நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 23 கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் ஆசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 23 ஆசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 56 + 144 = 200 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 125/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு வல்லுநர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரியவர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்விகளிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப் பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவ வேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற் கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக்குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல்களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார் களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர்களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களையெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடுவதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப்புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங் களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத்தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணா மூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகுகுரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டுகின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் என்னுந் இந்நூல் கைக்குறிப்பாக நாட்டார் அய்யாவின் மரபினர் பேரா. கோ. கணேசமூர்த்தி அவர்களிடம் இருந்தது. அந்நூல் முழுமையாக இல்லை. இதனை என் கெழுதகை நண்பரும், தொல்லியல் அறிஞருமான க. குழந்தைவேலன் அவர்கள் இந்நூல் செப்பமுடன் வருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தார். என்றும் அவருக்கு நன்றியுடையேன். முன்னுரை கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல் - குறள் 796 உறவுகளில் தலைசிறந்த உறவான நட்பை அளப்பதற்கு கேட்டை அளவு கோலாகக் கூறுவர் வள்ளுவர். அவர் கூற்றுப்படி கேடும் பயனுடையதே. நட்பை அளக்கப் பயன்பட்ட கேட்டைப் போல தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழகத்தைச் சூழ்ந்த ஒரு கேடே பயனாக இருந்துள்ளதை வரலாறு காட்டுகிறது. தமிழக வரலாற்றின் பொற்காலமாகக் கருதப்படும் கழகக்கால வீழ்ச்சிக்குப் பின்னர் நல்ல தமிழாட்சி , தமிழராட்சி நடைபெறவில்லை என்பதைத் தமிழக வரலாற்றை ஊன்றிக் கற்பார் நன்கறிவர். கழகக் காலத்திற்குப் பின் வரலாறு நெடுகிலும் தமிழும், தமிழரும், தமிழ்ப்பண்பாடும், தமிழ்நாடும் பையப்பையத் தன் தனித்தன்மையை - நீர்மையை இழந்து கொண்டே வந்துள்ளன. இவற்றுக்குக் கரணியாக இருந்தவர்களும் இருப்பவர்களும் நம்மை ஆண்டவர்களே. கழகக் காலத்திற்குப் பின் தமிழகத்தின் வட பகுதியைப் பல்லவர்களும், தென்பகுதியைப் பாண்டியர் களும் ஆண்டனர். பல்லவர்கள் வடவர், வடமொழி (பாகதம்) யாளர்; பாண்டியர் தென்னவர், தென் தமிழ் மொழியாளர். ஆனால் ஆட்சி அமைப்பில் நாடு, மொழி, இன நலனில் இருவருக்கும் வேறுபாடு எதுவும் காணப்படவில்லை. இருவருமே வடமொழிக்கும், வடவர்க்கும், வடக்குப் பண்பிற்கும் ஆதரவாகவே இருந்துள்ளனர். ஆட்சியில் அலுவலில், வழிபாட்டில் வடவர்க்கும் வடமொழிக்கும் வாழ்வளித்துள்ளனர் என்பதை அவர்கள் காலக் கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் பல்லவரையும் பாண்டியரையும் வென்று என்றுமில்லா நிலையில் தமிழகத்தை - பரந்த தமிழகமாக சோழர்கள் ஒரு குடைக்கீழ் கொண்டுவந்து பெருமை பெற்றனர். இவர்களும் தமிழ்மொழி, பண்பாடு, நாகரிகத்திற்கு ஆதரவு அளித்ததாக ஒரு சான்றும் கிடைக்க வில்லை. பல்லவ பாண்டியர்களினும் மேலாக வடமொழிக்குக் கல்விக் கூடங்கள் அமைத்துக் கற்பார்க்கும், கற்பிப்பார்க்கும் கொடையளித்தும் ஆயிரக்கணக்கில் வடவர்களை வலிந்து அழைத்து வந்து குடியேற்றி மனையும் நிலமும் ஊரும் அளித்தும் , வழிபாட்டுயுரிமை நல்கியும், அவர்களைத் தமது குலக்குருக்களாக ஏற்று வழிபட்டும் பெருமை கொண்டார்களே ஒழிய தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதாகச் சான்றில்லை. கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் தமிழ் அரசர்கள் எனக் கூறிக்கொண்ட சோழ, பாண்டிய மன்னர் களின் ஆட்சி முற்றிலும், மறைந்துவிட்டது. அக்காலம் தொடங்கி தமிழகம் முகமதிய, மராட்டிய, விசய நகர மன்னர்களது ஆட்சிக்கு அடிமைப்பட்டுப்போய்விட்டது. அதன் பின்னர் தமிழ் மன்னர்கள் யாருமே தலையெடுக்க வில்லை. பண்டைய தமிழ் மன்னர்கள் பெயரில் ஆங்காங்கே ஓரிருவர் தலைகாட்டினாலும் அவர்களும் பெயர் சொல்லும் அளவுக்கு முகாமையர்களல்லர். தமிழகத்தில் புகுந்த முற்றிலும் வேற்று மொழி இன மக்களான மராட்டிய, மகமதிய, விசயநகரர்களில் மராட்டியரும் விசய நகர அரசர்களும் வடமொழியையும், வடமொழியாளர்களையும் ஆதரித்ததோடல்லாது அவரவர் சார்பான இன மக்களின் குடியேற்ற நாடாக தமிழகம் ஆக்கிவிட்டனர். போதாக்குறைக்கு மராட்டியமும் தெலுங்கும் உள் நுழைக்கப்பட்டதை, அதனால் தமிழ் மக்கள் ஆட்சியால், மொழியால், மதத்தால் அயண்மை படுத்தப்பட்டு தங்களை யார் இன்னார் என இன அடையாளம் மறந்து சாதிகளின் பெயரால் அடையாளப் பட்டுப்போயினர். தமிழும் தமிழ்ப் பண்பாடும் நீர்த்துப் போயின. இத்தகைய சூழலில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வணிகத்திற்காக வந்த வெள்ளையர் அரசியல் வணிகத்திலும் ஈடுபட்டு நாட்டைத் தம்வயம் படுத்திக் கொண்டனர். எனவே தமிழகம் கி.பி. 6- ஆம் நூற்றாண்டு முதல் அரை அடிமை நாடாகவும் 13- ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் முழு அடிமை நாடாக மாற்றம் பெற்று என்றும் நீங்கா அடிமைத் தளையில் சிக்குண்டது. பல்வேறு இன அரசுகளின் வேட்டைக் காடாகி அவர் களது அகப்புறப் பகைச்சுழலில் சிக்கித் சிதறுண்டுபோன தமிழகத்தை வெள்ளையர் ஒன்றாக்கி தன் பேராளுமையின் கட்டுக்குள் அடிமைப் படுத்தி விட்டனர். வெள்ளையர் ஆட்சியின் கீழ் அடிமைக் குடி மக்களானது நமக்குப் பெருங்கேடுதான் என்றாலும் அக்கேட்டிலும் ஒரு நன்மை பிறந்துள்ளது. வணிகமும் சுரண்டலும் வெள்ளையர்களது நோக்கம் என்றாலும் தங்கள் தேவைக்காக நமக்குக் கல்வி அளிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது. அதனால் கல்விக் கூடங்களை ஏற்படுத்தி அனைவருக்குமான பொதுக் கல்வியை அளிக்கத் தொடங்கினர். வணிகக் கூட்டத் தோடு வந்த கிறித்தவ மத நிறுவனங்களும் தம் மதத்தைப் பரப்பக் கல்விக் கூடங்களை அமைத்து கல்வி அளித்தது1. அதன் பயனாய் பொதுக்கல்வி பெற்ற நம் மக்களிடையே தம்மைப் பற்றிய விழிப்புணர்வு அரும்பத் தொடங்கியது. ஆள வந்த வெள்ளையர்களுக்கு மிகத் தொன்மை வாய்ந்த நம் நாட்டின் கோயில்கள், கல்வெட்டுகள், மொழி இலக்கியங்கள் புதிதாகவும் புதிராகவும் இருந்தன. ஆதலால் நம்முடையதை நாம் மறந்து இன்னதென அறியாது புறத்திட்ட கல்வெட்டுக்களை, கலைகளை பிறநாட்டவர்களான அவர்கள் படித்தறியும் முயற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாகக் கல்வெட்டு, கலை முதலான வரலாற்றுச் சான்றுகள் வெளிவரத் தொடங்கின. ஆங்கிலேயரால் பெற்ற பொதுக் கல்வி அறிவு நமது மொழியையும், இலக்கியங்களையும் நம்மைத் தேடிப் படிக்கத் தூண்டியது. அவை நம்மை உணர்த்தி நமது தொன்மையை, பெருமையை வெளி உலகுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற துடிப்பை ஏற்படுத்தியது. இவ் வெளிப்பாடு மொழி, வரலாற்று அறிவாளர்களுக்கு அமுதக் கலயம் கிடைத்தது போலாயிற்று. இலக்கியம் படித்தவர்கள் வரலாற்றையும் வரலாற்றுச் சான்றுகளான கல்வெட்டுகளையும், வரலாறு படித்தவர்கள் இலக்கியங் களையும் படிப்பதும் ஆராய்வதும் இன்றியமை யாதன எனக் கண்டனர். ஒரு புத்துணர்வு, புத்தெழுச்சி தோன்றியது. மறைந்து கிடந்த தேசியத் தன்னுணர்வு கொழுந்து விடத் தொடங்கியது. கி.பி.18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து கல்வெட்டுகள் தொல்பொருட்கள் கண்டுபிடிக்க அவை களைப் பற்றிய விளக்கங்கள் வெளிக் கொணரப்பட்டன. கட்டுரைகளாக நூல்களாக உருப்பெற்றன. இதுவரை இலக்கியம் மட்டுமே தமிழரின் தொன்மைக்கும், முன்மைக்கும் சான்றெனக் கருதி இருந்த தமிழ்ப் பேராசியர் களும், அறிவாளர்களும் கல்வெட்டுகளைப் பற்றிய விவரக் கட்டுரைகளையும், விளக்கக் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தனர். அவை 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறந்த ஆய்வேடுகளாகத் திகழ்ந்த செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில் போன்ற இதழ்களில் வெளிவந்தன. தமிழறிஞர்களோடு பல்துறை அறிஞர்களும் இதில் ஆர்வம் செலுத்தினர். திரு.டி.ஏ. கோபிநாதராவ், க. சுப்பிரமணியம், திருவாரூர் சோமசுந்தர தேசிகர், மயிலை சீனிவெங்கடசாமி, தி.வை. சதாசிவபண்டாரத்தார். மா. இராசமாணிக்கனார், சுந்தரேச வாண்டையார், சி. கோவிந்தராசனார். ந.மு. வேங்கடசாமி நாட்டார், மு. இராவையங்கார், இரா. இராகவையங்கார் ஒளவை துரைசாமிப்பிள்ளை, கோவிந்தசாமிப்பிள்ளை, கோவிந்தராசன், தி. ந. ராமசந்திரன், கோவி. சுப்பிரமணியம் போன்ற பலர் குறிப்பிடத் தக்கவர்களாவர். இவர்கள் தவிர ஆங்கிலத்தில் எழுதியவர் பற்பலர். கல்வெட்டுகளும், தொல்பொருட்களும் பண்டைய இலக்கியக் கூற்றுக்களை மெய்ப்பிக்கும் மாறாச் சான்றுகள் எனக் கண்ட தமிழறிஞர்கள் இதன் மேல் ஆர்வம் செலுத்தினர். அக் கல்வெட்டுக்களைக் கற்றுத் தமது இலக்கிய உரைகளில் மேற்கோள்களாக, சான்றுகளாகக் காட்டி தம் கட்டுரைகளையும் உரைகளையும் செறிவூட்டினர். பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாத ஐயரின் பதிப்புகளிலும் இவற்றைக் காணலாம். கல்வெட்டுக்களைப் பல்கலைக் கழக, கல்லூரிப் பேராசிரியர்கள் மட்டுமின்றி நாட்டுப்புறப் புலவர் பெருமக்களும் அன்று பயன் படுத்திய சிறப்பையும் காணலாம். எடுத்துக் காட்டாகக் கொங்கு மண்டல சதகத்துக்கு உரை எழுதிய திரு. முத்துச்சாமிக் கோனார் தன் உரைக்குறிப்புகளில் பற்பல கல்வெட்டுகளைக் சான்று காட்டி எழுதியுள்ளதைக் கூறலாம். கல்லூரிகளின் பக்கம் செல்லாது செல்வந்தர்கள், பண்ணையார்களின் ஆதரவில் வாழ்ந்த நாட்டுபுறப் புலவரும் இதனை அறிந்து பயன் படுத்தினார் எனில் அன்று அக்கல்வெட்டிற்கு இருந்த சிறப்பைக் கூற வேண்டுவதில்லை. தமிழ், தமிழ்நாட்டு வரலாற்றுக்கு அடிப்படைச் சான்றுகளாக விளங்கும் இக்கல்வெட்டுக்களை தமிழ் இலக்கியம் படிப்பார் கட்டாயம் தெரிந்துக் கொள்வது இன்றியமையாதது. இலக்கியம் படிக்காத வரலாற்றுப் படிப்பும், வரலாற்றையும், வரலாற்றுக்குச் சான்றுகளான கல்வெட்டுக்களையும் படிக்காத இலக்கியப் படிப்பும் முழுமைபெறாது. இதனை நன்குணர்ந்த கல்வியாளர்கள் குறிப்பாக அன்றைய, தமிழ்மொழி அறிஞர் பெருமக்கள் தமிழ் இலக்கியப் படிப்புகளான புலவர், வித்வான் பண்டிதத் தேர்வுகளுக்குக் கல்வெட்டை ஒரு பாடமாக வைத்தனர். கல்வெட்டுகள் பாடமாக வைக்கப்பட்டமையால் அவை தொடர்பான பாடநூல்களும், உரை நூல்களும், வினாவிடை நூல்களும் எழுந்தன. அக்கால வழக்குப்படி பாட நூல்களை அரசாங்கமே தயாரிப்பதில்லை. பாடத் திட்டம் வகுத்து அதற்கு நூல் கோரப்படும். பலர் எழுதிய நூல்களில் தகுதியும் சிறப்பும் உடைய நூல்கள் பாட நூலாகத் தெரிவு செய்யப்படும். கல்வெட்டுப் பாடத் திற்கும் இதே முறை கடைபிடிக்கப்பட்டிருக்க வேண்டும். பாடத்திற்குரிய கல்வெட்டுகளைத் தெரிவு செய்து பாடநூல் தயாரிப்பில் பல தமிழ் அறிஞர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். அம் முயற்சியில் நாவலர் நாட்டாரையாவும் முயன்றிருக்கலாம் என்பதை நமக்குக் கிடைத்த அவரது கையெழுத்துப் படி ஒன்றால் உணரமுடிகிறது. அவர் கல்வெட்டுப் பாடத்திற்கான கல்வெட்டுகளைத் தெரிவுச் செய்து அவற்றிற்கு குறிப்புகளைத் தொகுத்துள்ளார். பாடத்திற்கு வேறு நூல் தேர்ந்ததெடுக்கப்பட்டதாலோ அல்லது இந்நூல் முற்றுப் பெறாமையாலோ அவரது கையெழுத்துப்படி அச்சேறாமல் நின்றுவிட்டது. கல்வித் துறையில், காலஞ்செல்லச் செல்ல அறிவுத் திறனுக்கு மதிப்பு குறைந்து வினாவிடைக்கான மதிப் பெண்களுக்கு மதிப்பு ஏறியது. கல்வி காசுதரும் பதவிக்காக என்ற நிலைமை ஏற்பட்டது. அதனால் மாந்தகுலத்திற்கு நலந்தருங்கல்வி பையப் பையக் குறைந்து மாந்தக் குலத்தைப் பண்படுத்தும் கல்வி கைவிடப்படும் நிலை ஏற்பட்டது. அதனால் அவரது முயற்சிக்கு மீண்டும் வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது. அவரது முயற்சி கைவிடப்பட்டு கையெழுத்துப் படியாய் திருத்தம் பெறாமலே கிடத்தப் பட்டுவிட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டுத் தமிழறிஞர்களின் படைப்புகளை எல்லாம் வெளிக்கொணரும் முயற்சியில் தமிழ்மண் பதிப்பகம் தன்னைத் தலைப்படுத்திக் கொண்டது. இதுவரை வெளிவந்து மீண்டும் வெளி வராததும், அச்சேறாததுமான தமிழ் வல்ல அறிஞர்களின் நூல்களை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு பல அரிய நூல்களையும் அறிஞர் நூல் களையும் வெளியிடத் தொடங்கியது. அதன் ஒரு முயற்சியாக நாவலர் நாட்டாரின் நூல்களை வெளிக் கொணரத் திட்டமிட்டு அவரது படைப்புகளை அவரது உறவின் முறையினரிடம் தேடித் தொகுத்தது. அத்தேடலில் நாட்டாரையா கைப்பட எழுதி சாசனங்கள் என்று தலைப்பிட்ட ஒரு கையெழுத்துச் சுவடியும் கிடைத்துள்ளது. அதனை ஒரு முழு நூலாக இருக்கலாம் என எண்ணி ஒரு தனி நூலாக வெளியிட கணினியில் அச்சுக் கோர்த்து ஒரு நுலாக்க அணியப் படுத்தியது. ஆனால் கையெழுத்துப்படி ஒரு முற்றுப் பெற்ற நூலாக இருக்கவில்லை. அதன் பிற்பகுதி கிடைக்கவில்லை; எழுதப்பட்ட குறிப்புகளும் முழுமைபெறவில்லை என்பது பின்னரே உணரப்பட்டது. எனினும் கொண்ட முயற்சி கைவிடப்படக் கூடாது என்ற கொள்கையாலும், நாட்டாரையாவின் பணிகளை முற்றும் தமிழகம் அறிய வேண்டும் என்ற எண்ணத்தாலும் அவரது நூல் வரிசையில் 23- ஆம் நூலாக இக் கல்வெட்டு (சாசனம்) நூலை வெளிக் கொணர்கிறது. இந்நூல் முற்றுப் பெறா நூல் என்றாலும் நாட்டாரையா ஒரு தமிழ் அறிஞர் மட்டுமல்ல ஒரு நல்ல ஆசிரியர் என்பதை நிலை நாட்ட இந்நூலும் ஒரு கருவியாக இருப்பதைக் காணலாம். ஒரு நல்ல ஆசிரியனுக்கு இலக்கணம், நாளும் நாளும் படித்தறிவது. அவ்விலக்கணத்திற்கு கேற்ப அவர்அன்றன்று வந்த புதியவற்றைப் படித்ததை இந்நூல் தொகுப்பு காட்டுகிறது. நாட்டாரையா காலத்தில் வெளிவந்த கல்வெட்டு நூல்கள் மிகச் சிலவே. அவற்றை எல்லாம் படிக்க முயன்றுள்ளார். அதனால்தான் தமது கல்வெட்டு நூல் தொகுப்பில் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகள் (S.I.I. Vols.) திருவாங்கூர் தொல்லியல் வரிசைகள் (T.A.S. Vols.) இந்தியக் கல்வெட்டுத் தொகுதிகள் (E.I.Vol. ) என அன்று வந்த அனைத்துத் தொகுப்புகளில் இருந்தும் கல்வெட்டுகளைத் தெரிவு செய்து இதில் சேர்த்துள்ளார். கல்வெட்டு வாசிப்பு இலக்கிய வாசிப்புப் போன்றதன்று. இலக்கிய வழக்கைவிட மக்கள் வழக்கு கல்வெட்டுகளில் மிகுதி. அதோடு வடசொற் பயன் பாட்டுக்கும் குறைவிருக்காது. அதனால் அவரது வாசிப்பில் அவரது முயற்சியையும் மீறி சில பிழைகள் ஏற்பட்டுள்ளன. பொருள் காண்பதிலும் பல இடர் பாடுகள் நேர்ந்துள்ளன; வாசிப்பதிலும் சொற்பொருள் காண்பதிலும் பிழை வர நேர்ந்துள்ளது. இது கல்வெட்டு களின் தன்மையால் ஏற்பட்ட குறையே அன்றி, நாட்டார் ஐயாவின் குறையாகக் கொள்ள இயலாது. அத்துறை அறிஞர்களின் பதிப்பிலும் வாசிப்புப் பிழையும், பொருள் காண் பிழையும் ஏற்பட வாய்ப்புள்ள பொழுது இது ஒன்றும் குறையன்று; அவரது முயற்சி பெரிது. எனவே இன்று கல்வெட்டில் அறியப்பட்ட தெளிவுக் கேற்ப குறைகாணும் இடங்களுக்கெல்லாம் சரியான விளக்கக் குறிப்பு எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பு எழுதப்படாமலும், காணப்படாமலும் போன கல்வெட்டுகளுக்குச் சிறு சிறு குறிப்பு எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. நிறைவு பெறாத இந்நூலை வெளியிடுவதால் பயன் என்ன? என வினா எழுதல் இயற்கை. முன்னோர் மொழியை பொன்னே போல் போற்றுவோம் என்பதற் காகவும், தமிழக வரலாற்றுக்கும் வாழ்வியல் எழுச்சிக்கும் பயன்படும் கல்வெட்டுகளை தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்று எடுத்துக் கொண்ட ஐயாவின் முயற்சி பிற்காலத்திலாவது வெற்றி பெற வேண்டும் என்பதற் காகவும் இஃது ஓர் எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்நூல் வெளிக் கொணரப்படுகிறது. கல்வெட்டுகளின் பயனை, அருமையை இன்றிமை யாமையை இன்று கற்றாரும் பொது மக்களும் உணரவில்லை. அதனை உணரவேண்டும் என்ற உணர்வும் இன்றில்லை. என்றாலும் இந்நூல்வழி என்றேனும் உணரப்படவேண்டும் என்பதற்காகக் கல்வெட்டும் பயனும் என்னும் தலைப்பை இந்நூலுக்கு முகமையாகச் சேர்த்துள்ளோம். இத்தலைப்பு ஓர் ஆய்வன்று. ஆய்வுக்குரிய கருத்துகள் - செய்திகளாகக் கொடுக்கப் பட்டுள்ளன. இக்கருத்துகள் ஆய்வுக் கட்டுக் கோப்புடன் விரிவாக வெளிவர வேண்டியன. தமிழ்மண் வழியாக அவை விரைவில் வெளிப்படுத்தப்படும். நாட்டரையா 20 கல்வெட்டுகளைத் தொகுத்து குறிப்பு எழுதியுள்ளார். அவற்றுள் இறுதி ஐந்தின் குறிப்புகள் கிடைக்கவில்லை. இக்கல்வெட்டுக்களைச் சரிபார்ப்பதற்காக இதன் மூலங்களைத் தேடுவதில் பெருஞ் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இக்கல்வெட்டுகள் எவற்றில் இருந்து தொகுக்கப்பட்டன என்ற குறிப்பில்லை. தாம் தொகுத்த கல்வெட்டுக்களுக்கு ஐயா தாமே ஒரு தலைப்பைக் கொடுத்தமையாலும், அக்கல்வெட்டுகள் எந்த மாவட்டத்தில், வட்டத்தில் அடங்கியுள்ளன என்ற குறிப்பும் எழுதப் படாமையாலும் அக்கல்வெட்டுகள் பதிப்பிடம் தேடிக் குறிப்பதில் ஒரு கிழமைக்கு மேல் ஆகிவிட்டது. அவற்றை ஒப்பிட்டு திருத்தம் செய்வதிலும் சில நாட்களைச் செலவிட நேர்ந்துவிட்டது. இப்பதிப்பில் அக்கல்வெட்டுகளின் இருப்பிடம், அவை வெளியிடப்பட்ட நூல் விவரம் போன்றவை விளக்கக்குறிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தனித்தமிழ் இயக்கம் பரவலாக ஏற்படாமையால் ஐயாவுடைய இந்நூல் தலைப்பிலும், குறிப்புகளிலும் நிறைய வடசொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இது காலத்தின் பிழை. கல்வெட்டு வாசிப்பு அன்று வெகுவாக இல்லாமையாலும் கல்வெட்டுகளில் மக்கள் வழக்கு மிகுதியாகக் காணப்படுவதாலும், அவ்வழக்குச் சொற்களில் பல இலக்கியங்களில் ஆளப்படாமை யாலும், கல்வெட்டு குறிப்புகளில் பொருத்தமான பொருள் களைத் தருவதில் நாட்டாருக்குச் சிக்கல் இருந்துள்ளது. அவற்றுக்கெல்லாம் ஒவ்வொரு கல்வெட்டின் கீழும் விளக்கக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நூல் அச்சாக்கம் செய்யப்பட்டு வெளிவரும் நிலையில் இந்நூற்பணியை மேற்கொண்டதனால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நாள்களில் முடித்துக் கொடுக்க வேண்டி நேர்ந்தது. என்னென்ன சொல்லப்பட வேண்டும் என எண்ணி இருந்தேனோ அவற்றின் சிறுபகுதியைக் கூட கொண்டு வர இயலவில்லை. விரைவுப் பணியில் பிழைகளை முற்றும் தவிர்க்க இயலாமற் போய்விட்டது. தமிழ்த்தாயின் அருள் இருக்குமாயின் இதன் மறுபதிப்பில் அவை விரிவாகவும் நிறைவாகவும் வெளிவரும் என்ற நம்பிக்கையுடன் நிறைவு செய்கிறேன். இதனைப் பதிப்பிட வாய்ப்பளித்த தமிழ்மண் பதிப்பகத்தார்க்கு என்றும் நன்றியன். 21.12.2007 க.குழந்தைவேலன் தமிழ்ச்சோலை செம்பியன் மாதேவி (அஞ்சல்) திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 501. பேசி : 9443531795 கல்வெட்டுகளும் அதன் பயன்களும் வரலாறு மக்கள் குமுகத்தை வாழ வைக்கும் உயிர்ச்சாரம்; வளர வைக்கும் உந்து ஆற்றல். உலகில் நிலைபேறுடைய ஒவ்வோர் இனத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. வரலாறு இல்லாத எந்த ஒரு தொல் இனமும் எழுச்சியும் உயர்ச்சியும் அடைதல் அரிது. வரலாறு நேற்றைய மக்களின் வாழ்க்கைப் பதிவுகள்; இன்றைய மக்களின் வழிகாட்டி. எனவே ஒரு நாட்டின், இனத்தின் மொழியின் வரலாறு மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் என்றென்றைக்கும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மேலை நாடுகளுக்கு முறையாக எழுதப்பட்ட வரலாறுகள் உண்டு. அத்தகையதொரு வரலாறு நமக்கில்லை என்றொரு பொதுவான குறைபாடு நம்மவரிடையே உண்டு. மேலை நாடுகளுக்கு முறையான வரலாறு உண்டு எனினும் தொன்று தொட்டு வரும் தொல் வரலாறுகள் குறைவு. அங்கு அண்மைக்கால வரலாறுகளே நிறைவாகவும் விரிவாகவும் உள்ளன. நம் நாட்டுக்கு (தமிழ் நாட்டுக்கு) முறையாக எழுதப்பட்ட வரலாறு இல்லை என்பது ஒரு குறையே.எனினும் தொன்று தொட்டு இன்றுவரை ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பரந்துபட்ட கால வரலாற்றை வரைவதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் தொடர்ச்சியாக நமக்குக் கிடைக்கின்றன. இது நமக்குப் பெருமை தருவதாகும். வரலாற்றை வகுப்பதற்குரிய அடிப்படைச் சான்று களான இலக்கிய இலக்கணங்கள், ஆவணங்கள் (ஓலை, தோல், தாள் முதலியன) அயல்நாட்டார் குறிப்புகள், தொல் பொருட்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை எல்லா நாடுகளுக்கும் பொதுவாகக் கிடைத்துள்ளன. என்றாலும் தொன்மையாகவும், தொடர்ந்தும், மிகுதியாகவும் கிடைப்பது நம் நாட்டில் தான் என்றால் அது மிகையாகாது. இவை அனைத்தும் நமது நீண்ட நெடிய வாழ்வின் வளமையையும், தொன்மையையும் காட்டும் வரலாற்றுச் செல்வங்கள் என்பதில் ஐயமில்லை. வரலாற்றுக்குரிய மூலங்களில் நமது இலக்கிய இலக்கணங்கள் வளமானவை, தொன்மையானவை என்றாலும் இவற்றில் உள்ள சான்றுகள் அனைத்தும் நமது நீண்ட நெடிய பண்பாட்டை, வரலாற்றை மெய்ப்பிக்கப் போதுமானவை அன்று. இலக்கிய இலக்கணங்கள் அவ்வக்கால மக்களின் வாழ்வியல் நிகழ்வின் பதிவுகள், வாழ்க்கைப் பட்டாங்குகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இவை வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளது உள்ளவாறே பதிவு செய்யும் பதிவேடுகள் அன்று. அப்படிப் பதிவு செய்தால் அவை இலக்கியங்களும் ஆகா. இவற்றில் கற்பனை களுக்கும், கருதுகோள்களுக்கும் நிறைய இடமுண்டு. ஆதலால் நடந்தனவற்றை நடந்தவாறே பதிவு செய்ய இயலாது. இவற்றினூடே இலைமறைகாயாய் வரலாறு பொதிந்து கிடக்கும் அவ்வளவே. நமது இலக்கியங்கள் காலப் பழமையன. ஆதலால் பல்வேறு மக்களால் பல்வேறு காலங்களில் படியெடுத்துப் போற்றப்பட்டவை. படியெடுப்பவர் கவனக் குறைவால் பிழைகள், மாறுபாடுகள் தோன்றவும், உந்துதலால் தமது கருத்துக்களை இடைச் செருகலாகச் செருகவும் இடமுண்டு. அதனால் இலக்கியங்களில் பாடவேறுபாடு களும், இடைச்செருகல்களும் உண்மையை மாற்றிவிடக் கூடும். இதற்கு எடுத்துக்காட்டாக அண்ணாமலை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயணப் பதிப்பைக் கூறலாம். அப்பதிப்பில் பாடல்களின் அளவுக்கு இணையாகப் பாட வேறுபாடுகள் காட்டப் பட்டுள்ளன. பாடல்களின் இடையிடையே ஐயத்திற் குரிய பற்பல பாடல்களும் சுட்டப்பட்டுள்ளன. எனவே, இலக்கியங்கள் வாழ்க்கையின் பதிவு என்றாலும், வரலாற்றுக்குரிய சான்றுகளை உடையன என்றாலும் முற்றிலும் நம்பகத் தன்மை உடையன அல்ல. இலக்கியங்கள் வரலாற்றை வரைய எழுந்தனவல்ல. எனவே தமிழகம் வரலாற்றுப் போக்கில் வாழ்ந்ததையும் வீழ்ந்ததையும் அறியப் போதுமான சான்றுகள் அவற்றில் முழுமையாகக் கிடைப்பதரிது. மேலும் இலக்கியங் களுக்கென்று சில மரபுகள், வரையறைகள் உண்டு. இலக்கியங்களை இலக்கணங்கள் நெறிப்படுத்துகின்றன. இலக்கியம் கண்டுதான் இலக்கணம் எழுதப்படுகிறது என்றாலும் இலக்கணங்கள் தோன்றிய பின்னர் இலக்கிய வெள்ளங்களுக்கு இலக்கணங்கள் கரைகளாக நின்று நெறிப்படுத்துகின்றன. அதனால் பின்னோர் வேண்டும் மாறுபாடுகளை - வளர்ச்சியை - விளக்க வழி நூல்களும், சார்பு நூல்களும் தோன்றினாலும் முன்னோர் நூல்களின் முடிபுகளை ஏற்று அதன் வழி செல்ல வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுவிடுகிறது. அதனால் வரலாற்று மாற்றங்களை - உள்ளவாறே ஏற்று வெளிப் படுத்த இலக்கியங்களுக்கு வாய்ப்பில்லாமற் போய்விடு கின்றது. அதனால் இடைச்செருகல்களுக்கு இடமளிக்காது, காலத்தின் கண்ணாடியாய் விளங்கும் நம்பத்தகுந்த சான்றுகளும் வரலாற்று வரைவுகளும் நமக்குத் தேவை. அத்தகைய ஒரு சான்றாக இருப்பது கல்வெட்டுகளே. தமிழக வரலாற்றை மீட்டெடுப்பதற்கும் மீள் உருவாக்கம் செய்வதற்கும் பெரும்பயனாக இருப்பவை கல்வெட்டுக்களேயாகும். இதுவே நமக்குரிய சான்று களில் முதன்மையானதும் முகாமையானதுமாகும். அதற்கேற்றாற்போல் உலகிலேயே மிகுதியான கல்வெட்டுகள் கிடைக்கும் நாடாகத் தமிழ்நாடு விளங்கு கின்றது. வரலாற்றை மட்டுமல்லாது தமிழரின் தொன்மை, மொழி, இனம், பண்பாடு, நாகரிகம், கலைகள் என அதன் பண்முகச் சிறப்பையும் அறியப் பயன்படுவன கல்வெட்டுகளே. நமது இலக்கியக் கூற்றுகள் கல்வெட்டுகளால் மெய்ப்பிக்கப் படுகின்றன. கல்வெட்டுகளின் நோக்கம் வரலாற்றைக் கூறுவது அன்று. கோயில்களுக்கும், பிராமணர்களுக்கும் கொடுக்கப் படும் கொடைகள், கோயிலும் கோயில்களைச் சார்ந்தாரும் செய்துக்கொள்ளும் இசைவுகள் நில விற்பனை போன்ற வற்றைக் கூற எழுந்தவையே. அக் கொடைகளையும், நிலம், பொருள் பரிமாற்றங்களையும் கூறுவதற்குரிய அடிப்படைக் கூறுகளான கொடை கொடுக்கும் அரசன் அல்லது கொடை கொடுக்கப்படும் காலத்தில் உள்ள அரசன், அவனது பெருமைகள், கொடைப் பொருள், கொடை கொடுப்பவன், பெறுபவன், கொடைப் பொருள்களின் அமைவிடம், அதன் தன்மை, அளவு, கொடை தொடர்பான நெறிமுறைகள், அப்பணியில் பங்கு கொண்டோர், அதன் காப்பு என்பன போன்ற பல்வகைச் செய்திகளைக் கூற வேண்டி இருப்பதால் அவற்றின் வழி நமது வரலாறு, பண்பாடு, மொழி, குமுகம் போன்றவற்றைப் பற்றிய செய்திகள் கால, இடமுறை களோடு நமக்குக் கிடைக்கின்றன. இக் கல்வெட்டுக் களைக் கூர்த்த புலனோடு நோக்கினால் தமிழகம் பெற்ற பெருமைகள், உற்ற இடுக்கண்கள், அடைந்த எழுச்சி, வீழ்ச்சிகள், இன்றைய நமது நிலைக்கான காரணங்கள் முதலான அனைத்தையும் உணரலாம். நமது இலக்கியங்கள் ஒரு மாக்கடல் என்றால் கல்வெட்டுகள் மற்றொரு மாக்கடல். ஒன்றின்றி மற்றொன்றை அளக்க இயலாது. இரண்டும் இன்றி வலுவான, நிலையானத் தமிழகத்தைக் கட்டி எழுப்ப முடியாது. மாக்கடல்கள் போன்ற அளவிறந்த இலக்கியங் களையும் கல்வெட்டுக்களையும் வைத்துக் கொண்டு நமக்கு ஒரு வரலாறு இல்லை என்பது கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு ஏங்குவது போன்றது. கல்வெட்டுக்களைப் பற்றிப் பேசவும், விளக்கவும் இவ்விடம் போதுமானதன்று. ஏற்ற நேரமும் அன்று. கல்வெட்டுக்களால் நாம் அடையக் கூடிய பயன்களில் சிலவற்றை இங்கே சுட்டின் அது எதிர்காலத் தமிழகத் திற்கு வழிகாட்டியாக இருக்கும். ஆதலால் சிலவற்றை எடுத்துக் காட்டுவது நலந் தரும். எனக் கருதி சில எடுத்துச் காட்டுகள் காட்டப்படு கின்றன. இவ்வெடுத்துக் காட்டுகள் ஒரு பெரும் மாக்கடல் மணலின் ஒரு கைப்பிடியளவே. தமிழ் செம்மொழி. இது செம்மொழியாக இருந்தும் நம்மால் அதனை அம்பலம் ஏற்ற முடியவில்லை. ஏன்? இலக்கியங்களைச் சொன்னால் எடுபடவில்லை. ஆதலால் எல்லோரும் ஏற்கத் தக்க சான்றுகள் நமக்குத் தேவை . கல்மேல் எழுத்துகள் நம்மைக் கைவிடவில்லை. நமது தொன்மையை, நிலை நாட்டக் கல்வெட்டுகள் முன்னிற்கின்றன. தமிழகத்தில் மிகத் தொன்மையான கல்வெட்டுகள் எனக் கருதப்பட்டவை சமணத் துறவியர் தங்கிய கல்முழைக் (குகை) கல்வெட்டுகளே. இவற்றை ஆய்வு செய்த கல்வெட்டாய்வாளர்களும், இதனைச் சிறப்பாக ஆய்வு செய்த திரு. ஐராவதம் மகாதேவன் போன்றோரும் இக் கல்வெட்டுகளின் காலத்தை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை எடுத்துச் சென்றனர். அதற்குமுன் எடுத்துச் செல்ல அவர்களது ஆய்வை விட மனம் இடந்தரவில்லை. அவர்களுக்கு முந்தைய ஆய்வாளர்கள் அசோகனைப் பற்றிய உயர்வான கருத்தை அவர்கள் மனத்தில் ஏற்றி வைத்திருந்தமையே இதற்குக் காரணமாகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகம் தவிர்த்த இந்தியா முழுவதும் பரவலாகக் கிடைத்தனவும், பெரியன வாகக் கிடைத்துதனவும் மவுர்ய அசோகனது கல்வெட்டு களேயாகும். தமிழகத்தில் கிடைத்த மாங்குளம் கல்வெட்டும், மற்றும் சிலவும் கருத்தாலும் எழுத்தாலும் முன்னதாக இருக்கின்றன. ஆயினும் எழுத்தமைதி போன்றவற்றைக் காரணம் காட்டி அவற்றை ஏற்க மறுத்தனர். அசோகனது கல்வெட்டுகளே அதற்கும் அவர்கள் கண்முன் முன்னின்றன. அசோகனுக்கு எழுத்தைக் கொடுத்தவர்களே தமிழர்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இந்திய எழுத்துகளின் தோற்றம் பற்றிய கருத்துக்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக மாற்றம் பெற்று வந்துள்ளன. தொடக்கத்தில் இந்தியாவில் காணப்படும் எழுத்துகள் இந்தியாவுக்கு வெளியில் தோன்றியவை என்ற கருத்து நிலவியது. புதிய புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப் படப்பட இந்தியாவில் வழங்கிய தொன்மையான எழுத்துகள் இந்தியாவில் தோன்றியது என்ற கருத்துக்கு வலிவு ஏற்பட்டது. தெற்காகப் பார்க்க வேண்டிய இந்திய வரலாற்றை வடக்காகப் பார்த்தே பழக்கப்பட்டவர்களுக்கு வடக்கில் இருந்து விலக மனமில்லாமையால் முதன்முதலாகவும் பரவலாகவும் காணப்பட்ட அசோகனது கல்வெட்டுக்களைக் கணக்கில் கொண்டு இவ்வெழுத்துக்களை அசோகன்தான் தோற்றுவித்தான் என அடித்துக் கூறியவர்களும் உண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க முதல் தமிழகத்திலும் தொன்மையான எழுத்துப் பொறிப்புகள் கிடைக்கத் தொடங்கின. அவற்றில் அசோகன் கல்வெட்டில் காணப்பட்ட எழுத்துகளோடு காணப்படாத, தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துக்களும் இருந்தன. அதனால் தமிழகத்தில் காணப்பட்ட தொல் எழுத்துகளை அசோகனது பிராமி எழுத்து எனக் கூற முடியவில்லை. தமிழ் எழுத்துகள் எனச் சொல்லவும் மனம் வரவில்லை. அதனால் அசோகன் பிராமி என அசோகனை அடை கொடுத்தே பெயரிட்டனர். எவ்வளவோ மாற்றங்கள் வந்த பின்னரும் அவர்கள் அப்பெயரை விட்டபாடில்லை. இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளைச் சீர்தூக்கிப் பார்க்கின் தமிழ் எழுத்துக்களே இந்திய எழுத்துகளின் தாய் என்பதை வெள்ளி மலை அளவு துலக்கமாகக் காண்பர். இந்திய எழுத்துகளின் தாய் தமிழே என்பதை நிலை நாட்டப் போதுமான சான்றுகளில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே சுட்டுவது தமிழ் ஆய்வாளர்கள் இதன் பக்கம் தங்கள் ஆய்வைத் திருப்ப வாய்ப்புண்டு. 1. வடக்கில், அசோகன் காலத்திற்குப் பின்னரே எழுத்துப் பொறிப்புகள் கிடைக்கின்றன. தமிழகத்தில் அசோகனது காலத்துக்கு முன்பிருந்தே எழுத்துப் பொறிப்புகள் கிடைக்கின்றன. 2. தமிழகத்திற்கு (இன்றைய ஆந்திர நாட்டின் தென்பகுதி உட்பட - அமராவதிக்கு அப்பால் ) வடக்கில் அசோகன் கல்வெட்டைத் தவிர வேறு எழுத்துச் சான்றுகள் இல்லை. அசோகனால் மட்டுமே முதன் முதலாக எழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவ்வெழுத்துப் பயன்பாடும் அசோகனது கொள்கை களை அறிவிக்கும் அறையோலை( Proclamition) வெளியீட்டு நோக்கத்திற்காக வலிந்து புரியது புனைதலாக வெட்டப் பட்டனவே தவிர இயல்பான தோன்றியதல்ல அசோகனுக்குப் பின்னரும் வெகுகாலம் பொதுமக்கள் பயன்பாட்டில் அங்கு எழுத்துகள் வல்லை. 3.தமிழகத்தில் அரசர்களால் பயன்படுத்தப்பட்டதை விட பொதுமக்களால் பயன்படுத்தப் பட்டதே மிகுதி. சமணர்களது உறைவிடங்களில், பொதுமக்கள் அளித்த கொடைகளைக் குறிக்கும் கொடைப் பொறிப்புகள் பரவலாக கிடைத்துள்ளன. அதைவிட பொதுமக்கள் பயன்பாட்டில் எழுத்துகள் மிகுதியாகப் பயன்பட்டதை தமிழகத்து அகழ்வாய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. கழக இலக்கியங்களில் குறிப்பிடும் பெயர் பெற்ற ஊர்கள், துறைமுகங்கள் என எங்கு தோண்டினாலும் ஏராளமான எழுத்துப் பொறித்த மட்கல ஓடுகள் கிடைக்கின்றன. இவை அணைத்தும் அசோகன் கல்வெட்டைப் போல அரசனாலே, அதிகாரிகளாலோ பயன்படுத்தப் பட்டனபல்ல. ஊர்ப்புற பொதுமக்கள் பயன் படுத்தியவை. 4. தமிழகத்திற்கு வடக்கே இருந்த மக்கள் எழுத்தைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் இல்லை. 5. தமிழ் எழுத்துகள் எண்ணிக்கையில் குறைந்தவை. எளிமையானவை. எளிமையான தமிழ் எழுத்துக்களைக் கொண்டு சிக்கலான அதிக எண்ணிக்கை எழுத்துகள் உருவாவதே இயற்கை. அசோகன் காலத்தில் தமிழ் எழுத்துகளோடு புது எழுத்துகள் பல உருவானதும், காலஞ் செல்லச் செல்ல சமசுகிருதப் பயன்பாட்டுத் தேவைக்கேற்ப புது எழுத்துகளும் கூட்டெழுத்துகளும் உருவாக்கப் பட்டுள்ளதும் எளிமையில் இருந்து பெருமைக்கு எதற்கில் இருந்து வடக்கிற்குச் சென்றுள்ளதும் வெளிப்படை. கல்வெட்டு எழுத்து வளர்ச்சியும், பெருக்கமும் பரவலும் இதனை வலியுறுத்தும். 6. எல்லாவற்றினும் மேலாக அண்மைக் காலத்தில் . அசோகன் காலத்திற்கு முற்பட்ட நடுகற்கள் தமிழகத்தின் தென்பகுதியில் கிடைத்திருப்பதும் அவை வட மொழிகள் கலவாத தனித் தமிழில் எழுதப் பட்டிருப்பதும் நமது தமிழின் தொன்மையும், செம்மையும் காட்டப் போது மானவை. எல்லாவற்றினும் மேலாக எழுத்துப் பொறிக் கப்பட்ட புதிய கற்காலக் கருவி கிடைத்திருப்பதும் சிந்துச் சமவெளி எழுத்துப் பொறிப்புகள், தனித்தும் தொல் தமிழ் எழுத்துகளுடன் கலந்தும் கிடைத்திருப்பதும். கி.மு. 5-6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழ் நாட்டில் எழுத்துத் தோன்றியதும், தமிழ் மக்கள் பரவலாக அனைவரும் எழுத்தறிவுடையராய் இருந்ததும் அறிஞர்கள் ஒப்புக் கொண்ட ஒன்று. எனவே தமிழ் நாட்டில் தோற்று விக்கப்பட்ட மிகத் தொன்மையான எழுத்துக்களில் இருந்தே இன்றைய இந்திய இலங்கை எழுத்துகள் உருப்பெற்றுள்ளமையால் தமிழ் எழுத்துகளே இந்திய எழுத்துகளின் முதல் தாய் என்பதும் தமிழ் ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து மொழியாய் இலக்கிய மொழியாய் இருந்துள்ளது என்பதும் வெளிப்படை. கழக, இலக்கியங்களின் காலத்தை வரையறுப்பதிலும் தமிழின் தொன்மையை நிலைநாட்டுவதிலும் கல்வெட்டின் பங்கு அளப்பரியது. தொல்காப்பியம் கடைக் கழகக் காலத்திற்கு ( கடைச் சங்க காலம்) முந்தையது என்பது பலரும் ஒப்ப முடிந்த முடிபு. கழகக் காலத்தை இலக்கியங்களைக் கொண்டு கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கால வரையறுத்தவர் பலர். 5 ஆம் நூற்றாண்டு எனச் சொன்னவர்களும் உண்டு. அதனால் தொல்காப்பியத்தை கி.மு. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன் கொண்டு செல்ல பலர் தயங்கினர். அண்மைக் காலத்துக் கல்வெட்டுகளின் வழி கழகக் காலத்தை கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கும், தொல்காப்பியத்தைக் கி.மு. ஐந்து ஆறாம் நூற்றாண்டுக்கும் மறுப்புகளை உடைத்துக் கொண்டு எடுத்துச் செல்ல முடிகிறது. அதற்காக ஏரண நோக்கில் ஒரு சிறு எடுத்துக்காட்டை இங்குக் காணலாம். அசோக மன்னன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புத்த மதக் கருத்துகளையும், அறங்களையும் தன் நாட்டிலும் தன் நாட்டிற்கு அப்பாலுள்ள நாடுகளிலும் பரப்ப வேண்டுமென்று தன் நாட்டு எல்லை ஓரங்களில் கற்களில் பொறித்து வைத்தான். வடக்கு ஆந்திரப் பகுதியில் உள்ள அவனது தென் எல்லைக் கல்வெட்டு “என்னுடைய நாட்டிலும், எனது நாட்டிற்கு அப்பாலுள்ள சேர சோழ பாண்டிய, அதியமான் ( சதியபுதோ) நாடுகளிலும் மக்களுக்கும் விலங்குகளுக்கும் பண்டுவம் நல்க வேண்டும் என்பது அதன் கருத்து. சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி முறையான வரலாறு இல்லை என்றாலும் அவர்கள் மூவரும் தொல்காப்பியம் முதலாக கடைக்கழக இலக்கியங்கள் ஈறாக பரக்கப் பேசப்பட்டவர்கள். அவர்களது நாடுகளும் குடிகளும் கூட மிகுதியாகப் பேசப்பட்டன. கழக இலக்கியங்களில் அதியமான் என்ற அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றிய பாடல்களோ விரல் விட்டு எண்ணத்தக்க குறுகிய எண்ணிக்கை கொண்டவை. அவன் குடியும் பரக்கப் பேசப்படவில்லை. அவன் குடியில் உள்ளோராய் அக்காலத்துப் பேசப்பட்டவன் அவன் மகன் பொருட்டெழனி மட்டுமே.இவர்கள் இருவருக்கு முன்னரும் பின்னரும் (8, 13ஆம் நூற்றாண்டுகளைத் தவிர ) பெரிதாகப் பேசப்பட்ட அதியர் எவருமில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அதியமான் நெடுமான் அஞ்சியைத் தவிர அதியர் குடியில் அதிகம் பேசப் பட்டவர் அறியப்பட்டவர்கள் எவரும் இலர். அதியமான் நெடுமான் அஞ்சிக்கு முன்னும் பின்னும் அதியர் குடியில் பேசப்படத்தக்கவர் யாரு இல்லாத பொழுது அசோகன் தன் நாட்டிற்கு அப்பால் தமிழ் மண்ணில் உள்ள அதியர் குடியைப் பேசினால் யாரைப் பற்றி பேசி இருப்பான். உலகம் போற்றும் அதியமான் அஞ்சியைத் தவிர வேறு யாரையும் பேசி இரான். எனவே அசோகன் காலத்தில் இருந்தவனும் அசோகன் கல்வெட்டில் குறிக்கத் தக்க பேருடையவனும் அதியமான் நெடுமான் அஞ்சி மட்டுமே. அதியமான் நெடுமான் அஞ்சியின் கல்வெட்டான சண்பைக் கல்வெட்டும் அதியரை அசோகன் கல்வெட்டில் விளிப்பது போல சதியபுதோ என்றே அழைக்கிறது. அதற்கு முன்னும் பின்னும் இச் சொல்லாட்சி எங்கும் காணப்படவில்லை. எனவே அதியனும் அசோகனும் சமகாலத்தவர் என்பதில் ஐயமில்லை. அதியன் அசோகன் காலத்தவன் ஆதலால் அதியனை வென்ற பதிற்றுப் பத்துப் பெருஞ்சேரல் இரும்பொறையும் அசோகன் காலத்தவன் ஆவான். பெருஞ்சேரல் இரும்பொறை முதலான மூன்று சேர அரசர்களைக் குறிக்கும் புகளூர் அந்நாட்டார் மலைக் கல்வெட்டும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். ஆதலால் கடைச் சங்கக் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டி எல்லையில் நிலவியதாகும். கடைக் கழகக் காலத்துக்கு முந்தைய தொல்காப்பியமும் கடைக் கழகக் காலமான கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பல நூற்றாண்டுகளுக்கு முந்தையதாகும். புகளூர்க் கல்வெட்டையும், சண்பைக் கல்வெட்டையும் எழுத்தமைதி காட்டி மறுத்துக் காலத்தைப் பின் தள்ளிக் கூறுகின்றனர். மறுப்பது பொருந்தாது. அன்று முறை யாகப் மர்த்தப்பட்ட பயிற்சி பெற்ற கல்தச்சர்களால் முறையாக கல்வெட்டுகள் வெட்டப் படவில்லை. எனவே நாட்டுப்புறத்தான் எழுதியதில் எழுத்தமைதி காண்பது பொருத்தமாக இருக்காது. இக் கடைக் கழகக் காலத்திற்கு முந்தையது தொல்காப்பியம் என்றால் தொல்காப்பியத் திற்கு முந்தைய இலக்கியங்கள் அவ்விலக்கியங்களை எழுத அவர்கள் பெற்ற மொழியறிவைத் தேடிய காலம் என எத்துணை நூற்றாண்டுகள் பழமையானதாகத் தமிழ் மொழியின் தோற்றமும் வளர்ச்சியும் இருந்திருத்தல் வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க. இஃது ஒரு கல்வெட்டை மட்டும் கொண்டு கழகக் காலப் பழமையை கணக்கிட்டு முடிவு செய்திட வேண்டும் என்பதற்காக காட்டப்படவில்லை. காலக் கணிப்பிற்கு ஒவ்வொரு கல்வெட்டும் தரும் கருத்தாழத்தைக் காட்ட ஓர் எடுத்துக் காட்டாகவே இது இங்குச் சுட்டப்பட்டது. தமிழ் இலக்கணத் தெளிவுக்குக் கல்வெட்டு அறிவு தேவை தமிழ் எழுத்துகளின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் நமது இலக்கியங்களில் காண இயலாது. இலக்கியங்கள் நெடுங்காலமாக வழக்கில் இருந்தாலும் அவை அழியக் கூடிய ஓலைகளில் எழுதியமையால் காலந்தோறும் படி எடுத்துப் போற்றப்பட வேண்டியதாய் இருந்தன. அதனால் எழுத்துகள் எழுதிய காலத்து வடிவில் இல்லாமல் படி எடுத்த காலத்து உருவ அமைதியில் இருக்கும். பழைய படிகள் பயனின்மையால் தவிர்க்கப் பட்டு விடும். எனவே இலக்கிய ஏடுகளில் எழுத்தின் வளர்ச்சியைக் காண இயலாது. எழுத்துகளின் தோற்ற காலத்தையும் அதன் வளர்ச்சிப் போக்கையும் அறியாது நமது தொன்மை இலக்கணமான தொல்காப்பிய எழுத்ததிகார நூற்பாக்கள் பலவற்றுக்கும், இடைக் காலத்தில் எழுந்த நன்னூல் எழுத்ததிகார நூற்பாக்களில் ஒருசிலவற்றுக்கும் விளக்கம் காண இயலாது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் தொல் காப்பியத்திற்கு உரை கண்ட இலக்கணப் பேராசிரியர் களான இளம்பூரணருக்கும் நச்சினார்க்கினியர் போன் றோர்க்கும் தொல்காப்பியர் காலத்து எழுத்துக்களைக் காணும் வாய்ப்பு இல்லாமற் போயிற்று. அதனால் அவர்கள் எழுத்தின் உருவத்தைப் பற்றிய நூற்பாக்களுக்கு தம் புலனெறியால் தத்தம் காலத்து எழுத்தமைதியை மனதிற் கொண்டு இட்டுக்கட்டி உரைகண்டுள்ளனர். அதனால் அவை குறைபாடுடையனவாகவே அமைய நேர்ந்தன. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் “புள்ளி இல்லா எல்லா மெய்யும் உருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலும் ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல் உயிர்த்த லாறே” - தொல் - எழுத்து .17 இந் நூற்பாவுக்கு உரை எழுதிய இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் தம் காலத்தில் கண்ட எழுத்துருக் களுக்கே விளக்கங் கூறினர். “இது மெய்யும் உயிருங் கூடிப் புணருமாறும் ஆண்டு அவை திரியாதுந் திரிந்தும்” நிற்குமாறுங் கூறுகின்றது. (இ-ள்) புள்ளி இல்லா எல்லா மெய்யும் - உயிரைப் பெறுதற்குப் புள்ளியைப் போக்கின எல்லா மெய்களும், உரு உருவாகி அகரமோடு உயிர்த்தலும் - புள்ளி பெறுகின்ற காலத்து இயல்பாகிய அகரம் நீங்கிய வடிவே தமக்கு வடிவாகி நின்று பின்னர் ஏறிய அகரத்தொடு கூடி ஒலித்தலும், ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும் - ஒழிந்த பதினோருயிரொடுங் கூடி அவ்வடிவு திரிந்து ஒலித்தலும், ஆயீரியல உயிர்த்தலாறே - என அவ்விரண்டு இயல்பினையுடைய, அவை ஒலிக்கும் முறைமை எ-று. ‘புள்ளியில்லா மெய்’ யெனவே, முன் பெற்றுநின்ற புள்ளியை உயிரேற்றுதற்குப் போக்கினமை பெறுதும். ‘உருவுருவாகி’ யெனவே புள்ளி பெறுதற்காக இயல்பாகிய அகரம் நீங்கிய வடிவே பின்னர் அகரம் பெறுதற்கு வடிவாமென்பது கூறினார். எ-டு: க ங ய என வரும். ‘ உருவு திரிந்து உயிர்த்தலாவது’ மேலுங் கீழும் விலங்கு பெற்றும், கோடு பெற்றும், புள்ளி பெற்றும், புள்ளியுங் கோடும் உடன் பெற்றும் உயிர்த்தலாம். கிகீ முதலியன மேல்விலங்கு பெற்றன. கு கூ முதலியன கீழ்விலங்கு பெற்றன. கெ கே முதலியன கோடு பெற்றன. கா ஙா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார். கொ கொ ஙோ ஙோ முதலியன புள்ளியுங் கோடும் உடன் பெற்றன. இங்ஙனந் திரிந்து ஒலிப்பவே உயிர்மெய் பன்னிரு பதினெட்டு இருநூற்றொருபத்தாறாயிற்று. ஆகவே உயிர்மெய்க்கு வடிவும் ஒருவாற்றாற் கூறினாராயிற்று. - தொல். எழுத். நச்சினார்க்கினியர் இஃது, உயிரும் மெய்யும் கூடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ- ள்) எல்லா மெய்யும் புள்ளி இல்லா, - எல்லா மெய்களும் புள்ளி இல்லையாம் படியாக, உருவு உருவு ஆகி - தத்தம் முன்னை வடிவே பின்னும் வடிவாக, அகரமோடு உயிர்த்தலும் - அகரத்தொடு கூடி ஒலித்தலும், ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும் - ஒழிந்த உயிர்களொடு வடிவு வேறுபட்டு ஒலித்தலுமாகிய, அ ஈர் இயல - அவ்விரண்டு இயல்பினையுடைய, உயிர்த்தல் ஆறு - அவை ஒலிக்கு முறைமை எ-று. ‘தன்னின முடித்தல்’ என்பதனான், அளபெடை உயிரோடும், சார்பிற்றோற்றத்து உயிரோடும் கூடும் உயிர்மெய்யும் கொள்க. எ-டு : உருவு உருவாகி உயிர்த்தல் க ங எனக் கண்டுகொள்க. உருவு திரிந்து உயிர்த்தல் கா ஙா எனக் எனக் கண்டுகொள்க. ஈண்டு உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க் கூட்டத்தினை ‘எல்லா மெய்யு’ மென்று மெய்மேல் வைத்துக் கூறியது, அது முன்கூறிக் கூறப்படுதல் நோக்கிப் போலும். உயிர்மெய் யென்பதனை ஒற்றுமை கொள்வுழி உம்மைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை யெனவும், வேற்றுமை கொள்வுழி உம்மைத் தொகையெனவும் கொள்க. ‘இல்லாத’ என்பது ‘இல்லா’ என நின்றது. உருவு திரிந்து உயிர்த்தல் மேலும் கீழும் விலங்கு பெறுவன விலங்குபெற்று உயிர்த்தலும், கோடு பெறுவன கோடு பெற்று உயிர்த்தலும், புள்ளிபெறுவன புள்ளிபெற்று உயிர்த்தலும், புள்ளியும் கோடும் உடன் பெற்று உயிர்த்தலும் எனக் கொள்க. - இளம்பூரணர் தொல்காப்பிய உரைகாரர்களான அவர்கள் கால எழுத் தமைதியைக் கூட இவ்வுரையைக் கொண்டு இக்கால ஆசிரியப் பெருமக்களும், மாணாக்கரும் உணர இயலாது இந்நூற்பாக்களுக்கு அச்செழுத்துக்களைக் கொண்டே இவர்கள் ஒருவாறு அமைதி காண்பரல்லாது உண்மை உணரார். இதே போன்று, “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” - தொல்- எழுத்து : 15 “ அரையளவு குறுகல் மகரம் உடைத்தே இசையிடன் அருகுந் தெரியுங் காலை’ - தொல் - எழுத்து: 13 உட்பெறு புள்ளி உருவா கும்மே - தொல் - எழுத்து ;14 இவற்றுக்கும் சரியான விளக்கம் பெற எழுத்துகளின் தோற்றம் வளர்ச்சி பற்றிய அறிவு இன்றியமையாதது. மேற்கண்ட நூற்ப்பாக்களில் “உட்பெறு புள்ளி உருவா கும்மே” என்பதற்கு உரை காண்பதில் உரையாசிரியர்கள் பட்டபாடு பஞ்சுபடாப்பாடு. இன்றைய நிலைமை அதனை விட இரங்கத்தக்கது. பிற்காலத்தில் இலக்கணங் கற்று வல்ல பேராசிரியர்களாக விளங்கிய க.வெள்ளை வாரணனார், கு.சுந்தரமூர்த்தி போன்றோர் பண்டை எழுத்துக்களைக் கற்றிலராயினும் உய்த்துணர்வால் ஏறத்தாழ சரியான விளக்கம் அளித்துள்ளது போற்றுதற் குரியது. இவர்களுக்கு முந்தையோர் உரைத் தெளிவு இன்றி கவலைப்பட்டிருக்கக் கூடும். இதே போன்று “மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையில்” - தொல்.எழுத்து.101 “குற்றியலுகரமும் சற்றென மொழிப ” - தொல்.எழுத்து.106 என்னும் நூற்பாக்களுக்கும் தெளிவு காண்பது அரிது. இதற்bகல்வெட்டுப் பயிற்சி இன்றியமையாதது. இன்றைக் காலப் பெரியோர்க்கும் மாணாக்கர்க்கும் இந்நூற்பாக்களுக்கு தெளிவு கிடைக்கவில்லையே அதற்கு என்ன செய்வது என்பது பற்றிய எண்ணம் எழ வாய்ப்பே இல்லை. தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் சமனப் பரவல் ஏற்பட்டது.வேதமதத்தினரும் அசோகனது புத்தமத ஆதரிப்பால் தமிழுகம் நோக்கிப் பரவத் தொங்கினர். அதனால் வடக்கிலிருந்து வந்த மொழிகளின் ஓரிரு சொற்கள் தமிழகத்தில் பயன்பட்டமையால் அவற்றை அப்படியே எழுத நேர்ந்தால் எப்படி எழுதுவது என்பதற்காக சொல்லதிகாரத்தில், ஒரு நூற்பா யாத்துள்ளார். “ வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்தே சொல்லா கும்மே” - தொல். சொல். 401 தொல்காப்பியர் வடசொல் எனச் குறிப்பிடும் வடமொழிச் சொல். சமசுகிருத அல்ல. வடமொழி என்பது தொல்காப்பியர் காலத்தில் இன்று நாம் நினைக்கும் சமசுகிருதம் வழக்கிலேயே இல்லை. தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இருந்தது வர்க்க எழுத்துகள் மிகுதியாக இல்லாத, சமசுகிருதத்தில் மிகுதியாகக் காணப் படும் கூட்டெழுத்துக்கள் இல்லாத பாகத மொழியே யாகும், இது பிராகிருதம் எனவும் வழங்கும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் பயன்படுத்தியதும், அவனுக்குப் பின் வந்த சாதவாகனர்கள் தமிழகத்தல் பயன்படுத்தியதும் பல்லவர்கள் தமிழகத்தில் பேரரசை நிலை நாட்டு முன் பயன்படுத்தியதும் பிராகிருதமே, சமசுகிருதமன்று. தொல்காப்பியர் காலத்தில் வடசொல் எனக் குறிப் பிட்டது தமிழ் எழுத்துகள் நீங்கலாக அன்று பாகத்திற் காகப் புதிதாக உருவாக்கப்பட்டு வழங்கிய சில வர்க்க எழுத்துகள் மட்டுமே. தமிழகத்தின் எப்பொருள் வழி எச்சொல் நுழையினும் மொழி பெயர்த்து வழங்குவது முறைமையாக இருந்ததை வழக்கிற் காணலாம். ஆதலால் அவர் எல்லா வட சொற்களுக்காகவும் இவ்விலக்கணத்தைக் கூறி இரார் மொழி பெயர்த்து வழங்க இயலாத வட மொழிப் பெயர்ச் சொற்களுக்கே இது பொருந்தும். “வடசொல் பெயராய் அல்லது தமிழில் வராது” என்னும் தெய்வச் சிலையர் உரை சிறப்புடையது. இதனை கழகக் கால சமணத் துறவியர்க்குப் படுக்கை அமைத்துக் கொடுத்த கல்வெட்டுகளை நோக்கித் தெளிவு பெறலாம். உரையாசிரியர்கள் காலம் சமுசுகிருதம் தனக்கு வேண்டிய எல்லா எழுத்துக்களையும் உருவாக்கிக் கொண்டு இந்தியா முழுவதிலும் முழுவீச்சில் பரப்பப் பட்ட காலம். தமிழகத்தில் உலக வழக்கில் நுழைந்து பரவியகாலம்ஆதலால் தொல்காப்பியர் பிராகிருதத் திற்கும் கூறிய இலக்கணத்தை சமசுகிருதத்திற்கு பயன்படுத்தி உரையாசிரியர்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்டு உரை வரைந்தனர். உரையாசிரியர்களும், நன்னூலரும் வாழ்ந்த காலத்தில் வடமொழி எனப் பெயர்பெற்ற சமசுகிருத வழக்கு மிகுதி. நல்ல தமிழ்ச் சொற்கள் இருக்கவும் வலிந்து வடசொற் களைப் புகுத்திய காலம். இதனை கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் தமிழகம் முழுக்க பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் காணலாம். அக் கல்வெட்டு, மற்றும் மக்கள் வழக்குகளின் அடிப்படையில் உரைகாரர் கள் உரைஎழுதினர் நன்னூலார் றூற்பா செய்தார். நன்னூலில் தன் காலத்தில் வடசொற்கள் மிகுதியாக தமிழ் மக்கள் வழக்கில் பயின்றமையால் அதற்கேற்ப எந்தெந்த எழுத்துகள் பொது எவை எவை சிறப்பு எனப் பிரித்துக் காட்டினார். இவை சமதகிருத எழுத்துகள் இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும் அல்லா அச்சு ஐவருக்கம் முதல்ஈறு யவ்வாதி நான்மை ளவ்வாகும் ஐயைம் பொதுவெழுத்து ஒழிந்த நாலேழும் திரியும். - நன்னூல் - எழுத்து - 146 அவற்றுள் ஏழாம்உயிர் இய்யும் இருவும்ஐ வருக்கத்து இடையில் மூன்றும் அவ்வம் முதலும் எட்டே யவ்வும் முப்பது சயவும் மேலொன்று சடவும் இரண்டு சதவும் மூன்றே யகவும் ஐந்திரு கவ்வும் ஆஈறு ஐயும் ஈ ஈறு இகரமும் - நன்னூல் - எழுத்து - 147 நன்னூலாரின் இந்நூற்பாக்களுக்கும் உரைகாணவும், விளங்கிக் கொள்ளவும், கல்வெட்டுகளைப் படித் தறியாமல் இயலாது. எனவே, தமிழ் இலக்கணத்தைச் செம்மையாகப் பயிலவும் கல்வெட்டுகள் இன்றியமையாதன என்பது சொல்லாமால் விளங்கும் மண்ணுக்கும் மக்களுக்கும் அடையாளங் கொடுப்பது மொழி. மொழி ஒரு மரபணு. அம்மரபணு மண்ணின் விளைபொருளிலும், மக்களின் செய் பொருளிலும் பொதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே தமிழ் மண்ணில் தோன்றிய பொருள்களில் மட்டும் அல்லாது இம்மண்ணில் எழுந்தருளிய கடவுளரும் தமிழ் மரபணு செறிந்த தமிழ்க் கடவுளாகவே இருத்தல் வேண்டும். அவ்வியற்கைப் படியே தமிழ் மண்ணில் எழுந்தருளிய, எழுந்தருளுவிக்கப்பட்ட கடவுளரும் தமிழ்ப் பெயரே தாங்கி இருந்தனர் என்பதை நமது கல்வெட்டுகள் பொதிய வைத்துள்ளன. இம் மண்ணின் மக்களால் வழிபடப்பட்ட பெருந் தெய்வங்களும் சிறு தெய்வமாக்கப்பட்ட தாய்த் தெய்வங்களும் தமிழ்ப் பெயரே தாங்கித் தமிழாகக் காட்டியளித்தன. தமிழக நாநிலத்தின் தெய்வங்களும் முல்லை குறிஞ்சியும் திரிந்த பாலையெனப் படிவங் கொண்ட ஐந்தாவது நிலத் தெய்வமும் சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை எனத் தமிழ்ப் பெயர் தாங்கினர். இலக்கண இலக்கிய நூல்களில் சிறு தெய்வங்களும் மாரி,காளி, வேலன் எனத் தமிழ்ப் பெயரே தாங்கி நின்றனர். இவற்றை எல்லாம் தொல்காப்பியம் முதலான நமது தொன்மையான இலக்கண இலக்கிய நூல்களில் பரக்கக் காணலாம். கழகக் கால வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழகம் சமய, வணிகப் போர்வையில் வந்தும் வரவழைத்தும் குடியமர்ந்தவர்களின் வேட்டைக் காடாகவும், வலிமை மிக்கோரின் அடிமை நாடாகவும் மாறிப் புதுப் புதுக் கடவுள்கள் திணிக்கப்பட்ட பொழுதும் அவைகள் மண்ணின் மாண்பிற் கேற்பத் தமிழ்க் கடவுளாகவே இங்கு காலூன்றச் செய்யப்பட்டனர் என்பதை நமது இலக்கியங்களை விட கல்வெட்டுகளாலேயே அறிய இயலும். வந்தவர்க்கெல்லாம் இடம் கொடுத்து தன் வளமை மாறாது இருந்த இந்தத் தமிழ் மண்ணின் மக்களின் ஏமாளித் தன்மை வந்தவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்து விட்டது. எனவே தங்களை நிலை நிறுத்திக் கொள்ள மொழி அழிப்புப் பணிகளைத் தொடங்கினர். எந்த ஒரு இனம் அழிக்கப்பட வேண்டுமோ, அடிமைப்படுத்தப் பட வேண்டுbமா அந்த இனத்தில் மொழியை முதலில் அழிக்க வேண்டும் என்பது உல அரசியல் பட்டாங்கு. அதற்கு முதற்படியாக அக்கால மக்கள் தங்களுக்குப் பற்றுக்கோடு அவனே எனப் பற்றி இருந்த தமிழகத்தில் முன்பே வழக்கில் இருந்தனவும் வந்ததுவுமான கடவுட் பெயர்களை எல்லாம் வடமொழி மயமாக்கும் முயற்சி பேரளவில் நடந்தது. அதற்கு ஆட்சியில் ( வழக்கில்) ஆவணத்தில், இலக்கியங்களில் ஆழப் பதிந்த தமிழ்க் கடவுட் பெயர்களெல்லாம் வடமொழிப் பெயர்களாக்கப்பட் மன, மாற்றம் பட்ட பெயருக்கேற்ப கதை கட்டி நிலை நாட்டப்பட்டன, நூலும் வழக்கும், ஆவணமும் அறியா மக்கள்அதைப் பற்றிக் கொண்டனர். அதனால் பழந்தமிழ்க்கடவுட் பெயர்கள் ஏறத்தாழ முற்றிலும் மக்கள் மனதை விட்டு நீங்கிவிட்டன. நம் குறையை உணராமல் யாரோ நம்மைக் கெடுத்து விட்டார்கள் என்று நம்மில் சிலர் கூவிக் குமைந்து கொண்டுள்ளோமே தவிர விடுதலைக்கு வழி தேடவில்லை. விடுதலைக்கு வழி கல்வெட்டில் உள்ளது. கல்வெட்டுகளின் வழி நமது மெய்யான பண்பாட்டு வரலாற்றை, மொழிச் சிறப்பைத் தெரிந்தெடுத்து நல்ல வரலாறு காணவேண்டும். ஏட்டிலும், எழுத்திலும் உள்ள கடவுட் பெயர்களை வெளிக்கொணர வேண்டும். வழக்குப் படுத்த வேண்டும். கடவுளையே நம்பியுள்ள மக்கள் கடவுள் தமிழானால் தமிழ்ப் பெயர் தாங்க அதற்குரிய ஓரிரு எடுத்துக்காட்டுகள் சிலவற்றை இங்கு மேலும் காணுதல் பயனுடையதாகும். சிவன்,சைவம் என்றாலே அது தில்லையைக் குறிக்கும். தில்லை என்பது தில்லை மரத்தால் அடையாளங் காணப்பட்டு பெற்ற பெயர். இது பெரும்பற்றப் புலியூரில் அடங்கியது. தில்லையில் ஒரு சிறிய அம்பலத்தில் எழுந்தருளப் பெற்ற இறைவன் அம்பலவன் எனப்பட்டன. அவ்வம்பலம் சிறியதாகையால் சிறிய அம்பலம் சிற்றம்பலம். சிற்றம்பலத்தில் எழுந்தருளியவன் சிற்றம்பலவன். அவன் ஒரு கூத்தாடி. அவன் ஆடுமிடம் சிற்றம்பலம். அவன் தென்னன் தென்னாட்டவன். தென்னாடுடைய சிவன். அவனைப் போற்றினர் அடியார். “தில்லையில் கூத்தனே தென்பாண்டி நாட்டானே” , கூத்தாடி ஆடவல்ல பெருமானே, நள்ளிருளில் நட்டம் பயின்றாடி என்று நல்ல தமிழாலே நல்லோரின் திருப்பாடல்கள் போற்றிப் பரவியதை தேவார திருவாசகங்களிலும், ஏனைய திருமுறைகளிலும் காணலாம். தமிழகத்து மன்னர்களிலேயே பெருமன்னனான விளங்கியவன் முதலாம் இராசராசன் . இவன் அத்தில்லைக் கூத்தன் மேல் அளவற்ற பற்று கொண்டவன். அவனை ஆடவல்லான் எனத் தலைமேல் தூக்கி வைத்துப் போற்றியவன். ஆடவல்லான், ஆடவல்லான் என அரற்றி அளக்கும் படிக்கும் நிறுக்கும் படிக்கல்லுக்குங் கூட ஆடவல்லான் என்று பெயர் வைத்து அழைத்தான். தில்லையிலும் தமிழகமெங்கனும் உள்ள நூற்றுக் கணக்கான சிவத் திருக்கோயில்களிலும் உள்ள ஆயிரக் கணக்கான கல்வெட்டுக்களில் அடியார் திருப்பாங்களின் கூத்தன். கூத்தபெருமாள், ஆடல்வல்லான் என்ற பெயர்களே திரும்பத் திரும்பப் பேசப்படுகின்றன. அந்தக் கூத்தன் எங்கே. நடராசன் என்றால் தானே அடியார்க்கும் அடிமைத் தமிழர்க்கும் தெரியும். ஆயிரக்கணக்கான பாடல்களில் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வழிபாட்டில் இல்லாத இந்த நடராசர் எங்கே வந்தார். காவிரி அறுத்தெடுத்த அரங்கத்தில் எழுந்தருளி இருந்தவன் அரங்கன், இன்று அவன் அங்கில்லை; திருமுதுகுன்றம் காணவில்லை. முதுகுன்றமுடையான் ஓடிவிட்டான். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயிலிலும் தமிழ்க் கடவுளர் ஓட்டப்பட்டு விட்டனர். தமிழ்ப் பெயர் அழிக்கப்பட்டுவிட்டது. நமக்கு இன்று குழலுதும் பிள்ளையைத் தெரியாது; வேணுகோபாலனைத் தெரியும். வெண்ணைக் கூத்தனைத் தெரியாது; நவநீத கிருட்டிணனைத் தெரியும். கொற்றவையைத் தெரியாது; துர்க்கையைத் தெரியும். எரிசினக் கொற்றவையை; ஊடல் தீர்த்த பெருமானை, கரியுரி போர்த்தானை, காடுகிழாளை. விடையேறியை, பிறைசூடனை, ஆவுடையானை அம்மையப்பனை நெடுமுடியண்ணைலை அவ்வவ்வூர்களில் தோன்றிய உடையார்களை எவரையும் இன்று நமக்குத் தெரியாது. தெரிய வேண்டுமென்றால் கல்வெட்டுக்களைப் படிக்க வேண்டும். கல்வெட்டு, எங்கும் தமிழ் இருந்ததை, எக்கடவுளும் தமிழாக இருந்ததை எல்லாம் கல்வெட்டுகளின் வழி மீட்டெடுக்கலாம். சாசனங்கள் என்ற இந்நூல் தொகுப்பில் உள்ள 20 கல்வெட்டுகளில் காணப்படும் கடவுட் பெயர்களைப் பட்டியலிடுவது சிறந்த எடுத்துக் காட்டாக அமையும். 1. கிணறு பற்றியது - இதில் கடவுள் பெயர் வரவில்லை. 2. 3 ராஜராஜீசுவரமுடையார் - கழகக் காலத்துக்குப் பின் வந்த அனைத்துத் தமிழ்நாட்டு அரசர்களும் வடமொழிப் பெயரே பூண்டமையால், அரசர்கள் பெயரால் ஏற்பட்ட, மாற்றப்பட்ட கோயில்கள் வடமொழிப் பெயராகவே இருக்கின்றன. 4. திருவானிலைமாதேவர் இன்று பசுபதீசுவரம் 5. 7 . துவராபதியான காமக்கோடி விண்ணகர் ஆழ்வார். - இன்று இராசகோபால சாமி திருவயேந்தி தேவர் - இன்று ராமன் 8. வண்டுவராபதி எம்பெருமான் ( கிருட்டினன்) 9. கடவுள் பெயர் இல்லை 10. திருவானைக்கா திருவெண்ணாவல் கீழ் இனிது எழுந்தருளியவர்.இன்று சம்புகேசுவரர். 11. அருளாளப் பெருமாள் இன்று வரதராசப் பெருமாள். 12. தீக்காலி வல்லமுடைய பரமேசுவரன் - புஙரவ நாதேசுவரர் 13. தீக்காலி பெருமானடிகள் - இன்று பில்வநாதேசுவரர் 13. வடசிகரக் கோயில் 15. சுசீந்திரமுடைய நாயனார் .இன்று தாணுமாலயப் பெருமாள் 17. அனந்த புரத்து எம்மான் - இன்று பத்மநாபன் 18. விசுவநாதர் - பிற்கால வடமொழி வழக்கு 19. முன் செங்கோட்டை உடையார் பின் குலசேகர முடையார் 20. திருவானைக்காவுடைய நாயனார் இன்று சம்புகேசுவரம். நமது கட்டடக் கலைத் திறனை அறியக் கல்வெட்டுகள் உலகத்திலேயே கோயில்கள் என்றால் அது தமிழகம் தான். காதங்கள் பற்பல சென்று தேடினாலும் கற்களையே காணமுடியாத ஊரில் முற்றிலும் கருங்கற்களால் பனிமலை போல் கோயிலெடுத்து இன்று 1017 ஆண்டுகள் ஆகியும் ஒரு விரற்கிடை அளவு கூட அசையாத கட்டடத்தைக் கட்டியவர்கள் தமிழர்கள். அதில் கடவுட் பழமைகளைக் கண்கொள்ளாக் காட்சியாக அமைத்த வர்கள் நமது தமிழ்ப் பெருந்தச்சர்கள். பெருந்தச்சர்கள் தான். மாமல்லைக் கோயிலைக் கட்டியவன் கேவாத பெருந்தச்சன். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவன் இராசஇராசப் பெருந்தச்சன். இதே போன்று நூற்றுக் கணக்கான பெருந்தச்சர்கள் நமது கட்டடக் கலையை, படிமக் கலையை உலகமே கண்னை உயர்த்திப் பார்க்கும் ஒப்பற்ற புனைவுகளை எல்லாம் செய்தவர்கள். இத்தகைய ஒப்பரிய அருங்கலை வல்லாரின் பெயரைப் பெருந்தச்சன் என்று கூறினால் படித்த படிக்காத தமிழர்கள் எத்தனை பேர் அறிவர். அப்பெருந்தச்சர்களைக் கொன்று சுதபதி ( ஸ்தபதி ) களை உருவாக்கியவர்யார். தமிழ் மண்ணிலே எழுந்தருளிய இறைவன் வீற்றிருக்குமிடம் கர்ப்பகிருகம். கர்ப்ப கிருகமென்ற சொல் தமிழகத்தில் எங்குமே பதியப்படவில்லை. தமிழகத்துக் கல்வெட்டுகள் அனைத்திலும் உண்ணாழிகை, அகநாழிகை என்ற சொல்லைத் தவிர வேறு சொல் பயன்படுத்தப்படவே இல்லை. கோயில்கள் நிறைந்த இத்தமிழகத்தின் கோயில், கோயில் உறுப்புகள் அனைத் திற்கும் தமிழ்ப் பெயரே உண்டு என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. தமிழக கட்டடக் கலை, படிமக் கலைகளை யெல்லாம் அடிப்படையாகக் கொண்டு இடைக்காலத்து எழுதப் பட்ட நூல்களான மயமதம், சரசுவதியம், காசிபசில்ப சாத்திரம் போன்ற நூல்கள் வடமொழியில் தமிழகத்து எல்லாக் கலைகளுக்கும் உரிய இலக்கண நூல்கள் இருந்ததை நமது இலக்கியங்கள் பட்டியலிடுகின்றன. அவை எங்கே? குறிப்பாகப் பெருங்கதை அனைத்து வகை நூல்களையும் ( சாத்திரங்கள் Techenical Books) கூறுவதைக் காணலாம்.இவைகளை எல்லாம் எங்கே போயின. அழித்தவர் யார். நமது கலையைப் பற்றிய இலக்கண நூல்கள் வட மொழியில் அiதது ஏன். இவ் வடமொழி நூல்களுக்கான சான்றுகள் தமிழகக் கோயில்களே, இவை எழுதப்பட தமிழகக் கோயில்களே அடித்தலம் என்பதை அவற்றில் உள்ள கலைச் சொற்களே சான்று. இந்தியாவெங்கும் புகழப்படும் பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கலை. பரதநாட்டிய நூல் தமிழகத்துக் கலை. அக்கலையின் வளர்ச்சிக்கேற்ப வடமொழியில் எழுதப்பட்டது என்பதை எல்லாம் நமது கல்வெட்டுகளிலன்றி வேறு எங்கும் காண முடியாது.2 கல்வெட்டு ஒரு கலைச்சொற் களஞ்சியம் ஆட்சியில், ஆவணத்தில், மக்கள் வழக்கில் இன்று தமிழைக் காண்பது அரிதாக உள்ளது. இதற்குக் காரணம் தேவையான கலைச் சொற்கள் இல்லை என்ற குறை பல்லோரால் கூறப்படுகிறது. இது ஒரு பொய்க் கூற்று. இது கைப்பொருளை கவனமின்றித் தொலைத்தவனின் கூற்று . நமது ஆட்சிக்கு அலுவலுக்கு எனத் தேவையான கலைச் சொற்கள் கல்வெட்டுகளில் மலிந்து கிடக்கின்றன. நாம் நமது தேவைக்காக வளர்த்துக் கொண்ட கலைச் சொற்களைப் புல்லிடை உக்க அமுதம் போல ஊற்றி விட்டுத் தேடுகிறோம். துறைதோறும் துறைதோறும் பயன்படும் கலைச்சொற்களைக் கல்வெட்டுகளில் இருந்து தொகுத்துக் கொண்டு இன்றைய அறிவியலுக்கேற்ற கலைச் சொற்களை அவற்றின் அடியாக உருவாக்கிக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாகச் சில, Order - ஆணை Order - பணி Ward - குடும்பு நபர் - பேர் நம்பர் - உரு. Personal Secretary - அணுக்கர் Sweeper - திருவலகு , அலகு endorsement - கீலீடு exchange - தலைமாறு Final Order - கடையீடு கர்ப்பக்கிருகம் - உண்ணாழிகை பிராகாரம் - திருச்சுற்று பிரதிஷ்டை - எழுந்தருளல் மேசுதிரி - நாயகம் ஜீவனாம்சம் - கொற்றிலக்கை ஸ்தபதி - பெருந்தச்சன் அமாவாசை - காருவா பவுர்ணமி - வெள்ளுவா பஷம் - பக்கம் பிரசாதம் - அமுது விக்ரகம் - திருமேனி Document - ஆவணம் Orbitater - நடுவிருக்கை கலைச் சொற்களை நூற்றுக்கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம். ஆதலால் நமது கலைச் சொல் தேவையை நிறைவு செய்வது கல்வெட்டுகள் என்பதை கல்வெட்டைப் பயில்வார். இன்னும் கல்வெட்டால் தமிழும் தமிழகமும் அடையும் பயன்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கு இது இடமும் அன்று. நேரமும் இல்லை, இன்று தேவை செயற்பாடே. யார், எவர் தமிழ் வாழ வேண்டும், வளர வேண்டும், உயர வேண்டும் நிலை பெற வேண்டும் என எண்ணுகிறார்களே அவர்களெல்லாம் படியெடுத்துப் பதிப்பித்த கல்வெட்டுகளைப் படிக்க; ஆய்க. அவற்றின் வழி நமது செல்வத்தை வெளிக்கொணர்க! அழியும் கல்வெட்டுகளைக் காக்க! காணாத கல்வெட்டுக்களைக் கண்டுபிடிக்க. இது வாழும் மண்ணின் இன்றைய தேவை. இன்று தமிழ் நாட்டுக்குத் தேவை ஒரு நேர்மையான நடுநிலை வரலாறு. அதற்குரிய சான்றுகள் மண்ணில் மறைந்த மணிக் கற்களாய் கல்வெட்டில் மறைந்து கிடக்கின்றன. அது நிரப்பப்பட வேண்டும்; தொகுத்து முறைப்படுத்தி நமது வரலாறு புதிதாய் எழுதப்பட வேண்டும். வரலாறு உலகில் உள்ள ஒவ்வொரு தேசிய இனமும் விழித்து எழுவதற்குரிய உந்து ஆற்றல். ஒவ்வொரு தேசிய இனமும் விழித்தெழுவதும், தன் ஆளுமையையும், உரிமையும் மீட்டெடுப்பதும் ஆளுதற்குரிய வலிமையைப் பெறுவதும் இன்றைய காலத்தின் தேவை. மற்றைய இனங்களை விடத் தமிழினத்திற்கு இது மிகமிகத் தேவை. தன் தேவையை இந்த இனம் உணருமாயின் உய்யும்.என நூற்றுக்கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம். க.குழந்தைவேலன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv பதிப்புரை xii முன்னுரை xviii கல்வெட்டுகளும் அதன் பயன்களும் xix 1. இராஜராஜக்கிணறு உக்கல் சாசனம் 1 2. திருப்பதியம் - இராஜராஜேஸ்வரர் 10 ஆலய சாசனம் 3. இராஜேந்திர சோழ தேவர் சாசனம் 19 4. கணபதி நல்லூர்ச் சாசனம் 27 5. அமண்பாக்கம் சாசனம் 33 6. பாக்கூர் சாசனம் 43 7. மணிமங்கலம் சாசனம் 53 8. மணிமங்கலம் சபையார் சாசனம் 60 9. சிறுபழுவூர்ச் சாசனம் 66 10. வில்லவராயன் சாசனம் 75 11. அருளாளப் பெருமாள் கோயில் சாசனம் 83 12. தீக்காலி வல்லம் கோயில் சாசனம் 91 13. மகாவலிவாணராயர் சாசனம் 98 14. மாதவக் கிரம வித்தன் சாசனம் 104 15. வாணமகாதேவியார் சாசனம் 110 16. அதவோடு தோட்டம் சாசனம் 113 17. கன்னி பகவதியார் சாசனம் 118 18. அரிகேசரிதேவர் சாசனம் 122 19. பராக்கிரம பாண்டிய தேவர் சாசனம் 129 20. வாலக்காமயர் சாசனம் 132 கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் 1. இராஜராஜக்கிணறு உக்கல் சாசனம் 1. ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல் பெருநிலச் செல்வியுந் தனக்கே உரிமை பூண்டமை மனக் கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்க பாடியும் நுளம்ப பாடியும் தடிகை பா 2. டியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டொழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல் வென்றித் தண்டாற் 3. க் கொண்ட தன்னெழில் வளரூழியு ளெல்லா யாண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோ ராஜகேஸரி வந்மரான ஸ்ரீராஜ ராஜதெவர்க்கு யாண் 4. டு 29 ஆவது ஜயங்கொண்ட சோளமண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீ விக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்தின் மேலை 5. ப் பெருவழியில் ஸ்ரீ ராஜராஜ தேவர் திருநாமத்தால்க் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான் உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் பணிமகன் சோழமண்டலத்து தென்கரை நாட்டு நித்த 6. வினோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான் கண்ணனாரூரன் இவனே ஸ்ரீ ராஜராஜ கிணற்றில்த் தொட்டிக்கு நீரிறைப்பார்க்கு அருமொழிதேவன் மரக்காலால் நிசதம் நெல் ஜ2 உ ங3 ஆ 7. கத் திங்கள் 6 -க்கு நெல் 30 (ஙய) கலமும் ஸ்ரீ ராஜ ராஜன் தண்ணீரட்டுவார்க்கு நிசதம் நெல் ஜ1உ ங2 ஆக திங்கள் 6 (சா) க்கு நெல்லு 30 (ஙய) கலமும் இப்பந்தலுக்கு, குசக்கலம் இடு 8. வார்க்கு திங்கள் 1க்கு நெல்லு 2 தூணி (ஹ1) ஆக திங்கள் (சா) க்கு நெல்லு 4 களமும் ஸ்ரீ ராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆட்டாண்டுதோறும் புதுக்குப் புறமாக வைச்ச 9. நெல்லு 2 களம் 8 குறுணி2 ஆக நெல்லு (ஜ) 66 களம்கலம் 8 குறுணி இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸபையோம் இறை திரவியமும் கிரயத் த்ரவ்யமும் கொண்டு இறை இழிய்ச்சி... . . . . . . . . . . . . . . கல்வெட்டின் குறிப்புகள் இராஜ ராஜகிணறு - உக்கல் சாசனம் (இராஜராஜன் - I 985-1014) இடம்: செங்கற்பட்டு ஜில்லா மாமண்டூர்க்கடுத்த உக்கல் என்னும் கிராமத்தில் விஷ்ணு கோவில் மேலைச் சுவரிற் கண்டது. பொருள்: இராஜராஜ தேவன் என்கிற இராஜகேசரிவர்மன் ஆட்சி 29ஆம் ஆண்டில், அவன் வேலையாள் ஆவுர்க் கூற்றத்து ஆவுருடையான் கன்னன் ஆரூரன், சோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து தனியூர் விக்ரமாபரணச் சதுர்வேதி மங்கலத்தின் மேலைப்பெருவழியில் கிணறும் தொட்டியும் சமைத்தான் என்பதைக் குறிக்கும் வெற்றி: 1. காந்தளூர்ச் சாலை கலமறுத்தான். 2. சேரரைச் செயித்துச் சிற்றரசாக்கினான். 3. கங்கபாடி, நுளம்பாடி, தடிகைபாடி,வேங்கைநாடு, குடகு, கலிங்கம், கொல்லம், ஈழம் முதலிய நாடுகளைக் கைப்பற்றினான். 4. சேர, சோழ, பாண்டியாகிய மும்மண்டலங்களையும் தனதாக்கி ‘மும்மடிச்சோழன்’ என்று பெயர் பெற்று விளங்கினான். 5. இரட்டபாடி ஏழரையிலக்கமும், முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரமும் வென்றான். காலம்: கி.பி.1014 மெய்க்கீர்த்தி: “திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொள” எனத் தொடங்குவது. சொற்பொருள்: ஜ - என்பது நெல் அளவுக் குறிப்பு ங - என்பது குறுணி ( 1 மரக்கால்) சா-என்பது கலம் ( 12 மரக்கால்) வித - என்பது 2 தூணி ( 8 குறுணி) ஸ்வஸ்தி ஸ்ரீ - மங்கல மொழி. முரட்டொழில் - சண்டையில் விருப்பமான. எழில் - வலி, தொழு உதகை - தொழுதகை ஓர் பட்டினம். யாண்டு - இது சாசனங்களில் அரசர்கள் ஆட்சிக் காலத்தைக் குறிக்கும். தனியூர் - பெரிய நகரம். உசால் - பல்வேறு பகுதிகளடங்கிய ஊர். உடையார் - அரசனுக்கும் இறைவனுக்கும் இட்டு வழங்கும் ஒரு மரியாதைச் சொல். ஆவூர்க்கூற்றம் - ஆவூரின் பகுதி. நிசதம் - நாடோறும். ( தண்ணீர் ) அட்டுவர் - வார்ப்பார். புதுக்குப்புறம் - புதுப்பித்தல். இறையிழிய்ச்சி - வரி விலக்குதல். பிறகுறிப்புகள்: நீரிறைக்கும் மரக்காலுக்குப் பெயர், அருண் மொழித் தேவன் என்பது. நீரிறைப்பார்க்கு நெல் நாளொன்றுக்கு 2 குறுணி. மாதம் 6க்கும் 30-கலம். நீர் வார்ப்பாருக்கு நாளொன்றுக்கு 2 - குறுணி, மாதம் 6-க்கு 30 கலம். மட்கலம் அளிப்பார்க்கு மாதம் 8 குறுணி, மாதம் 6-க்கு 4 கலம். கிணறுந் தொட்டியும் புதுப்பித்தற்கு ஆண்டுதோறும் 2 -கலம். 8 - குறுணி ஆக 66 கலம் 8 -குறுணி. ஆறு மாதத்திய செலவு ( 1 - கலம் 4 - குறுணியைக் கழிக்க ) 65 கலம் 4 - குறுணி யாதல் காண்க. விளக்கக் குறிப்பு இக் கல்வெட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ( முன்னாள் செங்கற்பட்டு மாவட்டம்) மாமண்டூருக்கு அருகிலுள்ள உக்கல் என்ற ஊரிலுள்ள பெருமாள் கோயிலின் மேலைச் சுவரிற் வெட்டப்பட்டுள்ளது. இது தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3இல் நான்காம் எண் கல்வெட்டாக வெளி யிடப்பட்டுள்ளது. கல்வெட்டுக்குறிப்பில் சோழ மண்டலம் காழியூர்க் கோட்டம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஜெயங்கொண்ட சோழமண்டலத்து காழியூர்க்கோட்டம் என்று திருத்தி வாசிக்கப் படவேண்டும். சோழமண்டலம் என்பது தஞ்சாவூரை உள்ளடக்கிய பண்டைய சோழ நாட்டுப் பகுதிகளையே குறிக்கும். ஜெயங் கொண்ட சோழமண்டலம் என்பது தொண்டை மண்டலத்திற்கு இராசராசன் காலத்தில் அவன் சிறப்புப் பெயரால் இடப்பட்ட புதுப்பெயராகும். உக்கல் என்ற ஊரின் பெயர் உசால் என பிழையாக வாசிக்கப்பட்டுள்ளது. பழைய கல்வெட்டுப் பதிப்புகளில் ‘க்’ கையும் ‘க’ வையும் சேர்த்து க்க எனக் கூட்டெழுத்தாக எழுதுவது வழக்கம். அது ‘சா’ கரம் போல் காணப்படும். ஆதலால் இதனை உசால் என்று பிழையாகப் வாசித்துள்ளனர். வாசிப்பு பிழையானதால் அதற்கு பொருள் கூற வந்த நாட்டாரைய்யா உசால் என்பது பல்வேறு ஊர்களின் பகுதி என கருதுகோலாக பொருள் கூறிச் சென்றுள்ளார். இவ்வூரின் பெயர் உக்கல் என்பதே. இக்கல்வெட்டின் அரசனாகிய இராசராசனுக்கு முந்தைய பல்லவர், சோழர் காலக் கல்வெட்டுக்களிலும், பிந்தைய சோழ, பாண்டிய அரசர்களின் கல்வெட்டுக்களிலும் உக்கல் என்ற பெயரே தொடர்ந்து வந்துள்ளது. உக்கல் என்ற இவ்வூர் வளமான ஊராகையால் பிராமணர்களுக்கு பல்லவர் காலத்திலேயே முற்றுட்டாகக் கொடையளிக்கப்பட்டுள்ளது. அதனால் இது சதுர்வேதி மங்கலம் ஆக்கப்பட்டுள்ளது. (நான்கு வேதம் வல்ல பிராமணர் களுக்கு அளிக்கப்பட்டது.) உக்கல் என்ற பெயரை மாற்றி உக்கலான அபராஜித சதுர்வேதி மங்கலம் எனப் பெயரிடப் பட்டது. அதன்பின்னர் இராசராசனுடைய காலத்தில் இது மீண்டும் பெயர் மாற்றப்பட்டு உக்கல் ஆன சிவசூளாமணி சதுர்வேதி மங்கலம் எனவும் அதன் பின்னர் மீண்டும் ஒரு முறை பெயர் மாற்றப்பட்டு விக்கிரமாபரண சதுர்வேதிமங்கலம் எனவும் பெயரிடப்பட்டது. தமிழ்நாட்டில் வடமொழிப் படுத்தப்பட்ட ஊர்களில் பெயர்கள் பல பழம்பெயரைத் தக்கவைத்துக் கொண்டதைப் போல உக்கல் என்ற இவ்வூரும் தன் பழம் பெயரை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தனியூர் - பெரிய நகரம் தனியூர் என்பது தனி ஆட்சி உடைய ஊர் என்று பொருள் படும். தமிழ்நாட்டில் தனியூர் எனக் குறிப்பிடப்படும் ஊர்கள் அனைத்துமே பிராமண ஆட்சி ஊர்களாக அதாவது சபையால் ஆட்சி செய்யப்படும் பிரமதேய, ஊர்களாகவும் பெரும்பாலும் பிரமதேய சதுர்வேதி மங்கலங்களாகவும் வழங்கப்பட்ட ஊர்களாகவுமே காணப்படுகின்றன. நெறிவிளக்காகத் தில்லை போன்ற பெருங்கோயில் உள்ள ஓரிரண்டு ஊர்கள் மட்டுமே சதுர்வேதி மங்கலமல்லாத தனியூர்களாக காணப்படுகின்றன. இப்பெருங்கோயில் ஊர்களும் பிராமண சபைகளால் ஆளப்படுவதற்கு மாறாக மூலப்பருவுடையார் என்ற ஒரு சபையால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இச்சபையும் பிராமணர் களால் ஆளப்பட்டதாகவேதோன்றுகிறது. இத் தனியூர்கள் ஆட்சியில் ஊர், நாடு, நகரம் இவற்றின் ஆட்சிக்கு அப்பாற்பட்ட தனியாட்சி உடையனவாக விளங்குகின்றன. உடையார்- அரசனுக்கும் இறைவனுக்கும் இட்டு வழங்கும் ஒரு மரியாதைச் சொல். இது வெறும் மரியாதைச் சொல் மட்டுமன்று. அரசனுக்குத் தான் ஆளும் நாடும் ( நாட்டை உலகமெனக் கொள்வது அன்றைய வழக்கம்) நாட்டு மக்களும் உடைமையானவர்கள். இறைவனுக்கு இவ்வுலகும் உலகுடைய பொருள்களும் உடைமையானவை. இருவரும் நாட்டையும் உலகையும் தமது உடமைப் பொருள் களாக கொண்டமையால் உடையார் எனச் சிறப்பிக்கப்பட்டனர். அதேபோல், அரசன் மனைவியும் இறைவன் மனைவியான நம்பிராட்டியாரும் உடையாள், உலகமுழுதுடையாள் எனச் சிறப்பிக்கப்பட்டனர். அரசன் ஆட்சி செய்யும் அரண்மனையும் இறைவன் காட்சிக் கொடுக்கும் கோயிலும் கோயில் என்றே பொதுவில் அழைக்கப்பட்டன. இவ்வகையில் மன்னனும், இறைவனும் ஒப்பக் கருதப்பட்டனர். அதனால்தான் ஆழ்வார் பெருமக்கள் “திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும் ” எனக் கூறிப் போந்தனர். எனவே இது அரசனுக்கும் இறைவனுக்கும் இட்டு வழங்கும் ஒரு மரியாதைச் சொல் மட்டுமன்று அடைமொழி அல்லது சிறப்புப் பெயர். உடைமை - செல்வம் (சொத்து) செல்வத்தை வடமொழியில் ஐஸ்வர்யம் என்பர். இறைவன் இந்த உலகத்தை உடைமையாக -செல்வமாகக் கொண்டவன். அதனால் செல்வமுடையானாகிய இறைவன் ஐசுவரியன் எனப்பட்டான். அவனை உடைமையாகக் கொண்டவளான இறைவி ஐஸ்வர்யாள் என்றழைக்கப்பட்டாள். ஐஸ்வர்யன் ஈஸ்வரன் எனவும், ஐஸ்வரி ஈஸ்வரி எனவும் மரூவி வழங்க இவர்கள் உறையும் இடம் ஈஸ்வரம் எனப்பட்டது. ஆவூர்க்கூற்றம் - ஆவூரின் பகுதி கூற்றம் என்பது கூறு என்ற வேர்ச்சொல்லடியாகப் பிறந்த சொல். நாட்டைப் பல பெரும் கூறுகளாகப் பிரித்து அப்பிரிவுகள் அந்நாட்டின் கூறுகள் என்ற பொருளில் அப்பிரிவில் தலைமையாக உள்ள ஊர்களை அடையாளப்படுத்தி கூற்றம் எனப் பெயரிட்டனர். ஒல்லையூர்கூற்றம், முத்தூற்றுக் கூற்றம், தஞ்சாவூர்க் கூற்றம் என நாட்டின் பழம் பிரிவுகள் அழைக்கப்பட்டதைக் காணலாம். இக்கூற்றங்களே பிற்கால அரசர் காலத்தில் வள நாடுகளாகவும், நாடுகளாகவும் மாற்றம் பெற்றன. இது இன்றைய மாவட்டம், வட்டம் போன்ற பிரிவுகளாகும். ஆதலால் பகுதி அன்று நாட்டுப்பிரிவு. புதுக்குப்புறம் - புதுப்பித்தல் நாட்டுக்காகவும் , கோயில்களுக்காகவும் அமைக்கப்பட்ட ஆறு, குளம், ஏரி, வாய்க்கால் போன்ற கட்டுமானப் பொருள்களும் வழிபாட்டுக்காக அளிக்கப்பட்ட அறக்கட்டளைகளும் தேய்வு அழிவுகளுக்கு ஆளாவது இயற்கை. அவற்றை வேண்டும் பொழு தெல்லாம் செப்பனிட்டு புதுப்பித்து வைத்துக் கொள்வதற்கு பொருள் ஒதுக்கீடு தேவை. அவ்வொதுக்கீட்டு பொருள்கள் அவற்றை காத்து ஓம்புவதால் அது புறமெனப்பட்டது. ஈன்று புறந்தருதல் என்றலைக்கடனே எனவரும் புறநானூற்று அடிகளை நோக்க இது புலப்படும். ஆகவே அவற்றை ஓம்புதலுக்காக நிலையாக வைக்கப்பட்ட பொன்னோ பொருளோ வருவாய் தரும் நிலமோ அவற்றுக்கு புறமாகக் கருதப்பட்டது. இங்கு தண்ணீர்த் தொட்டியையும் அதில் நிலையாய் நீர் அட்டுவதையும் புதுப்பித்துப் பேணிக்காக்க செலவாக நிலமளிக்கப்பட்டது. இந்நிலத்தால் வரும் வருவாய் அவற்றை புதுப்பித்துக் காப்பதற்கு பயன்படுவதால் புதுக்குப்புறம் எனப்பட்டது. இறையிழிச்சி - வரி விலக்கி இது வரியை விலக்குவது அன்று. இறையிலி என்பதற்கு வரி நீக்கப்பட்டது அல்லது விலக்கப்பட்டது என்பது பொருள். நிலக் கொடை அளிப்பவர் தாம் அளிக்கும் கொடை நிலத்திற்கு உரிய வரியைத் தாமே செலுத்தி அளிப்பதற்கு இறையிழிச்சிக் கொடுத்தல் என்று பெயர். இது இன்று ஊர்திகளுக்கு உரிய வரியை மொத்தமாக செலுத்தியபின் ஊர்தி வாங்குவது போன்றது. தொழுதகை - தொழுதகை ஓர் பட்டினம் ‘தொழுதக விளங்கும் யாண்டே’ என வரவேண்டிய கல்வெட்டு வாசகம் தொழுதகை விளங்கும் யாண்டே என வந்துள்ளது. தொழுதக என்பதற்கு வணங்கத் தக்க, போற்றத்தக்க என்பதே பொருள். இராசராசன் மிகப் பெரும் மன்னனாகையினால் எல்லோராலும் வணங்கத் தக்க பெருமையுடையவன். ஆதலால் தொழுதக விளங்கும் என சிறப்புடன் கூறப்பட்டது. ‘தொழுதகு மெய்யை ’ - அகம்.310 ‘தொழுதகு தெய்வ மன்னாள்’ - சீவக சிந்தாமணி 1912 என்பன போல வரும் அடிகளை நோக்குக. தொழுதகு - தொழத்தக்க மதிப்பையுடைய. தொழுதக - தொழுதகை. தொழுதகை என்பது நெடுந்தகை, பெருந்தகை என்பன போல வரும். யாண்டு - இது சாசனங்களில் அரசர்களின் ஆட்சி ஆண்டைக் குறிக்கும். ஆண்டு என்பது வேறு. யாண்டு என்பது வேறு. ஆண்டு என்பது முறையாகத் தொடர்ந்து ஒரே சீராக வரும் 365 நாட்களைக் கொண்ட ஒரு நாள் தொகுதி. யாண்டு என்பது குறிப்பிட்ட நாட்களைக் கொண்டு இராது. 365 நாளுக்குக் கூடியும் குறைந்தும் வரும். ஒருவர் பிறந்த நேரத்தில் கோளும் ,நாளும் மதியமும் எப்படி இருந்ததோ அப்படியே அடுத்த ஆண்டு அதே மாதம் அதே மதியத்தில் அதே நாளில் முடிவது ஒரு யாண்டு எனக் கணக்கிடப்படும். நம் முன்னோர் பிறந்த நாள்களைக் வெறும் மாதமும் நாளையும் மட்டும் கணக்கிட்டு கொண்டாடுவதில்லை. பிறந்த நாள் ( நட்சத்திரம்) கோள் ( கிரகம்) பிறை (வளர்பிறை, தேய்பிறை) இவற்றைக் கொண்டே கணக்கிடுவர். அதேபோல மன்னர்கள் தாம் அரசுக்கட்டிலில் ஏறிய மாதம், பிறை, நாள் இவற்றைக் கொண்டு தம்முடைய ஆட்சிக் கணக்கை கணக்கிடுவர். இது யாண்டு எனப்படும். 365 நாட்களின் எண்ணிக்கை கொண்டு கணக்கிடுவது ஆண்டு. நாள் ( நட்சத்திரம் ) கோள் கொண்டு கணக்கிடுவது யாண்டு. ஆண்டு வேறு, யாண்டு வேறு. ஆகவே ஒருவருடைய அகவையை ( வயதை ) கணக்கிடும் பொழுது இத்தனை யாண்டு எனத் தான் கூறவேண்டும். ‘யாண்டு பலவாக நரையில வாகுதல்’ என வரும் பிசிராந்தையாரின் கூற்று இக் காரணம் பற்றியாகும். நீரிறைக்கும் மரக்காலுக்கு பெயர் அருண்மொழித் தேவன் நீரிறைக்கும் மரக்காலுக்கு அருண்மொழித் தேவன் என்பது பெயரன்று. நீரிறைப்பாருக்குக் கூலியாக நெல் அளக்கும் மரக்காலின் பெயரே அருண்மொழித் தேவன். அருண்மொழித் தேவன் ( இராசராசன்) நெல் அளக்கும் மரக்காலுக்கும் தன் பெயரைச் சூட்டியுள்ளான். 2. திருப்பதியம் சாசனம் 1. ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமைபூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கைநாடுங் கங்கபாடியுந் தடிகைபாடியும் நுளம்பாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந் திண்டிறல் வென்றித் த 2. ண்டாற் கொண்ட தென்னெழில் வளரூழியு ளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோராஜகேசரி வர்ம்மரான ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவது வரை உடையார் ஸ்ரீ ராஜ ராஜீ.ஸ்வரம் உடையார்க்குத் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்ய உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் குடுத்த பிடாரர்கள் நாற்பத் தெண்மரும் இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பா 3. ன் ஒருவனும் இவர்களிலே நிலையாய்க் கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின்மர்க்குப் பேரால் நிசதம் நெல்லு முக்குறுணி நிவந்தமாய் ராஜகேஸரியோ டொக்கும் ஆடவல்லா னென்னும் மரக்காலால் உடையார் உள்ளூர்ப் பண்டாரத்தேய் பெறவும் இவர்களில் செத்தார்க்கும் அனாதேசம் போனார்க்குந் தலைமாறு அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவார் அந்நெல்லுப் பெற்றுத் திருப்பதியம் விண் 4. ணப்பஞ் செய்யவும். அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவார் தாந்தாம் யோக்யர் அல்லாது விடில் யோக்ய ராயிருப்பாரை ஆளிட்டுத் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்வித்து அந்நெல்லுப் பெறவும் அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவாரின்றி யொழியில் அந்த நியாயத்தாரே யோக்யாரா யிருப்பாரைத் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்ய இட்டு இட்ட அவனே அவ்வவர் பெறும்படி நெல்லுப் பெறவும் ஆக இப்படி உடையார் ஸ்ரீ ரா 5. ஜராஜதேவர் திருவாய் மொழிந்தருளினபடி கல்லில் வெட்டியது. (1) பாலன் திருவாஞ்சியத் தடிகளான ராஜராஜப் பிச்சனான சதாசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி. (2) திருவெணாவல் செம்பொற் சோதியான தஷிணமேரு விடங்கப் பிச்சனான ஞனசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (3) பட்டாலகன் அம்பலத்தாடியான மனோத்ம சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (4) பட்டாலகன் சீருடைக் கழலான 6. பூர்வசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (5) பொற் சுவரன் திருநாவுக்கரையனான பூர்வசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (6) மாதேவன் திருஞானசம்பந்தனான ஞாந சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (7) கயிலாயன் ஆரூரன் தர்மசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (8) செட்டி எடுத்த பாதமான கவசசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குணி (9) இராமன் சம்பந்தனான ஸத்யசிவனுக்கு நெல் 7. லு முக்குறுணி (10) அம்பலவன் பத்தர்கள் . . . . . டனான வாமசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (11) கம்பன் திருநாவுக்கரையனான சதாசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (12) நக்கன் சீராளனான வாமசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (13) அப்பி திருநாவுக்கரையனான நேத்ரசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (14) சிவக்கொழுந்து சீராளனான தர்ம்மசிவனுக் (8) கு நிசதம் நெல்லு முக்குறுணி (15) ஐஞ்நூற்றுவன் வெண்காடனான சத்ய சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (16) அரையன் அணுக்கனான திருமறைக்காடன் . . . . னான தர்ம சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (17) அரையன் அம்பலக் கூத்தனான ஓங்கார சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி (18) ஆரூரன் திருநாவுக்கரையனான ஞாநசிவனுக்கு நிசதம் நெ 9. ல்லு முக்குறுணி 19.கூத்தன் மழலைச் சிலம்பான பூர்வ சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 20. ஐஞ்நூற்றுவன் சீஆரூரனான தத்புருஷ சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 21. சம்பந்தன் ஆரூரானான வாம சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 22. அரையன் பிச்சனான தர்மசிவனுக்கும் நிசதம் நெல்லு முக்குறுணி 23. காசியபன் எடுத்தப்பாத பிச்சனான உருத்ர சிவனுக்கு நிசதம் 10. நெல்லு முக்குறுணி 24. சுப்ரஹ்மண்யன் ஆச்சனான தர்ம சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 25. கூத்தன் அமரபுஜங்கன் ஆன ஸத்திய சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 26..... வெண்காடனான அகோர சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 27. மாதேவன் திருநாவுக்கரையனான விஜ்ஞான சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 28. கூத்தன் வெண்காடனான உருத்திர சிவனுக்கு நிசதம் 11. நெல்லு முக்குறுணி 29. ஐஞ்நூற்று வன் திருவாய்மூரான அகோரசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 30. திருமலைக் கூத்தனான வாம சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 31. ஐஞ்நூற்று வன் எடுத்தபாதமான தர்மசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 32. அரையன் தில்லைகரசான பூர்வசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 33. காளி சம்பந்தமான தர்ம சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 34. காபா 12. லிகவாலியான ஞாநசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 35. வெண்காடன் நமஸ்ஸிவாயமான உருத்ர சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 36. சிவனனந்தனான யோக சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 37. சிவக்கொழுந்து சம்பந்தனான அகோரசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 38. இராமன் கணவதியான ஞான சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 39. பிச்சன் வெண்காடனான அகோர சி 13. வனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 40. மறைக்காடன் நம்பி ஆரூரானான ஞானசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 41. சோமன் சம்பந்தனான ஞாநசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 42. சக்தி திருநாவுக்கரையனான ஈசான சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 43. பொற்சுவரன் நம்பி யாரூரனான தர்மசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 44. ஆச்சன் திருநாவுக்கரையனான நேத்த்ர சிவனுக்கு நிசதம் 14. நெல்லு முக்குறுணி 45. ஐயாரன் பெண்ணோர் பாகனான ஹ்ருதய சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 46. இராசாதித்தன் அம்பலத்தாடியான சிவ சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 47. செல்வன் கணவதி தெம்பனான தர்ம சிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 48. கூத்தன் தில்லைக் கூத்தனான ஞானசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 49. உடுக்கை வாசிக்கும் த்வேதை கோமபுரத்து தத்தய க்ரம வி 15. த்தன் மகன் சூர்யதேவ கிரமவித்தனான ஆ . லவிடங்க உடுக்கை விஜ்ஜாதிரனான சோமசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 50. கொட்டி மத்தளம் வாசிக்கும் குணப்புகழ் மருதனான சிவாசிவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி 51. கல்வெட்டின் குறிப்புகள் திருப்பதியம் - இராஜராஜேஸ்வரர் ஆலய சாசனம் (இராஜராஜன் I 985-1014) இடம்: தஞ்சை ஜில்லா, இராஜேஸ்வரர் கோவில் வடபாற் சுவரின் வெளிப்புறத்தில் கண்டது. பொருள்: சோழன், இராஜராஜன், தனது 29வது ஆட்சியாண்டில் தஞ்சை இராஜேஸ்வரர் ஆலயத்தில் திருப்பதிகம் ஓதுவார் 48 - பேரும், உடுக்கை வாசிப்பான் ஒருவனும் மத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக 50-பேர் தினசரி ஒவ்வொருவரும் நெல் 3 - குறுணி தனது உள்ளூர்ப் பண்டாரத்திலிருந்து பெறும்படி ஆணையிட்டதைத் தெரிவிக்கின்றது. வெற்றி: முதற் சாசனத்தில் கண்டவையே காலம்: கி.பி. 1014 மெய்க்கீர்த்தி: திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொள எனத் தொடங்குவது. சொற்பொருள்: பிடாரர்கள் - பாடகர்; நிவந்தம் - படியளத்தல். ராஜகேசரி, ஆடவல்லான் - நெல் அளக்கும் மரக்கால்களின் பெயர்கள். உள்ளூர்ப் பண்டாரம் - உள்ளூர் பொதுவிலிருக்கும் பொக்கிஷம். அனாதேசம் போனார் - ஊர்விட்டுப் போனார். தலைமாறு - பதிலாக, அடுத்த முறை கடவார் - நெருங்கின பந்துக்கள். ஆளிட்டு - தெரிந்து, அந்த நியாயத்தார் - நியமிக்கப்பட்ட வேலைக்குத் தகுதியுடையார், திருப்பதியம் - திருப்பதிகம் - தேவாரம். பிறகுறிப்புகள் இறந்தார் - அனாதேசம் போனார் இவர்களுக்குப் பதிலாக, அவ்வவர்க்குரிய நெருங்கிய பந்துக்கள் உரியராவர், அவர்களும் பதிகம் பாடுதல்முதலியவற்றிற்கு உரியரல்லராயின் பிறர் தேர்ந்தெடுக்கப் படுவர், பந்துக்கள் இல்லாவிடில் பதிகம் பாடுதல் முதலியதன்மையார் தேர்ந்தெடுக்கப்படுவர். உடுக்கை வாசிப்பானும் மத்தளங் கொட்டுவானும் நிலையானவர்கள். இச்சானத்தைக் கல்லில் வெட்டினவன் ராஜராஜப் பிச்சனான சதாசிவன். (இவனுக்கு நிசதம் நெல்லு முக்குறுணி) விளக்கக்குறிப்பு இக் கல்வெட்டு தஞ்சாவூர் இராசஇராசேசுவரமுடையார் கோயில் திருச்சுற்றின் வடக்குச் சுவரில் வெட்டப்பட்டுள்ளது. இது தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 2இல் 65ஆம் எண் கல்வெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. இராசகேசரி, ஆடல்வல்லான் - நெல் அளக்கும் மரக்கால்களின் பெயர் இராசராசன் தன்னுடைய காலத்தில் அளவைகளுக்கு தன்னுடைய பெயரையும் தான் வழிபடு கடவுளான ஆடல் வல்லான் பெயரையும் சூட்டி மகிழ்ந்தான். ஆகவே இராசராசன் , ஆடல்வல்லான் என்ற இருவகை மரக்கால்கள் இருந்தன. ஆயினும், பின்னர் ஆடல்வல்லான் என்ற பெயரையே நீட்டல், முகத்தல், நிறுத்தல் போன்ற எல்லா அளவைகளுக்கும் ஆடல் வல்லான் என்னும் துலையால் , ஆடல்வல்லான் என்னும் காசுக் கல்லால், ஆடல்வல்லான் என்னும் மரக்காலால் , ஆடல்வல்லான் எனும் கோலால் என ஆடல்வல்லான் என்ற பெயரையே சூட்டியுள்ளான். ‘ நான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயமே ’ என அடியார்கள் கூறுவது போல எப்போம் ஆடல்வல்லான் திருப்பெயரே காதில் ஒலிக்கவேண்டும் எண்ணினான் போலும். இக்கல்வெட்டில் இராசராசன் என்னும் மரக்கால் முன்பு வழக்கில் இருக்க பின் இம் மரக்காலின் பெயரை ஆடல்வல்லான் எனப் பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும். அளவையில் இராசராசன் என்ற மரக்காலும், ஆடல்வல்லான் என்னும் மரக்காலும் ஒப்பு ஆதலால் இராசகேசரியோடு ஒக்கும் ஆடல்வல்லான் என்னும் மரக்கால் எனக் குறிப்பிட்டள்ளான். உள்ளூர் பண்டாரம் - உள்ளுர் பொதுவிலிருக்கும் பொக்கிஷம். பண்டாரம் என்னும் சொல் பண்டம் + ஆரம் = பண்டாரம். பண்டங்களின் தொகுதி அல்லது குவியல் என்பது பொருள். அரசனது அரண்மனையிலும், இறைவனது கோயில்களிலும் பொருட்களையும் ஆவணங்களையும் திரட்டி வைக்கும் இடமாக இது இருந்தது. இப் பண்டாரங்கள் அவற்றில் வைக்கும் பொருளின் சிறப்புக்கேற்ப பொற்பண்டாரம், பூப்பண்டாரம் எனப் பெயர் பெற்றிருந்தன. இப்பண்டாரம் என்னும் நல்ல தமிழ்ச் சொல் பொக்கிஷம் என்ற வடமொழிச் சொல்லால் வாழ்விழந்தது. இதற்கு மாற்றாக இன்று நாம் டிரசரி என்ற ஆங்கிலச் சொல்லையும் அதன் மொழிப்பெயர்ப்பான கருவூலம் என்ற சொல்லையும் பயன்படுத்தி வருகிறோம். சேரநாட்டில் (கேரளம் ) இன்றும் கோயில் தோறும் உள்ள உண்டியல்கள் பண்டாரம் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. அப்பண்டாரத்தை நாம் உருதுச் சொல்லான உண்டியல் என்ற சொல்லால் அழைக்க நல்ல தமிழ்ச் சொல் வழக்கிழந்து விட்டது. இராசராசன் காலத்து உள்ளூர் பண்டாரம் என்று சொல்லப் பட்டது அரச பண்டாரம், கோயில் பண்டாரம் இவற்றிலிருந்து வேறுபடுத்தப்பட்டு ஊராட்சியின் கீழ் இருந்த ஊர்ப் பண்டாரத்தைக் குறிக்கும். தலைமாறு - பதிலாக ஒரு பொருளுக்கு ஈடாக அதே அளவுள்ள வேறு பொருளைக் கொடுப்பதற்குத் தலைமாறு என்று பெயர். இதனை இன்று எக்சேன்ஜ் ( Exchange ) என்ற ஆங்கிலச் சொல்லால் குறிப்பர். பதில் என்பது மாற்று என்பதற்கு உரிய வடமொழிச் சொல். அடுத்தமுறை கடவார் - நெருங்கின பந்துக்கள். அடுத்தமுறை கடவார் என்பது எல்லா நெருங்கிய உறவு களையும் (பந்துக்கள்) குறிக்காது. ஒருவருடைய உடமைக்கும், உரிமைக்கும் உரிமையுடைய அடுத்த நிலையில் உள்ள உறவினர் - பிறங்கடை - (வாரிசு ) ஆவர். ஆளிட்டு - தெரிந்து. அந்த நியாயத்தார் - நியமிக்கப்பட்ட வேலைக்குத் தகுதியுடையார். ஒரு பணி செய்வார்க்கு அடுத்து அப்பணி உரிமைக்குடையார் அப்பணிக்குரிய பணித்தகுதி உடையவர் அல்லாராய் இருப்பின் அப்பணியைச் செய்தல் இயலாது. பணி செய்யாத பொழுது அதன் ஆக்கமும் இழப்பர். ஆனால் பணி உரிமை அக்காலத்தில் குடும்ப உரிமை போல நடைமுறையில் இருந்ததால் உரிமை உடைய அக்குடும்பத்தாரே அப்பணிக்குரிய பணித்தகுதி உடையாரை அப்பணிக்குரிய ஆளாக இட்டு அதற்குரிய சம்பளத்தைப் பெறலாம். எனவே ஆள் என்பது பணி ஆள். ஒவ்வொரு பணியையும் செய்வதற்கு அதற்குரியத் தகுதிகள் வேண்டும். செய்யும் பணிக்கேற்ப செய்பவரின் தகுதி வரையறுக்கப் பட்டுள்ளது. அத்தகுதியுடையாரையே பணிமக்களாக அமர்த்துவது நடைமுறை. இதனை வள்ளுவரும் “இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்” எனக் குறிப்பிடுவார். ஒரு பணிக்குரிய பணித்தகுதியை வரையறுப்பதற்கு பணிஅமைப்பு நெறி (Adhack Rule) என்று பெயர். இந்த பணிஅமைப்பு நெறி நமக்கு ஒன்றும் புதிதல்ல. நம்முடைய நடைமுறையில் இருந்ததே என்பதை இக்கல்வெட்டால் அறியலாம். சிலப்பதிகாரத்தில் ஆடல்மகளிர்க்குரிய தகுதியாக, “ ஆடலும் பாடலும் அழகும் என்றிக் கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல் ” (அரங்கேற்று காதை 8-9). எனவரும் அடிகளாலும் உணரலாம். அதுபோல இராசராசன் தஞ்சாவூர்க்கோயிலில் பணியமர்த்திய ஆடல் மகளிர், திருப்பதியம் பாடுவார் மற்றும் உள்ள பணிகளுக்கு உரிய தகுதி வரையறுத் திருப்பதைக் காணலாம். இது சோழர் காலத்தில் பெருவழக்காக இருந்துள்ளது. ஒரு பணி செய்வார் இறப்பினும் அல்லது வேறு நாடு செல்லினும் அவருடைய குடும்பம் துன்புறக்கூடாது என்பது அன்றைய வழக்காக இருந்துள்ளது. அதே நேரத்தில் பணிக்குரிய தகுதிகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதிலும் கட்டுப் பாடு இருந்துள்ளது. அதனால் இறந்த அல்லது வெளிநாடு சென்ற பணியாளர் குடும்பத்தினர் விட்டுச் சென்றவர் பணியைச் செய்து அப்பணிக்குரிய ஊதியத்தைப் பெறலாம். ஆனால் அதற்குரிய தகுதி அவர்களுக்கு இருக்க வேண்டும். ஒருகால் அதற்குரிய தகுதி அவர்களுக்கு இல்லாது போனால் அத்தகுதி யுடைய ஒருவரை அக்குடும்பமே பணியமர்த்தி அவ்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் பணியும் குறைபடக் கூடாது பணிமக்களும் குறைபட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டே அன்று பணியமர்த்தம் செய்யப்பட்டிருந்த மாந்த நேயம் போற்றத்தக்கதாக இருந்துள்ளது. 3. ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர் சாசனம் 1. ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னி வளர இருநிலமடந்தையும் பொற்சயப் பாவையும் சீர்த்தநிச் செல்வியும் தன்பெருந் தேவியராகி இன்புற நெடுதியல் ஊழியுள் இடைதுறை நாடும் துடர்வன வேலிப் படர் வனவாசியும் சுள்ளிச் சூழ்மதிள் 2. கொள்ளிப்பாக்கையும், நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகடலீழத் தரைசர் தமுடியும் ஆங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வைத்த சுந்தர முடியும் இந்திரனாரமும், தெண்டிரை ஈழமண்ட 3. ல முழுவதும் எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடுங் குலதனமாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையும், சங்கதிர் வேலைத் தொல்பெருங் காவற் பல்பழந்தீவும் செருவிற் சினவி இருபத்தொருகா லரசு களைகட்ட பரசுராமன் 4. மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட்டொளித்த சயசிங்கன் அளப்பரும் புகழொடும் பீடியல் இரட்டபாடி ஏழரை இலக்கமும் நவநெதிக் குலப்பெரு மலைக 5) ளும் விக்கிரம வீரர் சக்கரகோட்ட முதிர்படவல்லை மதுரமண்டலமும், காமிடைவள நாமணைக் கோணையும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும், பாசடைப்பழன மாசுணி தேசமும் அயர்வில் வண்கீர்த்தி ஆதி நகரவையில் 6) சந்திரன் றொல்குலத் திந்திரதனை வினைஅமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத்தொடு நிறைகுல தனக்குவையும் கிட்டருஞ் செறிமிளை ஒட்ட விஷையமும் பூசுரர்சேர் நற் கோசலைநாடும், தந்ம பாலனை வெம்முனை யழித்து வண்டுறை சோலைத் தண்ட 7) புத்தியும் இரணசூரனை முரணுகத்தாக்கித் திக்கணை கீர்த்தித் தக்கணலாடமும் கோவிந்த சந்தன் மாவிழிந்தோடத் தங்காத சாரல் வங்காள தேசமும், தொடுகழற் சங்கு வொட்டல் மயிபாலனை வெஞ்சமர் விளாகத் தஞ்சுவித் தருளி யொண்டிறல் யானையும் பெண்டி 8) ர் பண்டாரமும் நித்தில நெடுங்கட லுத்திர லாடமும் வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனல்க் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசையோத்துங்க பந்மனாகிய கடாரத்தரைசனை வாகயம் பொரு 9) கடல் கும்பக் கரியொடு மகப்படுத் துரிமையில் பிறக்கிய பெருனெதிப் பிறக்கமும் ஆர்த்தவ னகனகர் போர்த்தொழில் வாசலில் விச்சாதிரத் தோரணமும் மொய்த்தொளிர் புனை மணிப் புதவமும் கனமணிக் கதவமும் நிறைசீர் விசையமும் துறை 10) நீர்ப் பன்னையும் வன்மலையூரெயிற் றொன்மலையூரும், ஆழ்கடலகழ்சூழ் மாயிருடிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப்பாளமும் காவலம் புரிசை மேவிலிம்பங்கமும் விளைப்பந் தூறுடை வளைப் 11) பந்தூறும் கலைத்தக்கோர் புகழ் தலைத் தக்கோலமும் திதமாவல்வினை மாதமாலிங்கமும் கலாமுதிர்க் கடுந்திறல் இலாமுரிதேசமும் தேனக்கவார்பொழில் மானக்கவாரமும் தொடுகடல்க் காவல்க் கடுமுரட் கடாரமும் மாப் 12) பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி பந்மரான உடையார் ஸ்ரீராஜேந்திர சோழதேவர்க்கி யாண்டு 19ஆவது நாள் இரு நூற்று நாற்பத்திரண்டினால் உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர் கங்கைகொண்ட சோழ 13) புரத்துக் கோயிலினுள்ளால் முடிகொண்டசோழன் திருமாளிகையில் வடபக்கத்து தேவாரத்துச் சுற்றுக் கல்லூரியில் தாநஞ் செய்தருளா இருந்து உடையார் ஸ்ரீ ராஜராஜ ஈஸ்வரமுடையார் கோயிலில் ஆசார்ய்ய போகம் நம் உடையார் ஸ்ரீஸர்வ்வசிவ பண்டித 14) சைய்வ்வாசார்ய்யர்க்கும் இவ்வுடையார் சிஷ்யரும் ப்ரசிஷ்யரும்ஆய் ஆர்ய்யதேசத்தும் மத்திய தேசத்துத்தான் கௌட தேசத்துத்தான் உள்ளாராய் யோக்யரா யிருப்பார்க்கே ஆட்டாண்டு தோறும் இத்தேவர் கோயிலில் ஆடவல்லானெ 15) ன்னும் மரக்காலால் உள்ளூர் பண்டாரத்தே நிறைச் சளவாக இரண்டாயிரக்கல நெல்லு ஆட்டாண்டு தோறும் சந்திராதித்தவல் பெறத் திருவாய் மொழிந்தருளத் திருமந்திர ஓலை செம்பியன் விழுப்பரையன் எழுத்தினா 16) ல் . . . . . . த்திருவாய்க் கேழ்விப்படி கல்லில் வெட்டித்து இது இவ்வம்சத்துள்ள சைய்வ்வ ஆச்சார்யர்களே, இத்தன்மம் ரக்ஷிக்க. கல்வெட்டின் குறிப்புகள் இராஜேந்திர சோழ தேவர் சாசனம் (இராஜேந்திர சோழ தேவன் 1012 - 1032) இடம்: தஞ்சைஇராஜேஸ்வரசுவாமி கோவில், தென் பால் கவரில் கண்டது. பொருள் : இராஜேந்திர சோழதேவன், தனது 19 - ம் ஆட்சியாண்டு 242 ம் நாளில் சைவாசாரிய குருக்கள் ஒருவருக்கு ஆண்டுதோறும் 2000 கல நெல் ஆடவல்லான் மரக்காலால் உள்ளூர்ப் பண்டாரத்தி லிருந்து கொடுக்குமாறு சாசனம் பண்ணினான். இவ்வுத்திரவைக் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து அனுப்பினான். வெற்றி : (கங்கை கொண்ட சோழன்) இராஜேந்திர சோழதேவன், வடக்கே கங்கைவரை சென்று வென்றவன். ஆகையால், கங்கை கொண்ட சோழன் என்று கூறப்படுகின்றான். இவன் படை யெடுத்து வென்ற பிரதேசங்களாவன- 1.வனவாசி, 2. கொள்ளிப் பாக்கை, 3. இடதுறை நாடு, 4. மண்ணைக் கடகம், (இவை நான்கும் மைசூர் இலாகாவைச் சேர்ந்தவை) 5. தக்கிணலாடம், 6. உத்தரலாடம், 7. வங்காளதேசம், 8. கடாரம், 9. ஈழம் 10. பல்பழந்தீவுகள், 11. கோசலை நாடு, 12. இலங்காசோகம், 13. கேரளம், 14. ஏழரையிலக்கம், 15. சக்கரக்கோட்டம், 16. மதுர மண்டலம் , 17. நாமணைக் கோணை, 18. பஞ்சப்பள்ளி, 19. மாசுணி தேசம், 20. ஒட்டவிழயம், 21. தண்டபுத்தி 22. தக்கோலம், 23. இலாமுறி தேசம், 24. மானக்கவரம் - முத. இந்திரரதன் செல்வம், மகிபாலன் யானை இவற்றைக் கைப்பற்றினான். மேல-சளு1. 2ம் சயசிங்கனை வென்று, இரட்டபாடி கொண்டான். காலம்: சுமார் கி.பி. 1030 மெய்க்கீர்த்தி: “திருமன்னி வளர இருநிலமடந்தையும், போற் சயப்பாவையும் சீர்த்தநிச் செல்வியும் ” எனத் தொடங்குவது. சொற்பொருள்: முன்னர் - ஈழத்தரசர். சாந்திமத் தீவு - ஒரு தீவு ( சயசிங்கன் இடம் ). முயங்கி - ஓரூர் அல்லது இடம். ஆதிநகரவை - ஆதிநகரத்தில் நடந்த சண்டை. தக்கணலாடம் - குசராத் - கூர்ஜரம் i.e. கூர்ஜராஷ்டிரம், விச்சாதிரத்தோரணம் - ஒரு வளைவு ( Arch) தேவாரத்து - ( ச் சுற்றுக் கல்லூரி ) - அரசனது பூந்தோட்டம் தேவாரம் - பூந்தோட்டம். தேவர் + ஆரம் - தேவாரம். கோயில் - அரண்மனை. துடர்வன வேலிப் படர் - தொடர்ச்சியான காட்டின் சுவர் ( Walls of Continous forest ) பிற குறிப்புகள்: அலைகடல் நடுவட்படு கலஞ் செலுத்தி. விளக்கக்குறிப்பு தஞ்சைப் பெருவுடையார் கோயில் தென் சுவரில் வெட்டப் பட்டுள்ள கல்வெட்டு. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 2 இல் 20ஆம் எண் கல்வெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. தேவாரத்து (ச்சுற்றுக் கல்லூரி)- அரசனது பூந்தோட்டம். தேவாரம் - பூந்தோட்டம் தேவாரம் என்பதற்குப் பூந்தோட்டம் எனப் பொருள் கொண்டிருப்பது பொருத்தமன்று. பூந்தோட்டம் என்பதற்கு தமிழகத்தில் எல்லாக் காலத்திலும் எல்லாப்பக்கங்களிலும் உள்ள கல்வெட்டுக்களில் நந்தவனம் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது. இலக்கியங்களிலும் தேவாரம் என்பதற்கு பூந்தோட்டம் என்ற பொருள் எங்கும் இல்லை. கல்வெட்டுக்களில் ‘ திருவடகுடி மகாதேவர் ஸ்தானமடம் தேவாரத்திற்கு திருப்பதியம் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக் கரையன் ’ -( தெ.இ.க. 8:675) ‘திருவாமாத்தூர் ஆளுடைய அழகிய தேவர் கோயிலில் திருப்பதியம் பாடி வரும் குருடர்களைத் தவிர்த்து நம் தேவாரத்து திருப்பதியம் பாடும் பொய்யாத தேவடிகள்’ (தெ.இ.க. 8:749), பெரிய பெருமாளுக்குத் தேவார தேவராக எழுந்தருளுவித்த தேவர் பாதாதிகேசம் ஐவிரலே இரண்டு தோரை உசரத்து’ ( தெ.இ.க. 2:38), ‘வேலி கங்கரையர் புத்தடிகள் செய்வித்த தேவாரம் ’ ( இ.க. 19:28 - E.I. XXIX , 28) எனவரும் ஆட்சிகளை நோக்க இறைவன் கோயிலிலும். அரசன் கோயிலிலும் , மடங்களிலும் இறைத்திருமேனிகளை வைக்கும் ஒரு கூறு ( பகுதி) என்பது பெறப்படுகிறது. ஆகவே, தேவாரம் என்பது கோயிலின் ஒரு பகுதி. கல்லூரி என்பதற்கும் பூந்தோட்டம் என்பது பொருளன்று. கல்லூரி என்ற சொல் சீவக சிந்தாமணியில் கல்வி பயிலும் ( இங்கு விற்பயிற்சி ) இடம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கல்வெட்டுக்களில் எங்கும் பூந்தோட்டம் என்ற பொருளிலோ, கல்வி பயிலும் இடம் என்ற பொருளிலோ ஆளப்படவில்லை. “தீக்காலி வல்லத்தில் தென்பக்கத்துக் கோயிலில் உள்ளால் மாளிகை மேலைக் கல்லூரியில் எழுந்தருளி பரிசட்டஞ் சார்த்தி அருளா நின்று ” (தெ.இ.க. 8: 222) எனவும், இக்கல்வெட்டில் வரும் கங்கை கொண்ட சோழபுரத்து கோயிலின் உள்ளால் முடிகொண்டசோழன் திருமாளிகையில் வடப்பக்கத்துத் தேவாரத்து சுற்றுக் கல்லூரியில் தானஞ்செய்தருளா இருந்து (தெ.இ.க. 20) எனவும் இவைப் போல வரும் பிற இடங்களிலும் கல்லூரி என்பது கல்விச்சாலையையோ பூந்தோட்டத்தையோ குறிக்க வில்லை. 20ஆம் நூற்றாண்டு அகரமுதலிகளில் ஒன்று ( மு.அருணாசலம் பிள்ளை) சுற்றுத் தாழ்வாரம் என பொருள் கூறியுள்ளது. அத் தேவரம், ஒரு கட்டடப் பகுதியின் தாழ்வாரமாக இருக்கலாம். கல்லூரி என்பது கல் இருக்கை என பொருள்படலாம். கல்லில் ஊர்தல்- கல் + ஊர்தல் = கல்லூர்தல் - கல்லில் ஏறி அமர்தல் . ஊர்தல் என்றால் ஏறுதல், படர்தல் என்பது பொருள். ஊர் = ஏறு , படர் . ஊரி - ஏறி அமர்விடம், படர்இடம், இருக்கை. . எனவே கல்லூரி என்பது தேவாரத்தில் ( கோயிலின் ஒரு பகுதியில்) உள்ள கல்இருக்கை எனவும் பொருள் படலாம். முன்னர் - ஈழத்தரசர் இது முன்னவர் என இருக்க வேண்டும். சேரரைச் சொல்லுமுன் ஈழத்தரசாரைச் சொன்னமையால் முனைவர் என்பது சுட்டு. சோழன் சேரன் மேல் படை எடுத்த பொழுது சேர அரசன் எதிர்கொள்ள இயலாது தன்னுடைய அரச முடியை தன் பாட்டனாரான ஈழவரசனிடம் கொண்டு சேர்த்தான். இது சோழரின் ஈழவரை வென்று அம்முடியைக் கைப் பற்றியதைக் குறிக்கிறது. துடர்வன வேலி - தொடர்ச்சியான காடு துடர் என்பது தொடர் என்பதன் திரிபு. தொடர், தொடரி என்பன சங்கிலியைக் குறிக்கும். வளைவாகவோ, கொக்கியாகவோ ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து தொடுக்கப்படுவது தொடரி. சங்கிலி என்பது தமிழ்ச் சொல் அன்று. தமிழிலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும் தொடர், தொடரி என்ற சொற்களே பயின்று வந்துள்ளன. தொடர், தொடரி என்ற சொற்களின் திரிபான துடர், துடரி என்ற சொற்களும் ஆட்சிப் பெற்றுள்ளன. ‘தொடர்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇ’ ( புறம்) ‘தூங்கு துடர் விளக்கு’ (கல்வெட்டுகள்) எனவருதல் காணலாம். அரண்மனைக்கு காவலாக நீர்அரண், மதிலரண், காட்டரண் எனப் பல அரண்கள் வேலி போல அமைந்திருக்கும். அதுபோல் காட்டரணை வேலியாகக் குறிப்பிடுவது மரபு. அதன்படி‘ துடர்வன வேலி படர்வனவாசி’ என வனவாசியின் காட்டரணை ( வன அரணை - வேலியை ) குறிப்பிடுகிறது. இராஜேந்திர சோழன் தஞ்சாவூர்க் கோயிலில் சைவாச் சார்யம் ( சிவபூசை) செய்ய வடநாட்டு பிராமணர்களை அமர்த்தியதைப் பற்றி இக்கல்வெட்டு பேசுகிறது. கழகக் காலத்திற்குப் பின் தோன்றிய பல்லவ பாண்டியர்களின் காலத்தில் பக்தி இயக்கம் தோன்றியது. இக்காலக்கட்டத்தில் தமிழகக் கோயில்களில் மறையவர், அந்தணர் ஆகியோர் கோயில் வழிபாடு செய்ததாக நாயன்மார்களின் திருப்பாடல் களும் கல்வெட்டுக்களும் கூறுகின்றன. இவர்கள் தமிழ் மறையவர்களா? வடமொழி மறையவர்களா? அல்லது இருமொழியாரும் கலந்தவர்களா என்பது ஆய்வுக்குரியது. சோழர் காலத்தில் அரசர்களே தமிழகக் கோயில்களில் சைவாச்சார்யம் செய்வதற்கு வடநாட்டிலிருந்து பிராமணர்களை அழைத்து வந்து பூசைக்காணி வழங்கி பணியமர்த்தினார்கள் என்பதும் அப்பிராமணர்களை குல குருக்களாக கொண்டனர் என்பதும் கல்வெட்டுக்களால் அறிய வருகிறது. இராசராசனும் அவன் மகனான இராசேந்திரனும் வடநாட்டுப் பிராமணர் களைத் தங்கள் குருமார்களாகக் கொண்டிருந்ததைத் தஞ்சாவூர்க் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. இராசேந்திர சோழன் ஆயிரக்கணக்கான பிராமணர்களை கங்கைக் கரையிலிருந்து அழைத்து வந்து தமிழ்நாட்டில் குடியேற்றினான் என்பதைத் திருலோச்சன சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த சாரவவி என்ற நூல் கூறுகிறது. இவனது களக்காடு என்னும் வானவன்மாதேவிச் சதுர்வேதி மங்கலம் (மாமல்லபுரத்திற்கு அருகிலுள்ள மானாம்பதி) இதனை உறுதிச் செய்கிறது. இக்கல்வெட்டின் வழி இராசராசேசுவரம் உடையார் கோயிலில் வட நாட்டைச் சேர்ந்த ( ஆர்யதேசம் ) சர்வ சிவ பண்டிதர் சைவாச்சாரிய பணி செய்தார் என்பதையும் அவருக்கு உதவியாக சிஷ்யர்கள் பலர் இருந்தனர் என்பதையும் இவர்கள் அனைவரும் ஆரிய தேசத்தில் இருந்தும் மத்திய தேசத்தில் இருந்தும் கௌட தேசத்தில் இருந்தும் அழைத்து வரப்பட்டார்கள் என்பதையும் அறியலாம். இதனை, “ உடையார் ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார் கோயிலில் ஆச்சார்ய போகம் நம் உடையார் சர்வ சிவ பண்டித சைவாச்சார்யர்க்கும் இவ்வுடையார் சிஷ்யரும் பிற சிஷ்யரும் ஆய் ஆரியதேசத்தும் மத்திய தேசத்தும்தான் கௌட தேசத்தும்தான் உள்ளாராய் யோக்கியராய் இருப்பார்க்கே ” என வரும் பகுதியால் அறியலாம். இன்று வடமா, மத்தியமா, பிருகச்சாரணர் என அழைக்கப்படும் தமிழ்நாட்டு பிராமணர்கள் சோழர் காலத்தில் தாமே வந்தும் அழைத்து வரப்பட்டும் குடியமர்ந்த, குடியமர்த்தப்பட்டவர்களின் பிறங்கடையர்களாக (வாரிசுகளாக) இருக்கலாம் என்பது ஆய்வுக்குரியது. 4. கணவதி நல்லூர் சாசனம் 1. ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்றன் முன்னோன் சேனை பின்னதுவாக முன்னெதிர் சென்று இர 2. ட்டைபாடி யேழரை யிலக்கமுங்கொண்டு எதிரமர் பெறாது எண்டிசை நகம் பறையது கறங்கப் பேராற்றங்க 3. ரைக் கொப்பத்து வந்தெதிர்த்த ஆஹவமல்லன்றன் பெருஞ்சேனை யெல்லாம் படப்பொருது பாரது நிகழப் பசு 4. ம்பிணமாக்கி ஆங்கவ னஞ்சிப் புறக்கிட்டோட அவனானையுங் குதிரையும் பெண்டு பண்டாரமும் ஒட்டகத் தொடு அகப் 5. படப்பிடித்து திசையது நிகழ வீரா அபிஷேகம் பண்ணி வீர ஸிம்ஹாஸநத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேச(ரிபன்ம) ரான உ 6. டையார் ஸ்ரீராஜேந்திரா தேவற்கு யாண்டு 9 வது. அதிராசராச மண்டலத்து வெங்காலனாட்டு கணவதி நல்லூர் கீழ்பாக்கெ 7. ல்லை எருத்துக் குளத்துக்கு மேற்கும் வடபாக்கெல்லை நாட்டுப் பெருவழிக்கு தெற்கும் தென்பாக்கெல்லை ஆற்றுக்கு (வட 8. க்கு) வடக்கும் மேல் பாக்கெல்லை இராசமஹேந்திரன் வதிக்கு கிழக்கும் இன்னான் கெல்லைக் குட்பட்ட நில நஞ்சை புஞ்சை தி 9. ருவாநிலை மஹாதேவற்கு வேண்டும் நிமந்தங்களுக்குத் திருனாமத்துக் காணியாக உடும்போடி ஆமை தவழ புற்று எழு 10. ந்த இடம் கற்றுப்புல் பேரகர முற்றூட்டும் இறுப்பதாக நம் ஓலை குடுக்க திருவாய் மொழிந்தருளிநாரென்று திருமந்திர வோலை 11. க்ஷத்திரியசிகாமணி வளநாட்டு பனையூர் நாட்டு நேர்வாயிலுடையான் தாழி திருப்பனங்காடு உடையானான வானவன் பல் 12. லவதரையன் எழுத்து திருமந்திரஓலைநாயகம் இராஜராஜனான தொண்டைமான் எழுத்து ஊரான் உத்தம சோழனான இராஜராஜ 13. பிரஹ்மாதிராயன் எழுத்து அரையன் இராசராசனான வீரராஜேந்திர ஜெயமூரி நாடாழ்வான் எழுத்து உடன் கூட்டத்து அதிகாரிகளில் 14. க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பனையூர் நாட்டு ஜெயங்கொண்ட சோழநல்லூருடையார் உதையதிவாகரன் கூத்தாடியாரான வீரராஜேந்திர 15. மழவராயன் எழுத்து இவை பந்மாஹேஸ்வர ரக்ஷை. கல்வெட்டின் குறிப்புகள் கணபதி நல்லூர்ச் சாசனம் ( இராஜேந்திர தேவன் 1052) இடம்: கரூர் பசபதீச்சுரர் கோவில் தென் புறச்சுவரில் உள்ளது. பொருள்: கரூர் திருவானிலை மகாதேவற்கு வேண்டும் செலவிற்காக இராஜேந்திர தேவன் தனது ஆட்சியாண்டு 9இல் அதிராசராச மண்டலத்து, வெங்கால நாட்டிலுள்ள கணபதி நல்லூர் கிராமத்தைத் தானம் செய்தனன். வெற்றி: 1. இரட்டபாடியும் எழரையிலக்கமும் வென்றான். 2. பேராற்றங்கரைக் கொப்பத்து ஆகவமல்லனுடன் பொருது வென்றான். அவன் யானையையும், குதிரையையும் பெண்டு பண்டாரத்தையும் ஒட்டகத்தோடு கைப்பற்றினான். காலம்: கி.பி. 1020 விஜயராஜேந்திரனது மெய்க்கீர்த்தியைக் கொண்டுள்ளது இச்சாசனம். இவன் பட்டம் தரித்த வருடம் 1052 எனத் தெரிகிறது. இராஜேந்திர சோழ தேவன் பட்டந் தரித்தது 1012. இங்கு காட்டியுள்ள 1020 இவனது ஆட்சி யாண்டு. ஆகவமல்லனுடன் சண்டை செய்தவன் விஜயராஜேந்திரனே. ஆதலால் விஜயராஜேந்திரனது ஆட்சியாண்டு 9 ஆவதாகிய 1060 தான் இச்சாசன காலம். மெய்க்கீர்த்தி: திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்றன் முன்னோன் சேனை பின்னதுவாக எனத் தொடங்குவது. சொற்பொருள்: நகம் = பூமி, ஆகவமல்லன் = மேலைச் சாளுக்கிய மன்னன். பண்டாரம் = பொக்கிஷம். வதி = வழி. நிமந்தம் = வேண்டிய செலவு. புற்று = மேடு. திருமந்திர வோலை = அரசன் கட்டளையைக் கேட்டெழுதுவோன் . திருமந்திரவோலை நாயகம் = மேற்படி எழுதுவோருக்குத் தலைவன். முற்றூட்டு = பூரண அநுபவ பூமி. ஊரான் = நகரவாசி. உடன் கூட்டத்து அதிகாரிகள் = சபையுறுப்பினர். பிறகுறிப்புகள்: இவ்வரசனுக்கு இதிற் கூறப்பட்ட மெய்க் கீர்த்தியேயன்றி, “திருமாது புவியெனும் பெருமாதர் இருவர்தந்” எனத் தொடங்கும் வேறொரு மெய்க்கீர்த்தியும் உண்டு. “உடும் போடி ஆமை தவழ்புற்று எழுந்த இடம்” என வருணித்துள்ளமையால் நிலவளம் விளங்கும். விளக்கக்குறிப்பு கருவூர் திருஆநிலை மகாதேவர் கோயில் தென்சுவரில் உள்ள கல்வெட்டு. இது தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3 இல் 21ஆம் எண் கல்வெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழனாகிய முதலாம் இராசேந்திரனின் இரண்டாம் மகன் ஆவான். அவனது முதலாம் மகனாகிய இராசாதி ராசனுக்குப் பின் ஆட்சிக் கட்டிலில் ஏறியவன். கி.பி.1052இல் முடிசூடியவன். மேலைச் சாளுக்கியரோடு பல ஆண்டுகள் பலமுறை நடந்த சண்டையில் தன் அண்ணனுடன் இவனும் கலந்து கொண்டவன். அதனால் சாளுக்கியரை வென்றான் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகவே இக்கல்வெட்டின் அரசன் முதலாம் இராசேந்திரன் அல்லன். இரண்டாம் இராசேந்திரனே. இவனுக்கு விசய இராசேந்திரன் என்ற பெயர் இருந்ததாகத் தெரியவில்லை. இவனுக்கு 1. இரட்டைபாடி கொண்டு 2. திருமகள் மருவிய செங்கோல் வேந்தன் 3. திருமாது புவியெனும் பெருமாதர் என்னுத் தொடக்கத்தனவாகிய மூன்று மெய்கீர்த்திகள் உள்ளன. மூன்றாவது மெய்க்கீர்த்தி மிக நீளமானது. வதி - வழி வதிக்கு வாய்க்கால் என்றும் பொருளுண்டு. கொடை நிலத்தின் மேற்கெல்லையாகச் சுட்டப்பட்டுள்ள இவ்வதி இராசமகேந்திரன் வதி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவ் இராசமகேந்திரன் முதலாம் இராசேந்திரனாகிய கங்கை கொண்ட சோழனின் மக்களில் ஒருவன்ஆவான். இரண்டாம் இராசேந்திரனுக்கு அடுத்து இளவரசு பட்டம் கட்டப் பெற்ற அவனது தம்பியான இராசமகேந்திரன் மேலைச் சாளுக்கியரோடு முடக்காறு என்ற இடத்தில் நடந்த போரில் உயிர் துறந்தான். இவன் திருவரங்கத்து அரங்கர் கோயிலில் ஒரு திருச்சுற்று எழுப்பியுள்ளான். அதற்கு இராசமகேந்திரன் திருவீதி என்று பெயர் என்பதை அங்குள்ள கல்வெட்டால் அறியலாம். எனவே இராசமகேந்திரன் இரண்டாம் இராசேந்திரன் தம்பி என்பதும் , அவனுக்கு அடுத்து இளவரசுப்பட்டம் கட்டப்பெற்ற இவன் போரில் இறந்தமையால் அவனது நினைவாக இவ்வாய்க்காலுக்கு பெயர் இடப்பட்டுள்ளது. நிமந்தம் - வேண்டிய செலவு இறைவனுக்கு பூசைக்காகவும் மற்றும் சாத்துப்படி போன்றவற்றுக்காகவும் அளிக்கப்படும் பொருளுக்கு நிமந்தம் என்று பெயர். புற்று - மேடு புற்று என்பது கரையான்புற்று . நிலங்களைக் கொடை யளிக்கும் பொழுதும் விற்கும் பொழுதும் அதில் அடங்கியுள்ள அனைத்துப் பொருள்களையும் பயன்படும், பயன்படா அனைத்து நிலங்களையும் உள்ளடக்கிக் கொடுப்பதும் விற்பதும் மரபு. அதில் அடங்கியுள்ள நிலங்களைக் கூறுகின்ற பொழுது புற்றெழுந்தும் மேடிட்டும் நீர் கோர்த்தும் கரம்பாய்க் கிடந்தும் இவை போன்ற பயனற்ற நிலங்களையும் உள்ளடக்கிக் கொடுப்பதாக எழுதுவது வழக்கம். அவ்வழக்கப்படியே புற்று எழுந்த நிலத்தையும் குறிப்பிட்டுள்ளனர். முற்றூட்டு - பூரண அனுபவ பூமி கொடையளிக்கும் பொழுது அக்கொடைப் பொருளால் வரும் வருவாயையோ,வரியையோ அல்லது பிற குறிப்பிட்ட சில பயன்களையோ மட்டும் கொடையாக அளிக்காது அதில் உள்ள அனைத்து உரிமைகளும் உள்ளடங்க கொடுப்பதை முற்றூட்டு என வழங்குவர். முற்று - முழுவதும், ஊட்டு - ஊட்டுதல் , அளித்தல் = முழுமையாக அளித்தல் என்பது பொருள். இத் தமிழ்ச் சொல்லை சர்வமான்யம் என்ற வடசொல் பயனற்றுப் போக வைத்துவிட்டது. உடன் கூட்டத்து அதிகாரிகள் - சபை உறுப்பினர் சபை உறுப்பினர் என்பது ஊராலும் , நாட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் போல பிராமணச் சபைகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சபை உறுப்பினர் ஆவார். உடன் கூட்டு அதிகாரிகள் என்பவர் இவரினும் வேறானவர்கள். ஒரு பணி தொடர்பான பணிகளைச் செய்வோர் உடன் கூட்டத்து அதிகாரிகள். ஊரான் - நகரவாசி ஊரான் என்பது ஊராட்சி உறுப்பினரையோ குறிப்பிட்ட ஊரைச் சார்ந்தவன் என்பதையோ குறிக்கும் சொல். ஊரான், நாட்டான், நகரத்தான் என்பது போல அவ்வவ்வூரைச் சார்ந்த அல்லது ஆட்சி சார்ந்த சுட்டுப் பெயர். 5. அமண்பாக்கம் சாசனம் 1. ஸ்வஸ்திஸ்ரீ திருமாது புவியெனும் பெருமாதர் இருவர் தந் மாதேவியர்களாக மீதொளி வெண்குடையுயர்த்து திண்கலி பெயர்த்து தன்சிறிய தாதையாகிய எறிவலி கங்கைகொண்ட சோழனை பொங்கிகல் இருமடிசோழ நென்றும் பொருமுரட் டன் றிரு 2) த் தம்பியர் தம்முள் வென்றிகொள் மும்மடிச் சோழனைத் தெம்முனை யடுதிறற் சோழபாண்டிய நென்றுங் கோழிமன் றொடுகழல் வீரசோழனைப் படிபுகழ்க் கரிகால சோழநென்றும் பொருதொழில் வாள்வலித் தடக்கை மதுராந்தகனை 3) சோழகங்க நென்றுந் தோள்வலி மேவிகல் பராந்தக தேவனை சோளவயொத்தியராஜ நென்றும் துயரத்தன்பொடு கருது காதலருள் இத்தலம் புகழ் ராஜேந்திரசோழனை உத்தமசோழ நென்றுந் தொத்தணி முகையவி ழலங்கல் முடிகொ 4) ண்ட சோழனை இகல்விசயாலைய நென்றும் புகர்முகத் தேழுயர் களிற்று சோழகேரளனை வார்சிலை சோழகெரள நென்றுந் திண்டிறற் கடாரங்கொண்ட சோழனை தினகரன் குலத்து சிறப்பமர் சோள ஜனகராஜ நென்றுங் கனைகடல் படி 5) கொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழனை சுந்தர சோழ நென்றுஞ் செந்தமிழ்ப் பிடிக லிரட்டபாடி கொண்ட சோழனை தொல்புவியாளுடைச்சோழ கன்னகுச்சிய ராஜனென்றும் பின்னுந்தன் காதலர் காதலர் தம்முள் மேதகு கதிராங்கனை கழ 6) ல் மதுராந்தகனை வெல்படைச் சோழவல்லப நென்று மானசிலைக்கை யோரானைச் செவகனை நிருபேந்திர சொழ நென்றும் பருமணிச்சுடர் மணிமகுடஞ் சூட்டிப் படிமிசை நிகழு நாளி னுளிகல் வேட்டெழுந்து சென்றொண்டிற லிரட்ட மண் 7) டல மெய்தி நதிகளு நாடும் பதிகளு மநேக மழித்தனன் வளவநென்னு மொழிப்பொருள் கேட்டு வேகவெஞ்சளுக்கி ஆகவமல்லன் பரிபவ மெனக்கிதென் றெரிவிழித்தெழுந்து செப்பருந் திரத்த கொப்பத்தகவையில் சென்றெதி 8) ரென் றமர்துடங்கிய பொழுதவன் செஞ்சரமாரி தன் குஞ்சர முகத்தினுந் தன்றிருத்துடையிலுங் குன்றுறழ் புயத்திலுந் தைய்க்கவுந் தன்னுடன் களிறேறிய தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையா தொருதனி யநேகம் பொருபடை 9) வழங்கி யம் மொய்ம்பமர் சளுக்கி தம்பி ஜயசிங்கனும் போர்ப் புலகேசியுந் தார்த்தசபன்மனுமான மன்னவரில் மண்டலி யசோகையனுமான வண்புகழாளு மாரையனுந் தேனிவர் மட்டவிழலங்கல் மொட்டையனுந் திண்டிறல் நன்னி நுளம்பனு மெனு 10) மிவர் முதலியர் எண்ணிலி யரைசரை விண்ணகத் தேற்றி வன்னியரேவனும் வயப்படைத்துத்தனுங் கொன்னவில் படைக்குண்ட மயனும் என்றின்ன வெஞ்சின வரைசரொ டஞ்சிய சளுக்கி குலகுலகுலைந்து தலைமயிர் விரித்து வெனுற நெளித்துப் பின்னுற 11) நோக்கி கால் பறிந்தோடி மேல்கடல் பாய துரத்திய பொழுதச் செருக்களத் தவன்விடு சத்துருபயங்கரன் கரபத்திர மூலபத்திர ஜாதி பகட்டரை சநேகமு மெட்டுநடை பரிகளு மொட்டக நிரைகளும் வராக வெல்கொடி முதல் ராஜபரிச்சந்தமும் 12) ஒப்பில் சத்தியவ்வை சாங்கப்பை யென்றிவர்முதல் தேவியர் குழாமும் பாவையரீட்டமும் மெனையன பிறவு முனைவயிற் கொண்டு விஜய அபிஷெகம் செய்து தெந்திசை வயிற் போர்ப்படை நடாத்திக் கார்க்கடலிலங்கையில் விறற் படைக் கலிங்கர் ம 13) ன் வீரசலாமேகனைக் கடற்களிற்றொடு மகப்படக் கதிர்முடி கடிவித் திலங்கையற் கிறைவன் மாநாபரணந் காதலரிருவரைக் களத்திடைப்பிடித்து மாப்பெரும் புகழ்மிக வளர்த்த கோப்பரகேசரிபந்மராந உடையார் ஸ்ரீராஜேந்திர தேவந்கு யாண்டு நாலாவ 14) து நாள், 82 ஜயங்கொண்ட சோழமண்டலத்து செங்காட்டுக் கோட்டத்து மாகணூர் நாட்டு ராஜ சூளாமணிச் சருப்பேதிமங்கலத்து மஹாஸபையோம் இவ்வாட்டை ஸிம்ஹ நாயற்று அபரபக்ஷத்து அஷ்டமியும் வியாழக்கிழமையும் 15) பெற்ற ரோஹிணிநாள் எம்மூர் ப்ரஹ்மஸ்தாந மண்டபத்தே கூட்டக் குறைவறக் கூடியிருந்து எங்களூர் ஸ்ரீமத் த்வாராபதியான ஸ்ரீ காமக்கோடி விண்ணகராழ்வார்க்கு குடுத்த நிலமாவது எங்களூர் தென்பிடாகை அமண்பாக்கத்து நில 16) ங் கீழ்பாற் கெல்லை மண்ணிக்காலுக்கு மேற்கும், தென் பாற்கெல்லை மண்ணிக்காலுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை 17) அரைசங்குட்டத்துக்கும் நங்காசி யென்னும் புலத்துக்குங் கிழக்கும் வடபாற் கெல்லை பழுவூர் நக்கப்புத்தேரி கரைக்கு தெ 18) ற்கும் இத்தேவர்க்கு முன்பு சிலாலேகை பண்ணின நிலத்துக்குத் தெற்கும் ஆக இன் நாற்பாற் கெல்லைக்கும் நடுவுபட்ட நி 19) லமும் ஓடையு முடைப்பும் மேநோக்கின மரமும் கீணோக்கிய கிணறும் இன் நாற்பாற் கெல்லைக்கும் நடுவுபட்ட 20) தெல்லாம் ஸேனாபதிகள் ஜயங்கொண்ட சோழப் ப்ரஹ்மாதிராஜர் தாயார் காமக்கவ்வையள் பக்கல் ஸ்வம்கொண்டு சந்தரா 21) தித்தவற் இன்நிலத்துக்கு இறையிறுத்துக் குடுப்போமாநோம் மஹாஸபையோம் ஸபையு 22) ளிருந்து கரையிட்டுக் கரைப்பொந்து பணித்த காராம் பிசெட்டு நாராயணக்கிரமவித்தனும் இராயூர் ச 23) ந்திரதேவ அத்தாழிக் கிரமவித்தனும் ஸஹணை மாதவக்கிரமவித்தனும் பணிப்பணியால் 24)பணிகேட்டு எழுதிநேன் இவ்வூர் ஊர்க்கரணத்தான் அலங்காரன் சீராமநேன் இவை என் எழுத்து. கல்வெட்டின் குறிப்புகள் அமண்பாக்கம் சாசனம். இராஜேந்திர தேவன் 1052 இடம்: செங்கற்பட்டு ஜில்லா மணிமங்கலம் கிராமத்தில் இராஜகோபாலப் பெருமாள் கோவிலின் உட்பிரகாரத்தின் கீழ்ப் புறச் சுவரிற் கண்டது. பொருள்: இராஜேந்திர தேவனின் ( விஜய இராஜேந்திரன்) ஆட்சி யாண்டு 4 நாள் 82இல் இராஜசூளாமணி சதுர்வேதி மங்கலத்துச் சபையோர் அமண்பாக்கத்துள்ள சில நிலப்பகுதியை, சயங் கொண்ட சோழப் பிரமாதி ராஜர் தாயார், காமக்கவ்வை யாளிடத்துப் பொருள் கொண்டு, மணிமங்கலம், இராஜகோபால சுவாமிக்குத் தானஞ் செய்தனர். வெற்றி: நான்காம் சாசனத்திற் கூறியவையோடு, 1. இராஜேந்திர தேவன் கொப்பத்துக்குப் படையெடுத்துச் சென்று, ஆகவ மல்லனை மறுபடியும் வென்றான். இதில் ஆகவமல்லனின் தண்ட நாயகர்கள் தோல்வியடைந்தனர். இறந்தவர்கள்: 1. ஜயசிங்கன், 2.புலிகேசி 3. தசபன்பன் 4. மொட்டையன். 5. அசோகயைன் 6. நன்னிநுளம்பன். ஓடியவர்: 1. வன்னிதேவன் 2. துத்தன், 3. குண்டமையன் என்போர். மேலைச்சளுக்கிய வமிசத்து முதலாம் சோமேசுரனென்னும், ஆகவமல்லன் தம்பி ஜயசிங்கன், 2. இப்போரில் சளுக்கியருடைய (1) சத்ரு பயங்கரன் (2) கரபத்ரன் (3) மூலபத்ரன் என்னும் மூன்று பட்டத்து யானைகளையும், வராகக் கொடியையும், சத்தியவ்வை, சாங்கப்பை என்னும் இராஜ பத்தினிகளையும் பிடித்துக் கொண்டான். 3. ஈழத்தை யரசாண்ட (கலிங்கன்) வீரசலாமேகனையும், ( பாண்டியன் ) மானாபரணனையும் வென்றான். (மானாபரணன் காதலரிருவரையும் பிடித்தான் ) காலம்: 1015?, 1056?, 1056தான் இருக்க வேண்டும் மெய்க்கீர்த்தி: “திருமாது புவியெனும் பெருமாதர் இருவர்தம்” எனத் தொடங்குவது. சொற்பொருள்: பொங்கிதல் (பொங்கிகல்) = அதிகவீரம்; கோழி = உறையூர்; காதலர் = புத்திரர்; பிடிகல் = ஆதரவுக்காகப் பிடிக்கப்பட்டக்கல்; பகட்டரைச = ஏழுறுப்புத் தோய்ந்த அரசயானை; ராஜபரிச்சந்தம் = இராஜங்கதோரணையின் அறிகுறி; பிடாகை = சிறுகிராமம்; கரை = துண்டு நிலம்; போந்து பணித்தல் = மேற்பார்த்தல்; ஊர்க்கரணத்தான் = கணக்கன். பிறகுறிப்புகள்: (மும்மடிச் சோழனை) 1. கங்கை கொண்ட சோழனை இருமடிச் சோழனென்றும் 2. மும்மடிச் சோழனை சோழ பாண்டியனென்றும் 3. வீரசோழனை கரிகாலச் சோழனென்றும் 4. பாரந்தகனை சோளவயொத்தியராசனென்றும் 5. ராசேந்திர சோழ தேவனை உத்தம சோழனென்றும் 6. முடிகொண்ட சோழனை விசயாலயன் என்றும் 7. கடாரங் கொண்ட சோழனை சோளஜனராஜனென்றும் 8. முடிகொண்ட சோழனை ( பராந்தகன்) சுந்தர சோழனென்றும் 9. இரட்டபாடிக் கொண்ட சோழனை சோழகன்னகுச்சியராஜனென்றும் 10. மதுராந்தகனை சோழவல்லபனென்றும் 11. ஒருயானைச் சேவகனை நிருபேந்திர சோழனென்றும் வழங்கி வந்தனர். சோழ மண்டலத்துச் செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டின்கண், இராஜசூளாமணிச் சதுர்வேதி மங்கலமுள்ளது. விளக்கக்குறிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் இராசகோபால சாமி கோயில் என வழங்கும் வண்டுவராபதிப் பெருமாள் கோயில் முதல் திருச்சுற்று கிழக்குச் சுவரில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3இல் 29 ஆம் கல்வெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டும் சோழ அரசன் இரண்டாம் இராசேந்திரனுடைய நான்காவது ஆட்சியாண்டில் ( கி.பி. 1056) வெளியிடப்பட்டதாகும். இவன் கங்கை கொண்ட சோழனாகிய இராசேந்திரனின் இரண்டாவது மகன். இராசேந்திரனால் சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்ற பெயரரில் பாண்டிய நாட்டு அரசனாக கி.பி.1021 - 22 இல் முடிசூட்டப் பட்டவன். பின்னர் 1052இல் சோழ நாட்டு அரசனாகப் பதவியேற்றவன். சோழ அரசர்களில் முதலாம் இராசாதிராசன் , இரண்டாம் இராசேந்திரன், வீர இராசேந்திரன் ஆகிய மூன்று உடன்பிறப்புகளும் புது வழக்கமாக தங்களுடைய உறவினர் களாகிய சிற்றப்பன்மார்கள், தம்பிமார்கள், மக்கள், பெயரர் களுக்குத் தங்கள் ஆட்சியில் உயர் பதவி வழங்கிச் சிறப்பித் துள்ளனர் என்பதை அவர்களது மெய்க்கீர்த்தியில் பட்டியலிடப் பட்டுள்ளதை காணலாம். அதன்படி இவனும் தன் உறவினர் களுக்கு அளித்த பதவிகளும் பெயர்களும் மெய்க் கீர்த்தியில் பட்டியலிடப்பட்டுள்ளன. காலம் 1015, 1056, எனக் குறிப்பிட்டு 1056 ஆகத்தான் இருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டின் அரசன் கி.பி. 1052இல் அரசுக் கட்டிலில் ஏறியவன் ஆதலால் அவர் குறிப்பிட்ட கி.பி. 1056 என்பதே இக்கல்வெட்டின் சரியான காலக்கணிப்பாகும். பொங்கிகள் - அதிக வீரம் இகல் - பகை, போர், வலிமை , பொங்கியெழும் வலிமை எனப்படும். காதலர் - புத்திரர் மெய்க்கீர்த்தியில் காதலர் என்பது மக்களை குறிப்பதாக உள்ளது. எனவே , ‘காதலர் காதலர்’ என்பது மக்களின் மக்களை குறிப்பதாகும். பிடிகல் - ஆதரவுக்காக குறிக்கப்பட்ட கல். கல்வெட்டில் இராசேந்திரன் தன் மக்களில் ஒருவனான இரட்டபாடி கொண்ட சோழனை சிறப்பிக்கும் வகையில் செந்தமிழ் பிடிகல் என அவனை தமிழுக்கு ஆதரவானவன் என்ற பொருளில் அழைத்துள்ளான். எனவே பிடிகல் என்பது செந்தமிழுக்கு ஆதரவான பற்றுக்கோடுடையவன் என்ற பொருளில் ஆளப்பட்டதே யொழிய ஆதரவுக்காக பிடிக்கப் பட்ட கல் என்பது பொருளாகாது. பகட்டரசை - ஏழுறுப்புத் தோய்ந்த அரசயானை கல்வெட்டில் கரபத்திர மூலபத்தி ஜாதி பகட்டரைசநேகமு மெட்டு நிரைபரிகளும் ’ என வந்துள்ளது. இதில் சாதிப் பகடு என்பது உயர்சாதிப் பகடு என்ற பொருளில் யானையைக் குறிப்பதாகும். பகடு என்பதற்கு எருது என்றும் (“பகடு நடந்த கூழ் பல்லாரோடுண்க- குறள் ”)ஆண்யானை என்றும் பெருமை என்றும், வலிமை என்றும் பல பொருள்களுண்டு. எட்டுநிரைபரிகளும் என அடுத்த வாசகம் வருவதால் இது அநேக யானைகள் என்பது பொருள் தரும். இராஜபரிச்சங்கம் - இராஜாங்க தோரணையின் அறிகுறி. இது அரசனுடைய சின்னங்களைக் குறிப்பதாகும். பிடாகை - சிறுகிராமம் உட்கிடையூர் என்பதே இதன் பொருள். இன்று வருவாய் ஊர்கள் ( Revenue village ) உள்ளது போல அன்றும் பெரிய ஊர்களை தலைமை ஊர்களாகக் கொண்டு பல ஊர்களை உள்ளடக்கிக் கொண்டு இருப்பதுண்டு. அவ்வுள்ளடக்கர்களை அத்தலைமை ஊர்களின் பிடாகைகள் என்று குறிப்பிடுவது வழக்கம். எனவே பிடாகை என்பது சிற்றூரைக் குறிக்காது. ஒரு ஊராட்சிக் கீழ் அடங்கியுள்ள சிறிய, பெரிய உட்கிடையூர்களையேக் குறிக்கும். கரை - துண்டு நிலம் இங்கு கரை என்பது எல்லை என்ற பொருளில் வந்துள்ளது. கல்வெட்டுக்களில் கரை இட்டு , கரை போந்து என்பன போன்ற வாசகங்கள் எல்லையை அறுதிசெய்து என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. எனவே, கரை என்பது எல்லையைக் குறிக்குமே ஒழிய துண்டு நிலத்தைக் குறிக்காது. நிலத்துக்கு எல்லை வரையறை செய்வாரை கரையாளர் என வழங்குவதையும் காணலாம். போந்து பணித்தல் - மேற்பார்த்தல் பணி என்பது ஆணையிடல். ஒரு பணியை - வேலையைச் செய்யுமாறு பணித்தல் எனப் பொருள்படும். மேற்பார்த்தல் என்பதற்கு கண்காணித்தல் என்றும் மேற்பார்ப்பவரை கண்காணி என்றும் கல்வெட்டுக்களில் ஆளப்பட்டுள்ளன. பணி என்பது ஆணை , கட்டளை இடுதல் எனப்பொருள்படும். பணி, பணிப் பணி, பணிப்பணியால், பணிக்கச் செய்தல் எனப் பரந்து பட்ட ஆட்சியுடைய இச்சொல் மிகுந்த பொருளாழம் உடையது. இன்று ஆர்டர் ( Order ) என்ற ஆங்கிலச் சொல்லிற்கு வழங்கப் படும் பல்வேறு பொருள்களையும் உள்ளடக்கியது. ஊர்க்கரணத்தான் - கணக்கன் கணக்கன் என்ற தமிழ்ச் சொல்லிற்கு மாற்றாக கரணத்தான் என்ற வடசொல் புகுத்தப்பட்டு தமிழ்ச் சொல்லின் ஆட்சியை வலுவிலக்கச் செய்து விட்டது. கல்வெட்டுக்களில் ஊர்க்கணக்கன், நாட்டுக்கணக்கன் என்பன போல பரந்துபட்ட ஆட்சியுடைய இச்சொல்லுக்கு மாற்றாக வட மொழிக் கல்வெட்டுக்களில் கரணத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு பின்னர் தமிழ்க் கல்வெட்டுக்களிலும் பயன்படத் தொடங்கியது. அதன் விளைவே ஊர்கரணத்தான் என்ற சொல்லாட்சி. சோழமண்டலத்துச் செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டின்கண் இராஜசூளாமணிச்சதுர்வேதி மங்கலமுள்ளது. இங்கு குறிப்பிட்ட சோழமண்டலம் என்பது தஞ்சாவூரை உள்ளடக்கிய சோழமண்டலமன்று. இது முதலாம் இராசராசன் காலத்தில் தொண்டை மண்டலத்தை செயங்கொண்ட சோழ மண்டலம் எனப் பெயர்மாற்றப்பெற்ற செயங்கொண்ட சோழ மண்டலமாகும். இதில் அடங்கியது செங்காட்டுக் கோட்டம் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் மணிமங்கலம் இச் செங்காட்டுக் கோட்டம் மாகனூர் நாட்டில் அடங்கிய ஊராக வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே, ‘சோழ மண்டலத்து செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு... என்பது பொருந்தாது. இராசசூளாமணிச்சதுர்வேதி மங்கலம் என்பது இக்கல்வெட்டுள்ள மணிமங்கலம் ஆகும். மணிமங்கலம் வளம் பொருந்திய தொன்மையான ஊர் ஆதலால் அன்று வளமான ஊர்கள் வேதம்வல்ல பிராமணர்களுக்கு முற்றூட்டாக அளிக்கப் பட்டு சதுர்வேதி மங்கலம் ஆக்கப்பட்டது போல மணிமங்கலமும் பல்லவர் காலத்திலேயே சதுர்வேதி மங்கலம் ஆக்கப்பட்டுள்ளது. சதுர்வேதி மங்கலமாக்கப்பட்ட தமிழக ஊர்களின் பெயர்கள் அனைத்தும் வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டது போல இம் மணிமங்கலத்தின் பெயரும் பல்லவ அரசன் அபராசிதன் பெயரால் மணிமங்கலம் ஆன அபராசித சதுர்வேதி மங்கலம் என மாற்றப்பட்டது. சோழர் காலத்தில் இச்சதுர்வேதி மங்கலக் கொடையை உறுதி செய்வது போல இராசராசனுடைய சிறப்புப் பெயரால் இராசசூளாமணி சதுர்வேதி மங்கலம் என மாற்றப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் இதன் பெயர் மானாபரணச் சதுர்வேதி மங்கலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது - இறுதியாக முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டியனை இருமடி வென் கொண்ட சோழச் சதுர்வேதி மங்கலம் என நான்கு முறை பெயர் மாற்றப் பட்டுள்ளதை இவ்வூர்க் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வடமொழிப் பெயராக்கப்பட்ட பல தமிழ் ஊர்களின் பெயர்கள் நிலைபெறாதது போலவே மணிமங்கலத் திற்குக் சூட்டப்பட்ட வடமொழிப் பெயர்கள் கால வெள்ளத்தில் கைவிடப்பட்டு அதன் உண்மைப் பெயரே நிலைத்து நிற்பது தமிழும் தமிழ்நாடும் செய்த பேறு எனலாம். இக்கல்வெட்டின் வழியும் பிற கல்வெட்டுக்களாலும் தமிழகத்தில் உள்ள பல ஊர்களின் பெயர்களை வடமொழி பெயராக்கும் முயற்சி பரவலாக மேற்கொள்ளப்பட்டிருந்ததை உணரலாம். பல ஊர்களின் பெயர்களை வடமொழியில் மொழிபெயர்த்து இட்டு வழங்கியதோடு அரசர்களது பெயர்களாலும் வடமொழி ஆக்கப்பட்டதை வரலாறு காட்டுகிறது. கழகக் காலத்திற்குப் பின் ( சங்க காலம் ) தமிழகத்தை ஆண்ட அனைத்து மன்னர்களும் தங்கள் பெயரை வடமொழிப் பெயர்களாக வைத்துக் கொண்டது இதற்கு ஏந்தாக அமைந்து விட்டது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டே இம்மணி மங்கலத்து பெயர் மாற்றங்களாகும். தமிழகத்து ஊர்ப்பெயர்களைப் போலவே தமிழ்நாட்டு கடவுள் பெயர்களும் வடமொழியாளர்களாலும் வடமொழிப் போற்றிகளாலும், படாதபாடு பட்டதையும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. எடுத்துக்காட்டாக மணிமங்கலத்தில் உள்ள அனைத்துக் கோயில் கடவுள் பெயர்களும் நல்ல தமிழ்ப் பெயர்களாக இருந்து வடமொழிப் பெயர்களாக மாற்றம் பெற்றுள்ளதை இங்குச் சுட்டிக்காட்டலாம். இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ள இக்கோயில் இன்று இராசகோபாலாசாமி கோயில் என்று வழங்கப்படுகிறது. ஆனால் இக்கோயிலின் பெயரைத் துவராபதியான காமக்கோடி விண்ணகராழ்வார் என இக்கல்வெட்டு கூறுகிறது. இராசகோபால சுவாமி என்ற இப்பெயர் இங்கு மட்டுமல்லாது தமிழகத்தின் எந்த இடத்திலும் கடவுளுக்கு பெயராக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. திருமாலின் மாற்றுப் பிறப்புகளான ஆய்க்குலப் பிள்ளை அல்லது திருவாய்ப்பாடிப்பிள்ளை ( கோகுலகிருட்டிணன் ) , திரு அயோத்திப் பெருமாள் ( இராமன் ), வெண்ணெய்க்கூத்தன் அல்லது வெண்ணெய்க்கு ஆடியருளிய பிள்ளை ( நவநீத கிருட்டிணன் ) , குழலூதும் பிள்ளை ( வேணுகோபாலன்) என்பன போன்ற அனைத்துக் கடவுட் தமிழ்ப் பெயர்களும் வடமொழியாக்கப்பட்டு தமிழ்ப் பெயர்கள் மறைந்து போனதை நம்முடைய வரலாற்றை நன்கு கற்பார் அறிவர். இறையிறுத்துக் குடுத்தல் - இறை செலுத்திக் கொடுத்தல் நிலத்தை விற்கும் பொழுதோ அல்லது கொடையாக கொடுக்கும் பொழுதோ விற்பவர் அல்லது கொடையளிப்பவர் அந்நிலத்துக்குரிய நிலவரியையும் தாமே செலுத்தி கொடுப்பதற்கு இறையிறுத்துக் குடுத்தல் என்று பெயர். இறுத்தல் - செலுத்துதல். 6. பாக்கூர் சாசனம் 1) ஸ்வஸ்திஸ்ரீ திருவளர் திரள்புயத் திருநில வலையந்தன் மணிப்பூணெனத் தங்கிப் பன்மணிக் கொற்றவெண்குடை நிழற் குவலையத் துயிர்களைப் பெற்ற தாயிலும் பேண மற்றுள்ள வறைகழலரசர் தன்னடியினி லொதுங்க வுறைபிலத்திடைய் கலியது வொதுங்க முறைமையி லரும்பெறல் தமையனை மு 2) ன் வந்தானை யிரும்புவிபுகழ் இராஜராஜனென் றொளிர் மணிமுடி சூட்டி தன்றிருமைந்தனாகிய கங்கைகொண்ட சோழனை யெழுயரியானைச்சேனைச் சோழபாண்டிய னென் ண்டுயர் மணிமுடிப் பாண்டிமண்டலங் குடுத்தருளிய் வாட்கை வடிகொண்ட கதிர்வேல் முடிகொண் 3) ட சோழனை சுந்தரசோழனெனச் சுடர்முடி சூட்டி யந்தமில் பெருஞ்சிறப்பருளித் தன்கிளைவருலகத் தவற்குரிய வகலிடம் வேறுவே றருளி இகல்விளை விருதொடு மலைக்கும் விக்கலன் றன்னொடும் வெஞ்சிலைத் தடக்கை மாசாமந்தரைக் கங்கபாடிக் 4) களத்திடைனின்று துங்கபத்திரைக் கரைபுகத் துரந்து அங்கவர் வேங்கைனாட்டிடை மீண்டவர் விட்ட தாங்கரும் பெருவலித் தண்டுகெடத் தாக்கி மாதண்ட நாயக்கன் சாமுண்ட ராஜனைச் செற்றவன் சிரத்தினையறுத்து மற்றவனொரு மகளாகிய விருகய 5) ன்தேவி நாகலையென்னுந் தோகையம் சாயலை முகத்தொடு மூக்கு வேறாக்கி பகைத்தெதிர் மூன்றும் விசையினும் மேன்றெதிர் பொருது பரிபவந்தீர்வதெனக் கருதிப் பொருபுனல் கூடல் சங்கமத் தாகவமல்லன் மகனாகிய விக்கலன் சிங்களனென்றிவர் தம்மொடும் மெண்ணில் சாமந்தi6) ர வென்றடு தூசிமுன்விட்டுத் தன்றுணை மன்னருந் தானும் பின்னடுத்திருந்து வடகடலென்ன வகுத்தவத் தானையை கடகளிறொன்றால் கலக்கி யடல்புரிக் கோசலச்சிங்களக் கொடிப்படை முன்னர்த் தூசிவெண்களிற்றொடுந் துணித்து கேசவ தண்டநாயக்கன் கேத்தரசன் திண்டிறல் மாரயன் திறற் 7) போத்தரைய னிகல்செய்ய பொற்கோதை மூவேத்தி யென்றார் தடுத்துப் பிலனேக சாமந்தரைச் சின்னா பின்னஞ் செய்து பின்னை முதலியாகிய மதுவணநொட விரித்த தலையொடு விக்கலனோடச் செருக்கெழிலழிந்து சிங்களனோட அண்ணல் முதலிகளனைவரு மமர் போர்பண்ணின பகடிழிந்தோ 8) ட னண்ணிய ஆகவமல்லனு மவற்கு முன்னோட தன் வேகவெங்களிற்றினை விலக்கி வாகை கொண்டங்கவர் தாரமும் மவர் குலதனமும் சங்கு முன்தொங்கலுந் தாரையும் பேரியும் மேக டம்பமும் வெண்சாமரையும் சூகரக் கொடியும் ம 9) கரதோரணமும் புஷ்பகப்பிடி போர்க்களிற் றீட்டமும் பாய்பரித் தொகையொடும் பறித்து செய்யொளிர் விசையமணி மகுடம் மிசையொடுந் திசைதொறும் சினப்புலி செலுத்திக் குசைகொளுத்தும் புரவிப் பொத்தப்பி வேந்தனை வாரனை வனைகழல் கேரளன்றனை 10) ஜனநாதன் றம்பியைப் போர்களத் தலங்கல்சூழ்ப் பசுந் தலையரிந்து பொலங்கழல்த் தென்னனை சீவல்லவன் மகன் சிறுவனை மின்னவில் மணிமுடி வீரகேசரியை கதகடகளிற்றா லுதைத்திட்டு மதகொடு செயித்து வரப்பாகாச் செங்கோல் செலுத்தி வேதநீதியை 11) விளக்கி மீதுயர் வீரத்தனிக் கொடித் தியாகக் கொடியொடும் ஏற்பவர் வருகென நிற்ப போர்த்தொழி லுரிமையிலெய்தி அரசு வீற்றிருந்த மேவருமனுனெறி விளங்கியக் கோ இராசகேசரி பர்ம்மரான உடையார் ஸ்ரீ வீரராஜேந்திர தேவற்கு கெங்கை கொ 12) ண்ட சோழபுரத்துக் கோயிலுள்ளால் திருமஞ்சன சாலையில் எழுந்தருளியிருந்து உதகம் பண்ணியருளின அதிராஜராஜமண்டலத்து வெங்காலனுட்டுப் பாக்கூர் வெள்ளான் வகையி லிறைமுதல் தவிர்த்து யாண்டு 3 வதுக் கெதிராவது முதல் 13) இவ்வூர் இறையிலி தேவதானம் திருனாமத்துக் காணியாக இறைபுரவு சிற்றாயம் எலவையு கவை மன்றுபாடு தெண்டகுற்றம் உடும்போடி ஆமைதவழ் புற்றும் எழுவன முளைப்பன கற்றுப்புற் பேரகர முற்றூட்டும் இவ்வூர் இறை கட்டின காணிக்கடன் 14) பொன் முன்னூற்று முக்கழஞ்சரையே மஞ்சாடி அரைமாவும் நெல்லு முவ்வாயிரத்து அஞ்ஞூற்று முப்பத்தொரு கலனே தூணியும், இந்நாட்டுக் கருவூர்த் திருவாநிலை மஹாதெவற்கு இறுப்பதாக யாண்டு முதல் இறையிலி தேவதானம் திருனாமத்துக் காணியாக வரியி 15) லிடத் திருவாய் மொழிந்தருளின படிக்கு, திருவாய் மொழிந்தருளினாரென்று திருமந்திர ஓலை க்ஷத்திரியசிகாமணி வளநாட்டு பனையூர் நாட்டு நேர்வாயிலுடையான் தாழி திருப்பனங்காடுடையான் வானவன்ப் பல்லவரைய னெழுத் தினாலும் திருமந்திர ஓலைனாயகம் 16) அச்சுதன் இராஜராஜனான தொண்டைமானும் ஊரன் உத்தம சோழனான இராஜராஜப்ரஹ்மாதிராயனும் அரையன் இராஜராஜனான வீரராஜேந்திர ஜயமுரினாடாழ்வானும் வீரராஜேந்திர மங்கலப் பேரரையனும் இவர்களுடன் ஒப்பிட்டுப்பு 17) குந்த கேழ்விப்படியே நம் வரியிலிட்டுக் கொள்க வென்ன வீரபத்திரன் தில்லைவிடங்கனான வில்லவராஜராஜன் ஏவ இவன் ஏவினபடியே உடன் கூட்டத்து அதிகாரிகள் க்ஷத்திரிய சிகாமணி வளனாட்டு பனையூர் நாட்டு ஜயங்கொண்ட சோழ ந 18 ) ல்லூருடையான் உதைய திவாகரன் கூத்தாடு வானான வீரராஜேந்திர மழவராயரும் வீரரஜேந்திர ப்ரஹ்மாதி ராயரும், அருமொழிதேவ வளனாட்டு னென்மலினாட்டு பெரிய குடையூர் அரங்கன் திருச்சிற்றம்பலமுடையான்னான வானவன் மூவேந்த n19) வளானும் அதிராசராச வளநாட்டு தேவூர்னாட்டு பனைக்குடி யுடையான் காடன் வீதிவிடங்கனான ஜயங் கொண்டசோழ விழுப்பரையரும் விசையரா ஜந்ர வளநாட்டு புலியூர் நாட்டுப் பூண்டியுடையான் அத்தாணிச் சீயாரூரன் முடிவிழுப்பரையனும் ப- 20). . . . . . இராஜேந்திர பட்டரும் இராஜராஜப் பாண்டிகுல வளனாட்டு உத்தமசோழ வளநாட்டு முள்ளினாட்டு நிகரிலி சோழனாட்டு மதிமங்கலத்து கொச்சாக்காற்புறத்து விண்ணவ நாராயணபட்டனும் விடையில் அதிகாரிகள் உய்யக் கொண்டானும் இப்படி 21) . . . . . . கத்திருவாய் மொழிந்தருளினபடிக்கு நம் வரியிலார் வரியிலே இட்டு இறையிலி தேவதானம் திருனாமத்துக் காணியாகத் திருவாநிலை மஹாதெவற்கு அவிபெலி அற்சனா போகத்துக்குச் செம்பிலும் கல்லிலும் வெட்டி கெ 22)ாள்க இப்படிக்கு அற்சுதன் இராஜநாராயணன் தொண்டைமான் எழுத்து ஊரன் உத்தமசோழனான இராஜராஜப்ரஹ்மாதிராயன் எழுத்து இப்படிக்கு அரையன் வீரராஜே . . . . ன் ஜயமுரி நாடாழ்வான் 23) எழுத்து. இப்படிக்கு வீரராஜேந்திரமங்கலப் பேரரையன் எழுத்து இப்படிக்கு அதிகாரி க்ஷத்திரியிசிகாமணி வளனாட்டு பனையூர் நாட்டு ஜயங்கொண்டசோழ நல்லூருடையான் உதையதிவாகரன் கூத்தாடுவான் வீரராஜேந்திர மழவராயன் எழு 24) த்து இப்படிக்கு வானவன் மூவேந்திரவேளான் எழுத்து இப்படிக்கு ஜெயங்கொண்ட சோழ விழுப்பரையன் எழுத்து இப்படிக்கு அத்தாணி. . . . . . விழுப்பரையன் எழுத்து. இப்படிக்கு திருமந்த்ர ஓலை எழுதும் வானவன் பல்லவரையன் எழுத்து இப்படிக்கு வி 25) டையதிகாரி உய்யக்கொண்டான் எழுத்து. இது பன்மாஹெஸ்வர ரக்ஷை இத்தன்மம் நோக்குவான் ஸ்ரீ பாதம் என் தலை மேலே. கல்வெட்டின் குறிப்புகள் பாக்கூர் சாசனம் ( வீரராஜேந்திரன் - 1062 ) இடம்: திருச்சி ஜில்லா, கரூரில் பசுபதீச்சுரர் கோவிலின் தென்புறச் சுவரில் உள்ளது. பொருள்: உடையார்பாளையம் தாலுக்கா கங்கை கொண்ட சோழ புரத்தைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய இராஜகேசஸரி வர்மன் என்னும் வீரராஜேந்திரன் ஆட்சியாண்டு 4 இல் அதிரா சராச மண்டலத்து வெங்காலநாட்டுப் பாகூர் என்ற கிராமத்தை, கரூர் திருவானிலைத் தேவர்க்குத் தானஞ் செய்து இறை கட்டின காணிக்கடன் முன்னூற்று முக்கழஞ் சரையே மஞ்சாடி அரைமாப்பொன்னும் மூவாயிரத்து ஐந்நூற்று முப்பதொரு கலனே தூணி நெல்லும் அத்தேவர்க்கு இறுப்பதாகத் திருவாய் மொழிந்தருளினன் என்பது. வெற்றி: 1. ஆகவமல்லன் மகன் விக்கலன் ( விக்கிரமாதித்தன் ) என்பவனைக் கங்கபாடியினின்றும் துங்கபத்திரைக்கப்பால் துரத்தினான். 2. சாளுக்கிய தண்டநாயகனான வனவாசிராயன் சாமுண்டராயனைக் கொன்றான். 3. சாமுண்டராயன் மகன் இருகையன் மனைவி நாகலையென்பாளை மூக்கறுத்தான். 4. துங்கபத்திரையும் கிருஷ்ணா நதியும் கூடும் கூடல் சங்கமத்து, இன்னுமொருகால் போர் நடக்க அதில் சளுக்கிய தண்ட நாயகர்களில், கேசவய்யனையும், மாறய்யனையுங் கொன்றான். ஆகவமல்லன் பாசறையை முற்றிப்பிடித்தான். 5. ஆகவமல்லன் பட்டத்துயானை புஷ்ப்பகப் பிடியையும், அவன் குதிரையையும், குடை, விதானம், சாமரை, காக்கைக் கொடி, மனைவியரையும், பொருளையும் கைப்பற்றினான். 6. பொத்தப்பி நாட்டரசன் , கேரள அரசன் இவர்களை வென்றான். 7. தாரா தேசத்து ஜனனாதன் என்பவனையும் அவன் தம்பியையும் வென்றான். 8. தென்னனை, ஸ்ரீவல்லபன் சிறுவனை, வீரகேசரியைக் களிற்றால் உதைத்திட்டு, மதகொடு வென்றான். காலம்: கி.பி. 1066 ( வீரராஜேந்திரன் பட்டந் தரித்தது 1062இல்) இவன் இராஜாதிராஜன், விஜயராஜேந்திரன் ஆகியோர்க்குத் தம்பி. இவர்கள் மூவரும் ( இராசராசன் I மக்கள்?) மெய்க்கீர்த்தி: “திருவளர்திரள் புயத்திருநிலவலயந், தன்மணிப் பூணெனத் தங்கிப் பன்மணி” எனத் தொடங்குவது. சொற்பொருள்: தாயிலும் பொ = தாயிலும் பேண; தமையன் = ஆளவந்தான்; மூத்த சகோதரன். இவனுக்கு, வீரராஜேந்திரன் “ராஜராஜன்” என்னும் பட்டங்கொடுத்தான். விக்கலன் = ஒரு தலைவன் பெயர்; ( விக்கிரமாதித்தன்.) நாகலை = இருகையன் மனைவி; கூடல் சங்கமம் = துங்கபத்திரையும் கிருஷ்ணா நதியும் சேருமிடம்; முன்னார் = முன்னர்; போத்தயன்; கோதை = வில்லாளிகளின் இடதுகைத் தோற்கவசம்; முதலி = சேனாதிகாரி; தொங்கல் = சிறுகுடை ( கவிகை ); தாரை = எக்காளம் அல்லது ஊதுகொம்பு; தொன்றனை = கேரளனை ; மேகடமயம் = மேற்கட்டி ; இறை = வாய்தா ( அரசிறை ); புரவு = வீட்டு வரி முதலியன; சிற்றாயம் = சுங்கம்; வரியிலிடர் = வரிக் கணக்கில் பதித்தல்; மன்றுபாடு, தண்டக் குற்றம் இவை அக்கால அபராதங்கள். மஞ்சாடி = ஆகுன்றியெடை; கழஞ்சு = 12 பணவெடை ; அரைமா = 1/20. விடையிலதிகாரி = விடையளிப்போர்; வரியிலார் = அரசன் கட்டளையை உரியவர்களுக்கு அனுப்பும் அதிகாரி; தேவதானம் = ஆரியதேவாலயங்களுக்குக் கொடுக்கும் நிலம்; சாமந்தர் = தண்டநாயகன். பிலத்துடைய் = பிலத்திடைக் விளக்கக்குறிப்பு கரூர் மாவட்டம், கரூர் திருவாநிலை மகாதேவர் கோயில் (பசுபதீஸ்வரர் கோயில் ) உண்ணாழிகைத் ( கருவறை ) தென்சுவரில் வெட்டப்பட்டுள்ளது. இது தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3இல் 20 ஆம் எண் கல்வெட்டாக வெளியிடப் பட்டுள்ளது.இக்கல்வெட்டின் அரசன் வீரராசேந்திரன் ( கி.பி. 1063 - 1069) அவனது நான்காம் ஆட்சியாண்டில் ( 3 + 1 ) அதாவது கி.பி. 1067 இல் வெளியிடப்பட்டுள்ளது. இவனது மெய்க் கீர்த்தியிலும் இராசாதிராசனும் இராசேந்திரனும் தன் உறவினர் களுக்கு உயர் பதவி அளித்தது போல இவனும் தன் உறவினர் களுக்கு உயர் பதவி அளித்துச் சிறப்பித்ததைக் காணலாம். பசுபதீஸ்வரம் - திருவாநிலை அப்பர் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயில் அவரது திருப்பாடல்களில் திருஆநிலை அப்பர் என்றே சிறப்பிக்கப் பட்டுள்ளது. அவ்வூர்க் கல்வெட்டுக்கள் அனைத்திலும் திருவாநிலை மகாதேவர், திருவாநிலையுடையார் எனவும், திருவாநிலை மாதேவர் கோயில் எனவும் கடவுளும் கோயிலும் அழைக்கப் பட்டுள்ளதையும் காணலாம். ஆனால் இக்கோயிலின் பெயர் இன்று வடமொழியாக்கப்பட்டு பசுபதீஸ்வரம் என நிலை பெறுத்தப் பட்டுவிட்டது. இவன் இராசாதிராசன், விசயராசேந்திரன் ஆகியோர்க்குத் தம்பி. இவர்கள் மூவரும் (இராசராசன் I மக்கள்? ) இவர்கள் மூவரும் முதலாம் இராசராசனின் மக்கள் அல்லர். பெயரர்களே. அதாவது முதலாம் இராசேந்திரனுடைய மக்களாவர். தமையன் - ஆளவந்தான்; மூத்த சகோதரன் ‘அரும்பெறல் தமையனை ஆளவந்தானை’ என்பது மெய்க் கீர்த்தி வாசகம். இதற்கு ஆளவந்தான் எனப் பொருள் கூறியுள்ளார். ஆளவந்தான் வீரராசேந்திரனுடைய மூத்த உடன்பிறந்தான் ( மூத்த சகோதரன் ) அல்லன். முதலாம் இராசராசனின் இரண்டாவது அரசியான பஞ்சவன் மாதேவிக்கு பிறந்தவன். கங்கை கொண்டான். கங்கைகொண்டானின் மகனே ஆளவந்தான். வீரராசேந்திரன் இராசராசனுடைய முதல் மனைவிக்குப் பிறந்த மகனான கங்கைகொண்ட முதலாம் இராசேந்திரனுடைய மகனாவான். தந்தை வகையில் தமையனாய் அகவையில் மூத்த ஆளவந்தானை தமையன் என்று சிறப்பித்தது போற்றுதற்குரியது. வீரராசேந்திரன் தந்தையான முதலாம் இராசேந்திரனும், தனது தந்தையின் இரண்டாம் மனைவியான பஞ்சவன்மாதேவியை மிகவும் மதித்துப் போற்றியுள்ளான். அதற்கடையாளமாக தன் சிற்றன்னையின் பெயரால் கும்பகோணத்துக்கு அருகில் பஞ்சவன் மாதேவீசுவரம் என்னும் கோயிலை எடுத்து சிறப்பித்துள்ளான். தந்தையைப் போலவே அவன் மக்களும் பஞ்சவன்மாதேவி வழிவந்த மக்களைப் போற்றியுள்ளது சிறந்த உறவின் முறைக்கு அடையாளமாக உள்ளது. முதலி - சேனாதிகாரி முதலி என்பது முதலில் நிற்பவன், முதன்மையானவன் என்னும் பொருளை யுடையது. ஒவ்வொரு துறையிலும் முதன்மையாக இருப்பாரை முதலி என்றழைப்பது வழக்கம். அப்பர் முதலான நாயன்மார் மூவரையும் மூவர் முதலி என்பதும் இப்பொருள் பற்றியே. அகம்படி முதலி, கைக்கோள முதலி, செங்குந்த முதலி, சேனை முதலி வேளாமுலி என ஒவ்வொரு துறையிலும் முதன்மையாக இருப்பவரை அவ்வத்துறைப் பெயரைச் சார்த்தி முதலி என அழைப்பது பண்டைய வழக்கம். பின்னாளில் இதன் பொருள் உணரப்படாமல் இவை சாதிகளாக உருப்பெற்றன. இங்கு முதலி என்பது படைத்தலைவனைச் சிறப்பாக குறிப்பிட்டாலும் இது பல்துறை முதன்மைக்குரிய பொதுப்பெயராகும். எனவே முதலி என்பது சேனையதிகாரிக்கு மட்டுமல்லாது முதன்மையர் பலருக்கும் பொருந்தும் பொதுப்பெயராகும். தொங்கல் - சிறுகுடை தொங்கல் என்பது தொங்கவிடப்படும் ஒன்றைக் குறிப்பது. ஆகவே இது குடையன்று. தோரணத் தொங்கலாக இருக்க வேண்டும். தொன்றனை - கேரளனை கல்வெட்டில் ‘வனைகழல் தொன்றனைத் தாராசானாதன் தம்பியை’ என வரும் வாசகத்தில் உள்ள கேரளன் என்பது தொன்றன் என பிழைபட வாசிக்கப்பட்ட ஒன்றாகும் . ஆகவே இவ்விடத்தில் வனைகழல் கேரளனை ஜனநாதன் தம்பியை என வாசிக்க வேண்டும்.அல்லது வனைகழல் தோன்றலை என வாசிக்கலாம். கல்வெட்டுக்களைப் படிக்கும் போது இத்தகைய இடர்ப்பாடுகள் ஏற்படுவது இயற்கை. இத்தகைய இடங்களில் கல்வெட்டாய்வாளர் மொழியறிவும், வரலாற்றறிவும் தெளிவாகப் பெற்றவராக இருப்பின் இடமறிந்து ஏற்றப் பொருளறிந்து பொருத்தமாக வாசிக்கலாம். திருமஞ்சன சாலை - நீராடும் இடம் அல்லது நீராடும் மண்டபம். இறைமுதல் - வரியாகச் செலுத்தும் தொகை இறையிழி - வரியிலி ( வரியில்லாத ) வரியிலிடல் - வரிக்கணக்கில் பதித்தல் - வரியிலிடல் என்பது வரிக்கணக்குப் பொத்தகத்தில் பதிவு செய்தல். .......புரவு - வீட்டுவரி முதலியன , சிற்றாயம் - சுங்கம், .... மன்றுபாடு தண்டக்குற்றம் இவை அக்கால அபராதங்கள். இவை அபராதங்கள் அல்ல. அக்கால வரி வகைகளில் சிலவாகும். அபராதம் என்ற சொல்லுக்கு மாற்றாக தண்டம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சாடி- ஆகுன்றியெடை மஞ்சாடி என்பது ஒரு மரத்தின் விதை ( கொட்டை). இது பவழம் போன்ற சிவப்புநிறமுடையது. குன்றிமணி , மஞ்சாடி , கழஞ்சு (கழச்சிக்காய் ) ஆகியவை அக்காலத்தில் பொன்னை அளக்கும் எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்ட அளவைகள் ஆகும். ஆகவே மஞ்சாடி என்பது மஞ்சாடிக் கொட்டை . இங்கு ஓர் அளவை. விடையிலதிகாரி - விடையளிப்போர் இவர்கள் அரசனுடைய ஆணையை விடுத்து வைக்கும் அதிகாரிகளாக செயல்பட்டவர்கள். வரியிலார் - அரசன் கட்டளையை உரியவர்களுக்கு அனுப்பும் அதிகாரி. இவர்கள் அரசன் கட்டளையை அனுப்புபவர்கள் அல்லர். வரிவிதித்து தண்டும் அலுவலர்கள் ஆவார். இவர்களை வரியீடு செய்வார் என அழைப்பதும் உண்டு. தேவதானம் - ஆரிய தேவாலயங்களுக்கு கொடுக்கும் நிலம். தேவர் + தானம் = தேவர்தானம் . இறைவனுக்கு ( இறைவன் கோயிலுக்கும்) விடப்படும் கொடை நிலம் தேவதானம் என வழங்கப்படும். ஆரிய கோயில் என்று ஒரு தனிக் கோயில்இங்கு இல்லை. எல்லாக் கோயிலும் அரியர்கள் நுழைந்துள்ளமையால் அனைத்தும் ஆரிய மாகிவிட்டது. 7. மணிமங்கலம் சபையோர் சாசனம் 1) ஸ்வஸ்திஸ்ரீ திங்களேர்தரு தன்றொங்கல் வெண்குடைக் கீழ் நிலமக ணிலவ மலர்மகட் புணர்ந்து செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து தன் சிறியதாதையையுந் திருத்தமையனையுங் குறிகொள் தன்நிளங்கோக்களையும் நெறியுணர் தன்றிருப் புதல்வர் தம்மையுந் துன்றிய தெறுகழல் வானவன் வல்லவன் மீனவன் கங்க நிலங்கையற் கிறைவன் பொலங்கழற் பல்லவன் கன்னகுச்சியர் காவலநெனப் பொன்னணிச் சுடர்மணி மகுடஞ் சூட்டிப் படர்புகழாங் கவர்க்கவர் நாடருளி பாங்குறு தென்னவர் மூவருள் மானாபரணன் பொன்முடி ஆநாப்பருமணி 2) ப் பசுந்தலை பொருகளத்தரிந்து வாரளவிய கழல் வீரகேரளனை முனைவயிற் பிடித்து தனது வாரணக் கதக்களிற்றா னுதைப்பித் தருளி, அந்தமில் பெரும்புகழ்ச் சுந்தரபாண்டியன் கொற்ற வெண்குடையுங் கற்றைவெண் கவரியும் சிங்கதானமும் வெங்களத் திழந்து தன்முடிவிழத் தலை விரித் தடிதளர்ந்தோடத் தொல்லைய் முல்லையூர்த் துரத்தி ஒல்கலில் வேணாட்டரசை சேணாட் டொதுக்கி, மேவுபுக ழிராமகுட மூவர்கெட முனிந்து விடல்கெழு வில்லவன் குடர்மடிக் கொண்டு தன்னா 3) டு விட்டோடிக் காடுபுக்கொளிப்ப வஞ்சியம் புதுமலர் மலைந்தாங் கெஞ்சலில் வேலைகெழு காந்தருளூர் சாலை கலமறுத் தாஹவமல்லனு மஞ்ச, கேவுதன் றாங்கரும் படையா லாங்கவன் சேனையிற் கண்டப்பயனுங் கங்காதரனும் வண்டமர் களிற்றொடு மடியத் திண்டிறல் விருதரை வீக்கியும் விசையாதித் தனுங் கருமுரட் சாங்கமயனு முதலினர் சமரபீருவோத்துடைய விரிசுடர்ப் பொன்னோடயங் கரிப்புரவியொடும் பிடித்து தன்னடையிற் ஜயங்கொ 4) ண்டொன்னார் கொள்ளிப்பாக்கை உள்ளெரி மடுப்பித் தொருதனித் தண்டாற் பொருகட லிலங்கையர் கோமான் விக்கிரமபாஹுவின் மகுடமு முன்ன றனக்குடைந்து தெண்டமிழ் மண்டல முழுவதுமிழந் தேழ்கடலீழம் புக்க விலங்கேசுரநாகிய விக்கிரமபாண்டியன் பருமணி மகுடமும் காண்டகு தன்னதாகிய கன்னக்குச்சியினு மார்கலி யீழஞ் சீரிதென்றெண்ணி உளங்கொள தன்னாடு தன்னுறவொடும் புகுந்து விளங்கு முடிகவித்த வீரசலாமேகன் பொ 5) ருகளத் தஞ்சி தன்கார்க்களிறிழந்து கவ்வையுற றோடிக் காதலியோடுந் தன்றவ்வையைப் பிடித்து தாயை மூக்கரிய ஆங்கவமானம் நீங்குதற்காக மீண்டும் வந்து வாட்டொழில் புரிந்து வெங்களத்துலர்ந்தவச் சிங்களத்தரைசன் பொன்னணி முடியுங் கன்னரன் வழிவந் துறைகொள வீழத்தரைசநாகிய சீர்வல்லவன் மதனராஜன் மெல்லொளித் தடமணிமுடியுங் கொண்டு வடபுலத் திருகாலாவதும் பொருபடை நடாத்தி கண்டர்தினகரன் நாரணன் கணவதி 6) வண்டலர்தெரியல் மதிசூதனணென் றேனைப் பல வரையரை முனைவயிற்றுரத்தி வம்பலர் தருபொழில் கம்பிலி நகருள் சளுக்கியர் மாளிகை தகர்ப்பித் திளக்கமில் வில்லவர் மீனவர் வேபூகுலர் சளுக்கியர் வல்லவர் கௌசலர் வங்கணர் கொங்கணர் சிந்துரர் ஐய்யணர் சிங்களர் பங்களர் அந்திரர் முதலியவரைச ரிடுதிறைகளு மாறிலொன் றவனியுள் கூறுகொள் பொருள்களு முகந்து நான் மறையவர் முகந்துகொளக் குடுத்து விஸ்வலோகத்து விள 7) ங்க மனுநெறிநின் றஸ்வமேதஞ்செய் தரைசுவீற்றிருந்த ஜயங்கொண்டசோழ னுயர்ந்த பெரும்புகழ் கோவி ராஜகேஸரி வந்மரான உடையார் ஸ்ரீராஜாதிராஜ தேவற்கு யாண்டு 29 ஆவது ஜயங்கொண்ட சோழமண்டலத்து செங்காட்டுக் கோட்டத்து மாகணூர் நாட்டு மணிமங்கலமாந ராஜசூளாமணிச் சதுர்வ்வேதி மங்கலத்து மஹாஸபையோம் மெம்மூர் ப்ரஹ்மஸ்தானத்தே தனுநாயற்று பூர்வ்வபக்ஷத்துத் த்வியையும் புதன் கிழமையும் பெற்ற திரு 8) வோணத்திநாள்க் கூட்டக் குறைவறக் கூடியிருந்து பணிப் பணியால் பணித்த இவ்வூர் ஸ்ரீமத் த்வாராபதியான ஸ்ரீ காமக் கோடி விண்ணகர் ஆழ்வார்க்கு திருவமுதுக்கும் அர்ச்சனா போகத்துக்கும் இத்தேவர் பண்டாரத்தே நூறுகாசு பொலிசைக்கு கொண்டு இக்காசு நூற்றுலும் வந்த பொலிசைக்கு இறைகரத் தூட்டாக இறையிழிச்சிக் குடுத்த நிலமாவது பெருநல்வதிக்கு வடக்கு பாதிரிக்கழனி மே 9) லைக்காலுக்கு கிழக்கு விளைநிலங் குழி முன்னூறும் பாதிரிக்கழனி நடுவிற்காலுக்கு மேற்கு விளைநிலங் குழி இருனூறும் பெருநல் வதிக்கு தெற்கு ஆலைமேட்டில் மனையறுதி வாய்க்காலுக்கு கிழக்கு விளைநிலங் குழி நூற்றெண்பதும் ஆலை 10) மேட்டில் நந்தவன தோட்டக்காலுக்கு மேற்கு விளைநிலங் குழி நானூறும் இக்காலுக்கு கிழக்கு விளைநிலங் குழி இருனூறும் தெத்ரிய மரத்தின் மேலைக்காலுக்கு மெற்கு விளைநிலங் குழி முன்னூம் சுண்டிலேரிவதிக்கு கிழக்கு, விளைநில 11) ங்குழி நானூறும் பாவைதுறை வாய்க்காலுக்கு வடக்கு திருவையோத்திதேவர் நிலங் குழி இருநூற்றைம்பதுக்கு கிழக்கு தடியிரண்டிநால் குழி இருநூறும் ஆகத் தேவர்நிலங் குழி இரண்டாயிரத்திருனூறும் இறைகரத்தூட்டாக சந்தி 12) ராதித்தவற் நிற்பதாக திருவமுதுக்கும் அர்ச்சநாபோகத்துக் கும் இறையிழிச்சி சிலாலேகை செய்து குடுத்தோம். கல்வெட்டின் குறிப்புகள் மணிமங்கலம் சாசனம் ( இராஜாதிராஜன் - 1018) இடம்: செங்கற்பட்டு ஜில்லா காஞ்சீபுரம் தாலுக்கா மணிமங்கலம் கிராமத்திலுள்ள இராஜகோபால சுவாமி கோவில் வடமேற்புறச் சுவரிற் கண்டது. பொருள்: இராஜாதி ராஜன் ஆட்சியாண்டு 29 ஆவதில் மணிமங்கலம் சபையோர் அவ்வூர் விஷ்ணு கோவிலின் பண்டாரத்திலிருந்து, அக்கோவிலில் அருச்சனைக்கும் திருவமுதுக்கும் ஆக நூறு காசு கடன் வாங்கி, அத்தொகையின் வட்டிக்கீடாக, அவ்வூரிலுள்ள சில நிலங்களை இறை தவிர்த்து அக்கோவிலுக்குச் சாசனம் செய்து கொடுத்தனர். வெற்றி: இராஜாதிராஜன் தன் உறவினராகிய எழுவரை, சேர, சளுக்கிய, பாண்டிய , சுங்க, பல்லவ, கன்னியா குப்ஜ, ஈழ நாடு களுக்கு அரசராக நியமித்தான். 2. மானாபரணன், வீரகேரளன், சுந்தரபாண்டியன் என்னும் மூன்று பாண்டியர்களோடு போர்புரிந்து, முதல்வனாகிய மானாபரணன்றலையைக் கொய்து, வீரகேரளனை யானையால் மிதிப்பித்து, சுந்தர பாண்டியனை முல்லையூர் புகத் துரத்தினான். அப்பொழுதே வேணாட்டரசன் ஒருவனையும் செயித்தான். 3. காந்தளூர்ச் சாலை கல மறுத்தான். 4. குந்தள அரசனாகிய ஆகவமல்லனையும், விக்கிவிசயாதித் தனையும், கேவுதன் ( சங்கமய்யன்) என்னுந் தளகர்த்தனுடன் தோற்கடித்து, கண்டப்பய்யன் கங்காதரன் என்னும் இருசேனா நாயகர்களையுங் கொன்று. 1 காலம் கி.பி. 1046 டிசம்பர் 3 இரா ஜாதிராஜன் பட்டந்தரிந் தரித்தது, 1018 ல் இவன் இராஜேந்திர சோழன் மகன். மெய்க்கீர்த்தி “திங்களோர் தரு தன் தொங்கல் வெண்குடைக்கீழ் நிலமகணிலவ” எனத் தொடங்குவது. சொற்பொருள் : வல்லவனன் = சளுக்கியன்; தெரிசில் = மிகவழகு; கன்னகுச்சி = கன்னியாகுப்ஜம்; அத்திவாரணம் = யானையின் பெயர்; சேணாடு = சுவர்க்கம்; சமரபீரு = போரில் கோழை நெஞ்சுடையவன்; கன்னன் = கிருஷ்ணன்; வில்லவர் = சேரர்; வேழகுலர் = கங்கர்; பொலிசை = வட்டி; சிலாலேகை = கல் வெட்டு; விக்கிரம பாண்டியன் ஈழத்தில் குடி புகுந்தவன் வீரசலாமேகன் தாயையும், மனைவியையும், இராஜதித்தன் மூக்கரிந்தான். வீரசலாமேகனும் இவனால் போரில் கொல்லப் பட்டான். பிறகுறிப்பகள் மணிமங்கலம் இது செயங்கொண்ட சோழ மண்டலத்து செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டின் கண் உள்ளது இதற்கு இராஜ சூளாமணிச் சதுர்வேதி மங்கலம் என்று பெயருண்டு. இராஜராஜன் மனுநெறி தவறாதவன். குடிகளிடம் ஆறிலொன்று ஆறிலொன்று வாங்கினான். அஸ்வமேதயாகஞ் செய்தான் இவனுக்குச் சயங்கொண்ட சோழன் என்று பெயருண்டு. மணிமங்கலம் சபையார் விட்டநிலம் 2200, குழி. விக்கி விக்கிரமாதித்தன் 1056 - 1076. விளக்கக்குறிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ( முன்னாள் செங்கற்பட்டு) மணிமங்கலம் இராசகோபாலசாமி கோயில் உண்ணாழிகை வடக்கு மற்றும் மேற்குச் சுவர்களில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு. இது தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3இல் 28ஆம் எண் கல்வெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் இராசாதிராசனின் ( கி.பி. 1018 - கி.பி. 1054 ) 29 ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1047) வெளியிடப்பட்டது. இவன் மெய்க்கீர்த்தியின் வழி இவன் செய்த போர்கள் அடைந்த வெற்றிகள் முதலியவற்றை நாம் தெரிந்து கொள் வதோடு சோழ அரசர்கள் பிராமணரையும் மனுநெறியையும் மிக உயர்த்திப் போற்றியுள்ளதையும் அவற்றைப் பெருமையாகக் கருதியதையும் அறியலாம். இதனை ‘ .... வில்லவர் மீனவர் வேழ்குலர்,சாளுக்கியர், வல்லவர், கௌசலர், வங்கணர், கொங்கணர், சிந்துரர்,ஐயனர் , சிங்களர், வங்களர், அந்திரர் முதலிய வரைசரிடு திறைகளு மாறிலொன் றவனியுள் கூறுகொள் பொருள்களு முகந்து நான்மறையவர் முகந்துகொளக் குடுத்து விஸ்வலோகத்து விளங்க மனுநெறி நின் றஸ்வமேதஞ் செய்தரசு வீற்றிருந்த ’ என வரும் மெய்க்கீர்த்தி அடிகளால் உணரலாம். இவன் காலத்தில் மணிமங்கலம் இராசசூளாமணி சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டது. இராசசூளாமணி என்பது முதலாம் இராசராசனுடைய பட்டப் பெயர்களில் ஒன்று. கல்வெட்டில் இராசகோபாலசுவாமி கோயில் துவராபதியான காமகோடி விண்ணகர் ஆழ்வார் எனவும் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் பொழுது திருஅயோத்தி தேவர் எனவும் இவ்வூர்க் கடவுள் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. துவராபதி என்பது கண்ணன் ஆட்சி புரிந்த துவாரகையைக் குறிக்கும். எனவே தமிழ்நாட்டில் கண்ணனைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் துவராபதிப் பெருமாள் , துவராபதி ஆழ்வார் எனவும் துவாரகையை வண்டுவராபதி எனவும் குறிப்பிடுவதே மரபாக உள்ளது. அதேபோல இராமனை தமிழகம் எங்கெனும் உள்ள கோயில்களில் இராமன் எனக் குறிப்பிடாமல் திருஅயோத்திப் பெருமாள் என்றே குறிப்பிடு வதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, மதுராந்தகத்திலுள்ள ஏரி காத்த இராமர்கோயில் என வழங்கும் இராமர் கோயிலை அங்குள்ள கல்வெட்டுக்கள் திருஅயோத்திப் பெருமாள் என்று குறிப்பிடுவதை காணலாம். சிலாலேகை - கல்வெட்டு. சிலை என்பதற்கு கல் அல்லது மலை என்பது பொருள். லேகை என்பதற்கு எழுத்து என்பதுப் பொருள். கல்வெட்டுக்களை வடமொழியில் சிலாலேகை என வழங்குவர். கல்வெட்டுப் பகுதியில் மணிமங்கலம் ஸபையோர் சாசனம் எனத் தலைப்பிட்டு கல்வெட்டுக் குறிப்பில் மணி மங்கல சாசனம் எனத் தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டை முதன் முறையாகத் தொகுத்தபின் மீண்டும் இக்கல்வெட்டைத் திருத்தம் செய்யவில்லை எனத் தெரிகிறது. குறிப்பு - 1 : வெற்றிகளை எழுதியவர் இருசேனா நாயகர்களையும் கொன்று என்பதுடன் நிறுத்தி இதன் தொடர்ச்சி இறுதிப் பக்கத்தில் உள்ளது என எழுதியுள்ளார். அப்பக்கம் கிடைக்கவில்லை எனவே இன்னும் சில பகுதிகள் இக்கைப்படியில் விடுபட்டுக் கிடைக்காமல் போய்விட்டது. இதனால் இவர் 20 கல்வெட்டுகளுக்கும் குறிப்பு எழுதியுள்ளார் எனத் தெரிகிறது. நமக்குக் கிடைத்தவை 15 கல்வெட்டுகளுக்கான குறிப்புகளே. 8. மணிமங்கலம் சபையோர் சாசனம் 1) ஸ்வஸ்திஸ்ரீ புகழ்மாது விளங்கச் சயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையிற் சிறந்த மணிமுடி 2) சூடி மீநவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனை மன்னவ ரிரியலுற் றிழிதரத் திக்கனைத்துந் தன் சக்கரநடாத்தி விஜயாபி 3) க்ஷேகம் பண்ணி விரஸிம்ஹாஸநத்து உலகுடை யாளொடு மன்னி வீற்றிருந் தருளிய கோவிராஜகேஸரி பந்ம 4) ரான திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 48 வது குலோத்துங்க 5) சோழ வளநாட்டுக் குன்றத்தூர் நாட்டு மணிமங்கலமான பாண்டியனை இருமடிவென்கொண்ட சோழ 6) சதுர்ப்பெதிமங்கலத்து மஹாஸபையோம் எழுத்து. நம்மூர் வண்டுவராவதி எம்பெருமான் கோயிலில் ஸ்ரீ கா 7) ரியஞ் செய்கிற அள்ளூர்க் கேசவபட்டனும் அரணை புறத்து திருவாய்க்குல பித்தனுங்கண்டு யாண்டு 48 வது 8) கும்பநாயற்றுப் பூர்வ்வ பக்ஷத்துத் த்விதியையும் வெள்ளிக்கிழமையும் பெற்ற சசையத்துநாள் இவ்வாண்டு முதல் 9) அமாவாஸி சந்திராதித்த வரை எழுந்தருளுகைக்கு ராஜேந்திரசோழ வளநாட்டு அம்பத்தூர் நாட்டு நுளப்பியாற்று நுளப்பியா 10) று கிழான் வேளான் பேராயிரமுடையாநான தண்டக நாடுடையாந் குண்டூர் தோணயாக்கிரமவித்தன் பக்கல் ஆலைமேட்டில் விலைகொண்டு 11) டைய குழி நூற்றிருபத்தஞ்சும், இங்கே மத்தியஸ்தன் உறப்போந்தானும் தம்பிமாரும் பக்கல் விலைகொண்டுடைய குழி நூற்றொருபத்தஞ்சும் இராயூர் திரு 12) ப்பொரிக்கிரமவித்தந் பக்கல் பாதிரிக்கழநி மேலைக் காலுக்குக் கிழக்கு விலைகொண்டுடைய குழி நூற்றிருபத்து மூன்றும், இங்கே யிராயூர் விஷ்ணு திருவேங்கடக்கிர 13) மவித்தன் பக்கல் விலை கொண்டுடைய குழி நூற்றொருபத்தேழும், இங்கே ஐயக்கி வண்டுவராபதி பிச்சர்பக்கல் விலைகொண்டுடைய குழிநூ 14) ற்றொருபதும், இங்கே இராயூர் யஜ்ஞநாராயணக் கிரமவித்தன் பக்கல் விலை கொண்டுடைய குழி நூற்றிருபத்தேழும், 15) ஆலவதிக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று வீரவலி திருவரங்கமுடையான் ஸஹஸ்ரன் பக்கல் விலை கொண்டுடைய குழி நூற்றிருப 16) தும் இங்கெய் மூன்றாங் கண்ணாற்றில் இராயூரான் னந்திக்கிரமவித்தன் பக்கல் விலை கொண்டுடைய குழி நூற்றெட்டும், 17) அரிவாள் வதிக்குக் கிழக்கு முதற் கண்ணாற்று . . . . க்கராம்பிச்செட்டு நாணமாலைக் கிரமவித் 18) தன் பக்கல் விலை கொண்டுடைய குழி நூற்றொரு பத்தஞ்சும், ஆககுழி ஆயிரத்தைம்பதும் அமாவாஸிப் 19) புறம் சந்திராதித்தவற் செல்வதாக இறை விழுத் துகைக்குக் கிரயமாக இவர் பக்கல் ஸபையோமாக வேண்டும் 20) பொன்கொண்டு இன் நிலத்துக்கு வந்த இறை ஸபையோமே இறுக்கக்கடவோமாக இசைந்து இறை இழிச்சிக்குடுத்தோம். 21) இப்படி கல்லிலுஞ்செம்பிலும் வெட்டிச் சந்திராதித்தவற் செல்வதாக இறை இழிச்சிக் குடுத்தோ மஹாஸபையோம். 22) ஸபையுள் நின்று ஐய்யக்கி வண்டுவராபதிப் பிச்சர் பணிக்க பணியால் எழுதிநேன் இவ்வூர் மத்யஸ்தந் மணிமங்கல முடை 23) யாந் வேளான் பெரா னேற்றின எழுத்து. கல்வெட்டின் குறிப்புகள் மணிமங்கலம் சபையார் சாசனம் குலோத்துங்கன் I- ( 1070 - 1118) இடம்: செங்கற்பட்டு ஜில்லா, காஞ்சீபுரம் தாலுக்கா, மணி மங்கலம் இராஜகோபால சுவாமி கோவில் மேற்புறச் சுவரில் கண்டது. பொருள்: முதலாங்குலோத்துங்கன் ஆட்சியாண்டு 48வதில். வண்டுவராபதி கோவில் ஸ்ரீ காரியஞ் செய்கின்ற அன்னூர்க் கேசவ பட்டனும்; அரணைப்புரத்துத் திருவாய்க்குலப் பித்தனும், பலரிடம் ஆயிரத்தைம்பது குழி நிலம் வாங்கி, மணிமங்கலம் விஷ்ணு கோவில், இராஜகோபால சுவாமி, அமாவாசை தோறும் உலா வருதற் செலவின் பொருட்டு, மணிமங்கலம் சபையாரிடம் ஒப்புவிக்க, அவர்கள் அங்கீகரித்தனர். வெற்றி: 1. குலோத்துங்கன் பாண்டியரையும், சேரரையும் அடக்கி யாண்டான். 2. ஏனைமன்னர்களையெல்லாம் வென்று திக்கனைத்தும் தன் செங்கோல் செல்ல அரசாண்டான். இவனுக்குத் திரிபுவனச் சக்கரவர்த்தி என்று பெயருண்டு. காலம்: கி.பி. 1118 மெய்க்கீர்த்தி: “புழ்மாதுவிளங்கச் சயமாது விரும்ப, நிலமகணிலவ மலர் மகள் புணர” எனத் தொடங்குவது ( 3ம் மெய்க்கீர்த்தி சோழ சரித்திரம்) “புகழ் சூழ்ந்த புணரியகழ் சூழ்ந்த புவியில்” என்பதுமாம். (2ம் மெய்க்கீர்த்தி, சோழவமிச்சரித்திரச் சுருக்கம்.) சாசனத்தில் 1050 என்றிருக்கிறது, நூற்றொருபது, நூற்றிருபது என்ற வேறுபாடா என ஆராய்க.) சொற்பொருள்: சுழிதர = போரில் தோற்றோட ; உலகுடையாள் = குலோத்துங்கன் பட்டத்தரசி; வண்டுவராபதி = துவராபுரிக்கிறைவனாகிய கண்ணன்; கண்ணாறு = பல நிலத் தொகுதி; புறம் = சாமான் அல்லது புசிகரணம் (உலாவிற்காக) பிற குறிப்புகள்: மணிமங்கலம் = குலோத்துங்க சோழ வளநாட்டு குன்றத்தூர் நாட்டிலுள்ளது. ( இதனைமுன் சாசனக் குறிப்போடு ஒப்பிட்டராய்க). நிலம் விற்றவர்கள். 1. தோணயக்கிரவித்தன் குழி - 125; 2. உறப்போத்தானும் தம்பி மாரும் - 125; 3. திருப்பொறிக் கிரமவித்தன் - 123 ; 4. திருவேங்கடக் கிரமவித்தன் - 117; 5. வண்டு வராபதி பிச்சன் - 110; 6. நாராயணக் கிரமவித்தன் - 108; நாணமாலைக் கிரமவித்தன் - 115 ; ஆகக் குழி. 1070. விளக்கக்குறிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் இராசகோபால சாமி கோயில் மண்டபத்தின் மேலைச் சுவரில் வெட்டப் பட்டுள்ள கல்வெட்டு. இது தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3 இல் 31ஆம் எண் கல்வெட்டாக வெளியிடப் பட்டுள்ளது. முதற்குலோத்துங்கனின் (கி.பி. 1070 - 1122) 48 ஆவது ஆட்சியாண்டில் ( கி.பி. 1118) வெளியிடப்பட்டதாகும். முதற்குலோத்துங்கன் காலம் முதல் அரசன் தன்பட்டத் தரசியோடு அரசுக் கட்டிலில் வீற்றிருந்ததாக குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது. அதனால் மெய்க்கீர்த்தி முடிந்து அரசனது பெயர் கூறுவதற்கு முன்னர் உலகம் முழுதுடையாளொடும் வீற்றிருந் தருளிய , புவனமுழுதுடையாளொகும் வீற்றிருந்தருளிய முக்கோக்கீழானடிகளோடும் வீற்றிருந்தருளிய போன்ற வாசகங்கங்களுடன் கல்வெட்டுக்கள் பொறிக்கப்படுவதைக் காணலாம். இவன் காலம் முதற் கொண்டு சிவன் கோயில்களில் இறைவிக்கென (அம்மன்) தனி முற்றங்கள் (சன்னதி) அமைக்கப்பட்டு தனிக்கோயில் எடுக்கும் வழக்கம் தோன்றியது. அதற்கு முன்னர் பெருங்கோயில்களில் இறைவிக்கென ( அம்மன்) தனிக்கோயில்கள் அமைக்கும் வழக்கம் இல்லை. இதனுடைய வெளிப்பாடாகவே அரசியறை அரசுக்கட்டிலில் உடன் ஏற்றிய தாகும். கல்வெட்டுக் குறிப்பிலுள்ள பொருள் விளக்கத்தில் அன்னூர் கேசவப்பட்டனும் , அரணைப் புறத்து திருவாய்க்குளத்துப் பித்தனும் பலரிடம் 1050 குழி நிலம் வாங்கி மணிமங்கலம் விஷ்ணுகோயில் இராசகோபாலசாமி அமாவாசி தோறும் உலா வருதற் செலவின் பொருட்டு மணிமங்கலம் சபையாரிடம் ஒப்புவிக்க அவர்கள் அங்கீகரித்தனர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது சபையார், இக்கோயில் பூசை செய்யும் அன்னூர் கேசவப் பட்டருக்கும் அரணைப் புறத்து திருவாய்க்குளத்துப் பித்தனுக்கும் அனுப்பிய ஓலையைப் பற்றியது. அவர்கள் நிலம் வாங்கியவர்கள் அல்லர். இதன்படி இராசேந்திர சோழ வளநாட்டு அம்பத்தூர் நாட்டு நுளப்பியாறு கிழவன், வேளான், பேராயிரம் உடையானான தண்டகநாடுடையான் என்பவன் பல பேரிடம் நிலம் விலைக்கு வாங்கி இறை கட்டி துவராபதி பெருமாள் கோயில் அர்ச்சனாபோகத்துக்குக் கொடையாக அளிக்க அதனை ஏற்ற சபையார் மேற்படி பூசை செய்வாருக்கு அறிவித்ததைக் குறிக்கிறது எனவே . மேற்படி பட்டர்கள் இருவரும் விலைக்கு வாங்கவில்லை யென்பதும் இதனை வாங்கி அளித்தவன் நுளப்பியாறு கிழவன் என்பவனே என்பதும் பெறப்படும். இக்கல்வெட்டு மணிமங்கலத்தை குலோத்துங்க சோழ வளநாட்டு குன்றத்தூர் நாட்டு மணிமங்கலமான பாண்டியனை இருமுடிவென்கொண்ட சோழ சதுர்வேதி மங்கலம் எனக் குறிப்பிடுகிறது. இதற்கு முன்னர் உள்ள கல்வெட்டுக்களில் மணிமங்கலம் செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே முதற் குலோத்துங்கன் காலத்தில் மணிமங்கலம் செங்காட்டுக் கோட்டம் மாகனூர் நாட்டுப்பிரிவிலிருந்து புலியூர்க்கோட்டத்து குன்றத்தூர் நாட்டுப் பிரிவில் சேர்க்கப்பட்டது என்பது தெரிகிறது. இதில் குலோத்துங்க சோழ வளநாடு என்பது சென்னை மாநகரப் பகுதியில் அடங்கி யுள்ள புலியூரின் பெயரால் அமைந்த புலியூர்க் கோட்டமாகும். இப்புலியூர்க் கோட்டத்தை குலோத்துங்க சோழன் தன்னுடைய பெயரால் குலோத்துங்க சோழ வளநாடு என பெயர் மாற்றினான். அதனால் இக்கல்வெட்டில் குலோத்துங்க சோழ வளநாட்டு குன்றத்தூர் நாட்டு மணிமங்கலம் என வந்துள்ளது. இதே போல இதில் கொடையளித்தவனான நுளப்பியாறு கிழான் இராசேந்திர சோழ வளநாட்டு அம்பத்தூர் நாட்டு, நுளப்பியாறு கிழான் எனக் குறிப்பிட்டுள்ளதில் இராசேந்திர சோழ வளநாடு என்பது புழல் கோட்டத்தைக் குறிக்கும். புழல் கோட்டம் என்ற பெயரும் முதலாம் குலோத்துங்க காலத்தில் அவனது இளமைக் காலப் பெயரான இராசேந்திரன் என்ற பெயரால் இராசேந்திர சோழ வளநாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்டதே. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் நுளப்பியாறு சென்னைக்கருகிலுள்ள நொளம்பூராக இருக்கலாம். முன்பொரு காலத்தில் இங்கு ஒரு சிற்றாறு ஓடியிருக்க வேண்டும். அந்த ஆறு சேறு நிறைந்ததாக இருந்ததனால் நுளப்பியாறு எனப் பெயர் பெற்றது. அவ்வாற்றின் கரையில் அமைந்த ஊர் அவ்வாற்றின் பெயரால் நுளப்பியாறு எனப் பெயர் பெற்று பின்னாளில் நுளம்பூர் என்றாகி இன்று நொளம்பூர் என வழங்குகிறது. நாட்டார் அவர்கள் திரிபுவனசக்கரவர்த்தி என்பது குலோத்துங்கனுடைய பெயர் எனக் குறிப்பிட்டுள்ளார். திரிபுவன சக்கரவர்த்தி என்பது மூன்று உலகுக்கும் பேரரசன் என்று பொருள்படும். முதலாம் குலோத்துங்கன் காலம் முதலாக சோழ அரசர்கள் தங்களை மூன்று உலகுக்கும் அரசன் என்ற பொருளில் திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்றோர் அடைமொழியைத் தங்கள்பெயருக்கு முன்னர் சேர்த்துக் கொண்டனர். இவ்வடை மொழி குலோத்துங்கன் காலம் முதல் தமிழகத்து அனைத்து மன்னர்களாலும் பின்பற்றப் பட்டுத் தங்கள் பெயருக்கு முன் இட்டுக் கொண்ட ஒரு சிறப்புப் பெயராகும். இது குலோத்துங்கன் பெயரன்று பிற்கால மன்னர்களுக்குள்ள. பொதுவான சிறப்படை அல்லது சிறப்புபெறும். அரசர்கள் தங்களுக்குத் திரிபுவனச் சக்கரவர்த்திகள் என அடைமொழி கொடுத்துக் கொண்டது போலவே அரசி களுக்கும் உலமுழுதுடையாள் எனத் தமிழிலும், திரிபுவன மாதேவி என வடமொழியிலும் அடைமொழி சேர்த்து அழைக்கப்பட்டனர். கண்ணாறு - பலநிலத் தொகுதி கண்ணாறு என்பது நிலத்தொகுதியல்ல. கண் + ஆறு = கண்ணாறு - சிறுவழி மிகச் சிறிய ஆறு என நேரடிப் பொருள் தரும். பெரிய வாய்க்கால்களில் இருந்து வயல்களுக்கு நீர்ப்பாய்ச்ச சிறு துளையிட்டு மதகமைத்து பிரித்துச்செல்லும் வாய்க்காலை கண்ணாறு என்றழைத்தனர். எனவே இது நிலத்தின் தொகுதி யன்று. சிறு வாய்க்காலே ஆகும். கல்வெட்டுக்களில் முதலாம் கண்ணாறு, இரண்டாம் கண்ணாறு, மூன்றாம் கண்ணாறு என்பன போலவும் இரண்டாம் கண்ணாற்றுக்கு வடக்கு, மூன்றாம் கண்ணாற்றுக்கு தெற்கு என்பன போலவும் வருவதால் இது நிலத்தைக் குறிக்காது என்பதும் சிறு வாய்க்காலையே குறிக்கும் என்பதும் அக்கண்ணாறுகள் நிலங்களுக்கு எல்லை யாகச் சுட்டப்படுவது வழக்கம் என்பதையும் அறியலாம். புறம் - சாமான் அல்லது புசிகரணம் ( உலாவிற்காக) புறம் என்பது அறக்கட்டளை என்றபொருளில் ஆளப் பட்டிருக்கிறது. இது பற்றி முன்னர்க் கல்வெட்டில் விளக்கப் பட்டுள்ளது. இங்கு அமாவாசி (காருவா) தோறும் ஆழ்வார் எழுந்தருளுகைக்கான செலவுகளுக்கு முதலீடாக ( புறமாக ) விடப் பட்ட நிலத்தைக் குறிக்கிறது. நாவலர் நாட்டார் குறிப்பிட்டது போல மணி மங்கலம் விஷ்ணு கோயில் ராச கோபாலசாமி எழுந்தருள வல்ல. எழுந்தருளுவது வண்டு வராபதி எம்பெருமானே, வண்துவபதி ஆழ் என்ற தமிழில் பெயரை மொழி பெயர்க்க இல்லாமல் புதுப்பெயர் சூட்டிப் பரப்பி விட்டனர். மத்தியஸ்தன் - நடுவிருக்கை. ஒரு செயல்பாட்டைத் தீர்மானம் செய்வதில் சிக்கல் ஏற்படுகின்றபொழுது அதற்கு நடுநிலையாக இருந்து செயல்படக் கூடிய அலுவலர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். இன்று தீர்ப்பாயங்களில் நடுநின்று செயல்படுவதற்காக அமர்த்தப்படும் ஆர்பிட்ரேடர் ( Arbitrator) போல அன்று நடுநின்று செயல்பட்டவர்கள் நடுவிருக்கை எனத் அழகுத் தமிழில் அழைக்கப்பட்டனர். இந்த நடுவிருக்கை என்ற சொல்லை மத்தியஸ்தர் என்று வடமொழியில் பெயர்த்து வழங்கினர். அதனால் நடுவிருக்கை என்ற தமிழ்ச் சொல் வழக்கிழந்தது. நாட்டார் அவர்கள் “சாசனத்தில் 1050 என்று இருக்கிறது. நூற்றொருபது, நூற்றிருபது என்ற வேறுபாடா என ஆய்க” என தமது கல்வெட்டுக் குறிப்பில் குறித்துள்ளார். கல்வெட்டில் ஒன்பது பேரிடம் இருந்து விளைக்குப் பெறப்பட்ட நிலங்களின் அளவு 1050 குழி என்று உள்ளது. ஆனால் அவற்றைக் கணக்கிட்டால் 1060 குழி என வருகிறது. எனவே , வாசிப்பில் மூன்றாவதாக உள்ள “ திருப்போரிக் கிரமவித்தன் பக்கலும் ஆறாவதாக குறிப்பிட்டுள்ள இராயூர் யக்ஞ நாராயண கிராமவித்தன் பக்கலும், பெற்ற நிலங்களின் அளவை வாசிப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ஏற்பட்டதாக இருக்கலாம். எனவே கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள 1050 குழி என்பது சரியாக இருக்கும். 9. சிறுபழுவூர் சபையோர் நிலவிக்கிரய பத்திரம் 1) ஸ்வஸ்திஸ்ரீ புகழ்சூழ்ந்த புணரி அகழ்சூழ்ந்த புவியில் பொந்நேமியளவும் தந்நேமி நடப்ப விளங்கு ஜெயமகளை இளங்கோப் பருவத்துச் சக்க 2) ரகோட்டத்து விக்கிரமத் தொழிலால் புதுமணம் புணர்ந்து மதவரையீட்டம் வயிராகரத்து வாரி அயிநுநைக் கொந்தள வரைசர் தந்தளமிரிய வாளுறை கழித் 3) துத் தோள் வலிகாட்டிப் போர்ப்பரி நடாத்தி கீர்த்தியை நிறுத்தி வடதிசை வாகைசூடி தெந்திசை தேமரு கமலப் பூமகள் பொதுமையும் பொந்நியாடையும் 4) நந்னிலப்பாவை தநிமையும் தவிர வந்து புநிதத்திருமணி மகுடம் உரிமையிற்சூடி தந்னடி இரண்டும் தடமுடியாகத் தொந்நிலவேந்தர் சூட முன்னை மனுவ 5)ாறு பெருக கலியாறு வறுப்ப செங்கோல் திசைதொறும் செல்ல வெண்குடை இருநில வளாகம் மெங்கணுந் தனது திருநிழல் வெண்குடை வெண்ணிலாத்தி 6) கழ ஒருதநி மேருவிற் புலிவிளையாட வார்கடல் தீவாந்தரத்து பூபாலர் திறைவிடுத்த கலஞ்சொரி களிறு முறை முறை நிற்ப்ப விலங்கிய தெந்னவந் கருந்தலை பருந்தலைத்தி 7) ட தந்பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப இஞ்ஞாள் பிற்குலப் பிறைபோல் நிற்ப்பிழை யென்னும் சொல்லெதிர்க் கோடிற்றல்லது தந்கை வில்லெதிர் கோ 8) டா விக்கலந் கல்லதர் நங்கிலி துடங்கி மணலூர் நடுவிந் துங்பத்திரை யளவுற்று எங்கணும் பட்ட வெங்களிறும் விட்டதந் மானமுங் கூறிய வீரமுங் கிடப்ப ஏறி 9) ந மலைகளும் முதுகு நெளிப்ப இழிந்த நதிகளும் சுழந்றுடைந்தோட விழுந்த கடல்களும் தலைவிரிந் தலமர, குடதிசைத் தந்நாளுகந்து தாநும் தாநையும் பந்நாளீட்டமும் பல 10) பல முதுகும் பயந்தெதிர் மாறிய ஜயப்பெருந்திருவும் வாளாரொண்கண் மடந்தையரீட்டமும் மீளாது குடுத்த வெங்கரி நிரையும் கங்க மண்டலமும் சிங்கணமெந்நும் பாணி இரண் 11) டும் ஒருவிசைக் கைக்கொண்டு இணைவியப் புகழொடும் பாண்டி மண்டலங் கொள்ள திருவுளத்தடைத்தருளி வெள்ளவரு பரிதரங்கமும் பொருகரிக் கலங் 12) களும் போல் தந்திர வாரியும் முடைத்தாயிவந்து வடகடல் தெந்கடல் படர்வது போல் தந்பெருஞ் சேநையை ஏவி பஞ்சவரைவரும் பொருத போர்க்களத்தஞ் 13) சி வெருவி நெளித்தோடி அரணெநப்புக்க காடறத் துடைத்து நாட்டடிப்படுத்து மற்றவர் தம்மை வநசரர் திரியும் பொச்சை வெஞ்சுரமேற்றி கொற்ற விஜையஸ்தம்பம் 14) திசைதொறும் நிறுத்தி முத்திந் சிலாபமும் முத்தமிழ் பொதியிலும் மத்த வெங்கரி படுமையச் சைய்யமும் கந்நியும் கைக்கொண்டருளி தெந்நாட்டெலை 15) காட்டி குடமலை நாட்டுள்ள சாவெறெல்லாந் தநிவிசும் பேற மாவேறிய தந்வரூதினித் தலைவரை குறுகலர் குலைய கோட்டாறுளப்பட நெறிதொறும் நிலைக(ள்)ளிட்டருளி திறல் 16) கொள் வீரஸிம்ஹாஸநம் திரிய விட்டருளி பொங் கொளியாரமும் திருப்புயத்தலங்கலும் போல் வீரமும் தியாகமும் விளங்க பார்மிசை மேவலர் வணங்க வீர ஸிம்ஹாஸநத்து அ 17) வநி முழுதுடையாளொடும் வீற்றிருந்தருளிய கொ ராஜகெசரி வந்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ கொலொத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு இருபதாவ 18) து உத்தொங்கதொங்க வளநாட்டுக் குந்றக்கூற்றத்து ப்ரஹ்மதேயம் சிறுபழுவூர் ஸபையோம் விருத ராஜபயங்கர வாணகோவரையர் தங்க(ள்)ளாச்சி சோழகுல சுந்தரந்விச்சா 19) திரி யாழ்வார்க்கு ஸபை விலையாக விற்றுக் குடுத்த நிலமாவது ராஜேந்திரசோழ வாய்க்காலுக்கு வடக்கு பவித்திர மாணிக்க வதிக்குக் கிழக்கு முதல் கண்ணாற்று இரண் 20) டாம் சதுரத்து நிலம் நாலுமாவில் வடக்கடைய நிலம் ஒரு மாவில் கீழ்க்கடைய நிலம் அரைமாவும் இவ்வதிக்குக் கிழக்கு இவ்வாய்க்காலுக்கு வடக்கு இரண்டாங் க 21) ண்ணாற்று இரண்டாஞ் சதிரம் நிலம் நாலுமாவில் வடக்கடைய நிலம் ஒருமாவில் மேற்க்கடைய நிலம் அரைமாவும், ஆகநிலம் ஒருமா இந்நிலம் ஒருமாவும் இவரு 22) க்கு விற்றுக் கொள்வதாக எம்மிலிசைஞ்ச விலைப் பொருள் அந்றாடு னல்க்காசு ஒந்று இக்காசு ஒந்றும் ஆவணக் களியெ கைச்செல்லறக் கொண்டு விற்று விலையா 23) வணம் செயிது குடுத்தோம் ப்ரஹ்மதேயம் சிறுபழுவூர் ஸபையோம் இந்நிலம் ஒரு மாவுக்கும் இதுவே விலையோலை ஆவதாகவும் இதுவே பொருள் மாவறு 24) திப் பொருள்சிலவோலை யாவதாகவும் இதுவல்லது வேறுபொருள் மாவறுதிப் பொருள்ச் சிலவோலை காட்டக் கடவர் அல்லாதாராகவும் இப்படி இசைஞ் 25) சு இக்காசு ஒந்றும் கொண்டு இந்நிலம் ஒருமாவும் விலைக்கறவிற்று பொருளறக் கொண்டோம் சிறுபழுவூர் ஸபையோம் இவர்கள் பணிக்க இப்பிரமாணம் எழுதிநே 26) ந் மத்தியஸ்தந் பழுவூருடையாந் ஆயிரத்திருநூற்றுவந் முடிகொண்டாநேந் இவை எந்நெழுத்து இப்படிக்கு சாந்த மங்கலத்து பாலாசிரியந் இலக்குவணன் 27) கூத்தப்பந்நேந் இவை எந்நெழுத்து இப்படிக்கு பழுவூர் சவாந்திநாராணநெந் இவை எந்நெழுத்து இது சாந்தி பலாசிரியந் வீரநாராயணநது இது சாவாந்தி நாராயணந் மாறந் 28) யிப்படி அறிவேந் இவ்வூர் வீரசோழ விண்ணகராழ்வார் கோயில் திருவாராதநை பண்ணும் நாராயணந் திருவாயிக் குலமுடையாநேந் இப்படி அறிவேந் 24) இவ்வூர் கருமாந் இது பந்மாஹெஸ்வர ரக்ஷை.2 கல்வெட்டின் குறிப்புகள் சிறுபழுவூர்ச் சாசனம் - சிறு பழுவூர் நில விக்கிரய பத்திரம் ( முதலாங்குலோத்துங்கன் 1070 - 1118) இடம்: திருச்சி ஜில்லா கீழைப் பழுவூர் வடமலையீசுவரர் கோவில் இரண்டாம் பிரகார மேல்புறச் சுவரிற் கண்டது. பொருள்: முதலாங் குலோத்துங்கன் ஆட்சியாண்டு 20வதில் சிறு பழுவூர்ச் சபையோர், சோழகுல சுந்தரன், விச்சாதிரியாழ் வாருக்கு, ஒரு மாநிலத்தை, அன்றாடம் நற்காசு ஒன்றுக்கு விற்றனர். இச்சபையோர் இவ்விக்கிரயத்தின் பொருட்டுச் செய்து கொடுத்த சாசனமே விலையோலையாகவும், செலவோலை யாகவும் ஏற்பட்டது. வெற்றி: 1. குலோத்துங்கன் I இளம் பிராயத்திலேயே சக்கரக் கோட்டத்தில் தாராதேசத்து அரசனை வென்றான். 2. வைராகத்தில் யானைகளைப் பிடித்து மேன்மையடைந்தான். 3. குந்தள அரசனாகிய சளுக்கிய விக்கிரமாதித்தன் மீது படையெடுத்துச் சென்று, அவன் துங்கபத்திரையில் ஒளித்தும் விடாமற் சென்று அவனை வென்றான். 4. தென்னாடுகள் பலவற்றை வென்று பல அரசர்களும் வணங்க ஆட்சி புரிந்தான். 5. தீவாந்தரத்து அரசர்கள் யானை முதலிய திறை கொடுக்கப் பெற்றான். 6. கங்க மண்டலம், சிங்கண தேசம், பாண்டி மண்டலம் இவற்றைக் கைப்பற்றி ஜயஸ் தம்பங்கள் நாட்டினான். 7. தன் சேனையை ஏவி பஞ்சவர் ஐவரை வென்றான். 8. பாண்டியரை வென்று, மன்னார் குடாக் கடலைச் சார்ந்த நாடும், பொதிய மலையைச் சார்ந்த கூற்றமும், மேற்கு மலைத் தொடரும், கன்னியாகுமரியும், மேற்கு மலை நாடு கோட்டாறு முதலியவிடங்களையும், வென்று கைப்பற்றினான். (சோழ நாடு குமரி முதல் துங்கபத்திரை வரையுள்ளமை காண்க.) காலம்: கி.பி. 1090. மெய்க்கீர்த்தி: “புகழ் சூழ்ந்த புணரி அகழ் சூழ்ந்த புவியில், பொந்நேமி யளவும் தந்நேமி நடப்ப” எனத் தொடங்குவது. (2ம் மெய்க்கீர்த்தி சோழ வமிசச் சுருக்கம்) “புகழ் மாது விளங்கச் சயமாது விரும்ப” என்பதுமாம். (3ம் மெய்க்கீர்த்தி சோழ வமிசச் சரித்திரச் சுருக்கம்.) சொற்பொருள்: பொந்நேமி = மேருமலை; நேமி = ஆக்ஞாசக்கரம்; மதவரையீட்டம் = யானைக்கூட்டம்; வாரி = சமூகம்; தளம் = சேனை; வறுப்ப = வற்ற; நிற்பிழை = நிலைத்தகுற்றம்; கல்லதர் = கல்வழி; நங்கிலி = ஓரிடம்; தந்திரவாரி = சேனாவெள்ளம்; அரண் = அடைக்கலம்; முத்தின் சிலாபம் = மன்னார்விரிகுடா; பாணி = தேசம்; சையம் = மேற்கு மலை; சாவர் = வீரர்; கோட்டாறு = கன்னியாகுமரியை அடுத்துள்ள பட்டணம்; வதி = வழி. பிற குறிப்புகள்: சிறு பழுவூரில் ஒருச்சபையிருந்ததாகத் தெரிகிறது. விளக்கக் குறிப்பு இக்கல்வெட்டு அரியலூர் மாவட்டம் ( முன்பு திருச்சி மாவட்டம் உடையார் பாளையம்) கீழப்பழுவூர் வடமூலேசுவரர் கோயில் இரண்டாம் திருச்சுற்றின் மேலைச் சுவரில் வெட்டப்பட்டுள்ளது. இது தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3 இல் 71 ஆம் கல்வெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. முதற் குலோத்துங்க சோழனின் ( கி.பி. 1070 - 1122 ) 20ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1090 ) வெட்டப்பட்ட இக்கல்வெட்டில் கீழைப்பழுவூர், பழுவூர் எனவும், சிறுபழுவூர் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் இவ்வூரை தம் பாடல்களில் மன்னுபெரும் பழுவூர் என்றே பாடிஉள்ளார். இவ்வூர் இன்று இரண்டு பகுப்பாகி மேலைப்பழுவூர், கீழைப் பழுவூர் என வழங்குகின்றன. கீழைப் பழுவூராகிய சிறுபழுவூர்க் கல்வெட்டில் இவ்வூர்க் கோயிலை திருஞானசம்பந்தர் திருஆலந்துறையுடையார் என்றே பாடியுள்ளார். இங்குள்ள கல்வெட்டுக்களும் இக்கோயிலுடை யானை; திருவாலந்துறையுடையார் என்றும், திருவாலந்துறை மகாதேவர் என்றும் அழைக்கின்றன. ஆலமரத்தின் கீழ் இக்கோயில் இறைவன் எழுந்தருளியிருந்ததால் தமிழ்நாட்டுக் கடவுளர்கள் பெயர் பெறும் மரபுப்படி அவர் எழுந்தருளிய ஆலமரத்தை அடையாளமாகக் கொண்டு ஆலந்துறையுடையார் என்றே அழைக்கப்பட்டுள்ளார். பின்னாளில் தமிழகக் கோயில்களை வடமொழிக் கோயில்களாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப் பட்டபோது இக்கோயிலை வடமூலத்தான ஈசுவரன் என்று மொழி பெயர்த்து பழம் பெயரை மறையச் செய்து விட்டனர். வடமுலம் - ஆலமரம் இலக்கியத்திலும் கல்வெட்டுக்களிலும் இடம் பெறாத இவ்வழக்குப் பெயரைக் கருத்திற்கொண்டே நாட்டாரய்யா அவர்களும் கீழைப் பழுவூர் வடமலையீசுவரர் கோயில் என எழுதியுள்ளார். இவர் வடமூலத்தான ஈசுவரர் என்ற வடமொழிப் பெயரை தவறாக உணர்ந்து கொண்டதன் விளைவாக வடமலையீசுவரர் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, ஆட்சியிலும் ஆவணத்திலும் இல்லாது மக்கள் வழக்கில் மலிந்து போன வடமொழிவழக்கிலிருந்த நில விக்கிரய பத்திரம் என்ற சொல்லையும் எடுத்தாண்டுள்ளார். ஆனால் கல்வெட்டுக்களில் இது நிலவிளை ஆவணம் என்றே நல்ல தமிழில் பரவலாக வழங்கி வருவதைக் காணலாம். இக்கல்வெட்டுப் வெட்டப்பட்டுள்ள 2ஆம் திருச்சுற்றை பிராகாரம் எனவும் சுட்டியுள்ளது தமிழின் வழக்கழிவைக் காட்டுகிறது. விலையோலை= நில விற்பனை ஆவணம் இதனை இன்று விற்பனைப் பத்திரம் எனவும், முழுதும் வடமொழியில் நில விக்கிரய பத்திரம் என்றும் வழங்குகின்றனர். செலவோலை = இது நிலவிற்பனைத் தொடர்பாக ஆவணப்பதிவு முதலான செலவுகளுக்கான ஆவணச் செல்லைக் குறிப்பது. ஆவணக் களரி = பதிவு அலுவலகம் ( Land Registration Office ) இசைந்த = ஒப்புக்கொண்ட ( Agreed ) “சிறுபழுவூரில் ஒரு சபை இருந்ததாகத் தெரிகிறது.”என ஐயா குறித்துள்ளார். சோழர் காலத்தில் சிறுபழுவூர் பிராமணர் களுக்காக உரிய ஊராக வழங்கப்பட்டு பிரமதேயம் ஆக்கப் பட்டுள்ளது. இதனை “குன்றக்கூற்றத்து பிரமதேயம் சிறுபழுவூர்ச் சபையோம்” என வரும் கல்வெட்டு வாசகத்தால் அறியலாம். பிரமதேயம் ஆக்கப்பட்ட இவ்வூர் பிராமணர்களால் தேர்ந் தெடுக்கபட்ட சபையால் ஆளப்படுவதே அன்றைய வழக்கம். ஆதலின், அங்கு பிராமணர் ஆட்சி அதாவது சபையார் உண்டு என்று தெளிவான ஒன்று. 10. வில்லவராயன் சாஸனம் 1) ஸ்வஸ்திஸ்ரீ புகழ்சூழ்ந்த புணரி யகழ்சூழ்ந்த புவியில் பொந்நேமியளவுந் தந்நேமி நடப்ப விளங்கு சயமகளை யிளங்கோப்பருவத்து சக்கரகோட்டத்து விக்கிரமத் தொழிலால் புதுமணம் புணர்ந்து மதவரையீட்டம் வயிராகரத்து வாரி அயிர் 2) முனைக் கொந்தள வரசர்தந் தளமிரிய வாளுறை கழித்து தோள்வலி காட்டிப் போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி வடதிசை வாகைசூடித் தெந்திசைத் தேமருகமலப் பூமகள் பொதுமையும் பொந்நியாடை நன்நிலப் பாவையின் தனிமையுந் தவிரப் 3) புனிதத் திருமணிமகுடம் உரிமையிற் சூடித் தந் நடியிரண்டுந் தடமுடியாகத் தொந்நில வேந்தர் சூட முந்னை மனுவாறு பெருக கலியாறு வறுப்ப செங்கோல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை யிருநிலவளாகம் எங்கணுந் தனது திருநிழல் விண்ணிலாத் திகழ 4) ஒருதநி மேருவில் புலிவிளையாட வார்கடற் றீவாந் தரத்துப் பூபாலர் திறைவிடுதந்த கலஞ்சொரி களிறு முறை நிற்ப விலங்கிய தெந்னவந் கருந்தலை பருந்தலைத்திடத் தந் பொந்னகர்ப் புறத்திடைக் கிடப்பவிநாள் பிற்குலப்பிறைபோல் நிற்பிழை எந்னுஞ் சொல்லெதிர் கோடிற்றல் 5) லது தந்கை வில்லது கோடா வேழ்குலத் தரசர் அளத்தியலிட்ட களிற்றின தீட்டமும் பட்ட வெம்பரியும் விட்ட தந்மானமும் கூறிந வீரமும் கிடப்ப ஏறின மலைகளு முதுகு நெளிப்ப யிழிந்த நதிகளுஞ் சுழன்றுடைந்தோட விழுந்த கடல்களுந் தலைவிரித்தலமரக் குடதிசைத் தந்நாளுகளுந்து தானும் தாi6) நயும் பந்நாளிட்ட பலபல முதுகும் பயந்தெதிர் மாறின ஜயப்பெருந்திருவும் பழியுகந்து குடுத்த புகழிந் செல்வியும் வாளா ரொண்கண் மடந்தையரீட்டமும் மீளாது குடுத்த வெங்கரி நிரையும் கங்க மண்டலமும் சிங்கணமெந்நும் பாணியிரண்டும் ஒருவிசைக் கைக்கொண் 7) டீண்டிய புகழொடு பாண்டிமண்டலங் கொள்ளத் திருவுளத்தடைத்து வெள்ளவரு பரித்தரங்கமும் பொருபரிக் கலங்களும் போலத் தந்திர வாரியுமுடைத்தாய் வந்து வடகடல் தெந்கடல் படர்வது போலத் தந்பெருந் சேனையை யேவிப் பஞ்சவர் ஐவரும் பொருத போர்க் களத் 8) தஞ்சி வெருநெளித்தொடி அரணெநப்புக்க காடறத்து டைத்து நாட்டடிப்படுத்து மற்றவர் தம்மை வனசரர் திரியும் பொச்சை வெஞ்சுர மேற்றி கொற்ற விசயஸ்தம்பந் திசைதொறு நிறுத்தி முத்திந் சலாபமும் முத்தமிட் பொதியிலு மத்தவெங்கரி படுமய் 9) யச்சய்யமுங் கந்நியுங் கைகொண்டு புநிதத் தெந்நாட் டெல்லை காட்டிக் குடமலை நாட்டுள்ள சாவெறெல்லாந் தநிவிசும்பேற மாவேறியதந் வரூதினித் தலைவரைக் குறுகலர் குலையக் கோட்டாறுட்பட நெறிதொறும் நிலைகளிட்டருளித் திறல்கொள் வீ 10) ரஸிம்ஹாஸனந்திரிய விட்டருளிப் பொங்கொளி யாரமுந் திருப்புயத்தலங்கலும்பொல் வீரமுந் தியாகமும் விளங்கப் பார்தொழச் சிவநிடத் துமையெநத் தியாகவல்லி உலகுடையாளிருப்ப அவளுடந் கங்கை வீற்றிருந்தெந மங்கை 11) யர் திலதம் ஏழிசை வல்லபி ஏழுலகமுடையாள் வாழி மலர்ந் திநிதிருப்ப ஊழியுந் திருமாலாகத்துப் பிரியாதெந்று திருமகளிருந்தென வீரஸிம்ஹாஸனத்து உலகு முடையா ளொடும் வீற்றிருந்தருளிய கோவிராஜகேஸரி பந்மராந திரிபுவநச் சக்கர 12) வத்திகள் ஸ்ரீ குலோத்துங்கசோழ தேவர்க்கு யாண்டு 47 ஆவது பாண்டிகுலாசநி வளநாட்டு மீகொழை தேவதாந ப்ரஹ்மதேயம் திருவானைக்காவில் திருவெண்ணாவல் கீழிநிதமர்ந்தருளிய த்ரிபுவனபதிக்கு மூலப்ருத்த்யநாகிய ச 13) ண்டேஸ்வரன் ஆதேசம் ஜயசிங்ககுலகால வளநாட்டு மீசெங்கிளி நாட்டு வளம்பகுடி அரயமகந் முனையன் அருமொழி தேவநான வில்லவராயனுக்கு நாம் விற்றுக் குடுத்த நிலமாவது உடையார் திருவானைக்காவுடைய எம்பெருமாந் தே 14) வதாநம் தெந்கரை ஊர்களில் பாண்டிகுலாசநி வளநாட்டு மீகொழை ஆளிகுடியில் இவனுக்கு விற்றுக் குடுத்த நிலத்துக் கிசைந்த கிழ்பார்க்கெல்லை பிள்ளைகொள்ளி வாய்க்காலுக்கு மேற்கும் தெற்பாற்க்கெல்லை களத்தில் வடக்கிலகைய் வா 15) ய்க்காலுக்கு வடக்கும் மீபார்க்கெல்லை உத்தமசீலி சருப்பேதிமங்கலத்து தெந்பிடாகை புதுக்குடி எல்லைக்கு கிழக்கும் வடபார்க்கெல்லை தெந்நாற்றங்கரைப் பெருவழிக்கு தெற்கு ஆக இவ்விசைந்த பெருநாந் கெல்லையுள்பட்ட நிலம் 16) 4 தை க ¾ இந்நிலம் நாலே முக்காலும் இத்தேவர்க்கு யாண்டு நாற்பத்தேழவதுவரை பயிரிலி புஞ்செய்யாய்க் குட்டமும் மண்ணுமிட்டுக் கிடந்தமையி லந்நிலம் முனையந் அருமொழி தேவரான வில்லவராயனுக்கு விற்றுக் குடுத்து 17) க் கொள்வதாக எம்மிலிசைந்த விளைப்பொருள் அந்றாடு நற்காசு 4. ப2 இக்காசு நாலே மாகாணியுங் கைக்கொண்டு திருவானைக்காவுடைய எம்பெருமாந் ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கி முனையந் அருமொழிதேவனாக வில்லவராயனுக்கு விற்றுக்குடுத் 18) து இவந் உடையார் திருவானைக்காவுடைய எம்பெருமாந் கோயிலில் இடங்கை நாயகரெந்று எழுந் தருளுவித்த இஷபவாஹன தேவர்க்கும் நம்பிராட்டியார்க்குந் திருமஞ்சநங்களுக்கு திருவமிர்து படிக்கும் இரண்டு திருநாளிலும் இரண்டுநாள் திருவிழா எழுந்தருளுகைக்கும் உள்ளிட்டு 19) வேண்டும் நிமந்தங்களுக்கு இந்நிலம் 4 ¾ கல்லித் திருத்தி ஸ்ரீ பண்டாரத்து புஞ்செய் வரிசையால் வேலி ஒந்றுக்கு நெல் ஐங்கலமாக ராஜகேஸரி மரக்காலால் இந்நிலம் நாலே முக்காலுக்கும் அளப்பதாந நெல் 23 களநு இந் நெல் இருபத்துமுக்கலநெ இருதூணிக் குறு 20) ணியும் அளக்குமிடத்தில் கார் பாதி பசானம் பாதி அளப்பதாகவும் இதில் மிகுதிகொண்டு இவர் இடங்கை நாயக ரெஞ்று எழுந்தருளுவித்த இஷபவாஹந வெர்க்கும் நம்பிராட்டி யார்க்கும் திருமஞ்சன படிகளுக்கும் திருவமுதுபடிக்கும் இரண்டு திருநாளிலும் இரண்டுநா ளெழுந்தருளுகைக்கு 21) உள்ளிட்டு வேண்டு நிமிந்தங்களுக்கு நிமந்தஞ் செய்து குடுத்தோம் முனையந் அருமொழிதேவநான வில்லவராயனுக்கு திருவானைக்காவுடைய எம்பெருமானுக்கு மூலப்ருத்த்யநாகிய ஸண்டேஸ்வரந் உள்ளிட்ட கந்மிகளோம் இது பந்மாஹேஸ்வர ரbக்ஷ கல்வெட்டின் குறிப்புகள் வில்லவராயன் சாசனம் குலோத்துங்கன் I 1070 - 1118 இடம்: திருச்சி; திருவானைக்கா, 2ஆம் பிரகாரக் கீழ்புறச் சுவரிற் கண்டது. பொருள்: முதலாங் குலோத்துங்கன் ஆட்சியாண்டு 47வதில் திருவானைக்கா கோயில் சண்டேசரன் உள்ளிட்ட கன்மிகள் வில்லவராயன் என்பானுக்கு, தென்கரைப் பகுதியிலுள்ள ஆளிகுடி கிராமத்தின் கோவில் நிலத்தில் நாலே முக்கால் வேலியை அன்றாடு காசு நாலே மகாணிக்கு ( வீசம் ) சாசனம் செய்து கொடுத்தனர். வேலி 1-க்கு 5 கலமாக 23 3/4 கலம் நெல், கார்பாதியும், சம்பா பாதியும் இராஜகேசரி மரக்காலால் அளக்க வேண்டும். இந்நெல் திருமஞ்சனத்திற்கும் நைவேத்தியத்திற்கும் இரண்டு திருநாள்களிலும் 2. எழுந்தருளுகைக்கும் பயன்படுதற்கு மெனக் குறிக்கப்பட்டது. வெற்றி: 9-ம் சாசனத்திற் குறித்தவையே காலம்: கி.பி. 1117 மெய்க்கீர்த்தி : “புகழ் சூழ்ந்த புணரி அகழ் சூழ்ந்த புவியில்” எனத் தொடங்குவது. “புகழ் மாது விளங்கச் சயமாது விரும்ப” என்பதுமாம் . ( 3ஆம் மெய்க்கீர்த்தி சோழ வமிசச் சரித்திரச் சுருக்கம் ). சொற்பொருள்: பசானம் = சம்பா நெல்; கந்மி = பூசை செய்வோர் ( பூசாரி) பிற குறிப்புகள்: திருவானைக்கா = யானைகள் நிறைந்த காடாய் ஒரு காலத்திலிருந்தது. இதனால் இப்பெயர் பெற்ற திவ்வூர். “கஜாரண்யம்” என்பது இதன் வடமொழிப் பெயர். இவ்வூரில் கடவுட்டன்மை பொருந்திய வெண்ணாவல் மரம் ஒன்றிருக்கிறது. இது நெடுங்காலமாய் இருந்து வருதலை நாளைக்குங் காணலாம். விளக்கக்குறிப்பு இக்கல்வெட்டு திருச்சி மாவட்டம் திருவானைக்கா, திருவானைக்காவுடையார் கோயில் 2ஆம் திருச்சுற்றுக் கிழக்குச் சுவரில் வெட்டப்பட்டுள்ளது. இது தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3 இல் 76 ஆம் எண் கல்வெட்டாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் முதற்குலோத்துங்கன் சோழனுடைய கல்வெட்டாகும். இது அவனது 47வது ஆட்சியாண்டில் ( கி.பி. 1117) வெளியிடப் பட்டதாகும். வழக்கமாகத் தமிழ் நாட்டுக் கோயிற் பெயர்கள் எல்லாம் வடமொழியாக மாற்றப்பட்டது போலவே திருவானைக் காவுடையார் கோயில் பெயரும் வடமொழியாக்கப்பட்டு சம்புகேசுவரம் என வழங்குகிறது. இக் கோயில் இறைவன் ஒரு திருவெண்ணாவல் மரத்தின் கீழ் எழுந்தருளியிருந்ததால் திருவெண்ணாவலின் கீழ் இருந்தார் என அழைக்கப்பட்டார் அதனை வடமொழியில் சம்புகேசுவரம் என மொழி பெயர்த்து மாற்றம் செய்துவிட்டனர். ( சம்பு- நாவல்) இக்கல்வெட்டில் திருவானைக்காவுடையாருக்கு உடைமை யான நிலமாய் பயிரிலி புன்செய்யாய் மண்ணிட்டுக் கிடந்த (கரம்பு) நிலம் நாலே முக்கால் வேலியை முனையன் அருண்மொழி தேவனான வில்லவராயனுக்கு நாலே மாகாணி காசுக்கு விற்று அக்காசை திருவானைக்காவுடையார் பண்டாரத்தில் சேர்த்ததையும், இந்நிலத்தை விளைகொண்ட வில்லவராயன் அந்நிலத்தைக் கல்லித் திருத்தி பயிரிட்டு அதனால் வரும் வருவாயிலிருந்து வேலிக்கு ஐந்து கலமாக 23 கலனே இருதூணி குறுணியாக வந்த நெல்லைக் கொண்டு இவ் வில்லவராயன் திருவானைக்காவுடையார் கோயிலிலே எழுந்தருளுவித்த இசப வாகனத் தேவர்க்கும், அவருடைய தேவியார்க்கும் திருமஞ்சனம், திருவமுது, இரண்டு திருநாள் எழுந்தருளுகை ( புறப்பாடு ) ஆகியவற்றுக்கு நிமந்தமாக அளித்ததைக் குறிக்கிறது. இதில் நிலம் விற்றவர் திருவானைக்காவுடையார். சிவன் கோயில்களில் சிவனுக்குச் சொந்தமான நிலங்கள் முதலான அனைத்துச் சொத்துக்களையும் படிநிகராளராக இருந்து விற்று வாங்குவதும் கொடுத்துப் பெறுவதும் சண்டேசுவரநாயனாரே ஆவார். அதனால் இந்நிலம் சண்டடேசுவர நாயனாரால் விற்கப் பட்டுள்ளது. இதனை வாங்கியவன் வில்லவராயன். எனவே இதனை வில்லவராயன் சாசனம் என்று சொல்லுவது பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. பொதுவில் நிலவிலை யாவணம் என்றே சொல்லவேண்டும். பசானம் - சம்பா நெல் தமிழ்நாட்டினுடைய பயிர்ப்பருவங்கள் இரண்டு. பொதுவாக ஒரு பூ விளைநிலம், இரண்டு பூ விளைநிலம், மூன்று பூ விளைநிலம் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிட்டிருந்தாலும் இரண்டு பூ ( பூ - பூகம் - போகம் ) விளைவதே பெரும்பான்மை. இந்த இரண்டுப் பருவங்களையும் கார் பருவம், பசானப் பருவம் எனப் பகுத்திருந்தனர். பசானப் பருவம் என்பது ஆவணி, புரட்டாசி மாதங்களில் நடவு செய்து மார்கழி, தை மாதங்களில் அறுவடைக்கு வரும் பருவம். இப்பருவத்தில் கார்ப் பருவத்தை விட அதிக விளைச்சல் காண்பதால் நில வருவாயை பசானப் பருவத்தில் அரசுக்குச் செலுத்துவதே மரபாக இருந்துள்ளது. ஆதலால் வரி வருவாய் ஆண்டைக் கணக்கிடும் பொழுது பசானப் பருவத்தைக் கொண்டே கணக்கிடப்படும். அரசன் ஆட்சிக்கட்டில் ஏறிய நாள் தொடங்கிய முதல் ஆண்டில் வரும் பசானப் பருவத்தில் இருந்து இப்பாசன (நிலவரி) ஆண்டு கணக்கிட்டு அவன் ஆட்சியாண்டோடு தொடர்ச்சியாக முதலாம் பசானம், இரண்டாம் பசானம் என ஆட்சி முடிகின்ற வரை வருவாய் ஆண்டும் தொடரும். பசானம் என்ற வருவாய் ஆண்டு அக்பர் காலத்தில் மாற்றம் செய்யப் பெற்று பசலி என்ற உருதுச் சொல் தமிழகத்தில் புகுத்தப்பட்டு விட்டது. அது முதல் பசானம் என்ற தமிழ் வழக்கு அழிந்து பசலி என்ற உருது வழக்கு நிலைபெற்றுவிட்டது. எனவே, கல்வெட்டில் கார்ப்பாதி, பசானம்பாதி என வருவது விளையும் பருவத்தையும், அதன் சார்பான வரியையும் குறிப்பிடுகிறது. பசானப் பருவத்தில் விளையும் நெல் சம்பா நெல் ஆகையினால் ஐயா பசானம் என்பதற்கு சம்பா நெல் குறிப்பு எழுத நேர்ந்தது. கந்மி - பூசை செய்வோர் தமிழகக் கோயில்களில் வடநாட்டு பிராமணர்கள் பூசைக் காணியாளர்களாக பணியமர்த்தம் செய்யப்பட்ட பின்னர் கோயில் நிர்வாகங்களில் வடமொழிச் சொற்கள் பெரிதும் புகுத்தப்பட்டன. கோயிலுக்கு உரிய பணிகளை (கருமம்) செய்கின்றவன் தேவர்கர்மி (கர்மி - கருமம் செய்பவன், எனப்பட்டான். அந்தக் கர்மி - கருமி என்பதே கந்மினைத் தற்பவம் ஆகியுள்ளது. திருவானைக்கா = யானைகள் நிறைந்த காடாய் ஒரு காலத் திருந்தது. இதனால் இப்பெயர் பெற்றதிவ்வூர். “கஜாரண்யம் ” என்பது இதன் வடமொழிப் பெயர். கஜாரண்யம் என்ற பெயர் ஆவணங்களிலோ, மக்கள் வழக்கிலோ காணப்படாத ஒரு புதுப்பெயராக உள்ளது. தமிழக் கோயில்களை வடமொழியாக்கம் செய்கின்ற முயற்சியின் வெளிப்பாடாக கடவுள் பெயரான திருவெண்ணாவல் உடையார் என்பதைச் சம்புகேசுவரர் என ஆக்கப்பட்டது போல திருவாணைக்கா என்ற ஊர்ப் பெயரையும் வடமொழியாக்க முயற்சி நடந்துள்ளது. அதன் வெளிப்பாடாகவே ஐயா வாயிலாக இவ்விளக்கம் வெளிப்பட்டுள்ளது. 11. அருளாளப் பெருமாள் கோயில் சாசனம் 1) ஸ்வஸ்திஸ்ரீ பூமாது புணரப் புவிமாது வளர நாமாது விளங்க ஜயமாது விரும்பத் தன்னிநிரு பதமலர் மன்னவர் சூட மன்நிய உரிமையால் மணிமுடி சூடிச் செங்கோல் சென்று திசைதொறும் வளர்ப்ப வெங்கலி நீங்கி மெய்யறந் தழைப்பக் கலிங்க மிரியக் கடமலை நடாத்தி வலங்கொளாழி வரையாழி திரிய, இருசுடரளவு மொருகுடை நிழற்ற, விஜயாபிஷெகம் பண்ணி வீரஸிம்ஹாஸநத்து முக்கோக்கிழாநடிகளோடும் வீற் 2) றிருந்தருளிய கோப்பரகேசரி பந்மராந த்ரிபுவநச் சக்ர வர்த்திகள் ஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு ஒன்பதாவது ஜயங்கொண்ட சோழமண்டலத்து எயிற் கொட்டத்து எயில் நாட்டுத் திருவத்தியூராழ்வாரைப் பாடியருளிந ஸ்ரீ பூதத்தாழ்வாரும் ஸ்ரீ பொய்கையாழ்வாரும் பிறந்த திருக்கேட்டைநாள் அருளாளப் பெருமாள் புறப்பட்டருளி ஏகாசீதி திருமஞ்சநமும் பெருந் திருவமுதுஞ் செய்தருளத் திருமஞ்சநத்துக் குத் திருமுளைச் சார்த்த திருமு 3) ளைப் பாலிகை முப்பத்தாறுக்குப் பாலிகை ஒன்றுக் கடிக்கீழட்ட நெல்லு உரியாக நெல்லுப் பதக்கிருநாழியும் திருமுளைப் பீசங்கொள்ள அரிசி னாநாழியும் புண்ணியாஹ தக்ஷணைக்கு அரிசி அறுநாழி உழக்கும் பலித்ரவ்யத்துக்கு அரிசி இருநாழி உரியும் திருமுளைக்குத் திருநந்தா விளக்குக்கு நாளொன்றுக்கு எண்ணை உழக்காக நாளஞ்சுக்கு எண்ணை நாழி உழக்குங் க்ருதஹாரோஹணத்துக்கு நெய் மூவுழக் காழாக்கும் திருமஞ் 4) சநத்துக் கலசம் எண்பத்தொன்றுக்கு அடிக்கீழ் நெல்லு ஐங்குறுணி உரியும் கும்ப நாலுக்கு நெல்லு நாநாழியும் திருச்சுண்ணக்கலச மொன்றுக் கடிக்கீழரிசி இருநாழியுங் கலசஞ்சூழக் காணவிலையின் புடவை பதிந்மூன்றுங் கலசஞ்சுற்ற நூலரைப் பலமும் திருமஞ்சநத்துக்கு நெய் முன்னாழியும் தேநாழியும் பால் முன் 5) னாழியும் தயிர் முன்னாழியும் ஸ்நபந த்ரவ்யங்கள் வேண்டு வநவும் பஞ்சலோகமும் பஞ்சரத்நமும் திருச்சுண்ணத்துக்கு நாடன் மஞ்சள் நாற்பதிந் பலமும் திருவிளக்கெண்ணை உரியும் ஹோமத்துக்கு நெய் யுரியும் சார்த்தி அருளச் சந்தந முக்கசும் கற்பூர மாறுமாவும் அகில ரைக்கழஞ்சுங் கஸ்தூரி மஞ்சாடியு மிரண்டுமாவும் புழுகு நெய் யிரண்டு மஞ்சாடியு நாலுமாவு மாத்திரைக்கரிசி நாநாழியும் பெ 6) ருன்திருவமுதுக்கு அரிசி முக்கலனே குறுணியும் பருப்புப் பதக்கிருநாழி உரியும் பலவற்கத்துக்கறி நிறை எண்ணுற்றிருபத் தைம்பலமும் கறியமுதுக்கு உப்பு நாநாழியு மிளகு உரியும் கடுகு ஆழாக்கே இருசெவிடரையும் சீரக மாழாக்குஞ் சற்கரை இருபதின் பலமும் நெய் யுரியும் அமுதில் படைக்க சற்கரை முப்பத்திரு பலவரையும் நெய் பதிநொருநாழி ஆழக்கும் வா 7) ழைப்பழ மைம்பத்தஞ்சும் தயிர் தூணியும் கண்ட சற்கரை முக்கசும் திருக்கண்ணாமடைக் கரிசி இருநாழியு நெய்யு ழக்கும் சற்கரை இருபதின் பலமும் வாழைப்பழம் பத்தும் அப்ப அமுதுக் கரிசி பதக்கும் நெய்யிருநாழி உரியும் சர்க்கரை எண்பதிந் பலமு மிள காழாக்கும் சீரக மிருசெவிடரையும் விறகு கட்டு மூன்றும் குசக்கல உருவுக்கு நெல்லுக் கலமும் தண்ணீரமுதுக் கேல மொரு செவிடரையும் அ 8) டைக்காய் அமுதுக்கு பாக்கு நாநுற்றைம்பது வெள்ளிலைப் பற்றொந்பதும் திருவிளக்கெண்ணை நாழி உரியும் திருவிளக் குடையார்கள் குழாய் பந்நிரண்டுக் கெண்ணை முந்நாழியும் பாவைவிளக்குக் கெண்ணை இருநாழியும் ஆக இவையிற்றுக்கு நிமந்தமாகச் செல்வதாக இட்ட சமவிலைப்படியா லிக்காயில் சிலவளக்கு மருமொழிநங்கை மரக்காலால் திருக்கேட்டை நாளொன்று 9) க்கு நெல்லு முப்பதிந் கலமாக ஓராட்டை நாளைக்கு வேண்டுவதாக நெல்லு முன்னூற்றுத் தொண்ணூற்றுக் கலத்துக்கும் சோழமண்டலத்து விருதராஜ பயங்கர வளநாட்டு மண்ணிநாட்டு வங்கமுழையூர் முழையூருடையாந் வெண்காடந் ஆதித்ததேவநாந வங்கத்தரையந் இத்தேவர் பண்டாரத்துச் சில வளக்கு மருமொழி நங்கை மரக்காலா லளந்த நெல்லு 10) எழுநூற்றென்பதிந்கல மிந்நெல் லெழுநூற்றெண்பதிந் கலத்துக்கு மாஸந்தோறும் நெல்லு முப்பத்திருகலநே தூணிப் பதக்காக யாண்டு கலம் அரைப் பொலிசையால் பலிசை பொலிவதாந நெல்லு முன்னூற்றுத் தொண்ணூற்றுக்கல மிந்நெல்லு முந்நூற்று தொண்ணூற்றுக் கலத்துக்கும் அருளாளப் பெருமாள் மாஸந்தோறும் திருக்கேட்டை நாள் புறப்பட்டருளி 11) திருமஞ்சனமும் பெருந்திருவமுதும் செய்தருள வேண்டு வநவையிற்றுக்கு இந்நிமந்தப்படியே பண்டாரத்திலே விட்டுச் சந்த்ராதித்தவத் நிமந்தமாகச் செய்யக் கடவதாகச் சிலாலேகை செய்வித்துக் குடுத்தோம் இக்கோயிலில் ஸ்ரீ கோயில்வாரியம் புண்டவத்தநத்து ராஜராஜக்கிரமவித்தநும் தூதஹரி நின்ற நாராயணக்கிரமவித்தநும் ம்ருஹஸ்தலத்து 12) பாண்டவதூதக் கிரமவித்தநும் புண்டவத்தநத்து இளைய கோக்கிரமவித்தநும் தூதஹரி வெண்ணைக் கூத்தக்கிரமவித்தநும் தூதஹரி இளையருளாளக் கிரமவித்தநும் கோயிற் கணக்கு உத்திரமேலூருடையாநாந எட்டி திருக்காளத்தி உடையானும் இவ்வநைவோம் இப்படிக்கு இவை உத்திரமேலூருடையான் எட்டி திருக்காளத்தி யுடையான் எழுத்து. கல்வெட்டின் குறிப்புகள் அருளாளப் பெருமாள் கோவில் சாசனம் விக்கிரமசோழன் - 1118. இடம்: சிறிய காஞ்சீபுரம் அருளாளப் பெருமாள் கோவிலில் , குன்றென்னும் கல் மேடையின் மேல்புறச் சுவரிற் கண்டது. பொருள்: விக்கிரமசோழன் ஆட்சியாண்டு 9-தில் சோழ மண்டலத்து விருதராஜபயங்கர வளநாட்டு, மண்ணி நாட்டு வங்க முழையூர், முழையூருடையான் வெண்காடன் ஆதித்ததேவனான வங்கத்தரையன், அருளாளப் பெருமாள் மாதந்தோறும், பூதத்தாழ்வார், பொய்கை யாழ்வார், ஆகிய இருவர் திருநஷத்திரமாகிய , திருக்கேட்டை நாளில் புறப்பட்டருளி , திருமஞ்சனமும், பெருந்திருவமுதும் செய்தருளவதற்கு வேண்டும் பொருள்களுக்கு, அருமொழி நங்கை மரக்காலால் 700- கல நெல்லின் வட்டி நெல்லாகிய 390 - கலம் ஆண்டுதோறும் கொடுக்கப்பட வேண்டும் என்று செய்ததைக் குறிக்கும். வெற்றி: கலிங்கத்துப் போரில் வெற்றி கண்டான். ( இவ்வரசன் மெய்க்கீர்த்தியிலும் உலாக்களிலும் இவன் கலிங்கம் செற்றான் என்று கூறப்பட்டுளதாயினும் இவன் தன் தகப்பன் காலத்தே கருணாகரத் தொண்டைமானுடன் சென்று போரில் வென்றானேயல்லாமல் தனியாக வெல்லவில்லையென்பது அறியத்தக்கது) காலம்: கி.பி. 1127 ( விக்கிரம சோழன் குலோத்துங்கன் 1 மகன். இவன் பட்டந் தரித்தது. 1118 இல்) மெய்க்கீர்த்தி: “பூமாது புணரப் புவிமாது வளர, நாமாது விளங்கச் சயமாது விரும்ப” எனத் தொடங்குவது. ( 2ம் மெய்க்கீர்த்தி சோழ வமிசச் சரித்திரச் சுருக்கம் ) சொற்பொருள்: ஏகாசீதி = எண்பத்தொன்று ( 81 ); உரி = அரைப்படி; நாழி = ஒரு படி ; பதக்கு = 2 மரக்கால்; திருநுந்தா விளக்கு = இரவும் பகலும் எறியும் விளக்கு; அருமொழி நங்கை = வீரராஜேந்திரன் மனைவி, மரக்காலின் பெயருமாம்; வாரியம்= ; பலிசை = வட்டி. (கலத்திற்கு அரைக்கலம்) எட்டி = ஒரு பட்டப்பெயர்; முக்கோக்கிழானடிகள் = விக்கிரம சோழன் மனைவி. (மூத்தவள்) செவிடு = ? பிற குறிப்புகள்: விக்கிரம சோழன் ஆட்சியாண்டு 6 ஆவதில் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. இது அதிக மழையின் காரணமாக ஏற்பட்டதாகும். விளக்கக்குறிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் சின்னக் காஞ்சிபுரத்தில் உள்ள அருளாளப் பெருமாள் கோயில் மேலைச் சுவரில் உள்ள பாறையின் மீது வெட்டப்பட்டுள்ளது. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3இல் 80 ஆம் எண் கல்வெட்டாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகனான விக்கிரம சோழனின் 9ஆம் ஆட்சியாண்டில் ( கி.பி. 1127இல் ) வெளியிடப்பட்டதாகும். நூறு ஆண்டுகளுக்குமுன் இக்கல்வெட்டைப் படியெடுத்துப் பதிப்பித்தவர்கள் சின்னக்காஞ்சிபுரம் அருளாளப் பெருமாள் கோயில் மேலைச் சுவர் மலையில் உள்ள கல்வெட்டு என இடம் சுட்டிப் பதிப்பித்துள்ளனர். ஆனால் இக்கோயில் உள்ள இடத்தின் உண்மையான ஊர்ப்பெயர் திருஅத்தியூர் என்பதே. இதனை இக்கல்வெட்டிலுள்ள ‘செயங்கொண்ட சோழ மண்டலத்து எயில்கோட்டத்து எயில் நாட்டு திருவத்தியூர் ஆழ்வார் ’ எனக் குறிப்பிட்டுள்ளதால் அறியலாம். காஞ்சிபுரம் கல்வெட்டுகளில் செயங்கொண்ட சோழ மண்டலத்து எயில் கோட்டத்து எயில் நாட்டு நகரம் காஞ்சிபுரம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரமும் அத்தியூரும் அருகருகில் இருந்த வெவ்வேறு இரு தனித்தனி ஊர்கள் என்பது வெளிப் படை. தமிழ்நாட்டு ஊர்கள் பெயர் பெறும் மரபுப்படி காஞ்சி மரத்தை அடையாளமாகக் கொண்டு காஞ்சிபுரமும் அத்தி மரத்தை அடையாளமாகக் கொண்ட அத்தியூரும் பெயர் பெற்ற தொன்மையான ஊர்கள். பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட பெருவளர்ச்சி அத்தியூரைத் தன் பிடிக்குள் அடக்கி காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாய் சின்னக்காஞ்சிபுரம் என வழக்குப்படுத்தி விட்டது. கல்வெட்டில் பதிப்பித்தவர்கள் அருளாளப் பெருமாள் கோவில் என இக்கோயில் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இப்பெயர் இன்று அங்கு இல்லை. அன்றாடம் இக்கோயிலை சுற்றிச் சுற்றித் தொழுது வலம் வரும் அடியாரும் இப்பெயரை அறியார். கல்விக்கழகமும் கோயில் கூட்டமும் நிறைந்த இவ்வூரில் பிறந்தாரும் வாழ்வாரும் இப்பழம்பெயரை அறிந்திருப்பார்களா என்பது ஐயமே. ( இதனை இந்நூலின் கல்வெட்டும் அதன் பயனும் என்றப் பகுதியில் காண்க.) ஏகாசீதி = எண்பத்தொன்று( 81.) ஏகாதசி என்பது ஏகாசீதி என பிழைப் பட எழுதப் பட்டுள்ளது. ‘ஏகாதசி திருமஞ்சனம்’ ஏகாதசி அன்று மேற்கொள்ளும் நீராடல். ஏகாதசி என்பது கரும்பக்கத்தில் ( கிருட்டிணபட்சம்) 11ஆம் நாள் அல்லது வெண்பக்கத்தில் (சுக்கிலபட்சம்) 11 ஆம் நாள் என ஒரு மாதத்தில் வரும் இரண்டு 11ஆம் பக்க (பட்சம்) நாட்களைக் குறிக்கும். தமிழ்நாட்டில் திங்களின் ( நிலவு) வளர்பிறையையும் தேய்பிறையையும் பகுதி பகுதியாகக் கணக்கிட்டு அதனை 1ம் பக்கம், 2ஆம் பக்கம், 3ஆம் பக்கம்......... என கணக்கிடுவது தமிழ் இலக்கிய கல்வெட்டு வழக்கு (பகு - பக்கு - பக்கம்) ஆகும். இதுவே தமிழ் வழக்கம். இவற்றை வடமொழிக்கு மாற்றி பக்கம் என்பதை பட்சம் (பக்ஷம்) ஆக்கி கிருட்டிணபட்சம், சுக்கிலபட்சம் என மாற்றி நிலவின் ஒவ்வொரு நாள் வளர்ச்சி தேய்வுகளை திதி என்ற பெயரில் 1 ஆம் திதி , 2ஆம் திதி என்பதை வடமொழி எண்ணிக்கையால் பிரதிமா, துவிதியை .... எனக்குறிப்பிட்டு வழக்கப்படுத்தி விட்டனர். அதன்படி வளர் பிறை , தேய்பிறையில் 11ஆம் நாளைக் குறிக்க சுக்கில பட்சம் ஏகாதசி எனவும், வழக்குப் படுத்திப்பட்டது. கிருட்டிணபட்சம் ஏகாதசி எனவும் அந்நாள்களை நற்செயல்கள் செய்வதற்கும் உரியதாகக் கட்டி வைத்தனர். ஆதலால் ஏகாதசி என்பது வளர்பிறை தேய்பிறையில் வரும் 11ஆம் நாட்களைக் குறிக்கும். ஏகம் - 1, தசி (தசம்) - 10 (ஏகம்+ தசம் = ஏகாதசம் - ஏகாதசி 1 + 10 =11 ) என்பதே இதன் பொருள். 81 அன்று. நுந்தா விளக்கு = இரவும் பகலும் விளக்கு நந்தா என்றால் அணையாத, குறையாத என்று பொருள். நந்தா என்பது கல்வெட்டுக்களில் சிலநேரங்களில் நுந்தா எனவும் எழுதப்படுவது உண்டு. நந்துதல் - குறைதல் , நந்தா - குறையாத. இங்கு என்றும் அனையாது எரியும் அனையா விளக்கு எனப்பொருள்படும். ‘நந்தா விளக்கே நாமிசைப் பாவாய்’ என வரும் மணிமேகலை அடியே இதற்குச் சான்று. வாரியம் - வாரியம் என்பது ஆட்சிப்பிரிவு, துறை, திணைக்களம், என பல பொருள் படும். ஓர் ஆட்சியின் பல்வேறு துறைகளை தனித்தனி பகுத்து ஆட்சி செய்வது ஆளுமைக்கு எளிதாகவும், சிறப்பாகவும் இருக்கும். அதனால் ஊராட்சி முதல் நாட்டாட்சி வரை உள்ள பல் துறைஆட்சிப் பணிகளையும் பல்வேறு திணைக்களங்காகப் பிரித்து ஆளுவது பண்டுதொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. அப்படிப் பிரிக்கப்பட்ட ஆட்சிப் பகுதி அல்லது திணைக்களம் வாரியம் என்று அழைக்கப்படும். கல்வி வாரியம், ஏரி வாரியம், கோயில் வாரியம் ..... என வாரியங்கள் கல்வெட்டுகளில் சொல்லப்பட்டுள்ளன. இது இன்றுள்ள போக்குவரத்து கழகம், பாடநூல் கழகம், மின்சார வாரியம் போன்ற ஆட்சிப் பிரிவுகளைப் போன்றது. வாரியப்பணி செய்வார் வாரியர் எனப்படுவர். அருமொழி நங்கை - வீரராஜேந்திரன் மனைவி, மரக்காலின் பெயருமாம். அரசன் அரசமாதேவியர், அரசக்குடும்பத்தினர் பெயர் களையும் அரசர்களுக்கு விருப்பமான கடவுள் பெயர்களையும், அன்றாடம் பயன்படுத்தும் அளவைக் கருவிகளுக்கு பெயர்சூட்டி பெருமைப்படுவதும் நினைவிற்கொள்வதும் அக்கால வழக்கமாக இருந்துள்ளது. அதன்படி வீரராஜேந்திரன் தன் மனைவியின் பெயரால் முகத்தல் அளவையான மரக்காலுக்கு அவள் பெயரை வைத்துள்ளான் எனக் கொள்ளலாம். முன்பு வந்துள்ள கல்வெட்டில் இராசகேசரி, ஆடல்வல்லான் என்னும் மரக்கால் களைப் பற்றி குறிப்பிட்டுள்ளதை இங்கு நினைவில் கொள்க. 12. தீக்காலிவல்லம் கோயில் சாசனம் 1) ஸ்வஸ்திஸ்ரீ திருமண்டப மிழிச்சி யெடுப்ப 2) தற்கு முன்புள்ள சிலாலேகைப்படி 3) கோ விஜய நந்தி விக்கிரம பந்மர்க்கு யாண்டு 17 4) ஆவது படுவூர்க் கோட்டத்து மீயாறு நாட்டுத் தீக்கா 5) லிவல்லமுடைய பரமேஸ்வரர்க்கு 6) இன்னாட்டு ஐம்பூணியும் வி 7) ளத்தூரும் இத்தேவர் தேவ 8) தானம் அமரூன்றி மங்கலமு 9) ம் விடேல்விடுகு விக்கிரமா 10) தித்தச் சதுர்வ்வேதி மங் 11) கலமென்னும் பேரா 12) ல் ஏகக் கிராமமாக மாவலி 13) வாணராயனான விக்கிரமாதித்த 14) வாணராயன் விண்ணப்பத்தாலு 15) ம் காடுபட்டித் தமிழ்ப் பேரரயன் 16) ஆணத்தியாலும் ஏகக் கிராமமாக்கி இவ்வ 17) மரூன்றி மங்கல முன்னித் தீக்காலி வல்ல 18) முடைய பரமேஸ்வரர்க்கு இறுத்து வ 19) ருகின்ற நெல்லு இரண்டாயிரக் காடியும் 20) பொன்னிருபதின் கழஞ்சு மிவ்வி 21) டேல்விடுகு விக்கிரமாதித்தச் சதுர் 22) வ்வேதி மங்கலத்துச் சவையார் 23) இறுப்பாராகவு மின்னெல்லில்த் தி 24) ருவமிர்துக்கு நெல்லு அறுநூற்று 25) க் காடியும் திருவுண்ணாழிகை யுள்ளா ரா 26) தித்துப் பாசரிக்கும் சிவப்ராஹ்மண 27) ர்க்கு நெல்லு ஐஞ் 28) ஞூற்றுக் காடியும் ஸ்ரீ ப 29) லி கொட்டுவார்க்கு நெல்லு 30) ஐஞ்ஞூற்றுக் காடியும் 31) திருப்பள்ளித் தாமம் 32) பறிப்பார்க்கும் திருப் 33) பதியம் பாடுவாருள்ளி 34) ட்ட பல பணி செய்வார் 35) க்கு நெல்லு நாநூற்று 36) க் காடியும் திருநொந்தா 37) விளக்குக்கும் திருமெய்ப் பூச்சுக்கும் 38) சிதாரிக்கு மற்றும் கண்டஸ்புடித நவக 39) ர்மாதிகளுக்கும்மாகப் பொன் இருபதி 40) ன் கழஞ்சும் ஆக இன்னெல்லும் 41) இப்பொன்னும் இத்தேவற்கு 42) சந்த்ராதித்தவல் லிறுப்பார்களா 43) கவும் இப்பரிசு நிவந்தமாக 44) ச் செய்து குடுத்தோம். 45) இத்தர்மம் பந்மாஹெ 46) ஸ்வரர் ரக்ஷை. கல்வெட்டின் குறிப்புகள் தீக்காலி வல்லம் கோவில் சாசனம் விஜயநந்திவிக்கரமபந்மர் இடம்: பாலாற்றின் கிளை நதியான நிவாநதியின் மேல் கரையிலுள்ள, திரு வல்லம் என்னும் கிராமம் வில்வநாதேஸ்வர கோயில் மண்டப வடபுறச் சுவரிற் கண்டது. பொருள்: விஜயநந்திவிக்கிரமபந்மர் என்னும் பல்லவ மன்னனது, ஆட்சியாண்டு 17-ஆவதில், மாவலி வாணராயனான விக்கிரமாதித் தவாணராயன் ஆணையால், ஐம்பூணி, விளத்தூர் அமரூன்றி மங்கலம் என்னும் மூன்று கிராமங்களைச் சேர்த்து, விடல் விடுகு விக்கிரமாதித்திய சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரால், ஏககிராமமாக வழங்கப்பட்டு தீக்காலி வல்லமுடைய பரமேச் சுரரருக்குத் தானமாக விடப்பட்டது. இதனைப் பரிபாலிப்பவர் அவ்வூர்ச் சபையார். அச்சபையார் அக்கிராம வருவாயினின்றும் 2000 காடி நெல் 20 கழஞ்சு பொன் கோயிலுக்கு, அமுது படி முதலிய பூசை நைவேத்தியங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று நியமிக்கப்பட்டது. வெற்றி: ............. காலம்: கி.பி.9ஆம் நூற்றாண்டு மெய்க்கீர்த்தி: ............. சொற்பொருள்: தீக்காலிவல்லம் = திருவல்லம் ; ஆணத்தி = நிறை வேற்றுவோன்; காடி = ஒரு நிறையளவு; திருவுண்ணாழிகை = கோவில் சரக்கரை; கண்டஸ்புடிதம் = பழுது பார்த்தல் ; இழிச்சியெடுத்தல் = இடித்தல்; மெய்ப்பூச்சு = அபிசேகம் பிறகுறிப்புகள்: 2000 காடி நெல்லுக்குச் செலவு வருமாறு; திருவமுதுக்குக் காடி நெல் - 600; திருவுண்ணாழிகைக்குக் காடி நெல் - 500; பலிகொட்டுவார்க்குக் காடிநெல் - 500; திருப்பள்ளித் தாமம் பாப்பார், திருப்பதியம் பாடுவார் இவர்களுக்கு காடி நெல் - 400; ஆகமொத்தம் - 2000. விளக்கக்குறிப்பு காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வல்லத்து வில்வ நாதேஸ்வரர் கோயில் மாமண்டப வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3 இல் 43 ஆம் கல்வெட்டாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பல்லவ அரசன் விசய நந்திவிக்கிரமவர்மனது 17ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது. இக்கல்வெட்டு வெட்டிக் கிடந்த மண்டபம் பழுதடைந்து போனமையால் அம்மண்டபத்தை இறக்கி மீண்டும் கட்டி யுள்ளனர். பழுதடைந்த மண்பத்தில் இருந்த பழங்கல்வெட்டுக்கள் படியெடுக்கப் பட்டு புது மண்டபம் கட்டப்பட்ட பின் படியெடுக்கப் பட்ட முந்தைய கல்வெட்டுக்கள் இந்த மண்டபத்தில் மீண்டும் பொறிக்கப்பட்டள்ளன. இதனை ‘திருமண்டபம் மிழிச்சி யெடுப்பதற்கு முன்புள்ள சிலாலேகைப்படி ’ என வரும் இக்கல்வெட்டின் தொடக்க அடிகளால் அறியலாம். கல்வெட்டுக்கள் என்றென்றும் நிலையாக ( திங்களும் ஞாயிறும் உள்ள வரை - சந்திராதித்த வரை) இருக்க வேண்டும் என்பதற்காக அழியாத கல்லிலும் செம்பிலும் வெட்டி வைத்தனர். அழியாது எனக் கருதப்பட்ட இவை அழியும் நிலை ஏற்படின் கொடுக்கப்பட்ட கொடைகள் என்றும் நிலையாக இருக்க வேண்டும் ஆகையால் அதனை மீண்டும் வெட்டி வைத்துப் பாதுகாத்தனர். அதன்படி கொடையின் மீதும் வரலாற்றின் மீதும் மிகவும் மதிப்பும் பற்றும் கொண்டவர்கள் அழியுமிடத்தில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து மீண்டும் வெட்டி வைத்துள்ளனர். அதற்கு இக்கல்வெட்டு ஓர் எடுத்துக்காட்டாகும். இக்கல்வெட்டை மீண்டும் பதித்து வைத்துக் காப்பாற்றியதால் கி.பி.9ஆம் நூற்றாண்டிலேயே நாயன்மார்களுடைய திருப்பதியங்களைக் கோயில்களில் ஓதுவது பெருவழக்காக இருந்துள்ளது என்ற வரலாற்றை அறியமுடிகிறது. கோயில் பழுதால் அழியும் கல்வெட்டுக்கள் பலவற்றை அழியாது காத்தப் பெருமைக்குரிய செம்பியன் மாதேவியரைப் பற்றி இந்த இடத்தில் குறிப்பிடுவது பயனுடையதாக இருக்கும். அவருடைய திருப்பணிக்கு நன்றி செலுத்துவதாலும் இருக்கும். இவ்வம்மையார் தன் காலத்தில் பழங்கோயில்கள் பலவற்றைத் திருப்பணி செய்துள்ளார். தான் திருப்பணி செய்த அனைத்துக் கோயில்களிலும் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து புதிதாகக் கோயில் கட்டி முடித்த பின்னர் படியெடுத்த அக்கல்வெட்டுக்களை அப்படியே அக்கோயில்களில் வெட்டி வைத்துள்ளார். பின்வருவோர்க்கு எழுத்தமைதி முதலியவற்றால் கல்வெட்டின் உண்மை நிலையில் ஐய்யம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக ‘இதுவும் ஒரு பழங்கற்படி’ என எழுதி பழங் கல்வெட்டின் வாசகத்தை அதே முறையில் வெட்டுவித்து முன்வெட்டப்பட்டக் கல் பயனின்மையால் தவிர்க்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளதால் பல கோவில்களின் தொன்மையான வரலாறு காக்கப்பட்டுள்ளது. இந்த முறை எல்லோராலும் பின்பற்றப்பட்டிருக்குமேயாயின் தமிழ் நாட்டில் இலக்கக் கணக்கான கல்வெட்டுக்கள் கிடைத்திருக்கும். தமிழுக்கு எண்ணரிய கலைச் சொற்களும், தெளிவான வரலாறும் கிடைத்திருக்கும். நந்திவர்மன் காலத்து (கி.பி. 846 - 869) மாவலி வாணராயனான விக்கிரமாதித்த வானராயன் என்பவன் படுவூர்க் கோட்டத்து மீயாற்று நாட்டு ஐம்பூணி , விளத்தூர், அமர்ஊன்றி மங்கலம் என்ற மூன்று ஊர்களையும் ஒரே ஊராக்கி தன் பெயரால் விடேல் விடுகு விக்கிரமாதித்த சதுர்வேதி மங்கலம் எனப் பெயரிட்டு பிராமணர்களுக்கு கொடையாக வழங்க அரசனிடம் விண்ணப்பித்தான். அவ்விண்ணப்பத்தை ஏற்ற அரசன் காடுபட்டி தமிழ்ப் பேரரையனை செயற்பாட்டு அலுவலராக்கி (ஆணத்தி) அவனுடைய வேண்டுகோளை நிறைவேற்றினான். இச்சதுர்வேதி மங்கலத்துள் உள்ளடக்கிய மூன்று ஊர்களில் அமரூன்றி மங்கலம் என்ற ஊர் முன்பே தீக்காலி வல்லமுடைய பெருமானடிகளுக்குத் தேவதானமாகக் கொடுக் கப்பட்டிருந்தமையால் அதனால் வரும் வருவாயான 2000 காடி நெல்லையும் 20 கழஞ்சு பொன்னையும் முன்புள்ள முறைப்படி தீக்காலி வல்லத்து கோயிலுக்கு அளிக்க ஆணையிட்டு இவ்வேண்டுகோளை நிறைவேற்றினான். திருவுண்ணாழிகை = கோயில் சரக்கரை கோயிலில் இறைவன் எழுந்தருளியிருக்கும் திருமுற்றத்திற்கு (சன்னதி) உண்ணாழிகை என்பது பெயர். உள் + நாழி = உண்ணாழி = உண்ணாழிகை. இவ்விடத்தில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் திருவுண்ணாழி எனச் சிறப்பிக்கப் பட்டது. சரக்கரை என்பது பண்டாரம் என்பதே பொருள். ஆகவே சரக்கரை என்பது பொருந்தாது. இழிச்சி = இடித்தல் இழி என்றால் இறங்கு. இழிதல் = இறங்குதல். மேடு பள்ளத்தை ஏற்றிழிவு என்பது வழக்கு. கோவில்களும் மண்டபங்களும் பெரும்பாலும் கற்களால் கட்டப்பட்டவை. அவை பழுதடையும் பொழுது அவற்றை இடித்துத் தள்ளுவது வழக்கமல்ல. கோயிலில் உள்ள கற்களை உடையாமல் இறக்கி பழுதான கற்களை மட்டும் மாற்றி மீண்டும் கோயில், மண்டபம் எடுப்பது கட்டடக் கலை வல்லார் செயலாகும். ஆகவே இங்கு இழிச்சி என்பது இறக்கி என்பது பொருள். மெய்ப்பூச்சு = அபிசேகம் இறைவன் திருமேனியின் மீது சந்தனம், பொற்சுன்னம் போன்ற நறுமணப் பொருள்களை பூசி வழிபடுதல் வழிபாட்டு மரபுகளில் ஒன்று. அவ்வாறு பூசப்படும் நறுமணப் பொருள்கள் மெய்யில் - உடம்பில் - திருமேனியில் - பூசப்படுவதால் இதற்கு மெய்ப்பூச்சு என்று பெயர். இதனை மேற்பூச்சு என்றும் வழங்குவதை பல கல்வெட்டுக்களில் காணலாம். அபிசேகம் என்பது வேறு. மெய்ப்பூச்சு என்பது வேறு. ஆதலால் அபிசேகம் என்பதும் மெய்ப்பூச்சு என்பது வேறு வேறாகும். தீக்காலிவல்லத்திலுள்ள இறைவன் தமிழ்நாட்டு மரபுப்படி தீக்காலி வல்லமுடையார் அல்லது தீக்காலி வல்லமுடைய மகாதேவர், தீக்காலி வல்லமுடைய பெருமானடிகள் எனப் பெயர் பெறுவதே முறையாகும். இக்கல்வெட்டிலும் அம்முறைப்படியே இறைவன் பெயர் தீக்காலி வல்லமுடைய மாதேவர் எனவும், இவ்வூரிலுள்ள மற்றக் கல்வெட்டுகளில் தீக்காலிவல்லத்துப் பெருமாளடிகள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் இன்று இத்தமிழ்ப்பெயர் முற்றிலும் மறைக்கப்பட்டு வில்வநாதேஸ்வரர் கோயில் என வழங்குகிறது. இத் தமிழ்ப் பெயரை வடமொழிப் பெயராக மாற்ற முயன்றவர்கள் வல்லத்துப் பெயரான வல்லம் என்பதை வில்வம் என பிறழ உணர்ந்து வில்வம் என்பது வடமொழியாதலால் வில்வநாதன் எனப் பெயரிட்டுள்ளனர். வல்லம் - வில்வம் = பில்வம். வில்வம் என்பது கூவிளத்தைக் குறிக்கும். பரிசு - முறை. பரிசு என்ற இச்சொல் முறையாக, முறைப்படி என்ற பொருளில் முன்பு ஆளப்பட்டது. இன்று பரிசு (Prize) என்பது என்ற பொருளில் ஆளப்படுகிறது. 13. மஹாவலிவாணராயர் சாசனம் 1) ஓம் நமச்சிவாயம் ஸ்வஸ்திஸ்ரீ 2) கோ விசைய நந்திவிக்கிரம பருமற்கு யா 3) ண் டறுபத்திரண்டாவது ஸகல ஜகத்ர 4) யாபிவந்தித ஸுராஸுராதீச பரமேஸ்வர ப்ரதி 5) ஹாரீக்ருத மஹாவலி குலோத்பவ ஸ்ரீமாவலிவாணராயர் 6) வடுகவழி பன்னீராயிரமும் ஆள வாணபுரத்து 7) வடசிகரகோயில் புதுக்குவித்து இதற்கு இளங் 8) கிழவர் மகன் மன்றாடிடை அழிஞ்சிற்களம் பட்டி விலைக்கு 9) கொண்டு குடுத்தேன் ஊற்றுக்காட்டுக் கோட்டத்து அளிங்கணபாக்கத்து 10) கீழகத்து தட்டான் மாதமகந் அரிதீரன் குடுத்த தேவர் போகம் 11) மஹாவலிவாணராயர் பிடாகை வலஞ்செய்து கொடுத்தார் இது காத் 12) தார் அடியென் முடி மேலன இது அழித்தான் கடிகை எழாஇருவரையும் 13) கொன்ற பாவத்து படுவான் இது அழித்தான் இப்பாவத்துக்கு அஞ்சானாயில் 14) அன்றாள் கோயிலுக்கு ஆயிரம் காணம் தண்டப்படுவோம் வாணபுரத்தோம். 15) பஹுபிர் வஸுதா தத்தா ராஜபி: ஸகராதிபி: யஸ்ய யஸ்ய யதா பூ 16) மி தஸ்ய தஸ்ய ததா பலம்!! கல்வெட்டின் குறிப்புகள் மகாவலிவாணராயர் சாசனம் விஜயநந்திவிக்கிரமவர்மன் இடம்: செங்கற்பட்டு ஜில்லா திருவல்லத்தின் வட கிழக்கு, 1-மைலில் ஓடும், பாலாற்றின் கிளை நதியான நிவாநதியின் இடையிடந்த பழமையான பெரிய நுனி மழுங்கிய ஒரு பாறையில் வெட்டப்பட்டுள்ளது. பொருள்: விஜயநந்திவிக்கிரமவர்மன் ஆட்சியாண்டு 62-வதில் ஊற்றுக் காட்டுக் கோட்டத்து அளிங்ஙனபாக்கம், கீழகத்து அரிதீரன் என்னும் தட்டான், அழிஞ்சிற் களம் என்னும் நிலத்தை விலைக்கு வாங்கி; வாணபுரத்து வடசிகரக் கோவிலுக்குத் தேவபோக மாகத் தானம் கொடுத்தான். இதனை மகாவலிவாணராயர் உறுதி செய்தார். வெற்றி: ............ காலம்: கி.பி. 9ஆம் நூற்றாண்டு. மெய்க்கீர்த்தி: .................. சொற்பொருள்: வடசிகரக் கோவில் = வடக்கில் உள்ள சிகரமுடைய கோவில், (சிகரம் = கோபுரம்) கடிகை = கூட்டம்; எழாயிருவரையும் = நிலைத்த குடிகள்; அன்றாள் கோவில் = நீதிமன்றம்; காணம் = பொன்; மகாவலிவாணராயர் = தேவாசுரர்களுக்குத் தலைவனாகிய சிவனுக்கு வாயிற் காவலன் ஆகிய மகாபலியின் குலத்திற் பிறந்தவர். பிற குறிப்புகள்: “ ஓம் நமசிவாயம்” என்று இச்சாசனத்தின் ஆரம்பத் திலுள்ளது கவனிக்கத்தக்கது. இத்தருமத்தை அழித்ததனால் வரும் பாவத்திற்கு அஞ்சானாயின் ஆயிரம் பொன் அபராதம் விதிக்கப்படும். வாணவராயன், வடுக வழி பன்னீராயிரம் ஆண்டவன். விளக்கக்குறிப்பு இக்கல்வெட்டு காஞ்சிபுரம் மாவட்ட திருவல்லத்திற்கு கருகில் ஓடும் பாலாற்றின் கிளை யாறான நிவா ஆற்றின் இடையில் கிடக்கும் பாறையின் சரிவில் வெட்டப்பட்டுள்ளது. இது தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3 இல் 42 ஆம் எண் கல்வெட்டாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டு தொன்மையான தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. பல்லவ அரசன் விசயநந்தி விக்கிரமவர்மன் எனப்படும் ( கி.பி. 846 - 869 ஆம் ) நந்திவர்மனின் 62 ஆம் ஆட்சியாண்டில் வாணஅரசன் மாவலி வாணராயன் வடுகவழி பன்னீராயிரம் என்னும் பகுதியை ஆண்டு வந்தான். அவனது தலைநகராகக் கருதப்படும் வாணபுரத்தில் இருந்த வடசிகரக் கோயிலை ஊற்றுக்காட்டுக் கோட்டத்து ஆலிங்கணபாக்கத்து கீழகத்தில் இருந்த தட்டான் மாதன் என்பவனின் மகன் அரிதீரன் என்பவன் புதுக்குவித்தான். அதோடு அமையாது இளங்கிழார் மகன் மன்றாடி என்பனிரிடமிருந்து அழிஞ்சிற்களம் என்ற இடத்தை விளைக்குப் பெற்று இக்கோவிலுக்கு தேவர் போகமாக கொடுத்துள்ளான். இவன் கொடுத்த இக்கொடை நிலத்தை மாவலி வாணராயன் பிடாகை வலஞ்செய்து (உக்கிடையூரை எல்லையாவரையறுத்துக்) கொடுத்தான் என்பதைத் தெரிவிக்கிறது. வடசிகரக்கோயில் = வடக்கில் உள்ள சிகரமுடைய கோயில் ( சிகரம் - கோபுரம்) சிகரக் கோவில் என்பது கோவில் வகைகளில் ஒன்று. சிகரம் - உச்சி. மண்டபத்தின் மீது கூடமாக வைத்துக் கட்டுவது சிகரம் எனப்படும். மாவலி வாணராயன் தலைநகராகிய வாணபுரத்தில் சிகரம் வைத்துக் கட்டப்பட்ட இருகோயில்கள் இருந்திருக்க வேண்டும். அவை அமைப்புக் கருதியும் இடம் கருதியும் அடையாளப் படுத்தப்பட்டு வடசிகரக்கோயில், தென் சிகரக் கோயில் என அடையாளத்துடன் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். வட சிகரக் கோவில் பழுதுபட அதனை மன்றாடி புதுப்பித்ஒன்றை ஒன்று அணுகிக் கட்டப்படும் இரட்டைக் கோயில் களை திசையைக் கொண்டு அடையாளப்படுத்துவது வழக்கம் இதனை கீழைப்பழுவூரில் உள்ள ஆதித்தசோழன் காலத்து இரட்டைக் கோயில்களை வடலாயில் தென்கோயில், நன்வாயில் சிறீ கோயில் என அழைப்பதை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். இது போன்றே வாணபுரத்தில் உள்ள சிகரக் கோயில்கள் திசையால் வழக்குப் பெற்றிருக்கலாம். எனவே சிகரம் என்பது கோபுரம் அன்று. கடிகை - கூட்டம் கடிகை என்பது கல்விக் கழகத்தைக் குறிக்கும். காஞ்சி புரத்தில் கடிகை இருந்ததை வரலாறு காட்டுகிறது. அக் கடிகையில் பணியாற்றியவர்கள் கடிகையர் எனப்பட்டனர். ஆகவே கடிகை என்பது கூட்டம் அல்ல. கடிகை எழாயிருவர் எனக் கல்வெட்டில் கூறப்பட்டிருப்பது ஒரு மக்கள் அடையாளம். நூற்றுவன் , ஐந்நூற்றுவன், ஈராயிரவன், எழுநூற்றுவன், மூவாயிரவர் என்பன போல எண்ணிக்கை மக்களுக்கு அடையாளமாக கொடுக்கப்பட்டுள்ளது. இவை எதற்கான அடையாளம் என்பது இன்னும் தெளிவாக அறியப் படவில்லை. வடபுலத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்து குடியேறியவர்களையும் அழைத்து வரப்பட்டு குடியேற்றப் பட்டவர்களையும் குறிப்பதாக இருக்கலாம். எப்படி இருப்பினும் இதற்கு நிலைத்த குடிகள் என்பது பொருளாகாது. ஓம் நமசிவாயம் கல்வெட்டுக்களின் தொடக்கம் மங்கலச் சொல்லாக தொடங்கப்பட வேண்டும் என்பது இலக்கணம். இவ்விலக்கணம் பிற்காலத்தில் வகுக்கப்பட்டது. தொடக்கக் காலத்தில் கல்வெட்டுக் களின் தொடக்கத்தில் தமிழ் சொற்களே தொடக்கச் சொல்லாக இருந்தது. எடுத்துக்காட்டாக பல்லவர் கல்வெட்டுக்களில் கோ, கோவிசய போன்ற சொற்களே ஆளப்பட்டன. பின்னர் வடமொழி வாசகங்கள் அந்த தொடக்க இடத்தைப் பிடித்தன. ஸ்வஸ்திஸ்ரீ , சுபமஸ்து, ஜிதம்பகவத போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன. சில கல்வெட்டுக்களில் கடவுளைச் சார்த்தி சிவமயம், சிவாயநம, ஓம் நாராயணாய என்றலெல்லாம் தொடங்கின. அதுபோல இக்கல்வெட்டில் ஓம் நமசிவாய என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டுக்களில் தொடக்கச் சொற்களின் வளர்ச்சியைக் கொண்டே நமது மொழியிலும், பண்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்ய இயலும். அன்றாள் கோயிலுக்கு என்பது அன்றாள் கோவினுக்கு என இருக்க வேண்டும். அன்றாள் கோ என்பது அழிப்பவன் எவனோ, எக்காலமோ அக்காலத்து நாட்டை ஆள்கின்ற அரசன் எனப்பொருள்படும். 14. மாதவக்கிரம வித்தன் சாசனம் (ஒரு பிராமணன்) 1) ஸ்வஸ்திஸ்ரீ 2) ஸகலஜகத் ரயாதி வந்தித ஸுராஸுராதீச 3) புர பரமேஸ்வர ப்ரதிஹாரீகிருத மஹாவலிகுலொத்பவ மஹாபலி 4) வா'99ராஜர் சகர யாண்டு எண்ணூற் றொருபதாவ 5) து படுவூர்க் கோட்டத்துக் காரைநாட்டு வந்நி பேடாகிய இரணவிக்ரமச் சதுர்வ்வேதி மங்கலத்து ஸ 6) பையோம் இக்கோட்டத்து மீயாறு நாட்டுத் தீக்கா 8) லிவல்லத்துத் திருத்தீக்காலிப் பெருமாநடிகளுக்கு 9) சந்தராதித்தவல் ஒரு திரு நுந்தாவிளக்கு எரிப்பதற்கு நிச 10) தம் உழக்காழாக் கெண்ணை யட்டுவதற்கு இக்கோட்டத்துக் காவி 11) ரிப்பாக்கமாகிய அவநிநாராயணச் சதுர்வ்வேதி மங்கலத்துக்கீ 12) ழ் வடசேரி, எட்டுக்கூர் மாதவக்ரமவித்தன் பக்கல் தன்மகட்டளை 13) த்துளை நிறை இருபத்தைங்கழஞ்சு பொன் கொண்டு சந்தராதி 14) த்தவல் எரிப்பதாக இத்தன்மம் முட்டாமை செலுத்து வோ 15) மாநோம் ஸபையோ மித்தன்மம் முட்டில் தன்மாஸநத்தி 16) லெ நிசதம் ஐங்கழஞ்சு பொன் பந்மாஹெஸ்வ 17) ரரே மன்றப் பெறுவதாகவும் இம்மன்று பாடிறு 18) த்தும் இத்திரு நூந்தா விளக்கு முட்டாமை 19) ச்செலுத்துவோமானோம் வன்னி பேடாகிய ரண விக்கிரமச் சதிர்வ்வேதிம 20) ங்கலத்துச் சவையோம் இதற்கு விரோதஞ் செய்தார் கெங் 21) கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங் கொள்வார் 22) இது ப 23) ந்தமாஹெ 24) ஸ்வரர் ர 25) க்ஷை. கல்வெட்டின் குறிப்புகள் மாதவக்கிரமவித்தன் சாசனம் மகாவலிவாணராயன் இடம்: செங்கற்பட்டு ஜில்லா, திருவல்லம் கிராமம், வில்வநாதேஸ்வரர் கோவில் மகா மண்டபம் வடபுறச் சுவரிற் கண்டது. பொருள்: மகாவலி, வாணராயன் காலத்தில் கீழ் வடச்சேரி எட்டுக்கூர், மாதவக் கிரமவித்த னென்பான், தீக்காலி வல்லத்துப் பிரானுக்கு நாடோறும் உழக் காழாக்கு ( காலேயரைக்கால் ) எண்ணெயிட்டுத் திருநுந்தா விளக்கு எரிப்பதற்கு இருபத்தைஞ்சு கழஞ்சு பொன் கொடுக்க, அதனைப் பெற்றுக் கோயிற் சபையார், அங்ஙனமே அத்தருமத்தை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்டனரென்பதைத் தெரிவிக்கும். வெற்றி: ....... காலம் : கி.பி. 888 சகயாண்டு 810 மெய்க்கீர்த்தி: ..... சொற்பொருள்: சக வருசம் = ஒரு அரசனது காலம். தன்மக் கட்டளைத்துலை = தருமத்துக்காகக் கொடுக்கும் பொன்னை நிறுக்கும் துலாக்கோல். தன்மாசனம் = நீதிமன்றம் (நியாயசபை). மன்றுப்பாடு - அபராதம். பிற குறிப்புகள்: இத்தருமம் தவறினால் அதற்கு அபராதமும் கொடுப்பதாக சபையார் ஒப்புக் கொண்டமை கவனிக்கத் தக்கது. இத்தருமம் தவறினால் ஐந்து கழஞ்சு பொன் வசூல் செய்தல், இத்தருமத்துக்கு விரோதஞ் செய்தோர் கங்கையிடை குமரியிடைச் செய்தார் செய்யும் பாவங்களையடைவர். விளக்கக்குறிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் வல்லத்து வில்வதேசுவரர் கோயில் மாமண்டப வட சுவரில் வெட்டப்பட்டுள்ளது. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி3இல் 44ஆம் எண் கல்வெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. இது பல்லவர் காலத்தில் வடுகவழி பன்னீராயிரம் பகுதியை ஆண்ட வாணர் குல அரசனது கல்வெட்டாகும். அரசனது பெயர் இதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவனது பட்டப்பெயரான மாவலிவாணராயர் என்னும் வாசகத்தால் இது வாணர் குல மன்னனுடைய கல்வெட்டு என்பதை அறியலாம். இக்கல்வெட்டு பழைய கல்வெட்டின் படியாகும். ‘திருமண்டப மிழிச்சி யெடுப்பதற்கு முன்புள்ள சிலாலேகைப்படி’ என தொடங்கிய முன் கல்வெட்டின் (இந்நூலில் கல்வெட்டின் எண். 12 ) தொடர்ச்சியாக இக்கல்வெட்டு எழுதப்பட்டிருப்ப தாலும் , கல்வெட்டின் எழுத்தமைதியினாலும் இதுவும் ஒரு பழங்கல்வெட்டின் படி என்பதை அறியலாம். இக்கல்வெட்டில் படுவூர்க்கோட்டத்து காரைநாட்டு வந்நிபேடாகிய இரணவிக்கிரமசதுர்வேதி மங்கலத்து சபையார் இக்கோட்டத்தைச் சார்ந்த தீக்காலி வல்லத்து தீக்காலிப் பெருமாள் அடிகள் கோயிலில் நுந்தா விளக்கெரிக்க காவிரிப்பாக்கமான அவனிநாரண சதுர்வேதி மங்கலத்து கீழ்வடச் சேரி எட்டுக்கூர் கிரமவித்தன் என்பவனிடம் அறக்கட்டளையாக கொண்ட இருப்பத்தைந்து கழஞ்சு துளை நிறை பொன்கொண்டு ஞாயிறும் திங்களும் உள்ள வரை எரிப்பதாக ஒப்புக்கொண்டதைக் குறிக்கிறது. இந்த அறக் கட்டளை என்றென்றும் தடைபடாமல் செய்ய வேண்டும் என்றும் தடைபட்டால் நாள்தோறும் ஐந்து கழஞ்சு பொன் தண்டமாக செலுத்த வேண்டும் என்றும் இத்தண்டத்தை இக்கோயில் பூசை செய்வாரிடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தண்டம் செலுத்தினாலும் எரிக்க வேண்டிய விளக்கை தடைபடாமல் எரிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டதைக் குறிக்கிறது. இதில் குறிப்பிடப்பட்ட ஊர்கள் இன்றும் சிறு சிறு மாற்றங்களுடன் நிலைத்திருப்பதைக் காணலாம். வந்நிப்பேடு - வன்னிவேடு என்று வழங்குகிறது. காவிரிப்பாக்கம் - சென்னை - வேலூர் சாலையில் உள்ள காவேரிப்பாக்கம் ஆகும். எட்டுக்கூர் - இது காவேரிப்பாக்கத்திற்கு அருகிலுள்ள ஒருஊர். காரை - இது இராணிப்பேட்டைக்கு அருகில் உள்ளது. பல்லவ, பாண்டிய, சோழ, விசய நகர மன்னர்களின் காலங் களில் தமிழ்நாட்டின் வளமான ஊர்கள் நூற்றுக்கணக்கில் பிராமணர்களுக்கு கொடையாகப் பிரமதேயம் சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களில் அளிக்கப்பட்டதைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இக்கல்வெட்டுக்களை ஆராய்ந்தால் தமிழகத்தின் பெரும்பகுதியை மன்னர்கள் அவர்களுக்கு நீர்வார்த்துக் கொடுத்து விட்டனரோ என ஐயுறத் தோன்றுகிறது. இவ்வாறு அளித்ததனால் இந்நாட்டுக்கும் மக்களுக்கும் அடையாளமாக உள்ள தமிழ்மொழிப் பெயர்கள் மாற்றப் பட்டு அழிவுக் காளாகியுள்ளன. அதற்கு எடுத்துக் காட்டாக இக்கல்வெட்டில் வரும் வந்நிப்பேடு இரணவிக்கிரமச் சதுர்வேதி மங்கலம் ஆகவும், காவேரிப்பாக்கம் அவணி நாராண சதுர்வேதி மங்கலமாகவும் மாற்றப்பட்டதைக் குறிப்பிடலாம். சக வருஷம் - ஒரு அரசனது காலம் இது ஓர் அரசனது காலத்தைக் குறிப்பதன்று. ஒரு ஊழியை - காலமுறையை ( Era ) குறிப்பதாகும். இந்தியாவில் வழங்கி வந்த கலியாண்டு, விக்கிரம ஆண்டு என்பது போல அன்று வழக்கிலிருந்த ஒரு கால கணக்கு முறையாகும். இது இன்றும் இந்திய அரசால் பின்பற்றப் பட்டு வருகிற தமிழ்நாட்டில் இக் காலக்கணிப்பு முறை மிகவும் பிற்காலத்தில் மிக அரிதாகப் பின்பற்றப்பட்டுள்ளது. பொதுவாக தமிழரசர்கள் தங்களுடைய ஆட்சியாண்டைக் கணக்கிடத் தாங்கள் முடிசூடிய நாளிலிருந்து யாண்டு 1 ,2., 3 .. எனக் கணக்கிடுவதே முறையாகும். அரிதாக, இந்த சக ஆண்டைப் பயன்படுத்தியதால் நமக்கு வரலாற்றுக் காலத்தை கணிக்கப் பயனாக இருக்கிறது. இவ்வாண்டை கல்வெட்டுக்கள் சக ஆண்டு, சகரை ஆண்டு, சகாப்தம், சாலிவாகன சகாப்பதம் என பல பெயர்களால் குறிக்கின்றனர். இவ்வாண்டு கிறித்துவ ஊழிக்கு முன் 78 ஆண்களுக்கு முற்பட்டதாகக் கணித்துள்ளனர். ஆகவே சகஆண்டு குறிப்பிட்டுள்ள ஒரு கல்வெட்டின் காலத்தை அறிய அவ்வாண்டுடன் (சக ஆண்டுடன்) 78 ஆண்டுகளைக் கூட்டிக் கொண்டால் நாம் வரலாற்றுக்கு பயன்படும் கிறித்தவ ஆண்டு கிடைக்கும். எடுத்தக்காட்டாக இக் கல்வெட்டில் வரும் சகஆண்டு 810 என்பதுடன் 78 க் கூட்டினால் 810 + 78 = 888. இக்கல்வெட்டு கி.பி. 888இல் வெளியிடப்பட்டதை அறியலாம். மன்றுபாடு - அபராதம் மன்று - மன்றம்; ஊரிப் பொதுவிடம். ஊரின் வழக்குகளை தீர்வு செய்யும் அற மன்றமும் இல்லை மன்றுதல் தீர்வு செய்தல் (நிதி வழங்கல்) மன்றுபாடு - தீர்வு செய்த வரி தண்டம் மன்றுதல் என்பதற்கு தண்டுதல், பெறுதல் என்று பொருள்படும். மன்றத்திலே இட்ட தண்டத் தொகையை தண்டுதல் மன்றுபாடு ஆகும். இது தண்டமாகவும் இருக்கலாம், மன்றத்திலே ( நீதி மன்றம் ) அளித்த தீர்வுப்படி செலுத்தும் தொகையாகவும் இருக்கலாம். தன்மக்கட்டளை துலை - தருமத்துக்கு பொன்னைக் நிறுக்கும் துலாக்கோல். கல்வெட்டில் தன்மக் கட்டளை துளை நிறை பொன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. துலை என்பது துலாக் கோலைக் குறிக்கும். இன்னொரு துளை என்பது பொன்னின் மாற்றைக் (நிறை) குறிக்கும். ஆகவே இங்கு துலை என்பது துளை என்பதன் தவறான பொறிப்பு என எண்ணி எழுதப்பட்டுள்ளது. துளை நிறை பொன் என்பது மாற்றுக் குறையாத பொன் என்பதைக் குறிப்பது 15. வாணமஹாதேவியார் சாசனம் 1) ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ விமானம் இழித்துவதற்கு முன்புள்ள சிலாலேகைப்படிய் ஸகலஜகத்த்ரயாபிவந்தித ஸுராஸுராதீச பரமேஸ்வர ப்ரதிஹாரீக மஹாவலிகுலொத்பவ வாண வித்யாதர ராயரான வாணராயர் மஹாதேவியார் கொங்குணி தர்ம்ம மஹாராஜ குணிலபுர பர 2) மேஸ்வரரான ஸ்ரீ நாத ஸ்ரீ மநசிவமஹாராஜப் பெருமானடிகள் மகனார் ப்ரதிபதி அரையர் மகளார் வாணமஹாதேவியார் தீக்காலிப் பெருமானடிகளுக்கு நொந்தா விளக்கு ஒன்றினுக்கு இத்தீக்காலி வல்லத்து ஸபையார்க்குக் குடுத்த செ 3) ம்பொன் இருபதின் கழஞ்சு இப்பொன்னுக்குப் பொலியூட்டு நிசதம் உரிய் நெய் ஒரு விளக்குக்கு அட்டுவோமானோம் ஸபையோம் இன்னெய் சந்த்ராதிந்தவற் முட்டாமை அட்டுவோமானோம் முட்டில் பந்மாஹெஸ்வரரே நிசதி ஐங்கழஞ்சு பொன் மந்ற வொட்டிக் குடுத்தோம். 4) இத்தண்டப்பட்டும் நெய்முட்டாமை அட்டு வோமானோம் ஸபையோம் இதன்றென்றோம் கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவங் கொள்வார் இத்தந்ம்மம் பந்மாஹேஸ்வர ரக்ஷை இத்தர்ம்மம் ரக்ஷித்தாரடி யென் முடி மேலன. கல்வெட்டின் குறிப்புகள் வாணமகாதேவியார் சாசனம் இடம்: செங்கற்பட்டு ஜில்லா திருவல்லம் கிராமம் வில்வநாதேஸ்வரர் கோவில் மேல்புறச் சுவரிற் கண்டது. பொருள்: மேலைக் கங்கவரசனான பிருதிவிபதி மகளாகிய, வாணவித்தியாதர ராயனான வாணராயர் தேவியார், திருவல்லம் கோவில் திருநுந்தா விளக்கு எரிக்க, இருபது கழஞ்சு பொன் கொடுக்க, அதனைத் திருவல்லம் சபையார் ஏற்று, அத்தருமத்தைச் செய்வதாக ஒப்புக்கொண்டனர். வெற்றி: ........... காலம்: கி.பி.9ஆம் நூற்றாண்டு மெய்க்கீர்த்தி: ............. சொற்பொருள்: வாணமகாதேவி = குந்தவ்வை; கொங்குணிதர்ம்ம மகாராஜா = மேலைக்கங்கவரசர் பட்டம்; குணிலபுரம் = குவலபுரம் என்பதன்றிரிபு. இதுவே கோலார் என தற்போது வழங்குகிறது. கங்கவரசனின் தலைநகரம்; பொலிவூட்டு = மொத்தவட்டி பிற குறிப்புகள்: இத்தருமம் தடைபட்டால் 5 கழஞ்சு பொன் அபராதம். விரோதஞ் செய்தார் கங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவமடைவர். விளக்கக்குறிப்பு இக்கல்வெட்டும் முந்தைய கல்வெட்டைப் போன்றே காஞ்சிபுரம் மாவட்டம் , வல்லம் வில்வநாதேஸ்வரர் கோவில் வடசுவரில் வெட்டப்பட்டுள்ளது. தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 3இல் 47ஆம் எண் கல்வெட்டாகப் பதிப்பிக்கப் பட்டுள்ளது. இக்கல்வெட்டு பல்லவர் காலத்தில் அவர்களின் கீழ் அடங்கிய குறுநில மன்னனாக இருந்த வாணர்குல அரசர் வாணவித்யாதரன் மனைவியும் கங்க மன்னன் முதலாம் பிரதிவிபதியின் மகளுமான வாணமாதேவியார் வல்லத்து தீக்காலி பெருமாளடிகள் கோயிலில் ஒரு நந்தா விளக்கு எரிக்க 20 கழஞ்சு செம்பொன்னை திருவல்லத்து சபையரிடம் அளித்தாள். அப்பொன்னின் பலிசையால் ( வட்டி) நாள்தோறும் ( நிசதி ) ஒரு உரி நெய் முட்டாமல் ( தவறாது) நிலவும் ஞாயிறும் உள்ளவரை அளக்கவும் தவறினால் நாள்தோறும் 5 கழஞ்சு பொன் தண்டம் செலுத்தவும், செலுத்தியும் முட்டாமல் அளக்கவும் ஒப்புக்கொண்டதைக் குறிக்கிறது. வாணவன் மகாதேவை - குந்தவ்வை என்பது பற்றிய குறிப்பேதும் இல்லை. பொலிவூட்டு - மொத்த வட்டி : பொலி - பொலிசை. வட்டிக்கு அன்று வழங்கிய சொல். பொலி என்பதற்கு, உயர்தல், சிறத்தல், ஒளிர்தல், நிறைதல், ஆக்கம் (லாபம்) எனப் பல்பொருள்கள் உண்டு. மூலத் தொகையால் வரும் ஆக்கம் பொலி - பொலிசை என வழங்கப்பட்டது. நெல் தூற்றுவர் பொலி - பொலி என ஒலித்தலும் நிறைய வேண்டும். ஆக்கந்தர வேண்டும் என்னும் பொருள்பட்டதே. எனவே வைப்புத் தொகையாக வைத்த பொன்னுக்கு உரும் ஆக்கம் - பொலிசையால் செல்லுத்தது பொலியூட்டு. இது மொத்த வண்டியன்று வட்டியைக் கொண்டு செலுத்துவது. பலிசையாகச் செலுத்த வேண்டியது - ஊட்ட வேண்டியது பொலியூட்டு. 16. அதவோடு தோட்டம் சாசனம் 1) ஸ்வஸ்திஸ்ரீ பூமடந்தையும் ஜயமடந்தையும் பொலிந்து திருப்புயத் திருப்ப பார்முழுதுங் குடைநிழற்ற 2) பராக்ரமத்தால் முடிசூடி தென்மதுராபுரித் திருவிளை யாட்டத்திற் கண்டு மன்னரெல்லாம் வந்திறை 3) ஞ்ச மலைநாடு கொண்டருளி மாபாரதம் பொருதருளி மன்னவற்கு தூது சென்றருளி தேவாசுர மதுகை தரித்துதேனாரு 4) மரயுங் கொண்டருளி வடவரையிற் கயல் பொறித்து வானவர்கோ னாரம்பூண்டு திடவாசகக் குறுமுனி 5) பால்செந்தமிணூல் தெரிந்தருளித் தளிரிருங்கை மாதுரிமைச் செங்கோ லெங்குந் திசைநடாத்தி மன்னி 6) ய வீரஸிம்ஹாஸநத்திற் த்ரைலோக்ய முழுதுடையா ரோடும் வீற்றிருந்தருளி மாமுதல் மதிக்குலம் விளக்கிய 7) கோமுதல் கொற்றவன்மரான த்ரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்ட்ய தேவர் அபிஷேக காலத் 8) தில் ராஸிதாகோத்ரத்து ஆஸ்வலாயந ஸூத்ரத்து நாராயணன் சேந்தனான இடையாற்று மங்க 9) லத்து நம்பியும் திருப்புத்தூராழ்வாரும் பிள்ளையார் வீரகேரள தேவரும் உத்தரமந்திரி 10) கள் வீரகேரள பாண்டியக் கோனாரும் நிற்க இடையாற்று மங்கலத்து நம்பி 11) யோடும் திருவாய் மொழிந்தருளி பெருமாளுக்கு திருவாயுஷ்யார்த்தமாக ஸுசிந்த்ரமுடை 12) ய நாயனாற்கு பெருமாள் தாநம் பண்ணிக் குடுத்தருளின பூமி தென் கூற்றுப் புறத் 13) தாநாட்டுப் பூசன் குடிப்பா லதவோடு தோட்டம் இவ்வதவோடு தோட்டத்து 14) க்கு பெருநான்கெல்லை கீழெல்லை பாதிரித் தோட்டத்து நீர்நக்கல் தென்னெல்லை 15) கல்க்குழிக்கு வடக்கு மேலெல்லை புல்லாங் குறிச்சிக் கர்கறைவயலில் ஒற்றுவாயல் கிணற் 16) றுக்கு கிழக்கு வடவெல்லை கறடிகும்பல் கடம்புக்கு தெற்கு ஏரி இரண்டினால் விளைநி 17) லமும் காடு முள்ப்பட நிலம் ஏழு வேலி இன்னில மேழுவேலியும் இறையிலி காராண்மையு மு 18) ட்பட ஸுசிந்த்ரமுடைய நாயினாற்கு தானம் பண்ணினார் பெருமாள் முன்னுடையாரும் பழம் 19) பேரும் நீக்கி இப்படிக்கு பெருமாள் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் குடுக்கவென் 20) று திருவாய் மொழிந்தருளி திருமந்திர வோலை முரப்புநாட்டு மறவனூ ரம்பலவன் 21) வேளானான நித்தவினோத மூவேந்த வேளாரெழுத் தினால் ப்ரஸாதஞ் செய்தருளிய ஸ்ரீ 22) முகத்தினாலும் ஸேனாபதிகள் வெண்பைக்குடி நாட்டு இளவெண்பைச் சந்திரசேகரனான 23) வீரபாண்டிய மூவேந்தவேளார் கடையீட்டினாலும் புரவுவரி திணைக்கள நாயகம் 24) மலைகூற்றத்து விளத்தூர் நாராயணன் கேசவனான தென்னவசிகாமணி மூவேந்த வேளாரெ 25) ழுத்தினாலும் முகவெட்டி நாயகம் செம்பில் நாட்டு அரையனேரி தாயன் பொன்னனான கு 26) றும்பிலுடையா னெழுத்தினாலும் கூற்றுக்கு கூறு திருவழுதி வளநாட்டு கோட்டூர்ப் பேர 27) ருளாளன் கற்றங்குடியான் வானவன் வழுதிக்கோன் b . . . ட்டின் உள்வரி படியாலும் நித்தவினோத மூn28) வந்த வேளாரெழுத்தினால் ப்ரஸாதஞ் செய்தருளிய ஸ்ரீ முகத்தாலும் வீரபாண்டிய மூவேந்த வே 29) ளார் கடையீட்டாலும் புரவுவரியா ரெழுத்திட்ட உள்வரியாலும் இக்காலமுதல் திருப்படி மாற்று 30) ள்ளிட்டன செலுத்துவாராகச் சொன்னோம் ஸுசிந்த்ரமுடைய நாயனாற்கு. விளக்கக் குறிப்பு (அதவோடு தோட்டச் சாசனம்) இக்கல்வெட்டு குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலைய பெருமாள் கோயில் முதல் திருச்சுற்றில் இயற்கையாய் அமைந்துள்ள பாறை மீது வெட்டப்பட்டுள்ளது. திருவாங்கூர் தொல்லியல் வரிசை (T.A.S.Vol) தொகுதி 2 இல் 3- ஆம் எண் கல்வெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. இக் கல்வெட்டைப் பதிப்பித்த திரு கோபிநாதராவ் விரபாண்டியனின் சுசீந்திரம் கல்வெட்டு என்றே தலைப்பிட்டுப் பதிப்பித்துள்ளார். நாட்டார் கொடையளிக்கப்பட்ட இடத்தின் பெயரைத் தலைப்பாகக் கொடுத்துள்ளார். இக் கல்வெட்டில்தான் தன் அலுவலர்கள் உடனிருக்க அரசன் கொடையளித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு புதுமை. உடன் கூட்டத்து அலுவலர்கள் உடன் இருப்பினும் இடையாற்று மங்கலத்து நம்பி என்னும் பிராமணனுடன் சேர்ந்து ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது. இது அவர்களுக்கு அளித்துள்ள சிறப்பைக் காட்டுகிறது. இக்கொடை அரசனுடைய நீண்ட வாணாள் வேண்டி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு வழக்கப்படி இறைவன், ஊரைச் சார்த்தி சுசீந்திரமுடைய நாயனார் என்றே பெயர் பெற்றுள்ளார். தமிழ் நாட்டுக் கடவுட் பெயர்களை வடமொழி மாற்றம் செய்ய முயன்றவர்கள் மூன்று வழிகளைப் பின்பற்றினர். 1. தமிழ்ப் பெயரை அதே பொருளில் மொழிபெயர்த்தல் 2. தமிழ்ப் பெயரை எப்படிப் பொருள் கொண்டார்களோ அப்பொருள்படி மொழிபெயர்த்தனர். 3. மொழி பெயர்க்க இயலாத பெயர்களுக்கு மாற்றாகப் புதுப்புது வடமொழிப் பெயர்களை இட்டுக் கட்டிச் சூட்டினர். அம்முறைப்படி சுசீந்திர முடைய நாயனார்; திருச்சு வீந்திர முடைய என வழங்கும் இக்கோயிற் கடவுட் பெயரை மொழி பெயர்க்க இயலாமையால் புதிய ஒரு பெயரைச் சூட்டினர். அதுதான் தாணுமாலய பெருமாள். தாணு- சிவன் மால் - திருமால் அயன் - பிரம்மன். இது கடவுட் பெயரால் சமயப் பூசல் ஏற்பட்ட காலத்து சந்து செய்விக்கும் முயற்சி மேற்கொண்ட காலகட்டப் பெயர். இது போன்றதே நெல்வேலி சங்கரன் கோயில் சங்கர நயினார் கோயிலும். இதை ஒட்டியே “அரியும் சிவனும் ஒன்று அறியாதார் வாயில் மண்ணு” என்ற புது மொழியும் தோன்றி இருக்க வேண்டும். 17. கன்னி பகவதியார் சாசனம் ஸ்வஸ்திஸ்ரீ திருவளரச் செயம் வளரத் தென்னவர்தங் குலம் வளர வருமறை நான்கவை வளர வனைத்துலகுந் துயர் நீங்கத் தென் மதுராபுரி தோன்றித் 2. தேவெந்த்ரனோ டினிதிருந்து மன்னர் பிரான் வழுதியர்கோன் வடிம்பலம்ப நின்றருளி மால் கடலை எறிந்தருளி மலையத்துக் கயல் பொறித்துச் சேரலனை 3. ச் செருவில் வென்று திறைகொண்டு வானைசூடிக் கூபகர்கோன் மகட்குடுப்பக் குலவிழிஞங் கைக்கொண்டு கன்னிப்போர் செய்தருளிக் காந்தளூர்ச் சாலை கலமறுத் 4. து மன்னு புகழ் மறையவர்தம் மணியம்பலத்து ளினிதிருந்து ஆயிரத்தெண்மர் அவிரோதம் பணிப்பணியால் மறைபேர்த்துக் கல்நாட்டிப் பண்டுள்ள பேர்தவி 5. ர்த்து நிறுப்பனவு மளப்பனவும் கயலெழுதி அனந்தபுரத் தெம்மாற்கு நிலவிய பொன்மணி விளக்கு நின்றெரியப் பத்தமைத்து ஆங்கமைத்து தாயநல்லூர் அடத்தென் 6. னாட்டரையனென அறிவகையால் யறிந்துரைத்து தென்னவர் தங் குலதெய்வம் தென்குமரிக் கன்னியார் தம் திருநாள் விளாவதனிவ் i 7) தப்பூசப் பிற்றை நான்று வந்திரந்தாரெல்லாற்கும் மாற்றாதே தியாகம் இட அறத்தால் விளங்கிய ஆய்ந்த கேள்விப் புறத்த 8)ாய நாடு பூமகட் களித்துத் தெலிங்க வீய மங்குளங்கொண்டு தென்கலிங்க மடிப்படுத்து திசைஅனைத்து முடனாண்ட ஸ்ரீ 9) பராந்தக தேவற்கு யாண்டு 9தாவது ராஜராஜப் பாண்டி நாட்டு உத்தம சோழ வளநாட்டுப் புறத்தாய நாட்டுக் குமரிக் கன்னியா பகவதிய 10)ார் தேவதானத்துக்குப் பெருநான் கெல்லை வடவெல்லை நாஞ்சிநாட்டு அதியனூரும் மிந்நாட்டுப் 11) பெருங்குடி மலையுட்பட பணைகுடி நீங்கலாக மூன்றுங் கூடின மலையிற் சந்தேச தேசப்பிரமாணம் ஆனைமலையும் மனுத்திரப் 12) பாறையும் தோரண குழியும் பிடாரனேரிக் கொழுக்குத்தும் கண்டனேரிக் கொழுக்குத்தும் வாழையாற்று வடவாறும் 13) நாவாயும் கோடிக்களாவும் விறகடுகுப்பையும் ஒழுக்கந்தாழ்வும் இன்னாட்டு வடகீழ் மூலை கருங்குளமும் அள்ளியூரும் பூச 14) ன்குடியும் கூடின பிரமாணமான புக்கூழ் குழியும் கிராரத்திக் குளமும் சிதற்றைப் பாறையும் நெடுவாலி குழியும் மேற்கு n15) நாக்கின் நீர்வீழ்தாழ்வும் விளக்கன் குழி நீர்கொள்ளியும் இரட்டைக் கிணறும் ஆதனார்துறை நீர் வீழ்தாழ்வும் பால்பாடும் நெடுங் 16) களரும் உசிலோடு குழியும் ஆனை அடிப்பாறையும் கறடி மணலும் இரட்டைநுரம்பும் கறிம்பாடும் ஆனைக்கல்லும் இவ்வெல்லையி 17) ல் கிழக்குக் கருங்குளவளநாட்டு விசாபுரியும் இருக்கந்துறைக்குந் தென்கீழ் மூலையும் தென் எல்லை கிழக்குப் பாருசமே போந்து இந்நா 18) ட்டுத் தென்மேல்மலை கேரளன் குடியும் நாஞ்சினாட்டு மணற்குடியும் கூடின சந்தேசப் பிரமாணம் கேரள 19) ங்குடிக்குத் தென்மே ல்மூலைபெ . . . . . ழையும் கட . . . . ம்பன்றி தலைவிளை . . . . ற்கும் . . . . . . . நடுவிளையும் மாணாக்க 20) ன் குழிக்கீழ் விளிம்பும் நங்கை கிணறு . . .. . . தாகச் சுசீந்திரமும் கேரளன் குறிச்சியும் . . . வழியும் தேவிகுளத்தில் நீ 21) ர் கொள்ளியும் ஆறுண்ணி வடகொம்பில் . . . . . . . க்குப் பாறையும் வடக்கு நோக்கி 22) ன நீர் வீழ்க்காரடுவெள்ளெலுப்பைத் தாழ்வும் பள்ளிச் சந்த நீங்கலாக குருந்தோ . . . . ளற்பொற்றையும் ம 23) லையே யொழுங்காகப் போந்து தோவாளைக்குக் கீழெல்லைக . . . னையும் உருண்டப் பொற்றையும் ஒழுங்காக ஊசி மலையு 24) ம் ஒழுங்காகப் போந்து ஆனைமலையாக இவ்விசைந்த பெருநான் கெல்லை யுட்பட்ட . . . . . . தங்களும் அமிர்துபடி சாத்து 25) ப் படியுஞ் சந்தனங்கற்பூரத்துக்கும் நாம் பிறந்த தைப் 26) பூசத் திருநாளுக்கும் செல்விதாக இறையிலி தேவதானமாக நமக்குடைய படி.... நீர் வார்த்துக் குடுத்தோம் குமரிக்கன்னிப் பகவதியாற்கு.. விளக்கக் குறிப்பு (கன்னி பகவதியார் சாசனம்) கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி குமரிப் பகவதியார் கோயில் முதல் திருச்சுற்றுக் கிழக்குச் சுவரில் வெட்டப்பட்டுள்ளது. திருவாங்கூர் தொல்லியல் வரிசை தொகுதி 1- இல் பக்கம் 49 - 55 இல் வெளியிடப்பட்டுள்ளது. பாண்டிய அரசன் சடையவர்மன் பராந்தக பாண்டியன் (கி.பி. 11-12 நூ) தான் பிறந்த நாளான தை மாதம் பூசநாளில் தனது நெடுநல் வாழ்நாளுக்காக குமரிக் கன்னியா பகவதியார் அமுது படி சாத்து படிக்கும் கற்பூரஞ் சந்தனம் போன்றவற்றுக்கும் தைப்பூசத்திருநாள் சந்திக்கும் இறையிலி தேவதானமாக நிலம் அளித்ததைக் குறிக்கிறது. இவன் ஆட்சிக்கட்டில் ஏறிய நாளிலேயே கொடையளித் ததைக் குறிப்பிடுவதால் இவனது மெய்க்கீர்த்தில் இவன் வெற்றிகள் ஏதும் கூறப்படவில்லை. மெய்க்கீர்த்தில் கூறப்பட்டுள்ள வெற்றிகள் எல்லாம் இவன் காலத்துக்கு முந்தைய தொல்கதை, மாந்தர்களுக்கு ஏற்றிக் கூறப்பட்டனவும், இலக்கியங்களில் பேசப்பட்டனவுமான வெற்றிகளே. அவ்வெற்றிகள் யாவும் இவன் மேல் ஏற்றக் கூறப்பட்டுள்ளது. இவனது மலைமண்டலத்து வெற்றியும் இவன் ஆட்சிகட்டில் ஏறும் முன் கலந்து கொண்ட ஏதோ ஒரு போரில் பங்கு கொண்டதாக இருக்க வேண்டும். இக்கல்வெட்டைப் பதிப்பித்தவர்கள் பராக்கிரம பாண்டியன் கல்வெட்டு எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்டார் ஐயா, தன் வழக்கப்படி கொடை அளிக்கப்பட்ட இடத்தின் பெயரால் தலைப்பிட்டுள்ளார். தமிழகத் தென் கோடி மாவட்டம் கன்னியாகுமரி என வழங்கப்படுகிறது. இதன் உண்மையான பெயர் குமரி என்பதே “புறத்தாய நாட்டுக் குமரி நாட்டுக் குமரி” என்றே கல்வெட்டுகள் குறிக்கின்றன. அங்கு எழுந்தருளி இருக்கும் தெய்வம் கன்னி பகவதி. இதனை இக் கல்வெட்டில் வரும் “தென்னவர் தங் குல தெய்வம் தென் குமரிக் கன்னியார்” என்றும், ‘குமரிக் கன்னியா பகவதி’ என்றுமே குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். தமிழநாட்டுக் கோயில்கள் வடமொழியாக்கம் செய்யப் பட்ட பொழுது தமிழ்க் ‘கன்னி’ யை - கன்னி என்ற சொல்லை வடமொழிக்கு எடுத்துக் கொண்டு கன்னி பகவதி என ஆக்கிவிட்டனர். குமரி, கன்னி என்பன் ஊருக்கும், இறைவிக்கும் பொதுவாக்கப்பட்டு ஊரைக் ‘கன்னியாகுமரி’ ஆக்கிவிட்டனர். பொற்றை - துறுகள் நிறைந்த பாறை இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் எல்லை அடையாள இடங்களின் பெயர்கள் இனிமையான தமிழ்ப் பெயர்களாக நின்று சிறப்பு சேர்க்கின்றன. இவ்வூர்களில் பல குமரியைச் சூழ்ந்தே உள்ளவை. ஓரிரண்டு ஊர்கள் மட்டும் நெல்லை மாவட்டத்தின் தென் எல்லையில் உள்ளன. 18. அரிகேசரிதேவர் சாசனம் 1. சுபமஸ்து பூமிசைவனிதை மார்பினிற் பொலிய நாமிசை கலைமகள் நலனுற விளங்கப் புயவரை மீது சயமகள் புணரக் கயலிணை யுலகின் கண்ணெனத் திகழச் சந்திரகுலத்து வந்தவதரித்து முந்தையோர் தவத்தின் முளையென வளர்ந்து தென் கடலை வடகடலை தெளிவுறத் தெரிந்து மன்பதை புரக்க மணிமுடி புனைந்து சங்கரசரண பங்கயஞ் சூடிச் செங்கோலோச்சி வெண்குடை நிழற்றி வானவாரியு மன்னருள் வாரியுந் தானவாரியுந் தப்பாதளித்து மறக்களை பறித்து நல்லறப்பயிர் விளைத்துச் சிங்கையி லனுரையி லிராசையிற் செண்பையில் விந்தையிலறந்தையில் முதலையில் வீரையில் வைப்பாற்b. . . . . ன்னரை வென்கண் டெப்பாற்றிசையு மிசை விளக்கேற்றிப் பதினெண் . . . . கம் போற்றப் பதினெண்பாக்ஷைப் பார்த்திபரனை வருந்திறையுஞ் சின்னமு முறை முறை குணர்ந்து குறை பல விரந்து குரைகழ லிறைஞ்ச வவரவர் வேண்டிய தவரவர்க் கருளி அந்தணரனேகர் செந்தழ லோம்ப விந்தை முதல் அகரம் ஐந்திடத்தியற்றிச் சிவநெறி யோங்கச் சிவாற்சனை புரிந்து மருதூராற்கு மண்டபமமைத்து முன் ஒரு தூர் மூங்கிலுள் புக்கிருந்த சிற்பரர்தம்மைத் திருவத்த சாமத்துப் பொற்கலத்தமுது பொலிவித்தருளிச் சண்பக வனத்துச் சங்கரர் தமக்கு மண்டப மமைத்து மணிமுடி சூட்டி 2) விழாவணி நடாத்தி விரைப்புனலாடல் வழாவகை நடாத்த நின் மன்னருள்தனால் வற்றாவருவியும் வற்றி வற்கடமுற்ற விக்காலத் துறு புனல் நல்கென வேண்டி யப்பொழுதே வேறிடத்தின்றிச் சேண்டரு புனலிற் செழும்புனலாட்டி மின்கால் வேணி விஸ்வநாதர்க்குத் தென்காசிப் பெருங்கோயில் செய்து நல்லாகம வழி நைமித்தி கமுடன் எல்லாப் பூசையும் எக்கோயிலினும் பொருள் முதலனைத்தும் புரையற நடாத்தித் திருமலி செம்பொற் சிங்காசனமிசை உலக முழுதும் உடையாருடனே இலகு கருணை யிரண்டுரு வென்ன அம்மையும் அப்பனுமா யனைத்துயிர்க்கும் இம்மையப் பயனு மறுமைக் குறுதியு மேம்பட நல்கி வீற்றிருந்தருளிய ஸ்ரீ அரிமர்த்தன தேவரான பராக்ரம பாண்ட்ய தேவற்கு யாண்டு இருபத்தெட்டாவதின் எதிராவது . . . . ற்று இருபத்தொன்றாந் தியதியும் பூர்ணையும் வெள்ளிக்கிழமையும் பெற்ற சோதி நாள் தென்வாரி நாட்டு சித்ரநதி உத்தரதீரத்தில் தக்ஷிணகாசியிலே உடையார் விஸ்வநாதனுக்கு அபிநவமாக உபாநாதி ஸ்தூபி பய்யந்தமுந் திருப்பணி செய்து உடையார் விஸ்வநாதனையும் பிரதிஷ்டித்து அர்த்தமண்டபம் இடை நாழிகை மஹாமண்டபம் ஸோபாநம் இவையுந் திருப்பணி செய்து திருப்பள்ளி அறை நாச்சியார் முதலாக உள்ள திருவுடம் புகளும் ஏறிஅருளப் பண்ணுவித்து ஆவரண கோபுராதிகளும் ஆரம்பித்து மேல் 3) உடையார் விஸ்வநாதந் பூஜைக்கு அமுதுபடி சாத்துப்படி திருமாலைத் திருப்பரிவட்டந் திருவிளக்கு உட்பட்ட பல நித்ய நியமங்களுக்கும் பல விசேஷ பூஜை திருநாட் செலவுக்கும் முன்னாள் இரண்டாவதின் எதிர் இருபத்து மூன்றாவது முதலுக்கு நாம் தேவதானமாக விட்ட பற்றுகளில் தென்வாரி நாட்டுத் தென்காசிக்குப் பெருநான் கெல்லையாவது கீழ் எல்கை புலியூர் பற்றான காராண் குளத்தில் நீர் நக்கலுக்கும் பரிம்புக்கும் புலியூர் அகரப்பற்றில் புஞ்சைக்கும் நாராயண ஸ்ரீ பாதங்கள் மடப்புறத்தில் மேல் எல்கைக்கு மேற்கும், தென் எல்கை சித்ரநதிக்கு வடக்கு, மேல் எல்கை குன்றக்குடிப் பரிம்புக்குக் கிழக்கும் வடவெல்கை சென்னாய்ப் பொற்றைக்கும் குத்துக் கல்லுக்கும் தெற்கும், ஆக இன்னான்கெல்கைக்குட்பட்ட பற்றும், இந்த நதிக்கு தக்ஷிணதீரத்தில் வாயுளான்குடிப் பற்றுக்குப் பெருநான் கெல்கையாவது, கீழ் எல்கை புலியூர் அணைக்கும் திருச்சாலைக்குடிப் பற்றுக்கும் ஆழங்காலுக்கு மேற்கும், தென் எல்கை திருச்சாலைக்குடிப் பற்றுக்கும் பராக்ரம பாண்டிய சதுர்வேதி மங்கலத்து பட்டகள் அகரப்பற்றில் வடவெல்கைக்கும் உடையார்திருக்குற்றாலமுமுடைய நாயனார் பழந்தேவதானத்துக்கு வடக்கும், மேல் எல்கைவாயுளான்குடி அணைக்குக் கிழக்கும் வடஎல்கை சித்ர நதிக்குத் தெற்கும், ஆக இன்னான் கெல்கைக்குட் பட்ட பற்றும் குன்றக்குடி பற்றுக்குப் பெருநான் 4) கெல்கையாவது கீழ் எல்கை இடைமலைப் பரிம்புக்கு மேற்கும், தென் எல்கை சித்ரநதிக்கு வடக்கும் மேல் எல்கை செங்கோட்டை பிடாரியார் கோயிலுக்கும் இலத்தூற்குப் போகிற பெருவழிக்குக் கிழக்கு வடஎல்லை கடமர் குளத்துக்குத் தெற்கு ஆக இன்னான் கெல்கைக்குட்பட்ட பற்றில் உடையார் திருக்குற்றாலமுடைய நாயனார் தேவதானமான நிலம் ஒன்பதுமா முந்திரிகையின் மூன்றுமா முக்காணியும் நீங்கலாக உள்ள பற்றும் பராக்கிரம பாண்டிய நல்லூற் பற்றுக்குப் பெருநான் கெல்கையாவது கீழ் எல்கை இலுப்பைத் தொண்டிற் பெருவழிக்கு மேற்கும் தென் எல்கை இக்குளத்தில் நீர் நக்கலுக்கு வடக்கும் மேல் எல்கை உடையார் திருக்குற்றாலமுடைய நாயனார் பழந் தேவதானமான திருச்சாலைக்குடிப்பற்றுக்குக் கிழக்கும் வடஎல்கை சித்ரநதிக்கு தெற்கும், ஆக இன்னான் கெல்கைக் குட்பட்ட பற்றில் இருங்கண்டி ஸ்ரீ பத்மநாபன் தான இறையிலி நிலமிரண்டுமாவும் நீங்கலாக உள்ளபற்று நல்லூற் பற்றில் வள்ளை முட்டமும் இக்குளத்தில் நீர்பாயும் நிலமாய் வடவூற் பற்றில் நின்றுங் கூட்டின நிலம் மூன்றுமா அரையும் ஆக இப்பற்றுக்குப் பெருநான் கெல்கையாவது கீழ் எல்கை காடேற்றிப் பற்றுக்கு மேற்கும் தென் எல்கை வடவூற் பற்றிற் செங்குளத்தில் நீர்பாயு நிலத்துக்கும் தஞ்சாவூற் பெருங்காலுக்கும் அனுபோக மழகியான் குளத்தில் நீர்பாயும் பற்றுக்கு வடக்கும் மேல் எல்லை 5) இக்குளத்தில் நீர் நக்கலுக்கும் தவணைப் பற்றுக்குங் கிழக்கு வடஎல்கை தஞ்சாவூரில் நின்றும் தவணைக்குப் போகிற பெருவழிக்குத் தெற்கும் ஆக இன்னான் கெல்கைக் குட்பட்ட பற்றும் வடவாரி நாட்டுப் பைம்பொழிற் பற்றில் நல்லாண் பிள்ளைப் பெற்றாளுக்கும் விஸ்வநாதப் பேரேரிக்கும் பெருநான் கெல்கையாவது கீழ்எல்கை செங்கோட்டைப் பிடாரியார் கோயிலுக்கும் இவ்வூரில் நின்றும் இலத்தூற்குப் போகிற பெருவழிக்கு மேற்கு தென் எல்கை ஆற்றுக்கு வடக்கு மேல் எல்கை பைம்பொழிலில் நின்றும் நல்லூற்குப் போகிற பெருவழிக்கும் முழங்கால் முட்டிப்பாறைக்குங் கிழக்கு வடஎல்கை தேனிடு பொற்றைக்குத் தெற்கு ஆக இன்னான் கெல்கைக்குட் பட்ட பற்றும் முப்பதாவது மேஷ ஞாயிற்று இருபத்தெ . . . . தியதியும் பூர்வ பக்ஷத்து பஞ்சதியும் திங்கட்கிழமையும் பெற்ற புணர்பூசத்து நாள் நாம் முன்புவிட்ட பற்றுக்கள் நீங்கலாக நாளது பூஜைச்சிலவுக்கு விட்ட தென்வாரி நாட்டு இராசகுலராம நல்லூரான புலியூர் பற்றுக்கும் வீரபாண்டிய நல்லூர்ப் பற்றுக்கும் பெருநான் கெல்கையாவது புலியூர் பற்றுக்குப் பெருநான் கெல்கைக்கு கீழ் எல்லை திருவெண் காட்டு முதலியார் மடப்புறமான பாட்டக்குறிச்சிப் பற்றுக்கு மேற்கு தென் எல்கைச் சிற்றுற்றாக்கு வடக்கு மேல் எல்கை பழந்தேவதானமான 6) தென்காசிப் பற்றுக்குக் கிழக்கு வடஎல்கை ஆயக்குடி பற்றுக்குத் தெற்கு ஆக இன்னான்கெல்கைக் குட்பட்ட பற்றில் உடையார் திருக்குற்றாலமுடைய நாயனார் தேவதானமும் உடையார் விக்ரமபாண்டீஸ்வரமுடைய நாயனார் தேவதானமும் நயினார் திருவிருந்தபெருமாள் திருவிடை யாட்டமும் ஸ்ரீக்ருஷ்ணந் திருவிடை யாட்டமும் பராக்ரமபாண்ட்ய நல்லூரில் நயினார் திருவேங்கட நாதன் திருவிடை யாட்டமும் முகந்தானத்ந்த நாராயண ஸ்ரீ பாதங்கள் மடப்புறமும் அகரப்பற்றும் நீங்கலாக இன்னான் கெல்கைக் குட்பட்ட பற்றும் வீரபாண்ட்ய நல்லூருக்குப் பெருநான் கெல்கையாவது கீழ் எல்கை தட்டான் குளத்துப் பரிம்புக்கு மேற்கு தென் எல்கை திருச் சிற்றம்பலத்துக் காலான இராசகுலரா . . . . . காலுக்கும் நயினார் திருவிருந்த பெருமாள் திருவிடை யாட்டமான ஆகவராம . . . . துக்கும் வடக்கு மேல் எல்கை திரு வெண்காட்டு முதலியார் மடப்புறமான பாட்டக் குறிச்சிப் பற்றுக்குக் கிழக்கு வடஎல்கை விந்தனூர்ப் பெருவழிக்குத் தெற்கு ஆக இன்னான் கெல்கைக் குட்பட்ட பற்றும் ஆக இப்பற்றுக்களில்ப் பெருநான் கெல்கைக்குட்பட்ட நஞ்செய் புஞ்சை மாவடை மரவடை பட்டடை கொடித் தோட்டம் செக்கிறை மற்றுமுள்ள ஸமஸ்தப்பராப்திகளும் முப்பதாவது பசானமுதலுக்குத் தேவதானமாக விட்ட அளவுக்கு இம்மரியாதியிலே இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு ஆசந்த்ரதாரவத் இவ்வாலையம் உள்ள அளவும் 7) கையாண்டு கல்லிலுஞ் செம்பிலும் வெட்டிப் பூசையுந் தாழ்வற நடத்திப் போதவும் பாற்க இவை கிடாரத் தூருடையான் எழுத்து உ துல்யம். விளக்கக் குறிப்பு (அரிகேசரிதேவர் சாசனம்) திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம் தென்காசியில் உள்ள காசிவிசுவாதர் கோயில் உண்ணாழிகை மேற்கு, தெற்குச் சுவரின் அடிப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. திருவாங்கூர் தொல்லியல் தொகுதி (T.A.S.Vol) 1- இல்147 - 149 ஆம் பக்கங்களில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மதுரைப் பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் அக்குடியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் 14- ஆம் நூற்றாண்டு வாக்கில் தென்காசியைத், தலைநகராகக் கொண்டு ஆண்டனர். இவர்களைத் தென்காசிப் பாண்டியர்கள் என்றழைப்பர். தென்காசிப் பாண்டியர்களில் பேர்பெற்றவள்அரிமர்த்தன பராந்தக பாண்டியன். இக்கல்வெட்டு அவனது 2 + 23 = 25 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாண்டிய மன்னன் சிவனிடத்தில் அளவற்ற பக்தி பூண்டவன். அந்தணர்களை ஆதரித்து அவர்கள் செந்தழல் ஓம்ப வெவ்வேறு இடங்களில் ஐந்து அக்ரகாரங்களை ஏற்படுத்தினான். சிவநெறி ஓங்க சிவார்ச்சனை பல செய்தான். மருதூர் இறைவர்க்கும், சங்கரவனத்து சங்கரனார்க்கும் மண்டபம் எடுத்தான். மூங்கிற் புதரில் கிடந்த சிவனுக்கு அர்த்தசாம அழுதளித்தான். பல கோயில்களுக்குப் பூசைகள் நடத்திக் கொடையளித்தான். எல்லாவற்றிற்கும் மேலாக தென்காசியில் (தச்சின காசி) விசுவநாதருக்குக் கட்டடக் கோயில் ஒன்றை அடிமுதல் முடி வரை பெருங்கோயிலாகக் கட்டினான். அதில் இடைநாழிகை, மாமண்டபம், படி மண்டபம், பள்ளி அறை எடுத்தான். கோயிலுக்கு வேண்டிய அனைத்துத் திருமேனிகளையும் செய்து கோயிலில் விசுவநாதரை எழுந்தருளிச் செய்தான். அழுதுபடி, சாத்துப்படி முதலான பூசைக்கு வேண்டிய எல்லா ஏற்பாடு களையும் செய்தான் என அவனது மெய்க்கீர்த்தி பகுதி விரிந்து கொண்டே போகிறது. கல்வெட்டின் மூலப் பகுதியில் விசுவநாதற்கு அளித்த நிலமும் அதன் எல்லைகளும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. திருவுடம்பு - திருமேனி இறைவன் எழுந்தருளுiகாக செய்யப்படும் இறை திருவுருங்களை - (விக்ரகங்கள்) திருமேனி, செப்புத்திருமேனி என வழங்குவது மரபு. இக்கல்வெட்டில் திரு + உடம்பு = திருவுடம்பு எனப் புதிய நல்ல சொல் வழங்கப்பட்டுள்ளது. தென்காசியில் ஓடும் சிற்றாறு, சித்ராநதி எனவும், தென்காசி தச்சின காசி எனவும் வடமொழிப்படுத்தப்பட்டுள்ளன. 19. பராக்கிரம பாண்டிய தேவர் சாசனம் 1. சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ புவநேக வீர 2. சந்தரகுல ப்ரதீப கோ ஜடிலவர்ம்ம த்ரி 3. புவநச் சக்ரவர்த்தி கொநேரின்மை கொண்டான் 4. பெருமாள் அபிராம பராக்ரம பாண்ட்யதேவர் நந்தநரான 5. ஸ்ரீ பெருமாள் குலசேகர் தேவரான பராக்ரம பாண்ய 6. தேவற்கு யாண்டு சகாப்தம் 1467-ல் மூன்றாவது விஸ்வ 7. ாஸுவர்ஷம் அற்பசி மாஸம் முப்பதாந்தியதியும் அபரப 8. க்ஷத்து ஏகாதசியும் சுக்ரவாரமும் வைத்ருதி யோகமு 9. ம் ஸிம்ஹகரணமும் பெற்ற உத்திரத்து நாள் தென்னுரி 10. நாட்டு செங்கோட்டையில் உடையார் குலசே 11. கரமுடைய நயினாற்கு தேவதானம் பாட்டமாக 12. குடுத்தநிலம் அரைமாவுக்கு நாம் சேர்த்துக் குடுத்த 13. நிலமாவது, மேற்படி நாட்டு மேற்படியூரில் 14. மேற்படியார் அஞ்சாலியில் மேல்வாரம் தவிர்த்து 15. க் குடுத்த குளப்புரவு பதினொன்றுங் கண்ணாறு தடி 16. ஆறு நிலம் அரைக்காணி முந்திரிகை பன்னிரண் 17. டாங் கண்ணாறு தடி எட்டு நிலம் அரைக்காணி மு 18. ந்திரிகை பதின்மூன்றுங் கண்ணாறு தடி அஞ்சு 19. நிலம் அரைக்காணி இதுவும் ஆக நிலம் அரைமாவும் 20. நாளது முதலுக்கு நாங் கொள்ளும் முறைபாடு எப்பேர்ப் 21. பட்டதும் நம் வரியிலார் கணக்கிலும் தவிர்த்து ஆச 22. ந்தரதாரவற் செம்பிலும் சிலையிலும் வெட்டி கை 23. ய்யாண்டு கொள்ளவும் துல்யம். பாற்க இவை 24. . . . . . . . . விளக்கக்குறிப்பு (பராக்கிரம பாண்டிய தேவர் சாசனம்) திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டைச் சிவன் கோயில் உண்ணாழிகைத் தென் சுவரில் இக்கல்வெட்டு வெட்டப் பட்டுள்ளது. திருவாங்கூர் தொல்லில் வரிசை தொகுதி 1- இல் பக்கம் 159 - 60 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பிற்காலத் தென்காசிப் பாண்டிய மன்னர்களில் ஒருவனான குலசேகர தேவன் பராக்ரம பாண்டியனின் மூன்றாவது ஆட்சியாண்டில் (சகம் 1467) கி.பி. 1545 இல் கல்வெட்டு வெளியிடப்பட்டது. இக்குல சேகரன் அதிவீரராம பாண்டியனின் மகனும், வரகுணராம பாண்டியனின் தந்தையுமாவான். தென்னாரி நாட்டு செங்கோட்டையில் உள்ள உடையார் குலசேகர முடைய நாயனாற்கு தேவதானப் பாட்டமாக நிலம் வழங்கியதைத் தெரிவிக்கிறது. துல்யம் - தெளிவானது, மிக மிக சரியானது என்பது பொருள் வரியிலார் - வரிக்கூறு செய்வார். 20. வாலக்காமயர் சாசனம் சுபமஸ்து. ஸ்வஸ்திஸ்ரீ. சகாப்தம் 1403 இதன்மேல் செல்லாநின்ற பிலவஸம் வத்ஸரத்து கும்பநாயற்று பூர்வபக்ஷத்து பூறுணையும் ஆதித்தவாரமும் பெற்ற மகத்துநாள் ஸிம்மபிரஹஸ்பதி மஹாமக புண்யகாலத்திலே ஸ்ரீ மந்மஹா மண்டலேச்வரந் சோழர் பீமந்சோழநாராயணன் உரையூர் பூர்வராதீச்வரந் வாலக் காமயர் ஆக அக்கலராசர் நாயனார் அழகிய திருவானைக்காவுடைய நாயனார் கோயில் ஆதிசண்டேச்சுவர தேவர் கனமிகளுக்கு குடுத்த தன்மசாதனப் பட்டையம். நாயனார் அழகிய திருவானைக் காவுடைய நாயனார் வடகரை வெண்கோன் குடியில் திருவெட்டை ஆக எழுந்த தருளுகிற திருநாள் மண்டபச் சிறப்புக்கும் நாச்சியார் அகிலாண்ட நாயகியாற்குக்கால சந்தியாக அமுது செய்தருளி தன்மவெச்சமாக6 நடக்கிற ஒரு தளிகை அமுது படிக்கும் விளக்கக்குறிப்பு இக்கல்வெட்டு திருச்சி மாவட்டம் திருவானைக்கா, திருவானைக்கா உடையார் கோயில் முதல் திருச்சுற்று வடசுவரில் வெட்டப்பட்டுள்ளது. இது இந்தியக் கல்வெட்டுகள் (Epigraphyca Indica) தொகுதி 3- இல் பக்கம் 72 - 73 இல் வெளியிடப் பட்டுள்ளது. ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியரின் முன்னுரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க)  நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .)  நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும்  1,2 நெல்லு, குறுணி என்பதற்கான சுருக்கக் எழுத்துக் குறிகள். 1. 2 குறுணி தூணி என்பதன் சுருக்கக் எழுத்துக் குறிகள். 2. சுருக்கெழுத்துக் குறி 1. மேலைச் சாளுக்கியன்