நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 17 சொற்பொழிவுக் கட்டுரைகள் வரலாற்றுக் கட்டுரைகள் ` ஆசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 17 ஆசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 40 + 368 = 408 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 255/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர்களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர் களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை ‘நாட்டார் ஐயா’ என்று தமிழ் நெஞ்சங்கள் போற்றும் ந..மு.வே. நாட்டார் அவர்களின் விழாத்தலைமைப் பேருரைகள், வானொலிச் சொற்பொழிவுகள், கட்டுரைகள் ஆகியவை அழகிய நூல்வடிவில் ‘தமிழ்மண்’ பதிப்பகத்தாரால் வெளியிடப் படுகிறது. ‘தமிழ்மண்’ இதுவரையில் வெளியிட்டுள்ள எண்ணற்ற தமிழ் இலக்கிய ஆய்வு நூல்கள் வரிசையில், இப் புதிய நூல் மற்றுமோர் அரிய இலக்கிய நூலாக அமைகிறது. ஓர் எளிய தமிழ்ப்பற்றாளன், நாட்டார் ஐயாவின் இந்நூலைப் படிக்க நேர்ந்தால், அவர்தம் உள்ளத்தில் இந்நூல் விளைவிக்கக்கூடிய தமிழ் உணர்வும், எழுச்சிமிக்க எண்ணங்களும் எத்தகையனவாக இருக்குமென்ற நோக்கில், நூலைப் படித்து கருத்தறிவிக்கும் வாய்ப்பைத் ‘தமிழ்மண்’ இளவழகனார் எனக்களித்துள்ளார். நல்ல நூல்கள் மட்டுமே ‘நூல்’ என்று குறிப்பிடத் தக்கவை. நல்ல நூல்கள் கருத்துப் பெட்டகங்களாக எக்காலமும் நிலைத்து பயனுள்ள இலக்கியச் செய்திகளை மக்களுக்கு வழங்கும் தன்மையுள்ளவை. அறிஞர் பெருமக்கள் தமிழ் இலக்கியச் சுவையில் தாம்பெற்ற அரும்பயனை, பொதுமக்களும் பெற வேண்டுமென்ற நோக்கத்தில், கணக்கற்ற இலக்கிய நூல்களை இயற்றியுள்ளனர். தமிழ் மூல இலக்கியங்களைப் படித்துப் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு இத்தகைய ஆய்வு நூல்கள் தமிழறிவும் இலக்கிய உணர்வும் ஊட்டுவனவாகும். நாட்டார் அவர்களின் நூல்கள் அனைத்தையும் மொத்தமாக வெளியிடும் ‘தமிழ்மண்’ இளவழகனாரின் முயற்சியும் கடின உழைப்பும் பயனுள்ள தமிழ்பணியே ஆகும். நாட்டார் பேருரை களின் தொகுப்பான இந்நூலின் இலக்கிய நறுஞ்சுவையால் நெஞ்சம் இனிக்கிறது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 21ஆம் ஆண்டுவிழாவில், நாட்டார் ஐயா ஆற்றியுள்ள தலைமைப் பேருரையைத் தொடக்கமாகக் கொண்டு, இந்நூல் அமைந்துள்ளது. பண்டைத் தமிழ்நாட்டின் கல்விவளம், தமிழ் மொழியின் இலக்கியச் சிறப்புகள், தமிழ்ப்புலவர் பெருமக்களின் மாண்பு ஆகியவை விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. நம்மை அறிவு வகையால் மக்களாக்குவதாய், துன்பந் துடைப்பதாய், எழுமையினும் தொடர்ந்து உறுதியளிப்பதாய், அறம் பொரும் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் பயப்பதாய் உள்ள கல்வியினும் பெறத்தக்க விழுப்பேறு யாதுளது? இத்தகைய கல்வியின் சிறப்பை, இற்றை யோரினும் பண்டைத் தமிழ்ப் பெரியோர் நன்குணர்ந் திருந்தனரென்பது, பழந்தமிழ்ப் பனுவல்களால் இனிது புலனாகின்றது... என்று கல்வியின் அளப்பரிய ஆற்றலையும், பண்டையோர் கல்விச் சிறப்பையும் உணர்சி பொங்க எடுத்துரைக்கிறார். உலகம் போற்றும் பொதுமறையருளிய திருத்தகு தெய்வத் திருவள்ளுவரும், கல்வியின் சிறப்பனைத்தையும் பலபட விரித்துரைத்ததன்றி, பெற்றோர் தம்மக்கட்கு ஆற்றும் உதவியாவது அவரைக் கல்வியில் வல்லராக்குதல் என அஃதொன்றையே சிறந்தெடுத் தோதினாரன்றோ!... பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே கல்வியைக் கண் போல் மதித்து வாழ்ந்தவர் தமிழ்மக்கள். ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று கல்வியின் பயனைப் போற்றினர். தம்மக்களுக்குப் பொன்னும் பொருளும் குவித்துவைக்கப் போராடும் இக்காலத்தவர்போல் அல்லாமல், அவையத்து முந்தியிருக்கச் செய்வதையே தந்தையின் தலையாய கடமை யென்று தமிழர் வாழ்ந்த காலம் அது. திருவள்ளுவர் பண்டையோர் வாழ்க்கை நெறிகளைத் தான் திருக்குறளில் பதிவு செய்து இன்றும் நமக்கு வலிவுறுத்திக் கூறிக் கொண்டிருக்கிறார். தலைசிறந்த புலவரென யாங்கணும் ஒரு சிலரை யேனும் காண்டலரிதா யிருக்கின்ற இற்றை நாளிற் போலன்றி, பண்டு ஒரு நூற்றாண்டினுள் நல்லிசைப் புலவர் ஐந்நூற்றவரின் மிக்கார் திகழ்தன ரென்னில், அப்பொழுது தமிழ்ப்புலமை எவ்வளவு உயரிய நிலையை அடைந் திருத்தல் வேண்டும்? கற்றார் தொகை எத்துணையாகப் பல்கியிருத்தல் வேண்டும்? அங்ஙனம் கல்வி வளம் பெற்ற பொழுது, நாட்டிற் பிற நலன்களும் ஒருங்கு வாய்ந்திருத்தல் இயல்பேயன்றோ? கல்வியின்றியே உயர்நிலையடைந்ததென்று காட்டத் தகுந்த நாடொன்று பண்டையேனும், இன்றேனும் உண்டோ? ... நாட்டார் ஐயா குறிப்பிடும் புலவர்கள் எண்ணிக்கையும், மக்களில் கற்றோர் தொகையும், தமிழ்நாட்டின் கல்விச் செழிப்பும் எண்ணியெண்ணி வியக்கத்தக்கச் செய்திகளாகும். பண்டைத் தமிழ்மக்கள் கல்வியைப் போற்றி வாழ்ந்தனர். பனையோலையும், எழுத்தாணியும் கல்விக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்ட அற்றை நாளில், சங்கம் நிறுவி தாய்மொழி வளர்க்கப்பட்டுள்ளது. தாய்மொழியில் புலமை யெய்துவதென்பது தமிழர்களின் பிறப்புரிமையாகவும், தமிழை வளப்படுத்துவதும் பாதுகாப்பதும் தலையாய தாய்மொழிக் கடமையென்றும் கருதப்பட்டது. அக்காலத்தில், வேந்தர் - அமைச்சர் - படைமறவர் - வாணிகர் - மருத்துவர் - பாணர் - உழவர் முதலிய பலவகைத் தொழில் வினைஞர்கள் ஆண் பெண் வேற்றுமையின்றி, நல்லிசைப் புலவர்களாகத் திகழ்ந்திருந்தனர். கருத்துமிக்க அரிய பாடல்களை இயற்றிச் சங்கத்தமிழ் வளர்த்துள்ளனர். மன்னர் முதல் பாணர் வரை எல்லா தரத்தினரும் செய்தொழில் வேற்றுமை பாராட்டாது தாய்மொழி நலம் பேணும் பண்புடைய வர்களாக தமிழர் வாழ்ந்த காலமே, தமிழ்மொழியின் பொற்காலம் ஆகும். தமிழின் இற்றை நிலை யாவர்க்கும் தெரிந்தது தான். தமிழ் கற்பாரும், கற்பிப்பவரும், புரப்பாரும் அருகி விட்டனர் ... 75 ஆண்டுகட்கு முன் தமிழ்மொழியின் நிலைமையை நெஞ்சம் நெகிழ்ந்து எடுத்துரைக்கிறார் நாட்டார் ஐயா. இன்றைய கணினி காலத்து தமிழ்மொழியின் நிலைமையைக் காண்பாரெனில், நாட்டாரின் தமிழ்நெஞ்சம் என்ன பாடு படுமோ.. இன்று தமிழ் கற்பாரும், கற்பிப்பாரும் மட்டு மல்லாது, தமிழ்நாட்டிலேயே தமிழின் பயன்பாடுகள் நாளுக்குநாள் குறைந்து இன்று வீட்டுமொழியாகச் சுருங்கி விட்டது. என்றாலும், தமிழின் இத்தகைய நிலையை மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. கணினியில் தமிழ், வலைய தளத்தில் தமிழ் என்றெல்லாம் தமிழ் வளர்வதாக நம்மை நாமே தேற்றிக் கொண்டிருக்கிறோம். இன்றைய தமிழர் உள்ளத்தில் இயல்பாக அமைந்திருக்க வேண்டிய தாய்மொழிப் பற்று மட்டுமே தமிழின் வளமும் வாழ்வும் ஆகும். இன்றைய தமிழ்நாட்டில் அறிவியல் கல்வி வளர்ச்சி வியப்பூட்டுகிறது. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் எண்ணிக்கையால் கூடிக்கொண்டேயிருக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பெருவளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய கல்விகள் எல்லாம் அறிவை உயர்த்தும் புறவளர்ச்சிக் கல்வியே. எளிதில் வேலை வாய்ப்பு பெறவும் - பெரும் பொருள் ஈட்டவும், மருத்துவம், பொறியியல் முதலிய தொழிற்கல்வி களையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இத்தகைய கல்விச் சூழலில், தமிழ் இலக்கியம் கற்போர் அருகிவிட்டது விந்தையல்ல. என்றாலும், மனதைப் பண்படுத்தி, வாழ்க்கை நெறிகளை உணர்த்தக்கூடிய தமிழ் இலக்கியக் கல்வியை இழப்பது, பண்பாட்டுச் சீரழிவே ஆகும். பண்டைத் தமிழ்ச் சங்கத்து நல்லிசைப் புலவர்கள் பாடித்தொகுத்தவற்றுட், புறநானூறு என்னும் ஒரு நூல் மட்டும் நாம் எய்தலாகும் உணர்ச்சி, நிலத்தினும் பெரிது, வானினுமுயர்ந்தது, கடலினும்அளத்தற்கரிது... என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார் நாட்டார் அவர்கள். இறைவனைப் போற்றி வழிபட்ட தன் நெஞ்சத்தால் - தமிழை எழுத்தெண்ணிப் புலமை பெற்ற தமிழறிஞர் நாட்டார் ஐயா. உடல் குருதித்துடிப்பு ஒவ்வொன்றையும் அவர் உள்ளதின் தமிழ் உணர்வுத் துடிப்பாகவே கொண்டு வாழ்ந்தவர் நாட்டார் அவர்கள். புறநானூறு பற்றி முழக்க மிடும் உணர்ச்சிமிக்க உள்ளக்கிளர்ச்சியே அவர் தமிழ்ப் பற்றுக்குச் சான்று. ஒரு நூலுக்கே இத்துணை எழுச்சி யென்றால் - அவர் தமிழ் இலக்கியச் செல்வங்களை எண்ணி யெண்ணி எத்துணை மகிழ்ச்சியோடு வாழ்ந்திருக்க வேண்டும்? ஒரு நாட்டின் நாகரிக வளர்ச்சியைப் புலப்படுத்து வனவற்றுள், முதன்மையானது, அந்நாட்டு மொழி வளர்ச்சியா மென்பதனை யாரும் மறுக்கவியலாது. எந்நாட்டில், எக்காலத்தில், மொழிவளர்ச்சி தலை சிறந்து விளங்குகின்றதோ, அக்காலத்தில் அந்நாடு பல்வகை நாகரிக மேம்பாடு முடையதாய்த் திகழ்தல் கண்கூடு. நமது தமிழ்நாட்டு வரலாற்றுடன் தமிழ் மொழி வளர்ச்சியை ஒத்து நோக்கினால், இவ் வுண்மை நன்கு தெளிவாகும்... நாட்டு வளர்ச்சிக்கும், நாகரிக வளர்ச்சிக்கும் அடிப் படையாக அமைவது, அந்நாட்டு மொழி வளர்ச்சி. அறிவாற்றல் மிக்க மக்களால், அவர்தம் தாய்மொழி வளமடைகிறது. வளர்ச்சியுற்ற மொழியால் மொழிக்குரிய மக்களும் அறிவு வளம் பெறுகின்றனர். ஆதலால், மொழி வளர்ச்சியும், மக்கள் அறிவு வளர்ச்சியும் ஒன்றையொன்று சார்ந்தே வளம் பெறுவன. பண்டைத் தமிழர்களின் அறிவுக்கும் மொழிப் பற்றுக்கும் திறமைக்கும் சான்றாகவே உலகின் முதற்செம்மொழியாகத் தமிழ்மொழி திகழ்கிறது. பண்டைத் தமிழர் நாகரிகத்தின் எல்லை விரிவானது. ‘முத்தமிழ்’ என்று நம் தாய்மொழி போற்றப்படுவதே தமிழர் நாகரிக வளர்ச்சியின் விளைவுதான். இசை முதலிய கலைச் செல்வங்கள் தமிழர் நாகரிகத்தின் அடையாளங்கள். பண்டைத் தமிழ் மக்களின் நாகரிக வாழ்வுக்கு இசை ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. தமிழர் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிகழ்ச்சி களிலும் இசை இடம் பெற்றிருந்தது. இன்றும் சிற்றூர்களில் இத்தகைய இசையைக் கேட்கலாம். இன்றைய நாகரிகம் செல்வர்களின் பகட்டான வாழ்க்கை முறையாகக் கருதப்படுகிறது. பொன்னும் பட்டும் பளபளக்கும் மகிழ்வுந்துப் பயணமும் நாகரிக வாழ்வாகக் கருதுவது, நகைப்புக்குரிய போலி நாகரிகமே ஆகும். பண்டைத் தமிழர் வாழ்க்கை நெறிகளோடு ஒத்து நோக்கினால், இன்று நாமெல்லாம் ‘தமிழர் போல்’ வாழும் ‘போலி’ இனத்தவர் என்ற ஐயம் ஏற்படுகிறது. பண்டைத் தமிழ்மக்கள் தாய்மொழிப் பற்றுடையவர். ஆதலால், அறிவோடு திகழ்ந்தனர். அருங்கலைகள் கண்டு உலகம் வியக்க நாகரிக வாழ்வு வாழமுடிந்தது. 5000- ஆண்டு களுக்கு முன்பே நாகரிகவாழ்வு வாழ்ந்த சிந்துவெளித் தமிழ்மக்களை இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும். எப்பொழுது தமிழர்களின் தாய்மொழிப் பற்று சரியத் தொடங்கியதோ, அப்பொழுதே தமிழர் நாகரிகமும் படிப்படியாக மறையத் தொடங்கிவிட்டது. இன்றைய வேற்றுமொழியர் உரிமை கொண்டாடும், இசை, நடனம், நாடகம், மருத்துவம், கணியம், ஓவியம், சிற்பம் முதலிய எண்ணற்ற கலைகள் எல்லாம் பண்டைத் தமிழர் உருவாக்கிய அரிய நாகரிகச் செல்வங்கள் தான். பண்டை நாளிலிருந்த புலவர்கள் பரிசில் கருதி யாரையும் எங்ஙனமும் பாடினரென்று கூறுதல் பொருந்தாது. அவர்கள் தாம் குற்றமற்ற பண்பு களுடையவராய் இருந்த தோடு, வேந்தர்களாயினும், பிறராயினும், தவறுடைய ராகக் காணப்படின் சிறிதும் அஞ்சாது அவர்களை நெருங்கி அறிவு கொளுத்தியும் வந்தனர். பண்டைத் தமிழர் ஒழுக்கம் உயிரினும் மேலாகக் கருதி வாழ்ந்தனர். மானமும் வீரமும் வாழ்க்கை நெறிகளாகப் போற்றித் திகழ்ந்தனர். மக்களுக்கு நன்நெறிகளைக் கற்பிக்கும் பனுவல்களை இயற்றி வழிகாட்டியாக புலவர் பெருமக்கள் வாழ்ந்தனர். மன்னர்களும் மக்களும் கல்விச் சிறப்புடைய நல்லிசைப் புலவர்களை போற்றியும் புரந்தும் பண்புடையவராகத் திகழ்ந்த காலம் அது. ‘கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு’ - என்ற பழமொழியே இதற்குச் சான்று. புறநானூறு கூறும் அரிய வரலாற்றுச் செய்திகளில் மன்னர்கள் புலவர்களின் அறிவுரைகளை மதித்து வாழ்ந்தமை அறியலாம். நாடு போற்றும் நல்லிசைப் புலவர் பெரு மக்கள் அறநெறியும் அஞ்சாமையும் மானமும் போற்றி வாழ்ந்தவர். இவர்களில் பொன்னுக்கும் பொருளுக்கும் புகழ்பாடி வாழ்ந்த புலவர்கள் அரிது. ஒரு நாடு எல்லா சிறப்புகளோடும் திகழ வேண்டு மென்றால், அந்நாட்டு மக்கள் தாய்மொழிப் பற்றும் - புலமையும் மிக்கவர்களாக இருக்க வேண்டும். மக்களுக்கு வழிகாட்டியாகப் புலவர் களும் - புலவர்களைப் போற்றிப் புரப்பவர்களாக வேந்தர்களும் வாழ்ந்தமையால் பண்டைத் தமிழகம் செந்தமிழ்ச் சோலையெனத் திகழ்ந்தது. முற்காலத்துப் புலவர்கள் தம் வாழ்க்கையைச் செம்மையுற நடத்துதற்குத் தமிழ்ப்புலமை யொன்றையே கருவியாகக் கொண்டிருந்தாருமல்லர். அவர்கள் பலவகை வாணிகமும், பிற தொழில்களும் நடத்தி வந்தனரென்பது அவர்கள் பெயருடன் வழங்கும் அறுவை வாணிகன் - கூலவாணிகன் - பண்ட வாணிகன் - பொன் வாணிகன் - வண்ணக்கன் என்பன முதலிய அடைமொழிகளால் விளங்குகிறது... இயற்கையருளால் மக்களுக்கு வாய்த்துள்ள அரும்பேறு ‘மொழி’. மாந்தர்க்கு மட்டுமே உரிய ஆறாவது அறிவின் அடையாளமாகத் திகழ்வது தாய்மொழி. மொழியின் பயனால் விளைவதே எண்ணம். இற்றை உலகின் அளப்பரிய வளர்ச்சிகள் எல்லாம் மக்கள் எண்ணத்தால் உருவானவைகளே. இத்தகைய மொழியை இறையருள் என்றே கருதவேண்டும். அதனால்தான் நமது முன்னோர் தாய்மொழியைத் ‘தமிழ்த் தாய்’ என்று தெய்வநிலைக்கு உயர்த்திப் போற்றி வாழ்ந்தனர். விலங்கினங்கள் தோன்றிய காலம் முதல் எந்த வளர்ச்சியும் பெறாமைக்கும், மாந்தரினம் வியக்கத்தக்க மாற்றங்களும் உயர்வுகளும் பெற்றுள்ளமைக்கும், மொழியின் ஆற்றல்தான் அடிப்படை. பண்டைத் தமிழர் தாய்மொழியைப் போற்றி வாழ்ந்தன ராதலால், தமிழ் இலக்கிய இலக்கணங்கள் வளர்ச்சி யடைந்தன. அரியகலைகள் உருவாயின. நாகரிகம் தழைத்து வளர்ந்தது. இன்று ‘உலகின் முதற் செம்மொழி தமிழ்’ என்று நாம் பெருமை பாராட்டுவதற்கு, நம்முன்னோர் தாய்மொழிப் பற்றே காரணம். பண்டைத் தமிழ்மக்களைப் போல் மொழிப் பற்றோடு வாழ்ந்தவராக உலகில் வேறு எந்த இனத்தவரையும் குறிப்பிட இயலாது. ஆனால், இற்றை நாளில் தாய்மொழி நலங்கருதாது மாக்களென வாழ்பவர், உலகளவில் தமிழர் களாகத்தான் இருக்கக் கூடும். பண்டைத் தமிழகத்து மன்னர்களும் மக்களும் ஆர்வம்மிக்கவராய் தமிழைக் கற்றுத் தேர்ந்தனர்.தமிழில் புலமையெய்துவதென்பது ஒவ்வொருவருக்கும் பிறப்புரிமை யாகவும், தலையாய கடமையாகவும் கருதப்பட்டது. அதனால் தான், மன்னர், வாணிகர், பாணர் முதலிய வேற்றுமையின்றி எல்லாத் தரத்தினரும் அவரவர் தகுதிக்கேற்பப் புலமை பெற்றிருந்தனர். நல்லிசைப்புலவர் பலரும், வாணிகம் செய்து செழிப்புடன் வாழ்ந்தனர் என்பதை விட, வாணிகம் முதலிய பல்வேறு தொழில் செய்வோரெல்லாம் அக்காலத்தில் புலவர்களாகத் திகழ்ந்தனர் என்றே கருதயிடமுண்டு. மக்களுடைய ஊக்கம் நிலத்தளவில் அடங்காது திங்கள் மண்டிலத்திலும் சென்று காண்குதுமெனப் பாய்ந்தெழு கின்ற இற்றை நாளிலே, பழங்கதைகளைப் படித்துப் பயன் என்னோ என்றுரைப்பரு முளர். அவர்கூற்று ஒருபுடை உண்மையுடையதே. அத்தகைய புதிய கலைநெறிகளிற் சென்று பயனடைய முயல்வது யாவர்க்குமுரிய கடனே. ஆனால், பண்டை யிலக்கண விலக்கியத் தீஞ்சுவை நூற்களைக் கல்லாது விடுதலினாலே அவையெல்லாம் கைவந்து விடுமோ? அல்லதூஉம், புதிய கலைகளைப் பயிலுதல் மாத்திரத்தானே யாவும் இயற்றவல்ல அறிவு நுட்பமும் வினைத்திட்பமும் எய்தலாகுமோ? அறிவியல் சார்ந்துள்ள கல்வியில் இன்றைய தலை முறையினர் ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். அதையே பெற்றோர்களும் ஊக்கப்படுத்துகின்றனர். அறிவியல் தொடர் புடைய பொறியியல், கணினியியல், மருத்துவம் முதலியவை கற்பதால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதே இவர்கள் நோக்கம். உண்மை என்றாலும், பண்பாடும் நாகரிகமும் கொண்ட குமுகாய வளர்ச்சிகளுக்கு மொழியியல், இலக்கியம், வரலாறு முதலிய படிப்புகளும் இன்றியமையாதவை ஆகும். 75-ஆண்டுகட்கு முன்பே நாட்டார் ஐயா இக்கருத்தை வலிவுறுத்தியுள்ளார். அறிவியல் தொடர்புடைய கல்வி மட்டுமே வளர்ச்சி யடையுமானால், காலப்போக்கில் தமிழர்களின் ‘மொழிப் பற்று’ என்பது அத்திப்பூ போல் காணமுடியாத ஒன்றாகிவிடும். தமிழிலக்கியத் தீஞ்சுவை நூல்கள் கற்பிக்கும் பண்புகளை, அறிவியல் கல்வி முறையால் பெற முடிவதில்லை. அறிவியல் தொழிற்கல்வி கற்போர், கூர்மதியினராகத் திகழ்ந்த போதிலும், பண்பாடு குன்றியவராக இருத்தல் இயல்பு. அறிவியலில் வாழ்க்கை நன்நெறிகளைக் கற்க முடியுமா? தமிழினத்தின் பழமைச் சிறப்புகளைப் பாதுகாப்ப தற்காக அறிவியல் கல்வியைத் தடுக்க முடியாது. இலக்கிய நூல்களை இல்லத்திலாவது கற்றுப் பயனடைய வேண்டும். அறிவியல் கல்விச் செருக்கால், இன்று தாய்மொழி மறந்து விட்ட தமிழர் பெருகிவிட்டனர். ஒருவர் அலுவல் முடிந்து இல்லம் சென்றால் ‘அலுவலர்’ ஒப்பனை மாறிவிடுகிறது. பெற்றோர்க்கு மகனாகிவிடுகிறார். மனைவிக்குக் கணவனாகவும், மக்களுக்குத் தந்தையாகவும் வாழ நேரிடுகிறது. இல்லற வாழ்க்கையின் அரிய பண்புகளைக் கற்பிப்பது வாழ்வியல் இலக்கணமாம் திருக்குறள் அல்லவா? திருக்குறள் போலும் நூல்களையாவது கற்றுப் பண்புடையவராக வாழ்வதே தமிழர்க்குரிய வாழ்க்கை நெறியாகும். நாமாக உழந்து தேடியாது யாதுள என்றும், உயரிய பண்புகளும் செயல்களும் நம்மிடையே காணப்படின், அவையும் நம் முன்னோரின் வழிவந்தமையால் நமக்குக் கிடைத்த பேறுகளென்றே நாட்டார் ஐயா முன்னோர் நமக்களித்துள்ள பண்பாட்டுச் செல்வங்களை எடுத்துரைக் கிறார். ந.மு.வே. நாட்டார் ஐயா ஒரு செந்தமிழ்க் கடல். அவர்தம் எண்ண அலைகள் நூல் முழுவதும் தமிழ் முழக்கமிடுகின்றன. ‘அருமைத் தமிழ்மொழி’, ‘தெய்வத் திருவள்ளுவர்’ என்றே சொற்பொழிவுகளில் உணர்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக இதோ நாட்டாரின் தமிழ் முழக்கம்: நம் தாய்மொழியாகிய அருமைத் தமிழ் மொழியோ நெருநற்றோன்றிய தன்று; நிரம்பா இலக்கணத்தது மன்று. ஆராய்ச்சியாளர் எவரும் இன்னும் தமிழின் தொடக்கம் கண்டறிந் தாரில்லை. பல்லாயிர வாண்டுகளின் முன்பே, திருந்திய நிலையெய்தியதும், வரம்பிட்டு வைத்த இலக்கண நுண்மை வாய்ந்ததும், உலகெலாம் ஒரு துலையிடினும் ஒப்பி நிற்கும் பெருமை வாய்ந்த தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம் , திருவாய்மொழி, போலும் நூற்களாகிய மூலபண்டாரங்களை யுடையதும், முனிவரும் மன்னரும் முதலாய முன்னோர் பலரும், சுவைத்துச் சுவைத்து ஆராவின்ப நுகர்ந்து பலபடப் பாராட்டிப் போற்றி வந்ததும், என்றும் தன் இளமையெழில் சிதையாது நின்று நிலவுவதுமாகிய இனிமை மிக்க தமிழே நாமனை வரும் போற்றிப் பயில்வதற் குரியதும், நம்மை வளர்த்து உறுதியளிக்குந் தன்மை வாய்ந்ததுமாகிய மொழியாம். ‘தமிழ்மண்’ பதிப்பகம், செந்தமிழ் விளைநிலமாகத் திகழ்கிறது. அறிஞர்களின் தமிழ் இலக்கிய இலக்கண ஆய்வு நூல்களை வெளியிடுவது ‘தமிழ்மண்’ பதிப்பகத்தின் தனித்தன்மை. பதிப்புத்தொழில் வெற்றிக்கு, மக்களைக் கவரும் நூல்கள் மட்டுமே வெளியிடப்படும் வணிகச் சூழ்நிலையில், காண்பதற்கரிய இலக்கியப் படைப்புகளைப் பதிப்பதற்கு, தாய்மொழிப் பற்றும், பொருளிழப்பு நேரிடின் தமிழ் நலங்கருதி தாங்கிக் கொள்ளும் துணிவும் ஈகமும் வேண்டும். இவற்றைத் ‘தமிழ்மண்’ இயல்பாகவே பெற்றுள்ளது. தமிழறிஞர்கள் நூல்களைப் பதிப்பிக்கும் ‘தமிழ்மண்’ முயற்சி வியப்பூட்டுவதாகும். அறிஞர் ஒருவரின் நூல்கள் வெளியீடு என்றால் - அவர் எழுதியுள்ள நூல்கள் அனைத்தையும் மொத்தமாக ஒரே நேரத்தில் வெளியிடுவது ‘தமிழ்மண் பதிப்பகத்தின்’ தனிச்சிறப்பு. அறிஞர் பெருமக்களின் நூல்கள் வெவ்வேறு பதிப்பகங்களால், எப்போதோ வெளியிடப் பட்டு, இன்று காணக்கிடைக்காத நிலையில், நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து, காணமல் போகவேண்டிய அரிய படைப்புகளுக்குப் ‘புத்துயிர்’ அளிப்பது தமிழ்மண் பதிப்பகம் இளவழகன் அவர்களின் செயற்கரிய தமிழ்த்தொண்டு ஆகும். சங்க இலக்கியங்கள், தமிழ்மொழியின் செம்மொழிப் பண்புகளின் அடையாளங்கள். ஓலைச்சுவடிகளில் கரையான் களுக்கு விருந்தாகப் புதைந்துகிடந்த சங்க இலக்கிய அரும் பெரும் தமிழ்ச் செல்வங்களைத் தேடிக் கண்டெடுத்து அரும் பாடுபட்டுப் பதிப்பித்து, தமிழ்வளம் காத்த பெருமகனார் உ.வே.சா.ஐயர்அவர்கள். ஐயர் முயலாதிருந்தால் சங்க இலக்கியங்கள் என்றோ காணாமல் போயிருக்கும். ஐயர் அவர்களின் சுவடி மீட்புப் பணியைப் போல் - அவர்கள். ஐயர் முயலாதிருந்தால் சங்க இலக்கியங்கள் என்றோ காணாமல் போயிருக்கும். ஐயர் அவர்களின் சுவடி மீட்புப் பணியைப் போல் - என்றோ பதிக்கப்பட்ட , அறிஞர்களின் அரிய இலக்கியப் படைப்புகளையெல்லாம், தேடித்தேடி ஒன்று சேர்த்து, மறுபதிப்பு செய்து தமிழ்வளம் பெருக்கி வருகிறார் ‘தமிழ்மண்’ இளவழகன் அவர்கள். ‘தமிழ்த்தாத்தா’ காட்டிய பாதையில், இன்று தமிழ்ப்பணியாற்றிவரும் இளவழகனார் அவர்களை ‘ஐயர்’ அவர்களின் வழித்தோன்றல் என்பது பொருந்தும். வளர்க ‘தமிழ்மண்’! ச.சிவ.வல்லாளன் 22.8.2007 33/16 காமராசு சாலை, ஆழ்வார் திருநகர் சென்னை - 600 087 தொ.பே. 65468422 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மையாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக்கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகுகுரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் (1884 - 1944) பிறந்த ஊர் தஞ்சைக்கு வடமேற்கில் சுமார் 12 கி. மீ. தொலைவில் உள்ள நடுக்காவேரி என்னும் ஊர் நாவலர் ந. மு. வே. பிறந்த ஊராகும். பெற்றோர் தந்தையார் திரு. வீ. முத்துச்சாமி அவர்கள்; தாயார் திருவாட்டி தைலம்மையார் அவர்கள். பிறந்த நாள் தாரண ஆண்டு சித்திரைத் திங்கள் இரண்டாம் நாள் (12-4-1884). பெயர் வைப்பு நாவலர் ந. மு. வே. அவர்களுக்குப் பெற்றோர் முதலில் வைத்த பெயர் சிவப்பிரகாசம் என்பதாகும். இவருக்கு முன் பிறந்த தட்சணாமூர்த்தி, இராமச்சந்திரன் ஆகிய இருவரும் இளமையிலேயே இயற்கை எய்தினர். எனவே கவலை கொண்ட பெற்றோர் இந்தக் குழந்தையையாவது காப்பாற்றி அருள வேண்டும் என்று திருவேங்கடப் பெருமானை வேண்டிக் கொண்டு சிவப்பிரகாசம் என்னும் பெயரை மாற்றித் திருவேங்கடப் பெருமான் நினைவா வேங்கடசாமி என்று பெயரிட்டனர். கல்வி நடுக்காவேரியில் இருந்த தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை ந. மு. வே. பயின்றார். அப்போதெல்லாம் நான்காம் வகுப்புத் தேர்வு அரசினர் தேர்வாக இருந்தது. தேர்வில் ந. மு. வே. ஒவ்வொரு பாடத்திலும் முதன்மையாகத் தேறினார். இதற்காகப் பல பரிசுகளையும் பெற்றார். தொடக்கக் கல்வி முடிந்த பின் தம் தந்தையாரிடமே சில நூல்களைப் பாடம் கேட்டார். பிறகு, பகற்பொழுதில் வேளாண்மையில் ஈடுபட்டு உழைத்துவிட்டு, இரவில் தாமாகவே நன்னூல் முதலிய இலக்கண நூல்களைக் கற்றறிந்தார். பின்னர்த் திருவாளர் ஐ. சாமிநாத முதலியார் அவர்களின் அறிவுரைப்படி 1905 ஆம் ஆண்டில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வந்த பிரவேச பண்டிதத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதற்குரிய பரிசுகளையும் பெற்றார். அச்சங்கத்தின் இரண்டாம் தேர்வாகிய பால பண்டிதம் தேர்வினை 1906 ஆம் ஆண்டில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுப் பொற்பதக்கம் பரிசு பெற்றார். மூன்றாம் தேர்வாகிய பண்டிதத் தேர்வை 1907 ஆம் ஆண்டில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுத் தங்கத்தோடா பரிசு பெற்றார். இப்பரிசினைப் பாண்டித்துரைத் தேவர் தம் கைகளாலேயே வழங்கி நாவலருக்குப் பெருமை சேர்த்தார். மூன்று தேர்வுகளிலும முதன்மையாளராகத் தேர்ச்சி பெற்றுப் பரிசுகளும் பெற்றதால் ந. மு. வே. அவர்களின் புகழ் தமிழ் நாடெங்கும் பரவியது. கல்வி முடிந்தபின் ந. மு. வே. அவர்கட்குத் திருமணம் ஆயிற்று. ஆற்றிய பணிகள் ந. மு. வே. அவர்கள் 1908இல் திருச்சி எஸ். பி. ஜி. கல்லூரியில் தமிழாசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். பின் 1909இல் கோயம்புத்தூர் தூய மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தார். நாவலரின் அறிவாற்றலையும் பாடம் கற்பிக்கும் திறனையும் அறிந்து மீண்டும் எஸ். பி. ஜி. கல்லூரி, தமிழாசிரியர் பணி ஏற்குமாறு வேண்டி ந. மு. வே. அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அவர் கி. பி. 1910இல் மீண்டும் எஸ். பி. ஜி. கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இவர் தமிழ் கற்பித்து வரும் காலத்தில் பெரும்பாலான ஆண்டுகளில் பி. ஏ. வகுப்பிற்குரிய தமிழ்த் தேர்வில் இக்கல்லூரி மாணவர்களே முதற்பரிசாகிய தங்கப்பதக்கம் பெற்று வந்தனர். உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக 1933 ஆம் ஆண்டு இக்கல்லூரி மூடப்பட்டமையால் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தாரின் அழைப்பினை ஏற்று அங்குச் சென்று தமிழ்ப்பணி புரிந்தார். அங்குச் சிறப்புறப் பணியாற்றி 30-6-1940இல் ஓய்வு பெற்றார். தம் குடும்பத்துடன் தஞ்சை வந்து தங்கினார். பின்னர்க் கரந்தைப் புலவர் கல்லூரியில் முதல்வர் பணியை ஏற்றுக்கொண்டு ஊதியம் பெறாமல் சிறப்புறப் பணியாற்றினார். ந. மு. வே. இயற்றிய நூல்கள் 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி 1915இல் வெளியிடப் பட்டது. 2. நக்கீரர் என்னும் நூல் 1919இல் எழுதப்பட்டது. 3. கபிலர் என்னும் நூல் 1921இல் எழுதப்பட்டது. இவ்விரு நூல்களும் சென்னைப் பல்கலைக் கழகம், காசி இந்து பல்கலைக் கழகம், இலண்டன் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பி. ஏ. வகுப்பிற்குப் பாடமாக வைக்கப் பட்டிருந்தன. 4. கள்ளர் சரித்திரம் என்னும் நூல் 1923இல் எழுதப் பட்டது. கள்ளர் வகுப்பினரைப் பற்றி எழுதப்பெற்ற தாயினும், தமிழ் மக்கள் அனைவரைப் பற்றியும் பொதுவாக இதில் ஆராயப்பட்டுள்ளது. 5. கண்ணகியின் வரலாறும் கற்பு மாண்பும் என்னும் நூல் 1926இல் எழுதப்பட்டது. 6. சோழர் சரித்திரம் என்னும் நூல் 1928இல் எழுதப் பட்டது. 7. கட்டுரைத் திரட்டு - I, கட்டுரைத் திரட்டு - II ஆகியவையும் வெளிவந்துள்ளன. இதில் நாவலர் ந. மு. வே. எழுதிய பற்பல கட்டுரைகள்அடங்கியுள்ளன. ந. மு. வே. எழுதிய உரைகள் 1. தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வேண்டுகோளின்படி 1925இல் இன்னாநாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய நூல்லகளுக்கு உரையும், முகவுரையும் எழுதினார். 2. 1925 - 1931இல் திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதப்பட்டது. 3. 1940இல் அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத் திருத்தம், 4. தண்டியலங்கார பழைய உரைத்திருத்தம், 5. யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் ஆகியன எழுதப்பட்டன. 6. கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது 1940 - 42இல் சிலப்பதிகார உரையும், 7. 1942-44இல் மணிமேகலை உரையும், 8. கரந்தைக் கவியரசு அரங்கவேங்கடாசலம் பிள்ளையுடன் அகநானூறு உரையும் ந. மு. வே. அவர்களால் எழுதப் பட்டன. சொற்பொழிவுத் திறன்: நாவலர் ந. மு. வே. சொற்பொழிவாற்றும் திறன் மிக்கவர். தமிழ்த்தாத்தா உ. வே. சாமிநாத அய்யர், மு. இராகவையங்கார், இரா. இராகவையங்கார், திரு. வி. க., இரா. பி. சேதுப்பிள்ளை, அரசஞ் சண்முகனார், கந்தசாமிக் கவிராயர், அருணாசலக் கவிராயர், மு. கதிரேசன் செட்டியார், கோவிந்தராச ஐயங்கார், கவியரசு அரங்க வேங்கடாசலம் பிள்ளை முதலியோருடன் நாவலர் அவர்கள் பல்வேறு அமைப்புக்களிலும், சங்கங்களிலும், விழாக்களிலும், கல்லூரி களிலும் ஆற்றியுள்ள சொற் பொழிவுகள் எண்ணிறந்தன. கொழும்பிலுள்ள தமிழன்பர்கள் வேண்டுகோளின்படி 1939 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் அவர் இலங்கை சென்று விவேகானந்த சங்கம் முதலிய சங்கங்களிலும் சொற் பொழிவுகளாற்றித் திரும்பினார். ந. மு. வே. அவர்களின் சொற்பொழிவு என்றால் தமிழன்பர்கள் மிக்க மகிழ்ச்சியோடு கூடிவிடுவர். தமிழ்இலக்கியங் களுக்கு அவர் பொருள் விரித்துக் கூறும் அழகை அனைவரும் மெய்ம்மறந்து சுவைப்பர். தாம் படித்துச் சுவைத்தவற்றைப் பயனுள்ள முறையில் பிறருக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லு வதில் நாவலருக்கு இணை நாவலர் அவர்களே எனில் அது மிகையாகாது. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். என்பார் வள்ளுவப் பெருந்தகை. அவ்வாறே தம் பேச்சைக் கேட்போரைத் தன்பால் ஈர்த்துக் கொள்வதோடு கேளாத வருக்கும் அவர் பேச்சைக் கேட்க வேண்டும் என்னும் விருப்பம் ஏற்படக் கூடிய அளவுக்குச் சொற்பொழிவாற்றும் திறனை ந. மு. வே. பெற்றிருந்தார். நாவலர். ந. மு. வே. அவர்களின் சொற்பொழிவால் நல்ல தமிழ் நடை ஓங்கியது. நாவலர் பட்டம் 24-12-1940இல் சென்னையில் சென்னை மாநிலத் தமிழர் சங்கச் சார்பில் சென்னை மாநிலத் தமிழர் மாநாடு நடை பெற்றது. ந. மு. வே. அவர்களின் தமிழறிவையும் சொற்பெருக்காற்றும் திறனையும் பாராட்டிப் போற்றும் வகையில் இப்பேரவையில், அறிஞர்கள் கூடி, அவருக்கு நாவலர் என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தனர். நாவலர் ந. மு. வே. வாழ்க்கையில் சில நிகழ்ச்சிகள் நாவலரின் பண்பு நலம், புலமைத் திறன், அஞ்சா நெஞ்சம், தூய வாழ்க்கை முதலியவற்றை அனைவரும் அறிந்து கொள்ளுதல் நலம். எனவே அவற்றை உணர்த்தும் முகத்தான் அவர் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன. 1908ஆம் ஆண்டில் காஞ்சி காமகோடி பீடாதிபதி - சங்கராச்சாரிய சுவாமிகள் நடுக்காவேரிக்கு வந்திருந்த போது ந. மு. வே. அவர்கள் பண்டிதத் தேர்வில் முதன்மையாகத் தேறி, தங்கத் தோடா பரிசு பெற்ற செய்தியை அறிந்திருந் தமையால், அவரைத் தாம் தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்து வரச் செய்து பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தார். 1912ஆம் ஆண்டில் நாவலர் ந. மு. வே. தம் வீட்டில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். காலை பத்து மணியளவில் ஒருவர் வந்து அவரை வணங்கி வரவேற்று ஒரு நாற்காலியில் அமரச் செய்தார். வந்தவர் சட்டை அணியாமல் ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டிருந்தார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்றும், அவற்றை விளக்க வேண்டும் என்றும் நாவலரிடம் அவர் கேட்டுக் கொண்டார். அவரும் அவற்றை விளக்கினார். இதேபோல் அவர் தொல்காப்பியத்திலும் சில ஐயப்பாடுகளைத் தீர்த்துக் கொண்டார். அவர் வணங்கிச் சென்றபின் நாவலர் தம் தம்பியை நோக்கி, இப்போது வந்து சென்றவர் யார் தெரியுமா? என்று கேட்டார். நாவலரின் தம்பி இப்போது வந்து சென்றவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று விடையிறுத்தார். இந்நிகழ்ச்சி ந. மு. வே. அவர்களின் தமிழ்ப் புலமையைத் தெரிவிக்கின்றது. ந. மு. வே. அவர்களின் தந்தையார் வேதாந்த நூல்களை ஆழ்ந்து கற்றவர். ந. மு. வே. திருச்சியிலிந்து கோடை விடுமுறையில் நடுக்காவேரிக்கு வரும்பொழுது தம் தந்தை யாருடன் வேதாந்த சித்தாந்த வாக்கு வாதங்கள் நடத்துவார். தந்தையார் என்ற முறையில் நாவலரின் தந்தையார் அதட்டிப் பேசுவார். மகன் என்ற முறையில் ந. மு. வே. அடக்கத்தோடும், பணிவோடும் பேசுவார். ஆனாலும் தம் கருத்துக்களை ந. மு. வே. அழுத்தம் திருத்தமாய் நிலை நாட்டி விடுவார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டுவிழா இராமநாதபுரம் மன்னர் ப. இராசராசேசுவர சேதுபதி தலைமையில் நடைபெற்றுது. அவர்களுடன் வந்திருந்த அவைப்புலவராகிய திருவாளர் இரா. இராகவையங்கார் அவர்கள் விழா நடைமுறை விதிகளை மீறி மற்றொருவர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு மறுப்புக் கூறினார். உடனே நாவலர் எழுந்து ‘தாங்கள் சமத்தானப் புலவராய் இருக்கலாம். ஆயினும் ஒருவர் பேசும் போது இவ்வாறு குறுக்கே எழுந்து பேசுவது சால் பாகாது’ என்று கூறினார். அவையில் பரபரப்பு ஏற்பட்டது. இராகவையங்கார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அமர்ந்தார். சேலம் செவ்வாய்ப்பேட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் ஆண்டுவிழா தமிழறிஞர் திருவாளர் மு. இராகவையங்கார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாவலர் ந. மு. வே. சொற்பொழிவாளராகச்சென்றிருந்தார். விழாவில் தலைமை தாங்கிய இராகவனார் அவர்கள் தம் முகவுரையில் திருமங்கை யாழ்வாரின் பெருமைகளைப் பற்றிக் கூறத் தொடங்கியவர் சில தவறான சொற்களைக் கூறிவிட்டார். உடனே நாவலர் எழுந்து திருமங்கையாழ்வாரைத் திருமங்கை மன்னன் என்பர் தாங்களும் மன்னன் என்று கூறிய வாயால் இவ்வாறு பேசுவது சான்றாண்மை யாகுமா? என்று கேட்டார். தலைவர் திடுக்குற்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பூவாளூர் சைவ சித்தாந்த சபையின் ஓர் ஆண்டுவிழா, திரு. வி. க. தலைமையில் நடைபெற்றது. நாவலர் ந. மு. வே. அவர்களும் திரு. கா. சு. பிள்ளை அவர்களும் சொற் பொழிவாற்றச் சென்றிருந்தனர். சுயமரியாதை இயக்கம் தீவிரமாக இருந்த காலம் அது. இவ்வியக்கத்தைச் சேர்ந்த பெரும் பேச்சாளர்களும் இவ்விழாவுக்கு வந்திருந்தனர். தலைவர் பேசத் தொடங்கியதும் இவர்களிடமிருந்து ஒன்றன்பின் ஒன்றாகக் கேள்விக் கணைகள் புறப்பட்டன. குழப்பம் ஏற்பட்டது. தலைவர் அமைதியை நிலை நாட்ட முயன்றார். பயனில்லை. உடனே நாவலர் எழுந்து கேள்வி கேட்பவர்களை நோக்கி, ‘உங்களுக்கு உண்மையான ஐயங்களிருந்தால் அவற்றைத்தாளில் எழுதிக் கொடுங்கள். முடிவில் அவைகளுக்கெல்லாம் யானேவிடையளிக்கிறேன். இவ்வாறு செய்யாமல் அவையின் நடைமுறை விதிகளை மீறிக் கேள்விகள் கேட்டு விழா நடைபெறாமல் தடுப்பது உங்கள் நோக்கமானால் அதற்கு யான் இடம் தரேன்’ என்று கூறி அமைதி ஏற்பட வழி வகுத்தார். எந்த நேரத்திலும் எந்த ஐயப்பாட்டிற்கும் விடையளிக்கும் அளவுக்கு நாவலரின் தமிழ்ப் புலமை மேலோங்கி இருந்தது. சைவ சித்தாந்த சமாஜ ஆண்டுவிழா திருச்சி மலைக் கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் 1941இல் நடைபெற்றது. ந. மு. வே. அவர்கள் திருவாசகம் என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவாற்ற இருந்தார். நிகழ்ச்சிக் குறிப்பும் இவ்வாறே அச்சிடப்பட்டு விட்டது. ஆனால் நாவலர் அவர்கள் சொற்பொழிவாற்ற எழுந்த போது தலைவர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள் நாவலரைத் திருக்குறளைப் பற்றிப் பேசுமாறு ஆணையிட்டார். அவ்வாறே, நாவலர் ‘திருக்குறளும் விரிநூற் கேள்வி பரிமேலழகர் உரையும்’ என்னும் பொருள் பற்றி மிகச் சிறப்பாகச் சொற்பொழிவாற்றி முடித்தார். எந்த விதத் தயாரிப்பும் முன்னறிவிப்புமின்றி நாவலர் அவர்கள் தலைவர் கட்டளைக்கு இணங்கச் சிறப்பான முறையில் சொற்பொழி வாற்றியதைக் கண்டு அவையோர் வியந்து பாராட்டினார். 1940ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் திருப்பதியில் அனைத்து இந்தியப் பத்தாவது கீழ்த்திசைக் கலை மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் நடக்கவிருந்த சொற்போரில் திருவஞ்சைக்களம்தான் சேரர் தலைநகர் என நிலைநாட்ட ந. மு. வே. சென்றிருந்தார். திரு. இரா. இராகவையங்கார் கரூவூர் தான் சேரர் தலைநகர் என நிலைநாட்டச் சென்றிருந்தார். சொற்போர் தொடங்கு முன் இராகவையங்கார் நாவலரை அணுகித் தம் சார்பாகப் பேசும்படியும் இல்லையெனின் மையமாக விட்டு விடும் படியும் கேட்டுக்கொண்டார். நாவலரோ அவ்வேண்டு கோளை ஏற்க மறுத்துத் தம் வாதத் திறமையால் திருவஞ்சைக்களம்தான் சேரர் தலைநகர் என்பதை நிலை நாட்டினார். நாவலர் திருச்சி பாதிரியார் ஈபர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது 20 மாணவர்கள் சேர்ந்து மணற் பரப்பில் நிலாச்சோறு உண்பதற்காக அவரையும் உடனழைத்துச் சென்றிருந்தார்கள். உண்டு முடிந்த பின் தம் ஆசிரியரை நோக்கி ஏதாவது அறிவுரை கூறவேண்டும் என்றார்கள். நாவலர், நாராயணசாமி என்னும் மாணவரை நோக்கி, “நாராயணசாமி! நீதான் நன்றாகப் பாடுவாயே, ஏதாவது ஒன்று பாடு,” என்றார். அவர் தேவாரத்தில் ஒரு பாட்டை இசையுடன் பாடினார். பாடி முடிந்ததும் நாவலர் அப்பாடலுக்கு ஒரு மணி நேரம் பொருள் விரித்து விளக்கம் கூறினார். நாவலரின் இளவல் திரு. ந. மு. கோவிந்தராயர் பி. ஏ. எல். டி., அவர் களைச் சந்தித்தபோது இந்தச் செய்தியை நாராயணசாமி அவர்களே நேரில் கூறியதுடன், “அவர்கள் பொருள் கூறிய குரல் இன்னும் என்காதுகளில் ஒலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது” என்றும் கூறினாராம். நாவலரிடம் பாடம் கேட்ட பலர், “இவர் என்னிடம் தமிழ் பயின்றவர், கற்பிக்கும் திறமையுடையவர்” என்று அவர் அளிக்கும் ஒரு சான்றிதழைக் கொண்டே உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் ஆயினர். இஃது நாவலரின் அறிவுத் திறத்தை உலகுக்குணர்த்தும் செய்தியன்றோ? நகைச்சுவை உணர்வு நாவலரின் இளவல் தொடக்கப்பள்ளி மாணவராயிருந்த போது ஒருவர் தேள்கடி மந்திரம் என்று சில புரியாத சொற் களைச் சொல்லிக் கொடுத்து ஒருவருக்கும் சொல்லி விடாதே என்று எச்சரிக்கை செய்திருந்தார். ஆனால் அவரோ உடனே அம் மந்திரத்தை ஒரு சிறு கற்பலகைத் துண்டில் எழுதி எல்லோரும் பார்க்கும்படியாக ஒரு சுவரில் பதித்து வைத்தார். இதைப் பார்த்த நாவலர் ந. மு. வே. “என் தம்பி இப்பொழுதே இராமானுசர் ஆகிவிட்டானே” என்று நகைச் சுவையோடு கூறினார். தமிழ்த் தொண்டும் மறைவும் நாவலர் ந. மு. வே. அவர்களின் தமிழ்ப்பணி அளவிடற் கரியது. தமிழாசிரியராகவும், சொற்பொழிவாளரா கவும், கட்டுரை யாளராகவும், உரையாசிரியராகவுமிருந்து அவர் தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். தமிழ்மொழி வரலாற்றிலும், தமிழ் வளர்ச்சியிலும் நாவலர் ந. மு. வே. அவர்களின் பங்கு என்றென்றும் போற்றப்பட வேண்டிய தாகும். தம் வாழ்நாள் முழுதும் தமிழுக்காகவே வாழ்ந்துவந்த நாவலர் ந. மு. வே. அவர்கள் கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே தமிழிலக்கியங்களுக்கும் உரைகள் எழுதி அணிசேர்த்துவந்த நேரத்தில், முப்பதாண்டுகளுக்கும் மேலாக அவரை நலிவுறுத்திவந்த ஈளைநோய் 28.3.1944 ஆம் ஆண்டில் அவரின்னுயிரைப் பறித்துக் கொண்டுவிட்டது. நாவலர் ந. மு. வே. அவர்களின் இழப்பு நற்றமிழுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவர்கள் விட்டுச் சென்ற அவர்தம் படைப்புக்கள் இறவாப் புகழுடையனவாகும். வீ. உலக வூழியன் L L L உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv அணிந்துரை xi பதிப்புரை xxii சொற்பொழிவுக் கட்டுரைகள் 1. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 21ஆம் ஆண்டு விழாத் தலைமைப் பேருரை 3 2. துறையூர் தமிழ்ப்புலவர் மாநாட்டு வரவேற்புரை 19 3. தஞ்சையில் நடைபெற்ற சைவர் மாநாட்டுத் தலைமைப் பேருரை 30 4. குழித்தலை கம்பர் செந்தமிழ்ச் சங்கத்தின் 11 ஆம் ஆண்டு விழாத் தலைமைப் பேருரை 42 5. தென்காசி, திருவள்ளுவர் கழகத்தின் 12 ஆம் ஆண்டு விழாத் தலைமைப் பேருரை 50 6. சொல்லின் செல்வர் 57 7. தமிழ்நாட்டின் திருமடங்களும், திருஞானியார் திருமடமும் 61 8. முடங்கல் 66 9. கல்வி 73 10. வள்ளுவர் வாய்மொழி 91 11. சுந்தரர் செந்தமிழ் 98 12. அறிவுடை நம்பி 115 13. தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இசைப்பகுதிகள் 121 14. உக்கிரப் பெருவழுதி 127 15. சோகரஸம் 132 16. சிருங்கார ரஸம் 138 17. வீரச்சுவை 145 18. நமது தாய்மொழி 152 19. கலித்தொகை 159 20. மனோன்மணீயம் 166 வரலாற்றுக் கட்டுரைகள் 1. கண்ணகி வரலாறு 179 2. கண்ணகி கற்பு மாண்பு 205 3. மணிமேகலை 229 4. கந்தபுராணமும் கம்பராமாயணமும் 253 5. திருவிளையாடற் புராணம் 259 6. திருநாவுக்கரசர் 266 7. சம்பந்தரும் தமிழிசையும் 280 8. கோச்செங்கட்சோழர் 289 9. கோப்பெருஞ்சொழர் (அல்லது) நட்பின் பெருமை 295 10. கிள்ளிவளவன் 303 11. ஓர் தமிழ் வேந்தின் இறுதி அறவுரை 310 12. ஐயரவர்களின் பொறுமை 313 13. ராவ் சாகிப் வெ.ப.சுப்பிரமணிய முதலியாரவர்கள் 315 14. டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் 317 15. அன்பும் காதலும் 318 16. வாகைத்திணை 319 17. வைகறை நினைவு 328 18. உழுதொழில் 331 19. பழந்தமிழ் மக்களின் சமயநிலை 336 20. இளங்கோவடிகளும் இயற்கைப்புனைவும் 342 21. கலித்தொகை மாண்பு 348 சொற்பொழிவுக் கட்டுரைகள் 1. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 21 ஆம் ஆண்டு விழாத் தலைமைப் பேருரை தமிழ்த் தெய்வத்தின் எழுச்சி கண்டின்புற விழைந்து குழுமி யிருக்கும் சான்றோர்களே! கரந்தைச் தமிழ்ச்சங்கத்தின் 21-ஆவது ஆண்டு விழாப் பேரவைக்கு வந்து இந்நிலைக்களத்தில் அமர்தற்கும் யான் உரியனானமையை உன்னின் பலப்பல எண்ணங்கள் தோன்றி என் உள்ளத்தைக் கவர்ந்து விடுகின்றன. எனது தகுதியின்மையை என்போல் அறியவல்லார் யாருமிலரென்பது இப்பொழுது தெளிவாயிற்று. இச்சங்கத்தின் தலைவரும், அமைச்சரும் முதலாய அறிஞர்கள் தம்மொடு நெடுநாட் பழகிய என் இயல்பினை அறிந்திலரெனக் கூறுதல் பிழையாம் எனின், உயர்ந்தவற்றையே உள்ளுதலுடைய அவர்கள் உள்ளத்தில் எனது சிறுமை தோன்றாதிருத்தல் இயல்பேயாம் என்பேன். இனி இதனைப் பாரித்துரைத்தலை விடுத்து, என்னையும் இந்நிலையில் இருக்கப்பணித்த அவர்களது பேரன்பிற்கும், அவ்வன் பிற்கு உறுதுணையாக நின்ற இறைவனது திருவருட் குறிப்பிற்கும் கையடையாகி, அவை இயக்கும்வழி இயங்குதலே கடப்பா டெனக் கருதுகின்றேன். பெரியோர்களே! உலகின்கண் "மன்னுயிர்ப் பன்மை"யுள் (புறம்.19) மக்கட் பிறப்பினர் உயர்ந்தாராதலும், மன்பதையுள்ளும் ஒருவரோ, ஓர் குழுவினரோ, நாட்டினரோ உயர்ந்தாராதலும் அறிவின் சிறப்பா லென்பது கண்கூடு. " அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலார் என்னுடைய ரேனு மிலர்1 என்றார் தெய்வப்புலமைத் திருவள்ளுவனார். பிறிதொன்று மிலரேனும் அறிவுடையார் யாவுமுடையராவரென்றும், பிறவெல்லாம் உடையராயினும் அறிவில்லார் ஒன்றும் இலராவர் என்றும் கூறிய அவரது விழுமிய கருத்துப்பெரிதும் சிந்தித்தற் குரிய தொன்றாம். அறிவுவளர்ச்சிக்குக் கல்வியே கருவியாகவுள்ளது. கல்வி, கேள்விகளின் பின் அறிவுடைமை என்னும் அதிகாரத்தை வைத்து முறைப்படுத்திய வள்ளுவர் கருத்து அஃதாதல் தெள்ளிது. ‘கற்றல் கேட்டலுடையார் பெரியார்' (முதல் திருமுறை - திருப்பிரமபுரம்- பா-2) என்னும் ஆளுடையபிள்ளையார் அருண்மொழியும் அன்னதே. கேள்வியும் கல்வியுள் அடங்கும். ஆதலின் கல்வியைக் கேள்வி என்னும் பெயரால் வழங்குதலுமுண்டு. நம்மை உண்மை மக்களாக்க வல்லது கல்வியே என்பதும், கல்வியால் அறிவு வளரப்பெறேமாயின் நாம் விலங்குகளோடொப்ப வைத்து மாக்கள் என்னும் பெயராற் கூறுதற்கு உரியமாவேம் என்பதும். " மாவும் மாக்களும் ஐயறி வினவே"1 " மக்கள் தாமே ஆறறிவுயிரே"2 என்னும் தொல்காப்பிய நூற்பாக்களால் இனிது விளங்கும். நம்மை அறிவு வகையால் மக்களாக்குவதாய், துன்பந்துடைப்ப தாய், எழுமையினுந் தொடர்ந்து உறுதியளிப்பதாய், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் பயப்பதாய் உள்ள கல்வியினும் பெறத்தக்க விழுப்பேறு யாதுளது? இத்தகைய கல்வியின் சிறப்பை இற்றையோரினும் பண்டைத் தமிழ்ப் பெரியோர் நன்குணர்ந்திருந்தனரென்பது பழந்தமிழ்ப் பனுவல்களால் இனிது புலனாகின்றது. " உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"3 எனக் கூறியவன் ஒரு பழைய தமிழ் வேந்தனாவன். உலகம் போற்றும் பொதுமறையருளிய திருத்தகு தெய்வத் திருவள்ளுவரும் கல்வியின் சிறப்பனைத்தையும் பலபட விரித்துரைத்ததன்றி, பெற்றோர் தம்மக்கட்கு ஆற்றும் உதவியாவது அவரைக் கல்வியில் வல்ல ராக்குதல் என அஃதொன்றனையே சிறந்தெடுத் தோதினாரன்றோ! அறிவுருவாகிய திருவாதவூரடிகள் திருச்சிற்றம்பலக் கோவை யுள்ளே கல்வி நலங்கூறல் என்னுந் துறையுள் வைத்தோதிய " சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின் ஆரள வில்லா வளவுசென் றாரம் பலத்துணின்ற ஓரள வில்லா வொருவ னிருங்கழ லுன்னினர்போல் ஏரள வில்லா வளவின ராகுவ ரேந்திழையே"1 என்னுஞ் செய்யுள் கல்வியின் சிறப்பையும், கற்றாரெய்தும் பயனையும் எவ்வளவு பெருமிதத்துடன் உரைக்கின்றது பார்மின்! பல்லாயிரவாண்டுகளின் முற்றோன்றிய ஒல்காப்பெருமைத் தொல்காப்பியமென்னும் தமிழியனூலுள்ளே " கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே"2 எனப் பெருமிதம் பயப்பனவற்றிற் கல்வியே முன்வைத்துக் கூறப்படுதலுங் காண்க. அகத்திணையியலில், " வாயினுங் கையினும் வகுத்த பக்கமோ டூதியங் கருதிய வொருதிறத் தானும்"3 என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியது ஒரு தலைமகனது கல்வியின் நோக்கத்தைப் புலப்படுத்துகின்றது. உண்மைப் பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கத்திடத்தும் பாகுபடுத்தோதிய நூல்களாற் பெறும் பயனைக் கருதியவழியும் தலைவன் பிரிவனென்பது இதன் கருத்து. வாய் என்பது உண்மை யென்னும் பொருளிலும், கை என்பது ஒழுக்க மென்னும் பொருளிலும் ஈண்டு வந்துள்ளன. அறிஞர்களே! இப்பொழுது நமக்கும், கல்லூரிகளிற் பயிலும் நம் பிள்ளைகட்கும் ஏற்றபடி பொருள் கொள்ளுமாறு இப்பகுதி அமைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி யளிப்பதாகும். பல தீஞ்சுவைப் பண்டங்களை முப்பொழுதும் கையுடன் வாயிற்கொண்டு நுகரும் பயனுடைத்தாகிய கல்வி என இதற்குப் பொருள் கொள்ளுதல் பெரிதும் பொருத்தமன்றோ! இங்கெடுத்துக்காட்டிய சில மேற்கோட் குறிப்புக்களிலிருந்தே "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்"பாகிய (தொல்.செய்.75) தமிழகத்தே பண்டை நாளிற் கல்வி பெருகியிருந்த தென்பதும், தமிழ்மொழி சால வளம்பெற்றிருந்ததென்பதும் ஒருவாறு புலனாம். தலைசிறந்த புலவரென யாங்கணும் ஒரு சிலரையேனும் காண்டலரிதா யிருக்கின்ற இற்றை நாளிற்போலன்றி, பண்டு ஒரு நூற்றாண்டினுள் நல்லிசைப்புலவர் ஐந்நூற்றவரின் மிக்கார் திகழ்ந்தனரென்னில், அப்பொழுது தமிழ்ப் புலமை எவ்வளவு உயரிய நிலையை அடைந்திருத்தல் வேண்டும். கற்றார் தொகை எத்துணையாகப் பல்கியிருத்தல் வேண்டும். அங்ஙனம் கல்வி வளம் பெற்ற பொழுது நாட்டிற் பிற நலன்களும் ஒருங்கு வாய்ந்திருத்தல் இயல்பேயன்றோ? கல்வியின்றியே உயர்நிலை யடைந்ததென்று காட்டத் தகுந்த நாடொன்று பண்டேனும் இன்றேனும் உண்டோ? தமிழ் நாட்டில் எப்பொழுது கல்வி சிறந்திருந்ததோ அப்பொழுது தமிழ் மக்களாயினார் அறனும் மறனும் ஆற்றலும் மிக்காராய்ப் பிறரெல்லாம் கண்டு உட்குமாறு பெருமதிப்புடன் வாழ்ந்து வந்தனரென்பதும், வேளாண்மையும் வாணிகமும் வேறு தொழிற்றிறங்களும் நாட்டிலே பல்கியிருந்தன வென்பதும் நாம் காணலாகின்ற வரலாற்றுண்மையாம். இனி, என்று அத்தகைய கல்வி தலையெடுத்து விளங்குமோ, என்று தமிழ் மக்களனைவரும் கல்வியிற்சிறந்து திகழ்வரோ அன்றே நம் தமிழ்நாடு துறக்கமும் விழையுஞ் சிறப்புடை நாடாகும் என்க. இனி, கல்வியானது உலகில் வழங்கும் பலமொழி களானும் எய்தற்பாலதே யெனினும், தாய்மொழியிற் கற்றலென்பது ஒவ்வொருவர்க்கும் பிறப்பானுரிய கடன்களுள் விழுமிய தொன்றாம். அன்றியும் நாட்டு மக்களனைவரும் கல்வி கற்று அறியாமையினீங்குதற்கு வேற்று மொழியைத் துணையாகக் கொள்ளுதல் ‘ஆற்று வெள்ளத்தைக் கடக்க மண்குதிரை கொண்டது போலும்' பயனில் செயலேயாகும். இந்நாட்டிலே எத்தனை ஆண்டுகளாக எவ்வளவு பொருட்செலவும் முயற்சியுங் கொண்டு ஆங்கிலக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது? அங்ஙனம் கற்பித்தும் ஆடவரினும் மகளிரினும் கற்றார் எத்துணையராகவுள்ளார்? இன்னும் எத்தனை யாண்டுகள் செல்லினும் யாவரும் அம்மொழி வாயிலாகக் கல்வி பெறுதல் கூடுமோ? இதனைச் சிந்தித்துணர்வது அறிஞர் கடனாகும். அம்மட்டோ! தம் நாட்டின் பழைய நிலையினையும், தம் முன்னோரின் பல்வகைப் பெருமை களையும் அறிந்து இன்புறுவதற்கும், அவ்வாற்றால் ஊக்கமும் உரனுங்கொண்டு தம் நாட்டை வளம்படுத்த முயல்வதற்கும், முந்தையோர் கைக்கொண்டொழுகிய சீரிய நெறிகளைக் கடைப் பிடித்து இம்மை மறுமைப் பேறுகளை யெய்துதற்கும் தாய் மொழிக் கல்விபோல் உறுதுணையாவது பிறிதுண்டோ! கூறுமின். ஒரு நாட்டிலே பண்டுதொட்டு வழங்கிவந்து மக்களுடைய குருதியிற் கலந்திருப்பதும், பின்னும் அந்நாட்டில் என்றும் நிலைபெற்றிருக் கற்பாலதுமாகிய மொழியன்றோஅங்கு வழிவழியாக வாழும் மாந்தர்க்கு அறிவின் செல்வத்தை வரையாது வழங்குதற்குரியதாகும். இனி, நம் தாய்மொழியாகிய அருமைத் தமிழ்மொழியோ நெருநற்றோன்றிய தன்று; நிரம்பா இலக்கணத்ததுமன்று. ஆராய்ச்சி யாளர் எவரும் இன்னும் தமிழின் தொடக்கம் கண்டறிந்தாரில்லை. பல்லாயிர வாண்டுகளின் முன்பே திருந்திய நிலை யெய்தியதும், வரம்பிட்டு வைத்த இலக்கண நுண்மை வாய்ந்ததும், உலகெலாம் ஒரு துலையிலிடினும் ஒப்பி நிற்கும் பெருமைவாய்ந்த தொல் காப்பியம், திருக்குறள், திருவாசகம், திருவாய்மொழி போலும் நூற்களாகிய மூலபண்டாரங்களை யுடையதும், முனிவரும் மன்னரும் முதலாய முன்னோர் பலரும் சுவைத்துச் சுவைத்து ஆராவின்ப நுகர்ந்து பலபடப்பாராட்டிப் போற்றி வந்ததும், என்றும் தன் இளமை யெழில் சிதையாது நின்று நிலவுவதுமாகிய இனிமை மிக்க தமிழே நாமனைவரும் போற்றிப் பயில்வதற்குரியதும், நம்மை வளர்த்து உறுதியளிக்குந் தன்மை வாய்ந்ததுமாகிய மொழியாம். ஆன்றோர்களே! தமிழின் பழமை பெருமைகளை யெல்லாம் முன் இச்சங்க விழா நாட்களில் மெய்யன்பர்களாகிய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரவர்கள், மறைமலையடிகள் முதலான புலமை மிக்கோர்கள் பல படியாக விரித்துரைத்திருத்தலானும், எனதாற்றல் பெரிதும் சுருங்கியதாகலானும் யான் அவற்றைவிரியாது விடுக்கின்றேன். எனினும், தமிழ்மக்களாகிய நாமனைவரும் பண்டைச் செந்தமிழாகிய இலக்கணங்களை யெல்லாம் துறைபோகக் கற்று அவை கூறும் விழுப்பொருளை நுகர்ந்தின்புறலும், தமிழின் பழமை, பெருமை களையும் பண்டைத் தமிழ்மக்களின் மேதக்க சிறப்புக்களையும் பாராட்டிப் பயனெய்தலும் வேண்டுமெனத் தெரிவித்தல் ஈண்டு எனது கடனாகின்றது. பழமையினையும் பெருமையினையும், பாராட்டுதலிற் பயனின்றெனக் கூறும் அறிஞர் சிலருமுண்டு. தாம் கற்று வல்லராதலுமின்றி, மொழியையும், நாட்டையும் வளம்படுத் தற்குரிய முயற்சியை மேற்கோடலுமின்றி வாளா மடிந்திருந்து, பழமை பெருமை பேசுதலிற் பயனின்றென்பதே அன்னார் கருத்துமாகும். அவ்வாறன்றிப் பண்டை நூற்களின் துறை களிற்றிளைத் தின்புறுவோர் அவற்றைப் பாராட்டாதிருத்தல் வேண்டுமென்பது எங்ஙனம் பொருந்தும்? " என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க்-குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் றெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்"1 என்பது முதலிய செய்யுட்கள் பலவற்றாற் பண்டைச் சான்றோராலேயே ஏத்திப் போற்றப் பெற்ற திருக்குறள் என்னும் தெய்வத் தமிழ் நூலைக் கற்று அதன் சொற்பொருள் மாண்புகளை யுணருமொருவர், அந்நூலையும், அதனையியற்றிய பெருநாவலர் பெருமானையும் பாராட்டாதிருத்தல் சாலுமோ? கலித்தொகை முதலிய சங்கச்செய்யுட் களின் அமிழ்துங் கைக்கும் சுவையிற்றிளைத்தவர் அவற்றையி யற்றிய நல்லிசைப் புலவர்களின் புலமைத் திறத்தினை வியவா திருத்தல் எங்ஙனம் கூடும்? தமது குடியிடத்தும், மொழியின் கண்ணும், நாட்டின்பாலும் உயரிய மதிப்பும் பற்றும் வைத்திருப்போரே ஆண்மையும் ஊக்கமும் உடையராய் மேன் மக்களாதல் ஒருதலை. " மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த தென்புலங் காவலி னொரீஇப் பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே"1 என்று வஞ்சினங் கூறிய பூதப் பாண்டியன் தனது நாட்டினிடத்தும், பிறந்த குடியினிடத்தும் எத்துணைப் பெருமித எண்ணமுடைய னென்பதனைச் சிந்தித்துப் பார்மின்! " ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் றலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் னிலவரை"2 என்றுரைத்த நெடுஞ்செழியன் தமிழின்பாலும் தமிழ்ப் புலவரிடத்தும் வைத்த உயர் மதிப்பிற்கும் எல்லை யுளதோ? ஆதலின் அன்பர்களே, நாம் நமது பண்டைச் செந்தமிழிலக்கியங் களைப் பயின்று அவற்றாலறியப்படும் நம் முன்னோராகிய புலவர், வேந்தர், வள்ளியோர், வீரர் என்றின்னோரின் பெருமைகளை யெல்லாம் உணர்ந்து உணர்ந்து பாராட்டுதல் போல நமக்கு ஆண்மையும் ஊக்கமும் அளிக்கவல்லது வேறொன்றில்லை யென்பது உண்மை, உண்மை. " மெல்ல வந்தெ னல்லடி பொருந்தி ஈயென இரக்குவ ராயிற் சீருடை முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் இன்னுயி ராயினுங் கொடுக்குவென்"3 என்ற சோழன் நலங்கிள்ளியின் வஞ்சினமொழியைப் படிக்குங் கால் அவனுடைய படை வீரமும் கொடை வீரமும் முதலிய பண்புகள் நம் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து புத்துணர்ச்சியும் புத்துயிரும் தருகின்றன. " முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்"1 என்பதனை நினையின் பாரியின் வள்ளண்மை நம் உள்ளத்தை அள்ளிக்கொண்டுவிடுகின்றது. " இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொல்நுண் டேர்ச்சிப் புலவர் நாவிற் சென்று வீழ்ந்தன்று அவன்அருநிறத் தியங்கிய வேலே"2 என அதியமான் துஞ்சியகாலை ஒளவையார் கூறிய மொழிகள் நம் நெஞ்சினை உருக்குகின்றன. பண்டைத் தமிழ்ச்சங்கத்து நல்லிசைப் புலவர்கள் பாடித் தொகுத்தவற்றுட் புறநானூறு என்னும் ஒரு நூலால் மட்டும் நாம் எய்தலாகும் உணர்ச்சி "நிலத்தினும் பெரிது, வானினு முயர்ந்தது; கடலினும் அளத்தற்கரிது". (குறுந்.3). பண்டை நற்றவத்தால் இத்தகைய நூற்செல்வத்தைப் பெற்றுவைத்துள்ள தமிழ் மக்களாகிய நாமனைவரும் அவற்றை நுகர்ந்து வீறெய்தி ஏனையரும் நுகர்ந்து பயனெய்துமாறு எடுத்து வழங்குதல் வேண்டாவோ? கூறுமின்; கூறுமின். இனி, புதிய புதிய கலைகளும், புதிய புதிய பொறிகளும் தோன்றி, முன்பு கனவிலுங்கருதி யறியாத வியத்தக்க நுண்மாண் வினைகள் எண்ணிறந்தன விரியும் இற்றை நாளிலே, மக்களுடைய ஊக்கம் நிலத்தளவில் அடங்காது திங்கள் மண்டிலத்திலும் சென்று காண்குதுமெனப் பாய்ந்தெழுகின்ற இற்றை நாளிலே பழங்கதைகளைப் படித்துப் பயனென்னோ என்றுரைப்பாருமுளர். அவர் கூற்று ஒருபுடை உண்மை யுடையதே. அத்தகைய புதிய கலைநெறிகளிற் சென்று பயனடைய முயல்வது யாவர்க்குமுரிய கடனே. ஆனால், பண்டையிலக்கண விலக்கியத் தீஞ்சுவை நூற்களைக் கல்லாது விடுதலினாலே அவையெல்லாம் கைவந்து விடுமோ? அல்லதூஉம், புதிய கலைகளைப் பயிலுதல் மாத்திரத் தானே யாவும் இயற்றவல்ல அறிவு நுட்பமும் வினைத்திட்பமும் எய்தலாகுமோ? இந் நாட்டிலே புதிய கலைகளாகின்ற அறிவியனூல் களைப் படித்துப் பட்டம் பெற்றவர் எத்தனையாயிரவர் உளர்? அவரெல்லாம் கண்ட புதுப்பொறிகள் யாவை? அவரியற்றிய நுட்ப வினைத்திறங்கள் யாவை? வசுவும், இராமனும் (ஜெ.ஸி.போஸ், சர் சி.வி.ராமன்) முதலிய இரண்டோரறிஞர் தாமே நுண்பொருள் காணும் ஆற்றல் பெற்றுளர்? அவர்களும் பழமை பாராட்டு வோராகவேயுள்ளனர். ஆதலின், நுட்ப வினைகள் இயற்றுதற்குக் கல்லூரியிற் கலை பயிலுதல் ஒன்றுமே அமையாது. புதியனகாண வேண்டுமென்னும் ஆர்வமும், கூரறிவும், விடாமுயற்சியும், கெடா வூக்கமும் வேண்டும். அவை பெறுதற்கு உள்ளம் உரனுடைத்தாதல் வேண்டும். மக்கள் வறுமையானும் பிணியானும் நலிவெய்தலின்றி, பாவேந்தர்களியற்றிய காப்பியநாடகக் கவிதை நலங்களை நுகர்ந்து இன்புறும் பொழுதிலன்றி அறிவும் உள்ளமும் உரம்பெற மாட்டா. எனவே, நாம் எவ்வகையான வினைத்திறனாற்றுதற்கும் முதற்கண் வேண்டப்படுவது நல்லிசைப் புலவர்களியற்றிய சுவைபழுத்த செய்யுட்களின் இன்பங்களை நுகர்ந்தும் பன்னருஞ் சிறப்பின் முன்னையோரின் விழுமிய பண்புகளைப் பாராட்டியும் மகிழ்ச்சியிற்றிளைத்தலேயாம். மற்றும், கல்வி என்பது சில நிகழ்ச்சிகளையும், பொருள்களையும், அவற்றினியல்புகளையும் அறிவது மாத்திரமன்று. ஊக்கமும் மகிழ்ச்சியும் விளைத்து, உள்ளத்தைப் பண்படுத்தி, உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவித்து உயர்நெறியிற் செலுத்துவதே உண்மையான கல்வியாம். புதியனவாகிய அறிவியற் கலையாராய்ச்சியிற் சிறந்து புதுப் பொறிகள் கண்டு நுண்மாண் வினைபுரியும் மேனாட்டினர் ஏனோரினுஞ் சிறப்பாகத் தம் இலக்கியங்களைப் பலபட ஆராய்ந்து கற்றுக் களிகூர்ந்து, அவற்றையும் அவற்றையியற்றிய புலவர் பெரு மக்களையும் எத்துணையாகப் பாராட்டுகின்றனர் என்பதனை அறியினும் பண்டையிலக்கியங்களைப் படித்தலிற் பயனின் றெனக் கூற எவரும் ஒருப்படாரென்க. இனி, நம் தமிழ்மொழியின் இற்றை நிலை என்னை? அதனை வளம்படுத்தி மக்கள் நலம் பெற்றோங்குதற்குச் செய்யற்பாலன யாவை? என்பன பற்றி எனக்குத் தோன்றுவன சில கூறுவல். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்பிருந்த தமிழ் வேந்தர்கள் தாங்கள் தமிழ்கற்றுப் புலமையிற்சிறந்து விளங்கியத னோடு, சங்கங்கள் நிறுவித் தமிழாராய்ச்சி செய்வித்தும், கற்று வல்ல புலவர்கட்கு வேண்டுவன நல்கி அவர்களை நன்கு மதித்துப் போற்றியும் வந்தனர். சோழன் கரிகாற் பெருவளவன் பட்டினப் பாலை பாடிய உருத்திரங் கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலளித்தான். சேரர் குல வேந்தர் பலர் பதிற்றுப்பத்துள் ஒவ்வொரு பத்துப்பாடினோர்க்குப் பன்னூறாயிரம் பொன்னும், பிறவும் பரிந்தளித்தனர். குமணன் முதலிய வள்ளல்கள் புலவர்கட்குத் தம்முயிரையும் வழங்க ஒருப்பட்டிருந்தனர். அந்நாளில் ஆடவரேயன்றி மகளிருள்ளும் பற்பலர் புலமையிற்சிறந்து விளங்கினர். இடைக் காலத்தே பல்லவராட்சியில் அத்துணையின்றேனும் ஒருவாறு தமிழ் புரக்கப்பெற்றுவந்தது. சமணப் புலவர்களால் அரிய பலநூல்கள் இயற்றப்பெற்றன. சைவசமய குரவர்களியற்றிய தேவார திருவாசகத் திருமுறைகளும், ஆழ்வார்களியற்றிய திவ்விய பிரபந்தங்களும் உலகமுள்ளவரை நிலைபெற்று உயிர்கட்குப் பேரின்ப வீட்டினை நல்க வல்லன. அதன் பின்னர் முதற் குலோத்துங்கன் முதலிய சோழமன்னர்களின் ஆட்சியில் தமிழ் மீட்டும் வீறுற்றெழுந்தது. செயங்கொண்டார், கம்பர், ஒட்டக் கூத்தர் என்னும் கவிச்சக்கரவர்த்திகள் தோன்றித் தமிழை வளம்படுத்தினர். தமிழ் வேந்தர்களின் ஆட்சி நிலைகுலைந்த பிற்காலத்திற்றான் புரப்பாரற்றுத் தமிழ் வளர்ச்சி குன்றுவ தாயிற்று. குறுநில மன்னர் சிலராலே அது தன்னிருப்பினைக் காட்டிக் கொண்டிருந்தது. இரண்டு நூற்றாண்டுகளின் முன் சேது வேந்தர் சிலர் தமிழை ஒருவாறு புரந்து வந்தனர். திருவாவடு துறையினும் தருமபுரத்தினும் நிலைபெற்ற சைவ மடங்கள் தமிழையும் சைவத்தையும் போற்றி வந்தன. பாண்டி நாட்டிற்றோன்றிய சிவஞான முனிவர், குமரகுருபரவடிகள் என்னும் இரு பெரும்புலவரும் முறையே இம்மடங்களைச் சார்ந்து பெருமை யெய்தினர். இறைவனருளால் அம்மடங்கள் இன்றும் இருக்கின்றன. திருப்பனந்தாள் மடத்தின் தலைவரவர்கள் வித்துவான் தேர்வில் முதன்மையாய்த் தேறுவோர்க்கு ஆயிரம் வெண்பொன் அளித்து வருவது மகிழ்ச்சிக் குரியது. தமிழின் இற்றைநிலை யாவர்க்குந் தெரிந்ததுதான். தமிழ் கற்பாரும், கற்பிப்பாரும், புரப்பாரும் அருகிவிட்டனர். தமிழின் சுருங்கிய நிலைகண்டு மனம் உளைந்த பாண்டித்துரை யென்னும் தமிழர் கோமானால் முப்பதாண்டுகளின்முன் மதுரையம்பதியிலே தமிழ்ச்சங்கம் நிறுவப்பெற்று, அதன் சார்பிலே தமிழ் கற்பிப் பதற்கு ஓர் கல்லூரியும் அமைக்கப்பெற்றது. தமிழ்த் தேர்வுகளும் ஏற்படுத்தப்பெற்றன. அதன் பயனாகப் பண்டைத் தமிழ் நூற்களின் பெயர்களும் அறிதற்கு இடனின்றியிருந்த எம்போல்வார் பலர் அவற்றையறிந்து சிறிது சுவைக்கவும் நேர்ந்தது. பின், இருபதாண்டு களின் முன் இச்சங்கத் தலைவரது அருமைத் தம்பியாராகிய தமிழ்ப்பற்றே உருவெடுத்தாற் போன்ற இராதாகிருட்டினனார் என்னும் திருமகனால் இச்சங்கம் நிறுவப்பெற்றது. வரம்பில்லாத தமிழ்ப்பற்றும் தூய உள்ளமும் உடையோர்களாலே நிறுவிப் போற்றப் பெற்று வரும் இச்சங்கமானது நாடொறும் வளர்ந்து தமிழின் சுவையைப் புலப்படுத்தி யாவரையும் தமிழ்ப் பற்றுடைய ராக்கி வருவது கண்கூடு. இங்ஙனமெல்லாமிருந்தும், பல காரணங் களாலே கற்பவர் தொகை அருகிவிட்டமையாலும், கற்பவர்களும் இம்மை வாழ்வு கருதி ஆங்கிலக் கல்வியொன்றனையே மேற் கொண்டு விட்டமையாலும், ஆங்கிலக் கல்விக்கு நிலைக்களனாக உள்ள சென்னைப் பல்கலைக்கழகமானது தமிழில் அருவருப்புற்ற தறுகணாளரின் செல்வாக்கிற்குட்பட்டு இருபதாண்டுகளின் முன் அதற்கு ஒதுக்கிடமும் தாராது புறக்கணித்தமையாலும் தமிழ்மொழியானது பெரிதும் இரங்கத் தக்க நிலையை எய்தியது. இச்சங்கம் போன்ற பல இடங்களிலிருந்து தமிழ் மக்கள் செய்த முறையீடு சென்னைப் பல்கலைக்கழகத்தின் செவிக்கெட்டியது. நாட்டு மொழிகளிற் பற்றுடையார் சிற்சிலர் முயற்சியால் தமிழ் முதலிய மொழிகள் சில ஆண்டுகளாகப் பின்னும் அதில் இடம் பெறுவவாயின. அதன்கண் தமிழ் மொழியானது சிறப்பு வரிசையில் இன்னும் தனக்குரிய முதலிடத்தில் வைக்கப்பெறவில்லையாயினும், ஆங்கிலங்கற்கும் தமிழ் மாணவர்கள் தமிழும் பயிலுதற்கு இடமளித்தும், தமிழுக்குத் தனிப்பட்ட வித்துவான் தேர்வினை ஏற்படுத்தியும், தமிழாராய்ச்சியின் பொருட்டு ஆராய்ச்சி நிலையம் அமைத்தும் சென்னைப் பல்கலைக்கழகம் செய்துவருமுதவியை நாம் பாராட்டுதல் வேண்டும். இத்தகைய செயல்கட்கு உறுதுணையா யிருந்தவர்களில் தமிழறிஞராகிய திருவாளர் கா.நமச்சிவாய முதலியாரவர்களும் ஒருவரென்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிப்ப தாகும். எனினும் ஆராய்ச்சி நிலையம் முதலியன அமைத்துப் பொருள் வழங்கும் அளவானே பல்கலைக்கழகத்தின் கடமை, தீர்ந்ததாகி விடாதென்றும், அவை செய்யும் செயல்முறைகள் தமிழ் வளர்ச்சிக்குப் பொருந்தியுள்ளனவா என்பதனை நன்கு கண்காணித்தலும், தமிழ் வளர்ச்சிக்குரிய பிறவும் அது மேற் கொண்டு செய்துவர வேண்டுமெனவும் அடுத்தடுத்து நினைப்பூட்டி வருவது இச்சங்கம் போன்றவற்றின் கடமை. தமிழின் பழைய நூற்றுறைகளையும், தமிழரின் பழைய நாகரிகச் செய்திகளையும், கலைகளையும் ஆராய்ந்து வெளிப் படுத்தியும், தமிழ் மக்கள் கைத்தொழில் முதலியவற்றில் மேன்மை யுறுதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தியும் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆக்கம் விளைத்தலையே முதல் நோக்கமாகக் கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப் பெற வேண்டு மென்னும் முயற்சி 1925-ஆம் ஆண்டு முதல் 1927-ஆம் ஆண்டு முடிய நடைபெற்றதனைப் பலர் அறிதல் கூடும். அதன் சார்பாக நடைபெற்ற முதற் பெருங்கூட்டம் 23-8-1925ல் இச்சங்கக் கட்டிடத் திலேயே நிகழ்ந்தது. பின்பு நிகழ்ந்தவற்றை இங்கு விரித்துரைக்க வேண்டியதில்லை. அம்முயற்சியைச் சென்னை அரசாங்கத்தினரே ஏற்றுக் கொண்டு, அதனை ஆராய்ந்து துணிதற்கு ஓர் குழுவினை நியமித்தனர். அதற்கு அமைச்சராக இருந்தவர் இப்பொழுது சென்னை மாகாண அரசியலில் அமைச்சராகவிருக்கும் கனம் பி.டி.ராஜன் அவர்களே. அக்குழுவினர் தமிழ் நாட்டின் பல பகுதியிலுமுள்ள அறிஞர் பலரோடும் உசாவி, முடிவில், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவுவது இன்றியமையாததே எனவும், அதற்கேற்ற இடம் திருச்சிராப்பள்ளியே எனவும் தம் துணிபுரைத்தனர். அவ்வளவில் அது நின்றுவிட்டது. அம்முயற்சி அறவே கைவிடப் பெற்றதற்குக் காரணம் என்னை? தன வணிகர் கோமானாகிய செட்டிநாட்டரசர் கனம் அண்ணாமலை அவர்கள் வரையா வள்ளண்மையுடன் பெரும் பொருள் வழங்கி அப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தமையே யாகும். இது முற்கூறிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கங் கொண்டு தோற்றுவிக்கப் பெற்றதாகலின் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் ஆக்கத்திற்கும் இஃதே அமையுமென்னுங் கருத்தால் முன்னெழுந்த முயற்சியைக் கைவிட நேர்ந்தது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அது தோற்றிய நோக்கத்தை நிறைவேற்றி வருகின்றதெனவே எண்ணுகிறேன். எனினும் தமிழ் மக்களாயினார் இச்செய்திகளை அடிக்கடி அதன் நினைவுக்குக் கொண்டுவருதல் கடனாகும். பூகோளம், சரித்திரம், கணிதம் என்பவற்றையும், பிற புதிய அறிவியல் நூல்களையும் தமிழில் எழுதுவித்தலும், தமிழ் வாயிலாக அவற்றைக் கற்பித்தலும் செய்ய வேண்டுவது முற்கூறிய இரு பல்கலைக்கழகங்களுக்கும் உரிய கடனாகும். ஆங்கில மொழிந்த எல்லாப் பாட வகைகளையும் உடனே தமிழ் வாயிலாகக் கற்பித்தல் சாலாதெனின், அவற்றை யாண்டுதோறும் ஒவ்வொன்றாகவேனும் வெளிப்படுத்திக் கற்குமாறு செய்தல் வேண்டும். இவ்வகையிலும் அவ்விரு பல்கலைக் கழகங்களையும் வற்புறுத்துவது தமிழ்ச் சங்கங்களுக்கும், நாட்டின் பற்றும் மொழிப் பற்றுமுடைய தமிழ் மக்களுக்கும் உரிய கடனாகின்றது. ஆங்கிலத்திலுள்ள அறிவியல் நூல்களைத் தமிழில் மொழி பெயர்க்குமிடத்துத் தமிழின் தூய்மையைப் பாதுகாத்தலும் வேண்டும். எத்துறையிலாயினும் வேற்று மொழிச்சொற்களை வரம்பின்றிப் புகுத்தியெழுதப்படும் நூற்கள் தமிழின் பெருமைக்குக்கேடு விளைப்பனவேயாகும். அறிவியல் நூற்பொருள்களைக் குறிக்குஞ் சொற்கள் தமிழில் அகப்படா என்போர் அறிவும், முயற்சியும் சுருங்கியோரேயாவர். இருமொழியினும் புலமையுடையோர்கள் கூடி மடியின்றி முயன்றால் எத்தகைய பொருளுக்கும் தமிழ்ச்சொல் காண்டல் அரிதன்று. ஒருவாற்றானும் தமிழ்ச்சொல் அமைத்தல் இயலாதாயின் பிறசொற்களைத் தமிழ் முறைக்கியையத் திரித்து ஏற்றுக் கொள்ளுதல் குற்றமாகாது. அதற்கும் ஓர் எல்லை வேண்டும். நமக்கு வேறு எம் மொழியிடத்தும் எத்துணை வெறுப்புமின்று. பல்லாயிர ஆண்டு களாக இயல்வரம்பு சிதையாது போற்றப்பெற்று வந்த நம் இனியமொழியின் வனப்பினையும் தூய்மையையும் பாதுகாவாது விடுதல் பெரியதோர் ஏதமாமென்பதே நமது கருத்து. இனி, உயர்தரப் பள்ளிகளிற் பயிலும் மாணாக்கர்கள் ஆங்கிலமொழிந்த பாடப் பகுதிகளைத் தாய்மொழியிற் கற்று விடையெழுதுதலை அரசாங்கத்தினர் உடன்பட்டிருக்கவும், உயர்தரப்பள்ளிகள் பெரும்பாலனவும் நாட்டாண்மைக் கழகங்களின் கீழே நம்மவர் ஆட்சிக்குட்பட்டிருக்கவும் அவற்றை ஏன் தாய் மொழி வாயிலாகக் கற்பிக்க முந்துகின்றிலரென்பது விளங்கவில்லை. தற்பொழுதுள்ள ஆசிரியர் சிலர் தமிழறிவு சாலாதவராயின் அதன்பொருட்டு இங்ஙனஞ் செய்தல் நாட்டின் பாலும் மொழி யினிடத்தும் பற்றுடையவர் செயலாகுமா? இத் தஞ்சையின் பெருநாட்டாண்மைக் கழகமே தமிழ் வாயிலாகக் கற்பித்தலைப் புறக்கணித்தது என்னின் வேறு யார் மீது நாம் குறை கூறுவது? இனி, ஆங்கிலக் கல்லூரிகளிற் பயிலும் மாணாக்கர்களுக்கும் நாம் கூற வேண்டுவதொன்றுண்டு. தமிழ் எடுத்துப் படிக்கும் மாணாக்கர்களிலேயே பெரும்பாலர் தமிழிற் சில வரிகள் தாமும் பிழையின்றியெழுத ஆற்றலற்றவராயிருக்கின்றனர். கீழ் வகுப்புக்களி லிருந்து தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருதலையே இது காட்டுகின்றது. ஆசிரியர்களும், பாடப் புத்தகங்களும், தேர்வு முறைகளும் இதற்குக் காரணமாயினும், மாணாக்கர்களிடத்தில் தமிழ்ப் பற்றில்லா திருத்தலே சிறந்த காரணமாகும். முன்பு ஆங்கிலத்திற் பெரும் புலமையெய்திப் பட்டம் பெற்ற பலர் தமிழ்ப்புலமையிலும் சிறந்து விளங்கினர். ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள், ஆசிரியர் பூண்டி அரங்கநாத முதலியாரவர்கள் முதலானோர் எய்தியிருந்த தமிழ்ப் புலமையும், தமிழ்ப் பற்றும் மிகவியந்து பாராட்டற் குரியன. தமது தாய்மொழியில் பற்றும் பயிற்சியுமில்லாதோர் ஆங்கிலங்கற்று நாட்டிற்கு யாது பயன் விளைப்போராவர்? இப்போது தமிழ் வித்துவான் தேர்வுக்குப் படிப்போர் தொகையும், தேறுவோர் தொகையும் பல்கி வருதல் மகிழ்ச்சியடைதற்குரியது. ஆனால் அப் பட்டம் பெற்றவர்கள் அதனைத் தம் படிப்பிற்குத் தொடக்கமென நினைந்து மேலும்மேலும் பல நூல்களையும் கற்றலும், அதன் பயனாக அரிய ஆராய்ச்சியுரைகளை எழுதி வெளியிடுதலும் செய்வாராயின் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்தோராவர். ஆராய்ச்சியுரைகள் எழுதுவோரைக் குறித்தும் சிறிது கூறுதல் வேண்டும். ஆராய்ச்சியை மேற்கொள்வோர் தாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கு இயைபுள்ள பலவற்றையும் நன்கு கற்றறிதல் வேண்டும். பண்டை நூற்களின் கருத்துக்களை நுனித்துணர்தல் வேண்டும். இக்காலத்து ஆராய்ச்சி செய்வோர் சிலர் பண்டுதொட்டு வருங்கொள்கையுடன் மாறுபட்டு உரைத்தலே ஆராய்ச்சியா மெனவும், அதுவே தம்மறிவை மிகுத்துக் காட்டுமெனவும் கருதி, யாதோராதரவுமின்றித் தாம் கருதியவாறெல்லாம் புரைபட்ட கொள்கைகளை வெளியிட்டு 'அரங்கின்றி வட்டாடி' (திருக்குறள்.401) வருகின்றனர். தொல்காப்பியத்தையும், சங்கவிலக்கியங்களையும், திருக்குறளையும் ஒப்பற்ற நூல்களெனப் பாராட்டிப் பேசுவோர் அவற்றின் கருத்துக்குமாறாகக் கடவுள் வழிபாடு முதலிய சீரிய கொள்கைகளைப் புறம்பழித்துரைப்ப தென்னை? பழைய தமிழ் நூற்கள் யாவும் உலகிற்கு நிமித்த காரணமாகிய கடவுள் ஒருவர் உண்டென்னும் கொள்கையும் உயிர்கள் அவரை வழிபட்டு உய்ய வேண்டுமென்னும் கொள்கையும் உடையனவே. தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் தொடக்கத்திலேயே கடவுள் வாழ்த்துக் கூறினர். அதன்கண் அவர், " கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்"1 என்றுரைத்தது பெரிதும் சிந்திக்கற் பாலதன்றோ? சமணர்களும் புத்தர்களும் வடமொழி தென்மொழிகளை நன்கு கற்றுப் புலமையடைந் திருந்தும், அவற்றின் கருத்துக்குமாறாக, முழுமுதற் கடவுளின் உண்மை கொள்ளாமையாலன்றோ, " ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறிகிலா ஆதமில்லி யமணோடு தேரரை வாதில்வென் றழிக்கத் திருவுள்ளமே"2 என மூன்றாமாண்டில் உண்மை ஞானம் கைவரப்பெற்ற ஆளுடைய பிள்ளையார் இறைவன்பால் விண்ணப்பித்து நின்றனர். ஆதலின் அறிஞர்களே! தமிழாராய்ச்சி செய்வோர் கடவுளும், இருவினைப் பயனும் முதலியன இல்லையென்றுரைக்கும் இன்மைப் படுகுழியில் விழாது, கல்வியறிவின் பயனைத் தலைப்படுவோராயிருத்தல் வேண்டும். காய்தலுவத்தலின்றி நடுநின்றுபுரியும் ஆராய்ச்சியாளர் யாவர்க்கும் இஃது ஒத்த முடிவாகும். பண்டைச் சான்றோ ரொருவர் " நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை யென்போர்க் கினனா கிலியர்"1 என்று கூறியிருப்பதைக் கருத்திற் பதிப்போமாக. இனி, இச்சங்கமும், இது போன்ற வேறு கழகங்களும் மேற்கொள்ள வேண்டிய தமிழ்ப் பணிகளைச் சுருங்கவுரைத்து இவ்வுரையை முடிப்பல். தமிழை வளம்படுத்தற்கு நாம் செய்ய வேண்டியவற்றை நினைத்தால் இதுகாறும் ஒன்றும் செய்திலோம் என்றே கூறுதல் வேண்டும். மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்ததென்று நாம் பாராட்டு கின்ற தமிழுக்கு நாம் என்ன ஒப்பனை செய்திருக்கின்றோம்? செவ்விதின் ஆராய்ந்து எழுதப்பெற்ற தமிழ்மொழி வரலாறு இல்லை. தமிழ் புலவர் வரலாறும் இல்லை. பண்டையிலக்கியங் களைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சியுரைகளும் இல்லை. கம்பராமாயணம் என்பது காப்பியவரசாகத் திகழ்வது. அது நமக்குக் கிடைத்திருக்கின்ற விலை மதிக்கலாகாத மாணிக்கமாகும். புலவர்கள் அதில் எத்தனையோ வகையான ஆராய்ச்சிகள் செய்வதற்கு இடனுண்டு. இருந்தும், ஒன்றும் செய்யப்பட்டிலது. திருத்தமானதொரு பதிப்பைத்தானும் அது பெற்றிலது. பெரியபுராணமும் ஆராய்ச்சிக்கு நிலைக்களனாகவுள்ளதே. கலித்தொகை முதலிய செய்யுட்களின் அழகுகளையும் பலபடியாக ஆராய்ந்து வெளியிடுதல் வேண்டும். தமிழுடன் ஆங்கிலப் புலமையும் வடமொழிப் புலமையும் உடையோர் இத்தகைய ஆராய்ச்சித்துறையில் இறங்குதல் இன்றியமையாதது. இன்னனைய பல பணிகளால் தமிழணங்கை அணி செய்தற்குத் தமிழ்ச் சங்கங்கள் முற்படுதல் வேண்டும். பணியியற்றவல்ல புலவர்களைத் தோற்றுவிப்பதும் தமிழ்ச் சங்கங்களின் கடமையே. மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையரென்னும் பேரறிஞரொருவரால் தமிழ்மொழி எத்துணை நலம் பெற்றுள்ளது. நாம் இங்ஙனமெல்லாம் நமது பழந்தமிழைப் பற்றியும், பழந்தமிழ்ப் பெருமக்களைப் பற்றியும் பேசுதற்கு வாய்தந்த வள்ளல் அவரன்றோ? அப்பெரியார் இன்னும் பல்லாண்டு நல்லுடம்புடன் வாழ்ந்து மற்றும் செய்யக் கடவனவாகிய தமிழ்ப் பணிகள் பல செய்ய வேண்டுமெனத் தமிழ்த் தெய்வத்தின் திருவருளைச் சிந்திப் போமாக. அவர்கள் போல் மற்றுஞ் சிலரேனும் பணியாற்ற வல்லார் இருப்பின் தமிழ் எவ்வளவு உயர்நிலை யடைதல் கூடும்? ஆகலின் ஆராய்ச்சியறிவு சான்ற தக்க புலவர்கள் தோன்றுதற்குத் துணையாயிருப்பது தமிழ்ச் சங்கங்களின் முதற்கடனாகும். இனி, இக்கரந்தைத் தமிழ்ச் சங்கமானது தோன்றிய நாள் தொட்டு வரம்பில்லாத தமிழ்ப் பற்றுடன் தனது ஆற்றலுக்கியைந்த தமிழ்ப் பணிகளை ஆற்றிக் கொண்டு வருகிறது. தமிழ் மக்களுக்குத் தமிழிலே சிறந்த பற்றினை யுண்டாக்கியது இச்சங்கமென்று கூறுவது சிறிதும் புனைந்துரையாகாது. ஆண்டுதோறும் பெரும் புலவர்களை அழைத்து விரிவுரையாற்றுவித்துச் சிறப்பாக ஆண்டு விழாக் கொண்டாடியும், தலைசான்ற புலமையுடைய தமிழ்ப் பெருமக்களின் திருநாட்களையும் அங்ஙனமே கொண்டாடிப் போற்றியும் யாவர்க்கும் தமிழின்கண் ஆர்வத்தையும் பற்றையும் விளைவித்து வருகிறது. ஆராய்ச்சி மிக்க உயர்ந்த கட்டுரைகளைத் தாங்கி வருகின்ற 'தமிழ்ப் பொழில்' என்னும் சிறந்த பத்திரிகையைத் திங்கடோறும் வெளியிட்டு வருகிறது. 8 ஆவது வகுப்பு வரையுள்ள இலவசப் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி எளிய பிள்ளைகள் பலரைக் கண்ணுடையவராக்கு கின்றது. இது நேரில் தமிழ் வளர்ச்சியுடன் இயைபுடையதாகத் தோன்றாவிடினும், சிறந்ததோர் அறச்செயலாமென்பது அனைவர்க்கும் ஒத்தது. அன்றியும் இதிற் கற்போர் தமிழில் நல்ல பயிற்சியும் பற்றும் உடையராதலையும், இவர்கள் பின்னாளில் சங்கத்தின்பால் மிக்க ஆதரவு காட்டலாகு மென்பதனையும் நினைந்தால் தமிழ் வளர்ச்சியுடன் இச்செயலும் இயைந்ததேயாகும். எனினும் நேர் முகமாகத் தமிழ் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய, நான் முற்குறித்த சிலவற்றைச் செய்யத் தொடங்குவது இன்னும் இன்றியமையாததேயாகும். ஆயின் அவற்றை எங்ஙனம் செய்வது? சங்கம் என்பது புலவர்களும் பற்றுள்ள உறுப்பினர்களும் சேர்ந்த தொகுதி தானே? அவர்கள் தங்கள் பொருளாலும் புலமையாலும் உதவிற்றிலரென்னின், வேறு துறைகளில் ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான பொருள் களை வாரியிறைக்கும் தமிழ் நாட்டுச் செல்வர்கள் இதற்குச் சிறிதும் உதவ முன் வந்திலரென்னின், சங்கம் என் செய்யும்? தம் உடல் பொருள் ஆவியையெல்லாம் தமிழுக்கென ஒப்புவிக்கும் ஒருபத்து உமாமகேசுவரர்கள் நம் சங்கத்திலே - தமிழ்நாட்டிலே தோன்றி விடுவார்களாயின் அன்றே தமிழ்மொழி உயர்நிலையுற்றதாமென்க. ஆன்றோர்களே, இது காறும் அறிவாற்றல் சுருங்கிய என் புன்மொழிகளைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த நுங்கட்கு என் வணக்கத்தைச் செலுத்துகின்றேன். ஒரு தமிழ்ப் புலவன் பெறும் பேறுகளுள் இதனிற்சிறந்ததொன்றில்லை யென்னத்தக்க இத்தகைய பெருஞ்சிறப்பினை எனக்களித்த பேரன்புடைய இச்சங்கத் தலைவரும், அமைச்சரும் முதலானவர் கட்கு எனது நன்றியறிவு உரியதாகுக. புழுவினுங் கீழ்மையுடைய என்னையும் இப்பொழுது இந்நிலையில் இருக்கப் பணித்து இதனை நிறைவேற்றா நின்ற செம்பொருளின் றிருவருளை எங்ஙனம் போற்றவல்லனாவேன். 2. துறையூர், தமிழ்ப்புலவர் மாநாட்டு வரவேற்புரை தாவா நல்லிசைத் தண்டமிழ்ப் புலவீர்! ஓவாத் தமிழ்ப் பற்றுடைய நற்செல்வீர்! நுங்கள் வரவு தமிழ்மொழி வீறுபெற்றோங்கும் தகைசான்ற நல்வரவாகுக. நுங்கள் நாண்மீன்கள் என்றென்றும் நின்று நிலைபெறுவனவாக. (புறம் : 24) "தொல்கேள்வித் துறைபோகிய நுண்மாணுழை புலமுடைய புலவர் பலர் இகலின்றி ஒருங்குகூடி அளவளாவித் தமிழ்ச்சுவை நுகரும் இன்பத்தை நோக்கத் துறக்கவின்பம் இறப்பச் சிறிதென்ப." (நாலடி.கல்வி.6) வானோர்க்குமரிய அச்செஞ்சொலின்பத்தை இன்று நீவிரெல்லாம் நுகர்ந்து ஏனோர்க்கு மளிக்குமாறு கூடியிருக்கும் இத்துறையூரைத் தமிழ்த் துறையூர், தவத்துறையூர் என்று போற்றுதல் தகும்! தகும்!! அறிஞர்களே! ஒரு நாட்டின் நாகரிக வளர்ச்சியைப் புலப்படுத்து வனவற்றுள் முதன்மையானது அந்நாட்டுமொழி வளர்ச்சியா மென்பதனை யாரும் மறுக்கவியலாது. எந்நாட்டில் எக்காலத்தில் மொழி வளர்ச்சி தலைசிறந்து விளங்குகின்றதோ அக்காலத்து அந்நாடு பல்வகை நாகரிகமேம்பாடுமுடையதாய்த் திகழ்தல் கண்கூடு. நமது தமிழ்நாட்டு வரலாற்றுடன் தமிழ்மொழி வளர்ச்சியை ஒத்து நோக்குங்கால் இவ்வுண்மை நன்கு தெளிவாம். சங்கங் களிருந்து தமிழாராய்ந்த நாளில், வேந்தர்களும் வள்ளல்களும் தமிழைப் போற்றிய நாளில், ஆடவரும் மகளிருமாகப் புலவர் ஆயிரவர் திகழ்ந்த நாளில், ஒப்பற்ற தீஞ்சுவைச் செழுந் தமிழ்ப் பாடல்களும் பனுவல்களும் தோன்றிப் பல்கிய நாளில், நமது தமிழகத்திலே மக்களெல்லாரும் அறிவும் ஆற்றலும் மிக்கு விளங்கினர்; வேளாண்மையும் வாணிகமும் பல்வகைக் கைத்தொழிலு மாகிய செல்வ வளர்ச்சித் துறைகளெல்லாம் சிறப்புடன் நிலவின, அரசியற்றுறையோ அரசெனத் திகழ்ந்தது, தமிழ் வேந்தர்களின் வீரமும் வண்மையும் முறைசெய்யுந் திறனும் வியந்து போற்றுதற் குரியனவாக இலங்கின. மொழி வளர்ச்சி சுருங்கியதென்றோ அன்றே நாடும் பீடழிந்து நின்றது. ஆகலின், நாட்டு வளர்ச்சியும் மொழி வளர்ச்சியும் ஒன்றோடொன்றியைபுடையவாதல் ஒருதலை. இப்பொழுது நமக்குள்ள பெருமை யெல்லாம் நம் முன்னோரின் பெருமையேயாகும். அன்னோர் காடு கெடுத்துப் பண்படுத்தி வைத்த விளைபுலங்களில் அவர்கள் அகழ்ந்து கரைகோலி வைத்த காவிரி முதலிய ஆறுகளும் ஏரிகளும் நீரினையுதவ விளையும் உணவினை யுண்டும், அவர்கள் போற்றி வளர்த்துதவிய தமிழினைப் பேசியும் வாழ்ந்து வருகின்றோம். அவர்கள் வரம்பிட்டு வைத்த வாழ்க்கை நெறிகளே அறிவும் முயற்சியும் இல்லேமாயினும் நம்மை வழிநடத்து வனவாக வுள்ளன. நாமாக உழந்து தேடியது யாதுளது? ஒரோவழி உயரிய பண்புகளும் செயல்களும் நம்மிடையே காணப்படின் அவையும் அம்முன்னோரின் வழிவந்தமையால் நமக்குக் கிடைத்த பேறுகளென்றே கூறுதல் பொருந்தும். இங்ஙனம் பல்லாற்றானும் நமது நிலை சுருங்கியதாயினும் இனிப் பெருகுவதற்கு வழியில்லாது போகவில்லை. கீழ்நிலையின் வரம்புகண்ட நாம் இனி மேனிலையிற் றிரும்பாது வேறென் செய்வது? 'கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த வீரக்குடி'யினர் வாழ்ந்தது எமது தமிழகம் (பு.வெ.மா.கரந்தை-குடிநிலை) என்பதனை எண்ணின், கரிகாலனும் செங்குட்டுவனும் நெடுஞ்செழியனும் முன்னான வீரமன்னர்கள் வீறுடனாண்டது எமது தமிழ் நாடென்பதனை உன்னின், நக்கீரர், கபிலர், வள்ளுவர், இளங்கோவடிகள் முதலாய நல்லிசைப் புலவர்கள் பல்லிசை நிறுத்தது எமது தண்டமிழ் நாடென்பதனை நினையின் அவை எமக்கு ஊக்கமும் உரனும் உண்டாக்காது போமா? ஆண்மை மிக்க வீரர் வழியில், அரசர் வழியில், வள்ளியோர் வழியில், தெள்ளியோர் வழியில் வந்த யாமோ அறிவு குன்றி, ஆண்மை குறைந்து, பீடிழந்து வாடி நிற்போம் என்னும் உணர்ச்சி எம்மை உயர்நெறிக்கண் உந்தாது சாமா? "இனி நாம் அழுங்கிக்கிடவோம்; நாடெங்கும் தமிழினை முழங்கச் செய்வோம்" என்றெழுமின்! தளரா ஊக்கமுடன் உழைமின்! நாமும் உயர்ந்தோம். நமது நாடும் உயர்ந்தது. கல்விச் செல்வர்காள்! தமிழ்ப் புலவரென்பார் தமிழகத்திலே ஓர் குறுகிய கூட்டத் தினரல்லர்; விரிந்த சிந்தையுடைப் பெருந்தக்கோர்கள் அன்னவரே யாவர். தமிழ்ப் புலவரின்றித் தமிழகம் என்பது யாண்டுளது? "யாம் தமிழரேம்; எமது பீடுடைத் தமிழகம்; எம் வீறுடை முன்னோர்" என்று கூறிக் கொள்வ தெல்லாம் தமிழ்ப் புலவர்களால் வந்த பேறல்லவோ? தம்முடைய பழைய பெரிய அறிவுச் செல்வங்களை யெல்லாம் வழிவழியாகப் பாதுகாத்து வந்து நாட்டின் பெயரை நிலைநாட்டுவோர் புலவர் என்பதில் ஐயமுண்டோ? பண்டு தொட்டுப் புலமை சிறந்து விளங்கினோரெல்லாம் ‘ஒரு நாழி உண்டி'யின் (புறம். 189, நல்வழி. 19,28) பொருட்டுக் கற்றோரல்லர். ‘திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த முருகவேளும்' (இறையனார் களவியல். நூற். 1உரை) தமிழாராய்ந்ததனைப் பழங்கதையென ஒதுக்குவார் ஒதுக்குக. முக்குற்றமற்ற முனிவர்களும், முடிசார்ந்த மன்னர்களும் செந்தமிழ்ப் புலவர்களாய்த் திகழ்ந்தனரே. பாலை பாடிய பெருங்கடுங்கோ, பெரியகணைக்காலிரும் பொறை என்னும் சேரமன்னர்களும், நலங்கிள்ளி, கிள்ளிவளவன், நல்லுருத் திரன், கோப்பெருஞ் சோழன் என்னும் சோழ மன்னர்களும், ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பூதப்பாண்டியன், அறிவுடை நம்பி, இளம்பெருவழுதி, நல்வழுதி, குறுவழுதி, உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டி மன்னர்களும், பிறரும் சங்க காலத்தே தம் உடலோம்புதற் பொருட்டோ தமிழ் கற்று நல்லிசைப் புலமை யெய்திச் சிறந்தனர்? இத்தகைய வேந்தர் பெருமக்களெல்லாம் புலவர் வரிசையிற் சேர்ந்திருப்பது தமிழ்ப் புலவர்கட்குப் பெருமிதம் பயப்பதொன்றாம். ஆனால், அரசர்களாலேயே புலமைக்குப் பெருமையுண்டாயிற்றெனல் அமையாது. புலமையால் அவர்கள் பெருமை எய்தினர் எனக் கூறுதல் பெரிதும் பொருந்தும். நிலனாளுஞ் செல்வத்தினும் புலனாளுஞ் செல்வம் மேதக்கதே யாகும். புலவர்களுக்குள்ளே புலமைத் திறத்தாலன்றிப் பிறப்பு முதலிய வேறெவ்வகையாலும் பெருமை சிறுமையில்லை. முடியுடை வேந்தராயினும், வேட்டுவராயினும், பாணராயினும் புலவரென்ற வகையில் ஒரு நிகரானவரே. திருக்குறளென்னும் தெய்வத் தமிழ்மறையை "வந்திக்க சென்னி, வாய் வாழ்த்துக, நன்னெஞ்சம், சிந்திக்க கேட்கசெவி" (திருவள்ளுவ மாலை: 4) என்று உள்ளமுருகிப் போற்றினவன் உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டி வேந்தனாவன். திருக்குறளை இங்ஙனம் போற்றினவன் அதனையியற்றிய பெரு நாவலராகிய வள்ளுவனாரையும் தெய்வமாகக் கொண்டு பரவினானாவன் என்பதில் இழுக்கென்னை? ஆகலின் தமிழ்ப் புலவரென்பார் யாவரும் ஓரினத்தவரென்பதனைக் கடைப்பிடிமின். " கற்றவர்க்கும் நலநிறைந்த கன்னியர்க்கும் வண்மைகை யுற்றவர்க்கும் வீரரென்றுயர்ந்த வர்க்கும் வாழ்வுடைக் கொற்றவர்க்கும் உண்மையான கோதில் ஞான சரிதராம் நற்றவர்க்கும் ஒன்று சாதி நன்மை தீமையில்லையால்"1 என்பது எங்கட்கு மறை மொழியாகும். உலகில் வேறெவ்வெவர் எவ்வகை வேற்றுமை யுடையராய்த் தொலையினும் தொலைக. தமிழ்ப் புலவராகிய எங்கட்குள் எத்துணையும் வேற்றுமையின் றெனச் சாற்றுமின். இனி, முன்னாளில் மூவேந்தரும் பிறரும் தமிழைப் புரந்தனர்; தமிழ்ப் புலவரைப் போற்றினர்; இந்நாளிலோ தமிழ்ப் புலவரும் பிறரால் நன்கு மதிக்கப் பெறவில்லையே என நீவிர் கூறுதலுங் கூடும். அங்ஙனம் கூறுவதில் உண்மையின்றென யான் உரைக் கின்றிலேன். எனினும் ஒன்று கூறுவதுடையேன். தமிழ்ப் புலவர்கள் ஏனோர் பாலுள்ள இக்குறையினை எடுத்துரைப்பதைக் காட்டினும் தம்பாலுள்ள குறைகளை முந்துற அறிந்து களைதல் கடனாகும். பண்டை நாளிலே தமிழ்ப் புலவரென்றால் இலக்கிய விலக்கணங் களைத் துறைபோகக் கற்றுப் பலகலையிலும் வல்லுநராய்ப் புலத்துறை முற்றி விளங்கினர். வாய்மையும் அன்பும் மற்றும் பல குணங்களும் நிரம்பித் திகழ்ந்தனர். அங்ஙனமாகலின் அவர்களை நல்லிசைப் புலவர் என்றும், பொய்யா நாவினர் என்றும், சான்றோர் என்றும் யாவரும் போற்றுவாராயினர். வேந்தர்கள், வள்ளல்கள் முதலாயினார் அவர்கள் பால் மிகுமதிப்புடையராய் வரிசை பல வழங்கி மகிழ்வித்து வந்ததன்றி, அவர்களில் ஓரொருவரைத் தமக்குச் சிறந்த நட்பாளராகக் கொண்டு, அன்னோர் பாடும் சுவைமிக்க தமிழ்ப் பாக்களைக் கேட்டு இன்புற்று மகிழ்ந்தும் அறிவுறூஉக்களால் தம் பிழையினை யோர்ந்து திருந்தியும் வந்தனர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், 'என் மாற்றரசைப் போரிலே தாக்கி முரசுடன் அவர்களைக் கைப்பற்றேனாயின், யான் இத்தன்மையனாகுக' என வஞ்சினங் கூறுமிடத்து, " ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் றலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைக வென்னிலவரை"1 என்று கூறியிருப்ப தொன்றே அக்காலத்துப் புலவர்களிடத்து வேந்தர்கள் வைத்திருந்த எல்லையில்லாத பெருமதிப்பிற்குப் போதிய சான்றாம். உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் சிறப்பினையுடைய புலவர் என்று கூறும் அருமையைப் பாருங்கள். புலவர்கள் எனது நாட்டினைப் பாடாது விடுக என்பது அவன் கூறிய வஞ்சினமாயின், தன்மீதுள்ள வெறுப்பால் அவர்கள் அங்ஙனம் பாடாது விடுத்தலைத் தனக்கு எவ்வளவு இகழ்ச்சியாக அவன் கருதியிருத்தல் வேண்டுமென்பதனை ஓருங்கள். சேரமான் தகடூரெறிந்த பெருங்சேரலிரும்பொறை என்ற அரசனைக் காணச் சென்ற மோசிகீரனார் என்ற புலவர் அவனது வீர முரசு நீராடச் சென்றிருந்த காலையில் அதனை வைத்தற்குரிய சிறப்பினையுடைய முரசு கட்டிலில் அறியாது ஏறித் துயின்றனர்; அதனை வந்து கண்ணுற்றான் அரசன். தனது வழிபாட்டிற்குரிய சிறப்பினையுடைய முரசு வைக்குங்கட்டிலில் அவர் துயிலுவதைக் கண்டும் சிறிதும் வெகுளாது, தனது கையால் சாமரை கொண்டு அவருக்கு விசிறிக் கொண்டு நின்றான். துயிலினின்றெழுந்தபின், தாம் முரசு கட்டிலில் துயின்றதனையும், அரசன் விசிறினதையும் அறிந்த புலவர் மிக வியந்து அவனைப் பாராட்டிப் பாடினர். அம் மன்னவன் புலவரிடத்து எத்துணை அன்பும் மதிப்பும் வைத்திருத்தல் வேண்டும்? இங்ஙனம் எத்தனையோ பலசான்றுகள் உள்ளன. இன்னும் பிற்காலத்திலிருந்த கம்பர் முதலான புலவர்களுக்கு வேந்தர்கள் சிவிகை சுமந்தது முதலிய வரலாறுகளும் கேட்கப்படுகின்றன. அவர்களுடைய புலமையின் பெருமை என்னை? நம்மை அவர்களோடு ஒப்பிடுதல் யாங்ஙனம்? இக்கால நிலையில் படிப்படியாக நம் உரங்குன்றி வந்துள்ள நிலையில், வேறு பல துறைகளிற் கருத்தைச் செலுத்த வேண்டியுள்ள நிலையில், நாம் அவ்வளவு பெரும் புலமை யடைதற்கு வாய்ப்பு இன்றேனும், தமிழ் இலக்கிய விலக்கணங்களில் ஓரளவாவது அழுத்தமான பயிற்சியைப் பெறுதல் நமக்குரிய கடனாகும் என்பதனை அறியற்பாலம். தமிழ்ப் புலவரென்போரை விடுத்து, ஏனையரை நோக்கியும் ஒன்று கூறுதல் வேண்டும். தமிழ் நூல்களில் ஒன்றையேனும் படியாத என் இளந் தோழர்களும், பிறரும் தங்கட்குத் தமிழில் அளவு கடந்த பற்றுள்ளதாகப் பலகாலும் பேசுவதை நாம் கேட்கின்றோம். அஃது உண்மையான பற்றாமா? தமிழ் நூல்களைக் கற்று அவற்றின் பயனை நுகர்வதன்றோ தமிழ்ப் பற்றுள்ளவர்க்குரிய முதற்கடன்? அங்ஙனமின்றித் "தமிழ் தமிழ்" என வானளாவக் கூச்சலிடுவதெல்லாம் ஏதோ வேறு பயன் கருதிய செயலாவதன்றி உண்மையான தமிழ்ப் பற்றாகா தென்பது ஒருதலை. கழிந்த நாட்களில் தமிழ் நூல் கற்பதற்கு இயலாது போயினும், இனி யாம் தமிழ் கற்பேம் என உறுதி கொண்டு நாடொறும் சிறிதேனும் பயின்று வருவரேல் அவரது தமிழ்ப் பற்றை யாம் பாராட்டுதல் பொருந்தும் இனி, "தன்னைத் தலையாகச் செய்வானும் தான்" (நாலடியார்-248) என்றபடி, தமிழ்ப் புலவர்கள் தம்மை உயர்த்திக் கொள்வதற்கு அவர்கள் நல்ல கல்வியுடையராதல் ஒன்று மட்டும் போதாது. விரிந்த உள்ளமும் சிறந்த பண்புகளும் வேண்டும். பண்டை நாளிலிருந்த புலவர்கள் பரிசில் கருதி யாரையும் எங்ஙனமும் பாடினரென்று கூறுதல் பொருந்தாது. அவர்கள் தாம் குற்றமற்ற பண்புகளுடையராய் இருந்ததோடு, வேந்தர்களாயினும் பிறராயினும் தவறுடையராகக் காணப்படின் சிறிதும் அஞ்சாது அவர்களை நெருங்கி அறிவு கொளுத்தியும் வந்தனர். " நிலம் பெயரினும் நின்சொற் பெயரல்"1 " அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி"2 " அடுபோர்ச் செழிய இகழாது வல்லே நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோ ரம்ம இவண் தட்டோரே தள்ளா தோரிவண் தள்ளா தோரே"3 " அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும் பெரும நின் செல்வம் ஆற்றா மைந்நிற் போற்றா மையே"4 “ கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும் ஒடியா முறையின் மடிவிலை யாகி நல்லதன் நலனும் தீயதன் றீமையும் இல்லை யென்போர்க் கினனா கிலியர்"5 " கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயில்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ - - - - - - - - - - - - - - - - - வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும் காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்"6 " நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம் அதனால், நமரெனக் கோல்கோடாது பிறரெனக் குணங்கொல் லாது ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும் திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையும் மூன்றும் உடையை யாகி இல்லோர் கையற நீ, நீடு வாழிய நெடுந்தகை"1 என்பன போல்வன வெல்லாம் புலவர்கள் அரசர்கட்கு எத்தகைய அறங்களை அறிவுறுத்தி வந்தனரென்பதனைக் காட்டுகின்றன. சோழன் நலங்கிள்ளியென்பானும் நெடுங்கிள்ளி என்பானும் ஒருவருக்கொருவர் பகைஞராய்ப் போர் தொடுத்த காலைக் கோவூர்கிழார் என்னும் புலவர் அவர்கட்கு அறிவு கொளுத்துமாறு பாடிய பாட்டுக்கள் அவரது அஞ்சாமையையும் உயர் குணத்தையும் புலப்படுத்துகின்றன. ஒரு காலத்தே இளங்கண்டீரக்கோ இளவிச்சிக்கோ என்ற இரண்டு சிற்றரசர்கள் ஒருங்கு கூடியிருந்தவிடத்திற் சென்ற பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் கண்டீரக் கோவைக் கைகுலுக்கிச் சிறப்புச் செய்து விச்சிக்கோவை அங்ஙனஞ் செய்யாது விட்டனர். அது விச்சிக்கோவிற்குச் சிறிது வருத்தத்தை யுண்டாக்க, அவன் அதன் காரணத்தை உசாவினன். அதற்குப் புலவர் கூறிய விடையாவது, "தம் கணவர் சேய்மைக்கட் சென்றிருப்பின், பெண்டிரும் பாடிவந்தோர்க்குப் பரிசில் கொடுத்தனுப்பும் உயர் குடியிற் பிறந்த கண்டீரக்கோன் ஆதலின் யான் அவனைப் புல்லினேன். நீயும் வள்ளலாகிய நன்னன் வழியில் தோன்றியவனும், உயர் குணமுடையவனும் ஆயினும் நும் முன்னோருள் ஒருவன் புலவர்கட்குக் கதவு அடைத்தானாதலின் நுங்கள் மலையை "எம்மவர் யாரும் பாடாது விட்டனர்; ஆதலின் யானும் நின்னைத் தழுவிற்றிலேன்" என்பது. இதிலிருந்து ஓர் குடும்பத்தில் யாரேனும் தகாத செயல் செய்யின் அக் குடும்பத்திலே தோன்றினார் எவரையுமே புலவர்கள் மதிப்பதில்லை என்பது புலனாகின்றது. பெண்பாற் புலவர்களும் அஞ்சாமையும், அருஞ்செயல் புரியும் ஆற்றலும் முடையராயிருந்தன ரென்பதற்கு அதியமானிடமிருந்து ஒளவையார் தொண்டைமானுழைத் தூது சென்ற வரலாறு சான்றாம். அத்தகைய அஞ்சாமையும், அருந் திறலும், பெருந்தன்மையும் இற்றை நாளில் தமிழ்ப் புலவர்கட்கு வேண்டும். ஏதோ சிறிது பொருள் கிடைத்தாற்போதுமென்று தம் நிலைமைக்குத் தகாவாறு பிறரைத் தொடர்ந்து அவர்கள் மனைவாயிலைப்பற்றி நின்று பெருமைகெட வொழுகுவது தமிழ்ப் புலவர்கட்குச் சிறிதும் அடாது. அத்தகைய இழிதகவு யாரிடமேனும் காணப்படின் அன்னாரைப் 'புலவர் கூட்டத் திற்குப் புறகு' என நீவிர் ஒதுக்குதல் வேண்டும். சுருங்கச் சொல்லின் பிறரெல்லாம் தம்மிடம் மதிப்பு வைக்குமாறு நடந்து கொள்வது தமிழ்ப் புலவர் கடனாம். மற்றும் உலகநடை யறிதலும் இன்றியமையாதது. " உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லா ரறிவிலா தார்"1 என்பது மெய்ம்மொழியன்றோ? உலகிலே நன் மக்களாயுள்ளாரின் நோக்கங்களும் கொள்கைகளும் நடை முறைகளும் எங்ஙனம் உள்ளன வென்பதை அறிந்து அவற்றிற்கேற்ப ஒழுகுதலே உலகத்தோடு பொருந்த வொழுகலாகும். தாம் எவ்வளவுதான் பழம் பனுவல்களில் அழுத்தமான பயிற்சியுடையராயினும் இக்காலத்து அறிவு ஆராய்ச்சித் துறைகளைப் புறக்கணித்திடுதல் சாலாது. பழைய நூல்களைப் புதிய முறையில் ஆராய்தலும், புது நூல்கள் எழுதலும் வேண்டும். இவ்வகையில் தமிழ்ப்புலவரனைவரும் தமிழன்னைக்குப் பெரிதும் கடன் பட்டிருக்கின்றனர். முற்காலத்துப் புலவர்கள் தம் வாழ்க்கையைச் செம்மையுற நடத்துதற்குத் தமிழ்ப் புலமை யொன்றையே கருவியாகக் கொண்டிருந்தாருமல்லர். அவர்கள் பலவகை வாணிகமும், பிற தொழில்களும் நடத்தி வந்தனரென்பது அவர்கள் பெயருடன் வழங்கும் அறுவை வாணிகன், கூலவாணிகன், பண்ட வாணிகன், பொன் வாணிகன், வண்ணக்கன் என்பன முதலிய அடைமொழிகளால் விளங்கு கின்றது. இந்நாளிலும் புலவர்கள் அத்தகைய வினைமுயற்சிகளில் ஈடுபடுதல் வேண்டும். தண்டமிழ் போற்றும் திண்டிறலுடையீர்! இது காறும் தமிழ்ப் புலவர்கள் தம்மைத்தாமே உயர்த்திக் கொள்ளுதற்குரிய நெறிகள் சிலவற்றை எனது சிற்றறிவிற்குத் தோற்றியவாறு கூறினேன். விரிவஞ்சிக் கூறாது விட்டனவும் உள. இனி, அரசாங்கத்தினரும், பல்கலைக்கழகத்தாரும், நாட்டாண்மைக் கழகத்தினர் முதலிய நாட்டுச் செல்வர்களும் தமிழ்ப் புலவர்கட்கு ஆற்ற வேண்டிய கடன்கள் பலவுள்ளன. அவற்றை யெல்லாம் நான் இங்குக் கூற ஒருப்பட்டிலேன். என்னினும் அறிவின் மிக்க பலர் இக்கூட்டத்திலிருக்கின்றீர்கள். நீங்களெல்லீரும் கூடிச் சூழ்ந்து ஒருமித்துச் செய்யும் முடிபுகளை அரசாங்கத்தினர் முதலாயினார்க்கு அறிவிப்பீர்களென்று நம்புகிறேன். ஒன்று மட்டும் நான் குறிப்பிட விரும்புதலுடையேன். உயர்திறப் பள்ளி களிலாக, கல்லூரிகளிலாக தமிழாசிரியராயுள்ளார் அங்குள்ள ஏனையாசிரியன்மாருடன் எல்லா வகையிலும் ஒத்த நிலையினராக வைக்கப் பெற வேண்டும். இப்பொழுது பல்கலைக்கழகத்தின் எந்த அவையினும் தமிழ்ப் புலவர்க்கென இடம் யாதுமில்லை. மக்கட்கு நாட்டின் பற்றும் மொழிப்பற்றும் வளர்ந்துவரும் இந்நாளில், எல்லாக் கலைகளையும் தாய்மொழி வாயிலாகக் கற்பிக்க வேண்டுமென அறிஞர் பலரும் வற்புறுத்துகின்ற இந்நாளில், தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களிலே தமிழ்ப் புலவர்க்கென இடமில்லாதிருப்பது பெருங்குறையாம். அது விரைவில் அகற்றப் படவேண்டும். வித்துவான் தேர்வில் வெற்றி பெறுவோர் பட்டம் பெறும் நாளில் ஆங்கிலப் பட்டதாரிகளோடொப்ப நிலையங்கி (GOWN) தரித்துக் கொள்ள வேண்டுமென இவ்வாண்டு முதல் விதித்துள்ளார்கள். இவ்விதி இவர்களை நன்கு மதிக்க வேண்டு மென்னும் நன்னோக்கங் கொண்டியற்றப் பட்டதாயின் இவர்களும் பல்கலைக்கழக அவைகளின் அங்கத்தினர் பதவியை விரும்பி நிற்கவும், வாக்குரிமை அளிக்கவும் உரிமை தருதல் வேண்டும். நேற்று நடந்த சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் சென்னை மாகாணக் கல்வியமைச்சராகிய பெருந்திருவாளர் திவான்பகதூர் எஸ்.குமாரசாமி ரெட்டியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து அவர்கட்கு நாட்டினிடத்தும் நாட்டு மொழியினிடத்தும் உள்ள பெரும்பற்றுத் தெள்ளிதன் விளங்கு கிறது. பிற கலைகளை நாட்டுமொழி வாயிலாகக் கற்பிப்பதன் இன்றியமையாமையை அவர்கள் பலபடியாக வற்புறுத்தி யுள்ளார்கள். அவர்கள் தமிழர் மகாநாட்டுத் தலைவராக இங்கே எழுந்தருளியிருப்பதை, நாம் கருதியன கைகூடுமென்பதற்கு அறிகுறியாகக் கொள்ளக் கடவேம். தமிழ் நாட்டின் செல்வத் தோன்றல்களுக்கும், நாட்டாண்மைக் கழகங்களின் தலைவர்கள் முதலாயினார்க்கும் ஒன்று கூறுகின்றேன். நீங்கள் பண்டைநாளிற் புரவலர்கள் போலத் தமிழ்ப் புலவர்க்குப் பன்னூறாயிரம் பொன் பரிந்தளிக்க வேண்டுமெனவும், நாடும், ஊரும், நடைநவில் புரவியும், களிறும், தேரும் வரிசையின் வழங்க வேண்டுமெனவும் கேட்கின்றிலேன். நும்மின் மிக்காராக மதித்துப் போற்ற வேண்டு மெனவும் கேட்கின்றிலேன். யான் கேட்பதெல்லாம் நீங்கள் அவர்களை அவமதியாதிருக்க வேண்டுமென்பதே. தமிழ்ப் புலவர்கள் யாதேனும் காரியமாகவோ காரியமின்றியோநுங்களிடை வருவரேல் அவர்கட்கு இருக்கையளித்து முகமுன் கூறுதலேனும் நீவிர் புரிதல் வேண்டும். அரும்பெறற் புலவர்களே! தமிழ்ப் பற்றுடைய பெரும் பெயர்ச் செல்வர்களே!! இம்மாநாட்டிற்கு நுங்களை வரவேற்கு முகத்தால் என் கருத்திற்றோன்றிய சிலவற்றை வெளியிட்டதனை நீங்கள் பொறுத்தருளல் வேண்டும். யான் கூறியவற்றில் பிழையாவன வுளவேல் அவற்றை ஒதுக்கிவிடவும், நீங்கள் கண்ட நல்லனவற்றைத் தெரிவிக்கவும் நுங்கட்குக் கடப்பாடுளது. யான் சோணாட்டின் குணபாலாகிய தஞ்சையைப் பிறப்பிடமாகவும், குடபாலாகிய திருச்சிராப்பள்ளியை வினையாற்றிடமாகவும் கொண்டிருப்பதும், இந்நாட்டிலுள்ள தமிழாசிரியருள்ளே ஆண்டினாற் பெரும்பாலும் முதுமை யுற்றிருப்பதுமே நுங்களை வரவேற்கும் பேற்றினை எனக்கு அளிப்பனவாயின. புலவர்கள் மேன்மையுறவும், தமிழ் மொழி தழைக்கவும், நாடு நலம் பெற்றோங்கவும் இத்தகைய மாநாடுகள் கூடுவது இன்றியமையாததென்பதை அனைவீரும் அறிவீர்கள். இக்கருத்தினைக் கொண்டே சில ஆண்டுகளின் முன் திருச்சிராப்பள்ளியிலுள்ள தமிழ்ப் பண்டிதர்கள் முன்னின்று மும்முறை 'தமிழ்ப் பண்டிதர் மாநாடு' நடாத்தினேம். தமிழ் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள தமிழ்ப் பண்டிதர்கள் அக்கூட்டங்கட்கு வந்து சிறப்பித்தார்கள். அப்பொழுது சென்னை வளர்நெறி அமைச்சராயிருந்த பெருந்திருவாளர் திவான்பகதூர் சர்.டி.என். சிவஞானம் பிள்ளை அவர்களும் ஓர் கூட்டத்திற்குத் தலைவராக வந்திருந்தனர். தமிழ் மக்கள் அனைவரும் இரங்குமாறு நம்மை நீத்தகன்ற திருமிக்க, பா.வே.மாணிக்க நாயக்கரவர்கள் அம்மாநாடுகட்கு உறுதுணையாக நின்று கடனாற்றினர். திருவாளர் தி.மு.நாராயணசாமி பிள்ளையவர்களும் அதற்கு ஆதரவாக இருந்தமையை இங்கே மகிழ்ச்சியுடன் குறிப்பிடுதல் வேண்டும். இப்பொழுது இத்தகைய கூட்டங்களில் நம்மை உட்படுத்தி இயக்கிக் கொண்டிருக்கிற ஒரு பேராற்றல் நம்மில் ஒருவராக உருக்கொண்டு கரந்தையம்பதியினின்று இங்கு வந்திருத்தலை எல்லீரும் அறிவீர்கள். அது நல்லுடம்புடன் பல்லாண்டு வாழ வேண்டுமென வாழ்த்துவதன்றி நாம் செய்யற்பாலது யாது? இப்பொழுது தமிழர் மகாநாட்டிற்கும், தமிழ் மாணவர் மகா நாட்டிற்கும் வாய்த்தமை போலவே தமிழ்ப் புலவர் மகாநாட்டிற்கும் இருபெருந்தக்கார்கள் திறப்பாளராகவும், அவைத் தலைவராகவும் வாய்த்திருப்பது நமது பெரும் பேறாகும். திறப்பாளராகிய திருவாளர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியாரவர்களின் புலமை மாண்பினை வியந்து புகழாதார் யாருமிரார் என்பது தேற்றம். தென்மொழி, வடமொழி என்னும் இருமொழிப் புலமையும் ஒருங்குடைய நமது பண்டிதமணியார் நாடொறும் அரிய நூல்களை ஆராய்ந்து நுண்பொருள் கண்டு அவ்வின்பத்தில் திளைத்தலையே பொழுதுபோக்காக் கொண்டுள்ள பெருவாழ்வுடையவர். தலைவராகிய திருவாளர் கா.நமச்சிவாயமுதலியாரவர் களைத் தமிழ் நாட்டிலுள்ள ஐயாட்டைச் சிறுவர் சிறுமியர் முதலாக முதுக்குறைவுடைய பெரியோர்காறும் யாவரும் அறிவர். அவர் "நல்லாசிரியர்க்கும்" ஆசிரியர்; பலதிறத்து மாணவர்கட்கும், ஆசிரியர்கட்கும், புலவர்கட்கும், நூல்கள் எழுதியும், பதிப்பித்தும் வெளியிடும் பேருதவியாளர்; சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ஆக்கம் தேடித் தருவதில் முனைந்து நிற்கும் மூதறிஞர்; தமிழ்ப் புலவர்கள் பெருமிதத்துடன் வாழ வேண்டுமென்பதற்கு எடுத்துகாட்டாக நிற்கும் பீடுடையார்; அவரைக் குறித்து இன்னும் கூறுவேனாயின், நீவிர் யார் கூறுதற்கு, யாம் அறியாமோ? என நீங்கள் என்மேற் சீற்றங் கொள்ளுதலுங் கூடும். புலவர் பெருமக்களே, நுங்கள் எல்லோரையும் மனமுவந்து வரவேற்கின்றேன்; வாழ்த்துகின்றேன். அங்ஙனமே, திறப்பாளரும், தலைவருமாகிய இரு பெரியார்களையும் வரவேற்கின்றேன்; வாழ்த்துகின்றேன். அவர்கள் தங்கள் பணியை உளமுவந்தேற்று ஆற்றுமாறு நுங்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன். நல்வரவு! நல்வரவு!! வாழ்க! வாழ்க!! வாழி தமிழ்மொழி வாழி தமிழகம் வாழி தமிழர்கள் வாழி புலவரே. 3.தஞ்சையில் நடைபெற்ற சைவர் மாநாட்டுத் தலைமைப் பேருரை சமயமும் தத்துவமும் சென்ற டிசம்பர்த் திங்கள் இறுதியில் தஞ்சையில் கூடிய சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் 28-ஆம் ஆண்டு விழாவில் தலைமை வகித்த திருவாளர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் நிகழ்த்திய தலைமை உரை. சமயம் அன்பர்களே! மன்பதைகள் உய்ந்திடுதல் வேண்டிக் கடவுளருள் பெற்ற பேரறிவுடைய பெருமக்கள் கண்டநெறியே சமயம் எனப்படுவது. ஆதலின் அது கடவுள் வகுத்தது எனலும் அமைவுடைத்தே. உலகிலே சமயம் என்பது இன்று நேற்று உண்டாயதன்று; பல்லாயிரம் ஆண்டுகளாகவே உளது. யாதானுமோர் ஒழுங்கிற் குட்பட்டொழுகும் மக்கள் வாழ்க்கை, என்று தொட்டுள்ளதோ அன்று தொட்டே சமயம் என்பதும் உளதாம். சமயத்தொடர்பு சிறிதும் இல்லாத நாட்டினரையோ கூட்டத்தினரையோ நாம் ஒரு பொழுதும் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. இடத்தானும் காலத்தானும் பல்வேறு குழுவினராகப் பிரிந்த மக்களின் அறிவு செயல்களின் வேறுபாட்டிற்கேற்பவும், நெறி வகுத்தோர்களின் அறிவு அகக்காட்சிகளுக்கேற்பவும் சமயம் பலவாயின. எல்லாச் சமயங்களும் மக்கள் உயர்நிலையடைய வேண்டுமென்னும் பெரு நோக்கமுடையனவே. அவை யாவற்றிற்கும் பொதுவான அறங்களும் ஒழுக்க நெறிகளும் உள்ளன. உலோகாயதம் தொடங்கிப் படிப் படியாக உயர்ந்துள்ள சமயங்கள் பலவும் பண்டைக்காலந் தொட்டே யுள்ளன. எந்தச் சமயத்தினரேனும் அந்தச் சமயநெறியில் ஒழுகுவரேல் மேன்மையுறுவது ஒருதலை. எனினும், சமயங்கள் யாவும் ஒரு நிகரனவே என்றாதல் ஒரு பெற்றியுடைய பயன் விளைப்பன என்றாதல் கூறுதல் பொருந்தாது. ஒரு மொழியின் கண் நெடுங்கணக்கு முதல் அறிவுநூல் இறுதியாக உள்ள அனைத்து நூலும் அம் மொழியாளர் பயிலுதற்குரியனவும், அவர்கட்கு இன்றியமையாதனவுமாம். எனினும், அறிவு நூல்களில் துறை போகிய ஒருவன் மீட்டும் நெடுங் கணக்கும் சிற்றிலக்கியமும் பயிலுதல் அவமாதல் போல, முடிந்த உண்மைகளைக் கூறும் சமய நெறி யுற்றோன் ஒருவன் மீட்டும் கீழ்ப்படியிலுள்ள சமயங்களை நோக்கிச் சேறல் அவமே யாகும். சைவம் திருநெறிச் செல்வர்காள்! உலகிலே பல்வேறு சமயங்கள் இருப்பினும் நாம் முதன்மையாகச் சைவத்தை ஆராயும் கடமைப் பாடுடையோம். சைவ சமயம் எப்பொழுது உண்டாயதெனக் காலவரையறைக் குட்படுத்துரைக்க வியலாத அத்துணைப் பழமையுடையதாக வுள்ளது. தமிழிலும் வடமொழியிலுமுள்ள தொன்னூல்களெல்லாம் சைவத்தின் தொன்மைக்கும் முதன்மைக்கும் சான்று பகர்கின்றன. பண்டைத் தமிழ்ச்சங்கத்துச் சான்றோர் பலரும் பல கடவுளரைக் கூற நேர்ந்த இடங்களில்எல்லாம் சிவபெருமானையே முதற்கண் வைத்துக் கூறுவாராயினர். அதுவே யன்றி இன்றியமையாக் கடவுள் தன்மையாகிய பிறப்பிறப்பின்மையைச் சிவபெருமானுக்கே உரிமையாக்கியும் கூறிஉள்ளனர். சிலப்பதிகார ஆசிரியர் “பிறவா யாக்கைப் பெரியோன்” (இந்திர:169) என்றதனால் பிறப்பின்மையும், சிவ சத்தியாகிய கொற்றவையைக் கூறுமிடத்தே, “விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டிருந்தருள் செய்குவாய்” (சிலம்பு. வேட்டுவவரி) எனச் சார்த்தி யுரைத்தமையால் இறப்பின்மையும் கறைமிடற்றிறைவர்க்கே உரியவாகக் குறித்தவாறு காண்க. இங்ஙனம் சிவபெருமானது முழுமுதன்மையைக் குறிப்பிடுஞ் சான்றுகள் மற்றும் எண்ணிறந்தனவுள்ளன. முதுகுடுமிப் பெருவழுதி என்பவன் பஃறுளியாறு கடல் கோட்படாதிருந்த பழங்காலத்தில் விளங்கிய ஓர் தமிழ் வேந்தன். அவனைப்பாடிய புலவர் ஒருவர் ‘முக்கட் செல்வர் கோயிலை வலஞ்செய்தற்கண் நின் குடை தாழ்க’ (புறம்: 6) எனப்பணித்தமையால் பல்லாயிரவாண்டுகளின் முன்பே சிவபிரானுக்குத் திருக்கோயிலிருந்த செய்தி வெளியாகின்றது. அகத்தியர், பதஞ்சலி, புலிக்காலர், உபமன்யு, மார்க்கண்டர் முதலிய முனிவர்கள் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்ற சீரடியார்களாவர். பண்டைக்காலத்து முனிவர்கள் பலருமே சிவவழிபாடுடையரென்பதனை வியாச பாரதத்து அநுசாசன பருவம் முதலியவற்றால் அறியலாகும். மான்தோல், புலித்தோல், சடைமுடி முதலிய சிவ சின்னங்களுடையராகவே அவர்கள் கூறப்படுதலுங்காண்க. சுருங்கக் கூறுமிடத்து இமயமுதற் குமரிகாறும் பரதகண்ட முழுதும் பண்டை நாளில் விளங்கிய வேந்தர்களும் முனிவர்களும் ஏனை மாந்தர்களும் முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபட்ட கடவுள் சிவபெருமானே; அவர்கள் ஒழுகிய நெறி சைவமே எனல் சாலும். அயல்நாடுகளிலும் சிவலிங்க வழிபாடு போல்வதொரு வழிபாடே இருந்ததென்பதற்கும் ஆதரவுகள் உள்ளன. உண்மை இவ்வாறாகவும் சிலர் நடுநிலை திறம்பிச் சிவனையும் சைவத்தையும் இகழ்ந்து நிரயத்துக்காளா கின்றனரே எனப் பரிந்தன்றோ “ கூவ லாமை குரைகட லாமையைக் கூவலோ டொக்கு மோகட லென்ப போல் பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால் தேவதேவன் சிவன்பெருந் தன்மையே”1 என்று திருநாவுக்கரசுகள் அருளியதூஉ மென்க. சமய நூல்கள் இனி, இங்ஙனம் பழம் பெருமை வாய்ந்த சைவசமயத்தின் இயல்புகளை யெல்லாம் நமக்குத் தெளிய அறிவுறுத்தும் தமிழ் நூல்கள் திருமந்திரமும், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞான போதம் முதலிய மெய்கண்ட நூல்கள் பதினான்குமாகும். பன்னிரு திருமுறையுள் திருமந்திர மொழிந்த முதற் பத்தும் இறைவனை வழுத்தும் துதிகளாகவும், பெரிய புராணம் திருத்தொண்டர்களின் வரலாறு கூறுவதாகவும் இருப்பினும், அவற்றுள்ளும் சைவ சமயத்தின் உண்மைகளே ஆண்டாண்டுப் பொதிந்து கிடக்கின்றன. எனவே, சைவர்கட்குப் பிரமாணமாக உள்ள நூல்கள் பன்னிரு திருமுறைகளும், பதினான்கு சித்தாந்த நூல்களுமாம். இவையன்றித் திருக்குறள் என்னும் தமிழ் மறையும் சைவர்கட்குப் பிரமாண நூலே யாகு மென்க.. வடமொழியி லுள்ள ஆரணவாகமங்கள் சைவமுதற் பிரமாணங்களேயாயினும் அவற்றின் ஞானகாண்டப் பொருளை மயக்கமற அறிவுறுத்துஞ் சிறப்பினாலும், சைவ சமயத்தை நிலைநாட்டிய பெருமையாலும், யாவரும் ஓதி உய்தி பெறுதற்குரிய எண்மையாலும், தமிழ் நூல்களே முதன்மையாகப் போற்றற் குரியனவாம். சைவம் உலகில் இன்று நின்று நிலவுவதற்குத் திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் தோன்றித் திருப்பதிகங்கள் பாடிப் புறச் சமயங்களை வென்று சிவபிரான் முழுமுதன்மையை நிலைநாட்டினமையே காரணம் என்பதனை அன்று என்பார் யாவர்? இனி, இத்தகைய சைவ சமயத்தின் உண்மைகள் யாவை யென்னின், அவற்றை இங்கு விரித்துரைக்கக் கருதிற்றிலேன். சைவ சமய உண்மை “ பதிபசு பாச மெனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாச மனாதி பதியினைச் சென்றணு காபசு பாசம் பதியணு கிற்பசு பாசநில் லாவே,”1 என்னும் திருமந்திரச் செய்யுள் சைவத்தின் கோட்பாடு இன்ன தென்பதைச் சுருக்கமாக அறிவுறுத்துகின்றது. இங்கே விரிவுரை யாற்ற வந்திருக்கும் பெரியோர்கள் சைவத்தின் உண்மைகள் பலவற்றை விளங்க எடுத்துரைப்பார்களாதலின், அவற்றைக் கேட்டுணர்ந்து பயனுறுவோமாக. சைவச் சார்புள்ள பொதுவகை யான சில கருத்துக்களை மட்டும் இங்கே நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சைவம் என்பது துவைதம் என்றும், சைவசித்தாந்திகள் துவைதிகள் என்றும், தாங்களே பழுத்த அத்துவைதிகள் என்றும் சிலர் கூறுவதுண்டு. சைவ சித்தாந்த நூல்களில் யாண்டும் அது துவைதம் என்று கூறப்படவில்லை. ‘அத்துவைதம்’ என்னும் சொற்கு ஏனையோர் கொண்ட பொருள்களில் வேறாயதொரு மெய்ப்பொருள் கண்டமையினாலேயே சிவஞான போத ஆசிரியர்க்கு மெய்கண்டார் என்னும் திருப்பெயர் உளதாயிற்றென்பதனை “பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாத னருள் மேவுநாள் எந்நாளோ”2 என்னும் தாயுமானவடிகள் திருவாக்கு விளக்குதலும் காண்க. சைவ சித்தாந்தத்தை அத்துவிதம் என்றலே அமையு மெனினும் விசிட்டாத்துவிதம் முதலியவற்றின் வேறுபாடு தோன்றச் சுத்தாத்துவிதம் என ஆன்றோர் வழங்குவராயின ரென்க. உலகிலுள்ள சமய வாதியரில் சிற்சிலர் கடவுள் அருவப் பொருளேயன்றி உருவப்பொருளன்றென்பர். அருவமும் உருவத்தின் நுண்மையே யென்பதனையும், விசும்பு போலும் சடப் பொருளும் அருவ மாதலின் அருவம் என்பதனாற் கடவுளுக்கு ஓர் ஏற்றமின் றென்பதனையும் அவர்கள் ஓர்ந்திடல் வேண்டும். அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்றுங் கடந்ததே கடவுளின் உண்மை நிலையென்றும், உயிர்கள்மேல் வைத்த கருணையால் அம் மூவகை வடிவையும் இறைவன் எடுத்தருள்வன் என்றும் சைவ சித்தாந்தம் கூறும். இறைவன் நினைத்ததொரு வடிவினை எடுத்துக் கொள்ளமாட்டாத குறை பாடுடையவனல்ல னென்பதனையும், அதனால் அவன் இன்னவாறு வந்திடான் என்று அவனது பேராற்றலுக்கு இழுக்குண்டாகக் கூறுதல் தகவன்றென்பதனையும் உணர்தல் வேண்டும். உருவ வழிபாடு இனி, சில சமயத்தினர் உருவ வழிபாடு கூடாதென்றும், அது தாழ்ந்த நிலையென்றும் கூறுவர். பிரமசமாசம் போன்ற கூட்டத் தினரும் அங்ஙனம் கூறுவர். மக்கட்கு உருவ வழிபாட்டினால் வரும் இழுக்கு இன்று என்பதனையும், அஃது இன்றியமையாச் சிறப்பின தென்பதனையும் விளக்கலுறின் இம் முகவுரை விரிந்து விடுமாகலின் வாளாவிடுகின்றேன். ஆனால், உருவ வழிபாடு கொள்ளற்பாலதா, தள்ளற்பாலதா என நாம் புதுவதாக ஆராய்ந்து முடிவுகட்ட வேண்டியதில்லை யென்பதனை நம்மவர்கள் கருத்தில் வைக்க வேண்டும். இதனை மிகமிக வற்புறுத்தியவர்கள் நம் சமய குரவர்கள். மெய்யுணர்வின் முற்றுப் பேறுடையராய், இறை வனால் வலிதின் விரும்பி ஆட்கொள்ளப் பெற்றோராய், அவனது எல்லையில்லாத பேரருளைப் பெற்று யாவர்களும் செய்ய வொண்ணாத செயல்களைச் செய்தோராய் விளங்கி நமது சமயத்தை நிலைநாட்டிய அருட்குரவர்கள் தங்கள் பதிகங்களால் உருவவழிபாட்டை வற்புறுத்தியதனோடு அமையாது தாங்களும் பதிகள் தோறுஞ் சென்று வழிபாடு செய்து போந்தன ரென்றால், அவர்கள் காட்டிய வழியே நாம் உய்யும் நெறியாகக் கடைப் பிடித்து ஒழுகலே நமது கடமையாம். அது தாழ்ந்த நிலையென்று நினைப்பது அறியாமையேயாம். சைவ விளக்கம் இனி, சைவம் என்றால் அஃது ஒரு சிறு கூட்டத்தாரின் குறுகிய கொள்கை யெனக் கருதும் பேரறிவாளரும் உளர். ஏனைச் சமயத்தினரிற் போலச் சைவ ரென்போரிலும் குறுகிய கொள்கையுடையார் இருத்தல் கூடும். எனினும், சைவ சமயம் குறுகிய கோட்பாட்ட தென்பது சிறிதும் பொருந்தாது. பிற சிறப்புக்கள் பற்றிச் சைவ சமயம் பாராட்டப்படாதொழியினும், வேறெச்சமயத்தினுங் காணப்படாத அத்துணை விரிந்த நோக்கமும் பரந்த கொள்கையும் உடைத்தாதல் பற்றியேனும், அது யாவரானும் பாராட்டப்பெறுதல் வேண்டும். எந்த உயிரையும் எப்பொழுதும் நிரயத்துக் கிடந்துழலுமாறு சைவ சமயம் விட்டுவிடுவதில்லை. வெவ்வேறு தகுதியுடைய மக்கள் அனைவர்க்கும் ஏற்றபடி முறைகளை வகுத்து எல்லோரையும் உயர் நெறியிற் செலுத்திப் பேரின்பமளிப்பது அதன் இயல்பாம். வேறு எச்சமயத்தையும் உலகிற்கு வேண்டாவென அது வெறுத்து ஒதுக்குவது மன்று. “ சந்தான கற்பகம்போல் அருளைக் காட்டத் தக்கநெறி இந்நெறியே காண்சன் மார்க்கம்”1 என்று தாயுமானவடிகளும் “ விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்தே எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்”2 என்று திருநாவுக்கரசுகளும் அருளிச் செய்தன இங்கே சிந்திக்கற் பாலன. மற்றும் சைவத்தின் பரந்த கொள்கையை வரலாற்று வாயிலாகப் பெரிய புராணம் தெளிவுபடுத்துதல் கண்கூடு. குல வேற்றுமை, நிலை வேற்றுமை, பால் வேற்றுமை என்பன ஆண்டவனை வழிபட்டுப் பேறு பெறுவதற்குத் தடையாவன அல்ல. எல்லோரும் வீடு பெறுதற்குரியர் என்பதே சைவத்தின் கொள்கை. இனி, சைவ சமயமானது பழந்தமிழ் மக்களுடைய கடவுள் கொள்கையின் வேறுபட்டதன்றாகலின் நாமும் அம்முறையே சமயத்தைப் பேணி ஒழுகுதல் கடனாகும். தமிழருடைய கொள்கை களைச் செவ்விதின் விளக்குவன தொல்காப்பியம், திருக்குறள் என்ற இரண்டு பெரு நூலுமாம். தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் மக்கள் வாழ்க்கை நிலையை இல்லறம் துறவறம் என இரண்டாக வகுத்துக் கொண்டு, இம்மை, மறுமை, வீடு என்னும் மும்மைப் பேறும் எய்துதற்குரிய வழிகளை மிகத் தெளிவாக விளக்கி யுள்ளார். கற்றுத் துறைபோய காதலனும் காதலியும் அன்பும், இன்சொல்லும், அடக்கமும், ஒழுக்கமும் மிக்காராய்த் தீவினைக் கஞ்சி, அறத்தாற்றி னீட்டிய பொருளால் விருந்தோம்பல், ஒப்புரவாற்றல், வறியார்க்கீதல் முதலிய அறங்களைச் செய்து வாழ்தல் இல்லற வாழ்க்கையாமென்றும், அதன் இம்மைப் பயன் இன்பமும் புகழுமாக, மறுமைப்பயன் துறக்கம் பெறுதலென்றும், இல்லறம் கடைபோய வழி எல்லா வுயிர்களிடத்தும், அருளுடைய ராய், வாய்மை, கொல்லாமை முதலிய விரத ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து, மனத் தூய்மையடைந்து, நிலையாமை கண்டு, இருவகைப் பற்றுமற்று, மெய்ந்நூற் பொருட்கள் கேட்டல் முதலியவற்றால் மெய்யுணர் வெய்தி, முக்குற்றங்களின் நீங்கி யிருத்தல் துறவற வாழ்க்கையா மென்றும், அதன் பயன் பிறவித் துன்பத்தினின்று நீங்கிப் பேராவியற்கையாகிய பேரின்பப் பெரு வாழ்வு பெறுத லென்றும் யாவரும் இனிதின் உணருமாறு கூறியிருக்கும் திறப்பாடு எத்துணையும் போற்றற்குரிய தொன்றாம். உயிர்கள் யாதேனும் ஒன்றனைப் பற்றியே நிற்கும் இயல்பின வாதலின் அவை அகப்பற்றும் புறப்பற்றுமாகிய பசு பாசப்பற்று நீங்குதற்கு ஆசிரியர் கூறியுள்ள உபாயம் பதியாகிய கடவுளைப் பற்றுதலேயாம் என்பது, “ பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு”1 என்னும் பொருளுரையால் விளக்கமாம். கடவுளைப் பற்று தலெனினும் அவனோதிய வீட்டு நெறியைப்பற்றி யொழுகுத லெனினும் இடையறாது அவனைச் சிந்தித்தலேயாம். எனவே, மனையின்கண் கூடி வாழ்வாராக, வனத்தின்கண் தனித்துவாழ் வாராக, இறைவனைப் பற்றி நின்று ஏனைப் பற்றுக்களின் நீங்கினோரே பிறவியறுத்து வீடு பெறுதற்குரியா ரென்பது ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். தொல்காப்பியனாரும் ஒவ்வொருவரும் தத்தம் ஒழுகலாற்றின் மேம்படுதலே வாகையா மென்று வாகைத் திணைக்கு இலக்கணங் கூறிவருமிடத்தே, “ கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும் இடையில் வண்புகழ்க் கொடைமை யானும் பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்”2 என்னும் பகுதியால் இல்லற ஒழுக்கத்தையும், “ அருளொடு புணர்ந்த அகற்சியானும் பொருளொடு புணர்ந்த பக்கத்தானும் காமம் நீத்த பாலி னானும்”3 என்னும் பகுதியால் துறவு, மெய்யுணர்வு, அவாவறுத்தல் களையும் குறிப்பிடுவாராயினர். இப்பகுதிகட்கு இளம்பூரணரும், நச்சினார்க் கினியரும் திருக்குறளையே மேற்கோளாகக் கொண்டு, இல்லற வியல்பு, துறவற வியல்புகளை விரித்துக் காட்டி உரை வகுத்திருத் தலும் காண்க. மற்றும், நச்சினார்க்கினியர் ‘காமம் நீத்தபாலி னானும்’ என்பதற்கு உரைகூறிய விடத்தே பால் என்றதனால் உலகியலுள் காமத்தினைக் கைவிட்ட பகுதியினையுங் கொள்க”என வுரைத்து, “ இளையர் முதியர் என இருபால் பற்றி விளையும் அறிவென்ன வேண்டா-இளையனாத் தன்றாதை காமம் நுகர்தற்குத் தான் காமம் ஒன்றாது நீத்தான் உளன்”1 என மேற்கோள் காட்டி யிருந்தலும் சிந்திக்கற் பாலது. இல்வாழ்க்கையராயினும், புறவாழ்க்கையராயினும் இறைவனைப் பற்றி நின்று, ஏனைப் பற்றுக்களின் நீங்கினாரே வீடு பெறுதற் குரியரெனும் இவ்வுண்மைக்குப் பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களின் வரலாறுகள் சிறந்த எடுத்துக்காட்டுக் களாம். திருமுறைகளும், சித்தாந்த நூல்களும் இவ்வுண்மையை விளக்குவனவே. ‘பற்றாங்கவையற்றீர்’ என்னும் திருவாசகத் திருப்பாட்டின்கண் (உயிருண்ணிப். பத்து:5) இக்கருத்து இனிது விளங்குதல் காண்க. பற்றற்குரியதனைப் பற்றித் துன்பத்திற் கேதுவாய பற்றுக்களின் நீங்கி நற்கதி யடைய விரும்புவீரெல்லாம் விரைந்து ஓடிவம்மின்! திருப்பெருந்துறை இறைவன் சீரைக் கற்றல் செய்ம்மின்! அவன் கழல்களைப் பேணி வழிபடுமின்! வழிபடும் அடியரோடுங் கூடுமின்! என்று வாதவூரடிகள் நம்மனோர்க் கருளிச் செய்யுந் திறன் இருந்தவாறென்னே! இங்ஙனம், தமிழ்நூற் கருத்தும், சைவ சித்தாந்த உண்மையும் வேறாகாமையை எண்ணும்பொழுது பண்டைத் தமிழ் மக்களின் வேறு சில உயரிய பண்புகளும், கொள்கைகளும் நம் நினைவிற்கு வரக்கூடியனவாகவுள்ளன. எந்தக் கடவுளரையோ சமயத்தையோ இகழ்தலென்பது பழைய தமிழரிடத்து ஒரு சிறிதும் காணப்படாத தொன்று. அத்தகைய சிறந்த பண்பினை நாமும் கொண்டு ஏனையோரும் கொள்ளுமாறு செய்யின் சமயப் பூசல் என்பது இல்லாது ஒழியும். திருமால் வழிபாடு சைவர்கட்குப் புறம்பாய தொன்றன்று. மற்றும், எச் சமயத்தினர் தங்கள் சமயமே உயர்ந்த தெனக் கூறினும் அன்னார்க்கு அவ்வுரிமை உண்டென்பதனை மதித்து நம் நிலையினின்று வழுவாதிருத்தலே நமது கடனாம். எந்தச் சமயத்தையோ, சமயக் கடவுளரையோ எள்ளி நகையாடல் என்பது புன்மையாம் என்பதனைக் கருத்திற் பதிப்போமாக. பிறப்பினால் உயர்வுதாழ்வு இல்லை இனி, தமிழருடைய மற்றொரு சிறந்த கொள்கை, பிறப்பினால் உயர்வு தாழ்வு இன்று என்பது. ‘ பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’1 ‘ நல்ல குலமென்றுந் தீயகுல மென்றுஞ் சொல்லள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின் ஒண்பொருள் ஒன்றோ, தவம், கல்வி, ஆள்வினை என்றிவற்றா னாகுங் குலம்’.2 என்பன தமிழருடைய அடிப்படையான கொள்கையைத் தெரிவிப்பன. பன்னிருதிருமுறைகளையும், எழுத்தெழுத்தாகச் சோதித்துப் பார்ப்பின் சைவ சமயத்தின் அடிப்பட்ட கொள்கையும் இதுவே யென்பது போதரும். சமய நெறியிலே சாதி குலம் என்னும் எண்ணம் உதித்தலே உய்தியில் குற்றமாம் என்பது சான்றோர் கருத்து. திருக்கோயில் நுழைவு இனி, இதனைப்பற்றி இங்கே பேசும்போது பெருங் கிளர்ச்சியுடன் நடைபெற்று வருகின்ற இக்கால நிகழ்ச்சியொன்று யாவருடைய நினைவிற்கும் வாராமற் போகாது. அதுகுறித்து ஒன்றுங் கூறாதுவிடின் அது படிறு, அல்லது கோழைமையின் பாற்படும். எக்குடியிற் பிறந்தார்க்கும் அவரது சமயக் கோயிலிற் சென்று ஆண்டவனை வழிபட உரிமை வேண்டுமென்பாரும், சிலர்க்கு அது கூடாதென்பாரும் சமயப் பற்றுடையவர்களே, சமயம் மாசின்றி நிலைபெற வேண்டுமென்னும் எண்ணம் உடையவர்களே. ஆதலின் ஒருவர் கருத்தை மற்றொருவர் பரிவுடன் ஆராய்ந்து பார்த்தல் முறையாகும். நான் இங்கே கூறக் கருதுவன நூன்முறையுடன் மாறுபடாத சில வரலாற்றுண்மைகளே. அவற்றை ஆய்ந்து துணிதல் இப்பேரவையோர் கடனும் ஏனை அறிஞர் கடனுமாம். திருக்கோயில்கள் இப்பொழுது காணப்படுதல் போன்றே பண்டை நாளில் இருந்தனவல்ல. முன்னாளில் மரங்களினடியிலும், மன்றங்களினும் நட்ட கந்துருவங்களில் கடவுளை வழிபட்டு வந்தனர். பின்பு, நாளடைவில் மண்டபங்களும், திருச்சுற்றுக்களும் பிறவும் சிறிது சிறிதாகப் பெருகிவர அவற்றை அமைக்கும் ஆகம விதிகளும் ஏற்படலாயின. இப்பொழுதும் ஓர் மரத்தடியில் வைக்கப்பெற்ற பிள்ளையார்க்குச் சிறு பந்தரும், மண்டபமும், கோயிலும் முறை முறையே உண்டாதலைக் காண்கின்றோம். இவ்வாறேதான் பண்டை நாளினும் கோயில்கள் யாவும் தோன்றின. யானை முதல் எறும்பு ஈறாகவுள்ள அனைத்துயிர்களும் கடவுளை வழிபட்ட செய்தியைப் புராணங்கள் புகல்கின்றனவே. இப்பொழுதுள்ளன போன்ற கோயில்களிலா அவை வழிபட்டன? கோயில்கள் பண்டை நாளில் எப்படியிருந்தன வேனும் இப்பொழுதுள்ள வழக்கத்திற்குமாறாக யாதுஞ் செய்தல் பொருந்தாதெனின், வழக்கம் என்பதும் யாண்டும் ஒரு பெற்றியாகக் காணப்படவில்லையே. தமிழகத்திலேயே ஒரு நாட்டுக் கோயிலிற்புகுதற்குரியரல்லார் மற்றொரு நாட்டுக் கோயிலிற் புகுதற்குரியராதலும் தமிழ் நாட்டின் எப்பகுதியிலும் கோயிலிற் புகலாகாதவர் வேறு நாட்டுக் கோயிலிற் புகுதற்குரியராதலும் காணப்படுதலின் நூல்களோ வழக்கமோ இன்னின்னார் கோயிலிற் புகத்தகாதவர் என அறுதி யிடுவதாகத் தோன்றவில்லை. சிலவகுப்பினர் யாண்டும் கோயிலிற் புகுவதில்லை யெனினும், ஒருசார் நூல்களும் அதற்காதரவாக விருப்பினும் நம் பெருமக்களுடைய உண்மைக் கருத்தினை ஊன்றியுணர்தலும், நமது சமயத்தின் ஆக்கத்தை நாடுதலும் நமக்குரிய கடனாம். சாதி குலம் என்பன உலகியல் நடை பேற்று முறையில் ஏற்பட்ட சில கட்டுப்பாடுகள் அல்லது சட்டதிட்டங்கள். சமயங்களோ உயிர்களின் கடைத்தேற்றத்திற்குரிய நெறிகள். உடல் பற்றுக் கோடாகத் தோன்றிய சாதி உயிரின் ஈடேற்றத்தைக் குறிக்கோளாகவுடைய சமயத்திற் புகுந்து சில மக்களை அதற்குரிய ரல்லாராக்குதல் முறையாகுமா? நம் சைவ சமய அருட்குரவர்கள் கோவில்தோறுஞ் சென்று இறைவனை வணங்கி உய்யுமாறு பதிகங்கடோறும் வற்புறுத்தருளியது. சிலரை மட்டுங் கருதியோ? சிவ நேயர்காள்! இவற்றை ஓர்ந்து பாருங்கள். வடமொழிக் கடலும், தென்மொழிக்கடலும் நிலை கண்டவரும், வேத ஆகமங் களின் விளைபொருளெல்லா முணர்ந்து சிவஞான போதத் திற்குத் திராவிடமாபாடியம் என்னும் ஒப்பற்ற பேருரை வகுத்த வருமாகிய மாதவச் சிவஞான முனிவர், “ சிவனெனும் மொழியைக் கொடிய சண்டாளன் செப்பிடின் அவனுடன் உறைக, அவனொடு கலந்து பேசுக, அவனோ(டு) அருகிருந் துண்ணுக வென்னும் உவமையில் சுருதிப்பொருடனை நம்பா ஊமரோ டுடன்பயில் கொடியோன் இவனெனக் கழித்தால் ஐயனே கதிவே றெனக்கிலை கலைசையாண்டகையே”1 என்றருளிய அருமைச் செய்யுளின் பொருளைச் சிந்தனை செய்யுங்கள். அருமறையின் துணிபு இதுவென்றும் அதனை நம்பாதவர் இத்தகையரென்றும், அவ் வன்கண்ணரொடு உடன்பயிலுதலே இறைவனுக்கு வெறுப்பினை விளைக்கும் பெருந் தீங்காமென்றும் அருளிச் செய்ததனை அறிந்து வைத்தும், அதனைப் புறக்கணித் தொதுக்கி மாறுபடப் பேசுவோரும் சைவராவரோ? அன்னார் அவரைப் போற்றுதலும் உண்மையாமோ? மற்றும் சமயத்தின் நிலைபேற்றை விரும்புவோர் புறச் சமயம் புகுவோர் புகுக, சைவ சித்தாந்தத் தேனமுதருந்துவோர் சிலரிருந்தாற்போதும் என அமைதல் சாலாது. பலர் இருப்பினன்றி இக்காலநிலையில் அத்தேனமுதைச் சிலரும் அருந்த முடியாத நிலை ஏற்படும் என்பது உறுதி; காலமென்னும் கடு நீர்ப்பெருக்கானது சமய நெறியுள்ளும் முன்னும் எத்தனையோ பல மாற்றங்கள் செய் துள்ளது; இனியும் செய்ய வல்லது என்பதனை உணர்ந்து அதற் கேற்பத் தலைசாய்த்துக் கொடுப்பதே அழிவினைத் தடுக்கும் சதுரப்பாடாகும். சமாஜப் பணி இனி, சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் பணிகள் சிலவற்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். சமாஜம் இதுவரை சமயத்திற்குப் பல தொண்டுகள் புரிந்துள்ளது என்பதில் ஐயமில்லை அதிலும் சில ஆண்டுகளாகச் சைவத் திருமுறைகள் யாவற்றையும் யாவரும் எளிய விலைக்கு வாங்கிப் படிக்குமாறு அழகுற அச்சிட்டு வருஞ் செயல் மிகவும் பாராட்டற் குரியது. இந் நன்முயற்சியில் ஈடுபட்டுழைக்கும் சமாஜ உறுப்பினர்கட்குச் சைவ உலகம் முழுதும் கடப்பாடுடையதாகும். இங்ஙனமே மெய்கண்ட நூல் களையும், பிற சைவநூல்களையும் அச்சிட்டு உதவும் பணியைச் சமாஜம் மேற்கொள்ளுமென்னுந் துணிபுடையேன். சமய வளர்ச்சியின் பொருட்டுச் சமாஜம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் எத்தனையோ பல உள்ளன. சைவ சமயத்தவருள் தங்கள் சமய உண்மைகளை அறிந்தவர்கள் எத்தனை பேர் உளர்? தங்கள் சமய நூல்கள் இன்னவென்றும், சமய குரவர் இன்னரென்றும் அறிந்தவர்களாவது 100-க்கு ஐந்துபேர் இருப்பரோ? இந்த நிலைமையில் இன்னும் எவ்வளவு காலத்திற்குச் சைவ மக்களை விட்டு வைப்பது? சைவரென்போர் யாவரும் தம் சமய உண்மைகளை ஓரளவேனும் தெரிந்து கொள்ள வேண்டிச் சமாஜம் உடனே மேற்கொள்ள வேண்டிய பணியாவது தகுதியுடைய சமயச் சொற்பொழிவாளர் ஒருவரேனும் ஊர் தோறுஞ் சென்று விரிவுரை யாற்றும்படி ஏற்பாடு செய்தலாகும். மற்றும் தமிழ்நாட்டின் இன்றியமையாத இடங்களிலேனும் ஆண்டுதோறும் சிலராவது சைவ சித்தாந்த நூல்களை முறையாகக் கேட்டுப் படிக்கும்படி தூண்டுதல் வேண்டும். சித்தாந்த வெளி யீட்டிலும் சைவ சமய உண்மைகளை அனைவரும் எளிதில் உணரும்படியாகத் தனித்தனியே விளக்கி எழுதிவரல் வேண்டும். மிக எண்மையுடைய இரண்டொரு பணியையே இங்கே குறிப் பிட்டேன். ஆனால் என் விருப்பம் உலக முழுதும் சைவ சமய மாண்பினை அறியும்படி செய்து ‘சேரவாரும் ஜெகத்தீரே’ என அழைக்க வேண்டுமென்பதாகும். சமாஜம் தன் பணியைச் செய்யு மாறு சைவர்கள் யாவரும் அதில் உறுப்பினராகச் சேர்ந்தும் பிறவாறும் உதவி புரியும் கடமைப்பாடுடையராவர். முடிவாகச் சைவ மக்கள் எல்லாருடைய நினைவுக்கும் நான் கொண்டுவர விரும்புகின்றவை சைவர்களெல்லோரும் தாழ்வெனும் தன்மை யுடையராதல் வேண்டும்; * ‘நின்று மிருந்துங் கிடந்து நடந்து நினை என்றுஞ் சிவன்றா ளிணை’1 என்றபடி எப்பொழுதும் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்தல் வேண்டும். தீமை யெல்லாவற்றையும் போக்கி நன்மை யனைத்தையும் தரவல்ல திருவைந்தெழுத்தை இடையறாது, உருப்பெற உன்னி ஓதுதல் வேண்டும்; சைவத்திற்கும் நமக்கும் வாழ்வளித்த சமய குரவர்களை மாறா அன்புடன் போற்றி ஒழுகுதல் வேண்டும்; இவற்றால் தாம் எய்தும் இன்பத்தை வைய முழுதும் எய்துக வெனச் சிந்தித்தல் வேண்டும் என்பனவே. நமச்சிவாய வாழ்க! நாதன்றாள் வாழ்க! 4. குழித்தலை கம்பர் செந்தமிழ்ச் சங்கத்தின் 11 - ஆம் ஆண்டு விழாத் தலைமைப் பேருரை தமிழின்பால் உள்ள அன்பு மிகுதியால் இங்கே கூடி இருக்கும் உடன்பிறப்பாளர்களே! நுங்களால் இக்கூட்டத்திற்குத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற யான் வழக்கம்போல் முன்னுரையாகச் சில பேச வேண்டுமென்றும், பேசுவேன் என்றும் நீங்கள் விரும்புவதும், எதிர்பார்ப்பதும் இயல்பே. இச் சங்கத்தின் பெயரையே பற்றுக் கோடாகக் கொண்டு எனக்குத் தோன்றுங் கருத்துக்கள் சிலவற்றை இப்பொழுது வெளியிட விரும்புகின்றேள். தமிழின் பெருமை இது "கம்பர் செந்தமிழ்ச் சங்கம்" எனப் பெயரிடப் பெற்று வழங்கி வருகிறது. செந்தமிழ் என்றால் என்னை? ஆன்றோர் பலரும் நம் தமிழ் மொழியின் பெயர் கூறும்பொழுது செந்தமிழ், பைந்தமிழ், இன்றமிழ், மென்றமிழ், வண்டமிழ், ஒண்டமிழ் என்று இங்ஙனம் சிறந்த அடைமொழிகளோடு சேர்த்துரைப்பது வழக்கமாக உள்ளது. அவ்வடை மொழிகளெல்லாம் தமிழின் சிற்சில சிறப்பியல்புகளைக் குறிப்பனவாகவுள்ள. செந்தமிழ் என்பது திருந்திய தமிழ் என்னும் பொருளுடையதாகும். தமிழ் மொழியானது நெடுங் காலத்தின் முன்பே திருத்தமான நிலையை அடைந்துள்ளது. திருத்தமாவது இலக்கண வரையறை செய்யப் பெற்றுப் பெரும்பாலும் அவ்விதிகளுக்கு இணங்கி நடைபெற்று வருவது. மொழியானது ஆதியில் வழக்கும் செய்யுளுமாக வளர்ச்சியுற்று வரும்பொழுது அவற்றின் சொற்கள் இடந் தோறும், நாள்தோறும் வடிவு திரிந்தும், பொருள் வேறுபட்டும் செல்வது இயல்பாகலின் அவற்றை அங்ஙனமே விட்டுவிடின் எண்ணிலாத மாற்றங்களுக்குட்பட்டு முன்பின் தொடர்பின்றி யொழியுமென்பது கருதி, அக்காலத்து நன்மக்களின் வழக்கினையும், செய்யுளையும் நன்கு ஆராய்ந்து பேரறிஞர்கள் இலக்கணம் வகுப்பாராயினர். இலக்கணம் உதாரணமாக ஒன்று காட்டுகின்றேன். யான், யாம் எனத் தன்மையிலும், தான், தாம் எனப் படர்க்கையிலும் இருப்பது போன்றே முன்னிலைப்பெயரும் நீன், நீம் எனஆதித் தமிழில் இருந்தனவாதல் வேண்டும். வேற்றுமையுருபேற்கும் பொழுது ஏனையவை போலவே நின்னை, நின்னால் என முதல்குறுகி, னகர வொற்றோடிருப்பது கொண்டும் அவற்றின் முதல்பெயர் 'நீன்' என்று தெளியலாகும். யாங்கள், தாங்கள் என்பவற்றின் முதல் நிலை யாம், தாம் என்பனவாதல் போல நீங்கள் என்பதன் முதல் நிலையும் நீம் என்றிருப்பது முறையன்றோ? அங்ஙனமாகவும், முதனூலாசிரியர் இலக்கணம் வகுத்த காலையில் சொற்களின் உருவம் சிதைந்து நீ, நீயிர் எனவே நன்மக்கள் வழக்கிலும், செய்யுளிலும் காணப்பட்டமையால் அவையே முன்னிலைப் பெயராகக் குறிக்கப்படலாயின. இவ்வாறாக ஆன்றோரால் வகுக்கப் பெற்ற இலக்கண வரம்புகளோடு பொருந்திச் சிதைவின்றி வழங்கிவரும் மொழியே செந்தமிழ் எனப்படுவதாகும். ஆதித் தமிழ் சிற்சில இடங்களில் நாடோறும் உருச்சிதைந்து வெவ்வேறு வகையாக மாறுதல் அடைய, அவை கன்னடம், தெலுங்கு முதலிய வெவ்வேறு திராவிட மொழிகளாயின. அம்மொழிகள் தாமும் காலத்துக்குக் காலம் பெரிதும் மாறுபாடெய்தி வந்து தம் முன்னையவுருவினை முற்றிலும் இழந்து நிற்கின்றன. செந்தமிழொன்றுமே எஞ்ஞான்றும் உருச்சிதையாது வழங்கி வருகின்றது. அதற்குக் காரணம் அதன் இலக்கண வரம்புடைமையே. அதனாற்றான், தமிழினைப் பாராட்டப்புக்க பெருமக்கள், " கண்ணுதற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ"1 என்றிங்ஙனம் இலக்கணத்தை விதந்தெடுத்துரைத்து, அதன் பெருமை தெரிப்பாராயினர். பண்டுதானே இலக்கணம் நன்கமையப் பெற்ற மொழி, பின் பெரிதும் சிதைவுறுவதற்கு இடனின்று. ஒரோவழிப் பழையன கழிதலும், புதியன புகுதலும் உள. அவற்றிற் கேற்பப் பின்வருஞ் சான்றோர்கள் வழிநூல் இயற்றிப் போதருவர். இலக்கியம் தமிழ் மொழியிலே பண்டையிலக்கியங்களாக விளங்குவன கடைச் சங்கப் புலவர்களியற்றிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலியன. அவை இற்றைக்கு ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முற்பட்டவையாகும். தொல்காப்பியம் என்னும் தமிழிலக்கணம் அவற்றிற்குப் பன்னூறு ஆண்டுகளின்முன் தோன்றியதென நிலைநாட்டப்பெறுகின்றது. அந்நூல்தான் வழக்குஞ் செய்யுளும் ஆராய்ந்து முந்து நூல்கண்டு இயற்றப் பெற்றதெனக் கூறப்படுகின்றது. தொல்காப்பியர் தமது நூலிற் பலவிடத்து முன்னையோர் துணிபினைக் குறிப்பிட்டுச் சொல்வதி லிருந்து அதற்கு முன்பே இலக்கண நூல் பல வழங்கினமை புலனாகின்றது. இவ்வாற்றால், பழந்தமிழ் செந்தமிழாகத் திருத்த முற்றதும் எத்தனையோ பல ஆயிர ஆண்டுகளின் முன்பு என்பது பெறப்படும். கம்பர்தம் பெருமை இனி, இச்சங்கத்தின் பெயரோடு தொடர்புற்றுள்ள கம்பர் என்னும் புலவர் பெருமானைப்பற்றித் தமிழ்நாட்டில் அறியாதாரிலர். கல்வியிற் பெரியர் என்றும், கவிச்சக்கரவர்த்தி என்றும் யாவரும் அவரைப் பாராட்டுவர். அவரது கவிபாடும் ஆற்றலைக் குறித்துக் "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்" என ஒரு பழமொழியும் வழங்கிவருகின்றது. அவரது இத்தகைய பெருமைக்குக் காரணம் அவரியற்றிய இராமாயணம் என்னும் ஒப்பற்ற பெருங்காப்பியமேயாகும். ஆனால், கம்பர் செந்தமிழ்ச் சங்கம் என்பதிலுள்ள செந்தமிழ் என்பது இராமாயணத்தைக் குறிப்பதாகக் கொள்ளுதற்கு இடனின்று. இச்சங்கத்தினர் பொதுவாகத் தமிழ் வளர்ச்சியே கருதி முயன்று வருதலின், ஈண்டுச் செந்தமிழ், என்பது தமிழ் மொழியையே குறிப்பதாகும். ஆயின், கம்பரது தமிழ் என்று கூறுதற்குரிய இயைபுதான் என்னையெனின், அவர் தமிழ் மொழியைப் பலபடியாகப் பாராட்டியிருத்தலானும், தாம் இயற்றிய காப்பியத்தின் மூலமாகத் தமிழன்னைக்கு உலவாப் புகழ்தேடித் தந்து பெருமையெய்தியவராகலானும் தமிழை அவருக்கு உரிமையாக்கிக் கம்பரது தமிழ் என்று கூறுதல் பெரிதும் பொருத்தமுடைத்தேயாம். முடியுடை வேந்தரும் சிவிகைசுமக்குமாறு வாழ்ந்த அவரது பெருமித வாழ்க்கையானது பொதுவாகக் கல்விக்கும், சிறப்பாகத் தமிழ்க் கல்விக்கும் பெருமையளிப்பதொன்றன்றோ? "நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான் பிறந்த இல்லாண்மை யாக்கிக் கொளல் (1026) என்றார் திருவள்ளுவர். தம் அறிவாலும், ஊக்கத்தாலும் தாம் பிறந்த குடியை உயரச்செய்து அதனை ஆளுதற்குரியரே நல்லாண்மையுடையராவர். பிறந்த குடி என்பது அறிவுடைய பெருமக்களுக்கு அவரவர் அறிவுக்கும், பெருமைக்கும் ஏற்ப ஒரு நாடாகவும், தேசமாகவும் இருக்கும். உலக முழுதுமாகவும் இருக்கும் அவற்றை விளங்கச் செய்தலால் அவர்கள் பெயரால் அவை வழங்குதற்குரியனவேயாம். இத்தேசத்தினைப் பரதகண்டம் என வழங்குவது இதுபற்றி யன்றோ? இரகுவின் வமிசம், பூருவின் மரபு, குருநாடு என்றிங்ஙனம் வழங்குவனவும் காண்க. அவ்வாறே நாமும் நம் தமிழ்நாட்டைக் கரிகாலன் நாடு, நெடுஞ்செழியன் நாடு, செங்குட்டுவன் நாடு என வழங்குவோமாக; அதனைப் பார்க்கிலும், தொல்காப்பியர் நாடு, திருவள்ளுவர் நாடு, கம்பர் நாடு என்று இங்ஙனம் கூறுதல் சிறப்புடைத்தாம். அங்ஙனமே தமிழையும் வள்ளுவர் தமிழ், நக்கீரர் தமிழ், கம்பர் தமிழ், சேக்கிழார் தமிழ், சம்பந்தர் தமிழ், சடகோபர் தமிழ் என்று கூறிப்பாராட்டுவோமாக. இனி, கம்பர் தம் தாய் மொழியாகிய தமிழை எங்ஙனம் பாராட்டியுள்ளாரென்பதை நோக்குங்கள். அவர் அகத்தியனாரைக் குறிக்குமிடங்களில் ‘தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்"1 என்றும், "நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்"2 என்றும், "என்றுமுள தென்றழிழியம்பி யிசை கொண்டான்"3 என்றும் கூறுகின்றார். "செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்றமிழ்"4 என்று தமிழின் இனிமையையும் திருந்திய தன்மையையும் பாராட்டுகின்றார் கோதாவிரியாற்றையும், பம்பைப் பொய்கையையும், இராமாயணத்தில் வருணிக்குமிடங்களில் செந்தமிழ்ச் சான்றோரியற்றிய கவிதைகளை உவமையாகக் கூறுகின்றார். சீதாபிராட்டியையும் "செஞ்சொற் கவியின்பம்"5 என்று கூறி மகிழ்கின்றார். இவை போல்வனவற்றி லிருந்து, தமிழின் சுவையும், சான்றோர் கவியும் அவருள்ளத்தை எவ்வளவு கொள்ளை கொண்டுவிட்டன என்பது புலனாகின்றது. இப்பொழுதும் பலர் தமிழைப் பாராட்டுகின்றனர். ஆனால் அவர்கள் தமிழ் நூற்களைக் கற்பதில்லை; அவற்றின் பொருளை அறிவதில்லை; சுவையை நுகர்வதில்லை; தமிழே உயர்ந்தது என்கின்றனர். அங்ஙனம் கூற வேண்டாம் என்பது என் கருத்தன்று. அவ்வளவில் அவர்கள் நின்று விடலாகாதென்றே கூறுகின்றேன். கம்பர் தமிழன்பு அவரைக் கவிச்சக்கரவர்த்தியாக்கிற்று; ஆக்கிய பின் அவர் மேலும் மேலும் தமிழன்னையிடத்து அன்பு பெருகு வாராயினர். தமிழ் நாட்டினிடத்தும் அவருக்குள்ள பற்று அளவிடற் பாலதன்று. கோசல நாட்டைக் கூறும்பொழுது "காவிரிநாடன்ன கழனிநாடு"1 என்றும், கங்கையாற்றைக் கூறும் பொழுது "தெய்வப் பொன்னியே பொருவுங்கங்கை"2 என்றும் உரைப்பன போல்வன அவரது நாட்டின் பற்றை நன்கு விளக்கு கின்றன. மற்றும் அவர் இராமாயணத்திற்குச் சிறப்பளிப்பன தமிழ் மக்களின் சீரிய வழக்கவொழுக்கங்களையும், தமிழ் வேந்தர்களின் நீதி முதலியவற்றையும் உள்ளத்திற் கொண்டு, அவற்றிற்கேற்ப இராமாயணத்து வரும் நன் மக்களின் பண்புகளை அமைத்துச் செல்வதுபோல்வனவாம். மகளிர்க்கு உயிரினும் நாண் சிறந்தது என்றும், நாணினும் கற்புச் சிறந்தது என்றும் தொல்காப்பியம் கூறுகின்றது.3 அத்தகைய தமிழ் நங்கையரின் உயரிய கற்பொழுக்கத்தைப் பற்றிய உணர்ச்சியால் உந்தப்பெற்றே அவர் எவ்விடத்தும் மாதர்களின் கற்புக்கு இழுக்குண்டாகாவாறு பாதுகாத்தும், பெருமைப்படுத்தியும் கூறிச் செல்கின்றனர். நாகரிக மக்களின் உள்ளப்பான்மையைத் தெள்ளிதின் விளக்குவதில் கம்பர் நிகரற்றவர். இவ்வுலகிலே தனி முடி தரித்தரசாளும் இன்பத்தினும் வானுலகிற் கற்பகக் காநிழலில் எய்தும் இன்பத்தினும், கம்பராமாயணம் கற்பதனால் எய்தும் இன்பம் பெரிதென4 ஒருவர் கூறியது சிலருக்கேனும் உண்மையாயிருக்கு மென்பதில் ஐயமில்லை. உலகிலே பல மொழிகளிலுள்ள உயர்ந்த காப்பியங்களைக் கற்றுணர்ந்த அறிஞர் சிலர் கம்பராமாயணமே சுவையில் பிறவற்றின் விஞ்சியுள்ளது எனப் புகன்றுள்ளனர். இவ்வாற்றால், கம்பர் தமது காப்பியத்தால் தமிழுக்குப் பெருமை தந்துளர் என்பதில் இழுக்கென்னை? இங்ஙனம் கூறுவதிலிருந்து கம்பருடைய தத்துவங்கள் எல்லாம் யாவரும் ஒத்துக் கொள்ள கூடியனவென்று நான் புகல்வதாக நினைத்தலாகாது. யாதொரு நூலின் கொள்கையும் யாவர்க்கும் முற்றிலும் உடன்பாடாகு மென்று கூறவியலாது. இராம காதையே புனைந்துரையாயினும் ஆகுக. அதன் கோட்பாடுகள் பல பொருத்தமற்றவையாயினும் ஆகுக. ஒன்பான் சுவையும் ஒருங்கு பெய்து வைத்த கொள்கலம் போன்ற கம்பராமாயணத்தைக் கற்றுக் கவிச் சுவையை நுகர்ந்து இன்புறுதலும், அதில் வந்துள்ள நன்மக்களின் பண்புகளை யறிந்து பயனெய்துதலும் யாவர்க்கும் கடனாம். உழவுத்தொழில் கம்பர், தமக்குமுன்பிருந்த சங்கத்துச் சான்றோர்களிடத்திலும், திருவள்ளுவர் முதலானவர்களிடத்திலும் அளவற்ற அன்பும் மதிப்பும் வைத்துள்ளவர். தெய்வப்புலமைத் திருவள்ளுவர் ஒப்பற்ற தமது திருமறையின் கண் உழவு என்று ஓர் அதிகாரம் வகுத்துள்ளார். அதில் நாட்டிற்கு உழவுத் தொழிலின் இன்றிமையாமையை நன்கு உணர்ந்து அத்தொழிலை மற்றெல்லாத் தொழிலினும் சிறந்தது என்றும், உழவுத் தொழில் செய்வார் ஏனையோரையெல்லாம் புரக்கும் ஆற்றலுடையவர்களாக இருத்தலின் பெருமதிப்பிற்கு உரியவரென்றும் கூறியிருத்தலைக் கற்றோர் யாவரும் அறிவர். கம்ப நாடர் திருக்குறளிலுள்ள எத்தனையோ பல பாக்களைத் தமது காப்பியத்தில் எடுத்து அமைத்துப் பாராட்டியிருப்பதுடன் திருவள்ளுவர் கொள்கையைப் பின்பற்றி உழவின் மேன்மை புலப்பட 'ஏரெழுபது' என்ற ஒரு நூலும் இயற்றினர். சங்கப் புலவர்களும் இத்தொழிலின் மேன்மையை நன்கு அறிந்திருந்தார்கள். சோழ நாட்டிலே ஒரு காலத்தில் சிலர் அரசனுக்கு நிலவரி கொடுக்க முடியாத நிலைமையிலிருந்தனர். அப்பொழுது நிலவுரிமை யுடையராயிருந்த ஒரு புலவர் அரசனை அணுகி "வேந்தே! நினது குடையானது வெயிலை மறைப்பதற்குக் கொண்டன்று, வருத்த முற்ற குடிகளின் துன்பத்தை மாற்றுவதற்கு அடையாளமாக எடுத்ததாகும். உன் படை வீரர்கள் மாற்றாரை வென்று உனக்குத் தருகின்ற வெற்றியும் உழுகின்ற கலப்பை சென்ற படைச்சாலின் பக்கத்திலே பயிர்கள் நன்றாக விளைந்ததன் பயனேயாகும். ஆதலால், நீ உழுதொழில் செய்வாருடைய துன்பத்தை நீக்கி அவர்கள் குடியைப் பாதுகாப்பாயாயின் பகைவர்களெல்லாம் நின்னடியின்கீழ் வணங்கி நிற்பர்" (புறம்:35) என்று கூறினர். அதனால் அவ்வரசன் ஆறில் ஒன்றாகத் தான் வாங்கிக் கொண்டிருந்த நியாயமான வரியையும் அப்போது வாங்காது விட்டுவிட்டான். இங்ஙனம் எத்தனையோ பல சான்றுகள் சொல்லக்கூடும். இதிலிருந்து ஓர் அரசனுடைய அரசியல் நன்கு நடப்பதற்கே உழுதொழில் செய்யும் குடிகள் நலனுடன் வாழ்தல் இன்றியமையாததென்பது பெறப்படும். இக்காலத்தை நோக்குங்கள். நிலத்தின் இலாபத்தில் செம்பாதி அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரியாக விதிக்கப் பெற்றுள்ளது. உண்மையை ஆராய்ந்தால் இப்பொழுது நிலவரி பாதியளவில் நிற்கவில்லை. குடிகள் வரி கொடுக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக் கின்றனர். இது குறித்து எவ்வளவு முறையிட்டாலும், அரசாங்கத்தார் செவியில் ஏறுவதில்லை. குடிகள் படுகின்ற இந்தத் துன்பம் அரசியலில் பெரிய குழப்பம் உண்டாவதற்கு ஏதுவாகவும் கூடும் என்பதனை ஆட்சியை நடாத்துபவர்கள் உணர்தல் வேண்டும். தேச ஆட்சியில் பொறுப்புள்ள பதவிகளை வகிக்கும் பெரு மக்களெல்லாம் நம் பழ நூல்களைக் கற்றுணர்ந்து அவற்றிற் கேற்ப நடக்க வேண்டுமென்னும் உணர்ச்சியுடையராகுங் காலமே நாட்டிற்கு நற்காலமாகும். சங்கங்கள் அன்பர்களே! இதுகாறும் செந்தமிழ் இன்னது என்பதையும், கம்பருக்கும் தமிழுக்கும் உள்ள இயைபினையும் கம்பருடைய பெருமையையும் ஒருவாறு கூறினேன். இனி, சங்கம் என்பது குறித்துச் சில சொற்கள் சொல்ல விரும்புகின்றேன். பண்டை நாளிலே சமயத்தைப் பரப்புவதற்கும் மொழியை வளர்ப்பதற்கும் சங்கங்களிருந்தன. தமிழை வளர்ப்பதற் கென்று முன்பு மூன்று சங்கங்கள் நடைபெற்ற செய்தியைக் கேட்டிருக்கின்றோம். அதனாலேயே நம் தமிழானது சங்கத்தமிழ் என்றும் வழங்குகிறது. தமிழ்மொழி, பழைய நாளிலே தான் மிக உயரிய நிலையில் இருந்தது. பின்பு காலத்துக்குக் காலம் அதன் பொலிவு சிறிது குறைந்தே வந்தது. பாட்டுக்களின் உண்மைத் தன்மை குறைந்து எல்லாவற்றையும் உயர்வு நவிற்சியாகப் புனைந்துரைக்கும் பொய்ம்மை மிக்கது. நம் தமிழ் வளம்பெற வேண்டுமானால் இடைக்காலத்தே வேறு சிலரால் நேர்ந்த குறைகளை ஒழித்து, பழம் புலவர்களின் சிறந்த நெறியையே கடைப்பிடித்தல் வேண்டும். அதற்குப் பழைய இலக்கிய இலக்கணங்களின் ஆராய்ச்சி இன்றியமையாதது. சில ஆண்டுகளாக 'வித்துவான்' தேர்வு முதலிய குறித்துத் 'தொல்காப்பியப் பயிற்சியும் சங்க இலக்கியங்களின் பயிற்சியும் ஏற்பட்டு வருதல் மகிழ்ச்சிக்குரியதே யாகும். எனினும் ஊர்தோறும் சங்கங்கள் நிறுவி, தமிழை வளர்த்தற்கு யாவரும் முயலுதல் வேண்டும். தமிழ் ஆராய்ச்சியைக் குறித்து இரண்டொரு சொற்கள் சொல்ல விரும்புகின்றேன். "காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே"1 என ஆன்றோர் விதித்துள்ளார். உண்மைப் பொருள் காண வேண்டுமென்பதே ஆராய்ச்சி செய்வாரின் நோக்கமாக இருக்க வேண்டும். இதனோடு, இவ்வாராய்ச்சியால் மக்களுக்கு நன்மை விளையுமா தீமைவிளையுமா என்றும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தமிழாராய்ச்சி செய்வோர்கள் தமிழைப் புறம் பழித்தும் தமிழ் மக்களை இழிவுபடுத்தியும் காட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் ஆராய்ந்தால் அது மிகவும் கொடுமையாகும் நம் முன்னோர்களைப் பற்றியும் மொழியைப் பற்றியும் பெருமிதமான உணர்ச்சியுண்டாகும் படியாகப் பேசுவதும், எழுதுவதுமே உண்மைத் தமிழன்பர்களின் செய்கையாதல் வேண்டும். 5. தென்காசி, திருவள்ளுவர் கழகத்தின் 12 - ஆம் ஆண்டுவிழாத் தலைமைப்பேருரை தெய்வப்புலமைத் திருவள்ளுவர் பெயர்கொண்டு திகழும் இக்கழகத்தின் 12-ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடுதற் பொருட்டு இவண் குழுமியிருக்கும் செந்தமிழ் அன்பர்களே! நுங்களால் இப்பேரவைக்குத் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற யான் முன்னுரையாகச் சில பேசவேண்டும் என்று விரும்புவது இயல்பே. யான் ஒருமணியளவு பேச வேண்டுமென்று இவ்விழாவின் நிகழ்ச்சி முறையில் விதித்தும் உள்ளீர்கள். ஆதலின், இக்கழகம் எவரது பெயரைத் தலைமேற் கொண்டுள்ளதோ, அப்பெரியாரைப் பற்றியே இப்பொழுது யான் சில பேசுவது பொருத்தமாக விருக்கும் என நினைந்து எனது முன்னுரையைத் தொடங்குகின்றேன். "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" (423) என்னும் திருக்குறளின் கருத்தை அறிந்துள்ள நீங்கள் யான் கூறுவனவற்றையும் ஆராய்ந்து மெய்ம்மை காண்டல் கடனாகும். செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், இன்றமிழ், மென்றமிழ் என்றிங்ஙனம் புலவர் பலராலும் சிறப்பித்தோதப் பெறும் நம் அருமைத் தாய் மொழியாகிய தமிழில் உள்ள திருக்குறள் என்னும் தெய்வத் திருமறையை அருளிய பெரியார் திருவள்ளுவர் என்பது பலரும் அறிந்ததொன்றாகும். திருவள்ளுவர் திருக்குறள் இயற்றினவர் என்பது ஒன்றன்றி, அவரது மெய்வரலாறு பிறிதொன்றும் தெரிந்திலது. திருவள்ளுவருடைய வாழ்க்கை வரலாறாகப் புனைந்துரைக்கப்பட்ட சில கதைகளே வழங்கி வருகின்றன. திருவள்ளுவர் பகவன் என்னும் முனிவனுக்கும், ஆதி என்னும், புலைச்சிக்கும் பிறந்த மக்கள் எழுவரில் ஒருவர் என்றும், திருமயிலையில் வளர்ந்தவரென்றும், வாசுகி என்னும் மாதினை மணந்து இல்லறம் நடாத்தினர் என்றும், நெய்தற்றொழில் புரிந்து வந்தாரென்றும், ஏலேலசிங்கரென்னும் பெருஞ் செல்வர்க்கு ஆசிரியராய்த் திகழ்ந்தார் என்றும், அவர் திருக்குறள் இயற்றி மதுரைச் சங்கத்தில் அரங்கேற்றத் தொடங்கியபொழுது சங்கப் பலகையானது திருக்குறளுக்கே இடந்தந்து ஏனைப் புலவர்களுக்கு இடந்தரவில்லையென்றும், திருக்குறள் அரங்கேறியபின் சங்கம் அழிந்து விட்டதென்றும், மற்றும் பலபலவாறும் கூறப்படுகின்றன. அவையெல்லாம் முழு உண்மைகள் என்றோ, அவற்றிற் சிறிதும் உண்மையில்லை யென்றோ அறுதியிட்டுரைக்க இயலாது. திருவள்ளுவரை உள்ளிட்ட ஏழு பிள்ளைகளின் வரலாற்றை யுரைப்பது கபிலரகவல் என வழங்கும் ஒரு சிறு நூலேயாகும். அந்நூல் சங்கப் புலவராகிய கபிலர் பாடியதென்றே சில பேரறிஞர்கள் வாதாடினும் பெரும்பாலார்க்கு அஃது உடன்பாடன்று. அது சங்கப் புலவர் வாக்கென்பதற்குச் சிறிதும் இடமில்லையென்பதே என்கருத்தும் ஆகும். ஞானாமிர்தம் என்னும் சைவசித்தாந்த நூலின் ஒரு செய்யுளில் உள்ள, " யாளி, கூவற் றூண்டு மாதப் புலைச்சி காதற் சரணி யாகி மேதினி இன்னிசை யெழுவர்ப் பயந்தோ ளீண்டே"1 என்னும் பகுதி, யாளி என்பவனால் கிணற்றில் வீழ்த்தப்பட்ட புலைச்சியொருத்தி பின் அவனுக்கே மனைவியாகி ஏழு மக்களைப் பெற்றனள் என்பதொரு வரலாற்றைத் தெரிவிக்கின்றது. அதன் உரையானது இதனைச் சிறிது விரித்துரைக்கின்றது. யாளியை யாளிதத்தன் என்றும், எழுவரைக் கபிலர் முதலிய பிள்ளைகள் எழுவர் என்றும், புலைச்சியை வடதேயத்துப் பார்ப்பனனொருவன் எடுத்து வளர்த்துப் பின் அவனுக்கே கொடுக்கப்பட்டவள் என்றும் அவ்வுரை கூறுகின்றது. திருவள்ளுவர் காலத்தை நோக்க இதுவும் மிகப் பிற்பட்ட காலத்தது ஆகலானும், கபிலர் முதலிய எழுவரும் பிறப்பினால் ஒருவரோடொருவர் தொடர் புடையரல்லரென்றே பழைய நூல்களாற் கருதப்படுதலானும் இதனையும் உறுதியுடைய சான்றெனக் கொள்ளலாகாது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்விளங்கிய ஒரு பெரியாரது உண்மை வரலாற்றை அறியவேண்டின் அவரது வாய்மொழியாகிய அகச்சான்றுகளும் அல்லது அவர் காலத்து விளங்கிய ஏனையோர் அவரைப்பற்றிக் கூறியுள்ளனவும் துணை செய்தல் வேண்டும். அவ்விரண்டும் இல்லாவிடினும் அக்காலத் தோடு ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்புற்று வருகின்ற சான்று களேனும் இருத்தல் வேண்டும். அவ்வாறின்றி இருநூறு ஆண்டு களின் முன்னிருந்த ஒருவர் கூறியது அவ்வரலாற்றுக்கு ஆதரவாக மாட்டாது. அவர் கூற்றுக்கு முற்பட்ட தொடர்பு இல்லாவிடில் அதற்கும், இப்பொழுது நாமாக ஒன்றுபடைத்து மொழிதற்கும் வேற்றுமையில்லை. எனினும் முற்பட வழங்குகின்ற கதைகள் இயற்கைக்கு மாறில்லாதனவாய், நலம் பயக்கும் சில உண்மை களை அறிவுறுப்பனவாய் இருப்பின், அவை உண்மையெனத் துணியப் படாவிடினும் வேறு உண்மை காணும் வரை அவற்றைத் தழுவிக் கொள்ளுவதில் இழுக்கொன்றும் இல்லை. எனவே, திருவள்ளுவர் ஓர் நங்கையை மணந்து இல்லறம் நடத்தினர் என்பதனையும், அவர் ஆடை நெய்தலாகிய தொழிலை மேற் கொண்டு எளிமையுடன் வாழ்ந்துவந்தனரென்ப தனையும், இவைபோல்வன சிலவற்றையும் நாம் மறுக்க வேண்டியதில்லை. நல்லிசைப் புலமை வாய்ந்த கபிலர், திருவள்ளுவர், ஒளவை என்பவர்களும், அதிகமான் முதலியோரும் ஒரு பார்ப்பனனுக்கும் புலைச்சிக்கும் பிறந்த மக்கள் என்பது ஒரு தவறான கொள்கையின் மேல் புனைந்துரைக்கப்பட்டதேயாகல் வேண்டும். இனி, திருவள்ளுவ மாலையில் உள்ள " உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தான் உத்தர மாமதுரைக் கச்சென்ப - இப்பக்கம் மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப் போதார் புனற்கூடற் கச்சு"1 என்னும் வெண்பாவில், 'செந்நாப் போதார் கூடற்கு அச்சு' என்று கூறப்பட்டிருத்தல் கொண்டு திருவள்ளுவர் பிறப்பிடம் மதுரையாதல் வேண்டும் என்று சில அறிஞர் கருதுகின்றனர். மற்றும், அவ்வெண்பாவில் உள்ள 'மறுவில்' என்பதற்கு 'மருவு' எனப் பாட பேதங்கொண்டு, 'மாதாநுபங்கி' என்பது வள்ளுவருடைய மனைவியார் பெயராகல் வேண்டும் என்றும் கருதுகின்றனர். தெய்வப் புலவர், "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார் கொல், மற்றையவர்கள் தவம்"2 என இல்லறத்தாரைக் கழறிக் கூறியிருந்தும், அவரது வாழ்க்கை வரலாறாக வழங்கும் சில கதைகள் பற்றுக்கோடாகவே அவரை இல்லறத்தில் நின்றோராகப் பலரும் கொள்கின்றனர். அக்கதைகளிலுள்ள செய்திகள் ஒரோவொன்றாக மறுக்கப்படின், அவர் இல்லறத்தில் நின்றார் என்பதும் புனைந்துரையாய் ஒழியும். அவர் மனை வாழ்க்கையி லிருந்தே பற்றற்ற பெரியாராவர் என்பது உறுதியாயினும், தமிழோசை தழுவாத நீண்ட வடசொற்றொடர் அக்காலத்தில் தமிழ்க்குடி மகளிர்க்குப் பெயராக அமைந்திருந்ததென்பது ஐயுறற்பாலதே. யாழ்ப்பாணப் புலவராகிய முத்துத்தம்பிப் பிள்ளையவர்கள் தாமியற்றிய 'அபிதானகோசம்' என்னும் நூலில் இலங்கையை வெற்றி கொண்டு இற்றைக்கு இரண்டாயிரத்தறுபது வருடங் களுக்கு முன்னர் அரசு புரிந்த சோழமண்டலத்தானாகிய ஏலேல சிங்கனுடைய பௌத்திர பௌத்திரனுக்குப் பௌத்திரனாகிய ஏலேலசிங்கன் என்னும் பிரபுவுக்குத் திருவள்ளுவர் நண்பினர்" என்று குறிப்பிட்டு, வேறு சிலவும் கூறியுள்ளார். இஃதும் ஆராய்ச்சிக்குரியதே. இனி, வள்ளுவர் என்ற பெயர்க்கு வண்மையுடையோர் என்று சிலர் பொருள் கூறுகின்றனர். அது, வள்ளுவக்குடியில் பிறந்தவர் அத்துணை மேன்மையுடையராதல் சாலாது என்னும் கருத்துடன் கூறப்படுவதேயாகும். பழைய இலக்கியங்களில் வண்மையுடையோன் என்ற பொருளில் வள்ளல், வள்ளியோன் என்னும் பெயர்கள் வழங்குகின்றன. வள்ளுவன் என்பது குடிப் பெயராகவே வழங்குகின்றது. வள்ளுவக்குடி என்பது தமிழ் நாட்டிலுள்ள பழங்குடிகளில் ஒன்றாகும். பழம் பெருங் காப்பியமாகிய மணிமேகலை முதலியவற்றில் 'முதுகுடி' என்று கூறப்படுவது அதன் பழைமைக்கு உறு சான்றாகும். வள்ளுவர் என்பார் அரசகாரியங்களை நகரமாந்தர்க்கு அறிவிக்கும் கருமத் தலைமையுடையார் என்றும், அன்னோர் தானைகள்சூழ யானை மீதிவர்ந்து சென்று முரசறைந்து தெரிவிப்பர் என்றும் தொன்னூல் களால் அறியப்படுகின்றது. பெருங்கதை என்ற பழங்காப்பியத்தில், தமிழ் வழக்கை யொட்டி, வள்ளுவரைப் பற்றிய செய்திகள் பலவிடத்துக் கூறப்பட்டுள்ளன. " அரச கொற்றத் தருங்கடம் பூண்ட முரசெறி வள்ளுவ முதியனைத் தரீஇ"1 என்றும், " திருநாள் படைநாள் கடிநாள் என்றிப் பெருநாட் கல்லது பிறநாட் கறையாச் செல்வச் சேனை வள்ளுவ முதுமகன்"2 என்றும் அதிற் கூறப்படுதல் காண்க. அரசருடைய பிறந்த நாள், படையெழுச்சி நாள், மணநாள் என்னும் இப்பெரு நாட்களிலேயே அச்செய்திகளை வள்ளுவர் முரசெறிந்து தெரிவிப்பர் என்று கூறியிருப்பது, பொதுவாகப் பறையறையும் ஏனோரின் இவருக்குள்ள வேறுபாட்டையும், இவர்தம் மதிப்பையும் நன்கு புலப்படுத்து கின்றது. இக்குடியினர் பண்டு தொட்டே நிமித்தம் அல்லது சோதிடம் எனப்படும் குறிநூலில் வல்லுநராக இருந்து வருகின்றனர். இவ்வாற்றால் வள்ளுவக்குடி என்பது அறிவு முதலிய தகுதியமைந்த ஒரு முதுகுடி என்பது பெறப்படும். இக்குடியிற் பிறந்து சிறந்தமையாற்றான் நம் தெய்வப்புலவர்க்குத் திருவள்ளுவர் என்னும் பெயர் உளதாயிற்றென்பதில் எத்துணையும் ஐயமில்லை. திருவள்ளுவமாலை என்னும் பெயரால் வழங்குகின்ற வெண்பாக் களின் தொகுதி திருக்குறளுக்குச் சிறப்புப்பாயிரம் போல்வதொன் றாகும். சிறப்புப்பாயிர இலக்கணங்கள் யாவும் அதில் நன்கமைந் துள்ளன. திருக்குறள் அரங்கேறியபொழுது அதனைச் செவி மடுத்தின்புற்ற சங்கப்புலவர் ஒவ்வொருவரும் தனித்தனியாக அதனைப் புகழ்ந்து பாடிய பாக்களின் தொகுதியே திருவள்ளுவ மாலை என்பதில் இற்றைநாள் ஆராய்ச்சியாளர் சிலர்க்குத் கருத்தொருப்பாடு இன்றெனினும், அத்தொகுதி ஓர் ஆயிரம் ஆண்டுகளின் முன்பே நிலைபெற்றிருந்ததென்பதனை யாரும் மறுக்கவியலாது. " வள்ளுவன் றனக்கு வளர்கவிப் புலவர்முன் முதற்கவி பாடிய முக்கட் பெருமான்"1 என்னும் கல்லாடச் செய்யுளடிகள் அப்பாக்களின் பழைமையைப் புலப்படுத்துவதோடு, இறையனார் பாடியதை முதற்கவி என்று கூறுதலின் அப்பொழுதே அப் பாக்கள் ஒரு முறைப்படத் தொகுக்கப் பட்டிருந்தன என்பதையும் தெரிவிக்கின்றன. நாமகள் பாடிய தென்பது பின்பு முன்னர்ச் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். இறையனார் முதலாக ஐம்பத்தொருவர் பாடிய திருவள்ளுவ மாலைச் செய்யுட்களுள் நாற்பத்தாறில் ஆக்கியோன் பெயராக 'வள்ளுவர்' என்னும் பெயர் வந்துள்ளது. அவற்றுள், மாமூலனார் பாடிய செய்யுளிலுள்ள "வள்ளுவனென்பானோர்பேதை யவன்வாய்ச்சொற் கொள்ளாரறிவுடையார்" என்பது அவர் வள்ளுவக்குடியிற் பிறந்தவர் என்பதனைக் குறிப்பால் வலியுறுத்தலுஞ் செய்கின்றது. மற்று, முதற் பாவலர், செந்நாப்போதார், பெருநாவலர் என்னும் பெயர்கள் ஒவ்வொரு பாவிலும் வந்துள்ளன. எனவே, திருவள்ளுவர் என்னும் பெயரே ஆசிரியர்க்குப் பயில வழங்கியதென்பது போதரும். அது குடிபற்றிய பெயராயினும் அதுவே அவர்க்கு இயற்பெயர்போல் ஆகிவிட்டமையின், " சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்"1 என்னும் தொல்காப்பியச் சூத்திரவுரையில், சேனாவரையர், கல்வி பற்றிய சிறப்புப் பெயர் முன்னும், இயற்பெயர் பின்னும் வருவதற்கு, 'தெய்வப் புலவன் திருவள்ளுவன்' என்று உதாரணங் காட்டினர். மற்று, திருவள்ளுவர் பெருமையும், திருக்குறளின் சிறப்பும், நுதலிய பொருளும், பயனும் முதலாயின திருவள்ளுவ மாலையிற் பலபடியாகப் பாராட்டப்பட்டுள்ளன. வள்ளுவரைத் திருவள்ளுவர் என்றும், தெய்வத் திருவள்ளுவர் என்றும், தேவிற்சிறந்த திருவள்ளுவர் என்றும் அப் பாக்கள் போற்றுகின்றன. நான்முகக் கடவுளே திருவள்ளுவராகத் தோன்றி நான்மறையின் மெய்ப் பொருளே முப்பாலாக அருளினர் என்று இரண்டு செய்யுட்கள் கூறுகின்றன. திருவள்ளுவரது கல்விப் பெருமையை அப்புலவர் பெருமக்கள் எவ்வளவு மதித்திருந்தனர் என்பது இதனால் புலனாகும். ‘ அப்பா லொருபாவை யாய்பவோ வள்ளுவனார் முப்பான் மொழிமூழ்கு வார் 2 ‘ முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வார் எப்பா வலரினு மில் 3 ‘ சிந்தைக்கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த விருவினைக்கு மாமருந்து 4 ‘ - - - - - - - - - - - - நூன்முறையை, வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சம் சிந்திக்க கேட்க செவி 5 என்றிவை போல்வன திருக்குறளின் எல்லையற்ற சிறப்பினைப் புலப்படுத்தா நிற்கின்றன. ‘ ஆனாஅற முதலா வந்நான்கும் - ஏனோருக் கூழின் உரைத்தாற்கு’6 ‘ அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை’ 1 ‘ முப்பாலின் நாற்பால் மொழிந்தவர்’ 2 என்பனவாதியவற்றால் நுதலிய பொருள் அறியப்படும். ‘ உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள முருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு’ 3 ‘ வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க் காய்தொறு மூறு மறிவு’4 ‘ வள்ளுவனா ரேற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்ளிரு ணீக்கும் விளக்கு’5 ‘ பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே’6 ‘ அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திறனனறிந்தேம் வீடு தெளிந்தேம்’ 7 என்றிவை முதலாயின நூலின் பயனை அறிவுறுத்துகின்றன. திருக்குறள் கற்பார் ஒவ்வொருவரும் அதன் சிறப்புப்பாயிரமாகிய திருவள்ளுவ மாலையை நன்கு கற்று இன்னோரன்ன பொருள் பலவற்றையும் சிந்தித்து உணர்தல் கடனாம். 6. * சொல்லின் செல்வர் உலகில் மக்கள் எய்தும் பேறுகளுள் கல்வி, பொருள் என்ற இரண்டையும் செல்வம் என ஆன்றோர் வழங்குவர். இவ்வுலக வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாததாயினும் கல்வியை நோக்க இறப்ப இழிந்ததேயாகும் திருத்தக்கதேவர் சிந்தாமணியில், ‘ நற்பொருள் செய்வார்க்கிடம் பொருள் செய்வார்க்கு மஃதிடம்’ 1 எனப் பொருளினை வாளா கூறிக் கல்வியை நற்பொருள் என விசேடித்துக் கூறினார். தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் யாரானும் வௌவப்படாததும் கொடுத்தலாற் குறைவுறாததும் ஆகிய சீரிய செல்வம் கல்வியே என்றும், பொன், மணி முதலியன அன்னவல்ல என்றும் அவற்றின் இயல்பு தெரிந்துணர்த்தி யுள்ளார். மாணிக்கவாசகப்பெருமான் ஓதற்குப் பிரியும் தலைவன் கூற்றில் வைத்து, " சீரளவில்லாத் திகழ்தரு கல்விச் செம்பொன்வரை"2 எனக் கல்வியை மேருமலையோடு ஒப்பித்துப் பாராட்டியுள்ளார். இங்ஙனம் கல்வியின் சிறப்பைக் கூறும் சான்றோர் கூற்றுக்கள் எண்ணிறந்தனவாகும். இத்தகைய சிறந்த கல்வியைப் பெற்றுளோர் சொல்வன்மையும் உடையராதல் வேண்டும். அஃதின்றேல் அவர் அக் கல்வியால் உலகிற்குப் பெரும்பயன் விளைக்குநர் அல்லர். ஏனோரால் நன்கு மதிக்கற்பாடும் எய்துநரல்லர். " இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற துணர விரித்துரையா தார்".3 என்பது வாயுறை வாழ்த்து. திருக்குறள் அமைச்சியலில் சொல் வன்மை என்ற அதிகாரத்தாலன்றி, தூது, அவையறிதல், அவையஞ்சாமை என்னும் அதிகாரங்களாலும் இப்பொருள் வலியுறுத்தப்படுகின்றது. அரசியலில் கேள்வி, அறிவுடைமை என்னும் அதிகாரங்களிலும் இது சுட்டப்படுகின்றது. சொல்வன்மை என்பது என்னை? கற்க வேண்டும் நூல்கள் பலவற்றையும் கசடறக் கற்றுணர்ந்தோர் தாம் உணர்ந்த அரிய பொருள்களையும் கேட்போர் மனங்கொள்ளுமாறு எளியவாகச் சொல்லுதல், சிறந்த பயனுள்ளவற்றைச் சுருக்கமும் விளக்கமும் இனிமையும் பொருந்த வழுவிலவாகச் சொல்லுதல், பருவம், நிலை, கல்வி, ஒழுக்கம், செல்வம் முதலியவற்றால் தமக்கும் கேட்போர்க்கும் உளவாய தகுதி வேறுபாடுகளை அறிந்து அவற்றிற்கேற்பச் சொல்லுதல், முன் சொல்வனவும் பின் சொல் வனவும் அறிந்து, நிரல்படக் கோத்துச் சொல்லுதல், கூறும் பொருளுக்கேற்ப எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேறு பாடமையவும், மெய்ப்பாடு தோன்றவும் சொல்லுதல், நிமிர்ந்த நிலையும் மலர்ந்த முகமும் தெளிந்த குரலும் உடையராய்த் தடுமாற்றமின்றிச் சொல்லுதல் என்றின்னோரன்ன பண்புகளின் தொகுதியே சொல்வன்மை எனப்படும். இவ்வாறு சொல்லின் உலகினர் அதனைப் பின்னும் கேட்க விரும்புவர்; விரும்பி ஏற்றுக்கொள்வர்; ஏற்று அவ்வழி ஒழுகுவர். இவ்வாற்றால் சொல்வன்மையுடையார்க்கு உலகம் வயமாதல் பெற்றாம். ஆகவே சொல்வன்மையானது ஓர் வளவிய செல்வமாமென்பது தேறப்படும். குமரகுருபரவடிகள், " சொல்வளம் மல்லல் வெறுக்கையாம்"1 என்று கூறியதூஉங் காண்க. முதன் முதலாக மாருதி கூறிய மாற்றம் சிலவற்றைக் கேட்ட இராமன், தம்பியாகிய இலக்குவன் முன்னர் அனுமானைப் பாராட்டியுரைத்தானாகக் கம்பர் பாடிய, " இல்லாத உலகத்தெங்கும் ஈங்கிவன் இசைகள்கூறக் கல்லாத கலையும் வேதக் கடலுமே யென்னுங் காட்சி சொல்லாலே தோன்றிற் றன்றே! யார்கொல் இச்சொல்லின் செல்வன் வில்லார்தோள் இளையவீர, விரிஞ்சனோ? விடைவல்லானோ?2 என்னும் செய்யுளின் கருத்து ஈண்டு அறிந்து இன்புறற்பாலது. சொல்வன்மை என்பது நூல் கற்பிக்கும் ஆசிரியர்க்கும், அவையின்கண் சொற்பொழிவியற்றுவார்க்கும், முறைமன்றத்தில் வாதுசெய்வார்க்கும், அமைச்சர், தூதர் முதலாயினார்க்கும் இன்றியமையாததாகும். நூல் உரைகளுள்ளும் மேல் எடுத்தோதிய பண்புகள் அமைந்தனவே என்றும் நின்று இன்பம் பயப்பனவாம். இம் மலர்தலை யுலகிற் பல தேயத்தும் பண்டு தொட்டு நாவன்மையான் மேவிய புகழினர் பற்பலராவர். நம் தண்டமிழ் நாட்டிலே தமிழுரையாகிய அமிழ்த மழையைப் பொழிந்து மன்பதை நன்புலம் குளிர்விக்கும் கொண்டலாக இஞ்ஞான்று ஒருவர் உள்ளனர். ஒருவர் என்ற அளவிலே அவர் திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப்புலியூர் திருஞானியார் மடாலயத்தில் அருட்குரவராக எழுந்தருளியிருக்கும் சிவத்திரு சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய அடிகளாவர் என்பதனைத் தமிழுலகம் தானே அறியும். அடிகளின் அளவுபடாத கல்வியின் பெருமையையோ, ஞான மேம்பாட்டினையோ, அறுமுகப் பெருமானை நனவிலும் கனவிலும் தினைத்துணைப் பொழுதும் மறத்தலில்லாத அன்பின் பெருக்கையோ எடுத்தியம்புதற்கு யான் எத்துணையும் சிறியன். அவர்களுடைய சொற்பொழிவுகள் மேலே குறித்தனவும் குறியாது விடுத்தனவுமாய சொல்வன்மைத் திறங்களெல்லாம் ஒருங்கு பொருந்தியவாதல் தேற்றம். அடிகளின் சொன்மாரிகள் சொற்பொழிவுக்கமைந்த பற்பல அற்புத இலக்கணங்கள் என்றே கொள்ளற்பாலன. அவையிற்றை ஈண்டெடுத்து விளக்குதல் எளிதன்று. பன்முறையும் கேட்டு அந் நன்முறைகளைத் தெளிதல் வேண்டும். அவர்கள் மாணவர்க்குக் கற்பிக்கும் அருமையும் அத்தகைத்தே. உலகிலே சொற்பொழிவு செய்வார் பற்பலர். ஆனால் சிவத்திரு ஞானியாரடிகளைப்போல் ஐந்து மணி, ஆறுமணி என்னும் காலவளவு நிலை பெயராதிருந்து, கேட்போர் சிந்தையும் பிறிதொன்றிற் செல்லாவாறு சொன்மழை பொழிவாரை 'இன்றினூங்கோ கேளலம்'. (புறம்:76) தொல்காப்பியம், திருக்குறள், சங்கச் செய்யுள், பன்னிரு திருமுறை, சித்தாந்த சாத்திரம் முதலாய தமிழ் நூல்களிலும், உபநிடதம் சிவாகமம், புராணம், இதிகாசம் முதலிய வட நூற்களிலும், சான்றுகள் காட்டி மேற்கொண்ட பொருளைத் தெளிவுறுத்தும் அடிகளின் வித்தகச் சொற் பொழிவு கற்றறிந்தோர்க்குக் கழிபேரின்பம் பயப்பதொன்றாம். எவ்வெப் பொருளையும் எப்பாலவரும் எவ்வெம் மதத்தரும் விரும்பிக் கேட்குமாறு உரைக்க வல்லார் அடிகள் ஒருவரே என்பதனை அனைவரும் அறிவர். அடிகள் எத்தனை ஆண்டு களாகக் கடல்மடை திறந்தாற்போன்று எத்தனையாயிரம் சொற் பொழிவுகள் நிகழ்த்தியிருப்பர், எத்தனை நூறாயிரவர் கேட்டுப் பயனெய்தியிருப்பர், என்பன நினையின், அடிகட்குத் தமிழுலகம் எவ்வளவு கடமைப்பாடுடையது என்பது புலனாகும். அடிகள் மடாலயத் தலைமையேற்ற (ஐம்பதாம் ஆட்டைப்) பொன்விழாக் கொண்டாடும் பேற்றுக்குரியமாகிய நாம் அவர்கள் மேலும் நல்லுடம்போடு பல்லாண்டு பல்லாண்டு வாழப் பல்லாண்டு கூறுவோமாக. 7. தமிழ் நாட்டின் திருமடங்களும், திரு. ஞானியார் திருமடமும் தமிழ்நாட்டின் பல இடங்களில் சிவனடியார் திருமடங்கள் பண்டு இருந்தமை பெரியபுராணத்தால் அறியப்படுகின்றது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் சேர்ந்து திருப்புகலூரை அடைந்த பொழுது அப்பதியில் அப்பொழுது இருந்தவராகிய முருகநாயனார் திருமடத்தில் எழுந்தருளியிருந்தனர் என்பதும், அங்ஙனமே அவர்கள் திருக்கடவூரை எய்தியபொழுது குங்கிலியக் கலயநாயனார் திருமடத்தில் அடியார் குழாங்களுடன் அமுதுண்டு தங்கியிருந்தார்கள் என்பதும், திருவீழிமிழலையில் இருவரும் வேறு வேறு மடத்தில் அடியார்களுடன் வதிந்து இறைவன்பாற் படிக்காசு பெற்று அனைவருக்கும் உணவளித்து வந்தனர் என்பதும், திருமறைக்காட்டில் மறைகள் பூசித்துத் திருக்காப்பிட்ட வாயிலைத் திருப்பதிகம் பாடித் திறந்து சென்று வழிபட்டு மீண்டபின் அப்பதியில் ஒர் திருமடத்தில் இரவுத்தங்கி இருந்தனர் என்பதும் அதிற் கூறப்பட்டுள்ளன. மற்றும் திருஞான சம்பந்தப் பெருமான் மதுரையை அடைந்த பொழுது அடியார் கூட்டத்துடன் தங்கியிருந்த இடம் "செங்கமலத்திருமடம்" என்று கூறப்பெற்றுளது. திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியில் தாமே திருமடம் சமைத் திருந்த வரலாற்றையும் அதனால் அறிகின்றோம். இவ்வாற்றால் திருத்தொண்டர்கள் தங்கியிருக்கும் திருமடங்கள் பல இடங்களில் சமயகுரவர்கள் காலத்து இருந்தமை புலனாயினும், ஞானகுரவர்கள் மாணாக்கர்களுக்குப் பரம்பரையாகப் போதித்தும் உபதேசித்தும் வரும் திருமடங்கள் அப்பொழுது இருந்தமை விளக்கமாக அறியக்கூடவில்லை. திருமூலர் திருமந்திரத்தில் ‘குரு மடவரலாறு' என்னும் தலைப்பில் இரண்டு செய்யுட்கள் உள்ளன அவற்றுள் ஒன்றில் 'மடம் ஏழு' என்று கூறப்பெற்றுளது மற்றொன்றில் காலாங்கர், கோரக்கர், மாளிகைத்தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகதேவர், மூலர் எனும் எழுவர் பெயர்கள் காணப்படுகின்றன. அவர்களில் அறுவரைப்பற்றி வேறு அறியக் கூடாவிடினும் மூலருடைய குருசந்தான மரபு ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பது * "மூலன் மரபில் வரு மவுனகுரு" எனத் தாயுமான அடிகள் கூறுவது போல் பவற்றால் கருதத்தகும். கோதாவிரி ஆற்றின் பாங்கர் ஆமர்த்தகம், புட்பகிரி, கோளகி, இரணபத்திரம் என்னும் நான்கு மடங்கள் பண்டு சைவாசாரியர்கட்கு உரியனவாய் இருந்தன எனவும் பிரம சூத்திரத்திற்குச் சிவாத்துவித சைவ பாடியம் இயற்றியவரும் சங்கராசாரியருக்கு முன்பிருந்தவரும் ஆகிய நீலகண்ட சிவாசாரியார் அம்மடங்களைச் சேர்ந்த சிவாசாரியர் வகுப்பைச் சேர்ந்தவர் எனவும் கூறுகின்றனர். அதன்பின் வேதாந்தமத குரவராகிய சங்கராசாரியர் பல இடங் களில் மடங்கள் நிறுவுவாராயினர். பின்பு இற்றைக்கு ஏறக்குறைய எழு நூறு ஆண்டுகளின் முன்னர் திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன மடமும், அதன் பின் தருமபுரம் ஆதீன மடமும், பின்னர்த் திருப்பனந்தாள் மடம் முதலாயினவும் தோன்றி நிலவுவ ஆயின. துவித விசிட்டாத்துவித மடங்களும் தோன்றின. வீரசைவமடங்களும் தமிழ்நாட்டிலும் அயல் நாட்டிலும் பல தோன்றி வளரலாயின. இவ்வாறு தோன்றிய மடங்களெல்லாம் ஞானத்திலும் தவவொழுக்கத்திலும் மேம்பட்ட பெரியோர் களால் நிறுவப்பெற்றனவாகும். ஒவ்வொரு மடத்திலும் அத்தகைய பெரியோர்கள் பலர் பின்னரும் இருந்து வந்திருக்கின்றனர். தமிழ் நாட்டில் சமயம் என்பது பெரும்பாலும் மடங்களின் ஆட்சியில் இருந்து வந்துளது. திருவாவடுதுறை ஆதீன மடமும் தருமபுர ஆதீன மடமும் சைவத்தையும் தமிழையும் புரப்பதில் தலைசிறந்து நின்றன. திருப்பனந்தாள் மடம் இப்பொழுது சில வழிகளில் தமிழுக்கு ஆக்கம் அளித்து வருகிறது. இப்பொழுது தவஞானச் செல்வர்களாக விளங்கும் நம் உயர்திரு ஞானியார் அடிகளைத் தலைவர்களாகக் கொண்டுள்ள திருக்கோவலூர் ஆதீன மடமும் மெய்ஞ்ஞான நிலையுற்ற பெரியாரொருவரால் தோற்றுவிக்கப் பெற்றதாகும். திருக் கோவலூரை நினைக்கும் பொழுது அப்பதியின் சிறப்பையும் அதனைத் தன்னகத்துடைய நாட்டின் பெருமையையும் கூற உள்ளம் விழைகின்றது. சோழநாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் நடுவணதாகி, நடுநாடு எனப்பெறும் அது திருமுனைப் பாடி நாடு, மலையமானாடு, சேதி நாடு, மகத நாடு என்னும் பல பெயர்களையுடையதாகும். இந்நாட்டிலே பெருவள்ளல்கள் சிலர் பண்டு இருந்திருக்கின்றனர் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய மலையமான் திருமுடிக்காரியை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருந்தும். இவன் திருக்கோவலூரை அரசிருக்கையாகக் கொண்டு இந்நாட்டினை ஆண்டு வந்தவன். இவனது வரையா வள்ளண்மையை, " நாளன்று போகிப் புள்ளிடை தட்பப் பதனன்று புக்குத்திறனன்று மொழியினும் வறிது பெயர்குந ரல்லர் நெறிகொளப் பாடான் றிரங்கு மருவிப் பீடுகெழு மலையற் பாடியோரே"1 எனவும் பிறவாறும் நல்லிசைப் புலவராகிய கபிலர் பாராட்டி யுள்ளார் தமிழ்நாட்டு முடியுடை வேந்தர்கள் ஓரொருகால் இவன் உதவியைப்பெற்று மாற்றாரை வென்ற செய்தியும் அறியப் படுகின்றது. இவ்வாற்றால் படையாண்மையிலும், கொடையாண்மை யிலும் மேம்பட்ட காரியும், அவன் வழியினரும், ஆண்டது இந்நாடு என்பது போதரும். பின்பு இந்நாட்டுத் திருக்கோவலூரிலே இருந்து அரசாண்ட குறுநில மன்னராகிய மெய்ப்பொருள் நாயனார் வரலாறு நெஞ்சை உருக்கவல்லது. வஞ்சவேடம் பூண்டு வந்த மாற்றானது சுரிகைக்கு இலக்காகி விழும் பொழுதும் "மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் எனத்தொழுது"2 கொண்ட கொள்கையை நிலை நிறுத்தியவர். உயிர் நீங்கும் அக்கணத்திலும் "பரவிய திருநீற்றன்பு பாதுகாத்துய்ப்பீர்"3 என்று சுற்றத்தாருக்கும் பரிசனங்கட்கும் அறிவுறுத்தியவர். மற்றும் நரசிங்க முனையரையர் முதலிய திருத்தொண்டர்கள் பலர் இந்நாட்டில் விளங்கியிருந்தனர். "ஒளவை பாடலுக்கு நறுநெய் பால் பெருகி அருந் தமிழறி வினாற் சிறந்து" (வில்லிபாரதம் - சிறப்புப்பாயிரம்-பா-8) என்று போற்றப் பெறும் பெண்ணையாறும், "தென்றிசையிற் கங்கையெனும் திருக்கெடிலம்"4 நதியும் இந்நாட்டை வளம் செய்வனவாகும். இந்நாட்டின் தலைநகராகிய திருக்கோவலூர் அட்ட வீரட்டங் களில் ஒன்றாயதும், தேவாரப்பாடல் பெற்றதுமாகிய திருப்பதியாதலோடு ஆழ்வார்களின் மங்கல வாழ்த்துப் பெற்ற திவ்வியபதியும் ஆகும். முதலாழ்வார் மூவரும் 'மொழி விளக்கேற்றி முகுந்தனைத்தொழுதது' (வில்லிபாரதம் - சிறப்புப்பாயிரம்) இத்திருப்பதியில் நிகழ்ந்த வியப்புறு செய்தியாகும். மற்றும், "பவக்கடல் கடந்து முத்தியங் கரையிற் படர்பவர் திசைப்பற நோக்கித் தவக்கலன் நடத்த வளர்ந்தெழும் சோணசைலம்"1 ஆகிய திருவண்ணாமலையைத் தன்னகத்துடையது. இந்நாடன்றோ? மற்றும் இந்நாட்டின் பெருமைக்கு வேறு கூறுவானேன்? நாவுக்கரையரும், நம்பி ஆரூராரும் பிறந்த நாடு இந்நாடன்றோ?, " மறந்தரு தீநெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி அறந்தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும் பிறந்தருள உளதானால் நம்மளவோ பேருலகில் சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு"2 என நம் அருண்மொழித் தேவர் கூறுவது ஈண்டு அறிந்து இன்புறற்பாலது. வில்லிபுத்தூரர் புதல்வராகிய வரந்தருவாரும் இந்நாட்டின் பெருமையைக் குறித்தற்கு, " தேவரும் மறையும் இன்னமுங் காணாச் செஞ்சடைக் கடவுளைப்பாடி யாவரும் மதித்தோர் மூவரில் இருவர் பிறந்தநாடு இந்த நன்னாடு"3 என்று இயம்புவாராயினர். மற்று, நடுநாட்டுத் திருப்பதிகளில் திருப்பாதிரிப்புலியூர், என்னும் இப்பதியின் மேன்மை செப்புதற்கரிய தொன்றாம். நாமெல்லாம் பிறவிக் கடலினின்றும் கரையேறு மாறு திருநாவுக்கரசர் ஐந்தெழுத்தின் துணைகொண்டு 'பொங்கு கடற் கன்மிதப்பிற் போந்தே'றிய பெருமை எஞ்ஞான்றும் அடியார்களின் உள்ளத்தில் நிலைபெற்றிருப்ப தொன்றாகும். கரையேறிய வுடன் அப்பர் தம்மைக் கரையேற்றிய முதல்வரைப்பாடிய அருமைத் திருவிருத்தம் சைவசித்தாந்த நுண்பொருளெல்லாம் அமைந்து பயனளிப்ப தொன்றாகும். " திருவாய் பொலியச் சிவாயநமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூரானே" என்பது சிவஞானபோதத்தின் உண்மையதிகாரம் கூறும் சாதனத்தையும் பயனையும் உணர்த்துகின்றது. இத்தகு விழுப்பமுடைய இப்பதியில் இத்திருமடத்தின் கண் திருக்கோவலூர் ஆதீன ஐந்தாவது பட்டத்து அருட் குரவராக எழுந்தருளியிருக்கும் உயர்திரு. ஞானியாரடிகளின் பெருமைக்குச் சென்னை முதலிய பற்பல இடங்களினின்றும் போந்து இன்று இங்கு நிறைந்திருக்கும் அடியார் குழுவே சான்று பகரும், அடிகளின் பெருமையைச் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டின், பரதனை நோக்கிக் குகன் கூறும் ஒரு செய்யுளைக் காட்டுதல் பொருந்தும். " என்புகழ்கின்ற தேழை எயினனேன் இரவியென்பான் தன்புகழ்க் கற்றை மற்றையொளிகளைத் தவிர்க்குமாபோல் மன்புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்களெல்லாம் உன்புகழாக்கிக் கொண்டாய் உயர்குணத் துரவுத்தோளாய்"1 அடிகளின் கல்விப்பெருமை அளவிடற்கரியது. வீரசைவப் பெரியார்களில் சிவப்பிரகாச அடிகள், சாந்தலிங்க அடிகள், சிதம்பர அடிகள் என்னும் மூவரும் ஓருருக்கொண்டாலனையர் நம் அடிகள், அடிகளின் சொற்பொழிவைத் தேன்மழை போலும் சொன்மழை என்றே கூறுதல் வேண்டும். அதனைச் செவிமடுப்பார் யாவரும் உள்ளேயிருக்கும் ஒரு தெய்விக ஆற்றலால் இயல்பாக வெளிப்படுவன என்று நினைப்பரன்றி முயன்று பேசும் சொற் களாக நினையார் என்பது தேற்றம். அடிகள் சொற்பொழிவிற் காணும் எத்தனையோ வகையான வித்தகத் திறனையெல்லாம் எடுத்தியம்புதல் இப்பொழுதைக் கேலாதாகலின் இவ்வளவில் நிறுத்துவேன். சித்தாந்த சைவ வளர்ச்சிக்கு நம் அடிகள் செய்துள்ள உதவியோ அளவிடற்கரியது. சைவ சித்தாந்த மகாசமாசம் என்னும் சமய வளர்ச்சிப் பெருங்கழகம் அடிகள் திருமுன் இத்திருமடத்திலே தோன்றியது என்பதும், பல ஆண்டுகளில் அடிகள் அதற்குத் தலைமையேற்று நடத்தி வந்துள்ளார்கள் என்பதும் அடிகளின் சொற்பொழிவுகளாலே சைவத்தின் மாண்பும், சமயகுரவர்கள் பெருமையும் முதலாயின எங்கணும் விளக்கமுறலாயின என்பதும் சைவ மக்கள்யாவரும் நினைவு கூர்தற்பாலன. உலகில் எல்லா வகுப்பினரும், எல்லாச் சமயத்தினரும், ஆடவரும், மகளிரும், கற்றவரும் மற்றையரும் கேட்டுப் பாராட்டுவதும் பயனடைவது மாகிய இயல்பு அடிகளின் சொற்பொழிவுக்கே அமைந்த தனிச் சிறப்பாகும். அடிகள் பட்டமேற்ற ஐம்பதாண்டுகளாகப் பொது வாகத் தமிழுக்கும், சிறப்பாகச் சைவத்திற்கும் எவ்வளவு பெருநலன் விளைந்திருக்கும் என்பதனை நினையின் இந்நாட்டினர் அவர்கட்கு எவ்வளவு கடமைப்பாடுடையர் என்பது தெளியலாம். அடிகள் பட்டமேற்ற பொன்விழாவைக் கொண்டாடிக் களிக்குமாறு கூடியுள்ள நாம் அனைவோரும் அடிகள் மற்றும் பல்லாண்டு வாழ்ந்து நம்மனோரைச் செம்மை நெறியில் உய்க்குமாறு வில்லாண்ட கனகத் திரள் மேருவிடங்கனை நினைந்து பல்லாண்டு கூறி வாழ்த்துவோமாக. 8. முடங்கல் பல்லாயிர ஆண்டுகளாகப் பனுவல்களும் ஆவணங்களும், பிறவும் இந்நாட்டிலே பனையோலையிற்றீட்டப்பெற்று வந்தன. ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குச் செய்தி தெரிவிக்க வேண்டின் அதனைப் பனையோலையில் எழுதிச் சுருள்செய்து காப்பிட்டு ஏவலாளர் முதலாயினார் கைக்கொடுத்துச் செல்லவிடுவது வழக்கம். அதனை ஓலையென்றும், முடங்கலென்றும் கூறுவர். ஓலையில் எழுதப்படுதலின் ஓலை யென்பது பேராயிற்று, இலை என்னும் பொருளுடைய பத்திரத்தில் வரையப்படுதலின் பத்திரமென்பது பெயராயினாற் போலப் பிற்காலத்தே ஓலையென்பது மங்கலமல்லாத செய்தி வரைந்ததாகப் பொருள்படுவ தாயிற்று. செய்தி வரைந்த ஓலையை வளைத்துச் சுருள் செய்தமையின் அது முடங்கல் என்னும் பெயர்பெறுவதாயிற்று. முடங்கல் - வளைதல். முடங்கல் வரைதலைப்பற்றிய வேறு சில செய்திகளும் பின்காட்டுவனவற்றால் அறியலாகும். சிலப்பதிகாரம், புறஞ்சேரியிறுத்த காதையில் மாதவி தீட்டிய முடங்கலொன்றைக் கோவலன் பெற்ற வரலாறு காணப்படுகிறது. கோவலன் மாதவி வயத்தனாயொழுகித் தன் முன்னோர் ஈட்டிய பெரும் பொருளனைத்தையும் இழந்து, கானல் விளையாட்டில் அவள்பால் வெறுப்புற்றுக் கண்ணகியை யடைந்து, கண்ணகி யளித்த காற்சிலம்பிரண்டனையும் வாணிக முதலாகக் கொண்டு மதுரையெய்தி உலந்த பொருளீட்டுவதெனத் துணிந்து, பத்தினி யாகிய கண்ணகி நல்லாளொடும் வழிக்கொண்டு, கவுந்தியடிகள் என்னும் சமண சமயத் தவமூதாட்டியாரின் சார்பு பெற்றுச் சென்று சோணாடு கடந்து பாண்டிநாட்டு மதுரைக் கேகுமிடையே, ஒருநாள் இரவு நிலவில் நடந்து செல்லுங்கால் வைகறைப் பொழுதில் 'வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதி' (புறஞ்சேரி - 38-39) ஒன்றின் புறத்தையடைந்து மாதவத்தாட்டியொடு காதலிதன்னையும் ஓர் ஒதுக்கிடத்தே யிருக்கச் செய்து, தான் காலைக்கடன் கழித்தற்கு ஓர் நீர்நிலையை அடைவானாயினான், அப்பொழுது மாதவி கொடுத்த முடங்கலுடன் கோவலனைத் தேடிப் பலவிடமும் சுற்றித்திரிந்துவந்த கோசி கனென்னும் வேதியன், கோவலனைக் கண்டும் துயர்மிகுதியால் அவன் உருவம் வேறு பட்டிருத்தலானும், நிறம் மயங்கித் தோன்றும் பொழுதாகலானும் ஐயுற்றவனாய், அது தெளிதற்கு, ஆங்கிருந்த ஓர் குருக்கத்திப் பந்தரை யடைந்து, " கோவலன் பிரியக்கொடுந்துய ரெய்திய, மாமலர் நெடுங்கண் மாதவிபோன்று இவ், அருந்திறல் வேனிற்கு அலர்களைந் துடனே, வருந்தினை போலும் நீமாதவி" என்று கூறி, அதனைச் செவியுற்று 'நீ இங்கே கூறிய கூற்றின் பொருள் யாது' எனக் கோவலன் வினாவினமையால் ஐயத்தினீங்கித் தெளிந்து, அவனைச்சார்ந்து, இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணியிழந்த நாகம் போன்று வருந்தியதும், துன்னிய சுற்றமெல்லாம் இன்னுயிரிழந்த யாக்கை போலத் துயர்க்கடலில் வீழ்ந்ததும், ஏவலாளர்கள் எத்திசையிலும் தேடச் சென்றதும், இராமன் பிரிந்த அயோத்தி போலப் புகாரிலுள்ளா ரனைவரும் அறிவு கலங்கியதும், முன்பு வசந்த மாலையால் தனது திருமுகத்தைக் கோவலன் மறுத்தது கேட்டு மாதவி பள்ளியில் மயங்கி வீழ்ந்ததும், அவளுற்ற துயரங் கேட்டுத் தான் அங்கே சென்றிருந்ததும், மாதவி தன் கையால் ஒரு முடங்கல் வரைந்து 'இதனை என் கண்மணி யனையாற்குக் காட்டுக' என்று சொல்லித் தன்னிடங் கொடுத்ததும், அதனைப் பெற்றுத் தான் பல தேயங்களும் தேடித் திரிந்ததும், ஆகிய செய்தி யெல்லாம் கூறி, மாதவியின் ஓலையைக் கோவலன் கையிற் கொடுத்தான். கோவலன் அதனைப் பெற்றவுடன் அதன்மீது இடப்பட்டிருந்த இலச்சினையைக் கண்டான். அவ்விலச்சினை தான் ஓலை மடியின் புறத்து மண்மேல் மாதவியின் குறுநெறிக் கூந்தலால் ஒற்றியதாகும். அது மாதவி தன்னுடன் கூடி யுறைகின்ற காலத்து அவள் கூந்தலின் வாசநெய் பூசிய தன்மையைத் தனக்கு உணர்த்திற்றாகலின், கோவலன் அதனைத் தன் கையால் விரைவில் விடுவியாதவனாய்த் தாழ்த்திருந்து பின்பு விடுவித்து ஏட்டினை விரித்து அதனுட்கிடந்த உரையின் பொருளை உணர்வானாயினான். " உடனுறை காலத் துரைத்தநெய் வாசங் குறுநெறிக் கூந்தன் மண்பொறி யுணர்த்திக் காட்டிய தாதலிற் கைவிட லீயான் ஏட்டகம் விரித் தாங் கெய்திய துணர்வோன்"1 இதிலிருந்து ஓலையை முத்திரித்துக் காப்புச் செய்யும் வழக்கம் பண்டிருந்ததென்பது புலனாகின்றது. மாதவி கூந்தலைப் பொறித்து இலச்சினை யிட்டதும், அதனாற் கோவலனெய்திய உணர்ச்சித் தன்மையும் அவர்கள் காதலையும் கலக்கத்தையும் வெளிப்படுத்தி உளத்தையுருக்குகின்றன. இனி, முடங்கலின் வாசகம் வருமாறு. " அடிகண் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோ டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது கையறு நெஞ்சங் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி".1 இதிலுள்ள முதலடிக்குத் 'தேவரீர் திருவடிகளைத் திக்கு நோக்கித் தண்டம் பண்ணினேன்; இதனைத் திருவுளத்திலே கண்டருள்க'. என்று பொருள்கூறி, 'இஃது ஓலைமுகப் பாசுரம் இனி அக்காரிகை பாசுரம்'. என அடியார்க்குநல்லார் உரைத்திருப்பது சிந்திக்கற் பாலது. இஃது ஓலை யெழுதுவோர் தமது தகுதிக்கும் எழுதப்படுவோரின் தகுதிக்கும் இயைய ஓலை முகத்தே முகமனுரை தீட்டுவதோர் வழக்குண்டென்பதனைக் காட்டுகின்றது. வாசகத்தின் பொருளை 'இரவிடைக் கழிதற்கு யான் செய்த குற்றம் ஈதென்றறியாது நெஞ்சங் கையறா நின்றது; அதனைப் பொறுக்கவேண்டும்' என அரும்பதவுரைகாரர் சுருங்கக் கூறினர். அடியார்க்குநல்லார் ஆற்றல்பற்றி விரித்துக் கூறுகின்றார். அதனையும் சேர உணர்ந்து கோடல் நலமெனக் கருதி ஈண்டெழுதுகின்றேம். "வடிமொழி யுணர்ந்து குற்றந் தீர்ந்த நற்காட்சியை யுடைய உயர்ந்தோனே, இருமுது குரவர் பணிவிடை யொழிந்ததன் மேலும் குலத்திற் பிறந்து கற்பையாளுத லுடையவளுடனே இரவின்கண் நகரிடையைக் கழிந்துபோதற்கு வந்த பிழைப்பென்னை? அஃது அறியாது என்பிழைப்போவென்று அவலித்து அரற்றிக் கவலித்துக் கையாற்றின்கண் நெஞ்சழுங்கா நின்றது; என்பிழைப் பெனினும் மகளிர் சொல் குற்றமறாத சொல்லென்று திருவுளம்பற்றல் வேண்டும்; இதுவேயன்றி எனக்கு இப்பொழுது நடக்கின்ற இச்செயலறவு நன்றன்று; அதனைக்கடியல் வேண்டும்; ஆதலால் இவ்வாற்றான் நினக்கு ஓர்புகழ்க் குறைபாடின்றாகப் போற்றுவாயாக". இதன்கண் ஆற்றலால் வருவித் தெழுதியிருக்கும் பொருள்களை வாசகத்துடன் பொருத்திக் காண்க. அடியார்க்கு நல்லார் இங்ஙனம் பொருள் கூறினராயினும், கொண்டு கூட்டின்றி வாசக ஒழுங்கின்படியே பொருளுரைப்பது அஃதோரோலை (திருமுகம்) ஆதற்கும், முறைமைக்கும் ஒத்ததாய் இன்னும் சிறப்புடைத்தா யிருக்குமெனத் தோன்றுகிறது. வாசகத்தின் சுருக்கமும், தெளிவும், இனிமையும், பொருணிறைவும் மிகவும் புகழ்ச்சிக்குரியவாய்க் கற்றோர்க்குக் கழிபேரின்பம் விளைப்பன வாகும். வாசகத்திலுள்ள ஒவ்வொரு மொழியும் பல்காற் சுவைத் தின்புறற்பாலவாய திட்ப நுட்பங்கொண்டு திகழ்கின்றன. இளங்கோவடிகளென்னும் புலவர் பெருமான் ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முன்னரே திருமுகமெழுதும் பெருமித முறையினை நமக்குக் காட்டி வைத்திருக்கின்றனர்! அடிகள் தமது சதுரப்பாட்டைப் பிறிதொரு வகையாலும் இங்கே காட்டி யிருப்பது பெரியதோர் இறும்பூது விளைப்பதாகும். மாதவி விடுத்த ஓலையின் வாசகத்தை யுணர்ந்ததும் கோவலன் 'அவள் பால் தீதொன்றுமின்று. என்றீதே' எனத் தெளிந்து தளர்ச்சி நீங்கித் தன் தந்தைக்குக் கோசிகன் வாயிலாகவே ஓர்முடங்கல் விடுப்பானாயினன். அதுதான் மாதவி தனக்கு விடுத்ததே யன்றி வேறன்று. மாதவி தீட்டிய வாசகத்தையும் பொருளையும் கோவலன் கூர்ந்துணர்ந்த பொழுது, அவையே தன் தந்தைக்குத் தான் விடுத்தற்கும் அழகுறப் பொருந்தினமை கண்டு, அம்முடங்கலைக் கோசிகன் கையிற் கொடுத்து 'மாசில் குரவர் மலரடி'யைத் திசை நோக்கித் தொழுதேன் எனச் சொல்லி இவ்வோலையைக் காட்டுகவெனக் கூறி, என் பொருட்டாக அவரெய்தியுள்ள துன்பத்தைப் போக்குதற்கு விரைந்து செல் என அனுப்பினன். காட்டுவழியே நடந்து கொண்டிருக்கும் கோவலன் தன் றந்தைக்குத் தீட்டுமாறு வேறு ஓலையும் கருவியும் எங்ஙன் பெறுகிற்பான் எனக்கருதி அடிகள் தமது மதிவன்மையால் இங்ஙனம் பெண்ணோலையை ஆணோலையாக்கி யளித்தனர் போலும்! இதிலிருந்து தன் ஊரிலுள்ளார்க்குத் திருமுகம் போக்கு மொருவன் அங்குள்ளார் பலரில் யாருக்கெழுத வேண்டுமென்னும் முறைமையும் வெளியாகிறது. மாதவி தீதிலளெனத் தெளிந்த கோவலன் அவளை மதிப்பதற்கு இதைப் பார்க்கிலும் இப்பொழுது செய்யத் தக்கது பிறிதில்லையுமாகும். அன்றி அதனைத் தன்பால் வைத்துக் கொண்டிருத்தலும் இப்பொழுது அவற்கு முறைமையன் றென்பது சிந்திப்பார்க்குப் புலனாகா நிற்கும். இனி, கோவலற்குக் கோசிகன் கூறியனவாக முன் எழுதிய செய்திகளில் மாதவி முன்பொருமுறை கோவலற்குத்திருமுகம் போக்கின ளென்பதும் ஒன்றாகும். ஆண்டுத் திருமுக வாசகம் இம்முறையான் அமைக்கப் பெற்றிலதாயினும், அதனானும் சில செய்திகள் உணர்ந்து கொள்ளப்படுதல் நோக்கி அதன் வரலாற்றை இங்கே குறித்திடுகின்றாம். கோவலன் மாதவியுடன் கூடி இன்பந் துய்த்து வருகின்ற காலத்தில் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரவிழா நடைபெற்றது. அவ்விழாவின் முடிவில் உவாநாளிலே நகரமாந்தராகிய ஆடவரும் பெண்டிரும் கடலாடுதற்குச் சென்றனர். கோவலனும் மாதவியும் அங்ஙனமே ஊர்திகளிற் சென்று கடற்கரையை யெய்தித் தாழை வேலியின் உள்ளிடத்தே புன்னை நீழலிலுள்ள புதுமணற் பரப்பில் சித்திரத் திரையைச் சுற்றிலும் வளைத்து மேல் விதானிக்கப் பெற்ற தந்தக் கட்டிலில் அமர்ந்திருந்தனர். அப்பொழுது மாதவியானவள் தோழியாகிய வசந்தமாலையின் கையிலிருந்த யாழை வாங்கிப் பண்ணல், பரிவட்டணை முதலிய எண்வகையால் இசையையெழுப்பி, மெல்லிய விரல்கள் நரம்பின் மேற்படர, வார்தல் முதலிய எண்வகைக் கரணத்தானும் பொருந்திய இசைக் கூறுகளைத் தன் செவியான் ஓர்த்துப் 'பாணியாது?' எனக் கூறிக் கோவலன் கையில் யாழை நீட்டினள். அவனும் அதனை வாங்கிக் காவிரியை நோக்கிய ஆற்று வரியும், கானல் வரியும் முதலிய இசைப்பாட்டுக்களை மாதவியின் மனமகிழப் பாடுவானாயினன். அங்ஙனம் பாடியவற்றைக்கேட்ட மாதவியானவள் அப்பாடல்கள் அகப்பொருட் சுவையுடன் கூடியிருந்தமையின் கோவலன் வேறு மகளிர்பால் மனம் வைத்துளானெனத் திரிய வுணர்ந்து, யாழினைத் தான் வாங்கித் தான் வேறு குறிப்பிலளாயினும் வேறு குறிப்புடையாள் போன்று அகப்பொருட்சுவை தழுவிய வரிப்பாட்டுக்களைப் பாடினள். அங்ஙனம் பாடியது கேட்ட கோவலன் யாழிசைமேல் வைத்து ஊழ்வினை வந்துருத்ததாகலின், 'யான் கானல்வரி பாடத் தான் அப்படிப்பாடாது என்னை யொழிய வேறொன்றின்மேல் மனம் வைத்து மாய முடையளாகிப் பாடினள்' என்றெண்ணி அவளைத் தழுவிய கை நெகிழ்ந்தனனாய் விட்டுப் பிரிந்து மாலைப் பொழுதிலே ஏவலாளர் சூழ்தரப் போயினன். மாதவியும் கையற்ற நெஞ்சினளாய் வண்டியிலேறிச் சென்று தன் மனையை அடைந்தாள், அடைந்தவள் வேனிற் காலமாகலின் அதற்குரிய வானுற உயர்ந்த மேனிலையில் நிலா முற்றத்தே சென்று யாழைக் கையிலெடுத்துக் கண்டத் தாற்பாடி, அது மயங்கி, யாழாற் பாடலுற்று அதுவும் மயங்கிப்பின், காமராசனாணையாலே உலகமெல்லாம் தொழுதிறைஞ்சப்படும் அவனது திருமுகத்தைக் கோவலற்கு விடுப்பேமென்னும் எண்ண முடையளாயினள். திருமுகமெழுத அவள் கொண்ட கருவிகள்: சண்பகம், மாதவி, பச்சிலை, பித்திகை, மல்லிகை, செங்கழுநீர் என்பவற்றால் நெருங்கத் தொடுத்த மாலையின் இடையே கட்டிய முதிர்ந்த தாழம் பூவின் வெள்ளிய தோடும், அதற்கு அயலதாகிய பித்திகையின் முகையும், செம்பஞ்சிக்குழம்பும் ஆகும். பித்திகை யரும்பை எழுதுகோலாகக் கொண்டு செம்பஞ்சிக் குழம்பிலே தோய்த்துத் தாழையின் வெண்டோட்டில் எழுதின ளென்க. எழுதின வாசகம். " மன்னுயி ரெல்லா மகிழ்துணை புணர்க்கும் இன்னிள வேனில் இளவர சாளன் அந்திப் போதகத் தரும்பிடர்த் தோன்றிய திங்கட் செல்வனுஞ் செவ்விய னல்லன் புணர்ந்த மாக்கள் பொழுதிடைப் படுப்பினும் தணந்த மாக்கள் தந்துணை மறப்பினும் நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல் இறும்பூ தன்று இஃது அறிந்தீமின்"1 என்பது. இதனைத் தன் முற்றாத மழலைச் சொல்லால் பலகாற்பேசிப் பேசி யெழுதி, வசந்தமாலையைக் கூவி, ‘இம் மாலையிலெழுதிய பொருளையெல்லாம் கோவலற் கேற்பச் சொல்லி அவனை இப்பொழுதே இங்கே கொண்டுவருவாயாக' என விடுத்தாள். அவ்வோலையைக் கொண்டு சென்று அவளும் கோவலற்குக் கொடுப்ப, அவன் ‘மாதவி நாடக மகளாகலின் பலவாறாக நடிப்பது அவட்கு இயல்பன்றோ? என்று கூறி மறுப்ப, அவள் இரக்க முற்றுச் சென்று மாதவிக்கு அதனை யுரைத்தனள். மாதவியும், ‘மாலைவாரா ராயினும் காலை காண்குவம்' என மலரமளிமிசைத் துயிலின்றி யிருந்தனள். திருமுகவாசகத்திலுள்ள நயங்களை ஓர்ந்துணர்க. வாசகமே யன்றி, அதனை வரைந்த தாழை வெண்டோட்டு முடங்கலும், பித்திகைக் கொழு முகையும், அலத்தகக் குழம்பும், மலர்மாலிகையும் காதலுணர்ச்சியைப் புலப்படுப்பனவாதல் காண்க. இனி இப்பொழுதையிற்போல எழுதுங் காகிதம் அக்காலத் திருந்திலதேனும், வெண்ணிற இதழில் செந்நிறக் குழம்பு தோய்த்துக் கூரிய முகையால் எழுதப்பெற்ற தென்னுஞ் செய்தியானது இப்பொழுது வளர்ச்சியடைந்திருக்கும் காகித எழுத்துமுறை இரண்டாயிர ஆண்டுகளின் முன்பே கருக் கொண்டிருந்த தென்பதைக் காட்டுகின்றது. இனித் திருமுகமெழுதுவது குறித்த பிறிதொரு செய்தி சீவகசிந்தாமணியிற் காணப்படுகின்றது. அதனையும் ஈண்டுத் தருகின்றாம். தன்னையாழில் வெல்வோரையே மணஞ் செய்து கொள்வ தென் றிருக்கிற காந்தருவதத்தை யென்னும் விஞ்சையர் நங்கையை யாழில் வென்று தன் கல்வியைத் தோற்றுவிக்கக் கருதிய சீவகன் அச்செய்தியைத் தன்றோழனாகிய புத்திசேனனால் கந்துக்கடனுக்கு அறிவிக்க, அதனைக் கேட்டுணர்ந்த கந்துக்கடன் சீவகன் அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்தவனாதலைப் புத்திசேனனுக்குக் கூறி, அன்னனாயினும் கட்டியங்காரனது பகைமை அவனுக்குளது எனக் கூறும் அப்பொழுது கோயிலி லிருந்து நாகமாலை யென்பவளால் அனுப்பப்பட்ட தூதியொருத்தி வந்து தன் கூந்தலாகிய உறையிற் பொதிந்த நீலமணி போலும் குவளையை யெடுத்து நீட்டினள். அதனை அவன் மயிரில் முடித்த மலரென்றிகழாது நாகமாலையின் குறிப்பால் ஒரு காரியம் உளதென்று கருதி அதனை யேற்று அதன் அகவிதழி னுள்ளிருந்த தொரு ஓலையை யெடுத்து வாசிக்கின்றான். அதனைக்கூறும்பாட்டு. " நல்லவ ணோக்க நாய்கன் றேர்ந்துபூங் குவளைப்போதின் அல்லியுட் கிடந்த வோலை தாளது சலாகை யாதல் சொல்லுமென் றாய்ந்துகொண்டு துகிலிகைக் கணக்கு நோக்கி வல்லிதிற் சலாகை சுற்றி யோலையை வாசிக்கின்றான்".1 என்பது. மறை பொருளாகத் திருமுகம் எழுத இம்முறை கையாளப் பட்டிருக்கிறது. ஒருசலாகையில் ஓலையை வரிசையாக நீளச்சுற்றி அதன்மீது வாசகத்தை வரைந்து பின்பிரித்தெடுத்துச் சுருள் செய்து அநுப்புவது. இதனை நீட்டோலையாக வாசிக்கலுறின் எழுத்துக்கள் வெவ்வேறிடங்களிற் பிரிந்து கிடக்குமாதலின் வாசக உருவினைக் காணுதல் அமையாதாகும். ஆக, எழுதப் பட்டார்க்கு அச்சலாகை (கம்பி)யையோ, அதனையொத்த பிறிதொன்றையோ உடன் அனுப்பியாதல், அதன் அளவினையும் வடிவினையும் தெரிவித்தாதல் அம்முறையானே அதனை வாசிக்கு மாறு குறிப்பிடுதல் வேண்டும். நாகமாலை விடுத்த ஓலையோ மிகவும் வியப்பினை விளைப்பதொன்று. அவள் தான் எழுதிய ஓலையைக் குவளை மலரினுள்ளே வைத்துக் கொடுக்கத் தூதியானவள் அதனைக் கூந்தலினுள்ளே பொதிந்து வைத்துக் கொணர்ந்தளித்தாள். இது இடையே எவ்வகையானும் எத்துணையும் வெளிப்படாது போற்றுதற்குச் செய்த தொரு சூழ்ச்சித்திறனாகும். குவளை மலரோ தாளுடன் கூடியதாய் இருந்தது. அத்தாள்தான் ஓலையைத் துகிலிகைக் கணக்குப்படி சுற்றி வாசித்தற்கமைந்த சலாகையாக் காணப்பட்டது. அம்முறையானே அவனும் அதனை வாசித் துணர்ந்தான். நாமும் இவ்வளவில் இதனை நிறுத்துதும். 9. கல்வி பண்டை நாளிலிருந்த பெரியோர்கள் உயிர்களை ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என அறிவு வகையாற் பாகுபாடு செய்து வைத்திருக்கின்றனர். அவற்றுள் ஏனைய வெல்லாம் பொறிகளான் அறியும் அறிவே உடையனவாக, மக்களுயிர் ஒன்றும் மனத்தான் எண்ணியறியும் அறிவினையும் உடையதாகின்றது. "மக்கள்தாமே ஆறறிவுயிரே" என்று தொல்காப்பியர் (மரபியல்-33) கூறுதல் காண்க. அதனாற்றான் எல்லாப் பிறப்பினும் மக்கட் பிறப்பு உயர்ந்ததாகக் கொள்ளப்படு கின்றது. மக்களுள்ளும் உயர்வு தாழ்வுகள் அறிவு விளக்கத்திற் கேற்பவே அமைகின்றன. குணம், செயல்களும் உயர்வு தாழ்வு கட்குக் காரணமாயினும் அவை அறிவைச் சார்ந்தே நிகழ்தலின் அதனுள் அடங்கற் பாலனவாகும். அறிவு விளக்கம் பொருள்களை ஆராய்ந்து அறிதலால் உண்டாவது. நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்னும் ஐம்பூதங்கள், (தொல்.மரபியல்-91) அவற்றானாய உலகங்கள், உலகிலுள்ள பொறிகளானறியும் பருப் பொருளும் அவற்றானறியலாகா நுண் பொருளுமாகிய எண்ணிறந்த உயிர் உயிரல் பொருள்கள், அவற்றின் குணம் செயல்கள், தோற்ற நிலை யொடுக்கங்கள், அவற்றை ஒழுங்குபடுத்தமைத்து மக்கள் பயன் கொள்ளும் நெறிகள், மக்களின் இன்ப துன்ப விளைவுகள், அவற்றின் காரணங்கள் என்றிவற்றோரன்ன பலவும் ஆராய்ந்தறியற்பாலவாய பொருள்களாம். அவற்றை ஆராய்ந்தறிதல் என்பது அறிவு அனுபவமுடைய பெரியோர்களாலே தொன்றுதொட்டு அவ்வத் துறையில் இயற்றப்பெற்றுள்ள நூல்களைக் கற்றலானே கைவரப் பெறுவது. அங்ஙனம் கற்றலாகிய தொழிலும், கற்கப்படுவனவாகிய நூல்களும், கற்றலானெய்தும் அறிவும் கல்வியென்னும் பெயரால் வழங்கப்படுவனவாகும். கல்வி என்பது நூல், நூலறிவு என்னும் பொருள்களிலேயே பயின்று வழங்குகின்றது. 'கல்வி கரையில' (நாலடி- கல்வி-5) என்புழி நூலும், 'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி' (குறள்- கல்வி- 8) என்புழி நூலறிவும் பொருளாதல் காண்க. மக்கள் நூல்களைப் பயிலும் அளவிற்கேற்பவே அவர்களறிவு நுட்பமும் பெருக்கமும் எய்துகின்றது; ‘ தாங்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு’ 1 ‘ தொட்டனைத் தூறு மணற்கேணி; மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு’ 2 என்னும் முதுமொழிகள் இவ்வுண்மையை அறிவுறுத்து நிற்கின்றன. இனி, மக்கள் நூல்களைக் கற்றலின்றியே பொருள்களை நேரிற் கண்டு, அவற்றினியல்புகளைத் தம் இயற்கை யறிவால் ஆராய்ந்தறிந்து அறிவு விளக்கமெய்துதல் சாலாதோ எனின், சாலாது; என்னை? மக்கள் யாவரும் பிறந்தபொழுது எதனையும் தாமாக அறியும் அறிவின்றியிருந்து பின் ஒரோவொன்றாகப் பிறருதவியால் அறிந்து வருதல் கண்கூடாதலின், அங்ஙனம் அறிந்து ஓரளவு அறிவும் உரனும் பெற்றவழியன்றி இயற்கையறிவால் ஆராய்ந்தறிதல் என்பதற்கு இடனேயின்று; பின்னரும், எட்டு தற்கரிய கால இடங்களிற் பட்டவற்றை அறிதற்கு இயற்கையறிவு கருவியாதல் இல்லை; நிகழ்காலத்தே அணிமைக்கண் உள்ள தொன்றும் பொறிகளான் அறியலாகா நுண்பொருளாயின் அஃது அவ்வறிவிற்குப் புலனாகாது; நேரிலுள்ள பருப்பொருளை ஆராயப் புகுந்த வழியும் அதனியல்புகளை ஒருதலையாக அறியலாமென்னும் உறுதிப்பாடின்று; அறியலாமெனினும் மக்களின் சிறிய வாழ் நாளில் யாதானும் ஒன்றிரண்டு அறியக் கூடுமன்றிப் பல பொருள் களை ஆராய்ந்தறிந்து நிறைந்த அறிவைப்பெறுதல் அமையாது; அங்ஙனம் அறியும் வழி நேரும் இடர்ப்பாடுகளும் இன்னல்களும் பலவாம். ஞாயிற்று மண்டிலத்தின் அளவு, அதிற் கலந்துள்ள பொருள்கள், அதன் ஒளியும் வெம்மையும் சென்று பொருந்தும் இடங்கள் என்பவற்றை வேறு கருவியின்றித் தன் இயற்கையறிவால் ஆராயப் புகுந்தானொருவன் அவற்றைப்பற்றி எத்துணையறிவு கைவரப்பெற்றவனாவன்? பல்வேறு வகையான பூடுகள், அவற்றின் வித்து வேர், தோல், தழை, பூ, காய், கனிகள்; இரும்பு முதலிய தாதுப் பொருள்கள் என்னும் இவை முதலானவற்றின் தனித்தனியான பண்புகளையும், அவற்றின் கலப்பாலுண்டாகும் தன்மைகளையும் ஆராய்ந்தறிந்து. இவ்வேதுவாலுண்டாய இந்நோய்க்கு இதனால் இன்னவாறு மருந்தமைத்து உண்க என மருத்துநூலோர் கூறியிருப்ப வற்றைக் கொள்ளாது விடுத்து, ஒருவன் தன் இயற்கையறிவால் அவையனைத்தையும் ஆராய்ந்து காண்பல் எனப் புகுவனேல், அவன் பெறும் அறிவும் எய்தும் இன்னலும் எத்துணையவாகும் என்பதனை ஓர்மின்கள். ஒவ்வொரு துறையிலும் தொல்லோர் கண்டறிந்தவற்றை விடுத்துப் புதுவதாக ஆராய்ச்சியைத் தொடங்கு வார் நிலைமை இப்பெற்றியதே. இப்பொழுதுள்ள மக்களின் அறிவுகளும் செய்கைத் திறங்களும் உலகிலே தொன்றுதொட்டுத் தொடர்ச்சியாய் வந்து கொண்டிருக்கிற அறிவின் விளைவேயன்றி வேறில்லை. இப்பொழுது மக்களனைவரும் தொல்லோரின் அறிவனைத்தையும் கையகன்று, இயற்கை யறிவொன்றுகொண்டு நிற்பரேல் அவர் நிலைமை பேரிருளில் விடப்பட்ட கண்ணிலாக் குழவிகளின் நிலைமையையே ஒக்கும். ‘ இருளே உலகத் தியற்கை இருளகற்றும் கைவிளக்கே கற்ற அறிவுடைமை’ 1 என்னும் முதுமொழி இவ்வுண்மையை அறிவுறுத்தல் காண்க. கற்ற அறிவுடைமை என்றால் பல்வேறு காலதேயங்களிலிருந்த எண்ணிறந்த பெரியார்களின் அறிவனைத்தையும் ஒருங்கே பெற்று அறிவுடையராதல் என்பதேயாகின்றது. இங்ஙனம் பல்லாயிரவர் அரிதின் உழந்து தேடிய பேரறிவுப் பொருட்குவை யனைத்தும் பெற்று நுகரும்பேறு கற்றறிவுடையார்க்கே வாய்ப் பதாகவும், மக்களாய்ப் பிறந்தாருள்ளே பலர் கல்விகல்லாது கண்ணிலிகளாய் முகத்திற் புண்கொண்டு ‘தனக்குப் பாழ் கற்றறி வில்லா வுடம்பு' (நான்மணி - 20) என்றபடி பாழான உடலைச் சுமந்து திரிந்துழல்வது தகுதியாமோ? இனி, மக்களாய்ப் பிறந்தாரனைவரும் கல்வி கற்கவேண்டு மென்பதும், அங்ஙனம் கற்றலின் பயனாவது அறிவு பல்குத லென்பதும் மேற்கூறியவாற்றால் விளக்கமாம். சுருங்கக்கூறின், கல்விக்குப் பயன் அறிவு எனல் அமையும். எனவே கற்பாரின் நோக்கமும் அறிவுப்பெருக்கமெய்துதலேயாகல் வேண்டுமென்பது போதரும். இக்காலத்திலோ மிகவும் புல்லியதோர் நோக்கங் கொண்டு பெரும்பாலும் கற்குந்தொழில் நடைபெறுகின்றது. இஃதொழிந்து முற்கூறிய பெருநோக்குடன் கல்வி பயிலப்பெறுங் காலத்திற்றான் உண்மையான கல்வி இந்நாட்டில் நிலவுவதாகும். கல்விக்குப் பயன் அறிவுடைமை யெனவே, அறிவால் எய்தலாகாத தொன்றின்மையின் கல்வியுடையார் எல்லா நலங்களும் எய்து தற்குரியராவ ரென்பது பெறப்படும். கல்வியின் பயனைக்குறித்து, " கைப்பொருள் கொடுத்துங் கற்றல் கற்றபின் கண்ணுமாகும் மெய்ப்பொருள் விளைக்குநெஞ்சின் மெலிவிற் கோர்துணையுமாகும் பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம்புகழுமாம் துணைவியாக்கும் இப்பொரு ளெய்தி நின்றீ ரிரங்குவ தென்னை யென்றான்"2 என்று திருத்தக்க தேவரும், " அறம்பொரு ளின்பம் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும்-உறுங்கவலொன் றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியினூங் கில்லை சிற்றுயிர்க் குற்ற துணை"1 என்று குமரகுருபரவடிகளும் கூறியன தெளிந்த உண்மையாகும். இனி, கல்வியானது பொருள் பயக்குமாறெங்ஙனம் எனின், பொருளொன்றே கருதிப் பெரிதும் கல்வி பயிலப்பெற்று வரும் இற்றை நாளில் அஃதிவ்வாறு பயக்குமென எடுத்துரைத்தல் மிகை. அன்றியும், கல்வியானது 'கேடில் விழுச்செல்வம்' (குறள்-கல்வி-10) என்பதனையும் ஏனையது பொய்ப்பொருள் என்பதனையும் சிந்திப்பின் அது பொருளெலாம் பயக்குமென்றுரைத்தல் கல்வியின் சிறப்பைக் குறைத்தலேயாகும். கல்வி ஒளியையும் புகழையும் நல்குதல் குன்றின்மேல் விளக்குப் போலும். கற்றாரை விரும்பிப் பேணாதாரிலர். மக்களிடத்து இயற்கையன்புடைய தாயும் சிறப்பின் பாலால் மனந்திரிந்து கற்றமகன்பாலே கழியன்புடையளாகின்றாள். (புறநானூறு 183) வீட்டில் இங்ஙனமாக, நாட்டிலோ எனில், விறகிற் பற்றியெரியும் அழல் பெரிதாயினும் அதனை யெள்ளித் திரியிற்பற்றியெரியும் சிறிய அழலை வணங்குதல் போலக் (நான்மணிக்கடிகை 63) கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்ற இளைஞனையே யாவரும் போற்றுகின்றனர். நாட்டினையாளும் வேந்தனும் ஆண்டில் முதியனை வருகவென் றழையாது இளையனாயினும் அறிவுடை யோனை அழைத்துச் சிறப்புச் செய்து அவன் வழியிற் செல்லுதலும் உடையனாகின்றான். கற்றார்க்குத் தம்மூர் என்ப தொன்றில்லை; அவர்க்கு யாதும் ஊரே; யாவரும் கேளிர் (புறநானூறு - 192) ஒரு நிலத்தினை ஆளும் அரசனுக்கும் அவனது நாட்டிலே தான் சிறப்பு; அங்கும் அன்புடன் சிறப்புப் பெறுவது மிக்க அருமை. கற்றார்க்கோ சென்ற இடமெல்லாம் சிறப்பு (மூதுரை - 26) புவியாளும் வேந்தர்களும் கவியரசர்கட்குச் சிவிகை சுமந்தது முதலிய செய்திகள் கேட்கப்படுகின்றன. ஒப்புயர்வற்ற கல்வியாளரின் புகழுக்கு எல்லையேது? திருவள்ளுவர், கம்பர் முதலாயினாரின் புகழ் உலகம் அழியினும் அழிவதாமோ? புலவராயினார் தம் புகழை நிலை நிறுத்துவதுடன், செங்கோன்மை, கொடை, வீரம் முதலியவற்றாற் சிறப்பெய்திய பிறருடைய புகழையும் தாம் இயற்றும் நூல்களால் நிலைபெறச் செய்கின்றனர். புலவரென்பார் இல்லையாயின் முற்காலத்திற்கும் பிற்காலத்திற்கும் என்ன தொடர்ச்சியுண்டு? அப்பொழுது உலகமென்பது இருள் செறிந்ததோர் வனமேயன்றோ? இனி, கல்வியால் விளையும் இன்பத்தைச் சிறிது நோக்கு வோம். உலகினர் பலராலும் நன்கு மதிக்கப்படுதலே இன்பம் விளைப்பதொன்று. ஆயின், உண்மைக் கல்வியுடையார்க்கு அங்ஙனம் தம்மைப் பிறர் மதித்தல் முதலியவற்றான் உண்டாகும் இன்பம் அத்துணைப் பெரிதன்று. பிற்றை நாளில் உலகெலாம் போற்றும் பெரும் புலமையெய்தினார் சிலர் தாம் உயிர்வாழும் நாளில் யாரானும் மதிக்கப்படாதிருத்தலும், அவர் அம்மதிப்பை யொன்றாகக் கொள்ளாது புலமை நடாத்திச் சேறலும் கண்டும் கேட்டும் அறியற்பாலனவே. கல்வியுடையார் முன் அறியாத நுண்பொருள் பலவற்றைத் தமது கலையுணர்வால் அறியுந் தோறெய்தும் இன்பமே சாலவும் பெரிது. மற்று, நல்லிசைப் புலவரின் சுவை கனிந்த செய்யுட்களில் உள்ளம் அழுந்திநின்று, அவற்றின் சொற்பொருள் விழுப்பங்கண்டு தம்மையுமறந்து நுகரும் இன்பத்திற்கு ஓர் எல்லையுண்டோ? 'கூடலினாய்ந்த ஒண்டீந் தமிழின் றுறைவாய் நுழைந்தனையோ' (திருக்கோவையர்:20) என மாணிக்கவாசகப் பெருமானும் கண்டு கூறிய கற்றலின் வருத்தத்திற்கு அதனால் விளையும் இன்ப மன்றே பரிசிலாக நின்று அவரை மேலும் அத்துறையில் ஊக்காநிற்பது. " எண்ணெயு நானமு மிவைமூழ்கி யிருடிருக்கிட் டொண்ணறுந் துகிற்கிழி பொதிந்துறை கழிந்தனபோற் கண்ணிருண்டு நெறிமல்கிக் கடைகுழன்ற கருங்குழல்கள் வண்ணப்போ தருச்சித்து மகிழ்வானாத் தகையவே".1 என்னும் சிந்தாமணிச் செய்யுளையாதல், " ஓதிம மொதுங்கக் கண்ட வுத்தம னுழைய ளாகுஞ் சீதைதன் னடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான் மாதவ டானு மாண்டு வந்துநீ ருண்டு மீளும் போதக நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள்"2 என்னும் கம்பராமாயண விருத்தத்தையாதல், " யாழுமெழுதி யெழின்முத்தெழுதி யிருளின் மென்பூச் சூழுமெழுதியொர் தொண்டையுந் தீட்டியென்றொல் பிறவி ஏழுமெழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம் போழுமெழுதிற்றோர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே"3 என்னும் திருக்கோவை மணியையாதல், " எழுந்துலகை நலிந்துழலு மவுணர்கடம் புரமூன்று மெழிற்கணாடி உழுந்துருளு மளவையினொள் னெரிகொளவெஞ் சிலைவளைத்தோ னுறையுங் கோயில் கொழுந்தரள நகைகாட்டக் கோகநக முகங்காட்டக் குதித்து நீர்மேல் விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வாய்காட்டு மிழலையாமே"1 என்னும் தேவாரத் திருப்பாட்டையாதல், " கற்பகத்தின் பூங்கொம்போ காமன்றன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ அற்புதமோ சிவனருளோ வறியேனென் றதிசயித்தார்"2 என்னும் பெரியபுராணத் திருச்செய்யுளையாதல் படிக்கும் பொழுது செந்தமிழ்ப் புலவர் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் இன்பம் இனைத்தென்பது அன்னார்க்கே தெரியும். பெரிதும் உவகைச் சுவை பற்றியனவே இங்கே காட்டப்பெற்றன. வீரம், வியப்பு முதலிய ஏனைச்சுவை பற்றியனவும் இங்ஙனமே கொள்க. இத்தகைய இன்பங்கருதியே ‘ ஆயுந் தொறுந்தொறு மின்பந் தருங்கல்வி’ 3 என்று தணிகைப்புராணமுடையாரும், ‘ தேருந் தொறுமினி தாந்தமிழ் போன்று’4 என்று தஞ்சைவாணன் கோவையுடையாரும் கூறிப்போந்தனர். தெய்வப் புலமை திருவள்ளுவனாரோ ‘ தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்’5 என்றதன்றியும், நற்குணமுடையாரது நட்பும் பழகுந்தோறும் இனிதாகுமென்பதற்கு உவமையாக. ‘ நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் பண்புடை யாளர் தொடர்பு’6 எனக் கூறியருளினார். கம்பநாடர் தாம் நுகர்ந்த செய்யுளின்பத்தைப் பலவிடத்துங்காட்டிச் செல்கின்றவர் சீதாபிராட்டியையே ‘ செஞ்சொற் கவியின்பம்’1 என்று பாராட்டுகின்றார். இங்கே காட்டியவற்றிலிருந்து கல்வியால் விளையும் இன்பம் எத்தகையதென ஒருவாறு புலனாதல் கூடும். இனி, 'பிறந்தோருறுவது பெருகிய துன்பம்' (மணிமே. ஊரலர்: அடி 65) என்றபடி, இவ்வுலகிலே அடைந்தாரைப் பிரிதலினாலும், பொறுத்தற்கரிய பிணியாலும், பொருட் கேட்டினாலும், பிறவாற்றாலும் மக்களுக்குத் துன்பமுண்டாதல் இயல்பே. கல்வியில்லாதார் ஊழாலே தமக்குத் துன்பம் நேர்ந்த விடத்து அதனுள் அமிழ்ந்து கரைகாணாது வருந்துவர்; முன்னறிந்து காக்கத்தகும் துன்பங்களையும் அவர்கள் காக்க வல்லுநரல்லர்; அன்றி, " அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்குஞ் செய்த லரிது"2 என்றபடி, பகைவர் பலர் கூடிச் செய்யவொண்ணாத இன்னல் களைத் தாமேயும் தமக்கு ஆக்கிக்கொள்வர். கல்வியுடையாரோ என்றால் துன்பங்களின் காரணங்களை நன்கு அறிந்திருத்தலின், அவை வாராமற்பெரிதும் காக்கவல்லுநர்; ஊழான் ஒரு துன்பம் உற்றவிடத்தும், கடவுட்பணி முதலியவற்றால் அதன் வலியைக் குன்றுவிப்பர்; பண்டு, இராமன், அறன்மகன் முதலாயினார்க்கும் கொடிய துன்பங்கள் நேர்ந்தமையும், அவர்கள் அவற்றான் மாழ்குதலின்றி நோன்று இன்ப துன்பங்களை ஒரு பெற்றியே நோக்கி அவற்றை வென்று திகழ்ந்தமையும் முதலிய வரலாறு களைச் சிந்தித்தும் அதனைப்பொறுப்பர்; இருவினைப்பயன் களுள் நல்வினையின் பயனாகிய இன்பம் வந்தபொழுது அதற் கமைந்திருந்த யாம் தீவினைப்பயனாகிய துன்பம் வந்த பொழுது அதனைப்பொறாது அல்லற்படுவது தகுதியன்றென்பது உன்னியும், ஊழான் எய்தற்பாலதாய துன்பத்தை ஒருதலையாக நுகர்ந்தே யாகல் வேண்டுமென்பதும் அதுகுறித்து அல்லலுற்றழுங்குதல் அதற்குத் தீர்வாகாதென்பதும் கருதியும் அதனான் வருந்தா திருப்பர்; துன்பமாவது அறிவின் ஓர் திரிபே என்பதும், அதனைமாறி நினைக்க அஃதொழியுமென்பதும் ஓர்ந்தும் அவ்வாறு அதனை மாற்றுவர்; துன்பமானது உள்ளத்திற் புகுந்து வருந்துதற்கு அற்றம்பெறாவாறு இடையறாது நூற்பொருளை ஆராய்தலினாலும் அதனை யொழிப்பர்; தனக்கு உவமை இல்லாதான் றிருவடிகளைச் சிந்தித்தலினாலும் அதனைப் போக்குவர். நெஞ்சு ஓங்குபரத்துற்றோராகிய அன்னோர் உடற்கு வரும் இடர் முதலியன அடுக்கும் ஒருகோடி யாயினும் நடுக்க முறுதலிலர். இவையெல்லாம் கருதியே ஆன்றோர்கள், ‘நெஞ்சின் மெலிவிற்கோர் துணையுமாகும்’1 எனவும், ‘மம்ம ரறுக்கு மருந்து’2 எனவும், ‘உறுங்கவலொன் றுற்றுழியுங்கைகொடுக்கும்’3 எனவும், ‘உற்றுழி யுதவுங் கல்வி’4 எனவும் கூறிப் போந்தனரென்க. இனி, கல்வியானது அறத்திற்குக் கருவியாதல் யாங்ஙனமெனின், இடையறாது நூற்பொருளை ஆராய்தலினாலே தவஞ்செய்வார் போன்று மனம் ஒருங்கி நிற்றலானும், நல்லம்யாமென்னும் நடுவுநிலையுடையராய் வாய்மை பேசுதலானும், அன்பும் அருளுமுடையராய் எவ்வுயிர்க்கும் இன்னா செய்யாமையானும் கல்வியுடையார் அறம் வளரும் செழி நிலனாதல் தேற்றம். மற்று, அவர் யாதொரு பழி பாவத்திற்கும் இடனின்றி வாழ்நாள் முழுதும் இரவு பகல் உழந்து தேடியதும், எல்லா நலங்கட்கும் காரணமாயதும், நிலைபேறுடையதும் ஆகிய கல்விப்பொருளை ஏனையர்க்கு வரைவின்றி வழங்கும் பேரறமானது பெரும்பாலும் தீவினையால் எய்தப்பெறுவதும், இன்பமேயன்றித் துன்பமும் விளைப்பதும், நிலையற்றதும் ஆகிய ஏனைப்பொருளை வழங்கும் அறத்தினும் எத்துணையோ மடங்கு பெரிதா மென்பதற்கு ஐயமின்று. பொருளால் அறஞ்செய்யு மிடத்தும், கல்வியில்லாதார் இக்காலத்து இவ்விடத்து இவ்வறம் செய்யற்பாலதென்றும், அது செய்யும் முறைமை யிதுவென்றும், அதனால் எய்தும் பயன் இன்னதென்றும் ஓர்ந்துணராது செய்தலின் அவ்வறம் திட்பமுடையதாகாது. ‘பன்னும் பனுவற் பயன்றே ரறிவிலார் மன்னு மறங்கள் வலியிலவே’5 என்று சிவப்பிரகாசவடிகள் கூறுதலுங்காண்க. அறத்தின் பயனளவு பொருளளவிற்று அன்றென்பது ‘ இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் றுணைத்துணை வேள்விப் பயன்’1 என்னும் திருக்குறளாலும், ‘ - - - - - - - - - - - - - - - - - - அறப்பயனும், தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்’2 என்னும் நாலடியார்ச் செய்யுளாலும் ஓர்ந்துணரப்படும். எனவே, கல்வி யில்லாதார் பெரும் பொருள் செலவிட்டும் எய்தலாகாத அறத்தினைக் கற்றவர் சிறிது பொருள் கொண்டும் எய்துதற்குரியராவர் என்பது பெறப்படும். இனி, வீடுபேற்றுக்குக் காரணமாவது மெய்யுணர்வாகலானும், மெய்யுணர்வு கல்வியானெய்தற் பாலதாகலானும் கல்வி வீடும் பயக்குமெனல் அமைவுடைத்தே. இதனை, ‘ கற்பக் கழிமட மஃகு; மடமஃகப் புற்கந்தீர்ந் திவ்வுலகிற் கோளுணரும்; கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரும்; அந்நெறி இப்பா லுலகத் திசைநிறீஇ யுப்பால் உயர்ந்த வுலகம் புகும்’3 என்னும் நான்மணிக்கடிகைச் செய்யுள் நன்கு விளக்குதல் காண்க. இக்கருத்தானே, ‘ எல்லா வுயிர்க்கு மிறைவனே யாயினும் கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே’4 என்று திருமந்திரமும், ‘ கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமாக் கடலை மற்றவ ரறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கை’5 என்று திருவிசைப்பாவும் கூறுவவாயின. இங்ஙனம் எல்லாப் பேற்றுக்கும் அடிப்பட்ட கருவியாயிருப்பது கல்வியென்னும் இவ்வுண்மை, கல்வியிற் பெரியராய கம்பரால் அயோத்தி மாநகரைச் சிறப்பித்துரைக்கும் ஓர் செய்யுளில் வைத்து நன்கு விளக்கப்பெற்றுளது. அது, ‘ ஏகம் முதற்கல்வி முளைத்தெழுந் தெண்ணில் கேள்வி ஆகம் முதற்றிண் பணைபோக்கி யருந்த வத்தின் சாகந் தழைத்தன் பரும்பித் தருமம் மலர்ந்து போகங் கனியொன்று பழுத்தது போலு மன்றே’1 என்பது கல்வியென்னும் ஓர் முளை, முதலில் முளைத்துக் கேள்வியாகிய கிளைகளை விடுத்து, அரிய தவமென்னும் தழை தழைத்து, அன்பாகிய அரும்பரும்பி, அறமென்னும் மலர் மலர்ந்து, போகமாகிய பழமொன்று பழுத்ததுபோலும் அந்நகர் என்னும் இதனால், மக்களெய்தும் முடிந்த பயனாகவுள்ளது இன்பப்பேறு என்பதும், அதற்குப் பரம்பரையிற் காரணமாகவிருப்பது கல்வி யென்பதும் பெறப்படுதல் காண்க. போகம் என்பது இம்மையின்பம், மறுமையின்பம், வீட்டின்பம் என்னும் மூன்றையுங் குறிப்பதாகக் கொண்டு, அவற்றிற்குத்தக அறம் முதலியவற்றிற்கும் பொருள் கொள்ளுதல் வேண்டும். இனி, இதுகாறும் கல்வியின் பேறுகளை விரித்துரைத்தன கொண்டு, கல்லாதார்க்கு எவ்வாற்றானும் உய்தியில்லை; அவர் எப்பேறும் அற்றவரே யென்றாதல், கற்றவரென்பார் அனைவரும் எல்லாப்பேறும் ஒருங்குபெற்றவரென்றாதல் கோடலமையாது. கல்லாராயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகுதலாலும், கேள்வியாலும் நல்லறிவு தலைப்படுதலும், அதனால் அறம் பொருளின்பங்கள் எய்துதலும், துன்பத்தினீங்குதலும் கூடும். ‘ கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற் கொற்கத்தி னூற்றாந் துணை’2 என்பது பொய்யாமொழியன்றோ? கற்றாருள்ளும் முற்கூறிய பேறுகள் அற்றாரும், எவ்வமுழப்பாருமுளர். எனினும், அவ்விழப் பிற்கும் உழப்பிற்கும் காரணம் அவரது கல்வியன்றென்பது கடைப்பிடிக்க. மக்கள் இம்மையில் எய்துந் துன்பத்திற்குக் காரணம் முன்னரே செய்துகொண்ட வினையும், பல பிறப்பினும் பயின்றுவந்த வாதனைவலியால் எளிதிலே தவிர்க்கவொண்ணாது இப்பொழுது செய்யும் வினையுமாம். கல்வி எவ்வகையிலும், அத்துன்பத்தை யொழிப்பதற்கே கருவியாகின்றது. கல்வியால் வரும் அறம் பொருளின்பமாகிய பயன்கள் இம்மையில் மிக விளையாதொழியினும். " ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து"1 என்று செந்நாப்போதார் கூறியவாறு, அது, வரும் பிறவிகளிலும் தொடர்ந்து, அப் பயன்களை விளைத்து, உயிர்க்கு அரணாதல் ஒருதலை. இனி, கற்க வேண்டுவன யாவென நோக்குவோம். வடமொழி வாணர், கலைகள் அறுபத்து நான்கு என வகுத்துள்ளனர். அவற்றுள், ஆகருடணம் முதலிய அட்ட கன்மங்கள், பல்வகைச் சாலங்கள், நவமணிப் பரீட்சைகள், யானை, குதிரை முதலியவற்றின் பரீட்சைகள் என்றிவை முதலிய வெல்லாம் தனித்தனி ஒவ்வொரு கலைகளாக எண்ணப்பட்டுள்ளன. அவற்றுட் சேராத வித்தை களும், தொழிற்றிறங்களும் மற்றும் எத்தனையோ உள்ளன. மேல் நாட்டினரின் ஆராய்ச்சியால் உண்டாகிய புதிய கலைவகைகளும் பல. இவை யாவும் எல்லாராலும் கற்றற்பாலன வல்ல; கற்க வேண்டியனவும் அல்ல. இவற்றிற் பெரும்பாலன, தொழிற் பயிற்சி என்னும் பெயரால் வேறு பிரித்தெண்ணத் தகுவன. மாந்தரனை வரும் ஒரு தலையாகக் கற்கவேண்டும் கல்வி யாவது, அறிவை வளர்த்து, மக்கட்பண்பை நெறிப்படுத்து, உண்மையை உணர்த்தி, இம்மை மறுமை வீட்டின்பங்களை நல்கவல்லனவாய்ப் புலத்துறை முற்றிய சான்றோர்களால் அவ்வம் மொழிக்கண் இயற்றப் பட்டுள்ள இலக்கியங்களையும், விதி நூல்களையும், உண்மை நூல்களையும் கற்றுணர்தலாம். அவற்றின் பொருள்களை ஐயந் திரிபற உணர்தற்கு இலக்கண நூற்பயிற்சியும் அளவை நூற்பயிற்சியும் இன்றியமையாதன வாகலின், அவையும் ஒரு தலையாகக் கற்க வேண்டுவனவாகும். அவற்றின் இன்றியமையாச் சிறப்பு நோக்கியே, " எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு"2 எனத் தெய்வப் புலவரும் அருளிச் செய்வாராயினர். தமிழைப் பொறுத்த வளவில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் என்னும் இலக்கியங்களும், திருக்குறள், நாலடி நானூறு, பழமொழி நானூறு முதலிய விதிநூல்களும், சமய குரவர் முதலாயினார் அருளிச்செய்த சைவத் திருமுறைகள் பன்னிரண்டும், வைணவ சமயப் பெரியார்கள் அருளிச்செய்த நாலாயிரப் பிரபந்தமும் ஆகிய உண்மை நூல்களும், தொல்காப்பியம் என்னும் கருவி நூலும் கற்கவேண்டிய தலைசிறந்த நூல்களாகும். துறைதோறும், மற்றும் சிறப்புடைய நூல்கள் பலவுள்ளன. தொல்காப்பிய உரைகள், களவியல் உரை, திருக்குறட் பரிமேலழகர் உரை முதலிய உரைகளும் படித்தறியற் பாலன. இவை யனைத்தும், நன்கு கற்றோரே தமிழிற் புலமை யுடையோராவர். உண்மை நூல் ஆராய்ச்சி செய்வோர், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் என்னும் சைவசித்தாந்த நூல்களையும் அவற்றிற்குச் சிவஞானயோகிகள் இயற்றிய உரைகளையும் கற்றுணர்தல் வேண்டும். முற்குறித்த நூல்களுள்ளே, திருக்குறளானது உறுதிப் பொருளெய்துதற்குரிய மக்கள் ஒழுகலாறுகளை வரையறுத் துணர்த்தும் சீரிய விதி நூலாக இருப்பதன்றி, ஒப்புயர்வற்ற திப்பிய இலக்கியமாகவும், உண்மை நூலாகவும் திகழ்கின்றது. " சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த விருவினைக்கு மாமருந்து-முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய வின்குறள்வெண் பா"1 என ஆன்றோர் கூறியது எட்டுணையும் புனைந்துரையன்று. தமக்கு எய்ப்பில் வைப்பாகக் கிடைத்திருக்கும் அம்மெய்ப் பொருட் களஞ்சியத்தில் நுழைந்து, தம் அறிவால்முகந்த அரும் பொருள்களை நுகர்ந்து மிடிதீர்ந் தின்புற்றிருத்தல் தமிழ்மக்கள் எல்லாருக்குமுரிய கடனாகும். தமிழரே யன்று; பிறமொழி யாளரில் அம் மொழிகளைக் கற்றுத் துறைபோயினாரும், தம் உணர்வு ஐயந் திரிபில்லதும், தம் புலமை குறைபா டில்லதும் ஆதலை விரும்பின், முடிவாகக் கற்றுணரற்பாலது திருக்குறள் என்னும் தெய்வச் செந்தமிழ்த் திருமறை யென்பது தேற்றம். இனி, கற்கத் தகுந்தனவாகிய இத்தகைய நூல்களை எங்ஙனம் கற்றல் வேண்டுமென்று பார்ப்போம். 'கற்க கசடறக் கற்பவை' என்றார் திருவள்ளுவர். (கல்வி - 1) கசடறக் கற்றலாவது ஐயம், திரிபு அறக் கற்றலாகும். ஐயமாவது, குற்றியோ மகனோ, கயிறோ அரவோ, இப்பியோ, வெள்ளியோ என்றாற்போல ஒன்றிலே துணிவு பிறவாது நிற்கும் பல தலையாய உணர்வு. திரிபாவது; குற்றியை மகனென்றும், கயிற்றை அரவென்றும், இப்பியை வெள்ளி யென்றும் உணர்தல்போல், ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணியும் மயக்க வுணர்வு. ஒருவன் எத்தனை நூல்களைப் பரிந்து தேடிப் படித்து, அவற்றைத் தன் நெஞ்சினிடமெல்லாம் நிறைத்து வைப்பினும், அவற்றின் பொருளை உள்ளவா றுணரானாயின், அவன் எய்தும் பயன் என்னை? பல நூல்களையும் பயின்று, அவற்றின் பொருளை நுண்ணிதின் ஆராய்ந் துணர்ந்த அறிவுடையோரே கற்றார் எனப்படுவர். நுண்ணியதாய் மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினுஞ் சென்ற அறிவில்லாதவன் யாவன், அவன் கல்லாதவன் என்பது தோன்ற, வள்ளுவனாரும், கல்லாமை என்னும் அதிகாரத்தில், " நுண்மா ணுழைபுல மில்லா னெழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று"1 என்றமை காண்க. அத்தகைய நுண்ணறிவு இயல்பிலே வாய்க்கப் பெறாதாரும், நூல்களை இடையறாது பயின்று ஆராய்தலினால் அதனைப் பெறுதல் கூடும். நூலாராய்ச்சியும் நுண்ணறிவும் ஒன்றற்கொன்று துணையாக நிற்றல் கண்கூடு. எனவே, கல்வி என்பது தொல்லோர் இயற்றிய நூல்களை அப்படியே பாடஞ் செய்தலென்பதன்று; அவற்றை நன்கு ஆராய்ந்து, பொருளுண்மை காண்டலே கல்வியாகும். இன்னும் பார்க்கின், அவற்றின் பொருள், அல்லது கருத்தை அறிதல்மட்டும் போதாது; அவை ஒன்றற் கொன்று மறுதலையாயவழி, அவற்றுள் மெய்யிது, பொய்யிது வெனத் துணிதலும் வேண்டும். " பத்தொ டொன்பது பாடை நூல்களும் மாறு படுதல் வழக்கே யன்றியம் ஒவ்வொரு பாடையி னுள்ளே யோரின் பலநூன் மாறு படுமே யன்றியும் ஒவ்வொரு நூற்கட லுள்ளே யோரின் எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தனுள் ஒன்றனை யொன்றே யொழிக்கு மன்றியும் ஓரதி காரத் துள்ளே யோரின் ஓரியல் விதியினை யோரிய லொழிக்கும் ஓரிய லதனி னுள்ளே யோரின் ஒருசூத் திரவிதி யொருசூத் திரவிதி தன்னைத் தடுத்துத் தள்ளு மன்றியும் ஒருசூத் திரத்தி னுள்ளே யோரின் ஒருவிதி யதனை யொருவிதி யொழிக்கும் நூலா சிரியர் கருத்தினை நோக்காது ஒருசூத் திரத்திற் கொவ்வொரா சிரியர் ஒவ்வொரு மதமா யுரையுரைக் குவரே அவ்வுரை யதனு ளடுத்தவா சகங்கட்கு அவர்கருத் தறியா தவரவர் கருத்தினுட் கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே"1 எனஇலக்கணக் கொத்துடையார் எடுத்துக்காட்டியவாறு, தொல்லை நூல் உரைகளின் அமைப்பு முறையையும், அவை ஒன்றையொன்று மறுத்தும், ஒன்றொடொன்று முரணியும் செல்லுமாற்றையும் ஓரின், உண்மைப் பொருள் காண்டற்கு ஆராய்ச்சி எத்துணை இன்றியமை யாததென்பது புலப்படும். இக் கருத்தானன்றே, " எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"2 எனப் பொய்யில் புலவரும் கூறிவைத்தனர். ஆராய்ச்சியின்றேல், மக்களின் அறிவு வளர்ச்சி யடைதற்கு வழியில்லை. ஒரு மொழி யானது துறைதோறும் எண்ணிறந்த நூல் உரைகளைக் கொண்டு மிளிர்வது, அம் மொழியினையுடைய மக்களின் ஆராய்ச்சித் திறத்தினால் ஆயதேயாம். மேனாட்டின ரிடத்தில்போல நம்மவரிடையே ஆராய்ச்சி காணப் படாமையாற்றான், இற்றை நாளிலே நம்நாட்டு மொழிகள் வளர்ச்சியற்றிருக்கின்றன. ஆனால், நம்முன்னையோர் ஆராய்ச்சி இன்ன தென அறியாதாரல்லர். முப்பது நாற்பது நூற்றாண்டுகளின் முன்பே தமிழ் மக்கள் ஆராய்ச்சி செய்யு முறைமையையும், அதன் பெருமையையும் நன்கறிந்திருக்கின்றனர். மிக்க தொன்மையுடைய தாகிய தொல்காப்பியம் என்னும் நூலே தமிழின் வழக்கிலும் செய்யுளிலும் உள்ள எழுத்துச் சொற்பொருள் களை முற்ற ஆராய்ந்து முறைப்படுத் தியற்றப்பெற்ற தன்றோ? தொல்காப்பியர் கூறியிருக்கும் நூலிலக்கணம், உரையிலக் கணமெல்லாம் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டனவே யாகும். அவர், உரையைக் காண்டிகை யென்றும், உரை (விருத்தி) யென்றும் இரு வகைப்படுத்து வைத்து, " சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை யெல்லாம் ஒன்ற வுரைப்ப துரையெனப் படுமே"3 என்றும், " மறுதலைக் கடாஅ மாற்றமும் உடைத்தாய்த் தன்னூ லானும் முடிந்தநூ லானும் ஐயமும் மருட்கையும் செவ்விதின் நீக்கித் தெற்றென வொருபொருள் ஒற்றுமை கொளீஇத் துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்"1 என்றும் உரையிலக்கணங் கூறியிருப்பதனை உய்த்துணர வல்லார்க்கு, இவ்வுண்மை புலனாகா நிற்கும். அவர், 'என்மனார் புலவர்' என்று கூறியிருப்பது அவருக்கு முன்னும் அது தலை சிறந்து நின்றமையைக் காட்டுகிறது. ஒரு நூல் கற்றற்கண் மன வெழுச்சி யுண்டாதற்கே அந் நூலின் முகத்தே ஆராய்ச்சி யுரை யொன்று அமையப் பெற வேண்டுமென முன்னையோர் கருதி யிருந்தன ரென்பது, ஆக்கியோன் பெயர் முதலிய எட்டனையும், காலம் முதலிய மூன்றனையும் வாய்ப்பக் காட்டும் சிறப்புப் பாயிரத்தினை ஒவ்வொரு நூலும் உடைத்தாயிருக்க வேண்டுமென அன்னார் வலியுறுத்தமையாற் போதருகின்றது. இங்கே காட்டியவற்றி லிருந்து, பழைய நூல் உரைகளின் பொருளை யுணர்தற்கும், அவை ஒன்றோ டோன்று முரணியவழி அவற்றின் மெய்ம்மை பொய்ம்மை தெளிதற்குமே யன்றி, புதிய நூல் உரைகள் வகுத்தற்கும் ஆராய்ச்சி இன்றியமையாத தென்பது பெறப்படுதல் காண்க. இங்ஙனமாகவும், தமிழ் கற்றாருள்ளே சிலர், முன்னோர் கூறிய அனைத்தையும் முழு உண்மைகளாகக் கொள்ள வேண்டு மென்றும், அவற்றை ஆராய்ந்து அவற்றிலுள்ள வழுக்களை யெடுத்துக் காட்டிக் களையலுறின், அது பெரியோரை இகழ்தலாகிய குற்றமாம் என்றும் கூறித் தமிழ் வளர்ச்சிக்கு இடர் விளைப்பாரா கின்றனர். அன்றியும், அவர் அங்ஙனம் கூறுதலால் தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்கட்கு உரை வகுத்த முன்னோர் பலர், தமக்கு முற்பட்ட உரைகளை மறுத்துப் பெரியோரை யிகழ்ந்த குற்றத்திற்காளாயினரெனத்தாமே அப்பெரியோரை இகழ்ந்து, குளிக்கப் போய்ச் சேறு பூசிக்கொள்வாராகின்றனர். இவர்கள் தம்மீது வைத்திருக்கும் அறிவுடன் கூடாத பற்றினை அப்பெரியோர்கள் அறிவரேல், மிக அருவரா நிற்பரென்பது ஒருதலை. இனி, ஆராய்ச்சி இன்றியமையாததென்றது கொண்டு, யாவருமே அது செய்தற்குரியரெனக் கொள்ளுதல் கூடாது. முறையான கல்வி சிறிதேனும் உடையாரன்றி, ஏனையோர் ஆராய்ச்சிக்குரியரல்லர். அடிப்பட்ட கல்வி சிறிதுமின்மையால், பழைய நூல் உரைகளின் பொருளுணரும் அறிவில்லாது வைத்துத் தம்மைப் பிறர் ஆராய்ச்சி வல்லுநரென மதித்தல் கருதி, அவையிற்றை ஆக்கியோர்மீது குற்றங் கூறித் திரிவாரும், அவரது கூற்றினைப் போற்றுவாரும் ஒரு நாட்டில் இருப்பின், அஃது அந்நாட்டின் இழிந்த நிலைமைக்கு அடையாளமாகும். கல்வி யுடையாரும் தாம் கற்று வல்ல துறையிலே ஆராய்ச்சியை நடாத்துதலே தகுதியாம். அவர் அங்ஙனம் ஆராயுங்காலும், விருப்பு வெறுப்பின்றி, உண்மைப் பொருள்காண வேண்டு மென்னும் நோக்கத்துடன் தொடங்கினாலன்றி, அது பயனுடைய தாகாது. இப்பண்புடன் ஆராய்ச்சியை மேற்கொண்டு பொருளுண்மை காண்போரே அறிவுடையோரென மதிக்கத் தக்காராவர். " காய்தல் உவத்தல் அகற்றி யொருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே-காய்வதன்கண் உற்ற குணந்தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும்"1 என்னும் ஆன்றோர் செய்யுள், ஆராய்ச்சி செய்வார்க்கு இருக்க வேண்டும் இன்றியமையாத பண்பினையும், அஃதில் வழிப்படும் இழுக்கினையும் நன்கு அறிவுறுத்துதல் காண்க. நூலாராய்ச்சி செய்வார், தாம் ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு, அதற்கு முரணாய வழியெல்லாம் அந்நூற்பொருள்களைத் திரித்து கூறுதல் அடாத செயலாகும். கல்வி கேள்விகளாற் றிருந்திய மனமுடையாரொருவர் தம் நுண்ணறிவாற் பலகாலும் ஆராய்ந்து நலம் பயப்பதெனக்கொண்ட கொள்கையுடன் ஏனைச் சான்றோர் இயற்றிய நூற் பொருள் முரண்படுமாயின், அவர் அந்நூற்பகுதியையோ, அன்றி, அந்நூல் முழுதையுமோ தமக்கு உடன்பாடாகக் கொள்ளாது விடுத்தல் குற்றமாகாது. ஆனால் அந்நூலாசிரியர் கருத்துக்கு மாறாகத் தமது கொள்கையுடன் பொருந்த அதற்குப் பொருள் செய்தலே ஏதமாம். வாழ்க்கையின் நோக்கமே மெய்யுணர்வு கைவரப் பெறுதலாயிருக்க, அதற்கு நெறியான நூலாராய்தற்கண் பொய்யினைப் பயின்று வருவது எத்துணை அறியாமையாகும். " யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற"2 என்னும் பொய்யில் புலவரின் மெய்யுரையைக் கற்றறிந்தாரொருவர் அவர் வாய்மொழிகட்கே பொய்ப்பொருள் கூறிவரின், அவரது பேதைமையை என்னென்றுரைப்பது! முதற்கண் பொய்யென அறிந்துவைத்தே ஒன்றனைக் கூறுவார், அதனை நிலைநிறுத்தலே கருத்தாகச் சான்றுகள் தேடிமுயலும்பொழுது, நாளடைவில் அவ்வெண்ணம் உறைத்தலால் அதுவே மெய்யாக மாறித் தோன்றுதலும் உண்டு. அவர் நல்லூழ் இருந்து திருந்தினன்றி, அவர்க்குப் பிறர் உண்மையுணர்த்துவ தென்பது இயல்வதொன்றன்று. எத்தகைய அறிவுடை யார்க்கும் ஓரோ வழி உண்மை. தோன்றாது. ஒன்று மற்றொன்றாகத் திரிந்து தோன்றுதல் நிகழக்கூடுவதே. அத் திரிபுணர்ச்சியின் பயனாக, அவர் தவறான கொள்கை யொன்றை வெளிப்படுத்தலும் கூடுவதே. எனினும், அவர் தாமாகவோ, அன்றிப் பிறரால் உணர்த்தப்பட்டோ தம் கொள்கை தவறென அறிந்த வழி, அதனை விடுத்து உண்மையைக் கடைப்பிடித்தலே நெறியாகும். அவ்வாறன்றித்தாம் முதலிற் கொண்ட கொள்கையை மாற்றுதல் இழிவென்னும் "மாண்பிறந்த மான"முடையராய், அதனையே நிறுத்துதற்கு முயல்வோர் தமக்கும், பிறர்க்கும் கேடு சூழும் தறுகணாளராவர். இத்தகைய தீமைகட்கெல்லாம் காரணம். " வெண்மை யெனப்படுவதி யாதெனின் ஒண்மை யுடையம்யா மென்னுஞ் செருக்கு"1 என வள்ளுவனார் கூறியாங்கு, யாவரினும். தம்மையே அறிவுடை யாரென மதித்துத் தருக்கும் புல்லறிவாண்மையாகும். இனி, நூலாராய்ச்சி செய்வார்க்கு ஒவ்வொன்றிலுமுள்ள நலங்களைக் கண்டறிய வேண்டுமென்னும் ஆர்வமே மிகுந்திருக்க வேண்டும். கடலின் ஆழத்தேயுள்ள விலையுயர்ந்த மணிகள் போன்று, நூலினுள்ளே அமைந்திருக்கும் அரிய கருத்துக்களும், உண்மைகளும்-அவற்றை அறிய வேண்டுமென்னும் அவாவும், உழைப்புமுடையார்க்கே விளங்கித்தோன்றுவன; அல்லாதார்க்கு வெறுங் கூழாங்கல்லும், கிளிஞ்சிலும் போல்வனவே தோன்றா நிற்கும். அவர் அவற்றையே பொருளெனக் கொண்டு அமைதலோ, அன்றி அந்நூலினை எள்ளி நகையாடலோ செய்வர். ஆராய்ச்சி முறை குறித்து மற்றும் கூறவேண்டுவன பலவுள்ளன. எனினும், இவ்வுரை விரிந்து செல்லாமை கருதி இன்னும் ஒன்று மட்டும் குறிப்பிட்டு நிறுத்துதும். முற்சொன்ன குற்றமொன்று மின்றி ஒருவர் நூலினை ஆராயும் வழியும், அந்நூல் தோன்றிய காலம் முதலியவற்றின் உணர்ச்சியில்வழி, அவர் அந்நூற் பொருளை உள்ளவாறுணரும் வலியிலராகின்றனர். இக்காலத்தே நம்மவரிற் சிலர், ஒருநூலின் பொருளை நோக்கவேண்டுமேயன்றி, அது தோன்றிய காலத்தை நோக்கவேண்டுவ தின்றென்கின்றனர். வேறு சிலர், நூல் தோன்றிய காலத்தை அதன் பெருமைக்கோ, சிறுமைக்கோ காரணமாகக் கொண்டுவிடுகின்றனர். இருவர் கொள்கையிலும் ஓரளவு உண்மை யிருப்பினும், ஆழ்ந்து நோக்கின், பெருமை சிறுமைக்காகவன்றி, நூலின் பொருளை உள்ளவாறுணர்தற் பொருட்டே அதன் காலத்தை வரையறுத்துணர்தல் வேண்டு மென்பதும், காலத்தை நோக்க வேண்டுவ தின்றென்பது அறியாமையா மென்பதும் புலப்படும். திருக்குறள் முதற்பாவிலுள்ள 'ஆதி' என்னும் சொல்லுக்கும், தொல்காப்பியத்தின் இரண்டாம் சூத்திரத்திலுள்ள 'ஆய்தம்' என்னும் சொல்லுக்கும் சிலர் கூறிவரும் பொருள்கள் எவ்வளவு பொருத்தமானவை என்பது காலவாராய்ச்சியாற் புடமிட்டறி வார்க்கே வெளிப்படும் என்பதனை இங்கே சான்றாகக் காட்டுதும். இனி, இங்ஙனம் பன்னூல்களையும் ஆராய்ந்தறிந்த புலமை யுடையார் தமக்கும், உலகிற்கும் பயனுண்டாக வாழு நெறியைப் பின்வருமாறு சுருக்கிக் கூறுதல் சாலும். 1. தாம் அறிந்த பொருள்கள் தம் வாழ்விலே அல்லது அழுந்திய உணர்விலே ஒன்றுபட வொழுகுதல். 2. தாம் அரிதின் உணர்ந்த பொருள்களை ஏனையர் எளிதின் அறிந்து பயனெய்துமாறு உரைத்தலோ, எழுதுதலோ செய்து போதரல். 3. உலகத்தோடு பொருந்த வொழுகுத லாகிய மக்கட் பண்பினை யுடைய ராதல். 4. வாலறி வுடைய இறைவன் றிருவடிகளைச் சிந்தித்து வாழ்த்தி வணங்குதல். 10. வள்ளுவர் வாய்மொழி வள்ளுவர் வாய்மொழி என்னும் தொடர் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய திருக்குறள் என்னும் பொருளதாகும். திருவள்ளுவ மாலையில் 'வள்ளுவர் வாய்மொழி மாண்பு' 'வள்ளுவர் வாய்மொழி மாட்டு' என வருதலுங் காண்க. வாய்மொழி என்பது மெய்யுரை என்னும் பொருளதுமாம். திருவள்ளுவரைப் பொய்யில்புலவர் என்றும், அவரியற்றிய திருக்குறளைப் பொய்யா மொழி என்றும் சான்றோர்கள் போற்றி வந்திருக் கின்றனர். 'திருவள்ளுவர் மொழிந்த பொய்யாமொழி' என்னுந் தொடர் திருவள்ளுவ மாலையில் உள்ளது. நல்லிசைப் புலவ ராகிய கூலவாணிகன் சாத்தனார் தாம் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில், " தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்"1 எனத் திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் என்றும், திருக்குறளைப் பொருளுரை யென்றும் கூறியிருத்தலுங் காண்க. பொருள் என்பது மெய்ம்மை என்னும் பொருளதாதலை 'பொருள் சேர் புகழ்' (திருக்குறள்-5) என்பதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையாலறிக. இத்தகைய மெய்ந்நூலை இயற்றிய ஆசிரியரது வரலாறாக இப்பொழுது நாம் அறியக்கிடப்பது ஒன்றுமில்லை யென்றே சொல்லலாகும். இவரைப்பற்றி வழங்கும் கதைகள் பலரும் அறிந்தனவாகலின் அவற்றை இங்கெடுத்துக் கூறுகின்றிலேன். அவையெல்லாம் வள்ளுவனார் காலத்துடன் தொடர்புற்றெழுந்த சான்றுகளுடன் கூடியனவல்ல. அவை எங்ஙனமாயினும் அவரது நெய்தற்றொழில், மனையறமாண்பு என்பவற்றைக் குறிக்கும் கதைகள் சிறந்த நீதியை அறிவுறுத்துவனவாகலின் அவற்றைப் போற்றிக் கொள்வதில் இழுக்கொன்றுமில்லை. இனி, ஆராய்ச்சி முறையிலே அவருடைய காலம், இடம், பிறப்பு, மதம் என்பன குறித்து எனக்குத் தோன்றுவனவற்றைச் சுருக்கமாகக் கூறுகின்றேன். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோட்டஞ் சமைத்து வழிபட்ட நாளில் அங்கு வந்திருந்த மன்னர் களில் 'கடல்சூழ் இலங்கைக்கயவாகு வேந்தனும்' ஒருவனாதல் கொண்டு சிலப்பதிகார மணிமேகலைகளின் காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டென்று துணியப்படுகின்றது. மணிமேகலை ஆசிரியர் திருக்குறளை மேற்கோளாக எடுத்தாண்டது முன்பே காட்டப்பெற்றது. இவ்வாற்றால் வள்ளுவனார் கி.பி. முதல் நூற்றாண்டில் விளங்கினவராவரெனக் கருதுதல் பொருந்தும். வேறு தடையில் வழி இன்னும் ஒன்றிரண்டு நூற்றாண்டுகள், முன்னாகக் கூறுதலும் இழுக்கின்றாம். இவர் பிறந்த இடம் திருமயிலாப்பூர் என்பது வழக்கு. 'செந்நாப்போதார் புனற் கூடற்கச்சு' என்பது கொண்டு இவர் மதுரையிற் பிறந்தாராவர் எனக் கருதுவாருமுளர். இவர் மதுரையிற் பிறந்தமையாலோ, அன்றி அங்குச் சிலகாலம் வதிந்தமையாலோ, அங்கிருந்து திருக்குறளை அரங்கேற்றினமையாலோ கூடற்கு அச்சு என்று கூறப்பெற்றாராதல் வேண்டும். இவர் பிறப்புப் பற்றிப் பலர் பலவாறு கூறுவர். திருவள்ளுவ மாலைச் செய்யுள் ஐம்பத்து மூன்றுள் நாற்பத்தாறு செய்யுட்களில் வள்ளுவர் என்னும் பெயர் வந்துளது. கல்லாடத்தினும், தொல்காப்பியவுரை முதலியவற்றினும் இப்பெயரானே இவர் கூறப்பெறுகின்றார். வள்ளுவர் என்பது தமிழ்நாட்டு மக்களுள்ளே ஓர் குடியினரைக் குறிக்கும் பெயராதலை இருவகை வழக்கினும் அறியலாகும். பழைய தமிழ்ப் பெரியார் பலர் குடிப்பெயரால் வழங்கப் பெறுதலும் பலருமறிந்ததே. இன்ன காரணங்களால் இவர் வள்ளுவக்குடியிற் பிறந்தாரென்பது தெளிவாகின்றது. குடிப் பெயராகிய சிறப்புப் பெயரே பின் இவர்க்கு இயற்பெயர் போன்று ஆயினமையின் 'தெய்வப் புலவன் திருவள்ளுவன்' என அதனை இயற்பெயராகக் கொண்டு உரையாளர்கள் எடுத்துக் காட்டுவாராயினரென்க. வள்ளுவன் என்பதற்கு வண்மை உடையோன் என்று பிற்காலத்தார் சிலர் பொருள் கூறுவாராயினர். வண்மையுடையோன் என்ற பொருளில் வள்ளல், வள்ளியோன் என வழங்குதலன்றி, வள்ளுவன் என யாண்டும் வழங்கக் காணாமையின் அதனைப் பொருளெனக் கொள்ளுமாறு இல்லையென்க. இவரது சமயங்குறித்தும் பல்வேறு கொள்கைகள் உண்டு. கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை யேகினான்' (திருக்குறள்-3) ‘அறவாழி யந்தணன்' (திருக்குறள்-7) என்று கூறியிருக்கும் கடவுட் பெயர்களும், வேறு சில ஏதுக்களும் திருவள்ளுவர் சமணரென்பதனைக்காட்டுமென்றும், பௌத்தரென்பதனைக் காட்டுமென்றும் ஒவ்வொரு சாரார் கூறுவர். வள்ளுவனார் உலகிற்கு முதலாகக் கடவுளுண்டென்பது, வேள்வியை ஒத்துக்கொள்வது முதலிய காரணங்களால் அக்கொள்கைகள் மறுக்கப்படுகின்றன. இவர் இப்பொழுது இந்துமதம் என்னும் பெயரால் வழங்கும் சமயத் தொகுதியுட் பட்டவர் என்பதே ஒருதலையாகத் துணியற்பாலதாகின்றது. இச்சமயங்களுள்ளும் இவரைச் சைவரென்று கூறுதற்கு அடிப்பட்ட ஆட்சி வலியுடைத்தாய் நிற்கின்றது. இவரியற்றிய நூலொன்று கொண்டே இவரை வைணவரல்ல ரென்று மறுத்தற்கிடனில்லை யெனக் கருதுகின்றேன். சைவசமயநெறித் தலைவர் சிலர் திருக்குறளைத் தங்கள் சமய நூற் பொருண்மைக்கும் மேற் கோளாக எடுத்துக்காட்டுதலும், சைவ தவ வடிவமாகத் திருவுரு நிறுவி இவர் வழிபடப் பெறுதலும், நாயனார் என்று பெயர் தந்து தமிழ் மக்களால் வழங்கப் பெறுதலும் போல்வன சைவரென்னும் ஆட்சியின் பாலவாம். எனினும் இவரியற்றிய நூலானது உலகத்தாரனைவர்க்கும் பொதுவாகிய தொன்றென்பது பலரும் இதனைப் பொதுமறையெனப்போற்றுதலானே அறியலாகும். " ஒன்றே பொருளென்னின் வேறென்ப வேறென்னின் அன்றென்ப வாறு சமயத்தார்-நன்றென்ன எப்பா லவரும் மியைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி"1 எனத் திருவள்ளுவமாலையிலும், " சமயக் கணக்கர் மதிவழி கூறா துலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன்"2 எனக் கல்லாடத்திலும் கூறியிருப்பன சிந்திக்கற்பாலன. இனி, ஆசிரியர் வரலாற்றை இவ்வளவில் நிறுத்தித் திருக்குறளின் மாண்புகளில் இச்சிறிது பொழுதில் இயலுமளவு கூறத் தொடங்கு கின்றேன். திருக்குறளின் மாண்பெல்லாம் ஆசிரியர் மாண்பா மென்பதும் கடைப்பிடிக்க. திருவள்ளுவர்க்குப் பின்றோன்றிய ஆசிரியர்களில் இந்நூலைப் போற்றாதார் யாருமிலர். பெருங் காப்பியங்களியற்றிய புலவர் பெருமக்களும், இறைவன் அருட்கடலிற் றிளைத்து நின்று பதிகங்கள் பாடிய பேரருளாளர்களும், கடவுள் உயிர் உலகம் என்பவற்றின் இயல்பினைத் தெரிவிக்கும் உண்மை நூல்களியற்றிய ஆசிரியர்களும், மற்றுள்ள புலவர்களும் திருக்குறட் பாக்களையும் தொடர்களையும் தங்கள் செய்யுட்களில் எடுத் தமைத்து அழகுபடுத்தியிருக்கின்றனர்; அதன் ஆணை வழியில் நின்று அதனை மேற்கோளாக எடுத்துக் காட்டியிருக்கின்றனர். திருவள்ளுவரையும் திருக்குறளையும் எல்லையின்றிப் புகழ்ந்து பாராட்டியிருக்கின்றனர். ஒப்புயர்வற்ற பெருங்காப்பியமியற்றிய கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாடர் தமது இராமாயணத்தில் எத்தனையிடத்தில் எத்தனை திருக்குறட்பாக்களை எத்தனை முறையாக அமைத்திருக்கின்றனர் என்பதனை நோக்குவார்க்குத் திருக்குறளானது கவியுலகத்தை எங்ஙனம் ஆட்கொண்டிருக் கின்றதென்பது புலனாகும். இற்றைநாளிலோ ஆங்கிலம் முதலிய மேனாட்டு மொழிகள் பலவற்றிலும், வடமொழி, தெலுங்கு, மலையாளம் முதலியவற்றிலும் திருக்குறளை மொழிபெயர்த்துப் படித்துப் பயனெய்தி வருகின்றனர். பண்டை நாளிலேயிருந்த தண்டமிழ்ப் புலவர் பலரும் இதனை ஒப்புயர்வற்ற நூலாகப் பாராட்டியதேயன்றி, இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மேனாட்டுப் புலவரொருவரும் 'திருக்குறள் போன்றதொரு நூல் வேறெந்நாட்டு மக்களிடத்தும் காணப்படுவதின்று' என்று மனமுவந்து கூறும்படி இதன் புகழ் யாண்டும் விஞ்சிப் பரப்பதாயிற்று. இவ்வாறெல்லாம் பலரும் ஒரு படித்தாய் இந்நூலைப் பாராட்டுதற்கு இதன்கட் காணப்படும் சிறப்பியல்புகள் என்னை? இவ்வினாவிற்குச் சில மொழிகளில் விடையிறுத்து விடுவதென்பது எளியதொன்றன்று. பன்னூற் பயிற்சியுடையராய் இந்நூலைப் பல்காலும் பயின்றுவரும் மதிநலமுடையார்க்கு இதன் ஈடு மெடுப்புமில்லாத சிறப்பியல்புகள் விளங்கும். ஈண்டு சிற்றறிவிற்கியைந்தவாறு ஒன்றிரண்டு காட்டலுறுகின்றேன். 'எல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி' என்றோதப்படும் வெண்பா என யாப்பினுள்ளும் அளவிற்சிறியதொரு குறட்பாவைக் கருவியாகக் கொண்டு, கூறக் கருதிய பொருட் பரப்பையெல்லாம் எவ்வகைக் குற்றமுமின்றி, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல் முதலிய அழகெல்லாம் பொருந்தக் கூறிவைத்திருப்ப தொன்றே ஆசிரியரது தெய்வப் புலமையின் பெற்றியைத் தெரிவிக்கப் போதிய தாகும். மற்று, இந்நூலின்கண், ஒன்றுக்கொன்று சேய்மையவாகிய உலகியற்றுறை களனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத் தெளிய வுணர்த்தும் உலகியலுணர்வின் நிறைவு காணப்படுகின்றது. இதற்கு உதாரணமாகச் சில காட்டுகின்றேன். "தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்"1 என்பது உழவின் நுணுக்கமான செய்தி யொன்றை யுணர்த்துவது. " நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.1 என்பது மருத்துவம் புரியும் திறப்பாட்டை விளக்குவது. இத்துறை களில் இவ்வகை யுணர்வுபெற்ற ஆசிரியர் அரசியல் கூறுவதைக் காணுங்கள். " அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கும் ஊதியமுஞ் சூழ்ந்து செயல்"2 " வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல்"3 இவ்விரண்டு செய்யுட்களும் அரசியலில் எவ்வளவு விரிந்தனவும் இன்றியமையாதனவுமான செய்திகளை அகப்படுத்துள்ளன. இங்ஙனமாக இருநூற்றைம்பது பாக்களால் அரசியலும், நூறு பாக்களால் அமைச்சியலும் கூறலுறுகின்ற ஆசிரியர் எவ்வளவு பொருட்களை ஆராய்ந்து முடிவுகட்டி யிருப்பரென்பதனைச் சிந்தித்துணர்மின். " சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை ஊக்க மழிப்ப தரண்"4 என்பது அரணின் மாட்சியையும், " ஒற்றொற் றுணராமை யாள்க; வுடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்"5 என்பது ஒற்றரை ஆளும் முறைமையையும் உணர்த்துவன. இனி, நீதியை வற்புறுத்துரைக்கும் அழகிற்கு மூன்று பாக்கள் காட்டுகின்றேன்: " கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி அறம்பார்க்கு மாற்றி னுழைந்து"6 ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து"7 " ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா வூக்க முடையா னுழை"8 இனி, இந்நூலுட் கூறப்பட்டிருக்கும் உவமைகளை யாரால் விலைமதிக்கலாகும்? ‘நவிறொறு நூனயம்போலும்'(783) 'அறிதோ றறியாமை கண்டற்றால்'(1110) ‘தம்மிலிருந்து தமதுபாத் துண்டற்றால்' (1107) 'எழுதுங்காற் கோல்காணாக் கண்ணே போல்'(1285) என்னும் உவமைகள் பலமுறை சிந்தித்து இன்புறற் குரியவை. " கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேங் கரப்பாக் கறிந்து"1 " உள்ளத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து"2 என்பன காதலின் சிறப்பை எவ்வளவு அருமையாக விளக்குகின்றன! இனி, மக்கள் யாவரும் உயர்நிலை யெய்துதற்குரிய பொதுவான நெறிகளை இவ்வாசிரியர்போற் கூறினார் யாவர்? " பொறுத்த லிறப்பினை யென்று மதனை மறத்த லதனினு நன்று"3 " எனைத்தானு மெஞ்ஞான்று மியார்க்கு மனத்தானாம் மாணாசெய் யாமை தலை"4 " இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு"5 என்பன மக்களுள்ளத்தே எஞ்ஞான்றும் நிலை பெறற்பாலவாய்த் தலைசிறந்த குணநலத்தினைத் தெளிவித்தல் காண்க. உயிர் களைப் பற்றியுள்ள எவ்வகை அழுக்கையுங் கழுவித் தூய்மை செய்தற்கு இவர்கண்டு கூறிய கருவி வாய்மை என்பதாகும். இவ்வாய்மையின்கண் இவர் கொண்டுள்ள உறுதிப்பாடு, " யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும் வாய்மையி னல்ல பிற"6 என்பதனால் விளங்கும். இனி, வீடடையும் நெறியினை இவ்வாசிரியர் கூறியிருக்கும் முறை போற்றற்பாலதாகும். கல்வியறிவும் குணநலங்களும் சான்ற கணவனும் மனைவியும் தலைசிறந்த அன்பினை யுடையவராய்க் கடியற்பாலவாய குற்றங்களைக் கடிந்து, விருந்தோம்பல், ஈகை, ஒப்புரவு முதலிய அறங்களைப் புரிந்து வாழவேண்டுமென்பதும், இல்லறம் முற்றுப்பெற்றவழி அன்பின் முதிர்ச்சியாகிய அருளினை யுடையராய்த் தவஞ்செய்ய வேண்டுமென்பதும் இவர் கருத்தா கின்றன. துறவின் முதற்படியாகிய தவவொழுக்கம் அல்லது நோன்புகளில் உறைத்து நிற்றலால் உளத்தூய்மையுண்டாகும்; பின்னர் நித்த அநித்தப் பொருள்களின் வேறுபாட்டுணர்வு தோன்றும்; என்பதும், வீடடைதற்குரியார் இருவகைப் பற்றுக் களையும் அறவே துறக்க வேண்டும் என்பதும், பற்றுக்களை விடுத்து மனம் அடங்கிய வழியும் மெய்யுணர்வில்லாவிடின் அதனாற் பயனின்றென்பதும், மெய்ந்நூற் பொருள்களைக் கற்றும் ஆராய்ந்தும் உண்மையை யுணர்ந்து மெய்ப்பொருளை இடையறாது சிந்திக்க வேண்டுமென்பதும், அச்சிந்தனையுள் அழுந்தி நிற்றலால் பிறவிக்குக் காரணமாய வினைப்பகுதிகள் ஒழியப் பேராவியற்கைத்தாகிய பேரின்ப வாழ்வு கிடைக்கு மென்பதும் தெய்வப் புலவரின் திருவுள்ளக்கிடைகளாகின்றன. " சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்"1 என்னும் இக்குறட்பாவானது தியானம், சமாதி என்னும் இரு நிலைகளையும் உணர்த்துவதாகத் திருக்களிற்றுப்படியாரிலுள்ள ஓர் அழகிய செய்யுள் கூறுகின்றது; அதனை யெடுத்துக் காட்டி இச்சிற்றுரையை முடிக்கின்றேன். " சார்புணர்ந்து சார்புகெட வொழுகி னென்றமையாற் சார்புணர்த றானே தியானமுமாம் - சார்பு கெடவொழுக னல்ல சமாதியுமாம் கேதப் படவருவ தில்லைவினைப் பற்று".2 11. சுந்தரர் செந்தமிழ் 'சுந்தரர் செந்தமிழ்' எனும் இத்தொடரில் உள்ள சுந்தரர் என்பது சைவசமய குரவர் நால்வருள் ஒருவராகிய ஆலால சுந்தரரையும், செந்தமிழ் என்பது அவர் பாடிய தேவாரத் திருப்பதிகங்களையும் குறிக்கும். இஃது ஆறாம்வேற்றுமைச் செய்யுட்கிழமை. திருக்கயிலையில், வெள்ளநீர்ச்சடை மெய்ப்பொருளாகிய சிவபெருமானுக்கு மலர்மாலையும், திருநீறும் எடுத்தணையும் அணுக்கத் தொண்டராகிய ஆலாலசுந்தரரும், அவ்விறைவன் பங்கிலுறையும் உமைப்பிராட்டியார்க்குப் "பொதுக் கடிந்துரிமை செய்யும் பூங்குழற் சேடிமார்" (தடுத்தாட் : 131) ஆகிய கமலினி, அனிந்திதை என்பவர்களும் மாதேவன் கட்டளையால், தென்றமிழ் நாட்டிலே, வன்றொண்டராகவும், பரவையார், சங்கிலியா ராகவும் தோற்றஞ் செய்தனரெனத் திருத்தொண்டர் புராணம் கூறாநிற்கும். சுந்தரர்க்கு அவர் நிலவுலகிலே தோன்றிய ஞான்று இடப்பெற்ற நம்பியாரூரர் என்னும் பெயரும், இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்டபொழுது, எதிர்த்து வன்மை பேசினமையின் எய்திய வன்றொண்டர் என்னும் பெயரும், அவர், திருவாரூரில் புற்றிடங்கொண்ட பிரானை வணங்கி, நன்புலன் ஒன்றி, இன்ப வெள்ளத்தில் மூழ்கி, இன்னிசைத் தமிழ்மாலை பாடியகாலை 'தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்' என்று இறைவன் அருளினமையாற் போந்த தம்பிரான் றோழர் என்னும் பெயரும், நாவலர் கோன் என்பது முதலிய பெயர்களும் புராணத்திற் பயில வழங்குமேனும், வழக்கிலே மக்கள் பலரானும் நன்கறியப்படு வதாதல் கருதிச் சுந்தரர் என்னும் பெயர் ஈண்டுக் கொள்ளப்பெற்றது. இஃது ஆலால சுந்தரர் என்பதன் பகுதிப் பெயர்கோளே. திருக் கயிலையிற் சிவத்தொண்டர்க்கு வழங்கிய அப்பெயர் அவரது தோற்றமாகிய நம்பியாரூரர்க்கும் உரியதாயிற்று. அருண்மொழித் தேவரும் திருக்கூட்டச் சிறப்பின் இறுதிச் செய்யுளில், " இந்த மாதவர் கூட்டத்தை யெம்பிரான அந்த மில்புகழ் ஆலால சுந்தரன் சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ் வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம்"1 என, இப்பெயரை ஆண்டுள்ளமை காண்க. இனி, சுந்தரர் வரலாற்றை எடுத்துரைப்பது இவ்வுரையின் நோக்கமன்று; அவர் பாடிய தேவாரத் திருப்பாட்டுக்களினால் அறியலாகும் அவருடைய வாழ்க்கைப் பண்புகளிலும், நவையறு நன்பொருள்களிலும் சிலவற்றை எடுத்துக்காட்டுவதே இதன் நோக்கமாம். எனினும், அவர் வரலாற்றின் குறிப்புக்கள் சிலவற்றை முதற்கட் கருத்தில் இருத்துதல் நன்றாகும். ஆலால சுந்தரர் இவ்வுலகிலே திருநாவலூர் என்னும் திருப்பதியில் ஆதிசைவராகிய சடையனார்க்கு இசைஞானியார் பால் "தீதகன் றுலக முய்யத் திருவவதாரஞ் செய்தார்"; நரசிங்க முனையர் என்னும் பல்லவ வேந்தரால் மகன்மை முறையுடன் சீரும் சிறப்புமாக வளர்க்கப் பெற்றார்; மாலயன் காணா ஆலமர் செல்வனால் வெண்ணெய் நல்லூரில் 'அற்புதப் பழ ஆவணங் காட்டி' ஆட்கொள்ளப் பெற்றார்; அவ்விறைவன் அருள்வழி நின்று பரவையாரையும், சங்கிலியாரையும் திருமணம் புரிந்தார்; தம்பிரான் றோழராய் என்றும் மணக்கோலந் தாங்கி இன்ப விளையாட்டுக்கள் நிகழ்த்தினார்; சேரமான் பெருமாளைத் தோழமை கொண்டார்; மூவேந்தரும் உடனிருந்து பரவத் திருப்பதிகம் பாடினார்; மாதொரு பாகனைத் தூதெனக் கொண்டார்; அவ்விறைவனாற் பொன்னும் பொதிசோறும் பெற்றார்; மற்றும் பற்பல அற்புதம் நிகழ்த்தினார்; இறுதியில் இறைவன் அருளிப் பாட்டால் களையா உடலோடு வெள்ளானை மேற்கொண்டு சேரமானுடனாகத் திருக்கயிலையுற்றார். இவை பலவற்றையும் அறுதியிடும் உறுதியுள்ள சான்றுகள் அவர் பாட்டுக்களிலிருந்தே காட்டுதல் சாலும்; அவற்றுட் சில பின்வருவன " நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்க முனையரையன் ஆதரித் தீசனுக் காட்செயு மூர் அணி நாவலூர்"1 " என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்"2 " வெண்ணெய் நல்லூரில், அற்புதப் பழ ஆவணங்காட்டி அடியனா என்னை ஆளது கொண்ட நற்பதத்தை"3 " மாழை யொண்கண் பரவையைந்தந் தாண்டானை"4 " சங்கிலியோ டெனைப்புணர்த்த தத்துவனை"1 " அடியேற்கு எளிவந்த, தூதனைத் தன்னைத் தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும், நாதனை"2 " பொன்னைத்தந்து என்னைப் போகம் புணர்த்த நன்மையினார்"3 " முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த"4 இவ்வாற்றால் இவரது இன்பம் நிறைந்த பெருமித வாழ்க்கையின் இயல்பு புலனாகாநிற்கும். இத்துணைப் பெருமையில் எத்துணை எளிமை பொருந்தியுள்ள தென்பதனைப் பின்னர் நோக்குதும். முதற்கண், இவரது ஆழ்ந்தகன்ற கல்வியின் திறத்தை ஆய்ந்து காண்டல் கடனாம். கல்வி கற்பார்க்கு அதில் ஓர் இன்பம் தோன்றுதல் வேண்டும். அஃதின்றேல், கல்வியில் உண்மையான ஈடுபாடும், அதனாற் கல்வி நிரம்புமாறும் உளவாகா. "தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர்"5 என்றும், "நவில்தொறும் நூல்நயம் போலும்"6 என்றும் தெய்வப் புலவரும் கூறுவர். நம் சுந்தரர்க்குக் கல்வி எங்ஙனம் இனித்தது என்பது, இன்பமே யுருவாகிய இறைவனைக் குறித்து, அவர், "கற்ற கல்வியினும் இனியானை"7 எனக் கூறுவதனால் இனிது விளங்கும். இங்ஙனம் பொதுப்படக் கல்வியை உவமங் கூறியதன்றி, "பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்"8 என்றும், "பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே"9 என்றும் சிறப்பு வகையால் தமிழின் இனிமையை இறைவன் இன்பொடு சார்த்தி யுரைத்தலின் தமிழ்க் கல்வியானது அவர்க்கு எல்லையில்லா இன்பினை அளித்த தாகல் வேண்டும். விழுப்பமுடைய நுண்பொருட் கல்வியை யன்றிப் பருப் பொருட்டாய உலகியற் கல்வியையும் அவர் புறக்கணியாது கற்றனர் என்பது, திருநாட்டுத் தொகைப் பதிகத்தில் பற்பல திருப்பதிகளைக் கூறிவருமிடத்து அவற்றுட் சில பதிகள் அமைந் துள்ள உள்நாடுகளை (சோணாடு முதலியவற்றின் உட்பிரிவு களை)யும் குறிப்பிட்டு, ‘மருகல் நாட்டு மருகல், கொண்டல் நாட்டுக் கொண்டல், குறுக்கை நாட்டுக் குறுக்கை, வெண்ணிக் கூற்றத்து வெண்ணி, நாங்கூர் நாட்டு நாங்கூர், நறையூர் நாட்டு நறையூர், மிழலை நாட்டு மிழலை, வெண்ணி நாட்டு மிழலை, பொன்னூர் நாட்டுப் பொன்னூர், புரிசை நாட்டுப் புரிசை, வேளார் நாட்டு வேளூர், விளத்தூர் நாட்டு விளத்தூர்' என்று உரைத்தலினின்று அறியலாகும். திருக்குறள், நாலடியார் முதலிய பழந்தமிழ் நூல்களில் நம்பியாரூரர்க் கிருந்த பயிற்சியும், மதிப்பும், அவர் திருநெல்வாயில்-அரத்துறைப் பதிகத்தில், " அகர முதலி னெழுத்தாகி நின்றாய்"1 " பொறிவாயிலிவை யைந்தனையும் அவியப்பொருது உன்னடியே புகுஞ் சூழல் சொல்லே"2 " பிறவிக்கடல் நீந்தியேறி அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே"3 " உறங்கி விழித்தா லொக்கும் இப்பிறவி"4 எனத் திருக்குறளில் ஒரு நான்கு பாக்களின் கருத்தையும், " மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவி"5 என நாலடிச் செய்யுள் ஒன்றின் கருத்தையும் தழுவிப் போற்றுதலான் அறியப்படும். மற்றும், திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகம் ஒன்றே தம்பிரான் றோழரின் பேராராய்ச்சியைப் புலப்படுக்கும் கருவியாதல் அமையும். பற்பல நிலங்களில் பல்வேறு காலத்திருந்த நாயன்மார் பலரையும் ஒருங்கே முதற்கண் அறிவிப்பது இப்பதிகமேயன்றோ? திருத்தொண்டர் பலருடைய வரலாறு களையும் முதன் முதல் அறிந்து கொள்ளுதற்கு எவ்வளவு சிறந்த ஆராய்ச்சி நிகழ்ந்திருத்தல் வேண்டும்? அடியார்களின் வரலாறு களைச் செவ்வன் அறிந்திருப்பினன்றி, அவர்கள் பால் அன்பும், அவர்களைப் பரவுதற்கண் ஆர்வமும், மனவெழுச்சியும் நிகழா வன்றே? எனவே, திருத்தொண்டத் தொகையானது அடியார் களின் வரலாற்றை விளங்க உரைத்திலதேனும், வன்றொண்டப் பெருந்தகை நன்கனம் அறிந்திருந்தாராதல் தேற்றம். அப்பதிகத்தில், " ஏனாதி நாதன்றன் அடியார்க்கு மடியேன்"1 " முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்"2 எனச் சிலரைப் பெயரளவிலும், " கட'd2வூரிற் கலயன்றன் அடியார்க்கு மடியேன்"3 " அலைமலிந்த புனன்மங்கை ஆனாயற் கடியேன்"4 எனச் சிலரை அவர்கள் நிலவிய ஊரொடு சார்த்தியும், " இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்"5 " அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கு மடியேன்"6 எனச் சிலரை அவர்கள் கொண்ட படைக்கலம் முதலியவற்றால் விசேடித்தும், " மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினா லெறிந்த அம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்"7 " வார்கொண்ட வனமுலையாளுமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன்"8 எனச் சிலரை அவர்கள் புரிந்த திருத்தொண்டு, செயல் என்பவற்றோடு கூட்டியும், மற்றும் சிற்சிலரை வேறு சிற்சில வகையாற் குறிப்பிட்டும் அவர் பரவியுள்ளார். மற்றும், " இல்லையே என்னாத இயற்பகைக்கு மடியேன்"1 " வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்"2 " நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்"3 என்பவற்றில் கொடுக்கப் பெற்றுள்ள அடைமொழிகள், அவ்வடியார்கள் வரலாற்றின் உயிர்நிலையாய உண்மைகளைத் தெரிவித்தல் கண்கூடு. உலகியலில் வழங்குதற் கேற்றதல்லாத தொன்றினையும் வழங்கினா ராதல் தோன்ற 'இல்லையே என்னாத' என்றும், மாற்றானது வாளுக்கிலக்காகி நிறைந்த செங்குருதி சோர வீழ்கின்ற நிலையிலும், 'மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்' எனத் தாம் கொண்ட கொள்கை பிழையாது, அவனைச் சிவனடியாரெனவே பேணிய தவவென்றியுடையா ரென்பது தோன்ற, 'வெல்லுமா மிகவல்ல' என்றும், பிறவியிலே கண்காணாராயிருந்தும், அகநாட்ட முடையராய்த் திருக்குளம் தோண்டுதலாகிய திருப்பணியை அரிதிற் புரிந்து, அதற் கிடர்செய்து தம்மைக் குருடரென எண்ணிய அமணர் கண்ணிழக்க, வாவியில் மூழ்கி மலர்க்கண் பெற்றெழுந்த சீரடியார் என்பது புலப்பட, 'நாட்டமிகு' என்றும் அடைபுணர்த் தோதிய மாண்பினை எங்ஙனம் அறிந் தேத்த வல்லேம்! இன்னும், வேடர் குலத்திலே தோன்றி, நன்னூற் கல்வி நவின்றறியாத கண்ணப்பரைக் குறித்து, " கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்"4 என்று கூறியது, அவர் பழம் பிறப்பிலேயே கலைகளெல்லாம் நிறைந்தாராதல் கருதியோ, கலைகளின் பயனாய அன்பின் மேம்பாடு துணிந்தோ, அவரது சீர் கலைகள் பலவற்றுள்ளும் நிலவுமாறு நினைந்தோ ஆதல்வேண்டும். திருத்தொண்டர்களின் வரலாறுகள் சுந்தரரால் நுண்ணிதின் ஆராயப் பெற்றவை என்பதற்கு அவர் திருப்பாட்டுக்களில் மற்றும் பல சான்றுகள் உள்ளன. அவர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருபெருமக்களின் தேவாரங்களைப் பன்முறை ஓதி, நன்காராய்ந்து, செம்பொருள் கண்டவர் என்பதனையும், அதனாலும் பிறவாற்றாலும் அவ்விருவர் வரலாற்றினையும், ஏனைய அடியார்கள் வரலாறுகளையும் நன்கு தெளிந்தவர் என்பதனையும், அவர் பாட்டுக்கள் காட்டா நிற்கின்றன. நாவுக்கரசர் பாடிய பாவின் தொகையை, " இணைகொள் ஏழெழு நூறிடும் பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்"1 என்று முதற்கண் வெளிப்படுத்தவர் நம் தம்பிரான்றோழரே. " ஊனமில் காழிதன்னுள் உயர்ஞான சம்பந்தர்க் கன்று ஞானம் அருள்புரிந்தான் நண்ணுமூர் நனி பள்ளியதே"2 என்பதனால், சம்பந்தர் காழியுள் ஞானம் பெற்றதனையும், " திருமிழலை, இருந்துநீர் தமிழோடிசை கேட்கு மிச்சையாற் காசு நித்தல் நல்கினீர்"3 என்பதனால், அரசரும், ஞானக் கன்றும் வீழிமிழலை இறையவர் பால் படிக்காசு பெற்றதனையும் அவர் வெளிப்படுத்துள்ளார். பல கூறுதல் வேண்டா; நற்றமிழ் வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன் நாளைப்போ வானும் கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம் புல்லன்என் றிவர்கள் குற்றஞ் செய்யினும் குணமெனக் கருதுங் கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன் பொற்றிரள் மணிக் கமலங்கண் மலரும் பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே.4 என்னும் திருபாட்டொன்றே அடியார்களின் வரலாற்று நுட்பங்கள் அவரால் எங்ஙனம் அறியப்பட்டுள்ளன என்பதற்கு உறு சான்றாகும். இவை யனைத்தும் ஓர்ந்தன்றோ, 'நுணங்கிய கேள்வி மேலோன்' (தடுத்: 14) என்று சேக்கிழார் பெருமான் இவரைப் போற்றுவ ராயினர். மற்றும் இவர், 'நான்மறையங்கம் ஓதிய நாவன்' என்று தம்மைக் கூறிக்கொள்வதனாலும், பிறவாற்றாலும் இவரது வடமொழிப் புலமை போதரும். எனினும், தமிழின் சுவையே இவருள்ளத்தைக் கொள்ளை கொண்ட தென்பதும், தமிழிலே தான் இவருக்கு எல்லையிகந்த பற்றிருந்தது என்பதும் மேல் எடுத்துக் காட்டிய " பண்ணார் இன்றமிழாய்"5 " பண்ணிடைத் தமிழொப்பாய்"1 என்பவற்றாலும், மற்றும் இறைவனைக் குறித்து, " தமிழோடிசை கேட்கு மிச்சையாற் காசுநித்தல் நல்கினீர்"2 " கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் இடர் தீர்க்குங் கருப்பறியலூர்"3 "தண்டமிழ்நூற் புலவாணர்க்கோ ரம்மானே"4 "செந்தமிழ்த் திறம் வல்லிரோ"5 என்றிங்ஙனம் பாராட்டுவதனாலும், ஆளுடைய பிள்ளையார் வேதம் முதலிய அனைத்தையும் ஓதாதுணர்ந்த பெருந்தகை யாயினும், அவரை, " நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன்"6 " நாளும் இன்னிசையாற் றழிழ் பரப்பும் ஞானசம்பந்தன்"7 என்று கூறிப் பரவுதலாலும், தாமும் இன்னிசையாற்றமிழே பரப்பினமையாலும் நன்கு துணியப்படும். " செந்தமிழ்த் திறம் வல்லிரோ செங்கணரவ முன்கையி லாடவே வந்துநிற்குமி தென்கொலோ"8 என்பது, செந்தமிழானது அரவின் நஞ்சினைத் தடுக்கும் மந்திரமாம் என்னும் குறிப்பிற்றோ? நச்சுத் தன்மையுடைய அரவும் தமிழிசையைக் கேட்டு மெய்மறந்திருக்கும் என்னும் குறிப்பிற்றோ ஆதல் வேண்டும். சுந்தரரது செந்தமிழ்க் கல்வியின் பெருமைக்கு வேறு கூறுதல் என்? கல்வி யென்னும் கற்புடை நங்கைபெற்ற செல்வ நன்மக்களாகிய அவருடைய அமிழ்த வெள்ளம் போலும் இன்னிசைத் தீந்தமிழ்ப் பாட்டுக்களே சான்றாதல் அமையாவோ? இனி, சுந்தரர் வாழ்க்கை எவ்வளவு பெருமிதமும் இன்பமும் நிறைந்தது என்பதனைத் தொடக்கத்தில் எடுத்துக்காட்டினோம். ஆயினும், அப்பெருமையிலோ இனிமையிலோ அவர் நெஞ்சம் தாழ்ந்தில தென்பதனை அவர் வாய்மொழிகள் நன்கு புலப்படுத்து கின்றன. அவர் கூறுவன கேண்மின்! " சொல்லிடில் எல்லை யில்லை சுவையிலாப் பேதை வாழ்வு நல்லதோர் கூரைபுக்கு நலமிக அறிந்தே னல்லேன்"1 ஆ! நல்லதோர் கூரையி(உடம்பி)லே புகுந்தும் இன்பமொன்றும் கண்டிலராம்! இவ்வாழ்விலே சுவையொன்றும் இல்லையாம்! இவ்வாறு தம் அனுபவத்தை எடுத்தியம்பும் பெருமான், " தோற்ற முண்டேல் மரண முண்டு துயரமனை வாழ்க்கை"2 " இன்ப முண்டேல் துன்பமுண்டு ஏழைமனை வாழ்க்கை"3 " மணமென மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் பிணமெனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன்"4 என்று பொதுவாகவும், உலகியலில் வைத்தும் பிறப்பின் பொல்லாங் கினை எடுத்துக் காட்டி, ஆதலாற் பிறவியை வேண்டேன் என்று அறுதியிட்டுரைக்கின்றார். பிறவிவெம்மையானது, அவரது அகமலரை எத்துணை வாட்டியுள்ளது என்பது காட்டுதற்கு, " மானுடவாழ்க்கை ஒன்றாகக் கருதிடிற் கண்கள் நீர்பில்கும்"5 என்னும் பொருண் மொழி ஒன்றே சாலாதோ? என்னே 'தூஉய்மை என்பது அவாவின்மை' என்றபடி, அவாவறுத்த அவரது தூய உள்ளத்தின் உணர்ச்சியை எம்மனோர் உய்யுமாறு எழுதிக் காட்டிய இவ்வோவியத்தின் அருமையை எங்ஙனம் வியக்க வல்லேம்! இவ்வுலக வாழ்க்கையின் பெற்றிமை இஃதெனவுணர்ந்த நாவலர் பெருமான் ஏனோரும் உய்தி பெறுமாறு கூறிய வாயுறை வாழ்த்தாவது, " மத்தயானை யேறி மன்னர் சூழ வருவீர்காள் செத்த போதி லாருமில்லை சிந்தையுள் வைம்மின்கள்"6 என்பது. அரசர்க்கரசர் நிலை இதுவாயின் மற்றையோர் நிலை இற்றென வேறு இயம்பலும் வேண்டுமோ? இவ்வண்ணம் இவ்வுலக வாழ்க்கையிற் சிக்கி ஆசையுட்பட்டு அவஞ் செய்ய ஒருப்படாராகிய நம்பியாரூரர், "தவஞ் செய்வார் தங்கமருஞ் செய்வார்" என்று அதனை நாடுதல் இயல்பேயன்றோ? திருத்துறையூர் என்னுந் திருப்பதியில் அவர் வேண்டுவதனைக் காண்டல் தகும். " துறையூர்த் தலைவா உனை வேண்டிக் கொள்வேன் றவநெறியே"1 " அத்தா உனை வேண்டிக் கொள்வேன் றவநெறியே"2 " ஐயா உனை வேண்டிக் கொள்வேன் றவநெறியே"3 என்றிவ்வாறு பதிகம் முழுதிலும் அவர் வேண்டுவது ஈதொன்றுமே. இங்ஙனம் தவநெறியை வேண்டிப் பெற்று, அதன்கண் சலியாது நிற்கும் பீடுடைமை தெளிந்தன்றோ, தொண்டர் சீர் பரவுவாராகிய அருண் மொழித் தேவர், அவரைச் ‘செய்தவப் பெரியோன்' என்பதன்றி, ‘தவத்தினால் மிக்கார் போற்றும் நம்பி யாரூரர்' என்றும்; ‘நீத்தாருந் தொடர்வரிய நெறிநின்றார்' என்றும் கூறிப் போற்றுகின்றார்; இன்னும் சங்கிலியார்க்கு நம்பி யாரூரரைத் தெரிவித்து, அன்னார் மணவினை முடிக்கும் தணவாக் கடன் பூண்ட சிவபெருமான் கூறிற்றாகவுள்ள, " சாருந் தவத்துச் சங்கிலிகேள் சால என்பால் அன்புடையான் மேரு வரையின் மேம்பட்ட தவத்தான் வெண்ணெய் நல்லூரில் யாரு மறிய யானாள உரியான் உன்னை எனையிரந்தான் வார்கொள் முலையாய்நீ அவனை மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்றார்"4 என்னும் பெரியபுராணச் செய்யுள் ஈண்டு அறிந்து இன்புறற்பாலது. இங்கே, ஒரு நங்கையைத் தம்முடன் சேர்த்தருளுமாறு குறையிரந்து நிற்கின்றார் ஒருவர். குறையிரக்கப்பட்ட இறைவனோ, அவரை, ‘மேரு வரையின் மேம்பட்ட தவத்தான்' என்று அம் மங்கை முன்னே நன்குரைக்கின்றான். இத்தவம் எத்தகைத்தோ? இதன் பெற்றிமை எம்மனோரால் எளிதின் அறியலாவதொன்றன்று. ஆயின், சைவசித்தாந்தச் செம்பொருணூல்கள் இக்கடாவிற்கு ஏற்ற விடை தருகின்றன.‘அங்கித் தம்பனை வல்லார்க்கு அனல் சுடாதவாறுபோல, இறைவனோடு ஒற்றுமையுற்று, அவ்விறை பணி நிற்கும் மெய்யுணர்வினோரை மல மாயை கன்மங்கள் தாக்க மாட்டா; அவர், பிராரத்த வினைப்பயன் துய்ப்புழி, எக்கருவிகொண்டு எத்தொழில் செய்தாராயினும், அது பற்றி அவர்மாட்டு விருப்பு, வெறுப்பு நிகழ்ந்து மேலைக்கு வித்தாதல் செல்லா; அவரால் நுகரப்படும் பிராரத்த வினையும் தற்பணி நீத்த அவரைத் தலைக்கூடமாட்டாது வெந்த ஆடைபோல் வலியற்று வாதனை மாத்திரையாய்ச் சிறிது நின்றொழியா நிற்கும் எனச் சிவஞானபோதத்தின் பயனியல் முதற் பாதமாகிய பத்தாஞ் சூத்திரம் அறிவுறுத்துகின்றது. " நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும் நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும் நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும் நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பில் ஏடுதரு மலர்க்குழலார் தோளிணைக்கே இடைக்கே எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும் இறை ஞானம் கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக் குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே யிருப்பர்"1 (சித்தியார் சூ.10) என்பதுங் காண்க. ஆயின், ஐம்புலக் களிற்றை அடக்கும் உரனில்லா உலக மாந்தர் இதனைத் தமக்கே கூறியது போற் கொண்டு மனப்பால் குடித்து மகிழ்வரேல், பெரியதோர் ஏதமே விளையாநிற்கும். எத்தனையோ பல படிகளைக் கடந்து சென்று, பாச நீக்கமுற்றுச் சிவப்பேற்றுக்கு அணியராய் நிற்கும் மெய்ஞ்ஞானியரை நோக்கியது இஃது என உணர்தல் வேண்டும். இவ் வுண்மைக்கு எடுத்துக் காட்டாகவே ஆரூரர் வாழ்க்கை அமைந்ததுபோலும்? அவர் பரவையாருடன் இன்பந் துய்ப்பதனைக் கூறும் வழி, " பன்னாளும் பயில்யோக பரம்பரையின் இனிதமர்ந்தார்"2 என்று சேக்கிழார் அருளிச்செய்தலும் உளங்கொளற்பாலது. மற்றும், சகமார்க்கம் எனப்படும் தோழமை நெறிக்கேற்ற ஆரூரர் வாழ்க்கை நிகழ்ச்சிகளும், அவர் தம்வாய்மொழியாகிய, " நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல்"3 என்பது முதலியவும் அவரது ஞானயோக நிலையினை வெளிப் படுத்தும் சான்றுகளாக உள்ளன. இனி, மூவேந்தரும் முன்னின்று பணி கேட்கும் பாவேந்த ராகிய தம்பிரான்றோழர் தாழ்வு எனுந் தன்மையை எவ்வளவு உயர்ந்ததாக மதித்துள்ளார் என்பது " தாழ்வெனுந் தன்மை விட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து வாழ்வதே கருதித் தொண்டர் மறுமைக்கொன் றீய கில்லார்"1 என்னும் பொருண் மொழியால் விளக்கமாம். அவர், அடியார்க்கு அடியராதலின் பயனை, " பண்டே நின்னடியேன் அடியா ரடியார்கட் கெல்லாம் தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன்"2 என்பதனால், நம்மனோர் அறியக் கரி கூறுகின்றார். அடியார் திறத்து அவர் எவ்வளவு எளிமையுடையர் என்பதற்குத் திருத்தொண்டத் தொகை யொன்றே சான்றாதல் அமையும். அடியார் ஒவ்வொரு வரையும் எவ்வகை வேற்றுமையும் இன்றி, அவர்க்கு அடியேன் என்றும், அவர் அடியார்க்கும் அடியேன் என்றும் கூறிப் பரவு கின்றாரல்லரோ? ஆரா அன்பினால் அவர் அடியார்களைப் பரவிய திருத்தொண்டத் தொகையே, அடியார்களின் அன்பின் திறத்தையும், இறைவனது பேரருட்டிறத்தையும் தெளியப் படுத்தி, உலகம் உய்தி பெறுதற்கு ஏதுவாயிற்று என்பதனை உளங்கொண்டு சேக்கிழார் பெருமான் கூறிய, " நேச நிறைந்த உள்ளத்தால் நீல நிறைந்த மணிகண்டத் தீச னடியார் பெருமையினை யெல்லா வுயிருந் தொழவெடுத்துத் தேச முய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்ததிருவாளன் வாச மலர்மென் கழல்வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்"3 என்னும் திருப்பாட்டின் அருமை பெருமைகளைப் புல்லறிவுடையேம் எங்ஙனம் சொல்லிப் பரவ வல்லேம்! மற்று, நாவரசிடத்தும், ஞானக் கன்றின்பாலும், அவர்கள் பாடிய தமிழ் மறையகத்தும் நாவலூர் வித்தகர்க்கிருந்த பெருமதிப்பு எத்தகைத் தென்பதனை, " நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக் கரையரும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை"4 என்னும் பொருளுரை யொன்றே இனிது புலப்படுத்தா நிற்கும். இனி, நம் சுந்தரர் இறைவனை மறவா மனத்தால் இறுகப் பற்றியதனையும், அதனாற் பெற்ற பேற்றினையும், " மழைக்கரும்பும் மலர்க் கொன்றையினானை வளைக்கலுற்றேன் மறவாமனம் பெற்றேன் பிழைத்தொரு காலினிப் போய்ப் பிறவாமைப் பெருமை பெற்றேன் பெற்றதார் பெறுகிற்பார்"1 என இறுமாந்துரைப்பது வாடிய பயிரில் மழை பொழிவது போல் சோர்ந்து கிடக்கும் நம் உள்ளத்தைத் தழையச் செய்கின்றது. திருவைந் தெழுத்தினை அவர் நெஞ்சமும் நாவும் எங்ஙனம் பற்றி நின்றன என்பது, " வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லால் மற்று நானறியேன் மறுமாற்றம்"2 " நற்றவாஉனை நான்மறக்கினும் சொல்லுநா நமச்சிவாயவே"3 என்பவற்றால் விளக்கமாம். " பெட்ட னாகிலும் திருவடிப் பிழையேன்" " பிழைப்ப னாகிலும் திருவடிக் கடிமை ஒட்டினேன்"4 என்பது, இறைவன் றிருவடிப் பிழைத்தல் ஒன்றுமே உய்தியில் குற்றமாம் என்பதனை அறிவுறுத்துகின்றது. ஏனோர்க்கு இறைவன் புரிந்த இன்னருள்கள் பலவற்றையும் எடுத்தெடுத்தியம்பி, 'யானும் அவ்வருளைப் பெறுவான் ஆதரித்து நின் திருவடி யடைந்தேன்' என்று அவர் கூறுவன பலவும், திருவடியே தஞ்சமெனப் பற்றி நிற்கும் அவரது கனிந்த உள்ளத்தைக் கவினுறக் காட்டுவனவும், உய்தி பெறற் குரியார் யாவரும் கடைப்பிடிக்கும் உறுதியான சாதனம் இதனின் மிக்கதில்லை என்பதனை நாட்டு வனவும் ஆகின்றன. 'சண்டீசனும், திருநாவுக்கரையனும், கண்ணப்பனும் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்தடைந்தேன்' என்றும், அடைக்கலம் புகுந்த அந்தணாளனைக் காக்க அவன்மேல் வந்த காலனுயிரைவவ்வியும், அஞ்சி யடைந்த அமரரைப் புரக்க நஞ்சினை உண்டும், இலங்கையர் கோனை விலங்கற் கீழ் அடர்த்து அவன் பாடிய இன்னிசை கேட்டுக் கோல வாளொடு நாளது கொடுத்தும், சம்பந்தன், நாவரையன், நாளைப் போவான், சூதன், சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம் புல்லன் என்றிவர்கள் குற்றஞ் செய்யினும் அவற்றைக் குணமெனக் கொண்டும், சிலந்தியின் செய்பணி கண்டு அதனை அரசனாக்கித் திருவும், வண்மையும், திண்டிறலரசும் செங்கணாற் களித்தும், வந்து வழிபட்ட இந்திரற்கு வானநாடாட்சி வழங்கியும், சந்தி மூன்றிலும் தாபரம் நிறுவி இறைஞ்சிய அகத்தியருக்குச் செந்தமிழ்ப் பொதியிற் சேர்வு நல்கியும், இன்னவாறு பலர்க்கும் நீ புரிந்த சீரருள்கள் பலவற்றையும் கேட்டு நின்றிருவடி யடைந்தேன்' என்றும் அவர் இயம்புகின்றார். " இயக்கர் கின்னரர் யமனொடு வருணன் இயங்கு தீவளி ஞாயிறு திங்கள் மயக்க மில்புலி வானர நாகம் வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம் அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி யதனை யர்ச்சித் தார்பெறு மாரருள் கண்டு திகைப்பொன் றின்றிநின் றிருவடி யடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூரு ளானே"1 என்பதும் காண்மின். இன்னோர் பெற்ற சீரருளெல்லாம் கண்டு, 'எனக்கு நின் பேரருள் வழங்குதியோ, வழங்ககில்லாயோ என்னும் தடுமாற்றம் நீங்கிற்' றென்பார் 'திகைப்பு ஒன்றின்றி' என்றார். இங்ஙனமாகச் சுந்தரர் திருப்பாட்டுக்களால் அறியலாகும் முப்பொருளியல்பும், திப்பிய நலங்களும் அளவில்லன. அவை யெல்லாம் இச்சுருங்கிய பொழுதில் ஒருங்கு கூறுதற்காகா. சுந்தரர் திருவருள் தோற்றுவித்த துணையானே ஒரு சிலவற்றை இப்பேரவைமுன் கூறலாயினேம். இனி, அவர் பாட்டுக்களில் அணிநலஞ் சான்ற இன்பகுதியும் சில கூறி அமையும் கருத்தினேம். சோணாட்டு மருதவளஞ் சான்ற பதியொன்றினைக் குறித்து, " அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூ ழயலின் கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக் கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே"2 என்றும், " கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் கவின்காட்டுங் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே"3 என்றும், " சோலைமலி குயில்கூவக் கோலமயி லாலச் சுரும்பொடுவண் டிசைமுரலப் பசுங்கிளிசொற் றுதிக்கக் காலையிலும் மாலையிலும் கடவுளடி பணிந்து கசிந்தமனத் தவர்பயிலுங் கலயநல்லூர் காணே"1 என்றும் பாடி யிருப்பவற்றில் எதுகை மோனைத் தொடை வளங்களும், உருவகம், முரண் முதலிய அணிநலங்களும், மருட்கை, உவகை என்னும் மெய்ப்பாடுகளும் தோன்ற இயற்கை வனப்புக்கள் எத்துணை எழில் பெற எடுத்துக் காட்டப்பெற்றுள. " திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே"2 என்பதும், வியப்பும், உவகையும் பயப்பது காண்க. மாம்பொழிலில் உள்ள மரங்கள் தளிர் ஈனுவது குறித்து, " சீதப் புனலுண் டெரியைக் காலும் சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே"3 என்றியம்புவது எத்துணை இன்சுவைத்தாக உள்ளது! மற்றும், பெருமான்றன் திருச்சடையினையும், திருமார்பின் நூலினையும் குறித்து முறையே, " அழல்நீர் ஒழுகி யனைய சடையும்"4 எனவும், " பளிக்குத் தாரை பவள வெற்பிற் குளிக்கும் போல் நூற் கோமான்"5 எனவும் கூறிய உவமங்கள் கழிபேரின்பம் பயவாநிற்கின்றன. பாவலர்க்கு நல்விருந்தாகும் இன்னோரன்னவை நாவலூர் மன்னரின் வித்தகக் கவித்திறத்தை விளக்கி நிற்பனவாதல் காண்க. மற்றும், நம்பியாரூரர் தம் தோழமைக்கேற்பத் தம்பிரானோடு அசதியாடிக் கூறுவனவும் இன்பம் பயப்பனவே. " காடு நும்பதி ஓடு கையது காதல் செய்பவர் பெறுவதென்"6 " சிலைத்து நோக்கும் வெள்ளேறு செந்தழல் வாய பாம்பது மூசெனும் பலிக்கு நீர்வரும் போது நுங்கையிற் பாம்பு வேண்டா பிரானிரே"7 என்பன அதற்குக் காட்டாதல் அமையும். ஒரேயொரு தோழர்; அவரோ நகையாடற் கேற்ற இலக்கண மெல்லாம் நன்கமைந்தவர்; அவரை விடுத்து வேறு யாருடன் விளையாடுவர்! இன்னும், கருத்துடை அடைகளாலே சமற்காரந் தோன்றக் கூறுவன சிலவும், அவரது தோழமைக்குப் பொருத்தமாக உள்ளன. ‘கோளிலிப்பெருமானே, குண்டையூரில் சில நெல்லுப்பெற்றேன்; அவற்றைக் கொண்டுவர ஆள் இல்லை; பரவையின் பசி வருத்தத்தை நீயும் அறிதி யன்றே? அவ்வாட் கண்மடவாள் வாடி வருந்தாமே அந்நெல்லினை அட்டித் தரப் பணிப்பாய்' என வேண்டுகின்றவர். " பாதியோர் பெண்ணை வைத்தாய் படருஞ்சடைக் கங்கை வைத்தாய் மாதர்நல் லார்வ ருத்தம் நீயும் அறிதி யன்றே"1 என்றியம்புகின்றார். திருவொற்றியூரிலே சூளுறவு பிழைத்து முகக்கண் மறைவுற்றவழி, அவர் பாடுவன கன்னெஞ்சையும் கரைக்கும் பெற்றியன. அவற்றுள் ஒன்றில், "மூன்று கண்ணுடையாய்! அடியேன் கண்கொள்வதே?"2 என முறையிட்டு மன்றாடுவது அவரது உரிமையின் பெருமையை இனிது புலப்படுத்துகின்றது. இனி, ஆலால சுந்தரர் அன்பின் ஆராமையால் எழுந்த அருமைத் திருப்பாட்டுக்களில் அமைந்த தொடர்கள் சில மலரினும் மென்மையவேனும் அவற்றின்பொருள் வரையினும் திண்மையன; கற்பார் கேட்பாரின் நெஞ்சினைத் திறைகொள்ளுந்திறத்தன. 'குறைவிலா நிறைவே, குணக்குன்றே, கூத்தனே, கோதிலா அமுதே, வானநாடனே, வழித்துணை மருந்தே, மாசிலாமணியே! நீயன்றி எனக் குறவாவார் யாவர்? நின்னை மறந்து வேறு எதனை நினைப்பேன்?' என்று கூறி அங்கலாய்க்கின்றார். அவ்வருமருந்திலே சிறிது புசித்து எம்பசித்துயர் ஒழிவதாக! "அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே?"3 "அன்னம் வைகும் வயற்பழனத்தணி ஆரூரானை மறக்கலும் ஆமே"4 திருவாவடுதுறையுள், " அங்கணாயெனை அஞ்சல்என் றருளாய் யார் எனக்குற வமரர்கள் ஏறே?"1 " நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன்மறந்து என்நினைக்கேனே?"2 " வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை மறந்துஎன் நினைக்கேனே?"3 நம்பியாரூரர் திருவொற்றியூரிலே, 'அன்புநாரா, அஞ்செழுத்தும் நெஞ்சு தொடுக்க அலர் தொடுக்கும்' திருப்பணி புரிந்திருந்த மின்கொடிபோலும் சங்கிலியாரைக் காதன் 'மணத்தாற் கலந்து பேரின்பம் துய்த்துவரும் நாளில், செந்தமிழ்ப் பொதியிற் றென்றல் வந்து வீசலுற்றது. திருவாரூரிலே அணிவீதி அழகரின்வசந்த விழாவை நினைந்தார். வீதி விடங்கப் பெருமானது ஒண்ணுதலார் புடை பரந்த ஓலக்கத்திடை நிகழும் பண்ணமரும் மொழிப் பரவையார் பாடலும் ஆடலும் அவர் செவியிலும் விழியிலும் திகழா நின்றன. ‘ஆ! என் முத்தினை, மாமணியை, வயிரத்தை, ஆரூர் அண்ணலை எத்தனை நாள் பிரிந்திருப்பேன்' என்று ஏசறவால் இனைகின்றார். அப்பொழுது அவர் பாடிய விலையிலா மாணிக்கம் போலும் திருப்பாட்டு ஒன்றினையும், அதனை நினைந்து நினைந்து உருகி யுருகிக் கருவி கரணமெலாம் சுழன்று நின்ற பெரியா ரொருவரின் அரியபாடல் ஒன்றினையும் கூறி, என் உரையை நிறுத்தி விடைபெறுகின்றேன். " ஏழிசையா யிசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி மாழையொண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன்! என்னாரூர் இறைவனையே!"4 - சுந்தரர் " ஏழிசையா யிசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் என்றுமுன்னீ சொன்ன பெருஞ் சொற்பொருளை ஆழநினைந் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந் தூழியிலொன் றாவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே."5 - இராமலிங்க அடிகள் 12. அறிவுடை நம்பி அறிவுடை நம்பி என்பவர் அமிழ்தினும் இனிய தமிழ் மொழியின்கண் அரும்பொருட் கருவூலமாக விளங்கும் சங்கச் செய்யுட்களை இயற்றிய சான்றோருள் ஒருவராவர். இவர் வழிவழியாகத் தமிழினை வளர்த்த தென்னர்குலத்தோன்றல் என்பது இவர் பெயர் ‘பாண்டியன் அறிவுடை நம்பி’ என அடையொடு புணர்த்து வழங்கப் படுமாற்றால் அறியலாகும். நம்பி என்பது ஆடவரிற் சிறந்தாரை யுணர்த்துவதொருசொல். இச்சொல் முழுமுதற் கடவுளையும், மற்றும் தேவரிற் சிறந்தாரையும், கடவுளடியாரையும் குறிக்கவும் வழங்கும். சீவக சிந்தாமணி, இராமாயணம் என்னும் காப்பியங்களின் தலைவர்களாகிய சீவகனும் இராமபிரானும் நம்பி என்னும் சிறப்புப் பெயராற் பலவிடத்தும் வழங்கப்பட்டிருப்பதும், சுந்தரமூர்த்தி நாயனார்தாம் பாடியதொரு பதிகத்தின் திருப்பாட்டிறுதி தோறும் ‘நாட்டியத் தான்குடி நம்பீ’ என இறைவனை விளித்திருப்பதும், திருத்தொண்டத் தொகையில் ‘கலைமலிந்தசீர் நம்பி கண்ணப்பர்’ என்றாற்போல நாயன்மார் ஒன்பதின்மர்க்கு நம்பி என்னும் அடைகொடுத் திருப்பதும், அவர்தாமும் நம்பி ஆரூரர் எனப் பெயர் சிறந்திருப்பதும் ஈண்டு அறியற்பாலன. பிங்கல நிகண்டும் ஆடவர் சிறப்புப் பெயராக இதனைக் குறித்துளது. எனவே, அறிவுடை நம்பி என்பதிலுள்ள நம்பி என்பதும் சிறப்புப்பற்றி எழுந்ததொரு பெயரேயாதல் வேண்டும். இவ்வரசர் பெருந்தகை நிரம்பிய கல்வியறிவும், சான்றோர்களைத் தமராகக்கொண்டு அவர் சொற்படியொழுகும் நற்பண்பும் வாய்ந்தவர் என்பது தேற்றம். விழுமிய குணங்களும் மெய்யுணர்வும் சான்ற பிசிராந்தையார் என்னும் புலவர் பெருமான் தமக்கு ‘ஆண்டு பலவாகியும் நரையில்லாமைக்குக் கூறிய காரணங்களில் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்’1 என்றியம்பியதற்கு இலக்காக நின்றவர் இவ்வறிவுடைநம்பி என்று கருதுதல் பொருத்தமே. பிசிராந்தையார் ஒருகால் நம்பியுழைச் சென்ற பொழுது, பொருண் மொழிக்காஞ்சியாக ஓர் அழகிய செய்யுட் கூறினர். காய்த்த நெல்லை அறுத்துக் கவளமாகக் கொடுக்கப்பெற்றால் ஒரு மாவிற் குறைந்த நிலத்தில் விளைந்த கதிரும் பலநாளைக்கு உணவாகும். நூறு செய்யாயினும் யானை தனித்துப்புக்கு உண்ணுமாயின் அதன் வாயின்கட் புகுந்த நெல்லினும் காலாற் கெடுக்கப்படுவது மிகுதியாகும்;1 அப்பெற்றியே அறிவுடைய அரசன் இறைகொள்ளும் நெறியை அறிந்து கொள்ளின் அவனது நாடு கோடி பொருளைத்தேடிக் கொடுத்து, தானும் மிகவும் தழைக்கும்; அவனறிவால் மெல்லியனாகி, நாடோறும் தகுதியறியாத ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடுகூடி, அருளின்றிக் குடிகட்கு அன்பு கெடுமாறு கொள்ளும் பொருளை விரும்பின், அந்த ‘யானைபுக்க விளைபுலம் போலத் தானும் உண்ணப் பெறான்; உலகமும் கெடும்’ என்பது அதன் கண் அமைந்த பொருளாகும். அச்செய்யுளிற் போந்த ‘அறிவுடை வேந்தன்’ என்பதற்கு இலக்கியமாக விளங்கினமையே இவர் அறிவுடை நம்பி என்று பெயர் கூறப்படுதற்கு ஏதுவாயிற்றுப்போலும்? நச்சினார்க்கினியர் கருத்துப்படி இச்செய்யுள் வாயுறைவாழ்த்தாயினும், ‘வேம்பும் கடுவும்போல’ வெய்தாகக்கூறும் சான்றோரது அறிவுரையையும் இவ்வரசர் உவப்புடன் ஏற்கும் அறிவுடையார் என்பது பெறப்படும். இனி, இவ்வரச கவியாகிய நம்பி பாடியனவாக நற்றிணையில் (15) ஒன்றும், குறுந்தொகையில் (230) ஒன்றும், அகநானூற்றில் (28) ஒன்றும், புறநானூற்றில் (188) ஒன்றும் ஆகநான்கு செய்யுட்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் அகப்பொருட் பகுதியாகிய மூன்று செய்யுளும் தோழிகூற்றாகவும், வரைவு கடாவுங் குறிப்பின வாகவும் இருத்தலின், இவரது காதற்கிழமைபற்றிய வரலாறு இவற்றின் உட்கிடையாகுங்கொல் எனக் கருதுதல் இழுக்கன்றாம் என்க. நல்லிசைப் புலவராயினார் தமது மெய் வரலாற்றை இங்ஙனம் குறிப்பிற்புலப்படுத்துதல் வழக்கே யென்பதற்குச் சான்றுகள் பலவுள்ளன. மேலே குறித்த நற்றிணைச் செய்யுள் ‘வரைவு நீட்டித்த வழித் தோழி தலைமகற்குச் சொல்லி வரைவுகடாயது’ என்னும் கருத்தினையுடையது. ‘முழங்குகின்ற அலைகொணர்ந்து கொழித்த பெரிய எக்கர் மணலை நுண்ணிய துகிலின் நுடக்கம் போலத் தோன்றுமாறு காற்று மிகுதியாகத் தூற்றாநிற்கும் கடற்கரையை யுடைய தலைவனே, நீதான் பூப்போன்ற எமது தலைவியின் நலத்தைப் புதுவதாக நுகர்ந்து வைத்தும் அதனை மறந்தாயா கலின் அதனாலாய வருத்தம் அடரா நிற்க, எமது உள்ளத்தே தாங்குமளவும் தாங்கி, மாசற்ற கற்பினையுடையாளொருத்தி தன் குழவியைப் பலியிடுதற்குக் கணவன் வாங்குதலும் அதனைக் கைவிட்டாற்போல, முன்னாள் முதற்கொண்டு எம்முடன் வளர்ந்து வந்த நாணினையும் கைவிட்டேம்; இனி இவ்வூர் அலரெழுவதாக’ என்பது அச்செய்யுளின் பொருள். இதில், காற்றினால் தூற்றப்படும் நுண்மணற் பரப்புக்கு நுடங்கும் துகிலை உவமை கூறியிருப்பது இயற்கையொடு பொருந்தி யுள்ளமை காண்க. ‘கடல்கொழித்து ஒதுக்கிய எக்கர் மணலிற் சிலவற்றைக் காற்று அள்ளித் தூற்றுதல் போல நின்னால் நீக்கப்பட்ட எம்மை ஊரார் அலர் தூற்றா நிற்பர்’ என இவர் உள்ளுறை அமைத்திருக்கும் திறப்பாடு பாராட்டற் குரியது. காமமும் நாணும் ஒருங்கே தாங்குதற்கரியன என்பதும், காம வெள்ளத்தால் நாண் என்னும் சிறை அழிதலுண்டென்பதும், “காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு”1 என்னுங் குறளாலும், “ அளிதோ தானே நாணே .... ............................... தாங்கு மளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே”2 என்னுங் குறுந்தொகைச் செய்யுளாலும் அறியப்படும் தலைவி யானவள் உயிரினுஞ் சிறந்த நாணினை அதனினுஞ் சிறந்த கற்பினாற் கைவிடுதற்கு, மடவரலொருத்தி தனக்கு இன்ப மூட்டும் உயிரினுஞ் சிறந்த குழவியைக் கணவன் சொற்பிழையாத கற்பினாற்கைவிட்டமையை உவமை கூறியிருப்பது நினைந்து நினைந்தின்புறற்பாலது. இவர் பாடிய அகநானூற்றுச் செய்யுளின் பொருளாவது, ‘தோழி, தலைவனைப் பிரிதலரிய காமத்தால் நீ செய்யற் பாலதனை அறியாயாயினும் யானுரைப் பதனைக் கேள்; நமது புனத்திலுள்ள தினைகளிற் பல கதிர்வார்ந்து கொய்தற்கு முன்பே (கிளிகளாற் கவரப்பட்டு) வெறுந் தட்டைகளாகக் காணப்படுகின்றன; நீ தான், பன்மலர்க் கண்ணி சூடி வேட்ட நாயுடன் மலைதொறுஞ் செல்லும் வெற்பனைப் பெறும் முயற்சியளவில் அமைந்தனை. இனி நீ நின் மாலை அசையுமாறு எழுந்தெழுந்து கிளிகளையோட்டும் ஓசையை அவற்றின் பேச்சுக் கிடையிடையே பலகாற் சொல்லி அவ்விடத்து அவ்வாறு ஒழுகாயாயின், அன்னையானவள் ‘இவள் கிளி யோட்டுதலை அறியாள்’ என்று கருதித் தினையைக் காத்தற்குப் பிறரைக் கொடுவந்து நிறுத்துவளாயின், பின் அவனது மலர்ந்த மார்பு உறுதற்கரிதாகும்’ என்பது. இது, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது ஆம். இதனால் களவுக் கூட்டத்திற்கு உண்டாகும் இடையூறு தலைவற்குக் குறிப்பினாற் புலப்படுத்தி வரைவு கடாவுமாறு காண்க. இச்செய்யுளில் வந்துள்ள, “ கிள்ளைத் தெள்விளி இடையிடை பயிற்றி ஆங்காங் கொழுகா யாயின்”1 என்னுஞ் சொற்றொடர் நுண் பொருளுடைத்தாய் இன்பஞ் செய்வ தாகின்றது. தெள்விளியாவது தெளிந்த இசைபோலும் ஓசை. கிளியை ஓட்டும் அவ்வோசையை அவற்றின்பேச்சுக் கிடையிடையே சொல்லுதல் என்பது கிளியின் பேச்சும் அதனை யோட்டும் இவளது ஓசையும் ஒருதன்மையான என்பதும், இவள் ஓட்டுங் குரலைக் கேட்ட கிளிகள் இவளைத் தம்மின மெனக் கருதி மீட்டும் போந்து கதிர்களைக் கவரா நிற்கும் என்பதும் பெற வைத்தபடியாம். கிளியோட்டும் கொடிச்சியின் குரலைக் கிளியின் குரலெனக் கருதி ஏனைக் கிளிகளும் தினையின்கட் போதரும் ஆதலின், தமர் காவலை விலக்குவர் போலும்; ஆகலின் மால்வரை நாட, தாழ்க்காது இவளை வரைந்து கொள்வாயாக-என்னும் பொருளமைத்து ஐங்குறுநூற்றிற் கபிலர் பாடிய “ கொடிச்சி யின்குரல் கிளிசெத் தடுக்கத்துப் பைங்குர லேனற் படர்தருங் கிளியெனக் காவலுங் கடியுநர் போல்வர் மால்வரை நாட வரைந்தனை கொண்மோ”2 என்னுஞ் செய்யுள் ஈண்டு ஒப்பு நோக்கி இன்புறற் பாலது. ‘ஆங்காங்கு ஓழுகாயாயின்’ என்றது நின்னாற் கிளிகள் கடியப் படாவாயினும், ஓட்டுதல் போன்று ஒழுகாயாயின் என்ற படியாம். இவர் பாடிய புறப்பாட்டு, “ படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே”1 என்பது. இதில், படைக்கப்படுஞ் செல்வம் பலவற்றையும் படைத்தலுடன், பலரோடும் கூட உண்டலையும் செல்வர்க்கு இலக்கணமாக இவர் கூறியது சிந்திக்கற் பாலது. “உடைமையுளின்மை விருந்தோம்ப லோம்பா மடமை”2 என்று பொய்யில் புலவரும் கூறியுள்ளாரன்றே? ஒளவையாரும் ‘சிறுசோற்றானும் நனிபல கலத்தன்; பெருஞ் சோற்றானும் நனிபல கலத்தன்’’3 என அதியமான் அஞ்சியைப் பாராட்டியுள்ளமை காண்க. ‘இடைப்படக் குறுகுறு நடந்து......... மயக்குறு மக்களை’ என்னும் பகுதியில் சிறுமகார் இயல்பும், அதனால் அவர் பெற்றோரை இன்பத்தில் மயங்கச் செய்யுமாறும் கூறியிருப்பது கழிபேருவகை விளைப்பதாம். ‘அழிழ்தினுமாற்ற’ என்னுங் குறளுரையில்,4 பரிமேலழகரும் ‘சிறுகையான் அளாவலாவது இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தல்’ என்று இச்செய்யுட் பகுதியை எடுத்தாண்டு இதன் சிறப்பைப் புலப்படுப்பாராயினர். “மக்களையில் லோர்க்குப் பயக்குறை இல்லைத்தாம் வாழு நாளே” என்பதன் கருத்து இல்வாழ்வார் எய்தும் இருமை யின்பத்திற்கும் நன்மக்கட் பேறு இன்றியமையாததாம் என்பது. பலரோடுண்டலாகிய ஈகையாற் புகழுண்டா மாதலின், அஃதும் அகப்பட இப்பாட்டின் பொருளை மேற்கொண்டு “பொன்னுடைய ரேனும்......தவர்” எனப் புகழேந்தியார்* பாடியிருக்குந் திறன் புகழ்ச்சிக்குரியது. “ இம்மை யுலகத் திசையோடும் விளங்கி மறுமை யுலகமும் மறுவின் றெய்துப செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோர்எனப் பல்லோ ருரைத்த பழமொழி யெல்லாம் வாயே யாகுதல் வாய்த்தனம் தோழி”1 என்னும் அகப் பாட்டின் பகுதியும் இதனுடன் அறிந்து மகிழற் குரியது. 13. தமிழ் இலக்கியங்களில்* காணப்படும் இசைப்பகுதிகள் இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து, செவிப் புலனைக் குளிர்வித்து, உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையேயாகும். தும்பி, வண்டு, குயில், கிளி, பூவை முதலிய உயிர்களிடத்து இவ்வின்னோசை இயற்கையாகவே அமைந்து இன்பஞ் செய்கின்றது. மக்கள், தம் நுண்ணறிவு மாட்சியால், பற்பல வகையாகிய இன்னிசைகளைத் தம் மிடற்றிலிருந்தும், கருவிகளிலிருந்தும் எழுப்புகின்றனர். இசை இயல்புகளையும், வேறுபாடுகளையும் சிறப்பாக அறியாவிடினும், பொது வகையில் இசையை விரும்பாதவர்கள் யாருமில்லை. பச்சிளங் குழவியும் இசையை விழைகின்றது. ஆனினங்கள், இசையைக் கேட்டு அசையிடாதிருக்கின்றன. யானை முதலிய வன விலங்குகளும், பாம்பு முதலியனவும் இசைக்கு வசமாகின்றன. அறிவே உருவாகிய ஆண்டவனும் இசையை விரும்புகின்றான். அவன் இசை வடிவமாக இருக்கின்றான் என்றும், இசையின் பயனாக உள்ளான் என்றும், இசை பாடுகின்றான் என்றும் ஆன்றோர் கூறுவர், ‘ஏழிசையாய் இசைப் பயனாய்' என்று சுந்தரரும், ‘எம்மிறை நல்வீணை வாசிக்குமே' என்று அப்பரும் கூறுதல் காண்க. கலைகட்கெல்லாம் தெய்வமாகிய நாமகள் கையில் வீணையை அமைத்துள்ள நம் முன்னோர்கள் இசைக் கலையை எவ்வளவு சிறந்ததாகப் போற்றியிருத்தல் வேண்டும்? இனி, தமிழ்மக்கள் பண்டுதொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதனைத் தமிழ்நூல்களின் ஆதரவு கொண்டு நோக்குவோம். தமிழ்மொழியானது மிகப்பழைய காலத்தில் இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பெரும் பிரிவுடையதாக இருந்தது. அதனால், முத்தமிழ் என்ற வழக்கு உண்டாயிற்று. பழைய சங்க காலங்களில், முத்தமிழ்க்கும் இலக்கண இலக்கியங்கள் பற்பல இருந்தன. ஆசிரியர் அகத்தியனார் இயற்றிய அகத்தியம் என்பது, முத்தமிழ் இலக்கணமே. தலைச்சங்கப் புலவர்கள் இயற்றிய பெருநாரை, பெருங்குருகு என்பனவும், நாரதர் இயற்றிய பஞ்ச பாரதீயம், அகத்தியர் மாணாக்கராகிய சிகண்டி என்பவர் இயற்றிய இசை நுணுக்கம் முதலாயினவும் பழைய இசைத்தமிழ் நூல்களாம். ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளின் முன் தோற்றிய பேரிலக்கணமாகிய தொல்காப்பியத்தில், இசையைப் பற்றிய குறிப்புக்களும், இசைபாடுதலையே தொழிலாகவுடைய பாணர் முதலானவர்களைப்பற்றிய குறிப்புக்களும் காணப்படுகின்றன. அந்நூலிலே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலங்கட்கும் வெவ்வேறு வகையான யாழ் அல்லது பண் உண்டு என்று குறிப்பிடப்படுவதால், அக்காலத்தே தமிழகம் முழுவதும் இசைக்கலை பரவியிருந்ததென்பதும், எவ்வகைக் குடிமக்களும் இசையுணர்ச்சி உடையராய் இருந்தனர் என்பதும் பெறப்படும். இரண்டாயிரம் ஆண்டுகளின்முன் விளங்கிய தெய்வப் புலமைத் திருவள்ளுவர்-குழல், யாழ், என்னும் இசைக் கருவிகளைப் பற்றியும், பண்ணைப் பற்றியும் திருக்குறளில் கூறியுள்ளார். மற்றும், சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் அவை பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சிலப்பதிகாரக் காப்பியத்தில், இசைக் கருவிகளின் பெயர்களும், இலக்கணங்களும், கருவிகளிலும் கண்டத்திலும் இசைகள் பிறக்கும் முறைமையும், பிறவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அக்காலத்திலே, பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ், என நால்வகை யாழ்கள் இருந்தன. பேரிகை, இடக்கை, உடுக்கை, மத்தளம், திமிலை, குடமுழா, தண்ணுமை, தடாரி முதலிய முப்பத்தொரு வகைத் தோற்கருவிகள் வாசிக்கப்பட்டன. ஆயிரம் நரம்புடைய ஆதியாழ் என்பதொன்று இருந்ததென்றும், ஆதியிசை பதினொராயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்று (11,991) என்றும் கூறினால், பெரும்பாலார் வியப்படையக்கூடும். " உயிருயிர் மெய்யள வுரைத்த ஐம்பாலினும் உடறமி ழியலிசை யேழுடன் பகுத்து மூவேழ் பெய்தந்................................. தொண்டு மீண்ட பன்னீ ராயிரம் கொண்டன ரியற்றல் கொளை வல்லோர் கடனே" சிலம்பு, அரங்.நாட்டார் உரை ஆனால், பழந்தமிழ் நூல்கள் அவற்றின் உண்மையைத் தெரிவிக் கின்றன. ஷட்ஜம் முதலிய ஏழிசைகளுக்கும் - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் தமிழ்ப் பெயர்கள் வழங்கின. இப்பொழுது ஆலாபனம் என்பது ஆளத்தி என்னும் பெயரால் வழங்கிற்று. த, ந, ம, என்னும் மூன்றும் மெய்யினங்களோடு, குற்றெழுத்து ஐந்தும், நெட்டெழுத்து ஐந்தும். தென்னா தெனா என்னும் அசைகளும் ஆளத்தி செய்தற்கு உரியவாயிருந்தன. மூலாதாரம் தொடங்கி, எழுத்தின் நாதம் ஆளத்தியாய், பின்பு இசையென்றும், பண் என்றும் பெயர் பெறலாயின. ஜநந ராகங்கள் பண் என்றும், ஜந்ய ராகங்கள் திறம் என்றும் கூறப்பட்டன. இசைப் பாட்டுக்கள் எல்லாம் செந்துறை, வெண்டுறை, வரி, உரு முதலிய பெயர்களால் வழங்கின. வரி, உரு முதலியவற்றில் எத்தனையோ பலவகைகள் உண்டு. இப்பொழுது கீர்த்தனங்கள் என்று கூறப் படுவன உருக்களில் அடங்குவனவாகும். பல வகையான கூத்துக் களோடும் வரிப் பாடல்கள் பாடப்பட்டன. கொற்றி, பிச்சி, சித்து, சிந்து, ஆண்டி, அம்மனை, பந்து, கழங்கு, உந்தி, தோள்வீச்சு, சாழல், தெள்ளேணம் முதலிய எண்ணிறந்த கூத்து வகைகளும், அவற்றிற்குரிய பாடல்களும் பயிற்சியில் இருந்தன. அவை பெரும்பாலும் மகளிருடைய விளையாட்டுக்களாக விளங்கின. மற்றும், மகளிர் கிளியோட்டுவதும் பாட்டு; சாந்திடிப்பதும் பாட்டு; உழத்தியர் நாற்று நடுவதும் பாட்டு; களை பறிப்பதும் பாட்டு; இவ்வாறு எல்லாச் செயல்களும் பாட்டுக்களோடு நிகழ்ந்தன. இவ்வாற்றால் முற்காலத்தில் தமிழகத்திருந்த ஆடவரும், மகளிரும், இசையும், கூத்தும், ஆகிய இன்பவிளையாட்டுக் களால் களி சிறந்து, உடம்பும் உள்ளமும் தளிர்த்திருந்தனர் என்னும் உண்மை புலனாகும் என்க. அம்மானை, பந்து, ஊசல், வள்ளை என்னும் வரிப்பாட்டுக்களைச் சிலப்பதிகாரத்தில் காணலாகும். அன்பே வடிவாகிய மாணிக்கவாசப் பெருமான் ஓதுவார் உள்ளத்தை உருக்கும் திருவாசகத்திலே தெள்ளேணம், சாழல், தோணோக்கம், உந்தி முதலாகிய வரிப் பாடல்களை அமைத்துள்ளார் என்றால், அப்பாடல்களும், கூத்துக்களும் அந்நாளில் எவ்வளவாகக் கொண்டாடப்பட்டிருத்தல் வேண்டும்! இனி, தமிழிலே, ஒப்பற்ற இசைப் பாக்களாக இப்பொழுது நமக்குக் கிடைத்திருப்பன யாவை எனநோக்குதும், சிலப்பதி காரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ் வரி, குன்றக் குரவை, வாழ்த்துக் காதை என்னும் ஆறு காதைகளும் இசைப்பாக்களின் தொகுதியேயாகும். " பவள வுலக்கை கையாற் பற்றித் தவள முத்தங் குறுவாள் செங்கண் தவள முத்தங் குறுவாள் செங்கண் குவளை யல்ல கொடிய கொடிய;"1 " பொன்னி லங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட மின்னி லங்கு மேகலைக ளார்ப்ப வார்ப்ப வெங்கணுந் தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்தடித்துமே தேவ ரார மார்பன் வாழ்க வென்று பந்தடித்துமே"1 என்பன முறையே கானல் வரியிலும், வாழ்த்துக் காதையிலும் உள்ளன. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருவாய்மொழி முதலியனவோ, வானோரும் அளவிடற்கரிய சிறப்புடைய இசைப் பெருஞ் செல்வக் களஞ்சியங்களாகும். அவற்றிற்குரிய பண்களின் இயல்பறிந்து முறைப்படி பாடுவார் தொகை அருகி வருவது பெரிதும் இரங்கத்தக்கதாகும். இதுகாறும் முத்தமிழில் ஒரு பகுதியான இசையைப் பற்றியே சிறிது ஆராய்ந்தோம். மற்றொரு பகுதியான இயற்றமிழை நோக்கின், அதுவும் இசையுடன் விரவியே நடைபெறுதல் புலனாகும். தொல்காப்பியனார் சொற்றொடர்களின் ஓசை யமைதிக்கு வண்ணம் என்று பெயர் கொடுத்து, அதை இருபது வகைப்படுத்தியுள்ளனர். வல்லெழுத்துப் பயின்று வருவது வல்லிசை வண்ணம், மெல்லெழுத்துப் பயின்று வருவது மெல்லிசை வண்ணம், நெட்டெழுத்துப் பயில்வது நெடுஞ்சீர் வண்ணம். குற்றெழுத்துப் பயில்வது குறுஞ்சீர் வண்ணம் என்று இவ்வாறு வண்ணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனாலும், செய்யுட் களெல்லாம் எதுகை, மோனை முதலிய தொடை விகற்பங்களோடு பாடப்படுதலாலும், இயற்றமிழ்ப் பாக்களும் இசையமைதி பெற்றிருப்பது நன்கு புலனாகும். வெண்பா முதலிய பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான இசையுடனேயே பண்டு தொட்டு ஓதப்படுகின்றன. அவற்றுள்ளும், கலிப்பா, பரிபாட்டு என்பனவற்றை இசைப்பாக்கள் என்றே பேராசிரியர் முதலிய பேருரையாளர்கள் கூறுவாராயினர். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடற் செய்யுட்கள் ஒவ்வொன்றுக்கும் பண்வகுத்திருப்பதும் நோக்கற்பாலது. பாலை யாழ், நோதிறம், காந்தாரம் என்ற பண்கள் அதிற் குறிக்கப்பட்டுள்ளன. இசைவகுத்தோராக ஒரு பதின்மர் பெயர் அதிற் காணப்படுதலின், அப்பொழுது இசை வாணர்கள் எவ்வளவு மிகுதியாக இருந்திருத்தல்வேண்டும் என்று கருதலாகும். மற்றும், வெண்பா முதலிய பாக்களுக்கு இனமாக வகுக்கப்பெற்ற தாழிசை, துறை முதலாயினவும் இசைப்பாக்களே யாதல் வேண்டும். மற்றும், மக்களுடைய உள்ளக்கிளர்ச்சியாகிய வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், வெகுளி, நகை, சாந்தம் என்பவற்றை மெய்ப்படத் தோற்றுவிக்கும் கவிதைகள் எல்லாம் இசை யமைதியுடையனவே என்னலாம். தொல்காப்பிய மெய்ப் பாட்டியலில், உள்ள உணர்ச்சியாகிய சுவைகளுக்கு இலக்கணம் கூறப்பட்டிருத்தலின், அக்காலத்திலேயே அத்தகைய செய்யுட்கள் மிக்கிருந்தனவாதல் வேண்டும். நமக்குக் கிடைத்துள்ள இடைக் காலத்து நூல்களிலும், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம் முதலியன சுவை யுணர்ச்சிகள் ததும்பப்பெற்ற பாடல்களால் அமைந்தனவாகும். இராமன் வனம் புகுவான் என்ற சொல்லைக்கேட்ட அளவில் அயோத்தி மாநகரம் எய்திய துயரத்தைக் கம்பர் வருணித்திருக்கும் பாடலில் இரண்டை நோக்குவோம். " ஆவும் அழுத; அதன் கன்றழுத; அன்றலர்ந்த பூவும் அழுத; புனற் புள்ளழுத; கள்ளொழுகும் காவும் அழுத; களிறு அழுத; கால் வாயப்போர் மாவும் அழுதன அம் மன்னவனை மானவே"1 " கையால் நிலந்தடவிக் கண்ணீர் மெழுகுவார்; உய்யாள்பொற் கோசலையென் றோயாது வெய்துயிர்ப்பார்; ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீயென்பார்; நெய்ஆர் அழலுற்றது உற்றார்அந் நீணகரார்."2 அவலச்சுவை என்னும் சோக ரசம் இவற்றில் எவ்வளவு ததும்பு கின்றது பாருங்கள்! " செல்லுஞ்சொல் வல்லானெதிர் தம்பியும், தெவ்வர் சொல்லும் சொல்லுஞ் சுமந்தேன்; இருதோள் எனச்சூ ம்பி யோங்கும் கல்லுஞ் சுமந்தேன்; கணைப்புட் டிலும்கட் டமைந்த வில்லும் சுமக்கப் பிறந்தேன்; வெகுண்டுஎன்னை யென்றான்."3 சீற்றம் தணியுமாறு கூறிய இராமருக்கு எதிராக எனது சீற்றத்தால் என்ன பயன் என்று இலக்குமணன் கூறும் மாற்றத்திலும், அவனது கோப உணர்ச்சி பொங்கித் ததும்புதலை அங்கை நெல்லியெனக் காட்டும் இச்செய்யுளின் அருமையை நோக்குங்கள். இனி, சுந்தர மூர்த்திகள் பரவை நாச்சியாரைக் கண்டதனைத் தெரிவிக்கும், " கற்பகத்தின் பூங்கொம்போ, காமன்றன் பெருவாழ்வோ, பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ, புயல் சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ, அற்புதமோ, சிவனருளோ, அறியேன்என் றதிசயித்தார்."1 என்னும் அருமைத் தெய்வப் பாடலில் விளங்கும் உவகை, வியப்பு என்னும் சிருங்கார, அற்புத ரசஉணர்ச்சிகளை எங்ஙனம் அளவிட்டு உரைக்க வல்லேம்! இங்ஙனம் இவ்விசை மயமாக இருக்கும் செந்தமிழ்ப் பாடல்கள் பாற்கடல் போற் பரந்துள்ளன. அவற்றை யெல்லாம் படித்தறிந்து இன்புற வேண்டுவது தமிழ் மக்கள் கடனேயாகும். 14. உக்கிரப் பெருவழுதி இறையனார் களவியலுரையின் பாயிரப் பகுதியில் முச்சங்க வரலாறு கூறிவருமிடத்தே கடைச்சங்கம் இருந்து தமிழாராய்ந்தார் நாற்பத் தொன்பதின்மர் என்றும், அவருள்ளிட்டு நானூற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினார் என்றும் நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என்னும் இத்தொடக்கத்தன அவர்களாற் பாடப்பட்டன என்றும், அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்றும், அவர் சங்கம் இருந்து தமிழா ராய்ந்தது ஆயிரத் தெண்ணூற்றைம்பதிற்றியாண்டு என்றும், அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்றும், அவருட் கவியரங் கேறினார் மூவர் பாண்டியர் என்றும், அவர் சங்கமிருந்து தமிழா ராய்ந்தது உத்தரமதுரை என்றும் கூறப்பட்டுள்ளது. "நாற்பத் தொன்பதின்மர் என்ப" என்றாற்போல ஒவ்வொன்றும் 'என்ப' என்னும் வாய்பாட்டால் முடிக்கப்பெற்றுள்ளது. இதன்கண் உக்கிரப் பெருவழுதி கடைச் சங்கத்திறுதியில் இருந்தானாக அறுதியிட்டுரைக்கப்படுதலின், தமிழிலக்கிய ஆராய்ச்சியில் இவன் பெயர் ஒருதலையாகக் குறிக்கற் பால தொன்றாம். இவன் கடைச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் என்னவே, சங்கச்செய்யுட்களைப் பாடிய புலவருள்ளும் அவராற் பாடப்பட்ட அரசர் குறுநிலமன்னர் முதலாயினாருள்ளும் பெரும்பாலார் இவனுக்கு முற்காலத்திலும் சிலர் நிகழ்காலத்திலும் விளங்கினர் என்பது போதரும். ஈண்டு இவ்வாறாய இவனது காலத்தின் பின்மையைக் குறித்தற்குப் பிற சான்றுகளும் உளவோ என ஆராய்தல்தக்கது. இவ்வேந்தன் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய அகநானூறு என்னும் நெடுந்தொகையைத் தொகுப் பித்தவன் என்று தெரிதலின் அதிலுள்ள பாட்டுக்கள் அனைத்தும் பாடப் பெற்ற பின்னர் இவன் வாழ்ந்திருந்தனன் என்பது ஒருதலை. எனவே, இவனும் இவனொடு ஒத்த காலத்தினரான சேரமான் மாவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்டபெருநற் கிள்ளி என்னும் அரசர்களும்' ஐயூர் மூலங்கிழார், உலோச்சனார், பாண்டரங்கண்ணனார் முதலிய புலவர்களும் விளங்கிய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் கடைப்பகுதி என்று கொள்ளுதல் பொருத்தமாகும். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் முதலிய அரசர்களும் நக்கீரனார், மருதனிள நாகனார், கூடலூர்கிழார், மாங்குடிகிழார் முதலிய புலவர்களும் சிறிது முன்னாக, கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்தனராதல் வேண்டும். ஒளவையார் உக்கிரப் பெருவழுதியையும் அவனுடன் ஒருங்கிருந்த மாவெண்கோ, பெருநற்கிள்ளி என்னும் சேர சோழ மன்னர்களையும் பாடி யுள்ளாராகலின் அவரும் அவர்கள் காலத்திருந்தாராவர். ஆயின் அவர் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடியிருப்பதுடன் பரணர் தம்காலத்தில் இருந்தமையைக் குறிப்பிடுதலானும், அவர் நீண்ட வாழ்நாள் பெற்றிருந்தனர் என்பதற்குச் சான்றுண்மை யானும் அவரது காலம் கி.பி. முதல் நூற்றாண்டின் கடைப்பகுதி தொடங்கி இரண்டாம் நூற்றாண்டின் கடைப்பகுதிகாறும் ஆகும் என்னலாம். இனி, அகநானூற்றைத் தொகுப்பித்தோன் உக்கிரப் பெருவழுதி யாக, அதனைத் தொகுத்தவர் உப்பூரிகுடிகிழார் மகன் உருத்திர சன்மர் எனப்படுதலானும், இறையனார் களவியலுரையும் அவராற் கேட்கப்பட்டதென்பது வரலாறு ஆகலானும், திருக்குறள் மாண்பையும் திருவள்ளுவர் பெருமையையும் கிளந்தெடுத் துரைக்கும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களில் உக்கிரப் பெருவழுதி பாடியதும் ஒன்றாக விருத்தலானும், களவியலுரையின் தோற்றத் தோடும், திருக்குறள் அரங்கேற்றத்தோடும் அவ்வேந்தற்கு இயைபுண்மை புலனாகின்றது. திருவள்ளுவமாலைச் செய்யுட்கள் பற்றிய கொள்கையில் இக்காலத்தே சிலர் மாறுபட்ட கருத்தினரா கின்றனர். களவியலுரை உருத்திரசன்மராற் கேட்கப்பட்டது பற்றியும், திருக்குறள் அரங்கேறியது பற்றியும் வழங்கும் கதைகளை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை. திருவள்ளுவ மாலையின் தொடக்கத்திலுள்ள இரு செய்யுட்களையும், அவை பற்றிய கதைகளையும் கழித்துவிட்டு, முப்பால் பாண்டியன் அவைக்களத்தே அரங்கேற்றப் பெற்றதென்றும், அப்பொழுது உடனிருந்து கேட்ட புலவர் பலரும் அதனைப் பாராட்டின ரென்றும் கொள்வதில் இழுக்கொன்று மில்லை. திருவள்ளுவமாலையில் வரும் *"வைவைத்த கூர்வேல் வழுதி"/ *"தாதவிழ்தார் மாற"/ *"வாளார் நெடுமாற" என்னுந் தொடர்கள் அவை பாண்டியன் முன்னர்ப் பாடப்பட்டன என்பதற்குச் சான்றாகும். 'குலபதி நாயனார்' என்றாற் போலும் சில பெயர்கள் எழுதுவோரால் திரிபுற்றிருத்தல் கூடும். கபிலர், பரணர், நக்கீரர் முதலியோர் சிறிது முற்பட்ட காலத்தே விளங்கினமை புலப்படினும், உக்கிரப் பெருவழுதி ஆட்சியெய்திய காலம் வரை அவர்கள் வாழ்ந்திருந்து, திருக்குறள் அரங்கேறிய ஞான்று அதனைப் புகழ்ந்துரைத்தனர் என்று கோடல் பொருத்தமேயாகும். மாறுபட்ட கருத்தினர் கூறும் வேறு சில ஏதுக்கள் இக் கொள்கையை மாற்றும் வலியுடையனவல்ல. இனி, உக்கிரப் பெருவழுதி என்னும் பெயர் 'கானப்பே ரெயில் கடந்த' என்னும் அடைமொழியுடன் சேர்த்தும் வழங்கப் படுகின்றது. கானப்பேர் என்பது தேவாரப் பாடல் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதிகள் பதினான்கனுள் ஒன்று. இப்பொழுது காளையார் கோவில் என வழங்கப்பெறுவது. கடைச் சங்க நாளில் இஃதோர் பெரிய அரணாகவும், வேங்கை மார்பன் என்பானுக் குரியதாகவும் இருந்தது. இவ் வரசன் அவனை வென்று அதனைக் கைப்பற்றிய சிறப்புப்பற்றியே கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என வழங்கப் பெற்றனன். இவ்வேந்தனது அவ்வெற்றியை ஐயூர் மூலங்கிழார் என்னும் புலவர் ஒரு செய்யுளில் (புறம்-21) வியந்து பாராட்டியுள்ளார். அதில் அவ் வரணானது மிக்க ஆழமாகிய அகழியையும், வானுற நிவந்த மதிலையும், மரங்கள் மிக அடர்ந்த காவற் காட்டினையும் உடையதாய், அணுகுதற்கரிய சிற்றரண்களாற் சூழப்பட்டிருந்தது என்றும், அதனைக் கொல்லன் தீயில்மாட்டிய இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிதென்று கருதிவேங்கை மார்பன் இரங்குமாறு இவன் வென்று பற்றினான் என்றும் கூறப்பட்டுள்ளது; பாடுவார் அறிவின் எல்லையைக்கடந்த புகழமைந்தவன் என்றும், புலவராற் பாடப்படும் போர்த் துறைகளை முடித்த வெற்றியையுடையவன் என்றும் இவன் புகழப்பட்டுளான். இனி, இவனுக்குமுன் விளங்கிய தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ் செழியன் முதலாயினார் சேரசோழ மன்னர்களோடு பகைமை பூண்டு போர் புரிந்தாராக, இவ்வரசனோ அவர்களுடன் நண்பு பூண்டிருந்தனன். இவனும் சேரமான் மாவெண்கோவும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் ஒருங்கிருந்த பொழுது ஒளவையார் இவர்களை வாழ்த்திய செய்யு ளொன்று புறநானூற்றில் உள்ளது. அதில் இம் மூவர்க்கும் அந்தண ரோம்பும் முத்தீ உவமையாகக் கூறப் பெற்றுள்ளது; உலக முழுதாளும் செல்வமும் ஓரிடத்தே நிற்பதன்றாகலின், வரைந்த நாளெல்லாம் இன்பந் துய்த்தும், அறம் புரிந்தும் வாழவேண்டும் என்றும், 'வாழச் செய்த நல்வினை யல்லது ஆழுங் காலைத் துணை பிறிதில்லை' (புறநானூறு-367) என்றும் அறிவுறுத்தலும், வானத்து மீனினும் மழைத் துளியினும் பல காலம் அவர்கள் வாழ வேண்டும் என்று வாழ்த்துதலும் அமைந்துள்ளன. இங்ஙனம் புலவர் பாடும் புகழுடையனாய இவ்வேந்தன் புலமையிலும் சிறந்தானாவன் என்பது முற்கூறிய வரலாறு களானே போதரும். இவன் பாடிய செய்யுட்கள் அகநானூற்றில் (26) ஒன்றும், நற்றிணையில் (98) ஒன்றும் உள்ளன. அகப் பாட்டில் முள்ளியின் பூவைக் குறிப்பதற்கு, " கூர்முண் முள்ளிக் குவிகுலைக் கழன்ற மீன்முள் ளன்ன வெண்கான் மாமலர்"1 என்று கூறியிருப்பது ஏனைய நல்லிசைப் புலவர்களைப் போன்றே இவ் வரசன் இயற்கைப் பொருள்களை நுனித்தறிந்துளான் என்பதற்குச் சான்றாகும். இப்பாட்டிலே தலைவி ஊடல் நீங்கித் தலைவனைக் கூடிய திறத்தினைத் தோழிக் குரைக்கும் பெற்றி இன்பம் பயப்பதாகும். நற்றிணைச் செய்யுளில், 'பன்றியானது புனத்தில் தினையை உண்ணுதற் பொருட்டு எந்திர மமைந்த புழைவழியிலே சென்று புகும்பொழுது பக்கத்தே பல்லி யடித்தலை அறிந்து, ஆங்குச் சென்றால் ஊறு நிகழுமென் றஞ்சி, மெல்ல மெல்லப் பின்னே மீண்டு வந்து முழையிலுள்ள பள்ளியில் தங்கும் நாடனே' என்னும் பொருளமைத்து, " எய்ம்முள் ளன்ன பரூஉமயி ரெருத்திற் செய்ய்ம்ம் மேவற் சிறுகட் பன்றி ஓங்குமலை வியன்புனம் படீஇயர் வீங்குபொறி நூழை நுழையும் பொழுதிற் றாழாது பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்துதன் கல்லளைப் பள்ளி வதியும் நாட"2 என்று பாடியிருப்பது கற்றோர்க்குக் கழிபேருவகை பயப்பதாகும். இதில் அமைந்துள்ள உள்ளுறையும் அறிந்து மகிழ்தற்குரிய தொன்றாம். இவ் வரசன் பன்றியானது பல்லி நிமித்தம் பார்த்தலைக் கூறியிருப்பது போன்றே, ஈழத்துப் பூதன் றேவனார் பாடிய அகப் பாட்டிலும், " முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை ஓங்கு வணர்ப் பெருங்குரல் உணீஇய பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடோர்த்துக் குறுகும் புருவைப் பன்றி"1 எனக் கூறப்பட்டிருப்பது ஒப்புநோக்கி மகிழ்தற் குரியது. " நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தாம் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த-நூன்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துக நன்னெஞ்சும் சிந்திக்க கேட்க செவி"2 என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் தெய்வப் புலமைத் திருவள்ளுவர்பாலும் திருக்குறள் மேலும் இவ் வரசர் பெருந் தகைக்குள்ள எல்லையில்லா மதிப்பைத் தெள்ளிதிற் புலப் படுத்தா நிற்கும். 15. சோக ரஸம் சோக ரஸம் என்பது தமிழில் அழுகை அல்லது அவலச் சுவை என்று சொல்லப்படும். சுவைகளைப்பற்றிப் பொதுவாகத் தெரிவிக்க வேண்டிய சில செய்திகளை முன்பு வீர ரஸத்தைப் பற்றிப் பேசியபொழுது கூறியுள்ளேன். எண்வகைச் சுவைகளில் அழுகைச் சுவையானது இளிவு, இழவு, அசைவு, வறுமை என்ற நான்கும்பற்றிப் பிறக்குமெனத் தொல்காப்பியனார் கூறியுள்ளார். இளிவு, என்பது பிறரால் இகழப்படும் சிறுமை. இழவு என்பது நெருங்கிய சுற்றத்தார் முதலானோரையும் இன்ப நுகர்ச்சிக்கு ஏதுவானவற்றையும் இழத்தல். அசைவு என்பது முதுமை முதலிய வற்றால் தளர்ச்சியுற்று வருந்துதல். வறுமை என்பது பொருளின்மையால் போகம் துய்க்கப் பெறாத நிலைமை. எனவே, பெருமை, பொருள், இளமை, யாக்கை என்பவற்றின் கேட்டினால் உண்டாவது அழுகை என்பது பெறப்படும். உலகிலே தோற்றமுடையன யாவும் நிலையில்லாதன என்பது என்றும் மாறாத ஓர் வாய்மையாகும். “ இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா; வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா”1 என்று கூறின், அன்றென மறுப்பார் யாவருளர்? காணப்படும் யாவும் நிலையற்றன என்று அறிந்தும் மக்கள் அவற்றின் மேல் பற்று வைப்பதற்குக் காரணம் பாச சம்பந்தமே யாகும். ஒன்றின் மீது பற்று வைத்தவர் அதனைப் பிரியவோ இழக்கவோ நேர்ந்த பொழுது அதனால் துன்புறுவதும் இயல்பே. உலக முழுதும் நாம் கண்கூடாகக் காணும் காட்சி இதுவே. ஆசிரியர் தொல்காப்பியனார் காஞ்சி என்னும் புறத்திணையால் அறிவிப்பது இந்நிலையாமையே. அத்திணையில் வரும், “ காதலி யிழந்த தபுதார நிலையும் காதலன் இழந்த தாபத நிலையும்”2 முதலாய துறைகளெல்லாம் நிலையாமையையும், அதனால் எய்தும் இன்னலையும் பலபடியாக எடுத்துக்காட்டுகின்றன. அவ்விலக்கணத்திற்கு உதாரணமாகும் எத்தனையோ பல வரலாறுகள் இலக்கியங்களிற் காணப்படுகின்றன. குடக்கோ நெடுஞ்சேரலாதன் என்ற சேரமன்னனும் பெருவிறற் கிள்ளி என்ற சோழமன்னனும் எதிர்ந்து புரிந்த போரில் இருவரும் இறந்தனராக, அதனைக்கண்ணுற்ற பரணர் என்னும் புலவர் பெருமான், “மிகப்பலவாக வந்த யானைகளெல்லாம் படைக்கலங் களால் இறந்துபட்டன. வெற்றி மிக்க குதிரையெல்லாம் வீரர்களோடு மாண்டு ஒழிந்தன. தேரேறி வந்த வீரரெல்லாம் ஒருங்கு மாய்ந் தார்கள். வீரமுரசெல்லாம் தாங்குவாரின்றிக் கிடந்து அழிந்தன. சாந்து பூசிய தம்முடைய மார்பிலே நெடியவேல் பாய்ந்தமையால் அரசரிருவரும் மடிந்தனர். ஐயோ, அவர்களுடைய வளம் பொருந்திய நாடுகள் இனி என்ன துன்பமுறாநிற்குமோ! என்று இரங்கிப் பாடிய புறப்பாட்டு அவலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகவுள்ளது. “ எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி விளைக்கும் வினையின்றிப் படையொழிந் தனவே; விறற்புகழ் மாண்ட புரவி யெல்லாம் மறத்தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே; தேர்தர வந்த சான்றோ ரெல்லாம் தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே; விசித்து வினைமாண்ட மயிர்க்கண் முரசம் பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே; சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென வேந்தரும் பொருதுகளத் தொழிந்தனர்; இனியே என்னாவதுகொல் தானே கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவல் முக்கித் தண்புனற் பாயும் யாணர் அறாஅ வைப்பிற் காமர் கிடக்கைஅவர் அகன்றலை நாடே”1 காட்டிலே ஒரு முல்லைக்கொடி படர்தற்குத் தான் ஏறிவந்த தேரை நல்கித் தன் இணையடி சிவக்க நடந்து சென்றவனும், “கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினும் கொடுப் பாரிலை” என்று சைவசமய குரவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளால் வள்ளன்மைக்கே எல்லையாக வைத்துப்பாராட்டப் பெற்றவனும் ஆகிய வேள் பாரியானவன் மூவேந்தரும் புரிந்த வஞ்சப் போரிலே துஞ்சுதலுற்றான். அவனுக்கு ஆருயிர்த் தோழராயிருந்த கபிலர் என்னும் நல்லிசைப் புலவர் அவன் இறந்ததற்கு மிக வருந்திப் பலவாறு புலம்பினராய், பாரியின் மகளிர் இருவரையும் தக்கோர்க்கு வாழ்க்கைப்படுத்தித் தமது நட்புக்கடன் கழிக்க எண்ணி, அன்னாரை உடன் அழைத்துச் சென்றனர். சென்றவர் ஒருநாள் ஓரிடத்தில் தங்கியபொழுது மாலைப்பொழுது வர நிறைமதி உதயமாயிற்று. அதனைக் கண்டபொழுது அதற்குமுந்திய நிறைமதியில் தாம் இருந்த நிலைமையும், அன்று எய்திய நிலைமையும், பாரிமகளிர் உள்ளத்துட்புகுந்து வாட்டின. அப்பொழுது அவர்கள் கூறிய, “ அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார், இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றுங் கொண்டார்- யாம் எந்தையும் இலமே,”1 என்னும் அருமைச்செய்யுள் நம் நெஞ்சினை உருக்குகின்றது. அதியமான் நெடுமான் அஞ்சி என்ற வள்ளல்தான் ஒரு மலையுச்சியிலே அருமையாகப் பெற்ற அமிழ்தமயமான நெல்லிக் கனியை நல்லிசைப் புலமை வாய்ந்த ஒளவையார் உண்டு நெடுநாள் உயிர் வாழவேண்டுமெனக் கருதி அவருக்களித்தவன்; பலகாலும் அருமை பாராட்டி அவரைப் பேணியவன். அவன் மாற்றானுடைய வேல்பாய்ந்து உயிர் துறந்தபோது, ஒளவையார் மனம் நைந்து அவன் பண்புகள் பலவற்றையும் சொல்லிச் சொல்லி அரற்றுகின்றவர், “அவன் மார்பில் தைத்த வேல் பாணருடைய உண்கலத்தைத் துளைத்து, இரப்போர் கையிலும் தைத்துருவி, அழகிய சொல்லையும் நுண்ணிய ஆராய்ச்சியையுமுடைய புலவர் நாவிலே போய் வீழ்ந்தது. எமக்குப் பற்றுக்கோடாகிய எம் இறைவன் எவ்விடத்துள்ளான் கொல்லோ! இனிப் பாடுவாரும் இல்லை; பாடுவார்க்கு ஒன்று ஈவாருமில்லை, பகன்றையின் பெரியமலர் பிறராற் சூடப்படாது கழிந்தாற் போலப் பிறர்க்கு ஒன்று ஈயாது கழியும் உயிர்கள் மிகப்பல உள்ளனவே! என்று கூறிஇரங்குவாராயினர். இன்னும், வறுமைத் துன்பின் செறிவை உரைப்பனவும், தம்மைப் புரந்தோர் தாமாய்ந்திடவே புலவர்கள் புலம்பி அலமரலை அறிவிப்பனவும், கணவனையிழந்த தணவாக்காதலி தீப்பாய் செய்தி தெரிவிப்பனவும், கைம்மைநோன்பின் வெம்மைவிரிப்பனவும் ஆகிக் கற்போர் உள்ளத்தைக் கலங்கச் செய்யும் எத்தனையோ பாட்டுக்கள் புறநானூற்றில் உள்ளன. தன் பெற்றோர் அளித்த பெரும்பொருட்குவியலை இழந்த கோவலன் கண்ணகியின் காற்சிலம்பை வாணிக முதலாகக் கொண்டு பொருளீட்டக்கருதி அந்நங்கையுடன் மதுரையை யடைந்து ஆயர் சேரியில் இருந்தபொழுது, மாபெரும் பத்தினியாகிய கண்ணகி திருமுகம் வியர்க்கவும் செங்கண் சேப்பவும் தன் கையால் அட்ட அறுசுவையுண்டியைக் கோவலற்களித்து வெற்றிலைச் சுருளும் பாக்கும் விருப்புடன் நல்கிநின்றாள். அப்பொழுது கோவலன் அவளை அருகே அழைத்து, அணைத்து “நின்மெல்லிய அடிகள் கல்லதர்க் கானம் கடத்தற்கும் வல்லவாயினவோ? இதுமாயம் கொல்லோ? வல்வினைகொல்லோ? யான் உளங்கலங்கி யாவதும் அறியேன். “ குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்து ஈங்கு என்றுயர் களைந்த பொன்னே, கொடியே, புனைபூங் கோதாய் நாணின் பாவாய், நீணில விளக்கே, கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி”1 யான் நினது சீறடிச் சிலம்பின் ஒன்றினைக் கொண்டுபோய் மாறி வருவேன், மயங்காதிருப்பாய் என்று கூறி அவள் தனித்திருக்கப் பிரியலாற்றாது உள்ளம் வெதும்பித் தன் கண்ணீரை மறைத்துச் செல்லா நிற்பதும், சென்றவன் அன்றே கொலையுண்ட தீச் செய்தியைக்கேட்ட கண்ணகி, “ பொங்கி யெழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கள் முகிலொடும் சேணிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை எங்கணா, என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்”2 ஆகி, அரற்றி, “காவியுகு நீரும் கையிற்றனிச் சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவுமாய்” அரசவையெய்தி வழக்குரைத்து, கீழ்த்திசைவாயிற் கணவனொடு புகுந்தேன், மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு” என்று கூறி, இரவும் பகலும் மயங்கிக் கையற்று வையைக் கரைவழியே ஏகாநிற்பதும், ஆகிய செய்திகள் எவ்வளவு வெவ்விய துயர்விளைக்கின்றன. சீவக சிந்தாமணி என்ற செந்தமிழ்க் காப்பியத்திலே, சச்சந்த மன்னன் கட்டியங்காரன் என்னும் தீயமைச்சன்பால் அரசினை ஒப்புவித்து அவனாற் கொலையுண்டு இறந்தானாக, அவன் தேவியாகிய விசயை, மயிற்பொறி ஊர்ந்து நகரின் புறத்தேயுள்ள புறங்காட்டிலே நள்ளிருளில் புதல்வனை யீன்று, அப்பாலனை நோக்கி’ ‘அரசே! நின் தந்தையானவர், சோதிடர்கள் பலருங்கூடிச் சாதகஞ்செய்ய, வேந்தர்கட்கெல்லாம் திருமுகம் விடுத்தும், “பன்னீராண்டு வரியை ஒழிமின், கோயில்களும், அறச்சாலை களும் புதுக்குமின், பகைவர்களைச் சிறைவிடுத்துச் சிறைக் கோட்டத்தைத் தூய்மையாக்குமின்! பண்டாரத்தைத் திறந்து விட்டு ஏழுநாள்காறும் வேண்டுவார் வேண்டுமாறு ஆடை அணிகலன்களும் செம்பொன்னும் கவர்ந்துகொள்ள விடுமின்! புலவர்களுக்குத் தேரும் யானையும் பட்டும் பொன்னும் வரை வின்றி வீசுமின்!” என்று கூறிக் கொண்டாடப் பிறக்கும் நீ, தீவினையேன் காண இவ்வாறு பிறப்பதோ? ‘ வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கின் நிழல்போல் நுடங்கிப் பேயாட எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வாறாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கியல் வேந்தே’ ‘ பற்றாமன்னன் நகர்ப்புறமால், பாயல் பிணஞ்சூழ் சுடுகாடால் உற்றாரில்லாத் தமியேனால் ஒதுங்கலாகாத் தூங்கிருளால் மற்றிஞ்ஞாலமுடையாய் நீ வளருமாறும் அறியேனால், எற்றே இதுகண்டு ஏகாதே இருத்தியால் என்இன்னுயிரே!’1 என்று அவலித்து அரற்றுவது கருங்கல் நெஞ்சையும் கலங்கச் செய்வன காண்மின்! பாரதப்போரிலே அருச்சுனன் மைந்தனாகிய அபிமன் இறந்த செய்தியைக் கூறும் வில்லிபுத்தூரர் தாம் முன்பு நிகழ்ந்த தொரு வரலாற்றைப் பாடும் கவிஞர் என்பதை மறந்தவராகிப் புத்திரசோகம் மேலிட்ட தந்தையே போன்று, “ மாயனாம் திருமாமன் தனஞ்சயனாம் திருத்தாதை வானோர்க் கெல்லாம் நாயனாம் பிதாமகன் மற்றொருகோடி நராதிபராம் நண்பாய் வந்தோர் சேயனும் அபிமனுவாம் சயத்திரதன் கைப்படுவான் செயற்கை வெவ்வேறு ஆயநாள் அவனிதலத் தவ்விதியை வெல்லும்வகை யார் வல்லாரே.”2 “ கன்னனையுந் தேரழித்தான் கந்தனிலும் வலியனே அந்தோ அந்தோ மன்னவர் ஐவருமிருக்க மைந்தனுயிர் அழிவதோ அந்தோ அந்தோ பொன்னுலகோர் வியந்துருகிப் புத்தியினால் மலர் சொரிந்தார் அந்தோ அந்தோ அன்னநெடுந் துவசன்இவற் காயுமிகக் கொடுத்திலனே அந்தோ அந்தோ.”1 என்று புலம்புவாராயினர். கவிக்கூற்றிலேயே இவ்வளவு சோகம் ததும்பக் கூறிய அவர் தருமன் வீமன் அருச்சுனன் முதலானவர்கள் எய்திய துயரத்தை எவ்வாறு கூறியிருப்பர் என்பது யாவரும் அநுமித்தற்குரியதே. தருமன் அரற்றுதலைத் தெரிவிக்கும் செய்யுட் களில் ஒன்றைக் கவனிப்போம். “ பிறந்ததினம் முதலாகப் பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும் சிறந்தனையென்றுனைக் கொண்டே தெவ்வரை வென்றுலகாளச் சிந்தித்தேனே மறந்தனையோ எங்களையும் மாலையினால் வளைப்புண்டு மருவார்போரில் இறந்தனையோ என்கண்ணே என்னுயிரே, அபிமாஇன் றென்செய் தாயே?”2 இவ்வாறே இராமசரிதை, நளசரிதை, அரிச்சந்திர சரிதை முதலிய வற்றைக் கூறும் காப்பியங்கள் பலவற்றிலும் சோகம் மிகுந்த பகுதிகள் ஆண்டாண்டுக் காணப்படுகின்றன. சோகம் என்பது அகத்தில் எழும் ஓர் துன்ப உணர்ச்சியேயாயினும் நல்லிசைப் புலவர்கள் அதனை மேலும் மேலும் விரும்பிநுகரும் சுவையாகச் செய்துவிடுகின்றனர். இங்ஙனம் அவலச்சுவையைக் கவிகள் மூலமாக அநுபவிக்கும் நாம் அதினின்றும் தெளியவேண்டிய சில உள்ளன. உலகில் இன்பதுன்பங்கள் மாறிமாறி நிகழ்ந்து கொண்டே யிருக்கும். யாதானும் ஒரு துன்பம் வந்துற்றபொழுது, ‘ஐயகோ என்செய்வோம்!’ என்று அதில் அமிழ்ந்துவிடாது, “இஃது உலகியற்கையே” எனவும், “எத்தனையோ பெரியோர்கள் எல்லை யில்லாத் துன்பங்களை அடைந்திருக்கையில் யாம் எவ்வளவு?” எனவும் எண்ணித் தம்மைத் தேற்றிக்கொள்ளுதல் வேண்டும். ஏனையோர் துன்புறுதலைக் காணுமிடத்து அதனைத் தமக்கு வந்த துன்பம்போல் நினைந்து நினைந்து உருகுதல் வேண்டும். இவ்வகை உணர்ச்சியானது கருணாரஸம் எனப்படும். கருணை என்பது பெரிதும் வேண்டற்பாலதொன்றே. மற்றும், துன்பத்தின் காரணத்தை அறிந்து நீங்கி, நிலையான இன்பத்தைப் பெறுதற்கு முயலுதலும் வேண்டும். 16. சிருங்கார ரஸம் இன்பச் சுவை சிருங்கார ரஸம் என்பது தமிழில் இன்பச்சுவை என்று கூறப்படும். சுவைகள் பலவற்றுள்ளும் இதுவே சிறந்ததெனக் கொள்ளப்படுகின்றது. திருக்குறள் காமத்துப்பால் அவதாரிகையில், "ஈண்டு இன்பம் என்றது ஒரு காலத்து ஒரு பொருளால் ஐம்புலனும் நுகர்தற் சிறப்புடைத்தாய காமவின்பத்தினை. இச்சிறப்புப் பற்றி வட நூலுட் போசராசனும், 'சுவை பல வென்று கூறுவார் கூறுக; யாம் கூறுவது இன்பச் சுவையொன்றனையுமே' என இதனையே மிகுத்துக் கூறினான்" எனப் பரிமேலழகர் பகர்ந்தனர். காமவின்பமானது ஒருகாலத் தொரு பொருளால் ஐம்புலனும் நுகரும் பான்மையது என்னும் ஒள்ளிய கருத்தினை, "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும், ஒண்டொடிக் கண்ணே யுள". (குறள்-1101) என்னும் வள்ளுவர் வாய்மொழி தெள்ளிதின் விளக்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் இச்சுவைக்கு உவகை என்று பெயர் கூறி, " செல்வம் புலனே புணர்வு விளையாட் டென்று அல்லல் நீத்த உவகை நான்கே."1 என்னும் சூத்திரத்தால், உவகைச் சுவைக்குப் பற்றுக் கோடானவை செல்வமும், அறிவும், புணர்ச்சியும், விளையாட்டும் ஆகுமென விளம்பினர். அவர், ஏனைய நகை முதலிய சுவைகளைப் போன்றே இதனையும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாக ஓதியுள்ளார். அகப்பொருளாகிய இன்பத்திற்கு இச்சூத்திரத்துள்ள புணர்வு என்பதனாற் குறிக்கப்படும் காதலே ஆதாரமாகும். செல்வம் முதலாயின வெல்லாம் அதற்குத் துணையாகும் இயல்பினவே. அகப் பொருளாவது, "ஒத்த அன்பால் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம். அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்தது எனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருள்". என்பர் நச்சினார்க்கினியர். அங்ஙனம் ஒத்த அன்புடைய இருவரும் கூடியொழுகும் ஒழுக்கத்தைக் களவொழுக்கம் எனவும், கற்பொழுக்கம் எனவும் இரண்டாகப் பகுத்துரைப்பது தமிழ் நூன்முறை. அவற்றுள் களவாவது, உருவும், திருவும், பருவமும், குலனும், குணனும், அன்பும் முதலிய வற்றால் ஒத்த தலைமகனும் தலைமகளும் அடுப்பாரும் கொடுப் பாரும் இன்றிப் பால்வகையால் தாமே எதிர்ப்பட்டுக் கூடி யொழுகுவது. கற்பாவது அவ்விருவரும் முறைப்படி வரைந்து கொண்டு இல்லத்திலிருந்து அறம் புரிந்து ஒழுகுவது. புணர்வு என்பது மெய்யுறு புணர்ச்சியை அன்றி உள்ளப் புணர்ச்சியையும் குறிக்கும். உள்ளப் புணர்ச்சியாவது அன்பால் இருவர் உள்ளமும் கலத்தல். எனவே, இவ்வொழுக்கத்திற்கு அடிப்படையானது அன்பு அல்லது காதல் என்பது பெறப்படும். இப்பிறப்பிலே யாதொரு முற்றொடர்பும் இன்றிக் கண்ட மாத்திரத்தே அவர்களுக்குள் உண்டாகும் இக்காதலுக்குக் காரணம் முற்பிறப்பின் தொடர்ச்சியே ஆதல்வேண்டுமன்றோ? எனவே, தலைவன் தலைவியர்க்குள் தோன்றி வளரும் இவ்வன் பானது எழுமையும் தொடரும் உழுவலன்பாம் என்பது பெறப் படும்.இவ்வுண்மை, " ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப"1 என்று தொல்காப்பியராற் கூறப்பட்டுள்ளது. எல்லாப் பிறப்பிலும் உயிரொன்றி ஒருகாலைக் கொருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால்வரை தெய்வத்தின் ஆணையாலே ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்படுவர் என்பது அதன் பொருளாகும். இத்தகைய அன்பின் மென்மையும், தூய்மையும், சீர்மையும் தமிழ் நூல்களிற் பலபடியாகப் பாராட்டப்படுகின்றன. " மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார்."2 என்றார் திருவள்ளுவர். தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங் களிலும் புறப்பொருளைக் காட்டிலும் அகப்பொருளே விரித்தும் மிகுத்தும் கூறப்பட்டுளது. அவையாவும் அன்பின் சிறப்பை விளக்குவனவே யாகும். மெய்ப்பாட்டியலுள்ளும் அகப்பொருள் பற்றிய நிகழ்ச்சிகளே விரித்துரைக்கப்பட்டுள்ளன. மற்றும், ஆலவாய்ப் பெருமான் அருளால் அகப்பொருணூல் ஒன்று வெளி யாயதும், அன்பே வடிவாகி, இன்ப வெள்ளத்திற்றிளைத்த மாணிக்கவாசகப் பெருமான் அகப்பொருட் கோவையொன்று அருளியதும் அகப் பொருளின் விழுப்பத்திற்கு உறு சான்றாகும். அன்பு என்பது மக்கள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஊடுருவிச் சென்று பயன் விளைப்பதாகலின், அதனை விளக்குவ தாகிய அகப்பொருளைச் சான்றோர் பலரும் இங்ஙனம் விரித் துரைத்தா ராவர். இனி, காதலால் இருவர் நெஞ்சமும் கலத்தலைப் புலப்படுத்தி, இன்பச் சுவையை நன்கு தோற்றுவிக்கும் குறுந்தொகைச் செய்யுள் ஒன்றை நோக்குதும். " யாயும் ஞாயும் யாரா கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே."1 தெய்வத்தால் நிகழ்ந்த கூட்டத்தின் பின்பு தலைவியானவள், தலைவன் தன்னைப் பிரிவானோ என ஐயுற்றதனைக் குறிப்பா லறிந்து, "என்தாயும் நின் தாயும் முன்பு எத்தகைத் தொடர்பினர்? என் தந்தையும் நின்தந்தையும் எம்முறையில் உறவினர்? யானும் நீயும் முன்பு எவ்விடத்தில் அறிந்துள்ளோம்? இம்மூன்றும் இல்லையாகவும் செந்நிலத்தில் பெய்த நீர்போலத் தெய்வத்தின் தூண்டுதலால் நம் இருவர் நெஞ்சமும் கலந்து ஒன்றுபட்டன வாகலின் இனிப் பிரிவு என்பதும் உள்ளதோ."? எனத் தலைவன் கூறினான் என்க. " தேவரிற் பெற்றநம் செல்வக்கடி வடிவார் திருவே யாவரிற் பெற்றினி யார்சிதைப்பார்"2 என்னும் மணிவாசகர் திருவாக்கும் இக்கருத்தினதே. மிதிலையில் திருவீதியிற் சென்று கொண்டிருந்த இராமனும், கன்னிமாடத் தும்பரில் நின்ற சீதையும் ஒருவரை யொருவர் கண்டு காதல் கொண்டதனைத் தெரிவிக்கும் கம்பநாடர் கவிதைகள் பெரிதும் இன்பம் பயப்பன வாகும். " எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக் கண்ணொடு கண்ணிணை கௌவி யொன்றையொன் றுண்ணவும் நிலைபெறா துணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்."1 " பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணித்து ஒருவரை யொருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை யண்ணலும் வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தினார்."2 திருமண நிகழ்ச்சியின் முன்பு அவ்விருவரும் ஒருவரை யொருவர் கண்டனராக வான்மீகி கூறாதிருப்பவும், தமிழ் மரபு கருதியே கம்பர் இங்ஙனம் சித்திரிப்பாராயினர். இருவருடைய காட்சியின் இயல்பையும், அதனோடு ஒருங்கு நிகழ்ந்த உள்ளக் கலப்பையும் தெரிவிக்கும் அவரது வித்தகக் கவித்திறத்தை எங்ஙனம் விளம்ப வல்லேம்? இனி, அன்பால் உள்ளங் கலந்த தலைவன் தலைவியர்க்குள் நிகழும் கூட்டம், பிரிவு, ஆற்றியிருத்தல், இரங்கல், ஊடல் என்னும் ஐவகை யொழுக்கங்களில், இரங்கலும் ஊடலும் முறையே அழுகையும் வெகுளியுமாகத் தோன்றினும், அவை காதலைச் சிறப்பிப்பனவே யாதலின், அவற்றையும் இன்பச் சுவை யென்றே கோடல் வேண்டும். ஆனால், பழைய உரையாசிரியர்கள் வெவ்வேறு மெய்ப்பாடுகளாகவும், அவற்றைக் குறித்திருப்பது சிந்திக்கற்பாலது. ஒரோ வழி அவை ஒருங்கியைந்து வருதலும், இன்னது இதுவெனத் துணியலாகாவாறு மயங்கி வருதலும், வியப்பு முதலிய ஏனைச் சுவைகளோடு விரவி வருதலும் உண்டு. கணையாழியைப் பெற்ற கற்பினுக் கணியாய சீதை எய்திய நிலைமையைத் தாசரதிக்கு உரைக்கும் மாருதியின் கூற்றில் அமைந்த, " ஒருகணத் திரண்டு கண்டேன் ஒளிமணி யாழி ஆன்ற திருமுலைத் தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ;நின்பால் விரகமென் பதனின் வந்த வெங்கொழுந் தீயி னால்வெந் துருகிய துடனே ஆறி வலித்தது குளிர்ப்புள் ளூற."3 என்னும் அருமைச் செய்யுளின் சுவை பல்கால் நுகர்ந்து இன்புறற் பாலது. பிராட்டி தன் மார்பில் அணைத்த ஆழியானது விரகத்தால் உண்டாய வெப்பத்தால் உருகியதும், உவகையால் ஆய தட்பத்தால் ஆறி இறுகியதும் ஒருங்கு நிகழ்ந்தனவாகக் கூறப்படுதலின், இதன்கண் அழுகை, உவகை என்னும் சுவைகள் இயைந்துள்ளமை பெறப்படும். ஒருகணத்து இரண்டும் நிகழ்ந்தன என்றமையால், வியப்பு தோன்றா நிற்கும். இவற்றுள் வியப்பும், அழுகையும் உவகையைச் சார்ந்து அதனைச் சிறப்பிப்பனவாகக் கொள்ளுதல் தகுதியாம். கண்ணகியின் காற்சிலம்பை முதலாகக் கொண்டு வாணிகஞ் செய்தல் கருதி, மதுரைக்கேகும் கோவலன், செல்லும் நெறியில் மாதவி விடுத்த ஓலையைக் கோசிகன் என்னும் மறையோனாற் பெற்று, அதன் மடிப்புறத்து மண்ணின்மீது மாதவி குறுநெறிக் கூந்தலால் ஒற்றிய இலச்சினையைக்கண்டு, அது தன்னுடன் கூடியுறையும் காலத்தே வாச நெய்பூசிய தன்மையை உணர்த்திற்று. ஆகலான், அதனை விரைவில் விடுவியாதிருந்தனன் என்பதில் மெய்ப்பாடு இன்னதெனத் துணிதற் கரிதாகின்றது. " நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே."1 என்னும் தலைவி கூற்றில் வியப்பும் இன்பமும் விரவியுள்ளன. இனி, தலைவன் கூற்றிலும் தலைவி கூற்றிலும் வரும் சுவை மிக்க பாட்டுக் களில் ஒவ்வொன்று காட்டுதும். திருக்கோவையாரில் உள்ள, " சொற்பா லமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே நற்பால் வினைத்தெய்வம் தந்தின்று நானிவ ளாம்பகுதிப் பொற்பார் அறிவார் புலியூர்ப்புனிதன் பொதியில் வெற்பில் கற்பாவிய வரைவாய்க் கடிதோட்ட களவ கத்தே"2 என்னும் அருமைச் செய்யுளும், தலைவனானவன், "நல்வினைத் தெய்வம் இவளைக் களவின்கட் கூட்ட அமுதமும் அதன்கட் கரந்து நின்ற சுவையும் என்ன என் நெஞ்சம் இவள் கண்ணே யொடுங்க, யான் என்பதோர் தன்மை காணாதொழிய, இருவர் உள்ளங்களும் ஒருவேம் ஆமாறுகரப்ப, ஒருவேமாகிய ஏகாந்தத்தின்கட் பிறந்த புணர்ச்சிப் பேரின்ப வெள்ளம் யாவரான் அறியப்படு' மென்று மகிழ்ந்துரைத்தான்; உரைப்பக் கேட்ட தலைமகளும், 'எம்பெருமான் என்கண் வைத்த அருளினாலன்றோ இவ்வகை அருளிய' தென்று இறப்பவும் மகிழ்வாளாம்" எனப் பேராசிரியர் விளக்கிய அதன் கருத்தும் இன்பச் சுவையை இனிது புலப்படுத்தா நிற்கின்றன. " நின்ற சொல்லர் நீடுதோன் றினியர் என்றும் என்றோள் பிரிபறி யலரே தாமரைத் தண்டா தூதி மீமிசைச் சாந்திற் றொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை நீரின் றமையா வுலகம் போலத் தம்மின் றமையா நந்நயந் தருளி நறுநுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை யுறுபவோ செய்பறி யலரே."1 இந் நற்றிணைச் செய்யுளில், தலைவியானவள் தான் வருந்தும்படி தலைவர் தன்னைப் பிரியார் என்று தோழிக்குக் கூறுபவள், அதற்கு ஏதுவாக, தலைவர் நிலைபெற்ற வாய்மையை உடையர் என்றும், நெடிது தோன்றும் இனிய குணங்களுடையர் என்றும் உரைப்பதும், அவருடைய நட்பானது தாமரையின் தாதினையும் சந்தனத்தின் தாதினையும் ஊதிச் சந்தன மரத்தில் வைக்கப்பெற்ற தேன்போல மேன்மையுடையதென்று விளம்புவதும் இன்பம் பயக்கின்றன. இதிலுள்ள உவமையானது இருவர் உள்ளத்தின் தூய்மையையும் ஒத்த அன்பின் சீர்மையையும் இனிது விளக்குதல் காண்க. இனி, அன்பு என்பதன் இயல்பும், அதனால் விளையும் நலங்களும் மனோன்மணிய நாடகத்தில் வாணியின் கூற்றில் வைத்துக் கூறப்பட்டிருப்பன அறிந்து மகிழற்பாலன. " ..................................... நேயமும் ஆக்கப் படும்பொருள் ஆமோ? நோக்கில் துன்பே நிறையும் மன்பே ருலகாம் எரியுங் கானல் விரியும் பாலையில் திரியும் மனிதர் நெஞ்சம் சிறிது தங்கி அங்கவர் அங்கங் குளிரத் தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில் நேருந் தாகம் நீக்குவான் நிமல ஊற்றா யிருந்து அவருள்ளம் ஆற்றியும், ஆறலை கள்வர் அறுபகை மீறில் உறுதுணை யாய்அவர் நெறிமுறை காத்தும், முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில் ஊன்றுகோ லாய்அவர் ஊக்கம் உயர்த்தியும், இவ்விதம் யாரையும் செவ்விதிற் படுத்தி, இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி, பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய், இல்லறம் என்பதன் நல்லுயி ரேயாய், நின்ற காதலின் நிலைமை, நினையில், இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பா யுருகி ஒன்றாம் தன்மை யன்றி, ஒருவரால் ஆக்கப் படும்பொருள் ஆமோ?"1 இதுகாறும் கூறியவற்றால், 'பிறப்பே குடிமை' என்னும் சூத்திரத்தில் தொல்காப்பியர் கூறிய ஒற்றுமை பலவு முடைய தலைவனும் தலைவியும் அன்பாற்கலந்து வாழும் ஒழுக்கத்தைத் தெரிவிக்கும் பாவாணரின் செய்யுட்களில் அமைந்த சுவையே இன்பச் சுவை அல்லது "சிருங்கார ரஸம்" ஆகும் என்பது பெறப்படும். 17. வீரச்சுவை சுவை என்னும் தமிழ்ச் சொல்லும், 'ரஸம்' என்னும் வட சொல்லும் ஒரே பொருள் உடையன. நாவினால் நுகரப்படும் சுவை ஆறு வகைப்படும் என்பர். செவியால் நுகரப்படுவன 'குண அலங்காரங்க' ளாகிய சொற்சுவைகளும், ஒன்பது வகையான பொருட்சுவைகளும் ஆம். நாவாற் சுவைத்து உண்டவை அப்பொழுதே அற்றுவிடும். செவியாற் சுவைத்து உண்டவை உள்ளத்தே எப்பொழுதும் நிலைபெற்று இன்பம் பயக்கும். கேள்வியின் சிறப்பைக் கூற வந்த தெய்வப் புலமைத் திருவள்ளுவர், " செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்"1 என்றார். இதில் பல அரிய கருத்துக்கள் அடங்கியுள்ளன. மற்றும், அவர் செவியால் நுகரும் சுவையையுணராது வாயால் நுகரும் சுவையைமட்டும் உணர்வாரைக் குறித்து, " செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?"2 என மிகக் கடுமையாக இடித்துரைத்தமை கருதத்தக்கது. இனிப் பொருட் சுவை ஒன்பதாவன: நகை, அவலம், இழிப்பு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை, சமனிலை என்பன. இச்சுவை யுணர்வுகள் மேற்குறித்த செவி வாயிலாக அன்றிக் கண் வாயிலாகவும் நிகழாநிற்கும். பித்தன் ஒருவன் உடல் முழுதும் சாம்பல் பூசிக், கிழிந்த துணிகளையும் கள்ளிகளையும் தொடுத்து இடையில் உடுத்தி, அலரிப்பூவும், எருக்கம்பூவும் கோத்து மார்பில் அணிந்து, அழுதலும், தொழுதலும், விழுதலும், எழுதலும் முதலியன செய்து வருதலைக் காணுமிடத்தும், அவன் ஒன்றோடொன்று இயையாத சொற்கள் பலவற்றைப் பேசுதலைக் கேட்குமிடத்தும் நகை நிகழ்கின்றது. நாடகவரங்கில் ஒருவன் பித்தனாக நடிக்குங்கால் அவனது கோலத்தையும் செய்கையையும் காண்டலாலும், அவன் சொற் களைக் கேட்டலாலும் நகை என்னும் சுவை நிகழும். மற்றும் அவன் இயல்புகளை அமைத்து நல்லிசைப் புலவர் ஒருவர் பாடிய பாட்டினைக் கேட்டலாலும் அச் சுவை நிகழும். ஏனைச் சுவை களும் இவ்வாறே விழியானும் செவியானும் நுகரப்படுவன வாகும். இவ்விரு பொறிகளாலும் திட்பமுற உணரும் நுட்பவுணர் வுடையார்க்கன்றி ஏனையோர்க்கு இச்சுவைகள் உணர்தற்கரியன என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ளார். மேற்குறித்த ஒன்பது சுவையுள் சமனிலையாவது சாந்தம். அஃதாவது ஐம்பொறியும் அடங்கப்பெற்றுப் பிறர்வையினும் வாழ்த்தினும் வாளாற்போழினும் தாளில் வணங்கினும் மனந் திரியாது அவற்றைச் சமமாகக் கொண்டு நிற்கும் நிலைமை. அஃது உலகியலின் நீங்கினார் பெற்றியாகலின் ஏனைய எட்டுமே காப்பியங்களிற் பயின்று வருவனவாகும். சுவை என்பது மெய்ப்பாடு என்றும் கூறப்படும். மெய்ப்பாடாவது "உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்த வாறே புறத்தார்க்குப் புலப்படுவதோராற்றால் வெளிப்படுதல்" என்பர் பேராசிரியர். புறத்து வெளிப்படுவது அகத்துணர்வே. ஆகலின் சுவைக்கு மெய்ப்பாடு என்னும் பெயர் பொருந்தியதே. ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளின் முற்பட்ட தொல்காப்பியத்திலே மெய்ப்பாடு செய்யுளுறுப்புக்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுவதோடு, தனியாக ஓர் இயலில் விரித்துரைக்கப்பெற்றும் உள்ளது. வடமொழி வாணர்கள் பிற்காலத்தில் இதனைப் பின்னும் விரித்துரைக்க லாயினர். தொல்காப்பியர் ஒவ்வொரு சுவையும் தோன்றுதற்கு மூலமான பொருள்கள் நந்நான்கு கூறுகின்றனர். அவர் வீரம் என்பதனைப் பெருமிதம் என்னுஞ் சொல்லாற் குறிக்கின்றனர். யாவரொடும் ஒப்ப நில்லாது மேம்பட்டு நிற்றலின் பெருமிதம் என்னும் சொல்லால் வீரம் குறிக்கப்படுகின்றது. கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கும் பற்றிப் பெருமிதம் பிறக்கும் என அவர் கூறியுள்ளார். எனவே போர்ச் செயலிற் காட்டும் ஆண்மையைமட்டுமே அவர் வீரம் எனக் கொண்டிலர் என்பது பெறப்படும். இந்நான்கினுள்ளும் படை வீரமும், கொடை வீரமும் பழைய இலக்கியங்களிற் பல விடத்து ஒருங்கு கூறப்பட்டுள்ளன. நலங்கிள்ளி என்ற சோழ மன்னன் பகைவருடன் போர் தொடங்குமுன் கூறுகின்ற வஞ்சினத்தில், " மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி ஈயென இரக்குவ ராயின், சீருடை முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்; இன்னுயி ராயினும் கொடுக்குவென்; இந்நிலத்து ஆற்ற லுடையோர் ஆற்றல் போற்றாதுஎன் உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதே"1 என்று இயம்புகின்றனன். இதில் பகைவராயினார் என் அடியின் கீழ் ஒதுங்கி நின்று 'ஈ' என இரப்பராயின் இந்த அரசாட்சியைக் கொடுப்பது பெரிதன்று. என் உயிரையே வேண்டினும் கொடுப் பேன்" என்பது அவனது கொடை வீரத்தையும், 'என் ஆற்றலையும் துணிபையும் மதியாது இகழ்ந்த அறிவிலியானவன் தூங்கும் புலியை இடறிய குருடன் போலப் பிழைத்து மீளுதல் அரிது' என்பது அவனது படை வீரத்தையும் நன்கு புலப்படுத்துதல் காண்க. ஒரு காலத்தில் தமிழ்நாட்டு மூவேந்தரும் பாரி என்னும் வள்ளலின் பறம்பு அரணை முற்றுகையிடத் தொடங்கினர். அப்பொழுது பாரியின் ஆருயிர் நண்பராகிய கபிலர் என்னும் புலவர் பெருமான் அங்கே போந்து அவ்வரசர்களை நோக்கிப் பின்வருமாறு கூறுகின்றார்; "வேந்தர்காள்! நீவிர் மூவிரும் நும் சேனையுடன் ஒருங்குதிரண்டு போர்செய்தீராயினும் பறம்பு நும்மாற் பற்றுதற்கரியது; பறம்புநாடு முந்நூறு ஊர்களை யுடையது; அம் முந்நூறு ஊரினையும் பரிசிலர் பெற்றுவிட்டனர். நீவிர் கூத்தரும் பாணருமாகி ஆடிப்பாடி வரின் எஞ்சியுள்ள பறம்பு மலை நுமக்குப் பரிசிலாதற்குரியது. அஃதன்றி எம்மையும் பாரியையுமே பரிசிலாக வேண்டினும் மறாது வழங்குவன் அவ்வள்ளல். இதன்கண் பாரியின் படைவீரமும் கொடை வீரமும் ஒன்றின் ஒன்று சிறந்து விளங்குதல் அறியற்பாற்று. இனி, கொடையேயன்றி இதனைக் கொள்கவென்று ஒருவன் வலிதிற் கொடுக்கவும் அதனைக் கொள்ளேன் என்று மறுப்பின் அஃதும் வீரத்தின் பாற்படுவதேயாகும். பழைய சங்கப் புலவர்கள் பால் இத்தகைய பெருமித உணர்ச்சி ததும்பியிருந்தமை அன்னோர் பாட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. இனி, படை வீரமாகிய தறுகண்மையைமட்டும் தனித்து நோக்குவோமாக. உலகத்து வேறு எம்மொழியினும் காணப்படாத பொருளிலக்கணம் என்பதொன்று தமிழில் இருத்தலைக் கற்றோர் அறிவர். அவ்விலக்கணம் அகப்பொருள் புறப்பொருள் என இரு பிரிவினையுடையது. பழைய தமிழ்ச் செய்யுட்களெல்லாம் அவற்றிற்கு இலக்கியமேயாகும். அவ்விருவகை இலக்கிய இலக்கணங் களாலும் உணர்த்தப்படுவன அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களுக்கு ஏதுவாகிய காதலொழுக்கமும் வீரவொழுக்கமும் ஆம். எனவே பெரும்பான்மை பற்றிக் காதலும் வீரமும் தமிழரின் தலை சிறந்த பண்பு என முடிவு கட்டுதல் பொருந்தும். தமிழருடைய படைமாட்சியைக் கூறவந்த திருவள்ளுவர் " கூற்றுடன்று மேல்வரினும் கூடி யெதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை"1 என்கின்றனர். பகைவரை வெகுண்டு நோக்கிய கண் அவர் வேல்கொண்டு எறியுமிடத்து இமைத்துவிடுமாயினும் வீரர்க்கு அதுவே தோல்வியாகுமாம்! "தன்னைத் தாக்கவருகின்ற களிற்றின்மீது தன் கை வேலை எறிந்து அதன் உயிரைப் போக்கி மேலும் தன்மீது வரும் களிற்றினை எறிதற்கு வேல் நாடித் திரியும் வீரனொருவன் தன் மார்பிலே தைத்துக் கிடந்த வேலினைக் கண்டு அதனைப் பறித்துக்கொண்டு மகிழுகின்றானாம்!" என்னே தமிழருடைய ஆண்மை!2 தமிழ் மறவர் போரில் புறங்காட்டுவது என்பது எக்காலத்தும் இல்லை. வெண்ணிப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் சோழன் கரிகாலனோடு போர்புரிந்த பெருஞ்சேரலாதன் என்னும் சேர மன்னன் தன் மார்பிலே தைத்து உருவின புண்ணும் புறப்புண்ணாகும் என நாணி வாளோடு வடக்கிருந்து உயிர் நீத்தான் என்றால், அவனுடைய வீரத்தையும் மானத்தையும் எவ்வாறு அளவிடலாகும்?3 முதுகுடிப் பிறந்த மகளிரும் நிகரற்ற வீரவாழ்க்கையினராவர் நரம்புகள் மேலேழுந்து தோல் திரைந்த முதியவள் ஒருத்தி தன் மகன் போரிலே புறங்கொடுத்தனன் என்று சிலர் கூறக் கேட்டாள். அவளுக்கு உண்டாகிய சினத்திற்கு அளவில்லை. 'என் மகன் போரிற் புறங்காட்டியது உண்மையாயின் அவன் பாலுண்ட என்அங்கத்தைச் சிதைத்திடுவேன்' என்று போர்க்களம். அடைந்தாள்; தான் கைக்கொண்ட வாளினால் அக் களத்தே கிடந்த பிணங்களைப் புரட்டிப் பார்த்து வந்தாள்; தன் மகன், பகைவன் வேலினால் இருகூறாகச் சிதைந்து கிடத்தலைக் கண்டாள். ஆ! அவனைப் பெற்ற நாளினும் பேருவகை கொண்டாள்!4 மற்றொரு வீர மகள் முதனாட் போரிலும் அதற்கு முன்னாட் போரிலும் தன் கணவனையும், தமையன்மாரையும் இழந்தவள் அன்றும் போர் முரசின் முழக்கங் கேட்டுத்தன் குடிக்கு ஒருவன் போர் செய்யவேண்டுமென விரும்பித்தன் ஒரே மகனை அழைத்துக் குடுமியில் எண்ணெய் நீவி வெள்ளாடை உடுத்தி வேலினைக் கையிற் கொடுத்துச் செருமுகம் நோக்கிச் செல்க என விடுத்தாள்!1 புறநானூற்றிலுள்ள இரண்டு செய்யுட்கள் இங்ஙனம் கூறாநின்றன. தமிழ் மக்களின் இணையற்ற வீரவுணர்ச்சிக்கு இவற்றினும் வேறென்ன சான்று வேண்டும்? தமிழர் இத்தகைய மறத்திறன் உடையராயினும் அறத்துறை வழுவிப் போர் செய்பவரல்லர். இரு பெருவேந்தர் போர் செய்வது கருதினால் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் குருக்கண்மா ராகிய அந்தணரும், பெண்டிரும், பிணியுழந்தோரும், மணம் புரிந்து மசுப் பெறாதோரும் என்னும் இவர்கட்கும், ஆனினங்கட்கும் ஏதமுண்டாகாவாறு, ‘யாம் போர் தொடங்குதும்; ஆகலின் நீவிர் நுமக்குப் பாதுகாவலாகிய இடத்தை அடைவீராக'2 என்று முதற்கண் தெரிவிக்கும் இயல்பினராவர். மற்றும் பொருகளத்திலும் அடிபிறக்கிட்டோரும், படையிழந்தோரும் முதலாயினாரை அவர் பொருது கொல்வாரால்லர். எனவே, ‘மன்னுயிர்காக்கும் அன்புடை வேந்தர்க்கு மறத்துறையினும் அறமே நிகழும்' என்க. பகைவர்மேற் செய்யும் வன்கண்மையைப் பேராண்மை என்று சொல்வர், அவர்க்கு ஒரு தாழ்வு வந்ததாயின் அது தீர்த்துக்கொள்ளுதற்பொருட்டுக் கண்ணோட்டமுடன் உதவி செய்தலை அவ்வாண்மைக்குக் ‘கூர்மை' என்று சொல்வர் என்னும் பொருளமைத்து வள்ளுவர் கூறிய, " பேராண்மை யென்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு"3 என்னும் செய்யுள் ஈண்டு அறியற்பாலது. சென்ற சென்ற போர்தொறும் வென்றியே புனைந்த அரக்கர் கோமானாகிய இராவணன் இராமனுடன் புரிந்த முதற் போரிலே படைகள் யாவும் பட்டொழிய, குடையும் கொடியும் இற்றொழிய, தேர் அழிந்து, முடியொழிந்து, வில்லும் அம்பும் இன்றி வெறுங் கையனாய் நாணத்தால் முகம் கவிழ்த்துக் கால்களால் நிலத்தினைக் கீறி நின்றானாக, அப்பொழுது அவனது நிலையைக் கண்டிரங்கிய பெருந்தகையாகிய இராமன் அவனை நோக்கி 'அறத்தினால் அன்றி அதற்கு மாறாகிய மறத்தினால் அமர் வெல்லுதல் அமரர்க்கும் அரிது என்பதனை மனத்தில் உறுதியாகக் கொள்வாய்; உன் ஊரிலுள்ள கிளைஞருடன் சேருமாறு பறந்து செல்வாய்; பாவி! இப்பொழுதே என் கையால் இறந்திருப்பாய்; நின் தனிமையைக் கண்டு இரங்கி யான் அச்செயலை நினைத்திலேன். உனக்குத் துணையாக அமைந்த சேனைகளும் பிறவும் பெருங் காற்றினால் மோதுண்ட பூளைபோல் ஆயினமை கண்டாயன்றே? 'இன்று போய்ப் போர் செய்தற்கு நாளை வருவாய் என' அருள் புரிந்தனன் என்னுஞ் செய்தியைக் கம்ப நாடர் தெரிவிக்கும் " அறத்தி னாலன்றி அமரர்க்கும் அரும்பகை கடத்தல் மறத்தி னாலரி தென்பது மனத்திடை வலித்தி பறத்தி நின்னெடும் பதிபுகக் கிளையோடும் பாவி இறத்தி யானது நினைக்கிலன் றனிமைகண் டிரங்கி"1 " ஆளை யாஉனக் கமைந்தன மாருதம் அறைந்த பூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்"2 என்னும் செய்யுட்கள் அறிந்து இன்புறற்பாலன. இனி, வீரச்சுவை ததும்பும் சில செய்யுட்களையும் தொடர் களையும் கூறி இவ்வுரையை முடிப்போம். சேரன் செங்குட்டு வனானவன் கண்ணகிக்குச் சிலை கொணர்தற்பொருட்டு வஞ்சி சூடி வடதிசைக்குப் புறப்படத் துணிந்தபொழுது, அவன் அமைச்சனாகிய வில்லவன்கோதை கூறுவது, " கங்கைப்பேர் யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை ஆட்டிய அந்நாள் ஆரிய மன்னர் ஈரைஞ் ஞூற்றுவர்க்கு ஒருநீ யாகிய செருவெங் கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம் இழிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய இதுநீ கருதினை யாயின் ஏற்பவர் முதுநீர் உலகின் முழுவது மில்லை"13 என்பது, தூணினின்றும் வெளிப்பட்ட நரசிங்கப் பெருமான் அவுணர் கூட்டத்தையெல்லாம் இமைப்பளவிற் கொன்று குவித்து நின்று ஆர்த்த நிலைகண்ட பிரகலாதன், 'இன்னும் உன் உள்ளத்தின் ஒன்றும் உணர்ந்திலை போலும்; ஆழிவேந்தை வணங்குதியாயின் உன் புன்றொழில் பொறுப்பன்' என்று கூறா நிற்ப, இரணியன் அவனை நோக்கி, " கேளிது நீயுங் காணக் கிளர்ந்தகோ ளரியின் கேழில் தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்துப் பின்னென் வாளினைத் தொழுவ தல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான்"1 கம்பர் வாயால் வெளிப்பட்ட இவ் வீரமொழிகள் தமிழருடைய ஆண்மையின் விளைவு என்பதில் ஐயமில்லை. மனோன்மணீய நாடகத்தில் ஜீவக வழுதியானவன் தன் படை வீரர்களை நோக்கிப் போரிலே ஊக்குஞ் சொற்கள் பின் வருவன; " அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னினும் நாட்டு அபிமானம் உள் மூட்டிய சினத்தீ அன்றோ வானோர்க்கு என்றுமே உவப்பு! வந்த இக்கயவர் நும் சிந்தையிற் கொளுத்திய வெந்தழற்கு அவரே இந்தனம் ஆகுக! இன்று நீர் சிந்தும் இரத்தம் ஓர் துளியும் நின்று உகம் பலவும் நிகழ்த்துமே இந்தப் பாண்டியர் உரிமைபா ராட்டும் பண்பினர் தீண்டன்மின் திருந்தலீர் அவர்தம் செருக்கு சுதந்தரம் அவர்க்குயிர் சுவாசமற்ற றன்று நினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை எனமுர சறையுமே எத்திசை யார்க்கும் இத்தனிப் போரில் நீர் ஏற்றிடுங் காயம் சித்தங் களித்துச் சயமாது உமக்கு முத்தமிட் டளித்த முத்திரை யாகி எத்தனை தலைமுறைக்கு இலக்காய் நிற்கும்!"2 இத்தகைய செய்யுட்களைப் பயின்று வீரச்சுவையை நுகர்ந்து பெருமித மெய்துதல் தமிழ்மக்கள் கடனாம். 18. நமது தாய் மொழி மக்கள் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாத சாதனமாயிருப்பது பாஷை அல்லது மொழி என்பதே. மொழியே மக்களை மாக்களினின்று வேறுபடுத்துவதாகும். இப்பொழுது உலக மக்களால் எண்ணிறந்த மொழிகள் பேசப்படுகின்றன. எம்மொழி எவ்வினத்தவரால் வழிவழியாகப் பேசப்படுகின்றதோ அம்மொழி அவ்வினத் தவர்க்குத் தாய்மொழி என்று சொல்லப்படும். 'காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு' என்பதுபோல் ஒவ்வொருவர்க்கும் அவரவர் தாய்மொழி மதிப்பிற்குரியதே. தாய் மொழியிடத்துப் பற்றில்லாதவரும் மக்கள் எனத் தகுவரோ? ஆயின், மொழிகள் யாவும் ஒருதன்மையின என்றாவது, ஒரே தகுதியுடையன என்றாவது கூறவொண்ணாது. இன்னமும் எழுத்துருவம் பெறாது பேச்சளவில் இருக்கும் மொழிகளும் உண்டு. எழுதப்பட்டும் பலவகைக் கருத்துக்களை வெளியிடுதற்கேற்ற சொற்கள் இல்லாதனவும் திருந்திய நிலையை அடையாதனவும், போதிய இலக்கிய இலக்கணங் களைப் பெறாதனவுமாகிய மொழிகளும் உள்ளன. ஒரு மொழியின் திருந்திய நிலை, அதன் சொற்பெருக்கம், இலக்கிய விலக்கணங்கள் என்பவற்றிலிருந்தே அதனைப் பேசும் மக்களின் நாகரிக நிலையை அறியலாகும். ஆரியம், எபிரேயம், இலத்தீன், கிரேக்கம், தமிழ் என்னும் இவை பல்வகைப் பெருமையும் தொன்மையும் வாய்ந்த மொழிகள் என்பர். அவற்றுள், நூல் வழக்கிலன்றி உலக வழக்கிலும் தளர்ச்சியின்றி நடைபெற்று வருவது தமிழே. நம் தாய் மொழியாகிய தமிழ் இன்ன காலத்தில் தோன்றிய தென்று வரையறுக்க முடியாத அத்துணைப் பழமை வாய்ந்த தாகும். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளின் முற்பட்ட சங்க இலக்கியங்களையும், அவற்றினும் முந்தியதாகிய தொல்காப்பியத் தையும் வைத்து நோக்குமிடத்துப் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்பே தமிழ் உயரிய நிலையை அடைந்துள்ளமை புலனா கின்றது. தமிழ் மிக்க இனிமையுடைய மொழியென்றும், இலக்கண வரம்புடைய மொழியென்றும் தொன்று தொட்டுப் பலராலும் பாராட்டப்பெற்று வருகிறது. பழைய புலவர்கள் தமிழ் மொழியைக் குறிக்குமிடத்தெல்லாம் அதன் பெயரை வாளா கூறாது, செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், மென்றமிழ், இன்றமிழ் என்று இவ்வாறாக யாதேனும் ஓர் சிறந்த அடைமொழி கொடுத்து வழங்கி வந்திருக்கின்றனர். கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாடர் தமது இராமாயணத்தில் அயோத்தி நகரைக் குறிக்குமிடத்தே, "செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்றமிழிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞரனைவரும் வடநூன் முனிவரும் புகழ்ந்தது"1 என்று பாடியுள்ளார். இதில் எவ்வளவு அடைமொழிகளால் தமிழ் சிறப்பிக்கப் பெற்றுள்ள தென்பதனைப் பாருங்கள். குமரகுருபரர் என்னும் புலவர் பெருமான் தாமியற்றிய முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழில், " கலைப்பால் நிறைந்த முதுக்குறைவிற் கல்விச் செல்வர் கேள்விநலம் கனியக்கனிய அமுதூறும் கடவுள் மறையும் முதற்சங்கத் தலைப்பாவலர்தீஞ் சுவைக்கனியும் தண்டேன் நறையும் வடித்தெடுத்த சாரங்கனிந்தூற் றிருந்தபசுந் தமிழும் நாற"2 என்கிறார். தீஞ்சுவைக் கனியாம்! தண்டேன் நறையாம்! அவற்றை வடித்தெடுத்த சாரமாம்! அது கனிந்து ஊற்றிருந்த பசுந்தமிழாம்!! தமிழ் என்றவளவில் இன்பவுணர்ச்சியானது அவருள்ளத்தே பொங்கித் ததும்பி வழிந்திருப்பதனை நோக்குங்கள், பழைய புலவர்கள் இருக்கட்டும் நம்மனோர் கண்முன் விளங்கிய கவியாகிய சுப்பிரமணிய பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்குங் காணோம் என்று பலமொழிகளோடு ஒத்து நோக்கி யறிந்த உண்மையை உரைத்துளாரன்றோ? தமிழ் இங்ஙனம் இனிமை யுடையதாயிருத்தலாலன்றோ தமிழ் என்ற சொல்லுக்கே இனிமையென்ற பொருளும் உளதாயிற்று!! ஆனால் தமிழ் இனியது என்று பிறர் கூறக்கேட்டதனாலேயே அதன் இனிமை புலப்பட மாட்டாது. கற்கண்டு சுவை மிக்கதென்று கேட்டவளவில் அதன் சுவையை உணர முடியுமா? அதனை வாயிலிட்டுச் சுவைத்து உண்ணும் பொழுதன்றோ அதன் இன்சுவை புலனாகும்? அதுவேபோல் தமிழையும் பலகாலும் கற்றும் கேட்டும் சிந்தித்தும் உரைத்தும் ஆராய்ந்தும் துய்க்கும்பொழுதே அதன் இனிமைமிகுதி புலனாவதாகும். தமிழ் தன் இனிமையால் கடவுளரையும் வயமாக்கும் இயல்பினதாதல் பற்றியே பரம்பொருளாய இறைவனைப் பாடி அவனருளைப் பெறுதற்குத் திருஞானசம்பந்தர் முதலிய நாயன்மார் களும், சடகோபர் முதலிய ஆழ்வார்களும், மற்றும் பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்க வடிகள் முதலிய பெரியோர்களும் தமிழையே கருவியாகக் கொண்டு பாடியுள்ளார்கள். அவர்கள் பாடிய அத்திருப் பாடல்களை இசையோடும், பொருளுணர் வோடும் இன்று நாம் பாடினும் அவை நம்மை இன்ப வெள்ளத்திலே திளைக்கச் செய்கின்றன. தமிழ் அவ்வாறு இனிதாதற்குக் காரணம் அதன் மென்மையும், எளிமையும், தெளிவும் முதலியனவாகும். தமிழ் மெய்யெழுத்துக் களில் வல்லெழுத்து என்று ஒரு பிரிவு இருப்பினும், வேறு மொழிகளிலுள்ள சில எழுத்துக்களை நோக்கின் இவை மென்மையுடையனவே. அன்றியும், ஒற்றெழுத்துக்களும், டகரம் முதலிய உயிர் மெய்யெழுத்துக்களும் சொல்லின் முதலில் வாராதிருப்பதும். வல்லொற்றுக்களும் வேறுசில எழுத்துக்களும் இறுதியில் வாராதிருப்பதும், சொல்லின் இடையிலும் சில எழுத்துக்களுடன் சில எழுத்துக்கள் கூடாதிருப்பதும் முதலிய வெல்லாம் சொற்கள் மென்மையும் எளிமையும் உடையனவா தற்குக் காரணமாகின்றன. தமிழுக்கே சிறப்பாகவுள்ள ழகர வெழுத்தோசையானது மிக்க இனிமையுடையதொன்று. இங்கே குறிப்பிட்ட முதல்நிலை, இறுதிநிலை, இடைநிலை என்பனவும், சொற்கள் ஒன்றொடொன்று கூடும் சந்தியிலக்கணங்களும் ஆகிய வரம்பு சிதையாமலே தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ச்சியுற்று வருகிறது. அதனாலன்றோ, " கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ"1 என்று திருவிளையாடற் புராணவாசிரியர் இனிமையும் இலக்கண வரம்பும் பற்றி இம்மொழியைப் பாராட்டியுள்ளார். இனி, தமிழின் சிறப்பியல்பனைத்தையும் இங்கெடுத்துக் கூறுதல் நம் கருத்தன்று. இலக்கணத்தில் எழுத்துக்களுக்கு உயிர், மெய் என்று பெயரிட்டிருப்பதும், சொல்லையும் பொருளையும் உயர்திணை அஃறிணை யென்று பாகுபடுத்தியிருப்பதும் ஆகிய இவற்றிலிருந்தே தமிழ் மக்களின் பழைய நாகரிக நிலையையும், தத்துவவுணர்வையும் குறிப்பாக அறியக்கூடும். சங்க விலக்கியங் களாகிய எட்டுத் தொகை, பத்துப்பாட்டுக்களிலிருந்து அக்காலத்தில் கல்வி எவ்வளவு பரவியிருந்ததென்பதும், வேளாண்மை, வாணிகம், கைத்தொழில்கள் எங்ஙனம் ஓங்கியிருந்தன வென்பதும், அரசியல், சமயநிலை, ஒப்புரவொழுக்கம் என்பன எத்தகைய நன்முறையில் விளங்கின வென்பதும், மற்றும் தமிழர்களுடைய காதல், மானம், வீரம், வண்மை, நீதி, சான்றாண்மை முதலியனவும் நன்கு அறியப் படும். திருக்குறள் என்னும் தெய்வச் செழுந்தமிழ் மறையானது தமிழர் தனி நாகரிகத்தின் ஒப்பற்ற அடையாளம்; நாம் அறிய வேண்டும் பொருளனைத்தையும் எளிதில் அறியுமாறு திரட்டித் தந்து நமக்கு எய்ப்பினில் வைப்பாக விளங்குவது. சிலப்பதிகாரம், சிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய காப்பியங்களோ ஒன்பான் சுவையும் பெய்துவைத்த சுவைப்பெட்டகங்கள். தமிழர் தம் தாய்மொழியிலுள்ள இவையனைத்தையும் கற்றுக்களிகூருங் காலமே தமிழ்நாடு உயர்நிலையடையுங் காலமாகும். நாம் இதுகாறும் நம் தாய்மொழியாகிய தமிழின் பழமை, இனிமை, இலக்கண வரம்புடைமை, அதிலுள்ள சிறந்த நூல்கள், அவற்றால் அறியலாகும் பொருள்கள் என்பனவற்றை ஒருவாறு கூறினோம். இனி காலத்துக்குக் காலம் தமிழ் எங்ஙனம் வேற்றுமை களை யேற்றும் வளர்ச்சியுற்றும் வந்துள்ள தென்பதனையும், இனி நாம் கையாள வேண்டிய முறைகள் யாவை யென்பதனையும் சிறிது நோக்குவோம். உலகிலுள்ள யாதொரு மொழியும் தோன்றிய நாள்தொட்டு ஒரே தன்மையாய் இருந்து வருவதன்று. ஓர் குழவி பிறந்து வளர்ந்து உயர்நிலையடைவது போன்றே மொழியும் தோன்றி வளரும் இயல்பினதாகும். அஃது வழக்காறற்ற நிலையை எய்தின் ஒருகால் அஃது ஒரே தன்மையை உடையதாகலாம். வழக்காறுடைய உயிருள்ள மொழிகள் யாவும் காலப் போக்கிற்கேற்ப வேறு படுதல் இயல்பே, தமிழ் இவ்விதிக்கு விலக்கானதன்று. தொல்காப்பியத்திலும் சங்கவிலக்கியங்களிலும் கிறு, கின்று, ஆநின்று என்னும் இடைநிலைபெற்ற செய்கிறான், செய்கின்றான், செய்யாநின்றான் என்பன போலும் நிகழ்கால வினைகள் வழங்க வில்லை; பிற்காலத்தே அவை பெருவழக்காயின. முன்பு வழங்கிய செய்ம்மன என்னும் வாய்பாட்டுச் சொல் பின்பு வழங்காது போய்விட்டது. அளபெடைகளும், செய்பு என்னும் எச்சமும், செய்கு முதலிய தன்மை வினைகளும், சென்றீ முதலிய முன்னிலை வினைகளும் முற்காலத்துப் பெருவழக்காயிருந்து பிற்றை நாளில் அருகிவிட்டன. மற்றும் பண்டு வழங்கிய எத்தனயோ பல திரி சொற்களின் உருவைப் பிற்கால இலக்கியங்களிற் காண்டலரிது. நான் என்னும் ஒருமைப் பெயரும், நாங்கள், நீங்கள், தாங்கள் அவர்கள் என்னும் பன்மைப் பெயர்களும் பிற்கால வழக்கே. மரபுச் சொற்களில் பிள்ளை, குழவி என்ற இளமைப் பெயர்கள் பன்றிப்பிள்ளை, புலிப்பிள்ளை, முயற்பிள்ளை, நரிப்பிள்ளை எனவும், யானைக்குழவி, ஆன்குழவி, எருமைக்குழவி எனவும் பண்டு வழங்குவதற்குரியவாயிருந்தன. மக்களின் இளமைப் பெயராகக் குழவி, மகவு என்பனவன்றி, பிள்ளை என்னும் பெயர் அப்பொழுது வழங்கியதில்லை; பிற்காலத்தில் பிள்ளை யென்னும் பெயர் பெருவழக்காயினமையைப் பிள்ளைத் தமிழ் என்னும் பெயரே உணர்த்தும். அப்பர் என்னும் பெயர் ஆட்டின் ஆணினையும், பாட்டி என்னும் பெயர் பன்றி, நாய் நரி என்பவற்றின் பெண்ணினையும், பிணா வென்னும் பெயர் மக்களுள்ளே பெண்ணினையும் பண்டு குறிப்பனவாயிருந்தன. செய்யுட்களுள்ளே பண்டு நிலவிய பரிபாடல் என்பது பிற்காலத்தே அருகியது. முன்னில்லாத தாழிசை, துறை, விருத்தங் களாகிய பாவினங்களும், சந்தப்பாக்களும், பிறவும் பின்னர்த் தோன்றி வளர்ச்சியுற்றன. பரணி, உலா, அந்தாதி, பிள்ளைத் தமிழ், கலம்பகம், மாலை, தூது முதலிய எத்தனையோ பிரபந்த வகைகளும் தல புராணங்களும் பிற்காலத்தே தோன்றி வளர்ந்தன. இரண்டடியுள்ள தாழிசை, கண்ணி என்பனவற்றாலும், கீர்த்தனை முதலியவற்றாலும் சிற்சில பிரபந்தங்கள் தோன்றலுமாயின. சமணம், புத்தம், கிறித்துவம், முகமதியம் என்னும் மதங்களின் கொள்கைகளும் அவ்வக் காலந்தோறும் தமிழில் வந்தேறின. பிறமொழிச் சொற்களையும் பொருள்களையும் தமிழ் வெறுக்க வில்லை. ஆசிரியர் தொல்காப்பியனாரே வழிநூல் வகையுள் மொழிபெயர்த்தியற்றுதலைச் சேர்த்தும், இன்றியமையாத வடசொற்களை எடுத்துக் கொள்ளுதற்கு. விதி வகுத்துமுள்ளார். அவ்வாறே எத்தனையோ மொழி பெயர்ப்பு நூல்கள் உண்டாயின. வடசொற்களும் புகுந்தன. இராவுத்தர், சலாம், சபாசு என்னும் பிறமொழிச் சொற்களும் இலக்கியத்தில் ஏறின. மற்றும், அரேபியம், இந்துத்தானி, பாரசீகம், போர்த்துக்கேசியம், ஆங்கிலம் முதலியவற்றி லிருந்து தமிழ் மக்களின் பேச்சு வழக்கில் ஏறியுள்ள சொற்கள் நூற்றுக்கணக்காகவுள்ளன. ஆனால் அவையெல்லாம் உரையாடல் களிலும், ஆவணம் முதலியவற்றிலுமன்றி இலக்கியங்களில் ஏறிற்றில. இவ்வாறாக ஈண்டுக் காட்டியனவும் காட்டாதனவு மாகிய எத்தனையோ வேறுபாடுகள் ஒவ்வொரு காலப் பகுதி யிலும் தமிழின்கண் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், தமிழின் வழிமொழிகளாகிய கன்னடம், தெலுங்கு, துளுவம், மலையாளம் என்பன வடவெழுத்துக்களையும், வட சொற்களையும், வடமொழி விதிகளையும் வரம்பின்றி யேற்றுத் தம் பழைய வடிவினை இழந்து நிற்றல் போலத் தமிழ் தனது தூய வடிவினை இழந்திலது; அடிப்படையான தனது இலக்கணத்தினின்று பிறழ்ந்துமிலது, இங்ஙனம் தமிழ் நங்கை காலத்திற்கேற்ற புதிய பணிகளைப் புனைந்தும், தன் இயற்கை யெழிலும் பண்பும் சிதையாமல் நடந்து, வருதலினாலேயே கன்னியெனப்படு கின்றாள். ஆசிரியர் சுந்தரம்பிள்ளையின் "உன்சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே" என்ற அருமைப் பாட்டை நோக்குங்கள். பிறமொழிச் சொற்களை எடுத்துக் கொள்வது குற்றமின்றா யினும், அவற்றை வரம்பின்றிப் புகுத்துவதானது தமிழின் தூய்மையையும் அழகையும் சிதைத்து, அதன் தொன்று தொட்ட மாண்பினைக் கெடுப்பதாகும் என்பதனைக் கருத்திலிருத்தல் வேண்டும். இக்காலத்துப் புதிய கலைகள் பலவும் எழுதுதற்குச் சொற்கள் பல வேண்டுமென்பது உண்மையாயினும், அதன் பொருட்டுத் தமிழினைத் துருவியாராய்ந்து வேண்டுஞ் சொற் களைக் காண்டலும், அவை போதாவிடத்துத் தமிழ்ப் பகுதி யினின்று புதிய சொற்களை ஆக்கிக் கொள்ளுதலும், இன்றியமை யாதவழிப் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளுதலும் அறிவும் ஊக்கமும் முயற்சியும் உடையார்க்கு அழகாவனவாம். அந்நெறியே கலைப் பயிற்சியை எளிதாக்குவதுமாம். இனி, பிற மொழிச் சொற்களை இரவல் வாங்குமிடத்தும் அவற்றைத் தமிழியல்புக்கேற்ற ஓசையினவாகத் திரித்துக் கொள்ளுதல் ஆன்றோர் கைக் கொண்ட நெறியாகும். கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன், என்றிவ்வாறாக வட சொல்லுரு வினைத் தமிழியல்புக்கேற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேதப் புத்தகத்தை மொழிபெயர்த்தோர் இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கேற்பச் சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குத் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும். ஆகவே, பிற மொழிகளிலுள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது. இனி, கொச்சையாகவும் வழுப்படவும் பேசுவதனையே நல்ல நடையெனக் கொண்டாடி, அப்படியே எழுதவேண்டும் எனக் கூறுவார் சிலருமுளர்; அவ்வறிஞர்களே ஆங்கில மொழியில் அவ்வாறு பேசுவதோ, எழுதுவதோ செய்தால் எவ்வகை மதிப்பினை யெய்தலாகும் என்பதனைச் சிந்தித்தல் வேண்டும். வாழைப் பழம் என்பது வாளைப் பளம் எனவும், வாயப் பயம் எனவும் வாஷைப் பஷம் எனவும் ஒவ்வொரு பக்கத்தில் பேசப்படுகின்றது. இழுத்துக் கொண்டு என்பது இஸ்துக்கின்னு என்று பேசப்படுகிறது. இவற்றை யெல்லாம் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ளுதல் எங்ஙனம்? சில விதிகளைத் தழுவி இயல்பாக மாறி வருகின்ற போலியும், மரூஉவும் முதலியன ஏற்றுக் கொள்ளத் தக்கவையே. ஓர் ஆற்று வெள்ளத்தைக் குறுக்கே அணையிட்டுத் தடுத்து நிறுத்தல் கூடாதாயினும், அதன் போக்கிலேயே சென்று பாழா காதபடி கரை கோலி நேரிதிற் செலுத்திக் கண்வாய்களின் வழியே நீரைப் பாய்ச்சிப் புலங்களை விளைவித்தல் அறிவுடைமையாகும். அவ்வாறே மொழியினையும் சில வரம்புகளுக்குட்பட்டு வளரும் படி செய்து மக்கட்குப்பயன் விளைத்தல் வேண்டும். 19. கலித்தொகை கலித்தொகை என்பது ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முன் விளங்கிய கடைச்சங்கப் புலவர்களாற் பாடித் தொகுக்கப்பட்ட எட்டுத் தொகையுள் ஒன்று; அகப்பொருள் பற்றிய நூற்றைம்பது பாட்டுக்களையுடையது. இதிலுள்ள செய்யுட்களெல்லாம் கலிப்பா ஆதலாலும் பல புலவர்கள் பாடிய வற்றின் தொகுதியாதலாலும் இதற்குக் கலித்தொகை என்பது பெயராயிற்று. சங்கச் செய்யுட்களெல்லாம் பொருளிலக்கணத்திற்கு இலக்கியமானவை. பொருளிலக்கணம் அகம், புறம் என இரு வகைப்படும். மக்கள் அடைதற்குரிய அறம், பொருள், இன்பம் வீடு என்னும் உறுதிப் பேறுகளுள் இன்பம் என்பது அகத்திலும், ஏனையவை புறத்திலும் அடங்கும். அகப்பொருளாகிய இன்ப மாவது இவ்வுலக இன்பங்கள் பலவற்றிலும் மிக்கது. அஃதாவது ஒரு காலத்து ஒரு பொருளால் ஐம்புலன்களும் நுகரத்தகும் சிறப்புடையது காமவின்பம். நல்லிசைப் புலவர்கள், அதனை உலகியலோடு நாடக வழக்கும் சேர்த்துப் புனைந்து மிக உயரிய நிலையில் வைத்துக் காட்டுகின்றனர். உருவும் திருவும் பருவமும் குலனும் குணனும் அன்பும் முதலியவற்றால் தம்முள் ஒப்புமையுடைய தலைமகனும் தலைமகளும் கொடுப்பாரும் அடுப்பாருமின்றிப் பான்மை வயத்தால் தனியிடத்து எதிர்ப்பட்டுக் கூடுவர். அவர்கள் பிரிந்து சென்று பின்பும் அவ்வாறே அவ்விடத்து எதிர்ப்பட்டு அளவளாவுதலும், பாங்கன் வாயிலாகவும் தோழி வாயிலாகவும் எதிர்ப்பட்டு அளவளாவுதலும் உண்டு. அக்காலத்தே தலைவன் பகலில் வருதலன்றித் தலைவிமேலுள்ள காதல் மிகுதியால் நள்ளிருளிலே கொடிய காட்டு வழியில் எவ்வகை இடையூற்றையும் பொருட்படுத்தாமல் வந்து செல்வதுமுண்டு. அதனையறிந்து தலைவனுக்குத் துன்பமுண்டாகுமே எனக் கருதித் தலைவி மிக வருந்துவள். இந்நிகழ்ச்சிகள் அகப்பொருளில் களவு எனப்படும். இவர்கள் இங்ஙனம் சில நாள் ஒழுகிய பின், தலைவன் பிறரறியாமல் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் சென்று தன்னூரில் மணஞ்செய்து கொள்ளுதலோ, அல்லது தலைவியின் பெற்றோர்கள் அவர்கள் நட்பின் சிறப்பையறிந்து அவளை அவனுக்குக் கொடுக்க, மணஞ்செய்து கொள்ளுதலோ உண்டு. தலைவி தலைவனுடன் செல்வது உடன்போக்கு எனப்படும். அப்பொழுது செவிலியானவள் காட்டு வழியிலே தலைவியைத் தேடிச் செல்வதுண்டு; மணம் புரிந்து கொண்ட தலைவனும் தலைவியும் இல்லில் இருந்து விருந்தோம்பல் முதலிய அறங்களைச் செய்து வாழ்வர். இது முதலாகவுள்ள நிகழ்ச்சிகளெல்லாம் கற்பு எனப்படும். அவ்விருவரும் எவ்வளவு பேரன்புடையராயினும், தலைவன், தலைவியின் இன்பத்திலேயே மூழ்கியிருப்பின் அவன் தன் கடமையைச் செய்யத் தவறியவனாவான். *'வினையே ஆடவர்க்குயிர்' என்பர் ஆன்றோர். முன்னோர் தேடிய பொருளை நுகர்ந்து கொண்டு முயற்சியின்றி இருப்பவன் ஆண்மகனாகான். ஆதலின் பிறநாடு சென்று பொருள் தேடிவருங் கருத்துடன் தலைவன் தலைவியைப் பிரிவான். இங்ஙனமன்றித் தன் அரசனுக்குத் துணையாகச் சென்று போர் புரியவும் பிரிவன்; இன்னும் வேற்று நாட்டிலே தன் கல்வியை மேம்படுத்தவும், போர் செய்யும் இரண்டு அரசர்களைச் சந்து செய்விக்கவும் பிரிவன்: தலைவன் அரசனாயின், தனது நாட்டினையும் அறப்புறங்களையும் காத்தற்கும் பிரிவன். தலைவன் பிரிவைக் கேட்பின் தலைவி ஆற்றாளாகலின் தான் செல்லுங்காரியத்தின் இன்றியமையாமையையும், தான் இன்ன காலத்தின் மீண்டு வருதல் உறுதியென்பதனையும் தோழி வாயிலாகத் தெரிவித்துப் பிரிவான். தலைவி கணவன் சொற் பிழையாத கற்புடையளாகலின், அவன் குறித்த பருவம் வருந்துணையும் ஆற்றியிருப்பள். அப்பருவத்தில் அவன்வராவிடின் தலைவிக்கு ஆற்றாமை மிகும். அதனால் அவள் மிக வருந்திப் புலம்புதலு முண்டு. இனி ஒரோவழித் தலைவனுக்குப் பரத்தையர் கூட்ட மாகிய புறத்தொழுக்கம் உண்டாயின். தலைவிக்கு ஊடல் மிகும் தலைவன் அவ்'d2வூடலைப் பல வழியாலும் நீக்கித் தலைவியுடன் கூடி இன்புறுவன். இவ்வாறாகத் தலைவனும் தலைவியும் கூடியிருக்கும் கூட்டம் குறிஞ்சித் திணையெனவும், பிரிவு பாலைத்திணையெனவும், தலைவி ஆற்றியிருப்பது முல்லைத் திணையெனவும், ஆற்றாவது இரங்குவது நெய்தற்றிணை எனவும், தலைவனோடு ஊடுவது மருதத்திணை எனவும்படும். ஈண்டுத்திணை என்பது ஒழுக்கம். இவ்வகை ஒழுக்கம் தலைவன் தலைவியருடைய ஒப்பற்ற அன்பின் பெருமையை விளக்குவனவே. எனவே, அகப்பொருள் என்பதற்கு அன்பினாலேயே நுகரும் இன்பம் எனச்சுருக்கமாகப் பொருளுரைக்கலாம். அன்பு பற்றிய இவ்வொழுக்கங்களே அகப்பொருளிற் கவிஞன் கூறக் கருதிய பொருள், அதனைச் சுவையுற உணர்த்துதற்கு இயைபுடைய வேறு பொருள்களைத் துணையாகக் கொள்கிறான். குறிஞ்சி முதலிய ஐந்திணைகளில் ஒவ்வொன்றும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூன்று பாகுபாடுடையன. அவற்றுள் முதற் பொருளாவன, நிலமும் பொழுதும், கருப்பொருளாவன தெய்வம், மக்கள், விலங்கு, பறவை, மரம், பூ, உணவு, யாழ் முதலியன. உரிப் பொருளாவன முற்கூறிய கூட்டம் முதலிய ஒழுக்கங்கள். முதற் பொருள், கருப்பொருள்கள் உரிப்பொருட்குச் சுவையூட்டுகின்றன. கலித்தொகையில் ஒவ்வொரு திணைக்குரிய பாட்டுக்கள் ஒருங்கு தொகுக்கப் பெற்ற ஐந்து பகுதிகள் உள்ளன. அவை, பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்ற முறையில் அமைந்துள்ளன. பாலைக்கலி முதலிய ஐந்து பகுதியும் பெருங் கடுங்கோ முதலிய ஐவரால் பாடப்பட்டனவாக ஓர் வெண்பாக் கூறுகிறது. அது மேலும் ஆராய்தற்குரியது. கலித்தொகை தொகுத்தவர் ஆசிரியர் நல்லந்துவனார் என்போர். சங்கச் செய்யுட்கள் எல்லாவற்றிலும் பொதுவாகக் காணப்படும் இயல்புகள் இயற்கைப் பொருள்களை நன்கு அறிந்து அவற்றை உள்ளவாறு சொல்வதும், அவற்றிற்கு மிகவும் பொருத்தமான உவமைகள் கூறுவதும், மக்களின் மனநிலையை அறிந்துரைப்பதுமாகும். அவற்றோடு கலித்தொகையில் சிறப்பாகக் காணப்படுவன காட்சிப் பொருளாயுள்ளவற்றிற்குக் கருத்துப் பொருள்களை உவமங்கூறுவதும், அவற்றால் பல அறங்களை வெளிப்படுத்துவதும், இன்பம் பயக்கும் இன்னோசையுடைமையுமாகும். அகப் பொருளாய புலனெறி வழக்கிற்கு எல்லாப் பாக்களினும் கலிப்பாவே சிறந்ததென ஆசிரியர் தொல்காப்பியனாரும் கூறியுள்ளார். கலித் தொகையில் முதற்கண் உள்ள பாலைப் பகுதியை இப்பொழுது பார்ப்போம் முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில இடங்கள் வேனிற்காலத்தில் ஆதித்தன் வெம்மையால் நல்லியல்பு சிறிது மின்றித் திரிந்து, நினைப்பினும் நடுக்கஞ் செய்யும் கொடுமை யுடையவாம் என்பதும், அவ்விடங்களே பாலையாம் என்பதும் முன்னையோர் கொள்கை. அந்நிலத்திலுள்ள மான்களுக்கு உண்ண உணவில்லை; பருக நீருமில்லை; அவை பேய்த்தேரையே நீரென்று கருதி உண்ணுதற்கு ஓடுகின்றன. மந்திகள் ஊணின்றி வருந்துகின்றன. மரல் என்னுஞ் செடியும் வாடும்படி மலைகள் கொதித்ததால் ஊற்றுக்கள் நீர் ஊறப் பெற்றில. அதனால் உடம்பு வருந்திய யானைகள் உண்பதற்கு நீரின்றிச் சேற்றின் ஈரத்தைச் சுவைத்துப் போகின்ற தம் உயிரைக் காக்கின்றன. அந்நிலத்து மேகம் துளித்தலை மறந்துவிட்டது. அங்கே வாழ்பவர் ஆறலைக்கும் எயினர்களே. அன்னோர் அவ்வழியிற் செல்வாரிடத்துக் கொள்ளு தற்குரிய பொருளில்லையாயினும் அவர்கள் துள்ளுதலைக் கண்டு மகிழவே அவர்களைக் கொன்று வீழ்த்துவர். வழிச் செல்வார் மேல் எயினர் விடுத்த அம்பு தைத்ததால் உடல் சுருங்கி உள்ளுண்டாகிய நீர் வற்றி வாடுகின்ற நாவிற்குத் தண்ணீர் பெறாத வருத்தத்தை அவர்கள் கண்ணீர் வீழ்ந்து நாவை நனைத்துப் போக்குமாம். இத்தகைய துன்பமான செய்திகளும் நல்லிசைப் புலவர் செய்யுட்களையடைந்து கற்பார்க்கு இன்பம் விளைக்கின்றன. இப்பெற்றியுடைய பாலையிலுள்ள மரங்களின் இயல்பினை ஒரு செய்யுளில் உவமை கூறி விளக்க வந்த ஆசிரியர், அவை 'வறியவன் இளமைபோல' வாடிய கிளைகள் உடையனவாய், 'சிறியவன் செல்வம்போல்' சேர்ந்தார்க்கு நிழலில்லாதனவாய், 'யாவரிடத்தும் வரம்பு கடந்து தீமை செய்தவன் அடியுடன் அழிதல்போல' வேருடன் வெம்பும்படி ஞாயிற்றின் வெங்கதிர்கள் சுடுவனவாயின. அதனால், குடிகள் வருந்திக் கூவுமாறு கொலைக் கஞ்சாத அமைச்சர்களால் 'நெறியின்றிப் பொருளை வவ்விய கொடுங்கோல் மன்னனுடைய நாட்டைப்போல்' உலறிய மரங்களை யுடையதாயிற்று, அக்காடு என்கின்றார். அரச நீதி முதலிய அறங்கள் இதன்கண் எவ்வளவு செவ்வையாகக் கூறப்பட்டுள்ளன பாருங்கள்! இவ்வாறாய உவமைகள் எண்ணிறந்தனவாய் இதன்கண் உள்ளன. இனி இளவேனிற் பருவத்தின் நிகழ்ச்சிகளைக் கூறுமிடத்து ஒரு பாட்டில் அமைந்துள்ள இயற்கை வருணனையை எடுத்துக் காட்டுகிறேன். ஆற்றின் இருமருங்கிலுமுள்ள குளங்கள் நீர் நிறைந்து விளங்குவன, அவ்வாறானது தன்னால் உண்டாக்கப் பட்ட அந்நாட்டின் வளங்களைக் கண் விழித்துக் காண்பனபோல் உள்ளன. கரையிலுள்ள செம்முருக்கின் இதழ்கள் அக்குளத்து நீரிலே வீழ்ந்திருப்பவை பளிங்குபோலும் கண்ணாடியுள் பவளம் பதித்தாற் போல் இருக்கின்றன. தெளிந்த குளங்களின் நிழலில் தம்மையும் தாம் ஊதும் பூவையும் கண்ட வண்டுகள் அவ்விடத்தே நெருங்கி ஆரவாரிக்கின்றன. அக்காலத்தே நெருப்பினை யொப்ப இலவம் பூக்கின்றன. புன்கின் பூக்கள் பொரிகளைப்போல் உதிர்கின்றன. கோங்குகள் பொற்பொடிபோல் தாதினைச் சிந்துகின்றன. இவ்வாறாக இளவேனில் வந்தது, நம்மை விட்ட கன்ற தலைவர் வந்திலரே! எனத் தலைவி வருந்துகின்றாள். இனி, கற்போர்க்கு மிக்க இன்பம் விளைக்கும் பொருட் சிறப்புடைய செய்யுட் பகுதிகளில் ஒன்றிரண்டு நோக்குவோம். களவுக் காலத்தில் பிறரறியாமல் தலைவி தலைவனுடன் போய் விட்டாள், காட்டுவழியிலே அவளைத் தேடிச் செல்கின்ற செவிலியானவள் குடை, கமண்டலம், முக்கோல் இவற்றுடன் எதிரே வருகின்ற அந்தணர் சிலரைக் கண்டு, நீவிர் வருங்காட்டிலே என்மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் சேர்ந்து செல்லுதலை அறிவீரோ என்றாள். அதற்கு அவர்கள் கூறும் விடையாவது யாம் காட்டிலே அவர்களைக் கண்டு அச்செய்கைஅறமெனவே கருதிப் போந்தோம். நீர், ஆண்மையும் எழிலுமுடைய அவ்வண்ணலோடு அருஞ் சுரத்திற் செல்லும் மடந்தையின் தாயிர் போலும். " பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யும் நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே"1 " சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும் தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே"2 " ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யும் சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே"3 ஆதலால் மிக்க கற்பினையுடையாள் பொருட்டு வருந்தாதீர், அவள் யாவரினுஞ் சிறந்த கணவனை வழிபட்டுப் போயினள். இம்மையில் இங்ஙனம் கற்புப் பூண்டு நிகழ்த்தும் இல்லறமே தலையாய அறம், என்பது. தலைவர் தன்னைப் பிரியுங்காலத்துக் காடு இவ்வியல்பினது எனக்கூறிச் சென்றாராகலின் அவர் அவ்வழி அதனைக் காணுமிடத்துத் தான் வருந்துமாறு. பிரிந்திருப்பாரல்லர் எனத் தலைவி துணிவதைக் கூறுஞ் செய்யுளொன்று. அதில் ‘ அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையால் கடியவே கனங்குழாய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே’4 ‘ அன்புகொள் மடப்பெடை யசைஇய வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே’5 ‘ இன்னிழ லின்மையால் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவு முரைத்தனரே1 என, தலைவர் கூற்றைக் கொண்டு கூறுங் கூற்றுக்கள் காட்டின் கொடுமையையும், அக்காட்டிலும் மக்களல்லா ஏனையுயிர்களும் அன்பு சிறந்து விளங்குதலையும் ஒருங்குணர்த்தி இன்பம் விளைக் கின்றன. இனி, குறிஞ்சிக்கலி முதலியவற்றிலும் ஒன்றிரண்டு பதம் பார்ப்போம். மேகம் இடித்து முழங்கி மழை பெய்கிற பாதியிரவிலே மின்னலொளியில் பிடியுடன் வந்து புனத்தை மேயும் யானை நடக்கும் ஓசையைக் கேட்ட கானவன் மலையில் ஆசினிப் பலாவின்மீது இட்ட பரணில் ஏறிக் கவணினாற் கடுவிசையுடன் கல்லை வீச, அக் கல் வேங்கையின் பூக்களைச் சிதறி, ஆசினியின் கனிந்த பழங்களை யுதிர்த்து, தேனிறால் துளைபட உருவி, மாவின் வடுக்களையுடைய கொத்துக்களைக் கலக்கி, வாழையின், மடலைக் கிழித்துப் பலவின் பழத்திலே சென்று தங்கும் என ஒரு செய்யுள் கூறுகின்றது. மலைவளம் - எவ்வளவு அழகாக இதிற் கூறப் பட்டுள்ளது. இங்ஙனம் மலைவளங் கூறிய நல்லிசைப் புலவர், தலைவன் இரவிடை வருதலும், செவிலி கடுஞ்சொற் கூறித் தலைவியை இற்செறித்தலும், தலைவனது மனவெழுச்சியையும் அவன் நுகரும் இன்பத்தையும் கெடுத்தலும் முதலாகிய கருத்துக் களை இதன்கண் உள்ளுறையாக அமைத்திருக்குந் திறன் வியந்து பாராட்டற்குரியது. மருதக் கலியிலே கலியாண நாளில் தன் மனைவியோடும் தீவலஞ் செய்யும் அந்தணனைப்போல அன்னம் தன் பெடையோடு பொய்கையில் புதிதாக மலர்ந்த தாமரைப் பூவைச் சூழ்ந்து திரியும் என்றும், பொய்கையில் விளையாடும் அன்னம் தன் சேவலை இலைமறைத்தமையால் காணாது கலங்கி, நீரிலுள்ள மதியின் நிழலைக் கண்டு அதுவென மகிழ்ந்து ஓடி, அங்ஙனம் ஓடும் பொழுது தன்னை அணைதற்கு எதிரேவரும் தனது துணையைக் கண்டு நாணி மலர்களினுள்ளே புகுந்து மறையும் என்றும் கூறப்பட்டுள்ளன. மருதவளங் கூறும் இதன்கண் ஊடல் என்னும் உரிப்பொருளுக்கேற்ற உள்ளுறைகள் அமைந்துள்ளன. மருதக் கலியில் இங்ஙனமாய உள்ளுறைகள் பிறவற்றினும் மிகுதியாகக் காணப்படும். முல்லைக்கலியில், ஆயர்கள் கொல்லேறு தழுவினாற்கே தம் மகளைக் கொடுப்பதென்று உறுதி செய்து அவ்வாறே மணம் புரிவிக்கும் செய்கை மிகுத்துக் கூறப்பட்டுள்ளது. வெள்ளை, காரி, குரால், சேய், செம்மறு, நெற்றிச்செகில், வெண்காற்சேய் முதலிய ஏற்றினங்களின் தறுகண்மையையும், அவற்றின் மீது அஞ்சாது பாய்ந்து தழுவித் தாம் காதலித்த பெண்ணை மணக்கும் ஆயர் மைந்தர்களின் வீரத்தையும், கொல்லேறு தழுவினானையே மணப்பதென்றிருக்கும் ஆயர் மகளிரின் பெருமிதத்தையும் அதிற்காணலாம். 'கோள் வழுக்கித் தன்முன்னர் வீழ்ந்தான் மேற் செல்லாது, மீளும் புகரேற்றுத் தோற்றங்காண்' 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே யாயமகள்.' என்பன பெருமிதமும் வியப்பும் விளைக்கின்றன. நெய்தற் கலியிலே, தலைவனைப் பிரிந்து வருந்துந் தலைவி தனது நெஞ்சை நோக்கி 'அறியாமையுடைய நெஞ்சமே, கானலின் கண்ணே யாதொரு பொருளையுங் காணாதபடி இருளைப் பரப்பி, உயிர்களெல்லாம் செயலற்றிருத்தற் கேதுவாகிய நள்ளிரவில், ஒரு மருந்தாலும் தீராத காமநோயைச் செய்தவனிடத்துச் சென்றாயே, சென்ற நீ அவனைக் கண்ணாற் காணுமளவுதானும் பெற்றாயோ? காணாதிருந்தாயோ? என இரங்குகின்றாள். இங்ஙனம் தலைவியின் இரக்கத்தை வெளிப்படுத்தும் இப்பகுதியில் எத்தனையோ அழகிய உவமைகளும் அறங்களும் அமைந்துள்ளன. ‘ ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை அறிவெனப் படுவது பேதையார் சொல்நோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாஅமை நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை, முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல், பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்1 என ஒரு பாட்டில் தலைவனுக்கு இருக்க வேண்டும் குணங்களெல்லாம் சொல்லப்பட்டுள்ளன. கலித்தொகையைப் படிக்கும் இன்பத்தில் அமிழ்ந்தவர்க்கு அமிழ்தமும் கைக்கும் என்பது தேற்றம். 20. மனோன்மணீயம் மனோன்மணீயம் என்பது ஆசிரியர் சுந்தரம்பிள்ளையால் இயற்றப்பெற்றதொரு தமிழ் நாடகம். சுந்தரம்பிள்ளையவர்கள் சென்ற நூற்றாண்டினிறுதியில் திருவனந்தை அரசர் கல்லூரியில் தத்துவ சாத்திர போதகாசிரியராய் விளங்கியவர்; தத்துவ நூலாராய்ச்சியுடன், வரலாற்றாராய்ச்சி, மொழியாராய்ச்சி முதலியவற்றிலும் சிறந்தவர். நல்ல தமிழ்ப்புலமையும் கவிபாடும் ஆற்றலும் வாய்ந்தவர். இவர் திருஞான சம்பந்தப்பெருமான் விளங்கிய காலத்தை முதன் முதலாக ஆராய்ந்து அறுதியிட்டுரைத்தார். அது தமிழிலக்கிய ஆராய்ச்சி செய்வார்க்கு ஒரு கலங்கரை விளக்கம் போலாயிற்று. இவரது மொழியாராய்ச்சியையும், தாய்மொழியாய தமிழின்பால் இவருக்கிருந்த எல்லையற்ற பற்றினையும் இவர் இயற்றிய தமிழ்த்தெய்வ வணக்கம் புலப் படுத்தும். பண்டைக்காலத்தில் தமிழிலே நாடகக்கலை உயரிய நிலையில் இருந்ததென்பது தமிழ்மொழியை மூன்று பிரிவினதாக வைத்து இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என வழங்கு தலானும், நாடக விலக்கணங்கள் பல சிலப்பதிகாரத்துக் கூறப்படுதலானும், பிறவற்றானும் அறியப்படும். எக்காரணத் தானோ பிற்காலத்திலே நாடகம் பெரிதும் அருகி விட்டது. அக்குறையினைப் போக்குவதற்கு உயரிய நிலையில் நாடகம் ஆக்குவது, தமிழன்னைக்காற்றும் அரும் பணிகளுள் ஒன்றாக ஆசிரியர்க்குத் தோன்றியது. அதனால் உதித்ததே இந்நூல். இந்நாடகம் தோன்றிய நாள் தொட்டு அறிஞர் பலருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் உரியதாயிற்று. அன்று முதல் இன்று காறும் இதுபோல்வது பிறிதொன்று தோன்றாதிருத்தலே இதன் பெருமைக்குச் சான்றாகும். இந்நாடகத்திலே மக்கள் அறிய வேண்டிய சிறந்த பொருள்கள் பலவற்றை ஏற்றவிடங்களில் வெளிப்படையாகக் கூறியிருப்பதுடன், தத்துவப் பொருள்களை நூல் முழுதும் உள்ளுறையாக அமைத்திருப்பது ஆசிரியரது உயர்ந்த சிந்தனையையும், அறிவின் சதுரப்பாட்டையும் புலப்படுத்து கின்றன. இது முழுதும் செய்யுளாலேயே அமைந்திருப்பினும் இதிற் பெரும் பகுதியான ஆசிரியப்பா உரைநடை போலவே பெரும்பாலும் காணப்படும். மற்றும் பலவகையான பாக்களும் பாவினங்களும் கருத்துக்களுக்கேற்ற ஓசை நலமுடையனவாக இதில் ஆண்டாண்டு வந்துள்ளன. தமிழர் நாகரிகத்தைப் புலப் படுத்துவது ஆசிரியர் கருத்தாதலின் அதற்குப் பொருத்தமாக நாடகம் நிகழுமிடத்தையும், நாடகப் பாத்திரங்களையும் அமைத்துக் கொண்டார். சீவகன் என்னும் பாண்டியன், சூழ்ச்சித் திறமும் தீய நினைவு முடைய குடிலன் என்னும் அமைச்சன் வயப்பட்டு, அவன் சொற் படி, மதுரையை விடுத்துத் திருநெல்வேலியிற் கோட்டை கட்டி அதில் உறைகின்றனன். சீவகனுக்குக் குலகுருவாகிய சுந்தரமுனிவர் அவனை ஆபத்தினின்றும் பாதுகாத்தற்பொருட்டு, அரணிலே ஓர் அறை தமக்கென வாங்கி அதிலிருந்து அரணின் புறத்துள்ள தமது உறையுள்வரை பிறரறியாது ஒரு சுருங்கை வழி அமைத் திருக்கின்றனர். சீவகனுக்கு ஒரே மகளாகிய மனோன்மணியும் சேர தேயத்தரசன் புருடோத்தமனும் ஒருவரையொருவர் கனவிற் கண்டு காதல் கொள்கின்றனர். அதற்கு முன்பே மனோன்மணியின் தோழி யாகிய வாணியும் நடராசன் என்னும் ஆண்டகையும் ஒருவரை யொருவர் கண்டு காதல் கொண்டுள்ளனர். வாணியின் தந்தையாகிய சகடன் பொருளாசையால் தன் மகளைக் குடிலன் மகனாகிய பலதேவனுக்கு மணஞ் செய்விக்கத் துணிந்து அரசன் அனுமதியும் பெற்றுள்ளான். மனோன்மணிக்கேற்ற மணவாளன் புருடோத்தம வன்மனே எனச் சுந்தரமுனிவர் கூறவும், மனோன்மணியும் அவட்குரிய அரசாட்சியும் தன் மகன் பலதேவனுக்குக் கிடைக் கலாகாதா என்ற பேராசையால் குடிலன் ஒரு சூழ்ச்சி செய்து, பலதேவனையே சேரனிடம் தூதுவிடுவிக்கச் செய்து, சேரன் படையெடுத்து வரும்படி செய்வித்தனன். போரிலே பாண்டியன் பின்னிட நேர்ந்தது. இன்னமும் அவன் குடிலன் உரையையே மெய்யென நம்புகின்றனன். மனோன்மணியைப் பலதேவனுக்கு மணஞ் செய்விக்கத் துணிகின்றனன். மனோன்மணி கடமை உணர்ச்சியால் அதற்கிசைகின்றனள். நள்ளிரவிலே ஒரு மணவறையில் சுந்தரமுனிவர் மணச்சடங்கியற்ற, மனோன்மணி பலதேவனெதிரே மாலையுங்கையுமாய் வந்து நிற்கின்றனள். பாதகனாகிய குடிலனுக்கு விலங்கிடுவித்து, அவன் காட்டிய சுருங்கை வழியே வந்த புருடோத்தமன் மனோன்மணியின் கண்ணெதிரே நிற்கின்றான். மனோன்மணி அவனுக்கு மாலையிட்டு அவன் தோள்மேற் சாய்ந்து அவசமாகின்றனள். உண்மைக்காதல் வெற்றியுறுகின்றது. இக்கதையை நடத்தும் வாயிலாக வெளிப்படுத்தப் பெற்றுள்ள அரும் பொருள்களிற் சிலவற்றை இனி நோக்குதும். சேரநாட்டின் ஒரு பகுதியாகிய நன்செய் நாட்டின் மருதவளம் நெய்தல் வளங்களைத் திணைமயக்கத்தின் பாற்படுத்து எழில்பெறக் கூறியிருப்பது ஆசிரியரது கற்பனைத்திறத்தைப் புலப்படுத்துகின்றது. மற்றும் அந்நாட்டிலே ஒருசார், துகிர்க்கால் அன்னமும் புகர்க்காற் கொக்கும், செங்கட்போத்தும் கம்புட்கோழியும், கனைகுரல் நாரையும் சினமிகு காடையும், பொய்யாப் புள்ளும் உள்ளான்குருகும்1 எண்ணிலவாகக் குழுமியெழுப்பும் பேரொலியுடையதாயிருக்கு மென்றும், நாற்றுப் பறிப்பவரும் நடுபவரும் களை பறிப்பவரு மாகிய கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டுமாய ஒலி ஒருசார் பரந்திருக்குமென்றும் இயற்கை வளம் கூறியுள்ளார். விடியற்கால நிகழ்ச்சிகளைக் கூறுமிடத்தே, காக்கைகள் கத்திக் கொண்டு திசை தோறும் ஓடுதலை, இருட்பகைவன் ஆகிய கதிரவன் தம்மையும் இருளெனக் கருதிக் காய்வனோ என்று அஞ்சித் தம் பெயரைச் சொல்லிக்கொண்டு ஓடுவதாகக் கற்பனை செய்திருப்பது நகைப்பும் வியப்பும் விளைவிக்கின்றது. உண்மைக்காதலின் இயல்பு, பலதேவனை மணக்குமாறு தூண்டும் சீவக வழுதிக்கு விடைகூறும் வாணியின் கூற்றில் வைத்து நன்கு விளக்கப் பெற்றுளது. 'நேயமும் ஆக்கப் படும் பொருளாமோ? நோக்கில் துன்பே நிறையும் மன்பேருலகாம் எரியும் கானல் விரியும் பாலையில், திரியும் மனிதர் நெஞ்சம் சிறிது தங்கி அங்கவர் அங்கங் குளிரத் தாருவாய்த் தழைத்தும் ஓயாத் தொழிலில் நேருந் தாகம் நீக்குவான் நிமல ஊற்றா யிருந்தவர் உள்ளம் ஆற்றியும் ஆறலை கள்வர் அறுபகை மீறில் உறுதுணையாய் அவர் நெறிமுறை காத்தும் முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில் ஊன்று கோலாய் அவர் ஊக்கம் உயர்த்தியும் இவ்விதம் யாரையும் செவ்விதிற்படுத்தி இகத்துள சுகத்திற்கு அளவு கோலாகிப் பரத்துள சுகத்தை வரித்த சித்திரமாய் இல்லறம் என்பதன் நல்லுயிரேயாய் நின்ற காதலின் நிலைமை நினையில் இரும்பும் காந்தமும் பொருந்தும் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பாயுருகி ஒன்றாந் தன்மை யன்றி ஒருவரால் ஆக்கப்படும் பொருள் ஆமோ?'2 புத்தி தத்துவ மாகிய வாணி, காதலின் நீர்மையை இங்ஙனம் விளக்கியது இயல்பே. நடராசன் தன் நண்பனாகிய நாராயணனுடன் நிகழ்த்தும் உரையாட்டில் வைத்து, மகளிர் ஆடவரினும் மனவுறுதியுடைய ரென்றும், அவர் கெடுவது ஆடவராலேயே என்றும் வாழ்க்கையாம் கடலுட்போகும் ஆடவர் நெஞ்சமாகிய மரக்கலம், நிர்ணயமற்ற எண்ணமாம் காற்றால் அறத்துறையகன்று அலையாவண்ணம் அறத்துறைக்குடாவில் நிலைபெற நிறுத்தும் நங்கூரமாவது மாதர்தம் நிலையே என்றும் கூறியிருப்பதும், மற்றும், இல்லறத்தின் பயனைத் 'தனக்கென வாழுந் தனி மிருகத்தின், மனக்கோண் நிமிர்த்து, மற்றையர் இன்பமும், துன்பமும் தனதா அன்பு பாராட்ட, மெள்ள மெள்ளத்தன் உள்ளம் விரித்துப், பொறையும் சாந்தியும் படிப்படி புகட்டிச், சிறிது சிறிது தன் சித்தந் தெளிந்து, தான் எனும் நினைப்பும் தனக்கெனும் இச்சையும், ஓய்வுறச் செய்து மற்று ஒன்றாய் நின்ற, எங்கும் நிறைந்த பேரின்ப வெள்ளம், முங்கி அதனுள் மூழ்கிட யாரையும், பக்குவஞ் செய்யும் நற் பள்ளிச் சாலை' இவ் இல்லறம் என்று1 விளக்கியிருப்பதும் சிந்திக்கற்பாலன. குடிலனுடைய வஞ்ச நெஞ்சினை அரசனுக்குக் குறிப்பாகத் தெரிவிக்கக் கருதிய நாராயணன் தனது மூக்கிலே கரி தேய்த்து வந்து, 'மூக்கிற் கரியர் உளர்' என நாயனார் தூக்கிய குறளின் சொற்படி எல்லாம் உள்ள நின்னருகு அவர் இல்லாராவரோ?2 என்றியம்புவது நகைச்சுவை பயக்கின்றது. தான் எவ்வாறு தெரிவித்தும், அரசன் குடிலனை உண்மையாளனாக நம்பி யிருத்தல் கண்டு இரங்கி, அவன் தானே கூறிக்கொள்ளும் மொழிகள் அரச பாரம் பொறுத்தலின் அருமையைப் புலப்படுத்துகின்றன. என்னே அரசர் தன்மை மன்னுயிர்க்கு ஆக்கமும் அழிவும் அவர்தம் கடைக்கண் நோக்கில் உண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார். பெற்ற அப்பெருமையின் பாரம் உற்று நோக்குவரேல் உடல் நடுங்காரோ? கரும்போ தேனோ என்று அவர் களிப்பது நெருப்பாறும் மயிர்ப்பாலமும் அன்றோ? விழிப்பாய் இருக்கிற் பிழைப்பர். விழி இமை கொட்டில் கோடி பிறழுமே, கொட்டும் வாலால் தேளும், வாயால் பாம்பும் விடம் சுக்குமெனக் கருதி, எவற்றையும் அடிமுதல் முடிவரை ஆய்ந்து பாராதவர் ஆளும் உலகம் என்ன பாடுபடாது?3 என்னும் அவன் கூற்றுக்களை நோக்குமின். போர் மூண்டகாலை சீவகன், படைத்தலைவர்களையும், வீரர்களையும் நோக்கி, நுமது போர்க்கோலம் நோக்கியாம் மகிழ்ந்தோம். ஆ! ஆ! யார்க்கு இது வாய்க்கும்! யாக்கையின் அரும்பயன் வாய்த்தது இங்கு உமக்கே. தாயினுஞ் சிறந்த தயை பூண்டிருந்த நும், தேயமாம் தேவிக்குத் தீவினையிழைக்கத் துணிந்த வஞ்சரை எண்ணுந்தோறும்,1 களங்கமில் நும் முகங் காட்டும் இச்சினத்தைக் கண்டு பாண்டியே கொண்டனள் உவகை. தாம்பிர பன்னியும் அலையெறிந்து ஈதோ ஆர்த்தனள்,2 விந்தம் அடக்கினோன் தந்த நற்றமிழ் மொழி தற்சுதந்தரம் அறும் அற்பர் வாய்ப்படுமோ?3 தொட்டிலிற் கிடந்து, நும் அன்னையர் தாலாட்ட முன்னையோருடைய தீரமும், செய்கையும், வீரமும், பரிவும் விரும்பிக் கனிவுடன் கேட்ட வண்டமிழ் மொழியால் மீட்டு இக்காலம் ‘ஆற்றிலம், ஆண்மையும் உரிமையும் தோற்றனம்' என்போர்யாவர்? அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னிலும் நாட்டு அபிமானம் உள் மூட்டிய சினத்தீ அன்றோ வானோர்க்கு என்றுமே உவப்பு?4 இன்று நீர் சிந்தும் இரத்தம் ஓர் துளியும் நின்று உகம் பலவும் நிகழ்த்துமே,5 போர்க்குறிக் காயமே புகழின் காயம்,6 புண்ணோ அதுவும் புகழின் கண்ணே,7 என்றிவ்வாறு கூறி, அவர்கட்கு மனவெழுச்சியை உண்டாக்குந் திறன் பாராட்டற்குரியது. சீவகன் போரின் முடிபு யாதாகுமோ என்ற ஐயத்தால், மனோன்மணியைப் பலதேவனுக்கு மணஞ் செய்வித்து முனிவரிருக்கைக்கு அனுப்பத் துணிந்து அதனை அவருக்கு அறிவிக்க, அவள் செவிக்கு அது காய்ச்சின நாராசம்போல் இருந்ததாயினும், தந்தைக்கு நேர்ந்த துன்பத்தை உன்னி, எவ்வாறேனும் அப்பொழுது அவனைத் தேற்றுவதே கடனெனக் கருதி, தன்பாடு யாதாயினும் தன்னை யடுத்தவர் நலமுற வேண்டும் என்னும் உயரிய எண்ணத்தால் வாணி நடராசனை மணக்கவும், நாராயணன் சிறையினின்று விடுவிக்கப்படவும் கேட்டு அனுமதி பெற்றுக் கொண்டு தந்தையின் கருத்திற்கு இணங்குவாளாயினள். அப்பொழுது வாணி, ‘வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும், பொருந்தினும் பொருந்தீர் ஐயோ இத்தகைப், பெருந்துயர்க்கு எங்ஙனம் இசைந்தனை'8 என்று வருந்தா நிற்புழி, ‘வருந்தலை வாணி, என் மனமாரவே இசைந்தேன் மெய்ம்மை, தீதற இன்பந் துய்ப்ப நீ எண்ணில், ஈதல அதற்காம் உலகம், எனக்கெனக்கு என்றெழும் இச்சையாதிகளான மாசுகள் அனைத்தையும் தேய்த்து மாற்றி ஒளியேற்றி உயிரினை மண்ணிய மணியாப் பண்ணிட என்றே, வைத்த இக் கடிய வாழ்க்கையாம் சாணையைப், பைத்த பூஞ்சேக்கையாப் பாவித்து உறங்க எத்தனிப்பது ஏழைமை யன்றோ? இந்தச் சுகவிருப்பே நம்மைத் தொழும்பு செய்பந்தம், தவமே சுபகரம், தவமாவது என்ன? உடுப்பவை உண்பவை விடுத்து வனத்திலே சென்று ஐந்தீ நாப்பண் உறைதல் முதலியவற்றைத், தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர், தந்தை தாய் ஆதியா வந்ததன் குடும்ப, பந்த பாரத்தினைப் பேணித் தனது சொந்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க்கு எந்த நாளும் சுகம் இசைந்திடக் கடமையின் முந்துகின்றவரே முதல் தவ முனிவர்' என்று கூறும் மனோன்மணியின் மொழிகள் பேரறிவும் கடமை உணர்ச்சியும் பொருந்தியனவாக உள்ளமை காண்க. இனி, சமயநெறியிலே ஒன்றிரண்டு நோக்குவோம். நிட்டாபரர், கருணாகரர் என்பவர்கள் சுந்தர முனிவருடைய இரண்டு சீடர்கள், இவர்களை முறையே வேதாந்தியாகவும் சித்தாந்தியாகவும் கொள்ளலாம். போர் மூண்டதனை அறிந்தபொழுது கருணாகரர் பரிவுற்று வருந்துகிறார். அதுகண்டு நிட்டாபரர் கூறுவதும், அதற்கு மாறாகக் கருணாகரர் கூறுவதும் வேதாந்த சித்தாந்த உண்மைகளைத் திரட்டிக் கூறும் இரு சொற்பொழிவுகளாக உள்ளன. அவற்றை மிகவும் சுருக்கிக் கூறின், பல்லாயிரங் கோடி அண்டங்களும் மாயை என்னும் மாகடலுள் மொக்குள் போல் அடிக்கடி தோன்றியழியும் என்பதும், அம்மாயைதான் பரம்பொருட்கு எதிரில் சூனியமாம் என்பதும், உலக நிகழ்ச்சிகளை யாராலும் மாற்றவியலாதென்பதும், ஏனோர் துன்புறுவதைக் கண்டு வருந்து வதால் மாயை நம்மையும் பீடிக்கும் என்பதும், உலக சம்பந்தமான எண்ணத்தை விடுத்து உலகை மறந்திருப்பதால் உலகம் மறைய, உள்ளம் இறந்து உண்மை ஞானம் உதிக்கும் என்பதும், அப்பொழுது சச்சிதானந்த சொரூபம் விளங்கும் என்பதும் நிட்டாபரர் கருத்தாகும். அண்டகோடிகளெல்லாம் ஆண்டவனின் அருள் வெளிக்குள்ளே தங்குகின்றன. அன்பினால் ஒன்றொடொன்று இயைபுற்று விளங்கும். இவ்வுலகம் இறைவனது அருளைப் பயிற்றிடும் பள்ளியேயாகும். உலகில் எல்லாப் பொருளையும் தாங்குவது அருளே. அவ்வருளையே நினைந்து தானெனல் மறந்து உள்ளம் நெக்கு நெக்குருகி நிற்பவர் பிறர்க்காகவே இராப்பகல் உழைப்பர். ஒரு பயன் கருதார். அகிலமும் தாங்கும் அருளில் ஓர் அங்கமாச் சகலமுஞ் செய்வர். அதுவே அவர் சமாதி. எங்கெலாம் துக்கங் காணினும் அங்கெலாம் அங்கம் கரைய நின்று அரற்றி, 'ஐயோ, எம்மையுங் காத்த இன்னருள் இவரையும் செம்மையிற் காக்க' என மொழி குளறி அழுது வேண்டுவதேயன்றி விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே என்பது கருணாகரர் கருத்தாகும் சுந்தரமுனிவர் வந்தபின், இவர்கள் உரையாடலை அறிந்து, 'அமையும் உங்கட்கு அவரவர் நிலையே' என ஒரு சொல்லால் அவர்களைத் தெருட்டுவது அருட்குரவராகிய அவருக்கு இயைந்ததே. இந்நூல் முழுவதும் தத்துவப் பொருள்களே உள்ளுறையாகக் கொண்டு இருப்பதென்று முன்பே சொன்னோம். சீவகனைக் குடிலன் தன்வயப்படுத்தி ஆட்டுவிக்குஞ் செயலனைத்தும் சீவான்மாவை மாயை ஆட்டுவிப்பதேயாகும். அருட்குரவருடைய உபதேச மொழிகளையும் நம்பாமற் செய்துவிடுகிற மாயையின் வல்லமையை என்னென்பது. ‘ஆறுகோடி மாயா சக்திகள், வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின'1 என மணிவாசகப் பெருமானும் கூறியுள்ளாரன்றோ? எனினும், ஆண்டவன் அருட்சத்தியானது முடிவில் மாயையின் ஆற்றலை அழித்து, உயிரின் தற்போதத்தைக் கரைத்து அதனைத் தன் மயமாக்கிக் கொள்ளுமென்பது இந்நூலின் முடிபொருளாதல் காண்கின்றோம். நாடகப் பாத்திரங்களின் பெயர்களையும், குணம் செயல் முதலிய வற்றையும் ஆசிரியர் தாம் வகுத்துக்கொண்ட உட்பொருள் தொனிக்குமாறு கூறியிருப்பது வியப்பிற்குரியது. நடராசனைக் குறித்துச் சீவகன் முதலியோர் உரையாடுமிடத்தே, 'சுத்தமே பித்தன், சொல்லுக்கு அடங்கான், தனியே உரைப்பன், தனியே சிரிப்பன், எங்கேனும் ஒரு பூ, இலை, கனி அகப்படின், அங்கங்கு அதனையே நோக்கி நோக்கித் தங்கா மகிழ்ச்சியில் தலை தடுமாறுவான்; நின்றால் நின்றபடியே அன்றி இருக்கினும் இருப்பன் எண்ணிலாக்காலம். சிரிக்கினும் விழிக்கினும் நலமிலை தீதே', என்று புகழாப் புகழ்ச்சியாகக் கூறியிருப்பது காண்க. இந்நாடகத்திலே மனோன்மணியின் விருப்பப்படி வாணி யாழிலிட்டுப் பாடும் இசைப் பாட்டுக்களின் தொகுதி ஒரு வரலாறாகச் சிவகாமி சரிதம் என்னும் பெயருடன் திகழ்கின்றது. வெண்செந்துறையில் ஐம்பதுகண்ணிகள் அடங்கிய இப்பகுதி, மிக்க சந்த நலமும் பொருட் சிறப்புமுடையதாய்க் கற்போர்க்குக் கழிபேரின்பம் விளைப்பதாகும். பரிபாகமுற்ற உயிரை இறைவன் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் முறைமையே இதிலும் உருவகமாகக் கூறப்பெற்றுள்ளது. இனி, மணவறையில் மனோன்மணி மாலையிடுதற்கு நிற்கும் பொழுது சீவகன் விருப்பப்படி வாணிபாடும் இனிய பாட்டில் இரண்டு கூறி இவ்வுரையை முடிப்போம். " நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த வொருகரிமுன் ஓர் முறையுன் பெயர்விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர் ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான் அழைப்பதற்குன் பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ."1 " மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதுலிங்கக் குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர் வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன் நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே.2 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் தமிழாராய்ச்சி இதழ்களில் வெளிவந்த விவரம் தலைமைப் பேருரைகள் வ. கட்டுரையின் கட்டுரை வெளிவந்த தொகுதி இதழ் கட்டுரை வெளிவந்த எண் பெயர் இதழின் பெயர் எண் எண் ஆண்டும் திங்களும் 1. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் 21 ஆம் ஆண்டு விழாத் தலைமைப் பேருரை தமிழ்ப் பொழில் துணர் - 8 மலர் - 3 1932 - சூன் - சூலை 2. துறையூர், தமிழ்ப் புலவர் மாநாட்டு வரவேற்புரை தமிழ்ப் பொழில் துணர் - 8 மலர் - 4 1932 - சூலை - ஆகஸ்ட்டு 3. தஞ்சையில் நடைபெற்ற சைவர் 1934 - சூன் - சூலை ஆகஸ்டு மாநாட்டுத் தலைமைப் பேருரை செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 12 பரல் - 6,7,8 4. குழித்தலை, கம்பர் செந்தமிழ்ச் சங்கத்தின் 11 ஆம் ஆண்டு விழாத் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 14 பரல் - 9 1936 - செப்டம்பர் தலைமைப் பேருரை 5. தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 17 பரல் - 3 1939 - மார்ச்சு 12 ஆம் ஆண்டு விழாத் தலைமைப் பேருரை 6. சொல்லின் செல்வர் தமிழ்ப்பொழில் துணர் - 15 மலர் - 7 1940 - அக்டோபர் -நவம்பர் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 20 பரல் - 4 1943 - ஏப்பிரல் 7. தமிழ்நாட்டின் திருமடங்களும், தமிழ்ப்பொழில் துணர் - 15 மலர் - 11 1940 - பிப்பிரவரி - மார்ச்சு திரு. ஞானியார் திருமடமும் வானொலிச் சொற்பொழிவுகள் 8. முடங்கல் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 3 பரல் - 9, 10 1925 - செப்டம்பர் -அக்டோபர் 9. கல்வி தமிழ்ப்பொழில் துணர் - 2 மலர் - 9 1926 - டிசம்பர் துணர் - 2 மலர் - 10 1927 - சனவரி - பிப்பிரவரி 10. வள்ளுவர் வாய்மொழி செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 5 பரல் - 2 1927 - பிப்பிரவரி 11. சுந்தரர் செந்தமிழ் தமிழ்ப்பொழில் துணர் - 15 மலர் - 12 1940 - மாாச்சு -ஏப்பிரல் துணர் - 16 மலர் - 1 ஏப்பிரல் - மே 12. அறிவுடை நம்பி செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 17 பரல் - 1 1939 - சனவரி 13. தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 17 பரல் - 4 1939 - ஏப்பிரல் இசைப்பகுதிகள் தமிழ்ப்பொழில் சிலம்பு - 5 மலர் - 3 1939 - சூன் - சூலை 14. உக்கிரப் பெருவழுதி செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 17 பரல் - 8 1939 - ஆகஸ்ட் 15. சோகரஸம் (அவலச் சுவை) செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 17 பரல் - 9 1939 - செப்டம்பர் 16. சிருங்காரம் ரஸம் ( இன்பச் சுவை) செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 17 பரல் - 10 1939 - அக்டோபர் 17. வீரச் சுவை செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 18 பரல் - 1 1940 - சனவரி 18. நமது தாய்மொழி தமிழ்ப்பொழில் துணர் - 17 மலர் - 14 1941 - சூலை - ஆகஸ்ட்டு செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 20 பரல் - 10 1933 - அக்டோபர் 19. கலித்தொகை தமிழ்ப்பொழில் துணர் - 18 மலர் - 7 1942 - அக்டோபர் - நவம்பர் 20. மனோன்மணீயம் தமிழ்ப்பொழில் துணர் - 18 மலர் - 12 1943 - மார்ச்சு - ஏப்பிரல் வரலாற்றுக் கட்டுரைகள் 1. கண்ணகி வரலாறு நில மடந்தைக்கு நெற்றியிலிட்ட திலகம்போலும் நற்றமிழ் வரைப்பில், ‘நாடெல்லாம் நீர்நாடு தனை யொவ்வா நலமெல்லாம்' என்று தெய்வத் தன்மையுடைய பெரியோராற் புகழ்ந்துரைக்கப்பட்ட சோழநாட்டின்கண், சோழ மன்னர்கள் முடிசூடி அரசு வீற்றிருக்கும் தலை நகரங்களுள் காவிரிப் பூம்பட்டினம் என்பது ஒன்று; அது காவிரி கடலொடு கலக்குமிடத்தில் உள்ளது; மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்தது; அதற்குப் புகார் என்றும் ஒரு பெயருண்டு. அப்பதியிலே வணிகர் குலத்தில் ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முன்பு வண்மையிற் சிறந்த மாநாய்கன் என்பான் ஒருவன் இருந்தான். அவன் மகள் கண்ணகி யென்பாள், திருமகளின் மிக்க பொற்பும், அருந்ததியின் மிக்க கற்பும் உடையவள். அக்காலத்து அப்பதியில் அக்குலத்திலே பெருஞ்செல்வமும் பெருங் கொடையும் உடையவனாயிருந்த மாசாத்துவான் என்பவன் மகன் கோவலன் என்னும் பெயருடையான்; அழகாலும் இளமையாலும் அவனைச் செவ்வேள் என்று பலரும் பாராட்டுவர். அவ்விருவருடைய பெற்றோர்களும் அவர்களுடைய மணக்கோலத்தைக் காண விரும்பினர்; பெருஞ்சிறப்புடன் இருவர்க்கும் மன்றல் நடந்தது. கோவலன் கண்ணகியுடன் கூடி இன்பந் துய்த்து. " மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே யென்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ யாழிடைப் பிறவா இசையே யென்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை". என்று இங்ஙனமாக அவளுடைய நலங்களைப் பாராட்டிக் களிப்புற்றிருந்தான். இருக்கும் நாளிலே, கோவலன் தாயாகிய பெருமனைக்கிழத்தி யென்பவள். கோவலனும் கண்ணகியும் இல்வாழ்க்கையைச் செவ்விதாக நடத்தி உயர்ச்சி பெற்று விளங்கு தலைக் காண விரும்பி, வேறொரு மாளிகையில் இல்லறம் நடத்துதற்கு வேண்டும் பொருள்களை நிரப்பி, ஏவல் செய்வோரையும் திரளாக ஏற்படுத்தி, அவர்களை அதில் இருக்கச் செய்தனள். அவர்களும் அதிலிருந்து அன்பும் இன்சொல்லும் முதலியன உடையராய், விருந்தோம்பல் முதலிய அறங்களைச் செய்து இல்வாழ்க்கையை நடத்தி வருவாராயினர்; இவ்வாறு சில ஆண்டுகள் சென்றன. இங்ஙனம் நிகழ்ந்துவருங்கால், மிக்க அழகும், ஆடல் பாடல்களில் மேம்பட்ட தேர்ச்சியும் உடைய மாதவியென்னும் நாடகக் கணிகைபால் கோவலன் விருப்பஞ் சென்றது. செல்லவே, உள்ள பல்வகைப் பொருள்களையும் நாடோறும் அவட்குக் கொடுத்து, தன் மனைவாழ்க்கையை மறந்து, அவளுடன் மருவி மகிழ்ந்திருப்பானாயினன். கண்ணகி தன் கணவனது பிரிவுக்கு வருந்தினளாயினும், அவ்வருத்தத்தைச் சிறிதும் வெளிப்படுத் தாமலும், கோவலனை வெறுத்தலில்லாமலும் ஒழுகிவந்தாள். அக்காலத்தில், சோழமன்னர்களால் ஆண்டுதோறும் இந்திரனுக்குச் செய்யப்படும் இந்திர விழாவானது நடைபெற்றது. விழாவின் முடிவில் நிறைமதி நாளில் அந்நகரத்து ஆடவரும் மகளிரும் வழக்கம்போலக் கடலாடச் சென்றனர். மாதவியும் கோவலனுடன் கடற்கரையை அடைந்தாள். அடைந்து, தாழை வேலியின் நடுவே புன்னை மர நிழலில் புதுமணற் பரப்பிலே சித்திரத் திரையைச் சுற்றிலும் வளைத்து, விதானித்து அமைத்த தந்தக் கட்டிலின்மீது கோவலனுடன் சேர அமர்ந்து, தான் பாடுதற்கேற்பச் சமைத்த யாழை அவன் கையில் நீட்டினள். அவன் அதனை வாங்கிப் பலவகை வரிப் பாட்டுக்களைப் பாடி அதனை வாசித்தான். அவன் பாடியவற்றுள், ‘ திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே இருகய லிணைவிழியே யெனையிடர்செய்தவையே’ என்பது. இங்ஙனம் அவன் பாடியவெல்லாம் அவனுக்கு வேறு மகளிர்பால் விருப்பமுண்டென்று கருதக்கூடியவாறு அகப் பொருட்சுவை தழுவி யனவா யிருந்தமையின், மாதவியானவள், 'இவன் வேறு குறிப்புடையன்' என்றெண்ணிப் புலந்து, அவன் கையிலுள்ள யாழை வாங்கி, தான் வேறு குறிப்பில்லாத வளாயினும் அக்குறிப்புடையாள்போல் அகப்பொருட்சுவை தழுவிய பலவகை வரிப்பாட்டுக்களைப் பாடி அதனை வாசித்தாள். அதனைக் கேட்ட கோவலன், ‘வேறொருவன்மேற் காதல்கொண்டு இவள் பாடினள்' என்றெண்ணி, ஊழ்வயத்தால் அவள் மேல் வெறுப்புற்று விடுத்துப் போயினன். மாதவியும் மிக்க வருத்த மெய்திய மனத்தினளாய்ப் பண்டியிலேறித் தன் மனையை அடைந்து, வானை யளாவிய மேனிலையிலே வேனிற் பருவத் திற்குரிய நிலா முற்றத்தை யெய்தி, வீணையைக் கையிலேந்தி மிடற்றாற் பாடுதலுற்று, அது மயங் கினமையின், பின் வீணையை வாசிக்க அதுவும் மயங்கிற்று. அப்பொழுது மாதவி கோவலனுக்குத் திருமுகம் விடுக்கும் கருத்தினளாகி, தான் அணிந்திருந்த சண்பகம் முதலியவற்றால் நெருங்கத் தொடுத்த மாலையின் இடையேயுள்ள தாழம்பூவின் வெள்ளிய தோட்டிலே, அதற்கு அயலதாகிய பித்திகையின் முகைகொண்டு செம்பஞ்சிக் குழம்பிலே தோய்த்து ‘இப்பொழுது இளவேனில் என்பான் இளவரசாளன்; அவன் பிரிந்துறைவார்க்கு நலம்புரியான்; அவனே யன்றி, அந்திப் பொழுதாகிய யானையின் பிடரிற்றோன்றிய திங்கட் செல்வனும் செவ்வியனல்லன்; இதனை அறிவீராக' என்று தன் மழலைச் சொல்லாற் பேசிப்பேசி எழுதி, அதனை வசந்தமாலை என்னுந் தோழி கையிற்கொடுத்து, ‘இதிலுள்ள வாசகங்களை யெல்லாம் கோவலற்கு ஏற்பச் சொல்லி, அழைத்து வருக' என்று கூறிவிடுத் தாள். அவள் சென்று அதனைக் கோவலற்கு அளித்து, அவன் அத்திருமுகத்தை மறுக்கவே வாட்டத்துடன் விரைந்து சென்று அதனை மாதவிக்கு உரைத்தாள். மாதவி ‘மாலை வாராராயினும் காலையில் அவரைக் காண்போம்' என்று சொல்லி, மலர் அமளியின் கண்ணே செயலற்ற நெஞ்சமுடன் வீழ்ந்து, இமை பொருந்தாது கிடந்தனள். இஃது இங்ஙனமாக, கண்ணகி தீக்கனவு கண்டு, அக்கனவின் திறங்களைத் தன் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தி யென்பாளுக்குக் கூற, அவள், ‘காவிரி கடலொடு கலக்குமிடத்தில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் என்னும் பொய்கைகளில் முழுகிக் காமவேள் கோட்டத்தை வணங்கின மகளிர் இம்மைக்கண் வாழ்நாள் முழுதும் கணவருடன் கூடி இன்பந் துய்த்து மறுமையிலும் போகபூமியிற் போய்ப் பிறந்து அவருடன் இன்பம் நுகர்வர்; ஆகலின், நாமும் ஒருநாள் சென்று நீராடக்கடவோம்' என்றுரைக்கக் கேட்டு, ‘அங்ஙனம் தீர்த்த மாடித் தெய்வந்தொழுதல் எங்கட்கு இயல்பன்று', என்று சொல்லியிருந்தாள். அவ்வாறிருக்கும் பொழுது, கோவலன் அங்கு வந்து மனையினுள்ளே சென்று, கண்ணகியின் வாடிய மேனியைக் கண்டான். ‘பொய்யை மெய்யாகக் காட்டியொழுகும் பரத்தையை மருவி, என் முன்னோர் தேடிவைத்த பொருட் குவியல்களை யெல்லாம் தொலைத்து வறுமையுற்றேன்; அஃது எனக்கு மிக்க நாணைத் தருகின்றது' என்றான். கண்ணகி, மாதவிக்குக் கொடுத்தற்குப் பொருளின்மையால் இங்ஙனம் தளர்ந்து சொன்னானென்று கருதி, மலர்ந்த முகத்துடன், ‘அடியேனிடத்தில் இன்னும் இரண்டு சிலம்புகள் உள்ளன; அவற்றைக் கைக்கொண்டருள்க' என்று சொன்னாள். அது கேட்ட கோவலன், ‘மதுரையை அடைந்து இச்சிலம்பை முதலாகக் கொண்டு வாணிகஞ் செய்து இழந்த பொருள்களைத் தேடுதற்கு எண்ணினேன்; நீயும் உடன் வருக' என்றான். கண்ணகியும் அதற்கு இசைந்தனள். இருவரும் இரவின் கடையாமத்தில் ஒருவரும் அறியாவகை புறப்பட்டு நகர் வாயிலைக் கடந்து, காவிரியின் வடகரை வழியாக மேற்கு நோக்கிச் சென்றனர். ஒரு காததூரஞ் சென்றதும் மெல்லியலாகிய கண்ணகி அடிவருந்தி இளைப்புற்று, ‘மதுரை மூதூர் யாது? என வினவினள். அது கேட்டலும் கோவலன், 'நங்காய் மதுரை நம் நாட்டிற்கு அப்பால் ஆறைந்து காதவளவில் உள்ளது; இனி நணித்தே,' என்று கூறி வருத்தத்தால் நக்கு, அவளுடன் சென்று, அங்கே ஒரு பூஞ்சோலையில் தவஞ்செய்து கொண்டிருந்த ஆருகத சமயத் தவமுதியாளாகிய கவுந்தியைக் கண்டு அடிபணிந்து, தாம் மதுரைக்குச் செல்லுதலைத் தெரிவித் தான். கவுந்தியடிகள் 'மதுரையிலுள்ள பெரியோர்கள்பால் அறவுரை கேட்கும் கருத்துடையேன் ஆகலின், யான் மதுரைக்குச் செல்வேன்; நீவிரும் உடன் வருக,' என்ன, மூவரும் வழிக்கொண்டு சென்றனர். செல்லும் வழியில், காவிரியின் நீர் வாய்த்தலைக் கிட்ட கதவின் மீதெழுந்து குதிக்கும் ஓசையும், செந்நெல்லும் கரும்புஞ் சூழ்ந்த பழனங்களிலே தாமரைக் காட்டில், ‘ கம்புட் கோழியும் கனை குரல் நாரையும் செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும் கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்’ என்னும் பறவைகள் 'வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்' பல்வேறு வகைபடக் கூடியிருந்து ஒலிக்கும் ஓசையும், பொன்னேர் பூட்டி நின்றோரின் ஏர்மங்கலப் பாட்டோசையும், நாற்றை நடுகின்ற கடைசியரின் குரவைப் பாட்டோசையும், களத்தின்கண் கிணைப் பொருநரின் முழவோசையும் முதலிய ஓசைகள் அவர்கட்கு இன்பத்தை விளைத்து நடத்தலாலுண்டாம் வருத்தத்தை மாற்றின. இங்ஙனம் நாளைக்கொரு காதமாக நடந்துசென்று, ஒருநாள் ஆற்றிடைக்குறையை அடைந்து அங்கு வந்த அறமுரைக்கும் சாரணரை வணங்கி, ஓடமேறிக் காவிரியின் தென்கரை யெய்தி ஒரு பொழிலின்கண் இருந்தனர். அப்பொழுது அங்கு வந்த பரத்தை யொருத்தியும் தூர்த்தனொருவனும் கோவலன் கண்ணகி இருவரையும் இகழ்ந்துரைக்க, அது பொறாத கவுந்தியடிகள் நரி வடிவமாகும்படி அவர்களைச் சபித்து, அவர்கள் அவ்வாறானதைக் கோவலனும் கண்ணகியும் அறிந்து இரக்கமுற்று அவர்கட்கு உய்திக்காலம் உரைத்தருளுமாறு வேண்டிக் கொண்டமையால், 'இவர் பன்னிரு திங்கள் நோயுழந்த பின் முன்னை யுருவம் பெறுக' எனச்சாப விடை செய்தார். பின் மூவரும் உறையூரை அடைந்தனர். அடைந்தவர் அன்று அந்நகரிற் றங்கி, மறுநாள் வைகறையிற் புறப்பட்டுச் சிறிதுதூரஞ் சென்று. அங்கு வந்த ஓர் அந்தணனால் மதுரைக்கு வழி தெரிந்துகொண்டு அப்பாற் சென்றனர். செல்லும் வழியிலே ஐயை கோட்டம் ஒன்றிருந்தது. அதிற் சென்று தங்கினர். அங்கே, சாலினி யென்னும் தேவராட்டியானவள் தெய்வ மேறப்பெற்று, வேட்டுவர்க்கு வெற்றியும் வளமும் சுருங்கினமையும் அது தீர்தற்பொருட்டுக் கொற்றவைக்குப் பரவுக் கடன் கொடுக்க வேண்டு மென்பதுங் கூறிவருமிடையே, அங்கிருந்த கண்ணகியை நோக்கி, ‘ இவளோ, கொங்கச் செல்வி குடமலையாட்டி தென்றமிழ்ப் பாவை செய்தவக் கொழுந்து’ என்றுரைத்தாள். மேல் நிகழவிருக்குஞ் செய்தியை உட்கொண்டு கூறியவிதனைக் கண்ணகி முதலானோர் அப்பொழுது உணரக் கூடவில்லை. ‘ அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி மாலவற் கிளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாட் டடக்கைப் பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை’ ஆகிய கொற்றவையைப் பரவிய பாட்டுக்களில், ‘ விண்ணோ ரமுதுண்டுஞ் சாவ வொருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்’ என்றும், ‘ மருதி னடந்துநின் மாமன்செய் வஞ்ச உருளுஞ் சகட முதைத்தருள் செய்குவாய்’ என்றும் சிவபிரானும், திருமாலும் செய்த செயலெல்லாம் அவளால் நிகழ்ந்தனவாகக் கூறப்பட்டுள. சாலினியின் கோலமும் கூத்தும் முடிந்தன. கண்ணகி வெயிலின் வெம்மை பொறாளென்றும், பாண்டியனுடைய செங்கோல் ஆட்சியில் எவ்வகை ஏதப்பாடும் நிகழாவாகலின், இரவிற் செல்லுதல் தக்கதென்றுங் கோவலன் கூறக் கவுந்தியடிகளும் அதற்கிசைந்தமையின், மூவரும் இரவில் நிலவு தோன்றியவுடன் புறப்பட்டுச் சென்று, கோழி கூப்பிடும் வைகறைப் பொழுதில் ஒரு பார்ப்பனச் சேரியின் பக்கத்துள்ள தோர் கோயிலை யடைந்தனர். கோவலன் ஓர் ஒதுக்கமாகிய அடைப்பிடத்தில் கண்ணகியையும் கவுந்தியடிகளையும் இருக்கச் செய்து, தான் காலைக்கடன் கழித்தற்பொருட்டு, நீண்ட வழியிலுள்ள ஒரு நீர் நிலைக்குச் சென்றான். அப்பொழுது, மாதவியால் அனுப்பப்பட்டு வந்த கௌசிகன் என்னும் மறையவன் அங்கே கோவலனைக் கண்டு, அவன் தந்தை தாயாராகிய இருநிதிக் கிழவனும் பெருமனைக்கிழத்தியும் அருமணி யிழந்த நாகம் போன்று வருந்தி யொடுங்கியதும், உயிரை யிழந்த உடம்புபோல் சுற்றமெல்லாம் துயர்க்கடலில் மூழ்கியதும், ஏவலாளர்கள் எல்லாத் திசையிலும் தேடச் சென்றதும், இராமன் பிரிந்த அயோத்தியர் போலப் புகாரிலுள்ளார் அனைவரும் வருத்த முற்றதும், மாதவி யானவள் தன் திருமுகத்தை மறுத்துக் கூறிய மாற்றத்தை வசந்தமாலை சொல்லக் கேட்டுப் பசந்த மேனியளாய் வருந்திப் படுக்கையில் வீழ்ந்ததும், அவளுற்ற துயரினைக் கேட்டுத் தான் அங்கே சென்றிருந்ததும், அவள் ஒரு முடங்கல் வரைந்து 'இதனை என் கண்மணி யனையாற்குக் காட்டுக' என்று கூறி அளித்ததும், அதனைத் தான் ஏற்றுப் பல நாடுகளுந் தேடிக் காணாமல் வந்ததும் ஆகிய செய்திகளைக் கூறி மாதவியின் ஓலையை நீட்டினான். அவ்வோலையோ, மடிப்புறத்து மண்ணின் மேல் மாதவியின் கூந்தலால் ஒற்றப்பட்ட இலச்சினையுடன் கூடியிருந்தது. அஃது அவளுடன் கூடியிருந்த காலத்தே உரைத்த நெய்யின் வாசத்தை அவனுக்கு உணர்த்திற்று; ஆதலால், விரைவில் அதனைப் பிரிக்க மன மிலனாய்ப் பின்பு பிரித்து வாசித்தான். 'அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்' என்பது ஓலையின் முகவரியாக இருந்தது; பின் எழுதப்பெற்ற வாசகம், ‘ வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோ(டு) இரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி’ என்பது. இதன் பொருளெல்லாம் உணர்ந்தான் கோவலன்; மனங் குழைந்தான்; மாதவி பிழையிலளெனத் தெளிந்து தளர்ச்சி யொழிந்தான். பின், அவ்வோலையே தன் தந்தைக்குத் தான் அனுப்புதற் கேற்றவாறு உரையும் பொருளும் சிறந்து விளங்குதல் கண்டான்; 'மறையோனே, மாசில் குரவர் மலரடி தொழுதேன் எனச் சொல்லி, என் தந்தைக்கு இவ்வோலையைக் காட்டு,' என்று கூறி அதனைக் கொடுத்து,' என் பொருட்டாக அவரெய்தும் நடுக்கத்தைப் போக்குதற்கு விரைந்து செல்வாய்,' எனக் கௌசிகனை விடுத்தான். விடுத்தபின், கண்ணகியும் கவுந்தியடிகளும் இருக்கு மிடத்தை யடைய, மூவரும் புறப்பட்டுச் சென்று இடையிற் சந்தித்த பாணர்களால் வழியினளவு முதலின தெரிந்துகொண்டு, அற்றைநாள் ஓரிடத்திற்றங்கி, முன்போலவே மீட்டும் இரவிலே பெயர்ந்து செல்வாராயினர். செல்லும்பொழுது புலவர் செந்நாவிற் பொருந்திய மதுரைத் தென்றல் வந்து வீசிற்று. சொக்கலிங்கப் பெருமானாகிய முன்னவன் கோயிலிலும் பாண்டி மன்னவன் கோயிலிலும் காலை முரசொலிக்கும் ஓசையும், மாதவர்கள் காலையில் மந்திரமோதும் இசையும், யானை முழக்கமும், குதிரையின் ஆர்ப்பும் முதலிய ஒலியெல்லாம் கடலொலிபோல எதிர்கொண்டன. கோவலன் முதலிய மூவரும், ‘ குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக வோங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர்’ விரிந்தவை மேலே யுடுத்த பூந்துகிலாகவும், ‘ குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் பிடவமும் மயிலையும்’ பின்னி நெருங்கியவை மேகலையாகவும், முருக்கிதழும் முல்லையும் முதலியன செவ்வாயும் வெண்ணகையும் முதலியவாகவும் பொருந்தப்பெற்ற ‘வையை யென்ற பொய்யாக் குலக்கொடி'யின் மருங்கே வந்து தொழுது, ‘பரிமுக வம்பியும் கரிமுகவம்பியும், அரிமுகவம்பியும்' என்னும் ஓடங்களிலேறிப் பலருஞ் செல்லா நிற்க, தாம் அவற்றில் ஏறிச் செல்லாது மரப்புணையிற் சென்று தென்கரையடைந்து, வலமாகப்போந்து, மதிலின்புறத்தே கீழ்த் திசை வாயிற்கு அயலதாகிய முனிவர் இருக்கையொன்றில் வந்து தங்கினர். மறுநாள் வைகறையில் சிவபிரான், திருமால், பலதேவன், முருகவேள் ஆகிய இக்கடவுளர் கோயில்களிலும், அறவோர் பள்ளியிலும் அரசன் கோயிலிலும் காலை முரசம் சங்குடன் முழங்கா நிற்க, கோவலன் எழுந்து கவுந்தியடிகளை யடைந்து தொழுது தங்கட்கு நேர்ந்த துன்பங்களைக் கூறி வருந்தி, 'யான் சென்று இந்நகரிலுள்ள வணிகர்க்கு எனது நிலைமையை உணர்த்தி வரும் வரையில் இவள் நுமது பாதக் காப்பினளாகலின், இவட்கொரு துன்பமுண்டாதல் இல்லையே,' என்றனன். என்றலும், கவுந்தியடிகள், அறஞ் செய்யாதார் எய்தும் துன்ப முதலிய வற்றையும், பண்டு இராமனும் நளனும் தம் காதலியரைப் பிரிந்து வருந்திய வரலாறு' களையும், அவற்றின் காரணத்தையும் கோவலற்குக் கூறி, 'நீ நின் காதலியுடன் பிரியாவாழ்க்கை பெற்றனையாகலின் அத்தன்மை யுடையா யல்லை', எனச் சொல்லித் தேற்றி, 'வருந்தாது சென்று வருக' என விடுத்தார். கோவலன் சென்று மதுரையில் பற்பல வீதிகளிலுமுள்ள வளங்களையெல்லாம் கண்டு மகிழ்ச்சியுற்று மீண்டு வந்து, மதுரையின் சிறப்பையும் பாண்டி மன்னவன் கொற்றத்தையும் கவுந்தியடிகட்குக் கூறி, அப்பொழுது அங்கு வந்த தன் பழைய நட்பாளனாகிய மாடலன் என்னும் மறையவனைக் கண்டு அவனுடன் அளவளாவிக் கொண்டிருந்தான். அப்பொழுது, அங்கு வந்த ஆயர் முதுமகளாகிய மாதரியைக் கவுந்தியடிகள் கண்டு, ஆவினைப் பாதுகாக்கும் கோவலர் வாழ்க்கை ஒரு கொடுமையுடைய தன்றென்பது உன்னியும், மாதரியின் முதுமையையும் நல்லொழுக்கத்தையும் உணர்ந்தும், கண்ணகியை அவள்பால் அடைக்கலமாக ஒப்புவிப்பது இழுக்கின்றென எண்ணினார். எண்ணி, மாதரியை விளித்து, 'இம்மடந்தையின் கணவனின் தந்தை பெயரைக் கேட்பின், இந்நகரிலுள்ள இவர் குலத்தினர், அரும்பொருள் பெற்றாரைப்போல மகிழ்ந்து, நல்விருந்தாக எதிர்கொண்டு அழைத்துச் சென்று, இவர்களைத் தங்கள் மனையகத்தே வைத்துக்கொள்வர்; அங்ஙனம் செல்வர் மனையகம் சென்று புகுமளவும், நான் இவளை நினக்கு அடைக் கலமாகத் தருகின்றேன்; இவளுக்குத் தோழியரும் செவிலியரும் நற்றாயும் நீயேயாகி இவளைப் பேணுவாயாக; இவள், முன்பு நிலமகள் கண்டறியாத அடியினையுடையளாயினும், வழி நடக்கும் பொழுது, கதிரின் வெம்மையாற் காதலன் மெய் வருந்தியதென்று நடுங்கி, வாட்டமுற்று, தனது துயரென வேறுகாணாத கற்பின் தகுதி யமைந்தவள்; கற்புக்கடம் பூண்ட இத் தெய்வமல்லது வேறு பொற்புடைத் தெய்வத்தை யாம் கண்டதில்லை யென்றும், பத்தினிப் பெண்டிர் இருந்த நாட்டில் வானம் பொய்யாது, வளஞ் சுருங்காது, அரசர் கொற்றஞ் சிதையாது என்றும் நல்லோர் உரைப்பர்; அன்றியும் தவத்தினர் அடைக்கலம் சிறிதாயினும், பின்பு மிகப் பெரிய இன்பம் பயப்பதாம்' என்று கூறி, கண்ணகியை மாதரிபால் ஒப்புவித்தார். அவள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, கவுந்தியடிகளை வணங்கி விடைபெற்று, கண்ணகியைக் கோவலனுடன் அழைத்துச் சென்று, ஆயர்பாடியிலுள்ள தன் மனையை அடைந்து, அவ்விருவரையும் பூவல் ஊட்டிய புதிய மனையொன்றில் இருக்கச் செய்து, கண்ணகியைப் புதுநீரால் மஞ்சனஞ் செய்வித்து, முகமன் மொழிந்து, தன் மகள் ஐயை என்பவளைக் கண்ணகிக்குத் துணையாக வைத்து, அடிசில் அடுதற்குரிய புதிய கலங்களையும், பலாக்காய், வெள்ளரிக்காய், கொம்மட்டி, மாதுளங்காய், மாங்கனி, வாழைக்கனி, ஆவின் பால், நெய் முதலியவற்றையும் விரையக் கொடுப்பித்தனள். கண்ணகி அவள் அளிப்பித்த பல்வேறு பசுங்காய்களையும் மெல் விரல் சிவப்ப அரிந்து, தன் கைவன்மைக் கேற்றவாறு, கண் சிவப்பவும் முகம் வியர்ப்பவும் கருத்துடன் காதலற்கு உணவாக்கி, வெள்ளியே பனந்தோட்டினால் அழகுபெறப் புனைந்தியற்றிய தவிசின் மேலே தனது செல்வன் வந்திருந்தபின்பு, அவன் அடிமலர் கழுவிய நீரைத் தன் கையாலே தொழுது மாற்றி, புவி மடந்தையின் மயக்கத்தைப் போக்குவாள் போலத் தரையிலே தண்ணீர் தெளித்துத் தடவி மண்டிலமிட்டு, குமரிவாழையின் குருத்தை விரித்து, அதனகத்தே அமுதைப் பெய்து, ‘அடிகள், ஈங்கு அமுது செய்தருளுக,' என்று கூறி, அங்ஙனமே முறையால் அமுதுண்டு இனிதிருந்த கோவலற்குப் பாக்கினையும் அழகிய மெல்லிய வெற்றிலைச் சுருளையும் கொடுத்துக்கொண்டு நின்றனள். கோவலன், கண்ணகியை அருகழைத்து அணைத்து, 'நின் மெல்லிய அடிகள் கற்கள் பொருந்திய காட்டு நெறியில் நடத்தற்கு வன்மையுடையனவோ! நீ இப் பாலைவழியில் வந்ததற் கிரங்கி எம் தாய் தந்தையர் என்ன துன்பமுற்றார்களோ! யாம் இங்ஙனம் துன்ப முற்றது கனவோ! நனவாயின், இதற்குக் காரணமாக முன்பு செய்த தீவினை யாதோ? என்னுள்ளங் கலங்குதலால் யான் ஒன்றும் அறிந்திலேன்; வீணரோடும் விடரோடுங் கூடிப் பிறரைப் புறங்கூறுங் கூட்டத்திற் புகுந்து, நல்லொழுக்கத்தைத் துறந்த தீவினையாளனாகிய எனக்கும். இனி, தீக்கதியன்றி நற்கதி யுண்டாமோ? இருமுது குரவர்க்கும் ஏவல் செய்தலை யொழிந்தேன்; நினக்கும் இடுக்கண் விளைத்தேன்; இக்கூடா வொழுக்கம் தீதெனச் சிறிதும் எண்ணிலேன்; இங்ஙனமாகவும், இங்கு வருவதற்கு ‘எழுக' வென்று நான் கூறியவளவில் நீ மறாது எழுந்தாய்', என்று பலவாறிரங்கிக் கூறினான். இவற்றைக் கேட்ட கண்ணகி, ‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணரை யோம்பலும், துறவோர்க்கு எதிர்தலும், விருந்தினரை ஏற்றுக்கோடலும் என்னும் இவற்றை இழந்திருந்த என்னை, நும் தாய் தந்தையர் கண்டு, நீர் என் முன்பு நில்லாமையால் வந்த வெறுப்பை யான் கரந்தொழுகுதல் அறிந்து, அன்புடன் அருள் கலந்த மொழியால் என் பொறையைப் பாராட்டி, என் பொய்ம்முறுவல் கண்டு, அஃது என் உளத்தே மறைத்த வருத்தத்தையும் கவலையையும் வாய்திறந்து சொல்லுவது போலே யிருந்ததென்று கொண்டு வருந்தும்படியாக நீர் போற்றா வொழுக்கத்தை மேவினீர்; எனினும், நுமது மொழியைச் சிறிதும் தப்பி நடவாத உள்ள வாழ்க்கையை உடையே னாகலின், நும்முடன் வருவதற்கு ஒருப்பட்டெழுந்தேன்' என்று கூற, அவளை நோக்கி, 'சுற்றம் முதலியவற்றை நீங்கி, நாண் முதலிய குணங்களும் கற்புமே பெருந்துணையாக, என்னுடன் வந்து என் தனிமையைத் தீர்த்த, ‘ பொன்னே கொடியே புனைபூங் கோதாய் நாணின் பாவாய் நீணில விளக்கே கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வீ’ இனி, நின் சிலம்புகளுள் ஒன்றைக் கொண்டுபோய் விற்று வருவேன்; வருமளவும் தனிமையால் வருந்துதலை யொழிவாயாக," என்று சொல்லி, காதலியின் மெய்ம் முழுதும் தழுவி, ஒரு சிலம்பை வாங்கிக் கொண்டு, அவள் தனித்திருத்தலைக் கண்டு மனம் வெதும்புதலாலே பெருகிய தன் கண்ணீரை அவள் காணின் வருந்துவா ளென்று மறைத்தவனாகி, அவ்விடத்தை விட்டு அரிதிற் பெயர்ந்து, எதிரே கொல்லேறு பாய வந்ததனைத் தீ நிமித்த மென்று அறியாது சென்று, மதுரையின் ஆவண வீதியினுள்ளே புகுந்தான். அப்பொழுது, உருக்குத் தட்டாரும், பணித்தட்டாரும் ஆகிய நூற்றுவர் தன் பின் வர, முன்னே, அரச வரிசையாகிய சட்டையிட்ட பொற்கொல்ல னொருவன் ஒதுங்கி நடந்து சென்றனன், அவனைக் கோவலன் கண்டு, 'இவன் அரசனாற் சிறப்புப்பெற்ற பொற்கொல்லனாவன்' எனக் கருதி, அவனருகிற் சென்று, 'அரசன் தேவி அணிதற்கு ஏற்றதோர் சிலம்பினை நீ விலைமதிக்கற்பாலையோ? என்று அவனை வினாவி, அவன் தான் வல்லவனாதலைப் பணிவுடன் தெரிவிக்கவே, தான் கொணர்ந்த சிலம்பினை அவனுக்குக் காட்டினன். பொய்த்தொழிலையுடைய அப்பொற்கொல்லன் அச்சிலம்பின் தொழிலருமையை யெல்லாம் புரிந்து நோக்கி, 'இது கோப்பெருந்தேவிக்கல்லது பிறர்க்குப் பொருத்தமுடைய தன்று; இதனை அரசற்கு யான் தெரிவித்து வருமளவும் நீவிர் என் புன்குடிலுக் கருகாகிய இவ்விடத்தில் இருப்பீராக,' என்று கூறி, ஓரிடத்தைக் கோவலனுக்குக் காட்டிச் சென்றான். சென்ற பொற்கொல்லன், முன்பு அரசன் மனைவியின் சிலம்புள் ஒன்றை வஞ்சித்துத் திருடிக்கொண்டவன் ஆதலால், 'யான் முன் கவர்ந்துகொண்ட சிலம்பு என்னிடத் திற்றானே உள்ளதென்று அரசற்கு வெளிப் படுவதன் முன்னே, அதனோடு ஒத்த சிலம்பைக் கொணர்ந்த இப்புதியவனால் என்மீது உண்டாகும் ஐயத்தைப் போக்கிக் கொள்வேன்,' என்று தனக்குள்ளே துணிந்து, அரண்மனையை அடைந்து, தன் தேவியின் ஊடல் தணிந்து இன்புறுவதற்கு வேட்கை மீதூர்ந்து அவள் கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பாண்டியன் நெடுஞ்செழியனைக் கண்டு வணங்கித் துதித்து, 'கன்னக்கோல் முதலியன இல்லாமலே அரண்மனையிலிருந்த சிலம்பைத் திருடியவன் அடியேனுடைய குடிலில் அச்சிலம்புடன் வந்திருக்கிறான்,' என்று கூறினான். கூறலும், அரசன், வினை பலிக்குங் காலமாதலால் யாதும் ஆராய்ச்சியின்றியே, காவலாளரை அழைத்து, 'என் மனைவியின் சிலம்பு இவன் கூறிய கள்வன் கையிடத்ததாயின், அவனைக் கொன்று அச்சிலம்பைக் கொணருதிர்,' என்று கட்டளையிட்டான். பொற்கொல்லன் தன் எண்ணம் பலித்ததென்று அகமகிழ்ந்து, காவலாளருடன் சென்று கோவலனை யடைந்து, 'இவர்கள் அரசன் கட்டளையாற் சிலம்பு காண வந்தவர்கள்', என்று கூறி, அதனை அவர்கட்குக் காட்டுவித்து, அவர்களை வேறாக அழைத்து, அதன் அருமைகளைக் கூறுவான் போன்று அரசன் மனைவியின் சிலம்புடன் ஒப்புமை கூறிக் காட்டி, கோவலன் முகக்குறி முதலிய வற்றை நோக்கி, 'இவன் கொலைப்படுதற்குரிய னல்லன்', என்று கூறிய காவலாளரை இகழ்ந்துரைத்து, 'இவன் கள்வனே' எனப் பல ஏதுக்கள் எடுத்தியம்பி வற்புறுத்தி நின்றான். அப்பொழுது அவர்களுள்ளே கொலையஞ்சா னொருவன் விரைந்து சென்று, கோவலனைத் தன் கைவாளால் எறிந்தான்; நிலமகள் துயர் கூரவும், அரசன் செங்கோல் வளையவும், பண்டைத் தீவினை உருத்து வந்தமையாவ் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தான். இப்பால், கண்ணகியிருந்த இடைச்சேரியில் பல வகையான உற்பாதங்கள் நிகழ்ந்தன. அதனைக் கண்ட மாதரி முதலியோரால் உற்பாத சாந்தியாகத் திருமாலைக் குறித்துக் குரவைக் கூத்து நிகழ்த்தப்பட்டது. அக்கூத்திலே அவர்கள் படர்க்கைப் பரவலாகப் பாடிய பாட்டுக்கள். 1. மூவுலகு மீரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே. 2. பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே. 3. மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே நாராயணா வென்னா நாவென்ன நாவே. என்பன. கூத்தின் முடிவில் மாதரி நீராடுதற் பொருட்டு வையை யாற்றுக்குச் சென்றாள். அப்பொழுது சிலம்பு திருடியவனென்று துணிந்து கோவலனை அரச னேவலாளர் கொன்ற செய்தியை, மதுரையுள் ளிருந்து வந்த ஒருத்தி சொல்லக் கேட்டு, கண்ணகி, பதைபதைத்து இனைந்து ஏங்கி அழுது மூர்ச்சித்துப் பலவாறு புலம்பி, தானும் அவனுடன் இறக்கத் துணிந்து, ஆய்ச்சியர் நடுவே நின்று, சூரியனை நோக்கி, ‘செங்கதிர்ச் செல்வனே! நீ யறிய என் கணவன் கள்வனோ? என்றாள். ‘நின் கணவன் கள்வனல்லன்; அவனைக் கள்வனென்ற இவ்'d2வூரைத் தீயுண்ணும்,' என ஒரு குரல் உண்டாயது. ஆதித்தன் கூறிய அம்மொழியைக் கேட்ட பின்பு, கண்ணகி, அங்கு நில்லாது, மிகுந்த சீற்றத்தோடும் தன்னிடமிருந்த மற்றொரு சிலம்புடனே புறப்பட்டு, கண்டார் நடுங்கும்வகை வீதிவழியே சென்று, அங்குள்ள மகளிரை நோக்கிப் பலவாறு புலம்பி, ‘என் கணவனை முன்போலக் கண்டு அவன் சொல்லும் நல்லுரையைக் கேட்பேன்; அங்ஙனம் கேளேனாயின் என்னை இகழுமின்,' எனச் சூளுரைத்தேகி, வெட்டுண்டு கிடந்த கோவலனைச் சிலர் காட்டக் கண்டு, அளவில்லாத துயரத்தில் ஆழ்ந்து, அவனை முன்னிலைப் படுத்திப் பலவாறாகப் புலம்பி அழுது அவன் உடம்பினைத் தழுவிக் கொண்டனள். அவ்வளவில் அவன் உயிர் பெற்றெழுந்து நின்று, ‘மதிபோன்ற முகம் வாடியதே,' என்று சொல்லித் தன் கையாலே அவள் கண்ணீரை மாற்றி, அவள் இரண்டு கையாலும் தன் பாதங்களைப் பூண்டுகொண்டு வணங்கா நிற்க, ‘நீ இங்கிருக்க,' என்று சொல்லி, அவ்வுடம்பை யொழித்து விட்டு, துறக்கம் புகுதற்குத் தேவர்களோடு கூடிச் சென்றான். இஃது இங்ஙனமாக, பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவி தான் கண்ட தீக் கனாக்களைக் கணவனுக்கு உரைத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது கண்ணகி சினந் தணியாதவளாய் அரண்மனை வாயிலை யடைந்து, வாயில் காப்போனால் தன் வரவை அரசனுக்கறிவித்து, அவன் அநுமதியைப் பெற்று அரசன்முன் சென்று நின்றாள். மன்னவன் அவளை நோக்கி, ‘கண்ணீர் வார்தர எம் முன் வந்து நிற்கும் நீ யார்?' என வினவலும், கண்ணகி, ‘ஆராய்தலில்லாத அரசனே கூறுகின்றேன்; வானுலகத் தாரும் வியக்குமாறு, ஒரு புறாவின் துயரினைப் போக்குதல் கருதித் துலைபுக்க சிபி என்னும் வேந்தனும், கன்றினை யிழந்த ஆவின் கண்ணினின் றொழுகிய நீர் தன் நெஞ்சினைச் சுட, ஆன்கன்றுக் கீடாகத் தன் அருமந்த மைந்தனைத் தேர்க்காலில் வைத்தூர்ந்து முறைசெய்த மனு என்னும் வேந்தனும் செங்கோல் செலுத்திய பெரும்புகழ் வாய்ந்த புகார் என்பது என் பதியாகும்; அப்பதியிலே பழிப்பில்லாத சிறப்பினையுடைய பெருங்குடியிற் றோன்றி மாசாத்துவான் என்னும் வணிகன் மகனாகி, வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப நின்னகரடைந்து, என் சிலம்பினை விற்க வந்து நின்னாற் கொலைக்களப்பட்ட கோவலனுக்கு மனைவியாவேன் யான்; என் பெயர் கண்ணகி என்பது,' என்று கூறினாள். கூற, அரசன், கள்வனைக் கோறல் கடுங்கோலன்று; வெள்வேற் கொற்றங் காண்,' என்றியம்பினன். கண்ணகி, தன் கணவன் கள்வனல்லனென்று தெரிவித்தற் பொருட்டு, தன் சிலம்பி னுள்ளிருக்கும் பரல் மாணிக்கம் என்றாள். அரசன் தன் தேவி சிலம்பின் பரல் முத்தென்று சொல்லி, கோவலனிடமிருந்து பெற்ற சிலம்பை வருவித்து வைப்ப, கண்ணகி அதனை யுடைத்தாள். உடைக்கவே அதனுள்ளிருந்த மாணிக்கப் பரல் அரசன் வாயடியிற் சென்று தெறித்தது. அதுகண்டு அரசன் தாழ்ந்த குடையனாய்த் தளர்ந்த செங்கோலனாய் நடுநடுங்கி, 'இழிந்த பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட கொடுங்கோலனாகிய யானோ அரசன்! யானே கள்வன்! ஐயோ! மிகப் புகழ்பெற்ற இந்த அருமந்த குலம் என்னாற் பழியடைந்ததே! என் ஆயுள் இன்றே அழியக்கடவது என்று சொல்லித் துயரினால் மங்கித்தானிருந்த அரசுகட்டிலிற் றானே வீழ்ந்து உயிர் துறந்தான். அரசன் துஞ்சியதறிந்தவுடன் துன்பமிகுதியால் கோப்பெருந்தேவியும் உயிர் நீத்தாள். இங்ஙனம், கண்ணகி தன் கணவன் சிலம்பு திருடியவனல்லன் என்பதைப் பாண்டியன் முன் வழக்காடி மெய்ப்பித்தும், முன்கொண்ட வெகுளி தணியாளாய், 'யான் பத்தினி யென்பது உண்மையாயின் இவ்'d2வூரை அழிப்பேன்,' என்று சபதம் செய்து கொண்டு, அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, மதுரையை மும்முறை வலம் வந்து தன் இடக் கொங்கையைக் கையாலே திருகியெடுத்து வீதியினுள்ளே சுழற்றி யெறிந்தாள். அப்பொழுதே அந்நகரில் அவள் சொல்லிய வண்ணம் தீப்பற்றிக் கொண்டு பல இடங்களையும் எரித்தது. அவ்வெம்மையை ஆற்றாத மதுரையின் அதிதேவதையானவள் கண்ணகியிடம் வந்து நின்று அவளை நோக்கி, 'யான் இந்நகரின் தெய்வம்; உனக்குச் சிலவற்றைக் கூறவந்தேன்; அவற்றைக் கேட்பாயாக; இந்நகரத்தில் முன்பிருந்த பாண்டியர்களுள் ஒருவரேனும் சிறிதும் கொடுங்கோன்மை யுடையவரல்லர்; அரசு கட்டிலிற் றுஞ்சிய இந்நெடுஞ்செழியனும் அத்தன்மையனே; ஆயினும் இத்துன்பம் உனக்கு வந்த காரணத்தைக் கூறுவேன். முன்பு கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத் தரசனாகிய வசு என்பவனும் கபிலபுரத் தரசனாகிய குமரன் என்பவனும் தம்முட் பகை கொண்டு ஒருவரை யொருவர் வெல்லக்கருதி யிருந்தனர்; அப்பொழுது சிங்கபுரத்துக்கடை வீதியில் சென்று பண்டம் விற்றுக் கொண்டிருந்த சங்கமன் என்னும் வணிகனை, அந்நகரத் தரசனிடம் தொழில் செய்து கொண்டிருந்த பரதன் என்பவன் ‘இவன் பகைவனுடைய ஒற்றன்' என்று பிடித்து அரசனுக்குக் காட்டிக் கொலை செய்துவிட்டான்; அப்பொழுது அந்தச் சங்கமனுடைய மனைவியாகிய நீலியென்பவள் மிக்க துயரமுற்றுப் பதினான்கு நாள் பலவிடத்தும் அலைந்து, பின்பு ஒருமலையின் மீதேறிக் கணவனைச் சேர்தற் பொருட்டுத் தன் உயிரை விட நினைத்தவள், 'எமக்குத் துன்பம் விளைத்தோர் மறு பிறப்பில் இத்துன்பத்தையே அடைவார்களாக,' என்று சாபமிட்டிறந்தனள்; அப் பரதனே கோவலனாகப் பிறந்தான்; ஆதலால் நீங்கள் இத்துன்பம் அடைந்தீர்கள்! நீ இற்றைக்குப் பதினான்காவது நாளில் பகல் சென்ற பின்பு உன் கணவனைக் கண்டு சேர்வாய்', என்று சொல்லி அவளைத் தேற்றிச் சென்றனள். பின்பு, கண்ணகி மதுரையை நீங்கி, வையைக் கரைவழியே மேற்றிசை நோக்கிச் சென்று, மலைநாடடைந்து, அங்குள்ள நெடுவேள் குன்ற மாகிய திருச்செங்குன்றென்னும் மலைமேலேறி, ஒரு வேங்கைமரத்தின் நிழலில் நின்று பதினான்காவது நாளின் பகல் சென்ற பின், அங்கே தெய்வ வடிவுடன் வந்த கோவலனைக் கண்டுகளித்து, அவனுடன் விமானமேறித் தேவர்கள் போற்றும்படி விண்ணுலகடைந்தாள். கண்ணகி வேங்கை மரத்தின் கீழ் நின்றபொழுது 'நீ யார்? என உசாவி, அவள் மணமதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து உருத்தகாலை, கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் யான்', என்று கூறியதைக் கேட்டும், பின்பு வானவர் வந்து மலர் மழை பொழிந்து கோவலனைக் கண்ணகிக்குக் காட்டி, அவளையும் உடனழைத்துக் கொண்டு சென்றதனைத் தம் கண்களாற் கண்டும், வியப்பும் உவகையு மெய்திய மலைவாணராகிய வேடுவர்,' இவள் நம் குலத்துக்கே ஒரு பெருந்தெய்வமாவள்; இவள்பொருட்டுக் குரவை யாடக்கடவோம்,' என்று துணிந்து, தமரையெல்லாம் ஒருங்கழைத்து, தமது சிறுகுடியிடத்தே, தொண்டகம், துடி என்னும் பறைகளை முழக்கியும், கோடு வாய்வைத்தும், கொடுமணி இயக்கியும், நறும்புகை யெடுத்தும், விரவுமலர் தூவியும், குறிஞ்சி பாடியும் குரவைக்கூத்து நிகழ்த்துவா ராயினர். குரவையுள், குறிஞ்சிக் கிழவனாகிய செவ்வேளின் வெள்வேலைச் சிறப்பித்து அவர்கள் பாடிய பாட்டுமடை, 1. சீர்கெழுசெந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே; 2. அணிமுகங்க ளோராறும் ஈராறு கையும் இணையின்றித் தானுடையான் ஏந்திய வேலன்றே பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம் மணிவி சும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே; 3. சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மாரறுவர் திருமுலைப்பா லுண்டான் திருக்கைவேலன்றே வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க் குன்றங் கொன்ற நெடுவேலே. என்பன. பின்பு அவ்வேடர்கள், இவ்வதிசயத்தைத் தங்கள் நாட்டு அரசனாகிய சேரன் செங்குட்டுவனுக்குத் தெரிவிக்க எண்ணி, ‘யானைவெண் கோடும் அகிலின் குப்பையும் மான்மயிர்க் கவரியும் மதுவின் குடங்களும் சந்தனக் குறையும் சிந்துரக் கட்டியும் அஞ்சனத் திரளும் அணியரி தாரமும் ஏல வல்லியும் இருங்கறி வல்லியும் கூவை நூறும் கொழுங்கொடிக் கவலையும் தெங்கின் பழனும் தேமாங் கனியும் பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும் காயமும் கரும்பும் பூமலி கொடியும் கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும் ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் வாள்வரிப் பறழும் மதகரிக் களபமும் குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும் வரையாடு வருடையும் மடமான் மறியும் காசறைக் கருவும் மாசறு நகுலமும் பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் கானக் கோழியும் தேமொழிக் கிள்ளையும் என்பனவற்றைக் காணிக்கையாகச் சுமந்துகொண்டு சென்று, மலைவளங் காண்டல் வேண்டித் தன் தேவியாகிய வேண்மா ளோடும் தம்பியாகிய இளங்கோவடிகளோடும் நால்வகைத் தானையும் சூழப் புறப்பட்டு வந்து பேராற்றங் கரையிலுள்ள மணற்றிட்டையின் மேலிருக்கும் செங்குட்டுவன் திருமுன்பெய்தி, 'ஏழ்பிறப்படியோம், வாழ்க நின் கொற்றம்,' என்று அவனடி பணிந்து வாழ்த்தி, நிகழ்ந்தவற்றைக் கூறினார்கள். அப்பொழுது, அங்கு வந்திருந்த மதுரைத் தமிழாசிரியராகிய கூலவாணிகன் சாத்தனார் மதுரையிற் கோவலன் கொலையுண்டதும், கண்ணகி பாண்டியன்முன் வீசியெறிந்துவிட்டு, வஞ்சினங் கூறிவந்து மதுரை மூதூரைச் சுட்டெரித்ததும், நெடுஞ்செழியன் தான் செய்த தவறு காரணமாகத் தன்னை வெறுத்துக் கொண்டு அரியணைமீதே வீழ்ந்து உயிர் துறந்ததும், அவன் மனைவியாகிய பெருங்கோப்பெண்டு, ‘மன்னவன் செல்வழிச் செல்க யான்,' என்று, தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடுவாள் போல ஒருங்குடன் மாய்ந்ததும் முதலியவற்றைச் செங்குட்டுவற்கு விரித்துரைத்து, 'பாண்டியனது கொடுங்கோன்மை இத்தன்மைத்து என்பதைப் பெருவேந்தனாகிய நின்னிடத்துக் கூறவந்தவள்போல அந்நங்கை தனக்குரிய சோணாடு செல்லாது நின்னாட்டினை அடைந்தாள்; நின் கொற்றம் ஊழியூழி சிறப்பதாக,' என்று கூறினார். இங்ஙனம் பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைத் திறங்களைக் கேட்ட செங்குட்டுவன், வருத்த மிக்கவனாய், எம்மையொத்த அரசர் செவிகளிற் செம்மையின் வழுவிய சொல் சென்று பொருந்துவதன் முன்னே பாண்டியன் உயிர் நீங்கியதானது, அவனது தீவினையால் வளைக்கப்பட்ட கோலை உடனே நிமிரச் செய்து செங்கோலாக்கிவிட்டது; அரசராயுள்ளார்க்குத் தம் நாட்டிலே காலத்தில் மழை பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் தவறு செய்யுமாயின் அச்சம்; கொடுங்கோற் கஞ்சி மன்னுயிர் களைக் காத்தற்குரிய உயர்குடியிற் பிறத்தல் துன்பமேயல்லது இன்பமன்று,' என்று சாத்தனார்க்குக் கூறி, தன்தேவியை நோக்கி, 'நன்னுதால், கணவனுடன் உயிர் நீத்த பாண்டியன் தேவியும், சினத்துடன் நம் நாடு நோக்கிவந்த கண்ணகியும் என்னும் இவ்விரு பெரும் பத்தினிகளுள்ளே யாவர் வியக்கத்தக்கவராவர்? என்று உசாவ, அதுகேட்ட வேண்மாள், 'தன் காதலனது துன்பத்தைக் காணாது உயிர் நீத்த பாண்டியன் பெருந்தேவி விண்ணுலகத்தே பெருந்திரு வுறக்கடவள்; அது நிற்க, நம் நாட்டை நோக்கி வந்த பத்தினியை நாம் வழிபடுதல் இன்றியமையாதது,' என்று கூறினாள். அதுகேட்ட அரசர் பெருந்தகை அவள் கூறியதை விரும்பியேற்று, அமைச்சரை நோக்க, அவர்கள், ‘பத்தினிக் கடவுளின் படிவஞ் சமைத்தற்குரிய சிலையைப் பொதியிலினின்றேனும் இமயத் தினின்றேனும் கொணர்தல் தக்கது; அவ் விருமலைச் சிலைகளும் முறையே காவிரியினும் கங்கையினும் நீராட்டித் தூய்மை செய்தற் குரியன,' என்றார். என்றலும், அவன், ‘பொதியின் மலையிற் கல்லெடுத்துக் காவிரித்துறையில் நீராட்டுதல் வீரராகிய சேரர் குடிப்பிறந்தோர்க்குச் சிறப்பொடு பொருந்துஞ்செய்கையன்று; மலையரையன் நம் விருப்பிற் கிணங்கானாயின் வஞ்சிசூடிச் சென்று மலைந்து பெறுவோம்' என்று கூறினன். அது கேட்ட வில்லவன்கோதை என்ற சேனாதிபதி, அரசனை வாழ்த்தி, ‘நும்போலும் வேந்தராகிய சோழபாண்டியர் நும்முடன் மாறு பட்டுக் கொங்கர்செங்களத்திலே தம் புலிக்கொடியையும் கயற் கொடியையும் தந்து தோல்வியுற்ற செய்தி திசையானைகளின் செவி வரையில் சென்றுற்றது; கொங்கணர் கலிங்கர் கருநாடர் பங்களர் கங்கர் கட்டியர் வடவாரியர் என்னும் இவர்களுடன் தமது தமிழ்ப்படை கலந்து பொருத செருக்களத்தில் தாம் யானைமேற் சென்று பகைவரை யழித்த அரிய செய்கை இன்னும் எங்கள் கண்களை விட்டகலவில்லை; அன்றியும், எம் கோமகளாகிய தம் தாயின் சிலையைக் கங்கையில் நீர்ப்படை செய்த காலத்தே எதிர்த்துவந்த ஆரியமன்னர் ஆயிரவர்முன் தாம் ஒருவராக நின்று பொருத செருவெங்கோலத்தைக் கடுங்கட் கூற்றமும் கண்விழித்து நோக்கியதே; இங்ஙனம் கடல் சூழ்ந்த நிலவுலக முழுதையும் வென்று தமிழ்நாடாகச் செய்த நீவிர் இது செய்யக் கருதின் நும்மை எதிர்த்து நிற்க வல்லவர் உலகில் யாருளர்? இப்பொழுது எங்கோன் இமயமலைக்குச் செல்லக் கருதியது கடவுளுருச் சமைத்தற்குரிய கற்கொள்ளுதற் பொருட்டே யாகலின், அது குறித்து வடதிசையிலுள்ள மன்னர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டின் வில்லும் கயலும் புலியும் எனுமிவற்றை இலச்சினையாகக் கொண்ட நும் திருமுகத்தை முன்னே விடுத்தருளல் வேண்டும்,' என்று கூறினான். அப்பொழுது அழும்பில்வேள் என்னும் அமைச்சன், "நாவலந் தீவிலுள்ள பகைவருடைய ஒற்றுக்கள் நம் வஞ்சிமாநகரில் நீங்கா திருப்பன; அவைகளே இச்செய்தியை அவ்வரசர்களுக்கு அறிவிக்குந் தன்மையன; ஆதலால், வடதிசைச் செலவு குறித்து நமது பதிக்கண் பறையறைந்து தெரிவித்த லொன்றே அமைவதாகும்,' என்ன, அரசனும் அதற்கு நேர்ந்து, அங்குநின்றும், புறப்பட்டு வஞ் மாநகரடைந்தான். உடனே, செங்குட்டுவனது வடதிசைச் செலவு குறித்தும், ஆங்குள்ள மன்னர்கள் திறை கொண்டுவந்து பணியாராயின் அவர்க்கு நேரும் இன்னல்கள் குறித்தும் யானை மேலேற்றி நகரெங்கும் முரசறையப் பட்டது. அன்று மாலையில், அமைச்சர் முதலாயினார் சூழ்ந்து வாழ்த்த, அரசர் பெருமானாகிய சேரன் செங்குட்டுவன் அரியணை மேல் வீற்றிருந்து, தன் தானைத் தலைவர்களை நோக்கி, 'ஆரிய மன்னர் பலர் தம் நாட்டில் மன்றல் ஒன்றின்பொருட்டுக் கூடியிருந்த கூட்டத்திலே, 'தமிழ் நாடாளும் வேந்தர் இமயமலையின் நெற்றியில் வில் புலி கயல் பொறித்த நாளில் எம்போலும் வேந்தர் ஈங்கில்லை, என்று கூறித் தமிழரசை நகைத்திகழ்ந்தனர்' என இங்கு வந்த இமயத் தாபதரால் அறிந்தோம்; அவ்விழி மொழி நம்பாலே தங்குவ தாயின், அஃது, நமக்கேயன்றி, நம்போலும் சோழ பாண்டிய வேந்தர்கட்கும் இகழ்ச்சியை விளைவிப்பதாகும்; ஆகலின், அங்ஙனம் இகழ்ந்த அவ்வாரிய அரசர் முடிமேல் கடவுளுரு அமைத்தற்குரிய கல்லினையேற்றிக் கொண்டு வருவேன்; அங்ஙனஞ் செய்யேனாயின், குடிமக்களை நடுங்கச் செய்யும் கொடுங்கோலனாகக்கடவேன்,' என்று வஞ்சினங் கூறினான். அப்பொழுது நிமித்தம் வல்லானாகிய நிமித்திகன் எழுந்து நின்று, ‘அரசே! பகைவேந்த ரெல்லாரும் நின் திருவடியை வணங்குதற்குரிய முழுத்தம் இதுவாகும்; நீ கருதிய வடதிசைச் செலவிற்கு இப்பொழுதே எழுதல் சிறந்தது,' என்றான். செங்குட்டுவன் நிமித்திகன் கூறிய அந்நன் முகூர்த்தத்திலே தன் வாளினையும் குடையையும் பெயர்த்து நாட்கொள்ளும்படி செய்து, தன்னுடன் வருதற்கமைந்த தானைகட்கும், தானைத் தலைவர்களுக்கும் பெருஞ்சோறளித்து உபசரித்து, இரவினைக் கழித்து, அரண்மனை வாயிலில் காலை முரசம் ஒலியாநிற்கையில், எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய சந்திரமௌலிப் பெருமான் திருவடிப் பாதுகைகளை, யாவர்க்கும் வணங்காததும் வஞ்சி மாலை சூடியதுமான தன் சென்னியால் வணங்கி, உச்சியிற்றரித்துக் கொண்டு, தமது பட்டவர்த்தனக் களிற்றின்மேல் ஏறியருளினான். அப்பொழுது, ஆடக மாடத்து அறிதுயிலமர்ந்த திருமாலின் சேடங் கொண்டு வந்து, சிலர் அரசன் முன்னேநின்று ஏத்த, அரசன், தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுளின் வண்ணச் சேவடியை மணிமுடியில் வைத்திருந்தானாகலின், அத்திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் மணிப்புயத் தேந்தியவனாய்ப் புறப்பட்டுச் செல்வானாயினன். நால்வகைத் தானைகளும் மலைகளின் முதுகு நெளியவும் நாடெல்லாம் வழி யுண்டாகவும் பரந்து சென்றன. இங்ஙனம் பெருஞ் சேனையுடன் சென்ற செங்குட்டுவன் நீலகிரியை அடைந்து அதன் புறத்தே அமைந்த பாடியிற் றங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தனன். அப்பொழுது இமயத்தினின்றும் விசும்பின் வழியாகப் பொதியிலுக்குச் சென்று கொண்டிருந்த முனிவர்கள் அங்கே இறங்கி, செங்குட்டுவனால் வணங்கப்பெற்று. ‘வஞ்சி வானவனே,' என அவனை விளித்து, ‘இமயமலையில் வாழும் அருமறை யந்தணர்களைப் பாதுகாக்க வேண்டும்' என அவனைக் கேட்டுக்கொண்டு, வாழ்த்திச் சென்றனர். பின், கொங்கணக் கூத்தரும், கொடுங்கருநாடரும் தத்தமக்குரிய அணிகளுடன் தங்கள் மகளிரோடும் போந்து ஆடல் பாடல் களைச் செய்து பரிசில் பெற்றுச் சென்றனர். பின்பு, நாடக மகளிர் ஐம்பத்திருவரும், குயிலுவர் இருநூற்றெண்மரும், தொண்ணூற்றறு வகைப் பாசண்ட நூல்களில் வல்ல நகைவேழம்பர் நூற்றுவரும், நூறு தேர்களும், ஐந்நூறு களிறுகளும், பதினாயிரம் குதிரை களும், பண்டங்கள் ஏற்றப்பட்ட இருபதினாயிரம் சகடங்களும் என்னும் திறைப் பொருள்களோடு சஞ்சயன் முதலாகிய தன் தூதுவர் ஆயிரவர் வந்து கண்டு, ‘தேவரீர் வடதிசைச் செல்வது பத்தினிக் கடவுளின் உருவமைத்தற்குரிய சிலை யொன்றின் பொருட்டேயாயின், யாங்களே இமயத்திற் கல்லெடுத்து அதனைக் கங்கையில் நீர்ப்படை செய்து தரவல்லோம்,' என்று தம் நட்பரசராகிய நூற்றுவர் கன்னர் தெரிவித்திருக்கின்றனர் என்று கூறினர். அது கேட்ட வஞ்சி வேந்தன், ‘பாலகுமரன் மக்களாகிய கனகனும் விசயனும்வேறு பல மன்னரொடுங் கூடித் தமிழராகிய எம்முடைய ஆற்றலறியாது இகழ்ந்து கூறினர் எனக்கேட்டு இச்சேனை சீற்றங்கொண்டு செல்லா நின்றது,' என்பதனை நூற்றுவர் கன்னர்க்குக் கூறி, அவருதவி கொண்டு கங்கையாறு கடத்தற்குரிய நாவாய்களை அமைத்து வைக்க என்று சஞ்சயனை முன்னர் அனுப்பினன். பின் பாண்டியர் விடுத்த சந்தனம் முத்து முதலிய திறைகளைக் கண்டு, அவர்கட்குத் தன் இலச்சினை யிட்ட திருமுகம் அளித்தனன். யாவரும் சென்ற பின்பு செங்குட்டுவன் அங்கு நின்றும் புறப்பட்டு வடநாடு நோக்கிச் சென்று கங்கைக் கரையை அடைந்து, முன்பு சஞ்சயனுக்குத் தான் கூறி விடுத்தவாறே, தன் நட்பரசர்களாகிய கன்னர்களால் கொணர்ந்து வைக்கப் பட்டிருந்த மரக்கலங் களிலேறித் தானையுடன் அக்கரை சேர்ந்து, அவர்களால் உபசரிக்கப் பெற்று, அந்நாட்டி னீங்கி, தன் பகைவர் நாடாகிய உத்தர கோசலத்தை யடைந்து பாசறையமைத் திருந்தனன். அது தெரிந்தவுடன், அத்திசைக்கண் உள்ள உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் என்னும் அரசர்களோடு கனகவிசயர் என்ற வேந்தர் ‘தமிழராற்றலைக் காண்போம்,' என்று தருக்கி, பெரிய சேனையுடன் போருக்கு எதிர்த்தனர். இங்ஙனம் வடவரசர் திரண்டு வருதலைக் கண்ட செங்குட்டுவன், இரையைநாடி வேட்டத்தின் மேற்சென்ற ஆண் சிங்கமானது யானைக் கூட்டத்தைக் கண்டு பாய்ந்தவாறு போல, எதிர்த்து வந்தவடவேந்தர் சேனைகளின் மேற்பாய்ந்து கொன்று குவித்து நூழிலாட்டினன். போரில் துறந்தார் ஒழிந்த ஏனைய பகைவர்கள், தத்தம் படைக்கலங்களை யெறிந்துவிட்டு, சடைமுடியும் காவியுடையும், சாம்பற்பூச்சுமுடைய துறவோராகவும், கையிற் பீலியேந்திய சமண முனிவராகவும், பாணராகவும், கூத்தராகவும் வல்லவாறு வேடம்பூண்டு ஓடி யொளிப் பாராயினர். தமிழரை யிகழ்ந்த கனகன் விசயன் என்னும் அரசர் களோடு ஐம்பத்திருவர் தேர் வீரர் செங்குட்டுவன் சினத்திற் கிலக்காகி யகப்பட்டனர். தேவாசுர யுத்தம் பதினெட்டு ஆண்டிலும், இராம இராவண யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனக விசயரும் புரிந்த யுத்தம் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தன வென்று உலகினர் ஒருங்கெண்ணுமாறு ஒரு பகற்பொழுதில் ஆரியச் சேனைகளைக் கொன்று குவித்து மாற்றாரை வென்று தும்பை சூடிய வேந்தர் பெருமானாகிய சேரன் செங்குட்டுவன், பின்பு, தன் தானைத்தலைவனாகிய வில்லவன் கோதையைப் படையுடன் அனுப்பி, இமயமலையினின்றும் பத்தினிக் கடவுளின் படிவம் சமைத்தற்குரிய சிலையைக் கொணர்வித்து, அதனைக் கனக விசயரின் முடிமேல் ஏற்றிக்கொண்டு கங்கையாற்றை யடைந்து, நூல் வல்லோரால் முறைப்படி சிலையினை நீர்ப்படை செய்து, தென்கரையெய்தி, அங்குள்ள வெளியில் அரசர்க்குரிய கோயிலும், மண்டபங்களும், அரங்குகளும், பூம்பந்தர்களும், பூஞ்சோலைகளும் பூம்பொய்கைகளும் முதலியவற்றுடன் கன்னரால் அமைக்கப் பட்டிருந்த அழகிய பாடியிற்றங்கித் தன் படைத்தலைவர் களுக்கும், படை வீரர்களுக்கும், போரில் இறந்து துறக்கமெய்திய வீரர்களின் மைந்தர்களுக்கும், அவர்கள் பேராண்மைக்கும், வெற்றிக்கும் அறிகுறியாக, பொன்னாலாகிய வாகைப்பூக்களைத் தான் பிறந்த நாளிற் செய்யும்பெருங் கொடையினும் மிகுதி யாக நெடும் பொழுதிருந்து கொடுத்து, அரசிருக்கையில் வீற்றிருப் பானாயினன். இவ்வாறிருக்க, அப்பொழுது கங்கையாடி வந்த மாடலன் என்னும் மறையோன் செங்குட்டுவனைக் கண்டு வாழ்த்தி, 'மாதவியின் கானல்வரிப் பாட்டானது கனக விசயரின் முடித் தலையை நெரித்தது,' என்று கூற, செங்குட்டுவன் அவனை நோக்கி, ‘நான்மறையாள! இங்குள்ள பகைப்புலத்தரசர் பலரறியாத நகைத்திறம் ஒன்றுமொழிந்தனை; மொழிந்ததன் பொருளை விளங்க வுரைக்க,' என்றனன். என்றலும், அவன், காவிரிபூம் பட்டினத்தில் கோவலனும் மாதவியும் கடல் விளையாடச் சென்றது முதலாக நிகழ்ந்த வரலாறுகளை எடுத்துக்கூறி, தான் முன்பு மொழிந்ததன் பொருளை விளங்கவைத்தான். பின்னும் அவன் மதுரையில் கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற ஆய்ச்சியர் தலைவியாகிய மாதரி எரியிற் புகுந்து மாய்ந்ததும், கவுந்தியடிகள் உண்ணா நோன்பு கொண்டு உயர்கதி யடைந்ததும், தான் காவிரிபூம் பட்டினஞ் சென்று மதுரையில் நிகழ்ந்தவற்றைக் கூறிய காலையில் கோவலன் தந்தையாகிய மாசாத்துவான் பொருள் முழுவதையும் தானஞ் செய்துவிட்டுப் பௌத்த முனிவரைச் சரணடைந்து துறவியானதும், அவன் மனைவியாகிய பெருமனைக்கிழத்தி தன் புதல்வனுக்குண்டாகிய இடுக்கணைப் பொறாது வருந்தி உயிர் நீத்ததும், கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கன் சமண் சமயஞ் சார்ந்து துறவு பூண்டதும், அவன் மனைவி வாழ்நாளை விட்டு உயிர்விடுத்ததும், இவற்றை யெல்லாம் அறிந்ததும் மாதவி பிக்குணிக்கோலம் பூண்டு பௌத்த விகாரமடைந்து அறவுரை கேட்டதும் ஆகிய இவ்வரலாறு களையும் எடுத்தியம்பி, ‘மதுரையினின்றும் போந்து நான் கூறிய கொடுஞ் செய்தி சிலர் இறத்தற்கு வாயிலாக இருந்தமையால் அத்தீது தீர்தற் பொருட்டுக் கங்கையாட வந்தேன்,' என்று கூறினான். மற்றும் அவன் செங்குட்டுவன் வினாவிற்கு விடையாக, நெடுஞ்செழியன் துஞ்சியபின் கொற்கையிலிருந்த வெற்றி வேற் செழியன் கண்ணகிக்குப் பலியூட்டி, அரசின்றி வருந்திய மதுரையை அடைந்து அரசு கட்டிலேறிச் செங்கோலோச்சுவதும், குட்டுவற்கு மைத்துனனாகிய சோழனால் சோணாட்டின் ஆட்சி செவ்வனே நடைபெற்று வருவதும் கூறினான். இவற்றையெல்லாம் கேட்டு வியந்திருந்த வஞ்சிவேந்தன் மாலைப் பொழுதிலே வானின்கண் தோன்றிய பிறையை நோக்க, அவன் குறிப்பறிந்த நிமித்திகன் அரசனை வாழ்த்தி, ‘வஞ்சியினின்றும் புறப்பட்டு முப்பத்திரண்டு திங்கள் ஆகின்றன,' என்று கூறினன். பின்பு, சேரர்பெருமான் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன்னை மாடலனுக்குத் தானஞ் செய்து தனக்கு உதவி புரிந்த நட்பரசராகிய நூற்றுவர் கன்னரை அவர்கள் நாட்டிற்குச் செல்லுமாறு விடுத்து, தமிழரின் ஆற்றலை யறியாது போரில் எதிர்த்துத் தோல்வியுற்ற கனகன் விசயன் என்னும் ஆரியவரசர்களைச் சோழ பாண்டியர்க்குக்காட்டி வருமாறு தன் தூதுவர் ஆயிரவர்க்குக் கட்டளையிட்டனுப்பி, இரவு கழிந்து ஞாயிறு தோன்றியவுடன், தானையுடன் தென்திசை நோக்கிப் பெயர்ந்துவந்து, வஞ்சிமாநகரத்தின் அரண்மனையில் அந்தப்புரத்திலே அமளிக் கட்டிலின்மேல் தன்னைப் பிரிந் துறைதலால் உறக்கமென்பதில்லாமல், செவிலியரும் சேடியரும் முதலாயினர் தன் வடதிசை வெற்றியையும் மீட்சியையும் குறித்துப் பாடி ஆற்றுவிக்கும் பாடல்களையும், குறிஞ்சிநிலத்து வேட்டு மகளிரும், மருதநிலத்து உழவரும், முல்லைநிலத்துக் கோவலரும், நெய்தனிலத்துப் பரதவர் மகளிரும் தன் வெற்றியைச் சிறப்பித்துப் பாடும் பாடல்களையும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தன் கோப்பெருந்தேவியாகிய வேண்மாளின் கழலுதலுற்ற கைவளைகள் செறியும்படியாக, வலம்புரிச் சங்கங்கள் முழங்க, குஞ்சர வொழுகை யோடு கோநகர் முழுதும் வந்தெதிர் கொள்ள, வெண்கொற்றக் குடையின்கீழ் வாகை மிலைந்த சென்னியோடும் பட்டத்து யானைமேற் பொலிந்து வஞ்சி மூதூருட் புகுந்து தன் கோயிலை அடைவானாயினன். அப்பொழுது மாலைப்பொழுது வந்து நீங்கக் குடிகளுக்குத் தண்ணளி புரியும் குட்டுவன் திருமுகம்போல நிறைமதி தோன்றிற்று. மங்கல மடந்தையாகிய வேண்மாள், உலகின் நடுவே உயர்ந்து விளங்கும் மேருமலை போன்று அவ்வஞ்சி மூதூரின் நடுவில் விளங்கும் பொன் மாளிகையிலுள்ள நிலா முற்றமாகிய மணியரங்கிற் சென்று அம்மதியின் காட்சியைக் காணவேண்டி, தம்வளைக்கைகளில் விளக்குகளை யேந்திப் பல்லாண்டு கூறியேத்தும் மகளிரும், யாழ் முதலியவற்றுடன் இன்னிசை பாடும் மாதரும், கத்தூரி சாந்தங்களைக் கையிலேந்திய கூன் குறளர்களும், வண்ணமும் சுண்ணமும் மலர்மாலையும் ஏந்திய பெண்ணணியுடைய பேடியரும், பூவும் புகையும் விரையும் சுமந்துளோரும், ஆடியும் ஆடையும் அணிகலன்களும் ஏந்திய சேடியரும் சூழ்ந்துவர வந்தாள். இங்ஙனம் வந்த தன் பெருந் தேவியுடன் கூடி வேந்தர் பெருமானாகிய செங்குட்டுவன் நிலாமுற்றத்தை யடைந்திருந்து, கூத்தில் வல்லவனாகிய சாக்கையன், சிவபெருமான் ஆடிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தினை நடித்துக்காட்ட அதனைக் கண்டு மகிழ்ந்து, பின் அரசியல் மண்டபமாகிய பேரத்தாணியை எய்தியிருந்தான். இருந்தபின், கங்கைக்கரையினின்றும் முன் அனுப்பிய நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் வந்து, அரசன் ஆணைபெற்று உட்சென்று வணங்கி, தாம் சோழ பாண்டியர்களிடம் சென்ற காலையில், அவர்கள், ‘போர்க் களத்திலே ஆண்மையுடன் வாளும் குடையும் ஒழியத் தவக்கோலம் பூண்டு சென்ற ஆரிய மன்னரைப் பற்றிக் கொண்டு வருவது வெற்றியாகாது,' என இகழ்ந்துரைத்தனர் என்றார்கள். இங்ஙனம் தன் வெற்றியை அவர்கள் இகழ்ந்துரைத்தனர் என்பது கேட்டவளவில் செங்குட்டுவனுக்குச் சீற்றம் பொங்கிக் கண்கள் தழல் நிறங் கொண்டன. அதுகண்டு நிறைந்த கேள்வியையுடைய வனாகிய மாடலன் எழுந்து நின்று, செங்குட்டுவனை வாழ்த்தி, அவனது சீற்றத்தை ஆற்றி, யாக்கை இளமை செல்வம் என்பவற்றின் நிலையாமையை அவனுக்கு விளங்கத்தேற்றி, "நீ, அரியணையேறி ஐம்பதியாண்டு ஆயின பின்னும் அறக்கள வேள்வி செய்யாது எங்கணும் மறக்கள வேள்வியே செய்வாயாயினை; வானோருருவைப் பொருந்திய உயிர் மக்களுரு வெடுத்தலும், மக்கள் யாக்கையிற் பொருந்திய உயிர் விலங்குடம்பெடுத்தலும், விலங்குடம்பினின்ற உயிர் நரகதியடைதலும் கூடாதன வல்ல; ஆடுங் கூத்தர்களைப் போல் இவ்வுயிர்கள் எப்பொழுதும் ஓரிடத்தில் ஒரு கோலத்துடன் நிற்பன வல்ல; செய்வினை வழிப்பட்டு உயிர்கள் மாறிமாறிச் செல்லுமென்பது பொய்யற்ற அறி வினையுடையோர் கூறிய மெய்யுரையாகும்; மிக மேலாகிய யாக்கையைப் பெற்ற ஒரு நல்லுயிர் உலகத்துயிர்கள் செல்லும் பொதுநெறியிற் செல்லுதலைப் பொறேனாய் இவை கூறுகின்றேன்; அரசர்க்குச் சிறந்ததாக மறைகள் கூறுவதும், வானோரும் போற்றும் வீட்டு நெறியையளிப்பது மாகிய வேள்வியை நீ இன்றே இயற்றத் தொடங்குதல் வேண்டும்." என்று கூறினான். இங்ஙனம் மாடலன் கூறிய உறுதிமொழிகளைக் கேட்ட செங்குட்டுவன், சினந்தணிந்து, அவ்வுறுதிமொழியைக் கடைப் பிடித்து வேள்வி இயற்றத் துணிந்து, அதற்குரிய விழாவினைத் தொடங்குமாறு வேதவழிப்பட்ட அறங்களை நன்குணர்ந்த வேள்வியாசிரியர்களை ஏவி, ஆரியவரசர்களைச் சிறையினின்றும் விடுவித்து வேளாவிக்கோ மந்திரத்தில் இருக்கச்செய்து, வேள்வி முடிந்தவுடன் அவர்களைத் தம்மூருக்கு அனுப்புவதாகக் கூறி அவர்கட்கேற்ற உபசாரங்களைச் செய்யுமாறு வில்லவன் கோதைக்குக் கட்டளையிட்டு, மற்றும் சிறைப் பட்டோரனைவரையும் விடுவித்துச் சிறைக் கோட்டங்களைத் தூய்மை செய்யவும் தனது நாட்டிலுள்ள ஊர்கள் தோறும் குடிகள் செலுத்துதற்குரிய இறைப்பொருள்களை வாங்காது விடுக்கவும் அழும்பில்வேள் என்னும் அமைச்சனோடு ஆயக்கணக்கர்களை ஏவி, ஆன்றோர் பலருடன் சென்று சிற்ப நூல்வல்ல கம்மியர்களால் இயற்றப்பட்ட பத்தினிக் கோட்டத்தில், இமயத்தினின்றும் கொணர்ந்த சிலையில் கைத்தொழிலின் திறத்தால் இலக்கண முழுதும் அமையச் சமைத்த பத்தினியின் படிமத்தைப் பிரதிட்டை செய்து, விதிப்படி வேள்வியும் விழாவும் நாடொறும் புரியுமாறு கட்டளைசெய்து, அரசரெல்லாரும் தத்தம் திறைகளுடன் அக்கோயிலில் வந்து வணங்கும்படி பணித்து, அங்கே இருந்தான். அப்படி இருக்கும்பொழுது, முன்னம் கோவலன் கொலையுண்டது முதலியவற்றை மாடலனாற் கேட்டறிந்து, மாசாத்துவான் துறவு பூணவும், பெருமனைக்கிழத்தி உயிர் துறப்பவும், அளவுபடாத துன்பத்தை யடைந்தவர்களாய்க் கண்ணகியின் செவிலித் தாயும், அடித்தோழியும், சாத்தன் கோயிலிலிருந்த தேவந்தி என்னும் பார்ப்பனத் தோழியும் ஆகிய மூவருஞ் சேர்ந்து கண்ணகியைக் காண வேண்டி மதுரைக்கு வந்து, அங்கு அந்நங்கையைக் காணாது, அவள் சீற்றத்தால் மதுரை எரியுண்டமையறிந்து, மாதரி மகள் ஐயையைக்கண்டு, அவளை யழைத்துக்கொண்டு வையைக் கரைவழியே சென்று, மலைநாட்டிலுள்ள திருச்செங்குன்றென்னும் மலைமீதேறிக் கண்ணகியின் கோயிலிற் புகுந்து, நங்கையைச் சிறப்பியற்றிய செங்குட்டுவனைக் கண்டு, அவனுக்குத் தாங்கள் இன்னா ரென்பதைக் கூறி, பின் பத்தினியை நோக்கி, அவள் தாயும் மாமியும் உயிர் நீத்ததும், தந்தையும் மாமனும் மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் துறவு பூண்டதுமாகிய செய்திகளைச் சொல்லி, 'தான் அடைக்கலமாகப் பெற்ற நின்னைக் காத்தோம்ப முடியாமல் உயிர் துறந்த மாதரியின் மகள் ஐயையைக் காண்', என்று அவளைக் காட்டி, அழுது அரற்றினார்கள். அங்ஙனம் அரற்றும் பொழுது, பொற்சிலம்பும், மேகலையும், வளைகளும், வயிரத்தோடும், மற்றும் பல அணிகளும் அணிந்துகொண்டு மின்னற் கொடிபோலும் உருவமொன்று விசும்பின்மேலே தோன்றாநிற்க, செங்குட்டுவன் அதனைக் கண்டு மிக்க அதிசய மடைந்தான். கண்ணகி, செங்குட்டுவற்குத் தன் கடவுணல்லணி காட்டியதுடன், தன்னைக் காணவந்த மகளிரை நோக்கி, ‘தோழிமீர்! தென்னவன் தீதிலன்; தேவர்க்கரசன் கோயிலில் நல்விருந்தாயினான்; நான் அவன் மகளாவேன்; வெற்றி வேலையுடைய முருகனது இவ்வரையில் யான் என்றும் விளையாடுதலை யொழியேன்; நீவிர் எல்லோரும் என்னுடன் விளையாட வருவீராக,' என்று பழமை பாராட்டிக் கூறினள். இங்ஙனம் பத்தினிக் கடவுள் நேர்நின்று கூற, அவற்றைக் கேட்டிருந்த செங்குட்டுவன் ஆயத்தாராகிய வஞ்சிமகளிர் வியப்புற்றுத் தம்மிற்கூடி, அத் தெய்வத்தையும், அத் தெய்வம் உலாவுதலுற்ற தமிழ்நாடாளும் அரசர் மூவரையும் வாழ்த்தி அம்மானை, கந்துகம், ஊசல், வள்ளைப்பாட்டு என்பவற்றாற் பாடினார். அவர் அவ்வரசர் களைப் பாடியவற்றுள் ஒரோவொன்று பின்வருவன : அம்மானைவரி புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவி லுடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை குறைவி லுடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்கா ணம்மானை காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை. கந்துகவரி பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட மின்னிலங்கு மேகலைக ளார்ப்ப வார்ப்ப வெங்கணும் தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே தேவரார மார்பன் வாழ்க வென்றுபந்த டித்துமே. ஊசல்வரி ஓரைவ ரீரைம் பதின்ம ருடன் றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட வாடாமோ 'd2வூசல். கடம்பெறிந்த வாபாடி யாடாமோ 'd2வூசல். வள்ளைப் பாட்டு தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழ லவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல். பாவைமா ராரிக்கும் பாடலே பாடல். சேரர் பெருமானாகிய செங்குட்டுவன் கண்ணகியின் தெய்வவுருவத்தைத் தரிசித்த பின்னர், தேவந்தி யென்னும் பார்ப்பனியை நோக்கி, 'நீங்கள் பத்தினியின் முன்பு அரற்றிய பொழுது கூறிய மணிமேகலை யென்பாள் யார்? அவள் துறவு பூண்டதன் காரணம் யாது? என்று வினவ, அவள் மணிமேகலையின் வரலாற்றை அவள் துறவு பூண்டது ஈறாகக் கூறி முடித்தாள். பின்பு அவள்மேல் சாத்தன் என்னும் தெய்வம் ஆவேசித்துக் கட்டளையிட்டவாறு, அங்கிருந்த மாடலன், முன்னொருநாளில் அச்சாத்தனால் தன்னிடம் கொடுக்கப் பெற்றதும் தன் கையிலுள்ளதுமான கமண்டலத்து நீரை அங்கு வந்திருந்த இளம்பெண்கள் மூவர் மீது தெளிப்ப, உடனே அவர்கள் பழம்பிறப்புணர்ச்சி யுடையராய்க் கண்ணகியைக் குறித்துப் புலம்பா நிற்க, அவர்கள் கண்ணகி நற்றாய், கோவலன் நற்றாய், மாதரி என்னும் மூவரின் பிறப்பின ராதலையும், அம்மூவரும் இங்ஙஙனம் பிறப்பதற்குற்ற காரணத்தையும் மாடலன் செங்குட்டு வனுக்கு விளக்கி, 'நல்லறம் புரிந்தோர் பொன்னுலகடைதலும், ஒன்றிற் பற்றுவைத்துள்ளோர் புவியிற் பற்றுள்ள விடத்தே பிறத்தலும், அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும், பிறந்தவர்கள் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் இவர்கள் வரலாற்றால் இனிது விளங்கும்; நீ ஆனேறுயர்த்தோனாகிய பரமன் அருளினால் தோன்றி, மாநிலத்தை நன்கு புரந்தமன்னவன் ஆகலின் செய்தவப் பயன்களையும் சிறந்தோர் படிவங்களையும் கையிலுள்ள பொருள்போற் கண்டனை; நீ ஊழி யூழிதோறும் உலகங்காத்து நீடு வாழ்வாயாக,' என்று கூறினன். இவைகளைக் கேட்டு வியப்புற்றிருந்த செங்குட்டுவன், கண்ணகியின் கோயிலுக்கு அருச்சனா போகமாக நிலங்கள் அளித்து நித்தல்விழா நிகழ்த்தி வரச் செய்து, பத்தினியின் பூசை தேவந்தியால் நடந்துவரப் பணித்து, தான் பத்தினிக் கடவுளை மும்முறை வலம் வந்து வணங்கி நின்றான். அப்பொழுது கனக விசயர் என்னும் ஆரிய மன்னரும், முன்னமே சிறைப்பட்டிருந்து விடுபட்ட ஏனையரசரும், குடகக் கொங்கரும், மாளுவவேந்தரும், இலங்கையரசனாகிய கயவாகுவும் செங்குட்டுவனெதிரே வந்து பத்தினிக் கடவுளை வணங்கி ‘இச்சேரர் பெருமான் வேள்வியிற் போல எங்கள் நாடுகளிலும் வந்து அருள் புரியவேண்டும்', என வேண்டினர். வேண்டலும், ‘தந்தேன் வரம்' என்று ஒரு தெய்வ வாக்கு எழுந்தது. அதனைக் கேட்டுச் செங்குட்டுவனும் ஏனையரசர்களும் சேனையுடன் ஆரவாரித்து, வீட்டுலகத்தை நேரிற் கண்டவர்போல் மகிழ்வுற்றனர். பின்பு செங்குட்டுவன் அரசர்கள் அடிபணிய மாடலனோடு எழுந்து வேள்விச்சாலைக்குச் சென்றனன். செங்குட்டுவன் தம்பியும் இக்காப்பிய மியற்றிய ஆசிரியருமாகிய இளங்கோவடிகளும், அப்பொழுது அவ்வுழிச் செல்லாநிற்க, பத்தினிக் கடவுள் தேவந்தி மேற்றோன்றி, அவரை விளித்து, அவருடைய வரலாறுகளைச் சொல்லி உவப்பித்தாள் என்று, இங்ஙனமாக இக்கதையை நிறைவி த் தருளிய அடிகள், உலகத்தாரை விளித்து, இவ்வரலாற்றைக் கேட்டமையால் அவர்கள் கடைப்பிடித்தொழுகற் பாலவாய அறங்களைப் பின்னுள்ள அடிகள் முதலியவற்றால் அறிவுறுத் தருளினார். ‘ பரிவும் இடுக்கணும்; பாங்குற நீங்குமின் தெய்வம் தெளிமின் தெளிர்தோர்ப் பேணுமின் பொய்யுரை யஞ்சுமின்; புறஞ்சொற் போற்றுமின்; ஊனூண் டுறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்; 2. கண்ணகி கற்புமாண்பு ‘ தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’. குமரியொடு வடவிமயத் தொருமொழி வைத்துலகாண்ட வேந்தர் பெருமானாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதற்கு மைந்தரும், ஆரியமன்னர் ஈரைஞ்ஞூற்றுவர்க்கு ஒருதானாகி அமர்கடந்து இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய சேரன் செங்குட்டுவனென்னும் வீரருள் வீரற்கு இளையாரும் ஆகி, தமிழெனும் அளப்பருஞ் சலதியைக் கடந்து நின்று, சிந்தை செல்லாச் சேணெடுந்தூரத்து அந்தமிலின்பத்து அரசாள் வேந்தாகப் பற்றறத் துறந்த இளங்கோவடிகளென்னும் நற்றவக் குரிசில் தமிழகத்தின் பல்வகைப் பெருமைகளையும், தமிழ் மொழியின் ஒப்புயர்வற்ற மாட்சியையும், விளக்குவதாகத் தமது முத்தமிழ்ப் புலமையும் வித்தகக் கவித்திறலும் தோன்ற ஒரு காப்பியம் இயற்றக் கருதியிருந்தார். இருந்தார்க்குத் தகுந்ததோர் செவ்வியும் வாய்த்தது. அஃதென்னை யெனின், செங்குட்டுவன் மஞ்சுசூழ் சோலை மலைவளங் காணற்பொருட்டுத் தேவியாகிய வேண்மாளுடன் நால்வகைப் படையும் புடை சூழப் புறப்பட்டு வந்து பேராற்றங்கரையிலுள்ள மணற்குன்றிலே தங்கியிருப் பானாயினன். இளங்கோவடிகளும் உடன் வந்து அவணிருந்தார். மலைவாணராகிய வேட்டுவர்கள் ஒருங்கு திரண்டு யானை வெண்கோடும், அகிலின் குப்பையும், மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும், சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும், அஞ்சனத்திரளும், அணியரிதாரமும், ஏலவல்லியும், இருங்கறி வல்லியும், மற்றும் பல பலவுமாகிய மலைபடு பொருள்களைக் காணிக்கையாகச் சுமந்துவந்து தந்து செங்குட்டுவனை நோக்கி, 'மன்னவர் மன்ன, ஏழ் பிறப்படியேம் வாழ்க நின் கொற்றம்! யாம் வாழும் மலைப்பக்கத்தில் ஒரு வேங்கை மரத்தின் நிழற்கண்ணே கொங்கையொன்றிழந்த நங்கையாகிய பத்தினியொருத்தி வந்து நின்றாள்; அவள் பொருட்டு இந்திரன் றமர் வந்து திரண்டு, அவளுடைய காதற் கொழுநனை அவட்குக் காட்டி, அவளோடும் எங்கள் கண்காணும்படியாக விண்போயது பெரியதோர் வியப்பாயிருந்தது; அவள் எந்நாட்டாள்கொல், யார் மகள் கொல்லோ அறிந்தருள்க, என்று சொல்லிப் போயினர். தண்டமிழாசானாகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் அப்பொழுது அங்கு வந்த செங்குட்டுவனைக் கண்டு களிப்புற்றிருந்தவர், தீவினைச் சிலம்பு காரணத்தாற் கோவலன் கொலையுண்டது முதலாக மதுரையில் நிகழ்ந்த வரலாறனைத்தையும் அரசற்குக் கூறினார்; அவனுடன் கேட்டுக்கொண்டிருந்தார் இளங்கோவடிகள். அடிகளின் மாசற்ற உள்ளத்தில் மூன்று சிறந்த நீதிகள் ஊன்றிப் பதிந்தன. அவை, அரச நீதியிற் சிறிது பிழைப்பினும் அவ்வரசை அறக்கடவுளே கூற்றமாய் நின்று கொல்லுமென்பதும், புகழமைந்த பத்தினியை மக்களேயன்றித் தேவரும் முனிவரும் முதலாயினார் ஏத்துவதியல் பென்பதும், ஊழ்வினையானது அதன் பயனை நுகர்வித்தல் ஒருதலையென்பதும் ஆம். இம்மூன்றும் சிலம்பு காரணமாக நிகழ்ந்தமையின் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஒரு காப்பியம் இயற்றல்வேண்டுமெனத் துணிந்தார். தாம் கேட்ட வரலாற்றிலிருந்து அடிகள் தாம் இயற்றப்போகும் காப்பியத்திற்குப் பாவிகம் எனப்படும் உள்ளுறை அமைத்துக்கொண்ட வியப்பைக் காட்டிலும், அதற்குப் பெயர் தந்த வியப்பு மிகவும் பெரிய தொன்றாகும். வரலாற்றுடன் பொருந்திய மூன்று உள்ளுறைகளை ஒருங்கு தெரிப்பதாய் அதனானே (பெயர்) தன்னை ஆராய்ந்த துணையானே காப்பியத்தின் பண்பினை யுணருமாறு உதவி புரிவதாயுள்ள பிறிதொரு பெயர் யாதுளது? இங்ஙனம் துணிந்து வைத்த அடிகள், சாத்தனாரைப் பார்த்து. ‘ அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதி காரமென்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்’ என்று கூறினார். சாத்தனாரோ, ‘ முடிகெழு வேந்தர் மூவர்க்கு முரியது அடிகள் நீரே யருளுக’ என்றார். என்றலும், இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிச் சிலம்பாகிய இதனைத் தமிழ் மக்களின் செவியகத்தே ஒலித்துக் கொண்டிருக்குமாறு இயற்றி யளித்தார். முத்தமிழ்ப் புலமை சான்று, இதற்கு அரியதோர் உரைவகுத்தருளிய அடியார்க்கு நல்லாரே இக்காப்பியத்தின் பெருமையைக் குறித்து, ‘ எழுத்தின் திறனறிந்தோ இன்சொற் பொருளின் அழுத்தந் தனிலொன் றறிந்தோ - முழுத்தும் பழுதற்ற முத்தமிழின் பாடற் குரையின் றெழுதத் துணிவதே யான்’ என்று கூறியிருப்பரேல் இதன் அருமை பெருமைகளை நாம் எங்ஙனம் அளவிட்டுரைத்தல் சாலும்? இனி இளங்கோவடிகள் இத்தொடர்நிலைச் செய்யுட்குத் தலைசிறந்த மூன்று நீதிகளை உள்ளுறையாகக் கொண்டார் எனினும், அவற்றுள் இடைநின்ற பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலுண்டென்பதில் அவர் பெருநோக்குடையாரென்பது தெளிவாகின்றது. என்னை? பதிகத்தின் பின்னர் இவ்வுரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளின் முதற்கண் நிற்பது உரைபெறு கட்டுரை. அதில் அடிகள், 1. ‘அன்றுதொட்டுப் பாண்டியனாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயுங் குருவுந் தொடரக் கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழைபெய்து நோயுந் துன்பமும் நீங்கியது.' 2. ‘அது கேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவோடு சாந்தி செய்ய மழைதொழிலென்றும் மாறாதாயிற்று.' 3. ‘அது கேட்டுக் கடல் சூழிலங்கைக் கயவாகு வென்பான், நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்ட முந்துறுத்தாங்கு அரந்தை கெடுத்து வரந்தரு மிவளென ஆடித்திங்கள கவயினாங்கோர் பாடிவிழாக் கோள் பன்முறை யெடுப்ப மழை வீற்றிருந்தது வளம்பல பெருகிப் பிழையா விளையுணாடாயிற்று.' 4. ‘அதுகேட்டுச் சோழன் பெருங்கிள்ளி கோழியகத்து எத்திறத்தானும் வரந்தரு மிவளோர் பத்தினிக் கடவுளாகுமென நங்கைக்குப் பத்தினிக் கோட்டமுஞ் சமைத்து நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே.' எனத் தமிழ்நாட்டரசர்களும் இலங்கையரசனும் கண்ணகியைத் தெய்வமாகவே கொண்டு அவட்குக் கோட்டஞ் சமைத்துத் திருவிழா முதலியன புரிந்தமையையும் அதனால் அவரவர் நாட்டில் மழைவளம் பெருகி, நோயும் துன்பமும் நீங்கினமையையும் கூறியருளினார். கோவலன் கொலையுண்டபின் கண்ணகி மதுரையை எரித்து வையைக்கரை வழியே சென்று மலைநாட்டுத் திருச்செங்குன்று என்னும் மலையை அடைந்து அங்கே தெய்வ வடிவத்துடன் வந்த கோவலனுடன் விமானமேறிச் சென்ற நிகழ்ச்சியின் பின்னே நிகழ்ந்த வரலாறாகிய, அரசர் பலர் பத்தினிக் கோட்டஞ் சமைத்து விழாக் கொண்டாடியதனை, இளங்கோவடிகள் காப்பியத் தொடக்கத்திற்றானே கூறிவைத்தது அவர் பத்தினியையேத்துங் குறிப்பினராதலை நன்கு புலப் படுத்தும். இதனைக் கற்கப் புகுவார்க்கும் அத்தகைய குறிப்பு நிகழவேண்டு மென்பதும் அடிகள் கருத்தாதல் கூடும். இந் நுட்பங்களையுணர்ந்தன்றோ இதற்கு உரைவகுத்த அடியார்க்கு நல்லார் மங்கல வாழ்த்துப் பாடல் உரைக்கண், 'கண்ணகியை முற்கூறினார்; பத்தினியை யேத்தல் உட்கோளாகலான்', என்று கூறி வைத்தார். அரும்பதவுரைகாரரும், 'இவளை முன் கூறிற்று, கதைக்கு நாயகியாதலின்', என்றார். எனவே, இக்காப்பியத்திற்குப் பிறிதொரு பெயர் கூறவேண்டுமென்னில் 'கண்ணகி கற்பு' என்று கூறுதல் சாலும், இராமாயணம் என்பதற்கு, 'சிறையிருந்தாளாகிய சீதையின் ஏற்றங் கூறுவது', என்று ஒருசார் அறிஞர் பொருள் கொள்ளுதலுங் காண்க. ஆனால், அங்கே, இராமன் காப்பியத் தலைவனாதற்கு வேண்டிய இலக்கணமெல்லாம் ஒருங்குடையனா யிருத்தலின், 'இராமாவதாரம்' என அதற்குப் பெயர் கூறுதல் சாலும். இங்கோ கோவலன் அத்தகை யனல்லன். கண்ணகியே தலைவியாதல் வேண்டுமென்க. இனி, கண்ணகியின் உயரிய பண்புகளாக இக் காப்பியத்தால் அறியலாவனவற்றை எடுத்துக் காட்டுதும். கண்ணகி நல்லாள் காவிரிப்பூம்பட்டினத்திலே பெருஞ் செல்வமும் பெருவண்மை யுமுடைய மாநாய்கன் குலமகளென்பதும், திருவிலுஞ் சிறந்த அழகுடையாளென்பதும், அவள் கணவனாய் கோவலன் அரசனோடொருங்கு வைத்தெண்ணப் படும் ஒப்பற்ற குடிகளுக்குள்ளே யாவரினும் மிக்க செல்வமும் ஈகையு முடைய மாசாத்துவான் மைந்தனென்பதும் நாம் அறிந்தனவே. கோவலன் கண்ணகியை மணந்த பின்றை அவன்பால் எவ்வளவு காதலுடையனாயிருந்தா னென்பதும், அவன் அவளை நோக்கி, ‘ மாசறு பொன்னே வலம்புரி முத்தே காசறு விரையே கரும்பே தேனே அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே யென்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ யாழிடைப் பிறவா இசையே யென்கோ தாழிருங் கூந்தல் தையால் நின்னை’. என்றிங்ஙனம் கூறும் நலம்பாராட்டுரைகளால் வெளிப்படும். பல்லாற்றானுஞ் சிறந்தவர்களாய் உருவும் திருவும் முதலிய வற்றால் தம்முள் ஒப்புமை யுடையவராய இத்தலைமகனும் தலைமகளும் இங்ஙனம் காதற்கிழமை யுடையராய்க் கூடி இன்பந் துய்த்து இல்லற நிகழ்த்து நாளிலே அதற்கும் ஓர் இடையறவு நேர்ந்தது. உலக இன்பம் எத்துணைச் சிறந்த தொன்றாயினும் நிலைபேறுடைய தன்றே! அழகிற் சிறந்தாளும் ஆடல் பாடல் களில் வல்லாளு மாகிய மாதவி யென்னும் கணிகை வயத்தனாயினான் கோவலன். கண்ணகியோ தனித்திருப் பாளாயினாள். கோவலன் தன் அருமந்த மனைவியைப் பிரிந்து பரத்தை வயத்தனவாய் ஒழுக்கந் துறந்ததேயன்றி, தன் பெற்றோர், தன்னை வேறுபடு திருவின்வீறு பெறக் காண விழைந்தவர் அளித்த பொருட்குவி யலனைத்தையும் இழந்தான். அவ்வளவோ! கண்ணகியின் எண்ணரிய கலன்களையும் தொலைத்தான். இப்போது கண்ணகி எந்நிலையளாவள்! சாவிற் சாதல், நோவின் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கினிது மொழிதல், புணர்வுநனி வேட்டல், பிரிவுநனி யிரங்கல் என்பன அன்புடையார்க் குள்ள ஆறு குணங்கள் என்பர். காதலென்பதோ, ‘ யாரினுங் காதல மென்றேனா ஊடினாள் யாரினும் யாரினு மென்று’. என்றவாறு, காரணமின்றியும் அதனை நுட்பமாகக் கற்பித்துக் கொண்டு ஊடுமியல்பினது. கற்புடை மகளிர்க்குத் தம் கணவரைச் சிறிது பொழுது பிரிந்திருப்பதும் பெரிய துன்பமாம். அவர் நாம் நெடும்பொழுது பிரிந்திருக்கும் படி தம்மை நீத்தகன்றதேயன்றிக் கணிகை யொருத்தியை மருவியும் உறைகின்றாரென்னில், அம்மகளிரின் துன்பத்தை எங்ஙனம் உரைத்தல் சாலும்? தங்கணவர் தம்மைப் பிரிந்திருப்பது, தமக்கே யுரிய உடனுறை வின்பத்தை அவர் பிறர்க்களிப்பது, அவர் அதனை நுகர்வது, கணவருக்குண்டாகிய ஒழுக்கக்கேடு, அதனாலுண்டாகும் பழி, தமது மனையறத்திற்கு நேர்ந்த சிதைவு என்றின்னோரன்னவற்றால் அவரது உள்ளம் எரியினிழுதாகிச் சிதைந்தொழியுமன்றே? இந்நிலைமையில் கண்ணகியின் பண்பிருந்தவாறென்னை? தனது துன்பம் அனைத்தையும் பொறுத்தாள்; அது புறந்தோன்றாமலும் மறைத்தாள்; கணவன் ஒரு கணிகையுடன் நுகரும் இன்பத்திற்குத் தன் அணிகலன்களையெல்லாம் கொடுத்தாள்; அவன் அக்கணிகையை வெறுத்து வந்து, ‘பொய்யை மெய்யாகக் கொண்டொழுகும் சலதியோடாடி, என் குலத்தார் தேடிய மலை போலும் நிதியெல்லாம் இழந்து வறுமையுற்றது எனக்கு மிகுந்த நாணைத் தருகின்றது', என்று கூறியவழி, மாதவிக்குக் கொடுக்கப் பொருளில்லாது வருந்துகின்றானெனக் கருதி, நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச், ‘சிலம்புள கொள்ளும்,' என்றிறுத்தாள். கற்பென்பது எவ்வெக் குணங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதென்பதும், அதனியல்பின்ன தென்பதும் யாவரும் அறிதற் கரியனபோலும்! கம்பர், ‘ அன்பென்ப தொன்றின் றன்மை யமரரு மறிந்த தன்றால்? எனக் கூறியது கற்புக்கும் ஒத்ததெனல் சாலும். இனி, கோவலனைப் பிரிந்திருந்த நாளில் கண்ணகியின் மனநிலை எவ்வாறிருந்ததென இனிதறியக்கிடக்கும் சான்று ஒன்றுளது. கண்ணகி யளித்த காற்சிலம்பைப் பெற்ற கோவலன், ‘இச்சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு உலந்த பொருளீட்டு தலுற்றேன்; மலர்ந்த சீர் மாட மதுரையகத்துச் சென்று,' என்று கூறி, கண்ணகியையும் உடனழைத்துக் கொண்டு ஞாயிறு தோன்றுமுன் புறப்பட்டுக் காவிரி வடகரை வழியாக ஒரு காததூரம் வந்து கவுந்தியடிகள் என்னும் தவமாதைக் கண்டு கண்ணகியோடும் அவரை வணங்கினன். பின் அம்மூவரும் புறப்பட்டு மேற்கு நோக்கி வந்து காவிரியைக் கடந்து உறையூரை எய்திப் பின் அங்குநின்றும் காட்டுவழியாக நடந்து சென்று பாண்டியநாட்டு மதுரை மூதூரைக் கண்டனர். கவுந்தியடிகள் அங்கு வந்த மாதரி என்னும் ஆய்ச்சியர் தலைவியிடம் கண்ணகியை அடைக்கலமாக ஒப்புவிக்க, மாதரி, கோவலன் கண்ணகி இருவரையும் அழைத்துச் சென்று, ஒரு புதிய மனையில் இருக்கச் செய்து, தன் மகளாகிய ஐயை யென்பாளைக் கண்ணகிக்குத் துணையாக இருத்திச் சமைத்ததற்குரிய பல்வகைப் பொருளும் கொண்டுவந்து கொடுத்தனள். கண்ணகி தன் கைவன்மைக் கேற்றவாறு பல்வேறு கறிகளுடன் அடிசிலாக்கிக் கணவனை ஆதனத் திருத்திக் குமரி வாழையின் குருத்தினை விரித்து அமுது படைத்து, 'அடிகள் அமுதுண்க' என்று உபசரித்து ஊட்டி, இனிதாக உண்டிருந்த கோவலற்கு வெற்றிலைச் சுருளும் அடைக்காயும் தந்தனள். அப்பொழுது கோவலன் கண்ணகியை வருகவென அருகழைத்தணைத்து, 'கண்ணகியின் மெல்லிய அடிகள் கற்களையுடைய சுரநெறியைக் கடத்தற்கும் வன்மை யுடையனவோ' என்று கொடிய காட்டில் நடந்துவந்ததற்கிரங்கி, 'எம் முதுகுரவர் என்னுற்றனர் கொல்! மாயங் கொல்லோ! வல்வினை கொல்லோ! யானுளங் கலங்கி யாவது மறியேன். வீணரோடும் பரத்தரோடும் கூடி நல்லொழுக்கத்தை இழந்த எனக்குத் தீக்கதி யன்றி நற்கதி யுண்டாமோ; அதுவேயன்றி, இருமுது குரவர்க்கு ஏவல் செய்தலுந் தப்பினேன்; இளமையிலேயே பேரறிவுடையவளாய நினக்கும் சிறுமை செய்தேன்; இவ்வொழுக்கம் வழுவென்பதும் பார்த்திலேன்; நீயோ இங்கே வருவதற்கு எழுக வென்றவளவில் எழுந்தாய்', என்றிங்ஙனம் இரங்கிக் கூறினான். இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கண்ணகி கூறும் பொருண் மொழிகளே அவளுடைய உயரிய பண்புகளனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கச் செய்கின்றன. அவை, " அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும் பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் முந்தை நில்லா முனிவிகந் தனனா அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி யளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயுந் துன்பமும் நொடிவது போலும்என் வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப் போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா வுள்ள வாழ்க்கையே னாதலின் ஏற்றெழுந் தனன்யான்." என்பன. இதற்குமுன் கண்ணகி கோவலனிடம் பேசிய வார்த்தையாக அறியக் கிடப்பன, அவன் மாதவி மேல் வெறுப்புற்று வந்து இரங்கிக் கூறிய காலையில், ‘சிலம்புள கொள்ளும்,' எனக் கூறியதும், காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வழிக்கொண்டு ஒரு காததூரம் வந்த அளவில், ‘மதுரை மூதூர் யாது,' என வினாவியதுமே யாகும். கணவன் தன்னைப் பிரிந்து மாதவியை மருவியிருந்தமை குறித்தாதல், அதனால் தன் வாழ்க்கைக் குண்டான முட்டுப்பாடு முதலியன குறித்தாதல் ஒரு வார்த்தை யேனும் கூறிற்றிலள்; இப்பொழுதுதான் அவைகளைக் குறித்துப் பேசுதற்கு ஒரு செவ்வி வாய்த்தது. கோவலன் தான் நல்லொழுக்கந் துறந்ததும், தனக்குத் துன்ப மிழைத்ததும் முதலியவற்றைக் கூறிய துடன், அவனுடைய தாய் தந்தையரைப் பற்றியும் நினைக்குமாறு செய்தான். இந்த நிலைமையில், தன்னை அருகழைத்து அணைத்துக் கொண்டிருக்கிற கணவன் முன்பு கண்ணகி யாதும் உரையாடாது எங்ஙனம் வாய்வாளாமை மேற்கொண்டிருத்தல் கூடும்? கணவனுடன் சில சொற்கள் பேசுவது அவளுக்குக் கடப்பாடாயிற்று. இங்கே தன் கணவனால் குறிப்பிடப்பெற்ற தன் வாழ்க்கையைப் பற்றி யன்றி வேறு தான் பேசுதற்கு யாவை யுள? அன்றியும் தன் கணவன் கூறியவற்றிற்கு மறுமொழி யொன்றுங் கூறாதிருப்பது இயற்கையன்றே? இங்கே தன் வாழ்க்கையைப் பற்றி யாது கூறுவது? கணவன் யாதும் பிழை செய்திலன் என்று கூறி அவனைத் தேற்றுவதா? அங்ஙனமாயின், அது சிறிதும் உண்மையோடு பொருந்தியதன்று; கணவன் செய்தது பிழை யென்றும், அதனால் தனக்குண்டாய துன்பம் பெரிதென்றும் கூறுவதா? தான் செய்த தவற்றினை யுணர்ந்து இரங்கிக்கூறுகின்ற தன் ஆருயிர்க் காதலன் முன்பு, அவன் தன் பெருமையெல்லா மிழந்து சிறுமையுற்றிருக்கும் இந்நிலைமையில் தான் அங்ஙனம் கூறுவது பொருந்துவதன்றே? மற்றும், கணவன் இன்புறத் தான் எவ்வகைத் துன்பமும் உழத்தற்கு ஒருப்பட்டிருக்கும் கற்புடை மகள் எங்ஙனம் கணவனெதிரே தன் துன்பத்தைப் பெரிதாகக் கூறி அவனுக்கு மேலும் துன்பம் விளைவிப்பாள்? ஆக, இப்பொழுது கண்ணகி கூறுவன உண்மைக்கு மாறாகாமலும், சமயம் நேர்ந்துழி கணவன் தன் பிழையை உணரும்படி செய்து அவனைத் திருத்த வேண்டிய தன் கடமைக்கும் கற்பிற்கும் பொருந்தவும், கணவற்கு இன்னாமை மிகுதற் கேதுவாகாமலுமுள்ள இரண்டு செய்தி களாம். ஒன்று தன் கணவனது போற்றா வொழுக்கத்தால் தான் ஆற்ற வேண்டிய மனையறமாகிய கடப்பாடு ஆற்றப் படாமை; மற்றொன்று தன் மாமன் மாமிகளுக்கு உண்டாகிய வருத்தம். மனையறம் ஆற்றப்படாமை, ‘ அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’. என்பதனால் உணர்த்தப்படுகின்றது. இங்கே, முற்கூறிய அறவோர்க் களித்தல் முதலியவற்றை இறுதிக்கட் கூறிய விருந்தெதிர் கோடல் என்பதனுள் அடக்கலும் சாலும். அதுவே 'தொல்லோர் சிறப்பின் எனவும் விசேடிக்கப் பட்டுள்ளது. இல்வாழ்வார்க்கு இன்றியமையாத அறமாவது விருந்தோம்பலே என்பது ஆன்றோர் துணிபு. தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் இல்லறவியலில் இல் வாழ்க்கையின் சிறப்பும், வாழ்க்கைத் துணைநலமும், மக்கட்பேறும், இல்லறம் புரிவோர்க்குச் சிறந்த குணமாகிய அன்புடைமையும் முறையே கூறிப்போந்து, அவரியற்ற வேண்டிய அறங்களைக் கூறுவான் றொடங்கி முதற்கண் விருந்தோம்பலையே கூறுதலுங் காண்க. அவ்வதிகாரத் தொடக்கத்தே. ‘ இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’. என விருந்தோம்பலின் இன்றியமையாமை கூறப்பட்டது. பழந்தமிழ்நூல் பலவற்றுள்ளும் இவ்வாறே இவ்வறம் சிறப்பிக்கப்படுவது காணலாகும். குறிஞ்சிப் பாட்டில், தலைவன் தலைவியை வரைந்துகொண்டு இல்லறம் நிகழ்த்துதல் கூறி, அவளைத் தெளிவித்தா னென்னுமிடத்து. ‘ வசையில் வான்றிணைப் புரையோர் கடும்பொடு விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோ டுண்டலும் புரைவதென் றாங்கு அறம்புணை யாகத் தேற்றி.’ எனக் கூறியிருப்பதுங் காண்க. இவ்வறமானது ஒத்த அன்பினராய கணவனும் மனைவியும் கூடியிருந்தல்லது ஒருவராற் செயற்பாலதன்று. இவ்வுண்மை, சீதாபிராட்டி இராவணனால் இலங்கையிற் சிறைவைக்கப்பட்டிருந்த பொழுது தன் ஆருயிர் நாயகனாகிய இராமபிரானது தனிமைக்கு வருந்தினமை கூறுமுகத்தால், ‘ அருந்து மெல்லட காரிட அருந்துமென் றழுங்கும் விருந்து கண்டபோ தென்னுறு மோவென்றுவிம்மும்’ எனக் கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பநாடரால் அழகுறப் புலப்படுத்தப் படுகின்றது. தன் அருமந்த நாயகனைப் பிரிந்து கொடியவர்களாகிய அரக்கர்களின் ஊரில் தனியே காவலிலிருந்து கொண்டிருக்கும் தனது துன்பத்தைக் காட்டிலும் தன் நாயகனுக்குள்ளதாம் துன்பமே சீதைக்குப் பெரியதாய்த் தோன்றிற்று. உலக முழுதுக்குந் தலைவனாகிய பெருமான் காட்டிலே மிக எளிமையுற்று அங்கே கிடக்கும் கீரையை உணவாக உண்ணும்படி நேர்ந்ததே என்னும் வருத்தத்தின் மேல், அதனைத்தானும் தானிருந்து முகமன்கூறி ஊட்ட உண்ணுதற் கிலனாயினானே என்னும் வருத்தம் முதற்கண் உளதாயிற்று. எனவே, எளிய புல்லரிசிக் கூழாயினும் அடகாயினும் மாண்புடைய மனைவியால் உபசரித் தூட்டப்படுமேல் அஃது இனிதா மென்பதாயிற்று. உயர்குணனெல்லாம் ஒருங்குடைய தன் நாயகன் தானிருந்து உண்பிக்காமையானெய்தும் வருத்தத்தினும் பிறிதொன்றானெய்தும் வருத்தம் பெரிதாமென்று பின் சீதை ஏங்குகின்றாள். அவ்வருத்தந்தான் விருந்தினரைக் கண்டவிடத்து அவரை உண்பிக்கப் பெறாமையானெய்துவதாம். இதனானே தாமியற்ற வேண்டும் அறமாகிய கடப்பாட்டினையியற்று தற்கண் நேரும் முட்டுப்பாடே சான்றோர்க்கு எவற்றினும் பெருந் துன்பமாம் என்பது பெறப்படும். நாயகியாகிய தானின்றி நாயகனாகிய இராமபிரானால் விருந்தோம்பலாகிய அறம் இயற்றப்படு வதன்றே யெனவும், அதனால் விருந்தினரைக் கண்டுழி அவன் எங்ஙனந் துயருழக்குமோ வெனவும், சீதை உளம் வெதும்பினா ளென்க. மனைவியின்றிக் கணவனால் அறம் நிகழ்த்தப்படா தென்பது இதனாற் போந்தது. இனி, கண்ணகியோ நாயகனாகிய கோவலன் தன்னைப் பிரிந்திருந்தமையால் விருந்தோம்பலாகிய இல்லறம் தன்னால் இயற்றப்படாமை குறித்து வருந்துவாளாயினாள். ‘விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை', என்பதனால் அதுவே அவட்குப் பெரியதோரிழப்பாகத் தோன்றிற் றென்பதும், தானெய்தலாகும் இன்பத்தை யிழந்தது அங்ஙனந் தோன்றிய தின்றென்பதும் பெற்றாம். இல்வாழ்க்கையிற் புகும் ஒரு நங்கை எத்துணைப் பேரறிவும், பெரு நோக்கமும் உடையளாதல் வேண்டுமென்பதை இது தெளிவுபடுத்துகின்றது. இனி, மாமன் மாமிகளுக்குண்டாகிய வருத்தம் ஒரு வகை நிகழ்ச்சியின் மேலிட்டு, ‘ நும், பெருமகள் தன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் முந்தை நில்லா முனிவிகந் தனனா அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி யளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயுந் துன்பமும் நொடிவது போலும் என் வாயன் முறுவற்கவர் உள்ளகம் வருந்த’ என்பதனால் உணர்த்தப்படுகின்றது. "பெருமை மிக்க நும் தாயும் தந்தையும் என்னைக் கண்டு, நீர் என் முன்பு நில்லாமையால் உளதாம் வெறுப்புச் சிறிதும் புறந்தோன்றாமல் நான் கரந்தொழுகி னேனாக, அவர்கள் அது தெரிந்து தம் உள்ளத்தின் மிக்க அன்போடே அருள் கலந்த மொழியால் என் பொறுமையைப் பாராட்டுதல் செய்து, அவர்கள் வருந்தாமைப் பொருட்டு நான் என் வாயிலே தோற்றுவிக்கும் பொய்ம்முறுவலைக் கண்டு, அஃது என் நெஞ்சிலே ஒளித்த மெய் வருத்தமும் மனக் கவலையும் வெளிப்பட்டு வாய்திறந்து சொல்வதுபோலவிருந்த தென்று உளம் வருந்தாநின்றனர்," என்பது இதன் பொருள். "இங்ஙனம் அவர் வருந்த நீர் போற்றா வொழுக்கத்தை விரும்பினீர்" என்று கண்ணகி கோவலனை நோக்கிக் கூறினாள். இங்கே கோவலனுடைய தாயும் தந்தையும் தம் புதல்வனைக் குறித்து வருந்துதலின்றிக் கண்ணகியுற்ற துன்பத்திற்கே வருந்துதலும், அவளது பொறையைப் பாராட்டுதலும் அவர்களின் உயர்குணத்தைப் புலப்படுத்துகின்றன. மாமன் மாமிகளாயுள்ளோர் தம் மருகி திறத்து எத்தகைய அன்புடையரா யிருக்க வேண்டுமென்பது இதனாற் பெறப்படும். கண்ணகியே தனக்குண்டாய வருத்தத்தைச் சிறிதும் கருதாது தன் மாமன் மாமிகளுக்குண்டாய வருத்தத்திற்கு இரங்குகின்றாள். இதைப் பார்க்கிலும் அவளது உயர் குணத்திற்கு வேறென்ன சான்று வேண்டும்? கண்ணகி கோவலனது பொருந்தா வொழுக்கத்தை இங்கெடுத்துக் காட்டுந் திறன் மிகவும் போற்றற்குரியது. அவன தொழுக்கம் தீதென்பதனை, அவனுடைய அருமைத் தாயும் தந்தையும் மனம் வருந்துதற்குக் காரணமாயுள்ள தென்பதனாற் குறித்திடுகின்றாள். இதனால் ஒருவன் தன் தாய் தந்தையர் உளம் வருந்துதற்குக் காரணமான தீய வொழுக்கத்தை மேவுதல் சிறிதும் அடாததொன்றெனும் நீதி புலப்படுத்தப்படுகின்றது. "இங்ஙனம் நீர் போற்றாவொழுக்க முடையீராயினும் யான் நுமது வார்த்தையைச் சிறிதும் மாற்றாத உள்ள வாழ்க்கையேனாகலின் யான் அதற்கு மனம் பொருந்தி எழுந்தேன்" என்று கூறினாள். இதனால் ஒரு கற்புடைய மாதின் முதற்கடன் தன் கணவன் சொல்லை மனத்தாலும் மாற்றி நடவாமை யென்பது போதருகின்றது. ‘ கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை’ என்னும் அமிழ்தமொழி இங்கே சிந்திக்கற்பாலது. இனி, கண்ணகியின் கற்புமாட்சியைத் தெரிவிக்கும் பிறிதொரு சான்றுளது. தன் கணவனாகிய கோவலனைப் பிரிந்து தனித் துறையும் கண்ணகி நல்லாள் தீக்கனாக் கண்டு அதனைத் தன் தோழியாகிய தேவந்தியென்னும் பார்ப்பனிக்கு அறிவிக்க, அவள் கண்ணகியை நோக்கி, 'பொற்றொடீஇ! நீ கண்ட கனவு பற்றி வருந்த வேண்டா; நீ அவனால் வெறுக்கப்பட்டாயுமல்லை; நின் கணவன் காரணமாக ஒரு நோன்பு முற்பிறப்பிலே தப்பினாய்; அதனால் வந்த தீங்கும் ஒழிவதாக; காவிரி கடலோடு கலக்கும் சங்கமுகத் தயலதாகிய நெய்தலங்கானலிடத்துச் சோமகுண்டம் சூரிய குண்டம் என இரண்டு தடாகங்கள் உள்ளன; அவற்றில் நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுகின்ற மகளிர் வாழ்நாள் முழுதும் கணவருடன் பிரிப்பின்றி யிருந்து இன்புறுவர்; மறுமையிலும் போகபூமியிற் போய்ப் பிறந்து கணவருடன் பிரியாதிருந்து இன்பந் துய்ப்பர்; ஆதலின், நாமும் ஒருநாள் சென்று நீராடக் கடவோம்' என்றாள். ஆனால் கண்ணகியோ, 'கற்புடை மகளாய எமக்கு அஃது இயல்பன்று', என்று கூறி விட்டனள். மகளிர் தம் கணவர்க்கு உறுதுணையா யிருந்து இல்வாழ்க்கை நடாத்துதற்கண் மேற்கொள்ளத்தக்க கடன்கள் பலவுளவேனும், கற்புடைமைக்குச் சிறப்பியல்பாவது அவர் தம் கணவரையன்றி வேறு தெய்வத்தை வணங்காதிருத்தலேயாம். தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும், ‘ தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை’ என்று கூறியருளினார். ‘ இன்னிசை யெழிலியை யிரப்பவு மியைவதோ’ ‘ கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ’ ‘ வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மியைவதோ’ எனப் பாலைக்கலியில் வருந்தொடர்களும் தெய்வந் தொழாமையை விளக்குவனவாகும். இவ் விலக்கணத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாகக் கண்ணகியின் வரலாறு அமைந்திருப்பது காணற்பாலது. இனி, கோவலன் கண்ணகி எனும் இருவருடைய குணமேன்மையையும் ஒருங்கு தெரிவிக்கற்பாலதாகிய நிகழ்ச்சி யொன்றுளது. கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் காவிரியின் தென்கரையை யடைந்து ஒரு பொழிலில் இருந்தபொழுது, பரத்தை யொருத்தியும் தூர்த்தன் ஒருவனும் அவ்வழி வந்தவர் காமனையும் இரதியையும் போலும் இவர்கள் யாரென்று கேட்டறிவோமெனச் சொல்லி, கவுந்தியடிகளைப் பார்த்து, ‘மெலிந்த யாக்கையையும் நுண்ணிய தவத்தையும் உடையீர்! நும்மோடு கூடி வழிவந்த இவர்கள் யாவரோ,' என வினவினர். அவ்விருவரும் இவ்விருவரையும் வினவுதல் கண்ட கவுந்தியடிகள், ‘இவர்கள் என் மக்களாவர்; நீர் சொன்ன காமனும் தேவியு மல்லர்; மானிட யாக்கையர்; வழிவருதலால் மிகவும் வருந்தினர்; அவருழைச் செல்லாதே அகலப்போமின்', என்னலும், அத்தீயோர் அதுகேட்டு நகைத்து, 'கற்றறிந்தவரே, ஒரு வயிற்றுப் பிறந்தோர் கொழுநனும் மனைவியுமாய்க் கூடி வாழுமாறு நீர் கற்ற நூல்களிற் சொல்லிக் கிடப்பதுமுண்டோ,' என இகழ்ந்துரைத்தனர். இத் தீமொழியைக் கேட்டலும் கண்ணகி யானவள் செவிகளைப் புதைத்துக் கொண்டு தன் காதலன் முன்பு நடுங்கி நின்றனள். கவுந்தியடிகளோ, 'இவர் என் பூங்கோதை போல்வாளை யிகழ்ந்தனர்; இவ் விகழ்ச்சியால் துடக்கு முட்களையுடைய காட்டில் நுழைந்து திரியும் முதுநரியாகக் கடவர்' எனச் சாபமிட, தவத்தின் விளைவாகிய அச் சாபமானது அக் கணத்திற்றானே அவரைச் சென்று பொருந்திற்று. கோவலனும் கண்ணகியும் நரியின் கூக்குரலைக் கேட்டனர்; அடிகள் மனத்தால் நினைத்து இட்ட சாபமானதால் நிகழ்ந்ததை யறியார்களாகிய அவர்கள் அத்தீயோர் இகழ்ந்து கூறினமையாலும், இவரன்றிச் சபிக்க வுரியார் பிறரின்மையானும் உண்மையை அநுமித்துணர்ந்து, அவருற்ற துன்பத்திற்கு நடுங்கிச் சென்று, ‘நல்லொழுக்க நெறியினின்றும் நீங்கியோர் நீர்மையல்லாத வற்றைச் சொல்லினும், இஃது அவர் அறிவின்மையாற் சொல்லியதன்றோவென உயர்ந்தோர் தமது அறிவால் உணர வேண்டும்,' என உட்கொண்டு, கவுந்தியடிகளைப் பார்த்து, செய்தவத்தீர், உம்முடைய திருமுன் பிழை செய்த இவர்க்கு இனி, சாபநீங்கி உய்யுங் காலத்தை உரைத்தருள்வீர்', என வேண்டினர். அவரும் 'பன்னிரு திங்கள் இவர் இங்ஙனம் துன்பமுற்று, பின்னர் முன்னையுருவம் பெறுவாராக,' எனச் சாபவிடை செய்தார். இங்கே பரத்தையும் தூர்த்தனுங் கூறிய, 'உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதுமுண்டோ' என்னும் வார்த்தை கண்ணகிக்கு அளவற்ற வருத்தத்தை விளைத்ததென்பது அவள் தன் செவிகளைப் பொத்திக் கொண்டு நடுங்கினமையால் அறியப் படும். அங்ஙனமாயினும் கண்ணகியாதல், கோவலனாதல் அவர்கள் மேற் செற்றங்கொண்டாரல்லர். கவுந்தியடிகள் சினந்து சாபமிட்டார். சினமென்பது துறவறத்தினருக்கே முற்றிலும் கடியப்பட்டது; இல்வாழ்வார்க்கு அங்ஙனமன்று. இங்கே கவுந்தியடிகள் செயல் எத்தன்மையதென்னும் ஆராய்ச்சியின்று, இல்லறத்திற் குரியவராகிய கண்ணகியும் கோவலனும் நெறி கடந்தோர் கூறிய கொடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொண்டனர் ஆகலின், ‘ துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தார்வாய் இன்னாச்சொ னோற்கிற் பவர்’ என்னும் பொய்யாமொழியின்படி அவர்கள் துறவறத்தோரினும் தூய்மையுடைவராவர் எனல் சாலும். இனி அவர் பொறுத்ததே யன்றி, சாபத்தால் அன்னோர் நரியாயினமை உணர்ந்த மாத்திரத்தில் மிகவும் நடுங்கி விட்டனர். 'பெறுதற்கரிய மக்கள் யாக்கையைப் பெற்ற இவர் ஒரு சிறு பிழையால், அந்தோ, இவ்விழி பிறப்புற்றனரே,' என அவர் திறத்து இரங்கினர். 'நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியாமையென்று அறியல் வேண்டும்,' என அவர் கருதியது எவ்வளவு பெருந்தகைமையைக் காட்டுகிறது! இதனால், ‘ எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானாம் மாணா செய்யாமை தலை’ என்னுங் கொள்கையை அவர் உடையராதல் தெள்ளிது, எனினும் தவத்துறையினிற்கும் கவுந்தியடிகட்குத் தாம் அது கூறுதல் பொருந்தாமையின், தாம் மனத்தால் அங்ஙனம் சிந்தித்துக் கொண்டு, ‘உய்திக்காலம் உரையீர்', என்பதனையே வாக்காற் கூறினரென்க. கணவற்கும் மனையாட்கும் நெஞ்சு ஒன்றாய தென்பதும் இதனாற் பெறப்பட்டது. இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றிலிருந்து, கண்ணகியின் கற்பு மேம்பாடும், பொறுமை முதலிய குணங்களும் இனிது விளங்காநிற்கும். இனி, கோவலன் கொலையுண்ட பின் கண்ணகி பொறுக்கமுடியாத துயரமுடையளாகித் தெய்வமுற்றாள்போன் றாயினளாகலின், அப்பொழுதை நிகழ்ச்சிகள் மக்கட்டன்மையில் வைத்து ஆராய்தற்குரிய வல்ல. எனினும் அந் நிகழ்ச்சிகள்தாம் கண்ணகியை உலகத்தார் அறிந்துகொள்வதற்கும், வீரபத்தினி யென்றும் பத்தினிக் கடவுளென்றும் கொண்டாடுதற்கும் காரணமா யிருந்தன. அவற்றுள் அவட்குக் கணவன்பாலிருந்த அன்பின் மிகுதியையும், அரசன் முன்னரும் அஞ்சாது வழக்குரைக்கும் அவளது வீரத்தையும் புலப்படுத்துவன சில காட்டுதும். கண்ணகி யிருந்த ஆயர் சேரியில் பலவகையான உற்பாதங்களுண்டாக, மாதரி முதலியோரால் உற்பாத சாந்தியாகத் திருமாலைக் குறித்துக் குரவைக் கூத்து ஆடப்பட்டது. சிலம்பு விற்கச் சென்ற கோவலன் பொற்கொல்லன் சூழ்ச்சியால் வாளால் வெட்டுண்டிறந் தான். கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேள்வியுற்றா ளொருத்தி குரவையாடுமிடத்திற்கு வந்து நிகழ்ந்ததனை வாக்காற் சொல்லலாற்றாதவளாய் மெய்ப்பாட்டாற் புலப்படுத்தி நின்றாள். அப்பொழுது கண்ணகி, ‘ நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும் அன்பனைக் காணாது அலவுமென் னெஞ்சன்றே அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சாயின் மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ’ என்றிவ்வாறாகக் கூறிக் கலக்கமுற்று வினவலானாள். அப்பொழுது அவள், ‘அரசனது அந்தப்புரத்திற் சிலம்பு திருடியவன் இவனேயாமென்று குரைகழல் மாக்கள் கொலை குறித்தனர்,' என்றாள். என்னலும் கண்ணகி, ‘ பொங்கி யெழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கள் முகிலோடும் சேணிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை எங்கணா வென்னா இனைந்தேங்கி மாழ்குவாள்,’ ஆகி, ‘தம்மோடு இன்புற்ற தம் கணவர் எரியின்கண் மூழ்க அவரோடு அதனிடை மூழ்காது துன்பமுறுந் தன்மையாகிய கைம்மை நோன்புகளை நோற்று இடர்ப்படும் உயவற் பெண்டிரைப் போல அன்பனை யிழந்தேனாகிய யான் இருந்தழுவாள் ஒருத்தியோ,' என என்றிங்ஙனம் புலம்பினாள். இவையெல்லாம் கணவன்பால் அவட்கிருந்த அன்பு மிகுதியையும், கற்பின் திறத்தையும் காட்டு வனவாம். அவன் அரசன்முன் சென்று வழக்குரைக்கும் பொழுது, ‘ தேரா மன்னா செப்புவ துடையேன்.’ என்றும், ‘ நற்றிறம் படராக் கொற்கை வேந்தே’, என்றும் விளித்து, தன் நாட்டு அரசனாகிய சோழனது நீதியைப் புலப்படுத்தித் தன் வரலாறு கூறிக் கோவலன் குற்றமுடைய னல்லனென உறுதிப்படுத்தியதும், ‘ பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோ டொழிப்பேன் மதுரையும் என் பட்டிமையுங் காண்குறுவாய்’. என வஞ்சினங் கூறி, மதுரைமாநகரை எரியூட்டியதும் அவளது அஞ்சாமையையும், மறக் கற்பின் பான்மையையும் புலப்படுத்துவன. செங்கதிர்ச் செல்வன் அவளது வினாவிற்கு அசரீரியாக உடன் விடை கூறியதும், அங்கியங்கடவுள் அந்தணவுருத் தாங்கி வந்து, 'யார் யாரை யழிக்க வேண்டும்', என அவளது பணியைக் கேட்டு அவள் பணித்தபடியே புரிந்ததும், மதுரைமா தெய்வம் வெளிப் பட்டு அவட்குப் பழம்பிறப்பின் வரலாறு கூறியதும் தெய்வங் களெல்லாம் கற்புடை மகளிரின் உரைவழி நிற்குமென்னும் உண்மையைப் புலப்படுத்துகின்றன. அவள் வெட்டுண்டு கிடந்த கோவலனைத் தழுவி உயிர்பெற்றெழச் செய்ததும், பின் பதினான்காம் நாளில் தெய்வ வடிவுடன் வந்த கோவலனோடு விமானமேறிச் சென்றதும், வெற்றி வேற்செழியன், கொங்கிளங்கோசர் முதலாயினார் விழாச் செய்து வழிபட அவர்கள் நாட்டில் மழைவளம் பெருகச் செய்தருளியதும், இமயத்தினின்றும் கற்கொணர்ந்து தன்னைப் பிரதிட்டித்து வழிபட்ட சேரன் செங்குட்டுவனுக்குத் தெய்வ வடிவத்தோடு வெளிப்பட்டுக் காட்சி தந்து வாழ்த்தியதும், ஆரியமன்னரும் மாளவ வேந்தரும் இலங்கையரசனாகிய கயவாகுவும் அப்பொழுது அங்கு வந்து, 'இச்செங்குட்டுவனைப் போல எங்கள் நாட்டில் யாங்கள் புரியும் பூசையில் நீ எழுந்தருளி அருள் செய்ய வேண்டும்,' என்று குறையிரப்ப, அவ்வாறே வரமளித்ததும், தான் தேவந்திமேற்றோன்றி அங்கு வந்த இளங்கோ வடிகட்கு அவரது வரலாறு கூறி உவப்பித்ததும் அவள் வழிபடுவோர்க்கு வேண்டிய வரந்தரும் தெய்வமாயினமையைத் தெரிவிப்பனவாம். இனி, கற்புடை மகட்குக் கணவனே தெய்வமாயினும், அவன் தொழுகுலமாகிய தெய்வமும் அவனின் வேறல்லளாகிய அவட்கும் தெய்வமாத லமையும். அவ்வாற்றால் அவளுக்கோர் சமயக் கோட்பாடு முண்டாம். கோவலனும் கண்ணகியும் புகாரினின்று புறப்பட்டு வரும்பொழுது அசோகின் நிழலில் சாவகரால் இடப்பட்ட சிலாதலத்தைத் தொழுது வலங்கொண்டு வந்தன ரென்றும், கவுந்தியடிகள் அவர்களை, ‘பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்', எனக் கூறினரென்றும், ஒரு பொழிலில் தருமஞ்சாற்றும் சாரணர் தோன்ற, அவர்கள் ‘பண்டைத் தொல் வினை பாறுக' என்று கவுந்தியடிகளொடு காலுற வீழ்ந்து வணங்கினரென்றும் இளங்கோவடிகள் கூறிச் செல்லுதலால் கண்ணகியின் சமயம் ஆருகத மென்பது அவர் கருத்தாதல் பெறப்படும். சேரன் செங்குட்டுவனோ சிவபெருமான் வரத்தாற் றோன்றியவ னென்றும், ‘தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி' வைக்கும் சிவபக்தியுடையவனென்றும் அடிகளே கூறுகின்றார். அம்மன்னவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்டதும், அங்ஙனமே ஏனை மன்னரெல்லாரும் வழிபட்டதும் நோக்குழி, பத்தினிப் பெண்டிர் முதலாயினர் யாவரானும் போற்றற்குரிய ரென்னும் உண்மை வெளியாகின்றது. ‘ கற்றவர்க்கு நலனிறைந்த கன்னியர்க்கும் வண்மைகை உற்றவர்க்கும் வீரரென் றுயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக் கொற்றவர்க்கு முண்மையான கோதில்ஞான சரிதராம் நற்றவர்க்கு மொன்றுசாதி நன்மைதீமை யில்லையால்.’ என்னும் பாரதச் செய்யுள் இங்கே நினைக்கத்தக்கது. இனி, கவுந்தியடிகள் கண்ணகியை மாதரிபால் அடைக்கலமாக ஒப்புவிக்கும் பொழுது கூறிய கற்புடை மகளிரின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் இக்கட்டுரையை முடிப்போம். ‘ இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால் வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது நீணில வேந்தர் கொற்றஞ் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு’. குறிப்புரை எண். (பக்க எண்) 179. வரைப்பு - எல்லை. பொற்பு - அழகு. செவ்வேள் - முருகன். மன்றல் - கல்யாணம். துய்த்து - அநுபவித்து. பொன், முத்து, விரை, கரும்பு, தேன் என்பன முறையே ஒளி, பரிசம், மணம், சுவை, ஓசை என்னும் ஐம்புல இன்பங்களைக் குறிப்பன. "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள" என்னும் திருக்குறள் இங்கே நோக்கற்பாலது. அலை - கடல்; ஆகுபெயர். என்கோ - என்பேனோ. 180. நிறைமதி நாள் - பூரணை. விதானித்து. - மேற்கட்டி அமைத்து. சமைத்த - அமைத்த. வரிப்பாட்டு - இசைப்பாட்டு. "திரைவிரி ..... செய்தவையே" இப்பாட்டு, ஒரு தலைமகளை விரும்பி வருந்துகின்ற தலைமகன், தான் அவளைக் கண்ட இடத்தையும் அவள் அழகையும் தன் பாங்கனுக்குக் கூறுவதாக அமைந் துள்ளது; இஃது இயலிடங்கூறல் எனப்படும்; இப்பாட்டின் முன்னி ரண்டடியும் இடத்தையும், பின்னிரண்டடியும் இயலையும் உணர்த்துவன. அகப்பொருள் - இன்பம். 181. பண்டி - வண்டி. வேனிற்பருவம் - வசந்த காலம். மிடறு - கண்டம். தோடு - இதழ். பித்திகை - சிறு சண்பகம். முகை - அரும்பு. அமளி - மெத்தை. 182. ஆறைந்து - முப்பது, நணித்து - சமீபமானது. நக்கு - சிரித்து. ஆருகதம் - சமணம். வாய்த்தலை - வாய்க்காலின் தலைப்பு; மதகு. பழனம் - மருதநிலம். கம்புள் - சம்பங்கோழி. கானக்கோழி - கானாங்கோழி. நீர்நிறக் காக்கை - நீர்க்காக்கை. உள்ளு - உள்ளான். ஊரல் - குளுவை. புள்ளு - கணந்துட்புள். புதா - போதா; பெருநாரை. முனையிடம் - போர்க்களம். பொன்னேர் - நல்லேர்; புதிய ஏர். கடைசியர் - மள்ளத்தியர். முகவை - முகக்கப்படுவது, நெற்பொலி. கிணை - மருதநிலப் பறை. பொருநர் - கூத்தர். ஆற்றிடைக்குறை - ஆற்றின்மணற்றிட்டு. தூர்த்தன் - விடன்; பயனில்சொல்லாளன். உய்திக் காலம் - பிழைக்குங்காலம்; துன்பத்தின் நீங்குங் காலம். சாபவிடை - சாப நீக்கம். 183. ஐயை - கொற்றவை. கோட்டம் - கோயில். தேவராட்டி - தெய்வம் ஆவேசிக்கப் பெறுபவள். பரவுக்கடன் - பூசை. குடமலை யாட்டி - மேற்குமலையை ஆள்பவள். மாலவற்கு - திருமாலுக்கு. இளங்கிளை - தங்கை. பாய்கலைப் பாவை - தாவுகின்ற கலைமானை வாகனமாக உடையவள். சாவா மருந்தாகிய அமுதத்தை யுண்டும் சாதலும்; இறத்தற்கேதுவாகிய விடத்தினை யுண்டும் சாவாது நிற்றலும் கூறினார்; தேவர்களும் தமக்கு வரையறுத்த காலம் முடிந்து இறப்பர் என்றவாறு. நஞ்சினை உண்டது சிவபிரான். மருதமரத்தின் இடையே சென்றதும், சகடத்தை உதைத்ததும் கண்ணபிரான். மாமன் - கம்சன். 184. முடங்கல் - ஓலை. மடிப்புறம் - மடித்த வாயின் புறம். இலச்சினை - முத்திரை. வடியாக் கிளவி - குற்றம் நீங்காத சொல். குரவர் - தாய் தந்தையர். குலப்பிறப்பாட்டி - குலத்திற் பிறந்த மனைவி. என் பிழைப்பு - என் குற்றம். கையறு - செயலற்ற. புரையோய் - உயர்ந்தோனே. 185. குரவம் - குரா. வகுளம் - மகிழ். மரவம் - வெண்கடம்பு. நாகம் - சுரபுன்னை. திலகம் - மஞ்சாடி மரம். சேடல் - பவழ மல்லிகை. பாடலம் - பாதிரி. குருகு - குருக்கத்தி. தளவம் - செம்முல்லை. முசுண்டை - முசுட்டை. அதிரல் - மோசி மல்லிகை; புனலி. வெண்கூதாளம் - வெள்ளை நறுந்தாளி. குடசம் - வெட்பாலை. வெதிரம் - மூங்கில். பகன்றை - சிவதை. பிடவம் - குட்டிப் பிடவம். மயிலை - இருவாட்சி. பரிமுக அம்பி - குதிரை முகஓடம். கரிமுக அம்பி - யானை முக ஓடம். அரிமுக அம்பி - சிங்க முக ஓடம். அறவோர் - இல்லற நெறியிலும் துறவற நெறியிலும் வழுவாது ஒழுகுவோர் - பள்ளி - இருப்பிடம். 186. கொற்றம் - வெற்றி. உன்னி - நினைந்து. செவிலி - வளர்க்குந்தாய். நற்றாய் - பெற்ற தாய். பேணுதல் - பாதுகாத்தல். 187. பூவல் - செம்மண். முகமன் - உபசாரம். அடிசில் - உணவு. அடுதல் - சமைத்தல். குமரி வாழை - ஈனாவாழை, அறவோர் - விரதங் காப்போர். 188. பொய்முறுவல் - பொய் நகை. போற்றா வொழுக்கம் - கூடா வொழுக்கம். ஒருப்பட்டு - உடன் பட்டு. ஆவணவீதி - கடைவீதி. உருக்குத்தட்டார் - பொன் வேலை செய்வார். பணித்தட்டார் - இரத்தின வேலை செய்வார். புரிந்து - விரும்பி. கோப்பெருந்தேவி - அரசன் பட்டத்து மனைவி. 189. ஊடல் - பிணக்கு. மீதூர்ந்து - மிகுந்து. உருத்து - சினந்து. உற்பாதம் - பின்வரும் தீங்கை முன் அறிவிக்கும் குறி, "மூவுலகம் .... செவியே" இதில் திருமால் வாமனனாகத் தோன்றி, மாபலி பால் மூன்றடி மண் இரந்து திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகை அளந்ததும் இராமனாகத் தோன்றி இலங்கை அரக்கர்களை அழித்ததும், கண்ணனாகத் தோன்றி வாணாசுரன் கோட்டையை அழித்ததும் கூறப்பட்டுள. இரண்டடிக்குக் குறை படும்படியாக மூவுலகையும் முடியத் தாவிய சேவடி யென்க. தம்பி - இலக்குமணன். சோ அரண் - வாணன்கோட்டை. சேவகன் - வீரன். 190. உலக மெல்லாம் விரி கமல உந்தி - உலகங்களை யெல்லாம் தோற்றுவிக்கின்ற நாபிக்கமலம். கண்ணும் அடியும் கையும் வாயும் செந்நிற மாகியவன்; கருநிறமுடையவன். மடம் தாழும் - அறியாமை தங்கிய. இழித்தற் பொருட்டாக ஆர் விகுதி கொடுத்துக் கஞ்சனார் என்றார். நூற்றுவர் - துரியோதனனும் அவன் தம்பியரும். ஆரணம் - வேதம். பஞ்சவர் - தருமன் முதலிய பாண்டவர் ஐவர். வேதம் பின்றொடர்ந்து முழங்கப் பாண்டவர் பொருட்டு நூற்றுவர்பால் தூது நடந்தான் என்க. வேதங்கட்கு அரியனாயும் அடியார்க்கு எளியனாயினான் என்றார். கண்ணன் தூது சென்ற வரலாற்றைப் பாரதத்துட் காண்க. சூள் - வஞ்சினம்; சபதம். துறக்கம் - சுவர்க்கம். வார்தர - ஒழுக. 191. பருந்தினாலே துரத்தப்பட்ட ஒரு புறாவானது சிபிச் சக்கரவர்த்தியை அடைக்கலம்புக அவன் தான் பருந்திற்கு வாக்களித்தபடி அப்புறாவின் நிறையுள்ள ஊன் தருதற்குத் தன் தசைகளை அரிந்து துலையில் வைத்து, நிறை சரியாகாமையால் பின் தானே துலையில் ஏறினன் என்பது வரலாறு. திருவாரூரில் அரசாண்ட மனுச் சோழன் தன் மகனது தேர்க்காலில் தானாக அகப்பட்டு உயிர் துறந்த ஆன் கன்றின் பொருட்டு அவனைத் தேர்க்காலில் வைத்து ஊர்ந்து முறை செய்துஇறைவன் திருவருளுக் குரியனாகிய வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க. கோறல் - கொல்லுதல். அருமந்த - அருமருந்தன்ன. மரூஉ. அரசு கட்டில் - சிங்காதனம். துஞ்சியது - இறந்தது. 192. நெடுவேள் குன்றம் - முருகனது மலை. உசாவி - வினாவி. 193. மலைவாணர் - மலையில் வாழ்வோர். சிறுகுடி - வேட்டுவரூர். தொண்டகம், துடி என்பன குறிஞ்சிப் பறைகள். கோடு - கடமாக் கொம்பு. கொடுமணி - ஓசை கடிதாகியமணி. இயக்கி - அசைத்து. வெண்குன்று - சுவாமிமலை என்பர் சிலப்பதிகார அரும்பத வுரைகாரர். ஏரகம் - மலை நாட்டகத்த தொரு திருப்பதி என்பர் நச்சினார்க்கினியர். பௌவம் - கடல். சூர்மா - சூரபன்மனாகிய மாமரம். தடிந்த - துணிந்த. பிணிமுகம் - முருகக் கடவுள் ஏறும் யானை; மயிலுமாம். விசும்பிற்கோன் - இந்திரன். மாறு அட்ட - பகைவரைக் கொன்ற. சரவணப்பூம் பள்ளியறை - சரவணப் பொய்கையிலே தாமரைப் பூவாகிய படுக்கையில். தாய்மார் அறுவர் - கார்த்திகையாகிய ஆறு மகளிர். வரு திகிரிகோலவுணன் - மலையைச் சூழ்ந்து வரும் அவுணன் என்பர் சிலப்பதிகார அரும்பதவுரைகாரர். குருகு - பறவை; அன்றிற் பறவை. குருகு பெயர்க்குன்றம் - கிரவுஞ்சமலை. மான் மயிர்க் கவரி - மான் மயிராகிய வெண்சாமரை. மதுவின் குடம் - தேன் குடம். சந்தனக் குறை - சந்தனக் கட்டை. கறிவல்லி - மிளகுகொடி. கூவை நீறு - கூவைக் கிழங்கின் மா. பைங்கொடிப் படலை - பச்சிலை மாலை. காயம் - வெள்ளுள்ளி. அணங்கு, குருளை, பறழ், களபம், குட்டி, உளியம், மறி, கரு, பிள்ளை என்பன அவ்வவ் விலங்குகளின் இளமைப் பெயர். வாள்வரி - புலி. குடாவடி - கரடி. வருடை - மலையாடு. காசறை - கத்தூரி. நகுலம் - கீரி. 194. நாவி - புழுகு பூனை. 195. படிவம் . உரு. 28. தாம் முதலியன முன்னிலையைப் படர்க்கையாற் கூறியன. வில் சேரர்க்கும். கயல் பாண்டியர்க்கும், புலி சோழர்க்கும் இலச்சினையுமாவன. 196. செலவு - செல்கை. தாபதர் - தவம் செய்வோர்; முனிவர். முழுத்தம் - முகூர்த்தம். நாட்கொள்ளுதல் - நற் பொழுதில் புறப்படுதல். பெருஞ்சோறு அளித்தல் - விருந்து செய்தல். ஆடகமாடம் - திருவனந்தபுரம் என்பர். அறிதுயில் - யோக நித்தரை. சேடம் - பிரசாதம். 197. பாடி - படை வீடு. குயிலுவர் - இசைக் கருவியாளர். பாசண்டநூல் - சமய நூல். நகை வேழம்பர் - விதூடகர். சஞ்சயன் - தூதர் தலைவன், நீர்ப்படை செய்தல் - நீராட்டல். 198. கொன்று குவித்தலை "நூழிலாட்டு" என்று புறப் பொருளிலக்கணங் கூறும். பீலி - மயிற்றோகை. 199. பிக்குணி - பிக்ஷீணி; பௌத்த சமயத்தில் துறவு பூண்ட ஆடவர்க்குப் பிக்ஷீ என்றும், மகளிர்க்குப் பிக்ஷீணி என்றும் பெயர். விகாரம் - அறம் போதிக்கும் அரங்கு. நிமித்திகன் - சோதிடன். அமளிக் கட்டில் - படுக்கை மஞ்சம். 200. ஒழுகை - வரிசை. விரை - வாசனைப் பொருள்கள். ஆடி - கண்ணாடி. கொட்டிச்சேதம் - சிவபெருமான் திரிபுரத்தை யெரித்து ஆடிய கூத்து; இது கொட்டி எனவும், கொடுகொட்டி எனவுங் கூறப்படும். 201. வேள்வி - இராசசூயம். வேளாவிக்கோ மந்திரம் - வஞ்சிநகரின் புறத்திலுள்ள ஒரு மாளிகை. சிறைக் கோட்டம் - சிறைச்சாலை. இறைப் பொருள் - வரி நிலுவை. ஆயம் - கடமை; வரி. 202. அரற்றுதல் - புலம்புதல். 203. கந்துகம் - பந்து. வள்ளைப் பாட்டு - உலக்கைப் பாட்டு. கறவை முறைசெய்த - பசுவிற்கு நீதி செலுத்திய. பாடேலோர் - பாடுவோம்; ஏல், ஓர் என்பன அசைகள். பொலம் செய் கோதை - பொன்னாற் செய்த மாலை. வில் இட - ஒளிவீச. இலங்கு - விளக்குகின்ற. அடித்தும் - அடிப்போம். தேவரார மார்பன் - இந்திரன் போட்ட மாலையைச் சுமந்த பாண்டியன். ஐவரும் நூற்றுவரும் பகைத் தெழுந்த போரில் என்க. பாரதப்போரில் பாண்டவர் சேனைக்குச் சோறளித்தவன் சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன். இதனைப் புறநானூற்றின் இரண்டாஞ் செய்யுளாலும் அறிக. கடம்பு எறிந்தவா - பகைவருடைய காவல் மரமாகிய கடம்பினை வெட்டிய வரலாற்றை. ஆடாம் - ஆடுவோம். அவைப்பார் - குற்றுவார். புகார் மகளிர் காஞ்சி மரநிழலில் முத்தாகிய அரிசியைக் கரும்பாகிய உலக்கையால் குற்றுவார் என்க. வம்பு - மணம். பாழி - அகன்ற. ஆரிக்கும் - பாடும். 204. அருச்சனா போகம் - அருச்சனையின் பொருட்டுத் தானஞ் செய்த நிலம். நித்தல் விழா - நித்தியோற்சவம். பரிவு - உயிர்கள் வருந்துஞ்செயல். தெய்வம் தெளிமின் - தெய்வம் உண்டென்று தெளியுங்கள். தெளிந்தோர்ப் பேணுமின் - தெளிந்தோரை வழிபடுங்கள். புறஞ்சொல் போற்றுமின் - புறம் கூறாமற் காத்துக் கொள்ளுங்கள். ஊன்ஊண் துறமின் - புலாலுண்ணலை விட்டுவிடுங்கள். 205. "தற்காத்து ....... பெண்" கற்பின் வழுவாமல் தன்னைக் காத்துக் கொண்டு, தன்னைக் கொண்ட கணவனை உண்டி முதலியவற்றால் உபசரித்து, நன்மையமைந்த புகழைப் பாதுகாத்து நற்குண நற்செய்கைகளில் வழுவாதவளே இல்லறத்திற் கேற்ற மனைவியாவாள். குமரி - குமரியாறு; இது தெற்கிலிருந்து கடல் கொள்ளப்பட்டது. ஒரு மொழி வைத்து - தமிழ் மொழியை வழங்கும்படி செய்து. இமிழ் கடல் வேலி - ஒலிக்கின்ற கடல் வேலி போற் சூழ்ந்த பூமியை. சலதி - கடல். சிந்தை செல்லாச் சேணெடுந் தூரம் - மனத்திற் கெட்டாத மிக்க தூரம். அந்தமில் இன்பத்து அரசு - முடிவில்லாத இன்பத்தையுடைய வீட்டுலக அரசு. தவக்குரிசில் - தவராசர். முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ். வித்தகம் - சதுரப்பாடு; மிகமேன்மை. செவ்வி - தருணம். மஞ்சு - மேகம். 206. பாவிகம் - காப்பியப் பண்பு. தெரிப்பது - விளக்குவது பிழைத்தோர் - தவறியவர். உரைசால் - புகழமைந்த. பாட்டுடைச் செய்யுள் - இசைப் பாட்டு விரவிய காப்பியம். 207. "எழுத்தின் ....... யான்" இக் காப்பியத்தின் எழுத்துச் சொற்பொருளின் திட்ப நுட்பங்களை அறிந்திலேன் என்றவாறு. தொடர்நிலைச் செய்யுள். தலைசிறந்த - முதன்மையான. உரையிடையிட்ட - உரைச் செய்யுட்கள் இடையிடை விரவிய. வறங்கூர்ந்து - வறத்தல் மிக்கு. குரு - கொப்புளம். நாட்பலி பீடிகை - நாடோறும் பலி கொள்ளும் பலி பீடம். முந்துறுத்து - முற்படச் செய்து. அரந்தை - துன்பம். ஆடித் திங்கள் அகவயின் - ஆண்டுவிழாவாக ஆடி மாதத்தில். பாடி - நகர வீதிகள். பிழையா விளையுள் - தப்பாது விளையும் விளைவு. கோழி - உறையூர். 208. பின்றை - பின்பு. பொன் முதலியவற்றைக் கூறிய கருத்து முன் உரைக்கப்பட்டது. உயிரைமயக்குதலால் கொல்லிப் பாவையாகவும், அவ்வாறு அழியும் உயிரை இமைப்பொழுதில் மீட்டுத் தருதலின் ஆருயிர் மருந்தாகவும் கூறப்பட்டாள் மலையிடைப் பிறக்கும் மணி குழையாமையின், அதிற் பிறவா மணியே என்பேனோ, அலையிடைப் பிறக்கும் அமிர்தத்திற்கு இவ்வடிவின்மையின் அதனிற் பிறவாத அமுதே என்பேனோ, யாழ் கண்ணுக்கு இன்னாதாகலின் அதனிடைப் பிறவாத இசையே என்பேனோ, என விரித்துரைத்துக் கொள்க. இதில், தெரிதரு தேற்றவுவமை, பின்வருநிலை என்னும் அணிகள் அமைந்துள்ளன. தாழ் - தொங்குகின்ற, இரு - கரிய, நலம் பாராட்டு - அழகினைப் பாராட்டுதல். 209. இடையறவு - இடையீடு; தடை. வேறுபாடு திரு - பலவகைப்பட்ட செல்வம். வீறு பெற - உணர்ச்சி பெற்று விளங்க. நனி வேட்டல். மிக விரும்பல். "யாரினு ....... மென்று" தலைவனும் தலைவியுமாக இன்பம் நுகரும் யாவரினும் நாம் காதலுடையோம் எனத்தலைவன் கூற, தலைவியானவள் யாரினும் என்பதற்கு வேறு பொருள் கற்பித்துக் கொண்டு, உன்னால் விரும்பப்பட்ட மகளிருள் யாரைக் காட்டிலும் என்னிடம் காதலுடையாய் என்று கூறிப் பிணங்கினாள் என்பது இக் குறளின் கருத்து. என்றேனா - என்று யான் கூறினேனாக. 211. எரியின் இழுதாகி - நெருப்பிலிட்ட வெண்ணெய் போலாகி. சலதி - வஞ்சகி. நலங்கேழ் முறுவல் - நன்மை பொருந்திய புன்னகை; முறுவலை முகத்திற் காட்டி யென்க. 210. உலந்த - அழிந்த. அடைக்காய் - பாக்கு. சுரநெறி - பாலைவழி. 211. பெரும் பெயர் - மிக்க புகழ். தலைத்தாள் - தலைமையுடைய முயற்சி. முந்தை நில்லா முனிவுஇகந்தனனா - நீர் என் முன்பு நில்லாமையால் வந்த வெறுப்பை நான் கரந்தொழுகினேனாக. அற்பு உளஞ்சிறந்து - அன்பு உள்ளத்தின் மிக்கு. அளைஇ - கலந்து. நொடிவது - சொல்வது. வாய்வாளாமை - பேசாமை; மௌனம். "இருந்தோம்பி ...... பொருட்டு" - இல்லில் இருந்து பொருளைப் பாதுகாத்து வாழுஞ் செயலெல்லாம் விருந்தினரைப் பேணி உபகாரம் செய்தற் பொருட்டாம். வேளாண்மை - உபகாரம். 212. வரைதல் - மணஞ்செய்தல். வான் திணை - சிறந்தகுடி. புரையோர்- உயர்ந்தோர். கடும்பு - சுற்றம். புரைவது - உயர்ந்தது. 213. அறம் புணையாக - இவ்வறமே கரையேற்றும் தெப்பமாக - பெருந்தகையானவன் விருந்துண்ட மிச்சிலை உன்னுடன் உண்டல் புரைவது என்று தலைவியைத் தெளிவித்து என்க. அருந்தும் மெல் அடகு - உண்ணுதற்குரிய மெல்லிய கீரையை. ஆர்இட - யார் இருந்து ஊட்ட. முகமன் - இன்மொழி. 215. சொல் திறம்பாமை - கணவன் சொல்லுக்கு மாறு படாமை. நெய்தலங்கானல் - நெய்தல் நிலத்துச் சோலை. 216. எழிலி - மேகம். கனலி - சூரியன். வளி - காற்று. 217. இறந்தார் - நெறிகடந்தார். நோற்கிற்பவர் - பொறுப்பவர். எனைத்தானும் - சிறிதாயினும். மனத்தானாம் மாணா - மனத்தோடு கூடிய துன்பம். தெள்ளிது - தெளிவு. 218. மெய்ப்பாடு - உள்ள நிகழ்ச்சி உடம்பில் வெளிப்பட்டுத் தோன்றுவது. மன்பதை - மக்கள் கூட்டம். எவன் - யாது. வானிலுள்ள சந்திரன் கரியமேகத்துடன் நிலத்தில் விழுந்தாற்போல எழுந்து விழுந்தாள் என்க. முகத்திற்குத் திங்களும், குலைந்த .கூந்தலுக்கு மேகமும் உவமை. எங்கணா - எவ்விடத்தாய். உயவற் பெண்டிர் - வருந்தும் மகளிர். 219. நற்றிறம் படரா - நன்னெறியில் செல்லாத. பட்டாங்கு - உண்மை. பட்டிமை - அடங்காமை. அசரீரி- உடம்பில்லது. அங்கியங் கடவுள் - அக்கினிதேவன். 220. தொழுகுலம் - வழிபடு தெய்வம். சாவகர் - சமண நோன்பிகள். சிலாதலம் - வட்டக்கல். பெருமகன் - அருக தேவன். சாரணர் - வான்வழியாகத் திரிபவர்; அறங்கூறுவோர். பாறுக - அழிக. புலவர்க்கும், கற்புடை மகளிர்க்கும், வள்ளல்களுக்கும், வீரர்க்கும், செங்கோல் வேந்தர்க்கும், ஞானிகட்கும் சாதி ஒன்றென்றார்; பிறப்பினால் இவர்களுக்குப் பெருமை சிறுமை இல்லையென்க. 3. மணிமேகலை மணிமேகலை யென்பது தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங் களிலொன்று, நல்லிசைப்புலவராகிய மதுரைக்கூலவாணிகன் சாத்தனாரால் இயற்றப்பெற்றது, தொல்லை உரையாசிரியர்கள் பலரானும் எடுத்தாளப்பெற்ற பெருமைஉடையது, "மணிமேகலை நூல்நுட்பங்கொள்வ தெங்ஙன்" என்று திருவெங்கைக் கோவையில் கவிஞர் பெருமானாகிய சிவப்பிரகாச அடிகளாற் சிலேடையில் வைத்துப் பாராட்டப்பெற்றது. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த வணிகர் குலத்தோன்றலாகிய கோவலனுக்கு மாதவியென்னும் நாடகக் கணிகை வயிற்றுதித்த மணிமேகலை யென்பாளது வரலாற்றை யுரைத்தலின் இந்நூல், மணிமேகலை யெனவும், மணிமேகலைத்துறவு எனவும் பேர்பெறுவதாயிற்று. இதனையி யற்றிய சீத்தலைச் சாத்தனாரோ பல்கலைக்குரிசில், சகலகலா வல்லவர், எனக்கூறத்தக்க பெருமையுடையார். முத்தமிழ்ப் புலமையும் நிரம்பிய வித்தகராகிய இளங்கோவடிகளாலும் "தண்டமிழாசான் சாத்தன்" என இவர் சிறப்பித்தோதப் படிருப்பதே இவரது பெருமைக்கு உறுசான்றாகும். சங்கத்துச் சான்றோராகிய சாத்தனார், தாம் அறிந்துள்ள கலைகளையும், கொள்கைகளையும் வெளிப்படுப்பதற்கு இந்நூலைக் கருவியாகக் கொண்டனராதல் வேண்டும். காப்பிய வியல்புகள் இந்நூலின்கண் எங்ஙனம் அமைந்துள்ளன என்பதையும், சில வரலாற்றுண்மைகளையும், புத்தமதத்தின் கொள்கை அல்லது முடிபுகளையும் ஆசிரியர் இதன்கண் எவ்வாறு புலப்படுத்துகின்றார் என்பதையும் ஆராய்தற்கெழுந்ததே இக் கட்டுரையாகும். பெருங்காப்பிய இலக்கணத்தைப் பற்றித் தண்டியலங்காரம் கூறும் நூற்பா, " பெருங்காப்பியநிலை பேசுங்காலை வாழ்த்துவணக்கம் வருபொருளிவற்றினொன் றேற்புடைத் தாகி முன்வரவியன்று நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகட னாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றலென் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடிகவித்தல் பூம்பொழி னுகர்தல் புனல்விளையாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென் றின்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரந் தூது செலவிகல் வென்றி சந்தியிற் றொடர்ந்து சருக்க மிலம்பகம் பரிச்சேதமென்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப" என்பது. இவ்விலக்கணங்களைத் தொகுத்து நோக்கின், பலதிறப் பட்ட மக்கட் பண்புகளும், இயற்கை வருணனைகளும் செறிந்து காணப்படுவதும், உறுதிப் பொருள் நான்கும் பயக்கும் இயல்பினதாய் அதற்கேற்ற பெருமக்களைத் தலைவராகவுடைத்தாயிருப்பதும், ஒன்பான்சுவையும், பாவமும் கற்போர் உள்ளத்தைக் கவர்வனவாக அமைந்திருப்பதும் காப்பியத்திற்கு இன்றியமையாத இலக்கணங் களா மென்பது பெறப்படும். காப்பிய இலக்கணங்களிற் பிறவெல்லாம் அமைந்து கிடப்பினும், சுவையும் மெய்ப்பாடும் துதைந்திராவிடில் அது புலவர்களால் மதிக்கத்தக்க காப்பியம் ஆமாறில்லை. அவை நிறையப்பெற்றுப் புலவருள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பெற்றியதாயினும், உறுதிப்பொருள் களுளொன்றும் பயவாதாயின் அதனாலெய்தலாகும் ஊதியம் ஒன்றுமில்லை. மணிமேகலையானது நாற்பொருளும் பயக்கும் குறை பாடில்லாப் பெருங்காப்பியம் ஆகுமா என்பது ஆராயற்பாலது. சிலப்பதிகாரப் பதிகவுரைத் தொடக்கத்திலும், இறுதியிலும் அக்காப்பியத்தைப் பற்றி அடியார்க்கு நல்லார் கூறியிருக்கும் கருத்துக்கள் இதற்குத் துணைபுரிவனவாம். அவை "உலகத்துக் காப்பியஞ் செய்வோன் அறனும் பொருளும் இன்பமும் வீடுங் கூறல்வேண்டுமன்றே, இந்நாடகக் காப்பியத்தினுள் அறனும் பொருளும் இன்பமும் சிறிதாயினுங்கூறி, வீடு கூறிற்றிலர்; என்னையெனின், 'யானறி குவனது பட்டது' என்று உரைத்த சாத்தனார் நாற்பொருளும் பயப்பப் பெருங்காப்பியமாகச் செய்யக்கருதியிருக்கின்றார்க்கு, அடிகள் 'நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுன்' என உளப்பாட்டுத் தன்மையாற் கூறச், சாத்தனார், இவர் ஏனையிருவேந்தரையும் புகழ்ந்துரை யாரென்பது கருதி, 'மூவேந்தர்க்கும் உரியதாகலின் நீரே யருளுக' என்று ஏகாரவினாப் பொருண்மையான் அவர் கருத்து நிகழ்ச்சி விளங்குவான்கூற, அவர் அதனையே துணிந்து, தமது முத்தமிழ்க் கல்வியும், வித்தகக் கவியும் காட்டுதற்குத், தாம் வகுத்துக்கொண்ட மூவகையுள்ளுறையின் விளைவுதோன்ற, மங்கலவாழ்த்துப் பாடல் முதல் வரந்தருகாதையிறுதி முப்பது வகைத்தாக வரையறுத்து, அதனை அதிகாரமாகப் பொதிந்துவைத்துப், பின்னர், அறனும் பொருளும் இன்பமுங் கூறி, அடைக்கலக்காதை யிறுதிக்கண் 'போதியறவோன்றன் முன், மணிமேகலையை மாதவியளிப்பவும்' எனக் கோவலன் முன் கண்ட கனவின் கண் நிகழ்ந்ததை எதிர்கால நிமித்தமாக மாடலற்குக் கூறுதலானும்,.........வாழ்த்தின்கண் 'மாதவி தன்றுறவுங் கேட்டாயோதோழி, மணிமேகலை துறவுங் கேட்டாயோதோழி' எனத் தேவந்தி கூறுதலானும், .............(பிறவற்றானும்) மணிமேகலை துறந்தாளென்பதுணர்ந்து, அத்துறவினைப் பின் வைத்து அதனோடு நாற்பொருளும் பூரித்துப் பெருங்காப்பியமாக முடித்தலைக்கருதி, அடிகள் சாத்தனார்க்கு இவ்வுரையையுரைத் துழி, அவர் மணிமேகலை பெயரான் அவள் துறவே துறவாக அறனும் வீடும் பயப்ப ஓர் காப்பியஞ் செய்தமைத்தனனெனக் கேட்டு, அவ்வடிகள் விரும்பி இவ்விரண்டினையும் ஒரு காப்பிய மாக்கி உலகின் கண் நடாத்துவான் வேண்டவும், இருவர் செய்தலின் இரண்டாக நடந்தனவென்க" என்பதும், "இது நாற்பொருளுள்ளும் அகத்திணைக் கண்ணது இன்பமாகலானும், புறத்திணைக் கண்ணது பொருளும் அறனுமாகலானும் வீடொழிந்த முடிபு கூறி நின்றது, அதனானன்றே ‘மணிமேகலை மேலுரைப் பொருண் முற்றிய சிலப்பதிகாரம்' என்பாரானதுவுமென்க" என்பதும் ஆம். சிலப்பதிகாரம் அறம் பொருளின்பமென்னும் மூன்றும் பயப்பதென்பதும், மணிமேகலை அறமும் வீடும் பயப்ப தென்பதும் அடியார்க்கு நல்லார் கருத்தாதல் பெறப்படும். சிலப்பதிகாரத்தில் வீடு விரித்துரைக்கப் படாமையின் அங்ஙனம் கருதினர் போலும். அக்காப்பியமானது தமிழியன்மரபு பிறழாமற் செல்வது. " அந்நிலை மருங்கின் அறமுதலாகிய மும்முதற் பொருட்கு முரியவென்ப"- என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தையும், "உலகியற்பொருள் மூன்றனையும் கூறுவான் அவற்றை மும்முதற் பொருளென்றான், அவையின்றி வீடுபெறுமாறு வேறின்மையின் வீடும் ஆண்டுக் கூறினானென்பது" எனப் பேராசிரியரும், "உலகியற் பொருள் மூன்றனையும் கூறி, அவற்றை விடுமாறுங் கூறவே வீடுங்கூறிற்றாம்" என நச்சினார்க்கினியரும் உரைத்திருப்பவற்றையும் நோக்குழி, சிலப்பதிகாரத்தில் வீடும் கூறப்பட்டுளதென்பதே தேற்றமாம். எனினும் மும்முதற் பொருள்களின் நிலையாமையுணர்ந்து, அவற்றைப் பற்றறத் துறந்து, மெய்யுணர்தலே வீடு பேற்றிற்கு நிமித்தமென்பது எல்லா ஆசிரியர்க்கும் ஒப்பமுடிந்த தொன்றாக லானும், சிலப்பதிகாரக் காப்பியத் தலைவனாகிய கோவலன் கொலையுண்டிறந்தமையானும், தலைவியாகிய கண்ணகியும் அவனொடு துறக்கம் புக்கமையானும், துறவுமெய்யுணர்வு களை அவர்கள் வாயிலாக வெளிப்படுத்தற்கு இடனின்றிப் போயினமையின், இளங்கோவடிகள் வீட்டின் நிமித்தத்தை விரித்துரைக்க மாட்டாராய், அதனை ஓராற்றானுணருமாறு மணிமேகலை துறவைக் குறிப்பிட்டுச் சென்றனர் என்க. பண்டை ஆசிரியன்மார்கள் நிலையாமை, துறவு, மெய்யுணர்வு, அவாவறுத்தல் என்பவற்றுள் ஒன்றை வீட்டிற்கு நிமித்தமாகக் கூறும் பொழுது பிறவற்றையும் அதனுளடக்கியே கூறிப் போதருவாராயினார். வள்ளுவனார் துறவறம் என்ற பகுதியில் இந்நான்கனையும் சேரவைத்துக் கூறியிருத்தலும், அவர் நீத்தார்பெருமை கூறுகின்றுழி ஐந்தவித்தல், யோகப்பயிற்சி, தத்துவவுணர்வு என்பவற்றை யெடுத்தியம்பலும் உணர்தற்பாலன. இனி, மணிமேகலை அறமும் வீடும் பயப்பதாம் என்ற அடியார்க்குநல்லார் கூற்று, முற்றிலும் பொருந்துவதே. இக்கதைக்கு நாயகியான மணிமேகலையும், ஆபுத்திரன் என்பானும் அமுத சுரபியென்னும் வற்றாது சுரக்கும் பாத்திரங்கொண்டு, " காணார் கேளார் கான்முட மானோர் பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பிகள் பசிநோயுற்றோர்" ‘யாவரும் வருக வென்றிசைத்து' அவர்களுக்கு அமுதூட்டி உயிர்களின் பசிப்பிணியைப் போக்கியதும், மணிமேகலை வேற்றுருக் கொண்டு தெரிவித்தவாறு, அரசனாகிய மாவண்கிள்ளி, சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கியதும் முதலிய அறச்செயல்கள் இதன்கண் கூறப்பட்டிருத்தலின் இஃது அறத்தினைப் பயப்ப தென்பது தேற்றமே. இருவினையும் பிறவிக்கேது வாகலின் துறவு பூண்டு வீடெய்தும் நெறியில் நிற்கும் மணிமேகலை அறஞ்செய்தல் பொருந்துமேவெனின், ஞானவேதுவாய அறவினைகள் துறந் தோரானும் செய்யப்படுமென்பதே ஆன்றோர் துணிபாம். " அற்காவியல் பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்" என்னும் தமிழ் மறையும், "அதனாற் செய்யப்படும் அறங்களாவன:- பயனோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான வேதுவாய் வீடுபயத்தலின் அவற்றை ‘அற்குப' என்றும், ‘செய்க' என்றும் கூறினார்" என்னும் பரிமேலழகர் கூற்றும் அதனை வலியுறுத்துமாறு காண்க. மணிமேகலை துறவு பூண்டு தவவொழுக்கத்தை மேற்கொண்டிருந்ததும், மெய்ப் பொருளை யுணர்தற் பொருட்டுப் பல்வேறு சமயங்களின் கொள்கைகனைக் கேட்டுணர்ந்ததும், அறவணவடிகளை யடைந்து தவத்திறம்பூண்டு தருமங்கேட்டதும், பவத்திற மறுகென நோற்றதும் முதலியவற்றால், இந்நூல் வீடு பயப்பதென்பது போதரும். பண்டைச் சான்றோர்கள் துறவினை வீட்டிற்கு நிமித்தமாகக் கூறுமிடத்துச் சமயவேறுபாடுகளைக் கருதினாரல்லர். எச்சமயத் தாராயினும் பற்றற்றவர் துறந்தோராவரென்பதும், அவர் வீடுபேறெய் தற்குரியர் என்பதும், அன்னார் கொள்கையாம். மெய்யுணர்தல் என்பது ஆசிரியன்பால் மெய்ந்நூற் பொருளைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிதல் என்று கொண்டனரேயன்றி, இன்ன சமயநெறியில் நின்று மெய்ப்பொருளையுணர்வது மெய்யுணர்வாம் எனக் கருதினாரல்லார். துறவுமெய்யுணர்வுகளைப் பற்றித் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் கூறியுள்ளனவும், ஆண்டாண்டுப் பரிமேலகழர் வரைந்திருக்கும் உரைகளும் இவ்வுண்மையைத் தெளிவுறுத்தல் காணற்பாற்று. சிலப்பதிகாரத்தில், கோவலன், கண்ணகி யென்பவர்கள் சமண்சமய நெறியில் ஒழுகினாராகக் கூறப்பட்டிருக்கவும், கோவலன் மகளாகிய மணிமேகலை புத்தசமய நெறியில் ஒழுகினாளாக இந்நூல் கூறுவதும், இளங்கோவடிகளும், சாத்தனாரும் ஒருவர்முன் ஒருவர் தாம்தாமியற்றிய இக்காப்பியங் களைக் கூறிக்கேட்பித்ததும், இவ்விருகாப்பியங்களையும் அவர்கள் ஒன்றாக நோக்கினமையும், யாம் முற்கூறியாங்கு அவர்கள் சமய வேறுபாடு கருதிற்றிலர் என்பதனை விளக்கும். சாத்தனார் சமயக்கணக்கர் தந்திறங்கேட்டகாதையில் அக்காலத்து வழங்கிய சைவம், வைணவம், பிரமவாதம், வேதவாதம் என்பனவும், சமண்மதத்தின் பிரிவுகளாகிய ஆசீவகம், நிகண்டம் என்பனவும், சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் என்பனவும் அளவைவாதம் என்பதனுள்ளே உலோகாயதம், நையாயிகம், மீமாஞ்சகம் முதலாயினவும் ஆகிய பல்வேறுசமயங்களின் இயல்புகளையும் தொகுத்து உணர்த்தியிருப்பதும், தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதையில், பிரத்தியக்கம், அநுமானம் என்னும் அளவைகளினியல்பைக் கூறப் புக்கு, அநுமானத்தை மிக விரித்துரைத்திருப்பதும், பவத்திறமறு கெனப் பாவைநோற்ற காதையில் புத்தசமயத்தின் தத்துவங்கள், கொள்கை களனைத்தையும் தெளிவுற விளக்கியிருப்பதும் பல சமய நுல்களிலும், தருக்கம் முதலியவற்றிலும் அவருக்கிருந்த பரந்த புலமையை வெளிப்படுப்பனவாகும். அதனாற்றான் "தண்டமிழாசான்" என்று இவரை இளங்கோவடிகள் புகழ்ந் துரைத்தாராவர். ஆசிரியர் என்னும் சிறப்புப்பெயரை இங்ஙனம் பலகலைகளினும் வல்லுநராயுள்ளோர்க்கே முற்காலத் தறிஞரானோர் கொடுத்து வழங்கினர் என்பது, "ஆசிரியர் நல்லந்துவனார்" என்பது முதலிய வழக்குகளால் அறியலாகும். பலசமய வுண்மைகளையும், அளவைகளி னியல்புகளையும் அவற்றினிலக்கணங்கூறும் முறையால் முதல்முதலாகத் தமிழில் வெளியிட்டருளிய பெருமை சாத்தனாருக்கே யுரியதாகும். மணிமேகலையானது காப்பியவியல்புகளனைத்தும் வாய்ந்த பெருங்காப்பியமாகுமா என்னும் ஆராய்ச்சியில் அஃது உறுதிப் பொருள் நான்கனுள் அறமும் வீடுமே பயப்பதாகும் என்பது இதுகாறும் கூறப்பெற்றது. இனி, தன்னிகரில்லாத் தலைவனையோ தலைவியையோ இஃதுடையதோ என்று நோக்குழி, இக்காப்பியத் தலைவியாகிய மணிமேகலை தவநெறியிலொழுகி அறம்புரிந்து குரவர்பால் உறுதிமொழிகளைக் கேட்டதவமாது என்பதன்றி, வேறு உலகியல் நெறியாற் கூறப்படுதற்குரிய பெருமை யொன்றும் காணப்படவில்லை. மற்று, காப்பியத்திற்கு இன்றியமையாத சுவையும், பாவமும் இதன்கண் எங்ஙனம் விளங்குகின்றன என்பதனை நோக்குதல்வேண்டும். காப்பியங்களில் இராமாயணம்போன்ற சில, சுவைமிக்க கதையமைதியினாலேயே கற்போருள்ளத்தை ஈர்க்கு மியல்பின. அதன்மேற் பாவேந்தர்களின் பாடற்றிறமும் சேரும்பொழுது அவற்றின் சுவைகள் அளவில்லாதனவாய் விஞ்சுகின்றன. இந்நூலிலோ கதையமைப்பில் அத்தகைய சுவையொன்றும் தோன்றுதற்கு இடனில்லை. மற்றும், பலசமய உண்மைகளையும், அளவைகளையுங் கூறுமிடத்துச் சுவையென்பது சிறிதும் காணப்படுமாறில்லை. அவ்விடங்களில் ஆசிரியர் சமயநூற் பொருண்மைகளைச் செய்யுள் வடிவில் யாத்தமைத்தது அருமைப்பாடேயெனினும், கவிதையால் முகரப்படும் சுவை மெய்ப்பாடுகளும், சொற்பொருளின்பங்களும் ஆண்டுச்சிறிதும் பெறப்பட்டில. காப்பியத்தின் இறுதிப்பகுதி இவ்வியல்பிற்றாய் முடியினும் இக்கதையுள்ளும் ஏனைப் பகுதி களிலே பாவலர் விருந்தாம் தீஞ்சுவைச் செஞ்சொற்கவியின்பம் செறிந்து திகழுமாறு பாட்டியற்றிய சாத்தனாரது புலமைமாண்பு எத்துணையும் பாராட்டற்குரியதாம். அத்தகைய இன்பகுதியுள் ஒரோ சில இறுதிக்கட் காட்டப்படும். இனி, இவ்வாசிரியரால் இதன்கண் வெளிப் படுத்தப் பெறும் உண்மைகள் யாவையென நோக்குதும். காப்பியத்தலைவியான மணிமேகலை முதலானோரின் வரலாறுகளே ஓர் உள்ளுறையை உடையனபோலத் தோன்றுகின்றன. பரதகண்டத்தின் வடகோடியிலே காந்தாரநாட்டின் கீழ்பாலுள்ள தேயங்களில் இரவிவன்மன் என்னும் வேந்தனுக்குப் புதல்வியராய்த் தோன்றி, இரண்டு அரசிளந் தோன்றல்களுக்கு வாழ்க்கைத் துணைவியராய்ப்புக்க தாரை, வீரை, இலக்குமி என்னும் மகளிர் மூவரில், மூத்தவளாகிய தாரையும், இளையளாகிய இலக்குமியும் மறுபிறப்பிலே சோணாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தில் மாதவி என்னும் நாடகக் கணிகையாகவும், அவள் மகளாகிய மணிமேகலையாகவும் பிறந்திருக்கின்றனர். வீரை என்பவளோ சண்பைநகரத்தில் ஓர் அந்தணனுக்கு மகளாய்த்தோன்றி, விஞ்சைய னொருவனால் வௌவிக் கொண்டு வந்து புகார் நகரில் விடப்பட்டு, மாதவிக்குத் தோழியாகின்றாள். இலக்குமிக்குக் கணவனாயிருந்து திட்டிவிடம் என்னும் பாம்பால் உயிர்துறந்த இராகுலன் என்னும் ஏந்தல் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுமுடிக்கிள்ளி யென்னும் சோழ மன்னனுக்குப் புதல்வனாய் உதயகுமரன் என்னும் பெயருடன் தோன்றி மணிமேகலையைக் காதலிக்கின்றான். இங்ஙனம் வடாது நாட்டிலே ஒருங்கு பிறந்து வாழ்ந்துவந்த சிலர் தமிழ் நாட்டிலே ஒருசேர மறுபிறப்புற்று வாழ்தலாகிய இவ்வரலாறு, புத்தமதமானது முதற்கண் வடநாட்டிற்றோன்றிப் பின் தமிழ் நாட்டில் இடம் பெற்ற உண்மையைக் குறிப்பின் உணர்த்துவதுபோலும்? மணிமேகலை யானவள் மணிபல்லவம் என்னுந் தீவையடைந்து, ஆங்குள்ள புத்த பீடிகைக் காட்சியால்தனாது பழம் பிறப்பின் வரலாற்றையறிவது தமிழ் நாட்டிற் புத்தமதம் பரவுதற்கு முன்னரே இலங்கையில் அது வேரூன்றியதனைப் புலப் படுத்தற்குரியது. இரத்தினத்தீவஞ் சென்று அறவாழியுருட்டிவந்த சாதுசக்கரன் என்னும் பௌத்த சாரணமுனைவனை மணிமேகலையின் முற்பிறப்பினளாகிய இலக்குமி வழிபட்டாள் என்னும் செய்தியும் இதனை வலியுறுத்துவ தாகும். இன்னும் இவ்வரலாறு களிலிருந்து, பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் பிறழா உண்மையாமென்பதும், இறந்த உயிர்கள் மறுமைக்கண் பற்றின்வழியே தொடர்புடைய பிறவி களை யடையும் என்பதும், ஊழ்வினை பயனையூட்டுதல் ஒரு தலை யென்பதும், மற்றும் இவை போல்வனவுமாகிய சமயக் கோட்பாடுகள் வெளிப்படுத்தப் படுதலும் காண்க. உயிர்கட்கு ஒரு பிறப்பிலுள்ள கெழுதகைமை அல்லது சம்பந்தம் பல பிறப்பினும் தொடர்ந்து வருவதுண்டு என்பது, காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள உலகவறவி எனும் அம்பலத்தில் உதயகுமரன் காஞ்சனன் என்னும் விஞ்சையனால் வெட்டுண்ட பொழுது வருந்திப் புலம்பிக்கொண்டு அவனருகே சென்ற மணிமேகலையை நோக்கி, ஆண்டு ஒர் தூணின்கண் உறைந்த கந்திற்பாவை யென்னுந்தெய்வம் " நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉம் மனக்கினியாற்கு நீ மகளாய தூஉம் பண்டும் பண்டும் பலபிறப்புளவால் கண்ட பிறவியே யல்ல காரிகை" என்றுரைத்து அவளை அவனருகே செல்லாது தடுத்தது என்னும், வரலாற்றால் வலியுறுத்தப்படுமாறும் ஓர்க. இங்ஙனம் எத்தனையோ பல பிறவிகளிற் கணவனும் மனைவியுமாயிருந்து வந்த வரலாற்றை இத்தெய்வம் அறிந்து கூறியது பெரிதும் இறும்பூது விளைக்கின்றது. கந்திற்பாவை மணிமேகலைக்குக் கூறியது இதுமட்டுமோ! அவள் இப்பிறப்பில் இனிச் செய்யவிருக்குங் காரியங்களை நிரலேயுரைத்து வந்து, முடிவிலே அவள் காஞ்சி நகரத்தையடைந்து அறவணவடிகள் பால் அறவுரைகேட்டு அறங்கள் பலவற்றையும் புரிந்து உயிர்நீத்து மேல்வரும் பிறப்புக்களெல்லாம் உத்தரமகத நாட்டில் எய்துவள் என்றும், அவை யெல்லாம் ஆண் பிறப்பாகவே நிகழுமென்றும், அப்பிறப்புக்களொவ்வொன்றிலும் அருளறத்தின் வழுவா தொழுகி இறுதியிற் புத்ததேவனுக்கு முதல் மாணாக்கனாகும் பெரும்பேறுற்றுப் பற்றற்று முத்தியடைவள் என்றும் உரைத்தருளியது. இற்றைநாளினும் ஊர்களினும், வனமாதிய வற்றினும் உறையும் இருபாலவாய தெய்வங்கள் பலவும் " புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து" தம்மை வழிபடுவார்க்கு மேல்நிகழ்ச்சிகளை ஒரோவழி அறிவித்துதவல் காண்டுமெனினும், அவை இத்துணைப் பேரறிவு விளக்கம் உடையவாதல் கண்டிலம். "மறுவில்செய்தி மூவகைக் காலமும், நெறியினாற்றிய அறிவர்" ஆகும் அமரமுனிவர்களும் இன்னணம் இடையிட்ட பல பிறவிகளுக்கப்பால் நிகழுஞ் செய்தி களையும் அறிந்து கூறினாராகக் கேட்டதோஇலம். புகாரிலிருந்த மணிமேகலா தெய்வமென்பதொன்றும் முன்பு மணிமேகலையை உதயகுமரன் கையில் அகப்படாவாறு எடுத்துச்சென்று மணிபல்லவ மெனுந் தீவிலுய்த்து, புத்த பீடிகைக் காட்சியால் அவள் பழம் பிறப்பின் வரலாறுகளை யுணரும்படிச் செய்தது. இங்ஙனம் பல்வேறு தெய்வங்கள் முக்கால நிகழ்ச்சிகளையும் முற்றவறியும் உணர்வுடையவாய் அரும்பெருஞ் செயல்கள் பலவற்றைச் செய்து போதருதல் பெருவியப்பே. மணிமேகலையிற் கூறப்பட்டுள்ள இத்தெய்வங்கள் புத்தசமயத்தின் மேம்பாட்டை யுணர்ந்து அச்சமய நெறியிலே மக்கள் ஒழுகுமாறு போதனை செய்வது இன்னும் பெருவியப்பாகவுள்ளது. தமிழ் நாட்டிலே புத்தமதம் பரவுதற்கு முன்னரே இத்தெய்வங்கள் அதன் உண்மைகளை நன்கு அறிந்திருந்தன போலும்! இத்தொடர் நிலைச்செய்யுளோ பிறிதொருமொழி யினின்று மொழி பெயர்க்கப்பட்டதன்று. தமிழ் நாட்டிலே பிறந்து வாழ்ந்தோரின் வரலாறாகிய இதனை அக்காலத்தே விளங்கிய தமிழ்ப் புலவராகிய கூலவாணிகன் சாத்தனார் தமிழிலேயே முதன் முதலாக வெளிப்படுத்துள்ளார். அவர் மணிமேகலை முதலானவர்களின் முற்பிறப்பின் வரலாற்றையும், பின் பல பிறவிகளில் நிகழவிருக்கும் செய்திகளையும் இதிலே கூறியுள்ளார். பழம்பிறப்பையுணர்ந்த மணிமேகலை முதலாயினோர் வாயிலாகவே இவ்வுண்மைகள் சாத்தனாரால் அறியப் பெற்றனவோ, அன்றி அன்னோர்க்கு அவற்றை யறிவுறுத்த தெய்வங்கள்தாம் அவருக்கு முணர்த்தினவோ அறிகிலம்! இனி, கடைச்சங்கத்து இறுதிநாளிலேயே சமண புத்தமதங்கள் தமிழ் நாட்டிலும் புகார், மதுரை, வஞ்சி முதலிய நகரங்களிலேயே அவற்றைப்பரப்பும் முயற்சிகள் நிகழ்ந்து வந்தனவென்பதும், நகருக்கு வெளியே எயிலின்புறத்தேயே அருகர் புத்தர் பள்ளிகளும், கோட்டங்களும் இருந்தனவென்பதும் சிலப்பதிகாரத்தாலும், இந்நூலாலும் அறியப்படுவனவாம். அந்நகரங்களிலே பலசமையங் களையும் உணர்ந்த பாசண்டிகளும், சொற்போராளரும் இருந்து வந்தனர் என்னும் உண்மையைப் புகாரில் இந்திரவிழாவைத் தெரிவித்து முரசறைபவன், " ஒட்டிய சமயத்துறுபொருள் வாதிகள் பட்டிமண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்" என வுரைத்தானாகக் கூறியிருப்பதும், வஞ்சிமாநகரிலே சமயவாதி களிடத்தே பலசமயக் கோட்பாடுகளையும் மணிமேகலை கேட்ட செய்தியும் உணர்த்தாநிற்கும். அந்நாளிலே பல சமயத்தவரும் சமயப்பூசல் என்பதின்றியே கலந்து வாழ்ந்து வந்தனர் என்பதும், அவர்களில்யாரும் எச்சமயத்தையும் இகழ்ந்துரைத்திலர் என்பதும் சிலப்பதிகாரத்தானும் ஏனைச் சங்கச் செய்யுட்களானும் புலனாகின்ற வுண்மைகளாம். எனினும் இக்காப்பியத்திலேதான் புத்தசமயத்தை மேன்மைப்படுத்தும் பொருட்டுப் பிறசமயத்தை இகழ்ந்துரைத் தலாகிய சமயவெறுப்புச் சிறிதே அரும்பியுள்ளமை காணப்படு கின்றது. சுதமதியின் தந்தையாகிய கௌசிக னென்னும் அந்தணன் புகார்நகரிலே தன்மகளைக் கண்டு அவளுடன் பிச்சையெடுத்த தற்குச் செல்லும்பொழுது ஒர் புனிற்றாவானது பாய்ந்து வயிற்றைக் கிழித்துவிட, அதனாற் சரிந்த குடரைக் கையிலேந்திக்கொண்டு, சுதமதி முன்பிருந்த சமணப் பள்ளியையடைந்து அங்கிருந்த முனிவர்கள்பால் அடைக்கலம் புகாநிற்கவும், அவர்கள் சினத்துடன் அவனையும் சுதமதியையும் புறத்தே தள்ளிவிட்டனரென்றும், பின்பு அவ்விருவரும் 'எம்மைப் பாதுகாக்கும் அறவோருண்டோ' என்று புலம்பிக்கொண்டு சென்றபொழுது சங்கதருமன் என்னும் புத்தமுனிவன் பேரிரக்கத்துடன் அவ்வந்தணனைத் தழுவி யெடுத்துச் சென்று பௌத்த சங்கத்தார் இருப்பிடத்தையடைவித்து, அவனது இறப்புத்துன்பத்தைப் போக்கியதுடன் சுதமதிக்குப் புத்த தேவனுடைய பெருமைகளை அறிவுறுத்தினானென்றும் கூறப் பட்டுள்ள செய்தி, சமணராவார் இரக்கமற்றவர் என்றும், பௌத்தர்கள் அருளிற் சிறந்தோர் என்றும் கருதச்செய்யும் எடுத்துக் காட்டாகத் தோன்றுகிறது. மற்றும், மணிமேகலை பலசமய வுண்மைகளையுங்கேட்டு, முடிவில் புத்தசமயமே சிறந்ததாகக் கொண்டு அந்நெறியில் ஒழுகினாளாக இந்நூல் கூறுவதும் பிறசமயங்களை யெல்லாம் குறிப்பின் எள்ளுவதாகவே தோன்றுகிறது. இனி, இக்கதையில் வந்துள்ள தெய்வங்களைப் போலவே இதிற் கூறப்பட்டுள்ள புத்தசமயத்தறவோரும் அளவிடப்படாத பெருமையுடையராய்த் திகழ்கின்றனர். மணிமேகலைக்கு அறத்தினை யறிவுறுத்தும் ஆசிரியராகிய அறவண அடிகள் என்பார் எத்தனையோ பல பிறவிகளின் பின்னிகழும் நிகழ்ச்சியையும் முன்னறிந்து கூறுகின்றார். மற்றும் பீடிகைக் காட்சியாலும், மந்திரங்களாலும் பழம்பிறப் புணர்தலும், வேற்றுருவெய்தலும், வான்வழிச்சேறலும் முதலிய பேறுகள் இச்சமயத்தார்க்கு எளிதில்வாய்க்கின்றன. இவற்றையெல்லாம் நோக்கின் புத்தசமயத்தைப் பரப்புதற்குரிய முயற்சி அந்நாளில் எவ்வளவு சதுரப்பாட்டுடன் மேற்கொள்ளப் பெற்றுளதென்பதும், சாத்தனார் அச்சமய வளர்ச்சிக்குப் புரிந்தபணி எத்தகைத்தென்பதும் புலனாம். மற்றும், காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வாணிகத்தின் பொருட்டுக்கடலிற் சென்று கப்பல் கவிழப்பெற்ற சாதுவன் என்னும் வணிகன், நாகர்மலையையடைந்து அங்கிருந்த உடையில்லாதோரும், மக்கள் ஊனையுண்ணுமியல்பினரும் ஆகிய நாகர்களுக்குக்கள்ளுண்டல், உயிர்க்கொலை என்னும் பாவங்களை ஒழிக்குமாறும், அறஞ்செய்யுமாறும் அறிவுறுத்தி நல்வழிப்படுத்தினன் என்னும் வரலாறானது புத்த சமயத்தினர் எங்கணும் தமது சமயத்தை நிலை நிறுத்துதற்கு எவ்வாறு முயன்றார் என்பதனையே அறிவுறுத்துவதாகும். நாகர் என்பார் பண்டை நாளிலே பரத கண்டத்தின் வடக்குப் பகுதியிலும், கிழக்கிலுந் தெற்கிலுமுள்ள தீவுகளிலும் வதிந்து வந்தோரென்றும், நாகரிகத்திலும் தெய்வபக்தியிலும் மேம்பட்டவர்களென்றும் புராண இதிகாசங்களாலும் பிறவற்றாலும் அறியப் படுகின்றது. மிக இழிந்த நிலையிலுள்ளோரையும் பிறவற்றாலும் அறியப் படுகின்றது. மிக இழிந்த நிலையிலுள்ளோரையும் பௌத்தர்கள் தங்கள் சமயத்திற்சேர்த்து நல்வழிப்படுத்தினர் என்று காட்டுவது கருதியோ, அன்றி, உண்மையாகவே நாகரில் ஒருசாரார் ஒரோ வழி இங்ஙனம் இழித்துரைக்கப்பட்டுள்ளார்? எனினும், முதுமையுற்று இறந்த விலங்குகளின் ஊனை உண்ணுமாறு நாகர் தலைவனுக்கு அவன்போதிப்பது, கொலையே பாவம், ஊனுண்டல் பாவமன்று என்னும் புத்த மதக்கொள்கை அப்பொழுதே இருந்ததுபோலும் எனக் கருதுதற்கேதுவாயுளது. இக்கொள்கை புத்தமதத்திற்குப் பெரியதோரிழுக்காகும் என்பதில் ஐயமில்லை. இனி, பல்லாற்றானும் புத்த சமயத்தின் மேம்பாட்டைக் கிளப்பதற்கென்றெழுந்தது இக்காப்பியமாகலின் இதிற் கூறப் படும் அச்சமயக் கொள்கைகளிற் சிலவேனும் ஈண்டு எடுத்துக் காட்டப்படுதல் பொருத்தமாம். ஆடவரேயன்றி மகளிரும் துறவுபூண்டு தவவொழுக்கத்தை மேற் கொள்ளுதற்கும், வீடடை தற்கும் உரியர் என்பது புத்தர்கொள்கை. அது மணிமேகலையின் துறவு கூறுமுகத்தால் இந்நூலின்கண் உடம்பொடு புணர்த்து அறிவுறுத்தப் பெற்றுள்ளது. பிறப்புத் துன்பமென்பதும், பிறவாமையே இன்பமென்பதும், பிறவியானது பற்றினாலுண்டா கின்றதென்பதும், பிறவாமையானது பற்றறுதியினாலுளதாவ தென்பதும் அச்சமயத்தின் கொள்கைகள். இவை நான்கும் நால்வகை வாய்மையென்று கூறப்படும். " துன்பம் தோற்றம் பற்றே காரணம் இன்பம் வீடே பற்றிலி காரணம் ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது" என்றும் " பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம் பிறவா ருறுவது பெருகிய ரின்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோ ருறுவது" என்றும் இந்நூலில் வாய்மை நான்கும் கூறப்பட்டுள்ளமை காண்க. பிறப்பாகிய துன்பத்தையும், அதன் காரணத்தையும் விளக்குதற்குக்காரண காரிய முறைமையால் ஒன்றொன்றைச் சார்ந்து தோன்றுவனவாகிய பன்னிரு நிதானங்களென்னும் பெயருடைய பன்னிரண்டு தத்துவங்கள் இந்நூலிற் சொல்லப் பட்டுள்ளன. அவையாவன பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் என்பனவாம். இவற்றில் பேதைமையென்பது அறியாமையாகும். செய்கையாவது கன்மம். உணர்வு என்பது உள்ளம் அல்லது விஞ்ஞானம். அருவுரு என்பது உயிருள்ள உடம்பு. வாயில் எனப்படுவன ஐம்பொறிகளும் மனமும். ஊறு என்பது பொறிகள் புலன்களை உறுவது. நுகர்வு என்பது சுக துக்க அனுபவம். வேட்கையாவது இன்பத்தையடையவேண்டும் என்றும் துன்பத்தையொழிக்க வேண்டுமென்றும் உளதாகும் அவா. பற்று இன்பத்தைக் கொடுக்கும் பொருள்களை இறுகப்பற்றி நிற்பது. பவம் என்பது மறுபிறப்புக்கு மூலமாகிய கன்ம ஈட்டம். தோற்ற மென்பது கன்மங்களுடன் பொருந்திய உள்ளம் பல்வகைக் கதிகளிற்பிறக்கும் பிறப்பு. பிணி மூப்புச் சாக்காடு முதலியன வினைப்பயனாகும். இவை ஒன்றையொன்று சார்ந்து உண்டாகும் முறைமை, " பேதமைசார்வாச் செய்கையாகும் செய்கை சார்வா வுணர்ச்சியாகும் உணர்ச்சி சார்வா அருவுருவாகும் அருவுருச் சார்வாவாயிலாகும் வாயில் சார்வா ஊறாகும்மே ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும் நுகர்ச்சி சார்ந்து வேட்கையாகும் வேட்கை சார்ந்து பற்றாகும்மே பற்றிற் றோன்றுங் கருமத்தொகுதி கருமத்தொகுதி காரணமாக வருமே யேனை வழிமுறைத்தோற்றம் தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்கா டவல மரற்றுக் கவலை கையாறெனத் தவலில் துன்பந் தலை வருமென்ப" என இந்நூலில் விளக்கப் பெற்றுள்ளது, இப் பன்னிரண்டில், உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, பிறப்பு என்பனவும், பிணி, மூப்புச்சாக்காடு, அவலம், அரற்று, கவலை, கையாறு என்னும் வினைப் பயனும் ஆகிய ஏழும் தோற்றமென்ப படுந் துன்பமும் பேதைமை, செய்கை, வேட்கை, பற்று பவம் என்னும் ஐந்தும் அதன் காரணமும் ஆகும். இனி, " பேதைமை மீளச் செய்கை மீளும் செய்கை மீள வுணர்ச்சி மீளும் உணர்ச் சிமீள வாயின் மீளும் அருவுரு மீள வாயின் மீளும் வாயின் மீள ஊறு மீளும் ஊறு மீள நுகர்ச்சி மீளும் வேட்கை மீளப்பற்று மீளும் பற்று மீளக் கருமத் தொகுதி மீளும் கருமத் தொகுதி மீளத் தோற்ற மீளுந் தோற்ற மீளப் பிறப்பு மீளும் பிறப்புப் பிணிமூப்புக் சாக்காடவல மாற்றுக் கவலை கையா றென்றிக் கடையி றுன்பம் எல்லா மீளும்” எனத் துன்ப நீக்கம் கூறப்பெற்றுள்ளது. துன்ப நீக்கத்திற்குரிய நெறி நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளத்தோர் தலைப்பாடு என்னும் எட்டுமாம் என்பர். பிறவித்துன்பத்தினின்றும் நீங்குதற்கு இவற்றையடைந்து கடைப்பிடித்தலோடு தானமுஞ் சீலமும் உடையராதல் வேண்டும். "தானந்தாங்கிச் சீலந்தலை நின்று" எனவும் "ஐவகைச் சீலத்து அமைதியுங்காட்டி" எனவும் இந்நூலுட் கூறப்படுதலுங் காண்க. ஐவகைச் சீலமாவன: காமம், கொலை, கள், பொய், களவு என்னும் இவ்வைந்தையும் முற்றத்துறத்தல். " கள்ளும் பொய்யுங் காமமுங் கொலையும் உள்ளக் களவு மென்றுரவோர் துறந்தவை என்று இந்நூல் கூறுகின்றது. இவ் வைந்தனோடுவேறு மூன்றும் ஐந்தும் கூட்டிச் சீலம் எட்டென்றலும் பத்து என்றலும் உண்டு. இனி, உயிர்கள் எய்தும் பிறப்பு மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என அறுவகைப்படுமென்பதும், நல்வினைசெய்த உயிர்கள் மக்கள், தேவர், பிரமர் ஆகிய கதிகளிற் பிறந்து இன்புறுமென்பதும், தீவினைசெய்த உயிர்கள் நரகர், விலங்கு, பேய் என்னும் கதிகளிற் பிறந்து துன்புறுமென்பதும், தீவினையாவன கொலை, களவு, காமம் என உடம்பிற்றோன்றுவன மூன்றும், பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என உரையிற்றோன்றுவன நான்கும், வெஃகல் வெகுளல் மயக்கம் என உளத்திற்றோன்றுவன மூன்றும் - ஆகிய பத்துமாம் என்பதும், நல்வினையாவன சொல்லப்பட்ட பத்துவகைத் தீவினையினும் நீங்கிச் சீலந்தாங்கித் தானந் தலைநிற்றலாம், என்பதும் புத்த நூற்றுணிபு. இவை, " தீவினை யென்ப தியாதென வினவின் ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய் கொலையே களவே காமத் தீவிழை வுலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில் சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென் றுள்ளந் தன்னி னுருப்பன மூன்றுமெனப் பத்து வகையாற் பயன்றெரி புலவர் இத்திறம் படரார் படர்குவ ராயின் விலங்கும் பேயும் நரகரு மாகிக் கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர் நல்வினை யென்பதி யாதென வினவிற் சொல்லிய பத்தின் றொகுதியி னீங்கிச் சீலந்தாங்கித் தானந் தலை நின்று மேலென வகுத்த வொருமூன்று திறத்துத் தேவரும் மக்களும் பிரமரு மாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர்" என இந்நூலுட் கூறப்படுதல் காண்க. மற்றும், துன்பத்திற் கெல்லாம் காரணமாகிய முக்குற்றங்களில் காமத்தை, உடம்பு நிலையில்லது, துன்பத்திற் குறைவிடமானது, உயிரின் வேறாயது, அவருவக்கத் தக்க அழுக்கு நிறைந்தது என்று பாவிக்கும் அசுப பாவனையாலும், வெகுளியை, எல்லா வுயிர்களிடத்தும் அன்பு செய்தலும், இரக்கங்கொள்ளுதலும், அவற்றின் ஆக்கத்திற்கு மகிழ்தலும் ஆகிய மைத்திரி, கருணை, முதிதை என்னும் பாவனை களாலும், மயக்கததைக்கேள்வி விமரிசம் பாவனையென்னும் உபாயங்களாலும் ஒழிக்கவேண்டு மென்றும் இதிற் கூறப் பட்டுளது, காணப்படுகின்ற எல்லாப்பொருளும் உயிரும் உருவம், நுகர்ச்சி, குறி, பாவனை உணர்வு என்னும் ஐந்தின் ஈட்டமே யென்பதும், இவையெல்லாம் கணந்தோறும் தோன்றியழியும் என்பதும் பௌத்த நூற்கொள்கை. இவற்றுள் உருவமென்பதில் நிலம், நீர், தீ, வளி என்னும் நான்கு பூதங்களும், உடம்பும், புலன்களும் அடங்கும். நுகர்ச்சியாவது இன்ப துன்ப அனுபவம். இது வேதனையென்றும் கூறப்படும். ஐம்பொறிகளும் மனமும் குறியென்று கூறப்படும். மனமொழி மெய்களால் உண்டாகும் நல்வினை தீவினைகள் பாவனையாகும். இது செய்கையெனவும் வாசனையெனவும் கூறவும்படும். உணர்வாவது விஞ்ஞானம் ஆகும். உருவ முதலியவற்றோடு கூடிய விஞ்ஞானமே ஆன்மாவா மெனவும், அது நீரோட்டம்போலச் சந்தானமாய்க் கணந் தோறும் தோன்றியழியும் எனவும், அங்ஙனம் அழியுமேனும் முற்கணத்தின் அழிவெய்தும் ஞானத்திற்றோன்றிய வாசனை பிற்கணத்திற்றோன்றும் ஞானத்திற் பற்றுதலால் அறிவு முதலாயின நிகழும் எனவும், இவ்வைந்தும் சந்தானமாகத் தோன்றியழிதலே பந்தம் எனவும், இவை அறக்கெடுதலே முத்தியாம் எனவும் கூறுப. இவ்வைந்தைவுங் குறித்து. " உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை உள்ள அறிவுஇவை ஐங்கந்த மாவன" என மணிமேகலை கூறுகின்றது. இந்துக்களின் புராணங்களிற் பிரமாண்டத்தில் அடங்கியுள்ள உலகங்களைப் பற்றியும், மகாமேரு, குலகிரிகள், எழுகடல், தீவங்கள், பெரும்புறக்கடல் என்பவற்றைப் பற்றியும், தேவகணங்கள் முதலாயின வற்றைப் பற்றியும் கூறியிருப்பதுபோன்றே பௌத்த நூல்களிலும் சிறிது வேறுபடக் கூறப்பெற்றுள்ளன. பிரமாண்டமென்பது சக்கிரவாளம் என்னும் பெயரால் இவற்றில் வழங்கப்பெறும். " நால்வகை மரபின ரூபப் பிரமரும் நானால் வகையி னுரூபப் பிரமரும் இருவகைச் சுடரும் இருமூவ கையிற் பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும் பல்வகை யசுரரும் படுதுய ருறூஉம் எண்வகை நரகரும் இருவிசும்பியங்கும் பன்மீனீட்டமும் நாளுங் கோளும் தன்னிடத் தடக்கிய சக்கிரவாளம்" எனவருதல் காண்க. இதுகாறும் எடுத்துக்காட்டிய புத்தமதக் கொள்கைகளிலும், தத்துவங்களிலும் பெரும்பாலன ஏனைய சமயக்கொள்கை களுக்கும் உண்மைகளுக்கும் மாறுபட்டன அல்ல. பழையமத சித்தாந்தங்களை ஆராய்ந்தவர்களின் கருத்துப்படி இவை யெல்லாம் பழமையான இந்து மதக் கோட்பாடுகளிலிருந்து எடுத்துத் தொகுக்கப் பெற்றனவேயாகும். இதிற் கூறப்பட்ட சீலமுதலிய நல்வினைகளும், பத்துவகைத்தீவினைகளும், உயிர்கள் அவற்றின் பயன்களை நுகர்தலும், மறுபிறப்பும் முதலாயின இந்துசமயத்திற்கும், சமண்சமயத்திற்கும் பொது வானவனவே. இதிற் கூறப்பட்டுள்ள பிறப்புத்துன்பமென்பது முதலிய நால்வகை வாய்மைகளும் யாவர்க்கும் பொதுவானவையே; ஆனால் பன்னிரு நிதானங்களில் ஒன்றாய்ப் பிறப்புக்குக் காரணமாய்க் கூறப்பட்டுள்ள பேதைமை என்பது அனாதியே உயிர்களைப்பற்றி நிற்கும் ஆணவம் அல்லது அவிச்சை எனப்படும் அறியாமையாகத் தோன்றவில்லை. இப்பன்னிரண்டுமே தம் கண் தோன்று வனவற்றை நோக்கப் பகுதியாதலும், தமக்கு முதலானவற்றை நோக்க விகுதியாதலும் உடையனவாகின்றன. எனவே பகுதி மாத்திரமேயாகவுள்ள, அல்லது, பகுதியும் விகுதியும் அல்லாத முதற்பொருளொன்று கூறப்படவில்லை. நித்தமாயுள்ள ஆன்மாவைப் பற்றியோ, கடவுளைப்பற்றியோ யாதொன்றும் கூறப்பட்டிலது. ஆன்மா என்றே தனித்தொருபொருள் இன்று என்பதும், ஐங்கந்தங்களின் சேர்க்கையே ஆன்மாவாமென்பதும், அதுவும் கணந்தோறும் அழிவதாய் முடிவிலே பொன்றக் கெட்டொழியுமென்பதும் இம்மதத்திற்கே யுரிய கொள்கை களாம். இது பற்றியே பௌத்தர்களைக் கணபங்கவாதிகள் என்றும், கணிக விஞ்ஞான வாதிகள் என்றும், சூனிய வாதிகள் என்றும் கூறுவர். ஆன்மாவென்றே ஓர்பொருளில்லாவிடத்து இம்மை மறுமைகளும், இருவினைப் பயன்களும், பந்த முத்தியும் யாருக்கோ அறிகிலம். ஐந்துகந்தமும் அறக்கெடுதலே முத்தி யெனின் முத்தியென்பதும் பொய்யாம். கந்தங்களைந்திற் றோன்றும் அறிவிற்கு முத்தியின்பம் உண்டு எனில், அவ்வறிவு கெடாதிருக்குமாயின் உருவமுதலிய கந்தங்களும் உண்டாதல் வேண்டும்; அவை உண்டாகவே முத்தியிடத்திலும் பந்த முண்டாகித் துன்பத்தையுந் தரும். " ஐந்து கந்தம் சந்தானத்தழிதல் பந்ததுக்கம் அறக்கெடுமைமுத்தியின்பம் என்றறைந்தாய் கந்தம் ஐந்து மழிந்தால் முத்தியணைபவர் யார் என்ன அணைபவர்வேறில்லையென்றாய் ஆர்க்குமுத்தியின்பம் ஐந்தினுணர்வினுக்கென்னில் அழியாதவுணர்வுண் டாகவே அவ்விடத்தும் உருவாதிகந்தம் ஐந்துமுளவாமதுவும் பந்தமாகி அரந்தைதரும் முத்தியின்பம் அறிந்திலை காண்நீயே" என்று சிவஞானசித்தியார் பரபக்கத்தில் புத்தமதத்தினரின் முத்தி நிலையை மறுத்திருப்பதும் காண்க. இனி, இக்காப்பியம் இயற்றிய சாத்தனாரது கவிதை மாண்பினைச் சிறிது நோக்குதும். காப்பியம் இயற்றும் கவிகளின் உட்கோள் தாம் கூறுங் கதைவாயிலாக உலகத்தார்க்கு உறுதி பயக்கும் அறங்களை வெளிப்படுத்தலேயாகும். இதனையே காப்பியப் பண்பு என்றும், பாவிகம் என்றும் கூறுவர். அங்ஙனமே இவ்வாசிரியரும் இக்கதையை நடத்திச் செல்வுழி இயலுமிடங் களிலெல்லாம் மக்கள் அறியவேண்டிய நீதிகளையும், அறங் களையும் திட்பமுறக்கூறி செல்கின்றார். மணிமேகலையைக் காதலித்து அவளைக் கைப்பற்றுதற் பொருட்டு மலர் வனத்தை யடைந்த உதயகுமரனை நோக்கிச் சுதமதி நீதிகூறுங் கூற்றில்வைத்து, " இளமை நாணி முதுமை யெய்தி உரைமுடிவு காட்டிய வுரவோன் மருகற் கறிவுஞ் சால்பும் அரசியல் வழக்குஞ் செறிவளை மகளிர் செப்பலு முண்டே அனைய தாயினும் யானொன்று கிளப்பல் வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி வினையின் வந்தது வினைக்கு விளைவாயது புனைவன நீங்கிற் புலால் புறத்திடுவது மூப்பு விளிவுடையது தீப்பிணி யிருக்கை பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை அவலக் கவலை கையா றழுங்கல் தவலா வுள்ளந் தன்பா லுடையது மக்கள் யாக்கை யிதுவென வுணர்ந்து மிக்கோ யிதனைப் புறமறிப் பாராய்" எனவுரைத்திருப்பது எவ்வளவு திட்பமும் நுட்பமும் சொல்லழகும் பொருளழகும் கொண்டு விளங்குகின்றது. அரசகுமரனுக்கு அவனது குலத்திற் சிறந்தானொருவனது பெருமையை எடுத்துக்காட்டி, அவனது வழித்தோன்றலாகிய நீ பிறர்க்கெல்லாம் அறிவும் சால்பும் அரசியன் முறையும் கூறுதற்கு உரியையாயிருப்பவும், அத்தகைய நினக்கு அவற்றை மகளிரானோர் செப்பலும் பொருந்துமோ? என்ற கூற்று அவனுள்ளத்தில் எத்துணை நாணினையும் உணர்ச்சியையும் விளைத்திருத்தல் வேண்டும். பிறப்பும் வினையும் காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருவனவென்னும் உண்மையை "வினையின்வந்தது வினைக்கு விளைவாயது" என்னும் ஒரடியாற் சுருங்கவுரைத்திருப்பது பாராட்டற்குரியது. மற்றும், இதில் யாக்கையின் இழிவை எடுத்துரைப்பது கேட்போருளத்திற் பசுமரத்தாணிபோற் பதியத் தக்கதாகவுள்ளது. இதிலுள்ள தொடர்களெல்லாம் தீவிய இனிய செந்தமிழ்ச் சொற்களால் அமைந்து, மோனை யெதுகை முதலிய தொகை விகற்பங்களாற் சிறப்பெய்தி, வலியும் தெளிவும் என்னுங் குணவணிகளுடைய வாய்த்திகழுதல் காண்க. அவனுக்கு மணிமேகலா தெய்வங்கூறிய " ...............மன்னவன் மகனே கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும் கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் மாரி வறங்கூரின் மன்னுயி ரில்லை மன்னுயிரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிரென்னுந் தகுதியின் றாகும் தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக" என்னும் பகுதி, அரசன் செங்கோன்மைதிரிதல் எத்தகைய பெருங்கேட்டிற்குப் பரம்பரையின் ஏதுவாகின்றதென்பதனை அளவைநூன் முறையான் அறிவுறுத்துவதோடு, அந்தாதி மடக்கு என்னுஞ் சொல்லணியானும் பொலிந்து நிகழ்கின்றது. ஆபுத்திரன் என்பான் ஈயுந்தொறும் தேயாது சுரக்கும் தெய்வக்கடிஞையொன்றுகொண்டு மாயிருஞாலத்து மன்னுயிர் களை ஒம்பிவரு நாளில் ஆண்டுப் போந்த இந்திரன் அவனை நோக்கி ‘நினக்கு வேண்டுவ நல்குவல், என் பெருந்தானத்தின் உறுபயன் கொள்க' என்றானாக, அதனைக்கேட்ட ஆருயிர் முதல்வன் விலாவிறச் சிரித்திட்டு அவனை எள்ளிப் 'போம்' என்றுரைப்பவன் ‘ஈண்டுச்செய் நல்வினையின் பயனை ஆண்டு நுகர்ந்திருக்கும் நும் கடவுளரையன்றி, " அறஞ்செய்மாக்கள் புறங்காத்தோம்புநர் நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர் யாவரு மில்லாத் தேவர் நன்னாட்டுக் கிறைவனாகிய பெருவிறல் வேந்தே" எனவிளித்து, ‘வருந்திவந்தோரின் அரும்பசியைப் போக்கி அவரது இனியமுகத்தை யான் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞையிருக்க, நின்னால் அளிக்கப்பெறுவன யாவுள' என்கின்றான். இதன்கண் கொடை பொருளாய பெருமிதம் தோன்றுமாறு காண்க. தேவர் நன்னாட்டுக் கிறைவனாகிய பெருவிறல் வேந்தே யென்பது புகழ்வது போலப் பழித்திறம் புனைவதோரணிநலமுடைத்து. ஈண்டு எள்ளல் பொருளாய நகைதோன்றுவதும் உள்ளற்பாலது. உதயகுமரன் விஞ்சையனொருவனால் வெட்டுண்டிறந்ததற் காற்றாது இராசமாதேவி மணிமேகலைக்குப் பல இன்னல்களை விளைக்க, அவள் அவற்றானெல்லாம் இடுக்கணின்றி யிருந்தமை கண்டு அஞ்சி, 'மகனையிழந்த துயரினைப் பொறுக்கலாற்றாது யான் நினக்குச் செய்த பிழைகளைப் பொறுத்தருள்க' என வேண்டினள். வேண்டவே மணிமேகலை அவளை நோக்கி, 'சென்ற பிறப்பிலே நீலபதி வயிற்றிற்றோன்றிய இராகுலனை அழற்கண்நாகம் ஆருயிருண்டகாலை யான் அதனைப் பொறாது தீயிற்பாய்ந் துயிரை விட்டேன்; அப்பொழுது நீ, " யாங்கிருந் தழுதனை யிளங்கோன் றனக்குப் பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை உடற் கழுதனையோ உயிர்க் கழுதனையோ உடற் கழுதனையே லுன்மகன் றன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே உயிர்க் கழுதனையே லுயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது அவ்வுயிர்க் கன்பினை யாயினாய் தொடி எவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும்" என்றறிவுறுத்துகின்றனள். ஈண்டு இறந்தோர் பொருட்டு அழுங்குதல் தகவன்று என்பதனை உடலுயிர்களையும் அவற்றி னியல்பினையும் வேறுபிரித்துணர்த்தித் தெருட்டும் திறப்பாடு போற்றற்குரியதாம். மற்றும், அவ்வுயிர்க் கன்பினையாயின் எவ்வுயிர்க்காயினும் இரங்கல்வேண்டும் என்பதன் பொருணுட்பம் நுண்ணுணர் வோர்க்கு இன்பம் பயப்பதொன்றாம். இனி, இக்காப்பியத்தின் முற்கூற்றில் மலர்வனம் புக்கது, பளிக்கறை புக்கது, மணிமேகலாதெய்வம் வந்துதோன்றியது, சக்கரவாளக் கோட்ட முரைத்தது என்னும் நான்கு காதையுள்ளும் கற்போர் கவிதையின்பத்திற் றிளைக்குமாறு இவ்வாசிரியர் தமது புனைந்துரையாற்றலைப் புலப்படுத்தியுள்ளார். மாதவி வயந்தமாலைக்குக் கூறியசொற்களால் மாமலர் நாற்றம் போல் ஏது நிகழ்ச்சியுண்டாகப்பெற்ற மணிமேகலை கோவலனும் கண்ணகியு முற்ற துன்பம் தன் செவியகம் வெதுப்ப நெஞ்சங்கலங்கிக் கண்ணீருகுத்து மாலையை நனைக்க, மாதவி அவள் துயரைப் போக்கு வாளாய்த் தாமரை தண்மதி சேர்ந்தது போலத் தன் செங்கையால் அவள் கண்ணீரைமாற்றி, தூயநீர்மை யுடையமாலை தூய்மையிழந்ததாகலின் வேறு நன்மலரை நீயே கொணர்வாய் என்றனள். அப்பொழுது அவளுடன் மலர் தொடுக்குஞ் சுதமதியானவள் அதனைக்கேட்டு, மணிமேகலை தனித்தேகுதலால் உளதாம் தீங்கினை எடுத்துரைப்பவள், " மணிமேகலை தன் மதிமுகந் தன்னுள் அணிதிகழ் நீலத் தாய்மல ரோட்டிய கடை மணியுகு நீர் கண்டனனாயிற் படையிட்டு நடுங்குங் காமன், பாவையை ஆடவர்கண்டால் அகறலுமுண்டோ" என அவளது எழிலின் சிறப்பைப் புலப்படுத்துகின்றனள். செஞ்சொற் கவியின்பம் நுகர்வார்க்கு இப்பகுதி நல்விருந்தாதல் தேற்றம். எனினும், ஆடவர் கண்டாலகறலுமுண்டோ என்றியம்பியவள் அவ்வளவில் நில்லாது "பேடியரன்றோ பெற்றியினின்றிடின்" என்று கூறுவது வரம்பிகந்த கூற்றேயாகும். இது சுதமதி கூற்றாகலின் இப்பழி தம்மைச் சாராதென்று கவிகருதினர்போலும்! இவ்வாறு கூறி, ‘மணிமேகலையொடும் மலர்கொய்ய யானும் போவல்' என்றுரைத்துச் சுதமதி அவளுடன் மணித்தேர்வீதியிற் செல்வுழி, உண்ணா நோன்பியாகிய ஓர் சமணமுனிவனை வழிமறித்துக் கள்ளுண்ணுமாறு இரக்கும் களிமகனையும், பித்தனொரு வனையும், பேடிக்கோலத்துடன் ஆடும் பேடு என்னும் கூத்தினையும், நெடுநிலைமனைதொறும் வித்தகரியற்றிய கண்கவர் ஒவியங் களையும், பொற்றொடிமகளிர் சிலர் தம் இளம் புதல்வரைப் பொற்றேரின் மீதுள்ள யானையிலேற்றி, முருகன் விழாக்கால் கோள் என்று பாராட்டுவதனையும் ஆண்டாண்டுத் திரள் திரளாகக் கண்டு நிற்போரெல்லாம் விராடன் பேரூரில் விசயனாம் பேடியைக் காணுமாறு சூழ்ந்த கம்பலைமாக்கள்போல மணிமேகலையை வந்துபுறஞ்சுற்றி, அவளது அழகைப் பலபடி யாகப் புனைந்துரைத்தனர்; என்னும் இப்பகுதியிற் சாத்தனார் பாத்திறம் மிக்க இன்பம் பயக்கின்றது. ஒரு நகரத்தின் பெருவீதியில் மாலைப் பொழுதிற் செல்வோர் இடையிடையே பற்பல காட்சிகளைக் காண்டல் கண்கூடாகலின் இவ்வாசிரியர் இங்ஙனம் கூறியது இயற்கையோடு பொருந்தியதாகும். இங்ஙனம் நகர நிகழ்ச்சிகள் பலவற்றைக் கண்டறிந்த ஒர் பாவலரே பல்வேறு உறுப்புக்களமையத் தொடக்கத்திற் கலம்பகம் பாடினாராவர்; பின்னர்க்கலம்பகம் இயற்றுவோர் அவற்றை அதற்கிலக் கணமாகக் கொண்டு விட்டனர். " வந்தீரடிகள் நும் மலரடி தொழுதேன் எந்தம் அடிகள் எம்முரை கேண்மோ அழுக்குடை யாக்கையிற் புகுந்தநும் முயிர் புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தாது இம்மையும் மறுமையும் இறுதியிலின்பமும் தன்வயிற் றரூஉம் என் தலைமகன் உரைத்தது கொலையு முண்டோ கொழுமடற் றெங்கின் விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே உண்டு தெளிந்திவ் யோகத் துறுபயன் கண்டா லெம்மையுங் கையுதிர்க் கொண்மென உண்ணா நோன்பின் தன்னொடுஞ் சூளுற்று உண்மென இரைக்கும் ஓர் களிமகள்" என்று களியினியல்பு கூறியிருப்பதில் நகைச்சுவை ததும்புகின்றது. ‘வந்தீரடிகள் நும்மலரடி தொழுதேன் எந்தம் அடிகள்' என்பது அகத்தே எள்ளிப் புறத்தே போற்றுதலாகிய வஞ்சப்புகழ்ச்சியாய்க் களியினது தருக்கினியல்i தெள்ளிதிற் புலப்படுத்துகின்றது. அமண்முனிவன் மண்ணாமேனியனாகலின் அவனுடம்பை அழுக்குடை யாக்கை என்று கூறி, அதனைப் புழுக்கறையோடு ஒப்பிடுகின்றனான். மும்மையின்பமும் தானே தரவல்லதென்றும், தலைமகன் உரைத்தது என்றும், கொலைவினை யில்லதென்றும் கள்ளினது பெருமையைப் பாராட்டுகின்றான். " ஆனாலு மிதன்பெருமை யெவர்க்கார் சொல்வர் அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்" என்றபடி அறிவான், அறிவு, அறிபொருள் என்னும் வேற்றுமை தோன்றாத இன்பத்த தாகலின் அதனை அறிவுறுத்த பெருமகனை என்தலைமகன் - குரவன் என்று கூறுவதில் இழுக்கென்னை! கொழுமடற்றெங்கு என்றும், விளைபூந்தேறல் என்றும் கொடுத்துள்ள அடைகளின் சிறப்பையும் ஓர்க. உண்டுதெளிந்து இந்தயோகத்தின் உறுபயனைக் காண்க என்பது இதற்கோர் மகுடம்போல் விளங்குகிறது. யோகம் என்றது அதன் முடிவாகிய சமாதி போலும்! அதினின்று உணர்ந்த பின்பு தானே அதனது பயன்புலனாகும்!! முனிவனோ உண்ணாநோன்பி, அவனை உண்ணுமாறு இரக்கின்றான்! அதிலும் கள்ளுண்ணுமாறு இரக்கின்றான்! சூளுற்று இரக்கின்றான்!! அவனது பரிவிருந்தவாறு என்னே!!! சுருங்கவுரைக்கின், இச்செய்யுளின்பமும் அதனை உண்டு தெளிந்த வழியே புலனாம் என்க. இனி, மையலுற்றானொருவன் அலரிமாலையையும், எருக்கம்பூ மாலையையும் தோளிலும் மார்பிலும் அணிந்து, கந்தைத் துணியுடன் மரக்கிளைகளிலுள்ள சுள்ளிகளையும் உடையாகக் கட்டி, உடல் முழுதும் சாம்பலைப் பூசிப் பலரொடும் இயைபில்லாத சொற் களைப் பேசி, " அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் தொழூஉம் எழூஉம் சுழலலுஞ் சுழலும் ஓடலும் ஓடும் ஒருசிறை யொதுங்கி நீடலு நீடும் நிழலொடு மறலும்" என்று கூறியிருப்பது பித்தனியல்பினை உள்ளவாறு விளக்கித் தன்மை நவிற்சி யென்னும் அணியுடைத்தாய்த் திகழ்கின்றது. இனி, உவவனத்தின் இயல்பு கூறும் ஆசிரியர், " குரவமு மரவமுங் குருந்துங் கொன்றையும் திலகமும் வகுளமுஞ் செங்கால் வெட்சியும் நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும் பிடவமுந் தளவமு முடமுட் டாழையுங் குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமுஞ் செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும் எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே ஒப்பத் தோன்றிய வுவவனம்" என்றுரைத்து, அவரே உவமங்கூறிய சித்திரச் செய்கைப் படாத்தினை நம் கண்ணெதிரே தோன்றச் செய்கிறார். மற்றும் ஞாயிற்றின் கதிர்களாகிய தானைக்கு இருள் வளைப்புண்டிருப்பதென அப்பொழிலின் இருட்சியைக் கூறுகின்றார். பின்னும் : அப்பொழிலின் இயற்கை வளங்களைக் கூறுபவர், " குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர் மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண்" என்றும், " மாசறத் தெளிந்த மணிநீ ரிலஞ்சிப் பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின் றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை யரச வன்ன மாங்கினி திருப்பக் கரைநின் றாலுமொருமயிறனக்குக் கம்புட் சேவற் கனைகுரன் முழவாக் கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய்" என்றும் இசைக் கருவியுடனும், பாட்டுடனும் கூடிக் கதை தழுவாது வரும் இரண்டு கூத்தினைக் கண்டு களிக்கும்படிச் செய்கின்றார். இனி, புகார்நகரிலுள்ள புறங்காட்டின் இயல்பு கூறிவருமிடத்தே, " சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன்றரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் எஞ்சியோர் மருங்கி னீமஞ் சாற்றி நெஞ்சு நடுக்குறூஉ நெய்த லோசையுந் துறவோ ரிறந்த தொழுவிளிப் பூசலும் பிறவோ ரிறந்த வழுவிளிப் பூசலும் நீண்முக நரியின் றீவிளிக் கூவுஞ் சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் புல'd2வூண் பொருந்திய குராலின் குரலும் ஊண்டலை துற்றிய வாண்டலைக் குரலும் நன்னீர்ப் புணரி நளிகடலோதையின் இன்னா விசை யொலி யென்று நின்றறாது" என அங்கு நிகழும் ஓசைகளை எடுத்துரைப்பது எவ்வகைப் பொருளையும் செவ்விதினறிந்து வழுவின்றுரைக்கும் ஆசிரியரது புலமை மாண்பினைப் புலப்படுத்துகின்றது. மற்றும், அவர் அம் முதுகாட்டியல்பனைத்தையும் எஞ்சா தெடுத்துரைத்து, முடிவின் கண், " தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம்பெண்டி ராற்றாப்பாலகர் முதியோரென்னா னிளையோரென்னான் கொடுந்தொழிலாளன் கொன்றனன் குவிப்பவிவ் வழல்வாய்ச் சுடலை தின்னக்கண்டுங் கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டயர்ந்து மிக்கநல்லறம் விரும்பாதுவாழும் மக்களிற் சிறந்த மடவோருண்டோ" என, அதுவே வாயிலாக மக்களுள்ளத்தை அறநெறியிற்றிருப்புவது அவரது குறிக்கோள் இது வென்பதனை இனிது தெரிப்பதாம். இனி, நிறையுவாநாளின் மாலைப்பொழுதிலே குணதிசையில் உதிக்கும் மதியமும், குடதிசையில் மறையலுறும் ஞாயிறும் ஒருங்கு தோன்றுங் காட்சியை உரைப்பான் புக்க ஆசிரியர், பன்மலரும் புள்ளொலியுமுடைய அகழியாகிய சிலம்படியையும், மதிலாகிய மேகலையையும், தோரணகம்பங்களாகிய தோள்களையும், தருநிலைக்கோட்டம் வச்சிரக்கோட்டம் என்னும் கொங்கை களையும், சோழ மன்னனுடைய கோயிலாகிய திருமுகத்தையும் உடைய புகார் நகராகிய நங்கை திங்களையும், ஞாயிற்றையும் முறையே வெள்ளிவெண்டோடும் பொற்றோடுமாகத் திருமுகம் பொலிவுற அணிந்து கொண்டாள் எனக் கூறிய புனைந்துரைநயம் பெரிதும் பாராட்டற்பாலது. மற்றும், அந்திக்கால நிகழ்ச்சிகளாக அவர் கூறியிருப்பனவெல்லாம் படித்தின் புறற்பாலன. இனி, இக்காப்பியத்திலே புத்ததேவரைப் பாராட்டியுள்ள பகுதிகளிலிருந்து, மக்கள் அறிந்து கடைப்பிடித்து மேன்மை யெய்துதற்குரிய பொருண்மொழிகள் பத்தினை எடுத்துக் காட்டுதல் இக்கட்டுரைக்குப் பொருந்திய இறுவாயாகும் என்க. 1. அருளும் அன்பும் ஆருயிரோம்பலும் ஒழியா நோன்பினன். 2. அருளறம் பூண்டோன். 3. அறவாழியாள்வோன். 4. பிறர்க்கற முயலும் பெரியோன். 5. தனக்கெனவாழாப் பிறர்க்குரியாளன். 6. தன்னுயிர்க்கிரங்கான் பிறவுயிரோம்புவோன். 7. மாரனைவென்ற வீரன். 8. தீநெறிக் கடும்பகை கடிந்தோன். 9. தீமொழிக் கடைத்த செவியோன். 10. வாய்மொழி சிறந்த நாவோன். 4. கந்தபுராணமும் கம்பராமாயணமும் இவ்விரு நூலும் இவற்றின் தலைவர்களாலும் கதை நிகழ்ச்சி களாலும் அவற்றின் கால இடங்களினாலும் ஆக்கியோரின் கொள்கை முதலியவற்றாலும் ஒன்றுடனொன்று தொடர்புடையன வல்லவே. அங்ஙனமாயினும் இவ்விரு காப்பியத்தும் பாத்திரங் களாவார் பண்புகளிலும் பிற சிலவற்றிலும் அவற்றை நடத்தும் கவியின் கருத்து வகைகளிலும் வியக்கத்தக்க ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில குறிப்பிடுதலே இச்சிற்றுரையின் நோக்கம். இக்காப்பியங்களின் தன்னிகரில்லாத் தலைவர் குமரனும் இராமனுமாவர். இவற்றின் முடிந்த நோக்கம் சூரபன்மன் முதலிய அசுரரையும் இராவணன் முதலிய அரக்கரையும் கொன்று அவர் களால் நலிவெய்திய வானவர் முனிவர் முதலாயினோரைப் புரந்திடுதல். சூரனும் இராவணனும் தெற்கே கடல் நடுவணுள்ள மகேந்திரத்திலும், இலங்கையிலும் இருக்கின்றனர்; இருவரும் சிவபிரான் பால் அரியவரங்கள் பெறுகின்றனர்; இருவருக்கும் சிங்கமுகன் கும்பகர்ணன் முதலிய தம்பியர் உளர்; இருவர் மைந்தருள்ளும் அமரரைச் சிறைப்படுத்திய பானுகோபனும், இந்திரசித்தனும் தலை சிறந்து விளங்குகின்றனர். குமாரவேளும், இராமபிரானும் வடக்கிலிருந்து தென்றிசை நோக்கிச் செல்லு கின்றனர். இருவருக்கும் வீரவாகுவும், அநுமனும் தூதர்களாகச் சென்று மகேந்திரத்தையும் இலங்கையையும் கலக்கி மீள்கின்றனர். இவைபோல்வன பாத்திரங்களின் தகுதியமைப்பிற் பெறப்படும். இனி, கவிகள் இவற்றை நடத்தும் முறையில் காணலாகின்ற ஒருமைப்பாடுகளை நோக்குவோம். இருநூலுள்ளும் கடவுள் வாழ்த்து, அவைபடக்கங்களின் பின்னர் ஆற்றுப்படலமும், அதன் பின் நாட்டுப்படலமும், நகரப் படலங்களும் அமைந்துள்ளமையை நோக்கின் இவையிரண்டும் இயலுமளவு ஒரு நெறியில் நடத்தல் கருதியன வென்பது தோற்றும். வீரவாகு கந்தமாதனத்தின் மேனின்று "உருகெழுசீற்றச் சிம்புள் உருவுகொண் டேகிற்றென்ன" கடலைத்தாவி மகேந்திரபுரியை அடைய, அநுமன் மகேந்திர வெற்பினின்று "கடலெலாங் கலங்கத் தாவுங்கலுழனும் அனையன்" ஆகிப்பாய்ந்து இலங்கையை எய்துகின்றான். மேல் இருவராலும் ஈரிடத்தும் நிகழ்வனவற்றின் ஒருமைப்பாடுகள் விரிவு கருகி இவண் குறிக்கப் பெற்றில. முதற்போரிலே இராவணன் தன் சேனைகளையும் தேர் படைக்கலங்களையும் இழந்து தனியே நிற்கும் பொழுது இராமன் அவனை நோக்கி, சிறையில் வைத்தவ டன்னை விட்டுலகினிற் றேவர் முறையில் வைத்துநின் றம்பியை யிராக்கதர் முதற்போர் இறையில் வைத்தவற் கேவல் செய்திருத்தியே லின்னும் தரையில் வைக்கிலே னின்றலை வாளியிற் றடிந்து. ஆள யாவுனக் கமைந்தன மாருத மறைந்த பூளையாயின கண்டனை யின்றுபோய்ப் போர்க்கு நாளைவாவென நல்கினை னாகிளங் கமுகின் வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல். என்கின்றான். சூரபன்மன் ஆற்றலற்று மோனமா நின்றுழி முருகக் கடவுள் அவனை நோக்கி, ஈண்டு நின்புடையீண்டிய விலக்கம் வெள்ளத்து நீண்டதானையு நின் சிலை வன்மையு நின்னாற் றூண்ட லுற்றிடு தெய்வதப் படைகளுந் தொலைந்து மாண்டுபோயது கண்டனை வறியனாய் நின்றாய். நெடிய தாரகற் செற்றவே லிருந்தது நின்னை யடுதலிங் கொரு பொருளுமன் றரிது மற்றன்றாற் படை யிழந்திடு நின்னுயி ருண்டிடிற் பழியாய் முடியுமென்று தாழ்க்கின்றனந் தருமத்தின் முறையால். பன்னுகின்றதென் பற்பல விண்ணுளோர் பலருந் துன்னு தொல்சிறை விடுத்தியே லுன்னுயிர் தொலையே மன்ன தன்மையை மறுத்திடி னொல்லை நாமடுதும் என்னை கொல்லுன தெண்ணங்க ளுரைத்தியா லென்றான். இந்திரசித்து இராவணனை நோக்கி, முட்டிய செருவின் முன்ன முதலவன்படையை முன்பா விட்டில ருலகையஞ்சி யாதலால் வென்று மீண்டேன் கிட்டியபோதுங் காத்தா ரின்னமுங் கிளர வல்லார் சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றார். ஆதலா னஞ்சினேனென் றருளலை யாசைதானச் சீதைபால் விடுதியாயி னனையவர் சீற்றந் தீர்வர் போதலும் புரிவர்செய்த தீமையும் பொறுப்ப ருன்மேல் காதலா லுரைத்தே னென்றா னுலகெலாங் கலக்கி வென்றான். இதனைக் கேட்ட இராவணன், இயம்பலு மிலங்கை வேந்த னெயிற்றிள நிலவுமெய்தப் புயங்களுங் குலுங்க நக்குப் போர்க்கினி யொழிதி போலாம் மயங்கினை மனிதன்றன்னை யஞ்சலை வருந்தலைய சயங்கொடு தருவனின்றே மனிதரைத் தனுவொன்றாலே. பேதைமை யுரைத்தாய் மைந்த வுலகெலாம் பெயரப் பேராக் காதையென் புகழினோடு நிலைபெற வமரர்காண மீதெழு மொக்கு ளன்ன யாக்கையை விடுவதல்லால் சீதையை விடுவதுண்டோ விருபது திண்டோளுண்டாய். விட்டனன் சீதைதன்னை யென்னலும் விண்ணோர் நண்ணிக் கட்டுவ தல்லாற் பின்னை யானெனக் கருதுவாரோ பட்டன னென்றபோதும் எளிமையிற் படுகிலேன்யான் எட்டினோ டிரண்டு மாய திசைகளை யெறிந்து வென்றேன். என்கின்றான். பானுகோபன் சூரபன்மனை நோக்கி, தாதைத னவ்வைகேள் சண்மு கத்தவன் றூதுவ னோடுபோர்த் தொழிலை யாற்றினே னேதமின் மானமு மிழந்து சாலவு நோதக வுழந்தன னோன்மை நீங்கினேன். நாற்படை யிவ்வகை நடந்து கோமகன் பாற்பட விரவின பரவு பூழிகண் மாற்படு புணரிநீர் வறப்பச் சூழ்ந்ததால் மேற்படு முகிலின மிசைய வந்தென. திண்டிற லனிகமீச் சென்ற பூழிகண் மண்டல முழுவதும் வரைகள் யாவையு மண்டமும் விழுங்கியே யவைகளற்றிட வுண்டலி னடைத்தன வுவரி முற்றுமே. முரசொடு துடிகுட முழவஞ்சல்லரி கரடிகை தண்ணுமை யுடுக்கைகாகள மிரலைக ளாதியா மியங்க ளார்த்தன திருநாகழி புமென்றாற் றுஞ்செய்கைபோல் என்ன சூரபன்மன், கார்மிசைப் பாய்வன கதிர வன்றனித் தேர்மிசைப் பாய்வன சிலையிற்பாய்வன பார்மிசைப் பாய்வன பாரிடத் தவர் போர்மிசைப் பாய்வன புரவி வெள்ளமே. பொங்கு வெங்கதிர் போன்றொளிர் பூணினர் திங்கள் வாளெயிற் றார்முடி செய்யவர் துங்கவற்புதர் பொன்புகர் தூங்குவே லங்கை யாள ரசனியி னார்த்துளார். ஓடு தேரி னுவாக்களின் மானவர் நீடு கையி னிவந்துறு கேதன மாடி விண்ணை யளாவுவ தாருவைக் கூட வேகொல் கொடியெனுந் தன்மையால். என்கின்றான். இந்திரசித்து இறந்த பொழுது இராவணன், மைந்த வோவெனு மாமக னேயெனும் எந்தை யோவெனு மென்னுயி ரேயெனும் முந்தி னேனுனை நானுளெ னோவெனும் வெந்த புண்ணிடை வேல்பட்ட வெம்மையான். என்கிறான். பானுகோபனிறந்த பொழுது சூரபன்மன். மைந்தவோ வென்றன் மதகளிறோ வல்வினையேன் சிந்தையோ சிந்தை தெவிட்டாத தெள்ளமுதோ தந்தையோ தந்தைக்குத் தந்தையிலான் கொன்றனனோ எந்தையோ நின்னை யிதற்கோ வளர்த்தனனே. என்கின்றான். இராவணன் தான்விடுத்த சூலம் வறிதானமை கண்டு, வென்றா னென்றே யுள்ளம் வியந்தான் விடுசூலம் பொன்றா னென்னிற் போகல தென்னும் பொருள்கொண்டான் ஒன்றா முங்கார த்திடை யுக்கோ டுதல்காணா நின்றானந்நாள் வீடண னார்சொன் னினைவுற்றான். சிவனோவல்ல னான்முக னல்லன் றிருமாலாம் அவனோ வல்லன் மெப்வா மெல்லா மடுகின்றான் தவனோ வென்னிற்செய்து முடிக்குந் தரனல்லன் இவனோதானவ் வேத முதற்கா ரணனென்றான். இவ்விதம் இராமனை வியக்கின்றான். சூரபன்மன் முருகவேள் தன் உண்மையுருவைக் கண்டு. கோலமா மஞ்ஞை தன்னிற் குலவிய குமரன் றன்னைப் பாலனென் றிருந்தெனந்நாட் பரிசிவை யுணர்ந்தி லேன்யான் மாலபன் றனக்கு மேனை வானவர் தமக்கும் பார்க்கு மூலகா ரணமாய் நின்ற மூர்த்தியிம் மூர்த்தியன்றோ. ஒற்றென முன்னம் வந்தோ னொருதனி வேலோன் றன்னைப் பற்றிக லின்றி நின்ற பராபர முதல்வ னெவ்தே சொற்றனன் சொற்ற வெல்லாந் துணிபெனக் கொண்டிலேனா லிற்றையிப் பொழுதி லீச னிவ னெனுந் தன்மை கண்டேன். என்கிறான். 5. திருவிளையாடற் புராணம் திருவிளையாடற் புராணம் என்பது மதுரையம் பதியிற் கோயில் கொண்டிருக்கும் பரங்கருணைத் தடங்கடலாகிய சோமசுந்தரக் கடவுளால் அடியார்கள் பொருட்டு நிகழ்த்தியருளிய அற்புதமான விளையாடல்களை யுணர்த்தும் தமிழ் நூலாகும். மதுரைப் பதியானது செந்தமிழ்ப் பாண்டிநாட்டிலே படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வரும் பழங்குடியினராகிய பாண்டி வேந்தர்கள் வழிவழியாக அரசு வீற்றிருக்கும் தலைநகராயது; பன்னெடுங் காலம் சங்கமிருந்து தமிழாராயப் பெற்ற தகுதிப் பாடுடையது; தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டுப் பதினான்கு திருப்பதிகளுள் முதலாவதாயது; கூடல், ஆலவாய் முதலிய திருப் பெயர்களையுடையது. அதன்கண் உறையும் இறைவனுடைய அருட்செயல்கள் திருவிளையாடல் எனப்படுவன. வரம்பிலா ஆற்றலுடைய இறைவன் செய்யுஞ் செயலெல்லாம் வருத்தமின்றி இனிதின் முடிதலின் அவற்றை அவன் விளையாட்டுக்கள் என்பர் "காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி" என்றும் திருவாசகமும், "சொன்னவித் தொழில்கள் என்ன காரணந் தோற்றவென்னின், முன்னவன் விளையாட்டென்று மொழிதலுமாகும்" என்றும் சிவஞானசித்தியும் நோக்குக. ஏனோரும் இங்ஙனம் விளையாட்டென்று கூறுவரென்பது "அலகிலா விளையாட்டுடையார்" என்னும் கம்பநாடர் கூற்றானறிக. சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடல்களை உணர்த்தும் நூல்கள் பல அவற்றுள், திருவிளையாடல்கள் பலவற்றையும் விரித்துரைப்பனவாய், திருவிளையாடற் புராணம் என்னும் பெயருடன் திகழ்வன இரண்டு. அவற்றுள் முன்னது செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவரால் இயற்றப்பெற்றது; திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் எனப்படுவது; வேம்பத்தூரார் திருவிளையாடல் எனவும், பழைய திருவிளையாடல் எனவும் வழங்கப் பெறுவது. பின்னது திருமறைக்காட்டிலே அபிடேகத்தர் மரபிலே தோன்றிய பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பெற்றது. முன்னதிலும் ஏறக்குறைய இருமடங்கு விரிவுடையது; கற்பனையலங்காரங்களில் சிறந்தது; சொன்னயம் பொருணயம் மிக்கது; சைவ நன்மக்கள் யாவரானும் பெரியபுராணத்தையடுத்துப் பாராட்டிப் பயிலப் பெறுவது. "பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடியகவிவலவ" எனவும் "தெய்வ மணக்குஞ் செய்யுளெலாம்" எனவும் சேக்கிழார் பெருமானையும் பெரியபுராணத்தையும் குறித்து மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கூறியன. இந்நூலாசிரியர்க்கும் இந்நூலுக்கும் ஏற்புடையனவே தான் தோன்றிய பின், பழைய புராணத்தை மூலையில் ஒடுங்கிக் கிடக்கச் செய்து. திருவிளையாடற் புராணம் என்ற வளவில் தன்னையே நினைவுகூரச் செய்து உலகெங்கும் உலாவி வருதலொன்றே இதனது பெருமைக்குச் சான்றாகும். சமயநோக்கம் முதலியனவின்றியே இலக்கிய வளம் கருதித் தமிழ் மக்கள் யாவரும் விரும்பிப் படிக்கின்ற நூல்கள் நைடதம், திருவிளையாடற் புராணம், வில்லிபாரதம், கம்பராமாயணம் முதலியவாமென்பது பலரும் வரலாறுகளின் வாயிலாக மறை களின் பொருளை வெளிப்படுத்தலின் புராணம் எனப்படும். இந்நூல் பெருங்காப்பிய இலக்கணங்கள் அமையப் பெற்றதா யிருத்தலின் காப்பியம் என்றும் பெயருக்கு ஏற்புடையதேயாகும். தன்னிகரில்லாத தலைவனை யுடையதாய், மலை கடல் நாடு வளநகர் பருவம் இருசுடர்க் தோற்றம் என்ற இனையன புனைந் துரைப்பதாய், நன்மணம் புணர்தல்; பொன்முடி கவித்தல், பூம்பொழில் நுகர்தல், புனல் விளையாடல், தேம்பிழி மதுக்களி சிறுவர்ப் பெறுதல் என்றிவை முதலியவற்றையும் மந்திரம் தூது மேற்செலவு போர்வென்றி முதலியவற்றையும் இனிதியம்புவதாய், உறுதிப் பொருள் நான்கும் பயப்பதாய், சுவையும் பாவமும் தோன்றச் செய்து விளங்குவது பெருங்காப்பியம் என்ப. இந்நூலகத்து ஆண்டாண்டு இவ்வியல்புகள் அமைந்திருத்தல் கண்கூடு. மற்றும் இந்நூலாசிரியர் இதனை ஓர் காப்பியமாகக் கருதியுள்ளா ரென்பது. தன்னிக ருயர்ச்சி யில்லான் காப்பியத் தலைவனாக முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கெலா முகமனன்றோ அன்னது தனதே யாகும் அண்ணலே பாண்டி வேந்தார் இந்நகர்க் கரசனாவான் இக்கவிக் குறைவனாவான் எனக் கூறுவதனால் விளங்கும். இவ்வாறு புராணமும் காப்பியமுமாக வுள்ள இந்நூல் சைவர்களுக்கு ஒரு சமய நூலும் பக்தி நூலுமாகத் திகழ்கின்றது. இந்நூலாசிரியர் சங்கச் செய்யுட்களிலும், சீவக சிந்தாமணி முதலிய பெருங்காப்பியங்களிலும், பன்னிரு திருமுறை களிலும், சைவசித்தாந்த மெய்நூல்களிலும் அழுந்திய பயிற்சியும் புலமையும் உடையார்; பெருமிதமுடைய இனிய நடையுடன் கவிதையியற்றுந் திறன் இயல்பிலே கைவரப் பெற்றவர். இவர் பழைய தமிழ் நூற்கருத்துக்கள் பலவற்றை இந்நூலில் ஆண்டாண்டு எடுத்தமைத்திருத்தலை இதற்குயான் எழுதிய உரையில் எனது சிற்றறிவிற்கு எட்டியவாறு புலப்படுத்தியுள்ளேன். எடுத்துக் காட்டாகப் பின்வருவன சில காண்க. " வையைதன், நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற் றென்றறியாத புரிசைசூழ் புனலூரன்" என்னும் மருதக்கலியின் கருத்து. " அம்மதில், திரைக்கரந் துழாவி அகழவோங்கு நீர்வையையா லல்லாது வேற்றுப் பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே" என இந்நூலின் மதிற்சிறப் புணர்த்துந் செய்யுளில் அமைக்கப் பெற்றுளது. “ ஒருகுழை யொருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும் பருதியஞ் செல்வன்போல் நளையூழ்த்த செருந்தியும் மீனேற்றுக் கொடியோன்போல் மிஞிறார்க்கும் காஞ்சியும் ஏனோன்போல் நிறங்கிளர்பு கஞலிப ஞாழலும் ஆனேற்றுக் கொடியோன்போல் எதிரிய விவலமும்” என்னும் பாலைக்கலியை உட்கொண்டு, " செங்கதிர் மேனியான்போ லவிழ்ந்தன செழுப்ப லாசம் மங்குலூர் செல்வன்போல மலர்ந்தன காஞ்சி திங்கட் புங்கவன் போலப்பூத்த பூஞ்சினை மரவம் செங்கை அங்கதி ராழியான்போல் வலர்ந்தன விரிந்த காயா" என்னும் இந்நூற் செய்யுள் இயற்றப்பெற்றதாகும். " கோட்டிளந் தகர்களும் கொய்ம்மலர தோன்றிபோற் சூட்டுடைய சேவலும்..... போர்க் கொளிஇ" "பொருவில் யானையின் பழுப்போற் பொங்குகாய்க் குலையவரை" " முட்டிலா மூவறு பாடைமாக் களாற் புட்பயில் பழுமரம் பொலிவிற் றாகிய” " புதுக்கலம் போலும் பூங்கனி யால்" என்னும் சிந்தாமணிச் செய்யுட் பகுதிகளும், " கொய்ம்மலர்க் குடுமிச்சேவல் கோழிளந்தகர் போர்மூட்டி" " ஆறிடு மதமால் யானைப் பழுக்குலை யவரை" " பாயதொன் மரப்பறவை போற்பயன் கொள்வான் பதினெண் டேயமாந் தருங்கிளர்ந்த சொற்றிரட்சி தான்" " கதிர்கலம் பெய்காட் போலுதிர் பழம்" என்னும் இந்நூற் செய்யுட் பகுதிகளும் முறையே ஒத்துள்ளன. " தீயில் வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன்" " மையிலங்குநற் கண்ணிபங்கனே வந்தெனைப் பணிகொண்ட பின்மழக் கையிலங்குபொற் கிண்ணமென்றலால் அரிவையென் றுனைக்கருது கின்றிலேன்" என்பவாகிய திருவாசகப் பகுதிகளை நினைவிலிருத்தி, " வஞ்சவினைக் கொள்கலனா முடலைத் தீவாய் மடுக்கிலேன் வரையுருண்டு மாய்ப்பே னல்லேன்" " மழலைதேறார் சிறியனா மொருமதலை கையிற்கொண்ட செம்பொன் மணிவள்ளம் போற்றேவர் யார்க்கும் அறிவரியாய் சிறியேனை யெறிவந் தாண்ட அருமை யளியேன்" என்பனவாதியாக வாதவூரடிகள் பரவுங் கூற்றில் வைத்து இவ் வாசிரியர் பாடியிருப்பன அறிந்து மகிழ்தற்குரியன. இனி, தருமிக்குப் பொற்கிழி யளித்த படலத்தில், இளவேனிலின் இயல்பையும், பொழில் விளையாட்டு முதலியவற்றையும் நகைச் சுவை முதலியன தோன்ற விரித்துரைத்திருப்பன. இவ்வாசிரியரது கற்பனைத் திறத்தை நன்கு விளக்குவனவாகவுள்ளன. " மனிதர் வெங்கோடை தீர்க்கும் வசந்தமென் காலம்வேறு துனிதவி ரிளங்கால் வேண்டும் சோலையு சோலை வேண்டும் புனிதநீர்த் தடமும்வேறு புதுமல ரோடை வேண்டும் மனிதரு மதியும்வேறு பான்மதி வேண்டுங் காலம்" என்னும் இளவேனில் வருணனையும், காடியுள் நறவ முண்டாள் தன்றுரு வேறுபாட்டை சூடியுள் நோக்கி நானே வல்லனோ எனைத்தான் கைக்கொண் டோடினர் பிறருமுண்டோ வுயிரன்னான் வந்திங்கென்னைத் தேடினென் செய்கோன் என்னைத் தேடித்தா சேடியென்றாள், என்னும் உடன்பாட்டுப் புனைவும் கற்பாரை இன்புறுத்துந் தகையனவாதல் காண்க. இவ் வாசிரியர் சிவசிந்தனை மேலிட்டவராய்த் தெய்வமணங் கமழ இந்நூலை யாத்துளா ரென்பது, மேகம் தெய்வநாயகன் நீறணி மேனிபோற் சென்று கடல்நீரைப் பருகி, உமையம்மை மேனி போற் பசந்து, இறைவன் உயிர்களின் துன்பத்தைப் போக்கு தற்கு அருள் சுரத்தல்போல, நீரினைச் சுரந்து எழுந்தது என்னும் அது, பொதியின் மலையின் உச்சியில் மழையைப் பொழிவது இராமபிரான் சோமசுந்தரக் கடவுளின் திருமுடிமேல் தூய நீரால் திருமஞ்சன மாட்டுதல் போலும் என்னும், நெற்பயிர்கள், ‘அன்புறு பத்திவித்தி ஆர்வநீர் பாய்ச்சுந் தொண்டருக்கு இன்புறுவான வீசன் இன்னருள் விளையுமாபோல்' விளைந்தன என்றும் உலகியற் பொருட்களைக் கூறுமிடத்தும் இங்ஙனம் உவமை கூறிச் செல்லுதலால் அறியப்படும். மற்றும் அவர், நீர்ப் பெருக்கின் கலக்கத்திற்கும் தெளிவுக்கும். " மறைமுதற் கலைகளெல்லாம் மணிமிடற் றவனே யெங்கும் நிறைபர மென்றும் பூதி சாதன நெறிவீ டென்றும் அறைகுவ தளிந்துந் தேறார் அறிவெனக் கலங்கி அந்த முறையின் வீடுணர்ந்தோர்போலத் தெளிந்தது மூரிவெள்ளம்" எனவும், அகழியல் வீழ்ந்தோர் கரையேற மாட்டார் என்பதற்கு, தெண்ணிலாமதி மிலைந்தவர்க் கொப்பெனச் சிலரை எண்ணினா ரிருள்நரக நீத்தேளினும் ஏறார் எனவும் உவமை கூறுதல் முதலியன, 'இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டாட்டா தொழிந்து ஈசன் திறமே பேணும்" இவரது உறுதிப்பாட்டைப் புலப்படுத்துவனவாகும். மற்றும் இந்நூலிலே, " மருட்சிசெய் காமநோயால் மதிகெடு மாறுபோல" " கோபமூள மெய்த்தவஞ் சிதையு மாபோல்" " உத்தமகுணங்க ளெல்லாம் உலோபத்தா லழியுமாபோல்" " செறுக்குற வழியுங் கற்ற கல்விபோல்" என்றிங்கனம் உவமையாகவும் " தையலார் மயலிற்பட்டோர் தமக்கொரு மதியுண்டாமோ" " அறிவிலாத அற்பரானவர்க்குச் செல்வமல்லது பகைவேறுண்டோ" என்றிங்கனம் வேற்றுப் பொருள் வைப்பாகவும் மக்கள் அறிந்து கடைபிடிக்க வேண்டிய எத்தனையோ பல நீதிகள் வந்துள்ளன. மற்றும் நவமணியிலக்கணம், புரவியிலக்கணம், இசை, கூத்து முதலிய கலைகளும் பலசமய நுண்பொருள்களும் இதன்கண் அறியக்கிடக்கின்றன. எல்லாவற்றினுங் காட்டில் இதில் விஞ்சி தோன்றுவன இறைவனுடைய அருட்பெருக்கைப் புலப்படுத்தி பத்தி நலங்கனியச் செய்யும் செய்யுட்களே அவற்றிற் சிலவற்றை எடுத்துக்காட்டி இவ்வுரையினை முடிப்போம். " வேதமுதற் கலைகாட்சி முதலளவை விரிஞ்சன் முதல் விண்ணோர் செய்யும் சோதனையு ளகப்படாச் சோதியுனைச் சோதிக்கத் துணிந்தோ னந்தோ பேதமையே னிடத்தென்ன குணங்கண்டேன் பிணிதீர்த் தென்பெற்றா யாசை கோதமிலாய் குற்றமே குணமாகக் கொள்வது நின்குணமோ வையா" என்பது வருண............ “ நின்னால் மொழிந்தமறை நின்னடிகள் வந்தித்தும் பன்னா ளருச்சித்தம் பாதந் தலைசுமந்தும் உன்னாமம் வாசித்தும் உன்னை யளியே னென்று சொன்னா லடியனேன் சோதனைத்தோ நின்னியல்பே" என்பது அபிடேக மாற்றும் விழுத்திய பாடல்கள். “ எழுதரிய மறைச்சிலம்பு கிடந்து புறத்தலம்ப வன்பரிதய மென்றும் செழுமலரோடையின் மலர்ந்து சிவானந்தத் தேன்றதும்பு தெய்வக் கஞ்சத் தொழுதகுசிற் றடிப்பெரிய விரல்சுவைத்து மைக்கணீர் துளும்ப வாய்விட் டழுதணையா டையிற்கிடந்தான் அனைத்துயிரு மீன்று காத்தழிக்கு மப்பன்" என்பது விருத்தனாய்க் குமாரனாய இறைவன் பின் பாலனாயது. " கடிய கானகம் புகுதவோ கட்டிய விரகை முடியி லேற்றவோ முண்டகத் தாள்கணொந்திடவந் தடியனேன் பொருட் டடாதசொற் பகரவோ வஞ்சக் கொடியனேன் குறை யிரந்தவா விளைந்ததே குற்றம்" " நெடிய னேமுதல் வானவர் நெஞ்சமும் சுருதி முடிய னேகமும் கடந்தநின் முண்டகப் பாதம் செடியனேன் பொருட்டாகஇச் சேணிலந் தோய்ந்த அடிய னேற்கௌத் தாயதோ வையநின் பெருமை" என்பன பாணபத்திரர் பரவுதல். மற்றும் வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலத்திலுள்ள செய்யுட்கள் அனைத்தும் நெஞ்சை யுருக்கும் நீர்மையன. " பித்திது வெனப்பிறர் நகைக்கவரு நாலார் சத்திபதி யத்தமது சத்தறிவு தன்னைப் பொத்திய மலத்தினும் வெரீஇச்சுமை பொறுத்தோன் ஒத்திழி பிணிப்புறு மொருத்தனையு மொத்தார்" " நெருப்பிலிடு வெண்ணெயென நெஞ்சுருக வெள்ளா உருக்குமித னாலெனை யொளித்தமல வாற்றல் கருக்குமவ னாகியெனை யாள்கருணை வெள்ளம் இருக்குமிட னேயிதென வெண்ணிநகர் புக்கார்" என்பன, அடிகள் திருப்பெருந்துறையை அடைதல் ஆராவன்புடன் செல்லுஞ் செலவைப் பாட்டின் நடையாலும் ஆசிரியர் புலப்படுத்தி யிருக்குந் திறன் அறிந்து பாராட்டி மகிழ்தற்குரியது. (குறிப்பு:- இக்கட்டுரை காலஞ்சென்ற நாட்டாரவர்கள் மதுரையில் நடந்த சமாஜ விழாவில் நிகழ்த்தக் கருதிய சொற் பொழிவின் சுருக்கம். உடல்நல மின்மையால் இச்சொற் பொழிவை அப்பெரியார் நிகழ்த்த இயலாமற் போயிற்று - பத்திராசிரியர்.) 6. திருநாவுக்கரசர் திருநாவுக்கரசர், பரதகண்டமெங்கணும் பரந்து நிலவிய தொன்மைச் சமயமும் உண்மைத் திருநெறியுமாகிய சைவ சமயத்திற்குப் புறச்சமயிகளால் உண்டாகிய இடையூற்றைக் களைந்து, அதன் மாண்பு மலை விளக்காய்த் திகழுமாறு செய்த பேரருளாளப் பெருமக்களாம் சமயக்குரவர் நால்வருள் ஒருவராவர். இவர் பசுகரணமெல்லாம் பதிகரணமாகத் திகழப்பெறும் சீவன் முத்த நிலையை எய்தியவாரென்பது, " பாலை நெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும் காலனையன் றேவிக் கராங் கொண்ட - பாலன் மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம் கரணம்போ லல்லாமை காண்" (திருக்களிற்றுப் படியார்) *முதல் ஈண்டு "உலகு" என்ற சொல் என்னும் ஆன்றோர் திருவாக்கானறியப்படும். இவரது மெய்வரலாறு தில்லையம் பலவாணர் அருளிய *முதல் கொண்டு சேக்கிழார் பெருமான் பாடிய திருத்தொண்டர் புராணத்துள்ளே திகழா நிற்பது. அதன் சுருக்கம் :- திருமுனைப்பாடி நாட்டிலே, திருவாமூரிலே, வேளாளர் மரபிலே குறுக்கையர் குடியில் புகழனார் என்பவர்க்கும் அவர் மனைவி மாதினியார்க்கும் திலகவதியார் என்பவர் பிறந்து சிலயாண்டு சென்றபின், மருணீக்கியார் என்பவர் திருவவதாரஞ் செய்து, உரிய காலத்திலே கல்வி கேள்விகளில் வல்லநாகி மேம்பட்டு விளங்கினார். திலகவதியாரை அரசன்பாற் படைத் தலைவராயிருந்த கலிப்பகையார் என்பவர் மணம் பேசிப் பெற்றோரின் இசைவு பெற்றும், கலியாணம் செய்யுமுன், தம் அரசன் ஏவலை மேற்கொண்டு வடபுலத்து மாற்றரசரோடு அமர்செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது புகழனார் இறந்து அவர் மனைவியாரும் உடன் சென்றனராக, திலகவதியாரும் மருணீக்சியாரும் பெருந்துயருழந்து தந்தை தாயார்க்குரிய கடன்களைச் செய்து முடித்தனர் அந்நாளிலே கலிப்பகையாரும் போர்க்களத்தில் உயிர்கொடுக்க அச்செய்தியைக் கேட்ட திலகவதியார் தாமும் இறக்கத் துணிந்தும் தம்பியார் வேண்டிக் கொண்டமையின் அவர்பொருட்டு உயிர்தரித்து ‘அம்பொன்மணி நூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி' மனையின்கண் தவம்புரிந்து கொண்டிருந்தார். அவர், இங்ஙனமிருக்க, மருணீக்கியார் யாக்கை நிலையாமையையும், செல்வநிலையாமையும் அறிந்து தமது செல்வத்தை அறஞ்செய்தலிற் செலவிட்டுப் பற்றற்ற நிலையை எய்தியும், சிவபெருமான் அருள் தலைக்கூடாமையால் உண்மைச் சமயம் இதுவென அறியப்பெறாது சமண் சமயத்திற் புகுந்து பாடலிபுத்திரம் என்னுமிடத்தையடைந்து நூலாராயிச்சியில் மேம்பட்டவராய் புத்த சமயத்தவரை வாதில்வென்று தருமசேனர் என்னும் பெயருடன் இருந்து வந்தார். திருவாமூரில் இருந்த திலகவதியார் திருவதிகை வீரட்டானத்தை யடைந்து வீரட்டானே சுரருக்குத் திருவலகிடுதல், திருமெழுக் கிடுதல், திருப்பள்ளித் தாமம். தொடுத்துச் சாத்துதல் முதலிய திருப்பணிகளைச் செய்துவரும் நாளில் தமது தம்பியார் சமணசமயப் படுகுழியில் வீழ்ந்து கெடுவதை இறைவனிடத்தில் விண்ணப்பித் துவர, அதனை ஏற்ற சிவபெருமான் அவருக்குக் கனவிலே தோன்றி, 'நின்தம்பி முற்பிறப்பிலே ஓர் முனிவனாகி நம்மையடையத் தவம் புரிந்தவன், சிறிது தவமியற்றி இந்நிலையனாயினான்; நாம் இனி அவனைச் சூலைமடுத்து ஆட்கொள்வோம்; கவலையொழிக என்று அருள்புரிந்தார். அதற்கியையத் தருமசேனருக்குச் சூலைநேரம் வந்துற்றது. சமணர் பலவகையான தீர்வினைச் செய்யவும் அது தீராது மேன்மேல் முறுகிவருத்தவே, உய்யுங்காலம் வந்தமையால் தமது தமக்கையை நினைந்து திருவதிகையை அடைந்து அவரை வணங்கி வேண்ட, அவர் பரமசிவனது அருளை வியந்து அவருக்குத் திருநீற்றைத் திருவைந்தெழுந்தோதக் கொடுத்து, திருப்பள்ளி யெழுச்சியிலே திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்று இறைவன்பால் ஆட்படுத்தினர். ஆட்பட்ட மருணீக்கியாரும் இறைவனை வலம் வந்து பணிந்து திருமுன்னின்று திருவருளினாலே பாடும் வன்மை பெற்றுத் தமது சூலை நீங்குமாறும் உலகினார் உய்யுமாறும் 'கூற்றாயினவாறு விலக்கிலீர்' என்னும் திருப்பதிகம்பாடி நோய் நீங்கிப் பேரின்பமடைந்து, தமக்கு மிகப் பெரிதாய உதவியைக் செய்ததென்று சூலையைப் பாராட்டினர். அப்பொழுது இறைவர் அவருக்கு ‘நாவுக்கரசு' என்னும் பெயரினைச் சூட்டியருளினார். திருநாவுக்கரசர் அன்று தொட்டு மனம்மொழி மெய் என்னும் மும்மைக்கரணங்களாலும் வழிபடும் உரிமை பூண்டு சிவசாதன மணிந்து, தியானமாறாத உணர்வும், தடையின்றியெழுகின்ற திருப்பதிகத் திருவாக்கும், மழைபோலப் பொழியும் கண்ணீரும், உழவாரப்பணியும் உடையவராயினார். இங்கு நிகழ்ந்தவற்றைக் கேட்ட சமணர் இதனை அரசன் அறியின் தானும் சைவனாவான் என்று அஞ்சி, அவனையடைந்து தரும சேனர் சூலை வந்ததாகப் பாவித்தும் சைவத்தையடைந்தது தானும் சைவனாவான் நமது சமயத்தை யிழந்தார்'; என்று சொல்லினர். அதைக்கேட்ட அரசன் அமைச்சர்களை யழைத்துத் தருமசேனரை அழைத்து வருகவென, அவர்கள் போய்த் திருநாவுக்கரசரை அழைக்க, அவர் ‘நாமார்க்குங் குடியல்லோம்' என்னும், மறுமாற்றத் திருத்தாண்டகம் பாடி மறுத்து, அமைச்சர்கள் வேண்டிக்கொண்டமையின், ‘இறைவன் உளன்' என்று அவரோடு சென்றனர். பல்லவமன்னன் அவரைக் காவலாளரிடம் ஒப்பு வித்துச் சமணர் சொல்லுமாறு செய்கவென விடுத்தான். சமணர் அவரைக் கொல்லுதற்கு நீற்றறையிலிட்டு ஏழுநாள் காறும் பூட்டிவைத்தும், பின் நஞ்சினையருத்தியும், யானையை ஏவியும் அவர் ஒன்றாலும் ஊனமின்றி யிருந்தமையின், இறுதி யாகக் கற்றூணிலே வலிய பாசங்களினாற் கட்டிக் கடலில் இட்டனர். இடவும், திருநாவுக்கரசர் ‘சொற்றுணை வேதியன்' என்னும் நமச்சிவாயத் திருப்பதிகம் பாடித் துதித்து, அக்கல்லே தெப்பமாக மிதக்கத் திருப்பாதிரிப் புலியூர் என்னும் பதியிற் கரையேறினார். ஏறினவர் திருக்கோயிலுக்குச் சென்று தரிசித்து 'ஈன்றாளுமாய்' என்னுந் திருவிருத்தம் பாடினர். திருநாவுக்கரசு நாயனார் பின்பு திருவதிகை வீரட்டானத்தை யடைந்து ஏழைத்தாண்டகம் முதலிய பலபதிகங்கள் பாடியிருக்கு மளவில் உண்மையை யறிந்த பல்லவவரசன் சைவத்தையடைந்து நாயனாரைத் திருவடிகளில் வணங்கிச் சமண் பாழிகளை யிடித்துத் திருவதிகையில் சிவபெருமானுக்குக் குணபரவீச்சரம் என்னுந் திருக்கோயில் எடுத்து உய்ந்தான். திருநாவுக்கரசர் திருப்பதிகடோறும் விருப்புடன் சென்று பதிகம் பாடியும்? உழவாரப் பணிபுரிந்தும் போதருவாராயினர். அவ்வாறு சென்ற பதிகளுள்ளே அவர் திருப்பெண்ணாகடத்தை யடைந்த பொழுது சமண் மாசு தீரும் பொருட்டுத் தமக்குச் சூல, இடப இலச்சினைபொறிக்க வேண்டுமென்று பாடி அவ்வாறே பொறிக்கப் பெற்றார். தில்லைத் திருப்பதியிலே பல பதிகங்கள் பாடிப் பணிசெய்யும் நாளில் திருஞான சம்பந்தப் பிள்ளையாருடைய பெருமைகளைக் கேள்வியுற்றுச் சீகாழிப் பதியை அடைந்து அவர் கழல்களில் விழுந்து வணங்கப் பிள்ளையாரும் இறைஞ்சித் தமது மலர்க்கையால் அவரையெடுத்து 'அப்பரே' என அவரும் ‘அடியேன்' என்றார்; இருவரும் திருக்கோயிலையடைந்து தரிசித்தபின்? அப்பர் பிள்ளையாரது மடத்திலே சில நாள் தங்கியிருந்து பின்பு பிற பதிகளையும் வணங்குதற்குச் சென்றனர். திருச்சத்தி முற்றத்திலே தமக்குத் திருவடி சூட்ட வேண்டி இறைவனைப் பாடி, நல்லூரிலே சூட்டப் பெற்று"ப் பதிகம்பாடித் துதித்தார். திருப்பழனத்தை வணங்கித் திங்களுருக் கணிமையிற் செல்லும்பொழுது அவ்'d2வூரிலுள்ள அந்தணராகிய அப்பூதியடிகள் தமது எல்லையில்லா அன்பு செய்தலையறிந்து அவர் மனைக்குச் சென்று அவரைக் கண்டு அவரன்பினை வியந்து அவரில்லில் அமுது செய்ய இசைந்து தாம் அமுது செய்தற்கு இலை கொணரச் சென்ற அப்பூதியடிகளின் புதல்வராகிய மூத்த திருநாவுக்கரசு இலையரியும்பொழுது அரவு தீண்டி மரித்தமையறிந்து ‘ஒன்றுகொலாம்' என்றும் பதிகம் பாடி அவரை உயிர்ப்பித்தனர். திருப்புகலூரையடைந்த பொழுது முருக நாயனார் மடத்தில் எழுந்தருளியிருந்த திருஞானசம்பந்தரைச் சந்தித்துப்பின் இருவருமாகப் பல பதிகட்குச் சென்று வழிபட்டனர். இருவரும் திருவீழிமிழலையை அடைந்தபொழுது மழையின்மையால் வற்கடம் மிக்கு உயிர்கள் பசியால் வருந்த, நாயன்மாரிருவரும் சிவபெருமான்பாற் படிக்காசு பெற்றுத் தங்கள் திருமடங்களிலே இரண்டு காலமும் யாவர்க்கும் உணவளித்தனர். இருவரும் திருமறைக் காட்டினையடைந்தபொழுது, மறைகள் பூசித்துத் திருக்காப்பிடப் பெற்ற எதிர்முக வாயிற் கதவு திறக்கப்படுமாறு சம்பந்தர் வேண்ட, அவ்வாறே 'பண்ணினேர் மொழியாள்' என்னும் பதிகம் பாடித் திறப்பித்தார்; அவ்வாயிலாற் சென்று வழிபட்டபின் பிள்ளையார் பதிகம் பாடி அடைப்பித்தார். திருநாவுக்கரசர் பழையாறையை அடைந்தபொழுது வடதளியிற் சிவபிரான் சமணர்களால் மறைக்கப்பட்டிருத்தலை யறிந்து, ‘இறைவனை நேரே கண்டு கும்பிட்டன்றிப் போகேன்' என உணர்வு கொள்ளாது அங்குத் தங்கி, இறைவனாற் கனவிலருளிச் செய்யப் பெற்ற சோழமன்னர் சமணரையகற்றிப் பெருமானை வெளிப்படுத்தக் கண்டு கும்பிட்டார். திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும்பொழுது வழியிலே பசியாலும் நீர் வேட்கையாலும் வருந்துவது பொறாத சிவபெருமான் தண்ணீர்ப் பந்தர் அமைத்துப் பொதிசோறும் தண்ணீரும் அளித்து உண்பிக்க உண்டு திருவருளை வியந்து பரவினார். திருக்காளத்தியை அடைந்து காளத்தியப்பரையும் கண்ணப் பரையும் தரிசித்திருக்கும்பொழுது, வடகயிலையிற் சிவபிரான் எழுந்தருளியிருக்குங் கோலத்தைத் தரிசிக்க விழைந்து, வடதிசைக் கான் காடுமலையெல்லாம் இரவு பகலாக உணவின்றி நடந்து தம் உறுப்புக்களெல்லாம் சிதைந்து வயமழிந்து ஓரிடத்திற் கிடந்தார்; அப்பொழுது அங்கே சைவ முனிவராகத் தோன்றிய சிவபெருமான் கயிலைக்குச் செல்லலாகாமை தெரிவித்து மீளுமாறு கூறவும் அதற்கொருப்படாது, பின் அவர் வானிலே மறைந்து பணித்த வண்ணம் ஓர் வாயியிலே மூழ்கித் திருவையாற்றிலே ஓர் வாவியிலெழுந்து திருக்கோயிலை யடைந்து, அதுவே திருக்கயிலையாக அம்மையப்பர் எழுந்தருளியிருக்குங் காட்சியைக் கண்டு வணங்கிப் பதிகம் பாடித்துதித்தார். திருப்பூந்துருத்தியை அடைந்து ஒரு திருமடங் கட்டுவித்துப் பல பதிகம் பாடிப் பணிசெய்து கொண்டிருந்தார். அப்பர் திருப்புகலூரை யடைந்து திருப்பணி செய்து கொண்டிருந்தபொழுது சிவபிரான் அவரது பற்றற்ற நிலையை உலகினர்க்கக் காட்ட வேண்டி அவ்ர பணி செய்யும் உழவாரம் நுழையுமிடங்களில் செம்பொன்னும் நவமணியும் திகழுமாறு செய்ய அவர் அவற்றை அங்குள்ள பரல் களோடொப்ப மதித்து உழவாரத்தாலெடுத் தெளிந்தார்; தேவ கணிகையர் எதிர் நின்று ஆடியும் பாடியும் மருட்டுமாறு செய்ய அதற்குச் சிறிதும் சித்தஞ் சலியாதிருந்து அவர் அகன்றொழியச் செய்தார். இறுதியில், திருநாவுக்கரசர் புகலூரிலே ஒரு சித்திரை மதிச் சதய நாளில் ‘எண்ணுகேன் என் சொல்லி யெண்ணுகேனோ' என்று திருத்தாண்டகம் எடுத்து, ‘உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே' என்று பாடி அண்ணலார் சேவடிக்கீழ் நண்ணரிய சிவானந்த ஞானவடிவாயினார் என்பது. இனி, இவ்வரலாற்றினின்று வளங்கொளற்பாலவாய உண்மைகளிற் சிலவற்றை ஈண்டு சிந்திப்போம்: திருநாவுக்கரசர் சூலைநோய் முன்பு தம்மைப் பொறுக் கலாற்றாத இன்னல் செய்ததாகவும், உண்மையறியாது புறச் சமயம் புக்க தம்மைச் சிவபிரான் திருவடிக்கு ஆட்படுத்தியது அதுவெனக் கொண்டு ‘இவ்வாழ்வு பெறத் தரு சூலையினுக்கெதிர் செய்குறை யென்கொலெனத் தொழுதார்' என்று சேக்கிழார் கூறுகின்றார். சூலை நோய் செய்த உதவிக்குக் கைம்மாறின்றெனக் கூறி அதனை வணங்கினாரென்பது ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும்' அவரது சால்புடைமையை அனிது விளக்குகின்றது. மற்று, நீற்றறையிலிடுதல் முதலிய கொடுந்துன்பங்களை யிழைத்த சமணர்திறத்தும் எத்துணையும் இன்னலிழைக்கக் கருதாமலும் சினங் கொள்ளாமலும் அமைந்திருந்த அவரதியல்பு ‘எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானாம், மாணா செய்யாமை தலை' என்னும் பொய்யாமொழிக்கு மெய்யிலக்கியமாகின்றது. அவர் திருக்கயிலை காண்பான் ஊணுறக்கமின்றிச் செல்வுழிக் காலால் நடந்ததன்றிக் கையை ஊன்றியும் மெய்யைக் கிடத்தியும் தவழ்ந்தும் புரண்டும் உடலுறுப்பெல்லாஞ் சிதையவும் உள்ளஞ் சிதையா திருந்தமை நோன்மைக்கு எடுத்துக்காட்டாகும். நீர்மையது இவ்வாற்றால் "வற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற்குரு" எனத் தெய்வப் புலவர் தவத்திற்கே யுருவ மெனக் கூறிய இரண்டு பண்புகளும் நாவுக்கரசர்பால் மேவிப் பொலிந்தமை விளக்கமாம். அருண்மொழித் தேவர் "திருநாவுக்கரசுவளர் திருத்தொண்டினெறி வாழ, வருஞானத் தவமுனிவர்"எனத் தோற்று வாயிலேயே திருத்தொண்டு, தவம், ஞானம் என்னும் மூன்றற்கு முரிமைப்படுத்துரைத்தமையும் காண்க. மற்று, அவர் 'ஞானத் தவமுனிவர்' என்றமையால் அவரது தவம் இம்மை மறுமைப் பயன் விழைந்து செய்யும் பொதுத் தவமாகாது, மெய்யுணர்வுக் கேதுவாகிய உண்மைச் சரியை கிரியை யோகமாகிய மெய்த்தவமா மென்பதும் பெற்றாம். இனி, நாவுக்கரசரது திருத்தொண்டோ மும்மைக் கரணமும் ஒன்றிய செம்மை வாய்ந்தது. அவரது உள்ளம் இறைவனை நெக்கு நெக்கு நினைந்து இனைந்துருகும் மென்னீர்மையுடன் மலை கலங்கினும் நிலைகலங்காத வன்னீர்மையும் உடையது; அவரது உரை 'பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி: எத்தினாற் பத்திசெய்கேன் என்னை நீ யிகழ வேண்டா' எனக் குறைந் தடைந்திரந்து கூறும் மென்றன்மையுடன் "வானந் துளங்கிலென் மண் கம்பமாகிலென் மால்வரையும், தானந்துளங்கித் தலை தடுமாறிலென்' என்றிங்ஙனம் செம்மாந்துரைக்கும் வன்றன்மையும் உடையது. அவரது உடல் தளர்ந்து அசையும் மெல்லியல்புடன் காடு மலையெல்லாம் நடந்து கால்கை தேயினும் ஓய்வின்றி நிலமிசைப் புரண்டு செல்லும் வல்லியல்பும் உடையது. நாவரசின் அன்பின் நெகிழ்ச்சியிலாய மென்னீர்மையை. " தூயவெண்ணீறு துதைந்தபொன் மேனியுர் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோ லன்பு நீர் பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல் மேயசெவ்வாயு முடையார் புகுந்தனர் மீதியுள்ளே" " சிந்தையிடை யறாவன்புந் திருமேனி தனிலசையும் கந்தைமிகை யாங்கருத்துங் கையுழவா, ரப்படையும் வந்திழிகண் ணிர்மழையும் வழவிற் பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசமெதிர் வந்தணைய" என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுட்கள் இனிது பிளக்கா நிற்பன சிவஞானபோத மாபாடியத்தில், ‘மாலறநேயம் மலிந்தவர் வேட’ திற்கு எடுத்துக்காட்டாக நின்றன இவையென்றால் இப்பாடல்களின் அருமையையும், திருநாவுக்கரசரது அன்பின் பெருமையையும் என்னென்பேம், மற்று, அம்பலவாணர் திருமுன் அவர்க்கு நிகழ்ந்த அன்பின் மெய்ப்பாட்டினை அருண்மொழித்தேவர் தீட்டிக் காட்டிய அற்புத வோவியப் பொற்பினையும் ஈண்டு நோக்கி யின்புறுதும்: " கையுந் தலைமிசை புனையஞ்சலியன கண்ணும் பொழிமழை யொழியாதே மெய்யுந் தகையன கரணங்களுமுட னுருகும் பரிவின பேறெய்தும் மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரு மின்றாழ் சடையொரு நின்றாடும் ஐயன் திருநட மெதிர்கும் பிடுமவ ரார்வம் பெருகுத லளவின்றால்" நாவுக்கரசர் சமணர்கள் புரிந்த கொடுவினை யனைத்தையும் கடந்தமை அவரது திருத் தொண்டின் உறைப்பாலேயாம்; சேக்கிழாரும், ‘நாணில மண்பத கருட னொன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டினுறைப் பாலே, வென்றவர்' என்றமை காண்க; பிறிதோரிடத்தும் அவ்வுரைப்பினை அவர் சுட்டுகின்றனர். பழையாறை வட தளியிற் சமணரது மறைப்பை நீக்கி மறைவனைக் கும்பிட்டன்றி யகலேன் என உணவுமின்றித் தன்னந் தனியே இருந்துவிட்டதும், ‘கயிலை மால் வரை நின்னாற் காண்டற்குரிய தொன்றன்று; மீளுவதே கடன்' என வரைப்புழி ‘ஆளுநாயகன் கயிலையிலிருக்கை கண்டல்லால், மாளுமிவ்வுடல் கொண்டு மீளேன்' என மறுத்ததும் திருத்தொண்டின் உறைப்பேயாகும். மற்று அவரது தொண்டினுக்குள்ளதோர் சிறப்பு அது கைத் தொண்டாவதாம்; கைத்தொண்டு சிறுமையுடன் புரிந்த தொண்டும், ஒழுக்கமுடனுனிற்றிய தொண்டும், கையாற் செய்த தொண்டுமாகும்; ‘கைத்தொண்டாகும் பெருமையினால், வாசியில்லாக் காசு நனிபெற்று வந்தார் வாகீசர்' எனச் சேக்கிழார் குரிசில் அதன் தனிமாண்பினைக் கிளந்தோதுதலுங் காண்க. இனி வரலாற்றுப் பகுதியுள் நாவுக்கரசின் ஞான நிலையைக் குறிப்பன அவர் திருமறைக்காட்டிலே கதவந் திறந்து கண்ணு தலைத் தரிசித்ததும், திருவையாற்றிலே யாவும் சத்தியுஞ் சிவமுமாய்த் திகழக் கண்டதும் என்னலாம். கதவந் திறந்தமை அவரது மெய்யுணர்வுக்கும் பொருத்தமாவதறிந்தே., " தாயிலியாகுங் சிவபெருமான்றனைத் தானெறுமோர் கோயிலினா ரறிவாகிய நாமமுன் கொண்டிருந்த வாயிலினாணவ மாகுங் கடாபமும் மன்றிறந்து நோயிலியாகிய சொல்லிறை காட்டுவ னோக்குதற்கே" என்று சிவப்பிரகாசவடிகள் அருளிச் செய்வாராயினர் என்க. மற்றும் 'பொருளல்லவற்றைப் பொருளென்றுணரும் மருளை நீக்கிப் பற்றறுத்த அவரது உணர்வு நிலையானது புகலூரிலே பொன்னை மாதரைப் பொருளெனக் கொள்ளாமையானும் போதரும். இதுகாறும் நாவுக்கரசர் வரலாற்றினின்று அவரது சால்பு, தவம், தொண்டு, ஞானம் என்பவற்றை எம் அறிவு சென்றவாறு சிறிது ஆராய்ந்தோம். இவற்றின் புறனாக அறியலாவ தொன்றுமுளது; அது, புறச்சமயம் புக்க தம்பியாரைத் தமக்கையார் திருவைந்தெழுத்தோதி திருநீறளித்துத் திருகோயிலுக்கழைத்தேகி இறைவனுக்காட்படுத்தினர் என்பதனால் இற்றைநாளினும் பிற்றை நாளினும் வேற்றுமதம் புக்கு மீளுங்கருத்துடையாரை யாது செய்தல் வேண்டும் என்பது. இனி, நாவுக்கரசரின் பாக்களாகிய பரவையிற் படிந்து அரும்பொருண் மணிகளைக் கொணர்தல் எமக்கெளிய தன்றாயினும், அதன் கரைமருங்குலாவும் திரை கொழிப்பவற்றுள் எம் புன்மதிச் சிறுமையால் ஒல்லுமளவு முகப்பேமாக. நாவுக்கரசரது கல்வியின் பெருமையும் கவிதையின் செழுமையும் ‘பாவுற்றவர் செந்தமிழின் சொல்வளப் பதிகத் தொடை பாடிய பண்பதனைக் கண்டு, அவருக்கு நாவுக்கரசு என்று திருப்பெயர் சூட்டிய நம்பரே அறியவல்லார்; அவர் இறைவன் திருக்கயிலையில் எழுந்தருளிய கோலத்தைத் தரிசிக்க மீதூர்ந்த வன்பினராயும், அவரை ஆண்டுச் செல்லவொட்டாது தடுத்துத் திருவையாற்றிலே அக்கோலத்தைத் தரிசிப்பித்த பெருமானது திருக்குறிப்பு, அவர் ‘மன்னு தீந்தமிழ் பின்னையும் புவியிடைவழுத்த' வேண்டுமென்பதாயின், அதற்குக் காரணம் இப்பாக்களைக் கேட்கும் விருப்பமும், அவற்றை உலகினர் நுகர்ந்து உய்ய வேண்டுமென்னுங் கருணையும் இறைவன்பால் விஞ்சினமையே யன்றோ? நாவுக்கரசர் தேவாரத்தில் சொல்லி, காந்தாரம் முதலிய பான்வகையன்றிச் சிறப்பாகவுள்ளன திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் என்னும் நாற்பகுதியுமாம். அவற்றுள்ளும் திருத்தாண்டகத்தைச் சிறப்பாக நோக்கித் தாண்டகவேந்தர் என்றும், தாண்டகச் சதுரர் என்றும் அவரைப் பாராட்டுவர் உயர்ந்தோர். ‘இணைகொள் ஏழேழு நூறிரும் பனுவ லீன்றவன் திருநாவினுக் கரையன்' என அவர் பாடியவற்றிற்கு மட்டும் நம்பியாரூரர் தொகை கூறியதில் ஏதோ ஓர் உண்மையிருத்தல் வேண்டும். அப்பாடல்கள் ஒவ்வொன்றினுள்ளே உலப்பில் பொருள்கள் உள்ளனவாகலின் அனைத்தின் பொருளும் எவ்வணம் அளவிடலாகும்? நாவுக்கரசர் வரலாற்றுப் பகுதிகள் பலவற்றுக்கு அவர் பாடல்களில் உறுதியுடைய சான்றுகள் பலவுள்ளன. தாம் சமண சமயஞ் சார்ந்து உழன்றதனையும், இறைவன் பணியை நல்கப் பின்பு அது தீர்த்து ஆட்கொண்டதனையும் பலவிடத்துப் பகர்கின்றார் சொல்லரசர். " பெருகுவித்தேன் பாவத்தைப் பண்டெலாங் குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு உருவித் தென்னுள்ளத்தி னுள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி அருகுவித்துப் பிணிகாட்டி யாட்கொண்டு பிணிதீர்த்த வாரர்தம் அருகிருக்கும் விதியின்றி யறமிருக்க மறம் விலைக்குக் கொண்டவாறே" என்பது காண்க. நாவுக்கரசர் தாம் முன்பு புறச்சமயம் புகுதலாகிய திருவடிப் பிழைசெய்தும் இறைவன் தம்மைச் சூலை நோயால் ஒறுத்துத் தாம் அடைந்த வழி ஆட்கொண்டருளிய பேரருளை நினைந்து அவ்விறைமைக் குணத்தைப் பாராட்டுவாராகியே, அத்தன்மையனாய இராவணனுக்குப் பண்டு அருள் செய்ததனை ஒவ்வொரு பதிக விறுதியிலும் பாடிப் பரவுவாராயினர். சிவபெருமானது பேரருட்டிறம் இத்தகையதென மன்பதைக் கூறிவுறுத்தற் பொருட்டே ஆளுடைய பிள்ளையாரும் பதிகந்தோறும் இராவணன் செய்தி கூறுவாராயினர் என்க. இனித் திருநாவுக்கரசர் சிவபிரானே தமக்கருட் குரவராய் அருணேணாக்கினால் ஞானமுழுக்கு செய்விக்கப் பெற்றவர் தாம் என்பதனை ‘மலங்கெடுத்து மாதீர்த்த மாட்டிக் கொண்ட மறையவனை', ‘அருணோக்கிற் றீர்த்த நீராட்டிக் கொண்டாய்' என்பவற்றினால் வெளியிடுகின்றார். திருநெறித் தமிழ் அருளிய மூவரும் குருவருளால் வீடுபெற்றவரெனச் சேக்கிழார் புராணங் கூறுவதும், ‘தோடு கூற்றுப் பித்தா மூன்றும், பீடுடைத் தேசிகன் பேரருளாகும்' என ஆன்றோர் பகர்வதும் இதனை வலியுறுத்து வனவாகும். மற்றும் இறைவனே தமது பந்தத்தை யறுத்து ஆட்கொண்டானன் என்பதனையும், அவன் பாடுவிக்கவே அவனருளால் தமிழ் மாலை பாடப்பெற்ற தென்பதனையும் ‘நாயேனை முன்னைப், பந்த மறுத்தாளாக்கிப் பணி கொண்டாங்கே பன்னிய நூற்றமிழ்மாலை பாடுவித்தென், சிந்தை மயக்கறுத்த திருவருளினானைச் செங்காட்டங் குடியதனிற் கண்டேனானே' எனவும், அருளறமாகிய நன்னெறி ஆண்டவனாலே தமக்கு அறிவுறுத்தப் பெற்றதென்பதனைத் ‘தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி' எனவும் அரசு அருளிச் செய்தலுங் காண்க. இனி, நாவரசர் தேவாரத்தால் அறியலாகும் பொருட்பரப்பைச் சுருக்கிக் கூறின் இறை, உயிர், கட்டு என்னும் முப்பொருளியல்பு களும், உயிர்கட்டின் நீங்கி இறையை அடைந்து பேரின் பெய்துதற் குரிய நெறிகளும், அந்நெறிகளிற் சென்று கட்டு நீங்கினார் நீர்மையும் ஆகிய சைவ சித்தாந்தச் செழும்பொருள் யாவும் அறியப்படும் என்னலாம். அவற்றுள்ளே ஒல்லுவ சில காட்டி இவ்வுரை முடிக்கப் பெறும் இறைவன் 'உலகெலாமாகி வேறாய் உடனுமாய்' உளன் என்பது சித்தாந்த நூற்றுணிபு: “ இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி யாகசமா யட்ட மூர்த்தியாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமேயாகி நெருநலையா யின்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகணின்ற வாறே" என்பது இறைவன் கலப்பினால் உலகெலாமாகி யுள்ள வியல்பினையும், " விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணு நிலனும் திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில் அரிதரு கண்ணியாளை யொருபாகமாக வருள் காரணத்தின் வருவார் எரியா வாரமார்பரிமையாரு மல்ல ரிமைப் பாருமல்ல ரிவரே" என்பது பொருட்டன்மையால் வேறாகியுள்ள வியல்பினையும், " விண்ணகத் தான்மிக்க வேதத்துளான் விரி நீருடுத்த மண்ணகத் தான்றிரு மாலகத் தான்மரு வற்கினிய பண்ணகத் தான்பத்தர் சித்தத் துளான்பழ நாயடியேன் கண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெரக் கறைக்கண்டனே" என்பது உண்ணிற்றலால் உடனாகியுள்ள வியல்பினையும் தெளிவித்தல் காண்க. இனி, உயிர்கள் முதல்வனையடைதற்குரியவாகச் சைவசமயங் கூறும் நெறிகள் நான்கு; அவை, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் அடிமை நெறி, மதலை நெறி, தோழ நெறி, உண்மை நெறி என்பனவாம். சைவ சமய குரவர்களாகிய நால்வர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் நால் நெறிகளுள் ஒவ்வொன்று ஒவ்வொருவர்பால் விஞ்சத் தோன்றுமாயினும், நால்வரும் சிவஞானிகளென்பது துணிபாகலின் ஒவ்வொருவர் வாக்கினுள்ளும் நானெறிகளும் புலப்படா நிற்கும். அம்முறையே வாக்கரசர் பாக்களுள்ளே சரியையாகிய அடிமை நெறியன்றி மற்றை நெறிகளும் தெற்றென விளங்குதல் கண்கூடு. " நிலை பெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்கும் புலர்வதன் முனலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்தேந்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா வயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் மாதி யென்றும் ஆரூரா வென்றென்றே யலறாநில்லே" என்பது சரியை யினையும், " தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சாத்தி ஆனிடை யஞ்சுங் கொண்டு அன்பினாலமர வாட்டி வானிடை மதியஞ் சூடும் வலம்பரத் தடிகள் தம்மை நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற்றேனே" என்பது கிரிசை யினையும் தெரிவிக்கின்றன. " உயிராவன மிருந்துற்று நோக்கியுள்ளக் கிழியினுரு வெழுதி உயிராவணஞ் செய்திட் டுனகைத் தந்தாலுனப் படுவாரோ டொட்டி வாழ்தி" " உடம்பெறு மனையகத்துள் உள்ளமே கதளியா மடம்படு முணர்நெய் யட்டி உயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத் தீ யா லெரிகொள விருந்து நோக்கிற் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே" " விறகிற் றீயினன் பாலிற்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமலைச் சோதியான் உறவு கோல் நட் டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே" என்பன யோக ஞானங்களை உணர்த்துவன. " நானெனிற் றானே யென்னும் ஞானத்தார் பந்தர் நெஞ்சுள் தேனுமின் னமுது மானார் திருச்செம்பொன் பள்ளியாரே" என்பது, சிவஞானபோதம், பத்தாஞ் சூத்திரத்தில், உயிர்தானென வேறு காணப்படாது முதல்வனே யாம்படி ஒற்றுமைப்பட்டு அவ்விறை பணியில் வழுவாது நிற்றல் வேண்டுமெனக் கூறிய ஞானநிலையினை உணர்த்துதல் காண்க. “ முன்ன மவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவனுடைய வாரூர் கேட்டாள் பெயர்த்து மவனுக்கே பிச்சியனோள் அன்னையையு மத்தனையு மன்றே நீத்தாள் அகன்றாளக லிடத்தா ராசாரத்தைத் தன்னை மறந்தாள்தன் னாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் றாளே" உயிர் இறைவனோடு இரண்டறக் கூடுதலாகிய அத்துவித முத்தியைப் பெறுமாறு படி முறையாக உருவக வாய்பாட்டால் இதில் அருளிச் செய்துள்ளார் ஞானத் தவமுனிவராகிய நம் நாவேந்தர். இனி, உள்ளம் தூய்மையுற்று மெய்யுணர்வு பெறுதற் கேதுவாகிய நன்னெறிகள் பலப்பல நாவரசர் பாடல்களில் ஆண்டாண்டுக் காணப்படுகின்றன. " விரதமெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்" " பொய்யனைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்யனை" சுரும்பமருங் குழன் மடவார் கடைக்கண் ணோக்கில் "துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப் பெரும் பயனை" "துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னை" என்பன காண்க. ஆயின் இறைவன்பால் உண்மையன்பின்றி எத்துணை நோன்புகளை மேற்கொள்ளினும் எவ்வெவற்றைச் செய்யினும் அவற்றானெல்லாம் பயனின்றென்பது அவர் கருத்தாதலை, " கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்குதண் குமரித்துறை யாடி லென் ஓங்கு மாகட லோதநீ ராடி லென் எங்குமீச னெனாதவர்க் கல்லையே" " வேத மோதிலென் வேள்விகள் செய்யிலென் நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென் ஓதியங்கமோ ராறு முணரிலென் ஈசனை யுற்குவார்க்கன்றி யில்லையே" என்றற் றொடக்கத்தனவாகிய கழற்றுரையால் அறியலாகும். ‘அம்பலக் கூத்தனைத், தினைத்தனைப் பொழுதும் மறந் துய்வனோ' 'நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்' என்பன இறைவனை இடையறாது நினைந்து அன்பினால் உருகுதலே அவனை யடைதற்கு நெறியாமென்பது அவரது உள்ளக்கிடையாதலைப் புலப்படுத்தும். மக்களெல்லோரும் இறைவன்பால் அன்பு செய்து உய்திகூட வேண்டுமென்னும் பேரிரக்கத்துடன் அவர்களை ஆற்றுப்படுத்துவனவும், அன்பு நெறியிற்றலைப்படாதாரை நோக்கி இரங்கிக் கூறுவனவும் ஆகிய பாடல்களும், பரந்த உலகியலறிவையும் புலமைத் திறத்தையும் வெளிப்படத் துவனவாகிய உவமைகளும் பழமொழிகளும் கற்பனைகளும் அமைந்த பாடல்களும் பலப்பல உள்ளன. " முன்னக நோவக் கடைந்தவர் நிற்கவே சங்கியாது சமுத்திர நஞ்சுண்டான்" என்றாற் போல நகைச்சுவை யமைந்தனவுமுள. அவைகள் விரிவஞ்சி விடப்பெற்றன. இறுதியாகக் கூறற்பாலது திருவைந்தெழுத்தின்பால் நாவுக் கரசர்க்குள்ள உறுதியான பற்றாகும். பாவத்தை யறுப்பதும் நடுக்கத்தைக் கெடுப்பதும், நலமிகக் கொடுப்பதும், ஞான மாவதும், கல்வியாவதும், நன்னெறியாவதும் எல்லாம் அத்திருமறையே என்கின்றார் அவர். "படைக்கல மாகவுன்னாமத் தெழுத்தஞ் சென் நாவிற் கொண்டேன்", 'திருவாய் பொலியச் சிவாய ரமவென்று நிறணிந்தேன்' என அன்பு ததும்பக் கூறுகின்றார்; பின்வருவதும் காண்மின் " நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் நமச்சிவாயவே நானறி விச்சையும் நமச்சிவாயவே நாநவின் றேத்துமே நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே" 7. சம்பந்தரும் தமிழிசையும் உலகிலுள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்ந்வாரு பெயருண்டு. மொழியின் பெயரைக் குறிப்பதிலேயே தமிழுக்கு மாத்திரம் உரிய சில சிறப்பியல்புகள் உள்ளன. செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், தண்டமிழ், ஒண்டமிழ், இன்றமிழ், மென்றமிழ், நற்றமிழ், சொற்றமிழ் என்றிவ்வாறு தமிழின் உயர் பண்பினைக் குறிக்கும் யாதாவதொரு அடைமொழியுடன் வழங்குவதொன்று; சங்கத்தமிழ் எனக் குறிப்பதொன்று; முத்தமிழ் என்பதொன்று; "துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா" எனப் பின்னிரண்டனையும் ஒருங்கு சுட்டியுள்ளார். ஒளவையார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், கம்பர் முதலிய பெருமக்களும், பழைய உரையாசிரியர்களும் முத்தமிழ் என வழங்கியுள்ளார்கள். "முத்தமிழ்த் துறையின் முறை போகிய, உத்தமக் கவிகட்கு" என்பது கம்பர் அவையடக்கில் வந்துள்ளமை காண்க. முத்தமிழாவன இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்பன. சிலப்பதிகாரத்தை இயலிசை நாடகப் பொருட் டொடர்நிலைச் செய்யுள் என்றார் அடியார்க்கு நல்லார். பொருளுணர்ச்சிக்குக் கருவியாய் வழங்கும் செய்யுளுமாகிய இலக்கியமும் அதன் இலக்கணமும் இயற்றமிழ் எனப்படும். பொருளையுணர்த்தும் உரைநடையோ செய்யுளோ இன்றி, இசை நாடகம் நடைபெறுதல் கூடாமையின் இயற்றமிழ் அவ்விரண்டற்கும் அடிப்படையாகும். பண்ணோடும் தாளத் தோடும் கூடிய பாட்டுக்கள் இசைத் தமிழாகும். ஆடல், பாடல், அழகு என்ற மூன்றுங்கூடியது நாடகத் தமிழ். ஆடல் என்பதில் நிலை, உடற்றொழில், ஒற்றைக் கை இரட்டைக்கைத் தொழில்கள் பாவகம் முதலிய பலவும் அடங்கும். நாடகத்தை அறிந்து இன்புறுதற்குக் கண்ணும் செவியும் வாயில்களாகும். இப்பொழுது இசைத் தமிழையும் நாடகத் தமிழையும் இயற்றமிழ் பற்றுக் கோடாகவுள்ள இருவேறு கலைகள் என்னலாம். உலகில் வேறு எம்மொழியாளரும் இசையையும் நாடகத்தையும் கலைவகையிற் சேர்த்து எண்ணினரன்றித் தம் மொழியின் கூறாக அவற்றைக் கொண்டிலர். தமிழர் மட்டுமே இசைத்தமிழ் என்றும் நாடகத் தமிழ் என்றும் அவற்றைத் தமது மொழியுடன் ஒன்று படுத்தியுள்ளனர். அதற்குரிய காரணம் ஆராய்தற்பாலது. பண்டைக் காலத்திலே தமிழ் நாட்டில் இயற்றமிழின் இலக்கிய இலக்கணங்கள் பல்கியிருந்தமை போலவே இசை நாடகங்களின் இலக்கிய இலக்கணங்கள் பல்கி யிருந்தமை ஒரு காரணமாதல் வேண்டும். சிலப்பதிகாரவுரையில் "இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும், பிறவும், தேவவிருடிநாரதன் செய்த பஞ்சபாரதீய முதலாவுள்ள தொன்னூல்களும் இறந்தன; பின்னும் முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் என்பவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்" என அடியார்க்குநல்லார் எழுதி யிருப்பதும், மற்றும் சிலப்பதிகார மூலத்தாலும் உரைகளாலும் அறியப்படும் செய்திகளும் பழைய நாளிலே இசை நாடகங்கள் தமிழில் எவ்வளவு பெருக்கமுற்றிருந்தன என்பதைப் புலப்படுத்தா நிற்கும். இனி, சிவஞான முனிவர், தொல்காப்பியப் பாயிர விருத்தியில் கூறும் காரணம் மற்றொன்று; அவர் கூறுவதாவது, "எண்ணென்ப வேனை யெழுத் தென்ப" எனவும், 'சத்தமும் சோதிடமும்' எனவும் இயற்றமிழோடு சிறந்தெடுத் தெண்ணப் படும் சோதிட முதலிய பிற கலைகளும் உளவாக முத்தமிழெனத் தமிழாசிரியரெல்லாம் இவற்றையே விதந்து கொண்ட தென்னையோ வெனின், - அஃதொக்கும்; சோதிட முதலிய பிற கலைகளெல்லாம் ஆரியத்திலும் தமிழினும் ஏனைமொழி களிலும் வேறுபாடின்றி யொப்ப நிகழ்தலின் அவற்றை வேறு விதிக்க வேண்டாமையானும், இயலிசை நாடகமென்னும் மூன்றும் தமிழ் நிலத்துச் சில வேறுபாடுடைமையின் அவற்றை வேறு விதிக்க வேண்டுதலானும், அதுபற்றி அகத்தியத்துள் இம்மூன்றுமே எடுத்தோதினாராகலின், முத்தமிழ் என வழங்கப்பட்டனவென அறிக" என்பது. எனவே, இயற்றமிழிற் போலவே இசை நாடகங் களிலும் தமிழுக்கேயுரிய பல சிறப்பியல்புகள் உள்ளனவென்பது பெறப்படுதல் காண்க. தமிழிசையின் சிறப்பியல்புகளை உயர்திரு விபுலானந்தவடிகள் விரிவாக ஆராய்ந்து 'தமிழ்ப் பொழி'லில் வெளியிட்டுவரும் கட்டுரைகளால் நன்கு அறியலாகுமாதலின் ஈண்டுச் சில குறிப்புக்கள் மட்டுமே தரப்படும். பல்லாயிரம் ஆண்டுகளின் முன்பு தொட்டே தமிழில் இசைக்கலை சிறந்திருந்ததென்பது தொல்காப்பியத்திலே "இசையொடு சிவணிய நரம்பின் மறை" என இசை நூல் குறிக்கப்பட்டிருத்தலானும், ஐந்திணைக்குமுரியவாகப் பண்கள் கூறப்படுதலானும், இசைபாடும் பாணர் முதலாயினாரைப் பற்றிக் கூறியிருக்குஞ் செய்திகளானும் அறியப்படும். ஒப்பற்ற இசைக் கருவிகளாகிய, பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என்னும் நால்வகை யாழும் தமிழுக்கே உரியனவாகும். வடமொழியில் ஸ்வரம் எனப்படுவது தமிழில் நரம்பு எனவும் இசை யெனவும் வழங்கும். சுருதி என்பது அலகு அல்லது மாத்திரையென வழங்கப்பெறும். இராகம் என்பதற்குப் பண் என்பதும் இசையென்பதும் பெயர்களாம். தமிழில் ஏழிசை அல்லது ஏழ் நரம்புகட்குரிய பெயர்கள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன; வடமொழியில் எழு சுரங்கட்கரிய பெயர்கள் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பன. நரம்புகள் தமிழில் குரல் முதலாகவும், வடமொழியில் ஷட்ஜம் முதலாகவும் எண்ணப்படுதலின் குரலும் ஷட்ஜமும் ஒன்றென்றும், இவ்வாறே துத்தம் முதலாயினவும் ரிஷபம் முதலாயினவும் ஆமென்றும் எண்ணுதல் இயல்பு; ஆனால் இது பிழை யென்பது அவற்றின் அலகு, ஓசை முதலியவற்றால் இப்பொழுது அறியப்பட்டுள்ளது. வடமொழியில் ஷட்ஜம் என்பதற்குச் சரியானது தமிழ் உழையாகும். தமிழில் குரல் என்பதற்குச் சரியானது வடமொழிப் பஞ்சமமாகும். குரல் முதலாக எண்ணப் பெற்ற காலத்தில் குரற்கிரமமாகிய பஞ்சமக் கிராமமும், உழை முதலாக எண்ணப் பெற்ற காலத்தில உழைக் கிரமமாகிய ஷட்ஜக் கிராமமும் வழக்கில் இருந்தனவாகும். தமிழில் இயல்பான நரம்பு தாரம் என்றும், அதினின்று உழையும், அவ்வாறே பிற ஐந்து நரம்புகளும் தோன்றினவென்றும் கூறப்படுதலானும், "தாரபாகமும் குரலின் பாகமும், நேர்நடு வண்கிளை கொள்ள நிற்ப" என்னுஞ் சூத்திர விதியால் தாரம் கைக்கிளையாகும். ஆதலானும் அத்தாரம் குரலாய தாரக்கிரமம் என்னும் காந்தாரக் கிரமமும் வழக்கில் இருந்ததாகும். வடமொழியிற் பரதர் நூல் இயற்றுதற்கு முன்னர்த் தோன்றியதாகிய சிலப்பதிகாரத்தில் இது காணப்படுதலின் இம்முறை தமிழுக்கே யுரியதென்பது பெறப்படும். மற்றும் செம்பாலை, படுமலைப் பாலை, செவ்வழிப் பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப் பாலை, மேற்செம்பாலை என்னும் ஏழ்பெரும் பாலைப் பண்களும், பாலையாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், செவ்வழி யாழென்னும் நான்கு திணைப்பெரும் பண்களும், அவற்றின் திறங்களும் முதலாயினவெல்லாம் தமிழுக்கே உரியனவாகும். தமிழிசை பற்றிய பொதுவான குறிப்புக்களை ஈண்டு இவ்வளவில் நிறுத்திச் சம்பந்தர்க்கும் தமிழிசைக்குமுள்ள தொடர்பினை இனி ஆராய்தும். சம்பந்தர் சைவ சமய குரவர் நால்வருள் ஒருவர்; சீகாழிப்பதியிலே சிவபாதவிருதயர் என்னும் மறையவர்க்கும் அவர் பத்தினியார் பகவதியார்க்கும் அவர்கள் ஆற்றிய தவத்தின் பயனாகத் தோன்றி, மூன்றாம் ஆண்டிலே உலகமீன்ற அன்னையாகிய உமைப் பிராட்டி அளித்த ஞானப்பாலையுண்டு சிவஞான சம்பந்தராகி, இறைவனை நேரிற்கண்டு பதிகம் பாடிப்பரவி அன்று முதற் சிவபிரான் கோயில் கொண்டுள்ள திருப்பதிகள் தோறும் சென்று தமிழிசைத் திருப்பதிகங்கள் பாடியும், பற்பல அற்புதங்கள் நிகழ்த்தியும் சைவ சமயத்தை நிலைநாட்டிய பெரியார். இவரது வரலாறு பெரிய புராணத்தில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளது. இவரும் சமய குரவருள் இவர் காலத்திருந்த திருநாவுக்கரசரும், சிறிது பிற்காலத்திருந்த சுந்தர மூர்த்திகளும் பாடிய தமிழ்ப் பதிகங்கள் தேவாரம் என்னும் பெயருடன் திகழ்கின்றன. தேவாரம் முழுதும் இசைப்பாட்டாகு மென்பது அவற்றிற்குப் பண் வகுக்கப்பெற்று அம்முறையே தொன்று தொட்டுப் பாடப்பெற்று வருதலின் அறியலாகும். தேவாரம் என்ற பெயர் தானும் கடவுளைப் பற்றிய இசைப்பாட்டு என்னும் பொருளதே. தே- தெய்வம்; வாரம் என்பது தெய்வப்பாடல், இசைப்பாட்டு, சொல்லொழுக்கமும் இசை யொழுக்கமு முடைய பாடல் என்னும் பொருளதாகும். இனி, இசைக்குத் தாளம் இன்றியமையாததென முன்னர்க் கூறினோம். ஞானசம்பந்தர் தமக்குச் சிவபிரானளித்த பொற்றாளத்தைக் கையிற் கொண்டு பாடிவந்தவர்; வன்றொண்டப் பெருமானும் "நாளு மின்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக் குலகவர் முன், தாளமீந்தவன் பாடலுக்கிரங்குந் தன்மையாளனை" என இறைவன் அவருக்குத் தாளம் ஈந்ததனைக் குறிப்பிட்டிருத் தலோடு, சம்பந்தரை நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புபவர் என்றும் கூறியிருப்பது அறியற்பாலது. அவர் பிறிதோரிடத்தும் "நல்லிசை ஞானசம்பந்தன்" என்றார். காழிவரும் பெருந்தகையார் கையில்வருந் திருத்தாளக் கருவிகண்டு வாழிதந் திருமுடிமேற் கொண்டருளி மனங்களிப்ப மதுரவாயில் ஏழிசையுந் தழைத்தோங்க இன்னிசைவண் டமிழ்ப்பதிகம் எய்தப்பாடித் தரழுமணிக் குழையார்முன் தக்கதிருக் கடைக்காப்புச் சாத்திநின்றார். என்றார் அருண்மொழித் தேவரும் மற்றும் பாணர்குலத் தோன்றல ராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் சம்பந்தர் பதிகங்களை யாழிலிட்டு வாசித்து வந்ததும், அவரது வேண்டுகோளின்படி பதிகவிசை யாழில் அடங்காமை காட்டுதற்காக, "மாதர் மடப்பிடி" என்னும் பதிகம் சம்பந்தரால் பாடப் பெற்றதுமாகிய வரலாறுகளும் தேவாரப் பதிகங்கள் இசைப்பாட்டுக்களாதலை வலியுறுத்தும். பாலறாவாயரின் பதிகத்தினை யாழ்ப்பாணரும் அவரது பத்தினியாரும் யாழிசையும் மிடற்றிசையும் ஒன்றப்பாடிய மாண்பினை, ‘ யாழிலெழும் ஓசையுடன் இருவர்மிடற் றிசையொன்றி வாழிதிருத் தோணியுளார் மருங்கணையு மாட்சியினைத் தாழுமிரு சிறைப்பறவை படிந்ததனி விசும்பிடை நின்று ஏழிசைநூற் கந்தருவர் விஞ்சையரும் எடுத்திசைத்தார்" எனச் சேக்கிழார் கூறிய அழகு நோக்கி இன்புறற் பாலது. இனி ஆளுடைய பிள்ளையாரின் திருவாயினின்றும் போந்த அகச் சான்றுகளை நோக்குவோம். பிள்ளையார் பதிகத்தின் பயன் கூறும் திருக்கடைக் காப்பில் எத்தனையோ பல இடங்களில் தம்முடைய பதிகங்கள் இசைப்பாட்டுக்களாமென்றும், இசைகற்றும், இசை அமைத்தும் அவற்றைப் பாட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். விரிவஞ்சி அவற்றுள் ஒரு சிலவற்றை ஈண்டுத் தருகின்றாம்: 1. "காழிந்நகர்க் கலைஞான சம்பந்தன் தமிழ்பத்தும், யாழின்னிசை வல்லார் சொலக் கேட்டாரவரெல்லாம்.......... உயர்வானடைவாரே" 2. "நலமிகு பத்தும் பண்ணியல்பாகப் பாடியு மாடியும் பயில வல்லார்கள்" 3. "தமிழ்ஞான சம்பந்தன் சமைத்த பாடல், வழங்கு மிசை கூடும் வகை பாடுமவர் நீடுலக மாள்வர் தாமே" 4. "சந்தநிரை தண்டமிழ்தெ ரிந்துணரு ஞானசம்பந்தனது சொல் முந்தியிசை செய்து மொழிவார்களுடையார்கள் நெடுவான்நிலனே" 5. "மாதொர் கூறனை வலஞ்சழி மருவிய மருந்தினை வயற்காழி நாதன் வேதியன் ஞானசம்பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் கேட்டுகந் தவர் தம்மை வாதியா வினை மறுமைக்கு மிம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே" இங்ஙனம் மும்மையும் பயக்கவல்ல செம்மை சான்ற தேவாரம் திருவாய்மொழி முதலிய இசைப் பெருஞ் செல்வங்கள் வறியாரனைவர்க்கும் வாரி வழங்குமாறு மல்கிக் கிடக்கவும் தமிழிலே இசையில்லை என்பது எத்துணை ஏழ்மைப்பாலதாகும்! இனி, திருமுறை கண்ட முதலாம் இராசராச சோழ மன்னரும் நம்பியாண்டார் நம்பிகளும் திருவெருக்கத் தம்புலியூரில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த மடந்தையொருத்தி இசையில் வல்லளென்பதைத் திருவருளாலறிந்து அம்மாதினால் தேவாரத்திற்குப் பண்ணடைவு செய்வித்தனரென்பது வரலாறு. இதனை அறிவிக்கும் திருமுறைகண்ட புராணம் என்னும் நூல் பண்களின் பெயரும் அவை ஒவ்வொன்றும் இத்தனையித்தனை கட்டளையாக அமைக்கப் பெற்றன என்பதும் கூறுகின்றது. கட்டனையென்பது யாப்பு வேறுபாடும் தாள வேறுபாடும் கருதியதாகலாம். சம்பந்தர் தேவாரத்தின் பண், கட்டளை, பதிக தொகை என்பவற்றைப் பின்வரும் அட்டவணையிற் காணலாம். பண் கட்டளை பதிகத்தொகை 1 நட்டபாடை 8 22 2 தக்கராகம் 7 24 3 பழந்தக்கராகம் 3 16 4 தக்கேசி 2 12 5 குறிஞ்சி 5 29 6 வியாழக்குறிஞ்சி 6 25 7 மேகராகக்குறிஞ்சி 2 8 8 இந்தளம் 4 39 9 சீகாமரம் 2 14 10 காந்தாரம் 3 29 11 பியந்தைக் காந்தாரம் 3 14 12 நட்டராகம் 2 16 13 செவ்வழி 1 10 14 காந்தார பஞ்சமம் 3 23 15 கொல்லி 4 18 16 கொல்லிக் கௌவாணம் 4 1 17 கௌசிகம் 2 14 18 பஞ்சமம் 1 11 19 சாதாரி 9 33 20 பழம்பஞ் சுரம் -- 17 21 புறநீர்மை 1 6 22 அந்தாளிக் குறிஞ்சி 1 2 ----- 383 ----- மேற்குறித்தவைகளில் பழம்பஞ்சுரம் என்ற பெயர் திருமுறைகண்ட புராணத்தில் காணப்படவில்லை. தமிழிலே திணை பற்றி வகுக்கப்பெற்ற பெரும்பண்கள் பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், செவ்வழியாழ் என நான்காகும். இவை ஒவ்வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என நந்நான்கு இனமாகும். இனி பாலையாழுக்குத் திறம் ஐந்தும் குறிஞ்சியாழுக்குத் திறம் எட்டும் மருதயாழுக்குத் திறம் நான்கும், செவ்வழியாழுக்குத் திறம் நான்கும் ஆக இருபத்தொரு திறப் பண்கள் உள்ளன. இவையும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் வேறுபாட்டால் நந்நான்கு ஆகும். மேலே குறித்த சம்பந்தர் பண்களில் எவ்வெவை எவ்வெவற்றைச் சாரும் என்பதனை நோக்குதும். 1) பாலையாழ்:- தக்கராகம்-அராகம் என்னுந் திறத்தின் அகநிலை. புறநீர்மை=நேர்திறம்-நேர்திறம் என்பதன் அகநிலை. பஞ்சமாம்-உறுப்பு என்பதன் அகநிலை. காந்தாரம்-ஆசான் என்பதன் அகநிலை. (இது குறிஞ்சிப் பண்ணின் திறத்துள் ஒன்றாகவும் காணப்படுகின்றது.) 2) குறிஞ்சியாழ்:- நட்டபாடை-நைவளம் என்பதன் அகநிலை; அந்தாளிக் குறிஞ்சி-புறநிலை; பழம்பஞ்சுரம்-பஞ்சுரம் என்பதன் புறநிலை; மேகராகக்குறிஞ்சி-அருகியல். கொல்லிக்கௌவாணம்-படுமலை என்பதன் அகநிலை, பழந்தக்கராகம்-மருள் என்பதன் புறநிலை, குறிஞ்சி-அரற்று என்பதின் அகநிலை; நட்டராகம்-புறநிலை; வியாழக்குறிஞ்சி-பெருகியல். 3) மருதயாழ்:- தக்கேசி-வவிர் என்பதன் அகநிலை, கொல்லி-புறநிலை; இந்தளம்-வடுகு என்பதன் அகநிலை; காந்தார பஞ்சமம்-பெருகியல். கௌசிகம்-வஞ்சி என்பதன் பெருகியல். பியந்தைக் காந்தாரம்-செய்திறம் என்பதன் அகநிலை- சீகாமரம்-புறநிலை. 4) செவ்வழியாழ்:- சாதாரி-முல்லை என்பதன் புறநிலை. (செவ்வழி என்பது பெரும் பண்ணின் பெயராகவே உள்ளது.) இனி இக்காலத்து வழங்கும் இராகப் பெயர்களில் இப்பண்களுக்கு உரிய இராகங்கள் இன்னின்ன வென்பதைக் கண்டுபிடிப்பது இயற்புலவரும், இசைப் புலவரும் சேர்ந்து செய்யத்தக்க வேலையாகும். இராகங்களுக்குள்ள சுரங்களின் கணக்கு முதலியவற்றால் இதற்கு இது ஒத்தது என்று காண்டல் கூடும். சில நாட்கள் இன்ன பண்ணுக்கு இன்ன ராகமென்று பழகிவிட்டால் பிறகு பண்ணின் பெயரே வழக்கத்துக்கு வந்துவிடும். தமிழிசையின் எழுச்சிக்கு இஃது இன்றியமையாது செய்யத்தக்க பணியாகும். இப்பொழுது இன்ன பண்ணினை இன்ன இராகத்தில் பாடவேண்டுமென்று சிலர் பரம்பரையிற் பாடி வருகின்றனர். அதனையும் ஆராய்ந்து செம்மை செய்தல் வேண்டும். திருவாவடுதுறை ஆதீனம் ஏட்டுப் பிரதியில் காணப்பட்டதாக தமிழ்ப்பொழில் துணர் 16 பக்கம் 446-447-ல் வெளிவந்திருப்பதனை எடுத்துக் காட்டி இதனை முடிப்பாம். பகற் பண் பண் இராகம் புறநீர்மை ஸ்ரீகண்டி காந்தாரம் (பியந்தை) இச்சிச்சி கௌசிகம் பயிரவி இந்தளம், திருக்குறுந்தொகை நௌத்த பஞ்சமி தக்கேசி காம்போதி நட்டராகம், சாதாரி பந்துவராளி நட்டபாடை நாட்டைக்குறிஞ்சி பழஞ்பஞ்சரம் சங்கராபரணம் காந்தார பஞ்சமம் கேதாரகௌளை பஞ்சமம் ஆகிரி இராப் பண் பண் இராகம் தக்கராகம் கன்னடகாம்போதி பழந்தக்கராகம் சுத்த சாவேரி சீகாமரம் நாதநாமக்கிரியை கொல்லி, கொல்லிக் கௌவாணம், திருநேரிசை, சிந்து கன்னடா திருவிருத்தம் வியாழக்குறிஞ்சி சௌராஷ்டிரம் மேகராகக் குறிஞ்சி நீலாம்பரி குறிஞ்சி மலகரி அந்தாளிக் குறிஞ்சி ஸைலதேசாட்சி (குறிப்பு : மணிமலர் 1941 - பண்டிதமணி, முதுபெரும் புலவர் திருவாளர் மு.கதிரேசச் செட்டியார் அவர்களுடைய அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவில் செட்டிநாட்டரசர், திருமிகு ராஜா, சர்.மு.அண்ணாமலைச் செட்டியார் அவர் தலைமையில் அளித்த கட்டுரைத் தொகுதி) 8. கோச்செங்கட் சோழர் உலகம் தோன்றிய நாள் தொடங்கி மேன்மையுற்றுவந்த தொல் குடியினர் சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடைத் தமிழ்வேந்தரென்பது மூதறிஞர் துணிபு. அவருள்ளே சோழர் குலமென்னும் பாலாழியிற் றோன்றி அறனும் மறனும் ஆற்றலுங் குன்றாது தனிச்செங்கோல் நடாத்தித் தம் புகழ் நிறுவிய மன்னர் அளப்பிலராவர். அம்மன்னர்களில், சைவ நன்மக்களது உள்ளத்தை முழு மணிப் பீடமாகக் கொண்டு வீற்றிருத்தற் குரியோருள் முதன்மையுற்றிருப்போர் கோச் செங்கட் சோழர் என்பார். இப்பெரியாரது சரிதம் எம்மனோரெல்லாம் கடைத்தேறுதற்கு எய்ப்பினில் வைப்பாகக் கிடைத்திருக்கும் ஞான பண்டாரமாகிய பெரியபுராணமென்னும் திருத்தொண்டர் புராணத் திருமுறையகத்தே மிளிர்கின்றது. அதன் சுருக்கம் பின்வருமாறு: புற வொன்றின் பொருட்டாகத் துலையேறியும் முறை புரிந்த சோழ மன்னர்க்குத் தொன்றுதொட்டு உரிமைவாய்ந்ததாகிய சோணாட்டின் கண்ணே அலையால் மணி கொழிக்கும் அழகிய காவிரியாற்றின் கரையில் சந்திர தீர்த்தத்தின் பக்கத்தே பலதருக்களும் நிறைந்த குளிர் பூஞ்சோலைஒன்றுளது. அப்பூங்காவின்கண் வெண்ணாவல் மரத்தின் கீழே தேவ தேவராகிய சிவபெருமான் சிவலிங்க மென்னும் திரு அருளுருத் தாங்கி எழுந்தருளி யிருந்தனர். பழம் பிறப்பில் மேலாய தவத்தினைச் செய்ததொரு வெள்ளானை அவ் வருளுருவைக்கண்டு, அன்பு மேலிட்டுக் கையால் நீரினை முகந்து வந்து ஆட்டியும், பூங்கொத்துக்களைப் பறித்துச் சாத்தியும் நீலகண்டராகிய பெருமானை நித்தலும் வழிபாடு செய்தொழுகா நின்றது. அதனால் திரு ஆனைக்கா என்னும் பெயரும் அத்தலத்திற்கு உளதாகி நிலவுகின்றது, இஃதிவ்வாறாக? ஞான முடையதொரு சிலந்தியானது நம்பரது செம்பொற்றிருமுடிமேல் சருகு முதலியன உதிராவண்ணம் மேல் விதானம் என்னுமாறு வாய் நூலால் வலையொன்று செறியப் புரிந்தது, அருமையாக இழைத்த அச்சிலம்பிவலையினைக் கண்டது ஆண்டவரை வழிபடச் சென்ற அவ்வானை. கண்டதும் ஈதிங்கிருப்பது அநுசிதமாமென்று அதனைச் சிதைத்தது. சிலந்தியோ முன்போல் மீண்டும் பந்தர் இழைத்தது. பிற்றைநாள் அதனையும் ஆனையழித்தது. பார்த்தது சிலந்தி. சினம் மூண்டது. ‘எம்பெருமான் திருமேனியிற் சருகு விழாமல் யான் வருந்தி யிழைத்த நூலின் பந்தரை இவ்வானை அழிப்பதோ!' என வெம்பிக் கொதித்தெழுந்து யானையின் துதிக்கையுட் புகுந்து கடித்தது. கடிக்கவே யானையானது அதனைப் பொறுக் கலாற்றாது நிலத்திலே கையை மோதி குலைந்து வீழ்ந்தது. கையிற் புகுந்த சிலந்தியும் உயிர் துறந்தது. இருமறைப் பொருளாகும் ஐயனும் அம் மதயானைக்கும் தகுமாறு வரமளித்துச், சிலந்தியானது சோழர் குலத்துதித்து உலகுபுரந்தளிக்க அருள் புரிந்தனர். அக்காலத்தே சோழ குலத்தரசனாம் சுபதேவன் என்பவன் தன்பெருந்தேவியாகிய கமலவதியுடன் தில்லைத் திருப்பதியை அடைந்து திருச்சிற்றம்பலத்தே திரு நிருத்தம் புரியும் சேவடியை வணங்கித் திருப்படியின் கீழ் வழிபாடு செய்து வந்தனன். தேவி கமலவதியும் இறைவரை வழிபட்டு மகப்பேறு கருதி வரம் வேண்டினள். பெருமானும் திருவுள்ளஞ் செய்தனர். முன் திருப்பணி புரிந்த சிலந்தி அரசு மகிழக் கமலவதி திருவயிற்றில் அழகிய .. வாய் வந்தெய்தியது. கமலவதி கருவுற்றுப் பத்துத் திங்களும் நிரம்பி மகப் பெறும்பொழுது அடுத்த காலையில் காலத்தின் இயல்பை அறியும் முதியா ரொருவர் ‘இன்னும் ஒரு நாழிகை கழித்து பிறக்குமேல் இக்குழந்தை மூன்றுலகமும் புரக்க வல்லதாகும்' என்று இயம்பினர். அதனைக் கேட்டவளவில் அன்னை கமலவதியும் ‘ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும்படி என் கால்களை மேலே தூக்கிக் கட்டுங்கள்' என்று சொல்லி, அங்ஙனமே அறிஞருரைத்து நற்பொழுது வந்துற்றவளவில் காற் பிணிப்பு விடப்பெற்று, அம்மணிபோலும் புதல்வனைப்பெற்றெடுத்து 'என் கோச் செங்கண்ணனோ என்றான்.' தேவி புதல்வனைப் பெற்று உயிர் துறக்கவே? செங்கோல் மன்னனாகிய சுபதேவன் ஆவியனைய அரும் புதல்வனை வளர்த்து முடி சூட்டுவித்துத் தானும் தவநெறி சார்ந்து சிலலோகமெய்தினன். கோச் செங்கட் சோழரும் சிவபெருமானது திருவருளால் பிறப்பினை யுணர்ந்து அரசாண்டு வருகின்றார் ஆகலின் சிவனார் மகிழ்ந்துறையும் திருக்கோயில் பல சமைத்தலாகிய திருத்தொண்டினைக் கடன்மையாக மேற்கொண்டனர். ஆனைக்காவிலே தாம் முன்பு அருள் பெற்றதனை அறிந்து ஞானச்சார்வாகும் வெண்ணாவல் மரத்தினுடன்கூட நலஞ் சிறந்து விளங்கும்படி பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயில் சமைத்தனர். மற்றும், அமைச்சர்களை யேவிச் சோணாட்டின் பற்பல பகுதிகளிலும் அம்மையப்பர் எழுந்தருளும் செம்மையாய் திருக்கோயில்கள் பலசமைத்து அக்கோயில் தோறும் அமுதுபடி முதலானவற்றுக்கு அளவில்லாத செல்வங்களை ஏற்படுத்தினர். தில்லைத்திருப்பதியைஅடைந்து பொன்னம்பலத்தே திருநிருத்தம் புரியும் பெருமானைப் பேரன்புடன் அடிவணங்கி உருகி உளங் களித்து உறையும் நாளில் வாய்மை குன்றாதத் தில்லைவாழ் மறையவர்க்குத் திருமாளிகை பல சமைத்தனர். இவ்வாறாகப் பூவுலகைப் பொதுவறப் புரந்தருளிய கோச்செங்கட் சோழர் சிவபெருமானுக்குரிய திருத்தொண்டுகள் பலபுரிந்து, தேவர் களும் போற்றத் தில்லையம்பலவாணரின் திருவடி நீழலை யெய்தினர். இனி, இவ்வேந்தர் பெருமானைப் பற்றிய சில ஆராய்ச்சிக் குறிப்புக்கள் இங்கே எழுதுதற்குரியன:- இவர், சேரமான்கணைக்கால் இரும்பொறை என்னும் சேரமன்னனுடன் போர்புரிந்து வாகைசூடி, அவனது கழுமலம் என்னும் ஊரைக் கைப்பற்றியதுடன், சேரமானையும் பிடித்துச் சிறைப்படுத்தினர். அப்பொழுது கணைக்காலிரும்பொறைக்கு உயிர்த்தோழனாயிருந்த பொய்கையார் என்னும் புலவர் செங்கட் சோழரது வெற்றித்திறத்தைச் சிறப்பித்துப் பதினெண் கீழ்க்கணக் கினுள் ஒன்றாகிய களவழி நாற்பது என்னும் நூலினை இயற்றிச் சேரமானைச் சிறை மீட்டனர். சில பிரபந்தங்களிலே இவ் வரலாறு கொண்டு கோச்செங்கட் சோழர் சுட்டப்படுகின்றார். " களவழிக் கவிதை பொய்கை யுரைசெய்ய வுதியன் கால்வழித் தளையை வெட்டியாசிட்ட வவனும்" என்று கலிங்கத்துப் பரணியும், " மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப் பாதத்தளை விட்ட பார்த்திவனும்" என்று விக்கிரம சோழனுலாவும், " அணங்கு, படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன்" என்று குலோத்துங்க சோழனுலாவும், இங்ஙனமே இராஜ ராஜ சோழனுலா முதலியனவும் கூறுகின்றன. புறநானூற்றிலுள்ள ‘குழவியிறப்பினும்' என்னும் பாட்டின் கீழ்க் குறிப்பு "சேரமான் கணைக்கா லிரும்பாறை சோழன் செங்கணானோடு போர்ப் புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சியபாட்டு" என்றுளது. தமிழ் நாவலர் சரிதையில் இப்பாட்டின் கீழ்க்குறிப்பு "சேரன் கணைக்காலிரும்பொறை செங்கணானாற் குணவாயிற் கோட்டத்துத் தளைப்பட்டபோது பொய்கையாருக் கெழுதி விடுத்த பாட்டு" என்றிருக்கிறது. இவை ஒன்றினொன்று சிறிது முரண்படினும், சேரமான் கணைக் காலிரும்பொறை கோச் செங்கண்ணராற் சிறைப்பட்ட செய்தி எல்லாவற்றினும் கூறப்பெற்றுளது. இனி, திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி, திருநறையூர்ப் பதிகத்தில் " கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்ற கழன் மன்னர் மணிமுடிமேற் காக மேறத் தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடஞ் சேர்மின் களே", என்றும், " பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற படைமன்னருடல் துணியப் பரிமாவுய்த்த தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடஞ் சேர்மின் களே", என்றும் இவ்வரசரைக் குறிப்பிட்டிருத்தலால், சோழ நாட்டிலுள்ள வெண்ணி அழுந்தூர் என்னும் ஊர்களில் நிகழ்ந்த போரிலும் இவர் பகையரசரை முறியடித்தன ரென்பது தெரிகின்றது. இவ்வாற்றால் சேர, பாண்டிய மன்னர்கள் இவருடன் போர் புரிந்து தோற்றுக் கீழ்ப் படிந்தாராதல் வேண்டும். மேற்குறித்த பதிகத்தில் திருமங்கை மன்னன் இவரைத் 'தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம்' என்பதனால் மூன்று நாட்டிற்கும் உரியராகக் கூறுவதும், சுந்தர மூர்த்திகள், திருத்தொண்டத் தொகையில் ‘தென்னவனா யுலகாண்ட செங்கணார்க் கடியேன் என்று கூறுவதும் இங்கே கருதற்பாலன. திருமங்கை மன்னன் இவரைப் புகழ்ந்து கூறுவதிலிருந்து, இவர் அரசராதற்கேற்ப வேறு மதங்களையும் புரந்து வந்தனரென அறியலாகும் எனினும் இவர் செய்த தொண்டுகளெல்லாம் சிவபெருமானுக்கேயாகும். இவர் சிவபெருமானுக்கு ஆனைக்கா முதல் அம்பர் இறுதியாக அறுபத்து நான்கு மாடக்கோயில்கள் கட்டினரென்று சில பெரியோர் கூறுகின்றனர். திருமங்கை யாழ்வாரே இவரது கோயிற் றிருப்பணியைக் குறித்து "இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ வீசற் கெழின்மாடம் எழுபது செய்துலக மாண்ட திருக்குலத்து வளச்சோழன்" என்று கூறியிருக்கின்றார். இதனால் எழுபது மாடக்கோயில் எடுத்தனரென அறியலாகும். மாடக்கோயில் என்பது பெருங்கோயில் என்றும் வழங்கப்பெறும். பெருங்கோயில் எல்லாம் கோச்செங்கண்ணர் கட்டியவே எனின், 'பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயி லெழுபதினோடெட்டும்' என்று திருநாவுக்கரசர் அடைவு திருத்தாண்டகத்திற் கூறியிருத்தலின், எழுபத்தெட்டுப் பெருங் கோயில் செங்கட் சோழர் எடுத்தனரென்று கொள்ள வேண்டும். சைவ சமயத்திற்கு இங்ஙனமாக இவர் செய்து வைத்த பேருதவி அளவு படும் தன்மையதோ? இந்நாட்டின்கண் எத்தனையோ அரசாங்கங்கள் தோன்றி மறைந்தன. எத்தனையோ படை யெடுப்புக்கள் நேர்ந்தன. எத்தனையோ பிறமதங்கள் ஆதிக்கஞ் செலுத்தின. நம் மெய்ச்சமயமாகிய சைவமானது இத்தனைக்கும் ஈடுகொடுத்து நாமெல்லாம் உய்யுமாறு இன்றுகாறும் நின்று நிலவுவதும், இனி என்றும் நிலவ இருப்பதும், நம் முன்னையோர் கோயில்களாலும், பூசைகளாலும், விழாக்களாலும் ஏற்படுத்தி வைத்த அடிப்படையின் வலிமையாலன்றோ? இங்ஙனமாக நம் சமயத்தை நிலைபெறச் செய்த பெருமைக்கு மற்றெல்லோரினும் சிறப்பாக உரிமை பூண்டவர் சோழர் பெருமானாகிய கோச் செங்கண்ணார் என்பது தேற்றம். இவர் சிலந்தியாயிருந்து இறைவனை வழிபட்டு அரசாயின உண்மையையும், இவர் பல திருக்கோயில்கள் எடுப்பித்த உண்மையையும் திருநெறித்தமிழ் வேதம் அருளிய சைவசமய குரவர்கள் தம்பதிகங்களில் பலவிடத்தும் பாராட்டி யிருக்கின்றார்களென்றால் இவரது பெருமையை நாம் எங்ஙனம் அளவிட்டுரைக்கலாகும்? " செங்கட் பெயர்கொண்ட டவன்செம் பியர்கோன் அங்கட் கருணை பெரிதா யவனே வெங்கண் விடையா யெம்வெணா வலுளாய் அங்கத் தயர்வா யினளா யிழையே." - திருஞானசம்பந்தர். " புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயி னூலாற் பொதுப்பந்த ரதுவிழைத்துச் சருகான் மேய்ந்த சித்தியினா லரசாண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப்பெய்தார் திறலான் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளா வன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக் கின்னமுதாம் பரசூர் மேய பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே" - திருநாவுக்கரசர். " தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர் சிக்கென வியற்றச் சுருண்ட செஞ்சடையாரது தன்னைச் n சாழனாக்கிய தொடர்ச்சிகண் டடியேன் புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம் போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி அருண்டென்மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் ஆவடுதுறை யாதியெம் மானே." - நம்பியாரூரர். 9. கோப்பெருஞ் சோழர், அல்லது நட்பின் பெருமை. பண்டொரு காலத்தில் ஒரு கோழியானது யானையொன்றைப் போரில் வென்ற இடமாதலின் 'கோழி' எனப் பெயர் பெற்றதும், தொன்றுதொட்டுச் சோழமன்னர்கள் வீற்றிருந்து அரசாளப் பெற்ற தலைநகரங்களுள்ளே மிக்க பழமை பொருந்தியதும், அறங்கள் நிலைபெற்ற அவைக்களத்தைத் தன்னகத்தே கொண்டிருந்ததும், 'ஊரெனப்படுவ துறையூர்' என ஆன்றோர் பலராலும் சிறப்பித்தோதப் பெறுவதும் ஆகிய உறந்தையம் பதியின்கண்ணே ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முன்பு கடைச்சங்க நாளிலே கோப்பெருஞ் சோழர் என்னும் அரசர் ஒருவர் இருந்தார். அவர் கல்விக் கடலின் எல்லை கண்டவர்; தீஞ்சுவை கெழுமிய செந்தமிழ்ப்பாக்கள் பாடுவதிற் சிறப்பு மிக்கவர்; அறத்தின் நுட்பங்களையெல்லாம் அறிந்து தாம் அவ்வாறொழுகுவதோடு, யாவரும் அறம்புரிந்து மேன்மையுற வேண்டுமென்னும் பெருவிருப்பினர்; புலவர் பெருமக்களிடத்துத் தாம் வைத்துள்ள அன்பாலும் மதிப்பாலும் அவர்களுடைய அன்பையெல்லாம் கொள்ளை கொண்டவர்; அவ்வாற்றால் தோலா நல்லிசை மேலோராகிய பிசிராந்தையார், பொத்தியார் என்னும் தண்டமிழ்ப் புலவர்கள் தமக்கு ஆருயிர் நண்பர்களாக அமையப் பெற்றவர். பிசிராந்தையார் என்பவர் பாண்டி நாட்டில் பிசிர் என்னும் ஊரிலிருந்த ஒரு புலவர். அவரது பெயரிலிருந்து அவரை ஆதன் என்பானுக்குத் தந்தையார் என்றாவது, ஒரு ஆதன் றந்தையின் வழியில் வந்து அப்பெயரிடப் பெற்றவர் என்றாவது கொள்ளுதல் தகும். ஆதன்றந்தை ஆந்தையெனமருவுமாறு தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளது. பிசிராந்தையார் தமது வாழ்நாளினிறுதிக் கூற்றில் தமக்கு நரையில்லாததன் காரணத்தை வினாவிய சான்றோர்க்குத் தாம் விடையிறுத்தலாகப் பாடியுள்ள பாட்டிலிருந்து அவரது களங்கமற்ற உயரிய வாழ்க்கை நிலை புலப்படும். அது " யாண்டு பலவாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர் யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கு மதன்றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழுமூரே" என்பது. தம் மனைவி மக்கள் அறிவிலும் குணத்திலும் மாட்சியுடை யராதலும், ஏவலாளர் தாம் கருதியதனைக் கருதியவாறே செய்து முடித்தலும், தம் நாட்டரசன் முறைவழுவாது குடிகளைப் பாதுகாத்தலும், தம்மூரின்கண் சான்றோர் பலரிருத்தலும் தமக்கு ஆண்டுகள் பல சென்றும் நரையில்லா திருத்தற்குக் காரணம் எனக் கூறிய அவரது உயரிய மனநிலை நமது புகழ்ச்சிக்கண் எங்ஙனம் அடங்குவதாகும்? இப்பெற்றியராய பாண்டி நாட்டுப் பிசிராந்தையார்க்கும் சோழநாட்டுக் கோப்பெருஞ் சோழர்க்கும் செப்புதற் கரியகட் பொன்றுளதாகி வளர்ந்து வருவதாயிற்று. ஆனால் அவர்கள் ஒருபொழுதும் ஒருவரை யொருவர் நேரிற் கண்டவரல்லர். ஒருவர் ஒருவருடைய குணங்களைக் கேள்வியுற்ற மாக்திரை யானே அவர்கள் பால் அடங்கியிருந்த உழுவலன்பு வெளிப்பட்டு அவ்விருவரையும் ஒத்த வுணர்ச்சியுடைய நட்பினராக்கி விட்டது. அவர்கள் ஒருவரொருவரைப்பற்றிப் பேசாத நாளும், நினையாத நாழிகையும் இருந்திருத்தல் சாலாது. பிசிராந்தையார் ஒரு நாள் மாலைப்பொழுதில் தமதாருயிர் நண்பனை நினைந்து காதல் கைமிக்கு அன்னச்சேவல் ஒன்றை விளித்துப் பாடுகின்ற பாட்டு அந்நட்பினையும் பெட்பினையும் திட்பமுறக் காட்டும். அது, ‘ அன்னச் சேவல்! அன்னச் சேவல்! ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல் நாருதலை யளிக்கு மொண்முகம் போலக் கோருகூடு மதிய முகிழ்நிலா விளங்கும் மையன் மாலையாம் கையறு பினையக் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயின் இடையது சோழநன் னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ வாயில்விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசி ராந்தை யடியுறை யெனினே மாண்டநின் இன்புறு பேடை யணியத்தன் அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே’ என்பது. அன்னச் சேவலே! அன்னச் சேவலே!! எம் அண்ணல் தன் நாட்டினைத் தலையளி செய்யும் முகம்போல மதியம் விளங்கும் மாலைப்பொழுதின்கண் யாம் செயலற்று வருந்தா நிற்கின்றேன். நீ தான் குமரியாற்றின் பெருந்துறையில் அயிரையை மேய்ந்து வடதிசைக் கண்ணதாகிய இமயமலைக்குச் செல்குதியாயின், இரண்டிற்கும் இடையிலுள்ளதாகிய சோழநாட்டை அடைந்த விடத்து, உறையூரின்கண் உயர்ந்து தோன்றும் மாடத்திடத்தே நின் பெடையொடு தங்கி, வாயில் காவலர்க்கு உணர்த்திவிடாதே தடையின்றிக் கோயிலிற் புகுந்து, எம் பெருங்கோவாகிய கிள்ளி கேட்க 'யான் பிசிராந்தையின்' அடியுறை என்று சொல்வையாயின் நின் இன்புறும் பேடை அணியத் தன் விருப்பமுள்ள அணிகலத்தை நினக்குத் தருவன்-என்பது இதன் பொழிப்பு. இவ்வாறாகிய உத்தம நட்பினால் விளையும் இன்பத்தைப் பார்க்கிலும் இவ்வுலகத்துச் சிறந்த வின்பம் யாதுளது? தலையாயர் தம்முட்செய்த நட்புக் கரும்பை நுனியிலிருந்து தின்றார் போலவும், பேரறிவாளர்களியற்றிய நூல்களின் நயம் அவற்றிற் பயிலுந் தோறும் வெளிப்பட்டின்பம் விளைத்தல் போலவும் மேன்மேல் வளர்ந்தின்பம் பயப்பதாமெனக் கூறுவர் ஆன்றோர். துறக்க வின்பமும் இதற்கு நிகராகாதெனில் இதன் பெருமையை வேறு கூறுதல் என்? கோப்பெருஞ் சோழரும் பிசிராந்தையாரும் காண்டலின்றியும் இங்ஙனமாக ஈண்டிய நட்பின் பயன் துய்த்து வருங்காலத்தில் நிகழ்வதொரு செய்தி நெஞ்சினையுருக்குந் தன்மையது. இவ்வரசர் பெருந்தகையாகிய கோப்பெருஞ் சோழருக்கு இரண்டு மக்கள் உளராயினர். 'மகனுரைக்கும் தந்தை நலத்தை என்றும், தக்கார் தகவிலரென்ப தவரவர் - எச்சத்தாற் காணப்படும் என்றும் ஆன்றோர் கூறும் பொது நீதிக்கு விலக்காக ஒரோவழித் தகவிலார்க்கு நன்மக்களும், தகவுடையாருக்குத் தீயமக்களும் உண்டாகின்றனர். கோப்பெருஞ்சோழரின் மக்களும் பாற்கடலிற் றோன்றிய ஆலகாலம் போலும் கொடிய பண்பினராயிருந்தனர். அன்பிற்கே நிலைக்களமாகிய தம் அருமைத்தந்தையுடன் போர் செய்யவும் எழுந்தனரென்றால் அன்னவரின் தீயபண்பை என்னென் றெடுத்துரைப்பது? கொடியவர்களான மக்கள் போர் குறித்து வருதலை கோப்பெருஞ்சோழர் கண்டார். சினங்கொண்டார். தாமும் போர் செய்தற்கு அக்கொடியார் மேற் சென்றார். அப்பொழுது அங்கிருந்து அந்நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர்க்கு ஓர் நல்லெண்ணம் உண்டாயிற்று. அஃது அவருக்கு இயற்கையு மாகும் அருஞ்சீர்த்திப் பெருஞ்சோழரைப் போர்செய்யாது தடுக்க வேண்டுமென்பதே அவரது எண்ணம் பெருங்கோவைப் பார்த்துப் பின்வருமாறு கூறுவாராயினர்: "அமரின்கட் பகைவரை அடுதல் செய்த வென்றியையும், வலிய முயற்சியையும், நிலமுழுதும் நிழல்செய்யும் வெண்கொற்றக் குடையினையும் உடைய வேந்தே, நின்னுடன் போர்செய்தற்கு வந்த இருவரையும் பார்க்குமிடத்து அவர்கள் நின்பகை வேந்தர்கள் அல்லர் நீயும் அவர்க்குப் பகைவன் அல்லை. தோன்றலே நீ இவ்வுலகத்துப் பரந்த புகழை யெய்தித் தேவருலகத்தை யடைந்த பொழுது நின்னாக ஒழிக்கப்பட்ட அரசாட்சியுரிமை அவர்க் குரியது; அதனையும் நியே அறிவை. புகழைவிரும்புவோனே, நின்னுடன் போர்செய்தக் கெழுந்த சூழ்ச்சியற்ற அறிவினையுடைய நின்புதல்வர் தோற்பின் நின்பெயரி செல்வத்தை அவருக்கன்றி யாவர்க்குக் கொடுப்பாய் நீ அவருக்குத் தோற்பின் நின்னையிகழும் பகைவர் உவக்கும்படியாக இவ்வுலகத்தே பழியைநிறுத்துவாய். ஆதலால், நினது மறன் ஒழிவதாக; விண்ணோர்கள் விருப்புடன் நின்னை விருந்தாக எதிர்கொள்ளுமாறு நல்வினை செய்தல் வேண்டும். அதற்கு விரைந்து எழுக; நின் உள்ளம் வாழ்வதாக." இவ்வாறாக நல்லிசைப் புலவரால் தெருட்டப்பெற்றபின் பெருங்கோவின் உள்ளத்திற் பொங்கியெழுந்த சினம் "இடுநீற்றாற்பையவிந்த நாகம்போல்" அடங்கி விட்டது. எனினும் மானம் என்பது அரசர்க்கு உயிரினுஞ் சிறந்ததாதலின் அவர் பின் உயிர்வாழ ஒருப்பட்டிலர். ‘மானமழிந்தபின் வாழாமை முன்னினிதே' 'மயிர்நீப்பின் வாழக் கவரிமா வன்னார்-உயிர்நிப்பர் மானம்வரின்' என்பன ஆன்றோரின் முதுமொழிகளல்லவா? தம் மக்களால் தமது குலத்திற்கும், தமக்கும் பழியுண்டாதலையுன்னி உயிர் துறக்கத் துணிந்தார் பெருஞ்சோழர். தற்கொலை செய்துகொள்வதில் பழியில்லாததொரு வழியை முற்காலத்தவர் கைக்கொண்டிருந்தனர். ததுதான் வடக்கிருத்தல் என்பது. வடக்கிருத்தல் என்றால் யாதானும் இன்றியமையாத காரணம்பற்றி உயிர்துறக்கத் துணிந்தவர் ஆற்றிடைக் குறைபோலும் தூயதொரு தனியிடத்தை யெய்தி, வடக்கு நோக்கியிருந்து, உணவு முதலியன துறந்து, கடவுட் சிந்தையுடன் உயிர்விடுதலாம். பெருங்கோவும் அங்ஙனமே வடக்கிருத்தலை மேற்கொள்வாராயினர். வடககருக்குங்கால் உலகத்தார்க்கு அறத்தின் மேன்மையைத் தாம் தௌத்ந்தவாறு அறிவுறுத்திச் சொல்ல வேண்டுமென்று அவர்க்கு விருப்பமுள தாயிற்று. தாம் உயிர் துறக்கும்பொழுதும் உலகத்தாருக்கு உதவிசெய்வதே உயர்ந்தோரின் நோக்கமென்பதற்கு இஃதொரு சான்றாம். தாம் அறிவுறத்தக் கருதியதனை நாம் என்றும் போற்றுவ தொரு செந்தமிழ்ச் செய்யுளாகப் பாடித் தந்தனர் நம் புவிக்கரசாகிய கவிக்கரசர். அது, " செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே ஐய மறாஅர் கசடீண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே யானை வேட்டுவன் ஆணையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கி னெய்த லுண்டெனில் தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும் தொய்யா வுலகத்தது நுகர்ச்சி யில்லெனின் மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும் மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே" (புறநானூறு) என்பது. இதன்பொருள்: ‘அழுக்கு நிறைந்த தெளிவில்லாத உள்ளத்தினை யுடையோர் அறத்தினைச் செய்வோமோ செய்யாதிருப்போமோ என்று கருதி ஐயம் நீங்காதவராகின்றனர்; யானை வேட்டைக்குச் செல்வோன் யானையையும் எளிதாகப் பெறுவன்; காடை வேட்டைக்குச் செல்வோன் அது பெறாமல் வெறுங்கையுடனும் திரும்புவன்; அதனால் உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந் தோர்க்குத் தாம் செய்த நல்வினைப்பகுதியால் அதனை நுகர்தல் உண்டெனின்; அவர் இருவினையும் செய்யா உம்பருலகத்தின்கண் இன்பமனுபவித்தலும் கூடும்; அவ்வுலகத்து நுகர்ச்சியில்லையாயின், மாறிப்பிறக்கும் பிறப்பு இல்லையாகவும் கூடும். மாறிப்பிறத்த லென்பதே இல்லையென்று சொல்வாருளராயின் இம்மலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது புகழை நிலைபெறுத்தி வகையில்லாத உடம்பொடு கூடிநின்று இறத்தல் மிகவும் பெருமையுடையது; அதனால், எவ்வாற்றானும் நல்வினை செய்தல் அழகிது என்பது. இங்ஙனம் அறிவுறுத்தருளி, அங்கே குழுமியிருந்த சான்றோர் களைப் பார்த்து 'என் நண்பன் பிசிராந்தை இப்பொழுது வருவன் என்று பெருஞ்சோழர் கூறினர். சான்றோர்களோ அவர் வாரா என்றனர். அது கேட்டதும் பெருங்கோவானவர்' என் உயிரை பாதுகாக்கும் நண்பன் பாண்டி நாட்டுள்ளும் சேய்மையிலுள்ள தாகிய பிசிர் என்னும் ஊரிடத்தான் என்று சொல்லுவர்; எனினும் நாம் செல்வம் உடைய காலத்து அவன் வாராதிருப்பினும் யாம் துன்புறுங்காலத்து வாராதிருப்பானல்லன்' என்றனர். சான்றோர் கட்கோ ஐயந்தீர்ந்தபாடில்லை, கோப்பெருஞ்சோழர் பின்னரும் கூறுகின்றார். "நிறைந்த அறிவினையுடையீர், ‘அவன் நின்னைக் கேள்வியுற்றிருப்பதல்லது சிறிதுபொழுதும் கண்டதில்லை; பல ஆண்டுகள் தவறாது பழகிப்போந்த உரிமையுடையராயினும் நீ கூறியவாறு வழுவுதவின்றியொழுகுதல் அரிதேயாகம்' என்று கருதி ஐயுறாதொழிவீராக; அவன் என்றும் என்னைப் புறக்கணித் தவனல்லன், இனிய குணங்களை யுடையவன்; பிணித்த நட்பினை யுடையவன்; புகழையழிக்கும் பொய்ம்மையை விரும்பான்; தன்பெயரைப் பிறர்க்குச் சொல்லும்பொழுது என் பெயர் ‘கோப்பெருஞ்சோழன்' என்று என் பெயரையே தன் பெயராகச் சொல்லும் அன்பின் உரிமையையும் உடையன்; அதன்மேலும் இப்படி யான் துயரமுறுங்காலத்து ஆண்டு நில்லான், இப்பொழுதே வருவன்; அவனுக்கு இடமொழித்து வைப்பீராக" என்றனர். இங்ஙனங்கூறிக் கோப்பெருஞ் சோழர் வடக்கிருக்கவே, பிசிராந்தையாரும் அவர் கூறியாங்கு அப்பொழுது அவண் வந்து சேர்ந்தனர். பிசிராந்தையார் போன்றே பெருங்கோவுக்கு ஆருயிர் நண்பரும், உறையூரிலிருந்தவரும் ஆகிய பொத்தியார் என்னும் புலவர் அதனைக் கண்டார். அளவிடமுடியாத வியப்பினையும், அடக்கவொண்ணாத துயரத்தினையும் உடையராயினர். அப்பொழுது அவர் கூறியது, " நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே யெனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல் அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத் தோற்றஞ்சான்ற சான்றோன் போற்றி இசை மரபாக நட்புக்கந்தாக இனையதோர் காலை யீங்கு வருதல் வருவ னென்ற வோனது பெருமையும் அதுபழுதின்றி வந்தவ னறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே அதனால், தன்கோ லியங்காத் தேயத் துறையுஞ் சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை அன்னோனை யிழந்த விவ்வுலகம் என்னாவது கொல் அளியது தானே." (புறநானூறு) என்பது. இதன் பொருள்: இவ்வரசன் எத்துணையும் பெரிய சிறப்புக் களுடன் கூடியும் அவற்றையெல்லாம் கைவிட்டு இவ்விடத்தே இப்படி வரத் துணிதல் நினைக்குமிடத்து வியப்பினையுடையது; வேற்று வேந்தனது நாட்டின்கண் விளக்கமமைந்த சான்றோன் புகழ் மேம்பாடாக நட்பே பற்றுக் கோடாக இன்னதோர் இன்னாக் காலத்து வழுவின்றி இவ்விடத்து வருதல் அதனினும் வியப்பை யுடையது; இவ்வாறு வருவனென்று துணிந்து சொல்லிய வேந்தனது பெருமையும், அவன் சொல்லிய சொற் பழுதின்றாக வந்தவனது அறிவும் வியக்குந் தோறும் வியக்குந்தோறும் வியப்பு எல்லை கடந்துளது; ஆதலால், தன் செங்கோல் செல்லாத தேயத்துறையும் சான்றோனது நெஞ்சைத் தன்னிடத்தே உரித்தாகப் பெற்ற பழைய புகழையுடைய அத்தன்மையுள்ள பெரியோனை யிழந்த இத்தேயம் என்னதுன்ப முறுங் கொல்லோ! இதுதான் இரங்கத்தக்கது என்பது. இங்ஙனம் பொத்தியார் வியந்தும் கையற்றும் கூறுமாறு சென்ற பிசிராந்தையாரும் வடக்கிருந்தனர். மற்றும் வடக்கிருந்தார் பலராவர். என்னே அன்பின் தகைமை! அன்பென்பது பல உடம்பிலுள்ள உயிர்களை ஒன்றாகப் பிணிக்குந் தன்மையாற்றான் அதற்கு நார் என்றும் பெயர் உண்டாயிற்றாதல் வேண்டும். இங்ஙனம் பெருங்கோவுடன் ஒருங்கே வடக்கிருந்தார் பல ராகவும், அவர்க்கு உயிர் நண்பராகிய பொத்தியார் மாத்திரம் உடன் வடக்கிருந்தாரல்லர். அதற்குக் காரணம் அவர் மனைவி கருப்பமுற்றிருந்தமை காரணமாகக் கோப்பெருஞ்சோழர் அவரைத் தடுத்து 'நினக்கு மகன் பிறந்தபின் வருக, என்று கூறிய மொழியை மறுக்கலாற்றாமையேயாகம். எனவே அவர் உடனுயிர் துறவாமைக்கும் நண்பன் சொல்லை மறுக்கலாற்றாத அவரது நட்புரிமையே காரணமாயிற்றென்பது தெளிவு. பிசிராந்தை யாரும், பெருங்கோவும் வடக்கிருந்தமை கண்டு முறையே கண்ணகனார், கரு'd2வூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் என்னும் புலவர்கள் இரங்கிப் பாடியுள்ளார்கள். கண்ணகனார் பாடியது, " பொன்னுந் துகிரு மத்து மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேயவாயினந் தொடை புணர்ந்து அருவிலை நன்கல மமைக்குங் காலை ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர் சான்றோர் பால ராப சாலார் சாலார் பாலரா குபவே" என்னும் அழகிய பாட்டாகும். பொன்னும், பவளமும், முத்தும், மணியும், நிலம், கடல், மலை என்பவற்றில் ஒன்றுக்கொண்று நெடிய சேய்மையிலிருப்பினும், அரிய விலையினையுடைய நல்ல அணிகலன்களைச் செய்யும் பொழுது அவை ஓரிடத்துத் தோன்றினாற்போல எப்பொழுதும் சான்றோர் சான்றோர் பக்கத்தினராவர் என்பது இதன் பொருளாம். பொத்தியார் என்னும் புலவர் தம் நண்பன் சொல்லை மறாது சென்று உரையூரைக் கண்டபொழுதும் பின்பொருகால் அரசனது நடுகல்லைக் கண்டபொழுதும் இரங்கிப்பாடிய பாட்டுக்கள் நெஞ்சினை யுருக்குந்தன்மையன. 'செங்கோலினன், திண்ணிய அன்பினன், மகளிர்க்கு மெல்லியன், வீரர்க்கு வீரன், உயர்ந் தோர்க்குப் புகலிடம்; அவனை அத்தன்மையனென்று கருதாது கூற்றம் உயிர் கொண்டுபோயிற்று; ஆதலால் வாய்மையையுடைய புலவர்களே, தம் துன்புற்ற சுற்றத்தையும் சேர்த்துக் கொண்டு அக்கூற்றத்தை வைவோம் வாரீர்' என்று கூறுகின்றார். இவ்வாறு தம் ஆருயிர் நண்பனைப் பிரிந்து ஒருநாளும் பொறுத்திருக் கலாற்றாத பொத்தியாரும், தமக்கு மகன் பிறந்த பின்னரும் வாளா அமைந்திருப்பரோ? மகனும் பிறந்தான். அவனுஞ் சென்றார். சென்று நடு கல்லைக் கண்டு அவர் ‘நிழலைக் காட்டிலும் நின்னைப் பிரியாதுறையும் நின் விருப்பமுள்ள மனைவி வயிற்று மகன் பிறந்தபின் வா' எனச்சொல்லி என்னை இங்கு நின்றும் போக்கிய அன்பில்லாதவனே, நின்னோடு என்னிடையுள்ள நட்பினை நீ எண்ணா திருப்பாயல்லை; புகழை விரும்புவோனே, எனக்கு குறித்துள்ள இடம் யாது? சொல்வீராக என்றனர். கோப்பெருஞ் சோழரோ கல்லாகியும் அவர்க்கு இடங்கொடுத்தனர். அவரும் ‘இன்னுயிர் விரும்புங் கிழமைத் தொன்னட்புடையோர் தம்முழைச் செலின், அவர் நடுகல் ஆகியக் கண்ணும் இடங்கொடுத் தளிப்பர்' என்று அதனை வியந்து கூறி, வடக்கிருப்பாராயினர். இந்நிகழ்ச்சி நாம் இருக்கும் இந்நகரையடுத்து நிகழ்ந்ததென்பதை நினைக்கும்பொழுது உண்டாகும் உணர்ச்சி பெரிதாகின்றது. இவ்வரலாற்றின்கண் விளக்கவேண்டிய வேறுசில நூண் பொருள்கள் அற்றமின்மையான் விளக்காது விடப்படுகின்றன. அறிவுடையோர் அவற்றையும் ஓர்ந்துணர்வாராக. 10. கிள்ளிவளவன் கிள்ளிவளவன் என்னும் பெயருடைய சோழமன்னர் இருவர் இருந்தனர். ஒருவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். மற்றொருவன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன். முன்னவன் வரலாறே இங்கு ஆராயப்படுவது. இவன் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கு மைந்தனென்றும், மணிமேகலையிற் கூறப்பட்ட உதயகுமரன் றந்தையாகிய மாவண்கிள்ளி என்பான் இவனேயென்றும், காவிரிப்பூம்பட்டினத் திலிருந்து செங்கோலோச்சிய இம்மன்னன், மணிமேகலைக் காப்பியங் கூறுமாறு அப்பட்டினத்தைக் கடல் கொண்டபின் உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டனனென்றும் கருதப்படு கின்றது. சோழன் நலங்கிள்ளி, வளத்தான் என்னும் இருவரும் இவனுக்குத் தம்பியராவர். இக்கிள்ளிவளவன் ஒப்பற்ற பெருவீரனாகவும் பெரு வள்ளலாகவும் பெரும் புலவனாகவும் விளங்கினான். ஆலத்தூர் கிழார், வெள்ளைக்குடி நாகனார், மாறோக்கத்து நப்பசலையார், ஆ'd2வூர் மூலங்கிழார், கோவூர்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர்முடவனார், கல்லிறையனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் என்னும் புலவர்பெரு மக்களாற் புகழ்ந்து பாடப்பெற்ற பெருஞ்சிறப்புடையன் இவன். இவர்கள் இவனைப் பாடிய பாட்டுக்களெல்லாம் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய புறநானூற்றிலுள்ளன. அவற்றிலிருந்து இவனுடைய வீரம், வண்மை முதலியனவேயன்றிப், புலவர்கள் பால் இவன் எவ்வளவு அன்பும் மதிப்பும் உடையவனாய் அவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் இயல்பினனாயிருந்தான் என்பதும் விளங்கும். அவற்றுட் சிலவற்றை இங்கே காட்டுதும்: ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் இம்மன்னன் பால் பரிசில் பெற்றுச்செல்லும்பொழுது, புலவர்களோடளவளாவியிருக்கும் இன்பத்தையே விரும்புமியல்புடைய இவ்வளவன் 'எம்மை நினைத்தும் வருவீரோ?, என ஆராமையுடன் கூறினான். அது கேட்ட புலவர் தமது நன்றியறிவைத் தெரிவிப்பாராக, "ஆன் கொலை முதலியன புரிந்ததீவினை யாளர்க்கும் அப்பாதகத்தினைப் போக்கும் வழியும் உளவெனவும், நிலம் கீழ்மேலாங்காலமாயினும் ஒருவன் செய்த நன்றியைச் சிதைத் தோர்க்கு உய்தியில்லை யெனவும்அறநூல் கூறா நின்றது; வேந்தே, காப்பில்லாத உள்ளத்துடனே இனியமொழிகள் பலவுங்கூறி மன்றத்திடத்தே ... உணவினை அருந்தச்செய்து, அங்ஙனம் அருந்திய பாணர்க்கு நீங்காத செல்வம் எல்லாவற்றையும் அளித்தோனும் எமது வேந்தனுமாகிய வளவன் வாழ்வானாக' என்று நின் பெருமை பொருந்திய தாளைப் பாடேனாயின் பல கதிர்களையுடைய ஆதித்தன் தோன்றுதலறியான்; யானோ தஞ்சம்; பெரும; இவ்வுலகின்கண் சான்றோர் செய்த நல்வினை யுண்டாயின் இமயமலையின்கண் மேகங்களெல்லாந்திரண்டு கார்காலத்துச் சொரிந்த மழைத்துளியினும் பல காலம் வாழ்வாயாக" என்னும் கருத்தமைந்த செய்யுளைப் பாடினர். கோவூர் கிழார் என்னும் புலவர் இவனுடைய அஞ்சாமையும் வீரமும் புலப்பட "காலனும் தான் உயிர்கொள்ளலாகும். காலம் வருந்துணையும் பார்த்திருப்பன்; அங்ஙனம் காலம் பாராது, வேற்படையினையுடைய பகையரசர்கள் கெடும்படி வேண்டிய விடத்துக் கொன்று வெல்லும் போரில்வல்ல வேந்தே? எட்டுத் திசையும் எரிகொள்ளி எரிந்து விழவும், மரத்தின் உலர்ந்த கொம்புகள் தாமே பற்றிக் கொள்ளவும், ஞாயிறு பலவிடத்துச் செறிந்து தோன்றவும், அஞ்சத் தகவனவாகிய புட்கள் குரலிசைக்கவும் நனவிலே உற்பாதங்கள் கண்டும், பல் நிலத்தில் விழவும், த'acலைமயிரில் எண்ணெய் வார்க்கவும், பன்றியேற்றை ஏறவும், ஆடையைக் களையவும், படைக்கலம் தான் இருந்த கட்டிலுடன் கவிழவும் இங்ஙனம் கனவிலே பொறுத்தற்கரியவற்றைக் கண்டும் அஞ்சாது போர் செய்யும் வலியையுடையோய்" என்று கூறியுள்ளார். இடைக்காடர் என்னுஞ் சான்றோர் இவனுடைய கொடையும் வீரமும் விளங்கித்தோன்ற "மலையினின்றிழிந்து கடலை நோக்கி யோடுகின்ற பல யாறுகளைப் போலப் புலவர் யாவரும் நின்னை நோக்கினர்; நீ தான் அவர்கட்குப் பரிசில் கொடுத்தற்பொருட்டு மருந்தில்லாத கணிச்சியென்னும் படையைச் சுழற்றிக் கூற்றுவன் வெகுண்டாற்போலும் வலியுடனே மாற்று வேந்தரின் நிலத்தைக் கொள்ளக் கருதினாய்" என்றனர். ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர், " நீ, உடன்று நோக்கும் வாயெரி தவழ நீ, நயந்து நோக்கும் வாய்பொன் பூப்பச் செஞ்ஞா யிற்ற நிலவு வேண்டினம் வெண்டிங்களுள் வெயில்வேண்டினம் வேண்டியது விளைக்கும் ஆற்றலை" என்று இவனைப் பாடினர். மற்றும் பலர் பலவாறு இவனைப் பாடியிருக்கின்றனர். இவ்வேந்தன் இங்ஙனம் புலவர் பலராற் புகழ்ந்து பாடப் பெற்றதேயன்றி, ஒரோவழித் தான் இழுக்கி நடந்த விடத்து அவர்களால் இடித்துரைக்கப் பெற்று முள்ளான். உலகிலே கற்றஞ் சிறிதுமில்லாதவர் எத்துணையர்? விருப்பு வெறுப்புக் களோடு வடி நிலத்தினை ஆண்டு வருகின்ற ஒரு மன்னன் அணுவளவுங் குற்றமின்றி யிருப்பதென்பது எளிதாகுமோ? திருக்கோவலூரிலிருந்த சிற்றரசனும்மூவேந்தரும் போரின்கண் தத்தமக்குத் துணையாக வேண்டி இரந்தழைக்கும்படியான பெரு விரமும் வரையாத வள்ளன்மையும் உடையவனும் கபிலர் முதலிய புலவர் பெருமக்களால் மிகப்புகழ்ந்து பாடப்பெற்ற பெருமை வாய்ந்தவனும் ஆகிய மலையமான் திரு முடிக்காரியின்பால் இம்மன்னன்மிக்க பகைமை பூண்டிருந்தான். அதற்குக் காரணம் தனக்குப் பகைவனாய் உறையூரிலிருந்த சோழனாகிய நெடுங்கிள்ளி என்பானுக்குத் திருமுடிக்காரியானவன் போரின்கண் துணை புரிந்ததே யாதல் வேண்டும். இந்நெடுங்கிள்ளியைக் கிள்ளி வளவன் தன்றம்பியாகிய நலங்கிள்ளியால் காரியாறு என்னுமிடத்திற் தொல்வித்தானென்பது " ஆர்புனை தெரிய விளங்கோன் றன்னால் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி" என மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரால் மணிமேகலையிற் கூறப்படுதலாலும், நெடுங்கிள்ளி காரியாற்றுத் துஞ்சிய என்னும் அடையுடன் வழங்கப்படுதலாலும் அறியக் கிடக்கின்றது. இந்நெடுங் கிள்ளிக்குத் துணைபுரிந்தமையால் தனக்குப் பகைவனாயின காரியின் மக்கள் ஒரு கால் தன்னிடத்தகப்பட்டபொழுது கிள்ளி வளவன் நினைதற்குமரிய கொடுஞ்செயலொன்றைச் செய்யத் தொடங்கினான். அச்செயலாவது மலையமான் மக்களை யானைக் காலால் அடறுவிப்பதே. கோவூர்கிழார் என்னும் புலவர்க்கு இச்செய்தி தெரிந்தது. அருள் நிறைந்த நெஞ்ச முடைய புலவர் நிகழவிருக்கும் இக் கொடுஞ்செயலையறிந்தும் வாளாவிருப்பதோ? கிள்ளிவளவனை விரைந்தணுகி அவனைப் பார்த்து "அரசே? நீ தான் ஒரு புறாவுற்ற துன்பத்தையும் மற்றும் பிறவுயிர்களுமுற்ற துன்பங்கள் பல வற்றையும் போக்கிய செம்பியன் மரபினுள்ளாய்; இவர்தாம்அறிவால் உழுதுண்ணும் கற்றோருடைய வறுமைக்குத் தாம்அஞ்சித் தம்முடைய பொருளைப் பகுத்துண்ணும் குளிர்ந்த நிழலையுடையாரின் மரபினுள்ளார்; அன்றியும் இவர்கள் தம்மைக் கொல்லவென நிற்கின்ற யானையைக் கண்டு தாம் இளமையால் முன்பு வெருவிய அழுகையையும் மறந்திருக் கின்ற சிறு பிள்ளைகள்; இம்மன்றத்தை மருண்டு நோக்கி முன்பு அறியாததோர் வருத்தத்தையும் உடையர்; இது கேட்டாயாயின் நீ விரும்பியதைச் செய்வாயாக" என்னும் கருத்துள்ள பாட்டொன்றை வறினர். இங்ஙனம் புலவர் பெருமான் மனங்கரைந் துருகப் பாடிய பாட்டைக் கேட்டபின் கிள்ளிவளவன் அப்பிள்ளை களைக் கொல்லாது விடுத்திருப்பானென்பதில் ஐயமில்லை. இவ்வேந்தன் ஒரு காலத்தில் சேர மன்னன் ஒருவனோடு போர் குறித்துச் சென்று கருவூரை முற்றுகை யிட்டான். சேரனோ சோழனுடன் எதிர்த்துப்பொரும் துணிவினனாய் மதில்வாயிலை அடைத்துக்கொண்டு கோயிலின்கண் இனிதிருப்பானாயினன். முற்றுகை நீட்டித்ததால் நகரிலுள்ள மக்கட்கு எத்துணைத் துன்பமுண்டாமென்பது கூறவேண்டுவதின்று. இதனை அறிந்த ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் கிள்ளிவளவனை அணுகி, "சிலம்பினையும் சிறிய தொடியினையுமுடைய மகளிர் கழங்கு விளையாடும் அணிமையையுடைய ஆன்பொருந்தத்தின் (அமராவதிஆற்றின்) மணல் சிதறும்படி காவல் மரங்களை வெட்டும் ஓசை தனது கோயிற் கண்ணே சென்று ஒலிப்பவும், அவ்விடத்து மானமின்றி இனிதாகயிருந்த வேந்தனுடன் இவ்விடத்து நின் முரசமொலிப்பப் பொருதாயென்பது கேட்டார் நாணுந் தன்மையையுடைத்து; அவனைக் கொல்வாயாயினும், கொல்லாது விடுவாயாயினும் அவற்றால் நினக்க வரும் உயர்ச்சி யாம் சொல்ல வேண்டா; நீயே எண்ணியறிவை" என்றிங்ஙனங் கூறிச்சந்து செய்து மீட்டனர். வெள்ளைக்குடிநாகனார் என்னும் புலவர் செவியறிவுறூஉ வாக இவ்வரசனைப் பாடிய பாட்டு மிகச் சிறந்தபொருள் களையுடையது. கடலை எல்லையாகவுடைய உலகத்தின் கண் குளிர்ந்த தமிழ் நாட்டிற்குரிய முரசொலிக்கும் படையினையுடைய மூவேந்தருள்ளும் அரசென்று சொல்லுதற்குச் சிறந்தது நின்னுடைய அரசே; ஞாயிறு நான்கு திக்கினும்தோன்றினும், வெள்ளி தென்றிசைக்கட் செல்லினும், அழகிய காவிரி பலகால்களால் ஓடி ஊட்டுதலால் தொகுதி கொண்ட வேற்படையின் றோற்றம் போல் கரும்பின் வெளிப் பூக்கள் அசையும் நாடென்று சொல்லப் படுவது நின்னுடைய நாடே; அந்நாடு பொருந்திய செல்வத்தை யுடைய பெருமை பொருந்திய அரசே, நினக்கரியவாகிய சிலகாரியஞ் சொல்லுவேன்; யான் கூறுஞ் சிலவார்த்தைகளைக் கேட்பாயாக; அறக்கடவுள் வீற்றிருந்து ஆட்சி புரிந்தாலொப்பச் செங்கோலால் ஆராய்தலையும், முறையினைக் கேட்கவேண்டுங் காலத்தில் எளிய செவ்வியையுமுடைய அரசர் வேண்டும் பொழுதில் மழையினைப் பெற்றவராவர், வானை முட்டிய பரந்த வெண் கொற்றக்குடை வெயிலை மறைத்தற்குக் கொண்டதோ வெனின், அன்று; வருந்திய குடிகளை நிழல் செய்தல் காரணத்தாற் கொள்ளப்பட்டது; வளவ, வருகின்ற மாற்றார் படையைப் பொறுத்து நின்று, அது புறங் கொடுத்தல் கண்டு ஆரவாரித்து நின் படை தருகின்ற வெற்றியும் உழுகின்ற கலப்பை நிலத்திலூன்றிய சாலிடத்து விளைந்த நெல்லினது பயனே; மழை பெய்யாதொழியினும், விளைவு குறையினும், இயல்பல்லாதன செயற்கையில் தோன்றினும்இவ்வுலகமானது காவலரைப் பழித்துரைக்கும்; அதனை நன்கு அறிந்தாயாயின், நீயும் குறளை கூறுவாரது உறுதியில்லா மொழியை யேற்றுக்கொள்ளாது ஏரினைப் பாதுகாக்கும் உழவர் குடியைப் பாதுகாத்து, அக்காவலால் ஏனைக்குடிகளையும் பாதுகாப்பாயாயின் நின் பகைவர் நின் அடியைப் போற்றுவர் என்னுங் கருத்துக்களமைந்தது அப்பாட்டு. இதனைப் பாடிய நாகனார் தம்பால் இறுக்கலாற்றாதிருந்த பழைய நிலவரியாகிய கடலை விடுவித்துக் கொண்டனர். இங்கே காட்டிய இரண்டு மூன்று சான்றுகளிலிருந்து, இவ்வரசன் புலவராயினார் கூறும் அறிவுரைகளைக் கேட்டு வழுக்களைந்து கோல் திருத்தி ஆண்டுவந்தன னென்பது விளங்காநிற்கும். இனி இவ்வேந்தனது செங்கோன்மையைப் புலப்படுத்தும் சான்று ஒன்று மணிமேகலைக் காப்பியத்திலுள்ளது. இவன் தன் மைந்தனாகிய உதயகுமரன் தவத்திறம் பூண்டிருந்த மணிமேகலையைத் காதலித்துக் காஞ்சனன் என்னும் விஞ்சையனால் வெட்டுண்டிருந்தனன் எனக் கேள்வியுற்றபொழுது, தன் அமைச்சனாகிய சோழிந்தவேனாதியை நோக்கி, "யான் செய்யுந் தண்டனையைத் தான் செய்ததனால் விஞ்சையன் தகவுடையானல்லன்; தவத்தினர் நோன்பும் மடந்தையர் கற்பும் அரசன் காவல் இல்லை யாயின் இல்லையாம்; தன் மகன் மீது தேர்க்காலைச் செலுத்தி முறை செய்த வேந்தர் பெருமானது வழியில் ஒரு தீவினையாளன் பிறந்தானென்பதை மற்றை அரசர்கள் கேட்கு முன்னம் அவனைப் புறங்காடடைவித்து அக்கணிகை மகளையும் சிறைப்படுத்துக" என்றனன்; என்னும் பொருளுடைத்தாக " யான் செயற்பால திளங்கோன் றன்னைத் தான் செய்ததனாற் றகவிலன் விஞ்சையன் மாதவர் நோன்பு மடவார் கற்பும் காவலன் காவ லின்றெனி னின்றால் மகனை முறைசெய்த மன்னவன் வழியோர் துயர்வினை யாளன் றோன்றின னென்பது வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம் ஈங்கிவன் றன்னையு மீமத் தேற்றிக் கணிகை மகளையுங் காவல் செய்கென்றனன் அணிகிளர் நெடுமுடி யரசாள் வேந்தென" என்று தண்டமிழாசானாகிய சாத்தனாரால் அருளிச் செய்யப் பட்டுளது. இதில், தன் மகனிறந்ததற்குச் சிறிதும் வருந்துதலின்றி, மகனை முறை செய்த மன்னவன் வழியில் ஓர் தீவினையாளன் தோன்றினானென ஏனையரசர் கேள்வியுறுதற்கு முன்னே அவனை சமத்திலேற்றுக வென அரசன் பணித்தானெனக் கழறியிருப்பது அவ்வரசன் நீதியிலும், தன் குலப் பெருமையைப் பாதுகாத்தலிலும் எவ்வளவு பெரு நோக்குடைய னென்பதனைப் புலப்படுத்தி நெஞ்சினையுருகச் செய்கின்றது. பெருங் கொடையாளியாகிய சிறுகுடிகிழான் பண்ணன் என்பவன் இவ்வரசனுக்குச் சிறந்த நண்பனாவன். பண்ணன் மீது இவன் பாடிய புறப்பாட்டு இவனது செய்யுளியற்றும் செந்நாப் புலமையினையும், தன் நண்பரிடத்து இவனுக்கிருந்த கெழுதகையன்பினையும், விழுமிய மதிப்பினையும் நன்கு புலப்படுத்தா நிற்கும். அது, " யான் வாழு நாளும் பண்ணன் வாழிய பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை யாணர்ப் பழுமரம் புள்ளிமிர்ந் தன்ன ஊணொலி யரவந் தானுங் கேட்கும் பொய்யா வெழிலி பெய்விட நோக்கி முட்டை கொண்டு வற்புலஞ் சேருஞ் சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச் சோறுடைக் கையர் வீற்றுவீற் றியங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டு மற்று மற்றும் வினவுதுந் தெற்றெனப் பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தோ சேய்த்தோ வறுமி னெமக்கே" என்பது. இப்பாட்டிலே, பண்ணன் இல்லத்தில் பாண் சற்று ஊண் உண்ணுதலால் எழுகின்ற அரவத்திற்குப் பழுத்த மரத்தில் பறவைகள் கூடியொலிக்கும் ஒலியையும், அவன் இல்லத்தினின்றும் சோற்றினையுடைய கையினராய்ப் பாண்பிள்ளைகள் செல்லும் ஒழுங்கிற்கு மழை பெய்யுங் காலத்தை நோக்கி முட்டை கொண்டு மேட்டு நிலத்தை யடையும் சிற்றெறும்புகளின் ஒழுங்கையும் உவமை கூறியிருப்பதும், பண்ணனைப் பசிப்பிணி மருத்துவன் என்றதும், யான் வாழுநாளையும்பெற்றுத்தான் வாழ்க என அவனை வாழ்த்தியதும் மிக்க வியப்பினையும் உவப்பினையும் விளைப்பனவாம். இங்ஙனம் வீரத்தினும், நீதியினும், வண்மையினும் மேம் பட்டுப் புலமைத்திறனும் வாய்ந்து, புலவர் கூறும் அறிவுறூ உக்களைக் கேட்டு முறைபுரிந்து வந்த இவ்வரசர் பெருந்தகை சேரனாட்டில் சேரர் மன்னனாகிய சேரனுடன் புரிந்த போரிலே உயிர்துறந்தானாவன் என்பது இவன் பெயருடன் இணைக்கப் பட்டு வழங்குகின்ற "குளமுற்றத்துத்துஞ்சிய" என்னும் அடையால் விளங்குகின்றது. இம்மன்னன் இறந்தமைக்காற்றாது புலவர்கள் பாடிய கையறுநிலைச் செய்யுட்கள் மிக்க உருக்க முடையன: "திண்ணிய தேரினையுடைய வளவனைக் கொண்ட கூற்றமானது தன் மனத்துள்ளே கறுவு கொண்டதாயினும், வெளிப்படநின்று வெகுண்டதாயினும், உற்று நின்று கையோடு மெய் தீண்டி வருந்திற்றாயினும் அஃது உய்யுமாறில்லை; ஆதலால் பாடுவாரைப் போலக் கையாற் றொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டதாகல் வேண்டும்" என்று மாறோகத்து நப்பசலையார் பாடினர். 'அன்பில்லாத கூற்றமே நீ மிகவும் பேதையாயிருக்கின்றாய்; சூழ்ச்சித் திற னில்லாமையால் மேல் விளைந்து பயன்படும் விதையைக் குத்தியுண்டாய்; நான் சொல்லிய வார்த்தை மெய்யாதலை இன்னமும் காண்பாய்; படைவீரரையும் யானையையும் குதிரையையும் எதிர்நின்று கொன்று நாடோறும் நின்பசி தீரும்படி உண்பித்த வசையில்லாத ஆற்றலையுடைய வளவனை நீ கொண்டாயாயின் இனி நின்பசியைத் தீர்ப்போர் யார் சொல்லுவாயாக" என்று ஆடுதுறை மாசாத்தனார் பாடினர். "கலம்வனையும் வேட்கோவே, கலம்வனையும் வேட்கோவே, புலவர் புகழ்ந்த பொய்யாத நல்ல புகழையுடைய செம்பியர் மரபினுள்ளானாகிய வளவன் தேவருலகத்தை யடைந்தானாகலான், அத்தன்மை யோனைக்கவிக்கும் இடமகன்ற தாழியை வனைதலை நீ விரும்பினாயாயின் இருநிலம் திகிரியாக மேருமலை மண்ணாக வனைய இயலுமோ நினக்கு; இயலாமையின் என்ன வருத்த முறுவாய்; நீ இரங்கத் தக்காய்;" என்று சுற்றத்தார் இரங்கிக் கூறுவதுபோல் ஐயூர் முடவனார் பாடினர். 11. ஓர் தமிழ்வேந்தின் இறுதி அறவுரை ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முன் வளவர் குலத் தோன்றலொருவன் உறையூரின்கண் இருந்து ஆட்சி நடாத்தினன். அவன், தான் புலமை சான்றிருந்ததோடு, நல்லிசைப் புலவர்களின் அருமை பெருமைகளைப் பாராட்டி அவர்களோ டளவளாவி இன்பந் துய்க்கும்பேறும் உடையனாயினான். "நுண்ணுணர் வினாரொடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே யொக்கும் விழைவிற்று" என்பது இவனது வாழ்க்கையை நோக்கியே எழுந்தது போலும். புலவர்களை இவன் கண்போலும் நண்பினராகக் கொண்டொழுகினன் எனில், அவர்கள் அவன் றிறத்தில் எங்ஙன மிருந்தனர் என்பது கூறுதல் வேண்டுமோ? அளவில்லாத புலவர்கள் நாடொறும் இவன் அவைக்களத்தை அணி செய்து போந்தனர். அவர்கட்கு உயிரென்பது இவனன்றி வேறில்லையாயிற்று. அறிவுச் செல்வத்தை அரிதினிற் போற்றும் இவ்வேந்தர் பெருமானுடைய இனிய குணம் பலவும் யாவர் செவியினும் சென்று சேர்வனவாயின. இவன் கோல் செல்லாத வேற்று நாட்டுறையும் ஓர் புலவர் பெருமானுடைய உள்ளத்தையும் இவன் குணங்கள் பிணித்து விட்டன. அவருடைய குணங்களும் இவனை அங்ஙனமே பிணித்தன. "இருவரும் மாறிப்புக்கிதய மெய்தினார்" என்றாங்கு ஒருவருள்ளத்தில் ஒருவர் உறைந்தனர். "முகத்திற் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்! அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே யானந்தம்" என்பது ஒரு பெரியார் வேறு கருத்திற் சொல்லிய தாயினும் இவர்கள் திறத்திலும் பொருந்துவதாகின்றது. இவர்கள் புறத்தே ஒருவரையொருவர் அடுத்துப் பழகியவரல்லர்; ஒரு முறையேனும் சந்தித்தவருமல்லர். ஆனால் அகத்தே கண்டு, உரையாடி, மகிழ்ந்து போந்தனர். ஆ! அவர்கள் நட்பின் தூய்மையும் பெருமையும் செப்புதற் கெளியவோ? வளவர் பெருமான் வடக்கிருக்கத் திருவுளங் கொண்டனன். வடக்கிருத்தலாவது அறத்திற்கும் புகழுக்கும் மாறாகாது தம் உயிர்நீத்தல் கடனென ஆராய்நது துணிந்தோர் தூயதோரிடத்தில் வடக்கு நோக்கியிருந்து உடலையொடுக்கி உம்பரெய்துதலேயாகும். வடக்கிருக்குங்கால் நம் புவிவேந்தன் நினைந்தனன்; வேற்று நாட்டிருந்த கவிவேந்தனும் அணைந்தனன். இருவரும் புறவுடல் நீத்துப் புகழுடல் எய்தினர். இவ்வரும் பேற்றினை உடனுறைந்து இன்பந்துய்த்த ஏனைப் புலவரும் எய்தா தொழிவரோ? புலவர் பலர் தெற்கிருந்தார் வடக்கிருந்தாராயினர். இங்ஙனம் தன் பிரிவு பொறுக்காது பரிவுற்றுயிர் விடும் புலவர் பலரையுடைய வேந்தன் எத்துணைப் பெருமையுடையனாதல் வேண்டும்? கோப்பெருஞ் சோழன் என்னும் பெயர் கோக்களுள்ளே பெருமை மிக்க அக்குரிசிலுக்குப் பெரிதும் ஏற்புடையதொன்றாம். பெருங்கோ உயிர்விடுக்கு முன் உலகிற்கு விடுத்த செய்தி யொன்றுளது. அஃது அத்தோன்றலின் நல்வாழ்வையும் செல் கதியையும் அளந்து காட்டும் அளவுகோல் போல்வதொன்றாம். அதனை அறிந்து சிந்தித்துப் பயன் கோடல் நம்மனோர் கடனாகும். அப்பெருந்தகையின் மருந்தனைய பொருண் மொழியாவது:- மக்கள் யாவரும் நல்வினை புரியுங் கடப்பாடுடையராவர். அறத்தின்கண் விருப்ப மில்லாதார் மக்களினத்திற் சேர்ந்தவரே யாகார். அவ்விருப் பிருந்தும் அபக்கடைந்த அறிவினையுடைய மனத்திட்ட மில்லாதவர்கள் நல்வினை செய்கவேமோ செய்யேமோ என எப்பொழுதும் ஐயத்தினின்று நீங்காதவரா யிருக்கின்றனர். அவ்வருவினை செய்யும் ஆற்றல் தமக்குளதோ இலதோ என்னும் ஐயமே அதற்குக் காரணமாகும். ஒருவன் மேற்கொண்ட வினை முடிவதும் முடியாமையும் அவ்வினையின் சிறுமை பெருமை யானன்று. அவனது திண்மையானும் திண்மை யின்மை யானுமே யாகும். யானை வேட்டைக்குச் செல்வோன் யானையைத் தப்பாது பெற்று வருதலும், காடை வேட்டைக்குச் செல்வோன் வறுங்கையுடன் திரும்புதலும் உண்டு. மக்கள் உள்ளுவவெல்லாம் உணர்ந்தனவே யாக வேண்டும். உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்கள் தாம் புரிந்த நல்வினைக்கீடாக வினை செய்துழல வேண்டாத உம்பருலகத்தின்கண் இன்பம் அநுபவியா நிற்பவர்; அஃதின்றெனில் மறு பிறப்பின் கண் விரும்பிய நலங்களைப் பெறுவர்; அல்லது மாறிப் பிறவாமையாகிய பேற்றினைப் பெறவர். மாறிப் பிறத்தலென்பதே இல்லை யென்பாருளராயின், இமய மலையின் சிகரம் ஓங்கினாற் போலும் தம் புகழை நிலை நிறுத்தி வசையில்லாத உடம்புடன் கூடி நின்றிறத்தல் மிகவும் தலைமை யுடைத்து; ஆதலின், எவ்வாற்றானும் நல்வினை செய்தல் அழகிது. இக்கருத்து நம் உள்ளத்தே என்றும் நின்று நிலவுமாறு அப் பெருமானால் ஓர் அழகிய செந்தமிழ்ச் செய்யுள் வடிவில் வழங்கப் பெற்றுளது. அது:- " செய்கவங் கொல்லோ நல்வினை யெனவே ஐய மறாஅர் கசடீண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே; யானை வேட்டுவன் யானையும் பெறுமே; குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே; அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கி னெய்த லுண்டெனில் தொய் யாவுலகத்து நுகர்ச்சி யுங்கூடும்; தோய் யாவுலகத்து நுகர்ச்சியில் லெனின் மாறிப் பிறப்பின்மையுங் கூடும்; மாறிப் பிறவா ராயினு மிமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே" என்பது. 12. ஐயரவர்களின் பொறுமை தமிழ் நாட்டின் பழமை பெருமைகளை அறிதற்குக் கருவி யாகும் தொன்னூல்கள் பலவற்றையும் நன்னர் ஆராய்ந்து வெளியிட்டு அயன்மொழியாளர் முன்னே தமிழ் மக்கள் தலைநிமிர்ந்திருக்குமாறு புரிந்தவர் மகாமகோபாத்தியாய, டாக்டர் வே.சாமிநாதையரவர்களாவர் என்பது உலகம் அறிந்த தொன்று. அப்பெரியார்க்கு எண்பதாவது ஆண்டு நிறைதலைக் கொண்டாடும் நிகழ்ச்சி யாவரையும் இன்புறுத்தல் ஒருதலை. தமிழொன்றே வல்லார் ஆராய்ச்சியின் பெற்றியறியா ரென்றும் வெளிற்றுரையாளர் நாணித் தலைகவிழ்க்குமாறு அவருடைய பதிப்புகள் விளங்குகின்றன. ஐயரவர்கள் பதிப்பின் விழுப்பங்களையும், அவற்றால் அவர்கள் எய்தலாகும் நல்லிசையின் எல்லையினையும் உரைப்பான்புகின் "விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும்" என்றும் சங்கத்துச் சான்றோர் வாய்மொழி நினைவுக்கு வருகின்றது. அவர்க்குக் கல்வி கற்பித்த பன்னருஞ் சிறப்பின் நல்லாசிரியராகிய மாக வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வரலாறு போன்றே அவரது வரலாறும் தமிழ்ப்புலவர் வரலாறுகளில் தலைசிறந்ததொன்றாக நிலவுதற் குரியது. அவர் ஒன்னாரும் விழையும் இத்தகைய சிறப்பினைப் பெறுதற்குக் காரணமாக இருந்தது வினைமுயற்சியான் வரும் இன்னாமையை யெல்லாம் இன்பமெனக் கருதும் அவரது மனத்திட்பமே. பன்னாட் பயிற்சியால் அவர்பாற் கண்டறிந்த அரிய குண மொன்றை ஈண்டுக் குறிப்பிடுதல் பொருந்தும். அதுதான் பொறுமை என்பது. பொறைக் கயிற்றிற் புகழை'ப் பிணித்த பெரியார்களில் ஐயரவர்கள் முதற்பத்தியில் நிற்றற்குரியவராவர். காரண முன் வரியும் அவர்பாற் கினமுண்டாக யாண்டுக் கண்டதில்லை. " உண்ணாது நோற்பார் பெரியார் பிறர் சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரிற் பின்" என்றும் தமிழ்மறை பொறுமையின் பெருமையை இனிது விளக்கு கின்றது. நம் தமிழ்ப் பெரியார் இன்றும் பல்லாண்டு வாழ்ந்து தமிழன்னைக்காவன பணிகள் புரிந்து இன்புறச் செந்தமிழ்க் குரவமாகிய தில்லையம்பலவாணர் செம்பொற் சேவடிகளை ஏத்துதும். குறிப்பு : கலைமகள் 14.03.35 13. ராவ் சாஹிப் வெ.ப. சுப்பிரமணிய முதலியாரவர்கள் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா நினைவு மலர் - 1940 (1.5.1937 - விழா நாள்) கூட்டமொத்திருந்த வீரர் அண்ணாமலை நகர், ந.மு.வேங்கடசாமி நாட்டார். திருவாளர் ராவ் சாகிப் சுப்பிரமணிய முதலியாரவர்கள் எண்பதாம் ஆண்டு நிறைவு விழாப் பத்திரம் வரப்பெற்று மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். திரு முதலியாரவர்களுடன் நெருங்கிப் பழகும்பேறு எனக்கு வாய்த்தியது. எனினும் முப்பதாண்டுகளின் முன்தொட்டு அவர்களின் கல்வி அறிவு ஆற்றல் முதலியவைகளை யறிந்திருக்கிறேன். அவர்களியற்றிய சில செய்யுள் நூற்பகுதி களையும் உரைப்பகுதிகளையும் படித்தும் மகிழ்ந்தும் இருக்கிறேன். செய்யுளியற்றல், உரையெழுதுதல், மொழிபெயர்த்தல், சொற் பொழிவாற்றல் என்னும் புலமைக் கூறுகள் பலவும் முதலியாரவர்களிடம் நன்கமைந்துள்ளன. அவர்கள் உரையைப் படிக்குங்கால் அவர்களுடைய நுண்ணறிவும் நடுநிலையும் மனஅமைதியும் அனுபவ நிறைவும் புலப்பட்டு இன்பம் விளைப் பனவாகவுள்ளன. தமிழினிடத்து ஆழ்ந்த பற்றும், அதற்கேற்ற புலமையும், சொல்வளமும் உடையவர்களாய் இருப்பதுடன் முதலியாரவர்கள் என்றும் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்தவர் களாயிருப்பது அவர்கள் வாழ்க்கை முற்போக்கை விரும்புந் தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டாக நிலவும்படி செய்வனவாம். அப்பெரியாருடைய எண்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி மகிழ்வதும், அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதும் தமிழ் மக்கட்குச் சிறந்த கடப்பாடேயாகும். அக்கொண்டாட்டப் பேரவை மகாமகோபாத்யாய தாக்ஷினாத்திய கலாநிதி டாக்டர் வே. சாமிநாதய்யரவர்கள் தலைமையில் நடப்பதே சாலவும் பொருத்தம். ஐயரவர்கள் தமிழ்மொழியைப் பல்லாற்றானும் வளமுறச் செய்து அதற்கு ஓர் தந்தைபோல் விளங்குவதுடன் ஆண்டு அனுபவங்களிலும் மேன்மையுற்றுத் தமிழ் மக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் வீற்றிருப்பவர்கள். தமிழ் முனிவர்க்கும் தமிழ் அறிவுறுத்த செந்தமிழ்க் குரவராகிய செவ்வேளின் திருப்பேரை இரு பெரியோரும் பெற்றிருத்தல் உவகை விளைவிப்பதாகும். அவ்விரு பெரியாரின் கூட்டத்தைக் கண்டுகளிக்கும் தமிழ்ப் புலவர்களுக்கு "கூட்ட மொத்திருந்த வீரர்" என்னும் கம்பர் பாட்டு நினைவிற்கு வராமற் போகாது. 14. டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்கள் (சதாபிசேக வரலாறு - 1936) தமிழ் நாட்டிலுள்ள சங்கங்களாலும், வேறு புலவர் பலராலும் செய்யலாகாத அரிய பணிகளை ஐயரவர்கள் சலியாத ஊக்கமும் உழைப்புங் கொண்டு தனியே அமைதியாகச் செய்து முடித்திருக்கும் திறத்தினை யாவர்தாம் வியந்து போற்றாதிருத்தல் கூடும். ஈடெடுப்பில்லாத மிழ்மொழியின் பீடு வெளிப்படுதற்குக் காரணமாயுள்ள பெரியாரின் (81-ஆவது) பிறப்புத் திருநாளைத் தமிழகத்திலுள்ள பல்திறத்த பெருமக்களும் ஒருங்கு கூடிக் கொண்டாடிப் போற்றும் இவ்வினிய செய்கையானது தமிழ்நாட்டின் எதிர்கால மேன்மைக்குச் சுபபூசகமாகின்றது. தமிழன்னையின் தவப்பெரும் புதல்வரும் தங்கள் தவத் தந்தையாருமாகிய புலவர் பெருமான் பிரம்மஸ்ரீ ஐயரவர்களின் சதாபிசேக முகூர்த்தமானது தமிழ்மக்களனைவர்க்கும் அவரவர் இல்லத்தில் நிகழும் மங்கலவிழாப் போன்று மகிழ்ச்சி விளைப்ப தொன்றாகும். ஐயரவர்கள் தாம் அடைந்துள்ள பெருமைக்கும் புகழுக்கும் காரணமாக வாணாள் முழுதும் சலியாத உழைப்பும் ஊக்கமும் கொண்டு செய்து போந்திருக்கிற தமிழ்ப் பணி களையும், அவற்றால் தமிழகம் அடைந்துள்ள எல்லையில்லாத நன்மைகளையும் தமிழ்மக்கள் ஒவ்வொருவரும் இந்நாளில் நினைவு கூர்ந்து போற்றுங் கடப்பாடுடையராவர். 15. அன்பும் காதலும் நன்மக்களால் எய்தற்பாலவாய உறுதிப்பொருள் நான்கனுள் ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் கூடி நுகரும் இன்பம் ஒன்றாகும். இவ்வின்பிற்குச் சிறந்த காரணமாகிய அன்பு காதல் என்றுங் கூறப்படும். காதலானது மக்கட்கு உள்ளத்தின் சுருக்கம் மெல்ல நெகிழ்ந்து மலர்விப்பது; எப்பொழுதுந் தேன்போல் இனிப்பது; எவ்வகை மாசுகளையும் துடைப்பது; செய்வினைத் திறங்களில் ஊக்கத்தை யெழுப்புவது; இம்மையின்பமேயன்றி மறுமை யின்பமும் பயப்பது; மறமலி யுலகமாகிய வன்கொடும் பாலையில் உழன்று திரியும் மாந்தர்கள் பருகியும் திளைத்தும் வெம்புதலொழியும் இன்ப'd2வூற்றாவது இக்காதலே யாமென்க. ‘ஆக்கி அளித்து அழிக்கும் கந்தழியின் பேருருவே என்றும் ஆன்றோர் கூறுப. பண்டைத் தண்டமிழ் வாணர் பலரும் இக் காதலின்பமாகிய அகப்பொருள் பாரித்துரைத்துப் போந்ததும், பேரின்பக் கடலிற் றிளைத்த மாணிக்கவாசகப் பெருமான் முதலாயினார் அகப்பொருட் கோவை முதலியன பாடியருளினதும், தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் தமது தமிழ் மறையில் இருநூற்றைம்பது குறள் வெண்பாக்களால் இதனை விரித்துரைத்தமைத்ததும் முதலாயின நுனித்துணர்வார்க்கு இதன் சிறப்பு நன்கு புலனாகும். குறிப்பு : செந்தமிழ்ச் செல்வி 1935 சிலம்பு-13, பரல்- 9 பவ- பங்குனி 16. வாகைத் திணை மக்கள் அடைய வேண்டும் உறுதிப் பொருள்களை அகப் பொருள் எனவும், புறப்பொருள் எனவும் பாகுபடுத்துரைப்பது தமிழ் நூன்முறை. இவை அறம், பொருள், இன்பம், வீடு என விரித்துரைக்கவும்படும். அகம் என்பதில் இன்பமும், புறம் என்பதில் அறம் பொருள்களும் அடங்கும். வீடு என்பது அகம், புறம் இரண்டினும் அடக்கிக் கூறப்படும். அகப்பொருள், புறப் பொருள் பற்றிய ஒழுகலாறு முறையே அகத்திணை, புறத்திணை எனப்படும். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை என அகத்திணை ஏழு வகைப்படும். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் எனப் புறத்திணை ஏழு வகைப்படும். குறிஞ்சி, பாலை முதலிய அகத்திணை இல்லறத்திற்குரிய தலைவன் தலைவியரின் கூட்டம், பிரிவு முதலியவற்றையும், வெட்சி, வஞ்சி முதலியபுறத் திணைகள் அறம் பொருள் கருதிய அரசர் முதலாயினாரின் நிரைகோள், பகைமேற் செலவு முதலியவற்றையும் குறிக்கும். மக்கள் புறத்திலே பொருளீட்டுதலும், அறம் புரிதலுமாகிய செய்கையெல்லாம் அகத்தில் இன்பந் துய்க்குஞ் செயலோடு நெருங்கிய தொடர்பும் ஒற்றுமையும் உடையதுவே. அதனாற்றான், ஆசிரியர் தொல்காப்பியனார், "வெட்சி தானே குறிஞ்சியது புறனே" என்றிவ்வாறாகப் புறத்திணை ஏழினையும் ஒவ்வோரகத் திணை யோடும் சார்த்தியுரைப்பாராயினர். ஆயின், அவற்றிற்குள்ள இயைபுகள் இப்பொழுதுள்ள உரைகளினால் முற்றும் தெளிவாக அறியக்கூடவில்லை. புறத்திணைகளில் முன்னுள்ள வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை என்ற நான்கும் போர்ச் செய்திகளாகலின் மறத்திறன் உடையன. அடுத்துள்ள வாகை மறம், அறம் என்னும் இருதிறனு முடையது. " தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தலென்ப" என்பது வாகைத் திணையின் இலக்கணம். இதன் பொருள் கேடில்லாத கோட்பாட்டினையுடைய தத்தமக்குள்ள இயல்பை வேறுபட மிகுதிப்படுத்தல் என்பதாம். எனவே, குலம், நிலை, தொழில் முதலியவற்றால் வேறுபாடுடைய மக்கள் யாவரும் தத்தமக்குரிய பகுதிகளைத் தம் அறிவு ஆண்மை முதலியவற்றால் மேம்படுத்துதல் வாகையாம் என்க. இயல்பல்லாதவற்றை மேற்கொண்டு அவற்றின் மேம்படுதல் வாகையாகாதென்பது "தாவில் கொள்கை" என்பதனாற் பெறப்படும். நச்சினார்க்கினியர், இதற்கு, 'வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தால்' என்று பொருள் கூறி, 'தாவில் கொள்கை யெனவே இரணியனைப் போல வலியானும் வருத்தத்தானும் கூறுவித்துக் கோடல் வாகை யன்றாயிற்று" என்றுரைப்பர். இதனைப் பாலைத்திணையின் புறம் என்பர். ஓதல், காவல் பொருளீட்டல் முதலியன குறித்துத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லுதலாகிய பாலை, அறம், பொருள், இன்பங்கட்கு ஏதுவாயினாற்போல வாகையும் ஆதலானும், பிறவற்றானும் அவ்விரண்டும் ஒற்றுமையுடையனவாம். இனி, 'தத்தம் கூறு' என்பதை விரித்து வாகைத்திணைப் பாகுபடுத்துரைக்கும் தொல்காப்பியச் சூத்திரம், " அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் றேயமும் நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணும் அனைநிலை வகையோ டாங்கெழு வகையில் தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர் என்பது. ஆசிரியர், வகையறுத்தியாக்கப் பெற்ற ஒழுக்கமுடைய பார்ப்பனர் முதலிய நாற்குடியினரை முதற்கண் நிறுவி, ஓர் குடிக்குரியரல்லாத அறிவர், தாபதர் என்போரையும், சொல், பாட்டு, கூத்து முதலியவற்றாற் பொருது வென்றி கொள்ளும் பொருநரையும் பின்னர்க்கூறி, அன்னார் ஒழுக்கம் நிலைக்களமாக வாகை பிறக்கும் என்பது தோன்ற வைத்துள்ளமை காண்க. "கூதிர் வேனில்" என்னும் அடுத்த சூத்திரத்தில் வாகைத் திணையின் துறைகள் மறத்தின் பகுதியாக ஒன்பதும், அறத்தின் பகுதியாக ஒன்பதும் கூறப்பட்டுள்ளன. இத்துறைகள் முற்கூறப் பட்ட பார்ப்பனர் முதலியோர், கூறப்படாத திணை மக்கள், பாணர் முதலிய ஏனையப் பழங்குடிமக்கள் ஆகிய யாவர்க்கும் பொதுவுரிமை யுடையனவே. வென்றி கருதிப் பாசறைக்கட் சென்றிருத்தலும், வென்றுகளம் வேட்டலும், வெற்றிக் களிப்பால் தேர்முன் குரவையாடுதலும் முதலாயின மறத்தின் பாற்படுவன. போர் வென்றியை வாகை என்றலும், அதற்கு வாகை மாலை சூடுதலுண்டென்றலும் பிற்றை நாளிலக்கியங்களிற் பரக்கக் காணப்படும். வென்ற வீரரேயன்றி அவரது படைக்கலமும் வாகைமிலைதலை கூறப்படும். " நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை சூடிய சிலையிராமன்" என்றார் கம்பர். "வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவதெமக்கு வேலை" என முருகக் கடவுளின் வேற்படைக்கு வணக்கங் கூறினார் ஓர் கவிஞர். இனி, அறத்தின் பகுதியாகக் கூறிய துறைகள் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் குறிக்கோளாகும். விழுப்பமுடையனவாகலின், ஒவ்வொருவரும் கருத்தில் இருத்தற் பாலன. மேலைச் சூத்திரத் தோதிய 'பார்ப்பனப் பக்கம்' முதலியவற்றை முதற்கண் ஆராய்ந்து, பின் இவற்றை விளக்கி முடிப்பாம். பார்ப்பனப் பக்கமாவது பார்ப்பனரியல் அரசர் பக்கமாவது அரசரியல். ஏனோர் பக்கமாவது வணிகரியலும், வேளாளரியலும் அறுவகை, ஐவகை. இருமூன்று என்பன அவர்கட்கு விதித்துள்ள தொழில்கள். ஆசிரியர் வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து நூலியற்றினாராகலானும், சில்வகை யெழுத்தின் செய்யுட்டாகிய சூத்திர யாப்பில் இயற்றப்படும் நூலின் (இலக்கணத்தின்)கண் யாவற்றையும் அஞ்சாது கிளந்துரைத்தல் பொருந்தாமையானும், அறுவகை முதலியவற்றின் பெயர்களை இலக்கியம் நோக்கி அறிந்து கொள்ளுமாறு விடுத்தார். பார்ப்பனர் அநத்ணரெனவும் படுவர். அவர்க்குரிய தொழில்கள்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறுமாம்; " ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம் புரி யந்தணர்" (பதிற்றுப் பத்து-24) என இலக்கியத்துள் அவைபெறப்படுதல் காண்க. அவன் அவற்றுள் ஓரோவொன்றைச் செய்தமையும் செய்யுட்களா லறியப்படும். அங்ஙனமே அரசர், வணிகர்,வேளாளர் என்பார்க்குரியனவும் அறியப்படும். அரசர்க்குரிய தொழில்கள் ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டஞ் செய்தல் என்னும் ஐந்துமாம். வணிகர்க்குரியன ஓதல், வேட்டல், ஈதல், உழவு, பசுக் காத்தல், வணிகம் என்னும் ஆறுமாம்; " உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர ஓதி யழல்வழிபட் டோம்பாத வீகையான் ஆதி வணிகர்க் கரசு" (பு. வெ. மாலை) என்பது காண்க. வேளாளர்க்குரியன உழவு, ஏனைத்தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தரல், வேட்டல், ஓதல் என்னும் ஆறுமாம் என்பர் இளம்பூரணர். விருந்தோம்பல் என்பது ஈகையில் அடங்கும். இவ்வாற்றால் ஒதுவித்தல், வேட்பித்தல், ஏற்றல் என்னும் மூன்றும் பார்ப்பனர்க்கும், காத்தல், தண்டஞ் செய்தல் என்னும் இரண்டும் அரசர்க்கும், நிரையோம்பல், வாணிகம் என்னும் இரண்டும் வணிகர்க்கும், பகடு புறந்தரல், உழவு, உழவொழிந்த தொழில் என்னும் மூன்றும் வேளாளர்க்கும் சிறப்புரிமை யுடையன என்பதும், ஓதல், வேட்டல், ஈதல் என்னும் மூன்றும் நாற்பாலாலார்க்கும் பொதுவாவன என்பதும் பெற்றாம். உழவு வணிகர்க்கு முளதேனும் வேளாளர்க்கு, உழவும், வணிகர்க்கு வணிகமும் சிறந்தன வென்பது மரபிலானறியப்படும். இவை யாவும் மரபியலிற் கூறற்பாலவேனும், இவை பற்றி வாகை நிகழ்தலின் ஈண்டுக் கூறி, இவற்றுளடங்காத சிலவற்றை மரபியலிற் கூறினா ரென்க. ஈண்டு "இருமூன்று மரபின் ஏனோர்" என வணிகரையும் வேளாளரையும் ஒருங்கியைத்துக் கூறியது அவ்விருவர்க்கும் வேற்றுமை சிறிதாகலின் என்க. எனவே ஆரிய வருணங்களுள் நான்காம் வருணத்திற்கும் தமிழ் வேளாண் குடிக்கும் யாதும் இயைபின்றென்பது பெற்றாம். இனி, பொதுத் தொழில்களான மூன்றனுள் வேட்டல் யாவர்க்கும் ஒரு பெற்றியதன்றித் திரிபுடையதாகும். காலதேயம் பற்றி மாறுந் தன்மையதுமாம். ஏனையிரண்டுமே யாவரும் எஞ்ஞான்றும் கடனாகக் கொள்ளற்பாலவை. மக்களியற்றும் வினைகளுள் இவ்விரண்டும் போற் சிறந்தன வேறில்லை. பவணந்தி முனிவர் தமது நன்னூற்கண் "ஓதல் ஈதல் ஆதிப் பல்வினை" என இவ்விரண்டையும் கிளந்தோதி, ஏனையவற்றை ‘ஆதி' என்பதனுள் அடக்கினமை இவற்றின் சிறப்பை உளங்கொண்டேயாதல் வேண்டும். இவற்றுள்ளும் ஈகையானது புகழுக்குச் சிறந்த காரண மென்பது. வள்ளுவனார் ஈகையின்பின் புகழை வைத்து, ‘ஈதல் இசைபட வாழ்தல்', ஈவார் மேல் நிற்கும் புகழ்' எனக் கிளந் தோதுதலானும், தொல்காப்பியனார் வாகையின் துறைகூறு மிடத்து ‘இடையில் வண்புகழ்க் கொடைமை' என்றுரைத் தலானும் இனிதறியப்படும். மற்றும், வண்மைபென்பது சிறந்த வீரராயினார்க் குரியதாதலைப் புறப்பாட்டுக்கள் முதலிய வற்றாலறியலாகும். " ஆனாவீகை யடுபோ ரண்ணல்" ‘ பேகன், கொடைமடம் படுத லல்லது படைமடம் படான் பிறர் படைமயக் குறினே’ என வருதல் காண்க. இனி, அறிவன் என்பதற்கு நச்சினார்க்கினியர் முழுதுணர்வுடையோன் எனக்கூறி, அறிவர்க்குக் காட்டாக அகத்தியனார் முதலியோரைக் குறித்தமையே பொருத்தமாகும். இளம்பூரணர் கணிவன் (சோதிடன்) எனக் கூறியது பொருந்துவ தன்று. வெண்பாமாலை யுடையாரும் அறுவன் வாகை என்பதற்கு முக்காலமும் உணரும் பெரியாரியல்பு என்றே கூறி, கணிவனைக் குறித்துக் கணிவன் முல்லை என வேறு துறைகூறிப் போந்தார். நாலிரு வழக்கிற்றாபதப் பக்கம் என்பது தவஞ் செய்வார்க்குரிய எண்வகையியல்பு; " நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடீஇச் சர்சடை தாழச் சுடரோம்பி - ஊரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி" (பு.வெ.மாலை) என்பது அவ்வெட்டனையும் உணர்த்தும். ஆசிரியர் நச்சினார்க் கினியர் சிறிது வேறுபட உரைத்துள்ளதனை அவ்வுரை நோக்கி அறிக. பாலறி மரபிற் பொருநர் என்பார் சொற்போர், இசைப்போர் முதலியவற்றில் வென்றி யெய்துவோராவர். இனி, அறத்தின் பகுதியாகக் கூறிய துறை ஒன்பதனையும் நோக்குதும்: 1. "பகட்டினானு மாவினானும், துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கம்" - இளம்பூரணர். ஆவினானும் எனப் பிரித்து, இது, பகடு புறந்தரும் வேளாளரையும், நிரையோம்பும் வணிகரையும் கறிக்குமெனக் கொண்டார். நச்சினார்க்கினியர் மாவினானும் எனப் பிரித்து, உழவஞ்சாமையும், பகையஞ்சாமையுமாகிய வெற்றியைக் குறிக்குமென்றனர். 2. "கட்டில் நீத்த பால்" - இதற்கு அரசன் அரசவுரிமையைக் கைவிட்ட பகுதி என்றுரைத்து, அரசு துறந்த வென்றிக்குப் பரதனையும் பார்த்தனையும் காட்டினர் நச்சினார்க்கினியர். இளம்பூரணர் 'கடிமனை நீத்த பால்' எனப் பாடங்கொண்டு, பிறர்மனை நயவாமையெனப் பொருள் கொண்டார். இது 'நட்டமையொழுக்கம்' என மேல் வருவதனுள் அடங்குதலின் 'கட்டில் நீத்த' என்பது பொருத்தமாகத் தோன்றுகிறது. 3. "எட்டு வகை நுதலிய அவையம்" - இஃது அவைக்கான் இருக்கும் சான்றோரியல்பு கூறுகின்றது. புறப்பொருள் வெண்பா மாலை அவைய முல்லை, சால்பு முல்லை என இரு துறை கொண்டு, முன்னதற்கு "நவை நீங்க நடுவு கூறும், அவை மாந்தர் இயல்பு" என்றும், பின்னதற்கு, "சான்றோர்தம் சால்புகு" என்றும் கூறுகின்றது. இவ்விரண்டும் 'எட்டு வகை நுதலிய அவையம்' என்பதில் அடங்கும். எண் வகைக் குணத்தினையும் உருவகஞ் செய்து சான்றோரியல்பு கூறும் பின்வரும் அழகிய ஆசிரிய மாணவர் செய்யுள் அறிந்து இன்புறற் பாலது: " குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையிற் காதலின் பத்துட் டங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாஅ வின்மையென் றிருபெரு நிதியமும் ஒருதா மீட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை உடனமர் இருக்கை யொருநாட் பெறுமெனிற் பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் பலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்ப இம் மலர்தலை யுலகத்துக் கொட்டும் பிறப்பே" 4. "கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை" - உண்மை நுல்களாற் கட்டப்பட்ட ஒழுக்கத்தோடு பொருந்திய காட்சி என்றபடி வள்ளுவனார் இல்லற வியலிற் கூறிய அடக்கமுடைமை, ஒழுக்க முடைமை, பிறன்மனை நயவாமை, அழுக்காறாமை, வெஃகாமை, தீவினையச்சம் முதலியன இதன்கண் அடங்கும். 5. "இடையில் வண்புகழ்க் கொடைமை" - இடையீடில்லாத வண்புகழைப் பயக்கும் கொடைத்தன்மை என்றபடி ‘உலக முழுதும் பிறர் புகழ் வாராமைத் தன்புகழ் பரத்தலின் இடையில் என்றார்' எனவும், ‘இக்கொடைப் புகழுடையான் மூப்புப் பிணி சாக்காட்டுக்கு அஞ்சாமையின் அது வாகையாம்' எனவும் நச்சினார்க்கினியர் உரைத்தவை விளங்கொளிற்பாலன. 6. "பிழைத்தோர்த் தாங்குங் காவல்" - தம்மைப் பிழைத் தோரைப் பொறுக்கும் பாதுகாப்பு என்றவாறு. பிழை செய் தோர்க்கு இம்மையும் மறுமையும் ஏதம் வராமற் காத்தலின இஃது ஏனையோரின் வெற்றியாயிற்று என்பர். கொடையும், பொறையும் இல்லறமாயினும் சிறப்பு நோக்கி வேறு கூறினார். 7. "பொருளொடு புணர்ந்த பக்கம்" மெய்ம்மையுடன் கூடிய இயல்பு; ஆவது மெய்யுணர்வு. இதற்கு அரசர்க்குரிய ஆறங்கங் களையும் புதல்வர்ப் பேற்றையும் பொருளாகக் கொள்வது பொருத்தமுடைத்தன்று. 8. "அருளொடு புணர்ந்த அகற்சி" அருளுடைமையோடு பொருந்திய துறவறம் என்றபடி. 'அருளொடு புணர்தலாவது ஓருயிர்க்கு இடர் வந்துழித் தன்னுயிரைக் கொடுத்துக் காத்தலும், அதன் வருத்தம் தனதாக வருந்துதலும், பொய்யாமை, கள்ளாமை முதலியனவுமாம் என்றார் நச்சினார்க்கினியர். 9. "காமம் நீத்த பால்" - எப்பொருள்களினும் பற்றற்ற பகுதி. இறுதிக்கட் கூறிய மூன்றும் திருக்குறளிலுள்ள மெய் யுணர்வு, துறவு, அவாவறுத்தல் என்னும் அதிகாரங்களின் பொருண்மையுடையன. இங்ஙனம் தொல்காப்பியர் கருத்தும் வள்ளுவர் கருத்தும் ஒருமையுறும் இடங்கள் பல. இதுகாறும், வாகையாவது மாந்தர் தத்தம் இயல்பினை மிகுதிப்படுத்தலாம் என்பதும், அது மறம் அறம் என இரு திறப்படும் என்பதும், அவற்றின் பகுதிகள் இவை யென்பதும் ஒருவாறு உரைக்கப் பெற்றன. அறத்தின் பகுதியாயவற்றுள் கொடை வென்றி ஒன்றெனக் கண்டோம். தமிழ் நாட்டிலே இஞ்ஞான்று இடையில் வண்புகழ்க் கொடைமையால் வாகை சூடியவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவியோ ராகிய ராசா சர். அண்ணாமலைச் செட்டியாரவர்களே யாவர். அவர் குடும்பத்தினரும் அவரும் இயற்றிய பிறவறங்களும் உவப்பில்லனவே. எனினும் கல்வியின் பொருட்டு அவர் அளித்த இக்கொடையாவற்றினும் விஞ்சிய தொன்றாய் வாகைக் குரியதாயிற்று. வாணிக வாகைக்கு உதாரணமாகக் காட்டப் பெற்றுள்ளதோர் செய்யுள் ஈண்டைக்கு மிகவும் இயைபுடையது அஃது, " ஈட்டிய தெல்லாம் இதன் பொருட்டென்பதே காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டோறும் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார் வணிகர் தாமரையும் சுங்கும் போல் தந்து" என்பது. தாமரை - பதுமநிதி. சங்கு - சங்கநிதி. அண்ணாமலை வள்ளலின் அறுபதாம் ஆண்டு நிறைவெய்துதல் கண்டு அனைவரும் களிகவர்வர்; கொண்டாடுவர்; வாழ்த்தெடுப்பர். யாமும் அவரது நெடிய நல்வாழ்வு கருதி, திருச்சிற்றம்பல முடையார் திருக்கையா லெழுதிய திருப்பாட்டினைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம். " காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பானரொக்கல் சீரணி சிந்தாமணி அணிதில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தக்கோர்தம் சங்கநிதி விதிசேர் ஊரணி வற்றவர்க் கூரன்மற்றி யாவர்க்கும் ஊதியமே" 17.வைகறை நிiவு (நிலைமண்டில ஆசிரியப்பா) மாணவ நண்பர்கள்காள்! மாணவ நண்பர்காள்!! பேணியான் கூறுவ பெட்புடன் கேண்மோ, மார்கழி பதினெட் டிரவுகழி வைகறைச் சீர்கெழு பொழுதிற் றுயிலொரீ இத் திகழும் தெள்ளிய வுணர்வுடன் சிந்தித் திடுவேற் 5 குள்ளந் தன்னி லுதித்த நினைவுகள் பற்பல வாமவை பாங்குறக் கிளக்குவல்; சொற்படு பதினைந் தாண்டுமுன் றொடங்கிக் கல்லூரி யிற்றமிழ்க் கணக்காய னாகிப் பல்லோரு மகிழப் பண்புடன் விரிவுரை 10 நிகழ்த்திவரு கின்றேன் நீர்மையில் முன் பின் மிகப்பெரு வேற்றுமை விளையுமா றென்னே! முன்னெலா மாணவர்க் காசிரிய னன்றி அன்னவர்க் கமைந்த தோழனு மாவேன்; நம்பியா ரூரர் தம்பிரான் றோழர் 15 என்பது தெரிவார் இம்பரிற் றந்தையர் மக்கள், ஆசிரியர் மாணவர், கணவர் தக்க மனைவியர், அரசர்தம் குடிகள் தாமுறு தோழமை தகுதியன் றென்னார்; ஏமுற முன்னை மாணவ ரிற்பலர் 20 கண்ணன் புல்லாங் குழலிசை கேட்ட வண்ண நல்லா னினமென மகிழ்ந்தே எற்சூழ் தருவர்; யானுமன் னாரும் அற்புடன் கூடி யளவளா வுறுவேம்; யானவ ரிருக்கை யெய்துவ; லன்னார் 25 ஆனவகை யென்னி லடைந்து காண்குறுவர்; சேர்ந்துண்டி கொள்வேம், சேர்ந்து விளையாடுவேம்; நேர்ந்திடு மின்ப துன்பங்க ளெல்லாம் ஒருவர்க் கொருவ ருசாவுவம், அவருள் மருவு நுண்ணறி வாளரும் யானும் 30 வான நூல் எண்ணூல் மன்னுமெய் யுணர்வுநூல் ஏனவும் பேசி யிருநிலந் தன்னில் ‘நுண்ண றிவினாரொடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே யொக்கும் விழைவிற் றால்’ எனும் தொல்லோர் கட்டுரைச் சுவை தெரிந்திடுவம்; 35 பல்லா றிங்ஙன் பயன் றுய்த் திடுங்காற் சிலர் தம தூர்க்குச் சின்னாட் பிரியினும் அலமந் துள்ள மனலிடை மெழுகாய்க் கண்ணீ ருகுத்தலுங் கடவம்; மற் றவருள் கற்குந் துறைவிடுத் தகன்றதற் பின்னும் 40 எற்குறு நண்பரா யியைந்துளார் பலரால்; மற்றிந் நாளின் வகைமையோ வென்னில், மாணவ ரென்பால் மதிப்பு நனியுடையர், காணவு மடக்கங் காட்டுவர், மணையில் உடனிருப் பதனுக் கஞ்சி யொடுங்குவர், 45 தொடர்பு வேறிலர்; சொற்றிடில் யானும் பள்ளியி லவர்க்குப் பல்கலைக் கழகம் தெள்ளி விதித்த நூல் செப்புத லன்றிப் பிறிது தொடர்பிலாப் பெற்றிய னாவேன்; கெழுதகை யன்பும் கேண்மையும் உசாவும் 50 பழுதிலா இன்பும் பிரிவினிற் பரிவும் இன்னயாங் கொளித்தன? இவ்வகை நிலைமை என்னவா றெய்தின? இளமைதீர் திறத்தின் பெற்றிமை யாலோ? பெருவினைச் செறிவின் உற்றிட லானோ? ஒண்பொருள் கல்வியிற் 55 பெருமைசால் சில்லோர் பயிற்சியும் பிறரால் வருசிறு புகழ்ச்சியும் வாய்த்தமை யாலோ? ஒன்றுந் தேறேன்; உவைகளா லென்னின், ஆண்டின் முதிர்வும் அழிவிலா முயற்சியும் யாண்டும் பரக்கும் ஈடெடுப் பில்லா 60 விழுத்தகு புகழும் மேவியோர் சிலர் தாம் பழுத்தஅன் புடைய ராகுநற் பான்மை காண்டலின், அவையுங் காரண மாகா; எவ்வாறாயினு மன்பினை யிழந்தே ஒவ்வாத் துயரினுக் கோரிலக் கானேன்; 65 நல்லொழுக் கருகினன், நலந்திகழ் தூய்மை ஒல்லுமா றில்லேன், நோன்புக ளுஞற்றேன், மெய்யுணர் வுறுகிலன், மேதகு பூசனை செய்யுமா றறியேன், ஆயினும் சீர்த்த அன்பே யமையுமென் றிருந்தேன், அதுவும் 70 வன்பே யாகி முடிதலின், வள்ளுவர் ‘அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம் ‘பெனும் படியான் உயிரிலியானேன் ஓ!ஓ! கொடிதே!! அயர்வுறு மென்னுளம்; ஆற்றகில் லேனே! 75 அண்மையிற் பயிலு மறிவுசா லிளைஞர் தம்வயி னன்பு தான்பெறா தேனுக் கெவ்வுயிர் மாட்டுமன் பெங்ஙனம் கூடும்? உயிர்கள்பா லன்பிலா வுறுதியில் லேற்கு மயர்வறு மறையும் மாற்றமு மனனும் 80 தீண்டுதற் கரிய செம்பொரு ளின்பால் வேண் மன்பு விளையுமா றெளிதோ? ஆயினு மப்பொரு ளன்புரு வாகலின் தாயினுஞ் சிறந்த தனிப்பொரு ளதுவே வாய்மைசா லன்பை வழங்குமென் றமைவேன்; 85 இன்னவே யென்னுளந் துன்னிய நினைவுகள்; மன்னிய சீர்பெறு மாணவ நண்பர்காள்! நிவிர்தா மன்பின் நிலைக்கள மாகித் தாவில் பழம்பொருள் தாண்மலர் சூடி அறிவுந் திருவு மாற்றலு மெய்தி 90 நெறிமையின் வாழியர் நீணிலத் துயர்ந்தே. 18. உழுதொழில் உலகை ஆளும் அரசன் முதல் காட்டிலே திரியும் வேட்டுவன் வரையில் யாவர்க்கும் இன்றியமையாதன உணவும், உடையும் ஆம். சங்கப்புலவராகிய நக்கீரர், “ தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி உடுப்பவை யிரண்டே” என்று புறப் பாட்டிலே புகன்று வைத்தனர். ஒளவை யாரும் தமது நீதி நூலில், “உண்பது நாழி யுடுப்பது நான்கு முழம்” என்று இயம்பினார். உணவுக்கும் உடைக்கும் இன்றியமையாத மூலப் பொருள் கள் உழுதொழிலாற் கிடைப்பன. மக்கள் எஞ்ஞான்று உழுது பயிர் செய்யத் தொடங்கினரோ அஞ்ஞான்றே நாகரிகம் கால் கொள்ளப் பெறுவதாயிற்று. தமிழ் நாட்டிலே இத்தொழில் என்று தொடங்கியதென இயம்புதல் அரிது. மிகப் பழைய நூலாகிய தொல்காப்பியத்தில் உழுத்தொழில் கூறப்பட்டுள்ளது. மற்றும் அந்நூலிலே திணைகள் வகுத்து, அவற்றின்கண் உண்டாம் கருப்பொருள்கள் இவையெனத் தெரிவிக்குமிடத்து உணவு, மரம், பூ என்பனவும். மக்கள் செய்தொழிலும் கருப்பொருளாகக் கணிக்கப் பட்டுள்ளன. மலைநெல், தினை, மூங்கிலரிசி என்பன குறிஞ்சியிலும், வரகு, சாமை, முதிரை என்பன முல்லையிலும் , செந்நெல், வெண்ணெல் என்பன மருதத்திலும் விளையும் உணவுப் பொருள்களாம். கரும்பும் மருதத்திற் குரியது. வேங்கை, சந்தனம், அகில், தேக்கு முதலியன குறிஞ்சி நிலத்திலும், உழிஞை, பாலை, ஓமை, இருப்பை முதலியன பாலை நிலத்திலும், கொன்றை, காயா, குருந்தம் முதலியன முல்லை நிலத்திலும், காஞ்சி, வஞ்சி, மருதம் முதலியன மருத நிலத்திலும், கண்டல், புன்னை, ஞாழல் முதலியன நெய்தல் நிலத்திலும் வளரும் மரங்களாம். இங்ஙனம் ஒவ்வொரு நிலத்திற்கே உரியவாகாமல், இரண்டு மூன்று நிலங்களில் வளர்ந்து பயன்றரத்தக்க மரம் முதலியனவும் உள்ளன. வாழை மருதத்திலும், குறிஞ்சியினும் பயிராதற்குரியது. தெங்கு மருதம் நெய்தல் இரண்டினும் பயன்றரும். மாமரம் மருதம், முல்லை, குறிஞ்சி என்னும் மூன்று நிலத்தினும் தளிர்க்கும் பழைய சங்கப்புலவர்கள் இவ்வியல்பினை நன்கறிந்து திணை வளங் களைக் கூறுமிடத்து அவ்வத்திணைக்குரிய பொருள்களையே கூறியிருக்கின்றனர். எனவே, குறிஞ்சி, பாலை,முல்லை, மருதம், நெய்தல் என்னும் நிலங்களில் இன்னின்ன பயிர்களும், மரங்களும், மலர் தரும் செடி கொடி முதலியனவும் பயிராகும் என்பதனைப் பண்டைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பதும், அறிந்து அம்முறையே வேளாண்மை செய்து வந்தனர் என்பதும் புலனாகின்றன. இற்றை நாள் அரசியலார் விவசாயக் கல்லூரிகளால் இன்னமும் பொது மக்கள் அறியவியலாத இத்தகைய வேளாண்மை நுணுக்கங்களை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளின் முன் தமிழ்மக்கள் அறிந் திருந்தனர் என்பது வியப்பும் மகிழ்ச்சியும் விளைக்குஞ் செய்தியாம் நாட்டின் இலக்கணங் கூறவந்த தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் தொடக்கத்திலேயே ‘தள்ளாவிளையுளும்’ என வேளாண்மையைக் குறிப்பிட்டுப் பின்னரும் அதனை வற்புறுத்துவாராயினர். உணவுப் பொருளுக்கு வேற்று நாட்டை எதிர்நோக்கும் நாடு என்றேனும் பகைவர் முற்றுகையாலோ, பிற தடையாலோ அதனைப் பெற இயலாவிடின் அழிந் தொழிவது திண்ணம். ஆதலின் அக்குறைபாடில்லாத நாட்டினையே ‘நாடு’ எனச் சிறப்பித்துச் சொல்வர் ஆன்றோர். நாட்டில் விளைவு மிகுதற்கு நிலத்தின் நன்மையும், உழவர் முயற்சியும் காரண மாகும். ஆதலின் உழுதொழிலையும், உழவரையும் தமிழ்மக்கள் பெரிதும் பாராட்டிப் போற்றி வந்தனர். “ சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” “ உழுவா ருலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை யெல்லாம் பொறுத்து’ என்றிவ்வாறாக வள்ளுவனார் தெள்ளியுரைத்த பாக்கள் அனைத்தையும் பன்முறை சிந்தித்து உண்மை யுணர்தல் வேண்டும். கல்வியிற் பெரியராய கம்பர் இதனைச் சிறப்பித்தற் கென்றே ‘ஏரெழுபது’ என ஒரு நூலியற்றினர். ஒளவையார் சிறுவர் உள்ளத்தில் இதனைப் பதிய வைக்குங் கருத்துடன், “ பருவத்தே பயிர் செய்” “ நெற்பயிர் விளை” “ பூமி திருத்தியுண்” எனவும். “ சீரைத்தேடின் ஏரைத்தேடு” “ தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது” “ மேழிச் செல்வம் கோழை படாது” எனவும் முறையே ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்னும் நூற்களிற் கூறி யுள்ளனர். முற்காலத்திருந்த தமிழ் வேந்தர்களும் வேளாண்மையின் இன்றியமையாமையை உணர்ந்து காடு கொன்று நாடாக்கினர்; ஏரி, குளங்களைத் தோண்டுவித்தனர்; யாற்றினின்று கிளை களும், கண்ணாறுகளும் வெட்டுவித்தனர்; அணைகளும், மதகு களும், கட்டுவித்தனர்; இங்ஙனம் உழவுக்குரிய வசதிகளைப் பெருக்கியதன்றி, விளைபொருள்களில் ஆறில் ஒரு கூறே இறையாகப் பெற்றும், அதனையும் தள்ள வேண்டிய வழித் தள்ளியும் பலவாறு உழவர் குடியைப் புரந்து வந்தனர். அக் காலத்திருந்த புலவர்களும் அரசர்களை நெருங்கி வேளாண் குடியைப் பாதுகாக்கும் கடப்பாட்டினை அவர்க்கு எடுத்துக் காட்டித் தெருட்டினர். பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய ஒரு புலவர் ‘தம் நாட்டிலே நீர் நிலைகளைப் பெருக்கிய அரசரே உடம்பும் உயிரும் படைத்தோராவர்; அவரே பகைவரை வெல்லவும், மறுமை யின்பத்தை நுகரவும், புகழை நிறுத்தவும் வல்லவராவர்’ என்றியம்பினார். சோழன் கிள்ளிவளவனைப் பாடிய ஒருவர், “ வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே” என்றும். “ பகடு புறந்தருநர் பாரம் ஒம்பிக் குடிபுறந் தருகுவை யாயின் நின் அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே” என்றும் அறிவுறுத்தனர். பாண்டியன் அறிவுடை நம்பியை நோக்கிப் பிசிராந்தை யார் என்னும் புலவர் ‘அறிவுடைய அரசன் இறை கொள்ளும் நெறியை அறிந்து கொள்ளின், அவனது நாடு கோடி பொருளை ஈட்டிக் கொடுத்துத் தானும் மிகவும் தழைக்கும்; அவன் அறிவால் மெல்லியனாகி, நாடோறும் வரிசையறியாத ஆர வாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி, அன்புகெடக் கொள்ளும் பொருளை விரும்பின் அவனும் உண்ணப் பெறான் உலகமும் கெடும்’ என்று உரைத்தருளினர். இவ்வாறு புலவர்கள் கூறும் அறிவுரையைச் செவி மடுத்தும், நல்லமைச்சரோடு கூடியும் தமிழ் வேந்தர்கள் உழவர்க்கு உதவிசெய்து உழுதொழிலை வளர்த்து வந்தமையால் வேளாண்மை வளம் பெற்றது. ‘வேலியாயிரம் விளையுட்டாக’ என்ற படி ஒரு வேலி நிலம் ஆயிரக்கலம் விளைவுடையதாயிற்று. மக்கள் பசியின்றி வாழ்ந்து பல நலங்களுக்கும் உரியராயினர். உழவர்கள் நிலத்தின் கிழவராயிருந்தனர்; அதனால், கிழார் என்ற பெயரும் அவர்க்கு உளதாயிற்று. இங்ஙனம் முன்னாளில் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்று புகழும்படி பெருமிதமுடன் உரிமை வாழ்க்கை வாழ்ந்து வந்த வேளாண் மாந்தர் இப்பொழுது எழுச்சியின்றி உரங் குன்றி நிற்கின்றனர்; உழுதொழில் வெறுக்கத்தக்க நிலையை அடைந் துள்ளது. இதன் காரணம் ஆராய்தற்குரியது. பண்டை நாளிலே இந்நாட்டில் வேளாண்மை செழித் திருந்தது போன்றே பலவகைக் கைத்தொழில்களும், வாணிக மும் மேன்மையுற்றிருந்தன. கைத் தொழில்களுள் நெய்தற் றொழில் எய்தியிருந்த மேன்மையாவர்க்கும் இறும் பூது விளைப்பதொன்றாம். பழைய தமிழிலக்கியங்களை ஆராயின் இவ்வுண்மை புலனாம். பழைய நாளில் இந்நாட்டுக்கு வந்து சென்ற யவனாசிரியர்களாகிய தாலமி, பிளைனி, பெரிப்புளூஸ் முதலானவர்கள் எழுதியுள்ள குறிப்புக்களாலும் இதனை நன்கு அறியலாம். இந்நாட்டின் விளை பொருள்களும் செய்பொருள் களும் வேற்று நாடுகளில் மிகுதியான விலைக்கு விற்கப்பட்டமை யால் இந்நாட்டின் செல்வம் மேன்மேற் பெருகுவதாயிற்று. வாழ்க்கைக்கு வேண்டும் இன்றியமையாத பொருள்கட்குப் பிற நாட்டினர் கையை எதிர்பார்க்காமலே இங்குள்ளவர்கள் வாழ்ந்து வந்தனர். உழுதொழில் செய்வார் தம் விளை பொருள் களைக் கொண்டே வேண்டும் பண்டங்களை மலிவாகப் பெற்று வாழ்க்கை நடாத்தினர்; விருந்தோம்பல் முதலிய அறங்களை மேற்கொண்டு ஏனையோர்க்கும் உதவி புரிந்து வந்தனர். அதனால் உழுதொழிலுக்கே தனியாக பெருமை இருந்துவந்தது. இந்நாளிலோ இந்நாட்டுக் கைத்தொழில் வாணிக மெல்லாம் நசித்துவிட்டமையால், உடை முதலிய இன்றியமையாத பொருள் கட்கும் பிறநாட்டுத் தொழிலாளரையும், வாணிகரையும் எதிர் நோக்க வேண்டியதாயிற்று. வேற்று நாட்டவர்களின் கூட்டுற வால் வாழ்க்கையின் இயல்புகளும் மாறிச் செலவினை மிகுவித்து வருகிறது. மகளிர் தம் கையாற் செய்துவந்த அடுக்களைத் தொழில்களையும் இயந்திரங்கள் கவர்ந்து கொண்டன. ஊறுகறிகளும், தின்பண்டங்களும் கூட வேற்று நாட்டிலிருந்து வருவிக்கப்படுகின்றன. இங்ஙனம் மக்களின் முயற்சி சுருங்கவும், செலவு பெருகவும் பல வழிகள் உண்டாயின. இந்நிலையில் வேளாண்மை செய் வோர்க்கு வரிப்பளுவும் நாளுக்கு நாள் மிகுவதாயிற்று. அவர்கள் வரி செலுத்தி எஞ்சிய பொருள் கொண்டு வாழ்க்கை நடத்த இயலாதவராகி விட்டனர். அதனால் உழுதொழிலுக்கும் போதியவளவு செலவு செய்ய ஆற்றல் அற்றனர். இயல்பிலே உரங்குன்றி வருகின்ற நிலங்கள் தக்கவாறு பண்படுத்தப் படாமையாலும் விளைவு குறைவனவாயின. அன்னோர் என் செய்வர்? மேலும் மேலும் கடன் வாங்குவாராயினர்; நிலங்களை விற்பாராயினர். இப்பொழுதுள்ள நிலங்களெல்லாம் வாங்கு வார் இன்மையின் விற்கப்படாதவையே தவிர வேறில்லை. இந்நிலையில் விட்டிருப்பின் சின்னாளில் உழுதொழில் என்பது ஒழிந்துவிடும். தேச நலத்திற் கருத்துடைய பெருமக்கள் இப்பொழுதே இதற்கு ஏற்ற செயல்முறைகளைக் கையாண்டு, இத்தொழிலைச் சிதையவிடாது பாதுகாத்தல் வேண்டும். இந்நோய்க்கு முதலாவதாகச் செய்யவேண்டிய மருத் துவம் நிலங்களின் பண்புகளை உள்ளவாறு சோதித்துணர்ந்து, நிலையான குறைந்த வரியை விதித்தலாகும். குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்தல், வேளாண்மை நுட்பங்களை யாவரும் நன்கு அறியும் படி செய்தல், முதலியன. அடுத்துச் செய்தற்குரியன. இவை ஓரளவு செய்யப்பட்டுவரினும், இன்னும் மிகுதியாகவும் விரைவாகவும் செய்யப்பட வேண்டும். மற்று, கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர்களும் உழுதொழில் செய்ய முற்பட்டு, தொழில் செய்வதைக் குறைவாக மதிக்கும் எண்ணத்தை மாற்றுதல் வேண்டும். இத்தகைய செயல்களில் அரசாங்கத்தினரும் நாட்டு நன்மக்களும் கருத்து வைத்தால் நாடு நலம் பெறும். 19. பழந்தமிழ் மக்களின் சமயநிலை தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளின் முன்பே உயிர் உடல்களை வெவ்வேறாக உணர்ந்திருந்தனர் என்பது தமிழ் எழுத்துக்களுக்கு உயிர் என்றும், மெய் என்றும் பெயரிட்டிருத் தலானே பெறப்படும். எவ்வளவு பழங்காலத்திற் சென்று நோக்கினும் தமிழர்கள் உலகம், உயிர், கடவுள் என்னும் மூன்று பொருள்களையும் உணர்ந்திருந்தமையோடு, உலகம் ஐம்பூதங் களாலாயதென்றும், உயிர்கள் வினைக்கட்டுடையன என்றும், கடவுள் வினைக்கட்டில்லாதவர் என்றும் அறிந்திருந்தனர் என்பது புலனாகின்றது. மிக்க பழமை வாய்ந்ததாகிய தொல் காப்பியத்தில், “ காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம்” எனவும், “ நிலத்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம்” எனவும், “ வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்” எனவும் கூறப் பட்டிருத்தல் காண்க. மற்றும் அதிலே கடவுள் என்னும் பெயரும், கடவுளை வாழ்த்துதலும் கூறியிருப்ப தினின்று பரம்பொருளானது எல்லாவற்றையும் கடந்து நிற்கும் இயல்பினதென்பதும் அதனை நினைந்து வாழ்த்தி வழிபடுதலே உயிர்கள் கட்டினின்றும் நீங்கி இன்புறுதற்குரிய நெறி என்பதும் அவர்கள் அறித்திருந்தமை போதரும். இயல்பாகவே கட்டின் மையும், முற்றுணர்வும், வரம்பிலின்பமும் உடைய அம் மெய்ப் பொருளையே பல்வேறு காலங்களில் பற்பல தேயத்தினுமுள்ள மாந்தர்கள் தாம்தாம் அறிந்தவாறு வெவ்வேறு பெயரானும், வெவ்வேறு நெறியானும் வழிபட்டு வருகின்றனர். தமிழ் நாட்டிலே குறிஞ்சிநில மக்கட்கு முருகக் கடவுளும், முல்லைநில மக்கட்குத் திருமாலும், மருதநில மக்கட்கு இந்திரனும், நெய்தல்நில மக்கட்கு வருணனும் தெய்வங்கள் எனத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. திணைப்பிரிவும், திணை மக்கட் பிரிவும் இயற்கையானவையே எனினும், திணைகட்குத் தெய்வ அடைவு ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளின் முன்பு ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. கண்ணப்பிரான் ஆயர்பாடியில் வளர்ந்து ஆயர்களுடன் சேர்ந்து ஆவினம் மேய்த்தல் முதலிய விளையாடல்களைக் செய்து போந்த பின்னரே முல்லை மக்களிடத்து மாயோன் வழிபாடு சிறந்து விளங்கிற்று என்னலாம். ஆரிய வேதங்களில் மிகுத்துக் கூறப் படும் இந்திரன் வழிபாடும் வருணன் வழிபாடும் அக்காலத் திற்றான் தமிழர்களாலே கைக்கொள்ளப் பட்டிருக்க வேண்டும். முருகன் வழிபாடு அங்ஙனம் இடையில் உண்டாயதென நினைக்கக் காரணமில்லை. இனி, பண்டைத் தமிழ இலக்கியங் களில் சிறப்பாகக் கூறப்படும் கடவுளர் நால்வர். நக்கீரர் பாடிய 56-ம் புறப்பாட்டிலே இடபக்கொடியும் கணிச்சிப் படையும் மணிமிடறும் உடைய சிவபெருமானும், வால்வளை மேனியும் கலப்பைப் படையும் பனைக்கொடியும் உடைய பலராமனும், நீலமணி யொக்கும் மேனியும் கலுழக்கொடியும் உடைய கண்ணனும், மயிலாகிய கொடியும் மயிலூர்தியும் உடைய முருகவேளும் முறையே கூறப்பெற்றுளர். அதில், “ ஞாலங் காக்கும் கால முன்பின் தோலா நல்லிசை நால்வர்” என இவர்கள் உலகத்தைப் புரப்போராகக் கூறியிருப்பதும் சிந்திக்கற்பாலது. கபிலர் பாடிய இன்னாநாற்பதிலும், “ முக்கட் பகவன் அடிதொழா தார்க்கின்னா பொற்பனை வெள்ளையை உள்ளா தொழுகின்னா சக்கரத் தானை மறப்பின்னா ஆங்கின்னா சத்தியான் றாடொழா தார்க்கு” என இந்நால்வரும் இம்முறையே கூறப்பெற்றனர். சிலப்பதிகாரம் இந்திர விழவூரெடுத்த காதையில், “ பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும்” எனவும், ஊர்காண் காதையில், “ நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்” எனவும் காவிரிப்பூம் பட்டினத்திலும், மதுரையிலும் இந்நான்கு தேவர்களின் கோயில்கள் இருந்தனவாக முறையே கூறப் பெற்றுள. இவற்றில் நால்வரின் முறை முற்கூறிய வாறன்றிச் சிறிது பிறழ்ந்துளது. எனினும், யாண்டும் சிவபெருமானே முதலில் வைத்துக் கூறப்படுகின்றனர் அன்றியும். அவர் பிறவா யாக்கைப் பெரியோன் எனவும் பகவன் எனவும், இறையோன் எனவும், தலைமை தோன்றக் கூறப்படுதலும் சிந்திக்கற்பாலது. வேறிடங்களில் இன்னும் வெளிப்படையாகவும் சிவபிரானுக்கு முதன்மை கூறப்பெற்றுளது. “ நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவாள் நெடியோன் தலை வனாக மாசற விளங்கிய யாக்கையர்” என மாங்குடி மருதனார் ‘மதுரைக் காஞ்சி யிலும், “ நுதல்விழி நாட்டந் திறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக” எனக் கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலையிலும் கூறி யிருத்தல் நோக்குக. இவ்வாற்றால், தொன்று தொட்டுத் தமிழ் மக்கள் முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்டு வந்த தெய்வம் சிவபெருமானே என்பது வெள்ளிடை மலைபோல் தெள்ளிதின் விளங்கும். பிற் காலத்துச் சமணவாசிரியர் முதலாயினாரும் தமிழ் வழக்கின் இவ்வுண்மை யுணர்ந்தே தம் நூல்களில் பல கடவுளரையும் கூறுமிடத்துச் சிவபெருமானை முதற் கண் வைத்துக் கூறிப் போந்தனர். நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் முதலிய உரையாசிரியன்மாரும் .இந்நெறி பிழையாமலே உரை வரைவாராயினர். இங்ஙனமாயினும், பண்டைத் தமிழ் மக்கள் திருமாலிடத்தும் செவ்வேளிடத்தும் நிறைந்த அன்புடையராகவே விளங்கினர். இன்னோரையும் உலகங்காக்கும் கடவுளராகப் போற்றிப் புகழ்ந்தனரேயன்றி ஒரு சிறிதும் குறைவுபடக் கூறினாரல்லர். மற்றும் தொகை நூல் களின் கடவுள் வாழ்த்திலும், பரிபாடலினும் சிவபிரானோடு வேற்றுமையில்லாத முதற் றெய்வங்களாகவே இவர்கள் பரவப்படுகின்றனர். இன்னும், சிவ வழிபாட்டினும் செவ்வேள் வழிபாடு விஞ்சியிருந்ததெனக் கூறுதலும் சாலும். பத்துப் பாட்டில் ஒரு பாட்டும் (திருமுருகாற்றுப் படையும்) பரிபாடலின் முப்பத்தொரு பாட்டும் முருகப்பிரானுக்கு உரியவாயிருத்தலே இவ்வுண்மையை விளக்கும்; முருகவேள் எழுந்தருளி யிருக்கும் திருப்பதிகள் பல சங்கச் செய்யுட்களிற் பயின்றிருத்தலும் அதற்குச் சான்றாகும். திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம் முதலிய திருப்பதிகளைத் திருமுருகாற்றுப் படை கூறுகிறது. பரிபாடலும், பிற தொகை களும் அவற்றைப் புகழ்ந்துரைக்கின்றன; சிலப்பதிகாரமும், “ சீர்கெழு செந்திலும் *செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்” என்றேத்துகின்றது. இனி, வட நாட்டிற் செங்கோலோச்சிய பெருவேந்த னாகிய அசோகன் தன் மக்களாகிய சங்கமித்திரை, மகேந்து என்பவர்களுடன் புத்தமத போதகர் பலரைத் தேயந்தோறும் விடுத்து அம்மதத்தைப் பரவச் செய்தமையால், கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பௌத்தமதம் தமிழ் நாட்டிலும் இடம் பெற்று வளரத் தொடங்கிற்று. சமண மதமும் அக்காலந் தொடங்கியே பரவலுற்றது என்னலாம். சிலப்பதிகாரம் முதலியன கொண்டு நோக்குமிடத்து, கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளிலே, தமிழ் நாட்டின் தலைநகரங்களாகிய புகார், உறந்தை, மதுரை, வஞ்சி, காஞ்சி என்னும் இடங்களில் சமண பௌத்த மதங்கள் மிக்க வலிமையுற்றிருந்தமை புலனாகின்றது. அருகன் கோட்டமும், புத்தசைத்தியமும் நகர்ப்புறங்களில் கட்டப்பட்டிருந்தன; சமண முனிவர்களும், பௌத்த முனிவர் களும் உறையும் பள்ளிகள் ஆங்காங்கிருந்தன; சாரணர்கள் இடையறாது மதபோதனை புரிந்து வந்தார்கள்; ஆடவர்களும் பெண்டிர்களும் மிகுதியாக அம்மதங்களிற் புகுவாராயினர். அக்காலத்துத் தமிழ் வேந்தர்கள் நடுவுநிலையுடன் இத் தனைக்கும் இடந்தந்து அவர்களையும் புரந்து வந்தமை பெரிதும் பாராட்டற்குரியது. சிவன், திருமால் முதலிய தெய்வங்களை எள்ளுதலின்றியே அவர்கள் தம் மதங்களைப் போதித்து வந்தமையாற்றான் அவை விரைந்து பரவலுற்றன எனக் கருதல் பொருந்தும். இனி, அக்காலத்திலுள்ள புலவர்களாயினும் பிறராயினும் அவர்கள் தம்மின் வேறுபட்ட சமயத்தார்களின் உணர்ச்சியை மதித்து அவற்றைச்சிறிதும் இகழாது பாராட்டி வந்தனர் என்பதும், ஓர் குடும்பத்திலுள்ள பலர் தத்தம் விருப்பத்திற் கியைந்தவாறு வெவ்வேறு மதங்களைக் கைக்கொண்டும் தம்முள் வேற்றுமை சிறிதுமின்றி ஒழுகி வந்தனர் என்பதும் பழைய இலக்கியங்களினின்றும் அறியலாகின்ற உண்மைகளாம். எச் சமயத்தையும் இகழாது போற்றும் பெருந்தன்மையுடைமைக்குத் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரையும், இளங்கோவடி களையும் சிறந்த எடுத்துக் காட்டாகக் கொள்ளல் தகும். வள்ளுவனார், “ நுலோர் தொகுத்தவற்று ளெல்லாம் தலை” “ பல்லாற்றால் தேரினு மஃதே துணை” என்றிங்ஙனம் எல்லா நூலினும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறிச் செல்வர்; எம் மதத்தையும் இகழார். இளங்கோவடிகள், தம் தமையனாகிய செங்குட்டுவன் சிவபெருமான் திருவருளாற் பிறந்தவன் என்றும், அவன் இமயஞ் செல்லப் புறப்பட்ட பொழுது உலகு பொதியுருவத் துயர்ந் தோனாகிய சிவபெருமான் சேவடியை முடிமேற் கொண்டு யாரையும் இறைஞ்சாச் சென்னியால் இறைஞ்சி வலங்கொண்டு போந்து யானையின் பிடரில் ஏறியருளிய பின்பு ஆடகமாடத்து அறிதுயிலமர்ந்த திருமாலின் சேடங் கொண்டு வந்து சிலர் நின்று துதித்தகாலையில் தான் சிவபெருமான் திருவடியை மணிமுடி மேல் வைத்திருத்தலின் அதனை வாங்கித் தோளின் மீது தரித்தனன் என்றும் கூறு முகத்தால் செங்குட்டுவன் சிவபெருமானையே முழு முதலாகக் கொண்டு வழிபடுவோன் என்பது பெற வைத்து, தம் கொள்கையும் அதுவாதலை ‘பிறவாயாக் கைப் பெரியோன்’ என்பது முதலியவற்றாற் குறிப்பிட்டனர். அன்னராயினும், அவர், கவுந்தியடிகள் அருகதேவனை வாழ்த்துதல் கூறுமிடத்து, “ ஒருமூன் றவித்தோன் ஓதிய ஞானத் திருமொழிக் கல்லதென் செவியகம் திறவா காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு நாமம் அல்லது நவிலா தென்னா ஐவரை வென்றோன் அடியிணை யல்லது கைவரைக் காணினும் காணா என்கண் அருளறம் பூண்டோன் திருமெய்க் கல்லதென் பொருளில் யாக்கை பூமியிற் பொருந்தாது” என்றிங்ஙனமும்; வேட்டுவ வரியில் அவர்கள் கொற்றவையைப் பரவு மிடத்து, “ அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி மாலவற் கிளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாட் டடக்கைப் பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை ஆய்கலைப் பாவை அருங்கலப்பாவை” “ ஆனைத்தோல் போர்த்துப் புலியி னுரியுடுத்துக் கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால் வானோர் வணங்க மறைமேன் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்” என்று இவ்வாறாகவும்; ஆய்ச்சியர் குரவையில் அவர்கள் திருமாலைப் பரவு மிடத்து, “ பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் கனிவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணெ கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே” என்று இத்தன்மையாகவும்: குன்றக் குரவையில் குறவர்கள் முருகவேளைப் பாடு மிடத்து, “ சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்கை வேலன்றே பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே” என்று இன்னணமும்; அவரவர் உணர்ச்சியுடன் கலந்து எல்லாத் தெய்வங்களையும் வாயார மனமார வழுத்துவாராயினர். இனி, சிவபிரான் திருக்கோயில் முதலாக முன் கூறிப் போந்த கோயில்களன்றி, மாசாத்தன், ஞாயிறு, திங்கள் என்னும் தெய்வங்கட்கும், திருக்கைலை, செவ்வேளின் கைவேல் முதலிய வற்றுக்கும் தனித்தனியாக இயற்றப்பெற்ற கோயில்கள் அந்நாளிலே நிலவினவென்க. 20. இளங்கோவடிகளும் இயற்கைப்புனைவும் உலகமும் உலகத்தில் உள்ளனவுமாகிய பொருள்களை யெல்லாம் இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என இருவகையாகப் பாகுபாடு செய்தல் கூடும். நம் சமய நூல்களின் வழி நின்று நோக்கின், ஐம்பூதங்களும் இயற்கைப் பொரு ளெனவும், அவற்றின் கலப்பாலாகிய உலகமும் உலகத்துப் பொருள்களும் செயற்கைப் பொருளெனவும் தோன்றும். “ நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலக மாதலின்” என ஆசிரியர் தொல்காப்பியனாரும் கூறினர். இன்னும் நுண்ணிதின் நோக்கின் மாயையின் காரியமாகும் ஐம்பூதம் உள்ளிட்ட அனைத்துமே செயற்கைப் பொருளெனல் தோன்றும். நவீன அறிவியற்கலைகளெனப்படும் சடதத்துவ நூல்கள் கூறும் இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் என்பன வேறு வகையின. இவ்விரு வகையினும் வேறுபட்டன கவிவாணர் கொள்ளும் இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் என்பன, கவிஞருலகிலே, மக்களால் இயற்றப்படாது கடவுளால் இயற்றப்பட்டனவோ, இயற்கையில் அமைந்திருப்பனவோ ஆகிய மலை, கடல், நாடு, காடு, என்பனவும், அவற்றிடை இயல்பில் உண்டாவனவும் ஆகியவை இயற்கைப் பொருள் எனவும் மக்களால் இயற்றப்படும் அறுசுவையுண்டி, எழுநிலை மாடம், பட்டாடை, மணிக்கலன், முதலிய யாவும் செயற்கைப் பொருள் எனவும் கொள்ளப்படும். இவற்றுள் முன்னதாகிய இயற்கைப் பொருளையே Nature என்று ஆங்கிலத்திற் கூறுவர். மக்கள் தம் அறிவாற்றல்களால் எவ்வளவு அரிய பொருள்களை ஆக்கிக் கொள்ளினும் அவையெல்லாம் இயற்கைப் பொருள்கள்போல் உடல் வளமும் மன மகிழ்வும் தரற்பாலனவல்ல. இவ்வுண்மையை அறிந்தே நம் முன்னோர்கள் தம் வாழ்க்கையைப் பெரிதும் இயற்கையை ஒட்டி நடத்தி வந்திருக்கின்றனர். பண்டைக் காலத்திலிருந்த தமிழ்ப் புலவர்கள் இயற்கையின் பெருமையை நன்கறிந்தவர்கள் என்பதற்குத் தமிழின் திணை வகுப்புகளே சான்றாகும். மலையும் அதனைச் சார்ந்த இடமும் குறிஞ்சியெனவும், புறவு அல்லது காடு முல்லையெனவும், நீர் வளமுடைய பழனம் முதலியன மருதம் எனவும், கடல் சார்ந்த நிலம் நெய்தல் எனவும் தமிழிலக்கணம் கூறும். வளஞ்சிறிதுமில்லாத வறண்ட சுரம் பாலை யெனப்படும். அவ்வந் நிலத்தில் உறையும் மக்கள், தலைமக்கள், அவர்கள் வழிபடும் தெய்வம், அவர்கட்குரிய உணவு, தொழில், யாழ், அங்குள்ள விலங்கு, பறவை,மரம்,பூ முதலியனவெல்லாம் கருப்பொருள் என்று கூறப்படும் இன்ன நிலத்தில் இன்னவை உளவாகும் என்னும் இயற்கை யுண்மை யைப் பழந்தமிழ்ப் புலவர்கள் அறிந்தாற் போல வேறு யாரும் அறிந்திலரென்றே கூறலாம். சங்கச் செய்யுட்களாகிய எட்டுத் தொகை பத்துப் பாட்டு என்பவற்றை இயற்கையின் ஓவியங்கள் என்னலாம். அவற்றிலுள்ள ஒவ்வொரு பாட்டும் இயற்கைப் பொருள்களை நம் அகக் கண்முன் தோற்றுவித்து இன்பம் விளைக்கின்றன. உதாரணமாக ஒன்று காட்டுதும்: ‘குறிஞ்சி நிலத்திலுள்ள ஒரு தலைவியும் தோழியும், தினைப்புனம் காத்தற்குச் சென்று, உயர்ந்த மரத்தின்மீது இடப்பட்டிருக்கும் பரணின் கண் ஏறியிருந்து, தட்டை. முதலிய கருவிகளால் கிளிகளை யோட்டுகின்றனர். ஞாயிறு காயும் நண்பகற் பொழுதில் பறவைகள் தத்தம் சேக்கைகளை அடை கின்றன. அப்பொழுது அவ்விருவரும் அங்கு நின்றகன்று, மலையுச்சியினின்றும் தூய வெள்ளாடை போற் பரந்து இழியும் அருவியில் நீராடுகின்றனர். பளிங்கைக் கரைத்து வைத்தாற் போன்ற கனைகளிலே இனிய பல பாட்டுக்களைப் பாடிக் கொண்டு குடைந்து குடைந்து விளையாடுகின்றனர்; பின் கரையேறி, பொன்னிலே நீலமணியைப் பதித்து வைத்தாற் போல் முதுகிலே தாழ்ந்த பின்னலாகிய கூந்தலைப் பிழிந்து ஈரம் புலர்த்திவிட்டு, சிவந்த கண்களுடன் பல பக்கமும் திரிந்து மலர் கொய்கின்றனர். செங்காந்தள், சுனைக்குவளை, குறிஞ்சி, வெட்சி, எருவை, குரவம், செருவினை, கருவினை, கோங்கம், போங்கம், செருந்தி, கரந்தை, தில்லை, முல்லை, பாதிரி, சண்பகம், முதலிய நூறுவகையான பூக்களைப் பறித்து வந்து அகன்ற பாறையிலே குவித்து, அவற்றால் தழை என்னும் உடையினைச் செய்து இடையில் உடுத்தியும், பல்வேறு உருவினையுடைய மாலை களைப் புனைந்து சூடியும்,. நெருப்பென விளங்குந் தளிர்களை யுடைய அசோக மரத்தின் குளிர்ந்த நிழலில் இனிது வீற்றிருக் கின்றனர்.’ இவ்வியற்கைப் புனைவு கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் உள்ளது. கோதாவரியாற்றுக்குச் சான்றோர் கவியினை உவமை கூறிய கம்பர் இரண்டற்கும் பொதுவாக, “ஐந்திணை நெறியளாவி” என்றுரைத்தார். எனவே கவிதைகட்கு வனப்புத் தருவன ஐந்திணைப் பாற்படும் இயற்கைப் பொருள்களாம் என்பது போதரும். இனி, பெருங் காப்பியங்கட்கு இவ்வியற்கைப் புனைவுகள் இன்றியமையாதன வென்பது, “மலைகடல் நாடு வளநகர் பருவம், இருசுடர்த் தோற்ற மென்றினையன புனைந்து” என அதற்கிலக்கணங் கூறுவதனான் அறியப்படும். தமிழிலுள்ள பெருங்காப்பியங்களில் காலத்தால் முற்பட்டதும், தமிழ் மொழியின் இயல்பையும் தமிழ் நாட்டின் பெருமையையும் அறிதற்குக் கருவியாயிருப்பதும் முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் ஆகும். அதனை இயற்றியவர் செங்குட்டுவன் என்னும் சேர வேந்தற்குத் தம்பியாரும் துறவு பூண்டிருந்த வருமாகிய இளங்கோவடிகள் ஆவர். முத்தமிழ்த் துறையின் முறை போகிய உத்தமக் கவியாகும் இளங்கோவின் காப்பியத் தில் எத்தனையோ பல வித்தக சித்திரங்கள் வியப்பும் உவப்பும் விளைக்க வல்லன. அவற்றுள் இயற்கைப் பொருளின் புனைவாக வுள்ள சிலவற்றை ஈண்டு நோக்குதும். சிலப்பதிகாரத்தின் முப்பது காதைகளில் ‘நாடு காண் காதை’ என்பதொன்று. கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து புறப்பட்டுக் காவிரியின் வடகரை வழியாகக் குடதிசை நோக்கி வந்து திருவரங்கத்திற்கு எதிரே ஒடம் ஏறித் தென்கரையெய்தி உரையூரை அடைந்தனர் என்னும் இந் நிகழ்ச்சியைத் தெரிவிக்கும் பகுதிக்கு நாடு காண் காதை என்று பெயரிட்டுள்ள நுட்பம் அறிந்து மகிழ்தற்குரியது. “ நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு” என்பது தெய்வப்புலவரின் மெய்யுரையன்றோ? வளம் மிக்க நிலப்பகுதியை ஆளுதலினாலேயே வளவர் எனப் பெயர் பெற்ற சோழரது நாட்டின் கண் அவ்வளத்திற்குக் காரணமாகிய காவிரியின் மருங்குள்ள நிலம் எத்துணை வளமிக்கதாகல் வேண்டும்? அவ்வளமெல்லாம் அவர்கட்குக் காட்சிப் பொருளாகி இன்பம் விளைத்தன என்னுங் கருத்துத் தோன்றவே அடிகள் ‘நாடுகடந்த காதை’ என்னாது ‘நாடுகாண் காதை’ எனப் பெயரிட்டார் என்க. கோவலன் கண்ணகி இருவரும் சமண் சமயத்தவமுதியோளாகிய கவுந்தி இருக்குமிடம் அடைந்தனர். கவுந்தியடிகளும் அவர் களுடன் மதுரைக்குவர ஒருப்பட்டு காவிரிமருங்குள்ள எந் நெறியில் எவ்வாறு தாம் செல்ல வேண்டுமென்பதை அவர் கட்குக் கூறுகின்றவர், “வெயிலின் வெம்மையைப் பொறுக்க லாற்றாத மென்மையையுடைய கண்ணகியைப் பூக்கள் நிறைந்த சோலைகளின் வழியே அழைத்துச் செல்வேமாயின் கிழங்குகள் தோண்டியெடுத்த குழிகளைச் சண்பகத்தின் பூந்துகளும், பழம் பூக்களும் விழுந்து மூடி பொய்க்குழிப்படுத்தலால் அவற்றை அறிந்து விலகிச் செல்லாதவர்கட்கு அவை மிக்க துன்பத்தினைத் தரா நிற்கும். அவ்வாறு விலகிச் செல்லும் பொழுது மேலே தொங்கும் பலாப்பழம் முட்டினும் முட்டும். மஞ்சளும் இஞ்சியும் ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் பாத்திகளிலுள்ள பலாவின் வித்துக்கள் பரல்போலத் துன்புறுத்தலுங்கூடும். தண்டலை வழியிற்செல்லாது வயல் வழியே போவோம் என்றால், ஆங்கண் பொய்கையிலுள்ள கயல் மீன்களை ஓட்டி நீர்நாய் கவ்விய வாளைகள் மலங்குகள் பிறழும் செறுவிலே குறுக்காகப் பாயின் இவள் கலங்கலுங்கூடும். வயலும் சோலையுமல்லது வேறாகிய வழியுமில்லை; ஆகலின் அவ்வழிகளில் கண்ணகிக்கு இன்னல் உண்டாகாது பாதுகாத்து வருக” என்று கூறி அவரும் உடன் சென்றனர். மூவரும் செல்வுழி., காவிரியின் நீர் வாய்த்தலைக் கிட்ட கதவின் மீதெழுந்து குதிக்கும் ஒலியன்றி, ஆம்பி, கிழார், ஏத்தம் முதலிய நீர் இறைக்கும் பொறிகள் ஒலித்தல் இல்லாத கழனிகளிலே செந்நெலும் கரும்பும் சூழ்ந்த பழனங்களிலுள்ள தாமரைப் பூக்களாகிய காட்டில், “ கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும், செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும், கானக் கோழியும், நீர் நிறக்காக்கையும், உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்” என்னும் பறவைகள் வேந்தரிருவர் போர் செய்யுமிடத்தில் அணிவகுத்து நிற்கும் படைகள் போல் நிரைநிரையாயிருந்து எழுப்பும் பல்வேறு வகையான ஒலிகளும் எழுகின்றன. மற்றும், சேற்றினிற் புரண்டு கழுவப்படாத உடம்பினையுடைய எருமை கள் தினவுடைய முதுகினைத் தேய்த்தலால் புரிநெதிழ்ந்து நெற் கூட்டிலுள்ள பலவகை நெற்களும் அருகே கழனிகளிற் கவரிபோற் காய்த்த செந் நெற்கதிர்களின் மீதே சொரியா நிற்க அதனைக் கண்ட வினைஞரும், களமரும்,ஒருங்கு கூடி ஆர்க்கும் ஒலி ஒருபுறமும், கடைசியர் தாமரை ஆம்பல் முதலிய களை களைப் பறித் தெறிந்து நாற்றினை நட்டுத் தோளும் மார்பும் சேறாடிய கோலத்துடன் வீறுபெறத் தோன்றி மதுவுண்டு பாடும் பாட்டுக்களின் ஒலி ஒரு புறமும், அறுகையும் குவளை மலரையும் கதிருடன் கலந்து தொடுத்த மாலையை, மேழியிலே சூட்டி நிலத்தினைப் பிளப்பவர் போல் பொன்னேர் பூட்டி நின்றோர் பாடும் ஏர் மங்கலப்பாட்டின் ஒசை ஒரு புறமும், நெற் கதிரை அரிந்து போரிட்டோர் அதனைக் கடாவிடும் பொழுது பாடும் முகவைப் பாட்டின் ஒசை ஒரு புறமும் எழாநின்றன, காவிரியின் அடை கரையிற் செல்லும் கோவலனும், கண்ண கியும் இப்பலவகை யொலிகளையும் முறையிற்கேட்டு மனங் களித்தலால் வழி நடத்தலினுண்டாம் வருத்தத்தை நெஞ்சிற் கொள்ளாது செல்வாராயினர். சோணாட்டின் இயற்கை வளத்தினை இளங்கோவடிகள் இவ்வாறு நிரல்படக் கூறி யிருக்குந் திறன் கற்பார்க்குக் கழிபேறுவகை பயப்பதாகும். இனி, இவர்கள் வையை யாற்றைக் கடந்து மதுரைக்குச் செல்லுதல் கூறும் பொழுது இளங்கோவடிகள் வையையை ஓர் நங்கையாக உருவகப்படுத்தி ‘புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி’ எனவும், ‘வையையென்ற பொய்யாக் குலக்கொடி’ எனவும் அருமை பாராட்டுகின்றவர், அதற்கேற்ப, அதனைச் சார்ந்துள்ள இயற்கைப் பொருள்களை அந் நங்கையின் அங்கங்களாகப் புனைந்துரைக்கின்றனர். வையையின் கரை மருங்குலாக, அதன் புறவாயில் அடர்ந்த குரவம், வகுளம், கோங்கம், வேங்கை, மரவம், நாகம், திலகம், மருதம், சேடல், செருந்தி,செண்பகம், பாதிரியாகிய மரங்கள் மலர் விரிந்து விளங்குவன பூந்துகிலாகவும், அதன் அகவாயிலுள்ள குருகு, தளவம், முசுண்டை, அதிரல்,கூதாளம், குடசம், வெதிரம், பகன்றை, பிடவம், மயிலை என்னும் தூறுகளும், கொடிகளும் மலர்ந்து பின்னிக்கிடப்பன மேகலையாகவும் அழகு செய் கின்றனவாம்! வையையாறு முழுதும் நீர் புறந்தோன்றாமல் மலர்களால் மூடப்பட்டிருப்பது அவள் கண்ணகிக்கு மேல் வருந்துன்பத்தை அறிந்து ‘புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக், கண்ணிறை நெடுநீர் கரந்தடக்கியது’ போல்கின்ற தாம்! இவற்றிலிருந்து இயற்கைப் பொருள்களின் காட்சியில் இளங்கோவின் உள்ளம் எவ்வாறு ஈடுபட்டிருந்த தென்பதும் தாம் கண்டு நுகர்ந்த அப்பொருள்களைக் கதையில் எங்ஙனம் ஏற்ற பெற்றியமைத்துச் சுவை யூட்டுகின்றனரென்பதும் புலனாகின்றன. இனி, சிலப்பதிகாரத்தில் காட்சிக் காதை என்ப தொன்றுண்டு. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் படிமஞ் செய்தற் பொருட்டு இமய மலையிற் கற்கொள்ளக் கருதினன் என்பது அக்காதையின் முடிந்த பொருளாயினும், குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளங்களை அவன் கண்டு களித்தமை அதன் முற்பகுதியாகவுள்ளது. செங்குட்டுவன் மஞ்சுசூழ் சோலை மலைவளங் காண்டற் பொருட்டாக தன் தேவியாகிய வேண் மாளுடனும், விளையாட்டிற்குரிய பலவகைப் பொருளுங் கொண்டு தானைகள் சூழ வஞ்சி நகரினின்றும் புறப்பட்டுச் சென்று பேராற்றின் கரையை அடைகின்றான். அவ்வியாறானது ‘கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை, நாகம் திலகம் நறுங்காழாரம்’ ஆகிய பலவற்றினின்றும் உதிர்ந்த பூக்களின் பரப்பினால் புனல் தோன்றாது மறைய, நெடியோன் மார்பில் ஆரம்போன்று பெரிய மலையைக் குறுக்கிட்டுச் செல்லா நின்றது. அதன் அடைகரையிலுள்ள மணல் எக்கரில் அரசன் முதலானோர் சென்று ஒருங்கிருக்கின்றனர். அங்கே குன்றக் குறவர்களின் குரவையிற்கொடிச்சியர் பாடும் பாட்டினோ சையும், செவ்வேளைப் பூசிக்கும் வேலனது பாட்டின் ஒசையும், தினை குற்றுவோரது வள்ளைப் பாட்டோசையும் புனத்திலே கிளியோட்டுதல் முதலிய வற்றானெழும் ஓசையும், இறாலி னின்றும் தேனெடுக்கும் குறவரோசையும் முழவென ஒலிக்கும் அருவியின் ஓசையும், புலியொடு போர் செய்யும் யானையின் ஒசையும், பரணின் மேலுள்ளவன் விலங்கினைக் கடிந்தோட்டும் ஓசையும், குழியில் விழுகின்ற யானையின் பாகர் செய்யும் ஓசையும், இயங்குகின்ற படைகளின் ஓசையோடு ஒருங்கெழுவன வாயின. அவ்வோசை யின்பத்தை நுகர்ந்திருக்கும் பொழுது வேங்கை மரத்தின் நிழலில் கண்ணகி கோவலனோடு தேவ விமானத்தில் ஏறிச் சென்ற அதிசயத்தைக் கண்ட குன்றக் குறவர் கள் அதனைத் தங்கள் மலைநாட்டுக்கு வேந்தனாகிய செங்குட்டு வற்கு அறிவிக்கக் கருதிப் பல காணிக்கைப் பொருள்களோடும் வந்து அரசனைக் கண்டு தெரிவிக்கின்றனர். அவர்கள் கொணர்ந்த பொருள்கள் இவையெனக் கூறும்வாயிலாக இளங் கோவடிகள் மலைவளமனைத்தையும் ஒருங்கு தொகுத்துக் காட்டுவது இயற்கையோடு அவர் எவ்வளவு பயின்றுள்ளார் என்பதனைப் புலப்படுத்தும். “யானை வெண்கோடும் அகிலின் குப்பையும், மான் மயிர்க்கவரியும், மதுவின் குடங்களும், சந்தனக் குறையும் சிந்துரக்கட்டியும், அஞ்சனத் திரளும், அணியரி தாரமும், ஏலவல்லியும் இருங்கறிவல்லியும், கூவை நூறும், கொழுங்கொடிக் கவலையும், தெங்கின் பழனும் தேமாங்கனியும், பைங்கொடிப் படலையும், பலவின் பழங்களும், காயமும் கரும்பும் பூ மலிகொடியும், கொழுந்தாட்கமுகின் செழுங்குலைத் தாறும், பெருங்குலை வாழையின் இருங்கனித்தாறும், ஆளியின் அணைங்கும், அரியின் குருளையும், வாள்வரிப் பறழும், மதகரிக் களபமும், குரங்கின் குட்டியும் குடாவடி யுளியமும், வரையாடு வருடையும் மடமான் மறியும், காசறைக் கருவும் மாசறு நகுலமும், பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும், கானக்கோழியும் தேமொழிக்கிள்ளையும்” ஆகிய இவற்றை மலைவாணர் தலையிற் சுமந்து வந்து வைத்து “ஏழ்பிறப்படியேம், வாழ்க நின் கொற்றம்” என வாழ்த்தி, பின்பு, கண்ணகி வானுற்ற செய்தியைக் கூறுகின்றனர். ஐம்புலன்களுக்கும் இன்பம் விளைப்பனவாகிய மலை படுபொருள் அனைத்தையும், ஓர் காட்சி மன்றத்தில் தொகுத்து வைப்பது போல் இங்கெடுத்தியம்பியுள்ள இது மலைநாட்டு மன்னன் மைந்தராகிய அவர் மலையின் இயற்கை வளங்களை எவ்வளவு நன்கறிந்துள்ளார் என்பதனைப் புலப்படுத்துகின்றது. 10.10.1941 அன்று திருச்சி வானொலியில் பேசிய பேச்சு. 21. கலித்தொகை மாண்பு உலகின் கண் எல்லா உயிர்களும் இன்பத்தை விழை கின்றன. எனினும், மக்களொழிந்த ஏனைய உயிர்கள் யாவும் உணவும் இணைவிழைச்சும் முதலியவற்றால் என்றும் ஒரு பெற்றியே சிறுச்சிறு இன்பந்துய்த்துவருதலன்றி, அவ்வின் பத்தைப் பெருக்கவும். ஏனைத் துன்பத்தைத் தவிர்க்கவும் வகை யறியாதனவா யுள்ளன. மக்கள் மட்டுமே தம் பகுத்தறிவு கொண்டு முயன்று பொருளீட்டியும் அறம் புரிந்தும், அவை சார்பாக இவ்வுலகில் நுகரும் இன்பத்தை மேன்மேற் பெருகச் செய்தற்கும், மறுமையின்பினையும் என்றும் நிலையாய வீட்டின்பினையும் எய்துதற்கும் உரியராகின்றனர். எனவே மக்களாலெய்தலாகும் பேறுகள் இன்பம்,பொருள், அறம், வீடு என்னும் நான்குமாதல் பெற்றாம். ஈண்டு இன்பம் என்றது இம்மையின்பமாகும். இந் நான்கினையும் அகம்,புறம் என இருவகைப்படுத்துரைப்பது தமிழ் நூன் முறை. அகப்பொருளாவது இன்பம். ஏனைய புறப்பொருள் எனப்படும். இம் மலர்தலை யுலகில் மக்கள் துய்க்கும் இன்பம் பல திறத்த வாயினும், அவை பலவற்றுள்ளும், உலக வளர்ச்சிக்கும், உயிர்களின் மலர்ச்சிக்கும் இன்றியமையாததும், ஒரு காலத்தொரு பொருளால் ஐம்புலனும் நுகர்தற் சிறப்புடையதுமாகிய காமவின்பமே நூலோரால் இன்பமென வைத்துப் போற்றப்படுகின்றது. ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் ஒருவர்க் கொருவர் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாது யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவ தொன்றாகலின், அஃது அகப்பொருள் எனப்படுவதாயிற்று. இவ்வின்பத்தினை எத்துணையும் விழுமி தாக்குதற்குத் தொல்லை நல்லாசிரியன்மார் கண்ட வித்தகத் திறங்கள் பல. அவை அனைத்தும் ‘புலனெறி வழக்கு’ என்பதில் அடங்கும். புலனெறிவழக்காவது, உலகத்து ஆடவரும் மகளிரும் உலகியலாற் கூடியொழுகும் ஓழுக்கத்துடன் நாடக வழக்காய புனைந்துரையும் சேர்த்துப் புலவராயினார் செப்பஞ் செய்தமைத்ததோர் திப்பிய நெறி. புலநெறி வழக்கிலே ஒத்த அன்புடைய தலைவனுந் தலைவியுங் கூடியொழுகும் ஓழுக்கம் ‘களவு’ எனவும் ‘கற்பு’ எனவும் இருவகைப்படும். அவற்றுள் களவாவது உருவும், திருவும், பருவமும், குலனும், குணனும், அன்பும் முதலியவற்றால் ஒத்த தலைமகனும், தலைமகளும் அடுப்பாருங் கொடுப்பாருமின்றிப் பால்வகையால் தாமே எதிர்ப்பட்டுக் கூடியொழுகுவது. கற்பாவது அவ்விருவரும் முறைப்படி வரைந்து கொண்டு இல்லிலிருந்து அறம்புரிந் தொழுகுவது. இவ்விருதிறத்தும் தலைமக்கள் ஓழுக்கம் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என ஐவகைப்பட்டு நிகழுமென்பதும்., அவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்னும் ஐந்திணைக்கும் உரியவாமென்பதும்,. அகத்திணைகள் முதல், கரு, உரி எனப் பாகுபாடெய்துமென்பதும், களவொழுக்கமானது இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு,. பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டமென நால் வகையான் நிகழுமென்பதும், களவின்கண் தலைவி தோழிக்கும், தோழி செவிலிக்கும் என்னும் இம்முறையானே அறத்தொடு நிலை நிகழுமென்பதும், இரு கைகோளினும் கூற்று நிகழ்த்து தற்குரியார் இன்னின்னார் என்பதும், அவர் இன்னின்ன நெறிப் பாடுடையர் என்பதும், தலைவற்கு .இவ்விவ்வேதுவாற் பிரிவு நிகழும் என்பதும், அவன் மீண்டு வரும் பொழுதும் முறைமையும் இவ்விவை என்பதும், பிறவும் புலனெறிவழக்கிடைக் காணப் படுகின்றன. ‘இறையனா ரகப்பொருள்’ உரையாசிரியர் இதனை ‘இல்லது இனியது நல்லது என்று புலவரால் நாட்டப்பட்டதோ ரொழுக்கம்’ என்றே பலவிடத்தும் வற்புறுத்திச் சொல்லா நிற்பர். எனினும் உலகியலும் புனைந்துரையும் விரவியதே புலனெறி வழக்காமெனல் ஆசிரியர் தொல்காப்பியனாரின் கருத்தென்பது, “ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்” என்பதனாற் பெறப்படும். இதன் உரையில் ஆசிரியர் நச்சினார்க் கினியர், “புனைந்துரை வகையிற் கூறுபவென்றலின் புலவர் இல்லனவும் கூறுபவாலோவெனின், உலகத்தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க்குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிந் தொழுகல் அறமெனக் கருதி, அந்நல்லோர்க்குள்ளனவற்றிற் சிறிதில்லனவும் கூறுதலின்றி, யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன கூறார்” என்றுரைப்பது சிந்திக்கற்பாலது. இவற்றிலிருந்து, களவுக் கூட்டமென்பது தமிழ்நாட்டு ஐந்திணை மக்களிடம் இயல்பாக நிகழ்ந்து வந்த தொன்றென் பதும், அவர்கள் முதற்கண் களவில் அளவளாவியிருந்து பின் வரைந்து கொள்ளும் ஒழுகலாறுடையர் என்பதும், இவற்றை அடிப்படையாகக் கொண்டு நல்லிசைப்புலவர்கள் சுவை பயப்பனவாகிய கருத்துக்கள் பலவற்றைத் தொகுத்துப் புலனெறி வழக்கினை அமைத்துள்ளாரென்பதும் கருதற்பாலவாகின்றன. மலைநாட்டு முதுவர் முதலாயினார்பால் இஞ்ஞான்றும் காணப்படும் ஒழுகலாறுகள் இக்கருத்தினை வலியுறுத்துவனவாகும். களவுக் கூட்டம் புலனெறியன்றி உலகியலானும் ஐந்திணை மக்களிடை நிகழ்தலுன்டென்னுங் கருத்தினர் நச்சினார்கினியரென்பது, “ முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே” என்னும் களவியற் சூத்திரத்திற்கு அவருரைத்த உரையால் அறியப்படும். மலைவாணரிடம் இவ்வொழுக்கம் பெரு வழக்க மாயினமை கொண்டே தொல்லாசிரியன்மார் குறிஞ்சிக்கண் புணர்ச்சியை அமைத்தனர் போலும். எனினும் கூடுதல் முதலிய உரிப்பொருள்கட்கு நிலமும் காலமும் வரையறை செய் திருப்பதில் நாடக வழக்கு இயைந்துள்ளமை தேற்றம். இவ்வாறு புலனெறியிற் புனைந்துரைகள் புகுத்தப் பட்டமையின் நோக்கம் தலைமக்களின் அகவுணர்ச்சியாகிய அன்பினைப் பலவாறும் வெளிப்படுத்துதலே யாதல் வேண்டும். ஐந்திணை யொழுக்கமானது அன்பின் பாலதென்பது, “அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை” எனத் தொல்காப்பியமும், “அன்பி னை ந்திணை க் களவெனப் படுவது” எனவும், “ களவு கற்பெனக் கண்ணிய ஈண்டையோர் உளநிக ழன்பின் உயர்ச்சி மேன” எனவும் இறையனார் களவியலும் கூறுதலாற் போதரும். புலனெறிவழக்கிடைக் காணப்படும் தலைமக்களின் வியக்கத்தக்க அன்பின் திறனும், தலைவியது கற்பின் திண்மையும் முதலாய அக வுணர்ச்சி மேம்பாடெல்லாம் தமிழ் நன்மக்களின் உலகியலான உணர்வொழுக்கவுயர்ச்சியினின்றும் உதித்தனவே யாகும். புலனெறிவழக்கினை யாத்த தமிழ்ப்புலவர்களின் உள்ளத்தே மலர்ந்த அவ்வுயர் பண்புகள் ஏனைத் தமிழ் மக்கள் அகத்தில் முகிழ்த்தில எனல் யாங்ஙனம் அமையும்? கள வொழுக்க மானது ஆரிய மக்களின் எண்வகை மன்றலுள் ஒன்றாய யாழோர் கூட்டத்தை ஒப்பது எனக் கூறப்படுவது, இருவர் தமியராய் எதிர்ப்பட்டுக் கூடுதலாகிய ஒரு புடை ஒப்புமை கருதியே யாகும். யாழோர் கூட்டத்தில் பின் கற்பு நிகழ்தல் ஒருதலை யன்று. களவுக் கூட்டமோ கற்பின் இன்றியமையாமையை யுடையது. மற்றும், புலனெறி வழக்கிற் பலவாறும் புகழ்ந்துரைத்தற்கேற்ற உழுவலன்பின் விழுமிய திறனெல்லாம் களவுக்கே சிறப்புரிமை யுடையன. ‘சொற்பால் அமுதிவள் யான் சுவையென்ன’ என்னும் திருச்சிற்றம்பலக் கோவைச் செய்யுளும், அதற்குப் பேராசிரியர் எழுதிய உரையும் அவ்வன்பின் சிறப்பினை நன்கு விளக்குதல் காண்க. மகளிர்க்கு உயிரினும் நாண் சிறந்ததென்பதும் அதனினுங் கற்புச் சிறந்த தென்பதும் களவியலின் தெளிபொருளாக உள்ளன. இத்தகைய நாணுங் கற்பும் பேணு மடவார் இஞ்ஞான்றும் உளராதல் கண்கூடாகலின் இவை உலகியலாதல் இல்லெனல் சாலாது. “ குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி நாணமும் மடனும் நல்லோ ரேத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய் நாணின் பாவாய் நீ ணில விளக்கே கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி” என்று கோவலன் கூறுவன கண்ணகியின் உண்மைப் பெண்மை நலங்களே யன்றோ? இங்ஙனம் காந்தருவத்தினும் சிறந்த நலங்களோடு தமிழரின் களவு முறை திகழ்ந்தமையாற்றான் இதனைத் தமிழக்கே உரியதெனச் சான்றோர் பலரும் கூறுவாராயினரென்க. பரிபாடலில் குன்றம்பூதனார் பாடிய ஒன்பதாஞ் செய்யுளில் “ நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின்” என நான்மறைப் புலவரை விளித்துக் களவு, கற்பு என்பவற்றின் இயல்பினையும், அவற்றுள் மெய்யுற்று அறியாதார் இருவர் அன்பொத்துப் பான்மை வகையால் தாமே மெய்யுற்றுக் கூடும் காதற்கூட்டமாகிய களவே சிறந்த தென்பதனையுங் கூறி வந்து, இதனை வேண்டும் பொருளிலக்கணத்தையுடைய தமிழை ஆயாதார்க்கு இதன் சிறப்பு விளங்கா தென்பார், “தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழ் ஆய்வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன்” என்று கூறி, இது தமிழுக்கே உரியதாமாறும், அதனால் தமிழ் சிறந்ததாமாறும் வலியுறுத்தி உரைத்திட்டமை காண்டும். மற்றும், பதுமையோடுங் களவிற் கூட்டம் நிகழ்த்த வெண்ணிய சீவகன், “ தேவர் பண்ணிய தீ தொடை யின்சுவை மேவர் தென்றமிழ் மெய்ப்பொரு ளாதலின்” என அதனைத் தென்றமிழின் மெய்ப்பொருளாமெனக் கொண்டான் என்றும், சுரமஞ்சரியும் சீவகனும் களவிற் கூட்டம் நிகழ்த்தினமையை, “இன்றமிழியற்கையின்பம் நிலைபெற நெறியிற்றுய்த்தார்” என்றும் திருத்தக்கதேவர் கூறியுள்ளமையும் இது தமிழியலா மென்பதனை வலியுறுத்தாநிற்கும். நச்சினார்க் கினியர் இவற்றைச் சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப் படுதலின் ‘உலகியல் வழக்கான காந்தருவம்’என்பர். இதுகாறுங் கூறியவற்றால் ஐந்திணைப் பாற்படும் அன்பின் விளைவாகிய அகப் பொருளின் சிறப்பு இனிது புலனாகா நிற்கும். ஆயின் உலகத்தில் இருவரிருவராய் இன்பந் துய்க்கும் எல்லா மக்களும், “ பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ டுருவு நிறுத்த காமவாயில் நிறையே யருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.” எனத் தொல்காப்பியர் கூறிய ஒப்புமை பலவுமுடையராத லில்லை. அடியோரும் வினைசெய்வாரும் முதலாயினார் தமக்குரியரன்றிப் பிறர் ஏவிய வழி ஒழுகுவோராதலின் அவரது அன்பின் நிலையும். இன்பமும் குறைபாடுள்ளனவேயாகும். ஆகலின் அவருடைய இன்ப ஒழுக்கங்கள் தலைமைப்பாடுடைய நன் மக்களின் அன்பொழுக்கங்களோடு ஒரு தன்மையவாகா என்பது பற்றிப் பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் அவற்றிற்குக் கைக்கிளை, பெருந்திணையெனப் பெயர் கொடுத்து அகப் புறமென ஒருசார் ஒதுக்கிவைப்பாராயினர். ஏனை நன்மக்கள் பால் உலகியலால் நிகழும் ஒருசார் கைக்கிளை பெருந்திணையும் உள. அவையும் அகப்புறமே யாகுமென்க. இனி, இத்தகைய புலனெறிவழக்குப் பற்றிய செய்யுட்களே புறப்பொருட் செய்யுளினும் மிகுதியாகச் சங்கத்துச் சான் றோரால் இயற்றப்பட்டுள்ளன. புறப்பொருள் முயற்சியில் உழந்து வாட்டமுறும் மக்கள் உள்ளத்தில் இன்புநீர் பாய்ச்சிக் கிளர்ச்சியை விளைப்பதற்கு இஃது ஏற்ற கருவியாதல் கருதிப் போலும் இதனை மிகுத்துப் பாடுவாராயினர்! மற்றும் காட்சிப் பொருளும் கருத்துப் பொருளுமாகிய இரு வகைப் பொரு ளையும் இனிதமைத்துக் கற்பார் நெஞ்சம் காமுறச் செய்யுள் புனைதற்கு இஃது ஏற்ற பெற்றியதாதலும் கருதற்பாற்று. ஐந்திணையின் பாகுபாடாகிய முதல் கரு உரிப் பொருள் களில் முதற்பொருளாகிய நிலம் பொழுதுகளும் அவற்றைச் சார்ந்து தோன்றும் கருப்பொருளாகிய விலங்கு, புள், மரம், பூ முதலாயினவும், ஆண்டு வாழும் மக்களும் அவர்கள் செய் தொழில் முதலாயினவும் காட்சிப் பொருளாம். உரிப் பொருளாகிய புணர்தல், பிரிதல் முதலியன பற்றி அகத்தே தோன்றும் உணர்ச்சி வகைகள் கருத்துப் பொருளாம். “ ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா கற்பும் ஏரும் எழிலும் என்றா சாயலும் நாணும் மடனும் என்றா நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங் காவயின் வருஉங் கிளவி யெல்லாம் நாட்டிய மரபின் நெஞ்கொளி னல்லது காட்ட லாகாப் பொருள வென்ப” என்னும் பொருளியற் சூத்திரத்துக் கிளந்தோதிய ஒப்பு முதலியனவும், ‘எல்லாம்’ என்பதனால் உரை யகத்தே நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டிய ஒளி, அளி, காய்தல், அன்பு, அழுக்காறு, பொறை, நிறை ,அறிவு முதலாயினவும் கருத்துப் பொருளாமாறு ஒர்க. இறையனாரகப் பொருள் உரையாசிரியரும், “உலகத்துப் பொருள்தான் இரண்டு வகையான் உணர்த்தப்படும். உண்மை மாத்திரை உணர்த்திப் பிழம்பு உணர்த்தப்படாதனவும், உண்மையும் பிழம்பும் உணர்த்தப்படுவனவுமென” என்று கூறி அவற்றுள் உண்மை உணர்த்திப் பிழம்பு உணர்த்தப்படாதன வற்றுக்குக் காமம் முதலியவற்றையும், ‘ஒப்பும் உருவும்’ என்னும் சூத்திரத்துக் கூறப்பட்டவற்றையுமே எடுத்துக் காட்டினார். இவையெல்லாம் பிழம்புணர்த்தப்படாத வாயினும் நல்லிசைப் புலவர் தாம் சொல்லுந்திறங்களால் இவற்றை நம் நெஞ்சிலே நிறுத்துகின்றனர். பொறிகளாற் காண்டற்குரியவாகிய இயற்கைப் பொருள்கள் பலவற்றின் திறங்களையும் நுனித்தறிந்து கூறு வதிலும், கருத்துப் பொருளாய அன்பு முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும், சங்கப் புலவர்களின் வித்தகக் கவித்திறம் எத்துணையும் பாராட்டற்குரியதாம். பல்வேறு காலத்திருந்த புலவர்கள் பலரால் பாடப் பட்டனவும் கடைச்சங்கத் திறுதி நாளிற் சான்றோர் சிலரால் ஒவ்வொரு முறை பற்றித் தொகுக்கப்பட்டனவும் ஆகிய எட்டுத் தொகையுள் ஒன்றாயது கலித்தொகை. இஃது அகப்பொருளாய புலனெறி வழக்கையே பொருளாக உடையது; முழுதுங் கலிப்பாவால் அமைந்தது. ஆசிரியர் நல்லந்துவனாரால் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் இம்முறையே தொகுத்து நிறுத்தப்பெற்றது. இதில் உள்ள பாலை முதலிய ஐந்து பகுதிகளும் முறையே பெருங்கடுங்கோன், கபிலர், மருதனிள நாகனார், நல்லுத்தரன், நல்லந்துவனார் என்போராற் பாடப்பெற்றன என்பது ஒர் வெண்பாவால் அறியலாவது. இவ்வைந்து பகுதிகளிலும் பாண்டியர் குடியும், பாண்டியர்க் குரிய பதி, யாறு, மலைகளாகிய கூடல், வையை, பொதியில் என்பனவும், பிறவும் பாராட்டப்பட்டிருத்தலின் இவற்றை இயற்றிய ஆசிரியர் வரலாறு ஆராய்ந்து அறுதியிடப் பெறல் வேண்டும். இனி, கலித்தொகையென்னும் இவ்விலக்கியத்தின் சிறப்பு அளவிடற்கரிய தொன்றாகும். புலனெறி வழக்கினைப் பாடுதற்குச் சிறப்புரிமையுடைய செய்யுள் கலியே யென்பது. “ நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட் டாயீரு பாங்கினும் உரிய தாகு மென்மனார் புலவர்” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் அறியப் படும். செய்யுளியலிற் கூறிய முறையன்றிக் கலியை முற்கூறியது பரிபாட்டினும் அது சிறந்தது என்பதனைப் புலப்படுத்தும். கலியுள்ளும் சிறப்புடைய ஒத்தாழிசைக் கலியே பலவாகவும் ஏனைய சிலவாகவும் இத்தொகையில் அமைந்துள்ளன. இன்பம் பற்றிய எக்களிப்பு அல்லது மனவெழுச்சிக்குக் கலியின் துள்ளலோசை பொருத்த முடைத்தாகலின் ஆசிரியர் புலனெறி வழக்கிற்கு இதனையே சிறந்ததெனக் கொண்டாராதல் வேண்டும். மற்றும் தரவு தாழிசை முதலிய கலியுறுப்புக்கள் புலனெறி வழக்கிற் கூற்று நிகழ்த்துதற் குரியார் ஒருவர் மற்றொருவர்க்கு ஒன்று கட்டுரைக்குமிடத்து அக்கருத்தினைத் தொகச் சொல்லியும் தூவாத நீக்கி வகுத்துரைத்து வலியுறுத்தியும், முடிவின்கண் பயனால் நகச் சொல்லியும் நன்றி பயத்தற் கேற்ற வெவ்வேறு ஓசையும் அமைப்பும் உடையவாகத் திகழ்தலும் இதனது சிறப்புரிமைக்கு ஏதுவாதல் வேண்டும். இனி, இக்கலிச் செய்யுளெல்லாம் சங்கு திரண்டு முரன்றெழும் ஓசைபோலத் தழைந்து இன்பம் பயக்கும் ஓசை நல முடையனவாக, அவற்றில் அமைந்துள்ள பொருள்வளமும், கருத்து மாண்பும் அளவிடற் கரிய சிறப்பினவாய்த் திகழ்கின்றன.. இத்தொகையின் கண் ஐந்திணையின் கருப்பொருள்களின் இயல்களும், ஆண்டு வாழும் மக்களின் பெற்றிமைகளும் கிழியில் எழுதிக்காட்டினா லொப்ப அழகுறத்தெளிந்து தோன்றுகின்றன. இதிலுள்ள உவமங் களின் மாட்சி யொன்றே இதனை இணையற்ற சிறப்பினதாக்கும் தகுதிப்பாடுடையது. ஆயின், இன்பம் நுதலி எழுந்த இதன்கண் பாலையின் கொடுமை பலபடியாகக் கூறப்படுதல் துன்ப நினைவை யெழுப்பி இன்ப வெழுச்சிக்கு ஊறு செய்வதாகுமாலோ எனின், ஆகாது. என்னை? தலைவனது மீட்சியின்கண் அவ்வின்பம் முன்னையிலும் சிறந்து தோன்று மாகலின் என்க. அல்லதூஉம் தலைமகன் தன் கடப்பாடுகளை ஆற்றுதற்கண் எத்தகைய துன்பங் களையும் பொறுக்கு மியல்பினன் என்பதனை நாட்டுதற்கும், தலைவனைப் பிரிந்த தலைவியின் தலையன்பு பற்றிய அக உணர்ச்சிகளைக் காட்டுதற்கும், தலைவன் பிரிந்து செல்லும் பாலையின் கொடுமை கூறல் பெரிதும் பயப்பாடுடையதாதலுங் காண்க. தலைவியைப் பிரிந்து வேற்றுநாட்டகலும் தலைவ னொருவன் யாண்டும் வெம்மை மிக்க ஆரதரத்தம் நடந்து சேறல் உலகியலில் ஒருதலையன்றாயினும், முற்குறித்த பயன் கருதியே தொல்லாசிரியர் நாடக வழக்குப் பற்றி இதனை அமைத்தாராகல் வேண்டும். அங்ஙனம் இறப்ப இன்னாதவற்றை உரைக்க வேண்டிய இடத்தும் நல்லிசைப் புலவர்கள் தம் சொல்லுந்திறத்தால் அவற்றிற் கினிமையூட்டிக் கற்பவர் காமுறுமாறு செய்துவிடுகின்றனர். இனி, தூயதொரு காதலின்பம் துய்க்கும் இவருள் தலைவனானவன் பரத்தையிற் பிரிந்தொழுகும் ஒழுக்கமும் இழிவு தரும் நீரதாகவே தோன்றுகிறது. இஃதுலகியல் போலப் புலனாயினும் நாடக வழக்குப் பற்றியே புலமை மிக்கார் இதனைப் புகுத்துரைத்தாராதல் வேண்டும். இனி, தூயதொரு காதலின்பம் துய்க்கும் இருவருள் தலைவனானவன் பரத்தையிற் பிரிந்தொழுகும் ஓழுக்கம் மதிக்கண் மறுப்போல்வ தொன்றாய்த் தோன்றுகிறது. இவ் வொழுக்கமானது புலனெறி வழக்கிற் காணப்படுவது பேருரை யாசிரியர்களின் உள்ளத்தைத் திகைக்கச் செய்துளதென்பது அன்னோர் பன்னெறிப்பட இதற்கு அமைதி கூறுந்திறத்தான் அறியப்படும். “காதற் பரத்தை எல்லார்க்கு முரித்தே” என்னும் இறையனாரகப் பொருட் சூத்திர வுரையில் ஆசிரியர் நக்கீரனார் பரத்தையிற் பிரிவு நிகழ்தற்கு ஏதுவாகக் கூறப்படும் பல கருத்துக்களை ஆராய்ந்து கழித்துப், புனைந்துரை வகையால் ஒர் கருத்தினை நிறுவி, இறுதியில், “பரத்தையிற் பிரிந்தான் தலைமகன் என்றால் ஊடலே புலவியே துனியே என்றிவை நிகழும், நிகழ்ந்தால் அவை நீக்கிக் கூடினவிடத்தும் பெரிய தோரின்பமாய் அவ்வின்பத் தன்மையை வெளிப்படுப்பன அவையெனக் கொள்க” என்று முடிக்கின்றனர். திருச்சிற்றம்பலக் கோவையாரின் உரையில் பேராசிரியர் “பரத்தையிற் பிரிவென்பது தலைமகளை வரைந்தெய்திய பின்னர் வைகலும் பாலே நுகர்வானொருவன் இடையே புளிங்காடியும் நுகர்ந்து அதன் இனிமையை நுகர்ந்தாற்போல, அவள் நுகர்ச்சியின் இனிமை யறிதற்குப் புறப்பெண்டிர் மாட்டுப் பிரியாநிற்றல் அல்லதூஉம் பண்ணும் பாடலும் முதலாயின காட்டிப் புறப்பெண்டிர் தன்னைக் காதலித்தால் தான் எல்லார்க்கும் தலைவனாதலின் அவர்க்கும் இன்பஞ் செய்யப் பிரியா நிற்றல் என்றுமாம். அல்லதூஉம் தலைமகளை ஊடலறி தற்குப் பிரிதல் என்றுமாம்” என்று கூறாநிற்பர். இவையெல்லாம் பரத்தையிற் பிரிவென்பது நாடக வழக்குப் பற்றி அமைக்கப்பட்ட தென்னும் கருத்தினை, உட்கொண்டு, அங்ஙனம் அமைக்கப்படு தற்கு ஏதுக்களை ஆராய்ந்த வாறேயாம். வரைவின் மகளிரொடு மருவியொழுகும் பூரிய வொழுக்கம் செல்வர் சிலரிடை உலகியலாற் காணப்படினும், சீரியராகும் தலைமக்கள் அதனை உடையராதல் ஒருதலையன்றே; ஆதலான், சில பயன் கருதிப் புலவராயினார் இதனைப் புனைந்துரைத்தனரென்றே கோடல் வேண்டும். அப் பயன்களுள், தலைவன் எத்துணைக் கொடுமை செய்யினும் தலைவி தன் கற்பினின்றும் சிறிதும் கலங்குதல் இலளாவள் என்பதனை வெளிப்படுப்பதே தலையாயதாகும். மாணிக்கவாசகப் பெருமான் கூடலினாய்ந்த தீந்தமிழ்க் கடலிற் படிந்து கொழித்தெடுத்த அரும்பெறன் மணிகளுள் ஒன்றாய, “ வேயாது செப்பி னடைத்துத் தமிவைகும் வீயினன்ன தீயாடி சிற்றம் பலமனையாள் தில்லை யூரனுக்கின் றேயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள் யாயா மியல்பிவள் கற்புநற் பால வியல்புகளே” என்னும் கோவைச் செய்யுளில், தலைவனது பரத்தைமை யொழுக்கத்தால், வேயாது செப்பினடைத்த பூப்போலத் தலைவியின் மெய் வாடியும் தலைவனுக்கு ஒவ்வாப் பழி வருமென்று அஞ்சி, அவள், அவனது கொடுமையைத் தன் ஆருயிர்த் தோழிக்கும் மறைத்த லாகிய கற்பின் பொற்பு இனிது விளக்கப்படுதல் காண்க, இனி, மிடாச் சொன்றிக்கு ஓர் அவிழ்பதமாம் என்னும் முறையால் கலித்தொகைப் பொற்பேழை யகத்து ஒளிவிடும் கதிர்மணிக் குவையுள் ஒரு சில காட்டி இவ்வுரை முடிக்கப்பெறும். பாலைக் கலியுள்ளே, சுரத்தின் வெம்மையைக் குறித்தற்கு, “ உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிகுத் தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம் கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு” என்றும், “ இன்னிழலின்மையால் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலை” என்றும், கூறுவன நெஞ்சினை உருக்குந் திறத்தன. இவற்றின்கண் அவலமேயன்றி, அருளும் தோன்றுகின்றன, பின்னதன் கண், காட்டகத்து வாழும் விலங்கும் இத்தகைய பேரன்பின தாகலின் அதனை யறிந்து தலைவியைத் தலையளி செய்தற்குத் தலைவன் வாராதிரான் என்னும் கருத்து வலியுறுத்தப்படுகின்றது. “வீறுசால் ஞாலத்து’ என்னுஞ் செய்யுளில், இளவேனிற் காலத்து யாறு தன்னாலே வளம்பெற்ற நாட்டின் பொற்பினைக் கண்விழித்துக் கண்டாற் போல் அதன் மருங்குள்ள கயங்கள் விளங்குகின்றன என்றும், பளிக்குக் கண்ணாடியினுள்ளே பவழம் பதித்தாற்போலக் காம்பினின்று கழன்று உதிர்ந்த முருக்கின் சேயிதழ்கள் குளத்து நீரிடைக் காணப்படுகின்றன என்றும் கூறிய உவமங்கள் மருட்கையும் மகிழ்ச்சியும் விளைப்பன. குறிஞ்சிக் கலியிலே ‘கானவன் யானை மீது வீசிய கவண்கல் வேங்கையின் பூவைச் சிதறி, ஆசினி மென்பழத்தை யுதிர்த்து, தேனின் இறாலைத் துளைப்படுத்து, மாவின் குலையை உழக்கி, வாழையின் மடலைக் கிழித்து, பலவின் பழத்துட் சென்று தங்கும்’ எனக் குறிஞ்சியின் கருப்பொருள் பலவற்றைச்சிறப்பு சிறப்புற எடுத்தடுக்கி,அவற்றின் கண் அகப்பொருள் ஒழுக்க நிகழ்ச்சிகளை உள்ளுறுத் தமைத்திருக்கும் திறப்பாடு பாராட்டற்குரியது. மருதக் கலியில், “ காதல்கொள் வதுவைநாட் கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர்கொள் மானோக்கின் மடந்தைதன் துணையாக ஓதுடை யந்தணன் எரிவலஞ் செய்வான்போல்” அன்னம் தன் அணிநடைப் பெடையோடு தாமரைத் தனி மலரைப் புறஞ்சூழ்ந்து திரிதரும் என்றுரைப்பது இனிமை பயப்பதொன்றாம். முல்லைக் கலியிலே, வெள்ளை, காரி, குரால், சேய், கரி, நெற்றிக் காரி, செம்மறு வெள்ளை, ஏந்திமிற் குரால், பல்பொறிப் புகர் என்றிங்ஙனம் நிறம்பற்றி ஏறுகளுக்குப் பெயர் கூறி, அவற்றுக்குப் பலராமன், கண்ணன், முக்கண்ணான், முருகன் என்னும் கடவுளர்களையும், அவர்கள் தரித்துள்ள தார், வளை, மறு, உடை முதலியவற்றையும் பொருந்தவைத்து உவமங் கூறியிருப்பது பாராட்டுந் திறத்தது. “ கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையும் புல்லாளே ஆய மகள்” என்பதன் கருத்து அறிந்து சுவைத்து இன்புறற்பாலது. நெய்தற்கலியுள், தலைவனைப் பிரிந்து ஆற்றாமை மிக்குக் கடல், முகில், ஞாயிறு முதலியவற்றை நோக்கித் தலைவி கூறும் கழிபடர்க் கிளவியெல்லாம் இருப்பு நெஞ்சையும் நெகிழ்க்குந் திறத்தன. ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை என்னும் பண்புகளை ஒரு செய்யுளில் எடுத்து நிறுத்தி, “ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்” என்றிங்ஙனம் அவற்றின் கருத்தினை வரையறுத் துணர்த்தி யிருப்பது ஆசிரியரது மாண் புலமைக்குச் சான்றாகும். “ தம்புகழ் கேட்டார்போல் தலைசாய்த்து மரந்துஞ்ச” என்று ஆசிரியர் உவமமாகத் தேர்ந்து கூறியதோர் நற்பண்பு நன்மக்கள் உள்ளத்தே என்றும் நின்று நிலவுதற் குரியது. மற்றும் இக்கலித்தொகையிற் கூறப்பட்டிருக்கும் தலை மக்களின் பண்புகளும், அறநெறிகளும், உலகியல்களும் முதலாயின வெல்லாம் பேருறுதி பயப்பனவாகும். முதல் கருஉரிப் பொருகளின் இயல்புகளைத் தெளிவுறுக்கு மிடங்களில் வேத்தியல் முதலாய ஏத்தரும் அறநெறிகள் எத்தனையோ பல உவமங்களில் வைத்து அறிவுறுத்தப் பெற்றுள்ளன. மக்களின் மனநிலை, ஒழுக்கம் முதலிய பண்புகளுக்கு மரம், பூ முதலிய பருப்பொருள் களையும், பருப்பொருள்களுக்கு அப்பண்புகளையும் உவமையாக அமைத்திருக்கும் அழகு இதனிற்போல இத்துணை மிகுதியாக வேறெங்கும் காண்டலரிது. இதனைக் கற்பதில் தம் நெஞ்சினைத் திறை கொடுத்தோரே தமிழின் சுவையை இனிது நுகர்ந்து இன்புறுவோராவர். கலித்தொகைக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதிய உரை விழுமியதொன்று. அவரியற்றிய உரை பலவற்றினும் இது சிறந்தது என்னலாம். நுண்மாண் கருத்துக்களை ஆண்டாண்டு ஆய்ந்து வெளிப்படுத்தியும், உள்ளுறையுவமங்களைத் தெள்ளிதின் விளக்கியும், செய்யுள்தோறும் மெய்ப்பாடும், பயனும் தெரிவித்தும் இவ்வுரை இயன்றுள்ளது. சில தொடர்களுக்கு வெளிப்படை யாகத் தெரியும் பொருளை விடுத்து, விழுமிய பொருள் புகுத்துரைப்பது இவ்வுரையாசிரியர் இயல்பென்பது பலரும் அறிந்ததொன்று. கலியின் கடவுள் வாழ்த்திலுள்ள, “ கூறாமற் குறித்தன்மேற் செல்லும் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி” என்பதில் ‘கூறாமற் குறித்ததன்மேற் செல்லும்’ என்பது கூளிக்கு அடைமொழியாய் நின்று, ‘கூறவேண்டாமலே கருதிய வினையிற் செல்லும்’ என்னும் பொருள் பயப்பது கண்கூடு. தக்கயாகப் பரணி உரையாசிரியர், “இறைவர்தம், மேலை நெற்றி விழிக்கவந்து பணிந்து நின்றனன் வீரனே” என்பதற்கு உரை கூறுமிடத்து, “கூறாமற் ... கேளினி” என்னும் இப்பகுதியை எடுத்துக் காட்டியிருப்பது அவர் கருத்தும் அன்னதாதலைப் புலப்படுத்தும். ஆயின், நச்சினார்க்கினியரோ, அதனை இறைவனுக்கு அடையாக்கி, “மாற்றம் மனம் கழிய நின்றவன்” என்ற கருத்தினைப் புலப்படுத்துகின்றார்.  1940 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 9, 10 நாட்களில் சென்னையில் நடைபெற்ற கலித்தொகை மாநாட்டில் தமிழறிஞர் ந.மு.வே. அவர்கள் நிகழ்த்திய தலைமை உரை. நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) L L L ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியர் உரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் குறிப்புகள் 1. திருக்குறள் 430 1. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - மரபியல் நூற்பா - 32 2. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - மரபியல் நூற்பா - 33 3. புறநானூறு பா - 183 1. மாணிக்கவாசகர் - திருக்கோவையார் பா - 308 2. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் நூற்பா - 9 3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் நூற்பா - 41 1. திருக்குறள் திருவள்ளுவ மாலை பா - 3 1. புறநானூறு - பா - 71 2. புறநானூறு - பா - 72 3. புறநானூறு - பா - 73 1. புறநானூறு - பா - 110 2. புறநானூறு - பா - 235 1. திருக்குறள் - 2 2. திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவாலவாய்த் திருப்பதிகம் - பா - 4 1. புறநானூறு - பா - 29 1. வில்லிபாரதம் ஆதிபருவம் வாரணா வதச்சருக்கம் பா - 68 1. புறநானூறு - பா - 72 1. புறநானூறு - பா - 3 2. புறநானூறு - பா - 5 3. புறநானூறு - பா - 18 4. புறநானூறு - பா - 28 5. புறநானூறு - பா - 29 6. புறநானூறு - பா - 35 1. புறநானூறு - பா - 55 1. திருக்குறள் - 140 1. ஆதிபுராணத் திருக்குறுந்தொகை - 5 1. திருமந்திரச் செய்யுள் 115 2. தாயுமான வடிகள் - எந்நாட் கண்ணி - 4 1. ஆகாரபுவனம் சிதம்பர ரகசியம் பா - 11 2. திருப்பெருவேளுர்த் திருப்பதிகம் 2:9 1. திருக்குறள் 350 2. தொல்காப்பியம் -பொருளதிகாரம் - புறத்திணையியல் நூற்பா - 17 3. தொல்காப்பியம் -பொருளதிகாரம் - புறத்திணையியல் நூற்பா - 17 1. பெரும் பொருள் விளக்கம் - புறத்திரட்டு - அறிவுடைமை பா - 15 1. திருக்குறள் - 972 2. நாலடியார் - 195 1. கலைசைப் பதிற்றுப்பத்து அந்தாதி - பா - 76 1. *இக்குறள் வெண்பா ந. மு. வே நாட்டார் ஐயா எழுதியதாக இருக்கலாம். இக்கருத்தமைத்த இரண்டு பாடல்கள் உள்ளன. விவரம் வருமாறு: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் யாம் என்றும் நினைந்தாலும் என் கொலோ - சென்றுதன் தாள் னவர்இறைஞ்சுத் தண்சாரற் காளத்தி ஆள்வான் அருளாத வாறு. - கயிலைபாதி காளத்திபாதி அந்தாரி பா - 42 நின்று நினைந் (து) இருந்துகிடந் (து) எழுந்து தொழும் தொழும்பனேன். வேணாட்டடிகள் அருளிய திருவிசைப்பா - பா - 5 நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை - அபிராமி அந்தாதி - 10 1. திருவிளையாடற் புராணம் பாண்டித்திருநாட்டுப்படலம் பா - 57 1. கம்பராமாயணம் - ஆரணியகாண்டம், அகத்தியப்படலம் பா - 41 2. மேலது பா - 36 3. மேலது பா - 47 4. கம்பராமாயணம் - பாலகாண்டம் - நகரம் - 1 5. கம் - பாலகாண்டம் - மிதிலைக் காட்சிப் படலம் பா .2,3 1. கம் - அயோத்தியா காண்டம் கங்கை கொண்ட படலம் பா : 1 2. கம் - பாலகாண்டம் அகலிகைப்படலம் பா - 5 3. தொல். பொருள் - களவியல் - 23 4. கம்பராமாயணம் தனியன்கள் பா.13 1. அறநெறிச்சாரம் பாட்டு - 42 1. ஞானாமிர்தம் பா - 40 ; 20 - 23 1. திருக்குறள் திருவள்ளுவமாலை - பா - 21 2. திருக்குறள் 263 1. பெருங்கதை - உஞ்சைக்காண்டம் உரிமைவிலாவணை அடி - 155 - 156 2. பெருங்கதை - இலாவணக்காண்டம் - கடிக்கம்பலை அடி - 32 - 34 1. கல்லாடம் 13 : 23 1. தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - கிளவியாக்கம் நூற்பா - 41 2. திருவள்ளுவமாலை - பா - 12 3. திருவள்ளுவமாலை - பா - 17 4. திருவள்ளுவமாலை - பா - 51 5. திருவள்ளுவமாலை - பா - 4 6. திருவள்ளுவமாலை - பா - 7 1. திருவள்ளுவமாலை - பா - 8 2. திருவள்ளுவமாலை - பா - 19 3. திருவள்ளுவமாலை - பா - 24 4. திருவள்ளுவமாலை - பா - 31 5. திருவள்ளுவமாலை - பா - 47 6. திருவள்ளுவமாலை - பா - 49 7. திருவள்ளுவமாலை - பா - 50 * 18.11.1939 நிகழ்ந்த உயர்திரு. ஞானியார் அடிகளின் பொன்விழாப் பாராட்டுரை இது. செந்தமிழ்ப் பூம்பொழிவின் முதற் பகுதியினின்று எடுத்தது. 1. சீவகசிந்தாமணி - நாமகள் இலம்பகம் பா - 48 2. மாணிக்கவாசகர் - திருக்கோவையார் பா- 308 3. திருக்குறள் - 650 1. குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - பா - 4 2. கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - அநுமப்படலம் - பா - 18 * தாயுமானவர் பாடல்கள் - குரு வணக்கம் - பா - 1 1. புறநானூறு - பா - 124 2. பெரியபுராணம் - மெய்ப்பொருள் நாயனார் புராணம் - பா - 15 3. மேலது பாட்டு - 22 4. பெரியபுராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - பா - 89 1. சோணகைல மாலை - பா - 2 2. திருநாவுக்கரசர் புராணம் - பா - 11 3. வில்லிபாரதம் - சிறப்புப்பாயிரம் - பா - 9 1. கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் - கங்கை காண் படலம் - பா - 30 1. சிலப்பதிகாரம் - புறஞ்சேரியிறுத்த காதை அடிகள் 83 - 86 1. சிலப்பதிகாரம் - புறஞ்சேரியிறுத்த காதை அடிகள் 87 - 92 1. சிலப்பதிகாரம் - வேனிற்காதை அடிகள் 56 - 63 1. சீவகசிந்தாமணி - காந்தருவதத்தையார் இலம்பகம் பா - 177 1. மூதுரை - 7 2. திருக்குறள் - 396 1. அறநெறிச்சாரம், பாட்டு - 146 2. சீவகசிந்தாமணி, கனகமாலையார் இலம்பகம் பாட்டு - 39 1. நீதிநெறி விளக்கம். பாட்டு - 1 1. சீவகசிந்தாமணி, நாமகள் இலம்பகம் பா - 164 2. கம்பராமாயணம் ஆரண்ய காண்டம் சூர்ப்பநகைப் படலம் - 5 3. மாணிக்கவாசகர் - திருக்கோவையார் பாட்டு - 79 1. திருஞானசம்பந்தர் தேவாரம் - திரு வீழிமிழலைத் திருப்பதிகம் பாட்டு - 3 2. பெரியபுராணம் - தடுத்தாட்கொண்டபுராணம் பா - 140 3. தணிகைப் புராணம் - களவுப்படலம் பாட்டு - 100 4. தஞ்சைவாணன் கோவை - பாட்டு - 59 5. திருக்குறள் - 399 6. திருக்குறள் - 783 1. கம்பராமாயணம் , பாலகாண்டம் மிதிலைக்காட்சிப்படலம் பாட்டு - 23 2. திருக்குறள் - 843 1. சீவக - கனகமாலை - 39 (1595) 2. நாலடியார் - 132 3. நீதிநெறி விளக்கம் - 1 4. இடம் விளங்காத மேற்கொள் 5. நன்னெறி - பா - 32 1. திருக்குறள் - 87 2. நாலடியார் - 38 3. நான்மணிக்கடிகைப் பாட்டு - 28 4. திருமந்திரம் - கல்லாமை அதிகாரம் பாட்டு - 312 5. திருவிசைப்பா - திருவீழிமிழலைப் பதிகம் - பா - 2 1. கம்பராமாயணம் - பாலகாண்டம் - நகரப்படலம் பா - 74 2. திருக்குறள் - 414 1. திருக்குறள் - 398 2. திருக்குறள் - 392 1. திருக்குறள், திருவள்ளுமாலை - 51 1. திருக்குறள் - 407 1. இலக்கண விளக்கம் - நூற்பா - 6 2. திருக்குறள் - 423 3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - மரபியல் நூற்பா - 105 1. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - மரபியல் நூற்பா - 106 1. அறநெறிச்சாரம் - பா - 42 2. திருக்குறள் - 300 1. திருக்குறள் - 844 1. மணிமேகலை சிறை செய் காதை அடிகள் 59 - 61 1. திருக்குறள் திருவள்ளுமாலை - பாட்டு - 9 2. கல்லாடம் பாட்டு 14 அடிகள் 20 - 22 1. திருக்குறள் - 1037 1. திருக்குறள் - 948 2. திருக்குறள் - 461 3. திருக்குறள் - 471 4. திருக்குறள் - 744 5. திருக்குறள் - 589 6. திருக்குறள் - 130 7. திருக்குறள் - 220 8. திருக்குறள் - 594 1. திருக்குறள் - 1127 2. திருக்குறள் - 1249 3. திருக்குறள் - 152 4. திருக்குறள் - 317 5. திருக்குறள் - 987 6. திருக்குறள் - 300 1. திருக்குறள் - 359 2. திருக்களிற்றுப்பாடியார் - பாட்டு - 34 1. பெரியபுராணம் திருக்கூட்டச்சிறப்பு பாட்டு - 9 1. சுந்தரர் தேவாரம் திருநாவலூர்த்திருப்பதிகம் பாட்டு - 11 2. சுந்தரர் - திருத்தொண்டத் தொகை - பாட்டு - 11 3. சுந்தரர் தேவாரம் திருநள்ளாற்றுத் திருப்பதிகம் - பாட்டு - 6 4. சுந்தரர் தேவாரம் திருவாரூர்த் திருப்பதிகம் - பாட்டு - 10 1. சுந்தரர் தேவாரம் திருவாரூர்த்திருப்பதிகம் - பாட்டு - 11 2. சுந்தரர் தேவாரம் திருநள்ளாற்றுத் திருப்பதிகம் - பாட்டு - 8 3. சுந்தரர் தேவாரம் திருநாவலூர் பதிகம் - பாட்டு - 8 4. சுந்தரர் தேவாரம் திருப்பரங்குன்றத் திருப்பதிகம் - பாட்டு - 11 5. திருக்குறள் - 399 6. திருக்குறள் - 783 7. சுந்தரர் தேவாரம் திருநீடுர்த்திருப்பதிகம் - பாட்டு - 5 8. சுந்தரர் தேவாரம் திருக்குருகாவூர் வெள்ளடைத் திருப்பதிகம் - பா - 6 9. சுந்தரர் தேவாரம் திருமழபாடித் திருப்பதிகம் - பாட்டு - 5 1. திருநெல்வாயில் அரத்துறைத் திருப்பதிகம் - பாட்டு - 7 2. மேலது - பாட்டு - 23. 3. மேலது - பாட்டு - 3 4. மேலது - பாட்டு - 4 5. மேலது - பாட்டு - 7 1. சுந்தரர் திருத்தொண்டத்தொகை - பாட்டு - 2 2. மேலது - பாட்டு - 3 3. மேலது - பாட்டு - 2 4. மேலது - பாட்டு - 2 5. மேலது - பாட்டு - 2 6. மேலது - பாட்டு - 9 7. மேலது - பாட்டு - 3 8. மேலது - பாட்டு - 6 1. சுந்தரர் திருத்தொண்டத்தொகை - பாட்டு - 1 2. மேலது - பாட்டு - 1 3. மேலது - பாட்டு - 5 4. மேலது - பாட்டு - 2 1. சுந்தரர் தேவாரம் திருநின்றியூர்த் திருப்பதிகம் - இரண்டாம் பதிகம், பாட்டு - 2 2. சுந்தரர் தேவாரம் திருநனிப்பள்ளித்திருப்பதிகம்- பா - 9 3. சுந்தரர்தேவாரம் திருவீழிமிழலைத்திருப்பதிகம்- பா - 8 4. திருப்புன்கூர்த்திருப்பதிகம் - பாட்டு - 4 5. சுந்தரர் தேவாரம் திருமழபாடித் திருப்பதிகம் - பாட்டு- 5 1. சுந்தரர் தேவாரம் திருக்குருகாவூர் வெள்ளடைத் திருப்பதிகம் - பா - 6 2. சுந்தரர்தேவாரம் திருவீழிமிழலைத்திருப்பதிகம்- பாட்டு- 8 3. சுந்தரர்தேவாரம் திருக்கருப்பறியலூர்த்திருப்பதிகம்-பா- 11. 4. சுந்தரர் தேவாரம் திருவாரூர் பரவையுண்மண்டளித் திருப்பதிகம் - பாட்டு - 6 5. சுந்தரர்தேவாரம் திருப்பைஞ்ஞீலித்திருப்பதிகம் - பா- 4 6. சுந்தரர் தேவாரம் - திருப்புன்கூர்த்திருப்பதிகம் - பா - 4 7. சுந்தரர் தேவாரம் - திருக்கோலக்காத்திருப்பதிகம் - பா - 8 8. சுந்தரர் தேவாரம் திருப்பைஞ்ஞீலித்திருப்பதிகம் - பா - 4 1. சுந்தரர் தேவாரம் திருவாரூர்த்திருப்பதிகம் - பா - 8 : 4 2. சுந்தரர்தேவாரம்-திருவெதிர்கொள்பாடித் திருப்பதிகம்- பா-2 3. சுந்தரர்தேவாரம் - திருவெதிர்கொள்பாடித் திருப்பதிகம் - பா - 8 4. சுந்தரர்தேவாரம்- பண்- இந்தளம் திருவாரூர்த் திருப்பதிகம் - பா - 1:6 5. சுந்தரர் தேவாரம் - திருநாட்டியத்தான் குடித்திருப்பதிகம் - பா - 8 6. சுந்தரர்தேவாரம் - திருவெதிர்கொள்பாடித்திருப்பதிகம் - பா - 1 1. சுந்தரர் தேவாரம் - திருத்துறையூர்த்திருப்பதிகம் - பா - 1 2. மேலது பா - 2 3. மேலது பா - 8 4. பெரியபுராணம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் - பா - 839 1. சிவஞானபோதம் - சூத்திரம் 10 சிவஞானசித்தியார் சுபக்கம் பா - 308 2. பெரியபுராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் பா - 181 3. சுந்தரர் தேவாரம் - திருவாமாத்தூர்த் திருப்பதிகம் பா - 9 1. சுந்தரர் தேவாரம் - பண் - இந்தளம் - திருவாரூர்த் திருப்பதிகம் - பா- 7 2. சுந்தரர் தேவாரம் - திருமழபாடித் திருப்பதிகம் - பா - 4 3. பெரியபுராணம் - சண்டேசுவரநாயனார் புராணம் -பா - 60 4. சுந்தரர் தேவாரம் - திருவலிவலத் திருப்பதிகம் - பா - 5 1. சுந்தரர்தேவாரம் - திருப்பிரம்மாபுரத் திருப்பதிகம் - பா- 4 2. சுந்தரர்தேவாரம் - திருவொற்றியூர்த் திருப்பதிகம் - பா - 1. 3. சுந்தரர்தேவாரம் - பண் - பழம்பஞ்சுரம் - திருப்பாண்டிக் கொடுமுடித் திருப்பதிகம் - பா - 1 4. சுந்தரர்தேவாரம் - பண்- தக்கேசி திருவொற்றியூர்த் திருப்பதிகம் - பா- 2, 1. 1. சுந்தரர்தேவாரம் - திருப்புன்கூர்த் திருப்பதிகம் - பா - 6 2. சுந்தரர்தேவாரம் - திருக்கலய நல்லூர்த் திருப்பதிகம் - பா - 1 3. சுந்தரர்தேவாரம் - திருக்கலய நல்லூர்த் திருப்பதிகம் - பா - 9 1. சுந்தரர்தேவாரம் - திருக்கலய நல்லூர்த் திருப்பதிகம் - பா - 8 2. சுந்தரர்தேவாரம் - திருநின்றியூர்த் திருப்பதிகம் பா - 2 3. சுந்தரர்தேவாரம் - திருசோற்றுத்துறைத் திருப்பதிகம் பா - 6 4. சுந்தரர்தேவாரம் - திருசோற்றுத்துறைத் திருப்பதிகம் பா - 1 5. சுந்தரர்தேவாரம் - திருசோற்றுத்துறைத் திருப்பதிகம் பா - 4 6. சுந்தரர் தேவாரம் - திருப்பைஞ்ஞீலித் திருப்பதிகம் பா - 7 7. சுந்தரர் தேவாரம் - திருப்பைஞ்ஞீலித் திருப்பதிகம் பா - 2 1. சுந்தரர் தேவாரம் - திருக்கோளிலித் திருப்பதிகம் பா - 2 2. சுந்தரர் தேவாரம் - திருவொற்றியூர்த் திருப்பதிகம் பா - 4 3. சுந்தரர் தேவாரம் - திருமழபாடித் திருப்பதிகம் - பா - 1 4. சுந்தரர் தேவாரம் - பண் - தக்கேசி திருவாரூர்த் திருப்பதிகம் பா - 1 1. சுந்தரர் தேவாரம் - திருவாவடுதுறைத் திருப்பதிகம் பா - 1 2. சுந்தரர் தேவாரம் - திருநள்ளாற்றுத் திருப்பதிகம் பா - 1 3. சுந்தரர் தேவாரம் - திருவாழ்கொளிப் புத்தூர்த் திருப்பதிகம் பா - 1. 4. சுந்தரர் தேவாரம் - பண் பழம்பஞ்சுரம் திருவாரூர்த் திருப்பதிகம் - பா - 10 5. இராமலிங்க அடிகள் - திருவருட்பா ஐந்தாம் திருமுறை ஆளுடைய நம்பிகள் அருள்மாலை பா - 5 1. புறநானூறு - 191 1. புறநானூறு - 184 1. திருக்குறள் - 1247 2. குறுந்தொகை - 149 1. அகநானூறு 128 : 10, 11 அடிகள் 2. ஐங்குறுநூறு 289 1. புறநானூறு - 188 2. திருக்குறள் 89 3. புறநானூறு 235 4. திருக்குறள் 64 ** “பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில் புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய் மக்களையிங் கில்லா தவர்” - நளவெண்பா - 246 1. அகநானூறு 66 : 1 - 6 அடிகள் * திருச்சிராப்பள்ளி இந்திய ஒலிபரப்பியின் மூலம் 21-06-1939ல் உயர் திரு. ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் நிகழ்த்திய சொற்பெருக்கு. 1. சிலப்பதிகாரம் - கானல்வரிப் பாட்டு - 20 1. சிலப்பதிகாரம் - வாழ்த்துக் காதைப் பாட்டு - 20 1. கம்பராமாயணம் - அயோத்தியாகாண்டம் நகர்நீங்குபடலம் பாட்டு - 98. 2. மேலது பாட்டு 104 3. மேலது பாட்டு 135 1. பெரியபுராணம் தடுத்தாட்கொண்ட புராணம் பாட்டு - 140 ** திருவள்ளுவமாலை - 19, 32, 50 1. அகநானூறு பா 26 : 1 - 2 அடிகள் 2. நற்றிணை பா 98 : 1-7 1. அகநானூறு பா - 88 : 1-4 2. திருக்குறள் திருவள்ளுவமாலை பா - 4 1. மணிமேகலை - சிறைசெய் காதை - அடிகள் 135, 136 2. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - புறத்திணையியல் நூற்பா - 19 அடிகள் - 28, 29 1. புறநானூறு பா - 63 1. புறநானூறு பா - 112 1. சிலப்பதிகாரம் - கொலைக்களக்காதை அடிகள் - 84 - 91 2. சிலப்பதிகாரம் - துன்பமாலை அடிகள் 30 - 34 1. சீவகசிந்தாமணி - நாமகள் இலம்பகம் - பா - 309-310 2. வில்லிபாரதம் - பதின்மூன்றாம் போர்ச்சருக்கம் பா - 131 1. வில்லிபாரதம் - பதின்மூன்றாம் போர்ச்சருக்கம் பாட்டு - 133. 2. மேலது பா - 138. 1. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் நூற்பா - 11 1. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - களவியல் நூற்பா - 2 2. திருக்குறள் - 1289 1. குறுந்தொகை - 40 2. மாணிக்கவாசகர் - திருக்கோவையார் - பா - 14 1. கம்பராமாயணம் -அயோத்தியா காண்டம் -மிதிலைக் காட்சிப் படலம் பா -35 2. மேலது பா - 37 3. கம்பராமாயணம் - சுந்தரகாண்டம் - திருவடிதொழுதபடலம் பா - 42 1. குறுந்தொகைப்பாட்டு - 3 2. மாணிக்கவாசகர் - திருக்கோவையார் - பா - 8 1. நற்றிணைப் பாட்டு - 1 1. மனோன்மணீயம் - அங்கம் 1 - களம் 4 - அடிகள் 82 - 105 1. திருக்குறள் - 412 2. திருக்குறள் - 420 1. புறநானூறு பா - 73 1. திருக்குறள் - 765 2. “கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்” என்னும் குறளின் கருத்து.நோக்குக! 3. புறநானூறு 66-ஆம் பாட்டின் கருத்து. 4 புறநானூறு 278 - ஆம் பாட்டின் கருத்து 1. புறநானூறு 279 - ஆம் பாட்டின் கருத்து 2. புறநானூறு - 9 3. திருக்குறள் - 773 1. கம்பராமாயணம் - யுத்தகாண்டம் - முதற்போர்புரிபடலம் பா - 251 2. மேலது பா - 255 3. சிலப்பதிகாரம் - காட்சிக்காதை - அடிகள் 160 - 167 1. கம்பராமாயணம் - யுத்தகாண்டம் - இரணியன் வதைப்படலம் பா - 146 2. மனோன்மணீயம் - அங்கம் - 4 முதற்களம் - அடிகள் 136-151 1. கம்பராமாயணம் - பாலகாண்டம் - நகரப்படலம் - பா.1 2. குமரகுருபரர் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - முத்தப்பருவம் பா-4 1. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் - மதுரைக்காண்டம் பா - 122 * குறுந்தொகை - 135 - பா. அடி - 1 1. கலித்தொகை - பாலைக்கலி - பாட்டு - 9 2. மேலது 3. மேலது 4. கலித்தொகை - பாலைக்கலி - பாட்டு - 11 5. மேலது 1. கலித்தொகை - பாலைக்கலி - பாட்டு - 11 1. கலித்தொகை - நெய்தற்கலி - பாட்டு - 6 1. மனோன்மணீயம்- 2ஆம்அங்கம் - 1 - களம் - 4 - அடிகள் 118-121 2. மனோன்மணீயம் - அங்கம் - 1 - களம் - 4 - அடிகள் 84-104 1. மனோன்மணீயம் - அங்கம் - 2- களம் - 2 - அடிகள் 172-183 2. மனோன்மணீயம் - அங்கம் - 2- களம் - 1 - அடிகள் 268-270 3. மனோன்மணீயம் - அங்கம் - 2- களம் - 1 - அடிகள் 298-307 1. மனோன்மணீயம் - அங்கம் - 4 - களம் - 1 - அடிகள் 79-85 2. மனோன்மணீயம் - அங்கம் - 4 - களம் - 1 - அடிகள் 89-92 3. மனோன்மணீயம் - அங்கம் - 4 - களம் - 1 - அடிகள் 106, 107 4. மனோன்மணீயம் - அங்கம் - 4 - களம் - 1 - அடிகள் 136-139 5. மனோன்மணீயம் - அங்கம் - 4 - களம் - 1 - அடிகள் 141,142 6. மனோன்மணீயம் - அங்கம் - 4 - களம் - 1 - வரி 152 7. மனோன்மணீயம் - அங்கம் - 4 - களம் - 1 - வரி 160 8. மனோன்மணீயம் - அங்கம் - 5 - களம் - 2 - அடிகள் 100-102 1. திருவாசகம் - போற்றித் திருவகவல் அடிகள் - 44,45 1. மனோன்மணீயம் - அங்கம் - 5 களம் - 3 - கொச்சகக்கலிப்பா - 2. 2. மனோன்மணீயம் - அங்கம் - 5 களம் - 3 . கொச்சகக்கலிப்பா - 3.