதுமுண்டு. இடை யில் அரைஞாண் அணிந்திருப்பார். அரையில் ஆடையின்றிக் குழந்தை வடிவில் நிற்பார். புயங்களில் தோள் வளை துலங்கும். இந்த இளமுருகனை நின்ற கோலத்திலும் இருந்த கோலத்திலும் கூத்தாடும் கோலத்திலும் அமைக்கலாம். கூத்தாடும் கோலத்தில் அமைத்தால் இடது கையில் கனியும் வலது கையில் ஊசி (சூசி) முத்திரையும் திகழவேண்டும். இடது கையில் கனி இன்றி விரல்கள் விரிந்தவாறும் அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. காசியப சிற்ப நூல், சோமசுகந்த சுகாசன மூர்த்தியின் இலக்கணத்தைச் சிற்பரத்தினம் என்னும் நூலைத் தழுவியே துரைக்கின்றது. ஆனால் ஒன்றிரண்டு புதிய செய்திகளும் கூறு கின்றது. அவைவருமாறு: உமாதேவியின் பின்புறமானது (பிருட்ட பாகமானது) இருக்கையின் மீது நான்கு அங்குலம் இருக்கவேண்டும். இந்த நான்கு அங்குலத்தையும் தொடைக்கு மேலுள்ள பாகத்துடன் (ஊர்த்துவ காயத்துடன்) சேர்த்தே உருவாக்கவேண்டும். சிவபெருமான் முகம் சிவகாமியின் பக்கம் சிறிது சாய்ந் திருக்கவேண்டும். தேவியின் முகமும் சிவபெருமான் பக்கம் சிறிது சாய்ந்தே இருக்க வேண்டும். விரல்கள் சிறிது வளைந்தே இருக்க வேண்டும். இடது கை உயரத்தூக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும் (தொடையின் மீது இருக்கவேண்டும்). உமாபதிக்கும் உமாதேவிக்கும் ஊடே முருகன் இடம் பெற்றிருப்பார். முருகன் உருவம் தேவியின் கழுத்து மட்டத்திற்குக் கீழ் இருப்பது உத்தமம். அரனார் மைந்தன் - கந்தன் அமர்ந்த கோலமாகவோ ஆடுங்கோலமாகவோ நின்ற கோலமாகவோ இருக்கலாம். அமர்ந்த கோலமாக இருந்தால் இரண்டு கால்களும் ஆசனத்தின் மீது மடக்கி வைத்திருப்பதுபோல் காணப்படவேண்டும். ஆடுங் கோலத்தில் இருந்தால் இரு பாதங்களும் சிறிது வளைந்து காணப்படவேண்டும். நின்ற கோலத்தில் இருபாதங்களும் சமபங்கமாக இருக்கலாம். நிருத்த மூர்த்திக்கு வலது கால் தித பாதமாகவும் சிறிது வளைந்தும் இடது கால் பீடமட்டத்திற்கு மேல் 4,5,6 அங்குலம் தூக்கியும் இருக்கலாம். சகளாதிகாரம் என்னும் சிற்ப நூலிலும் மேற்கூறிய சிற்ப நூற்களைத் தழுவியே கூறப்படுகிறது. என்றாலும் சில புதிதாகக் காணப்படுகின்றன. அவை அடியில் வருமாறு. மூர்த்தியின் கையில் மூன்று கங்கணங்களும் கொடிப்பூ வேலை செய்த தோள்வளையும் (கேயூரமும்) வாகுவலையமும் (அங்கதமும்) உதரபந்தனமும் (வயிற்றுப் பக்கத்தில் அணியும் அணிகலனும்) காணப்படவேண்டும். ஊருதாமம் என்னும் அணிகலனும், மாலை போன்ற பாத சரமும்(தொடை வரையில் தொங்கும்) பாதங்களில் விரல் அணி களும் அணிகலன்களாக அமைக்கப்படவேண்டும். கர்ணபூரம் என்னும் காதணியின் அகலம் 4½ அங்குலம் இருக்கவேண்டும். மழுவின் நீளம் பன்னிரண்டு அங்குலம். மானின் உயரமும் அதுவே. பூணூல் (யக்ஞோபவீதம்) சன்ன வீரம் போல் குறுக்காக அணியப்படும் - இரு மாலைகளும் அணிவிக்கப்படவேண்டும். கழுத்தில் மாலையும் (ஹாரமும்) மாலையில் தொங்கும் மாணிக்க மணியும் (ஹார ஸ்ரீவத்ஸமும்) அட்டிகையும் (நிதலாஞ் சலமும்) அணிகலன்களாக அமைந்திருக்கவேண்டும். இவ்வாறு எல்லா அணிகலன்களும் அணிந்து அழகு மிக்கவராய் இம்மூர்த்தி விளங்கவேண்டும். தேவி, மூர்த்திக்குச் சற்றுப் பின்னால் அமர்ந்திருக்கவேண்டும். தலையில் மணி மகுடமோ, கரண்ட மகுடமோ, கிரீட மகுடமோ1 கேச பந்தமோ அமைந்திருக்கலாம். காதில் மகர குண்டலம் ஒளிர நெற்பயிர் போன்ற பச்சை (சியாமள) வண்ணத்தோடு விளங்க வேண்டும். சிவகாமி சிவப்புச் சேலை அணிந்து முகவாய்க் கட்டை சற்று உயர்ந்து சன்ன வீரம் என்னும் குறுக்கு மாலை அணிந்து மாலைகள், தோள்வளை முதலிய நகைகள் பூண்டு எழிலுடன் இன்ப நிலையில் காணப்படவேண்டும். தேவியின் தாலி இருவிதமாக அமைக்கப்படும். ஒன்று தெளிவாகக் காணப்படுவது (வியக்தம்), மற்றொன்று தெளிவாகக் காணப்படாமல் இருப்பது (அவியக்தம்). தாலி பொன்னால் ஆனதாகக் கழுத்தில் தொங்கவிடப்பட்டோ அல்லது படிமத்தோடு பொருத்தப்பட்டோ இருக்கலாம். முருகன் (கந்தன்) உருவின் இடது கை முகுள முத்திரை தரித்தும் பூவைத்தாங்கியும் வலது கை, வரதக் கையாகவும் இருக்க வேண்டும். சன்னவீரம் (இரு தோள்கள் மீதும் குறுக்காகப் பூணூல் போல் நாபி வழியாக எதிர்ப்புற விலா வரை தொங்கும் குறுக்கு மாலை) பாம்பு முகப்போடு கூடிய அரைஞாண் முதலிய அணிகளும் காணப்படவேண்டும். இரு கால்களும் நடப்பது போல் இருக்கலாம் அல்லது சிங்கக் கட்டில் மீதோ தாமரை இருக்கை மீதோ (பத்மாசனத்தின் மீதோ) இளமுருகனை அமைக்கலாம். சிவபெருமானை உத்தம தச தாலத்திலும் தேவியை மத்தியம தசதாலத்திலும் கந்தனைப் பஞ்ச தாலத்திலும் குழந்தைகளுக்கான அணிகளுடன் அமைக்கலாம் என்று கூறப்படுகிறது. சாரசு வதீய சித்திர கர்ம நூலில் காணப்படும் சிற்ப இலக்கணம், சோமாசு கந்த மூர்த்தியின் வடிவ அமைப்பை ஏனைய சிற்ப நூலை அனுசரித்தே கூறுகிறது. என்றாலும் அளவைமுறைகள் மிக விளக்க மாகவும் விரிவாகவும் கூறப்படுகின்றன. அவைகள் படிமங்களை வார்க்கும் தபதிகளுக்கு இன்றியமையாதவை. ஆனால் அவைகளை நமது வாசகர்கள் நன்கு படித்துச் சுவைக்க முடியாது என்று எண்ணி அவைகளைப் பற்றி இங்கு விளக்கவில்லை. படிமங்களின் விளக்கம் (1) சோமசுசந்த சுகாசன மூர்த்தி - பெருவேளூர் இங்கு முதலாவது இணைக்கப்பட்டிருக்கும் சோமசுகந்த மூர்த்தியின் திருஉருவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரு வேளூரில் உள்ள படிமம் ஆகும். இன்றும் இத்திரு உருவம் வழிபடப்பட்டுவருகிறது. இவைகள் நல்ல அழகிய செப்புப் படிம மாகக் காணப்படுகின்றன. இது பாடல் பெற்ற நல்ல தலமாகும். இதனைச் சமய குரவர்களில் ஒருவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளை கண்டு களித்துப் போற்றி, குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதைஎன்றும் நறவிள நறுமென் கூந்தல் நங்கையோர் பாகத்தானைப் பிறவியை மாற்றுவானைப் பெருவேளூர்ப் பேணினானை உறவினால் வல்லனாகி உணருமா றுணர்த்து வேனே (தேவாரம்) என்று அழகாகப் பாடியுள்ளார். இத்திரு உருவங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. இறைவன் இறைவியோடு மட்டுமல்லாமல் இளமுருகனோடு இன்ப நிலையில் எழிற் கோலத்தில் மகனின் மழலை மொழி கேட்டுக் கொஞ்சும் நிலையில் வசதியான நிலையில் அமர்ந்திருக்கின்றார். இத்திரு உருவம் சோழ நாட்டில் உள்ளது. ஆனால் அதன் தோற்றம் பாண்டிய நாட்டுப் பாணியில் திகழ்கிறது. இறைவன் சடாமகுடதாரியாய் நெற்றிக் கண்ணையுடையவராய் விளங்குகிறார். அவரது மகுடத்தில் பிறையும் ஊமத்த மலரும் காணப்படுகின்றன. கழுத்திலிருந்து அணியணியாய்ப் பல பொன் மணிமாலைகள் நீண்டு நெஞ்சுக்குழி வரை தொங்குகின்றன. தோளில் பூணூலும் வயிற்றின் மேற்பகுதியில் உதர பந்தமும் கைகளிலும் கால்களிலும் பல்வேறு விதமான அணிகலன்களும் அழகுடன் திகழ்கின்றன. வலது பக்கம் பின்புறக்கை மழுவேந்தி இருக்கிறது. முன்புறக்கை அபய முத்திரை தாங்கி இருக்கிறது. இடது பக்கமுள்ள பின்புறக்கை மானை ஏந்தி நிற்கிறது. முன் புறக்கை நண்டுக்கையாக (கடகாமுக அதமாக)க் காணப்படுகிறது. அரையில் ஆடையை இறுகப் பிணைத்திருப்பது போல் தெரிகிறது. அது தொடை வரை நீண்டு இருக்கிறது. இடது காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்தும் வலது காலைக் கீழே தொங்கவிட்டும் சுகாசன நிலையில் வீற்றிருக்கிறார் இம்மூர்த்தி. இந்த மூர்த்தியின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. இதை உருவாக்கிய சிற்பி தனது கைத்திறனை உலகிற்குக் காட்ட வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தின் மீது உருவாக்கியுள்ளமை யால் ஒரு அற்புத சிற்பமாக இது காட்சி அளிக்கிறது. இந்தத் திரு உருவம் ஐம்பொன்னால் கி.பி.12ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. தேவியின் திருஉருவம் தேவியின் திரு உருவம் மூர்த்தியின் திரு உருவிற்கு ஏற்ற எழில் நலம் இயைந்ததாக உருவாக்கப் பெற்றிருக்கிறது. தேவியின் தலை மீது கரண்ட மகுடம் கவினுற விளங்குகிறது. காது, கழுத்து, கை, கால் முதலிய உறுப்புகளில் ஆகமங்களில் அறிவுறுத்தியுள்ள அனைத்தணிகலன்களும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தேவிக்கு மேலாடை காணப்படவில்லை. இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழகப் பெண்களின் ஆடை அணியும் நிலையைப் புலப்படுத்துவதாகக் கொள்ள இடமுண்டு. இடுப்பில் அழகிய ஆடை கரண்டைக் கால்வரை தொங்கும் நிலையில் காணப்படு கிறது. தேவி இரு கைகளையுடையவளாய்க் காணப்படுகின்றாள். வலது கையில் குவளை மலருள்ளது. இடது கை இருக்கை (ஆசனம்) வரை நீண்டு இருக்கிறது. இடது கால் கீழே தொங்கவிடப்பட்டும் வலது கால் மடிக்கப்பட்டுப் பீடத்தின் மீது வைத்திருப்பது போலவும் காணப்படுகின்றன. தேவியின் திருமுகத்தில் அருள் ஒளிர்கிறது. அன்பு திகழ்கிறது. மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் என்ற மெய் மொழிக்கிணங்க மகனின் அரவணைப்பில் கண்ட இன்பம் இன்னும் மாறவில்லை என்பதை அவர் முகம் புலப்படுத்தி நிற்கிறது. மூர்த்தியின் முகமும் தேவியின் முகமும் ஒரே அளவில் ஒரே அமைப்பில் ஒரே பாவத்தில் ஓர் ஆவிற்கு இரு கோடு பூத்தாற் போன்று நிறைவான அமைப்பில் சிற்பி வார்த்தெடுத்திருப்பது கண்டு சுவைக்கத் தக்கதாகும். தேவிக்கும் நெற்றிக் கண் இருப்பது போல் காணப்படுகிறது (காளிக்கு நெற்றிக் கண் உண்டு). இந்த மூர்த்தி இல்லறத்தார் வழிபடுவதற்குரிய மூர்த்தி என்பதோடு இத்திரு உருவம் பக்தர்கள் மெய் மறந்து நின்று வழிபடும் வண்ணம் மிகக் கவர்ச்சிகரமாய் உருவாக்கப் பெற்றுள்ளது. சிற்பியின் சீரிய சிற்பத் திறமை போற்றற்குரியது. அனைத்தும் ஆகம விதிகள் பிறழா வண்ணம் மிக உன்னிப்பாக உணர்ந்து உருவாக்கப்பெற்றதாகத் தெரிகிறது. இளமுருகன் மூர்த்தியின் படிமத்திற்கும் தேவியின் படிமத்திற்கும் இடை யிலே இளமுருகன் நின்ற கோலத்தில் எழிலுடன் காணப்படுகின்றார். அவர் உருவ அமைப்பு, உயரம், அழகு முதலிய அனைத்தும் ஆகம விதிகளை அனுசரித்து அமைக்கப்பட்டிருக்கிறது. முருகன் வலது கையில் பூவைத் தாங்கியும் இடது கையில் முகுள முத்திரை தாங்கியும் தலையில் மகுடமும் மார்பில் பூணூலும் கையில் கங்கணங்களும் தோளில் வாகு வலயமும் உதர பந்தனமும் கழுத்தில் மாலைகளும் காதில் குண்டலமும் விரலில் மோதிரமும் அணிந்து அழகுடனும் மகிழ்ச்சியுடனும் விளங்குகிறார். பெற்றோர் முகப் பொலிவு பிள்ளை முகத்தில் காணப்படுகிறது. முருகன் பிள்ளைப் பருவக் கோலம் ஆனாலும் நிமிர்ந்து மிகக் கம்பீரமான தோற்றத்தில் காணப்படுகிறார். இவ்வுருவம் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாது தித்திக்கும். சோமசுகந்த சுகாசன மூர்த்தி - குண்ணாண்டார் கோயில் சோமசுகந்த சுகாசன மூர்த்தியின் படிமத் திரு உருவம் புதுக்கோட்டையைச் சேர்ந்த குண்ணாண்டார் கோயிலில் உள்ளதாகும். இந்த மூர்த்தி பொதுவாக அழகுற அமைக்கப்பட்ட படிம உருவம் என்று குறிப்பிடப்பட்டாலும் பெருவேளூர்ப் பெருமானின் திருஉருவிற்கு அடுத்தபடியாகக் கூறத்தக்க சிறப்புடையதாகும். பெரு வேளூர் மூர்த்தியின் இடுப்பும் முகமும் மார்பும் பரந்து விரிந்து இருக்கின்றன. பேலூர் மூர்த்தியின் முகமும் இடுப்பும் மார்பும் சிறுத்து இருந்தாலும் அழகாக இருக்கிறது. ஆனால் இந்த மூர்த்தி முகமும் இடையும் சிறுத்தும் கால்களும் கைகளும் திரண்டும் உறுதியாகக் காணப்படுகின்றன. ஆகம விதிகளை யொட்டி முன்கூறிய இரு மூர்த்திகளைப் போல் கைகளும் ஆயுதங்களும் அணிகலன்களும் முத்திரைகளும் பிறவும் உள்ளன. அதிகமான அணிகலன்கள் காணப்படவில்லை. இறைவன் தாமரை (பதும) பீடத்தின் மீது சுகாசனமாய் - சொகுசாக வீற்றிருக்கிறார். தேவி தேவி பதும பீடத்தின் மீது பாங்குற வீற்றிருக்கிறார். அவரது கால்கள் மடிக்கப்பட்டுப் பாதம் பீடத்தின் மீது சாய்ந்த நிலையில் இருப்பதோடு வெளிப்புறமாகச் சாய்ந்து, முழங்கால் முருகனைத் தொட்டுக் கொண்டு இருப்பது போல் உள்ளது. ஆடைகளும் அணிகலன்களும் அணிந்து அழகு திகழ விளங்குகிறார். முருகன் இளமுருகன் நின்ற கோலத்தில் எழிலுடனும் மகிழ்வுடனும் காணப்படுகிறார். பீடம் அழகுற அமைந்திருக்கிறது. முன்கூறிய இருமூர்த்தி களுக்கும் அடுத்தபடியாகத்தான் இதைக் கூறமுடியும். சோமசுகந்த சுகாசன மூர்த்தி பேலூர் இங்கு மூன்றாவதாக இணைக்கப்பட்டிருக்கும் சோமாசு கந்த சுகாசன மூர்த்தியின் திருஉருவம் சேலம் மாவட்டத்தில் உள்ள பேலூரில் உள்ளது. இதுவும் அழகிய படிமங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. மூர்த்தி இந்த மூர்த்தியின் திருஉருவில் சடா மகுடம் சிறந்து எழில் பெற்றிலங்குகிறது. மகுடத்தின் மீது பிறையும் ஊமத்த மலரும் கங்கையும் இடம் பெற்றுள்ளன. காதில் குண்டலமும் கழுத்தில் பொன்மணி மாலைகளும் கைகளில் கடகமும் தோளில் வாகு வலயமும் விரல்களில் மோதிரங்களும் அரையில் ஆடையும் அழகு செய்கின்றன. கைகள் நான்கும் முன்னர் எடுத்துக்காட்டிய பெருவேளூர் மூர்த்தியைப் போன்று அமைந்துள்ளன. கால்களும் அதே போன்று இருக்கின்றன. இந்த உருவங்கள் அசல் சோழர் பாணியில் அமைந்திருக்கிறது. முகத்தில் இன்பமும் அருளும் இணைந்து திகழ்கின்றன. கண்களில் கருணை பொலிகிறது. வலது காதில் மகரக் குழையும் இடது காதில் ஓலைச் சுருள் அல்லது வட்ட மான குண்டலமும் காணப்படுகின்றது என்று கூறலாம். தேவி தேவியின் திருஉருவம் எல்லா அணிகளுடனும் களிப்புடன் காணப்படுகிறது. தலையில் மகுடமும் காதில் தோடும் குண்டலமும் வலது கையில் குவளை மலரும் இடது கையில் வரத முத்திரையும் காணப்படுகின்றன. அரையில் ஆடையும் மேகலையும் மின்னு கின்றன. இடது காலை மடக்கித் தொங்க விட்டுக் கொண்டு வலது காலை மடக்கி முட்டுக் கையைத் தொடும் நிலையில் இருக்கிறார். பாதம் பீடத்தின் மீது இருக்கிறது. முருகன் முருகன் பிள்ளைக் கோலத்தில் நிற்கின்றார். கால்கள் சிறிது வளைந்து காணப்படுகின்றன. அவர் எல்லா அணிகலன்களும் அணிந்து அழகுற நிற்கிறார். சிற்பியின் கை வண்ணம் காணத்தக்கது. தத்துவ உண்மை உலகம் அனைத்தும் பொருளும் சக்தியும்1 பிரிக்க முடியாத வாறு பிணைந்து நிற்கின்றன. அதுபோல் உலகில் ஆணும் பெண்ணும் இணைந்து காணப்படுகின்றனர். பொருளும் சக்தியும் இவ்வுலகில் ஆணும் பெண்ணுமாய்ப் பிரதி பலிக்கின்றன என்று கூறுவதுமுண்டு. ஆணும் பெண்ணும் இயைந்து காணப்படுவது இயற்கை நியதி. பொருளும் சக்தியும் பிணைந்து இவ்வுலகாய்க் காட்சி தருகிறது. அது போல் ஆணும் பெண்ணும் இணைந்து இவ் வுலகாய் மிளிர்கின்றனர். உலகில் உள்ள எல்லாம் ஆண் பெண் வடிவிலே காட்சி அளிக்கின்றன. மரம், செடி, கொடிகள் போன்றவைகள் கூட ஆணும் பெண்ணுமாய் அமைந்துள்ளன. மரம், செடி, கொடி முதலியவைகள் பூத்துக் காய்த்துப் பழுத்து நிற்பதிலே அழகும் மணமும் கவர்ச்சியும் சுவையும் காணப்படுகின்றன. இந்த நியதிப்படியே மக்களும் ஆணும் பெண்ணுமாய் இணைந்து இன்புற்று மக்களைப் பெற்று இவ்வுலகை அழகுபடுத்துகின்றனர். இவ்வுலகில் ஆண் பெண் உறவு இன்றி இருந்தால் அவன் விலங்காகவே இருப்பான். ஆண் பெண் கூட்டுறவிலே நமது மொழியும் கலையும் நாகரிகமும் நாடும் நகரமும் வீடும் அழகும் இன்பமும் பிறவும் பிறந்தன. ஆண் - பெண் கலப்பிலே மக்கள் தோன்றினர். அறிவு பெருகியது; விஞ்ஞானம் வளர்ந்தது. ஆடை, அணிகள், அழகுகள் எல்லாம் மலர்ந்தன. இதை விளக்குவதற்காகவே இந்த அழகிய சோமாசு கந்த மூர்த்தம் பிறந்தது. இதன் பொதுவான தத்துவமும் உலகில் ஆணும் பெண்ணும் கூடி மக்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வது என்பதை உணர்த்து வதேயாகும். சுருங்கக் கூறின் இல்லறமே நல்லறம் என்பதாகும்; இல்லற வாழ்விலே நின்று அழியாப் பேரின்ப வாழ்வு பெறலாம் என்பதேயாகும். துதி தந்தை யாய்த் தாயுமாகித் தரணியாய்த் தரணியுள்ளார்க்கு எந்தையு மென்ன நின்ற ஏழுல குட னுமாகி எந்தை யெம்பிரானே என்றென்று உள்குவார் உள்ளத் தென்றுஞ் சிந்தையுஞ் சிவமுமாவார் திருப்பயற்றூரனாரே - அப்பர் (தேவாரம்) தந்தை தாயுல குக்கோர் தத்துவன் மெய்த் தேவர்க்குப் பந்த மாயின பெருமான் பரிசுடை யவர்திருவடிகள் அந்தண் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும் எந்தை என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே -சுந்தரர் (தேவாரம்) தாயானே தந்தையுமாகிய தன்மைகள் ஆயானே யாயநல் லன்பர்க் கணியானே சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில் மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே - சம்பந்தர் (தேவாரம்) என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தான்ஈசன் துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ? மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத் தன்னையே கோவணமாச் சாத்தினன் காண்சாழலோ - மாணிக்கவாசகர் (திருவாசகம்) குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும் நறவிள நறுமென் கூந்தல் நங்கையோர் பாகத் தானைப் பிறவியை மாற்றுவானைப் பெருவேளூர்ப் பேணி னானை உறவினால் வல்ல னாகி உணருமா றுணர்த்துவோனே சமர சூரபன்மாவைத் தடித்த வேற் குமரன் தாதை நற் கோடிமயம் மேவிய அமரர் கோவினுக்கு அன்புடைத் தொண்டர்கள் அமர லோகம தாளுடையார்களே. சந்திர சேகர மூர்த்தி சிவபெருமானுக்குச் சந்திரசேகரர் என்ற ஒரு சிறப்புப் பெயர் உண்டு. அன்றியும் அவரைச் சந்திரசூடேசுவரர், பிறைசூடி, பிறைசூடிய பெம்மான், பிறைசூடும் பெருமாள் என்றெல்லாம் அழைப்பதுண்டு. அரனார், அன்பர்களுக்கு அருள் அளிக்கும் பொருட்டுப் பல்வேறு காலங்களில், வெவ்வேறு கோலங்களில் தோன்றியுள்ளார். உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் என்பது அப்பர் அடிகளின் அருள்வாக்கு. பசுபதி, பசுக்களின் பாசங்களைத் துடைத்துத் துப்புரவு செய்து தன்னோடு சேர்த்துக் கொள்ள நாடி எழுந்த திருக்கோலங்களில் சந்திர சேகர மூர்த்தம் ஒன்று என்று சைவசமய மெய்யுணர்வு பெற்ற அறிவர்கள் கூறுகின்றனர். இறைவன் கொண்ட அருட்கோலங்கள் எட்டில் சந்திர சேகர மூர்த்தம் ஒரு சிறப்புடைய திருக்கோலமாகக் கருதப்படும். சிவபெருமானுக்குச் சிறப்புடைய சின்னமாகச் சிவனடியார்கள் கூறும் நுதல்விழி, நீலகண்டம், ஐந்துதலை, புலித்தோலாடை, திரிசூலம், இளம்பிறை ஆகியவைகளில் இளம்பிறை தனிச்சிறப் புடையதாகும். அரனார், தம் அழகிய சடாமகுடத்தில் இளம் பிறையை அணிந்திருப்பதாலே அவருக்குச் சந்திரசேகரமூர்த்தி என்ற பெயர் எழுந்தது. அவர் இளம்பிறையை வேண்டும் என்றோ அல்லது அழகுக்காகவோ சடைமீது அணியவில்லை. அவர் சந்திரனைச் சடையில் தரித்ததற்கு ஒரு நல்ல புராணக் கதை உண்டு. சிவ பெருமான் காட்சிதரும் ஒவ்வொரு நிலைக்கும் அவர் உடலில் அணிந்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு புராணக் கதைகள் உண்டு. அதற்குப் பல தத்துவப் பொருள்களும் உண்டு. இங்கு அவர் தம் முடி மீது தாங்கி இருக்கும் கூனல் இளம்பிறைக் குரிய புராணக் கதையை மட்டும் ஆரோய்வோம். பிறைசூடிய புராணக்கதை தக்கன் என்பவன் அச்சுவினி அத்தம் அனுடம் அவிட்டம் ஆயிலியம் உரோகிணி உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி இரேவதி கார்த்திகை இன்னோரன்ன இருபத்தேழு ஏந்திழைகளை (உடுக்களை)ப் பெற்றிருந்தான். அப்பெண்கள் அனைவரும் அழகு மிக்கோர்களாய் அறிவிற் சிறந்தோர்களாய்த் திகழ்ந்தனர். அவர்கள் அனைவரும் வளர்ந்து நல்ல பருவம் உற்றுக் கவின்மிகு கன்னியர் களாய்க் காட்சி அளித்தனர். சந்திரன் விண்ணில் திகழும் நட்சத்திர அழகிகளைக் கண்டு காதலுற்றான். உடனே அப்பெண்களின் தந்தை யிடம் சென்று அவர்களைத் தனக்குத் திருமணம் செய்து தருமாறு கேட்டான். தக்கன் தன்மக்கள் இருபத்தேழு பேர்களையும் அழகு மிக்க சந்திரனுக்குத் திருமணஞ்செய்து கொடுக்க இணங்கினான் என்றாலும் அவன் சில நிபந்தனைகளை விதித்தான். தன் மருமகனாக வரப்போகும் சந்திரனிடம் இந்த இருபத்தேழு மனைவிகளிடத்திலும் பாரபட்சமின்றி நடந்து வரவேண்டும் என்று கூறினான். அதற்கு சந்திரன் சம்மதித்தான். திருமணம் நடைபெற்றது. சில நாட்கள் சென்றதும் சந்திரன் கார்த்திகை, உரோகிணி ஆகிய இரு பெண்களிடத்தில் மட்டும் காதல் உடையவனாக இருக்கிறான் என்று தக்கன் அறிந்தான். தக்கன் மக்களில் ஏனைய இருபத்தைந்து பேர்களும் மனம் நொந்து தங்க ளுடைய தந்தையின் பாற் சென்று தங்கள் கணவர் ஓரவஞ்சகமாய்த் தங்களை ஒதுக்கித் தங்கள் உடன் பிறந்தாள் கார்த்திகையிடமும் உரோகிணியிடமும் காதல் கொண்டு தங்களைப் புறக்கணித்து வருவதைக் கூறிக் கண்ணீர் பெருகக் கதறி முறையிட்டனர். அதைக் கேட்ட தக்கன் சினமுற்றுச் சந்திரனை அழைத்து இருபத்தேழு மனைவிகளுடனும் மிக்க அன்பு செலுத்தி நடக்கும்படி வற்புறுத் தினான். ஆனால் சந்திரன் மீண்டும் உரோகிணியிடமும் கார்த்திகை யிடமுமே அன்பு செலுத்தி வந்தான். பிற மனைவிகளை அலட்சியம் செய்து வந்தான். எனவே புறக்கணிக்கப்பட்ட சந்திரன் மனைவிகள் இருபத்தைந்து பேர்களும் மீண்டும் தம்முடைய தந்தையிடம் போய்த் தங்களின் கணவன் சந்திரன் தங்களைப் புறக்கணித்து வருவதைக் கூறி அழுதனர். தக்கன் கோபங்கொண்டு, சந்திரன் நாளுக்கொரு கலையாகக் குறைந்து மறைக என்று சாபம் இட்டான். அதன் பலனாகச் சந்திரனின் பதினாறு கலைகளில் பதினைந்து கலைகள் தேய்ந்து மறைய ஒரு கலை மட்டும் எஞ்சி நின்றது. இந்நிலையில் சந்திரன் செய்வதின்னதெனத் தெரியாது இந்திரனிடம் போனான். இந்திரன் நான்முகனிடம் போய் முறையிடும்படி கூறினான். நான்முகன் இதற்குத் தன்னால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை. சிவபெருமானிடம் போய் முறையிடு. அவரால்தான் இந்தச் சாபத்தை நீக்க முடியும் என்றான். சந்திரன் கயிலை சென்று சிவபெருமானை அணுகித் தனது நிலையைக் கூறி தனக்குச் சாப விமோசனம் அளிக்கும்படி கேட்டான். தன்னை வந்தடைந்தார்க் கெல்லாம் இன்பந்தரும் சிவபெருமான் சந்திரனிடம் கருணை கொண்டு அவனுக்கு அபயம் அளித்து அவனைத் தம் சடா மகுடத்தின் மீது எடுத்தணிந்து அவனுக்கு வாழ்வளித்தார். நீ என் சடைமுடி மீது இடம் பெற்றமையால் உன்னுடைய சாபம் நீங்கப் பெற்றது. நாளுக்கொரு கலையாக வளர்ந்து முடிவில் ஒருகலை மட்டும் உன்னை விட்டு நீங்காமல் நீ தேய்ந்தும் வளர்ந்தும் வரக் கடவை என்று வரம் அளித்தார். சந்திரன் ஒரு கலையாய்த் தேய்ந்து நிற்கும் பொழுது சிவபெருமான் சடா மகுடத்தில் இடம் பெற்றதால் சந்திரன் சிவபெருமான் சடையில் இளம்பிறை வடிவில் காட்சி தருகிறான். இதனால் சிவபெருமான் சந்திரசேகரமூர்த்தி என்று போற்றப் பெற்றார். சந்திரன் கலைகள் எல்லாம் அழிந்து மக்கள் இரவில் அல்லல் உறாவண்ணம் இறைவன் திருவருள் பாவித்துச் சாபத்தால் தேய்ந்த சந்திரனைத் தன் முடிமீது வைத்து உயர்த்தியதால் அவன் ஒளி பெற்றுய்ந்தான். சந்திரன் கொடிய சாபத்தால் தன் ஒளியை இழந்து பெருமை குன்றிச் சிறுமையடைந்தாலும் இறைவன் பால் சென்றதால் சாபம் நீங்கப் பெற்றதுமன்றி உலகில் எவரும் பெற்றிராத பேரும் புகழும் எய்திச் சிவபெருமான் தலைமுடி மீது இலங்கும் பெருமையை எய்தினான். இதனை நமக்கு இந்தச் சந்திர சேகர மூர்த்தம் எடுத்துக்காட்டுகிறது. சந்திரன் இயல்பால் எளியவன்தான், செயலால் குற்றமுடையவன்தான் என்றாலும் சிவபெருமான் பாதத்தில் சரண்அடைந்து சிவபெருமான் முடியில் ஏற்றப் பெற்று எவரும் எய்தமுடியாத உயர்வைப் பெற்றான்.1 பொருந்த வானுறை நாள்களை நாள்தொறும் புணர்வோன் அருந்த வானவர்க்கு ஆரமுது அன்புடன் அளிப்போன் திருந்தவானவர்க்கு அரியவன் செஞ்சடை முடிமேல் இருந்த வானவன் பெருமையை யார் கொலோ இசைப்பார் அந்தி ஆரண மந்திரத்து அன்புடன் அவனை வந்தியாதவர் மண்ணிலும் வானினும் இல்லை - சிரிவில்லிப்புத்தூரார் மைவார் கருங்கண்ணி செங்கரம் கூப்ப, மறந்தும் மற்றைப் பொய்வா வைரிற் புகாது தன் பொற்கழற் கேஅடியேன் உய்வான் புகஒளிர் தில்லை நின் றோன் சடை மேலதொத்துச் செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே எனத் திருச்சிற்றம்பலக் கோவையில், மணிவாசகப் பெருமான் எடுத்துக் காட்டியுள்ளார். இங்குக் கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர் ஆகிய சந்திரசேகர மூர்த்தியின் அடியினைச் சார்ந்தவர்கள் என்றும் இடையூறுகள் நேராது இன்பம் அடை வார்கள் என்று எடுத்துக்காட்டப் பட்டுள்ளது. அகப்பொருள் இலக்கண நூற்களில் பிறை தொழுக என்றல் ஒரு துறையாக வைத்துப் பாடப்பட்டது. இது சந்திர சேகர மூர்த்தியின் சிறப்பை நன்கு எடுத்துக்காட்டுவதாகும். முற்காலத்தில் திருமணத்தை விரைவில் பெற விழைந்த இளமங்கையர்கள் இளம் பிறையைக் கண்டு தொழுது வந்தனர் என்று தெரிகிறது. கயல்வந்த கண்ணியர் கண்ணிணை யால், மிகு காதரத்தால் மயல்வந்த வாட்டம் அகற்றா விரதம் ஏன் ? மாமதியின் அயல்வந்த ஆடரவு ஆடவைத் தோன், அம்பலம் நிலவு புயல்வந்த மாமதில் தில்லை தன் னாட்டுப் பொலிபவரே என்று திருச்சிற்றம்பலக் கோவை கூறுகிறது. மாமதியின் அயல்வந்த ஆடரவு ஆட வைத்தோன் என்று கூறுவதனால் சிவபெருமான் பாம்பையும் மதியையும் பகை தீர்த்து ஓரிடத்தே விளங்கச் செய்ததுபோல் தலைமகனையும் தலைமகளையும் ஊடல் அகற்றி ஒன்றுபடச் செய்வது நின்கடமை என்று தோழிக்குத் தலைவன் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. இங்கும் சந்திரசேகர மூர்த்தத்தின் பெருமை நன்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஆகமச் சான்றுகள் சுப்பிரபேதாகமம் சந்திரசேகர மூர்த்தியின் திரு உருவ அமைப்பின் இலக்கணத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறது. மேருமலைச் சாரலில் சிவபெருமான் கட்டு வாய்ந்த உடலும் இளமையும் எழிலும் ஒளிரத் திகம்பரராய்த் தோன்றினார். தங்களின் தவச் செருக்கால் தான் எனும் அகந்தை தலைக்கேறித் தங்களுக்கு இறைவன் இன்னருள் தேவையில்லை என்று கர்வம் கொண்டிருந்த தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிமார்கள் இறைவனின் அருள் எனும் காப்பு இன்மையால் பிச்சாடனரின் அழகில் மயங்கி கற்பை இழந்தனர். அவ்வாறே முனிவர்களும் திருமாலின் மோகினி வடிவில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்து நிறையழிந்தனர். இதனால் முனிவர்கள் சிவபெருமான் மீது சினந்து சிவபெருமானை அழிக்கக் கங்கணம் கட்டினர். பெருமானைத் தங்களின் வேள்வியால் கருக்கிவிடக் கருதி ஒரு பெரும் யாகம் நடத்தினர். அவர்களின் யாக குண்டத்திலே மானும் (கிருஷ்ணாமிருகாவும்) முயலகனும் (அபசுமார புருசனும்) பரசும் (மழுவும்) எருதும் (இடமும்) புலியும் சிங்கமும் ஏனைய விலங்குகளும் தோன்றின. முனிவர்கள் இவ்விலங்குச் சக்தியை ஏவி அரனாரை அழித்து வரும்படி ஆணையிட்டனர். ஒப்பற்ற சக்தி வாய்ந்த பேரறிவினனாகிய முக்கட் கடவுள் முனிவர் களின் சிற்றறிவை எண்ணிச் சிரித்தார். முனிவர் அவரை அழித்து வருமாறு ஏவிய மானையும் மழுவையும் இரு கரங்களில் ஏந்திக் கொண்டனர். முயலகனைத் தம் காலால் மிதித்து அவன் என்றும் எழா வண்ணம் அவன் மீது ஒரு காலை ஊன்றிக் கொண்டு நின்றார். புலி, யானை முதலிய கொடிய விலங்குகளைக் கொன்று அவைகளின் தோலை ஆடையாக அரையில் அணிந்தும் போர்வையாகப் போர்த்தியும் கொண்டார். கபாலத்தையும் இளம் பிறையையும் சடையில் சூடிக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சுப்பிர பேதாகமத்தில் சிவபெருமான் அணிந்துள்ள இந்த அணிகலன்களின் தன்மைகளைப் பற்றி எடுத்துக் காட்டுவ தாவது : சிவபெருமான் முக்கண், நாலுகை, இளம்பிறை, ஊமத்தம் பூக்கள், பாம்புகள் முதலியனவெல்லாம் அவரை அழிக்க வந்தவை களேயாயினும் அவற்றைத் தம் சடா மகுடத்தில் இடம் பெறச் செய்தார். அரையில் புலித்தோலைப் பிணைத்துக் கொண்டார். கழுத்தில் காணும் மாலைகள், கையில் காணும் கெயூரம், மார்பில் காணும் யக்னோபவீதம், காதில் காணும் குண்டலங்கள் போன்றவைகள் எல்லாம் அவரது அரிய அங்கங்களை அணி செய்யும் அணிகலன் களேயாகும். பூர்வ கரணாகமம் சிவபெருமானுடைய பிட்சாடன மூர்த்தம், கங்காள மூர்த்தம், அரியர்த்த மூர்த்தம், மங்கை பங்கன் மூர்த்தம், சுகாசன மூர்த்தம், காமாந்தக மூர்த்தம், தட்சணாமூர்த்தம் ஆகிய திருஉருவத் தோற்றங்களில் அரனார் அருகே அம்பிகையின் உருவம் இருக்கக் கூடாது என்றும் ஏனைய மூர்த்தங் களிலெல்லாம் சிவபெருமான் திருஉருவத்தின் பக்கத்தில் உமா தேவியின் உருவம் இருக்கலாம் என்றும் கூறுகிறது. உமாதேவியின் உருவத்தின் உயரம் சிவபெருமான் காதளவிற்கு இருக்கலாம். இவ்வாறு அமைக்கப்படும் திருஉருவம் உத்தம வகுப்பிற்கு உரியதாக உயர்த்திக் கூறப்படும். உமாதேவியின் உருவம் உமைபங்கனின் வாயளவு இருப்பின் மத்திம வகுப்பிற் சேர்ந்ததாகும். பெருமா னுடைய தூக்கிய கைஅளவு இருந்தால் அதம வகுப்பிற்குரியதாகக் கொள்ளப்படும். காரணாகமத்தின் இறுதியில் நிருத்த மூர்த்தி, கங்காள மூர்த்தி, தட்சணாமூர்த்தி ஆகிய மூர்த்திகளின் நிறம் வெண்மையாகவும், பிற மூர்த்திகளின் நிறம் செந்நிறமாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பெற்றுள்ளது. சந்திரசேகர மூர்த்தியின் திருஉருவம் மூன்று வகைப்படும். அவை கேவால சந்திர சேகர மூர்த்தி, உமா சகித சந்திர சேகர மூர்த்தி, ஆலிங்கன சந்திர சேகர மூர்த்தி எனப்படும். நமது கோயில்களில் இந்த மூன்று விதமான மூர்த்திகளும் இடம் பெற்றிருக்கின்றன. அம்சுமத் பேதாகமத்தில் கோபால சந்திரசேகர மூர்த்தியின் வலது பக்கமுள்ள கரங்களில் ஒன்று அபய முத்திரையாகவும் இடது பக்கமுள்ள கைகளில் ஒன்று வரத முத்திரையாகவும் ஏனைய வலது கைகளில் ஒன்றில் மானும் மற்றக் கையில் மழுவும் திகழ வேண்டும். சிவபெருமானுடைய திருஉருவம் நின்ற கோலத்தில் காணப்பட வேண்டும். உடம்பு எவ்விதமான வளைவும் பெற்றிருக்கக் கூடாது. இந்த நிலை சிற்ப நூற்களில் சமபங்கம் என்று கூறப்படுகின்றது. சிவபெருமான் தலையில் சடாமகுடம் திகழ வேண்டும். அதில் இளம்பிறை எழில் ஒழுகும் அணிபோல் ஏற்றம் பெற்றுத் திகழ வேண்டும். முக்கண்ணும் எழில்பெற்றுத் துலங்க வேண்டும். சிவ பெருமான் எல்லாவிதமான அணிகலன்களாலும் அலங்கரிக்கப் பட்டவராய் இருக்க வேண்டும். அவரது அரையில் மஞ்சள் நிறமான பட்டு (பீதாம்பரம்) புனைந்திருக்க வேண்டும். ஆடையின் நுனி முழங்காலுக்குக் கீழ் வரையும் இறங்கி இருக்க வேண்டும். இடுப்பில் இறுகக் கட்டப்பட்ட ஆடை மடிக்கப்பட்டதாய், பெரிய மடிப்புகள் இருகால்களுக்கும் இடையே புகுந்து பின்பக்கமாகச் சென்று இடுப்பில் செருகப்பட்டிருக்க வேண்டும். கை வரத முத்திரையாக இருக்க நேரிட்டால் நீண்ட கையாகக் காணப்படலாம். மணிக்கட்டு இடுப்பின் உயரத்தைத் தொடும் அளவிற்கு அமைக்கப் பட்டிருக்க வேண்டும். கை விரல்களின் நுனிகள் நேத்திர மூலசூத்திரத்தைத் தொட்டிருக்க வேண்டும். கைகளின் விரல்கள் சற்று வளைந்து இருந்தால் கையின் பின்புறம் சற்று எடுப்பாக நாபி சூத்திர அளவு இருக்க வேண்டும். சம பங்க நிலையுள்ள படிமங்களில் இராசத குணத்தன்மை வெளிக்காட்டப்பட வேண்டும். கைகளை கர்த்தரி முகக்கை முத்திரை நிலையில் அமைத்து மானும் மழுவும் அவை களில் இடம் பெறச் செய்ய வேண்டும். இளம் பிறைவடிவம் சடா மகுடத்தின் இடது அல்லது வலது பக்கம் இணைந்து இலங்க வேண்டும். சிவபெருமானின் திருஉருவம் சிவப்பு வண்ணம் உள்ளதாகக் காணப்பட வேண்டும். உத்தர காமிகாகமம் சிவபெருமானின் தோற்றத்திற்குச் சில விளக்கம் கூறுகிறது. வலது பக்கமுள்ள சிம்மக் கரணம் கடகக் கை கட்டிய வாலாம்பிதக் கை நிலைகளில் அமைந்திருக்கலாம் என்று கூறுகிறது. பெருமானின் பின்பக்கம் இருக்கும் இரு கைகள் கத்திரிக்கை முத்திரை நிலையில் இருக்கவேண்டும். இக்கா சூத்திரத்தைவிட உயரமாக இருக்கக் கூடாது. அதாவது தோளுக்கு மேல் மழுவின் உச்சியும் மானின் உச்சியும் காது அல்லது கர்ண சூத்திரத்தை விட உயரமாக இருக்கக் கூடாது. எப்பொழுதும் மான் சிவபெருமானுடைய திருஉருவத்தை நோக்கிய வண்ணமாக இருக்க வேண்டும் அல்லது அதனின்று அகன்று இருக்க வேண்டும். மழுவின் உச்சி எப்பொழுதும் அதினின்று விலகித் திரும்பி இருக்க வேண்டும். சந்திர சேகர மூர்த்தியின் திருஉருவில் இடது காதில் இரத்தின குண்டலம் அல்லது பத்மபத்திரம் ஆகியவைகளில் ஏதாவது ஒன்று காதணியாக இருக்கலாம். வலது காதில் மகர குண்டலம், சிம்ம குண்டலம் அல்லது பத்திரகுண்டலம் ஆகியவைகளில் ஏதாவது ஒன்று காதணியாக இருக்கலாம். தலைமயிரின் சுருள் பின்பக்கம் கீழே காதளவு தொங்க வேண்டும். அப்போது சடை அல்லது முடியின் பின்னல்கள் அல்லது புரிகள் திருஉருவின் வலது இடது பக்கங்களில் தோள்வரை தொங்க வேண்டும். சந்திர சேகர மூர்த்தியின் உருவம் முத்துக்கள் கோத்த கழுத்து மாலைகளும் (முத்தாரங்களும்) அணி தரும் மணிகள் பதித்த வில்லைகளும் (பதக்கங்களும்) பொருந்தி அழகோடு காணப்பட வேண்டும். மார்பில் பூணூல் (யக்னோப வீதம்) சன்ன வீரம், உதரபந்தனம் ஆகியவை களும் கைகளில் கெயூரங்களும் கடகங்களும் (காப்புகளும்) விரல்களில் மோதிரங்களும் இடுப்பில் அரைக்கச்சும் பாதங்களில் சதங்கைகளும் தண்டைகளும் இலங்க வேண்டும். இம்மூர்த்தி பத்ம பீடத்தில் திகழும். இவருக்கு நான்கு கைகள் உண்டு. இஃதன்றி இம்மூர்த்தத்தின் பிரிவில், உமா சகித சந்திர சேகர மூர்த்தி, ஆலிங்கன சந்திர சேகர மூர்த்தி, கேவால சந்திர மூர்த்தி ஆகியவர்களைப் பற்றியும் அமைப்பைப் பற்றியும் விளக்கம் தரப்பட்டுள்ளது.1 சிற்பச் சான்றுகள் சிற்பரத்தினம் என்னும் ஏட்டில் சந்திர சேகர மூர்த்தியின் உருவ அமைப்பைப் பற்றி நன்கு கூறப்பட்டிருக்கிறது. இம்மூர்த்தியின் உருவம் சுவரில் அல்லது பலகையில் தீட்டப்பட்டால் வெண்மை யாக இருக்க வேண்டும். அல்லது ஞாயிற்றின் செவ்வண்ணம் அல்லது பொன்னின் மஞ்சள் நிறம் தீட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. சந்திர சேகர மூர்த்தியின் உருவம் உயர்ந்ததோள்கள், நீண்ட கைகள், தாமரை இதழ் போன்ற கண்கள், மூன்று அரைக் கச்சைகள் (கடிசூத்திரங்கள்) உள்ளதாக அமைந்திருக்க வேண்டும். இம்மூர்த்தி யின் உருவத் தோற்றம் பதினாறு வயது கடந்த கட்டழகு வாய்ந்த காளையின் கம்பீரத் தோற்றமும் பொலிவும் பெற்றிருக்க வேண்டும். தொண்டை நீல நிறமும் பால்வடியும் அழகிய முகமும் காதுகளின் கவினுறு குண்டலங்களும் பருத்து உறுதியான கழுத்தும் உள்ளதாய் காணப்பட வேண்டும். கைகள் நான்கு எட்டு, பத்து, பதினாறு வரை இருக்கலாம். இவர் சாந்தமூர்த்தி. இவரது உருவில் உள்ள நான்கு கைகளில் பின்பக்கமுள்ள கைகள் ஒன்றில் மூவிலை வேலும் மற்றொன்றில் உடுக்கையும் தாங்கி எஞ்சியிருக்கும் முன்பக்கமுள்ள கைகள் ஒன்று வரதக் கையாகவும் மற்றொன்று அபயக் கையாகவும் இருக்க வேண்டும். எட்டுக் கைகள் உடைய திரு உருவமாயின் அதன் தோற்றம் எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதற்கு மூலப் பிரதிகளில் விளக்கம் ஒன்றும் காணப்படவில்லை. பத்துக் கைகள் இருந்தால் கட்சா கடகம் இரண்டும் தவிர்த்து ஏனைய ஆயுதங்களும் கைகளும் காணப்படலாம். கசாசுரனைக் கொல்லும் நிலையில் மூர்த்தி பத்துக் கைகளைப் பெற்றிருந்தால், வலது கைகள் அக்சமாலை, வாள், சக்தியாயுதம், தண்டம், சூலம் உடையதாயும், இடது கைகள் கட் வாங்கம் பாம்பு கபாலம் கடகம் மான் முதலியவைகளைப் பெற்றதாயு மிருக்கலாம். மூர்த்தி முப்புரம் எரிக்கும் நிலையில் பதினாறு கைகள் பெற்றிருக்கலாம். இம்மூர்த்தி முன்னர்க் கூறிய பொருள்களோடு பின்வரும் பொருள்களும் உடையவராய்க் காணப்பட வேண்டும். அதாவது அம்பு, சக்கரம் ஆகியவைகளும் வலது கையில் கதையும் வில்லும் இடது கையில் மணியும் சங்கும் இடம் பெற்றிருக்க வேண்டும். வைரவ மூர்த்தி பதினாறு கைகள் உடையவராய் இருக்க வேண்டும். மேற்கொண்டு எழுந்த கைகளில் உடுக்கை, சங்கு காணப்பட வேண்டும். காசியப சிற்ப நூலில் கேவால சந்திர சேகரமூர்த்தி சமபாதமாக இருப்பார். இம்மூர்த்தி முக்தி அளிப்பவராவார். கத்திரி முத்திரை யுடன் கூடிய பரகைகளின் (பரஹதங்களின்) நுனியானது இக் காசூத்திர முறையில் சமமாக இருக்க வேண்டும். அந்தக் கை களின் நடுவிரல்கள் கழுத்து மட்டமாக இருக்க வேண்டும். வலது கை அபயக் கையாகவும், இடது கை அபயக் கையாக அதோமுக மாகவும் இருக்க வேண்டும். கையின் அடித்தலமானது இடுப்பு மட்டமாக இருக்கவேண்டும். நுனிக்கை(கராக்கிரகம்) மேட்டிராக்கிர சமமாக இருக்கவேண்டும். நடுவிரல் நுனியிலிருந்து தொடைவரை ஒதுக்கம் நான்கு அங்குலமாகும். வரதக் கைத்தலத்தின் (இடது உள்ளங்கையின்)மேற்பாதியின் பின் பக்கம் நாபிமட்டமாகத் தூக்கி இருக்கவேண்டும். வலது கையில் மழுவும் இடது கையில் பெண்மானும் திகழ வேண்டும். மழு, மான் ஆகியவைகள் வெளி நோக்காகவாவது உள்நோக்காகவாவது இருக்கலாம். இம்மூர்த்தி சடைமுடி அணிந்தவராயும் வலது பக்கத்தில் சந்திர கலை இடம் பெற்றவராயும் காணப்படுவார். அல்லது இடது பக்கத்தில் இளம்பிறைச் சந்திரனை அணிந்திருப்பவராய்க் காணப் படுவார். இந்தச் சந்திரசேகர மூர்த்தி பீதாம்பரம் என்னும் பொன்னிறப் பட்டாடை கட்டி அனைத்தணிகளும் அணிந்து அழகான முகமும் முக்கண்ணும் உடையவராய் இருப்பார். ஆடையின் தலைப்பு நளகாந்தமாக இருக்க வேண்டும். மேலாடை, தொடை நடுவரை இருக்க வேண்டும். இந்த மூர்த்தி பிரபா மண்டலத்துடன் (பிரபாவளி யுடன்) திகழ்வார் என்று - இம்மூர்த்தியின் திருஉருவம் உருவாக்கு வதற்குரிய வழிகளும் அளவை முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. நின்ற கோலத்தில் காட்சி தரும் இம்மூர்த்தி சமபாதமாகவும் அனைத்தங்கங்களும் நேராக உயர்ந்தும் காணப்படுவார். வலது கையில் மழுவும் இடது கையில் மானும் உடையவராய் இம்மூர்த்தி காணப்படுவார். மானின் உயரம் 13½ அங்குலம். மான், மூர்த்தியின் முகத்தை நோக்கிக் கொண்டிருப்பது போல் காணப்படும் என்று சாரவதீய சித்திர கர்ம சாத்திரம் கூறுகிறது. மேலும் மானின் உயரத்தைப் போல் மழுவின் உயரமும் இருக்கும் என்றும் மூர்த்தி சடா மகுடம் உடையவராக அல்லது கிரீட மகுடமாவது அணிந் திருப்பவராய்க் காணப்படுவார் என்றும் கூறுகிறது. சந்திர சேகரரின் இடப்பாகத்தில் இளம்பிறையும் வலப்பாகத்தில் ஊமத்தம் பூவும் மகுடத்தின் நடுவில் பாம்பு வடிவமான மலரும் (நாகப்பூவும்) இருக்கும். மகுடத்தின் நாற்புறமும் நான்கு பூரிமங்களால் அணி செய்யப் பட்டிருக்கும் (பூரிமம் - இலை வடிவமான அலங்காரம்). முகம் தெளிவாகவும் எழிலாகவும் இருக்கும். இவரது உடல் தூய்மையான வெண்மை நிறம் (படிக நிறம்) உடையது. கால்களும் கைகளும் உடலுக்கு ஏற்றபடி பொருத்தமாக அமைந்திருக்கும். அரையில் புலித்தோல் அல்லது பீதாம்பரம் பிணைத்திருக்கப் பட வேண்டும். பீதாம்பரம் கணுக்காலுக்கு மேல் ஆறு அங்குலம் உயர்ந்திருக்கும். தொப்புளுக்குக் கீழே ஐந்து அங்குலம் ஆடையின் எல்லை அமைந்திருக்கும். புலித் தோலாடை நடுத்தொடைவரை தொங்கும். பூணூலும் நாக சூத்திரமும் (பாம்பு வடிவான கயிறும்) இம்மூர்த்தி பூண்டிருப்பார். கழுத்தில் முத்து மாலைகளும் உபக் கிரீவமும் (உள் கழுத்தணியும்) இடது காதில் கர்ணிகை (தாமரை மொக்கு அணி) அல்லது சங்கபத்திரமும் (சங்கு வளையம்) வலது காதில் மகாகுண்டலம், சிம்மபத்திரம், வியாள குண்டலம் (பாம்பு வடிவான காதணி) ஆகியவைகளில் ஏதாவது ஒன்றும் அணிந்திருக்க வேண்டும். கையில் கடகமும் விரலில் மோதிரமும் கைகளில் மூவிலை வேல், தாமரை, அங்குசம் போன்றவைகளும் பாதத்தில் பாதசரமும் கால் விரல்களில் மோதிரங்களும் அணிந்திருக்க வேண்டும். சந்திர சேகர மூர்த்தியின் முகம் சிருங்கார ரச பாவத்தை வெளிப்படுத்துவதாகக் காணப்பட வேண்டும். மேலும் இவர் நேராக அமைந்த சமமான பாதங்களுடன் சிருங்கார ரச பாவமும் அகன்ற விழிகளும் அழகிய முகமும் இராவ பாவமும் பவளம் போன்ற மேனியும் உடையவராய் அவரது நான்கு கைகளில் இரு கைகள் அபயக் கை களாகவும் ஏனைய இரு கைகளில் மானும் மழுவும் தாங்கிய கைகளாகவும் காணப்பட வேண்டும். சடா மகுடத்தில் திங்களும் சுகுமாரமான அமைப்பும் எழிலும் இளமையும் துள்ளும் ஒளி மிக வாய்ந்த உடலும் உடையவராய்த் திகழ வேண்டும் என்று மேலும் விரிவாகச் சிரி சாரசுவதீய சித்திர கர்ம நூல் கூறுகிறது. அகத்தியரால் எழுதப்பெற்ற சகளாதிகாரம் என்னும் சிற்பநூல் - சந்திரசேகரர் வலது கையில் அபயமுத்திரையும் இடது கையில் வரதமும் தாங்கி இருப்பார். அல்லது இடது கை தொடை மீது வைத்திருப்பார் என்று கூறுகிறது. வெளிப்புற வலக்கையில் மழுவும் இடக்கையில் மானும் தாங்கி இருப்பார். சடா மகுடத்தில் இடப் பாகத்தில் இளம் பிறை இலங்கும். சுத்தமான செம்பவள வண்ணத்தோடு ஒளிவீசும் உடலோடும் உருவத்தோடும் முக் கண்ணோடும் நிறைவான அழகோடும் சிருங்கார பாவம் தவழும் முகத்தோடும் மூர்த்தி அமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும், விசாலமான முகமும் அகன்ற அரிய விழிகளும் புன்னகை தவழும் இனிய முகபாவமும் அபய வரதக் கைகளும் இளம் பிறையைத் தலையிற் சூடிய நிமிர்ந்த தோற்றமும் சமபாத நிலையும் பவள மேனியும் மானையும் மழுவையும் ஏந்திய கைகளும் பத்ம பீடத்தின் மீது பாங்குற நிற்கும் பாதங்களும் அமைந்தவராய்ச் சந்திர சேகர மூர்த்தியின் திருஉருவம் காணப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதையொட்டியே ஏனைய சிற்ப நூற்களும், சந்திர சேகர மூர்த்தியின் திருஉருவ இலக்கணங்களை விரித்துக் கூறுகின்றன. படிமங்களின் விளக்கம் 5. (அ) சந்திர சேகரர் - தொல்பொருள் காட்சிசாலை, சென்னை. சென்னை, மத்திய அரசாங்கத் தொல்பொருள் காட்சி சாலையில் உள்ள இவ்வுருவம் ஆகம விதிகளை அனுசரித்து உருவாக்கிய சந்திர சேகர மூர்த்தியின் திருஉருவப் படமானது அழகிய பத்ம பீடத்தின் மீது சிறிதும் வளையாது நேராக நிமிர்ந்து நிற்கும் நிலையில் உள்ளது. இதனுடைய முன்புறக் கைகளில் வரதக்கையும் அபயக் கையும் அழகுறக் காணப்படுகின்றன. பின்புறக் கைகளில் ஆகம விதிகளை அனுசரித்து மானும் மழுவும் இடம் பெற்றுள்ளன. சிற்பி அக்கரை யோடும் திறமையோடும் இப்படிமத்தை உருவாக்கி இருக்கிறார். மூர்த்தியின் பொலிவான தோற்றம் நன்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இத்திருஉருவின் அமைப்பில் உடற்கட்டு நன்றாக எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. மூர்த்தியின் உருவ அமைப்பும் அணிகலன் களும் ஆயுதங்களும் ஆடைகளும் கடகங்களும் சடா மகுடமும் அழகாக இருக்கின்றன. முகத்தில் நல்ல பாவங்கள் காணப்படு கின்றன. உதடுகளில் புன்னகை தவழ்கிறது. மான் சிவபெருமான் திருமுகத்தை நோக்குகிறது. பரசும் ஆகம விதிகளுக்கேற்ப இருக்கிறது. இருகாதுகளில் ஒன்று குண்டலத்தையும் மற்றொன்று தோடு போன்ற காதணியையும் பெற்றுள்ளது. மார்பில் பூணூலும் உதர பந்தமும் காணப்படுகின்றன. சிற்பி தன் சிற்ப அறிவை நன்கு பயன்படுத்தித் தன்னுடைய கைத்திறன் அனைத்தும் நன்கு காணுமாறு திருஉருவை உருவாக்கியுள்ளார். இவ்வுருவம் கி.பி. 10 அல்லது 11ஆம் நூற்றாண்டில் உருவாக்கப் பெற்றிருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த மூர்த்தியின் படிமம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திர சேகர மூர்த்தியின் திருஉருவில் இளமையின் பிரதிபலிப்பு எழிலுடன் காணப்படுகிறது. சந்திரசேகரர் - விளமல் (தஞ்சை) விளமல் - திருவாரூர் பதஞ்சலிசுவரர் கோயிலில் உள்ள ஒரு அழகிய செம்புப் படிமம். இப்படிமம் சோழர்களின் கலைநயம் நன்கு மிளிறுமாறு சிற்பியால் சிறப்புறப் படைக்கப்பட்டுள்ளது. ஆகம விதிகளை அனுசரித்து எழில் ஒழுக உருவாக்கப்பட்டுள்ளது. அடியில் அமைக்கப்பட்டிருக்கும் பத்ம பீடம் பாங்குடன் ஒளிர்கிறது. மூர்த்தியின் அபயகரமும் வரதக் கரமும் அழகு பொலிய அமைந்துள்ளன. பின்புறமுள்ள இருகரங்களில் மானும் மழுவும் திகழ்கின்றன. மான் அவரது தோளின் மீது பாய்வதுபோல் காணப் படுகின்றது. இடுப்பு சிறிதாக அதில் ஆடைகளும் அணிகலன்களும் கணிசமாக இலங்குகின்றன. கழுத்தில் பல்வேறு விதமான காரை, மாலை போன்ற கழுத்து அணிகளும் மார்பில் பூணூலும் திகழ் கின்றன. முகம் மிகப் பொலிவுடன் காணப்படுகின்றது. முகம் முன்னர் கூறப்பட்ட சந்திரசேகர மூர்த்தியின் முகத்தைவிட கவின் பெற்றிலங்கு கிறது. சிற்பி இத்திருஉருவில் தம் கைவண்ணம் முழுவதையும் காட்டி விட வேண்டும் என்று கருதி சிறப்பாகச் செய்திருக்கிறார். முகத்தில் அழகு பொலிகிறது. அருள் ஒளிர்கிறது. அன்பு ததும்பு கிறது. இந்தத் தெய்வத் திருஉருவில் முகத்திற்கேற்ப மகுடமும் மாண்புற்றிலங்குகிறது. உடல் நல்ல கட்டுவாய்ந்ததாய்க் காணப்படு கிறது. அவரது அழகிய முகத்தில் காணப்படும் அன்பு பொங்கும் இனிய பாவம் ஏற்றம் உற்றதாய் விளங்குகிறது. காதில் குண்டலங் களும் கைகளில் கடையங்களும் கவின் பெற்றொளிர்கிறது. இத்திரு உருவம் 12ஆம் ஆண்டில் உருவாக்கப் பெற்றிருக்கலாம் என்று அறிஞர்களால் மதிப்பிடப் படுகின்றது. இந்த மூர்த்தி உடல் அமைப்பை உற்று நோக்கினால் அதில் எழிலும் இளமையும் நன்கு திகழ்வதைக் காண முடியும். இதில் அணுவளவும் ஆகம விதிகள் முரணாகாதவாறு சிற்பி உன்னிப்பாக உற்று நோக்கிப் படைத் துள்ளார். சந்திர சேகரர் - தியாகராயர் கோயில், திருவெற்றியூர். (செங்கற்பட்டு மாவட்டம்) இது தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பனைமலை என்னும் ஊரில் தவளகிரிசுவரர் திருக்கோயிலில் உள்ள செம்புப்படிவம் உள்ளது. இந்தப் படிமம் பத்ம பீடத்தின் மீது நிற்கிறது. இந்த உருவம் கடைந்தெடுத்த கவின்பெறும் உருவம் போல் காணப்படுகிறது. இதன் முன் எடுத்துக் காட்டிய விளமல் மூர்த்தியை விட நீண்ட சடா மகுடம் இருப்பதால் அதைவிட இது கட்டையாய் இருப்பது போல் காட்சி அளிக்கிறது. சடாமகுடம் அழகாக காந்தார சிற்பப்பாணி யில் காணப்படுகிறது. முகம் அழகுற அமைந்திருந்தாலும் அதிக மான கனிவு காணப்படவில்லை. காதிலும் கழுத்திலும் மணிக்கட்டி லும் காலிலும் அணிகலன்களும் நன்கு பொருத்தப்பட்டுள்ளன. வழக்கம்போல் பின்புறமுள்ள கைகளில் மழுவும் மானும் காணப் படுகின்றன. முன்புறமுள்ள கைகளில் அபயமுத்திரையும் வரத முத்திரையும் திகழ்கின்றன. மார்பில் பூணூலும் மார்பின் கீழே உதரபந்தமும் அரையில் ஆடையும் அணிபெற்றுள்ளன. இந்தத் திருஉருவில் கால்கள் கனத்து மரக் கட்டை போல் காணப்படுகின்றன. வயிறு, மார்பு, கழுத்து, முகம், கை போன்ற வைகள் தனிச் சிறப்புடையதாய் செய்யப்பட்டுள்ளன. இது 11ஆம் ஆண்டின் இறுதியில் அமைக்கப்பட்ட அழகிய படிமம் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். ஒரு காதில் மகரக் குழையும் மற்றொரு காதில் தோடும் கழுத்திலும் கைகளிலும் ஆகமங்களில் கூறும் அழகிய அணிகளும் பெற்று மூர்த்தி கச்சிதமாகக் காணப்படுகிறார். காதுத் துவாரங்கள் அகலமாயும் பல அணிகளை புனைந்து கொள்வதற்கு ஏற்றதாய்க் காதுகள் நீண்டும் காணப்படுகின்றன. சடையில் கபாலமும் பாம்பும் இலங்க சடாமகுடம் உயரமாயும் எடுப்பாகவும் அமைந்துள்ளது. சடா மகுடம் காந்தார பாணியில் அமைக்கப்பட்டது போல் திகழ்கின்றது. தத்துவ விளக்கம் மக்கள் தவறு செய்வது இயல்பு. தவறு செய்தோர் சிவபெரு மானை நண்ணித் தம் தவற்றை ஒளியாது அவரிடம் முறையிட்டுக் கண்ணீர் விட்டுக் கதறி மன்னிப்புக் கோரினால் இறைவன் மனம் இளகி மன்னிப்பு அருளுவன் என்பதை இம்மூர்த்தம் காட்டுகிறது. சிவபெருமான் அருளும் அன்பும் நிறைந்தவன். உயிர்கள் மீது நீங்காத அன்பு கொண்டவன். எல்லாக் குற்றங்களையும் மன்னித்து மாண்பு அருள்பவன். சிவபெருமானைச் சரண் அடைபவர்கள் எல்லா வகையான பேற்றையும் நன்மையையும் எய்த இயலும் என்பதைச் சந்திர சேகரமூர்த்தம் மெய்ப்பிக்கின்றது. பாம்பைக் கண்டு அஞ்சும் மதி சிவபெருமான் திருமுடியில் ஏற்றப்பெற்றதால் அதற்குப் பயம் ஒழிந்தது. அதுபோல் பெருமான் திருவடிகளை அடையப் பெறுவோர்கள் பிறவித்துயரிற்பட்டு அலமந்து அஞ்சி வாழாது அருள் பெற்று மகிழ்வர். சிவபெருமானின் சீரிய செஞ்சடை எரிகின்ற நெருப்பை ஒத்துள்ளது. அந்நெருப்பை அவிக்க இமையோர் சொரிகின்ற திருப்பாற்கடல் போன்றது கங்கை. கங்கைக்கருகில் சடையில் இடம் பெற்றுள்ள சந்திரன் ஆற்றில் மிதந்து செல்லும் தோணியைப் போலக் காணப்படுகிறது. தோணியைச் செலுத்தும் கழிபோல இறைவன் உடலில் உலவும் பாம்பு உள்ளது. எளியவராயினும் வலியவராயினும், தவறு செய்து அதனால் துன்புறும் பொழுது சிவபெருமானைத் தேடி அடைந்து அடைக்கலந் தேடினால் நிச்சயம் அவர்களுக்கு அடைக்கலம் அளித்து அவர்கள் இன்னலை அகற்றி அவர்கள் எதிர்பாராத அளவு இன்பம் அளித்து உயர் பதவிகளையெல்லாம் உவந்து அளிப்பான் என்பதைச் சந்திர சேகர மூர்த்தம் நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகிறது. சந்திரன் சாப விமோசனம் பெறச் சென்றான். அவன் விமோசனம் பெற்றதுடன் பெருமானின் திருமுடியில் இடம் பெறும் உயர்நிலையும் பெற்றுள்ளான். துதி விளக்கம் நீணி லாவர வச்சடை நேசனை பேணி லாதவர் போதுள வோட்டினோம் வாணி லாமயி லாடு துறைதொழும் காணி லார்க்கும் கடுந்துய ரில்லையே (அப்பர் - தேவாரம்.) தோடுடைய செவி யன்விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடையபிர மாபுரம் மேவிய பெம்மானிவனன்றே (சம்பந்தர் - தேவாரம்) கையது கபாலம் காடுறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர் மெய்யது புரிநூல் மிளிரும்புன் சடைமேல் வெண்திங்கள் சூடிய விகிர்தர் பையர வல்குற் பாவையர் ஆடும் பாச்சிலாச் சிராமத்தெம் பரமர் மெய்யரே ஒத்தோர் பொய் செய்வதாகில் இவரலா தில்லையோ பிரானார் (சுந்தரர் - தேவாரம்) அளிக்கின்ற நின்கருணைக் கையில் வாங்கவு நீங்கி இப்பால் மிளிர்கின்றஎன்னை விடுதி கண்டாய் வெண்மதிக்கொழுந்தென் றொளின்ற நீண்முடி உத்தரகோச மங்கைக் கரசே தெளிகின்ற பொன்னு மின்னும் அன்ன தோற்றச் செழுஞ்சுடரே (மாணிக்கவாசகர் - திருவாசகம்) பிச்சாடன மூர்த்தி உலகில் மக்கள் முயற்சியால் முன்னேறலாம் என்பர் சிலர். ஆண்டவன் துணையின்றி மக்கள் எவ்வளவு முயன்றாலும் முன்னேற முடியாது என்று சிலர் கூறுவர். சிலர், மக்கள் வேண்டினாலும் சரி, வேண்டாவிடினும் சரி, முயற்சி செய்வார்க்கு ஆண்டவன் வலியவந்து உதவுவான் என்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தேவாரத்தி லிருந்தோ திருமந்திரத்திலிருந்தோ திருக்குறளிலிருந்தோ தங்கள் கருத்தை வலியுறுத்துவதற்கேற்ற பாக்களை மேற்கோளாக எடுத்துக் காட்டுவர். பிறர் மறுத்தால் தாங்கள் கூறும் கருத்தே அப்பாவில் ஒளிர்கிறது என்று அதற்குப் பதவுரையும் பொழிப்புரையும் கருத்துரையும் அவசியமானால் விரிவுரையும் கூறுவர். கேட்போர் எது சரியென்று முடிவு காண முடியாது திகைத்து நிற்பார்கள். ஆனால் சைவப் பெரும்புலவர்கள், மனிதன் முயற்சியால் மட்டும் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற முடியாது. முயற்சியும் ஆண்டவனின் துணையும் இருந்தால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். இறைவனை வேண்டுபவர்க்கு முயற்சி தோன்றும்; துணைவரும்; அருள் பெருகும்; வெற்றிவரும் என்பர். மாதேவனை மறந்து, மாதவம் புரிந்து, வேள்வி, யோகம், சடங்கு, மந்திரம், தந்திரம் முதலியவைகளால் நாம் நாடும் நலனும், பலமும், வெற்றியும் பெற முடியும் என எண்ணி இறுமாந்து ஒரு சில ஏகான்ம வாதப் பித்தர்கள் முற்காலத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எங்களுக்கு ஆண்டவனின் அருளோ அவனது அன்போ, அவனது துணையோ, உதவியோ அவசியம் இல்லை என்று கூறி மமதை கொண்டிருந்தனர். ஆண்டவனை வேண்டாது, அவனை நம்பாது உலகில் வாழ்ந்து வந்தனர். தவத்தால் பல நலன்களையும் பெற்று வந்தனர். அவர்கள் சில ஆசனப் பயிற்சியால் ஆக்கையை வலுவுறச் செய்து வந்தனர். யோகப் பயிற்சியால் பல அற்புத சக்தியைப் பெற்றிருந்தனர். பெண்கள் கூடப் பயிற்சியால் நல்ல உடற்கட்டும் அழகும் பெற்றவர்களாய் விளங்கினர். அவர்கள் கூட ஆண்டவன் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவர்கள் தாமே கடவுள் என்று வேதாந்தம் பேசி வந்தனர். தவ வலியால் எல்லாம் பெற முடியும் என்று தர்க்கம் பண்ணினர். தாங்கள் பெற்ற நலனைக் கூறிக் கர்வமும் கொண்டனர். இது தமிழர்கண்ட தெய்வ உண்மைக்கு மாறானது என்று எவ்வளவு கூறினும் எடுத்துக் காட்டியும் ஏற்க வில்லை. மக்கள் எவ்வளவு நோன்பு நோற்றாலும் தவம்பல இயன்றி னாலும் அவர்கள் நிறைவான நிலையைப் பெற முடியாது. இதனால் மக்கள் உடல்பலம் பெற முடியும். ஆன்ம பலம் பெற முடியாது. ஆன்ம பலம் பெற ஆண்டவனின் திருவருள் துணைவேண்டும் என்று சைவநெறிகூறுகிறது. பிச்சாடன மூர்த்தம் - இறைவனை இம்மியளவும் எண்ணாது தன் முயற்சியால் எல்லாம் எய்தலாம் என்று எண்ணியவர்கள் கூற்று பொய்யானது; அவர்கள் வாழ்க்கை யில் தோல்வியுற்றனர்; நிறையழிந்தனர் என்பதை மெய்ப்பிப்பதாக இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. புராணச் சான்றுகள் முற்காலத்தில் தாருகாவனத்தில் சில முனிவர்கள் இருந்தனர். அவர்கள் ஆண்டவனை வேண்டாதவர்கள். தாமே கடவுள் என்றிடும் ஏகான்மவாதப் பித்தங் கொண்டவர்கள். தங்களின் தவ வலிமையால் எல்லா நலனையும் பெற முடியும் என்று எண்ணி இருந்தனர். ஆண்டவனின் அருள், அவனின் துணை தங்களுக்கு அவசியம் இல்லை என்று இறுமாந்திருந்தனர். ஆனால் அவர்கள் வேதங்களி லும், வேள்விகளிலும் நம்பிக்கை கொண்டவர்கள். யோகம் பயின்றவர்கள். தங்களின் கிரியைகளால் சில சித்திகள் வாய்க்கப் பெற்றவர்கள். அதேபோன்று அவர்களின் மனைவிமார்களும் திருவருள் துணையின்றித் தாங்கள் கற்புடையவர்களாயும் ஒழுக்க முடையவர்களாயும் வாழ முடியும் என்று செருக்குற்றவர்கள். சிவ பெருமான் துணையைச் சிறிதும் நாடாதவர்கள். சிவபெருமானைச் சிறிதும் சிந்தியாமலே மக்கள் வேள்வியால் தவத்தால் யோகத்தால் திறம்பட வாழ்ந்து இன்பநிலை எய்த முடியும் என்ற தத்துவத்தை நிலைநாட்ட முன் வந்தனர். இறைவன் அவர்கள் மீது கொண்ட அருட் பெரும் கருணையால் அவர்கள் கண்ட முடிவு தவறு என்பதை அவர்களுக்கும் அவனிக்கும் அறிவுறுத்தி அவர்களைத் தடுத்தாட் கொள்ளத் திருவுள்ளங் கொண்டார். சிவபெருமான் திருமாலை எழின்மிக்க மோகினி வடிவம் பெறச் செய்தார். சிவபெருமான் தான் ஒரு ஏழைப் பிச்சைக்கார உருவத்தைத் தாங்கிக் கொண்டார். ஆனால் அவர் அழகெல்லாம் ஒருங்கே திரண்ட ஓர் ஆண் அழகனாய் காணப்பெற்றார். செவ்விய மேனியும் சிறந்த நோக்கும் பரந்தமார்பும் பவள வாயும் உருண்டு திரண்ட தோள்களும் கட்டு வாய்ந்த உடலும் உள்ள இளங்காளை யாய் எழில் ஒழுகும் இளந்தோன்றலாய்ப் புறப்பட்டார். அரையில் ஆடையே இல்லை. அங்கங்களில் அணிகளே இல்லை. பயங்கர மான பாம்புகளே அவரது அணிகலன்களாய் அங்கமெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தன. கையில் ஒரு மண்டையோட்டைப் பிச்சைப் பாத்திரமாய்த் தலைகீழாய்ப் பிடித்திருந்தார். அவர் அருகில் செல்லும் அவரது மனைவியைப் போன்று மோகினி கவின்பெரும் கட்டழகியாய்க் காணப்பட்டாள் என்றாலும் அவள்மீது அழகிய அணிகலன்களோ நல்ல ஆடைகளோ இல்லை. விலையுயர்ந்த மணிகள் பதித்த அணிகலன்கள் அறவே இல்லை. அவள் அரை நிர்வாணமாய், முழுநிர்வாணமாய்ப் பிச்சைக்காரனாய்ப் பித்தனாய்ச் செல்லும் தன் கணவன் பின் சென்றாள். இருவரும் ஆண்டவனை வேண்டாத முனிவர்கள் வாழும் தாருகாவனத்தை அடைந்தனர். அங்குள்ள முனிவர்களின் குடிசைகளை அடைந்து பிச்சை கேட்டனர். அங்குத் தவநிலையில் இருந்த முனிவர்கள் திருமாலின் மோகினி வடிவத்தைக் கண்டு மயங்கினர். தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்தனர். மையல் கொண்டு மெய் மறந்தனர், நெறி பிறழ்ந்தனர். தவம் இழந்தனர். அதேபோல் தாருகாவனத்து முனிவர்களின் மனைவிமார்களும் பிச்சாடன வடிவத்தைக் கண்டு காமுற்றனர். கற்பைப் பறி கொடுத்தனர். அவரைக் கட்டிப் பிடித்துத் தழுவ விரைந்தனர். தம் இல்லிற்குள் வந்து கொஞ்சிக் குலவி இன்பந்தர வேண்டும் என்று மன்றாடினர்; கெஞ்சினர். இவன் பிச்சைக்காரன், பித்தன், ஆடையில்லாதவன், சடையன், பாம்பை அணிந்தவன் என்றெல்லாம் எண்ணாது பெண்மையின் பண்பை இழந்து அவரது மேனியழகைக் கண்டு காம வெறி கொண்டு எல்லாப் பெண்களும் பிச்சாடனரைப் பின்பற்றிச் சென்றனர். அவர்களின் கற்பு அழிந்து, கர்வம் குன்றியது. இறைவன் தன் வேடத்தைக் கலைத்து, தான் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். வேண்டுபவர்களுக்கு யாண்டும் இடும்பை இல. தம் அன்பர்கள் இடறுற்றுக் கீழே சாய விடாது அவர்கள் அருகே சென்று ஊன்று கோலாய் நின்று அவர்கள் விழுந்து விடாது துணை செய்பவன் என்று எடுத்துக் காட்டி நின்றார். இந்த வரலாற்றினைக் கந்த புராணத்தில் ததீசி யுத்தரப்படலம் விரிவாக விளக்குகிறது. இஃதன்றி சிவபெருமான் கையில் கபாலம் வைத்திருப்பதற்கும் சில ஆயுதங்கள் வைத்திருப்பதற்கும் வேறு புராணக் கதைகள் உள்ளன. சிவபெருமானுடைய புதல்வர் பிரமன். அவருக்குச் சிவபெருமானைப் போல் ஐந்து தலைகள் இருந்தன. ஒரு நாள் தொலைவில் பிரமன் வருவதைப் பார்த்துச் சிவபெருமான் வருவதாக எண்ணி நீட்டி உட்கார்ந்து கொண்டிருந்த பார்வதி மரியாதைக்காகத் தம் கால்களை மடக்கிக் கொண்டார். அருகில் வந்ததும் சிவபெருமான் அல்லர், பிரமன் என்று அறிந்து வெட்க முற்றார். இதைப் பார்வதி பரமசிவனிடம் பகர்ந்தாள். பரமன், பிரமன் சிரசுளில் ஒன்றைக் கொய்தார். அதுமுதல் பிரமன் நான்முக னானார், இது ஒரு புராணக் கதை. இப்புராணக் கதையை யொட்டி எழுந்த மற்றொரு புராணக் கதையில் - சிவபெருமான் பிரமனுடைய ஒரு சிரசைக் கிள்ளினார். ஆனால் அது கீழே விழாமல் சிவபெருமான் கையிலே ஒட்டிக் கொண்டது. சிவபெருமான் அந்த பிரமதோசம் நீங்கக் கையில் கபாலம் ஏந்தி நிர்வாணியாய் நீணிலமெங்கும் திரிந்தலைந்து இறுதியாக இமயமலைச் சாரலில் உள்ள பிரம்ம கபாலம் என்னும் இடத்திற்கு வந்ததும் அவர் கையில் ஒட்டிய கபாலம் கீழே விழுந்தது. இது வட நாட்டில் எழுந்த சுமார்த்த சமயத்தைத் தழுவி எழுந்த புராணக் கதை. பிரம கபாலம் ஏந்தி எங்கும் திரிந்தலைந்த வரைப் பிட்சாடனர் என்று கூறுவர். ஆனால் வட இந்தியாவில் பிட்சாடனர் உருவங்களும் கோயில்களும் விழாக்களும் தலங்களும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. சிற்ப நூற்களில் கூறப்படுவதாவது: தேவாசுரப் போரில் பிரமனின் ஒரு சிரசானது அறுந்து அசுரர் பக்கத்தில் போய் விழுந்தது. அதனால் அசுரர்கள் விருப்பம் நிறைவேறியது. அசுரர் களின் பாண (அம்பு) பலத்தினாலே விரட்டப் பட்ட தேவர்கள் பரமசிவனைச் சரணம் அடைந்தனர். அசுரர்களை வெற்றி கொள்ளுவதற்காகவும் உலகின் நன்மைக்காகவும் அசுரர்களை அழிக்கவும் சிவபெருமான் பிரமனின் சிரசை வகித்தார். அதனால் அண்டங்கள் அனைத்தும் காப்பாற்றப்பட்டன. பிரமனின் சிரசைக் கொய்ததனால் உண்டான பிரமஹத்தியைப் போக்கவும் உலகங் களுக்கு உபகாரமாகவும் உயிர்களின் நன்மைக்காகவும் கபாலத்தைக் கையிலிருந்து விடுவிக்கவும் சிவ பெருமான் பிட்சாடன வேடத்தைத் தரித்தார் என்று சிற்ப நூல்களில் கூறப்படுகின்றன.1 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருப்பராய்த்துறை என்னும் ஊர் உள்ளது. திருச்சி-ஈரோடு இருப்புப் பாதையில் எழுமனூர் புகைவண்டி நிலையத்திலிருந்து 1½ மைல் தொலைவில் திருப்பராய்த் துறைக் கோயில் இருக்கிறது. இது பாடல் பெற்ற தலம். பரப்பு நீர் வருகாவிரித்தென்கரைத் திருப்பராய்த் துறை என்று அப்பர் அடிகள் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள இறைவர் தாருகாவனேசுரர் என்றும் திருப்பராய்த்துறை நாதர் என்றும் கூறப்படுவார். பராய் மரங்கள் நிறைந்த காடுகள் ஆகையால் தாருகாவனம் என்று கூறப்படுகிறது. இங்கு முற்காலத்தில் தவம் இயற்றிய முனிவர்கள் தங்கள் தவப்பேற்றால் கர்வங் கொண்டிருந்தனர். இவ்வுலக மக்களுக்கு இறைவன் என்று எவரும் தேவையில்லை யென மயங்கி நின்றனர். மக்கள் தவத்தினால் எதையும் பெற முடியும் என்று தருக்குற்று இருந்தனர். சிவபெருமான் அவர்களின் அறியாமைக்கு இரங்கினார் என்றாலும் அவர்களின் செருக்கடக்கப் பிட்சாடனர் வேடங் கொண்டார். திருமாலை மோகினி வடிவங் கொள்ளச் செய்தார். இருவரும் கணவனும் மனைவியுமாக தாருகா வனத்திற்குள் புகுந்தனர். அங்கு உறைந்த முனிவர்களும் முனிவர் களின் மனைவிகளும் மயங்கினர். அவர்கள் சிவபெருமானின் அழகிலும் மோகினி வடிவிலும் காமுற்று நிறை இழந்தனர். அப்பால் அவர்கள் தன்னறிவு பெற்று யாகங்கள் செய்து அதில் எழுந்த புலியைக் கொண்டு சிவ பெருமானை அழிக்கும்படி ஏவினர். சிவபெருமான் அப்புலியைப் பிடித்துக் கொன்று அதன் தோலை யுரித்து அரையில் ஆடையாகக் கட்டிக் கொண்டார். மீண்டும் முனிவர்கள் தவமியற்றி யானை, மான், பாம்பு, பூதங்கள் முதலியவை களைத் தோன்றச் செய்து சிவபெருமானை அழித்து வரும்படி அவைகளை ஏவி ஆணையிட்டனர். அவைகள் ஆணையின்படி சிவ பெருமானிடம் போந்து அவரிடம் மோத முற்பட்டன. சிவபெருமான் யானையைக் கொன்று அதன் தோலையுரித்து போர்வையாகப் போர்த்திக் கொண்டார். மானை அவர் ஒரு விளையாட்டுப் பொருளாகக் கையில் ஏந்திக் கொண்டார். பாம்புகளைக் கழுத்தி லும், கைகளிலும், தலையிலும், இடுப்பிலும் அணிகலன்கள் போல் அணிந்து கொண்டார். பூத கணங்களைத் தம் ஏவலாளர்களாக இருக்குமாறு பணித்தார். இதனால் முனிவர்கள் தோல்வியுற்றுத் தமது அறியாமைக்கு வருந்திப் பெருமானிடம் மன்னிப்புக் கேட்டனர். தவத்தினாலும் முயற்சியினாலும் மக்கள் விரும்பிய பலனை அடைய முடியும். தவமும் முயற்சியும் செய்யும் பொழுதும் பெறும் பயனை நுகரும் பொழுதும் இறைவனுடைய திருவருள் துணை இல்லா விட்டால் அவர்கள் வழுக்கி விழுந்து விடுவார்கள். இதுவே இந்த மூர்த்தம் உணர்த்தும் உண்மை. ஆகமச் சான்றுகள் பிட்சாடன மூர்த்தியின் படிமம் கிட்டத்தட்ட கங்காள மூர்த்தியின் படிமம் போன்று இருக்க வேண்டும். இடது கால் பூமியின் மீது உறுதியாக ஊன்றிக் கொண்டும் வலது கால் சிறிது வளைந்து காலைத் தூக்கி நடக்கும் பாவனையிலும் இருக்க வேண்டும். முன்பக்கத்து வலது கையும் பின்பக்கத்து இடது கையும் கங்காள மூர்த்தியின் கைகளைப் போல திகழ வேண்டும். முன் பக்கத்து இடது கையில் கபாலமும் பின்பக்கத்து வலது கையில் உடுக்கையும் காணப்பட வேண்டும். தலையில் சடைகள் விரிந்தும் (சடாபாரம் விழுந்தும்) அல்லது வட்டமாகக் கட்டப்பட்டும் (சடா மண்டலமாகவும்) சடையின் மேற்புறம் இளம்பிறை சூடப்பட்டும் இருக்க வேண்டும். சடை அணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். நெற்றியில் பட்டம் கட்டப் பட்டிருக்க வேண்டும் அல்லது அணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். பெருமானும் உடம்பில் எவ்வித ஆடைகளும் அணிகளும் அரைக் கச்சைகளும் அணிந்திருக்கக் கூடாது. அரையில் அரவம் சுற்றியிக்க வேண்டும். கை, கழுத்து, தலை முதலிய உறுப்புகளில் பாம்புகள் அணிகளாய்த் திகழலாம். மார்பில் வெண்மையான பூணூலும் கழுத்தில் நீல நிறமும் நெற்றியில் திரி புண்டரமும் திகழ வேண்டும். கங்காள தண்டம் கூடாது அந்த இடத்தில் மூவிலை வேல் மயில் இறகுகள் காணப்படலாம். காலில் பாதக்குறடுகள் காணப்படலாம். பாதக் குறடுகள் இல்லாமலும் இருக்கலாம். கை, கபாலம் ஏந்தித் தொப்புள் வரை தூக்கப்பட்டிருக்கலாம். மற்றொரு கை காதளவு உயர்ந்து, மணிக்கட்டினின்று காது 16 அங்குலத் தொலைவில் இருக்கலாம். இது பெரிதும் கங்காளர் உருவத்தை அனுசரித்தே இருக்கலாம். சுப்பிரபேதாகமம் சிவன் கரத்திலுள்ள கபாலம் நான் முகனுடையது என்றும், கங்காளர் திருமாலுடையது என்றும் பிரம்மா, விஷ்வச்சேனா ஆகிய இருவரையும் சிவபெருமான் சேதப் படுத்திய கதையில் திருமாலின் திருமூர்த்தம் அங்கீகரிக்கப்பட்டும் அனுசரிக்கப்பட்டும் வந்திருக்கிறது என்றும் கூறுகிறது. சிற்பநூற் சான்றுகள் சாரசுவதீய சித்திர கர்ம சாத்திரம் என்னும் நூல் பிட்சாடன மூர்த்தியின் இலட்சணத்தைப் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறது: பிட்சாடன மூர்த்தி நான்கு கைகளும், மூன்று கண்களும் கொண்டு புன்னகை பூத்த முகத்தவராய் இருக்க வேண்டும். அவர் ஆடையின்றி நிர்வாண கோலத்துடன் காணப்பட வேண்டும். காதிலும் கழுத்திலும் கை யிலும் பிறவிடங்களிலும் எல்லா அணிகலன்களும் அணிவிக்கப்பட்டிருக்கலாம். கால்களில் பாதரட்சைகள் காணப்படலாம். வலது கால் குஞ்சிதமாகவும் இடது கால் சுதிதமாகவும் இருக்க வேண்டும். இந்த மூர்த்தி முற்றிலும் பிட்சைக்காரக் கோலத்திலே காணப்பட வேண்டும். இவர் சடாமண்டலத்தினராகவாவது விரிந்த சடையை யுடையவராகவாவது இருக்கலாம். முன்பக்கமுள்ள வலது கை மானைத் தொடுவது போலவும், பின் பக்கமுள்ள வலது கை உடுக்கை ஏந்தியிருப்பது போலவும் இடது பக்கமுள்ள முன்கை பிட்சைப் பாத்திரத்தை (கபாலத்தை) ஏந்தி நிற்பது போலவும் பின்புறத்து இடக்கை மயில்தோகையை வைத்துக் கொண்டு இருப்பது போலவும் காணப்பட வேண்டும் (கைகளின் அளவு கங்காளமூர்த்திக்குரியவைகளாகும்.) கைகள் நண்டுக் கையாகவும் (கடக அதமாகவும்) ஊர்த்துவ முகமாகவும் இருக்கும். வலது பக்கமுள்ள கை கீழேதொப்புள் வரை மட்டமாக இருக்க வேண்டும். அந்தக் கையின் மணிக்கட்டின் உச்சியானது வயிற்றிலிருந்து 5 அல்லது 6 அங்குல ஒதுக்கமுடையதாக இருக்க வேண்டும். அந்த விலாப்பக்கத்திலிருந்து நடுக்கையின் உச்சியில் - நடுவில் உள்ள ஒதுக்கம் 5 அங்குலமாகும். வரதக்கை யானது (இடது கையானது) பக்கத்தில் வலது கை மட்டத்திற்குச் சமமாகவும் ஒதுக்கத்தில் 2 அங்குலம் குறைவாகவும் இருக்க வேண்டும். இந்தக் கையின் மணிக்கட்டின் கீழ்த்தலமானது வயிற்றின் மேல் தடத்திற்குச் சமமாக இருக்க வேண்டும். நாபியிலிருந்து மணிக் கட்டு வரை ஒதுக்கம் 18 அல்லது 19 அங்குலம் இருக்க வேண்டும். கை அல்லது உள்ளங்கை ஆகியவைகளின் மத்தியில் உள்ள ஒதுக்கம் 7 அங்குலமாகும். இந்த மூர்த்தியின் கைநுனி கட்சகட்டமாக (கட்சம் - கக்கம்) உயர்ந்திருக்கும். தோள் மூலத்திலிருந்து (கையின் அடிப்பக்கத்திலிருந்து) மணிக்கட்டுவரையில் ஒதுக்கம் 12 அங்குலம். தநாதாந்தமானது 13 அல்லது 14 அங்குலமாகும். இம்மூர்த்தியின் பக்கத்தில் பூதம் காணப்படும். அதன் உயரம் மூர்த்தியின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பாகமாக இருக்கலாம். இந்தப் பூதத்தை அடுத்து நிற்கும் பூதமானது இந்தப் பூதத்திள் காது மட்டம் முகவாய்க் கட்டை வரை அல்லது தோள் மட்டம் வரை உயரம் உடையதாய் இருக்கலாம். இந்தப் பூதத்தின் வாய்க்கு மேலே பொக்கணம் என்னும் பாத்திரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பூதத்தின் அளவை சதுதானமாகக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். பூதம் இடது பக்கம் இருக்க வேண்டும். இரண்டு பக்கங் களிலும் பெண்கள் காணப்பட வேண்டும். பிட்சாடனரின் உருவம் சமபங்க வடிவில் இருக்க வேண்டும். அதன் பாதாங்குட்டங்களின் மத்திய அளவு கங்காளருக்குக் கூறப்பட்டிருப்பது - போல் கால் பெருவிரல்களின் நடுவின் ஒதுக்கம் 18-அங்குலமாகும். கபாலத்தை ஏந்தி நிற்கும் கையின் பின் பக்கத்திலிருந்து நாபி மத்தியம் வரையில் ஒதுக்கம் 16 அங்குலமாகும். விசேசித்து 10 அங்குலமிருக்கலாம். மற்றவைகளை முன் கூறியது போலவே கொள்ள வேண்டும். நடுநெற்றி, நாசிகாக்கரம், உதட்டின் வலதுபுறம், கழுத்தின் வலது பக்கம், இருதயத்தின் வலது பக்கம், நாபியின் வலது பக்கம், திகபாகத்தின் மணிக்கட்டின் மத்திமம் - இந்த இடங்களில் சூத்திரம் விழ வேண்டும். காசியப சில்ப நூலில் பிட்சாடனரின் வடிவம் மேற்கூறிய விதமாகக் கூறப்படினும் சில புதிய விளக்கங்களும் காணப்படு கின்றன. அது அடியில் வருமாறு: பிட்சாடனர் உருவம், நெற்றி நடுவிலிருந்து வலது பக்கத்தில் 7 அல்லது 8 யவை அளவிலும் மூக்கின் நுனியிலும் கீழ் உதட்டின் இடது பக்கத்திலும் நடுக்கழுத்தின் இடது பக்கத்திலும் இருதய மத்தியிலும் - தொப்புளுக்கு இடது பக்கத்தில் 10-யவை அளவிலும் ஊன்றிய இடது காலின் (திதாங்கிரியின்) மணிக்கட்டு முட்டின் நடுவிலும் பூர்வ சூத்திரத்தைத் தொங்க விடலாம். நாதமானது அபங்கம் அல்லது சமபங்கமாக இருக்கலாம். காலில் பாதுகை தரித்தும் பாதுகை இல்லாமலும் இருக்கலாம். விரித்த சடாபாரம் அல்லது சடா மண்டலம் வட்ட வடிவில் கட்டப் பட்டிருக்க வேண்டும். நெற்றிப் பட்டை தரித்திருக்க வேண்டும். சடாபாரத்தில் நிலவும் மண்டையோடும் திகழ வேண்டும். மூர்த்தி எல்லா அணிகலன்களும் பூண்டு கடிசூத்திரம் இல்லாமல் இருக்க வேண்டும். பிட்சாடனர் தூய வெண்மை நிறம்வாய்ந்தவராயும் பலவிதப் பாம்புகளை அணிகலன்களாக அணிந்தவராயும் வெண்மை யான பூணூல் பூண்டவராயும் நீலகண்டனாகத் திரிபுண்டரம் தரித்துப் பத்ம பீடத்தின் மீது இருக்க வேண்டும். சகளாதிகாரமும், பிட்சாடனர் உருவம் மேற்குறித்தவாறே இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் சிறிது காய்ந்த முகத்துடன் மேலாடையுடன் இடுப்பில் பாம்பு அரைஞாணுடன் காணப்பட வேண்டும் என்று கூறுகிறது. சிற்பரத்தினம் என்னும் நூலும் மேற்கூறிய சிற்பசாத்திர விதிகளை அனுசரித்தே பிட்சாடனமூர்த்தியின் இலக்கணத்தை விவரிக்கிறது. படிமங்களின் விளக்கம். 1. பிட்சாடன மூர்த்தி - வழுவூர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வழுவூரில் பிட்சாடன மூர்த்தியின் அழகிய வெண்கலப் படிமம் உள்ளது. இப்படிமத்தில் இடது பக்கத்துப் பின்புறக் கை கடகக் கையாக (நண்டுக் கையாக) இதர பிட்சாடனர் உருவங்களில் அமைந்திருப்பது போல் காணப் படுகிறது. அவசியமானால் இக்கையில் கங்காள தண்டமோ சிகி பிஞ்சாவோ இணைத்துக் கொள்ளலாம். மூர்த்தியின் அருகில் மான் நிற்கிறது. சில இடங்களில் மூர்த்தியின் பக்கத்தில் மான் இருப்ப தில்லை. காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலில் உள்ள பிட்சாடனர் உருவில் இரு கைகள் தாம் உள்ளன. ஒரு கையில் சிக்கிபிஞ்சாவும் மற்றொரு கையில் சின்முத்திரையும் அக்சமாலையும் காணப்படு கின்றன. இம்மூர்த்தியின் உடம்பில் ஆடை எதுவும் காணப்பட வில்லை. தலையில் சடாமகுடம் இல்லை. கங்காளர் உருவத்தி லிருந்து பிட்சாடனர் உருவம் சற்றுக் குறைந்ததாகவே காணப்படு கிறது. பிட்சாடனமூர்த்தி நல்ல முகக்கட்டும் உடல் வனப்பும் உடையவராக விளங்குகிறார். இது திருமறைக்காடு (வேதாரணியம்) இடபாந்தக மூர்த்தியோடு ஒப்புநோக்கற்குரியது. ஒருவேளை இவ்விருபடிமங்களையும் ஒரு சிற்பியே செய்திருந்தாலும் இருக்கலாம். இவ்விரு உருவங்களும் கைதேர்ந்த சிற்ப விற்பன்னரால் செய்யப்பட்டிருக்கலாம் என்று கருத முடியும். பொதுவாக வழுவூர் பிட்சாடன மூர்த்தியின் படிமம் மிக அழகுறச் செய்யப்பட்டுள்ளது என்று கூறலாம். இங்கு இணைக்கப் பட்ட நான்கு படிமங்களின் திருஉருவங்களும் மிகச் சிறப்புடையவை. ஆகமவிதிகளை அனுசரித்தும் சிற்ப நுற்களைத் தழுவியும் இவற்றை ஆக்கிய சிற்பி மிகத் திறம்படச் செய்து முடித்திருக்கிறார். இதில் குற்றம் கூறுவதற்கெதுவும் இல்லை. மூர்த்தியின் அருகில் காணப் படும் மானும் பூதமும் மிகப் பொலிவுடையனவாகவே காணப்படு கின்றன. 2. பிட்சாடன மூர்த்தி - திரிபுவனம் திரிபுவனம் பிட்சாடன மூர்த்தியின் திருஉருவப் படிமம் மிக அழகு வாய்ந்த படிமங்களில் ஒன்றாகும். இது திருவெண்காடு, கும்பகோணம், தஞ்சைப் பிட்சாடனர் உருவத்தோடு ஒப்பு நோக்கற் குரியது. இதன் முகமும் அங்கங்களும் அழகாக உள்ளத்தைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படிமத்தின் வலது முழங்காலிற்குக் கீழே ஒரு மணி கட்டப்பட்டிருக்கிறது. இது இதர படிமங்களில் காணப்படவில்லை. ஆகமங்களில் இது கூறப்பட வில்லை. இந்த மூர்த்தியின் சடைமுடியில் இடைஇடையே காணப் படும் நெளிவும் குழைவும் எழிலும் முகத்தில் பொலிவும் மோகனப் புன்னகையும் காண்போர் உள்ளத்தைக் கவர்வனவாகக் காணப்படு கின்றன. பிட்சாடனர் சிறிது சாய்வாக நின்று கொண்டு மிகச் செல்லமாக வளர்க்கும் மான் மறிக்கு உணவு ஊட்டும் அரிய கரம் ஒய்யாரமாக அமைந்துள்ளது. இந்த மான்மறி பிட்சாடனமூர்த்தியின் பாதத்திற்கருகில் பின்பக்கத்திலுள்ள இரு கால்களை ஊன்றி, முன்பக்கத்திலுள்ள இரு கால்களைத் தூக்கி, முகத்தை உயரத் தூக்கி, அவரது கையில் இருக்கும் புல்லைக் கடிக்க முயல்வது போல காணப்படுகிறது. இது இம்மூர்த்தியின் திருஉருவ அமைப்பிற்கு நல்ல அணி செய்வதுபோல அமைந்துள்ளது. மூர்த்தியின் கால்களில் இரு பாதத்குறடுகள் காணப்படுகின்றன. பின்புறத்து வலது கையில் தமருகம் அழகுற அமைந்திருக்கிறது. இந்தப் பிட்சாடனர் திருஉருவம் அழகிய சோழர் பாணியில் நன்கு உருவாக்கப்பட்டுள்ளது. இவ் வுருவம் சோழநாட்டுத் தபதியால் 10-வது நூற்றாண்டில் உருவாக்கப் பட்டதாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இது வழுவூர் பிட்சாடன மூர்த்தியின் படிமம் போல் அழகுற ஆகம விதிகளை அனுசரித்துச் செய்யப்பட்டுள்ளது. இவ்வுருவிலும் சிற்பி தனது கைவண்ணம் அனைத்தையும் காட்டியுள்ளார். இதில் குற்றம் கூறுவதற்கு எதுவும் இல்லை. 3. பிட்சாடன மூர்த்தி - பந்தணை நல்லூர் பந்தணை நல்லூர் பிட்சாடன மூர்த்தியின் படிமம் முன் குறிப்பிட்ட இரு படிமங்களினும் குறைவானதன்று. நல்ல ஏற்றம் வாய்ந்த எழிற்படிமம் என்று எல்லோரும் புகழகத்தக்க சிறப்பு வாய்ந்தது. பின்புறமுள்ள வலது கையில் தமருகமும் இடது கையில் சிக்கி பிஞ்சாவும் முன்புறமுள்ள வலது கை மான் மறிக்கு உணவளிக்கும் நிலையிலும் இடது கை பிரம கபாலம் ஏந்தி நிற்கும் நிலையிலும் உள்ளன. மூர்த்தியின் முகம் அழகுற அமைந்திருக்கிறது. சடைகளின் புரிகளும் அதன் நெளிவும், அமைப்பும் அழகும் இப் படிமத்தின் எழிலை உயர்த்துகிறது. கால்களில் மணிகளும் பாதங் களில் குறடும் ஒரு பக்கம் மானும் மற்றொரு பக்கம் பாத்திரத்தைத் தலையில் வைத்து நிற்கும் பூதமும் காணப்படுகின்றன. இந்த மூர்த்தி, ஏனைய பிட்சாடனர் படிமங்களை யொப்ப நிர்வாண கோலத்திலே காணப்படுகிறார். தாருகாவனத்து முனிசிரேட்டர்களின் பத்தினிகள் பிட்சாடன மூர்த்தியின் நிர்வாண கோலத்தைக் கண்டு நாணி வீட்டில் ஒளிந்து நிற்கவில்லை. அவர்கள் பிட்சாடனருக்குப் பிச்சை அளிக்க ஆர்வங்கொண்டு அகப்பையில் அன்னத்தை அள்ளிக் கொண்டு அவர் அண்மையிற் செல்ல மெதுவாக அடிஎடுத்து வைத்துச் சென்றனர். அழகு அனைத்தும் ஓருருவாய்த் திரண்டு தம்முன் நிற்கும் பிட்சாடனரின் புன்னகையில் மயங்கிக் காமுற்றுக் கற்பை இழந்து அகதிக்கு அன்னமிட வந்திருக்கிறோம் என்பதை மறந்து சிலைபோல் நின்றனர். அப்பத்தினிமார்கள் மூர்த்தியின் முன்னழகை அப்படியே கண்டு சுவைத்துப் பருகி இமைகொட்டாது பார்த்துக் கொண்டே இருந்தனர். இந்தக் காட்சி அற்புதமானது. இது ஆறடியில் அமைக்கப்பட்ட அழகிய உருவம். இந்த மூர்த்தியை உருவாக்கிய சிற்பி ஏனைய எழில் மிக்க பிட்சாடன மூர்த்தியின் திருஉருவைவிட மிகச் சிறப்பான திருஉருவை அமைத்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் மிக உயரமாக அழகு பொலிய அற்புதச் சிற்பமாகச் சிறப்புடன் செய்துள்ளார். இது சோழர் பாணியில் உருவாக்கப்பட்டது. இது 13ஆம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டதாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இது பாடல் பெற்ற தலம். தத்துவ விளக்கம் சிவபெருமான் மக்கள் மீது பேரன்பு கொண்டவன். எல்லா உயிர்களுக்கும் இன்பப் பேற்றை நல்குபவன். தவறு செய்பவர் களுக்கும் உண்மை உணர்வூட்டித் தடுத்தாட் கொள்பவன். அவன், தன்னை மறந்த, அல்லது தெய்வ உதவி நாடாத முனிவர்களுக்கும் தன் துணையின்றி வாழ்வது அரிது என்பதை உணர்த்தப் பிட்சாடன மூர்த்தியாய்ப் போந்தார். இது இறைவ னுடைய எளிமைத் தன்மையை இனிது விளக்குவதாகும். இறைவன் மக்கள் செய்யும் தவறான வழியினின்று அவர் களைத் தடுத்து நேரான வழியில் சீராக நடத்துவான். இதையே இம்மூர்த்தம் விளக்குவதாகும். இறைவன் மும்மலங்களையுங்கடந்தவர். மக்கள் முயற்சியி னாலும், தவத்தினாலும் யோகத்தினாலும் சில நலன்களைப் பெற முடியும். சக்திகளையும் சித்திகளையும் அடையலாம். ஆனால் அவர்கள் உலக வாழ்க்கையில் வழுக்கி வீழாது வாழ்வதரிது. அவர்கள் நன்னெறிவழுவாது வாழ இறைவனின் திருவருள் துணை வேண்டும். தாருகாவன முனிவர்கள் தங்கள் தவத்தால் பல சித்திகள் கைவரப் பெற்றவர்கள்தான். ஆனாலும் தங்கள் ஒழுக்கத்தைப் பேணி வாழ முடியாது காம வேட்கைக்கு ஆட்பட்டுக் கற்பிழந்தனர். அவர்கள் மனைவிகளும் அவ்வாறே நிறையிழந்தனர். தவமுடையோர்க்கும் ஒழுக்கம் பேண இறைவன் அருள் வேண்டும் என்பதை இம்மூர்த்தம் நன்கு உணர்த்துகிறது. இறைவன் இரப்புத் தொழிலை மேற்கொள்வதன் மூலம் அவனுக்கு நாம் அன்பை அளிக்கும் வாய்ப்பை அளித்துள்ளான். அதன் மூலம் அவனுடைய எட்டாத திருவடிகளை நாம் எட்டிப் பிடிக்க இன்னருள் பாலிக்கின்றான். இதனை நமது தமிழ் ஆகம மாகவும் மறையாகவும் போற்றப் பெறும் திருமந்திரத்தில் திருமூலர், பரந்துல கேழும் படைத்த பிரானை இரந்துணி என்பர்கள் எற்றுக்கு இரக்கும் நிரந்தர மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே (1851) என்று கூறி நமக்குப் பிட்சாடன மூர்த்தியின் தத்துவத்தை விளங்கச் செய்துள்ளார். பிட்சாடன மூர்த்தியின் தத்துவத்தை விளக்க வந்த துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், இறைவன் பிட்சாடனராய்ப் பிச்சை ஏற்க வந்தார். தாருகாவனத்து முனிவர்களின் பத்தினி ஒருவர் பிச்சையிடவந்தாள். அவள் அவரைப் பெரிதும் விரும்பி மிகவும் கை தாழ்த்துத் தான் கொண்டு வந்த உணவைப் பிச்சைப் பாத்திரத்தில் இட்டாள். இறைவன் அவளை நோக்கி என் பிச்சை ஓட்டைத் தொடலாமோ என்றார். அதற்கு அவள், ஓட்டினை மட்டுமா தொடுவேன், என் வீட்டினுள்ளே வந்தால் உம்மையுந் தொடுவேன் என்றாள். இறைவன் உனக்கு இதுவும் வேண்டும் கொல் ! ஆட்டின் பாலைப் பருகலாம் என்றால், அதற்கு மூலமாய் இருக்கும் ஊனையும் உண்ண எனக்கு விருப்பந்தான் என்பது போலவன்றோ உன் பேச்சு இருக்கிறது என்னும் கருத்துப் பொலியப் பின்வரும் பாட்டையாத்துள்ளார். வேட்டனம் பாதுகை தாழ்த்திட மாமுது வெற்பர் பலி ஓட்டினை நீதொடலாமோ என, உமையுந் தொடலாம் வீட்டில் யான் எனவே, அவர்தாம் இது வேண்டுவை கொல் ? யாட்டினின் பால் என மூலமுமாம் என்பது என்றனரே 1 இச்செய்யுளில் வீடு என்று குறிக்கப்படுவது இல்லத்தை மட்டுமின்றி வீடு பேற்றையும் குறிக்கும். வீட்டிற்குள் வந்தால் உம்மைத் தொட்டு அணைத்து யான் மகிழ்வேன் என்ற காதற் கருத்தும் வீடுபேற்று நிலையில் உயிராகிய நான் சிவமாகிய உம்மோடு ஒன்றித் தொடர்பு கொண்டு இன்புறலாம் என்ற தத்துவப் பொருளும் ஒருங்கே புதைந்து தோன்ற அழகாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. இறைவன் மன்னன் போல் மணிகள் பதித்த பொன் அணி கலன்கள் அணிந்து பட்டாடை புனைந்து நல்ல மணப்பொருள் களைப் பூசிக் கொண்டு வரவில்லை. அவர் ஒரு பிச்சைக்காரனாய், பித்தனாய், வேட்டுவ நிலையில் நிர்வாணியாய்ப் போந்தார். அவரோடு திருமால் பெண் வடிவில் சென்றார். தவம்பல இயற்றி உயர் பதவிகள் பெற்ற முனிவர்களும் அவர்கள் மனைவிமார்களும் தங்கள் உள்ளத்தெழுந்த காம உணர்ச்சியை அடக்க முடியாமல் வழுக்கி வீழ்ந்தனர். தபோதனர்கள் இறைவனையோ அவன் கட்டளைகளையோ மறந்தவர்களானதால், நீங்கள் தவறிழைக்கப் பார்க்கிறீர்கள் என்று இறைவனுடைய திருவருட்கருணை துணை நிற்க முடியாமற் போயிற்று. உயிர்கள் எவ்வளவு உயர்நிலை பெற்றாலும் சிற்றறிவுடையவர்களேயாம். அவர்களால் எளிதில் மாயையை வெல்ல முடியாது. அது மக்களை எளிதில் வசிகரித்து விடுகிறது. உயிர்கள் எளிதில் இருள் உலகில் அகப்பட்டுக் கொள் கின்றன. இறைவனுடைய அருள் கருணை என்னும் பேரொளிதான் உயிர்களுக்கு ஒளியாய் நின்று வழிகாட்ட முடியும். இறைவனது கருணை ஒளியே உயிரைப் பற்றிய மாயை என்னும் அழுக்கை அகற்ற முடியும். இதை விளக்கவே இந்த மூர்த்தம் எழுந்தது. பிச்சாடன மூர்த்தம் பெருமை வாய்ந்தது. இம்மூர்த்தியை வழி படுவதன் மூலம் உயிர்கள் மாயையின் வழிப்படாது இறைவனுடைய அருள் ஒளியால் நல்வழிபெறுவார். மக்களின் ஒழுக்கம் ஓம்பப்படும். கற்பு காக்கப்படும். இறைவன் தோன்றாத் துணையாய் இருந்து உயிர்களுக்கு இன்பந்தருவான் என்பது உறுதி என்று சைவ நெறி கூறுகிறது. துதி அம்பலத்தே கூத்தாடி அமுது செயப் பலிதிரியும் நம்பனையும் தேவனென்று நண்ணுவது என்னேடீ! நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா எம்பெருமான் ஈசா என் றேத்தினகாண் சாழலோ (மாணிக்கவாசகர் - திருவாசகம்.) வாரி ருங்குழல் வாள்நெடுங்கண் மலைமகள் மது விம்மு கொன்றைத் தாரி ருந்தட மார்பு நீங்காத் தையலாள் உலகுய்ய வைத்த காரி ரும் பொழிற் கச்சி மூதூர்க் காமக் கோட்ட உண்டாக நீர்போய் ஊரிடும் பிச்சை கொள்வதென்னே ஒண்காந்தன் தளியு ளீரே (சுந்தரர் - தேவாரம்.) நீருலாஞ் சடைமுடிமேல் திங்களேற்றார் நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார், ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார் ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றிலேற்றார் வாருலா முலைமடவாள் பாக மேற்றார் மழுவேற்றார் மான்மறியோர் கையிலேற்றார் பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே (நாவுக்கரசர் - தேவாரம்) உரம னுஞ்சடை யீர்விடையீரும தின்னருள் வரம னும்பெற லாவது மெந்தை வலஞ்சுழிப் பிரம னுந்திரு மாலு மளப்பரி யீர்சொலீர் சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே (சம்பந்தர் - தேவாரம்.) காலசம்மார மூர்த்தி காலன் கண்ணுதற் கடவுளின் கட்டளையை நிறைவேற்றும் பணி ஆள். அவன் இறைவன் விதிப்படி உயிர்களைக் கவர்ந்து செல்பவன். அவன் கட்டளையை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாய் இருப்பவன். அதில் அவன் சிறிதளவும் தாட்சண்ணியம் காட்டாதவன். அதனால் அவனைக் கொடியவன் என்றும் ஈவு இரக்கம் அற்றவன் என்றும் மக்கள் புகல்வர். காலனுக்கு இயமன், கூற்றுவன், மறலி, நமன், சண்டன், பாசகரன் என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. மக்களின் வாழ்க்கைக் காலம் முடிந்ததும் ஒரு வினாடி பிந்தாது உடலினின்று உயிரைக் காலன் பிரித்துச் செல்வான். ஆனால் எதற்கும் ஒரு விதி விலக்கு உண்டு. இறைவன் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் இவ்வளவு காலம் வாழலாம் என்று ஒரு விதி ஏற்படுத்தியுள்ளான். இந்த விதியில் மாற்றம் செய்யும் அதிகாரம் இவனுக்கு உண்டு. கடவுள் காலன் செய்யும் கடமையைச் செய்யாது தடுத்து நிறுத்தவும் அவன்தன் கட்டளையை மீறினால் அவனைத் தண்டிக்கவும் முடியும். இதனை விளக்குவதே இந்த மூர்த்தத்தின் உட்பொருளாகும். புராணக்கதை முன்னொரு காலத்தில், கடகம் என்னும் ஊரில் குச்சுகர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவருக்குக் கவுச்சிகர் என்னும் பெயருடன் மகன் ஒருவர் இருந்தார். அவர் இளமையிலே இறைவன்பால் ஈடுபாடு உடையவராய் இருந்தார். அவர் தவம் பல இயற்றித் தக்கோன் எனத் தரணி போற்றும் பேறு பெற்றவராய்த் திகழ்ந்தார். அவரது பக்தியையும் பண்பையும் அன்பையும் வியந்து திருமால், அவருக்கு மிருகண்டூயன் என்னும் சிறப்புப் பெயரை அளித்தார். அவரை வாழ்த்தி வரம்பல அளித்தார். அவர் அவரது தந்தையின் ஆணைப்படி அநாமயம் என்னும் காட்டில் வாழ்ந்து வந்த உசத்தியார் என்னும் முனிவரின் மூத்த மகள் விருத்தை என்னும் எழில் வாய்ந்த ஏந்திழையை விரும்பி மணந்து இல்லறம் இனிது நடத்தி வந்தார். அவர்கள் இல்லறம் நல்லறமாகப் பொலிந்தது. அதன் பயனாக அவரது அகமுடையாள் மிருகண்டு என்ற ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். மிருகண்டு அழகும் ஆண்மையும் உள்ள பிள்ளையாய் வளர்ந்து தக்க பருவம் வந்ததும் முற்கலமுனிவர் மூத்த மகள் மருத்துவதி என்னும் மங்கை நல்லாளை மணந்து இன்புற்று இல்லறம் நடத்தி வந்தார். மிருகண்டு முனிவரும் மருத்துவதி என்னும் மாதரசியும் மணம் புரிந்து பல்லாண்டு இல்லறம் நடத்தினர். அவர்களுக்கு மகப்பேறு கிடைக்கவில்லை. அதனால் அவர்களின் இல்வாழ்க்கை சோபிக்க வில்லை. இருவரும் மனம் வருந்தினர். மிருகண்டு காசிக்குப் போய்ச் சிவ பெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து வந்தார். இறைவன் அவரது தவத்திற்கிரங்கிக் காட்சி அளித்து மிருகண்டை நோக்கிப் பின்வருமாறு கேட்டார். உனக்கு நீண்ட ஆயுளையுடைய பயனற்ற மக்கள் பலர் வேண்டுமா? அல்லது அறிவிற் சிறந்த அற்ப ஆயுளை யுடைய அழகிய ஆண்மகன் ஒருவன் வேண்டுமா? இரண்டில் ஒன்றைக் கேள் என்றார். மிருகண்டு நன்றாக யோசித்து அற்ப ஆயுள் உடையவனே யாயினும் அறிவுடைய ஓர் ஆண்மகனே வேண்டும் என்றார். சிவபெருமான் மகிழ்ந்து பதினாறு வயது வரை வாழும் நன்மகன் உனக்குப் பிறப்பான் எனக் கூறி மறைந்தார். மிருகண்டு மனைவி மருத்துவதி இறைவன் வாக்குப்படிக் கருவுற்றாள். பங்குனித் திங்கள் இரேவதி நாளில் கடக ஓரையில் வியாழனும் வெள்ளியும் உச்ச நிலையில் இருக்கவும் செவ்வாய், புதன், சனி ஆகியகோள்கள் நல்ல இடத்தில் இருக்கவும் ஞாயிறும் திங்களும் மீன வீட்டில் கூடி நிற்கவுமான நன்னாளில் ஓர் அழகிய ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். நான்முகன் தோன்றி அக்குழந்தைக்கு மார்க்கண்டேயர் என்ற பெயரைச் சூட்டினார். மார்க்கண்டன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாய் வளர்ந்து வந்தான். அவன் ஐந்து ஆண்டுப் பருவம் அடைந் ததும் பள்ளிக் கூடம் சென்றான். எழுத்தும் கணக்கும் கலைகளும் பயின்று வந்தான். சமய நூற்கள் பல பயின்று உயிர் உடல், இறைவன், இன்பம், வீடு முதலியவைகளைப் பற்றியெல்லாம் நன்குணர்ந்தான். கற்றபடி நிற்க முன் வந்தான். சிவபக்தியிலும் சிவவழிபாட்டிலும் சிறந்து விளங்கும் சிறுவனாய்த் திகழ்ந்தான். தாய் தந்தையர்கள் தனயனின் அறிவையும் அழகையும் சொற்களையும் பக்தியையும் கண்டு பெருமிதமடைந்தனர். நகரமக்கள் நன்மகனைக் கண்டு நாவார வாழ்த்தினர். மதி நுட்பம் வாய்ந்த மார்க்கண்டனை மகனாகப் பெற இவனது தந்தையும் தாயும் என்ன நோன்பு நோற்றனரோ என்று வியந்தனர். மார்க்கண்டன் வளர்ந்து வந்தான். ஆனால் வயது ஏற ஏற அவனது பெற்றோர்கள் மகிழ்ச்சி குன்றி வந்தனர். கவலையெனும் கடலுள் மூழ்கினர். மார்க்கண்டன் பெற்றோர்களின் கவலைக்குரிய காரணத்தை அவர்களிடம் வற்புறுத்திக் கேட்டு உணர்ந்து கொள்ள முயன்றான். பெற்றோர்கள் துக்கத்தால் துயர் உற்றனர். விம்மி அழுதனர். பெறுதற்கரிய பெரும்பேறாக உதித்த தன் மகன் பதினாறு வயதில் உயிர் துறந்து விடுவான் என்பதை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாகினர். இறுதியில் மகனிடம் உண்மையைக் கூறியும் விட்டனர். மார்க் கண்டனோ மனங்கலங்காது, என் அருமைத் தாய் தந்தையர்களே ! இறைவன் வல்லவன் அல்லவா ? அவன்தானே எனக்கு 16-வயது என்று நிர்ணயித்தவன். அவன் விதித்த சட்டத்தை அவன் நினைத்தால் மாற்ற முடியாதா? என்று வினவினான். அதற்கு அவனது பெற்றோர்கள் ஆம்! அவனால் எல்லாம் முடியும். அவன் நினைத் தால் ஆகாத கருமம் அவனியில் எதுவும் இல்லை. ஆனால் அவனது திருவருள் உன்பால் திரும்ப வேண்டுமே என்றனர். உடனே மகன் எழுந்து அம்மா ! அப்பா !! கவலையை விடுங்கள். நான் அந்த ஆண்டவனின் அருட்பதத்தை நாடித் தவமிருந்து அவனிடம் நான் நீண்ட ஆயுளைப் பெற்றுத் திரும்பி வருவேன். கவலையை விடுங்கள் என்று கூறினான். உடனே பெற்றோர்களிடமிருந்து விடைபெற்று இறைவனைக் காணச் சென்றான். மார்க்கண்டன் பெற்றோர்கள் மனத்தில் மகிழ்ச்சி உண்டு பண்ண நாடிக் காசிக்குப் போய்க் கடுந்தவம் இயற்றினான். கடவுள் காட்சி அளித்து மார்க்கண்டா! நீ தெற்கே திரும்பித் தமிழகத்தி லுள்ள திருக்கடவூர் என்னும் திருப்பதியை அடைந்து நம்மை வழிபட்டுக் கொண்டிரு. உனக்கு என்றும் எமபயம் எழாது செய்வோம் என்று கூறி மறைந்தார். மார்க்கண்டன் ஆண்டவன் ஆணைப்படி தெற்கு நோக்கி வந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கடவூருக்கு வந்து சிவபெருமானை இடைவிடாது நினைந்து வழிபட்டு வந்தான். மார்கண்டனுக்கு 16-வயது அரும்பி அது நிறைவு பெறும் நேரம் அண்மியது. அப்பொழுது காலதூதன் அவன் உயிரைக் குடிக்கக் கும்மாளமிட்டு வந்தான். ஆனால் அவனால் இவ்விளைஞன் அருகே செல்லவும் முடியவில்லை. அவன் ஆச்சர்யமுற்று நாணமுற்றுக் கூற்றுவனிடம் போய் இச்செய்தியைக் குறையிரந்தான். காலன் கடுஞ்சினங் கொண்டு தன் கணக்கர்களாகிய சித்திரன் புத்திரன் ஆகியவர்களை அழைத்து மார்க்கண்டேயரின் வாணாள் கணக்கினைக் கேட்டான். 16-வயதுதான், அவருடைய ஆயுள் என்பதை நன்கறிந்து மீண்டும் தன் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அனைவரும் முன்போலவே மார்க்கண்டேயர் அருகே அணுக முடியாது மீண்டனர். அதைக் கேட்ட அந்தகன் அளவிலாக் கோபங்கொண்டு துடித்து எழுந்தான். மார்க்கண்டனுக்குப் பதினாறு ஆண்டு நிறைவெய்தி விட்டது. இனி ஒரு நொடியும் அவன் உலகில் இருப்பது கூடாது. இது ஆண்டவன் ஆணை. அதை மீறுவது அதர்மம் என்று வினாடியில் மார்க்கண்டனை அணுக எண்ணித் தன் எருமைவாகனத்தில் அமர்ந்து பாசம், தண்டம், சூலம், மழு முதலிய தன் படைக்கலங்களை ஏந்தி மார்க்கண்டனை நேருங்கினான். உடனே அவன் மார்க்கண்டேயனுக்குத் தன் கோர வடிவைக் காட்டி அச்சுறுத்தி அதட்டி அவனை அழைத்தான். அவனோ அந்தகனைக் கண்டு அணுவளவும் அஞ்சவில்லை. எழவும் இல்லை. அவன் சிவபெருமானை நினைந்து கொண்டு தம் முன் உள்ள திருக்கடவூர் சிவலிங்கத்தைத் தழுவிச் சிக்கெனப் பிடித்துக் கொண்டு அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்சவருவது யாதொன்றும் இல்லை என்று உறுதியாக இருந்தான். காலன் கடவுளின் கட்டளையைக் கடிதில் நிறைவேற்றக் கருதி முனைந்து தன் கையில் உள்ள பாசக் கயிற்றை எடுத்து மார்க் கண்டேயன் மீது வீசி அவனையும் அவன் பற்றி நின்ற சிவலிங்கத்தை யும் ஒன்றாகச் சேர்த்து ஈர்க்க முனைந்தான். அரனார் அவனது ஆணவத்தையும் அறிவின்மையையும் அறிந்து அதை அடக்கி அறிவுச் சுடர்கொளுத்த முன் வந்தார். மார்க்கண்டேயன் தழுவி யிருந்த சிவலிங்கத் திருஉருவத்தினின்று கோடி ஞாயிறு ஒளிபோல் சிவபெருமான் காலன் கதிகலங்கக் கணப்பொழுதில் வெளிப் பட்டார். காலனைக் காலால் எற்றி உதைத்தார். காலன் கீழே விழுந்து இறந்து வீழ்ந்தான். மார்க்கண்டன் அவனது கோரப்பிடியினின்று விடுபட்டு மீண்டான். இறைவனுடைய விதி மாற்ற முடியாததுதான். என்றாலும் எதற்கும் ஒரு விதி விலக்கு உண்டு என்பதனைக் காலன் அறியாதிருந்தான். ஆனால் இந்தச் சம்பவத்திற்குப் பின் இறைவ னுடைய ஆணையிலும் விதிவிலக்கு உண்டு என்ற உண்மை உலகிற்குத் தெரிந்தது. இதன் மூலம் இறைவனின் சட்டத்தில் விதி விலக்கு என்ற ஒரு புதிய அத்தியாயம் எழுந்தது. எல்லா உயிர் களிடத்தும் செலுத்தும் சட்டம் சிவபெருமானுடைய பக்தர்களிடம் செல்லாது என்பதைக் காலன் உணர்ந்தான். விதியை விதிப்பவனுக்கு அதை மாற்றவும் முடியும் என்பது இதனால் மெய்ப்பிக்கப்பட்டது. மார்க்கண்டேயர் இறைவனுடைய அருளைப் பெற்றார். அவர் என்றும் பதினாறு வயது உடையவராய்ச் சிரஞ்சீவிப் பட்டம் பெற்றார். அப்பால் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கிக் கடவுள் கால தேவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்து இனி என்பக்கம் வந்தவர் களை அணுகாது அஞ்சிநடந்து கொள் என்று எச்சரித்து அனுப்பி னார். அதுமுதல் காலன் கடவுளின் பக்தர்களிடம் செல்வதில் மிகச் சாக்கிரதையாக நடந்து கொள்ள ஆரம்பித்தான். ஆனால் அதற்குப் பின் அவன் உண்மையான சிவபக்தர்களைக் கண்டதாக நமக்கு ஒரு சிறு சம்பவம் கூட எட்டவில்லை. மார்க்கண்டேயர் வரலாற்றைக் காசிப முனிவர் தமக்கும் தன் மனைவி மாயை என்னும் அரக்கிக்கும் பிறந்த மக்களாகிய சூரபதுமன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய அசுரர்களுக்குத் தவத்தின் பேற்றை விளக்க எடுத்துக் காட்டினர் என்று கந்தபுராணம் கூறுகிறது. இஃதன்றி இறைவன் சுவேதன் என்னும் முனிவர் பொருட்டும் காலனைக் காலால் உதைத்து வீழ்த்திய வரலாறு ஒன்று உண்டு. இதனை, தரும் செயல் உடைய நம் சுவேதன் தன்னை முன் இகழ்ந்தனன் மறலி; எம்மால் எறிந்தனன்; புகன்றிடின் இன்னும் நம் பொருவில் தொண்டரால் உகுந்திறல் உடையவர் உளர் அநேகரே (சிவப்பிரகாசர் சித்தாந்தசிகாமணி) என்று கூறப்படுவது காலனுக்குக் கடவுள் இருமுறை அறிவுறுத் தியது எண்ணப்படுதற்குரியது. சுவேத முனி சுலோசனை என்னும் தன் மனைவியோடு கூடி இல்லறம் நடத்தி வாதாபி என்ற மகனைப் பெற்று இறுதியில் இழக்க நேர்ந்தது. அதனால் முனிவர் வாழ்க்கையில் வெறுப்புற்றுக் காளாஞ்சநம் என்னும் ஆற்றங்கரையில் அரனை வழிபட்டு வந்தார். அவரது ஆயுளின் இறுதியில் கூற்றுவன் அவரது உயிரைப் பற்றிக் கவர்ந்து செல்ல முற்பட்டான். சுவேதன் சிவபெருமான் திருப் பாதத்தைப் பற்றி நின்றான். காலன் அவர் உயிரைப் பற்றி இழுக்க முனைந்த பொழுது சிவபெருமான் தோன்றிக் காலனை வீழ்த்தினார் என்று நூல்கள் கூறுகின்றன. இது திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் நடந்தது என்று வான்மீகி இராமாயணம் முதலிய நூற்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் சிவபெருமானுக்கு காலாரி, கால சம்மாரர், காலாந்தக மூர்த்தி என்று பல பெயர்கள் எழுந்தது. கால சம்மார மூர்த்தம் மிகச் சிறந்தது. நீண்ட வாணாளை வேண்டுபவர்கள் கால சம்மார மூர்த்தியை வழிபடுவர். திருக்கடவூர், திருவெண்காடு ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று இறைவனை வழி பட்டு வருவார்கள். வஞ்ச நலன் வாதனைக்கும் வன் பிறவி வேதனைக்கும் அஞ்சி உனை அடைந்தேன் ஐயா ! பராபரமே என்று தாயுமானவர் பராபரக் கண்ணியிற் கூறியிருப்பதுபோல் இந்த மூர்த்தியைப் போற்றி வழிபட்டு வருவது சாலச் சிறப்புடையது என்று சைவ சமய நூற்கள் சான்றுகின்றன. சிவபக்தர்களும் இதனைப் பிறருக்கு அறிவுறுத்துகின்றார்கள். கடவூர் கடவூர், திருக்கடவூர் என்று சிறப்பித்துக் கூறப்படும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் மாயூரம் தரங்கம்பாடி இருப்புப் பாதை யில் உள்ள ஒரு புகை வண்டி நிலையம். இது மூவர் தேவாரமும் பெற்ற முதுபெரும்பதி. குங்கிலியக் கலய நாயனார் அவதரித்த ஊர். இது அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. புகைவண்டி நிலையத்தி லிருந்து ½ கல் தொலைவில் இருக்கிறது. மார்க்கண்டன் உயிரைக் கவர வந்த காலனை வீரட்டனார் தடுத்த இடம் இதுவேயாகும். எனவே நீண்டவாணாளை நாடுவோர் இங்குப் போந்து ஆயுள் ஓமம் செய்து கொள்ளுகின்றனர். இங்குக் கோயில் கொண்டிருக்கும் சுவாமி அமிர்தகடேசுரர் என்று அழைக்கப்படுகிறார். தேவி அபிராமி அம்மை என்று கூறப்படுகிறார். கோயில் பெரிதாக அழகாக இருக்கிறது. மேற்கே பார்த்த சந்நிதி. இங்குக் கால சம்மார மூர்த்திக்குத் தனிச் சந்நிதியுண்டு. இது காரிநாயனார் வசித்து முத்தி பெற்ற இடம். கணபதியைக் கள்ள வாரணப் பிள்ளை என்று கூறுவர். கோயிலில் வில்வாரணியேசுரர், பாபகரேசுரர், புண்ணியவர்த்தனேசுரர் என்னும் இலிங்கங்கள் உள்ளன. கால சம்மாரர் சந்நிதியில் எருமை வாகனத்துடன் கூற்றுவன் கூப்பிய கையோடு நிற்கிறான். அபிராமி அம்மன் அருள் ஒழுகும் முகத்துடன் இலங்குகிறார். இவைகள் பார்க்கத் தக்கனவாகும். இக் கோயிலில் 54 கல்வெட்டுகள் உள்ளன. இராசராசன் சோழன் இக்கோயிலுக்கு நிபந்தம் அணிந்திருக்கின்றான். திருக்கடையூர் என்பதும் இதுதானோ ! தேரோடும் வீதி என்பதும் இதுதானோ ? என்று பாடிக் கொண்டு கோவலன்மாதவியைத் தேடி இங்கு வந்த தாகக் கூறப்படுகிறது. அபிராமி அந்தாதி இவ்வூரிலுள்ள அபிராமிப்பட்டரால் இங்குள்ள கோயிலில் வீற்றிருக்கும் அபிராமி அம்மை மீது பாடப் பெற்றதாகும். திருக்கடவூர்ப் பக்கமுள்ள மணல் மேட்டில் மார்க்கண்டேயர் கோயில் ஒன்று இருக்கிறது. மார்க்கண்டேய மடத்திற்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்பது தெரியவில்லை. இக்கோயில் தருமபுர மடத்தின் ஆளுகையில் இருந்து வருகிறது. பாடல் பெற்ற மூதூர் திருநாவுக்கரசர் பாலனுக் காயன்று பாற்கடல் ஈந்து பணைத் தெழுந்த ஆலினிற் கீழிருந் தாரணம் ஓதி அருமுனிக்காய்ச் சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்தர்ந் தோடிவந்த காலனைக் காய்ந்த பிரான்கட வூருறை உத்தமனே. சுந்தரர் மண்ணீர் தீவெளிகால் வருபூதங்கள் ஆகிமற்றும் பெண்ணோ டாணலியாய்ப் பிறவாஉரு ஆனவனே கண்ணா ரும்மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம். அண்ணா என் அமுதே எனக் கார்துணை நீயலதே. இலக்கியச் சான்றுகள் திருக்குறள் திருக்குறள் சமயப் பொதுநூல் என்றாலும் அதில் கால சம்மார மூர்த்தியின் பெருமை விதந்தோதப் பெற்றுள்ளது. தவம் இயற்றிப் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு இடையூறு எதுவும் இல்லை யாகையால் இயமனை வெல்லுதலும் கைகூடும் என்னும் பொருள் பட மிக அழகாக வள்ளுவர் தம் குறளில் துறவற இயலில் தவம் என்னும் தலைப்பில் கூறியுள்ளார். அது அடியில் வருமாறு : கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு இஃதன்றிக் காலசம்மார மூர்த்தியின் பெருமை தேவாரத்தில் பல விடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் ஏழாம் திருமுறையில் திருக்கடவூர் வீரட்டம் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் கால சம்மார மூர்த்தியைத் தொழுது, அன்றாலின் நிழற்கீழ் அறம் நால்வர்க் கருள்புரிந்து கொன்றாய் காலன் உயிர் கொடுத் தாய்மறையோனுக்குமான் கன்றா ருங்காவா கடவூர்த்திரு வீரட்டத்துள் என்தா தைபெருமான் எனக்கார் துணை நீயலதே என்று சிவபெருமானின் பல அருட்கோலங்களை உள்ளம் உருக எடுத்துக் காட்டியுள்ளார். சைவ சமய மெய்யன்பர்கள் தம் தத்துவ ஞானக் களஞ்சியமாய்ப் போற்றிவரும் திருவாசகத்தில் மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேலவர் புரங்கள்மூன் றெரித்த கையனே காலாற் காலனைக் காய்ந்த கடுந்தழற் பிழம்பன்ன மேனிச் செய்யனே செல்வத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீர் ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே என்று திரிபுரம் எரித்த திருக்கோலத்தையும் காலனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயர்க்கருள்புரிந்த திருக்கோலத்தையும் கண்டு களித்துப் போற்றிப் பணிந்து பாடியுள்ளார். சைவ சித்தாந்த அறிவுக்கடலாய் விளங்கிய பேரறிவாளர் தாயுமானவர் தம் திருப்பாடலில், இறப்பையும் பிறப்பையும் எண்ணினால் எவர் உள்ளமும் நடுங்கும். ஆனால் கால சம்மார மூர்த்தியின் திருக்கோலத்தைக் கண்டபின் எனக்குப் பயம் இல்லாது மறைந்து போய்விட்டது. எவரும் இனி இறப்பதற்கு அஞ்ச வேண்டியதில்லை. மார்க்கண்டன் உயிரைக் கவரவந்த மறலி என்ன பாடுபட்டான் என்பதை எண்ணிப் பார்த்தால் சிவனுடைய அன்பர்களுக்கும் மரண பயம் ஏன் தோன்றப்போகிறது என்பதை உணர்ந்து பின்வரும் பாடலைப் பாடியுள்ளார். மார்க் கண்டர்க் காக அன்று மறலிபட்ட பாட்டை உன்னி பார்க்கின் அன்பர்க்கு என்ன பயங்காண் ? பரா பரமே ? கவிச் சக்கரவர்த்தி என்று போற்றிப் புகழ்ந்து ஏத்தப் பெறும் கம்பன் கால சம்மார மூர்த்தியின் பெருமையை தம் இராமகாதையில் எடுத்துக் காட்டுவதோடு இறப்பு என்னும் பெரிய கொடுந்துன்பம் எவருக்கும் என்றேனும் ஒருநாள் வருவது உறுதி, அதனை நாம் மறவாது நடந்து கொள்ள வேண்டும். இறப்பை மறப்பதைக் காட்டினும் கேடுவேறு எதுவும் இல்லை என்றும் எடுத்துக் காட்டியுள்ளார். நஞ்சினை மிடற்றுவைத்த நகைமழு வாளன் நாளும் தஞ்சென முன்னம் தானே தாதைபாற் கொடுத்துச் சாதல் அஞ்சினேன் அபயம் என்று அந்தணர்க் காக அந்நாள் வெஞ்சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மையுண்டோ என்றும் இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் மறப்பு எனும் அதனின் மேற் கேடு மற்றுண்டோ என்றும் கம்பர் இராம காதையில் எழில் பெற எடுத்துக் காட்டி யுள்ளார். ஆகமச் சான்றுகள் ஆகமங்கள் அனைத்திலும் அறக்கடவுளாகிய கால சம்மார மூர்த்தின் கோலங்களைப் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. மூர்த்திகளின் திருஉருவ அமைப்பையும் பாவங்களையும் தெளிவாக எடுத்துக்காட்டும் நூற்கள் சிற்ப சாத்திரங்களாகும். ஆனால் அவைகளைவிட அதிகார பூர்வமாக ஆணையிட்டு உரைக்கும் நூல்கள் ஆகமங்களேயாகும். ஆகமக் கருத்துகளுக்கு மாறாக எந்தச் சிற்ப நூற்களும் இருக்க முடியாது. சிற்பநூற்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக எங்காவது இருக்கக் கண்டால் அறிஞர்கள் ஆகமங்களை ஆராய்ந்து அந்த முடிவையே முடிவாகக் கொண்டு தொழில்படுவர். கால சம்மார மூர்த்தியின் திருஉருவம், பத்மபீடத்தின் மீது வலது காலை ஊன்றிக் கொண்டு இடது காலை எவ்வளவு தூரம் உயர்த்தித் தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் உயர்த்தித் தூக்கிக் காலனுடைய நெஞ்சில் மிதித்துத் தள்ளுவது போல் தோன்ற வேண்டும். சிவபெருமானுடைய கால்பெருவிரல் காலன் மீது படாது விரல் அகன்றிருக்க வேண்டும். மூர்த்தி முக்கண்ணும் சடா மகுடமும் நாலு அல்லது எட்டுக் கைகளும் உடையவராக இருக்க வேண்டும். வலது கைகளில் ஒன்று சூலத்தைத் தாங்கிக் காதளவு மேலே தூக்கி இருக்க வேண்டும். ஏனைய வலக்கை பரசைத் தாங்கி இருக்க வேண்டும். அல்லது வரதக் கையாகவிளங்க வேண்டும். வலக்கை பரசைத் தாங்கி இருந்தால் பரசின் விளிம்பு சிவபெருமானுடைய திருஉருவத்தை நோக்கித் திரும்பி இருக்க வேண்டும். கையின் உயரம் இக்க சூத்திரத்தின் அளவு வரை இருக்கலாம். முன்பக்கத்து இடது கையின் உள்ளங்கை முன்புறமாகத் திரும்பி உந்தியின் உயரம் வரை வைத்துச் சூசிக் கையாக இருக்க வேண்டும். இடது கை விசுமயக் கையாக இருக்க வேண்டும். இந்த மூர்த்தத்தில் (கோலத்தில்) கையிலுள்ள மோதிர விரல் உசுநிசா வரை உயர்த்தி இருக்க வேண்டும். அல்லது மகுடத்தின் அடிப்படைவரை இருக்க வேண்டும். இப்படிமம் எட்டுக் கைகளைப் பெற்றிருந்தால் வலது கைகளில் சூலம், பரசு, வச்சிரம், கடகம் ஆகியவைகளும் இடது கைகள் இரண்டில் முறையே நீர்மல்கிக் கிடப்பது போலவும் காணப்பட வேண்டும். அவன் அரைமீது சிவப்பு நிறமான ஆடை அணிந்திருப்பது போல் காணப்படலாம். தலையிலுள்ள முடிகளும் கண்களும் செந்நிறமாகத் திகழ வேண்டும். மீசை, இமைகள், இருபக்கங்களிலும் உள்ள கோரைப் பற்கள் எல்லாம் சிவப்பாகக் காணப்பட வேண்டும். காலன் உயரம் சிவபெருமானின் உந்தியின் உயரம் அளவு இருக்க லாம். இந்தச் சிற்பம் நவதால அளவு முறைக் கேற்ப அமைந்திருக் கலாம். காமிகாகமத்தில் வேறோரிடத்தில் காலாரியின் கோலத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறப்படுகிறது: சிவருமானுடைய படிமம் மார்க்கண்டன் தழுவிக் கொண்டிருக்கும் இலிங்கத்தினின்று எழுந்து நிற்பது போல் உயரமாக இருக்க வேண்டும். காலன் உருவம் நிலத்தின் மீது மல்லாந்து வீழ்ந்து கிடப்பது போல் காணப்பட வேண்டும். இந்த எடுத்துக்காட்டின்படி இலிங்கமும் சிவபெருமான் திருஉருவமும் முன்னர்க்கூறப்பட்டிருக்கும் இலிங்கோற்பவ மூர்த்தியின் உருவம் போல் திகழ வேண்டும். சிவபெருமான் உயரம் உடம்பெல்லாம் திருவெண்ணீறு திகழ அழகுடன் காணப்பட வேண்டும். மார்க்கண்டேயர் சிவலிங்கத்தின் அருகே அமர்ந்து அழகிய மலர்களால் அர்ச்சிப்பது போலவும், தன்னை மீட்பதற்குச் சிவ பெருமான் எப்பொழுது வருவார் என்று ஆவலோடு எதிர்பார்ப்பது போலவும் காணப்படுகிறார். கண்ணுதற் கடவுள் காட்சியளிக்கப் போகிறார், அதைக் கண்டு களித்து இன்புறப் போகிறோம் என்ற எண்ணத்தைவிடத் தன்னுடைய வருங்கால வாழ்வை அழிக்கும் மரணபயம் அதிகமாக அவரை வாட்டுகிறது. காரணாகமத்தில் மேலும் கூறுவதாவது : கண்ணுதற் கடவுளின் இரு கைகளும் கடகக் கையாக (கடக அதமாக) மூவிலைவேலைத் திருப்பிப் பிடித்துக் கொண்டு தொங்கவிடப் பட்டிருப்பது போல் காணப்பட வேண்டும். (இந்த விதி செம்புப் படிமங்களுக்கே பொருந்தும் என்று தெள்ளத் தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது) மூவிலை வேல் போன்ற ஆயுதங்கள் எப்பொழுது தேவையோ அப்பொழுதே செய்து மூலப்படிமத்தோடு வார்க்காது தனியாக வார்த்து இணைத்துக் கொள்ள வேண்டும். ஆயுதங்கள் மட்டுமின்றிக் கைகளில் ஏந்தி இருக்கும் வீணை போன்ற இசைக் கருவிகளும் தனியாகச் சரி செய்து மூல உருவத்தோடு இணைத்துக் கொள்ளப்படலாம். வீணை, மூவிலைவேல், யாழ், எருது வாகனம் போன்றவைகளை ஒன்றாக ஒரே வார்ப்படத்தில் உருவாக்க முடியாது. அதில் பல இடையூறுகள் உள்ளன. பொதுவாகச் செம்புப் படிமங்கள் எல்லாம் கடகக்கை (நண்டுக் கை) உடையதாகவே பெரும்பாலும் இருக்கும். நண்டுக் கை அமைப்பில்தான் பக்தர்களின் விருப்பப்படி பல்வேறு பொருள் களை இணைத்துக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாகத் தேவி களின் படிமங்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் மூர்த்தியின் அருகில் அமர்ந்திருக்கலாம். அல்லது நிற்கலாம். அவர்களின் ஒரு கை நண்டுக் கையாகப் பூக்களைப் பிடித்திருக்கலாம். இராமன் இலக்குமணன் படிமங்களில் உள்ள கைகள் இதே கைகளின் அமைப்புகளையுடையதாய் வில் அம்பு முதலியவைகளை இணைப் பதற்கு ஏற்றதாக அமைக்கப் பட்டிருக்கின்றன. வீணாதர தட்சிணா மூர்த்தியின் கைகளும் யாழ்முரி நாதர் கைகளும் நண்டுக் கையாக அமைந்திருப்பது வீணை யாழ், போன்ற இசைக்கருவிகளை உலோகத்தினாலோ அல்லது மரத்தினாலோ செய்து இணைப்ப தற்கேயாகும். சிவபெருமான் - சிறப்பாக இடபாந்தக மூர்த்தியின் திருஉருவத்தின் வலது கை கடகக் கையாக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் நந்தி என்னும் அவருடைய காளை வாகனம் தனியாக வார்க்கப்பட்டுப் பின்புறமாக அருகில் இணைத்து வைக்கப்பட் டிருக்கும். அவருடைய வலது கை நந்தி மீது வைத்திருப்பது போல் காணப்படும். இரு உருவங்களையும் நன்றாகப் பொருந்தும் படி இணைத்து விட்டால் ஒரே வார்ப்படத்தில் வார்க்கப் பட்டதுபோல் காணப்படும். சிற்ப நூற் சான்றுகள் சிரி சரசுவதீய சித்திர கர்ம சாத்திரம் என்னும் சீரிய நூலில், கால சம்மார மூர்த்தியின் திருஉருவ அமைப்பு இலக்கணத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. காலாரி மூர்த்தி முக்கண் உடையவர்; கோபத்தால் நெருப்புப் பொறி பறக்கும் கண்களை உடையவர்; நான்கு கைகளை உடையவர்; அவரது வலதுகையில் மூவிலை வேலுடன் இடது கை வரதக் கையாகவும் சூசிமுத்திரை யுடனும் திகழ வேண்டும். வலது கைகளில் ஒன்று அல்பல்லவக் கையாகவும் உட்னீ சோக்ருதமாகவும் இருக்க வேண்டும். அந்தக் கையிலுள்ள மூவிலைவேல் அதோமுகமாக (கீழ்நோக்கியிருக்கும் படி) பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். சூசிக் கையான இடது கையின் நுனி நாபிக்குச் சமமாக இருக்க வேண்டும். அந்தக் கையின் மணிக்கட்டானது விலாப் பக்கத்தின் நடுவினின்று 16-அங்குலம் தள்ளி இருக்க வேண்டும். மூவிலைவேல் ஏந்திய கையின் நுனி, காதின் உச்சிமட்டம் இருக்கலாம். அந்தக் கையின் மணிக்கட்டு கர்ணாந்தம் இவைகளின் நடுவில் ஒதுக்கம் 24 அல்லது 25 அங்குலமாகும் பரதக் கைகள் இரண்டும் கடக ஆபரணத்துடன் இருக்க வேண்டும். அந்தக் கடகங் களின் உச்சியானது தோள் பட்டைக்குச் சமமாக இருக்க வேண்டும். கால சம்மார மூர்த்தி, காலைக் காலனுடைய மார்பில் வைத்துக் கொண்டு பயங்கரமான முகமும் சடாமகுடமும் பவழ மேனியும் வாய்ந்தவராய்க் கோபமான தோற்றத்துடன் காணப்பட வேண்டும். இந்த மூர்த்தியின் காலடியில் காலால் உதைக்கப் பட்ட நிலையில் விரிந்த தலைமயிரும் கீழே விழுந்து உருண்டு கிடக்கும் மணி மகுடமும் கையில் பாசமும் பயங்கரமான பாவமும் உடைய வனாய்க் காலன் காணப்பட வேண்டும்.1 மற்றொரு சிற்ப நூலில் - காலாரி மூர்த்தியின் வலது கால் வளைக்கப்பட்டு மற்றொரு காலுக்குக் குறுக்காக உள்ள சாய்வுடன் அமைக்கப்பட வேண்டும். இடது பாகம் தூக்கி வளைக்கப்பட்டுப் பாதம் மேலே தூக்கப்பட்டு அதன் கட்டைவிரல் எமனுடைய நெஞ்சில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். முகத்தில் அடங்காக் கோபமும் ஒளிவீசும் கண்களும் எழிலும் வாய்ந்தவராய்க் கால காலன் காணப் பட வேண்டும் என்று மேற்கொண்டு விளக்கம் தருகிறது.2 மற்றொரு சிற்ப நூலில், காலாரி என்பது கால+அரி என்னும் இரு சொற்றொடர்கள் இணைந்த பதமாகக் கருதப்படுகிறது. காலன் என்பது இயமனுக்குப் பெயர். அவனை நமன் கூற்றுவன், மறலி, சண்டன் என்றும் பலவிதப் பெயர்களால் அழைப்பர். காலனை வென்றதால் கடவுளுக்குக் காலாரி என்றும் காலசம்மாரன் என்றும் பெயர்கள் கூறப்பட்டன. இம்மூர்த்தியை இடது புறம் சற்றுச் சாய்ந்த உடம்பு உள்ளவராக அமைக்க வேண்டும். வலது கால் இயற்கை யாகப் பத்ம பீடத்தில் நன்கு படிந்திருக்க வேண்டும். ஏனைய இடது கால் சிறிது மடங்கப்பட்டதாக மேலே தூக்கப் பெற்றுக் காலனுடைய மார்பில் வைக்கப்பட்டதாகக் காணப்பட வேண்டும். மூர்த்தி கோரைப் பற்களுடன் கோபமான முகத்துடன் முக்கண்ணுடன் காணப்படுவார். சடைமுடி நன்றாக அலங்கரிக்கப்பட்டிருக்கலாம். இந்தப் படிமத்தை நான்கு அல்லது எட்டுக் கைகள் உள்ளதாக அமைக்கலாம். நாலு கைகளில் வலது புறம் முன்கையில் மூவிலை வேலும் பின் கையில் கோடரி அல்லது வரத முத்திரையும் இடது புறம் முன்கையில் சூசி முத்திரையும் கொண்டு பின்கை மோதிர விரலின் நுனியைத் தலைப்பாகை வரையுயர்த்தி ஆச்சரியத்தைக் காட்டும் குறிப்புடன் அமைக்கலாம். எட்டுக்கைகளானால் வலது புறம் முறையே (1) மூவிலைவேல் (2) பரசு (3) வச்சிரம் (4) வாள் ஆகியவைகளையும் இடது புறம் முறையே (1) ஆச்சரியக் கை (2) கேடயம் (3) பாசம் (4) சூசிக்கை ஆகத் திகழலாம். காலனின் இருகைகளுள் ஒன்றில் பாசம் இருக்கும். பேழை போன்ற மகுடத்துடன் பயங்கரமான முகம் உடையவனாய் இருப்பான்; இரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கீழே விழுந்து கிடப்பான். இரு கைகளும் கூப்பி மார்பில் வைத்தவாறு இருக்கும். கால்கள் நிலைகுலைந்து கிடக்கும். மற்றொரு சிற்பநூல் மூர்த்தி, செம்பவள நிறத்தில் கோபப் பார்வையுடன் விளங்குவார். காலன் கருப்பு நிறம் உடையவனாய்த் தெற்றுப் பற்களுடன் வீழ்ந்து அஞ்சலிக் கையுடன் கிடப்பான் என்று கூறுகிறது1. படிமங்களின் விளக்கம் (அ) கால சம்மார மூர்த்தி - திருக்கடவூர் கால சம்மார மூர்த்தியின் திருஉருவங்களில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருக்கடவூர் (திருக்கடையூர்) கோயில் உள்ள கால சம்மார மூர்த்திக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. மிகச் சிறப்புடைய தாகும். இங்குக் காலசம்மாரர் உருவத்தில் முன்புறம் வலது கையில் நெருப்பும், பின்புறம் இடது கையில் பாசமும், பின்புறம் வலது கையில் திரிசூலமும் கொண்டு காணப்படுகிறார். அவரது வலது முன்புறம் இடது கையால் காலனுக்கு அறிவுறுத்துவது ஆள்காட்டிவிரல் போலவும் காணப்படும். வலதுகால் ஊன்றியும் இடது கால் மேலே தூக்கி நிற்பது போலவும் காணப்படுகிறது. கீழே பாம்பும் அதன் கீழே காலன் வீழ்ந்து கிடப்பது போலவும் காணப்படுகிறது. வலது கையால் மூவிலை வேலைப் பிடித்துக் காலனைக் குத்தி வீழ்த்த நிற்பது போல் காணப் படுகிறார். இதில் காலன் உருவமும் வலப்புறம் மார்க்கண்டன் உருவமும், கீழே ஒரு பூதம் போல் ஒரு குள்ளமான வடிவமும் காணப்படுகிறது. குள்ள உருவம் இன்னதென்று திட்ட வட்டமாகக் காணப்படவில்லை. இடது புறம் முன்கை விசுவமயக் கையாகவும் பின்புறம் இடது கை பாசம் ஏந்திய கையாகவும் காணப்படுகின்றன. சிவபெருமான் சடாமகுடம் தாங்கிக் காதிலும் கழுத்திலும், கையிலும் இடுப்பிலும், காலிலும் பல்வேறு அணிகலன் அணிந்தவராய்க் காணப்படுகிறார். இந்த மூர்த்தியின் திருஉருவம் மிக அழகுடன் பொலிகிறது. செம்பு உருவம் அழகுடன் திகழ்கிறது. மூர்த்தி எழிலுடன் நிமிர்ந்த நிலையில் நிற்கிறார். இதை அழகுற வடித்தெடுத்த சிற்பியின் கைவண்ணம் மெச்சத்தக்கது. 2. கால சம்மார மூர்த்தி- கொடும்பாளூர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்கோட்டைப் பகுதியில் உள்ள கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயிலில் கல்லில் கடைந்தெடுக்கப் பெற்ற இம்மூர்த்தியின் சிலை, பால் போன்ற பளிங்குக் கல்லில் செய்யப் பெற்ற படிமம் போல் கவினுறக் காட்சி அளிக்கிறது. இந்த மூர்த்தியின் சடா மகுடம் ஆகமங்கள் அறிவுறுத்தும் அழகுடன் அணி பெற்றிலங்குகிறது. மார்பில் பூணூலும் வயிற்றின் மீது குறுக்காக உதர பந்தமும் காணப்படுகின்றன. இம்மூர்த்தி நான்கு கைகள் உள்ளவராய்க் காணப்படுகிறார். வலது முன் கையில் பாசமும் பின் கையில் பரசும் இருக்கின்றன. இடது முன் கை சூசிக்கையாக இருக்கிறது. பின்கை நாகபாசத்தைத் தாங்கி இருக்கிறது. மூர்த்தி உடல் ஆகம விதிகளை அனுசரித்துச் சாய்ந்தவாறே இருக்கிறது. ஆனால் இங்கு இலிங்கமோ மார்க்கண்டனோ காணப்படவில்லை. மறலி மனம்பதறி மல்லாந்து கீழே வீழ்ந்து கிடக்கவில்லை. முழங்கால்கள் இரண்டையும் கீழே ஊன்றிக் கொண்டு கைகளைப் பூமியில் வைத்துக் கொண்டு சிவ பெருமான் காலடியில் சாய்ந்து கிடப்பது போல் காணப்படுகிறான். இறைவனின் இடது கால் அவனை முதுகில் மிதித்துத் தள்ளுவது போல் காணப்படுகிறது. கல்லில் செதுக்கப் பெற்ற இந்தக் கவினுறு சிற்பச் சிலை செம்பில் வார்க்கப் பெற்ற சிறந்தபடிமம் போல் பாங்குற விளங்குகிறது. இதைச் செதுக்கிய சிற்பி கையாண்ட செதுக்குமுறை பிற சிற்பிகள் கையாண்ட முறைகளைவிட முற்றிலும் மாறாகச் சீரிய முறையில் போற்றத்தக்கதாய் மிளிர்கிறது. 3. கால சம்மார மூர்த்தி - திருச்செங்காட்டன்குடி திருச்செங்காட்டன் குடி தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இது கணபதி கசமுகாசுரனை சம்மாரம் செய்த ஊராகும். இவ்வூர்ப் படிமம் சோழர் பாணியில் சீர்பெறச் செய்யப் பெற்றுள்ளது. மூர்த்தி சடாமகுடதாரியாய் எல்லா அணிகலன்களையும் அணிந்தவ ராய்த் திகழ்கிறார். நான்கு கைகள் காணப்படுகின்றன. இடது காலை ஊன்றிக் கொண்டு வலது காலால் காலனை மிதித்துத் தள்ளியிருக் கிறார். மறலி மல்லாந்து வீழ்ந்து கிடக்கிறான். இயமன் இறைவன் பாதங்களருகே முயலகனைப் போல் - ஆனால் குப்புற வீழ்ந்து கிடவாது மல்லாந்து கிடக்கிறான். காலாரியின் வலது கரத்தில் மூவிலை வேல் கட்டையாய் இருக்கிறது. பின்புறக் கையில் மழு இருக்கிறது. முன் இடது கை சூசிக்கையாகவும் பின்புறக்கை நாக பாசம் உடையதாகவும் இருக்கின்றன. உலகும் இலிங்க உருவமும் மார்க்கண்டேயரும் நமது கண்களுக்குப் புலப்படவில்லை. இந்த உருவம் கிட்டத்தட்ட பட்டீச்சுரத்திலுள்ள உருவம் போல் இருக் கிறது. பட்டீசுரத்திலுள்ள உருவம் இடது காலால் எமனை உதைப்பது போல் இருக்கிறது. இங்குக் காணப்படும் உருவம் இடது காலால் எமனை மிதித்துத் தள்ளி அவன் மார்பின் ஓரத்தில் அவரது காற்பெருவிரல் தொட்டுக் கொண்டு நிற்பது போல் இருக்கிறது. கொடுங்காலன் தலை கொடும்பாளூர் படிமத்தில் வலது பக்கமாக இருக்கிறது. இங்கு இடது பக்கமாக இருக்கிறது. இம்மூர்த்தியைச் செதுக்கிய சிற்பியும் கைவண்ணம் வாய்க்கப் பெற்றவரேயாவார். இவர் பணியில் குற்றம் கூறுவதற்கில்லை. கால சம்மார மூர்த்தியின் தத்துவம் இறைவனே இயற்கை என்று எண்ணப்படுகிறது. இயற்கை எப்பொழுதும் ஒரு நியதிக்குட்பட்டிருத்தல் இயல்பு. அதேபோல் இறைவனும் சில விதிகளுக்கு உட்பட்டிருப்பது போல் காணப்படு கிறான். இது பொதுவாக எல்லாச் சமயச் சான்றோர்களும் காணும் நெறி. இறைவனுடைய கட்டளை அல்லது விதி (ஆணை) நிரந்தர மானது. மாற்ற முடியாது. மாறுதல் இல்லாதது என்பது ஒரு பொது வான நம்பிக்கை ! ஆனால் எந்த விதிக்கும் ஒழுங்கிற்கும் சட்டத் திற்கும் ஒரு விதிவிலக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இறைவன் எல்லாம் வல்லவன். எதையும் மாற்றவும் எதையும் அழிக்கவும் எதையும் உருவாக்கவும் வல்லவன் என்றால் அவனுக்கு அவனது சட்டத்தை ஆணையை மாற்றவும் புதிய ஆணையை உண்டாக்கவும் முடிய வேண்டும். இந்த ஆற்றல் இறைவனுக்கு உண்டு என்பதை ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் என்ற குறளில் வள்ளுவர் எடுத்துக் காட்டியுள்ளார். ஊழ் என்பதற்கு இருவினைப்பயன், செய்தவனையே சென்றடைவதற்கு ஏதுவாகிய நியதி முறை, உண்மை, விதி என்றெல்லாம் பொருள் கூறப்படும். ஊழ்வலிது, ஊழ்வினையால் வரும் பயன் அதைத் தேவர்களாயினும் மக்களாயினும் அனுபவித்தேயாக வேண்டும் என்பதே விதி. ஆனால் விதிக்கும் ஊழிற்கும் சில விதிவிலக்கு உண்டு என்றே சைவநெறி கூறுகிறது. சிவபெருமான் விதியையும் மாற்றியமைக்கும் ஆற்றலும் ஆண்மையும் அதிகாரமும் உடையவன். இதனை வள்ளுவர், தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலிதரும் என்ற குறள்பாவின் விதிக்கு விலக்கு உண்டு என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். இந்த விதி விலக்கை எடுத்துக் காட்டவே மார்க் கண்டன் கதை எழுந்தது. இறைவன் ஒரு விதியை ஏற்படுத்தி யுள்ளான். அது மாற்ற முடியாத ஒரு சட்டமேயாகும் என்றாலும் மக்கள் இறைவனிடம் மன்றாடி அந்த விதியை மாற்றியமைக்கும் படி வற்புறுத்தி வேண்டினால் எல்லாம் வல்ல இறைவன் திருஉள மிரங்கி விதியை மாற்றி அமைத்து அவனது ஆணைக்கு அவனே ஒரு விதிவிலக்கை அருளுவான் என்பது மார்க்கண்டன் கதையின் சாரம். மொத்தத்தில் கால சம்மார மூர்த்தத்தின் தத்துவம் தெய்வபக்தியினால் மற்றொரு விதியும் மாற்றப்படும் என்பதேயாகும். இறைவன் எல்லாம் வல்லவன். அவனால் எதுவும் செய்ய முடியும். அவனால் முடியாத காரியம் எதுவும் இல்லை. அவன் சர்வாதிகாரி என்பதே இந்த மூர்த்தத்தின் மூல தத்துவமாகும். இறுவாய் இறைவனின் எண்வகைக் கோலங்களை (அஷ்டமூர்த்தங் களை)ப் பற்றி விளக்க இவ்வேடு எழுந்துள்ளது. இதில் மக்களின் தோற்றம், குமுகாய வளர்ச்சி, அறிவுப் பெருக்கம், குடும்பத் தலைவி, தாய்த் தெய்வம், உருவ வழிபாட்டின் உற்பத்தி, படிமக்கலையின் வளர்ச்சி, படிமங்களின் இலக்கணம், தசதால இலட்சணம் இன்னோரன்ன எண்ணிலாப் பொருள்கள் எல்லாம் எடுத்தாராயப் பெற்றுள்ளன. கலைப் புலமை வாய்ந்த நுண்ணறிவாளர்கள் படிமங்களின் இலக்கணம் அதன் அளவை முறைகள் ஆகியவை இந்நூலில் இடம் பெற்றிருப்பதனை ஏற்றுக் கொண்டாலும், மக்களின் தோற்றம், உருவ வழிபாட்டின் தொடக்கம், சிற்பக்கலை வளர்ச்சி ஆகியவைகள் இங்கு இடம் பெற்றிருப்பது அவசியமா? - என்று கேட்பினும் கேட்பர். ஆனால் இந்நூல் கலைநூற் புலமை யுடையோர்க்காக எழுதப்பெற்ற நூல் அன்று. கலைத்துறையில் அதிகம் ஈடுபடாத பொதுமக்களுக்காக எழுதப் பெற்றதால் மக்களின் உற்பத்தி, குமுகாய அமைப்பு, குடும்பத் தலைவியின் ஏற்றம், தாய்த் தெய்வத்தின் தோற்றம், உருவ வழிபாட்டின் தொடக்கம் ஆகியவை களைப் பற்றி விளக்கமாக எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. தமிழகத்தின் தொன்மை, தமிழ்மக்களின் எழுச்சி, தாய்த் தெய்வத்தின் காட்சி, தந்தைத் தெய்வத்தின் மாட்சி, அம்மை யப்பனின் தோற்றம், சிவலிங்க வழிபாடு முதலியவைகள் விரிவாய் விளக்கப்பட்டுள்ளன. உருவ வழிபாடு தமிழகத்தில் தோன்றியதா அல்லது அயல் நாட்டினின்று இங்கு கொண்டுவரப்பட்டதா? - என்றெல்லாம் இன்று இந்நாட்டில் வாழும் ஒரு சிலரால் வினாக்கள் வினவப்படுகின்றன. ஏன்? தமிழ் மக்களுக்கே இவைகளைப் பற்றி ஐயப்பாடுகள் எழுந்துள்ளன. தமிழகம் உலகிலே மிகவும் தொன்மையான காலத்தில் தோன்றிய நாடு. இதன் தொன்மைக்கு இந்தநாட்டின் அமைப்பும் அதன் பாறைகளும் மரங்களும் சான்று தருகின்றன. தமிழ்நாட்டி லுள்ள மலைகளையும் பாறைகளையும் ஆய்ந்த அறிவியல் விற்பன்னர்கள் இவைகள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என்று முடிவுகட்டியுள்ளனர். மனித வர்க்கம் தோன்றிய முதலிடம் தென் இந்தியா என்பது தமிழறிஞர்களின் எண்ணம். ஆனால் இன்று மனிதன் முதலில் தோன்றிய இடங்களில் தென் இந்தியாவும் ஒன்று என்று பல நில நூல் வல்லுநர்களும் மானிட நூல் வல்லுநரும் கூற முற்பட்டு விட்டனர். இந்தியாவில் ஆதி மனிதன் தக்கணத்தில் ஆறு லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று நிலநூல் வல்லு நர்கள் கூறுகின்றனர். ஆதிமனிதன் வாழ்க்கை தொடங்கிய காலம் ஏறத்தாழ ஐந்து லட்சம் ஆண்டுகளுக்குமுன் என்று கணித்துள்ளனர். வரலாற்றுக் காலத்திற்குமுன் மக்கள் பயன்படுத்திவந்த கருவிகள், பொருட்கள், தாதுப் பொருள்கள் முதலியவைகளின் பெயரால் அவ்வக்காலங்களை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். எடுத்துக் காட்டாகத் தொல்பழங்கற்காலம், பழம் கற்காலம், இடைக்கற் காலம், புதிய கற்காலம், கற்கட்டுப் பண்பாட்டுக்காலம், வெண்கலக் காலம், இரும்புக்காலம், செம்புக்காலம் என்றெல்லாம் கூறப்படு கின்றன. தொல்பழங்கற்காலம் தொட்டு நேற்று வரை அதாவது - வரலாற்றுக் காலம் வரை மக்கள் தென் இந்தியாவில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களின் அடிச்சுவடுகளும் அவர்கள் பயன்படுத்திய கற்காலக் கருவிகளும் அவர்கள் குகைகளிலும் பிறவிடங்களிலும் உணவு சமைத்த சாயலும், உலோகக் கருவிகளும், கல்லறைகளும், கோடரி, அரிவாள் ஈட்டி போன்றவையும் சிவலிங்கம், நந்திச்சிலை போன்றவைகளும் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள பாலாற்றின் கிளைநதியான கோத்தலையாற்றுப் படுகையினை அகழ்ந்து பார்த்து 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அங்கு வாழ்ந்த தொல்பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகளை இந்தியப் புதை பொருள் ஆராய்ச்சித் துறையினர் கண்டெடுத்துள்ளார்கள். இதே போன்று ஆந்திர நாட்டிலும் புதை பொருள் ஆராய்வுத் துறை வல்லுநரான செர்மன் மங்கை ஒருத்தி 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல் பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான கருவிகளை அகழ்ந்தெடுத்துள்ளார். தென் இந்திய மக்களின் வரலாறு நிறைவானதாக எழுதப்பட வில்லை. இதுவரை போதிய சான்றுகளும் கிட்டாது இருந்து வந்தன. இப்பொழுது சிறிது சிறிதாகப் பல சான்றுகள் கிடைத்துள்ளன. ஆதித்தநல்லூரில் அகழ்ந்து கண்ட பொருள்களையும் சிந்துவெளி நாகரிகத்தில் உந்திய பொருள்களையும் ஆராய முன்வந்த வரலாற்றுப் பேரறிஞரும் புதை பொருள் ஆய்வுத்துறை இயக்குநரும், வங்கம் தந்த எங்கள் தங்கப் பேரறிஞருமான இராகேல் தாசு பானர்ஜி (r.d. Banerji) இவ்விரு இடங்களுக்கு இடையேயுள்ள அரிக்கன் மேடு, ஐதராபாத், குசராத் முதலிய இடங்களில் கிடைத்த பொருள்களையும் ஒப்பிட்டுத் திராவிட நாகரிகம் சங்கிலித் தொடர்பு போல் அரப்பாவிலிருந்து ஆதித்தநல்லூர்வரை ஒழுங்காக அமைந்துள்ளது என்று எடுத்துக் காட்டியுள்ளார். இப்பொழுது சிந்துவெளிகளில் பொறித்துள்ள ஓவிய எழுத்துக்களைப் படித்த பின்லாந்துப் பேரறிஞர்களும் சோவியத் பேரறிஞர்களும் அதை ஆதரித்து எழுதியுள்ளனர். இந்தியாவில் 5000 ஆண்டிற்கு முன்னே சிறந்து வாழ்ந்த முதுமக்கள் நாகரிகமுடையமக்களாய் நாலடுக்கு மாடிகளை நன்கு அமைந்திருந்தனர், உலகிலே ஒப்பற்ற வானநூற் புலமையுடையோ ராய் இருந்தனர். தாய்த் தெய்வ வழிபாடும், இறைவழிபாடும் இலிங்க வழிபாடும், கிருஷ்ணன்(திருமால்) வழிபாடும் செய்து வந்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது இலக்கியங்களில் காணப்படும் தெய்வங்களுக்கும் சமயங்களுக்கும் நானிலத்திற்கும், புதைபொருள் ஆராய்ச்சியினர் முடிபுகளும், அவர்கள் கண்ட உருவங்களும் கற்காலக் கருவிகளும், உலோக கால ஆயுதங்களும் பானை சட்டிகளும் பொம்மைகளும் கட்டிடங்களும் ஓவிய எழுத்துகளும் எவ்வளவு ஒத்திருக்கின்றன? நமது மனித குல வளர்ச்சி இயல்பு, விதிகளைப் பற்றிய ஆய்வுநூல் (sociology) எவ்வளவு தூரம் ஆதரவாக இருக்க முடிகிறது ? -என்பன வெல்லாம் ஆய்ந்து இங்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. வரலாற்றுக் காலத்திற்கு முந்திய மக்களின் வாழ்க்கை முறைகளை அறியப் புதைபொருள் ஆய்வு நூலும் சமுதாய இயல் நூலுமன்றி நமக்கு வேறு எந்த நூல் நல்ல ஆதரவு தர முடியும் ? கொற்றவை மலையே மக்களின் ஆதி வாழ்விடம். தாயே நமது தலைவி; அவளே நமது அரசி; அவளே நமது தெய்வம். அவளே நமது தெய்வ உணர்வின் கரு. ஞாயிறு, நமது வாழ்விற்கு அடிகோலிய அமுத ஊற்று. அதேபோல் திங்களும் விண்மீன்களும் தீயும் நமது தெய்வ எண்ணங்களுக்குரிய வித்துக்கள். கொற்றவை நமது தமிழர் சமுதாயத்தின் ஆதித் தெய்வம். இவள் மாயோள், பழையோள், காடுகிழாள், துணைங்கையஞ் செல்வி, காளி நீலி, சூலி என்ற பெயரால் வழிபடப்பட்டுள்ளாள். இவளது நினைவுக்குறியாக, வழிபாட்டு வழியாக உருவவழிபாடு உந்தியது. இவள் ஆதிப் பொது உடைமைச் சமுதாயத்தில் (premitive communist Society) எழுந்த வீரத் தெய்வம்; காக்கும் கடவுள்; தியாகச் செம்மல். தமிழ்நாட்டில் எப்பொழுது தோன்றினாள் ? - என்று கூற முடியாது; தமிழ் இலக்கியத்தின் மூலம் இவள் மூவாயிரம் ஆண்டிற்கு முன் அரும்பிய தெய்வம்; அரப்பன் - திராவிட நாகரிகத்தில் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் எழுந்த தெய்வம் ஆவாள். சிந்து வெளிப் புதைப் பொருள் ஆராய்ச்சித் தலைவர் (director general of archaeology) திரு. சர் ஜான் மார்சல் தாய் அல்லது பெருந்தாய், பிற்காலத்தில் பிறந்து உருவாக்கிய மூலப் பொருளின் (பிரகிருதியின்) முதல் உருவமாகும். அவளுடைய பிரதிநிதிகளே இன்று எண்ணிலாச் சிற்றூர்களில் காணக் கிடக்கும் சிறுதெய்வங்களாகும். அவைகளின் பெயர்களும் வரலாறுகளும் எண்ணற்றன. என்றாலும் எல்லாம் ஒரே அடிப்படை யில் இருந்து அரும்பியதாய்க் கருதப்படுகின்றது. இச்சிறு தெய்வங் களின் மூல சக்தியே செழிப்பின் தெய்வம்; உழைப்பின் தெய்வம். இப்பெண் தெய்வங்கள் அனைத்தும் ஆரியர்க்கு முற்பட்ட, ஆரியரல்லாத இனத்தவர்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதில் இம்மியளவும் ஐயம் இல்லை. ஆரியர்கள் இந்நாட்டில் அடியெடுத்து வைக்க ஆரம்பிக்கு முன்னரே இங்கு வாழ்ந்த மக்கள் (பிற்காலத்தில் எழுந்த) இந்து சமயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தகைய ஆதி மக்களிடையே பெண் (தாய்) தெய்வ வழிபாடு நிலைத்துள்ளது என்று கூறியுள்ளார்கள். ஜான்மார்சல் அவர்கள் கூற்றுப்படி சிந்து வெளிநாகரிகத்தில் கண்ட, தாய்த் தெய்வ வழிபாடு, தமிழர்களிடையே இன்றுவரை பொன்றாது நிலவி வருகிறது. சங்க இலக்கியங்களில் மட்டுமன்றிச் சைவ சமய சாத்திரங் களிலும் தாய்த் தெய்வ வழிபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. தொல் காப்பியம் என்னும் பழம் பெரும் நூலில் கூடக் கொற்றவைக்குப் பலி கொடுத்து வழிபடும் முதுபெரு நிலை குறிப்பிடப்பட்டுள்ளது. தாய்த் தெய்வமே சைவசமயத்தில் சக்திவணக்கமாய்ப் போற்றப் படுகிறது. இந்தத் தாய்த் தெய்வமே ஒரு காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் முதலிய நானிலங்களிலும் பாலை நிலத்திலும் தனிப் பெருந் தெய்வமாக ஆட்சி புரிந்து இருந்து வந்துள்ளது. ஆனால் பிற்காலத்தில் எழுந்த சங்க மருவிய நூற்களிலும், சங்க காலத்திற்குப் பின்னர் எழுந்த நூற்களிலும் கொற்றவை பாலை நிலம் ஒன்றில் மட்டும் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. மக்களின் விலங்குப் பிராயத்தில் கொற்றவை குறிஞ்சி நிலத்தில் தோன்றி எல்லா நிலத்திலும் தனி அரசாட்சி புரிந்து வந்துள்ளாள். மக்களின் மிருகப் பிராயத்தில் உணவிற்காகத் தன் உடற்பலத்தை நம்பி விலங்கு களோடு போராடும் காலத்தில் பிறந்த பழம் பெரும் தெய்வமாவாள். ஆதியில் தமிழ்ப் பெருங்குடி மக்களின் முன்னோர்கள் கண்ட தாய்த் தெய்வமாகிய கொற்றவையே முருகனாகவும் மாயோனாகவும் பெருந்தெய்வமாகிய சிவபெருமானாகவும் பரிணமித்துள்ளாள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் மக்கள் அறிவு வளர்ச்சி பெற்ற காலத்தில் ஆணும் பெண்ணும் கூடி மணம் புரிந்து இனவிருத்தி செய்யும் நியதியை உணர்ந்தனர்; வளம் நிறைந்த நிலத்திலே வித்தை ஊன்றுவதன் மூலம் மரம் செடிகொடிகள் உரம் பெற்றுத் துளிப்பதை அறிந்தனர். அதன் பின்னரே தாய்த் தெய்வத் தோடு தந்தைத் தெய்வமும் இருக்க வேண்டும் என்று கண்டனர். அதன் பிறகே அம்மையப்பர் என்ற உணர்வு எழுந்தது. என்றாலும் தாய்த் தெய்வம் முந்தியதா? தந்தைத் தெய்வம் முந்தியதா ? தாய்த் தெய்வம் சிறந்ததா ? தந்தைத் தெய்வம் சிறந்ததா ? வித்து முந்தியதா, மரம் முந்தியதா ? முட்டை முந்தியதா ? கோழி முந்தியதா ? என்ற வினாக்கள் எழுந்தன. இறுதியாக முட்டைதான் முந்தியது என்று முடிவு கண்டனர். இதன் பலனாகத் தாய்த் தெய்வமே முந்தியது என்று முடிவு கட்டினர். இதற்குப் பல அறிஞர்களின் ஆதரவும் கண்டனர். ஆனால் சைவப் பெரியோர்கள், சக்தி என்பது சிவத்தின் ஆற்றலேயாகும். சக்தி பெண்ணல்ல; சிவம் ஆண் அல்ல. நெருப்பில் அடங்கியிருக்கும் சூடுபோல ஊழிக்காலத்தில் சக்தி சிவத்தில் அடங்கும். நெருப்பில் அடங்கியிருக்கும் சூடு, காற்றால் கிளர்ந்தெழுவது போல் சிவத்தில் அடங்கி நிற்கும் சக்தி இயக்க முறும் பொழுது உலகிற்குக் காட்சி அளிக்கும், சக்தி சிவத்தில் தோன்றுவதும் ஒடுங்குவதுமாகிய மாறுதலை அடையும். சிவம் ஒன்றில் தோன்றுவதோ ஒன்றில் ஒடுங்குவதோ இல்லை. சக்தி தொழிற்படும். சிவம் தொழிற்படாது இருந்து தொழிலைப் பயனுறச் செய்யும். சக்திகளிலிருந்து சதாக்கியங்களும் சதாசிவம் மகேசுரம் ஆகிய மூர்த்திகளும் எழுந்தன. இதைச் சக்தியின் படைப்பு என்று சைவ சித்தாந்த விற்பன்னர்கள் விளக்கியுள்ளார்கள். சேயோன் (முருகன்) முருகன் முற்காலத் தமிழர் கண்ட பழம்பெருந் தெய்வங்களில் ஒன்று. முருகனை வேலன், சேய், செவ்வேள் என்றெல்லாம் அழைப்பர். ஆரியர்கள் முருகனை கந்தன் (கந்தன்), கார்த்திகேயன், சுப்பிரமணியன், குமரன், ஆறுமுகன், சிவகுமாரன், சண்முகன் என்று வழங்கினர். ஆரியர்கள் இத்தெய்வத்தின் பெயரால் பல புராணக் கதைகளைப் புனைந்தனர். பிற்காலத்தில் இத்தெய்வக் கதை தமிழர் கண்ட இயற்கைத் தெய்வமாகிய முருகனுக்குரியதாகக் கூறப் பட்டது. முருகனே கந்தன் என்று கூறப்பட்டான். தந்தை வழி வந்த நாகரிகப் பண்பு, தமிழகத்திலே புகுந்தது. சமயம், கலை, மொழி முதலியவைகளோடு உறவுற்றுத் தலைதூக்கிய காலத்திலே இந்தத் தெய்வ ஒருமைப்பாட்டை ஆரியர்கள் வலிந்து நிலைநாட்டினர். முருகனைத் தமிழ் நூற்கள் ஆதியில் சிவகுமாரன் என்று கூறவில்லை. அவன் தாய்வழி உரிமை கொண்டாடும் தமிழர் சமூகத்தில் பிறந்து ஆட்சி பீடத்தமர்ந்தும் பின் சேய்த் தெய்வமாகத் திகழ்ந்தும் வந்தான். திருமுருகாற்றுப்படையில் மலைமகள் மகனே என்றும் இழையணி சிறப்பிற்பழையோள் குழவி என்றும், வெற்றிவேல் வெல்போர்க் கொற்றவை சிறுவ என்றும் கூறப்படுகின்றது. இன்று தாய்வழி உரிமை நிலவும் கேரள நாட்டில் மக்கள் ஒருவனை மாயன் நாயர் மகன் என்று கூறாது மாலினி மகன் என்று கூறுவது போல் முருகனைச் சிவன்மகன் என்று கூறாது கொற்றவை மகன் என்று கூறுவதிலிருந்து பழங்காலக் குறிஞ்சி நிலத்தில் தாய்வழி உரிமை நிலவிய சமூக உறவுமுறை திகழ்ந்தது என்றும், அக்காலத்தில் முருகன் தோன்றியதால் அவன் கொற்றவை மகன் என்று கூறப் பட்டான் என்றும் நன்கறிகிறோம். இதன் மூலம் பழங்காலத்தில் தாய்க்கு இருந்த உயர்வும் நன்கு தெரிகிறது. தாய்த் தெய்வத்தின் தனிப் பெருஞ்சிறப்பை எளிதில் உணர முடிகிறது. தமிழர்களிடையே முருகன் (வேலன்) ஒரு போர்த் தெய்வமாகவும் குறவர்களின் (வேடர் களின்) வெறியாட்டுத் தெய்வமாகவும் காணப்படுகிறான். முருகன் தமிழர் புராதனப் பொது உடைமைச் சமூகமாய் உருப்பெற்றெழுந்த காலத்தில் வேட்டுவ நெறியினர் கண்ட தெய்வமாவான். மக்களின் மிருகப் பிராயம் மாறிச் சிறிது நாகரிகம் துளிர்த்து மக்கள் தங்கள் உணவிற்காக வேல் ஏந்தி நின்ற சமூகத்தில் எழுந்த தெய்வம் - வேலன் (முருகன்) ஆவான். மாயோன் மாயோன், திருமால் என்றும் அண்ணன் என்றும் கூறப்படு வான். மாயோன் முல்லை நிலத் தெய்வம். மாயோள் என்று கூறப்படும் கொற்றவையின் இடத்தில் சேயோனாகிய அவள் மகன் அமர்ந்து ஆட்சி நடத்தி வந்தது போல், மாயோள் இடத்தில் அவளது அண்ணனாகிய மாயோன் அமர்ந்து ஆட்சி நடத்தி வந்தான். ஆனால் அவளது பழம் பெரு நிலமாகிய குறிஞ்சியில் அவளது மகனும் பிற்காலத்தில் அவள் ஆட்சி அரும்பிய முல்லையில் மாயோனும் ஆட்சிக்கு வருகின்றார்கள். புராணங்களில் மாயோள் சிவனுடைய மனைவியாகக் கூறப்படுகிறாள். பின்னர் மாயோன் சிவனுடைய மைத்துனனாகக் கூறப்படுகிறான். இந்த மைத்துனனே (அரியே) மனைவி வேடத்திலே அரனோடு (சிவனோடு) செல்வ தாகவும் அவனோடு கூடி அரிகரனைப் பெற்றதாகவும் கூறப்படு கிறது. இத்தெய்வம் பிற்காலத்தில் ஆரியர்கள் கண்ட விட்ணுவோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆரியர் தெய்வம் விட்ணுவின் கதைகள் தமிழர் கண்ட முல்லை நிலத் தெய்வமாகிய திருமால் தலையில் ஏற்றப் பெற்றுள்ளன. முல்லை நில மக்கள், குறிஞ்சி நில மக்களினின்று நாகரிகம் பெற்றவர்கள். கொற்றவை, கையில் அறுபட்ட தலைகளும், முருகன் கையில் வேலும், திருமால் கையில் குழலும் காணப்படுகிறது. இவைகள் இத்தெய்வங்களின் தன்மையைப் புலப்படுத்தும். மாயோன் குழல் ஊதுபவனாகவும் ஆடுமாடு மேய்ப்பவனாகவும், வெண்ணெய் திருடுபவனாகவும் கோபிகளோடு கூடிக் காதல் விளையாட்டுப் புரிபவனாகவும் பீதாம்பரம் அணிந்தவனாகவும் கோதண்டம், சக்கரம், சங்கு தரித்தவனாகவும் காணப்படுகின்றான். திருமால் (மாயோன்) முல்லை நிலத்தின் தன்மையை நன்கு பிரதிபலிப்பவனாகக் காணப்படுகிறான். வேட்டையாடி வயிறு வளர்த்து வந்த குறிஞ்சி நில மக்களின் சகோதரர்களான முல்லை நில மக்கள், நாகரிக வளர்ச்சிக்கும் சிறுதொழில் வளர்ச்சிக்கும் இசை வளர்ச்சிக்கும் சிறப்பாக உணவு உற்பத்திப் பெருக்கத்திற்கும் காதல் விளையாட்டிற்கும் உலகில் முதன் முதலாக வழிகண்ட மக்களாய்க் காணப்படுகின்றனர். முல்லை நிலத்தில்தான் பசு, ஆடு முதலிய விலங்குகளை மக்கள் பழக்கி அவைகளின் பாலைக் கறந்து சாப்பிட ஆரம்பித் தனர். பாலைக் காய்ச்சி தயிர் எடுக்கவும், வெண்ணெய், நெய், மோர் முதலியவைகளை உற்பத்தி செய்யவும் வழிகண்டனர். ஆட்டுத் தோலைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் ஊனைத் தின்று உயிர் வாழவும் முற்பட்டனர். இன்றைய அரசியல் ஆராய்ச்சியாளர்கள் முல்லை நிலத்திலே மாயோள் ஆட்சி மறைந்து மாயோன் ஆட்சி அரும்பியது. மாயோள் வழிபாடு குன்றி மாயோன் வழிபாடு எழுந்தது. மாயோன் வழிபாடே வைணவ நெறியாக மலர்ந்தது என்று கூறுகின்றனர்.1 மேலும் முதன் முதலாக முல்லை நிலத்திலே புன்செய்த் தானியம் பயிரிடப் பெற்றது. சிறுதொழில்கள் பல தோன்றின. மக்கள் உணவுப் பற்றாக்குறை என்னும் துன்பநிலை அகற்ற வழி கோலப்பட்டது என்று கூறுகின் றனர். உணவுப் பற்றாக்குறை நீக்கப்பட்டதின் எதிரொலியாகவே இந்த நிலத்தில் நாகரிகம் எழுந்தது. இசை முழக்கமும் குழல் யாழ் முதலிய இசைக்கருவிகளும் பிறந்தன. இங்குதான் ஆண் பெண் உறவு நிலை உயர்ந்து, மக்கள் வாழ்க்கை நிலை ஒருவரன் முறைக்குட்பட்ட தாய்த் துளிர்க்க ஆரம்பித்தது. இந்நிலத்திலே முதன்முதலாக மக்களின் வாழ்க்கை முறை ஒழுங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அகத்திணை புறத்திணை என்ற திணை (ஒழுக்க) இயல்புகள் ஆகியவைகளுக்கு அடிப்படையிடப்பட்டது. மக்களின் நல்ல காதல் வாழ்க்கை அரும்பியது. இந்நிலத்தில்தான் புராதனப் பொது உடைமைச் சமூகம் சிறப்புடன் நிலவியது. சிவபெருமான் சிவபெருமான் தமிழர் கண்ட பெருந் தெய்வம்; சிவபெருமான் மிகமிகத் தொன்மையான தெய்வம் என்று கூறப்படுகிறது. சிவம் என்னும் சொல் செம்மை என்பதன் அடியாக அரும்பிய ஒரு தனித் தமிழ்ச் சொல். இதற்குச் சிவப்பு, நன்மை, மங்களம், மகிழ்ச்சி என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகின்றன. சிவம் என்ற பெயரிலிருந்து சிவன் என்ற பெயர் திரிபுற்றெழுந்தது. சிவன் என்ற சொல் நாம் அறிந்த அளவில் ஆண்பாற் பெயராகவே பயன்படுத்தப் பெற்றுவந்துள்ளது. சிவன் என்ற பெயர் தமிழகத்தில் ஆரியர் செல்வாக்கு மிகுந்திருந்த காலத்தில் எழுந்த தமிழ்ச் சொல் அன்று, வடமொழிச் சொல் என்று கூறப்பட்டு வந்தது. அப்பால் சென்னை மாகாணத்தில் அரும்பிய தென் இந்திய நல உரிமைச் சங்க எழுச்சியின் பயனாகப் பார்ப்பனரல்லாதார் கட்சி வலுப்பெற்று எழுந்தது. அதுவரை, தமிழ் மொழி ஆரியத்தினின்று பிறந்த மொழி என்று கூறப்பட்டது. அப்பால் ஆரியத்திற்குச் சமமான மொழி என்று சொல்லப்பட்டது. சைவம் சுமார்த்தமதத்தின் கிளைமதம் என்று பறையறைவிக்கப்பட்டது. தமிழர்களின் வேதம் வட மொழியில் எழுந்த இருக்கு, யசுர், சாமம், அதர்வணமேயாகும்; தமிழர்களின் தெய்வம் உருத்திரன், பிரமன், விஷ்ணு முதலிய தெய்வங்களேயாகும். வேதவிதிப்படி தமிழர்கள் அனைவரும் சூத்திரர்களே. சிவன் என்ற வார்த்தை வடசொல்லே என்ற வாதங்களெல்லாம் ஆராயப் பெற்று அவைகளெல்லாம் தவிடுபொடியாக்கப் பெற்றுத் தமிழர்கள், ஒரு தனியினம் அவர்களுக்கென்று ஒரு தனிமொழியும் மன்றங்களும் கடவுளும் சமயங்களும், கலைகளும் பண்பாடுகளும் உடையும் உணவும் உண்டென்று நிலைநாட்டப் பெற்றது. இதன்பயனாகச் சிவன் என்னும் தெய்வம் தனித் தமிழ்த்தெய்வம் என்று உறுதிப் படுத்தப் பெற்றது. ஏன் திருமாலும் கொற்றைவையும் முருகனும் தமிழர் தெய்வங்களே யாகும் என்று முடிவு செய்யப் பெற்றது. தமிழ் மக்கள் செய்த தவப்பேறாக எழுந்த உயர்திரு மறைமலைஅடிகளும், எம்.எ.சுந்தரம் பிள்ளை அவர்களும் தனித் தமிழ்க்கிளர்ச்சிக்கு அடிகோலினர். சைவம் தமிழர் கண்ட தூய நெறி என்று நிலை நாட்டினர். தமிழர்களுக்குத் தமிழில் நான்மறைகள் இருந்தன என்றும் அவற்றிற்கும் ஆரியர்கள் கண்ட நால்வேதத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்றும் கூறித் தமிழர் இயக்கத்திற்கு அடிகோலினர். திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் மறைமலை அடிகளார்க்குப் பக்கபலமாக நின்று இந்தியாவில் தமிழ் மக்கள் ஒரு தனியினம் என்றும் அவர்களின் முழு முதல் தெய்வம் சிவபெருமான் என்றும் அவர்களுக்கு சிவபெருமான் அளித்த நான்மறைகள் உண்டு என்றும் போர் முரசறைந்தார். தமிழ் மக்கள் வேட்டுவ வாழ்க்கை நிலையில் இருந்த பொழுது சிவனை வழிபட்டமையால், தமக்குள் புலியை வென்ற அரிய சின்னமாக மதிக்கப்பட்ட புலித்தோலையும் பாம்பு வசியத்தையும் அப்பெருமானுக்கு ஏற்றி வணங்கினர் போலும். புலித்தோல் ஆடையும் பாம்பு நகையும் சிவபெருமானுக்கு உரியவையாயின என்றும் சிவபெருமான் தமிழர் தெய்வம் என்பதோடு பழம் பெருந்தெய்வம் என்றும் வற்புறுத்திக் கூறிவந்தார். சிவம் என்ற சொல் தனித்தமிழ்ச் சொல் என்று இராப்சன் போன்ற பேரறிஞர்கள் எடுத்துக் காட்டியதும் டாக்டர் கிரையர்சன் போன்றவர்கள் சிவன் என்ற சொல் தமிழ் மக்கள் தாங்கள் கண்ட முழுமுதல் தெய்வத்திற்கு வழங்கிய பெயர் என எடுத்துக்காட்டியதும் தமிழர் எழுச்சிக்குத் துணை நின்றன.1 சிவன் தமிழர்களின் தொன்மையான காலத்தில் எழுந்த பெருந் தெய்வம் என்று கூறப்பட்டாலும் இன்று நமக்கு கிடைத்துள்ள தமிழ் நூற்களை வைத்து ஆராய்ந்து பார்த்தால் சிவபெருமான் பழமையான தெய்வம் என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் காணப்படவில்லை என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். சிவன் என்னும் சொல்லை இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு களுக்கு முன் எழுந்ததாகக் கூறப்படும் தொல்காப்பியத்தில் காண முடியவில்லை. அதோடு தமிழர் கண்ட ஐந்து வகை நிலங்களிலு முள்ள மக்கள் வணங்கிய தெய்வப்பட்டியலில் சிவன் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் கிறித்தவ சகாப்தம் எழுந்தபின் தமிழகத்தில் எழுதப்பெற்ற தமிழ் இலக்கியங்களிலும் சமய நூற்களிலும் சிவன் என்னும் பெயர் காணப்படுகிறது. ஆனால் சேயோன், கொற்றவை, திருமால், வேந்தன், வருணன் முதலிய தெய்வப் பெயர்கள் காணப்படுகின்றன. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் ஞாயிறு, திங்கள், நெருப்பு ஆகியவைகளை வழிபட்டு வந்துள்ளனர் என்று கூற முடியும். கொடிநிலை, கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (தொல்.பொ.புற. 7) என்ற தொல்காப்பியச் சூத்திரம் இதனை உறுதிப்படுத்துகிறது. இந்தச் சூத்திரம் கூறும் கொடிநிலை என்பதற்கு ஞாயிறு என்றும் கந்தழி என்பதற்கு நெருப்பு என்றும், வள்ளி என்பதற்குத் திங்கள் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ஞாயிறு திங்கள் நெருப்பு வழிபாடு முத்தீவேட்டல் என்று கூறப்பட்டது. இந்த மூன்று தெய்வங்களின் வழிபாடே பிற்காலத்தில் முறையே சிவபெருமான், கொற்றவை, முருகன் வழிபாடாக மலர்ந்தது. (உருத்திரன் நான்முகன் திருமால் வழிபாடாகப் பரிணமித்தது என்பாரும் உளர்) பின்னர் இந்த முத்தெய்வ வழிபாட்டோடு திருமால் வருணன் வழிபாடும் கூடி ஐந்து நிலங்களுக்குரிய தெய்வ வழிபாடாக எழுந்தது என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். ஞாயிறு சிவபெருமானாகப் பரிணமித்து மருத நிலத் தெய்வமாக எழுந்தது. மருத நிலத்தில் நாகரிகம் முதிர்ந்து குடும்பத் தலைவி ஆட்சி வீழ்ந்து குடும்பத் தலைவன் ஆட்சி எழுந்து அப்பால் அது வேந்தன் ஆட்சியாய்த் துளிர்த்த காலத்தில் வேந்தன் சிவபெருமானாகத் தோன்றியிருக் கலாம் என்பது எமது எண்ணம். மருத நிலத்தில் சிவவழிபாடு விருத்தி அடைந்த பொழுது, ஞாயிற்றில் சிவபெருமான் வீற்றிருப்ப தாகக் கருதப்படவே ஞாயிற்றின் செந்நிறம் சிவனுக்கு உரித்தாயிற்று. மக்கள் ஞாயிற்றைச் சிவபெருமானோடு இணைத்து வழிபட்ட காலத்தே செந்நிறமுடைய இளங்கதிர் சிவனது மகனாகிய முருகனது உருவமாகக் கருதப்பட்டது. இதனால் முருகன் செவ்வேள் எனப் பட்டார். சிவனும் செய்யோன், செவ்வண்ணன், செஞ்சடையான் என்றும் அழைக்கப்பட்டான். சிவ வடிவில் நான்கு வகையுண்டு. வலப்பக்கம் மேற்புறக் கையில் மழு அல்லது சூலம் வைக்கப் பட்டுள்ளது. அது தந்தைத் தெய்வத்தின் வீரத்தைக் காட்டும் பழங் கற்காலப் படையாகும். சூலம் என்பது புதுக்கற்கால ஈட்டிபோல்வ தாகும். வலப்பக்கம் அன்பர்களை அஞ்ச வேண்டாம் என்று காட்டும் அபயகரமாக அமைந்திருக்கும். இடப்பக்கத்தின் மேற்புறத் தில் உள்ள கையில்திகழும் மான் வேட்டுவ மகளிரால் விரும்பி வளர்க்கும் மானைக்குறிப்பதாய்த் தாயின் இரக்க நிலையை உணர்த்தும். இடப்பக்கத்துக் கீழ்க் கை மக்களுக்கு உணவுப் பொருள்களைப் பகுத்துக் கொடுக்கும் முறையில் அமைந்துள்ளது. தமிழர்கள் வேட்டுவ வாழ்க்கை நடத்திய பழங்காலத்தில் வேட்டு வீரர் யானைத் தோல், புலித்தோல், மான் தோல் முதலியவை களைப் போர்வையாகவும் ஆடையாகவும் தரித்திருந்தனர்; கையில் எப்பொழுதும் மழுவும் திரிசூலமும் தாங்கி இருந்தனர். அவர்கள் காளை மாடுகளைப் பழக்கி அவற்றை வாகனமாகப் பயன் படுத்தினர். பிற்காலத்தில் பொதிசுமப்பதற்கும் உழுவதற்கும் வண்டியை இழுப்பதற்கும் பயன்படுத்தினர். சிவபெருமானுக்கு யானைத் தோல் போர்வையாகவும், புலித்தோல் ஆடையாகவும், மழுவும் சூலமும் ஆயுதமாகவும், காளை வாகனமாகவும் அமைந் திருத்தலின் அது தமிழர்கள் வேட்டுவ வாழ்க்கையில் ஈடுபட்ட தொன்மையான காலத்தில் சிவவழிபாடு தொடங்கி இருத்தல் கூடும் என்பதை நினைப்பூட்டுகிறது என்று சில அறிஞர்கள் கருதுகின் றார்கள். ஆனால் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் முதலிய நூற் களில் தமிழகத்தில் சிவவழிபாடு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்பதற்குச் சான்றுகள் கிடைத்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சிவவழிபாடு நிலவியத்தற்குத் தமிழ் இலக்கியங்கள் மூலம் நல்ல சான்றுகள் நம்மால் காட்ட முடிய வில்லை என்பது உண்மை. சிவவழிபாடு தொன்மையானது தான். ஆனால் பழந்தமிழ் நூற்கள் பல அழிந்து போனதால் நம்மால் இலக்கியச் சான்றுகள் எடுத்துக் காட்ட முடியாதிருக்கிறது. ஆனால் சிவபெருமான் மருத நிலத் தெய்வமாக எழுந்தார். அந்நிலத்திலே முதன் முதலாக வேந்தன் ஆட்சி மலர்ந்தது. வேந்தன் தெய்வமாக எண்ணப்பட்டுப் பின்னர் வேந்தன் சிவபெருமானாகப் பரிணமித் துள்ளான் என்று எண்ணப்படுகிறது. மருத நிலத்தில் புராதனப் பொது உடைமை ஆட்சி பொன்றிக் குடும்பத் தலைவன் ஆட்சி எழுந்து அது நிலக்கிழார் ஆட்சியாக மாறி வேந்தன் ஆட்சியாக விரிவுற்றது என்று எண்ணப்படுகிறது. ஞாயிற்றைச் சிவனுக்கு உவமையாகவும் அவன் ஒளியைச் சக்திக்கு உவமையாகவும் வழங்கிய போது அவ்வொளி பரவிய இடமாகிய விண்ணும் சக்திக்குப் பேராயிற்று. விண்ணு என்ற பெயரே விண்டு எனவும் விஷ்ணு எனவும் மாறிற்று. இருக்கு வேதத்தில் விண்ணிற் பரவிய கதிரொளியே விஷ்ணு எனவும் மாறிற்று. இருக்கு வேதத்தில் விண்ணிற் பரவிய கதிரொளியே விஷ்ணுவாகப் பேசப்படுகிறது என்று பேராசிரியர். திரு. கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் கருதுகின்றார்கள். சிந்துவெளி ஓவிய எழுத்துகளை ஆய்ந்த ஆசிய ஆய்வின் காண்டி நேவியக் கழகம் சிவன் வழிபாட்டினைச் சிந்துவெளி மக்கள் 5000 ஆண்டிற்கு முன் கண்டனர் என்று சான்று காட்டி நிறுவியுள்ளது.1 இப்பொழுது நாம் சிவபெருமானுடைய தொன்மையை நிலை நாட்டத் தமிழகத்தினின்று சிந்து வெளிப்பிரதேசத்தை நாட வேண்டியதிருக்கிறது. இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிந்து ஆற்றங்கரையில் சிறப்புற்று விளங்கிய மொகஞ்சதாரோ அரப்பா நகரங்களை நாடிச் செல்ல வேண்டியதிருக்கிறது. அங்குத் தமிழர்களின் முன்னோர்களான திராவிடப் பெருங்குடி மக்கள் கண்ட சத்திவழிபாடு, இலிங்க வழிபாடு, சிவவழிபாடு (பசுபதி வழிபாடு) முதலியவைகள் நிலவி இருந்ததற்கு நல்ல சான்றுகள் கிடைத்துள்ளன. சிவவழிபாடு என்பதனை சிந்து வெளிமக்களின் சமயப் பண்பாக அறிஞர்கள் முடிவு கட்டியுள்ளார்கள். சிந்து வெளி நாகரிகத்தை அகழ்ந்து ஆராய்ந்து அங்குள்ள பழங்கால மக்கள் வழிபட்ட தெய்வங்களை முறைப்படுத்திக் காட்டிய அறிஞர் சர்.சாண் மார்சல் முதலில் தாய்த் தெய்வத்தையும் அதற்கடுத்த படியாக மும்முகமுடைய பசுபதியையும் (சிவனையும்) மூன்றாவதாக இலிங்கம்அல்லது குறி ஆகியவற்றையும் எடுத்துக் காட்டியுள்ளார். சிந்துவெளி நாகரிகத்தில் இலிங்க வழிபாடு மட்டுமன்றி ஆட வல்லான் வழிபாடும் இருந்தது. அதோடு மரவழிபாடும் இருந்து வந்ததாகத் தெரிகிறது. அரசமரம் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகிறது. தமிழர்களின் முன்னோர்கள் ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன்பே அரச மரத்தின் அடியில் கல் நட்டு வழிபாடு இயற்றி வந்ததை அங்குள்ள முத்திரைகள் உறுதிப்படுத்துகின்றன. இன்று கிடைத்த இந்திய வரலாற்று முடிவுப் படி சிவபெருமான் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்திய மண்ணில் காட்சி அளித்த பழம் பெருந்தெய்வமாகக் கருதப்படுகிறார். அதற்குச் சிந்து வெளியிற் கிடைத்த திருஉருவங்களும் எண்ணற்ற முத்திரைகளும் சான்றாக உள்ளன. சிவபெருமானுடைய ஆறாயிரம் ஆண்டிற்கு முந்திய பழைமையைக் காணப் பாபிலோனுக்கும் சிவபெருமானுடைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய பழைமையைக் காண அமெரிக்காவிலுள்ள பெரு மெக்சிகம் ஆகிய மாநிலங்களுக்கும் சென்றால் அங்கு நாம் நன்கு காண முடிகிறது. பாபிலோன் நாட்டை அடுத்த அக்கத்திய நாட்டின் மலைத் தெய்வம் சிவன் என்னும் பெயர் பெற்றிருந்தது. மங்கோலிய நாட்டில் கூடச் சிவ வழிபாடு உண்டு. இமயமலைக்கு வடக்கேயுள்ள சைபீரியாவில் உள்ள துரானி யராகிய துக்கிரர் என்னும் இனத்தவர்கள் சிவன் என்னும் தெய்வத்தை வழிபட்டு வந்தனர். அன்றியும் சீரிய நாட்டில் சிவன் உருவம் சில கிடைத்துள்ளன இட்டைட் (ஹிட்டைட்) பெரு, மெக்சிகம் முதலிய நாடுகளில் எல்லாம் மிக மிகத் தொன்மையான காலத்தில் சிவ வழிபாடு நிலவியது என்பதை நாம் நன்கு அறிகின்றோம். தமிழகத்தில் சிவபெருமானை மருத நிலத்தெய்வமாகக் கண்டனர். அறிஞர்கள் நானிலத் தெய்வமாக - தென்னாட்டுத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். இல்லை, அவனை எந் நாட்டவர்க்கும் இறைவனாகப் போற்றி வருகின்றார்கள். சிவபெருமானுடைய தொன்மையை அவரது வாகனமும் தோற்றமும் ஆடையும் அணிகலன்களும் ஆயுதங்களும் அவர் தலைமுடியும் அதில் காணப்படும் இலைகளும் மலர்களும் நன்கு விளக்குகின்றன. மக்களுடைய வேட்டுவ வாழ்க்கையில் எழுந்த தெய்வமாக அவர் இன்றும் காணப்படுகிறார். வேட்டுவ வாழ்க்கை மக்கள் இனத்தின் பழம் பெருமை வாய்ந்த வாழ்க்கை நிலைகளில் ஒன்று. அது மக்கள் சமூகம் உணவு சேகரிக்க முற்பட்ட நிலைகளில் முதல் நிலையாகும். அதுவே மனித சமூகத்தின் நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படை. அதுதான் மக்கள் சோம்பல் வாழ்க்கையைத் துறந்து சுறுசுறுப்புடன் தொழில் புரியவும் செல்வத்தைப் பெருக்கவும் நாகரிகம் பெறவும் முதற்படியிற் கால் வைத்த முதுபெரு முன்னேற்ற நிலையாகும். அது குறிஞ்சி நில வாழ்க்கையாகக் குறிஞ்சி ஒழுக்கமாக முதலில் துளிர்த்தது. குறிஞ்சி நிலத்திலே கொற்றவை எழுந்தாள். அப்பால் அவள் சேய் எழுந்தான். குறிஞ்சியில் இரண்டு பழம் பெருந் தெய்வங்கள் தோன்றின. ஆனால் அங்குக் கொற்றவை கணவன் எழவில்லை. அந்த இடம் நீண்ட நாளாகக் காலியாக இருந்தது. பிற்காலத்தில் அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன் சிவபெருமான் மருத நிலத்தில் எழுந்து கொற்றவையின் கணவன் என்னும் இடத்தைப் பெற்றார். கொற்றவை சிவனின் சக்தியாகவும், முருகன் சிவனுடைய மகனாகவும் உருப்பெற்றார்கள். மாயோன் சிவனுடைய மைத்துனராக எழுந்தார். இது தமிழர் வாழ்வில் கணவன், மனைவி, மக்கள் அண்ணன், தம்பி, மைத்துனன், மாமன் என்ற புதிய உறவு முறையும் குலமுறை யும் எழுந்த காலத்தில் தோன்றிய தெய்வமாகும். சிவபெருமானுடைய வாகனமாக நந்தியும் அணிகளாகப் பாம்பும் காணப்படுவது சிவபெருமான் தனக்கென ஒரு குலமுறை யோடு இணைத்துப் பேசப்படுவதை நன்கு விளக்கும். நந்தி, நாகம், குரங்கு, காகம் போன்றவைகள் ஆரியருக்கு முன்னர் இந்தியாவில் எழுந்த பழங்காலக் குலங்களின் சீரிய சின்னங்களாகக் கொள்ளப் படுகின்றன. இக்குலத் தொடர்புகள் எழுவது பௌராணிக வழக்கு வலுப்பெற்று எழுகின்ற காலமாகக் கருதப்படுகிறது. முப்புரம் எரித்தல், நீலகண்டனாக நிற்றல், சந்திரசேகரனாகத் திகழ்தல் - கலியாண சுந்தரனாகக் காட்சி அளித்தல், உமையொரு பாகனாக ஒளிர்தல் முதலியவைகளைப் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் சிவ வழிபாடு மக்களிடையே ஆதிகாலத்தில் அதிகச் செல்வாக்குப் பெற்று இருக்கவில்லை என்றே கருதுகின்றனர். தமிழ் மக்கள் குலங்களாகவும் குடிகளாகவும் (tribes and clans) வாழ்க்கை நடத்திய பழங்காலக் கூட்டு வாழ்க்கையிலே வெறியாட்டுத் தெய்வமாகக் கொற்றவையும் வேலனும் சிறப்புடன் திகழ்ந்தனர். முற்காலத்தில் மக்களுக்கும் கடவுளுக்கும் இடையில் எவ்விதத் தரகர்களும் இல்லை. அதாவது பூசாரிகள் இல்லை. மக்கள், கடவுளுக்குப் பலியிட்டு உணவு படைத்து மலர் சூட்டிக் குடித்து வெறித்து ஆடிப்பாடிக் கூட்டாக வழிபடும் முறையில் ஒரு சமுதாயத் தெய்வம் தேவையாய் இருந்தது. சமூகத்தில் தனி உடைமையும் ஆட்சி முறையும் தோன்றிய பொழுது தனிப்பட்ட இஷ்ட தெய்வங்களும் வகுப்புகளுக்கான தனிப்பட்ட தெய்வங்களும் எழுந்தன. இந்த நிலையில் சிவன், திருமால் முதலிய தெய்வங்கள் தோன்றின. தறிவணக்கமும், இலிங்க வணக்கமும், மூர்த்தி வணக்கமும் கோயில் வழிபாடும், சமூகத்தில் எழுந்துள்ள வர்க்க முரண்பாடுகளும் தனித் தனித் தெய்வங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன. சிவவழிபாடு சிறப்புற்று எழுந்த பொழுது பழைய வழிபாட்டு முறைகளையும் பழைய தெய்வங்களையும் இணைத்து ஒரு புதிய தோற்றம் எழுந்தது. சிவபெருமான் ஒப்புவமையற்ற பெருந்தெய்வ மாக உயர்த்தப் பெற்றார். சிந்துவெளி நாகரிகத்தில் காணப்பட்ட பசுபதி என்னும் தெய்வம் விலங்குகள் சூழ்ந்து நிற்கக் கூட்டு வாழ்க்கையில் பூதகணங்களுக்குத் தலைவராய்க் கொற்றவையின் கொழுநனாய் - அதாவது மலைமகளின் மணவாளனாய், முருகனின் தந்தையாய், திருமாலின் மைத்துனனாய்ப் பழைமையும் புதுமையும் தன்னுள் அடக்கி நிற்கும் தனிப் பெருந் தெய்வமாகக் காட்சி அளிக்கிறார். தமிழர்கள் கண்ட நானிலங்களிலுள்ள தெய்வங் களுக்கும் சிவன் பெரிய தெய்வமாகப் போற்றப் பெற்றார். மாதேவன் வழிபாடு மருத நிலத்தில் மலர்ந்தது. அந்நில மக்கள் சிறப்புற்று வாழ்க்கைப் படியின் உயர்ந்த நிலையில் கால் வைக்க அடியெடுத்து வைக்க முன் வந்துள்ளனர். அந்நிலத்தில் பயிர்த் தொழிலும் கைத்தொழில்களும் பெருகின. நாடும் நகரங்களும் வளம் பெற்று எழுந்தன. குடும்பத் தலைவன் ஆட்சி மாறி வேந்தன் ஆட்சி வீறுற்று எழுந்தது. பெரிய நிலக்கிழார்களும் வணிகர்களும் சிறு பொருள்களின் உற்பத்தியாளர்களும் பெருகினர். தனி உடைமையை அடிப்படையாகக் கொண்ட சமூக வாழ்க்கை அரும்பும் காலத்திலே செல்வாக்குப் பெற்ற தெய்வமாகச் சிவபெருமானும் திருமாலும் எழுந்தனர். இந்தச் சமூகத்திலே இசையும் நாட்டியமும் பலகலை களும் பிறந்தன. பரத்தையர்கள் என்ற ஒரு புதிய சமூகம் கூடத் தலை தூக்கியது. இவர்களைப் பொது மகளிர், பதியிலார், தளியிலார் என்றெல்லாம் கூறினர். இது தனியுடைமை அமைப்பின் விளைவு என்று கூறலாம். சிவபெருமான், திருஉருவையும் அவருடைய ஆடைகள் அணிகலன்கள் ஆகியவைகளையும் உற்று நோக்கினால் அவர் மக்கள் வேட்டுவ வாழ்க்கை நிலையில் வாழ்ந்த காலத்தில் எழுந்த தெய்வமாகக் கருத முடியும். ஆனால் அவரது வரலாறு அவர் பிற்காலத்தில் - மருத நிலத்தில் மக்கள் நிலத்தை உழுது பண்படுத்தி நெல், புல், கேழ்வரகு முதலிய தானியங்களை விளைவித்தும், கைத்தொழில்கள் பலவற்றை வளர்த்தும் ஏராளமான பசுக்களையும் எருதுகளையும் பழக்கிப் பால், தயிர், நெய், மோர் முதலியவைகளை உண்டாக்கியும் கலப்பை, பானை, சட்டி, மூவிலைவேல், கொழு முதலியவைகளைச் செய்தும் தோல், சீப்பு, தூண், சட்டம், விட்டம் போன்றவைகளை உருவாக்கியும் தச்சுவேலை, கொல்வேலை, கன்னார் வேலை, பொற்பணி நூற்றல், நெய்தல், பானை சட்டி வனைதல் போன்ற பலவகைத் தொழில்களை வளர்த்தும், செல்வத்தைப் பெருக்கியும் வந்ததால் இந்நிலத் தெய்வமாகிய சிவன், முதலாளித்துவ சமூக அமைப்பில் வேந்தனாகப் போற்றப்பட்ட தெய்வமாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இந்நில மக்கள் பிற்காலத்தில் சிவபெருமானுக்கு வெண்மையான ஆடைகளையும் பொன் அணிகளையும் அணிவித் திருப்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. இந்நில மக்கள் நாகரிகத்திற்கு அடிகோலி அதை உயர்த்தியவர்கள். தமக்கென்று மனைவியும் மக்களும் விளை நிலங்களும் வீடுகளும் காடுகளும் ஆடைகளும், மாடைகளும், அணிகலன்களும், மணிகளும், ஆயுதங்களும், காகிதங்களும் ஆடுமாடுகளும் கண்டு தனி உடைமைச் சமூகத்தைக் கட்டி வளர்த்துக் கொண்டனர். நாடும் நகரங்களும், சிற்றூர்களும், பேரூர் களும் அமைத்தனர். இந்நிலத்தில் தான் முதன் முதலாகக் குடும்பத் தலைவர்களும், நிலக்கிழார்களும் வேந்தனும் தோன்றினர். ஆட்சி முறை வகுக்கப்பட்டது. எழுத்தும் மொழியும் இலக்கியங்களும் இலக்கணங்களும் எழுந்தன. இசை, ஓவியம், படிமம், கட்டிடம் போன்ற பல கலைகள் துளிர்த்தன. இந்தத் தனியுடைமைப் பண்பின் விளைவாக மருத நிலத்தில் பக்தி மார்க்கமும் இஷ்ட தெய்வ வழிபாடும் தனிப்பெருந்தெய்வமும் தலை தூக்கின. திருமண வாழ்க்கை முறையும் கட்டுப்பாடுகளும் ஒழுக்கமும் நீதியும், அறமும், ஈகையும் பிறவும் கால் கொண்டன. தமிழகத்தின் நாகரிகத்திற்கு மருதமும் முல்லையும் எடுத்துக்காட்டாக ஒளிர்ந்தன. முல்லை நிலத்தில் தான் முதன் முதலாகச் சிறு கைத்தொழில்கள் அரும்பின. ஆடுமாடு மேய்க்கும் தொழில் எழுந்தது. கோன் ஆட்சி துளிர்த்தது. இந்நிலத் தெய்வமாகிய மாயோனின் இடையில் அணியப் பெற்ற பீதாம்பர ஆடையும், கையில் உள்ள வேய்ங் குழலும் அவனது காதற்கூத்தும் இந்நிலத்தில் தனியுடைமை முறைக்கு வித்திடப் பட்டதை விளக்கும்.. முல்லை நிலத்தில் நாகரிகம் நன்கு வளர்ந்தது என்று கருதலாம். முல்லை நிலத்தில் மாயோன் சிறு தொழில் புரிவோர் தெய்வ மாகவும் சிவபெருமான் மருதநிலத்தில் பெரிய நிலக்கிழார்கள் உழவர்கள், கைத்தொழிலாளர், தனியுடைமையாளர்கள் முதலியோர் களின் பெருந்தெய்வமாகவும் எழுந்தனர். முருகனோ வேடுவத் தொழில்புரியும் புராதனப் பொது உடைமையாளர்களின் தெய்வ மாக எழுந்தார். மருத நிலத்தில் சிவனை வழிபடும் சைவமும் முல்லை நிலத்தில் மாயோனை வழிபடும் வைணவமும் குறிஞ்சி நிலத்தில் முருகனை வழிபடும் கௌமார சமயமும் பாலை நிலத்தில் மாயோளை வழிபடும் சாக்தமும் எழுந்தன. படிப்படியாய்த் தமிழகத்தில் ஞாயிற்றை வழிபடும் கௌரம் கணபதியை வழிபடும் காணாபத்தியம் முதலிய சமயங்களும் ஆறு தெய்வங்களும் தோன்றி அறுவகை அகச் சமயங்கள் அரும்பின. இந்த ஆறு சமயத்தார்க்கும் ஆதியில் சத்தி வழிபாடு உரித்தாக இருந்தது என்பது எனது எண்ணம். ஆனால் சைவப் பேரறிஞர்கள் - ஒரு காலத்தில் ஆறு சமயங்களுக்கும் பொதுவாக அருவுருவாகிய சிவலிங்க வழிபாடு விளங்கிற்று. இலிங்கார்ச்சன தந்திரத்துள், அறுவகை அகச் சமயத்தில் எதைத் தழுவினாலும் முதலில் சிவலிங்க பூசை செய்து விட்டு இட்ட தேவதையை வழிபட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே சிவநெறியில் அறுசமயங்களும் ஆறுபகுதிகளாக விளங்கின என்று ஊகிக்க முடிகிறது என்று கூறுகின்றனர்.1 மேலும் சிவன் இன்ன நிலத்திற்குரிய தெய்வம் என்று பழைய தமிழ் நூற்களில் குறிப்பிடப்படவில்லை. தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் நூல் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று பொருளைப் பாகுபடுத்துகிறது. பொருளின் அடிப்படையில் எழும் ஒரு பாகுபாடு இங்கு எடுத்துக் காட்டவும் படுகிறது. கருப்பொருளில் திணைகளுக்குரிய தெய்வத்தைக் குறிப்பிடவில்லை. உணவு, விலங்கு, மரம், தலைவன், தலைவி, புள், பறை, யாழ் முதலியவைகள் கூறப்படுகின்றன. இங்கு சிவன் கருப்பொருளாக இடம் பெறவில்லை. எனவே சிவன் மருத நிலத்திற்குரிய தெய்வமாக எண்ணப்பட்டாலும் அவன் எல்லா நிலத்திற்கும் பொதுவான ஒரு பெருந்தெய்வமாக உயர்த்தப்பட்டுள்ளான். சிவன் குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகனின் தந்தையாகவும் பாலை நிலத் தெய்வமாகிய கொற்றவையின் கொழுந னாகவும் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனின் மைத்துனனாகவும் மருத நிலத் தெய்வமாகிய வேந்தனின் தலைவனாகவும் நெய்தல் நிலத் தெய்வமாகிய வாரணனின் (வருணனின்) தலைவனாகவும் எழுந் துள்ளான். அதனால்தான், தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவனுடைய உலக ஆதிக்கம் உணர்த்தப் பெறுகிறது. அவன் பெயர் ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன் சிந்து வெளியிலும் பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாபிலோனிலும், இருபது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மெருசிகத்தி லும் காணப்படுகிறது. மருத நிலம் பிற நிலங்கள் எட்டிப் பிடிக்க முடியாத அளவில் பயிர்த்தொழில், கைத்தொழில், வணிகம், கலைகள், பண்பாடு நாகரிகம் முதலிய துறைகளில் வளர்ந்து விட்டது; அங்கே பொருளாதாரம் நன்கு வளர்ந்து செழிப்புற்றுள்ளது. அந்நிலத் தெய்வமாகிய சிவன் வேந்தனாக விண்ணிற்கு உயர்த்தப் பெற்றான். விண்ணவர் தெய்வமாகச் சிறந்து விளங்கலுற்றான். மருத நிலத்தில் சைவ நெறியாகிய சிவநெறி தழைத்து எழுந்தது. அதன் பொருளா தாரச் செழிப்பால் சைவநெறி, முல்லை நிலத்தில் எழுந்த வைணவ நெறியையும் விஞ்சிவிட்டது. மருத நிலத் தெய்வமாகிய சிவன் மகேந்திரகிரிக்கும் இமயகிரிக்கும் ஏற்றப் பெற்றான். அவன் பசுபதி யாகவும் மலை மகள் கணவனாகவும் விளங்கப் பெற்றான். நான் முகனும் திருமாலும் சிவபெருமானிடம் போய்த் தங்களில் யார் பெரியவர்கள் என்பதை முடிவு கட்டப் போயினர். சிவபெருமான் யார் தனது அடியையும் முடியையும் கண்டுபிடிக்கிறார்களோ அவர் களே பெருந்தெய்வம் என்று கூற இருவரும் சிவபெருமானுடைய அடியையும் முடியையும் காண முடியாது தோல்வியுற்றுச் சிவ பெருமானே பெருந்தெய்வம் என்று ஏற்றுக்கொண்டார்கள். நான்முகன் (தமிழர்கள் 5 நிலங்களிலும் இடம் பெறாத பிரமன்) சிவனாரது முடியைக் கண்டதாகப் பொய் கூறிச் சைவக் கோட்டையி னின்று விரட்டப்பட்டான். ஏன் ? தமிழ்நாட்டுக் கோயிலுக்குள் கூட இடம் பெறாது தெருவில் அலைகின்றான். திருமால் சைவக் கோட்டைக்குள் இடம் பெற்றுத் திருக்கோயிலினுள் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளார்; சிவனுடைய மைத்துனராகவும் மனைவி யாகவும் துணைவராகவும் போற்றப்படுகிறார். கொற்றவை, சிவ பெருமானோடு திருவாலங்காட்டில் நடனம் ஆடித்தோல்வியுற்றது தமிழகத்தில் தாய் ஆட்சி வீழ்ந்து பெண்ணுரிமை பறிக்கப்பட்டதை உணர்த்துகிறது. முல்லை நிலத்தின் தனிப்பெருந் தெய்வமாக விளங்கிய திருமால், சைவ சமயத்தில் சிவனுக்கு அடங்கிய தெய்வமாகவே போற்றப்படுகிறார். திருமாலுக்கு என்று தனி நெறியும், தனிக் கோயிலும், தனிப்பக்தர்களும் ஏற்பட்ட போதிலும் சைவ வைணவ சண்டைகள் பெருகிய அளவில் எழுந்த காலத்திற்கு முன்பிருந்து இன்றுவரை சைவ நெறியாளர்கள் திருமாலைப் புறக்கணித்து விடவில்லை. தமிழர் கண்ட சிவன் கோயில்களில் திருமால், முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களை தக்க இடத்தில் வைத்து இன்று வரை வழிபட்டு வருகின்றார்கள். ஆனால் சைவம் நான்முகனைத் தனது கோயிலில் இடம் பெற அனுமதிக்காவிடினும் மகாவிஷ்ணு, இந்திரன் போன்ற ஒரு தெய்வமாக அவனை ஏற்றுக் கொண்டிருக் கிறது. சைவம் தமிழகத்தில் தழைத்த அறுவகை அகச் சமயங் களையும் விழுங்கி அவைகளை நன்றாகச் சீரணித்துக் கொண்டது என்று பல ஐரோப்பிய அறிஞர்கள் கூறுகின்றார்கள். அதோடு புறச் சமயங்களான பௌத்தம் சமணம் முதலிய சமயங்களைத் தமிழகத்தி னின்று விரட்டியடித்தாலும் அவற்றின் நல்ல கொள்கைகளை யெல்லாம் தழுவிக் கொண்டது என்றும் கூறி வருகின்றார்கள். சிவநெறியில் சீவகாருணிய ஒழுக்கம் நன்கு ஓம்பப் பெறுவதே இதற்கு நல்ல சான்றாகும். விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ்செய்தே எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாகும் வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளே நின் விளையாட்டல்லால் மாறுபடும் கருத்துண்டோ (தாயுமானவர்) என்று கூறும் பொதுமைக் கருத்தால் சைவம் தமிழகத்தில் தோன்றிய தேசிய மதங்களையெல்லாம் தன்னுள் சேர்த்துக் கொண்டு, புறச் சமயங்களான பௌத்தம் சமண முதலியவைகளிலுள்ள நல்ல கொள்கைகளை எடுத்துக் கொண்டு அம்மதங்களைத் தன் எல்லை வரை சென்று விரட்டியடித்துள்ளது என்பது புலனாகும். புறச் சமயங்களின் இயற்கைக்கு மாறான துறவறம், பெண் வெறுப்பு, அசுத்தமான வாழ்க்கை, வாழ்க்கைக்கு ஒவ்வாத சீவ காருணியம், பயனற்ற ஒழுக்கம், கலைவெறுப்பு, தமிழ் மொழி வெறுப்பு, அரசியல் போக்கு, தமிழர்களை அடிமைப் படுத்தி அழிக்கும் பொதுமை நோக்கு ஆகியவை. தமிழ் மக்களுக்கு இடை யூறாக இருப்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டி மக்களின் ஆதரவோடு அச்சமயங்களை விரட்டியடித்தது. பௌத்தம் சமணம் முதலிய மதங்களுக்குப் பலம் வாய்ந்த வணிகவர்க்கத்தினர் ஆதரவும் செல்வர்களின் உதவியும் மன்னர்களின் பாதுகாப்பும் இருந்தது என்றாலும் விவசாயிகளின் ஆதரவைப் பெற்ற மக்களின் ஆதரவை யும் மன்னர்களின் உதவியையும் பெற்றுப் புறச் சமயத்தை ஓட்டித் தேசிய சமயத்தை இந்நாட்டில் நிலைநாட்டி விட்டது. இதனால் சிவனாரின் பெருமை உயர்ந்தது. இறைவனின் எண்வகைத் தோற்றம் மிகத் தொன்மையான காலத்தில் எழுந்த ஞாயிறு திங்கள் நெருப்பு முதலிய இயற்கைப் பொருள்களின் வணக்கமும் அப்பால் தாய் ஆட்சியில் எழுந்த சக்தி வழிபாடும் (தாய் வழிபாடும்) சேய் வழிபாடும் (முருகன் வழிபாடும்) மாயோன் வழிபாடும் (திருமால் வழிபாடும்) பின்னர் எழுந்த வேந்தன் வழிபாடும் (சிவவழிபாடும்) வாரணன் வழிபாடும் இறுதியில் எழுந்த கொழுநன் வழிபாடும் சிவலிங்க வழிபாடாகப் பரிணமித்து எழுந்தன. ஞாயிறு வழிபாடு தந்தை வழிபாடாகவும் திங்கள் வழிபாடு தாய் வழிபாடாகவும் துளிர்த்தன என்றும் தமிழ் அறிஞர்கள் கருதுகிறார்கள். இளங்கதிர் வழிபாடு முருகன் வழிபாடாகவும் யானை வழிபாடாகவும், பாம்பு வழிபாடு பிற்காலத்தில் யோக நெறி தழைத்த காலத்தில் ஆதார சக்திக்கும் குண்டலி சக்திக்கும் அறிகுறியாய்ப் பரிணமித்தது என்றும் கூறப்படுகிறது. சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய விண்மீன் வழிபாடு கருநிறமுடைய மாயோள்(தாய்) வழிபாடாகிப் பின் மாயோன் வழிபாடாக மலர்ந்தது. அதன்பின் செவ்வாய் வழிபாடுகள் சிவன் வழிபாடு ஆகவும், புதன், வியாழன், வழிபாடு நான்முகன் திருமால் வழிபாடாகவும் மலர்ந்தது. இது ஒரே காலத்தில் எழ வில்லை. சற்று முன்பின்னாக எழுந்திருக்கலாம் என்று பின்லாந்துப் பேரறிஞர்கள் கூறுகிறார்கள். ஞாயிறு வணக்கமும் திங்கள் வணக்கமும் அம்மையப்பர் வணக்கமாக எழுந்துள்ளது என்று சைவப் பேரறிஞர்கள் கருதுகி றார்கள். அது ஆரம்பத்தில் ஆவுடையார் வணக்கமும் கந்து வணக்கமு மாக எழுந்து அப்பால் சிவலிங்க வணக்கமாக மாறியது. கந்து அப்பனின் சின்னமாகவும் ஆவுடையார் அம்மையின் சின்னமாகவும் இருந்தது. அதாவது அப்பனின் சின்னமாக ஒரு நீண்ட கல்லும் அம்மையின் சின்னமாக ஒரு வட்டக் கல்லும் வழிபடப்பட்டது. அப்பால் வட்டக்கல் மீது நீண்டகல்லை ஏற்றிச் சிவலிங்க வடிவமாக அம்மையப்பரின் சின்னமாக வழிபடப்பட்டது. ஞாயிற்றையும் அதைச் சுற்றிவரும் கோள்களையும் உற்று நோக்கின் ஞாயிறு இலிங்கமாகவும் அதைச் சுற்றி வரும் கோள் களின் தொகுதி பீடமாகவும் காணப்படும். அணுவின் நடுவில் மின் சத்து என்னும் நுண்பொருளும் சுற்றிலுமுள்ள பின் அணுவும் சேர்ந்து ஒளிர்கிறது என்று கூறும் விஞ்ஞானிகளின் கூற்றை ஆராய்ந்த நமது சைவப் பேரறிஞர்கள் அணுவிலும் சிவலிங்க அமைப்புக் காணப்படு கிறது என்று உருவகப்படுத்திக் காட்டியுள்ளார்கள் கதிரவன் பிரபஞ்சங்களுக்கு நடுவாய் எல்லாக் கோள்களையும் இயக்குபவ னாய் இருப்பதுபோல இறைவனை அருவுருவமான சிவலிங்கமாகத் தமிழர்கள் கண்டது சாலப் பொருத்தமானது. இதன் உண்மையைத் திரு. கா. சுப்பிரமணியபிள்ளை, மறைமலை அடிகள், திரு.வி.க. போன்ற சைவப் பெரியார்கள் தம் நூற்களில் நன்கு விளக்கி யுள்ளார்கள். உலகில் உள்ள ஊர்வன, பறப்பன, நடப்பன முதலிய உயிரினங்கள் மட்டுமன்றிப் புல், மரம், செடி, கல் ஈறாக உள்ள எல்லாம் உயிர் உள்ளனவாகக் கருதப்படுகின்றன. இவைகளுக்குப் பிறப்பும் இறப்பும் உள்ளன. இவைகள் இன்ப துன்பங்களைத் துய்க்கின்றன என்றெல்லாம் கூறப்படுகின்றது. மேலும் இவ்வுயிர் இனங்கள்அனைத்தும் ஆண், பெண் என்னும் பால் வேற்றுமை யுடையனவாக ஒன்றையொன்று தழுவி இன்பமுற்று வர்க்க விருத்தி செய்வனவாய்த் திகழ்கின்றன. வர்க்க விருத்தி செய்யும் மூலக் கருவிகள் அனைத்தும் பெரும்பாலும் ஒரே வடிவமாகவே காணப் படுகின்றன. இக்கருவிகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் அனைத்தும் வட்ட வடிவமாகவும் நீண்ட முளை வடிவமாகவுமே காணப்படுகின்றன. உலக வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும் நுட்பமான இக்கருவிகளை உருவாக்கும் மூலசக்தி இதே வடிவில் தான் இருக்க வேண்டும் என்று மக்களின் முன்னோர்கள் எண்ணி யதில் வியப்படையத் தேவை இல்லை. தமிழர்கள், உலகில் கலை வளர்ச்சி அரும்பு முன்னர் எழுந்த பழங்கற்காலத்தில் இறைவியின் சின்னமாகச் சதுரம் அல்லது வட்டம் அல்லது முக்கோண வடிவமான கல்லையும் இறைவனின் சின்னமாக ஒரு நீண்ட முளை அல்லது தூண் போன்ற ஒரு சின்னத்தையும் தெரிந்தெடுத்தது அறிவோடு பொருந்திய செயலேயாகும். பழங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் உணவளிக்கும் மரங் களையும், நறுமணம் நல்கும் மரம், செடி, கொடிகளிலுள்ள மலர் களையும், கடித்தவுடனே உயிர் துறக்கச் செய்யும் கொடிய நச்சுப் பாம்புகளையும், தங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விண்ணிலுள்ள ஞாயிறு, திங்கள் முதலிய கோள்களையும், இருமூங்கில் மரங்கள் உரசுவதாலும் கற்கள் ஒன்றொடொன்று மோதுவதாலும் எழும் நெருப்பையும் தன்னைக் கருவுற்றுப் பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாலூட்டித் தாலாட்டி உணவூட்டி உயிர் ஊட்டிப் பாதுகாத்து வளர்த்து வந்த தாயையும், வளர்ந்ததும் அன்புகாட்டி அறிவூட்டி வளர்க்கும் தந்தையையும் தம் நல் வாழ்விற்கு அடிகோலும் குடும்பத் தலைவி, குடும்பத்தலைவன், வேந்தன் முதலியவர்களையும் அவர் களின் ஆவிகளையும் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இது இயற்கையேயாகும். இதில் தவறு காண்பதற்கில்லை. மக்கள், தங்களின் இறந்து போன தாய் தந்தை வீரர்கள் முதலியவர்களுக்கு மரத்தடியில் நடுகல்நட்டு வழிபட்டும் நாகரிக முதிர்ச்சி பெற்ற பின்னர் தாய்த் தெய்வத்திற்கு ஒரு கல்லையும் தந்தைக்கு ஒரு கல்லையும் சின்னமாக வைத்து வழிபட்டும் வந்தனர். அப்பால் அம்மையப்பர் வழிபாடு எழும் காலத்தில் இரண்டு சின்னங்களும் இணைக்கப்பட்டுச் சிவலிங்க வழிபாடு துளிர்த்தது. கல்லைச் செதுக்க வழிகண்ட காலத்தில் ஒரே கல்லில் சிவலிங்கம் உருவாக்கப்பட்டது. அப்பால் கற்காலம் மாறி உலோக காலம் உருப்பெற்றெழுந்த பின் கல் உளிகள் செய்யப் பெற்றுக் கல்லைச் செதுக்க வழி கண்டனர். அப்பொழுதுதான் ஒரே கல்லில் சிவலிங்கம் செய்யப் பெற்றது. லிங்கம் உருண்டை வடிவினின்று நான்குபட்டை, எட்டுப் பட்டை, பதினாறு பட்டை போன்ற வடிவில் செய்யப்பட்டது. அதேபோல் ஆவுடையாரும் சதுரம், முக்கோணம், வட்டம் போன்ற வடிவிலும் அமைக்கப்பட்டது. ஆதியில் இயற்கையில் எழுந்த மலைகளும் சிறுமுளை போன்ற கல் உருவங்களும் சுயம்பு இலிங்கம் எனப்பட்டன. வழிபாட்டிற்குச் சுயம்பு இலிங்கம் மிகச் சிறந்தது என்று கூறப்படுகிறது. ஆகமங்களில் சுயம்பு இலிங்கத்தை வழிபடுவது சாலச் சிறந்தது என்று கூறப்படுகின்றது. இலிங்க வடிவில் நீண்டு உயர்ந்து காணப்படும் மலைகள் எல்லாம் சுயம்பு இலிங்கமாக வழிபடுவதற்கு ஏற்றவை என்று ஆகமங்களில் சிறப் பித்துக் கூறப்படுகின்றது. இலிங்கங்களில் அடிபகுதியில் இருக்கும் ஆவுடையார் வட்டவடிவிலும் சதுரவடிவிலும் எண் கோண வடி விலும் பதினாறு பட்டை வடிவிலும் உருவாக்கப் பெற்றது. பீடங் களும் பல்வேறு வடிவில் எழுந்தன. இவையெல்லாம் உலோகக் கால எழுச்சியில் தோன்றிய அற்புதச் சிற்பப் படைப்புகளாகும். உலோக காலம் உருப்பெற்று முன் எழுந்த கற்காலத்தில் கற்களை மரத்தின் அடியில் நட்டு வழிபடும் நாகரிகம் எழுந்து விட்டது. பெரிய ஆலமரத்தின் அடியில் மண்மேட்டை எழுப்பி அதன் மீது ஒரு கல்லை நட்டு வழிபடும் வழக்கம் எழுந்தது. இதனை ஆலமுற்றம் எனக் கூறுவர். இஃதன்றிப் பிற்காலத்தில் ஆங்காங்கே அம்பலத்தில் தெய்வம் உறையும் தறியாகிய தூண் ஒன்று நடப்பட்டு வழிபடப்பட்டது. மகளிர் நீராடித் தூய்மையுடையவர்களாய் அம்பலத்தை மெழுகி மாலையில் நந்தா விளக்கேற்றி மலர்தூவி வழிபட்டு வருவர். தெய்வம் உறையும் தறியாகிய கந்து நடப்பெற்ற பொதியில் என்னும் அம்பலங்கள் பல இருந்ததாகப் பட்டினப் பாலை கூறுகிறது. இது கி.மு. முதல் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. கிறித்துவ சகாப்தம் அரும்புவதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழகமெங்கும் சிவலிங்க வழிபாடு பரவி இருந்தது என்று சான்று காட்டிக் கூறப்படுகிறது. பின்னர் இலிங்கத்தின் மீது சிவபெருமானுடைய முகம் மட்டும் செதுக்கப் பெற்றது. இது தமிழகத்தில் சிற்பக் கலை துளிர்க்க ஆரம்பித்த பொற்காலமாகும். முதலில் இலிங்க வடிவில் செதுக்கப் பெற்ற ஒரு முக இலிங்கத்தை ஏகமுக லிங்கம் என்றனர். அப்பால் துவிமுக இலிங்கமும் திரிமுக லிங்கமும் சதுர்முக லிங்கமும் பஞ்சமுக இலிங்கமும் எழுந்தன. உலோக கால ஆரம்பத்தில் இலிங்க வடிவின் பரிணாம வளர்ச்சி யாக இந்த முகலிங்கங்கள் கிளைத்தன. அப்பால் இலிங்க உருவில் சடாபாரம், முகம், உடல், இடுப்பு, கால் என - அதாவது முழங்காலுள்ள இலிங்கோற்ப மூர்த்தி உருவம் புடை சிற்பமாக எழுந்தது. அப்பால் இலிங்கத்தின் முன்புறம் புடைசிற்பமாகச் சிவபெருமான் முழு உருவம் செதுக்கப் பெற்றது. இதுதான் இலிங்க உருவின் இறுதி அமைப்பு. இந்த இலிங்க உருவத்தை இலிங்கம் என்றோ மூர்த்தம் என்றோ நம்மால் கூற முடியவில்லை. வேண்டுமானால் இலிங்க மூர்த்தம் என்று கூறலாம். இது ஆகமங்களில் என்ன பெயரில் அழைக்கப்பட்டுள்ளது என்று நம்மால் கூறமுடியவில்லை. இந்த இலிங்க வடிவமே மூர்த்தங்கள் தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்தது. இதன் பின்னரே சிவபெருமானின் தனி உருவம் அமைக்கும் மூர்த்தங்கள் தோன்றின. அதாவது சிவபெருமானின் உருவத்தை இலிங்கத்தினின்று பிரித்து இலிங்கம் வேறு மூர்த்தம் வேறு என்று கூறப்பட்டது. இலிங்க வடிவில் சிவபெருமானுடைய முழு உருவம் திகழும் ஓர் அரிய சிற்பவடிவம் ஆந்திர நாட்டில் உள்ள குடிமல்லம் என்னும் இடத்தில் உள்ளது. இது கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. இதைப் போன்ற திருஉருவம் இதுவரை தமிழகத்திலே வேறு எந்நாட்டிலும் எவரும் கண்டதாகத் தெரிய வில்லை. இத்திருஉருவம் ஆவுடையார், இலிங்கம், சிவலிங்கம், முகலிங்கம் ஆகியவற்றின் பரிணாம அமைப்பு, மூர்த்தம் வரை சங்கிலித் தொடர் போல் வளர்ந்து வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்ட நல்ல சான்றாக அமைந்துள்ளது. இந்தச் சங்கிலித் தொடர் போன்ற இலிங்க வளர்ச்சியில் விடுபட்ட சங்கிலித் துண்டு எதுவும் இல்லை. எல்லாம் வரிசைக்கிரமமாகச் சரியாக அமைந்துள்ளன. இலிங்க அமைப்பு முறை, முறையாக வளர்ந்து, பின் மூர்த்தங்கள் அதாவது சிவபெருமானின் முழு உருவத்தோற்றம் காணும் சிறந்த சிற்ப அமைப்பு முறை தலை தூக்கிய காலம் கிறித்தவ சகாப்தம் துளிர்த்த காலமாக இருக்கலாம் என்று எண்ணப்படு கிறது. வேறு நாடுகளில் சிவபெருமான் முழு உருவத் தோற்றம் கிறித்தவ சகாப்தம் அரும்பு முன்னர் மண்ணிலோ மரத்திலோ சுதையிலோ தோன்றியிருக்கலாம். ஆனால் தமிழகத்தில் கல்லிலும், செம்பிலும், சிவமூர்த்தங்கள் கிறித்தவ சகாப்தத்திற்குப் பின்னர்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆனால் மொகஞ்ச தாரோவில் கிறித்தவ சகாப்தம் எழுவதற்கு 3500 ஆண்டுகளுக்கு முன்னரே சிவமூர்த்தங்கள் தோன்றிவிட்டன என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. சிவபெருமானுடைய மூர்த்தம் ஒன்று ஆதியில் அரும்பியது. அது தட்சணாமூர்த்தியின் மூர்த்தமாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். இது ஆதியில் சிவபெருமான் மகேந்திர மலையில் கல்லால மரத்தின் அடியில் தமிழக முனிவர்கள் நால்வர்க்கு அறம் உரைத்த அரிய மூர்த்தமாகும். இதனைக் குருமூர்த்தம் என்று கூறுவர். அப்பால் சந்திர சேகர மூர்த்தம், கலியாண சுந்தர மூர்த்தம், உமா சுகந்த சுகாசன மூர்த்தம் போன்ற எட்டு மூர்த்தங்கள் காணப்பட்டன என்பது எனது எண்ணம். மக்களின் தெய்வ நம்பிக்கையும் அறிவு வளர்ச்சியும் எழுந்த பின் மூர்த்தங்களும் பலவாகப் பெருகின. இருபத்தைந்து மூர்த்தங்கள் கொண்ட மகாதேவ மூர்த்தமும் அறுபத்து நான்கு மூர்த்தங்கள் கொண்ட சிவமூர்த்தமும் காணப் பட்டன. அறுபத்து நான்குக்கு மேற்பட்டுச் சில மூர்த்தங்கள் கூட உள்ளன. இந்த மூர்த்தங்கள் எல்லாம் உலோக காலத்தில் தான் அதிக மாகச் சிறப்புற்றெழுந்தன. சிலை உருவங்களை விடச் செப்புருவங் களே சிறப்புடையனவாய் இலங்குகின்றன. செப்புருவங்களில் தான் நுண்ணிய வேலைப்பாடுகளைச் சித்திரித்துக் காட்ட முடிகிறது. ஒரு சிறிய முடியையும் எடுத்துக் காட்ட முடியும். உலோக காலத்தில் தமிழகத்தில் அரசுகள் தலைதூக்கி எழுந்தன. தமிழகம் பொன்னும் மணியும் உணவும் பொருள்களும் பெருகிச் சிறப்புற்றோங்கியது. கடல் வணிகம் பெரிய அளவில் வளர்ந்தது. நாட்டின் பொருளாதாரச் செழுமை யால் எங்கும் கோயில்களும் தெய்வத் திருஉருவங்களும் எண்ணில வாய் எழுந்தன. ஒவ்வொரு மூர்த்தத்தையும் பல்வேறு சிற்பிகள் தங்கள் கை வண்ணத்தைக் காட்டி எழில் பெறச் செய்தனர். ஒரு மூர்த்தி சோழர் பாணியிலும், பல்லவர் பாணியிலும் பாண்டியர் பாணியிலும் உருவாக்கப் பெற்று அழகொளிர விளங்கியது. இந்த மூர்த்தங்கள் மரத்திலும் மண்ணிலும் கல்லிலும் செம்பிலும் பொன்னிலும் ஓவியத்திலும் நாடெங்கும் பரவின. இவைகளின் அமைப்பையும் இலக்கணத்தை யும் கதைகளையும் தத்துவங் களையும் விளக்க ஆகம நூற்களும் சிற்ப நூற்களும் புராணங்களும் சமய சாத்திரங்களும் தத்துவ நூற்களும் எழுந்தன. மக்களின் அறிவு வளர்ச்சி காரணமாகவும், சமய ஆராய்ச்சி காரணமாகவும் அறிஞர்கள் இந்த மூர்த்தங்களின் அமைப்பிலும் முத்திரைகளிலும் பல நுண்ணிய தத்துவங்களைக் கண்டனர். பல வரலாற்று உண்மைகளை உணர்ந்தனர். எடுத்துக்காட்டாகத் திரிபுராந்தக மூர்த்தத்தைக் கொள்வோம். திரிபுர அசுரர்கள், தவத்தால் மூன்று உலோகக் கோட்டை களைப் பெற்றனர். அதன் துணையால் தேவர்களுக்கும் முனிவர் களுக்கும் பல இன்னல்களை விளைவித்து வந்தனர். அதனால் துன்பமுற்ற தேவர்கள் தங்கள் துயரை அகற்றுமாறு சிவபெருமானை வேண்டினர். அதைச் செவிமடுத்த சிவபெருமான் தேவர்கள் துயரகற்ற போர்க்கோலம் பூண்டு திரிபுர அசுரர்களை அழிக்கச் சென்றார். ஆனால் அவர் தமது வில்லில் ஏற்றிய பாணத்தை விடவில்லை. முப்புரத்தை நோக்கிச் சிரித்தார். முப்புரம் எரிந்தது. அசுரர்கள் அழிந்தனர். இது புராணக்கதை இந்தப் புராணக் கதையை மேற்போந்தவாறாக நோக்கின் சிவபெருமான் தேவர்களுக் காக அசுரர்களை அழித்த கதையாக இது புலப்படும். ஆனால் இதன் உட்பொருள் வேறாக இருக்கிறது. ஒரு தவளையானது சுண்டெலி ஆற்றைக் கடப்பதற்குத் தன் முதுகின் மீது ஏறி இருக்கும்படி கூறி அழைத்துச் சென்றதாகச் சிறுவர்களுக்குக் கூறப்படும் கதைபோல் சில உண்மைகளை விளக்கக் கூறும் கதையாக இருக்கிறது. முப்புரம் என்பது மும்மலம் ஆகும். சிவபெருமான் மும் மலத்தை ஒழித்து உயிர்களுக்கு இன்பம் அளித்தலையே இப் புராணக்கதை எடுத்துக் காட்டுகிறது. இதனைத் தமிழ் ஆகமமாகிய திருமந்திரத்தில் திருமூலர் அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்ப ர்கள் மூடர்கள் முப்புர மாவன மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறிவாரே (329) என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறே அட்ட மூர்த்தம் அணைத் திற்கும் அழகிய சிற்ப உருவங்களும், புராணக் கதைகளும் உட் பொருள் காட்டும் தத்துவங்களும் உள்ளன. சிவபெருமானுடைய ஒவ்வொரு உறுப்புக்கும் முத்திரைக்கும் அணிக்கும் ஆடைக்கும் தத்துவங்கள் உண்டு. சிவபெருமான் அழகிய மனித வடிவில் காணப்படவேண்டும் என்று சிற்ப உருவங்கள் செய்யப்படவில்லை. அவரது உடம்பிற் கேற்ற பொருத்தமான அளவில் அவரது முகமும் கைகால்களும் இருக்க வேண்டும் என்று அளவு முறைகள் சிற்ப நூற்களில் கொடுக்கப் பட்டிருந்தாலும் அவரது உருவ அமைப்புகளும் முத்திரைகளும் அணிகலன்களும் ஆடைகளும் சில தத்துவப் பொருள்களை விளக்குவதாக அமைக்கப்பட்டன. அன்றியும் மனித உருவில் நல்ல கட்டு வாய்ந்த உடலும் உறுதியான நரம்புகளும் தசைப்பற்றும் பெற்ற எழில் வாய்ந்த உருவமாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைக்கப்படவில்லை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. தமிழர்கள் ஆதியில் இயற்கையின் கோபத்தைக் கண்டஞ்சினர். தங்கள் பயம் நீங்கி இன்பம் பெற இயற்கையைத் தெய்வமாகக் கொண்டனர். அதன் அடிப்படையிலே தெய்வ நம்பிக்கை வளர்ந்து உருவ வழிபாடாக உயர்ந்தது. உருவ வழிபாடு மக்களுடைய கலை அறிவால் சிறப்புற்றெழுந்தது. தெய்வங்கள் மனித உருப்பெற் றெழுந்து அதற்கு இல்லமாகப் பெரிய கோயில்களும் விமானங் களும் கோபுரங்களும் எழுந்தன. தமிழர்கள் தாங்கள் கண்ட தெய்வ உண்மையை அவர்கள் அறிவு வளர வளர உயர் நிலைப்படுத்தினர். தங்கள் திருக்கோயில்களை எல்லாக் கலைகளையும் வளர்க்கும் இடமாக மாற்றினர். திருக்கோயில்களில் நமது கட்டிடக்கலை, படிமக் கலை, ஓவியக் கலை, இசைக்கலை, ஆடைக்கலை, ஆயுதக் கலை, அணிகலன்களின் கலை, உணவுக்கலை, மருத்துவக் கலை முதலியவைகளெல்லாம் இடம் பெற்றுள்ளன. முற்காலத்தில் கோயில்கள் அரண்களாகக் கூட விளங்கின. கோபுரங்களிலிருந்து பார்த்து - பகைவர்கள் நாட்டின் மீது படையெடுத்து வருவதை நம் காவல் வீரர்கள் தொலைவில் வரும்பொழுதே உணர்ந்து மன்னர்களுக்கும் மக்களுக்கும் அறிவித்து வந்தனர். நம் கோயில்கள் மக்களுக்காக மக்கள் வாழ்விற்காக, மக்களின் இன்ப நிலைக்காக எழுப்பப் பெற்ற பெருங்கருவூலங்களாகும். அங்குக் கல்வெட்டாகவும் செப்பேடுகளாகவும் நம் வரலாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எனவே கோயில்களும் அவற்றில் அடங்கிய சிற்ப உருவங்களும் நம் கருவூலங்களாகும். அவற்றை என்றும் மறவாது பாதுகாத்து வருவோமாக. கோயிலை அழித்து விட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். கோயிலை அழிப்பது நமது கலையை அழிப்பது - நமது நாகரிகத்தை அழிப்பதாகும்; ஏன் நமது வரலாற்றின் மூலக் கருத்தையே சிதைப்பதாகும். நாம் கசினி முகமதுவின் வாரிசு என்று கூறிக் கொள்வது போலாகும். நமது தமிழகத்தின் தலைவர் என்று கூறும் பெரியார். திரு. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் தமிழர்கள் காட்டு மிராண்டிகள் என்ற நிலை கூறியதை தமிழர்கள் நேற்றுவரை வன்மை யாகக் கண்டிக்கவில்லை என்று இருக்க, நம் கலைகளை அழித்தால் நாம் காட்டு மிருகங்கள் என்று நெற்றியில் பச்சை குத்திக் கொள்வது போலாகும். நம் கோயில்களையும் அங்குள்ள சிலைகளையும், சிற்பங்களையும் பிற கலைகளையும் பேணி வளர்த்து உலகில் உயர்ந்த நாகரிகமும் பண்பும் வாய்ந்த இனமாகத் திகழ வேண்டும். நமது நாட்டில் கைவண்ணம் வாய்ந்த சிற்பிகளால் அமைக்கப் பட்ட அற்புதமான கற்சிலைகளும், எழில்மிக்க வெண்கலப் படிமங்களும் உள்ளன. அவை பல்லவர் பாணியிலும் சோழர் பாணியிலும் பாண்டியர் பாணியிலும் ஒப்புயர்வற்றவைகளாய் இலங்குகின்றன. அவைகளுடன் எனக்குக் கிடைத்த அட்டமூர்த்தியின் அழகான சிற்ப வடிவங்கள் இருபத்து நான்கை இங்குத் தந்துள்ளேன். இந்தச் சிற்ப வடிவங்கள் எத்துணை அழகாய் வடிக்கப் பெற்றுள்ளன. அவை சிற்ப நுட்பங்களுக்கும் ஆகம விதிகளுக்கும் ஏற்ப எத்துணைச் சிறப்பாக உருவாக்கப்பெற்றள்ளன என்பதைப் பற்றி எனது அற்பச் சிற்ப அறிவைக் கொண்டு ஒப்பு நோக்கி யுள்ளேன். துஞ்சாப் பெருமை வாய்ந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எண்ணற்ற செம்புப் படிமங்கள் என் உள்ளத்தைக் கவர்ந்தவை என்பதை நான் எடுத்தாண்ட படங்களிலிருந்து நன்கு காணலாம். ஆனாலும் பல்லவர்கள் பாணியில் உருவாக்கப்பட்ட படிமங்களி லும் பாண்டியர்கள் பாணியில் உருவாக்கப்பட்ட படிமங்களிலும் குறையுளது என்று நான் கருதவில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உயர்வு என்பதே எனது முடிவான கருத்து. ஆரியர்களும் தமிழர் நெறியும் ஆரியர்கள் வருமுன் தமிழர் நெறி மிக மேலான தூய நெறியாக இருந்தது. ஆரியர்கள் இந்நாட்டிற் புகுந்தபின்னரும் நெடுநாள்வரை தமிழர் நெறி கலப்பற்றதாக இருந்தது. ஆனால் ஆரியர்களும் திராவிடர்களும் கூடிப் புத்த நெறியை எதிர்க்க முதன் முதலாக இந்து மதம் என்ற பெயரால் ஒன்றுபட்டனர். திராவிடர்களின் கலைகளும் தத்துவ நூற்களும் வடமொழியாலாக்கப் பெற்றன. சைவர்கள் முன்னின்று தமிழகத்தில் பௌத்தம், சமணம் முதலிய நெறிகளை விரட்டியடித்தனர். இதன் பலனாகத் தமிழகத்தில் தமிழர்களின் சைவம், வைணவம் ஆகிய மதங்கள் தளிர்க்கவில்லை. ஆனால் குன்றின என்று கூற முடியும். தமிழகத்தில் உள்ள மன்னர்களிடம் ஆரியர்கள் செல்வாக்குப் பெற்றவர்கள். மன்னர்களின் தயவால் ஆரியர்கள் ஏராளமாகக் குடியேற்றப் பெற்றனர். வீடு, தோட்டம், நன்செய், புன்செய் நிலங்கள் ஆகியவற்றைத் தமிழ் அரசர்களிடம் மானியமாகப் பெற்றனர். சைவத்திருக்கோயில்களோ பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்குள் வந்தன. வடமொழி வலுப்பெற்றுச் சைவ வைணவக் கோயில்களில் புகுந்து முதலிடம் பெற்றது. வடமொழி தெய்வமொழியாகக் கூறப்பெற்றது. அர்ச்சனைகள், கோயிற் கிரியைகள், மணச்சடங்குகள் எல்லாம் வடமொழியில் நிகழ்த்தப் பெற்றன. தமிழ் நான்மறையும் வடமொழி நூல் வேதங்களும் தெய்வவாக்கு என்று தமிழர்கள் போற்றும் படியான நிலைமை எழுந்தது. ஆகமங்கள், சிற்பநூற்கள், ஓவிய நுற்கள் போன்றவைகள் வட மொழியில் எழுந்தன. தமிழில் உள்ள மூலநூற்கள் அழிக்கப்பட்டன. ஆரியர்கள் திராவிடர்களோடு போரிட்டு, ஆரியர் பெற்ற வெற்றிகளால் தேவ - அசுர போராட்டக் கதைகள் பெருகின. சிறந்த சிவபக்தர்களாக இருந்து சைவம் ஓம்பிய தமிழகத் தலைவர்கள் இராட்சதர்களாகவும் கொடியவர்களாகவும் இழித்துரைக்கப்பட்டனர்.அறப்போர் அறியாத மிலேச்சத் தன்மை வாய்ந்த ஆரிய மன்னர்கள் திருமாலின் அவதாரமாக உயர்த்தி யுரைக்கப்பட்டனர். அவர்கள் ஆற்றிய அதர்மப் போர் நீதிப் போராக வடமொழியில் எழுதப்பெற்றது. சிவதீக்கையே இன்னதென அறியாத வட நாட்டு ஆரிய மன்னர்கள், சிவதீக்கைபெற்று இறைவனுடைய அன்பிற்குப் பாத்திரமாயிருந்த தென்னாட்டுத் தலைவர்கள் கொல்லப் பட்டதைத் தென்னாட்டார் உள்ளத்தினின்றும் போக்கச் சிவலிங்க வழிபாடு செய்து கழுவாய் தேடிச் சிவபெருமான் அன்பைப் பெற்று விட்டதாக வட மொழியில் கதைகள் இயற்றினர். படிப்படியாய் வடநாட்டு ஆரிய அரசர்களைத் தெய்வ அவதார மாகக் கற்பித்துக் கூறித் தென்னாட்டார் போற்றும் நிலையில் செய்து விட்டனர். ஆரியர்கள் இந்நாட்டிற்கு வரும்பொழுது ஆடு மாடு மேய்ப்பவர்களாகவும் குதிரை மாமிசம் புசிப்பவர்களாகவும் வந்தனர். அவர்கள் மொழி, வளம் பெற்றதாக இல்லை. அது வரி வடிவம் கூடப் பெற்றிருக்கவில்லை. கலைகளைப் பற்றி அவர்கள் கடுகளவும் அறியார்கள். அக்காலத்தில் திராவிடர்கள் மொழி, எழுத்து, கலை, சமய ஆட்சி, வீடு, நாடு, நகரம், கூட கோபுரம், கோட்டை கொத்தளம் அமைத்து உயர்நிலையில் இருந்தனர். ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்து பல்லாண்டுகள் சென்றதும் திராவிடர்களிடமிருந்து அறிந்த அறிவைக் கொண்டு தங்கள்மொழி, வரிவடிவம், சமயம், ஆட்சி முறை முதலியவைகளை வளர்த்துக் கொண்டனர். திராவிடர்கள் எழுப்பிய வான் அளாவிய கல், செம்பு, வெண்கலம் போன்ற கோட்டைகளைக் கண்டு அவைகளை அசைக்க முடியாதிருந்தனர். அப்பால் திராவிடத்து, கோயில்களின் பல இரகசியங்களை அறிந்து திராவிடர்களை அழித்து வெற்றிசூடிக் கொண்டனர். அதற்குக் காரணமான தம் தலைவர்களைப் போற்றினர். அவர்களை உருத்திரனுடைய அவதாரம் என்று ஏற்றினர். சிவபெருமானே அரக்கர்களின் அரண்களை அழித்து பூசுரர்கள், முனிவர்கள், தேவர்கள் இன்னல்களைத் துடைத் தனர் என்று கூறினர். பிற்காலத்தில், முப்புரம் அழித்தது, மும்மலம் ஒழித்தது என்று தத்துவம் கூறி சிவ பக்தர்களைத் திசை திருப்பி விட்டனர். சைவநூற்களில் பல இடைச்செருகல் செய்யப்பட்டன. சிவபக்தர்களை அசுரர், அரக்கர், இயக்கர் என்றும் ஆரியர்களை தேவர், பூசுரர் என்றும் எழுதிப் பொய்யை மெய்யாக்கி விட்டனர். இதனைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக் காட்ட முன் வந்தவர் தமிழ்க் காவலரும், சைவப் பெரியாரும் திருவனந்தபுரம் அரசர்கல்லூரிப் பேராசிரியருமான உயர்திரு எம்.ஏ. சுந்தரம்பிள்ளை அவர்களே ஆவர். இவர் வழியில் 1930ஆம் ஆண்டிற்கு முன்பே உயர். திரு. R¥ãukÂaãŸis v«.V., எம்.எல் அவர்களும் மறைத்திரு. மறைமலைஅடிகளும் துடித்து எழுந்து அசுரர்கள் என்று சிவபக்தர்களும் திராவிடமன்னர்களும் கூறப்படுவதை எடுத்துக் காட்டினர். தேவர் - அசுரர் போராட்டம் எல்லாம் ஆரியர் - திராவிடப் போராட்டமே என்று எடுத்துக் காட்டினர். ஆரியர்களின் சிறு தெய்வம் திராவிடர்களின் பெருந்தெய்வத் தோடு இணைத்தும் ஒப்பிட்டும் எழுதிய ஏடுகளைக் கண்டித்தனர். திராவிடப் பெருந்தெய்வம் பிறவாதது; இறவாதது. ஆரியர் தெய்வம் பிறந்திறந்து அழிவது என்று எடுத்துக் காட்டப் பெற்றது. இராவணன், சூரன் போன்ற அரசர்களும், மண்டோதரி போன்ற பெண் அரசிகளும் சிவபக்தி வாய்ந்தவர்கள் என்று சான்று காட்டி எடுத்துக் காட்டப்பெற்றது. இராவணப் பெரியார் என்று முன்னீர்ப் பள்ளம் உயர்திரு. எம்.எ. பூரணலிங்கம்பிள்ளை அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதிவெளியிட்டார்.1 சைவ உலகில் ஒரு திருப்பம் எழுந்தது. நமது நாட்டு முதல் அமைச்சர், பிரிட்டிஷ் ஆட்சியின் போது நாட்டின் விடுதலைக்காகப் போராடி சிறையிலிருந்த பொழுது தனது மகள் இந்திராகாந்திக்கு உலக வரலாற்றை கடிதங்கள் மூலம் எழுதி வந்தார். அதில் இராமாயணம், வடநாட்டு ஆரியர்களுக்கும் தென்னாட்டுத் திராவிடர்களுக்கும் இடையே எழுந்த போராட்டமே யாகும். அதில் இராமனுக்கு உதவி செய்த தென் இந்தியர்களே அனுமார் (குரங்கு) என்று வருணிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் எழுதியுள்ளார். இக்கடிதங்கள் இன்று நூல்வடிவம் பெற்று வெளி வந்துள்ளது. தமிழிலும் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளது. 1935ஆம் ஆண்டிற்குப் பின் காங்கிர செல்வாக்கு ஓங்கியது. ஜடி கட்சி வீழ்ந்தது. திராவிட இன எழுச்சி குன்றியது. என்றாலும், இன்றைய நிலையில் - சைவம் இந்து சமயத்திற்கு அல்லது சுமார்த்த சமயத்திற்கு அப்பாற்பட்டது. சிவநெறிக்கும் ஆரியர்களுக்கும் அணுவளவும் தொடர்பு இல்லை. சிவநெறி தொன்மையான நெறி. இது ஒன்றே இன்று உயிருடன் நிலவும் பழமையான நெறி. இது தமிழர் நெறி. இந்நெறியே சிந்துவெளியில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நந்தா ஒளியுடன் இமயத்தின் உச்சி வரையும் எட்டி நின்றது. எகிப்து, மெசபொத் தாமியா, சுமேரியா, பாபிலோனியா, அசீரியா, அக்கேடியா, சால்டியா, சின்ன ஆசியா, ஹிட்டைட், ஈடர் தீவு, கிரீட்தீவு, பெயின், பெரு, மெக்சிகோ முதலிய அனைத்துலக நாடுகளிலும் பரவி, செங்கோலோச்சியது - என்று தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்களும், வரலாற்றறிஞர் களும் எடுத்துக்காட்டி வருகின் றார்கள். தமிழ் நெறி தழைக்கவும், சிவநெறியில் படிந்துள்ள மாசுகள் அகலவும் புராணங்களில் அழுக்கும், இடைச்செருகல்களும் நீங்கவும், இடைவிடாத போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது. தமிழ்ச் சமய குரவர்கள் நால்வரிலும் முதியவராயும் சமணர்களும், மன்னனும் இயற்றிய எல்லாக் கொடுமைகளுக்கு அஞ்சாது எதிர்த்து நின்று வெற்றி பெற்ற வீரரும் தம் வானாள் முழுவதும் துறவியாய்ப் பணியாற்றியவருமான அப்பர் அடிகள் தேவாரப் பாடலில், முத்தனைய முகிழ்முறுவ லுடையார் போலும் மொய்பவளக் கொடியினைய சடையார் போலும் எத்தனையும் பத்தி செய்வார்க் கினியார் போலும் இருநான்கு மூர்த்திகளு மானார் போலும் மந்திரவச் சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழி மிழலையமர் விகிர்தர் போலும் அத்தனொடும் அம்மையெனக் கானார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள் தாமே என்று அட்டமூர்த்தியை இரு நான்கு மூர்த்திகளுமானார் என்று போற்றியுள்ளார். மற்றொரு சைவ சமயக் குரவராயும் வயதில் எல்லோருக்கும் இளைவராயும் விளங்கிய சம்பந்தர் தேவாரத்தில் நட்டத்தோடு நரியாடு கானத்தெரி யாடுவான் அட்டமூர்த்தி யழல் போலுருவன் அழகாகவே இட்டமாக விருக்கும் மிடம்போ லிரும்பைதனுள் வட்டஞ் சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கு மாகாளமே என்று அட்டமூர்த்தியை அழகொளிரப் பாடிப் போற்றியுள்ளார். அட்டமூர்த்தியுருவம் அற்புதமான தத்துவ அடிப்படையில் அமைந் துள்ளதால் சைவசமயக் குரவர்கள் நால்வரும் தமது திருப்பதிகங் களில் பல் வேறிடங்களில் அதனைப் போற்றிப் புகழ்ந்து கூறி யுள்ளார்கள். அட்டமூர்த்தம் (அதாவது சிவபெருமானுடைய எட்டுத் திருக்கோலங்கள்) அவரது மகாதேவமூர்த்தம் இருபத்தைந்திற்கும் சிவமூர்த்தம் அறுபத்து நான்கிற்கும் அடிப்படையாய் அமைந் துள்ளது. இந்த அட்டமூர்த்தத்திலிருந்தே மகாதேவமூர்த்தம் எழுந்தது. இலிங்கோற்ப மூர்த்தமும் மூன்று அட்ட மூர்த்தமும் (அதாவது 24 மூர்த்தமும்) இணைக்கப்பெற்று இருபத்தைந்து மூர்த்தங்களும் மகாதேவமூர்த்தம் எனக் கூறப்பட்டுள்ளன. எட்டு அட்ட மூர்த்தங்கள் அதாவது அறுபத்து நான்கு மூர்த்தங்களை (அட்டமூர்த்தம் மகாதேவ மூர்த்தம் அனைத்தும் உள்ளடக்கி)ச் சிவமூர்த்தம் எனக் கூறினர். தமிழர்கள், சைவர்கள் ஒரே தெய்வ வழிபாட்டைக் கொண்ட வர்கள். அவர்கள் கண்ட ஒரு தெய்வத்தில் தாய்த் தன்மையும் தந்தைத் தன்மையும் விளங்குவதாகக் கண்டு அதனை அம்மையப்பராகக் கொண்டு வழிபட்டார்கள். இறைவனுடைய ஆற்றல் அம்மை யாகவும் அவனுடைய அருள் அப்பனாகவும் எண்ணி வழிபடப் பட்டது. உலகமானது சடம், சக்தி என்னும் இரு கூறாகக் காணப் பட்டாலும் சடமும் சக்தியும் பிரித்துக் காண முடியாதது போல் இறைவனும் பிரித்துக் காணமுடியாத ஒரு பரம்பொருள் என்று எண்ணப்பட்டது. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று கூறப்படும் திருமந்திரவாக்கு சைவர்களின் மந்திரமாகும். தமிழ் வரிவடிவில் அ என்பது முதன் முதலாக உச்சரிக்கப் படும் உயிர் எழுத்தாகும். அ-என்பதற்குக் கடவுள் என்பதே பொரு ளாகும். திருமாலையும் சிவனையும் குறிக்கும் அவ்வென்சொற் பொருளாவான் (பாகவதம் சி.சு.பா.20) அகாரம் அவன் (திருமந்திரம்) அகரம் என அறிவாகி (விநாயகபுராணம்) என்று கூறப்படுதலால் கடவுள் அறிவிற்கும் அது பெயராம். கடவுள் எங்கும் நிறைந்திருப்பது போல் எல்லா எழுத்துக் களிலும் அகரம் உண்டு என்றார்1 அகரம் உலகில் உள்ள பல்வேறு மொழிகளிலும் முதலிடம் பெற்றுள்ளது. சிவபெருமான் எட்டுக் கோலங்களாக எழுந்தருளிய தற்கு எண்ணற்ற காரணங்கள் உள. அவர் கொண்ட கோலங்கள் இரண்டாக அல்லது மூன்றாக நாலாக இல்லாது எட்டாக இருப்பது மிகச் சிறப்புடையது. எட்டு என்ற எண் மட்டற்ற மாண்புடையது. அந்த எண்ணின் பெருமை எழுத இந்த ஏடு இடந்தராது. எட்டின் பெருமையை எழுதிக் கொண்டே போகலாம். எட்டு என்ற எண் அ என்று எழுதப்பட்டு வருவது தெரிந்ததே. அ என்பது தமிழ் வரிவடிவங்களில் முதல் எழுத்தாய் உயிர் எழுத்தாய், ஒலிகளுக்கெல் லாம் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் இருப்பதும் சிந்திக்கத்தக்கது. தமிழ் எண்ணின் முதலாவதாக இருக்கும் ஒன்றிற்குத் தமிழர் க என்ற எழுத்தைப் பயன்படுத்தினர். அதிலும் அ என்ற உயிர் எழுத்து ஒலிக்கிறது. க் + அ = க. அதாவது க் என்ற மெய் எழுத்தும் அ என்ற உயிர் எழத்தும் இணைந்தே க என்ற உயிர்மெய் எழுத்தாக எழுந்து ஒன்று என்ற எண்ணின் குறியீடாக வழங்குகிறது. எட்டினை அடிப்படையாக வைத்து மகாதேவ மூர்த்தமும் சிவமூர்த்தமும் கண்டதுபோல் எட்டினை அடிப்படையாக வைத்தே இரண்டு எட்டாக அதாவது பதினாறாகச் சோடச உபசாரங்களும் பதினாறு பேர்களும் பதினாறு சைவமும் முப்பத்தி ரெண்டு அறங்களும் முப்பத்திரெண்டு பண்களும் முப்பத்திரெண்டு உபநிடதங்களும் முப்பத்திரண்டு சிற்ப நூற்களும் அறுபத்து நான்கு கலைகளும் அரும்பியுள்ளன. அட்டமூர்த்தி என்பதனால் இறைவன் எட்டு என்று தமிழர்கள் என்றும் எண்ணியதே இல்லை. இறைவன் ஒருவனே. அவன் பிறப்பற்றவன். குணம், குறி, ஊர்பேர் உருவம் இல்லாதவன். அவனை இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று எழுதிக் காட்ட முடியாது என்று தமிழர்கள் இன்றன்று பண்டு முதல் அறிவார்கள். அவன் எல்லாத் தேவர்களுக்கும் முதல்வன். அவனே மண்ணையும் விண்ணை யும் எண்ணிலா உலகங்களையும் ஞாயிறு, திங்கள் போன்ற கோள்களையும் படைத்தவன். அவனே முடிவில் எல்லாவற்றையும் அழிப்பவன் என்று தமிழர்கள் அறிவார்கள் என்றாலும் அவர்கள் அவனைக் கண்டு அஞ்சவில்லை. அவனை அன்புள்ள அம்மை யாகவும் அப்பனாயும் மாமனாகவும் மாமியாகவும் ஏன் நல்ல தோழனாகவும், தலைவனாகவும் கொண்டனர். அவன் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா நாட்டிற்கும் எல்லாச் சமயத் திற்கும் இறைவன் என்று நம்பினர். அவன் தென்னாட்டார் கண்ட தெய்வம்; ஆனாலும் எந்நாட்டவர்க்கும் இறைவன் என்று கூறினர். அவனை ஏழிசையாகவும் இசைப் பயனாகவும் கண்டனர். அவன் கொண்ட கோலங்கள் எண்ணிலாதன. என்றாலும் எல்லாக் கோலங் களும் இந்த எண் வகைக் கோலத்தில் (அட்டமூர்த்தத்தில்) அடங்கி யிருப்பதாக அறிந்தனர். அட்டமூர்த்தி வடிவங்களில் அளவிலாத் தத்துவங்களைக் கண்டனர். அட்டமூர்த்தியை முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் மூவுலகிற்கும் மும்மூர்த்திகளுக்கும் முதல்வனாகக் கொண்டனர். இதனை அப்பர் அடிகள் மூவுருவில் முதல் உருவாய் இருநான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்து மூவர் தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவளத் திருமேனிச் சிவன் என்று அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். சிவன் என்ற பதத்தை வைத்து இறைவன் ஆண் என்று எண்ணுவாரும் உளர். இறைவன் ஆணுமல்லன் பெண்ணுமல்லன், அலியுமல்லன், அவன் சில சமயங்களில் ஆண் போலவும் சில சமயங்களில் பெண் போலவும் காட்சியளித்திருக்கலாம். அவன் பிறவாதவன், இறவாதவன், அவனுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை என்று திருவாசகம் பல விடங்களில் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் காட்டியுள்ளது. உலகில் மக்கள் கடவுளை இசக்கியாகவும், நீலியாகவும், பேச்சி யாகவும், மாடனாகவும், ஐயனாராகவும், வீரனாகவும், மனிதனாகவும் எண்ணிச் சோறு, பழம், கருவாடு, கள்ளு, ஆட்டுக்கறி முதலியன படைத்து வழிபடுகின்றார்கள். சில வேடர்கள் அவனை வேடனாக வும், சில உழவர்கள் அவனை நல்ல உழவனாகவும், சில வீரர்கள் அவனை நல்ல வீரனாகவும், சில கவிஞர்கள் அவனை நல்ல கவிஞ னாகவும், சில மன்னர்கள் அவனை நல்ல மன்னனாகவும் எண்ணி வழிபடுகின்றனர். வேடர்கள் அவனைக் கருப்பனாகவும் மரவுரி பூண்டவனாகவும் புலித்தோலை உடுத்தியவனாகவும் மழு ஏந்திய வனாகவும் எண்ணிப் போற்றுகின்றனர். சில செல்வர்கள் அவனை அழகனாகவும், செந்நிறத்தவனாகவும், பொன்னாடை புனைந்த வனாகவும் பட்டாடை தரித்தவனாகவும், மணிகள் பதித்த பல பொன் அணிகலனைப் பூண்டவனாகவும் செல்வம் உடையவ னாகவும் காண்கின்றனர். அவன் அன்பர்களுக்கு பொன்னும், மணியும், பூமியும், ஆடுமாடுகளும் வாழ்வும் அளிப்பான் என்று சிலர் கூறுகின்றனர். எண்வகை வடிவமானாலும் இறைவன் ஒருவனே!  நுண்கலைச் செல்வர் சாத்தன் குளம் அ. இராகவன் தொகுதிகள் சமூகச் சீர்திருத்தம் 1. குடியரசுக் கட்டுரைகள் பண்பாட்டு வரலாறு 2. தமிழர் பண்பாட்டில் தாமரை 3. தமிழ்நாட்டு திருவிளக்குகள் 4. தமிழக சாவகக் கலைத்தொடர்புகள் 5. இறைவனின் எண்வகை வடிவங்கள் 6. வேளாளர் வரலாறு தொழில்நுட்ப வரலாறு 7. நம்நாட்டுக் கப்பற்கலை 8. தமிழ்நாட்டு அணிகலன்கள் 9. தமிழ்நாட்டு படைகலன்கள் 10. தமிழ்நாட்டுக் கோயில் கட்டிடகலை - 1 தமிழ்நாட்டுக் கோயில் கட்டிடகலை - 2 11. இசையும் யாழும் தொல்பொருள் ஆய்வு 12. கோநகர் கொற்கை 13. ஆதிச்ச நல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் தமிழியல் ஆய்வு 14. அறிவு இதழ்க் கட்டுரைகள் 15. ஆய்வுக் கட்டுரைகள் (இதுவரை தொகுக்கப்படாதவை) 1. “In fact the last centuries of the Neolithic age witnessed the making of iron implements Which the Neolithic People used on a large scale. The date of this transition or the length of its duration cannot be fixed with any satisfaction though one school of archaeologists contends’ that 5000 B.C. may be roughly taken as the Chronological limit for the begining of the Iron Age in south India” - PRE - HISTORIC SOUTH INDIA - V.R. Ramachandra Dikshitar. M.A., Professor of Indian History, Archaeology and Anthropology University of Madras. (Madras) 1951. P. 95 1. Even an author like Bharatha who lived by about the 3rd century B.C. refers to a country called Dramida. By this he undoubtedly meant Dravida Desa. Ptolemy also refers to this in his geography. From these evidences one can demonstrate fully that the Dravida desa and its culture were known to the people of North India even in the 3rd century B.C.” - Pre - Historic south India - Prof. V.R. Ramachandra Dikshitar M.A. (Madras) 1951. 1. Dr. Paul M.west. Ph.D. Sexology.(Monthly Magazine July 1953 P.7-8) 2. தூய விமானமும் தூலம தாகுமா லாய சதாசிவ மாகுநற் சூக்குமம் பாய பலிபீடம் பத்திர லிங்கமா மாய வரனிலை யாய்ந்துகொள் வார்கட்கே. திருமூலர் - திருமந்திரம் 1689 1. Holy Bible - 1. King chap VII Ver. 21 1. முருகன் அல்லது அழகு - திரு.வி. கலியாண சுந்தர முதலியார். 1. Decipherment of the Proto - Dravidian inscription of the indus civilization - Asko Parbola & others Cobenhagen - 1969. 1. Dr. Grierson Says: “The term ‘Siva’ is Tamil in its origin: the conception of Rudra Siva has a tinge of Dravidian influence on the Aryans not only philosophically but on their whole mode of thought” - Lingiestic Survey of India. Vol VI. 1. பாரதிநூல்கள் - காவியங்கள். பாரதி அறுபத்தாறு - சி. சுப்பிரமணிய பாரதி. (சென்னை) 1941. பக் 17. 1. Mohenjo Daro and Indus civilization Sir John Marshall (London) 1930, Vol I - III. 2. Dravidian civilization - R.D. Banerji (Modern Review) Calcutta. 1928. 3. Mohenjo Daro-Sir Mortimeo Wheeler. (Karachi) 1950. 1. Pre-Historic South India - V.R. Ramachandra Dikshitar 1951. Dravidian Civilization - R.D. Banenji Calcutta. 1928. 2. Vameeki Ramayanam (Sanskrit) 1. Ancient Sind. Marivala - Karachi (Pak) 1. Indian civilization and its antiquity - B. Mukerjee 2. Ganesa Siva Linga and Yama (the God of death and justice) and numeroas serpent Gods were worshipped in some areas on the whole continent Hindu America - Chaman Lal. P. 60 1. தமிழ் இந்தியா - ந.சி. கந்தையா பிள்ளை (சென்னை) 1945. 2. Ancient faiths embodied in ancient names Vol - II. P. 352 Short studies in the science of comparative religion - G.R. Forlong P. 352. 1. சிவலிங்க மகத்துவம் - மங்கையர்க்கரசியார் (ஆண்டாளம்மை) சென்னை - 1918. 1. மாலொ டும்மறை யோதிய நான்முகன் காலொ டும்முடி காண்பரி தாயினான் (அப்பர் தேவாரம், திருநெய் - 9.) 1. Bas Relief` 1. சுக்கிரநீதி - தமிழ் மொழி பெயர்ப்பு - மகிபாலன்பட்டி கதிரேசன் செட்டியார். 1. குறிஞ்சிப்பூ, மஞ்சள் நிறத்தில் மட்டுமன்றி நீலநிறத்திலும் இருக்கும். 1. காசியப சிற்ப சாத்திரம். தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு. 2. தமிழகத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் திருச்செங்கோட்டைத் தவிர மற்றெல்லாத் தலங்களிலும் சிவலிங்கமே மூலத்தானத்தில் இருக்கிறது. திருச்செங்கோட்டு மலைமீதுள்ள கோயிலில் மட்டும் மாதொருபாகம் அதாவது அர்த்த நாரீசுவர வடிவமான திருவடிவம் இருக் கிறது. அதாவது இடதுபுறம் பெண் வடிவமும் வலதுபுறம் ஆண் வடிவமும் கொண்ட அர்த்த நாரிவடிவம் காட்சி தருகிறது - கோயில் சிற்பங்களில் சில அபூர்வ விலங்குகள் - இராமச்சந்திரன் செட்டியார் (கட்டுரை) திருக்கோயில் அச். 1966. 1. சிலப்பதிகாரம். அரங். 99.100 1. பூஜாம்சோதயம் என்பதை நிர்ணயிக்கும் பொழுது பீடத்தின் உயரத்தை நீக்கிவிட வேண்டும் என்றும் சுயம்பு லிங்கத்தின் சிரசைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மாளவலிங்கத்தில், சிரசின் உயரத்தை நீக்கி விட வேண்டும் என்றும் மானசாரத்தில் கூறப்பட்டுள்ளது. 1. சிற்பரத்தினம் - சிரிகுமாரர் (சிரிரங்கம்) தமிழாக்கம் . . . 1961. 1. தென் இந்திய சிற்ப வடிவங்கள் - க. நவரத்தினம் பக். 92. 1. சுக்கிரநீதி - திரு. கதிரேசன் செட்டியார் மொழிபெயர்ப்பு அத் 4. பிர.4 சுலோகம் 77-80. 1. சைவ சித்தாந்த விளக்கம் - கா. சுப்பிரமணிய பிள்ளை (மதுரை பக். 48-49 (1913) 1. சிவஞான சித்தியார் சுபக்கம். பிரமாணவிளக்கம் 1. பைளில் (பழைய ஏற்பாடு). ஆதியாகமம். அத். 1 வசனம். 27. 1. மானைத் தவிரச் சிவனின் மற்றச் சின்னங்கள் கொண்டு விளங்கும் அன்னையைக் காளி என்பர். இரண்டு கைகள் மட்டும் இருந்தால் காளி என்றும் அதற்கு மேற்பட்ட கைகள் இருந்தால் பத்திரகாளி என்றும் அழைக்கின்றனர். கலைச்செல்வன் ரா. நாகசுவாமி. எம்.ஏ. பக்.64, (1961) சென்னை. 1. கலைக் களஞ்சியம் (சென்னை) பக் 1-2, 1954 1. தமிழர் சமயம் - திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை 1. “There is no doubt that it was in the close of the Paleolithic period that the Dravidian, from whom the vast majority of the peoples of India are derived first came to pominence. The Dravidians or the Mediteraneans migrated into the land some time, we may suppose about the 9th or 8th millennium B.C., and after deriving the ‘Pre-Dravidians’ and Indonesian. Mundas to the hills and woods, occupied the more fertile parts and carried on the neolethic culture. The Dravidian culture spread throughout India during the . . . millienuiums” the neolitheans contributed to the evolution of human thought morals and religion” Pre-Musal man India - Prof. V. Rengachari (Madras) 1. சில்பரத்தினம் - சிரிகுமாரர் (தமிழ்மொழியாக்கம்) 1961 1. மகேந்திரமலை - இது பொதியமலைக்கு தெற்கேயுள்ள வளம் பொருந்திய ஒருமலை. பல ஊழிகளிலும் நீரில் அழுந்தி முழுகாதமலை - திருவிசைப்பா (திருப்பனந்தாள் வெளியீடு) பக்கம் 29 (சிரிவைகுண்டம்) 1974. 1. வரதமுத்திரை என்பது மணிக்கட்டில் இருந்து விரல்கள் கீழ்நோக்கி, உள்ளங்கை முன்புறம் இருக்கும்படி கையைத் தொங்க விடப்பட்டிருப்பதாகும். 1. மகுடங்களின் விளக்கம் - திரு. கோபிநாதராவ் எழுதிய இந்தியத் திருஉருவங்கள் என்ற நூலின் முதற் பாகம் 15 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. 1. Matter and Force (சடமும் சக்தியும்) 1. சிவ சொரூப சாத்திரம் - சென்னை 1909 பக் 11-12 தேவாரம் வேதசாரம் - செந்தில்நாதையர் சென்னை. 1. சந்திரசேகரர் தனித்திருந்தாலும் தேவியுடன் இருந்தாலும் அவரைச் சுற்றிப் பிரபை மண்டலம் இருக்க வேண்டும். 1. காசியப்ப சில்ப சாத்திரம் 77 வது படலம். 1. நால்வர் நான்மணி மாலை 1. ஸரஸவதீய சித்திரகர்ம சாதிரம் - தஞ்சை சரவதி மஹால் வெளியீடு 1900 2. சகளாதிகாரம் - அகத்தியர். தஞ்சை சரசுவதிமகால் வெளியீடு 1961. 1. காசியப சில்ப சாத்திரம். பக் 68 1. அம்மையின் ஆண்வடிவமே திருமால் என்று சிவாகமங்கள் கூறும்; மாயோள் வழிபாடே மாயோன் வழிபாடாயிற்று என்பதும் குழலூதும் கண்ணன் தமிழ்த் தெய்வமே என்பதும் தமிழ் நூலாராய்ச்சியின் முடிவாகும் - தமிழர் சமயம். திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை. எம்.ஏ.எம்.எல். பக்.7. 1940. 1. Dr Grierson Says in his valuable book Vedic India, “The term ‘Siva’ is Tamil in its origin; the conception of Rudra - Siva has a tinge of Dravidian influence on the Aryan not only philosophically but on their whole mode of thought” 1. Further progress in the indus script Deghement - Asko. Hindu (weekly Magazine) Pentti Adlto (22.3.70) 1. சமயங்களைப் புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என நான்கு வகைப்படுத்தி ஒவ்வொன்றிற்கும் ஆறு சமயங்களாக 24 சமயங்களை அறிஞர்கள் கண்டுள்ளார்கள். 1. Ravana the great by M.S. Puranalingam Pillai B.A.L.T, 1. கலைக்களஞ்சியம் (சென்னை) பக் 1.2.1954.