பண்பாட்டு வரலாறு நூற்களஞ்சியம் - தொகுதி இரண்டு தமிழர் பண்பாட்டில் தாமரை சாத்தன்குளம் அ. இராகவன் அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் தொகுதி இரண்டு தமிழர் பண்பாட்டில் தாமரை | சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி | முதல் பதிப்பு : 1964 | மறு பதிப்பு : 2005 | தாள் : 18.6 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 16+200 = 216 | நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 200 | படிகள் : 1000 | நூலாக்கம் : சரவணன், அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 இந்நூலாக்கத்திற்கு உதவியவர்கள் : பேரா. வீ. அரசு மற்றும் ஆய்வாளர், இர. பிருந்தாவதி. பதிப்புரை தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும், வளமும் வலிமையும் சேர்க்கின்ற நூல்களை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டு எம் பதிப்பகம் தொடங்கப் பட்டது. தமிழிசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர், மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார், தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையா, செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார், பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர், முனைவர் இரா. இளவரசு போன்ற அறிஞர் பெருமக்கள் எழுதிய நூல் களையும், ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தையும் ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனிமுத்திரைப் பதித்ததைத் தமிழுலகம் அறியும். அந்த அடிச்சுவட்டில் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கின்ற நூல்களை மீள்பதிப்பு செய்வதற்கு எம் பணியைத் தொடர்ந்த நேரத்தில் நுண்கலைச்செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தையும் எம் பதிப்பகம் வெளியிட்டால் மொழிக்கும் இனத்திற்கும் யாம் இதுவரையிலும் செய்த பணிக்கு அது மேலும் வலிமை சேர்க்கும் என்றும் அவருடைய நூல்கள் வெளிவருவது மிகமிக இன்றி யமையாதது என்றும் சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கியத்துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தெரிவித்தார். அவரின் வழிகாட்டுதலின் பேரில் இந்நூல்கள் வெளிவருகின்றன. நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் நூல்களாக வெளிவந்தவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து நூற்களஞ்சியமாக உங்கள் கைகளில் தவழவிட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். இவை மட்டுமன்றி குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ் களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து விரைவில் வெளியிடவிருக்கிறோம். இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப் போடும் வருவதற்கு உரிய வழிகாட்டுதல் தந்து பல்லாற் றானும் துணை இருந்து உதவியவர் பேரா. வீ. அரசு ஆவார். மேலும், அவரே இந்நூல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மதிப்புரை அளித்துச் சிறப்பு செய்துள் ளார். இவருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி என்றும் உரியதாகும். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர்களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றி யுணர்வோடு பாராட்டுகிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்துராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்டபோது பல்லாற்றானும் துணை யிருந்த பெருமைக்குரியவர். அவர் இந் நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாண னிடமும் உரிமையுரை வாங்கி உதவியதோடு இத் தொகுதிகள் வெளி வருவதற்குப் பெரிதும் துணை இருந்தார். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதி களைக் கணினி ஆக்கம் செய்து உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத் தொகையன், செல்வி பிருந்தாவதி, செல்வி கலையரசி, செல்வி கோகிலா ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த குமரேசன், இராமன், சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் சரவணன், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வெங்கடேசன், தனசேகரன், சுப்ரமணியன் ஆகி யோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவதில் உறுதியாகப் பணியாற்றுவோம். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற ஐயத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இ. இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) 30.12.2005 கா. வீரலட்சுமி அம்மையார் (அறிஞர் அ. இராகவனின் தங்கை) மதிப்புரை நம்பிக்கை-சடங்கு-கலை வரலாறு பெரும்பாலும் இன்று வெளிவரும் நூற்கள் அனைத்தும் பழைய தமிழ் இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளாகவே காணப்படுகின்றன. கம்ப இராமாயணத்தைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும், சிலப்பதிகாரத்தைப் பற்றியும், பெரிய புராணத்தைப் பற்றியும், ஏனைய நூற்களைப் பற்றியும் போதிய அளவு ஆராய்ச்சி நூற்கள் வெளிவந்துள்ளன. இஃதன்றி அதிகமான நாவல்களும், சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. ஆனால், நமது கலைகளைப் பற்றிய நல்ல நூல் எதுவும் வெளிவந்ததாக எனக்குத் தெரியவில்லை. அறிஞர் இராகவன் இந்நூலின் முதற்பதிப்பில் எழுதியுள்ள முகவுரையில் மேற்கண்டவாறு குறிப்பிடு கிறார். அவரது மனப்பதிவை நாம் முற்றிலும் மறுக்க முடியாது. இத்தன்மையை மாற்றுவதற்காக, கலைத் துறையில் சுமார் 20 ஆண்டுகள் தொடர்ந்து நூல்களை எழுதிய பெருமை இராகவன் அவர்களைச் சாரும். இந்நூல், தமிழகத்தின் பண்பாட்டு வரலாற்றை ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் உதவும் நூல். பண்பாட்டு வரலாற்றில், புழங்கு பொருட்களுக்கு (Material Culture) முதன்மையான இடமுண்டு. நாள்தோறும் நமது புழக்கத்தில் இருக்கும் பொருட்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் நெருக்கமான உறவு உண்டு. நமது வாழ்க்கை பற்றியப் பதிவைத்தான், நாம் பண்பாட்டு வரலாறு என்கிறோம். தொல்பழங்காலத்து மனித சமூகத்துக்குத் தம்மைச் சுற்றி நிகழும், நிகழ்வுகளுக்கானக் காரணங்கள் புரியவில்லை. இயற்கை நிகழ்வில் உள்ள மர்மங்களைக் கண்டு மனிதர்கள் வியப்படைந்தார்கள். காலப் போக்கில் இயற்கையைக் கண்டு அச்சம் கொள்ளவும் தொடங்கினர். அச்சத்தின் விளைவாக இயற்கையை வழிபடத் தொடங்கினர். இயற்கையை வழிபடுவது என்பது, இயற்கையில் உள்ள பொருட்களை வழி படுவது என்பதாக மாறியது. இவ்விதம் வழிபடும்போது, அடிப்படையான சில நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டனர். இவ்வகையான நம்பிக்கைகளே மனித சமூகத்தின் அடிப்படைகளாக இன்றும் தொடர் வதைக் காண்கிறோம். நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதற்குப் பல்வேறு சடங்குகளை நிகழ்த்தத் தொடங்கினர். சடங்குகளை நிகழ்த்துவதற்கு, இயற்கையில் உள்ள பொருட்களையே பயன்படுத்தினர். சடங்குகளை நிகழ்த்தும் போது அரூவமான இயற்கையே அவர்களுக்குக் கடவுளாக தொடக்கத்தில் இருந்தது. (இத்தன்மை இன்றும் நாட்டார் சாமிகள் குறித்த வழிபாடுகளில் தொடர் கிறது) பின்னர் உருவத்தை உருவாக்கிக் கொண்டனர். உருவ வழிபாடுகளில் மலர்கள் முதன்மையாக இடம் பெறத் தொடங்கின. மலர்களை மனிதர்கள் தலையில் அணிந்து கொள்வது ஒருபக்கம்; இன்னொரு பக்கம் தாங்கள் வழிபடும் உருவங்களுக்கும் அணியச் செய்தனர். இவ்வகையில் மலர்கள் மனித வாழ்க்கையில் தவிர்க்க இயலாத பொருட்களில் ஒன்றாகிவிட்டதைக் காண்கிறோம். மலர்களை இவ் விதம் பயன்படுத்தும் முறைமையை மலர் சார் பண்பாட்டு நிகழ்வு என்று கூறலாம். இயற்கையில் நூற்றுக்கணக்கான மலர்கள் காணக்கிடக்கின்றன. இயற்கையில் உள்ள மலர்களில் சிலவற்றை, சில பகுதிகளைச் சார்ந்த மக்கள் குறிப் பிட்ட நம்பிக்கை சார்ந்து பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட வகைச் சடங்குகளுக்குக் குறிப்பிட்ட மலர் களைத்தான் பயன்படுத்துவது என்ற மரபு உருவாகி யுள்ளது. சில பகுதிகளில் புனிதமாகக் கருதப்படும் மலர்கள், சில பகுதிகளில் அவ்விதம் கருதப்படுவ தில்லை. வட இந்தியப் பகுதிகளில் தலைவர்களுக்கு அணிவிக்கப்படும் செண்டிப்பூ என்ற வகை தென் னிந்தியப் பகுதிகளில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், அவை விழாக்காலங்களில் மாடுகளுக்கு மட்டுமே அணிவிக்கப்பெறும். மனிதர்கள் அணிந்து கொள்வ தில்லை. இவ்வகையில் மனிதர்கள் பயன்படுத்தும் மலர்கள் குறித்து விரிவாகப் பேச முடியும். இராகவன் அவர்கள், இவ்வகையில் தாமரைப் பூ, தமிழ்ச் சமூகத்தில் இடம்பெறும் முறைமையை இந் நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார். தமிழ்ச் சமூகத்தில் மனிதவாழ் முறைமை என்பது, தொல் பழங்காலம் முதல் திணை மரபைச் சார்ந்திருப்பதைக் காண்கிறோம். ஒவ்வொரு திணைக்கும் ஒரு மலரை அடையாளப் படுத்துகிறோம். அம்மலர், குறிப்பிட்டத் திணையின் பெயராகவும் அதே நேரத்தில் திணைசார் ஒழுக்க விழுமியமாகவும் இருநிலையில் செயல்படுவதைக் காண்கிறோம். தாமரைப்பூ, மருதநிலம் சார் பண் பாட்டோடு நெருங்கிய உறவு கொண்டிருப்பதைக் காண்கிறோம். தாமரை நீரில் உற்பத்தியாகிறது. மருதநிலம் சார் குளங்களில் தாமரைகள் உருவா கின்றன. எனவே திணை சார் ஒழுக்கம் பற்றிய புரிதலுக்கும் இம்மலர் உதவுகிறது. தமிழ் மற்றும் வடமொழி சார்ந்த புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் இடம்பெறும் பொருட் களில் தாமரைக்கு முதன்மையான இடமுண்டு. புழங்கு பொருட்களாக உள்ளவை, நாளடைவில் புராணங்களி லும் இலக்கியங்களிலும் இடம் பெறுகின்றன. இவ்விதம் புராணங்களிலும் இலக்கியங்களிலும் இடம் பெறுபவை நாளாவட்டத்தில் சிற்பம், ஓவியம் ஆகிய பிற கலை வடிவங்களிலும் இடம் பெறுவதைக் காண் கிறோம். இந்நூலில் புராணமரபில் தாமரை இடம் பெறுவது, புராணக் கதைகளில் இம்மலருக்கான இடம் ஆகியவை குறித்த விரிவான ஆய்வைக் காண முடிகிறது. இலக்கியங்களில் உவமை மற்றும் உருவகங் களாகவும் இவை இடம் பெற்று விடுகின்றன. அவ்விதம் இடம் பெறுவதின் மூலம் இலக்கியத்தின் அழகியலைத் தீர்மானிப்பதில், இவ்வகையான பொருட்களுக்கு முதன்மை ஏற்பட்டுவிடுவதைக் காண்கிறோம். இலக்கியத்தின் அழகியலாகக் கருதப்படுபவை சிற்ப-ஓவியங்களில் இடம் பெற்று விடுகின்றன. சிற்பம் வளர்ச்சியுற்ற நிலையில் கட்டிடக் கலையாகப் பரிணமிக்கிறது. கட்டிடக் கலையில் தூண்கள், கோபுரங்கள், விதானங்கள், மாடங்கள், சுவர்கள், படிகள் ஆகிய பிற வடிவங்கள் முதன்மையாக அமைந்து விடுகின்றன. இவை அனைத்திலும் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. சிற்பங்களாகச் செதுக்கப்படும் உருவங்களுக்குப் பல்வேறு உருவங்கள் தேவைப்படு கின்றன. அவ்வகையான உருவங்களை, இயற்கையி லிருந்தும், புராணங்களிலிருந்தும், இலக்கியங்களி லிருந்தும் சிற்பிகள் தேர்வு செய்து, தமது கற்பனை வளத்தோடு செதுக்குகிறார்கள். இவ்விதம் சிற்பிகளைக் கவரும் பொருட்களில் மலர்கள் முதன்மையான இடம்பெறுகின்றன. அம்மலர்களில் தாமரைக்குத்தான் சிற்பங்களில் முதலிடம் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். படிகள், தூண்கள், விதானங்கள், கருவறைகள், கோபுரங்கள் ஆகிய அனைத்துவகையான சிற்ப வேலைப்பாடுகளிலும் தாமரையைக் சிற்பிகள் செதுக்கியுள்ளனர். இவ்வகையில், சமூகத்தில் கலைஞர் களைக் கவரும் பொருட்களில் ஒன்றாக தாமரை அமைந்துள்ளது. எவ்வளவோ மலர்கள் இருக்க, தாமரை மட்டும் கலைஞர்களை ஏன் கவரவேண்டும்? தாமரையின் அமைப்பு முறையே அதற்குக் காரணமாக இருக்க வேண்டும். இப்பின்புலத்தில் தாமரை வடிவச் சிற்பங்கள், தாமரை ஓவியங்கள் ஆகியவை தமிழகத்தில் இடம் பெற்றிருக்கும் தன்மையின் பல பரிமாணங் களை இந்நூல் வழி நாம் பெற முடிகிறது. மனிதர்கள் இயற்கைப் பொருட்களைக் காட்சி நிலையில் அமையும் ஓவியம் மற்றும் சிற்பங்களாக அமைப்பதோடு அமைதி கொள்வதில்லை. மாறாக, தாங்கள் பயன்படுத்தும் பொருட்களிலும் அவற்றின் உருவங்களை அமைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக, ஆடைகளில் தாமரையின் உருவம் மிகுதியாகப் பயன் படுத்தப்படுகிறது. நாள்தோறும் வீடுகளில் வரையப் படும் கோலங்களில் தாமரையின் இடம் முதன்மையாக அமைகின்றது. மனிதர்கள் அணிந்து கொள்ளும் அணிகலன்களில் தாமரை வடிவம் இடம் பெறுகிறது. இவ்வகையில், தமிழக மக்களிடத்தில் தாமரை இடம் பெறும் கூறுகளைப் பின்வரும் வகையில் தொகுக்க முடியும். புழங்குபொருள் பண்பாடு - புராணங்கள் - இலக்கியங்கள் - ஓவியங்கள் - சிற்பங்கள் - கோவில்கள் - உடுத்தும் உடை மற்றும் அணிகலன்கள் எனப் பல் நிலையிலும் தாமரை இடம் பெறுவதைக் காண்கி றோம். பிற்காலங்களில், தமிழகத்தில் பெருவழக்கத்தில் வந்த புராணக் கதைகள், தாமரை மூலம் பல தத்துவப் பொருளைப் புலப்படுத்தும் வகையிலும் அமைந் திருப்பதைக் காண்கிறோம். மனிதர்கள், தங்கட்கு ஏற்படும் பல்வேறு நோய் களைத் தீர்ப்பதற்கு இயற்கையில் உள்ள பொருட் களையே பயன்படுத்துகின்றனர். இப்படிப் பயன்படுத்தும் முறைகளையே மருத்துவம் என்கிறோம். தாமரையும் தமிழர்களின் மருத்துவம் தொடர்பான பொருட்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இதன் மலர்கள், இலைகள், தண்டுகள் மற்றும் வேர்கள் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விதம் பயன்படுத்துவது குறித்தும் இந்நூல் விரிவாகப் பேசியிருப்பதைக் காண்கிறோம். அறிஞர் இராகவன் அவர்கள், காசு சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். தான், மிக அரிய காசுகளைச் சேகரித்து வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம். இக்காசு களில் காணப்படும் வடிவங்கள் குறித்த ஆய்விலும் அவர் ஈடுபட்டிருந்தார். இவ்வகையில் காசுகளில் வரையப்பட்டிருக்கும் உருவங்களில் ஒன்றாகத் தாமரை இடம் பெற்றிருப்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளார். மனிதர்களின் பண்பாட்டு வரலாற்றில், அவர்களது நம்பிக்கை சார்ந்த வழி பாடுகள் முக்கிய இடம் பெறுகின்றன. அதைப் போலவே, வணிகத்திற்குப் பயன்படுத்தும் காசுகளும் முக்கிய இடம் பெறுகின்றன. தாமரை வழிபாட்டில் இடம் பெற்றிருப்பதைப் போல், காசுகளில் உருவங் களாகவும் இடம் பெற்றுள்ளன. இசைத் துறையில் பண்களின் பெயராகவும், யோகாசனத்தில் ஓர் ஆசனத்தின் பெயராகவும், நாட்டிய வடிவமைப்பில் உருவமாகவும், தாமரை இடம் பெறுவதைக் காண்கி றோம். தாமரைப்பூ வடிவத்தில் நகர் அமைக்கப் பட்டதை அறிகிறோம். மேல் விவரித்த வகையில் அமைந்திருக்கும் இந்நூல், தமிழகப் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைக்க எவ்வகையில் உதவும் என்பதைப் புரிந்து கொள்வதையே இந்நூற் பயனாக நாம் கொள்ள முடியும். இந்நூல் தரும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைக்க முயலும் போது, நாம் பெறும் பயன்கள் எவை என்பதைத் தொகுத்துக் கொள்ள வேண்டிய தேவை நமக்குண்டு. - இயற்கையோடு மனிதர்கள் கொள்ளும் உறவு சார்ந்தே இவ்வுலக இயக்கம் நடைபெறுகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களை, மனிதர்கள் தங்கள் தேவைக்கேற்பத் தகவமைத்துக் கொள்கிறார்கள். இயற்கையில் உள்ள தாமரை எவ்விதம் மனிதர்கள், தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாக ஆக்கிக்கொள்கிறார்கள் என்பதை மேற் குறித்தப் பின்புலத்தில் புரிந்து கொள்ள இந்நூல் அடிப்படைத் தரவாக அமைந் திருக்கிறது. - மனிதர்கள், தங்களுடைய புழக்கத்தில் பயன் படுத்தும் பொருட்களை, எவ்விதம் காலப் போக்கில், புனிதமாக்கி விடுகிறார்கள் என்ற வரலாறு சுவையானது. தாமரை என்ற மலரைச் சூடிக் கொள்ளத் தொடங்கி, பின்னர் அதனை வழிபாட்டுப் பொருளாகவும் ஆக்கிக் கொண் டுள்ளதைக் காணமுடிகிறது. - மனித சமூக வரலாற்றில் ஒரு பகுதியான பண்பாட்டு வரலாறு என்பது அவர்கள், பயன் படுத்தும் பல்வேறு பொருட்களைப், படிப்படி யாக எப்படி வளர்த்தெடுக்கிறார்கள் என்பதை அறிவதின் மூலம் புரிந்து கொள்ளலாம். தாமரை புழங்கு பொருள் - வழிபாட்டுப் பொருள்- ஓவியம், சிற்பம் மற்றும் கோலம், இலக்கியத்தில் உவமை மற்றும் உருவகம் ஆகிய பிற கூறுகளால் அமைந்துவிடுகிறது. இவ்வகை யில் தமிழகத்தின் பண்பாட்டு வரலாற்றில் அதில் தாமரையின் இடம் குறித்து அறிவதற்கு இந்நூல் அரிய தரவாக இருப்பதைக் காண்கிறோம். அறிஞர் சாத்தன்குளம் இராகவன், கல்வித் துறையில் ஆசிரியப் பணி, சுயமரியாதை இயக்கப்பணி, பொதுவுடைமை இயக்கப்பணி எனப் பல பரிமாணங் களில் செயல்பட்டு, வளமான அநுபவத்தை உள்வாங்கி யவர். இந்தப் பின்புலத்தில், அவர் உருவாக்கியுள்ள இந்நூல் தமிழகத்தின் கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு ஆகியவற்றைப் பயில முனைவோர்க்கு பெரிதும் உதவும். இந்நூலை வெளியிடும் அமிழ்தம் பதிப்பகத்தின் முயற்சியை பெரிதும் பாராட்ட வேண்டிய கடமை நமக்கு உண்டு. பேராசிரியர், தலைவர் வீ. அரசு தமிழ் இலக்கியத் துறை சென்னைப் பல்கலைக் கழகம். தமிழர் பண்பாட்டில் தாமரை 1. தாமரையின் சிறப்பு தாமரை தமிழகத்தில் தழைத்துக் கிளைத்துக் கிண்ணம் போன்ற வண்ண மலர் பூத்துக் குலுங்கும் ஓர் அரும்பெரும் பூங்கொடியாகும். தமிழ்நாட்டின் பல்வேறு விதமாய் விளங்கும் தட்பவெப்ப நிலைகள், அங்கு பலப்பல மரங்களும், செடிகளும், கொடிகளும் வளரத் துணையாய் இருக்கின்றன. தாவரநூற் புலவர்கள் உலகில், இதுவரை மிகவும் சிரமப்பட்டு ஆராய்ந்து மரம், செடி, கொடிகளில் 35,000 இனங்கள் உள்ள தென்று கண்டுபிடித்துள்ளார்கள். அவைகளில் பலவற்றை நன்கு ஆராய்ந்து பெயரும் இட்டுள்ளார்கள். இந்திய நாட்டிலுள்ள தாவர ஆராய்ச்சிக் கழகம், இந்தியாவில் 11,000 தாவர இனங்கள் உள்ளன வென்று கூறுகிறது. இவைகளில் 2,000 தாவரங்களே இனவாரி யாகவும் குடும்பவாரியாகவும் பிரிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப் பட்டு ஒரு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. தாவரங்களில் மரங்கள், செடிகள், கொடிகள் என்று மூன்று பெரும்பிரிவுகள் உள்ளன. இவைகளில், நீரில் வளர்வது, நிலத்தில் வளர்வது என்று இருபிரிவுகள் உள்ளன. தாவரங்களில் சில மருந்திற்காகவும், சில மலர்களுக்காகவும், சில காய்கனிகளுக்காகவும் உபயோகப்படுகின்றன. சில வீடு, பாலம், மேசை, நாற்காலி போன்ற வற்றிற்குப் பலகைகள், உத்தரம், கட்டை முதலியனவாகப் பயன்படுவன வாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மலர்களுக்காக உபயோகப்படும் மரம், செடி, கொடிகளைப் பூமரங்கள், பூஞ்செடிகள், பூங்கொடிகள் என்று கூறுகின்றோம். மலரும் மக்களும் உலகில் எத்தனை விதமான பூக்கள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டார்க்கும் ஒவ்வொரு பூவின்மீது பிரியம் இருக்கிறது. ஒரு நாட்டார் பெரிதும்விரும்பும் பூ, பிற நாட்டார்க்கு விருப்பமாக இருப்பதில்லை. ஒரு பூ, இது வரை எல்லா நாட்டார்க்கும் உகந்தது என்று நாம் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. ஒரு நாட்டார் ஒரு பூவை விரும்புவதற்குக் காரணம் அப் பூவின் அழகும் அதன் அமைப்பும் அதன் மணமுமே என்று நாம் எளிதில் சொல்லிவிடுவதற் கில்லை. சில நாட்டார் அழகுள்ள பூவை மட்டும் விரும்புகின்றனர். சில நாட்டார் மணமுள்ள மலரை மட்டும் மதிக்கின்றனர். ஆனால் அதே நாட்டில் உள்ள, அழகும் மணமும் ஒருங்கே அமைந்த எண்ணற்ற மலர்களை மக்கள் விரும்பாது விட்டுவிடுகின்றனர். சில நாடுகளில் அழகோ, மணமோ இல்லாத மலர் பெரிதும் விரும்பப் படுகின்றது. ஒரு நாட்டினர் ஒரு பூவை விரும்புகின்றனர் என்றால் அதற்கு அம் மலரின் மாண்பும், மணமும், குணமும், அளவும், அழகும் மட்டும் காரணம் அல்ல; அந்நாட்டு மக்களின் உள்ளக் கிடக்கையும், அறிவின் முதிர்ச்சியும்,அவற்றின் சுற்றுச்சார்பும் பண்பும் காரணமாய் இருக்கின்றன என்று அறிஞர்கள் கருதுகின் றார்கள். எனவே, சிறந்த பண்பும், சீரிய அறிவும் வாய்ந்த மக்கள் கண்ட மலர் மிகுந்த சிறப்புடையதாக இருக்கிறது. அம் மலர் அவர்களின் மொழியிலும் நெறியிலும், கலையிலும் காவியத்திலும், வாழ்விலும் இணைந்து உன்னத நிலையில் ஒளிர்கிறது. அதை உலகிலுள்ள பல்வேறு நாட்டு மக்கள் மட்டுமன்றி, அறிஞர்களும் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். நாளடைவில் ஒரு நாட்டினர்க்கு உரித்தான மலர், அனைத்துலக மக்களுக்கும் உரித்தானதாகி, தெய்வீக மலராய்ச் சீரும் சிறப்பும் பெற்று விளங்கலாம்; அம் மலர், மக்களின் இதய மலராக ஏற்றம் அடைகிறது. பாரசீகர்களுக்கு மாதுளம் பூவும், ஜப்பானியர்களுக்கு செவ்வந்திப் பூவும், எகிப்தியர்களுக்குக் குமுதமலரும், கிரேக்கர் களுக்கு ஒலிவ மலரும், உரோமர்களுக்கு முந்திரியும், ஆங்கிலேயர் களுக்குச் செறி மலரும், பிரஞ்சுக்காரர்களுக்கு ரோஜா மலரும், தமிழர்களுக்குத் தாமரையும் உகந்தனவாகும். ஒரு நாட்டார் ஒரு பூவைத் தங்களுக்கு உரித்தான பூ அல்லது தேசீயப் பூ என்று முடிவு கட்டிவிட்டால் அப்பால் அம் மலர் அந்நாட்டவர்களால் மட்டுமின்றி அயல்நாட்டினராலும்கூட அம் மலரின் குணமும், மணமும், அழகும் மிகைப்படுத்திப் போற்றப் படுகிறது. பண்டைக் காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த சேர, சோழ பாண்டிய அரசர்கள் மூவரும் தங்களுக்கு என்று தனி நாடும், கொடியும், குடையும், யானையும் வைத்திருந்தது போன்ற தனித் தனிப் பூவும் உடையவர்களாய் இருந்தார்கள். சேரனுக்குப் பனை மலரும், பாண்டியனுக்கு வேப்ப மலரும், சோழனுக்கு ஆத்தி மலரும் உரித்தானது என்று நமது நாட்டு வரலாறு கூறுகிறது. இம் மலர் களின் பெருமை மிகைப்படுத்திப் போற்றப்பட்டுள்ளது; புலவர் களால் புகழ்ந்து ஏற்றப்பட்டுள்ளது. என்றாலும் அப் புகழ்ச்சி நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை. இன்று பண்டிதர்களுக்கு அன்றி ஏனையோர்க்கு இதன் பெயரே தெரியாது. ஆனால் பண்டைய மக்கள் கண்ட ஒருசில மலர்களோ தெய்வீக மலர்களாய்ச் சிறப் பெய்தியுள்ளன. புராணக் கதைகளில் முதல் இடத்தைச் சொந்தப் படுத்தியுள்ளன. புலவர்களின் கருத்தைக் கவர்ந்துள்ளன; கதை களிலும், காவியங்களிலும், ஓவியங்களிலும், சிற்பங்களிலும், தத்துவங் களிலும் புகுந்து அவைகளின் புகழ் விண்முட்ட எழுந்துள்ளது. ஆனால் எல்லா நாட்டினரும் கண்ட மலர் ஏற்றம் பெற்றிருக்க வில்லை; ஏன் என்று இதுவரை நாம் சிந்திக்கவும் இல்லை. தமிழர் கண்ட தாமரை உலக மக்கள் அனைவராலும் ஒருமிக்க போற்றப்படும் மலர் தமிழர் கண்ட தாமரை மலரே யாகும். இது இவ்வுலகில் தனிச்சிறப்பு வாய்ந்த மலராய் மிளிர்கிறது. இதன் அழகு அனைத்துலக அறிஞர் களாலும் வியந்து பாராட்டப்பெறுகிறது. இதன் மணமும் குணமும் குறைகூறுவதற்கில்லாதவாறு அமைந்திருக்கிறது. தாமரை தமிழ கத்தில் தழைத்து, தமிழர்களின் உள்ளத்தைக் கவர்ந்து போற்றப் பெற்று, வட இந்தியாவிலும் புகழ்பெற்று விளங்கியது. இறுதியில் இமய மலையின் உன்னதச் சிகரத்திலும் பூத்துப் புகழ்பெற்று விளங்கியது. தமிழர்கள் கண்ட குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகனை இமய மலையின் உச்சியில் உள்ள நீலப் பைஞ்சுனையாகிய சரவணப் பொய்கைக்கு ஏற்றிக் கார்த்திகேயன் என்னும் வடமொழி நாமஞ் சூட்டித் தாமரைப் பூவில் பிறந்தான் என்று சிறப்பும் பெறும்படி சமய விற்பன்னர்கள் செய்துவிட்டனர். தமிழ்நாட்டுப் பேரறிஞர் திரு. கதிரேசஞ்செட்டியார் அவர்கள் குறுந்தொகையில் வரும் தாமரை புரையும் காமர் சேவடி என்ற காப்புச் செய்யுளுக்கு உரை எழுதும் போது நிவந்தோங்கு இமயத்து நீலப் பைஞ்சுனையில், சரவணப் பூம்பொய்கையில், பதுமப் பாயலில், முருகப் பெருமான் தோன்றிய உண்மையை நினைவுறுவார். cs¡ f©Q¡F¤ jhkiu ky® v§‡d« òydhfhâU¤jš TL«? என்று வியந்து கூறியது நோக்கற்குரியது. தமிழத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த தண்டாமரை யோடு முருகனும் தமிழர்களின் தனி உடைமையாய் இல்லாது இந்தியாவின் பொதுஉடமையாய் ஆக்கப்பட்டது, அறிஞர்கள் வியந்து பாராட்டற்குரியதேயாம். தாமரையின் பெருமை தாமரை தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சர்வ சாதாரணமாகக் காணப்படும் ஒரு அழகிய கொடியாகும். தமிழகத்தின் தட்பவெப்ப நிலையும் அதன் மண்ணும் நீரும், தாமரை தழைத்துக் கிளைத்து வளரத்தக்கதாய் அமைந்திருக்கிறது. காலையில் கதிரவன் கீழ்த்திசையில் காலடி வைக்க ஆரம்பித்ததும் கமல மலர் அரும்பு கிறது; மாலையில் பகலவன் மேற்றிசையில் மறைந்ததும் கமல மலர் கூம்புகிறது. இரவில் சந்திரன் எழுந்ததும் தாமரை இனத்தைச் சேர்ந்த அல்லி மலர்கிறது; அதிகாலையில் சந்திரன் மறைந்ததும் அல்லிமலர் கூம்புகிறது. இரவும் பகலும் தாமரையும் அல்லியும் இந்நாட்டை அணிசெய்கின்றன. வண்டாமரையில் வட்டவடிவமாய் அடுக்கடுக்காய் அணி பெறத் திகழும் எழில்ஒழுகும் அல்லி வட்டத்தின் (இதழ்களின்) தண்டின்மேல் பச்சைப்பசேலென ஒளிரும் பூ இதழ்களைக் காப் பாற்றும் புல்லி வட்டமும் (புற இதழ்களும்) நடுவே மஞ்சள் வடிவ மாகத் திண்டுபோன்று இருக்கும் வட்டவடிவமான பொகுட்டும், அருகே தோசைக் கல்லைப்போன்ற வடிவத்துடன் பச்சை வண்ணத் துடன் இலங்கும் இலைகளும், பளிங்குபோன்ற தண்ணீர்த் தடாகத் தினுள் கயிறுபோல் நிமிர்ந்து விளங்கும் தண்டும், அருகே துள்ளி விளையாடும் மீன்களும், அதைக் கௌவித் தன் வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்ள ஆவலோடு நிற்கும் கொக்குகளும் சேர்ந்து தமிழ் நாட்டின் நகரங்களை மட்டுமின்றி சிற்றூர்களையும் அழகு செய் கிறது. காலையில் செந்தாமரை அழகு பொலிய விரிந்து நிற்பதும், அதன்மீது பகலவன் தன் பொற்கிரணங்களைப் பொலிவுடன் பாய்ச்சுவதும் காணக் காணக் களிப்பை உண்டாக்கும் கவின்பெறும் காட்சியாகும். கவிஞர்கள் கருத்தைக் கவரும் கண்கொள்ளாக் காட்சி யாகும். இக்காட்சி கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள் உள்ளத்தை மட்டுமல்ல, பாமர மக்கள் உள்ளத்தையுமே ஈர்க்கும் வனப்புடைய தோற்றமாகும். ஒரு நகருக்கு அழகுசெய்ய வல்லது தேன் உடைந் தொழுகும் செவ்விதழ்த் தாமரைப் பூக்கள் நிறைந்த தண்ணீர்த் தடாகமே யாகும் என்று பண்டைக்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த நகர அமைப்பாளர்கள் கருதி ஒவ்வொரு நகரிலும் தாமரைக் குளங் களை அமைத்து நகரை அழகுசெய்தனர். சந்திரன் இல்லாத வானம் போன்றும், மந்திரிகள் இல்லாத அரசன் போன்றும், யானைகள் இல்லாத சேனைகள் போன்றும், கற்றவர்கள் இல்லாத கழகம் போன்றும், தந்திகள் இல்லாத வீணைபோன்றும், கொங்கைகள் இல்லாத மங்கையைப் போன்றும் - தாமரை இல்லாத தடாகம் பொலிவற்று விளங்கும் என்று தமிழர்கள் கருதிவந்துள்ளனர். சந்திரன் இல்லா வானம், தாமரை இல்லாப் பொய்கை, மந்திரி இல்லா வேந்தன், மதகரி இல்லாச் சேனை, சுந்தரப் புலவ ரில்லாத் தொல்சபை சுதரில் வாழ்வு, தந்திகள் இல்லா வீணை, தனமில்லா மங்கை போலாம். என்பது, பண்டைக்காலத்தில் பத்து வயதுள்ள தமிழ்நாட்டுப் பள்ளிப் பிள்ளைகள் பயின்றுவந்த விவேக சிந்தாமணிப் பாடலாகும். இப்பாட்டு ஒன்றே பண்டையத் தமிழர்கள் தாமரையைப் பற்றிக் கொண்ட மதிப்பை எடுத்துக்காட்டப் போதிய சான்றாகும். தாமரைப் பூ, பூக்களில் புனிதம் வாய்ந்தது. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை என்றார் சைவ சமய குரவர்களில் ஒருவர். பூவிற்கு அரசி என்று பாரூக் என்ற எகிப்திய நாட்டு அறிஞர் ஒருவர் புகழ்ந்துள்ளார். பிரடரிக் எங்கல் என்ற ஜெர்மன் நாட்டு மேதை, தாமரை, தமிழகத்தில் மலரும் அழகிய ரோஜா என்று புகழ்மாலை சூட்டி யுள்ளார். பூவொடு தமிழர் தொடர்பு தமிழர்கள் தங்கள் நாட்டின் சின்னமாகத் தாமரையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கு முக்கிய காரணம் உண்டு. உலகி லுள்ள எந்த இனத்தவரையும்விட, தமிழர்களுக்குப் பூவொடு மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்கள் பூவைப்பற்றி ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக ஆராய்ந்து அதைத் தம் வாழ்வோடு பிணைத்துக் கொண்ட பூ ஆராய்ச்சி நிபுணர்களாய் விளங்கியதாலே பூவிற் தாமரையைத் தங்கள் தேசீய மலராகத் தேர்ந்தெடுத்துக் கொண் டனர். தமிழர்கள் பூக்களின்மீது கொண்ட ஆர்வத்தினாலே தாங்கள் வாழும் நிலத்தையே பூவென்றும், பூலோகமென்றும் கூறினர். அது மட்டுமன்று; தாங்கள் வாழும் நிலத்தைப் பூவைக்கொண்டே நானிலமாகப் பிரித்தனர். குறிஞ்சிப்பூ நிறைந்துள்ள மலைப் பகுதியைப் குறிஞ்சி நிலம் என்றும், அதில் வாழும் மக்களைக் குறிஞ்சிநில மக்கள் என்றும், முல்லைப்பூ நிறைந்த காட்டுப்பகுதியை முல்லைநிலம் என்றும், அப்பகுதியில் வாழும் மக்களை முல்லைநில மக்கள் என்றும், நெய்தல் பூ நிறைந்துள்ள கடல்சார்ந்த நிலத்தை நெய்தல்நிலம் என்றும், இப்பகுதியில் வசிக்கும் மக்களை நெய்தல்நில மக்கள் என்றும், மருதம் பூ நிறைந்துள்ள வயல்கள் உள்ள பகுதியை மருதநிலம் என்றும், அப்பகுதியில் உறையும் மக்களை மருதநில மக்கள் என்றும் பிரித்தனர். மேலும் தங்கள் மக்களைப் பிச்சி, கமலம், செங்கமலம், செண்பகம், அல்லி, நீலம், பதுமம், மல்லிகை, சரோசம், மாதவி, அம்புசம் போன்ற மலர்களின் பெயர்களை இட்டு அன்புடன் அழைத்துவந்தனர். மேலும் பெண்மக்களைப் பூவை, பூங்கொடி, பூங்கோதை, பூவியலார், மெல்லியலார் என்று கூறி வந்தனர். பெண்கள் பருவம் அடைதலை பூத்தல் என்றனர்; அவர்கள் ஒரு ஆடவனை அடைதலை மணத்தல் என்று மொழிந்தனர்; ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கணவனும் மனைவியுமாய் வாழ்வதற்குச் செய்யும் வாழ்க்கை - ஒப்பந்தத்தைத் திருமணம் என்றனர். திருமணத்தில் நிகழும் முக்கிய சடங்கு, மாலை மாற்றலேயாகும்; அதாவது கணவன் தன் கழுத்தில் கிடக்கும் பூமாலையைப் பெண்ணிற்குச் சூடலும், பெண் தன் கழுத்தில் சூட்டப்பட்ட பூமாலையைக் கணவனுக்குச் சூட்டலுமே யாகும். ïij¥g‰¿ v‹ndhL ciuaho¡bfh©oUªj nkdh£L m‹g® xUt® k»œªJ btF mHfhf, ‘jÄH®fŸ, óÉny njh‹¿, óÉny ts®ªJ, óÉny ïizªJ, óÉny kiwªJÉL»‹wd® nghY«! என்று கூறினார். உண்மையில் அவர் கூறியது நடை முறையில் இருக்கும் நிலைமட்டுமன்றிப் பொருள் நிறைந்த வார்த்தை யாகவும் இருக்கிறது. வாழ்வோடு கூடிய பூ பூக்கள் தமிழர்களின் வாழ்க்கையோடு தோன்றிப் பற்றிப் பிணைந்து பின்னிக் கிடக்கின்றன. உலகிலுள்ள நாடுகளில் தமிழர் நாட்டில்தான் மலர்கள் மக்களுடைய பிறப்புமுதல் இறப்புவரை - ஏன்? - அதற்குப் பின்னர் நடைபெறும் பாடை ஏறல், கல்லெடுப்பு, காடாற்று, கிழமைக்கழுதல், திதி முதலிய எல்லாச் சடங்குகளிலும் இடம் பெறுகின்றன. குழந்தைகளின் பிறப்பு, சோறூட்டல், பிறந்த நாள், காது குத்தல், பள்ளிக்கு வைத்தல், பூப்பு விழா, நிச்சிய தாம்பூலம், திருமணம், சிசுமந்தம், அறுபதாம் ஆண்டுநிறைவு விழா மட்டுமன்றி, ஊர்வலம், திருவிழா, நண்பர்களை வரவேற்றல், தலைவர்களைக் கௌரவித்தல் முதலிய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மட்டுமன்றி, திருமணத்திற்கு அல்லது கோயிலுக்குச் செல்லுதல், சினிமாவிற்குப் போதல் முதலிய சமயங்களில் எல்லாம் பூ இன்றி யமையாத பொருளாய் விளங்குகிறது. தமிழ்மக்களின் வாழ்க்கையில் நடைபெறும் எல்லா இன்ப துன்பங்களிலும், பிரேத நிலையிலும், விழாக்களிலும் - ஏன்? - சுவர்க்கலோகத்தில்கூட பூக்கள் இடம் பெற்றிருக்கும். அதோடு, தமிழ்நாட்டுப் பெண்கள் தங்களை அலங் கரித்துக்கொள்ள பூவை ஒரு முக்கிய பொருளாகக் கொண்டிருக் கின்றனர். தெய்வங்களை மலர்மாலை சூட்டி வணங்குவதோடு தெய்வத் திருவுருவங்களை மலர்களால் அர்ச்சித்தும் வணங்குவர். மணமக்களை வாழ்த்த மலர் தூவி வாழ்த்துவதும் உண்டு. தேவர் களுக்கு மகிழ்ச்சி யுண்டானால் மலர்மாரி பெய்யச் செய்வர் என்ற நம்பிக்கையும் உண்டு. பொதுவாகத் தமிழர்கள் பூவோடு கொண்ட தொடர்பு மிகுதியால் அவர்கள் பூவைப் பற்றிய சிறந்த அறிவைப் பெற்றிருந்தனர். எனவே தங்களின் தேசீயச் சின்னமாக உலகினர் போற்றும் வண்ணம் தாமரைப் பூவைத் தேர்ந்தெடுத்தனர். எனவே தாமரைப்பூ தமிழர் வாழ்வில் ஒரு தலையாய இடத்தைப் பெற்றுள்ளது. தாமரையைக் கண்ட தத்துவ ஞானிகள் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மலர்கள் உள்ளன என்றாலும் தாமரையைவிடச் சிறந்த மலரை இன்றுவரை எவரும் கண்டதே யில்லை. அதன் கலையழகு காணக் காணத் தெவிட்டாது தித்திக்கும் அமுதமாகும். பளிங்கு போன்ற அழகிய தண்ணீர்த் தடாகத்தில் கண்களைக் கவரும் வண்ணம் பச்சைப் பசேலென வட்ட வடிவமாக ஒளிரும் அழகிய இலைகளையும், அதன் இடையிடையே கண்களை யும் கருத்தையும் ஒருங்கே வசீகரிக்கும் வண்ணம் அடுக்கடுக்காய் மெல்லிய இதழ்களையுடைய செந்தாமரை, வெண்டாமரை போன்ற தாமரை அரும்புகளின் அழகையும், பூக்களின் எழிலையும் கண்ட வர்கள் எவர்தான் அதனை உற்று நோக்காது இருக்கமுடியும்? தமிழர் கண்ட தண்டாமரையின் அழகும் சிறப்பும் பெருமையும் படிப்படி யாய் இந்தியா முழுவதும் பரந்து அப்பால் ஆசியாவிலே பரவி இன்று உலகமெங்கும் பரவி நிற்கின்றது. தாமரையில் பல்வேறு வகைகள் உண்டு. செந்தாரை, வெண்டாமரை, நீலத் தாமரை, மஞ்சள் தாமரை (பொற்றாமரை), கல் தாமரை, குளிர் தாமரை, ஆகாயத் தாமரை, ஓரிதழ்த் தாமரை, அல்லி, ஆம்பல் போன்ற பலவிதத் தாமரைகள் உள்ளன. செந்தாமரையும், வெண்டாமரையும் மக்கள் வாழும் மாநிலத்தை அலங்கரித்து வருகின்றன என்று தாவரநூற் புலவர்கள் மொழிகின்றார்கள். நீலத் தாமரைஅமரர்கள் வாழும் அமராபதியை அலங்கரித்துவருகின்றது என்று ஆத்மீக ஞானிகள் கூறுகின்றார்கள். நீலத் தாமரையின் நறுமணம் அமரர்களுக்குப் பொன்றா இன்பத்தைப் பொழியும் என்று அவர்கள் புகல்கிறார்கள். பொற்றாமரை (மஞ்சள் தாமரை) மனத்திற்கு மாறா இன்பத்தை அளித்து மகிழ்விக்கும் என்று தத்துவ ஞானிகளால் கருதப்படுகிறது, மானத வாவியில் பொற் றாமரை பூத்துப் பொலிவுடன் விளங்குவதாகப் புராணங்கள் புகழ்ந்து கூறுகின்றன. மலர்மேல யன்மா னதவா வியினுட் பொலன்மெல் லிதழ்பூத் தசெழுங் கமல நலனார் வளையம் பலநா ளுமயின் றுலவா தொளிர்பொன் னிறமுற் றமையால் என்று நைடதம் நவில்கிறது. இது வெறும் கற்பனை என்று கருது வாரும் உண்டு. அறிவியல்வாதிகள் மட்டுமன்றி, மானத வாவியில் பல்லாண்டு வாழ்வதாகக்கூறும் மேதைகளும் இதை மறுத்து உரைக்கின்றார்களாம். இனி, இங்கு தாமரையைத் தமிழ்நாட்டுச் சமயஞானிகளும், புலவர்களும், சிற்பிகளும், ஓவியர்களும், பெண்களும், நெசவாளி களும், நகர நிர்மாண கர்த்தர்களும், ஆடவல்லாரும், யோகிகளும், கணிதமேதைகளும், மருத்துவர்களும், தத்துவஞானிகளும், பொற் கொல்லர்களும், அரசாங்கமும், பிறரும் எந்தெந்தக் கோணங்களி லிருந்து எவ்வெவ்விதமாகக் கண்டுள்ளார்கள் என்று விளக்கமாக ஆராய்வோம். 2. காவியத்தில் கமலம் தமிழ்க் கவிஞர்கள் நம் நாட்டின் கருவூலமாகக் கருதிப் போற்றும் காவியம் அனைத்திலும் கமலம் ஒரு தனிச் சிறப்புடன் திகழ்கிறது. தமிழர்கள் கண்ட கவின் பெறு காவியங்கள் அனைத்தும் இயற்கையை அடிப்படையாகக் கொண்டவைகளாகும். இயற்கை யின் எழில், காவியத்தின் சிறந்த அணியாக இலங்குகிறது. மலர்கள் அந்த அணியை ஒளிசெய்யும் மணிகளாகத் திகழ்கின்றன. அம் மணிகளில் கமலம் வைரக் குன்றென ஒளிர்விட்டோங்குகின்றது. கதிரவன் ஒளியால் கமல மலர்கள் கால மாறுதல்களையும், பல்வேறு வண்ணங்களின் தன்மைகளையும் நமக்கு விளக்கிக் காட்டுகின்றன. அது நம்மை இயற்கையின் எழிலினைக் கண்டு இன்புறச் செய்து நமது புத்தி பூர்வமான உணர்வைப் பண்படுத்து கிறது. கமல மலர் ஐம்பொறிகளுக்கு இன்பமூட்டும் எழில்தரும் இளம்பூவையாய்ப் பொலிகின்றது. இயற்கையன்னை நமக்கு அளித்த எழிலிற் சிறந்த கமல மலரைவிடக் கவிஞர்கள் தம் கற்பனைத் திறத்தால் அணிசெய்து அளித்த காவியக் கமலம் ஆயிரம் மடங்கு உயர்ந்ததாய் ஒளிர்கிறது. தடாகங்களில் மலர்ந்திருக்கும் தண்டா மரையைக் காணும்போது பெறும் இன்பத்தைவிட இந்தக் காவியப் பூங்காவில் உள்ள கற்பனைப் பொய்கையில் பூத்திருக்கும் பொன் றாத புண்டரீகப் புனிதப் பூக்கள் அளிக்கும் இன்பம் நம்மை மெய் மறக்கச் செய்கிறது. கடவுளும் மனிதனும் இந்தியாவில் சிறந்த கவிஞர்களில் ஒருவராய் விளங்கிய ஸர். முகம்மத் இக்பால், இயற்கையின் எழிலைவிட மனிதனால் ஆக்கப் பட்ட செயற்கையின் எழில் சிறந்தது என்றார். தண்ணீர்த் தடாகத் தில் மலர்ந்திருக்கும் தாமரையைவிட, காவியத்தில் மலர்ந்திருக்கும் கமலமும், ஓவியத்தில் ஒளிரும் தாமரையும் மிக அழகாய்த் திகழ் கின்றது என்பதை யாரே மறுக்கவல்லார்? இதனை விளக்கி இக்பால், இறைவன் இயற்கையைப் படைத்தான்; மனிதன் கலையைப் படைக் கிறான். ஆண்டவன் அகண்ட உலகை உண்டாக்கினான்; மனிதன் அதை அழகுபடுத்துகிறான். இவைகளில் எது சிறந்தது? இறைவன் படைப்பா? மனிதன் சிருஷ்டியா? என்று, இறைவனை நோக்கி மனிதன் கூறுவதுபோல் பாடுகிறார். இயற்கையை மனித உபயோகத் திற்கு மாற்றியவன் கலைஞனே. கடவுள் மண்ணைப் படைத்தார்; மனிதன் பாத்திரத்தைப் படைக்கிறான். கடவுள் இரவைப் படைத் தார்; மனிதன் விளக்கை உண்டாக்குகிறான். கடவுள் பாலையை, மலையை, காட்டை உண்டுபண்ணினார்; மனிதன் தோட்டங்களை, தோப்பை, பூங்காவை அமைக்கிறான். கடவுள் கல்லைச் சமைத்தார்; மனிதன் கண்ணாடியை, நவரத்தினங்களை ஆக்கி ஒளி பெறச் செய்கிறான். கடவுள் நஞ்சை உண்டுபண்ணினார். மனிதன் அதை நன்மருந்தாக ஆக்கினான். கடவுள் அழகற்ற மலர்களையும், பறவை களையும், மிருகங்களையும் ஆக்கினார்; மனிதன் எண்ணற்ற வண்ணங்களால் அவைகளை எழில்பெற்று ஒளிரச்செய்கிறான். அவனது காவியச் சோலையில் கன்னியர்களும், கமலமும், மான் களும், மயில்களும் எத்துணை அழகாய்ச் சோபித்து நிற்கின்றன என்னும் கருத்துத் தோன்றும் கவிதைகளை எழுதியுள்ளார். மேலும், இயற்கைக் காட்சிகளில் காணும் எழில் நிரந்தரமன்று. அதில் பொலியும் அழகான அம்சம் எல்லாம் அழியும் தன்மை உடையன. இன்று கலகலவெனச் சிரித்துக் களிப்பு உள்ளம் காட்டிநிற்கும் முல்லையும் தாமரையும் ரோஜாவும் நாளை வாடிவிடுகிறது; மாலைப் பொழுதில் அற்புதக் காட்சி அளித்து நிற்கும் மேகம் இமைப்பொழுதில் மறைந்துவிடுகிறது; முல்லைநகை பயிற்றி உள்ளம் கவர்ந்து ஒளிவிட்டு நிற்கும் மதிமுக மங்கையர் திலகம் என்று, ஏற்றும் எழிலரசி, பல்லற்று, சொல்லற்று, தோல் சுருங்கிக் கிழவியாய் மறைந்துவிடுகிறாள். முல்லையிலும், மேகத்திலும், ஏந்திழையிலும் நாம் காண்பது அழகு. அந்த அழகை அழிவற்றதாக ஆக்கமுடியாதா? முடியும். அதுதான் கலைஞன் கண்ட கலை. மலர்க்கொத்துக் குலுங்கும் செடியை ஓவியமாகத் தீட்டிவிடலாம்; கவிதையாகப் புனைந்துவிடலாம்; சிலையாகச் செதுக்கிவிடலாம். கவிதையிலே, ஓவியத்திலே, சிற்பத்திலே மலரும் மலர்களும், காட்சி தரும் கன்னியும், ஒளிரும் மேகமும் அமரத்துவம் பெற்றவைகள்; அழியாதன என்று அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் இக்பால். மலர்களும் புலவர்களும் தமிழ்ப் புலவர்கள் முல்லை முகையைப் பல்லிற்கும், கருங் குவளை மலரைக் கண்ணிற்கும், செங்காந்தட்பூவை உள்ளங்கைக்கும், எள்பூவை நாசிக்கும், செண்பகப் பூவை மேனிக்கும், செங்கழனி மலரைக் காலுக்கும் உவமானமாகக் கூறுவார்கள். செப்புமுகங் கமலம் திங்கள் காதிற்குவள்ளை யொப்பரிய கத்திரிகை பூசலா - மப்புநிலை கண்ணாடி சாணை கபோலம் குமிழ்சாதி யெண்ணாசிக் கும்உவமை யே என்றும், முத்துத் தளவ முருந்தெயி ராயிரம் என்றும், மேவிற் புருவம் விழிக்கு வண்டும் தாமரையும் காவியும் கூற்றம்புங் கருவிளையும் என்றும், மாந்தளிர்பூஞ் சண்பகப் பூமா மேனி என்றும் உவமானம் கூறலாம் என்ற இலக்கணத்தை எடுத்துக் காட்டியுள்ளார், உவமான சங்கிரகம் என்னும் நூலின் ஆசிரியர். இந்த இலக்கண விதியை அனுசரித்து எல்லாக் காவியப் புலவர்களும் தம் நூற்களில் பூக்களை உவமானம் கூறுவது மரபு. செந்திருக் கமலம் வைகுந் திருமுகம் இலங்கத் தோன்றும் சுந்தரச் சாதி காவி துலங்குசெவ் வாம்பல் முல்லை விந்தையோ கமழ்தல் பானு மின்முகங் காண்டிஞ் ஞான்று பந்தன் கொங்கை வாய்ந்த பாலனை மணத்தல் அம்மா - (திரு அ. இராகவன், சிற்ப விற்பன்னர் திரு தொ.மு. ghÞfu¤ bjh©lkh‹, v«.V., I.V.vÞ., அவர்களின் திருமணத்தின்போது பாடிய வாழ்த்து- 1926) என்ற பாமாலை, மலர்களைக் கவிஞர்கள் உவமானமாக எப்படி எடுத்தாள்கிறார்கள் என்பதற்கு ஏற்ற எடுத்துக் காட்டாகும். என்றா லும், தாமரை மலரைப்போல் ஒரு பூவானது பல அவயங்களுக்கும் உவமானமாகக் கூறப்படுவதை நாம் எங்கும் காணமுடியாது. தாமரை மலர்தான் முகம், கண், வாய், கை, முலை, பாதம், உந்தி, அல்குல் போன்ற பல்வேறு உறுப்புக்களுக்கும் உவமானமாகக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாக, திருமுகம் கமலம் இணைவிழி கமலம் செய்யவாய் கமலம் நித்திலம் கமலம் வருமுலை கமலம் துணைக்கரம் கமலம் வலம்புரி உந்திபொற் கமலம் பெருகிற அல்குல் மணித்தடம் கமலம் பிடித்தடைத் தாள்களும் கமலம் உருஅவட் கவ்வா றாதலி னன்றே உய்ந்தது பூவினுட் கமலம் என்ற பாட்டு நமது கருத்தினை அரண் செய்வதாகத் திகழ்கிறது. இந்தச் செய்யுளைப் பின்னணியாக வைத்து பிறமொழிப் புலவர் களெல்லாம் போற்றும் கலைமகள் அந்தாதியில் கம்பன் ஒரு அரிய பாடலைப் பாடியுள்ளான். அப் பாடலைப் பார்த்து போற்றுவாரும் உளர்; தூற்றுவாரும் உளர்; யார் என்ன கூறினும், அப் பாவின் சொன்னயமும் பொருணயமும் யாவரும் போற்றற்குரியதேயாம். கற்பனைத் திறம், கற்றோர்கள் மெச்சும் பெருமை வாய்ந்ததாக இருக்கிறது. அங்க அழகு கம்பர் கலைமகளைத் தம் வழிபடு கடவுளாய்க் கருதி வணங்கியவர். அவர் கலைத் தெய்வமாகிய நாமகளின் உருநலனை ஓவியமாகத் தீட்டி, தாம் இயற்றிய கலைமகள் அந்தாதியில் கலைஞர்களுக்கு விருந்தாகக் கவின்பெற எடுத்துக்காட்டி யுள்ளார். கலைமகளின் கார்மேகம் போன்ற கரிய முடியினின்று அரிய அடிவரை அங்கம் அங்கமாக எடுத்து அதன் அழகை, சிறப்பை, செம்மையை விவரித்துள்ளார். கவிஞர்கள், காளையரினும் கன்னி யர்கள் கண்கவர் வனப்பினை யுடையவர்களாய் இருப்பதை உணர்ந்தே அவர்களின் எழிலொழுகும் அங்கங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டியுள்ளார்கள். தமிழ் இலக்கியங் களில் பெண்களின் உறுப்புக்களில் ஒவ்வொரு பகுதியையும் விடாது ஓவியப்படுத்திக் காட்டும் வழக்கம் பண்டுதொட்டு இன்றுவரை இருந்துவரும் ஒரு மரபாகும். இல்லறத்தைச் சிறப்பித்துக் கூறும் காவியப் புலவர்களும், துறவறத்தைப் பெருமைப்படுத்திக் கூறும் சமயப் புலவர்களும் இந்த வழக்கத்தை ஒருங்கே கையாண்டிருப் பதை அவர்களின் இலக்கியங்களின் முலம் நன்கறிகின்றோம். எனவே அழகை அப்பட்டமாக எடுத்துக்காட்ட நாடும் நல்லிசைப் புலவர்கள், பட்டிசைந்த அல்குலாள் என்றும், கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி என்றும், செப்பும் இளமுலையாள் என்றும் வளருங் குரும்பமுலை வள்ளிக் கணவா என்றும், சைவ சமய குரவர்கள் உள்ளிட்டுப் பெரும் சமயப் பெரியோர்கள் பலரும் பாடி யுள்ளார்கள். மேலும் பண்டையத் தமிழ்ப் பெண்களிற் பெரும் பாலார் மேலாடை அணியும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. நிற்க, கல்வியிற் பெரிய கம்பன், தாம் பாடிய கலைமகள் அந்தாதியில், கலைமகளுக்குக் கமல மலர் திருக்கோயிலாகவும், கைகளாகவும், பாதங்களாகவும், தொப்புளாகவும், அல்குலாகவும், முகமாகவும், கண்களாகவும், உதடுகளாகவும் இருந்தது என்று பாடியுள்ளார். இதன் மூலம் கமல மலரின் பெருமை நன்கு புலனாகின்றது. சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையு முரோருக முந்திரு வல்குலு நாபியு மோங்கிருள்போற் முரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழு மொரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே (கலைமகள் அந்தாதி) என்ற பாடல் ஆராயத்தக்கது. சூளாமணியில் தாமரை பூங்காவில் புதுப்புதுப் பூக்கள் பொன்போற் பூத்துக் குலுங்க வேண்டும்; தண்ணீர்த் தடாகங்களில் தண்டாமரை தளிர்த்துத் தண்ணென எழுந்து தகதகவென மலர்ந்திருக்கவேண்டும்; நீளிரவில், விண்ணில், வெண்ணிலா தண்ணொளி வீசி இன்பந்தரவேண்டும். அஃதின்றேல் அப் பூங்கா, மக்களைப் பெற்றிராத மனைபோல் மாண்பிழந்து, இன்பமிழந்து, கவின்தரு காட்சியிழந்து, பாழ்பட்டு நிற்கும். இவ்வரிய காட்சியைப் பழம்பெரும் காப்பியங்கள் ஐந்தினுக்கும் எத்துறையினும் குன்றாது சொன்னயம், பொருணயம், நடையழகு, கற்பனை அலங்காரம் மிகுந்த சூளாமணி என்னும் பேரிலக்கியத்தில் தோலாமொழித் தேவர் என்னும் சைன முனிவர் வெகு அழகாக எடுத்துக் காட்டுகிறார். தொக்கிள மலர்துதை விலாத சோலையும் புக்கிளந் தாமரை நகாத பொய்கையும் மிக்கிளம் பிறைவிரி விலாத அந்தியும் மக்களை இலாததோர் மனையும் ஒக்குமே (சூளாமணி) இவ்வாசிரியர் சூளாமணியில் நாட்டின் வளத்தை நலம்பெற எடுத்துக்காட்டியிருக்கின்றார். ஒரு குளத்தில் நீர் நிறைந்திருக்கிறது. செங்குவளை மலர் சிலுசிலுவென்று திகழ்கிறது. பொற்றாமரை மலர்கள் பூரித்துப் பொகுட்டினைச் சூழவுள்ள இதழ்கள் மலரக் காட்சி அளிக்கிறது. இக் காட்சி, காதலன் வரவைக் கண்டு கழி பேருவகையுடன், கண்ணொளி திகழ, இன்முகங்காட்டிப் பூரித்து வரவேற்கும் காரிகையைப் போன்று தோன்றியது. முற்றத் துறந்த சைன முனிவராகிய தோலா மொழித் தேவரின் உள்ளத்தை இக்காட்சி கவர்ந்துவிட்டது. பல்லறத்தினும் இல்லறமே நல்லறம் என நவிலும் நமது மக்களுக்கு இது ஓர் இணையிலா ஓவியம் என எண்ணி, அதை அழகாக எடுத்துக்காட்டுகிறார். சாந்துநீர் நிறைந்த வாவி தயங்குசெங் குவளை வாவி பூந்துகள் அவிழ்ந்த பொற்ற மரைமலர் புனைந்த வாவி (சூளாமணி) சூளாமணியில் மற்றோர் இடத்தில், தாமரையின் பெருமை தோன்ற ஓர் அழகான பாட்டைப் பாடியுள்ளார். கீழ்த்திசையில், அதிகாலையில் அருணன் அரும்புகின்றான். அம்புய மலர்களின் அரும்புகள் நெகிழ்ந்து மலர்கின்றன. அப்பால் அந்திப்பொழுதில் அருணன் மேற்றிசையில் மறைந்ததும் அம்புயம் மூடிக் குவிகிறது. அந்திப் பொழுதில் அருணன் ஆழ்கடலுக்கப்பால் மறைந்ததும் அம்புலி ஆகாயத்தில் எழும். அம்புலி அரும்பியதும் ஆம்பல் மலர் தம் அழகிய இதழ்களை விரித்துக்கொண்டு கிளர்ந்து மலரும். அப்பால் அம்புலி மறைந்து அருணன் அரும்பியதும் ஆம்பல் கூம்பும். ஒரே குளத்தில் பகற்பொழுதெல்லாம் எண்ணற்ற தாமரை மலர்கள் பல்வேறு வண்ணத்தில் மலர்ந்து எழிலொழுகக் காட்சி யளிப்பதும். அப்பால் அந்திப்பொழுது அண்மியதும் அம் மலர்கள் அனைத்தும் கூம்பி, இராப்பொழுதனைத்தும் ஆம்பல் அலர்ந்து பல்வேறு வண்ணத்தில் காட்சி தருவதையும் கண்டு களிப்புற்று உலகியல் முறையை நமக்கு ஓர் நல்ல ஓவியமாகத் தீட்டித் தந்துள்ளார். அது பின்வருமாறு: அங்கொளி விசும்பில் தோன்றும் அந்திவான் அகட்டுக் கொண்ட திங்களங் குழவிப் பால்வாய்த் தீங்கதிர் அமுதம் மாந்தித் தங்கொளி விரிந்த ஆம்பல் தாமரை குவிந்த தாங்கே எங்குளார் உலகில் யார்க்கும் ஒருவராய் இனிய நீரார். (சூளாமணி) ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகச் சிறந்து விளங்கும் சிலப்பதிகாரத்தில், கடலாடு காதையில், கோவலனும் மாதவியும் அதிகாலையில் சோழனுடைய துறைமுகப் பட்டினமாக விளங்கும் பூம்புகார் நகரின் மருவூர்ப் பாக்கத்தைத் தாண்டி கடற்கரைக்கு வந்து கண்ட காட்சியை வெகு அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறார், இளங்கோவடிகள். சரியாகப் பொழுது புலவரவில்லை; இந்திரவிழா இறுதிக்கட்டத்தை எய்தியது; எங்கும் பகல்போல் விளக்குகள் ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன; துறை முகத்தில் கலங்கரைவிளக்கு கதிரவன்போல் தகதகவென்று எரிகிறது; வணிகர்கள், கடைகளில் விளக்கை ஏற்றிவைத்திருக்கிறார்கள்; மீனவர்கள், கட்டுமரங்களில் திருவிளக்கு ஏற்றிவைத்திருக்கின்றார்கள்; காவலர்கள், கரங்களில் நந்தாவிளக்கை ஏந்திக்கொண்டிருக்கின்றனர். எங்கு நோக்கினும் பட்டப்பகல்போல் ஒளிவீசுகின்றது. அங்குள்ள அழகிய பூங்கா பாங்குறத் திகழ்கிறது. அதன் நடுவே ஒரு அழகிய ஏரி எழிலுடன் விளங்குகிறது. அதில் தண்டாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்கு கின்றன. குளக்கரையில் உள்ள புதரில் வேறு பல பூக்கள் மலர்ந்து கமகமவென்று நறுமணம் வீசிக்கொண்டிருந்தன. நெய்தல் நிலம், மருதநிலம்போல் இலங்குகிறது. கடற்கரையிலுள்ள வெள்ளிய மணல், விளக்குகளின் ஒளியை அதிகப் படுத்திக் காண்பிக்கிறது. இவ்வரிய காட்சி, செவிக்கினிய காட்சியாகத் திகழ்கிறது. இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும் விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும் மொழிபெயர் தேயத்தோர் ஒழியா விளக்கமும் கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும் எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி இடிக்கலப்பு அன்ன ஈர்ஆயின் மருங்கின் கடிப்பகை காணும் காட்சிய தாகிய விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின் மருத வேலியின் மாண்புறத் தோன்றும் கைதை வேலி நெய்தல்அம் கானல் பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி என்று சிலப்பதிகாரம் சிறப்புடன் எடுத்துக்காட்டுகிறது. 3. இலக்கியங்களில் காணும் உவமங்கள் சீவகன் ஓர் அழகிய பூங்காவிற்குள் நுழைந்தான்; அங்குள்ள அழகிய தடாகத்தில் தாமரையும், ஆம்பலும் அடுத்தடுத்து அலர்ந்து கூம்பும் அணிபெறும் காட்சியைக் கண்டான்; கழிபேருவகை கொண் டான். இக் கவினுறு காட்சியைத் திருத்தக்கத்தேவர். நந்தாப் பெருமை வாய்ந்த சிந்தாமணி எனும் காப்பியத்தில் ஒரு தெவிட்டாத தீஞ்சுவை ஓவியமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளார். அது பின்வருமாறு: அண்ணல்தான் செலுமுன்னாள் அணிமலர்ப்பூம் பொழிலதனுள் வண்ணமாச் சுனைமாநீர் மணிதெளித்தனை யதுதம்பித் தண்ணெண்தா மரைகழுநீர் நீலம்தா தவிழ்ஆம்பல் எண்ணிப்பன் மலர்சஞலி இனவண்டுபாண் முரண்றுளதே என்று சீவக சிந்தாமணி அதனை அழகுறக் கூறுகிறது. பெருங்கதை என்னும் பேரிலக்கியத்தில், கொங்குவேள் என்னும் சீரிய புலவர், எழில்மிக்க ஏரி (புஷ்கரணி) ஒன்றை நமக்கு ஒரு சொல்லோவியமாகத் தீட்டித் தந்துள்ளார். பொதுவாகக் காவியம் இயற்றும் கவிஞர்கள் கண்டிப்பாகத் தம் காவியத்தின் ஆரம்பத்தில் நாட்டு வளத்தை நயம்பட எடுத்துக்காட்டாமல் இரார். நாட்டு வளத்தை நவிலும்போதெல்லாம் அடியெடுத்து வைக்கும் அன்னமும், ஆடும் மயிலும், கூவும் குயிலும், ஓடும் மானும், பாடும் பறவையும் இடம் பெற்றிருக்கும். எல்லாவற்றிற்கும் சிகரமாக, அழகிய குளமும், அம்புய மலரும். அதன் இனத்தைச் சேர்ந்த அல்லியும், ஆம்பலும் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். தமிழ்ப் பெரும் இலக்கியங்களில் சிறந்து விளங்கும் பெருங்கதை, இதை விட்டுவிடுமா? கவிஞர், என்றும் அழியாத்தன்மை வாய்ந்த அவரது அமர இலக்கியத்தில் பின்வரு மாறு சித்தரிக்கின்றார்: ஆசற வறியா அளப்பருங் குட்டத்து பாசடைத் தாமரை ஆம்பலொடு பயின்று புள்புகன் றுறையுமோர் பூம்பொக் கரணி (பெருங்கதை) என்று பெருங்கதை கவின்பெற எடுத்துக்காட்டுகிறது. சோழர்களின் கடற்கரைப் பட்டினமாய்த் திகழ்ந்த காவிரிப் பூம்பட்டினம் வரலாற்றுப் புகழ்பெற்ற இடமாகும். அங்குள்ள மருவூர்ப்பாக்கத்தில் உவவனம் என்னும் புகழ்பெற்ற பூந்தோட்டம் ஒன்று அழகுற விளங்கியது. அதன் நடுவே அழகிய ஏரி ஒன்று இருந்தது. அதில் பல வண்ணங்களுள்ள தாமரைப் பூக்கள் பூத்துக் குலுங்கின. குளக்கரையிலுள்ள புதரில் தாழம்பூக்கள் மலர்ந்து கமகம வென்று நறுமணம் வீசிக்கொண்டிருந்தன. தாழம்பூக்களினின்று பூந்துகள் (மகரந்தப் பொடி) காற்றில் எங்கும் பறந்து, தாமரை மலர்களின் இதழ்களிலெல்லாம் படிந்து இருந்தது. குளத்திலிருந்த கயல்மீன் ஒன்று துள்ளிக் குதித்துத் தாமரை மலரில் வீழ்ந்தது. வீழ்ந்த மீன் மீண்டும் புரண்டு எழுந்து நீரிற் குதிப்பதற்குமுன் தாழம்பூவில் அமர்ந்து இரை தின்றுகொண்டிருந்த மீன்குத்திப் பறவை ஒன்று இம்மீனைக் கண்டு நாவில் நீர் ஊற, வாயிலிருந்த இரையையும் கீழே துப்பிவிட்டு, தாமரை மலர்மீது விழுந்துகிடந்த மீனைக் கௌவிப் பிடிக்க விரைந்து சென்றது. அதற்குள் அம்மீன் துள்ளிக் குதித்துத் தண்ணீருக்குள் தப்பி ஓடிவிட்டது. மீன்குத்தி வாயிற் கிடைத்த இரையையும் இழந்து, ஆசைப்பட்ட கயல்மீனும் அகப்படாமற் போகவே, பெரிதும் ஏமாந்து வருந்தியது. இவ்வரும் காட்சியைக் கூல வாணிகன் சாத்தனார் என்னும் பெரும்புலவர், மணிமேகலையில் பின்வருமாறு சித்திரித்துக் காட்டியுள்ளார். விரைமலர்த் தாமரை கரைநின்று ஓங்கிய கோடுஉடை தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால்வெண் சுண்ணம் ஆடியது; இதுகாண்! மாதர் நின்கண் போதுஎனச் சேர்ந்து, தாதுஉன் வண்டுஇனம் மீதுகடி செங்கையின் அம்சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங்கயல் பாய்ந்து பிறழ்வன் கண்டு, ஆங்கு எறிந்து, அது பெறாஅது, இரைஇழந்து வருந்தி மறிந்து நீங்கும் மணிச்சிரல் காண்! எனப் பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட மணிமே கலைஅம் மலர்வனம் காண்புழி. (மணிமேகலை: பளிக்கறைபுக் காதை: 16-26) என்பது, படிக்கப் படிக்கத் தெவிட்டாததாகும். நைடதம் புலவர்க் கௌடதம் என்று புகழ்பெற்ற நூலாகும். பிற்காலப் பாண்டியர்களில் புகழ்பெற்று விளங்கிய அதிவீரராம பாண்டியன் நமக்கு இந்தச் சொல் - ஓவியத்தை நன்கு தீட்டித் தந்துள்ளார். தமயந்தி என்னும் அரசகுமாரி, நளன்என்னும் நிடத நாட்டு மன்னனின் அழகையும் வீரத்தையும் ஒரு அன்னத்தின் மூலம் அறிந்தாள்; அவன்மீது காதல்கொண்டாள். நாளடைவில் அக் காதல் வளர்ந்து பொங்கித் ததும்பியது. அவள் அக்கால மக்கள் வழக்கிற்கேற்ப, இடையில் எழில்தரும் பொற்சரிகைகள் புனைந்த பட்டாடையைப் புனைந்து இருந்தாள். மேலாடைகள் எதுவும் அணியவில்லை. ஆனால், செந்தாமரை மலர்களைச் செவ்வையாகக் கோத்து, மாலையாகக் கழுத்தில் அணிந்துகொண்டு, கண்ணைமூடித் தாம் நாடும் காதல்தெய்வத்தை நினைத்துக் கொண்டிருந்தாள். அவளது உள்ளத்திலே காதல்தெய்வமாகிய நளன் காட்சி அளித் தான். காதற்சுரம் அவளை நன்றாகப் பற்றிக் கொண்டது. உடல் வெம்பியது. கழுத்தில் அணிந்திருந்த கமல மலர் அவளது உடலில் எழுந்த வெம்மையைப் பொறாது குவிய ஆரம்பித்தது. குவியும் தாமரை இதழ்கள் அவளது மெல்லிய மார்பைத் தழுவின. கண்ணை மூடித் காதல்தெய்வத்தோடு மனோஉலகில் களித்து உரையாடும் தமயந்திக்கு இக் காட்சி உண்மை நிகழ்ச்சிபோல் தோன்றியது. நளன் தன்னை மணந்து, தாமரை இதழ்போன்ற அவனது விரல்களால் தனது கொங்கையை மெதுவாகப் பற்றுகிறான் என்று எண்ணிப் பூரித்தாள். கண்களை விழித்தாள்; உண்மையை உணர்ந்து, நாணித் தலைகுனிந்தாள். இந்தச் சொல் - ஓவியம் பின்வருமாறு: ஐயரிக் கண்மெய் யழன்றவெம்மை யாற்றலான் தொய்யில்வெம் முலைப்புதைந்த தோடவிழ்ந்த தாமரை மையன்மா மதத்தயானை நளன்மணந்திவ் வாறுதான் கையினாற் பிடிப்பனென்று காட்டுமாறு போன்றதே (நைடதம்) என்று நயம்பட நவின்றுள்ளது சிந்திக்கத்தக்கது. தோழி ஒருத்தி தன் தலைவியின் முக அழகைப் பாராட்ட எண்ணினாள். சந்திரனைப் போன்ற முகம் என்றோ, தாமரை போன்ற முகம் என்றோ அவள் கூறவில்லை. தண்டாமரை, தன் தலைவியின் முகத்தைத் தரிசித்தபின் அம் முகத்தின் பேரழகைப் பெற, பிரம தேவனை நோக்கி ஒற்றைக் காலில் நின்று தவம் புரிகிறது என்று தம் கற்பனைக் கண்ணில் கண்டாள். உடனே புன்னகை பொலியத் தண்ணீர் நிரம்பிய தடாகத்தில் வண்டுகள் மொய்க்கும் செந்தாமரையானது நீண்டகாலமாக ஒற்றைக்காலில் நின்று அகோர தவம் புரிந்த காரணத்தால் - உள்ளம் கவரும் இனிய குரல் படைத்த தலைவியே! உன் முகத்தின் வடிவையும் எழிலையும் எய்தியது என்று நயம்பட நவில்கின்றாள். இதில் சொன்னயமும், பொருணயமும் பொலிந்து காணப்படுகிறது. அது வருமாறு: தண்துறைநீர் நின்ற தவத்தால் அளிமருவு புண்டரிகம் நின்வதனம் போன்றதால் - உண்டோ பயின்றார் உளம்பருகும் பண்மொழியாய்ப் பார்மேல் முயன்றால் முடியாப் பொருள் (பழம்பாடல்) முயன்றால் முடியாப் பொருள் ஒன்றும் இல்லை என்ற உண்மையை விளக்க இவ்வரிய சித்திரத்தை நமக்குத் திறம்பட வரைந்து அளித்துள்ளார் இப்பாவின் ஆசிரியர். ஆனால் அவர் பெயரை மட்டும் குறிப்பிடாது விட்டுவிட்டார். அரண்மனையில் ஒருநாள் அரசிக்கு அடங்காக் கோபம் அரும்பியது. அதனைக் கண்டு அவளது இளம் பருவம் வாய்த்த தோழிமார்கள் பயந்து நடுங்கிக் கைகூப்பி வணங்கி நின்றனர். இக் காட்சி எப்படியோ அரண்மனைப் புலவர் கண்களுக்குத் தெரிந்து விட்டது. சில நாள் சென்று அப் புலவர் ஒரு தாமரைத் தடாகத்தை நண்ணினார். அங்கு ஓர்அரிய காட்சியைக் கண்டு வியந்தார். பெரிய தாடாகத்தின் நடுவே தாமரை மலர் ஒன்று தலைநிமிர்ந்து எழிலுடன் எழுந்து நின்றது; அதைச் சுற்றிப் பல இளம் ஆம்பல் மலர்கள் கூம்பி நின்றன. தென்றற் காற்று மெல்லென வீசி ஆம்பல் மலர்களை ஆட்டி அசைத்தது. புலவர் உள்ளத்திலே, இளம் ஆம்பல்கள் குவிந்து ஆடிக் கொண்டிருந்த ஆட்டமும் வாட்டமும், மலர்ந்து நிமிர்ந்து நின்ற தாமரையின் ஏற்றமும் பெருமிதமும், அன்றொருநாள் அரண்மனை யில் அரசியின் அருகே அச்சத்தால் நடுங்கிக் கைக்கூப்பிக் கொண்டு நின்ற இளந்தோழிமார்களின் காட்சியை நினைவிற்குக் கொண்டு வந்தது. அதை நமக்கு ஒரு தீஞ்சுவை ஓவியமாகத்தீட்டி தந்துள்ளார். அது வருமாறு: சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர் மடத்தகை ஆயம் கைதொழு தாஅங்கு உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல் தாமரை இறைஞ்சும் தண்துறை. அரண்மனையில் அன்று அப் புலவர் கண்ட காட்சி அவர் உள்ளத்தில் உணர்ச்சியை ஊட்டிவிட்டது. எனவே அரசியும் தோழி யும் போன்றதே, அம்புயமும் ஆம்பலும் என்று இரண்டையும் இயைபு செய்து எடுத்துக்காட்டியுள்ளார். இவ்வாறு இருவித உணர்ச்சி ஒற்றுமைகளை இயைத்து எழும் கற்பனைக் கவிதைகள் கற்றோர்க்கு நல்ல விருந்தாகும். அணி செய்யும் அகல்விளக்கு ஒளிவிட்டு ஓங்கி எரிகிறது. அந்த அற்புதமான அகல்ஒளியில் அரண்மனையின் அந்தப் புரத்தில் அணிஅணியாய் இருக்கும் அரும்பொருள்கள் அனைத்தும் பொன் னொளி வீசிப் பொலிவுற்றிருக்கின்றன. ஆண்டுள்ள கமல விதானம் கலையழகை மேலும் உயர்த்திக் கொண்டிருக்கிறது. உடலுக்கும் உள்ளத்திற்கும் இன்பந் தரும் தென்றலுக்கு வழிவிடும் பலகணிகளும், பொன்னார் வண்ணப் பங்கயப் பட்டுத் திரைச்சீலையும், மின்னும் கலைப்பொருள்களும், அங்கு போந்துநிற்கும் அரசனைப்போல் அசையாப் பொருள்களாகிவிட்டன. நீலவானில் ஒளிரும் உவாமதி அரண்மனையின் அந்தப்புரத் திற்குள் எவ்வாறு வந்தது? j©Ù®¤ jlhf¤âš jtG« j© lhkiu v¥go ï§F¤ njh‹¿aJ? என்று அரசன் ஆச்சரிய முற்று அசையா நின்றான். அப்பால் சிறிதுநேரம் சென்று அவன், ஆ! இது குளிர்தரும் உவாமதி அல்ல! அருகே தோன்றுவது தண்ணெண்றிருக்கும் தண்டாமரையுமல்ல! அழகு தவழும் அரசியின் அணிமுகந்தான் அம்புலியாய்த் தோன்றுகிறது. அவள் அந்தப்புரத்தில் ஓர் அழகிய அறையில் அமர்ந்து அணி செய்து கொள்கிறாள். தன் கார்மேகம் போன்ற கருங்கூந்தலில் ஒரு அம்புய மலரைச் செருக ஆரம்பிக் கின்றாள் என்று எண்ணினான். அவள் கண்கள் இரண்டும் கண்ணாடியில் நன்கு பதிந்திருந் தன. கண்ணாடியில், அவள் எதிர்பார்த்த அரசன் கள்ளன்போல் வருவதைக் கண்டாள். என்றாலும் முகத்தைச் சற்றும் திருப்பாது, அவன் வரவை அறியாதவள் போல் இருந்துவிட்டாள். உலகமனைத்தையும் மறந்து, தன் முக அழகைக் கரத்தில் இருக்கும் கைக்கண்ணாடியில் கண்டு களிக்கும் காரிகைபோல் கச்சிதமாக நடித்தாள் அவள். அருகே நிற்கும் அரசன், தன் காதலி தன் வரவைக் கண்டு நாணாது நிற்பது நல்ல சந்தர்ப்பம் என்று உன்னி, அவள் அருகே நண்ணி, அவ்வாரணங்கின் அழகைப் பருக எண்ணி இன்பக் கடலிற் றிளைத்து நின்றான். தண்ணவனின் தண்ஒளியையும், அழகு சிந்தும் அம்புய மலர் அலர்வதையுங் கண்டு, அயன் அமிழ்தைக் கலந்து வனைந்த அழகுப் பொருளல்ல இந்த ஆரணங்கு என்று எண்ணி அவன், எதற்கும் எட்டமுடியாத எழிலைத் தன் கற்பனையில் கண்டுகளித்துப் பேருவகை அடைந்து கொண்டிருப்பானா? தெய்வ லோகத்திலே யுள்ள எழிலுருவே மாயாஜாலம் பூண்டு காட்சி அளிக்கிறது. ஆகா! m‰òjkhd mÂíW muɪj kybud¤ âfG« mH»a Kf«! என்று வியந்து நின்றான் அவள் அணித்தே அரசர்க்கரசன். மலரை அணியும் பாவனையில் அவள் தன் அழகைக் கண்டு பெருமிதம் அடைகிறாள். மலரை அணிந்துவிட்டால், தன் முகத்தை வேறுபக்கம் திருப்ப நேரிடலாம் அப்பொழுது தன் எண்ணம் ஈடேறாமல் போகலாம். எனவே, மலரைக் கொண்டையில் சூடாது நிற்கின்றாள். இந்த ஆழ்ந்த அரிய கருத்தை வெகு நளினமாக, மிக அற்புதமாக ஒரு புலவர் இந்தப் பாவில் சித்தரித்துக் காட்டியுள்ளார். அது வருமாறு: சீத மதியின் ஒளியும் செழுங்கமலப் போதின் புதுமலர்ச்சியுங் கண்டு - வேதாதன் கைம்மலரா னன்றிக் கருத்தால் வகுத்தமைத்தான் மெய்ம்மலர்ப்பூங் கோதை முகம். காலைப்பொழுதில் கதிரவன் ஒளிவீசிக் களித்து எழுந்தான். கலைஞர்களின் கண்களையும் கருத்தையும் கவரும் கமல மலர்கள், காதலன் வரவைக் கண்டுகளித்து முகமலரும் கன்னியைப்போல் மலர்முகம் காட்டியது. கருவண்டுகள், கள்ளுண்டு களிக்க நாடி, இன்னிசை பாடிப் பொய்கையை அண்மின. வெள்ளை அன்னம், விரித்த செந்தாமரை மலரின் மீதமர்ந்து, தென்றல் காற்றின் இன்பம் நுகர்ந்து, தெள்ளிய திரைகள் தாலாட்டப் பதுமப் பள்ளியில் படுத்து உறங்கியது. இந்த காட்சியை, தாய்தன் கையின் மெல்லத் தண்ணெண் குறங்கி னெறிய வாய்பொன் அமளித் துஞ்சும் மணியார் குழவி போலத் தோயும் திரைகள் அலைப்பத் தோடார் கமலப் பள்ளி மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்மின். என்று பாடினார் சிந்தாமணி ஆசிரியர். அன்பிற்குரிய அன்னை, அருமருந்தன்ன அழகிய குழந்தையை மஞ்சத்தில் கிடத்தி அனிச்சமலர் போன்ற அதன் மேனியை அரவிந்தம் போன்ற தம் கரங்களால் தடவித் துயில்விப்பதுபோன்று, ஆய்மலரில் அமர்ந்த அன்னத்தைத் தன் எழிற் கையால் தட்டி, மெய் இன்புறத் துயில் கொளச் செய்யப்பட்டது எனப் புலவர் அமைத் துள்ள உவமை மிகமிகப் போற்றத்தக்கதாகும். தண்மை வாய்ந்த தடாகம் தலையாய அன்பு நிறைந்த தாயைப் போன்றது. திரைகள் தோய்தலால் அன்னம் எய்திய இன்பம், பிள்ளையின் மெய், தாயின் கை தோய்தலால் நுகரும் இன்பத்தை நிகர்த்தது. அன்னம் அரிதுயில் கொண்ட அரவிந்த அமளி வெண்பட்டு விரித்த பஞ்சணை நிகர்த்தது என்று கலைஞர்கள் போற்றும் வண்ண ஓவியம்போல் கவிஞர் ஒப்பற்ற காவியத்தில் தீட்டிய அற்புதத் திறம் கலையுலகம் என்றும் போற்றற்குரிய தாகும். தண்மை வாய்ந்த பொய்கையில் மலர்கள் நிறைந்திருந்தன. நீலவண்ணமுள்ள நீண்ட ஆடையை அணிந்த ஆரணங்கு ஒருத்தி நீராடப் போந்தாள். ஆடையின் மீது அணிசெய்த மணிகள் அருணன் ஒளியால் செந்தாமரை மலர்களைப்போல அழகுறத் திகழ்ந்தன. அதனைக் கண்டு அருகேயிருந்த அன்னம் ஆர்வத்தோடு ஓடி அதனைக் கௌவியது. ஆனால் சேலையிலுள்ள மணிகளின் நிழலாய்த் தோன்றிய சுடர்கள் என்பதை அறிந்து தன் மடமைக்கு வெட்கித் திரும்பியது மடவன்னம். இத்தகைய கருத்தை ஒரு சொல்-ஓவிய மாக்கித் தந்துள்ளார். நமது காப்பிய புலவர், நீலத்துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள் கோலச் சுடர்விட் டுமிழக் குமரி அன்னம் குறுகிச் சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன வாலிச் சுடர்கள் கவ்வி அமுங்கும் வண்ணம் காண்மின். நீலவண்ணம் நிறைந்த ஆடையை அணிந்த அழகிய ஆரணங்கு தம் ஆடையின்மீது பிணித்த செம்மணிகள் பசுமையான தாமரை இலைகளின் நடுவே திகழ்ந்த செங்கமலப் பூப்போல அழகுற விளங்கின. நீராடப் போந்த மெல்லியலாளின் நீலவண்ணச் சேலை யில் செம்மணிகள் அருகருகே பிணித்திருந்தமையால், அதன்மீது ஆதித்தன் ஒளிபட்டு, அதன்நிழல்கள் நீரில் நெருங்கி விழுந்து, செந்தாமரை மலர்போல் திகழ்ந்தன. அன்னம் செந்தாமரைப் பூவென்று மயங்கிக் கவ்வி ஏமாந்தது. இதனால் அம் மங்கை நல்லாளின் ஆடையில் பிணைத்திருந்த மணிகள் ஏற்றம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அன்னம் மணியின் நிழலை மலர் என்று ஏமாந்து கௌவிய காட்சி நகைச்சுவை பயப்பதாகும். அதோடு, பண்டைக்கால மாதர்கள் ஆடையை அணிபெறச் செய்ய மணிகளை இழைத்திருந்த ஏற்றத்தைக் கவிஞர் நமக்குக் காட்டியுள்ளார். 4. சமய நெறிகளில் பொற்றாமரை, செந்தாமரை, வெண்டாமரை தமிழ்நாட்டில் கிளைத்தெழுந்த சமயங்கள் மட்டுமல்ல; பிற்காலத்தில் அயல்நாடுகளில் பிறந்து தமிழகத்தில் பரவிய சமயங் களும் தாமரை மலரைப் புனிதப் பூவாகப் புகழ்ந்து போற்றிவந் துள்ளன. தமிழர்கள் கண்ட நெறிகளும், தெய்வங்களும், சாத்திரங் களும், கோத்திரங்களும், வாழ்க்கை முறைகளும் இயற்கையின் அடிப் படையிலே எழுந்தனவாகும். தமிழர்களின் வாழ்வு இயற்கை யோடியைந்த இன்ப வாழ்வாக மலர்ந்து ஒளிர்ந்தது. தமிழர்கள், இயற்கையையே இறைவனாகக் கொண்டனர்; இயற்கையையே இறைவன் வாழும் கோயிலாகக் கண்டனர்; இயற்கையோ டியைந்தே இன்ப சாகரத்தில் வாழ்வை அமைத்துவந்தனர். தாமரை, இயற்கையின் கண்ணாக மிளிரும் சூரிய ஒளியினால் ஒழுங்கான வளர்ச்சியையும், எண்ணற்ற வண்ணத்தையும் பெறு கிறது; கால மாறுதலை அறிவுறுத்துகிறது; நம்மைச் சுற்றிலுமுள்ள பரந்த பூப்பிரதேசத்திலுள்ள புத்திபூர்மான நிகழ்ச்சிகளில் காணும் உண்மைகளைப் பண்படுத்துகிறது. தாமரை, சூரியனின் ஒளிர்முகங் கண்டு மலர்ந்தும், அது மறைவது கண்டு கூம்பியும் நிற்கும். அல்லி, சந்திரன் உதிப்பது கண்டு களித்து மலர்ந்தும், அது மறைவது கண்டு கூம்பியும் நிற்கும். இந்த இயற்கைநிலையில் பொதிந்துகிடக்கும் பல அரிய உண்மைகளை அறிந்த தமிழர்கள் நாகரிக வளர்ச்சி அரும்பிய காலத்தில் அற்புதமான அழகும், அரிய தத்துவமும், ஆழ்ந்த கருத்தும் பொதிந்து கிடக்கும் தாமரையோடு தாங்கள் கண்ட தெய்வக் கருத்துக்களை இணைத்துவிட்டனர். தமிழர்கள் பண்டுதொட்டு இன்றுவரை இயற்கையை முன்னிருத்தி, தன் தெளிந்த அறிவால் கண்ட அறக்கடவுளைத் தன் அரிய கற்பனையோடு இணைத்துக் கலையாக்கி அதன் சிறப்பை மண்ணின்று விண்ணிற்கே உயர்த்திவிட்டனர். கலையை வாழ்க்கை யின் தத்துவத்தை விவரிக்கும் அரும்பொருளாகச் செய்தனர். இயற்கையின் எழில்முகமாய் இலங்கும் தாமரை மலரைத் தம் நெறி யோடு இணைத்துத் தெய்வங்களின் ஆசனமாகவும், பிறப்பிடமாக வும், முகமாகவும், கண்ணாகவும், கையாகவும், உந்தியாவும், பாத மாகவும், பீடமாகவும், கோயிலாகவும், இன்பலோகமாகவும் ஆக்கி விட்டனர் என்று பொதுவாகக் கூறப்படுகின்றது. பகலவன் காதலி தாமரை தாமரையின் எழிலும், வண்ணமும் அது பகலவனைக் கண்டு மலர்வதும் தமிழ்மக்களுக்கு உவகை அளித்தது. தாமரையின் காதல னாகிய பகலவன், இருளை அகற்றி ஒளியைப் பரப்பி உயிரினங் களுக்கு ஊக்கம் அளித்தது கண்டு வியந்தனர். அது, மரஞ்செடி கொடிகள் மட்டுமல்ல; உயிரினங்களும் தோன்றுவதற்கு மூலகாரண மாய் இருப்பதை உணர்ந்தனர். அதன் ஒளி உடம்பிற்கு உரமும், உள்ளத்திற்கு உவகையும் அளிப்பது கண்டு அதைப் போற்றினர்; வாழ்த்தினர். பகலவனே உலக உற்பத்திக்குக் காரணபூதமாக இருக்கிறான் என்று கண்டு பகலவன்மீது பாடினர்; அவனை வணங்கிப் போற்றினர். காலையில் கீழ்த்திசையில் பகலவன் தன் பொற்கிரணங்களைப் பாய்ச்சிப் பார் அனைத்தும் பரப்பிக் கொண்டு எழுவதையும், உலகிலுள்ள உயிர்ப்பிராணிகள் அனைத்தும் உறக்கம் விட்டு எழுந்து உவகை கொண்டு தத்தம் காரியங்களைக் கவனிப் பதையும் பண்டைக்கால தமிழ் மக்கள் கண்டு வியந்தனர். கீழ்த் திசையில் பகலவன் எழுந்ததும் கவின்பெறு கலம மலர்கள் களிப்புற்று மலர்ந்து எழிலுறத் திகழ்வதும், மாலையில் அவன் மேற்றிசையில் மறைந்ததும் தாமரை மலர்கள் கூம்பிக்கொள்வதும் கண்டு ஆச்சரியம் எய்தினர். மக்கள் நாகரிகம் பெற்றுக் கமல மலரைப்பற்றிக் கவிகள் யாத்தனர். கமல மலர்களின் காட்சி, ஓவியப் புலவர்களின் உள்ளத்தைக் கவர்ந்தது. பகலவனைத் தெய்வம் என்றும், அவன் உலகை உயிர்ப்பிக்கும் உன்னதமான கடவுள் என்றும் கலைஞர் களும் கவிஞர்களும் கண்டனர். தாமரை அவனது அருமைக் காதலி என்றும், அவள் அவன் வரவைக் கண்டு களிக்கின்றாள், அவன் மறைவைக் கண்டு துன்பந் துய்க்கின்றாள் என்றும் பாட முனைந்த னர். இறுதியில் ஆரிய நாகரிகம் வளர்ந்தபின் தமிழகத்தில் பகலவன் பிரமனாகப் பரிணமித்துவிட்டான், அல்லது பிரமனாக்கப்பட்டு விட்டான் என்று அறிகிறோம். தாமரை அவனது அருமைத் தேவி யாகிய கலைமகளாகப் பரிணமித்து விட்டாள். தாமரை விரிவதைக் கலைமகளின் புன்னகையாகவும், அது நன்றாக விரிந்து மலர்ந்திருப் பதைக் காதலன் எழில் உருவை முற்றாகக்கண்டு காதல் வெறியால் நாணத்தை மறந்து அவன் உருவின் அழகை முற்றாகக் கண்டு களித்து நிற்பதாகவும், மாலையில் பகலவன் மறைவதைப் பிரமன் தன் அருமைக் காதலியாகிய கலைமகளின் இல்லத்தில் புகுந்து அவளோடு கூடிக்குலாவி இன்பந்துய்த்துச் சயனித்திருப்பதாயும், அப்பால் அவ் வெண்டாமரையாள் கருவுற்று நிற்பதையும் தம் கவித்திறமையால் வருணித்து அற்புதமான காவியமாகவும், புராணமாகவும், வசனவிடு தூதாகவும், கவிதை வடிவிலும் வசன நடையிலும் எழுதிக் குவித்து விட்டனர். அஃதோடின்றி வெண்டாமரை பிரமதேவனின் ஆசன மாகவும், கலைமகளின் ஆசனமாகவும் உறைவிடமாகவும் எல்லாத் தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நானில மக்கள் மேனிலையுற்றது தமிழகம் மிகத் தொன்மையான காலத்திலே நானிலமாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மலைப் பகுதியைக் குறிஞ்சி நிலம் என்றும், மலை அடிவாரத்தை முல்லைநிலம் என்றும், கடற்கரைப் பகுதியை நெய்தல் நிலம் என்றும், வயலும் வயல்சார்ந்த பகுதியும் மருதநிலம் என்றும் கூறப்பட்டது. இந்த நானில மக்கள் மேனிலையுற்றதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதப் பூவும், ஒவ்வொரு தெய்வமும், ஒவ்வொருவித இசைக் கருவியும், இவ்வொரு விதப் பண்ணும், பிறவும் தனித்தனியே எழுந்தன. நமது நாகரிகம் மலையிலே அரும்பி, அப்பால் அதன் அடிவாரத்திற்கு இறங்கி, பின்னர்க் கடற்கரைப் பக்கம் ஓடி, இறுதியில் ஆற்றங்கரையில் நிலைத்துக் கிளைத்து வளர்ந்தோங்க ஆரம்பித்தது. நமது நாகரிகத்திற்கு மருதநிலந்தான் நல்ல வளம் நிறைந்த விளைநிலமாக இருந்தது. மருதநிலத்தைத்தான் ஏனைய நில மக்கள், தங்கள் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத தானியங்களின் களஞ்சியமாக எண்ணினர். இந்நில மக்கள்தான் சமூகத்தின் முன்னோடிகளாய் விளங்கினர். இந்நில மக்களிடந்தான் ஏனைய நிலத்தில் வாழ்ந்த மக்கள் கடல்படு திரவியங்களையும், மலைபடு திரவியங்களையும், முல்லைநிலத்திலுள்ள ஆடுமாடுகளை யும் கொடுத்து தானியங்களைப் பெற்றுப் போயினர். இந்நில மக்கள்தான் தங்கள் பயிர்களை அழிக்கும் யானைகளையும் புலி களையும் கொல்ல ஆயுதங்களைக் கண்டனர்; தோலாடையை நீக்கிப் பருத்தியாடையைப் புனைந்னர்; இராட்டினம் கண்டு நூல் நூற்றனர்; நெய்தல் தொழிலை வளர்த்தனர்; கட்டிடக் கலையைக் கண்டனர்; மொழி வளர்த்தனர்; சமயஞானத்தை நிறுவினர்; தத்துவஞானத்தை ஆய்ந்தனர்; நாட்டியத்தை நிலைநாட்டினர்; நாடகத்தை, இசையைப் போற்றினர்; கலைகளைக் கற்றுக் கருவூல மாக வளர்க்க முனைந்தனர். இங்குதான் பொருளாதார வளம் பொங்கித் ததும்பியது. இங்கு மாடுகள் மந்தைமந்தையாகப் பல்கிப் பெருகின; மாடுகள் செல்வமாக மதிக்கப்பெற்றன. (மாடு என்றால் செல்வம் என்று நிகண்டுகளும், அகராதிகளும் நமக்கு அறிவுறுத்து கின்றன.) இங்குதான் புராதனப் பொதுவுடைமைச் சமுதாயம் அரும்பி, அழிந்து, புதிய நிலப்பிரபுத்துவ சமூகம் தோன்றியது; இந் நிலத்தில்தான் பண்ணையார்களும், மிராசுதார்களும், மன்னர்களும் பிறந்தனர்; இங்குதான் சமூகம் துளிர்த்தது; இங்குதான் திருமண முறை வளர்ந்தது; பரத்தையர் சமூகம் பிறந்தது; இங்குதான் தமிழ்ப் புலவர்கள் தோன்றினர்; இங்குதான் சைவம் தழைத்தது; இங்குதான் இந்திரன் சிவபெருமானாகப் பரிணமித்தான்; இந்த வளமிக்க நிலத்திலேதான் தாமரை மலர்ந்தது; செல்வங் கொழிக்கும் இந்நிலத் தெய்வமாகிய சிவபிரான் ஏனைய தெய்வங்களைப்போல் தாமரை மலரை அணியாது பொற்றாமரை மலரைப் புனைந்துகொண்டான். சிவபெருமானின் பொற்றாமரை சிவபிரானுக்கும், பார்வதிக்கும் உவந்த மலர் பொற்றாமரை யாகும். இதை மஞ்சள் தாமரை என்று மதிப்பாரும் உளர். பெரும் பாலும் நாம் திருமாலுக்கும், திருமகளுக்கும் செந்தாமரையும், பிரம தேவனுக்கும் கலைமகளுக்கும் வெண்டாமரையும் உரித்தானது என்று பெரிதும் கேள்விபட்டிருப்போம், அல்லது படங்களில் பார்த்திருப்போம்; புராணங்களில் படித்திருப்போம், ஆனால் சிவபிரானுக்குப் பொற்றாமரை உரித்தானது என்று அநேகர் கேள்விப்பட்டிருக்க முடியாது; படங்களில் பார்த்திருப்பது அரிது. சிவபெருமான் பொற்றாமரையில் பார்வதியோடு உட்கார்ந்து கொண்டு, மடியில் பிள்ளையாரை வைத்துக் கொஞ்சுவது போன்ற படம் ஒன்றை எனது நண்பர் ஒருவர் எனக்கு அளித்தார். அப் படம் எங்குள்ள சிற்பத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. அப் படத்தைப் பார்த்த பின்னரே, எனக்கும் சிவன் சம்பந்தப்பட்ட புராணங்களைப் படித்து, இதன் உண்மையை உணரவேண்டும் என்ற எண்ம் எழுந்தது. தன் மகனைக் கொன்ற இந்திரனைப் பழிதீர்க்கும் பொருட்டு துவஷ்டா செய்த யாகத்திலே விருத்திராசுரன் தோன்றினான். தன்னைக் கொல்லவந்த விருத்திராசுரனை இந்திரன் கொன்று விட்டான். இக் கொலையினால் இந்திரனைப் பிரமகத்தி பிடித்தது. அவன் ஒளியிழந்து, தெளிவிழந்து, திகைத்து, எங்கும் திரிந்து, கடம்ப வனத்தை அடைந்தான். அப்பொழுது சிவபெருமான், இந்திரன் அப் பழியினின்று மீண்டும் உய்யுமாறு அநுக்கிரகம் புரிந்ததும், அவன் சிவபெருமானை அருச்சிருப்பதற்கு மலர்தேட, எங்கும் காணாது திண்டாடியபோது சிவபெருமான் ஒரு பொய்கையிலே பொற் றாமரைகள் பூத்துக் குலுங்குமாறு செய்வித்து அவனது விருப் பத்தைப் பூர்த்தி செய்யத் துணைசெய்தார். இந்திரன் சிவனைப் பூசித்து, பிரமகத்தி நீங்கித் தன் இருப்பிடம் சென்றான் என்று திரு விளையாடல் புராணம் கூறுகிறது. இதிலிருந்து சிவபெருமானுக்குப் பொற்றாமரை உவப்பானது என்று ஒருவாறு அறியமுடிகிறது. ஒரு காலத்தில் சிவபெருமான் திருமுடிமீதிருந்து வீழ்ந்த பொற்றாமரைப் பூவை துருவாசர் ஏந்திக்கொண்டு போய் இந்திர னிடம் கொடுத்தார். இந்திரன் அதை ஒரு கையால் வாங்கித் தன் வாகனமாகிய ஐராவதம் என்ற வெள்ளை யானையிடத்தில் கொடுத்தான்; அது அதை வாங்கித் தன் காலின்கீழ்ப் போட்டு மிதித்துத் துவைத்துச் சிதைத்தது. துருவாசர் கோபங்கொண்டு, ஏ, இந்திரா! பாண்டின் வளையால் உன் சிரசு சிதறப்பெறும்! c‹ thfdkh»a Iuhtj«, fU¤j fh£lhidahŒ¥ bgUik ÆHªJ, mH»HªJ, áWikí‰W¤ j‹ czɉfhf¡ fhblš yh« miyªJ âǪJ fZl¥gl¡fltJ! என்று சபித்தார் எனத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. தமிழகம் கண்ட திருமால் திருமால் மிகத் தொன்மையான காலத்தில் தமிழகம் கண்ட பெருந்தெய்வங்களில் ஒன்று. பண்டைத் தமிழ்மக்கள் கண்ட முல்லைநிலத்தில் எழுந்த மாயோள், பிற்காலத்தில் மாயோனாக மாற்றப்பட்டாள் என்று தமிழ் இலக்கியங்களின்மூலம் அறிகின் றோம். பிற்காலத்தில் - அதாவது ஆரியர்கள் இந்நாட்டில் அடி யெடுத்து வைத்தபின் ஆரியத் தெய்வமாகிய விஷ்ணு மாயோனோடு (திருமாலோடு) இணைக்கப்பட்டுவிட்டார் என்றும், விஷ்ணுவின் திருவிளையாடல்கள் எல்லாம் மாயோன் வரலாறாகப் புராணங் களில் இடம்பெற்றுவிட்டது என்றும் பல தமிழ்ப் பேரறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழர் கண்ட மாயோன் திருமால், நாராயணன் என்றும் போற்றப்பட்டான். இந்த மாயோன் ஆரியர்களால் விஷ்ணுவாகவும், பத்து அவதாரங்கள் எடுத்த மாதவனாகவும், உந்தி பூத்தோனாகவும், கமலக்கண்ணனாகவும், சாரங்கபாணியாகவும், பதுமநாபனாகவும், தாமோதரனாகவும், முகுந்தனாகவும், முராரியாக வும் அழைக்கப்படுகின்றான். திருமால் திருமகளின் (இலட்சுமியின்) கணவனாகவும், சிவனுடைய மைத்துனனாகவும் (மனைவியாகவும்), பிரமனுடைய தகப்பனாகவும் பரிணமித்துவிட்டான். மகாவிஷ்ணு, உலகில் தர்மம் குன்றி, அதர்மம் மேலிடும்போது அவதரித்து, துஷ்ட நிக்கிரக சிஷ்டபரிபாலனம் பண்ணுவார் என்று வைணவப் புராணங்கள் கூறுகின்றன. ஆரியர்களுக்குச் சிவனைவிட விஷ்ணுவினிடம் அதிக பக்தியும் மரியாதையும் உண்டு. சைவர்கள், சிவன் உலகில் பிறப்பதே இல்லை என்றும், வைணவர்கள் வணங்கும் விஷ்ணு சிவனுடைய அடியார்களில் ஒருவர் என்றும் விஷ்ணு, இந்திரன், பிரமன் முதலிய தேவர்கள் பிறந்து இறந்துபோகும் உயிர்களே என்றும் நவில்கின்றார்கள். விஷ்ணுவைப் பிறப்பிறப்பற்ற முழுமுதற்பொருளாகச் சைவர்கள் கருதுவது இல்லை. ஆனால், வைணவர்களோ விஷ்ணுதான் முழுமுதற் கடவுள் என்று கூறி வழிபட்டு வருகின்றார்கள். வைணவர்களின் ஒரு பிரிவினராகிய தென்கலைக்காரர்கள், எங்கள் தெய்வமாகிய திருமால் விஷ்ணு என்னும் பெயர் கொண்டிருந்தாலும் எங்கள் வேதமாகிய திருவாய் மொழியும், பிற பிரபந்தங்களும் தமிழிலேயன்றி வடமொழியில் இல்லாதிருப்பதாலும், வைணவர்களின் குருவாகிய ஆழ்வார்களும், அவர்களது திருவிளையாடல்களும், அவர்களின் மெய்யடியார் களும் தமிழ்நாட்டிலே தோன்றி, தமிழிலே பிரபந்தங்கள் அனைத்தும் செய்திருப்பதாலும் எங்கள் சமயம் பண்டு தமிழ்நாட்டிலே வாழ்ந்த முல்லை நிலத்தில் அரும்பிய சமயமாகும்; அந்த முல்லைநில மாக்கள் கண்ட மாயோனே எங்கள் முழுமுதற் கடவுள் என்று கூறி, தாங்களும் தங்கள் தெய்வமும், தங்கள் வேதமும் தமிழ்நாட்டிலே தமிழர்களுக்காக எழுந்த தூநெறி என்று கூறுகிறார்கள். இதில் பெரிதும் உண்மையுண்டு என்று தமிழ் அறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொள்கிறார்கள். நிற்க, வைணவக் கோவில்களில் செந்தாமரைக்கு அதிகச் சிறப் புண்டு. விஷ்ணு புராணத்தில் மட்டுமின்றி எல்லா வைணவ சமய நூற்களிலும் தாமரைக்குத் தனிப் பெருமை அளிக்கப்பட்டுள்ளது. திருமாலுக்கு உகந்தது செந்தாமரை; அவர்இருப்பதும் செந்தாமரை. அவர் பத்மாசனத்திலே இருப்பார். அவர் மனைவியாகிய திருமகள் (இலட்சுமி) உறைவது செந்தாமரை. அவளது பெயரே செந்தாமரை யாள், பத்மாவதி, கமலாசனி என்பதாகும். திருமாலின் உந்தியில் தோன்றிய தாமரைப் பூவிலே பிரமதேவன் பிறந்தான் என்று புரா ணங்கள் புகழ்ந்து கூறுகின்றன. மேலும் திருமால் கமலக்கண்ணனாக வும், பத்மநாபனாகவும், பங்கயப் பாதனாகவும், தாமரைக் கைய னாகவும், கமலையின் கணவனாகவும் போற்றப்படுகின்றார். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் இந்நிலவுலகம் நீரினின்று வெளிப்படுமுன் அச்சந்தரும் பெரும்வெள்ளமே எங்கும் நிறைந்திருந்தது. அதன் நடுவே பொகுட்டோடு கூடிய வெள்ளைத் தாமரை மலர் ஒன்று மலர்ந்து தோன்றியது. அத் தாமரை மலரின் நடுவில் நான்முகன் வீற்றிருந்தான். அந்த நான்முகனைக் கொண்ட தாமரை மலரை நின் திருஉந்தியாகக் கொண்டு திகழும் திருமாலே! நின்னுடைய சக்கரப் படையே இவ்வுலகிற்குக் காவலாகும் என்று சங்க நூல்கள் கூறுகின்றன. மாநிலம் இயலா முதல்முறை அமயத்து நாம வெள்ள நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டுநின் நேமி நிழலே என்று பரிபாடல் கூறுகிறது. சங்க நூற்களிலே திருமால் இடம் பெற்றிருப்பதிலிருந்து, திருமால் தமிழர் கண்ட பெருந்தெய்வம் என்றும், அவனுக்கும் தாமரைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டென்றும் அறியக்கிடக்கின்றது. மேலும் வைணவக் கோயில்களில் புஷ்ப யாகம் என்று ஒரு ஹோமம் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. அதோடு நாராயண னுக்கும் நம்மாழ்வாருக்கும் நற்றாமரைப் பூவில் நாட்டம் அதிகம் என்று எங்கள் நற்றமிழ் மறைகள் நவில்கின்றன என்று நயம்பட நவின்றுள்ளார் ஒரு நாராயண பக்தர். அரங்கனுக்கு ஆயிரத்தொரு அம்புய மலர்களை அருச்சித்தல் அதிவிசேஷ ஆராதனைகளில் ஒன்றாக அறைகின்றனர், அம் மத பாகவதர்கள். புஷ்ப யாகத்திற்கும், அரியின் அர்ச்சனைக்கும் அத்தியாவசியமாய் இருப்பது அம்புய மலர்கள். எனவே அரசர்களாலும், அறவோர்களாலும் அழகிய தாமரைக்குளம் கட்டப்பட்டு, பண்டுதொட்டு இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மன்னர்களும், மாநிலச் செல்வர்களும் மதிப்பிடற்கரிய வருமானமுள்ள சொத்துக்களை மானியமாக விட்டிருக்கின்றார்கள். இதனை மெய்ப்படுத்த எண்ணற்ற சிலாசாசனங்களும், செப்பேடுகளும் இன்றும் நமது திருக்கோயில் களில் உள்ளன. ஆழ்வார் திருநகரி (குருகூர்), சிரிவைகுண்டம், நாங்குநேரி (வானமாலை), திருக்குறுங்குடி முதலிய தென்பாண்டி நாட்டு வைணவத் தலங்களில் உள்ள சாசனங்களில் இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அங்குள்ள கல்வெட்டுகளும், செப்பேடுகளும் புஷ்ப யாகத்திற்கு அளித்த இடங்களும் மடங்களும், குளங்களும் இதர மானியங்களும் இவைஇவை என்பதை நன்கு உணர்த்துகின்றன. வைணவ சமய ஆராய்ச்சியாளர்கள், தங்கள் சமயம் பிற சமயங் களைவிடத் தாமரைக்கு ஒரு தனிச் சிறப்பை அளித்திருக்கிறது என்று கூறுகின்றனர். திருமால் மனைவி திருமகள் திருமாலைப் போல் இலட்சுமி தமிழ்நாட்டுத்தெய்வந்தான் என்று சொல்வதற்கில்லை. ஆரியர்களின் தெய்வமாகிய மகா விஷ்ணுவைத் திருமாலாக்கி, அத் திருமாலுக்கு மகாவிஷ்ணுவின் மனைவியாகிய இலட்சுமியை மனைவியாக்கியும்விட்டனர்; தமிழர் களும் இவர்கள் இருவரையும் ஏற்றுக் கொண்டுவிட்டனர். பண்டையச் சிங்களவர்கள் தமிழ்நாட்டிற் பிறந்து வளர்ந்த அழகக்கோன் என்பவனை இலங்கைக்கு அழைத்துப்போய் அலாகக்கூன் என்று பெயர்சூட்டி, பொடிநோனா என்பவளை அவனுக்கு மனைவியாக்கிப் பிரஜாஉரிமை அளித்ததோடமையாது, சிங்கள மன்னராகவும் ஆக்கிக்கொண்ட வரலாற்றைப் போல, திருமாலுக்கு இலட்சுமியை மனைவியாக்கி, அப்பால் திருமாலுக்கு மகாவிஷ்ணு என்று பெயர் சூட்டினர். தமிழர்களும் விஷ்ணுவைத் திருமால், மாயோன் என்றும், இலட்சுமியைத் திருமகள், செய்யாள், செந்தாமரையாள் என்றும் கூறி, நீண்ட காலமாகத் தங்கள் தெய்வப் பட்டியலில் இடம் அளித்துவிட்டனர். இலட்சுமி ஐசுவரியங்களுக்கு அதிபதியாய், திருமகளாய், பூமகளாய், சீதேவியாய், செந்திருவாய், பத்மாசனியாய், செங்கமலத் தாயாய் இன்று தமிழர்களின் வீடுகளில் தவறாது இடம்பெற் றுள்ளாள். அவளது இருப்பிடம் செந்தாமரை. அவளைப் பற்றித் திவாகரம் கூறுவதாவது. பொறிமா ஆக்கம் செல்வி பொன் பூமகள் செய்யாள் இந்திரை திருமகள் பெயரே கமலை பதுமை விமலை கோகனகை அனையவும் அவள் பெயர் ஆகுமென்ப. - (சேந்தன் திவாகரம்) திருமகள் (இலட்சுமி), திருமாலின் மனைவியாய் அவரது மார்பில் இடம்பெற்றுள்ளாள் என்பது புராணக் கதை. இது பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் காணக்கிடக்கின்றது. அருமைநற் கறியினும் ஆர்வம் நின்வயின் பெருமையின் வல்லாம்! யாம்இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது அல்லியந் திருமறு மார்ப! நீஅருளல் வேண்டும் என்று பரிபாடல் கூறுகிறது. இலட்சுமி என்னும் பதம் ஆரிய வேதங்களிலெல்லாம் மிகப் பழமையானதாய்க் கூறப்படும் இருக்கு வேதத்தில் காணப்படுகிறது. ஸ்ரீ என்னும் பதமும் இருக்கு வேதத்தில் காணப்படுகிறது. இது அழகு, ஐசுவரியம், இனிய காட்சி முதலியவைகளைக் குறிப் பிடுகிறது. பிந்திய வடமொழி வேத நூற்களில் ஸ்ரீயும், இலட்சுமியும் பன்மையில் அடிக்கடி ஒன்றாக இணைந்து அழகையும் இனிமையை யும் உணர்த்தும் பதமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்று ஒரு கலாமேதை ரூபம் என்ற பத்திரிகையில் கூறியுள்ளார். புத்தருக்கு முற்பட்ட காலத்தில், ஸ்ரீ சுக்த, ஸ்ரீ லட்சுமி போன்ற பதங்களெல்லாம் ஒரே தெய்வத்தைக் குறிப்பிடும் பெயர்களாகக் காணப்படுகின்றன. இத் தெய்வங்கள் தாமரையோடு நெருங்கிய சம்பந்தமுடையன வாகக் காணப்படுகின்றன. பத்மதிதா என்னும் தெய்வம் தாமரை மலர்மீது நிற்பவளாகவே திகழ்கின்றாள். பின்னர் அவள் பத்மவாசா, பத்மகிரஹா என்றும் அழைக்கப்பட்டாள். இலட்சுமியைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களில்லாம் அவள் தண்ணீரோடு மிகத் தொடர்புகொண்டவளாகவே கூறப்படுகிறது; குறிப்பாக, தாமரையோடு மிக நெருங்கிய தொடர்புடையவளாகக் கூறப்படுகிறது. தாமரை தண்ணீரின் சின்னமாக திகழ்கிறது (தாமரை என்பதன் பொருள் தண்ணீர் ஆகும்). ஸ்ரீலட்சுமி மூன்று வகைகளில் தண்ணீரோடு தொடர்புடையவளாகத் திகழ்கிறாள் (1) பத்ம ஹதா வாக தூக்கிய வலது கையில் தாமரை மலரை வைத்திருக்கிறாள்; இடது கை இடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. (2) ஒரு மலர்ந்த தாமரை அவள் காலின்கீழ் ஒரு ஆசனம்போல் அவளைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. (3) அதோடு அவள் பத்மவாசினியாகக் கமலா யலயத்தில் வாழ்கிறாள். அவள் பூக்களின் தாள்களால் சூழப்பட்டு வளரும் வட்டமான இலைகளின் நடுவே எழில்தரும் சூழ்நிலையில் வாழ்கிறாள். இந்நிலையில் அவள் எப்பொழுதும் ஒவ்வொரு கையிலும் மலர்ந்த தாமரை மலரின் தண்டினைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள் என்று இந்தியக் கலைகளைப் பற்றி மிக நன்கு ஆராய்ந்த கலாயோகி திரு. ஆனந்த குமாரசுவாமி அவர்கள் கூறி யுள்ளார்கள். (Early Indian Art (Sri Lakshmi) by Dr. A.K. Ananda coomarasamy). மேலும், இலட்சுமியின் கணவனாகிய விஷ்ணுவுக்குப் பதும நாபன் என்ற பெயரும் உண்டு. செல்வத்திற்கும், செழிப்பிற்கும், அழ கிற்கும் அதிதேவதையாய் விளங்கும் இலட்சுமி, காத்தல் தொழிலைப் புரிந்துவரும் கடவுளாகிய மகாவிஷ்ணுவிற்கு மனைவி யாகும்; பிரம்மாவிற்குத் தாயாகும்; கல்விக்கு அதிதேவதையாகிய கலை மகளுக்கு (சரவதி) மாமியாராகும். திருமகளைத் திருமால் மார்பி லும், கலைமகளைப் பிரமன் நாவிலும் எப்பொழுதும் வைத்திருப்ப தாக விஷ்ணு புராணம் விவரிக்கிறது. வரிநுதல் எழில்வேழம் பூநீர்மேல் சொரிதர புரிநெகிழ் தாமரை மலர்அம்கண் வீறுஎய்தி திருநயத்து இருந்தன்ன தேங்கமழ் விறவெற்ப என்று குறிஞ்சிக்கலிப் பாடல் கூறுகிறது. கம்பனும் இலக்குமியைத் தாமரை மலரில் வாழ்பவளாகப் போற்றுகிறான். அது வருமாறு: செய்ய தாமரைச் செல்வியைத் தீம்புனல் கையி னாட்டும் களிற்றர சொன்னவே பௌத்த நூலாகக் கூறப்பெறும் மணிமேகலை என்ற பழம் பெரும்காப்பியம் கூறுவதாவது: விரைமலர்த் தாமரை ஒரு தனிஇருந்த திருவின் செய்யோள் இவ்வாறு திருமகளைப் பற்றிப் பல பழந்தமிழ் நூற்கள் கூறுவதால் முற்காலத்தில் இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் தமிழர்கள் திருமகளைத் தாமரையில் வாழும் தெய்வமாகக் கருதிப் போற்றிப் புகழ்ந்து பாடிவந்திருக்கிறார்கள் என்பது நன்கறியக் கிடக்கின்றது. இஃதன்றி, முல்லைநிலத்தில் முதன்முதலாக எழுந்த தாய்த்தெய்வமாகிய மாயோளே பிற்காலத்தில் திருமகளாக எழுந் துள்ளாள் என்று கூறினும் தவறில்லை. மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்ட பத்மனாபனாக வும், திருமாலின் மனைவியாகிய திருமகள் பத்ம மலரில் பிறந்த பத்மாவதியாகவும் கூறப்பட்டுள்ளது. சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய முந்நிறத் தாமரைப் பூக்கள் மும்மூர்த்திகளின் சீரிய சின்ன மாகக் குறிப்பிட்டப்பட்டிருக்கின்றன. தாமரை என்ற நீர்க்கொடி ஒன்றாக இருந்தாலும் அது மூன்றுவிதமான மலர்களை உடையதாக இருக்கிறது. அதுபோல் தெய்வம் ஒன்றாக இருந்தாலும் அது முத்தொழிலைச் செய்யும்போது மூன்றுவிதமான பெயர்களையும் மூன்றுவிதமான இருப்பிடங்களையும் உடையதாய்க் கருதப்படு கிறது. வெள்ளை சிருஷ்டித் தொழிலை நடத்தும் பிரமனுக்கும், சிவப்பு, திதியாகிய காக்கும் தொழிலைப் புரியும் விஷ்ணுவிற்கும், நீலம், சம்ஹாரத் தொழிலைச் செய்யும் உருத்திரனுக்கும் உரித்தானது என்று கூறுகின்றது என வடமொழி வேத விற்பன்னர்கள் விளக்கம் கூறுகின்றனர். மணி வடிவமான தாமரைப் பூவின் பழம், ஹிரண்ய கர்ப்பம் - அதாவது பூமாதேவியின் கருப்பை என்றும் வியந்து கூறப்படுகிறது. தாமரை, வாழ்க்கையின் மூன்று நிலைகளைப் பிரதிபலிப்பதாக முற்கால முனிவர்கள் கண்டனர். அதாவது அறம், பொருள், இன்பம் என்பதாகும். மஹாநிர்வாண தந்திரம் என்னும் நூல், தாமரையின் சின்னத்தில் அடங்கியிருக்கும் அரும்பெரும் பொருள்களையெல் லாம் மக்களுக்கு அறிவுறுத்துகின்றது. தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் பிரபஞ்சத்தின் மூலப்பொருளாக - மக்களின் சிந்தனை களுக்கெல்லாம் எட்டாத செம்பொருளாக - எல்லா உயிரினங் களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறான். தாமரையின் தண்டு, உலகம் வெறும் மாயை (பொய்) என்பதை மக்களுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. தாமரை, இம் மாபெரும் உலகமாக உவமித்துக் காட்டப்படுகிறது. அதன் பழம், விடுதலைக்கு வித்தான மோட்ச மாகக் கருதப்படுகிறது - அதாவது உயிர்கள் உலக பந்தத்தினின்று விடுபடும்பொழுது இன்பத்தை எய்துகின்றது என்று விளக்கப் படுகிறது. இருக்கு வேதத்தில் ஸ்ரீசுகதா என்னும் தேவியைப் பற்றி ஒரு அருமையான பாடல் உள்ளது. அவளே பிற்காலத்தில் பத்ம மலர் (தாமரைப் பூ) மீது வாழும் பத்மினியாகப் பரிணமித்துள்ளாள். பத்மினி பத்ம மலர்மீது அமர்ந்திருப்பதால் பத்மதி என அழைக்கப்பெற்றாள்; அவள் பத்ம பூவின் நிறத்தை உடையவளாய் இருப்பதால் பத்மவர்ணா என்று பகரப் பெற்றாள்; அவள் பத்ம மலரில் பிறந்தவளாய் இருப்பதால் பத்ம சம்பவ என்று பாடப் பெற்றாள்; அவள் பத்ம கண்களை உடையவளாய் இருப்பதால் பத்மாக்சி என்று போற்றப்பட்டாள்; அவள் கண்கள் பத்ம மலரின் இதழ்களைப் போல் நீண்டு அகன்று விளங்குவதால் பத்மதலை யட்டாக்சி என்று பாராட்டப்பெற்றாள். மேலும் அவளுடைய தொடைகள் பத்ம மலர்களைப் போல் மென்மையும் தண்மையும் உடையதாய் இருப்பதால் பத்ம உரு என்று புகழப்பட்டாள்; அவளது முகம் பத்ம மலர்போல் பொலிவுற்றிருப்பதால் பத்மனான என்று புகலப்பெற்றாள்; அவள் பத்ம மலரை (சரோஜ மலரை) உறைவிடமாகக் கொண்டதால் சரோஜினிலய என்று வரையப் பட்டாள். அவள் என்றும் பத்ம மலரில் காணப்படுவதால் பத்மப் பிரியா என்று பெயரிடப்பெற்றாள்; அவள் கைகளில் பத்ம மலரை ஏந்திநிற்பதால் பத்மஹதா என்று வர்ணிக்கப்பெற்றாள்; அவள் பூவுலகின் தேவியாய்த் திகழ்வதால் க்ஸானதேவி என்று வணங்கப் பெற்றாள்; அவள் எல்லா உயிர்களுக்கும் தாயாக இருப்பதால் பிரஜனம் பவாசி மாதா என்று புகழ்மாலை சூட்டப்பட்டாள். பிரமனது அன்னையாகிய பத்மலட்சுமியின் கருப்பை பதும மலராய் இருப்பதால் பதுமகற்ப, பத்மயோனி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. வடமொழியாளர்களால் வரையப்பட்ட விஷ்ணு புராணத்தில் தாமரை இமயத்தின் மேலே ஏற்றப்பெற்றுள்ளது. அதன் ஏற்றமும், எழிலும் வானுற உயர்த்தி வரையப்பட்டுள்ளன. மும்மூர்த்திகளுள் ஒருவராயும், படைப்புத் தொழிலுக்கு அதிபதியாயும் இருக்கும் பிரமன் இமயகிரியிலுள்ள மானசரோவர் தடாகத்தில் தமது அழகிய சிம்மாசனத்தில் - அதாவது தாமரை மலரின் கருவறையின்மீது அமர்ந்து காட்சி அளிப்பதாகக் காணப்படுகிறார். மானசரோவர் என்னும் சுனையினின்று எழும் பிரமபுத்திரா, கங்கை, யமுனை, சிந்து என்னும் நான்கு நதிகளும் நான்கு தாமரைத் தண்டுளாகக் கருதப்படு கின்றன. மண்ணினுள்ள கைலாச கிரி, விண்ணிலுள்ள சுவர்க்க பூமியைத் தாங்கி கொண்டு நிற்பதுபோல் இத் தடாகத்தின் அருகில் திகழ்கின்றது. இமயமலை உலகிலே உயர்ந்த தெய்வீக மலையாய்த் தலைநிமிர்ந்து ஒய்யாரமாக உலகின் நடுவில் காட்சியளிக்கிறது. அதன்மீது பொற்றாமரைக் குளம்போல் மானசரோவர் அரும்பி ஞாலத் திலுள்ள நாற்றிசைக்கும் நலம் விளைவிக்கும் நான்கு புண்ணிய நதிகளை உற்பத்தி செய்துள்ளது. அவ்வழகிய அருஞ் சுனையில் அரும்பிய அரவிந்த மலர்களின் நாலுதண்டுகளும் நாற்றிசைகளிலும் பரவி, அதாவது சீனத்தின் வடபாகம், பாரசீகம், மத்திய ஆசியாவின் மேற்குப் பகுதி, தென் இந்தியா, திபேத், பர்மாவின் கீழ்ப்பகுதிக ளெல்லாம் பரவித் தலைநிமிர்ந்து பூத்துப் புகழ் பரப்பி வரும் புண்டரீகப் பூக்கள் என்று வடமொழிப் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர். 5. தமிழர் பண்பாட்டில் தாமரை வடமொழி அறிஞர்கள் தாமரையை ஹிரண்ய ஹர்ப்பம் - அதாவது, உலகின் கருப்பை என்று போற்றினர். தாமரை உயிர் களின் உற்பத்திக்கு மூலகாரணமாய் இருக்கிறது என்று கண்டனர். இமயமலையின் அடிவாரத்தில் பண்டு குடியேறிய ஆரிய மக்களின் உள்ளத்திற்கு உலகில் உயர்ந்து ஒப்பற்றதாய் வெள்ளிமலையென விண்முட்டி நிற்கும் பனிமலையின் பாங்கும், எழில் தரும் இன்பக் காட்சியும், குளிர்ந்த காற்றும் உள்ளத்திற்கு உவகை ஊட்டின. அதன் உச்சியினின்று பொங்கிக் கீழ் நோக்கிச் சரேல் என்று பாய்ந்து ஓடிவரும் ஆறுகளின் அழகும், விண்ணுற ஓங்கி நிற்கும் விருட்சங் களின் தோற்றமும், மானசரோவர் சுனையில் பூத்துக் குலுங்கும் புண்டரீக மலர்களின் கவினுறு காட்சியும், அதன் கரைகளின்மீது பச்சைக் கம்பளம் விரித்தாற்போன்று பாங்குறத் திகழும் பசும்புற் றரைகளும் ஓர் ஒப்பற்ற இயற்கைக் கோயிலாகத் திகழ்ந்தது. மக்கள் ஏறமுடியாத அதன் உன்னத சிகரத்தில் பிரமன் கோயில் கொண் டிருக்கின்றான் என்று எண்ணினர். அன்று கோயில்களையும் கோட்டைகளையும் கண்டும் கேட்டும் அறியாத ஆரியர்கள், பிரமனுக்குக் கோயிலே வேண்டாம் என்று பாடினது ஆச்சரியமல்ல. மானசரோவர் தடாகத்திற் பூத்த தாமரைமீது அமர்ந்துகொண்டே அவன் தன் படைப்புத் தொழிலை ஆற்றினான் என்று பாடினர். அவர்கள் பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்தி களும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலைப் புரிகின்றனர் என்று கண்டனர். ஆனால் சைவ சமயமோ, இம் மூவர்களும் பிறந்திறந்துபோகும் உயிர்களே என்றும், இம் மூவர் களுக்கும் மேம்பட்ட தெய்வமே சிவன் என்றும், அவன் பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை என்றும், மூவர்களுக்கும் அவன் முதல்வன் என்றும் கூறுகின்றது. ஆனால் பண்டைத் தமிழர்கள் பழம்பெரும் நூல்களில் முருகன், மாயோன், வேந்தன் (இந்திரன்), வருணன், கொற்றவை (காளி) ஆகிய ஐந்து தெய்வங்களைத் தவிர வேறு தெய்வங்கள் தமிழர் கண்ட தெய்வப் பட்டியலில் இல்லாததால் பிரமன் ஆரியர்கள் தெய்வமாகித் தமிழகத்தில் குடியேறிச் சைவ சமய சாத்திரங்களிலும் இடம் பெற்றுள்ளான். இன்றைய தமிழ்மக்களிற் சிலர் இலங்கை, சிங்கப்பூர், மலாய் நாடு, கிடா (கடாரம்), பர்மா, சாவகம் முதலிய நாடுகளில் குடியேறிப் பிரஜா உரிமை பெற்று அந்த நாட்டையே தாயகமாகக் கொண்டுவிட்டதுபோல், பிரமன் வெளிநாட்டுத் தெய்வமாயினும், சுமார் 3,000 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் குடியேறித் தமிழ்நாட்டுத் தெய்வப்பட்டியலில் இடம் பெற்று விட்டான். இன்று அவனை யாரும் எளிதில் விரட்டிவிடமுடியாது. பிரமதேவனும், அவனுடைய மனைவியும் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவர்கள். இதற்கு எண்ணற்ற புராணக் கதைகளும் உண்டு. பெரும்பாலான கோயில்களில் பிரமனுக்கு இடம் கிடையாது. நீரூழிக்காலத்தில் இவ்வுலகம் எல்லாம் நீரில் மூழ்கி மறையும். அப்பொழுது அந்நீரில் முதலில் ஒரு தாமரைப் பூ மலர்ந்து தோன்றும்; அம் மலரினின்று பிரமன் பிறப்பான்; இவ்வுலகங்களை யெல்லாம் படைப்பான். அவனுடைய தந்தையாகிய திருமாலும் நீயாக இருக்கின்றாய் என்று பார்ப்பனர்க்குரிய வேதம் கூறும் என்று பரிபாடல் கூறுகிறது. வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை. சேந்தன் திவாகரத்தில், உந்தியில் உதித்தோன் ஒளிமலர் மிசையோன் . . . . . . . . . . . . . . . . . . . . கமலயோனி . . . . . . . . . . . . . . . . . . . . . இரணிய கருப்பன் என்றெல்லாம் கூறுவதைக்கொண்டும் தமிழர்களும் பிரமனைத் தாமரை மலரில் வீற்றிருப்பவனாகவே கருதிவந்துள்ளனர் என்பதை அறிகின்றோம். பிரம்மதேவனைப்பற்றி அதிகமாய்த் தமிழ் நூல் களில் காணமுடியாது. அவனுக்குக் கோயிலே கிடையாது. தேவாரம் முதலிய சைவ சமய நூற்களில் பிரம்மா பிறந்து இறந்து சாகும் ஒரு சிற்றுயிராகவே கூறப்பட்டுள்ளான். ஆனால் சுமார்த்தர்களின் வடமொழி வேதங்களில் உயிர்களை உற்பத்தி செய்பவன் என்று ஆரியர்களின் தனிப் பெருமையைப் பெற்ற பிரமன் மும்மூர்த்தி களில் ஒருவனாய் - ஏன்? - உயர்ந்தவனாயும் போற்றப்படுகிறான். இருக்கு வேதத்தில் தாமரை அமலக்கா என்று போற்றப் படுகிறது. பிரமன் வெண்டாமரைமீது வீற்றிருக்கும் வேதநாயகனாய் விளங்குகிறான். அம்புச மலரில் அடங்கி இருக்கும் அருளும், பொருளும், உருவும், திருவும் ஆரியர்கள் இதைத் தெய்வ மலராகப் போற்றிப் புகழும்படி செய்துவிட்டது. அதோடு, பிரமனுக்குக் கண்ட புராணக் கதைகள் அளவிடற்கரியனவாய்விட்டன. அவ னுடைய உற்பத்தியைப் பற்றிக் கூறும் கதைகள் எண்ணற்றன. இருக்கு வேதத்தில் இரண்டு விதமான தாமரைகளைப் பற்றிப் பாடப்பட்டுள்ளது. அதாவது, தண்ணீர் மேல் தன் தலையைத் தூக்கித் தகதகவெனக் காட்சி தரும் வெண்டாமரையாகிய புண்டரீக மும், நீணலம் போற்றும் நீலத் தாமரையாகிய புண்டரி சரோஜாவும் ஆகும். தாமரை ஓர் அரிய ஆத்மீக ஒளியின் பிறப்பிடமாக இருக்கு வேதம் போற்றுகிறது. வெண்டாமரை, மக்களின் கலை, மொழி, நெறி முதலிய அறிவுகளையூட்டும் கலைத் தெய்வமாகிய சரவதியின் பிறப்பிடமாய், ஆசனமாய் அமைந்துள்ளது. விரிந்து செறிந்து விண் ணிலும் மண்ணிலும் மிக அழகொளிர எங்கும் ஜொலிக்கும் நீலத் தாமரையை அருணோதய ஆரணங்காய் உலவும் உஷாதேவியின் பிரதிநிதியாகத் திகழும் இரட்டைத் தெய்வமாகிய அசுவினி தேவர் களுக்கு அர்ப்பணிக்கும் அரிய மலர் என்று ஏற்றம் அளிக்கிறது. உபநிஷத்துக்கள் உயிர்களை உருவாக்கும் உன்னதமான செயலை ஆற்றும் பிரம்மதேவனின் பிறப்பிடமாகத் தாமரையைக் குறிப் பிடுகின்றன. இந்த அகண்ட பிரபஞ்சம் ஆதியில் திரவ நிலை யில் திகழ்ந்தபொழுதே பிரமன் தாமரை இலையின்மீது அமர்ந்து கொண்டு தன் உற்பத்தித் தொழிலை ஆரம்பித்தான் என்று கூறுகின்றன. மகாபாரதத்தில் பிரமன் தாமரையில் தோன்றிய நாபிஜர் என்று நவிலப்படுகிறது. இவற்றைப் பற்றி விரிவாக ஜெர்மன் நாட்டுப் பேரறிஞர் ஸிம்மர் கூட, இந்திய ஆசியக் கலை (Art of Indian Asia) என்ற நூலில் விளக்கமாக ஆராய்ந்துள்ளார். கலைமகள் கலைமகளை வடமொழியினர் சரவதி என்று கூறினர். இவளும் வடநாட்டிலிருந்து குடியேறி, கணபதி, இலட்சுமி போன்று தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு ஏட்டிலும், ஒவ்வொரு பாட்டிலும், ஒவ்வொரு கோயிலிலும் ஏறித் தமிழகத்தைச் சொந்தப்படுத்திக் கொண்டு, கலைத் தெய்வமாய்க் காட்சி அளிக் கிறாள். இவள் கலைமகள், நாமகள், பூமகள், வெண்டாமரையாள், வீணாபாணி, சரவதி, வித்யா தெய்வம் என்று அழைக்கப்படுகிறாள். இவளும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இந்நாட்டிலுள்ள இலக் கியங்களையெல்லாம் சொந்தப்படுத்திக்கொண்டிருக்கிறாள். கலைமகள் சிவனுடைய மகனாகிய பிரமதேவன் மனைவி என்று ஒருசில புராணங்கள் கூறுகின்றன. சில புராணங்கள் திருமாலின் தொப்பூழிலிருந்து தோன்றிய நான்முகன் மனைவி என்று கூறுகின்றன. பிரமதேவன் எல்லா உயிர்களையும் படைப்பது போல் கலைமகளையும் படைத்தான்; அவளது அழகையும், அறிவை யும், ஆற்றலையும், இளமையையும் கண்டு அவள்மீது ஆசைக் கொண்டான்; திடீரென்று எழுந்து அவளது கைகளைப் பிடிக்க முயன்றான்; அவளோ அவன் கைகளில் அகப்படாது ஓடிக்கொண்டே யிருந்தாள். அதைத்தான் இன்றைய இந்தியாவில் காணப்படும் சரவதி ஆறு என்று கூறுகின்றனர். இறுதியில் அவளைப் பிடித்து அவளோடு கூடிக்கலந்து இன்பந் துய்த்து இறுதியில் மனைவியு மாக்கிக் கொண்டான் என்று பதும புராணம் கூறுகிறது. அப்பால் கல்விக்கு அதிதேவதையாகவும், வெண்டாமரையில் உறைபவளாக வும் கொள்ளப்பட்டாள். கலைமகளாய் விளங்கும் சரவதி பிரமதேவனுடைய நாவில் வசிப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. பிரமனுடைய நாவில் கலைமகள் வசிப்பதால் அவன் எல்லாக் கலைகளையும் அறிந்தான். அதுபோல் நாமும் கலைமகளை நாவில் இருக்கும்படி செய்தால் நமக்கு எல்லாக் கலைகளும் வளரும் என்பது நமது மக்களின் ஐதீகம். புரட்டாசித் திங்களில் வரும் சுக்கிலபட்ச மூலநட்சத்திரத் தில் நவமியில் சரவதி பூசை இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வீட்டி லும், அரசாங்க காரியாலயங்களிலும் நடை பெற்று வருகிறது. கலை மகளின் அருளை நாடி ஒன்பது நாள் நவராத்திரி பூசை நாடெங்கும் நடந்துவருகிறது. நவமிக்கு அடுத்த நாள் வரும் விஜயதசமியில் தமிழர்கள் தம் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவர்; அரி வரி ஏடு தொடங்குவர். தமிழ்நாட்டுப் புலவர்கள் பலரும் கலைமகளைப் போற்றி வணக்கம் செலுத்தியுள்ளார்கள். கலைமகள் வெள்ளைத் தாமரை யில் வீற்றிருப்பாள்; வெள்ளை ஆடையும், வெள்ளை அணிகளை யும் அணிந்திருப்பாள். பெரும்புலவர்களில் ஒருவரான காளமேகம், கலைமகள் தன்மீது காட்டிய கருணையை வியந்து பாராட்டி, வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டெம்மைச் சரியா சனம்வைத்த தாய் என அழகாகப் பாடியுள்ளார். ஆரியர்களும், வைணவர்களும், கவிதைக் காதலர்களும் கவிச் சக்கரவர்த்தி என்று புகழும் கம்பன் பாடிய கலைமகள் அந்தாதியில், உரைப்பார் உரைக்கும் கலைகளெல் லாம்எண்ணில் உன்னையன்றித் தரைப்பால் ஒருவர் தரவல ரோதண் ணமுதினும்மேல் வரைப்பாம் அருள்புரிந்து இங்கெனை வாழ்வித்த மயிலே விரைப்பாசு அடைமலர் வெண்தா மரைப்பதி மெல்லியலே என்று எழிலொழுக வியந்து பாடியுள்ளார். நமது தேசியக் கவி பாரதியார், வெள்ளைத் தாமரைப் பூவி லிருப்பாள் என்று பாடியுள்ளார். பிள்ளையார் இன்று தமிழகத்தில் பிள்ளையாரைப்பற்றி அறியாத தமிழ்ப் பிள்ளைகள் எவரும் இலர். ஆனால் இப் பிள்ளையார் பண்டைய தமிழர் கண்ட தெய்வப் பட்டியலில் இல்லை. சங்ககால இலக்கியங் களில் இந்தப் பிள்ளையாரைப் பற்றி அதிகமான பேச்சே இல்லை. ஏழாம் நூற்றாண்டில் நரசிங்கவர்ம பல்லவனோடு சேனைத் தலைவ ராகச் சென்று வாதாபிப் போரில் புலிகேசியைப் புறமுதுகிட் டோடும்படி செய்து வாகைமாலை சூடித் திரும்பிவந்த சிறுத் தொண்டர், வாதாபியில் கண்ட கரிவடிவம் வாய்ந்த கணபதி உருவத்தைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தார்; முதன்முதலாக சிறுத்தொண்டர் கணபதீச்சுரத்தில் ஒரு கோவில் கட்டித் தமிழகத் தில் விநாயகருக்குப் பிரஜா உரிமை அளித்தார். அப்பால் அந்த விநாயகர் ஒவ்வொரு குக்கிராமத்திலும், ஒவ்வொரு சந்தியிலும், ஒவ்வொரு கோயிலிலும் இடம் பெற்றுள்ளார். இன்று தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு ஏட்டிலும் இடம் பெற்றுள்ளார். திருவாரூர், திருச்செங்காட்டங்குடி முதலிய இடங் களிலுள்ள பிள்ளையார், வாதாபி விநாயகர் என்று அழைக்கப் படுகிறார். சிறுத்தொண்டர் வாதாபியிலிருந்து கொண்டுவந்த பிள்ளையாராக இருப்பதால் வாதாபி விநாயகர் என்று பெயர் வழங்குகிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால், தமிழர்நெறியை நன்கு ஆராய்ந்தவரான திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை, எம். V., எம். vš., அவர்கள், பிள்ளையார் தமிழ்நாட்டுத் தெய்வமே என்ற உறுதிகூறுகிறார். திருவாவடுதுறை ஆதீன வித்துவான் திரு. தண்டபாணி தேசிகர் அவர்கள் அதை ஆதரிக்கின்றார். பிள்ளையார் வடநாட்டுக் கடவுளாய் இருந்தாலும் சரி, தென்னாட்டுக் கடவுளாய் இருந்தாலும் சரி; இன்று தமிழகத்தி லுள்ள ஏனைய தெய்வங்களைவிட அதிக உரித்தும் ஆதரவும் பெற்றுள்ள தெய்வமாக இருக்கிறது. நமது ஆராய்ச்சியில், கணபதியை வடநாட்டுத் தெய்வமாக முடிவுகட்டிவிட்டாலும், இதை வட நாட்டுக்கு ஓட்டி விட முடியாது; மக்கள் உள்ளத்தினின்று அகற்றி விட முடியாது. இந்தப் பிள்ளையாரைக் கணபதி, விநாயகர், விக்னேவரர், யானை முகத்தான், ஐந்து கரத்தான், தொந்தி வயிற்றோன், பேழை வயிற்றோன், பெருச்சாளி வாகனன், மூசிக வாகனன், தொந்திக் கணபதி என்றெல்லாம் அழைத்துவருகிறார்கள். கணபதி, பெரிய கோவில்களின் கருவறையில் பல்வேறு பொன் அணிகளைச் சூடிக்கொண்டு, பட்டாடைகளைப் புனைந்து கொண்டிருக்கும் தெய்வம் அல்ல. இவர் சாதாரண ஏழை எளிய மக்களின் தெய்வம். இவருக்குப் பொன்னணியோ, பட்டாடை களோ, பெரிய கோவில்களோ தேவையில்லை. ஒரு சந்தியில் நிழலுக்காக ஒரு வேம்பும் அரசும் இருந்தால் போதும்; அங்கு பிள்ளையார் எழுந்தருளிவிடுவார். பெரும்பாலும் கணபதியின் உருவம் பொன், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களில் செய்யப் படுவதில்லை; கற்களில்தான் செய்யப்படுவது வழக்கம். இதை யாரும் களவுசெய்து கொண்டுபோவதில்லை. சில சமயங் களில் களவுசெய்து கொண்டுபோகப்பட்டாலும், உடனே அப்பகுதி மக்கள் கூடி புதிய கணபதியைச் செய்துகொண்டு அதன் இருப்பிடத் தில் பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். இவர் கல் வடிவில் இருப்ப தால் இரவுபகல் அஞ்சாது சந்திகளில் பயமின்றி வாழ்ந்து வருகின் றார். ஒருசில இடங்களில் விநாயகருக்கு வெள்ளி அங்கியிருந்தால் அதைப் பத்திரமாகப் பக்கத்திலுள்ள அறைகளில் பூட்டிவைத்துக் கொள்வார்கள். ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புத்தியில் வைத்தடி போற்றுகின் றேனே (திருமந்திரம்) என்று பாடித் தமிழ்மக்கள் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் முதன்முதலாகப் பிள்ளையாரை வணங்கிக் காரியத்தை ஆரம்பிப்பர். எந்த நூலை எழுத ஆரம்பித்தாலும் முதன்முதலில் கணபதி வணக்கம் (காப்பு) கூறியபின் தான் நூல் ஆரம்பமாகும். பிள்ளைக்குக் காது குத்தல், பள்ளிக்கு வைத்தல், திருமணஞ் செய்தல், சாவுக் கிரியைகள் ஆகிய யாவற்றிலும் கணபதி முதலிடம் பெற்றிருப்பார். சிவபெருமான் ஆண்யானை வடிவமும், உமாதேவி பெண் யானை வடிவமும் கொண்டு கூடிக்கலந்து பெற்ற பிள்ளையே யானை முகமும், மனித உடலும் கூடிய இந்த விநாயகர் என்னும் தெய்வம். பார்வதி குளிக்கப்போகும்போது தனது உடம்பிலுள்ள அழுக்கைத் திரட்டி ஒரு குழந்தையாக்கி, அதை வாயிலில் நிற்கச்செய்து, நான் குளிக்கப்போகிறேன்; யாராவது ஆண்மக்கள் உள்ளே புகுந்து விடாமல் பார்த்துக்கொள் என்று கூறிவிட்டுக் குளிக்கச் சென்றா ளாம். அப்பொழுது அங்கு பரமசிவன் வந்தார். வந்ததும், வீட்டி னுள்ளே புகமுயன்றார். அழுக்குருண்டைப் பிள்ளையாக வாயிலில் காவலாக நிற்கும் பிள்ளை, சிவபெருமானை நோக்கி, அம்மா உள்ளே குளித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் உள்ளே புகக்கூடாது என்று கூறவே, சிவபெருமான், நீ யாரடா என்னைத் தடுப்பதற்கு என்று சினந்து கூறி, அக்குழந்தையின் சிரசைக் கிள்ளி எறிந்துவிட்டு உள்ளே புகுந்தார். பார்வதி குளித்துவிட்டு வந்து, நீங்கள் உள்ளே எப்படி வந்தீர்கள்? thÆÈš vtU« c§fis¤ jL¡fÉšiyah? என்று கேட்டாள். அதற்குப் பரமசிவம், ஒரு சிறுபிள்ளை, உட்புகக்கூடாது என்று தடுத்தது; என்னைத் தடுக்க நீ யாரடா என்று அக்குழந்தையின் சிரசைக் கொய்துவிட்டு உள்ளே வந்துவிட்டேன் என்று கூறினார். gh®tâ, ‘v‹ mUik¡ FHªijia¡ bfhiybrŒJ É£O®fns! என்று கோவென்று அழதார். உடனே பரமசிவன் தேவியை நோக்கி, வருந்தாதே! உன் பிள்ளைக்கு இப்பொழுதே உயிர்கொடுத்து உன்னிடம் ஒப்புவிக்கிறேன் என்று குழந்தை இறந்துகிடந்த இடத் திற்கு வந்தார். அங்கு அதன் சிரசைக் காணவில்லை. உடனே பக்கத்தில் நின்ற ஒரு யானையின் சிரசைக் கொய்து இந்த அழுக்குருண்டைப் பிள்ளையின் உடலில் ஒட்டவைத்து யானை முகமுடைய ஒரு பிள்ளையை உருவாக்கிவிட்டார். கரிமுகமுடைய கணபதி தோன்றி னார்; கௌரி தேவி களிப்புற்றார் என்று சில புராணங்கள் கூறு கின்றன. பிள்ளையார் பிறப்பைப் பற்றிப் பல்வேறு புராணங்கள் பல்வேறுவிதமாகக் கூறுகின்றன. இந்த யானைமுகம் தாங்கிய பிள்ளையார் என்னும் தெய்வம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வடஇந்தியாவிலும் பௌத்த மதத்தின் மூலம் இலங்கை, பர்மா, மலாயா, சாவகம், தாய்லாந்து, கம்போடியா, சம்பர், திபேத், சீனம், ஜப்பான், கொரியா, துருக்கிதானம், மங்கோலியா முதலிய நாடுகளிலும் காணப்படுகிறார். பண்டைய தமிழ் நூல்களில் இடம்பெறாத இந்தப் பிள்ளையார் ஆரியர்களின் பழம்பெரும் வேதநூல்களில் எல்லாம் இடம்பெற்றிருக்கிறார். கல் சூத்திரத்தில் ஒன்று மானவ கிருஷ்ய சூத்திரமாகும். இது யசுர் வேதத் தொடர்பு உடையது. வடமொழிச் சார்புடைய பிரமகைவர்த்த புராணம், வராக புராணம், வாமன புராணம், மகா காந்தம், அக்னி புராணம், பத்ம புராணம், கருட புராணம் முதலியவைகளில்தான் கணபதியின் வரலாறு காணப்படு கிறது. வியாசர் எழுதிய வடமொழிப் பாரத சுலோகங்களில் கணபதி யின் பெயர் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. இக் கணபதி உருவங்கள் பலவாறு காணப்படுகின்றன. அஷ்ட கணபதி என்றும், சோடச கணபதி என்றும் கணபதி வடிவங் களைப் பிரித்திருக்கின்றார்கள். இக் கணபதியைப் பிரமச்சாரி என்றுதான் தமிழ்மக்களிற் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, அவர் எப்பொழுதும் பெருச்சாளி மீதுதான் வீற்றிருப்பார் என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். என் பிள்ளைப் பிராயத்தில் எனது பாட்டியார், இந்தக் கணபதி, தாயைப் போல் தாரம் வேண்டும் என்று கேட்டதால், தாயாகிய பார்வதி கோபித்து, சந்தியில் உட்கார்ந்து என்னைப் போன்ற பெண் யாராவது வருகிறாளா பார் என்று சொல்ல, அன்றுமுதல் இன்று வரை தாய் சொல்படி சந்தியில் இருந்துகொண்டு, தாயைப்போல் உருவமுடைய பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்று சொன் னார்கள். ஆனால் சில இடங்களில் ஒருமுகம் உடையவராயும், சில இடங்களில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து முகங்களையுடையவ ராயும், சில இடங்களில் தொடையில் ஒரு பெண்ணையுடையவ ராயும், சில இடங்களில் இருபுறமும் இரு மனைவிகளையுடையவ ராயும், சில இடங்களில் இவர் பெண்முகம் உடையவராயும் விளங்குகிறார். சக்தி கணபதி என்ற பெயரை உடைய கணபதி ஒருவர் சில இடங்களில் காணப்படுகிறார். அவர் சிவப்பு நிறம் உள்ளவராயும், அருகில் பச்சை நிறமான ஒரு தேவியை உடையவ ராயும் இருக்கிறார். லட்சுமி கணபதி என்பவர் அமுதப் பிரவாகம் போன்ற நீலத் தாமரைப் பூவை ஏந்திய இருபெருந் தேவிகளை இருபக்கங்களிலும் வைத்துக்கொண்டு இருக்கிறார். ஏரம்ப கணபதி ஐந்து முகமும், துவிமுகக் கணபதி இரண்டு முகமும், மும்முகக் கணபதி மூன்று முகமும் உடையவர். சுசீந்தரத்திலும், வடஇந்தியா வில் உள்ள ஜபால்பூர் அருகேயுள்ள பீராகேட்டிலும் பெண்வடிவ முள்ள கணேசனிகள் காட்சி அளிக்கிறார்கள். மதுரை மீனாட்சி கோயிலில் யானை முகமும், இரு தனங்களும், புலிக்கால்களும் உடைய வியாக்ரம விநாயகர் காணப்படுகிறார். ஏரம்ப கணபதி அபயவரதமாகிய கைகளை உடையவர். பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் இவற்றைத் தாங்கிச் சிங்க வாகனத்தில் செல்வார். மயூரேச கணபதி, ஒருநாள் தன்னை வணங்கிய முனிகுமாரர்களை எமன் பிடிக்க முயலும்போது மயில்வாகனத்தில் ஏறிச் சென்று எமனை உதைத்துக் குழந்தையை மீட்டாராம். எனவே சிங்க வாகனத்திலும், மயில் வாகனத்திலும் இருக்கும் கணபதி வடிவங்கள் தமிழ்நாட்டில் உண்டு. அத்தகைய கணபதி வடிவங்களின் போட்டோக்கள் என்னிடம் பலவுண்டு. கணபதி இவ்வாறே கரங்களிலும், மகுடத்தி லும், நிறத்திலும் ஆயுதங்களிலும் பல மாற்றம் உடையவராய் இருக்கிறார். அதே போல் பல இடங்களிலும் தாமரைப்பூவிலும் இருக்கிறார். திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து வெளியான கணபதி என்னும் நூலில் தருண கணபதி, ஊர்த்துவ கணபதி, துவிஜ கணபதி, ஏகாட்சர கணபதி, உச்சிஷ்ட கணபதி போன்ற வடிவங்களைப் பத்ம பீடத்தின்மீதும், பாலகணபதி, சித்தி கணபதி, சக்தி கணபதி, திருவாரூர் மூலாதாரக் கணபதி முதலிய பிள்ளையார்களைச் செந்தாமரை மலர் மீதும் வீற்றிருப்பவர்களாக வண்ணப் படங் களில் வெளியிட்டிருப்பதிலிருந்து பேழை வயிற்றையுடைய யானை முகக் கடவுளும் தாமரையை விடவில்லை என்றால், தாமரையின் மகத்துவம் ஒருவாறு விளங்கக்கூடியதாகுமென்று எண்ணுகிறேன். எல்லாக் கணபதிகளையும் அறிந்திருந்தாலும் தாமரை மலர்மீது வீற்றிருக்கும் கணபதியைப் பெரும்பாலான மக்கள் கண்டிருக்கமாட்டார்கள். சக்திக் கணபதி சிவந்த நிறம் உடையவர். பச்சை நிறப் பாவையைப் பக்கத்தே வைத்திருப்பார். கணபதியும் காதலியும் ஒருவர் இடுப்பில் மற்றவர் கரங்கள் இருகத் தழுவிக்கொண் டிருக்கும் காட்சி அழகாக இருக்கும். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய கரங்களுடன், அபய கரமும் உடையவர். இவர் செந்தாமரை மீது அமர்ந்து கொண்டு இடது துடைமீது தேவியை வைத்துக் கொண்டிருப்பார். ஏகாட்சரக் கணபதி சிவப்பு நிறம் உடையவர். செம்பட்டு அணிந்து செம்மலர்களைப் புனைந்திருப்பார். பிறைமுடியார், முக்கண்ணர், குறுந்தாளர், குறுங்கையார், மாதுளம் பழம், பாசம், அங்குசம், வரதம் ஆகியவற்றைத் தாங்கிய கரங்களையுடையவர்; பதுமாசனத்தில் வீற்றிருப்பவர். மும்முகக் கணபதி வலக்கையில் கூரிய அங்குசம், கட்சமாலை, வரதம் இவைகளை உடையவர். இடக்கையில் பாசம், அமுத கலசம், அபயம் இவைகளை உடையவர், இவர் பொற்றாமரையாசனத்தில் நடுப் பொகுட்டில் மூன்று முகங்களோடு எழுந்தருளியிருப்பார். பூப்போன்ற சிவந்த மேனியை உடையவர். மூலாதாரக் கணபதி என்று யோக சாதிரங்களில் ஒரு கணபதி கூறப்படுகிறார். யோகநிலையில் மூலாதாரம், சுவாதிட்டனம், மணிபூரம், விசித்தி அநாகதம், ஆக்ஞை என்று ஆதாரங்கள் குறிப் பிடப்பட்டுள்ளன. அவற்றுள் மூலாதாரம் முக்கோண வடிவமாகப் பாலுணர்த்தும் குறிக்குக் கீழும் குதத்திற்கு மேலும் இருக்கும். அதில் நான்கு இதழ்களோடுகூடிய தாமரை உள்ளது. அதன் நடுவில் ஆதிதேவதையாகக் - குண்டலி சக்தியை நடத்துபவராக இருப்பவர் மூலாதாரக் கணபதி. கணபதி தாமரையிலே இருப்பதுமட்டுமல்ல; அவரை உபாசிப்பவர்கள் தாமரை வடிவமுள்ள யந்திரங்களில் மந்திரங்களை வரைந்து தாமரை மலர் தூவி உபாசித்துக் கணபதியின் அனுக் கிரகத்தைப் பெற்றுவருவதும் கமலத்திற்கும் கணபதிக்குமுள்ள தொடர்பை ஒருவாறு உணர்த்தும். 6. தமிழ் முருகன் ஆரியர் தெய்வமானான் முருகன் முருகன், பிள்ளையாரைப்போல், பிரமனைப்போல் ஆரியர் தெய்வமா? அல்லது அன்னிய நாட்டிலிருந்து தோன்றித் தமிழ் நாட்டில் பிரஜா உரிமை பெற்ற தெய்வமா? என்ற ஐயம் எவருக்கும் எழவேண்டிய அவசியம் இல்லை. முருகன் என்னும் வார்த்தையே தூய தமிழ்ச் சொல். அஃதோடன்றி, பண்டைய தமிழர்கள் வகுத்த நானிலத்தில் ஒன்றான குறிஞ்சிநிலக் கடவுள். முருகன் என்னும் பெயர் முருகு என்னும் தமிழ் மொழி அடிப்படையாகப் பிறந்தது. முருகன் என்னும் வார்த்தைக்கு வாசனை, அழகு, இளமை என்ற பொருள் உண்டு. எனவே, முருகன் பூவிலே பிறந்தான் என்றால் நம்மில் பலருக்கு ஆட்சேபம் இராது. ஆனால் தாமரை மலரிலே பிறந்தான் என்றால் நாம் ஆச்சரியப்படுவோம். ஆனால் தமிழகத்தின் தனிப்பெருந்தெய்வமாக விளங்கிய முருகன் தாமரை மலரில் பிறந்தோன் என்பதற்குப் பழைய தமிழ் இலக்கியங்கள் கூடச் சான்று தருகின்றன. மென்மை வாய்ந்த ஆறுமுகங்களையும், மத்தளம் போன்ற பன்னிரு தோல்களையும், உதய சூரியனது நிறத்தினை ஒத்த அழகினையும் உடையவனாய்த் தண்டாமரை மலரில் தமிழர் கண்ட முருகன் தோன்றினான் என்ற பொருள் தரும் பாடல் பரிபாடலில் உள்ளது. அது வருமாறு; மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள் ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை மிகவும் உயர்ந்து ஒப்பற்று விளங்கும் இமயமலையின் கண் உள்ள நீலநிறமான தருப்பைப் புற்கள் வளர்ந்துள்ள, சரவணப் பொய்கை என்னும் பசுமையான சுனையில் தாமரை மலராகிய படுக்கையில் முருகன் பிறந்தான் என்று மற்றொரு பரிபாடல் பாட்டு மிகத் தெளிவாக விளக்குகிறது. அது வருமாறு: நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே நிவந்தோங்கு இமையத்து நீலப் பைஞ்சுனைப் பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல். முருகன் தமிழர் கண்ட தகைசான்ற இயற்கைத் தெய்வம். சுப்பிரமணியன், கந்தன், சரவணன் முதலிய பேர் கொண்ட தெய்வம் ஆரியர் தெய்வம். இடைக்காலத்தில் முருகனாகிய தமிழ்த்தெய்வத்தையும், கந்தபுராணக் கதைகளில் கதாநாயகனாகக் காட்சி தரும் முருகனையும் ஒன்றாக இணைத்துள்ளனர் என்று கூறுவாரும் உளர். ஆதியில் கடல் தோன்றியது; கடலினின்று மலைகள் எழுந்தன; அப்பால் மக்கள் தோன்றினர். மக்கள் கடலோரத்திலும் காடுகளி லும் மலைகளிலுமாக வசித்தனர். மலைகளில் வாழும் மக்கள் மணத்தைக் கண்டு மகிழ்ந்தனர்; மலரின் அழகைக் கண்டு மனம் பூரித்தனர். நறுமணம் நல்கும் நன்மலரினின்று முருகு (வாசனை) வருவதைக் கண்டு இன்பங் கொண்டனர்; இளமை கண்டனர்; உள்ளத்தில் அமைதியுற்றனர். இத்தகைய உயரிய இன்ப உணர்ச்சியை ஊட்டும் முருகை - மணத்தை - நமது கட்புலனுக்குத் தோன்றாத ஒரு சக்தி தோற்று வித்துக்கொண்டிருக்கிறது. முருகை உண்டுபண்ணும் சக்தியை முருகன் என்று பண்டைய தமிழ்மக்கள் போற்றினர். அப்பால் நாளடைவில் முருகன் முக்கண்ணன் மகனாகிய சேயோன் என்றும் புகழப்பட்டான். தொல்காப்பியம் என்னும் பழம்பெருந் தமிழ்நூலில், மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் என்று கூறப்பட்டிருக்கிறது. சேயோன் என்ற பதத்திற்கு மகன் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அப்பால் சேயோன் மயில் வாகனன் ஆகவும், வேலனாகவும், செவ்வேள் ஆகவும் பரிண மித்துள்ளான். குறிஞ்சிநில மக்கள் கண்ட முருகன் மருதநிலத்தில் பெரிதும் காணப்படும் தாமரை மலரில் ஏற்றப்பட்டிருக்கிறான். நானிலத்தில் மருதநிலமே செல்வங் கொழிக்கும் செழுநில மாயும், நாகரிக மக்கள் வாழும் நகரங்களாயும் இருந்ததால் குறிஞ்சி நிலத் தெய்வம், மருதநிலத் தெய்வமாகிய முக்கண்ணன் மகனாக ஆக்கப்பட்டுள்ளான் போலும். தமிழ்நாட்டுத் தெய்வங்களும், மறைகளும் தென்னாட்டிலே தான் பிறந்ததாகச் சைவர்கள் கூறிக்கொள்கிறார்கள். முருகன் பிறந்தது குற்றால மலையில்; தமிழ் பிறந்தது பாபனாசத்திற்கருகேயுள்ள பொதிகை மலையில்; தமிழ் மறைகள் பிறந்தது அதன் அணித்தேயுள்ள மகேந்திர மலையில் என்று கூறப் பல தேவார, திருவாசகச் சான்றுகள் உண்டு. ஆனால், தமிழ்த் தெய்வம் முருகன் இமயமலைக்கு எப்படிக் கொண்டுபோகப்பட்டான் என்பது பலருக்குப் புலப்படவில்லை. தென்னாட்டில் ஏற்பட்ட கடல்கோளுக்குப்பின் தமிழர்கள் இமயமலைக்கு ஏற்றப்பட்டிருக்கலாம், அல்லது வெளிநாட்டி னின்று ஆரியர்கள் வந்து தமிழர்களைத் தென்னாட்டிற்கு விரட்டி யடித்துவிட்டு முருகனை விரட்டாது, அவனைக் கார்த்திகேயனாக, பாலசுப்பிரமணியனாக, ஆறுமுகனாக, கந்தனாக ஆக்கிக் கொண் டிருக்கலாம். சரவணப் பொய்கையில் சிவபெருமானுடைய கண்களி லிருந்து ஆறுபொறிகள் தோன்றிச் சரவணப் பொய்கையில் உள்ள தாமரை மலரில் விழுந்து ஆறுகுழந்தைகளாக மாறின. அதைப் பார்வதிதேவி ஒன்றாகச் சேர்த்து எடுத்துத் தழுவினார். அப்பொழுது ஆறுமுகங்களும், ஓர் உடம்பும், பன்னிரண்டு கரங்களுமுள்ள ஆறுமுகம் அவதரித்தான். இவன் சரவணப் பொய்கையில் உள்ள தாமரை மலரில் தோன்றியதால் சரவணத்துதித்தோன் என்று கூறப்படுகின்றது. கச்சியப்ப சிவாச்சாரியரால் பாடப்பட்ட கந்தபுராணத்தில் இந்த ஆறுமுகன் அவதாரத்தைக் கூறும் பொழுது, மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொ ணாம னிறைவுடன் யாண்டு மாகி நின்றிடு நிமல மூர்த்தி யறுமுக வுருவாய்த் தோன்றி யருளொடு சரவ ணத்தின் வெறிகமழ் கமலப் போதின் வீற்றிருந் தருளி னானே என்றும் முண்டக மொன்றில் வைகும் முருகனைச் சுற்றிச் செங்கேழ் வண்டுள கமலக் காடு வான்புகன் றடத்தி னிற்ற வண்டர்கண் முதல்வ வோர்பா லன்றியெம் மெல்லாம் பீடங் கொண்டருண் முறையி னின்று நோற்றிடுங் கொள்கைத் தன்றோ என்றும் பல பாடல்களில் முருகன் முண்டகப் (தாமரை) பூவில் பிறந்தோன். தாமரைப்பூவில் உறைவோன் என்று பாடியுள்ளார். பழந்தமிழ் இலக்கியமாகிய பரிபாடலில், முருகப் பெருமானே! நின்னைப் பெற்ற வரிசைவரிசையான மெல்லிய இதழ்களையுடைய தாமரை மலர் மின்னலையொத்து விளங்கும் உதிராத உறுதியான இதழ்த் தொகுதிகளையுடையது. அத் தாமரையைத் தன்னகத்தே கொண்டதும், என்றும் வற்றாததும், ஒரே நிலையாக இருப்பதுமான சரவணப் பொய்கையே இமய மலையிலுள்ள சுனைகளிளெல்லாம் சிறந்ததாகும். ஆனால், திருப்பரங்குன்றத்துச் சுனைநீர் சரவணப் பொய்கையோடொப்பதாகும் என்று எண்ணப்படுகிறது. இது பரிபாடலில், இமயக் குன்றிற் சிறந்து நின்னீன்ற நிறையிதழ்த் தாமரை மின்னீன்ற விளங்கினர் ஊழா ஒருநிலைப் பொய்கையோ டொக்கும்நின் குன்றின் என்று கூறப்பட்டுள்ளது. இவைகளினால் ஐயமறத் தாமரைப்பூ முருகனுக்கும் உரித்தானது என்று நன்கு தெரிகிறது. அதற்குப் பழம் பேர் இலக்கிய ஆதரவுகளும் உள்ளன. சரவணன், அறுமுகன், தேவகுமாரன், விசாகன் என்று வடமொழிப் பெயர்கள் வைத்து இவனும் முருகனும் ஒன்றேயென்று புராணங்கள் எழுதிவிட்டனர். ஆனால் இன்று தமிழ்மக்கள், முருகனும் சுப்பிரமணியனும் ஒன்று என்றே நம்புகின்றனர். முருகன் இமயமலையில் சரவணப் பொய்கையிலுள்ள தாமரை மலரில் அறுமுகனாய்ப் பிறந்தான் என்று எண்ணுகின்றனர். அவர்கள் பழைய இலக்கியங்களில் கூட இப்புராணக் கூற்றுகள் ஏறியிருக்கின்றன. சரவணத் துதித்தோன் அறுமுகன் விசாகன் குகன்சேய் செவ்வேள் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன. மேலும், நாரி யொருத்திக் கிடப்பாக நல்கும் பெருமா னுதல்விழியி னண்ணும் பொறியைப் பவனணங்கி நடுங்கிச் சுமந்து கங்கையெனும் வேரிப் புனலிற் புகுத்தவன் வெம்பிப் பயந்து சரவணத்தின் மீதி லிடமூ விருகுழவி விரைந்து பிறந்தங் கழுதுவிம்மி மூரி நெருப்பி னுடன்மடவார் முலையுண் டுறங்கி யெழுந்திருந்து முளரிப் பூவிற் றவழ்ந்திடஐ முகத்தோ னுடன்வந் துமைகரத்தால் வாரி யணைக்கத் திரண்டதிரு வடிவத் தொருவன் வருகவே என்று கச்சியப்பர் பக்திப் பரவசம் கொண்டு பாடியுள்ளார். சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணினின்று வீழ்ந்த அக்கினிப் பொறிகளை அக்னி பகவான் ஏற்றுக்கொண்டு போய்ச் சரவணப் பொய்கையில் விட்டார்; அவ் ஆறு பொறிகளும் சரவணப் பொய்கையில் உள்ள தாமரை மலரில் வீழ்ந்தன; ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின; இந்த ஆறு குழந்தைகளும் ஆறு தலைகளும், ஓர் உடலுமுள்ள ஆறுமுகனாக மாறின என்பதை இப் பாட்டு வலியுறுத்துகிறது. ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தி ஸ்ரீ ஹயக்ரீவ மூர்த்தி என்று அழைக்கப்படும் பரிமுகக் கடவுள் பிற்காலத்தில் எழுந்த ஆரியக் கடவுளாகும். இவர் கரிமுகக் கடவுளாகிய கணபதியைப் போல் வைணவர்கள் கண்ட குதிரை முகக் கடவுளாகத் தெரிகிறது. கடலிலே வேதங்களை ஒளித்துவைத்த ஓர் அரக்கனைக் கொல்ல மகாவிஷ்ணு மனித உடலும், குதிரை முகமும் தாங்கி இந்நிலவுலகில் அவதரித்து வேதங்களை மீட்டுக் கொண்டு வந்த தாகப் பாகவதம் கூறுகிறது. தென் இந்தியப் பிராமணர்கள் இல்லங் களில் இத் தெய்வம் உண்டு. வட இந்தியாவில் உள்ள ஆரியர்கள் கல்வி கற்க ஆரம்பிக்கும் போது ஹயக்ரீவ மூர்த்தியை வணங்குகின்றார்கள். ஹயக்ரீவ மூர்த்தி கல்வி, ஞானம், கலை இவற்றின் வடிவின ராக, உலகைப் படைத்துக் காப்பாற்றுகிறவர் என்று வடமொழிச் சுலோகங்கள் கூறுகின்றன. பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம் பரிமுகமா யருளிய பரமன் என்று திவ்வியப் பிரபந்தம் கூறுகிறது. இவர் கல்விக்கு அதிதேவதை என்று வைணவப் பெரி யோர்கள் கூறுகின்றார்கள். இந்த ஹயக்ரீவ மூர்த்தியை வேதாந்த தேசிகர் பெரிதும் ஆராதித்து வந்தாராம். இப்பொழுது இது மைசூரில் உள்ள ஸ்ரீபரகால மடஜீயர் சுவாமிகளால் ஆராதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஹயக்ரீவ மூர்த்தி மனிதமுகம் படைத்த தேவியுடன் தாமரை மலர்மீது (இருவிதத் தாமரைகளில்) வீற்றிருப்பது தாமரை மலரின் மகத்துவத்தைப் பெரிதும் எடுத்துக்காட்ட உதவுகிறது. காயத்திரி தேவி தமிழர்களில் பலருக்கு காயத்திரி தேவியைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் நண்பர் திரு. சிதம்பர.ராமலிங்கம் பிள்ளை, திரு. வையாபுரிப் பிள்ளை போன்றவர்களுக்குத்தான் இத் தெய்வத்தைப்பற்றி நன்கு தெரிந்திருந்தது. இவர்கள், காயத்திரி தேவி நமது தெய்வம் என்று அவளை நாடோறும் பூசித்தவர்கள். ஆனால் இத் தேவியைப்பற்றி பிராமணர்கள் - சிறுவர்கள் உட்பட - அனைவரும் அறிவர். ஒருவர் கிறிது சமயம் புக விரும்பினால் முதலில் ஞானநானம் செய்யப்படவேண்டும்; ஒருவர் இலாமிய சமயம் புக விரும்பினால் அவர் கலிமா சொல்லவேண்டும்; சைவ சமயம் புக ஒருவர் விரும்பினால் அவர் முதலில் சிவதீக்கை பெறவேண்டும்; அதுபோல் சுமார்த்தமதம் புகுவோர் பூணூல் தரித்துக் காயத்திரி ஜெபம் செய்யவேண்டும். இந்த சுமார்த்த மதத்தில் பார்ப்பனரைத் தவிரப் பிறரை அனுமதிக்கமாட்டார்கள். ஆரிய சமாஜத்தினர், எந்த மதத்தவராய் இருந்தாலும், எந்தச் சாதியினராய் இருந்தாலும் தம் மதத்திற்கு வந்தால் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆரிய சமாஜம் புகுவோர்க்குப் பூணூல் அணிவித்துக் காயத்திரி ஜெபம் சொல்லிக்கொடுப்பார்கள். அவர்கள் நாடோறும் காயத்திரி மந்திரத்தையே வேத மாதாவாக - வேதத்தின் தாயாக - எண்ணி வழிபட வேண்டும். இந்தக் காயத்திரி தேவியை வணங்கிக் காயத்திரி மந்திரத்தை நாடோறும் உச்சரிப்பவன் நல்ல பிராமணனாய்விடுகின்றான் என்று வேதங்கள் அறிவுறுத்துகின்றனவாம். நான்கு வேதங்களையும் கற்றிருந்தாலும், காயத்திரியை வணங்காதவர்கள் இழிகுலத்தோராய் விடுகின்றனர் என்று வேத வியாசர் மொழிந்துள்ளார். இக் காயத்திரி தேவிக்கு முத்துப்போன்று ஒளிரும் முகம் ஒன்று; பவளம்போல் பிரகாசிக்கும் முகம் ஒன்று; பொன்போன்று பேரொளி பரப்பும் முகம் ஒன்று; நீல வானத்தை நிகர்த்த முகம் ஒன்று; தூய வெள்ளைக் காந்தி வீசும் முகம் ஒன்று. இவ்வாறு அழகிய ஒளிவீசும் ஐந்து முகம் உடைய தேவி - இக் காயத்திரி தேவி. இவளுக்குப் பத்துக் கரங்கள் உண்டு. இவள் மக்களுக்கு, விரும்பும் வரம் அருளுகிறேன், அருகில் வா என்று அழைக்கும் கை ஒன்று; அஞ்சேல் என்று அபயம் அளிக்கும் கை ஒன்று; அடியார்களை அடக்கியாள்வதற்கு ஈட்டி வைத்திருக்கும் கை ஒன்று; பகைவர்களைப் பாசத்தால் பிணிக்கும் கை ஒன்று. ஆக்குந் தொழிலை உடையவள் என்பதையும், அழிக்குந் தொழிலை உடையவள் என்பதையும் உணர்த்த முறையே இரு கரங்களும் இரு தாமரை மலரை ஏந்தி இருக்கின்றன. சங்கு, சக்கரம், கபாலம், கதை முதலியவற்றை ஒவ்வொரு கையிலும் தாங்கி இருக்கின்றன. இவள் தன்னை வழிபடுவோர் இருதய கமலங்களில் எப்போதும் வீற்றிருப்பாள் என்பதை உணர்த்த, இவள் செந்தாமரை மலர்மீது வீற்றிருக்கின்றாள். சாரதா தந்திர தியானத்தில் இக்கருத்துகள் நன்கு பிரதிபலிக் கின்றன. உலகில் தாய்போல் பல மாதர்கள் இருப்பினும், நம்மை ஈன்ற அன்னையின் அன்பும், அருளும், பெருமையும் தனித்து விளங்குவது போல், வேதங்களில் பல மந்திரங்கள் இருப்பினும் அவை வேத மாதாவான காயத்திரி தேவிக்கு நிகராகா. (1) கிரியை (நற்காரியம்) ஒன்றும் செய்யாதவன், (2) மூர்க்கன், (3) தொழுநோய் கொண்டவன், (4) மனம்போல் ஆசரணை கொண்டவன் - ஆகிய நால்வருக்கும் வாழ்நாள் உள்ளவரை தீண்டல் காத்தல் தகும் என்று கூர்ம புராணம் கூறுகிறது. இத்தகைய பாப ஜென்மம் பெற்றவர்கள்கூட, ஞானிகள் உபதேசத்தைப் பெற்றுக் காயத்திரியைப் பதினாயிரம் முறை ஜபம் செய்தால் அவர்கள் பாபங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து விமோசனம் அடைவார்கள் என்று வியாசர் கூறுகிறார். காயத்திரிதான் தம் புத்திரனைப் பரிசுத்தம் செய்யும் தாய் போன்ற மகாதேவி என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது என காயத்திரி மகிமை என்ற வடமொழி நூல் கூறுகிறது. (காயத்திரி மகிமை - ஆசிரியர்: பண்டிட் ஸ்ரீ டி. கே. ராமபத்ர சர்மா) காயத்திரி தேவி தமிழர்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத ஆரிய தெய்வமாகும். என்றாலும் அவள் தாமரையோடு நெருங்கிய தொடர்புகொண்டவளாகக் கருதப்படுகிறாள். பௌத்த சமயம் சைவம், வைணவம், சுமார்த்தம் முதலிய சமயங்களைப்போல் பௌத்த சமயமும் தாமரையைச் சிறப்பித்துக் கூறுகிறது. சிறப்பாகக் கூறினால் இந்த மூன்று சமயங்களைவிடப் பௌத்த சமயத்தில்தான் தாமரை தலையாய இடத்தைப் பெற்றிருக் கிறது என்று சொல்லலாம். சிவன், பிரம்மா, விஷ்ணு முதலியவருக்குப்போல் புத்தருக்கும் தாமரை மலர் மிகவும் உவப்பானதாகத் திகழ்கிறது. ஏனைய தேவர்களைப்போலக் கமல மலர்மீது பத்மாசனத் திலே புத்தர் பெருமான் வீற்றிருக்கும் ரீதியில் அவரது படிமங்கள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன. மற்றைய சமயக் கோயில்களைவிடப் புத்தருடைய கோயில் களில்தான் தாமரை மலர் கல்லில் எண்ணற்ற வித்தியாசமான வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளது. இங்குப் பிரசுரிக்கப்பட்ட தாமரை வடிவங்களில் பல பௌத்த ஆலயங்களில்கூடக் காணப்படுகின்றன. மேலும், பௌத்த மதச் சின்னங்களில் எல்லாம் தாமரை கண்டிப்பாகத் திகழும். பௌத்த சமயத்தின் தெய்வமாக - இல்லை - ஞானகுருவாக விளங்கும் புத்த பகவான், பத்ம மலர்மீது பத்மாசனத்தில் அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்து, மக்களின் வழிகாட்டியாகவும், ஞான ஒளி யாகவுமிருந்து மக்களை மெய்ஞ்ஞான இன்ப சாகரத்திற்கு - நிர்வாணத்திற்கு - அழைத்துச் செல்கிறார் என்று பௌத்தத் துறவிகள் மொழிகின்றார்கள். சாஞ்சி, பார்குத் போன்ற பௌத்தக் கோயில்களில் காணப் படும் கல்தூண்களிலும், படிகளிலும், உத்திரங்களிலும், கூரை களிலும் விதவிதமான தாமரை வடிவங்களே தீட்டப்பட்டுள்ளன. ஓவியங்களிலெல்லாம் தாமரை வடிவங்களே ஒளி செய்கின்றன. பௌத்தர்களால் போற்றப்படும் பத்மா என்னும் தேவி தாமரை வடிவமாகவே காட்சி அளிக்கின்றாள். அத்தேவியின் திருஉருவம் பௌத்தக் கோயில்களில் காணப்படும் சிறந்த சிற்ப வடிவங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பௌத்தர்களின் (பவித்திர நூலாகிய) தாமரைச் சூத்திரமாகிய நல்லறம் என்ற நூல் ஒரு சிறந்த இலக்கியமாகும். ஆசியாவிலுள்ள பெரும்பாலான பௌத்தர்கள் போற்றும் அரும்பெரும் கருவூலமாகும். மகாயான பௌத்த சமயம் என்று கூறப்படும் பௌத்த சமயப் பிரிவினரின் மூலாதார இலக்கியமாகும். நேபாளத்திலும், திபேத்திலும் இன்றும், ஓம்: மணிபத்ம ஹூம் என்ற தாமரை மந்திரம் ஒவ்வோர் இல்லத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவலோகீதீவர பத்மபாணி (கையில் தாமரை மலரை வைத்திருக்கும் பௌத்த உருவம்) புத்தரின் சிறந்த பக்தர் மட்டு மல்லர்; பௌத்த ஞானிகளில் சிறத்தவருமாவார். பாலி மொழியில் வரையப்பட்ட பௌத்த இலக்கியங்கள் பலவற்றிலும் பதும மலர் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. தாமரை பௌத்தத் துறவிகளின் வாழ்க்கையில் சிறந்த சீலத்தை யும், உயர்ந்த ஒழுக்கத்தையும், ஆழ்ந்த அன்பையும் உணர்த்தும் ஒப்பற்ற அடையாளமாகக் கருதப்படுகிறது. புத்தர் பெருமான் லலித் விதாராவில் கூறுவதாவது; தாமரை தண்ணீரில் தோன்றியது. தண்ணீரிலேயே வளர்ந்து தண்ணீரிலே வாலிபம் பெற்றுத் தண்ணீருக்கு மேல் தலையைத் தூக்கிக்கொண்டு தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆனால் அது தண்ணீரி னால் நனைக்கப்பட முடியாதது. தண்ணீரினின்று தனித்து வேறாகவே நிற்கிறது. அதேபோன்று, உலகிலே தோன்றிய மக்களும் உலக பந்தத் திற்கு உட்படாது மெய்ஞ்ஞான நெறியை நாடி வாழவேண்டும். தாமரை, மக்களின் வாழ்க்கைக்கு நல்ல எடுத்துக் காட்டாக இலங்குகிறது என்று பௌத்த துறவிகளும், அறவோர்களும் எடுத்துக்காட்டுகின்றார்கள். சேற்றில் முளைத்த செந்தாமரை தன் அழகால், சுத்தத்தால், நெறியால் தெய்வங்களுக்கு உவப்பான மலராக உயர்ந்துள்ளது; மக்கள் உள்ளத்தை வசீகரிக்கும் அற்புதப் பூவாகப் போற்றப் படுகிறது. அதன் அரிய சக்தி, விஞ்ஞானிகளுக்கும் எட்டாத அற்புத மாக இருக்கிறது. இலங்கையில் பௌத்தர்கள் ஒவ்வோர் ஆண்டும் இரு பெருவிழாக்களைக் கொண்டாடிவருகின்றார்கள். அவைகளில் ஒன்று, போசன் பண்டிகை; மற்றொன்று, விசாகவிழா. இவ்விரு பெருவிழாக்களிலும் எண்ணற்ற தாமரை மலர்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. இலங்கையிலுள்ள புஷ்பதான சங்கம் என்ற ஒரு பெரிய தாபனம் நாடெங்குமுள்ள தன் கிளைச் சங்கங்கள் மூலம் லட்சோபலட்சம் தாமரை மலர்களைப் பறித்து, பத்திரமாகப் பாதுகாத்து, விழாவிற்கு வரும் பௌத்த சமய பக்தர்களுக்குப் பரிசாக அளிக்கிறது. பக்தர்கள் பத்மமலர்களைப் புத்தர்பெருமானின் பாத கமலங்களில் அருச்சித்து அகமகிழ்கின்றனர். பௌத்த சமயிகள் தங்கள் புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்லும்பொழுது வழியெங்கும் இருமருங்கினும் தோரணங்கள் கட்டிக் கமல மலர்களால் அலங்கரிப்பர்; இடை யிடையே போடப்பட்டிருக்கும் அழகிய பந்தல்களிலும், மேடை களிலும் தாமரை மலர்களால் அழகுபடுத்துவார்கள். இவைகள் எல்லாம் கண்கொள்ளாக் கவின்பெறு காட்சிகளாகும். மங்கோலியாவில் உள்ள பௌத்தர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னுள்ள எண்ணற்ற தாமரைக் காய்களைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்கள். தாமரைக் காய்களை ஜெப மாலையாக உபயோகிப்பதும் உண்டு. ஜப்பானிலும், ஜாவாவிலும், தாய்லந்திலும், வியட்னாமிலும் உள்ள பௌத்தத் துறவிகளும், விஞ்ஞான விற்பன்னர்களும் தாமரை வித்து, தாமரை மலர், தாமரை இலை, தாமரைத் தண்டு, தாமரைக் கிழங்கு முதலியவற்றைத் தனித்தனியே எடுத்து ஆராய்ந்து அவற்றின் சிறப்புகளைப்பற்றியும், அதனால் மக்கள் அடையும் நன்மைகளைப் பற்றியும் பல நூல்கள் யாத்துள்ளார்கள். அருகக் கடவுள் சைவம், வைணவம், சமார்த்தம், பௌத்தம் போன்று சமண சமயத்தில் தாமரை தனியிடம் பெற்றுள்ளது. இந்தச் சமண மதம் ஒருகாலத்தில் தமிழ்மக்களின் உள்ளங் களைக் கவர்ந்து அரசாங்க மதமாய் ஆட்சிபுரிந்து வந்தது. திலகவதி அம்மையாரின் தீவிர முயற்சியால், அப்பர் பெரு மானின் அஞ்சாத் தொண்டால், சம்பந்தப் பெருமானின் சலியாப் பணியால் சமண மதம் தமிழகத்தைவிட்டு அறவே அழிக்கப் பட்டுத் துடைக்கப்பட்டுவிட்டது. தேசிய மதமான சைவம் அரசாங்க மதமாய், தமிழ் ஆட்சி மொழியாய் எழுந்தது. மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பெரிதும் சைவம் துளிர்த்தது; சமணம் அழிந்தது. சமண சமயத்தில் கடவுள்போல் போற்றப்படுபவர் அருகன். இந்த அருகக் கடவுள் மிக்க அன்புடன் நேசிப்பது அம்புய மலர் களாகும். எனவே அருகர்கள் பூசிப்பதற்கு அம்புய மலர்களையே பெரிதும் விரும்புகிறார்கள். சமணர்கள் அருகக் கடவுளைக் கமல வாகனன், கமல ஊர்தி, அருகன் ஊர்தி, அம்புயம், பூமிசை நடந்தோன் என்றெல்லாம் பாடிப் போற்றிப் புகழ்கின்றனர். அருகக் கடவுளைத் தாமரை மலர்மேல் நடந்த செங்கமல மலர்போன்ற செவ்விய சிவந்த திருவடிகளையுடையவன் என்று வருணிக்கிறது சமண சமய புராணங்கள். தமிழ்நாட்டிலுள்ள அறிஞர்கள் போற்றும் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாக மதிக்கப்படுவது சீவக சிந்தாமணி நந்தாப் பெருமை வாய்ந்த சிந்தாமணி, காய்களிற் றிடைமருப்பில் கவளம்போன் றேமாராக் கதியுட் டோன்றி ஆய்களிய வெவ்வினையின் அல்லாப்புற் றஞ்சினேன் அறிந்தார் கோவே வேய்களிய வண்டறைய விரிந்தலர்ந்த தாமரையின் விரைசேர் போதின் வாயொளியே பெறநடந்த மலரடியை வலங்கொண்டார் வருந்தார் போலும் என்று கூறுகின்றது. சொன்னயமும், கவி நயமும் பொலிந்து விளங்கும் சூளாமணி என்னும் தமிழ் இலக்கியத்தில் தோலா மொழித்தேவர் என்னும் சமண சமயப் புலவர், மணங்கமழும் தாமரையின் மதுத்திவலை கொப்பளித்து மதர்த்து வாமன் அணங்கிவர் சேவடியின் அழகெழில் ஓரோர் ஒளிபருகி அலரும் போலும் என்று எழில் சொட்டச் சொட்டப் பன்னலமும் திகழ எடுத்துக் காட்டுகின்றார். அம்புயம் அருகக் கடவுளின் அழகிய ஆசனமாகும். கவிநயம் மிகுந்து விளங்கும் திருவந்தாதியில், தாமரையே எத்தவங்கள் செய்தாய்! சகம்மூன்றினுக்கும் தாமரைசே யென்று சாற்றும்போலும் முச்சத்திரத்துத் தாமரைசேர் திருவைத் திருமார்பில் தரித்தவர்செந் தாமரையேய் சரணம் தலைமேற்கொண்டு தங்குதற்கே என்று தாமரையின் புகழ் பாடப்படுகிறது. மேலும் அருகக் கடவுள் தாமரை மலர்மீது ஏகினவன் என்று நீலகேசி என்னும் தமிழ்க் காப்பியத்தில் கூறப்படுகிறது. அது வருமாறு: பண்டா கமத்துள் பயிலாவுரை யென்று மிக்கார் விண்டீங் கிதனை வெகுளார் விடல்வேண் டுவன்யான் தண்டா மரைமேல் நடந்தான் தடந்தாள் வணங்கிக் கண்டேன் கிடந்தேன் கனவின் னிதுகண்ட வாறே அறநெறிச்சாரம் என்றும் நூலில், தாவின்று எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப் பூவின்மேற் சென்றான் புகழடியை - நாவின் துதித்தீண் டறநெறிச் சாரத்தைத் தோன்ற விரிப்பன் சுருக்காய் விரைந்து என்று அறவோன் வணக்கம் கூறுவதில் தாமரைப் பூவின் பேறு விளக்கப்படுகிறது. தமிழ் இலக்கண நூலான யாப்பருங்கல விருத்தியில், காமரு கதிர்மதி முகத்தினை சாமரை இடையிடை மகிழ்ந்தனை தாமரை மலர்புரை அடியினை தாமரை மலர்மிசை ஒதுங்கினை ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி வீடொடு கட்டினை விளங்கும் நின்மொழி என்பன போன்ற பாடல்களால், தாமரை, சமண சமயத்திலும் பெரிய இடத்தைச் சுவீகரித்துள்ளது என்பது நன்கறியக் கிடக்கின்றது. சமண சமயத்தின் முதல்வரான அருகர் தாமரை மலர்மீதுதான் நடப்பாராம். ஆகையால் அவரைப் பூமேல் நடந்தான், கமலவூர்தி என்றெல்லாம் அழைக்கிறார்கள். அருகக் கடவுள் எழுந்தருளி அறம் உரைக்கும் இடத்தைச் சமவசரணம் என்று சமண இலக்கியங்கள் கூறுகின்றன. சமவசரணத்தில் அடுக்கடுக்காக ஏழு மாடவீதிகள் இருக்கு மாம். இந்த மாடவீதிகளில் இரண்டாவதாக உள்ளது, காதிகா பூமி என்று கூறப்படுமாம். இக் காதிகாபூமி சமவசரணத்தைச் சூழ்ந்து அகழி போன்ற நீர்நிலை இருக்குமாம். இது மிக விசாலமாக உள்ளது. ஆழமாகக் காணப்படினும் முழங்காலளவுதான் நீர் இருக்குமாம். அடித்தளம் சமபூமியாய்ப் பன்னிறப் பூக்கள் மலர்ந்து அழகுறக் காட்சி அளிக்குமாம். அருகனை வணங்கச் செல்லும் அன்பர்கள் இதில் இறங்கித் தான் போகவேண்டுமாம். அருகக் கடவுளை அர்ச்சிப்பதற்காக அன்பர்கள் அல்லி, அம்புஜம் (தாமரை) போன்ற மலர்களைப் பறித்துச் செல்வார்களாம். சுருக்கமாக அருகக் கடவுளைச் சுற்றி இருக்கும் சுவர்க்க பூமியே தாமரைப்பூக்கள் நிறைந்த குளமாகக் காணப்படுகிறது. மேலும், சமணர்கள் அமைத்த கோயில்களில் எல்லாம் தாமரை மலர் கல்லில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. சமணர் களின் ஓவியங்களிலும், மரச் சிற்ப வடிவங்களிலும், காவியங் களிலும் தாமரை முதலிடம் பெற்றள்ளது. சைவ, வைணவ, சுமார்த்த, பௌத்த கடவுள்களுக்குப்போலச் சமணக் கடவுளுக்கும் தாமரை உகந்ததென்பது வெள்ளிடை மலையாய் விளங்குகிறது. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் என்று வள்ளுவர் கூறிய மெய்ம்மொழி அருகனையே குறிப்பிடுவ தாகவும், வள்ளுவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்றும் கூறும் சமண பக்தர்களும் இன்று உளர். வள்ளுவர் சமணராயினும் சரி, சைவராயினும் சரி; வள்ளுவர் மலர் என்ற வார்த்தைக்குத் தாமரை என்று பொருள் கூறுவது ஒன்றையே நாம் இங்குக் குறிப்பிட விரும்புகின்றோம். ஏனைய தமிழ் இலக்கிய கர்த்தாக்களைப்போல் வள்ளுவரும் தாமரையை விட்டுவிடாது தமது தெய்வீக நூலில் குறிப்பிட்டிருக்கிறார் என்பது ஒன்றே நாம் இங்கு உணர்வதற்குரியது. 7. இயற்கையை வென்றது செயற்கைத் தாமரை சிற்பம், தமிழர் கண்ட அறுபத்து நான்கு கலைகளில் ஓர் அருங்கலையாகும். தமிழர்களின் பண்டைய பெருமைக்கும், கலைச் சிறப்பிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இலங்குவது இக் கலை ஒன்றேயாகும். தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும், இலங்கையிலும், இந்தோனீசியாவிலும், கம்போடியாவிலும், இன்னும் எண்ணற்ற அயல்நாடுகளிலும் மதர்த்துக் கிளர்ந்து எழுந்து நின்றது தமிழர் களது சிறந்த சிற்பக் கலை. தமிழ் மக்களின் சிரத்தைக் குறை வினாலோ, காலவேற்றுமையாலோ இக் கலை கவனிப்பாரற்று வீழ்ந்து வருகிறது. இது கல்லில் வடித்த கலையாதலால் அறவே அழிந்து விடாது ஆங்காங்கு இன்னும் தலைகாட்டிக் கொண்டு நிற்கிறது. இந்தச் சிற்பக் கலை ஓர் இனத்தவரின் கலையாகக் கருதப்பட்டு நாளடைவில் அவர்களிடத்தினின்று இக் கலை மறையத் தலைப் பட்டுவிட்டது. தமிழில் வரையப்பட்ட எண்ணற்ற சிற்ப நூல்கள் சிதைந்து ஒழிந்துபோய்விட்டன. செல்லரித்த சிற்ப நூல்கள் கணக்கில் அடங்கா. இன்று நமக்கு எடுத்துக்காட்டாகக் காட்டத் தமிழில் ஒரு சிற்ப நூல்கூடக் காணவில்லை. ஈழநாட்டிலுள்ள எமது அரிய நண்பரும், கலைப் புலவரு மான க. நவரத்தினம் அவர்கள் தமிழில் சகளாதிகாரம் என்ற ஒரு சிற்பநூல் இருப்பதாகக் கூறினார். ஆனால் அந்நூல் இன்னும் என் கண்ணிற்குப் புலப்படவில்லை. சிற்பநூற்கள் அனைத்தும் வடமொழியில்தான் உள்ளன. இன்று அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. அது தமிழர்களின் நல்லகாலம் என்றே கருதவேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்றபின், அழிந்துகொண்டிருக்கும் தமிழர் கலைகள் புத்துயிர்பெற்று எழ ஆரம்பித்திருக்கின்றன; சிற்பமும் சிறிது தலைதூக்க ஆரம்பித்துள்ளது. நிற்க, சிற்பநூல் வல்லுநர்கள் சிற்ப இலக்கணத்தில் ஓர் உருவத்தைக் கல்லிலோ, மரத்திலோ, சுவரிலோ, வேறு பொருள் களிலோ தீட்டும்பொழுது மூன்று விதிகள் கவனிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதாவது, (1) அநுகாரகம், (2) வியஞ்சகம், (3) சாந்தசிகம் என்பதாகும். (1) அநுகாரகம் என்றால் ஒரு பொருளின் இயற்கைத் தோற்றத்தை உள்ளதை உள்ளவாறே உருவாக்கிக் காட்டுவதாகும். அதாவது, சிற்பிகள் கண்முன் காணப்படும் பொருளைச் சமதளத் தில் அதே உருவமாக உருவாக்குவார்கள்; இது அதே பொருளா, அல்லது அதன் பிரதிபிம்பமா என்று மயங்கும்வண்ணம் தீட்டு வார்கள். கைதேர்ந்த சிற்பிகளால் செய்யப்பட்ட கல் உருவங்களையும், களிமண் உருவங்களையும், வண்ண ஓவியங்களையும், இவை உண்மையான உயிருள்ள உருவங்கள் என்று எண்ணித் தொட்டுப் பார்த்த மக்கள் பலர்; கொத்திப்பார்த்த குருவிகள் பல; முகர்ந்து பார்த்த விலங்குகள் பல. இதன் பலனாகச் சிற்ப உலகில் உருவங் களைத் தூரத்திற்கு ஏற்றார்போல உருவாக்கும் அறிவும், மொட்டு, பூ, காய், பழம், இலை, வேர், தண்டு போன்ற பொருள்களையும், பல்வேறு வண்ணங்கள் கொண்ட பறவைகள், பூச்சிகள், விலங்குகள் முதலியவைகளையும் உள்ளதை உள்ளவாறே தீட்டும் வண்ண அறிவும் சிற்பக் கலையில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளன. படம் பிடிக்கும் நிழலுருக் கருவிகள் பெருகப் பெருகக் கையால் பொருள்களையும் உயிர்களையும் உள்ளதை உள்ளவாறே உருவாக்கும் ஓவியங்கள் தீட்டும் கலை, வளர்ச்சி குன்றி வருகிறது. (2) வியஞ்சகம் என்றால் ஒரு வடிவத்தின் இயற்கை அழகை அடிப்படையாக வைத்து ஒரு சிற்பி தன் கற்பனைத் திறனை உபயோகித்து அழகு பொலியத் தீட்டும் ஒரு சிறந்த சிற்பமாகும். இது சிற்பியின் கற்பனைத்திறனும் கைத்திறனும் கூடிச் செயற்கை உருவம் இயற்கை உருவினும் சிறந்து விளங்குமாறு செய்யப்படும் சீரிய அற்புதப் படைப்பாகும். இறைவன் இயற்கைப் பொருளை உருவாக்கினான். அவ னுடைய மக்களாகிய சிற்பிகள் தந்தை உருவாக்கிய இயற்கைப் பொருள்களைவிடத் தம் சீரிய சிந்தனைச் சிறப்பால், காணுதற்கரிய கைப்பணியால் செயற்கைப் பொருள்களைச் செய்து ஒரு அற்புதமான ஒளியை அளிக்கின்றார்கள். பொன்மலர் நாற்றம் பெற்றது போன்று இயற்கை, செயற்கை யால் செகம் புகழ ஒளிவிட்டோங்குகிறது. கடவுள் மண்ணைப் படைத்தான்; மனிதன் அற்புதமான பாண்டங்களைப் படைக்கிறான்; அழகிய மாளிகைகளைக் கட்டுகிறான். கடவுள் கல்லைப் படைத்தான்; மனிதன் அவைகளைப் பட்டைத் தீட்டி விலைமதிக்கமுடியாத மணிகளாகப் படைக் கிறான். கடவுள் உலோகங்களைப் படைத்தான்; மனிதன் அணிகளை, பாத்திரங்களை, படிமங்களை, ஆயுதங்களைச் செய்கிறான். கடவுள் பாஷாணத்தை (நஞ்சை)ப் படைத்தான்; மனிதன் அதை அருமருந்தாகச் செய்தான். கடவுள் மரத்தைப் படைத்தான்; மனிதன் பலகைகளாக, உத்திரங்களாக, சட்டங்களாக, விட்டங்களாக, கதவுகளாக, சன்னல் களாக, தூண்களாக, தெய்வப் படிமங்களாக, பொம்மைகளாகச் செய்கிறான். பரிணாமவாத சித்தாந்த நியதிக்கேற்பக் கடவுளினும் அவனது மக்கள் சிறந்து விளங்குவது முறைதானே? இது தந்தைக்கு மகிழ்ச்சி யூட்டும் விஷயமா? பொறாமையூட்டும் செயலா? கோபப்படும் காரியமா? என்று சிற்ப சாதிரி ஒருவர் உலக மக்களை விநயபூர்வ மாக வினவுகின்றார். சிற்பி ஒரு பொருளை உருவாக்கும்பொழுது அவன் கண்முன் நிற்கும் பொருளும் அப்பொழுது அவன் பெற்றிருந்த உள்ளத்தின் நிலையும் சாயலும் ஒருங்குகூடிக் கையிலிருக்கும் உளி அல்லது தூரியக் கோலின் வழியே பிரதிரூபம் எடுக்கின்றன. உள்ளம் ஒரு பொருளைத் திருத்தியும், கற்பனையால் சில உறுப்புகளைத் திருத்தியும் மிகைப்படுத்தியும் பார்க்கிறது. எனவே, சிற்பிகள் ஒரு பொருளை இயற்கையில் காணப்படும் தோற்றத் திற்கும், உருவத்திற்கும் சிறிது வேறுபாட்டுடன் - ஆனால் மூல அம்சத்திற்கு முரண்படா வண்ணம் - எழில்பெறத் தீட்டுவதே வியஞ்சகம் எனப்படும். இதனால் சிற்ப விதிகளை உணராதவர்கள் தீட்டிய சிற்பங் களையும் ஓவியங்களையும் வியஞ்சகமாகக் கருதக் கூடாது. வியஞ்சகத்திற்குச் சில இலக்கணங்களும், வரைமுறைகளும் உண்டு. அதை உணர்ந்தே சிற்பிகள் சிறந்த சிற்ப உருவங்களைச் சீருடன் சிருஷ்டித்துச் செகம் புகழும் பேறுபெற்றுள்ளார்கள். ஒரு மரம் அல்லது ஒரு செடிக்கு அதன் வடிவத்தைக் கொண்டே சிறப்பு அளிக்கப்படுகிறது. மூங்கிலும், சவுக்கும், புல்லும் சில வேறுபாடுகளையுடைய வையாக இருந்தாலும் ஒரே இனமாகும். ஆனால் புல், மூங்கில் செடியின் வடிவத்தில் இயங்கும் சந்தம் ஒரு தனித்த சந்தமாகும். புளியமரமும், வாதமடக்கி மரமும், குன்றியமணிச் செடியும், இண்டஞ் செடியும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. மூங்கில், புல் போன்றவைகளுக்கும் புளி, வாதமடக்கி, குன்றிமணி, இண்டு முதலியவைகளுக்கும் சில வேற்றுமைகள் இருந்தாலும், பல ஒற்றுமைகளும் காணலாம். எனவே இவைகளை ஒரே வகுப்புச் சந்தத்தினால் இணைக்கப்பட்டவை என்று கூறலாம். மூங்கில், புல் இவைகளின் சந்தத்தை மட்டும் தனியாக வரைந்தால் அவ்வுருவை மூங்கில் என்றோ, புல் என்றோ பிரிக்க முடியாது. என்றாலும், பொங்கியெழும் ஊற்றுத் தாரைபோல் விரியும் இயக்கத்தின் கோடுகள் இதன் பொதுச் சந்தமாகும். இவ்வாறே சங்கு, நீர், செடி கொடி முதலியவைகள் வரை, சுருள் கோடுகளை உடைய உருவங்கள் அமைந்த பொதுச் சந்தமாகக் கொள்ளப்படும் என்று சிற்பச் சிறப்புகளை வங்க ஓவிய நிபுணர் நந்தலால் போ நமக்கு நன்கு அறிவுறுத்துகிறார். சிற்ப இலக்கண விதிகளை அனுசரித்தே தாமரை மலரைப் பல்வேறு வடிவங்களில் நமது நாட்டுச் சிற்பிகளும், தச்சர்களும், ஓவியர்களும், கன்னர்களும் கல்லிலும், மரத்திலும், துணியிலும், உலோகத் தகட்டிலும் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் கவின் பெறத் தீட்டியுள்ளார்கள். தமிழகத்திற்குத் தனி உரிமையுடைய தாமரை வட மொழிநூற் புலவர்களால் வட இந்தியாவிற்கும் - ஏன்? - இமயமலைமீதும் ஏற்றப்பட்டுள்ளது. அப்பால் அது புத்த சமயத்தின்மூலம் வட இந்தியாவிலும், நாளடைவில் திபேத், இலங்கை, சிங்கப்பூர், மலைநாடு, தாய்லாந்து, இந்தோசீனா, இந்தோனீசியா, கொரியா, சீனா, ஜப்பான், எகிப்து முதலிய நாடுகளிலும் பரவிச் சீரும் சிறப்பும், பேரும் பெருமையும் பெற்று விளங்குகிறது. இதைப்பற்றி டாக்டர் சிம்மர் என்னும் ஜெர்மன் பேரறிஞர், ஆர்ட் ஆப் இந்தியன் ஏசியா என்னும் மாபெரும் நூலில் மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். முதன்முதலாகத் தமிழகத்தின் சிற்பங்களில் செழுந்தாமரை நாளடைவில் சிற்ப வல்லுநர்களின் கைத்திறனால் வியஞ்சகம் என்ற சிற்ப இலக்கண விதிகளுக்கேற்பப் பல்வேறு அழகிய உருவம் பெற்று அழகுற மலர்ந்தது. சிற்பிகள் தீட்டிய சிறந்த செந்தாமரை வடிவத்தைப் போல் இயற்கைத் தாமரை எழிலுடன் விளங்குவதை எங்கும் எவரும் காணமுடியாது. சிற்பிகள் தீட்டிய தாமரை வடஇந்தியாவிலுள்ள ஆரிய சமய ஆச்சாரியர்களின் உள்ளங்களையெல்லாம் வசீகரித்துவிட்டது. எனவே, தாமரை கோயில்களிலும், கூரைகளிலும், தெய்வப் படிமங் களின் பாதங்களிலும், பலி பீடங்களிலும், உத்திரங்களிலும், கதவு களிலும், படிகளிலும், காசுகளிலும், நகைகளிலும், தாம்பாளங் களிலும், பானை சட்டிகளிலும், சிங்காசனத்திலும், செங்கோலிலும் இடம்பெற்றுள்ளன. சிற்பிகள், தாமரை மலரின் உருவத்தை கல், மரம், சுவர், உலோகத் தகடு முதலிய எந்தப் பொருள்களின் மீது தீட்டினாலும் அந்தப் பொருள்களின் இயற்கைத் தன்மைக்கேற்பத் தாமரையின் உருவ அமைப்பிலும் சில மாற்றங்களைச் செய்து அழகுபடுத்தி யிருக்கிறார்கள். எனவேதான் தாமரை மலரிலிருந்து எண்ணற்ற விசித்திரமான கற்பனைக் கமல வடிவங்கள் அரும்பின. அதன் அழகும் அமைப்பும் பாமரர்கள், படித்தவர்கள், தத்துவ ஞானிகள் முதலியோர்களின் கண்களுக்கெல்லாம் நல்ல விருந்தாக எழுந்தன. எந்த மலரும் இத் தாமரை மலர்போல உலகமெங்கும் பரவிச் சீரும் சிறப்பும் எய்தித் தெய்வீக மலராகப் பரிணமித்ததை நாம் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை. எனவேதான் திராவிடக் கட்டிடக் கலையில் காணப்படும் கமலமலரின் அரிய சிற்ப வடிவச் சிறப்பு, நாள் முழுவதும் கண்டுகளிக்கும் அருமை வாய்ந்தது என்று ஒரு மேதை கூறியுள்ளார். மற்றொரு மேனாட்டுச் சிற்பக் கலைஞர் பெர்சி பிரவுண் என்பார், கலைக் கண்ணுடைய சிற்ப மேதைகள், திராவிடச் சிற்பங்களில் மலர்ந்திருக்கும் கமலமலரின் கவின்பெறும் சிறப்பை ஆண்டு முழுவதும் தினசரி கண்டு களித்து வந்தாலும் அலுப்புத் தோன்றுவதில்லை என்று தமிழர் கண்ட தண்டாமரை மலருக்கு ஒரு சிறந்த புகழ் மாலையைச் சூட்டி, திராவிடத் தாமரையை - ஏன்? - திராவிடச் சிற்பத் தாமரையைப் பாராட்டி யுள்ளார். தாமரை, தமிழர்களின் கோயில்களிலும் திராவிட, நாகர, வேசர சிற்பங்களிலும் சிறிது காலம் தமிழகத்தில் ஆட்சி செலுத்தி அப்பால் அடியோடு அழிந்துபோன பௌத்த, சமண சமயங்களின் கோயில்களிலும் (தாமரைச் சிற்ப வடிவம்) இன்றும் மலர்ந்த தாமரைபோல் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் இணையற்ற ஓவியங்களிலும் செந்தாமரை நந்தா ஒளியை ஊட்டும் செந்தாரகையாய் இலங்குகிறது. அதன் அழகிய அமைப்பு, அரிய தன்மை, அற்புத வண்ணம் மக்கள் அறிவிற்கு விருந்தாகக் கண்ணுக்கு ஒளியாகத் திகழ்கிறது. பழங்காலத் தமிழகச் சிற்பத்தில் எதை நோக்கினாலும் தாமரை ஒரு சக்தி வாய்ந்த இடத்தைச் சுவீகரித்துக் கொண்டிருப் பதை நாம் காணமுடியும். திராவிட நாகரிகத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக எழுந்த மொகஞ்சதாரோவில், கி.மு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தாமரைப்பூ, சூரிய தேவனின் தலைமீது கொத்துக்கொத்தாகப் பூத்துக் குலுங்கும் தெய்வீக மலர்போல் செய்யப்பட்ட வடிவங்கள் காணப்படுகின்றன. முற்காலத்தில் தாமரை, சூரியன் - அதாவது பிரமன் என்னும் உற்பத்தித் தொழிலை நடத்தும் தெய்வம் - இரவில் துயிலும் அழகிய பஞ்சணைகளையுடைய மாளிகையாகக் கருதப்பட்டது. சூரியன் காலையில் கீழ்த்திசையில் தோன்றி மாலையில் மேற்றிசையில் மறைந்ததும் தாமரை மலர் தன் இதழ்களை ஒன்றாகச் சேர்த்துக் குவிந்துகொள்வதை, பகலவன் பங்கய மாளிகையைப் பூட்டிக் கொண்டு படுத்திருப்பதன் சின்னமாகக் கருதிவந்தனர்; அற்புதமாகச் சிற்பத்திலும் வடித்துக்காட்டினர். கி. பி. மூன்றாவது நூற்றாண்டில் முளைத்த மௌரிய சிற்பத் தில் தாமரைப் பூவின் வடிவம் இரண்டுவகையான வழியில் பயன் படுத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம். முதலாவதாகக் கோயில் அல்லது விமானங்களை விரிந்த தாமரை மலர்போல் நிர்மாணித்தனர். விமானம் விரிந்த விண்ணகத்தின் சின்னம். நீலத் தாமரை மலர் அதன் மலர்ந்த இதழ்களால் நீணிலத்தை மூடிக்கொண் டிருக்கிறது. ஆண்டுள்ள மாபெரும் தெய்வ இல்லத்தின் (கோயிலின்) மேல்தளத்தைத் தாங்கியிருக்கும் தாமரைத் தண்டுபோன்றிருக்கும் தூண்வடிவம் தெய்வ அம்சம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அது தண்ணீர்த் தொட்டிக்குமேல் வளர்ந்து செடியின் உச்சியில் தன் இதழ்களை மலரச்செய்து அழகுற நிமிர்ந்துநிற்கும் தண்டாமரைச் சின்னமாகச் சிறப்புற்று விளங்குகின்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க அசோகன் என்னும் மன்னர் மன்னன் நிலைநாட்டிய தூணில் தாமரை மலர் ஒரு தனிச் சிறப்புடன் விளங்குகிறது. இரண்டாவதாகத் தாமரை மலர் உத்திரங்களின் நடுவிலும், தூணின் இறுதியிலும் அழகுபடுத்தும் அரிய சின்னமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூலாதாரமான முண்டக மலரின் இவ்விரு சின்னங்களும் தமிழகத்திலும் - ஏன்? - இந்தியாவில் உள்ள எல்லாக் கட்டிடங் களிலும், சிற்பத்திலும் அழகுக்காகப் பல்வேறு வடிவத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளன. பண்டைக்காலத்தில் தமிழகத்தில் சிற்பம் பயின்ற தெய்வக் கம்மாளர்கள் தாமரை மலர்களைச் சிற்பங்களில் தீட்டக் கருதினால் அதைப் பன்னிரண்டு விதமாக அணிபெறச்செய்து கல்லிலும், மரத்திலும், உலோகங்களிலும் பொறித்து வந்ததாக அறிகிறோம். அவை அடியில் வருமாறு உள்ளன: 1. உபதளம் 2. குமுதம் 3. நளினம் 4. சுபகரோனிகம் 5. புண்டரீகம் 6. மகா புண்டரீகம் 7. சதபத்திரம் 8. சகபத்திரம் 9. காலரம் 10. பதுமம் 11. கோகநகம் 12. தாம்ர ரசம் இந்தப் பன்னிரண்டு விதமான பதுமப் படிவங்களும் கன்னியாகுமரிதொட்டு வேங்கடம்வரையுள்ள குமரி, சுசீந்திரம், வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, தென்காசி, கிருஷ்ணாபுரம், சிரிவைகுண்டம், திருச்செந்தூர், மதுரை, திருச்சி, திருவரங்கம், தஞ்சை, திருவாரூர், ஆவுடையார் கோயில், சிதம்பரம், சீர்காழி, தாராசுரம், மன்னார்குடி, சுவாமிமலை, நார்த்தாமலை, காஞ்சிபுரம், பேரூர், திருவண்ணாமலை, வேலூர், காளாதி, திருப்பதி போன்ற எண்ணற்ற, தென்னாட்டில் உள்ள திருக்கோவில்களில் எழில்பெறத் திகழ்கின்றன. இப் பன்னிருவிதப் பதும வடிவங்களும் சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளில் பலப்பல வித்தியாச வடிவங்களில் சிற்ப வடிவில் திகழ்கின்றன. அதோடு ஒவ்வொரு நூற்றாண்டிலும் வெவ் வேறு விதச் சிறப்பு உருவங்களை அடைந்துள்ளன. தாமரை, தொல்காப்பியர் காலந்தொட்டு பாரதிதாசன் காலம் வரை தமிழ்ப் புலவர்களுக்கு உகந்த மலராகக் காட்சி அளித்துள்ளது. அது காளிதாசனையும் துளசிதாசையும்கூட விட்டுவிடவில்லை. தாகூர், வேமன்னா, இக்பால், வள்ளத்தோல் போன்ற புலவர்களின் புகழ்ச்சிக்கும் உரிய மலராகத் திகழ்ந்தது. இன்று பாரத நாட்டில் பதும மலரைப் பாராட்டிப் பாடாத பாவலனே இல்லை; சிற்பத்தில் சித்தரிக்காத சிற்பியே இல்லை; ஓவியத்தில் பதுமத்தைப் பாவிக்காத ஓவியனே இல்லை. எங்காவது ஒருவன் உளன் என்று கூறினால் சிற்ப இலக் கியமோ, சிற்ப இலக்கணமோ தெரியாத - ஏன்? - சிற்ப ரசிகத் தன்மைகூட இல்லாத ஒரு பாமரன் என்றுதான் கருதவேண்டும். இன்றைய சராசரி தமிழன், கற்பனை செய்யும் ஆற்றல் காவியப் புலவர்களுக்கு மட்டுந்தான் உண்டு என்று நம்பிக்கொண்டிருக் கிறான். ஆனால் உற்றுநோக்கினால் தூரிகைப் புலவர்களும், உளிப் புலவர்களும், எழுத்தாணி (பேனா)ப் புலவர்களைப்போல் - ஏன்? - அவர்களைவிட ஒருபடி உயர்வாகக் கற்பனையில் உலக மேதைகள் கண்டு உவக்கும் வண்ணம் சுவரிலும், கல்லிலும், பலகையிலும் தம் கற்பனைத் திறனும், கைத்திறனும் விளங்கச் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுச் சிற்பிகள் பல்வேறு விதமான உலக முழுவது முள்ள அழகுவடிவங்கள் அனைத்தும் பொருந்தத் தம் கற்பனைத் திறம் அனைத்தும் இணைத்துத் தாமரை வடிவத்தைச் செதுக்கி யுள்ளார்கள். இயற்கைத் தாமரையில் நாம் என்றும் கண்டிராத எழிலை, காவியக் கமலத்தில் இன்றும் காணமுடியாத கவின்பெறும் வனப்பைச் சிற்பத் தாமரையில் காணும்படி தீட்டியுள்ளார்கள். என்னிடம் நூற்றுக்கணக்கான தாமரை வடிவங்கள் உள்ளன. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்குமுன் தமிழர்களின் நெருங்கிய உறவினர்களாய் இருந்த ஆந்திரர்களால் நிர்மாணிக்கப் பட்டு, ஆந்திரக் கலைக்கோயிலாகத் திகழும் அமராவதியிலுள்ள பௌத்த சிற்பங்கள் சில இன்னும் சிறப்புடன் திகழ்கின்றன. இன்று நமது சென்னை நகரிலுள்ள தொல்பொருள் காட்சிசாலையில் கூடக் காணப்படுகின்றன. இவை ஓவியப் புலவன் மிக எளிதாகத் தன் துகிலிகைக் கோலினைக்கொண்டு தீட்டிய ஓவியம் அல்ல. இவை என்ணெய்க் கற்களால் மயிரிழை போன்ற நுண்ணிய வடிவங்களும் சிறிதும் பின்னப்படா வண்ணம் பொறிக்கப்பட்ட வடிவங்களாகும். குப்தர்கள் காலத்திலும் தாமரை மலரைத் தேவர்களுக்கும் தேவிகளுக்கும் உகந்ததாகக் கருதி, தாமரை மலரின் இதழ்களைத் தெய்வப் பாதங்களில் அர்ச்சித்து வந்தனர். பாற்கடலின் நடுவே வெகு ஒய்யாரமாகத் தலைதூக்கி நிற்கும் தண்டாமரை மலரின்மீது திருமகள் வீற்றிருப்பது போலவும், இரு பெரிய யானைகள் மிகுந்த பணிவோடு பொற்குடத்தினைக்கொண்டு தண்ணீரை மொண்டு இலட்சுமி மீது சொரிவதுபோலவும் கற்சிற்பங்கள் செலுக்கப்பட்டுள்ளன. இலட்சுமியின் திருவடிவங்கள் எட்டுச் சிறப்புடையன; அதாவது அஷ்டலட்சுமி வடிவங்கள் என்று சிற்ப சாதிரங்கள் சொல்கின்றன. அவைகளில் இந்தக் கஜலட்சுமியின் வடிவம் மிகச் சிறப்புடையது. இலங்கையில் பௌத்தர்கள்கூட இவ்வடிவத்தைப் போற்றுகின்றார்கள். அபு மலையில் உள்ள தில்வாராத் திருக்கோயிலில் செதுக்கப் பட்ட செந்தாமரையின் சிறந்த வடிவம் அனைவராலும் போற்றப் படுகிறது. இந்தச் சிறப்பு வாய்ந்த திராவிட பாணியிற் கட்டப்பட்ட கவின்பெறு கோவிலில் அழகுக்கு அழகு செய்தாற் போன்று தாமரை மலர் சிற்பச் செழுமையும், கலை நுட்பமும் ஒருங்கே பிணைந் துள்ளதாய் வட்டவடிவமாயும், அரைவட்ட வடிவமாயும் தூண்கள் மீதும், உத்திரத்தின்மீதும், கூரையின்மீதும் செதுக்கப்பெற்று இன்று கற்சிற்பக் கலை வரலாற்றில் ஓர் ஒப்புயர்வற்ற உயிர் ஓவியமாய் விளங்குகிறது. இந்தியச் சிற்பிகளின் திறமையையும் பெருமையை யும் எடுத்துக்காட்டும் சீரிய சிற்பச் சின்னமாக இன்றும் காட்சி தருகிறது. ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்குமுன் தொடங்கி, படிப்படி யாகச் சமண மதம் துடைக்கப்பட்டுத் தமிழர் தூநெறி மறுமலர்ச்சி பெற்று எழுந்தது. சைனப் பெரியார்கள் அதைத் தமிழர்களின் பொற்காலம் என்று கூறுகின்றார்கள். அதை நான் தமிழர்களின் கற்காலம் என்று கூறுகின்றேன். இந்த அரிய கற்காலத்தை உருவாக்கிய பெருமை பல்லவ மன்னர் களுக்கு உண்டு. சிற்ப விற்பன்னனும், ஓவிய மேதையும், சிறந்த நாடகாசிரியனுமான மகேந்திரவர்மன் என்னும் பல்லவ மாமன்னன் சைவந் தழுவினான் அப்பர் பெருமானின் மதிப்பிற்குரிய சிஷ்யனாக மாறினான். அவன்மூலம் அப்பர் பெருமான் மண்ணகத்திலே விண்ணகத்தை உருவாக்கிய சிற்ப விதிகளில் கண்ட ஏழு விதமான கோவில்களை யும் உருவாக்கிக் காட்டினார். மன்னன் காஞ்சியைக் கோநகரமாகவும், கடல்மல்லையைத் துறைமுகப்பட்டினமாகவும் கொண்டு ஆட்சி நடத்தினான். தன் துறைமுகப்பட்டினமாகிய மாமல்லபுரத்தில் தமிழகத்திலே முதன் முதலாகக் கற்கோயிலை உருவாக்கி இது பொற்கோயிலினும் பொன்றாச் சிறப்புடையது என்று உலகம் போற்றச் செய்தான். அவன் வழிவந்த மன்னன் நரசிம்மவர்மனும் கலைத் தெய்வத்திற்குப் பல கற்கோயில்களைச் செய்து காணிக்கையாகத் தமிழன்னையின் பாதாரவிந்தத்தில் சமர்ப்பித்துப் பொன்றாப் புகழ்உடம்பைப் பெற்றுள்ளான். பல்லவர்கள் கல்லைப் பேசவைத்தனர்; பாடச் செய்தனர்; கமல மலராக மலரச் செய்தனர்; அதனின்று பொங்கும் சிற்பத் தேனைச் சிற்ப மேதைகள் விரும்பிப் புசிக்கும்படி செய்துவிட்டனர். மாமல்லபுரத்தில் எங்கு நோக்கினும் சிற்பச் செல்வமே காட்சி அளிக்கிறது. தமிழகத்தின் தலைசிறந்த கலைக்கோயிலாகக் காட்சி அளிப்பது மாமல்லபுரமே யாகும். நீங்கள் விரும்பினால் அங்கு மலர்ந்துள்ள சிற்பத் தாமரை சொரியும் செந்தேனை யுண்டு களித்து வரலாம். சென்ற ஆண்டு நான் எனது நண்பர் திரு மயிலை சீனி வேங்கடசாமி அவர்களுடன் சென்று கடன்மல்லையிலுள்ள தமிழர்களின் தலைசிறந்த சிற்பச் சோலையிலுள்ள தண்டாமரைத் தடாகத்தைக் கண்டு, தாமரைத் தேனையுண்டு களிப்புற்றுக் காலையி லிருந்து மாலைவரை மயக்குற்று நின்று இரவு இல்லம் திரும்பி னேன். இன்னும் அந்த இனிப்பு எங்கள் உணர்வைவிட்டு அகல வில்லை. மகாபலிபுரத்து வராக மண்டபத்தில் மங்காத மாமலராக ஒரு அழகிய பதும மலர் மலர்ந்துள்ளது. அம் மண்டபத்தின் மேற்கூரைமீது இந்தக் கமல மலர் இன்றும் காட்சி அளிக்கிறது. இந்த மாமலர் பதின்மூன்று நூற்றாண்டுகளாக வாடாத மலராகத் தமிழகத்திற்குப் பெருமை அளித்துக் கொண்டிருக்கிறது. பல்லவர்களின் தலைநகராகிய காஞ்சிபுரத்தில் கமல மலரைக் கருங்கல்லில் செதுக்கிச் சிற்பத் திறமையில் ஒப்பாருமிக்காரும் இல்லாத சிற்பிகள் காஞ்சியர் என்ற பெயரை முதன்முதலில் ஈட்டினர். இந்நகர் போதிசத்துவர், கௌடில்லியர் போன்ற மகா மேதைகளை உலகிற்கு அளித்துச் சிறப்புற்றதுபோல் சிறந்த சிற்பி களையும் அளித்தது. காஞ்சியிலுள்ள சிற்பங்களும், ஓவியங்களும், படிமங்களும், கட்டிடங்களும், நகர அமைப்பும் பல்லவர்களுக்கு அழியாச் சின்ன மாகத் திகழ்கின்றன. இங்கு இயற்கையாக மலர்ந்த அல்லியும், செயற்கையாக மலர்ந்த அல்லியும் எத்துணை ஒற்றுமை வேற்றுமைகளைப் பெற் றிருக்கின்றன என்று நன்கு காணலாம். காஞ்சியிலுள்ள சிற்பி தன் இரும்பு உளியால் கருங்கல்லில் கமல மலரை மலரச்செய்து, இரவும் பகலும் கூம்பாத, வாடா மலராகச் செலுக்கியுள்ளான். இந்த அல்லிச் சிற்பம் காஞ்சிபுரத்திற்கு அண்மையிலுள்ள திருப்பருத்திக் குன்றத்துச் செய்கைக் கோயிலில் உள்ளது. சென்னைக்கு அணித்தேயுள்ள திருவொற்றியூர்த் திருக்கோயி லிலும் கல்லிற் செதுக்கப்பட்ட அல்லிச் சிற்பம் அழகாகக் காணப் படுகின்றது. காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சி அம்மன் கோயில் ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற திருக்கோயிலாகும். இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆராய்ச்சிமிக்க ஆன்றோர்கள் மூன்றாம் குலோத்துங்க சோழனால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டதாகக் கூறுகின்றார்கள். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவர்ண காமாட்சி கோயில் எதிரில் பூமியின்மீது கருங்கல்லினாலே ஒரு தாமரை வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கற்சிற்பத் தாமரைமீது நின்று கொண்டே சுவர்ண காமாட்சி அம்மையைப் பலர் கைகூப்பி வணங்கிவருகின்றனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருப்பனம்பூரில் அகளங்கச்சாரியார் என்னும் அமணகுரு ஒருவர் இருந்தார். அவர் காமாட்சி அம்மன் கோயிலில் பௌத்தர் களோடு வாதிட்டு வென்றார். அவர் சமாதி திருப்பனம்பூரில் இருக்கிறது. இவ்வூரில் உள்ள சமணக் கோயில்களில் இது மிகத்தொன்மையானது. இது மாடக் கோயில்போல் காணப்படுகிறது. கோயில் இடிந்துகிடந்தாலும் இந்தச் சிற்பங்கள் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்று எளிதில் கூறிவிடலாம். வாயிற்படிக்கு மேற்புறத்தில் வண்ணத்தினால் ஒரு தாமரைப்பூ தீட்டப்பெற்றிருக்கிறது. இது தர்ம சக்கரத்தின் சாயலை ஒத்திருக்கிறது. ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முந்திய ஆந்திர நாட்டி லுள்ள ஓர் ஆலயத்தில் ஓர் அற்புதமான தாமரைச் சிற்பம் உள்ளது. இது இன்று கிலமாய்க் கிடக்கும் பௌத்தக் கோயிலிலுள்ள கற்சிற்ப மாகும். சலவைக் கல்லினால் மிக அழகுறச் செதுக்கப்பட்டுள்ளது. இதன் அற்புதமான அழகும், சிற்பச் சிறப்பும் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவையாய் ஒளிவிட்டு ஓங்குகின்றன. முற்காலத்தில் தமிழர்கள் கோயில்களைக் கடற்கரையருகில், மலையருகில், குன்றின்மீது, ஆற்றோரத்தில் நிர்மாணித்து, அருகிலே குளங்களையும் வெட்டினர். தண்ணீரின்றி எவ்விதக் கோயில் வழிபாடும் நடைபெற முடியாது என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அதோடு இறைவனை வழிபட பிச்சி, முல்லை, செண்பகம், கொழுந்து முதலிய பூக்களைத் தரும் பூந்தோட்டமும், அல்லி, தாமரை முதலிய பூக்களுக்குப் பெரிய தெப்பக் குளங்களும், நீர்நிலைகளும் ஆயிரக்கணக்கில் பொருளைச் செலவிட்டு அழகுற அமைத்துள்ளார்கள். தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திர நாட்டில் திராவிடச் சிற்பப் பாணியில் படிமங்களும், பதுமங்களும், கோயில்களும், வாயில்களும், மண்டபங்களும், கருவறைகளும் நிர்மாணிக்கப் பட்டுள்ளன. ஆந்திரர் நாட்டில் விசயநகர நாயக்க மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட அழகிய மண்டபங்கள் அன்று கண்டவாறே அழியாது அணிபெறத் திகழும் புண்டரீக மண்டபம் ஒன்று இன்றும் பொன்றாப் புகழுடன் பொலிவுற்று விளங்குகிறது. இங்கு எங்கு நோக்கினும் - கூரைமுதல் பாவுகல், படிக்கல் வரை - பதும மலர்களாகப் பொறிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் வெவ்வேறு காலங்களில் மதுரையில், நெல்லையில், தென்காசியில், கிருஷ்ணாபுரத்தில், சுசீந்திரத்தில் பொறிக்கப்பட்ட பதுமச் சிற்பங்களின் படங்கள் பல என்னிடமுள்ளன. சுருக்கமாகக் கூறின், தமிழகத்தின் எந்தத் திருக்கோயிலைப் பார்த்தாலும் தாமரை உருப் பொறித்த விமானம், கூரை, கதவு, தூண், படிகள், உத்திரங்கள், பூமியில் உள்ள பாவுகல் மட்டுமல்ல - படிமங்கள், அதன் பீடங்கள், கரங்கள், மணிகள், அணிகள், விளக்குகள், ஆடைகள் முதலியவைகளிலெல்லாம் தாமரை இடம் பெற்றிருக்கிறது. சோழர்களால் அழகிய திருக்கோயிலும், பௌத்தர்களால் பல விகாரைகளும், பள்ளிகளும் கட்டப்பட்டு அழிந்து கிடக்கும் எண்ணற்ற அழிபாடுகளையும், புதைந்து கிடக்கும் ஆடவல்லான், காரைக்கால் அம்மையார், உமாதேவி போன்ற எண்ணற்ற செப்புப் படிமங்களையும் உடைய இலங்கையிலுள்ள பொலனருவை என்று கூறப்படும் புலதியர் நகரில் தாமரை வடிவமான ஒரு தடாகமே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் குடைந்தெடுக்கப்பட்ட சின்னஞ் சிறிய அழகிய தாமரைக் குளத்தின் வடிவம் இதன் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அழகு, கலைஞர்கள் கண்ணுக்கு அரிய விருந்தாகும். 8. ஓவியத்தில் ஒளிரும் தாமரை ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் போன்ற நுண்கலைகள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. ஆனால் அக் கலைகள் அரும்பிய காலம், அதன் சிறப்பு முதலியவற்றைக் கொண்டே அந்நாட்டின் அல்லது அந்நாட்டு மக்களின் நாகரிகத்தன்மையை அளக்கமுடி கிறது. எனவே ஒவ்வொரு நாட்டாரும் தங்களின் கலைகளைக் கரு வூலமாகப் போற்றிவருகின்றனர். தமிழகத்தில் அரும்பிய நுண்கலைகளில் ஓவியம் தொன்று தொட்டு இருந்துவரும் அருங்கலையாகும். உலகில் எழுத்துக்கள் ஏற்படுவதற்கு மூலாதாரமாக எழுந்தது ஓவியமாகும். ஆதி எழுத்துக்கள் எல்லாம் கோடுகளால் வரைந்த ஓவியங்களாகவே காணப்பட்டன. எகிப்திய எழுத்துக்களும், அதற்குமுன் எழுந்த மொகஞ்சதாரோ எழுத்துக்களும் மக்களின் உள்ளத்தெழும் கருத்துக்களை மற்றவர்களுக்கு உணர்த்திய ஓவிய வரிவடிவங்களே யாகும். பண்டைக் காலத்திலுள்ள சில குகை ஓவியங்களை ஆராய்ந்து பார்த்தால் கற்கால மனிதன் குகைகளில் எழுதிய ஒவியங்கள்தாம் நமது வரிவடிவங்களின் மூலவடிவங்கள் என்ற முடிபுக்கு வர முடிகிறது. குகைகளினின்று மனிதன் வெளிவந்து பரந்த சமவெளிகளில் குச்சுகள் கட்டி, அப்பால் நாளடைவில் நாடு நகரங்கள் அமைத்து, மச்சு வீடுகள் காண முனைந்தான். தனக்குக் கிடைத்த ஓய்வுநேரங் களில் தான் பார்த்தவற்றையும் அனுபவித்தவற்றையும் அடுத்தவர் களுக்கு அறிவுறுத்த ஓவிய வடிவங்களைக் கண்டான். நாளடைவில் அவன் அத்துறையில் வளர்ந்தான். எனவே, காவியத்தின் மூலக் கருவாக ஓவியம் எழுந்தது என்கிறோம். முதன்முதலாக மனிதன் ஓர் அழகிய பொருளைக் கண்ணுற்ற பொழுது அவனுடைய உள்ளத்தில் இன்பஞ் சுரந்தது; அழகு உணர்ச்சி அரும்பியது. அவ்வுணர்ச்சியின் பயனாக மனிதன் ஓவியத்தைக் கல்லிலும், மண்ணிலும், சுவரிலும், மரப் பலகையின் மீதும் தீட்ட முனைந்தான். அப்பால் அதன் உண்மையான சாயலை உருவாக்க விரும்பி அதற்குப் பல வண்ணங்களைத் தீட்டினான். ஒரு பொருளை அதன் இயற்கையான வடிவத்தில் தீட்டி அதைக் கண்டு களிக்க விரும்பி னான். ஆனால் அவன் உள்ளம் அதில் திருப்தி அடையவில்லை. எனவே இயற்கையில் காண்பதைவிட ஒரு பொருளை அழகுபெறப் படைப்பதே சிறந்தது என்று அவன் உள்ளம் அறிவுறுத்தியது. அத் துறையில் பல ஆண்டுகள் முயன்று பண்பட்டு இயற்கையைவிட அழகில் சிறந்த ஓவியங்களைப் படைக்க முற்பட்டான்; அப்பால் அதற்கு இலக்கணங்களையும் வகுக்கத் தலைப்பட்டான்; இறுதியாக ஓவியத்தை உலகில் ஒப்பற்ற கலையாக உயர்த்திவிட்டான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - அதாவது சங்க காலத்திற்கு முன்பே - தமிழகத்தில் ஓவியக் கலை ஓங்கியிருந்தது. சுவரிலே எழுதப்பெற்ற ஓவியங்களே பெரும்பாலும் காணப் பட்டன. இஃதன்றிச் சுவர்களிலும், திரைச்சீலைகளிலும், மரப் பலகைகளிலும் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன என்பதற்குச் சான்றுகள் உள. படம் என்னும் சொல், படாம் என்ற சொல்லிலிருந்து வந்தது என்றும், படாம் என்பது ஓவியந் தீட்டப்பட்ட துணிச்சீலை என்ற பொருளை உடையது என்றும் தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள். முற்காலத்தில் அரசனுடைய அரண்மனையில் சித்திரமாடம் என்னும் கட்டிடம் தனியே அமைந்திருந்தது. கோயில்களில்கூடச் சித்திரக்கூடம் என்ற மண்டபம் இருந்தது. கோயில் சுவர்களில் ஓவியங்களை எழுதி அழகுபடுத்தியிருந்தனர். அரசர்களின் உருவம், அரசிகளின் உருவம் வண்ண ஓவியங்களில் தீட்ப்பட்டிருந்தன என்று பல தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குற்றாலத்திலும், திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர்க் கோயிலிலும் சித்திரக் கூடம் என்னும் மண்டபம் இருந்ததாக அறிகின்றோம். காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள உவவனம் என்னும் அழகிய பூங்காவானது, அழகு ஒழுக எழுதப்பெற்ற திரைச்சீலை போன்று அழகாக இருந்தது என்று சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே யொப்பத் தோன்றிய உவவனம். (சிலப்பதிகாரம்) மாதவி என்னும் நாட்டிய பெண் ஆடற் கலையோடு ஓவியக் கலையும் உணர்ந்த ஒண்டொடி என்று மணிமேகலையில் கூறப் பட்டிருக்கிறது. நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூற் கிடைக்கையும் கற்றுத்துறை போகிய பொற்றொடி மங்கை. சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் மாதவி யாழைக் கையில் எடுத்து மீட்டுகின்றாள். அவள் பத்மாசனத்திலிருந்து யாழைக் கரங்களிலே வைத்து வாசிக்கும் அழகு உள்ளத்தைக் கொள்ளைக்கொள்வதாய் இருக்கிறதென்று கூறப்பட்டுள்ளது. அது வருமாறு: ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி. ஒன்பது விருத்திகளுள் முதல் விருத்தி அமைந்த அமைப்பில் இருப்பாளாகி என்பது இதன் பொருளாகும். விருத்தி என்பது பரிபாஷை. உட்கார்ந்திருக்கும் முறையை ஓவிய நூலிலும், நாடக நூலிலும் அவ்வாறு கூறுவார்கள் என்று தெரிகிறது. இதற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், இதனுள் விருத்தி என்பது இருப்பு, ஓவிய நூலுள் நிற்றல், இருத்தல் கிடத்தல், இயங்குதல் என்னும் இவற்றின் விகற்பங்கள் பல உள என்று மொழிந்துள்ளார். மேலும், உட்காரும் முறைக்கு ஆதாரமாகத் தமிழ் ஓவிய நூலினின்று ஒரு சூத்திரத்தை எடுத்துக்காட்டுகிறார். மதுரை நகர்க் கடைவீதிகளின் தோற்றம் சித்திரத்திலே அழகாக எழுதிவைத்த படம்போல் இருந்ததாம். ஓஉக் கண்டன்ன இருபெரு நியமத்து. என்று சங்க காலப் புலவர்கள் ஒருவர் கூறுகிறார். புறநானூற்றில் ஒரு வீட்டைச் சிறப்பித்துக் கூறும்பொழுது, ஓவத் தன்ன இடனுடை வரைப்பில். என்று எடுத்துக்காட்டியுள்ளார். மகனே இராம! நீ மகுடம் புனைந்துகொள் என்று தசரதன் கூறுகின்றான். பரதனுக்கு முடிசூட்டப்படும்; நீ, பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும். இது அரசரின் ஆணை என்று இராமனிடம் கைகேயி கழறுகின்றாள். இருவரின் வார்த்தை களையும் இராமன் கேட்கிறான். அவன் முகத்தில் இம்மியளவும் மாறுதல் எழவில்லை; மகிழ்ச்சியும் எழவில்லை: வாட்டமும் தோன்றவில்லை. வண்ணத் தாமரையையொப்ப இராமன் இருந் தான். இதைக் கம்பன் ஓர் உவமையாக எடுத்துக்காட்டுகிறான். அது வருமாறு: அப்பொழு தலர்ந்த செந்தா kiuÆid bt‹w j«kh! (அயோத். காண்டம்.) அசோகவனத்தில் வாடும் சீதை இச்சம்பவத்தை நினைவு கூறு கிறாள். அப்பொழுதும் கம்பன் தாமரையை உவமை கூறுகிறான்; மெய்த்தி ருப்பதம் மேவென்ற போதிலும் இத்தி ருத்துறந் தேகென்ற போதிலும் சித்தி ரத்தின் அலர்ந்தசெந் தாமரை ஒத்திருந்தமுகத்தினை.... (சுந்தர காண்டம்.) மற்றோரிடத்தில் இராமனுடைய அழகை எடுத்துக் காட்ட ஆரம்பிக்கும்பொழுது, கம்பன், ஓவியத்தெழுதவொண்ணா உருவத்தாய் என்று கூறியுள்ளான். இதன் மூலம் எழிலையும் கலை நுட்பத்தையும் கண்ட தமிழகக் காவியப் புலவர்கள், அழகிற்கு எடுத்துக்காட்டாக ஓவியத்தை ஒப்பிட்டுக் கூறியதால் ஓவியம் பண்டுதொண்டுத் தமிழகத்தில் சிறந்து வளர்ந்த ஒரு பெருங்கலை என்பது நன்கறியக்கிடக்கின்றது. தமிழ்நாட்டில் எழுந்த எல்லாக் காவியங்களும் தமிழகத்தில் ஓவியக் கலை உயர்ந்துநின்றது என்பதற்குச் சான்று தருகின்றன. பண்டைக்காலம் முதல் சிறந்தெழுந்த ஓவியத்தில் தாமரை ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. அழகுத் தெய்வமான திருமகளைச் செந்தாமரை மலர்மீது தீட்டியுள்ளார்கள். இத் திருமகளைச் செந்தாமரையல்லாத வேறு எந்த மலர்மீது தீட்டினாலும் அப் படம் சோபிக்காது என்பதை ஓவிய விற்பன்னர்கள் மட்டுமன்றிச் சாதாரண மக்களும் உணரக்கூடும். தாமரையின் சிறப்பை எண்ணித் தான் எல்லாத் தெய்வங்களும் தாமரைப் பூவை உறைவிடமாகக் கொண்டிருப்பதாக நமது முன்னோர்கள் ஓவியந் தீட்டினார்கள் போலும்! புதுக்கோட்டையைச் சேர்ந்த அண்ணல்வாயில் என்னும் ஊருக்கருகே சிற்றண்ணல் வாயில் என்ற ஒரு சிறிய குன்றில் குடையப்பட்ட குகைக்கோவில் ஒன்று உண்டு. mக்Fகைக்nfயிலில்தீ£டப்பெற்றவ©zஓவிa«ஒன்றுŸsது;மிகப்ãuசித்தி¥ பெற்றது. உலகப்புfœ வாய்ந்த mஜந்தா,á»ரியாகுiகஓÉயங்கSக்குஅJஇ«மியளவும்குiறந்ததன்று.m#ந்jhî« இதுவும் மிகவும் ஒற்றுமையுடையது. சமண காலத்தில் தமிழர்கள் ஓவியக் கலையிலும் ஒப்பற்று விளங்கினர் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இலங்குவது இந்தச் சிற்றண்ணல் வாயில் குகை ஓவியம் ஒன்றே யாகும். இதன் பெருமையை நீண்ட காலமாய் நாம் அறியாதிருந்துவிட்டோம். அதன் பலனாய் அவ்வரிய ஓவியச் செல்வம் சிதைந்துவிட்டது. என்றா லும் பாண்டிச்சேரியிலிருந்த பேரறிஞர் ஜோவியோ துப்ரயேல் என்ற பிரஞ்சு மேதை அதைப் பார்த்துத் தமிழர்கள் மட்டுமன்றி உலகமே கண்டு வியப்புறச் செய்தார். இந்தக் குகைஓவியத்தில் குறிப்பிடத்தக்கது காதிகா பூமி என்னும் தாமரைக் குளத்தின் ஓவியமாகும். இது 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திரவர்மன் என்னும் ஓவியப் புலவனாகிய பல்லவ மன்னன் காலத்தில் தீட்டப்பட்டுள்ளது. இது பாண்டிய நாட்டு ஓவியம் என்பாரும் உளர். பல நூற்றாண்டுகள் சென்றும் இன்னும் இந்தத் தாமரை ஓவியம் எழிலுடன் புத்தம் புதிதாகத் தீட்டப் பட்டதுபோல் பொன்றாது ஒளிர்கிறது. இதன் அழகை வியந்து ஈரான் நாட்டைச் சேர்ந்த சர்கீ ககோடாரின் என்ற முலிம் ஓவியர் அங்குச் சென்று அவையனைத்தையும் வண்ணப் படமாக வரைந்துகொண்டு போயுள்ளார். உலாந்தா நாட்டு ஓவியன் ஒருவன் இத் தாமரைக் குளத்தின் அழகை வியந்து புனையா ஓவியமாக வரைந்து கொண்டு யோயுள்ளான். திரு. மயிலை சீனி வேங்கடசாமி, டி. என். இராமச்சந்திரன் மேத்தா, ஆர். சீனிவாசன், சுந்தர சர்மா போன்றவர்கள் இந்த ஓவியத்தைப்பற்றி பல நூல்களும் கட்டுரைகளும் வரைந்துள் ளார்கள். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும், காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும், இலங்கை நாட்டைச் சேர்ந்த அநுராத புரத்திலுள்ள லங்கராம விகாரே என்னும் பௌத்தப் பள்ளியிலும், இலங்கையின் இரண்டா வது தலைநகரமாயும் பௌத்தர்களின் புண்ணிய சேத்திரமாயும் விளங்கும் கண்டியிலுள்ள லங்கா திலக விகாரே என்னும் பௌத்தப் பள்ளியிலும், கொழும்பிற்கு அணித்தேயுள்ள களனி பௌத்தக் கோயிலிலும் தாமரை உருவங்கள் மிக அழகாக, வண்ண ஓவியமாக வரையப்பெற்றுள்ளன. இந்த ஓவியங்களில் ஓவியர்கள் தம் கைத்திறன் அனைத்தையும் காட்டி அழகு ததும்பத் தீட்டியிருப் பதையும், தாமரையானது தன் மூலஉருவத்திற்கு மாறுபடாமல் எத்துணைவிதமாகக் கவின்பெற வரையப்பட்டிருக்கிறது என்பதை யும் இந்த ஓவியங்கள் நன்கு எடுத்துக்காட்டுகின்றன. இதன்மூலம் தாமரை ஓவிய இலக்கணத்திற்கு மாறுபடா வண்ணம் எப்படி யெல்லாம் ஓவிய விற்பன்னர்கள் தம் கற்பனைத் திறனால் சிறப்புறச் சிருஷ்டித்துள்ளார்கள் என்பதை நன்கறியலாம். உலகிலுள்ள எந்த இனத்தவர்களின் கலைகளும், நமது கலையைப்போல் மக்களின் வாழ்க்கையோடு நெருங்கித் தொடர்பு கொண்டு, வாழ்க்கையொடு வாழ்க்கையாய் இணைந்து பின்னிப் பிணைந்து இலங்குவதைக் காணமுடியாது. நமது கலை இயற்கை அடிப்படையின்மீது மிகச் சக்தி வாய்ந்த தாயும், எழிலிற் சிறந்ததாயும் தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. பதின்மூன்று ஆண்டுகள் திராவிட ஓவியத்தை ஆராய்ந்து அதன் சிறப்பை அறிந்த ஓவியப் புலவர் உயர்திரு. கிரிபித் என்பார், நாம் இங்கு உயிருள்ள ஓவியத்தைப் பெற்றிருக்கின்றோம். அந்த ஓவியங்களில் (அஜந்தா ஓவியங்களில்) காணப்படும் மனித முகங்களில் மிக்க பாவமும், உறுப்புகளில் அப்பழுக்கற்ற அழகும் மிளிர்வதைக் காண்கிறோம். மலர்கள் மலர்ந்து எழிலுடன் திகழ் கின்றன; வண்ணப் பறவைகள் நீலநிற வானத்தில் ஒய்யாரமாகப் பறக் கின்றன; வனவிலங்குகள் காடுகளில் துள்ளிக் குதித்து ஓடுகின்றன; போரிடுகின்றன. எல்லாப் பறவைகளும், விலங்குகளும், மக்களும் தம் வாழ்வை இனிது நடத்துகின்றன. நான் கண்ட உயிர்க்களை ததும்பும் எழில் ஓவியங்களின் மூலப் பொருள்களும், மூலக் கருத்துக் களும் இயற்கை என்னும் இலக்கண நூலினின்று எடுக்கப்பட்டவை யாகும் என்று புகழ்மாலை சூட்டியுள்ளார். இவரது கூற்றிற்கு அடிப்படையாய் விளங்கியது நமது தாமரையின் ஓவியமேயாகும். ஓவியத்திற்கும், காவியத்திற்கும், இசைக்கும் இயற்கை மூலப் பொருளாய் இருக்கிறது. காலையில் கீழ்த்திசையில் பகலவன் தன் பொற்கிரணங்களை வீசி வெகு கம்பீரமாகத் தோன்றுவதும், பளிங்குபோல் ஒளிரும் நீர்நிலைகளில் பச்சைப் பசேரென்று பச்சைக் கம்பளங்களை விரித்தாற்போன்று வட்டவடிவமான இலைகளுக் கருகே உள்ளங் கவரும் செந்தாமரை, காதலனைக் கண்டு புன்னகை தவழ வரவேற்று நிற்கும் இளங் காதலியைப்போல் கவின்பெறக் காண்பதும், ஓவியர்களுக்கு நல்ல விருந்தாகும். எனவே இயற்கை, மனிதன்மூலம் கலையைப் பரிணமிக்கச் செய்கின்றது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். காவியம், கற்றவர்களே அனுபவிப்பதற்கு உரியது. இன்று தமிழர் கண்ட ஒப்பற்ற காவியங்களைத் தமிழறியாத பிற நாட்டார் ரசிக்கமுடியவில்லை. ஆனால் தமிழர் தீட்டிய ஓவியத்தையோ எல்லா நாட்டாரும், எல்லா மொழியினரும் ரசிக்கமுடிகிறது. தமிழர் தீட்டிய சிற்றண்ணல் வாயில் தாமரை ஓவியம் ஈரான் நாட்டிலுள்ள முக்கிய பத்திரிகைகளிலெல்லாம் இடம் பெற்று எல்லா மக்களாலும் ரசிக்கப்படுகிறது. உலாந்தா நாட்டு அறிஞர் எழுதிய ஒரு நூலில் உலகிற் சிறந்த பழைய ஓவியங்களில் ஒன்றாக அண்ணல் வாயில் அம்புஜ ஓவியம் தீட்டப்பட்டு, மேனாட்டு மக்களெல்லாம் கண்டு களித்துவருகின்றார்கள். 9. தமிழகக் கோலங்களில் தாமரை மாட்சி பெண்கள் இயற்கையிலேயே மென்மை வாய்ந்தவர்கள். அவர்களை மெல்லியலார், பூவியலார் என்று தமிழ் இலக்கியங்கள் கூறுவதில் பொருள் உண்டு. மேலும், ஆண்களைவிடப் பெண்கள் அழகு வாய்ந்தவர்கள்; அழகுக் கலைகளில் ஆர்வம் உடையவர்கள். பெண்கள் ஆடைக ளாலும் அணிகளினாலும் மணிகளினாலும் தம்மை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் உடையவர்கள். பண்டுதொட்டு அவர்கள் தம் கூந்தலைப் பல்வேறு விதமாக வாரி, கொண்டைகளாகவும் சடைகளாகவும் கட்டி, அதில் அணிகள் தரித்து, மலர்களைச் சூட்டியும் பட்டுத் துணிகளைக் கட்டியும் வந்தனர். பெண்கள் கண்களுக்கு மையிடுவர்; நெற்றிக்குப் பொட்டிடுவர்; கால்விரல்களிலும் கைவிரல்களிலுமுள்ள நகங்களுக்குச் சாயந் தீட்டிக்கொள்வர்; அவர்கள் நாள்தோறும் தங்கள் உடலைப் புனித நீரால் கழுவிக் கூந்தலுக்கு நறும்புகைகள் காட்டுவர். பல்வேறு வண்ணங்கள் உள்ள பூந்துகில்களை அணிவர்; பஞ்சாலும் பட்டாலும் செய்த கச்சுகளை அணிவர்; நறுமணம் கமழும் நற்சாந்துகளை உடலிற் பூசுவர். தங்கள் உடலைமட்டுமல்ல; இல்லத்தையும் கோயில்களையும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்கும் பொறுப்பும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மாதர்கள் வைகறையில் துயில்நீத்துக் காலைக்கடன்களைக் கழித்துக் குளித்து வீட்டை மெழுகிப் பல்வேறுவிதமான கோலந் தீட்டி வீட்டிலுள்ள பண்டபாத்திரங் களைக் கழுவித் தூய்மை செய்து அறுசுவை கலந்த பல்வேறு வகை யான சோறுகளையும் கறிகளையும் சமைப்பர். திருவிளக்கின் முன்னர் பல்வேறு அழகிய கோலங்களிட்டு மல்லிகை, முல்லை, பிச்சி, போன்ற பூக்களைப் பறித்து மாலை களாகக் கட்டி விளக்கிற்குப் போட்டுத் தூபதீபம் காட்டி வணங்குவர்; பக்திப் பாடல்களைப் பாடுவர். இவற்றின்மூலம் அவர்களின் அன்றாட வாழ்க்கை முழுவதிலும் கலை பின்னிப் பிணைந்து கிடப்பதை நாம் நன்கறியக்கூடும். கோலம் என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். கோலம் போடத் தெரியாத கோதையர்கள் தமிழகத்தில் இல்லை என்ற அளவில் கோலக் கலை பண்டைக்காலத்தில் தமிழகத்தில் வளர்ந்திருந்தது. சின்னஞ்சிறு குழந்தைகள் எல்லாம் சிறுவீடு கட்டிக் கோலம் போட்டுப் பழகும். பால்மணம் மாறாப் பச்சிளங்குழந்தைகள் கூடக் கையில் கரித்துண்டோ, சிறு குச்சோ கிடைத்தால் உடனே சுவரிலோ, பூமியிலோ கோலம் போட ஆரம்பித்துவிடும். பண்டைக்காலத்தில் கணவன் இறந்ததும், வேறு கணவனை வரிக்க நாடாது, கைம்மை நோன்பு நோற்கும் காரிகைகளும், திருமண வாழ்வை வெறுத்த இளம்பெண்களும், அலிகளும் கோயில் களுக்குச் சென்று, கோயிலைச் சாணத்தால் மெழுகுதல், மாவினால் கோலம் இடல், மலர்பறித்து மாலைகள் தொடுத்தல் முதலிய திருப்பணிகளோடு, ஆடல்பாடல் முதலிய பணிகளையும் ஆற்றி வந்தனர். சைவம் தளிர்க்கப் பெருங் காரணபூதராய் இருந்தவரும், அப்பர் அடிகளின் தமக்கையும், கன்னிக் கைம் பெண்ணுமான கங்கைகுலக் காரிகை புனிதவதி, கோயிலைத் தூய்மைப்படுத்தி, கோலம் தீட்டி, ஆடிப்பாடி வந்த தேவரடியாரே யாவர். சமயகுரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி அடிகளின் மனைவியர்களான பரவையும், சங்கிலியும் மலர் பறித்தல், கோல மிடல், நாட்டியமாடல், இறைவன் துதிபாடல் போன்ற திருப்பணி களைச் செய்து, கோயிலிலே உண்டு உறங்கி ஒழுக்கந் திறம்பா உத்தமிகளாய் நல்வாழ்வு நடத்திய தேவரடியாரே யாவர். பண்டைக் காலத்தில், இப்பொழுது போடுவதுபோல் கோலம் கற்பொடியினாலோ, சுண்ணாம்பினாலோ போடுவது இல்லை. அரிசி மாவினால் அழகழகான கோலந் தீட்டுவர். அஃதன்றி அரிசிமாவைக் கரைத்துத் தனியாகவோ, மஞ்சள் கலந்தோ ஒரு சிறு குச்சியில் துணியைக் கட்டித் தூரியக் கோல்போல் வைத்துக் கொண்டு, எண்ணமுடியாத வண்ணங் கோலங்களைத் தீட்டிவிடுவர். எறும்புகளும், பறவைகளும் இந்த மாக்கோலத்தில் உள்ள மாவைத் தின்று பசியாறும். பண்டைக்காலப் பாவையர்கள் தீட்டிய கோலத்தில் அழகுக் கலையோடு சீவகாருண்யமும் பொதிந்து கிடந்தது புலனாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்னர்வரை அரிசிமாவினால் இல்லா விட்டாலும் கற்பொடியாலும், சுண்ணாம்பினாலும் ஒவ்வொரு நாளும் தமிழர்கள் தம் இல்லத்தில் உள்ள திருவிளக்கின் முன்னரும், முற்றத்திலும், அடுப்பின் மேலும், அதன் முன்னும் பற்பலவிதமான கோலங்களை இட்டு வந்தனர். இன்று அவ்வழக்கம் குன்றி வருகிறது. கார்த்திகைத் திங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலும், தமிழர் திருநாளாகிய தைப்பொங்கலிலும் இன்றும் தவறாது வெள்ளைப் பொடிக் கோலம்மட்டுமன்றி வெள்ளை, மஞ்சள் நிற முள்ள நீர்க்கோலமும் வீடெங்கும் தீட்டிக் களித்துவருகின்றனர். வெள்ளைக் கல்லை இடித்துச் சலித்து மாவாக்கி, அந்த மாவைக்கொண்டே கோலம் போடுகிறார்கள். இந்தப் பொடி, அரிசிமாவைப்போல் கோலம் போடுவதற்கு ஏற்றதே யாகும். ஆள்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையே பொடியை எடுத்து வைத்துக்கொண்டு, விரும்பும் கோலத்திற்கேற்பப் புள்ளி களை (மொட்டுகளை) வைத்துப் புள்ளிகளுக்கு ஏற்றாற்போல் பல வளைவுக்கோடுகளாலும், நேர்க்கோடுகளாலும் கம்பிகள் இழுத்து விதவிதமான கோலங்களைத் தீட்டுகிறார்கள். கோலம் தீட்டுவதில் கைதேர்ந்த மங்கையர்கள் தீட்டிய கோலங்கள் எத்துணை அற்புதமாகவிருக்கின்றன! எத்துணை அழகு மிக்கவையாகக் காணப்படுகின்றன! கோலம் நமது இல்லத் திற்கு மட்டுமன்றிக் கோவிலுக்கும் ஒரு தனிச் சோபை அளிக்கிறது என்பதை யாரே மறுக்கவல்லார்? இக் கோலக்கலை தமிழர்க்கே உரியது என்றாலும் அவர்கள் நெருங்கிய உறவினர்களான கேரளர், ஆந்திரர், கன்னடர், துளுவர் முதலியவர்களிடமும் இன்னும் இருந்துவருகிறது. கேரள நாட்டில் பூக்களால் கோலமிடும் ஒரு புதுக்கலை இன்று நிலவி இருக்கிறது. மகாராஷ்டிரர்களும், வங்காளிகளும் பல வண்ணப் பொடி களைக் கொண்டு பலவித உருவங்களைப் படைத்து வருகின்றனர். அவர்கள் ஆவணித் திங்களில் நாகசதுர்த்தி பூசை, அனந்த விரதம் போன்ற நல்ல நாட்களில் அந்தந்த நாட்களுக்கேற்றவாறு நானா விதக் கோலங்களைத் தீட்டுகிறார்கள். நாக சதுர்த்தி நாளில், நாகம், பின்னிப் பிணைந்து எழுந்து நிற்பதுபோல் கோலம் இடுகின்றார்கள். ஆந்திர நாட்டில் மார்கழித் திங்களில் அஷ்ட (எட்டு) நாகபந்தம், துவி (இரட்டை) நாகபந்தம் என்ற கோலங்களை இடு கின்றனர். இதனை அவர்கள் சங்கராந்திக் கோலம் என்று கூறுகின் றார்கள். அறிவு, அழகு, ஐசுவரியம் ஆகியவைகளுக்கு அதிபதியாகிய திருமகளையும், கலைமகளையும் செந்தாமரையாள், வெண்டா மறையாள், கமலாசனி, பத்மாசனி என்று குறிப்பிடுவதால் இத்தெய் வங்களின் சின்னமாக இடும் கோலம் தாமரை மலரேயாகும். தாமரையைச் சுமார் ஐம்பதிற்கு மேற்பட்ட வடிவில் கோல மாக நமது பெண்கள் தீட்டுகின்றனர். அவைகளில் ஒன்று இருதய கமலம் என்பதாகும். இருதய கமலத்தில் தெய்வம் உறைவ தாக எண்ணப்படுவதால் இதற்கு ஏற்றம் மிகுதி. கோலங்களில் நாள்தோறும் போடுபவை வேறு; பண்டிகை நாட்களில் போடுபவை வேறு. பண்டிகை நாட்களிலும் தெருவாயில்களில் போடுபவை, பட்டாலையில் போடுபவை, பூசையறையில் போடுபவை, சமைய லறையில் போடுபவை, திருமணக் காலங்களில் போடுபவை என்று பல்வேறுவிதமான கோலங்கள் உண்டு. அவைகளில் தனித்தனித் தத்துவமும் நோக்கமும் உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு வாரத்தில் ஒவ்வொரு நாளும் தீட்டப்படும் கோலங்கள் ஒவ்வொரு விதமாக வும், அந்த நாளின் தன்மைக்குரியனவாகவும் காணப்படுகின்றன. அதாவது, அடியில் கண்டவாறு கோலங்கள் போடப்படுகின்றன: ஞாயிற்றுக்கிழமை - செந்தாமரை திங்கட்கிழமை - அல்லி மலர் செவ்வாய்க்கிழமை - வில்வ தளம் புதன்கிழமை - மாவிலை வியாழக்கிழமை - துளசி மடம் வெள்ளிக்கிழமை - அஷ்டதள பதுமம் (எட்டு இதழ்த் தாமரை) சனிக்கிழமை - பவளமல்லிகை பௌர்ணமியன்று பகவதியைப் பூசை பண்ணுபவர்கள் ஒருவிதத் தாமரைப்பூ கோலம் போடுகிறார்கள். இதன் நடுவே குத்துவிளக்கை ஏற்றிவைத்துப் பூசிக்கிறார்கள். இக் கோலத்தை இதர கோலத்தைப்போல் அலட்சியமாகக் கருதமாட்டார்கள். கோலத்தின்மேல் கால் மிதிக்காமல் கவனமாக நடந்து செல்வார்கள். கணபதிக்குக் கமல கணபதி என்ற ஒரு பெயரும் உண்டு. எல்லாக் கணபதியும் தாமரைப் பீடத்தில் இருப்பதால் கணபதியைப் பூசை செய்பவர்கள் கமலக் கோலந் தீட்டி வணங்குவது வழக்கம். இக் கோலத்தையும் நடைபாதைகளில் போடாது பூசையறைகளில் மட்டுமே போடுவார்கள். திருமணக் காலத்தில் தீட்டும் மணைக்கோலங்களைத் தமிழ் நாட்டில் படிக்கோலம் என்று கூறுவார்கள். திருவிளக்கு முன்னரும், மணவறையிலும், பள்ளியறையிலும் விரிந்த தாமரை மலர், தாமரை மொட்டு, கொடித்தாமரை, பூச்செண்டு, கலியாண மேடை முதலிய கோலங்களைத் தீட்டி வீட்டை அணிபெறச் செய்வார்கள். தமிழகத்தில் அரும்பித் தமிழ்நாட்டிற்கே உரித்தானதாகக் கருதப்படுவபது கோலக் கலை; தமிழகத்தின் பெருமைக்கு எடுத்துக் காட்டாகத் தமிழ்நாட்டு மாதர்களின் கலை வளர்ச்சியை உலகிற்கு உரைக்க ஓர் உதாரணமாக இருப்பது கோலக் கலை. இன்று அன்னியநாட்டு நாகரிகத்தின்மீது கொண்ட மோகத்தால் இக் கலை கைவிடப்பட்டுவருகிறது. ஆனால் மேனாட்டு வெள்ளைப் பெண்கள் ஒவ்வொருவரும் ஓவியக் கலை பயின்றவர் களாயும், ஓவியக் கலை ரசிகர்களாவும் இருப்பதோடு, நமது கோலக் கலையைக் கண்டு வியந்து பாராட்டுபவர்களாயும் இருக்கிறார்கள். இன்று வங்க அரசாங்கம், பெண்கள் கல்லூரிகளில் கோலக் கலையைக் கற்பிக்க முனைந்திருப்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷய மாகும். இதைப் பின்பற்றி நாட்டுப் பற்றும், கலைப்பற்றுமிக்க எங்கள் மதிப்பிற்குரிய தமிழ் நாட்டு மாநிலக் கல்வி இயக்குநர் திரு. சுந்தர வடிவேல் அவர்கள் நம் நாட்டுப் பெண்கள் கல்லூரிகளில் நமது கோலக்கலையைத் துளிர்க்கச் செய்வார் என்று நம்புகின்றோம். சென்ற 1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்புக் கலாலய மண்டபத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்கள் ஒரு கோலக் காட்சிக்கு ஏற்பாடு செய்து அதை வெற்றிகரமாக நடத்திக்காட் டினர். திருமதிகள் ஆள்வாப் பிள்ளை, கே. சி. நடராஜா, பாலேந்திரா, லீலா சுப்பிரமணியம் போன்ற பெரிய இடத்துப் பெண்கள், கையில் கோலமாவை எடுத்துக் கொண்டு பல்வேறு விதமான கோலங் களைத் தீட்டிக் கோலக் கலைக்குப் புத்துயிர் ஊட்டிக் கோலக் கலை வளர்க்க வந்ததைக் கண்டு கழிபேருவகை அடைகின்றேன். தாய்த் தமிழகத்திலும், தமிழர்கள் வாழும் சிங்கப்பூர், மலாயா நாடு, சாவகம், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் இத்தகைய கோலக் காட்சிகள் நடத்துவது நல்லது. தமிழகத்தில் புள்ளி வைத்துக் கோலம் கோடும் வழக்கந்தான் பெரும்பாலும் பண்டுதொண்டு இருந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு கோலத்திலும் ஒவ்வொரு ஒழுங்கு இருப்பதை உணர முடியும். மாவுடன் தண்ணீரைக் கலந்து ஒரு குச்சியில் துணிகளைச் சுற்றித் தூரியக்கோல்போல் மாவில் முக்கித் தீட்டும் கோலம் பண்டிகை நாட்களில் மட்டும் போடப்படுவது, இது சில நாட்கள் அழியாதிருக்கும். ஆனால், நாடோறும் போடுவது வெள்ளைப்பொடிக் கோலமே யாகும். இது எளிதும் கூட. கட்டைவிரல், ஆள்காட்டி விரல் ஆகிய இரண்டாலும் பொடியை எடுத்து விர்விர் என்று சில வினாடிகளில் தாமரை மலர், குழந்தைத் தொட்டில், சந்தனக் கிண்ணம், பிரம்ம முடி, பாக்குத் தட்டு, முத்துப் பந்தல், பன்னீர்ச் செம்பு, கத்திரிக்கோல், அஷ்டதல தாமரை, ஊஞ்சல் பலகை போன்ற கோலங்களைப் போட்டுவிடு கின்றனர். இவ்வளவு விரைவில் இத்துணை அழகிய உருவங்களைத் தீட்டும் ஆற்றலையும் அழகையும் கண்டு மேனாட்டுச் சிற்பிகளும், ஓவியர்களும், கலைமேதைகளும் ஆச்சரியமுறுகின்றார்கள். புள்ளி வைத்துப் போடும் பொடிக்கோலங்களிலும், கரைத்த மாக்கோலங்களிலும்தான் சிற்பச் சிறப்புகளைக் காணமுடிகிறது என்று கூறுகிறார்கள். வடநாட்டில் பல்வேறு வண்ணப் பொடிகள் தூவி அலங் கரிக்கும் ரங்கோலி என்னும் கோலம் அழகாய் இருந்தாலும் அதைத் தமிழ்நாட்டு மாக்கோலத்தின் திறமைக்குச் சிறிதும் ஒப்பிடமுடியாது என்று புகழ்கின்றார்கள். இன்று துளையிட்ட தகர டப்பாக்களில் கோலப் பொடியை நிரப்பி அதைப் பூமியில் வைத்து இழுத்துப் போடும் கம்பிக் கோலங் களில் எவ்விதமான அழகும், சிற்பச் சிறப்பும் இல்லை. இந்தக் கோலங்களின் அடிப்படையிலிருந்தே துணிகளில் பூக்கள் போடும் எம்பிராய்டரி, பூ, நூல் வேலை, குரோசா, குசன் வோர்க் போன்ற கலைகள் துளிர்த்து வருகின்றன. நமது நாட்டிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த செக் நாட்டைச் சேர்ந்தவரும், தமிழ்ப் பேரறிஞரும், பிரேக் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழிஇயல் ஆராய்ச்சிப் பகுதித் தலைவரும், எமது உழுவலன்பருமான உயர்திரு. டாக்டர். fÄš Rtyãš, v«.V., ã.v¢.o., அவர்கள் தமிழகத்தில் கண்ட கோலக்கலையை ஆராய்ந்து மிக வியந்து பாராட்டினார். மிக முன்னேற்றம் அடைந்திருப்பதாகக் கூறும் மேனாட்டில் நூற்றிற்கு ஒன்றிரண்டு பெண்கள்தாம் ஓவியம் பயின்றிருப்பர்; அதிலும் நிபுணத்துவம் பெற்றிருப்போர் மிகக் குறைவாகும். என்றாலும் மேனாட்டுப் பெண்கள் எல்லாம் ஓவியக் கலைஞர்கள் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்புதொட்டே நம் பெண்கள் நூற்றிற்குத் தொண்ணூறு பேர் கோலக் கலையின்மூலம் ஓவியம் பயின்று அதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள் என்றால் யார்தான் வியந்து பாராட்டாதிருக்க முடியும்! சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்ற முதுமொழிக்கேற்பத் தமிழ்நாட்டுப் பெண்கள் இளமைமுதல் முதுமைவரை இடைவிடாது நாடோறும் கோலந்தீட்டிவருவதால் அதில் அவர்கள் நல்ல நிபுணத்துவம் பெற்று விளங்குகிறார்கள். பென்சில் அல்லது தூரியக்கோல் மூலம் ஓவியம் தீட்டு வதைவிட இருவிரல்களுக்கிடையே கோலப்பொடியை வைத்துக் கொண்டு இயந்திரம்போல் அற்புதமான பொற்புறும் ஓவியங் களைத் தீட்டுவது என்றால் எவர்தான் பாராட்டாதிருப்பர்? இன்று அலட்சியமாய் நெகிழவிடப்பட்ட நமது கோலக் கலையை மேனாட்டுச் சிற்ப விற்பன்னர்களும், ஓவிய நிபுணர்களும் புகழ்ந்து நமது நாட்டுக் கோலப் புத்தகங்களைத் தேடிக் கண்டு பிடித்துத் தங்கள் நாட்டுக்குக் கொண்டுசெல்லுகிறார்கள். மேலும், கோலப் புத்தகங்கள் மிக அழகான முறையில் நல்ல தாளில் அச்சிட்டு வெளியிடவேண்டுமென்றும் அறிவுறுத்து கின்றார்கள்; கோலப் புத்தகங்களில் உள்ள பல கோலங்களுக்குப் பெயரே பொறிக்கவில்லை என்று வருந்துகிறார்கள். அழிந்துவரும் தமிழ்க் கலைகளைப் பாதுகாத்து உயிர்ப்பிக்க வேண்டுமென்ற ஆர்வம் நமது நாடு சுதந்திரம் எய்திய பின்னர் ஆங்காங்கே துளிர்த்து வருகிறது. தமிழ்க் கலைகளை உயிர்ப்பிக்க முன்வரும் அறிஞர்கள் இக் கோலக் கலைமீதும் கண்ணோட்டம் செலுத்துவது அவசியம். நமது பெண்கள் அறுசுவை உண்டி சமைக்கும் மடைக் கலையோடு நில்லாது, ஆடுதல், பாடுதல், பூத்தொடுத்தல், குழந்தை மருத்துவம், கோலந் தீட்டல் போன்ற நுண்கலைகளையும் பயின்று நமது இல்லங்களில் கலாதேவிகளாய், இலட்சுமிகளாய் வாழ்ந்த தமிழகத்தின் பொற்காலத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். கலைகள் அனைத்தும் நமது கன்னியர்கள் கையில் இருந்ததி னாலன்றோ நமது முன்னோர்கள் கலைத் தெய்வங்கள் அனைத்தை யும் பெண்ணாகக் கண்டனர். பண்டைக்காலத்துப் பட்டிக்காட்டு பாட்டிகள் தீட்டிய கோலங்களைப்போல இன்று எம். V., பட்டம் பெற்ற பெண்களல்ல - சித்திரக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பெண்களும் தீட்ட முடியாதிருப்பதை எண்ணி நமது கோலச் சிற்பங்கள் நூல்வடிவில் அழகுபெற வெளிவரச் செய்யவேண்டியது நமது இன்றியமையாத கடமை என்பதை நாம் நன்குரவேண்டும். கோலக் கலை புத்துயிர் பெற்று எழ நமது பத்திரிகைகளும், பொது மக்களும் இடைவிடாது முயலவேண்டும். நிற்க, நமது பெண்கள் தீட்டிய கோலங்களில் ஆயிரக்கணக் கான வகைகள் உண்டு என்றாலும் பலவற்றிற்குப் பெயரே தெரிய வில்லை. தெரிந்தவைகளில் குறிப்பிடத் தக்கவை, விளக்கு மாடம், திருவிளக்கு, தூக்கு விளக்கு, கை விளக்கு, கட்டில், தேர், தூண் பல்லக்கு, தூக்குப் பல்லக்கு, தொட்டில், கப்பல், ஊஞ்சற் பலகை, பிரம்ம முடி, நிலைக்கண்ணாடி, மிட்டாய்ப் பெட்டி, தாம்பாளம், பாக்குத் தட்டு, சந்தனக் கும்பா, பன்னீர்ச் செம்பு, பூச்செண்டு, கலியாண மேடை, முத்துப் பந்தல், முத்துப் பெட்டி, பாசிப் பந்து, புல்லாக்கு, நாற்காலி, கலியான மனை, கலியான மேடை, கூசா, சோபா, இரத்தின சமுக்காளம், தீபாராதனைத் தட்டு, புஷ்பக விமானம் போன்ற பல கோலங்களாகும். ஆனால் இவைகளில் ஒவ்வொன்றும் ஒன்றிரண்டு விதமாகத் தான் (கோலங்கள்) தீட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் தாமரை சிறப்புற்ற மலராய் இருப்பதால் அதை நூற்றுக்கணக்கான விதமாக அழகுறத் தீட்டியிருக்கிறார்கள். அவை அனைத்தையும் வெளியிடவேண்டுமாயின் இச்சிறுநூல் போதாது. நமது நங்கையர்கள் தீட்டிய கோலங்கள் - சிறப்பாகத் தாமரை வடிவக் கோலங்கள் - சிற்ப விதிகளுக்கு முரண்படாமல் அழகுடன் மிளிர்கின்றன. இதைப் புகழ்ந்து எமது மதிப்பிற்குரிய நண்பரும் ஈழநாட்டுச் சிற்ப மேதையும், இலங்கை அரசாங்கத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழக உதவிக் கமிஷனரும் ஒவிய விற்பன்னருமான காலஞ்சென்ற எ. சண்முகநாதன் அவர்கள் பல கட்டுரைகள் எழுதிவந்தார். தாமரையைத் தமிழ்நாட்டுச் சிற்பிகளும், ஓவிய வல்லுநர் களும் எவ்வாறு அழகுபடச் செதுக்கியுள்ளார்கள் என்று ஆராய்ந்து வந்ததோடு, கோலத்தைப்பற்றி ஓர் அழகிய நூலை வெளியிடவும் முயன்று வந்தார். தமிழ்நாட்டின் துரதிஷ்டம் அவரது நூல் வெளிவராமல் போய்விட்டது. தாமரையைப் பற்றிய சில கோலவடிவங்களை இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து வெளிவரும் அப்சர்வர் என்னும் ஆங்கில தினசரியில் வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது நன்றி உரித்தாகுக. 10. ஆடைகளும் தாமரையால் அழகுபெற்றன உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் மரவுரி உடுத்தும் காட்டுத் தழைகளை அரையிற் பிணித்தும் ஆட்டுத் தோலை அரையிற் கட்டியும் நாகரிகமற்ற மக்களாய் வாழ்ந்த காலத்தில் தமிழர்கள் பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும், நவமணிகள் இழைத்த பொன் அணிகளைப் புனைந்தும் நாகரிகத்தில் நனிசிறந்த மக்களாய்ச் சீரும் சிறப்பும் பெற்று விளங்கினர். பொதுவாகத் தமிழர்கள் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் சிறந்த ஆடைஅணிகளை அணிந்திருந்தனர் என்று சொல்வதற்குப் பயம். தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே உணவு, உடை விஷயத்தில் மிகவும் முன்னேறியிருந்தனர். என்றாலும் இன்றைய பண்டிதர்கள், தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பருத்தி நூல், பட்டு நூல், கம்பளி நூல் முதலியவைகளை மெல்லியதாக நூற்றுப் பல்வேறுவிதமான ஆடை களை அணிந்துவந்தனர் என்று தான் எழுதுகின்றனர். சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கர்கள், உரோமர்கள் போன்ற நாகரிக மக்களின் பொற்காலங்களையும் தாண்டியவர்களாய், மொகஞ்சதாரோவில் தலைசிறந்த நகரங் களையும், கட்டிடங்களையும், முத்திரைகளையும், அணிகளையும், ஆடைகளையும் செய்து நாகரிகத்தின் உச்சிக்கொம்பை எட்டிப் பிடித்த மக்களாய் வாழ்ந்தனர் என்று சர் ஜான் மார்ஷல், அறிஞர் ஹிரா அடிகள், வில்சன் போன்ற மேனாட்டறிஞர்கள் தக்க சான்றுகளுடன் நிலைநாட்டியுள்ளனர். நமது இந்திய அரசாங்கத்தின் கைத்தொழில், வணிக அமைச்சால் நிறுவப்பெற்ற அகில இந்திய கைப்பணிக் கழகம் வெளியிட்ட இந்திய அச்சுப் புடவை (Indian Printed Textiles) என்ற நூலில், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மொகஞ்சதாரோவில் காணப்படும் ஆடைகளைக் கொண்டு, நெய்தற் கலை மிகத் தொன்மையான காலத்திலே இந்தியாவில் அரும்பியது என்பதை உறுதிப்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது. (The art of using pigments to ornament fabricks has an ancient origin. The discovery of fragment of a madder - dyed fabric at Mohenjo - daro sticking to a silver vase, would led us to believe that the mardent proses of dyeing cloth was known in India five thousand years ago) Indian Printed Textiles. Page. 4. Published by All-India Handicrafts Board, Ministry of Commerce & Industry Government of India. பண்டைத் தமிழகத்தில் உழவுத்தொழிலுக்கு அடுத்த படியாக அரும்பியது நெசவுத்தொழிலே யாகும். செய்யுந் தொழில் எல்லாம் சீர்தூக்கிப் பார்க்கின் நெய்யுந்தொழிலுக்கு நிகரில்லை என்று அறவோர்கள் எல்லாம் இத்தொழிலை உயர்ந்த தொழிலாக ஏற்றுச் செய்துவந்தனர். ஆடைகளில் பல்வேறு வண்ணங்கள் தீட்டிய ஆடைகளும் நெய்யப்பட்டன. ஆடைகளில் அவ்வவற்றின் தன்மைக்கு ஏற்ப அவை களுக்குப் பலவிதமான பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கோசிகம், பீதகம், பச்சிலை அர்த்தம், நுண்துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக் கம்மி, குருதி, கரியல், பேடகம், புரியட்டக் காசு, வேதங்கம், புங்கர்க் காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்று மடி, நூல் யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம் இறைஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி என்று 36 வகையான ஆடைகள் சிலப்பதிகார உரையில் கூறப்பட்டுள்ளன. இஃதன்றி, இவற்றின் தன்மைக்கேற்ப துகில், பூந்துகில், புட்டகம், உடுக்கை போன்ற பெயர்களும் கொடுக்கப்பட்டிருந்தன. துகில் வெண்மை நிறம் உடையதாயும், சிவப்பு நிறம் உடைய தாயும் இருக்கும். பூந்துகில் தாமரை, மல்லிகை போன்ற மலர்களின் வடிவம் உடையதாய் நெய்யப்பட்டது. 1. துகில்சேர் மலர்போல் மணிநீர் நிறைந்தன்று (பரிபாடல்) 2. மீப்பால் வெண்துகில் போர்க்குநர் பூப்பால் வெண்துகில் சூழ்ப்பக குழல் முறுக்குநர் (பரிபாடல்) 3. புட்டகம் பொருந்துவ புனைகுவோரும் (பரிபாடல்) 4. நீலக் கச்சைப் பூவராடை (புறம்) 5. பாம்பு பயந்தன்ன வடிவின் காம்பின் கழைபடு சொலியின் இழைமணி வாரா ஒன்பூங் கலிங்கம் (புறம்) 6. கோபத் தன்ன தோயாப் பூந்துகில் (பெரும்பாண்.) என்று கூறப்படும் பாடல்களினின்று பன்னிற நூற்களால் பல்வேறு விளிம்புகளும், முன்றானைகளும் உள்ள அழகிய ஆடைகள் நெய்யப்பட்டதை அறியலாம். விளிம்பிலோ, முன்றானையிலோ, ஆடையின் உடலிலோ ஆடைகள் அழகுற்று விளங்கத் தாமரை மலர், அல்லி மலர், பிச்சிப்பூ, மல்லிகை மொட்டுப் போன்ற பூக்களும் அரும்புகளும் அணிபெற இலங்குமாறு ஆடைகள் நெய்தனர். இம்மலர்கள் சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள், ஊதா, பச்சை போன்ற பல்வேறு நிறங்களில் மட்டுமன்றி வெள்ளிச் சரிகை, பொற்சரிகை இவற்றா லும் தகதகவென்று மின்னப் பட்டிலும், பஞ்சிலும் அழகுபொலிய நெய்தனர். எல்லாப் பூக்களிலும் தாமரைப்பூவே தமிழ்நாட்டுப் பெண்களின் உள்ளத்தைக் கவர்ந்தது. மேலும் அவர்கள் அக்காலத்தில் நெய்த ஆடைகளும், விளிம்பும், முன்றானைகளும், உடம்பும் அழகுற இருந்தது மட்டு மன்றி மிக மெல்லியவாயும் இருந்துவந்தன. 1. நோக்கு நுழைகல்லா நுண்மை யழக்கனிந்து அரவுரி யன்ன அறுவை (பெரும்பாண்.) 2. ஆவி யன்ன அவிநூற் கலிங்கம் 3. புகைவிரிந் தன்ன பொங்குதுகி லுடிஇ (புறம்) என்று கூறும் சங்கநூற் சான்றுகள் அவர்கள் நெய்த அழகிய மெல்லிய துகிலினை எடுத்துக்காட்டப் போதிய சான்றாகும். பாம்பின் சட்டைப்போலவும், மூங்கிலில் உரித்த மெல்லிய தோல்போலவும், புகையைப்போலவும், பால்நுரை போலவும், தெளிந்த வெண்ணிறமான அருவிநீர்வீழ்ச்சி போலவும் பண்டைத் தமிழர்கள் ஆடைகளை நெய்தனர் என்பதற்கு எண்ணற்ற சான்றுக ளுள. தக்கநாட்டின் சீவகன் கண்ட தாமரைத் தடாகங்கள் திரைச் சீலையில் ஓவியப் புலவன் தீட்டிய தண்டாமரைத் தடாகம்போல் காட்சி அளித்தனவாம். அதைப் பழம்பெரும் தமிழகக் காப்பியங் களில் ஒன்றான சீவக சிந்தாமணியில், படம்புனைந் தெழுதிய வடிவில் பங்கயத் தடம்பல தழீஇயது தக்கநாடு என்று கூறுவதன்மூலம் முற்காலத்திலிருந்தே தமிழக மக்கள் உடுத்தும் சேலைகளில்மட்டுமன்றித் திரைச்சேலைகளிலும் ஓவியத்தி லும் தாமரை சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்பதை நாம் நன்கறியலாம். ஜெர்மய்ன் மெர்லாஞ்சு என்னும் மேனாட்டறிஞர் ஒருவர் இந்தியப் பட்டின் சாயல் என்னும் பொருள்பற்றி இலண்டனில் உள்ள இந்தியக் கழகத்தில் 1938ஆம் ஆண்டில் ஒரு சிறப்புச் சொற் பொழிவாற்றினார். அதில், இந்தியாவின் பட்டு நெசவு பண்டைக் காலத்திலிருந்தே ஒரு தனிச்சிறப்பு வாய்ந்ததாய் இருக்கிறது. ஒருவேளை இந்தியாவின் அழகுக்கலையில் தாமரை ஒரு சாதாரண நோக்கம் உடையதாக இருக்கலாம். தண்ணீர்மீது தகதகவென இலங்கும் பசுமையான தாமரை இலையும் செந்நிறத் தாமரைப் பூவும் எகிப்தியத் தாமரைப் பூவினின்று முழுவதும் வேறுபட்டு எழிலிற் சிறந்து இலங்குகின்றன. இந்தியத் தாமரை மலர், தடாகத்திலுள்ள தண்ணீர் மீது தலைதூக்கி நின்று தன் உறுதியான தண்டின்மீது ஒய்யாரமாக நிமிர்ந்துநிற்கிறது. தாமரைப்பூவின் மேற்பக்கம் ரோஜா மலரைப் போல் தோன்றுகிறது. இந்தியாவில் தாமரை மலர் ஒரு சிறந்த அழகிய மலராக எண்ணப்படுகிறது என்று மொழிந்துள்ளார். அதோடு அவர் எழுதிய கட்டுரையில் ஆர். பில்டர் என்ற பிரஞ்சு அறிஞர் எழுதிய இந்தியத் துணிகள் என்ற நூல் ஒன்றில் வெளிவந்த பழங்காலத்திய இந்தியப் பட்டுகளில் பொறித்த தாமரைப் பூக்களின் உருவங்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் நெய்யப்பட்ட பங்கய மலர்கள் தீட்டிய பட்டுப் புடவைகள் பார் முழுவதிலுமுள்ள பார்த்திபர்களின் பாரிய அரண்மனைகள் அனைத்தையும் அலங் கரித்தன. பாண்டிய மன்னர்கள் இலங்கையிலுள்ள சிங்கள மன்னர் களுக்கும், உரோம அரசர்களுக்கும், கிரேக்க அரசர்களுக்கும், மொகலாய மன்னர்களுக்கும் இப் பங்கயப்பட்டினைப் பரிசாக அளித்தனர். அந்த அயல்நாட்டு மன்னர்களும் இப் பரிசை அன்புடன் ஏற்றுத் தங்கள் நாட்டிலுள்ள சிறந்த பொருள்களைப் பதிலாக அளித்துப் பாண்டிய நாட்டுப் பங்கயப் பட்டால் தங்களின் அந்தப் புரங்களை அலங்கரித்தனர். இறுதியாக இங்கிலாந்து இளவரசியாம் எழிலிற் சிறந்த ஏந்திழை எலிசபெத் என்பாரின் பள்ளியறையிலுள்ள படுக்கை விரிப்பாகவும் மலர்ந்தது, இந்தப் பாரத நாட்டுப் பங்கயப் பூம்பட்டு. எலிசபெத் இராணியின் திருமணத்திற்காகப் பாரதநாடு அளித்த பரிசாகிய இப் பங்கயப்பட்டு எலிசபெத் இராணியின் இருதயத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டதால் தம் திருமணத்தின்போது தம் பள்ளி யறையிலுள்ள பஞ்சணைமீது பாரத நாட்டுப் பங்கயப் பூம்பட்டை விரித்து அதன்மீது அவரும் அவர் கணவரும் முதல் - இரவைக் கழித்தனராம். 11. தமிழக வரலாற்றைக் காட்டும் தாமரைக் காசு மிகத் தொன்மையான காலத்தில், உலகத்திலுள்ள எல்லா நாட்டிலும் பொருள் பரிமாற்றம் பண்டமாற்று முறையிலே நடை பெற்றுவந்தது. இது வரலாற்று நூற்புலவர்கள் அனைவரும் ஒரு மிக்கக்கொண்ட முடிபாகும். தமிழகத்திலும் மிகப் பழமையான காலத்தில் பண்டமாற்று முறை தோன்றிப் பின்னர்க் காசு என்னும் பரிமாற்றுக் கருவி முளைத்தது. இந்தக் காசையே நாணயம், துட்டு, சல்லி என்று கூறு கிறோம். உலகிலுள்ள பல நாடுகளில் ஒருகாலத்தில் காசாக ஆடு, மாடு, கொட்டைகள், சோவிகள் போன்ற பொருள்கள் உபயோகப் படுத்தப்பட்டு வந்தன. தமிழகத்தில் மிகப் பழமையான காலத்தில் மாடுகள் காசாக உபயோகப்பட்டு வந்தன. அக்காலத்தில் ஒருவனுடைய செல்வத்தை மதிப்பிட அவனுக்கு எத்தனை மாடுகள் இருக்கின்றன என்ற கணக்கின்மீதே ஒரு முடிபிற்கு வந்தனர். அதனால் மாட்டிற்குச் செல்வம் என்ற பொருள் கொள்ளப்பட்டு நிகண்டுகளிலும், அகராதி களிலும், இலக்கியங்களிலும் மாடு என்னும் பதம் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. பண்டைக்காலத்தில் தமிழ்நாடு நானிலமாகப் பிரிக்கப்பட் டிருந்தது. அந்த நானிலங்களிலே ஒன்றாக முல்லை நிலத்தின் தெய்வம் மாயோனாகக் காணப்பட்டான். அவன் மாடு மேய்ப்பவ னாகக் கருதப்பட்டான். அத் தெய்வம் மாட்டையுடையதாய் விளங்கியதானது அது பெருஞ்செல்வம் உடையதாக இருந்தது என்பதையே மெய்ப்பிக்கிறது. மாடு மேய்ப்பவன் கோன் என்று கூறப்பட்டான். கோன் என்றால் அரசன் என்று பொருள் கொள்ளப்படும். மாட்டை உடையவன் - அதாவது செல்வத்தையுடையவன் மன்னனாக மதிக்கப்பட்டான். மாடு மேய்க்கும் கோல் (கம்பு) பிற்காலத்தில் மக்களுக்கு நீதி வழங்கும் செங்கோலாகப் பரிணமித்தது. நானிலத்தில் மற்றொரு நிலமான மருதநிலத்துத் தெய்வம் இந்திரன் எனப்பட்டான். தொல்காப்பியத்தில் இந்நிலத் தெய்வம் வேந்தன் எனக் கூறப்படுகிறது. இந்த வேந்தனே பிற்காலத்தில் சிவபெருமானாகப் பரிணமித்தான். இவன் காளைமாட்டை வாகனமாக உடையவனாகவும், மாடுகளின் கொடிய விரோதியாகிய புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்துகொண் டிருப்பவனாகவும், மாட்டைக் காப்பதற்கக் கையில் மழு, திரிசூலம் போன்ற ஆயுதங்களை உடையோனாகவும் காணப்பட்டான். பசுவிற்கும் காளைக்கும் பொதுப்பெயராக வழங்கிய மாடு என்னும் பதம் நாளடைவில் செல்வம் என்னும் பெயரைப் பெற்றது. பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் அதே பொருளில் உபயோகப்படுத்தப்பட்டும் வந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் சென்ற பின்னர் - பொன், வெள்ளி, செம்பு முதலிய தாதுப்பொருள்கள் செல்வமாகவும், காசாகவும் எழுந்த பின்னர்ப் பண்ட மாற்றுமுறை படிப்படியாக மறையத் தொடங்கிற்று. பண்டமாற்றுப் பொருளாகப் பயன்பட்ட மாட்டுக்குப் பதிலாகப் பொன் நாணயம் வழங்கப்பட்டது. அப்பால், மாட்டைத் தேடிவைக்கும் வழக்கம் குன்றி, பொன்னைத் தேடிவைக்கும் வழக்கம் எழுந்தது. மாட்டைப் பால், தயிர், வெண்ணெய் முதலியவைகளுக் காகவும், ஏர் உழுதல், வண்டி இழுத்தல், பொதி சுமத்தல், செக்காட்டல் முதலிய வேலைகளுக்காகவும் உபயோகப்படுத்தினர். மாடு பண்டமாற்றுப் பொருளாக மதிக்கப்படாமற்போனாலும், மாடு என்னும் பதம் மறையாது நீண்ட காலமாகச் செல்வம் என்ற பொருளில் வழங்கப்பட்டு வருகிறது. மாட்டிற்குப் பதிலாகக் காசு என்ற பொன் நாணயம் தோன்றிய பின்னரும் மாடு என்ற பதம் பெருவழக்குடையதாய் மக்கள் உள்ளத்தில் உறைந்துவிட்டது. சோழநாட்டில் பொற்காசு களை மாடை என்று வழங்கினர். உத்தம சோழன் மாடை, மதுராந்தகன் மாடை, இராஜராஜன் மாடை என்ற பெயர்கள் வழங்கப்பட்டுவந்தன. பழைய தமிழ் இலக்கியங்களில் செல்வம் என்று குறிப்பிட வேண்டியபொழுதெல்லாம் மாடு என்ற சொல்லே பெரும்பாலும் உபயோகப்படுத்தப்பட்டு வந்துள்ளது. தெய்வப் புலவர் திருவள்ளுவர், கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்று கூறியுள்ளார். அதாவது, ஒருவனுக்குக் கல்விதான் அழியாத ஐசுவரியம்; மற்றைய ஐசுவரியம் எல்லாம் மாடு (செல்வம்) அல்ல என்று பொருள் கூறப்படுகிறது. இங்கு மாடு, செல்வம் என்று குறிப் பிடப்படுவது உற்று நோக்குதற்குரியது. இஃதன்றி, அப்பர்பெருமான் என்னும் சைவ சமய நாயன்மார் களில் ஒருவரும், சமண சமயத்தைத் தமிழ் நாட்டில் வேரறுத்த வீரருமான பேரறிஞர், திருச்சேறைக் குறுந்தொகையில், மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர் ஓடி எய்த்துப் பயனிலை ஊமர்காள் என்றும், வைத்த மாடு மடந்தைநல் லார்களும் ஒத்தொவ் வாதஉற் றார்களும் என்செய்வார் என்றும் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. இஃதன்றி, மாட்டின் உருவம் பண்டைக்காலத்தில் வெளி யிடப்பட்ட காசுகளில்கூடப் பொறிக்கப்பட்டுவந்தது. இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ளதாகக் கருதப்படும் மொகஞ்ச தாரோ முத்திரைகளில் திமில் பொறித்த தென்னிந்தியக் காளை மாட்டின் உருவம் காணப்படுகிறது. இது அக்காலத்தில் உபயோகப் படுத்தப்பட்ட காசாகவும் இருக்கலாம் என்று பேரறிஞர்கள் பலர் மதிக்கின்றார்கள். அதோடு, பழம்பாண்டியர்கள் வெளியிட்ட காசுகளில் மாட்டின் உருவம் காணப்படுகிறது. பல்லவர்களின் காசுகளில்கூட மாட்டின் உருவம் காணப்படுகிறது. மாட்டைச் செல்வமாக வளர்த்துவந்தது தமிழ்நாட்டில்மட்டுமன்றிக் கிரேக்க நாட்டிலும், உரோம நாட்டிலும் வழக்கமாக இருந்துவந்ததால் அவர்கள் நாட்டில் வெளியிட்ட பழங்காசுகளிலும் மாடுகள் இடம்பெற் றுள்ளன. நாளடைவில் நாகரிகம் தமிழ்நாட்டில் நனிசிறந்து விளங்கிய தன் பயனாக நாணயத்திற்குத் தாதுப்பொருள்கள் உபயோகப் படுத்தப்பட்டன. தங்கம் இயற்கைப் பொருளாகவே கிடைத்ததால் அதற்கு உலோகம் என்ற பொருளில் பொன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். அப்பால் வெள்ளி, செம்பு, இரும்பு முதலிய தாதுப் பொருள் கிடைக்கவே அவற்றை முறையே வெண்பொன், செம்பொன், கரும்பொன் என்று வழங்கினர். பிற்காலத்தில் சாவகத்திலிருந்து தமிழகத்திற்கு ஏராளமாகப் பொன் கொண்டுவரப்பட்டது. பொன்னைச் சாவக மக்கள் சாவக மொழியில் தங்கம் என்று கூறியதால் தமிழர்களும் பொன்னைத் தங்கம் என்று அழைக்க முற்பட்டனர். முதன்முதலில் உலோகக் காசுகள் இப்பொழுதுள்ள காசாகத் தகட்டு வடிவத்தில் முத்திரையிட்டு வழங்கப்படவில்லை; பெரிதும் சிறியதுமான கட்டி வடிவுள்ள காசாகவே வழங்கப்பட்டன. அது காணம், குன்றிமணி, மஞ்சாடி விதை, கழற்சிக் காய் முதலிய கொட்டைகளின் எடையுள்ளதாய் வழங்கப்பட்டது. அப்பால் காசுக் கட்டிகள் - அதாவது முத்திரையிடாத கட்டி நாணயம் எடை குறைந்தும், மாற்றுக் குறைந்தும் போகவே, உரையும் நிறையும் சரியாக உள்ள தகட்டில் முத்திரையிட்ட காசு நாணயம் மக்களிடையே புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது. கடைச்சங்க காலத்திலே பண்டமாற்று, கட்டி நாணயம், காசு நாணயம் ஆகிய மூவகை முறைகளும் புழக்கத்திலிருந்ததாகத் தமிழ் அறிஞர்கள் கூறுகின்றார்கள். நீண்டகாலமாகச் சிற்றூர்களிலெல்லாம் விற்பனையில் பண்ட மாற்று முறையே அனுஷ்டானத்தில் இருந்து வந்தது. நகரங்களிலோ அஃகம், காணம், காசு, பொன் முதலிய காசு நாணயம் செலாவணி யில் இருந்துவந்தது. காசு அச்சிடும் இடத்திற்கு அஃகசாலை என்றும், காசடிக்கும் பொற்கொல்லர்களுக்கு அஃசாலையர் என்றும், காசு அச்சிடும் தெருவிற்கு அஃசாலைத் தெரு (Mint Street - தங்கசாலைத் தெரு) என்றும் பெயர் வழங்கிவந்தது. அஃகம் என்பது காசு என்றும், நாணயத்தில் பன்னிரண்டில் ஒரு பாகம் என்றும், காசு என்பது பதினான்கு குன்றிமணி எடையுள்ளதென்றும் அறிகிறோம். சேர, சோழ, பாண்டியர், பல்லவர் ஆகிய தமிழ்நாட்டின் வேந்தர்களும் தத்தம் நாட்டில் தத்தம் சின்னம் பொறித்த ஏராளமான காசுகளை வெளியிட்டுத் தமது நாட்டிலும், தாம் வெற்றிகொண்ட நாட்டிலும், தம் காசுகளைச் செலாவணியில் இருக்கச் செய்துள்ள னர். தமக்கு வேண்டிய அயல்நாட்டினரின் பொற்காசுகளையும் தம் நாட்டில் செலாவணி இருக்க இடம் அளித்தனர். மிகப் பழங்காலத்தில் வெளியிட்ட காசுகள், சதுர வடிவமாக வும், அப்பால் வெளியிட்ட காசுகள் வட்டவடிவமாகவும் காணப் படுகின்றன. அக் காசுகளில் பெரும்பாலும் அரச முத்திரையோ, வேறு சில சின்னமோதான் காணப்படுகிறது; மன்னனது நாட்டின் பெயரோ, அரசனது நாமமோ, வெளியிட்ட ஆண்டோ, காசின் மதிப்போ அவற்றில் காணப்படவில்லை. பிற்காலத்தில் வெளியிடப்பட்ட காசுகளில் அரசனுடைய பட்டப் பெயரும், அவனுடைய முத்திரையும் காணப்படுகின்றன; சில காசுகள் இன்று இயந்திரங்களில் அச்சிடப்பட்ட காசுகளைவிட மிக அழகுடையவையாய்க் காணப்படுகின்றன; சில காசுகள் மிளகாய் விதை அளவில் சிறியனவையாகக் காணப்படுகின்றன. பாண்டியர்களின் முத்திரையிட்ட வெள்ளிக் காசுகளும், அதைப்போன்ற வடிவத்தில் பாண்டிய முத்திரையிடாத பழைய வெள்ளி அடிகாசுகளும் (Silver Puranas) கொற்கை, கன்னியாகுமரி, மதுரை, கூச்பீகார், டில்லி, இலங்கை முதலிய இடங்களிலெல்லாம் காணப்படுகின்றன. இக் காசுகள் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டவை என்று அறிஞர்கள் மதிப்பிடு கின்றார்கள். போடிநாயக்கனூரில் சமீபத்தில் கிடைத்த பாண்டியன் முத்திரையிட்ட வெள்ளிக் காசுகள் பாண்டியர்களின் தொன்மையை யும், நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாண்டியர்கள் காசுகள் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற சிறப்பையும் காட்டுகின்றன. நமது நாட்டை ஆண்ட பண்டைய தமிழ்வேந்தர்கள், புலவர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஏராளமான பொற்காசுகளை வாரிக் கொடுத்துவிட்டனர். நாகரிகம் வளர வளர மக்கள் ஏராளமான பொன், அணிகளை யும், பொற்கலங்களையும், பொன் வட்டிலையும் செய்யத் தலைப் பட்டனர். பொற்சிலைகள் பல எழுந்தன. கோபுரங்களில் பொற் குடங்கள் ஏற்றப்பட்டன. தெய்வப் படிமங்கள் இருக்கும் மண்டபத் தின் கூரைக்குப் பொன்தகடு வேயப்பட்டது. போர்களில் ஒரு நாட்டை மற்றொரு நாட்டார் சூறையிட்ட தால் ஏராளமான பொற்காசுகள் கொள்ளையிடப் பட்டன. ஒருசில மக்கள் அரசர்களின் கொள்ளைகளுக்கும், தனிப்பட்ட திருடர் களின் கொள்ளைகளுக்கும் பயந்து பொற்காசுகளை பூமியிற் புதைத்து வைத்தனர். அவைகள் மீண்டும் தோண்டி எடுக்கமுடியாதபடி இன்றும் புதையுண்டு கிடக்கின்றன. எஞ்சிநின்ற கோடானுகோடி விலைமதிப்புள்ள தமிழ் நாட்டுப் பொன்னும் மணியும் பொற்காசுகளும் டில்லியில் அரசாண்ட மொகலாய மன்னனால் சூறையாடிக் கொண்டுபோகப்பட்டன. அதனால் இன்று தமிழ்நாட்டில் பழந்தமிழர் வெளியிட்ட பொற் காசுகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. பொன் கிடைப்பது அரிதாகிவிடவே தமிழகத்தில் வெள்ளி நாணயம் செலாவணியில் பெரிதும் இருந்துவந்தது. அப்பால் அதுவும் அருகவே, செம்பு நாணயம் பெரிதும் செலாவணியில் வந்தது. அப்பொழுது தலைத்தரக்காசுகள் பொன்னாகவும், இடைத் தரக் காசுகள் வெள்ளியாகவும், கடைத்தர நாணயங்கள் செம்பாக வும் செலாவணியில் இருந்துவந்தன. காசு, பொன், கழஞ்சு, மாடை என்ற பல தரங்களில் வழங்கி வந்த பொன் நாணயங்கள் அனைத்தும் படிப்படியாய் மறைந்தது. இறுதியில் காசு ஒன்றே நிலைத்தது. பணம் என்ற வெள்ளிக் காசும், துட்டு என்ற செம்புக் காசும் பிற்காலத்தவைகள். அக்காலத்தே பொற்காசுகளை வணிகர்கள் செம்பு கலந்து ஏராளமாக வெளியிடவே நல்ல காசு இதுவென்றும், கலப்புக் காசு இதுவென்றும் வேறுபாடு காண்பதற்காகப் பலவிடங்களில் கட்டளைக் கல் என்ற உரைகல்லும், தண்டவாணி என்னும் உரை யாணியும் எற்படுத்தப்பட்டன. கலப்புக் காசுகளை மக்கள் வாசி பெற்றே வாங்கினர். பொற் காசில் கலந்துள்ள செம்பிற்காக மக்களால் வாங்கப்பட்ட வட்டமே வாசி என்று கூறப்பட்டது. தூய பொற்காசு நற்காசு எனப்பட்டது. நாம் எடுத்துக்கொண்ட விஷயத்திற்குப் புறம்பாக இருப்பி னும், இங்கு காசு சம்பந்தமான ஆராய்ச்சியைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் சொல்லாமல் இருக்க எனது உள்ளம் ஒருப்பட வில்லை. தமிழர்கள் பழமையில் பற்றுக்கொண்டவர்கள் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் நடைமுறையில் அவ்வாறு அவர்கள் காணப்படவில்லை. இன்று ஒரு மேனாட்டாரை எடுத்துக்கொண்டால் அவர் வீட்டில் அவருடைய அப்பனின் ஆடை, பாட்டனின் படம், பூட்டனின் பூண்தடி, ஓட்டனின் உண்கலங்கள், அவர்களின் செருப்பு, பேனா, கையெழுத்துக்கள் போன்றவைகளைப் பத்திரப் படுத்தி வைத்திருப்பார். ஆனால் தமிழ்மகனோ தன் தந்தையின் ஆடையையோ, அவர் உபயோகப்படுத்தின எழுத்தாணியையோ, அவரது அணிகளையோ, அவர் உபயோகப்படுத்தின செம்பு, வட்டில் போன்ற பாத்திரங்களையோ பத்திரப்படுத்தியது பண்டும் இல்லை; இன்றும் இல்லை. இவ்வுணர்ச்சி பரவலாகத் தமிழ்நாட்டில் எங்கும் பரவிநின்றதால் நமது நாகரிகத்தை நிலைநாட்டத்தக்க பழம்பொருள் எதையும் நாம் உலகின் முன் காட்டவில்லை. துரதிஷ்டவசமாக நமது மன்னர்களின் அரண்மனைகளோ, முடிகளோ, செங்கோல் களோ, குடைகளோ, கொடிகளோ, அணிகளோ, அவர்கள் வெளி யிட்ட காசுகளோ காண்பது குதிரைக்கொம்பாக இருக்கின்றது. இன்று நம் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக இலங்குவது நமது கோயிற் கட்டிடங்களும், சிலைகளும், செப்புப் படிவங்களும், கோயிலில் உள்ள அணிகளும், பாத்திரங்களும், விளக்குகளும் பிறவுமே யாகும். நமது நாட்டுப் பழங்கால மன்னர்கள் வெளியிட்ட காசு களைப் பற்றி நாம் கவனம் செலுத்தியதே இல்லை. அதிர்ஷ்ட வசமாக நமது நாட்டுப் பழங்காசுகள் பல இப்பொழுது கிடைக் கின்றன. என்றாலும் நாமோ நமது அரசாங்கமோ அதைப்பற்றிப் போதிய அக்கறை செலுத்தவில்லை. நமது நாட்டிலுள்ள சேர, சோழ, பாண்டிய, பல்லவப் பேரரசுகள் ஏராளமான காசுகளை வெளியிட்டன. அவைகளைச் சேகரிக்க நாம் கச்சை கட்டிக்கொண்டு முன்வரவில்லை. நமது நாட்டில் கிடைக்கும் அரிய பழங்காசுகளை அதிக விலை கொடுத்து வெளிநாட்டார் வாங்கிக்கொண்டு போய்விடு கிறார்கள். இலங்கையில் ஏராளமான சேர, சோழ, பாண்டியர் காசுகள் கிடைக்கின்றன. அவைகளை சேகரிக்க தமிழ் மக்கள் முன்வர வில்லை. அந்தமான், மலைநாடு, சாவகம், காம்போஜம், தாய்லந்து முதலிய இடங்களில் தமிழ்நாட்டுக் காசுகள் கிடைக்கலாம் என்று நாம் சிந்தித்ததே இல்லை. நமது அறிஞர்கள் பலருக்கு நமது பழங்காசுகளின் முக்கியத்துவமே புலப்படவில்லை. சில பேரறிஞர்கள் பழங்காசுகள் சேகரிப்பதைத் தீப்பெட்டி லேபில் சேகரித்தல், அஞ்சல் முத்திரை சேகரித்தல் போன்ற பொழுது போக்குக் கலையாகக் கருதுகிறார்கள். இது பெரிய வெட்கக்கேடாகும். காசிப் பல்கலைக் கழகத்தில் இந்தியர் காசு ஆராய்ச்சிக் கழகம் (The Numismatic Society of India) என்று ஒரு தாபனம் இருக் கிறது. இது தோன்றி 25 ஆண்டுகளாகின்றன. இதில் இன்று 270 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். காசிப் பல்கலைக் கழகம், லட்சுமணபுரி பல்கலைக் கழகம், கல்கத்தா பல்கலைக் கழகம், திருப்பதி பல்கலைக் கழகம் போன்ற பல்வேறு பல்கலைக் கழகங்களின் சரித்திரப் பேராசிரியர்களும், மற்றையோர்களும் இக் கழகத்தில் அங்கம்பெற்றுள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் அரசாங்கப் புதை பொருள் ஆராய்ச்சிப் பகுதி, அரசாங்க எபிகிராபக் பகுதி ஆகிய வற்றிலுள்ள மூவர் உத்தியோகத் தோரணையில் பெயரளவில் அங்கம் வகிக்கின்றார்கள். இஃதன்றி, நானும் எனது மாவட்டத்தைச் சேர்ந்த கல்லிடைக் குறிச்சி வழக்கறிஞர் ஈவரனும், செங்கோட்டைப் புகைவண்டிச் சிற்றுண்டிச் சாலை நிர்வாகி வாஞ்சீவரனும், புதுச்சேரியைச் சேர்ந்த அமரநாத் என்பவரும் அங்கத்தினர்களாக இருந்துவரு கிறோம். என்னைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டிலே எவரையும் விட அதிகமான பழங்காசுகள் சேகரித்து வைத்திருக்கிறேன்; ஆராய்ந்தும் வருகின்றேன்; அவற்றினை வெளியிடவும் தயாராயிருக்கிறேன். மற்றவர்களைப்பற்றி நான் அதிகம் சொல்வதற்கில்லை. ஆனால் இக் கழகத்தில் தமிழ்நாட்டு வரலாற்றுத் துறையில் ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு வரலாறு இன்னும் சீரிய முறையில் எவராலும் எழுதப்படவில்லை. தமிழ்நாட்டு வரலாற்றை உயர்ந்த முறையில் வரையத் தமிழர்கள், தமிழ் இலக்கியம், காசு ஆராய்ச்சி, கல்வெட்டு, செப்பேட்டு ஆராய்ச்சி, வெளிநாட்டு வழிப்போக்கர்கள் தமிழகம் வந்து பார்த்து எழுதிய குறிப்புகள் முதலியவைகளை நன்றாக ஆராயவேண்டும். இத் துறையில் நன்கு ஆராயாமல் வரலாறு எழுதினால் அது நல்ல வரலாறாகப் பிறநாட்டு அறிஞர்களால் மதிக்கப்படமாட்டாது. நமது அறிஞர்கள் இத் துறையில் இன்னும் காலெடுத்து வைக்கக்கூட இல்லை. இந்தியக் காசு ஆராய்ச்சிக் கழகத்திலிருந்து வெளியிடப்படும் முத்திங்கள் வெளியீட்டில் இதுவரை தமிழ் நாட்டுக் காசைப்பற்றி ஒரு கட்டுரைகூட எவரும் எழுத முன்வரவில்லை. நமது அண்டை நாடான ஆந்திர நாட்டில் அறிஞர்கள் ஆந்திர வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் என்று ஒன்று கண்டு, அதன் சார்பில் ஒரு மாதப் பத்திரிகையையும் நடத்திவருகின்றனர். அந்நாட்டி லுள்ள வரலாற்று அறிஞர்கள் பலரும் கட்டுரை வழங்கிவரு கின்றனர். அதேபோன்று, தமிழ்நாட்டு வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் (Tamil Nadu Historical Research Society) கருக்கொள்ளும் அறிகுறியே இந்த 1964ஆம் ஆண்டில்கூட இல்லை என்றால், வரலாற்று ஆராய்ச்சிப் பத்திரிகையை நாம் எப்படி எதிர்பார்ப்பது? இதெல்லாம் பார்க்கும்பொழுது, நமது காலத்தில் நமது நாட்டின் செம்மையான வரலாற்றைப் பார்க்கமுடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இது நிற்க. நான் 1950ஆம் ஆண்டிலிருந்து தமிழ் நாட்டுப் பழங்காசுகளைச் சேகரித்துவருகிறேன். பொன், வெள்ளி, செம்புக் காசுகளாகப் பழந்தமிழர் காசுகள் மட்டும் என்னிடம் ஆயிரத்துக்கு மேற்பட்டவை உண்டு. இஃதன்றிக் காலஞ்சென்ற திருச்சி சர். டி. தேசிகாச்சாரி அவர்களிடம் சுமார் 200 காசுகள் இருந்தன. அவைகள் என்ன வாயினவென்று தெரியவில்லை. சென்னையிலுள்ள திருவாளர் ஸ்ரீநிவாசகோபாலாச்சாரி அவர்களிடமும், எ. பார்த்தசாரதி அவர்களிடமும் கொஞ்சம் காசுகள் இருந்தன. அவைகளை அவர்கள் புதுடில்லியிலுள்ள மத்திய அரசாங்க தேசீயத் தொல்பொருள் காட்சிசாலைக்கு விற்றுவிட்டார்கள். இன்று தமிழகத்தின் வரலாற்று ஆராய்ச்சிக்குரிய உயர்ந்த காசுகளின் சேமிப்பு என்னிடமே உள்ளது. எனவே, காசுகளில் தாமரைக்கு எவ்வளவு இடமுண்டு என்று எளிதில் என்னால் தீர்மானிக்க முடிந்தது. தாமரை (பதுமம்) தமிழகத்தின் தலையாய துறைகளிலெல் லாம் புகுந்து சிறப்புற்று விளங்குவதைப்போல் காசிலும் இடம் பெற்று ஒளிர்கிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பழம்பாண்டியர்களின் துறைமுகப்பட்டினமாக விளங்கிய கொற்கையிலும், இந்தியாவின் தென்கோடியான குமரிமுனையிலும், சோழநாட்டிலும், ஈழநாட்டி லும், வடநாட்டிலுள்ள அசாமிலும், டில்லியிலும், பாகிதான் நாட்டைச் சேர்ந்த கூச்பீகாரிலும் வெள்ளிப் புரணா என்னும் பழங்காசுகள் கிடைக்கின்றன. அவைகள் சதுரவடிவமாகவும், வட்டமாகவும், நீண்ட சதுரவடிவமாகவும், நான்கு மூலைகளும் வெட்டப்பட்டு வட்டமாக மழுப்பப்பட்டவையாயும் உள்ளன. அவைகளின் முன்பக்கம் சூரியன், தாமரை, யானை, சக்கரம் போன்ற பல சின்னங்கள் காணப்படுகின்றன. பின்பக்கம் எவ்விதச் சின்னமும் இன்றி மழமழவென்றிருக்கின்றன. இதனை அறிஞர் லோவந்தால் 1888ஆம் ஆண்டில் தான் எழுதிய திருநெல்வேலிக் காசுகள் என்ற நூலில் கொற்கைப் பாண்டியன் காசுகள் என்று முடிவுகட்டியுள்ளார். பின்னர்த் தோன்றிய சில காசு ஆராய்ச்சிக்காரர்கள் இதை மறுத்தார்கள் என்றாலும் இது இன்ன நாட்டுக் காசு என்று அவர்களால் அறுதி யிட்டுக் கூற முடியவில்லை. ஆனால் சமீபத்தில் இதேபோன்ற காசுகள் போடிநாயக்க னூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவைகளின் முன்புறம் இதே போன்று காணப்பட்டாலும் பின்புறத்தில் பழம்பாண்டியர்களின் சின்னமாகிய மீன் வடிவம் காணப்படுகிறது. போடிநாயக்கனூரில் கண்டெடுத்த எல்டிங் காசு எனப்படும் வெள்ளிப் பழம்காசுகள் காசு ஆராய்ச்சியாளர்களின் மூளையைக் குழப்பிவிட்டன. கடம்பர்களால் வெளியிடப்பட்ட பொற்காசு ஒன்றிற்குப் பத்ம தங்கா என்று பெயர்; அதாவது தாமரைப் பொன் என்று பொருள்கூறப்படும். இப்பொற்காசின் முன்பக்கத்தில் நடுவே தாமரை மலர் (பதுமம்) மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றிலும் பல உருவங்கள் காணப்படுகின்றன. இக் காசை ஸர் டப்ளியூ. எலியட் என்னும் காசு ஆராய்ச்சி நிபுணர் பனவாசிக் காசு என்றார். ஆனால் அறிஞர் எம். மோராயி என்பவர் இக் காசு பனவாசியை ஆண்ட கடம்பர்குல மக்களின் கனகக் காசு என்று விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார். அறிஞர் இ. ஜே. ராப்சன் என்ற காசு ஆராய்ச்சி அறிஞர், இது கடம்பர்களின் காசு என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் நீண்ட சதுர வடிவமான ஒருவகை நாணயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. அவைகள் மிகத் தொன்மையான காலத்தவைகள் என்று காசு ஆராய்ச்சியில் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். இக் காசை லட்சுமி பிளேக் என்று கூறுகிறார்கள். இதன் முன்பக்கத்தில் ஒரு பெண் உருவம் எட்டு இதழுடைய தாமரை மலர்மீது நிற்பதுபோலக் காணப்படுகிறது. அப்பூவினையொட்டி அடியினின்று அப்பெண் உருவின் இருமருங்கினும் தோள் அளவு வரை இரு தாமரைத் தண்டுகள்மீது இரு பூக்கள் எட்டு இதழ் களோடு எழுந்து நீண்டுநிற்கின்றன. அதன்மீது இரு யானைகள் தம் துதிக்கையில் இரு குடங்களை ஏந்திக்கொண்டு பெண் உருவின்மீது நீர் சொரிவதுபோல் காணப்படுகிறது. நான்கு மூலைகளிலும் நான்கு பிறை வடிவங்களும், இரு பக்கங்களிலும் இரு விளக்குகளும், அதன் மேலே இரு வட்டவடிவங் களும் காணப்படுகின்றன. இது பாண்டியர்கள் வெளியிட்ட கஜலட்சுமி காசாக இருக்க லாம். ஆனால் இலங்கையிலுள் சிலர் இது புத்தர் பெருமானின் தாய் மாயாதேவியின் உருவந் தீட்டிய சிங்களக் காசு என்று கூறுகின்றனர். இலங்கையில் கிடைத்த பொற்காசுகள் சிலவற்றைக் காகவனு என்று கூறுகின்றனர். அக் காசின் முன்பக்கம் ஒரு முரட்டு மனிதன் நின்றுகொண்டிருப்பதைப்போல் காணப்படுகிறது. அவனுடைய கையில் ஐந்து இலைகளுள்ள பூ காணப்படுகிறது. அவன் அரையில் அரச உடைகள் அணிந்திருப்பதுபோல் இரு கோடுகள் காணப் படுகின்றன. பின்பக்கம் ஒரு மனிதன் உட்கார்ந்திருப்பதுபோல் தீட்டப்பட்டிருக்கிறது. அவனுடைய வலக்கையில் தாமரை மலர் வைத்திருப்பதுபோல் காணப்படுகிறது. இலங்கையில் கி. பி. 1153-1186ஆம் ஆண்டுகளில் ஆட்சி புரிந்த வனை இலங்கை வரலாறு எழுதிய ஆங்கில வரலாற்றாசிரியர்கள் மஹா பராக்கிரமபாகு என்று புகழ்ந்தனர். இவன் பாண்டிய மன்னனின் நெருங்கிய உறவினன் என்று கூறப்படுபவன். இவன் வெளியிட்ட பொற்காசுகளில் - அதாவது மாசா என்னும் நாண யங்களில் முன்பக்கம் ஒரு வட்டவடிவமான கோட்டினுள் ஒரு மனிதன் தாமரை மலர்மீது நிற்பதுபோல் காணப்படுகிறது. பின்பக்கம் வட்டவடிவில் சங்குச் சின்னத்தின் கீழ்த் தேவநாகரி எழுத்துக்கள் உள்ளன. இது ஸ்ரீ பராக்கிரமபாகு என்று வாசிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டுக் காசு என்பாரும் உளர். இஃதன்றிச் சேது என்ற தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட காசுகள் இராமநாதபுரம் மாவட்டத்திலும், யாழ்ப்பாணப் பகுதி களிலும் காணப்படுகின்றன. அக் காசில் முன்பக்கம் சுற்றிலும் வட்டமாகப் புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன. அதனுள் ஒரு வட்டம் போடப்பட்டு நடுவே நந்தி படுத்திருப்பதுபோல் தீட்டப்பட்டிருக்கிறது. அதன் மேலே இளம்பிறையும் சூரியனும் காணப்படுகின்றன. பின்பக்கம் வட்ட வடிவமான பல புள்ளிகளும், அதை அடுத்து ஒரு வட்டவடிவமான கோடும், நடுவே தாமரையும் காணப்படுகின்றன. தாமரைப் பொகுட்டில் தமிழ் எழுத்தில் சேது என்று குறிக்கப்பட்டிருக்கிறது. கேது என்று வாசிப்பாரும் உளர். இக்காசை அறிஞர் நல்லூர் - ஞானப்பிரகாச அடிகள் ஈழத் தமிழ்க் காசு என்று கூறியுள்ளார். சிலர், சேதுபதிகள் வெளியிட்ட தமிழ்நாட்டுக் காசுகள் என்று கூறுகின்றார்கள். ஆனால் ஸர் டப்ளியூ. எலியட், இது மகரத்துவஜ கேது என்ற பாண்டிய மன்னன் வெளியிட்ட காசாக இருக்கலாம் என்று அபிப்பிராயப்படுகிறார். குப்த அரசர்களில் புகழ்பெற்ற சந்திரகுப்தன் வெளியிட்ட பொற்காசில் முன்பக்கம் திருமாலின் உருவமும், பின்பக்கம் திரு மகளின் உருவரும் தீட்டப்பட்டுள்ளன. திருமகள் அழகான ஆடை அணிந்து அம்புய மலர் (தாமரை மலர்)மீது அணியுற அமர்ந்து காட்சி அளிக்கின்றாள். காதணிகள் கவின்பெறக் கலகலெனத் திகழ்கின்றன. அவளது வலக்கை வளைந்து எதையோ சுட்டிக் காட்டுவதுபோல் காணப்படுகிறது. இடக்கை கீழே தொங்க விடப்பட்டிருக்கிறது. அதுவும் கொஞ்சம் வளைந்தே காணப்படுகிறது. அந்தக் கைவிரல்களால் நீண்ட தண்டினையுடைய தாமரை மொட்டுகளைப் பிடித்துக்கொண் டிருக்கிறாள். வலக்கைக்குக் கீழே வலம்புரிச் சங்கு காணப்படுகிறது. வலப்பக்கம் சக்ரவிக்ரம என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறே இரண்டாம், மூன்றாம் சந்திரகுப்தன் காசுகளிலும் திருமகள் தாமரை மலர்களோடு காணப்படுகிறாள். முதலாம் குமாரகுப்தன் காசுகளிலும், சமுத்திரகுப்தன் காசுகளி லும் திருமகளும் அவள் கரங்களில் தாமரையும் இடம் பெற் றுள்ளன. தாமரைக்குரிய நிலம் நெய்தல்நிலமே யாகும். தாமரைக்குரிய நிலமாகிய நெய்தல்நிலத்திலே செல்வம் அரும்பியது. நானிலமும் வறுமையால் வாடும்பொழுது நெய்தல்நிலத்தில்மட்டும் வளம் நிறைந்திருந்தது. நெய்தல் நிலமாகிய கன்னி நிலத்திலே நிலப்பிரப்புத்துவ சமூகம் கிளர்ந்தெழுந்தது. இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையே நெய்தல்நிலத்தில்தான் இடப்பட்டது. தாமரைக் குரிய நிலமாகிய நெய்தல்நிலத்திலே மாடு என்னும் செல்வமும் பெருகிவந்ததால் காசில் மாட்டின் வடிவமும், தாமரை யின் வடிவமும் பொறிக்கப்பட்டது மிகப் பொருத்தமானதேயாகும். 12. தமிழர் நாகரிகச் சான்று தாமரை அணிகள் மிகத் தொன்மையான காலத்திலிருந்தே தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் தங்களை அலங்கரித்துக்கொள்வதில் தலைசிறந்து விளங் கினர். அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அநேக விதமான ஆடைகளை அணிய ஆரம்பித்துவிட்டனர். ஆடைகளின் விளிம்பில் அணிஅணியாய் அழகிய அம்புய மலர்களும், அல்லி மொட்டும், அநேகவிதமான செடிகளும், காதணிக் காய்களும், பழங்களும், பறவைகளும், விலங்குகளும் இடம்பெற்று அழகு காதணி செய்தன. பஞ்சாடைகளும், பட்டாடைகளும், கம்பளி ஆடைகளும் அணிய முற்பட்டனர். நகங்களுக்குச் செந்நிற வர்ணந் தீட்டினர்; கண்களுக்குக் கருநிற மை தீட்டினர்; நெற்றிக்குக் குங்குமம், சாந்துப் பொட்டுகள் இட்ட னர்; முகத்திற்கு வெண்பொடி பூசினர்; உதட்டிற்குக் கொவ்வைப் பழம் போன்ற சாயம் தீட்டினர்; நெஞ்சிற்கு நறுமணம் நல்கும் சாந்துகளை அணிந்தனர்; தொய்யில் எழுதினர்; உச்சியிலிருந்து பாதம்வரை பலவிதப் பொன், வெள்ளி அணிகளைப் பூட்டினர்; அணிகளில் மணிகளைப் பதித்தனர். நமது நாகரிகம் மலையினின்று அரும்பி ஆற்றோரங்களிலே செழித்துக் கிளைத்தது. அதேபோன்று நமது அணியின் வரலாற்றை ஆராய்ந்தால் அதுவும் மலையிலே முளைத்து ஆற்றங்கரையிலே மலர்ந்து கிளர்ந்தது என அறியக் கிடக்கின்றது. நமது தெய்வநெறிகூட மலையிலே அரும்பி ஆற்றங் கரையிலே வளர்ந்ததாகவே அறிகிறோம். நமது தெய்வம் மரமாகத் தோன்றி, அப்பால் மரத்தடிகளிலே தோன்றி நமக்கு அறம் உரைத்தது. நமது ஆடைகளையும், நமது அணிகளையும், நமது மருந்து களையும், நமது செல்வங்களையும், நமது மணத்தையும் மரங்களே நல்கின. நம் முன்னோர்கள் ஆரம்ப காலத்தில் மரஉரிகளை அணிந்து மலர்களைக் காதிலும், கழுத்திலும், மூக்கிலும், இடுப்பிலும், கரண்டையிலும் அணிந்துவந்தனர் பூவைப் புனிதப் பொருளாகப் போற்றினர்; பூவை வாழ்க்கைத் துணைவியாகக் கண்டனர் பூக்களைத் தெய்வத்தின் உறைவிடமாக மதித்தனர்; பூக்களைத் தெய்வங்களுக்கு உகந்த அர்ச்சனைப் பொருளாகத் தேர்ந்தெடுத்தனர். பெண்ணைப் பூங்கொடி, பூவியலார், பூவையர் என்றனர்; அவள் பருவம் அடைதலைப் பூப்பு என்றனர். பூங்கொடி ஒரு கொம்பினைப் பற்றிப் படருவது போல் அவள் ஒரு ஆடவனை வாழ்க்கைத் துணைவனாக வரித்து அவனைத் தழுவி இன்பந்துய்க்க ஆரம்பிப்பதை மணத்தல் என்றனர்; மாலையிடல் என்றனர். பூக்களை நம் முன்னோர்கள் தங்கள் தலையிலும், சடையிலும், கழுத்திலும், காதிலும், மூக்கிலும், கையிலும், இடுப்பிலும், காலிலும், அணிந்துவந்தது அரிய செயலன்று. நமது பண்டைய அணிகளின் பெயர்களை உற்றுநோக்கினால் அவைகள் அனைத்தும் இலை யாகவும், தழையாகவும், ஓலையாகவும், கொடியாகவும், பூவாகவும், பூவிதழ்களாகவுமே காணப்படுகின்றன. இதனால் பண்டைக்காலத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்திலுள்ள கட்டைகள், பட்டைகள், மட்டைகள், இலைகள், தழைகள், ஓலைகள், தளிர்கள், அரும்புகள், மலர்கள், காய்கள், பழங்கள், கொட்டைகள் முதலியவைகளைத் தலையிலும், காதிலும், கழுத்திலும், கைகளிலும், கால்களிலும், இடுப்பிலும் அணிந்துவந்தனர். கடற்கரையில் வாழ்ந்த நெய்தல்நில மக்கள் சிப்பி, சங்கு, முத்து, பவளம், மீன் கொம்புகள், சோவி போன்ற பொருள்களை அணிந்துவந்தனர். அப்பால் அவர்கள் நாகரிகம் எய்திப் பொன், வெள்ளி, செம்பு, ஈயம் முதலிய தாதுப்பொருள்களைக் கண்டு, அவைகளைக் கொண்டு அளவிலா அணிகள் செய்து அணிய ஆரம் பித்தனர். என்றாலும் அவர்களது பண்டைய வாழ்க்கையும் அதன் இன்பமும் என்றும் அவர்களின் இருதயத்தை விட்டு அகல வில்லை. அவர்கள் பிறப்புமுதல் இறப்புவரை மலர்களை மறவாது அணிந்து வந்தனர். அறக்கடவுளை அழகிய மலர்களால் அர்ச்சித்துவந்தனர். கடவுளை மலர்மேல் ஏற்றினர். அவர்கள் ஆயிரக் கணக்கான ஆண்டு களாக நனிசிறந்த நாகரிகத்தைக் கட்டி வளர்த்து மண்ணின்று விண்ணிற் பறக்க ஆரம்பித்த காலத்திலும் மலரை மறக்கவில்லை. பொன் அணிகள் பல பூண்டிருந்தாலும், நவமணிகள் நாலா யிரம் பூட்டியிருந்தாலும் பூமாலை இன்றி அவர்கள் புதுமணம் செய்யத் துணிவதில்லை. அவர்களின் அருமைத் துணைவியும் சகோதரியும் பெண்கொடியாய், பூங்கொடியாய், பூவையராய், பூவியலாராய்க் காணப்பட்டனர். அவர்கள் அருமைக் குழந்தைகள் மல்லிகையாகவும், செண்பகமாகவும், மாதவியாகவும், கமலமாகவும், பத்மாவாகவும், சரோஜாவாகவும், வனஜாவாகவும் அழைக்கப்பட்டனர். அவர்களின் வாழ்க்கையோடும் உதிரத்தோடும் மூச்சோடும் உயிரோடும் ஒன்றிய இந்த மலர் உணர்ச்சி அவர்களின் அணியாக அரும்பியது. அப்பால் அவர்கள் நாகரிகம் பொன் அணியாய்ப் பூத்தகாலத்தும் பூவணியாகவே பெயர்பெற்றது. பண்டைய தமிழர்கள் அணிந்த பொன் அணிகள் தோடு, ஓலை, குழை, வழை, தொடி, கர்ணப்பூ, கொப்பு, முருகு, கொடி, காப்புவளை, நத்து, புல்லாக்கு, பூவாளி, அத்திக்காய்க் கொலுசு, வடம், தாழம்பூ, நெல்லிக்காய் மாலை, மதுரங்காய் மாலை, காசு மாலை, பிச்சிப்பூ மாலை, மாங்காய் மாலை, கொந்திக்காய், கொன்னப்பூ, அரசிலை மோதிரம் என்று பெயர் பெற்றிருப்பதே இதற்குத்தக்க சான்றாகும். பண்டையத் தமிழ்மக்கள் பல்லாண்டுகளாய் மலரை, கொடியை, தழையை, இதழை, அரும்பைத் தலையிலும் கழுத்திலும் காதிலும் அணிந்து மலரின் மணத்தையும், அரும்பின் அழகையும், பூவின் புனிதத்தையும், தழையின் தண்மையையும் சுவைத்துச் சுகித்து வந்தனர். நாளடைவில் மக்கள் நாகரிகம் பெற்றுப் பொன், வெள்ளி முதலிய தாதுப்பொருட்களைப் பூவிற்குப் பதிலாகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். என்றாலும், பூவையும், அரும்பையும், தழையையும், ஓலையை யும் அணிந்து, அதனால் அழகும் நலமும் பெற்று வந்த மக்களின் உள்ளத்தினின்று அவற்றை அகற்றவே முடியவில்லை. பாரம்பரிய மாய்ப் பல்லாண்டு இவ்வலங்காரப் பொருள்கள் அவர்களின் உள்ளத்திலும் உதிரத்திலும் கலந்து அழியாப் பொருளாய் நிலைத்து விட்டன. எனவே, அவர்கள் அணிந்த பொன் அணிகளுக்கெல்லாம் ஓலை என்றும், பூவென்றும், கொடியென் றும், அரும்பு என்றும், மாலை என்றும், காய் என்றும் பெயரிட்டு வந்தனர். அவ்வணிகள் பெயரைமட்டும் பெறவில்லை; அவற்றின் உருவையும் பெற்றிருந்தன. முதுபெருந் தமிழ் மக்கள் அணிந்திருந்த நகைகளின் பெயரைக் கேட்டாலே அவ்வுண்மை புலனாகும். படிப்படியாக அணிகள் வடிவிலும் பெயரிலும் மாறி வந்துள்ளன. இஃதன்றிப் பாண்டிய நாட்டு அணிகள் ஒருவித மாகவும், சோழநாட்டு அணிகள் வேறு ஒருவிதமாகவும், சேரநாட்டு அணிகள் பிறிதொருவிதமாகவும், தொண்டைநாட்டு அணிகள் மற்றொருவிதமாகவும் மாறுதல் அடைந்துள்ளன. இஃதன்றி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பலவித வடிவங்களில் நகைகள் மாற்றம் அடைந்துள்ளன; அதோடு மக்களின் பொருளாதார நிலைக்கேற்பவும் மாறுதல்கள் பெற் றுள்ளன. பொன் அணியாய் இருந்தவைகள் வெண்பொண் அணி யாயும், வைரம், மரகதம், பதுமராகம், புஷ்பராகம், வைடூரியம், நீலம், கோமேதகம் முதலிய மணிகள் பதித்த அணியாகவும் பல்வேறு வண்ணத்தில் அரும்பின. இஃதன்றி, ஆண்கள் அணியும் அணி, பெண்கள் அணியும் அணி, குழந்தைகள் அணியும் அணி என்ற பெயரால் பலவித வடிவங்களில் அணிகள் பல எழுந்தன. நாளடை வில் அந்தணர்கள் அணியும் அணி, அரசர்கள் அணியும் அணி, வணிகர்கள் அணியும் அணி, உழவர்கள் அணியும் அணி என்ற மாற்றமும் பெற்றன. உலகிலுள்ள எந்த இனத்தவர்களையும்விடத் தமிழர்களுக்கே அணியில் அதிக ஆசை பிறந்தது. தமிழர்களின் நெருங்கிய உறவினர் களான கேரள நாட்டார், ஆந்திர நாட்டார், கன்னட நாட்டார் போன்ற அண்டை நாட்டார்களைவிடத் தமிழர்களுக்கு அணியில் மிக்க ஆசை எழுந்துள்ளது. தமிழர்கள் அணியின்பேரில் கொண்ட அதிக அவாவினாலே தாங்கள் கண்ட அரிய இலக்கியங்களுக்கே அணிகளின் பெயரைச் சூட்ட முற்பட்டனர். தமிழில் சிறந்த காப்பியங்காகப் போற்றப் பெறும் ஐம்பெரும் காப்பியங்களும் ஐந்து அணிகளின் பெயரைப் பெற்று ஒளிர்கின்றன. சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்ற நூல்கள் முறையே தமிழ்அன்னையின் சிலம் பாகவும், சிந்தாமணியாகவும், வளையாகவும், குண்டலமாகவும் மக்க ளாலும் புலவர்களாலும் போற்றிப் புகழப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான அணிகள் இருந்தன. இன்று அவற்றின் பெயர்கள் நமது இலக்கியங்களில் காணக் கிடக்கின்றன. ஆனால் அவைகளிற் பல அழிந்தொழிந்து மறைந்துபோயின. தமிழர்கள் பழமையில் பற்றுக்கொண்டவர்கள்; பழமையை விடாப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டு நிற்பவர்கள் என்று கூறப்படு கிறது. ஆனால் தமிழர்கள் தங்களின் பழைய அணிகளைப் பாது காக்கத் தவறிவிட்டனர். மேனாட்டார்க்கு அணியில் அதிகப் பற்றில்லை என்றாலும் அவர்களின் தொல்பொருள் காட்சியில் அவர்களின் அணிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன; அணிகளைப் பற்றிப் பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் பண்டுதொட்டு - ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எண்ணற்ற அணிகள் அணிந்துவந்த தமிழர்களிடம் இன்று நூற்றுக் கணக்கான அணிகளைக்கூடக் காணமுடியவில்லை. அணிகளைப் பற்றிய ஒன்றிரண்டு நூல்களைக்கூட நாம் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. எங்காவது அணி இலக்கணம் என்ற ஒரு பெயரைக் கேட்டால் நிச்சயம் அது யாப்பு, அணி இலக்கண மாகவே இருக்கும். நமது தொல்பொருள் காட்சிசாலையில் பழம்பேர் அணிகளைப் பார்ப்பது முயற்கொம்பாகவே இருக்கிறது. நமது அதிர்ஷ்டவசமாக மொகஞ்சதாரோவில் சில அணிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அவைகள் பழம்பெரும் திராவிட மக்களின் நனிசிறந்த நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக இலங்குகின்றன. இவ்வரிய பெரிய அணிகளும் மணிகளும், ஐதராபாத்தில் அகழ்ந் தெடுக்கப்பட்ட அரிய அணிகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் இந்திய அரசாங்கப் புதை பொருள் பகுதியா ரால் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அணிகளும், மண் பொம்மைகளின்மேல் பொறிக்கப்பட்ட பல்வேறு விதமான அணி களும், பாண்டிச்சேரியை அடுத்த அரிக்கன்மேடு என்னும் இடத்தில் அகழ்ந்தெடுத்த பண்டையத் தமிழர்களின் பாத்திரங்களும், ஆயுதங்களும், அணிகளும் தமிழர்களின் பழம்பெரு நாகரிகத்தை அணிசெய்வனவாய்த் திகழ்கின்றன. மொகஞ்சதாரோ, ஹரப்பா, ஐதராபாத் நகரத்தின் தொடர்ச்சி, அரிக்கன்மேடு, ஆதிச்சநல்லூர் நாகரிகம் என்று அறிஞர்கள் அறுதியிட்டு உறுதிகூறுகின்றனர். அதோடு அமராவதி, நாகார்ஜுன கொண்டா, அஜந்தா, சிற்றண்ணல் வாயில், தஞ்சை, காஞ்சி, பனமலை முதலிய இடங் களில் கிடைத்த பண்டைத் தமிழர்களின் ஓவியங்களும், காஞ்சி, மதுரை, தஞ்சை, நெல்லை, கோவை, திருச்சி மாவட்டங்களிலுள்ள சிற்பங்களும், தமிழ்நாட்டுக் கோயிலின் பண்டாரங்களில் உள்ள அணிகளும் நமது சிறப்பை எடுத்துக்காட்டச் சிறந்த சான்றாகத் திகழ்கின்றன. இந்த அணிகளில் தாமரை ஒரு கணிசமான இடத்தைச் சுவீகரித்துக்கொண்டிருக்கிறது. தமிழர்களின் குறிஞ்சிப் பாட்டு, கலித்தொகை, பரிபாடல், பத்துப்பாட்டு, குறுந்தொகை, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை போன்ற பழந்தமிழ் நூல்களில் தமிழர்கள் கண்ட அணிகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் மாதவி அணிந்திருந்த நகைகளைப் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மன்னர்களும், வேளாண் பிரபுக்களும் முத்து, பவளம், வைரம் கோத்த அல்லது பதித்த மணிகளையும், மாலைகளையும், கடகங் களையும் அணிந்துவந்தனர். பேரரசர்கள் மணிகள் கட்டிய வீரக் கழல்களைப் புனைந்து வந்துள்ளனர். பெரிய நிலச்சுவான்தார்களும், வணிகர்களும் பொன்னாற் செய்த மணிகள் பதித்த அணிகளையும், ஏனையோர் சங்கு, பாசி மாலைகளையும், நீல, வெள்ளை மணிகள் கோத்த கழுத்தணிகளையும் பூட்டிவந்தனர். கி.மு. 400ஆம் ஆண்டிலிருந்து கி.மு. 200ஆம் ஆண்டுவரையுள்ள அணிகளின் வரலாற்றை ஆந்திர நாட்டில் அரும்பிய அமராவதிச் சிற்பங்கள் அழகாக எடுத்துக்காட்டுகின்றன. அமராவதி, நாகார்ஜுன் கொண்டா முதலிய இடங்களில் உள்ள சிற்பங்களில் காணும் அணிகள் திராவிட மக்களின் சிறந்த நாகரிகச் சின்னமாக மிளிர் கின்றன. அஜந்தா ஓவியம் அமராவதிச் சிற்பங்களுக்கு ஆக்கம் அளிப்ப தாக விளங்குகின்றனவென்று கலைமேதைகள் கூறுகின்றனர். கி. பி. 7ஆம் நூற்றாண்டின் அணிகளை அஜந்தா ஓவியம் எடுத்துக்காட்டு கிறது. கி.மு. 200 முதல் கி. பி. 400 வரையுள்ள காலத்து அணிகளை அமராவதி நாகரிகம் நன்கெடுத்துக்காட்டு கிறது. கி.மு. 200 முதல் கி.பி. 400 வரையுள்ள காலத்து அணி களையே நாகார்ஜுன கொண்டா சிற்பங்களும் காட்டுகின்றன. பல்வேறுவிதமாகச் சித்தரிக்கப்பட்ட காப்புகளும், கடகங் களும், வளையல்களும் அமராவதிச் சிற்பங்களில் காணப்படு கின்றன. மலர்ந்த தாமரைபோன்ற திருகைக் கொண்ட தலையணியால் அக்கால மக்கள் தங்கள் தலையை வாரி, அணிகள் பூட்டிவந்திருக் கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. பொன்னாற் செய்யப் பட்ட தங்கப் பட்டைபோன்ற அணியால் தலையைச் சுற்றி அணி செய்து வந்திருக்கின்றனர் என்பது நன்கு புலனாகின்றது. தலையினின்று நெற்றியில் சில தொங்கல்கள் தொங்குமாறு சில நகைகள் செய்யப்படுகின்றன. காதில் மீன், பாம்பு, இலை, பூ போன்ற உருவங்களையுடைய குண்டலங்களையும், தோடுகளையும் அணிந்திருந்தனர் என்பது நன்கு தெரிகிறது. காதணியிலிருந்து வேறு பலவிதமான எழில் தரும் தொங்கட் டங்கள் தோள்களின்மீதும் தொங்கியிருந்ததாகத் தெரிகிறது. மகரமீன், பாம்பு வடிவங்கள் தீட்டப்பட்ட காதணி, காப்பு, மோதிரம் முதலியவைகள் நன்கு தெரிகின்றன. மேலும் பல்வேறு விதமான மாலைகளும், கொடிகளும், இடுப்புப் பட்டைகளும், சங்கிலிகளும், உதரபந்தங்களும், சன்ன வீரங்களும் அணிந்திருந்தனர் என்று தெரிகின்றது. அமராவதிச் சிற்பங்கள் வாயிலாகக் கடைச் சங்க காலத்தில் தமிழர்கள் கண்ட பலவித அணிகளையும் இன்று நாம் நன்கறிய முடிகிறது. மொகஞ்சதாரோவில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட பொன் அணிகளும், மணிகள் பதித்த பல அரிய அணிகளும் திராவிடர்களின் அணிகலச் சிறப்பிற்கு அழியாச் சான்றாக இலங்குகின்றன. மொகஞ்சதாரோ நாகரிகத்திற்கும், ஆதிச்சநல்லூர் நாகரிகத் திற்கும் நடுவே காணும் இடைவெளியை நிரப்பச் சான்றுகள் இல்லை என்று அறிஞர்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கையில் சமீபத்தில் வடஇந்தியாவில் அரசாங்கப் புதைபொருள் பகுதியினர், சில இடங்களை அகழ்ந்து திராவிட நாகரிகத்தில் காணும் இடை வெளியை நிரப்ப முன்வந்துள்ளது நமக்குக் களிபேருவகை அளிப் பதாகும். நமது பழம்பெருந் தமிழ் இலக்கியங்களைத் துருவித் துருவி நன்காராய்ந்தால் பண்டைக்காலத்தில் தமிழர்கள் பல அரிய அணிகளை அணிந்திருந்தார்கள் என்பது நன்கு அறியக்கிடக் கின்றது. அவற்றில் அரிவையர், ஆடவர், குழந்தைகள் அணிகளைப் பற்றி நாம் ஆராய்வோம். அரிவையர் அணிகள் 1. கால்விரல் அணி: மகரவாய் மோதிரம், பீலி, பில்லணை, முஞ்சி, மெட்டி(கால் மோதிரம்). 2. காலணி: பாதசாலம் (பரியகம்), சிலம்பு (நூபுரம்), பாடகம், தண்டை, சதங்கை, அரியகம், கொலுசு, காற்சரி, கிண்கிணி, கழல், வளை. 3. தொடை அணி: குறங்கு செறி. 4. தோள் அணி: மாணிக்க வளை, முத்து வளை, கொந்திக் காய், வங்கி, பாசிப்பந்து, தோள்வளை. 5. நுசுப்பணி (இடையணி): மேகலை, காஞ்சி, கலாபம், தாமம் (பருமம்), விரிசிகை, தாரகச்சும்மை (நட்சத்திரத் தொகுதிபோல் முத்துக்கள் கோத்தது), ஒட்டியாணம், அரைஞாண் கடிசூத்திரம், ஊரு தாமம். 6. முன்கை அணி: ஆடகம், கைவளை, பரியகம், வால்வளை (சங்கு வளை), பவளப் பல்வளை, நவமணி வளை, சூடகம் (கடகம்), பொன் வளை, சரிகை, கொலுசு, பாட்லி, கங்கணம், காப்பு, தோடா, அத கடம். 7. கைவிரல் அணி: வாளைப் பகுவாய் மோதிரம், நெளி மோதிரம், முடக்கு மோதிரம், மணிகளிழைத்த அடுக்காணி, கேள்கிளர், செங்கேழ், கிளர்மணி மோதிரம் மரகதத் தாள் செறி, மரகத வட்டப்பூ. 8. பிடரணி: கொக்குவாய். 9. கழுத்தணி: வீரச் சங்கிலி, நேர்ஞ் சங்கிலி, நுண்ஞாண், கோவை சவடி, சரப்பளி, முத்தாரம், பின்றாலி, நுளைவினை, பொன்மாலை, காசுமாலை, மணிவடம், பவளவடம், சங்குமாலை, ஏகவலி, ஏகவடம், வன்னசரம் அட்டிகை, பதக்கம், பூரான் அட்டிகை, கடுகுமணி, பொட்டுச் சரம், முத்துச்சரம், நெல்லிக்காய் மணி, கோதுமை மணி, பதும மணி, மருதங்காய் மாலை, ஒக்கட்டு, சுத்துமணி, காறை, அடிக்காறை, ஏகவாளி, திரிசாரி, பஞ்சசாரி, சப்தசாரி, கந்த மாலை. 10. காதணி: நீலக்குதம்பை, சந்திரபாணி, காதோலை, தோடு, குதம்பை, மகரக் குழை, தாளுருவி, வாளி, வல்லிகை, இரட்டை வாளி, குண்டலம், மகர குண்டலம், பத்திர குண்டலம், இரத்தின குண்டலம், சங்கு, சர்ப்ப குண்டலம், கொப்பு, கடுக்கன், முருகு, பூடி, விசிறி, கர்ணப்பூ, கொன்னப்பூ, குருடு, சிமிக்கி, பச்சைக்கல், கடிப்பு (கடிப்பம்), சுறவுக் குழை, பொற்றோடு, குண்டலகேசி. 11. தலை அணி: சீதேவி, வலம்புரி, தெய்வ உத்தி, பூப்பாளை, தென்பல்லி, வடபல்லி, சுட்டி (நுதல் அணி, செழுநீர் வலம்புரி, புல்லகம் (நுதலணி), சூளாமணி, பொன்னரி மாலை, கோதை மகரப் பகுவாய், முஞ்சகம், இராக்கொடி, வளைவு, தாழம்பூ, கொண்டைச் சடை நாகம், சடையணி, குஞ்சம் (குன்றிக் குடி), நெற்றிச் சுட்டி, நிலவு, பிறை, மயிர்மாட்டி, சூரியப் பிரபை, சந்திரப் பிரபை, மத்தக மணி, தலைப்பானை, சிந்தாமணி. 12. மூக்கணி: மூக்குத்தி, புல்லாக்கு, திருகுகள், பேசரி. ஆடவர் அணிகள் 13. தலையணி: முடி, மகுடம். 14. தோள் அணி: பதக்கம், வாகுவலயம். 15. காதணி: குண்டலம், கடுக்கன். 16. கையணி: கங்கணம், வீரவளை. 17. அரையணி: அரைஞாண், பொன் வடம், பவளவடம், கொடி, தொடி, கருமுத்து வடம். 18. கால் அணி: வீரக் கழல், வீரகண்டை, சதங்கை. 19. விரலணி: மோதிரம். 20. கழுத்தணி: பொன்மாலை, கண்டிகை, கௌடு. குழந்தைகள் அணி 21. கழுத்தணி: ஐம்படைத் தாலி. 22. காதணி: வாளி, கடுக்கன், குவளை, குச்சு. 23. இடுப்பணி: கொடி, சதங்கை. 24. கால் அணி: தண்டை, கொலுசு, பாதசரம், கால் கொலுசு. 25. இடுப்பணி: அரைமூடி. 26. முன்கை அணி: காப்பு, கொலுசு, வளையம், சங்கிலி. 27. கைவிரல் அணி: மோதிரம். தாமரையின் சிறப்பு இவ்வணிகளில் பல்வேறு பொருள் இடம்பெற்றிருந்தாலும் பதுமம் ஒரு கணிசமான இடத்தைப் பெற்றுள்ளது. எண்சாண் உடம்பிற்கும் சிரசே பிரதானம் என்ற பழமொழிக்கேற்பச் சிறப்பு வாய்ந்த பெண்களின் தலையணியில் தாமரை இடம்பெற்றுள்ளது. முற்காலத்தில் பெண்கள் பிடரிப் பக்கத்தில் சடையின்மீது சொருகப் பூ, திருகுப்பூ, முன்பில்லை என்ற பொன் அணிகளை அணிந்து கொள்வார்கள். அந்தச் சொருகுப்பூவின் அடியில் ஒரு மடை வைத் திருக்கும். அந்த மடைவழியாகச் சடைபின்னும்பொழுது சில முடி களைக் கோர்த்துச் சடைமீது இந்தச் சொருகுப்பூ பொருந்தும் படியாக வைத்துச் சடையைப் பின்னி முடித்துவிடுவார்கள். இந்தச் சொருகுப் பூவானது தாமரை வடிவம் பொறிக்கப் பட்டுச் சடையின்மீது அழகாக ஒளிரும். இது பெரும்பாலும் பொன்னாலான அணியாகவே இருக்கும். அடிப்பாகமும், சடை மயிரைக் கோக்கும் மடையும் வெள்ளியாலானவையாக இருக்கும். இஃதன்றி இதேபோன்று திருகுப்பூ என்றும் ஒரு சடை அணியும் உண்டு. இது மேற்கூறிய சொருகுப் பூவைப்போலவே காணப்பட்டாலும் இவ்வணியைச் சடையோடு வைத்துப் பின்ன வேண்டியதில்லை. சடையைப் பின்னி முடித்துவிட்டு இந்த அணியின்கீழுள்ள திருகைச் சடையின்மீது பொருந்தவைத்துத் திருகினால் அந்தத் திருகு சடையை நன்றாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளும். ஆனால் யாரும் எளிதில் இதைச் சடையிலிருந்து கழற்றிவிடலாம். பெரிய விழாக்களில் குழந்தைகளிடமிருந்து திருடர்கள் சுலப மாக அபகரித்துவிடுவார்கள். எனவே இது சடையில் வைக்கவும் கழற்றவும் எளிதாக இருந்தாலும் இதைப் பெண்கள் அதிகமாக விரும்புவதில்லை. இதன் மீதும் அழகான மலர்ந்த தாமரை காணப் படும். பெரும்பாலும் மடையும் சிற்சில இடங்களில் திருகும் இருக்கும். கீழே குறிக்கப்பெற்றிருப்பவை இன்றைய நவநாகரிக நங்கை யர்கள் அணியும் நவீன அணிகள் ஆகும். ஆயினும் பண்டையப் பண்பை அடிப்படையாகக் கொண்டு அன்னப் பறவையும், அம்புய மலர்களும் அழகுற இலங்கச் செந்தாமரை, வெண்டாமரை, பொற்றாமரை வடிவில் வைரம், மாணிக்கம், புஷ்பராகம் முதலிய மணிகளில் தாமரை வடிவம் அழகுற விளங்கப் பொன்னாலும், வெண்பொன்னாலும் அணிகள் செய்யப்படுகின்றன. அன்னப் பறவை வைரத்தாலே எழிலொழுக வெண் பொன்னில் பொறிக்கப்பட்டு அழகுற விளங்குகிறது. இவ்வணிகள் காதுகளில் ஜிமிக்கியாகவும், தொங்கட்டமாகவும், கழுத்தில் அணியும் பெண்டன் என்னும் மாலையாகவும் செய்யப்பட்டுள்ளன. தாமரை மலர் வடிவம் துலங்கும் தலையணிகளும், சடையணி களும் உண்டு. இவ்வணிகளைப் பணம் படைத்தோர் விலையுயர்ந்த நவமணிகள் பதித்துப் பொன், வெண்பொன் போன்ற விலையுயர்ந்த தாதுப்பொருள்களில் பதித்துக்கொள்வதைப்போல் வசதி குறைந்த நடுத்தர வர்க்கத்தார் பொன்னில் செயற்கை வைரங்களையும், போலி இரத்தினங்களையும் பதித்து அணிந்து வருகின்றார்கள். ஏழை, எளிய மக்களும் வெள்ளி, மாற்றுக் குறைந்த பொன், செம்பு, ரோல்டு கோல்டுகளில் போலிக் கற்கள் பதித்து வெண்டா மரை, செந்தாமரை, பொற்றாமரை, நீலத் தாமரை வடிவமுள்ள அணிகளை அணிந்து வருகிறார்கள். தாமரை வடிவம் முற்கால அணிகளில்மட்டுமல்ல; இன்றைய அணிகளிலும் ஏற்றம்பெற்று இலங்குகின்றது. 13. தத்துவத்தின் அடிப்படையில் தாமரை உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு துறையில் உன்னத நிலையை அடைந்திருக்கிறது. அமெரிக்கா செல்வத்திற் சிறந்த நாடு; ஜெர்மனி விஞ்ஞானத்தில் சிறந்த நாடு; இங்கிலாந்து அரசியலில் சிறந்த நாடு; பிரான்சு காதற் கலையில் சிறந்த நாடு; இந்தியா தத்துவ ஞானத்தில் உயர்ந்த நாடு என்பது உலகிலுள்ள ஒப்பற்ற அறிஞர்கள் கூறும் உண்மையாகும். நமது நாட்டுத் தத்துவ ஞானிகள் ஆயிரக்கணக்கான ஆண்டு களாகத் தம் காலத்தையும், அறிவையும் இந்தத் தத்துவ ஆராய்ச்சி யிலே கழித்து இருக்கின்றார்கள். பல்லாண்டு இந்தத் தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுத் தாங்கள் கண்ட உண்மைகளைப் பல்வேறு நூற்களின் மூலம் நமக்குத் தந்துள்ளார்கள். லோகாயத வாழ்வை நாடிநிற்கும் நாம் அவர்கள் கண்ட தத்துவ ஞானமாகிய ஆத்மீக வாழ்வில் அதிக அக்கறை செலுத்துவ தில்லை. கஞ்சிக்குத் திண்டாடிநிற்கும் நமது மக்களுக்கு இந்தத் தத்துவ ஞானம் கசப்பாக இருக்கின்றதே யொழிய இனிப்பாக இருப்பதில்லை. ஒருசிலர் ஆத்மீக இன்பத்தில் அக்கறைகொண்டு தத்துவ சாத்திரங்களை புரட்டிப் பார்க்கலாம் என்று முனைந்தால் அந்தப் பாஷையும், அரிய கருத்துகளும் எளிதில் புலப்படுவதில்லை, சிரமத்தோடு முயன்றாலும் நாலைந்து ஏடுகளுக்குமேல் செல்லப் பொறுமை உண்டாவதில்லை. ஆனால் இன்று ஒருசில அறிஞர்கள் மக்கள் எளிதில் உணரும் வண்ணம் எளிய தமிழில் சின்னஞ்சிறு வாக்கியங்களில் - வசன நடையில் எழுதியிருப்பதால் அது மக்கள் எளிதில் உணரக்கூடிய தாக இருக்கிறது. கசப்பான உண்மைகள் என்று கூறும் இந்தத் தத்துவ சாத்திரத்திலும் தாமரை மலர் காணப்படுவதால் இவற்றைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். மக்களின் உடம்பு அன்னமய கோசம், பிராணமய சோகம் என்ற இரு பொருள்களால் ஆக்கப்பட்டது என்று கூறுகின்றனர். கட்டிப்பொருள், நீர்ப்பொருள், வாயுப்பொருள் என்ற முப்பொருள்களால் ஆக்கப்பட்ட மனித உடம்பை அன்னமய கோசம் என்று கூறுகின்றார்கள். ஆகாயம், நுண்ஆகாயம், அணு, திரள்அணு ஆகிய நான்கு பூதங்களால் அமைந்த மனித உடம்பைப் பிராணமய கோசம் என்று கூறுகின்றார்கள். அன்னத்தை ஆகாரமாக அருந்தி உயிர்வாழும் உடம்பை அன்ன உடம்பு (அன்னமய கோசம்) என்றும், பிராண வாயுவை உண்டு உயிர்வாழும் உடம்பைப் பிராண உடம்பு (பிராணமய கோசம்) என்றும் உரைப்பர். உயிர் பகலவனிடமிருந்து அரும்பும் பல அரிய சக்திகளில் ஒன்று. அதனை இழுத்து உயிர்க்கும் பிராண உடம்பைப் பற்றி இங்கு நாம் ஆராய்ந்து பார்ப்பது இன்றியமையாதது. மக்களின் பூலோக உடம்பு இரு பகுதிகளைக் கொண்டதாய் விளங்குகிறது. அதனுடைய திண்ணிய தடித்த பகுதியே நம்முடைய கண்களுக்குத் தெரிகிறது. அது அன்ன உடம்பு என்று கூறப்படும். இவ்வாறு கண்ணிற்குப் புலப்படாத நுண்ணிய பகுதி பிராண உடம்பு என்று கூறப்படும். இவ்விரண்டு பகுதிகளும் கூடியதே மக்களின் தூல உடம்பு என்று கருதுகிறோம். இவ்விரண்டு பகுதி களும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து இயங்கமுடியாது. மனிதன் இறக்கும் பொழுதுதான் இவை ஒன்றைவிட்டு ஒன்று பிரிகின்றன. உண்மையில் இவை இரண்டும் ஓர் உடம்பின் பகுதியேயன்றி இரு பகுதிகளாக அறிஞர்கள் ஒப்புவதில்லை. பிராண உடம்பு உருவத்தில் அன்ன உடம்பை ஒத்து, அதை விடக் கால் அங்குலம் விரிவுடையதாக இருக்கும் என்று தத்துவ ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது கட்டியாய் இராமல், புகை வடிவமான நீலநிறம் போன்ற ஒளியை உடையதாய் இருக்கு மாம். இதைக் கருஉடம்பு என்று கூறுகிறார்கள். இது ஆவியாலான அன்னமய கோசம்போல் ஒளிரும். மக்களாற்றிய நல்வினை, தீவினைகளுக்கேற்ப அன்ன உடம்பு உருவாகிறது. நுண்ணிய தன்மை வாய்ந்த பிராண உடம்பு கடற் பஞ்சுக்குள் தண்ணீர் மறைந்துநிற்பதுபோல் அன்ன உடம்பில் வியாபித்து நிற்கிறது என்று கூறுகிறார்கள். பிராண உடம்பு இன்றி அன்ன உடம்பு நீடித்திராது: ஐம்பொறிகளும் தொழிற்படா. பிராண உடம்பு அன்ன உடம்பின் உயிர்வாழ்க்கைக்கு ஆதாரமா யிருக்கிறது. இது அன்ன உடம்பிற்கும், ஏனைய நுண்ணுடம்பு களுக்கும் இடையே நின்று இணைந்து, மக்களின் எண்ணங்களும் ஆசைகளும் உருப்பெற உதவுகிறது. மக்களின் அன்ன உடம்பில் எண்ணற்ற மாறுதல்கள் எப்பொழுதும் எழுந்துகொண்டே இருக்கின்றன. இந்த மாறுதல்களுக்கு இடையே அவ்வுடம்பு உயிர்த்திருக்கும் பொருட்டு அதற்கு மூன்று வகையான தேவைகள் எழுகின்றன. அதாவது ஊட்டத்திற்கு உணவும், சுவாசத்திற்குக் காற்றும், நரம்பொழுக்கிற்கு மூன்று விதமான பிராணாதார சக்திகளும், உணவை உட்கொள்ள வாயும், காற்றைச் சுவாசிக்க மூக்கும் இருப்பது போன்று மூவகைப் பிராணாதார சக்திகளை உட்கொள்ளப்பிராண உடம்பில் பல கருவிகளும் உள்ளூற அமைந்துள்ளன. அவை வட்டுகள்போல் வட்டவடிவமாய்ச் சுழன்று கொண்டே இருப்பதால் சக்கரங்கள் என்றும், பிராண உடம்பிற்கு ஆதாரமாக நிலவும் சக்திகளை இழுக்கும் கருவிகளாய் இலங்குவதால் ஆதாரங்கள் என்றும், தாமரை மலர்போன்ற தோற்றம் உடையன வாய் இருப்பதால் கமலங்கள் என்றும் பண்டுதொட்டுத் தத்துவ ஞானிகள் கூறிவருகின்றனர். ஆதாரங்கள் ஆற்றில் புரண்டோடும் பெருவெள்ளத்தில் எழும் நீர்ச்சுழிகளைப்போன்று பிராண உடம்பின் வெளிப்புறத்தில் சுழிகளாக இலங்கும். பிராணமய கோசத்தின் வெளிப்புறத்தில் நீர்ச்சுழி போன்று சுழன்று கொண்டிருக்கும் தாமரையானது பூசணி, ஊமத்த மலர்களைப்போல் பல வண்ணங்களில் ஒளிவீசிக் கொண் டிருக்கும். அந்தப் பூவின் காம்புகளிலிருந்து மெல்லிய நாளங்கள் அரும்பி, முதுகுத் தண்டின் நடுவில் ஓடும் சுழிமுனை நாடியில் மூங்கிலில் கணுக்கள் அமைந்திருப்பதுபோல் காணப்படும். மக்களின் உடம்பில் ஒன்றின் சக்திகளை மற்றொன்றிற்கு இறக்கும் துவாரங்கள் ஆதாரம் என்று கூறப்படுகின்றன. இவை களின் ஆதரவின்றி ஒன்றும் உயிர் வாழ முடியாது. எனவே இது எல்லா உயிர்களின் உடம்பிலும் இலங்குவதாகும். ஆனால் இவைகள் ஒவ்வொரு உயிருக்கும் வெவ்வேறு வித மாகப் பெரிதாகவும் சிறிதாகவும் இருக்கும். சாதாரண மக்களிடம் வானவில்லின் வண்ணங்களைப்போல் மின்னொளி வீசி மிகவும் மெதுவாக சுழலும்; அறிவிற் சிறந்த மக்களிடம் மின்னொளி இலங்க வேகமாய்ச் சுழலும். இந்தச் சக்கரங்கள் உடம்பிலுள்ள சில உறுப்புகளின் மேலுள்ளனவாகக் கூறப்பட்டாலும் அவை அவ்வுறுப்புகளின் அங்கங்கள் அல்ல; பிராண உடம்பின் அங்கங்களாகும். பிராண உடம்பு அன்ன உடம்பினின்று அகலும்போது இவைகளும் அகன்றுவிடும். பிராண உடம்பிலுள்ள ஆதாரங்கள் ஆறு என்று தத்துவ ஞானத்தில் தலைசிறந்த ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆறு தாமரைகளும் மலரும்போது தலைக்குமேல் இருக்கும் சகராரமும் கூடவே மலரும். அதை இவற்றுடன் இணைத்துச் சக்கரமாக யாரும் கருதுவதில்லை. என்றாலும் அதுவே அனைத்திலும் மேலான சக்கர மாகக் கருதப்படும். அன்ன உடம்பும் பிராண உடம்பும் இணைந்து தொழில்படும் மக்களின் தூல உடம்பை ஏழு ஆதாரங்களின்மூலம் தொழிற்படுத்தும் சக்திகள் மூன்றாம். இஃதன்றி வேறுபல சக்திகளும் உண்டு. அவற்றைப் பின்னர்க் கூறுவோம். எண்ணற்ற சக்திகள் உலகில் உள. அவை எங்கும் இடைவிடாது இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் வேலை அளவிடற்கரியன. ஆன்றோர்கள் அவற்றை படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்று வகையாகத் தொழிற்படுத்தும் சக்திகளாகக் கண்டுள் ளார்கள். காக்கும் சக்தியை இரண்டாக்கி துன்பத்தினின்று காப்பன, இன்பத்தினின்று காப்பன என்றும், அழிக்கும் சக்தியை இருகூறாக்கி மறைப்பன, அருள்வன என்றும், இறைவனுடைய தொழிலைப் பஞ்சகிருத்தியங்கள் என்றும் அறிஞர்கள் கண்டிருக்கின்றனர். இறைவனுடைய இந்த மூவுருவங்களில் உருவத்திற்கு ஒரு சக்தியாக மூன்று சக்திகள் இணைந்து நம் தூல உடம்பிற்குரிய ஆதார சக்திகளாக வேலை செய்கின்றன. அவை குண்டலினி, உயிர்ச் சக்தி, பிராண சக்தி என்று கூறப்படுகின்றன. இவற்றில் சிவப்புநிறமுடைய குண்டலினி பிரம்ம பாகத்தைச் சேர்ந்தது என்றும், நீலவண்ணம் வாய்ந்த உயிர்ச் சக்தி விஷ்ணு பாகத்தைச் சேர்ந்தது என்றும், பொன்வண்ணம் வாய்ந்த பிராண சக்தி சிவ பாகத்தைச் சேர்ந்து என்றும் கூறப்படுகிறது. உயிர்ச் சக்தியும், பிராண சக்தியும் வெவ்வேறாகக் கருதப்படக் கூடியவை யல்ல. மூன்று சக்திகளும்கூடி வேலை செய்யும்பொழுது நெற்றிக் கண் பார்வை தோன்றும். அவற்றின் நிறங்களைத் தான் சமய ஞானிகள் திரிமூர்த்திகளுக்கு உரியன எனக் கூறியுள்ளார்கள். பொன்னார் மேனியன் என்றும், நீல வண்ணன் என்றும், செந்தாமரையான் என்றும் கூறுவன இந்த மூன்று சக்திகளால் எழுந்த பெயர்களே யாகும். குண்டலினி சக்தி குண்டலினி குடிலை, ஓங்காரி எனப்படுபவள். அவள் ஓங்கார உருவினள். அவளை நாதப்பிரம சக்தி என்றும் நவில்வர். நாதத்தினின்றே அண்டசராசரங்களும் ஆக்கப்படுகின்றன. குண்டலினியின் முக்கிய தொழில் படைப்பு ஆனதால் இது இறைவ னுடைய படைப்புமூர்த்தமாகக் கருதப்படுகிறது. இந்தக் குண்டலினி சக்தி இறைவனிடமிருந்து ஓங்கார ஒலியாய் முதன்முதலாக வெளிவந்தபொழுது அது மகா மாயையைக் கலக்கி அதில் நுண்ணிய குமிழிகளாகிய விந்துவையும், அவ் விந்துவைக் கலக்கி ஏழுவித தத்துவங்களையும் உருவாக்கிவிட்டது. அவ் விந்துவை ஏழுவிதமாகத் திரட்டி நிலம், நீர், காற்று, ஆகாயம், நுண்ணாகாயம், திரட்டணு, அணு என்ற ஏழுவிதமான பூதங்களைப் படைத்து, அதனின்றே பருப்பொருளாகிய ஏழு பூதங்க ளைப் படைத்து, சப்தலோகங்களைப் படைத்து, முடிவில் பூலோகத் தையும் சப்த பூதங்களையும் படைத்தது. இந்தக் குண்டலினி எல்லா உடம்புகளிலும் அடங்கிக் கிடக்கும் ஓர் அக்கினி. இது மின்சார சக்திபோல் ஒளிர்வது. உறங்கிக் கிடக்கும் பாம்பு போன்று முதுகுந் தண்டின் அடியில் சுருண்டு கிடப்பது. இது ஆன்ம வளர்ச்சி பெற்றவர்களிடம் நன்கு வேலை செய்யும்; முயற்சி செய்யாதவர்களிடம் நன்கு வேலை செய்யாது. தகாத மக்களிடம் இது தட்டி எழுப்பப்படுமானால் பல தீங்குகளும் விளைவிப்பதோடு காமப்பேய்களாகவும் ஆக்கிவிடும். எல்லாச் சக்திகளையும்போலவே இக் குண்டலினியும் கட்புலனுக்குத் தோன்றாத அருஞ்சக்தி யாகும். இது பூமியின் நடுமையத்திலிருந்து நாற்புறமும் பரவி, உயிரினங்களின் மூலாதாரங்களில் புகுந்து வேலை செய்யும்போது அங்கு பூலோக அணுக்களைத் திரட்டி ஏழு சுருள் கொண்ட நாகம் போன்று உறங்கிக் கிடக்கும். அதனால் பாம்புபோன்று வளைந்து வளைந்து கிடப்பதால் குண்டலினி சக்தியானது சர்ப்பாக்கினி என்று அழைக்கப்படும். குண்டலினி மூன்று அம்சங்கள் பின்னியதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். இவை தனித்தனியே பிரிக்கப்பட்டுத் தட்டியெழுப்பப் படும்பொழுது அங்கு இடகலை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று பிரிவுகள் எழுகின்றன. இந்த இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகியவைகளைத் தொழிற்படச் செய்தால் சிற்றின்ப இச்சைகளையும், மன ஆசை களையும் அடக்கிப் பகுத்தறிவை வளர்க்கச் செய்யும். இந்நாடிகளை வயப்படுத்திப் பிறவிப் பெருங்கடலைக் கடக்க நமது தத்துவ ஞானங்கள் துணை செய்கின்றன என்று விளக்கிக் கூறப்படுகிறது. உயிர்ச் சக்தி உடம்பிற்கு ஆதாரமாக இருக்கும் இரண்டாவது சக்தி உயிர்ச் சக்தி - குண்டலினி மகா மாயையைக் கலக்கி ஏழு உலகங்களையும் அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பூதத்தையும் படைத்தபோது அவைகளிலுள்ள அணுக்கள் ஒன்றையொன்று தொடாமல் தனித் தனியே அசைந்து ஆடிக்கொண்டிருக்கும். அந்த அணுக்களின் அசைவு அரை விநாடி நின்று போனா லும் அண்டங்கள் அணைத்தும் நிர்மூலமாய்விடும். இது மேனாட்டு விஞ்ஞானிகள் ஒப்ப முடிந்த உண்மை. இதனை இந்தியத் தத்துவ ஞானிகள், எடுத்த கால் ஊன்றாத - இமைப்போதும் நில்லாத - இறைவன் தாண்டவமாக நமக்குக் கோயில்கள்மூலம் கற்பித்தனர். ஆடவல்லான் தன் தூக்கிய திருவடியைக் கீழே ஊன்றுவா ராயின் அந்தக் கணமே அண்டபிண்ட சராசரங்கள் அனைத்தும் அடியுடன் விழுந்து நிர்மூலமாய்விடும் என்று கூறிவைத்தனர். அணுவின் ஆட்டத்தை ஆடவல்லான் என்னும் தெய்வத்தின் ஆட்டமாகப் பண்டைத் தமிழ்நாட்டறிஞர்கள் கண்டனர். இதனைத் திருமூலர், அணுவில் அவனும் அவனுள் அணுவும் கணுவற நின்று கலப்ப(து) உணரார் இணைஇலி ஈசன் அவன்இங்கு மாகித் தணவற நின்றான் சராசரம் தானே என்று மொழிந்துள்ளார். ஒன்றையொன்று தொடாது ஆடும் அணுக்களிடையே ஆண்டவனுடைய இரண்டாவது மூர்த்தத்திலிருந்து உயிர்ச் சக்தி வெளிப்பட்டு ஏழு உலகங்களிலும் பரவி வியாபிக்கிறது. அந்த வியாபகத்தின் பலனாக அணுக்களிடையே ஒரு கவர்ச்சி எழுகிறது. அதனால் தனித்தனியே இயங்கி வந்த பூதங்களுள் பலவிதப் புணர்ப்பும் கலப்பும் ஏற்பட்டு, தனு கரண புவனங்களை அரும்பச் செய்கிறது. இந்த உயிர்ச் சக்தி பல்வேறு உலோகங்களை ஒன்றோடொன்று கூடச்செய்து, அவற்றிலிருந்து அணுக் கிருமிகளைத் தோற்றுவித்து, ஒன்றோடொன்று பொருந்தி, மரம், செடி, கொடிகளையும், விலங்கு, பறவை, மக்கள் போன்ற உயிர் இனங்களையும் அவைகளின் உறுப்பு களையும் உருவாக்கிவிடுகிறது. இதனால் உயிர்ச் சக்தி காத்தற்சக்தி என்று கூறப்படும் இறைவன் தன்மையில் உள்ள ஏழு கலைகள் போன்று உயிர்ச் சக்தியிலும் ஏழு கலைகள் உள்ளன. அவை மக்களின் உடம்பில் புகும்பொழுது ஒவ்வொரு ஆதாரத்தில் ஒவ்வொரு கலை மாத்திரமே மலர்ச்சி பெறுவதால் அந்த ஆதாரச் சக்கரங்கள் அல்லது கமலங்கள் வெவ் வேறு இதழ்களை உடையனவாய்க் காணப்படுகின்றன. பிராண சக்தி உடம்போடு உயிர் ஒன்றித்து இயங்குவதற்கு இன்றியமையாத சக்திகளான குண்டலினி, உயிர்ச் சக்தி ஆகியவைகளைப்போலப் பிராண சக்தியும் இன்றியமையாததே யாகும். உயிர்ச் சக்தி இறைவனிடமிருந்தும், பிராண சக்தி சூரியன் மூலமாகவும் உலகிற்கு வருவன. இந்தப் பிராணசக்தி சூரியன் அரும்பியதும் நமக்குப் பெரிதும் உண்டாகிறது. இளவெயில் எழுந்ததும் உயிர்களுக்கு ஒருவித இன்பம் எழுகிறது; களிப்புப் பொங்குகிறது. மற்ற இரு சக்திகளைப் போலவே இந்தப் பிராண சக்தியும் எல்லா உலகங்களிலும் தொழிற்பட்டு வருகிறது. பிராண சக்தி, மனிதன் தானே தாண்டவம் ஆடுவது போல் அணுவிற்கு உள்ளிருந்தே அதனை ஆட்டுகின்றது. பிராண சக்தியை உறிஞ்சிய அணு, பேய்பிடித்த மனிதனைப்போல் ஆடும். இந்தச் சக்தி பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் என்ற பஞ்சப் பிராணன்களின் தொகுதி. ஆகையால் பிராண சக்தி என்று கூறப்படுகிறது. இது சுவாசத்தோடு கலந்து உடம்பில் சாரும் பொழுது உடம்பிற்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஊட்டித் தெம்பை வளர்க்கிறது. பெருஞ் சுமை போன்றிருக்கும் உடம்பைப் பஞ்சு போலாக்கித் துள்ளிக் குதிக்கச் செய்வதால் இது சிவசக்தி என்று கூறப்படும். இம் மூன்று சக்திகளும் மூன்று கோசங்களையும் இயக்கி வருகின்றன. குண்டலினி மூலாதாரத்திற்குள்ளிருந்து பொங்கியெழுந்து, ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கடுக்காக இருக்கும் ஒரு நுண்ணிய ஏழு அடுக்கு அணுக்கூடு ஒன்றை அமைத்து, அதன் வெளிக்கூட்டில் கனல்போல் தகதகவெனக் கொதித்துக்கொண்டிருக்கும். யோகியரல்லாத நமது உடம்பில் மந்தமான இந்தச் சிறுகனல் முதுகுத் தண்டின் வழியாக மேலேறிக் கணுவுக்குக் கணு பூங்காம்பு வழியாக ஒவ்வொரு ஆதாரத்திற்கும் இடைவிடாது சென்று கொண்டிருக்கும். உயிர்ச் சக்தியோ உடம்பிற்கு வெளியே இருந்து ஆதாரம் ஒவ்வொன்றினுள்ளும் ஒரே காலத்தில் வந்து புகுந்துகொண் டிருக்கும். இடைவிடாது நிகழும் இரு சக்திகளும் அகத்திலிருந்து ஒன்றும், புறத்திலிருந்து ஒன்றுமாக வட்டமாக இருக்கும். ஆதாரங் களின் மேல்மட்டத்தில் எதிர்த்துச் சந்தித்து ஒன்றோடொன்று மோதி உராயவே, அந்த வேகத்தால் ஆதாரங்கள் யாவும் சக்கரங்கள் போலச் சுழலும். அப்பொழுது அவைகள் நீர்ச்சுழிகள் போன்று காணப்படும். உயிர்ச் சக்தியின் ஏழு கலைகளில் ஒவ்வொரு கலையும் ஒவ்வோர் ஆதாரத்தில் விரியும். நிற்க. ஆதாரங்கள் ஏழு என்று தத்துவ விற்பன்னர்கள் கூறு வார்கள். அவை, (1) மூலாதாரம், (2) சுவாதிஷ்டானம், (3) மணி பூரகம், (4) அனாகதம், (5) விசுக்தி, (6) ஆக்ஞை, (7) சகராரம் என்பனவாகும். மூலாதாரத்தில் - அதாவது குதத்தில் (முதுகுத் தண்டின் அடியில்) விரிவது நாலு இதழ்க் கமலம் ஆகும். அது வண்டிச் சக்கரத்தின் நடுக்குடத்திலிருந்து கால்கள் பரந்து செல்வதுபோலவும், குறவன் தட்டு முடையும்போது அடியிடுவதுபோலவும் இக் கலை நான்கு கால்களாக விரியும். எஞ்சிநின்ற ஆறு கலைகளின் சக்திகளும் அக்குறவன் தட்டைச் சுற்றி முடைவதுபோல் நான்கு ஆர்க்கால்களுக்கு மேலும் கீழும் மாறிமாறி வேகமாக ஓடும். அப்போது நீர்ச்சுழி போன்ற ஆதாரம் தனித்தனி நான்கு இதழ்களையுடைய கமல மலர்போல் காணப்படும். மூலாதாரத்தில் நாலுகாற் கலை திகழ்வதுபோன்று சுவாதிஷ் டானத்தில் மண்ணீரலும் (குய்யத்தின்) குறியின் அடியிலும் ஆறு இதழ்க் கமலம் அழகுற அரும்பிநிற்கும். இது மஞ்சணைச் சிறப்பு நிறமாகக் கண்கவர் வனப்புடையதாகக் காட்சி தரும் என்று தத்துவ விற்பன்னர்கள் சாற்றுகின்றனர். நாபியில் - அதாவது தொப்புழில் (உந்தியில்) பத்துக் கலை திகழ்வதுபோல் மணிபூரகத்தில் பத்து இதழ்க்கமலம் பாங்குடன் திகழும். இதன் நிறம் மரகதத்தைப் போன்று பச்சைப் பசேலென்று கவின்பெறத் திகழும் என்பது ஞானமார்க்கத்தில் ஈடுபட்டுழைக்கும் தவஞானச் செல்வர்கள் ஆய்ந்துரைக்கும் அரும்பெரும் உண்மை யாகும். உந்தியில் - அதாவது மணிபூரகத்தில் பத்து இதழ்க்கமலம் திகழ்வதுபோல், நெஞ்சில் - அனாகதத்தில் பன்னிருகால் கலை - அதாவது பன்னிரண்டு இதழ்க் கமலம் பாங்குடன் திகழ்கிறது. இதன் வண்ணம், உருக்கிய பொன் நிறமாகும். இதயத்தில் - அதாவது அனாகதத்தில் பன்னிரண்டு இதழ்த் தாமரை திகழ்வதுபோன்று கழுத்தில் (விசுக்தியில்) பதினாறு இதழ்த் தாமரை மேகநிலை வண்ணத்தில் விளங்கும். ஆக்ஞை என்பது புருவத்தின் நடுவில் நெற்றியில் விளங்கும் தொண்ணூற்றாறு இதழ்த்தாமரையாகும். இதன் நிறம் பொன் பாய்ந்த நீலநிறமாக இருக்கும். சகராரம் என்பது தலைஉச்சியில் பூக்கும் ஆயிரத்தெட்டு இதழ்களையுடைய தாமரையாகும். கோயிலில் மூலத்தானத்திற்கு மேலுள்ள விமானம் மனிதனுடைய பிரமரந்திரம் என்ற சகராரச் சக்கரத்தை அறிகுறியாகக் காட்டுவது. இந்தச் சக்கரம் ஆயிரத் தெட்டு இதழ்களையுடைய இரண்டடுக்குத் தாமரை போன்றது. இவ்வாறே மூலத்தான விமானங்கள் அமைக்கப்படுகின்றன. அதிக உயரமின்றித் தாமரை மொக்குப் போன்று பெரிய கோயில் களில் பொன் வேயப்பட்டுச் சூரியப் பிரகாசமாக ஜீவன்முகத்த னுடைய சகராரம் போல ஒளிவீசித் திகழவேண்டும் என்பது ஆலயங்களின் உட்பொருள் என்று கூறுகிறார்கள். இது எல்லா நிறங்களும் உடையதாய் இலங்கும். 14. நவரத்தினங்களில் தாமரை வண்ணமே நடுநாயகம் உலகில் எண்ணற்ற மணிகள் உண்டு. அவைகளில் நீரில் விளைபவை, நிலத்தில் விளைபவை என்று இரு வகைகள் உண்டு. மணிகளில் முத்தும், பவளமும் நீரில் விளைபவை; மற்ற வைகள் நிலத்தில் விளைபவை. பெரும்பாலானவை நிலத்தில் விளைபவையாதலால், நீரில் விளைபவைகளையும் நிலத்தில் விளைபவைகளையும் ஒருங்கு சேர்த்துக் கற்கள் என்று கூறுகின்றனர்; இரத்தினம் என்றும் கூறப் படுவதுண்டு. முற்காலத்தில் நமது நாட்டில் முத்து, வைரம், மாணிக்கம், நீலம், மரகதம் ஆகியவைகளைப் பஞ்ச ரத்தினம் என்று கூறிவந்தனர். வடமொழி நூற்களில் இவை மஹாரத்னம் என்று கூறப்படுகின்றன. நிலத்தில் விளையும் வைரம், மரகதம், மாணிக்கம் (பதும ராகம்), புஷ்பராகம், வைடூரியம், நீலம், கோமேதகம் என்ற ஏழு விமான கற்களோடு, நீரில் விளையும் பவளம், முத்து ஆகிய இரண்டு மணிகளையும் சேர்த்து நவமணிகள், நவரத்தினங்கள் என்று கூறுகின்றனர். உத்பல பரிமளம் என்ற வடமொழி நூல் இருபத்திரண்டு விதமான மணிகளைப் பற்றிக் கூறுகிறது. அவை வைரம், மரகதம், மாணிக்கம் (பத்மராகம்), வைடூரியம், இந்திர நீலம், கோமேதகம், புஷ்பராகம், முத்து, பவளம், கர்கேதனம், ருதிராக்ஷம், விபுவம், விமலகம், இராஜமணி, படிகம், சந்திர காந்தம், சௌகந்திகம், சங்கம், பிரஹ்ம மணி, ஜ்யோதீ ரஸம், ஸீவ்யகம், மஹா நீலம் என்பவைகளாகும். நமது தமிழ்நாட்டிலுள்ள அறுபத்துநாலு கலைகளில் மணிச் சோதனை (இரத்ன பரீட்சை) என்பதும் ஒன்று. ஆனால், தமிழில் மணிச்சோதனை என்ற நூல் இதுவரை நம் கண்ணிற் புலப்பட வில்லை. மேனாட்டிலுள்ள மணி ஆராய்ச்சி நிபுணர்கள் நூற்றிற்கு மேற்பட்ட மணிகள் உண்டென்று உரைக்கின்றனர். ஆங்கிலத்தில் மணிகளைப் பற்றி எண்ணற்ற நூல்கள் உண்டு. ராபர்ட் வெப்டர் என்ற மணி ஆராய்ச்சி நிபுணர், மணி ஆராய்ச்சிச் சுருக்கம் என்று ஓர் அரிய நூலை எழுதியுள்ளார். அதில் நூற்றுற்கு மேற்பட்ட மணிகளின் பெயர்களையும், அதன் நிறங்களை யும், குணங்களையும் விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார். ஆனால், உலகில் மணி நிபுணர்கள் எத்தனை மணிகளைக் கண்டாலும், தமிழர் கண்ட ஐந்து மணிகளே தலைசிறந்த மணி களாகும். நவமணிகளைத் தலை, இடை, கடை என்று தரம் பிரித்துள் ளார்கள் நம் தமிழர்கள். அதாவது வைரம், முத்து, மரகதம், மாணிக்கம் என்பவைகளைத் தலைமணிகள் என்றும், நீலம், புஷ்பராகம், வைடூரியம் என்பவைகளை இடை மணிகள் என்றும், கோமேதகம், பவளம் என்பவைகளைக் கடைமணிகள் என்றும் பிரித்துள்ளார்கள். பிற்காலத் தமிழ்நாட்டில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்று இனம் பிரிக்கப்பட்டதைப்போல் மணிகளின் இயல்பு, நிறம் இவற்றை ஆராய்ந்து வைரம், முத்து ஆகிய இரண்டும் அந்தணர் இனம் என்றும், பவளம், மாணிக்கம் ஆகிய இரண்டும் அரச இனம் என்றும், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம் ஆகிய மூன்றும் வணிக இனம் என்றும், நீலம், மரகதம் ஆகிய இரண்டும் வேளாளார் இனமென்றும் கூறுவது உண்டு. இஃதன்றி மக்கள் முக்குண வயத்தராய் இருப்பது போல் இக் கல்லிலும் நிறங்களை வைத்து முக்குணங்களைப் பிரித்துள்ளார்கள். இராஜதத்திற்குச் சிவப்பும், தாமதத்திற்குக் கறுப்பும், சாத் வீகத்திற்கு வெள்ளையும் உரியன என்று கண்ட அறிஞர்கள், மணி களிலும் மூன்று குணங்களை ஒட்டிய பாகுபாடுகளை வகுத் துள்ளார்கள். மாணிக்கம், கோமேதகம், புஷ்பராகம், வைடூரியம், வைரம், பவளம் ஆகிய ஆறு மணிகளும் இராஜத குணம் உடையவைகள் என்றும், நீலம் தாமத குணம் உடையது என்றும், மரகதமும், முத்தும் சாத்வீக குணத்தை உடையனவென்றும் கூறுப்படும். நிலத்தில் பிறந்த மணிகள் ஏழினுள் வைரம் மிக உறுதிவாய்ந்த கல்லாய் இருப்பதால் அதற்கு ஏற்றம் உண்டு. ஆனால் மாணிக்கம் அழகும், உயர்ந்த குணமும் வாய்ந்தாக இருப்பதால் அறிஞர்கள் இதற்கு முதன்மை அளித்துள்ளார்கள். மேலும் இது தாமரைமலர் நிறத்தில் இருப்பதால் இதனைப் பதும ராகம் (பதுமம் என்றால் தாமரை) என்று பெருமைப்படுத்திக் கூறப் படுவது உண்மை. இது மகாரத்தின வரிசையிலும், அரச மணியாகவும், இராஜத குணம் உடையதாகவும், எல்லா மணிகளுக்கும் நடுநாயகமாக இருக்கக்கூடிய தன்மையுடையதாகவும் கருதப்படுகிறது. கற்களில் மாணிக்கத்திற்குத் தாமரையின் பெயரைச் சூட்டி யிருப்பது தமிழர்கள் தாமரையின்மீது கொண்ட அளவிட்டுரைக்க முடியாத பெருமையினை எடுத்துக்காட்டுவதற்கு ஒரு நல்ல சான்றாகும். இஃதன்றி வடமொழி வல்லுநர்கள், இந்திரகோபப் பூச்சி போன்ற சிவந்த பதுமராகம் (மாணிக்கம்) சூரியனுக்கு மகிழ்ச்சி தரும்; செம்மை, பொன்மை, வெண்மை, கருமை ஆகிய நிறங் களையுடைய முத்துக்கள் சந்திரனுக்குச் சந்தோஷத்தை அளிக்கும்; பொன்னிறத் தோடும், செந்நிறத்தோடும்கூடிய பவளம் செவ்வாய்க்கு இன்பத்தை அளிக்கும்; மயில், காடை முதலிய பறவைகளின் இறகுபோன்ற பச்சைநிறமுடைய மரகதம் புதனுக்குக் களிப்பூட்டும்; பொன்னிற ஒளியையுடைய புஷ்பராகம் வியாழனுக்கு விருப்பத்தை உண்டுபண்ணும்; நட்சத்திரம் போன்ற வெண்மைநிறமுள்ள வைரம் சுக்கிரனுக்கு உவப்பை அளிக்கும்; சூல் கொண்ட கார்மேகம் போன்ற நீலம் சனிக்கு சந்தோஷத்தை அளிக்கும்; பொன்னிறமும் செந்நிறமும் கலந்த கோமேதகம் இராகுவிற்கு உவகை ஊட்டும்; பூனைக்கண் போன்ற நிறமும், அசையும் நூலைப்போன்ற ஒளியும் உடைய வைடூரியம் கேதுவிற்கு விருப்பத்தை உண்டாக்கும் என்று கூறுகின்றனர். (சுக்கிர நீதி என்ற வடமொழி நூலில் இது விளக்க மாகக் கூறப்பட்டிருக்கிறது.) நவக்கிரகங்களை வழிபட விரும்புபவர்கள் நவமணிகளை வழிபட்டுச் சாந்தி பெறலாம் என்று சோதிட சாதிரம் கூறுவதோடு, மேலும், பூசை செய்யும் இடத்தில் வெள்ளை ஆடையை விரித்து நடுவில் பதுமராகத்தை (மாணிக்கத்தை) வைத்துச் சுற்றிலும் ஏனைய எட்டு மணிகளையும் வைத்து இவைகளுக்குரிய மலர்களைக் கொண்டு அர்ச்சித்து நவக்கிரக பூசை விதிப்படி வழிபடவேண்டும் என்று கூறுகிறது. இதன்மூலம் தாமரையின் பெயர்பெற்ற பதுமராகம் என்னும் மாணிக்கத்தின் மாண்பு நன்கறியமுடிகிறது. நவமணிகளை அமைத்துப் பூசிக்கும் முறை வருமாறு: நடுவில் (சூரியன்) மாணிக்கம்; வடக்கில் (இராகு) கோமேதகம்; வடமேற்கில் (சனி) நீலம்; வடகிழக்கில் (கேது) வைடூரியம்; மேற்கில் (சுக்கிரன்) வைரம்; கிழக்கில் (சந்திரன்) முத்து; தெற்கில் (புதன்) மரகதம்; தென் மேற்கில் (வியாழன்) புஷ்பராகம்; தென்கிழக்கில் (செவ்வாய்) பவளம். நவமணியில் மோதிரம் செய்து அணிய விரும்புபவர்களும் தாமரை நிறம் வாய்ந்த பதுமராகத்தை நடுவிலமைத்து ஏனைய மணிகளை விதிப்படி சூழவைத்து அணியவேண்டும் என்றும், அவ்வாறு அணிவதால் மோதிரம் அழகுற அமைவதோடு, அணிப வர்களுக்கு நல்ல உடல்நலமும் செல்வமும் பெருகும் என்று வட மொழி நூற்கள் பல கூறுகின்றன. பூசை செய்வதற்கு நவமணிகளை வைக்கும் நிலையினின்று மோதிரத்தில் மணிகள் இருக்கவேண்டிய இடம் சற்று வேறுபட் டிருக்கிறது. நவமணிகளை மோதிரத்தில் வைக்கவேண்டிய இடம் வருமாறு: நடுவில் மாணிக்கமும், வடமேற்கில் புஷ்பராகமும், வடக்கில் வைடூரியமும், வடகிழக்கில் மரகதமும், தெற்கில் பவளமும், தென் கிழக்கில் முத்தும், தென்மேற்கில் கோமேதகமும், மேற்கில் நீலமும், கிழக்கில் வைரமும் வைத்து மோதிரம் செய்யப்படவேண்டும் என்று மிருதி ஸாரோத்தாரம் கூறுகிறது. மேலும், நவமணிக்குரிய மலர்களைத் தெரிந்தெடுத்த பண்டைக்கால மணி நிபுணர்கள் மாணிக்கத்திற்குச் செந்தாமரை யும், முத்திற்குச் சிறு சண்பகமும், பவளத்திற்குச் செவ்வல்லியும், மரகதத்திற்குக் காந்தளும், புஷ்பராகத்திற்கு மல்லிகையும், வைரத் திற்கு நூறிதழ்த் தாமரையும், நீலத்திற்குக் கருவிள மலரும், கோமேதகத்திற்கு கருங்குவளைப் பூவும், வைடூரியத்திற்கு வெண் டாமரையும் உரிய மலராகக் குறிப்பிட்டார்கள். மணிக்குரிய பூக்களில் செந்தாமரை, வெண்டாமரை, நூறிதழ்த் தாமரை, செவ்வல்லி மலர்கள் இடம் பெற்றிருப்பதை நோக்கும் போது மணி நிபணர்கள் தாமரைக்குக் கொடுத்திருக்கும் முக்கியத் துவம் நன்கு புலனாகும். மாணிக்கத்தை ஏனைய மணிகளைவிட மக்கள் விரும்பி அணிகின்றனர். இரத்தின வியாபாரிகளை மாணிக்க வியாபாரிகள் என்று கூறிவருவதிலிருந்து மாணிக்கத்தின் மாண்பு மதிப்பிடற் கரியதாகும். இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்த இத்தாலிய நாட்டு வழிப் போக்கராகிய மார்க்கோபோலோ என்பவர் கி.பி. 1293இல் தமிழ் நாட்டிற்கு வந்தார். அவர் இரத்தினத் தீவு என்னும் இலங்கைக்கும் சென்றார். தமிழகத்திலும் இலங்கையிலும் பதுமராகம், புஷ்பராகம் முதலிய மணிகளை அகழ்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றும், மன்னர்கள், மணிகளில் பெரியனவாகவும், உலகிலேயே உயர்ந்தன வாகவும் இருப்பவைகளை வைத்திருக்கிறார்கள் என்றும் கூறி யுள்ளார். பதுமராகத்தைப்பற்றி அவர் குறிப்பிடும்பொழுது பெரிய நீள வடிவம் உள்ள பதுமராகம் குற்றமற்றதாய் சிவந்த நெருப்பைப்போல், ஜெகஜோதியாய் ஒளிவிட்டு ஜுவலிக்கிறது. கான் என்ற அரசன் தன் தூதர்கள் மூலம் ஒரு பதுமராகத்தை இலங்கை அரசனிடம் கேட்டான். அவன் அதை அளிக்க மறுத்துவிட்டான் என்று குறிப் பிட்டுள்ளார். அவர் தமிழ்நாட்டிற்குப் போந்து மணிகளைப்பற்றிய விவரங்களை அறிந்து அதனைத் தனது குறிப்பில் பின்வருமாறு குறித்து வைத்திருக்கிறார். அங்குக் கிடைக்கும் பதுமராகங்களுக்கு அந்தணர் சாதிக் கற்கள் என்று பெயர் இட்டுள்ளார்கள். இரத்தின மணிகள் பூமிக்கு அடியிலும் ஏரிகளிலும் கிடைக்கின்றன. மலைச்சரிவில் உள்ள வர்கள் நிலத்தை அகழ்ந்து மணிகளை எடுக்கிறார்கள். சில சிவப்பு நிறமாகவும் (பதுமராகம்), சில மஞ்சள் நிறமாகவும் (புஷ்பராகம்), சில நீலநிறமாகவும் (வைடூரியம்) இருக்கின்றன. நூறு பணம் மதிப்புள்ள பதுமராகம் அரசனுக்கு உரியது என்று ஓர் ஐதீகம் இவர் களிடம் உண்டு. அத்தகைய மணிகளை நாட்டு அதிபதியிடம் நல்குவர். அந்த மணிகளுக்கு அவர் நூறு பணம் கொடுப்பார். அதற்குக் குறைவான மதிப்புள்ள மணிகளை, அவற்றைக் கண்டெடுத்த மக்கள் வைத்துக் கொள்கிறார்கள். நூறு பணம், ஆறு பொன் தினார்களின் மதிப்பிற்குச் சமம். மாணிக்கத்தில் பலவகைகள் உண்டு. இதன் நிறங்களைக் கொண்டே இதன் வகைகள் பிரிக்கப்படுகின்றன. பொதுவாக மாணிக்கத்தைப் பதுமராகம், சௌந்திகம், நீலகந்தி, குருவிந்தம் என்று நான்கு வகையாகப் பிரித்துள்ளார்கள். பதுமராகம் நல்ல இளஞ்சிவப்பு நிறமுடையதாகக் கண்ணை யும் கவர்வதாய்க் காணப்படும். தாமரையின் அழகிய நிறம் இதில் நன்கு திகழ்கிறது. சௌந்திகம் என்பது அசோகத் தளிர்போன்ற நிறமுடையதாய் இருக்கும். நீலகந்தி என்பது இளநீலம் கலந்த நிறமாகப் பொலியும். குருவிந்தம் என்பது மஞ்சள் நிறம் வாய்ந்ததாக இருக்கும். இவைகளில் இளஞ்சிவப்பு நிறம் வாய்ந்த பதுமராகமே தலைசிறந்த மாணிக்கமாக மதிப்பிடப்படுகிறது (ராஜ நிகண்டு). சிலப்பதிகாரத் தில் மாணிக்கத்தைப்பற்றிக் கூறும்பொழுது, பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் விதிமுறை பிழையா விளங்கிய சாதியும் என்று மாணிக்கத்தின் நான்கு வகைகள் விளக்கப்பட்டுள்ளன. பதுமம் என்று அவர் குறிப்பிடுவது பதுமராகமே யாகும். மேலும் இதற்கு உரை எழுதும்பொழுது பதுமராகம், சாதுரங்கம் என்றும் கூறப்படும்; இது தாமரைப் பூ, கருநெய்தல் மலர், கதிரொளி, நெருப்பு, மின்மினி, மாதுளம்பூ, மாதுளை விதை, மேகம், விளக்கொளி, இந்திரகோபம் போன்ற பத்து நிறங்களில் ஒன்றைப் பெற்றிருக்கும் என்று அடியில் வரும் சூத்திரத்தை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார்: தாமரை கழுநீர் சாதகப் புட்கண் கோபம் மின்மினி கொடுங்கதிர் விளக்கு மாதுளைப் பூவிதை வன்னியீ ரைந்தும் ஓதுசா துரங்க ஒளியர் கும்மே. பதுமராகம் தாமரை மலர் வண்ணத்தில் சீரியதாய்ச் சிறப் புடையதாய் இருக்கிறது. மேல்பர்மாவிலுள்ள மாகோக் என்னு மிடத்தில் இந்தப் பதுமராகம் கிடைக்கிறது. இதன் வண்ணத்தைப் பற்றிக் குறிக்க முன்வந்த மேனாட்டு நிபுணர்கள், சிறந்த மாணிக்கம் புறா இரத்தம் போன்று இருக்குமென்று குறிப்பிட்டுள்ளார்கள். ஏனெனில், அவர்கள் தாமரையைக் கண்டும் கேட்டும் அறியாத வர்கள். மேற்கு பர்மாவிலுள்ள பிரசித்திபெற்ற மாணிக்கச் சுரங்கம் பழம்பெருஞ் சரித்திரச் சின்னமாக மதிக்கப்படுகிறது. இது இங்குள்ள குன்றுகளின் அருகில் கிடைக்கிறது. அருகேயுள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும்பொழுது பல்வேறு வண்ணம் வாய்ந்த மாணிக்கங்களும் நீரில் இழுத்தோடப்படுகின்றன. அவைகள் ஆற்றிலுள்ள சிறு கற்களோடு கற்களாய்க் கலந்து கிடக்கின்றன. இவைகள் வானவில்லின் பல்வேறு நிறங்களையுடையவையாய்க் காட்சி தருகின்றன. பல தலைமுறைகள் கழித்தே அந்நாட்டு மக்கள் இது மாணிக்கம் என்று கண்டனர். மாகோக் மாணிக்கச் சுரங்கம் 1916 சதுரமைல் கொண்டது. அங்குள்ள ஆட்சியாளர் ஓர் குறிப்பிட்ட அளவிற்குமேல் மாணிக்கங்களைச் சேர்த்து வைப்பது கூடாது என்றும், எஞ்சியவைகளை அரசாங்கத்திற்குக் கண்டிப்பாகக் கொடுத்துவிடவேண்டும் என்றும் விதிகள் செய்தனர். எனவே அரசாங்க பொக்கிஷத்தில் விலையுயர்ந்த மாணிக்கங்கள் வந்து குவிந்தன. மாகோக் என்னும் இடத்திற்குக் தெற்கே 400 மைல்களுக்கு அப்பால் விலை உயர்ந்த மாணிக்கக் குன்றுகள் உள்ளன. 1757இல் இச் சுரங்கம் பர்மிய மன்னர்வசம் வந்தது. தாய்லாந்து நாட்டிலுள்ள பேங்காக்கிலும் மாணிக்கங்கள் கிடைக்கின்றன. ஆனால் அவைகள் பர்மாவில் கிடைக்கும் மாணிக்கங்களைவிடக் கருப்பு நிறம் வாய்ந்தவை. அபூர்வமாக நல்ல மாணிக்கங்களும் கிடைக்கும். இந்தத் தாய்லாந்து மாணிக்கக் கல்லைப் பர்மா மாணிக்கத்திலிருந்து பிரிப்பது ஒரு லேசான வண்ண நிழலேயாகும் என்று மணிப் பரிசோதகர்கள் கூறுகின்றனர். இஃதன்றி ஆப்கானிதானத்திலுள்ள காபூலின் அருகிலும் நல்ல மாணிக்கச் சுரங்கங்கள் உண்டு. இதை அமீர் சுரங்கம் என்றழைப்பர். மங்கலான சிவப்புக் கற்களும், நீலக் கற்களும் இலங்கையில் பண்டுதொட்டு இன்றுவரை கிடைக்கின்றன. இலங்கையில் மாணிக்கம் கிடைக்கும் ஒரு பகுதியிலுள்ள நகருக்கு இரத்தினபுரி என்று இன்றும் பெயர் வழங்குகிறது. இலங்கை மாணிக்கம் தொன்மையான சிறப்புடையதென்று கூறப்பட்டு வருகிறது. சிங்களத் தீவிலே உண்டாகிற சிவப்பு நிறம் வாய்ந்த சீரிய மாணிக்கக் கற்கள் பத்மராகம் என்று வழங்கப்படுகின்றன. மஞ்சள் நிறத்தில் காணபுரம் (கான்எரில்) என்ற இடத்தில் கிடைக்கும் மாணிக்கம் குருவிந்தம் என்று வழங்கப்படுகிறது. அசோக மரத்தின் தளிர்போன்ற சாயலோடு அதே காணபுரத்தில் கிடைக்கும் மாணிக்கத்தைச் சௌந்திகம் என்றும், நீலச் சாயல் அமைந்து தும்ம புரத்தில் கிடைக்கும் மாணிக்கத்தை நீலகந்தி என்றும் கூறுகின்றனர். சிங்கள நாட்டில் தோன்றியவைகள் சிறந்தவைகள் என்றும், காணபுரத்தில் காணப்படுபவை மத்திமமென்றும், தும்மபுரத்தில் தோன்றியவை அதமம் என்றும் போஜராஜன் எழுதிய யுக்தி கல்பதரு என்ற நூல் கூறுகிறது. பர்மிய மன்னர் 44 காரட் எடையுள்ள மாணிக்கம் ஒன்றை ஐரோப்பாவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு நான்கு லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார். 1777இல் உருவிலும் எடையிலும் ஒரு புறா முட்டை வடிவி லுள்ள மாணிக்கம் ஒன்றை வீடன் மன்னர், முன்னாள் இரஷிய இராணி காதரைனுக்குப் பரிசாக அளித்தாராம். இந்தியாவை ஆண்ட ஷாஜஹான் என்னும் முகலாய மன்னரின் ஆட்சிக் கட்டிலான மயில் ஆசனத்தில் வைக்கப்பட்ட திமூர் என்னும் மாணிக்கம் 361 காரட் எடை உள்ளதாம். விசாபூர் அரசனிடம் 50 காரட் எடையுள்ள மாணிக்கம் இருந்ததாம். எட்வர்ட் மாணிக்கம் என்ற பட்டை தீட்டப்படாத சிவப்புக் கல் 167 காரட் எடையுள்ளதாக இருந்தது. ஜான் ரகின் என்பவரால் 1887ஆம் ஆண்டில் ஸர் ஹாரிபட்பி எட்வர்ட் ஞாபகார்த்தமாக இக் கல் பரிசளிக்கப்பட்டதாம். குற்றமற்ற மாணிக்கங்களைத்தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று மணி சாதிரங்கள் கூறுகின்றன. மாணிக்கத்தின் குணங்கள் பன்னிரண்டு என்றும், குற்றங்கள் பதினாறு என்றும் சிலப்பதி காரத்தில் அதன் உரையாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். எல்லாச் சிறப்பும் வாய்ந்த கல்லாடமும் அதனை எடுத்துக்காட்டுகிறது. அது வருமாறு: தேய்க்கின் நெருப்பிற் சேர்க்கின் அங்கையில் தூக்கினற் றகட்டில் சுடர்வாய் வெயிலின் குச்சையின் மத்தகக் குறியி னோரத்தின் நெய்த்துப் பார்வையின் நேர்ந்து சிவந்தாங்கு ஒத்த நற்குணம் உடையபன் னிரண்டும் கருகிநொய் தாதல் காற்று வெகுளி திருகல் முரணே செம்மண் இறுகல் மத்தகக் குழிவு தராசம் இலைச்சுமி எச்சம் பொரிவு புகைதல் புடாயம் சந்தை நெய்ப்பிலி எனத்தகு பதினாறும் முந்திய நூலின் மொழிந்தன குற்றமும். இவ்விதக் குற்றமுள்ள பதுமராகத்தை அணிபவர்களுக்கு நோய்களும், வணிகத்தில் நஷ்டமும், போரில் தோல்வியும், உலகில் அவமானமும், தானியங்களில் நாசமும் உண்டாகும் என்றும், நல்ல மணியை அணிந்தால் வெற்றியும், மங்கலமும், உடற்பலமும் உண்டாகும்; பேரும் புகழும் எழும்; விலங்குகளாலும், பேய் பூதம், வறுமை, தீ முதலியவற்றாலும் துன்பம் எழாது; ஆயுள் நீடிக்கும்; உடல்நலம் பெருகும்; மனமயக்கம் மாறும்; மஞ்சள்காமலை நீங்கும் என்றும் நமது முன்னோர்கள் கருதினர். பதுமராகத்தின் குற்றங்கள் எட்டு என்றும், குணங்கள் நான்கு என்றும் ஒளி வகைகள் பதினாறு என்றும் மிருதி ஸாரோத்தாரம் என்னும் வடமொழி நூல் கூறுகின்றது. அவைகளில் எட்டு குற்றங்களாவன: (1) துவிச்சாயம், (2) துவிபதம், (3) பின்னம், (4) கர்க்கரம், (5) லசுநாபதம், (6) காமலம், (7) ஜடம், (8) தூம்ரம். இதை விளக்கிக் கூறுவதானால், (1) துவிச்சாயம் இருவித வண்ணங்கள் கலந்திருப்பது; இது உற்றார் உறவினர்களைக் கொல்லும். (2) துவிபதம் என்றால் ஒரு கல்லில் இரண்டு உருவங்கள் காணப்படுதல்; இதை அணிபவர்களுக்கு மானபங்கங்கள் உண் டாகும். (3) பின்னம் என்றால் உடைந்திருக்கும் பதுமராகம்: அதை அணிபவர்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு அல்லல் உறுவர். (4) கர்க்கரம் என்றால் மணல் ஒட்டியதுபோல் பொரிந்து காணப்படும் கல்; இதை அணிவதாலும் வைத்திருப்பதாலும் பந்துக்களும் பசுக்களும் நிர்மூலமாகும். (5) லசுநாபதம் என்றால் கல்லில் பால் படிந்தது போல் இருப்பது; இது அமங்கலத்தை அளிக்கும். (6) காமலம் என்பது தேன்துளி போன்ற நிறம் வாய்ந்தது; இதை அணியின் ஆயுள் குன்றும், செல்வம் நீங்கும், வெற்றி மாறும். (7) ஜடம் என்றால் சிவந்த நிறமில்லாத பதுமராகம்; இதை அணிபவர்களுக்கும் வைத்திருப்பவர்களுக்கும் தானிய நஷ்டமாகும். (8) தூம்ரம் என்றால் புகை அடைந்ததுபோல் காணப்படுவது; இதை அணிபவர்களுக்கு இடியினால் பயம் உண்டாகும். கரடு முரடு, மங்கல், அவல் வடிவம், சிதறிய ஒளி, விகாரத் தோற்றம், கோணல், இலேசு முதலியனவும் மாணிக்கத்தின் தோஷங்கள் என்று கூறப்படுகின்றன. தாமரை மலர்போன்ற சிவப்பு, கனமாக இருத்தல், மாசு இல்லாதிருத்தல், அழகான தோற்றம் ஆகியவைகள் நல்ல பதும ராகத்தின் இலட்சணங்கள். பதுமராகத்தின் ஒளியைப் பார்ப்பவர்கள் அணையாத அழகிய ஜுவாலை அதனுள் ஜ்வலிப்பதாகக் கூறுகின்றார்கள். அதனால் மாணிக்கத்தின் உள்ளிருக்கும் ஒளியை யாராலும் மறைக்க முடியாது என்பது நன்கறியக்கிடக்கின்றது. கொஞ்சம் கருவலும், வெள்ளியும் போன்று ஒளிர்வது ஆண்பதுமராகம் என்றும், சிறிது வெளுப்பாக ஜ்வலிப்பது பெண்பதுமராகம் என்றும் கூறப்படும். பதுமராகம் முதலில் வெளுப்பாக இருந்து, பின்னர் சூரிய வெப்பத்தால் முதிர்ச்சி அடைந்து செந்நிறம் பெறுகிறது. செந்நிறம் பெற்றதே சிறந்த பதுமராகம் எனப்படும். பதும ராகம் மணிகளின் மன்னன் என்று வடமொழியிலுள்ள சாதிரங்கள் கூறுகின்றன. பருமன் அதிகம் ஆகஆக விலை உயரும் தன்மை பதும ராகத்திற்கே பெரிதும் உண்டு. நல்ல நிறம், குற்றமற்ற தன்மை, ஒளி ஊடுருவிச் செல்லும் தன்மை ஆகிய நலம் நிறைந்த மணிகள் கிடைப்பது அரிது. பதுமராகம் பணக்காரர்களும், பார்வேந்தர்களும் பரிந்து அணியும் ஓர் இரத்தினம்மட்டுமன்று; சோதிட வல்லுநர்கள் கிரக சாந்திக்காகப் பூசை செய்யச் சொல்லும் ஒரு தெய்வீக மணியுமாகும். மேலும் இது உடலைப் பீடித்த பல கொடிய நோய்களை அகற்றும் அருஞ் சஞ்சீவி என்றும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம் சித்தர் கண்ட மருத்துவ நூல்களில் பதுமராக பபம் செய்யும் முறையும், மாணிக்க மணி வைப்புமுறையும் கூறப் பட்டுள்ளன. பதுமராக பபத்தைச் சாப்பிட்டால் கண்ணோய், மேகரோகம், சன்னி, ஜுரம் போன்ற நோய்கள் விலகும்; கிரகதோஷங்கள் நீங்கும்; வீரிய விருத்தி, ஆயுள் விருத்தி, மனோரம்மியம் முதலியவைகள் உண்டாகும்; உடலுக்கு நல்ல காந்தியும் குளிர்ச்சியும் உண்டாகும் - என்று சிந்தாமணி என்னும் மருத்துவ நூல் கூறுகிறது. அது வருமாறு: சுரரோகம் சன்னிகளின் தோசம் அதிதாகம் உரமான மேகம் ஒழியுந் - திரமாக ஊணிக்கொள் நேத்திரநோய் ஓடும் அரவீன்ற மாணிக்கத் தால்வசிய மாம். மாணிக்கம் அதன் அழகாலும், குணத்தாலும், நலத்தாலும் பெருமை தாங்கிய தெய்வீக மலராகிய பதுமத்தின் பெயரைப் பெற்றது மிகப் பொருத்தமானது. மலர்களில் பதுமம் ஏற்றம் பெற்றிருப்பது போன்று மணி களில் பதுமராகம் தெய்வீக மணியாய்ச் சிறப்புற்றுத் திகழ்கிறது. மலர்களில் பதுமம் பகலவன் விரும்பும் மலராகப் பரிமளித் திருக்கிறது. பதுமராகம் நவக்கிரகங்களுக்குத் தலைமைதாங்கும் பகலவன் விரும்பும் மணியாய்த் திகழ்கின்றதும், நவரத்தினங்களாகிய புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம், முத்து, வைரம், மாணிக்கம், நீலம், மரகதம் ஆகிய மணிகளில் பதுமராகத்திற்குச் செந்தாமரையும், வைரத்திற்கு நூறிதழ்த் தாமரையும், வைடூரியத் திற்கு வெண்டாமரையும், பவளத்திற்குச் செவ்வலியும் உரிய மலர் களாக இருக்கின்றன என்று மணி சாதிரங்கள் கூறுகின்றன. இது ஒன்றே பதுமராகம்மட்டுமல்ல; ஏனைய மணிகளும் பதுமத்தோடு தொடர்புமிக்கவை என்பதைக் காட்டுவதற்குப் போதியதாகும். 15. மருத்துவத்தில் தாமரை மாட்சி தாமரை ஏனைய கலைகளில் இடம்பெற்றிருப்பதுபோல் பெயரளவில் மருத்துவக் கலையில் இடம்பெற்றிருக்கவில்லை. மக்களுக்கு உறுபிணி அகற்றி, உடலை ஓம்புவதில் தாமரை தனிப் பெருமை பெற்று விளங்குகிறது. தாமரையின் இலையும், தண்டும், பூவும், விதையும், தேனும் மருத்துவ நூற்களில் சிறப்பித்துக் கூறப் பட்டுள்ளன. தமிழர் கண்ட மருத்துவம் சித்த மருத்துவம் என்று கூறப்படு கிறது. இதனைத் தமிழ் மருத்துவத்தில் தலை சிறந்த அறிஞர்களும் அறவோர்களுமான சித்தர்கள் வளர்த்து வந்ததால் இது சித்த மருத்துவம் என்று கூறப்படுகிறது. இது ஆயுர்வேத மருத்துவம் என்றும் கூறப்படும். இந்த ஆயுர்வேத வைத்தியத்தை வடநாட்டார் தமதாக்கி ஆயுர்வேத வைத்தியம் என்று கூறிக்கொண்டனர். இன்று சித்த வைத்தியம் செயலற்றுக் கிடக்கின்றது. ஆயுர்வேத வைத்தியமும், யூனானி வைத்தியமும், மேனாட்டு வைத்தியமும் சித்த வைத்தியத்தை மிதித்துத் துவைத்து அதனைத் தலைதூக்கவிடாது செய்துவருகின்றன. இந்திய சுதந்திரத்திற்குப்பின் நாட்டுக் கலைகள் எல்லாம் துளிர்க்க ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் சித்த வைத்தியத்தின் இடத்தை ஆயுர்வேத வைத்தியம் கவர்ந்து கொண்டு, எல்லாம் ஒன்று தானே என்று பொதுமைப்பண் பாடித் தமிழர்களின் கண்களில் மண்ணைத் தூவி வருகிறது. தமிழ் மருத்துவத்தை நாம் நன்கறிந்தால் நமக்கு ஒரு தனியான தேசபக்தி அரும்பும்; நாம் இந்நாட்டு மக்கள் என்று தலைதூக்கிப் பேசும் தைரியமும், பெருமையும் எழும். ஏனெனில் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழ் வைத்தியத்தை இன்றைய மேனாட்டு மருத்துவத்தைவிட மிகச் சீரும் சிறப்புமாய் உலகம் கண்டு வியப்புறும் முறையில் அமைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். தமிழ் மருத்துவர் நோய் வராமல் தடுக்கவும், வந்த நோய்களைத் தீர்க்கவும், இரத்தம், ஊண், கொழுப்பு, எலும்பு, மூளை, வெண்ணீர் முதலிய சப்த தாதுக்கள் உடம்பில் குறைந்துபோகாமல் தடுக்கவும் முறையே காப்பு மருந்துகளையும், எதிருறை மருந்துகளையும், ஒப்புறை விதிகளையும் அனுசரித்து மருந்து கண்டனர். சித்தர்கள் தாம் எழுதிய தலைசிறந்த மருத்துவ நூற்களில் விகற்ப ரோகங்களில் ஒப்புறை, எதிருறை, கலப்புறை ஆகிய சிகிச்சைக் கிரமங்களைத் தெளிவாகக் கூறியுள்ளனர். ஆனால் நோய்தீர்க்கும் அவ்வரிய முறைகளை இன்றைய நாட்டுமருத்துவர்கள் சரியாக அறியாது இடர்ப்படுகின்றனர்; அன்னிய மருத்துவ முறைகளைப் பின்பற்றுபவர்களும் இதே தவறைப் புரிந்து இடர்ப்பட்டுவருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஆங்கில மருத்துவர்கள் எதிருறை (Allopathic) சிகிச்சைக் கிரமங்களையும், பிரஞ்சு, ஜெர்மன் மருத்துவர்கள் ஒப்புறை (Homeopathic) சிகிச்சை முறைகளையும், இந்தியாவிலுள்ள ஆயுள்வேத மருத்துவர்கள் கலப்புறை (Mixopathic) முறைகளையும் கையாண்டுவருகிறார்கள். ஆயுள்வேத மருத்துவர்கள் மூலிகைகளையும் உபயோகிக் கின்றார்கள். ஆனால் நமது சித்த வைத்தியர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எதிருறை, ஒப்புறை, கலப்புறை என்னும் மூன்று முறை களையும் கையாண்டு சிறந்த மருத்துவர்களாய்ப் பேரும் பெருமை யும் பெற்றுள்ளார்கள். சித்த மருத்துவர்கள் இன்றும் அம் மூன்று முறைகளையும் கையாண்டு வருகிறார்கள். நமது தமிழ் மருத்துவத்தில் நோய்தீர்க்கப் பலவிதமான மருந்துகளை உபயோகித்து வந்தனர். இதனைத் திருமூலர் தம் நூற்களில் தெளிவாக விளக்கி எழுதியுள்ளார். அவை (1) மூலிகைகள் (Herbs), (2) உப்புகள் (Salts), (3) தீநீர்கள் (Acids), (4) உபவாசம் (Fastings), (5) உடற்பொருள்கள் (Body components) (6) பாசாணம் (Arsenics) (7) உலோகங்கள் (Metals), (8) சத்துக்கள் (Extracts or Essences), (9) இரச குளிகை (Mercury Pills), (10) யோகம் (Contemplations) என்பனவாகும். மேற்கண்ட மருந்துகளை நம் சித்தர்கள் மூன்று வகையாகப் பிரிவு செய்து நோய்தீர்த்து வந்தனர். சில இடங்களில் ஒவ்வொரு சித்தரும் ஒவ்வொரு முறையில் கைதேர்ந்தவராகக் காணப்பட்டார். இஃதன்றி மூன்று முறைகளிலும் நன்கு பயின்று கைதேர்ந்த நிபுணர் களாய் விளங்கிய சித்தர்களும், அவர்வழிவந்த மருத்துவர் களும் உண்டு. தமிழ் மருத்துவத்தின் மூன்று முறைகளாவன: (1) தேவருறை, (2) மக்களுறை, (3) அரக்கருறை. தேவருறை என்று கூறப்படுவது மூலிகைகள், பாசாணங்கள், உப்புகள், இரசங்கள், சத்துக்கள், கற்பங்கள், கந்தகம், உலோகங்கள் முதலியவைகளால் செய்யப்பட்ட மருந்துகளாகும். இந்தக் தேவருறையில் (1) கட்டு மாத்திரை, (2) பொடி (Powder), (3) சூரணம், (4) மெழுகு, (5) இலேகியம் (Paste), (6) எண்ணெய் (Oil) (7) திராவகம், (8) களங்கம், (9) செந்தூரம், (10) சுன்னம், (11) கட்டு, (12) பதங்கம் ஆகிய பன்னிரண்டு விதமான பவித்திர மருந்துகள் அடங்கியுள்ளன. இவைகள் உடனடியாக மந்திர சக்தியைப்போல் மனிதர் களுக்குறும் மாபெரும் நோய்களை அகற்றும் மகோன்னதமான சக்தி வாய்ந்த மருந்துகளாகும். இந்த அற்புதமான சக்தியை வியந்தே தேவருறை என்ற சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டது. மக்களுறை என்று கூறப்படுவது, (1) மூலிகை, (2) பபம், (3) செந்தூரம், (4) சுன்னம், (5) செயநீர், (6) சத்து, (7) மணி போன்ற வைகள் ஆகும். பச்சிலைமுதல் மணிவரை உள்ள இம் மருந்துகள் வல்லுறை எனப்படும். இந்த வல்லுறை என்ற வலிமை பொருந்திய மருந்துகளே மக்கள் உறையாகும். இம் மருந்துகள் முப்பத்துமூன்று வகைப்படும் என முனிவர்கள் உரைக்கின்றனர். இது மக்கள் உடலிற்கு ஏற்படும் பிணிகளை உடனடியாகத் தீர்க்கும் நடுத்தரப் பரிகாரம் ஆகும். அரக்கருறை என்று கூறப்படுவது, தீராத கொடிய நோய் களுக்கு அறுவை, கீறல், அட்டை விடல், சூடு போடுதல், இரத்தம் வாங்குதல், சலாகை போடாத கொம்பு கட்டல் முதலிய முறை களால் செய்யும் சிகிச்சைமுறையாகும். வேர்பார், தழைபார் மிஞ்சினால் மெல்லப் பற்ப (பபம்) செந்தூரம் பார் என்ற முதுமொழிப்படி மாமூலிகைகளால், செய்யப்பட்ட மருந்துகளால், தீர்க்கமுடியாத நோய்களுக்குப் பப, செந்தூரங்களால் பரிகாரம் காணலாம். இவ்விரு பரிகாரங்களாலும் பரிகரிக்கமுடியாத தீராப் பிணிகளுக்கு அறுவை, கீறல், அக்கினி, காரம் முதலிய கருவிகளைக் கொண்டு பிணிதீர்க்கவேண்டும் என்று மருத்துவமுறை வகுத்தனர். அறுவைமுதல் மகப்பேறு ஈறாக அஞ்சனங்கள் அவலோக மருந்து உட்படக் கையாளும் வலிய மருந்துகள் அனைத்தும் அரக்கருறையிற் சேர்ந்தனவாகக் கருதப்படும். இம்மருந்துகள் 21 வகைப்படும் என்று சித்தர்கள் கூறுகின்றனர். இஃதன்றி கொடிய உடல்நோய்களையும், மிருத்து நோய் களையும் அகற்றி, உடம்பை உரம்பெறச் செய்ய மேற்கண்ட மும் முறைகளோடு ஆசனம், பிராணாயாமம், தாரணம், தியானம், சமாதி போன்ற பலவகையான உடற்பயிற்சி முறைகளையும், மூச்சுப் பயிற்சி முறைகளையும், உள்ளப் பயிற்சி முறைகளையும் கொண்டு மக்களின் பிணி அகற்றி, மக்கள் இல்லறத்தை நல்லறமாக நடத்த வழி கோலினர். இஃதன்றி, தொன்மை வாய்ந்த இந்த நன்மை தரும் மருந்து களை அகமருந்துகள் என்றும், புறமருந்துகள் என்றும் கூறுவதும் உண்டு. அகமருந்துகள் 32, புறமருந்துகள் 32 என்று கூறுகின்றனர். இதன் விவரத்தை தேரையர் என்னும் சித்தர் விளக்கிக் கூறியுள்ளார். அதோடு, உரைக்கும் மருந்து, கலக்கும் மருந்து, எரிக்கும் மருந்து, உழுக்கு மருந்து, உலர்ந்த மருந்துகள் என்று மருந்து செய்யும் முறைகள் முப்பத்து எட்டு என்றும் அவர் விளக்கிக் கூறியுள்ளார். தேரையர் மருந்து முறைகள் நமக்குத் தெவிட்டாத இன்பம் பயப்பனவாகும். சித்தர்கள் தங்கள் மருந்திற்கு உரிய மூலப்பொருள்களை உயிர்ப்பொருள்கள், மூலிகைப் பொருள்கள், தாதுப் பொருள்கள் என்னும் மூன்றுவகைப் பொருள்களாகப் பிரித்துள்ளனர். மேலும், மருந்துகளில் பின்வரும் பல்வகைப் பிரிவுகளையும் கண்டு, அவைகளைச் சுத்திகரிக்கும் முறைகளையும், புடமிடும் முறைகளையும், கலப்பு முறைகளையும், அவைகளின் குணாகுணங் களையும் கண்டனர். அம் மருந்துகளும் வகைகளும் வருமாறு: 1. உப்பு (Salts) 25 2. பாசாணங்கள் (Arasenics) 64 3. உலோகங்கள் (Metals) 11 4. உபரசங்கள் (Metallic Essences) 120 5. உடற் பொருள்கள் (Body components) 64 6. கற்பங்கள் 268 7. மாமூலிகைகள் (Great Herbs) 64 8. சிறு மூலிகைகள் (Simle Herbs) 1008 மேற்கூறிய பொருள்களின் கலப்பால் உண்டான பொருள்கள் எண்ணிறந்தன உண்டு. அவைகள் எல்லாம் வாத, மது, மருத்துவம், கற்பகம், யோகம் ஆகியவைகளுக்குப் பயன்படும் என்று கூறு கின்றனர். இதனைத் திருமூலர் தம் மருத்துவ நூற்களில் நன்கு விளக்கிக் கூறியுள்ளார். தாதுப் பொருள்களை (உலோகப் பொருள்களை) ஐம்பூத வகைப்படி வகுத்தும், தாது விளைவுப் பொருட்களென வகுத்தும் இருக்கின்றார்கள். மூலிகைப் பொருட்களிலும், உயிர் (சீவ)ப் பொருட்களிலும் என்னென்ன தாதுப் பொருள்கள் அடங்கியிருக்கின்றன, என்னென்ன சத்துப் பொருள்கள் அடங்கியிருக்கின்றன என்பவைகளையெல் லாம் அறிந்து, அவைகளை எடுத்துச் சுத்தப்படுத்தி அரைத்து, அரைப்பிலே வீரியம் ஏற்றி மருந்தாக்கி, உடம்பில் இன்னின்ன பொருட்குறைவினால் இந்த நோய் உண்டாகி இருக்கிறது என்பதை ஐயந்திரிபற ஆய்ந்து மருந்து கொடுத்தனர். ஆங்கில மருத்துவம் அன்னையின் கருப்பையில் உதிப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் தமிழ் மருத்து வத்தைக் கண்டுள்ளனர். மருந்துகள் செய்யுமுன்பே அதில் சேரும் சரக்குகளின் பஞ்சபூதப் பகுப்புமுறை அறிந்தும், சத்துரு மித்ரு முறை அறிந்தும், சத்துரு மித்ரு மறை அறிந்தும், நாதவிந்துச் சரக்குகளை நன்கறிந்தும், காடிநீர், காரநீர் எவையெவை என்பதைக் கண்டும் மருந்து செய்யும் முறைகளை வகுத்துள்ளனர். மூலிகை, பற்பக் கரு, குரு, முப்பு, ஏக மூலிகைப் பிரயோகம், திராவகம் செயல் நீர் ஆகியவற்றை மருந்து செய்யும்பொழுது உபயோகிக்கும்முறை ஆகியவை பற்றிச் சித்தர் நூல்களில் சிறப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. சித்தர் மருத்துவத்தில் செய்பாகம், கைபாகம், புடபாகம், எரிப்புப் பாகம் முதலியவற்றைப்பற்றியெல்லாம் கூறப்பட்டிருந் தாலும், ஒருவர், ஒரு குருவின்மூலமே இதனைப் பயின்று நடை முறையில் தேர்ந்தாலன்றி இந்த மருத்துவத்தைச் செய்தல் அரிது. நிற்க. இந்தச் சித்தர்கள் கண்ட தமிழ் மருத்துவத்தில் மூலிகைகள் முக்கிய இடத்தைச் சொந்தப்படுத்தியுள்ளன. உலகிலே அதிகமான மூலிகைகள் மலிந்துள்ள தமிழ்நாட்டில் அவற்றின் மூலம் நோய்நீக்குதலே சிறந்த மருத்துவம் ஆகும் என்று சித்தர்கள் கண்டனர். ஒரு நோய்க்கு பல மூலிகைகளைக் கலந்து மருந்து செய்வது உண்டு. ஒரு வியாதியை ஒரே மூலிகையால் குணப்படுத்துவதும் உண்டு. இது எளிதான பரிகாரம்; ஏழை எளிய மக்களுக்கு ஏற்ற மருந்து. இந்த மூலிகைமருத்துவத்தில் தமிழர்கள் மிகுந்த முன் னேற்றம் அடைந்திருந்தனர். எனவே, மூலிகை அகராதி என்ற நூல்கூட எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மூலிகைகளில் தாமரைக்கு ஒரு தனிச் சிறப் புள்ளது. அதன் இலை, வேர், தண்டு, பூ, தேன் முதலிய அனைத்தும் நல்ல மருந்தாக உபயோகப்படுகின்றன. தாமரைமலரில் மிகமிகச் சக்தி வாய்ந்த பொருள்கள் அடங்கி யிருக்கின்றன. இதனை நமது நாட்டிலிருந்த பழங்கால மருத்துவர்கள் மட்டும் கூறவில்லை; இன்றுள்ள மேனாட்டு மருத்துவர்களும் தாமரையிலுள்ள ஒவ்வொரு பகுதிகளையும் நன்கு ஆராய்ந்து அதன் சத்துப் பொருள்களையும், அதை அருந்துவதால் தீரும் நோய்களை யும் நன்கு விளக்கியுள்ளார்கள். தாமரைமட்டுமல்ல; அதன் இனமாகிய செந்தாமரை, வெண் டாமரை, நீலத் தாமரை, மஞ்சள் தாமரை ஆகியவைகளும், பற்பல நிறமாய் விளங்கும் அல்லிகளும், கற்றாமரை, ஓரிலைத் தாமரை, ஆகாயத் தாமரை, நிலத் தாமரை, குளிர் தாமரை, நெய்த்தாமரை, மலைத் தாமரை போன்ற பலவிதத் தாமரைகளும் மக்களுக்குற்ற நோய்களை அகற்றுவதற்கு மட்டுமன்றி, ஆடு, மாடு, யானை, குதிரை முதலியவைகளுக்கு ஏற்படும் பலவகையான கொடிய நோய்களை (தனியேயும், பல மருந்துகளோடு கலந்தும்) அகற்றுவதற்கும் பயன் படுகின்றன. வெண்டாமரைப்பூ இதயத்திற்கும், மூளைக்கும் மிகவும் நல்ல மருந்தாகும். செந்தாமரைப்பூ மூலக்சூட்டை முழுவதும் தணிக்க வல்லது. கற்றாமரையில் செம்புச் சத்து அதிகம்; இது குஷ்டம் முதலிய கொடிய நோயை அகற்றவல்லது. இதன் இலையைக் காயவைத்துப் பொடி செய்து, காலை மாலை ஒரு கரண்டி வீதம் நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் மூளைக்குப் போதிய வலு உண்டாகும். தாமரைத் தேன் அரும்பெருஞ் சஞ்சீவியாகும். உடலுக்கு உரமளிக்கும்; ஊக்கம் ஊட்டும்; நல்ல தேஜ உண்டாகும்; கண் நோய்களைக் கருவறுத்து, கண்களுக்கு நல்ல குளிர்ச்சியையும் அழகையும் அளிக்கும். ஆகாயத் தாமரை, கற்றாமரை, வெண்டாமரை முதலியவை களோடு சுத்த நீர், பசும்பால் ஆகியவற்றைக் கலந்து அரைத்தால் அரிய கற்பமாகும் என்று சித்த மருத்துவர்கள் சிலர் கூறுகிறார்கள். தாமரை லேகியம், தாமரைச் சூரணம் ஆகியவைகளை விதிப்படி சாப்பிட்டு வந்தால் மார்ச்சளி, க்ஷயரோகம் போன்ற கொடிய நோய்கள் அனைத்தும் அடியோடு ஒழியும். தாமரை வித்தை மருந்தாகச் செய்து சாப்பிட்டு வந்தால், மனிதன் நரை திரை மூப்பு முதலியவைகள் அண்டாது நீண்டநாள் வாழலாம் என்று சித்த யோகியர் சிலர் கூறியுள்ளார்கள். ஆயுர்வேத மருத்துவர்களும் இதை ஆதரிக்கின்றார்கள். இதயத்தில் ஏற்படும் கொடிய நோய்களை எல்லாம் விரட்டும் ஆற்றல் வெண்டாமரைக்கு உண்டு. இதயத்தைப் பலப்படுத்தி, மூளைக்கு வலுவுண்டாக்கக்கூடிய வல்லமையும் வெண்டாமரைக் குண்டு. தாமரைக் கியாழம், வலிப்புக் கண்ட குழந்தைகளுக்குக் கொடுத்தால் ஒரே பொழுதில் குணம் காணும். தாமரைப் பூக்களை உட்கொண்டு உயிரோடு நீண்ட நாள் வாழமுடியும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றார்கள். சமரச சன்மார்க்க சங்கங்கண்ட இராமலிங்க அடிகளாரும் இதனை ஆதரித்துள்ளார். மேலும், புருவ மத்தியில் வெண்டாமரை மலர் மலர்ந்திருப்பதாகவும், அதன் மத்தியில் ஓங்கார வடிவமாய் ஒரு பீடம் இருப்பதாகவும், அதன் மத்தியில் அசையாது விளங்கும் ஒரு தீபம் இருப்பதாகவும், அதன் நடுவில் கடவுள் இருப்பதாகவும் பாவித்துச் சிவாயநம என்று நா அசையாமல் சிந்திக்கவேண்டும்; இதனால் சுத்த சன்மார்க்க யோகமாதி சித்தியெல்லாம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். (திருவருட்பா: 6-வது திருமுறை, 162 பக். 103) மேலும், தாமரைப்பூ கண்ணிற்குக் குளிர்ச்சி தரும்; தாமரை வளையம் நஞ்சுகளை முறிக்கும்; தாமரை மணி வசீகரம் அளிக்கும்; தாமரைத் தாது மேகம் போக்கும்; தாமரைக் கிழங்கு ஆண்மை அளிக்கும்; சூதபந்தினியாகும் என்றார். பொற்பங் கயத்தின் புதுநறவுஞ் சுத்த சலமும் புகல்கின்ற வெற்பந் தாமர மதிமதுவும் விளங்கும் பசுவின் தீம்பாலும் நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவைதீர்க்குங் கற்பங் கொடுத்தாய் நின்றனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே என்றும் கூறியுள்ளார். (திருவருட்பா: 6-ம் திருமுறை, பக்கம். 282) தாமரை மகரந்தம், தாமரை வளையம் ஆகியவற்றோடு ஏலம், இலவங்கம், வால்மிளகு, சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சம் வேர், அகில் கட்டை, அதிமதுரம், அக்கிராகாரம், அசுவகந்தி, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம், மான்கொம்பு, சடாமாஞ்சில், உருத்திராக்கம், கோரோசனை, அம்பர் ஆகியவற்றை வகைக்கு இரண்டரை வராக னெடை எடுத்தும், சாம்பிராணிப்பூ, அப்பிரக பபம், வெள்ளி பபம், முத்து பபம் இவற்றில் வகைக்கு ஒன்றேகால் வராகன் எடை எடுத்தும், சுத்திக்கவேண்டியவற்றைச் சுத்தித்துப் பொடி செய்து குழிஅம்மியில் இட்டு மாதுளைப்பூ இரசம், இளநீர், முலைப் பால் இவற்றில் தனித்தனியே நன்றாக அரைத்து, குன்றிமணி அளவு மாத்திரை செய்து உலர்த்தி உண்ணவும், இளநீர், பால், சர்க்கரை, தேன், பழ இரசங்கள் அனுபானங்கள். இதனை ஒரு மண்டலம் உட்கொண்டால் முகஅழகு, நல்ல தொனிஅழகு, ஆயுள்பலம் முதலியவைகள் உண்டாகும். தாகச்சுரம், கண்ணோய், கண்காசம், கல்லடைப்புக் காமாலை, நீரிழிவு, சோகை, உழலை வாந்தி இவைகள் நீங்கும். இதனை மகா ஏலாதி மாத்திரை என்பர். பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டை ஐந்து நிலமாக வகுத் திருந்தனர். அவை முறையே முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்று கூறப்படும். குறிஞ்சி நிலத்தில் நோய் அதிகம் உண்டாகும். அந்நிலத்தில் இரத்தத்தை உறிஞ்சும் சுரமும், வயிற்றில் கட்டியும், சிலேத்பனமும் தங்கும் என்றும், பாலைநிலம் வாதம், பித்தம், கபம் இவற்றால் விளையும் பிணிகட்கு இருப்பிடமென்றும், பிணிகள் யாவும் இந் நிலத்தில் எழும் என்றும், முல்லைநிலத்தில் பித்தநோய் போம், வல்லை நோய் உண்டாகும், வாதநோய் வரும் என்றும், நெய்தல் நிலத்தில் வாதநோய் வளரும், ஈரல்பெருக்கு உண்டாகும், குடல் வாய்வு வளருமென்றும், தாமரை மலர் நிறைந்த மருதநிலம் வாத முதலிய முத்தோஷங்களும் அகலும், நோய் அணுகாது, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமென்றும் கூறுகின்றனர். மருதநிலம் நன்னீர் வளம்ஒன்றைக் கொண்டே பொருதனில மாதியநோய் போக்கும் - கருதநிலத் தாறிரதஞ் சூழ அருந்தவரென் றார்பிணியெல் லேறிரதஞ் சூழ்புவிக்கு மில் என்று சித்த மருத்துவாங்கச் சுருக்கம் கூறுகிறது. ஆசனத்தில் பதுமம் (தாமரை) சித்த மருத்துவத்தில் நோய் நீக்கப் பலவிதமான மருந்துகள் கண்டனர்; அதோடு ஆசனப் பயிற்சியும் கண்டனர். மக்கள் நோய் அற்று நீண்டநாள் வாழ, உடல் உருக்குப்போல் உரம்பெற்று எழ, மேனி பொன்போல் ஒளிவிட்டுத் திகழ, உள்ளம் என்றும் பொன்றா இன்பக்கடலிற் றிளைத்துநிற்கக் தமிழ்நாட்டில் வாழ்ந்த நமது முன்னோர்கள் சிறந்த மருந்துகளைமட்டுமன்றிப் பல சுவாசப் பயிற்சிகளையும், ஆசனப் பயிற்சிகளையும் மேற்கொண்டு நலம்பெற்றனர். இதனால் உடலின் உள்ளுறுப்புகளும் வெளியுறுப்புகளும் பலம் பெற்றன; நோய்கள் நீங்கின; நோய் வராமலும் காக்கப்பட்டன. இவ்வரிய வித்தை தமிழகத்திற்கு உரித்தானது; நமது சித்தர்கள் கண்ட சீரிய மருந்து. இவ்வித்தையை நன்கு பயின்றவர்கள் என்றும் அழியாச் சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெறலாம் என்று நவில்கின்றனர். இவ்வித்தையை நன்கு பயின்ற முனிவர்களிற் சிலர் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாய் வச்சிரதேகம் பெற்று மலைகளிலும் குகைகளிலும் வாழ்வதாக நம்புதற்குரிய பெரியோர்கள் நவில் கின்றனர். தமிழகம் கண்ட இவ்வரிய வித்தை நீண்டகாலமாகக் கவனிப்பாரற்றுக் காடேறிவிட்டதாக எண்ணப்பட்டு வந்தது. இந்திய சுதந்திர எழுச்சியோடு இவ்வித்தையும் மறுமலர்ச்சி பெற்றெழ ஆரம்பித்தது. தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம் இதைப்பற்றி எழுதும் கட்டுரைகளுக்கு இடமளிக்க வந்தன. ஒருசில புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்தன. ஒருசில யுவர்கள் ஆசனப் பயிற்சியால் கட்டுமதான உடலைப் பெற்றனர்; பல தேசீயவாதிகள் பிரிட்டிஷ் சிறைக்கூடங்களில்கூட நாள் தவறாது பயிற்சி செய்து வந்தனர்; சினிமா நட்சத்திரங்களும் மாணவர்களும்கூட பயிற்சிசெய்ய முற்பட்டனர். இலங்கையிலுள்ள எனது நண்பர் நாராயணன் என்பவர் சர்வாங்க ஆசனத்தின்மூலம் தனக்கு ஏற்பட்ட ஆத்மா வியாதியைப் போக்கி, நல்ல உடல்வளமும் தேஜஸும் பெற்று விளங்கினர். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபொழுது எடுத்த போட்டோவையும், இன்று அவர் உடல் பெற்றிருக்கும் உரத்தையும் வளத்தையும் கண்டு நானே பெரிதும் ஆச்சரியமுற்றேன். ïy§ifÆš nkdh£L kU¤Jt¤ JiwÆš v«.ã., ã.vÞ., பட்டம் பெற்ற எனது நண்பர் டாக்டர் சி. கந்தசாமி அவர்கள் இந்த ஆசனப் பயிற்சியின்மூலம் பலருக்கு நோய்நீக்கிவருகின்றார். ஆசனப் பயிற்சியும், சுவாசப் பயிற்சியும் பெற்ற சிலர் வாரக் கணக்காய் மண்ணிற்குள் புதையுண்டு கிடந்து மீண்டும் உயிரோடு எழுந்துவருவதை நாம் கண்டும் கேட்டும் வருகின்றோம். இந்த ஆசனங்களை உடம்பின் பல பகுதிகளுக்கும் அகமும் புறமும் பலம் பெறப் பலவிதமாகப் பிரித்திருக்கின்றார்கள். அவைகள் முறையே சிரசாசனம், சர்வாங்க ஆசனம், பத்மாசனம், புஜங்காசனம், சலபாசனம், தனுராசனம், பசிமோத்தானாசனம், ஹலாசனம், மயூராசனம், மத்ச்யாசனம், அர்த்த மச்யேந்திராசனம், பாதஹதாசனம், வீராசனம், அவினி முத்ராசனம், விபரீதகரணி யாசனம், யோகமுத்திராசனம், சானுசிரசாசனம், பாதஹதாசனம், வஜ்ராசனம், சாந்தியாசனம் போன்று பல ஆசனங்கள் உண்டு. பத்மாசனம் நமது தலையையும், அரைக்குமேல் உள்ள உடம்பையும் தாங்கிநிற்பது முதுகெலும்பு. இதை மேருதண்டம் என்று ஆசனத் துறையில் நன்கு பயின்ற அறிஞர்கள் மொழிவர். நாபிதூரம் வரைக்கும் கோண எலும்புகள் கூடி முன்னால் பெட்டிபோல் நெஞ்செலும்புடன் சுவாசப் பையையும் இருதயத்தையும் பாது காக்கின்றன. நரம்புக் குழாய்கள், சுவாசக் குழாய் முதலியவைகளைக்கூடப் பாதுகாக்கின்றன. முதுகு எலும்பு ஒரு எலும்பினால் ஆனதன்று; வட்டமான துவாரங்கள் இடப்பட்ட முப்பத்திரண்டு எலும்பு களினால் ஆனாது. முதுகெலும்பு ஒரே எலும்பாக இருந்தால் திரும்பவும், வளையவும், நிமிரவும் முடியாது. இது உள்ளும் புறமும் நரம்பு களாலும் சதைகளாலும் மூடப்பட்டுள்ளது. அது அடிப்பட்டா லும் எளிதில் முறியாது; வளைந்துகொடுக்கக்கூடியது. முதுகெலும்பில் நடுவில் ஒரு துவாரமிருக்கிறது. இதன் வழியாகத்தான் உயிர்நரம்புகள் ஓடுகின்றன. இதனை முதுகு நரம்பு என்று கூறுவார்கள். மூளையின் பொருளே நீண்டு முதுகு நரம்பாக வந்திருக்கிறது என்று சிலர் கூறுகின்றார்கள். இந்த நரம்புகளில் சில தாம் அறிந்த வைகளை மூளைக்கு அறிவிக்கவும், அங்கிருந்து வரும் செய்திகளை ஏனைய அங்கங்களுக்கு உணர்த்தவும், அதன்படி செய்யவும் பயன்படுகின்றன. முதுகெலும்பின் ஒவ்வொரு பக்கத்திலும் நமது விருப்பத்திற்கு அடங்காது செயலாற்றும் அதிஅற்புதமான நரம்புச் சக்கரங்கள் அமைந்துள்ளன. இந்த நரம்பு உச்சிமுதல் உள்ளங்கால் வரையும் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் ஆட்டுவிக்கிறது. இந்த நரம்பில் எந்தப் பகுதியில் எவ்விதக் கோளாறு எழுந்தாலும் அந்தப் பகுதி செயலற்று விரைவில் உயிருக்கு ஊறு உண்டாகும். முதுகெலும்பு நேராக நிமிர்ந்துநின்று தொழிலாற்ற அமைந் திருக்கின்றது. நிமிர்ந்து உட்காரும்பொழுதும், நிமிர்ந்து நிற்கும் பொழுதும் முதுகெலும்பைச் சார்ந்த உதிரக் குழாய்களும், சதை களும், இரத்தாசயமும் இயற்கை ரீதியில் தொழிற்பட்டு உடல் நலம் பெறுன்றன. சுவாசப்பை அகன்று பரவிநிற்கிறது. இருதயம் இறுக்கமற்றுத் தாராளமாகச் செயலாற்றுகிறது. மூச்சுக்குழாய்கள் வளைவின்றி இருப்பதால் சுவாசிப்பதற்கும் சுலபமாக இருக்கிறது. மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் சதைவளைவு மேலும் கீழும் தாராளமாகப் போய்வருகிறது. வயிற்றுக்குள் அடங்கியிருக்கும் சோற்றுப்பை, பித்தப்பை, குடல் முதலியவை சிறிதும் சிரமம் உறுவதில்லை. இந்த முதுகெலும்பை நேராக வைக்கப் பத்மாசனம் பெரிதும் பயன்படுகிறது. பத்மாசனம் என்றால் தாமரை ஆசனம் என்று பொருள். சாதாரணமாக எவரும் நீண்டநேரம் காலை மடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க முடிவதில்லை. அவ்வாறு உட்கார்ந்தால் முதுகெலும்பு நேராக இருக்க, கால்களும் குண்டியும் போதிய அளவு துணையாக இருப்பதில்லை. பத்மாசனம் இடுவதில் முதுகெலும்பு நேராக நின்று தான் ஆக வேண்டும். இந்த ஆசனம் பயிலும்போது சிலருக்குக் காலைத் தூக்கி வைக்க முடியாது. சில நாட்கள் பயிற்சி செய்தால் கணைக்கால், சதைகள், பூட்டுகள் தளர்ந்துகொடுக்கும்; அப்பால் எளிதில் காலைத் தூக்கி வைக்கமுடியும். இந்த ஆசனம் போட்டு நீண்டநேரம் அமர்ந்திருக்க முடியும். இந்த ஆசனத்தில் நீண்டநாள் அமர்ந்து பழகிவந்தால் உடலுக்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உவகையும், உயிருக்கு உறுதியும் உண் டாகும். பத்மாசனம் பழகும் முறை முதலாவதாகப் பூமியில் ஒரு சமுக்காளத்தை விரித்துப்போட்டு அதில் அமர்ந்து கால்களை நீட்டவேண்டும். அப்பால் வலதுகாலின் அடிப்பாகத்தை இருகரங்களாலும் பிடித்துச் சந்துவரை மெல்ல இழுத்துக் குதிங்காலை அடிவயிற்றுச் சதையோடு ஒட்ட செய்யவும். பாதம் மேல்நோக்கி இருக்க வேண்டும். பின்னர் இடதுகாலைப் பிடித்து வலது தொடைமேல் வைத்துக் குதிங்கால் அடிவயிற்றைத் தொடும்படி செய்யவேண்டும். இடது காலைத்தூக்கி வைக்கும் பொழுது வலதுகாலின் முட்டின் மீது வைக்காது கொஞ்சம் தள்ளி வைக்கவேண்டும். இரு தொடைகளும் முழங்கால்களும் பூமியின் மீது இருக்கவேண்டும். முதுகு நேராக நிமிர்ந்து இருக்கவேண்டும். கைகள் சின்முத்திரை வடிவமாக இருக்கவேண்டும். இரு பாதங் களும் மேல்நோக்கிப் பதும மலர்போல் இருக்கவேண்டும். கண்கள் கீழ்நோக்கி மூக்கின் நுனியைப் பார்க்கவேண்டும். இந்த ஆசனம், ஆசனப் பயிற்சி நூல்களில்மட்டுமன்று; சிற்ப சாத்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தப் பத்ம ஆசனத்தில் தென்னாடுடைய சிவனும், பார்புகழும் பகவான் புத்தரும் இருப்பதாக நமது ஐதீகம். இதே ஆசனத்தில் சிலை வடிவங்களும் செதுக்கப்படுகின்றன. பத்மாசனத்தில் இருக்கும் பாவனையில் தீட்டப்பட்ட படிமங்கள், பார்க்கக் கவர்ச்சிகரமாக இருக்கும். இந்த ஆசனப் பயிற்சியில் சதைகள் இறுகும்; நரம்புகள் வலுப்பெறும்; முதுகுத்தண்டு வளையாது நிமிர்ந்திருக்கும்; கூன் உண்டாகாது; இதயம் பலமுறும்; நோய் அணுகாது; நீண்டநாள் வாழ வழிகாணலாம். இந்த ஆசனத்திற்கு வேறு பெயரிடாது பத்மாசனம் என்று பெயரிட்டதிலிருந்து, நமது முன்னோர்கள் தாமரையின்மீது கொண்ட பற்றும் மதிப்பும் நன்கு புலனாகின்றன. தாமரைக்கு உரிய மருதநிலமே நோய்கள் வரவிடாது மக்களைக் காக்கும் என்றால், தாமரை ஆசனமும் மக்களை நோயணுகாது காக்கும் என்பதில் சந்தேகப்படவேண்டிய அவசியமின்று. இந்த ஆசன அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை வங்கச் சிற்பத்துறை வல்லுநர் பனீந்திரநாதவசு, எம். V., அவர்கள், இந்தியச் சிற்பநூற் கொள்கைகள் என்ற நூலில் நன்கு விளக்கி யுள்ளார். 16. தாமரை வடிவில் தமிழக நகர அமைப்பு முற்காலத்தில் தமிழகம் மூன்று நாடுகளாய்ப் பிரிக்கப்பட்டு, மூன்று முடிமன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்து வந்தது. இம் முடிமன்னர்கள் தம் நாட்டை எளிதில் ஆள்வதற்கு ஏற்றதாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிற்கும் பெரிய சிறிய அதிகாரி களை நியமித்து நல்லாட்சி நடத்திவந்தனர். இந்த ஆட்சி அமைப்புகள் தமிழர்களின் பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் ஒத்தவையாக இருந்தன. நாட்டின் பெரும்பிரிவிற்கு மண்டலம் என்றும், அவற்றின் உட்பிரிவுகளுக்கு வளநாடு என்றும், அவற்றின் உட்பிரிவுகளுக்கு நாடு என்றும் அவற்றின் உட்பிரிவுக்கு ஊர் என்றும் பெயர் வைக்கப் பட்டிருந்தன. சில மண்டலங்களின் பெயர்களில் உட்பெயர்கள் மாறியும் இருந்தன. சோழநாட்டில் கூற்றம் என்றும், தொண்டைநாட்டில் கோட்டம் என்றும் சில பெயர்வேறுபாடுகள் இருந்தன. சிறிய பிரிவு எல்லா நாட்டிலும் ஊர் என்றே அழைக்கப் பட்டது. ஊர்களில் சதுர்வேதி மங்கலம் என்ற பிரிவுகள் உண்டு. இவை சமய சம்பந்தத்தால் ஏற்பட்டவை. பெரிய பிரிவுக்கும், நடுத்தரப் பிரிவுக்கும், சிறிய பிரிவுக்கும் ஏற்ற ஆட்சித் தலைவர்கள் இருந்தனர். பாண்டிய நாடு நிர்வாகம் நடத்துவதற்கு எளிதாகச் சில மண்டலங்களாகவும், பல வளநாடுகளாகவும், பல கூற்றங்களாகவும், பல நாடுகளாகவும், பல ஊர்களாகவும் பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய நாடு மதுரோதய வளநாடு, வரகுண வளநாடு, கேரளசிங்க வளநாடு, திருவழுதி வளநாடு, சீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு, அமிதகுண வளநாடு என்று பிரிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இஃதன்றி, வளநாட்டில் அடங்கிய கூற்றங்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணக்கிடக்கின்றன. இரணியமுற்ற நாடு, புறப்பறளை நாடு, களக்குடி நாடு, தென்பறம்பு நாடு, வடபறம்பு நாடு, செவ்விருக்கை நாடு, பூங்குடி நாடு, சூரன்குடி நாடு, கீழ்க்களக் கூற்றம், கானப்பேர்க் கூற்றம், கொழுவூர்க் கூற்றம், மிழலைக் கூற்றம் போன்றவை பாண்டிய நாட்டின் பிரிவுகளாக இருந்தன. நாடுகளின் பெயர்கள் ஊர்கள் அடியாகப் பிறந்தன. வளநாடு களின் பெயர்கள் எல்லாம் பாண்டியர்களின் இயற் பெயர்களும், சிறப்புப் பெயர்களுமாய் இருந்தன. மண்டலங்கள் மாகாணங் களுக்கும், வளநாடு மாவட்டங்களுக்கும், கூற்றம் தாலுக்காக் களுக்கும் ஒப்பானவை. முற்காலத் தமிழ்நாட்டு அமைப்பு, கடிகாரத்தின் சக்கரங் களைப்போல் ஒன்றோடொன்று தொடர்புடையனவாய்த் திகழ்ந்தன. ஊர்களில் பேரூர்களும், சிற்றூர்களும் உள்ளன. நகரங்களில் மன்னர்கள் வாழும் கோநகரமும், கடற்கரைகளை அடுத்த பேரூர் களில் துறைமுகப் பட்டினங்களும் இருந்தன. பாண்டிய நாட்டின் துறைமுகப் பட்டினமாகிய கொற்கையில் பாண்டிய நாட்டு இளவரசர்கள் இருந்து வந்தனர். இது, இங்கிலாந்து இளவரசர் வேல்நாட்டில் இருப்பதைப் போன்றது. பண்டைக்காலத்தில் தமிழர் கண்ட தலைநகரங்கள் இன்றைய நவநாகரிகப் பட்டினங்களாய் இலங்கும் மேனாட்டு நகரங்களை விடச் சாலச் சிறப்புடையன. நகரங்களின் நடுவே பெரிய கோவில்களும், விண்முட்டும் விமானங்களும், பொற்றேர்களும் இருந்தன. எழுநிலை மாடங்கள் எழிலிற் சிறந்து விளங்கின. பல பல்கலைக் கழகங்களும், பல கல்லூரிகளும், தமிழ்ச் சங்கங்களும், ஓவிய மண்டபங்களும், இசை ஆராய்ச்சிக் கழகங்களும், நாடக அரங்குகளும், ஆறுகளும், குளங்களும், நந்தவனங்களும், கோட்டை கொத்தளங்களும், காவற் கூடங்களும், அகழ்களும், அகலமான தெருக்களும், கடைவீதிகளும் இருந்தன. வீடுகளும், கோவில்களும் அமைக்க விசேஷ அறிவு பெற் றிருந்தனர். அன்று அவர்கள் அமைத்த கோவில்களிலுள்ள கருவறையின் அமைப்பைக் கவனித்தால், அவர்கள் கட்டிடக் கலையிற் பெற்ற பெரிய சிற்பஞானம் புலனாகும். கருவறைகளைச் சதுரவடிவமாக வும், நீண்ட சதுரவடிவமாகவும், வட்டவடிவமாகவும், அரை வட்ட வடிவமாகவும், நீண்ட சதுரவடிவத்தில் ஒருபக்கத்தில் உள்ள இரு கோணங்களும் மழுப்பப்பட்டு வட்டவடிவமாகவும் அமைத்திருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் சதுரமாகவும், வட்டமாகவும் தோண்டப் பட்ட கேணிகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் மழைத் தண்ணீரும், கழிவுநீர்களும் வெளியே செல்லத் தக்க வடிகால்கள் உள்ளன. நகரிலுள்ள கழிவுநீர்களும், மழைத் தண்ணீரும், சாக்கடை களும் ஊருக்கு வெளியே செல்லத்தக்க மேல்மூடி போட்டுள்ள வடிகால்களும், மருத்துவச்சாலைகளும், பல்வேறு தொழிற்சாலை களும், அறங்கூறும் அவையும், ஆட்சி மன்றங்களும், இன்னோரன்ன பல்வேறு நிலையங்களும் உள்ளன. இஃதன்றி, பெரும் பூங்காக் களும், விளைநிலங்களும், மேய்ச்சற்றரைகளும் இருந்தன. பண்டைத் தமிழர்களின் நகரமைப்புத் திறன் எப்படி இருந்தது என்பதைக் காண, இன்று சிந்துவெளியில் அகழ்ந்து கண்ட மொகஞ்சதாரோ, ஹரப்பா, சங்குதாரோ முதலிய - திராவிடப் பெருங்குடி மக்கள் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவிய நகரங்களே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. மொகஞ்சதாரோ பாகிதானிலுள்ள சிந்து நதிக் கரையோரத்திலே இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சிப் பகுதித் தலைவர் சர் ஜான் மார்ஷல் என்பவரால் மொகஞ்சதாரோ நகர் அகழ்ந்து காணப்பட்டது. இந்நகர் தமிழ்நாட்டிலே எழுந்த ஆற்றங்கரை நாகரிகத்தை அடிப்படையாகக்கொண்டெழுந்த நகரம்போல் காணப்படுகிறது. மொகஞ்சதாரோ சிந்து ஆற்றின் கரையிலும், ஹரப்பா ரவி ஆற்றின் கரையிலும் உள்ளன. மரக்கலப் போக்குவரத்து வசதிக்காகவே நகரங்கள் ஆற்றோரங் களில் அமைக்கப்பட்டுள்ளன. தோணிகளில் ஏற்றப்படும் பண்டங்கள் நேராக அரபிக்கடலை எளிதில் அடையமுடியும். அவ்வாறே கப்பல் களில் வரும் வெளிநாட்டுப் பண்டங்கள் படகுகளில் இறக்கப்பட்டு மொகஞ்சதாரோ நகரை அடையமுடியும். இந்நகர் ஒரு சதுரமைல் பரப்புடையது. தெருக்கள் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. காற்றோட்டத்தைக் கவனித்து நகர் இவ்வாறு அமைக்கப்பட் டிருக்கிறது. பெரிய தெருக்களைச் சிறிய தெரு வெட்டிக்கொண்டு போகிறது. பெரிய தெரு முக்கால்மைல் நீளமும் 40 அடி அகலமும் உள்ளது; இது வண்டிப் போக்குவரத்து வசதிக்காக அகலமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் இருமருங்கிலும் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. சிறிய தெருக்கள் பெரிய தெருக்களைவிட நல்ல நிலையில் உள்ளன. சந்துகளின் முனைவீட்டுச் சுவர் வளைவாக அமைக்கப்பட் டிருக்கிறது. ஒவ்வொரு தெருவிலும் நல்ல செங்கல் வைத்துக் கட்டப்பட்ட வார்கால்கள் உண்டு. ஒவ்வொன்றும் 10 அங்குல அகலம் இருக்கும். இவ்வீடுகளில் உள்ள சிறிய கழிநீர்க்கால்களும் சிறந்த முறையில் செங்கல்லால் கட்டப்பட்டுள்ளன. வீட்டு வடிகால்களிலுள்ள தண்ணீர், தெருக் கால்வாயில் வந்து கலந்து ஊருக்கு வெளியே செல்கிறது. இந்நகரில் காணும் சாக்கடை அமைப்புமுறையே இன்றைய பட்டினங்களில் உள்ள பாதாளச் சாக்கடை முறையைக் காண வாய்ப்பளித்தது என்று எண்ணமுடியும். தெருக்களில் வீடுகள் அணிஅணியாய்க் கட்டப்பட்டுள்ளன. ஒரு வீட்டிற்கும் மற்றொரு வீட்டிற்கும் இடைவெளி இல்லை. அவர்கள் வீட்டிற்குப் பெரும்பாலும் கடப்பட்ட செங்கற் களையே உபயோகித்திருக்கின்றனர். சுவரின் மீது களிமண் சாந்தையே மேற்பூச்சாக உபயோகப் படுத்தியுள்ளனர். வீட்டுச் சுவர்கள், பலகணிகள், வாயிற்படிகள், உத்திரங்கள், சட்டங்கள், விட்டங்கள், இருத்துக் கட்டைகள், மல்லுக்கைகள் எல்லாம் ஒழுங்காக அமைத்திருக்கின்றனர். சுவர்கள் 3 அடிமுதல் 6 அடிவரை அகலமுள்ளவையாகக் காணப்படுகின்றன. மேன்மாடங்களைத் தாங்கத் தக்க அகலமான சுவர்களை அமைத்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. இரண்டு, மூன்று, நான்கு அடுக்கு மாடிகள் உள்ள வீடுகளும் உள்ளன. கோயில்களும் கடைகளும் காணப்படுகின்றன. கட்டிடங் களும் நடுவில் அகன்ற நிலாமுற்றங்கள் உள்ளன. அதனைச் சுற்றிப் பல அறைகள் உள்ளன. சில வீடுகளில் மாடங்களும், சுவர் அறை களும், அலமாரிகளும் உள்ளன. படுக்கை அறைகள், நீராடும் அறைகள், மலங்கழிக்கும் இடங்கள் தனித்தனியே உள்ளன. மேன்மாடிகளில் படுக்கை அறைகள் பல உள்ளன. 242 அடி நீளமும் 112 அடி அகலமுமுள்ள பெரிய மாளிகையும் உண்டு. பெண்களுக்கென்று தனி அறைகளும் உள்ளன. ஒவ்வொரு இல்லத்திலும் நீராடத் தனி அறை உள்ளது. சமையலுக்கென்று தனி அறைகளும் காணப்படுகின்றன. ஆடு, மாடு, கோவேறு கழுதைகளைக் கட்டிவைக்கத் தக்க தனி இடங்களும் உள்ளன. பெரும்பாலான வீட்டுவாயில்கள் 4 அடி உயரம் உள்ளவையாக இருக்கின்றன. இஃதன்றி, வீட்டிற்கு வேண்டிய அழகிய பூவேலை செய்யப் பட்ட மண்பாண்டங்களும், விளையாட்டுப்பொருள்களும், வெண் கற்பானைகளும், மைக்கூடுகளும், அம்மி, உரல், மாவரைக்கும் கல்உரல்களும், விளக்குகளும், பீங்கான்களும், ஊசி, கோடரி, அரிவாள், கட்டில், பாய், மேசை, நாற்காலி, ஊதுகுழல்கள், சொக்கட்டான் கருவிகள், பொன் வெள்ளி முதலிய உலோகங்களால் செய்யப்பட்ட அணிகளும், பலவித மணிகளும், ஆயுதங்களும், பொம்மைகளும், முத்திரைகளும் உள்ளன. எகிப்தியர், சுமேரியர் முதலியோர்களைவிடச் சுகாதார முறைப்படி அமைக்கப்பட்ட வீடுகளையும் நகரங்களையும் பண்டைத் திராவிடர்கள் அமைத்திருந்தனர் என்பதற்கு மொகஞ்ச தாரோ நல்ல எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. மூவேந்தர்களின் தலைசிறந்த கோநகரங்களாய்ப் புகழ்பெற்று விளங்கிய பேரூர்கள் மதுரை, உறையூர், வஞ்சி, புகார் என்னும் நகரங்களே யாகும். பிற்காலத்தில் காஞ்சி பல்லவ மன்னர்களின் கோநகராய்த் திகழ்ந்தது. இதில் சோழர்களுக்கு உறையூர் சில காலம் தலைநக ராயும், புகார் துறைமுகப்பட்டினமாயும் விளங்கின. சிலகாலம் புகார் நகரமே தலைநகராய் - கோநகராய்ச் சிறப்புற்று விளங்கியது. சிலப்பதிகார ஆசிரியர் ஆகிய இளங்கோவடிகள் தமிழகத்தின் பேரூர்களாக மேற்கண்ட நான்கு நகரங்களையே குறிப்பிட்டுள்ளார். நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு மாட மதுரையும் பீடார் உறந்தையும் கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும். (சிலப். 8: 1-4) சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அடிக்கடி ஒருவர் மீது ஒருவர் பகைகொண்டு மறப்போர் நடத்திவந்தனர். அதனால் மூன்று அரசர்களும் பலங் குன்றினர். இது தமிழகத்தில் அன்னியர்கள் கால்வைக்க இடம் அளித்தது. அவர்கள் ஆற்றிய போர்களில் நாடு முழுவதும் நலிவுற்றது. இக் கொடிய மறச்செயலால் நமது பழம்பெரும் மன்னர்களின் தலைநகரங்களையோ, சிம்மாசனத்தையோ, செங்கோலையோ, ஏனைய பழம்பொருளையோ நாம் கண்டுகளிக்கமுடியாமற் செய்யப்பட்டுவிட்டது. மேனாட்டில் ஒவ்வொரு சிறிய நகரத்திலும் ஒரு நகர மண்டபம் இருக்கும். அங்குள்ள நூல்நிலையத்தில் அந்நகரத்தின் படமும், ஊர் அமைப்பின் வரலாறும் காணப்படும். வெளியூரார்கள் அவற்றை எளிதில் அறிந்துகொள்வார்கள். நமது நாட்டில் அவ்வழக்கங்கள் எல்லாம் வளர வில்லை. நாட்டுப் பற்றும், நகரப் பற்றும், கலைஆர்வமும் பெருகி வரும் இந்நாளில் இச்சிறப்புகள் விரைவில் தோன்றுவது அவசியம். முற்காலத் தமிழ்மக்கள் நகர அமைப்பை நன்கு ஆராய்ந்து, அதைத் திறம்பட நிலைநாட்டியுள்ளார்கள். ஆனால் பிற்காலத் தமிழர்கள் அதனை மறந்துவிட்டார்கள். கெட்டி என்ற வெள்ளையர் நமது நகர அமைப்பின் அழகை வியந்து பாராட்டினார். அதன் பின்னர்தான் நமது மக்கள் நகர அமைப்புக் கலை ஒன்று இருக்கிறது என்ற உணர்வைப் பெற்றனர். அதன் பின்னர் இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், பரஞ்சோதி முனிவர், கச்சியப்பர் முதலியவர்கள் நகர அமைப்பு களைப்பற்றிச் சிறப்புடன் புகழ்ந்துள்ளார்கள் என்பதைக் கண்டனர். அப்பால் நகராண்மைக் கழகங்கள் நகரை நன்றாக வைப்பதில் அக்கறை காட்டின. கோயில் நகரம், உல்லாச நகரம், புற நகரம், பூம்பொழில் நகரம், சிறுவர் நகரம், இளைஞர் நகரம், தொழில் நகரம், தோட்ட நகரம், விளையாட்டு நகரம், துறைமுக நகரம், மலை நகரம் முதலிய வேறுபாடுகளை ஆய்ந்து வளர்ச்சி செய்யும் முறையில் நகர் அமைக்க முற்பட்டனர். இனிப் பண்டைத் தமிழர் கண்ட நகரங்களை ஆராய்வோம். சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாயும், தலைநகராயும் விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். இதனைப் பூம்புகார் என்றும் கூறுவர். இது காவிரியாறு கடலொடு கலக்கும் இடத்தில் மிக அழகுடன் அமைக்கப்பட்டிருந்தது. இன்ப பூமி (சுவர்க்க பூமி)க்குள்ள புகழும், நாகருலகத்திற் குள்ள போகமும் புகார் நகரில் ஒருங்கே நிலை பெற்றிருந்தனவாம். `நாகநீள் நகரொடு நாகநா டதனொடு போகநீள் புகழ்மன்னும் புகார் நகர்.' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. முற்கால நகர் இருபாகங்களை உடையது. ஒருபாகம் ஊர் என்றும், மற்றொரு பாகம் பட்டினம் என்றும் அழைக்கப்படும். புகார் நகரின் ஒரு பாகம் மருவூர்ப்பாக்கம் என்றும், இன்னொரு பாகம் பட்டினப்பாக்கம் என்றும் அழைக்கப்பட்டது. இதன் நடுவில் நாளங்காடி என்ற எழில்மிக்க பொழில் ஒன்று உள்ளது. மருவூர்ப்பாக்கத்தில் கடற்கரையை அடுத்துக் கண்களைக் கவரும் அழகுடைய யவனர் சேரிகளும் வணிகத்தின்பொருட்டு வந்த பல நாட்டு மக்கள் வாழும் இருப்பிடங்களும் இருந்தன. வண்ணம், சுண்ணம், சாந்தம், பூ முதலியன விற்போர் திரியும் நகர வீதியும், பட்டுச் சாலியர் இருக்கும் இடங்களும், நவமணிகளும் பொன்னும் பொற்பணிகளும் விற்கும் மறுகுகளும் கூலக்கடைத் தெருக்களும், கன்னார், தச்சர், கொல்லர், தட்டார், பாணர் உறை விடங்களும் இருந்தன. பட்டினப்பாக்கத்தில் அரச வீதியும், கொடித்தேர் வீதியும், பீடிகைத் தெருவும், வணிகர் மறுகும், மறையோர் சேரியும், வேளாளர் வீதியும், மருத்துவர், சோதிடர், சூதர், மாகதர், கூத்தர், நாளிகைக் கணக்கர், கணிகையர் முதலியோர் இருக்கைகளும் இருந்தன. மகதச் சிற்பரும், மராடக் கொற்றரும், யவனத் தச்சரும் கூடிக் கண்ணைக் கவரும் முறையில் கவின்பெற அமைத்த அரசன் கோயில் இருந்தது என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனால், மதுரையின் நகர் அமைப்புப் போல் எங்கும் ஒரு நகர் இருந்தது என்று கூறுவதற்குச் சான்றுகள் இல்லை. காஞ்சிபுரம் காஞ்சி, தொண்டைநாட்டுத் தலைநகராகவும், பல்லவப் பேரரசர்களின் தலைநகராகவும் இருந்தது. சீன யாத்திரிகன் கண்டுகளித்த நன்னகர், வடமொழி வாணர் இதை ஏழு முத்தி நகரங்களில் ஒன்றாக மதித்துப் போற்றுகின் றார்கள். வைணவ ஆழ்வார்களால் பாடல் பெற்ற பதினேழு கோயில் களைக் கொண்டது இந்நகர். ஊரின் நடுவே கோயில்களும், சுற்றி லும் மாடவீதிகளும், இவைகளை இணைக்கும் ஏனைய தெருக் களும், அவைகளில் பெருஞ்சதுரமாக இருக்கும் தேர்விழாத் தெருக் களும் வேறு எங்கும் காணல் அரிது. இங்கு 350 கோயில்கள் உண்டு. தெருக்கள் நீண்டு விசாலமாக இருக்கும். மிகப்பழைய கோயிலான கைலாசநாதர் கோயில் ஊருக்கு வெளியே இருக்கிறது. பரமேவர விண்ணகரமாகிய வைகுண்டப் பெருமாள் கோயில் ஊரின் இடையில் உள்ளது. இஃதன்றி, ஜைனர், பௌத்தர் ஆலயங்களும் உள்ளன. மணிமேகலையின் கதையில் கூறப்பட்டுள்ள கோயில்களும், தரும மதவனம் என்ற வனமும், அறவண அடிகள் பால் மணி மேகலை அறங்கேட்ட மடமும், சாக்கிய நாயனார், திருக் குறிப்புத் தொண்டர் முதலியோர் அவதரித்த இடமும் இங்குண்டு. காஞ்சிபுரம், மேற்கில் மேடாகவும், கிழக்கில் பள்ளமாகவும் இருக்கிறது. தெருக்கள் அகலமாகவும் நீளமாகவும் காணப்படு கின்றன. அரச வீதிகள் நான்கும் கிட்டத்தட்ட நூறு அடி அகலம் உள்ளன. பெரிய மழை பெய்தாலும் தெருக்களில் தண்ணீர் தேங்காது வடிந்துவிடும். நகரின் நடுவே மஞ்சள்நீர்க் கால்வாய் ஒன்று ஓடுகிறது. இங்கு உயர்ந்த கோட்டை ஒன்று இருந்தது. எனவே "மதிற் கச்சி" என்று தேவாரம் இதைப் புகழ்ந்து பாடுகிறது. காஞ்சி எண்ணற்ற கோயில்களுக்கு மட்டுமின்றி சிறந்த நகர அமைப்பிற்கும் எடுத்துக்காட்டாக இலங்குகிறது. விடுகள் தெருக்களினின்று உயர்த்திக் கட்டப்பட்டுள்ளன. மேனாட்டு நகரங்களில் காணக் கிடக்கும் இருட்டுச் சந்துகளும், குப்பை மேடுகளும் இங்கு காண முடியாது. ஏகாம்பரநாதர் கோயிலைச் சூழ்ந்த தேர் ஓடும் தெருக்களும், காமாட்சி அம்மாள் கோயிலைச் சூழ்ந்த தேர்த் தெருக்களும் ஒன்றுக்கொன்று இடர்ப்படாது அமைக்கப்பட்டுள்ளன. நல்ல நகர அமைப்பு முறைகளை அறிய விரும்புவார்க்குக் காஞ்சி சிறந்த எடுத்துக்காட்டாக இலங்குகிறது என்று நகர் அமைப்பு வல்லுநரான கெட்டி என்ற மேனாட்டு நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இந்நகர் தாமரை மலரின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதுபோல் காணப்பட்டாலும், மதுரையைப் போல முற்றிலும் அந்த அமைப்பு முறை கைக்கொள்ளப்பட வில்லை. ஆனால், மயிலின் வடிவ அமைப்பை உடையதாய் இருக் கிறது என்று தண்டியலங்காரம் என்னும் நூலில் கூறப்பட்டிருக் கிறது. `ஏரி யிரண்டும் சிறகா, எயில்வயிறாக காருடைய பீலி கடிகாவா - நீர்வண்ணன் அத்தியூர் வாயா, அணிமயிலே போன்றதே பொற்றேரான் கச்சிப் பொலிவு' தமிழகத்திலுள்ள பழம்பெரும் (பேரூர்கள் எல்லாம் உறையூர், புகார், கொற்கை போன்ற ஊர்கள்) அழிந்து போயின. இன்று முற்றும் சிதையாது எழிலுடன் நிற்கும் பழைய நகர்கள் காஞ்சி புரமும், மதுரையுமே யாகும். காஞ்சி நகர் அமைப்பில் தாமரை வடிவம் ஒரு சிறிதே காணப் படுகிறது. மதுரை முற்றிலும் தாமரை வடிவமாகவே திகழ்கிறது. மற்றைப் பேரூர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து போய் விட்டதால் அவை தாமரையின் அமைப்பையுடையனவாக இருந் தனவா இல்லையா என்று திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. பண்டைத் தமிழக மக்களின் ஆட்சியாக விளங்கிய பாண்டிய நாட்டின் அகநாட்டுத் தலைநகராய் விளங்கியது மதுரை. இந்நகர் சேரர், சோழர் கோநகரங்களைவிட எழிலும் ஏற்றமும் உடையது. இந்நகர் முத்தமிழ் வளர்த்த கடைச்சங்கம் மருவிய மூதூராகும். வாழையடி வாழையாய் வாழ்ந்த பழம் பாண்டிய மறக்குல மன்னர்கள் மாண்புடன் வாழ்ந்த மாநகரமாகும். தமிழகத்தின் தலைசிறந்த முத்தமிழ்ப் புலவர்களைத் தாங்கிய சங்கப் பலகை இருந்த மங்காத கலைநகரமாகும். இங்கு நான்கு மாடங்கள் கொண்ட எண்ணற்ற மாளிகைகள் பல இருந்ததால், இந்நகர் நான்மாடக் கூடல் எனக் கூறப்பட்டது. இந்நகர் அறுபத்து நான்கு கலைகளையும் பழுதற ஓதிய கலைப்புலமை வாய்ந்த பாண்டியப் பேரரசர்களால் கட்டப்பெற்ற பேரூராகும். அவர்கள் பல தலைமுறைகளாகத் தென்மதுரை, கபாடபுரம் போன்ற தலைநகர்களைச் சீரும் சிறப்புமாகக் கட்டிய அனுபவத்தினால் மதுரை மாநகரை மாண்புற அமைத்தனர். மதுரை பழந்தமிழர்களின் சீரிய நகரமைப்புத் திறனுக்கும், சிற்பச் சிறப்பிற்கும் அற்புதமான எடுத்துக்காட்டாக இலங்குகிறது. நகரின் நடுவே பாண்டியன் கோயிலும், நாற்புறமும் சதுரவடிவமாக நான்கு வீதிகளும், அப்பால் அடுத்தடுத்துச் சதுரஞ் சதுரமாகச் சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளிவீதி முதலான சதுர வீதிகளும் ஒன்றன்மேல் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் பெருங் குடியிலே நகர் அமைப்பில் நனிசிறந்த சிற்ப வல்லோர்கள் பலர் இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு இந்நகர் எடுத்துக்காட்டாக இலங்குகிறது. இந்நகர அமைப்பு அழகிய தாமரையின் வடிவம் போல் அமைக்கப்பட்டிருக்கிறது. தாமரைப்பூவின் நடுவில் இருக்கும் பொகுட்டினைப்போன்று நகரின் நடுவே பாண்டியன் கோயில் பண்புடன் விளங்கிற்று. பொகுட்டினைச் சூழ்ந்து விளங்கும் மாவட்டத்தையொப்பத் தெருக்களும், இதழ்களைப் போன்று மாளிகைகளும் அமைந்துள்ளன. புலவர்கள் தம் அறிவாகிய துலாக்கோலின் ஒரு தட்டில் மதுரையையும், மற்றொரு தட்டில் உலகிலுள்ள ஏனைய நகரங் களையும் வைத்து நிறைபோட்டுப்பார்த்து மதுரை மாநகரின் எடையை மிகத் துல்லியமாகக் கண்டனர் என்று அறிஞர்களால் பாராட்டப்படுகிறது. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீரூர்; பூவின் இதழகத் தனைய தெருவம்; இதழகத்து அரும்பொகுட்டு அணைத்தே அண்ணல் கோயில்; தாதின் அனையர் தண்தமிழ்க் குடிகள்; தாதுண் பறவை யனையர் பரிசில் வாழ்நர்; பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம இன்துயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாதுஎம் பேரூர் துயிலே. (பரி. vii 1-10) இதன் பொருள்: சிறப்புடைய மதுரை, திருமாலின் தொப்பூழில் பூத்த தாமரைப்பூவினைப் போன்று திகழ்ந்தது. அப் பூவின் அகவிதழ்களைப்போன்று மதுரையின் தெருக்கள் திகழ்ந்தன. அந்த இதழ்களின் நடுவே உள்ள தாமரைக் கொட்டையை ஒத்துப் பாண்டியனது அரண்மனை விளங்கிற்று. அந்நகரிலுள்ள குளிர்ந்த தமிழ்மொழி பேசும் மக்கள், தாமரை மலரிலுள்ள மகரந்தப் பொடி யினைப்போல் இருந்தனர். அக் குடிகளிடத்துப் பரிசில் பெற்று வாழ்வதற்கு வேற்றுநாட்டிலிருந்து வரும் மக்கள் அந்த மகரந்தப் பொடிகளை உண்ண வரும் வண்டுகளை ஒப்பக் காணப்பட்டனர். சேரன் தலைநகராகிய வஞ்சியிலும், சோழன் தலைநகராகிய கோழி யிலும் (உறையூரிலும்) வாழும் மக்கள், கோழி கூவும் ஒலி கேட்டுத் துயில் எழுவர். ஆனால் மதுரை மக்கள், பிரமதேவன் நாவில் பிறந்த அந்தணர்களின் வேதக் குரல்ஒலி கேட்டுத் துயில் எழுவர் என்ப தாகும். இப் பாட்டின்மூலம் நகர் அமைப்புக் கலையிலும் தாமரை இடம் பெற்றிருப்பது நன்கு புலனாகின்றது. தாமரையின் அழகு, கட்டிடக் கலைஞர், நகர் அமைப்புக் கலைஞர், புலவர்கள் முதலிய அனைவருடைய கருத்தையும் கவர்ந்திருந்தது என்பது நன்கு புலனாகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழர் அமைந்த அரிய நகர் அமைப்பைப்போன்ற சிறந்த நகர் அமைப்பு வேறொன்றை இன்றுவரை நாம் எங்கும் கண்டதேயில்லை. லண்டன், பாரி முதலிய நகரங்கள் பெரியவைகள், அழகியவைகள் என்று கூறலாம்; ஆனால், மதுரை மாநகரின் அற்புதமான சிற்பப் படைப்பிற்கு இணையாக விளங்கும் பெருமை எதற்கும் இல்லை என்று எல்லா நகர நிர்மாணிகர்களும் நவில்கின்றனர். மதுரை - கோயில்நகர் என்று ஜே. பி. எல். செநோய், ஐ. சி. vÞ., என்பவர் ஒரு நூல் எழுதியுள்ளார். அதில், மதுரை மாநகர் சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் திராவிடக் கலைகளுக்கும், நாகரிகத் திற்கும் நடுநாயகமாக விளங்குகிறது. ஐரோப்பிய அறிஞர்கள், மதுரை - தென்னிந்தியாவின் ஏதென் என்று எடுத்துக்காடு கிறார்கள். இதில் உண்மையில்லாமற்போகவில்லை. தமிழ்ச் சங்கப் பலகை தென்னாட்டு அறிவாளிகளின் உள்ளத்தையெல்லாம் கவர்ந்து நின்றது. இந்துக்களின் சமய வாழ்க்கையையும் பிறவற்றையும் அறிய ஆவல்கொள்ளும் அன்னிய நாட்டவர்க்கு இந்தியாவில் இதைவிட ஏற்ற எடுத்துக்காட்டைக் காணமுடியாது. இந்நகரும் பாண்டிய மன்னர் நிலையும் இலங்கையின் பழைய வரலாற்றைக் கூறும் மஹாவம்சம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு. 500ஆம் ஆண்டு சந்திரகுப்த மௌரியன் சபையில் இருந்த கிரேக்கத் தூதர் சிர். (கி. பி. 320) பாண்டிய மன்னர்களையும், அவர் களது நாட்டின் சிறப்பையும் புகழ்ந்து கூறியுள்ளார். பண்டைக்காலக் கிரேக்கர்களும், உரோமர்களும் மதுரையைப்பற்றி நன்கறிந்திருந்தனர். தாலமி என்னும் வரலாற்று ஆசிரியர் பாண்டிய நாட்டிற்குப் புகழ்மாலை சூடுகின்றார். கி. மு. 27இல் பாண்டிய மன்னன் உரோம அரசர் அகட என்பவரிடம் தன் தூதரை அனுப்பிவைத்தான். இந்நகர் ஐரோப்பாவோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்ததை யும், நனிசிறந்த நாகரிகத்தையும், எழிலையும் பெற்றிருந்ததையும் மேனாட்டுப் புலவர்கள் அடிக்கடி தங்கள் நூற்களில் குறிப்பிட் டிருக்கின்றார்கள் என்ற கருத்தை விரிவாக விளக்கியுள்ளார். பண்டைக்காலத்து மதுரை நகரைக் கண்டுகளிக்கத் தமிழகத் தின் நான்கு திசைகளிலிருந்தும் மக்கள் திரள்திரளாக வந்தனர். கிரேக்கர்களும், உரோமர்களும், அரேபியர்களும்கூட வந்தனர். நகர் அருகே வந்ததும், மதுரை வந்துவிட்டது என்பதை எளிதில் உணரமுடியுமாம். நகரின் அண்மையில் பூங்காக்கள் பலவிருந்தன. மல்லிகை, முல்லை, மாதவி, சண்பகம், கழுநீர் முதலிய மலர்மணமும், அகில், புனுகு, சவ்வாது, கதூரி முதலிய களபங் களின் மணமும் மனத்திற்கு இன்பமூட்டுமாம். அஃதன்றி நகரிலுள்ள வீடுகளின் அடுக்களையிலிருந்து எழும் தாளிப்புப் புகையும், அங்காடிக் கடையின் அடை, அப்பம் முதலிய பண்டங்களின் வாசனையும், ஆற்றில் மகளிரும் மைந்தர்களும் நீராடித் தலைமுடியை உலர்த்த எழுப்பும் அகிற் புகையும்கூடித் தென்றலோடுகூடிவரும் புதுமணத்தை நுகர்ந்து, மதுரை அண்மித்து விட்டது என்பதை அறிவார்களாம். காழ்அகில் சாந்தம், கமழ்பூங் குங்குமம் நாவிக் குழம்பு, நலங்கொள் தேய்வை மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத் தேமென் கொழுஞ்சேறு ஆடி, ஆங்குத் தாதுசேர் கழுநீர், சண்பகக் கோதையொடு மாதவி, மல்லிகை, மனைவளர் முல்லைப் போதுவிரி தொடையில் பூவணை பொருந்தி அட்டில் புகையும் அகல் அங்காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த அந்திப் புகையும் ஆகுதிப் புகையும் பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர் விளங்குபூண் மார்பின் பாண்டியன் கோயிலின் அளந்து உணர்வறியா ஆருயிர்ப் பிணிக்கும் கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப் புலவர் செந்நாப் பொருந்திய நிலப்பின் பொதியிற் தென்றல் போலாது, ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது; காணீர், (சிலப்பதிகாரம். 13. 115-132) மதுரை செல்வோர், ஆண்டு அரசன் கோயிலும், ஆண்டவன் கோயிலும், ஆண்டெழும் முரசின் ஒலியும், மறைஒலியும், மந்திர முழக்கமும், வெற்றிவிழா முழக்கும், கரியின் முழக்கமும், பரியின் கனைப்பும், மருதப் பறையொலியும் கண்டும் கேட்டும் தமிழ் நாட்டுப் பேரூர்ச் சிறப்பை அறிவார்கள். தமிழ்நாட்டுப் பேரூர்கள் மருதநிலத்தில் பெரும்பாலும் பேராற்றங்கரையிலே எழுந்தன. மதுரையும் வைகைக் கரையிலே வளம்பெற்று எழுந்தது. திராவிடப் பெருங்குடி மக்களுக்குத் தொடர்புள்ள எகிப்தியர் நகரங்களை நைல்நதிக் கரையிலே கட்டினர்; சுமேரியர் டைகிர, யூப்ரட் நதியோரங்களிலே உருவாக்கினர். மொகஞ்சதாரோவிலோ சிந்து நதிக்கரையிலே நகரங்களை நிர்மாணித்தனர். அதேபோன்று காவிரிக் கரையிலே சோணாட்டுத் தலைநகரான உறையூரும், ஆன் பொருநைக் கரையிலே சேரநாட்டுத் தலைநகராகிய கருவூரும் எழுந்தன. புகார் துறைமுகப்பட்டினமாய் இருந்தாலும் காவிரி கடலொடு கலக்கும் இடத்திலே அரும்பியது. அவ்வாறே கொற்கை யும் துறைமுகப்பட்டினமாய் இருந்தும் தண்பொருநை சங்கம மாகும் இடத்திலே அமைக்கப்பட்டிருந்தது. 17. நாட்டியக் கலையில் நற்றாமரை உலகிலே பழம்பெருநாடு தமிழகமாகும். உலகில் உயிருடன் உலவும் மொழிகளில் தமிழ் மிகத் தொன்மையான மொழி. இது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை. இப் பழம்பெரும் மொழி மிகுந்த அற்புதமான அமைப்பை உடையது; இதன் இலக்கண அமைதி வேறு எந்த மொழிக்கும் இல்லை. ஆதியில் தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்தோர் தமிழை மூன்று கூறாக்கியுள்ளனர். அதாவது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழாகப் பிரித்தனர். இவைகள் ஒவ்வொன்றிற்கும் இலக்கணமும் இலக்கியமும் உருவாக்கினர். இம்மூன்றும் ஒன்றுக் கொன்று இன்றியமையாதன. மூன்றிற்கும் பொதுவாகச் சில இலக்கணங் களும் உண்டு. இம்மூன்றும் தமிழில் ஒரு கொத்தாக வழங்கப்படுவதுபோல் வேறு எந்த மொழிகளிலும் வழங்குவதில்லை. இம்மூன்றின் இலக்கணமும் தனித்தனியே அழகாக அமைந்துள்ளது என்று மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் கூறியுள்ளார்கள். இம்மூன்றையும் சேர்த்து முத்தமிழ், தமிழ் மூன்று, மும்மைத் தமிழ் என்று கூறியுள்ளனர். குடக்கோ முனிசேரன் தண்டாவுரை முத்தமிழ், சங்கத் தமிழ் மூன்றுந் தா, பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின், றெழுதத் துணிவதே யான் என்ற பாடல்கள் பிறந்தன. இலக்கியங்களுள் சிறந்த சிலப்பதிகாரத்தில் மூன்று தமிழும் விரவி வருவதால் அது முத்தமிழ்க் காப்பியம் என்று பாராட்டப் பட்டு வருகிறது. பண்டைக்காலத்தில் எழுந்த பைந்தமிழ்ப் புலவர் களில் பலர் இம்மூன்றிலுமே பயிற்சியுடையவர்களாய் விளங்கினர். அவர்களுள் முத்தமிழ்க் கவி என்ற சிறப்புப்பட்டம் பெற்றுச் சிலர் விளங்கினர். தமிழ்மொழி தென்பாண்டி நாடாகிய நெல்லையிலே பிறந்து பாண்டிய நாட்டின் கோநகராகிய மதுரையிலே வளர்ந்தது. மதுரையில் ஒன்றாகவும், வேறுவேறாகவும் எழுந்த சங்கங் களால் இயல், இசை, நாடகம் ஆகிய இந்த முத்தமிழும் ஆதரித்துப் போற்றி வளர்க்கப்பட்டு வந்தன. வேறு பல இடங்களில் எழுந்த தமிழ்ச் சங்கங்களும் இந்த முத்தமிழைப் போற்றிப் புகழ்ந்து கண்ணெனக் கருதிக் கவனமாய் வளர்ந்துவந்தன. இயற்றமிழ் என்று கூறுவது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களும் இலக்கியங்களும் கொண்ட தாகும். இசைத் தமிழ் என்று இயம்புவது சுரம், சுருதி, இராகம் என்னும் மூன்றின் இலக்கணங்களும், ஆதி இசைகளும், பண்களும் சேர்ந்ததாகும். நாடகத் தமிழ் என்பது தாளம், பாவனை, அலங் காரம், இரசம் என்னும் நான்கு அங்கங்களை உடையதாகும். எழுத்தொடு சொற்பொருள் யாப்பணி யென்னா வழுத்துஞ் சுருதிசுர வன்னம் - அழுத்துந் தனிவொற்றுப் பாவனை தான மிரசம் பன்னிரண் டிலக்கணமாம் பார் என்று மதிவாணன் நாடகத் தமிழ் என்னும் நூல் கூறுகிறது. முத்தமிழிலுள்ள இயல் இசை என்னும் இரண்டையும்விட நாடகம் மிகச் சிறப்புடையது. ஏனெனில் நாடகத்தில், இயலும் இசையும் அமைந்திருப்பதோடு இன்னும் பல சிறப்புக்களும் பொருந்தியிருக்கின்றன. இயற்றமிழைப் பல்லாண்டு படித்தவர் களும் இசைத் தமிழை இசைப்பயிற்சியுள்ளவர்களுமே நன்கு அறிய முடியும். நாடகத் தமிழைப் படித்தவர்களும் பாமரர்களும் எளிதில் நன்கறியமுடியும். நாடகத்தினைப் பண்டைக்காலத் தமிழர்கள்தாம் முதன் முதலில் கண்டனர். இயற்றமிழ் உருவாவதற்கு முன்னரே தமிழகத் தில் நாடகம் அரும்பியது. நாடகம், நாட்டின் பண்பினையும், பழமையினையும் பாங்குறக் காட்டும் பளிங்காகும். தமிழர்கள் நாடகக்கலையினை உலகில் முதன்முதலில் கண்டதோடு அதற்கு இலக்கணங்களும் இலக்கியங் களும் வளர்த்தவர்கள். இன்றுள்ள தமிழ் நூல்களில் தொல்காப்பியம் மிகப் பழமை யானது என்று கருதப்படுகிறது. இப்பழம்பெருந் தமிழ்நூல் இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகட்குமுன் நெல்லை மாவட்டத்திலே இயற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம், நாடக வழக்கினும், உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனறி வழக்கம் கலியே பாரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர் என்று கூறுகிறது. நாடக வழக்கத்தாலும் (புனைந்துரை வகையானும்) உலகியல் வழக்கத்தாலும் புலவரால் பாடுதற்கு அமைந்த புலவர் மரபு வழக்க மானது. கலிப்பாட்டு, பரிபாட்டு ஆகிய இருவகைப் பாடல்களா லும் பாடுவதற்கு உரியதாகும் என்று புலவர்கள் புகல்வார்கள் என்பது இச்சூத்திரத்தின் கருத்து. கருத்துகள் நிறைந்த கற்பனைக் கதைகளை நமது முன் னோர்கள் நாடகமாக நடித்துவந்தனர். நடந்த வரலாற்று நிகழ்ச்சி களையும் நாடகமாக நடித்துவந்தனர். இக்கதைகளைக் கலிப் பாவிலோ, பரிபாட்டிலோ பாடும் வழக்கம் பண்டைக்காலத் தமிழ்ப் புலவர்களிடம் இருந்திருக்கிறது என்பது நன்கு புலனாகிறது. இது, நாம் மேற்கண்ட தொல்காப்பிய சூத்திரத்திலிருந்து காணும் உண்மை. முற்காலத்திலே தமிழ்நாட்டில் நாட்டியம், நாடகத்தில் ஒரு அங்கமாக இருந்தது; பிற்காலத்திலே அது ஒரு தனிக் கலையாகப் பரிணமித்தது. புராணக் கதைகளுக்குத் தக்கபடி பல பாத்திரங்கள் தனித்தனியே வேடம்பூண்டு நான்குவித அபிநயங்களால் நடித்துக் காட்டுவதை நாடகம் என்றும், ஒரு பாத்திரமே முற்கூறிய முறையி லன்றி நான்கு அபிநயங்களினால் நடித்துக்காட்டுவதை நாட்டியம் என்றும், ஆகாரியம் நீக்கி மற்றைய மூன்று அபிநயங்களினால் நடிப்பதை நிருத்தியம் என்றும், நான்குவித அபிநயமும். முக, ரச, பாவம், ஜதி, சொற்கட்டு, சுரம் முதலியவைகளும் ஒருங்குசேர நடிப்பதை நிருத்தம் என்றும் நாட்டிய சாத்திரங்கள் நவில்கின்றன. இஃதன்றி ஆண், பெண்வேடமிட்டு நடிப்பதை நடனம் எனவும், பெண், ஆண் வேடமிட்டு நடிப்பதை நாட்டியம் எனவும், ஆண் ஆணாக நடிப்பதை நிருத்தியம் எனவும், பெண், பெண்ணாக நடிப்பதை நிருத்தம் எனவும், இறைவன் ஆடிய ஆட்டத்தைக் தாண்டவம் எனவும், இறைவி ஆடிய ஆட்டத்தை லாசியம் எனவும் மகாபரத சூடாமணி என்னும் நாட்டிய நூல் கூறுகிறது. இறைவன் ஆதிசக்திக்காக சக்தியோஜாதமுகமாகி நடித்ததை நடனம் எனவும், பராசக்திக்காக வாமமுகமாகி நடித்ததை நாட்டியம் எனவும், இச்சாசக்திக்காக அகோரமுகமாகி நடித்ததைக் தாண்டவம் எனவும், கிரியாசக்திக்காகத் தற்புருஷமாகி நடித்ததை நிருத்தியம் எனவும், ஞானசக்திக்காக ஈசானமுகமாகி நடித்ததை நிருத்தம் எனவும் கூறுகின்றனர். இந்த ஐந்துவகை நடனங்களும் தமிழ் மண்ணிலே தோன்றித் தமிழ்ப் பெருங்குடி மக்களால் வளர்க்கப்பட்டன. இந்த நாட்டியத் திற்குப் பரமகுருவாக ஆடவல்லானைப் பண்டுமுதல் இன்றுவரை ஏற்றிப் போற்றி வருகின்றனர். ஆடவல்லானைக் கூத்தன் என்றும், கூத்தப்பெருமான் என்றும், அம்பலவாணன் என்றும், நடராசன் என்றும், சபாபதி என்றும், பொன்னம்பலவன் என்றும், ஆனந்தக் கூத்தன் என்றும், நிருத்தமூர்த்தி என்றும் பலவாறாகப் போற்றிவருகின்றார்கள். இக்கூத்தைத் தெய்வீகக் கலையாக்கித் தங்கள் கோயில்களில் தனியிடம் அளித்துத் தமிழர்கள் போற்றி வந்தனர். தமிழர் ஆட்சி மறைந்த காலத்தும் தமிழ்ப் பெருங்குடி மக்களும், தமிழ்நாட்டுச் செல்வர்களும் தேவதாசிகளின்மூலம் இக் கலையைப் பேணி வளர்த்தனர். தமிழ் மக்கள் சங்ககாலத்திற்கு முன்பே நாடகக் கலையிலும், அதன் உறுப்பாக இருந்த நாட்டியக் கலையிலும் சிறப்புற்று விளங்கினர். எடுத்துக்காட்டாக, இன்றையத் தமிழ் மக்களின் முன்னோர் களான திராவிடக் குடிமக்கள் சிந்துவெளியில் ஐயாயிரம் ஆண்டு கட்குமுன் வாழ்ந்துவந்தனர். அவர்கள் வாழ்ந்த நாடும் நகரமும் அழிந்து புதையுண்டுபோயின. ஆனால், இந்தியப் புதைபொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவர் சர் ஜான் மார்ஷல் என்னும் ஆங்கில நற்குடி மகன் அப் பகுதியை அகழ்ந்து புதையுண்ட நகரங்களையும், பலப்பல அரும் பெரும் பொருட்களையும் கண்டெடுத்து, இத் திராவிட நாகரிகம், கிரேக்க நாகரிகத்தை விடச் சிறந்தது என்றும், புதையுண்ட நகரம் மொகஞ்சதாரோ என்றும் பெயர் கண்டார் என்பதை முன்னரே குறித்துள்ளேன். நமது பிரதம மந்திரியும், வரலாற்று ஆசிரியருமான பண்டித நேரு அவர்கள், பண்டு மொகஞ்சதாரோவில் அரும்பிய நாகரிகத் தின் மூலம் இந்தியாவில் வாழ்ந்த பண்டைக்கால மக்கள் உலக நாகரிகத்தின் முன்னோடிகளாய் விளங்கினார்கள் என்று நாம் பெருமையுடன் கூறிக்கொள்ள முடியும். பரதமுனி என்பவரால் வடமொழியில் எழுதப்பட்ட பரத நாட்டியம் என்ற நூல் முற்றிலும் தமிழர் கண்ட நாட்டியத்தையே கூறுகிறது. சங்ககாலத்திலே கி. பி. 300க்கு முன்னரே இக்கலை சிறப் புற்று வளர்ந்திருந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக நாட்டியத்தைப் பற்றிக் கூறும் பண்டைத் தமிழ்நூல் ஒன்றாவது இன்று முழுவடிவ மாக நமக்குக் கிடைக்கவில்லை. சிலப்பதிகார உரையில், நாடகத் தமிழ்நூலாகிய பரதம், அகத்தியம் முதலிய தொன்னூல்களும் சிறந்தன என்றும், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்பனவற்றுள்ளும் ஒருசில சூத்திரங்களே கிடைக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அடியார்க்கு நல்லார் தம்முடைய காலத்தில் வழங்கியன என்று குறிப்பிடப்பட்டுள்ள இசை நுணுக்கம், இந்திரகாளியம், பஞ்ச மரபு, பரதசேனாபதீயம், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல், கூத்தநூல் என்பவைகளும் இன்று கிடைக்கவில்லை. என்றாலும், மகாபரத சூடாமணி, அபிநய தர்ப்பணம், அபிநய தர்ப்பண விலாசம், இசை மரபு, பாவ ராக தாளம், கச்சப்புட வெண்பா, சுத்தானந்தப் பிரகாசம், தாளசமுத்திரம், கூத்தநூல், ஆதிமூல பரதம், பரத சங்கிரகம், நாட்டிய சூடாமணி, பரத சாத்திரம், பரதசேனாபதியம், நடநாதி வாத்திய ரஞ்சனம், சபா ரஞ்சித சிந்தாமணி, சங்கீத பரதநாட்டிய சாரசங்கிரகம் போன்ற சில தமிழ் நுல்கள் கையேட்டுப் பிரதிகளாகவும், அச்சேறியவை களாகவும் இன்று காணக்கிடக்கின்றன. தொல்காப்பியத்தில் வெறிக் கூத்து, கருங் கூத்து, வள்ளிக் கூத்து, கழலிணைக் கூத்து முதலிய கூத்துக்களின் பெயர்கள் கூறப் பட்டுள்ளன. இவையே பிற்கால நாட்டிய வளர்ச்சிக்கு அடிப்படை. மேலும், அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டு ரங்கம், மல் என்று நின்று ஆடும் ஆறு கூத்தும், துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை என்னும் ஐந்து வீழ்ந்தாடும் கூத்தும் உள. இன்று தமிழகத்தினரால் ஆடப்பட்டுவரும் தமிழ் நாட்டியம் பரதநாட்டியம் என்று கூறப்படுகிறது. இது பாவ ராக தாளம் என்னும் மூன்றும் இசைய ஆடப்படுவதால் பரதநாட்டியம் என்று கூறப்படுகிறது. இது மகளிர் மட்டும் ஆடற்குரிய கலையாகக் கருதப் படுகிறது. இப் பரதநாட்டியத்தை மூன்று பாகமாகப் பிரித்துள்ளார்கள். அதாவது, (1) அங்க பேதம், (2) உபாங்கபேதம், (3) பிரத்தியாங்கம் என்று கூறப்படும். முதலாவது கூறப்படும் அங்கபேதத்தை ஏழு பிரிவாகப் பிரித்துள்ளார்கள். அவை, (1) சிரசு, (2) கரப் பிரகரணம், (3) அங்குலி யாதி கரகரணம், (4) வட்சசு, (5) பார்சுவம் (6) கடி, (7) பாதம் என்ப தாகும். இவை ஒவ்வொன்றிற்கும் பல உட்பிரிவுகள் உள. அவற்றை விரிக்கிற் பெருகும். நாட்டியத்தில் அதிக முக்கியத்துவம் கைகளுக்கேயாகும். எனவே கைகளைப்பற்றியே இங்கு ஆராய்வோம். அஃதன்றி நாம் எடுத்துக்கொண்ட பொருளுக்குரிய முக்கிய ஆதாரங்களும் கை களில்தான் உள்ளன. கரப்பிரகரணம் என்பதில் ஒற்றைக்கை (அசம்யுத ஹதம்) 108, இரண்டைக் கை (சம்யுத ஹதம்) 64, முத்திரைக் கை 24, நிருத்தக் கை 32, கரகேந்திரக் கை 13, சிரோபாணி கர்மம் 20 என்று கூறப்படும். ஒற்றைக் கைகள் 108, இரட்டைக் கைகள் 64 என்று கூறப் பட்டிருந்தாலும் இவைகளில் ஒருசில கைகள் தாம் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. உச்சிமேற் புலவர் கொள்ளும் நச்சினார்க்கினியர் என்று கூறப்படும் அறிஞர் 33 ஒற்றைக் கைகளையும், 15 இரட்டைக் கை களையும், அவைகளின் தொழில்களையும்தான் விவரித்துள்ளார். இந்த முப்பத்துமூன்று ஒற்றைக் கைகளில் முக்கியமான கைகள் மூன்றை இங்குக் குறிப்பிடவேண்டியது அத்தியாவசியமாக இருக்கிறது. அவைகள் மூன்றும் தாமரையின் பெயரைப் பெற்றிருக் கின்றன. - ஏன்? தாமரையின் வடிவத்தையே பெற்றிருக்கின்றன. அதாவது, (1) முகுள ஹதம் (மொட்டுக் கை), (2) பதும கோச ஹதம் (மலரும் தாமரைக் கை), (3) அலபதும ஹதம் (மலர்ந்த தாமரைக் கை) எனப்படும். இஃதன்றி அர்த்த முகுளம் (அரை மொட்டுக் கை) எனப்படும் பதுமமுகுள ஹதம், பதாக பதுமகோச ஹதம் என்னும் இரட்டைக் கைகளும் உள. இங்கு முதலாவதாகக் கூறப்பட்ட மொட்டுக் கை (முகுள ஹதம்) எனப்படுவது தாமரை மொட்டுப் போன்று கையைக் குவித்து உபயோகிப்பதே யாகும். இக் கையை எப்படி வைப்பது என்பதுபற்றிப் பரதசாத்திரத்தில் கரைகண்ட நிபுணர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். அரபத்த நாவலர் தனது பரத சாதிரம் என்னும் நூலில் இதற்கு இலக்கணம் கூறும்பொழுது ஐந்து விரல்களையும் நுனிகூட்டுவது முகுள ஹதம் என்பதாகும் என்று குறிப்பிட் டுள்ளார். விரனுனி யைந்துங் கூட்டி மின்னுங்கை முகுள மாகும் என்று மகாபரத சூடாமணி கூறுகிறது. முகுள மென்பது மொழியுங் காலை யைந்து விரலும் தலைகுவிந் தேற்ப வந்து நிகழும் மாட்சித் தாகும் என்று சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் இலக்கணம் வகுத்துக்காட்டியுள்ளார். இவ்வாறு விரல்களை வைத்துக் காட்டும் அபிநயத்தின் கருத்தைப் பரதநூற்கள் விநியோகம் என்று கூறும். எனவே, முகுளக் கையின் விநியோகத்தை ஆராய்ந்தால் நமது நாட்டிய சாதிரத்தில் பொதிந்து கிடக்கும் பல அரிய கருத்துக்கள் ஒருவாறு புலனாகும். முகுளக் கையின் விநியோகத்தை அரபத்த நாவலர் தமது பரத சாதிரம் என்னும் நூலில், பஞ்ச பூதப் பண்பைக் காட்டிடல் நெஞ்சி லிருந்த நினைவினைக் கூறல் தாமரை வாழைப் பூவினைச் சாற்றல் மாமலர் எடுத்து வரதன்மேற் போடல் அன்னத்தை வாரி அருந்திடல் அருளுடன் பொன்னை அள்ளிப் பொருந்த அளித்தல் பன்றி குதிரை பருமுகங் காட்டல் மன்றல்சேர் குழலியர் வருமுலை காட்டல் பொன்னுடை யவரெனப் பன்னிடற் கிதுவா தோரணக் குஞ்சந் தொடுத்துக் காட்ட நேரனக் குருமுனி நிகழ்த்தினர் மாதே என்று கூறியுள்ளார். இதன் பொருளாவது: பஞ்சபூதங்களின் கூட்டங்காட்டல், மார்பில் வைத்துத் தன் எண்ணத்தைக் கூறல், தாமரைப்பூ, வாழைப் பூக்களைக் காட்டுதல், மலர்களை எடுத்து மாதேவர்க்கு அருச்சித்தல், அன்னத்தை வாரியுண்ணல், பொன்னை இரவலர் முதலியோர் களுக்கு ஈதல், பன்றி, குதிரை முதலியவைகளின் முகத்தைக் காட்டல், பெண்களின் குயங்களைக் காட்டல், பொன்னுடையோருக்கு உபமானங் காட்டல், குஞ்சங்களைக் காட்டல் ஆகியவைகளேயாம். மகாபரத சூடாமணியில் அதன் ஆசிரியர், உணவு பஞ்ச பாணங்கள், நீலமலர், உந்தி, வாழைப்பூ முதலியவைகளைக் காட்ட இம் முகுளக் கையை உபயோகப்படுத்தலாம் என்கிறார். அதோடு அர்த்த முகுளம், சிலி முகுளம், கண்ட முகுளம், மத்திம முகுளம், பிரதே முகுளம் என்று பல பிரிவுகளைப் பிரித்து, அதற்கு இலக்கணமும் விநியோகங்களும் கூறியுள்ளார். இனி இரண்டாவது கூறப்பட்ட பதுமகோச ஹதம் (மலரும் தாமரைக்கை) என்பதைப்பற்றி ஆராய்வோம். சிலப்பதிகார உரையில், மலரும் தாமரைக் கைக்கு (பதும கோசக் கை) இலக்கணம் கூறியுள்ளார்: பதுமக் கோசிகம் பகருங் காலை ஒப்பக் கைவளைத் தைந்து விரலும் மெய்ப்பட வகன்ற விதியிற் றாகும். அதாவது, ஐந்து விரல்களையும் பரப்பி, அவற்றின் நுனிகளை வளைத்தால் பதுமகோசக்கை யாகும் என்பதாகும். இக் கையின் விநியோகத்தைப் பற்றி அரபத்த நாவலர், பரத சாதிரத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். கப்பரை காந்தள், கஞ்ச மலர்க்கிணை தைப்புறு தொன்னை பொற்கிண்ணந் தாங்குதல் விந்தைசேர் வேலிக் குவமானம் விளம்பல் ஐந்தலை நாகத் தனிமுடி காட்டுதல் பனைமா தெங்கு பருவிளங் கனியின் வனையிணை குறித்தல் வானாடி காட்டுதல் பருங்கல் லெடுத்துப பகைவர்மே லெறிதல் விரும்பியே கொங்கையி னகக்குறி வைத்தல் பஞ்சாக் கினிக்குப் படிவங் கூறல் அஞ்சு மூர்த்தினிக் கபிநயங் காட்டுதல் தேவிசா முண்டி தெரிசனைக் கிதுவாம் ஓவறு கொற்றைக் குடைக்கினை யுரைத்தல் தீபநீ ராஞ்சனஞ் சிறப்புட னெடுத்தல் தாபதர்க் கிறைமுனி சாற்றின ரன்றோ இதன் பொருள்: கப்பரை, காந்தட்பூ, தாமரை மலர் ஆகியவைக்கு உவமை காட்டல், தொன்னை, கிண்ணம் முதலியவை களைத் தாங்குதல், ஐவேலிக் காய்க்கு உவமானங் காட்டல், ஐந்துதலை நாகங் காட்டுதல், பனம்பழம், மாம்பழம், விளாம்பழம், தேங்காய் இவற்றிற்கு இணைகாட்டல், கண்ணாடி காட்டல், பகைவர்மேல் கல்லெறிதல், பெண்களின் தனங்களில் நகக்குறி வைத்தல், பஞ்சாக்கினிக்கு உவமை காட்டுதல், ஐந்து தலை நாகத் திற்கு அபிநயம் காட்டுதல், பார்வதி, சாமுண்டியின் தரிசனைக் காட்டல், குடைக்கு உவமானங் காட்டல், தீபாராதனை காட்டல், நீராஞ்சனம் எடுத்தல் முதலியன. பதுமகோசக் கையிலும் மகாபரத சூடாமணியில் சிலிட்ட பதுமகோசக் கை என்ற ஓர் உபபிரிவின் இலக்கணமும் அதன் விநியோகமும் கூறப்பட்டுள்ளன. இனி மூன்றாவதாகக் கூறப்பட்ட அலபதும ஹதம் (மலர்ந்த தாமரைக் கை) என்ன என்பதைப்பற்றி ஆராய்வோம். சிலப்பதிகார உரையாசிரியர், அலாபத் திரமே யாயுங் காலைப் புரைமையின் மிகுந்த சிறுவிரன் முதலா வருமுறை யைந்தும் வளைந்துமறி வதுமே என்று கூறியுள்ளார். மகாபரத சூடாமணியில், விரலைந்தும் வளைத்து நீட்டி வேறுவேறாய்ப் பிடித்த கரமல பதுமக் கையாம் என்று கூறியுள்ளார். மேலும், விரகங்கண் ணாடி வட்ட மேல்வீடு முலைக ளுக்கும் இரதமூர் பூர்ணச் சந்த்ர னெழில்குளங் களுக்கு மாமே; கொண்டைகெம் பீரங் கர்வங் கோபங்கூக் குரல்ம லர்ந்த முண்டகப் பூக பித்த முதலான கனிக ளுக்கும் வண்டில்கொண் டாட்டம் சக்ர வாகமாம் சப்தத் திற்கும் எண்டிசை புகழும் பந்து நிருத்தமு மழகுக் காமே; அழகுடன் நாபி தன்னி லமைத்திட விகாரத் திற்கும் வளம்பெறு முகநே ராக வைக்கவித் தனைதா னென்றும் தளம்பதி சுபசந் தோஷ மதன்புய னேறி னிற்பாம் தெளிந்தகை சிரத்தின் மீதிற் சேர்ந்திடக் கிரீட மாமே என்று கூறியுள்ளார். இதன் பொருள்: விரகம், கண்ணாடி வட்டம், மேல்வீடு, தனங்கள், பூரணச் சந்திரன், குளங்கள், கொண்டை, கம்பீரம், கருவம், கோபம், கூக்குரல், மலர்ந்த தாமரை, கபித்தம் முதலான கனிகள், வண்டில், கொண்டாட்டம், சக்ரவாகம், சப்தம், பந்து, நிருத்தம், அழகு ஆகியவைகள் ஆகும். இதில் சிலிட்ட அலபது மக்கை என்ற ஓர் உபபிரிவு முண்டு; அதற்கு இலக்கணமும் விநியோகமும் உண்டு. இதேபோன்று இரட்டைக் கைகளில் பதும முகுள ஹதம், பதுமகோச ஹதம் என்ற கைகளைப்பற்றியும், அதன் இலக்கணங் களைப்பற்றியும், விநியோகங்களைப் பற்றியும், நாட்டிய நூற்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. விரிவஞ்சி இதனுடன் நிறுத்திக் கொள்ளுகின்றோம். தாமரை, பல கலைகளிலும் இடம்பெற்றிருப்பதைப் போல் நாட்டியக் கலையிலும் இடம்பெற்றிருக்கின்றது என்று எளிதில் சொல்வதற்கில்லை: நாட்டியக் கலையில் தாமரை சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. அதோடு அதிகமான இடங்களையும் கைப்பற்றியுள்ளது. எந்த மலருக்கும், எந்தப் பறவைக்கும், எந்த விலங்கிற்கும் இல்லாதவாறு தாமரை நாட்டிய நூலில் பல இடங்களைச் சொந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. நாட்டிய நூற்களில் தாமரையின் பெயர்மட்டிலும்தான் விளங்குகிறது என்று கூறிவிட முடியாது; அதன் உண்மையான பல்வேறு தோற்றங்களும் நன்கு திகழ்கின்றன. அதன் மொட்டு நிலையும், அதன் மலரும்நிலையும், அது முழுமையாக விரிவுற்ற நிலையும் நடனக் கலையை உருவாக்கிய முதல்வன் கருத்தை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன. தாமரை மொட்டின் வளர்ச்சியும் விரிவும் நாட்டியக் கலை யின் கர்த்தாவிற்குப் பல்வேறு பொருள்களை உள்ளடக்கிக் கொண் டிருப்பது புலப்பட்டிருக்கிறது. எனவேதான் அதற்கு இத்துணை முக்கியத்துவம் அளித்துள்ளார்; இத்துணைப் பொருள்களையும் அளித்துள்ளார். நாட்டியக் கர்த்தா, தாமரையின் காதல் தூதுவனாகிய வண்டினைக்கூட மறந்துவிடவில்லை. ஒற்றைக் கைகளில் பிரமர ஹதம் (தேனீக் கை) என்று, தாமரைத் தேனை நத்தும் தேனீக்கும் ஓர் இடம் அளித்துள்ளார். 18. நவநிதிகளில் நளின மலர் பண்டைக் காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் செல்வங் களை நிதிகள் என்று கூறினர். இந்த நிதிகளை அவர்கள் ஒன்பது வகையாகப் பிரித்துள்ளனர். அவைகளில் ஒவ்வொன் றிற்கும் ஒவ்வொரு விதமான உருவமும் தீட்டியுள்ளனர். 1. வண்டோகை (பாண்டூகம்) 2. மானோகை (மாணவம்) 3. பிங்கலிகை (பிங்கலம்) 4. பதுமை (பதுமம்) 5. சங்கை (சங்கம்) 6. வேசங்கை (நைசர்ப்பம்) 7. காளை (காளம்) 8. மாகாகாளம் (மஹா காளம்) 9. சவ்வாதம் (சர்வ ரத்தினம்) எனப்படும். இந்த ஒன்பது விதமான உயர்ந்த செல்வங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சிறு தெய்வம் என்றும், ஒவ்வொரு சிறுநிதித் தேவதைக்கும் காவலாகப் பல்லாயிரம் பூதங்கள் உள என்றும் புராணக் கதைகள் கூறுகின்றன. ஒன்பது நிதிகளின் பெயர்களை வைத்தே ஒன்பது தெய்வங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்பது தெய்வங்களில் ஒவ்வொன் றும் ஒவ்வொருவிதமான சம்பத்துக்களை அளிக்கவல்லது என்று பண்டைக்காலச் சைவர்களும், சமணர்களும் நம்பினார்கள். 1. நவநிதிகளில் ஒன்றான வண்டோகை நெல், கோதுமை, பருப்புப் போன்ற தானிய மணிகளையும், ஏனைய மக்களுக்கு இன்றியமையாத உணவுப் பொருள்களையும் அளிக்கவல்லது. 2. மானோகை என்னும் நிதி போருக்குரிய கரி, பரி, தேர், காலாள்போன்ற நால்வகைப் படைகளையும், அரிய பெரிய ஆயுதங்களையும், மிக அபூர்வமான பொறிகளையும் அளிக்க வல்லது. 4. பிங்கலிகை என்னும் நிதி ஆண்கள், பெண்கள் ஆகி யோர்க்கு மட்டுமன்றி, யானை, குதிரை முதலிய பரிவாரங்களுக்கும் உரிய அணிகளை அளிக்கும் ஆற்றல் வாய்ந்தது. 4. பதும நிதி வெள்ளை, கருப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை போன்ற பன்னிறப் பஞ்சாடைகளையும் பட்டாடைகளையும் பல்வேறு வகைகளில் அளிக்கும் வன்மையுடையது. 5. சங்க நிதி குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளையும், இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழையும், காவியம், ஓவியம், படிமம், மாடமாளிகை, கூடகோபுரம் முதலியவைகளையும் நல்கவல்லது. 6. வேசங்கை நிதி வீடுகள், பாசறைகள், அரண்கள் அமைந்த அழகிய நகரங்கள், பட்டினங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் முதலிய வைகளைப் பழுதற அமைத்துக் கொடுக்கும் பண்புள்ளது. 7. காளை நிதி நிகழ்காலம், சென்றகாலம், வருங்காலம் ஆகிய முக்கால நிகழ்ச்சிகளையும், முன்கூட்டியே உணர்த்துவதோடு, விவசாயம், கைத்தொழில் முதலியவைகளின் விளைவுகளையும் முன்கூட்டிய அறிவிக்கும். 8. மாகாளை என்னும் நிதி பொன், வெள்ளி முதலிய தாதுப் பொருள்களையும், மாணிக்கம், வைரம், முத்து, பவளம் போன்ற நவமணிகளையும் நல்கவல்லது. 9. சவ்வாதம் என்னும் நிதி ஏழு ஜீவரத்தினங்களையும், ஏழு அஜீவரத்தினங்களையும் - அதாவது, (1) கிரகபதி, (2) சேனாபதி, (3) விசுவகர்மன், (4) புரோகிதன், (5) கரி, (6) பரி, (7) பெண் ஆகிய ஜீவ ரத்தினங்கள் ஏழையும் (1) சக்கரம், (2) குடை, (3) வாள், (4) தண்டா யுதம் (5) சூடாமணி (6) தோல், (7) காசிணி ஆகிய அஜீவரத்தினங்கள் ஏழையும் அளிக்கவல்லது என்று கூறப்படுகிறது. 1. சாலி முதலாகிய தானியம் அனைத்தும் ஏலமின் கோடெழில் திகழ மருந்து தண்டுத லின்றி வண்டோகை கொடுக்கும்; 2. கத்தி தோமரத் தண்டெழு நாஞ்சில் வித்தக வாள்வளை விற்கணை பிறவும் மிக்க வாயுதம் விரலங் கரக்கை பக்கரை யினையன மானோகை கொடுக்கும்; 3. பெரியார் சிறியார் பேதையர் தமக்கும் கரிபரி தேர்க்கும் கவினுடை மணிப்பூண் சிங்குதல் இன்றிப் பிங்கலிகை கொடுக்கும்; 4. துகிலொடு நூலும் கவரியும் சவரியும் தகவதின் ஈயும் தான்பது மையே; 5. தண்ணிய காற்றும் சந்தனக் குழம்பும் புண்ணிய நறுநீர்த் திவலையும் நிழலும் என்றிவை முதலாச் சங்கை பயக்கும்; 6. தாளமும் சங்கும் சகண்டையும் திமிலையும் காளமும் குழலும் கரடியும் துடியும் வீணையும் யாழும் விளங்குசூ ளிகையும் இணையன பிறவும் வேசங்கை கொடுக்கும்; 7. எழுத்தும் சொல்லும் பதமும் சுலோகமும் விழுத்தகு நூலும் புராணமும் விருத்தமும் சோதிட நிமித்தமும் சொல்லிய பிறவும் காளை என்னும் கனநிதி கொடுக்கும்; 8. உழவும் தொழிலும் வரையும் வணிகமும் செழுமிசை விச்சையும் சீலமும் பிறவும் ஒழியுதல் இன்றி மாகாளை கொடுக்கும்; 9. மரகதம் வச்சிரம் வயிடூ ரியமும் பரவிய நீலமும் பதும ராகமும் கோமே தகமும் கொழும்புருட ராகமும் தாமும் முத்தும் தடமா ணிக்கமும் சத்திர காந்தமும் சூரிய காந்தமும் இந்திர நீலமோ டெழுவகை லோகமும் தவ்வுத லின்றிச் சவ்வாதம் ஈயும். ஜீவ சம்போதனை என்னும் சமண நூலில் இது விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. பரத கண்டத்தை ஆண்ட ஜீத - சத்துரு என்னும் அரசருக்கு அஜிதன், சகன் என்னும் இரு மக்கள் இருந் தனர். மூத்தவனாகிய அஜிதன் சமண குருவாக - தீர்த்தங்கரராகச் சமண சமயத்தைப் பரப்பினான். இளையவனாகிய சகன் வளர்ந்து தகப்பனுக்குப் பின் அரியாசனத்தை அடைந்தான். ஒருநாள் அவன் கண்டப் பிரபாத மலைக்குத் தன் பரிவாரங்களுடன் சென்று இந்திரனை (நாட்டிய மாலகனை) நோக்கித் தவம்புரிந்தான். இவனது தவத்தினால் இந்திரனுடைய அரியாசனம் குலுங் கியது. உடனே இந்திரன் சகனுக்குக் காட்சி அளித்து, வேண்டிய வரம் அளித்தான். எனவே, சகன் தனது ஆட்களைக்கொண்டு இந்திரனுக்குச் சிறப்புச் செய்வித்தான். பின்னர் சகர சக்கரவர்த்தி கங்கைக் கரையை அடைந்து ஒன்பது விதமான ஒப்பற்ற செல்வமாகிய நவநிதியை வேண்டி நோன்பு நோற்றுப் பெற்றான். இந்த நவநிதிகளில் ஒவ்வொன்றிற்கும் தலைமையாக இருக்கும் ஒன்பது தேவ குமாரர்களும், நவநிதிக்குக் காவலாக இருக்கும் கணக்கற்ற பூதங்களும் நவநிதியோடு சகன்முன் தோன்றி, அரசே! உமது நல்வினைப் பயனால் நாங்கள் உமக்கு ஊழியர்களானோம். நவநிதியாகிய எங்கள் துணையைக் கொண்டு உமது விருப்பத்தின் படி எல்லா இன்பங்களையும் துய்ப்பீராக! பெரிதாகிய சமுத்திர நீர் வறண்டாலும் வறண்டுவிடும்: எங்கள் நிதிச் செல்வம் ஒருபோதும் குறையாது. சக்கரவர்த்தியாகிய தங்களது கட்டளைப்படி ஏவல் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம் என்று பணிந்து கூறின. இவ்வாறு பெறுதற்கரிய பேற்றைச் சகர சக்கரவர்த்தி தமது புண்ணியவசத்தால் பெற்றாராம். இந்த நவநிதிகளை அல்லாமல் அவற்றின் உருவங்களை நான் நீண்டநாளாகக் காண முயன்றுவந்தேன்; முடியவில்லை. கடைசியாகச் சென்னை மாநில அரசாங்க தொல்பொருள் காட்சிசாலையில் மேன்மாடிக்குச் செல்லும் படிகளில் இருமருங் கிலும் கட்டப்பட்டிருக்கும் சுவர்களின் அடியில் இரு சிறிய உருவங் களைக் கண்டேன். அவற்றைக் கூர்ந்து நோக்கினேன். அவை சங்கநிதி, பதுமநிதிகளின் உருவங்கள் எனக் கண்டு பேரானந்த முற்றேன். ஏனை ஏழு நிதி உருவங்களையும் தேடிப்பார்த்தும் பயன் இல்லை என்று சோர்ந்திருந்த நிலையில் எனது உழுவலன்பரும்,. கலை ஆராய்ச்சி நிபுணருமான திரு. மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள் மகாபலிபுரத்துச் சிற்பச் செல்வங்களை எனக்குக் காண்பிக்கும்பொருட்டு அழைத்துச் சென்றார்கள். தமிழகத்தின் தலைசிறந்த சிற்பச் செல்வங்களைக் கண்டு களிப்புற்றேன். அதோடு அறிஞர் சீனி. வேங்கடசாமி அவர்களின் சிற்ப விளக்கத்தைச் செவிமடுத்து இறும்பூதெய்தினேன். அதோடு அவர்கள் மகாபலிபுரத்துச் சிற்பத்தில் இந்த நவநிதிகள் பொறிக்கப்பட்டிருப்பதை விளக்கி மகாபலிபுரத்து ஜைன சிற்பம் என்று தாம் எழுதிய ஒரு சிறு நூலையும் எனக்கு அன்பளிப்பாக நல்கினார்கள். அவர்களுக்கு எனது நன்றி. அவர்கள் தமது நூலில் நவநிதியைப்பற்றிக் கூறியிருப்பதாவது: மகாபலிபுரத்துச் சிற்பத்தை எதிர்நின்று பார்ப்பவருக்கு இடப்புறத்து மேற்பகுதித் தோற்றம் அழகாகத் திகழ்கிறது. வலப் புறத்தில் ஒடுங்கிய வயிறும், வளர்ந்த தாடியும் உள்ள ஒருவர் தன் இரு கைகளையும் தலைமேல் தூக்கி ஒற்றைக்காலில் நின்று தபசு செய்கிறார். இது சகர சக்கரவர்த்தியின் உருவம். இது அவர் கண்டப் பிரபாத மலையில் தபசு புரிவதைக் குறிக்கிறது. இவருக்கு எதிரில் தண்டாயுதத்துடனும், நான்கு கைக ளோடும் ஓர் உருவம் நிற்கிறது. இது நாட்டிய மாலன் (இந்திரன்) உருவம். சகர சக்கரவர்த்தி, நாட்டிய மாலன் உருவங்களுக்குப் பக்கத்தில் மிகக் குறுகிய குறள் உருவங்கள் குறுகிய கைகால்களுடன் காணப்படுகின்றன. இவ்வாறு ஆறு குறள் உருவங்கள் காணப்படு கின்றன. இந்தச் சிற்பப் பகுதியின் இடக்கோடியில் இன்னும் இரண்டு குறள்உருவங்கள் காணப்படுவதை நேரில் காணலாம். ஆகமொத்தம் எட்டுக் குறள் உருவங்கள் இதில் காணப்படுகின்றன. இவை எட்டுப் பூதங்கள் ஆகும். இஃதன்றிக் கிரீட மகுடம் உடையனவாய் ஆகாயத்தில் பறப்பதுபோல் ஆண், பெண் ஆகிய எட்டு இணைத் தேவர்கள் இதில் காணப்படுகிறார்கள். இந்த எட்டு இணைத்தெய்வ உருவங் களும், எட்டு பூதங்களும் எதைக் குறிக்கின்றன என்றால் சகர சக்கரவர்த்திக்குக் கிடைத்த ஒன்பது நிதிகளில் எட்டு நிதிகளைக் குறிக்கின்றன. (ஒன்பதாவது நிதியைப் பின்னர் விளக்குவேன் என்கிறார் ஆசிரியர்.) எட்டு நிதிக்கும் எட்டுத் தலைவராக எட்டுத் தேவர்களும், காவலாக எட்டாயிரம் பூதங்களும் இருந்ததை இந்தச் சிற்பப் பகுதி குறிக்கிறது. இதில் எட்டு நிதிகளின் தலைவர்களாக எட்டுத் தேவர் களும் மனைவியர்களோடு எட்டுச் சோடி உருவங்கள்மூலம் காட்டப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பெயரும் எட்டு நிதிகளின் பெயரேயாகும். எட்டாயிரம் பூதங்களைச் சிற்பத்தில் காட்ட முடியாததால் எட்டுப் பூதங்களைக் காட்டியிருக்கிறார்கள். எட்டு நிதிகளின் தலைவர்களும் தேவர்களாய் இருப்பதால் சிற்பத்தில் ஆகாயத்தில் பறப்பதைப்போல் அமைந்திருக்கின்றார்கள். கீழே தரையில் சகரனுடைய மந்திரிகளும், மலைகளில் உள்ள மான், புலி, சிங்கம் முதலிய விலங்குகளின் உருவங்களும் சித்தரிக்கப்பட் டுள்ளன. இக்கருத்துக்களை மறுத்துரைப்பாரும் உண்டு. அந்தப் பிரச்சினையில் நாம் இப்பொழுது இறங்கத் தேவையில்லை. நாம் இப்பொழுது காணவேண்டியது நவநிதிகளின் உருவமேயாகும். அந்த ஒன்பது நிதிகளின் உருவங்கள் நமக்குக் காணக் கிடைக்கா விடினும் எட்டு நிதிகளின் உருவங்கள் காணக்கிடக்கின்றன என்பதை உங்கட்கு இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அபிப்பிராயங்களை விளக்கி ஸ்ரீபுராணம் ஜீவ சம்போ தனை திரிசஷ்டி சாலக புருஷ சரித்திரம் 2வது பகுதியின் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் நன்கு கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இந்நூல்கள் அனைத்தும் சமண சமய சம்பந்தமான நூற்கள் என்பதை நமது வாசகர்கள் மனத்தில் இருத்திக் கொள்வார்களாக. இஃதன்றி இந்த நிதிகளுக்கு விளக்கம் இதுவரை வேறு சமயங்களில் நான் காணவில்லை. எங்கள் சமய நூற்களில் உண்டு என்று உரைப்பாரும் இலர். பொதுவாக நாம் செல்வர்களைத் தனவந்தர்கள், ஐசுவரிய வான்கள் என்று கூறுகிறோம். ஒருவருக்கு இலட்சக்கணக்கான பணம் சேர்ந்துவிட்டால் அவர்களை இலட்சப்பிரபு என்று அழைக் கிறோம்; கோடிக்கணக்காய்ப் பணம் சேர்ந்துவிட்டால் கோடீசு வரர்கள் என்று கூறுகிறோம். செல்வத்திற் சிறந்த இராவணனுக்குக் கோடிகோடியாகப் பணம் இருந்ததால் நமது முன்னோர்கள் அவனை இராவணேசுவரன் என்று அழைத்தார்கள் போலும்! அதோடு பண்டைக்காலத்தில் யாரும் கோடிக்கணக்கான திரவியங்களுக்கு உரியவராகமுடியாது. எனவே ஒருவர் அந்த ஈசுவரப் பட்டத்தை அடையமுடியாததால் கோடீசுவரர் என்ற பட்டம் பெருமையுடையதாக மதிக்கப்பட்டது. நமது பழங்கதைகளில் நவகோடி நாராயணர்களைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உலகிலே இதுவரை எந்தக் கோடீசுவரர்களிடமும் சங்க நிதியோ, பதும நிதியோ, காள நிதியோ, மாகாகாள நிதியோ, நைசர்ப்ப நிதியோ, பாண்டூக நிதியோ, மாணவ நிதியோ, பிங்கல நிதியோ, சர்வரத்தின நிதியோ இருந்ததாக நமக்குத் தெரியவில்லை. இந்த மாபெரும் நிதி அமெரிக்காவிலுள்ள எந்தப் பெரிய இயந்திரத் தொழில் அதிபர்க ளிடமும் இதுவரை வந்து சேர்ந்தது இல்லை. இந்த நவநிதிகளில் பலவற்றை நாம் இதன்முன்னர்க் கேள்விப் பட்டே இருந்திருக்கமாட்டோம். ஆனால் சங்கநிதி, பதுமநிதி என்னும் வார்த்தைகளைக் கேள்விப்பட்டாவது இருப்போம். எனவே அவைகளைப் பற்றி இங்கு ஆராய்வோம். சங்கம் என்றால் சங்கு என்றும், பதுமம் என்றால் தாமரை என்றும் எவரும் எளிதில் கூறிவிடலாம். ஆனால் கணக்கில் இதன் மதிப்பு என்னன்று ஆராய வேண்டும். சங்கம் என்ற எண்ணை எழுதுவதானால் கோடிகோடி மதிப்புடையது என்று கூறலாம். சங்கம் என்ற எண் 15 தானங் களையுடைய எண்ணாகும். அதனை 10,00,00,00,00,00,000 என்று எண்ணால் எழுதலாம். இதன் அடையாளம் வலம்புரிச்சங்கு ஆகும். பதுமம் என்றால் இதைவிட மிகமிகப் பெரிய எண் ஆகும். இந்த எண் முப்பத்தாறு தானங்களையுடையது. அதாவது 1,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,000 என்று எண்ணால் எழுதலாம். நவநிதிகள் என்று சொல்லப்படுபவை அனைத்தும் உயிரற்ற ஜடப்பொருள்களேயாம். இந்த நிதியங்கள் முற்காலத்தில் எவரும் தான் சேர்க்கமுடியும் என்று எண்ணவே முடியாது. இன்று இயற்கை அன்னை அடிவயிற்றில் உள்ள எண்ணற்ற திரவியங்களையெல்லாம் இயந்திர உதவியால் வெளியே கொண்டு வரவும், கோடானுகோடி மக்களது உழைப்பின் பலனை ஒருவன் எளிதில் சுரண்டவும் வாய்ப்புள்ள இந்தச் சமுதாயத்தில்கூட நமது நாட்டில் கோடீசுவரர்களைத்தான் காணலாம். ஆனால், 100 கோடி டாலர்களுக்குச் சொந்தமான மகா கோடீசுவர்களையோ, 100 மகா கோடியாகிய சங்கேசுவரர்களையோ எங்குபோய்க் காண்பது? மேனாட்டில் உள்ள எந்த நகரங்களிலும் காணமுடியாது. அளவிலாத நிதிகளையுடைய மன்னர்களை மகா விஷ்ணுவின் அவதாரமென்று கண்ட நமது மக்கள், அதைவிட அதிகமாகக் கோடானுகோடி திரவியமுள்ளவர்கள் தெய்வத்தன்மையுடையவர் களாக இருக்கவேண்டுமென்றும், மனிதன் எத்தனை மக்களைச் சுரண்டினாலும் இவ்வளவு பெரிய செல்வத்தைப் பெறமுடியாது என்றும், தெய்வ அருளினாலேதான் அதைப் பெற முடியும் என்றும் அப்படிப் பெற்றவர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்றும் எண்ணினர். எனவே, நவநிதிகளுக்கும் தலைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்றும், அவனுக்குப் பெயர் குபேரன் என்றும் கண்டனர். குபேரன் திக்குப்பாலகர் எண்மருள் ஒருவன் என்றும், இவன் உத்தர திசையில் அளகாபுரியில் இருந்து ஆள்பவன் என்றும், இவனது மனைவி சித்திரரேகை (ஹார்த்தி) என்றும், இவனது வாகனம் குதிரை என்றும், இவன் ஐசுவரியத்திற்கு அதிதேவதை என்றும், யட்சர்களின் அரசன் என்றும் கூறப்படுகிறது. நமது நாட்டுச் சிற்பிகள் தமது கற்பனைத் திறத்தால் அளப்பரிய செல்வங்களுக்கு அதிபதியாய் இருப்பவன் எப்படி இருக்கவேண்டுமென்பதையும் நன்கு சிந்தித்துக் குறுகிய உடம்பும் பருத்த தொந்தியும் உடையவனாகக் குபேரனை உருவாக்கினர். தலையில் கரண்டக மகுடமும், கழுத்தில் நவரத்தின மணி மாலைகளும், மார்பில் பூணூலும், வயிற்றில் உதரபந்தமும் ஆகிய இவைகள் அனைத்தும் வெண்பொன்னாலும் (பிளாட்டினத் தாலும்), உயர்ந்த மணிகளாலும் செய்யப்பட்டனவாய் உருவாக் கினர். முகத்தில் செல்வச் செருக்கில் இறுமாந்திருப்பதுபோல் உருவாக்கினர். அவன் அருகே சங்கநிதி காணப்படுகிறது. வேறொன்று: அதே வடிவத்தில் குபேரன் உட்கார்ந்திருக் கிறான். அவன் பக்கத்திலே பதுமநிதி காணப்படுகிறது. அவன் உள்ளம் பூரித்து உவகையோடு உட்கார்ந்து கொண்டு இருக்கின்றன. குபேரனுடைய தோட்டத்திலே பெரிய குளம் இருக்கிறதாம். அதிலே சங்கநிதியும், பதுமநிதியும் தோன்றிப் படர்ந்து வளர்ந்து காய்த்துக் கொழிக்கிறது என்று காவியப் புலவர்கள் கற்பனை செய்கிறார்கள். இந்தக் குபேரனுடைய தனி உருவங்களும், சங்கநிதி, பதுமநிதி ஆகிய உருவங்களும் சென்னை மாநில அரசாங்கத்தின் தொல் பொருள் காட்சிசாலையில் கல்லில் செதுக்கப்பட்ட உருவங்களாகக் காணப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பதுமநாப புரம் அரண்மனைச் சுவரிலே தீட்டப்பட்ட ஓவியங்களிலும் இவ் வுருவங்கள் காணப்படுகின்றன. திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள கீழ்வேளூர்க் கோயிலிலே குபேரனுக்கு என்று தனிக்கோயில் இருக்கிறது. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள நாகேச்சுரத்திலுள்ள கோயிலிலே சங்கநிதி, பதுமநிதி ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எவ்வளவு செல்வம் உடையவராக இருந்தாலும், குபேரனாக இருந்தாலும் அவர்கள் இறைவனுக்கு ஈடாகமாட்டார்கள். அவர் களது பொருட்செல்வங்கள் இறைவனுடைய அருட்செல்வத்திற்கு ஈடாகமாட்டா என்பதை அறிவுறுத்தத் திருக்கோயில்களின் வெளியே வாயிற்புறங்களில் குபேரன், சங்கநிதி, பதுமநிதி ஆகிய உருவங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. குபேரனுக்கு எல்லாச் சம்பத்தும் இருந்தும் மன மகிழ்ச்சி மட்டும் இல்லை; உள்ளம் நிம்மதி அடையாது சஞ்சலத்திலேயே இருக்கிறது. எல்லாப் பொருட் செல்வங்களையும்விட உள்ளம் அமைதி பெறுவதே சாலச் சிறந்த செல்வமாகும். அதற்கு இறைவனின் அருட் செல்வத்தைப் பெறவேண்டும். சங்கநிதி, பதுமநிதி ஆகியவைகளைப் பெற்றும் சாந்திபெறாத குபேரன் ஆண்டவனின் அருள்நிதியையும் அடையக் கோயில் கோபுரவாயிலில் காத்துநிற்கின்றான். நின் கருணைநிதி வேண்டும் என்று பாடுகிறான். அவனைப் போல் நாமும் பொருள்நிதியும், அருள்நிதியும் பெற முயல்வோமாக என்பதற்கு எடுத்துக்காட்டாகக் கோயிலில் குபேரனுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது என்று சமயஞானிகள் கூறுகிறார்கள். குபேரன், நவநிதிகள், ஜீவரத்தினம், அஜீவரத்தினம், நாட்டிய மாலன் முதலிய பெயர்கள் பெரும்பாலும் சமண சம்பந்தமுடையவை என்று தெரிகிறது. எனவே சமண சம்பந்தம் அதிகம் இல்லாதவர் களுக்கு இதைப்பற்றித் தெரியாது; அக்கறையும் இல்லை. ஆனால் அப்பர் அடிகள் சமணராய்ச், சமண குருவாய், தர்மசேனர் என்னும் பெயருடையவராய் இருந்ததனால் இவற்றைப் பற்றியெல்லாம் நன்கறிந்திருந்தார். அவர் சமண மதத்தைத் துறந்து சைவம் தழுவிய பொழுது இக் கருத்துக்கள் எல்லாம் தவறானவை யாகவும், வெறுக்கத்தக்கவையாகவும் அவருக்குப் புலப்பட்டது. சங்கநிதி, பதுமநிதி என்னும் இருநிதிகளை எமக்கு அளித்து, விண்ணையும் மண்ணையும் ஆளும் பெரும்பேற்றைத் தருபவர் களாயினும், மாண்டு மடியும் அவர்களின் செல்வத்தைக் கண்டு நான் மதிக்கமாட்டேன். ஆனால் அங்கமெலாம் குறைந்து அழுகும் தொழுநோய் பற்றியவராய்ப், பசுவைக் கொன்று தின்னும் புலைய ராய் இருந்தாலும் சிவபெருமானுக்கு அடியார் ஆகிவிட்டால், அவர்கள் நாம் மதிக்கும் மாண்புடையவரும், நாம் வணங்கும் தெய்வமும் ஆவர் என்று பாடியுள்ளார். சங்கநிதி, பதுமநிதி இரண்டுந் தந்து தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க் கேகாந்த ரல்ல ராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோய ராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளாரே இவர் சமணராய் இருந்ததால் பதுமநிதியையும், சங்கநிதியை யும் குறிப்பிட்டுள்ளார் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வோமாக. நமது தாமரை இந்த நிதியிலும் இடம்பெற்றிருப்பது கண்டு அதன் பெருமையை நன்கு தெரிந்துகொள்வோமாக. 19. தமிழ் இசையில் தாமரை தமிழ் இயல், இசை, நாடகம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. என்றாலும் இசை, இயலிலும் நாடகத்திலும் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. தமிழர்கள் இசைக்கு ஏற்றம் அளித்தனர்; இசையை இறைவ னாகக் கண்டனர். ஏழிசையாய் இசைப்பயனாய், இயலவன் இசையவன், இசை விரும்பும் கூத்தனார், எம்மிறை வீணை வாசிக்குமே என்றெல்லாம் தமிழ்மறை முழங்குகின்றது. தமிழர்கள் வாழ்வு இசையோடு பொருந்தியிருந்தது. தமிழ்த் தாய், பாலோடு தாலாட்டுப் பாடி நீலாம்புரி இராகத்தைப் பிள்ளைப் பருவத்திலே ஊட்டினாள்; அப்பால் நிலாப் பாட்டுடன் சோற்றை ஊட்டினாள்; பாட்டுப் பாடி விளையாட்டுக் காட்டினாள். மேலும் தமிழ்நாட்டுச் சிறுவர்கள், சிறுமியர்கள் சடுகுடு, கிளித் தட்டு, களச்சி, அம்மானை, கும்மி, கோலாட்டம், ஊஞ்சல் முதலிய எல்லா விளையாட்டுகளையும் இசையோடே விளையாடப் பயிற்று விக்கப்பட்டனர். இஃதன்றி, திருமணம், வாழ்த்து, நலுங்கு, ஊஞ்சல், பூப்பு விழா முதலிய எல்லா மங்கல நிகழ்ச்சிகளிலும் இசைக்கு முதலிடம் உண்டு. பிணச் சடங்கில் ஒப்பாரிப் பாட்டு மிகப் பிரதானமானது. காதற் கேச்சிலும், கடின வேலைகளிலும் இசை இல்லாமல் இராது. தமிழர்கள் போர்க்களத்திலும் இசை முழக்கினர்; துன்பத்தி லும் இன்பத்திலும் இசை முழக்கினர். தமிழன் இன்று வறுமையால் வாடிப் பிச்சை எடுத்துப் பிழைக்கும் நிலையிலும் இசை முழக்கிவருவது கண்கூடு. தமிழர்களின் நாடகம், அனைத்தும் இசைமயமாக இருக்கும். நாடகத்தில் தண்ணீர் கேட்கவும், உதவி தேடவும் இசை பயன் படுத்தப்படும். மரணநிலையிலும் பாட்டுப் பாடியே மரணம் அடைவதாக நடிப்பார்கள். எனவே, இசை தமிழர்களின் வாழ்க்கையோடு இயைந்துநின்றது என்று கூறலாம். உலகில் எந்த இனத்தவர்களும் தமிழர்களைப்போல் இசைமயமாய் வாழ்ந்ததை நாம் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை. இதன் பயனாய்த் தமிழர்களின் வாழ்க்கை இன்பகரமாக இருந்தது. அவர்கள் இல்வாழ்வு வளம் நிறைந்ததாக, வண்மை உடைய தாக இருந்தது. அவர்கள் நோயற்ற யாக்கையையும், உரம்பெற்ற உடலையும் பெற்றிருந்தனர். அவர்கள் நோயுற்றபொழுதும்கூட, இசை, அவர்களுக்கு இன்னமுதாய், நோயின் வருத்தத்தை மறக்கச் செய்து, விரைவில் நோயை அகற்றியது. இதனை இன்றைய மேனாட்டு மருத்துவர்கள் கூடக் கண்டு போற்றிவருகின்றனர். இசையின் ஏற்றம் மதம்கொண்டு, கட்டுக்கடங்காது, காடும் மேடும் பிளிறித் திரியும் களிறும் இசையில் அடங்கிவிடுகிறது. அங்குசம், பரிக்கோல் முதலிய கொடிய ஆயுதங்களுக்கும் அடங்காத அடங்கொண்ட யானை, யாழின் இனிய இசைக்கு அடங்கி ஒடுங்கிவிடும். தமிழ் இலக்கியங்களில் ஒன்றாகப் போற்றப்பெறும் அக நானூற்றில் பண்டைத் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது: குறிஞ்சி நிலத்திலுள்ள ஒரு தினைப்புனத்தைக் காவல்காக்க ஓர் இளங் குறப்பெண் (கொடிச்சி) சென்றாள். அப்பொழுது அவள் அருகே இருந்த பளிங்குபோன்ற ஒரு சுனையில் புனலாடினாள். அப்பால் தினைப்புனத்திற் கட்டப் பட்ட பரண்மீது ஏறினாள். தேன் எனத் தித்திக்கும் தென்றலங்குழவி மெல்லெனத் தவழ்ந்தது. அவள் தன் கைகளால் கார்மேகம் போன்ற கருங்கூந்தலின் கட்டை அவிழ்த்து அதனை உலரச்செய்துகொண்டு நின்றாள். அவள் உள்ளம் நெகிழ்ந்தது; இன்பம் பொங்கித் ததும்பி யது. அவள் கிளர்ந்தெழுந்து தனது காதலன் களிப்புறத் தன் நிலத்திற் குரிய குறிஞ்சிப் பண்ணைப் பாட ஆரம்பித்தாள். அவளையறியாது தினைக்கதிரைத் தின்ன ஆசையோடு தினைப்புனத்தின் ஒரு மூலை யில் கால்வைத்த யானை, அம் மங்கைநல்லாள் பாடிய இசையமுதை உண்டு, தன்னுணர்வு இழந்து, பசியை மறந்து தினைக்கதிரைத் தொடாது மயங்கி நின்றது. அப் பாட்டு வருமாறு: ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென மறம்புகல் மழகளி றுறங்கும் நாடன். (அகம். 102: 5-9) பெருங்கதையில், பிரமசுந்தர முனிவரிடம் இசை பயின்ற உதயணன் என்பான், நளகரி என்ற மதங்கொண்ட மாபெரு மதகரியை அடக்கியதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. அவன் அந்த யானையிடம் கோடபதி என்று பெயர்சூட்டப்பெற்ற வீணையை மீட்டி அடக்கி அதன்மீது ஏறி அமர்ந்தான். அந்த யானை, ஆயுதங் களை அவனிடம் எடுத்துக் கொடுத்தது; அவன் அதன்மீது அமர்ந்து அரசன் போன்று பவனி வந்தான். வீணையின் இசையினால் வீறாப்பு அடக்கப்பட்ட மதங் கொண்ட யானை, குருவினிடம் பக்திகொண்ட ஒரு சீடனைப்போல் பணிந்துநின்றது என்று கூறப்பட்டுள்ளது. வீணை கெழீஇ வீதியி னடப்ப ஆணை யாசாற் கடியுறை செய்யு மாணி போல மதகளிறு படிய என்றும், அணியிழை மகளிரும் யானையும் வணங்கும் மணியொலி வீணையும் என்றும் கூறும் பாக்கள் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. தமிழ்நாட்டில் முற்காலத்தில் அசுணம் என்றொரு விலங்கு இருந்ததாம். அதைப் பறவை என்றும் கூறுவாரும் உண்டு. ஆனால் விலங்கென்றே பலரும் கூறுகின்றனர். இந்தப் பிராணி இசைஇன்பம் பெரிதும் நாடும் அபூர்வமான இனத்தைச் சார்ந்தது; இன்னிசையைச் செவியில் கேட்டால் இன்ப வெறியால் மெய்ம்மறந்து மயங்கி மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்துவிடு மாம். இதைப் பற்றிப் பழந்தமிழ் நூற்களில் பல அரிய செய்திகள் காணப்படுகின்றன. இருஞ்சிறைத் தொழுதி யார்ப்ப யாழ்செத் திருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும் (அகம். 88. 11-12) என்று கூறும் பாட்டால், வண்டின் ஒலியைக் கேட்டு யாழ் ஒலியோவெனக் குகையில் இருக்கும் அசுணங்கள் உற்றுக் கேட்கும் என்று விளக்கப்பட்டிருப்பது கவனித்தற்குரியது. அசுணத்தைப் பிடித்து அதன் ஊனை உறிஞ்சும் கன்மன வேடர்கள், காட்டிலுள்ள புதர்களின் மறைவில் நின்றுகொண்டு யாழை மீட்டுவார்கள். யாழின் இன்னொலியைச் செவிமடுத்த அசுணம் கண்களை மூடி உணர்விழந்து மயங்கி நிற்கும். அப்பொழுது அக் கொடிய வேடர்கள் அதை எளிதில் கைப்பற்றிக் கொன்று உண்பர். வேடர்களின் கை, யாழின் இசையை எழுப்பி அசுணத்திற்கு இன்பமூட்டிப் பின் அதன் குரல்வளையைப் பற்றி உயிரைக் கவர உதவுகிறது. அசுணம் கொள்பவர் கைபோல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே என்று நற்றிணை என்னும் சீரிய பழந்தமிழ்நூலில் உள்ள பாட்டும், இசை, விலங்கையும் கவரும் ஆற்றல் வாய்ந்தது என்பதை என்பதை எடுத்துக்காட்டுகிறது. கொடிய நாகப்பாம்பும் இசைகேட்டு மகிழ்ந்து படம் எடுத்து ஆடுவதையும், இசைவயப்பட்டுப் பசுக்கள் உணர்விழந்து நிற்கும் பொழுது அதன் மடியினின்று தானாகவே பால்சுரந்து கீழே பெருகி விடுகிறது என்பதையும், மரஞ்செடிகொடிகள் இசையைக் கேட்டுச் செழித்துக் கிளைத்து வளர்ந்துவருகின்றன என்பதையும், வண்டி மாடுகள், ஏற்றக் காளைகள் முதலியவைகளை ஓட்டும் பொழுது தில்லானா, தெம்மாங்கு முதலிய பாடல்களைப் பாடினால் அவைகள் வருத்தமின்றித் தம் வேலைகளைச் செய்து முடிக்கின்றன என்பதையும் நாம் கண்டும் கேட்டும் வருகின்றோம். தேர் இழுப்பவர்கள், கிணறு தோண்டுபவர்கள், வயலில் உழுபவர்கள், நாற்று நடுபவர்கள், ஏற்றம் இறைப்பவர்கள், நெல் குத்துபவர்கள் இன்னோரன்ன பற்பல உழைப்பாளர்களும் தம் உழைப்பால் ஏற்படும் அயர்வு நீங்க இசை முழக்கிவருகின்றனர். இசைமுழக்கம் கேட்டு, அழுத குழந்தைகள் இன்புற்றுத் தூங்குகின்றன. சங்ககாலத்தில், போர்வீரன் போரில் காயமுற்று வீடு திரும்பிய பொழுது, அவன் மனைவி தன் தோழியிடம், தன் தலைவனுக்கு நோயின் வருத்தம் தெரியாமல் இருக்கவும், புண் விரைவில் ஆறவும், யாழும் பல்லியமும் இசைத்து, ஆம்பற்குழலையூதி, ஓசை செய்யும் மணியை இயக்கி, காஞ்சிப் பண்ணைப் பாடி, அகில் புகையைப் புகைத்தால் தலைவனின் வேதனை அகலும்: புண் ஆறும்; இது ஓர் அரிய சஞ்சீவி என்று கூறியதாக அகநானூற்றில் அரிசில் கிழார் என்னும் புலவர் பாடியுள்ளார். பண்டைத் தமிழகத்தில் பாலைநிலக் கள்ளர்கள் வழிப் போக்கர்களிடம் பணத்தை, பண்டங்களை, அணிகளைப் பறிப்பர்; அடிப்பர்; கழுத்தைத் துண்டிப்பர். ஆனால் அக் கொடிய வன்கண் மறவர்களும் தங்களின் நிலத்திற்குரிய பாலைப்பண்ணைப் பாடு வதைச் செவியுற்றால் தம் கொள்ளைத் தொழிலையும், கொலைத் தொழிலையும் மறந்து, பெட்டிப் பாம்புபோல் அடங்கி, இசை வாணனை வணங்கித் தம் தொழிலால் தேடிய பொன்னையும் பொருளையும் அவரிடம் கொடுத்து வழியனுப்புவாராம். இசையின் இத்தகைய பெருமையை எண்ணியே, ஓடுங் கொடிய விடப்பாம்பும் பேயும் இசைகேட் டுள்ளுருகி யாடுங் கருங்கல் லசைந்துவரும் அழுத குழவி குரல் அடங்கும் மாடும் இசைகேட் டுழுதுவரும் வந்த பசுவும் பால்சுரக்கும் பாடும் இசைகேட் டுருகாரை என்னென் றுறைப்பேன் பாவலரே என்று தமிழ்ப் புலவர் பாடியுள்ளார்போலும்! இசைநூற்கள் பண்டைக் காலத்திலே தமிழிலே பல இசைநூற்களும், இசை இலக்கணங்களும் இருந்தன. முதுநாரை முதுகுருகு என்னும் இசை நூற்கள் சங்ககாலத்திலே முளைத்த முதுபெரு நூற்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை கூறுகிறது. இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும், தேவ இருடி நாரதன் நவின்ற பஞ்சபாரதீயம் போன்ற தொன்னூற்களும் இறந்துவிட்டன என்று சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். சிகண்டி முனிவர் இயற்றிய இசை நுணுக்கம், அறிவனார் இயற்றிய பஞ்சமரபு, வாய்ப்பியனார் இயற்றிய வாய்ப்பியம், யாம ளேந்திரர் இயற்றிய இந்திரகாளியம், பதினாறு படலம் முதலிய இசைநூற்களிலிருந்து அடியார்க்குநல்லார் மேற்கோள் காட்டு கிறார். இஃதன்றி, தாளவகையோத்து, சச்சுப்புட வெண்பா, இசை மரபு, இசைத் தமிழ்ச் செய்யுள் துறைக்கோவை, சிலப்பதிகாரம், பரிபாடல், கலித்தொகை போன்ற பல இசைத் தமிழ்ச்செய்யுள் நூற்களும், இசைத் தமிழ் இலக்கணங்களும் இருந்தன. மேலும், சைவ சமய குரவர்கள் பாடிய தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்பனவும், திவ்வியப் பிரபந்தமும், திருப்புகழும் இசைப்பாட்டிலே அடங்கும். இவற்றில் அமைந் துள்ள இசைவகைகளை விளக்கும் தேவகானம் என்ற இசை இலக்கணம் ஒன்று இருந்ததாம். இப்பொழுது அதைக் காண முடியவில்லை. தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களான குறவஞ்சி, பள்ளு, சிந்து போன்ற நூற்களில் இசைப் பகுதிகள் உண்டு. மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர், திருநெல்வேலி வடிவேற் கவிராயர், கும்பகோணம் பாபநாச முதலியார், பச்சை மிரியன் ஆதிப்பையர், சீகாழி அருணாசலக் கவிராயர், சீகாழி முத்துத்தாண்டவராயர், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர், தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை, பெருங்கரைக் கவிகுஞ்சர பாரதி, திருக்கடவூர் அபிராமிப் பட்டர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர், அரியலூர்ச் சண்பக மன்னார், தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர், உடுமலைப் பேட்டை முத்துசாமிக் கவிராயர், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், தூத்துக்குடி சங்கரதாச சுவாமிகள், புதுவை பாரதி தாசன் போன்ற அறிஞர்களின் பாடல்களும் இசைநூற்களில் இடம் பெறத்தக்க சிறப்புடையனவாகும் என்பது இசை இலக்கணங் களைப் பழுதறக் கற்ற அறிஞர்கள் கண்ட முடிபாகும். இசைக் கருவிகள் தமிழர்கள் இசையைக் குரலாலே முதலிற் பாடினர். குரல் இசையே பெரிதும் மதிக்கப்படுவதாகும். என்றாலும் சுர, சுருதி களைக் காப்பதற்கும், தாள லயங்களைக் குறிக்கும், பின்னணி ஒத்ததாக அமைவதற்கும் இசைக் கருவிகள் இன்றியமையாத வையாய் இருக்கின்றன. இசைக்கருவிகள் குரல்வழியே நிகழும்; குரல்வழியே இசைக் கருவிகள் இயங்கும். பண்டுதொட்டு நம்மிடையே பலவிதமான இசைக் கருவிகள் வழங்கிவருகின்றன. அவைகள் ஒன்றின்வழி ஒன்று மிகப் பொருத்தமாக ஒத்து நிகழும். குரல்வழி நின்றது யாழே; யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே; தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே; முழவோடு கூடி நின்றிசைத் தாமந் திரிகை (சிலப். காதை. 3: வரி 139-142) என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இசைக் கருவிகள் மூன்றுவகைப்படும். அதாவது, பாடும் பொழுது பயன்படத்தக்கவை ஒருவகை; அது கீதாங்கம் - பாட் டுறுப்பு - என்று கூறப்படும். மற்றொன்று நாடகத்திற்கு உரியது; இது நிருத்தாங்கம் - கூத்துறுப்பு - எனப்படும். இன்னொன்று இவ்விரண் டிற்கும் பயன்படும் உபாங்கம் - பொது உறுப்பு - என்று கூறப்படும். இந்த இசைக் கருவிகள் செய்யப்படும் முறையால் தோற் கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள், கஞ்சக் கருவிகள் என்று நான்கு வகைப்படும். தவில், தப்பட்டை, டமாரம், மத்தளம், மிருதங்கம் போன்று தோலால் மூடப்பட்ட கருவிகள் தோல்கருவிகள் எனப்படும். யாழ், வீணை, பிடில் போன்று தந்தி அல்லது நரம்புகளுடன் கூடிய இசைக் கருவிகள் நரம்புக் கருவிகள் என்று கூறப்படும். வேய்ங்குழல், நாகசுரம், மகுடி போன்று துளைகளில் காற்றைச் செலுத்தி ஊதப்படும் கருவிகள் துளைக் கருவிகள் எனப்படும்: சாலரா, சப்ளாக்கட்டை போன்ற இசைக் கருவிகள் ஒன்றோ டொன்றைத் தட்டி அடிப்பதால் அவை கஞ்சக் கருவிகள் என்று கூறப்படும். இந்த இசைக் கருவிகளையும் இசை அரங்கு வாத்தியங்கள், கோவில் வாத்தியங்கள், யுத்த வாத்தியங்கள், கிராம மக்களின் வாத்தியங்கள் என்று நான்கு வகையாகப் பிரித்துள்ளார்கள். யாழ், வீணை, குழல், மிருதங்கம், கோட்டு வாத்தியங்கள் போன்றவைகள் கச்சேரி வாத்தியங்கள். கொம்பு, தாரை, திருச்சின்னம், பூரி சங்கு உடல் போன்ற வைகள் கோயில் வாத்தியங்கள். பேரி, துந்துபி போன்றவைகள் போர் வாத்தியங்கள். நெடுங்குழல் முரசு, பறை, பம்பை, உறுமி, தாளம் போன்ற வைகள் கிராம மக்களின் வாத்தியங்கள் என்றும் கூறப்படும். தோற்கருவிகள்: இவை படகம், பேரிகை, இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடா முழா, தக்கை, தண்ணுமை, தகுணிச்சம், கணப் பறை, தமருகம், தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை முரசு, கண்விடு தூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை, தொண்டகம், கிணைப் பறை, மீன்கோட் பறை, நிரைகோட் பறை, பதலை, மொந்தை விரலேறு கோட் பறை, ஆகோட் பறை, பெரும்பறை, தப்பட்டை, தவில், மத்தளம், டாமரம், கொட்டி மத்தளம், சிடுசிடு, உறுமி, பம்பை, நகரா, உடுக்கை பேரி, சல்லரி, மல்லாரி, மிருதங்கம் போன்றவைகள் என்று கூறப்படும். துளைக் கருவிகள்: இவை புல்லாங்குழல், நாகசுரம் முதலி யவை. கொன்றையங் குழல், ஆம்பலங் குழல், முல்லையங் குழல் எனப் பலவகையான குழல்கள் பண்டைய நூல்களில் கூறப் பட்டுள்ளன. நரம்புக் கருவிகள்: யாழ், இவற்றுள் 21 நரம்புகளுடைய பேரி யாழ், 19 நரம்புகளுடைய மகரயாழ். 14 நரம்புகளுடைய சகோட யாழ், 9 தந்திகளையுடைய தும்புரு யாழ், 7 நரம்புகளுடைய செங் கோட்டியாழ், வில்யாழ், சீறியாழ், ஒரு தந்தியையுடைய மருத்துவ யாழ் முதலியவைகள் குறிப்பிடத்தக்கனவாகும். ஆயிரம் நரம்புகளைக் கொண்ட ஆதியாழ், நூறு தந்திகளை யுடைய கீசகப் பேரியாழ் ஆகியனவெல்லாம் இன்று வழக் கொழிந்துவிட்டன. இவைகள் எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த இசைக் கருவிகளாகும். இராவணன் யாழ் இசைப்பதில் வல்லோனாக இருந்தான். யாழ் இசையால் சிவபெருமான் அருளைப் பெற்று இராவணன் என்னும் பெயரையும் பெற்றான். அதனால் சிவபெருமான் இராவண அனுக்கிரகமூர்த்தி என்ற பட்டம் பெற்றார். இராவணனுடைய நாட்டுக்கொடி யாழ் பொறிக்கப்பட்ட இசைக்கொடியாய் இலங்கியது. கி.பி. 300க்குப்பின் தமிழ்நாட்டில் யாழ் இருந்த இடத்தை வீணை என்னும் புதிய கருவி பற்றிக்கொண்டது. வீணையில் பரிவாதிநி, மகரவீணை, சித்திராகோசாவணி சித்திரிகை, கூர்மிசை, சாரங்கம், இராவணாசுரம், கின்னரி வராளி கீதி, குச்சிகை, விபஞ்சிகை, சகள வல்லகி, சரவீணை, அநாவிதம், மகதி, பிரகதி, லகுலாட்சி, கச்சளா, காந்தாரி, அனுமதம், ருத்திரிகை, களாவதி போன்ற பல வீணைகளும் உண்டு. கஞ்சக் கருவிகள்: வெண்கலத்தாற் செய்யப்பட்ட தாள வகைகள் எல்லாம் கஞ்சக் கருவிகள் என்று கூறப்படும். இசையின் தோற்றம் இசை என்பது நமது குரலின் மூலமாக எழும் இன்னொலி யாகும். இந்த இன்னொலியை உயர்த்தியும் தாழ்த்தியும் ஒலிக்கும் பொழுது மிகக் கவர்ச்சிகரமாக இருக்கும். எனவே தமிழகத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் இந்த ஒலி ஆராய்ச்சியில் பெரிதும் ஈடுபட்டுச் சுரங்களை (இசைநிறங்களை)க் கண்டனர்; இசை இலக்கணங்களை வகுத்தனர்; இசை நூற்களை எழுதினர்; இசைக் கருவிகள் பலவற்றை உருவாக்கினர். தமிழ்மொழி முத்தமிழாக வகுக்கப்பட்டதால் தமிழ்ச் சங்கத்தில் இசைத் தமிழும் இடம்பெற்றிருந்தது. என்றாலும் முற்காலத்தில் இசைக்கென்றே தனிச் சங்கமும் இருந்தன என்று அறிகிறோம். வாயால் பாக்களைப் பாடுவதற்கும், கருவிகளால் சுருதிகளை மீட்டுவதற்கும் அடிப்படையாய் நிற்கும் இசையொலியை நுண்இசை வல்லுநர்கள் நாதம் என நவில்வர். பொருள்களின் இயக்கத்தாலும் அதிர்ச்சியாலும் ஒலி அரும்புகிறது; ஒலியினால் காற்றின் அலைகள் எழும்புகின்றன. அந்த இன்னொலி, உயிர்களின் செவிகளில் புகுந்து அதனுள்ளிருக்கும் மெல்லிய சவ்வுத் திரைகளிற் பாய்ந்து அதனை அதிரச் செய்கிறது. காதுகளின் உள்ளேயுள்ள மிக மென்மையான சவ்வுப் பறையின் (Drum) பின்பக்கத்தில் இருக்கும் சுரையில் நாதம் தோன்றி மயிரிழை போன்ற நரம்புக் கருவிகளின்மூலம் மூளைக்குள் புகுந்து ஒலியுணர்ச்சியை உண்டாக்குகிறது. மனித வர்க்கத்தின் வரலாற்றில் எத்தனையோ தலைமுறை தலைமுறையாகத் தமிழன் இசையை ஆராய்ந்து இறுதியாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இசைக் கலையின் அடிப்படை இன்னொலிகளை ஒழுங்குபடுத்தி, ஒலிகளின் அளவுகளை வரிசைப் படுத்தியுள்ளான். இவ்வாறு ஆராய்ந்தறிந்து கண்ட ஒலிஇலக்கணங்கள் தமிழில் பல இருந்தன. பண்டு இருந்த எண்ணற்ற இசை இலக்கணங்கள் இன்று அழிந்துவிட்டன; ஒருசிலவே அழியாது அச்சேறியுள்ளன. பல இலக்கண நூற்களின் சூத்திரங்கள் பழந்தமிழ் நூற்களில் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. மேற்கோளாக எடுத்தாண்ட சூத்திரங்கள் இன்று நாம் படிக்கத்தக்கனவாக நிலவுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் கண்ட இன்னொலிகள் இன்று சுரங்கள் (நிறங்கள்) என்று கூறப்படுகின்றன. சுரங்களின் சேர்க்கையே இசையாக எழுந்துள்ளது. இதைப் பண் என்றும், இராகம் என்றும் கூறிவருகின்றோம். தமிழர் கண்ட இசை ஏழிசை என்று போற்றப்படுகிறது. பாடல்கள் பண்ணோடு பாடப்படுவது பாட்டு அல்லது பாடல் எனப்படும். பண்டைக்காலத் தமிழகத்தில் பலவகைப் பாடல்கள் இருந்தன. அவை வரிப்பாட்டு, அம்மானை வரி, ஆற்றுவரி, கானல் வரி, கந்துகவரி, திணைநிலைவரி, நிலைவரி, ஊசல்வரி, சாயல்வரி, சங்குவரி, சார்த்துவரி, படைப்புவரி, மயங்குதிணை நிலைவரி, முகமில்வரி, முகவரி எனப் படும். வேட்டுவவரி, ஊர்சூழ்வரி, கானல்வரி ஆகிய பாடல்கள் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன. இசைப் பாட்டுகள் முற்காலத்தில் செந்துறை, வெண்டுறை, வரி, உரு முதலிய பல பெயர்களில் வழங்கின. வரி, உரு என்பனவற்றுள் பலவகை உண்டு. கீர்த்தனம் உருவில் அடங்கும். வரிப்பாடல் என்பன பலவகையான கூத்துக்களோடு நிகழ்வன. பண்கள் அமைத்துப் பழங்காலத் தமிழர்கள் பாடிய பலவகை யான உருக்களில் பெரும்பாலன மறைந்துபோயின. பழந்தமிழ் நூற்கள் பலவற்றின் உரைகளில் மேற்கோளாகக் காணப்படும் சில உருக்கள் படிக்கப்படும் முறை நமக்கு நன்கு தெரியவில்லை. எனவே இங்கு அவற்றின் பெயரையும், இன்று காணப்படும் சில பாட்டு களின் பெயரையும் கீழே குறிப்பிட்டுள்ளேன். அவையாவன; அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, ஒப்பாரி, கப்பற் பாட்டு, கழல் பாட்டு, காக்கைப் பாட்டு, காளப்பாட்டு, கிளிப் பாட்டு, குணலை, குதம்பை, குயில், குரவை, குறத்தி கூடல், கொச்சகச் சார்த்து, கோத்தும்பி, கோழிப் பாட்டு, சாழல் செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி தாலாட்டு, திருவங்கமாலை, திருவந்திக் காப்பு, தெள்ளேணம், தோணோக்கம், நையாண்டி, பகவதி, பந்து, பல்லாண்டு பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி பிடாரன், பொற்சுண்ணம், முகச் சார்த்து, மூரிச்சார்த்து, வள்ளைப்பாட்டு. இவற்றைத்தவிர, சித்தர் பாடல்களில் வழங்கும் பலவகை இசைப் பாட்டுகளும், சித்து, நொண்டிச்சிந்து முதலியவையும், கும்மி, கோலாட்டம் முதலியவையும், பலவகையான கண்ணிகள், ஆனந்தக் களிப்பு, கீர்த்தனங்கள் முதலியவையும் உண்டு. இராகங்கள் தமிழர்களின் இசை பண்டு அவர்கள் வாழ்ந்த குறிஞ்சி நிலத்தில் அரும்பி, முல்லைநிலத்தில் தவழ்ந்து, நெய்தல், பாலை நிலங்களில் ஓடியாடி, மருதநிலத்திலே வளர்ந்து மணந்து கிளைத்துப் பெருகிநின்றது என்று கூறலாம். தமிழர்கள் வாழ்ந்த ஐந்து நிலங்களுக்கும் ஐந்து பண்களும், ஐந்து இசைக் கருவிகளும் இருந்தபோதினும் குறிஞ்சிநிலத்தில் துளிர்த்த செம்பாலைப் பண் என்ற சங்கராபரணமே முதன்முதலி தோன்றிய தாய்ப்பண் என்று கூறப்படுகிறது. இஃதன்றி, முல்லைநிலத்திலே முளைத்த முல்லைத் தீம்பாணி என்னும் சாதாரிப் பண்தான் முதற்பண் என்றும், தாய்ப்பண் என்றும் கூறுவாரும் உண்டு. தமிழ் இசையைப்பற்றி நன்கு ஆராய்ந்து, அதற்காக ஏராளமாக பொருளைச் செலவிட்டு, இசைச்செல்வராய் விளங்கிய திரு. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தமது கருணாமிர்த சாகரம் என்னும் இசைநூலில், செம்பாலைப் பண்ணே பொருத்த சுரங் களையுடைய இராகமாயும், பொருத்த சுரங்களுடன் மற்றைய இராகங்கள் உண்டாவதற்குரிய பொதுவிதியை உள்ளடக்கிய இராகமாயும் இருப்பதைக் காண்கிறோம். இதுவே எல்லா இராகங்களுக்கும் தாய் இராகமாயும் இருக்கிறது. இதற்குச் செம்பாலைப் பண் என்று பூர்வத்தோர் வழங்கிவந்த பெயர் மறைந்தது. இன்று சங்கராபரணம் என்ற பெயர் வழங்கிவருகிறது. இத்தாய் இராகம் நாளதுவரையிலுள்ள சங்கீத வித்துவான்களாலும், மற்றும் யாவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இசை நூற்களில் பண்கள், பண்ணியல் திறம், திறம், திறத்திறம் என்று பலவகைகள் கூறப்பட்டுள்ளன. பண்கள் ஏழு நரம்புகளை (சுரங்களை)க் கொண்டவை. அவற்றைக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று கூறுவார்கள். இந்த ஏழு பண்களும் இப்பொழுது ச ரி க ம ப த நி என்று கூறப்படுகின்றன. பண்களிலிருந்து பிறப்பது பண்ணியல் திறம், திறம், திறத்திறம் என்பனவாகும். இவை பண்களின் கிளைகளாக இயங்கும் வகை களில் பண்டைக்காலத் தமிழர்கள் பல்லாயிரம் இசைகளைக் கண்டு, அவற்றை நன்கு பயின்று பாடிவந்திருக்கிறார்கள் என்று உயர்திரு. விபுலானந்த அடிகளார் தமது யாழ் நூல் என்ற ஒப்பற்ற தமிழ் இசைக் கருவூலத்தில் விளக்கிக் கூறியுள்ளார். பண்டைத் தமிழர்கள் கண்ட இந்த ஏழிசையை வடமொழி யாளர்கள் சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்றனர். நிற்க. தமிழர்கள் ஆதியில் கண்ட செம்பாலைப் பண்ணாகிய குறிஞ்சிப் பண்ணில் உள்ள ஏழு சுரங்களில் ஒவ்வொன்றையும் கிரகம் மாற்றிக்கொண்டுபோனால் ஆறு தாய் இராகங்கள் கிடைக்கும் என்று நாளடைவில் கண்டனர். அவர்கள் ஆயிரக்கணக்காண ஆண்டுகள் இரவும் பகலும் இடைவிடாது செய்த பண் ஆராய்ச்சியின் பயனாக 103 தாய்ப் பண்களைக் கண்டனர். அப்பால் இவைகளின் கிளைகளாக 11,991 ஆதி இசைகளை வகுத்தனர். இவை மொத்தமாக 12,000 பண்கள் என்று கூறப்பட்டன. இந்த எண்ணிக்கைகளைச் சிலப்பதிகார உரை ஆசிரியரும் ஏற்றுக்கொண்டுள்ளார். உயிருயிர் மெய்யள வுரைத்தவைம் பாலினு முடறமி ழியலிசை யேமுடன் பகுத்து மூவேழ் பெய்தந் தொண்டு மீண்ட பன்னீ ராயிரம் கொண்டன ரியற்றல் கொளைவல்லோர் கடனே என்னும் சூத்திரம், ஆதிஇசை பன்னீராயிரம் என்பதை வலி யுறுத்துகிறது. இன்று இசை ஆராய்ச்சியில் பல்லாண்டு உழைத்தவர்களும், பரம்பரை ஓதுவாமூர்த்திகளின் மரபில் வந்தவர்களும், என் உறவினருமான பாளையங்கோட்டை உயர்திரு. இ. அப்பாசாமி ஓதுவார் அவர்கள், 12,000 பண்கள் பிறந்த முறைகளை வகுத்துக் காட்டி, அவற்றிற்குப் பெயர்கள் சூட்டியுள்ளார். அதை விரைவில் இசைப் புலவர்கள் சபையில் அரங்கேற்ற இருக்கிறார். பன்னீராயிரம் தமிழ் இசை இருந்த இந்த நாட்டில் ஆயிரம் தமிழ்ப் பண்களின் பெயரைக் கூடக் காணமுடியவில்லை. இன்று தமிழ்ப் பண்களின் பெயர்களை வேண்டுமானால் கூறலாம். ஆனால், வழக்கில் சிறப்பாக 10 பண்கள்தாம் இருந்துவருகிறது என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். 12,000 இராகங்கள் நாளடைவில் மறைந்து ஆறாயிரம் ஆகி, அவையும் மறைந்து ஆயிரம் ஆகிவிட்டது. ஆறாயிரம் இராகங்களைப்பற்றிக் கூறும் அநுமத்கடகம் என்ற நூலும், ஆயிரம் இராகங்களைப்பற்றிக் கூறும் வியாச கடகம் என்ற நூலும் இருந்ததற்குச் சிலப்பதிகாரத்திலே சான்றுகள் உள. இன்று 72 மேளகர்த்தா என்ற தாய் இராகங்களையும், ஜன்னிய இராகங்களான 1005 இராகங்களையும் சேர்த்து 1077 இராகங்களை யும் பெருங்குளம் - திரு. பி. ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்கள் தமது கான வித்தியாப் பிரகாசினி என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். திரு. மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்கள், கருணாமிர்த சாகரத்தில் 15,004 இராகங்களின் பெயர்களைக் காட்டியிருப்ப தோடு, இன்னும் பல கிளைஇராகங்கள் இருப்பதாகவும், அவற்றின் பெயர் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்கள். கிடைத்தால் வாசகர்கள் அந்தப் பெயர்களை எழுதிக்கொள்ளத் தம் நூலில் இடமும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த இராகங்களின் பெயர்கள் எல்லாம் வடமொழியிலே இருக்கின்றன. என்றாலும், இந்த இராகங்கள் எல்லாம் தமிழர்க்கே உரியவைகள் என்று அறிஞர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். இந்த இராகங்களில் 31 இராகங்கள் தாமரையின் பெயரைத் தாங்கி இருக்கின்றன. தாமரை ஏனைய கலைகளில் பெற்றிருக்கும் இடத்தைவிட இசையில் அதிகமான இடத்தைச் சொந்தப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவை வருமாறு: 1. கமல நாராயணி 2. கமல வசந்த 3. கமலா தரங்கிணி 4. கமலாபரணம் 5. கமலா மனோகரி 6. கமல பஞ்சமம் 7. கமலிகா வசந்தம் 8. கமலாலோல 9. கமலாஸ்ரீ 10. கமலினி 11. கமலாவதி 12. நளின ஹம்சி 13. நளின சுகி 14. நளின பரமரி 15. நளின பஞ்சமம் 16. நளினமுகி 17. நளினப்பிரிய 18. நளின குசுமாவளி 19. நளின காந்தி 20. பத்ம காந்தி 21. பத்ம பவானி 22. பத்மமுகி 23. பத்ம ராகம் 24. பத்ம சௌந்திரிய 25. பத்மினி 26. பத்ம கோச 27. பத்ம கேசரி 28. இமராமப்பிரிய 29. சராசப் பிரிய 30. சரோஜாபரணம் இஃதன்றி, இசை இலக்கணத்தில் இசையின் தகுதியை நான்கு பிரிவாகப் பிரித்துள்ளனர். அதாவது 1. இடம், 2. செய்யுள், 3. குணம், 4. காலம் என்பனவாகும். அவற்றின் விளக்கம் கீழ்வருமாறு: 1. இடம்: இடம்பற்றிய இராகம் ஐந்திணை இராகம். அதகைக் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று கூறுவார்கள். இந்நிலத்திற்குரிய பண்கள் முறையே குறிஞ்சிப் பண் (சங்கராபரணம்). முல்லைப் பண் (சாதாரி), நெய்தல் பண் (கல்யாணி), மருதப் பண் (இந்தோளம்), பாலைப் பண் (சாரங்கம்) என்று கூறப்படும். 2. செய்யுள்: வெண்பாவிற்குச் சங்கராபரணம், அகவற் பாவிற்குத் தோடி, கலிப்பாவிற்குப் பந்துவராளி, விருத்தத்திற்கும் கலித்துறைக்கும் பைரவி, தாழிசைக்குத் தோடி, விருத்தப்பாவிற்குக் கல்யாணி, காம்போதி, மத்தியமாவதி, உலாவிற்குச் சௌராஷ்டிரம், தேவாரத்திற்குப் பூபாளம், பிள்ளைத்தமிழுக்குக் கேதாரகௌளம், பரணிக்குக் கண்டாரவம் என்பன தக்க இராகமாகும். 3. குணம்: இரக்கம் உள்ளவை ஆகரி, கண்டாரவம், நீலாம்பரி, பியாகடை, புன்னாகவராளி ஆகியவைகளாம். துக்கம் உள்ளவை, முற்கூறிய இராகங்களோடு வராளியுமாகும். மகிழ்ச்சியுள்ளவை காம்போதி, சாவேரி, தன்னியாசி ஆகியவைகளாகும். போர்க்குணம் உள்ளவை நாட்டை இராகமாகும். 4. காலம்: வசந்தகால இராகம் காம்போதி, அசாவேரி, தன்னியாசி எனவும், மாலைவேளை இராகம் கல்யாணி, காபி, கன்னடம், காம்போதி எனவும், யாமவேளை இராகம் ஆகரி எனவும், விடியற்காலை இராகம் இந்தோளம், இராமகலி, தேசாட்சரி, நாட்டை, பூபாளம் எனவும், உச்சிவேளை இராகம் சாரங்கம், தேசாட்சரி எனவும், எக்காலத்துக்கும் ஏற்ற இராகங்கள் ஆகரி, இந்தோளம், இராமகலி, சாரங்கம், பூபாளம் ஆகியவைகளை நீக்கி ஏனையவைகளை எல்லாம் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் கூறுவர். இஃதன்றித் தேவாரத்தில் காணப்படும் பண்கள் 21-ஐப் பகற்பண் பத்து என்றும், இராப்பண் 8 என்றும், பொதுப்பண் 3 என்றும், அவைகளைப் பாடவேண்டிய நாளிகைகளையும் கணக் கிட்டுள்ளார்கள். இராகங்களில் 6 பருவத்திற்கும் அதாவது மாசி, பங்குனி மாதங்களில் தீபகமும், சித்திரை, வைகாசியில் மேகநாதமும், ஆனி, ஆடியில் சீராகமும், ஆவணி, புரட்டாசியில் மாளவ கௌசிகமும், ஐப்பசி, கார்த்திகையில் பைரவமும், மார்கழி, தையில் இந்தோளமும் பாடவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். 20. திசை அனைத்தும் இசை படைத்த திருமலர் தாமரை தமிழ்நாடெங்கும் தழைத்துக் கிளைத்துச் செழித்து வளரும் ஒரு நீர்க்கொடியின் மலர். தாமரை தமிழ்நாட்டிலுள்ள சமயங்களில் சால்புற்றொளிர் கிறது; காவியங்களில் கவின்பெறக் காட்சியளிக்கிறது; ஓவியங்களில் ஒளிர்ந்தோங்குகிறது; கட்டிடக் கலையில் கவினுற மின்னுகிறது; படிமக் கலையில் பாங்குறத் திகழ்கிறது; மருத்துவக் கலையில் மாண்புற்றிலங்குகிறது; கோதையர்கள் தீட்டும் கோலங்களில் கோள் எனக் கொழிக்கிறது; நகர அமைப்பில் நனிசிறந்து ஓங்குகிறது; நாட்டியக் கலையில் நந்தா விளக்காய் ஜொலிக்கிறது; தத்துவ நூற் களில் தகதகவென்று மின்னுகிறது; அணிகளிலெல்லாம் மணி யெனப் பிரகாசிக்கிறது; ஆடைகளிலெல்லாம் அழகுறப் பொலி கிறது; சித்திரக் கவிதைகளிலெல்லாம் வித்தாரமாய் விளங்குகிறது; சுருங்கக் கூறின், கமலம் கலைகளிலெல்லாம் கவின்பெறக் காட்சி தருகிறது எனலாம். தாமரையைக் கலைக் கமலம் என்று கூறுவது மிகப் பொருத்தமானது. தாமரை இல்லாதிருந்தால் இந்தியாவில் கலை களே இல்லாமல்போயிருக்கும் என்றுகூடச் சொல்லலாம் என அனைத்துலகக் கலைமேதை ஆனந்த குமாரசுவாமி அவர்கள் கூறியது மிக ஆழ்ந்த கருத்துடைய பொன்மொழியாகப் போற்றற் குரியது. எண்ணற்ற பெயர்கள் தாமரைக்கு எண்ணற்ற பெயர்கள் உண்டு. எடுத்துக் காட்டாக, அம்புஜம், அம்போருகம், அம்புசாதம், அம்புசன்மம், அரவிந்தம், அற்பகெந்தகம், ஆசிய பத்திரம், ஆய்மலர், இரத்த குமுதம், இரத்த சந்தியாகம், இரத்த மண்டலம், இரத்தோற்பலம், இந்துகமலம், இண்டை, இராமப்பிரியம், இரதிகாந்தன், இராச சூயம், இராசீயம், இறும்பு, உலோசனி, கசம், கச்சடம், கஞ்சம், கமலம், கந்தோதம், குசேசயம், கோகநகம் (செந்தாமரை), கோகயம், சதபத்திரி, சந்திரகாம்பியம், சரோஜம், சரோருகயம், சலசம், சாரசம், சிரியின் புட்பம், சூது, சோமாக்கியம், தண்டாமரை, தாமரசம், திருமலர், திருமாலுந்தி, திவாபீதம், தேவனம், தோடகம், நளினம், நதீசம், நளம், நீரொட்டி, நீரோருகம், பங்கயம், பங்கநாதம், பங்கேசம், பங்கேருகம், பதுமம், பற்பம், புட்கரம், புண்டரீகம் (வெண்டாமரை), மரைப்பூ, மர்க்கடாசியம், மகோற்பலம், மதணா லயம், மரைமிருமாறம், மிருணாலினி முண்டகம், முளரி, மூசாந்தம், வனசம், வனசோபனம், வாரிசம், வாணிமலர், வாரியுற்பவம், வாரூருஹம், வாரிசம், விஷபுஷ்பம், விசப்பிர என்று எண்ணற்ற எழில்பெயர்கள் நிகண்டுகளிலும், பேரகராதிகளிலும், மருத்துவ அகராதிகளிலும் காணப்படுகின்றன. இவைகளில் பல வடமொழிப் பெயர்களாய்க் காணப்படுகின்றன. என்றாலும் தமிழர்கள் தாமரைமீது கொண்ட ஆர்வத்தால் மொழிவேற்றுமை கொள்ளாது பெயர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தாமரைமலர்மட்டுமன்றி அதன் பெயர்களும் அழகாய் இருப்பதை உணர்ந்து மக்கள் தமது அருமைப்பிள்ளைகளுக்கு அம்புஜம், அம்புஜவல்லி, அரவிந்தன், இரதிகாந்தன், கமலம், சரோஜா, சரோஜினி, சந்திர காந்தா, நளினி, பங்கஜம், பங்கஜவல்லி, பத்மா, பத்மாவதி, பத்மலோசனி, பத்மினி, மிருணாலினி என்றும், கமலநாதன், கமலவேணி, கமல மனோகரி, கமலினி, கமலப் பிரிய, கமலலோசனி, நளின ரஞ்சனி, நளின ரஞ்சன், வனஜா என்றும் பெயர் சூட்டிவருகின்றனர். தமிழகத்திற்குத் தண்டாமரைமீது தனி உரிமை உண்டு என்று தமிழர்கள் எண்ணிவந்தனர்; எழுதி வந்தனர்; பாடிவந்தனர். ஆனால் தாமரையின் தனிப் பேரழகு இந்திய நாட்டைப் பெரிதும் கவர்ந்தது. வங்கம், கலிங்கம், ஆந்திரம், கேரளம், கன்னடம் - ஏன்? குமரி தொட்டு இமயம்வரையுள்ள கலைஞர்களை மட்டுமல்ல; சாதாரண மக்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது; சமய அறிஞர்களின் உள்ளத்தை வசீகரித்தது. சமண சமயத்திலும், பௌத்த சமயத்திலும் தாமரை இடம் பெற்றதுடன் இந்தச் சமயங்கள் பரவிய நாடுகளி லெல்லாம் தாமரையின் புகழ் பரவியது. இறுதியில் தாமரைச் செடியே எங்கும் பரவிவிட்டது. நாளடைவில் எல்லா நாட்டின் கலைகளிலும் தாமரை இடம் பெற்று விட்டது. கி.மு. 2000 ஆண்டிற்கு முன்னரே தமிழகத்தினின்று தாமரையை எகிப்தியர்கள் கொண்டுபோனதாகத் தெரிகிறது. தாமரை மேற்கு எகிப்தின் தேசீயச் சின்னமாக மேன்மையுற் றெழுந்தது. தாலமி என்னும் வரலாற்று ஆசிரியன், வனசம் வாழ்க்கையின் மறுமலர்ச்சியை நல்கும் அருமலர் என்றும் மாறா இளமை வடிவம் வாய்ந்த ஒசிரி, இசி என்னும் எகிப்தியர்களின் தெய்வத் திருக் குமாரனான ஹோர என்னும் குழந்தைத் தெய்வத்தின் அம்சமாகத் தாமரை பிரதிபலிக்கிறது என்றும் கூறுகிறான். எல்லம் அசிரியா, சால்டியா போன்ற பழம்பெருந் திராவிட மக்களின் மூதாதையர்கள் வாழ்ந்த நகர்களிலெல்லாம் தாமரை இடம்பெற்றிருக்கிறது. அங்குள்ள தெய்வங்கள் எல்லாம் தாமரையைத் தங்கள் கையில் வைத்திருந்ததாக தெரிகிறது. அந்நாடுகளில் உள்ள பழம்பொருள்களில் எல்லாம் தாமரை உருவங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன. காந்தாரம் (ஆப்கானிதானம்), சீனம், ஜப்பான், சாவகம், தாய் லாந்து, மங்கோலியா சம்பா, கம்போஜம், பாலி, பர்மா, இலங்கை, முதலிய நாடுகளிலுள்ள பௌத்தர்கள் இன்றும் தாமரையைப் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள். எங்கும் புத்தபகவான் பத்மாசனத்தின்மீதே அமர்ந்திருப்பதாக உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. திபேத், நேபாளம் போன்ற நாடுகளில் தாமரை பெரிதும் போற்றப்பட்டு வருகிறது. ஓம்: மணி பத்மேஹூம் என்பது திபேத்தியர்களின் சிறந்த மந்திரமாக மதிக்கப்படுகிறது. இதன் பொருள்: ஓ, தாமரை மலரின் நடுவே கொலுவீற்றிருக்கும் தெய்வமே! உன் பாதார விந்தங்களில் சிரஞ்சாய்த்து வணங்குகிறேன் என்பதாகும். இது அவர்களின் மூலமந்திரமாய் விளங்குகிறது. எகிப்தியர்கள் தாமரையைத் தண்ணீர் லில்லி என்று செல்லப் பெயரிட்டு அழைப்பர்; நீல நதியின் பாலம் என்று சிறப்பித்துப் பாடுவர். ஒருகாலத்தில் எகிப்து நாடு முழுவதும் தாமரையின் சிறப்புப் பரவியிருந்தது. தாமரையின் சின்னம் நீல நதியோடு இணைந்து சீரும் சிறப்பும் பெற்று விளங்கியது. அந்நாட்டில் அரசனின் அரண் மனையிலிருந்து ஆடு மேய்ப்பவன் குடிசைவரை நிகழும் எல்லா வைபவங்களிலும் தாமரை தனிப்பெருமையுடன் விளங்கியது. விருந் தினர்கள் வருகையில் தாமரை மலரைத் தலைமீது சூட்டி முகமன் கூறி அவர்களை வரவேற்பதே அவர்களின் பண்பாக இருந்தது. பண்டைக்கால எகிப்தியர்களின் பெரிய தெய்வமாகிய ஒசிரிய தாமரை மலரின் வடிவம் போன்ற மணிமகுடத்தைத் தாங்கிக்கொண்டிருந்தது. ஹெர்குல என்னும் தெய்வம் நிய்ம்ப் என்னும் சிறுதெய்வத்தைக் காட்டிலே துரத்திச் சென்றபோது நிய்ம்ப் நீல நதியில் குதித்து அழகிய வெண்டாமரையாக வேற்றுருவம் கொண்டு நின்றது என்று ஒரு கிரேக்க புராணம் கூறுகிறது. பண்டைய தாய்லாந்து நாட்டின் தலைநகராகிய அயோத்தி யில் தாமரை பேரும் பெருமையும் பெற்றுத் திகழ்ந்தது. இன்றும் அந்நாட்டின் கோயில்களிலும் சிற்பங்களிலும் தாமரை தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. அரண்மனையில் நிகழும் எல்லா மங்கல நிகழ்ச்சிகளிலும் தாமரைக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. அதோடு தாமரை தாய்லந்து நாட்டின் தேசீயச் சின்னமாகவும் திகழ்கிறது. தாய்லந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஒரு திரு மகளின் சிலை கிடைத்துள்ளது. அவளுடைய பாதங்களைத் தாமரை தாங்கிநிற்கின்றது; இரு கரங்களிலும் தாமரை மலர்கள் ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன. இச்சிலை தமிழ்நாட்டுச் சிற்ப வடிவம்போல் இல்லை; கெமர் சிற்பமுறையைத் தழுவி அமைக்கப்பட்டிருக்கிறது. இது அங்கோர் வாட்டிற்கு முன்னர் கி.பி. 11வது நூற்றாண்டில் தோன்றிய தாகக் கருதப்படுகிறது. இங்கு தமிழ் கண்ட தண்டாமரை மட்டுமல்லாமல், தமிழ் மொழியும் தெய்வமொழியாகக் கருதப்பட்டுக் கோயில் திருவெம் பாவையும், தேவார திருவாசகப் பாடல்களும் ஓதப்பட்டு வருவ தோடு, மன்னர்களின் முடிசூட்டு விழாக்களிலும் தேனுறை தமிழில் தெய்வப் பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. ஜப்பானிய விஞ்ஞானி கண்ட சாகாமலர் ஜப்பானிய நாட்டில் பௌத்தம் தாமரைக்கு உன்னதமான ஓர் இடத்தை அளித்திருக்கிறது. ஜப்பானியர்கள் பண்டுதொட்டுத் தாமரையைப் போற்றிப் புகழ்ந்து வருகின்றார்கள். புத்தபகவானை அர்ச்சிக்க ஜப்பானியர் தாமரை மலரைத் தனி ஆவலோடு பறித்துச் செல்லுகிறார்கள். ஜப்பானிய மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த தாமரை இப்பொழுது ஒரு தலைசிறந்த ஜப்பானிய விஞ்ஞானியையும் கவர்ந்துள்ளது. அவர் தாமரைச் செடியையும், அதன் பூக்களையும், விதைகளையும், பற்றி ஆராய்வதிலே தமது முழுக்கருத்தையும் செலுத்திவருகிறார். அந்த விஞ்ஞானியின் பெயர் டாக்டர் இச்சிரோ ஓகா என்பதாகும். அவருக்கு இப்பொழுது எழுபத் திரண்டு வயதாகிறது. தாமரை விதையானது ஒரு திடமான சிறிய மணியாகத் திகழ்கிறது. அந்த வித்து எளிதில் அழிந்துபோவதில்லை. அது மரணம் அடைய மறுக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அழியாது மண்ணில் புதையுண்டு கிடக்கமுடியும் என்றாலும் அதன் வாழ்வில் ஒளி மங்குவதில்லை. சந்தர்ப்பம் அரும்பும்பொழுது அது முளைவிட்டுக் கிளைத்தெழுகிறது என்று சமீபத்தில் கூறியுள்ளார். டாக்டர் ஓகா தாமரைச் செடியைப்பற்றித் தனி ஆராய்ச்சி செய்து தலைசிறந்த விஞ்ஞானியாய்த் திகழுவதால் அவரது நட்பிற் குரிய ஏனைய விஞ்ஞானிகளான நண்பர்கள் அவரை அன்பின் பெருக்கால் திரு. தாமரை என்ற செல்லப்பெயரிட்டு அழைத்துவரு கின்றனர். அவர் சமீபத்தில் ஜப்பானிய மொழியில் தாமரையைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் தாமரையைப்பற்றிப் பாமரர், படித்தோர் ஆகிய இருசாராரையும் கவரத்தக்க கருத்துகள் நிறைந்த கருவூலங்கள் அதிகமுள்ளன. தண்ணீர்ச் செடியாகிய தாமரை கிரேக்க புராணங்களில் காணும் தாமரையைத் தின்பவர்களின் கதைகளால் வெகு விசித்திர மாகச் செய்யப்பட்டிருக்கிறது. கீழ்நாட்டிலுள்ள பௌத்த சமய பக்தர்களின் நம்பிக்கை தாமரைப் பூவான தெய்வ அருள்பெற்ற இல்லத்தில் மலர்கிறது என்பதாகும். புத்தர்பெருமானே எப்பொழு தும் தாமரைமலர்ப் பீடத்தில் அமர்ந்து காட்சி அளித்து வருகிறார் என்று அவர் கூறுகிறார். டாக்டர் ஓகா ஐம்பது ஆண்டுகளாகத் தாமரையைப்பற்றி ஆராய்ந்துவருகிறார். அவர் கம்யூனிட் சீனாவின் வடபகுதியி லுள்ள மஞ்சூரியாவில் மிகத் தொன்மையான தாமரை வித்துக்களை ஏராளமாகக் கண்டெடுத்துள்ளார். டாக்டர் ஓகா, வித்துக்களை ஆராய்வதில் அதிக ஆர்வம் உடையவர். குறைந்தது 500 ஆண்டு களுக்கு முந்திய பழைய வித்துக்களைக் கண்டெடுத்து அவைகளை அவர் விசேஷ அக்கறையோடு ஆராய்ந்துவருகின்றார். அவர் பதினாயிரத்திற்கு மேற்பட்ட விதைகளைப் பரீட்சித்துப் பார்த்துள்ளார். அவர் அதை அக்கறையோடு ஆராய்ந்து பல அரிய விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளார். அதனால் அவர் அதிக ஆக்கமும் ஊக்கமும் பெற்றுள்ளார். அவரது ஊக்கத்திற்கு முக்கிய காரணம் அவரது முயற்சியின் வெற்றியே யாகும். அவரது அரிய முயற்சியால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய தாமரை விதை முளைவிட்டு அரும்பியது. தாமரை விதை தனக்குள்ளே தன் நீண்ட வாழ்வைப் பாதுகாத்து வைத்துக்கொண்டிருக்கிறது அதன் மேலே மூடியிருக்கும் தோடு கனமாயும் கடினமாயும் இருக்கிறது. உள்ளே இருக்கும் பருப்பை மூடியிருக்கும் கனத்த மேல்தோடு, உள்ளே காற்றும் ஈரமும் புகமுடியாதவாறு காத்துவருவதோடு, முளை அரும்பும் சந்தர்ப்பம்வரை உயிரோடு பாதுகாத்து வைப்ப தற்கு வேண்டிய சக்தியுடையதாய் அமைந்திருக்கிறது. பழங்கால வித்துக்களை முளைவிடச் செய்யும் முயற்சியில் தாம் வெற்றிபெற்றதும், 1,200 ஆண்டுகளுக்கு முன்னுள்ள வித்தை முளையரும்பச் செய்தார். தோக்கியோ நகருக்கு அருகே அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித் துறையினர் தோண்டிப்பார்த்த பொழுது பூமியின் அடியில் ஒரு பானையில் தாமரை வித்துக்கள் பத்திரமாய் மூடி வைக்கப்பட்டிருந்தன. அது 1200 ஆண்டுகளுக்கு முன்னுள்ளதாக அவர்களால் முடிவு செய்யப்பட்டது. அப் பழம்பெரு வித்துக்கள் டாக்டரிடம் கொடுக்கப்பட்டன. அந்தத் தாமரை வித்தில் மேல் தோடு கடினமானதாக இருந்ததால் அதைக் கந்தகத் திராவகத்தின் இறுகிய நீரில் தோய்த்து மென்மையுடையதாக மாற்றினார். பின் உருக்கு அரத்தால் அவ்விதையைத் தண்ணீரில் நனைத்தார். விதை யின் உள்ளே இருந்து முளை வெளிவந்தது. தாமரை வித்துக்கள் சிரஞ்சீவித் தன்மை உடையன என்பது மெய்ப்பிக்கப்பட்டது. மீண்டும் தோக்கியோ நகருக்கு 8வது மைலில் பூமியில் புதையுண்டு கிடந்த பழங்கால வித்துக்கள் அவரிடம் கொடுக்கப்பட்டன. தாமரை சாகா மூலிகை என்பதை மீண்டும் உலகிற்கு உணர்த்த உறுதி கொண்டார். அந்த வித்துக்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளவை யாக இருக்கலாம் என்று தாவர நூல் வல்லுநர்களால் மதிப்பிடப் பட்டது. இத் தாமரை விதைகள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஒரு தொன்மையான தோணியின் காலத்தை அடிப்படையாக வைத்தே தாமரை விதைகளின் காலமும் கணிக்கப் பெற்றது. அவரது கணிப்பு சரியா என்பதை அறிய அமெரிக்க விஞ்ஞான நிபுணர்கள் சிலர் முன்வந்தனர். அவர்கள் இத்தகைய பொருள்களின் கால அளவைக் கணிக்கும், ரேடியோ கார்பன் முறைகளை உபயோகித்துப் பார்த்து, அவ்விதைகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவையே என்று முடிவுகட்டினர். டாக்டர் ஓகா கண்ட பழங்கால வித்துக்களின் ஜீவசக்தி களைப் பற்றிய முடிவுகள் உண்மையா? அவர் பரீட்சித்துப் பார்த்தது பழங்காலப் பதும வித்தா? என்ற சவால்கள் அவர்மீது பல சந்தேகங் களைக் கிளப்பின. என்றாலும் அவர் கவலைப்படவில்லை. ஏனெனில், அவரது ஆராய்ச்சி விஞ்ஞான ரீதியானது, உண்மையை அடிப்படையாகக் கொண்டது என்பதை உலகம் அறிந்தது. தாமரையின் எந்தப் பழங்கால வித்துக்களும், முளைத் தெழுவதற்கு அவர் ஒரு சந்தர்ப்பம் அளித்தார். அவைகள் ஆச்சரிய மான முறையில் முளைத்து வளர்ந்து பூத்துநிற்பதை உலகம் கண்டது. அவரது வெற்றியைக் குறிப்பிட வித்துக்களுக்கு சென்னி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பெயர் அமெரிக்கத் தாவர உயிரியல் நிபுணரின் பெயராகும். அந்த அமெரிக்க நிபுணர்கள்தான் டாக்டர் ஓகாவின் ஆராய்ச்சி சரி என்று கூறினர். மேலும் இந்த விதைகளைப் பற்றி அக்கறைகொண்டு அமெரிக்க நாட்டிலும் அவைகளை அறிமுகப்படுத்திவைத்தார். பண்டைக்காலப் பதும வித்துக்களினின்று தாமரைச் செடி முளைத்து வளர்ந்து பூத்தது. அதற்கு ஜப்பானியர் ஓகா என்று பெயரிட்டனர். ஜப்பானிலுள்ள அத் தாமரை அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் அறிமுகம் செய்விக்கப்பட்டது. மேற்கு ஜெர்மனி யில் நடைபெற்ற அனைத்துலகத் தோட்டவேலைப் பொருட்காட்சி விழாவில், ஓகாவினால் முளைவிடச் செய்யப்பட்ட பழங்காலத் தாமரைக் கொடிகளையும் பூக்களையும் பொதுமக்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் காட்டுவதற்காக விசேஷமான முறையில் அமைக்கப்பட்ட ஒரு வெப்பமுள்ள அறையில் அவை வளரச் செய்யப்பட்டிருந்தன. டாக்டர் ஓகா தாமரை என்ற தனது அரிய பெரிய இலக்கி யத்தில், தாமரைத் தண்டினின்று எடுக்கப்பட்ட தாமரை நார்கள் மனிதனால் உபயோகிக்கப்பட்ட முதல் தாமரை நாராக இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார். அவரது நூல் விஞ்ஞான ரீதியாக ஒரு விதையின் வயதை அளக்கப் பல்வேறு முறைகளைக் கூறுகிறது. ஆனால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குமுன் இறந்த வித்திற்கு உயிர் ஊட்டி முளைக்கச் செய்யும் தாமரை விதைகளைப்பற்றிக் கூறும் தகவல்கள் மிகவும் அருமையானவை. இவ்வரிய விஷயங்கள் அனைத்தும் ஜப்பானிய நாட்டின் தலைநகரிலுள்ள வானொலியில், நடப்புச் செய்திகள் என்ற தலைப்பில் 1960ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22, 23, 24 தேதிகளில் ஒலிபரப்பப்பட்டன. இதனை விளக்கி 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளிவந்த ஜப்பானிய வானொலிச் செய்தி என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதோடு ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன் தோன்றிய தாமரை வித்தினின்று முளைத்தெழுந்த தாமரைச் செடியும், அதன் பேரரும்பும், மலரும் வெளியிடப் பட்டிருந்தன. ஜெர்மன் பேராசிரியர் தாமரைக்குச் சாற்றும் புகழ்மாலை தாமரையின் புகழை எத்தனையோ மேனாட்டுப் பேராசிரியர் களும் கலைஞர்களும் போற்றியிருக்கின்றார்கள். அவர்களில் எனக்குப் பிடித்தமானவர் திரு. எய்ன்ரிச் சிம்மர் என்பவராவார். அவர், இந்திய ஆசியாவின் கலை என்றொரு ஒப்பற்ற நூலை எழுதியுள்ளார். அதன் விலை ரூ.300. அதில், தாமரையில் சின்னம் என்றொரு அத்தியாயத்தை 80 பக்கங்களில் எழுதி முடித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதன் கருத்தாவது: வடமொழியில் தாமரை கமலா, பத்மா என்று கூறப்படுகிறது. இந்தப் பதங்களின் இறுதியில் ஆ என்ற ஒலி சேர்க்கப்பட்டிருப்பது பெண்பாலைக் குறிப்பதற்கேயாம். எனவே தாமரையிலே தங்கி அதை அணிசெய்யும் தேவியையே கமலா, பத்மா என்று குறிப்பிடு கின்றனர் என்பது நமக்கு நன்கு தெரிகிறது. உலகை உருவாக்கி அதைக் காக்கும் கடவுளாகிய திருமாலின் மனைவியாகிய திருமகளையே அது காட்டுகிறது. அவள் அதிர்ஷ்டம், ஆக்கம், ஐசுவரியம் ஆகியவை களின் அவதாரம். ஏனைய தெய்வங்கள் இரதம் அல்லது விலங்கு களின் மீது இருப்பதுபோல் அவள் தாமரை மலர்மேல் அமர்ந் திருந்து அகிலத்தின் செழிப்பு, தட்பம் ஆகியவைகளின் மீதும், பூதேவியின் கருப்பையில் இருக்கும் விலையுயர்ந்த அணிகள் மணிகள் மீதும் தலைமை வகிக்கிறாள். தெய்வத்திற் சிறந்த சிவபெருமானுடைய வாகனமாகிய நந்தியைப்போலவும், பிரமதேவனுடைய வாகனமாகிய அன்னத்தைப் போலவும், திருமகளின் வாகனம் தாமரையாக இருக்கிறது. முக்கிய மான இந்து சமயக் கடவுளர்களின் பல்வேறு தெய்வீக உறை விடத்தோடுள்ள புகழ்நெறியை ஒரு புலவர் நிந்தாதுதியாகப் பின்வருமாறு பாடியுள்ளார். அது, தாமரைத் தேவி முண்டக முகிழத்தில் துயில்கிறாள் சிவபெருமான் இமயமலை மீதும் திருமால் பாற்கடல் மீதும துயில்கிறார்கள் அவர்கள் இவ்வாறிருப்பது மூட்டைப்பூச்சிக்குப் பயந்தே என்று நான் எண்ணுகிறேன் என்பதாகும். தாமரை இந்தியாவின் தெய்வீக மலர்; கீழ்நாட்டின் ரோஜா. தாமரைச் செடிமட்டுமன்றி, அதன் உருவமும் புகழும் கலை மூலமாகவும், கவிகள் மூலமாகவும், கதைகள் மூலமாகவும் இந்தியா வின் மூலைமுடுக்குகளிலெல்லாம் பரவிநிற்கிறது. ஆனால், பௌத்த மதம் பரவிய இலங்கை, பர்மா, கம்போடியா, சாவகம், சுமத்ரா, பாலி, போர்னியோ, தாய்லாந்து, வியட்னாம், லாவோ, கொரியா, சீனா, மங்கோலியா, ஜப்பான் முதலிய நாடுகளில் தாமரை தனிப்பெருமை பெற்று விளங்குகிறது. மன்னர்களின் மணி மகுடங்களிலும், அரசிருக்கைகளிலும், கட்டிடங்களிலும், அணிகளிலும், மணிகளிலும், சட்டி, தொட்டி, பானை, பண்டபாத்திரங்கள் முதலிய பொருள்களிலும் தாமரை அழகொளிர மின்னுகிறது. எல்லா நாட்டிலும் புத்தர்பெருமான் கோவிலையும், அவர் அமர்ந்திருக்கும் பீடத்தையும் அது அணிசெய்கிறது. காவியப் புலவர்களுக்கும், ஓவியப் புலவர்களுக்கும், சிற்பி களுக்கும் தாமரை மலர்மீது தணியாக் காதல் உண்டு. சுருங்கக்கூறின், கலையழகு வாய்ந்த கவின்பெறு கமல மலர், இந்தியாவைவிடப் பௌத்த மதம் பரவிய நாடுகளிலெல்லாம் பீடும் பெருமையும், சீரும் சிறப்பும் பெற்றுத் தெய்வத் திருமலராய் உலகம் உள்ள அளவும் அழியாப் பெரும்புகழைப்பெற்று விளங்குகிறது என்று புகழ் மாலை சூட்டியுள்ளார். மேனாட்டில் புகழ்மாலை சூட்டிய ஆனந்தகுமாரசுவாமி உலகிலே தாமரைக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு என்று எடுத்துக்காட்டி, அதற்கு அனைத்துலகப் புகழ் தேடிக் கொடுத்தவர் உயர்திரு. ஆனந்தக் கெண்டி குமாரசுவாமி அவர்களாவார். அவர் ஒரு தமிழர். தமிழகம் அவரை ஆதரித்து, அவரது கலை ஆராய்ச்சிக்கு உதவத் தவறிவிட்டது. அதன் பயனாக அவர் அமெரிக்காவிற்கு போக நேரிட்டது. அமெரிக்க அரசாங்கம் அவரை ஆதரிக்க முன் வந்து, அந்நாட்டின் போடன் நகரிலுள்ள உயர்ந்த தொல்பொருள் காட்சிசாலையில் அவருக்கு ஒரு கௌரவமான பதிவி அளித்ததோடு, போதிய பொருள் வசதிக்கும் வழிசெய்தது. அவர் ஒப்பற்ற கலைஞர்; சிறந்த யோகி; பன்மொழிப் புலவர். அவர் எழுத்து, மொழி, கலை, புதைபொருள் ஆராய்ச்சி, விஞ் ஞானம், சமயம், வரலாறு, இன்னோரன்ன பல்வேறு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். அவர் 1877ஆம் ஆண்டு இலங்கையில் தலைநகராக கொழும்பில் பிறந்து, 1947ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் நாள் இறந்தார். அவர் பல்வேறு துறைகளைப்பற்றிப் பெரியவையும் சிறியவையுமாக 500 நூற்கள் எழுதி வெளியிட் டுள்ளார். இந்நூற்களில் நாம் இங்குக் குறிப்பிடத்தக்கது தாமரை யின் புகழ்பாடும் சிரி என்னும் ஒரு சிறு நூலாகும். அதில் அவர் வடமொழி, தென்மொழி, ஆங்கிலம் முதலிய 14 மொழிகளைப் பயின்று, அதன் இலக்கியங்களையெல்லாம் நன்கு ஆராய்ந்து தாமரைக்கு உன்னத தானம் அளித்துள்ளார். அதன் சாரம் அடியில் வருமாறு: கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய மொகஞ்ச தாரோவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்களில் சூரியதேவனின் தலைமீது தாமரைப்பூ கொத்தாக இருப்பதுபோல உள்ள ஓர் உருவம் காணப்படுகிறது. முற்காலத்தில் இந்திய மக்கள் சூரிய தேவனின் உள்ளத்தைக் கவர்ந்த அவனது உறைவிடமாகத் தாமரை மலரைக் கருதினர். சூரியன் மறைந்ததும் தாமரை மலர் குவிந்துகொள்வதை, சூரியன் தனது அழகிய மலர்மாளிகையினுட் புகுந்து துயில்வதன் அடையாளமாக எண்ணினர். பண்டைக்காலத்தில் பாரத மக்கள் பட்டினங்களைப் பங்கய மலர் வடிவில் கட்டினர். நகரின் நடுவே கோயிலும், நாற்புறமும் நான்கு தெருக்களும் நிர்மாணித்தனர். இது தாமரைப்பூவின் நடுவே பொகுட்டும் அதனைச் சுற்றி நாற்புறமும் இதழ்களும் இருப்பது போலவும், இதழ்களின் இறுதியில் காணப்படும் இடைவெளிகள் நான்கும் நான்கு வாயில்கள் இருப்பதுபோலவும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நாம் அமராவதியில் காணப்படும் அழகிய ஓவியத்தைக் கூறலாம். இது சரவதி நகரின் அமைப்பை விவரித்துக் காட்டுவதாகக் காணப்படுகிறது. அதில் காணப்படும் அகழியும் வாயிலும் தாமரைப்பூவின் அமைப்பை உடையனவாகக் காட்டப் பட்டுள்ளன. கிட்டத்தட்ட பாரதநாட்டின் பண்டைய எழுத் தாளர்கள் எல்லாம் தங்கள் நகரங்களில் தாமரைத் தடாகமும், தாமரைப் பூக்கள் நிறைந்த நந்தவனங்களும் இருப்பதைக் குறிப் பிடாது விடமாட்டார்கள். கி. பி. மூன்றாவது நூற்றாண்டில் முளைத்த மௌரியர்களின் கலைகளில் தாமரைப்பூ இருவிதமான சம்பிரதாயத்தை அடிப் படையாக வைத்துத் தீட்டப்பட்டிருக்கிறது. முதலாவது கோயில் அல்லது தூபிகள் எல்லாம் தலைகீழாகக் காணப்படும் ஒரு தாமரைப்பூவைப்போன்று அமைக்கப்பட்டுள்ளன. விமானம், நீலத் தாமரை மலர், தலைகீழாகக் காணப்படும் தன்னுடைய இதழ் களோடு பூமியை உறையிட்டுக்கொண்டிருக்கும் விண்ணின் சின்ன மாகப் பொலிகிறது. தாமரைத் தண்டுகள் தூண்கள் போல் பூசிக்கத் தக்க நிலையில் நிற்கின்றன. அவைகள் தாமரைப்பூக்களின் சின்ன மாகத் தண்ணீர்த் தொட்டிகளிலிருந்து வளர்ந்து வெளியே தலை தூக்கிக்கொண்டும், இதழ்களின்மேல் நுனியால் நமக்குக் காட்டிக் கொண்டும் இருக்கின்றன. அசோகனுடைய தலைநகரில் நிறுத்தப்பட்ட தூண்கள் தாமரை இதழ்களைத் தாங்கிக்கொண்டே இருக்கின்றன. மேலும், தாமரை மலர் சட்டங்களிலும், விட்டங்களிலும், உத்திரங்களிலும், கிராதிகளிலும், பெரிய விருதுகளிலும், பதக்கங்களிலும் அணிசெய் வதற்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இருவிதமான கருச்சின்னங்களுக்கும் இந்தியக் கலையிலும், கட்டிடக் கலையிலும் பிரயோகிக்கப்பட்டன. அமைப்பு, அழகு செய்தல் ஆகிய இருவகை யிலும் பலவாறு உபயோகப்படுத்தப்பட்டன. பாதர நாட்டின் பழம்பெரும் கலைஞர்கள் தாமரைப் பூக் களை அலங்கார வகைகளுக்காக உபயோகிக்க 12 வகைகளைச் செய் திருக்கின்றனர். அதாவது: 1. உபதளம், 2. பத்மம், 3. குமுதம், 4. நளினம், 5. சுபக்சுரோணிகம், 6. புண்டரீகம், 7. மகாபுண்டரீகம், 8. சதபத்திரம், 9. சஹபத்திரம், 10. காஹலரம், 11. கோகநகம், 12. தமராசா என்பன. இந்தப் பன்னிருவகையான பங்கய வடிவச் சிற்பச் சிறப்பையும் அமராவதி, பார்ஹுத், சாஞ்சி, புத்தகயா முதலியவிடங்களில் நாம் காணமுடியும். சிற்ப வேலையில் சங்தேக முறையில் தீட்டும் செடி கொடி களை வரைவதோடு, தாமரைக் கற்பக்கிருகங்களையும், தொடர்ந்து செய்யும் மணிவேலைகளையும் அடக்கியிருக்கின்றனர். சிற்ப வேலைகளில் காணும் கொடிகள் எழிலையும் பலத்தையும் பிரதி பலிக்க உட்கார்ந்திருக்கும் யானையின் வாயிலிருந்து தாமரையைத் தாங்கியிருக்கும் கொடிகள்வரை செல்லுகின்றன. பௌத்த தூபிகளில் நடுப்பாகம் தாமரை மலர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. தூபிகள் முழுவதிலும் தாமரைமலர் தெய்விக பக்தியோடு விவரிக்கும் ஓர் அரிய சிறந்த சின்னமாகக் காணப்படுகிறது. அசந்தா ஓவியத்திலும் ஏனைய சிற்பச் செல்வத்தி லும் புத்தர்பெருமானைப் பிரதிபலிக்கத்தக்க சின்னமாக காணப் படுகிறது. தாமரை, இயற்கை அனைத்திலும் உணர்ச்சியுள்ள படைப்பி லும் பரிசுத்த அழகையும் கம்பீரத்தையும் பிரதிபலிக்கிறது. சாஞ்சி யில் தாமரைப் பூத் தண்டுகளின் சந்தம் முற்கூறிய தன்மைகளை யுடைய மிகச் சிறந்த பண்பாக இருக்கிறது. சிற்றண்ணல் வாயில் மட்டுமன்றிச் சமணர்களால் கட்டப் பட்ட கோயில்களிலுள்ள கற்சிற்பங்களிலும், ஓவியங்களிலும் தாமரை தனியிடம்பெற்றுச் சீரும் சிறப்பும் பெற்று விளங்குகிறது. அவர்களின் வழிகாட்டிகளும் ஆசிரியர்களும் தாமரை வடிவந் தாங்கிய பீடங்களில்தான் இருப்பார்கள். அவர்களின் சுவர்க்க பூமியே - காதிகா பூமி கமல மலர்களின் காடுகள் நிறைந்த கவின்பெறு குளிர்சோலையாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கண்ட இலக்கியங்களிலெல்லாம் தாமரை முதலிடம் பெற்றிருக்கிறது. சமணர்களின் கோயில்கள், வீடுகள், பண்ட பாத்திரங்கள், தட்டுமுட்டுச் சாமான்கள், கைத்தடிகள் முதலியவை யெல்லாம் தாமரை உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. சைவநெறியில்தான் தாமரை ஒரு மகோன்னதமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் இன்று தாமரைக்குச் சிறப்பு அளிப்பதில் பௌத்தர்களும், சமணர்களும், வைணவர்களும், நாங்கள் எவருக்கும் சளைத்த வர்கள் அல்லோம் என்று போட்டி போட்டுக்கொண்டு சிறப்பித் துள்ளார்களோ என்று ஐயப்படும் நிலையில் காணப்படுகிறார்கள். தாமரை தமிழகத்தில் உயிராகப் போற்றப்படுகிறது. தண்ணீர் முற்காலத்திலுள்ள கோயில்களுக்கு அருகில் இருப்பது இன்றியமை யாததாய் எண்ணப்பட்டது. நீரின்றி எவ்விதமான தெய்வத்தையும் வழிபட முடியாதவாறு சமயம் அமைக்கப்பட்டிருக்கிறது. இறை வனை வழிபடத் தாமரைப் பூக்கள் கோயில்களிலுள்ள தெப்பங் களிலும், வெளியே உள்ள குளங்களிலும் பாதுகாத்து வளர்க்கப் பட்டு வந்தன. இந்தியாவிலுள்ள எல்லாப் பெரிய தெய்வத் திருத் தலங்களிலும் உள்ள கோயில்களில் உணர்ச்சியை ஊட்டும் கல்தூண் களிலும், பாவுகற்களிலும், சிற்பக் கணித விதிப்படி அமைத்த திருவறைகளிலும் தாமரைப்பூ பொறிக்கப்பட்டுள்ளன. பௌத்த, சமண, சைவ, வைணவத் திருக்கோயில்கள் அனைத்தும் பண்டைய சிற்ப விதிகளை அனுசரித்து நிர்மாணிக் கப்பட்டுள்ளன. திருவறையின் அளவுக்குச் சிற்ப விதிகளை நன் காராய்ந்து நல்ல ஓசையில் நல்ல முறையில் அடிப்படையிட்டிருக் கின்றார்கள். இந்தத் திருவறையோடு தூண்களும், தண்ணீரும், தாமரை மலரும் அவைகளின் முக்கியத்துவம் குன்றாது பாதுகாத்து வரப்படுகின்றன. இந்திய சமய வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் அவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. திருக்கோயில்களின் வாழ்விலும், வரலாற்றிலும், உயிரிலும் தாமரை மலர் காணப் படுகின்றன. விஷ்ணு புராணத்தில் தாமரை இமயத்தோடு இணைத்துப் போற்றப்படுகிறது. உயிர்களை உற்பத்தி செய்யும் பிரமதேவன், உலகிலே உயர்ந்த மலையாகிய இமயத்திலுள்ள மானஸரோவர் தடாகமாகிய திருவறையின் நடுவே தம் சிங்காசனத்தில் - தாமரை மலரில் அமர்ந்து அவனியனைத்திற்கும் காட்சியளிக்கிறான். அங்கிருந்து பிரமபுத்திரா, கங்கை, சிந்து, யமுனை ஆகிய நான்கு நதிகளும் நான்கு தாமரைத் தண்டுகள்போல் அத் தடாகத்தினின்று எழுந்து நாலு திக்குகளிலும் நன்கு பாய்ந்து அங்குள்ள பூமியையும், மக்களையும் வளம்பெறச் செய்து உயிரூட்டுகின்றன. கைலாச மலை ஒரு பீடத்தைப்போல் அல்லது ஒரு தூணைப் போல் இத் தடாகத்தின் அருகில் காட்சி அளிக்கிறது. இமயம் உலகிலேயே உயர்ந்த மலையாய் உலகின் நடுவில் கம்பீரமாய் நிற்கிறது. அதனின்று பொங்கிப் பெருக்கெடுத்து ஓடி, நாலா திசை களும் பரவும் நதிகள் தாமரைபோல் சீனம், பாரசீகம், மத்திய ஆசியா வின் மேற்குப் பகுதி, இந்தியா, திபேத், பர்மா முதலிய நாடுகளி லெல்லாம் பரவித் தனது பெருமை எங்கும் பரவும்படி செய்வதாகக் கலைஞர்கள் புகழ்மாலை சூட்டியுள்ளார்கள் - என்றும் குறிப்பிட் டுள்ளார். தாமரை பாரதநாட்டின் தேசீய மலராகத் திகழ்வதற்குரிய ஏற்றம் பெற்றுள்ளது என்பதை ஒருவாறு விளக்கிவிட்டேன். பாதர நாட்டு மக்களும், அறிஞர்களும், அரசாங்கமும் தாமரையின் பெருமையை மனத்தில் எண்ணி, அதைத் தேசீய மலராகத் தேர்ந்தெடுத்துப் பேரும் பெருமையும், சீரும் சிறப்பும், திருவும் உருவும் பெறுவார்களாக.  பின்னிணைப்பு அறிஞர் அ. இராகவன் முதல் பதிப்புக்கு எழுதிய முகவுரை முகவுரை உலகிலே மிகத் தொன்மையான மொழி தமிழ் மொழியே யாகும். மேலும் தொன்மையான மொழிகளிலே இன்று உயிருடன் நிலவும் மொழியும் இதுவேயாகும். தமிழ் பழமையானதாயினும் இன்றுள்ள மொழிகளில் சீரும் சிறப்பும் உடையது என்று மொழி ஆராய்ச்சி வல்லுநர்களால் போற்றிப் புகழப்படுகிறது. இம்மொழி ஒரு காலத்தில் அரசாங்க மொழியாகவும் இருந்தது. இன்றும் அரசாங்க மொழியாவதற்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால் நமது நாடு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்ததால் தமிழ்மொழி போதிய அளவு கவனிக்கப்படவில்லை. சமீபத்தில் தோன்றி ஐரோப்பிய மொழிகளுக்கொப்ப இலக்கிய வளம் பெறவில்லை. நாடு உரிமை பெற்றபின் நமது மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சி பிறந்திருக்கிறது. அதாவது, எனது நாடு, எனதுமொழி, எனது கலை, எனது நாகரிகம் என்று பேசப்படுகிறது; எழுதப்படுகிறது. இவ் வுணர்ச்சியின் பயனாக நமது நாட்டில் பல தமிழ்ப் பத்திரிகைகளும், பல நூற்களும் தோன்றியுள்ளன. பெரும்பாலும் இன்று வெளிவரும் நூற்கள் அனைத்தும் பழைய தமிழ்இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளாகவே காணப் படுகின்றன. கம்ப இராமாயணத்தைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும், சிலப்பதிகாரத்தைப் பற்றியும், பெரிய புராணத்தைப் பற்றியும், ஏனைய நூற்களைப் பற்றியும் போதிய அளவு ஆராய்ச்சி நூற்கள் வெளிவந்துள்ளன. இஃதன்றி அதிகமாக நாவல்களும், சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. ஆனால் நமது கலைகளைப் பற்றி நல்ல நூல் எதுவும் வெளிவந்ததாக எனக்குத் தெரியவில்லை. நமது நாட்டில் கலைஞர்கள் மிகக் குறைவு. நமது மொழியில் கலை நூற்களைக் காண்பது மிக அரிதாய் இருக்கிறது. இதனால் நமது மக்களிடம் கலையுணர்ச்சி குன்றி வருகிறது; கலைகளைச் சுவைக்கும் தன்மை மறைந்து வருகிறது. தமிழன்னைக்குக் கலைச் செல்வங்கள் உண்டா என்று இன்று மேனாட்டறிஞர்கள் நம்மை வினவும் நிலையில் நாம் இருந்துவருகிறோம். நமது முன்னோர்கள் கலைத் தெய்வத்தை நோக்கி, அறுபத்து நான்னு கலைகளையும் எனக்குத் தா என்று இறைஞ்சினர். இன்று கலைமகளைப் பற்றியே நாம் மறந்துவிட்டோம். தமிழில் அறுபத்து நான்று கலைகள் இருந்தன என்பதே நம்மில் பலருக்கு தெரியாது. நமது நாடு உரிமை பெற்றபின்னர்கூட நாம் நமது கலைகளில் கருத்தைச் செலுத்தத் தவறிவிட்டோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே நமது நாட்டு மகாகவி பாரதியார், சென்றிடு வீரெட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்று நமக்குக் கட்டளையிட்டார். நமது முன்னோர்களால் கருவூலமாகக் கருதப்பெற்ற தமிழ்க் கலைகள் இன்றையத் தமிழ்மக்களுக்கு அறிமுகப் படுத்தப்படுவதே இந் நூலின் முக்கிய நோக்கம். இதில் தாமரையின் சிறப்பைக் கூறுவதோடு இலக்கிய கர்த்தாக்களைப்போல் கலைப் புலவர்களும் தாமரையின் அழகை எவ்வாறு ரசித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்ட முயன்றுள்ளேன். சமயங்களில் தாமரை, இலக்கியங்களில் தாமரை, கவிதையில் தாமரை, நாட்டியத்தில் தாமரை, சிற்பத்தில் தாமரை என்று பல தலைப்புகளில் தாமரையின் பெயரால் நமது கலைச் சிறப்பை விளக்கியுள்ளேன். இது ஒரு புது முயற்சி. அதோடு, சுமார் 25 ஆண்டு களுக்கு மேலாக, எழுதும் தொழிலை விட்டுப் பொருள் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த எனக்கு இதை முன்போல் சரளமான நடையில் எழுத முடியவில்லை. என்றாலும் மிகச் சிரமப்பட்டு எழுதி முடித்துள்ளேன். கலைகளைக் கசடறக் கற்றறிந்தவர்களே அதைப்பற்றி எழுத முடியும். ஆனால் இன்று கலைகளைக் கற்றறிந்த பேரறிஞர்களைத் தமிழகத்தில் காண்பதே அரிதாய்விட்டது. எனவே ஆலையில்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை என்ற பழமொழிப்படி, தமிழ்க் கலைகளைச் சிறிதளவே பயின்ற நான் எனது சிற்றறிவைக் கொண்டு இந்நூலைத் துணிந்து எழுதிமுடித்தேன். எனவே இந்நூலில் குற்றங்கள் பல இருக்கலாம். சில இடங்களில் சில விஷயங்களைத் தெளிவுபட விளக்கவேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் கூறப்பட்டிருக்க லாம். அதனை அறிஞர்கள் பொறுத்து, தமிழ்மக்களிடையே நமது கலை உணர்ச்சியை வளர்க்க வேண்டும் என்ற எனது நன்னோக்கத் திற்கு ஆதரவு நல்குவார்கள் என்று நம்புகிறேன். இந் நூல், சிங்கப்பூரில் இருந்துவெளிவரும் தமிழ் முரசு என்னும் சீரிய நாளிதழில் முதன்முதலாக என்னால் தொடர்ந்து எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே யாகும். அவைகளைச் சில மாற்றங்களுடன் தமிழர் பண்பாட்டில் தாமரை என்ற தலைப் புடன் நூல்வடிவமாக்கப் பெற்றிருக்கிறது. இதனை நூல்வடிவமாக்க மகிழ்வுடன் ஆதரவும் அனுமதியும் அளித்த தமிழ் முரசு ஆசிரிய ரும், எனது உழுவலன்பருமான தமிழவேள் உயர்திரு கோ. சாரங்க பாணி அவர்களுக்கும், தனது பல்வேறு வேலைகளுக்கிடையே இதை முழுவதும் படித்துப் பார்த்து அவசியமான திருத்தங்களைச் செய்யத் தூண்டி, நூல்வடிவமாகச் செய்ய ஊக்கமளித்த பாளையங் கோட்டைப் பேராசிரியர் திரு நா. thdkhkiy, v«.V.,vš.o., அவர்களுக்கும் எனது வணக்கம் உரித்தாகுக. இந் நூலை எழில்பெற வெளியிட்டுதவிய தமிழ்ப் புத்தகாலயத் தார்க்கு எனது நன்றி உரித்தாகுக. கலைக்கூடம் 61, பெருமாள் வடக்குரதவீதி சாத்தான்குளம் பாளையங்கோட்டை அ. இராகவன் திருநெல்வேலி - 2 21-6-64