நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 16 இலக்கணக் கட்டுரைகள் இலக்கியக் கட்டுரைகள் ஆசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 16 ஆசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 376 = 400 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 250/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப் பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின்நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள் கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை வியக்க வைக்கிறார் நாட்டார்! கோவை நகர மாணவர்களின் நெஞ்சம் அகலாத் தஞ்சைத் தமிழாசிரியர்கள் பலர். அவர்களில் முதலிடம் வகிப்பவர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். கோவை தூய மைக்கேல் பள்ளித் தமிழாசிரியராக அவர் பணியாற்றிய காலம் ( 1909 முதல் 1910 வரை) வெறும் இரண்டாண்டுகள் தாம்! திருச்சிப் பணிக்குச் சென்ற பின்பும், ந.மு.வே. அவர்களைக் கோவைக்கு ஆண்டுதோறும் அழைப்பதையும், பல நாள்கள் தங்கவைத்து உபசரிப்பதையும், இலக்கிய விழாக்களில் பங்கேற்கச் செய்து மகிழ்வதையும் அவரின் பழைய மாணவர்கள் (பெரும்பாலும் பஞ்சாலை அதிபர்கள்) வழக்கமாக்கி வைத்திருந்தனர். தமிழாசிரியப் பணியை 21.7.1908இல் திருச்சியில் தொடங்கிய நாட்டார் அவர்கள் கோவை, சிதம்பரம் எனப் பணிச்சுவடுகளைப் பதித்தபின் 30.06.1940இல் ஓய்வு பெற்றுத் தஞ்சை திரும்பினார். தஞ்சை கரந்தைப் புலவர் கல்லூரி மதிப்பியல் முதல்வராக 02.07.1941இல் பணியைத் தொடர்ந்தார். அவர் 28.3.1944 ஆம் நாள் விழிதுயிலும் வரை விழி துயிலாமல், தமிழாய்வையும் உரைவிளக்கப் பதிப்புப் பணிகளையும் வாழவைத்த வரலாற்றுக்கு உரியவர். வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு நிலத்தை உழுதபடியே, தமிழ் நூல்களால் மனத்தை உழுது பண்படுத்திக் கொண்ட இளமை வாழ்வு அவருக்குரியது. இலக்கியத் தொடர்பும் இலக்கணத் தோய்வும் வடமொழிப் பயிற்சியும் இசை ஈடுபாடும் அவரது மனவயலின் வரப்புகள் ஆனதையும், தமிழ்ப் பயிர் அதில் தழைத்து வளர்ந்ததையும் அவர் வரலாறு பேசும். நடுக்காவிரியில் உழவுத் தொழிலில் ஈடுபட்ட இளைஞராக ந.மு.வே. இருந்தபோது, செவ்வந்தி புராணச் செய்யுள் நுட்பத்தை அவர் தெளிவு படுத்திய திறம்கண்டு வியந்த நின்றார் - தொடக்கக் கல்வி அதிகாரியான சாமிநாத முதலியார்; அந்தவியப்பே, மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வெழுதுமாறு நாட்டாருக்கு வழிகாட்ட வைத்தது. ஆய்வுலகில் அடைபட்டு நின்ற எத்தனையோ வழிகளைத் திறந்துகாட்டும் திறனுடன் நாட்டார் திகழ்ந்தது உண்மை! அந்தத் திறன் அவரிடம் இருப்பதை உலகம் அறிந்து கொள்ளும் வழியைத் திறந்து வைத்தது, அந்தத் பண்டிதத் தேர்வுதான்! பிரவேச பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் என ஆறாண்டு களில் எழுத வேண்டிய தேர்வுகளை மூன்றே ஆண்டுகளில் தொடர்ந் தெழுதி முதல் மாணவராய்த் தேர்ச்சி பெற்றார். பண்டிதத் தேர்வில் தங்கத்தோடா, தங்கப்பதக்க விருதுகளுடன் உயர்ந்து நின்றபோதுதான் நாட்டாரைத் தமிழகம் வியந்து பார்க்கத் தொடங்கியது. பழந்தமிழ் இலக்கிய மாளிகையைத் தாங்கிய நான்கு தூண்களில் ஒருவராக ந.மு.வே. அவர்கள் ஆய்வுலகில் இன்று நிலையான இடத்தைப் பெற்றுவிட்டார். பழந்தமிழ் இலக்கிய மாளிகைக்கு அடிமனை அமைத்தவர் ஆறுமுக நாவலர்; கற்சுவர் எழுப்பியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்தவர் உ.வே.சாமிநாத அய்யர்; வாயில் திறந்தவர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். புகழ்மிக்க தமிழறிஞர்களான அ.மு.சரவண முதலியார் (அ.ச.ஞா. அவர்களின் தந்தையார்), முனைவர் அ.சிதம்பரநாதனார், பேராசிரியர் வ.சுப.மாணிக்கம், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் முதலிய நன்மாணாக்கர்களை உருவாக்கிய ஆசிரியர் அவர். ஆசிரியச் சான்றோராகவும் ஆய்வறிஞராகவும் திகழ்ந்த நாட்டாரின் அறிவுத்திறன், இன்றைய ஆய்வுலகின் அடித்தளப் பரப்பாய் விரிந்து நிற்கிறது. நாட்டாரின் அறிவுப் பரப்பைப் போலவே அவரின் ஆய்வு நேர்மையும் வியப்பு தருவது. தம் முன்னோராகிய உரையாசிரியர்கள் கருத்தை மறுக்க நேர்ந்ததையும், தமது கருத்தையே தாம் மறுக்க நேர்ந்த வளர்ச்சிப் போக்கையும் மறைக்காமல் வெளிப்படுத்துவார். கருத்து வளர்ச்சியும் முடிபு மாற்றங்களும் இல்லாமல் சரியான ஆய்வு எப்படிப் பிறக்கும்? அதனை உறுதிப் படுத்தும் நாட்டாரின் குரல் இது: “ யான் இவ்வாராய்ச்சியை நடாத்துழிப் பண்டைநூல் உரையாசிரியன்மார் கொண்ட கொள்கைகளுக்கு ஓரோவழி மாறாகச் சொல்லுதலும் கூடும். இதுகாறும் யான் கொண்டிருந்த கருத்துக்கு முரணாகவும் சில இருத்தல் கூடும். ஆராய்ச்சியின் வெற்றி இதுவென அறிந்த அறிவுடையார் இவை குறித்து என்னை முனியார் என்னும் துணிவுடையேன்.” நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் ஆய்வுத் திறன் - உரைவிளக்கம், காலத்தெளிவு, இலக்கிய நயம், கருத்துநுட்பம், தமிழர்வாழ்வு, தமிழக வரலாறு எனப் பலமுனைகளைக் கொண்டிலங்குவது. அவரின் எழுத்துகள் அனைத்தையும் முழுதாய்ப் பார்ப்பதற்கு அறிவுலகம் ஏங்கி நின்றது. நாட்டார் அவர்களின் உரைப்பதிப்புகள், ஆய்வு நூல்கள், அச்சில் வராத படைப்புகள், சொற்பொழிவுகள், நாட்குறிப்பு அனைத்தும் தாங்கிய அறிவுக்கருவூலம் இப்போது 24 தொகுதிகளான முழுத் தொகுப்பாய் உலகின் கைகளுக்குக் கிடைத்திருக்கிறது. இதற்கு முழுமுதற் காரணமானவர் தமிழ்மண் பதிப்பக நிறுவநர் திரு.கோ.இளவழகன் அவர்கள். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலை வணங்கும். நாட்டார் நூல்களை அரசுடைமை ஆக்கிப் பதிப்புப் பணிக்கு வழியும், தமிழாய்வுக்கு வாழ்வும் தந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் அறிவுப் பெரும்பணி, வரலாற்றில் என்றும் வாழும். நாட்டார் 1921 இல் கனவு கண்ட திருவருள்கல்லூரி 14.10.1992இல்தான் பேராசிரியர் பி.விருத்தாசலம் (கரந்தைப் புலவர் கல்லூரி முன்னாள் முதல்வர்) அவர்களின் பெருமுயற்சியால் தஞ்சையில் உருவானது. தமிழக வரலாற்றில் நாட்டாருக்கென அமைந்த தனித் தன்மைகள் பலவுண்டு. l தமிழறிஞர் ஒருவருக்குத் தமிழ்நாட்டில் கற்கோவில் எழுப்பப் பட்டது நாட்டாருக்குத்தான்! ‘ந.மு.வே. நாட்டார் கோவில் ’ இன்றும் நடுக்காவிரியில் திகழ்கிறது. l இன்று புழக்கத்தில் உள்ள கல்லூரி, ஆவணக்களரி, திருவாளர், வழக்கறிஞர், கண்காணியார் போன்ற தனித் தமிழ்ச் சொற்களை நாட்டில் நடைபயில விட்ட பெருமை நாட்டாருக்கு உரியது. l திருமண அழைப்பிதழ், புதுமனை புகுவிழா முதலிய அழைப்பிதழ்களை நல்ல தமிழில் அமைக்கும் முறையை நாட்டாரே அறிமுகப்படுத்தினார். l நாட்டார் எழுதிய தனித்தமிழ் அழைப்பிதழ்களைக் ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்டுப் பாராட்டிய தந்தை பெரியார் ( நாட்டாரை விட அய்ந்து வயது மூத்தவர்) , அவரின் திருவருள் கல்லூரி முயற்சிக்கு 1922 இலேயே 50 உருபா நன்கொடை வழங்கியும் ஊக்கப்படுத்தினார். நாட்டாரின் இலக்கண, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் இணைந்த இத்தொகுப்பு - புதிய உண்மைகள் பலவற்றை நமக்கு அள்ளித் தருகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் 11.2.1930இல் நாட்டார் நிகழ்த்திய ஆய்வுச் சொற்பொழிவு ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’! இதுவரை நூலாக வெளிவராத விரிவான அக்கட்டுரை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தொல்காப்பிய முழுநூலின் சாரத்தையும் ஒரே கட்டுரையில் அடக்கிக் காட்டும் நாட்டாரின் நடைத்திறமும், ஆய்வு நுட்பமும் வியப்பைத் தருவது உறுதி. இலக்கணம், இலக்கியம், பிறமொழிநூல்கள் எனும் பரந்து பட்ட நூற்பயிற்சியோடு தம் ஆய்வு முடிவுகளை நாட்டார் நிறுவுவதை இந்த நூல் முழுதும் பார்க்க முடியும். நாட்டார் காட்டும் ஆய்வு முடிபுகள்: l அகத்தியர்க்கு மாணாக்கர் தொல்காப்பியர் என்பதை ஏற்காத நாட்டார், அதற்கான சான்றுகளைக் குவித்துக் காட்டி மலைக்க வைத்துவிடுகிறார். l குமரிக் கண்டக் கொள்கையை வலியுறுத்தும் நாட்டார்- கலித்தொகை, சிலப்பதிகாரம், களவியலுரை காட்டும் கடல்கோள் குறிப்புகளால் அதனை அலசிக் காட்டுகிறார். l தொல்காப்பியத்திற்கு முதனூல் ஐந்திரம் என்பார் கூற்று பொருந்தாக் கூற்று எனவும் போலியுரை எனவும் நிறுவுகிறார். l பொய்கையார், பொய்கையாழ்வார் இருவரும் ஒருவரே எனும் மு.இராகவையங்கார் கருத்தை மறுத்து, இருவரும் இருவரே எனப் புலப்படுத்துகிறார். l ‘இன்னிலை’ பாடியவர் பொய்கையார் எனும் வ.உ. சிதம்பரனார் கருத்தை ஏற்காத நாட்டார், ‘இன்னிலை பலரால் பாடப்பட்ட தொகை நூல்’ என விளக்குகிறார். l வையை, வைகை எனும் இருவகை வழக்குகளில் வையை என்பதன் பக்கமே தமிழிலக்கியங்கள் நிற்பதை வரிசைப் படுத்தி நிறுத்துகிறார். l ‘அகத்தியர்க்குச் சிவன் தந்தது தமிழ்’ எனக் கடவுளுக்கும் மொழிக்கும் முடிச்சு போடுவதை ஏற்காத நாட்டார் ‘மொழிகளெல்லாம் மக்களிடையே தோன்றி அவர்களால் வளர்க்கப்படுவனவே’ என உறுதிப்படுத்துகிறார். l உலக முதன்மொழி தமிழ் எனும் கருத்தோடு உடன்படும் நாட்டார், “எல்லா மொழிகளையும் அவ்வவற்றின் தோற்றத்திற்குச் சார்பாயுள்ள மொழிகளில் ஒடுக்கிக் கொண்டு செல்லின், வேறு சார்பல்லாது தோன்றியது ஒன்றிரண்டுதான் இருக்கக்கூடும்’ என எவரையும் தம் இலக்கு நோக்கி நகர்த்தி விடுகிறார். l திணை மயக்கம் இடம்பெற்ற சிறந்த நூலை இனம் காட்டும் போது “பெரிய புராணத்தில்... திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்திற்றான் ஆசிரியர் ஐந்திணைகளையும் ஒருங்கே ஆராய்ந்து அழகுபெறக் கூறிவைத்திருக்கின்றனர்” எனப் பெரியபுராணத்தின் சிறப்பைக் கூறுகிறார். தம்மைப் பற்றி.... தம் ஆய்வில் ஆழமும் அறிவுத் தேடலில் முனைப்பும் காட்டும் நாட்டார் தம்மை எளியராக்கிக் காட்டும் மனப்பண்பு வியப்பாயுள்ளது. “ இயல்பிலே சுருங்கிய அறிவினேமாகிய யாம், பல வினை நலிவுகட்கு இடையே இப் பேராராய்ச்சியை எடுத்துக் கொண்டது தமிழன்னைக்குச் சிறுமகார் ஆற்றும் சிறு திருத்தொண்டு” என்கிறார். தமக்கு உடன்பாடில்லாத கருத்தை மறுக்கும்போது “ யாம் அவர்கள் பால் சார்ந்திருக்க முடியவில்லை” என நயம்பட மறுக்கிறார். பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகளார், மு.இராகவையங்கார், வ.உ.சிதம்பரனார், தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வே.வேங்கடராசுலு ரெட்டியார் - இப்படி அறிஞர் பலரிடத்தும் தமக்கு உடன்பட முடியாத கருத்து தலைகாட்டிய விடத்து நாட்டார் மறுக்கத் தவறவில்லை. இந்நூல் முழுதும் அவற்றைப் பரக்கக் காணமுடியும். தாம் மறுப்பெழுதுவதற்கு உரிய காரணத்தையும் கூறி விடுகிறார் நாட்டார். “ அவர் கருத்துக்களை ஆண்டுள்ள வகைமையிற் கற்பார்க்குத் திரிபுணர்ச்சி உண்டாகாதவாறு சிலவற்றை விளக்குதல் கடனெனக் கருதியும், அதனோடு எனக்கு அமைதியில வாகத் தோன்றும் அந்நூற் பொருள்களிற் சிலவற்றை யேனும் வெளிப்படுத்தல் அன்னவர் ஆராய்ச்சி பின்னுந் தூய்மையுறுதற்கும் தமிழ் வளர்ச்சிக்கும் உரியதா மென ஓர்ந்தும் அவையிற்றை.. எழுதி வெளியிடத் துணிந்தேன்.” திறனாய்வின் தேவையை இவ்வாறு தெளிவுபடுத்துகிறார் நாட்டார். வித்துவான் வே.வேங்கடராசுலு ரெட்டியார், சென்னைப் பல்கலைக்கழக வழி வெளியிட்ட ‘கபிலர்’ எனும் நூலில்- அங்ஙனம், இங்ஙனம் என எழுதாமல் ‘அங்கனம் இங்கனம்’ எனவும் நக்கீரரை ‘நற்கீரர்’ எனவும் எழுதியிருந்ததைக் கண்ட நாட்டார் ‘அழிவழக்கு’ என அவற்றைக் கண்டித்து எழுதினார். “ நினைத்தபடியெல்லாம் சொற்களின் உருவை மாற்றி வழங்குவரேல், அது... பிறிதொரு மொழியாவதன்றித் தமிழாகாது’ எனத் தெருட்டினார். நாட்டார் மறுப்புக்கு மறுப்பாக ‘செப்பமுடையார்க்குச் செய்யும் விண்ணப்பம்’ என ரெட்டியார் எதிர்க்கட்டுரை எழுதியதற்கும் நாட்டார் விரிவான கட்டுரையை விடை யாக்கினார். இவை அனைத்தையுமே இந்த நூல் (ரெட்டியார் மறுப்புக் கட்டுரையையும் சேர்த்து) நமக்குத் தருகிறது. காலச்சூழலையும் கருத்துப் போக்கையும் ஆய்வு வளர்ச்சியையும் அறிந்து மகிழும் வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது. ந.மு.வே. அவர்களின் ஆய்வுப் பார்வை, நூற்புலமை, இலக்கிய நோக்கு, இலக்கணத் திட்பம், சமுதாயப் பார்வை, அரசியல் கண்ணோட்டம் முதலிய முத்துக்கள் நிரம்பிய கடலாய்க் காட்சி தருகிறது இந்த நூல். மூழ்குவோர் கைகளை எதிர்பார்த்து முத்துக்கள்காத்திருக் கின்றன. ‘தாயகம்’ எசு.வி.எல்.நகர் அன்புடன் சூலூர். கோவை - 641 402 செந்தலை ந.கவுதமன் பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மையாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக்கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல் களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகுகுரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv அணிந்துரை xi பதிப்புரை xvii இலக்கணக் கட்டுரைகள் 1. உவம விளக்கம் 3 2. உரை நுட்பம் 11 3. யாப்பருங்கல நூலாசிரியர் பெயர் 15 4. இலக்கண விளக்க உரையாளர் யார்? 17 5. இலக்கண விளக்க உரையாளர் 22 6. மயக்க மறுப்பின்மேற் குறிப்பு 31 7. தொல்காப்பியம் 35 8. பெரியபுராணமும் பொருளிலக்கணமும் 39 9. தமிழ்எழுத்துக்கள் 43 10. ஒரு குறட்பா 51 11. நந்தம்போற்கேடு என்னும் குறளுரை ஆராய்ச்சி 54 12. தமிழின் சிறப்பியல்பு 62 13. திணை மயக்கம் 72 14. இளங்கோவடிகளும் பொருளிலக்கணமும் 77 15. தொல்காப்பிய ஆராய்ச்சி 82 16. தொல்காப்பியர் கல்விப் பெருமையும் நூலமைப்புத் திறனும் 130 17. பரணிப் பெயர்க்காரணம் 136 18. கபிலர் என்னும் நூலின் ஆராய்ச்சி 140 19. *செப்பமுடையார்க்குச் செய்யும் விண்ணப்பம் 150 20. திரு.வே.வே.ரெட்டியாரவர்களின் ஆராய்ச்சியின் செப்பமுடைமை 169 21. யாப்பியல் அமையாச் செய்யுள் 186 இலக்கியக் கட்டுரைகள் 1. சீவான்மா 193 2. திருவள்ளுவரும் சமரசசன்மார்க்கமும் 202 3. பொய்கையார் 210 4. சேக்கிழார் செய்யுள் மாட்சி 219 5. தெய்வமணக்குஞ் செய்யுளெலாம் 224 6. கோயில் 228 7. வள்ளுவர் கலித்துறை 231 8. ஆளுடைய பிள்ளையார் 233 9. திருவிழா 244 10.சிந்தாமணியின் நந்தாவொளிகள் 248 11. பரஞ்சோதி முனிவரும், திருவிளையாடலும் 254 12. ஐயவினாவுக்கு விடை 258 13. மார்க்கண்டேயர் அல்லது முயற்சியின் வெற்றி 259 14. பண்டைத்தமிழ்ச் சான்றோரின் வானநூற்புலமை 264 15. அளவைகள் 271 16. பதிற்றுப்பத்து மூலமும் உரையும் 275 17. புறநானூற்றின் ஆராய்ச்சி 281 18. குறிஞ்சிப்பாட்டின் உள்ளுறை 291 19. சாத்தனார் பாத்திறல் 299 20. சங்கநூல்களும் சைவமும் 305 21. இளங்கிளை 310 22. புறநானூற்றில் கண்ட சில பழைய வழக்குகளும், வரலாறுகளும் 312 23. ஆசிரியரும் மாணாக்கரும் 316 24. இந்தியை இந்தியாவுக்குப் பொதுமொழியாக்குதல் பொருந்தாது 325 25. தமிழவேள் தனிமாண்பு 327 26. தமிழில் கலைச்சொற்கள் 329 27. தொண்டைமான் இளந்திரையன் 331 28. பதிற்றுப்பத்து 335 29. சமய அணிகலன் 340 30. பிற்காலப்புலவர்களின் “சுடுசொல்” ஆட்சி 344 31. இளவேனிற் கவியின்பம் 350 32. கம்பர் காட்டும் ஒழுக்க நெறிகளில் சில 354 33. பசிப்பிணி மருத்துவன் 360 34. பரிமேலழகர் 364 35. கணம்புல்ல நாயனாரது திருப்பதி 370 இலக்கணக் கட்டுரைகள் 1. உவம விளக்கம் உவமமென்பது ஒருபொருளோடு ஒருபொருளினை ஒப்புமை கூறுதல். தருக்கநூலோர் உவமத்தை ஓர் அளவையாகக் கொள்வர். அலங்கார நூலோர்அதனை ஓர் அலங்காரமாகக் கொள்வர். தமிழிலக்கணநூலோர் அதனைப் பொருள்புலப்படுக்குங் கருவி யாதல் பற்றிப் பொருளுறுப்பாகக் கொண்டனர். தருக்கநூலோரும், பண்டைத்தமிழிலக்கண நூலோரும், உவமையைப் பெரும்பாலும் பொருளின் புலப்பாட்டிற்குக் கரணமாகக் கொள்ளுதலினால் அவ்விருவரும் கருத்துவகையால் வேறுபாடுற்றிலர். அலங்காரநூலோர் அன்னரல்லர். அன்றியும், பண்டையிலக்கண நூலில், பொருளுறுப்பாகக் கூறிய உவமவகையுட் சிலவற்றையும் வேறு சிலவற்றையுந்திரட்டிப் பிற்காலத்து வடமொழியாளர் அவை செய்யுட்கு அலங்காரமென நூல் செய்தாரேயன்றித் தொல்லாசிரியர் அங்ஙனஞ் செய்திலர். வடமொழிமதம் பற்றி நூல்கள் எழுந்த பிற்காலத்தில், தமிழிலும் வடமொழியலங்காரம் போன்று அணிநூல்களியற்றப்பட்டன. அவ்வணியையும் இலக்கணத்தின் பகுதியாகக் கொள்ளுதலே தமிழ் மரபாயிருக்கின்றது. அணியென நூலியற்றுதல் பொருத்த முடைத்தன்றென்பது சில தமிழ் நூலுரையாசிரியர்களின் கருத்து. அதற்கு அவர் கூறுங் காரணங்களுட் சில:- 1. அணியென நூலியற்றினோர் கூறிய இலக்கணத்திற் பிழையாது செய்யுட் செய்தவழியும் வல்லோர் செய்யின் அணியுடைத்தாகியும் அல்லோர் செய்யின் அணியுடைத்தன்றாகியும் இருத்தலின் அவையெல்லாம் செய்யுட் கணியென ஒருதலையாகக் கூறலமையா; 2. செய்யுட்கு அணிசெய்யும் பொருட்டிறனெல்லாம் விளங்கக்கூறாது சிலவற்றையே வரைந்து அணியெனக் கூறுதல் குன்றக்கூறலாய் முடியும்; 3. அணியெனப்படின் மெய்யின் அணிபோல் அவை செய்யுட்கு வேறாகி நிற்றல் வேண்டும்; என்பன. இதனை "நிரனிறுத் தமைத்தல்" என்னும் உவமவியலிறுதிச் சூத்திரத்துப் பேராசிரியருரையிற் பரக்கக் காணலாம். அகனும் புறனுமாய பொருட்கூறுகளை அவ்வவற்றினியல்பு கூறியுள்ளவாறு புலப்படுத்தல் வேண்டும். இயல்பு கூறுதல் மாத்திரையானே பொருள் புலப்படாவிடத்தும், அவற்றிற்குப் பெருமை சிறுமை கூறவேண்டியவிடத்தும் ஒப்புமையுள்ள பிற பொருள்களோடு உவமித்து விளக்க வேண்டும். அணிநூலாரும் தொடக்கத்திற் றன்மையணியும் அடுத்து உவமை அணியுங் கூறிப் போந்தனர். இவ்வாற்றால் உவமம் பொருட்குப் பெரியதோருபகார முடைத்தாதல் பெறப்படுகின்றது. "வடநூலாருள்ளே சித்திரமீ மாஞ்சை யென்னும் அலங்காரகாரர் உவமையணியொன்றே வேறுபடுத்திக் கூறுந்திறத்தாற் பலவித அலங்காரங்களாகு மென்பர்" எனக்கூறி உதாரணங்களுங்காட்டினர் சுன்னாகம், அ.குமாரசுவாமிப் பிள்ளையவர்கள். (தண்டியலங்காரம், பக்கம் 40-41) உவமவுறுப்புக்கள் உவமிக்கும் உவமையும், உவமிக்கப்படும் பொருளும், அவ்விரண்டன்கண்ணுமுள்ள பொதுத்தன்மையும், அவற்றை விளக்கவரும் உருபிடைச்சொல்லுமென நான்காம். உவமந்தான் வெளிப்படையுவமம், உள்ளுறையுவமம் என இருவகைப்படும். அவற்றுள் வெளிப்படை உவமத்தை முதற்கண் விளக்குதும். உவமையும் பொருளும் வெளிப்பட்டே நிற்பது வெளிப் படையாகும். உவமந்தோன்றுதற்குரிய நிலைக்களம், சிறப்பு நலன் வலி காதல் இழிபு என்னும் ஐந்துமாகும். ஒருபொருள் அதன்கட் செயற்கையாலுளதாகிய சிறப்புப்பற்றியாவது, இயல்பிலுள்ள அழகுபற்றியாவது, வலிபற்றியாவது, அவையில்வழியும் உளவாகக் கொண்டுரைக்குங் காதல் பற்றியாவது, இழிபு பற்றியாவது அதனோடு ஒப்புமையுள்ள வேறு பொருளோடு உவமிக்கப்படுமன்றி யாதும் இயைபின்றியே வாளா உவமிக்கப்படுமாறில்லை. உவமைக்கும் பொருட்குமுள்ள பொதுத்தன்மை வினை, பயன், மெய், உரு என்ற நான்குமாம். அவற்றானுவமிக்குமிடத்துப் பொருளினும் உவமை உயர்ந்ததாகல் வேண்டும். உவமையும் பொருளும் பொருந்தியனவென்று பிறர் மகிழும்படியும் உவமிக்க வேண்டும். கருமைப்பண்புபற்றி மயிற்றோகை போலுங்கூந்தலென்னாது காக்கைச்சிறகு போலுங்கருமயிரென்று கூறுதலும், தவறாமற் பாய்தல் பற்றிப் புலிபோலப் பாய்ந்தானென்னாது பூனை போலப் பாய்ந்தானென்று கூறுதலும் பொருந்தாவாம். புலி யன்ன வீரன் வினையுவமம். மழை போலுங்கை பயனுவமம். உடுக்கை போலும் இடை மெய்யுவமம். பவளம் போலும் வாய் உருஉவமம்..புலியன்ன வீரன் என்பது அது பாயுமாறே பாய்வன் எனத் தொழில் பற்றி யொப்பித்தமையின் வினையுவமமாயிற்று. ஏனையவு மிவ்வாறே காண்க. அளவு, சுவை, தண்மை, வெம்மை, நன்மை, தீமை, சிறுமை, பெருமை முதலாயினவெல்லாம் வினை முதலிய நான்கன் பகுதியாயடங்கும். பவளவாயென உவமைக்கும் பொருட்கும் பொதுவாய ஒப்புமைக் குணத்தை விதந்து சொல்லாவிடில் அது ‘சுட்டிக்கூறாவுவமம்' எனப்படும். "பவளம்போற் செந்துவர்வாய்" எனப் பொதுத்தன்மையை விதந்து சொல்லின், சுட்டிக் கூறியவுவமமாகும். இவற்றை முறையே தொகையுவமையென்றும், விரியுவமையென்றும் தண்டியலங்காரங் கூறுகின்றது. உவமவுருபு தொக்கு நிற்றலை உவமத்தொகை என்றும், விரிந்து நிற்றலை உவமவிரியென்றும் பேராசிரியர் கூறினர். தண்டியலங்காரத்திற் கூறப்பட்டுள்ள ஐயவுவமை, விபரீத உவமைகள் தொல்காப்பியர் கூறிய ‘தடுமாறுவமம்' என்பதிலடங்கும். தடுமாறுவமத்தில் உவமையைப் பொருளாகவும், பொருளை உவமையாகவும் உரைத்தவழியும் பொருளினும் உவமை உயர்ந்த தாகல் வேண்டுமென்னும் விதிப்படி அங்கு உவமையாகப் போந்த பொருளை உயர்ந்ததாக்கியேயுரைக்கல் வேண்டும். உவமையும் பொருளும் பலவாக வேறு வேறு வரிசையாக நிறுத்திக் கொண்டு கூட்டியுவமித்தலும் உண்டு; அது 'நிரனிரையுவமம்' எனப்படும். அலங்கார நூல்களிற் கூறப்படுகின்ற உவமவிகற்பங்களிற் பலவற்றையும், வேற்றுமை, தற்குறிப்பேற்றம், திருட்டாந்தம், விலக்கு முதலிய அலங்காரங்கள் பலவற்றையும், ஆசிரியர் தொல்காப்பியனார் ‘வேறுபடவந்தவுவமத்தோற்றம்' என அடக்கினர். இனி, சிறப்பு முதலிய ஐவகை நிலைக்களத்தும் வினை முதலிய பொதுத்தன்மை நான்கானும் உவமம் நிகழுமெனவே, அவை தம்மினுறழ உவமம் இருபஃதாகும், அவையும், சுட்டிக் கூறாவுவமம் முதலியனவாக விகற்பித்து வழக்கிற்குஞ் செய்யுட்கு முரியவாய் நகைமுதலிய எண்வகை மெய்ப்பாடுந்தோற்றுவித்து நிகழுமாகலின் அவற்றானெல்லாமுறழ உவமவிகற்பம் இறப்பப் பலவாம். சுருங்கச் சொல்லுமிடத்து உவமமெல்லாம் உவமிக்கப்படும் பொருட்குப் பெருமை சிறுமை கூறுதலும், அவ்வாறன்றி அவற்றினியல்பைப் பட்டாங்கு கூறுதல் உடையனவாம். பொருளினியல்பை உவமத்தால் விகாரமுறுத்தாது பட்டாங்கு கூறும் வழக்கைப் பத்துப்பாட்டு முதலிய நல்லிசைப்புலவர் செய்யுளிடத்துப் பெரிதுங்காணலாம். உதாரணமாகப் பின்வருவன காண்க: " நீளரை யிலவத் தலங்குசினை பயந்த பூளையம்பசுங்காய் புடைவிரிந் தன்ன வரிப்புற வணிலொடு"1 " ஓங்குநிலை யொட்டகந் துயின்மடிந் தன்ன வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகின்"2 " ....................வேழத்துப் பாம்பு தைப்பன்ன பரூஉக்கை துமிய"3 " பொய்பொருகயமுனிமுயங்குகைகடுப்பக் கொய்பத முற்றன குவவுக்குர லேனல்"4 " விளைதயிர்ப் பிதிர்வின் வீயுக்கிருவிதொறுங் குளிர்புரை கொடுங்காய் கொண்டன வவரை"5 " மேதி யன்ன கல்பிறங் கியவின் வாதிகை யன்ன கவைக்கதி ரிறைஞ்சி"6 " வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன்"7 " அம்பணத் தன்ன யாமை யேறிச் செம்பி னன்ன பார்ப்புப் பலதுஞ்சும்"8 இன்னோரன்ன கருத்துக்களாற் பண்டைத்தமிழ்ப்புலவராயினாரது உலகியற்பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சித் திறன் அறிந்து வியக்கத் தக்கதாகின்றது. இனி, உவமையும் பொருளும் ஒரு நிகரனவாயிராமல் மிகப்பெரியவும் மிகச்சிறியவுமாயிருப்பின் வழக்குவழிப்பட்டுச் சிறப்பிற்றீராதனவாயிருத்தல் வேண்டும். "மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப் பகுவெண் டிங்கள் தோன்றியாங்குக்-கதுப்பயல்விளங்குஞ்சிறுநுதல்"என்று கூந்தலுக்கும் நெற்றிக்கும் மிகப்பெரியவாகிய கடலையும் பிறையையும் உவமை கூறினும் அவ்வாறு வழக்குடைமையிற் சிறப்பிற்றீராவாயின. இவ்வாறன்றி "மேருமால்வரை காம் பொத்து விண்முகடு குடையொத்து விண்மீன் கணம் முத்துப் போன்றன". என்று உலகவரம் பிறந்து பொருளைப் புகழ்தற் பொருட்டு உவமங்கூறுதல் தமிழ் வழக்கன்றாம். உவமைக்கண் முதல் சினை திணை பால் மயங்கிவரினும் மரபுநிலை திரியாதன கொள்ளப்படும். சந்திரன் போன்ற முகம் போலும் தாமரையென உவமம் அடுக்கிக்கூறுதல் குற்றமாம். அன்ன, ஆங்க முதலிய உவமஉருபுகளெல்லாவற்றையும் எல்லாவுவமத்திற்குங் கொள்ளாது பொருள் நோக்கியும் மரபுநோக்கியும் வினையுவமை முதலிய வற்றிற்கு உரியன விதந்து கொள்ளல் வேண்டும். ஒரு பொருட்கு ஒரு பொருளையுவமங்கூறுங்கால் வினைபயன் முதலியவற்றுள் ஒன்றேயன்றி இரண்டு முதலியனபற்றிக் கூறவும்படும். இனி உள்ளுறையுவமமாவது உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாகிய இரண்டனுள், பொருளினைக் கிளந்து கூறாது இது இன்ன பொருட்குவமமாயிற்று என அறிவுடையோர் ஊகித்துணர்ந்து துணியுமாறு உவமமாத்திரமே கூறுதலாகும். உவமேயமாகிய பொருளினைக் கிளந்து கூறாது உவமங் கொள்ளுதல் செவ்விதன்றாயினும் ஏனையுவமம் போன்று பொருள் கொள்ளப்படுதலின் அதுவும் ஒப்பினாகிய பெயராய் உவமமெனப்படுவதாயிற்று. அதுபற்றியே ஆசிரியர் தொல் காப்பியனாரும் உள்ளுறையுவமமென்றும், உவமப்போலி யென்றும் பெயர் கூறுவாராயினர். புலப்படக் கூறாமைபற்றி உவமப்போலியென்றாரேனும் அது நல்லுணர்வுடையோர்க்கே அரிதிற்கூறவும் உணரவும்படுவதாய நுட்பமுடைத்தாய் அகப் பொருட்குச் சிறந்ததாய் விளங்குதலின் ஏனையுவமத்தினும் தவலருஞ் சிறப்பினதாதல் பெறப்படும். இது நல்லுணர்வுடை யோர்க்கே புலனாவதெனவே ஏனையுவமம் போல் வழக்கிற்கு முரியதாகாது செய்யுட்கேயுரியதாதல் பெறப்பட்டது. செய்யுளுள்ளும் புறத்திற்கன்றி அகத்திற்கேயுரியதாம். அகத்துள்ளும் குறிஞ்சி, மருதம், நெய்தலென்னுமூன்றற்கும், அவற்றுள்ளும் மருதத்திற்கும் சிறந்ததாம், பரத்தையிற் பிரிந்த தலைவன் பின் தலைவியைக் கூடுதற்பொருட்டு வாயில் விடுக்க வாயிலாய் வந்தார்பால், தலைவிக்கும் தோழிக்கும் கூற்றுநிகழும் பொழுது பரத்தையரிழிபும், தலைவன் கொடுமையு முதலாயின உணர்த்துதல் காரணத்தான் உள்ளுறை கூறப்பெறுவர் பெரும்பான்மையும். சிறுபான்மை யேனையிடத்தும் உள்ளுறை நிகழும். நற்றாய், தந்தை, தன்னையர், ஆயத்தாரென்போர் உள்ளுறையுவமை கூறப்பெறாதவராவர். அவரொழிந்த தலைவன் தலைவி, தோழி, செவிலி, பாங்கன், பாணன், காமக்கிழத்தி முதலாயினா ரெல்லாரும் கூறுதற்குரியர். அவருள்ளும், தலைவியும் தோழியுமே கூறுதற்குச் சிறந்தோராவர். தலைவி உள்ளுறையுவமங்கூறுங்கால் மருதம் நெய்தல் என்னுமிரண்டிடத்தும் தானறிந்த பொருளானே கூறப்பெறுவள். சிறுபான்மை குறிஞ்சியிலறிந்த பொருளாற் கூறலுமுண்டு. தோழியும் செவிலியும் அந்நிலத்துள்ளனவெல்லாம் அறிந்து உள்ளுறை கூறுவர்; பிறநிலத்துள்ளன கூறார். ஏனோரெல்லாம் இடம்வரைவின்றித் தாந்தாமறிந்த பொருளானெல்லாங் கூறப் பெறுவர். ஐந்திணைக்குமுரிய தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, தொழில், யாழ் முதலிய கருப்பொருள்களிற் றெய்வமொழிந்தன வெல்லாம் உள்ளுறைதோன்றுநிலனாம். இவையெல்லாம் உய்த்துணருங்கால் இது, நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல்சான்ற புலனெறிவழக்காய்த் தமிழ் முதனூலாசிரியனாற் படைக்கப்பட்டதாய்த் தோன்றுதலின், தம் நுண்ணுணர்வின் மிகுதியால் உள்ளுறை கூறும் வழக்குத் தமிழ் மக்கட்கேயுரித்தெனல் தேற்றமாம். சங்கமருவிய தொகைநூல்களில் அகம்பற்றிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை அகநானூறு என்பவற்றினெல்லாம் உள்ளுறை கூறும் வழக்கைப் பரக்கக் காணலாம். " கரைசேர் வேழங் கரும்பிற் பூக்கும் துறைகே ழூரன் கொடுமை நன்று மாற்றுக தில்ல யாமே தோற்க தில்லவென் றடமென் றோளே"1 என்னும் ஐங்குறுநூற்றுச்செய்யுளில், தலைமகன் பரத்தையர்க்குச் சிறப்புச் செய்கின்றானென்பதுணர்ந்த தலைமகள் வாயிலாய் வந்தார்க்கு அதனை வெளிப்படக்கூறாது கரைமருங்கு நிற்கும் வேழம் வயலகத்து விளைக்குந் தீங்கரும்பு போலப் பொலியுமூரன் என்று கூறி, அதனாற் பொதுமகளிர்க்குக் குலமகளிரைப் போற் சிறப்புச் செய்கிற்பான் தலைவனென்ப துணரவைத்தாள்; இஃதுள்ளுறையுவமமாதல் காண்க. இனி, இவ்வுள்ளுறையுவமமும் ஏனையுவமம் போன்று சிறப்பு, நலன், வலி, காதல், இழிபென்னுமைந்தனையும் நிலைக் களனாக்கொள்ளும். ஏனையுவமத்திற்குப் பொதுவியல்பு, வினை, பயன், மெய், உரு என்ற நான்குமாக, உள்ளுறைக்கு அவற்றோடு சாதியுஞ்சேர்ந்து ஐந்தாகும். இங்ஙனம் ஐந்துநிலைக்களத்தும் ஐந்துதன்மையானுந்தோன்றும் உள்ளுறையுவமந்தான் எண்வகை மெய்ப்பாடுந்தோற்றுவித்துத் தனித்தனியும் விரவியும் வரும் விகற்பமெல்லாம் இறப்பப்பலவாம். அவற்றுக்கெல்லாம் உதாரணங்காட்டி விளக்கப்புகின் வரம்பின்றிப் பெருகுமென்க. இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் உள்ளுறையை உடனுறை உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐவகைப்படுத்துரைத்தார். அவற்றுளொன்றாகிய உவமமே உள்ளுறையுவமமென இதுகாறும் விளக்கப்பட்டது. ஏனையநான்கனுளொன்றாகிய உடனுறை யென்பதனையும் ஈண்டு இன்றியமையாமைபற்றிச் சிறிதுவிளக்கி முடிப்பாம். உடனுறையென்பதற்கு "நான்கு நிலத்துமுளவாய் அந்நிலத்து உடனுறையுங் கருப்பொருளாற் பிறி தொன்றுபயப்ப மறைத்துக் கூறும் இறைச்சியும்" எனப் பொருள் கூறினர் நச்சினார்க்கினியர். இதனால் உடனுறையென்பது நிலத்துடனுறையுங் காரணத்தாற் கருப்பொருட்காயிற்று என்பது பெறப்படுகின்றது. கருப்பொருளெனினும் இறைச்சி எனினும் ஒக்கும். தொல் காப்பியத்துப் பலவிடத்தும் இறைச்சியெனும் சொல்லுக்குக் கருப்பொருளென்றே எல்லாவுரைகாரரும் பொருள் கூறினர். இங்கு இறைச்சியெனப்படும் கருப்பொருளாற் பிறப்பதனை யிறைச்சியென்றார். "இறைச்சிதானே பொருட்புறத்ததுவே" "இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே - திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே" என்னுஞ்சூத்திரங்கள் இறைச்சிக்கு இலக்கணங் கூறவந்தவாம். இவ்விருசூத்திரத்தானும் இறைச்சியை இருவகைப் படுத்துரைத்து உதாரணங்காட்டினர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். இன்னோரன்ன பொருட்டிறங்களில் அவருரையின்றி யாமறியற் பாலதொன்றின்மையின் அவ்வுரைக்கருத்தையே இங்குக் கூறு கின்றேன். முதற் சூத்திரக்கருத்து, கூறவேண்டியபொருளைத் தலைமையாக வெளிப்படக்கூறாது வேறு பொருளினடக்கிக் கூறுதலாம். "இலங்குமருவித்திலங்குமருவித்து - வானினிலங்கு மருவித்தே தானுற்ற - சூள்பேணான் பொய்த்தான்மலை" என்னுமிதில், சூள்பொய்த்தானென்பதே கூறவேண்டும் பொருள். அதனைத் தலைமையாகக் கூறாது, மலை விளங்கும் அருவியையுடைய தென்னும் பிறிதுபொருளாகிய கருப்பொருள் கூறுமுகத்தான் மறைத்துக் கூறினமையின் இறைச்சியாயிற்று. சூள்பொய்த்தா னென்பது ஒருவாற்றான் மறைக்கப்பட்டமையின் உள்ளுறையிலடக் கினார். இரண்டாஞ் சூத்திரக்கருத்து, உள்ளுறையுவமம் போன்றே கருப்பொருளை நிலனாக்கொண்டு தோன்றும் பொருளென்பதாம். ஆயின், உள்ளுறையுவமத்திற்கும் இதற்கும் வேறுபாடென்னை யெனின், உள்ளுறையுவமம், கூறவேண்டிய பொருளைச் சிறிதும் புலப்படக்கூறாது முழுதும் உவமையாற்பெறவைத்தல். இறைச்சி, கூறவேண்டிய பொருளைப் புலப்படக்கூறி அதன்புறத்தே கூறும் கருப்பொருளால் வேறு பொருளுந்தோன்றச் செய்தல். கன்று பாலுண்ணுமாறு பிடி தினையையுண்ணும்நாடனே! நீ இரந்து துயருற்றகாலத்து நான் இவளை நின்னொடு சேர்த்த நன்றியை மறவாது இன்று நீ இவளை வரைந்து கொள்ளல் வேண்டும்; என்னுங்கருத்துள்ள செய்யுள் இறைச்சிக்குதாரணமாகும். இதில் நாடனேயென்பதில் நீ நின்கருமஞ்சிதையாமற் பார்த்து எமக்குயிராகிய இவளைத்துயருறுத்தி எம்மை இறந்துபடுவித்தல் ஆகாது என்று உள்ளுறையுவமமெய்திற்றேனும் கூறவேண்டிய பொருளைப் பின்னர் வெளிப்படக்கூறி யிருத்தலின் இது இறைச்சியாயிற்று. " ஏற்றவளை வரிசிலை யோனியம் பாமுனிகலரக்கி சேற்றவளை தன்கண வனருகிருப் பச்சினந் திருகிச் சூற்றவளை நீருழக்குந் துறை கெழு நீர்வள நாடா மாற்றவளைக் கண்டக் காலழலா தோமன மென்றாள்"1 என்னும் இராமாயணச் செய்யுள் இறைச்சி போற்றோன்றினும் இறைச்சிக்கு நச்சினார்க்கினியர் கூறிய இலக்கணத்தில் ஒன்றேனும் முற்றுமமையப் பெறாமையானும், அகனைந்திணைக் கேலாமை யானும் இறைச்சியாகாதென்க. இறைச்சி பெரும்பாலும் தலைவன் கொடுமை கூறும் வழிப்பிறக்கும். கருப்பொருள்களில் உள்ளுறையுவமத் திற்கு விலக்கிய ‘தெய்வம்' இறைச்சிக்கண் வருதலுண்டு, மற்றும் இதனியல்பெல்லாம் புலனெறிவழக்குப் பற்றியுணர்ந்து கொள்ளற் பாலன. இதுகாறுங்கூறியவாற்றால், பிறர் அலங்கார முதலிய பெயர்களால் விரித்துக்கூறிய பரந்து பட்ட பொருளையெல்லாம் அவரினும் முன்னரறிந்து உவமவிலக்கணத்தாற் சுருங்க விளங்கவுரைத் தருளிய ஆசிரியர்தொல்காப்பியனாரது பேரருட் புலமையே புலமையாகக்கண்டாமென்க. வாழியதமிழ்சேர்நாடுமன்னவர்மக்களெல்லாம் வாழியதமிழ்சேர்சங்கம்தலைவர்கள்மதிவல்லோர்கள் வாழியதமிழென்றேத்தவயங்கிடுமெமதுதாயே வாழிய இராமநாதன்மன்னுயிர்க்கருளுமாறே.2  2. உரைநுட்பம் நச்சினார்க்கினியர், பேராசிரியர், இளம்பூரணர், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள் நமக்குச் செய்துவைத்திருக்கும் உதவிகள் அளவிடற்பாலவல்ல அன்னாருரைகளிருந்திலவாயின் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, திருக்குறள் முதலியவற்றின் நுண்பொருள்களை நம்மனோர் அறிந்து அநுபவித்தல் எளிதன்று. பண்டைச்செந்தமிழ் நூல்கள் பலவற்றைக் காலவயத்தாலிழந்து நம்பூர்வீகநிலைமையை முற்றும் விளக்கமுற அறிய முடியாம லிருக்கிற நாம் தொல்காப்பியம் முதலிய மணி விளக்குக்களையும் இழந்து முழு இருளிற் கிடந்து தடுமாறாவண்ணம் அவை யிற்றைப் போற்றியளித்த பெருவண்மை உடையோர் அவ்வுரை யாளர்களே என்பதிலையமின்று. எனினும் உரையாளர் களெல்லாம் நூலாசிரியர்கள் காலத்திற்கு மிகப் பிற்பட்ட காலத்தவரேயாகலின் நூலாசிரியரின் கருத்துக்களை ஒரோவழி அறிய முடியாது மயங்குதலும், தம் காலத்து வழக்குக்களை நூலியற்றிய காலத்து வழக்காகத் துணிந்தேற்றிக் கூறுதலும் நிகழக்கூடியவே. ஒவ்வொரு நூலுக்குப் பலப்பல வுரைகள் ஏற்படக் காரணமும் அதுவே. ஆயின், அவ்வுரைகள் மிக்க திட்ப நுட்பமமைந்தனவாய் அறிதற்கரியனவாயுள்ளன வென்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்திற் கொள்ள வேண்டும். அவை அங்ஙனம் அறிதற்கரியவாயிருத்தல் பற்றியே அவ்வுரைக்குப் பொருள் காணமாட்டாத பலர் உரைப் பாடத்தையும் பலபடியாகத் திரித்திருக்கின்றனர். சிலர் பழையவுரைகளைச் சோதித்து அவற்றின் பொருளைத் திரிபுபடவுணர்ந்து உரையாளர்மேற் பழிசுமத்தி நிந்தித்தெழுதியுமிருக்கின்றனர். அவற்றிற் கொவ்வோருதாரணம் ஈண்டுக் காட்டுதும். அது, பதிப்பித்தவர்களையாவது ஆராய்ச்சி செய்தவர்களையாவது சிறிதேனுங் குறை கூறுங் கருத்தினாலும், அவர்கள்பால் மதிப்பின்மையாலுமன்று. அவர்கள்பால் எமக்குப் பெருமதிப்புண்டு. அவர்கள் செய்திருக்கும் உதவிகளைப் பாராட்டுதல் எமக்கு முதற்கடமையன்றோ? பழையவுரைகளைக் கற்போர் அவற்றை நுணுகியாராய்ந்து அவற்றின் பொருள் காண வேண்டுமென்பது புலப்படுத்தற்கே இஃதெழுதுகின்றேம். திருக்குறள், காமத்துப்பால், பொழுதுகண்டிரங்கல் என்னும் அதிகாரத்தில் ஒன்பதாம் பாட்டு, " பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து,"--1 என்பது. இது தலைவி கூற்று. இப்பாட்டினை, 'மதிமருண்டு மாலை படர் தரும் போழ்து பதிமருண்டுபைதலுழக்கும்' என்று அந்நுவயித்துக் கொண்டும், 'மதிமருண்டு' என்பதனை 'மதிமருள' எனத் திரித்துக் கொண்டும் பரிமேலழகர் பொருள் கூறுகின்றார். அவர் கூறும் பொருள்,-- "இதற்கு முன்னெல்லாம் யானே மயங்கி நோயுழந்தேன். இனிக் கண்டாரும் மதிமருளும் வகை மாலை வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கி நோயுழக்கும்"--என்பது. இங்குப் 'பதி' என்பதற்கு அவர் கருதிய பொருள் 'ஊரிலுள்ளார்' என்பதாகும். இனி, அவ்வுரையாளர் பிறர் கொள்கையாக எடுத்துக்காட்டியவுரையொன்றுண்டு. அவ்வுரை, யாம் பார்த்த புத்தகங்களில் பின்வருமாறு பலபடியாகத் திரிந்துளது:- 1. மாலைமயங்கி வரும்போழ் தெனமதி நிலைகலங்கி நோயுழக்குமென்றுரைப்பாருமுளர்" திருக்குறள் நாவலர் பதிப்பில் 4,7-ஆம் பதிப்புக்கள். 2. "மாலைமயங்கிவரும் போழ்து என்பதி நிலைகலங்கி--" நாவலர் 8-ஆம் பதிப்பு. 3. "மாலைமயங்கிவரும்போழ்து என்பதி மதிநிலைகலங்கி" மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அச்சான கையடக்கப் புத்தகம். 4. "......போழ்தெனமதி நிலை கலங்கி" கோ.வடிவேலுசெட்டியார் பதிப்பு. 5. ".....பொழுது பதிமதிநிலை கலங்கி--" மேற்படியார் தெளிபொருள் விளக்கவுரை. இங்கெடுத்துக்காட்டிய இத்தனை பதிப்புக்களிலும் உண்மைப் பாடம் வெளிவராதிருப்பதே நமக்கு வியப்பைத் தருகின்றது. நாவலர் 4,7-ஆம் பதிப்புக்களில் உள்ள பாடத்தில் 'போழ்தென' என்றிருப்பதைப் 'போழ்தென்' என்று திருத்திக்கொண்டால் பொருள் பொருத்த முறுகின்றது. அதுவே உண்மைப் பாடமும் ஆம். ஓர் புள்ளியில்லாத குறையால் புலவர் பலரும் இங்ஙனம் மயங்குவாராயினர். ஏனைப் பாடங்களின் பொருத்த மின்மையை யீண்டு விளக்கலுறின் விரியுமென்று கருதி விடுக் கின்றாம். "மதி பதிமருண்டு" எனப் பொருள் கூறுக. 'பதி' என்பது இப்பொருள் பயத்தலை, "மதியுமடந்தை முகனுமறியா-பதியிற் கலங்கியமீன்" (திருக்குறள் 112-ஆம் அதிகாரம்-6) என்பதானும் அறிக. இனி, "தாழ்காவி, னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு, மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம், மாயிரும் பெடையோ டிரியல் போகிப், பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த், தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும்" என்னும் பட்டினப்பாலை (53-58) அடிகட்கு ஆசிரியர் நச்சினார்க்கினியரெழுதிய பொருள் பின்வருமாறு:- "விளங்குகின்ற சடையினையுடைய இருடிகள் தீயின்கண்ணே வேட்டலைச் செய்யும் நெய்முதலியவற்றின் நறிய புகையை வெறுத்துக் குயில்கள் தம்முடைய கருமையையும் பெருமையையு முடைய பேடைகளுடனே கெடுதலையுடையவாய் நீங்கிப் போய், பூதங்கள் வாசலிலே காத்திருக்கும் புகற்கரிய அச்சத்தையுடைய காளிகோட்டத்திடத்திற் கல்லைத்தின்னும் அழகிய புறவு களுடனே குடியிருப்பாகத் தங்கும் இளமரக் காவினையும்" "முனிவரைத் தன்னிடத்தே கொண்டிருத்தலிற்காக் காரணமாயிற்று" 'துச்சிற்சேக்கும்தாழ்காவின்' என்று அந்நுவயிக்க. சோலையின் கணிருந்த குயில்கள் அங்குள்ள முனிவர் வேட்கும் வேள்விப் புகையை வெறுத்தலால் அதினீங்கிப்போய்க் காளிகோட்டத் திடத்திற் புறாக்களுடனே தங்கியிருக்கும்: என்பதே அவருரையின் பொருளாகும். 'தங்கும் இளமரக்கா' என்றிருத்தலால், 'புறாக்கள் காவின்கட்டங்கும்' என்று கொண்டு பிறர்மயங்குவரோ என்று கருதியே அங்ஙனம் மயங்காமைப் பொருட்டு "முனிவரைத் தன்னிடத்தே கொண்டிருத்தலிற் காக்காரணமாயிற்று" என்று விளக்கமும் எழுதினார். எனவே "தங்கும் கா = தங்குதற்குக் காரணமான கா" என்று பொருள் வெளிப்படையாயிற்று. பெயரெச்சம் காரணப் பெயர் கொண்டு முடிந்தது. ஆசிரியர் தாம் கருதிய பொருளை இங்ஙனம் நன்கு விளக்கியிருப்பவும், பிறர் அதனுண்மை காணாது மயங்குவாராயினர். பட்டினப்பாலையாராய்ச்சி என்னும் புத்தகத்து 70-ஆம் பக்கத்தில் பின்வருமாறு வரையப்பட்டுள்ளது:- (53-58) 'முனிவர் வேட்கும் புகையை வெறுத்தலாற் குயில்கள் சோலையைவிட்டுக் காளிகோட்டத்திற்போய்த் தூதுணம் புறாக்களோடும் ஒரு புறத்தே தங்கும்' என நேரே பொருள் படுதலை விடுத்து நச்சினார்க்கினியர் காளிகோட்டத்தைப் புறாக்களுக்கு விசேடண மாக்கிப் பின் அப்புறாக்களோடுங் குயில்கள் காவிலே சென்றிருக்குமெனக் காவுடனே சேர்த்துப் பொருளுரைக்கின்றார். அங்ஙனம் பொருளுரைப்பின் முனிவர் வேள்வி வேட்குமிடம் இதுவென்பது பெறப்படாமையானும், குயில்கள் எவ்விடத்தை விட்டு எங்குப் போயிருந்தனவென்று வினாவுவார்க்கு இறுக்கலாகாமையானும் அஃதுரையன்றென மறுக்க. தவப்பள்ளிகளுள்ள காவிலே முனிவர் வேட்கின்றா ரென்றும், அங்கெழும் புகையை வெறுத்து அச்சோலையை நீங்கிப் போய்க் குயில்கள் காளிகோட்டத்திற்றங்குகின்றன வென்றும் பொருள் கூறுதலே பொருத்தமுடைத்தாதல் காண்க." இவ்விரண்டுரையையுங் காண்பவர்கள், ஆராய்ச்சியுரையாளர் மூல பாடத்திற்குப் பொருள் நன்கு அறிந்துகொண்டுளார்: எனினும் அப்பொருள் படவேயெழுதியுள்ள நச்சினார்க்கினியரின் உரை நுட்பத்தையறிய மாட்டாது இடர்ப் பட்டு மறுத்தலை மேற் கொண்டனர்: என்று உணர்வார்களாக. இங்ஙனம் ஒரோ வழி மறுப்படவெழுதி யிருப்பினும் ஆராய்ச்சியுரையாற் பெரிதும் பயனுண்டென்பதே எமது கருத்து. பழைய நூலுரைகளின் பொருளையறிய மாட்டாது பின்னுளோர் வழுப்பட எழுதியும், பாடந்திரித்துமுள்ளன எண்ணிறந்தன. சான்று மாத்திரையாக ஈண்டு இரண்டு காட்டப்பட்டன. நுண்மாணுழை புலம் உடையோர் ஆராய்ந்து கற்றுப் பயனுறுக.  3. யாப்பருங்கல நூலாசிரியர் பெயர் தமிழிலுள்ள யாப்பிலக்கண நூல்களுள் 'யாப்பருங்கலம்', 'யாப்பருங்கலக் காரிகை' என்னும் இருநூலும் இயற்றிய ஆசிரியர் ஒருவரே யாவர். இது, 'இந்நூல் யாவராற் செய்யப் பட்டதோ வெனின்........ அருந்தவத்துப் பெருந்தன்மை அமுதசாகரரென்னு மாசிரியராற் செய்யப்பட்டது' என்று யாப்பருங்கலக்காரிகையுரை செய்தார் கூறிய காரிகை நூலாசிரியர் பெயரும், வீரசோழியவுரையில் அவ்வுரை செய்தார் 'மாலை மாற்றே சக்கரஞ் சுழிகுளம்' என்னும் யாப்பருங்கலச் சூத்திரத்தை எடுத்துக் காட்டி, 'என்று அமுத சாகரனார் கூறியனகொள்க' என்றமையாற் பெறப்பட்ட யாப்பருங்கல நூலாசிரியர் பெயரும் ஒன்றாயிருத்தலானும், யாப்பருங்கல விருத்தியுரையில் அவ்வுரையாசிரியர் 'இந்நூலுடையாரும் 'மாஞ்சீர்கலியுட் புகா' எனவும். பிறவாற்றானும் விளங்கக் கூறினார்; என்று காரிகைச் செய்யுளை யெடுத்துக்காட்டி, யாப்பருங்கல ஆசிரியரே காரிகை செய்தாராகக் கூறியிருத்தலானும் துணியப் படும். இங்ஙனம் துணியப்பெற்ற இவ்விரு நூல்களையுமியற்றிய ஆசிரியர் பெயர் "அமிர்தசாகரர்" என்றும், "அமுதசாகரர்" என்றும் யாப்பருங்கலக்காரிகையுரைப் புத்தகங்களிலும், யாப்பருங்கலக்காரிகைப் புத்துரைப் புத்தகத்திலும், யாப்பருங்கல விருத்தியுரைப் புத்தகத்திலும், நன்னூல் மயிலைநாதருரைப் புத்தகத்திலும், பிறவற்றிலும் காணப்படுகிறது. "அமிர்த சாகரர்" என்று தமிழகராதியிலும் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் பெயர் கூறுதல் சிறப்புப்பாயிர விலக்கணத்துளொன் றாகலின் யாப்பருங்கலவாசிரியர் பெயரையும் அந்நூற் சிறப்புப் பாயிரங் கொண்டே அறிதல் வேண்டும். யாப்பருங்கலச் சிறப்புப்பாயிரம் " யாப்பருங் கலநனி யாப்புற வகுத்தோன் - - - - - - - - - - - - - - - - - - - - - - - அளப்பருங் கடற்பெய ரருந்தவத் தோனே" என்று கூறுகின்றது. யாப்பருங்கலப் பதிப்புரையிலும், காரிகை முகவுரையிலும் இப்பெயரை ஆராயப்புகுந்தவர்கள் "கடற்பெயரருந்தவத்தோன் என்று பாயிரங் கூறுவதன்றி வெளிப்படையாற் கூறவில்லை" என்கின்றார்கள். பாயிரத்திலுள்ள 'அளப்பருங்கடல்' என்னும் தமிழ்ச் சொற் றொடரும், 'அமிதசாகரம்' என்னும் வடசொற்றொடரும் ஒரு பொருளனவாகலின் ஆசிரியர் பெயர் அமிதசாகரர் என்பதா மென்றும், அதுவே 'அமிர்தசாகரர்' 'அமுதசாகரர்' எனப் பலராலும் திரித்து வழங்கப்பட்டதென்றும் நான் கருதுகின்றேன்.  4. இலக்கண விளக்க உரையாளர் யார்? சுவாமிநாத தேசிகர் தமது இலக்கணக்கொத்து என்னும் நூற்பாயிரத்தே, " நூல்செய் தவனந் நூற்குரை யெழுதல் முறையே யெனிலே அறையக் கேள்நீ முன்பின் பலரே யென்கண் காணத் திருவா ரூரிற் றிருக்கூட்டத்திற் றமிழ்க்கிலக் காகிய வயித்திய நாதன் இலக்கண விளக்கம் வகுத்துரை யெழுதினன் அன்றியுந் தென்றிசை யாழ்வார் திருநக ரப்பதி வாழுஞ் சுப்பிர மணிய வேதியன் றமிழ்ப்பிர யோக விவேகம் உரைத்துரை யெழுதினன் ஒன்றே பலவே"1 என்று கூறிப் போந்தனர். நூலும் உரையுமாக இலக்கணக் கொத்தியற்றுவான்புக்க ஆசிரியர் தாம் இங்ஙனம் இயற்றுவது பொருத்தமே யென்று காட்டுதற்கு இது கூறினர். எனினும், நூல்செய்தவரே அந்நூற்கு உரையும் எழுதுதல் வழக்காறன்று என்பதனை, அவர் 'முறையே'? என எழுப்பிக் கொண்ட ஆசங்கையே விளக்காநிற்கும். என்னை? வழக்குப் பயிற்சியுள்வழி ஆசங்கைக்கு இடனின்மையின், 'முன்பின்பலரே' என அவராற் கருதப்பட்டார் யாவரோ அறியகில்லேம். இலக்கணவிளக்க ஆசிரியராகிய வைத்தியநாததேசிகர் தாமே அந்நூற்கு உரையும் இயற்றினராவரோ என்பதே இங்கு ஆராய்தற்பாலது. சுவாமிநாத தேசிகரோ 'என் கண்காண'........ வைத்தியநாதன் இலக்கண விளக்கம் வகுத்துரை யெழுதினன்' என்கின்றனர். இதனால் இவ்விருவரும் ஒருகாலத்தின ரென்பதும், இலக்கணக்கொத்தியற்றப் புகுமுன் இலக்கண விளக்கம் இயற்றப்பட்டு விட்டதென்பதும். புலனாகும் இலக்கண விளக்கத்திற்குச் சூறாவளியென்னும் மறுப்புரை யெழுதிய சிவஞானயோகிகளும் வைத்தியநாத தேசிகரே தமது நூலுக்கு உரையும் எழுதினர் எனக் கொண்டுள்ளார். இது, சூறாவளியின் கண் 'எழுத்ததிகார மென்புழி அதிகாரம் முறைமை யென்றார்', 'உயிர்த்தல் என்பதற்கு ஒலித்தல் எனப் பொருளுரைத்தார்' என்றிங்ஙனம் இலக்கண விளக்க உரையைப் பல்லிடத்து எடுத்து மறுத்தலாற் பெறப்படும். இலக்கண விளக்கப் பாயிரவுரையியற்றி னாரும் அவரே யெனச் சிவஞானமுனிவர் துணிந்திருப்பது அவர் சூறாவளியின்கண் 'பாயிரஞ்செய்தார் சதாசிவ நாவலரென்றன்றே ஆண்டுரைத்தார்' என எழுதியிருப்பதனால் அறியலாகும். சதாசிவ நாவலரியற்றிய சிறப்புப் பாயிரமும் " இலக்கண விளக்க மென்றொருபெயர் நிறீஇப் புலப்படுத் தியலுறப் பொருள்விரித் துரைத்தனன் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - நலம்படு வைத்தியநாத தேசிகனே"1 என்று கூறாநின்றது. 'இனி, இலக்கண விளக்கத்தையும், வேறுபல தொன்னூல்களையும் வெளிப்படுத்துதவிய சி. வை. தாமோதரம் பிள்ளைஅவர்கள் தாம் எழுதிய இலக்கணவிளக்கப் பதிப்புரையில் பின் வருமாறு கூறியிருக்கின்றனர். 'நூற்கு உரையும் பாயிரமும் அணியியலிற் சொல்லணிச் சூத்திரங்களும் வைத்தியநாத தேசிகருடைய புதல்வர் ஐவருள் மூத்தவராகிய சதாசிவ தேசிகரால் இயற்றப்பட்டன எனக் கூறுவாருமுளர். ஆயினும் ஆசிரியரை நேரிலே பார்த்து அறிந்த வரும் மகா வித்துவானுமாகிய ஸ்ரீ கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை ஈசானதேசிக சுவாமிகள் தமது இலக்கணக் கொத்தில் ஓருரைச் சூத்திரத்தினகத்துத் தாமே தமது நூற்கு உரையியற்றியதற்கு மேற்கோளாக "என்கண்காண....... வகுத்துரை யெழுதினன்" எனக் கூறுமாற்றானும்- இலக்கண விளக்கம் மூலமும் உரையுமாகவே ஆசிரியரால் இயற்றப்பட்டதென்றும் கொள்வதே தகுதி". பிள்ளையவர்கள் இவண் இலக்கணக் கொத்தினை மேற் கோளாகக் கொண்டு தம்கருத்து நிலையிட்டனராயினும், அதன் கண் ஐயுறுவதற்கும் இடம் செய்து வைத்தனராவர். இலக்கண விளக்கவுரை சதாசிவ தேசிகர் இயற்றியதெனக் கூறுவாருமுளர் என்பது புலப்படுத்தினரே. பிறர் ஏன் அங்ஙனம் கூறுதல் வேண்டும்? ஒரு காலத்தின ரல்லராதல் பற்றிச் சிவஞான முனிவருரைத்தன கொள்ளா தொழியினும் ஒரு காலத்தினராய் நூலாசிரியரை அறிந்துள்ள ஈசானதேசிகரும் சதாசிவநாவலரும் கூறியவற்றை எங்ஙனம் புறக்கணித்தல் கூடும்? என்னுமிவை இங்கு ஆராய்ச்சிக் குரியன. உரையெழுதினார் சதாசிவநாவலர் என்பார் பதிகத்தையாதல், இலக்கணக் கொத்தினையாதல் படித்தறியாது கூறினாரென்றல் சாலாது. படித்தறியாதவரேல் அவர் சதாசிவ நாவலரென்று தான் எங்ஙனம் கூறவியலும்? ஆகவே அதனை நேரிலறிந்தாரிடமிருந்து வழிவழியாக வந்த செய்தியோ, அன்றி நூலுரையின்கட் காணப்படும் கருத்துக்களோ அவர் அங்ஙனம் கூறுதற்குக் காரணமாதல் வேண்டும். இனி இலக்கண விளக்க உரையினைக்கொண்டே இதனுண்மை காண்பாம். உரையின்கண் 'எழுத்திலக்கணம் உணர்த்துகின்றார்' 'ஆகுபெயரான் எழுத்திலக்கணத்தை எழுத்தென்றுங் கூறினார்' 'இந்நயம் பற்றி இவர் இலக்கணங் கூறாமையின்' 'சார்பின்பால வென்றார் இந்நூலுடையா ரென்றுணர்க' 'மெய்யை முற்கூறினார்' 'அல்வழி வேற்றுமை யென்றார்' இவற்றுடன் வினைத்தொகை பண்புத்தொகை' அன்மொழித்தொகை என்பனவற்றையும் எடுத்து ஓதாராயினார்' 'நிறுத்தமுறையானே எழுத்துணர்த்திச் சொல்லுணர்த்துகின்றாரா ஆதலின்' 'குறிப்பும் இசையும் பண்பின் பகுதியாய் அதன்கண் அடங்குமேனும் விளங்குதற் பொருட்டு வேறு கூறினார் 'பொருளிலக்கணம் உணர்த்துகின்றார்' என்றிங்ஙனம் பலவிடத்தும் நூல்செய்தவர் படர்க்கையில் வைத்துக் கூறப்படு கின்றனர். யாண்டும் தன்மையிடத்தாற் கூறப்படவில்லை. நூலாசிரியரே உரைகண்டாருமாயின் தன்மையாலன்றோ கூறியிருத்தல் வேண்டும்? பிரயோக விவேகமுடையாரும், இலக்கணக்கொத்து நூலாரும் 'இவ்வாறு கவிதோறும் உரைக்கு முன்னாகப் பின்னாக உரைச் சூத்திரமுஞ் செய்தாம்' தொல்காப்பியம் ஐந்தனையுமுணர்த்தலிற் கடலென்றாம்' என்றிங்ஙனம் தாமே நூலும் உரையும் இயற்றியோ ரென்பது தோன்றத் தன்மையாற் கூறிச்செல்லுதலுங் காண்க. எனவே, இலக்கண விளக்கமுடையார் தாமே அதற்குரை வகுத்தன என்பது வாய்ப்புடைத்தன்றாதல் பெற்றாம். இனி, பிரயோக விவேகமுடையார் "பெரும் புங்கவர்புகழ் போதாயனி சுப்பிரமணியள்......பாடினான்றமிழ் கற்பவர்க்கே"1 என்னுஞ் செய்யுளுரையில் "இது தன்னைப் பிறன்போலும் நாந்திக் கூறுகின்றது. வடநூலார் தாமே பதிகமும் உரையுஞ் செய்வார். இந்நூலும் வடநூலைத் தற்பவமாகச் செய்தலான், யாமும் பதிகமும் உரையுஞ்செய்து, உதாரணமுங் காட்டினாம். தண்டியாசிரியர் மூலோதாரணங் காட்டினாற் போல யாமும் உரையெழுதியதல்லது மூலோதாரணமுங் காட்டினாம். இனிச் சம்பந்தர், சடகோபர் முதலாயினாரும் திவாகரரும், பதினெண்கீழ்க் கணக்குச் செய்தாரும் முன்னாகப் பின்னாகப் பதிகங் கூறுவதுங் காண்க என்று கூறிப்போந்தனராகலின் இலக்கண விளக்க முடையாரும் தம்மைப் பிறர்போற் கூறினாராவர் என்னாமோ எனின், என்னாம். "பசுகரணங்களெல்லாம் பதிகரணங்களாக வசிபெறும் அடியார்" ஆன சம்பந்தர் சடகோபர் முதலாயினாரை அவர் ஈண்டெடுத்துக்காட்டுதல் பொருத்தமின்று. பிறவற்றிலுள்ள பதிகங்கள் ஆராய்ச்சிக்குரியன. 'வடநூலார் தாமே பதிகமும் உரையுஞ்செய்வார்' என்று கூறியவர், பின்பு தாம் துணிந்தவாறு, தமிழ் நூலாசிரியருள்ளும் சிலர் தாமே பதிகமுஞ் செய்தனரெனக் காட்டினராயினும் நூலாசிரியர் தாமே அந்நூற்கு உரையெழுது மாறும் உண்டென்பதற்குத் தமிழாசிரியருள்ளேயாரையும் அவர் காட்டாராயினர். அன்றியும், தன்னைப் பிறன்போற் கூறுவது பதிகத்திலன்றி, உரையின் கண் என யாப்புறுத்தப்படவுமில்லை. இவ்வாற்றால் இலக்கணவிளக்க ஆசிரியரே அதற்கு உரை கண்டாரென்பது பொருத்தமின்றாதல் தெளிக. இனி, நூலாசிரியரே அதற்கு உரையியற்றுவதும், உரையின்கண் தம்மைப் பிறர்போற் கூறுவதும் தமிழ்மரபன்றாயின் ஆகுக. இலக்கண விளக்கமுடையார் தாம் புதுவதாக அங்ஙனம் உரை யியற்றியும், கூறியும் போந்தனராவர் என்னில், அது பொருந்தாது, என்னை? "புள்ளியில்லா வெல்லாமெய்யும்" என்னும் எழுத்தியற் சூத்திரவுரையில், உயிரும் மெய்யுங் கூடுகின்ற கட்டத்தினை எல்லாமெய்யுமென மெய்மேல் வைத்துக் கூறியது அது முன்னர்க் கூறப்படுதல் நோக்கிப்போலும் என உரையெழுதினார் நூலாசிரியரது கருத்தில் ஐயுறவு தோன்றக் கூறுதலின் என்க. இதுகாறும் செய்த இவ்வாராய்ச்சியால், இலக்கண விளக்கமுடையாரும், அதற்கு உரைகண்டாரும் வேறுவேறாவரென்பதும், வைத்தியநாததேசிகரே நூலும் உரையும் இயற்றினாரெனக் கொண்டு பிறர் மேற்கோள் காட்டியதும், மறுப்புரை வரைந்ததும் பிழையாமென்பதும் அங்கை நெல்லியென விளங்குதல் காண்க. ஆயின், இலக்கணவிளக்கப் பாயிரமானது "பொருள் விரித்துரைத்தனன்" என்று கூறுவதென்னையெனின், அதற்கு, வைத்தியநாததேசிகர் தமது நூலை மாணவர்க்குப் பொருள் விரித்தறிவுறுத் தனர் என்ற துணையே பொருள் கொள்ளின் இடர்ப்பாடிலதாம் என்க. நூலாசிரியரின் புதல்வர் பாயிரத்து இங்ஙனம் 'பொருள் விரித்துரைத்தனன்' என்றது கொண்டே, ஈசான தேசிகரும் 'என்கண்காண.......இலக்கண விளக்கம் வகுத்துரையெழுதினன்' எனத் துணிந்து கூறியிருத்தல் வேண்டும். உலகின்கண் ஒவ்வொரு வரலாறும் எவ்வளவு விரைவிலும் எளிதிலும் பிறழ்ச்சியடையக் கூடு மென்பதற்கும், அவையிற்றை எங்ஙனம் சிக்கறுத்து உண்மை காணலாகும் என்பதற்கும் ஓர் எடுத்துக் காட்டாகும் துணையே இஃதெழுதலாயிற்று. யாம் எழுதிய இது திரிபுடைத்தாமாயின் பிறர் அதனை யெடுத்து விளக்குழி அதனாற் பெருமகிழ்வேயெய்தா நிற்பேம் என்க. மறைந்து கிடக்கும் பழைய உண்மைகளை ஆராய்ந்து வெளிப்படுத்தலே மிக அருமையுடைத்தாயிருப்ப, எவ்வகையான பற்றுக் காரணமாகவும் மேலும் மேலும் உண்மைகளை மறைத்தும் திரித்தும் செல்லுதல் அறிவுடைமைக் கழகாகாதென்பதே எமது கருத்து.  5. இலக்கண விளக்க உரையாளர் 'செந்தமிழ்ச்செல்வி' 2-ஆம் சிலம்பு, 3, 4-ஆம் பரல்களில் 'இலக்கணவிளக்க உரையாளர் யார்? என்னும் தலைப்பின் கீழ் யாம் எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக 'இலக்கண விளக்க உரையாளர் நூலாசிரியரே' என்னும் தலைப்பின் கீழ் திருவாளர், வி. சிதம்பர ராமலிங்கம் பிள்ளையவர்களால் 5, 6-ஆம் பரல்களில் ஓர் கட்டுரை வரையப்பெற்றுளது. எமது சுட்டுரை யிறுதியில் "யாம் எழுதிய இது திரிபுடைத்தாமாயின் பிறர் அதனை யெடுத்து விளக்குழி அதனாற் பெருமகிழ்வே யெய்தாநிற்பே மென்க" எனக் கூறியது எமது மெய்யான உள்ளக்கிடக்கை. பிள்ளையவர்கள் கட்டுரை நேரிய முறையில் உண்மை விளங்க எழுதப்பட்டிருப்பின் அன்னார்க்கு எமது பணிவையும் மகிழ்வையும் புலப்படுத்தி யமைவதாகிய அத்துணையே எமது செயலாக விருத்தல் கூடும். அங்ஙனம் எழுதப்பட்டிராமையின் யாமும் இஃதெழுவது கடப்பாடாகிவிட்டது. பிள்ளையவர்கள் எமது கட்டுரையில் ஒரு தொடரை யெடுத்துக் காட்டி 'என்று கூறினமைக்கு நாம்பெரிது மிரங்குகின்றே மாயினும்' என்றும், பிறிதொரு தொடரை யெடுத்துக்காட்டி 'என்று கூறியமைக்கு நாம் கழிபேருவகை பூக்கின்றேம்' என்றும் கூறித் தமது மறுப்புரையை முடித்துள்ளார்கள். உண்மையில் அவர்கள் உளப்பாங்கு இவையெனத் தெரியின் அவர்களதருளுக்கும் அன்புக்கும் உரியமாயினமை குறித்துப் பெருமகிழ்வெய்தா நிற்பேம். மற்று, அவர்கள் 'என்பது முதலாகப் பலபடப் பாரித்துக் கூறியனவெல்லாம் வெறும் போலியாயின' என்றிங்ஙனம் வரைந்துள்ளவற்றையும், எடுத்துக்கொண்ட பொருளுக்கியை பின்றியே கூறியிருப்பன பிறவற்றையும் ஈண்டாராய்தல் எம் கருத்தன்று. இயைபுடைய சிலவே இங்கு ஆராயப்படுவன. பிள்ளையவர்கள் யாம் எழுதியிருப்பனவற்றால் சுவாமிநாத தேசிகரின் பெருமைக்கும், சிவஞான சுவாமிகளின் பெருமைக்கும் யாதோ இழுக்கு நேர்வதாகக் கருதிக்கொண்டு முதற்கண் அதனைப் பரிகரிப்பான் றொடங்குகின்றனரெனத் தோன்றுகின்றது. அதன் பொருட்டு அவர்கள் கூறுவன: "சுவாமிநாததேசிகர் யாதொன்றும் பயனின்றி வாளா கூறாரென்பதும், அவர் நூலாசிரியராகிய தாம் உரையியற்றுதல் தக்கதோவென வினா எழுப்பி அதற்கு விடை கூறும் வழி 'என்கண்காண....... வயித்தியநாத, னிலக்கண விளக்கம் வகுத்துரை யெழுதினன்', என மேற்கோள் காட்டுகின்றாரென்பது நாம் அறிந்த நிலைமையில் அவர் கூறுவதைப் பொருளில் கூற்றாகப் புறக்கணித் தொதுக்குதல் கூடாது". இனி மாதவச் சிவஞான சுவாமிகளோ இலக்கண விளக்கத்திற்கு 'இலக்கண விளக்கச் சூறாவளி' யென்னும் பெயரால் மறுப்பொன்று அருளிய பெரியார். ஒரு நூலுக்கு மறுப்பு எழுதுவார் அந்நூலை எவ்வளவு நுணுகி நோக்கியிருப்பாரென்பதும், 'உயிரும் மெய்யும் கூடுகின்ற கூட்டத்தினை எல்லா மெய்யுமென மெய்மேல் வைத்துக் கூறியது அது முன்னர்க் கூறப்படுதல் நோக்கிப்போலும்' என ஐயுறவு தோன்றக் கூறுகின்றாரென்பதும் மறுப்பெழுதிய மாதவச் சிவஞான சுவாமிகள் பார்வைக்குப் புலப்படாமலிருந்தனவென்று எண்ணிக் கொள்வது அறிவுடைமைக் கழகன்று' என்பன. இவற்றிலுள்ள சொன்முடிபு வழுக்களை யெடுத்துக் காட்டுதலிற் போதரும் பயனின்மையின் அவற்றை விடுத்துப் பிள்ளையவர்களின் கோட்பாடுகளையே ஈண்டாராய்தல் தக்கது. சுவாமிநாததேசிகர் கூறியதை யாம் புறக்கணித்தொதுக்கினாற் போன்று கூறப்பட்டுளது. யாம் எமது கட்டுரைத் தொடக்கத்திலேயே சுவாமிநாததேசிகர் கூற்றுக்களை யெடுத்தாராயப்புக்கதனையும், பின்பு, 'ஒரு காலத்தினராய் நூலாசிரியரை அறிந்துள்ள ஈசான தேசிகரும் சதாசிவ நாவலரும் கூறியவற்றை எங்ஙனம் புறக்கணித்தல் கூடும் என்றெடுத்துக் கொண்டிருப்பதனையும் உணரவல்லார்க்கு யாம் அதனைப் புறக்கணித் திடவில்லையென்பது தெள்ளிதின் விளங்கா நிற்கும். 'சுவாமிநாத தேசிகர்யாதொன்றும் பயனின்றி வாளா கூறாரென்பது நாம் அறிந்த நிலைமையில் அவர் கூறுவதைப் பொருளில் கூற்றாகப் புறக்கணித் தொதுக்குதல் கூடாது' என்றும், 'ஒரு நூலுக்கு மறுப்பு எழுதுவார் அந்நூலை எவ்வளவு நுணுகி நோக்கியிருப்பார்' என்றும் கூறும் கூற்றுக்கள் அறிஞரவைக்களம் ஏறுதற்குரியவாமோ? தேசிகர் யாதொன்றும் பயனின்றிவாளா கூறாரென்பதனை அறிந்தவர் யாவர்? அவரறிந்தது கனவிலா? நனவிலா? தேசிகர் யாதொன்றும் பயனின்றிக் கூறாரென்பது கனவிலாதல் நனவிலாதல் எம்மாலறியப்படாமையின் யாம் அவர் கூற்றைப் புறக்கணித் தொதுக்கினும் அஃதும் அமையுமன்றோ? 'ஒரு நூலுக்கு மறுப்பெழுதுவார் அந்நூலை எவ்வளவு நுணுகி நோக்கியிருப்பர்' என்று கொண்டு அவ்வளவில் அமைவதாயின் உலகின்கண் ஆராய்ச்சியென்பது தோன்றுதற்கு இடமேயில்லை. சிவஞான முனிவர்தாமும் தொல்லை நூல் உரையாசிரியர்களை யெல்லாம் மறுத்தெழுதியிருத்தலும் அமையாது. அத்துணையோ? சிவஞான முனிவர் முதலாயினார் இயற்றிய நூல் உரைகளையெல்லாம் பிறர் எங்ஙனம் மறுத்தெழுதியவிடத்தும் பிள்ளையவர்கள் போல்வார் வாய்திறவாது அடங்கியிருக்கக் கடமைப்பட்டவராவர். இவ்வாற்றால் பிள்ளையவர்கள் வழக்கு வறிதே அழிந்தொழிந்தமை காண்க. இனி, இலக்கண விளக்க நூலாசிரியரே அதற்குரைகண்டாருமாகார் என்பதற்குயாம் எடுத்துக்காட்டிய காரணம் மூன்று. அவை: 1. இலக்கண விளக்கப் பதிப்புரையில் 'நூற்கு உரையும் பாயிரமும் அணியியலிற் சொல்லணிச் சூத்திரங்களும் வைத்தியநாத தேசிகருடைய புதல்வர் ஐவருள் மூத்தவராகிய சதாசிவ தேசிகரால் இயற்றப்பட்டன எனக் கூறுவாருமுளர்' என்று குறித்திருத்தலாற் பெறப்படும் பரம்பரை வழக்கு. 2. தாமே நூலும் உரையும் இயற்றிப் போந்த பிரயோக விவேகமுடையாரும், இலக்கணக்கொத்து நூலாரும் 'சூத்திரஞ் செய்தாம்' கடலென்றாம் என்றிங்ஙனம் தாமே நூலும் உரையும் இயற்றியோரென்பது தோன்றத் தன்மையாற் கூறிச் செல்லுதல் போலாது, இலக்கண விளக்க உரையாளர் 'எழுத்திலக்கணம் உணர்த்துகின்றார்' 'இந்நயம் பற்றி இவர் இலக்கணங் கூறாமையின்' 'சார்பின் பாலவென்றார் இந்நூலுடையாரென்றுணர்க' என்றிங்ஙனம் பலவிடத்தும் நூல் செய்தவரைப் படர்க்கையில் வைத்துக் கூறி, நூல் செய்தவரும் வேறு தாமும் வேறு என்பதனைப் புலப்படுத்துவது. 3. இலக்கண விளக்க உரையாளர் 'உயிரும் மெய்யுங் கூடுகின்ற கூட்டத்தினை எல்லா மெய்யுமென மெய்மேல் வைத்துக் கூறியது அது முன்னர்க் கூறப்படுதல் நோக்கிப்போலும்' என நூலாசிரியரது கருத்தில் ஐயுறவு தோன்றக் கூறுவது: என்பன. இவற்றுள் முதலாவதை எடுத்து மறுக்குமிடத்து, இலக்கண விளக்கவுரை யியற்றினார் சதாசிவ நாவலரென்று வாய்மொழி யளவிற் கூறுவாரை ஆதரிக்க வந்தேமெனக் கூறப்பட்டுள்ளது. 'சுவாமிநாத தேசிகர் சரித்திரம் அவர் வைத்தியநாத நாவலரிடம் தாமியற்றிய இலக்கணக்கொத்து நூலைச் சொல்ல அவ்வைத்திய நாதநாவலர் மிக வியப்புற்று மனமகிழ்ந்தாரென்று கூறுகின்றது' என்றும், 'வைத்தியநாத நாவலர்.....தம்மிடம் எதிர்பார்த்த தொழிலைச் செய்து முடித்தனர். இதுவே பரம்பரை வரலாறு' என்றும் யாதோராதரவும் காட்டுத லின்றிப் பரம்பரையெனக் கூறிச் செல்லும் பிள்ளையவர்கள் வாய் மொழியளவிற் கூறுவாரை யாம் ஆதரிக்க வந்தேமென மறுக்கப்புகுவது என் கருதியோ? அன்றியும் அவர்கள் "சிவஞான சுவாமிகள் நேரிலறிந்தாரிடமிருந்து வழிவழி வந்த செய்தியை மேற்கொண்டும், நூலுரைகளிற் காணப் படும் கருத்துக்களை நுணுகி யாராய்ந்தும் அவ்வாறு கூறினார்கள்" என்பதனால் சுவாமிகளே வழிவழி வந்த செய்தியையும் பிரமாண மாகக் கொண்டுள்ளார்களென ஒத்துக் கொள்ளவில்லையா? 'சிவஞான சுவாமிகள் நூலுரைகளை நுணுகி ஆராய்ந்து கூறினார்கள்' என்பதிலிருந்து ஏனையவற்றினும் அது வலியுடைத்தென்பது பிள்ளையவர்கட்கும் கருத்தாகச் செய்தே, அவர்கள் தாமும் நூலுரைகளை யாராய்தலையே முதன்மையாகக் கொள்ளுவதன்றோ அவர்களதறிவுடைமைக் கழகாகும்? அவ்வாறின்றிப் பிறர் ஆராயுங்கால் அங்ஙனம் ஆராய்வதனையே ஒரு குற்றமாக எடுத்துக் கொள்வது அவர்களதறிவுக்கும் அருளுக்கும் சிறிதும் ஏற்றதாகாது. இனி, இரண்டு மூன்றாம் காரணங்கட்கு மறுப்பாகப் பிள்ளையவர்கள் கூறுவன. "வைத்தியநாத நாவலர் இலக்கண விளக்க நூலைத் தம்முடைய தனி வாக்கினாற் கூறினாரல்லர். அவர் பெரும்பாலும் பவணந்தி முனிவர் தொல்காப்பியர் முதலியோர் கூறிய சூத்திரங்களைத் தழுவிச் சூத்திரமும், இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், மயிலைநாதர் முதலியோர் கூறியவுரைகளைத் தழுவி உரையும்...... செய்து முடித்தனர். "பிறவுரையாசிரிய ருரைப்பகுதியை அவ்வாறே எடுத்தமைக்கப் புகுவார் ஒருவர் தம்மைப் படர்க்கையிற் கூறுதல் பொருந்துமே யன்றித் தன்மையிற்கூறிச் செல்லுதல் பொருந்தாதென்பது யாவரும் எளிதின் அறிவதொன்று."அது முன்னர்க் கூறப்படுதல் நோக்கிப்போலும்' என உரையெழுதினார் நூலாசிரியரது கருத்தில் ஐயுறவு தோன்றக் கூறும் பகுதி இளம்பூரணர் கூறியவுரைப் பகுதியேயாம்" வைத்தியநாத நாவலர் இலக்கண விளக்கச் சூத்திரமியற்றும் பொழுது தம்மைத் தொல்காப்பியரையும் பவணந்தியாரையும் சேர்த்து உருக்கிவார்த்த பிண்டமாகவும், உரையியற்றும் பொழுது தம்மை இளம்பூரணர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் மயிலை நாதர் என்னும் இவ்வனைவரையும் சேர்த்து உருக்கி வார்த்த பிண்டமாகவும் பாவித்துக் கொண்டார் என்பதே, பெறப் படுவதாம் என்பன. இங்கு வழக்கிற்குரிய ஓர் உரைப்பகுதியை இளம்பூரணத்தினின் றெடுத்ததெனக் காட்டிய பிள்ளையவர்கள் அங்ஙனமே அவ்வுரை யாளர் நூலாசிரியரைப் படர்க்கையில் வைத்துக் கூறியிருக்கும் பகுதிகள் பலவற்றையும் இன்னுழி இன்னுழியிருந்தெடுக்கப் பட்டன வெனக் காட்டுதற்குக் கடமைப்பட்டவராவர். அவை யாவும் அவர்களாற் காட்டப்பட்டன வென்றே வைத்துக் கொண்டு மேல் ஆராய்ச்சி நிகழ்த்துதும். இலக்கண விளக்கச் சூத்திரங்கள். மிகுதியும் தொல்காப்பியச் சூத்திரங்கள் முதலியவற்றைத் தழுவியும், அங்ஙனமே இலக்கண விளக்கவுரை இளம்பூரணர் முதலானோர் உரைகளைத் தழுவியும் ஆக்கப்பட்டுள்ளன என்பதைத் தமிழிலக்கணம் கற்றார் யாவரும் அறிவர். இங்ஙனம் நூலியற்றுவாரும், உரையியற்றுவாரும் தமக்கு முன்னுள்ள நூல் உரையாசிரியர்களின் கூற்றுக்களை மிகுதியாகவோ, குறையாகவோ, திரித்தோ, திரியாமலோ தமது நூல் உரைகளில் எடுத்தமைத்துக் கொள்வது வழக்காறே. நன்னூலார் பல சூத்திரங்களை முன்னூல்களிலிருந்து சிறிதும் வேறுபடுத்தாமலே எடுத்துவைத்துக் கொண்டிருத்தாலும் காண்க. அவர் இப்பொழுது இறந்துபட்ட பழைய நூல்களி லிருந்து மற்றும் எத்தனையோ பல சூத்திரங்களை யெடுத்துக் கொண்டுளரெனில் அதனை யாவர் எங்ஙனம் மறுத்துரைக்கற் பாலர்? உரையாளர்களும் தமக்கு முன்புள்ள உரையில் வேண்டுமவற்றை யெடுத்துக் கோடல் வழக்கே யென்பதற்குப் பல சான்றுகள் காட்டலாகும். தொல்காப்பியச் செய்யுளியலுக்குப் பேராசிரியரியற்றிய உரையையும் நச்சினார்க்கினியர் எழுதிய உரையையும் ஒத்து நோக்குவார்க்கு நச்சினார்க்கினியர் பெரும் பாலும் பேராசிரியருரையை யெடுத்துத் தழுவிக் கொண்டிருப்பது புலனாகும். முன்னூல் உரைகளிருப்பவும் கற்பார்க்கு உபகாரப்பட்ட அவற்றை வேறு படுத்துநூலுரைகள் வகுக்கப்புகுவார் தம் கருத்துடன் மாறுபடாதவைகளை முன்னையவற்றினின்றும் எடுத்துக் கொள்வது தமக்கு வீணிலே காலக்கேடுண்டாகாமற் பாதுகாப்ப தோர் நெறியாம். அன்றியும் அது முன்னையவற்றில் அவர்க்குள்ள மதிப்புடைமைக்கு அறிகுறியுமாகும். இங்ஙனம் ஒருவர் முன்நூல் உரைப் பகுதிகளையெடுத் தமைத்துக் கொள்ளுதலும் அவர் அவைகளை யுடம்பட்ட வகையில் அவற்றை அவருடைய கருத்துக்களென்னத் தடையில்லை. அந்நூலுரைப் பகுதிகளாலெய்தும் புகழிலும் இகழிலும் அவருக் குரிமையுண்டு. இன்னநூல் உரைகளினின்றும் அவை எடுக்கப் பட்டன என்பதும் காணப்படாத நிலையில் முழுப்புகழும் இகழும் அவரையே சார்வனவாகும். இவ்வாற்றால் இலக்கண விளக்க நூலாரும், அதன் உரையாளரும் முன்னூல் உரைகளிலிருந்து வேண்டும் பகுதிகளை யெடுத்தமைத்துக் கொண்டனராயினும் அவை அவர்களின் கருத்துக்களென்றே கோடல் வேண்டும். அல்லாக்கால் அம்முன்னூல் உரைப்பகுதிகள் வேறெந்நூல் உரைகளினின்றெடுக்கப்பட்டனவென்றும், அவைதாமும் மற்றெந்நூல் உரைகளினின் றெடுக்கப்பட்டன வென்றும் இங்ஙனம் மேன்மேல் வரம்பின்றி ஆராய்தற் கிடனுண்டாகி விடுதலின் இன்னவை இன்னாராலியற்றப்பட்டன வென்பது பெறப்படாதொழியும். இக்கருத்தானன்றே சிவஞானமுனிவர் இலக்கண விளக்கச் சூத்திரங்களும், அதனுரையும் பெரும்பாலும் முன்னூல் உரைகளினின் றெடுக்கப் பட்டனவாகவும் அவற்றை இலக்கண விளக்க ஆசிரியர்க்கே உரியவாகக்கொண்டு தமது சூறாவளியின் கண் மறுத்திட்டதூஉமென்க. பின் வரும் எடுத்துக்காட்டுகளால் இது நன்கு விளங்குவதாகும். க. தொல்காப்பிய முதல் சூத்திரவுரைக்கண், நச்சினார்க்கினியர் "இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின் எழுத்திலக்கணம் உணர்த்தினமை காரணத்தான் எழுத்ததிகாரமென்னும் பெயர்த்து. எழுத்தையுணர்த்திய அதிகாரமென விரிக்க. அதிகாரம் - முறைமை" என்றனர். நன்னூல் முதற் சூத்திரவுரைக்கண், மயிலைநாதர் "இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின் எழுத்திலக்கணம் உணர்த்தினமையின் எழுத்ததிகாரமென்னும் பெயர்த்து. அதிகாரமென்றது முறைமை என்றனர். இலக்கண விளக்க முதற்சூத்திர உரையில் அதன் உரையாளர் இவ்வதிகாரம் எழுத்து உணர்த்தினமையான் எழுத்ததிகாரமென்னும் பெயர்த்து. எழுத்தையுணர்த்திய அதிகாரம் என விரிக்க. எழுத்து என்றது அதனிலக்கணத்தை; அதிகாரம் என்றது முறைமை என்றனர். இலக்கண விளக்கச் சூறாவளியில், சிவஞானமுனிவர் "எழுத்ததிகாரமென்புழி அதிகாரம் முறைமையென்றார். அதிகார மென்னும் வடசொற்கு அது பொருளன்மை தொல்காப்பிய விருத்தியிற் கூறியவாற்றானறிக" என்று மறுத்துரைத்தனர். உ. 'புள்ளியில்லா வெல்லாமெய்யும்' என்னுந் தொல்காப்பியச் சூத்திரவுரையில் 'உயிர்த்தல்' என்பதற்கு 'ஒலித்தல்' என்று பொருள் கூறினர் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும். இலக்கண விளக்கத்தில் அப்பொருளே உணர்த்த எழுந்த 'புள்ளியில்லா' என்னுஞ் சூத்திரவுரையில் 'உயிர்த்தல்' என்பதற்கு ஒலித்தல் என்று பொருள் கூறப்பெற்றுள்ளது. இலக்கண விளக்கச் சூறாவளியில், உயிர்த்தலென்பதற்கு ஒலித்தலெனப் பொருளுரைத்தார், முன்னுருவாகியும் உருவு திரிந்து முயிர்த்தல் வரிவடிவிற்கல்ல தொலிவடிவிற் கன்மையின் ஒலித்தலென்னும் பொருளேலாமையறிக" என்று சிவஞான முனிவர் மறுத்தனர். ' எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்றா பதம்புணர்ப் பெனப்பன் னிருபாற் றதுவே'1 என்பது நன்னூல். " எண்பெயர் முறைபிறப் புருவளவு முதலீ றிடைநிலை போலியொடு பதம்புணர்ப் புளப்பட வாறிரு பகுதித் ததுவென மொழிப"2 என்பது இலக்கண விளக்கம். இலக்கண விளக்கச் சூறாவளியில் 'எண்ணுதற்கும் பெயர் கருவியாகலின் அதனை முற்கூறாதது முறையன்று; எண்ணு முறையும் போல்வனவற்றால் ஒரு பயனின்மையின் அவற்றை வகையுட் சேர்த்துக் கருவி செய்தல் பயனில் கூற்றாமாறறிக. போலியெழுத்தென வொன்றில்லை யென்பது தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியுட் காண்க' என்று சிவஞானமுனிவர் மறுத்துரைத்தனர். முனிவர் பிறாண்டும் மறுத்துரைத்ததெல்லாம் இப்பெற்றியவாதல் காண்க. இஃதிவ்வாறாகவும், மாதவச் சிவஞான சுவாமிகளுக்குப் பரிந்தெழுந்த திருவாளர், சிதம்பரராமலிங்க பிள்ளையவர்கள் சுவாமிகளின் கருத்தின்னதென அறியகில்லாராய் "வைத்தியநாத நாவலர் இலக்கண விளக்கச் சூத்திரமியற்றும் பொழுது தம்மைத் தொல்காப்பியரையும் பவணந்தியாரையும் சேர்த்து உருக்கி வார்த்த பிண்டமாகவும், உரையியற்றும் பொழுது தம்மை இளம்பூரணர் சேனாவரையர் நச்சினார்க்கினியர் மயிலைநாத ரென்னும் இவ்வனைவரையும் சேர்த்து உருக்கி வார்த்த பிண்ட மாகவும் பாவித்துக்கொண்டாரென்பதே பெறப்படுவதாம்" என்றும், "பிறவுரையாசிரிய ருரைப்பகுதியை அவ்வாறே எடுத் தமைக்கப் புகுவார் ஒருவர் தம்மைப் படர்க்கையிற் கூறுதல் பொருந்துமேயன்றித் தன்மையிற் கூறிச்செல்லுதல் பொருந்தா தென்பது யாவரும் எளிதின் அறிவதொன்று" என்றும் இங்ஙனம் முன்னோடு பின்மலையத் தமக்குத் தோற்றியவா றெல்லாம் கூறிச்செல்வாராயினர். பிள்ளையவர்கள் இலக்கண விளக்கவுரை யாளர் படர்க்கையிற் கூறுதல் பொருத்தமுடைத் தென்பதற்குக் கூறுங் காரணங்கள் தொல்லாசிரியர் பல்லோர் கொள்கைக்கும் முரணாகி வழுப்பட்டொழிதலின் அவை அறிவுடையோர் எவரானும் ஏற்றுக்கோடற்பாலவல்ல என்க. பிள்ளையவர்கள், அவர் படர்க்கையிற் கூறுவதே பொருத்த மென்று சாதிக்கப் புக்கதனைக் கைவிடுத்து, அவர்பிற ஆசிரிய ரெல்லாரையும் சேர்த்து உருக்கிவார்த்த பிண்டமாகத் தம்மைக் பாவித்துக் கொண்டாரென்று தாம் குறிப்பிற் கூறியதனை வெளிப்படுத்துரைப்பாராய் 'வைத்தியநாத நாவலர் கல்வியறிவு சிறிதுமில்லாதவர் உன்மத்தர். அவர் ஒரு நூலாதல் உரையாதல் இயற்றினாரல்லர்' என்று புகன்றிருப்பாரேல் ஒரோவழி அவர் தாமறிந்த உண்மையைக் கரவின்றி யெடுத்துரைத்தனரென்று கருதுதற்கிடனுண்டாகும். ஆயின், அப்பொழுது, "திருவாரூரிற் றிருக்கூட்டத்திற், றமிழ்க்கிலக்காகிய வயித்திய நாதன், இலக்கண விளக்கம் வகுத்துரை யெழுதினன்" என்று வைத்தியநாத நாவலரைப் பிரமாண ஆசிரியராகக் கொண்டு புகழ்ந்தெடுத்துரைத்த சுவாமி நாததேசிகரையும், இலக்கண விளக்கம் என்பது வைத்தியநாத நாவலரால் இயற்றப்பட்டதொரு நூலெனக் கொண்டு அதற்குச் 'சூறாவளி' யென்னும் பெயரால் மறுப்புரை யெழுதிய சிவஞான சுவாமிகளையும் வரம்பின்றிப் புறம்பழித்தனராவர். சுவாமிநாத தேசிகர் யாதொன்றும் பயனின்றி வாளா கூறாரென்றும், சிவஞானமுனிவ ரெழுதிய மறுப்புரையில் அணுத்துணையும் மறுவிருத்தல் காணலாகாதென்றும் கொண்ட பிள்ளையவர்கள் முடிவின்கண் எவ்வழியிலும் அவ்விருவர் கொள்கையுடனும் மாறுபட்டு அவர்களைப் புறக்கணித் தொதுக்குதலாகிய குற்றத் தினின்றும் தப்புதற்கு வழியின்றி யிடர்ப்படுவாராயினமை காண்க. இனி, "இலக்கணவிளக்க வுரையாளர் யாரென்றெழுந்த வினாவுக்கு இன்னாரென்று விடையிறுப்பதன்றி வேறாவரென்ற அளவிற் கூறிவிடுத்தல்......செப்புவழுவுமாயிற்று" என்பது போல்வன இலக்கணவறிவுடையா ரொதுக்கற்பாலவாகலின் பிள்ளையவர்கள் அவற்றை அயர்த்தெழுதிவிட்டனர் போலுமென விடுத்தலே சாலுமென்க. 'அரியகற்றாசற்றார் கண்ணுந் தெரிங்கா, லின்மையரிதே வெளிறு'1 என்றபடி எத்துணைப் பேரறிவுடையாரும் ஒரோவழி உண்மையுணரமாட்டாது திரியக்கூறுதல் இயல்பேயென்பதும், அதனை ஒருவர் வெளிப்படுத்துரைத்தலால் அப்பேரறி வுடையார் பிறவாற்றானெய்திய பெருமைக்கு யாதோரிழுக்கு மின்றென்பதும் ஓராமல் 'பெரியாரைப் பழித்து விட்டனர்' என அலர் தூற்றியெழும் இயல்புடையார்க்குத் திருவாளர் பிள்ளையவர்கள் போல்வார் அறிவுகொளுத்தல் கடனாமன்றித்தாமே அந்நெறியைப் பின்பற்றி யொழுகல் அறிஞரால் விரும்பத்தக்க தன்றாகும். " எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"1  6. மயக்க மறுப்பின்மேற் குறிப்பு "இலக்கணவிளக்கு உரைச் சமாதானப் போலித்தேற்றம்" "இலக்கணவிளக்க உரைவரலாற்று மயக்க மறுப்பு" என்னும் தலைப்பெயர்களின் கீழே எழுதப்பட்டுள்ள இரண்டு கட்டுரைகள் முன்னர் உள்ளன. அவற்றுள் போலித்தேற்றத்தை ஆராய எமக்குப் பொழுதின்மையின், அதனை விடுத்து மயக்க மறுப்பின்மேற் சில குறிப்புக்கள் எழுத நேர்ந்தனம். 9-ஆம் பரலில் 'இது குறித்துப் பின்னும் எழுதுமாறில்லை' எனத் தெரிவித்திலே மாயினும், மயக்க மறுப்பினைக் கண்ட பின்னர் யாம் சில எழுதுதல் கடனெனத் தோற்றியது. இது பிழையாயின் அறிஞர்கள் பொறுத்தருள்வார்களாக. இலக்கணவிளக்கவுரை வரலாறு பற்றி எம்முடன் மாறுபட்டெழுது வோர் அனைவரும் சிவஞான முனிவர்பால் தமக்குள்ள அளவு கடந்த அன்பினாலே, அப்பெருமான் எழுதியவற்றுள் யாரும் ஒரு சிறு பிழையும் காணல் தகாதென்னுங் கருத்தினை அடிப்படை யாகக் கொண்டுளார்களென்பது அவற்றைப் படிப்போர்க்குப் புலனாகும். முனிவரது பேரறிவினையும் கல்வியின் பல துறையிலும் விரிந்து சென்ற அவரது புலமைத்திறத்தினையும், தமிழ்மொழிக்கும் சைவ சமயத்திற்கும் அவர் செய்துள்ள அளவுபடாத உதவி களையும் நினையுங்கால் நம்மனோர்க்கு அவர்பால் வரம்பற்ற அன்புண்டாவதிலும், அவரைத் தாம் தாம் நினைந்தவாறெல்லாம் பாராட்டுவதிலும் வியப்பொன்றுமில்லை. இவ்வாற்றால் எமக்கும் அவர்பால் அன்புளதென்றே நினைந்து கொண்டிருக்கின்றேம். ஆனால் பிறரது அன்பிற்கும் எமது அன்பிற்கும் வேற்றுமை இருத்தல் கூடும். மயக்க மறுப்புடையார் எம்மைக் குறித்துச் சற்று வன்மையான சொற்களை வழங்கி வந்திருப்பினும் அவை சீரிய தமிழ்ச் சொற்களாக விருத்தலானும், எம்மை நண்பரென்று பாராட்டி யிருத்தலானும் பெரிதும் உவகையே யெய்துகின்றேம். நண்பர்கள் எம் கருத்தினை உள்ளவாறறிந்து கொள்ளவில்லை யென்றும், யாம் கூறாதவொன்றனையும் கூறியதாக வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்கின்றார்க ளென்றும் இச்சிறு பிழை களையாதல் யாம் அவர்கள்பாற் சார்த்தாதிருக்க முடியவில்லை. யாம். இலக்கணவிளக்கப் பாட்டியலின் பதிகமும், அதனுரையும் முதலாயின வெல்லாம் பார்த்த பின்னரே 'இலக்கணவிளக்க உரையாளர் யார்?' என ஆராயத் தொடங்கினேம். இலக்கண விளக்கவுரையாளர் இன்னாரென்பது ஆராய்ந்து துணியவேண்டிய நிலையில் இருத்தல் போன்றே அந்நூற்குப் பொதுப்பாயிரமமைத் தாரும், அதன் சிறப்புப் பாயிரத்திற்கு உரை கூறினாரும் பாட்டியலின் பதிகத்திற்கு உரை பகர்ந்தாரும் இன்னாரின்னாரென்பது ஆராய்ந்து துணிய வேண்டிய நிலையிலுள்ளது. துணியப்படாத நிலையிலுள்ள அவற்றைப் பார்க்கினும் இலக்கணக்கொத்து முதலியன சிறந்த சான்றுகளாமெனக் கருதியே இவையிற்றையே யெடுத்துக் கொண்டேம். பின், ஓர் உரை வரலாற்றினை அறிந்து கோடற்கு அவ்வுரையின்கட் காணப்படுங் குறிப்புக்கள் சான்றுகளாய் அமையுமேல் அவை பிறவெல்லாவற்றினும் வலியுடையன வென்று கருதி அவைகொண்டு முடிவு செய்தனம். இனி, மயக்க மறுப்புரை வரைந்த நண்பர் பாரிப்பாக்கம் கண்ணப்ப முதலியாரவர்களால், இலக்கணவிளக்கவுரை அந் நூலாசிரியரதன்றென்பதற்கு யாம் காட்டிய ஏதுக்கள் மறுக்கப் பட்டு விட்டனவாவென்று பார்ப்போம். 1. இலக்கணவிளக்கப் பதிப்புரையிலிருந்து யாமெழுதியதனை யெடுத்துக்காட்டி, அது "அப்பதிப்புரையாசிரியராம் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களான் ஆண்டே மறுத்தொதுக்கப் பட்டதொன்றாம்" எனக் கூறப்பட்டுள்ளது. யாமெழுதியதனைச் சிறிது கருத்தூன்றிப் படிப்போர் அஃது எந்த அளவிற்கு எடுத்துக் காட்டப் பட்டுள தென அறியலாகும். அது கிடக்க, தாமோதரம் பிள்ளையவர்கள் யாம் ஆராய்ச்சிக்கெடுத்துக்கொள்ளாத எவ்வாதரவுகளைக் கொண்டு அதனை மறுத்தொதுக்கி யிருக்கின்றார்கள்? அவர்கள் மறுத்துவிட்டதாகவே வைத்துக் கொள்வோம். தாமோதரம் பிள்ளையவர்கள் கூறுவன வெல்லாம் நம்முதலியாரவர்கட்கு உடன்பாடாமா? பிள்ளையவர்கள் இலக்கணவிளக்கப் பதிப்புரையில் பக்கம் 7 முதல் 15 வரையில் சிவஞான முனிவர் இலக்கணவிளக்கச் சூறாவளி வரைந்தது பெரும் பிழையாம் என விரிவுபடக் கூறியிருப்பதுடன் சூறாவளியின்கண் சில பகுதிகளையெடுத்துக் காட்டி மறுத்தலுஞ் செய்திருக்கின்றார்கள். "இலக்கணவிளக்கச் சூறாவளியென்று ஓர் அநியாயகண்டனம்" என்றும், "சிவஞான முனிவரர் தெரித்த குற்றங்களின் இலஷணம் எத்தன்மைய என்பதற்கு மேலே காட்டிய ஐந்து உதாரணமும் போதுமாதலின் இவ்வளவில் நிறுத்துதும்' என்றும் இங்ஙனமாகப் பிள்ளையவர்கள் கூறுவனவெல்லாம், உடம்பாடாயினன்றே 'அவர்களான் ஆண்டே மறுத்தொதுக்கப்பட்ட' தென்று முதலியாரவர்கள் கூறுவது சால்புடைத்தாகும்? 2. உரைகாரர் நூலாசிரியரை எவ்விடத்தும் படர்க்கையில் வைத்துக் கூறுவது என்னும் ஏதுவை யெடுத்துக்கொண்டு, அதற்கு மறுப்பாக "அவ்வாறியற்றுதன் முறையன்றாமென்னும் நியதியொன் றுண்டாயினன்றே அது முறை பிறழ்வாவது அங்ஙனமேதுமின்மையின் அவ்வாறு கடா நிகழ்த்துதலே முறையன்றாமென்றொழிக" என்று கூறப்பட்டுளது. இங்ஙனம் மறுக்கலுறுவார்க்கு யாம் வாய்வாளாமை மேற்கொண்டிருத் தலன்றிச் செயற்பாலது பிறிதில்லை. இனித் தொல்காப்பியவுரைகள் முதலாயின வெல்லாம் அவ்வந் நூலாசிரியர்களாலேயே இயற்றப் பட்டன என்று கூறின் அன்றென மறுப்பார் யார்? 3. உரைகாரர் நூலாசிரியர் கருத்தில் ஐயுறவு தோன்றக் கூறுவது என்னும் ஏதுவை ஆராய்ச்சிக் கெடுத்துக் கொண்டு மறுப்பாக "அவ்விலக்கண விளக்க நூலார் இவ்வாறு அந்நூலகத்துச் செய்து போந்த மயக்க வழூஉக்கள் பலவற்றுள்" என்பது முதலாகக் "காழ்ப்பின்றி யூழ்த்தமரமென வடியொடு முறிந்து வீழ்ந்தமை காண்க" என்பது காறும் வரையப்பட்டுளது. இதனைப் படிப்பவர்கள் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 2, பக்கம் 302 முதல் 306 வரையில் யாமெழுதி யிருப்பதனை ஒரு முறை உடன் சேர்த்துப் பார்த்தல் வேண்டும். இலக்கண விளக்க நூலாசிரியர் சிறிதும் அறிவில்லாதவராகவே மறுப்புரைகாரர் களாற் கூறப்படுகின்றனர். சிவஞானமுனிவர் சூறாவளி கொண்டு தூற்றிவிட்ட பின்னரும் நம் நண்பர்கள் இலக்கணவிளக்கத்தைச் சிறிதும் எஞ்சாது படித்திருப்பது மிக்க வியப்பையே விளைக் கின்றது. பிற நூலுரைப்பகுதிகளை அங்கங்கு கிடந்தவாறே யெடுத்துக்கொண்டு தம்மை மறந்து மயங்கிக் கூறும் பெரும் பித்தராகிய வைத்தியநாத நாவலர் தாமே உரையெழுதும் பொழுது ஓரிடத்திலாவது மறந்தும்யாம் உரைத்தாம் என்றாற் போலத் தன்மையாற் கூறாதிருப்பது எல்லாவற்றையுங் காட்டில் வியப்பை விளைக்கின்றது. இவை கிடக்க, இலக்கணவிளக்க நூலார் செய்து போந்த மயக்க வழூஉக்களை எடுத்துக்காட்டப் புகுந்தவர்கள் உரையின்கண் உள்ள வழூஉக்களை யெடுத்துக்காட்டிய தென்னை? அவ்வாறு காட்டியவெல்லாம் இலக்கணவிளக்க உரையாளர் அந்நூலாசிரியரின் வேறாவர் என்னும் எம்கொள்கைக்குத் துணையாவன வன்றி அங்ஙனமன்றென்னும் தம் கொள்கைக்குத் துணையாமாறியாங்ஙனம்? இவ்வாற்றால் இலக்கணவிளக்க உரைகாரர் அந்நூலாசிரியரல்லரென்பதற்குயாம் காட்டிய வேதுக்கள் பிறரால் ஒரு சிறிதும் அசைக்கப்படவில்லை யென்பது காட்டுதன் மாத்திரையே இங்கு எழுதுதற் கமைந்தாமென்க. இலக்கணவிளக்க நூலும், அதனுரையும் வழுவுள்ளனவல்ல மென்பது எம் கருத்தன்று. அவற்றில் எத்தனையோ பலவழுக் களிருத்தல் கூடும். ஆயினும் அவை எமது கொள்கையை மறுக்கப் புகுந்தார்க்குத் துணையாவன அல்லவென்க. யாம் மிகவுஞ் சுருங்கிய அறிவும் சுருங்கிய கல்வியும் உடையே மென்பதனை நன்கு அறிவேம். யாம் கூறுவனவற்றில் பற்பல வழுக்களிருத்தல் கூடும், வழுவென அறிந்தகாலை யாம்அவற்றைத் திருத்திக் கொள்ளுதலுங் கூடும். ஆயினும் அவ்வப்பொழுது அறிந்தவற்றைத் தானே அவ்வந்நிலையில் உண்மையெனக் கொள்ளல் வேண்டும். இனி, நண்பர் கண்ணப்ப முதலியாரவர்கள் ஒரு திருக்குறட்பாவை " எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்வில்லைப் பெரியார்ப் பழித்தொழுகு வார்" என்று பிழையாக எழுதியிருக்கின்றார்கள். அங்ஙனம் தவறு நேர்வது யாவர்க்கு மியல்பே. வெண்பாவின் தளைசிதையுமாறும் பிழை பட்டிருத்தலால் இதனைப் படிப்பவர்யாரேனும் பிழையாகப் பாடஞ்செய்து விடாமைப்பொருட்டு இங்கே யெழுதுகின்றேம். " எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்"  7. தொல்காப்பியம் ' மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி யிறைவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்.'1 உலகிலுள்ள மொழிகள் எல்லாவற்றையும் வென்று ஆரிய மொழியுடன் உறழ்வது தமிழ் என்று சில நூற்றாண்டுகளின் முன் விளங்கிய ஒரு பேரறிஞர் இப்பாட்டிலே கூறிவைத்தனர். இப்பொழுது தமிழ்மொழியுடன் வேறு மொழிகளையும் ஒருங்கு நன்காராய்ந்த ஆராய்ச்சிவல்ல புலமையாளர்கள் இம்முடிபுக்கே வருகின்றனர். தமிழ் மொழி எவ்வளவு பழமையுடையது என்பதனையும், பண்டைநாளில் எவ்வளவு பரவியிருந்தது என்பதனையும் ஆராய்ந் தறிந்த மதிவல்லராகிய ஆசிரியர் சுந்தரம்பிள்ளையவர்கள், அதனை, ' சதுமறையா ரியம்வருமுன் சகமுழுதும் நினதாயின் முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே'2 என்று மொழிந்தருளினர். இங்ஙனம் பழமையால் மாத்திரமன்றி, இயல் வரம்பாகிய திருந்திய நிலையாலும், இனிமை முதலிய வற்றாலும் தமிழ்மொழி தலைசிறந்து விளங்குதலின், புலமையும் தெய்வத்தன்மையும் வாய்ந்துளோர் என நம்மாற் போற்றப் பெறும் நம் பெருமக்கள் பலரும் தமிழைக் குறிக்குமிடத் தெல்லாம் செந்தமிழ், பைந்தமிழ், இன்றமிழ், மென்றமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், நற்றமிழ், சொற்றமிழ் என்றிங்ஙனம் அடையடுத்து வழங்குவாராயினர். இந்நாட்டிற்குரிய தொன்முது மக்களாகிய தமிழருடன் ஆரியர்விரவி ஒரு நாட்டினராக வாழலுற்ற காலத்தில் தமிழருடைய தத்துவ ஞானங்கள் வடமொழி நூல் களாகப் பரிணமித்தன. ஆரியருடைய கலை ஞானங்களும், கோட்பாடுகளும் தமிழிலும் ஏறின. இரு மொழியும் நம்முடைய பெருமொழிகளென இந்நாட்டு முன்னையோர் போற்றி வந்தனர். எனினும் சிற்சில துறைகளில் ஒரு மொழி மற்றொரு மொழியினும் ஒவ்வொரு காலத்திற் சிறந்து விளங்குதல் இயற்கையே. தமிழ் மொழியானது ஆரியத்தை வெல்லுதற்கு மாறு கொண்டு நிற்கின்றது என்பது தலைப்பிற்காட்டிய பாட்டிலே குறிக்கப் பெற்றுளது. உறழ்தல் என்பதற்கு ஒத்தல் என்றும் பொருள் கூறப்படினும், வெல்லுதற்கு மாறுகொள்ளல் என்பதே சிறந்த பொருளாகும். நம் இருமொழிகளில் வடமொழி வழக்கற்று வீழ்ந்ததனையும் தமிழ்மொழி இளமைச்செவ்வியுடன் என்றும் வழங்குதற்குரியதாய் மிளிர்வதனையும் நோக்குழி தமிழ் ஆரியத்தை ஒருவாற்றால் வென்று விட்டதென்றே இப்பொழுது கூறுதலும் ஏற்புடைத்தாகும். தமிழ் தன் மொழியமைதியாற் பிறமொழிகளைவென்று விளங்குதலேயன்றி, தன்னிடத்துள்ள சில நூல்களாலும் வாகை சூடித்திகழ்தல் கண்கூடாம். திருக்குறள், திருவாசகம், திருவாய் மொழி என்னும் நூல்களுக்கு இணையான நூல்களை வேறெம் மொழியிற் காணக்கூடும்? தொல்காப்பியம் என்னும் இயல்நூலும் அத்தன்மையதே. இயல், இசை, நாடகம் என்னும், முத்துறையிலும் முச்சங்க நாளிலே இயற்றப்பெற்றுப் பரந்துகிடந்த இலக்கண நூல்களெல்லாம் கரந்துபடவும், தொல்காப்பிய மென்னும் இவ்வியற்றமிழிலக்கணம் இன்று காறும் நின்று நிலவுவது, பல்லாயிரம் ஆண்டுகளாக நம்முன்னையோர் இதனை எங்ஙனம் மதித்துப் போற்றி வந்தன ரென்பதற்கு உறு சான்றாகும். ' கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோ லெண்ணி டைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ.'1 என்றிவ்வாறாக, இலக்கண வரம்புடைமையால் நம் தமிழ்மொழி நிகரற்றதென வைத்துப் போற்றப்பெறுவது புனைந்துரையாமென ஏதிலார் புறங்கூறுதற் கிடனின்றி, எய்ப்பினில் வைப்பாக இந்நூல் கிடைத்திருப்பது நாம்புரிந்த தவத்தின் பயனேயாம். தமிழின், வரலாறனைத்தும் ஒருங்குணர்ந்து கோடற்குச் சிறந்த கருவியாக வுள்ள இந்நூல் இனி எக்காலத்தும் நிலவுதலுறும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. இந்நூலானது தமிழ்கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்து முந்துநூல்கண்டு முறைப்படத் தொகுத்தியற்றப்பட்ட தென்பது வடவேங்கடம் என்னும் இதன் சிறப்புப் பாயிரத்தால் அறியலாவது. இந்நூலை ஆராய்ச்சி செய்யுமிடத்து இது நன்கு தெளிவாம். இந்நூலின் எழுத்ததி காரத்து மொழிமரபின் கண்ணே மொழிக்கீறாம் எழுத்துக்கள் கூறி வருமிடத்தே, சகரமெய்யூர்ந்த முற்றுகரமும், நகரவொற்றும் இவ்விரண்டு மொழிகட்கே, ஈறாகு மென்றும், பகர மெய்யூர்ந்த முற்றுகரமும் ஞகர வொற்றும் ஒவ்வொரு மொழிக்கே ஈறாகு மென்றும், பகரமெய்யூர்ந்த வுகர வீற்றுச் சொல் ஒன்றே தன்வினைப் பொருளும் பிறவினைப் பொருளும் பயப்பதாமென்றும் உணர்த்துவார், " உச்ச காரம் இரு மொழிக் குரித்தே"1 " உப்ப காரம் ஒன்றென மொழிப இருவயி னிலையும் பொருட்டா கும்மே"2 " உச்ச காரமொடு நகாரம் சிவணும்"3 " உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே அப்பொரு ளிரட்டா திவணையான".4 என ஆசிரியர் கூறி வைத்திருப்பன சிலவற்றிலிருந்தே, தமிழில் இரு வகை வழக்கினுமுள்ள சொற்பரப்பெல்லாம் ஒருங்கு தொகுத்து வைத்துக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டதென உணரலாகும். மற்றும், தொகைமரபின் கண்ணே, " அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதலாகி உளவெனப்பட்ட ஒன்பதிற் றெழுத்தே அவைதாம், கசதப என்றா நமவ என்றா அகர உகரமோ டவையென மொழிப".5 என்னுஞ் சூத்திரத்தால், தமிழக முழுதும் வழங்கிய அளவுப் பெயர், நிறைப் பெயர்களை அவற்றின் முதலெழுத்தெடுத் தோதிக்குறித்து வைத்ததும், பொருளதிகாரத்து மரபியலில், இளமைப்பெயர், ஆண்மைப்பெயர், பெண்மைப்பெயர் எல்லாம் எடுத்தோதி, இன்னின்னவற்றிற்கு இன்னின்ன பெயர்கள் உரிய வெனக் கூறி வைத்திருப்பதும் போல்வன இவ்வுண்மையை நன்கு விளக்குவனவாகும். தமிழுக்கே உரிய சிறப்பு வாய்ந்த பொருளதி காரத்தில் மக்களுடைய ஒழுகலாறெல்லாம் தொகுத்துணர்த்தி யிருக்கும் மாட்சி அளவிடற் பாலதன்று. இவ்வாறாக இந்நூலின் கண்அமைந்து கிடக்கும் எழுத்துச் சொற் பொருட்டிறங்களையும், அவற்றை ஆசிரியர் கூறிச் செல்லும் நெறிமுறைகளையும் நூற்பாக் களின் திட்ப நுட்ப அழகுகளையும், இன்னோரன்ன பிற சிறப்புக் களையும் ஒரு கட்டுரையில் எழுதிக்காட்டுவதென்பது இயலாத தொன்றாம். இனி, இத்தகைய சீருஞ்சிறப்பும் வாய்ந்த இவ்வியல் நூலை யருளிய ஆசிரியராகும் ஒல்காப்பெருமைத் தொல்காப்பியனாரது வரலாறு ஏனைப்பல ஆசிரியர்களின் வரலாறு போன்றே நாம் செவ்விதின் அறிய வொண்ணாததாயிற்று. இவ்வாசிரியரின் வரலாற்றுக் குறிப்புக்களாக நமக்குக் கிடைத்திருப்பன மிகச் சிலவே. இவை கொண்டு சிற்சிலர் தாம் தாம் கருதியவாறு இவ்வாசிரியரைப் பற்றி எழுதியிருக்கின்றனர். யாமும் தொல் காப்பியர் வரலாறாக அறிவனவற்றைத் தொல்காப்பிய ஆராய்ச்சி முடிவிற் கூறுவேம். இனித்தொல்காப்பிய ஆராய்ச்சியைப் பல பகுதிகளாகப் பகுத்துக் கொண்டு, அவற்றை முறையே ஒரோ வொன்றாக எழுதிவரக்கருதியுள்ளேம். இயல்பிலே சுருங்கிய அறிவினேமாகிய யாம் பலவினை நலிவுகட்கு இடையே இப்பேராராய்ச்சியை எடுத்துக் கொண்டது தமிழன்னையின் சிறுமகார் ஆற்றும் இச்சிறு திருத்தொண்டுக்கு அன்பர்களின் அன்பு முன்னின்று ஊக்கமளிப்பது போன்று இறைவன்றிருவருள் உண்ணின்று ஊக்கமளிக்கும் என்னும் துணிபு கொண்டேயாம். வாழி கரந்தை வளருந் தமிழ்ச்சங்கம் வாழி தமிழ்ப்பொழில் மாண்புடனே- வாழியரோ மன்னுமதன் காவலராம் வண்மைபுரி வோரெவரும் உன்னுபுக ழின்பநலம் உற்று.1  8. பெரியபுராணமும் பொருளிலக்கணமும் திருத்தொண்டர்களின் வரலாறு தெரித்துரைக்கும் பெரிய புராணத் திருமுறை யின்கண்ணே காணப்படும் பொருளிலக்கணக் குறிப்புக்களுள் அகப்பொருட் பகுதியவாய சிலவற்றையெடுத்துக் காட்டுதல் இச்சிறு கட்டுரையின் கருத்தாம். சேக்கிழார் பெருமான் பண்டைத்தண்டமிழ் இலக்கிய இலக்கணத் துறைகளெல்லாஞ் சென்று தெளிபொருள் கண்ட செந்தமிழ்ப் பேராசிரியர்களுள் ஒருவராவரென்பதனைப் பெரியபுராணச் செய்யுட்கள் பொதுவாக வன்றிச் சிறப்புவகையானும் உணர்த்தி நிற்கின்றன. பாண்டிநாட்டு மதுரையிலே தமிழ்ச்சங்கம் இருந்ததும், சிவபெருமான் சங்கத்து வீற்றிருந்ததும், பொருணூல் அருளியதும், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளாகிய அப்பொருமான் தலைச்சங்கப் புலவராதலும் ஆகிய தமிழ் வரலாற்றுக் குறிப்புக்கள் பின்னுள்ள செய்யுட்களில் அமைந்திருத்தல் காணலாகும். ' சால்பாய மும்மைத் தமிழ்தங்கிய வங்கண் மூதூர் நூல்பா யிடத்தும் முளநோன்றலை மேதி பாயப் பால்பாய் முலைதோய் மதுப்பங்கயம் பாய வெங்குஞ் சேல்பாய் தடத்தும் முளசெய்யுண்மிக் கேறு சங்கம்'1 ' மும்மைப் புவனங்களின் மிக்கதன் றேயம் மூதூர் மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருளுந் தருவார்திரு வால வாயில் எம்மைப் பவந்தீர்ப் பவர்சங்க மிருந்த தென்றால்'.2 ' நீல மாமிடற் றாலவா யானென நிலவு மூல மாகிய திருவிருக் குக்குறண் மொழிந்து சீல மாதவத் திருத்தொண்டர் தம்மொடுந் திளைத்தார் சாலு மேன்மையிற் றலைச்சங்கப் புலவனார் தம்முன்'3 மற்றும் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்தில் " அங்கண் முல்லையின் றெய்வமென் றருந்தமிழுரைக்கும் செங்கண் மாறொழுஞ் சிவன்மகிழ் திருமுல்லை வாயில்"1 என்றுரைத்திருப்பது தொல்காப்பியம்போலும் தமிழிலக்கண முன்னூல்களின் ஆணைவரம்பு கடைப்பிடித்துய்க்கும் ஆசிரியர் இயல்பினைப் புலப்படுத்துகின்றது. தொண்டை நாட்டின் முல்லையை அணிந்துரைக்குமிடத்தே அத்திணைக்குரிய தெய்வத்தின் இருப்பையுடன்பட்டுச் சைவத்தின் மேன்மை தெரிக்கும் சமற்காரம் பெரிதும் போற்றற்பால தொன்றாகும். இதனால் சிவபெருமான் எந்நிலத்துக்கும் இறையென்பது குறிப்பித்தவாறுமாகும். திருநாட்டுச் சிறப்பிலே 'மொய்வரையுலகம் போலும் முளரிநீர் மருதவைப்பு' என்பதிலுள்ள 'மொய்வரையுலகம்' என்னும் சொற்றொடர் தொல்காப்பியத்திலுள்ள 'சேயோன் மேய மைவரை யுலகமும்' என்பதனை நினைந்து எழுந்ததாதல் வேண்டும். புராணத்தில் 'மைவரையுலகம்' என்றே பாடங்கொள்ளுதலும் சிறப்புடைத்தாதல் கருதற்பாலது. 'திருநாட்டுச் சிறப்பில்' - (பா.12) 'இந்திரதெய்வதந் தொழுது நாறு நடுவர்' என்றது இலக்கணங்கூறும் 'வேந்தன்மேய தீம்புனலுலகத்திற்கு ஏற்புடைத்தாமாறு காண்க. பெரியபுராணத்திற் கண்ணப்பநாயனார் புராணம் முதலிய பல புராணங்களில் திணைகளின் பெற்றி விரிவாகவும் சுருக்கமாகவும் கூறப்பட்டிருப்பினும், திருக்குறிப்புத் தொண்டநாயனார் புராணத் திற்றான் ஆசிரியர் ஐந்திணைகளையும் ஒருங்கே ஆராய்ந்து அழகு பெறக் கூறிவைத்திருக்கின்றனர். சிவஞானமுனிவர் தமது காஞ்சிப் புராணத்தில் 'திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்தைந் திணை வளமுந் தெரித்துக் காட்ட மருத்தொண்டைவாய்ச்சியர் வாழ்குன்றை நகர்க்குலக் கவியே வல்லான்' என்று பாராட்டியது இப்பகுதியை நோக்கியேயாகு பொருளிலக்கணங் கற்பாரெ வரும் இதன் சுவையை நுகர்ந்தின்புறல்வேண்டும். இதிலுள்ள திணைப்பகுதியெல்லாம் எடுத்தெழுதின் மிகவிரியுமாகலின் ஒன்றிரண்டு செய்திகளே இங்கே காட்டப்படுகின்றன. " குறவர் பன்மணி யரித்திதை விதைப்பன குறிஞ்சி கறவை யானிரை மானுடன் பயில்வன கானம் பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனம் சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்."2 ' தேனி றைந்தசெந் தினையிடி தருமலைச் சீறூர் பானி றைந்தபுற் பதத்தன முல்லைநீள் பாடி தூநெ லன்னநெய் கன்னலின் கனியதண் டுறையூர் மீனி றைந்தபே ருணவின வேலைவைப் பிடங்கள்.'1 இவ்விரு பாட்டிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு நிலங்களின் பெற்றி நன்கு கூறப்பட்டிருத்தல் காண்க. முற்பாட்டில் நெய்தலுக்குக் கூறிய 'சுறவமுண்மருப் பணங்கயர்வன' என்னுஞ் செய்தி 'சினைச்சுறவின் கோடு நட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினால்'2 என்று பட்டினப்பாலையிற் கூறப்பெற்றுள்ளது. 'நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளந்தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கோடு நாட்டிப் பரவுக்கடன் கொடுத் தலின் ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார்' என நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையிற் கூறுதலும் இங்கே கருதற்பாலது. இனி, திணை ஐந்தாயினும் ஆசிரியர் தொல்காப்பியனார் பாலைத்திணைக்கு நிலம் வேண்டிற்றில ரென்பது, " நடுவ ணைந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே"3 என்னும் அகத்திணையியற் சூத்திரத்தான் அறியலாகும், பாலைத் திணைக்கு இயற்கையில் நில மின்றாயினும் வேனிற்காலத்து நண்பகற் பொழுதில் முல்லையும் குறிஞ்சியும் சார்ந்த இடங்கள் வெம்மை மிக்குப் பாலையெனப்படும் என்பது தொல்லாசிரியர் கொள்கை. இதனை, " வேனிற் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தான லந்தி ருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்"4 என்னும் சிலப்பதிகாரத்துக் காடுகாண்காதையான் அறிக. இது, " கோல முல்லையுங் குறிஞ்சியு மடுத்த சில்லிடங்கள் நீல வாட்படை நீலிகோட் டங்களு நிரந்து கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப் பாலை யுஞ்சொல லாவன வுளபரன் முரம்பு"5 என்னும் பாட்டில் சேக்கிழார் பெருமானால் எவ்வளவு அழகு பெறக் கூறப்பெற்றுளது. சில்லிடங்கள், பொழுதினைப் பற்றி, பாலையுஞ் சொலலாவன என்னுந் தொடர்களெல்லாம் ஆழ்ந்த கருத்தினைக் கொண்டிருக்கின்றன. மற்று இப்பாட்டில் பாலைக்குத் தெய்வங் கூறியிருப்பது ஆசிரியரது தெளிவினைக் காட்டுகின்றது. 'மாயோன் மேய' என்னும் தொல்காப்பியச் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர், 'பாலைக்கு ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற்றோன்றிய மழையினையும் காற்றினையும் அத்தெய்வப் பகுதியாக்கிக் கூறுபவாலெனின், எல்லாத் தெய்வத்திற்கும் அந்தணர் அவிகொடுக்குங்கால் அங்கி ஆதித்தன்கட்கொடுக்கும் என்பது வேதமுடிபாகலின் ஆதித்தன் எல்லா நிலத்திற்கும் பொதுவெனமறுக்க' என்றும், 'அவ்வந்நிலத்திற்றெய்வங்களே பாலைக்குந் தெய்வமாயிற்று' என்றும், 'தெய்வமுணாவே' என்னும் சூத்திரவுரையில் 'இதனானே பாலைக்குத் தெய்வமும் இன்றாயிற்று' என்றும் தம் துணிபுரைத்துப் போந்தனர். உரையாசிரியராகிய இளம்பூரணவடிகளோ 'தெய்வம் கொற்றவை' என்று கூறினர். இக்கொள்கைக்கே இலக்கிய மேற்கோள்கள் மிகுதியாகக் காணப்படும். சேக்கிழார் பெருமானும் 'நீல வாட்படைநீலி' எனக் கொற்றவையைக் கூறிவைத்திருப்பது நாம் போற்றற் பாலதொன்றாகும்.  9. தமிழ் எழுத்துக்கள் " எழுத்தெனப் படுப, அகரமுதல் னகர விறுவாய் முப்ப ஃதென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே."1 " அவைதாம், குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன,"2 என்னும் தொல்காப்பிய நூன்மரபுச் சூத்திரங்கள் தமிழெழுத்துக்கள் இவை யெனவும், இத்துணைய வெனவும் உணர்த்துகின்றன. 'எழுத்தெனப்படுப' என்னும் இத்தலைச் சூத்திரத்தானும், இவ்வியலிற் பின்வரும் பல சூத்திரங்களானும் தமிழெழுத்துக்களின் முறை நெடுங்கணக்கில் வழங்கிவரும் முறையே யாமென்பது அறியப் படும். அது விரிவஞ்சி விளக்காது விடப்படுகின்றது. அகரம் முதல் ஒளகாரம் இறுதியாகவுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துக்களும், ககரம் முதல் னகரம் இறுதியாகவுள்ள பதினெட்டு மெய்யெழுத்துக் களும், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று சார்பெழுத்துக்களும் தமிழெழுத்துக்களாமென்க. எழுத்துக் களை உருவெழுத்து, உணர்வெழுத்து, ஒலியெழுத்து, தன்மை யெழுத்து என்றும், பிறவாறும் பகுத்துக்கொண்டு இலக்கணங் கூறுவாருமுளர். இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும், 'தன்மையும் வடிவும் நமக்குணர்த்தலருமையின் ஆசிரியர் கூறிற்றிலர்' என இங்ஙன முரைப்பது தன்மையெழுத்தென ஓர்பிரிவு கொள்ளுதலும் உண்டென் பதற்குப் பழஞ்சான்றாகும். வெளிப்படையாகவுள்ள ஒலியெழுத்து, வடிவெழுத்து என்பனவே இங்கு ஆராய்ச்சிக்குரியன. எழுத்து என்னும் பெயரின் காரணம் சுவாமிநாத தேசிகர் தமது இலக்கணக் கொத்துரையில் எழுத்தென்னும் பெயர் பற்றி யெழுதுவது பின்வருமாறு:- "எழுத்தென்னுந் தொழிற் பெயர் அப்பொருளை விட்டுப் பால்பகாவஃறிணைப் பொருட்பொதுப் பெயராய், அப்பொருளை விட்டு ஓவிய முதலியன போலன்றி அகரம் னகரம் முதலியன வடிவை யுணர்த்துஞ் சிறப்புப் பெயராய், அப்பொருளை விட்டு ஒலியை யுணர்த்தும் ஆகுபெயராய், அப்பொருளைவிட்டு அவ்வொலியின திலக்கணத்தை யுணர்த்தும் இருமடியாகு பெயராய், அப்பொருளைவிட்டு அவ்விலக்கணத்தை யுணர்த்தும் நூலினையுணர்த்தும் மும்மடியாகு பெயராய், அப்பொருளை விட்டு இங்ஙனங் கூறிற்றெழுத்து இங்ஙன மறிவித்த தெழுத்து எனக் கருமகருத்தாவையும் கருவிக் கருத்தாவையும் உணர்த்தும் நான்மடி யாகுபெயராய் நின்று பலபொருள் பட்டது காண்க". இதனானே, எழுத்தென்னுஞ் சொல் தொழிற் பெயரென்பதும், அது முதற்கண் எழுதலுறும் வடிவையுணர்த்திப் பின்பு ஒலியை யுணர்த்தலுற்ற தென்பதும் அவர் கருத்தாதல் பெறப்படும். யாப்பருங்கல விருத்தி மேற்கோட் சூத்திரமொன்று 'எழுதப்படு தலினெழுத்தே' என்று கூறுவதும், நன்னூல் உரைக்கண் 'எழுதப் படுதலின் எழுத்தெனக் கொள்க' என்று மயிலை நாதர் கூறுவதும் எழுத்தென்பது எழுது என்னும் பகுதியடியாகப் பிறந்த செயப்படு பொருட்பெயர் என்னும் கருத்துடையனவாம். சிவஞான முனிவர் தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் எழுதப்படுவதென்னும் பொருட்கண் எழுதென்னு முதனிலையுரிச்சொல்லின் முன்னர்ச் செயப்படு பொருண்மை யுணர்த்தும் ஐகாரவிகுதி புணர்ந்து..... அவ்வைகாரங் கெட்டுக் கெட்ட வழித் தகரமிரட்டித்து எழுத்தென முடிந்தது' என்று கூறுவது அதனைத் தெளிவாக்குகிறது. மற்றும் அவர், 'இவ்வாறன்றி எழுதென்னு முதனிலை எழுத்தெனத்தானே திரிந்து நின்ற தென்றும், அஃதாகு பெயராற் செயப்படு பொருளை யுணர்த்திற் றென்றுங் கூறுவாருமுளர்; அது பொருந்தாது, என்றுரைப்பது சுவாமிநாத தேசிகர் கூற்றை மறுப்பது போன்றுளது. எனினும், இவரனைவரும் எழுத்தென்பதற்கு எழுது என்பதே முதனிலையெனக் கொண்டனர். இன்னோர் கருத்தின்படி எழுத்தென்பது எழுதப்படும் வடிவையே முதற்கட் குறித்ததாகும். அங்ஙனமாயின், ஒலியையுணர்ந்து கோடற்குக் கருவியாகவே வடிவு வேண்டப்பட்டதென்பது எல்லார்க்கும் உடம்பாடாகலின் வடிவாகிய எழுத்துண்டாதற்கு முன்பு ஒலியைக் குறிப்பதொரு பெயர் இருந்திருத்தல் வேண்டும். தொல்காப்பியத்துயாண்டும் எழுத்தென்னும் பெயரே பயின்று வந்துளது. 'ஓரள பிசைக்குங் குற்றெழுத்து' 'ஈரள பிசைக்கு நெட்டெழுத்து' என்றாற்போல் வருவன பலவும் ஒலியையே சிறப்பாகக் குறித்தவும், வடிவினைச் சிறப்பாகக் குறிக்கலுறும் 'உட்பெறு புள்ளி யுருவா கும்மே' 'மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்' என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களில் எழுத்தென்னும் பெயர் காணப்படாமையும் சிந்திக்கற்பாலன. இவ்வற்றால் எழுத்தென்னும் பெயர் மொழிக் கருவியாம் ஒலியைக் குறிப்ப தொன்றாகவே தொல்காப்பியனார் கொண்டுளா ரெனக் கருதுதல் பொருத்த முடைத்தெனத் தோன்றுகிறது. தொல்காப்பிய உரைகாரர் யாரும் இப்பெயர்ப் பொருளை விளக்கிற்றிலராயினும் 'இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பார் அறியாதார்; அதனை உருவென்றேகோடும்' என நச்சினார்க்கினியர் கூறுவது ஒருவாறு இக்கருத்திற்குச் சார்பாகவுளது. இனி, ஆசிரியர் 'எல்லா வெழுத்தும்' என்னும் பிறப்பியற் சூத்திரத்து எழுத்தொலிகளின் நிலைவேறுபாடுகளை யுணர்த்துங்கால் 'எழுதரு வளி'யில் எனவும், 'அகத்தெழு வளியிசை' எனவும், 'எழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரிவளியிசை' எனவும், வளியிசையின் எழுச்சியை அவற்றுக்குக் காரணமாகக் கோடலின் எழு என்னும் பகுதியினின்று எழுத்தென்னும் பெயர் தோன்றிற்றாகக் கொள்வது பொருத்த முடைத்தெனத் தோன்று கிறது. அது பின்பு அவ்வெழுத் தினையுணர்தற்குக் கருவியாக வேண்டப்பட்ட வடிவினையும் குறித்ததாகல் வேண்டும். உயிர் முதலிய பெயர்களின் காரணம் இனி, அகரமுதலிய பன்னிரண்டுக்கும் உயிர் என்றும், ககர முதலிய பதினெட்டுக்கும் மெய் என்றும் குறியிட்டிருப்பது பண்டைத்தமிழரின் உண்மை நூலுணர்வுக்குத்தக்க சான்றாகும். நன்னூல் உரையில், மயிலைநாதர் 'ஆவி, உயிர், மெய், உடம்பு என்பன இடுகுறிப் பொதுப்பெயர்' என்று கூறியது பொருத்தமில் கூற்றாம். 'அம் முதலீரா றாவி' என்னும் நன்னூற் சூத்திரவுரைக் கண் 'ஆவியும் மெய்யும் போறலின் இவ்விருவகையெழுத்திற்கும் ஆவி மெய்யென்பன உவமவாகு பெயராய்க் காரணப் பொதுப் பெயராயின' என்று சங்கர நமச்சிவாயப்புலவர் கூறுவதும், 'ஒளகார விறுவாய்ப், பன்னீரெழுத்து முயிரென மொழிப' என்னுந் தொல்காப்பியர் சூத்திர வுரைக்கண் 'இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதோர் குறி; மெய்பதினெட்டினையும் இயக்கித்தான் அருவாய் வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று' என்றும், 'னகார விறுவாய்ப், பதினெண்ணெழுத்து மெய்யென மொழிப' என்னுஞ் சூத்திரவுரைக்கண் 'இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி, என்னை, பன்னீருயிர்க்குந்தான் இடங்கொடுத்து அவற்றான் இயங்குந்தன்மை பெற்ற உடம்பாய் நிற்றலின்' என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பனவும் உயிர் மெய்யென்பவற்றின் பொருளை விளக்குவனவாம். குற்றிய லிகரம், குற்றியலுகரம் என்பன இகர உகரங்களின் குறுக்கமாயினும் அவை முன் ஒரு மாத்திரையாய் நின்று பின் அரை மாத்திரையாய்க் குறுகின எனற்கிடனின்றி, இடமும் பற்றுக்கோடுஞ் சார்ந்து இயற்கையாய் அரைமாத்திரை பெற்று நிற்றலானும் அப்பெயர்க் குரியவாயின. ஆய்தம் என்பதன் பெயர்க் காரணத்தைப் பழைய உரையாளர் யாரும் உள்ளவாறு புலப்படுத்தினாரல்லர். 'ஆய்த மென்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப்போல் மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியு மென்றார்' எனத் தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர் கூறியிருக்கின்றனர். ஈண்டு முப்புள்ளி யெனக் கூறின் அவ்வடிவு ......இங்ஙனமோ, அன்றி உங்ஙனமோ, வேறெங்ஙனமோ எழுதப் படும் என ஐயம் நிகழுமாகலின், அது நிகழாமைப் பொருட்டு 'முப்பாற்புள்ளி' என ஆசிரியர் கூறி வைத்தனர். நச்சினார்க்கினியர் 'அடுப்புக் கூட்டுப் போல' என உவமங்காட்டி அதனை விளக்கினர். ஆய்தமென்னும் பெயர்க்கு அவர் காரணங் கூறிற்றிலர். பிற்காலத்தே நன்னூற்கு உரையெழுதப் புகுந்தார் சிலர் நச்சினார்க்கினியரின் கருத்தினையறிய மாட்டாராய் அதனைத் திரியக்கொண்டு, 'அடுப்புக் கூட்டுப் போல ஒருவகை ஆயுத வடிவாக மூன்று புள்ளி வைத்து எழுதப்படுதலால் ஆய்தமென்று பெயர். ஆய்தம் - ஆயுதம்; இங்கே போர்க் கருவியாகிய கேடகமென்னும் படையும், சமைத்தற் கருவியாகிய அடுப்பும்.' என்று தம்மனம் போனவாறு கூறுவாராயினர். இங்ஙனம் ஒரு நெறிப்பாடுமின்றித் தனித்தமிழ்ச் சொல்லாகிய ஆய்தம் என்பதனைப் படைக்கலப் பொதுமை யுணர்த்தும் ஆயுதம் என்னும் வடசொல்லெனக் கொண்டு நலிந்து பொருள் கூறுவது ஆராய்ச்சிக்கும் அறிவுக்கும் சிறிதும் ஒத்ததன்று. ஆயின், ஆய்தமென்பதன் பொருள்தான் யாதோ எனின், ஆய்தல் என்பது நுணுகுதல் என்னும் பொருட்டாகலின் நுணுகிய ஓசையுடையது என்பது பொருளாதல் வேண்டும். ஆய்தல் அப்பொருட்டாதலை " ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்"1 என்னும் உரியியல் சூத்திரத்தானறிக. முதல் சார்பு இனி, உயிர், மெய் என்பவற்றை முதலெழுத்தென்றும், குற்றியலிகரம் முதலியவற்றைச் சார்பெழுத்தென்றும் பின்னுளோர் கூறிவருகின்றனர். தொல்காப்பியனார் அகரமுதல் னகரவிறுவாய் முப்பதனையும் எழுத்தென்றதன்றி, முதலெழுத்தென்று கூறிற்றிலர். குற்றியலிகரம் முதலிய மூன்றனையும் சார்ந்து வருவன எனக்கூறி, அவையும் எழுத்துக்களோடு ஒரு நிகரன என்றார். எனினும் 'மூன்றுதலை யிட்டமுப்பதிற் றெழுத்தின்' எனச் சார்பிற்றோற்றமும் எழுத்தென்னும் பெயரால் ஆளப்பட்டது. ஆயின், எழுத்தெனப்படுப முப்பத்துமூன்று எனக் கூறாது 'முப்பஃதென்ப......மூன்றலங்கடையே' எனக் கூறியது என்னையெனின், அம்மூன்றும் தனித்தேனும், சாரியையொடு பொருந்தியேனும் வருதலின்றி, மொழியைச் சார்ந்தே வருதலாகிய சிறப்பின்மையைப் பற்றி என்க. இங்ஙனம் சிறப்பும் சிறப்பின்மையும் பற்றி வேறு பிரித்துக்கூறுவது ஆசிரியர்க்கியற்கை யென்பதனை, 'சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப வறிந்திசினோரே' எனவும், 'இடைச்சொற் கிளவியும் உரிச்சொற்கிளவியும் அவற்று வழிமருங்கிற் றோன்று மென்ப', எனவும் சொற்களைப் பிரித்தோதுதன் முதலியவற்றான் அறியலாகும். குற்றியலிகரம் முதலிய மூன்றும் உயிரும் மெய்யும்போல அத்துணைச் சிறப்புடையன வல்ல வென்பதே ஆசிரியர் கருத்தாதல் 'சார்ந்துவரன் மரபின் மூன்று' என முதலிற் கூறியதனையே 'சார்ந்துவரினல்லது தமக்கியல் பிலவெனத்', தேர்ந்துவெளிப்படுத்த ஏனை மூன்றும், எனப் பிறப்பியலுள் வலியுறுத்திக் கூறலானும் நன்கு துணியப்படும். அவ்வாறு கூறினா ராயினும், முதற் சூத்திரத்து 'எழுத்தெனப்படுப ...... முப்பஃதென்ப... ...மூன்றலங்கடையே' என, மூன்று மல்லாவிடத்து முப்பதுஞ் சிறந்தன என்பதனால், மூன்றுமே முப்பதினுஞ் சிறந்தன எனப்பொருள் கோடலும் அமையுமாலோ எனின், அங்ஙனம் பொருள் கொள்ளாமைக்கன்றே அடுத்த சூத்திரத்து அவற்றை 'எழுத்தோரன்ன என ஓதினாராயிற்றென்பது. இன்றேல் 'எழுத்தோரன்ன' என்பது பொருளில் கூற்றாமாறு காண்க. இவ்வுண்மை 'எழுத்தோரன்ன' வென வேண்டா கூறியவதனான், முன் 'எனப்படுப' என்ற சிறப்பு அம்மூன்றற்குங் கொள்ளக் கிடந்தமையின், அது விலக்குதல் பெறுது மென்பது என இளம்பூரணராலும், இங்ஙனமே நச்சினார்க்கினியராலும் விளக்கப்பெற்றிருத்தலுங் காண்க. அற்றாயினும், சார்பிற்றோற்ற மென்பன மூன்றுமே எவற்றினுஞ் சிறப்புடையன வென்று காண்கின்றாமெனின், அங்ஙனமாயின் அது புதியதோராராய்ச்சியின் பயனென்றே கொள்ளப்படும். யாமும் அவ்வாராய்ச்சியின் பயனை இழத்தற்கு ஒருப்படுவேமல்லேம். தமிழ்ப் பற்றுடையார் பலரும் அன்னர் எனினும், அதனைத் தொல்காப்பியனார் கருத்தாக வைத்து நலிந்து பொருள் கோடற்கும், புதிய ஆராய்ச்சியின் பயனால் உளதாம் பெருமையை ஆராய்ச்சியாளர்க்கன்றித் தொல்காப்பியனார்க் களித்தற்கும் கருதுதல் பெரியதோரிழுக்காமென்க. இனி, தொல்காப்பியனார் சார்பிற்றோற்றம் மூன்றெனக் கூறியிருப்பவும், நன்னூலார் சார்பெழுத்துப் பத்தென்பாராயினர். ' உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு- அஃகிய இ உ ஐ ஒள மஃகான் - தனிநிலை பத்துஞ் சார்பெழுத்தாகும்'1 என்பது நன்னூல். யாப்பருங்கலமுடையார் உயிர்மெய், அளபெடை, ஐ ஒள மகாரங்களின் குறுக்கம் இவற்றைத் தனித்தனி எழுத்தென வேண்டினராயினும் ஆய்தக்குறுக்கமென ஒன்று கொண்டிலர். எனினும், யாப்பருங்கலவிருத்தி மேற்கோட் சூத்திரங்கள் சிலவற்றில் ஆய்தக் குறுக்கமும் கூறப்பட்டுள்ளது. இலக்கண விளக்கமுடையார் சார்பெழுத்து ஓன்பதெனக் கொண்டனர். ஆய்தக் குறுக்கங் கொண்டிலர். அதன் உரைகாரர், தொல்காப்பியனார் கூறிற்றில ராகலின் ஆய்தக் குறுக்கமென ஒன்று இன்றென்றியம்பினர். இங்ஙனம் சார்பெழுத்துக்கள் பற்றிக் கருத்து வேறுபடு வாரெல்லாம் தொல்காப்பியனாரது ஆணை கடைப்பிடித் தலைப் பெருமையாகக் கொள்ளும் ஒரு பெற்றியராகலின், யாமும் தொல்காப்பியரது கருத்தினை ஆராய்ந்து காணற்பாலம். தொல்காப்பியனார் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், உயிரளபெடை, மகரக்குறுக்கம், உயிர்மெய் என்பவற்றை நூன் மரபிற் பொதுவகையாலும், மொழிமரபிற் சிறப்பு வகையாலும் கூறியுள்ளார். இவற்றுட் குற்றியலுகரம் குற்றியலுகரப்புணரியலுள் மேலும் சிறப்பாகக் கூறப்பெற்றுள்ளது. ஐகார ஒளகாரங்கள் குறுகுமென்பதனை மொழி மரபிலும், ஒற்றளபெடையைச் செய்யுளியலிலும் கூறியுள்ளார். ஆய்தங் குறுகுமென யாண்டுங் கூறிற்றிலர். இங்ஙனம் பிறர் சார்பெழுத்தெனக் கொண்ட ஒன்பது தொல்காப்பியராற் கூறப்பட்டிருப்பினும், அவர் சார்பெழுத்து மூன்றேயென்றும், அவற்றுடனாக எழுத்துக்கள் முப்பத்துமூன்றே யென்றும் வரையறை செய்து கொண்டார். அதன் காரணம் என்னை யென்பதே இங்கு ஆராய்தற்குரியது. உயிர்மெய்யை ஓரெழுத்தாகக் கொள்ளுதல் பொருந்தாதெனச் சிவஞான முனிவர் தமது தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் நன்கு விளக்கியுள்ளார். அது, "இனி இம் மூன்றுமேயன்றி உயிர்மெய் முதலியவற்றையும் சார்பெழுத்தென்பாரு முளராலோவெனின், ஆல் என்புழி உயிர் முன்னும் மெய் பின்னும் நின்று மயங்கினாற்போல, லா என்புழியும் மெய்முன்னும் உயிர் பின்னும் நின்றுமயங்கினவேயல்லது, உயிரு மெய்யுமாகிய தந்தன்மை திரிந்து வேறாகாமைக்கு 'மெய்யோடியையினு முயிரிய றிரியா' என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களே சான்றாகலான், உயிர்மெய்யாகிய காலத்தும் குறின்மை நெடின்மை யென்னும் உயிர்த்தன்மையும், வன்மை மென்மை இடைமை யென்னும் மெய்த்தன்மையும் தம்மியல்பிற் றிரிவு படாமையானும், உடன் மேலுயிர் வந்தொன்றுதல் பொன்மணி போல இயல்பு புணர்ச்சியா மென்பவாகலானும், ஒற்றுமை நயத்தான் உயிர்மெய் யென்பதனைத் தகர ஞாழல் போல உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை யென்பார்க்குத் தகரமும் ஞாழலுங் கூடிய சாந்து பின்னர்த் தகரமு ஞாழலு மாகாதவாறு போல மெய்யுயிர் நீங்கிற்றன்னுருவாதல் பொருந்தாமையானும், துணங்கை யென்பது மெய்ம்முதல் உயிரீறு மெய்ம்மயக்கமெனவும் வரகு என்பது உயிர்த்தொடர் மொழிக் குற்றியலுகர மெனவும் கொள்வதன்றி, உயிர்மெய் முதல் உயிர்மெய்யீறு, உயிர்மெய்மயக்கம், உயிர்மெய்த் தொடர் மொழிக் குற்றியலுகரம். எனக் கொள்ளாமையின் ஒற்றுமை நயம்பற்றி யொன்றென்பதனாலொரு பயனின்மை யானும், மெய்களெல்லாம் உயிர்வந்தொன்றாது தனித்து நின்ற வழியே மாத்திரை கொள்ளவும் எழுத்தென்னவும் படுமென்பது அவற்றியல் பாகலின் அதுபற்றியொன்றெனல் வேண்டாமை யானும், அவ்வியல் பறிந்து கோடற்குத் தனித்து நின்றமெய்யை யொற்றெனவும் புள்ளியெனவும் உயிரோடு கூடிய மெய்யை உயிர்மெய்யெனவும் சிறப்புப் பெயரிட்டாளுதல் ஆசிரியர் கருத்தாகலானும், உயிரோடு கூடியவிடத்து வரி வடிவுவேறு படுதலின் அதுபற்றிப் 'புள்ளியில்லாவெல்லா மெய்யும்' என மெய்மேல் வைத்துச் சூத்திரஞ் செய்து வடிவெழுத்திலக்கணங் கூறினாரன்றி ஒலியெழுத்திலக்கணம் வேறுபடக் கூறாமை யானும் - அது பொருந்தாதென மறுக்க" என்பது. இங்ஙனம் உயிர்மெய் ஓரெழுத்தாகாதென்பதற்குச் சிவஞான முனிவர் கூறிய காரணங்களெல்லாம் மிக்க வலியுடையன வென்பதில் ஐயமில்லை. எனினும், கா முதலியன ஓரெழுத்தொரு மொழியெனக் கொள்ளப்படுதலானும், செய்யுளியலில், அசை கொள்ளுமிடத்தும் பிறாண்டும் உயிர்மெய்யை ஓரெழுத்தெனவே கொள்ளவேண்டி இருத்தலானும் உயிர்மெய்யை ஒருவாற்றால் ஓரெழுத்தாகக் கொள்ளுதலும் ஆசிரியர் தொல்காப்பியனார்க்குடன் பாடென்பது பெற்றாம். அதனாற்றான் பின்னூலாசிரியர்கள் உயிர்மெய்யைச் சார்பெழுத்துளொன்றாகக் கொண்டனராவர். எனினும், எழுத்தின் தன்மையை நோக்குழி அதன்கண் உயிரும் மெய்யும் வேறுவேறு புலப்பட நிற்றலானும்' உயிர்மெய்யென ஒன்று கொள்ளாது கா என்பது க் ஆ என எழுதப்படினும், எழுதுதற்கும் பயிலுதற்கும் சிறிது வருத்தமாவதன்றி வேறொரிழுக்கு மின்மையானும் தொல்காப்பியனார் உயிர்மெய்யை வேறெழுத்தாக வைத்தெண்ணிற்றிலர். இங்ஙனமே வடநூலார் முதலாயினாருஞ் உயிரும் மெய்யுஞ் சேர்ந்ததனை ஓரெழுத்தாக வைத்தெண்ணாமையும் காண்க.  10. ஒரு குறட்பா " நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது"1 இது தெய்வப் புலமைத் திருவள்ளுவதேவர் அருளிய திருக்குறளிற் புகழ் என்னும் அதிகாரத்திலுள்ளது. இதற்குப் பரிமேலழகர் கூறிய பொழிப்புரை "புகழுடம்பிற்கு ஆக்கமாகும் கேடும், புகழுடம்பு உளதாகும் சாக்காடும் சதுரப்பாடுடையார்க்கல்லது இல்லை" என்பது. வறுமையால் உடம்பை மெலியச் செய்து புகழை வளர்த்தலும், உடம்பைத் துறந்து புகழை நிலைபெறச் செய்தலும் வித்தகர்க்கே கூடுமென்பது பரிமேலழகர் கருத்து; இது அவராலேயே நன்கு விளக்கப்பெற்றுள்ளது. "நந்து என்னுந் தொழிற் பெயர் விகாரத் தால் நத்து என்றாய், பின் அம் என்னும் பகுதிப் பொருள் விகுதி பெற்று நத்தம் என்றாயிற்று. போல் என்பது ஈண்டு உரையசை என நத்தம், போல் என்னும் இருசொற்களுக்கும் அவர் இலக்கணங் கூறியுள்ளார். காலத்தாற் பரிமேலழகர்க்கு முந்தியவரென்று கருதப்படுகிற மணக்குடவர், இப்பாட்டிற்கு "ஆக்கம் போலக் கேடும் உளதானாற் போலச் சாதலும் வல்லவற் கல்லது அரிது" என உரை கூறி "இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது" எனக் கருத்துரைத்துள்ளார். மணக்குடவர் தம் கருத்தை நன்கு விளக்கிற்றில ராயினும், இருவர் கருத்தும் முரண்படாமை காணற்பாலது. நத்தம் என்பதற்கு ஆக்கமென்றே இருவரும் பொருள் கூறினர். பரிமேலழகர் போல் என்பதனை உரையசையெனக் கொண்டு ஆகும் என்பதனை முன்னுங்கூட்டினமையும், மணக்குடவர் போல் என்பதனை உவமைச்சொல்லாகவே நிறுத்தி அதனைப் பின்னும் கூட்டினமையும் தம்முள் வேறுபாடாம். வித்தகன் வித்தகர் என ஒருமையும் பன்மையுமாகப் பாடங்கொண்டமையும் ஆம். இனி, பெயரறியப்படாத ஒருவரதுரையுடன் கூடிய திருக்குறட் பனையேட்டுச் சுவடியொன்று என்னிடம் உளது. அவ்வுரை பரிமேலழகர் முதலாயினாரின் உரையுடன் சேர்த்தெண்ணற் கேற்ற தகுதியுடையதாகத் தோன்றாவிடினும், சில காரணங் களால் அன்னோர் உரைக்கும் முற்பட்டதாமோ என ஐயுறத்தக்க தாகவுளது. சிற்சில பாக்கட்குப் பிண்டமாகக் கருத்து மாத்திரமே கூறப்பட்டுள்ளது. வேறுபட்ட பாடங்களும் காணப்படுகின்றன. அதன்கண் இப்பாவிற்கு எழுதப்பட்டிருக்கும் உரை:- "சங்காயிரஞ் சூழவாழும் வலம்புரிபோலே கிளையானது தன்னைச் சூழ வாழ்வது கீர்த்திமானுக்குக்கைவரும் என்றவாறு" என்றதே. இதிலிருந்து இப்பாவிலுள்ள 'கேடு உளதாகுஞ் சாக்காடும்' என்னுஞ் சொற்கட்குப் பொருளறியக் கூடவில்லை; எனினும், 'நத்தம்' என்பதற்கு 'வலம்புரி' எனப் பொருள் கொள்ளப்பட்டிருப்பது வெளியாகிறது. இனி, சீவகசிந்தாமணியில் "சங்குடைந்தனைய வெண்டாமரை மலர்த் தடங்கள் போலும்-நங்குடி" (சிவகசீந்தா - 547) என்பதற்கு "தடங்களிலே உடைந்த தன்மையவாகிய மலரும் சங்கும் போலும் நங்குடி. இது தூய்மைக்குவமை; இனிச் சங்கு கெட்டாலும் நிறங்கெடாதது போலக் கெட்டாலுந் தன்றன்மை கெடாத குடியுமாம்; 'நத்தம்போற் கோடும்' என்ப" என நச்சினார்க்கினியர் உரை கூறியுள்ளார். பிற்பொருளில் சங்கு உடைந்தனையகுடி என இயையும்; சங்கு கெட்டாலும் நிறங் கெடாதது போலக் கெட்டாலுந்தன்றன்மை கெடாதகுடி என்று கூறியவர் அதற்கு மேற்கோளாக 'நத்தம்போற் கேடும்' என்பதனைக் காட்டியிருப்பதி லிருந்து, அவர் நத்தம் என்பதற்குச் சங்கென்று பொருள் கொண்டுள்ளமை புலனாம். 'உளதாகுஞ் சாக்காடும்' என்பதற்கு நச்சினார்க்கினியர் கொண்ட பொருள் இன்னதென வெளிப்படாவிடினும், 'நத்தம் போற்கேடும்' என்பதற்கு அவர் கொண்ட பொருள்' புகழ் குன்றுதலில்லாத வறுமை என்பதாகல் வேண்டும். புகழ், குடியின்றன்மை, அன்றி வித்தகர் தன்மை ஆகும். எனவே இக்குறளுக்கு மணக்குடவரும் பரிமேலழகரும் கொண்ட கருத்துடன் நச்சினார்க்கினியர் கருத்து மாறுபட்டிலது என்பதும், எனினும் நச்சினார்க்கினியர் நத்தம் என்பதற்குச் சங்கென்று பொருள் கொண்டு அதனை உவமை யாக்கியுள்ளாரென்பதும் போதருதல் காண்க. யான் சிறியனாய்த் திண்ணைப்பள்ளியில் திருக்குறள் படித்து வந்த பொழுது என் தந்தையார் முதலாயினோர் 'நத்தம்' என்பதற்கு நத்தை யென்றும், சங்கென்றும் ஏதேதோ பொருள் கூறக் கேட்டுளேன். ஆனால் அப்பொழுது அவர்கள் பொருந்தமுறப் பொருள் சொல்லியதாக நான் நினைக்கவில்லை அஃதெவ் வாறாயினும் நத்தம் என்பதற்குச் சங்கெனும் பொருள் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியராலும் கொள்ளப்பட்டுள்ளதென இப்பொழுதறியலானேன்.  11. நந்தம்போற்கேடு என்னும் குறளுரை ஆராய்ச்சி 'ஒரு குறட்பா' எனத் தலைப்பெயரிட்டு யானெழுதிய கட்டுரை யொன்று 'தமிழ்ப் பொழில்' துணர்-1 பக்கம் 429-431இல் வெளிவந்தது. அதனை மறுத்து, "நத்தம்போற்கேடு என்னுங் குறளுரை" என்னுந் தலைப்பின்கீழ், திருவாளர் T.N. அப்பனையங்கார் அவர்கள் தமிழ்ப் பொழிலுக்கு எழுதிய கட்டுரை என்பார்வைக்கு வந்தது. சிற்றறிவும் சிறு கேள்வியுமுடைய யான் பலவினைகளுக் கிடைப்பட்ட பொழுதுகளில் எழுதிவரும் இன்னோரன்ன உரைகளில் இறப்பவும் பலவாய பிழைகளிருத்தல் இயல்பே. மூதறிவுடைய பெரியார்கள் என் உரைகளிலும் கருத்தைச் செலுத்தி ஆராய்ந்து, அவற்றிலுள்ள பிழைகளையெடுத்துக் காட்டுவார்களாயின், அது எனக்குப் பெரியதோர் ஊதியமா மென்பதிற் சிறிதும் ஐயமில்லை. ஐயங்காரவர்கள் எழுதியது அத்தன்மையதாயின் அவர்கட்கு என் மகிழ்ச்சியையும் நன்றியறிவையும் தெரிவித்து அமையும் அத்துணையன்றியான் செய்யற்பாலது பிறிதில்லை; என் பொழுதும் வறிதாகாது. ஆனால், அவர்கள் என் கருத்தினைத் தெளிய அறியாமலும், மணக்குடவர், நச்சினார்க்கினியர் முதலாயினாரின் உரைப் பொருள்களைக் காணாமலும், முன்னொடுபின் முரணுமாறும், தமிழ் வளர்ச்சிக்குத் தடைபயக்கு முறையிலும் எழுதியிருத்தலின், கற்பார் மலைவுறாவண்ணம் அவற்றை விளக்குதல் என் கடனாயிற்று. " நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது"1 என்னுங் குறளுக்கு மணக்குடவரும், பரிமேலழகரும் எழுதிய உரையின் ஒற்றுமை வேற்றுமைகளை நான் நன்கு எடுத்துக் காட்டியிருக்கிறேன். மணக்குடவர் தம் கருத்தை நன்கு விளக்கிற்றில ராயினும், இருவர் கருத்தும் முரண்படாமை காணற்பாலது' என நான் எழுதியிருப்பது ஐயங்காரவர்களுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. அவர்கள் ‘இவ்விருவருரையும் ஒரே கருத்துடையன என்றல் எவ்வாறு பொருந்து மென்பது விளங்கவில்லை' என்றும், ‘ஆக்கம் போலக்கேடு' உளதானாற்போலச் சாதல் என்பன தெளிவாய்ப் பொருளுணரக் கிடப்பனவாமோ' என்றும் கூறிப் போந்து, பின், ஆக்கம்போலக்கேடு' என்றதனை ‘ஆக்கம் போலத் தோன்றுங்கேடு' என விரித்துப் பொருள் செய்து பார்த்தும், அத்தொடரை முன்பின்னாக மாறிக் ‘கேடு போற் றோன்றும் ஆக்கம்' என வைத்துப் பொருள் செய்து பார்த்தும், முடிவில் அவ்விரு பொருளும் பொருந்தாவெனக் கழித்து, அவ்வளவினமையாது, ‘ஆதலால் அதனை உவமச் சொல்லாகவே நிறுத்தி உண்மைப் பொருள் காணுதல் எளிதினியலாத தென்பது தெளிவாயிற்றென்க' என்றுரைத்தனர். இதிலிருந்து, மணக்குடவருரையின் கருத்தை அவர் அறிந்து கொள்ளவில்லை யென்பதும், அதனைத் தம்மால் அறிய முடியவில்லையென அவர் ஒத்துக் கொண்டிருப்பதும் வெளியாகின்றன. எனவே, ‘எளிதினியலாத தென்பது தெளிவாயிற் றென்க' என்று கூறியது அவரளவில் உண்மையே. பிறருக்கும் இயலாததெனக் கூறுதல் முறையன்றாகலின், அக்கருத்துடன் கூறியதாகக் கொள்ளுதல் வேண்டா. மணக்குடவர் கூறிய ‘ஆக்கம்போலக்கேடும்' என்னுந் தொடருக்கு, ஆக்கம்போலுமாறு கெடுவதும் என்பதே பொருள். அது ஒருவாற்றாற்கேடாயினும், ஆக்கம் பயப்பதாகலின் ஆக்கம்போலக் கருதப்படுவதாயிற்று. இன்னும் விளக்கமாகக் கூறின், ஆக்கத்துள் வைத்தெண்ணத்தகும் கேடும், நிலைபேற்றில் வைத்தெண்ணத்தகும் சாவும் வல்லவற் கல்லது அரிதென்பது மணக்குடவர் உரைப் பொருளாகும். " ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன் விற்றுக்கோட் டக்க துடைத்து"1 என்னுங் குறளும், " வீந்தவ ரென்பவர் வீந்தவ ரேனும் ஈந்தவ ரல்ல திருந்தவர் யாரே"2 என்னும் கம்பராமாயணச் செய்யுட் பகுதியும் மேல் ஆராய்ந்த உரைக் கருத்தினை விளக்கத்தகுவன. ஐயங்காரவர்களுக்கு இது புலனாகாமையால் ‘ஆக்கம்போலத் தோன்றுங்கேடு' ‘கேடுபோற் றோன்றும் ஆக்கம்' என்றிங்ஙனம் இடர்ப்பட்டுரைத்து, மணக் குடவருரை பரிமேலழகருரையுடன் முரணுவதென்றும், அவருரையின் உண்மைப்பொருள் காணவியலாதென்றும் பலவாறு கூறுவாராயினர். ‘ஆக்கம்போலக் கேடு' என்னும் தொடரின் பொருள் அவர்க்கு எளிதின் விளங்கவில்லையேனும், "இது புகழ்பட வாழ்தல் மக்களெல்லார்க்கும் அரிதென்றது' என மணக்குடவர் கருத்துரைத்ததிற் கருத்தூன்றியிருப்பரேல் இத்தகைய மருட்சி அவர்க்கு உண்டாகாமலிருத்தலுங் கூடும். புகழைப் பெருகச் செய்தலும் புகழை நிறுத்தலும் எல்லார்க்கும் இயல்வதன்று என்பதே பரிமேலழகர் உரையின் கருத்து. மணக்குடவரும் புகழ்பட வாழ்தல் எல்லார்க்கும் அரிது என்றே கூறியிருக்கிறார். இங்ஙனமிருக்க இருவர் கருத்தும் முரண்படாமை காணற்பாலது' என யானெழுதியதில் இழுக்கென்னுளது? இனி, திருக்குறட் பனையேட்டுச்சுவடி யொன்றிலிருந்து நான் எடுத்துக்காட்டிய மற்றொருவர் உரைக் குறிப்பினை ஆராய்வான்புக்கு, அதனைத் திருக்குறளின் நேரான பதவுரை என்றாதல் அன்றிப் பொழிப்புரை யென்றாதல் கொள்ள இடமில்லை. மற்று அது ஏதோ ஒருவகையான கருத்தினைப் புலப்படுக்கின்ற ஒரு போலியுரை யெனவே புறக்கணிக்கத்தக்கது' என்றனர். 'அவ்வுரை பரிமேலழகர் முதலாயினாரின் உரையுடன் சேர்த்தெண்ணற் கேற்ற தகுதியுடையதாகத் தோன்றாவிடினும்' என யான் கூறியிருப்பவும் அவர் அவ்வுரையினை ‘ஒரு போலியுரை' என்பதனாற்போந்த பயனென்னை? அவ்வுரையை எடுத்தெழுதி "இதிலிருந்து, இப்பாவிலுள்ள ‘கேடும் உளதாகும் சாக்காடும்' என்னுஞ் சொற்கட்குப் பொருளறியக்கூடவில்லை' என யானே கூறியிருப்பவும், அவர், ‘திருக்குறளின் பெரும்பான்மையான சொற்களுக்கு அவ்வுரையிற் பொருள் காணுமாறில்லை' என்றுரைப்பது பயனில் செயலாம். "சங்காயிரஞ் சூழவாழும் வலம்புரிபோலக் கிளையானது தன்னைச் சூழ வாழ்வது கீர்த்திமானுக்குக் கைவரும்' என்னும் அவ்வுரையையும் ஊன்றி நோக்கின், அது, கிளையாயினார் முதலானோர் தன்னைச்சூழ அவர்க்குப் பொருளை யீந்து வறுமையுறுவது புகழ்பெறும் பண்புடையானுக்கே இயல்வதாம் என நலிந்தேனும் பொருள் கொள்ள இடந்தந்து நிற்கின்றது. ‘உளதாகுஞ் சாக்காடும்' என்பதற்கே இதிற் பொருள் காணப்படவில்லை. ‘நத்தம் போல்' என்பதற்கு ‘வலம்புரிபோல' என்று அவ்வுரை கூறுவது யாவர்க்கும் எளிதின் விளங்கற்பாலதாகவும், ஐயங்காரவர்கள் அதனை மறுப் பதற்கும் பெரியதோர் ஆராய்ச்சியை மேற்கொள்வது வியப்பா கின்றது. மற்று, அவர் 'ஆதலால் நத்தமென்னுஞ் சொற் பொருள் அறிதற்கு இவ்வுரையையே போதிய சான்றாகக் கொள்ளுதல் இயலாதென்க' என்கின்றனர். நத்தமென்னுஞ் சொற்பொருள் துணிதற்கு இவ்வுரையினையே போதிய சான்றாகக் கொண்டிருந் தாலன்றோ அதனை இங்ஙனம் மறுத்துரைக்க வேண்டும்? 'இவ்வுரையில் நத்தமென்பதற்கு வலம்புரியெனப் பொருள் கொள்ளப்பட்டிருப்பது வெளியாகிறது' என்பதும், "நத்தமென்னுஞ் சொற்பொருள் துணிதற்கு இவ்வுரையே போதிய சான்று" என்பதும் ஒரே கருத்துடையனவெனக் கொண்டனர் போலும்? இனி, சீவகசிந்தாமணியில் ஒரு தொடருக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையினை எடுத்துக்காட்டி, அவர் கருத்திதுவென நான் விளக்கியிருந்ததற்கு மறுப்பாக ஐயங்காரவர்கள் எழுதியுள்ளவற்றை நோக்குழி, அவர் நிலைமைக்குப் பெரிதும் இரங்க நேர்கின்றது. "சங்குடைந்தனைய வெண்டாமரை மலர்த்தடங்கள் போலும்- நங்குடி" என்பதற்கு நச்சினார்க்கினியர் "தடங்களிலே உடைந்த தன்மையவாகிய மலரும் சங்கும் போலும் நங்குடி; இது தூய்மைக்குவமை" என முதலிற் கூறிப், பின், இனிச் சங்கு கெட்டாலும் நிறங்கெடாதது போலக் கெட்டாலுந் தன்றன்மை கெடாத குடியுமாம்; 'நத்தம்போற் கேடும்' என்ப" என்றுரைத்தனர். "பிற்பொருளில் சங்கு உடைந்தனைய குடி என இயையும். சங்கு கெட்டாலும் நிறங் கெடாதது போலக் கெட்டாலுந் தன்றன்மை கெடாதகுடி என்று கூறியவர் அதற்கு மேற்கோளாக 'நத்தம் போற் கேடும்' என்பதனைக் காட்டியிருப்பதிலிருந்து, அவர் நத்தம் என்பதற்குச் சங்கென்று பொருள் கொண்டுள்ளமை புலனாம்' எனயான் எழுதியிருந்தேன். "இரண்டுரையிலும் ‘உடைந்தனைய' என்பது மலருக்கு அடை" என ஐயங்காரவர்கள் கூறுகின்றனர். நச்சினார்க்கினியர் எந்தவுரையிலும் சொற்களைப் பொருள் கோள் முறையில் முன்னிறுத்திப் பின் பொருளுரைக்கவில்லை. அவர் பொருளுரைத்திருப்பதிலிருந்தே சொற்களை இன்னவாறு இயையவைத்திருக்கின்றனரனெ நாம் அறிதல் வேண்டும். முதலுரையில், தடங்கள் உடைந்தனைய வெண்டாமரை மலர் சங்குபோலும் நம் குடி என அவர் சொற்களை இயைய வைத்திருக் கின்றனர் என்பது அவ்வுரையைக் கொண்டுதானே அறிய வேண்டியுள்ளது? அவ்வாறாக, ‘இனிச் சங்கு கெட்டாலும் நிறங்கெடாதது போலக் கெட்டாலுந் தன்றன்மை கெடாத குடியுமாம்' என்னும் உரையிலிருந்து, சங்கு உடைந்தனைய குடி என அவர் சொற்களை இயைத்திருக்கின்றனரென்பது அறிவுடையார் எவர்க்கும் எளிதிற் புலனாவ தொன்றாகவும், ‘பிற பொருளில் சங்கு உடைந்தனைய குடியென இயையும் என்றல் அவருரைக்கு மாறுகொளக் கூறலாம்' என ஐயங்காரவர்கள் கூறியதென்னை? மாறுகொளக்கூறல் என்பதனை அவர் யாங்ஙனம் அறிந்தனர்? உடைந்தனைய என்பதனை மலருக்கேற்றி, உடைந்த தன்மையவாகிய என இடர்ப்பட்டுரைக்கும் முற் பொருளிலும், சங்கு உடைந்தாற் போலும் குடி என்னும் பிற்பொருளே சிறந்ததாமென்க. 'உடைந்த காலத்து நிறம் வேறுபடாமை மற்றெல்லாப் பொருள்களிடத்து மிருப்பவும் அதற்குச் சங்கினையே எடுத்துக் காட்டுதல் ஏற்புடைய தன்றாம்' என்கின்றனர். சுட்ட காலத்து நிறங்குன்றாமை பொன் முதலிய பிற பொருள்களிடத்து மிருப்பவும் அதற்குச் சங்கினையே எடுத்துக்காட்டுதல் ஏற்புடையதன்றாம் என்பார்க்கு இவர் யாது கூறுவர்? பொன்னின் றன்மை அதுவாதல் "சுடச்சுடரும் பொன் போல்" எனத் தமிழ் மறையுள்ளும் கூறப்படுதல் காண்க. இனி, "நத்தம்போற்கேடு" என்பதற்குப் பரிமேலழகருரையைத் தழுவியே நச்சினார்க்கினியரும் ஆக்கமாகுங்கேடு எனப் பொருள் கருதியுள்ளாரென்றலும் ஆண்டைக் கேற்புடையதாகின்றது. கெட்டாலும் தன் தன்மை கெடாதகுடி எனக்குடியின் பெருமையை மேலே கூறிப்போந்தவர். அப்பொருளை வலியுறுத்தற்கு, அங்ஙனம் வறுமையாற் கேடடைந்த காலத்தும் தம் தன்மையிற்குன்றாது ஆக்கமுற்று விளங்குதல் புகழ்பட வாழுங்குடிப் பிறந்தார் கண்ணே உளதாம் என்னுங் கருத்துள்ள ‘நத்தம்------ லரிது' என்னுந் திருக்குறளை முதற் குறிப்பினால் நினை'd2வூட்டிச் சென்ற வரெனக் கொள்ளுதலில் யாதோரிழுக்குமின்று' என்கின்றனர். இதில் 'பரிமேலழகருரையைத் தழுவியே' எனப் புறப்பட்டவர் பின் அவருரையை நட்டாற்றில் விட்டுவிட்டமை காணலாகும். ‘வறுமையாற் கேடடைந்த காலத்தும் தம் தன்மையிற் குன்றாது ஆக்கமுற்று விளங்குதல் புகழ்பட வாழும் குடிப்பிறந்தார் கண்ணே உளதாம் என்பதுதானா பரிமேலழகர் கொண்ட பொருள்? வறுமை யென்பது யாது? கேடென்பது யாது? இங்ஙனம் வழுப்படக் கூறியிருப்பன பல. அவற்றை ஆராய்தல் வீண் காலப்போக்கே. திருக்குறளை முதற்குறிப்பினால் நினைப்பூட்டிச் சென்றனர் என ஐயங்காரவர்கள் கூறுவது குறி கூறுவதே போலும். அக்குறிதான் பொய்க் குறியாதல் இங்கே காட்டப்படும். நச்சினார்க்கினியர் மேற்கோள் எடுத்தாளும் முறைமையைச் சீவக சிந்தாமணியின் முதற் செய்யுளுரையைப் படித்த துணையானே அறிந்து கொள்ளலாகும். அவர் ஒரு செய்யுளோ சூத்திரமோ முழுவதும் மேற்கோளாகக்காட்டப்பட வேண்டின் அதனை அங்ஙனமே முழுதும் எடுத்தெழுதியிருப்பர்: அன்றி அதன் முதலும் இறுதியும் எழுதியிருப்பர்: அன்றி முதலிலுள்ள சொல்லையோ தொடரையோ எழுதி, என்னுஞ் செய்யுள், என்னுஞ் சூத்திரம் என்றிங்ஙனம் விளங்க வெழுதியிருப்பர்: செய்யுள் அல்லது சூத்திரத்தின் ஒரு பகுதியே வேண்டுமாயின், எப்பகுதி வேண்டுமோ அதனை மாத்திரம் எழுதியிருப்பர்; இவ்வுண்மைகளை அவருரை முழுதுங் காணலாகும். இதனை அவர் திருக்குறட்பாக்களை யெடுத்தாண்டிருப் பதிலிருந்தே காட்டுகின்றேன்: சிந்தாமணி, முத்தியிலம்பகம், 189ஆம் செய்யுளுரையில் "கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண் மேற்செல்லா துயிருண்ணுங் கூற்று" என முழுதும் எடுத்துக் காட்டினர். அவ்விலம்பகத்து 292ஆம் செய்யுளுரையில் "சிறைகாக்குங் காப்பெவன் செய்யும்" என முதற்பகுதியைக் காட்டினர். விமலையாரிலம்பகத்து 3-ஆம் செய்யுளுரையில். "ஒன்னார், அழுதகண்ணீருமனைத்து" என இறுதிப் பகுதியைக் காட்டினர். இவற்றிலிருந்து நான் மேலே கூறியன பிழையா வாய்மையாதல் தெளிக. ஐயங்காரவர்கள், கூற்றின்படி, ‘நத்தம் போற்கேடும்' என்னும் முதற் குறிப்பினால் அப்பாட்டு முழுதையுமே நச்சினார்க்கினியர் உணர்த்தினரெனக் கொள்ளின், சிந்தாமணியின் முதற் செய்யுளுரையில், அவர் "ஈண்டு உலகமென்றது உயிர்க்கிழவனை; ‘உலகமுவப்ப' என்னும் முதற்குறிப்பால் திருமுருகாற்றுப்படை முழுதும் உணர்த்தினா ரென்றன்றோ கொள்ள வேண்டும்? மற்றும் அவர் பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலியவற்றிலிருந்து காட்டிய வெல்லாம் அத்தன்மையவாதல் வேண்டுமே? இவற்றையெல்லாம் சிறிதும் ஓர்தலின்றி அவர் மறுப்பெழுதப் புகுந்ததனை என்னென்றுரைப்பது? யான் இதுகாறும் எழுதியவற்றிலிருந்து ஐயங்காரவர்கள் கூற்று முழுதும், சிறிதேனும் உண்மை விரவாத வெறும் போலியுரை யென்பது யாவர்க்கும் இனிது விளங்கா நிற்கும். இனி, நத்தம் என்னுஞ் சொல்லுக்குச் சங்கென்னும் பொருள் நச்சினார்க்கினியர் உரையிலன்றி வேறிடத்துக் காணப்படு வதுண்டோ என்பது இங்கு ஆராய்தற்குரியது திவாகரத்தில் "நத்துபணிலம் வளைநாகு சுரிமுகம், கம்புகோடு சங்கெனப்படுமே" என்றும், பிங்கலத்தில் "நந்து சுத்தி நாகு பணிலம், வண்டு கேடு வளையே சுரிமுகம், கம்பு வெள்ளை இடம்புரிசங்கே" என்றும், சூடாமணி நிகண்டில் "நலந்தருநந்து சுத்திநாகொடு வளைகம்புக்கோ, டிலங்கியவார ணம்வண் டிடம்புரி வெள்ளை சங்காம்" என்றும் சங்கின் பெயர்கள் கூறியவற்றில் நந்து என்னும் பெயர் முதலிடத்தில் நிற்கின்றது: இப்பெயர் அம்முச்சாரியை பெற்று நத்தம் என்றாகு மென்பது அறிஞரெல்லாரும் உடன்படற் குரியதே; மற்று, சூடாமணி நிகண்டில் "நத்தமே யிருளும் ஊரும் நந்துடன் இரவு நாற்பேர்" என நத்தம் என்னும் பெயர்க்கு நந்து என்று பொருள் கூறப்பட்டிருத்தலுங் காண்க. இம்மூன்று நிகண்டுகளும் நச்சினார்க்கினியர்க்குக் காலத்தால் முற்பட்டன வென்பதும் சிந்திக்கற்பாலது. இனி, ஐயங்காரவர்கள் தம் கட்டுரையில் ஓரிடத்தில் ‘அன்றியும், அது சிறப்புடையதாயின், மணக்குடவருக்குக் காலத்தினாற் பிற்பட்ட பரிமேலழகர் தாமும் அவ்வாறு உரைசெய்தலைத் தவிர்ந்து, போலென்பதை உரையசையாகக் கூறிவிடுத்ததென்னை?' என்றும், பிறிதோரிடத்தில் ‘ஆதலால் அதனை உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியரும் உடன்பட்டனரெனக் கூறுதல் அத்துணைப் பொருத்தமுடைய தன்றென்று தோன்றுகிறது' என்றும் கூறியுள்ளனர். இங்ஙனம் கோடலே நம் முனனோராகிய புலவர் பெருமக்களை நாம் போற்றுமுறையென இக்காலத்திலும் கருதுவார் சிலரிருக்கின்றனர். இது குறித்து யான் மிக விரித்தெழுதுங் கருத்துடையேனாயினும், இவ்வுரை விரியாமைப் பொருட்டு, அஃது ஆராய்ச்சிமுறை யன்றென்றும், அங்ஙனங் கோடல் தமிழ் வளர்ச்சிக்கு வழியடையாகுமென்றும் கூறுமளவில் நிறுத்து கின்றேன். "சங்குடைந்தனைய வெண்டாமரை மலர்த்தடங்கள் போலும், நங்குடி"1 என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறிய பொருள்கள் இவ்வாராய்ச்சிக்கு வேண்டுந் துணையாகவே மேலே தழுவப்பட்டன. சொற்கிடக்கை முறையை ஊன்றி நோக்கின் அவர் கூறிய இரு பொருளுமே ஆசிரியர் கருத்தொடு பட்டன என்று கொள்வதற்கு இடமில்லை. ‘சங்குடைந்தனைய' என்பதனை மலருக்கு அடையாக்கி, சங்கு உடைந்து விரிந்து நின்றாற் போலும் வெண்டாமரை மலர் எனக் கூறுதலே பொருத்தமுடைத்தாம். " சங்குடைந் தனையதாழைத் தடமலர்த் தொடையலானே"2 எனச் சூளாமணி கூறுவதும் இதனை வலியுறுத்தாநிற்கும். மற்றும் தடங்கள் போலும் குடியென்று நேரே பொருள் செய்வதே பெரிதும் பொருத்த முடைத்தாதல் காண்க. இக்காலத்தில், தமிழுக்கு அகத்தியராகி விளங்கும் பெருந் திருவினராகிய மகாமகோ பாத்தியாய உ.வே. சாமிநாதையரவர்களும் இக் கருத்துடையவர்களென்பதனை, அவர்களெழுதிய ‘சிந்தாமணி ஆராய்ச்சி விளக்கத்தில், ‘சங்குடைந்தனைய வெண்டாமரை மலர்' என்பதனோடு ஒத்த கருத்துடையதாகச், சூளாமணியிலுள்ள ‘சங்குடைந் தனையதாழை' என்பதனை எடுத்துக்காட்டியிருப்பதும், தடங்கள்போலும் குடி எனப் பொருள் படுதல்குறிப்பிட, "பாற்கடன் முளைத்ததோர் பவளப் பூங்கொடி"1 என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளை இலக்கத்தாற் குறித்திருப்பதும் நன்கு விளக்கும் என்க.  12. தமிழின் சிறப்பியல்பு உலகிலே ஏனையுயிர்களினின்றும் மக்களை வேறுபடுத்திக் காட்டுவதாய், மக்களின் அறிவு விளக்கத்திற்குச் சிறந்த கருவியா வதாய் உள்ளது மொழி. அன்றியும் மொழியானது அதனைப் பேசிவரும் மக்களின் கருத்துப் பொருள்களைத்திரட்டி வைத்திருக்கும் கரு'd2வூலமாயிருத்தலின், அதன் அமைப்பு முதலியன கொண்டே அம்மக்களின் நாகரிக நிலையை உணர்தலும் சாலும். இப்பொழுது எத்தனையோ பலநூறுமொழிகள் உலகத்தில் வழங்குவன என்ப. எனினும், தமிழ், ஆரியம், எபிரேயம், கிரிக்கு, இலத்தீன், முதலிய சிலமொழிகளே மிக்க பழமையும் பெருமையும் உடையனவாக அறிஞர்களாற் கொள்ளப்படுகின்றன. இவற்றுள் இருவகை வழக்கினும் நின்று நிலவுவது தமிழ். தமிழின் சிறப்பியல்பு என்னின் பிற மொழியிலின்றித் தமிழின் மட்டுமேயுள்ள தன்மை யென்றாகும். பிறமொழி என்பது தமிழ் அல்லாத எல்லா மொழியையும் குறிக்குமாயினும் ஈண்டுத் தமிழுக்கு எதிராக நிறுத்தி ஆராய்தற்குரியது சங்கதம் எனப்படும் ஆரிய மொழியே யாகும்; பரத கண்டத்து வழங்கும் மொழிகளுக்குள்ளே தென்மொழி என்றும் வடமொழி என்றும் திசைப் பெயரடுத்து எதிர் நிறீஇ வழங்கப்பெறுவன தமிழும் ஆரியமுமே யன்றோ? தமிழின் தனித் தன்மையையோ, உயர்வையோ கூறப்புகின் அது மற்றொன்றை வெறுப்பதோ இழிவுபடுத்துவதோ ஆகுமெனச் சிலர் கருதுகின்றனர். அத்தகைய மனப்பான்மையினர் இவ்வவையின் கண் இரார் என எண்ணுகிறேன். எல்லா மொழிக்கும் ஆரியமே தாயாகுமென்றும், அம்முறையே தமிழும் ஆரியத்தினின்றே தோன்றியதாகு மென்றும் கொள்ளும் ஆராய்ந்து துணியாத கொள்கையினை யுடையார் சிலர் சின்னாளின் முன்புதொட்டு இருந்து வருகின்றனர். மொழியாராய்ச்சி யென்பது புதியகலை முறைகளில் ஒன்றாகி உண்மையை விளக்கி வருகின்ற இந்நாளில் அக்கொள்கை அருகிவிட்டதென்பதில் ஐயமில்லை. எனினும் அக்கொள்கை அறவே ஒழியுமாறு, தமிழின், சிறப்பியல்பு களை உள்ளவாறு எடுத்துக் காட்டித் தெருட்டுதல் நம்மனோர் கடன். இச்சிற்றுரையும் இக்கருத்தினைக் கொண்டே எழுந்த தாகும். மொழிநூல் ஆராய்ச்சியாளர் மொழிகளை அவ்வவற்றின் பண்புகள் கொண்டு வெவ்வேறு குடும்பம் அல்லது குழுவாகப் பாகுபடுத்தியிருக்கின்றனர். இவ்வுரைபல்காமைப் பொருட்டு அவற்றையெல்லாம் இங்குக் கூறாது விடுகின்றேன். வடமொழி தென்மொழி என்னும் பெயர் வழக்கே அவை வெவ்வேறு தனி மொழியாமென்பதுணர்த்தி நிற்கவும், வடக்கினின்று தெற்கு உதித்ததென்பார் போல வடமொழியினின்று தென்மொழி வந்ததென்பார் சிலர் தோன்றினமை பரிவுறற்பாலதே. அதிலும், தமிழ் இலக்கணங்களைத் துறைபோகக் கற்று இலக்கணக் கொத்து இயற்றிய சுவாமிநாததேசிகர் 'ஐந்தெழுத்தாலொருபாடை யென்றறையவுநாணுவரறிவுடையோரே' என்று கூறியதுதான் பெரிதும் இரங்கற்குரியது. தேசிகர்க்கும் அது கருத்தாகாதென்பதும், ஓர் முனைப்புப் பற்றியே அங்ஙனம் கூறிவிட்டனரென்பதும் 'அகத்தியர்' என்னும் கட்டுரையில் முன் விளக்கியெழுதியுள்ளேன். வடமொழிப் பற்று மிக்காராய சுப்பிரமணிய தீக்கிதர் தாம் இயற்றிய பிரயோக விவேகத்தில் 'வடமொழிக்கும் தமிழுக்கும் வேற்றுமை சிறிது கூறி இது வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும்' பேதங் கோடி கூறிட்டு ஒரு கூறுண்டோ இன்றோவென்பது கூறுகின்றது'. என்றனர் அங்ஙனங் கூறிய அவர் தாமே 'வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும்' இலக்கணமொன் றென்பதறியாது சம்ஞாபேதத் தாலும் பாடைவேற்றுமையாலும் இகழ்ந்து வேறென்பாரை நோக்கியென்க" என்றும் கூறிவைத்தனர். தேசிகர் கருத்தும் தீக்கிதர் கருத்தும் ஆரியமும் தமிழும் வெவ்வேறு மொழிகளே யாமென்பதும், எனினும் அவ்விருமொழிக்கும் இலக்கணம் ஒன்றே யாம் என்பதுமாகக் காணப்படுகின்றன. மொழியின் அமைதியே இலக்கணமாகவும் அவர்கள் மொழியையும் இலக்கணத்தையும் வேறு பிரித்தோதியது எங்ஙனம் பொருந்தும்? அவர்கள் வாளா இலக்கணம் ஒன்றென மொழிந்தாரேயன்றி, எங்ஙனம் ஒன்றாகுமென ஆராய்ந்து தங்கோள் நிறுவினாரல்லர். இனி, இருமொழிப் புலமையும் ஒருங்குடைய பெரியாராகிய சிவஞான முனிவர் தாம் இயற்றிய தொல்காப்பியப் பாயிர விருத்தியில் "ஐந்திரம் நோக்கித் தொகுத்தானெனின், தமிழ் மொழிப் புணர்ச்சிக்கட்படுஞ் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக் கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகு பாடுகளும், அகம் புறமென்னும் பொருட் பாகுபாடுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்" என எழுதிய உரை சிந்திக்கற்பாலது. தொல்காப்பியத்திற்கு முதனூல் ஐந்திரம் எனக் கூறிய சுப்பிரமணிய தீக்கிதர் கூற்றையே ஆசிரியர் சிவஞான முனிவர் இங்ஙனம் மறுத்துரைத்தாராவர். தமிழிலக்கணத்திற்கு வடமொழி இலக்கணம் முதனூலாதல் எவ்வாற்றானும் பொருந்தா தென்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. தேசிகர் கூற்றும் இதனானே மறுக்கப்பட்டமை ஓர்க. வடமொழியிற் பெறப்படாத தமிழ்ச் சிறப்பியல்புகள் இவையெனத் தமிழிலக்கணப் பகுதிகள் பலவற்றைக் கிளந்தெடுத்தோதிய ஆசிரியர், அதனோடமையாது, 'இன்னோரன்ன பிறவும்' எனவும் கூறிப்போந்தனர். வடமொழியிற் பெறப்படும் தமிழியல்புதான் வேறு யாதுளது? பெயர்ச்சொல், வினைச்சொல், வினைமுதல், செயப்படுபொருள், பயனிலை, மூவிடம், முக்காலம், முதலியன வடமொழியிற் பெறப்படுவன என்னலாமோ? இவையில்லாத மொழிகளே உலகத்திலில்லை. உவகையில் இன் சொல்லும் வெகுளியில் வன்சொல்லும் எழுதல் போல இவையெல்லாம் எல்லா மொழியினும் இயல்பிலே அமைதற் குரியன. இவற்றை ஒன்றினின்று மற்றொன்றிற்கு வந்தனவென்று கூறுவோன் "மருந்திற் றணியாத பித்தனென் றெள்ளப்படுவான்" என்பது தேற்றம். இனி, ஐந்தெழுத்தாலொரு மொழியெனவும் அறிவுடையோர் நாணுவர் என்னுங் கூற்றை இன்னுஞ் சிறிது ஆராயாது விடுதல் தக்கதன்று. தமிழெழுத்துக்கள் முப்பத்து மூன்றென ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியிருப்பவும் அதனைச் சிறிதும் சிந்தியாது ஐந்தெழுத்தென்று கூறியது என் கருதி? தமிழ் முதலெழுத்துக்கள் முப்பதில் இருபத்தைந்தெழுத்து வடமொழியிலிருத்தலின் அவற்றைக் கழித்து, எஞ்சிய ஐந்துமே தமிழுக்குரியவாகக் கூறலாயிற் றெனின், வடமொழி யெழுத்துக்கள் யாவும் பிறமொழிகளில் காணப்படுதலின் வடமொழிக்கென ஓரெழுத்தேனும் இன்றென ஏன் கூறுதல் கூடாது? இனி அவர் எள்ளிக்கூறிய ஐந்தெழுத்தும் அத்துணை எளிமையுடையன வல்லவென்பதையும் ஓர் எடுத்துக்காட்டில் வைத்து விளக்குகின்றேன். " நற்றா டொழாஅ ரெனின்"1 என்பது ஓர் குறட்பாவின் பின்னடி. இவ்வடியை வடமொழியில் எழுதுதல் சாலுமோ? இதன் முதலிலுள்ள 'ந' என்னும் ஒன்றன்றி மற்றைய எழுத்துக்கள் எழுதப்படாவாயின் வடமொழியன்றோ பெரிதும் எழுத்துக் குறைபாடுடையதென இது காட்டா நிற்கும்? இப்பொழுது ஐந்தெழுத்து எத்துணைப் பெருமையுடையன வென்பது காண்க. இனி, உயிர், மெய், என்னும் தமிழ் எழுத்துக்களின் பெயர்கள் உயர்ந்த தத்துவக் கொள்கையுடன் பொருந்தியன. வடவெழுத்துக் களின் பெயர்களாகிய அச்சு, உறல் என்பனவோ யாதொரு சிறந்த கொள்கையும் உடையன வல்ல; 'அகர முதல் னகரவிறுவாய்' என்றாற்போல எழுத்துக்களின் முதல் இறுதிகளை உணர்த்தும் அத்துணைப் பயன்றானும் உடையனவல்ல; மாகேச்சுர சூத்திரம் என்பவற்றின் முதலையும் இறுதியையும் சேர்த்துப் பிரத்தியாகரித் தவையே அவை. தமிழானது பகுத்தறிவுடைய மக்கள் முதலிய உயிரை உயர்திணை என்றும், பகுத்தறிவில்லாத உயிரையும் உயிரில் பொருளையும் அஃறிணை என்றும் அறிவுபற்றிப் பாகுபாடு செய்திருப்பது போல வடமொழி செய்யவில்லை; வேறு எம்மொழியும் செய்யவில்லை. இவ்விரு வகைப் பெயர்களே தமிழ் மக்களின் உயரிய அறிவையும், கொள்கையையும், தமிழின் தனி மாண்பையும் விளக்குதற்குப் போதியனவாகும். தமிழ் எழுத்துக் களில் மொழிக்கு முதலில் வருவன இவை, இறுதியில் வருவன இவை, இவற்றோடு மயங்குதற்குரியன. இவை எனச் செய்திருக்கும் வரையறையும், தமிழ்ச் சொற்கள் நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாகப் புணரும் பொழுது உண்டாகும் மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் என்னும் திரிவுகளும், இயல்பும் எல்லாம் தமிழுக்குச் சிறப்பாகவுரியவை. ஒலியியல்பிற்கு மாறுபடாதவை. தமிழ் இலக்கணம் கூறுகின்ற சந்தியும் இளஞ்சிறார் உள்ளிட்ட மக்கள் பேச்சிலுள்ள சந்தியும் ஒன்றே; வடமொழிச்சந்தி அன்னதன்று. தமிழிலுள்ள பால் வகுப்பில் முறைப்பிறழ்வு சிறிதுமில்லை; வடமொழியிலுள்ள பால் வகுப்போ சொன்னோக்கங் கொண்டு ஆணைப்பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும், இரண்டையும் அலியாகவும் கூறும் பிறழ்ச்சியுடையது. ஒருமை பன்மை என்பது தமிழ் வழக்கு. ஒருமை இருமை பன்மை என்பது வடமொழி வழக்கு; வடமொழியிலே ஒரு பெயரைச் சார்ந்து நிற்றற்குரிய வேற்றுமை யுருபு அதன் அடைமொழிகள் எல்லாவற்றொடும் கூடியிருக்கும். அங்ஙனம் வருவது தமிழ் வழக்கன்று: பின் வருவதை எடுத்துக்காட்டாகக் கொள்க: 'கடற்கரையில் உள்ளதும் பாவங்களை அழிப்பதும் முனிபுங்கவர்களுக்கு அநுகூலமானதுமாகிய சுகந்தம் என்னும் மலையினது குகையில் வசிப்போனும் தன் ஒளியால் விளங்குவோனும் மக்களின் துன்பத்தைப் போக்குவோனும் ஆகிய முருகனை வழிபடுகின்றேம் என்று தமிழில் வரற்பாலது, 'கடற்கரையில் உள்ளதில் பாவங்களை அழிப்பதில் முனிபுங்கவர் களுக்கு அநுகூலமானதில் சுகந்தம் என்னும் மலையில் குகையில் வசிப்போனை தன் ஒளியால் விளங்குவோனை மக்களின் துன்பத்தைப் போக்குவோனை முருகனை வழிபடுகின்றேம்' என வடமொழியில் வரும். மற்றும் வடமொழியில் வேற்றுமை ஏழேயாகத் தமிழின் கண் எட்டாகும். 'இந்திரன் எட்டாம் வேற்றுமை யென்றனன்' என்பார் உளரேனும் வடமொழியின் போக்கு விளியைத்தனி வேற்றுமையாகக் கொண்டதன்று; தமிழிலே விளிவேற்றுமை பரந்திருப்பதொன்று; தொல்காப்பியர் 'விளி மரபு' என ஓர் இயல் கொடுத்து முப்பத்தேழு சூத்திரங் களாலே அதனை விரித்து விளக்குதலுங் காண்க. தமிழிலுள்ள வினைச்சொற்கள் திணை பால் இடம் காலம் என்பவற்றை ஒருங்குணர்த்தும் சிறப்புடையன; வேறு எம்மொழியிலும் அத்தகைய சிறப்புக் காணப்படவில்லை. கண்டான் என்னும் வினைமுற்றிலே முதனிலையானது காண்டலாகிய தொழிலையும், இறுதி நிலை யானது உயர்திணை ஆண்பால் படர்க்கை வினை முதலையும் இடை நிலையானது இறந்த காலத்தையும் வெளிப்படையாகக் காட்டி நிற்றல் காண்க. இங்ஙனமாக எழுத்துச் சொல் இலக்கணங் களில்காணப்படும் வேறுபாடுகளும் தமிழின் தனிமாண்புகளும் பலவாம். இனி, வடமொழியினும் பிறமொழிகளிலும் இலக்கணம் என்று கூறப்படுவது எழுத்துச் சொல்லமைதி யளவேயாகும். வடநூலார் இலக்கணத்தைச் சத்த நூல் என வழங்குதலும் காண்க. தமிழிலக்கணமோ எழுத்துஞ் சொல்லுமாகிய ஒலியளவில் அடங்குவதன்று: மக்கள் உறுதிப் பொருள் எய்துதற்குரிய ஒழுகலாற்றினை யெல்லாம் வரையறை செய்துணர்த்தும் பொருட் பகுதியையுடையது. பொருளிலக்கணம் வேறெம் மொழியிலுமின்றித் தமிழில் மட்டுமே யுள்ளதென்பது அனைவ ராலும் நன்கறியப்பட்டது. தமிழானது பிற இலக்கணங்களைக் காட்டினும் பொருளிலக்கணத்தையே சிறந்ததாகவும் இன்றியமை யாததாகவும் கொண்டுள்ள தென்பது "எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறேமேயெனின் இவை பெற்றும் பெற்றிலேம்" என்னும் இறையனாரகப் பொருள் உரையானும் அறியப்படும். பொருளிலக்கணம் அகம் புறம் என்னும் இருகூறுடையதாகி அறம் பொருள், இன்பம் வீடு என்னும் நாற்பொருளையும் நுதலுவது. அகமானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்னும் ஏழு திணைகளையும், புறமானது வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை என்னும் ஏழு திணைகளையும் ஒவ்வொரு திணையும் பற்பல துறைகளையும் உடையன. தமிழிலுள்ள சான்றோர் செய்யுட்களெல்லாம் அத்திணை துறைகளோடு பொருந்தியனவாகவே இருக்கும்: ஒரு செய்யுளேனும் பொருளிலக் கணத்திற்கு இலக்கியமாகாத தாயிராது. பொருளிலக்கணம் தமிழுக்கேயுரியது. எனவே அவ்விலக்கணத்துடன் பொருந்த எழுந்த செய்யுட்களெல்லாமும் தமிழுக்குரியன வென்பது கூறாதேயமையும். இவ்வுண்மை யுணர்வார்க்குத் தமிழானது வேறெம்மொழிக்கும் கடமைப்பட்டிராத தனிச் செம்மொழி யென்பது புலப்படும். உணராதாரே பலவாறு பிதற்றாநிற்பர். இனி, தமிழின் சிறப்பை விளக்கும் பொருளிலக்கணக் குறிப்புக்கள் சிலவற்றைச் சுருக்கமாகக் கூறி இவ்வுரையை முடிப்பாம். புறப்பொருளிலக்கணமானது அரசரின் போர் முறைகள் முதலியன கூறு முகத்தால் அறம் பொருள்களையும் வீட்டையும் உணர்த்துவது. அப் போர் முறை யொன்றே தமிழர் களின் உயரிய நாகரிகத்தைக் காட்டுதற்குப் போதியதாகும். போர் செய்தற்குரிய காரணங்கள் இன்னின்ன என்பதும், அப்போர் களை இன்னின்ன முறையானே ஆற்றுவர் என்பதும் புறத்திணை களில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இங்கே மிகவும் பாராட்டுதற்குரிய செய்தி யொன்றுளது. அஃதாவது தமிழ் நாட்டு வேந்தர்களும் வீரர்களும் போர் நிகழ்த்துமிடத்தே அப்போர் நிகழ்ச்சிக்கேற்ப ஒவ்வொரு வகையான மலர்களைச் சூடியிருப்பர் என்பதே. அங்ஙனம் சூடும்பூக்களானே அவ்வொழுக்கங்களும் வெட்சி, வஞ்சி, முதலிய பெயர்களைப் பெறுவனவாயின. தாம் சூடியிருக்கும் பூவிலிருந்தே அப்போர் இன்ன காரணத்தால் நிகழ்வதென்பதை அறிய வைப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய செயலாம்! இதிலிருந்து, தமிழரசர்கள் தமக்குள்ளே பொதுவான சில ஒழுங்குகளை யேற்படுத்தி அவற்றின் வரம்பு கடவாது ஒழுகிவந்தன ரென்பதும் பெறப்படும். தமிழ்நாட்டாரின் இப்போர்முறைகளும் வழக்கங்களும் பிற நாட்டவர்களாலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. பாரதத்தில் வந்துள்ள நிரைகோடலும் மீட்சியுமாகிய செய்திகள் தமிழருடைய போர்முறையை ஆரியர் ஏற்றுக் கொண்டமைக்கு அடையாளமாகும், "நம் போர் வீரர் தென்னாட்டாரைப் போலத்தலைக்குமலர்களை அணிகின்றனர்" எனப் பரதன் கூறுவதாக வான்மீகி முனிவர் தமது இராமாயணத்து அயோத்தியா காண்டத்திற் கூறியிருப்பது தமிழருடைய வழக்கம் ஆரியரால் விரும்பி யேற்றுக் கொள்ளப்பட்டமையை நன்கு தெளிவுறுத்தல் காண்க. இனி, அகப்பொருளின் மாண்பு அளவிடற் கரியதொன்றன்று. இயற்கையும் தூய்மையும் பொருந்திய தலையன்பினால் இன்பந்துய்க்கும் முறைமையை எழில் பெற உணர்த்துவது தமிழுக்கேயுரிய சிறப்பியல்பாம். இவ்வுண்மையைப் பண்டைச் சான்றோர் பலர் நன்குணர்ந்து கூறி வைத்திருக்கின்றனர். " இன்றமிழ் இயற்கை யின்பம் நிலைபெற நெறியிற் துய்த்தார் நிகர்தமக் கிலாத நீரார்"1 (சிந்.சுரமஞ்சரி 69) என்றார் திருத்தக்கதேவர். அகப்பொருள் கூறும் களவு, கற்பு எனப்படும் இருகைகோளும் உயரிய அன்புடன் பொருந்தியவே யெனினும், அவ்விரண்டனுள்ளும் களவே இயற்கையும் சிறப்பு முடையதாமென்பது "கற்பெனப்படுவது களவின் வழித்தே"2 என்பதனாலும் இறையனார் அகப்பொருளுக்குக் களவியல் எனப் பெயர் போந்தமையாலும் அறியப்படும். களவினது சிறப்பும், அது தமிழ் ஆயாதவரால் அறியப்படாத மாண்பினதென்பதும், பரிபாடல் ஒன்பதாம் பாட்டில் நன்கு வலியுறுத்தப்படுகின்றது. அதிலே நான்மறைப் புலவரை எதிர்முகமாக்கி, " நான்மறை விரித்து நல்லிசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது காதற் காமம் காமத்துச் சிறந்தது விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி . . . . . . . . . . . . . . . . . . . . தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழ் ஆய்வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன்"3 எனக் கூறித் தமிழினது சிறப்பை விளக்கியிருத்தல் காண்க. இங்ஙனம் தமிழர்க்கு முழு உரிமையுடைய களவுக்கூட்டம் போல்வதொருமணம் ஆரியரின் எண்வகை மணத்துள் ஒன்றாக வுள்ளது. அதுவே, யாழோர் கூட்டம் அல்லது காந்தருவமணம் என்பது. தொல்காப்பியத்திலும், இறையனார். அகப்பொருளிலும் தமிழருடைய களவுக்கூட்டத்தின் இயல்பை ஆரியருடைய யாழோர் கூட்டத்தோடு ஒப்பித்து விளக்கியிருத்தலும், " தேவர் பண்ணிய தீந்தொடை யின்சுவை மேவர் தென்றமிழ் மெய்ப்பொரு ளாதலின்"1 எனத் திருத்தக்கதேவர் கூறியிருத்தலும் நோக்கற்பாலன. ஆரியர் மணங்களில் ஒன்று தமிழர் மணத்துடன் ஒருவாறு ஒத்திருப்பினும் தமிழருடைய ஒழுக்கமும் நாகரிகமும் மிக மேம்பட்டவை யென்பதனைப் பல ஏதுக்களால் நிறுவுதல் கூடும். ஓர் ஆடவன் தான் காதலித்த நங்கையை அடையப்பெறாவழி மடலூர்ந்தேனும் அவளை அடைதற்கு முயல்வன் என்பது அகப்பொருளில் கூறப்படுவ தொரு செய்தி மடலூர்வோர் நாணினை அடியுடன் இழக்க வேண்டுதலின் தமிழ்நாட்டு மகளிர் மடலூர்வதாக நினைத்தலுஞ் செய்யார். ஆதலின், தொல்காப்பியனாரும் " எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேற் பொற்புடை நெறிமை யின்மையான"2 என மடலூர்தலை மகளிர்க்கு விலக்கினார். தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும் இதுகொண்டே தமிழ்நாட்டு மகளிரின் ஒப்புயர்வற்ற மாட்சியை விளக்குவாராய், " கடலன்ன காம முழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்"3 என்றார். ஆனால், ஆரியருக்குள் மகளிரும் இத்தகைய செயல் செய்யலாமென அன்னாருடைய காமநூல் விதிப்பதாகும். அது திருமாலைக் காமுற்ற பெண்ணொருத்தி மடலூர்தல் கூறுவதாக " அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல் மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையிற் கேட்டறிவ துண்டதனை யாம் தெளியேம் மன்னும் வடநெறியே வேண்டினோம்"4 எனத்திருமங்கை மன்னன் பெரிய திருமடலிற் பாடியிருப்பதனாற் பெறப்படும். பெண்ணொருத்தி அதற்குத் தமிழ் நூல் இடந்தராமையின் வடநூல் முறையைத் தழுவுகின்றாள் என்பது இதில் விளக்கமாகச் சொல்லப்பட்டுளது. இதிலிருந்து ஆரியர் ஒழுக்கமும் தமிழர் ஒழுக்கமும் இத்தன்மையன என்பது நன்கு விளங்கும். இனி, தூய்மையாகிய அன்பின் றன்மையைக் காணவேண்டின் பண்டை அகப்பொருட் செய்யுட்களிலிருந்தே அதனைக் காணலாகும். பின் வருஞ்செய்யுள் ஐந்திணையைம் பதில் உள்ளது. " சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப் பிணைமா னினிதுண்ண வேண்டிக் கலைமாத்தன் கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி"1 பொருள்வயிற் சென்ற தலைவன். பிரிவுக்கு ஆற்றாது வருந்தும் தலைவியைத் தோழி ஆற்றுவிக்கும் பொருளையுடையது. இச்செய்யுள் காதலர் விரைந்து வருவர் என்பதைத் தெளியச் செய்வதே தலைவியை ஆற்றுவிக்கும் நெறியாம். அதனையே தோழி இங்ஙனம் கூறுகின்றாள். தலைவர் சென்ற நெறி ஓர் அரிய சுரநெறியாகும்: அச்சுரத்திலே ஒன்றையொன்று பிரிதலில்லாத அன்பினையுடைய ஆண்மானும் பெண்மானும் நீர் வேட்கை மிக்கு ஓர் வறுவாய்ச் சுனையைக் கண்டடைகின்றன. அதிலுள்ள நீரோ அவற்றுள் யாதேனும் ஒன்றே பருகக்கூடிய சிற்றளவினையுடையது, இரண்டும் பருகின் ஒன்றற்கேனும் விடாய் தணிவதாகாது: இந்நிலைமையில் என்செய்வது: ஆண்மானானது தான் விடாயால் வருந்தினும் தன்உயிரேயாகிய மேன்மையுடைய பெண்மான் அந்நீரைப் பருகி இளைப்பாற வேண்டுமென விரும்புகின்றது; ஆனால் அதனைப் பருகச் செய்தாலோ தன் காதலனாகிய ஆண்மான் உண்ணாதிருக்கத் தான் மட்டும் உண்பது தனது கற்பிற்கும் தலையன்பிற்கும் பொருந்தாமையின், அது பருகமாட்டாது; இதனைக் கருதிய ஆண்மான் இவ்வாறாயதோர் சூழ்ச்சி செய்யும்; அஃதாவது, பெண்மான் நீருண்டு முடியுங்காறும் தானும் நீருண்பதுபோல் அதில் வாய் வைத்து வாளா உறிஞ்சிக் கொண்டிருக்கும்; அக்காடு தான் தலைவர், கருதிச் சென்ற நெறியாகும் என்கின்றாள் தோழி. இதனாற் போதரும் பொருளாவது தாம் செல்லும் நெறியிலே விலங்குகளும் இங்ஙனம் அன்புடையனவாயிருத்தலைக் காணும் தலைவர் தம் உயிரே போலும் நின்னைப் பிரிந்திருக்கலாற்றாத வராய் உடனே மீள்வர் என்று கூறித் தேற்றியவாறாம். என்னே காதலின் பெருமை; காதல் கடவுளின் உருவமென்றால் வேறு கூறுவானேன். இறைவன் திருக்கைலையில் வீற்றிருக்குங் கோலத்தை நம் திருநாவுக்கரசு பெருமான் திருவையாற்றில் எங்ஙனம் தரிசித்தார்? " காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்"2 " வரிக்குயில் பேடையோ டாடி வைகி வருவனகண்டேன்"3 " பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவனகண்டேன்"1 " கருங்கலை பேடையோ டாடிக் கலந்து வருவனகண்டேன்"2 என்று இங்ஙனம் தாம் கண்டவாறு கூறி, இவற்றைக்கண்ட முறைமையால், " கண்டே னவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன்"3 என்று அருளிச் செய்தாரன்றோ? " காதல் விரிநிலத் தாரா வகை காணார் சாதல்நன் றென்பர் தகைமையோர் - காதலும் ஆக்கி யளித்தழிக்கும் கந்தழியின் பேருருவே நோக்கிலரை நோவ தெவன்"4 என்னும் இன்னிலைச் செய்யுளில் காதல் கடவுளின் சிறந்த வுருவமெனக் கூறப்பட்டிருத்தலுங் காண்க. பல கூறுவானேன். இறைவனை நினைந்துருகிப்பாடும் மெய்யடியார்கள் தம் அன்பின் முதிர்ச்சியில் அவனைத் தம்மோடு வேற்றுமையில்லாத காதற் கிழமையுடையவனாக வைத்துப் பாடுவதொன்றே காதலின் பெருமையை நன்கு விளக்குவதாகும். அங்ஙனம் பாடப்பெற்ற ஆளுடைய பிள்ளையார் திருப்பாட்டில் இரண்டு கூறி நிறுத்துதும். " பொன்னம்பூங் கழிக்கானற் புணர்து ணையோடுடன்வாழும் அன்னங்காள் அன்றில்காள் அகன்றும்போய் வருவீர்காள் கன்னவில்தோட் சிறுத்தொண்டன் கணபதீச் சரமேய இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே"5 " சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளம் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம் பிறையாளன் றிருநாமம் எனக்கொருகாற் பேசாயே"6  13. திணைமயக்கம் " திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே நிலனொருங்கு மயங்குத லின்றென மொழிப புலனன் குணர்ந்த புலமை யோரே"1 " உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே"2 " எந்நிலை மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும்"3 என்னும் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரங்கள் திணைமயக்கம் உணர்த்த எழுந்தன. " முத்திறப் பொருளுந் தத்தந் திணையொடு மரபின் வாராது மயங்கலு முரிய"4 என்னும் அகப்பொருள் விளக்கச் சூத்திரமும் அது. இவை ஒரு நிலத்தில் வேறு திணைக்குரிய உரிப்பொருளாகிய ஒழுக்கமும் கருப்பொருள்களும் மயங்கிவருதலையே பெரும்பான்மை உணர்த்துவன என்பது இவற்றின் உரையால் அறியலாகும். அங்ஙனம் மயங்கி வருதற்குச் சங்கத்துச் சான்றோர் செய்யுட்களி லிருந்து உரையாளர்கள் பல உதாரணங் காட்டியுள்ளார்கள். கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டினுள் வேறு திணைக்குரிய பூக்கள் மயங்கி வந்தவாறுங் காண்க. இப்பொழுது திணைமயக்கமென்று பலரால் அறியப் படுவது அகப்பொருள் கூறும் இத்திணைமயக்கமன்று: ஒருநிலம் மற்றொரு நிலத்துடன் நெருங்கியிருத்தலால் ஒன்றற்குரிய கருப் பொருள்கள் முதலியன மற்றொன்றிற் சென்று பொருந்துதல் என்பதே. சேரன்செங்குட்டுவன் கண்ணகிக்குக் கற்கால்கொண்டு நீர்ப்படை செய்து மீளுமுன் அவன் மனைவி வஞ்சி நகரத்தின் அரண்மனையில் பள்ளிக்கட்டிலின் மீது துயிலின்றியிருத்தலை வருணிக்கும் இளங்கோவடிகள், " குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்"1 " தொடுப்பே ருழவ ரோதைப் பாணியும்"2 " கோவல ரூதுங் குழலின் பாணியும்"3 " வெண்டிரை பொருத வேலைவா லுகத்து"4 " அஞ்சொற் கிளவிய ரந்தீம் பாணியும்"5 " ஓர்த்துட னிருந்த கோப்பெருந் தேவி"6 என்று கூறி, நால்வகை நிலமும் வஞ்சிக்கு அணிமையில் இருத்தலை விளக்கினார். அரும்பதவுரைகாரரும் ஓர்த்து உறங்காத தேவி யென்றது நாலுநில அணிமையுங் கூறிற்று என்றார். இங்ஙனம் ஒரு நாட்டின்கண் நிலங்கள் ஒன்றோடொன்று நெருங்கி அவற்றின் கருப்பொருள் முதலியன மயங்கியிருத்தலை அந்நாட்டிற்கு ஓர் சிறப்பாகக் கொண்டு புலவர்கள் அழகுறப் புனைந்து கூறி வந்திருக்கின்றனர். சங்கச் செய்யுளாகிய பொருநராற்றுப்படையில் கஅய-முதல் உஉரு முடியவுள்ள அடிகளில் இத்திணை மயக்கம் கூறப்பட்டிருக்கிறது. அதில் ஒருபகுதி பின்வருவது: " தேனெய்யொடு கிழங்குமாறியோர் மீனெய்யொடு நறவுமறுகவும் தீங்கரும்போ டவல்வகுத்தோர் மான்குறையொடு மதுமறுகவும், குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல் நறும்பூங் கண்ணி குறவர் சூடக், கானவர் மருதம் பாட, அகவர் நீனிற முல்லைப் பஃறிணை நுவலக் கானக்கோழி கதிர் குத்த, மனைக்கோழி தினைக்கவர, வரைமந்தி கழிமூழ்கக், கழிநாரை வரையிறுப்பத், தண்வைப்பின் நானாடுகுழீஇ"7 குறிஞ்சி நிலத்துக் குறவர் தேனையும் கிழங்கையும் நெய்தனிலத் திலேவிற்று அங்குள்ள மீனின் நெய்யும் மதுவும் வாங்குதலும், மருதநிலத்துக் களமர் கரும்பையும் அவலையும் குறிஞ்சி நிலத்தில் விற்று அங்குள்ள மான்றசையும் தேனும் கொள்ளுதலும், நெய்தனிலத்துப் பரதவர் குறிஞ்சிப் பண்பாடுதலும், குறிஞ்சிநிலத்துக் குறவர் நெய்தற்பூச் சூடுதலும், முல்லைநிலத்து ஆயர் மருதப் பண்ணும் மருத நிலத்தாராகிய அகவர் முல்லைப்பண்ணும் பாடுதலும், முல்லையிலுள்ள கோழி மருதத்தில் நெற்கதிரையும், மருதத் திலுள்ள மனைக்கோழி குறிஞ்சி சார்ந்த முல்லையிலுள்ள தினையையும் கவர்ந்துண்டலும், குறிஞ்சியிலுள்ள மந்தி நெய்தலின் கழியில் மூழ்குதலும், நெய்தலின் கழியிலுள்ள நாரை குறிஞ்சி யிடத்து மலையிற் சென்று தங்குதலும் இயற்கை நெறி பிறழாமல் இதிற் கூறியிருப்பது கற்பார்க்குப் பெரியதோர் இன்பம் பயப்பதாகும். " கொடிச்சியர் புனத்தயற் குறிஞ்சி நெய்பகர் இடைச்சியர் கதுப்பயற் கமழும்; ஏழையங் கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த் தொடுத்தலர் பிணையலார் குழலுட்டோன்றுமே"1 " கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப் புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே குலவுகாற் கோவலர் கொன்றைத் தீங்குழல் உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே"2 இவ்விரண்டும் சூளாமணிச் செய்யுட்கள் (33, 34). முல்லை நிலத்து ஆய்ச்சியர் குறிஞ்சிப்பூவையும் நெய்தனிலத்து நுளைச்சியர் மருதத்துப் பூவையும் சூடிக்கொள்வர் என்றும், நெய்தனிலத்து நுளையர் பறையோசையால் மருத நிலத்து உழவர் குரவை விளக்கமுறும் என்றும், முல்லைநிலத்துக் கோவலர் குழலிசையால் குறிஞ்சி நிலத்து அசுணமா உறங்கும் என்றும் இவற்றிற் கூறப்பட்டமை காண்க. இனி, தெய்வமணக்குஞ் செய்யுளியற்றவல்ல சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தே தொண்டை நாட்டின் வளமுரைக்குமிடத்து ஆறு செய்யுட்களில் திணைமயக்கங் கூறியுள்ளார். அவற்றுள் ஒன்று பின்வருவது: " கவரு மீன்குவை கழியவர் கானவர்க் களித்துச் சிவலுஞ் சேவலு மாறியுஞ் சிறுகழிச் சியர்கள் அவரை யேனலுக் கெயிற்றியர் பவளமுத் தளந்தும் உவரி நெய்தலும் கானமுங் கலந்துள வொழுக்கம்"1 நெய்தனிலமாக்கள் மீனினங்களைப் பாலைமாக்களுக்கு விற்று அவரிடமிருந்து சிவலும் சேவலும் வாங்குவர் என்றும், பாலைநில மகளிர் அவரை தினைகளை நெய்தல் மகளிர்க்கு விற்று அவரிட மிருந்து பவளமும் முத்தும் வாங்குவர் என்றும் இதிற் கூறப்பட்டுளது. இப்பாட்டில் அமைந்துள்ள சில நுண்பொருள்கள் அறியற்பாலன. ஈண்டுக் கானவரென்பார் பாலைமாக்கள். பாலையாவது முல்லையும் குறிஞ்சியும் கலந்து திரிந்ததென்பது. " முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலையென்பதோர் படிவங் கொள்ளும்"2 என்னும் சிலப்பதிகார அடிகளால் அறியலாகும். சேக்கிழார் குரிசிலோ " கோல முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்கள் நீல வாட்படை நீலிகோட் டங்களு நிரந்து கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப் பாலை யுஞ்சொல லாவன வுளபரன் முரம்பு"3 என்று கூறி வைத்துள்ளார். இங்ஙனம் முல்லையும் குறிஞ்சியும் பாலையாயினமையின் அவ்விரு திணைக்குமுரிய கருப்பொருள்கள் பாலைக்குரியவாதல் சாலும். இக்கருத்தானே முல்லைக்குரிய சிவலும் அவரையும், குறிஞ்சிக்குரிய குயிற்சேவலும் தினையும் இதிற் பாலைக்குரியவாகக் கூறப்பட்டனவென்க. இச்செய்யுளிலுள்ள மற்றொரு நயம் திணை மயக்கமுணர்த்தும். இதனில், சொற்களையும் மயங்கவைத்திருப்பதாகும். எயிற்றியர் அவரையேனலுக்குச் சிறுகழிச்சியர்கள் பவளமுத்தளந்தும் எனநிற்கற்பாலவாகிய சொற்கள் மாறி மயங்கி நிற்றல் காண்க. இனி, பரஞ்சோதிமுனிவர், சிவஞானமுனிவர், கச்சியப்ப முனிவர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் முதலானோர் பாடிய திணை மயக்கங்களுக்கு அளவில்லை. அவற்றையெல்லாம் இங்கு எடுத்துக் காட்டப்புகின் இவ்வுரை மிகவிரியுமாகலின், அணிமைக் காலத்திருந்த அறிஞர் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மனோன்மணியத்திலுள்ள திணைமயக்கப் பகுதியொன்றைமாத்திரம் காட்டி இதனை முடிக்குதும். " வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச் செந்தமிழ் வழங்கும் தேயமொன் றுளது: அதன் அந்தமில் பெருவளம் அறிவார் யாரோ மருதமும் நெய்தலும் மயங்கி அங்கெங்கும் புரையறு செல்வம் நிலைபெற வளரும்; மழலை வண்டானம் புலர்மீன் கவர, ஓம்புபு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி புன்னைநுண் டாதாற் பொன்னிறம் பெற்ற எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும் அலைகடற் காக்கைக்கு அலக்கண் விளைக்கும்; கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித் தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கு அலர்த்தாதே: வால்வளை சூல்உ ளைந்து ஈன்றவெண் முத்தம் ஓதிமக் குடம்பையென்று உன்னுபு காலாற் பருந்தினம் கவர்ந்து சென்று அடம்பிடைப் புதைக்கும்; கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக் கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்; அலமுகம் தாக்குழி அலமரும் ஆமை நுளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில் வழித்தெறி குங்குமச் சேற்றிடை ஒளிக்கும்; பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில் நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா; வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில் உப்பார் பஃறி யொருநிறை பிணிப்பர்; இப்பெருந் தேயத்து எங்கும் இராப்பகல் தப்பினும் மாரி தன்கடன் தவறா; கொண்மூ வென்னும் கொள்கலம் கொண்ட அமிழ்தினை அவ்வயின் கவிழ்த்தபின் செல்வுழி வடியும் நீரே நம்மிடிதீர் சாரல்; நன்னீர்ப் பெருக்கு முந்நீர் நீத்தமும் எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில் நடுக்கடல் நன்னீர் சுவைத்திடும் ஒருபால்; மரக்கலம் வந்திடும் வயற்கரை ஒருகால்"1  14. இளங்கோவடிகளும் பொருளிலக்கணமும் "குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட" இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேரர் பெருமான் மக்களுள் இளவலும், வேத்து முனியுமாகிய இளங்கோவடிகள் முத்தமிழ்ப் புலமையும் நிரம்பிய வித்தகக் கவியரசர் என்பது அவரியற்றிய பழுதற்ற முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதி காரத்தால் நன்கு துணியப்படுவதாகும், இத்தொடர் நிலைச் செய்யுளில் இயற்றமிழின் பகுதியாகிய பொருளிலக்கணத்தை, அடிகள் எங்ஙனம் கையாண்டுள்ளனரெனச் சில எடுத்துக் காட்டுக்களால் விளக்குவது இச் சிற்றுரையின் நோக்கம். இக்காப்பிய முழுதும் பொருட் பகுதிகள் பலவும் விரவி அமைந்து கிடத்தலை இதன் பதிகத்தொடக்கத்தே அடியார்க்கு நல்லார் விரித்துள்ள உரையால் இனிதுணரலாகும். அவர் அகப் பொருட்டிணை களாகிய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைக்குரிய நிலனும், பொழுதுமாகிய முதற் பொருள்களும், தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, தொழில், யாழ், பண், நிலமக்கள், நீர்நிலை, வார்கொடி, பூ என்னும் கருப்பொருள்களும், இருத்தலும் அதன் நிமித்தமும் முதலாகிய உரிப்பொருள்களும் இதன்கண் அமைந்து கிடத்தலை எடுத்துக்காட்டி, அதன் முடிவில், "இச் சொல்லப்பட்ட ஐந்திணையின் முதல் கருஉரிப்பொருளும் பிறவுமாகிய அகத்திணைப் பொருட் பயன் உடம்பொடு புணர்த்தி யுணர்த்திப் புறத்திணைப் பொருட்பயனும் பிறவும் இவ்வாறு உடம்பொடு புணர்த்தியுணர்த்துங்காற் புனைந்துரைக்கப்பட்டுக் கேட்போர்க்கு இன்பம் பயவாது உணர்வு சலிக்குமாதலின் வந்தன வந்துழிக் காட்டுதலைக் கருதிற்று இவ்வுரை யென்க" எனக் கூறினர். அகப் பொருட்பகுதி பலவும் ஆண்டே அவராற் காட்டப் பெற்றனவாகலின் அவற்றை விடுத்து, அவ்வுழி அவர் காட்டாது விடுத்த புறப்பொருட் பகுதியுள் ஒரு சிலவே ஈண்டுக் காட்ட நிற்பன. சிலப்பதிகார இந்திர விழ'd2வூரெடுத்த காதையில் சோழன் கரிகாற் பெருவளவன் வடதிசைமேற் படையெடுத்துச் சென்ற வரலாறு. " இருநில மருங்கிற் பொருநரைப் பெறாஅச் செருவெங் காதலிற் றிருமா வளவன் வாளுங் குடையு மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகவிம் மண்ணக மருங்கினென் வலிகெழு தோளெனப் புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள் அசைவி லூக்கத்து நசைபிறக் கொழியப் பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென இமையவ ருறையுஞ் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி யொற்றிக் கொள்கையிற் பெயர்வோர்க்கு."1 என இளங்கோவடிகளாற் கூறப்பெற்றுளது. கரிகாலனது இப்படையெடுப்பானது புறத்திணையுள் எதன்பாற் படுமென்பது ஆராய்ச்சிக்குரியது. புறத்திணை இலக்கணப்படி போர் மேற் செல்லுதற்குரிய காரணத்தையேனும், திணைப் பெயரை யேனும், திணைக்குரிய அடையாளப் பூவையேனும் ஆசிரியர் ஈண்டுக் கூறாது, 'வாளும் குடையும் மயிர்க்கண் முரசும், நாளொடு பெயர்த்து' என்னும் துறைக் குறிப்பால் இஃது இன்ன திணையாகு மென்பதனை உய்த்துணர வைத்திருக்கின்றார். நாளொடு பெயர்த்தலாவது நாட் கொள்ளுதல். அஃது இன்னதென் பதனை நாட்கோடலாவது நாளும் ஓரையும் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு இடையூறு தோன்றிய வழித் தனக்கு இன்றிய மையாதனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்ல விடுதல்" என நச்சினார்க்கினியர் விளக்கி யிருப்பது கொண்டு அறிக. எனவே, கரிகால்வளவன் தான் போர்க் கோலம், பூண்டு, வடதிசை நோக்கிப் புறப்படுமுன் தன்னுடைய வெற்றிவாள், கொற்றக்குடை, வீரமுரசு என்பவற்றை நன்னாளின் நன்முழுத்தத்தில் வடதிசை நோக்கிப் புறப்பட விடுத்தான் என்பது பெற்றாம். இனி, இங்ஙனம் வாள்நாட் கொள்ளுதல் முதலியன எத்திணையின் பாற் படுமென ஆராய்வுழி ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தின் படி உழிஞைப்பாற்படுமெனல் போதருகின்றது. என்னை? அவர் உழிஞைத் திணையின் துறைப்பகுதி கூறும் நூற்பா ஒன்றின் மாத்திரம் "குடையும் வாளும் நாள் கோள்" எனக் குடைநாட் கோளும் வாணாட் கோளும் கூறிப் பிறிதோரிடத்தும் கூறாமையின் என்க. ஆசிரியர் நச்சினார்க்கினியர் வஞ்சித்திணைக்கும் இவை உரிய வென்னும் கருத்தினராயினும், உழிஞைக்குப்போல வஞ்சிக்கு இவை இன்றியமையாதனவல்ல என்பதும் அவர் கருத்தாதல் "இயங்குபடையரவம்" என்னும் சூத்திரவுரையால் அறியப்படும். அவர், இவை வஞ்சிக்கு இன்றியமையாதனவன்மையின் "இயங்கு படை யரவம்" என்பதனுள் அடங்க வைத்து, உழிஞைக்கு இன்றியமையாமையின் ஆசிரியர் ஆண்டுக் கிளந்தோதினர் என்பர். பன்னிரு படலத்தின் வழி நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலையுடையாரோ வஞ்சி, காஞ்சி, உழிஞை என்னும் மூன்று திணைக்கண்ணும் குடை நாட்கோளும், வாணாட் கோளும் கூறுவர். இவற்றுட் காஞ்சியை வஞ்சியின் பால் அடக்கினும் வஞ்சி, உழிஞை, என்னும் இருதிணைக்கு அவ்விரு துறையும் உரிய வென்பது அவர் கருத்தாகும். சிலப்பதிகாரத்திற் போந்த எழுத்தின் றிறனறிந்தும் இன்சொற் பொருளின் அழுத்தந்தனை; அறிந்தும் இப்படியார்க்கு நல்லுரை பாலித்த அடியார்க்கு நல்லார் 'வாளுங் குடையும் - நாளொடு பெயர்த்து" என்னுந் தொடர்க்குச் சிறப்புரை கூறுமிடத்து வெண்பாமாலையின் வஞ்சிப் படலத்தில் அவ்விரு துறைக்கும் அமைந்த, " செற்றார்மேற் செலவமர்ந்து கொற்றவாணாட் கொண்டன்று"1 " பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக் கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று"2 என்னும் கொளுக்களையும், " அறிந்தவ ராய்ந்தநா ளாழித்தேர் மன்னன் எறிந்தில கொள்வா ளியக்கம் - அறிந்திகலிப் பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு நன்பகலுங் கூகை நகும்.3 " முன்னர் முரசிரங்க மூரிக் கடற்றானைத் துன்னருந் துப்பிற் றொழுதெழா - மன்னர் உடைநாளு லந்தனவா லோதநீர் வேலிக் குடைநா ளிறைவன் கொள".4 என்னும் வெண்பாக்களையும் மேற்கோளாகக் காட்டியிருப்பதி லிருந்து அவர் கரிகாலனது போர்ச் செலவை வஞ்சித்திணையின் பாற் படுத்தனர் போலும் எனக் கருத இடனுண்டாகின்றது. அவர் கருத்து யாதாயினும் கரிகாலன் கூடார் மண்கொளல் கருதியோ, அன்றித் தனது மண்ணினைக் கொள்ளுதல் கருதிய மாற்றாரோடு பொருதல் குறித்தோ புறப்பட்டானென்பது சிறிதும் பெறப்படாமையின் அதனை வஞ்சி யென்றல் பொருத்தமுடைத்தன்று. இனி, திருமாவளவன் போரிலேமிகு விருப்புடையனாகலின் வடதிசை நோக்கிப் போயினன் என்பது கொண்டு அதனைத் தும்பைத்திணை என்னலாமெனின், ஆசிரியர் ஒருவரும் வாணாட் கோடல் முதலியவற்றை அத்திணைக்குக் கூறாமையின் அங்ஙனமுரைப்பதும் பொருந்துவதன்றாம். இவ்வாற்றால், கரிகாலனது வடதிசைப் படையெடுப்பு உழிஞைத் திணையா மென்றலே செவ்விது. ஆயின், 'முழுமுதலரணம் முற்றலும் கோடலும்' ஆகிய உழிஞையிலக்கணந்தானும் அதன்கட் பெறப்பட்டிலதேயெனின், இமயமலையானது குறுக்கிட்டு விலக்கிற்றென்று அவன் முனிந்து அதன் பிடரிலே தனது புலியைப் பொறித்து மீண்டான் என்று சொல்லப்படுதலின் அதனையே பகைவரது அரண்முற்றிய செயலாகக் கொண்டு உழிஞையிலக்கணம் பொருந்தியுள்ளவாறு காண்க. மற்று, அதனை உழிஞை என்பதற்கு வேறு ஏதுக்களும் உள. ஆசிரியர் தொல்காப்பியனார் குடைநாட்கோளும் வாள் நாட்கோளும் கூறினாரன்றி, முரசு நாட்கோள் என ஒன்று கூறினாரல்லர். வெண்பா மாலையுடையாரும் அங்ஙனமே முரசு நாட்கோள் கூறிற்றிலரேனும், உழிஞைப் படலத்தில் வாணாட் கோள் என்னும் துறையை அடுத்து முரசவுழிஞை என்பதோர் துறை கூறியுள்ளார். எனவே, இளங்கோவடிகள் கூறிய முரசு நாட்கோளுக்கு வெண்பாமாலையின் உழிஞைப் படலத்தில் மாத்திரமே ஒருவாறு இலக்கணம் காணப்படுதலானும், செங்குட்டுவனது வடதிசைமேற் செலவை வஞ்சியின்பாற் படுத்துரைக்கக் கருதிய அடிகள் இதனோடு அதனிடை வேற்றுமை புலப்பட " இருநில மருங்கின் மன்னரெல் லாநின் திருமலர்த் தாமரைச் சேவடி பணியும் முழுத்த மீங்கிது முன்னிய திசைமேல் எழுச்சிப் பாலை யாகென் றேத்த மீளா வென்றி வேந்தன் கேட்டு வாளுங் குடையும் வடதிசைப் பெயர்க்கென"1 என்று கால்கோட் காதையில், செங்குட்டுவற்கு வாணாட் கோளும் குடைநாட்கோளும் கூறி, முரசு நாட்கோள் கூறாமை யானும் கரிகாலனது போர்ச்செலவு உழிஞைத்திணையா மென்பது வலியுறுதல் காண்க. இன்னும் முரசு நாட்கோளுக்கு அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டிய "மாசற விசித்த" என்னும் புறப்பாட்டில், " மஞ்ஞை ஒலிநெடும் பீலியொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை"1 என உழிஞைமாலை கூறப்பட்டிருத்தல் இதனை நன்கு வலியுறுத்து மாறும் காண்க. இதனால் அடியார்க்குநல்லாரும் இது உழிஞை யன்றென்னும் கருத்தினரெனத் துணிதல் செல்லாதென்க. இனி, இதுகாறும் காட்டியவற்றிலிருந்து இளங்கோவடிகள் தொல்காப்பியத்தையே யன்றிப் பன்னிரு படலத்தையும் தழுவியுள்ளாரென்பது போதரும். எனினும், " பொன்புனை யுழிஞை சூடி மறியருந்துந் திண்பிணி முரச நிலையுரைத்தன்று"2 என்னும் வெண்பாமாலையின் முரச வுழிஞைக் கொளுவானும். "குருதி வேட்கை யுருகெழு முரசம்"3 என்னும் புறப்பாட்டடியானும் வீரமுரசிற்குப் பலியூட்டுதல் பெறப் படுவதன்றி, அதனை நாட்கொண்டு பெயர்த்தல் பெறப்படாமையின், அடிகள் இவ்விரு நூலேயன்றி அக்காலத்து வழங்கிய வேறு நூல்களினும் இலக்கணங் கண்டோ, அன்றித் தற்காலத்து வேந்தரது வழக்கிற்கண்டோ வீரமுரசினை நாட்கொள்ளுமாறும் கூறிப்போந்தனரென்க. இங்ஙனமே, தொல்காப்பியம் முதலிய வற்றின் வேறாக அடிகள் தங்கோள்கையை நாட்டிச்செல்லுதல் பிறாண்டும் காணப்படும்.  15. தொல்காப்பிய ஆராய்ச்சி நூலாசிரியர் வரலாறு 1. தொல்காப்பியர் ஜமதக்கினி மைந்தரென்பதும் அகத்தியர் மாணாக்கரென்பதும் பொருந்துமா என்னும் ஆராய்ச்சி. அறிவு சான்ற ஆன்றோர்களே! இவ்வாராய்ச்சியுரைக்குப் பொருளாகவுள்ள தொல்காப் பியத்தில், " அவையடக்கிலே அரிறவத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினேன் றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே" என அவையடக்கத்திற்கு இலக்கணம் கூறப்பட்டிருத்தலின், யானும் அம்முறை பற்றி என் உரைகளிலுள்ள குறைகளை நுங்கள் சீரிய மதியாற் செப்பஞ் செய்து கொள்கவென வேண்டி, எனது ஆராய்ச்சியைத் தொடங்குகின்றேன். இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்கள் எல்லாவற்றுள்ளும் காலத்தால் முந்தியதும், தமிழியல் அனைத்தையும் முற்றவெடுத்துக் கூறுவதும் தொல்காப்பியமே என்பது தமிழ்வல்லார் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த கருத்தாகும். இந்நூலினை நன்கு ஆராய்தலானே தமிழ் மொழியின் இயல்புகளையும், தமிழகத்தின் பழைய நிலைமை களையும் ஒருவாறு காண்டல் கூடுமென்பதில் ஐயமில்லை. யான் இவ்வாராய்ச்சியை நடாத்துழிப் பண்டை நூல், உரையாசிரியன்மார் கொண்ட கொள்கைகளுக்கு ஒரோவழி மாறாகச் செல்லுதலுங் கூடும் அன்றி, இதுகாறும் யான் கொண்டிருந்த கருத்துக்கு முரணாகவும் சில இருத்தல் கூடும். ஆராய்ச்சியின் பெற்றி இதுவெனவறிந்த அறிவுடையார் இவை குறித்து என்னை முனியாரென்னும் துணிவுடையேன். இந்நூலின் ஆசிரியராகிய தொல்காப்பியர் சமதக்கினி முனிவர்க்கு மைந்தர் என்றும், அகத்தியனார்க்கு மாணாக்கர் என்றும் கூறப்படுகின்றார். இவற்றுள் முன்னையதற்கு ஆதரவு, உரையாசிரிய ரெல்லாருள்ளும் பின் வந்தவராகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர், தொல்காப்பியப் பாயிரவுரையில், "தேவ ரெல்லாருங் கூடி யாம் சேரவிருத்தலின் மேருந்தாழ்ந்து தென்றிசையுயர்ந்தது, இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற் குரியரென்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர் யமதங்கியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபாமுத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப், பெயர்ந்து... பொதியிலின் கணிருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி, திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி 'நீ சென்று குமரியாரைக் கொண்டு வருக' எனக் கூறினர்" என உரைத்திருக்கும் கதையன்றி வேறில்லை. அகத்தியனார் எனப் பெயரிய தமிழாசிரியர் ஒருவர் பண்டு விளங்கியிருந்தனரென்பதற்கும், முத்தமிழ்க்கும் இலக்கணமாக அவரால் இயற்றப் பெற்றதொரு விரிந்த நூல் அகத்தியமென்னும் பெயருடன் திகழ்ந்ததென்பதற்கும் அளவிறந்த சான்றுகள் உள்ளன. அவற்றை நான் எழுதிய 'அகத்தியர்' என்னும் உரை நூலில் விரிவாகக் காட்டியுள்ளேன். ஈண்டுச் சிலவற்றைக் குறிப்பிடு கின்றேன். இறையனார் களவியல் உரையில் முச்சங்க வரலாறு கூறு மிடத்து, தலைச்சங்கப் புலவருள்ளும் இடைச்சங்கப் புலவருள்ளும் அகத்தியனார் முதலில் வைத்துக் கூறப்படுகின்றனர். அகத்தியம் முச்சங்கத்தார்க்கும் நூலாயிருந்ததெனவும் அதிற்கூறப்பெற்றுளது. பின் வந்த உரையாளர்கள் பலரும் அகத்தியனாரைப்பற்றியும் அகத்தியத்தைப் பற்றியும் ஆண்டாண்டுக் குறிப்பிட்டிருப்பதுடன், அகத்தியமெனச் சிற்சில நூற்பாக்களையும் எடுத்துக் காட்டியிருக் கின்றனர். "தரவின்றாகித் தாழிசை பெற்றும்" என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரவுரையில் 'இனி இவ்வாறு வந்த கொச்சகங்களையெல்லாம் ஒரு வரையறைப் படுத்துப் பாத்தோறும் இனஞ்சேர்த்திப் பண்ணிற்குத் திறம் போலப் பின்னுள்ள. ஆசிரியர் அடக்குவர். அதனை அகத்தியமும் தொல்காப்பியமும் உணர்ந்து அவர்தம் கருத்தறிந்த ஆசிரியர் அவ்வாறடக்காமைக்குக் காரணங் கூறுவர்' என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். அவ்வாசிரியர் கூறுங் காரணம் இவையென அவர் பின்பு எடுத்துக் காட்டியவை யெல்லாம் பேராசிரியருரையாக விருத்தலின், அகத்தியமும் தொல்காப்பியமும் உணர்ந்தவரென அவராற் சுட்டப்பெற்றவர் பேராசிரியரேயென்பது துணிபு. "ஆங்ஙனம் விரிப்பின்' என்னும் செய்யுளியற் சூத்திரவுரையில் 'இஃது எற்றாற் பெறுதுமெனின், இதன் முதனூல் செய்த ஆசிரியன் அகத்தியனார் சொல்லுமாற்றாற் பெறுதும் என்றவாறு" எனப் பேராசிரியர் தாமே கூறியிருப்பதும் இதனை வலியுறுத்தும். இதிலிருந்து கடைச்சங்க காலத்தின் பின் நெடுநாள் வரை அகத்தியம் வழங்கி வந்ததென்று துணிந்து கூறலாகும். எனினும் அதற்கு யாரும் உரை கண்டாரெனத் தெரியாமையின், உரை யாளர்கள் காலத்தில் அந்நூல் முழுவுருவுடன் காணக் கூடாதவாறு சிதைந்து போயிற்றென்று கருதுதல் சாலும். இனி, தலைச்சங்கப் புலவராயிருந்து தமிழிலக்கணம் இயற்றிய இவ்வகத்தியரும், முனிவர் பலருள்ளும் சிறந்தவராக வைத்துப் புராணவிதிகாசங்கள் கூறும் அகத்தியரும், இருக்கு வேதப்பதிகங்களிற் பலவற்றை இயற்றிய அகத்தியரும் ஒருவரென்றோ, வெவ்வேறாவர் என்றோ அறுதியிட்டுரைத்தல் மிக அரிதாகும். அகத்தியர் என்பது ஓர் குடும்பப் பெயரே என்றும், அப் பெயருடையார் பலர் இருந்திருக் கின்றனர் என்றும், முதலில் விந்தமலையின் வடக்கில் ஓர் அகத்தியரும், இராமாயண காலத்தில் கோதாவரியாற்றங்கரையில் ஓர் அகத்தியரும், பாரத காலத்தில் பொதியின் மலையில் மற்றோர் அகத்தியரும் இருந்துளாரென்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றொரு சாரார் அகத்தியர் பெயரினர் பலரெனக் கூறுவதுடன் தலைச்சங்கத்து அகத்தியர் இருந்தாரென்பது தவறு என்றும், நக்கீரனார்க்கு இலக்கணம் அறிவுறுத்துவராகத் திருவிளையாடற் புராணம் கூறுகின்ற அகத்தியரொருவர் கடைச்சங்க நாளில் இருந்தாராவரென்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்தம் கூற்றுக்கு யாதொரு ஆதாரமும் காட்டப்படவில்லை. ஒரே பெயருடைய பலர் ஒருபெற்றியே நிகரற்ற பெருமை வாய்ந் திருந்தனர் என்பது புதுமையாகத் தோற்றினும் அங்ஙனம் நிகழ்தல் கூடாதென்பதில்லை. எனினும் அவர் ஒருவரல்லர் என்பதற்குச் சான்று இன்றியமையாததன்றோ? எந்த நூல்களின் வாயிலாக அகத்தியர் என்னும் பெயரை நாம் அறிகின்றோமோ அந்த நூல்களனைத்தும் அகத்தியரை ஒருவராகவே வைத்துக் கூறுகின்றன. அப்பெயரினர் பலரென்பதற்குத் தினையளவு சான்றும் காணப்படவில்லை. விந்தத்திற்கு வடக்கிலிருந்த அகத்தியரையும் பொதியில் அகத்தியரையும் ஒருவராகவே கந்த புராணம் முதலியன கூறுகின்றன. கோதாவரி மருங்கிருந்த அகத்தியரும் பொதியிலகத்தியரும் வேறல்லரென்பது இராமாயணத்தால் அறியப்படும். " நீண்ட தமிழாலுலகை நேமியினளந்தான்" " தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்" " என்றுமுள தென்றமி ழியம்பியிசை கொண்டான்" என அகத்தியப் படலத்துக் கம்பர் கூறுமாறுங் காண்க. மற்றும் அவர் 'விந்தமெனும் விண்டோய் நாகமது நாகமுற நாகமென நின்ற' மையும், 'ஈசனிக ராயுலகு சீர்பெற விருந்த' மையும் கூறுதலும் கருதற்பாற்று. அகத்தியர் பலரென்பார், முன்னுள்ள நூலாசிரியர் பலரும் பெயரொருமையால் மருண்டு அகத்தியரொருவரெனக் கொண்டு வழுவி விட்டனரெனக் கூறுங்கடப்பாடுடையராகின்றனர். அஃது எவ்வாறாயினும் ஆகுக. இராம ராவணப் போருக்கு முன்னரே அகத்தியர் பொதியிலின் கண் இருந்தன ரென்பதையும், அவரே அகத்திய மியற்றிய தமிழாசிரியராவாரென்பதையும் நமக்குக் கிடைத் துள்ள ஆதரவுகளனைத்தும் வலியுறுத்துகின்றன. காவிரிப் பூம்பட்டினத்திலிருந்த காந்தன் என்னும் சோழ மன்னன் அரசர் குலத்தைக் களைதலையே நோன்பாகக் கொண்ட பரசுராமன் தன்னொடு போர்குறித்து வருதலையறிந்து அகத்திய முனிவரைச் சரணடைந்தானென்று மணிமேகலைக்காப்பியங் கூறுவதும், அகத்தியர் இராவணனை வென்று போக்கியதாகத் தொல்காப்பிய உரையிலும் மதுரைக் காஞ்சியுரையிலும் நச்சினாக்கினியர் கூறுவதும் போல்வன வெல்லாம் இக்கருத்தை அரண் செய்து நிற்றல் காண்க. இனி, தொல்காப்பியனார் அகத்தியர்க்கு மாணாக்கர் தாமோ என்பது ஆராய்தற்குரியது. தமிழுரைகளில் முற்பட்ட தாகிய இறையனார் களவியலுரையானது தொல்காப்பியரை இடைச்சங்கத்துப் புலவராகவும், தொல்காப்பியத்தை இடைச் சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாகவும் கூறுவதன்றி அவரை அகத்தியனாரொடு தொடர்புபடுத்து யாதும் கூறிற்றிலது. " மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன்" என வரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரமே முதன் முதலாகத் தொல்காப்பியரை அகத்தியர் மாணாக்கர் என்று கூறுகின்றது. இதனைப் பின்பற்றியே பின்வந்த உரையாசிரியர் சிலரும் கூறுவாராயினர். வெண்பா மாலைக்கு முதனூலாகிய பன்னிருபடலம் களவியலுரைப் பாயிரத்தில் அளவினாற் பெயர் பெற்றதற்கு உதாரணமாகக் காட்டப்பட்டிருத்தலின் இந்நூல்கள் கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவையல்ல வென்று கருதல் பொருந்தும். எனினும் தொல்காப்பியர் முதற் பன்னிரு புலவரும் சேர்ந்தியற்றியது பன்னிரு படலம் என்பதில் இளம்பூரண வடி களும், நச்சினார்க்கினியரும் கருத்தொருப்படாதவராகின்றனர். தொல்காப்பியப் புறத்திணையியலுரையில் இளம்பூரணர் "அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில் மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல் என்னும் தந்திரவுத்திக்கும் பொருந்தாதாகி, மிகை படக்கூறல், தன்னானொரு பொருள் கருதிக் கூறல் என்னுங் குற்றமும் பயக்கும் என்க" என்றும், "பன்னிரு படலத்துள் 'தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்-றன்னவிருவகைத்தே வெட்சி' என இரண்டு கூறு படக் கூறினா ராயினும்... அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால் பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினார் என்றல் பொருந்தாது" என்றும், "பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சில துறை கூறினாரால் எனின், புண்படுத்தல் மாற்றோர் செய்த மறத்துறை யாகலின் அஃது இவர்க்கு மாறாகக் கூறுதல் மயங்கக்கூறுதலாம்; ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும், குன்றக் கூறலும், மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக் காட்டின் பெருகுமாகலின் உய்த்துணர்ந்து கண்டு கொள்க" என்றும் இங்ஙனம் பலவிடத்தும் பன்னிரு படலத்தை மறுத்திருப்பதுடன், வெட்சிப்படலம் தொல்காப்பியனார் கூறியதன்றெனத் துணிந்தும் உரைத்துள்ளார். நச்சினார்க்கினியரும் பன்னிரு படலக் கொள்கையைப் பலவிடத்து மறுத்திருப்பதுடன், 'கொடுப்போரேத்தி' என்னும் சூத்திரவுரையில் "தத்தம் புது நூல் வழிகளாற் புற நானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறைகூற வேண்டுமென்றுணர்க" எனவும் உரைத் துள்ளார். இவற்றிலிருந்து பன்னிரு படலம் என்பது பிற்காலத்து யாரோ ஒருவரால் இயற்றப்பெற்று, அகத்தியர் மாணாக்கர் பன்னிருவராலும் இயற்றப்பெற்றதெனக் கட்டியுரைக்கப்பட்ட தென்பதே அவர்கள் கருத்தாதல் பெறப்படும். 'வினையினீங்கி' என்னும் மரபியற் சூத்திரவுரையிற் பேராசிரியர் "பன்னிரு படலத்துப் புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப்பட்டது" என்று கூறியிருத்தல் ஊன்றியுணரின் அவர் கருத்தும் இதுவென்பது போதரும். இவ்வாற்றால் அகத்தியர்க்கு மாணாக்கர் தொல்காப்பியர் என்னும் கொள்கையும் வலியற்றொழிதல் கண்கூடாம். தொல்காப்பியத்திலே வடசொற் களை எடுத்தாளுதற்கு விதி கூறியிருப்பதுடன் அம்போதரங்கம், குஞ்சரம், வைசியன் முதலிய வடசொற்கள் பயின்றிருப்பதும், இகர ஐகாரவீற்று திங்கட் பெயரும் நாட்பெயரும் நின்று புணர்தற்கு வழிவகுத்திருப்பதும், வழி நூல் வகையுள் மொழி பெயர்த்தியற்றலும் ஒன்றாக விதித்திருப்பதும், பிறவும் ஓர்ந்துணரின் ஆரியமக்களின் கலப்புப் பெரிதும் ஏற்பட்ட பின்னரே இந்நூல் இயற்றப் பெற்றதாகுமெனில் பொருத்தமாம். இராமாயண காலத்தில் அத்துணை மிகுதியாக ஆரியக்கலப்பு இருந்திருக்க இடமின்மையால் ஆசிரியர் அகத்தியனார்க்கு நெடுநாளின் பின்பு தொல்காப்பியம் தோன்றியதாகுமெனலே நேரிது. இவ்வாற்றால் தொல்காப்பியனார் அகத்தியனார்க்கு மாணாக்கராக்குதல் செல்லாதென்பது பெறப்படும். ஆகவே, அவர் சமதக்கினியின் புதல்வர் என்பதும், அகத்தியரால் அழைத்து வரப்பெற்றன ரென்பதும் பொருந்தாமை கூறல் வேண்டா என்க. தொல்காப்பியர் அகத்தியனார்க்கு உடன் காலத்தினரல்லராயினும் அவரது கொள்கையைப் போற்றியோரருகினமையால் அவர்க்கு மாணாக்கரெனப் பெற்றனர் எனக் கருதுதல் சாலும். இனி பாரத நிகழ்ச்சிக்குப் பின்பே தொல்காப்பியம் இயற்றப்பெற்ற தென்பதற்கு உறுதியுடைய சான்று ஒன்று உள்ளது. தொல் காப்பியத்து உயிர் மயங்கியலில், " பனையின் முன்னர் அட்டுவரு காலை நிலையின் றாகும் ஐயெனுயிரே ஆகாரம் வருத லாவயி னான." " கொடிமுன் வரினே ஐயவணிற்பக் கடிநிலையின்றே வல்லெழுத்து மிகுதி" என்னுஞ்சூத்திரங்களால் பனை என்பது கொடி என்பத னோடு புணர்த்துப் பனைக்கொடியெனச் செய்கை செய்து முடிக்கப்பெற்றுள்ளது. தமிழ் வழக்குச் செய்யுட்களில் இத் தொடர் பயின்றிருந்தாலன்றி ஆசிரியர் இங்ஙனம் விதிகூறா ரென்பது தேற்றம். தொகை நூல்களிலும் பிறவற்றிலும் நம்பி மூத்தபிரானாகிய பலராமன் பலவிடத்துக் கூறப்பட்டிருத்தல் காணலாகும். அவற்குக் கொடி பனையென்பதும் அவற்றுள் காணக்கிடக்கின்றது. "புதையிருளுடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு" எனவும், "நின்னொன் றுயர்கொடி பனை" எனப் பரிபாடலிலும் "அடல்வேந் நாஞ்சிற் பனைக் கொடி யோனும்" எனப் புறநானூற்றிலும், "பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா" என இன்னா நாற்பதிலும் கூறப்படுதல் காண்க. இவ்வாற்றால் பலராமனோடு தொடர்புடைய பாரத நிகழ்ச்சிக்குப் பின்பே இந்நூல் இயற்றப் பெற்றதாதல் ஒருதலை. பாரத காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார் பலர். பாரதப் போர் நடந்தது கி.மு.1000-ஆம் ஆண்டில் என்று ஒருவரும், கி.மு.1100-ஆம் ஆண்டில் என்று மற்றொருவரும் கூறுகின்றனர். கி.மு.1194-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தென்று சித்தூர் கோபாலையர் ஆராய்ந்துரைக்கின்றனர். R.C. தத்தர் கூறுங்காலம் இன்னுஞ் சிறிது முன்னர்ச் செல்கின்றது. C.V. வைத்தியா என்பவர் கி.மு. 3100 தான் பாரதப்போரின் காலமாமென்று பல சான்றுகளால் நிறுவுகின்றனர். துவாபர கலியுக சக்தியில் பாரதம் நிகழ்ந்ததென்னும் பரம்பரைக் கொள்கை வைத்தியர் அவர்களால் வேறு சான்றுகள் கொண்டும் நிறுவப்படுதலின் அதுவே பாரதப்போரின் காலமாகுமென யாமும் கொள்ளற்பாலம். இனி, மாபாரதப்போரின் பின்பு தொல்காப்பியம் எப்பொழுது தோன்றியதென்பது ஆராய்தற் குரியது. கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழி திருந்திய நிலையைடைந்த தின்றென்னும் கருத்துடைய ஒருவர் தொல்காப்பியம் அந்நூற்றாண்டையடுத்துத் தோன்றியதாகும் என்பர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைநேந்திரமே தொல்காப்பியப்பாயிரத்தில் ‘ஐந்திரம்’ எனக் குறிக்கப்பட்டதென்னும் கருத்துடைய ஒருசாரார் அஃது கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் உதித்ததாகும் என்பர். சாதவாகனன் என்னும் ஆந்திரமன்னனுக்கு அமைச்சனாயிருந்த சார்வவர்மனால் இயற்றப்பட்ட ‘காதந்திரம்’ என்பதே திராவிட இலக்கணங்களுக்கு வழிகாட்டிற்று எனக்கொண்ட, மற்றொரு சாரார் இந்நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்பு எழுந்ததாகுமென்பர். இங்ஙனம் ஐரோப்பிய ஆசிரியர் சிலராலும் இந்திய ஆசிரியர் சிலராலும் பலவாறாகக் கூறப்பட்டன வெல்லாம் பழங்கதையாய்ப் போனமையின் இனி அவற்றின் பொருந்தாவியல்புகளை எடுத்து விளக்குதல் வேண்டா. கடைச் சங்கத்தின் இறுதிக்காலமானது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பிற்பட்டதன்று என்பது வரலாற்றறிவுடைய தமிழ் வல்லோர் பலராலும் இப்பொழுது நன்கு துணியப்பெற்றுள்ளது. கடைச்சங்கப் புலவருள்ளே பெரும் பகுதியினர் கி.பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் இருந்தோராவர். அவர்களால் இயற்றப் பெற்ற செய்யுட்களில் சகடம், சமம், சமழ்ப்பு, ஞமலி, ஞமன், யவனர் முதலிய சொற்கள் பயின்று வந்திருப்பவும், தொல்காப்பியனார், “ சகரக் கிளவியும் அவற்றோரற்றே அ ஐ ஒளவெனும் மூன்றலங் கடையே” “ஆஎ, ஒ எனும் மூவுயிர் ஞகாரத் துரிய” ஆவோ டல்லது யகரம் முதலாது” என்னும் சூத்திரங்களால் ச, ஞ, ய, முதலிய எழுத்துகள் மொழிக்கு முதலாகா என விலக்கியுள்ளார். மற்றும் அவர், “ நாற்சீர் கொண்ட தடியெனப்படுமே” என்று கூறிவைத்து, எழுத்துவரையறை கொண்டு அந்நாற் சீரடியையே குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐவகைப்படுத்துரைத்தனர். இது கட்டளையடி எனப்படும். சங்கச் செய்யுட்களிலோ இக் கட்டளையடிக்கு இலக்கியம் காணு மாறில்லை. சங்கச் செய்யுள் பலவற்றையும் ஆராய்ந்து தொல் காப்பியத்திற்கு உரை வகுத்த பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ‘ஆங்ஙனம் விரிப்பின்’ என்னுஞ் சூத்திரவுரையில், “சிறப்புடைய கட்டளையடி சான்றோர் செய்யுளுட் பயின்று வரல் வேண்டும் பிறவெனின், இந்நூல் செய்த காலத்தில் தலைச் சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் கட்டளையடி பயின்று வரச்செய்யுள் செய்தாரென்பது இச் சூத்திரங்களாற் பெறுதும்; பின்பு கடைச்சங்கத்தார்க்கு அஃது அரிதாகலின் சீர்வகையடி பயிலச் செய்யுள் செய்தாரென்றுணர்க” என உரைத்தனர். இங்ஙனம் கடைச்சங்க நாளிலேயே தொல்காப்பியர் கூறியன இறந்து பட்டனவும், கூறாதன தோன்றியனவுமாக உள்ளவை சாலப்பல. அவற்றை விரிப்பிற் பெருகும். இவற்றிலிருந்து கடைச்சங்க நாட்குச் சில பல நூற்றாண்டுகளின் முன்பே தொல்காப்பியம் தோன்றியதெனல் பெறப்படும். கடைச்சங்க நாளின் முன்பே தொல்காப்பியர் இருந்தாரெனக் கொண்டாருள் ஒரு சாரார், இலங்கைத் தீவின் வரலாற்றாற் பெறப்படும் கடல்கோள் பலவற்றுள் கி.மு. 306ல் நிகழ்ந்த மூன்றாங் கடல் கோட்குச் சிறிது முன்னே தொல்காப்பியம் இயற்றப்பெற்றதெனவும், அலெக்சாந்தர் என்னும் கிரேக்க வேந்தன் இந்தியாவின் மேற்படையெடுத்து வந்தபொழுது உடன்போந்த கிரேக்க வான நூலாசிரியராற் கொண்டு வரப்பட்ட ‘ஹோரா’ என்னும் மொழி தொல் காப்பியத்துள் ‘ஓரை’ எனத் திரித்து வழங்கப்படுதலின் அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றதெனல் போதரும் எனவும் கூறுவர். மற்றும் ஒரு சாரார் பாணினியால் எடுத்துக் காட்டப்பெற்ற வடமொழி இலக்கணவாசிரியர் அறுபத்து நால்வருள் முதல்வனாகிய இந்திரனாற் செய்யப்பட்ட ‘ஐந்திரம்’ என்னும் நூலினைச் சுட்டி ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனப் பனம்பாரனார் பாயிரத்துள் ஓதுதலின், பாணினியின் காலமாகிய கி.மு.350க்கு முன்பே தொல்காப்பியம் இயற்றப் பெற்றதாகும் என்பர். ஓரைஎன்னும் தமிழ்ச் சொல்லே ‘அரிசி’ முதலிய சொற்கள் போன்று கிரேக்க மொழியிற் புகுந்ததாமெனக் கருதற்குப் பல காரணங்கள் இருத்தலானும், தொல்காப்பியர் பாணினிக்குப் பின்னிருந்தவராயின் வடமொழியில் மிகச்சிறப் புடையதாகிய பாணினீயத்தை நன்கு கற்று, ஓர் பகுதியிற் பிறந்த பல சொற்களை ஆராய்ந்து அதன்கண் அடக்கும் அந்நூன் முறையை மேற்கொண்டு தாமும் தமது நூலின் கண் சொற்களை ஆராயாது விடாராகலானும், பாணினீயம் நிறைந்த என்னாது ‘ஐந்திரம் நிறைந்த’ எனக் கூறியிருப்பதனால் அவர் பாணினீயத்தை உணர்ந்தவரல்லர் என்பது பெறப்படுதலானும் தொல்காப்பியர் பாணினிக்கு முன்னிருந்தாராவர் என்னும் கொள்கையே வலியுறா நிற்கும். பாணினியின் காலம் கி.மு. 300 என்றும், 350-என்றும், கி.மு.700க்கு நீண்டநாளின் முன்னாகும் என்றும் சரித்திர அறிஞர் பலர் பலவாறு கூறா நிற்பர் எஸ். கிருஷ்ண பேல் வால்கர் என்னும் அறிஞர் தமது ‘வடமொழி’ இலக்கணவொழுங்குகள்’ என்னும் நூலிலே’ பாணினியின் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியதன்றென ஆராய்ந்து நிறுவியுள்ளார். பாணினி முனிவர் காலம் எதுவாயினும் தொல்காப்பியனார் அவர்க்கு முன்னிருந் தாராவரென்பது, கடைப்பிடிக்க தொல்காப்பியர் காலத்தை ஆராய்தற்குரிய மற்றொரு சாதனம் குமரியாறு கடல்கொள்ளப் படுவதற்கு முன்பு அவர் இருந்தாரென்பது. கலித்தொகை, சிலப்பதிகாரம், களவியலுரை முதலிய தமிழ்நூல், உரைகள் தமிழ் நாட்டில் நிகழ்ந்த கடல் கோளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார் குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன்பது தமிழ்நாடுகள் இருந்து கடல் கொள்ளப்பட்டதெனக் கூறுகின்றார். எர்னஸ்ட் ஹெக்கல், ஸ்காட் எலியட் முதலிய பேரறிஞர்களாற் குறிப்பிடப்படுகின்ற குமரிக்கண்ட (லெமூரியா) அழிவு பன்னூறாயிர ஆண்டுகளின் முன்பு நிகழ்ந்ததாகல் வேண்டும். ‘எலியட்’ பண்டிதர் கூறும் ஐந்து பெரிய பிரளயங்களில் கி.மு. 9564-ல் நிகழ்ந்த ஐந்தாம் பிரளயத்தால் ஏழேழ் தமிழ்நாடுகள் கடல் கொள்ளப்பட்டனவென்று கருதுதல் பொருந்தும். எனினும் குமரியாறும், அதன் தெற்கே சிறு நிலப்பகுதியும் எஞ்சியிருந்து பின்னொரு கடல்கோளால் அழிந்திருக்க வேண்டும். களவியலுரையானது ‘அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல்கொண்டது’ என இடைச் சங்கத்திறுதியில் நிகழ்ந்ததாகக் கருதியுரைக்கின்ற கடல்கோளால் குமரியாறு அழிந்திருக்க வேண்டுமாதலின் அதற்கு முன்பே தொல்காப்பியம் இயற்றப்பெற்றதாமென்க. பனம்பாரனார் குமரியாற்றைத் தமிழ்நாட்டிற்கு எல்லையாகக் கூறியிருப்பதும், ‘கடல் கொள்வதன் முன்பு பிறநாடு முண்மையின் றாதற்கும் எல்லை கூறப்பட்டது’ என இளம்பூரணர் உரைத்திருப்பதும் போல்வன இதனை வலியுறுத்தாநிற்கும். இனி அக்கடல்கோள் எக்காலத்து நிகழ்ந்ததோ எனின், கூறுவல். யூதவேதத்தின் ஆதியாகமத்திலே நோவாவின் காலத்தில் ஓர் பிரளயம் உண்டான வரலாறு விரித்துரைக்கப்பட்டுள்ளது. அது கிமு. 2344இல் நிகழ்ந்திருக்க வேண்டுமென்று யூதநூலாசிரியர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். பாபிலோனியர்க்குள்ளும் ஓர் கடல் கோட் செய்தி வழங்கி வந்திருக்கின்றது. இதன் வரலாறு கி.மு.2000-ல் அவர்களால் வெட்டப்பட்ட கல்வெட்டொன்றிலே கூறப்பட்டுள்ளது. இலங்கைத் தீவின் வரலாற்றிலும் கி.மு.2387இல் ஓர் கடல்கோள் நிகழ்ந்தமை குறிக்கப்பட்டுள்ளது. மநுவரசன் காலத்தில் ஓர் பிரளயம் நிகழ்ந்தமையைச் சதபத பிராமணம் தெரிவிக்கின்றது. அப்பிரளயத்தோடு தொடர்புற்ற மநுவரசன் மலையமலைமேல் தவம் புரிந்து கொண்டிருந்தானென மச்சபுராணம் கூறுகின்றது. பாகவத புராணமானது கிருதமாலையாற்றங்கரையிலே திராவிட அரசனான சத்தியவிரதன் என்பான் தவஞ்செய்து கொண்டிருந்த பொழுது அங்கு மீன் வடிவுடன் வந்த ஒரு தெய்வம் அங்கே நிகழப் போகும் கடல்கோளை அவனுக்கு முன்னரே அறிவித்து, அவ்வாறே அது நிகழ்ந்தபொழுது ஓர் மரக்கலத்தில் அவனையும் அவனைச் சார்ந்தோரையும் ஏற்றுவித்துக் கொண்டுபோய் உய்வித்த வரலாற்றை விரித்துரைக்கின்றது. யூதர்களின் ஆகமத்திற் கூறப்பட்டுள்ள கடல்கோள் வரலாற்றோடு பாகவதபுராணத்தின் வரலாறு பெரிதும் ஒத்திருத்தல் கருதற்பாலது. இங்ஙனம் வெவ்வேறு நாட்டினர் கூறும் பிரளயம் வரலாற்றாலும் காலத்தாலும் பெரிதும் ஒத்திருத்தலானும், அது தமிழ்நாட்டில் நிகழ்ந்ததென்பதற்குப் புராணங்களேயன்றி பழைய தமிழ்நூல் உரைகளும், நிலநூல் உண்மையும் சான்று பகர்தலானும் இற்றைக்குச் சற்றேறக்குறைய 4200-ஆண்டுகளின் முன்பு தமிழகத்தின் தெற்கே ஒரு கடல்கோள் நிகழ்ந்து, அதனாற் குமரியாறும், அதனைச் சார்ந்த நிலப்பகுதியும் அழிந்தனவென்றும், தொல்காப்பியம் அதற்கு முன்னரே இயற்றப்பெற்றதாகுமென்றும் கொள்ளுதல் வேண்டும். ஒருக்கால் இக்கடல்கோளாற் குமரியாறு அழியாதிருந் திருப்பின், இலங்கை வரலாற்றிலே கி.மு.504இல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இரண்டாங் கடல்கோளின் முன்பாவது தொல் காப்பியம் இயற்றப்பெற்றதாகல் வேண்டும். இவ்வாற்றால் இலங்கை வரலாறு கூறும் இரண்டாங் கடல்கோள் நிகழ்ந்த கி.மு.504ஆம் ஆண்டுக்கும், பாணினி முனிவர் காலமாகிய கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் முன்னும், பாரத காலமாகிய கி.மு.3100க்குப் பின்னும் உள்ள காலப் பகுதியொன்றிலே தொல்காப்பியர் இருந்தாரென்பது கொள்ளற்பாற்று. தொல்காப்பியரது கல்விப் பெருமையும், நூலமைப்புத் திறனும் : தொல்காப்பியப் பாயிரமானது தொல்காப்பியரைத் தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்தவர் என்றும், முந்து நூல் கண்டவர் என்றும், ஐந்திரம் நிறைந்தவர் என்றும் கூறுகின்றது. இவ்வாசிரியர்க்கு முன்பே தமிழில் இலக்கண நூல்கள் பல இருந்திருக்க வேண்டுமென்பது இவர் தாமே ‘என்ப’ என்றும், ‘என்மனார் புலவர்’ என்றும் இவ்வாறாகத் தொல்லாசிரியர் மதம்படப் பலவிடத்துங் கூறிச் செல்லுதலால் அறியப்படும். முந்துநூல் என்றது அகத்தியம் ஒன்றனையே யெனச் சிலர் கொண்டனர். அஃதொன்றே யாயின் ஓரிடத்தேனும் அதனை விதந்தோதாது யாண்டும் ‘என்மனார் புலவர்’ என்றும், ‘கடிநிலையின்றே ஆசிரியர்க்கு’ என்றும் பொதுப்படக் கூறிச் செல்லாராகலின், இவர்க்கு முன்பே பல நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், அவற்றையே ‘முந்து நூல்’ எனப் பாயிரமும் கூறிற்றெனவும் கோடல் வேண்டும். முந்து நூலாவன அகத்தியமும், மாபுராணமும், பூதபுராணமும், இசைநுணுக்கமும் என நச்சினார்க்கினியரும் கூறினர். அப்பொழுதிருந்தவை இன்னின்ன நூல்களென அறுதியிட்டுரைத்தல் சாலாதெனினும் அகத்தியம் உள்ளிட்ட பல நூல்கள் இருந்தன வென்பது தேற்றம். இவர் அவற்றையும், அற்றைநாள் வழக்குச் செய்யுட்களையும் நன்காராய்ந்தவர் எனப் பாயிரம் கூறுவதும், அவையனைத்தையும் முற்றவறிந்தவர் எனக்கருதற்குரிய குறிப்புக்கள் தொல்காப்பியத்திற் காணப்படுவதும் இவரது கல்வியின் அகலத்தையும் ஆழத்தையும், நன்கு புலப்படுத்துவனவாம். எடுத்துக்காட்டாகப் பின்வரும் குறிப்புக்கள் சில நோக்கற்பாலன. மொழி மரபின் கண்ணே மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களை உணர்த்துமிடத்து ‘உச்சகாரம் இருமோழிக்குரித்தே’ என்னுஞ் சூத்திரத்தால் சகரவுகரத்தை ஈற்றிலுடைய முற்றியலுகரமொழி, தமிழில் இரண்டே உள்ளன என்றும், ‘ உப்பகாரம் ஒன்றென மொழிய இருவயினிலையும் பொருட்டா கும்மே’ என்னுஞ் சூத்திரத்தால் பகரவுகரத்தை ஈற்றிலுடைய முற்றுகர மொழி ஒன்றேயுண்டென்றும் அஃதொன்றுமே தன்வினைப் பொருளும் பிறவினைப்பொருளும் உடைத்தாகுமென்றும் கூறினர். பின்னும் நகரவொற்றை ஈறாகவுடைய சொல் உச்சகார மொழிபோல் இரண்டேயென்றும், ஞகரவொற்றை யீறாக வுடைய சொல் உப்பகாரமொழிபோல் ஒன்றேயென்றும், ஆனால் இது இருபொருட்படாதென்றும் கூறினர். மற்றும் நிலம் நிலன், கலம் கலன் என்பபோல மகரத்தோடு மயங்குத லில்லாத னகரவீற்று அஃறிணைச் சொற்கள் ஒன்பது உள்ளன வென்றும், தொகைமரபின் கண்ணே அளவுப் பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் முதலாகவுள்ளன கசதபநமவஅஉ என்னும் ஒன்பதெழுத்துமே என்றும் வரையறுத்துக் கூறியுள்ளார். இவை போல்வனவும், உயிரும் புள்ளியும் இறுதியாகிய பலதிறப்பட்ட சொற்களையும் எஞ்சாதெடுத்து வருமொழியொடு புணர்த்துச் செய்கை செய்து முடிப்பதும், வேற்றுமைகளின் பொருள் விகற்பங் களையும் அவை மயங்கிவருமாற்றையும் மிகவிரித்துரைப்பதும், இளமைப்பெயரும் ஆண்பாற்பெயரும் பெண்பாற்பெயரும் ஆகிய மரபுப் பெயர்கள் பலவற்றையும் எடுத்து அவை இன்னின்ன வற்றுக்கு உரியவென உணர்த்துவதும் பிறவும் தமிழ் வழக்குச் செய்யுட்களின் சொற்பொருட் பரப்பு முழுதும் இவ்வாசிரியரால் நன்கு வடித்தறியப் பெற்றன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி யெனத் தெள்ளிதின் விளக்குவனவாதல் காண்க. இனி இவ்வாசிரியர்தாமே சூத்திரத்தியல்பெனக் கூறிய சில்வகையெழுத்தின் செய்யுட்டாதலும் நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாதலும் போல்வனவெல்லாம் ஒருங்கமைந் தனவாகத் தொல்காப்பியச் சூத்திரங்கள் விளங்குவதும், அவற்றின் கண் சொற்கள் பொன்பணியாமாறு போல இவர் கருதிய வாறெல்லாம் திரிந்து அழகு செய்வதும் போல்வனவற்றை நோக்கின் இவர் வழிவழியாகத் தமிழிலே ஊறிவந்ததொரு குடியின் கட்டோன்றி, உண்ணுஞ்சோறும் பருகுநீரும் தின்னும் வெற்றிலையுமெல்லாம் தமிழாகவே கொண்டு வளர்ந்து தலைமையெய்திய சான்றோராவர் என்பது விளங்கும். “ முதலா வேன தம்பெயர் முதலும்” “ ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே” “ உச்ச காரமொடு நகாரஞ் சிவணும்” “ உப்பகாரமொடு ஞகாரையுமற்றே அப்பொருளிரட்டாதிவணையான என்னும் சூத்திரங்களிலுள்ள முதலா, முதலும், அலங்கடை, சிவணும், ஞகாரை, இவணை யென்னும் சொல்வழக்கு களையும், இந்நூற்பாக்களின் திட்ப நுட்பங்களையும் நோக்குங் கள். இறையனார்களவியற் சூத்திரம் சிலவன்றி நன்னூல் சின்னூல் தொன்னூல் முதலாய பிற்காலத்து எந்நூலின் கண்ணும் ஒரு சூத்திரத்தானும் இந்நூற்பாக்களின் அணிமையிலும் நிற்றற் குரிய தன்றாயின் ஆசிரியர் தொல்காப்பியனாரது தமிழ்ப் புலமையின் விழுப்பத்தை எங்ஙனம் அளவிட்டுரைத்தல் கூடும்? இனி இவர் வடமொழியிலும் பெரும் புலமை வாய்ந்தவரென்பது ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றி’ என்னும் பாயிரக் கூற்றானே துணியப்படும். “ அகத்தெழு வளியிசை யரிறப நாடி அளபிற் கோட லந்தணர் மறைத்தே” என இவர் கூறுவது அருமறையின்கண் இவருக்குள்ள பயிற்சியைப் புலப்படுத்தா நிற்கும். இனி இவ்வாசிரியர் இந்நூலை அமைக்கும் திறப்பாடுகள் நோக்கற்பாலன. எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூன்றனையும் மூன்று அதிகாரத்தாற் கூறலுற்ற இவர் ஒவ்வோரதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாக வகுத்துக் கொண்டுள்ளார். இங்ஙனம் ஒவ்வோர் அதிகாரமும் இயல்வகையால் ஓரளவினவாக வகுத்திருப்பது தாம் கூறக்கருதிய பொருள்களை ஓரெல்லையுள் அடக்க முயன்று இடர்ப்படுவதாகுமெனச் சிலர் கருதவுங்கூடும். எனினும் அவ்வியல்கள் யாவும் இன்றியமையாதனவும், அவ்வவ் வதிகாரங்களோடு இயைபுள்ளனவுமாதல் நுண்ணறிவான் ஆராய்வார்க்குப் புலனாகா நிற்கும், ஆயின் ஓரதிகாரத்தை ஒன்பான் இயலிற் குறையவோ மிகவோ வகுத்தமைத்தல் ஒல்லாதோ எனின், அங்ஙனஞ் செய்தல் ஒல்லுமாயினும் ஒரு நிகரான வரையறையுடைமையின் பயன்கருதி அங்ஙனம் இயல்களை வரையறை செய்து, பொருளளவுக்கேற்பச் சூத்திரங்களை மிகுத்தும் குறைத்தும் இடர்ப்பாடின்றி யாத்தமைத்துள்ளாரெனல் வேண்டும். பண்டையாசிரியர்கள் தாம் கருதிய பொருள்களை எஞ்சாமற் கூறுவதில் நோக்குடையராயிருந்தமைபோன்றே அவை பிற்காலத்தில் திரிபின்றி நின்று நிலவவும், கற்போருள்ளத்தில் எளிதிற்புகுந்து அகலாதிருக்கவும் உரிய முறைகளை இயலுமளவு கைக்கொண்டு அவற்றைக் கூறும் கருத்துடையாராவர். பாணினியும் தமது நூலின் எட்டு அத்தியாயங்களையும் நந்நான்கு பாதங்களாக வகுத்துள்ளனர். திருக்குறள், தேவாரம், திருவாய்மொழி முதலிய தமிழ் மறைகளும், ஆரிய வேதப் பகுதியாகிய ஐதரேயப் பிராம்மணம் முதலியனவும், சங்கச் செய்யுட்களில் பதிற்றுப்பத்து முதலாயினவும் ஒவ்வோரளவினவாக இயன்றிருத்தலும் காண்க. இனி, இவ்வாசிரியர் மெய்ப்பாட்டியலின் கண் எண்வகை மெய்ப்பாடும் நிகழுங் காரணங்களை உணர்த்துமிடத்து, “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” “ செல்வம் புலனே புணர்வு வினையாட்டென் றல்லல் நீத்த வுவகை நான்கே” என்றிங்ஙனம் ஒவ்வொரு மெய்ப்பாட்டுக்கும் நந்நான்கு காரணங் கூறுவதும், உவமவியலிலே வினை, பயன், மெய், உரு என்னும் நால்வகை உவமத்திற்கும் உருபுகள் தனித்தனி எவ்வெட்டாக வரையறுத்துரைப்பதும், பெயரியலிலே, “ அவனிவன் உவனென வருஉம் பெயரும் அவளிவள் உவளென வரூஉம் பெயரும் அவரிவர் உவரென வரூஉம் பெயரும் யான் யாம் நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவர் என்னும் ஆவயின் மூன்றோ டப்பதினைந்தும் பாலறி வந்த உயர்திணைப் பெயரே” எனவும், “ அதுவிது உதுவென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய ஆய்தப் பெயரும் அவையிவை உவையென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை என்னும் பெயரும் ஆவயின் மூன்றோடப்பதினைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயரே” எனவும் ஓரினமான மும்மூன்று பெயர்களை ஒவ்வோரடியில் நிறுத்தி அழகும் தெளிவும் பொருந்தக் கூறுவதும் போல்வன கற்போருள்ளத்தில் அவை நன்கு பதியுமாறு செய்ய மேற் கொண்ட முறைகளாம் என்க. இனி இலக்கண நூல்களில் பொதுவும் சிறப்பும் முதலிய விதிகள் ஒன்றனையொன்று போற்றியும் மறுத்தும் செல்லும் இயல்பினவாகலின் இலக்கணங்கற்பார் நூலின் ஒரு பகுதி கற்று அமையாது நூன்முழுதுங் கற்கும் கடப் பாடுடையராவர். அக்கடப்பாட்டினின்றும் அவர் விலகாமைப் பொருட்டு இவர் நூற்பாக்களை அமைத்திருக்குந் திறன் மிக வியத்தற்குரியது. இருள் என்னுஞ் சொல் நின்று வேற்றுமைப் பொருட் புணர்ச்சியில் வருமொழியோடு புணருமாறு கூறவந்தவர் ‘இருளென்கிளவி வெயிலியல் நிலையும்’ என்றார். வெயில் என்னுஞ் சொற்கு அங்ஙனம் விதி கூறுமிடத்தோ ‘வெயிலென்கிளவி மழையியல் நிலையும்’ என்றார். மற்று, மழை என்னுஞ் சொற்கு விதி கூறுங்கால் ‘மழையென் கிளவி வளியியல் நிலையும்’ என்றார். வளி என்னுஞ் சொல்லுக்கு விதியும் ‘வளியென வரூஉம் பூதக் கிளவியும் - அவ்வியல் நிலையல் செவ்விதென்ப’ என அதற்கு முன்னுள்ள சூத்திரத்தோடுமாட்டெறிந்து கூறினார். அச்சூத்திரந்தான் ‘பனியென வரூஉம் காலவேற்றுமைக்கத்தும் இன்னும் சாரியை யாகும்’ என்பது. இங்ஙனம் உயிர் மயங்கியல் 39-ம் சூத்திரத்திற் கூறிய விதியை 161-சூத்திரங்கட்குப்பின் புள்ளி மயங்கியலிலுள்ள ‘இருளென் கிளவி’ என்னும் சூத்திரங்காறும் தொடர்ந்து வரச்செய்திருத்தலின் இவையனைத்தையும் ஒருங்கு கற்றுணர்ந்தாலன்றி இருள், வெயில், மழை, வளி என்னுஞ் சொற்கள் அத்துச்சாரியை யாவது இன்சாரியை யாவது பெற்று முடியும் என்பதனை எங்ஙனம் அறிதல் சாலும். இவை வெவ்வேறு உயிரும் புள்ளியும் இறுதியாகவுடைய சொற்களாதலின் இவற்றை ஒருவழிக் கொணர்ந்து ஒருங்குமுடித்தலும் பொருந்தாமை காண்க. இவ்வாறு முடிப்பன மற்றும் பலவுள. இங்ஙனம் சூத்திரங் களைக் கோவைப்படுத்தி முதலும் முடிவும் மாறுகோளின்றி இவ்வாசிரியர் அமைத்திருக்கும் முறையை உணரலாற்றாத சிலர் தம்மை இலக்கணம் வல்லாராகத் தாமே மதித்துக் கொண்டு, ‘தொல்காப்பியத்துள் இச்சூத்திரம் ஈண்டிருத்தல் பொருந்தாது, ஆண்டு இருத்தல் வேண்டும்’ என்று தமக்குத் தோற்றியவாறெல்லாம் உரைத்தல் எத்துணைப் பெரியதோர் அறியாமையாகும். தொல்காப்பியத்திற்கு முதனூல் ஐந்திரமென்பார் கூற்றுப் போலியாதல் : திருக்குருகூர்ச் சுப்பிரமணிய தீக்கிதர் தாம் இயற்றிய தமிழ்ப் பிரயோக விவேகவுரையில் “ஏழியன் முறைய தெதிர் முக வேற்றுமை - வேறென விளம்பான் பெயரது விகாரமென்-றோதிய புலவனு முன்னொரு வகையா - னிந்திரனெட்டாம் வேற்றுமை யென்றனன்’ என அகத்தியத்தின் கண்ணும், ‘ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்’ எனத் தொல்காப்பியப் பாயிரத்தின் கண்ணும் வருதலின் இவைகட்கு முதனூல் பாணினீயமும் ஐந்திரமுமா மென்க. அகத்திய நிறைந்த தொல்காப்பியன் என்னாமையானும், ‘கடிநிலையின்றே யாசிரியர்க்கு’ எனப் பொதுப்பட வோதியதல்லது பெயரெடுத்தோதாமையானும் அதுவே பொருளென்க. பின்னூல் செய்தார் தத்தம் பாயிரத்துள் வேண்டிய வாறோதினார்; அதுபற்றி உரைகாரரும் அவருரைத்தாங்குரைத்தார்; அது பொருளன்மையறிக” என்று கூறினர். இவர் அகத்தியத்திற்கு முதனூல் பாணினீயம் எனக் கூறியது போலியுரை யாமென ‘அகத்தியர்’ என்னும் உரைநூலில் விரித்து விளக்கியுள்ளேன். தொல்காப்பியத்திற்கு ஐந்திரம் முதனூல் என்றது பொருந்துமா என்பது ஈண்டு ஆராய்தற்குரியது. எத்தனையோ பல நூலாசிரியர் உரையாசிரியர்களின் கொள்கைக்கு முற்றிலும் மாறாகத் தாம் கொண்ட இத்துணிவிற்கு இவர் காட்டிய ஆதாரம் தொல் காப்பியப் பாயிரத்தில் “ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்” எனக் கூறியிருப்பதேயாகும். தொல்காப்பியர் தமக்கு முன்னுள்ள தமிழ் நூல்களேயன்றி ஐந்திரவியாகரணமும் கற்றுவல்லவரென அவர் பெருமை கூற வேண்டியே பாயிரத்துள் அவ்வாறுரைக்கப்பட்டது. அதனால் ஐந்திரத்தை முதனூலாகக் கொண்டனரென்பது எட்டுணையும் பெறப்படுவதின்று. பாயிரத்தில், ‘தமிழ் கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி’ என்பதும், ‘செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடுமுந்து நூல் கண்டு முறைப்பட வெண்ணி’ என்பதும் நூல் இயற்றினமையை விசேடித்து நிற்றலும், ‘ஐந்திரம் நிறைந்த’ என்பது ஆக்கியோன் பெயரை விசேடித்து நிற்றலும் நோக்காது தீக்கிதர் இங்ஙனம் வழுவுவாராயினர். அவர் பிறிதோரிடத்தில் ‘ யாம் இந்நூலுட் பெரும்பான்மையும் தற்சமம் தற்பவங்களாற் கூறினாம். இப்பெரும்பான்மையுங் கூறியது யாது பற்றியெனின், வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் இலக்கண மொன்றென்பதறியாது சம்ஞாபேதத்தாலும் பாடை வேற்றுமை யாலும் இகழ்ந்து வேறென்பாரை நோக்கியென்க’ எனக் கூறியிருப்பதை நோக்குங்கால், வடமொழிக்கும் தமிழுக்கும் இலக்கணம் ஒன்றெனக் கொண்ட திரிபுணர்ச்சியும் அவர் சிறிதும் ஓராது தொல்காப்பியத்திற்கு ஐந்திரம் முதனூலெனக் கூறக் காரணமாயிருந்ததெனல் வேண்டும். இனி, சுப்பிரமணியதீக்கிதரேயன்றிச் சுவாமிநாத தேசி கரும் தமது இலக்கணக் கொத்தில் “ வடமொழி தென்மொழி யெனுமிரு மொழியினும் இலக்கண மொன்றே யென்றே யெண்ணுக” என்று கூறுவாராயினர். தமிழினும் வடமொழியினும் நிரம்பிய புலமையுடையராகிய இவ்விருவரும் இங்ஙனம் கூறியது மிகுந்த வியப்பிற்குரியது. இவர்கள் தமிழுக்கும் வடமொழிக்குமுள்ள வேற்றுமையை அறியாதாரல்லர் என்பது, சுப்பிரமணிய தீக்கிதர் தமது பிரயோக விவேகத்து 46-ஆம் செய்யுளுரையில் ;‘இது வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பேதம் கோடி கூறிட்டு ஒரு கூறுண்டோ இன்றோவென்பது கூறுகின்றது. திணை உணர்த்தும் வினைவிகுதியும், ஆண்பால் பெண்பாலுணர்த்தும் வினைவிகுதியும் வடமொழிக்கில்லை. தமிழ்மொழிக்குப் பிரதமா விபத்தியும், இலிங்கத்திரயமுமில்லை’ என உரைத்தலானும், இங்ஙனமே சுவாமிநாத தேசிகரும் ‘இருதிணையும் ஆண்பால் பெண்பால் வினையீறும் வடமொழிக்கில்லை. மூன்றி லிங்கமும்,முதலீற்று வேற்றுமைகட் குருபுகளும் தமிழிற்கில்லை. மேலும் ஆண்டாண்டுக் காட்டுதும்’ என ஓரிடத்துரைத்து, மற்றோரிடத்து, ‘ சிலபெயரெச்சமுஞ் சில வினைத்தொகையும் இருவகையுவமையும் வண்ணச் சினைச்சொலும் பண்புத் தொகையெனப் பகரும் வடநூல்’ எனச் சூத்திரஞ் செய்து, ‘பகரும் வட நூல் எனவே தமிழிற் கடாதென்க’ எனவும் உரைத்தலானும் இனிது விளங்கும். இவ்வாறு இவற்றின் வேறுபாடுகளை நன்கு உணர்ந்து வைத்தே இவர்கள் இருமொழிக்கும் இலக்கணம் ஒன்றெனக் கூறியது வடமொழியின் மேலுள்ள பற்று மிகுதியானோ, வேறெ தனானோ என்பது தெரிந்திலது. இனி, வடமொழியிலும் பிற மொழிகளிலும் இலக்கணம் என்பது எழுத்துச் சொல்லமைதியே யாகும். வடநூலார் இலக்கணத்தைச் சத்தநூல் என வழங்குதலுங் காண்க. தமிழிலக்கணமோ எழுத்துஞ் சொல்லுமாகிய ஒலியளவில் அடங்குவதன்று; மக்கள் உறுதிப் பொருளெய்து தற்குரிய ஒழுகலாற்றினையெல்லாம் வரையறை செய்துணர்த்தும் பொருட்பகுதியை உடையது. பொருளிலக்கணம் வேறெம் மொழியிலுமின்றித் தமிழில் மாத்திரமே யுள்ளதென்பது அனைவ ராலும் நன்கறியப்பட்டது. தமிழானது பிற இலக்கணங்களைக் காட்டினும் பொருளிலக்கணத்தையே சிறந்ததாகவும் இன்றியமையாததாகவும் கொண்டுள்ளதென்பது ‘ எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொரு ளதிகாரத்தின் பொருட்டன்றே, பொருளதிகாரம் பெறேமேயெனின் இவை பெற்றும் பெற்றிலேம்’ என்னும் களவியலுரையானும் அறியப்படும். இவ்வாறாகவும், இருமொழிக்கும் இலக்கணம் ஒன்றென்பதும், தொல்காப்பியத் திற்கு முதனூல் ஐந்திரம் என்பதும் பொருந்துமாறு எங்ஙனம்? பொருளிலக்கணத்தை விடுத்துச் சொல்லிலக்கணம் ஒன்றே கொண்டு அங்ஙனம் கூறினாராவரெனின், அதன்கண்ணும் இருமொழிக்கும் கோடிபேதமுள்ளன என்று அவரே கூறினமை மேலே காட்டப்பெற்றது. தொல்காப்பியர் ஐந்திரத்தை முதனூலாகக் கொண்டன ரென்னும் பிரயோகவிவேக நூலார் கொள்கையை இருமொழிக்கடலும் நிலைகண்டுணர்ந்த சிவஞான முனிவர் தமது பாயிரவிருத்தியுள் மறுத்திருக்கும் பகுதி ஈண்டு அறிந்து மகிழற்பாலது. அது, ‘ஐந்திரம் நோக்கித் தொகுத் தானெனின், தமிழ் மொழிப் புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், ‘குறியீடுகளும், வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம்புறம் என்னும் பொருட்பாகு பாடுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும், இவையெல்லாம் தாமே படைத்துக் கொண்டு செய்தாரெனின் முந்து நூல் கண்டு என்பதனோடு முரணுதலானும் முற்காலத்து முதனூல் அகத்தியம் என்பதூஉம், அதன் வழித்தாகிய தொல் காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம் துணியப்படுமென்க’ என்பது. இதிற்குறிப்பிடப் பெற்றனவும் பிறவுமாகிய தமிழின் சிறப்பியல்புகள் பின்னரும் விளக்கப்படும். இவ்வாற்றால் தொல் காப்பியத்திற்கு முதனூல் ஐந்திரமென்பார் கூற்றுச் சிறிதும் பொருத்தமில்லாத போலியுரையாயொழிதல் காண்க. தொல்காப்பியத்தின் பாகுபாடு தொல்காப்பியம் என்னும் நூல் சூத்திரம், இயல், அதிகாரம் (படலம்) என்னும் மூன்று உறுப்புக்களை அடக்கியதோர் பிண்டமாகும். இந்நூற்படலங்கள் எழுத்ததிகாரம், சொல்லதி காரம், பொருளதிகாரம் என மூன்றாம். இவ்வதிகாரங்கள் ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களை உடையன. எழுத்ததி காரத்தின் இயல்கள் நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன. நூன்மரபானது நூற்கு இன்றியமையாதனவாகிய எழுத்துக்களின் பெயரும், முறையும், தொகையும், பாகுபாடும், அளவும், உருவும், மெய் யெழுத்துக்கள் பிற மெய்யோடும் தம்மோடும் மயங்குமாறும், பிறவும் உணர்த்துகின்றது. மொழிமரபானது குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற சார்பெழுத்துக்கள் ஒரு மொழிக் கண்ணும் புணர் மொழியகத்தும் வருமாறும், ஓரெழுத்தொரு மொழி முதலிய மொழிப் பாகுபாடும், மகரக் குறுக்கமும், ஐகார ஒளகாரங்களின் தோற்றமும், மொழிக்கு முதலாம் எழுத்துக்களும், ஈறாம் எழுத்துக்களும் பிறவும் உணர்த்துகிறது. பிறப்பியலானது உடம்பினகத்து எழுத்துக்கள் பிறக்கும் நிலைக்களங்களும், உறுப்புக்களும், அவற்றான் அவை வேறு வேறு பிறக்குமாறும், பிறவும் உணர்த்துகின்றது. புணரியலானது மெய்யும், உயிரும் இறுதியும் முதலுமாகவுள்ள சொற்கள் நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய் அல்வழி வேற்றுமைப் பொருளில் இயல்பும் திரிபுமெய்திப் பொது வகையாற் புணருமாறும், பெயருடன் ஐ முதலிய வேற்றுமையுருபுகளும், இன் முதலிய சாரியைகளும் புணருமாறும், எழுத்துக்களுடன் காரம் முதலிய சாரியைகள் புணருமாறும், பிறவும் உணர்த்துகின்றது. தொகை மரபானது மேல் உயிர் மயங்கியல் முதலியவற்றில் ஈறுகடோறும் விரிந்து முடியும் புணர்ச்சி விதிகளைத் தொகுத்து முடிக்கின்றது. இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் மேல் வேற்றுமைக்குக் கூறும் முடிவு பெறாது திரிபெய்தி நிற்குமாற்றையும் இஃது உணர்த்துகின்றது. உருபியலானது பெயர்கள் வேற்றுமையுருபுகளுடன் புணரும் பொழுது சாரியைப் பேறெய்துமாற்றை விரித்துணர்த்துகிறது. உயிர்மயங்கியலானது உயிரீற்று மொழிகள் நின்று பெரும் பான்மை வன்கணத்தோடும், சிறுபான்மை ஏனைக் கணங் களோடும் அல்வழியினும் வேற்றுமையினும் புணருமாற்றை விரித்துணர்த்துகின்றது. புள்ளிமயங்கியலானது மெய்யீற்று மொழிகள் நின்று பெரும்பான்மை வன்கணத்தோடும், சிறுபான்மை ஏனைக்கணங்களோடும் புணருமாற்றை விரித் துணர்த்துகின்றது. குற்றியலுகரப் புணரியலானது குற்றிய லுகரத்தின் வகையும், அவை நின்று வருமொழியோடு புணரு மாறும் உணர்த்துகின்றது. ஒன்று முதலாகிய குற்றுகர வீற்று எண்ணுப் பெயர்கள் நின்று எண்ணுப் பெயரோடும் பிற பெயர் களோடும் புணரும் முறைமையை இது விரித்துணர்த்து கின்றது. எழுத்ததிகாரத்தில் நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாக வைத்துப் புணர்க்கப்படாத சொற்கள் இவையென் பதனையும் இஃதுணர்த்துகின்றது. சொல்லதிகாரத்தின் இயல்கள் கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினை யியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன. கிளவியாக்க மானது சொல்லும் பொருளும் இருதிணை ஐம்பாலாகப் பாகுபடுமாறும், சில திணை பால் இடம் மரபு முதலியவற்றின் வழாநிலை, வழுவமைதிகளும் உணர்த்துகின்றது. வேற்றுமை யியலானது எட்டு வேற்றுமைகளின் பெயரும் முறையும் முதலியன கூறி, விளியொழிந்த ஏனை வேற்றுமைகளின் பொருள் விகற்பங் களை விரித்துணர்த்துகின்றது. வேற்றுமை மயங்கியலானது வேற்றுமையுருபுகள் தம்பொருளிற் றீராது பிறவற்றின் பொருளிற் சென்று மயங்கும் பொருண் மயக்கமும், தம்பொருளிற் றீர்ந்து பிறவற்றின் பொருளிற் சென்று மயங்கும் உருபு மயக்கமும், வினை நிகழ்ச்சியின் எட்டுக் காரணங்களும், ஆகு பெயரின் வகைகளும், பிறவும் உணர்த்துகின்றது. விளிமரபானது விளியின் பொது விலக்கணமும், உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர்களில் இவ்வீறு இவ்வாறு விளியேற்குமென்பதும், விளியேலாப் பெயர்கள் இவையென்பதும் உணர்த்துகின்றது. பெயரியலானது நால்வகைச் சொற்குமுரிய சில பொது விலக்கணங்களும், பெயர்ச்சொல்லின் பாகுபாடும், இலக்கணமும் உணர்த்துகின்றது. வினையியலானது வினைச் சொல்லின் பாகுபாடும், இலக்கணமும், காலவழாநிலை வழுவமைதிகளும், ஒரு சார் மரபு வழுவமைதியும் உணர்த்துகின்றது. இடையிய லானது இடைச்சொல்லின் பாகுபாடும், ‘மண்’ முதலிய இடைச் சொற்கள் பொருள் குறிக்குமாறும், இரட்டித்து நின்று அசை நிலையாவனவும் பொருள் குறிப்பனவும் இவையென்பதும் உணர்த்துகின்றது. உரியியலானது இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி ஒரு சொல் பல பொருட்கு உரிமை யாதலும் பல சொல் ஒரு பொருட்கு உரிமையாதலும் உடைய உரிச் சொற்கள் பலவும், அவற்றின் பொருளும், சொற்களின் பொருள் உணருமாறும், அதனையுணர்த்து முறைமையும் உணர்த்துகின்றது. எச்சவியலானது முற்கூறிய எட்டியலுள்ளும் உணர்த்துதற்கு இடமின்றி எஞ்சி நின்ற சொல்லிலக்கணங் களைத் தொகுத்துணர்த்துகின்றது. செய்யுட்குரிய இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வட சொல் என்பவற்றின் இலக்கணங் களும், வலிக்கும் வழிவலித்தல் முதலிய செய்யுள் விகாரங்களும், நிரனிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் பொருள் கோள்களின் இலக்கணங்களும், வேற்றுமைத் தொகை முதலிய அறுவகைத் தொகைகளின் இலக்கணங்களும், பிரிநிலை முதலிய பத்து வகை எச்சங்களும், அவற்றின் முடிவுகளும், சில வினைச் சொற்கள் அசைநிலையாமாறும், சில வழாநிலை வழுவமைதி களும், பிறவும் இஃது உணர்த்துகின்றதென்க. பொருளதிகாரத்தின் இயல்கள் அகத்திணையியல், புறத் திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன. அகத்திணையிய லானது அகத்திணை ஏழன் பெயரும், அகனைந்திணையின் முதல் கரு உரிப்பொருள்களும், அகப்பொருட்டலை மக்களாவார் இவரென்பதும், ஓதற்பிரிவு முதலிய பிரிவுகளின் வரையறைகளும், நற்றாய், தோழி, கண்டோர், தலைவன் என்பவர்க்குக் கூற்று நிகழுமிடங்களும், உள்ளுறையுவமமும், கைக்கிளை பெருந்திணை களின் இலக்கணங்களும், பிறவும் உணர்த்துகின்றது. புறத்திணையிய லானது புறத்திணை ஏழன் பெயரும் இலக்கணமும் அவற்றின் பகுதியாகிய துறைகளும் உணர்த்துகின்றது. பாடாண்டிணையில் ஒருபகுதியாகக் கடவுள் வாழ்த்து வகைகளை உணர்த்துகின்றது. களவியலானது களவு இன்னதென்பதும், தலைமக்கள் எதிர்ப் பாட்டின் காரணமும், காட்சி முதலியன நிகழுமாறும், இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் என்னும் களவுக் கூட்டம் நான்கும், தோழியிற் கூட்ட வகைகளும், எண்வகை மணமும் அகத்திணையேழனுள் இன்னவாறு அடங்கு மென்பதும், களவென்னும் கைகோளில் தலைவன், தலைவி, தோழி, செவிலி என்போர்க்குக் கூற்று நிகழுமிடங்களும், களவு வெளிப்படுமாறும், பிறவும் உணர்த்துகின்றது. கற்பியலானது கிழவன் கிழத்தியை மணத்தலாகிய கற்பின் இலக்கணமும், முனிவர் கரணம் யாத்தவாறும், கற்பென்னும் கைகோளில் தலைவன், தலைவி, தோழி, செவிலி, அறிவர், கூத்தர், பார்ப்பார் முதலியோர்க்குக் கூற்று நிகழுமிடங்களும், ஓதற் பிரிவு முதலியவற்றின் காலவரையறையும், தலைவனும் தலைவியும் துறவறம் நிகழ்த்தி வீடுபெறுமாறும், பிறவும் உணர்த்துகின்றது. பொருளியலானது அகப்பொருட்குரிய வழுவமைதிகள் பலவும் உணர்த்துகின்றது. மெய்ப்பாட்டியலானது அகத்திற்கும் புறத் திற்கும் பொதுவாகிய எண்வகை மெய்ப்பாடுகளும், அவை ஒவ்வொன்று நான்காமாறும், அவை போல் வேறு முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும், அகப்பொருட்கேயுரிய மெய்ப்பாட்டின் வகை களும், பிறவும் உணர்த்துகின்றது. உவமவியலானது உவமத்தின் இலக்கணமும், வகையும், நிலைக்களனும், சில உவம விகற்பங்களும், உவமவுருபுகளும், தலைவி முதலாயினார் இன்னின்னவிடத்து உள்ளுறையுவமம் கூறற்குரியாரென்பதும், பிறவும் உணர்த்து கின்றது. செய்யுளியலானது நல்லிசைப் புலவர் செய்யுட்களில் தனிநிலைச் செய்யுட்கு உறுப்பாக வரும் மாத்திரை முதலாய இருபத்தாறும், பெரும்பான்மையும் தொடர்நிலைச் செய்யுட்கு உறுப்பாக வரும் அம்மை முதலிய எட்டு வனப்பும், கூறு முகத் தாற் செய்யுளிலக்கணம் உணர்த்துகின்றது. அடிவரையில்லாத அறுவகைச் செய்யுளும் உணர்த்துகின்றது. மரபியலானது இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர்களில் இன்னின்னவை இன்னின்னவற்றுக்கு உரியவென்பதும், ஓரறிவுயிர் முதலிய உயிர் வகைகளும், புல், மரம் என்பவற்றுள் வரும் மரபுப் பெயர்களும், அந்தணர் முதலியோர்க்குரிய சில முறைமைகளும், இருவகை நூல், காண்டிகை, உரை என்பவற்றின் இலக்கணங் களும், நூற்குற்றம் பத்தும், உத்தி முப்பத்திரண்டும் உணர்த்து கின்றது. தொல்காப்பியம் தோன்றியதற்கு நீண்ட நாளின் முன்பே தமிழ் மொழியும், தமிழரும் உயரிய நிலையில் இருந்திருக்க வேண்டுமென்பதற்கு அதிற் காணப்படும் ஆதரவுகள். தொல்காப்பியத்திலே பலவிடத்தும் ‘என்மனார் புலவர்’ என்று முன்னை யாசிரியர்களின் துணிவு கூறப்படுதலை நோக்கின் அதற்கு முன்பே தமிழிலக்கண நூல் பல இருந்திருத்தல் தேற்றம். ‘நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே’ ‘நுனித்தகு புலவர் கூறிய நூலே’ என வருபவை போல்வனவற்றால் முன்னை நூலாசிரியர் களின் பெருமையும் புலனாகும். ‘தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு’ எனவும், ‘தோலென மொழிப தொன்மொழிப் புலவர்’ எனவும் வருவன தொல்காப்பியம் தோன்றுதற்குப் பல நூற்றாண்டுகளின் முன்பே தமிழ் மொழியும் தமிழாசிரியரும் சிறந்திருந்தமை காட்டும். இங்கே குறிக்கப் பெற்றோர் இலக்கண ஆசிரியர்களென்பதனையும், ஓர் மொழியில் விழுமிய இலக்கணந் தோன்ற வேண்டுமாயின் அதற்கு முன்பே வழக்கும் செய்யுளும் சிறந்திருத்தல் வேண்டுமென்னும் உண்மையினையும் கொண்டு நோக்கின். தமிழ் மொழியானது தொடக்கம் கண்டுணரலாகாத அத்துணைப் பழமையுடையதென்பது பெறப்படும். தொல் காப்பியத்திற் பயின்றுள்ள சொற்கள், சொற்றொடர்கள், அது கூறும் செய்யுட்கள், பொருள்கள் என்பவற்றை உய்த்துணரினும் அவை அத்தகைய திருந்திய நிலை யெய்துதற்குப் பல நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டுமென்னும் உண்மை புலனாகும். எடுத்துக் காட்டாகத் தொண்ணூறு, தொள்ளாயிரம் என்னும் எண்ணுப் பெயர்களைக் காண்க. ஒன்பது பத்து தொண்ணூறு எனவும், ஒன்பது நூறு தொள்ளாயிரம் எனவும் ஆயினமைக்கு ஆசிரியர் கூறியிருக்கும் திரிபு விதி மொழிநூலியற்கையோடு பொருந்து வதன்றாயினும், அவற்றின் தோற்றரவு உணரலாகாவாறு அவர்க்கு நெடு நாளின் முன்பே அச்சொற்கள் அந்நிலைமையெய்தி விட்டன என்பது புலனாமன்றோ? தமிழ் மக்களின் பழைய உயரிய நிலை இவ்வாராய்ச்சிகளின் அறுதியிற் கூறப்படுமாகலின், ஈண்டு இரண்டு குறிப்புக்கள் மாத்திரம் எடுத்துக்காட்டுவல். ‘போந்தை வேம்பே ஆர் என வரூஉம், மாபெருந் தானையர் மலைந்த பூவும்’ ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்’ என்னுந் தொடர்கள் தமிழ்நாட்டு மூவேந்தர்களையும், அவர்களுடைய மாலை, தானை, நிலம் என்பவற்றையும் குறிப்பிடுகின்றன. மூவேந்தர் ‘வண்புகழ் மூவர்’ எனவும், தமிழ்நிலம் ‘தண்பொழில் வரைப்பு’ எனவும் புகழ்ந்துரைக்கப்பட்டிருத்தல் சிந்திக்கற்பாலது. வண்புகழுடையரெனவே அதற்குக் காரணமாய கொடை அளி செங்கோல் குடியோம்பல் முதலிய இறைமாட்சியனைத்தும் உடையரென்பதும் பெறப்படும். ஒரு நாட்டின் அரசியல் திருந்திய நிலையில் இருப்பது அந்நாட்டினதும், அந்நாட்டு மக்களதும் உயர்வைக் காட்டும் குறியாகும். அதனாற்றான், “ ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு” எனத் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும் கூறினர். சேக்கிழார், பெரியபுராணத்திலே சோணாட்டின் சிறப்புகளைக் கூறிவந்து, முடிவில், “ நற்றமிழ் வரைப்பி னீங்கு நாம்புகழ் திருநா டென்றும் பொற்றடந் தோளால் வையம் பொதுக்கடிந் தினிது காக்கும் கொற்றவ னநபாயன் பொற் குடைநிழற் குளிர்வருதேறா மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்ப லாமோ” என்று கூறியிருக்கும் செய்யுளின் கருத்தும் ஈண்டு அறிந்து மகிழ்தற்குரியது. வடமொழியிலுள்ள வேதம் முதலாய கலை களையும், தமிழ் நூல்களனைத்தையும் நன்குணர்ந்த பரிமேலழகர் திருக்குறளுரையிலே ‘சேர சோழ பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருங்குடி’ எனச் சிறப்பித்தோதிய மூவேந்தர் புகழ் கூறப்படவே தொல்காப் பியர்க்கு முன்பு தொட்டுள்ள தமிழ் மக்களின் உயர்வும் தானே பெறப்படும் என்க. இனி, ஒரு நாட்டின் உயர்வெல்லாம் அந்நாட்டு மக்களின் குணவொழுக்கச் சிறப்பேயாகும். மக்களுள்ளே மக்களின் பண்பு அறியப்படின் அது கொண்டே ஏனையர் பண்பும் அறியப் பட்டதாகும் என்ப. பண்டு தமிழ் நாட்டு மகளிர் பண்பு எங்ஙனம் இருந்ததென்பது “ உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு” எனத் தொல்காப்பியரும் கூறுவதனாற் புலப்படும். பிற பண்புகளும் பின்னர்க் காட்டப்பெறும். இங்கு எடுத்துக் காட்டியவற்றிலிருந்தே தொல்காப்பியந் தோன்றுதற்கு நெடுநாளின் முன்னரே தமிழும் தமிழரும் உயர்நிலை யெய்தியிருந்தமை அங்கை நெல்லியென நன்கு விளங்கும். எழுத்தாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும் தமிழ் எழுத்துக்களின் தொகையும் முறையும் உருவமும்: “ எழுத்தெனப்படுப அகரமுதல னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே” என்னும் தொல்காப்பிய முதற் சூத்திரத்தால் தமிழெழுத்துக் களின் தொகை முப்பத்து மூன்று என்பது பெறப்படும். அகர முதல் ஒளகாரம் ஈறாகவுள்ள பன்னிரண்டும் உயிரெழுத் துக்கள். ககர முதல் னகரம் ஈறாகவுள்ள பதினெட்டும் மெய் யெழுத்துக்கள். இம்முப்பதெழுத்துக்களையும் முதலெழுத் தென்ப. குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்றும் சார்பெழுத்துக்கள். இம்மூன்றும் உயிர்போலத் தனித்தும் மெய்போல அகரத்தோடு கூடியும் இயங்குதலின்றி ஒரு மொழியைச் சார்ந்தே வரும் இயல்பினவாகலின் சார்பெழுத் தெனப்பட்டன. இது பற்றியே இவை தோன்று மாற்றை ஆசிரியர் மொழி மரபின்கண் கூறினாரென்க. குற்றியலிகரம் குற்றியலுகரம் என்பன இகர உகரங்களின் குறுக்கமாகலின் இவற்றை வேறு கூற வேண்டிய தென்னையெனின், இவை முன்னர் ஒரு மாத்திரையாய் நின்று பின்னர் ஒரு காரணம்பற்றி அரை மாத்திரையாகாது என்றும் ஒரு மாத்திரையாயே நிற்கும் ஒரு தன்மையினவாகலின் இவற்றை வேறு எழுத்துக்களாக ஆசிரியர் வேண்டினாரென்க. இவற்றிற்குக் குற்றிகரம், குற்றுகரம் என்று பெயர் கூறியொழி யாது, ‘இயல்’ என்பது சேர்த்து ‘குற்றியலிகரம்’, ‘குற்றியலுகரம்’ எனக் குறிப்பிட்டிருத்தலும் கருதற்பாலது. உயிர்மெய், உயிரள பெடை, ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பவற்றை விடுத்துச் சார்பெழுத்து மூன்றென்றது என்னையெனின் கூறுவல். ‘ஆல்’ என்புழி உயிர்முன்னும் மெய்பின்னும் நின்று மயங்கினாற்போல் ‘லா’ என்புழியும் மெய்முன்னும், உயிர் பின்னும் நின்று மயங்கின வேயல்லது’ உயிரும் மெய்யுமாகிய தம் தன்மை திரிந்து வேறாயினவல்ல: “மெய்யோடியையினும் உயிரியல் திரியா” என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களும் அதற்குச் சான்றாகும். தினை என்பது மெய் முதல் உயிரீற்றுச் சொல் எனவும், வரகு என்பது உயிர்த்தொடர் மொழிக் குற்றியலுகரம் எனவும் கொள் வதன்றி, உயிர் மெய் முதல் உயிர்மெய் ஈற்றுச் சொல் எனவும், உயிர் மெய்த் தொடர் மொழிக் குற்றியலுகர மெனவும் கொள்ளாமையுங் காண்க. இவ்வாற்றால் உயிர் மெய் ஓரெழுத்தாகாமை பெறப்படும். அளபெடையிரண்டும் ஒரு காரணம் பற்றி நீண்டொலிப்பனவே ஆகலின் அவை வேறெழுத் தாகா. ஐகாரக் குறுக்கம் முதலியனவும் இயற்கையாகக் குறுகி யிசைப்பனவல்ல வாகலின் ஓரெழுத்தாகா. அங்ஙனமாகலின், பின்னுளோர் கொண்ட ஆய்தக் குறுக்கமென்பதொழித்து ஏனைய வெல்லாவற்றையும் ஆசிரியர் எடுத்தோதினராயினும் அவற்றை வேறெழுத்தாகக் கொண்டு சார்பெழுத்தென வேண்டினாரல்லர். வடநூலாரும் உயிர்மெய், உயிரளபெடை, ஐகாரக் குறுக்கம் முதலியவற்றை வேறெழுத்தெனக் கொள்ளாமை யுணர்க. பின்வந்த நன்னூலார் முதலாயினார் எழுத்தினியல்பை நோக்காது வேறெக் காரணத்தானோ அவற்றையும் சார்பெழுத் தென்பாராயினர். இனி ஒரு சாரார் தெங்கு, இஞ்சி, வண்டு, பந்து, செம்பியன் என்பவற்றிற் போல மெல்லெழுத்தை அடுத்துள்ள வல்லெழுத்துக்களின் ஓசைக்கும், செகுத்த, பசித்த என்பவற்றில் இயல்பாக மென்மையாய் ஒலிக்கும் வல்லெழுத்தோசை முதலியவற்றிற்கும் வேறு தனியெழுத்துக்கள் இல்லாமையால் தமிழ் நெடுங்கணக்கானது எழுத்துக் குறைபாடுடையது என்பர். ககரம் முதலிய வல்லெழுத்துக்கள் தனித்தும், பிறவெழுத்துக் களோடு கூடி ஒலிக்கும் ஒலியும் வெவ்வேறு இயல்பினவாயின் பின்னது இயற்கையொலியன்றென்பது பெறப்படும். மெல் லெழுத்தோடு கூடாதே வேறுபட ஒலிப்பதுண்டாயின் அது அதனைப் பேசும் மக்களின் சோர்வு முதலியவற்றால் உண்டா வதேயாம். அவ்வொலி எவ்விடத்தும் ஒரு பெற்றியே நிகழ் வதாகக் கொள்ளுதல் அமையாது. இங்ஙனம் பிறவெழுத்துக் களின் சேர்க்கையாலெழும் செயற்கையொலிக்கும், சோர்வு முதலியவற்றாலெழும் போலியொலிக்கும் தனித்தனி எழுத்துக்கள் அமைப்பதாயின் நாட்குநாள் எழுத்துக்கள் வரம்பின்றிப் பல்கி மரபுநிலை திரிந்து முன் முன்னுள்ள வழக்கும் செய்யுளு மெல்லாம் பொருளறிய வாராவாய்க் கழியும் என்பதனை அறிதல் வேண்டும். அன்றியும் தெங்கு, இஞ்சி முதலியவற்றிலுள்ள ஒலிகள் வேறெழுத்துக்கள் வேண்டாமலே யாதொரு இடர்ப் பாடுமின்றி இனிதின் இயன்று வரவும் அவற்றுக்கு வேறு எழுத்துக்கள் வகுக்க வேண்டுமென்பது பொருத்தமாகுமோ? தமிழ் நெடுங்கணக்கு வகுத்த முதலாசிரியர் தமது பேரறிவின் திறத்தால் தமிழிலுள்ள ஒலிகளின் பெற்றியை யெல்லாம் நுனித்துணர்ந்து எழுத்துக்கள் வகுத்த அடைவை ஓர்ந்துணராது பிறர் தமக்குத் தோன்றியவாறெல்லாம் எழுத்துக்களை மிகுத்தலும் குறைத்தலும் செய்யவேண்டுமென்று கூறுவது பெரியதோரேத மாகுமென்க. தமிழ் மெய்யெழுத்துக்கள் வலி, மெலி, இடை யென மூன்று இனமாக, அவை ஒவ்வொன்றும் ஒரேயளவாக அவ்வாறு எழுத்துக்கள் பெற்றிருப்பதும், எழுத்துக்களின் பிறப்பியலும், பிறவும் நோக்கின் அவை பரந்த ஆராய்ச்சியும் சிறந்த காரணமும் கொண்டு அங்ஙனம் வகுக்கப் பெற்றனவா மென்பது போதரும். இனி, தமிழெழுத்துக்களின் கிடக்கை முறை இப்பொழுது போன்றே தொல்காப்பியர் காலத்தும், அதற்கு முன்னும் இருந்தது. அங்ஙனம் இருந்ததென்பது தொல்காப்பியத்து நூன்மரபிலும் பிறப்பியலிலுமுள்ள சூத்திரங்கள் பலவற்றை அணுகவைத்து நோக்கின் இனிது புலப்படும். அச்சூத்திரங்கள் ‘என்ப’ ‘எனமொழிப’ என ஆசிரியர் துணிவாக உரைத்தலின் தொல்காப்பியர்க்கு முன்னும் அங்ஙனமிருந்தமை தேற்றம். தமிழ் நெடுங்கணக்கு அம்முறையால் எப்பொழுது யாரால் வகுக்கப்பெற்றதென அறுதியிடுதல் அரிது. எனினும், தமிழெழுத்துக்களின் முறை வைப்பும் வடவெழுத்துக்களின் முறைவைப்பும் இருமொழி யினும் சிறப்பெழுத்தொழிய நோக்கின் யாதும் வேறுபாடின்றி அமைந்திருத்தலின், தமிழ் வட மொழி இரண்டும் நன்குணர்ந்த ஆசிரியரொருவரால் ஒரு மொழியை நோக்கி மற்றொரு மொழிக் கண்ணும் அம்முறையானே எழுத்துக்கள் அமைக்கப் பெற்றனவா மென்று கருதுதல் பொருந்தும். எழுத்துக்கள் சாரியை பெற்று வழங்குதற்கண்ணும் ‘பகாரம் மகாரம்’ என்றாற்போல இரு மொழியிலும் ஒற்றுமையுளது. வடமொழியிலே ‘தலகாரம்’ என்றும், தமிழிலே ‘லளஃகான்’ என்றும் இரண்டெழுத்துக்குச் சாரியை யொன்றே வருதலும் சிறுபான்மையுண்டு. வடமொழியை நோக்கியே தமிழெழுத்துக்கள் முறைப் படுத்தப் பெற்றனவாயின் ஆசிரியர் அகத்தியனாரால் தமிழ் நெடுங்கணக்கு அங்ஙனம் வகுக்கப் பெற்றதாமெனக் கருதுதலும் இழுக்கன்று. ஆனால் வடமொழியெழுத்துக்கள் தொல்காப் பியர்க்கும் அகத்தியனார்க்கும் முன்னரும் அம்முறையால் வழங்கப் பெற்றனவென்பது துணியப்படினன்றி வடமொழி நோக்கித் தமிழெழுத்து முறை கொள்ளப் பெற்றதெனல் அடாது. வடவெழுத்துக்களை உணர்த்தும் மாகேச்சுர சூத்திரம் என்பவற்றில் உயிரெழுத்துக்களின் கிடக்கை முறை மாத்திரம் இப்பொழுது வழங்குமாறே காணப்படுகின்றது. முதலும் ஈறுங் கூட்டிப் பிரத்தியாகரித்து ‘அச்’ எனவும், ‘ஹல்’ எனவும் வடவெழுத்துக்கள் பெயரிடப்பட்டிருப்பது போலன்றி, தமிழ் எழுத்துக்கள் அவற்றினியல்பால் உயிர், மெய் என்பவற்றுடன் ஒத்திருத்தல் கண்டு உயிர் எனவும், மெய் எனவும் பெயரிடப் பட்டிருத்தலை நோக்கின் பிறரைக் காட்டினும் விழுமிய தத்துவ உணர்வு சான்றோரால் தமிழ்நெடுங்கணக்கு வகுக்கப்பெற்ற தாமெனல் போதரும் ஆகலின் தமிழை நோக்கியே வடவெழுத்து முறை தோன்றிற்றாமெனக் கருதுதலும் ஏற்புடைத்தே. இவற்றுள் யாது உறுதியுடைத்தென்பது இரு மொழியினும் வல்லுநரால் ஆராய்ந்து வெளியிடற் பாலது. இனி, தமிழ் எழுத்துக்களின் கிடக்கை முறைக்குரிய காரணங்கள் தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியில் சிவஞான முனிவரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன. ஆண்டுக் காண்க. இனி, இவ்வெழுத்துக்கள் ஒலி வடிவும் வரி வடிவும் என இருவகை வடிவுடையன. சிலர் எழுத்துக்களை உணர்வெழுத்து, ஒலியெழுத்து, தன்மையெழுத்து, உருவெழுத்து என்றும், பிறவாறும் பாகுபடுத்துரைப்பர். இவற்றுள் உணர்வெழுத் தாவது சிவாகமங்களில் உணர்த்தப்படும் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் நால்வகை வாக்குள் மத்திமைத் தானத்து உணர்ச்சியளவாக இருக்கும் எழுத்தென்றும், ஒலி யெழுத்தாவது தன் செவிக்கே கேட்கும் வைகரியென்றும். தன்மை எழுத்தாவது பிறர் செவிக்குக் கேட்கும் ஒலியுடைய வைகரி யென்றும், உருவெழுத்தாவது செவிப்புலனாம் ஒலியெழுத்தை அறிதற்குக் கருவியாக ஓவியம் போல் எழுதப்படுவதாமென்றும் கொள்க. இவற்றுள் உணர்வு, ஒலி, தன்மை என்னும் மூன்றும் ஒலியென்றே கொள்ளற்பாலன. எனவே எழுத்துக்கள் ஒலியெழுத்து எனவும், உருவெழுத்து எனவும் இரு வகையாகும். ஒலியெழுத்தாவது உயிரின் முயற்சியால் உந்தியிலுள்ள உதானன் என்னுங் காற்று நெஞ்சு, மிடறு, தலை என்னும் இடங்களிற் சென்று நிலைபெற்று அவற்றுடன் பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் என்னும் உறுப்புக் களுடன் கூடுதலால் வேறு வேறு ஒலியாகத் தோன்றுவதாம். தமிழெழுத்துக்கள் யாவும் இங்ஙனம் பிறக்குமாறு தொல் காப்பியத்திலே பிறப்பியலிற் கூறப்பட்டுள்ளது. இவ்வொலி வடிவேதான் நூல்களிற் பெரும்பாலும் எழுத்தென்று வழங்கப் படுவதாகும். உருவெழுத்தாவது கீற்றும் புள்ளியுங் கொண்டு கட்புலனாகத் தோன்றுமாறு எழுதப்படுவதாம். ஒலியெழுத்தின்றி இதற்கு நிலைபேறின்மையானும், இஃதின்றியே ஒலியெழுத்திற்கு இயக்கமுண்டாகலானும், ஓரெழுத்தொலிக்கே வெவ்வேறு மொழியாளர் வெவ்வேறு வடிவமைத்துக் கொள்வராகலானும் இஃது அத்துணைச் சிறப்புடைத்தன்று. அதனாற்றான் ஆசிரியர் தொல்காப்பியனார் தமிழ் எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் வடிவு கூறாது சிலவற்றுக்குச் சிறுபான்மை வடிவு கூறினார். நூன் மரபிலே மெய்களும், எகர ஒகரங்களும் புள்ளிபெறும் என்றும், மகரத்திற்கு உட்பெறு புள்ளி உருவாகும் என்றும், ஆய்தத்தை முப்பாற்புள்ளி என்றும் கூறியிருப்பதும், மெய்யும் உயிரும் கூடியவிடத்து அவை திரியாதும் திரிந்து நிற்குமெனப் பொதுப் படக் கூறியிருப்பது மன்றி, வேறு வடிவு கூறப்படாமை காண்க. சிலர் குற்றியலிகர, குற்றியலுகரங்கட்கும் புள்ளியுண்டென்பர். தொல்காப்பியச் சூத்திரங்கள் சில அவ்வாறு கருதுதற்கும் இடஞ்செய்து நிற்றலே அவர் அங்ஙனம் கூறுதற்குக் காரணமாகும். எனினும், அவற்றிற்குப் புள்ளி உண்டென்று துணிந்துரைக்கத் தொல்காப்பியத்திலே போதிய சான்றில்லை. ஆசிரியர் இங்ஙனம் சிறுபான்மையே வடிவு கூறினாராயினும், கூறியவற்றிலிருந்தே அக்காலத்தில் தமிழெழுத்துக்கள் வரி வடிவில் எழுதப் பெற்று வந்தன என்னும் உண்மை பெறப்படுகின்றது. ஒலியெழுத்தை நோக்க வடிவெழுத்துச் சிறப்பிலதென்று முன் கூறப்பட்ட தாயினும் வடிவெழுத்தின் பயன் சிறிதென்று கருதலாகாது. மொழி வளர்ச்சிக்கும், அம்மொழியைப் பேசும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கும் வடிவெழுத்துச் சிறந்த கருவியாகும். தமிழெழுத்துக் களின் ஒலி வடிவும், வரி வடிவும் ‘எழுத்து’ என்னும் ஒரு பெயராலேயே வழங்குகின்றன. இச்சொல் ‘எழு’ என்னும் பகுதியடியாகப் பிறந்திருப்பின் ஒலிவடிவைக் குறிப்பது பொருந்தும். அன்றேல் எழுத்து வரையறையும் அவை எழுதப்படுதலும் ஒருங்கு தோற்றிய காரணத்தால் வரி வடிவைக் குறிக்கும் அப்பெயரே ஒலி வடிவிற்கும் ஆயிற்றென்று கொள்ளுதல் வேண்டும். தொல் காப்பியத்திலே ‘அந்தரத்தெழுதிய எழுத்தின்மான’ என்னுந் தொடரில் ‘எழுதிய’ என்னும் வினை கொடுக்கப்பட்டிருத்தலின் எழுது என்னும் முதனிலையிலிருந்து எழுத்து என்னும் பெயருண்டாயிற்றென்பதே பெரிதும் பொருத்தமாம். இனி, தமிழ் வடிவெழுத்துக்களின் வரலாறாகப் பிறர் கூறியிருப்பன சில ஆராய்தற்குரியன. மொழி நூல் ஆராய்ச்சி யாளர்கள் பண்டு கல்வெட்டுக்களிலும் செப்புப் பட்டயங் களிலும் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களுக்கு வட்டெழுத்து என்று பெயர் கொடுத்து வழங்கி வருகின்றனர். ஐரோப்பியப் புலவர்களுள்ளே ‘டாக்டர் கால்டுவல்’, ‘டாக்டர் பூலர்’ முதலிய சிலர் தமிழ் வட்டெழுத்துக்கள் இந்திய நாடு முழுதும் வழங்கிய பிராமி என்னும் அசோக எழுத்துக்களிலிருந்து வந்தனவாம் என்பர். தமிழ் எகர ஒகரங்கட்கும் ஏகார ஓகாரங்கட்கும் வடிவு வேற்றுமையில்லாமை அவை பழைய வடவெழுத்துக்களினின்று வந்தன என்பதற்குச் சான்றாகும் என்று ‘கால்டுவல்’ கூறு கின்றனர். மிஸ்டர் இ. தாமஸ் ‘டாக்டர் ரைஸ் டேவிட்ஸ்’, ‘டாக்டர் பர்னல்’ என்னும் ஐரோப்பிய ஆசிரியர்கள் இந்தியாவில் வழங்கும் எழுத்துக்கள் எவ்விதத்திலும் ஆரியருடையனவல்ல வென்றும், கி.மு. 7 அல்லது 8வது நூற்றாண்டில் தமிழ் வர்த்தகர்களால் இந்தியாவில் வழங்கச் செய்தனவாகுமென்றும் கிடைத்துள்ள எல்லா ஆதரவுகளும் உறுதிப்படுத்துகின்றன என்கின்றனர். இந்து ஆரிய இலக்கணக்காரர்களின் வருகைக்கு முன்பே தமிழ் நெடுங்கணக்கு திருந்திய நிலையில் இருந் ததென்றும், தமிழ் வட்டெழுத்து அசோக எழுத்தினின்றும் வந்ததன்றென்றும் அவர்கள் உறுதியாக மொழிகின்றனர். இக்கொள்கையே திரு. சுவாமி வேதாசலம் அவர்களால் தமது நூற்கள் சிலவற்றில் வலியுறுத்தப்படுகின்றது. திரு.எம். சீனிவாசையங்காரவர்கள் ‘தமிழாராய்ச்சிகள்’ என்னும் தம் நூலின் கண்ணே வட்டெழுத்துக்கள் தமிழர்க்குரியனவே யன்றி வடநாட்டில் வழங்கிய அசோக எழுத்துக்களின் திரிபல்ல வென்றும், கால்டுவெல் கூறுகிறபடியன்றி ஏகார ஓகாரங் களோடு வேற்றுமை தெரிய எகர ஒகரங்களுக்குப் புள்ளியுண் டென்று தொல்காப்பியர் கூறுதலாலும், ப,ம, என்னும் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களிலும் வட்டெழுத்துக்களிலும் வேறுபட்டிருத்தலாலும் கால்டுவெல் முதலாயினோர் கொள்கை பொருந்தாது என்றும், கி.மு. 15 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் பினீஷியர், எகிப்தியர்களுடன் வாணிகத்தால் கலந்திருத்தலால் எகிப்தியருடைய எழுத்து முறையைத் தமிழர் அந்நாளிலேயே கொணர்ந்திருக்க வேண்டுமென்றும், இந்திய ஆரியர் இவ்வெழுத்து முறையைத் தமிழரிடமிருந்து பெற்றி ருத்தல் கூடுமென்றும் கூறி, தாமஸ்,டேவிட்ஸ், பர்னல் என்பவர் களின் கொள்கையே வலியுடைத்தாமென வற்புறுத்துகின்றனர். திரு.பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் தமது ‘தமிழ் மறை விளக்கம்’ என்னும் நூலிலே, வட்டெழுத்துக்கள் என்பன பல்லவ மன்னர் காலத்தில் சில நூற்றாண்டுகளே வழங்கின என்றும், அவை அசோகனுடைய ‘பாலி’ மொழி அறிந்தவர்களும், தமிழ் நன்கு அறியாதவர்களுமான கற்றச்சர்களால் பொறிக்கப் பட்டமையின் சிற்சில தமிழெழுத்துக்களுக்குப் பிரதியாகப் பாலி எழுத்துக்களைக் கலந்து பொறித்து விட்டனரென்றும், பல்லவர் காலத்துக்கு முன்னும் பின்னும் உள்ள தமிழ் எழுத்துக்களுக்கும் வட்டெழுத்துக்கும் தொடர்பு இல்லையென்றும், இப்பொழு துள்ள தமிழின் எழுத்துக்கள் கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முந்தியதாகிய தொல்காப்பியக் காலந்தொடங்கி ஒரு பெற்றியே உள்ளன என்றும் கூறுகின்றனர். தொல்காப்பியத்திற்கு முன்பு தொட்டுள்ள தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்து என்னும் பெயர்க்கு உரியவாயினும் அல்லவாயினும் அவை அசோகனுடைய பாலி எழுத்துக்களினின்று உண்டானவையல்ல வென்பது தேற்றம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டுத் தொடங்கியே வழங்கி வந்த பாலி (பிராமி) எழுத்தினின்று கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு தொட்டுள்ள தமிழ் எழுத்துக்கள் உண்டாயின வென்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்? இனி, தமிழெழுத்துக்கள் பிராமி அசோக எழுத்துக்களினின்று வந்தனவல்லவாயினும், அவை தமிழ ராலேயே முதலில் உண்டாக்கப் பெற்றனவோ அல்லது சில ஐரோப்பிய ஆசிரியர் முதலாயினார் கருதுமாறு வேற்று நாட்டவராகிய எகிப்தியரிடமிருந்து அறிந்து கொள்ளப் பெற்றனவோ என்பது துணிந்துரைக்கற்பாலதன்று. தமிழர் வேற்றுநாட்டவரிடமிருந்தே எழுத்தினை அறிந்தாரென்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லாத வரையில் தமிழெழுத்துக்கள் தமிழர் தாமாகவே அறிந்து உண்டாக்கியன வென்று கொள்வதே முறையாகும். இனி, உயிர்மெய்களின் வடிவு வேற்றுமை குறித்துத் தொல் காப்பிய உரைகாரர்கள் எழுதியிருப்பன ஈண்டு அறிதற்குரியன. ‘உருவுதிரிந்துயிர்த்தல் மேலும் கீழும் விலங்கு பெறுவன விலங்கு பெற்றுயிர்த்தலும், கோடு பெறுவன கோடு பெற்றுயிர்த்தலும், புள்ளி பெறுவன புள்ளி பெற்றுயிர்த்தலும், புள்ளியும் கோடும் உடனே பெறுவன உடன் பெற்றுயிர்த்தலும் எனக்கொள்க’ என இளம்பூரணர் கூறினர். நச்சினார்க்கினியரும் இங்ஙனம் கூறிய தனோடு மேலும் இதனை விளக்கி ‘கி, கீ’ முதலியன மேல் விலங்கு பெற்றன. ‘கு, கூ’ முதலியன கீழ் விலங்கு பெற்றன. ‘கெ, கே’ முதலியன கோடு பெற்றன. ‘கா, ஙா’ முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார். ‘கொ, கோ, ஙோ, ஙொ’ முதலியன புள்ளியும் கோடும் உடன் பெற்றன என உரைத்தார். இவர்கள் இங்ஙனம் வடிவு காட்டியது தமக்கு முன்னிருந்த கல்வெட்டுக்களைக் கொண்டோ பிற ஆதரவுகளைக் கொண்டோ ஆதல் வேண்டும். நச்சினார்க்கினியர் எழுதியிருப்பதிலிருந்து ‘கா’ முதலியன அவர் காலத்திற்கு முன்பு அருகிற் புள்ளி பெற்றும், அவர் காலத்தில் கால் பெற்றும் இயங்கியமை புலனாகும். ‘கெ, கே’ முதலியன கோடு பெற்றன என்று கூறியிருப்பதால் முன்பு நேர் கோடாக இருந்ததே பின்பு வளைத்தெழுதப்பெற்றது எனப் புலப்படுகின்றது. இவர்கள் ‘கை கௌ’ முதலியவற்றின் வடிவு வேற்றுமை காட்டாது விட்டதன் காரணம் புலப்படவில்லை. கை முதலியன முன்பு இருகோடு பெறுமெனக் கொள்க. இவை இவ்வாறாகவே கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன. கௌ முதலியவற்றின் பழைய வடிவு இன்னும் ஆராய்ந்து காணற்பாலது. இனி, பெயர், வினை, இடை, உரி எனத் தமிழ்ச்சொல் நால்வகைப்படும். ஆசிரியர் தொல்காப்பியனார், “ சொல் லெனப்படுவ, பெயரே வினையென் றாயிரண்டென்ப அறிந்திசினோரே” “ இடைச் சொற் கிளவியும் உரிச் சொற்கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப” எனக் கூறியிருப்பது பெயர் வினைகளின் சிறப்பையும், இடை உரிகளின் சிறப்பின்மையையும் காட்டும். பெயர் வினைகளை யின்றி இடைஉரிகட்கு இயக்கமின்மை உணர்க. எனினும் அவர், “எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே” என்று கூறியிருப்பது ‘அசைநிலை’ முதலிய இடைச் சொற்களும் பொருளுணர்ச்சிக்கு ஒருவாறு துணையாவன என்பதை விளக்கும். பெயர்ச் சொல்லாவது இருதிணை ஐம்பாற் பொருளை உணர்த்தும் சொல்லாம். பயனிலை கொள்ளற்கும் உருபேற்றற்கும் உரித்தாதலும், காலந்தோற்றாமையும் பெயர்ச் சொல்லின் இலக்கணமாகும். உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் எனப் பெயர்ச்சொல் மூவகைப்படும். வினைச் சொல்லாவது பொருளின் புடை பெயர்ச்சியாகிய தொழிலை உணர்த்தும் சொல்லாம். தொழில் நிகழ்ச்சிக்கு வினை முதல், கருவி, இடம், காலம் என்பன இன்றியமையாதன. வேற்றுமை கொள்ளாமையும், காலம் தோற்றலும் வினைச் சொல்லின் இலக்கணமாகும். காலமும் செயலும் குறிப்பிற் பெறப்படுவன குறிப்பு வினையும், வெளிப்படையாக வுள்ளன தெரிநிலை வினையும் ஆகும். இவையும் உயர்திணை வினை, அஃறிணை வினை, பொது வினை என மூவகைப்படும். இவையெல்லாம் மூன்று காலமும், மூன்று இடமும், ஐந்து பாலும் பற்றியும், முற்று, பெயரெச்சம், வினையெச்சம் என்பன பற்றியும் பலவாகப் பாகுபடுமாறுங் காண்க. இடைச் சொல்லாவது பெயரும் வினையும் இடமாக அவற்றைச் சார்ந்து தோன்றும் சொல்லாம். இடை என்பது இடம் என்னும் பொருட்டு. இனி, பெயர் வினைகட்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பாலும் இடையே வருதலின் இடைச்சொல் எனப்பட்டது என்பாரும், பெயர்ச்சொல் வினைச்சொற்களு மாகாது அவற்றின் வேறுமாகாது இடைநிகரதாய் நிற்றலின் இடைச்சொல்லாயிற்று என்பாரும் உளர். இடைச்சொல் சாரியையும், வினையுருபும், வேற்றுமையுருபும், அசைநிலையும், இசைநிலையும், குறிப்பிற் பொருளுணர்த்துவதும், உவமவுருபும் என எழுவகைப்படும். குறிப்பிற் பொருளுணர்த்துதல் ‘மன்’ முதலியன ‘கழிவு’ முதலிய பொருளையுணர்த்துதல். நன்னூலார் பொருளுணர்த்துவதும் குறிப்பும் என இரண்டாகக் கொண்டு இடைச்சொல்லை எண்வகையாக்குவர். உரிச்சொல்லாவது இசை, குறிப்பு, பண்பு என்பவற்றை உணர்த்தும் சொல். இஃது ஒரு பொருளுணர்த்தும் ஒரு சொல்லும், ஒரு பொருளுணர்த்தும் பல சொல்லும், பல பொருளுணர்த்தும் ஒரு சொல்லும் என மூவகைப்படும். நன்னூலார் ‘பிங்கல முதலா நல்லோ ருரிச் சொலின்’ என்று கூறியிருப்பது கொண்டு சொல்லெல்லாம் உரிச் சொல்லே என்பர் பிரயோக விவேக நூலார். அவர், “ வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா வுரிச்சொன்மேன” என்னும் சூத்திரத்தையும் தமக்காதரவாகக் கொண்டு ‘வெளிப் படவாராவுரிச்சொல்’ என்றமையால் ஏனையன வெளிப்பட வந்த உரிச்சொல்லென்பது பெற்றாம் என்பர். அங்ஙனம் கூறுவது, சொல்லெனப்படுவன பெயரும் வினையுமாகிய இரண்டுமே என்று அவற்றைச் சிறப்பித்துக் கூறி இடைச்சொல்லும் உரிச் சொல்லும் அவற்றைச் சார்ந்து தோன்றுமெனக் கூறிய தொல்காப்பியனார் கருத்துக்கும், ஏனையாசிரியன்மார் கருத்துக்கும் மாறாகலின் போலியென்றொதுக்கற்பாற்று. இனி உரிச்சொல் என்னும் பெயர்ப்பொருள் உணர்த் துவார் இசை குறிப்பு பண்பு என்னும் பொருட்கு உரிய சொல்லா கலின் உரிச்சொல்லாயிற்று என்பாரும், செய்யுட்குரிய சொல்லா கலின் உரிச்சொல் என்பாரும், பொருட்கு உரிமை பூண்டு வருதலின் உரிச்சொல் என்பாரும், பொருட்குப் பண்பு உரிமை பூண்டு நிற்றலின் அதனை உணர்த்துஞ் சொல் உரிச்சொல் எனப்பட்டதென்பாரும் ஆக உரைகாரர் பல திறத்தவராவர். வட நூலாசிரியர் ‘தாது’ என்று குறிப்பிட்ட சொற்களே இவை யென்பர் தெய்வச் சிலையார். இக்கருத்து ஒருசார் பொருத்த முடைத்தாகும் என்க. இனி தமிழ் மொழியானது மிக்க இனிமையுடைய தென்பது பலரும் அறிந்ததொன்று. பண்டைநாள் தொட்டு வந்த புலவர் பெருமக்கள் பலரும் இதன் சுவையை நுகர்ந்து வியந்து இதனைக் குறிக்குமிடமெல்லாம் செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், மென்றமிழ், இன்றமிழ், தீந்தமிழ், சுவைத்தமிழ், நறுந்தமிழ், செழுந்தமிழ், நற்றமிழ், சொற்றமிழ் என்றிங்ஙனமாக அடைகொடுத்து வழங்கி வருவாயினர். ‘ஒண்டீந்தமிழ்’ என மாணிக்கவாசகரும், ‘தேனுறை தமிழ்’ எனக் கல்லாடரும், ‘செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்றமிழ்’ என்று தஞ்சைவாணன் கோவையுடையாரும் கூறுமாறு காண்க. இங்ஙனம் பலரும் இனிமையுடையதெனப் பாராட்டுதற்குத் தமிழ்ச் சொற்களின் இனிய ஓசை நலமும், இயற்கை நெறி வழுவாத சந்தியமைதியும் பெரிதும் காரணமாதல் வேண்டும். தமிழ் எழுத்துக்களெல்லாம் உரப்பலும் கனைத்தலும் வேண்டாது எளிய முயற்சியால் எழுவன. அவற்றுள்ளும் சிலவெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வாராமையும், சிலவெழுத்துக்கள் இறுதியில் வாராமையும், சிலவெழுத்துடன் சிலவெழுத்து மயங்கி வாராமையும் நோக்கின் தமிழ்ச் சொற்களின் ஆக்கப்பாடு அருமுயற்சியின்றி கூறத் தக்கவாறு இயற்கை முறையில் அமைந்துள்ளனவென்பது புலப் படும். தனி மெய்களும், உயிர் மெய்களும் டகரம் முதலியனவும் முதலில் வரினும், வல்லொற்றுக்கள் இறுதியில் வரினும், மயங்கா வென்ற எழுத்துக்கள் மயங்குமாறு நிற்பினும் அவை மென்மைச் செவ்வியுடைய நாவிற்கு வருத்தம் விளைத்தல் கண்கூடு. மாணவர்கள் ப்ரபு, டம்பம், த்வொக், உத்பத்தி என்பவற்றை ஓதிக் காண்க. இனி இச்சொற்களே இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நால்வகைப்படும். ஆசிரியர் தொல்காப்பியனார், “ இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே” என்னும் எச்சவியற் சூத்திரத்தால் தமிழ்ச்செய்யுட்களுக்குரியன இந்நால்வகைச் சொல்லும் என்றமை காண்க. பெயர் வினை இடை உரி என்னும் நான்கும் இங்ஙனம் பாகுபடும் என்பது இளம்பூரணர் கருத்தாகும். பெயர் வினை இடை உரி என்பன இயற்சொல்லின் பாகுபாடு என்பதும், திரிசொல்லும் திசைச் சொல்லும் வடசொல்லும் பெரும்பான்மை பெயராயும் சிறுபான்மை வினையாகவும் வரும் என்பதும் சேனாவரையர், தெய்வச் சிலையார், நச்சினார்க்கினியர் என்னும் உரையாளர்களின் கருத்தாம். இவர்க்குள்ளும் சிறிது வேற்றுமையுண்டு. அதனை உரை நோக்கி யுணர்க. இயற்சொல்லாவது, செந்தமிழ் நிலத்து வழக்குடன் பொருந்தித் தம் பொருள் வழுவாமல் இசைக்கும் சொல்லாம். எனவே யாவரும் எளிதில் பொருளுணரும் செந்தமிழ் நாட்டுச் சொல் இயற்சொல் எனப்படும் என்க. இதனை, செந்தமிழ் நிலத்தும் கொடுந்தமிழ் நிலத்தும் ஒப்ப வழங்கும் சொல் லென்றும், இயல்பாகிய சொல்லென்றும் கூறுவர். இதனைச் செஞ்சொல் எனினும் அமையும் என்பர் தெய்வச்சிலையார். திரி சொல்லாவது இயற்சொல்லின் வேறுபட வருஞ்சொல். ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும் பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அரிதிற் பொருளுணரப்படும் சொல்லே திரிசொல் என்க. இயற்சொல்லே திரிந்து திரி சொல்லாகும் என்பதும், கிளி கிள்ளை யென்றானது உறுப்புத்திரிந்ததும், தத்தை என்றானது முழுவதும் திரிந்ததும் ஆம் என்பதும் சேனா வரையர் கருத்து. இளம்பூரணர் கருத்தும் இதுபோலுமெனக் கொள்ளக் கிடக்கிறது. நச்சினார்க்கினியர் சொல்லின் திரிவை ஒருவாறு கொண்டாராயினும், முழுவதும் திரித்தல் என்பதனைப் பிற சொற்கொணர்ந்து திரித்தல் என்பர். இயற் சொல்லின் வேறுபட வருவதென்பதே பிற ஆசிரியர்களின் கருத்தாகும். கிளி என்னும் சொல்லே தத்தை என்றும், மலை என்னும் சொல்லே வெற்பு என்றும் திரிந்தன வென்பது தமிழியலுக்கு முற்றிலும் மாறாகையால் சேனாவரையர் உரை கொள்ளற்பாலதன்றாகும். திசைச் சொல்லாவது செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்து கிடந்த பன்னிரு நிலத்துமுள்ளார் கருதிய பொருளையுடையதாகும். எல்லா நாட்டிற்கும் பொதுவாதலின்றிக் கொடுந்தமிழ் நாடு ஒவ்வொன்றற்கேயுரிய சொல் திசைச் சொல்லாம் என்க. வட சொல்லாவது வடமொழியிலிருந்து தமிழிற் கொள்ளப்படுஞ் சொல். அஃது இரு மொழிக்கும் பொதுவான எழுத்தாலாயதும், வடமொழிக்கேயுரிய எழுத்துச் சிதைந்து வருவதும் என இருவகைப்படும். இதற்கு ஆரியச் சொற் போலும் எனக் கூறிய இளம்பூரணருரை பொருந்துவதன்று. இனி செந்தமிழ் நிலம் யாது, செந்தமிழைச் சேர்ந்த பன்னிரு நிலம் யாவை என ஆராய்தல் வேண்டும். இளம்பூரணர், சேனாவரையர், நச்சி னார்க்கினியர் மூவரும் செந்தமிழ் நிலமாவது வையை யாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் உள்ள நிலம் என்பர். இவர்கள் இங்ஙனம் கொண் டமைக்கு யாதும் ஆதாரம் காட்டவில்லை. நாமும் கண்ட தில்லை. இவ்வுரையாளர்கள் காலத்திற்கு இவ்வரையறை பொருத்தமுடைத்துப் போலும்! கடைச்சங்க நாளிலும், பின்வந்த சேக்கிழார், கம்பர் முதலானோர் நாட்களிலும் பாண்டிநாடே செந்தமிழ் நாடெனக் கொள்ளப் பெற்றதென்று ‘கபிலர்’ என்னும் உரை நூலில் பல சான்றுகளுடன் காட்டியுள்ளேன். ஆசிரியர் தொல்காப்பியர் நாளிலே கிழக்கும் மேற்கும் கடலும், வடக்கும் தெற்கும் வேங்கடமும், குமரியும் எல்லையாக வுடைய நிலமுழுதும் செந்தமிழ் நாடாதல் வேண்டும். “ வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” எனப்பாயிரத்தும், “ வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்” எனச் செய்யுளியலினும் வருதல் இதற்குச் சான்றாகும். எனவே பன்னிரு நிலம் என்பன இதற்குப் புறம்பாகவுள்ள தமிழ்திரி நிலங்களாதல் வேண்டும். இளம்பூரணர், சேனாவரையர் முதலாயினார் பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீதநாடு, பூழி நாடு, மலையமானாடு, அருவாநாடு, அருவாவடதலை என்பன பன்னிரு நிலம் என்பர். இது பிற்காலத்திற்குப் பொருந்துமாயினும் தொல்காப்பியர் காலத்திற்குப் பொருந்துவதாகாது. அற்றை நாளில் இந்திய நாட்டின் வட பகுதியில் ஆரியமன்றிப் பிற மொழிகளும், தென் பகுதியில் தமிழன்றிப் பிற மொழிகளும் வழங்கியிருப்பின் ஆரியத்திற்கே வடமொழி என்றும், தமிழுக்கே தென்மொழி என்றும் பெயர் வழக்குண்டாகக் காரணமில்லை. அன்றியும், சிங்களம், கன்னடம், தெலுங்கு முதலியன அப் பொழுது தனி மொழிகளாக வழங்கியிருப்பின் தொல்காப்பியர் திசைச் சொற்கு இலக்கணங் கூறுமிடத்தில் அம்மொழிகளை விடுத்து, ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப்பின’ என்று மாத்திரம் கூறுதல் பொருத்தமுடைத்தன்று. ஆதலின் வடக்கே ஆரியத்தின் சிதைவுகளும், தெற்கே தமிழின் சிதைவுகளும் தனி மொழிகளின் நிலைமையை அடையாமலே அக்காலத்தில் வழங்கினவென்று கொள்ளுதல் வேண்டும். யான் கூறுவதே தெய்வச் சிலையார்க்கும் வேறுசிலர்க்கும் கருத்தென்பது அவருரையால் அறியப்படும். ‘வேங்கடமலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குண கடலின் மேற்கும், குட கடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலம் என்ப’ ‘பன்னிரு நிலமாவன குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் , துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்’ என்னும் அவ்வுரைப்பகுதிகள் காண்க. இதற்கு மேற்கோளாகஅவ்வுரையிற் கொள்ளப் பெற்றதொரு சூத்திரப்பகுதி நன்னூல் மயிலை நாதர் உரையிலும் காணப்படுகின்றது. அது, “ கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிள மென்னும் எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத் துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில வாட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப் பிருவரும் படைத்த பன்னிரு திசையிற் சொன்னய முடையவும்” என்பது; இதன் பின் ‘என்றார் அகத்தியனார்’ என்று கூறியிருத் தலின் இஃது அகத்தியச் சூத்திரமே எனக் கொள்ளப் பெற்றமை புலனாகும். இப்பன்னிரு நிலங்களும் முடியுடை வேந்தர் மூவரின் ஆணை வழி குறுநில மன்னர் பதின்மராலும் ஏனை இருவராலும் ஆளப் பெற்றன வென இச்சூத்திரம் கூறுவதும் கருதற்பாலது. கல்லாத சிறுவர் பேச்சிலுள்ள சந்தியும், தமிழிலக்கணங் கூறும் சந்தியும் ஒன்றேயாகலின் இயற்கையின் வழுவாமலே தமிழ் நூலோர் சந்திகளை அமைத்துள்ளனர் என்பது பெறப்படும். உதாரணமாக மாவிலை என வகரவுடம்படுமெய் பெறுவதும், வாழையிலை என யகரவுடம்படுமெய் பெறுவதும், மரவேர் என மகரவொற்றுக்கெடுவதும், வாழைக்காய் எனக் ககரவொற்று மிகுவதும், புளியங்காய் என அம்சாரியை பெற்று மகரம் ஙகரமாய்த் திரிவதும் தமிழிலக்கணம் கூறுமாறே சிறுவர் பேச்சில் அமைந்திருத்தல் காண்க. பொருளுணர்த்து முறை யிலும் தமிழ்ச் சொற்கள் மிகச் சிறப்புடையன. தமிழிலுள்ள வினைச் சொற்கள் திணை, பால், எண், இடம், காலம், செயல் என்பவற்றை ஒருங்கு விளக்குதல் போல் வேறு எம்மொழிச் சொற்கள் விளக்குவனவாகும்? படித்தான் என்னும் வினை முற்றிலே பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும், விகுதியால் திணை, பால், எண். இடங்களும் விளங்கித் தோன்றுதல் காண்க. திரு. செல்வக் கேசவராய முதலியார் எம்.ஏ. அவர்கள் தாம் எழுதிய ‘தமிழ்’ என்னுங் கட்டுரையில் ஆங்கிலத் தோடு தமிழை ஒப்பிட்டுக் காட்டியிருப்பதன் ஓர் பகுதி பின் வருவது. ‘நாம் வந்திலன், சென்றிலன் என ஒரு சொல்லாய் வழங்கும் எதிர்மறை முற்றுக்களை ஆங்கிலத்தில் உரைப்பதற்கு மூன்று சொற்கள் வேண்டும். தெரிநிலையும் குறிப்புமான ஒவ்வொரு வினையாலணையும் பெயரையும் ஆங்கிலத்தில் பல சொற்களின்றி அமைக்கலாகாது. ‘வந்தாய்’க்கு என்பதை வந்தவ னாகிய உனக்கு எனப் பொருள் படுவதாய் நான்கு சொற்களால் அமைக்க வேண்டும். அடியேனுக்கு என்னும் குறிப்பு வினையாலணையும் பெயரை அமைக்க ஆறு சொற்கள் வேண்டும். நம்முடைய பெயரெச்ச வினையெச்சங்களும் சொற் சுருங்குதற்கு அநுகூலமாக இருக்கின்றன. வந்த மனிதன் என்பதை அமைக்க அவர்களுக்கு நான்கு சொற்கள் வேண்டும். அவன் வந்து போனான் என்னும் ஒரு வாக்கியத்தை அவர்கள் இரண்டு வாக்கியமின்றி உரைக்க இயலாது. அவர்களுக்கு வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, உவமைத் தொகை, அன்மொழித் தொகைகள் இல்லை.’ இதிலிருந்து தமிழ்ச் சொற்களும் சொற் றொடர்களும் சுருங்கிய வுருவில் விரிந்த பொருளைக் கொண்டிருக்கும் சிறப்பு நன்கு புலனாகும். சொல்லமைதி, புணர்ச்சி, வேற்றுமை முதலியவற்றில் தமிழும் வடமொழியும் வெவ்வேறு இயல்பினவாதல்: உலகில் வழங்கும் எல்லா மொழிக்கும் ஆரிய மொழியே தாயாகுமென்றும், அம்முறையே தமிழும் ஆரியத்தினின்றே தோன்றியதாகுமென்றும் கொள்ளும் ஆராய்ந்து துணியாத கொள்கையினையுடையார் சிலர் சின்னாள் முன்பு தொட்டு இருந்து வருகின்றனர், மொழியாராய்ச்சி என்பது புதிய கலை முறைகளில் ஒன்றாகி மொழிகளின் உண்மைத் தன்மையை விளக்கி வரும் இந்நாளில் அக்கொள்கை அருகிவிட்டதேனும் உண்மையுணராதார் சிலர் இன்னுமிருத்தலின் அவர் பொருட் டாக வடமொழி தென்மொழிகளின் வேறுபட்ட இயல்பினை விளக்குதல் கடனாகின்றது. மொழி நூற்புலவர்கள் மொழிகளை அவ்வவற்றின் பண்புகள் கொண்டு வெவ்வேறு இனம் அல்லது குழுஉவாகப் பாகுபடுத்தியிருக்கின்றனர். பகுதிகளே சொற்களாக அல்லது சொல்லெல்லாம் ஓரசையேயாகவுள்ள இனம் (Isolating) ஒன்று. பகுதியுடன் விகுதி முதலியன ஒட்டிநின்று, அதனாற் சொல்லின் உருபு திரியாதிருக்கும் இனம் (Agglutinative) ஒன்று. விகுதி முதலியன கூடுதலால் சொல்லின் உருவந்திரிந்தும் மாறுதலடையும் இனம் (Inflectional) ஒன்று. மொழிகள் பலவும் இம் மூன்றினத்திலே அடங்காநிற்கும். சீனம் முதலியன முதல் இனத்தையும், தமிழ் முதலியன இரண்டாவது இனைத்தையும், வடமொழி முதலியன மூன்றாவது இனத்தையும் சேர்ந்தவை. தமிழானது சிறுபான்மை முதல் இனத்தையும் மூன்றாம் இனத்தையும் ஒத்திருக்குமாயினும் பெரும்பான்மை ஒவ்வாமை யுடையது. மொழிகள் ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமையை ஒரு காலத்தில் எய்து மென்பதற்குரிய இயைபும் சான்றும் இன்மையால் இம்மூவினமும் எக்காலத்தும் மூவேறு தனித்தன்மைகளை உடையனவேயாகும். இந்த அடிப்படையான வேறுபாட்டிலிருந்தே தமிழும் வடமொழியும் ஒன்றையொன்று சார்ந்திராத தனிமொழிகள் என்பது நன்கு புலப்படும். மற்று இவ்விரு மொழிகளும்இலக்கண வகையால் எங்ஙனம் வேறுபடுகின்றன என்பதும் காணற்பாலது. தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள வேற்றுமைகளைக் கூறுங்கால் இவ்விரு மொழிக்கும் ஒற்றுமையே இல்லையெனக் கருதுவதாகக் கொள்ளலாகாது. திருத்தமுற்ற மொழிகள் பல வற்றிலும் பொதுவாக அமைந்திருக்கக் கூடிய பண்புகள் பல உள்ளன. உயிர் மெய், பெயர் வினை, ஆண்பால், பெண்பால், ஒருமை, பன்மை, எழுவாய், பயனிலை, மூவிடம், முக்காலம் போல்வன எல்லா மொழிகட்கும் பொதுவியல்புகளாம். தமிழ் வாணரும் வடமொழிவாணரும் நெடுங்காலமாகக் கலந்து வாழ்தலால் அக்கலப்புப் பற்றியும் இவ்விரு மொழிக் கண்ணும் ஒத்த பண்புகள் சில அமைதல் இயற்கையே. மொழிகளின் வரலாற்றுக்கு அவற்றின் பொதுவியல்களினும் சிறப்பியல்புகளே மிக்க வலிமையுடையன வாகும். ஆகலின் தமிழின் சிறப்பியல்கள் இவையென்பது காட்டப்படின் அதுகொண்டு அஃது ஓர் உயர்தனிச் செம்மொழியாமென்பது போதரும். முன்பு, தொல்காப்பியத்திற்கு முதனூல் ஐந்திரம் என்பார் கூற்றை மறுத்துரைத்த வழியும் சிவஞான முனிவர் தொல் காப்பியப் பாயிரவிருத்தியலில் தமிழின் சிறப்பியல்புகளை விளக்கி அதனை மறுத்துரைத்தமையை எடுத்துக்காட்டிய வழியும், தமிழ்ச் சொற்களின் மாண்புகளை விளக்க நேர்ந்த வழியும் தமிழின் சிறப்பியல்புகள் பல போந்தன. மேலே பொது வகையாற் கூறியனவும், கூறாதனவுமாய சில சிறப்பியல்புகள் இங்கே விளக்கப்படும். ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும், ஏனைத் தாழ்ந்த உயிர்களையும் உயிரில்லாவற்றையும் அஃறிணை என்றும் பாகுபாடு செய்திருப்பது தமிழிலன்றி, வடமொழி முதலிய வேறெம்மொழியிலும் இல்லை. எழுத்துகட்கு உயிர், மெய் எனப் பெயரிட்டிருப்பது போன்று இஃதும் தமிழர்களின் தத்துவ வுணர்வு மேம்பாட்டிற்குச் சிறந்த சான்றாகும். பால் வகுப்பு முறையிலும் தமிழும் வடமொழியும் முற்றிலும் வேறுபட்டவை. தமிழ் முறையானது பொருணோக்கத்தால் ஆணை ஆண் என்றும் பெண்ணைப் பெண் என்றும் கூறும் சிறப்புடையது. வடமொழி முறையோ சொன்னோக்கங்கொண்டு ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும், இரண்டையும் அலியாகவும், உயிரில்லாத பொருட்களையும் ஆண் பெண்ணாக வும் பிறழக் கூறும் குறைபாடுடையது. ஒரு பொருளே சொல் வேற்றுமையால் ஆணாகவும், பெண்ணாகவும் அலியாகவும் மாறுவதும் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல்லே அடை மொழியாக வருங்கால் ஆண் பெண் அலியாக மாறுவதும் ஆகிய குறைகள் வடமொழியில் உள்ளன. உலகத்துப் பொரு ளெல்லாம் சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னும் குணங் களோடு கலந்தனவாகலின் சாத்துவிகமுள்ளது ஆணாகவும், இராசதமுள்ளது பெண்ணாகவும், தாமதமுள்ளது அலியாகவும், ஒரு பொருளே அக்குணங்களின் மிகுதி குறை ஒப்புப் பற்றி ஆண் பெண் அலியாகவும் கூறப்படும் என்னும் வட நூலார் கூற்றும் ஆராயுங்கால் உண்மையுடைத்தெனத் தோன்றவில்லை. தக்கிணம் என்னும் திசைப் பெயரானது அதனால் விசேடிக்கப்பட்டதற் கேற்பத் தக்கிண தேசம் என்புழி ஆண்பாலும், தக்கிணாமூர்த்தி என்புழிப் பெண்பாலும் ஆகுமெனின், தேசம் சாத்துவிகமாகவும் மூர்த்தி இராசதமாகவும் கோடற்குரிய இயைபுதான் என்னையோ? தமிழ் நூல்களிலே ‘தென்றலஞ் செல்வன்’ ‘நாணென்னு நல்லாள்’ என்றிங்ஙனம் உயிரில் பொருளும் குணமும் முதலாயின் ஆண் பாலாகவும் பெண்பாலாகவும் கூறப்படுதல் வடநூல் முறை யன்றோ வெனின், இவை உருவக மாதலின் வடநூல் முறையா மாறு யாங்ஙனம் என்க. ‘கங்கையாள்’ முதலியவற்றையும் விரித்து உருவகமாக்குதல் வேண்டும். சிறுபான்மை வடநூன்முறை தழுவிற்றுமாம். தமிழ்ச் செய்யுட்களும் நூல்களும் செய்யுள் என்பதைத் தொல்காப்பியர் பொதுப் பெயராகக் கொண்டிருக்கிறார். பாட்டுக்கும் உரைக்கும் சூத்திரத்துக்கும் அக்காலத்தில் செய்யுளென்றே வழங்கப்பட்டு வந்தது. பாட்டு என்பதற்குப் பா எனப்படுவதே சிறப்புப் பெயராகும். அவர் உறுப்புக்கள் 34 எனவும் பிரித்திருக்கிறார். செய்யுள் யாவும் பொருள் இலக்கணத்துக்கு இலக்கியமானவை. மாத்திரை என்பதும் அவ்வுறுப்புகளில் ஒன்று. செய்யுளில் தொகை நிலைச் செய்யுள் என்றும் தொடர்நிலைச் செய்யுளென்றும் பாகுபாடுகள் உண்டு. ‘புறநானூறு’ தொகை நிலைச் செய்யுளாகும். ‘சீவக சிந்தாமணி’ தொடர்நிலைச் செய்யுளாகும். தொல்காப்பியத்தில் கூறியுள்ள அசைக்கும், மற்ற நூல்களில் கூறப்பட்டுள்ள அசைக்கும் வித்தியாசமிருக்கிறது. தொல்காப்பியர் ‘நாற் சீர் கொண்டது அடியெனப்படுமே’ என்று கூறுகிறார்.இத்தனை எழுத்துக்கள் முதல் இத்தனை எழுத்துவரையுள்ளது இன்னின்ன அடியென்றும் அவர் வகுத்திருக்கிறார். 4 முதல் 6 வரை உள்ளதைக் குறளடியென்றும், 7 முதல் 9 வரையுள்ளதை சிந்தடியென்றும், 10 முதல் 14 வரையுள்ளதை நேரடியென்றும், 15 முதல் 19 வரையுள்ளதை நெடிலடியென்றும் 18 முதல் 20 வரையுள்ளதை கழி நெடில் என்றும் பிரித்திருக்கிறார். இதுதான் கட்டளையடி எனப்படுவது. இந்த கட்டளையடி என்பது கடைச்சங்க காலத்திலேயே இல்லாது போய்விட்டதாகத் தெரிகிறது. இதனைப் பேராசிரியர் முதலியோர் தங்கள் உரையில் விளக்கியிருக்கின்றனர். ஒரு காலத்தில் வழக்கத்திலிருந்து பிறகு மறைந்த ஒரு காரியத்தைப் பிற்காலத்திலும் வழக்கிலிருப்பது போலக் கூறுவது கூடாதென ஆசிரியர் ‘மரபு’ என்ற நுணுக்கத்தாலே குறிப்பிட்டிருக் கிறார். உதாரணமாக தழை என்பது முற்காலத்தில் கையுறையாகக் கொண்டு கொடுக்கும் ஒருவித தழையாலான உடை. இப்போது அந்த தழை கொடுக்கும் வழக்கமில்லை. இப்படியிருக்க இக்காலத்திலும் தழை கொடுத்ததாக எங்காவது சொல்லுவோமானால் அது தவறாகும். தூரவிருந்து ஒருவர் பாடுகையில் அது எத்தன்மையான பாவெனக் கண்டறிவதே பா என்ற உறுப்பின் லஷணமெனச் சொல்லப்படுகிறது. பா என்ற சொல் உறுப்பின் பெயராக விருப்பத்தோடு செய்யுளின் பெயராகவுமிருக்கிறது. பாக்களை ஆறுவகையாகப் பாகுபாடு செய்திருக்கிறார். செய்யுளில் இருவகை உண்டெனவும், அவற்றில் ஒன்று அடி வரையறை உள்ளதென்றும், மற்றொன்று அடிவரையறையற்றதென்றும் கூறப்படுகிறது. நூல் என்பது அடிவரையறை இல்லாதது. பண்டைநாளில் நூல் என்றது இலக்கணம் என்ற ஒன்றை மட்டும் குறித்தது. இப்போது நாம் எல்லாவற்றையும் நூலென வழங்குகிறோம். அக்காலத்தில் செய்யுள் என்ற பெயரால் மற்றவை வழங்கப்பட்டன. நூலுக்கு அடிவரையறை இல்லாதது போலவே சூத்திரத்துக்கும் அடிவரையில்லை, உரைக்கும் இல்லை. செய்யுட்களை ஆசிரியர் 7 விதமாகப் பாகுபாடு செய்திருக்கிறார். வண்ணம் என்ற ஒரு உறுப்பை மட்டும் 20 விதமாகப் பிரித்திருக்கிறார். வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம் முதலியன அந்தப் பாகுபாட்டில் அடங்கியவைகளே. இது ஓசைமுறையைக் குறிக்கிறது. இதிலிருந்து இப்போது ( Rhetoric ) என்று சொல்லப் படும் ஓசைமுறை அக்காலத்தும் இருந்ததாகத் தெரிகிறது. நூலை, முதல் வழியென இரண்டு வகைப்படுத்திக் கூறியிருக்கிறார். நன்னூலார் சார்புநூல் என்றும் ஒன்றைக் குறிக்கிறார். மற்றும் சிலர் எதிர் நூல் என்ற ஒன்றிருந்ததாகவும் சொல்லு கின்றார்கள். சார்புநூல் என்ற ஒன்றிருப்பதாகக் கொள்ளுவது தவறென நச்சினார்க்கினியர் கூறுகிறார். மொழி பெயர்ப்பும் வழிநூலாகவே கொள்ளப்படுகிறது. ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்புமை கூறுவது உவமமாகும். இது வெளிப்படை உவமமென்றும் உள்ளுறை உவமென்றும் பிரிகிறது. உள்ளுறை உவமம் பெரும்பாலும் செய்யுளுக்கும் அகப்பொருளுக்குமே உரியது. பண்டைநாளில் சங்க இலக்கியங்களில் உவமையை மிகப் பொருத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் நண்டின் கண்களுக்கு உவமை கூறுகையில் “ வேப்புநனையன்ன நெடுங்கட்கள்வன்” எனக் கூறி நண்டின் கண்களுக்கு வேப்பம்பூவை உவமையாகக் கூறுகிறார். உள்ளுறை உவமையினால் நாம் அக்கால மக்களின் நாகரீக மேம்பாட்டை உணர்ந்து கொள்ளலாம். மெய்ப்பாடு என்றது உள்ள நிகழ்ச்சி புறத்திலே வெளிப் பட்டுத் தோன்றுவதைக் காட்டுவது. இது எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மெய்ப்பாட்டியல் மனோதத்துவ சாஸ்திரம் போன்றிருக்கிறது. மரபு என்பதில் ஆசிரியர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என மூன்று பிரிவுகள் செய்து கொண்டு இன்னின்னவற்றை இன்னின்னவாறு கூறவேண்டுமென விரிவாக ஆராய்ந்திருக்கிறார். இளமைப் பெயர் - பார்ப்பு, குட்டி, குழவி, கன்று, குருளை முதலியன. ஆண்பாற் பெயர்;- ஏறு, களிறு, சேவு, சேவல் முதலியன; பெண்பாற் பெயர்- பேடை, பெட்டை, பிடிமுதலியன. குழவி என்பது குஞ்சரத்தின் இளமைப் பெயர் என அதற்குத் தனி சூத்திரம் சொல்லியிருக்கிறார். அதனால் அவ்வழக்கு அதிகமாக அக்காலத்தில் பிரயோகத்திலிருந்திருக்க வேண்டும். ஆவுக்கும் எருமைக்கும் அவ்விதமே சொல்லவேண்டுமென்றும் கூறியிருக்கிறார். இப்போது பலர் விநோதமாக நினைக்கக்கூடிய சில விஷயங்களும் ஆசிரியரால் இது சம்மந்தமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆட்டின் ஆணை அப்பர் எனச் சொல்லவேண்டுமென்றும், நரியின் பெண்ணை நரிப்பாட்டி எனச் சொல்ல வேண்டு மென்றும் கூறியிருக்கிறார். மரபியலில் உயிர்களைப் பலவிதப் பாகுபாடு செய்து மக்கள் தாமே ஆறறிவுயிரே என்றும் குறித்திருக்கிறார். தாவரவர்க்கத்தை மரம் புல் என இரண்டு விதமாகப் பிரித்து தென்னை, பனை முதலியவற்றைப் புல்லினத்தில் சேர்த்துப் புளிய மரம் முதலியவற்றை மரத்தினத்தில் சேர்த்தும் கூறியிருக்கிறார் என முடித்தார். பொருளாராய்ச்சி (மணமுறைகள்) தமிழரின் மணமுறை நாட்டார் இப் பிரசங்கத்தில் பண்டை நாளைத் தமிழரின் நாகரீகச் சிறப்புகளைப் பற்றி விவரித்தார். முதலில் அவர் தொல்காப்பியப் பொருளதிகாரத்திலிருந்து தமிழரின் மணமுறையை ஆராய ஆரம்பித்தார். பொருளதிகாரத்திலே ஆசிரியர் அகப்பொருளியலைப் பற்றியும் புறப்பொருளியலைப் பற்றியும் நன்கு ஆராய்ந்து பல விஷயங்கள் சொல்லியிருக்கிறார். சங்க இலக்கியங்களிலே அகப்பொருளே மிகுந்திருக்கின்றது. தொல்காப்பியரும் அகப் பொருளைப் பற்றியே முதலில் கூறியிருக்கிறார். உலகியல் என்பது மூன்று வகைப்படும்.அவை: இன்பம், பொருள், அறம் எனப் பிரியும். நால்வகைப் புருஷார்த்தங்களைக் கூறும் வடமொழி நூலார் அறம் பொருள் இன்பம் வீடு என அறத்தை முதலில் வைத்திருக்க தமிழ் நூல் வல்லார்கள் மட்டும் இன்பத்தை முதலில் வைத்திருப்பதன் காரணத்தை சற்று கவனிக்க வேண்டும். மக்கள் மட்டுமின்றி உலகிலுள்ள ஜீவராசிகளனைத்துமே இன்பத்தைத்தான் விரும்புகின்றன. வாழ்க்கையின் முடிவே இன்பமாகும். பொருளும் அறமும் இன்பத்தைப் பெற சாதனங்களாகவிருக்கின்றனவே யொழிய இன்பத்தைப் போல் அவை பயனாக மாட்டா. இன்பமாகிய பயனையடைய பொருளும் அறமும் துணையாக நிற்கின்றன. ஆதலால்தான் தமிழ் வல்லார் இன்பத்தை முதலில் வைத்திருக்க வேண்டும். இங்கும் இன்பம் என ஆசிரியர் சொல்வது இவ்வுலக இன்பத்தையேயாகும். வீடு அல்லது வீட்டின்பம் என்பது உலகியல் மூன்றையும் விட்ட நிலையாகும். ஐம்புலன் கொண்டும் ஒருங்கே நுகரும் தலையாய இன்பத்தையே ஆசிரியர் அகப்பொருளின்கண் விளக்கினார். மனமொத்து காதலிக்கும் ஒரு ஆண்மகனையும் பெண் மகளையும் ஆசிரியர் உயர்ந்த ஒழுக்கத்தினராகவும் மிக்கச் சிறந்தவராகவும் குறித்திருக்கிறார். அவர்களுக்குத் தலைமகன் - தலைமகள் எனப் பெயரிட்டழைத்திருக்கிறார். பெயரிட்டிருக்கும் பான்மையி லிருந்தே அவர்களை எல்லாவற்றிலும் அதாவது நடை, குணம் முதலிய எல்லாவற்றிலும் சிறந்தவராகவே ஆசிரியர்கள் கொண்டிருக் கிறார்கள் எனத் தெரிகிறது. கிழவன் - கிழத்தி என்றும் காதலர் அழைக்கப்படுகின்றனர். மாறாத உரிமை உடையவர்கள் என்பதைக் காட்டவே இவ்விதம் பெயரிடப்பட்டிருக்கிறது. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் காண்கின்றனர். கண்டவுடனே ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.இதுவே தலையன்பாகும். தலைவன் ஓரிடத்திலிருந்து வந்திருக்கக்கூடும் தலைவி வேறோரிடத்திலிருந்து வந்திருக்கக்கூடும். இருவரும் தெய்வசங்கற்பத்தால் ஒன்றாகச் சந்தித்தபோதே அவர்கள் நெஞ்சம் கலப்பார்கள். அதுவே வாழ்க்கைக்கு ஆரம்பமாகும். இது தெய்வத்தால் வந்த நட்பு என்றே ஆசிரியர்கள் உணர்த்தி இருக்கின்றனர். கண்டவுடனும் கேட்டவுடனும் அன்பு கொள்வதையே தலையன்பாக அவர்கள் கொண்டிருக்கின்றனர். காளத்தியில் தோன்றிய கண்ணப்பன் ஆண்டவனிடம் கொண்ட அன்பும் தலையன்பேயாகும். காளத்திமலை மீது நாதனிருப்பதாகக் கேட்டவுடனே அவர் அளவிலா அன்புகொண்டார். தலைஅன்பு வயப்பட்ட தலைவன் தலைவியர் தங்களுக்கிடையே தோன்றிய நட்பைத் தங்களால் ஏற்பட்டதாகக் கொள்வதில்லை. கடவுளே அங்ஙனம் கூட்டி வைத்ததாக நினைக்கின்றனர். தலை மக்களுக்குள் நேரிடும் கூட்டம் தெய்வத்தால் ஆகின்ற கூட்டமாகும். “ ஒன்றே வேறே என்றிருபால் ஆயின் ... ஒத்த கிழவனும், கிழத்தியும் காண்பே” என்றார் ஆசிரியரும். முதலிலே சந்திக்கலுற்ற தலைமக்கள் நெஞ்சம் கலந்து என்றும் பிரியாத் தன்மையுடைய வராகின்றனர். அது முதல் அவர்களின் உயிர் ஒன்றாகவும் உடம்பிரண்டாகவும் மாறுகிறது. ஒருவர் உடம்பில் மற்றொருவர் வாழ ஆரம்பிக்கின்றனர். இந்த அபிப்பிராயத்தைக் குறளாசிரியரும் வற்புறுத்தியிருக்கிறார். இவர்களின் கலப்பை இனி இறப்பிலேதான் பிரிக்க வேண்டும். அந்த இறப்பும் பிரிக்க முடியாதெனத் தமிழ் நூலார் கொள்ளுகின்றனர். வெவ்வேறிடங் களிலிருந்து ஓடிவந்த நீர் ஒன்று கலந்தபின் எப்படிப் பிரிக்க முடியாத தன்iய அடைகிறதோ அங்ஙனமே இவர்களும் பிரிவுறா நிலையை அடைகின்றனர். இந்த அபிப்பிராயத்தையே ஆசிரியர் தொல்காப்பியனாரும் “பெய் நீர் போல” என்ற சூத்திரத்தில் அமைத்திருக்கிறார்.இருவரும் ஒன்றுபட்ட பின் அவர்களுக்குத் தனித்தனியே இன்பதுன்பங்களில்லை. ஒருவருக்கு வந்த துன்பத்தை மற்றொருவரும் கொள்ளுகின்றனர். ஒருவர் அடையும் இன்பத்தை மற்றொருவரும் நுகருகின்றனர். ‘இருவர் ஆகத்துள் ஓருயிர் கண்டனம்’ என்ற திருக்கோவை யாற்றின் அடிகள் இதனை வலியுறுத்தும். இப்படித் தலைவனும் தலைவியும் நெஞ்சங்கலந்த பின் மெய்யுறு புணர்ச்சியின்றி அன்பொடு ஒழுகி வருவதையே களவு என வகுத்தார்கள். பிறகு உற்றார் பெற்றோர் அறிய மணவிழைகொண்டு ஒழுகும் வாழ்க்கைக்கு கற்பு எனப் பெயரிட்டனர். கற்பு என்பதை விட களவே சிறந்ததெனக் கொள்ளப்படுகிறது. “கற்பெனப்படுவது களவின் வழித்தே” என இறையனாரகப் பொருளில் கூறப்பட்டிருக் கிறது. களவு என்ற பெயரை நோக்கி அதை இழிவாக நினைக்கக் கூடாது. களவு வாழ்க்கையை சீவக சிந்தாமணியார் “இன்றமிழ் இயற்கையின்பம்” எனக் கூறுகிறார். தலைவன் தலைவியரிடையே ஏற்படும் இவ்விதச் சேர்க்கையை களவு-கற்பு எனப் பிரித்த ஆசிரியர் மற்றும் அவற்றை மூன்று உட்பிரிவுகளாகவும் பிரித்திருக்கிறார். அவையாவன:- கைக்கிளை பெருந்திணை, ஐந்திணை, அகனந்திணை என்பனவாம். கைக்கிளையும் பெருந்திணையும் சற்று தாழ்ந்தனவாகவும் ஐந்திணையே உயர்ந்த தாகவும் கொள்ளப்படுகிறது. கைக்கிளை என்பது சிறுமையுற வாகும். இது ஒரு பக்கத்துறவு. பெருந்திணை என்பது பருவம்நீங்கி ஒன்றுபடுவது. ஆகவே இவ்விரண்டையும் விட ஐந்திணையே சிறந்ததென ஆசிரியர் கொண்டார். இறையனாரகப் பொருளிலும் “அன்பின் ஐந்திணைக் களவெனப்படுவது” எனக் கூறப்பட்டிருக்கிறது. கற்புக்கு லஷணம் சொல்லுகையில் ஆசிரியர், “ கற்பெனப்படுவது கரணமொடு புணரகொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடற்குரி மரபினோர் கொள்வது” எனக் கூறுகிறார். கரணம் என்பது சடங்கு என்றாகும். இது சடங்குகளுடன் சுற்றத்தார் அறிய மணஞ் செய்துகொள்வதைக் குறிக்கிறது. சுற்றத்தாரின்றி ஒருவர் கொடுப்பதன்றி தலைவனும் தலைவியும் தாங்களே கூடுவதும் உண்டு. மணமென்றதில் தலைவனும் தலைவியுமே முக்கிய புருஷர்கள். இது நிற்க , “மேலோர் மூவருக்கும் புனர்த்தகரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டு” என்ற ஒரு சூத்திரமும், “பொய்யும் வழுவும் தோன்றியபின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என மற்றொரு சூத்திரமும் காணப்படுவதிலிருந்து நான்கு வருணத்தாருக்கும், ஒரே வித சடங்குகள் இருந்தனவென்றும் பிறகே நான்கு வருணத்தாருக்கும் வெவ்வேறான கரணங்கள் (சடங்குகள்) ஏற்படுத்தப்பட்டன வென்றும் தெரிகின்றது. ஆசிரியர் இங்கே குறிப்பது ஆரியர்களுக் குள்ளிருந்த வருண பாகுபாடுகளையேயாகும். இவ்விதப் பாகுபாடுகள் தமிழரிடம் அக்காலத்தே இருந்ததாகத் தெரியவில்லை. தமிழர் மணமுறைக்கும் ஆரியர் மணமுறைக்கும் வித்தியாசங்களிருந்திருக்கின்றன. ஆரியர் மணமுறை எட்டு வகைப்படும். அவைதான் பிரமம் காந்தர்வம் முதலியன. தமிழர் மணமுறை மூன்று வகையானதென முன்னமே சொன்னேன். அவைதான் கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணை என்பன. ஆரியர் மணமுறையில் ஆசுரம்,இராக்கதம், பைசாசம் என்ற மூன்றுவித மணங்களும் மற்றும் நான்குவித மணங்களும் தமிழ்மண முறைகளாகிய கைக்கிளை பெருந்திணைகளிலேயே அடங்கிவிட்டன. ஆசுரம் முதலிய மணங்கள் கூட வடமொழியில் போற்றப்படுகின்றன. அவற்றைத் தமிழர் ஒதுக்கித் தள்ளினர். தமிழரின் ஐந்திணை மணமே ஆரியரின் காந்தர்வ மணத்தோடு ஒன்றியிருக்கின்றது. மணச்சடங்குகள் கரணம் என்பதென்ன? தமிழ் மக்கள் அவற்றை எப்படிக் கொண்டிருந்தனர் என்பதை இனி ஆராய்வோம். இப்போது நமது நாட்டில் அநுஷ்டிக்கப்படும் கலியாணச் சடங்குகள் பண்டைநாளில் தமிழர்களால் அநுஷ்டிக்கப்பட்டதேயில்லை. அழகிய பந்தல் அமைத்துப் பசுந்தழைகட்டிப் புஷ்பாலங்காரம் செய்து புது மணல் பரப்புவதும், பிறகு சுமங்கலிகளாவிருப்பவர் நன்னீராடித் தலைவன் தலைவியரை ஒன்று சேர்ப்பதுமுண்டு. இவையே அக்காலச் சடங்குகள். இப்போது அநுஷ்டிக்கப்படும் சடங்குகளுக்கு இலக்கிய நூல்களில் ஆதாரமேயில்லை. இவ்விதம் சேர்க்கப்பட்ட காதலர் இருவர் மாறா அன்புடன் வாழ்கின்றனர்.வயது உயர உயர அன்பு குறையுமென நினைப் பதற்கில்லை. தலைவன் தலைவியைப் விட்டுப் பிரியாமலும் தலைவி தலைவனைவிட்டுப் பிரியாமலுமிருக்கின்றனர். அக்காலத்தில் முன்னோர் வைத்த பொருளைக் கொண்டு காலம் கடத்துவதை விட்டுத் தனது தாளாண்மையால் பணம் தேடி வாழ்வதே நலமென நினைத்தனராகையால் தலைமகன் பொருள் தேடவும், கல்வி பயிலவும் போரில் கலந்துகொள்ளவும் தலைவியை விட்டுப் பிரிவதுண்டு. இத்தகைய பிரிவைத் தலைவி தாங்கமாட்டாது அரற்றுவாள். தோழி அவளுக்கு ஆறுதல் கூறி ஆற்றுவாள். தலைவனும் தனது புறப்பாட்டை நேரில் தலைவியிடம் சொல்லாது சில குறிப்புகளால் உணர்த்துவான். அல்லது தோழி மூலம் செய்தி விடுப்பான். தலைவன் வரவையே எதிர்நோக்கித் தலைவி உண்ணல், பூச்சூடல் என்பன எதையும் கொள்ளாது காத்திருப்பாள். தலைவி பிரிவை ஆற்றாதவளாகியிருப்பதை உணர்ந்த தோழி தலைவிக்கு வருந்த வேண்டாமென்று சொல்லி தலைவன் தன்னிடம் சீக்கிரத்தில் வருவதாகச் சொல்லிப் போனதாகக் கூறித் தேற்றுவாள். கலித்தொகையிலே இந்த நிலையை “அடிதங்கு அழலன்ன வெம்மையாக” என்ற செய்யுள் மூலம் விளக்கியுள்ளார்கள். அதில் தோழி தலைவியை நோக்கி வெம்மையால் உலர்ந்து சொற்ப நீருள்ள ஒருசிறு குட்டையில் ஆண்யானையும் பெண்யானையும் நீரருந்தச் சென்றபோது அங்கு அருந்துவதற்குப் போதிய நீர் இல்லாதிருந்தும் ஆண் யானை முன்னதாக குடிக்காது “பிடியூட்டி பின் உண்'99ணும் களிறு” எனக் குறிப்பிட்டிருப்பதுபோல பெண் யானையைக் குடிக்கும்படிச் செய்துவிட்டுப் பிறகு குடிப்பதைப் பார்த்து விட்டும் அங்கு உன் தலைவன் நீண்ட நாள் தங்க மாட்டான் என்று கூறுகிறாள். குறுந்தொகையிலும் இந்நிலையை விளக்க இன்னொரு செய்யுளிருக்கிறது. சுனை நீலைக் குடிக்க வந்த ஆண்மானும் பெண்மானும் அங்கு இருவரும் குடிப்பதற்குப் போதிய நீரில்லாமையால் ஆண் மான் பெண் மான் குடித்தால் போதுமென நினைத்ததாம். ஆனால் ஆண்மானை விட்டுப் பெண்மான் முன்னதாகக் குடிக்க மனம் கொள்ளாது. ஆகையால் ஆண்மான் வாயை ஜலத்தில் வைத்துக் குடிப்பது போல் பாசாங்கு காட்டி விட்டுப் பிறகு பெண்மானை குடிக்கச் செய்யுமாம். தலைவன் தலைவியர்க்கிடையே உள்ள உள்ளன்பையும் இணைபிரியாத் தன்மையையும் பண்டைய ஆசிரியர்கள் இத்தகைய முறையில் விளக்கியிருக்கிறார்கள். ஜாதிப் பாகுபாடு என்பது தமிழருக்குள் இருந்ததாகத் தெரியவில்லை. வருணம் என்பது வட சொல், தமிழில் இதற்கு உரிய சொல்லே கிடையாது. தொல்காப்பியர் தமது நூலிலே வட சொற்கள் பலவற்றை உபயோகித்திருக்கிறார். குஞ்சரம் என்ற சொல்லை அவர் தாராளமாகக் கையாண்டிருக் கிறார். ஜாதி பாகுபாட்டைக் குறிக்கும் தமிழ்ச்சொல் இருந்திருந்தால் அவர் அதற்கு இலக்கணம் கூறியிருப்பார். அவர் நிலப்பெயர் குடிப்பெயர்... எனக் குறிக்கும் சூத்திரத்தில் ‘குடிப்பெயர்’ என்று ஆசிரியர் சொல்லியுள்ள இடத்தில் உரையாசிரியர்கள் சிலர் ஜாதி பாகுபாட்டைப் புகுத்த முயற்சிக்கின்றனர். மற்றும் சிலர் அந்த சூத்திரத்திலே “திணை நிலைப்பெயர்” என்று கூறியுள்ள இடத்திலே அதைப் புகுத்தப் பார்க்கின்றனர். பிறப்பு, திணை, குடி என்ற வார்த்தைகள் ஜாதியைக் குறிக்குமா என்று பார்த்தாலும் அவ்விதம் கொள்ளுவதற்கில்லை. ஆரியர் கலப்புக்குப் பின் தமிழரிடம் ஏற்பட்ட ஜாதி பாகுபாடுகளுக்கும் ஆரியர்களுக்குள்ளேயிருக்கும் வருண பேதங்களுக்கும் கூட வித்தியாசமிருக்கிறது. அந்த நான்கு வருணத்திலே தமிழர்கள் யாவரும் அடங்கவில்லை. பிராம்மண ஷத்ரிய, வைசிய, சூத்திரர் என்று பிரிக்கப்பட்டிருப்பதில் நான்காவதாகவுள்ள சூத்திரர் என்ற பதத்துக்கு ஏவல் செய்வோர் எனப் பொருள்படுத்தப்படுகின்றது. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பாகுபாட்டில் கடைசியாகவுள்ள வேளாளர் என்ற பதத்துக்கு அடிமை என்ற பொருளில்லை. வேளாண்மைத் தொழில் செய்பவர் எனவே அதற்குப் பொருள். அத்தொழிலும் அதனைச் செய்பவர்களும் தமிழர்களால் முதன்மையாகப் போற்றப்படுகிறார். தொல்காப்பியர் காலத்திலும் பிறகும் ஆரியக்கொள்கைகள் கலக்க ஆரம்பித்தன. இவற்றில் முக்கிய மானவை வேதம் வேள்வி வருணம் ஆகிய மூன்றே. வேதம் தமிழ்மக்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் வேத வேள்வியைத் தமிழ்மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. தமிழ் அரசர் சிலர் வேள்வி புரிந்ததாகத் தெரிகின்றதானாலும் ஆரியர்கள் செய்தது போல அவர்கள் செய்யவில்லை. இவைகளை யெல்லாம் பார்க்கும்போது ஆரியர்கள் மிகப் பழைய நாளிலேயே தமிழர்களோடு கலக்க ஆரம்பித்தார்கள் எனத் தெரிகிறது. தமிழரின் போர்முறைகள் தமிழர்கள் தறுகண் ஆண்மையுடையவர்கள், அஞ்சாதவர்கள் என்பதற்குப் பல ஆதாரங்களிருக்கின்றன. “விழித்தகண்” என்பதைத் தொடக்கமாகக் கொண்ட குறளடி தமிழரின் தறுகண் முறையை வெளியாக்குகின்றது. போர்முறையை வெட்சி, வஞ்சி, தும்பைத்திணை, உமிஞ்ஞைத்திணை எனப்பல பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றார். வெட்சி என்பது முதலில் ஆட்களை ஏவி, வேற்றரசனின் பசுக் கூட்டங்களைப் பிடித்து வரச் செய்தால் அவற்றை மீட்க அவ்வரசன் வர இருவரும் பொருவது. வஞ்சியென்பது நாட்டைக் கைப்பற்றப் போர் செய்வது, தும்பைத்திணை என்பது வீரத்தைக் காட்டப் போரிடுவது, உழிஞ்ஞைத்திணை யென்பது மதில் வளைத்து முற்றுகை யிட்டுப் போரிடுவது. அக்காலத்தில் அரசர்கள் நால்வகைப் படைகளையும் வைத்திருந்ததாகத் தெரிகிறது. “முழுமுதல் அரணம்” எனத் தொல்காப்பியனார் கூறியிருப்பதால் அக்காலத்தில் உயர்ந்த கோட்டைகளிருந்தனவென்று தெரிகிறது. நல்ல நாள் கண்டு குடை, வாள் முதலியனவற்றை வெளியே புறப்படச் செய்து பிறகு அரசர்கள் போர்முனைக்குச் செல்லும் வழக்கமுடையவர்களாக விருந்ததாகவும் தெரிகிறது. போரிடுவதற்கு முன் படையாளருக்கு விருந்திட்டு அரசனும் உடனிருந்து உண்ணுவதும் வழக்க முண்டென்று தெரிகிறது. போரிடுவதில் சில நியாயங்களை அநுஷ்டிக்க வேண்டுமென்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக் கிறது.பகைவர் வலியிழந்த காலத்தில் அவர்களைத் தாக்காமல் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் அதுவே யுத்ததருமமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்மக்களின் வாழ்க்கை முறை தமிழ்மக்கள் மிக்க முயற்சியுடையவர்கள். நாவாய்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் சென்று வாணிபம் நடத்தி வந்திருக்கின்றனர் என்பதற்கு அநேக ஆதாரங்களிருக்கின்றன. இல்லறம் நடத்தும் முறையில் அவர்களின் விருந்தோம்பும் தன்மை மிகச் சிறந்ததாகும். அவர்கள் சிறந்த ஒழுக்கத்தினராகவும் வள்ளன்மை வாய்ந்தவர்களாகவும், பிழைத்தார் தாங்கும் காவல் பான்மையோராகவும், மெய்யுணர்வு பெறுவதில் கருத்துக் கொண்டாராகவும் இருந்தனரென்றம் முடிவாகப் பற்றறத் துறக்கும் தன்மையினராயினர் எனவும் குறிக்கப்பட்டிருக்கின்றது. உலக இன்பத்தை நன்கு அநுபவித்த பின் அவர்கள் இவ்வின்பம் நிலையாதது என்பதை அறிந்து வீடு பெற விரும்பும் தன்மையினர் என்பதைக் காட்டவும் ஆதாரங்களுண்டு.  16. தொல்காப்பியர் கல்விப் பெருமையும் நூலமைப்புத்திறனும் தொல்காப்பியப் பாயிரமானது, தொல்காப்பியரைத் தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்தவர் என்றும், முந்துநூல் கண்டவர் என்றும், ஐந்திரம் நிறைந்தவர் என்றும் கூறுகின்றது. இவ்வாசிரியர்க்கு முன்பே தமிழில் இலக்கண நூல்கள் பல இருந்திருக்க வேண்டுமென்பது இவர் தாமே 'என்ப' என்றும் 'என்மனார் புலவர்' என்றும் இவ்வாறாகத் தொல்லாசிரியர் மதம்படப் பலவிடத்தும் கூறிச் செல்லுதலால் அறியப்படும். முந்துநூல் என்றது அகத்தியம் ஒன்றனையேயெனச் சிலர் கொண்டனர். அஃதொன்றேயாயின் ஓரிடத்தேனும் அதனை விதந்தோதாது, யாண்டும் 'என்மனார் புலவர்' என்றும், கடிநிலை யின்றே ஆசிரியர்க்க' என்றும் பொதுப்படக் கூறிச் செல்லா ராகலின், இவர்க்கு முன்பே பல நூல்கள் இருந்திருக்க வேண்டும் எனவும், அவற்றையே 'முந்துநூல்' எனப் பாயிரமும் கூறிற்றெனவும் கோடல் வேண்டும். முந்துநூலாவன அகத்தியமும், மாபுராணமும், பூதபுராணமும், இசை நுணுக்கமும் என நச்சினார்க்கினியரும் கூறினர். அப்பொழுதிருந்தவை இன்னின்ன நூல்களென அறுதியிட்டுரைத்தல் சாலாதெனினும், அகத்தியம் உள்ளிட்ட பல நூல்கள் இருந்தன வென்பது தேற்றம். இவர் அவற்றையும் அற்றைநாள் வழக்குச் செய்யுட்களையும் நன்காராய்ந்தவர் எனப் பாயிரம் கூறுவதும் அவையனைத்தையும் முற்றவறிந்தவர் எனக் கருதற்குரிய குறிப்புக்கள் தொல்காப்பியத்திற் காணப்படுவதும் இவரது கல்வியின் அகலத்தையும் ஆழத்தையும் நன்கு புலப்படுத்துவனவாம். எடுத்துக்காட்டாகப் பின்வரும் குறிப்புக்கள் சில நோக்கற்பாலன. மொழி மரபின் கண்ணே மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களை உணர்த்துமிடத்து 'உச்ச காரம் இருமொழிக் குரித்தே' (42) என்னுஞ் சூத்திரத்தால் சகரவுகரத்தை ஈற்றிலுடைய முற்றியலுகரமொழி தமிழில் இரண்டே உள்ளன என்றும், ' உப்ப காரம் ஒன்றென மொழிப இருவயி னிலையும் பொருட்டா கும்மே'1 என்னுஞ் சூத்திரத்தால் பகரவுகரத்தை ஈற்றிலுடைய முற்றுகர மொழி ஒன்றே யுண்டென்றும், அஃதொன்றுமே தன்வினைப் பொருளும் பிறவினைப் பொருளும் உடைத்தாமென்றும் கூறினர். பின்னும் நகரவொற்றை ஈறாகவுடைய சொல், உச்சகார மொழி போல் இரண்டே என்றும், ஞகரவொற்றை யீறாகவுடைய சொல் உப்பகார மொழிபோல் ஒன்றே யென்றும், ஆனால் இஃது இரு பொருட்படாதென்றும் கூறினர். மற்றும், நிலம்நிலன், கலம் கலன் என்பன போல மகரத்தோடு மயங்குதலில்லாத னகரவீற்று அஃறிணைப் பெயர்ச்சொல் ஒன்பது உள்ளன வென்றும், தொகை மரபின்கண்ணே அளவுப் பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் முதலாக வுள்ளன கசதப நமவ அஉ என்னும் ஒன்பதெழுத்துமே என்றும் வரையறுத்துக் கூறியுள்ளார். இவைபோல்வனவும், உயிரும் புள்ளியும் இறுதியாகிய பலதிறப்பட்ட சொற்களையும் எஞ்சா தெடுத்து வருமொழியொடு புணர்த்துச் செய்கை செய்து முடிப்பதும், வேற்றுமைகளின் பொருள் விகற்பங்களையும் அவை மயங்கி வருமாற்றையும் மிக விரித்துரைப்பதும், இளமைப் பெயரும் ஆண்பாற் பெயரும் பெண்பாற் பெயரும் ஆகிய மரபுப் பெயர்கள் பலவற்றையும் எடுத்து அவை இன்னின்னவற்றுக்கு உரியவென உணர்த்துவதும், பிறவும் தமிழ் வழக்குச் செய்யுட்களின் சொற்பொருட் பரப்பு முழுவதும் இவ்வாசிரியரால் நன்கு வடித் தறியப் பெற்றன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி யெனத் தெள்ளிதின் விளக்குவனவாதல் காண்க. இனி இவ்வாசிரியர் தாமே சூத்திரத்தியல்பெனக் கூறிய சில்வகை யெழுத்தின் செய்யுட்டாதலும், நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாதலும் போல்வனவெல்லாம் ஒருங்கமைந் தனவாகத் தொல்காப்பியச் சூத்திரங்கள் விளங்குவதும், அவற்றின் கண் சொற்கள் பொன்பணியாமாறு போல இவர் கருதியவா றெல்லாம் திரிந்து அழகு செய்வதும் போல்வனவற்றை நோக்கின், இவர் வழிவழியாகத் தமிழிலே ஊறிவந்ததொரு குடியின் கட்டோன்றி, உண்ணுஞ்சோறும் பருகுநீரும் தின்னும் வெற்றிலையு மெல்லாம் தமிழாகவே கொண்டு வளர்ந்து தலைமை யெய்திய சான்றோராவர் என்பது விளங்கும். " முதலா வேன தம்பெயர் முதலும்"1 " ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே"2 " உச்ச காரமொடு நகாரஞ் சிவணும்"3 " உப்ப காரமொடு ஞகாரையு மற்றே அப்பொரு ளிரட்டா திவணை யான"1 என்னும் சூத்திரங்களிலுள்ள முதலா, முதலும், அலங்கடை, சிவணும், ஞகாரை, இவணை என்னுஞ் சொல் வழக்குகளையும், இந்நூற் பாக்களின் திட்பநுட்பங்களையும் நோக்குமின்கள். இறையனார் களவியற் சூத்திரம் சிலவன்றி, நன்னூல் சின்னூல் தொன்னூல் முதலாய பிற்காலத்து எந்நூலின் கண்ணும் ஒரு சூத்திரந்தானும் இந்நூற்பாக்களின் அணிமையிலும் நிற்றற்குரிய தன்றாயின் ஆசிரியர் தொல்காப்பியனாரது தமிழ்ப் புலமையின் விழுப்பத்தை எங்ஙனம் அளவிட்டுரைத்தல் கூடும்? இனி இவர் வடமொழியிலும் பெரும்புலமை வாய்ந்தவர் என்பது 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றி' என்னும் பாயிரக் கூற்றானே துணியப்படும். " அகத்தெழு வளியிசை யரிறப நாடி அளபிற் கோட லந்தணர் மறைத்தே"2 என இவர் கூறுவது அருமறையின்கண் இவருக்குள்ள பயிற்சியைப் புலப்படுத்தா நிற்கும். இனி, இவ்வாசிரியர் இந்நூலை அமைத்திருக்கும் திறப்பாடுகள் நோக்கற்பாலன. எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூன்றனையும் மூன்று அதிகாரத்தாற் கூறலுற்ற இவர், ஒவ்வோரதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாக வகுத்துக் கொண்டுளார். இங்ஙனம் ஒவ்வோரதிகாரமும் இயல்வகையால் ஓரளவினவாக வகுத் திருப்பது தாம் கூறக்கருதிய பொருள்களை ஓரெல்லையுள் அடக்க முயன்று இடர்ப்படுவதாகுமெனச் சிலர் கருதவுங்கூடும். எனினும் அவ்வியல்கள் யாவும் இன்றியமையாதனவும், அவ்வவ் வதிகாரங்களோடு இயைபுள்ளனவுமாதல் நுண்ணறிவான் ஆராய்வார்க்குப் புலனாகா நிற்கும். ஆயின் ஓரதிகாரத்தை ஒன்பான் இயலிற் குறையவோ மிகவோ வகுத்தமைத்தல் ஒல்லாதோ எனின், அங்ஙனஞ் செய்தல் ஒல்லுமாயினும், ஒரு நிகரான வரையறை யுடைமையின் பயன் கருதி அங்ஙனம் இயல்களை வரையறை செய்து, பொருளளவுக் கேற்பச் சூத்திரங்களை மிகுத்தும் குறைத்தும் இடர்ப்பாடின்றி யாத்தமைத்துள்ளா ரெனல் வேண்டும். பண்டையாசிரியர்கள் தாம் கருதிய பொருள் களை எஞ்சாமற் கூறுவதில் நோக்குடையராயிருந்தமை போன்றே, அவை பிற்காலத்தில் திரிபின்றி நின்று நிலவவும், கற்போருள்ளத்தில் எளிதிற் புகுந்து அகலாதிருக்கவும் உரிய முறைகளை இயலு மளவுகைக்கொண்டு அவற்றைக் கூறும் கருத்துடையாருமாவர். பாணினியும் தமது நூலின் எட்டு அத்தியாயங்களையும் நந்நான்கு பாகங்களாக வகுத்துள்ளனர். திருக்குறள், தேவாரம், திருவாய் மொழி, முதலிய தமிழ் மறைகளும், ஆரிய வேதப்பகுதியாகிய ஐதரேயப் பிரமாணம் முதலியனவும், சங்கச் செய்யுட்களில் பதிற்றுப்பத்து முதலாயினவும் ஒவ்வோரளவினவாக இயன்றிருத் தலும் காண்க. இனி, இவ்வாசிரியர் மெய்ப்பாட்டியலின்கண் எண்வகை மெய்ப்பாடும் நிகழுங் காரணங்களை உணர்த்து மிடத்து, " கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே"1 " செல்வம் புலனே புணர்வு விளையாட்டென் றல்லல் நீத்த வுவகை நான்கே"2 என்றிங்ஙனம் ஒவ்வொரு மெய்ப்பாட்டுக்கும் நந்நான்கு காரணங் கூறுவதும், உவமவியலிலே வினை, பயன், மெய், உரு என்னும் நால்வகை உவமத்திற்கும் உருபுகள் தனித்தனி எவ்வெட்டாக வரையறுத்துரைப்பதும், பெயரியலிலே, " அவனிவன் உவனென வரூஉம் பெயரும், அவளிவள் உவளென வரூஉம் பெயரும், அவரிவர் உவரென வரூஉம் பெயரும், யான்யாம் நாமென வரூஉம் பெயரும், யாவன் யாவள் யாவ ரென்னும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த உயர்திணைப் பெயரே"3 எனவும், " அது விது உதுவென வரூஉம் பெயரும், அவைமுத லாகிய ஆய்தப் பெயரும், அவை யிவை உவையென வரூஉம் பெயரும், அவைமுத லாகிய வகரப் பெயரும், யாது யா யாவை என்னும் பெயரும், ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயரே"4 எனவும் ஓரினமான மும்மூன்று பெயர்களை ஒவ்வோரடியில் நிறுத்தி அழகும் தெளிவும் பொருந்தக் கூறுவதும் போல்வன கற்போருள்ளத்தில் அவை நன்கு பதியுமாறு செய்ய மேற்கொண்ட முறைகளாம் என்க. இனி, இலக்கண நூல்களில் பொதுவும் சிறப்பும் முதலிய விதிகள் ஒன்றனை யொன்று போற்றியும் மறுத்தும் செல்லும் இயல்பினவாகலின் இலக்கணங்கற்பார் நூலின் ஒருபகுதி கற்று அமையாது நூன் முழுதுங் கற்கும் கடப்பாடுடையராவர். அக் கடப்பாட்டினின்றும் அவர் விலகாமைப் பொருட்டு இவர் நூற்பாக்களை அமைத்திருக்குந்திறன் மிக வியத்தற்குரியது. இருள் என்னுஞ் சொல் நின்று வேற்றுமைப் பொருட் புணர்ச்சியில் வருமொழியோடு புணருமாறு கூறவந்தவர். " இருளென் கிளவி வெயிலியல் நிலையும்"1 என்றார். வெயில் என்னுஞ் சொற்கு அங்ஙனம் விதி கூறுமிடத்தோ " வெயிலென் கிளவி மழையியல் நிலையும்"2 என்றார். மற்று; மழை என்னுஞ் சொற்கு விதி கூறுங்கால் " மழையென் கிளவி வளியியல் நிலையும்"3 என்றார். வளி என்னுஞ் சொல்லுக்கு விதியும் " வளியென வரூஉம் பூதக் கிளவியும் அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப"4 என அதற்கு முன்னுள்ள சூத்திரத்தோடு மாட்டெறிந்து கூறினார். அச்சூத்திரத்தான் " பனியென வரூஉங் கால வேற்றுமைக் கத்தும் இன்னும் சாரியை யாகும்"5 என்பது. இங்ஙனம் உயிர்மயங்கியல் 39ஆம் சூத்திரத்திற் கூறிய விதியை 161 சூத்திரங்கட்குப்பின் புள்ளிமயங்கியலிலுள்ள 'இருளென்கிளவி' என்னுஞ் சூத்திரங்காறும் தொடர்ந்துவரச் செய்திருத்தலின் இவையனைத்தையும் ஒருங்கு கற்றுணர்ந்தாலன்றி, இருள், வெயில், மழை, வளி என்னும் சொற்கள் அத்துச்சாரியையாவது இன்சாரியையாவது பெற்று முடியும் என்பதனை எங்ஙனம் அறிதல் சாலும்? இவை வெவ்வேறு உயிரும் புள்ளியும் இறுதியாகவுடைய சொற்களாதலின் இவற்றை ஒருவழிக் கொணர்ந்து ஒருங்கு முடித்தலும் பொருந்தாமை காண்க. இவ்வாறு முடிப்பன மற்றும் பலவுள. இங்ஙனம் சூத்திரங்களைக் கோவைப்படுத்தி முதலும் முடிவும் மாறு கோளின்றி இவ்வாசிரியர் அமைத்திருக்கும் முறையை உணரலாற்றாத சிலர் 'தொல்காப்பியத்துள் இச்சூத்திரம் ஈண்டிருத்தல் பொருந்தாது, ஆண்டு இருத்தல் வேண்டும்' என்று தமக்குத் தோற்றியவாறெல்லாம் உரைத்தல் நகை என்னும் மெய்ப்பாட்டிற்குக் கருவியாம். அத்துணையன்றிவேறென் பயனுடைத்து?  17.பரணிப் பெயர்க்காரணம் தமிழ்ச் செய்யுட்கள் தனிநிலை, தொகைநிலை, தொடர்நிலை என முத்திறப்படும். அவற்றுள் தொடர்நிலை, சொற்றொடர் நிலை, பொருட்டொடர் நிலை என இருவகைப்படும். பொருட்டொடர் நிலைச் செய்யுள் நாற்பொருள் பயக்கும் நடைநெறித்தாகிப் பல்லியல்பானும் விரிந்து நடப்பதும், அவ்வாறின்றிக் குறை பாடுடையதும் என இரண்டாம். அவற்றுள் முன்னதனைப் பெருங்காப்பியமென்பர். பின்னதையும் அதுபோன்ற சொற் றொடர்நிலைச் செய்யுளையும் சில தனிச் செய்யுட்களையும் பிரபந்தம் என வழங்குவர். தமிழ்ப் பிரபந்தங்களைத் தொண்ணூற்றாறாக வகுத்திருக்கின்றனர். அவற்றுள் பரணி என்பதொன்று. அது பொருட்டொடர் நிலையாகும். போரின் கண் ஆயிரம் யானையைவென்ற வீரன்மேல் அது பாடப்படுவது என்ப, " ஆனையாயிரம் அமரிடைவென்ற மானவனுக்கு வகுப்பது பரணி"1 (இலக்கண விளக்கப்பாட்டியல்) பரணியின் இலக்கணம், " கடவுள் வாழ்த்துக் கடைதிறப் புரைத்தல் கடும்பாலை கூறல் கொடுங்காளி கோட்டங் கடிகண முரைத்தல் காளிந் திசொலல் அடுபேய்க் கவள் சொல லதனாற் றலைவன் வண்புக ழுரைத்த லெண்புறத் திணையுற வீட்ட லடுகளம் வேட்ட லிவைமே லளவடி முதலா வடியிரண் டாக வுளமகிழ் பரணி யுரைக்கப் படுமே"2 (இலக்கண விளக்கப்பாட்டியல்) என்பதனால் உணர்க. இனி, பரணியெனப் பிரபந்தப் பெயர் போந்த காரணம் பலரால் பலவாறு கூறப்படும். அவையெல்லாம், ஈண்டுரைப்பின் விரியும், காலஞ்சென்ற வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார், பி.ஏ., அவர்கள் தாம் அச்சிட்ட கலிங்கத்துப் பரணி முகவுரையில் பரணியென்னும் பெயர்க்காரணம் விசாரிப்பான்புக்குப் பலருடைய கொள்கைகளையும் எடுத்துக்காட்டி இறுதியில் தம் கொள்கையைப் பின்வருமாறு கூறுகின்றனர்:- "ஈண்டைக் கூறிய யாவரும் பரணி யென்னும் சொல்லைத் தாம் நாடோறும் வழக்கமாய்ப் பார்க்கும் அகராதிகளி லெடுத்துப் பார்த்து, அதன்கண் அச்சொல்லிற்குக் கூறப்பட்ட ஒவ்வொரு பொருளையும் இவ்வாறெடுத்தமைத்துப் பெரிது மிடர்ப் பட்டுச் சமர்ப்பித்துத் தமக்குட்டாமே மனப்பால் குடித்து மகிழுறுவாராயினார். இதுநிற்க, இனித் தொல்காப்பியம் பொருளதிகாரத்துச் செய்யுளியலிற் கொச்சகவொருபோகின் இலக்கணங் கூறுஞ் சூத்திரவுரையில் தேவபாணி முதலாயின தனக்கினமாகிய வண்ணகத்திற்கோதிய தரவின்றித் தாழிசை பெறுமெனவும் பாணியுளெல்லா மிரண்டடியானே தாழம்பட்ட வோசை விராஅய் வருதலும் முடுகிவருதலு முளவெனவும், " உளையாழி யோரேழு மொரு செலவு ளடங்குதலான் விளையாட நீர்பெறா மின்னுருவம் பராவுதுமே." என்றாற் போலும் பாணிச் செய்யுளுட் பயின்று வரும் பல தாழிசை தொடர் பொருளவாகலின் அவற்றைப் பலவடுக்கி வரினும் தாழிசையா மென்க வெனவும், மற்றுப் பாணியுட் புறத்திணை பலவும் விராஅய் வருதலின் அது தேவபாணியா மென்றதென்னை யெனின், அவையெல்லாங் காடுகெழு செல்விக்குப் பாணி நாட் கூழும் துணங்கையுங் கொடுத்து வழிபடுவதோர் வழக்குப் பற்றி அதனுட் பாட்டுடைத் தலைவனைப் பெய்து சொல்லப்படுவன ஆதலான் அவையெல்லா வாற்றானுந் தேவபாணியேயாம் என்பதெனவும் கூறாநிற்றலின் ஈண்டுயாம் ஆராயப் புகுந்த பரணி யென்பது பாணியென்றே யிருத்தல் வேண்டுமெனல் பெறுதும். அன்றியும் முற்காலத்து ஓலைச் சுவடிகளின் வரிவடிவின்கண் ரகார மனைத்துஞ் சில வுயிர்மெய்ந் நெடி லாகாரத்தோடியலும் காலென வெழுதப்பட்டிருத்தலும் ஒருவாறு எமது கூற்றை வலியுறுத்திகின்றமை காண்க." பிறரையெல்லாம் மனப்பால் குடிப்பவர் என்று கூறி விட்டுச் சாஸ்திரியார் நிறுவியிருக்கும் கொள்கையை ஈண்டாராய்வோம். அவர் எடுத்துக் காட்டிய தொல்காப்பிய வுரையினை நுண்ணிதின் ஆராய்வார்க்குத் "தேவபாணி" என்பது தவிர, மற்றுப் பாணி யென்றுள்ளன வெல்லாம் பரணியென்றே யிருத்தல் வேண்டும் என்பது புலப்படும். ஓலைச்சுவடிகளின் வரிவடிவில் ரகரத்திற்கும் நெட்டெழுத்தின் காலுக்கும் வேற்றுமை காணப்படாமையின் பிறர் இங்ஙனம் வழுவினர் எனக் கருதிய சாஸ்திரியார் தாமே அதில் வழுவி யிருக்கின்றமை வியப்பாகும்! 'பாணி நாட் கூழும் துணங்கையுங் கொடுத்து வழிபடுவது' என்பதற்குயாதும் பொருளில்லாமையை அவர் நோக்கிற்றிலர். பரணிப்பாட்டெல்லாம் தேவபாணியாம் என்பதே நச்சினார்க்கினியர் கருத்து. அதற்குக் காரணமும் அவர் கூறியுள்ளார். இவ்வாற்றால் பரணி வேறு, பாணிவேறு என்பது தெளிக. 'பரணியாவது காடுகெழு செல்விக்குப்பரணி நாட் கூழும் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்குப் பற்றியது' என அவர் எழுதியது பரணியென்னும் பிரபந்தப் பெயரின் காரணத்தைப் புவப்படுத்துகின்றது. கொற்றவை யென்பாள் வெற்றித் தெய்வமாகலின் வென்றி வேண்டி அவளை வழிபடுவார் வெற்றிக்குரிய பரணி நாளில் கூழிட்டுத் துணங்கையாடி வழிபடுதல் மரபாகும். வென்றபின் களக்கூழட்டுப் பேய்கட்கு இடுவதுண்டு. பேய்கள் கொற்றவையின் கணங்களாகலின், அக்கூழும் இதன் கட் கூறப்படுதலின், பரணியெனப் பெயர் வந்ததென்க. கலிங்கத்துப் பரணி, களம்பாடிய பகுதியில் 'களப்பரணிக் கூழ்பொங்கி' எனவும், 'பண்டு மிகுமோ பரணிக் கூழ்' எனவும், 'வருகூழ்ப் பரணிக் களங்கண்டு வந்தபேயை முன்னூட்டி, யொருகூழ்ப்பரணி நாமிருக்கு மூர்க்கட் பேய்க்கு வாரீரே' எனவும் வருதல் காண்க. நாட்பெயரால் பலியின்பெயர் வழங்குதல் 'திருவாதிரைக்களி' முதலிய பெயர் வழக்குகளாலும் உணர்க. இவ்வாற்றால் பரணிக் கூழ்பற்றியே பிரபந்தத்திற்குப் பரணியெனப் பெயர் போந்ததென்பது துணிபு.  18. கபிலர் என்னும் நூலின் ஆராய்ச்சி என் நண்பர் வித்துவான் திரு. வே. வேங்கடராஜலு ரெட்டி யாரவர்களால் எழுதப்பெற்று, சென்னைப் பல்கலைக் கழகத் தினரால் வெளியிடப்பட்ட 'கபிலர்' என்னும் உரைநூல் சென்ற யாண்டிலே அநுப்பப்பெற்று எனக்குக் கிடைத்தது. கிடைத்தும், யான் சிலயாண்டுகளாக நோயால் நலிவுற்று அவ்வப் பொழுது செய்யற் பாலவாய இன்றியமையா வினைகளன்றிப் பிறிதொன்றும் ஆற்றகிலாதிருந்து வருதலின் அதனைப் படித்துப் பாராதிருந்துவிட்டேன். இப் பங்குனித்திங்களின் இறுதியிற் பிறிதொரு வேலையும் முன்னில்லாமையின் செவ்வி வாய்த்து அதனைப் படித்தறியலானேன். ரெட்டியாரவர்களது ஆராய்ச்சி யறிவை முன்னமே 'பரணர்' என்னும் நூலால் அறிந்து ளேனாகலின், இப்பொழுது புதுவதாக வியப்பொன்றும் தோன்றவில்லை. ரெட்டியார் தமதுநூலின் முன்னுரையில், இற்றைக்குப் பதினாறாண்டுகளின் முன் என்னால் எழுதி வெளியிடப் பெற்ற 'கபிலர்' என்னும் உரைநூலைச்சுட்டி, அஃதிருக்கவும் இஃது எழுதியது மிகையாகாதெனற்குக் காரணங் கூறுவாராய், "நாட்டாரவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவரின் பயனைக்கருதி அந்நூலை எழுதியுள்ளார்கள். இஃது அன்னதோர் நோக்கத்தால் எழுதப்பட்டதன்று" என்றுரைத்து, இரண்டிற்குமுள்ள வேறுபாடு சிலவற்றைக் குறித்திருப்பதுடன், நூலினகத்தும் சில விடங்களில் அந்நூற்கருத்துக்களைத் தாம் வேண்டுமாற்றால் ஆண்டிருக்கின்றனர். அஃது என்பால் அவர் வைத்துள்ள அன்பிற்கும் மதிப்பிற்கும் அறிகுறியாம் என்றே எண்ணுகிறேன். எனினும், எனது நூலின் கருத்துக்களை ஆண்டுள்ள வகைமையிற் கற்பார்க்குத் திரிபுணர்ச்சி உண்டாகாவாறு சிலவற்றை விளக்குதல் கடனெனக் கருதியும், அதனோடு எனக்கு அமைதியிலவாகத் தோன்றும் அந்நூற்பொருள்களிற் சிலவற்றை யேனும் வெளிப்படுத்தல் அன்னவர் ஆராய்ச்சி பின்னுந் தூய்மையுறுதற்கும், தமிழ் வளர்ச்சிக்கும் உரியதாமென ஓர்ந்தும் அவையிற்றைச் சிறு கட்டுரைகளாக எழுதி வெளியிடத் துணிந்தேன். இச்செயல் அந்நூலின் ஆசிரியர் பாலுள்ள நட்பின் கிழமைக்கும், மதிப்பிற்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பொருந்திய தாகுமென்பதே எனது துணிபு. அந்நூலிற் புதுமையாகக் காணப்படும் சில சொல்லாட்சி முறையை முதலில் ஆராய்தற்கு எடுத்துக் கொள்கின்றேன். முகித்தல், அங்கனம், காண்கின்றது, நற்கீரர் என்பன முறையே ஆராயப்படும். "பரணர் என்னும் நூலை யான் எழுதி முகித்த பின்னர்" என அந்நூலின் முன்னுரை தொடங்குமிடத்தே 'முகித்த' என்றொரு சொல் ஆளப்பட்டுளது. 'பரணர்' என்னும் நூலின் முன்னுரையிலும் "அவர்களனைவரது வரலாற்றையும் ஒருங்கே எழுதி முகிப்பது அரிதாகுமாகலின்" எனவும், "தொல்காப்பியத்திற்கு ஓர் உரை எழுதக்கருதி; அதில் எழுத்ததிகாரத்திற்கு இப்போது உரை எழுதி முகித்திருக்கின்றேன்" எனவும் ஈரிடத்தில் இவ்வினையின் ஆட்சி உளது. இதனை வழங்குவது வழுவாகாது என்று காட்டுதற் பொருட்டு "முகிந்தது என்னுஞ்சொல், வழக்கிலும் பழைய ஏடுகளிலும் வழங்குதலானும், 'ஆற்றிற் பாலத்தை முகித்தே னல்லேன்' (குற்றாலத்தல, கண்டகசேதன. 39) என்று செய்யுளிலும் வந்துள்ளதனானும், 'முகிதுது' என்று கன்னடத்திலும், 'முகிஸெனு' என்று தெலுங்கிலும் வழங்குதலானும், முகிஎன்னுஞ்சொல் தொன்மையதே என்பது அறியப்படும்" எனக்கீழ்க்குறிப்பில் விளக்கம் எழுதப்பட்டுளது. (கபிலர்-முன்னுரை.) தமிழ் லெக்சிகனிலும் இச்சொற்குப் பொருள் கூறுமிடத்தே 'ஆற்றிற்பாலத்தை' என்னும் இம்மேற்கோளும், கன்னடத்திலும் தெலுங்கிலும் இது வழங்கு மாறும் காட்டப்பட்டுள்ளன. சங்கப்புலவர்களைப்பற்றி ஆராய்ச்சியுரை எழுதும் ஆசிரியரொருவர் பிற்காலத்துத் தலபுராணம் ஒன்றில் ஓரிடத்துக் காணப்படுவதன்றிக் கடல்போற் பரந்துள்ள தமிழ் இலக்கிய இலக்கணங்களில் யாண்டும் வழங்கப்படாததும், உரையாசிரியன்மார் எவரானும் தீண்டப்படாததும், எவ்விடத்து எத்திறத்து மக்களாலோ அருகி வழங்கப்படுவதுமாகிய திசைச்சொல் ஒன்றை முதன்மையாக நாட்டுவதும், அதனைப் பழைய தமிழ்ச் சொல் என்று நிறுத்தப்புகுவதும் நேர்மையுடையவாகத் தோன்ற வில்லை. 'முகித்த' என்று எழுதியவுடன் அதனை விளக்குவான் புகுந்ததே அது தமிழ்மக்களின் வழக்கிலில்லாதது என்பதற்குச் சான்றாகும். அன்றியும், முகித்தல் வினையை நூன் முழுதும் கொண்டுய்க்காது முன்னுரையளவில் முடித்திருப்பது எழுதினோருக்கும் அஃது அருவருப்பு விளைத்திருக்கு மென்பதனைக் காட்டா நிற்கும். இனி, 'அங்ஙனம்' முதலியவாகத் தமிழறிஞர் பலரானும் வழங்கப்படுஞ் சொற்கள் இதனகத்தும், 'பரணர்' என்னும் நூலினகத்தும் அங்கனம், இங்கனம், எங்கனம், யாங்கனம் என்றிங்ஙனமே வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு வழங்குவதே செவ்விது என்பது இவற்றை எழுதினோர் ஆய்ந்துகண்ட முடிபாகும். " ஆங்கனம் தணிகுவ தாயின் யாங்கும்" (நற்.322) ' ஈங்கனஞ் செல்க தானென என்னை யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்' (புற.208) 'யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலன் மண்டிலம்' (புற.8) என்று, ஆங்கனம் ஈங்கனம் யாங்கனம் என்னுஞ் சொற்களே பழைய செய்யுட்களில் வந்திருத்தலானும், ஙகரம் மொழிமுதற் கண் வாராதென்று தொல்காப்பியம் கூறுதலானும், அங்கனம் ஆங்கனம் இங்கனம் ஈங்கனம் எங்கனம் யாங்கனம் என்னுஞ் சொற்களே பழமைய என்பது அறியப்படும். ஆதலின், யான் இந்நூலில் அங்கனம் இங்கனம் யாங்கனம் என்னுஞ் சொற் களையே வழங்கியுள்ளேன்." (கபிலர்-முன்னுரை) என்று கூறப்பட்டிருத்தல் காண்க. குற்றாலத் தலபுராணத்தில் ஓரிடத்து வந்து விட்டது என்பது கொண்டு 'முகித்தல்' வினையை ஆளத் தொடங்கினோர் பல நூற்றாண்டுகளாகப் பலரானும் வழக்கினும் செய்யுளினும் வழங்கப்பட்டு வருவதும், ஒரு சிறந்த ஆசிரியரால் இலக்கணம் விதிக்கப்பட்டதும் ஆகிய சொல்லை அவ்வடிவில் வழங்க மறுப்பது வியப்பாகவுள்ளது. நன்னூலாசிரியர் இற்றைக்கு எழுநூறாண்டுகளின் முன்பிருந்தவர் என்பது யாவர்க்கும் ஒப்ப முடிந்தது. அவர் " சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி ஙவ்வும் முதலா கும்மே" என்று இலக்கணங் கூறியிருத்தலின் அவர் காலத்தின் முன்பே அங்ஙனம் முதலிய சொல்வழக்கு அவ்வடிவுடன் நிலவிய தென்பது பெறப்படும். அவ்வாறு பயில வழங்குவதனை அறவே யொதுக்கிப் புதியதொரு வாய்பாடுகொண்டு வழங்குவது மரபு நிலை திரித்துப் பொருளுணர்ச்சிக்கு ஊறு செய்வதேயாகும். "மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும்" என்னும் தொல்காப்பியச் சூத்திரமும், 'மரபினை நிலைதிரித்துச் சொல்லுபவெனின், உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து பிறிது பிறிதாகும்' என அதற்குப் பேராசிரியர் கூறிய உரையும் நோக்கற்பாலன. இனி, பழைய செய்யுட்களில் 'அங்ஙனம்' முதலியன வழங்காமையின் உண்மையும், தொல்காப்பிய விதியின்மையும் ஆய்தற்குரியன. ஙகர வொற்று அகரவுயிருடனன்றிப் பிறவுயிர்களோடு தமிழில் யாண்டும் வருதல் இல்லை. அவ்வுடன் கூடிய 'ங' என்னும் உயிர்மெய் தானும் அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் எங்ஙனம் யாங்ஙனம் என்னும் ஐந்து சொற்களிலன்றி வேறிடத்து உடனிலை யாக மயங்கி வருவதன்று. ஆகலின், செய்யுளில் எதுகைத் தொடையில் அச்சொற்களை அமைத்தல் அரிதென்பது கூறல் வேண்டா. ஙகரத்துடன் மயங்குதற்குரிய வேறுமெய் அதனோடு பிறப்பொற்றுமையும் ஒலியொற்றுமையுமுடைய ககரம் ஒன்றுமேயாம். ஆகலின், செய்யுட் செய்யும் புலவர் எதுகைத் தொடையில் ஙகரத்தைக் ககரமாகத் திரித்து வழங்குதல் இயல்பே. "யாங்ஙன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்" எனத் திரியாது கூறினும் எதுகை யாதற்கிழுக்கின்றாம். இறையனார்களவியலின் மூன்றாஞ் சூத்திரம் "ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன்" என்றே படிக்கப் பட்டு வருகின்றது. அன்றியும் வழங்குதற்கு அருமையுடைய சொற்களே எளியவாகத் திரிதல் இயல்பு. மரூஉச் சொற்களிற் பல அவ்வாறு வந்தனவே. அங்கனம் என்பதே பழைய வுருவாயின் வழங்குதற்கு எளிமையுடைய அச்சொல் அங்ஙனம் எனத்திரிதல் பொருத்தமின்றாம். ஆயின், ஙகரம் மொழிமுதற்கண் வாரா தென்று தொல்காப்பியம் கூறுதலின் 'ஙனம்' என்பது தொன்மையதாதல் எங்ஙனம் எனின், அங்ஙனம் முதலிய சொற்களை அங்ஙனம் என்றிங்ஙனம் பிரித்துப் புணர்த்துவது தொல்காப்பியர் கருத்தன்றாம். ஆகலின், ஙகரம் மொழிமுதற்கண் வருமென அவர்விதித்திலர். " பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை முன்னிப் புணர்ப்ப முடியும் எப்பதங்களும்" என்று நன்னூலார் ஒரு சொல்லையே முதனிலை முதலியவாகப் பிரித்து முடிக்குமாறு கொண்டாற் போலத் தொல்காப்பியர் கொண்டிலர். தொடர்மொழிகளிலுங்கூடப் பண்புத்தொகை, வினைத்தொகை முதலியவற்றை நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியுமாகப் புணர்க்கலாகாதெனல் அவர் கருத்தென்பது "உயிரும் புள்ளியும் இறுதியாகி" என்னுஞ் சூத்திரத்தான் அறியப் படும். 'ஙவ்வும் முதலாகும்' எனக் கூறிய நன்னூலாரும் சுட்டு வினாக்களின் பின் வருமென்றாரேயன்றித் தனித்து முதலாகு மெனக் கூறினாரல்லார். ஆகலின், தொல்காப்பியனார் ஙகரம் மொழி முதலில் வருமெனக் கூறாமையின் அங்ஙனம் என்பது பழைய வழக்காகாதெனத் துணிதல் பொருந்தாமை ஓர்க. ஆயின், அது பழைய வழக்கே எனத் துணீதற்குத்தான் சான்று என்னை எனின், கூறுவல். தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் முதல் இயலாகிய நூன் மரபில் உடனிலை மெய்ம்மயக்கம் கூறும் நூற்பா " மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே" என்பது. இதில், ர, ழ என்னும் இரண்டும் ஒழிந்த பதினாறு மெய்யும் தம்முன் தாம் வந்து மயங்குமென ஆசிரியர் விதித் திருத்தலின் ஙகர ஒற்றின்முன் ஙகரம்வந்து மயங்கும் சொல் இருந்ததாகல் வேண்டுமன்றே? தமிழிலே சுட்டு வினாக்களின் பின் ஙனம் என்பது இயைந்துவரும் அங்ஙனம் முதலிய சொற்களன்றி ஙகரம் உடனிலையாக மயங்கற்குரிய வேறு சொல் யாதுளது? திரு. வேங்கடராஜலு ரெட்டியாரவர்கள் பல யாண்டுகளின் முன்பே தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு உரையெழுதி முடித்துளார் என்பது 'பரணர்' என்னும் நூலின் முன்னுரையால் அறியப்படுகின்றது. அதன்கண், மேல் எடுத்துக்காட்டிய "மெய்ந் நிலை சுட்டின்" என்னுஞ் சூத்திரத்திற்கும் உரையும், உதாரணமும் எழுதப் பட்டிருக்கவே வேண்டும். அவையிற்றை இடையே ஒருகால் நினைக்கவு முடியாமற் செய்தமறதியின் வன்மையே வன்மை. அம் மறதியால் அவர் தாமெழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் யாவற்றினும் பிழையுள்ள தோர் முடிபினை மேற் கொண்டாராவர். தொல்காப்பியம், எட்டுத்தொகை முதலிய சங்கவிலக்கியங் கட்குப் பல நூற்றாண்டுகளின் முன்னர்த்தோன்றியதென்பது ரெட்டியாரவர்கட்கும் உடன்பாடே. அந்நூலினாலே அறுதியிடப் படுதலின் அங்ஙனம் முதலிய சொல் வழக்கும் பழமையதென்பது போதரும். அதனையறிந்தே நன்னூலாரும் அதற்குமாறின்றித் தமது மதமும்தோன்ற இலக்கணம் கூறிப்போந்தாரென்க. இனி, கபிலர் என்னும் அந்நூலின்கண் "புராணக் கதைகளும் பல காண்கின்றன; சிலவற்றில் ஒவ்வொரு சொல்லே காண் கின்றது; சிறிதும் மாறுபாடில்லாத அடிகளும் பரக்கக் காணுதலின்; ஐவர் புலவர் இயற்றியன எனக் காண்கின்றன வாகலின்; கபிலர் பாடிய கலிப்பாட்டுக்களுள்ளும் நாடக வழக்குக் காண்கின்றது; நாலசைச்சீரைப்பற்றிய இலக்கணமும் காண்கின்றது; ஞான வெட்டியான் என்னும் நூலிலும் காண்கின்றது; ஒற்று என றகர உகரம் காண்கின்றது; ழகரத்துக்கு டகரம் காண்கின்றது. ககர ழகரம் மாறிக் காண்கின்றது." (பக்கம்-33, 34, 35, 37, 38, 44, 49, 116, 117.) என்றிங்ஙனம் பலவிடத்தும் 'காண்' என்பதனடியாகவரும் வினைச்சொற்கள் காணப்படுகின்றன. இவை பலவிடத்தும் பரக்கக் காணப்படுதலின், இங்ஙனம் எழுதுவதே இலக்கணம் எனக்கருதி எழுதப்பட்டவாதல் வேண்டும். ஆசிரியர் தொல்காப்பியனார் " வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி யென்றா இன்னதற் கிதுபய னாக வென்னும் அன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇ ஆயெட் டென்ப தொழின்முத னிலையே" என்பதனால், வினை தோன்றுதற்குரிய காரணங்களைக் கூறி, " அவைதாம், வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும்" என்பதனால், சில வினைக்கண் அவற்றுட் குன்றத் தகுவன சில குன்றிவரும் என்றார். சேனாவரையர் "குன்றத்தகுவனவாவன செயப்படு பொருளும் ஏற்பதும் பயனுமாம்" என அதனை விளக்கி, கொடியாடிற்று, வளிவழங்கிற்று என அவை குன்றி வருதற்கு உதாரணங்காட்டினர். எனவே சில வினைகளிற் செயப்படு பொருள் குன்றிவருதல் இயல்பு. காண்டல் வினையோ செயப் படுபொருள் குன்றாதது. செயப்படு பொருளை விரித்துரைக்கும் "காப்பின் ஒப்பின்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் "நோக்கலின்" என வருதல் காண்க. காப்பு முதலாயினவெல்லாம் பொருள்பற்றி ஓதப்பட்டனவாகலின், நோக்கல் என்பதில் அப்பொருள் பற்றிவரும் காண்டல், பார்த்தல் என்பனவும் அடங்கும். எனவே, காண் என்பதனடியாகவரும் வினைச்சொற் களை, புராணக் கதைகளும் பல காணப்படுகின்றன, சிலவற்றில் ஒவ்வொரு சொல்லே காணப்படுகின்றது என்றிங்ஙனம் வழங்குதலே மரபாகும். உரையாசிரியர் பலரும் அம்மரபு பிறழாமலே வழங்கி வருவாராயினர். " செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே" என்னுஞ் சூத்திரம் வழக்கின்கண் ஒரோவழிச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்படும் மரபு வழுவை அமைத் தற்கெழுந்ததே. அவ்வழுவமைதியையே மேற்கொண்டு நூல் உரைகளில் யாண்டும் எழுதுதல் முறைமையன்றாம். இனி, வேற்றுமொழிப் பயிற்சி ஒன்றே கொண்டு தமிழின் இயல்பினை விளக்கலுறுவார் சிலர் தொல்காப்பியத்திலே செயப்பாட்டு வினையைப்பற்றிய குறிப்பு இல்லை எனவும், ஆகலின் தமிழின் கண் செயப்பாட்டுவினை இன்றெனவும் கூறாநிற்பர். செயப்படு பொருள் என்னும் பெயரிலிருந்தே செயப்பாட்டுவினையுண்மை பெறப்படுவதனையும், தொல்காப்பிய முதற் சூத்திரத்தின் தொடக்கமே "எழுத்தெனப்படுப" என அதனைக் குறிப்பிடு தலையும், " சொல்லப் பட்டன எல்லா மாண்பும் மறுதலை யாயினும் மற்றது சிதைவே" எனப் பிறாண்டும் அஃது ஆளப்படுதலையும் அவர் அறியார். ரெட்டியார் செயப்பாட்டுவினை பலவற்றைத் தாம் வழங்குதலின் அக்கொள்கையினர் அல்லரென்பது பெறப்படும். ஓர் அரைப் பக்கத்திலே (பக்.137) "கூறப்பட்டிருத்தலின், குறிக்கப்பட்டுள்ள, தொகுக்கப் பட்டுள்ளன, காட்டப் பட்டுள்ளன" என்றிங்ஙனம் எட்டிடத்தில் வழங்கியுள்ளமை காண்க. அங்ஙனமாகவும் காண்டல் வினை ஒன்றின்மட்டில் அவர் கருத்து மாறுபட்டது என்னையோ? ஆயின், காணப்படுகின்றது, காணப்படுகின்றன என ஓரிடத்தும் அவர் வழங்காமற் போகவில்லை. எனினும் முன்னது பெரு வரவிற்றாகவும், பின்னது சிறுவரவிற்றாகவும் இருத்தலை நோக்கின், காண்கின்றது என்பதனையே அவர் நினைவு கூர்ந்து வழங்கியுள்ளார் என்பதும், காணப்படுகின்றது என்பது பயிற்சி வயத்தால் அவரறியாமலே போந்ததாம் என்பதும் பெறப்படும். கற்போர் புதுவதாகவுள்ள தனையே வியப்புடன் நோக்கு வராதலின் காண்கின்றது என்பதே அவருள்ளத்தில் நிலைபெறுவ தாகும். ஒரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி வினைஞரால் எழுதப்பட்டு, உயர்ந்த தாளிற் பரிய உருவினதாகப் பொலிவுற அச்சிடப்பட்டுள்ள புத்தகத்திற் காணப்படுதலின் எத்துணையர் இவ்விழி வழக்கினை விழுமிய வழக்காகக் கொண்டனரோ என உன்ன அச்சமுண்டாகின்றது. இனி, தமிழ் நூற்களில் யாண்டும் நக்கீரர் என வழங்குஞ்சொல் இதில் நற்கீரர் என ஆளப்பட்டுளது. இதன் ஆசிரியர் முன்னர் எழுதிய 'பரணர்' என்னும் நூலினும் நக்கீரர் என்றே பலவிடத்தும் வந்துளது. அந்நூலின் கீழ்க் குறிப்புக்களுள் ஒன்றிலேதான் "நத்கீரர் என்பது நற்கீரர் என வழங்கிய சொல்லின் திரிபாகலாம் எனத் தோன்றுகின்றது" என வடநூல் ஒன்றிலே கண்ட 'நத்கீரர்' என்னும் வடிவுக்கு விளக்கம் எழுதுழி நற்கீரர் என்று குறிக்கப் பட்டுளது. இந்நூலின்கண் நக்கீரர் என்னும் வழக்கு அறவே கைவிடப்பெற்று, நற்கீரர் என்பதே வழங்குமாறு மேற்கொள்ளப் பட்டுளது. "இனி, நல்லந்துவனார் நல்லிறையனார் நல்லுருத்திரனார் என உயிர் முதன்மொழிகள் வந்தவிடத்தும், நன்னாகனார் நன்னாகையார் எனமெல்லெழுத்து முதன்மொழிகள் வந்த விடத்தும், நல்விளக்கனார் நல்வெள்ளியார் நல்வேட்டனார் என இடையெழுத்து முதன்மொழிகள் வந்த விடத்தும் நல் என்னும் அடைமொழியே வந்திருத்தலின் வல்லெழுத்து முதன் மொழிகள் வருமிடத்தும் நல்என்னும் அடைமொழி நிற்றலே முறையாமாக லானும், நற்காட்சி நல்லொழுக்கம் நன்ஞானம் என்று சிறப்புடைப் பொருள்களைக் கூறுமிடத்தும் நல் என்னும் அடைமொழியே வந்திருத்தலானும், பிறவாற்றானும் நற்கீரர் என்னுஞ் சொல்லே அமைவுடையதென்றும், நக்கீரர் என்னுஞ்சொல் மரூஉமொழி என்றும் தேர்ந்து, நற்கீரர் என்னுஞ் சொல்லை மேற் கொண்டுள்ளேன்" என அத்துணிபிற்கு ஏதுக் கூறப்பட்டுள்ளது. நற்கீரர் என்னுஞ் சொல்லே நக்கீரர் எனத் திரிந்ததாகல் வேண்டும் என்பது என்கருத்திற்கும் இசைந்ததே. நான்காண்டு களின் முன் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஒரு சிறப்புக்கூட்டத்தில், 'நல்லந்துவனார்' என்னும் பொருள்பற்றியான் பேசியபொழுது, நவ்வந்துவனார் என வழங்குதல் பொருந்தாதென விளக்குழி இதனை விரித்துரைக்கலானேன். எனினும் சான்றோர் வழக்கொடு முரணி நற்கீரர் என வழங்குதல் தகுதியன்று என எண்ணி யான் அவ்வழக்கினை மேற்கொண்டிலேன். வல்லின முதன்மொழிகள் வருமிடத்து மாத்திரமே நக்கண்ணையார், நக்கீரனார், நச்செள்ளையார், நத்தத்தனார், நப்பசலையார், நப்பண்ணனார், நப்பாலத்தனார் என நல் என்பது திரிந்து வருதலின் அதற்கு ஏது என்னென ஆராய்தலே முறைமையாம். வழங்குதற்கு எண்மையது ஆதலே முதலில் அதற்குக் காரணமாதல் வேண்டும். வல்லெழுத்து ஆறனுள் கசதப என்னும் நான்கு மெய்யும் உடனிலையாகவன்றி வேறு மெய்யுடன் மயங்குதல் இல்லை. அதற்குக் காரணம் அருமுயற்சியுடன் அதனைக்கூற வேண்டியிருத்தலே. தமிழெழுத்துக்களின் மயக்க விதியெல்லாம் அவை பெரும்பாலும் எளிய முயற்சியுடன் வழங்குதற் பயத்தவே. ட ற என்னும் இரண்டு மெய்யும் க ச ப என்பவற்றோடு மயங்குமாயினும் அதனை வழங்குதற்குச் சிறிது அருமுயற்சி வேண்டப்படுகின்றது. " கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட் டியற்கை விளங்கக் காணாய்" என ஒரு மொழியிலும் இளங்கோவடிகள் றகரத்தைப் பகரமாகத் திரித்திருப்பது காண்க. மகளிர் பேச்சில் நப்பெண்டு, நப்பிள்ளை, நச்சொல் என்பன கேட்கப்படுகின்றன. இவ்வாற்றால், ஒரு குறிலின்பின் வரும் றகரவொற்று வேறு மெய்களோடு மயங்கின் சிறிது வழங்குதற்கு அரியதாதல்பெறப்படும். அஃது உடனிலையாக மயங்குழியும் அத்தகையதே. இளம்பிராயத் தினரைப் பேசுவித்து இப்பொழுதும் அதனை அறிதல் சாலும்; எனினும் அதுகொண்டே அத்தகைய சொற்கள் பலவற்றையும் திரித்து வழங்குதல் கருத்தன்றாம். நக்கீரர் முதலிய வழக்குப் பண்டுதொட்டு நிலைபெற்று வருவதொன்று. இரண்டு திருவிளையாடற் புராணங்களிலும், சீகாளத்திப் புராணம் முதலியவற்றிலும் நக்கீரர் என்னுஞ்சொல் பலவிடத்து வந்துளது. சுருங்கவுரைக்கின் பழையவும் புதியவுமான நூல், உரைகள் யாவற்றினும் நற்கீரர் என்பது அன்று, நக்கீரர் என்பதே காணப்படுவது என்னலாம். எட்டுத்தொகை, பத்துப் பாட்டுக்களிலே பாடினோர் பெயரைப் புலப்படுத்தும் குறிப்புக் களில் நக்கீரனார், நச்செள்ளையார் முதலிய பெயர்கள் வழங்கி யிருத்தலின் அவை தொகுக்கப்பெற்ற அத்துணைப் பழங்காலந் தொடங்கியேஆன்றோர் பலரானும் அவை அங்ஙனம் வழங்கப் பெற்றன என்பது போதரும். முற்காலத்து நல்லிசைப் புலவர்கள் ஒருவர் ஒருவரைப் பாராட்டும் இயல்பினர் என்பது " புலனழுக் கற்ற அந்தணாளன் பரந்திசை நிற்கப் பாடினன்" " இன்றும் பரணன் பாடினன்" " அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை" என்னும் இவைமுதலியவற்றால் அறியப்படும். அவர்கள் ஒருவர் செய்யுளிலுள்ள சிறப்புடைய தொடர்களின் சுவையை நுகர்ந்து இன்புறுதலும், அவற்றையும், அவற்றை இயற்றினோரையும் பாராட்டுதலும் உடையர் என்பது ஒருவர் பாட்டிலுள்ள சொற் றொடர் அங்ஙனமே பலருடைய பாட்டுக்களில் வருதலானும், பதிற்றுப்பத்திலுள்ள ஒவ்வொரு பாட்டுக்களும் மறம் வீங்குபல் புகழ், சான்றோர் மெய்ம்மறை என்றிவ்வாறு அவற்றில் வந்துள்ள சிறப்புடைய தொடர்களாற் பெயர் கூறப்படுதலானும், சில புலவர்கள் அணிலாடு முன்றிலார், இரும்பிடர்த்தலையார் என்றிங்ஙனம் அன்னோர் பாட்டிலுள்ள தொடர்பற்றி எழுந்த சிறப்புப் பெயர்களால் வழங்கப் பெறுதலானும் அறியப்படும். இங்ஙனம் சிறந்த புலவரொருவர் பெயரின் முன்னுள்ள நல் என்னும் அடைமொழியைத் திரித்து நக்கீரனார் என்றாற்போல ஒருவர் வழங்கா நிற்க ஏனோரும் அதனைப் பாராட்டி அவ்வாறு வழங்குதற்குரிய பிறபுலவர் பெயர்களையும் அவ்வணம் வழங்கினாராதல் வேண்டும். அவ்வழக்கே பின்னரும் பாட்டு உரைகளிற்பயின்று வருவதாயிற்று. இங்ஙனம் பயிற்சிமிக்க வலியுடைய வழக்கினைப் புறக்கணித்து 'நற்கீரர்' என அழிவழக்குத் தொடர்வது முறையன்றாம். இப்பெயரினை இங்ஙனம் திரித்தோர் இனி நக்கண்ணையார், நச்செள்ளையார் முதலிய ஏனைப் பெயர்களையும் திரித்து வழங்கும் இயல்புடையராவர். இங்ஙனம் இவர்தாம் நினைத்தபடியெல்லாம் சொற்களின் உருவைமாற்றி வழங்குவரேல், அது தெலுங்கு, மலையாளம் போலும் பிறிதொரு மொழியாவதன்றித் தமிழாகாது என்க.  19. செப்பமுடையார்க்குச் செய்யும் விண்ணப்பம் வித்துவான் திரு வேங்கடராசலு அவர்கள், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை. யான் எழுதிய 'கபிலர்' என்னும் ஆராய்ச்சி நூலைப்பற்றித் திரு. ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் 'தமிழ்ப்பொழி'லில் (13-2) எழுதியிருக்குங் கட்டுரையைப் பார்த்தேன். நாட்டாரவர்கள், எனது ஆராய்ச்சி தூய்மையுறுதற் பொருட்டும் தமிழ் வளர்தற் பொருட்டும் அந்நூலில் (கபிலர்) தங்கட்கு அமைதியிலவாகத் தோன்றும் பொருள்களுட் சிலவற்றை வெளியிடுவதாகக் கூறி, முதற்கண், சில சொற்களைக் குறித்து அதில் எழுதியிருக்கின்றார்கள். நண்பனது மாசினைப் போக்கித் தூய்மைப் படுத்துவது நன்மக்கள் செயலேயன்றோ? அது கருதி நாட்டாரவர்களின் பெருந்தகைமையைப் பாராட்டுதலோடு அவர்கள் பால் நன்றியறிதலும் உடையேன். அவர்கள் ஆராய்ந்திருக்கின்ற சொற்களாவன: 1. முகித்தல் 2. ஆங்கனம் அங்கனம், ஈங்கனம் இங்கனம், யாங்கனம் எங்கனம் 3. காண்கின்றது, காண்கின்றன 4. நற்கீரர் என்பன.1 இவற்றுள், முகித்தல் என்னுஞ் சொல்லைக் குறித்து அவர்கள் எழுதியிருப்பதன் சுருக்கம்: 1. முகித்தல் என்பது திசைச்சொல். 2. அது தமிழிலக்கிய இலக்கணங்களில் (ஒரு தல புராணத்தில் ஓரிடத்திலன்றி) வழங்கப்படவில்லை. 3. சங்கப் புலவரைப்பற்றிய ஆராய்ச்சி நூலில், பிற்காலத்து மிக அருகிவந்துள்ள சொல்லை வழங்குதல் நேர்மையன்று. 4. முகித்தல் என்னுஞ்சொல் அருவருப்பினை விளைப்பது. இஃது, அதனை நூல்முழுவதும் வழங்காமையானே அறியப்படும். இவற்றை முறையே ஆராய்தும்:1 1. முகித்தல் என்னுஞ்சொல் திசைச்சொல் என்பது எதனாற் புலனாகின்றதோ, அறிகிலேன். அது தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்குதலான் திசைச்சொல்லாகும் எனின், (அவ்வாறாயின்) தமிழ்ச்சொற்களுட் பல்லாயிரஞ் சொற்கள் திசைச்சொற்களே யாகும். பழைய தமிழிலக்கியங்களில் வழங்காததனால், அது திசைச்சொல்லாகும் எனின், அவற்றில் வழங்காதனவெல்லாம் திசைச் சொற்களேயாகுமன்றோ? ஆயின், நான் நீங்கள், அந்த2, இந்த, எந்த, சரி, அனுப்பு, சிரி முதலியனவெல்லாம் பழைய தமிழிலக்கியங்களில் வழங்காதனவாகலின் திசைச்சொற்களேயாகும். அவ்வாறாயின் சொல்லாராய்ச்சித் திறனில்லாத புலவர், நான், நீங்கள் முதலிய சொற்களை வழங்கினும், அதனையுடைய நாட்டாரவர்கள் வழங்குதல் தகாதன்றே! அற்றன்று. நான் என்பது யான் என்பதன் மரூஉ; நீங்கள்3 என்பது நீயிர் என்பதன் மரூஉ; அந்த, இந்த, எந்த என்பவை அ, இ, எ என்னும் எழுத்துக்களின் மரூஉ. ஆகலின், அவை தமிழ்ச் சொற்களே. சிரி என்பது பண்டு இல்லாவிடினும் பின்னர்த் தமிழிற்றோன்றியதுவே என்று கூறுவார்கள்போலும். இனி, அனுப்பு என்பது விடுக்கும் என்பதன் மரூஉ என்றும், சிரி என்பது நகை என்பதன் மரூஉ என்றுங் கூறிவிடலாம்போலும். முகித்தல் என்பது திசைச்சொல் என்றே கொள்ளினும், செய்யுளிலும் வழக்கிலும் வழங்குதலின், அதனை உரைநடையில் வழங்குதல் தவறாதல் யாங்கனம்? திசைச்செல் வழங்கலாகாது என்று இலக்கணம் உளதோ? ஆயின் 'அனுப்பு' என்னுஞ் சொல்லை நாட்டாரவர்கள் வழங்குதல் தகாதன்றே?4 அச்சொல் (அனுப்பு) பண்டைச் செய்யுட்களில் யாண்டும் வந்திலாமையானும், தெலுங்கில் மட்டுமே உண்மையானும் அது தெலுங்கினின்று வந்ததாதல் கூடும்.5 2. முகித்தல் என்னுஞ்சொல் தலபுராணம் ஒன்றில் ஓரிடத்து மட்டும் வந்துளது என்று நாட்டாரவர்கள் எழுதியிருக்கிறார்கள். அஃது அருணகிரிநாதர் திருப்புகழில் பலவிடத்தில் வந்துளது. தமிழ்லெக்ஸிகனில் இச்சொல்லை நோக்கிய நாட்டாரவர்கள் அதிற்குறித்திருக்குந் திருப்புகழடிகளைக் கண்டிருத்தல் கூடுமே. அங்கனமாகவும் அவர்கள், 'பிற்காலத்துத் தலபுராணம் ஒன்றில் ஓரிடத்துக் காணப்படுவது' என்று எழுதியிருப்பது வியப்பினை விளைக்கின்றது. அருணகிரிநாதர்காலம் 14-ஆம் நூற்றாண்டு என்று தெரிதலின் இற்றைக்கு 500 யாண்டுகட்கு முன்னரே இச்சொல் தமிழில் வழங்கி வந்துளது தெளிவாகும். பழைய ஓலையேடுகளின் இறுதியில், முற்றிற்று என்றாதல், முகிந்தது என்றாதல் எழுதியிருத்தலை ஓலைச் சுவடி நோக்கினார் நன்கறிவர். ஆகலின், இச்சொல்வழக்குப் புதியதன்று என்பது அறியப்படு மன்றே? நிற்க. தமிழிலக்கிய இலக்கணங்களில் தமிழ்மொழிச் சொற்கள் எல்லாம் வந்துள்ளனவோ? வந்திலாதவற்றையும் வழங்கும்போழ்து, வந்துள்ளதனை வழங்குதல் கூடாது என்றல் அமையுமா றென்னையோ! 3. சங்கப்புலவரைப்பற்றி எழுதும் உரைநூலில், பிற்காலத்து வந்த சொல்லை வழங்குதல் தகாது என்றார்கள். அவ்வாறு சங்கச் செய்யுட்களில் வந்திலாத சொற்களை மேற்கொள்ளாதெழுதின் அஃது இக்காலத்து உரைநூலாதலே இல்லை. நிற்க. சங்கப்புலவர் செய்யுளுக்கு எழுதியிருக்கும் உரைகளில், அச்செய்யுட்களில் வந்திலாதனவாகிய உப்புக்கண்டம், கண்ட சருக்கரை, கிடாரம், குத்தலரிசி, சுமடு முதலிய சொற்களை உரையாளர் வழங்கியிருத்தல் நாட்டாரவர்கள் கருத்திற்குச் சிறிதும் அமையாதன்றே? சங்கப் புலவர் தஞ்செய்யுட்களின் உரையிலே இத்தகைய பிற்காலத்துச் சொற்கள் வந்திருக்க, அவரைக் குறித்து இக்காலத்தில் எழுதும் உரைநூலிற் பிற்காலத்துச் சொல்லை -சங்ககாலத்து வழங்காத சொல்லை - எழுதுதல் கூடாது என்று நாட்டாரவர்கள் சொல்ல வில்லை. வழங்குதல் கூடாது என்பது அமைவுடையதாகுமோ? 4. முகித்தல் என்னுஞ் சொல்லை நூன் முழுவதிலும் வழங்காத தனால் அச்சொல் எழுதினோருக்கே அருவருப்பினை விளைத் திருக்கும் என்றார்கள். முகிந்தது என்பது முற்றிற்று - பூர்த்தியாயிற்று என்னும் பொருளது. இச்சொல்லை நூன் முழுவதிலும் எவ்வாறு வழங்குதல் கூடும்? ஆங்கனம் முதலிய சொற்கள்: ஆங்கனம் முதலிய சொற்களைக் குறித்து நாட்டாரவர்கள் எழுதியிருப்பதன் கருத்துக்கள்: 1. நன்னூலார் அங்ஙனம் முதலிய சொற்களை விதிகூறி அமைத்துளார். 2. அங்ஙனம் முதலியவற்றை அவ்வடிவில் வழங்க மறுப்பது வியப்பாகவுள்ளது. 3. 'புதியதொரு வாய்பாடு கொண்டு வழங்குவது மரபு நிலை திரித்துப் பொருளுணர்ச்சிக்கு ஊறுசெய்வதே யாகும்'. 4. யாங்ஙனம் என்பதனை யாங்கனம் என எதுகைத் தொடையில் புலவர் திரித்தனர். 5. அங்கனம் என்பது வழங்குதற்கு எளிமையுடையது; அங்ஙனம் என்பது அருமையுடையது. ஆகலின், அங்கனம் என்பது அங்ஙனம் எனத் திரியாது. 6. 'அங்ஙனம் முதலிய சொற்களை அ-ஙனம் என்றிங்ஙனம் பிரித்துப் புணர்த்துவது தொல்காப்பியனார் கருத்தன்றாம். ஆகலின், ஙகரம் மொழிமுதற்கண் வரும் என அவர் விதித்திலர்'. 7. 'மெய்ந்நிலை சுட்டின்' என்னுஞ் சூத்திரத்தால் அங்ஙனம் என்னுஞ் சொல்லையே தொல்காப்பியனார் குறித்தார். 8. ஆங்கனம் இங்கனம் என்பது பிழையுள்ளதோர் முடிபு. 9. அங்ஙனம் என்னுஞ் சொல்வழக்குப் பழமையதே-என்பன. இவற்றை முறையே நோக்குதும்: 1. நன்னூலார் அங்ஙனம் இங்ஙனம் யாங்ஙனம் முதலிய சொற்களுக்கு விதிகூறியிருத்தலான் அவை வழங்குதல் கூடும் என்பதுவே போதருதலன்றி, ஆங்கனம், ஈங்கனம், யாங்கனம் முதலிய சொற்களை வழங்குதல் கூடாது என்பது எவ்வாறு போதரும்? அவர் அங்ஙனம் முதலியவற்றை அமைத்திலராயின், அவற்றை மேற்கொள்ளாது விடுத்தல் கூடும். அமைத் துள்ளாராகலின் அவற்றை வழங்குதல் தவறன்று. இதுவேயன்றி, ஆங்கனம் முதலியவற்றை வழங்குதல் தவறென்பது பெறப்படாது. 2. அங்ஙனம் முதலிய சொற்களை அவ்வடிவில் வழங்குதலை யான் யாண்டும் மறுத்திலேன். யான் மறுப்பது வியப்பாகவுளது, என்று நாட்டாரவர்கள் எழுதியிருப்பதுவே வியப்பாகவுள்ளது. மாணவர்பொருட்டு யான் எழுதியிருக்கும் புஸ்தகங்களில் அங்ஙனம் இங்ஙனம் யாங்ஙனம் என்பவற்றையே வழங்கியுள்ளேன். 3. அங்ஙனம், இங்ஙனம் முதலியவை புதியவாய்பாடா, ஆங்கனம்....யாங்கனம் முதலியவை புதிய வாய்பாடா? சங்கச் செய்யுட்களிலும் தொல்காப்பியத்திலும் வழங்கப்பட்டுள்ள ஆங்கனம்.....யாங்கனம் முதலியவை புதியவாய்பாடும் பிற்காலத்து நூல்களிலே வந்துள்ள அங்ஙனம்......யாங்ஙனம் முதலியவை பழையவாய்பாடும் ஆகுமாயின், பின்னை யாதுதான் யாதாகாது? சங்கச்செய்யுட்களில் ஆங்கனம்.....யாங்கனம் என்னுஞ் சொற்களின் பொருளை அறிந்த அறிஞர்கட்கு, யான் எழுதியுள்ள 'கபிலரில் வந்திருக்கும் ஆங்கனம்....யாங்கனம் என்னுஞ் சொற்களின் பொருள் விளங்காதோ? அது பொருளுணர்ச்சிக்கு ஊறு செய்வதாதல் எப்படி? அங்ஙனம்.......யாங்ஙனம் என்று வழங்குவதே மரபு என்றும் அவற்றை அங்கனம்.....யாங்கனம் என்று வழங்குவது மரபன்று என்றும் கூறி, 'மரபுநிலை திரியிற் பிறிதுபிறிதாகும்' என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தையும், அதற்கு, 'மரபினை நிலை திரித்துச் சொல்லுப எனின், உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து பிறிது பிறிதாகும்' என்னும் பேராசிரியருரை யையும் நாட்டாரவர்கள் ஆதாரமாகக் காட்டியிருக்கின்றார்கள். அச்சூத்திரவுரையினிறுதியில், 'செவிப்புலனாய ஓசைகேட்டுக் கட்புலனாயபொருள் உணர்வதெல்லாம் மரபுபற்றாக அல்லது மற்றில்லை என்றவாறு' என்று பேராசிரியரே எழுதியிருப்பதில் நாட்டாரவர்களின் நாட்டம் சென்றிலதுபோலும். இவ்வுரையினையும் மேலையிரண்டு சூத்திரங்களின் பொருளையும் நோக்குவோர்க்கு ஈண்டுக் கூறிய மரபு என்பது இன்னதெனத் தானேபோதரும். 'இருதிணை ஐம்பாற் பொருள்களைத் திணையும் பாலும் வழுவாமல் தழுவுதல் வேண்டும்' என்று, 'நிலந்தீ நீர்வளி' என்னுஞ் சூத்திரத்திற்கூறி, அம் மரபு திரிதல் செய்யுட்களுக்கு இல்லை என்பதனை அடுத்த சூத்திரத்திற் கூறி, அம் மரபு திரியில் பொருள் பிறிதாகும் என்பதனை 'மரபு நிலைதிரியின்' என்னுஞ் சூத்திரத்தில் ஆசிரியர் கூறியுள்ளார். உரையாளரும் இவ்வாறே பொருள் கூறியுள்ளனர். இனி, நாட்டாரவர்கள் கூறுவதுவே இச்சூத்திரத்தின் பொருள் என்று கொள்ளினும், ஆங்கனம்..........யாங்கனம் என்பனவே பழைய செய்யுட்களில் வந்திருத்தலின் அவற்றை ஆங்ஙனம், அங்ஙனம்.........யாங்ஙனம் என்று எழுதினோரன்றே மரபுநிலை திரித்தவராவர்? அவை (அங்ஙனம் முதலியவை) யன்றே பொருளுணர்ச்சிக்கு ஊறு விளைத்திருக்கும்? 4. யாங்ஙனம் என்பதனையே எதுகைத் தொடையில் யாங்கனம் என்று புலவர் திரித்தனர் என்று நாட்டாரவர்கள் எழுதியிருப்பது உண்மையாகுமா? பண்டைக் காலத்தில் ஆசிரியப்பாக்களில் எதுகை யிருந்தே தீரவேண்டும் என்னும் நியதி உண்டோ? பிற்காலத்திலும் - இக்காலத்திலும் - ஆசிரிய வடிகளை எதுகை யில்லாமல் அமைத்துப்பாடும் வழக்காறு உளதே. தொல்காப்பியம் செந்தொடையைக் கூறியிருத்தலானன்றே பண்டைப்புலவர் தஞ்செய்யுளில் எதுகை மோனைகளை நியதியாகக் கொள்ளாது விடுத்தனர். பிற்காலத்துப் புலவரேபோன்று எதுகைக்காகச் சொற்களைத் திரிக்கும் வழக்கம் பண்டைப் புலவர்பால் உண்டென்பது நாட்டாரவர்களால் யானறிந்த புதுச்செய்தியே. 'யாங்ஙனம் ஒத்தியோ வீங்குசெலன் மண்டிலம்' எனத் திரியாது கூறினும் எதுகையாதற்கு இழுக்கின்றாம். அங்ஙனமாகவும் எதுகைமோனைகளின் நிர்ப்பந்தம் இல்லாத காலத்தில் - இல்லாத பாவில், புலவரொருவரல்லர்- பலரும் 1-அச்சொல்லை வழங்கிய புலவரனைவருமே-ஙகரத்தைக் ககரமாகத் திரித்தே வழங்கினார் என்பது எத்துணை அமைவினது! ஙகரத்தோடு பிறப்பொற்றுமையும் ஒலியொற்றுமையும் உடையது ககரம் ஒன்றே என்று எழுதியிருக்கிறார்கள். ககரம் ஙகரத்தோடு ஒலியொற்றுமை உடையது என்பதும் எனக்குப் புதியதே. 'க'ஙக்கள் முயற்சியானும் மாத்திரையானும் குளக்கரை குளங்கரை என்னும் பொருளானும் ஒருபுடையொத்து இனமாயின' என்றே எழுதியுள்ளார் மயிலை நாதர். நாட்டாரவர்கள் ஒலியொற்றுமை யுடையது என்றது எப்படி எனவிளங்கவில்லை. ஙகரமும் அரைமாத்திரையது, ககரமும் அரைமரத்திரையது. ஆகலின் அவை ஒலியொற்றுமை யுடையவாகும் எனின், சகரமும் அரைமாத்திரையதே; ஏன் எல்லா மெய்யெழுத்துக்களும் அரைமாத்திரையவே. ஆகலின் எல்லா மெய்யெழுத்துக்களும் ஙகரத்தோடு ஒலியொற்றுமை உடையவேயாகும். ஙகரமும் ககரமும் ஒலிவேற்றுமையுடைய வாகலானன்றே வேறு வேறு இனங்களாயின. 'ஒழிந்த மெல்லெழுத்தையும் இடையெழுத்தையும் நோக்கித் தாம் வல்லென்றிசைத் தலானும் வல்லெனத் தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்தாயிற்று' என்றும், மெல்லென்றிசைத் தலானும் மெல்லென்று மூக்கின்வளியாற் பிறத்தனானும் மெல் லெழுத்தாயிற்று' என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் எழுதியிருத் தலின் ககர ஙகரங்கள் ஒலிவேற்றுமையுடையவாதல் அறியப் படுமே. இறையனார்களவியல் மூன்றாஞ் சூத்திரம் 'ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன்' என்றே படிக்கப் பட்டு வருகின்றது என்றார்கள். அச்சூத்திரம் முழுவதும் ஈண்டுத் தருகின்றேன். ' ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன் றன்வயிற் பாங்கி னோரிற் குறிதலைப் பெய்தலும் பாங்கிலன் றமியோ ளிடந்தலைப் படலுமென் றாங்க விரண்டே தலைப்பெயன் மரபே' என்பது அச்சூத்திரம். சூத்திரத்தின் இரண்டு மூன்று நான்காம் அடிகளை நோக்கின், முதலடி, 'ஆங்கனம் புணர்ந்த கிழவோன் றன்வயின்' என்றே அமைந்திருந்திருக்கும் என்பது எளிதிற் புலனாகும். உண்மைப் பாடம் அதுவேயாதல் ஓலையேடுகளை நோக்கின் அறியலாகும். என்னெனின், பழைய பதிப்புக்களில், ' ஆங்ஙனம் விரிப்பின் அளவிறந் தனவே பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை' என்று பதிக்கப்பட்டிருந்த தொல்காப்பியச் சூத்திரம், இப்பொழுது திரு. வே. துரைசாமி ஐயரவர்களைக் கொண்டு பரிசோதித்துத் திரு. கனகசபைப் பிள்ளையவர்கள் வெளியிட்ட பதிப்பில், ' ஆங்கனம் விரிப்பின் அளவிறந் தனவே, பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை' என்று பதிக்கப் பட்டுளது. துரைசாமிஐயரவர்கள் பாடத்தைத் திருத்திவிட்டார்கள் என்று நாட்டாரவர்கள் கூறிவிடுவார்கள் போலும். அகநானூற்றில், 'யாங்ஙனம்' என்று பதிப்பித்துள்ள மூன்று இடங்களிலும் (செய்யுள் 27, 90, 378) திரு எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களிடமிருக்கும் பழைய ஓலையேட்டில் 'யாங்கனம்' என்றே இருக்கின்றது. இஃது ஏடெழுதினோர் தவறு என்று நாட்டாரவர்கள் கூறுவார்களாயின் என்செய்வது! அச்சுப்புத்தகங்களில் ஆங்ஙனம் யாங்ஙனம் என்று பதித் திருத்தற்குக் காரணம் அவர்க்குள்ள நன்னூற்பயிற்சியே யாகும். மஹாமஹோபாத்யாய, டாக்டர் ஸ்ரீமத் ஐயரவர்களின் சங்கநூற்பதிப்புக்களில் இவ்வாறு வந்திலாமை நோக்கத் தக்கது. 5. வழங்குதற்கு எளிதாகிய அங்கனம் என்னுஞ் சொல், வழங்குதற்கு அரிதாகிய அங்ஙனம் எனத் திரியாது என்றார்கள். இதனை அறியின், மெல்லொற்றுத் தன் இனவல்லெழுத்தோடு கூடி வருஞ்சொல் வழங்குதற்கு எளியது என்பதும் மெல்லெழுத்து இரட்டித்து வரும் சொல் வழங்குதற்கு அரியது என்பதும் அவர்கள் கருத்தாதல் நன்குபுலனாகும். ஆகவே, வழங்குதற்கு எளிதாகிய ஒன்று என்பது வழங்குதற் கரிதாகிய ஒன்னு என்றும், அன்று " " அன்னு என்றும், கன்று " " கன்னு என்றும், என்று " " என்னு என்றும், வழங்குதல் என்னை? அன்று முதலியவை மலையாளத்தில் அன்னு முதலியவாயே வழங்குகின்றன. அன்றியும், மங்கலம் கஞ்சி சந்தனம் என்னுஞ் சொற்கள் அம்மொழியில் முறையே மங்ஙலம் கஞ்ஞி சந்நனம் என்று இருவழக்கிலும் வழங்கு கின்றன. ஒன்னு அன்னு கன்னு என்னு என்பவையே வழங்குதற் கரியவாகலின் ஒன்று அன்று கன்று என்று எனத் திரிந்தன என்பதும், அவ்வாறே, மங்ஙலம் கஞ்ஞி சந்நனம் என்பவையே வழங்குதற்கு எளியவாகிய மங்கலம் கஞ்சி சந்தனம் என்று திரிந்தன என்பதும் நாட்டாரவர்கள் கருத்தாதல் வேண்டும். வழங்குதற்கு அரிதாகிய அங்ஙனம் என்பதுவே வழங்குதற்கு எளிதாகிய அங்கனம் எனத் திரிந்தது என்றவர்கட்கு, வழங்குதற்கு அரியவாகிய மங்ஙலம் சந்நனம் என்பவையே வழங்குதற்கு எளியவாகிய மங்கலம் சந்தனம் என்றாயின என்பதன்றே அமைதியாகும். இனி, மாங்ஙா தேங்ஙா என்று மலையாளத்தில் வழங்குதல் போன்று தமிழிலும் மிகப்பழைய காலத்தில் வழங்கின என்றும் அவை வழங்குதற்கு அரியவாகலின், மாங்காய் தேங்காய் என்று திரியலாயின என்றும் நாட்டாரவர்கள் கூறுவார்கள். என்னையெனின், ங்ஙஒலி வழங்குதற்கு அரியதும் ங்க ஒலி வழங்குதற்கு எளியதும் ஆகும் என்பது அவர்கள் கொள்கையாகலின் என்க. 6. அங்ஙனம் முதலிய சொற்களை அ+ஙனம் என்றிங்ஙனம் பிரித்துப் புணர்ப்பது தொல்காப்பியர்க்குக் கருத்தன்றாகலின், அவர், ஙகரம் மொழிமுதல் வரும் என்று கூறிற்றிலர் என்றார்கள். ஆயின், அங்ஙனம் என்பதற்குத் தொல்காப்பியனார் கொண்ட பொருள் இது என்று நாட்டாரவர்கள் கூறவில்லை. அத்தன்மை, அப்படி என்பது அவர் கொண்ட பொருள் என்பார்களாயின், ஆண்டு, அகரம் சுட்டுப்பொருள் தருதலின் ஙகரம் மொழிமுதல் வந்ததாகும். ஆகவே, அஞ்ஞாலம் அந்நாள் அம்மணி என்னுஞ் சொற்களைப் பிரித்து, ' சுட்டின் முன்னர் ஞ ந ம த் தோன்றின் ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்' என்று விதிகூறிய ஆசிரியர், 'சுட்டின் முன்னர் ங ஞ ந ம த் தோன்றின்' என்று விதிகூறி அங்ஙனம் என்பதனையும் அமைத்திருப்பாரல்லவோ? அச்சம் அஞ்ஞை அண்ணன் என்னுஞ் சொற்களிலுள்ள அகரத்தைப் போலவே அங்ஙனம் என்பதிலும் அகரஞ் சொல்லுறுப்பாய் அமைந்துளது என்றாலன்றி, அங்ஙனம் என்பதில் ஙகரம் மொழிமுதல் வந்ததாகக் கருதப்படாமை அமையாது. அவ்வாறு கொள்ளின், அங்ஙனம் என்பதன் பொருள் யாது? வினைத்தொகை பண்புத்தொகைகளைப் பிரித்துப் புணர்க் கலாகாது என்னுங் கருத்தால் அதற்குப் புணர்ச்சிவிதி கூறாதது போன்று அங்ஙனம் என்பதற்கும் புணர்ச்சிவிதி கூறிற்றிலர் என்றார்கள். கொல்யானை அடுகளிறு ஓடுகால் என்னும் வினைத் தொகைகளில் உள்ள யானை களிறு கால் என்பனவும், கருங் குதிரை கரும்பார்ப்பான் செந்தாமரை வெண்குடை என்னும் பண்புத்தொகைகளில் குதிரை பார்ப்பான் தாமரை குடை என்பனவும் தனித்தும் வழங்குதல்போன்று, அங்ஙனம் என்பதிலும் ஙனம் என்பது தனித்து வழங்குதல் வேண்டுமே. தனித்து வழங்கின், ஙகரம் மொழிமுதலில் வருமென்று கூறவேண்டுமே. வினைத்தொகை பண்புத்தொகைகட்கு ஆசிரியர் புணர்ச்சிவிதி கூறாததன் காரணம்- 'கொல் எனத் தொழின்மை உணர நின்றது கொல்யானை எனத் தொகையாயவழி கொன்ற எனக் காலங் காட்டி நின்றமையின் புணர்க்கப்படாதாயிற்று.' 'கரும் எனப் பண்புணர நின்றது கருஞ்சான்றான் எனத் தொகையாயவழி, கரும் என்பது கரியான் எனப் பால்காட்டி நிற்றலிற் புணர்க்கப்படாதாயிற்று' என்று உரையாசிரியரும், 'ஆடரங்கு.........என நிலம் முதலாகிய பெயரெச்சந் தொக்க வினைத்தொகைகளை விரிக்குங்கால் ஆடினவரங்கு எனச் செய்த என்னும் பெயரெச்சத்து ஈறுவிரிந்த அகரஈறு இறப்புணர்த்தியும், ஆடாநின்றவரங்கு, ஆடுமரங்கு எனச் செய்யும் என்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த உம்மீறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்தியும் அவற்றானாய புடை பெயர்ச்சியைத் தோற்றுவித்து இரண்டு பெயரெச்சமும் ஒரு சொற்கண் ஒருங்கு தொக்குநிற்றலின் அதனை ஒரு பெயரெச்சத்தின்கண் அடக்கிப் புணர்க்கலாகாமையின், புணர்க் கலாகாது என்றார்.' 'கரும்பார்ப்பான் கரும்பார்ப்பனி கரும் பார்ப்பார் கருங்குதிரை கருங்குதிரைகள் என வரும் இவற்றுட் கரியனாகிய பார்ப்பான் கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார் கரியதாகிய குதிரை கரியனவாகிய குதிரைகள் என ஐம்பாலினையும் உணர்த்தும் பண்புகொள் பெயர் தொக்கவாறு காண்க. இவற்றுட் கருமை என்னும் பண்புப்பெயர் தொக்கதேல் கருமையாகிய பார்ப்பான் என விரித்தல் வேண்டும். அங்ஙனம் விரியாமையிற் பண்புகொள் பெயர் தொக்கதென்று உணர்க....... இங்ஙனம் ஐம்பாலுந் தொகுத்தற்கு உரிய முதனிலையாதலிற் புணர்த்தலாகாமை கூறினார்' என்று நச்சினார்க்கினியரும் கூறியிருப்பவற்றான் நன்கறியப்படும். இன்னதோ ரிடர்ப்பாடு அங்ஙனம் என்னுஞ் சொல்லிலுள்ள அகரச் சுட்டின்கண் இன்மையின், அதற்கு விதிகூறுதல் எளிதினியலுமன்றே.' இவற்றால், வினைத்தொகை பண்புத்தொகைகளுக்கு விதிகூற இயலாமல் விடுத்ததுபோல அங்ஙனம் என்பதனையும் விதிகூறாது விடுத்தார் என்று நாட்டாரவர்கள் கூறியது சிறிதும் பொருந்தாமை நன்கறியப்படும். 7. 'மெய்நிலை சுட்டின்' என்னுஞ் சூத்திரத்தால், அங்ஙனம் இங்ஙனம் முதலிய சொற்களைத் தொல்காப்பியனார் அமைத் துள்ளார் என்றார்கள். 'ர ழ ஒழிந்த மற்றைய மெய்யெழுத்துக்கள் தம்மொடு தாம் மயங்கும்' என்பதுவே சூத்திரத்தின் பொருள். இதனால், ஙகரத்தொடு ஙகரம் மயங்குதற்கு அங்ஙனம் இங்ஙனம் என்னுஞ் சொற்களையே ஆசிரியர் கருதினார் என்று துணிதல் அமையாது. ஆயின், உரையாசிரியர், எங்ஙனம் என்னுஞ் சொல்லையே உதாரணமாகக் காட்டினாரால் எனின், அதனை நோக்குதும்; ' ய ர ழ என்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்' என்னுஞ் சூத்திரத்தின் உரையில், ய ர ழக்களுக்கு முன் ஙகரம் வருதற்கு உதாரணமாக அவர் (உரையாசிரியர்,) வேய்ஙனம் வேர்ஙனம் வீழ்ஙனம் என்பவற்றைக் காட்டியுள்ளார். இவ்வுதாரணங்களில், வேய், வேர், வீழ் என்பவை நிலைமொழிகளாகலின், ஙனம் என்பது வருமொழி என நன்கறியப்படும். ஆகவே, ஙகரம் மொழிமுதல் வந்ததாகுமன்றே? இவ்வுதாரணமே ஆசிரியர் கருதினாராயின், 'முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்' என்று ஙகரத்தைப் பிரித்துக் கூறுதலின்றி, 'முதலாகெழுத்துத் தோன்றும் என்ப' என்பது போலன்றே சூத்திரஞ் செய்திருப்பார்? ஙகரம் மொழி முதல் வாராததனானன்றே அதனை முதலாகெழுத்தோடு சேர்க்காது பிரித்துக் கூறினார்? இச்சூத்திரத்திற்கு உரையாசிரியர் காட்டிய 'வேய்ஙனம்' முதலியவை உதாரணமாகுமோ? இதுபோன்றே, 'மெய்நிலை சுட்டின்' என்னுஞ் சூத்திரத்தின் உரையில் அவர் காட்டிய 'எங்ஙனம்' என்னும் உதாரணமும் அமைவுடையதன்று. அங்ஙனம் முதலிய சொற்கள் தொல்காப்பியனார் காலத்தில் வழங்கியிருக்குமேல் தொல்காப்பியத்திலும் சங்கநூல்களிலும் ஆங்ஙனம் ஈங்ஙனம் யாங்ஙனம் என்பனவன்றே காணப்படல் வேண்டும். அவ்வாறின்றி, ஆங்கனம் ஈங்கனம் யாங்கனம் என்பனவே காணப்படுதற்கு நியாயம் யாது? ஆயின், ஙகரத்தின்முன் ஙகாம் வருதற்கு உதாரணம் யாதோ எனின், 'பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவு முரைத்தனரே' என்னும் அடியில் ஙகரம் இரண்டு வந்திருத்தல்போல்வது உதாரணமாகும். அங்ஙனம் என்பது போலத் தனிமெய் முன்னர் உயிர்மெய் வந்ததுவே அமையும்; இஃது அமையாது எனின், தனிமெய்யோடு தனிமெய்மயங்கு தலை இச்சூத்திரத்தாற் கொள்ளாக்கால் 'கண்ண் கருவிளை,' 'பொன்ன் பொறி சுணங்கு' என்பனபோல வருபவற்றிலெல்லாம் மெய்கள் மயங்கி நிற்றற்கு இலக்கணமின்றாகும். அன்றியும், தனிமெய்யோடு உயிர்மெய் மயங்கிய சொற்களை உதாரணங் காட்டினும் ஆண்டு மெய்யொடு மெய்மயங்கிய துணையே உதாரணமாகக் கொள்ளப்படுதல் கருதத்தகும். மெய்மயக்கம் என்பது மெய்யொடு மெய்மயங்குதலேயாகும். இனி, ஙகர மெய்யோடு ஙகரஉயிர்மெய் மயங்கிய சொல் இருந்திருப்பின் அஃது உதாரணமாதற்குத் தட்டில்லை. 8. ஆங்கனம்..........யாங்கனம் என்பவற்றைப் பிழையுள்ளதோர் முடிபு என்றார்கள். ஆசிரியர் தொல்காப்பியனாரும் சங்கப்புலவர் பலரும் வழங்கியிருக்குஞ் சொல்லே பிழையுள்ளதாயின், பிழை யில்லாத சொல்யாதோ, அறியேன். 9. அங்ஙனம் முதலிய சொற்களின் வழக்குப் பழமையதே என்றார்கள். பழமையதாயின் சங்கச் செய்யுட்களில் வந்திருக்குமே ஆங்கனம் ஈங்கனம் யாங்கனம் என்னும் வடிவச்சொற்களே சங்கச் செய்யுட்களில் காண்கின்றன. ஓரிடத்திலாதல் ஆங்ஙனம் அங்ஙனம் என்னுஞ் சொற்கள் காண்கின்றில. சங்கச் செய்யுட்களில் ஆட்சியுடைய சொற்கள் புதிய வாய்பாட்டுச் சொற்களாதலும், அவற்றில் வந்திலாத சொற்கள் பழமையவாதலும் காலத்தின் கோலமே. முகித்தல் என்னுஞ் சொல் பண்டையிலக்கண இலக்கியங்களில் வந்திலாததனால் அதனை வழங்கியது தவறு என்றார்கள். ஆங்கனம்..........யாங்கனம் என்னுஞ் சொற்கள் பண்டையிலக்கண இலக்கியங்களில் வந்துள்ளனவாகலின் அவற்றை வழங்கியதும் தவறாயிற்று, நாட்டாரவர்கள் கூறுமந்நியாயம் நியாயமே! III. காண்கின்றது என்னுஞ் சொல்லைக் குறித்து நாட்டாரவர்கள் - எழுதியிருப்பதன் சுருக்கம்:- 1. காண்டல்வினை செயப்படுபொருள் குன்றாததாகலின், காண் என்பதன் அடியிற் பிறக்குஞ் சொற்களைக் காணப்படுகின்றது, காணப்படுகின்றன என்றிங்ஙனம் வழங்குதலேமுறை. 2. வேற்றுமொழிப் பயிற்சி ஒன்றே கொண்டு தமிழின் இயல்பினை விளக்கலுறுவார் சிலர்............தமிழின்கண் செயப் பாட்டுவினை இன்று எனவும் கூறாநிற்பர். 3. காண்கின்றது என்பதனையே அவர் ('கபிலர்' ஆசிரியர்) நினைவுகூர்ந்து வழங்கியுள்ளார்; காணப்படுகின்றது என்பது பயிற்சிவயத்தால் அவரறியாமலே போந்தது. 4. இது (காண்கின்றது என்பது போன்று செய்வினையாக எழுதுவது), இழி வழக்கு. 5. எத்துணையர் இவ்விழிவழக்கினை விழுமிய வழக்காகக் கொண்டனரோ என உன்ன அச்சம் உண்டாகின்றது. இவற்றை முறையே ஆராய்தும் :- 1. காண் என்பதன் அடியிற் பிறக்கும் வினைச் சொற்களைச் செயப்பாட்டுவினையாகவே வழங்குதல் வேண்டும் என்பதற்கு, ‘ வினையே செய்வது செயப்படு பொருளே ......... ....... ..... ........ ........ .. ஆயெட் டென்ப தொழின்முத னிலையே’ என்னும் சூத்திரத்தை விதியாகக் குறித்தார்கள். ஒரு தொழிற்கு முதனிலை (காரணம்) எட்டு என்பதும், அவை இவையென்பதும் இச்சூத்திரத்தாற் போதருதலன்றிச் செயப்படுபொருள் உள்ள வினையைச் செயப்பாட்டுவினை வடிவில் வழங்குதல் வேண்டு மென்பது போதருதல் இல்லை. செயப்படுபொருளுள்ள வினைக்கு உதாரணங்காட்டிய உரையாளரெல்லாரும் வனைந்தான் என்று செய்வினையாகக் காட்டினரேயன்றி, வனையப்பட்டது என்று செயப்பாட்டுவினையாகக் காட்டினாரில்லை. செயப்படுபொருள் குன்றாவினையைச் செயப்பாட்டு வினையாக வழங்குதல்வேண்டும் என்பது இச்சூத்திரத்தில் எவ்வாறு புலனாகின்றதோ, அறிகிலேன். நாட்டாரவர்கள் அறிவிப்பார்களாயின் அவர்கள்பால் என்றும் நன்றிபாராட்டுங் கடப்பாடுடையேனாவேன். ‘வினையே' என்னும் இச்சூத்திரத்தில் வந்துள்ள 'செயப்படு பொருள்' என்னுஞ் சொல்லால் அறியப்படும் எனின், அது, கருத்தாவின்1 செயலை அடைந்த பொருள் என்று கருமத்தினை விளக்கியதிதனை. அச்சொல்லால், தமிழில் செயப்பாட்டு வினை வழங்குதல் உண்டு என்பது அறியப்படும். அத்துணையேயன்றி, செயப்படுபொருள் குன்றாத வினையையெல்லாம் செயப்பாட்டு வினைவடிவில் வழங்குதல் வேண்டும் என்பது பெறப்படாதே. செயப்படுபொருளையே நன்னூலார் செய்பொருள் என்று வழங்கியுள்ளார் 'செய்பொருளாறுந் தருவது வினையே' என்றது காண்க. நாட்டாரவர்களும், தமிழிற் செயப்பாட்டு வினை வழக்கு உண்டு என்பதைக் கூறுமிடத்தே, 'செயப்படு பொருள் என்னும் பெயரிலிருந்தே செயப்பாட்டுவினை யுண்மை பெறப் படுவதனையும்' என்று எழுதியிருத்தலின், அச்சொல்லால், செயப்பாட்டு வினை வழக்கு உண்டு என்பதுமட்டுமே அறியப்படும். 2. வேற்றுமொழிப் பயிற்சி ஒன்றே கொண்டு, தமிழில் செயப்பாட்டுவினை இல்லை என்றார் இவர் எனயான் அறிகிலேன். ஆயின், செயப்பாட்டு வினைவழக்குத் திராவிட மொழிக்கு இயல்பாயதன்று; வடமொழியினின்று வந்தது என்பாரை யான். அறிவேன். ‘ கர்மணிப்ரயோகம் பாஷாஸைலிக்குச் சேர்ந்ததன்று’2 ‘ பாஷைக்குச் சொந்தமாகக் கர்மணிப்ரயோகம் இல்லை’3 இப்பொழுது வழங்கிவருவது வடமொழியின் சரியான மொழி பெயர்ப்பிற்கு வேண்டி இடைக்காலத்தில் கிருத்திரிமமாக ஏற்படுத்தியதொரு ஸம்ப்ரதாயமாகும். இதற்கு லக்ஷ்யம்-முதலாவது, வடமொழி அறியாதவர் கர்மணிப்ரயோகத்தை ஒருகாலும் ஆதரித்தல் இல்லை. பேச்சுமொழியில் செய்வினை வழக்கே கேட்குமாறுளது. பழைய நூல்களில்மட்டுமன்று, எழுத்தச்சன் ழுதலியோருடைய நூல்களிலும் வடமொழித் தொடர்பு இல்லாதவிடத்துக் கர்மணி ப்ரயோகம் இல்லை என்பது என் அனுபவம். "ரகுவம்ஸம் காளிதாசனால் உண்டாக்கப்பட்டது" என்பதற்கு ஈடாக, ரகுவம்ஸம் காளிதாஸன் உண்டாக்கியது" என்றால், சிறிதும் அமையாமை யில்லை என்பதன்று. இம்முறைமையே மொழிக்கு இயல்பாயது என்றும் தோன்றுகின்றது..............' ‘கர்மணி ப்ரயோகத்தைச் சுத்த திராவிடங்களாய வினைச் சொற்களில் அதிகம் ஒழித்தல் வேண்டும்.'1 ஈஸ்வரன் செய்யுன்ன தெல்லாம் (செய்கின்றதெல்லாம்) ஸஹிக்கயே (பொறுத்துக் கொள்ளுதலே) உள்ளு (உளது) என்று கூறாமல், ஈஸ்வரனால் செய்யப்பெடுன்னதெல்லாம் ஸஹிக்கப் பெடுகையே உள்ளு என்று பிரயோகித்தால், அது மலையாளம் அன்று என்றே கூறுதல் நேரும்' என்று, கேரளபாணிணி, மஹாமஹிமை, ஸ்ரீராஜராஜவர்ம கோயிற்றம்பிரானவர்கள் கூறியிருக்கின்றார்கள். ‘கன்னடத்தில் கர்மணி ப்ரயோகம் விஸேஷரூடமாக வில்லை. வீடுகட்டப்பட்டது என்பதற்குப் பதில் வீடுகட்டிற்று (மனெ கட்டிது) என்னும் ப்ரயோகம் ஏராளமாயிருக்கின்றது'.2 ‘மணிமயதாலயங்களு சமெது வைகாவுதத அளதெயலி' என்னும் அடியில், சமைக்கப்பட்டன என்னும் பொருளில் சமைந்தன (சமெதுவு) என்று வந்திருத்தல் காண்க.3 இக்காட்டியவற்றால், செயப்பாட்டுவினை வழக்குத் திராவிட மொழிகளுக்கு இயல்பாயதன்று என்பதும், செயப்பாட்டு வினையை வழங்க வேண்டியவிடத்துச் செய்வினையை வழங்கும் வழக்கே பொரும்பாலும் உளது என்பதும் போதரும். புகழுடம் போடு விளங்குங் கா. நமச்சிவாய முதலியாரவர்கள் கருத்தும் இதுவே. 3. காணப்படுகின்றது என்று செயப்பாட்டு வினையில்யான் எழுதியிருப்பது பயிற்சிமிகுதியால் என்னை அறியாமலே நேர்ந்தது என்று நாட்டாரவர்கள் கூறியிருக்கின்றார்கள். அவ்வாறாயின், அங்ஙனம் இங்ஙனம் யாங்ஙனம் என்பனவும் என்னை யறியாமற் சிலவிடங்களில் போந்திருத்தல் வேண்டுமே. எனது ‘கபில'ரில் ஓரிடத்தாதல் அவ்வாறு வந்திலதே. அங்ஙனம் முதலியவை எனக்குப் பயிற்சியில்லாதன என்பார்கள் போலும். ஆயின், கலாசாலை மாணவர்க்காக யான் எழுதியிருக்கும் புஸ்தகங்களில் ஓரிடத்திலாதல் அங்கனம்............யாங்கனம் என்னுஞ்சொல் வந்தில; அங்ஙனம் முதலிய சொற்களே வந்துள்ளன. இவற்றால், அறியாமல் எழுதும் வழக்கம் என்பால் இல்லை என்பதை நாட்டாரவர்கள் அறிந்து கொள்வார்களாக. 4. காணப்படுகின்றது என்று செயப்பாட்டுவினையாய் வழங்காமல், காண்கின்றது என்று செய்வினைவடிவில் வழங்கியது இழிவழக்கு என்றார்கள். ‘முனைவன் கண்டது முதனூலாகும்' என்று வந்துளது. ‘முனைவன் கண்டது' என்பதற்கு, 'முன்னோனாற் செய்யப் பட்டது' என்று பேராசிரியர் எழுதியிருக்கின்றார். ‘நோக்குவ வெல்லாம் அவையே போறல்' என்னுமிடத்தும், நோக்கப்படுவ என்று செயப்பாட்டுவினையில் வந்திலது. ‘நோக்குவ' என்பதற்கு, ‘தன்னாற் காணப்பட்டன' என்று உரையாசிரியர் எழுதியிருக்கின்றார். (நோக்கல் என்பது செயப்படுபொருள் குன்றாவினை யாகலின், அதனை, செயப்பாட்டுவினையில் வழங்குதல் வேண்டும் என்பது நாட்டாரவர்கள் கருத்து. பக்கம் 48 பார்க்க.) ‘கண்டது மொழிமோ' என்று குறுந்தொகையில் வந்துளது ‘காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும் காண்கின்ற வெந்தீயெலாம் யானே என்னும் காண்கின்ற விக்காற்றெல்லாம் யானே என்னும் காண்கின்ற கடமெல்லாம் யானே என்னும்' (திருவாய் 5.6.3.) என்று ஒரு செய்யுளில் பலமுறை வந்துளது. இவையெல்லாம் இழிவழக்கேயோ? இவை செய்யுளாகலின் அமையும்; உரை நடையில் அமையாது என்பார்களோ? அவ்வாறு செய்யுளுக்கும் உரைக்கும் தனித்தனியே இலக்கணங் கூறியிருத்தலை யான் அறிந்திலேன். உரையையுஞ் செய்யுள் என்னும் வழக்கு உளதன்றே? நிற்க. இக்காலத்துத் தமிழ்ப் புலவர்களுள் உரைநடை யெழுதுதலிற் சிறந்தவர் கா. நமச்சிவாயமுதலியா ரவர்களென்பது தமிழ்நாடு அறிந்த செய்தியே. அவர்கள், தம் உரைநூல்களில், காண்கின்றது என்பதனையே பெரிதும் வழங்கியிருக்கிறார்கள். ‘அங்கே பலப்பல கணவாய்களும் கொடுமுடிகளும் காண்கின்றன.' 1 ‘இடையிடையே கணவாய்களும் நீரோடைகளும் காண்கின்றன.'1 ‘காட்டுவிலங்குகளுட் சிறந்த யானை, புலி, கரடி முதலிய விலங்குகள் அடிவாரங்களில் மட்டும் காண்கின்றன.' 2 ‘ஒருகாலத்தில் அது சிறந்த நகரமாயிருந்தது என்பதற்கு அறிகுறிகள் ஆங்காங்கே இப்போதுங் காண்கின்றன' என்பன காண்க.3 இவை பயின்று வந்துள்ளன. காணப்படுகின்றது என்பதுவும் சிலவிடங்களில் வந்துளது. யான் எழுதிய 'கபிலர்' என்னும் நூல் முழுவதும் முதலியாரவர்கள் கடைக் கணித்துத் திருத்தஞ் செய்ததே. இதனை யான் முன்னுரையில் குறித்திருக்கின்றேன். திரு. செல்வகேசவராய முதலியாரவர்களும் ‘திருவள்ளுவர்' என்னும் நூலில் இவ்வாறு செய்வினையாக வழங்கியுள்ளார்கள். 5. யான் எழுதிய கபிலர் என்னும் நூல், உயர்ந்த தாளிற்பரிய உருவினதாகப் பொலிவுற அச்சிடப்பட்டிருத்தலின் அதிற் காணும் இவ்வழிவழக்கினை விழுமிய வழக்கென்று கொண்டு பலர் கெட்டொழிவரே என்று நாட்டாரவர்கள் அஞ்சுகின்றார்கள். இது மேன்மக்களியல்பே. ஆயின், தொல்காப்பியம் குறுந்தொகை திருவாய்மொழி முதலியவற்றைக் கற்போர் சிலர் என்று கொண்டு அவரைக்குறித்து அஞ்சாதிருப்பினும், திரு கா. நமச்சிவாய முதலியாரவர்களின் உரைநூல்களைப் பயிலும் மாணவர் பல்லாயிரவராகலின், இளமையிற் கற்றது சிலையிலெழுத்துப் போல் நிலைபெறுமாகலின் அவரனைவருங் கெட்டொழிவரே என்று நாட்டாரவர்கள் கருதுவார்களாயின், அவர்களுள்ளம் எவ்வாறு அஞ்சும்! அந்தோ!! IV. நற்கீரர் என்னுஞ் சொல்லைக்குறித்து நாட்டாரவர்கள் எழுதியிருப்பதன் கருத்து. 1. நக்கீரர் என்பது பண்டு தொட்டு நிலைபெற்றுவருவது 2. நற்கீரர் என்பது அழிவழக்கு 3. நக்கீரர் என்பதை நற்கீரர் என்று மாற்றினது போல நக்கண்ணையார் நச்செள்ளையார் முதலிய பெயர்களையும் மாற்றி வழங்குவரேல், அது பிறிதொரு மொழியாதலன்றித் தமிழாகாது. 1. நக்கீரனார் நப்பாலத்தனார் முதலிய பெயர்களில் நல் என்பதுவே அடைமொழி என்றும், நற்கீரனார் என்பதுவே நக்கீரனார் என்று மருவிற்று என்றும் யான் எழுதியிருப்பது தங்கட்கும் உடன்பாடே என்று நாட்டாரவர்களே எழுதியிருக் கிறார்கள். இதனால் நற்கீரனார் என்பதுவே திரிபில்லாதது-இயல்பாயது என்பது அவர்கட்கும் உடன்பாடாகும். அங்கன மாகவும், நக்கீரர் என்பது பண்டுதொட்டு நிலைபெற்று வருவது என்றது வியப்பினைத் தருகின்றது. இவ்வாறாயின், மஞ்சன், அஞ்சி(ஐந்து), போச்சி, ஆச்சி என்பவையே பண்டுதொட்டு நிலைபெற்றுவருபவை என்றும் மைந்தன், ஐந்து, போயிற்று போய்த்து, ஆயிற்று ஆய்த்து என்பவை பிற்காலத்தில் (என்னைப் போன்றவர்களால்) வழங்கப்பட்டவை என்றும் கூறுதல் வேண்டுமே. திரிந்தசொல் பண்டையதாகுமா, திரியாத சொல் பண்டைய தாகுமா? இனி, பண்டு என்றது கடைச் சங்ககாலத்தைக் குறிப்பது எனின், நக்கீரர் என்னுஞ் சொல் சங்கச்செய்யுட்களில் வந்திருப்ப தாகத் தெரியவில்லை. பண்டித இ. வை. அனந்தராமையரவர்கள், சிலகாலத்திற்கு முன்வரை நற்கீரர் என்பதுவே வழங்கிவந்ததாக எழுதியிருக்கிறார்கள்.1 (அவர்கள் நக்கீரன் என்பதுவே இயல்பாய பெயர் என்று கொண்டவர்கள்; நாட்டாரவர்கள் அக்கொள்கையின ரல்லர் தமிழ்ப். 13பக்கம். பார்க்க.) ஹாலாஸ்யமாஹாத்ம்யத்தில் நற்கீரன் என்று வழங்கியிருத்தலின், அப்புராணத்தை இயற்றினோர் காலத்தில் நற்கீரர் என்றே வழங்கிவந்தது என்பது தெளிவாகும். அக்காலத்தில் நக்கீரர் என்று (வடமொழியில்) பொருளில்லாத தொரு சொல்லாக அதனைத் திரித்து வழங்குதற்கு நியாய மில்லை. சீவகசிந்தாமணி 482-ஆஞ் செய்யுளின் உரையில் நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் விசேடவுரையைப் படித்த புலவர்களானே நற்கீரர் என்னும் வழக்கு ஒழிந்திருக்கும். நச்சினார்க்கினியர் காலத்தில் நக்கீரர் என்று வழக்கு வழங்கியது என்பதில் ஐயமில்லை. அவ்வளவிறானே அது பண்டுதொட்டு நிலைபெற்று வருவது எனல் அமைவுறாது. நற்சேந்தனார்,2 நற்றாமனார்3 என்னும் பெயர் அகநானூற்றிலும் நற்றிணையிலும் இன்னும் காண்கின்றன. நற்றமனார்4 என்னும் பெயரொன்று நற்றிணையிற் காண்கின்றது. மேற்கூறியவற்றால், நக்கீரனார் என்னுந் தொடக்கத்தனவே பண்டுதொட்டு வழங்குவன என்பது உண்மையின்றாய், வரலாற்றோடு முரணுதல் காண்க. 2. நற்கீரர் என்னுஞ்சொல் அழிவழக்கு என்றார்கள். இயல்பாய பெயரை உண்மைவடிவில் வழங்குதல் அழிவழக்காயின், சிறந்த வழக்கு யாதோ? நற்கீரர் என்பது அழிவழக்காயின், நற்சேந்தனார் நற்றாமனார் என்பவை அழிவழக்காகாவோ? 3. நற்கீரர் என்று எழுதியதுபோன்று நற்கண்ணையார் நற்செள்ளையார் என்றும், எழுதுவேனாயின் அவை தமிழ்மொழிச் சொற்களாகாமல், தெலுங்கு மலையாளம் போலப் பிறிதுமொழி யாகும் என்றார்கள். பெரும்புலவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரவர்களும் மசாவித்துவான் ரா. இராகவையங்காரவர்களும் நற்சேந்தனார் நற்றாமனார் என்னும் பெயர்களை முன்னரே எழுதியிருத்தலின், அவர்களே தெலுங்கு மலையாளம் போலப் பிறிதொருமொழியைப் படைத்துவிட்டார்களாகலின், புதிய தொருமொழியைப் படைக்கும் பெருமையும் அடியேனுக்குக் கிடைக்காமற் போயிற்று. நாட்டாரவர்கள் என்மாட்டுள்ள அன்பின் மிகுதியினால் அப்பெருமையை எனக்கே கொடுக்க உடன்பட்டாலும் நற்றிணையையும் அகநானூற்றையும் கண்ட தமிழுலகம் அதற்கு உடன்படாதே. 'தெற்றென' என்பது தெள் என்னும் முதனிலையடியிலும், நாக்கு என்பது நால் என்னும் பகுதியடியிலும் பிறந்த சொற்கள் என்பது யானறிந்தது. இதனைத் தமிழ்ப் பொழிலிலும் எழுதியுள்ளேன். அதுகொண்டு, ‘தெட்டென' என்றும், 'நாற்கு' என்றும் எழுதுதல் வேண்டும் என்பது என்கருத்தன்று. யான் அவ்வாறு எழுதிற்றுமிலேன். அறிஞர் வழங்கிய சொற்களை - திரிபில்லாதவற்றை - அவ்வாறே வழங்குதல் நலன் என்பது என்கருத்து. கன்னடமொழி - பழங்கன்னடம் என்றும் புதுக்கன்னடம் என்றும் இருபெரும்பிரிவினதாய் வழங்குதல் போலவும், மலையாளமொழி - பழைய மலையாளம் அர்வாசீன மலையாளம் என்றும் வழங்குதல்போலவும், தமிழ்மொழியும் பண்டைத்தமிழ் பிற்காலத்தமிழ் என்றும் பிரிவுற்றிருக்குமேல் ஆங்கனம்.......யாங்கனம் என்றும் நற்கீரர் என்றும் எழுதுதல் அமைதியாகாது. அவ்வாறு பிரிவின்றியிருத்தலானே, தமிழ்ப் புலவர்கள் நீயிர் யான் என்னுஞ் சொற்களையும் நும்மை நின்னை என்னுந் தொடக்கத்தவற்றையும் ஆடூஉ மகடூஉ என்னுஞ் சொற் களையும் இவைபோன்ற பிறவற்றையும் வழங்கி வருகின்றனர். புகழுடம்போடு விளங்குஞ் சூரியநாராயண சாஸ்திரியார் தம் உரைநூலில் அளபெடைச் சொற்களையும் வழங்கினார். நீவிர் நீயிர் நும்மை என்பனபோன்ற சொற்களைத் திரு நாட்டாரவர்களும் எழுதிவருகின்றார்கள். இவையெல்லாம் வழக்கிறந்தனவாயினும் பண்டைச் செய்யுட்களில் வந்திருத்தலான் வழங்கப்படுதலின், அடியேனும் ஆங்கனம் முதலியவற்றை வழங்கலானேன். சமன் செய்து சீர்தூக்குங் கோல்போலமைந்து விளங்கும் பெரியோர்கள் எம்மிருவர் கூற்றுக்களையும் ஆராய்ந்து, அமைவில்லாதவற்றை அருள்கூர்ந்து தெரிவிக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றேன். ‘குணத்தைக் கொள்ளாராக. அதனால் என்? குற்றத்தைக் கொள்வாராக. அதனால் என்? குணத்தைக் கொண்டு குற்றத்தைக் கொள்ளாதுவிடுவாராக. அதனால்தான் என்? குணத்தைக் குற்றமாகக் கொள்ளுதல்தான் பொறுத்தற்கு அரிதாயுளது'. என்று வடமொழி மஹாகவியொருவர் கூறியது நினைக்கத் தக்கதா யிருக்கின்றது.  20. திரு.வே. வே ரெட்டியாரவர்களின் ஆராய்ச்சியின் செப்பமுடைமை வித்துவான் திரு.வே.வேங்கடராசலு ரெட்டியாரவர்கள் எழுதிய 'கபிலர்' என்னும் நூலின் பொருள்கள் பலதிரிபுணர்ச்சியால் எழுதப்பட்டனவாகத் தோன்றினமையின், தமிழ் கற்கும் இளைஞர் பொருட்டு அவற்றைச் சில கட்டுரைகளாக எழுதி வெளிப் படுத்தல் கடனெனக் கருதி, யான் எழுதிய முதற்கட்டுரை 'தமிழ்ப் பொழில்' துணர் 13 மலர் 2-ல் வெளியிடப் பெற்றது. அதன்கண், முகித்தல், அங்கனம் காண்கின்றது, நற்கீரர் என ரெட்டி யாரவர்கள் வழங்கிய நால் வேறு சொற்கள் ஆராயப்பட்டன. அவர்கள் வழங்கிய அச்சொல் வழக்கு என்னால் மறுக்கப் பட்டமையின் அவர்கள் அறிவாராய்ச்சி குறைபாடுடைய ரென்றாதல், யான் நிறைவுடையேனென்றாதல் கருதினேனாக எண்ணாதிருக்க அவர்களையும் ஏனோரையும் வேண்டுகின்றேன். எனது சிறுமையை என்னின் அறிந்தார் பிறரிலர் என்பது தேற்றம். அங்ஙனம் மிகச் சுருங்கிய அறிவினேனாயினும், எதனையும் உண்மை காணும் நோக்குடன் ஆராயுமியல்பும், என் அறிவு ஆராய்ச்சிக் குறைவால் நேர்ந்த வழுக்களைப் பிறர் எடுத்துக் காட்டலுறின் அதற்கிசைந்து அவற்றைத் திருத்திக்கொள்ளும் விருப்பமும் உடையேன். தமது தவறுயாதாயினும் பிறர் எடுத்துக் காட்டிய வழி அதனை ஏற்றுக்கோடல் நன்மக்கள் இயல் பாகலானும், தமக்கும் பிறர்க்கும் பயனுண்டாக நூலாராய்ச்சி செய்வார்க்கு அஃது இன்றியமையாக் கடப்பாடு ஆகலானும் ரெட்டியாரவர்கள் என்னாற் காட்டலுற்ற பிழைகளுக்காக என்னை முனியாது அவற்றைத் திருத்திக்கொள்ள முற்படுவார்களென எண்ணினேன். ஆயின் அவர்கள் 'செப்பமுடையார்க்குச் செய்யும் விண்ணப்பம்' எனத் தலைப்பெயரிட்டு எழுதிய கட்டுரை 'தமிழ்ப் பொழில்' 13-ஆம் துணர்,9,10,11-ஆம் மலர்களில் வெளிவந்ததனைப் படித்து, என் எண்ணம் பழுதாயினமை கண்டேன். அவர்கள் பல பொருந்தாவுரைகளால் தம்பிழைபட்ட முடிபுகளையே சாதிப்பான் முயன்றுள்ளார்கள். மீட்டும் அவையிற்றை மறுத்து உண்மை நிலை நாட்டுதல் கடனாயினமையின் இக்கட்டுரை எழுத நேர்ந்தது. அவர்கள் எழுதியவற்றையெல்லாம் பெயர்த்தெழுதி ஆராயின் இவ்வுரை மிக விரியுமாகலின் இன்றியமையாதன எடுத்துக் காட்டப்படும். இதனைப் படிப்போர் அவர்கள் எழுதியதனையும் உடன்வைத்து நோக்குதல் நன்றாம். "முகித்தல் என்னுஞ் சொல் திசைச்சொல் என்பது எதனாற் புலனாகின்றதோ, அறிகிலேன். அது தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்குதலான் திசைச் சொல்லாகும் எனின், தமிழ்ச் சொற்களுட் பல்லாயிரஞ் சொற்கள் திசைச் சொற்களேயாகும்" என்பது முதலாகச் சில கூறி வந்து, 'முகித்தல் என்பது திசைச்சொல் என்றே கொள்ளினும்' என்று தொடங்கிச் சில கூறுகின்றார்கள். இவற்றை நோக்குழித் திசைச்சொல் என்பது பற்றித் தெளிவான கருத்தொன்றும் அவர்கட்கில்லை யென்பது புலனாகின்றது. " செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி"1 எனத் திசைச்சொற்கிலக்கண முணர்த்தும் தொல்காப்பியச் சூத்திரவுரையில் இளம்பூரணரும், சேனாவரையரும் செந்தமிழ் நாட்டுத் தென்கீழ்ப்பால் முதலாக வடகீழ்ப்பால் இறுதியாகவுள்ள பொங்கர் நாடு முதலாய பன்னிரு நாடுகளைப் பன்னிரு நிலம் என்பதற்குப் பொருளாகக் கொண்டனர். நச்சினார்க்கினியர் அவற்றுடன், அவற்றின் புறஞ்சூழ்ந்த சிங்களம் முதலிய பன்னிரு நாடுகளையும் கொண்டனர். தெய்வச்சிலையார் அவ்விரு திறத்துப் பன்னிரு நாடுகளையும் எடுத்துக்காட்டினரேனும், வடவேங்கடந் தென்குமரியிடைப்பட்ட தமிழ்நாட்டைப் புறஞ் சூழ்ந்த பன்னிரு நாடுகளைக் கோடலே பொருத்தமாமென்னுங் கருத்தினரென்பது அவருரையால் அறியப்படும். மயிலைநாதரும் நன்னூலுரையில் சிங்களம் முதலிய பன்னிரு நாட்டின் பெயர்களையுணர்த்தும் ஓர் சூத்திரப் பகுதியை எடுத்துக் காட்டி, அஃது அகத்தியனார் இயற்றியதாகவும் குறிப்பிட்டார். பிற்கூறிய பன்னிருநாட்டில் கருநடம், தெலுங்கு என்பனவும் அடங்கியுள்ளன. ரெட்டியாரவர்கள் தெலுங்கிலும் கன்னடத்திலுமிருந்து வந்து வழங்குவனவே திசைச் சொல்லாகா எனக்கருதின், பொங்கர்நாடு முதலியவற்றிற் குரியனவும் திசைச்சொல்லாகா என்பது அவர்கள் கருத்தாதல் போதரும். மற்று, தொல்காப்பியனார் கூறிய திசைச்சொல் இற்றென்று அவர்கள் விளக்குவார்களாக. இனி, "பழைய தமிழிலக்கியங்களில் வழங்காததனால் அது(முகித்தல்) திசைச்சொல்லாகும் எனின், அவற்றில் வழங்காதன வெல்லாம் திசைச்சொற்களேயாகுமன்றோ? ஆயின், நான், நீங்கள், அந்த, இந்த, எந்த, சரி, அனுப்பு, சிரி முதலியனவெல்லாம் பழைய தமிழிலக்கியங்களில் வழங்காதனவாதலின் திசைச் சொற்களேயாகும்" எனவும், "முகித்தல் என்பது திசைச்சொல் என்றே கொள்ளினும், செய்யுளிலும் வழக்கிலும் வழங்குதலின் அதனை உரைநடையில் வழங்குதல் தவறாதல் யாங்ஙனம்? திசைச்சொல்லை வழங்கலாகாது என்று இலக்கணம் உளதோ? எனவும் எழுதியுள்ளார்கள். (யான் எழுதியிருப்பதனை இங்கே தருகின்றேன்: "சங்கப் புலவர்களைப் பற்றி ஆராய்ச்சியுரை எழுதும் ஆசிரியரொருவர் பிற்காலத்துத் தலபுராணம் ஒன்றில் ஓரிடத்துக் காணப்படுவதன்றிக் கடல் போற்பரந்துள்ள தமிழிலக்கிய இலக்கணங்களில் யாண்டும் வழங்கப்படாததும், உரையாசிரியன்மார் எவராலும் தீண்டப்படாததும், எவ்விடத்து எத்திறத்து மக்களாலோ அருகி வழங்கப்படுவதுமாகிய திசைச்சொல் ஒன்றை முதன்மையாக நாட்டுவதும், அதனைப் பழைய தமிழ்ச்சொல் என்று நிறுத்தப்படுவதும் நேர்மையுடையவாகத் தோன்றவில்லை. 'இதில், பழைய தமிழிலக்கியங்களில் வழங் காதன வெல்லாம் திசைச்சொல்லாகுமென்றும், திசைச்சொற் களை வழங்கலாகாது என்றும் யான் கூறியனமை பெறப்படுமா றெங்ஙனம்? யான் கூறியவற்றை நெகிழவிடுத்துக் கூறாதவற்றைக் கூறியவாகக் கற்பித்துக்கொண்டு எழுதுவதே செப்பமுடைமை போலும். முகித்தல் என்னுஞ் சொல் திருப்புகழில் பலவிடத்தில் வந்துளது எனவும், அச்சொல்லைத் தமிழ் 'லெக்சிக'னில் நோக்கிய யான் அதிற் குறித்திருக்கும் திருப்புகழடிகளைத் கண்டிருத்தல் கூடும் எனவும், அவ்வாறாகவும் 'பிற்காலத்துத் தலபுராணம் ஒன்றில் ஓரிடத்துக் காணப்படுவது' என்றுயான் எழுதியது வியப்பினை விளைக்கின்றது எனவும், அருணகிரிநாதர் காலம் 14ஆம் நூற்றாண்டு என்று தெரிதலின் இற்றைக்கு 500 யாண்டுகட்கு முன்னரே அச்சொல் தமிழில் வழங்கிய தாகும் எனவும் அவர்கள் எழுதியுள்ளார்கள். யான் எழுதியது வியப்பு விளைக்கக்கூடியதென்பதில் ஐயமில்லை. ஆயின், தாம் எழுதியதனை நோக்கியே முதற்கண் அவர்கட்கு வியப்புண்டாதல் வேண்டும். "ஆற்றிற் பாலத்தை முகித்தேனல்லேன்" (குற்றாலத்தல. கண்டகசேதன 39) என்று செய்யுளிலும் வந்துள்ள தனாலும்" என எழுதிய அவர்கள் அதனினும் முற்பட்ட திருப் புகழில் அச்சொல் வழங்கியிருத்தலை எடுத்துக்காட்டாமை என்னை? அவர்கள் கருத்தின் ஆழம் அறிதற்கரியதாகவுள்ளது. மற்று, திருப்புகழில் வந்துள்ளதனால் அது பழைய தமிழ்ச்சொல் ஆகுமெனின், சலாம், சபாசு முதலாயினவும் பழைய தமிழ்ச் சொல்லா மென்பது அவர்கள் கருத்திற்கிசைந்தது போலும். "பழைய ஓலையேடுகளின் இறுதியில் முற்றிற்று என்றாதல், முகிந்தது என்றாதல் எழுதியிருத்தலை ஓலைச்சுவடி நோக்கினார் நன்கு அறிவர்' என்கிறார்கள். ஓலைச்சுவடி நோக்கிய பெருமை கற்றார் பலருக்குண்டு. நோக்கியதோடமையாது எண்ணிறந்த சுவடிகளை ஆராய்ந்து வெளியிட்டவர்கள் அச்சொல்லை ஓரிடத்தும் வழங்காது விட்டமை என்னை? 'முகிந்தது என்பது முற்றிற்று - பூர்த்தியாயிற்று என்னும் பொருளது. இச்சொல்லை நூன் முழுவதிலும் எவ்வாறு வழங்குதல் கூடும்?' என உரைக் கின்றார்கள். அதனை வழங்குதற்கு நூலின்கண் வேறிடமே வாய்க்கவில்லையென்பது பெரியதோர் வியப்பே! அது கிடக்க. பழைய தமிழிலக்கியங்களில் வழங்காதன என்று அவர்கள் எடுத்துக்காட்டிய சொற்களில் 'சிரி' என்பதும் ஒன்று. அது குறித்து அவர்கள் 'சிரி' என்பது நகை என்பதன் மரூஉ என்றுங் கூறிவிடலாம் போலும் என்று கூறி நகையாடுகின்றார்கள். அதனை நகை யென்பதன் மரூஉ என்று கருதுகின்றவர் யாரோ? 'விலாவிறச் சிரித்திட்டேனே' என்று திருநாவுக்கரசரும், 'சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்' என்று மாணிக்கவாசகரும், 'என்றானிறை யோனது கேட்டவர்- சிரித்தார்' என்று சேக்கிழாரும் 'சிரித்தது செங்கட் சீயம்' என்று கம்பநாடரும் அதனை வழங்கி யுள்ளார்கள். இங்ஙனம் தமிழுக்கு வேந்தர்கள் எனத்தக்க பழைய பெருமக்களாலும், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர் களாலும் பயில வழங்கப்பெற்றுள்ள இச்சொல்லை "நகையென்பதன் மரூஉ என்று கூறிவிடலாம் போலும்" என ரெட்டியாரவர்கள் உரைப்பதன் நோக்கம் இதுவெனப் புலனாகவில்லை. முகித்தல் என்னுஞ் சொல்லைக் குறித்துத் தடை நிகழ்த்திய யான் 'அநுப்பு', 'நீங்கள்' என்னுஞ் சொற்களை வழங்குதல் தகாது என்று சாற்றுகின்றார்கள். அவர்கள் கருத்து, யான் இவற்றை வழங்குதல் தவறாகாமை போல அவர்கள் அதனை வழங்குதலும் தவறாகாது என்று காட்டுவதோ? அவர்கள் அதனை வழங்குவது தவறாதல் போல யான் இவற்றை வழங்குவதும் தவறாகும் என்று காட்டுவதோ? யாதென அறியக்கூடவில்லை. முகித்தல் என்னுஞ் சொற் போலன்றி, இவை தமிழ் நாடெங்கணும் பொருளறிந்து பேசப்படுவனவாதலையும், தகுதியுடைய புலவர் பலராலும் இவை பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருதலையும் ஓர்தல் வேண்டும். அன்றியும் இச்சொற்களைப் பழந்தமிழிலக்கியங்களில் வந்துள்ள பழைய தமிழ்ச் சொற்கள் என யான் ஓரிடத்தும் கூறவில்லை என்பதனையும் அவர்கள் சிந்தித்தல் வேண்டும். இனி, அறிஞர் பலரும் 'அங்ஙனம்' முதலியவாக வழங்கி வருஞ் சொற்களை ரெட்டியாரவர்கள் 'அங்கனம்' முதலிய உருவினவாகத்திரித்து, அவர்கள் எழுதிய 'பரணர்' 'கபிலர்' என்னும் நூல்களினும், 'தமிழ்ப் பொழி' லில் வெளியிட்ட கட்டுரைகளிலும் வழங்கியிருப்பதோடு, 'கபிலர்' முன்னுரையில் அவ்வாறு வழங்கினமைக்குக் காரணமும் கூறியுள்ளார்கள். அது, "ஆங்கனம், ஈங்கனம், யாங்கனம் என்னுஞ் சொற்களே பழைய செய்யுட்களில் வந்திருத்தலானும், ஙகரம் மொழி முதற்கண் வாராதென்று தொல்காப்பியம் கூறுதலானும் அங்கனம் ஆங்கனம் இங்கனம் ஈங்கனம் எங்கனம் யாங்கனம் என்னுஞ் சொற்களே பழமைய என்பது அறியப்படும். ஆகலின் யான் இந்நூலில் அங்கனம், இங்கனம், யாங்கனம் என்னுஞ் சொற்களையே வழங்கியுள்ளேன்" என்பது. யான் அதனை ஆராய்ந்த பின்னர், அவர்கள் செப்பமுடையார்க்குச் செய்த விண்ணப்பக் கட்டுரையில் "அங்ஙனம் முதலிய சொற்களை அவ்வடிவில் வழங்குதலை யான் யாண்டும் மறுத்திலேன். யான் மறுப்பது வியப்பாகவுளது என்று நாட்டாரவர்கள் எழுதியிருப்பதுவே வியப்பாகவுள்ளது. மாணவர் பொருட்டு யான் எழுதியிருக்கும் புஸ்தகங்களில் அங்ஙனம் இங்ஙனம் யாங்ஙனம் என்பவற்றையே வழங்கியுள்ளேன்" என ஓரிடத்திலும், "கலாசாலை மாணவர்க்காக யான் எழுதியிருக்கும் புஸ்தகங்களில் ஓரிடத்திலாதல் அங்கனம் யாங்கனம் என்னுஞ் சொல் வந்தில; அங்ஙனம் முதலிய சொற்களே வந்துள்ளன" எனப் பிறிதோரிடத்திலும் எழுதியுள்ளார்கள். அவ்வாறிருப்பின், அவற்றையும், 'பரணர்' முதலியவற்றையும் பார்க்கும் ஒருவர், மாணவர்க்குப் புத்தகங்கள் எழுதிய திரு. வேங்கடராஜலு ரெட்டியாரவர்களும் வேறு. பெரியோர்களுக்காகப் பரணர் முதலிய நூற்கள் இயற்றிய திரு வேங்கடராஜலு ரெட்டியார் அவர்களும் வேறு என்றுதான் கொள்வர். என்னை? முன்னைய புத்தகங்களில் யாண்டும் 'அங்ஙனம்' முதலிய சொல் வழக்கும், பின்னையவற்றில் 'அங்கனம்' முதலிய வழக்குமே காணப் படுதலின் என்க. ரெட்டியாரவர்களும் சங்கப் புலவர்களாகிய பரணர் கபிலரும் வேறு, பதினோராந் திருமுறையிலுள்ள சில நூற்களியற்றிய பரணர் கபிலரும் வேறு எனச் சொற்களின் வழக்கு வேற்றுமை முதலியன கொண்டு துணிந்துள்ளார்களாதலின் அம்முறை பற்றிப் பிறர் செய்யும் ஆராய்ச்சி முடிபுகளை அவர்கள் மதித்தலே வேண்டும்! 'பரணர்' 'கபிலர்' என்னும் நூற்களியற்றிய ரெட்டியாரவர்கள் வழங்கிய சொற்களே என் ஆராய்ச்சிக் குரியவாகும். 'யாங்ஙனம் ஒத்தியோ வீங்குசெலன்மண்டிலம்' எனத்திரியாது கூறினும் எதுகையாதற்கு இழுக்கின்றாம். அங்ஙனமாகவும் எதுகை மோனைகளின் நிர்ப்பந்தம் இல்லாத காலத்தில் - இல்லாத பாவில், புலவரொருவரல்லர் பலரும் அச்சொல்லை வழங்கிய புலவரனைவருமே - ஙகரத்தைக் ககரமாகத் திரித்தே வழங்கினார் என்பது எத்துணை அமைவினது!' என்று எழுதியுள்ளார்கள். இதில் 'இழுக்கின்றாம்' என்பது காறுமுள்ள பகுதி முன்னர் என்னால் எழுதப்பட்டதே. புலவரெல்லாருமே ஙகரத்தைக் ககரமாகத்திரித்து வழங்கினார் எனல் என் கருத்தென்று எங்ஙனம் அறிந்தார்களோ? யான் எழுதியது ஒரோவழிக் ககரவுருவிற் காணப்படின் அதற்குக் காரணம் காட்டியபடியேயாம். "செய்யுட் செய்யும் புலவர் எதுகைத் தொடையில் ஙகரத்தைக் ககரமாகத் திரித்து வழங்குதல் இயல்பே" என்று எழுதிய யான், அதனையடுத்து, "யாங்ஙன மொத்தியோ வீங்கு செலன் மண்டிலம்" எனத் திரியாது கூறினும் எதுகை யாதற்கிழுக்கின்றாம்" என்றும், இறையனார் களவியலின் மூன்றாஞ் சூத்திரம் 'ஆங்கனம் புணர்ந்த கிழவோன்' என்றே படிக்கப்பட்டு வருகின்றது என்றும் எழுதியிருப்பவற்றை நோக்குவார். ஙகரவுருவில் இருப்பதே இயல்பாம் என்பதும், ககரவுருவிற் காணப்படுவன சில ஏடெழுதுவோரால் நேர்ந்தன வாகும் என்பதும் அன்றோ என் கருத்தெனக் கொள்ளா நிற்பர்? ரெட்டியாரவர்கள் என் கருத்துக்களைத் தமக்கு வேண்டிய வாறெல்லாம் திரித்துரைப்பது முறையாகுமா? 'பண்டைப் புலவர்தஞ் செய்யுளில் எதுகை மோனைகளை நியதியாகக் கொள்ளாது விடுத்தனர்" எனவும், 'யாங்ஙன மொத்தியோ வீங்கு செலன் மண்டிலம்' எனத் திரியாது கூறினும் எதுகையாதற்கு இழுக்கின்றாம்' எனவும் கூறிய அவர்களே, "இறையனார்களவியல் மூன்றாஞ் சூத்திரம் 'ஆங்ஙனம் புணர்ந்த கிழவோன்' என்றே படிக்கப்பட்டு வருகின்றது" என யான் எடுத்துக் காட்டியவழி, அதனை ஏற்றுக் கொள்ள மனமின்றி, "சூத்திரத்தின் இரண்டு மூன்று நான்காம் அடிகளை நோக்கின், முதலடி, 'ஆங்கனம்-' என்றே அமைந்திருக்கும் என்பது எளிதிற்புலனாகும்" என்கின்றார்கள். எத்துணை முரண்பாடு காண்மின்! எதுகையே வேண்டுவதின்று என்றும், மூன்றாம் எழுத்து ஙகரமாகவும் ககரமாகவும் மாறி யிருப்பினும் எதுகையாமென்றும் பண்டையோர் கருத்தினைக் கண்டுரைத்த அவர்கள் அவ்விரண்டனையும் காற்றிலே பறக்க விட்டு, பின் மூன்றடிகளில் பாங்கினோரில், பாங்கிலன், ஆங்க என வந்திருத்தலின் 'முதல' டியிலும் ஆங்கனம் என்றே இருக்க வேண்டும் மென்பது சால அழகிது. "பழைய பதிப்புகளில், ஆங்ஙனம் விரிப்பின் அளவிறந்தனவே பாங்குறவுணர்ந்தோர் பன்னுங்காலை' என்று பதிக்கப்பட்டிருந்த தொல்காப்பியச் சூத்திரம், இப்பொழுது திரு.வே.துரைசாமி ஐயரவர்களைக் கொண்டு பரிசோதித்துத் திரு. கனகசபைப் பிள்ளையவர்கள் வெளியிட்ட பதிப்பில், 'ஆங்கனம்....காலை' என்று பதிக்கப்பட்டுளது. துரைசாமி ஐயரவர்கள் பாடத்தைத் திருத்தி விட்டார்கள் என்று நாட்டாரவர்கள் கூறிவிடுவார்கள் போலும்' "என்றும், "அகநானூற்றில் ''யாங்ஙனம்' என்று பதிப்பித்துள்ள மூன்று இடங்களிலும் (செய்யுள் 27,90,378) திரு.எஸ்.வையாபுரி பிள்ளையவர்களிடமிருக்கும் பழைய ஓலையேட்டில் 'யாங்ஙனம்' என்றே இருக்கின்றது. இஃது ஏடெழுதினோர் தவறு என்று நாட்டாரவர்கள் கூறுவார்களாயின் என் செய்தும்" என்றும், "அச்சுப் புத்தகங்களில் ஆங்ஙனம், யாங்ஙனம் என்று பதித்திருத் தற்குக் காரணம் அவர்க்குள்ள நன்னூற் பயிற்சியே யாகும்" என்றும் எழுதியுள்ளார்கள். இதிலிருந்தே தொல்காப்யிமும், அகநானூறும் பழைய ஏட்டுச் சுவடிகளிலிருந்து முதலில் அச்சிட்டவர்கள் 'ஆங்ஙனம்' எனவும், 'யாங்ஙனம்' எனவுமே அச்சிட்டுள்ளார்கள் என்பது புலனாம். அகநானூறு மயிலை திரு இராஜகோபால ஐயங்காரவர்களாலும், மகாவித்துவான் திரு ரா. இராகவையங்கார் அவர்களாலும் ஆராயப்பட்டது. தொல்காப்பியச் செய்யுளியலை நச்சினார்க்கினியர் உரையுடன் அச்சிட்டவர்கள் மகாவித்துவான் திரு ரா. இராகவையங்கார் அவர்களே. அவர்கள் எங்கெங்கு கிடைத்த எத்தனை ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து அதனைப் பதித்துள்ளார்கள் என்பது அப்புத்தக முகவுரையால் அறியப்படும். அப்பதிப்பிலே, செய்யுளியல் 51ஆம் சூத்திரத்தில் 'ஆங்ஙனம் விரிப்பின்' என்றும், 213 ஆம் சூத்திரத்தில் 'ஆங்ஙன மறிப' என்றும், 242ஆம் சூத்திரத்தில் 'ஆங்ஙன மொழுகின்' என்றும் 'ஆங்ஙனம்' என்னுஞ் சொல் அவ்வுருவினதாகவே அச்சிடப் பெற்றுளது. அவர்கள் நன்னூற் பயிற்சியால் அங்ஙனம் செய்து விட்டார்களென்பது ரெட்டியாரவர்களின் கருத்தா கின்றது. பலராலும் நன்கு மதிக்கப்பெற்ற சிறந்த புலவர்களைத் தொல்காப்பியப் பயிற்சியில்லாரென்றும், நன்னூற் பயிற்சி யொன்றே உடையாரென்றும் குறைத்துரைப்பதே தமது பெருமையை மிகுப்பதாகுமென அவர்கள் கருதியுள்ளார்கள் போலும்! அவ்வளவு பெருமிதமுடைய அவர்கள் "ஆங்ஙனம்-(எனத்) துரைசாமி ஐயரவர்கள் பாடத்தைத் திருத்திவிட்டார்கள் என்று நாட்டாரவர்கள் கூறிவிடுவார்கள் போலும்" என, அங்ஙனங் கூறின் எனது நா வெந்துவிடுமென்பது போலப் புகன்றுள்ளார்கள். திரு.கனகசபைப் பிள்ளையவர்கள் வெளியிட்ட பொருளதிகாரப் பதிப்பு முன்னைய பதிப்புக்களில் உள்ள நூற்றுக்கணக்கான பிழைகளில் மிகச்சில திருத்தப்பெற்றும், சில குறிப்புக்கள் சேர்க்கப் பெற்றும், அழகாகப் பதிக்கப் பெற்றுளதென்பதும், குறைந்த விலையில் மாணாக்கர்கள் பெற்றுப் பயனடையுமாறு உதவப் பெற்றுளதென்பதும், உண்மை. ஆனால் அஃது, ஏடுபார்த்து முழுதும் செப்பஞ் செய்யப்பட்டது என்பதுபோல் மாறுபாடு பிறிதில்லை. புத்தகத்திலுள்ள அப்பிழை களெல்லாம் ஏட்டிலும் இருந்தனவாயின், ரெட்டியாரவர்கள் 'ஏடு' 'ஏடு' என்று, அதன் ஆணைக்கு அடங்கியொழுகுமாறு கூறுவதெல்லாம் பொருளில்லா வறுங்கூற்றேயாகும். மகாமகோ பாத்தியாய, டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்களின் பெயரையும் பதிப்பையும் ஒரோவழித் தமக்கு அரணாக அமைத்துக் கொள்ளும் ரெட்டியாரவர்கள், ஐயரவர்கள் தமது உரைநடையில் எவ் விடத்தும் 'அங்ஙனம்' முதலிய சொற்களை 'அங்கனம்' முதலிய வாகத் திரியாது வழங்குங் காரணத்தைத் தாமாக ஆராய்ந்தோ, அவர்களோடு உசாவியோ அறிந்து, தாமும் அதனைப் பின்பற்று வதன்றோ முறையாகும்? " இங்ஙன மிரண்டு திங்க ளேகலு மேக வேலான் அங்ஙனம் புணர்ந்த வன்பி னவண்மு லைப் போகநீக்கி எங்ஙன மெழுந்த துள்ள மிருளிடை யேகலுற்றான் தங்கிய பொறியினாக்கந்தனக் கொர்தே ராக நின்றான்"1 (சீவகசிந்தாமணி . 1359) என்பது ஐயரவர்கள் பதிப்பித்தது தானே? இவ்விடத்து நன்னூற் பயிற்சியாற் பதிப்பித்தார்கள் என்றே கூறுவார்கள் போலும்! இனி, அவர்கள் "வழங்குதற்கு. எளிதாகிய அங்கனம் என்னுஞ் சொல் வழங்குதற்கு அரிதாகிய அங்ஙனம் எனத் திரியாது என்றார்கள். இதனை அறியின், மெல்லொற்றுத்தன் இனவல்லெழுத்தோடு கூடிவரும் சொல் வழங்குதற்கு எளியது என்பதும், மெல்லெழுத்து இரட்டித்து வருஞ்சொல் வழங்குதற்கு அரியது என்பதும் அவர்கள் கருத்தாதல் நன்கு புலனாகும்" எனக்கூறி, ஒன்று, அன்று முதலாயின ஒன்னு, அன்னு முதலிய வாகத்திரிந்து வழங்குதல் என்னை? என வினாவுகின்றார்கள். வழங்குதற்கு எளிதாகிய அங்கனம் என்பது அரிதாகிய அங்ஙனம் எனத் திரியாது எனக் கூறியதிலிருந்து, அவர்கள் பிற் கூறியவெல்லாம் என் கருத்தாகுமென எங்ஙனம் அறிந்து கொண்டார்களோ தெரிந்திலது. எழுத்திலும், சொல்லிலும், தொடரிலும் சில தம்மளவில் யாவரும் வழங்குதற்கு அரியனவாக வுள்ளன. ழ என்னும் எழுத்து ளகரமாகவும், யகரமாகவும் சிற்சிலரால் வழங்கப்படுதல் கண்கூடு. சில பகுதியிலுள்ளவர்கள் அதனை ஷ எனவும் ஒலிக்கின்றனர். 'அங்ஙனம்' முதலாயினவும் அவ்வாறே திருந்தா நாவினோர்க்கு வழங்குதற்கு அரியவாதலை யாவரும் உணர்வர். இஃது உண்மைக்கு மாறாகுவதோ? இனி, மங்கலம், கஞ்சி, சந்தனம், மாங்காய், தேங்காய், என்பன மலையாளத்தில் முறையே மங்ஙலம், கஞ்ஞி, சந்நனம், மாங்ஙா, தேங்ஙா என வழங்குதலின் ங்ங ஒலி அரிதென்பதும்' ங்க ஒலி எளிதென்பதும் பொருந்தா என்கின்றார்கள். கஞ்சியும் சந்தனமும் ஈண்டைக்கு வேண்டா. மங்ஙலம், மாங்ஙா, தேங்ஙா என மலையாளத்தில் வழங்குதற்குரிய காரணத்தை அம்மொழி வரலாறு ஆராய்வார் ஆராய்க. திங்கள், பொங்கல், பங்குனி, கங்குல், மங்குல், சுங்கம் முதலிய சொற்களைத் தமிழ் மக்கள் திங்ஙள், பொங்ஙல், முதலியவாகத் திரித்து எங்கேனும் வழங்குகின்றார்களோ? அப்படி வழங்கின் அதனை எடுத்துக் காட்டுதலும், அன்றேல் வாளா அமைந்திருத்தலுமன்றோ நேர்மையாகும்? இனி, மரபு நிலை திரிதல் என யான் எழுதியது குறித்தும், 'ஙகரத்துடன் மயங்குதற்குரிய வேறு மெய்அதனோடு பிறப் பொற்றுமையும் ஒலியொற்றுமையுமுடைய ககரம் ஒன்றுமேயாம்' என யான் எழுதியதில் உள்ள ஒலியொற்றுமை என்பது குறித்தும் அவர்கள் கூறியவற்றுக்கெல்லாம் மாறு உரைப்பின் இவ்வுரை வெறிதே விரிவதாதலையும், அங்ஙனம், அங்கனம் என்பவற்றுள் பழமையது யாது என்னும் ஆராய்ச்சிக்கு அவை இன்றியமை யாதன அல்லவாதலையும் கருதி, அவற்றை இக்கட்டுரையில் விட்டொழிக்கின்றேன். வினைத்தொகை, பண்புத்தொகைகளைப் பிரித்துப் புணர்த்தாமைக்கு உரைகாரர்கள் கூறியுள்ள காரணங் களை அவர்கள் எடுத்துக்காட்டியிருப்பதன் ஆராய்ச்சியும் ஈண்டைக்கு வேண்டற் பாலதன்று. தொல்காப்பியர் அங்ஙனம், அங்கனம் என்பவற்றுள் யாதேனும் ஒன்றன் ஆட்சி புலப்பட விதி கூறியிருப்பின், அஃதொன்றே, அதற்கு மாறாகக் கூறப்படும் காரணங்களை யெல்லாம் சிதைத்தொழித்து உண்மையை நிலைநாட்டுவதற் குரியதாகும். இலக்கியங்களில் ஒரு சொல் இருவகையாக வழங்கின் அவற்றுட் பழையதாய வழக்கு இதுவெனத் துணிதல் பெரும்பாலும் அரிதாகும். அடம்பு, அடும்பு, அணிமை, அணுமை, குரிசில், குருசில், பரிதி, பருதி; என இச்சொற்கள் இரு தன்மையாகவும் பழைய செய்யுட்களில் வந்துள்ளமை காண்க. இவற்றுள் பழைய வடிவு. அன்றி, உண்மை வடிவு இதுவெனத் துணிதலாகாமையின் ஓர் பதிப்பில் ஒரு தன்மையாகவும், பிறிதொரு பதிப்பிற் பிறிதொரு தன்மையாகவும் இச்சொற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. தாழக்கோல் எனப் பொருள்படும் ஓர் சொல் 'தாழ்' எனவும், 'தாள்' எனவும் இலக்கியங்களில் வழங்கினும் ஆசிரியர் தொல்காப்பியனார் ழகார வீற்றில் வைத்து, " தாழென் கிளவி கோலொடு புணரின் அக்கிடைவருதல் உரித்து மாகும்"1 என விதி கூறியிருத்தலின், தாழ் என்பதே பழைய உருவாமென அறுதியிடப்படுமன்றோ? இவ்வாற்றால் அங்ஙனம் முதலிய வற்றின் வடிவு துணிதற்கு இதுகாறும் நிகழ்த்திய தடை விடை யாவற்றினும் பார்க்கில் ஈண்டெடுத்துக் கொள்ளப்படும் தொல்காப்பிய விதி பற்றிய ஆராய்ச்சியே இன்றியமையாச் சிறப்பிற்றாகும். தொல்காப்பிய நூன்மரபில் உடனிலை மெய்ம்மயக்கத்திற்கு விதிகூறிய ' மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முற் றாம்வருஉம் ரழவலங் கடையே'2 என்னுஞ் சூத்திரத்தை யான் எடுத்துக்காட்டி, அதில், ர,ழ என்னும் இரண்டும் ஒழிந்த பதினாறு மெய்யும் தம்முன் தாம் வந்து மயங்குமென ஆசிரியர் விதித்திருத்தலின் ஙகரவொற்றின் முன் ஙகரம் வந்து மயங்கும் சொல் இருந்ததாகல் வேண்டும் எனவும், தமிழிலே சுட்டுவினாக்களின் பின் ஙனம் என்பது இயைந்துவரும் அங்ஙனம் முதலிய சொற்களன்றி ஙகரம் உடனிலையாக மயங்கற்குரிய வேறு சொல் இல்லை எனவும் கூறினேன். அங்ஙனம் முதலிய சொற்களை அ+ஙனம் என்றிங்ஙனம் பிரித்துப் புணர்த்துவது தொல்காப்பியர் கருத்தன்றாகலின் ஙகரம் மொழிமுதற்கண் வருமென அவர் விதித்திலர் எனவும் உரைத்தேன். இவற்றிற்கு ரெட்டியாரவர்கள் கூறிய மறுப்புரையாவன. 1. அங்ஙனம் என்பதற்குத் தொல்காப்பியர் கொண்ட பொருள் அத்தன்மை, அப்படி என்பனவென்னின், ஆண்டு அகரம் சுட்டுப்பொருள் தருதலின் ஙகரம் மொழி முதல் வந்ததாகும். ஆகவே, அஞ்ஞாலம் அந்நாள் அம்மணி என்னுஞ் சொற்களைப் பிரித்து, 'சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்' என்று விதி கூறிய ஆசிரியர் 'சுட்டின் முன்னர் ஙஞநமத் தோன்றின், என்று விதி கூறி, அங்ஙனம் என்பதனையும் அமைத்திருப்பர். 2. "மெய்ந்நிலை சுட்டின்" என்னுஞ் சூத்திரத்தில் ஙகரத்தொடு ஙகரம் மயங்குதற்கு அங்ஙனம் இங்ஙனம் என்னும் சொற்களையே ஆசிரியர் கருதினார் என்று துணிதல் அமையாது. 3. உரையாசிரியர் அதற்கு எங்ஙனம் என்னுஞ் சொல்லை உதாரணமாகக் காட்டியதும் பொருந்தாது. 4. அங்ஙனம் முதலிய சொற்கள் தொல்காப்பியனார் காலத்தில் வழங்கியிருக்குமேல் தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் ஆங்ஙனம் ஈங்ஙனம் யாங்ஙனம் என்பன காணப்படாமல் ஆங்கனம் ஈங்கனம் யாங்கனம் என்பனவே காணப்படுதற்கு நியாயம் இல்லை. 5. ஙகரத்தின்முன் ஙகரம் வருதற்கு உதாரணம் 'பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவு முரைத்தனரே' என்னும் அடியில் ஙகரம் இரண்டு வந்திருத்தல் போல்வதாகும். தனி மெய்யோடு தனிமெய் மயங்குதலை இச்சூத்திரத்திற் கொள்ளாக்கால், 'கண்ண் கருவிளை', 'பொன்ன் பொறிசுணங்கு என்பன போல வருபவற்றி லெல்லாம் மெய்கள் மயங்கி நிற்றற்கு இலக்கணமின்றாகும். இவற்றுள் 4ஆவதாகக் குறிக்கப்பட்ட செய்தி உண்மைக்கு மாறாயதென்பது யான் மேலெடுத்துக் காட்டியவற்றிலிருந்து புலனாகும். மற்றும், இச்சூத்திர ஆராய்ச்சியினால் உண்மை துணிய வேண்டுவது முறையாகவும், அதற்கு மாறாகத் தாமே துணிந்து கொண்டதொரு பிறழ்ச்சி முடிபுக்கு இச்சூத்திரப் பொருளை இனைக்க முயல்வதாகவும் உள்ளது. ஆகலின் அதனையொழித்து, ஏனையன இங்கு ஆராய்தற்குரியன. 1. அங்ஙனம் என்றில்லாது, ரெட்டியாரவர்கள் கொள்கைப் படி அங்கனம் என்றிருப்பினும், அச்சொல் அத்தன்மை எனப் பொருள்படுமாகலின், அ என்னுஞ் சுட்டு தன்மை எனப் பொருள் படும் கனம் என்பதனோடு புணர்ந்த தெனல் வேண்டும். தொல்காப்பிய உயிர் மயங்கியலில் " வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும் எனவெ னெச்சமும் சுட்டின் இறுதியும் ஆங்க வென்னும் உரையசைக் கிளவியும் ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே"1 எனஅகர வீற்றிலும், " இகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே"1 " இனியணி யென்னுங் காலையும் இடனும் வினையெஞ்சு கிளவியும் சுட்டும் அன்ன"2 என இகர வீற்றிலும், "உகர விறுதி அகர வியற்றே"3 "சுட்டின் முன்னரும் அத்தொழிற் றாகும்"4 என உகர வீற்றிலும் ஆசிரியர் விதி கூறியிருத்தலின், கனம் என்பதொரு சொல் தன்மை எனப் பொருள்படுவதாயிருந்து, அகரம் முதலிய சுட்டுக்களோடு புணர்ந்திருப்பின், அக்கனம் என்பது முதலியவாக வலிமிக்கன்றோ முடிந்திருக்க வேண்டும்? அவ்வாறின்மையின், தம் கூற்றுத் தமது கொள்கையினையே சிதைத்தொழிப்பதனை ஓராது, அவர்கள் அங்ஙனம் என்பதன் உண்மையை மறுக்கப் புகுந்தது என்னையோ? அங்ஙனம் என்பது ஆசிரியர் கருத்தாகாது என்பதற்கும், உரையாசிரியர் காட்டிய உதாரணம் பொருந்தாதது என்பதற்கும் மற்றும் அவர்கள் கூறியன ஆராயற்பாலன. "ரழ ஒழிந்த மற்றைய மெய்யெழுத்துக்கள் தம்மொடுதாம் மயங்கும் என்பதுவே சூத்திரத்தின் பொருள். இதனால், ஙகரத் தொடு ஙகரம் மயங்குதற்கு அங்ஙனம் இங்ஙனம் என்னுஞ் சொற்களையே ஆசிரியர் கருதினார் என்று துணிதல் அமையாது. ஆயின் உரையாசிரியர், எங்ஙனம் என்னுஞ் சொல்லையே உதாரணமாகக் காட்டினாரால் எனின், அதனை நோக்குதும்; " யரழ என்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்"5 என்னுஞ் சூத்திரத்தின் உரையில், யரழக்களுக்கு முன் ஙகரம் வருதற்கு உதாரணமாக அவர், வேய்ஙனம், வேர்ஙனம், வீழ்ஙனம் என்பவற்றைக் காட்டியுள்ளார். இவ்வுதாரணங்களில் வேய், வேர், வீழ், என்பன நிலைமொழிகளாகலின், ஙனம் என்பது வருமொழி என நன்கறியப்படும். ஆகவே ஙகரம் மொழி முதல் வந்ததாகு மன்றே? இவ்வுதாரணமே ஆசிரியர் கருதினாராயின், 'முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்' என்று ஙகரத்தைப் பிரித்துக் கூறுதலின்றி, 'முதலாகெழுத்துத் தோன்றும் என்ப' என்பது போலன்றே சூத்திரஞ் செய்திருப்பார்? ஙகரம் மொழிமுதல் வாராததனானன்றே அதனை முதலாகெழுத்தொடு சேர்க்காது பிரித்துக் கூறினார்? இச்சூத்திரத்திற்கு உரையாசிரியர் காட்டிய 'வேய்ஙனம்' முதலியவை உதாரணமாகுமோ? இது போன்றே, 'மெய்ந்நிலை சுட்டின்' என்னுஞ் சூத்திரத்தின் உரையில் அவர் காட்டிய 'எங்ஙனம்' என்னும் உதாரணமும் அமைவுடையதன்று" என்று கூறியுள்ளார்கள். 'யரழ' என்று தொடங்கும் சூத்திரம், மெய்ந்நிலை சுட்டின்' என்னுஞ் சூத்திரத்தை யொட்டி முற்பட அமைந்துளது. யரழ வொற்றின்முன் ஙகரம் வந்து மயங்குதலுண்டென்பதும், ஙகரம் தன்னோடு தான் மயங்குதலுண்டென்பதும், இவ்விரு சூத்திரத் தாலும் பெறப்படுகின்றன. முன்னதற்கு வேய்ஙனம்' முதலியவற்றையும், பின்னதற்கு 'எங்ஙனம்' என்பதனையும் உரையாசிரியரும், நச்சினார்க்கினியரும் உதாரணங் காட்டினர். இரண்டு சூத்திரத் திற்கும் இருவரும் காட்டிய இருவகை உதாரணமும் பொருந்தா என்று ரெட்டியாரவர்கள் கூறுகின்றார்கள். பின்னதற்கு அவர்கள் காட்டும் உதாரணம் பின்பு ஆராய்தற்குரித்து. யரழ முன் ஙகரம் முயங்குதற்கு உரையாளர்கள் காட்டிய உதாரணம் அமையாது என்றவர்கள் தாம் வேறு காட்டவுமில்லை. எப்படியும் 'ஙனம்' என்பதனை ஏற்றுக் கொள்ளலாகாது என்பதே அவர்கள் கடைப் பிடி. அதற்கு அவர்கள் கூறும்காரணம் 'ஙனம்' என்பதனைக் கொண்டால் ஙகரம் மொழிக்கு முதலாகின்றது. ஙகரம் மொழி முதலாகுமேல் 'முதலாகெழுத்து ஙகரமோடு தோன்றும்' என முதலாகெழுத்தின் வேறாக ஙகரத்தைப் பிரித்துக் கூறுதல் அமையாது என்பதே நல்லது; அவர்கள் வாதம் எவ்வளவு பொருந்துமென்று பார்ப்போம். தொல்காப்பியம் கூறுவது நிற்க. அங்ஙனம் முதலிய சொற்களுக்கு நன்னூல் விதி கூறுதலின் அது தோன்றுதற்கு முன்பு தொட்டே அச்சொற்கள் வழக்கிலிருந்து வருகின்றன என்பது வாய்மையன்றோ? பல நூற்றாண்டுகளாக அங்ஙனம் அவை வழங்கி வரா நிற்கவும், ஙனம் என்பது ஒருகாலத்தும் ஓரிடத்தும் தனித்து வழங்காமைக்கு அவர்கள் யாது காரணம் கூறுவார்கள்? அஃது அங்ஙனம் வழங்குதற்கும் வழங்காமைக்கும், அவ்வாறு வழங்குதலும் வழங்காமையுமே காரணமென்று தான் அவர்கள் கூறவேண்டும்! இவ்வாற்றால், தொல்காப்பியத்தில் யரழமுன் ஙகரம் மயங்கும் என்பதற்கும் ஙகரம் தன்னொடு தான் மயங்கும் என்றதற்கும், தொல்காப்பியம் முழுதுக்கும் உரையெழுதினோராகிய உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் காட்டிய உதாரணங்களே பொருந்துவனவாம் என்பதும், தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆராய்ந்து நூலியற்றிய தொல்காப்பியனார் யரழ ஒற்றின் முன்னும், ஙகர ஒற்றின் முன்னும் ஙகரம் வந்து மயங்கிய சொற்கள் வழங்கினமைகண்டு அவற்றிற்கு விதி கூறியுள்ளார் என்பதும், அவ்வாறாயினும் ஙனம் என்பது யரழ வீற்றுச் சொற்களை யொட்டியும், சுட்டு வினாக்களை யொட்டியும் வழங்கியதன்றித் தனித்து வழங்காமையின் ஙகரம் மொழி முதற்கண் வருமென்று கூறிற்றிலர் என்பதும், நன்னூலார் காலத்தில் யரழவொற்றின் முன் ஙகரம் மயங்கிய சொற்கள் வழக்காறற்றுப் போகச் சுட்டு வினாக்களின் பின் ஙனம் என்பது சேர்ந்த சொற்களே வழங்கினமையின் அவ்வழக்கிற்கு மட்டில் விதி கூறினார் என்பதும், ஙனம் என்பது தனித்து வழங்காவிடினும் தனக்கென ஓர் பொருளுடையதாதல் பற்றித் தமது மதம்பட 'ஙவ்வும் முதலாகும்' என்றார் என்பதும் நன்கயறியப்படும் உண்மைகளாகும் என்க. ஙகர மெய்யுடன் உயிர் கூடிய பன்னிரண்டு உயிர்மெய் யெழுத்துக்களில் 'ஙா' முதலிய பதினோரெழுத்துக்களும் தமிழ் மொழியில் யாண்டும் வருவதில்லை. அதுபற்றியே "ஙப்போல்வளை" என்பதொரு முதுமொழியும் தோன்றிற்று. அகரங்கூடிய ஙகரத்தானும் 'ஙனம்' என்பதற்கன்றி வேறு சொல்லுக்கு உறுப்பாய் வர யாரும் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. இப்பொழுது அதனையும் செகுத்துவிட ரெட்டியாரவர்கள் முயல்கின்றார்கள். அவ்வெழுத்தின் மீது அவர்கட்கு அத்தகைய செற்றம் உண்டாயது என்னையோ! 5. ஙகரத்துடன் ஙகரம் மயங்குதற்கு "உண்ணுங்ங்களிறு" என்னும் ஒற்றளபெடையை அவர்கள் உதாரணங்காட்டியது முழுப்போலியாம் என்பதனைச் சிறுமகாரும் அறிவர். ஆசிரியர் தொல்காப்பியனார் நூன் மரபின்கண் மெய்ம்மயக்கங் கூறுவான்றொடங்கி, " டறலள என்னும் புள்ளி முன்னர்க் கசப என்னும் மூவெழுத் துரிய"1 என்பது முதல் " யரழ என்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்"2 என்பது காறுமுள்ள ஏழு சூத்திரங்களால் வேற்று நிலை மெய்ம் மயக்கங் கூறி, " மெய்ந்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே"1 என்னும் சூத்திரத்தால் மெய்கள் தம்மொடு தாம் மயங்கும் உடனிலை மெய்ம்மயக்கங் கூறுவாராயினர். இவையெல்லாம் மெய்ம்மயக்கமேயாயினும் தனி மெய்யுடன் உயிர்மெய் மயங்கு மாறு கூறியனவேயாகும். டகரவொற்று முதலாயினவற்றின் முன் தனிமெய்வந்து மயங்குதற்கு இடமின்மையுமோர்க. ஆசிரியர் தனி மெய்யுடன் தனி மெய்மயங்குமியல்பினை, மொழி மரபின்கண், " யரழ என்னும் மூன்று முன் னொற்றக் கசதப ஙஞநம ஈரொற் றாகும்"2* என்னும் சூத்திரத்தால் விதித்துப் போந்தனர். நன்னூலாரும் இம்முறை பிறழாமலே வேற்றுநிலை மெய்ம்மயக்கமும், உடனிலை மெய்ம்மயக்கமும், ஈரொற்று மயங்கும் மயக்கமும் கூறுவாராயினர். உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் இவ்வுண்மைக்கு மாறு பாடின்றியே உரையெழுதி, உதாரணமுங் காட்டினர். பின் வந்த இலக்கண விளக்க நூலாரும் இவ்வாறே கூறிப்போந்தனர். இவ்வாறிருக்க, ஒற்றளபெடையில் ஙகரவொற்று இரண்டு வந்திருத்தல் போல்வன 'மெய்ந்நிலை சுட்டின், என்னுஞ் சூத்திரத்தாற் குறிக்கப்பெற்றதென்று ரெட்டியாரவர்கள் கூறுவது சிறிதேனும் பொருந்துவதாகுமா? செய்யுட்கே யுரியதென்னுங் கருத்தால் ஆசிரியர் பொருளதிகாரத்துச் செய்யுளியலிற் கூறிய ஒற்றளபெடையை ஈண்டுக் கொணர்ந்து பொருத்த முயல்வது பெரியதோர் விந்தையே. 'மெய்ந்நிலை சுட்டின்' என்னுஞ் சூத்திரத்தை விட்டுவிட்டால் 'கண்ண்' 'பொன்ன்' என ஒற்றளபெடையில் மெய்கள் மயங்கி நிற்றற்கு இலக்கணம் இன்றெனக் கூறும் ரெட்டியாரவர்கள் உயிரளபெடையில் நெட்டெழுத்தின் பின் அ.முதலிய உயிர்க்குற்றெழுத்துக்கள் மயங்கி நிற்றற்கு இலக்கணம் யாண்டுக் கண்டுள்ளார்கள்? அவை இரண்டெழுத்து மயங்கிய மயக்கம் என்பதே உரையாளர்களுக்குக் கருத்தாயின், எவ்விடத் திலேனும் அவற்றை எடுத்துக்காட்டி அமைத்திருப்பார்களே? ஆசிரியர் யாதேனுமொன்றைக் கூறாது விட்டிருப்பின் அதனை அமைத்துக் கோடற் பொருட்டன்றோ புறனடை, உத்தி முதலாயின வற்றைக் கூறி வைத்துள்ளார்? புறனடை முதலியவற்றிலும் உரையாளர் அவற்றை எடுத்தமைத்திலாமையின், அவை ஈரெழுத்து மயங்கியமயக்கமல்லவென்பதே அவர்கள் கருத்தாதல் பெறப்படும். அளபெடை என்பது என்னை? நெட்டெழுத்தின் பின்னர் அதற்கு இனமாகிய குற்றெழுத்து வந்தும், ஒற்றெழுத்தின்பின் அவ்வொற்றே வந்தும் முன்னையவற்றின் ஓசையை மிகுவிப்பதே அளபெடை யாகும். ஆஅ" என்னும் உயிரளபெடையில் அகரம் ஆகாரத் துடன் ஒன்றுபட்டு அதனை மூன்று மாத்திரையினதாகச் செய்த தன்றி, வேறு தனியோசையை உடையதன்றாம். 'கண்ண்' என்னும் ஒற்றளபெடையிலும் பின்னுள்ள ணகரவொற்று முன்னுள்ள தனோடு ஒருமையுற்று அதனை ஒரு மாத்திரையினதாக மிகுவித்த அத்துணையன்றி, வேறு தனிப்பட்ட ஓசையினதன்று. மிகூஉம், தரூஉம், தெறூஉம், என்னும் உயிரளபெடைகளில் மிகுஉஉம், தருஉஉம், என அளபு நிறைக்க வந்த குற்றெழுத்துக்கள் இரண்டு தனித்தனி யெழுதி வழங்கப்படாமல் நெடில் ஒன்றும் குறில் ஒன்றுமாக எழுதி வழங்கப்படுதலே அளபு நிறைக்கவந்த எழுத்துக்கள் முன்னையவற்றின் வேற்றுமையுடையவல்ல என்பதற்குச் சான்றாகும். இவ்வாற்றால் உயிர்களில் மூன்று மாத்திரையைக் குறிப்பதற்கு ஓரெழுத்தும், மெய்களில் ஒரு மாத்திரையைக் குறிப்பதற்கு ஒரெழுத்தும் இல்லாமையாலேயே அவை ஆஅ, கண்ண் என வெவ்வேறெழுத்துக்களாக எழுதப்படுகின்றன என்பது கடைப் பிடிக்க. செய்யுளியலில் மாத்திரை வகையால் அசை கோடலின், அளபெடை நெடிலும் குறிலுமாகப் பகுக்கப்படுகின்றது என்பதும், ஆண்டும் ஒற்றளபெடையிலுள்ள ஒற்று இரண்டும் பகுக்கப்படுதல் இன்றென்பதும் உணரற்பாலன. எனவே, ங்ங், ண்ண் என ஒற்றளபெடையில் வருவன இடையறவு பட்டிசைக்கும் இருவேறெழுத்துக்களாகாமையின், 'அவை மயங்குதற்கு வேறு இலக்கணம் இன்மையின் "மெய்ந்நிலை சுட்டின்" என்னுஞ் சூத்திரம் அம்மயக்கத்தைக் குறிக்க வந்த தென்பது போலியாதல் காண்க. மற்றும், அச்சூத்திரத்திற் குறிப்பிடப்பெறும் பதினாறு எழுத்துக்களில் வல்லெழுத்தாறும் க்க், ச்ச் என ஈரொற்றாக மயங்காமையின், தனிமெய்யுடன் உயிர்மெய்யாக மயங்குவனவே அவற்றிற்கு உதாரணமாகும். அங்ஙனம் தனிமெய்யுடன் உயிர்மெய் உடனிலையாக மயங்குதல் கூறும் அச்சூத்திரத்தில் மயக்கத்திற்குரிய வல்லாத ஒற்றளபெடையின் ஒற்றுக்களைக் கொணர்ந்து புகுத்தி, அவை மயங்குதற்கு அச்சூத்திரம் விதியாமெனக் கூறுதல்யாமை மயிராற் கயிறு திரிப்பது போலும் வியக்கத்தக்க செய்தியே யாமென்க! இதுகாறும் செய்துபோந்த ஆராய்ச்சியால் 'அங்ஙனம்' முதலிய சொல்வழக்கைக் கருதியே ஆசிரியர் தொல்காப்பியனார் ''மெய்ந்நிலை சுட்டின்' என்னுஞ் சூத்திரத்தில் ஙகரம் உடனிலையாக மயங்குமாறு கூறியுள்ளார் என்பதும், அதற்கு மாறாக அங்ஙனம் முதலியன தொல்வழக்கின அல்ல என்றும், அங்கனம் முதலியனவே தொல்வழக்கின என்றும் அழிவழக்குரைப்பார் கூற்று ஒரு சிறிதும் அடாதென்பதும் நிலைநாட்டப்பட்டமை காண்க. உண்மை இவ்வாறாகவும், யான் முன்பு எழுதியவற்றைக் குறித்து ரெட்டியாரவர்கள் 'காலத்தின் கோலமே' என ஓலமிட்டதும், 'அந்நியாயம் நியாயமே' எனச் சாபமிட்டதும் எத்துணை நேர்மையுடையன என்பதை அவர்களாற் கருதப்பட்ட செப்பமுடையார் ஆராய்ந்து கூறுவாராக. இனி, 'மெய்ந்நிலை சுட்டின்' என்னுஞ் சூத்திரம் 'ஆடி நிழலின் அறியத்தோன்றி' நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க' அமைந்துள்ளதாகலானும், அதற்கு உரைகண்ட இருவரும் அதன் பொருளை நன்கு புலப்படுத்தியுள்ளாராகலானும் ரெட்டி யாரவர்கள் அச்சூத்திரத்தின் பொருளை அறிந்திலர் என்று கருதுவது இழுக்காகும் என உன்னியே, அவர்கள் அதனை மறந்தார்கள் என முன்பு எழுதினேன். ஆயின், அவர்கள் பின்னர் எழுதியவற்றை நோக்கியவிடத்து, அச்சூத்திரப் பொருளை அவர்கள் அறிந்திலர் என்பதும், அதுவேயன்றி, அதற்கு முன்னுள்ள "யரழ வென்னும் புள்ளி முன்னர்" என்னும் சூத்திரப் பொருளையும் அளபெடையின் இயல்பு முதலிய பிறவற்றையும் அவர்கள் அறிந்திலர் என்பதும், அவ்வாற்றால், அவர்கள் எழுதியிருப்பதாகக் கூறும் தொல்காப்பிய எழுத்ததிகாரவுரை வழுக்கள் மலிந்ததொன்றாக இருக்க வேண்டும் என்பதும் புலனாயின.  21. யாப்பியல் அமையாச் செய்யுள் தமிழ் மொழி வழக்கு எனவும் செய்யுள் எனவும் இரு வகையினை உடையது. மக்கள் பலரும் பேசும் சொல் நடையே வழக்கு என்பது. கற்றுவல்ல புலவர்களாற் செய்யப்படுவது செய்யுள் ஆகும். ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளை அடிவரையறை உடையது எனவும், அடிவரையறை இல்லது எனவும் இருவகைப்படுத்து உரைக்கின்றார். முன்னதில் வெண்பா முதலிய பாக்கள் யாவும் அடங்கும். பின்னதை ஆறு வகைப்படுத்துத் தொல்காப்பியர் கூறினும் நூல், உரை என்ற இரண்டினுள் அவற்றை நாம் அடக்கிக் கொள்வோம். எனவே செய்யுள் என்பது பாச் செய்யுள், நூற் செய்யுள், உரைச்செய்யுள் என மூவகைப் படும். இவற்றுள் நூற் செய்யுள் என்பது சூத்திரம். உரைச்செய்யுள் என்பது கட்டுரை. இப்பொழுது செய்யுள் என்ற அளவில் சூத்திரமோ, கட்டுரையோ உணரப்படுவதில்லை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, என்னும் பாக்களும், அவற்றின் இனமாகிய தாழிசை துறை விருத்தங்களும், மருட்பா, பரிபாடல் என்பனவுமே செய்யுள் என்று உணரப்படுவன. இவை பாட்டு என்னும் பெயராலும் வழங்கற்குரியன. யாக்கை, யாப்பு என்பன இரண்டும் யாத்தல் (கட்டுதல்) என்னும் பகுதியடியாகப் பிறந்தன. பல்வகைத் தாதுக்களால் யாக்கப்பட்டது உடம்பு. பல்வகைச் சொற்களால் யாக்கப்பட்டது செய்யுள். யாவரும் அழகுள்ளவற்றையே விரும்புவர். உடம்பு அழகுடையதாவது அதன் உறுப்புக்கள் பலவும் ஏற்ற வடிவம் உருவம் உடையனவாதலால். அவ்வாறே செய்யுளும் அதன் உறுப்புக்கள் ஏற்ற அளவும் ஓசையும் உடையனவாயின் அழகுடையதாகின்றது. செய்யுள் உறுப்புக்களாவன: எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலாயின. அவை எல்லாவற்றிற்கும் அளவு அல்லது வரையறை உண்டு. அவ்வரையறைகளின் வேறுபாட்டால் வெவ்வேறு வகையான ஓசைகள் உண்டாகின்றன. அவ்வோசை வேறுபாடு பற்றியே வெண்பா முதலிய பாக்கள் வகுக்கப்பட்டன. இவை யாவும் சேர்ந்ததே யாப்பியல் என்பது. எனவே, யாப்பியல் முற்றும் அமையாத செய்யுள் உண்டு என்பதற்கே இடமில்லை. ஆனால், ஓர்உடம்பு எவ்வளவு அழகுடைய தாயினும், அதனுள் இருக்கும் உயிரின் அறிவு முதலியவற்றிற் கேற்பவே அது மதிப்புப் பெறுவது போல, செய்யுளும் அதன்கண் அமைந்த கருத்தின் சிறப்பினாலேயே பெரிதும் மதிக்கப்படுவ தாகும். சிலர் செய்யுட்களின் வரையறைகள் கவி தன் கருத்தை உள்ளவாறு வெளியிடுதற்குத் தடையாயிருத்தலின் அவை கூடா என்பர். அவர்க்கு நாம் கூறுவது, உரைக்கும் பொருளுக் கேற்பவே ஒருசார் செய்யுட்கள் கடுமையான வரையறை யுள்ளன வாகவும், மற்றொருசாரன அங்ஙனம் இல்லாதனவாகவும் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதே. கத்தூரியை அதன் மணம் கெடாதவாறு திட்பமுடைய சிறிய சிமிழிற் பெய்து வைப்பது போல, மக்கட்கு அறிவுறுத்தும் உயர்தனிக் கருத்தினை அமைப் பதற்கு வரையறை மிகவுடைய சிறிய வெண்பாவானது கருவி யாகக் கொள்ளப்பெற்றது. உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்குங் கருத்தினை வெளிப்படுத்தத் துள்ளலோசையினை உடைய கலிப்பாவினைக் கருவியாகக் கொண்டனர். ஒரு நீண்ட கருத்து அல்லது வரலாற்றினை ஒரே தொடர்ச்சியாகச் சொல்வதற்கு அகவற்பா கருவியாயிற்று. அகவலுக்கு மிகுதியான வரையறை அல்லது கட்டுப்பாடு இல்லை. அகவல் அல்லது ஆசிரியப்பாவை ஆயிரம் அடிவரையில் பாடலாமென விதித்துள்ளனர் ஆயிரம் என்பதை அளவின்மை என்றே நாம் கொள்ளலாம். எதுகை, மோனை, இயைபு முதலிய தொடை விகற்பங்களும் இதற்கு ஒரு தலையாக வேண்டுமென்னும் நியதியில்லை. இவ்வாற்றால், ஆங்கிலத்தில் Blank - Verse என்பதனோடு இஃது ஒருவாறு, ஒற்றுமையுடையது எனலாம். நீண்ட கருத்தையோ, வரலாற்றையோ, உரையாடலையோ தடையின்றிச் சொல்லிச் செல்வதற்கு இதுவே அமையும். ஆதலின் யாப்பியல் அமையாச் செய்யுள் என்று புதிதாக ஒன்று தேடவேண்டியதில்லை. இனி, எதுகை, மோனை முதலிய தொடைகள் கருத்தினைத் தடையின்றிச் சொல்வதற்கு இடையூறாகும் எனச் சிலர் கருதுவர். இது முழு உண்மையாகாது. சிறுவர்கள் இயல்பாகவே எதுகை, மோனைகளைக் கையாளுகின்றனர். பொதுமக்கள் வழங்கும் பழமொழிகளிலும் பெண்டிர்கள் கூறும் ஒப்பாரி முதலிய வற்றிலும் எதுகை மோனை நயங்கள் இயல்பாக அமைதலைக் காண்கிறோம். ஆதலின் இதனை இயற்கைக்கு மாறு என்று சொல்லுதல் அமையாது. மற்றும் இவையெல்லாம் சிறந்த ஓசைகளுக்குக் காரணமாகின்றன. மக்களின் கருத்துக்கள் சொற் களால் மட்டுமன்றி ஓசை வேறுபாட்டாலும் உணர்த்தப்படுவன என்பதை நாம் கருத்தில் இருத்துதல் வேண்டும். ஓசையானது உணர்ச்சியை எழுப்பாவிடில் இசைக் கலையினால் என்ன பயனுண்டு? பல்வேறு வகையான உணர்ச்சிகளைப் புலப் படுத்தவும், உண்டாக்கவும் ஓசை கருவியாக இருத்தலால் அன்றே நம் முன்னோராய அறிஞர் பலரும் பல்வகை ஓசை நலமுடைய செய்யுட்களாலேயே நூல்கள் இயற்றிப் போந்தனர்? முன் ஆசிரியப்பாவைப் பற்றி விளக்கியவிடத்து, எதுகை, மோனை அதற்கு இன்றியமையாதன அல்ல எனக் கூறினோம், ஆயினும் சான்றோர்கள் பலரும் பெரும்பாலும் அவை பொருந்தும் படியாகவே செய்யுட்கள் இயற்றியுள்ளனர். அதனால் அவர்கள் கருத்துத் தடையுண்டது என்பதற்கு இடமில்லை. ஆங்கிலத்தில் Rythm எனப்படும். சந்தம் அல்லது தாளவறுதிக்கு எதுகை மோனைகள் சிறந்த கருவிகளாகும். இதற்கு உதாரணமாக, காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம் அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி ஒளிக்கின்ற தென்னோ வுரை.1 மலையிடைப் பிறவா மணியே யென்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே யென்கோ யாழிடைப் பிறவா இசையே யென்கோ தாழிருங் கூந்தல் தையால்.2 என்பவற்றை நோக்குமின், அண்மைக்காலத்தில், தம் கருத்தினைத் தங்கு தடையில்லாது பாடிய சுப்பிரமணிய பாரதியின் செய்யுட்களும் எதுகை மோனை முதலியவற்றால் சந்த நலம் அமைந்தே உணர்ச்சியை எழுப்பி இன்பம் பயத்தல் கண்கூடு. ஆகவே யாம் யாப்பியல் அமையாச் செய்யுள் வேண்டும் என்பது பொருத்த முடைத்தெனும் கருத்தினேம் அல்லேம்.  நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் தமிழாராய்ச்சி இதழ்களில் வெளிவந்த விவரம் வ. கட்டுரையின் கட்டுரை வெளிவந்த தொகுதி இதழ் கட்டுரை வெளிவந்த எண் பெயர் இதழின் பெயர் எண் எண் ஆண்டும் திங்களும் 1. உவம விளக்கம் செந்தமிழ் தொகுதி - 12 இதழ் - 9 1914 - சூலை - ஆகஸ்ட் 2. உரை நுட்பம் செந்தமிழ் தொகுதி - 16 இதழ் - 2 1918 - பிப்பிரவரி 3. யாப்பருங்கல நூலாசிரியர் பெயர் செந்தமிழ் தொகுதி - 17 இதழ் - 11 1920 - நவம்பர் 4. இலக்கண விளக்க உரையாளர் யார்? செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 2 பரல் - 3,4 1924 - மார்ச்சு - ஏப்பிரல் 1924 ஏப்பிரல் - மே 5. இலக்கண விளக்க உரையாளர் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 2 பரல் - 7 1924 - சூலை - ஆகஸ்டு 6. மயக்க மறுப்பின்மேற் குறிப்பு செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 2 பரல் - 9 1924 - செப்டம்பர் - அக்டோபர் 7. தொல்காப்பியம் தமிழ்ப்பொழில் துணர் - 1 மலர் - 1 1940 - ஏப்பிரல் - மே 8. பெரியபுராணமும் பொருளிலக்கணமும் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 3 பரல் - 6 1925 - சூன் 9. தமிழ் எழுத்துக்கள் தமிழ்ப்பொழில் துணர் - 1 மலர் - 4,6 1925 - சூலை - செப்டம்பர் 10. ஒருகுறட்பா தமிழப்பொழில் துணர் - 1 மலர் - 11 1926 - பிப்பிரவரி - மார்ச்சு 11. நந்தம் போற்கேடு என்னும் தமிழ்ப்பொழில் துணர் - 1 மலர் - 12 1926 - மார்ச்சு - ஏப்பிரல் குறளுரை ஆராய்ச்சி 2. தமிழின் சிறப்பியல்பு செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 5 பரல் - 6 1927 - ஆகஸ்ட் சிலம்பு - 6 பரல் - 3 1928 -மார்ச்சு 13. திணைமயக்கம் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 5 பரல் - 8 1927 - ஆகஸ்ட்டு 14. இளங்கோவடிகளும், பொருளிலக்கணமும் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 8 பரல் - 10 1930 - அக்டோபர் - நவம்பர் 15. தொல்காப்பிய ஆராய்ச்சி - - - 1930 - பிப்பிரவரி 16. தொல்காப்பியர் கல்விப் தமிழ்ப்பொழில் துணர் - 6 மலர் - 11,12 1931 - பிப்பிரவரி - மார்ச்சு பெருமையும், நூலமைப்புத்திறனும் மார்ச்சு - ஏப்பிரல் 17. பரணிப் பெயர்க்காரணம் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 11 பரல் - 6 1934 - சூன் 18. கபிலர் என்னும் நூலின் ஆராய்ச்சி தமிழ்ப்பொழில் துணர் - 13 மலர் - 2 1937 - மே - சூன் 19. *செப்பமுடையார்க்குச் செய்யும் தமிழ்ப்பொழில் துணர் - 13 மலர் - 9 1937 - டிசம்பர் விண்ணப்பம் தமிழ்ப்பொழில் துணர் - 13 மலர் - 10 1938 - சனவரி - பிப்பிரவரி தமிழ்ப்பொழில் துணர் - 13 மலர் - 11 1937 - பிப்பிரவரி- மார்ச்சு 20. திரு.வே.வே. ரெட்டியாரவர்களின் ஆராய்ச்சியின் செப்பமுடைமை தமிழ்ப்பொழில் துணர் - 14 மலர் - 1 1938 - ஏப்பிரல் - மே 21. யாப்பியல் அமையாச் செய்யுள் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 18 பரல் - 8 1940 - ஆகஸ்ட்டு இது வே. வேங்கடராசலுரெட்டியார் அவர்களால் எழுதப் பெற்றது. இலக்கியக் கட்டுரைகள் 1. சீவான்மா பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன் சரணவற் பதமலர் தலைக்கணி வாமே.1 சங்கங்களும், பிரசங்கங்களும், நம் 'செந்தமிழ்' போன்ற பத்திரிகை களும் கற்கும் அவாவுடைய மாணாக்கர்கட்குப் பெரும் பயனளிப்பதோடு, கற்றுவல்ல பண்டிதராயினார்க்குச் சிறிது பயனளிப்பனவுமாம். இவ் வியாசமும் ஒரே விஷயத்தைப் பற்றி நூல்களிற் பலவிடங்களிற் கூறப்பட்டுப் பரந்துகிடந்தவற்றை யொருவழித் தொகுத்து மாணாக்கர்க்கே பயன்படுமாறு வசனரூபமா யெழுதப்படுதலாற் பண்டித சிரோமணிகளாயுள்ளவர்கள் தமக்கா வதொன்றின்றெனச் சிறிதுங் குறைகூறார்களென்னும் நம்பிக்கை பெரிதுமுடையேன். அநாதி சுத்த சித்துருவாகிய சிவபெருமானாலருளிச் செய்யப் பட்ட ‘காமிகம்' முதலிய சிவாகமங்களிருபத்தெட்டும் ஞான பாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் எனத் தனித்தனி நான்கு பாதங்களுடையனவாயிருக்கும். அவற்றுள், ஞான பாதத்திற் பரமசிவனுடைய சொரூபமும், மூவகையான் மாக்களின் சொரூபமும், ஆணவம் முதலிய பாசங்களின் சொரூபமும், தத்துவங்களின் றோற்றமும் பிறவுங் கூறப்படும். அவற்றுள், சீவான்மாவைப்பற்றி முற்கூறிய ஆகமாந்தங்களாகிற சைவ சித்தாந்த சாஸ்திரங்களின் வாயிலாகவும், அநுபவமுள்ள ஆன்றோர் வாயிலாகவும் யானுணர்ந்த சிலவற்றுள்ளும் மிகச் சிலவற்றையே யீண்டெழுதலானேன். ஆன்மாக்கள் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூவகைப்படுவர். விஞ்ஞானகலர், ஆணவமலமொன்றே உடைய வர்கள். பிரளயாகலர் ஆணவம், கன்மம் ஆகிய இரண்டு மலமுடைய வர்கள். சகலர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலமுடையவர்கள். பின்னெழுதப்படுவன பெரிதுஞ் சகலருக்கே யுரியவை. சககலருக்குத் தூலதநுவாவது:- அண்டசம், உற்பிசம், சுவேதசம், சராயுசம் என்னும் நால்வகை யோனிகளிலும் பிறப்பதாய்த் தேவர், மானுடர், விலங்கு, பறவை, நீர்வாழ்வன, ஊர்வன, தாவரம் என்னும் எழுவகைத் தோற்றத்தையுடைய எண்பத்துநான்கிலக்ஷயோனி பேதமாயுள்ளது. இவ்வுடல்களை உடையவுயிர்கள் விஷயங் களையறியும் பேதத்தினால் அறுவகைப்படும். புல், மரம் முதலியவை பரிசம் ஒன்றையே உணரும் ஓரறிவுயிர்கள். நந்து, முரள் முதலியவை அதனொடு சுவையையுணரும் ஈரறிவுயிர்கள். சிதல், எறும்பு முதலியவை அவற்றொடு கந்தத்தையுணரும் மூவறிவுயிர்கள். நண்டு, தும்பி முதலியவை அவற்றொடுருவத்தையும், அதனொடு சமவாயமாயுள்ள வடிவத்தையுமுணரும் நாலறிவுயிர்கள். மா, மாக்கள் முதலியவை அவற்றொடோசையை யுணரும் ஐயறிவுயிர்கள். மக்களெனப்படுவார் ஐம்பொறி யுணர்வேயன்றி மனவுணர்வு முடையவர். இவற்றின் விவரங்கள் தொல்காப்பிய மரபியற்கண்ணே "ஒன்றறிவதுவே" என்பது முதலிய சூத்திரங் களானும், அவற்றினுரையானும் உணரத்தக்கவை. இனி, மெய்கண்டதேவரால் மொழிபெயர்த்தருளிச் செய்யப் பட்ட சிவஞானபோதத்தின் கண் "உளதில தென்றலி னெனதுட லென்றலி, னைம்புலனொடுக்க மறிதலிற் கண்படில் உண்டிவினை யின்மையி னுணர்த்த வுணர்தலின் மாயா வியந்திர தனுவினு ளான்மா"எனச் சீவா ன்மாவினுண்மையும், "அந்தக் கரண மவற்றினொன் றன்றவை, சந்தித்த தான்மாச் சகசமலத் துணரா, தமைச்சர சேய்ப்ப நின் றஞ்சவத் தைத்தே". என அதனிலக்கணமுங் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றை யொருவாறு விளக்குதும். உடம்போ பல்வகைக் கருவிகளாற் கட்டுண்டியல்வதொரு பாவை. உடற்கருவிகள் பலவற்றையும் தனித்தனியே பேதித்து ஆன்மா இதுவன்று, இதுவன்று என்று நீக்கிச் சோதனைசெய்து போதருங்கால் முடிவிற் சோதித்து நீக்கப்படுங்கருவி யாது மின்றாய்ச் சூனியந் தலைப்படக் காண்கின்றோம். ஆதலாற், சிலருண்டெனக்கூறும் ஆன்மா உட்பொருளாகமாட்டாது; சூனியமேயாம் என்று சூனியான்மவாதிகள் கூறுவர். உடல் பொறி முதலிய கருவிகளையெல்லாஞ் சோதனைசெய்து ஆன்மா வன்றென ஒரோவொன்றாகக்கழித்து நிற்பதாகிய அறிவு ஒன்றிருத்தலினால் அவர் சூனியமென்றுகூறியது பொருந்தாது. இனி, உடம்பின்கண்ணன்றி அறிவு நிகழக் காணாமையானும், நான் மெலிந்தேன் பருத்தேன் கரியேன் என உடம்பினையே நான் என்று வழங்கக் காண்டலானும் தேகமே. ஆன்மாவெனத் தேகான்மவாதிகள் கூறுவர். அங்ஙனம் உடம்பின் குணவிசேடங் களை உபசாரத்தாலான்மாவுக்கேற்றி வழங்கினும் யானுடம்பு என வழங்காது `என் பொருள்' முதலியபோல என்னுடம்பெனப் பேதமுற வழங்குதலானும், சிறுபான்மை என்னுயிரென்பது ஆகுபெயராய்ப் பிறிது பொருட்குச் செல்லுதலானும், பிணக் கிடையில் தேகமிருப்பினும் அறிவு நிகழக்காணாமையால் உடம்பு சடமும் ஆன்மாச் சித்துமாகலானும், இவ் வுடம்பிற்குவேறாய் ஆன்மா உண்டென்பது பெறப்படுதலால், அதனையுணராது தேகமே ஆன்மாவென்னுமவர் கூற்றுப் போலி. இன்னும் பிருதிவி, அப்பு, தேயு, வாயு என்னும் நான்கு பூதங் களும் நித்தியமென்றும், அவற்றுள் வாயு சலனகுணத்தையுடைய தாகையால் மற்றுள பூதங்கட்கு அதனோடு கலப்புண்டாகுதலின் இச் சரீராதிகள் தோன்றுமென்றும், பாக்கு வெற்றிலை சுண்ணாம்பு மூன்றுங் கூடியவளவில் முன்பில்லாத சிவப்புத் தோன்றுதல் போலப், பூதசையோகத்தினால் முன்பில்லாத மனமுந் தோன்று மென்றும், அறியுந்தன்மை மூளையினதேயாகலின் சரீரத்திற்கு வேறாயொரு ஆன்மா இல்லையென்றும், பிணமான சரீரத்தில் வாயு நீங்குதலால் அக்கினி அவியும்; அப்பொழுது அறிவுங் கெடும் என்றும் பலர் பலவாறு கூறுவர். பூதம் நான்குஞ் சடமாகலின் அவற்றின் கூட்டுறவிற் சேதனம் புதுவதாகத் தோன்று மென்றலியையாது. பாக்கு வெற்றிலை சுண்ணாம்புகளின் கூட்டத்திற்றோன்றிய செவ்வண்ணம் சடப்பொருட் குணமேயன்றிச் சிற்குணமன்று. அன்றியும் பாக்கின்கண்ணினிது தோன்றாதடங்கி நிற்குஞ் செவ்வண்ணம் விளங்கித் தோன்றியதேயன்றிப் புதிதாகச் செவ்வண்ணந் தோன்றிற்றில்லை. சரீரத்தின்கண் ஒருபகுதியாய்ச் சடமாயுள்ள மூளைக்கு அறியுந்தன்மை யுண்டென்பதும், பிணமாமவசரத்து வாயு நீங்குதலால் அறிவுகெடுமென்பதும் பொருந்தா. என்னை? உறக்கத்தின்கண் சரீரம், மூளை, வாயு என்பனவெல்லாமிருக்கவும், மூளைக்கும் மற்ற நாடிகட்குமுள்ள சம்பந்தம் நீங்காதாகவும், சூடு குளிர்ச்சி முதலியவைகட்குக் குறைவின்றாகவும் அக்காலத்தி லறிவின்றாகலால் என்பது. ஆன்மா சரீரத்தின் வேறாகவிருத்தலினாற்றான் பூதாவேசங் களிலும் மற்றுஞ் சில விடங்களிலும் சரீரத்தை முற்றும் மறக்க நேருகின்றது. யோகிகள் சமாதிகாலத்திற் சரீரத்தை மறந்து சீதோஷ்ணங்களை யறியாதிருக்கின்றார்கள். தாம் உறங்குங்காலத்தில் தம்முடைய கைகால் முதலிய அவயவங்கள் எவ்வமைப் புடனிருந்தனவென்று அறிந்து சொல்பவர் ஒருவருமில்லை. இனி, இந்திரியான்மவாதிகள், செவி முதலிய பொறிகளே சத்தம் முதலிய விஷயங்களை யறிவனவாதலால் அவையே ஆன்மாவாகுமென்று கூறுவர். இந்திரியங்களுள் ஒன்றறிந்த விஷயத்தை மற்றொன்றறியமாட்டமையானும், தனித்தனி விஷயங் களையறிவதன்றி எல்லா விந்திரியங்களும் ஒருங்கேயறிவதின்மை யானும். விஷயங்களை யுணருந்தம்மைத் தாமேயுணரமாட்டாமை யானும், ஓரிடத்திற் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறிந்த விஷயாநுபவங்களை மற்றோரிடத்திருந்து நினைந்து அவ்வண்ணமே நுகர்ச்சியுறுகின்றமையானும் அவர் கூறியது பொருந்தாது. அவ்விந்திரியங்களைக் கொண்டறியவல்ல மனமாகிய கருவியை யுடைய ஆன்மா வேறுண்டென்பதே தேற்றம். இனிப், புரியட்டகமாகிய சூக்கும வுடம்பே ஆன்மாவென் பாரும், பிராணவாயுவே ஆன்மா வென்பாரும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணமே ஆன்மாவென்பாரும், அனைத்துங்கூடிய சமுதாயமே ஆன்மாவென்பாரும், பிரமமே ஆன்மாவென்பாரு முளர். இவற்றுட் சில மேற்கூறியவைகளானே மறுக்கப்பட்டமையானும், இவற்றையெல்லாம் மறுத்துச் சித்தாந்த மோதுங்கால் மாணாக்கர்க்கு அறிவு தடுமாறுமாகலானும் இவற்றை நிறுத்தி மேற் செல்லுதும். இதுகாறுங் கூறிய சூனியம் முதலிய வெல்லாவற்றிற்கும் வேறாயுளதென்று பாரிசேட வளவையாற் பெறப்பட்ட ஆன்மா வானது உருவப் பொருளென்றும், சூக்குமவுருவென்றும், அருவுரு வென்றும், அருவென்றும், அசித்தென்றும், சித்தசித்தென்றும், சித்தேயென்றும், அணுவென்றும், உடலினேகதேசியென்றும், உடல் முழுதும் வியாபியென்றும், எங்குந்தான் வியாபியென்றும், சுத்தசித்தாயிருந்தே பின்மாயாகாரியத்தால் மறைக்கப்பட்ட தென்றும் பலர் பலவாறு கூறுவர். அவையெல்லாம் பொருந் தாவென்பதை முறையே விளக்குதும். உயிர் உருவப்பொருளாயின்: காட்சிப்புலனாதலும் பரிணமித் தழிவெய்தலும் வேண்டும்; அவ்வாறின்மையால் அஃது உருவப் பொருளன்று. சூக்குமவுருவாயின்: அது தூலவுருவைத் தோற்று விக்குஞ் சடமாதல் வேண்டும்; அவ்வாறின்மையாலுயிர் சூக்குமவுரு வன்று; அருவுருவென்னில்: மறுதலைப்பட்ட விரண்டுதன்மை யொரு பொருட்கணொருங்கு நிகழ்தல் கூடாமையான் உயிர் அருவுருவன்று. ஆகாயம் போலருவென்னின் அஃது உடம்பிற்குப் பல தொழில்களையும் பல விகாரங்களையுந் தரவற்றன்று; ஆதலா லுயிர் அருவன்று. உயிர் அசித்தே; அது பின் மனத் தோடுங்கூடிச் சித்தாயறியுமென்னில், சடப்பொருள் சித்தாதலும் சித்துப்பொருள் சடமாதலு முலகத்தின்மையா லதுபொருந்தாது. சித்தசித்தென்னில், மாறுபட்ட விரண்டுதன்மை யொருங்கு நில்லாமையாலது பொருந்தாது. உயிர் சித்தே யென்னில்; அசித்தாகிய கருவியை யின்றியறிதல் செல்லாமையால் அது பொருந்தாது. உயிரினை அணுவென்னில்; ஒரு துவாரத்தா லோடிப்போவதன்றி, உடம்பிற் கட்டுண்டற்கும் பாரந்தாங்கற்கு மொவ்வாதாகையாலது பொருந்தாது. உயிரினை உடம்பினினேகதேசி யென்னில்; உரு என்றார்க்கோதிய குற்றமெய்து மாகலான் அது பொருந்தாது. உடல் முழுவதும் வியாபியென்னில், உடம்பளவிற்குத் தக்க அறிவாத லின்மையாலும், உறக்கமுறுதலானும், ஐம்பொறியினு மொருங்கே யறிவுநிகழாமை யானும் அது பொருந்தாது. உயிரினை முதல்போலெங்கும் வியாபியென்னில், அவத்தைகளும் போக்கு வரவுகளு முறுதலானும், எல்லாவற்றையு மொருங்கேயறியாமை யானும், உடம்பிற் கட்டுண்டு நிற்றலானு மது பொருந்தாது வியாபகமாயிருந்த வுயிரை மாயாகாரியமானதநு, கரணம் முதலியவை பந்தித்து நிற்றலில் அறிவுதடையுற்று ஏகதேசப் பட்டதெனில்; அறிவு விளங்குதற்கேதுவாய மாயாகாரியம் அறிவைத் தடைசெய்தல் கூடாமையானும், முன் சுத்தமாயிருந்தவுயிரை அது பந்தித்ததென்னில் வீடுபெற்றவழியும் உறுமெனப்பட்டு முத்தியென்பதின்றாய் முடியுமாகலானும் அது பொருந்தாது. இனி, உயிரினிலக்கணத்தை, " அசித்தரு வியாப கம்போல் வியாபக மருவ மின்றாய் வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி நசித்திடா ஞானச் செய்தி யநாதியே மறைத்து நிற்கும் பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா."1 என்னுந் திருவாக்கா னுணர்க. இச் செய்யுட்குத் திருவாவடுதுறையி லெழுந்தருளிச் சித்தாந்த பாநுவாய் விளங்கிய ஸ்ரீசிவஞானமுனிவர் எழுதிய உரை வருமாறு :- ஒருவாற்றானும் அசித்தாதலரிய வியாபகப் பொருள்போல ஒளபச்சிலேடிக வியாபகமாதலும், அதுபற்றி அதிசூக்குமசித் தாதலுமின்றி அதுவதுவாய் வசிப்புண்ணும் வியாபகமாதலும், அநாதியே பசுத்துவமெனப்படும் ஆணவமலத்தின் மறைப்புண்டு கிடக்கும் இச்சாஞானக் கிரியைகளை யுடைத்தாய்ப் பசுவெனப்படுந் தூலசித்தாதலு முடையது உயிர் என்பதாம். இங்ஙனங் கூறப்பட்ட ஆன்மா இலக்கத்தாலளவுபடுத்தற் கரியவாய், கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூன்றவத்தை களையடைந்து நிற்கும். சீவான்மாக்கள் அளவில்லாதன வென்பதை மாணாக்கர்க்கொரு சிறிது விளக்குதும். எழுவகைத் தோற்றமாய்க் காணப்படுகிற சீவவர்க்கங்களில் அறிவின் முதிர்ச்சியைப் பெற்றவைகளைவிட அறிவு முதிராதவைகளே மிகுதிப்பாடுடையன வென் றறிகின்றோம். இப்பொழுது நம் (பிரிட்டிஷ்) ராஜாங்கத்தில் ஐனசங்கியையும், ஆடு, மாடு, குதிரை முதலியவற்றின் சங்கியையும் செய்து வருகின்றார்கள். பூர்வகாலத்திலும், அரசர்களுக்குரிய நால்வகைச் சேனைகளாகிற யானை, குதிரை, தேர், காலாள் என்பன கணிக்கப்பட்டு வந்தமையை இதிகாச புராணங் களினாலறிகின்றோம். ஆனால், எறும்பு முதலிய சிறு ஜெந்துக் களைக் கணிக்க விரும்பின் அஃதெவ்வாற்றானு மியலுவதாமோ? அம்மட்டோ? ஒவ்வொரு தூல சரீரங்களையுங் கொண்டு செலுத்து முயிர்கள் ஒவ்வொன்றாயிருக்க, ஒவ்வொரு சரீரத்தினுள்ளும் எண்ணிலாத ஜீவஜெந்துக்கள் வசிக்கக் காண்கின்றோம். பரமாத்மாவுக்குச் சரீரமாக வேதத்தின்கட் கூறப்படுகிற பிரபஞ்ச மானது நமக்கு வாசஸ்தானமாதல்போல நஞ்சரீரமும் எண்ணிலா தவுயிர்கட்கு வாசஸ்தானமாதல் பெருவியப்பே! அன்றியும் ஒரு சிறு வித்தினின்றுந் தோன்றியதோர் ஆலமரத்திற் கோடிக்கணக்கான வித்துக்கள் உண்டாகின்றன. வித்துக்களெல்லாந் தம் மகத்து உயிரையுடையனவாதலின் அவ்வுயிர்களெல்லாம் எவ்வாறம் மரத்தையடைந்தன? மண், நீர், காற்றுக்களின் மூலமாகவே அடைந்தனவாதல் வேண்டும். ஆகவே பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களினிடமாகவும் கட்புலனாகாத அளவற்ற ஜீவஅணுக்கள் நிறைந்திருக்க வேண்டுமென யூகிக்கப்படுவதால் ஜீவான்மாக்கள் அளவில்லாதன வென்பதில் ஐயமில்லை; இனிச், சீவான்மாக்களடையும் அவத்தைகளில் கேவலமாவது: ஆன்மாக்கள் சர்வசங்காரகாலத்து அசுத்தமாயா காரணத்திலே யொடுங்கிச் சிருட்டிகாலமளவும் ஒன்றுமறியாமற் கிடப்பது. சகலமாவது: சிருட்டிதொடங்கிச் சர்வசங்காரம் வரை ஆன்மாக்கள் தத்துவங்களோடு எண்பத்துநான்கிலக்ஷயோனி பேதங்களிற் பிறந்திறந் துழல்வது. சுத்தமாவது: கேவலசகலப் பட்டுப் பிறந்திறந்துழலும் ஆன்மாக்கட்கு மலபரிபாகமும், இருவினையொப்பும் சத்தினிபாதமும், குருவருளும் உண்டாக அவை திருவருளைக் கூடுவது. இவற்றை, " கேவல சகல சுத்த மென்றுமூன் றவத்தை யான்மா மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய் பொறிகளெல்லாங் காவலன் கொடுத்த போது சகலனா மலங்க ளெல்லா மோவின போது சுத்த முடையனுற் பவந்து டைத்தே".3 என்பது முதலிய சிவஞானசித்தியார்ச் செய்யுட்களானுணர்க. இனி, மேற்கூறிய காரணாவத்தை மூன்றன்கண்ணும் தனித் தனி சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம்; துரியாதீதம் என்னுங் காரியாவஸ்தைகள் ஐவைந்துள. சாக்கிரமாவது: ஆன்மா முப்பத்தைந்து கருவிகளோடு லலாடஸ்தானத்தில் நின்றவவசரம். சொப்பனமாவது: இருபத்தைந்து கருவிகளோடு கண்டத்தில் நின்றவவசரம். துரியமாவது: இரண்டு கருவிகளோடு நாபியினின்றவவசரம். துரியாதீதமாவது: ஆன்மா புருடனோடு மூலாதாரத்தில் நின்றவவசரம். இவை ஒவ்வொன்றின்கண்ணும் ஐவைந்தவத்தைகளுள். மேற்கூறிய சாக்கிரம் முதலியவைந்தும் கீழ்நோக்கிச்சென்றொடுங்கு முறையும், மேனோக்கித் தோன்று முறையும்பற்றி யிருவகைப்படும். அவற்றுள் ஒடுங்குமுறையது பிறவிக்குவித்தாம். தோன்றுமுறையது பிறவியறுத்தற்குக் காரணமாம். இவற்றின் விவரங்களையெல்லாம் நூல்களிற் கண்டுகொள்க. இனி, ஆன்மாக்கள் பொருந்துஞ் சரீரங்கள்: காரணசரீரம், கலாதிகளாகிய கஞ்சுகசரீரம், குணசரீரம், சூக்கும சரீரம், தூலசரீரம் என ஐந்து. இவை முறையே ஆனந்தமயகோசம், விஞ்ஞானமய கோசம், மனோமயகோசம், பிராணமயகோசம், அன்னமய கோசம் என்னும் பெயர்களைப் பெறுவனவாம். இவை காரணக்குறியவாதலும் பிறவு முய்த்துணர்க. இனி, சீவான்மாக்கட்குத் தநுகரணம் முதலியவை உண்டா வதெங்ஙனமெனில்: முற்பிறப்பிற்செய்த கன்மங்களுக்கீடாக முதல்வனாலளிக்கப்படுமென்க. கன்மமும் சரீரத்தை யின்றியமை யாமையால் தம்முண் முந்தியதியாதெனில்: அவை வித்தினிடத்து மரமும், மரத்தினிடத்து வித்தும்போலத் தம்முட் காரணகாரிய மாய்ப் பிரவாகாநாதியாய் வருதலின் அவற்றிற்குத் தம்முண் முற்பிற்பாடு கூறமுடியாது. இனி, இப்பிறப்பிற்கு முற்செய்த கன்மங் காரணமென்று கூறுதல் பொருந்தாது. காலதேசங்களி னியற்கையாற் சரீரத்திற்கு வடிவு, நிறம் முதலியவை யுண்டாகின்றன. பெற்றோர்களுடைய வறிவிற்குஞ் சரீரவமைப்புக்குந் தக்கபடி பிள்ளைகள் புத்திசாலி களாயும், மூடர்களாயும், சர்வாங்கசுந்தரர்களாயும், அங்கஹீனர் களாயும் பிறக்கின்றார்கள். அவரவர்களுடைய முயற்சிக்கும் சோம்பலுக்கு மேற்பச் செல்வ வறுமைகளையடைகின்றார்கள். இதற்காக மற்றொரு பிறப்புக் கொள்வதென்னை? எனில்: தேசவியற்கை முதலியன வடிவு முதலியவற்றிற் கொரோவழிக் காரணமாயினும் எல்லாவற்றிற்கும் அவையே காரணமென்றல் பொருந்தாது யாதோரங்கமுங் குறைவில்லாத சுந்தரர்களுக்கு அங்கஹீனரான பிள்ளைகளும், அங்கஹீனர்கட்குச் சௌந்தர்ய முள்ள பிள்ளைகளும், மூடர்களுக்கு அறிவுள்ள பிள்ளைகளும், அறிவுடையோர்க்கு மூடப்பிள்ளைகளும், நல்லவுணவுண் பவர்க்குக் கெட்ட பிள்ளைகளும், தீயவுணவுண்பவர்க்கு நல்ல பிள்ளைகளும், ஒரே தாய்வயிற்றிற் பலவிதமான பிள்ளைகளும், பிறக்கக்காண்டலானும், முயற்சியுள்ளவன் வறுமையையும், சோம்பியிருப்பவன் செல்வத்தையும் அநுபவிப்பது முண்டா கலானும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆற்றல் பிறர் கற்பிக்கவேண்டாது இளமையிற்றானே யமைந்துகிடத்தலானும் இவையெல்லாவற்றிற்குங் காரணமாய்க் கன்மமுண்டெனக் கொள்வதே பொருத்தமாம். கன்மமானது சடமாய்ச் செய்த பொழுதேயழிவதாகலாற் பின்னின்று தானே பயன்றரு மென்பதொவ்வாது. உயிர், கருவிகளையின்றி யறியமாட்டாத சிற்றறிவுடையதாகலின் தானே கன்மத்தின் பயனையறிந்தடையு மென்றலு மொவ்வாது ஆகலாற், சுதந்திரவறிவுடையனாகிய முதல்வனே உயிர்கள் மனவாக்குக்காயங்களாற் செய்கிற இதாகிதங்களையெல்லா மேற்றுக்கொண்டு அநுக்கிரக நிக்கிரகங் களைச்செய்து சுகதுக்கங்களையளிப்பன். பெற்றோர்கள், தஞ்சொற்படி நடவாதபிள்ளைகளையுறுக்கி யடித்துத் தண்டித்தல் கருணையானாற்போலவே முதல்வன் செய்யுந் தண்டமும் உயிர்கள் வீடுபேறெய்தற் பொருட்டு வைத்த கருணையானேயாம். மறைகள் ஈசனுடைய சொல்லாகும். நிரயம் அச் சொல்வழி நடவாதாரை வைக்குஞ்சிறைக்களமாகும். உம்பருலகங்கள் சொல்வழி நடப்போரைச் செல்வத்தோடுறை யவைக்கும் பதிகளாகும். உயிர்கள் தூலவுடம்பு கழிந்தவழிச் சூக்குமவுடம்பினின்றும் வினைப் பயன்களை யநுபவித் தற்குரிய வெவ்வேறு உடம்புகளுளவாதலால் அவ்வுடம்போடு இறைவனாணையாற் சென்று துறக்க நிரயத்தின்ப துன்பங்களை நுகர்ந்து பின்பு அவ் வினைச்சேட மநுபவித்தற் பொருட்டுச் சூக்குமவுடம்போடு நிலத்திற்சென்று கருப்பாயசயத்தைத் தலைப் படும். உயிர்கள் பூதனா சரீரம் போனபின்பு வினைகளின் வன்மை மென்மைகட்கேற்ப மற்றுமோர் பூதனாசரீரத்தையே எடுத்தலுமுண்டு. யாதனாசரீரம் போனபின் மற்றுமோர் யாதனா சரீரத்தையே யெடுத்தலுமுண்டு இம்மையிலும் வண்டு முதலியவை அச்சுமாறுதலால் உயிர் அச்சு மாறிப்பிறக்கு மென்பதிலைய மில்லை. இதற்குப் பிரமாணம்:- " அகலியை கல்ல தானா ளரிபல பிறவி யானான் பகலவன் குலத்திற் றோன்றிப் பாரெலா முழுது மாண்டு நிகரிலா வரச னாகுஞ் சிலந்திநீ டுலகம் போற்றச் சகமதி லெலிதா னன்றோ மாவலி யாய்த்துத் தானே"1 என்பது மற்றும் இதுபற்றி யெழுதவேண்டுவன வெல்லா மெழுதின் மிக விரியுமாதலால் வியாசத்தை யிம் மட்டினிறுத்துதும்.  2. திருவள்ளுவரும் சமரசசன்மார்க்கமும் உத்தம நாகரிகம் வாய்ந்த இத்தமிழுலகின்கண் இற்றைக்குச் சற்றேறக் குறைய ஆயிரத்தெண்ணூறு வருடங்களுக்கு முன் ஞான திவாகரனாய் விளங்கிய ஆசிரியர் திருவள்ளுவனாரின் பெருமையும், அவரருளிய திறக்குறளென்னுந் தெய்வப்பனுவலினருமையும், நன்மக்களொவ் வொருவருள்ளத்தையும் வளம்படுத்தி மகிழ் செய்வவாயின. அன்றுமுதல் ஒவ்வொரு சாதியாளரும், ஒவ்வொரு சமயங்களும், திருக்குறளைத் தங்கள் தங்கள் நூலென்றும், வள்ளுவரைத் தம்மவர் தம்மவரென்றும், கூறிப்போதருகின்றனர். தமிழ்மொழி வழங்காப் பிறதேயமாந்தரும், நம் தமிழ்மறையை நன்கு படித்தும் தத்தம் பாஷைகளின் மொழிபெயர்த்தும், ஆராக்காதலுடன் பாராட்டி வருவராயின், அது நம்மாலெத் துணை பாராட்டப்படுவதொன்றாகும். உலகில் மக்களெனப் பிறந்தாரொவ்வொருவரும் அதனைப் பொதுவே போற்றிப் புகழ்ந்து கூறிவரினும் தமிழிலக்கணவிலக்கிய வலிகொண்டு ஐயந்திரிபறக் கற்றுக் கேட்டு ணரும் பெருந்தவமுடையார்க்கே அதனருமை பெருமைகள் அளவு படாவாய்த் தோன்றுவனவாம். திருக்குறள் மதுரையிலரங்கேறிய காலத்தில் நிகரற்ற கல்வி யாளராய்த் தமிழுக்கரசராய் வீற்றிருந்த சங்கப்புலவர் நாற்பத்தொன் பதின்மரும் செவியாரக் கேட்டு மனமார வுவந்து வாயாரப் புகழ்ந்துள்ள பாடல்களினால் அது பிறந்த பொழுதே யாட்சி செலுத்தும் பெருமதிப்புற்றமை விளங்கும். அவர்கள் இதனை வேதமென்றும், வேதத்தின் மிக்கதென்றும், அமுதமென்றும், அமுதத்தின் மிக்க சுவையுள்ளதென்றும், அகவிருள் நீக்குந் திவாகரனென்றும், எல்லாப் பொருளுமிதன்பாலுள்ளன வென்றும், இதன் பாலில்லாத வெப்பொருளுமில்லை யென்றும், இந்நூலொன்றே கற்கத்தகுந்ததென்றும், மற்றும் பலவாறும் பாராட்டிக் கூறியிருக்கின்றனர். இது அக்காலத்திற்றானே அசைக்க வொண்ணாத பிரபல பிரமாண நூலாயிற்றென்பது கடைச்சங்கப் புலவருளொரு வராகிய சாத்தனார் தாமியற்றிய மணிமேகலைக் காப்பியத்துள் "தெய்வந்தொழாஅள் கொழு நற்றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழையென்றவப், பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்" எனக் கூறியிருத்தலால் நன்கு விளங்கும். இது, யாவருமொருசேரப் புகழுமத்துணைப்பாடெய்துதற்குக் காரணம், 'குன்றக்கூறல்' முதலிய குற்றமொன்றுமின்றிச் 'சுருங்கச் சொல்லல்' முதலிய அழகெல்லாங் கொண்டு விளங்குதலும், எல்லாருக்குமொத்த பொது நீதிகளைப் பசுமரத்தாணியறைந் தாற்போற் பதியக்கூறுதலுமாம். உலகிலுள்ள மாந்தரனைவரும் செந்நெறி கடைப்பிடித் துய்ய வேண்டுமென்னும் பெருங்கருணை யுடைய வள்ளலாகிய நம்மாசிரியர் சுருதி ஸ்மிருதி புராண இதிகாசங் களின் சாரமான பொருள்களை யெல்லாமெடுத்து ஒவ்வொரு சாரார்க்கேயுரிய சிறுபான்மையான சிறப்பியல்புகளை யொழித்துத் தூய்மை செய்து எல்லாருக்கு மொத்தனவும் உறுதி பயப்பனவுமான நீதிகளைத் திரட்டி வெளிப்படுப்பாராயினர். இவ்வுண்மை " சமயக் கணக்கர் மதிவழி கூறா துலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன்"1 எனக் கல்லாடத்தும், ஒன்றேபொருளென்னின் வேறென்ப வேறென்னின் அன்றென்ப வாறு சமயத்தார் நன்றென்ன எப்பாலவரு மியைபவே வள்ளுவனார் முப்பான் மொழிந்த மொழி. எனத் திருவள்ளுவமாலையினுமுள்ள கல்லாடர் திருவாக்கு களால் விளக்கமுறும். மனு முதலிய ஸ்மிருதிகளிலும் மகாபாரதத்திலுமுள்ள எத்தனையோ பல நீதிகளை நாயனார் தழுவியுள்ளாரென்பது உண்மையே. உதாரணமாக " அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று"2 " மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின்."3 " நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகு மாக்கங் கடை"4 " கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்."1 " ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை."2 என்பன மனு ஸ்மிருதியின் பொருளைக் கொண்டு வந்தன காண்க. அங்ஙனம் ஸ்மிருதியாசாரங்களைக் கொள்ளுமிடத்தும் அதிகாரி பேதம் முதலியனபற்றி அதனைத் தூய்மைப்படுத் துரைத்தலுமுணர்க. இனி, "இவர் பொருட்பாகுபாட்டினை அறம் பொருளின்ப மென வடநூல் வழக்குப் பற்றியோதினா"ரெனப் பரிமேலழகருரைத்தார். எனினும் தமிழ் வழக்குப்பற்றி யோதினாரெனல் பெரிதும் பொருத்தமாம். என்னை வடநூல் வழக்குப்பற்றி யோதினா ரெனில், வீட்டுப்பாலெனவொன்று கூறல்வேண்டும். அங்ஙனங் கூறாமையானும், பொருளினை அகம்புறமெனப் பகுத்து அகத்தின்கணின்பமும், புறத்தின்கணறனும் பொருளுங் கூறிப் புறத்தின் பகுதியாகிய காஞ்சித்திணைக் கண்ணே அவற்றது நிலையின்மைகூறுந்தமிழ் வழக்குப்பற்றி ஆசிரியர் வீடு ஒழிய ஏனை மூன்றுமே கூறி அவற்றின் நிலையின்மையைப் புறத்தைச் சாரவைத்தமையானு மென்பது. இவ்வுண்மை பொருளதிகார வாராய்ச்சியுடையார்க்கு நன்குபுலனாம். வீட்டினை யிலக்கண வகையாற்கூறுதல் தமிழ் வழக்கன்றென்பதனைப் பரிமேலழகரும் நச்சினார்க்கினியரும் உரைத்தவுரைகளாலுமுணர்க. அங்ஙன மாயினும், தெய்வப்புலவர் அகம் புறமெனப் பகுத்துப் பெயர் கொடாமையானும், முதற்கண் வைக்கற்பாலதாகிய வின்பத்தினை யிறுதிக்கண் வைத்தமையானும் பரிமேலழகர், வடநூல் வழக்குப் பற்றியோதினார் எனக் கூறியதுஞ் சாலும். உலகியலின் வழுவாதொழுகிப் பின்னவற்றது நிலையின்மை கண்டு பிறப்பினையஞ்சித் துறவெய்தி யவாவறுத்தாரால் ஒரு தலையானெய்தற்பாலதாகிய வீட்டினைப் பண்டைத்தமிழ்மக்கள் இலக்கண வகையாற் கூறாதொழிந்தது ஜனசமூகத்தின் சமாதான வாழ்க்கையை விரும்பிய அன்னவரின் நாகரிக முதிர்ச்சியை விளக்குமேயன்றிப் பிறிதில்லை, ஞானசாஸ்திரம் பயிலத் தொடங்கிய விக்காலத்துச் சமாதானமின்மை மிக்குவருதல் கண்கூடாகலான். எனினும், "மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியினாற்றியவறிவ" ராகுஞ் செந்நாப்போதார் வீட்டியலினைச் சிறிதுங்கூறா தொழிந்தாரு மல்லர். இனி, தெய்வப்புலவர் எல்லாருக்குமொத்த நீதிகளைக் கூறிப் போந்தாரெனவே அவர்தாம் ஒரு சமயத்திற் கட்டுண்டவரன்றி யெல்லாச் சமயங்களையுமொருங்கொப்பக் கொண்டவரா வாரெனின், அது பொருந்தாது. உலகியலே ஒருபடித்தாக முழுதும் ஒத்திருப்பதில்லை. உலகிலுள்ளமாந்த ரொவ்வொரு வரும் அறிவு முதலியவற்றில் வேறுபட்டவராயேயிருப்பர். அவர்கள் தம்முடைய அறிவாதியவற்றின் வன்மை மென்மைகட் கேற்ப வெவ்வேறு வகையான உத்தியோகங்களை மேற்கொண்டு ஏற்றமுந்தாழ்வுமான பல பேறுடையராதலுமுண்மை. அங்ஙனமே அனைவரும் கன்மத்தாலும் அறிவாலுமொத்தவராகார். அவற்றிற் கேற்ப அவர்கள் நின் றொழுகத்தக்க சமயங்கள் பலவும் உலகிற்கின்றியமையாதனவே. அவையெல்லா மொத்தனவாகா. வள்ளுவனாரும் ஒரு சற்சமயத்தை யடைந்தேயிருக்கவேண்டும். ஆயின் சமரசசன்மார்க்கம் என்பதென்னையெனின், அது வேறெச்சமயத்தையும் விரோதியாத நலப்பாடமைந்த மெய்ச்சமய மென்றே கொள்ளத்தகும். இவ்வுண்மை கருதியன்றே, " சன்மார்க்கஞானமதின்பொருளும் வீறு சமயசங்கேதப்பொருளுந்தானொன்றாகப் பன்மார்க்கநெறியினிலுங்கண்டதில்லை பகர்வரியதில்லைமன்றுட்பார்த்தபோதங் கென்மார்க்கமிருக்குதெல்லாம்வெளியேயென்ன வெச்சமயத்தவர்களும்வந்திறைஞ்சாநிற்பர் கன்மார்க்கநெஞ்சமுளவெனக்குந்தானே கண்டவுடனானந்தங்காண்டலாகும்."1 என்னுந் திருவாக்கெழுவதாயிற்று. அவரவர் கன்மபரி பாகத்திற் கேற்பப் பல மதங்கள் வேண்டுவனவேயென்றும், எல்லா மதங்களும் மேலான ஒப்பற்ற லட்சியத்தை யடைதற்கமைந்த சோபானங்களே யென்றும், தத்தம் நெறியின் வழுவா தொழுகினாரனைவரும் அதனையடைதலொருதலை யென்றும், எல்லாருக்குஞ் சித்திமுத்தி களைத் தரத்தக்க தனிமுதற் பரம்பொருளொன்றேயென்று முணர்ந்து ஒவ்வொருவரும் தத்தம் நெறியின் வழுவிக்கேடுறா வண்ணமுபதேசித்தலே சன்மார்க்கரின் கடமையாகும். அத்தகையரே நம் நாயனாருமென்க. நாயனார், பௌத்தர், சைனர் முதலியோரிலொருவராகா ரென்பதைப்பற்றிச் சேதுஸம்ஸ்தானவித்வான் ஸ்ரீமத்ரா. இராகவையங்காரவர்கள் தக்க நியாயங்காட்டி முன்னரே யெழுதியிருத்தலின் அவர் வேதவழிபட்ட ஓர் மதத்தினரென்பதே துணிபு. நாயனார் சைவ ரல்லரென்றாவது வைணவரல்ல ரென்றாவது கூறுதற்குத்தக்க ஆதார மொன்றுமேயில்லை. அவர் வேதத்தையும் வேதவழித்தான வேள்வியையும் குறித்திருக்கிறார். திருமாலுலகளந்தது, இந்திரன் சாபமெய்தியது, முதலிய புராண கதைகளையுங் கூறியிருக்கிறார். அந்தணர் முதலிய நான்கு வருணத்தையுமங்கீகரித்திருக்கிறார். பிரமசரியம், முதலிய நால்வகை நிலையினை மேற்கொண்டு முள்ளார். அந்தணர்க்கு ஆறுதொழிலுண்டென்பதும், அவர் வேதத்தை மறக்கலாகா தென்பதும், அவர் ஒழுக்கத்திற்றவறின் வருணமே கெட்டு விடுமென்பதும் அவராற் கூறப்பட்டுள்ளன. அரசன் கொடுங் கோலனாயின் அவனாட்டிற் பருவமழை பெய்யாதென்று சொல்லியுள்ளார். வாணிகத்திற்குப் பிறர் பொருளையுந் தம் பொருள்போற்பார்க்கும் நீதி வேண்டுமென்றனர். எல்லாத் தொழிலினும் உழவுத் தொழிலையே தலையாய தொழிலெனப் புகன்றனர். தேவர்கட்குப் பூசனையுந் திருவிழாக்களுஞ் செய்ய வேண்டும் என்பதும், பிதிரர் கடன் இறுக்க வேண்டுமென்பதும் ஆசிரியர்க்குடன்பாடே. பஞ்சதன்மாத்திரை முதலிய தத்துவங் களை யாராய்ச்சி செய்யின், பிரபஞ்ச உண்மையறியப்படுமென்று கூறுகிறார். வாத பித்தசிலேத்துமங்கள் இன்ன காலத்திற்றுன்பஞ் செய்யுமென்ற மருத்துவ நூற்கொள்கையை யெடுத்துக் காட்டுகிறார். ஒரு பிறப்பிற் செய்த வினையின் பயன் எழுபிறப்பு வரையிற் றொடருமென்பது மவர் கருத்தாகும். உரியவிடங்களில் சைவாக மங்களின் கருத்துக்களைத் தழுவுகிறார். இவற்றிற்கெல்லா முதாரணம் திருக்குறளிலாண்டாண்டுக்காண்க. இனி, பகவன், வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழியந்தணன், எண்குணத்தான், பற்றற்றான், மெய்ப்பொருள், உள்ளது, செம்பொருள் என்ற பெயர்களாற் பசுபதியாகிய தனிமுதல்வனையுணர்த்தி அவனிலக்கணங்களைத் தொகுத்தும் வகுத்துங் கூறியருளினார். "தனக்குவமையில்லாதான்" (குறள்:6) எனவே முதல்வன் ஒருவனேயென்பது ஆசிரியர் கருத்தாயிற்று. பரிமேலழகரும் "பொருள் சேர்புகழ்" (குறள்:5) என்பதற்கு இறைமைக் குணங்களிலராயினரை யுடையரெனக் கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின் அவை முற்றவுமுடைய இறைவன் புகழே, பொருள் சேர்புகழெனப்பட்ட தென்றும், எண்குணங்களிவை யெனவுணர்த்திய பின்னர் "இவ்வாறு சைவாக மத்திற் கூறப்பட்டது". (குறள்:9உரை) என்றும் கூறுவாராயினார். தெய்வப்புலவர் இங்ஙனங் கடவுளைக் கூறியவிடங்களில் ஓரிடத் தேனும் எம்மதத்தினரும் விரோதியாவாறு குறிப்பித்துச் சென்றமையே அவரது சமரச நிலையினை நன்கு விளக்குவதாயிற்று. முதற்குறளினாலே உலகிற்கு நிமித்தகாரணனாகிய பதியும், அவனாற் காரியப்படும் பிரபஞ்சத்திற்கு முதற்காரணமாகிய மாயையும், அப்பதியையும், பிரபஞ்சத்தையும் அறிந்தனுபவிக்கும் பசுக்களுமுளவென்பது பெறப்பட்டது. "இருள் சேரிருவினையும்", (குறள்:5) "மருளானாமாணாப்பிறப்பு" (குறள்:351) என்னும் பிரமாணங்களால் இருள், மருள், என்னும் பரியாய நாமங்களை யுடைய அவிச்சை அல்லது ஆணவமலம் ஒன்றுண்டென்பதும், அதனைப்பற்றியே இருவினைகள் நிகழுமென்பதும், இருவினையும் பிறவிக்கேதுவென்பதும் பிறவியுள்ளகாறும் துன்பம் ஒரு தலையானுண்டென்பதும் பெறப்பட்டன. "பிறவிப் பெருங் கடனீந்துவர்நீந்தா, ரிறைவனடிசேராதார்" (குறள்:10) என்னுங் குறளாலும், "காரண காரியத்தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், 'பிறவிப்பெருங்கடல்' என்றார்" என்னுமுரையாலும், இருவினையும் பிறவியும் தம்முட் காரணகாரியமாய் அநாதி தொட்டே வருகின்றனவென்பதும், இறைவனடியைச் சேர்ந்தே பிறவியறுக்க வேண்டுமென்பதும் பெறப்பட்டன. "வினையின் வந்தது வினைக்குவிளை வாயது". (மணிமேகலை - பளிக்கறை புக்க காதை 113) என்பதுங் காண்க. பொய்யில் புலவராகிய நம்மாசிரியர் உலகியல் நீதிகளையும் கடவுட்டிரு நாமங்களையும் அனைவரு மொப்புமாறு கூறியது போலவே வீடு பேற்றிற்குச் சிறந்த சாதனமாகிய பிறவேதுக் களையுங் கூறிப் போதருமாற்றால் நம்மாற் புகழப்படுவதன்றோ? (1) நில்லா தவற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்மை கடை. 1 (2) யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும். 2 (3) பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு மருளானா மாணாப் பிறப்பு. 3 (4) அவாவில்லார்க் கில்லாகுந் துன்ப மஃதுண்டேற் றவாஅது மேன்மேல் வரும். 1 என்னுந் திருவாக்குகளைச் சைவர், வைணவர், வேதாந்திகள், பௌத்தர், சைனர் முதலியோரில் உண்மையெனப் போற்றாதாரியாவர்? இங்ஙனம் யாவர்க்கும் பொதுவே கூறிச்செல்லும்நயம், "வேண்டும் பனுவற்றுணிவு", (குறள்:21) "நூலோர் தொகுத்தவற்றுள்", (குறள்:322) "பல்லாற்றாறேரினும்" (குறள்:242) என்னும் பிரமாணங்களாலும் வலியுறுவதாகும். தெய்வப் புலவரதுண்மைக் கருத்தையுணர்ந்த ஆசிரியர் பரிமேலழகியாரும், "பனுவலெனப் பொதுப்படக் கூறியவதனால் ஒன்றையொன்றொவ்வாத சமய நூல்களெல்லாவற்றிற்கும் இஃதொத்த துணிவென்பது பெற்றாம்". என்றும், "எல்லா நூல்களினும் நல்லனவெடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கியல்பாகலின் ஈண்டும் பொதுப் பட, 'நூலோர்' என்றும்", "என்றும் ஒன்றையொன்றொவ்வாத சமய நெறிகள் எல்லாவற்றானுமாராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே" என்றும், "மயங்கியவழிப் பேய்த்தேரிற்புனல் போலத் தோன்றி மெய்யுணர்ந்தவழிக் கயிற்றிலரவுபோலக்கெடுதலிற் பொய்யென்பாரும், நிலை வேறுபட்டு வருதலாற் கணந்தோறும் பிறந்திறக்கு மென்பாரும், ஒருவாற்றான் வேறுபடுதலும், ஒருவாற்றான் வேறுபடாமையும் உடைமையின் நிலையுறுதலும், நிலையாமையும் ஒருங்கேயுடைய வென்பாரும் எனப்பொருட் பெற்றி கூறுவார் பலதிறத்தாராவார்; அவரெல்லார்க்கு மவற்றது நிலையாமையுடம்பாடாகலின் ஈண்டு அதனையே கூறுகின்றார்." என்றும் உரை விரிப்பாராயினார். உலகப்பொருள்களின் நிலையாமையை யுணர வேண்டு மென்பதும், உணர்ந்த துணையானே அவற்றின் மேலுள்ள பற்றுக் களையும் தாம் நுகர்தற்கு வைத்திருந்த அப்பொருள்களையும் ஒருங்கே துறக்க வேண்டுமென்பதும், அங்ஙனந் துறத்தற்குபாயம் பற்றற்றான் பற்றினைப் பற்றித் தியான சமாதிகளைச் செய்தலே யென்பதும், அவ்வாறு பற்றுக்களை விட்டு மனம் ஒருவழிப்பட்ட விடத்தும் சந்தேக விபரீதங்களைப் போக்கி மெய் உணர்ந்தா லன்றிப் பயனில்லையென்பதும், மெய்யுணர்வினிலக்கணமாவது காணப்படுகிற எந்தப் பொருளினிடத்தும் காரண காரியமிரண்டு மின்றி முடிவாய் நிற்கும் முதற்பொருளைக் காண்டலே யென்பதும், அவ்வாறு பதிஞானங்கைவரற்குக் கேள்வி, விமரிசம், பாவனை யென்ற மூன்று பாயங்களைச் செய்ய வேண்டுமென்பதும், அவற்றினைச் செய்து பதியையுணர்ந்து சோகம் பாவனை செய்யவே அவிச்சைவலிகுன்றிச் சஞ்சிதகன்மமொழியுமென்பதும், பின் ஆகாம்யம் ஏறாதென்பதும், பின்னுந்தடையாயுள்ளது பிராரத்துவ வாசனையொன்றேயென்பதும், அதனையும் இடையறாத மெய்ப் பொருளுணர்வாலறுத்துத் திருவருளில் அதீதப்பட்டு நிற்றலாகியவதுவே பரமுத்தியென்பதும் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன. நாயனாருக்குப் பிற்காலத்தவர்களில் திருக்குறளின் சொல்லையும், பொருளையுமெடுத்துக் கோத்துத் தத்தம் நூல்களை யழகுபடுத்தாதவாசிரியர் யாருமில்லை. சைவத்திருமுறை களிலும், வைணவப்பிரபந்தத்திலும் திருக்குறளின் சொற் பொருள்களேறுவவாயின. தமிழின்கட் சைவசித்தாந்த சாஸ்திரங் களையருளிச் செய்த திருக்கடவூர் உய்யவந்ததேவநாயனார், சீகாழிக்கண்ணுடைய வள்ளலார், கொற்றவன்குடி உமாபதிசிவா சாரியார் முதலாயினாரெல்லாம் திருக்குறளைச் சென்னியிற் கொண்டு போற்றினார்கள். " தலைப்பட்டார் தீரத்துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவ ரென்று-நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த மெய்வைத்த சொல்".1 எனப் போற்றினார் உமாபதிசிவம். "கலைமகள் வாழ்க்கை முகத்தெனினும், மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான்"2 என்னுந்திருவாக்கும் பிறர்திறத் தெங்கனமாயினும் நம்மாசிரியர்க்காயின் உண்மையாமன்றோ! உருத்திரசன்மர் உடனிருந்து கேட்டதும், இறையனாருங் கலைம களாரும் புகழ்ந்ததுமாகிய பொய்யா மொழியின் மாண்பினையுடம் பெல்லா நாவாகக் கொண்டு ஊழிக்காலமெல்லாமுரைக்கினு முரைக்கலாகுமோ? தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழு முனிமொழியுங் -கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவாசகமென்றுணர்.3 (ஒளவையார்)  3. பொய்கையார் 'தமிழாராய்ச்சியிற் சிறந்த திருவாளர் மு.இராகவையங்கார் அவர்கள் செந்தமிழ் 'முதற்றொகுதி ஆறாம்பகுதியில் 'பொய்கையர்' என்னும் தலைப்பின் கீழ் ஒரு கட்டுரை வரைந்துள்ளார்கள். அதில், கடைச்சங்கப் புலவராகிய பொய்கையாரும், திருமாலடியாருள் ஒருவராகிய பொய்கையாழ்வாரும் ஒருவரேயென முடிவு செய்யப் பெற்றுள்ளது. நற்றிணைக்கு உரையெழுதிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்கள் பொய்கையார் வரலாறு கூறுமிடத்தே "யாப்பருங்கல விருத்தியுரைகாரர் நாலாயிரப் பிரபந்தத்து இயற்பா முதற்றிருவந்தாதியில் வரும் பாடல்களுள் 'பாலன்றன துருவாய்!(99), 'எளிதினிரண்டடியும்' (51) என்னும் வெண்பாக்களை யெடுத்துக் காட்டி 'இப்பொய்கையார் வாக்கினுள்' என்று கூறியவதனால் இவரே வைஷ்ணவர்கள் துவாபர யுகத்திற் பிறந்தவராகக் கூறும். பொய்கை யாழ்வாரென்றறியப்படும் என்றனர். இவர்கள் இவ்வொரே யேதுக் கொண்டு இங்ஙனம் துணிந்தது ஐயங்காரவர்கள் முன்னமே விரித்தெழுதி யிருப்பது கருதிப் போலும்? சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப்பண்டிதர் கா.ர. கோவிந்தராஜ முதலியாரவர்கள் தாம் அச்சிட்ட களவழி நாற்பது முகவுரையில் பொய்கைப் பெயரினர் இருவரையும் ஒருவராகவே துணிந்து, அதனை ஐயங்காரவர்கள் எழுதியிருப்பன கொண்டு நன்கு தெளியலாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இங்கே காட்டிய மூவருள் பின்னையரிருவரும் தாமாக ஒன்றும் ஆராய்ந்து முடிவுகட்டாது ஐயங்காரவர்களினாராய்ச்சி முடிவினைப் பின்பற்றியிருத்தலின் இங்கு நாம் ஆராய்தற்பாலது ஐயங்காரவர்கள் எழுதியிருக்கும் கட்டுரையே, அன்னார் தமது கட்டுரையில் 'முதற்காலத்தினரென்றறியப்பட்ட அவ்விரு பொய்கையாருடைய குணவிசேடங்களையும் ஆராயலுறின், ஒருவர் இறைவனது பொருள்சேர் புகழ் பாடும் புலவராகவும், மற்றொருவர் நாக்கொண்டு மானிடம் பாடும் புலவராகவும் காணப்படுவர். இங்குக் கூறிய இவ்விருவேறு குணங்களே, பொய்கையார் இருவர் கொள்கையைப் பலர் மனத்தினும் நெடுங்காலமாக அழுந்தச் செய்து வருகின்றன. இம்மன வழுத்தத்தாலேதான் பொய்கையார் ஒருவரா? இருவரா? என்னும் ஐய ஆராய்ச்சியும் பெரும் பாலார்க்குள் நிகழாமற் போயிற்று என்று கூறிஆராய்ச்சி நிகழ்த்தியுள்ளனர். இங்ஙனம் தாம் உடன் பட்டவாறே நெடுங் காலமாகப் போதரும் கொள்கையை உண்மை நிலையிடுங் கருத்தால் ஆராயப் புகுந்த ஐயங்காரவர்கட்குத் தமது கட்டுரையையும் பிறர் ஆராய்ந்து உண்மைகாணப்புகுவதில் உவப்பே விளையுமென்ப தொருதலை. நீண்ட காலமாகப் பலரும், ஐயப்பாடின்றி ஒரு பெற்றியே துணிந்து வந்ததொரு கொள்கையுடன் மாறுபடுவார் தாமே அதற்கு வலியுடைய ஆதரவுகள் காட்டக் கடமைப் பாடுடையராவர். ஐயங்காரவர்களால் தமது மறுதலைக் கொள்கைக்கு என்ன ஆதரவுகள் காட்டப்பட்டுள்ளன என்பது நோக்கற்பாலது - ஒருபெயரினராயினும் இருவர் என்று கொள்ளப்படுவோரை ஒருவரென்று நாட்டலுறின் அவர்க்குள் காலம், இடம், குடிப்பிறப்பு, பண்பு முதலியவற்றில் ஒருமைப்பாடு காணவேண்டியது இன்றியமையாததாகும். பொய்கையாழ்வார் துவாபர யுகத்தில் எட்டுலஷத்து அறுபத்தீராயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டாவதான சித்தார்த்தி வருடத்தில், கச்சித்திருவெஃகா என்னும் தலத்தின் பாங்கர் ஒரு பொய்கையின் கண்ணே பூத்ததொரு தாமரை மலரிலே திருவவதாரஞ் செய்தனர் என்பது பரம்பரை வரலாறு. இதனை ஐயங்காரவர்கள் ஒத்துக்கொள்ளவில்லையென்பது வெளிப்படை சரித்திர ஆராய்ச்சி செய்வார் சிலர் ஆழ்வார்கள் அனைவரையுமே மிகவும் பிற்பட்ட காலத்தினராகக் கூறுகின்றனர். ஐயங்காரவர் களோ பொய்கையாழ்வாரது காலம் இன்னது என ஆராய்ந்து அறுதியிடுதல் செய்யாதே சங்கத்துச் சான்றோராகிய பொய்கை யாரையும், ஆழ்வாரையும் ஒருவரெனத் துணிவாராயினர். தொல் காப்பிய வுரை முதலியவற்றில் பொய்கையாழ்வார் அருளிய திருவந்தாதி எடுத்துக் காட்டப்பட்டிருப்பது அவரைச் சங்ககாலத் தினரென்று துணிதற்கு ஆதரவாகமாட்டாது. என்னை? சங்க நாட்கு மிகவும் பிற்பட்டவை யென்று தெரிகிற எத்தனையோ பல நூல்களிலிருந்து தொல்லை யுரையாசிரியர்கள் மேற்கோள் காட்டியிருத்தலின் என்க. அன்றியும் தொல்காப்பியவுரையில் புதுவது கிளந்த யாப்பாகிய விருந்திற்கே பொய்கையாரது அந்தாதி எடுத்துக் காட்டாக விருப்பது சிந்திக்கற்பாலது. இனி, இருவரது இடமும் ஆராய்தற்பாலது. ஆழ்வார் தோன்றிய விடம் 'கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த பொய்கைப்பிரான் கவிஞர் போரேறு' என்றபடி கச்சித்திருப்பதி ஆகும். சங்கப்புலவர் இடமோ 'கானலந்தொண்டி அஃதெம்மூர்' (புறம்:48) என்று அவரே புறப்பாட்டிற் கூறியிருத்தலின், மேல்கடற் கரையிலுள்ள தொண்டிநகரம் என்பதாகும். அவரது பிறப்பிடம் தொண்டியன்றென வேறு ஆதரவு காட்டி மறுக்கப்படின், அப்பொழுது, அவர் அங்கு நெடுங்காலம் வதிந்தமைபற்றியோ, தம் ஆருயிர்த் தோழனாகிய சேரமானது பதியாதல் பற்றியோ அங்ஙனம் கூறினாராவரென்று கொள்ள வேண்டும். இவ்வாற்றால் இருவரும் ஓரிடத்தினரென்பது பெறப்படுமாறில்லை. இருவரும் பிறந்த குடியும் அறிதற்கு வழியில்லை. மற்று, இருவருடைய, பண்புகளையும் ஆராய்தலுறின், ஒருவர் 'இறைவனது பொருள்சேர் புகழ்பாடும்' புலவர்; மற்றொருவர் 'நாக்கொண்டு மானிடம் பாடும் புலவர்'. இங்ஙனம் ஐயங்காரவர்களே எழுதியிருப்பது முன்னர்க் காட்டப்பட்டது. அவர்கள் 'நாக்கொண்டு மானிடம் பாடேன்' என்னும் திருமழிசையாழ்வார் வாக்கினைக் குறிக்கொண்டு எழுதியிருப்பது ஆழ்வார்களனைவரும் மனித்தரைப் பாடாத மாண்புடையரென்பது காட்டுதற் பயத்ததாகும். பொய்கையாழ்வார் பாட்டுக்களே அவரியல்பினைப் புலப்படுத்தா நிற்கும். அவர், " வாயவனை யல்லது வாழ்த்தாது; கையுலகம் தாயவனை யல்லது தாம்தொழா-பேய்முலைநஞ் சூணாக வுண்டா னுருவொடுபே ரல்லால் காணாகண் கேளா செவி"1 " நாடிலும் நின்னடியே நாடுவன் நாடோறும் பாடிலும் நின்புகழே பாடுவன்-சூடிலும் பொன்னாழி யேந்தினான் பொன்னடியே சூடுவேற் கென்னாகி லென்னே யெனக்கு"2 என முதற்றிருவந்தாதியிற் பாடிய பாட்டுக்களிலிருந்து அவர் திருமால் சீரன்றிப் பிறிதொன்றும் பாடாத இயல்பினரென்பதும், வேறு நலந்தீங்குகளைப் பாராட்டாதவரென்பதும் போதரும். புலவர் பொய்கையாரோ எனில், தம் நண்பனொருவனைச் சிறை யினின்றும் விடுவித்தலாகிய பயன்கருதிச் சோழன் செங்கணானது போர்க்கள வென்றியையே சிறப்பித்துக் களவழி நாற்பது பாடிய வராகின்றார். எனவே இருவரும் தத்தம் பண்பாலும் ஒருநெறிய ரல்லரென்பது தெளியப்படும். ஆயினும் ஐயங்காரவர்கள் அவ்விருவர் பண்புகளிலும் மாறுபாடின் என்பது காட்டுவான் முயன்று பின்வருமாறு கூறுகின்றனர்:- "பட்டர்பிரான், திருமங்கை மன்னன் முதலிய ஆழ்வார்கள் தங்காலத்திருந்த அரசர் சிலரைத் தந்திருப்பதிகங்களிற் புகழ்ந்து கூறியிருத்தல் போல, அடியாராகிய பொய்கையாரே தங்காலத்துப் பெருந்தகை மன்னர் சிலரைப் புகழ்ந்து பாடினார் என்று கொள்ளின் இருவேறு பொய்கையாரைக் கற்பித்துக் கொள்ளுதற்குக் கூறுங் காரணங்கள் சிறிதும் பொருந்தாதனவாகும். சுருங்கச் சொல்லின் அபிமானமும், அஃதின்மையுமே அங்ஙனமாய கற்பனாசக்திக்கும் முக்கிய காரணங்களாகத் தோன்றுகின்றன". "ஈண்டுக் கூறிய அவ்விரு பெருவேந்தரும், பெருந்தகை யாளராகிய அப்பொய்கை முனிவராலும் புகழத்தக்க பெருமை வாய்ந்தவர் என்றே கொள்க. ஆழ்வார் பன்னிருவருள் ஒருவராய திருமங்கை மன்னன், திருநறையூர்த் திருப்பதிகத்தில், " கவ்வைமா களிறுந்தி வெண்ணியேற்ற கழன்மன்னர் மணிமுடிமேற் காக மேறத் தெய்வ வாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடஞ் சேர்மின்களே"1 " வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற விறன்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடஞ் சேர்மின்களே"2 என்றிவ்வாறு, சோழன் செங்கணானைப் புகழ்ந்திருத்தலால் அவ்வரசனது தெய்வத்தன்மையும் பெருமையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணரத்தக்கன. இச்சிறப்பெல்லாம் ஏனையோராகிய சேரமான் கோக்கோதைக்கும் ஒக்குமென்பது". பொய்கையாழ்வாரே களவழிநாற்பது பாடினாரெனல் அமையு மென்பதற்கு இவை தக்க சமாதானம் ஆமோ என்பது ஆராய்தற் பாலது. திருமங்கை மன்னன் முதலிய ஆழ்வார்களில் யாரேனும் எந்த அரசரையாவது புகழ்ந்து ஒரு பிரபந்தம் பாடியிருக்கின்றனரோ? அவர் தமது பெருமானைப்பாடி வருமிடத்தே ஒரோ வழி அக்காலத்தரசராயினோர் புரிந்த திருப்பணி முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறின் அதனை மானிடம் பாடல் என்பார் யாருமிலர். கோச்செங்கட்சோழர் தெய்வத் தன்மையும் பெருமையும் வாய்ந்த வரென்பதில் ஐயப்பாடின்று. அவர் திருத்தொண்டர் புராணத்துக் கூறப்பட்ட சிவனடியார்களில் ஒருவர்; சிவபெருமானுக்குப் பலப்பல திருக்கோயில்கள் சமைத்தவர்; அதனால் சைவசமய குரவர்களான திருநெறித் தமிழ்வேதம் அருளிய பெரு மக்களாலும் சிறப்பிக்கப் பெற்றவர். அவர் சிவபெருமானுக்குத் திருக்கோயில் பல சமைத்த பரிசை "இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோளீசற் கெழின்மாட மெழுபதுசெய் துலகமாண்ட திருக்குலத்து வளச்சோழன்" என்று திருமங்கையாழ்வாரும் விதந்தெடுத் தோதுவாராயினர். இம்மன்னர் பெருந்தகை தாம் அரசராதற் கேற்பத் திருமால் கோயிற் பணிக்கும் உதவிபுரிந்த காரணத்தானே அவ்வரலாறு தோன்றத் திருமங்கை மன்னன் 'சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம்' என்றிங்ஙனம் கூறுவாராயினர். பொய்கையாழ்வாரோ 'வாயவனையல்லது வாழ்த்தாது' 'பாடிலும் நின்புகழே பாடுவன்' 'மாயவனையல்லால் இறையேனும் ஏத்தாதென்நா' என்று தம் துணிபுரைத்துப் போந்தவர். அவர் அதற்கு மாறாக ஒரு அரசனது வெற்றிச் சிறப்பையே புகழ்ந்து களவழி பாடுதற்கு நிமித்தம் என்னை? கள வழியில் எத்திருப்பணி கூறப்பெற்றுள்ளது? 'கள்நாறும்மே கானலந்தொண்டி - அஃதெம்மூரே அவன் எம்மிறைவன்' என்ப தனால் ஓர் சேரமன்னனைத் தம் இறைவன் என்று பாடிய புலவரைப் பொய்கையாழ்வாரென்று கூறுதற்கு ஐயங்காரவர்களது மனம் எங்ஙனம் ஒருப்பட்டதோ தெரிந்திலது. இதனால் சங்கப்புலவர் பெருமையிற் குறைபாடுடையரெனக் கூறுவது நம் கருத்தன்று. பெரியார் பலரும் தாம் தாம் தோன்றிய காலத்துக்கும் ஏனைச் சார்புகட்கும் ஏற்ப வெவ்வேறு நெறிப்பாடும், கொள்கையும் உடையராகின்றனர். சைவசமய குரவர்களையாதல், வைணவ சமயத்து ஆழ்வார்களை யாதல் ஏனைக்காலத் தேனையரோடு ஒப்புமைப் படுத்துரைத்தல் சிறிதும் தகாதென்பதே எம்கருத்து. இனி, களவழி நாற்பது, பொய்கையாரது முதற்றிருவந்தாதி இவ்விரண்டின் நடைப்போக்கை ஆராயினும் இவை ஒருவரால் இயற்றப்பட்டன என்று கோடற்குச் சிறிதும் இடனின்று. இதுகாறுஞ் செய்துபோந்த ஆராய்ச்சியால் சங்கப் புலவராகிய பொய்கை யாரும், திருமாலடியராகிய பொய்கை யாழ்வாரும் ஒருவரல்ல ரென்பது நிலைநாட்டப்பட்டமை தெள்ளிதின் விளங்கா நிற்கும். இங்ஙனம் இன்றியமையாது வேண்டற்பாலவாய ஆராய்ச்சி நெறிகள் பலவும் அவர்கள் வெவ்வேறாவர் என்பதனை வலியுறுத்தி நிற்கச்செய்தே, வேறு நெறியானே ஒருவரென்று காட்ட முயலுதல் பயனில் செய்கையே. எனினும், அவ்வேறு நெறிதான் அவர்கள் ஒருவரே யென்னும் தம் கொள்கைக்குப் பற்றாயது எனக் காட்டியவழி அதனையும் ஏற்று ஆராய்தலே சால்புடைத் தாகலின் ஐயங்காரவர்கள் காட்டும் பிறிதோராதரவையும் இனி ஆராய்ந்து காண்பாம். அவர்கள் எழுதியிருப்பதனைப் பின்வருமாறு சுருக்கிக் காட்டுதல் அமையும்:- "யாப்பருங்கல விருத்தியில் 'பொய்கையார் வாக்கு? என்னுங் குறிப்புடன் பல செய்யுட்கள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுட் சில, இம்மை மறுமை முக்காலமுமுணர்ந்த இருடி களாற் செய்யப்படும் ஆரிடச் செய்யுட்கு உதாரணமாகக் குறிக்கப் பெற்றுள்ளன. அச்செய்யுட்களில் இருடித் தன்மை சிறிதும் புலப்படா திருக்கவும் அவை. ஆரிடமாகக் காட்டப்பட்டமையான் களவழி பாடிய பொய்கையார் இருடித்தன்மை வாய்ந்தவரென்று கொள்வதில் இழுக்கொன்றுமில்லை. பொய்கையாழ்வார் தெய்வத்தன்மை வாய்ந்த பெரியாரென்பது வெளிப் படையாகலின் அவரைச் செந்தமிழிருடி யென்று கொள்வது பொருத்தமே. அவ்விருத்தியுரைகாரரும் வேறு செய்யுட்களைப் பொய்கை வாக்கு எனப் பெருமையாய்க் கூறி வந்தது போலவே பொய்கையாழ்வாரியற்றிய அந்தாதியிலிருந்து 'பாலன்றன துருவாய்' 'எளிதினிரண்டடியும்' என்னும் இரண்டு வெண்பாக்களை யெடுத்துக்காட்டி 'இப்பொய்கையார் வாக்கினுள் முற்றியலுகர மீறாய்வந்தன' என்று குறித்திருக் கின்றனர். இவ்வாற்றால் யாப்பருங்கல விருத்தியில் பொய்கையார் வாக்கு என்று குறிக்கப் பட்ட பாடல்களும், புறநானூற்றிற் கண்ட செய்யுட்களும், களவழியும் பொய்கையாழ்வார் அருளிச் செய்தனவாகவே கொள்ள வேண்டும் என்பது". யாப்பருங்கல விருத்தியிலிருந்து இறுதியில் எடுத்துகாட்டிய இதனையே பொய்கையார் ஒருவரே யென்னும் தம் கொள்கைக்கு வலியுடைய ஆதரவாக ஐயங்காரவர்கள் குறித்துள்ளார்கள். ஒரு பழைய உரையை மேற்கோளாகக் கொள்ளுங்கால் கொள்ளு கின்ற நெறியில் அவ்வுரை கூறுவனவெல்லாம் உடன்பாடாதல் வேண்டுமென்னும் நெறிப்பாடில்லை. ஐயங்காரவர்கள் எழுதிய மதிப்புவாய்ந்த அரிய பல ஆரய்ச்சியுரைகளில் எத்தனையோ பல தொல்லை யுரையாசிரியர்களின் கருத்துக்கள் மறுக்கப்பட்டிருக் கின்றன. பழைய உரைகளிலிருந்து இலக்கிய இலக்கணப் பொருள் கட்கு நாம் மேற்கோள் கொள்ளும் அளவுதானும் சரித்திரக் கூறுகட்குக் கொள்ளலமையாதென்பது தெளிவு. எனவே யாப்பருங்கல விருத்தி பொய்கையார் ஒருவரே யெனக் கருதிக் கூறுவதாயினும் அதுகொண்டே ஒருவரெனச் சாதித்தல் அமையாதென்பது நம் கருத்து. இனி, அவ்விருத்தியுரைதான் களவழி பாடிய பொய்கையாரும், பொய்கையாழ்வாரும் ஒருவரெனக் கூறும் கருத்துடையதா என்று பார்ப்போம். அவ்வுரையில் களவழிப் பாட்டு உதாரண மாகக் காட்டப்படவில்லை. சில தனிப் பாட்டுக்களும், முதற்றிரு வந்தாதிச் செய்யுளிரண்டும் காட்டப்பட்டுள. அவற்றுள்ளும் ஆரிடத்திற்கு உதாரணமானவை தனிப்பாக்களே; அந்தாதிச் செய்யுட்களல்ல. இவற்றிலிருந்து அத்தனிப்பாக்களையருளியவர் ஓர் முனிவராவாரெனல் அவ்வுரையாளரின் கருத்தென்பது போதருமேயன்றி வேறில்லை. களவழி பாடிய பொய்கையார் முனிவரல்ல ரென்பதே அவ்வுரையாளர் கருத்தென்று துணிதற்கு இடனுண்டு. அவர், "ஏரியிரண்டும்" 'உடையவராய்ச் சென்றக் கால்' 'கண்டகம் பற்றி' என்னும் மூன்று வெண்பாக்களை யெடுத்துக் காட்டி, "என்றித் தொடக்கத்துப் பெருஞ்சித்திரனார் செய்யுளும், ஒளவையார் செய்யுளும், பத்தினிச் செய்யுளும் முதலாக வுடையனவெல்லாம் எப்பாற் படுமெனின் ஆரிடப்போலி யென்றும் ஆரிடவாசகமென்றும் வழங்கப்படுமென்க. இவை களெல்லாம் இருடிகளல்லா வேனையோராகி மனத்தது பாடவும், ஆகவும் கெடவும் பாடவும் வல்ல கபிலர், பரணர், கல்லாடர், மாமூலர், பெருந்தலைச் சாத்தர் இத்தொடக்கத்தோராலும், பெருஞ்சித்திரனார் தொடக்கத்தோராலும் ஆரிடச் செய்யுட் போல மிகவும் குறையவும் பாடப்படுவன எனக் கொள்க". என்று கூறியிருக்கின்றனர். அவர் இங்ஙனம் சங்கப் புலவரிற் சிறந்தார் சிலரையெடுத்துக்காட்டி அன்னாரது பெருமையினை யொத்துக் கொண்டும், அவர்களை' இருடிகளல்லா ஏனையோர்' என்றும், அவர்கள் பாட்டினை 'ஆரிடப்போலி' என்றும் கூறுதலானே, களவழி பாடிய பொய்கையார் முதலிய ஏனைச் சங்கப் புலவர்களும் அன்னரென்றாதல், அவரினும் பெருமை குறைந்தோரென்றாதல் அவர் கருதினாராவ ரென்பதே பொருத்தம். இனி, பொய்கையாழ்வாரை அவர் முனிவரென்று கருதினா ரென்பதற்கும் ஆதரவொன்றும் இல்லை. தனிப்பாட்டுக்களைப் பொய்கையார் வாக்கு என்று கூறியவர் அங்ஙனமே முதற்றிரு வந்தாதிப் பாட்டினையும் பொய்கையார் வாக்கு என்று கூறியது இவரும் பொய்கையார் என்னும் பெயரினர் என்பது குறிப்பிடவே யென்னில் இழுக்கென்னுளது? அவர், முன்னர் 57-ஆம் சூத்திரவுரையில் "அரிமலராய்ந்த கண்" "பாலன்றனதுரு வாய்" "எளிதிலிரண்டடியும்" என்னும் வெண்பாக்களை யெடுத்து காட்டியவிடத்து, அந்தாதிச் செய்யுளாகிய பின்னிரண்டையும் விடுத்து "அரிமலராய்ந்த கண் என்பது பொய்கையார் வாக்கு" என்று குறித்திருப்பது, தனிச்செய்யுளியற்றினாரும் வேறு, அந்தாதி பாடினாரும் வேறு என அவர் கருதினாரென்று கோடற்குச் சார்பாயுள்ளது. இவ்வாற்றால் களவழி பாடிய பொய்கையாரும் வேறு, முதற்றிருவந்தாதி பாடிய பொய்கையாழ் வாரும் வேறு, தனிச்செய்யுட்கள் பாடிய பொய்கை முனிவரும் வேறு எனல் பெறப்படுமாறறிக. தனிச் செய்யுளியற்றினாரைக் குறித்த வேறு செய்தியாவது, அச்செய்யுட்களின் தோற்றம், பொருட்பெற்றி யென்பனவாவது நாம் அறியுமாறில்லை ஒரோவழிப் பொய்கையாழ்வாரே பொய்கை முனிவரென முடிவு செய்யப்படினும் களவழிபாடிய பொய்கையார் இவரின் வேறாவரென்பதே தேற்றம். இனி, இன்னிலை யென்னும் அரிய நூலினை உரையெழுதி வெளிப்படுத்துதவிய திருவாளர், வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்கள் அந்நூலாசிரியரின் வரலாறு கூறுமிடத்தே, இன்னிலையியற்றினார். பொய்கையார் என்னும் பெயரினரென்றும், அவர் பொய்கையாழ்வாரே யென்றும், களவழி பாடிய பொய்கையார் அவரின் வேறாவரென்றும் முடிவு செய்திருக்கின்றார்கள். இன்னிலையியற்றினார் பெயர் பொய்கையாரென்பது துணிந்த பின்னரே அவரும் ஆழ்வாரும். ஒருவரோ அல்லரோ என்பது ஆராய்ச்சிக்குரியது. அவர் பெயர் பொய்கையாரென்பதற்கு அவர்கள் காட்டும் ஆதரவு ஓர் ஏட்டுப் பிரதியினிறுதியில் "பொய்கையார் பாடிய இன்னிலை முற்றிற்று" என எழுதப்பட்டுளதென்பதே. அதுகொண்டு அங்ஙனம் துணி தற்குப் பின்வருவன தடையாதலை யோர்ந்துணர்க. தொல் காப்பியச் செய்யுளியல் 113-ஆம் சூத்திரவுரையில் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் "திரைத்த விரிக்கில்" என்னும் இன்னிலைச் செய்யுளை யெடுத்துக் காட்டி, "இது பூதத்தாரவையடக்கு" என்று குறித்துள்ளார்கள். யாப்பருங்கல விருத்தியுடையாரும் 93-ஆம் சூத்திரவுரையிலே ஓரிடத்து எடுத்துக் காட்டிய மூன்று செய்யுட்களில் ஒன்று *இன்னிலைச் செய்யுளாகவும், அவர் "என்றித் தொடக்கத்துப் பெருஞ்சித்திரனார் செய்யுளும் ஒளவையார் செய்யுளும், பத்தினிச் செய்யுளும் முதலாகவுடையன" என்றே கூறிச் சென்றனர். இவற்றிலிருந்து இன்னிலை பலராற் பாடப்பட்ட தொகை நூல் என்பதே பெறப்படுகின்றது. இன்னிலை யேட்டுப் பிரதியின் தொடக்கத்தில் "மதுரையாசிரியரால் தொகுக்கப்பட்ட இன்னிலை நாற்பத்தைந்து" என எழுதியிருப்ப தாகப் பிள்ளையவர்கள் குறித்திருப்பதும் அந்நூல் பொய்கையா ரொருவராலே இயற்றப்பட்ட தன்றென்பதனையே வலியுறுத்தா நிற்கும். இன்னிலை யாக்கியோரைப் பற்றி மேலும் ஆராய்ந்து உண்மை கண்டுளோரிருப்பின் அவர்கள் அதனை வெளியிடுதல் நலம்.இதுகாறுஞ் செய்த இவ்வாராய்ச்சியாற் போந்த பொருள் சங்கப் புலவராகிய பொய்கையாரும் பொய்கையாழ்வாரும் ஒருவரே யெனக் கோடல் பொருந்துவதாகாதென்பதே.  4.சேக்கிழார் செய்யுள் மாட்சி பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணத்தை அருளிச்செய்த ஆசிரியர் சேக்கிழார் ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளின் முன்பு, தொண்டைமண்டலத்திலே புலியூர்க் கோட்டத்துக் குன்றத்தூரில் வேளாளர் குலத்தில் திருவவதாரஞ் செய்தருளியவர்; அருண்மொழித்தேவர் என்னும் பிள்ளைத் திருநாமம் உடையவர்; தாம் பிறந்தருளிய சேக்கிழார் குடிக்கு இணையற்ற பெரும்புகழ் விளைத்து, அக்குடிப் பெயராலேயே வழங்கப் பெறுபவர்; அக்காலத்துத் தமிழகத்தே செங்கோலோச்சிய அநபாய சோழ வேந்தர்க்கு முதலமைச்சாய்த் திகழ்ந்து, அம்மன்னர் பெருமான் உவந்தளித்த 'உத்தமச் சோழப் பல்லவன்' என்னும் பட்டமும் பெற்றவர். இவர் தம் அரசாகிய வளவர் பெருமானுக்குச் சிவனடியார்கள் வரலாற்றில் ஆர்வம் பெருகச் செய்து, பின் அவர் வேண்டிக்கொண்டவாறு சிதம்பரமெய்தித் திருச்சிற்றம்பலமுடையார் அருளிய 'உலகெலாம்' என்னும் மறையினை முதலாகக்கொண்டு திருத்தொண்டர் புராணத்தைப் பாடியருளினர் என்ப. இவ்வரலாறு உமாபதி சிவாசாரியர் பாடியருளிய சேக்கிழார் புராணத்தில் மிக்க அழகும் தெளிவும் பொருந்த விரித்துக் கூறப்பெற்றுள்ளது. மெய்கண்டசாத்திரம் எனவழங்கும் சைவசித்தாந்த நூல்களுட் பலவற்றை அருளியவரும், சைவசந்தானகுரவருள் ஒருவராகப் போற்றப்படுவோரும் ஆகிய உமாபதிசிவாசாரியர் சேக்கிழார் மீது புராணம்பாடிப் பரவி யிருப்பதும், திருத்தொண்டர் புராணமானது ஆளுடைய பிள்ளையார் முதலிய திருநெறித் தலைவர்களும், மெய்யடியார்களும் அருளிய அருட்பாக்களின் திருமுறைகளோடு ஓர் திருமுறையாக ஒருங்கு வைத்துப் போற்றப்பட்டு வருவதுமாகிய இவைகளே சேக்கிழார் பெருமையையும், திருத்தொண்டர் புராணத்தின் அருமையையும், பொதுவகையால் அறிந்துகொள்ளப் போதியனவாகும். உமாபதிசிவனார் ஒரு பாட்டில், 'உலகின்கண் எத்தகைய அரிய செயலுஞ் செய்தல்கூடும், திருத்தொண்டர் புராணத்தை அளவிட நம் சேக்கிழார்க்கு எளிதலது தேவர்க்கும் அரிது' என்று கூறுகின்றார். பிற்காலத்துப் பல்வகைப் புலமையும் ஒருங்கு வாய்ந்த பேரறிஞராகிய சிவஞானமுனிவர் தாம் இயற்றிய காஞ்சிப்புராணத்தில் தொண்டை நாட்டை வருணிக்குமிடத்தே, 'திருத்தொண்டை நன்னாட்டு நானிலத்து ஐந்திணை வளமும் தெரித்துக்காட்டக் குன்றைநகர்க் குலக்கவியாகிய சேக்கிழாரே வல்லரல்லால், கருத்தொண்டராகிய எம்போல்வார் வல்லரல்லர்' எனக் கூறுகின்றனர். அண்மைக்காலத்து விளங்கிய கவிஞர் சிகாமணியாகிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் தாம் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழில் பெரியபுராணத்தின் சிறப்பாகக் கூறியிருப்பன அளவிட்டுரைக் கற்பால வல்ல. இவற்றைப் படிக்குபொழுது, 'கவியின் பெருமையை உள்ளவாறறிவோன் கவியேயாவன்' என்னுங் கருத்து உறுதி பெறுவ தாகும். பிள்ளையவர்கள் ஒரு பாட்டில் 'அடியார் பெருமையும் அருமையும் நாளும் அறிஅம்பலவாணர் அவர் வரலாறு விரித்துரை செய்பவர் ஆர் என உட்கருதி, அவர் அன்பு அத்தனையும் கண் காண்படி செய்து, முதலும் எடுத்துத் தந்தருளினர்' என்கின்றனர். இவை யெல்லாம் முழு உண்மைக் கூற்றுக்களே யன்றிச் சிறிதும் புனைந்துரையல்ல வென்பது பெரியபுராணத்தை நன்கு கற்றுணரும் பேறுடையார்க்குப் புலனாகாமற் போகாது. இறைவனிடத்தும் அடியாரிடத்தும் உண்மையன்பும், மெய்யுணர் வநுபவங்களும், உலகியலறிவும், பலகலையுணர்வும், சரித்திர அறிவும், கவித்துவவிறலும் ஒருங்குவாய்க்கப் பெற்றாரொருவர் இயற்றியதிந்நூல் என்பதனை இஃது ஆண்டாண்டு நன்கு புலப்படுத்திச் செல்லுதல் காணலாகும். மெய்யன்பும், திருவருளின்றோய்வும் பெறாதாரொருவர், எத்துணைப் பெரும்புலமையும், கவித்துவமும் வாய்ந்தாரேனும் அவரால் இந்நூல் இயற்றலாவதொன்றன்று என்பது ஒருதலை. இதனைக் கற்பவரென்போர், பழுத்த செந்தமிழ்ச் செய்யுளாகிய பொன் வள்ளத்தில், அடியார்களின் அன்பின் நலமும், இறைவன்றிருவருள் நலமும் ஆகிய பாலையும் தேனையும் குழைத்துப்பருகுகின்றவரே யென்னலாம். இனி, இங்ஙனம் கூறிவந்து, யாமும் ஏதோ ஒருவகையாற் பெரியபுராணம் படித்துளோமென்பது காட்டாது விடுதல் முறையன்றாகலின், எமது சிற்றறிவுகொண்டு அதன்கண் யாம் கண்டு நுகர்ந்துவரும் பொருள்களுள் ஒரு சில இங்கே எடுத்துக் காட்டி இக்கட்டுரையை முடிக்கக் கருதுகின்றேம். திருவருள் கூட்டுவிக்குமேல் பின் நேர்ந்துழி நேர்ந்துழி வெவ்வேறு வகையான அழகுகளை யாம் அறிந்தவாறு எடுத்து விளக்குதலும் ஆகும். " மன்று ளாடுமது வின் னசையாலே மறைச் கரும் பறை புரத்தின் மருங்கே குன்று போலுமணி மாமதில் சூழுங் குண்டகழ்க் கமல வண்டலர் கைதைத் துன்று நீறு புனை மேனியவாகித் தூய நீறு புனை தொண்டர்களென்னச் சென்று சென்று முரல் கின்றன கண்டு சிந்தையன் பொடு திளைத்தெதிர் சென்றார்"1 சிதம்பரத்திலே ஆநந்தக் கூத்தாடும் ஐயனைத் தொழுங் குறிப்புடன் செல்கின்ற நம்பியாரூரர் நெறியிலே காணுங் காட்சிகளை வருணிக்கின்ற திருப்பாட்டுக்களில் ஒன்று இது. இப்பாட்டிலே, எல்லாவுயிர்கட்கும் இன்பம் நல்கும் பேரின்ப வடிவினனாகிய இறைவனை 'மது' என்றும், இறைவனது பொருள் சேர் புகழை இடையறாது பாடும் மறைகளின் இசையை அம்மதுவின் விருப்பாற் பாடுகின்ற சுரும்பின் இசையென்றும் உருவகப்படுத் துரைத்து, அதனைத் தில்லைத்திருப்பதிக்கு விசேடணமாக்கிய பெருமை உள்ளுதோறுள்ளுதோ றுள்ளமுருக்குந் தன்மையது. இங்ஙனம் தில்லையைக் குறிக்குமாறு கருதிய சில சொற்களில், இறைவனது வடிவின் பெற்றியும் அவனது திருக்கூத்தின் நோக்கமும், மறைகளின் கருத்தும், அப்பதியின் பெருமையும் என்றிவையெல்லாம் விளங்க உரைத்தருளினமை காண்க. இறைவன் மதுவாகச்செய்தே அம்மதுவின் குனிப்பால் விளைவது மது வென்பது பெறப்படும். 'நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆநந்தத் தேன் சொரியும் குனிப்புடையான்' என்பது மணிவாசகமன்றோ? இங்ஙனமாகக் 'கோதிலாத்தேறல் குனிக்கும் திருமன்ற'த்தையுடையதாய், மறைச்சுரும் பறைவதாயுள்ள அப்பதியினை மதிலும் அகழியும் சூழ்ந்திருக்குமாறு கூறுவார். 'குன்று போலு மணிமா மதில் சூழுங்குண்டகழ்க்கமலம்' என்றனர். மதிலகழிகளின் தோற்றமும் அமைவும் முதலியவற்றை விரித்துரைத்துக்கொள்ளுமாறு அவை சுருங்கிய சொற்களில் உலக வரம்பிறவாது. அழகுபெறக் கூறப் பெற்றுள்ளமை காண்க. அகழியிலே கமலத்தில் உறையும் வண்டுகள் தாழையின் நறுந்தாதாகியநீற்றினைப் பூசிக்கொள்ளுகின்றன என்கின்றனர். இதனால் பொருத்தமான திணைமயக்கமும் கூறிய வாறாயிற்று. இங்ஙனமாக மதில், அகழி, கமலம், வண்டு, கைதை, நீறு என்பனவற்றைக் கூறியொழிந்திருப்பின் ஆசிரியர் ஓர் கவியாக மாத்திரமே கருதப்படுவர். பின்னர், அவ்வண்டுகள், 'தூயநீறு புனை தொண்டர்களென்னச் சென்று சென்று முரல் கின்றன' என்றும், அதனைக் கண்டு, நம்பியாரூரர் 'சிந்தையன் பொடு திளைத்தெதிர் சென்றார்' என்றுங் கூறுகின்றனர். இங்கே தான் ஆசிரியருடைய பல்வகைப் பெருமையும் ஒருங்கு விளங்கு கின்றன. வண்டின்மேல் வைத்துத் தொண்டின் இலக்கணம் விளக்கப்பட்டன! 'தாவில் சராசரங்களெலாம்' சிவம் விளங்கும் உண்மை காணப் பெறும் சீரடியார் இவ்வாறன்றி வேறெங்ஙனம் கூறற்பாலராவர்! அப்பதி தான் மன்றுளாடுமதுவின் நசையாலே மறைச் சுரும்பறை புரமாகவே, அதனைச் சார்ந்துள்ள கமல வண்டுகள் தூயநீறு புனை தொண்டர்களென்னச் சென்று சென்று முரலாமல் வேறென்ன செய்வன! நம்பிகள் 'என்னுடைய தோழனுமாய்' என்று உரிமையாற் கொண்ட தம் தலைவனைக் கூடுதல் விதுப்புற்று ஆற்றாமை விஞ்சி ஊடலும் இரங்கலும் உடையராகின்றனர் என்பது குறிப்பிடத்தானோ மருதமும் நெய்தலும் மயங்கவைக்கின்றனர்? இன்னும் சிறிது பொழுதில் " ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள, அளப்பருங்கரணங்கள் நான்கும் சிந்தையேயாக, குணமொரு மூன்றும் திருந்துசாத்துவிகமேயாக, இந்துவாழ் சடையான் ஆடும் ஆநந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்பவெள்ளத்துடிளைத்துமாறிலா மகிழ்ச்சியின் மலர்" (பெரிய-தடுத்தாட்கொண்ட புரா. பா-106) தல் ஆகிய அநுபவத்தைப் பெறவிருக்கும் அவர்க்கு ஊடலும் இரங்கலும் உளவாதல் பற்றி நாம் கவலையுறுதல் வேண்டா. எம் சிறு தகைமைக்கேலாத ஒரு பெருந்திருப் பாட்டை யெடுத்துக் கொண்டு ஏதேதோ சொல்லி எம் அறியாமையை விரித்து விட்டேம் போலும் என அச்சம் எழுகின்றது. இனி இவ்வளவில் நிறுத்துதும், ஆனால் 'ஒரு சில எடுத்துக் காட்டுவேம்' என்று தொடங்கி ஒன்றுடன் நிறுத்துதலாகிய குற்றத்திற்கு மாத்திரமேனும் உட்படாவாறு, நங்கள் திருநாவுக்கரசர் திருத்தில்லையை யெய்தும் பொழுது ஆசிரியர் சேக்கிழார் பெருமான் அந்நெறியை வருணிக்கும் பாட்டுக்களில் இரண்டு எடுத்தெழுதி அடங்குவேமாக. " முருகிற் செறியிதழ் முளரிப் படுகரின் முதுமேதிகள் புது மலர் மேயும் அருகிற் செறிவனம் எனமிக் குயர்கழை யளவிற் பெருகிட வளரிக்குப் பெருகிப் புடைமுதிர் தரளஞ் சொரிவன பெரியோ ரவர்திருவடி வைக்கண் டுருகிப் பரிவுறு புனல்கண் பொழிவன எனமுன்புள வளவயலெங்கும்"1 " அவர்முன் பணிவொடு தொழுதங் கணைவுற அணிகொம் பரின்மிசை அருகெங்கும் தவமுன் புரிதலில் வருதொண் டெனுநிலை தலைநின் றுயர்தமிழ் இறையோராம் இவர்தம் திருவடி வதுகண் டதிசயம் எனவந் தெதிர் அரகர வென்றே சிவமுன் பயில்மொழி பகர்கின் றனவளர் சிறைமென்கிளியொடு சிறுபூவை" 2 மூங்கில்போற் பணைத்து வளர்ந்த கரும்புகண் முற்றி முத்துக்களைச் சொரிவன பெரியோராகிய திருநாவுக்கரசரது திருவடிவைக்கண்டு நெஞ்சுருகி அன்பு நீரைக் கண்களாற் பொழிவன போன்றுள்ளன; என்றும், அருகெங்கும் கொம்பு களில் இருக்கின்ற கிளிகளும், நாகணவாய்ப் பறவைகளும் திருத்தொண்டின் நிலைமையில் தலைமையுற்றுயர்ந்த தமிழிறைவ ராகிய இவரது திருவடிவைக் கண்டு, 'இங்ஙனம் ஓர் திருவடிவுள தாவது அதிசயம்' என வியந்து, 'அரகர' என ஆர்த்து, தாம் முன் பயின்ற சிவநாமங்களைக் கூறாநின்றன; என்றும், தொண்டர் சீர்பரவும் சேக்கிழார் பெருமான் கூறியருளிய அருமைப் பாட்டை யாம் எங்ஙனம் அளவிட்டுரைக்கற்பாலம்? திருச்சிற்றம்பலத்தை நோக்கி ஆராக்காதலின் அணைகின்ற திருநாவுக்கரசரது ஆர்வம் விஞ்சிய நடையை உள்ளத்தாலுணர்ந்து, ஆசிரியர் அதனைத்தமது செய்யுளின் கதியாற் புலப்படுத்துகின்றனர்போலுமெனக் கருதுமாறு இத்திருப்பாட்டுக்களின் நடை அமைந்துள்ளது. சேக்கிழார் பெருமான் சிந்தனைக்குரிய மெய்ப் பொருளாக உள்ளது திருநாவுக்கரசரின் திருவுருவமென்பது நாம் பலபடியாலும் காணலாகின்ற உண்மை.  5. தெய்வமணக்கும் செய்யுளெலாம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் தாம் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழில் 'சோறுமணக்கு மடங் களெலாம்' என்று தொடங்குகிற விருத்தத்தில் 'தெய்வமணக்குஞ் செய்யுளெலாம்' என்றுகூறிக் குன்றத்தூரைப் புகழுகின்றனர். "ஞாலமளந்தமேன்மைத் தெய்வத்தமிழ்' மொழியின் கண் சாலவும் தெய்வமணங் கமழப்பெற்ற சிறப்புரிமையுடையன சைவத்திருமுறை பன்னிரண்டுமாம். நூலறிவின் பயன் வாலறி வனது நற்றாள் தொழுது பிறவியறுத்தலே யாகலின் இறைவனது பேரருட்டிறங்களையும், அவனைவழிபட்டுய்யு முறைமை களையும் எடுத்தியம்பும் செய்யுட்களே பேரின்பப் பயனளிக்கும் பெருமை சான்றனவாகும். பன்னிரு திருமுறைச் செய்யுட் களெல்லாம் தேவதேவராகிய சிவபெருமானைப் பொருளாக வுடையன. அப்பெருமானது திருவருணெறிநின்று பேரின்பவாரி யிற்றிளைத்த பெருமக்களால் அருளிச் செய்யப்பட்டன. இந்நிலவுலகத்திலே எண்ணரிய தெய்விக அற்புதத்திறங்களை யாவருங் கண்டுய்யுமாறு இயற்றிக் காட்டியன. கற்றல் கேட்டலுடையாரெவரையும் பிறவிக்கடலினின்று கரையேற்றும் நற்றிற முடையன. மற்றும் இயம்புதற்கரிய எத்தனையோ வகையான பெருஞ் சிறப்புக்கள் இயையப் பெற்றன. இன்னவாகிய செந்தமிழ்த் தெய்வப் பாடல்களே குன்றைப்பதியிலே என்றும் பயிலப் பெறுவன என்பது 'தெய்வமணக்குஞ் செய்யுளெலாம்' என்னும் சீரிய தொடரின் கருத்தாகும். இனி, அத்திருமுறைகளுள்ளே பன்னிரண்டாவதாய்த் திகழ் வதும், உமாபதி சிவாச்சாரியார் கூறுமாறு ஏனைத் திருமுறைகளை யெல்லாம் அங்கங்களாகக் கொண்டு ஒளிர்வதும்,மெய்யடியார் களின் வரலாறு கூறுமுகத்தால் மற்றைத் திருமுறைகளின் தோற்றம் முதலிய வரலாறுகளை இனிதெடுத்தியம்புவதுமாகிய திருத்தொண்டர் புராணம் குன்றை முனிவராய சேக்கிழார் பெருமான் அருளியதாகலின் அப்பதியிடைப் பயிலப் பெறும் தெய்வமணங் கமழ் செய்யுட்கு அப்பெரிய புராணத்திலிருந்தே சில காட்டுவது இச்சிற்றுரையின் கருத்தாகும். பெரியபுராணத்தே அடியார்களின் வரலாறு கூறும் செய்யுட்களெல்லாம் அன்பின் பொலிவும் அருளின் விளக்கமும் கவினப்பெற்ற தெய்வப்பெற்றிமையு டையனவேயாகலின், அவற்றிற்கு அங்கங்களாகவுள்ள நாடு நகரம் முதலியவற்றின் வருணனைகளிலிருந்தே ஈண்டுச் சில காட்டப்பெறும். " வம்பு லாமலர் நீரால் வழிபட்டுச் செம்பொன் வார்கரை யெண்ணில் சிவாலயத் தெம்பி ரானை யிறைஞ்சலி னீர்ம்பொன்னி உம்பர் நாயகர்க் கன்பரு மொக்குமால்."1 இது திருநாட்டுச் சிறப்பிலே காவிரியைப் புனைந்துரைக்கும் செய்யுட்களில் ஒன்று. காவிரியானது இருகரையிலுமுள்ள சிவாலயங் களில் எழுந்தருளியிருக்கும் பெருமானை மலராலும் நீராலும் வழிபட்டு வணங்குகின்ற தென்பது பெரிதும் களிப்பினை விளைப்ப தொன்று. சோணாட்டிற் காவிரி யிருமருங்குமே எண்ணிறந்த திருக்கோயில்கள் உள்ளனவென்பதும், காவிரியின் நீர்பெருகி அக்கோயில்களின் மேல் ஊர்ந்து செல்லுதலுண்டென்பதும் என்றும் காணலாகும் உண்மையாம். 'இட்டுக் கொள்வன பூவுள நீருள' என்றபடி எம்பிரானை அருச்சித்தற்கு இன்றியமையா தனவாகிய மலரும் நீருங் கொண்டே காவிரியும் வழிபடுகின்றது. அன்றியும் அது நெக்கு நெக்கு வழிபடுவதேயன்றிப் பொக்க மிக்குப் பூசிப்பதன்றென்பது 'ஈர்ம் பொன்னி' என்பதனாற் குறிப்பித்தவாறாம். இங்ஙனமாக 'அந்தண்காவிரி' வந்து வழி படுதலின் அஃது 'உம்பர் நாயகர்க்கு அன்ப'ரையும் ஒக்கின்றதாம். ஆசிரியர் பெருமை இருந்தவாறென்னே! இனி இப்புராணத்திற் கூறவிருப்பன 'உம்பர் நாயகர்தங்கழலல்லது நம்புமாறறியாத' (தடுத்தாட்:153) அன்பர்களின் வரலாறு களென்பதும். அவரெல்லாம் சிவபெருமானை நினைந்து 'அன்போடுருகி அகங்குழைவார்' ஆகிச் சிவாலயந்தோறுஞ் சென்று பெருமானை மலராலும் நீராலும் வழிபடுங் கடப்பாட்டினரென்பது முன்னரே உணர்த்தி எம்மை யெல்லாம் ஆற்றுப்படுத்து வாழ்விப்பான் கருதிய 'வம்புலாமலர்' ஆகும். இதுதான் 'தெய்வமருவளர்' 'தீந்தமிழ்ச் செய்யுளாதல் வெளிப்படையன்றோ? இனி, இங்ஙனம் ஒழுகாநின்ற பொன்னியாம் கன்னி 'நாடெல்லாம் நீர்நாடு தனையொவ்வா நலமெல்லாம்' என்ற சோணாட்டுப் பண்ணைகளிற் பல்காலினுஞ் சென்று பரந்து விளையாட் டயரா நிற்கையில் அங்குள்ள சாலிகளெல்லாம் தூயவெண்மை யுண்மைக் கருவினையுடையவாகிப் பின் பசந்து சுருள் விரித்துக் கதிர்கள் விரிந்தன என்னும் பொழுது அரனடியார் உள்ளம் சுருள் விரித்து நெகிழ்ந்து மலர்ந்தன போலும் விரிந்தன என்பார் 'சுருள் விரித்தரனுக் கன்பர் ஆலின் சிந்தைபோல அலர்ந்தன கதிர்களெல்லாம்' என்றும், அங்ஙனம் விரிந்த கதிர்கள் பால் முற்றித் தலைவளைவது சிவபெருமாமனுக் கன்பராகிய மெய்யடியார்கள் கூட்டத்தில் ஒருவரை ஒருவரைத்தலையால் வணங்குவது போலும் என்பார் 'பத்தியின் பாலராகிப் பரமனுக்காளாமன்பர். தத்தமிற் கூடினார்கள் தலையினால் வணங்குமாபோல்' என்றும், அக்கதிர்கள் பழுத்து விளைந்தமை அரனடியார் மாட்டுச் சிவஞானம் விளைதல் போலும் என்பார் 'மற்றை வித்தகர் தன்மை போல விளைந்தன சாலியெல்லாம்' என்றும் கூறியிருப்பன போல்வன 'சிவகந்தம் பரந்து நாறு'ம் தீவிய செந்தமிழ்ச் செய்யுட்களாமாறு காண்க. இனி, இவ்வாறு காவிரிக் கரைவழியாகக் கழனிகளை யெல்லாம் பார்த்துக் கொண்டு சென்று திருவாரூர் என்னும் திருநகரத்தை யடைந்தால், இம்மை மறுமை யின்பங்களையும், என்றுமழியாத பேரின்ப வாழ்வையும் வரையாது வழங்கும் வள்ளற்றலைவராகிய நங்கள் தியாகராசர் அரசுவீற்றிருக்கும் அத்திருப்பதியின் கண்ணே கிளிகளெல்லாம் திருப்பதிகங்கள் பாடுதலையும், நாகணவாய்ப் பறவையெல்லாம் அவற்றைக் கேட்டுக்கொண்டிருத்தலையும் கண்டு கன்னெஞ்சமும் கரைந்துருகா நிற்குமாம். " உள்ள மாருரு காதவ ரூர்விடை வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாம் தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்" 1 என்றால் இத் திருப்பதியின் கண்ணுள்ள 'தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம்' இத்துணைப் பெருமை வாய்ந்ததென அறுதியிட்டுரைக்கலாவ தொன்றாமோ? இனி, அத்திருவாரூரின் கண்ணே, 'மின்னேர் செஞ்சடை யண்ணல் மெய்யருள் பெற்றுடையவ' ராகிய நம்பியாரூரர் 'ஈசனாரரு'ளே யாகிய பரவையாரைக் கண்டு மால்கொண்டு, ஆரூராண்டவர் அம்மங்கையைத் தந்து ஆவிநல்குவர்' என்னும் துணிபுடனிருக்கும்பொழுது, ஞாயிறு மேல் கடலில் மறைய மாலைப்பொழுதிலேமதியம் உதித்தது அம்மதியின் நிலவு பரந்த தன்மை நம் அருண்மொழித்தேவர் திருவாக்கில் இங்ஙனம் உள்ளது. " தோற்று மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய் ஆற்ற வண்டமெ லாம்பரந் தண்ணல்வெண் ணீற்றின் பேரொளி போன்றது நீணிலா" 1 உயிர்களுக்கெல்லாம் தூய்மையும், இன்பமும், தண்மையும் தந்து, அண்டமெல்லாம் பரந்து விளங்கும் நிலவொளிக்கு அண்ணலது வெண்ணீற்றொளியை உவமை கூறியது எவ்வளவு பொருத்தமும் அழகும் பொருந்தியதாய் இன்பம் விளைக்கின்றது பார்மின்! 'பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்க'ளாகிய மெய்யடியார்களின் பெருமையைத் திருவருட்டுணை கொண்டு பரவலுறுவார் இதனையன்றி வேறெவ்வுவமை கூறும் நீர்மையராவர்? அண்ட மெல்லாம் பரந்து விளங்கும் நிலவுக்கு அண்டமெல்லாம் வடிவாகிய அண்ணலின் திருநீறு உவமையாந்தன்மை சிந்தித்தற் குரியது. சிற்றறிவுக்குப் புலனாகியவற்றில் ஒன்றிரண்டு காட்டப் பெற்றன. பிழையுள்ளன பொறுத்தல் பெரியார் கடன்.  6. கோயில் கடவுள் வழிபாடு இன்ன காலத்திற் றொடங்கியதென வரை யறுத்தற் கியலாவாறு தொன்றுதொட்டிருந்து வருவதாயினும் இப்பொழுது காண்கின்றபடியாக எண்ணிறந்த திருக்கோயில்கள் பல்லாயிர ஆண்டுகளின் முன் இருந்தில என எண்ணுதற்கு இடனுண்டு. யானையும், சிலந்தியும் வழிபட்டஞான்று ஆனைக்காக் கோயில் இற்றையிற்போன்று அமைந்திருத்தல் சாலுமா? கடம்ப வனமாயிருந்த ஞான்று மதுரைக் கோயில் எப்படி யிருந்திருக்கும்? மற்றும் பல திருக்கோயில்களின் பழைய நிலைமையும் இத்தன்மையதே. கோயில் எடுக்கத் தொடங்கிய பின்னரும் தொடக் கத்திற்றானே இப்பொழுதுள்ளவாறு மிகப்பெரிய மதில்களும், மண்டபங்களும், கோபுரங்களும் இயற்றப்பட்டில என்பது தெளிவு. அக்காலத்தில் இன்னாரின்னார் இத்துணைத்தூரத்தில் அன்றி இன்ன மண்டபத்தில் இருந்து கடவுளையிறைஞ்ச வேண்டு மென்னும் வரையறை யிருந்திருக்குமோ என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். இச்சிறிய கட்டுரை இவற்றை யெல்லாம் ஆராய்தல் கருதியதன்று; முன்னைய நிலைமையோ இற்றை நிலைமையோ நேரிதென்றாதல் அன்றென்றாதல் காட்டக் கருதியதுமன்று; கோயிலைக் குறிக்குஞ் சில பெயர் வழக்கினையும், பிற சிலவற்றையும் தமிழ் நூல் கொண்டு ஆராய்தல் கருதியது. இப்பொழுதுள்ள தமிழ் நூல்கள் எல்லாவற்றினும் தொன்மை யுடையது தொல்காப்பிய மென்பது தமிழறிஞர் பலர்க்கும் ஒப்ப முடிந்தது. அதன்கண் கடவுளரைப் பற்றியும், வழிபாட்டினைப் பற்றியும் பலவிடத்துக் குறிப்புக்கள் உள்ளன. ஆனால், கடவுளர் வடிவினைப்பற்றியாவது, கோயிலைப் பற்றியாவது கூறியிருப்பது புலனாகவில்லை. 'மேவிய சிறப்பி னேனோர் படிமைய' என்னும் அகத்திணையியற் சூத்திரப் பகுதிக்கு 'நால்வகை நிலத்தினும் மேவிய சிறப்பையுடைய மக்களையல்லாத தேவரது படிமையவாகிய பொருள்கள்' என இளம்பூரணர் உரை கூறினர். நச்சினார்க்கினியர் இங்ஙனம் கருதிற்றிலர். உயிர் மயங்கியலில் ஓகாரவீறு கூறுமிடத்தில் 'இல்லொடு கிளப்பி னியற்கையாகும்' (தொல்.எழுத்து.294) என ஒரு சூத்திரம் இருத்தல் கொண்டு 'கோயில்' என்னும் பெயர்வழக்கு அப்பொழு திருந்ததாகக் கொள்ளப்படுகிறது. பெயர் இருத்தலின் அதற்குப் பொருளும் இருந்திருக்கவே வேண்டும். ஆயின், கோயில் என்பது அரசமனையைக் குறிக்கும் பெயராய்த் தொன்னூல் பலவற்றினும் பெருவழக்காக வழங்கி யிருத்தலின், தொல்காப்பியத் தாற் பெறப்படுவது இன்ன தெனத் துணிதற்கரிதாகின்றது. இனி, கடைச்சங்க நாளிலே யெழுந்த பனுவல்களில் கடவுளரிருக்கையைக் குறித்தற்குக் கோயில் என்னும் பெயரும், வேறுபல பெயர்களும் வழங்கியுள்ள. 'முக்கட் செல்வர் நகர் வலஞ் செயற்கே' என்பதில் நகர் என்ப தப்பொருட்டாதல் காண்க. தேவகுலம் என்பது அப்பொருளதாதல் இறையனாரகப் பொருளுரையால் அறியப்படும். இனிப் பலவற்றையும் விடுத்து அக்காலத்துத் தமிழக வரலாறனைத்தையும் வரித்த சித்திரம் போலுள்ள சிலப்பதிகாரம் ஒன்று கொண்டு நோக்குவோம். சிலப்பதிகார இந்திரவிழவூரெடுத்த காதையில், " பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வே ளணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்"1 எனக் கடவுளரிருக்கையைக் குறிக்கக் கோயிலென்னுஞ் சொல் பயின்றுள்ளமை காண்க. ஈண்டு 'மன்னவன்' என்பதற்கு வாசவன் என்று பொருள் கொள்ளப்பெற்றுள்ளது. 'சென்றாளரசன் செழுங்கோயில் வாயில் முன்' என்புழிக்கோயில் அரசமனையைக் குறிக்கின்றது. இனி, கோட்டம் என்னும் பெயர் இக்காப்பியத்திற் பெரிதும் பயின்றுளது. கனாத்திற முரைத்த காதையில், " அமரர்தருக் கோட்டம் வெள்ளியானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தன் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்கும்" 2 என வந்திருத்தல் காண்க. 'பத்தினிக்கோட்டம்' முதலிய பெயர்களும் காணப்படும். கோட்டமென்பது இங்ஙனம் பொதுவாக இருப்பவும், பதிகத்தில். ' குணவாயிற் கோட்டத் தரசுதுறந் திருந்த குடக்கோச் சேர விளங்கோவடிகட்கு' 1 என்னும் பகுதிக் குரையெழுதுங்கால், அடியார்க்கு நல்லார் 'கோட்டம்-அருகன்கோயில் என எழுதியது என்கருதியோ? அருகன்கோயில் 'புறநிலைக் கோட்டம்' எனப் பிறிதோரிடத்துக் கூறப்பட்டிருத்தலின், அது நகர்க்குப்புறம்புள்ளதாமெனக் கொண்டு, குணவாயிற் கோட்டம் என்பதற்கு அங்ஙனம் பொருளுரைத் திருப்பரோ என ஐயமுளதாகின்றது. ஊர்காண் காதையில், " நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவ லுயர்த்தோ னியமமும் மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்"2 எனப் பலபெயரும் பயின்றுள்ளன. 'நியமம்' என்பது முன் காட்டப்பெறாதது. அருகன் கோயிலைக் குறிப்பதற்குப் 'பள்ளி' முதலிய பெயர்களும் உள்ளன. மேலே காட்டியவற்றிலிருந்து 'கோயில்' முதலிய பெயர் வழக்குகளே யன்றி, அக்காலத்துச் சமயநிலை பற்றிய வேறு சில செய்திகளும் வெளிப்படும். இப்பொழுது யாண்டும் காணப் படாதும் அருகியுமுள்ள கோயில்கள் பல அப்பொழுதிருந்தன. இந்திரனுடைய வச்சிரம், வெள்ளானை, கற்பகத்தரு என்பவற்றுக் கெல்லாம் கோட்டமிருந்ததும், இந்திரவிழாப் பெருஞ்சிறப்புடன் இருபத்தெட்டு நாள் கொண்டாடப் பெற்றதும் இப்பொழுதைக்கு அரிய செய்திகளாம். ஞாயிறு, திங்கள் என்பன நவக்கோளிற் சேர்த்தும், ஒரோவழி இறைவனை வழிபட்டமை கருதித் தனித்தும் அமைக்கப்பட்டிருத்தலன்றி, இப்பொழுது அவற்றுக்குக் கோயில் எங்குள்ளன? அந்நாளிற் பெரிதும் பயின்றுள்ள நான்கு கடவுளரில் ஒருவனாகவுள்ள பலராமன் கோயிலை இப்பொழுது யாம் கண்டிலேம். இனி, இங்ஙனம் பல சமயக் கொள்கைகளும் அப்பொழுது மலிந்து கிடந்தன வாயினும் சிவசமயமானது முதன்மையுடைய தாகக் கொள்ளப் பெற்று வந்ததென்பது மேற் காட்டியவற்றி லிருந்தே நன்கு புலனாகும். யாண்டும் சிவன் முதலில் வைத்துக் கூறப்படுதலேயன்றி, 'பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்' என, முதற்கடவுட்கு இன்றியமையாத இலக்கணத்தால் வேறு பிரித்துக் கூறப்படுதலும் காண்க. 7. வள்ளுவர் கலித்துறை கடவுள்வாழ்த்து உலகுக் கொருமுத லுண்டவ னொள்ளிய மாணடிசேர்ந் திலகுற் றிடுமெய்ப் புகழ்புரிந் தோரீண் டிருவினையின் பலகுற்ற வின்னற் பவக்கட னீந்துவ ரென்றுரைத்தான் அலகற்ற சீர்த்திரு வள்ளுவ தேவ னனைவர்க்குமே. வான்சிறப்பு ஊனமி லாதுயிர் யாவையும் வாழ்வது முண்பதுவும் தான முடன்றவந் தான்றழைத் தோங்கலுந் தாரணியில் வானவர்பூசை நடத்தலும் வான்பெய லாலெனநற் றேனமர் சொல்லிற் றெரித்தவன் சீர்த்திரு வள்ளுவனே. நீத்தார்பெருமை அஞ்சலித் தான்ற செயல்புரி வார்பற் றறுத்தொளிர்வார் எஞ்சலி னற்குணத் தாரந்த ணாளரிவர்பெருமை விஞ்சிய தாகுமுலகினி லென்று விளம்பியநம் தஞ்சுடை யான்றிரு வள்ளுவன் சீரடி சார்குதுமே. அறன்வலியுறுத்தல் அறமது மும்மையு நல்குவ தாலே யனைத்துயிர்க்கும் உறுதுணை யாமஃ தொல்லும் வகையா னொழிவின்றியுள் மறுவிலனாக வுஞற்றுக வென்றருள் வள்ளுவன்சீர் நறுமலர்ச் சேவடி யென்னுளஞ் சென்னியி னற்குறவே. இல்வாழ்க்கை இல்லார் பொருளொன் றியல்புறு மூவர் பிதிரர்முதல் எல்லா வழியும் பகுத்துணு மன்புடை யில்லறமே நல்லா றெனப்புகல் வள்ளுவ தேவ னறியதமிழ்ச் சொல்லா றுணரும் பொறியுடை யார்மகிழ் தோய்குவரே. வாழ்க்கைத்துணைநலம் தன்னிறை காத்துக் கணவனைப் பேணுந் தகையுறு சொற் பொன்னினல் லாண்மழை பெய்யெனப் பெய்யும் பொலியுமவ்வில் எண்ணில தூங்கும் பெருந்தக்க வென்னுள வென்றுரைத்தான் மன்னிய வாய்மையன் மன்புல வன்றிரு வள்ளுவனே. புதல்வரைப்பெறுதல் குழலினும் யாழினு மின்பம் பயக்குங் குதலைச்செவ்வாய் அழகிய மக்கட் பெறலிற் பெறும்பே றரிதவரைக் கழகமுந் தேறப் புரிவது தந்தை கடனெனவே தழல்புரை தூய்மைத் திருவள் ளுவனுரை தந்தனனே. அன்புடைமை அன்போ டியைதற் கமைந்த தொடர்ச்சியிஃ தாகலினால் அன்புசெய் வாருடம் பேயுயிர் நின்றதா மவ்வுடம்பும் அன்புடை யார்பிறர்க் காக்குவ ரன்பே யருந்துணையென் றன்புரு வாந்திரு வள்ளுவன் கூறியளித்தனனே. விருந்தோம்பல் மேவாவில் வாழ்குவ தெல்லாம் விருந்தோம் புதற்பொருட்டால் சாவா மருந்தெனி னுந்தமித் துண்டல் தவிர்கமனை மாவாழ் குவள்விருந் துண்டமிச் சின்மிசை வான்புலங்கள் தாவா விளைவுறு மென்றனன் றண்ணளி வள்ளுவனே. இனியவைகூறல் ஈர மளைந்து படிறில வாகிய வின்மொழியாற் சீரிய நற்பொருள் செப்புவ ரல்லவை தேயவறம் பாரினி லோங்குவ ரின்னாத கூறல் பழியுறுநஞ் சாருவ தாமென் றறைந்தனன் வள்ளுவ வந்தணனே.  8. ஆளுடைய பிள்ளையார் மதிமுடிப் பெருமான் றிருவடி போற்றும் சைவநெறியின் வழிவந்த வளவர்களின் சோழ மண்டலத்திலே, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை, சீகாழி, கொச்சைவயம், கழுமலம் என்னும் பன்னிரண்டு பெயர்களையுடைய திருப்பதியில், அந்தணர் குலத்திலே, கௌணியர் கிளையிலே சிவபாத விருதயரென்பார் ஒருவர் இருந்தனர். அவர் மனைவியார் கணவரின் கருத்திற் கிசைந்த கற்பிற் சிறந்தவர், பகவதியார் என்னும் பெயருடையவர். அவ்விருவருடைய தாய் மரபும் தந்தை மரபும் சைவ நெறி வழி வந்தனவேயாம். அதற்கேற்ப, அவர்கள் சிவபெருமானையன்றி மற்றோர் தெய்வத்தைக் கனவிலும் நினையாதவர்களாயும், திருநீற்றின்பால் அன்பினை வளர்ப்பவர்களாயும் விளங்கினர், அவர்களுடைய இல்லற வாழ்கை யாவரும் வியப்பெய்துமாறு சிறப்புற்றிருந்தது. அவ்வாறிருக்கும் பொழுது, தமிழ் நாடெங்கும் சமண பௌத்தர்களின் பொய்ம்மை நெறிகள் பெருக, மெய்ச் சமயமாகிய சைவ நன்னெறி அருகுதலையும், திருநீற்றின் விளக்கம் குன்றுதலையும் சிவபாத விருதயர் கண்டு, கவலை கொண்டு, புற மதங்களின் தீமைகளைப் போக்கிச் சைவத்தைப் போற்ற வல்ல அரிய புதல்வரைப் பெறவேண்டி, இல்லறத்திலிருந்து கொண்டே, தோணியப்பரையும் பெரியநாய்ச்சியாரையும் நோக்கி மனைவியாருடன் தவம் புரிந்தனர். அத் தவத்தின் பயனாக உலகமெல்லாம் உய்யும்படி பகவதியார் கருவுற்றனர். அதனை யுணர்ந்து, சிவபாத விருதயர் திருவருளைப் போற்றி, மூண்டெழு கின்ற மகிழ்ச்சியுடன், மறை நூன் முறையிற் செய்தற்குரிய சடங்குகளைப் பத்துத் திங்களினும் சுற்றத்தார்களோடு சிறக்கச் செய்து பெரிதாகிய இன்பம் நுகரா நிற்கையில், திசைகளெல்லாம் விளக்கமுறவும், பரசமயத் தருக்கொழியவும், வைதிகத்துடன் முதன்மையாகிய சைவ நெறி தழைத்தோங்கவும், தொண்டர்களின் மனம் களிப்படையவும், திருநீற்றின் பெருமை எண்டிசையும் நிலவவும், எல்லாவுலகங்களுள்ளும் நில வுலகமும், நில வுலகத்திலுள்ள நாடுகள் பலவற்றினுள்ளும் தமிழ் நாடும் மேன்மை யெய்தவும், தமிழ் மொழியே ஏனை மொழிகளை வென்று விளங்கவும், மற்றும் இன்ன பல நலங்கள் பல்கவும், ஞாயிறு முதலிய கோட்களெல்லாம் நன்மையாகிய உச்சங்களிலே வலிமையுடனிருக்க, திருவாதிரை நாளிலே, சிறப்புடைய இலக்கினத்தில், பிள்ளையார் திருவவதாரஞ் செய்தருளினார். அப்பொழுது யாவருடைய உள்ளமும் இயற்கையாகவே மகிழ்ச்சியுற்றன; நீர் நிலைகளெல்லாம் மிக்க தெளிவும் தட்பமும் உடையவாயின; வானம் களங்கமின்றி விளங்கியது; தருக்களும் கொடிகளும் தழைத்து மல்கின; பறவைகளின் ஒலிகள் இன்பம் பயந்தன; வானோர்களும் மலர் மழை பொழிந்தனர்; மங்கல முழக்கமே எங்கணும் மலிந்தன; சீகாழிப் பதியினரும், அவருட் சிவபாத விருதயரும் உற்றமகிழ்ச்சியை யாரால் அளவிட்டுரைக்க முடியும்? நெய்யணி விழாக் கொண்டாடினர்; சாதகன்ம முதலிய சடங்குகள் உரிய காலங்களில் மிகுந்த சிறப்புடன் செய்தனர். பகவதியார் பரமர் திருவடியைப் பரவும் அன்பினையே கொங்கை சுரந்து அமுது செய்தருளுவித்தார். பிள்ளையார் தாயாருடைய மடித்தலமும் மணித்தவிசும் முதலியவற்றில் அமர்ந்து அவர் களாலே தாலாட்டப் பெற்றும், திருமுக மண்டலம் அசையச் செங்கீரை யாடியும், சப்பாணி கொட்டியும், மாளிகை முற்றத்திலே தவழ்ந்தும், வருக வருக வென்றைழைக்கும் மாதர்கள் மனங் கரைந்துருக அணைந்து தழுவியும், தளர்நடை நடந்தும், சிறுதேர் உருட்டியும், சிறுமியர் மணற் சிற்றில்களை அழித்தும் விளையாடிப் பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் பெருங் களிப்பினை விளைத்து வளர்ந்து, மூன்றாம் ஆண்டு எய்தப்பெற்றனர். பண்டு சிவபெருமான் திருவடியை மறவாத பான்மையினராகிய அப்பிள்ளையார் தாம் அவ் விறைவரைப் பிரிந்திருக்கும் உணர்ச்சி யானது ஓரோர்கால் உள்ளத்திற் றோன்ற வெருக்கொண்டாற் போலக் குறிப்பயலாய் அழுவர். இங்ஙனம் நிகழும் நாட்களில் ஒரு நாள், தந்தையாராகிய சிவபாத விருதயர் நீராடுவதற்குப் போம் பொழுது, பிள்ளையார், சிவபெருமானுடைய திருவருள் கூட, அவரைத் தொடர்ந்து அழுது கொண்டு பின் சென்றார். பின் சென்ற பிள்ளையாரைத் தந்தையார் திரும்பி நோக்கி, வெகுண்டவர் போல விலக்கவும், அவர் கால் கொட்டி மீளாமையின், 'உன் செய்கை இதுவாயில் வா'என்று உடன் கொண்டு சென்று, திருக்கோயிலுள்ளிருக்கின்ற வாவியின் துறையை அடைந்து, பிள்ளையாரைக் கரையில் வைத்துவிட்டு, தீர்த்தத்திலே இறங்கிப் பல கடன்களும் இயற்றுகின்றவர் அகமருடணத்தின் பொருட்டு நீரிலே பேராது மூழ்கினார். அப்பொழுது, பிள்ளையார் அவரைக் காணாது இறையளவேனும் தரியார் என்னும் நிலைமை தலைக்கீடாக, இறைவருடைய திருவடிகளை வழிபட்ட முன்னுணர்ச்சி மூள, கண்களை நீர் ததும்பும்படி கைகளினாலே பிசைந்து, இதழ் துடிக்க அழுகின்றவர், தம்முடைய முற்சார்பை அறிந்தோ, பிள்ளைமையானோ, இறைவருடைய திருத்தோணிச் சிகரத்தைப் பார்த்து, 'அம்மே அப்பா' என்று அழைத்தழைத்து அழுதார். அப்பொழுது, திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவர் அவருடைய முற்றிருத் தொண்டை நினைந்து, அவருக்கு அருள் செய்யத் திருவுளங் கொண்டு, மலைமகளாருடன் இடப 'd2வூர்தியில் எழுந்தருளிப் பொய்கையின் மருங்கடைந்து, உமாதேவியாரை நோக்கி, 'இவனுக்குப் பாலடிசில் ஊட்டுவாய்' என்றருளிச் செய்ய, அனைத்துலகங்களையும் ஈன்ற அன்னையாகிய பிராட்டியார், தம்முடைய திருமுலைப் பாலைப் பொன் வள்ளத்திலே கறந்து, சிவஞானத்தைக் குழைத்து, பிள்ளையாருடைய கையிலே கொடுத்து உண்பித்தருளினார்; சிவபெருமானும் அவருடைய கண்ணீரைத் துடைத்து அழுகை தீர்த்து அருள் புரிந்தார். எல்லா வுயிர்களுக்கும் தந்தையும் தாயுமாகிய பெருமானும் பிராட்டியும் இவ்வண்ணம் அருள் புரிந்தமையால் ஆளுடைய பிள்ளையார் என்னும் பெயரும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் கிட்டுதற்கரிய சிவஞானத்தோடு சம்பந்த முற்றமையால் திருஞானசம்பந்தர் என்னும் பெயரும் அவர் உடையராயினார். எல்லா ஞானங்களும் அவரை யடைந்தன. " சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்".1 சிவபாத விருதயர் சிறிது பொழுதிலே தம்முடைய நியமங்களை முடித்துக் கொண்டு கரையேறி, மெய்யுணர்வுடன் பொலிகின்ற பிள்ளையாரை நோக்கி, 'நீ யார் தந்த பாலை உண்டாய்' என்று சினந்து, 'எச்சில் மயங்க உனக்கு இதனைத் தந்தவரைக் காட்டு' என்று சொல்லி, கையில் எடுத்த ஒரு சிறிய வளார் கொண்டு ஓச்ச, ஆளுடைய பிள்ளையார் ஆனந்தக் கண்ணீர் சொரிய, உச்சியின் மேல் எடுத்தருளிய ஒரு திருக்கை விரலினாலே சுட்டி, விசும்பின் கண் இடபவூர்தியின் மேல் உமாதேவியாருடன் நின்றருளிய பரமசிவனைக் காட்டி, உள்ளே நிறைந்து பொங்கி யெழுந்த உண்மை ஞானத் திருமொழியினாலே, எல்லையில்லாத மறைப் பொருள் அனைத்தையும் எவ்வுயிரும் உய்யுமாறு இனிமை வளமிக்க தமிழால் அருளிச் செய்தற்குத் திருவுளங் கொண்டு, மறைகட்கு முதலாகிய பிரணவத்தைத் தகர மெய்யுடன் புணர்த்தி, தம்முடைய பாடல் சிவபெருமானுடைய திருச்செவியில் ஏறும் பொருட்டு முன்னர் அத்திருச்செவியையே சிறப்பித்து, " தோடுடைய செவியன் விடை யேறியோர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன் ஏடுடையமலரான்முனை நாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடையபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே"1 என்று பாடத் தொடங்கி யருளினார். சிவபெருமான் தமக்குப் பிழை செய்தவர்களும் பின்பு தம்மை வந்தடையின் அவர்களுக்கு அருள் செய்வாரென்பதை விளக்கும் பொருட்டு, தம்மை மதியாது தாம் வீற்றிருக்கும் திருக்கைலாய மலையையெடுத்துத் தன் வலியிழந்த இராவணன் பின்பு தம் மேல் இசை பாட அவனுக்கு அருள் புரிந்த திறத்தை எட்டாந் திருப்பாட்டிலும், எவ்வகைப்பட்ட சிறப்பினரும் சிவபெருமானை அன்போடு வழிபடினன்றி அவரை அடையார்கள் என்பதை விளக்கும் பொருட்டு, அவரை வணங்காது வழுவாகிய மனத்தை மேற்கொண்டு மயங்கிய திருமாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தேடியும் அடையாதவர்களாகிப் பின்பு, திருவைந்தெழுத்தைத் துதித்து உய்ந்த திறத்தை ஒன்பதாந் திருப்பாட்டிலும்', வேதகாரணராகிய கடவுளை அடையு நெறியை அறிந்து உய்யாத சமணர் புத்தர்களின் சமயங்கள் குற்றமுடையன என்னுந்திறத்தைப் பத்தாந் திருப்பாட்டிலும் அமைத்துப் பாடி, இங்ஙனம் திருப்பதிகத்தை நிறைவித்து, திருப்பதிகப் பயன்கூறும் திருக்கடைக் காப்புச் சாத்தித் தொழுது கொண்டு நின்றார். சிவபெருமானுடைய பெருங் கருணையைக் கண்டு தேவர்களெல்லாரும் வானின்கண் ஆரவாரித்து மலர் மழை பொழிந்தனர். தேவ துந்துபிகள் முழங்கவும், கந்தருவர்களும் கின்னரர்களும் இசை பாடவும், இந்திரன் முதலிய இமையோர்கள் ஏத்தெடுக்கவும், சிவகண நாதர்கள் அர அர என்று பரவும் ஓசை தழைக்கவும், மறை முழக்குடன் முனிவர் குழாம் புடை சூழவும் சிவபெருமான் உமாதேவியாருடன் திருத்தோணிக்கு எழுந்தருளினார். ஆளுடைய பிள்ளையார் அதனைக் கண்டு, அவரைத் தொடர்ந்தெழுகின்ற அன்பு மேலீட்டினாலே, தம்முடைய கண் வழியே சென்ற கருத்து நீங்காமற் கலந்து செல்ல, சிவபெருமான் எழுந்தருளிய திருக் கோயிலினுள்ளே புக்கார். எல்லை யில்லாத பெருந்தவத்தினை முன் புரிந்து அவருக்குத் தந்தை யெனப்படும் பேற்றினைப் பெற்ற சிவபாத விருதயர் கை குவித்து ஆனந்தக் கூத்தாடி, வெருட்சியும் வியப்பும் விருப்பும் அடைந்து, அவர் திருவாய் மலர்ந்தருளிய திருநெறித் தமிழின் பொருட் குறிப்பை உணர்ந்தார். சிவபெருமானைத் தனியே கண்டு தொடர்ந்த பிள்ளையாரைப் போலக் காணப் பெற்றி லராயினும், அங்கு நிகழ்ந்த அற்புதத்தைக் கண்டு, அது தோணியப் பருடைய திருவருளெனத் துணிந்து, பேரார்வத்தோடும் முன் சென்ற பிள்ளையாருக்குப் பின் சென்றார். அப்பொழுது அங்கே நிகழ்ந்ததனைக் கேள்வியுற்ற மறையோரெல்லாரும் உடல் புளகங்கொண்டு, 'இதனை யொப்பதாகிய அற்புதம் எங்கே நிகழ்ந்தது' என்று சொல்லிக் கொண்டு, திருக்கோயிலின் வாயிலில் வந்து சூழ்ந்தனர். பிள்ளையார், விடைமீது போந்து திருத்தோணியில் வீற்றிருந்தருளிய பெருவாழ்வின் திருமுன்பெய்தித் திருப்பதிகம் பாடி, குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசையுடன் கூடிய இனிய தமிழ்ப் பாடல்களால் சிவபெருமானைப்பாடுதலே திருத் தொண்டாக அருள்பெற்ற தொடக்கோடும் திருக்கோயிலினின்று புறப்பட்டார். அதுகண்ட காழியில் வாழும் அந்தணர் முதலிய திருத் தொண்டர்கள் எதிர்கொண்டு நின்று துதிப்பாராய், " காழியர் தவமே கவுணியர் தனமே கலைஞானத் தாழிய கடலே யதனிடை யமுதே யடியார்முன் வாழிய வந்திம் மண்மிசை வானோர் தனிநாதன் ஏழிசை மொழியாள் தன்திரு வருள்பெற் றனையென்பார்"1 " மறைவளர் திருவே வைதிக நிலையே வளர்ஞானப் பொறையணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித் துறைபெறு மணியே சுருதியி னொளியே வெளியேவந் திறையவ னுமையா ளுடனருள் தரவெய் தினையென்பார்"2 " புண்ணிய முதலே புனைமணி யரைஞா ணொடுபோதும் கண்ணிறை கதிரே கலைவளர் மதியே கவின்மேவும் பண்ணியல் கதியே பருவம தொருமூ வருடத்தே எண்ணிய பொருளாய் நின்றவ ரருள்பெற் றனையென்பார்"3 என்று இத்தன்மையன பலவற்றைக் கூறி வழுத்தி, அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி யெழுந்தார்கள். சிவபாத விருதயர் தெய்வஞானக் கன்றாகிய பிள்ளையாரை எடுத்துத் தோளின்மேல் வைத்துக்கொண்டு, மங்கலதூரியங்கள் ஒலிக்கவும், மறைகள் முழங்கவும், காழி நகரை வலஞ் செய்துகொண்டு தம்முடைய திருமாளிகையை அடைந்தார். ஆளுடைய பிள்ளையார், அன்றிரவு இடையறாப் பெருங்காதலுடன் தோணியப்பர் திருவடிகளைச் சிந்தித் திருந்து, மற்றை நாட் காலையில், திருக்கோயிலையடைந்து, தம் திருத் தந்தையாகிய பெருமானையும், திருத்தாயாகிய பிராட்டியையும் வணங்கித் துதித்து, அருள் பெற்று, திருக்கோலக்கா என்னும் திருப்பதியை அடைந்து, திருக்கோயிலை வலஞ்செய்து முன்னின்று, கையினால் ஒத்தறுத்துத் திருப்பதிகம் பாடத் தொடங்கினார். பாடும்பொழுது சிவபெருமானுடைய திருவருளினாலே, திருவைந்தெழுத்து எழுதப்பெற்ற பொற்றாளம் பிள்ளையார் திருக்கையில் வந்திருந்தது; பிள்ளையார் திருவருளை வியந்து, அதனைத் திருமுடிமேல் வைத்துக் களி கூர்ந்து, ஏழிசையும் தழைத்தோங்கத் திருப்பதிகத்தைப் பாடி முடித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி நின்றார். தும்புரு நாரதர் முதலாகிய இசைப் புலவோர்கள் விண்ணுலகும் வியப்பவெழுந்த இன்னிசையின் உண்மையை நோக்கித் துதித்து மலர்மழை பொழிந்தனர். பிள்ளையார் மீண்டு, தாம் நடந்து செல்லுதலைத் தரிக் கலாற்றாத தந்தையாரின் தோளின்மேல் எழுந்தருளிச் சீகாழியை அடைந்து, திருக்கோயிலிற் சென்று வலஞ்செய்து திருமுன் நின்று பதிகம்பாடி வணங்கிக் கொண்டு, அப்பதியிலுள்ளவரனைவரும் வாழ் வெய்தும்படி, அங்கே தம் இளந்திருக் கோலக்காட்சியை அளித்து வீற்றிருந்தருளினார். அங்ஙனம் இருக்கும்பொழுது அவருடைய தாயாராகிய பகவதியார் பிறப்பதற்குத் தவம்புரிந்த திருநனிபள்ளியில் உள்ள மறையோரெல்லாரும் பெரு மகிழ்ச்சியுடன் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து கவுணியர் பெருமான் திருவடிகளை வணங்கியிருந்தனர். பிள்ளையார் உலகமுய்யும்படி சிவஞானம் பெற்ற பெரு வார்த்தையைக் கேள்வியுற்று, வேறு திருப்பதிகளிலுள்ள திருத்தொண்டர்களும் மறையோரும் ஏனையரும் குழாங்கொண்டுவந்து, காழியிள வேற்றின் கழல்களை வணங்குஞ் சிறப்பினைப் பெற்றனர். அங்கே வந்து திரண்ட திருத்தொண்டர் முதலாயினார்கட்கு, உவகையுடன் திருவமுது அளித்தல் முதலிய செய்கைகளை யாவரும் புரியாநிற்க, சீகாழிப் பதியானது சிவலோகம்போல விளங்குவதாயிற்று. இங்ஙனம் நிகழும் பொழுது, திருநனிபள்ளியோர்கள் பிள்ளையாரை வணங்கி, 'தேவரீர் அடியேங்கள் பதியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கும் பொருட்டு அவ்விடத்திற்கு எழுந்தருளல் வேண்டும்' என்று விண்ணப்பிக்க, ஆளுடைய பிள்ளையார் அதற் கிசைந்தருளி, தோணியப்பரை வணங்கி அருள் பெற்று, பிறபதிகளையும் வணங்குவதற்குச் செல்லா நிற்புழி செந்தாமரை மலரினுஞ் சிறந்த அருமைத் திருவடிகள் தரையின்மேல் நடப்பதனையும், பிறரொருவர் தாங்குவதனையும் பொறாத அன்பினையுடைய தாதையாகிய சிவபாத விருதயர் வந்து எடுத்துத் தோளின்மேல் வைத்துக்கொள்ள, 'ஞானமுண்ட பெருந்தகையார் தம் பெருமானுடைய திருவடிகளை முடிமேற்கொண்ட கருத்துடன் போந்தருளினார். திருநனி பள்ளிக்கு அருகாக அணைந்தபொழுது, பிள்ளையார், வானளாவிய மலர்ச் சோலையுடன் தோன்றும் அப்பதியாதென்று வினாவியருள, தாதையார் 'திருநனி பள்ளி' என்றார். என்றலும், திருப்பதிகம் பாடிக்கொண்டு, திருக்கோயிலை அடைந்து பணிந்து போற்றி, அப்பதியில் அமர்ந்திருந்தார். பின் அப்பதியை நீங்கி, தலைச்சங்காடு, திருவலம்புரம், பல்லவனீச்சரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருமுல்லைவாயில் என்னும் திருப்பதிகளுக்குச் சென்று இறைஞ்சி, பதிகம் பாடிக் கொண்டு, மீண்டு சீகாழியை அடைந்து தோணியப்பரை வணங்கி, நாளும் அவரைக்கும்பிடும் விருப்பத்துடன் அங்கு எழுந்தருளியிருந்தார். இருக்கு நாளில் திருமயேந்திரப் பள்ளி, திருக்குருகாவூர் முதலாகிய பதிகளை இறைஞ்சி யேத்தித் தமிழ் மாலை பாடினார். இங்ஙனம் நிகழு நாளிலே, திருநீலகண்டப் பெரும்பாணர் ஆளுடைய பிள்ளையாரின் திருவடிகளை வணங்குதற் பொருட்டு, யாழ்கொண்டு பாடினியாருடன் சீகாழிக்கு வந்து சேர்ந்தார். பிள்ளையார் அவருடைய வரவை அறிந்து, அவரை எதிர் கொள்ளாநிற்க, அவர் பிள்ளையாருடைய திருவடிகளைப் பேரார்வத்துடன் வணங்கி ஏத்தி மகிழ்சிறந்தார். பிள்ளையார் அவரை அழைத்துக் கொண்டு திருக்கோயிற் புறமுன்றிலை அடைந்து, கும்பிடுவித்து, 'உங்கள் பெருமானுக்கு யாழ் வாசிப்பீராக' என்றார். பெரும்பாணர், பிள்ளையாரை வணங்கி, சிவபெருமான் மேலதாகிய(தேவ) பாணியை விறலியாரோடும் பாடி, யாழ் வாசிக்க, பிள்ளையார் மகிழ்ச்சி யடைந்து, அவர் பாடிய பின் அவரைக் கொண்டுபோய் உறைவிடங்கொடுத்து இருக்கச்செய்து, விருந்தளித்தார். திருநீல கண்டப்பெரும்பாணர், ஆழிவிடமுண்ட பெருமான்மீது திருஞான சம்பந்தப்பிள்ளையார் பாடிய திருப்பதிகங்களைக் கேட்டு, அமிழ்தம் அருந்தினவர்போலச் சிந்தை களித்து, அவற்றின் இசைகளை யாழிலே இட்டு வாசித்து எவ்வுயிர்களையும் மகிழ்வித்து, பிள்ளையாரை நோக்கி' , 'தேவரீர் பின்னும் அருள் செய்யும் திருப்பதிகங்களின் இசையை அடியேன் யாழில் இட்டு வாசித்துக் கொண்டு, தேவரீரைப் பிரிவின்றிச் சேவிக்கப் பெறவேண்டும்' என்று விண்ணப்பித்து, பிள்ளையார் அதற்கு இசைந்தருளப்பெற்று, அற்றை நாள் தொடங்கி அவர் பாடும் திருப்பதிகங்களின் இசைகளை யாழிலே இட்டுவாசித்துக் கொண்டு, என்றும் அகலாத நண்புடனிருந்தார். திருஞான சம்பந்தப் பிள்ளையார், தில்லைத் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிந்தருளும் அம்பலவாணரைப் பணிந்து ஏத்துதற்குப் பெருங்காதலுடையராய், தோணியப்பரை வணங்கி அருள் பெற்றுக் கொண்டு, தந்தையாரோடும், யாழ்ப்பாண ரோடும், அடியார்கள் பக்கத்திலே சூழ்ந்துவர, சீகாழியைக் கடந்து சென்று, தில்லையின் எல்லையை அடைந்து வணங்கிக் கொண்டு, பொய்கைகளும், பூஞ்சோலைகளும், கரும்பும், செந்நெலும், கமுகுடன் கலந்து உயர்ந்திருக்கும் கழனிகளும், திருநந்தவனங்களும் முதலியவற்றைக் கடந்து சென்று, அத்திருப்பதியைச் சூழ்ந்த திருமதிலின் தெற்கு வாயிலை அடைந்து, தில்லை வாழந்தணர்களும், மற்றை யடியார்களும் பேரலங்காரத்துடன் எதிர்கொண்டு வாழ்த்துரைக்கச் சென்று, அன்பர்களின் சிந்தைபோல் விளங்குகின்ற திருவீதியைத் தொழுது, தூலவிலிங்கமாகிய எழுநிலைக் கோபுரத்தை வணங்கி எழுந்து, உள்ளே புகுந்து திரு மாளிகையை வலஞ்செய்து, பேரம்பலத்தை வணங்கிக் கொண்டு, கனகசபையை அடைந்தார்; கைகள் சென்னியின் மேல் ஏறிக்குவிய, விழிகள் களிகொள்ள, உருகும் அன்புடன் திருவணுக்கன்றிருவாயிலிற் புக்கார்; அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமேயாகிய அம்பலத்தையும், அந்நிறை ஞானத்தெழுந்த ஒப்பற்ற ஆனந்தக் கூத்தையும் கண்ணின் முன்புறக் கண்டார்; 'மெய்யுணர்வின் அநுபவமாக வரும் சிவபோகத்தை உடம்பின்கண் உள்ள ஐம்பொறியளவினும் எளிவருமாறு அருளினை' எனப் போற்றி, சிவானந்த வாரிதியில் அமிழ்ந்து நின்று, "கற்றாங் கெரியோம்பி" என்னும் திருப்பதிகத்தைப் பாடியருளினார். பின்பு திருமாளிகையை வலஞ்செய்து புறம் போந்து, திருமுன்றிலில் வணங்கி யெழுந்து, கோபுர வாயிலையடைந்து பணிந்து, நான்கு திருவீதிகளையுந் தொழுது, அங்கே எழுந்தருளி யிருத்தற்கு அஞ்சி, திருவேட்களத்தை அடைந்து தொழுது பதிகம் பாடி, அங்கெழுந்தருளி யிருந்து கொண்டே, தில்லைக்கும் வந்து அம்பல வாணருடைய திருக்கூத்தினைக் கும்பிடுவார். கும்பிடு நாளிலே அங்கிருந்து திருக்கழிப் பாலைக்குச் சென்று வணங்கிப் பதிகம் பாடினார். இங்ஙனம் தாம் பாடும் திருப்பதிக விசைகளை யாழ்ப்பாணர் யாழிலிட்டு வாசிக்கும் பேற்றையளித்து, நாள் தோறும் திருக்கூத்தினைப் போற்றிவரும் திருஞான சம்பந்தர், ஒருநாள், தில்லை யந்தணர்கள் மன்றுளாடும் சேவடிக்கு அணுக்கராம் பேற்றினை வியந்து, அவர்கள் சீலத்தின் அளவின்மையையும் நினைந்து, பொங்கி யெழுகின்ற காதலுள்ளத்துடன் திருவேட்களத்தைக் கடந்து தில்லையை அணையும் பொழுது, அண்ட நாயகர் திருவருளாலே தில்லைவாழந்தணர் மூவாயிரவரும் சிவகண நாதராய்த் தோன்றக் கண்டு, அப்பரிசினைத் திருநீல கண்டப் பெரும்பாணர்க்கும் காட்டி, தாம் அவர்களை வணங்கினர். அந்தணர்கள், அவர் வணங்குமுன் தாமும் உடன் வணங்கிச் சூழ்ந்து வந்தனர். பிள்ளையார் திருமுடிமேற் குவித்த செங்கையுடன் திருக்கோயினுட் புகுந்து, மன்றில் நிறைந்தாடும் மாணிக்கக் கூத்தரெதிரே சென்று பணிந்து; "ஆடினாய் நறுநெய்யொடு பாறயிர்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அப்பதிகத்திலே "நீலத்தார்கரிய மிடற்றார்" என்னுந் திருப்பாட்டிலே தில்லை வாழந்தணரைத் தாம் கண்டபடி கூறி, அவர்கள் "தொழுதேத்து சிற்றம்பலம்" என்று அருளிச் செய்தார். இங்ஙனம் பணிந்து பதிகம்பாடி நிலைபெற்ற இன்ப வெள்ளத்திற் றிளைத்து, பிரியாவிடை பெற்றுப் புறம்போந்த காலையில், பாணர், பிள்ளை யாருடைய திருவடிகளை வணங்கி, 'அடியேன் பிறந்த திருவெருக்கத்தம் புலியூர் முதலாக நிவா என்னும் நதியின் கரையிலிருக்கின்ற பதிகளை வணங்குதற்கு எழுந்தருளவேண்டும்' என்று வேண்டினர். ஆளுடைய பிள்ளையார் அதற் கிசைந்தருளி, தந்தையார் முதலிய யாவருடனும் புறப்பட்டுச் சென்று, எருக்கத்தம் புலியூரின் மருங்கணைந்து, 'அடியேன் பிறந்தபதி இது' எனப் பாணர் கூறக்கேட்டு இன்புற்று, 'ஐயரே, நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு செய்தவாறு என்' எனச் சிறப்புரை வழங்கி, திருக்கோயிலினுட்புக்கு, வணங்கிப் பதிகம் பாடினார். பின் அங்கு நின்றும் அவருடன் எழுந்தருளிப் பல திருப்பதிகளும் பணிந்து பரவிக்கொண்டு, திருமுதுகுன்றினை அடைந்து, நம்பர் சேவடிகளை ஆராத காதலுடன் வணங்கிப் பதிகங்கள் பாடிச் சிலநாள் அங்கிருந்து, பெண்ணாகடத்தை யெய்தி, அங்கே திருத்தூங்கானைமாடம் என்னும் கோயிலில் வீற்றிருக்கும் சுடர்க் கொழுந்தாகிய பெருமானைப் பணிந்து தமிழ்மாலை பாடி, நெல் வாயிலறத் துறைக்குச் செல்லவிரும்பி, தந்தையாரின் தோள் மேலிருத்தலை ஒழிந்து, அவர் மனம் வருந்தும்படி, அந்தணர் முதலாயினார் சூழ்ந்து செல்ல விரைந்து ஏகினார். அவர் திருவடித் தாமரையும் பையப்பைய நொந்தது. இவ்வாறு சென்று, மாறன் பாடி என்னும் பதி நேர்பட, வழி நடந்த வருத்தத்தினாலே திருவைந் தெழுத்தை ஓதிக்கொண்டு அங்கே எய்தினர். அப்பொழுது வெய்யோன் மேல்கடலில் மூழ்கினான். அன்றிரவு பிள்ளையார் அடியார்களோடும் அப்பதியிலேயே தங்கினார். திருவறத்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமான் காழிப் பிள்ளையாரின் வழி வருத்தத்தைத் திருவுளத் தடைத்து, அவர் ஏறுதற்கு முத்துச் சிவிகையும் முத்துக்குடையும், ஊதுதற்கு முத்துச் சின்னங்களும் கொடுத்தருளத்திருவுளங் கொண்டு, திருநெல்வாயிலிருக்கின்ற மறையோரெல்லாருக்கும் தனித்தனியே கனவிலே தோன்றி, 'ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்; நீங்கள், முத்துச் சிவிகையும் முத்துக் குடையும் முத்துச் சின்னங் களும் நம்மிடத்தில் எடுத்து அவனையடைந்து கொடுங்கள்' என்று அருளிச் செய்தனர். உடனே அந்தணரெல்லாரும் விழித் தெழுந்து, ஒருங்கு கூடி, மகிழ்ந்து, அற்புத மெய்திய சிந்தையோடும் கோயிலை வந்தடைந்து, திருக்கோயிற் பணியாளர்களுக்கும் அவ்வருளுண்டானமை யறிந்து வியந்து, திருப்பள்ளி யெழுச்சிக் காலம் வர, திருக்காப்பை நீக்கி, முத்துச் சிவிகையையும் முத்துக் குடையையும் முத்துச்சின்னங்களையும் கண்டு, களிப்பு மிகுதியால் ஆரவாரித்து, பலவகை வாத்தியங்களும் ஒலிக்க, அடியார்களுடன், அவற்றைச் சுமந்து கொண்டு ஆளுடைய பிள்ளையாரிடத்திற்குப் போனார்கள். அதற்கு முன், பரமசிவன் பிள்ளையார்க்கும் கனவிலே தோன்றி 'அரத்துறையில் வீற்றிருக்கும் வள்ளலாகிய நாம் மகிழ்ந்து அளிக்கும் முத்துச் சிவிகை முதலியவற்றை நீ ஏற்றுக் கொள்ளுதல் தகும்' என்று உள்ளவாறு அருளிச்செய்ய பிள்ளையார் விழித்தெழுந்து, தாம் கனவிற்கண்ட பேரருட் பண்பினைத் தந்தையார்க்கும் அடியார் களுக்கும் அருளிச்செய்து, வைகறையிலே செய்வினை முற்றி, வெண்ணீறு அணிந்து, திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டு எழுந்தருளினார். பரிதி வானவனும் புகலி வேந்தரைச் சிவிகையின்மேல் ஏற்றிடக் காதலித்தவன் போலத் தேரின்மீது வந்து தோன்றினான். அப்பொழுது அந்தணர்களும் சிவனடியார் களும் அரஅர என்னும் முழக்கத்துடன் முத்துச் சிவிகை முதலிய வற்றைத் தாங்கிக்கொண்டு எதிரே வந்து, 'இவை திருவறத் துறையில் வீற்றிருக்கின்ற முதல்வர் தந்த பேரருளாகும், ஏற்றருள்வீர்' என்று கூறி, இறைவர் தங்களுக்கு அருளிச் செய்தவற்றை ஒன்றும் ஒழியாமல் உரைத்தார்கள். பிள்ளையார் அவற்றைக் கேட்டு, அக்கடவுளின் திருவருளை "எந்தையீசனெம் பெருமான்" என்னுந் திருப்பதிகத்தினாலே பாடி, " சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார் மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின் றாதியா ரருள் ஆதலின் அஞ்செழுத் தோதி யேறினார் உய்ய உலகெலாம்"1 ஆளுடைய பிள்ளையார் முத்துச் சிவிகையை வலம்வந்து நிலமிசை விழுந்து வணங்கி யெழுந்து, திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டு, உலகமெலாம் உய்யும்படி, அதில் ஏறியருளிய பொழுது சிவனடியாளர்களெல்லாரும் ஆரவாரித்தார்கள்; மறையோர்கள் வேத முழக்கஞ்செய்தார்கள்; வானோர்கள் ஆரவாரித்து மலர் மழை பொழிந்தனர்; பலவகைப்பட்ட மங்கல வாத்தியங்கள் ஒலித்தன. வளர்மதியானது பாற்கடலில் உதித்தாற் போல முத்துச் சிவிகையில் ஏறியருளிய கருணை வள்ளலாகிய திருஞான சம்பந்தப் பிள்ளையார், மேலே முத்துக்குடை நிழற்றவும், அடியார்களும் மறையோர்களும் முதலாயினார்கள் நெருங்கி உவகை மிகுதியாற் கூத்தாடித் தங்கள் தங்கள் கண்களினின்றும் பொழிகின்ற புனல் வெள்ளத்திற் குளிக்கவும், முத்துச் சின்னங்கள் "ஏழுலகங்களும் அடியார்களும் மறைகளும் உய்யும்படி ஞான சம்பந்தர் வந்தார்; உலக முழுதும் நிறைந்திருக்கின்ற உமா தேவியார் ஞானப்பாலூட்ட உண்டருளிய பாலறாவாயர் வந்தார்; வேதமுதலிய கலைகளனைத்தையும் ஓதாதுணர்ந்த முத்தமிழ் விரகர் வந்தார்" என்று ஊதவும், சென்று, திருவறத்துறையை அடைந்து, கோபுர வாயிலுக்குத் தூரத்திலே முத்துச் சிவிகையினின்றும் இறங்கி, வணங்கி யெழுந்து, திருக்கோயிலினுள்ளே புகுந்து, வலஞ் செய்து திருமுன்பணிந்து, இறைவன் றிருவருளைப் பலவாறு பரவிப் பதிகம்பாடி, சிலநாள் அப்பதியிலே எழுந்தருளியிருந்தார். இருக்கும் நாளிலே, திருநெல்வெண்ணெய் முதலிய பதிகளுக்கு அன்பர்களுடன் சென்று தொழுது திரும்பினார்.  9. திருவிழா விழவு என்பது கொண்டாட்டம் அல்லது களியாட்டத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல். இது சாறு என்னும் பெயராலும் வழங்கும். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படையில் 'ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்' என்றும், 'சாறயர்களத்து வீறு பெறத்தோன்றி' என்றும் இரு சொல்லும் பயின்றிருத்தல் காண்க. மக்கள்யாவரும் இன்பத்தையே விரும்புகின்றனரென்பது கண்கூடாய உண்மை. இவ்வுலகிலே மக்கள் இன்ப நுகர்ச்சியின் பொருட்டுச் செய்யும் கொண்டாட்ட மெல்லாம் விழவு என்னும் பெயரால் வழங்குதற் குரியனவே. யாற்றிலே புதுப்புனல் வந்துழி ஆடவரும் மகளிரும் சென்று நீராடி இன்பந் துய்க்கும் விளையாட்டுகள் புதுப்புனல் விழவு எனக் கூறப்படும். இங்ஙனமே கடற்கரைக் கானல் விளையாட்டு, உண்டாட்டு ஆய விழாக்கள் மிக்கிருந்தவென்பது பழைய தமிழ் நூல்களினால் அறியப்படுகின்றது. முன்பு காட்டிய 'ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்' என்னும் தொடரே அக்காலத்து ஒவ்வொரு ஊரிலும் விழாக் கொண்டாடப்பெற்று வந்ததென்பதற்குச் சான்றாகும். அகப்பொருளிலே ஊர்துஞ்சாமை யென்பதோர் துறையுளது. ஊரிலுள்ளாரெல்லாரும் விழாக் கொண்டாடுதலால் இரவில் துயிலாதிருப்பர் என்பது அதனாற் பெறப்படுகின்றது. இங்ஙனம் நகரங்களிலும், ஊர்களிலும் விழாச்செய்தல் மிக்கிருந்த செய்தியானது அக்காலத்து மக்கள் செல்வத்திலும் இன்பத்திலும் சிறந்திருந்தன ரென்பதைப் புலப்படுத்தாநிற்கும். செல்வமும், இன்பமும் நாட்டினை அழகு செய்வன என்பது " பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து"1 என்று தெய்வப் புலவரானும் கூறப்பெற்றள்ளது. பழைய புலவர்கள் 'விழவு மலி மூதூர்' 'விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர்' (பெரும்பா.411) என்று இங்ஙனம் அக்காலத்துப் பதிகளைச் சிறப்பித்துக் கூறியிருப்பது விழா ஒன்றிலிருந்தே செல்வப் பெருக்கு முதலியவற்றை அறிந்து கொள்ளலாகும் என்பதனைக் காட்டுகின்றது. இனி, தெய்வங்கட்குச் செய்யப்படும் இத்திருவிழாக்கள் தாமும், குறிஞ்சி, முல்லை முதலிய வெவ்வேறு நிலத்து மக்களால் வேறு வேறு பெயரினையுடைய கடவுளரைக் குறித்து வெவ்வேறு முறைமையாகச் செய்யப்படுவனவாகும். அவையெல்லாம் ஈண்டு விரித்தற்கு இடனின்று. இரண்டொரு திருவிழாக்கள் பண்டு நடந்த முறைமையை அறிந்து கொள்ளுதல், அதனொடு இப்பொழுது திருவிழா நிகழும் இயல்பினை ஒப்பிட்டுப் பார்த்தற்கும், சீர்திருத்தம் செய்வதற்கும் உதவியாயிருக்குமாகலின், அதுவே இங்குக் கூறக்கருதியதாகும். இறையனாரகப் பொருளுக்கு நக்கீரர் இயற்றிய உரையில் 'மதுரை ஆவணி யவிட்டம், உறையூர்ப் பங்குனி யுத்திரம், கரு'd2வூர் உள்ளி விழா', என மூன்று பெரிய திருவிழாக்கள் கூறப்பெற்றுள்ளன. அகநானூறு முதலியவற்றிலும் இத்திருவிழாக்கள் குறிக்கப் பட்டுள்ளன. ஆனால் இவை இவ்விவ்வாறு நடந்தன வென்று நன்கு அறிந்து கொள்வதற்கு ஆதரவுகள் கிடைக்கவில்லை. கார்த்திகைத் திங்களிலே திருக்கார்த்திகை நாளில் இரவிலே தெருக்களில் விளக்குகளை நிரை நிரையாக வைத்து, மாலைகளால் அணிவித்துப் பலரும் கூடி மகிழ்வுடன் விழாவயர்வர் என்ற செய்தி அகநானுற்றிலுள்ள நக்கீரர் பாட்டு ஒன்றினால் வெளியாகிறது. இவ்வாற்றால் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்பே தமிழகத்தில் இத்தகைய திருவிழாக்கள் நடைபெற்று வந்தன என்பது நாம் பெரிதும் பாராட்டுதற்கும் மகிழ்ச்சி யடைதற்கும் உரிய செய்தியன்றோ? இனிப் பழைய நாளிலே காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரனுக்கு விழாச் செய்த வரலாறு சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இருபெருங் காப்பியத்தும் விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளது. மணிமேகலை விழாவறை காதையால் அறியப்படும் செய்தி பின் வருவது. 'காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த பல சமயவாதிகளும், சோதிடரும், அமைச்சர் முதலிய ஐம்பெருங்குழுக்களும், எண்பேராயத் தாரும், பிறரும் ஒருங்கு கூடியிருந்து, பண்டு அகத்திய முனிவர் கட்டளையால் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் என்னும் சோழமன்னனால் இந்திரனது உடன்பாடு பெற்றுப் புகார் நகரிலே இருபத்தெட்டு நாள் நடத்தியதும், பின்னர் ஆண்டுதோறும் அங்ஙனமே நடத்தப்பெற்று வருவதுமாகிய இந்திர விழாவை நடத்தத் தவறினால் நிகழக்கூடிய தீமைகளை யெல்லாம் நன்கு சூழ்ந்து விழாவினை நடத்துவதென்று உறுதி செய்து கொண்டு, அதனை நகரத்தாருக்கு அறிவிக்கும்படி முரசறைவோனுக்குச் சொல்லினர். முரசடிக்கும் முதுகுடியிற் பிறந்தோனாகிய அவன், வச்சிரக் கோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த முரசினை யானையின் பிடரிலேற்றி, முதற்கண் ஊரினை வாழ்த்தி, வானம் திங்கடோறும் மும்மழை பொழிக, மன்னவன் கோட்கள் நிலைதிரியாமைக்குக் காரணமாகிய செங்கோலினன் ஆகுக, அறிஞர்களே! இந்திரவிழா நடக்கும் காலத்தில் எல்லாத்தேவரும் இங்கே எழுந்தருளுவர் என்பது பெரியார் துணிபாதலின் வீதி முதலியவற்றில் நிறை குடங்களும், பொற்பாலிகைகளும், பாவை விளக்குகளும் ஆகிய இவற்றைப் பரப்புங்கள்; குலைக்கமுகும், குலைவாழையும், வஞ்சியும், பூங்கொடியும், கரும்பும் ஆகிய இவற்றைக் கட்டுங்கள்; திண்ணைகளின் மேல் தூண்களில் முத்து மாலைகளைத் தொங்கக்கட்டுங்கள்'; வீதிகளிலும் மன்றங்களிலும் பழமணலை மாற்றிப் புதுமணலைப் பரப்புங்கள்; பலவகையான துகிற்கொடிகளையும் மாடங்களிலும் வாயில்களிலும் கட்டுங்கள்; கண்ணுதற் பெருமான் முதலாகச் சதுக்கப் பூதம் இறுதியாகவுள்ள தெய்வங்கள் உறையும் கோயில்களில் அவ்வத் தெய்வங்கட்கு ஏற்ப வெவ்வேறாகச் செய்யப்படும் கடன்களை அறிந்தோர் செய்யுங்கள்; அறவுரைகள் புரிதற்குரிய அறிஞர்களே! பந்தரிலும் அம்பலங்களிலும் சென்று விரிவுரைகள் புரியுங்கள்; சமயவாதிகளே! பட்டி மண்டபத்தையடைந்து முறைப்படி வாதம் புரியுங்கள்; யாவரும் யாரிடத்தும் பகைமையும் வெகுளியும் கொள்ளாதிருங்கள்' என்று கூறி முரசறைந்து, *'பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க' என வாழ்த்தி இங்ஙனம் விழாவினைத் தெரிவித்தனன். இதிலிருந்து அவ்விழாவின் நோக்கம் எவ்வளவு உயர்ந்த தாகக் காணப்படுகின்றது, பாருங்கள்! ஓர் பெரிய திருவிழாச் செய்வதென்றால் நகரத்திலுள்ள பலவகை மாந்தர்களும் ஒருங்கு கூடியிருந்து ஆராய்ந்து முடிவு செய்வதென்ற வழக்கம் அக்காலத்து மக்களின் ஒற்றுமையையும் ஆளுந்திறத்தையும் நன்கு விளக்கு கின்றதன்றோ? திருவிழா நடக்கும் ஒவ்வொரு நாளிலும் நகரத்தின் பல பக்கங்களிலும் அறவுரைக் கட்டுரைகளும், சமய வரலாற்று ஆராய்ச்சிகளும் நிகழுமென்பது திருவிழாவின் பயனை எவ்வளவு மிகுதிப்படுத்திக் காட்டுகின்றது! கல்வியும், சமய அறிவும் குறைந்துள்ள இக்காலத்தில் திருவிழாக்கள் நடைபெறும் பொழுது இத்தகைய செயல்கள் நிகழுமேல் எவ்வளவு பெரும்பயன் உண்டாகும். இக்காலத்தில் திருவிழாக்களை நடத்தி வைக்கும் அறநிலையத் தலைவர்களும், அறப் புரவலர்களும், பிறரும் இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்பு நம் முன்னோர் செய்து காட்டிய வழிகளை இனியேனும் பின்பற்றி யொழுகுமாறு பெருமான் திருவருள்பாலிப்பானாக! ' பற்றா மாக்கள் தம்முட னாயினும் செற்றமும் கலாமுஞ் செய்யா தகலுமின்'1 என்று இதிற் குறித்திருப்பதை ஒவ்வொரு மதத்தினரும் சிந்தித் துணர்வரேல் திருவிழா நடைபெறும் தூய நாட்களில் கலகமும், கொலையும் நிகழுதற்கு இடனுண்டாமோ? இனி, சங்க காலத்திற்குச் சிறிது பின்னிருந்த சமய குரவர்கள் காலத்தில் தமிழ்நாட்டிலே திருவிழா நடைபெற்றமைக்கு ஓர் மேற்கோள் காட்டி நிறுத்துதும். சைவ சமய குரவர்களாகிய திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் திருநாவுக்கரசரும் அடியார் குழாத்துடன் திருப்பதிகள் தோறும் சென்று இறைவனை வழிபட்டுத் திருப்பதிகம் பாடி வருநாளில், திருப்புகலூரில் எழுந்தருளியிருந்த பிள்ளையார் திருநாவுக் கரசடிகள் திருவாரூரினின்றும் புகலூர் நோக்கி வருவது கேள்வி யுற்று அடியார்களுடன் சென்று எதிர்கொண்டு அளவளாவி 'அப்பரே! நீர் வருநாளில் திருவாரூரிற் றிகழ்பெருமை வகுத்துரைப்பீர்' என்னலும், திருநாவுக்கரசர் திருவாரூரில் திருவாதிரைத் திருவிழா நடந்த சிறப்பினை ஒரு திருப்பதிகத்தால் அருளிச் செய்தனர். அதன் பெற்றியை அறிந்து கொள்வதற்குச் சில பாட்டுக்கள் இங்கே காட்டப்படுகின்றன:- " முத்துவி தான மணிப்பொற் கவரி முறையாலே பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள் அத்த னாரூர் ஆதிரை நாளாவதுவண்ணம்"2 " வீதிக டோறும் வெண்கொடி யோடு விதானங்கள் சோதிகள் விட்டுச் சுடர்மாமணிக ளொளிதோன்றச் சாதி களாய பவளமு முத்துத் தாமங்கள் ஆதி யாரூர் ஆதிரை நாளா வதுவண்ணம்"3 " துன்பம் நும்மைத் தொழாத நாள்க ளென்பாரும் இன்பம் நும்மை யேத்து நாள்க ளென்பாரும் நும்பி னெம்மை நுழையப் பணியே யென்பாரும் அன்பன் ஆரூர் ஆதிரை நாளாவது வண்ணம்"4 10. சிந்தாமணியின் நந்தாவொளிகள் அமிழ்தினும் இனிய தமிழ் மொழியாகிய அன்னைக்குப் பேரணிகலன்களாக விளங்குகின்ற ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகவுள்ளது சீவகசிந்தாமணி யென்பது. இதனையியற்றிய ஆசிரியர் திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவராவர். பிற்காலத்திலே விருத்த யாப்பினால் பெருங்காப்பியம் இயற்றிப் போந்த கம்பநாடர் போலும் சீரிய கவிகளுக்கெல்லாம் ஓர் வழிகாட்டியாகவுள்ளது இச்சிந்தாமணி யென்றால் இதன் பெருமைக்கு வேறென்ன சான்று வேண்டும்? எப்பொருளினையும் மெய்ப்பாடு தோன்றக்கூறும் இவ்வாசிரியரது திறம் அளவிட்டுரைக்கும் தகைத்தன்று. எவ்வகைச் சுவைகளையும் செவ்விதிற் பெய்து வைத்த கொள்கலம் போன்று விளங்கும் இக்காப்பியத்தைத் தமிழறிந் தோர் யாவரும் கற்று இன்புறுதல் வேண்டும். உமாபதி சிவாச் சாரியார் போலும் சில பெரியோர்கள் இதனை யிழித்துரைத்தது மதக் கோட்பாடு பற்றியேயன்றி, செய்யுட் சுவை முதலியன பற்றியன்றென்க. மாணிக்கவாசகரை வீட்டின்றன்மையை நன்கு உணர்ந்தோரெனக் கூறிய நச்சினார்க்கினியார்தாமே இதற்கு உரை செய்திருக்கின்றார்! வீடு பேற்றின் இயல்பினை விளக்க நேர்ந்துழி அற்றது பற்றெனி லுற்றது வீடு என்பது முதலிய திருவாய் மொழிப் (1-25) பகுதிகளையெடுத்துக் காட்டிய சீரிய வைணவரான பரிமேலழகரும், (திருக்.349 உரை) சிவஞானபோதம் முதலிய சைவ சித்தாந்த நூல்கட்குப் பேருரையும், சிற்றுரையும் முதலியன வகுத்தருளிய மாதவச் சிவஞான யோகிகளும் முதலாயினார் சிந்தாமணியிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாண்டிருக்கின்றனரே! இவ்வாறிருக்கவும் இக்காலத்துச் சமயப்பற்றினர் என்போரிற் சிலர் அதனைக் கண்ணால் நோக்குவதும் இழுக்குடைத்தென்று கருதுவது தாம் அதன்கண் நுழைந்து செல்லும் மதிவலி பெற்றிராமை பற்றியே போலும்! இனி, சிந்தாமணியிலே கற்பனை நயஞ்சிறந்து சுவை கெழுமி விளங்குவனவும், அரும்பெரு நீதிகளை அறிவுறுத்துவனவுமாகிய பாடல்களிற் சிலவற்றைத் திரட்டி வெளிப்படுத்தல் கற்போர்க்குத் தமிழிலே ஆர்வத்தை யெழுப்பி நலம் பயக்கு மென்று கருதி, அங்ஙனம் புரிய ஒருப்படுகின்றேன். இதற்கு நச்சினார்க்கினியார் எழுதியுள்ள உரை மிகச் சீரியதாயினும் இலக்கிய இலக்கணங் களை நன்கு பயின்றவர்களுக்கே அது பயன்படக் கூடும். ஆதலின் இங்கே தொகுக்கலுறும் பாடல்களை எளிய பொழிப்புரையுடன் வெளிப்படுத்தல் கடனாகின்றது. நாமகளிலம்பகம். காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென் றிசையால் திசைபோய துண்டே.1 (உரை) காய்த்தல் மாட்சிமைப்பட்ட தெங்கின் நெற்று விழுதலாலே, கமுகின் உச்சியிலுள்ள பொலிவு மிக்க தேன் போலும் இனிய நீரையுடைய பாக்குத்தாறு கிழிந்து, பலாப்பழம் பிளந்து, தேமாங்கனி சிதறி, வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங்கதம் என்று பெயர் கூறப்பட்டுப், புகழினாலே திசை முழுதும் சென்றதொரு நாடு உண்டென்க. சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம் போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.2 (உரை) நெற்களானவை அரிய சூலையுடைய பச்சைப் பாம்பின் தோற்றம் போல் நேர்மையாகக் கருத்தங்கி, நின்று, குடிப்பிற வாதவர் செல்வம் போன்று தலையை நேரே நிமர்த்தி, மெய்ப் பொருளை ஆராய்ந்த நூற் கல்வியினையுடைய மாந்தரைப்போல் மிகவும் வளைந்து விளைந்தனவென்க. (சொல்-நெல்) நற்றவஞ்செய் வார்க்கிடம் தவஞ்செய் வார்க்குமஃதிடம் நற்பொருள் செய்வார்க்கிடம் பொருள் செய்வார்க்கு மஃதிடம் வெற்ற வின்பம் விழைவிப்பான் விண்ணுவந்து வீழ்ந்தென மற்றை நாடு வட்டமாக வைகு மற்ற நாடரோ.3 (உரை) அவ் ஏமாங்கதம் என்னும் நாடு விண்ணுலகமானது வெற்றியையுடைய தனதின்பத்தை உலகினை விரும்பப் பண்ணுதற்கு மகிழ்ந்து வீழ்ந்த தென்னும்படி, தன்னை யொழிந்த நாடு தனக்கு எல்லையாகப் பொருந்தியிருக்கும். அது வீடுபேறு கருதி நல்ல தவத்தினைச் செய்வார்க்கும் இடம்; அது மறுமை கருதி இல்லறம் நடத்துவார்க்கும் இடம். அது ஞானமாகிய நற்பொருள் பயக்கும் கல்வியைக் கற்பார்க்கும் இடம் இவ்வுலக நடைக்குரிய பொருளினைத் தேடுவார்க்கும் இடமென்க. எண்ணெயு நானமு மிவைமூழ்கி யிருள்திருக்கிட் டொண்ணறுந் துகிற்கிழி பொதிந்துறை கழித்தனபோல் கண்ணிருண்டு நெறிமல்கிக் கடைகுழன்ற கருங்குழல்கள் வண்ணப்போ தருச்சித்து மகிழ்வானாத் தகையவே.1 (உரை) எண்ணெயும் மயிர்ச்சாந்து மென்கின்ற இவற்றிலே முழுகி, இருளைப் பிடித்து நீள முறுக்கி ஒள்ளியநறிய துகிற் கிழியாகிய உறையிலே பொதிந்து, அதினின்று வாக்கப்பட்டவை போல, நோக்கினார் கண் இருளும்படி நெறிப்பு மிக்குக் கடை குழைந்த கரிய விசையையின் கூந்தல்கள் சேடியர் அழகிய பூவால் அருச்சித்து வழிபட்டாலும் வருந்தும் தன்மையன என்க. இவ்வுருவு நெஞ்சென்னும் கிழியின்மே லிருந்திலக்கித் தவ்வுருவு நினைப்பென்னும் துகிலிகையால் வருத்தித்துக் கவ்வியத னோக்கினாற் கண்விடுத்துக் காதனீர் செவ்விதிற் றெளிந்தானாக் காமப்பூச் சிதறினான். 2 (உரை) கூறிய இவ்வுருவை ஒருப்பட்டிருந்து நெஞ்சென்னும் படத்திலே குறித்து, அதனை நினைவென்னும் எழுதுகோலால் உறுப்பு விளங்க எழுதி, தான் கைக்கொண்ட தியானத்தாலே நயனமோக்கம் பண்ணி, அன்பென்னும் நீரைச் செவ்வையாகத் தெளித்து, அமையாத வேட்கையாகிய பூவைச் சிதறினான் என்க. (சச்சந்தன் தன்மாமன் மகளாகிய விசையையின் பேரழகில் ஈடுபட்டு அவளை விரும்பினான் என்பது இங்ஙனம் கூறப்பட்டது) ஆரறி விகழ்தல் செல்லா வாயிரஞ் செங்க ணானும் கூரறி வுடைய நீரார் சொற்பொருள் கொண்டு செல்லும் பேரறி வுடையை நீயும் பிணையனாட் கவலஞ் செய்யும் ஓரறி உடையை யென்றா னுருத்திர தத்த னென்பான். 3 (உரை) (சச்சந்தன் நிமித்திகன் கூற்றை ஏற்றுக் கொள்ளாமை கண்டு) உருத்திர தத்தன் என்பான் பிறரால் இகழப்படாத நிறைந்த அறிவினையுடைய இந்திரனும் அமைச்சர் சொற்பொருளைக் கொண்டு நடக்கும் ; அவனைப்போல் நீயும் அறிவுடையையாயினும் இப்பொழுது இவன் சொல்லைக் கொள்ளாமையால் பெண்மான் போலும் விசையைக்கு அவலஞ் செய்யும் ஓரறிவுடையை ஆயினாய் என்றான் என்க. கோணிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி நீணில மாரியின்றி விளைவஃகிப் பசியு நீடிப் பூணணி மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி ஆணையிவ் வுலகுகேடா மரசுகோல் கோடி னென்றான்.1 (உரை) அரசன் நீதி செலுத்துவதிற் பிறழ்வானாயின், கோள்கள் நிற்கும் நிலைகுலைந்து, இரவின் நாழிகை குறையப் பகற் பொழுதுகள் மிக்கு, மழையில்லாது, நீணிலம் விளைவு சுருங்கி, பசி மிக்குப் பூணணிந்த மகளிருடைய அழகிய கற்பழிந்து, அறச்சாலைகளும் இன்றி, இவ்வுலகு கெடாநிற்கும்; அரசன் ஆணையென்றான் என்க. (கட்டியங்காரன் தன்னை அரசனாக்கிய சச்சந்தனைக் கொல்லக் கருதியபொழுது தருமதத்தன் என்னும் அமைச்சன் இருவர் பிழையையும் உட்கொண்டு கூறியது இது) சாதலும் பிறத்தல் தானும் தம்வினைப் பயத்தி னாகும் ஆதலும் அழிவு மெல்லா மவை பொருட் கியல்புகண்டாய் நோதலும் பரிவு மெல்லாம் நுண்ணுணர் வின்மை யன்றே பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான்.2 (உரை) வளையலணிந்த தோள்களை யுடைய நங்காய் இறத்தலும் பிறத்தலும் ஆதலும் அழிதலும் ஆகிய எல்லாம் தம் வினைகளின் பயனாலுண்டாகும் அவ்வாறிருக்க, இறத்தற்கும் அழிதற்கும் துன்புறுவதும், பிறத்தற்கும் ஆதற்கும் இன்புறுவதும் அறிவின்மை யன்றே? வினைப்பயனுறுதல் பொருட்கு இயல்பாதலை உணரா மையின் நீ பெரிதும் அறிவுடையை யல்லை என்றான் என்க. (அமைச்சனாயிருந்த கட்டியங்காரன் அரசனாகிய சச்சந்தனைக் கொல்லுதற்கு மாளிகையை முற்றுகையிட்ட பொழுது வருந்து தலுற்ற விசையை யென்னும் தன் மனைவிக்கு அரசன் கூறியது இது. வருகின்ற பாட்டும் அது) தொல்லைநம் பிறவி யென்ணில் தொடுகடல் மணலுமாற்றா எல்லைய அவற்று ளெல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கிச் செல்லுமக் கதிகள் தம்முட் சேரலம் சேர்ந்து நின்ற இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே யிரங்கல் வேண்டா. 3 (உரை) பழைய நம் பிறப்பை யெண்ணின் கடலின் மணலும் உறையிடப் போதாத அத்துணை மிகுதியுடையன, அப் பிறவியு ளெல்லாம் நாம் யாதும் சம்பந்த முடையோமல்லோம். இனி இவ்வுடம்பினின்றும் நீங்கிச் செல்லும் கதிகளிலும் சேர்தல் ஒரு தலையன்று. ஆதலின் இப்பொழுது சேர்ந்து நின்ற இரண்டு நாள் உறவை உறவாகக் கருதி அதற்கு இரங்க வேண்டா என்றான் என்க. உண்டென வுரையிற் கேட்பார் உயிருறு பாவ மெல்லாம் கண்டினித் தெளிக வென்று காட்டுவாள் போல வாகி விண்டொட நிவந்த கோயில் விண்ணவர் மகளிற் சென்றாள் வெண்டலை பயின்ற காட்டுள் விளங்கிழை தமியளானாள்.1 (உரை) வானை யளாவிய மாளிகையில் தேவமாது போல நல் வினையின் வண்ணமாய் இன்பம் நுகர்ந்திருந்த விசையையானவள். இப்பொழுது உயிர்கள் துய்க்கும் பாவம் உண்டென்று நூல்களிற் கேட்போ ரெல்லாம் இனி என்னைக் கண்டு தெளிவீராக வென்று உலகத்திற்குக் காட்டுவாள் போலத் தான் தீவினையின் வண்ணமாய்க் காட்டிலே தமியளானாள் என்க. (விசையை யானவள் மயிற்பொறி யேறிச் சென்று நள்ளிருளில் புறங்காட்டை யடைந்திருந்தமை குறித்துக் கவி சொல்லியது இது.) வெவ்வா யோரி முழவாக விளிந்தா ரீமம் விளக்காக ஒவ்வாச் சுடுகாட்டுயரரங்கின் நிழல்போல் நுடங்கிப் பேயாட எவ்வாய் மருங்கு மிருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வாறாகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க் கியல்வேந்தே.2 (உரை) புறங்காட்டிலே மகன் பிறந்த பொழுதில் விசையையானவள் மகனைப் பார்த்து நம் கோமானானவன் பன்னீராண்டு கறை விடுங்கள், அறச்சாலையும் கோயில்களும் நிறுவுங்கள், சிறைப் பட்டவர்களை விட்டு விடுங்கள், கரு'd2வூலத்தைத் திறந்து ஊர் தோறும் கொண்டு போய் ஏற்போர்க்கு கொடுங்கள், நகரில் பண்டசாலைக ளெல்லாம் திறந்து ஏழு நாள் வரையில் யாரும் ஆடை அணி முதலிய எவற்றையும் எடுத்துக் கொள்ளுமாறு விடுங்கள், என்று இங்ஙனம் அறிவித்தும் யானைகளும் நவமணி களும் பட்டாடைகளும் புலவர்களுக்கு வழங்கியும், மற்றை அரசர்க்கெல்லாம் திருமுகம் போக்கியும் கணிகளாற் பிறப்பேடு செய்வித்தும் மகிழுமாறு பிறக்க வேண்டிய நீ, வேந்தே! கொடிய வாயை யுடைய ஓரியின் குரல் முழவோசையாகவும், இறந்தவர் களின் ஈமச்சுடர் விளக்காகவும், பிறந்தார்க்கு ஒவ்வாத சுடுகாடாகிய அரங்கிலே பேய்கள் நிழல்போல் அசைந்து கூத்தாடவும், கூகைகள் எவ்விடத்து மிருந்து குழறிப் பாராட்டவும் ஓ! ஓ! தீவினையேன் காண்டற்காகப் பிறக்குமாறு இத்தன்மைத்தாய் இருந்தது. இதுவோ அரசர்க் கியல்பு கூறாய் என்றாள் என்க. பற்றா மன்னன் நகர்ப்புறமால் பாயல் பிணஞ்சூழ் சுடுகாடால் உற்றா ரில்லாத் தமியேனால் ஒதுங்க லாகாத் தூங்கிருளால் மற்றிஞ் ஞால முடையாய்நீ வளருமாறு மறியேனால் எற்றே யிதுகண் டேகாதே யிருத்தி யால்என இன்னுயிரே.3 (உரை) இவ்வுலக முடையாய் நீ கிடக்கின்ற இடம் பகைவனது நகர்ப் புறமாய் இரா நின்றது; நினது பாயல் பிணஞ் சூழ்ந்த சுடுகாடாய் ஓர் துணையுமில்லாத் தமியேனாய் இரா நின்றேன்; நின்னை அப்பாற் கொண்டு போகக்கருதின் போகலாகாத செறிந்த இருளாயிரா நின்றது; மேல் நீ வளருமாறும் அறியேனாயிரா நின்றேன் என்று பிள்ளையை நோக்கிக் கூறி, எனது கொடிய உயிரே! நீ இதை யெல்லாம் கண்டும் போகாது இராநின்றாய்; இதற்குக் காரணம் என் என்று கூறினாள் என்க: அறிவினாற் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற நெறியினைக் குறுகி யின்ப நிறைகட லகத்து நின்றார் பொறியெனும் பெயர ஐவாய்ப் பொங்கழ லரவின் கண்ணே வெறிபுலங் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் நின்றார்.1 (உரை) அறிவினாற் பெரிய இயல்பினை உடையராயினார் வினை கழிய நின்ற நன்னெறியினைக் குறுகி நிறைந்த இன்பமாகிய கடலகத்தே நின்றனர். வேட்கை யென்னும் நஞ்சினையுடைய உடம்பென்னும் பாம்பிடத்தில் பொறி யென்னும் பெயரையுடைய ஐந்து வாயிடத்தே களிப்பைச் செய்கின்ற பொருள்களிலே அடிப்பட்டு நின்றோர் துன்பமாகிய கடலுளே அழுந்தினார் என்க. (இதுவும் பின்வரும் பாடல்களும் சீவகனுக்கு ஆசிரியன் கூறிய உறுதி மொழிகளாகும்) கூற்றுவன் கொடியனாகிக் கொலைத்தொழிற் கருவி சூழ்ந்து மாற்றரும் வலையை வைத்தான் வைத்ததை யறிந்து நாமும் நோற்றவன் வலையை நீங்கி நுகர்ச்சியி லுலக நோக்கி ஆற்றுறப் போதல் தேற்றாம் அளியமோ பெரிய மேகாண்.2 (உரை) கூற்றுவன் கொடியவனாய்க் கொலைக்கருவியை ஆராய்ந்து தடுத்தற்கரிய வலையை வீசி வைத்தான். அதனை அறியத்தக்க நாமும் அறிந்து தவஞ்செய்து அவன் வலையினின்றும் தப்பிப் பேரின்ப உலகத்தை நோக்கி நெறிப்படப் போதலைத் தெளியாதிருக்கின்றேம். இத்தகைய நாமும் ஓ! ஓ! பெருமை யுடையமே காண் என்க. பேரஞ ரிடும்பை யெல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும் ஆரமிர் தரிதிற் பெற்றாம் அதன்பயன் கோடல் தேற்றாம் ஓருமைம் பொறியு மோம்பி யுளபகல் கழிந்த பின்றைக் கூரெரி கவரும் போழ்திற் கூடுமோ குறித்தவெல்லாம். 3 (உரை) பெரிய துன்பத்தை யெல்லாம் நீக்குதற்குக் காரணமான பிறப்பறுக்கும் மனிதயாக்கையைத் தவப்பயனாற் பெற்றாம்; பெற்றும் அதன் பயனைக் கொள்ள அறிகின்றிலேம். ஐம்பொறி களையும் ஐம்புலன்களாலே பேணி உள்ள நாள் சென்றால் நெருப்பானது உடம்பைக் கவரும் பொழுது நினைத்த அறமெல்லாம் செய்யக் கூடுமோ? ஓர்ந்து பாரும் என்க. தழங்குரல் முரசிற் சாற்றித் தத்துவந் தழுவந் வேண்டிச் செழுங்களி யாளர் முன்னர் இருளறச் செப்பினாலும் முழங்கழல் நரகின் மூழ்கு முயற்சிய ராகி நின்ற கொழுங்களியுணர்வி னாரைக் குணவதங் கொளுத்தலாமோ.1 (உரை) எல்லாரும் தத்துவ நெறியைத் தழுவுதல் வேண்டிப் பிரகிருதியில் மயங்கிக் கிடப்பார் முன் முரசறைந்து இருள் தீரச் சொன்னாலும் அது கொள்ளாது, முழங்குகின்ற அழல் வடிவாய நரகத்தின் மூழ்கும் முயற்சியராகும் மருண்ட அறிவினர்க்குச் சீலம் கொளுத்தலாகுமோ என்க. காட்சிநன் னிலையில் ஞானக் கதிர்மணிக் கதவு சேர்த்திப் பூட்சிசாலொழுக்கமென்னும்வயிரத்தாழ் கொளுவிப்பொல்லா மாட்சியில் கதிக ளெல்லா மடைத்தபின் வரம்பி லின்பத் தாட்சியி லுலக மேறத் திறந்தனன் அலர்ந்த தாரான். 2 (உரை) மலர்ந்த பூமாலையையுடையனாகிய சீவகன், அவனைச் சரணடைந்து, காட்சியாகிய நல்ல நிலையில் ஞானமாகிய ஒளி பொருந்திய மணிக் கதவினைச் சேர்த்தித் திட்பம் அமைந்த ஒழுக்கமென்கிற வயிரத்தாழைக் கொளுவி, மாட்சியில்லாத பொல்லாத தீக்கதிகளை யெல்லாம் அடைத்த பின்பு, எல்லை யில்லாத இன்பத்தையுடைய வீட்டுலகத்தை அடையுமாறு வழி திறந்தான் என்க.  11. பரஞ்சோதி முனிவரும் திருவிளையாடலும் இவர் ஏறக்குறைய 280 ஆண்டுகளின் முன்பு, சோழ மண்டலத்திலே, திருமறைக்காட்டில், வழி வழிச் சைவர்களாகிய அபிடேகத்தர் மரபில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவர்க்குப் புதல்வராய்த் தோன்றியவர்; தந்தையாரிடத்தில் முறையானே தீக்கைகள் பெற்று, தமிழிலும் வடமொழியிலுமுள்ள பலவகையான அரிய நூல்களையுங் கற்றுத்துறை போயவர்; சிவபத்தி அடியார் பத்தி மிக்கவர்; அங்கயற் கண்ணம்மையின் திருவடிக்கு மிக்க அன்பு பூண்டவர்; இவர் சிவபெருமான் திருக்கோயில் கொண்டிருக்கும் திருப்பதிகள் பலவற்றுக்கும் சென்று, மதுரையை அடைந்து கயற்கண் இறைவியையும் சோமசுந்தரக் கடவுளையும் நாடோறும் தரிசித்து வழிபட்டுக் கொண்டு அப்பதியில்வதியும் பொழுது, மீனாட்சி தேவியார் தமக்குக் கனவிலே தோன்றி 'எம்பெருமான் திருவிளை யாடல்களைப் பாடுவாய்' என்று பணிக்க, அப்பணியைத் தலை மேற் கொண்டு இந்நூலைப் பாடி முடித்து, சொக்கேசர் சந்நிதியில் அறுகாற் பீடத்திலிருந்து, அடியார்களும் புலவர்களும் முதலாயினார் கூடிய பேரவையில் இதனை அரங்கேற்றினர் என்று பெரியோர் கூறுவர். இவர் காலம் 400 ஆண்டுகளின் முன்பா மென்றும், 850 ஆண்டுகளின் முன்பாமென்றும் இங்ஙனம் வேற்றுமைப்படக் கூறுவாருமுளர்; ஒருவர் கூற்றும் ஆதரவுடன் கூடியதன்று; தக்க சான்று கிடைத்த வழியே இது துணிதற்குரிய தாகும். இவரியற்றிய வேறு தமிழ் நூல்கள் வேதாரணியப் புராணம், திருவிளையாடற் போற்றிக்கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி என்பன. திருவிளையாடற் புராணத்திலுள்ள மாணிக்கம் விற்ற படலம், கால் மாறியாடிய படலம், நரி பரியாக்கிய படலம் என்பவற்றை நோக்குழி இவ்வாசிரியரது அருங்கலை யுணர்ச்சியின் பரப்பு வெளிப்படும். தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களிலும், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய சங்கச் செய்யுட்களிலும், ஐம்பெருங்காப்பியங்களிலும், தேவாரம் முதலிய பன்னிரு திருமுறைகளிலும், மெய்கண்ட நூல்கள் முதலியவற்றிலும் இவ்வாசிரியர் நல்ல பயிற்சியுடையவர். பரஞ்சோதி முனிவரியற்றிய இத்திருவிளையாடற் புராணத் திற்கு முதனூல் வடமொழியிலுள்ள ஆலாசியமான்மியம் என்றும், இது பதினெண்புராணங்களிலொன்றாகிய காந்தபுராணத்தின் ஓர் பகுதியாம் என்றுங் கூறப்படுகின்றது. தல மான்மியங்களைப் பதினெண் புராணங்களிலொன்றனோடு இயைத்துரைப்பது அவற்றின் பெருமையை மிகுத்துக் காட்ட வேண்டுமென்னும் கருத்தினாலாம் என்பது நல்லறிவு டையாரனை வர்க்கும் உடன்பாடாகும். யாதானும் ஒரு தமிழ் நூல் ஆரியத்தினின்று மொழிபெயர்க்கப் பட்டதானால் மட்டும் யாவரும் ஒத்துக்கொள்ளத்தக்க பெருமையுடையதாம்; அதுவும் வேத ஆகமபுராண இதிகாசங்களில் ஒன்றைச் சார்ந்ததாகவும், பின் நிகழப்போகிற வரலாறுகளை முன்னரே கூறி வைத்ததாகவும் இருக்க வேண்டும்; என்னும் இத்தகைய போலிக்கொள்கைகள் பிறருடைய பழக்கங் காரணமாகச் சென்ற சில நூற்றாண்டுகளிலிருந்த தமிழ் மக்களிடையே தோன்றின. அவை தமிழ் நூல்கள் சில மறைந்தொழியும்படி வடமொழி மூலம் இன்றென்று புறக்கணித் தொதுக்குமாறும், சில தமிழ் நூல்களை ஆரியத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு அவற்றினின்று இவை வந்தனவென்று காட்டுமாறுந் தூண்டக் கூடியவாதல் காண்க. எனினும், அக்கொள்கைகள் வலியுற்று நின்ற காலத்தில் ஒரு தமிழ்ப் புலவர் அந்நெறியே சென்றிருப்பின், அவர் அவற்றைக் கடக்கும் மதுகையிலராயினாரென்பதன்றி, அவர்மீது வேறு குற்றஞ் சுமத்துதல் சாலாது. இற்றை நாளிலும் அத்தகையோரிருப்பதே பெரியதோர் வியப்பாகும். இன்னோர் இன்னமும் இருக்கின்றனரென்பதனைத் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராண முகவுரை 6-ஆம் பக்கத்தில் மகாமகோபாத்தியாய டாக்டர்.உ.வே.சாமிநாதையரவர்கள் எழுதியுள்ளதனாலறிக. சில ஆண்டுகளின் முன்பு சித்தாந்த நூற்பயிற்சி வாய்ந்தவராயிருந்த ஒருவர் குமரகுருபர சுவாமிகளின் சரித்திரத்தைத் தமிழில் எழுதி வைத்துக் கொண்டு, இதற்கு எப்படியாவது வடமொழியில் மூலம் கற்பித்துவிட வேண்டுமெனத் தாம் எண்ணியதை என்னிடம் கூறியதுமுண்டு! தனித்தமிழ் நூல்களாகிய பெரியபுராணம் போல்வனவற்றைச் சிலர் ஆரியத்தில் மொழிபெயர்த்து வைத்துக் கொள்ள, ஆரியத்தினின்று இவை மொழி பெயர்க்கப்பட்டன வென்று கூறும் ஒன்றிரண்டுபேர் இன்னுமிருக்கின்றனரே. இதிற் கூறப்படும் திருவிளையாடல் களெல்லாம் செந்தமிழ்ப் பாண்டி நாட்டிலே தமிழ் மக்களிடையே தமிழ் மொழியாற் பேசியும் எழுதியும் நிகழ்த்திப் போந்தனவாகலின், இவ்வரலாறுகள் ஆரியத்தில் எழுதப்படு முன்பே தமிழின் இருவகை வழக்கிலும் பயின்றனவாதல் வேண்டு மென்றும், இவற்றை வடநூற் புலவர் அம்மொழியில் எழுதுங்கால் தமிழ் வழக்குக்களை நன்கு அறியாமை முதலிய காரணங்களாற் சில பிறழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் இயல்பென்றும், இந்நூலாசிரியர் வடநூன் மேற்கோளாகக் கதைகளை எடுத்துக் கொண்டனராயினும் பழந்தமிழ் நூல்களின் கருத்துக்களையும் சொற்களையும் தொடர் களையும் எடுத்தமைத்தே இந்நூலை அழகுபெறச் செய்திருக்கின்றன ரென்றும் தமிழ் மக்கள் உணர வேண்டும். கதைகளிற் சில பிறழ்ச்சி நிகழ்ந்திருப்பினும், இந்நூல்களின் நோக்கம், சரித்திரவாராய்ச்சி செய்வதன்றி, முழு முதல்வனாகிய இறைவன் அடியார்களுக்கு எளிவந்து அருள் புரியும் பெருங் கருணைத் திறத்தை உணர்த்தி உயிர்களை உய்வித்தலே யென்பதை உன்னின், அஃதோரிழுக்காகத் தோன்றுமாறில்லை.  12. ஐயவினாவுக்குவிடை செந்தமிழ்ச்செல்வி, 4ஆஞ் சிலம்பு, 12-ஆம் பரலில் ஒருவர் எழுதிய ஐயவினாவைக் கண்டேன். பாண்டிவளநாட்டிற் பாய்கின்ற ஆறு சில நூல்களில் வையை எனவும், சில நூல்களில் வைகை எனவும் வழங்கப் பெறுகின்றது; இவற்றுள் எவ்வாட்சி குற்றமில்லது என்பது வினா. சங்கப் புலவர்கள் பாடித் தொகுத்த எட்டுத்தொகை, பத்துப் பாட்டு முதலியவற்றிலும், சிலப்பதிகாரம் முதலியவற்றிலும் இவ்வியாறு பலவிடங்களிற் கூறப்படுகின்றது; பரிபாடலில் இதற் கென்றே பல பாட்டுக்கள் உள; எவ்விடத்தும் வையை என்னும் பெயரே காணப்படுவது; வைகை என்று ஓரிடத்தும் வழங்கப் படவில்லை. பழைய தமிழ் வழக்குகளை அறியாமையாலோ, வடமொழியில் எழுத நேர்ந்தமை முதலிய காரணங்களாலோ பிற்காலத்தார் சிலர் சில தமிழ்ப் பெயர்களைத் திரித்து வழங்கு வாரும், அங்ஙனம் திரிக்கப்பட்டோ அன்றி மருவியோ வழங்கும் பெயர்களுக்கேற்பக் கதைகள் கட்டிக் கூறுவாரும் ஆயினர். பொதியில் என்னும் தமிழ்ச் சொல்லைப் பொதிகை என்று திரித்து வழங்குதலுங் காண்க. இவ்வாற்றால், பழைய தமிழ் வழக்குடன் பொருந்த வையை என்று கூறுவதே சாலவும் பொருத்த முடைத்து; எனினும், பிற்காலத்துப் பெரியோர் சிலர் தம் கால வழக்கைத் தழுவி ஒரோ வழி வைகை என்று பாடியிருப்பின் அது ஓர் குற்றமாகாதென்க.  13. மார்க்கண்டேயர் அல்லது முயற்சியின் வெற்றி உலையா முயற்சி களைகணா 'd2வூழின் வலிசிந்தும் வன்மையு முண்டே-உலகறியப் பான்முளை தின்று மறலி யுயிர்குடித்த கான்முளையே போலுங் கரி.1 தேவரும் விழையும் நாவலம் பொழிலின் தெற்கின்கண் கடகம் எனப் பெயரிய சிறந்த பதியொன்றுண்டு. அப்பதியிலே அளப்பருத்வத்தினையுடைய குச்சகன் என்னும் அந்தணனொருவன் இருந்தனன். அருமறை பயின்ற நாவினனாகிய கவுச்சிகன் என்பான் அவனுக்கு மைந்தனாவன். அம்மைந்தன் பிறவியாகிய பெருங்கடலைக் கடத்தல் கருதி ஓர் வாவியின் மருங்கெய்தி ஆனேறுயர்த்த அண்ணல் திருவுருவையும் திருவைந்தெழுத்தையும் உன்னி அருந்தவம் புரிந்தனன். அவன் உள்ளம் பேரின்ப அளக்கரில் மூழ்கியிருந்தது. உடலம் அசைவு சிறிதுமின்றி ஆதீண்டு குற்றிபோல் நின்றது. இங்ஙனம் உணவும் உறக்கமும் நீத்து, உயிர்ப்பும் இன்றி, ஓவியமே யென மேவி நோற்குங்கால் அவ்வழி வரும் பல்வகை விலங்குகளும் தத்தம் உடம்பின் கண்டூயம் (தினவு) தீர அவன்மீது உரைத்துச் செல்லா நிற்கும். அன்னான் அதனையும் உணராது தவத்தில் உறைத்து நிற்றலை உவணச் சேவல் உயர்த்தோனாகிய திருமால் உணர்ந்து, வானோர் குழுவுடன் போந்து, அவனது தவத்தைப் புகழ்ந்து, தன் மலர்க்கையால் அவன் உடம்பினை நீவி 'மலையையொத்த மாதவ! இன்று முதல் நின் பெயர் மிருக கண்டூயன் என்பதாகும். பிறைமுடியோன் பேரருள் நின்பால் முற்றுக' என அருள்புரிந்து மறைந்தனன். மாயோன் போயபின்றை அம்மாதவன் அங்கு நின்றும் விரைந்து சென்று, தன் தந்தை முன்பெய்தி அடிபணிந்து நின்றனன். அன்னவன் மகனை மகிழ்வுடன் கண்டு தழுவிக் கொண்டு 'தவத்திடை உற்ற பெற்றியை உரைப்பாய்' என்ன, அவனும் உள்ளவாறுரைத் தனன். அதனைக் கேட்ட தந்தை உவகைமிக்கு 'ஐய, நின்குலத்தவர்க்குள் நின்போலும் நோன்மை எவர்க்குளது? நினக்கும் அரியதொன்றுண்டோ? பாருளார் விசும்பின் பாலார் துறக்கமென்னும் ஊருளார் ஏனை உலகுளார் எல்லாருள்ளும் நின்னையொப்பார் யாருளார்? கறை மிடற்றண்ணலாகிய எந்தை யன்றி நீ புரிந்த நோன்மையைக் காணவல்லார் யாவர்?, எனப் பலவாறு புகழ்ந்து கூறி, இறைவனருளால் ஓர் நினைவுண்டாக, அதனை மைந்தனுக்குரைப்பானாய் 'ஐய, வேதம் முதலிய கலைகள் யாவும் விளம்பியனவும், எவராலும் தள்ளத் தகாதனவுமாகிய நான்கு கடமைகள் மாந்தர்க்கு உள்ளன. அவை ஆசிரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய பிரம சரியமும், இல்லின்கண் கற்புடைய மனைவியோடிருந்து அறத்தினைப் புரிதலாகிய கிருகத்தமும், இல்லைவிட்டுத் தீயோடு வனத்தின்கட் சென்று மனையாள் வழிபடத் தவஞ்செய்தலாகிய வானப்பிரத்தமும், முற்றத்துறந்த யோகவொழுக்கமாகிய சன்னி யாசமும் ஆம். அவற்றுள் முதல் நிலையாகிய பிரமசரியத்தை நீ இன்று காறும் இயற்றினை; பின்னவை இரண்டும் பின்பு செய்யற் பாலவாகலால் அவற்றை இப்பொழுது பேசுதல் வேண்டா; இடையில் வைத்துச் சொல்லப்பட்டதாகிய இல்வாழ்க்கைநிலை என்னும் கடனை ஆற்றுதற்கு நீ இஞ்ஞான்று தொடங்குதல் வேண்டும்' என்றனன். இவ்வுரையினைக் கேட்டலும் கவுச்சிகன் 'எந்தையார் எனக்கு இனியதோர் உறுதி கூறினர்' என அகத்தே நகைத்து, 'மாசற்ற தவத்தினையுடைய நீரும் புதல்வனாகிய ஒருவற்கு இங்ஙனம் விளம்புதல் முறையோ' என மொழிந்து, பின்னரும் தந்தையை நோக்கிக் கூறுவானாய் 'முன்னரே என்னைப் பற்றியுள்ள பாசத்தின் கட்டினையறுக்க வேண்டியயான் அஃதன்றிப் பின்னும் ஒரு பாசத்தாற் பிணிக்கப்படுவேனாயின் இன்னலெனும் ஆழியிடைப்பட்டு இனைதல் அன்றி, தனக்குவமையில்லாதான் தாளினைச் சேர்ந்து மனக்கவலை மாற்றலும் உளதாமோ? தன் கையே பற்றுக்கோடாகத் தவழ்ந்து செல்லும் முடவனொருவன் பின் அதற்கும் பிணியுண்டாக வருந்துதல் போல் யானும் வருந்தக் கடவேனோ? தவத்தினாலன்றிப் பொய்யாய இல்லொழுக்கத் தால் வினையினைப் போக்க முயல்வது உடம்பிலே பொருந்திய அழுக்கை மிக்க தூய நீராலன்றிக்கலங்கற் சின்னீராற் கழுவுதலை யொக்குமன்றோ? ஐம்புலங்களாகின்ற பூதங்களினால் ஈர்க்கப் பட்டு அல்லலுறும் புன்மையேனாகிய யான் மாதரெனும் பேயும் வந்து பற்றியக்கால் யாது செய்வேன்? மின்னற் கொடிபோலும் மகளிரை விரும்பிய வேட்கையானது புவியின்கண் பன்னாளும் துன்பத்தில் மூழ்குவிக்கும்; பின்பு நிரயமாகிய பிலத்தினுள்ளே செலுத்தாநிற்கும்; அஃது எந்நாளில் ஆண்டகையோர்க்கு இன்பம் பயக்குமோதான்? துன்பத்தை நுகரும் வினைத் தொடர்ச்சியுடைய மாந்தர் இன்பம் நுகர்வார்போல் ஏந்திழை யாரிடத்து அகப்பட்டனர்; ஞாளியானது தன்பல் மிக நடுங்கு மாறு தசையில்லாத என்பினைக் கறிக்குமாயின் அதனால் அது பெரியதோர் சுவையைப் பெற்றிடுதலுண்டோ? வேல் போலும் கண்களையுடைய மகளிர் வேட்கை ஒருவர் நெஞ்சிற் புகுமாயின் அது பின்பு நீங்கும் பெற்றியதோ? அஃது எஞ்சுதலின்றி எந்நாளும் உயிரை ஈர்தலால் ஓர்நாள் தானும் நலிதலில்லாத நஞ்சம் அதனின் மிக இனியதாகும். உலகிலே சாதல் பிறப்பென்னும் தடஞ்சுழியிற்பட்டுத் தடுமாறுகின்றவர் மாதர் வலைப்பட்டு மயக்குற்றாரே யல்லரோ? வானவர் முனிவருள்ளும் மகளிராசையால் இடும்பையுற்றோர் எத்துணையராவர்? அவையெலாங் கிடக்க, யான் அம்மடந்தையருடன் கூடிவாழும் ஒழுக்கத்தை விரும்பேன்; இந்திரன் முதலிய இமையவர் பதங்களையும் வேண்டேன்; வாழ்வெனும் கொடிய சிறையின் கண்ணும் வீழேன்; புலன்களால் அழியும் மயக்கினை நீக்கித் தவமென்னும் விழுச்செல்வத்தை யடைந்து இன்புற்றிருப்பேன்' என்றனன். இம்மொழிகளைக் கேட்டலும் தந்தையாகிய குச்சகன் 'ஆ'! உலகமெலாம் மீக்கூறும் நல்லறமாகிய இல்லறத்தினை இவன் நவை என இகழுகின்றான்; நான்மறையின் துணிவையும் கொள்ளு கின்றிலன்; தவமென்னும் மயலினைப் பூண்டான்' என்று துயரமெய்தி, மைந்தனை நோக்கிக் கூறுகின்றான். 'பேரறிவுடையாய்! ஓர் கன்னியை மறைமுறையால் வதுவை பூண்டு குலத்தினை யோம்பக் குமரரைப் பயந்த பின்னன்றோ தவம் புரிந்து வீடு பெறுதலென்பது வழக்காறாகும்? மகளிர் தம் உள்ளப் பரப்பின் ஒருபுறத்தே சிறிது மயக்கமும் தியக்கமும் உடையராயினும் அதன் ஆழத்தே அன்பும் கடைப்பிடியும் தெளிவுமே உடையராவர்; அவர் தம் உறுதியை நீ உணராய்; உலகிலே உயிர் வாழ்க்கையாகின்ற பெருங்கடலுட் செல்லும் ஆடவர் நெஞ்சமாகிய மரக்கலமானது உறுதியற்ற எண்ணமென்னும் சுழற்காற்றால் உந்தப்பட்டு அங்கு மிங்கும் அலைந்து கெடாமல் அறமாகிய துறையின்கண் நிலைபெற நிறுத்தும் நங்கூரமாவது மங்கையர் நிலை யென்பது கடைப்பிடிப்பாயாக; ஒருவற்கு அன்பும் நற்குணமும் உடைய மகளிர் வாழ்க்கைத் துணை வராயின் அவற்கு இல்லதுயாது? இல்லற மென்பது தனக்கென வாழும் விலங்கின்றன்மையுடைய மனக்கோளை நிமிர்த்து, மற்றையர் இன்பமும் துன்பமும் தன்னுடையவாக அன்பு பாராட்டச் செய்து, மெள்ள மெள்ள உள்ளம் விரித்து, பொறுமையையும் அமைதியையும் படிப்படியாகப் புகட்டி, சிந்தையைத்தெளிவித்து, தான் எனும் நினைப்பும் தனக்கெனும் விருப்பும் ஓய்வுறப் புரிந்து, பொங்கித் ததும்பிப் பூரணமாய்க் கிடக்கும் பேரின்ப வெள்ளத்தில் முங்கி மூழ்கும்படி யாரையும் பக்குவஞ்செய்யும் நல்ல பள்ளிச்சாலையாம் என ஓர்வாயாக. உலகிலுள்ள மன்பதை போன்று நீயும் காமவின்பம் நுகர்தற்கேயோ இது கூறினேன்? தாம் புரியும் நல்வினையாலே இறந்த மேலோரின் துன்பத்தைத் துடைத்தற்குரிய மக்களைப் பெறுதற்பொருட்டு ஓர் மாதினை மணத்தல் வேண்டும்; இந்த நன்மைவாய்ந்த இல்வாழ்க்கை நிலையை நீ இந்நாள் காறும் எண்ணாது முதலிற் செய்யற் பாலதாகிய கடன் ஒன்றையுமே செய்து முடித்தனை; பன்னாளாக எதிர் நோக்கியிருக்கும் வானோர்க்கும் அவிமுதலிய சிறப்புக்களைச் செய்யாது நீ இன்னே தவம் புரிதல் கருதற்பாலதோ? விருந்தினரை யோம்பலும், துறந்தார்ப்பேணலும், வறியார்க்களித்தலும், சுற்றந்தழுவலும், ஒப்புரவாற்றலும் என்னும் அறங்கள் செய்யாவழி மக்கட் பிறப்பால் யாருக்கு என்ன பயனுளது? உமையுடன் கூடி உலகுயிர்களை யெல்லாம் பயந்த சிவபெருமான் யாவரும் மடந்தைமாரோடு இல்லறத்திலொழுகப் பணித்துளானன்றே? " தேவரும் முனிவர்தாமும்செங்கண்மால் அயனும்மற்றும் யாவரும் மடந்தைமாரோடில்லறத்தொழுகுந்தன்மை மேவரப் பணித்தானன்றேவிமலையோடணுகிமேனாள் தாவரும் புவன மாதி சராசரம் பயந்த தாணு"1 அவ்விறைவன் செய்த வரம்பினைச் சிதையாதே; உயர்ந்தோர் பலரும் ஒழுகிய வழியை இகழாதே; எனது மொழியைத் தள்ளாதே; வசிட்ட முனியானவன் பொன்போலும் வனப்புடைய அருந்ததி யோடு எஞ்ஞான்றும் பிரிவின்றியிருந்தும் உயரிய தவத்தினை யுடையனாய் உலகிலே போற்றப்பட்டிலனோ? விருப்பு வெறுப்பற்ற தூயோர் நாடொறும் மடவரொடு கூடி முயங்கினும் மாதவம் புரியினும் அவரதுணர்வு சலிப்பின்றி ஒரு பெற்றித்தேயாகும்; தொல்லை முறையால் வரைந்து கொண்ட மெல்லியலோடு கூடி வாழின், தானம் உளதாகும்; அரிதாய தவமும் உளதாகும்; அவரால் எய்தலாகாத தொன்றில்லை. பத்தினிப் பெண்டிர் இருந்த நாட்டிலே வானம் பொய்யாது; வளம்பிழைப்பறியாது; நீணில வேந்தன் கொற்றஞ்சிதையாது; தெய்வமும் அவர் ஏவினசெய்யு மென்றால் ஆண்டகையாருள் அவரை நிகர்ப்பார் யாவர்? " காண்டகைய தங்கணவ ரைக்கடவு ளார்போல் வேண்டலுறு கற்பினர்தம் மெய்யுரையில் நிற்கும் ஈண்டையுள தெய்வதமும் மாமுகிலும் என்றால் ஆண்டகைமை யோர்களும் அவர்க்கு நிகரன்றே"1 ஆயிழையாருடன் கூடியின்புறும் அறத்தை முதற்கண் ஆற்றாது தூய தவநெறியைத் தொடங்குவையேல் வேட்கையென்னும் கொடிய நஞ்சு தலைப்படின் அதனை நான்முகனாலும் விலக்க வொண்ணாதே; இல்லறத்தில் நிற்போர் ஒழுக்கத்திற் சிறிது இழுக்குவராயின் அதனைத் தீர்க்கும் கழுவாயுமுளது; தவஞ் செய்வோர்க்கு அவ்விழுக்கமுண்டாயின் மலையின் உச்சி யினின்றும் தவறுதல் போல உய்தல் அரிதாகும். துன்பமாகிய திரையால் எற்றுண்டு வருந்தும் பிறவிக் கடலினின்று கரையேற வேண்டுமாயினும் அதற்குரிய நாளிலன்றிக் கதுமெனத் துறக்க லாகுமோ? நீ இப்பொழுதே உயரிய தவத்தின்கண் செல்லக் கருதுதல் நிவப்புமிக்க மலையின் குடுமியை அடையும் விருப்புடையார் அதன் சாரலையெய்தி நெறியானே ஏறிச் செல்லாது சேணிலே தாவுதலை யொக்கும். ஆதலால், மைந்தனே! நீ நும் முன்னோர் போல நல்லறமாகிய இல்லறத்தினை நடாத்தி, அதன் பின் துறவினை மேற்கொள்க. அங்ஙனம் புரியின் நினக்கு ஏதம் யாதும் உளதாகாது. இதனை மறுத்துரையல் ஆணை நமது' என்றனன்.  14. பண்டைத் தமிழ்ச்சான்றோரின் வானநூற்புலமை தமிழகத்திலே பழைய நாளில் வானநூல், எண்ணூல், குறிநூல், மருத்துநூல் முதலிய பலகலைகளும் விளக்க முற்றிருந்தன என்பதற்குப் பற்பல சான்றுகள் உள்ளன. அவற்றுள் வானநூல் எங்ஙனம் வளம் பெற்றிருந்ததென்பதனை ஈண்டுச் சிறிது விளக்குதும். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்னும் நல்லிசைப் புலவர் நலங்கிள்ளியென்னும் சோழ வேந்தனைப் பாடிய புறப்பாட் டொன்றில் " செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளி திரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல என்றும் இனைத்தென் போரும் உளரே"1 என்று கூறி, ஞாயிற்றின் தெருவும், இயக்கமும், பார்வட்டமும், திசையும், விசும்பும் என்பவற்றை அளந்தறிதலின் அருமையையும், அவற்றை ஆண்டாண்டுச் சென்று அளந்தறிந்தோர்போல அவை இத்துணை அளவையுடையனவென்று வழுவின்றுரைக்கும் அறிவுடையோரும் தமிழகத்திலே உளரென்பதனையும் புலப்படுப்பாராயினர். வான நூற்குரிய குறியீட்டுச் சொற்கள் தமிழின்கண் மல்கிக் கிடத்தலொன்றானே அக்கலை எவ்வளவு வளர்ச்சியுற்றிருந்ததென்பது புலனாகும். ஒன்பான் கோட்களில் ஞாயிற்றைக் குறிக்க-ஞாயிறு, செங்கதிர், பகலோன், பரிதி, வெய்யோன், என்றூழ், பனிப்பகை, வேந்தன், சான்றோன் முதலிய சொற்களும்; திங்களைக் குறிக்க-திங்கள், அம்புலி, தண்சுடர், நிலவு, அல்லோன், அலவன் முதலியவும்; செவ்வாயைக் குறிக்க-செவ்வாய், சேய், குருதி, ஆரல், அறிவன், நிலமகன், அழலோன் முதலியவும்; புதனைக் குறிக்க-அறிவன், கணக்கன், புலவன், புந்தி, மால், பச்சை முதலியவும்; வியாழனைக் குறிக்க-வியாழன், பொன், அந்தணன், அரசன், அமைச்சன், ஆண்டளப்பான் முதலியவும்; வெள்ளியைக் குறிக்க-வெள்ளி, பளிங்கு. புகர், மழைக்கோள் முதலியவும்; சனியைக் குறிக்க-நீலன், காரி, கரியோன், கதிர்மகன், முதுமகன், முடவன் முதலியவும்; இராகுவைக் குறிக்க-இருள், கரும்பாம்பு என்பனவும்; கேதுவைக் குறிக்க-கொடி, செம்பாம்பு, என்பனவும் தமிழிலே உள்ளன. இருபத்தேழு நாண்மீன்களில் அச்சுவினியைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் இரலை, புரவி, ஏறு, யாழ், தலைநாள், மருத்து நாள் முதலியவாம்; பரணியைக் குறிப்பன காடுகிழவோள், தாழி, அடுப்பு, முக்கூட்டு முதலியன; கார்த்திகையைக் குறிப்பன அறுமீன், அழல், ஆரல், அளக்கர் முதலியன; உரோகிணியைக் குறிப்பன பண்டி, உருள், வையம், ஊற்றால், முதலியன; மிருகசீரிடத்தைக் குறிப்பன மாழ்கு, மான்றலை மும்மீன், நரிப்புறம், பாலை வெய்யோன் முதலியன; திருவாதிரையைக் குறிப்பன செங்கை, யாழ், இறைநாள் முதலியன; புனர்பூசத்தைக் குறிப்பன கழை, கரும்பு, ஆவணம், ஏரி முதலியன; பூசத்தைக் குறிப்பன கொடிறு, வண்டு, காற்குளம், வியாழனாள் முதலியன; ஆயிலியத்தைக் குறிப்பன அரவினாள், கௌவை முதலியன; வேள்வி, வேட்டுவன், கொடுநுகம், வாய்க்கால் முதலியன மகத்தையும்; எலி, கணை முதலியன பூரத்தையும்; மானேறு, கதிர்நாள் முதலியன உத்தரத்தையும்; கைம்மீன், களிறு, ஐவிரல் முதலியன அத்தத்தையும்; நெய்ம்மீன், பயறு, அறுவை, நடுநாள் முதலியன சித்திரையையும்; விளக்கு, வீழ்க்கை வெறுநுகம், மரக்கால், காற்றினாள் முதலியன சோதியையும்; முறம், முற்றில், சுளகு, காற்றினாள் முதலியன விசாகத்தையும்; பனை, புல், தேள், நட்புநாள் முதலியன அனுடத்தையும் துளங்கொளி, தழல், வல்லாரை முதலியன கேட்டையையும் குறிக்கும் தமிழ்ச் சொற்களாம்; மூலத்தைக்குறிக்க அன்றில், வில், குருகு, கொக்கு, தேட்கடை முதலியவும்; பூராடத்தைக் குறிக்க' உடைகுளம், முற்குளம், நீர்நாள் முதலியவும், உத்திராடத்தைக் குறிக்க ஆடி, கடைக்குளம் முதலியவும், திருவோணத்தைக் குறிக்க உலக்கை, முக்கோல், மாயோனாள் முதலியவும், அவிட்டத்தைக் குறிக்கப் பறவை, காக்கை முதலியவும், சதயத்தைக் குறிக்க நீர்நாள், செக்கு, குன்று, போர் முதலியவும், பூரட்டாதியைக் குறிக்க முற்கொழுங் கோல், நாழி முதலியவும், உத்திரட்டாதியைக் குறிக்க மன்னன், அறிவனாள், பிற்கொழுங்கோல் முதலியவும், இரேவதியைக் குறிக்க நாவாய், தொழு, பஃறி, ஆணாள், கடைநாள் முதலியவும் தமிழின்கண்உள்ளன. பன்னிரண்டு இருக்கை (இராசி)களில் மேடத்திற்கு ஆடு என்பதும், இடபத்திற்கு ஏறு என்பதும், மிதுனத்திற்கு இரட்டை என்பதும், கடகத்திற்கு அலவன் என்பதும், சிங்கத்திற்கு மடங்கல் என்பதும், கன்னிக்கு நங்கை என்பதும், துலாத்திற்கு நிறைகோல் என்பதும், விருச்சிகத்திற்குத் தேள் என்பதும், தனுவிற்கு வில் என்பதும், மகரத்திற்குச் சுறா என்பதும், கும்பத்திற்குக் குடம் என்பதும், மீனத்திற்கு மீன் என்பதும். தமிழ்ப் பெயர்களாம். ஆட்டின் மறுபெயர்களாகிய வருடை, உதள், தகர், மறி, மை, முதலியவும், ஆடு என்னும் இருக்கையைக் குறிப்பனவாகும் இங்ஙனமே ஏறுமுதலியவற்றின் மறு பெயர்களையும். நாண்மீன் முதலியவற்றிலே குதிரை, பரி, புரவி என்றாற்போல் வரும் மறுபெயர்களையும், மிதுனத்திற்கு யாழ் என்பதுபோல் இயைபு பற்றி வரும் பிற பெயர்களையும் கொள்க. கோட்களைக் குறிக்கும் சேய், பச்சை, பொன், வெள்ளி, காரி என்னும் பெயர்கள் நிறம் பற்றியும், முடவன் என்பது இயக்கம் பற்றியும், வேந்தன், அறிவன், அந்தணன் முதலியன ஒவ்வோரியல்பு பற்றியும் வந்திருத்தல் காண்க. இங்ஙனமே நாட்கள் முதலியவற்றின் பெயர்க்காரணங்களும் உய்த்தறியற்பாலன. இவையிற்றிலிருந்து பண்டைத் தமிழ்வாணர்கள் கோள், நாள் முதலியவற்றின் இயல்புகளை எவ்வளவு நன்கறிந்திருந்தனரென்பது புலப்படும். வானநூற் சார்பாக மல்கிக் கிடக்கும் இத்தகைய சொற்களை நோக்குழி எத்தகைய கலைகளையும் வேற்றுமொழியின் கலப்பின்றியே தமிழின்கண் இயற்றுதல் சாலுமென்பது தெளிவாகின்றது. இனி, சங்கத்துச் சான்றோராய பழந்தமிழ்ப் புலவர்களின் வான நூற் புலமையினையும், அன்னார் அந்நூற் குறிப்புக்களை அழகிய தமிழ்ச் சொற்களாற்றொடுத்தமைத்திருத்தலையும் சில எடுத்துக்காட்டால் விளக்குதும். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை என்னும் சேரவேந்தன் துஞ்சியபொழுது கூடலூர்கிழார் என்னும் சான்றோர் இரங்கிப் பாடிய அழகிய பாட்டொன்று புறநானூற்றில் உள்ளது. அதில், அவர் 'வானத்தினின்றும் ஒரு மீன் விழுந்தது; அதனைப் பார்த்து யாமும் பிறருமாகிய பல்வேறு வகைப்பட்ட இரவலர் எம்முடைய மலைநாட்டுக்கு வேந்தனாகியவன் நோயிலனாகப் பெறின் நன்றென இரங்கிய நெஞ்சத்துடனே மிக அஞ்சினேம்; அஞ்சினபடியே ஏழாநாள் வந்ததாகலின் இன்று வலியையுடைய யானை கையை நிலத்திலிட்டுத் துஞ்சவும், திண்ணிய வாராற் பிணிக்கப்பட்ட முரசம் கண் கிழிந்துருளவும், உலகிற்குக் காவலாகிய வெண்கொற்றக்குடை கால் துணிந்து உலறவும், காற்றுப்போலு மியல்புடைய குதிரைகள் கதியின்றிக் கிடக்கவும், பகைவரைப் பிணிக்கும் ஆற்றலையும் நச்சினோர்க்கு அளந்து கொடுத் தலறியாத வண்மையையும் உடைய நீலமலை போலும் வேந்தன் தேவருலகத்தை யடைந்தான்' என்று கூறியிருப்பது நெஞ்சினையுருக்கு கின்றது. இப்பாட்டின் முற்பகுதி அவர், அம்மீனானது எப்பொழுது எவ்வுழி எங்ஙனம் விழுந்ததென்பதனைக் கூறியிருப்பது ஈண்டு நோக்கற்பாலது. அது, " ஆடிய லழற்குட்டத்து ஆரிரு ளரையிரவின் முடப்பனையத்து வேர்முதலாக் கடைக்குளத்துக் கயங்காயப் பங்குனியுய ரழுவத்துத் தலைநாண்மீன் நிலைதிரிய நிலைநாண்மீன் அதனெதிரேர்தரத் தொன்னாண்மீன் றுறைபடியப் பாசிச்செல்லாது ஊசிமுன்னாது அளக்கர்த்திணை விளக்காகக் கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே"1 என்பது 'மேடவிராசி பொருந்திய கார்த்திகை நாளின் முதற் காலின்கண் நிறைந்த இருளையுடைய பாதியிரவின்கண், முடப் பனைபோலும் வடிவையுடைய அனுடநாளின் அடியின் வெள்ளி முதலாகக் கயமாகிய குளவடிவுபோலும் வடிவையுடைய புனர் பூசத்துக் கடையின் வெள்ளி எல்லையாக விளங்கப் பங்குனி மாதத்தினது முதற்பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம் அவ்வுச்சி யினின்றும் சாய, அதற்கு எட்டாமீனாகிய மூலம் அதற்கெதிரே எழாநிற்க, அந்த உத்திரத்திற்குமுன் சொல்லப்பட்ட எட்டா மீனாகிய மீருகசீரிடம் துறையிடத்தே தாழ, கீழ்த் திசையிலும் வடதிசையிலும் போகாது கடலாற் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக மிக்க தீப்பரக்கக் காற்றாற் பிதிர்ந்து கிளர்ந்து வானத்தினின்றும் ஒரு மீன் விழுந்தது' என்பது அதன் பொருள். பங்குனி பதினைந்தாம் நாள் கார்த்திகை முதற்காலுடன் கூடிய இருள் செறிந்த பாதியிரவில் ஒரு மீன் மிக்க ஒளியுடன் வட கீழ்த்திசையில் விழுந்ததென்பது இதன் கருத்தாகும். இருபத்தேழு நாண்மீன்களுடன் கூடிய வான வட்டத்தின் மேற்பகுதியிலே பதின்மூன்றரை நாண்மீன்கள் நிலவுறுமாகலின் உத்தரம் உச்சியில் நிற்கும்பொழுது மேல் கோடியில் புனர்பூசத்துக் கடை வெள்ளி வரையிலும் கீழ்க் கோடியில் அனுடத்தின் அடி வெள்ளி வரையிலும் விளங்கு மென்க. உத்தரம் உச்சியினின்றும் சாய, மூலம் எழ என்றமையால் இரவு பதினெட்டரை நாழிகையளவில் மீன் விழுந்தமை பெறப் படும். இதன்கண் மேடத்தைக் குறிக்க ஆடு என்னுஞ் சொல்லும், கார்த்திகையைக் குறிக்க அழல் என்பதும், அதன் ஒரு காலைக் குறிக்க குட்டம் என்பதும், அனுடத்தைக் குறிக்க முடப்பனை என்பதும், புனர்பூசத்தைக் குறிக்ககுளம் என்பதும் வழங்கி யிருத்தலும், தலை நாண்மீன் முதலியன உத்தரம் முதலியவற்றைக் குறிப்பின் உணர்த்தலும், நாண்மீன்களில் இன்னது இன்னுழியிருக் குங்கால் இன்னது இன்னுழியிருக்குமென வரை செய்தலும் போல்வனவற்றிலிருந்து அற்றை நாளில்வான நூலானது கருதியவாறு தடையின்றிச் செய்யுளிலமைக்கும் வண்ணம் அத்துணைப் பயிற்சி உடைத்தாயிருந்ததென்பது போதரும். மீன் விழுந்தமை கொண்டு அரசற்கு இன்னது நிகழுமென நன்கு துணியப்பட்டதைத் தெரிதலானே நிமித்த நூற்பயிற்சியும் மிக்கிருந்தமை புலனாகின்றது. இதிலுள்ள பாசி என்பதற்குக் கிழக்கு என்பதும், ஊசி என்பதற்கு வடக்கு என்பதும் பொருளாம். இனி, வையையாற்றைச் சிறப்பித்துக் கூறும் பதினோராம் பரிபாட்டின்கண் கார் காலத்து மழை பெய்தல் கூறும் வழி அப்பொழுது கோட்கள் நின்ற நிலைமையை ஆசிரியர் நல்லந் துவனார் விளக்கியுள்ளார். அது, " விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப எரிசடை யெழில்வேழம் தலையெனக் கீழிருந்து தெருவிடைப் படுத்தமூன் றொன்பதிற் றிருக்கையுள் உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருடெரி புந்தி மிதுனம் பொருந்தப் புலர்விடியல் அங்கி யுயர்நிற்ப அந்தணன் பங்குவின் இல்லத் துணைக்குப்பா லெய்த விறையமன் வில்லிற் கடைமகர மேவப்பாம் பொல்லை மதிய மறைய வருநாளில் வாய்ந்த பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுன மடைய விரிகதிர் வேனில் எதிர்வரவு மாரி யியைகெனவிவ் வாற்றாற் புரைகெழு சையம் பொழிமழை தாழ நெறிதரூஉம் வையைப் புனல்"1 என்பது, இதன் முதல் மூன்று அடிகளில் இருபத்தேழு நக்கத்திரங் களாலாகிய பன்னிரண்டு இராசிகளும் இடபவீதி, மிதுன வீதி, மேடவீதி எனமூவகை வீதியாக வகுக்கப்பட்டிருத்தல் கூறப் பட்டுளது. நாண்மீன்களும் மதியமும் ஒன்றற்கொன்று நெடுஞ் சேய்மையில் உள்ளவாயினும் வானின்கண் மதிக்கு நேர் பொருந்தும் நாண் மீனே அற்றை நாளாகக் குறிக்கப்படுதலின் 'மதியமொடு விசும்பு புணர்ப்ப' எனப்பட்டது. எரி என்பது கார்த்திகையையும், சடை என்பது திருவாதிரையையும், வேழம் என்பது பரணியையும் குறிக்க, அவை முறையே கார்த்திகையின் முக்காலையுடைய இடபத்தையும், ஆதிரையையுடைய மிதுனத்தையும், பரணியை யுடைய மேடத்தையும் குறிப்பனவாயின. வீதி என்பது தெரு எனவும், இராசி என்பது இருக்கை எனவும் கூறப்பட்டன. இங்ஙனம் மூன்று தெருக்களாக வகுக்கப்படும் பன்னிரண்டு மனைகளில் இன்ன மனையுள் இன்னகோள் இருக்கும் பொழுதில் மழை பொழிந்த தென்பது மேற்கூறப்படுகின்றது. ஆவணித்திங்கள் அவிட்ட நாளில் வெள்ளி இடபத்தையும், செவ்வாய் மேடத்தையும், புதன் மிதுனத்தையும், ஆதித்தன் சிங்கத்தையும், வியாழம் மீனத்தையும், சனியும் மதியும் இராகுவும் மகரத்தையும் கேது கடகத்தையும் சேர, இராகு மதியினைத்தீண்ட, அகத்தியன் என்னு மீன் தன்னிடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்த, முதுவேனிற்குப் பின்னதாகிய கார் காலத்திலே சையமலைக்கண் மழைபெய்ய அதனாற் பெருகிவரும் வையைப்புனல் என்பது அதன் திரண்ட பொருளாம். கார்த்திகை உச்சியினிற்க விடிவது ஆவணித்திங்களின் தொடக்கத்தேயாகலின், ஆதித்தன் சிங்கத்தைச் சேர என்பது 'புலர் விடியல் அங்கியுயர் நிற்ப' என்பதனாற் குறிக்கப்பட்டது. சனியின் இருமனைக்கும் உப்பால் என்றது மீனம் என்றபடி. 'பாம்பு மதியமறைய வருநாள்' என்றது, ஆவணி மாதத்து மதி நிறை நாளாகிய அவிட்டத்தை. எனவே, மதியும் இராகுவும் மகரத்து நிற்க என்பதும், கேது அதற்கு ஏழாமிட மாகிய கடகத்து நிற்க என்பதும் பெறப்பட்டன. ஒன்பான் கோட்களில் மதியமும் பாம்புகளும் ஒழிந்த ஆறுகோட்கள் தத்தம் மனைகளில் நிற்றல் கருதற்பாலது. ஏறக்குறைய ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகளின் முன் ஆவணித்திங்கள் நிறையுவாவில் இங்ஙனம் கோட்கள் நின்றது எவ்வாண்டிலெனக் கணிக்கும் வழி இச்செய்யுள் தோன்றிய காலம் தெற்றெனப் புலப்படும். இதன்கண், வெள்ளி படி மகன் (செவ்வாய்), அந்தணன் (வியாழம்) எனக் கோட்களின் பெயர்களும், ஏறு (இடபம்), வருடை (மேடம்), வில்(தனுசு) என இராசிகளின் பெயர்களும் தமிழ்ச் சொற்களாய் நிற்றல் காண்க. புந்தி, யமன், மிதுனம், மகரம் முதலிய வடசொற்கள் இதன்கட் காணப்படுதல். " வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"1 " சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்"2 என ஆசிரியர் தொல்காப்பியனார் வடசொற்கள் தமிழில் வருமாறு கூறியதற்கேற்ப, வடமொழி வாணர் தமிழ் நாட்டிற் பரவிய காலத்தே தமிழ்ச் சான்றோர்கள் சிற்சில வடசொற்களை மேற்கொள்வாராயினமையான் என்க. இங்ஙனம் ஒரோ வழிக் காணப்படும் வடசொற்கள் தமிழ்ச்சொல் இன்மையாற் போந்தனவல்ல என்பது இவற்றாற் குறிக்கப்படும் பொருள்கள் பிறாண்டுத் தமிழ்ச்சொற்களால் வழங்கப்பெறுதல் கொண்டு அறியப்படும். பிற்காலத்துச் சோதிட நூல் இயற்றிய புலவர்களும். " மறியுடன் எருது மான்பெண் வருகுளிர் மீன்கோல் ஏழும் எறிகதிர் முதலா வுச்சம்" என்றிங்ஙனம் கோட்களும் மனைகளும் முதலியவற்றை இனிய தமிழ்ச் சொற்களால் எளிதிற் கூறிப்போதரலுங் காண்க.  15. அளவைகள் சமய நூல்களிலே பொருள் உறுதியின் பொருட்டுப் பல வகை அளவைகள் கூறப்பட்டுள்ளன. அளவை என்பதற்கு வடமொழியில் பிரமாணம் என்று பெயர். ஒவ்வொரு சமயத்தினரும் சில பல அளவைகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு தம் தம் கொள்கைகளை நிறுவுவர். ஆகவே அளவை யென்பது எல்லா மதத்தினர்க்கும் பொதுவாதல் பெறப்படும். எனினும் சில மதத்தினர் சில அளவைகளை ஒப்புக் கொள்வதில்லை. வேறு சிலர் சில அளவைகளை வரையறுத்துக் கொண்டு பிறவெல்லாம் அவற்றுள் அடங்குமென்று கூறுவர். பொதுவில் இவ்வளவை களை ஆய்ந்துரைப்போர் அளவை வாதியர் எனப்படுவர். கடைச் சங்கப் புலவருள் ஒருவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் இயற்றிய மணிமேகலை யென்னும் தமிழ்க்காப்பியத்தில் சமயக் கணக்கர்தந் திறங்கேட்ட காதை என ஓர் பாட்டு உளது. அதில், பாட்டுடைத் தலைவியும், பௌத்த சமயத்தைச் சார்ந்திருந்தவளு மாகிய மணிமேகலை யென்னும் நங்கை ஓர் மறைமொழியால் முனிவன் உருத்தாங்கிச் சேர மன்னரது வஞ்சிமாநகரத்தை யடைந்து, அங்கே பல சமயவாதிகளும் கூடியிருந்த அவையின் கண்புகுந்து, அவரவர் சமயக் கொள்கைகளை யெல்லாம் கேட்டு அறிந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்ட வாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி என்னும் இவர்களுடைய கோட்பாடுகளை அதில் ஒருவாறு காணலாகும். அவருள் அளவை வாதியானவன் காண்டல், கருதல், உவமை, ஆகமம், அருத்தாபத்தி, இயல்பு, ஐதிகம், அபாவம், பாரிசேடம், சம்பவம் என்னும் இப்பத்தளவைகளால் பொருளின் மெய்ம்மையை அறிந்து கொள்ளல் வேண்டும் என்கின்றனன். அளவைகள் பத்துக்கு மேலும் கூறுவார் உண்டென்றும், அவையெல்லாம் காண்டல், கருதல், உரை என்னும் மூன்றினுள் அடங்குமென்றும் சைவ நூல்கள் கூறுகின்றன. இதனை, " அளவை காண்டல் கருதலுரை யபாவம் பொருளொப் பாறென்பர் அளவை மேலும் ஒழிபுண்மை ஐதிகத்தோ டியல் பெனநான் களவை காண்பர் அவையிற்றின் மேலுமறைவ ரவையெல்லாம் அளவை காண்டல் கருதலுரை யென்றிம் மூன்றினடங்கிடுமே"1 என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தால் உணர்க. இனி, அப் பத்தளவைகளின் இயல்பை இங்கே சுருக்கிக் கூறுவோம். காண்டல் அல்லது காட்சியளவையானது வடமொழியில் பிரத்தியட்சப் பிரமாணம் எனப்படும். இது ஐந்து வகையினதாகும். கண்ணால் நிறத்தினைக் கண்டும், செவியால் ஓசையைக் கேட்டும், மூக்கால் நாற்றத்தை (மணத்தை) உயிர்த்தும், நாவால் சுவையை உண்டும், மெய்யால் ஊற்றினை (ஸ்பரிசத்தை) உற்றும் இன்பமும் துன்பமும் தடையற உணர்வது காட்சியாகும். இதற்கு உயிர், பொறி, நெஞ்சு என்பன ஊறுபாடின்றியும், ஒளி, பொருள், இடம் என்பன பழுதில்லாமலும் இருத்தல் வேண்டும். பொருளுண்மை அளவு சுட்டலும், ஒன்றை மற்றொன்றாகக் காண்கின்ற திரிதலும், இரண்டுபடக் காண்கின்ற ஐயமும் இன்றி, பொருள், பெயர் வகுப்பு, தன்மை, தொழில் என்னும் வேறுபாடுகள் தோன்றக் காண்பதே மயக்கற்ற காட்சியாகும். காட்சியை வாயிற்காட்சி, உளக்காட்சி, தன் நுகர்வுக் (வேதனை) காட்சி, மனஒருமைக்(யோக) காட்சி என நால்வகைப் படுத்துரைக் கின்றனர் சைவர். வாயிற் காட்சியாவது இந்தியப் பிரத்தியஷம்; அஃது உயிரின் அறிவு கண் முதலிய பொறிகளையும், தீ முதலிய பொருள்களையும், (பூதம்) உருவம் முதலிய தன் புலன்களையும் (தன்மாத்திரை) பற்றி நின்று, ஐயம் திரிபு என்னும் குற்றமின்றியும், பெயர், இனம் முதலிய வேறுபாடின்றியும், உருவம் முதலிய ஐம்புலன்களை வேறுபாடின்றி அறிவதாம். உளக்காட்சி மானதப் பிரத்தியக்ஷம் எனப்படும். அஃது ஐம்புலன் சார்ந்து அறிந்த வாயிற்காட்சியானது பின்மறத்தலின்றி நெஞ்சத்தால் நினைக்கப் பட்டு, உறுதியாகி அறிவின்கண் வந்து சேரும் நிலையான வுணர்வாம். தன்வேதனைக் காட்சியானது உளக்காட்சிப் பெருமை பற்றி நிகழும் தூய (சத்துவ) தன்மை முதலியவற்றின் விளக்கமாகிய இன்ப துன்பங்கள் உயிரின் உணர்வுக்குப் புலனாம்படி வருவதாகும். ஒருமைக் (யோகம்) காட்சியாவது அறிவைத் தடை செய்து நின்ற அழுக்குகளை எட்டுறுப் பொருமை நிலையால் (அட்டாங்க யோகசமாதி) வாட்டுதல் செய்து ஒரு காலத்தில் ஓரிடத்தில் இருந்தபடியே மூவிடத்தும் முக்காலத்துப் பொருள்களையும் உணர்வதாகும். கருதல் அளவை அநுமானப் பிரமாணம் எனப்படும். அது, பொது, எச்சம், முதல் என மூவகைப்படும். கருதல் சாதனத்தால் சாத்தியத்தை உணர்வது. பொதுவான கருதலாவது முதலும் பயனுமான(சாதனசாத்தியம்) சேர்க்கை. அதாவது முறையான உடனிகழ்ச்சி யில்லாதிருந்தும் காட்டின்கண் யானை யொலியைக் கேட்டவன் அங்கு யானை உண்டென உணர்தல் போல்வது. எச்சக் கருதலாவது ஆற்றில் வெள்ளம் வரக்கண்டு மேற்கில் மழை பெய்தமையை அறிதல் போல்வது. இது பயனளவை (காரியாநுமானம்) எனவும் படும். முதல் கருதலாவது கருக்கொண்ட மேகத்தைக்கண்டு மழைபெய்யுமெனச் சொல்லுதல் போல்வது. இது முதலானவை (காரணாநுமானம்) எனவும் படும். இம்மூவகை யளவைகளும் முறையே நிகழ்வு, இறப்பு, எதிர்வு, என்னும் முக்காலமும் பற்றி நிகழும் கருதலுக்கும் உயிர், மனம், பொறி என்பன ஊறின்றியிருத்தல் வேண்டும். சிவஞான சித்தியார் முதலை (சாதனத்தை) இயல்பு, காரியம், இன்மை (அநுபலத்தி) என மூவகைப்படுத்துக் கொண்டு, எடுத்துக்காட்டுமுறையே மா என்பது மரத்தைக் காட்டலும், புகை அனலைக் காட்டலும், குளிரின்மை பனியின்மையைக் காட்டலும் ஆம் என்று கூறுகிறது. மற்றும் இக்கருதல் தன் பொருட்டு, பிறர் பொருட்டு எனவும், உடன்பாடு, எதிர்மறை எனவும் பலவகையாகப் பிரிக்கப்படும்; கருதலளவை இன்னும் மிக விரித்துரைக்கற்பாலது; இங்கே சுருக்கப்பட்டது. உவமை அளவை உபமானப் பிரமாணம் எனப்படும். இஃது ஆவினைப்போலும் கவயமா அல்லது ஆமா(காட்டுப்பசு) என்று ஒன்றை மற்றொன்றனோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவது. உரையளவை என்பது சத்தப் பிரமாணம் எனவும், ஆகமப் பிரமாணம் எனவும் கூறப்படும். இது அறிவன் நூலால் துறக்க நரகங்கள் உண்டென அறிதல் போல்வது, ஆகம அளவையைத் தந்திரம், மந்திரம், உபதேசம் என மூவகைப்படுத்துக் கூறுகின்றது சிவஞானசித்தி. அருத்தாபத்தி என்பது தமிழில் பொருள் அளவை எனப்படும். 'எடுத்தமொழி யினஞ் செப்பலு முரித்தே' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற் குறிக்கப் பெற்றுள்ள இனம் செப்புதலே இவ்வளவைக்குப் பொருளாகும். ஆயர்பாடி கங்கையில் இருக்குமென்றால் கங்கைக் கரையில் என்று எண்ணுவதும், கொடுப்பார் உண்டென்றால் கொடாதவரும் உண்டெனக் கருதுவதும் இவ்வளவையாம். இயல்பு என்பது யானைமேலிருந்தோன் ஒன்று தா என்றால் பிறிதொன்று தராது அங்குசத்தைத் தருவது போல்வது. ஐதிகம் என்பது செவியாறலாக வருகின்ற உலகுரை ஆகும். அஃது இந்த ஆலமரத்தில் பேய் உண்டு என்து போல்வது. அபாவம் என்பது இன்மையாகும். அஃது அவ்விடத்து அப்பொருள் இல்லை யென்பதாகும். இன்மையில் பலவகையுண்டு. அவை கேட்டுணர்க. பாரிசேடம் என்பது ஒழிபு எனவும், மீட்சியளவை எனவும் தமிழிற் கூறப்படும். இராமன் வென்றான் என்றால் இராவணன் தோற்றான் என்று கருதுவது இவ்வளவையாகும். மூவரில் இருவர் பொய்யரென்றால் ஒருவன் மெய்யன் என்று அறிவது இது. சம்பவம் என்பது உள்ள நெறி எனப்படும். நாராசத்தின் அசைவினைக் கண்டு காந்தம் உளதென அறிவது இவ்வளவையாகும். 'இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்' (தொல்.சொல்.கிளவியாக்கம்.19) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின்படி காற்று அசையும், தீச்சுடும், நீர் குளிரும் என்பனவெல்லாம் இவ்வளவையாம் என்பர். அளவை பத்தும் ஒருவாறு உரைக்கப்பட்டன.  16. பதிற்றுப்பத்து மூலமும் உரையும் இரண்டாம் பத்து (11) வரைமருள் புணரி வான்பிசி ருடைய வளிபாய்ந்த தட்ட துளங்கிருங் கமஞ்சூ னளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி யணங்குடை யவுண ரேமம் புணர்க்குஞ் சூருடை முழுமுத றடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச் செவ்வா யெஃகம் விலங்குந ரறுப்ப வருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின் மணிநிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து மனாலக்கலவை போல வரண்கொன்று முரண்மிகு சிறப்பினுயர்ந்த 'd2வூக்கலை பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின் கடியுடை முழுமுத றுமிய வேஎய் வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் நாரரி நறவி னார மார்பிற் போரடு தானைச் சேர லாத மார்புமலி பைந்தா ரோடையொடு விளங்கும் வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப் பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்தநின் பலர்புகழ் செல்வ மினிதுகண் டிகுமே கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவு மாரியர் துவன்றிய பேரிசை யிமயந் தென்னங் குமரியோ டாயிடை மன் மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம் தூக்கு - செந்தூக்கு. பெயர் - (அ) புண்ணுமிழ் குருதி. இதன் பொருள்: (7-16.) சிவந்த வாயையுடைய வேல் மாறுபடும் பகைவரை யறுத்தலால் அரிய மார்பு திறந்த புண் உமிழாநின்ற குருதியினாலே நீலமணிபோலுங் கரிய நிறத்தினையுடைய கழியின் நீர் நிறம் மாறுபட்டுக் குங்குமக் கலவை போலுமாறு, அரணினையழித்து, மாறுபாடு மிக்க தலைமையுடனே உயரிய ஊக்குதலை யுடையையாய், பலர் நெருங்கிப் பாதுகாத்த திரண்ட பூக்களையுடைய கடம்பினது காவலையுடைய பரிய அடி துணிபடுமாறு படையினையேவி, வென்று அடிக்கப்படுகின்ற முழங்கும் முரசினைச் செய்த, வெல்லும் போரினையும், நாரானே வடிக்கப்பட்ட கள்ளினையும், ஆரமணிந்த மார்பினையும், போரிலே வெல்லுஞ் சேனையினையும் உடைய சேரலாத! மனாலம் - குங்குமம். போல என்றது போலுமாறு என வினையெச்சப் பொருள்பட்டு நின்றது. 'அருநிறந் திறந்த' என முன் வந்த அடைச்சிறப்பானும். 'மணிநிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, மனாலக் கலவை போல' எனப் பின்வந்த அடைச் சிறப்பானும் இதற்குப் 'புண்ணுமிழ் குருதி' என்று பெயராயிற்று. மாற்றாரது காவன் மரந்தடிதல் மரபு. கடம்பறுத்தது கடலின் கண்ணதோர் திடரினுள் என்பது இப்பத்தி னிறுதிச் செய்யுளானறியப்படும். வென்றி முயற்சியியற்றுவதனை 'கடம்பறுத்தியற்றிய வலம்படு வியன்பணை' (17) எனப் பின் கூறுவதானுமறிக. (21-25.) முண்முருக்கமரங்கள் செறிந்த மலைப்பக்கத்தே தூங்குகின்ற கவரிமான் பரந்து விளங்கும் அருவியையும், நரந்தம் புல்லையும் கனவிற் காணா நிற்கும் அருந்தவர்மிக்குள்ள பெரும் புகழ் இமயமும், தெற்கின் கண்ணதாயகுமரியும் ஆகிய அவற்றுக்கு இடையேயுள்ள மன்னர்களில் தம்மை மீக்கூறுவாரது மறம் கெடும்படி வென்று, 'கவிர்ததை சிலம்பிற் றுஞ்சு' மென்றது ஆண்டு உறையும் முனிவரதாணையானே முருக்கென்னும் முள்ளுடை மரமும், "மயிர் நீப்பின் வாழாக் கவரிமா" (திருக்குறள், 646) என்று சிறப்பிக்கப் பட்ட தன்மயிர்க்கும் வருத்தஞ் செய்யாமையால், அக்கவிர் செறிந்த சிலம்பின்கண்ணே இனிதாக உறங்குமென்றவாறு. 'அருவியொடு நரந்தம் கனவு' மென்றது அவராணையானே பிறவிலங்கானும் மக்களானும் வருத்தமின்றிப் பகற் காலத்துத் தான் நுகர்ந்த அருவியையும் நரந்தத்தையுமே கனவினும் காணுமென்றவாறு. குமரியொடு வென்னும் ஒடு-எண்ணொடு. அவ்வென்னும் வகரவீற்றுப் பெயர் ஆயிடையென முடிந்தது. மன் என்பது அரசென்பது போல் அஃறிணைச் சொல். மண்களில் மீக்கூறு மென்க. 'மதந் தப' என்பது பாடமாயின், வலிகெட என்று பொருள் கூறுக. (1-9) மலையை யொக்கும் அலைகள் பெரிய திவலைகளாக உடையும்படி காற்றுப் பாய்ந்து உழக்கிய அசையா நின்ற பெரிய நிறைந்த சூலினையும், மிக்கபெரிய பரப்பினையும் உடைய கரிய கடலை யடைந்து, பிறரை வருத்துந் தொழிலையுடைய அவுணர்கள் தமக்குப் பாதுகாவலாக உண்டாக்கிய அச்சம் விளைக்கும் மாவினது பரிய அரையினைத் துணித்த பெரிய புகழினையும், கடிய சினத் தினையும், வெற்றியினையுமுடைய முருகவேள் களிற்றினை யூர்ந்தாற்போல, பிசிர் - பிசிராக. கமஞ்சூல் - நிறைந்தநீர்; சூல்போறலாற் சூலெனப்பட்டது. 'அவுண ரேமம் புணர்க்கும் முழுமுத'லென்றது அசுரரெல்லாரும் தம்முட னெதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங்கொண்டிருந்த சாதித்த மாமர மென்றவாறு. அது கீழ்நோக்கிய தென்பது 'கவிழிணர் மாமுதல்' என முருகாற்றுட் போந்தமையா னறியப்படும். 'சூருடை முழுமுதல்' என்பதற்குச் சூரவன்மாத் தனக்கு அரணாகவுடைய மாவின் முதலென்றும், சூரனாதற் றன்மையை யுடைய மாவின் முதலென்றும் பொருள் கூறினும் அமையும். சூரவன்மனே மாமரமாய் நின்றானென்று புராணங் கூறுதலின் சூரனாதற்றன்மையையுடைய மாவெனல் சாலுமாறறிக. முன்னிப்புணர்க்கும் முதல் என முடிக்க. முன்னித் தடிந்த எனமுடிப்பினும் அமையும். (17-20) மார்பின்கண் நிறைந்த பசிய தாரும். ஓடையும் விளங்கா நின்ற வென்றிமிக்க கோட்டினையுடைய பழிக்கப்படாத யானையின பொன்னணிந்த எருத்தத்தின்மேல் இவர்ந்து விளங்கிய நினது பலரும் புகழுஞ் செல்வத்தை இனிதாகக் கண்டேமென்க. விளங்கும் யானை எனவும், நின் செல்வம் எனவும் கூட்டுக. (16) சேரலாத, (25) மறந் தபக் கடந்து (6) வேள்களிறூர்ந் தாங்கு (18) யானை (19) யெருத்தமேல் கொண்டு பொலிந்த நின் (20) பலர் புகழ் செல்வம் கண்டிகு மென மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. இனி, முருகவேள் மாக்கடன் முன்னி மாவினைத்தடிந்து களிறூர்ந்தாங்குஇவனும் கடலின்கண்ணே கடம்பினைத் துமித்து யானை யெருத்த மேல்கொண்டு பொலிந்தனன் என உவமங் கொள்ளலுஞ் சாலும். இதனால் அவன் வெற்றிச் செல்வச் சிறப்புக் கூறிய வாறாயிற்று.  (12) வயவர் வீழ வாளரின் மயக்கி யிடங்கவர் கடும்பி னரசுதலை பனிப்பக் கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே தாரணி யெருத்தின் வாரல் வள்ளுகி 5 ரரிமான் வழங்குஞ் சாரற் பிறமான் றோடுகொ ளினநிரை நெஞ்சதிர்ந் தாங்கு முரசுமுழங்கு நெடுநக ரரசுதுயி லீயாது மாதிரம் பனிக்கு மறம்வீங்கு பல்புகழ் கேட்டற் கினிதுநின் செல்வங் கேட்டொறுங் 10 காண்டல் விருப்பொடு கமழுங் குளவி வாடாப் பைம்மயி ரிளைய வாடுநடை யண்ணன் மழகளி றரிஞிமி றோப்புங் கன்றுபுணர் பிடிய குன்றுபல நீந்தி வந்தவ ணிறுத்த விரும்பே ரொக்கற் 15 றொல்பசி யுழந்த பழங்கண் வீழ வெஃகுபோழ்ந் தறுத்த வானிணக் கொழுங்குறை மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு நனையமை கள்ளின் றேறலொடு மாந்தி நீர்ப்படு பருந்தி னிருஞ்சிற கன்ன 20 நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள் வசையின் மகளிர் வயங்கிழை யணிய வமர்புமெய் யார்த்த சுற்றமொடு 25 நுகர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே துறையும் வண்ணமும் தூக்கும் அவை பெயர்.(8) மறம் வீங்கு பல்புகழ். இ-ள். 1-3 வீரர்கள் மறிந்து வீழும்படி வாளின் பிணக்கத்தாலே கலக்கி நிலத்தினைக் கவராநின்ற சுற்றத்தினையுடைய மாற்றரசு தலை நடுக்குறக் கடம்பின் அடியைத் துணித்த மிக்க சினத்தினை யுடைய வேந்தே, அரில்-பிணக்கம்(பின்னல்). வாளான் அரில்பட மயக்கி என்னலுமாம். 4-9. நினது செல்வம் தார்போலும் புறமயிரைப் பொருந்திய கழுத்தினையும் நீளுதற் றன்மையுடைய கூரிய உகிரினையுமுடைய மடங்கல் வழங்குதலையுடைய மலைப் பக்கத்தே பிற விலங்கு களின் தொகுதியைக் கொண்ட இனமாகிய நிரை நெஞ்சு நடுங்கினாற் போல முரசு முழங்கும் நெடிய நகரின்கண் அரசுகள் துயிலாமல் திசை நடுங்குதற்குக் காரணமான மறப்புகழ் மற்றைப் புகழினும் மிக்க நின்பல் புகழும் கேட்டற்கு இனிதாயிருந்தது. துயிலீயாது-வினைத்திரிசொல். மாதிரம் அரசு துயிலீயாது பனிக்கும் என இடத்து நிகழ் பொருளின்றொழில் இடத்தின்மேல் நின்றது. அரசர்க்குச் சிறந்த மறப்புகழ் மற்றைப் புகழினும் மிக்க பல்புகழ் என்று சிறப்பித்த வதனானே இதற்கு 'மறம்வீங்கு பல்புகழ்' என்று பெயராயிற்று. நின் செல்வம் பல்புகழ் கேட்டற்கு இனிது என்க; பல்புகழுடன் கூடிய செல்வம் என்றவாறு. 9-25. அச் செல்வத்தைக் கேட்குந் தோறும் நின்னைக் காண வேண்டுமென்னும் விருப்புடன், வாடாத பசுத்த மயிரினையும், இளைய வென்றி நடையினையும், தலைமையினையு முடைய இளைய களிற்றியானை கமழுகின்றகாட்டு மல்லிகையால் அரியாகிய வண்டினை யோட்டும் கன்றுடன் கூடிய பெண் யானையினை யுடைய பல குன்றுகளைக் கடந்து வந்து அவ்விடத்தே தங்கிய கரிய பெரிய கற்றத்தினது நெடுநாள் பட்டினி கிடந்தமையா லுண்டாகிய பசியால் வருந்திய துன்பம் ஒழியும்படி, வாளினாற் பிளந்து துணிக்கப்பட்ட வெள்ளிய நிணத்தையுடைய கொழுவிய துண்டங்களாகிற ஆட்டிறைச்சியைப் பெய்து அடப்பட்ட வெண் ணெலரிசியானாய வெள்ளிய சோற்றை மகிழ்ச்சி பொருந்திய கள்ளின் தெளிவுடனே உண்டு, நீரிலே மூழ்கிய பருந்தின் கரிய சிறகினையொத்த மண்ணா லரிக்கப்பட்ட பீறலாகிய துணியைக் களைந்த பின்பு பட்டினாற் செய்த தூய உடையினை அரையில் உடுத்தி, நெளிந்த கரிய கூந்தலையும், வளைந்த மூங்கிலை யொக்கும் மெல்லிய தோளையும் உடைய பழிப்பில்லாத மகளிர் விளங்கிய அணியினை அணிய விரும்பி மெய்ம்மையைப் பொருந்திய சுற்றத்துடனே நுகர்தற்கு நினது பெரிய ஆரவாரத்தையுடைய ஓலக்கத்துச் செல்கின்ற மகிழ்ச்சி இனிதா யிருந்த தென்க. குன்று பல நீந்திப் பழங்கண் வீழ வெண்சோறு தேறலோடு மாந்தி வாலரைக் கொளீஇ வயங்கிழை யணிய இன்னணம் நுகர்தற்கினிது என முடிக்க. கேட்டோறும் என்பதற்கு அச்செல்வத்தை யென வருவிக்க. நூலாக்கலிங்க மென்றது ஒருவர் நூலாநூலாகிய பட்டு நூல் முதலாயவற்றாற் செய்த கலிங்க மென்றவாறு. நூலின் மேலதாய நூலாமை யென்னுந் தொழில் சினையொடு முதற்குள்ள ஒற்றுமைபற்றிக் கலிங்கத்தின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது. நூலாநூற் கலிங்கம் என்பான் நூலென்பதனைத் தொகுத்துக் கூறினா ரென்பாருமுளர். (3) வேந்தே, (9) நின் செல்வம் (8) புகழ் (9) கேட்டற் கினிது (25) நின் பெருங்கலி மகிழ்வு நுகர்தற் கினிதென் வினை முடிவு செய்க. இதனால் அவன்வென்றிச் சிறப்பும், ஓலக்க வினோதச் சிறப்பும் உடன்கூறியவாறாயிற்று.  17. புறநானூற்றின் ஆராய்ச்சி புறநானூறு என்பது சங்கப் புலவர்களால் அருளிச் செய்யப் பட்ட எட்டுத்தொகையுள் ஒன்று. பாரதம் பாடிய பெருந்தேவனார் முதல் கோவூர் கிழார் இறுதியாகவுள்ள புலவர் பலராற் பாடப் பெற்ற நானூறு அகவற்பாக்களையுடையது. இதிலுள்ள பாக்கள் எல்லாம் தமிழுக்கே உரிய அகம் புறம் என்னும் பொருளிலக்கண வகையுள் புறப்பொருளிலக்கணத்தின் திணை துறைகளுக்கு இலக்கியமாக உள்ளவை. இந்நூற் செய்யுட்களிலிருந்து, பழைய நாளில் தமிழகத்திலிருந்து செங்கோலோச்சிய முடியுடைத் தமிழ் வேந்தராகிய சேர, சோழ, பாண்டியர்களில் பலருடைய வரலாறு களையும், பாரி, பேகன், ஆய், அதிகன், காரி, ஓரி, நள்ளி, குமணன் முதலிய வரையா ஈகையினையுடைய வள்ளல்களின் வரலாறு களையும், புலவர் வீரர் முதலானவர்களின் வரலாறுகளையும் அறிந்து கொள்ளலாகும். மற்றும்., அரசரொழுக்கம், ஒற்றுமை, அன்பு, அருள், துறவு, வாய்மை, தவம், கற்பு, நட்பு முதலிய எண்ணிறந்த அறங்களும், பண்புகளும் இவற்றிடை நன்கு விளங்கிக் கிடக்கின்றன. தமிழரின் வரலாறுகளையும், பழம்பெருமைகளையும், பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ளுதற்குச் சிறந்த கருவி யாகவுள்ள நூல்கள் எல்லாவற்றிலும் இது முதன்மையானது. இதனைப் பாடிய புலவர்களில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், எயினர், பொற்கொல்லர், நாகர், கூத்தர், பாணர் முதலிய பல வகுப்பினரும் இருக்கின்றனர். பாடிய பெண்பாலரும் பலராவர். தமிழ் மக்கள் இதனைப் படித்தலால் உயர்ந்த எண்ணங்களும் ஊக்கமும் உடையராவர் என்பதில் ஐயமில்லை. முதற்கண் இதிலுள்ள அரசாங்க ஒழுக்கத்தைப் புலப்படுத்தும் பகுதிகளை எடுத்துக் காட்டுதும். அரசர்பால் அமைந்துள்ள ஒழுக்கங்களைப் புலவர்கள் எடுத்துரைப்பனவும், அரசர்க்கு அவர் அறிவுறுத்துவனவும், அரசர்கள் தாமே கூறுவனவும் ஆகிய மூன்று வகையால் அரசாட்சி முறைகள் புலப்படுகின்றன. நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி என்ற சோழ மன்னனைப் பாடிய ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் 'நீ நின்னை வழிபட்டு ஒழுகுவோரை விரைவில் அறிந்து கொள்வை, பிறர் குற்றங்களை எடுத்துத் தூற்றுவாருடைய மொழியை நம்பமாட்டாய், நீ மெய்யாக ஆராய்ந்து துணியப்பட்ட தீமையை ஒருவன்பாற் கண்டால் அதனை ஒழுக்க நூலோடு பொருந்த ஆராய்ந்து அத்தீமைக்குத் தக ஒறுப்பாய், அங்ஙனம் தீமை புரிந்தோரும் தம் குற்றத்தை ஒப்புக்கொண்டு வந்து பணிந்து நிற்பரேல் முன்னையினும் அவர்மேல் அருள்மிகுந்து அவரை ஒறுக்காது விடுவாய்' என்று கூறுகின்றனர். " வழிபடு வோரை வல்லறி தீயே பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே நீமெய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி அத்தக வொறுத்தி வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே"1 என்பது காண்க. யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்னும் சேரமன்னனைப் பாடுகின்ற குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர், 'தென்றிசைக்கண் குமரியும், வடதிசைக்கண் இமயமும், கீழ்த்திசையிலும் மேற்றிசையிலும் கடலும் எல்லையாக வுடைய நிலத்திலே குன்றும் மலையும் காடும் நாடும் உடையோர் அனைவரும் ஒரு பெற்றியே வழிபாடு கூறக் கொடுமையைப் போக்கிச் செங்கோன்மை பூண்டு, ஆறிலொன்றாகிய இறைகொண்டு, நடுவு நிலைமையைப் பொருந்தித், தடையின்றி உருண்ட ஆணைவட்டத்தால் நிலவுலகம் முழுதையும் ஆண்டோருடைய மரபைக் காத்தவனே' என்கின்றனர். " தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலாவெல்லை குன்றுமலை காடுநாடு ஒன்றுபட்டு வழிமொழியக் கொடிதுகடிந்து கோல்திருத்திப் படுவதுண்டு பகலாற்றி இனிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர் வழிகாவல."2 என்பது அது. மற்றும் அவர் அவ்வேந்தனைப் பிறிதோரிடத்தில், 'பெரிய கடலின் ஆழமும், அகன்ற உலகத்துப் பரப்பும், காற்று இயங்கும் திசையும், வடிவின்றி நிலைபெற்ற வானும் என்னும் இவற்றை அளந்தறியினும் நின் அறிவு அன்பு கண்ணோட்டம் என்பன வரையறுத்தற்கு அரியன; ஆதலால் நின் குடைநிழலில் வாழ்வோர் சோறு சமைக்கும் நெருப்புடன் ஞாயிற்றின் வெம்மை யல்லது வேறு வெம்மை யறியார்; 'இந்திர'வில் அல்லது பகைவரது கொலை வில்லை அறியார்; கலப்பை அல்லது வேறு படைக்கலமும் அறியார்' என்று கூறுகின்றனர். அவ்வாய் மொழி பின்வருவது; " இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத் தகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய காயமும், என்றாங்கு அவையளந்தறியினும் அளத்தற் கரியை அறிவும் ஈரமும் பெருங்கண் ணோட்டமும்; சோறு படுக்குந் தீயோடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே திருவில் அல்லது கொலைவில் லறியார் நாஞ்சி லல்லது படையும் அறியார்"1 இனிப் புலவர் அரசர்கட்கு அறிவுறுத்தும் ஒழுக்கங்களைப் பார்ப்போம். நரிவெரூஉத் தலையார் என்னும் புலவர் இரும்பொறை என்னும் சேரமன்னனைப் பார்த்து, " அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரோ டொன்றாது காவல் குழவி கொள்பவரி னோம்புமதி அளிதோதானே யதுபெற லருங்குரைத்தே"2 என்கின்றனர். இதன் பொருள் அருளையும் அன்பையும் கைவிட்டு நரகத்தையே தமக்கு எப்பொழுதும் இடமாகக் கொள்ளும் தீயரோடு பொருந்தாது, நின்னாற் காக்கப்படும் நாட்டினைக் குழந்தையை வளர்ப்பார் போற் பேணிப் பாதுகாப்பாயாக, அங்ஙனம் காத்தல் யாவராலும் விரும்பத் தக்கதும், அருமையுடையதும் ஆகும்.' என்பது. பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் என்னும் புலவர் பின்வருமாறு அறிவுறுத்துகின்றனர். "கடல் சூழ்ந்த உலகம் முழுதையும்தமது முயற்சியாற் கைக்கொண்டு புகழை உலகத்தில் நிறுத்தி ஆட்சிபுரிந்த வலியோருடைய வழியில் வந்தோனே! நீ மறுமையுலகத்தின்கண் நுகரும் செல்வத்தை விரும்பினும், ஏனை மன்னரை யெல்லாம் வென்று நீயே தலைவனாதலை விரும்பினும், நல்ல புகழை இவ்வுலகத்தே நிலை பெறுத்துதலை விரும்பினும் அதற்குத் தக்க செய்கையைக் கேட்பாயாக. உடம்புகளெல்லாம் உணவை நிலைக்களனாக வுடையன; ஆதலின் நீரை இன்றியமையாத அவ்வுடம்புகட்கு உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள் இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத் தவராவர்; விதையை விதைத்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் புன்புலம் எத்துணை இடமகன்ற தாயினும் அது அரசனது முயற்சிக்குப் பயன்படாதது; ஆதலின் இவ்வுண்மையைக் கடைப்பிடித்து, ஏரி, குளம் முதலிய நீர் நிலைகள் மிகும்படி செய்தோரே மறுமைச் செல்வம் முதலிய மூன்றினையும் தம் பெயருடன் இவ்வுலகத்தில் இசையச் செய்தோராவர்". (புறம்.18) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடுகின்ற வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர், 'கடல் சூழ்ந்த உலகத்தில் மேம்பாடுடைய தமிழ் நாட்டினைப் புரக்கும் மூவேந்தருள்ளும் அரசு என்று கூறப்படுதற்குச் சிறப்புடையது நின்னுடைய அரசே; ஞாயிறு நான்கு பக்கத்திலும் தோன்றினும், வெள்ளிமீன் தென் பக்கத்திற் சென்றாலும் காவிரியானது நீர்வற்றாது பல கால்களாய் வந்து ஊட்டுதலினாலே வேற் படையின் தொகுதி போலக் கரும்பினுடைய வெள்ளிய பூக்கள் அசைந்து கொண்டிருக்கும் நாடு என்று சொல்லப்படுவது நின்னுடைய நாடே; இங்ஙனமாகிய செல்வத்தையுடைய வேந்தனே! நினக்குரிய சிலகருத்துக்களைக் கூறுவேன், நான் சொல்பவற்றைக் கேட்பாயாக! அறக்கடவுளே இருந்து அரசு புரிந்தாற்போல் செங்கோன்மை யுடையராய், முறை கேட்க (நீதி கேட்க) வேண்டுங் காலத்துக் காண்பதற்கு எளியசமயமு முடையராகும் மன்னர், மழைவேண்டுங்காலத்துப் பெய்யப்பெற்றோராவார்; நினதுவெண் கொற்றக் குடையானது வெயிலைமறைப்பதற்குக் கொண்டதோ வெனின் அன்று; அது, வருத்தமுற்ற குடிகளுக்கு நிழல் செய்வதற்காகக் கொள்ளப்பட்டது; போர்க் களத்தில் மாற்றாருடைய படையைப் புறங்கண்டு நின்படை நினக்குத் தருகின்ற வெற்றியும் கலப்பை யுழுத படைச்சாலில் விளைந்த நெல்லினது பயனே; மழை பெய்யுங் காலத்துப் பெய்யா தொழியினும், விளைவு குறையினும், உலகிலே தீயசெயல்கள் நிகழினும் உலகத்தோர் காவலரைப் பழித்துரைப்பர்; நீ, அதனை நன்கு அறிந்தனையாயின் குறளை கூறுவாருடைய உறுதியில்லாத மொழிகளை ஏற்றுக் கொள்ளாமல், உழு தொழில் செய்வாரது குடியைப் பாதுகாத்து, அதனாலே ஏனைக் குடிகளையும் காப்பா யாயின், நின் பகைவரும் நின் அடியைப் போற்றுவர்? என்று அழகுபெறக் கூறியுள்ளார். அது, " அறம்புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறைவேண்டு பொழுதிற் பதனெளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்றோரே; கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயில்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ; (வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக் களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை) வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே; மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கையல்லன செயற்கையிற் றோன்றினும் காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகல் ஞாலம்; அதுநன் கறிந்தனை யாயின் நீயும் நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடு புறந்தருநர் பார மோம்பிக் குடிபுறந்த தருகுவை யாயின்நின் அடிபுறந் தருகுவர் அடங்காதோரே."1 என்பது. இனி இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் என்னும் பாண்டியனைப் பாடுகின்ற மருதன் இளநாகனார் என்னும் புலவர், 'சிவ பெருமானது மூன்று கண்களில் நெற்றியில் விளங்கும் ஒரு கண்போல வேந்தர்களில் மேம்பட்ட மாறனே! யானை, குதிரை, தேர், காலாள் என்கிற நான்கு படையும் மாட்சிமைப் பட்டனவாயினும் அரசரது வெற்றியானது சிறந்த அறநெறியை முதலாக வுடையது; அதனால், இவர் நம்முடையரென அவர் செய்யும் கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாமலும், இவர் நமக்கு அயலாரென்று அவர் இனிய பண்புகளை வெறுத்தொதுக் காமலும், ஞாயிறு போன்ற வீரமும், திங்கள் போன்ற தண்ணளியும், மேகம் போன்ற வண்மையும் உடையையாகி நினது நாட்டில் வறிஞர் என்போர் இல்லையாக நீ நெடுங்காலம் வாழ்வாயாக' என்று கூறியுள்ளார். " கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடையபுகல் மறவரும் என நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்; அதனால், நமரெனக் கோல் கோடாது பிறரெனக் குணங் கொல்லாது ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும் திங்களன்ன தண்பெருஞ் சாயலும் வானத் தன்ன வண்மையும் மூன்றும் உடையை யாகி இல்லோர் கையற நீ, நீடு வாழிய நெடுந்தகை."1 என்பது அது. அறிவுடை நம்பி என்னும் பாண்டி வேந்தனிடம் பிசிராந்தையார் என்னும் புலவர் பெருந்தகை கூறும் அறிவு மொழிகள் மிகவும் போற்றற்பாலன. அவர் 'யானைக்கு விளைந்த நெல்லையறுத்துக் கவளமாகக் கொடுத்தால் ஒருமாவிற் குறைந்த நிலத்தில் விளைந்த கதிரும் பல நாளைக்கு ஆகும்; நூறு செய்யாயினும் யானை தனித்துப் புக்கு உண்ணுமாயின் அதன் வாயிற் புகுவதைக் காட்டிலும் காலால் அழிவது மிகுதியாகும். அவ்வாறே அறிவுடைய அரசன் இறைப்பொருள் கொள்ளும் நெறியை அறிந்து கொண்டால் அவனது நாடு கோடி பொருளைத் தேடிக்கொடுத்து, தானும் மிகவுந் தழைக்கும்; வேந்தன் அறிவு குறைந்தவனாகி நிலையறிந்து உறுதி கூறாமல் அவன் விரும்புவதனையே கூறும் வெறும் ஆரவாரத்தை யுடைய அமைச்சர் முதலானரோடு கூடி அன்பின்றிக் கொள்ளும் பொருளை விரும்புவானாயின் அந்த யானை புகுந்த விளைநிலம்போலத் தானும் உண்ணப் பெறான்; உலகமும்கெடும்' என்கின்றனர். பின்வருவது அவர் வாய்மொழி. " காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும்; நூறுசெறு வாயினும் தமித்துப் புக்குணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்; மெல்லியன் கிழவனாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவு தபவெடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான்; உலகமும் கெடுமே"1 மோசிகீரனார் என்னும் புலவர் 'இவ்வுலகமானது வேந்தனாகிய உயிரை உடையது. அதனால் இவ் வுலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று, நீரும் உயிரன்று, யானே உயிரென அறிதல் படையினையுடைய அரசனுக்குக் கடன்' என்கின்றார். அது, " நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால், யானுயிரென்ப தறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே."2 என்பது. இவ்வாறு அரசர்களை நெருங்கிப் பலதிறப்பட்ட ஒழுக்கங் களையும் எடுத்து இடித்துரைக்கும் புலவர்களின் பெருமையை யாரால் எடுத்தியம்பலாகும்? அரசராயினாரும் " இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரி லானுங் கெடும்."3 என்னும் முதுமொழியை யுணர்ந்து, புலவர்கள் தம்மை நெருங்கி அறிவு, கொளுத்துதற்கு இணங்கியும், அவர்கள் கூறும் அறிவுரைகளால் திருந்தியும் வந்தனர். இனிப் புலவர் முதலாயினார் ஒழுக்கங் கூறுவதைவிட அவ்வரசர்கள் தாமே கூறும் வாய்மொழியிலிருந்து அவர்கள் ஒழுக்கத்தில் எவ்வளவு கருத்துடையராயிருந்தனர் என அறிந்து கொள்வது உறுதி யுடைத்தாகும். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்னும் மன்னன் பகையரசர் பலர் ஒருங்கு சேர்ந்து போருக்கு வந்தவிடத்து வஞ்சினங் கூறுகின்றான். அவன் வஞ்சினமாகக்கூறும் வாய்மொழிகளில் அவனது ஒழுக்கத்தைப்புலப்படுத்தும் பகுதியை மட்டும் இங்கே நோக்குவோம். 'சிங்கம் போற் சினந்து அடங்காத சேனையை யுடைய மன்னர் பலர் சேர்ந்து என்னோடு போர் செய்வோம் என்று சொல்லுவர். அவரைப் போரின்கண் அலறும்படியாகப் பொருது தேருடன் புறங்காட்டி யோடச் செய்யேனாயின், அறம் நிலைதிரியாத அன்பினையுடைய அவைக்களத்தில் அறத்தின் தன்மையை அறியாத ஒருவனை ஏற்படுத்தி முறைதவறிக் கொடுங்கோல் செய்தேன் ஆகுக' என்று கூறுகின்றான். " ஆரம ரலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக; அறனிலை திரியா அன்பின் அவையத்துத் திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தே னாகுக."1 என்பது அவன் வாய்மொழி. இதிலிருந்து அக்காலத்துத் தமிழ் வேந்தர்கள் ஆட்சி நடத்து தற்கு அரசவை அமைத்துக் கொண்டிருந்தன ரென்பதும் அவ்வவையில் அறம் நிலைதிரியாதிருந்த தென்பதும் விளங்குகின்றன. அன்றியும் அரசவையில் அறத்தின் கூறுபாட்டை அறியாத ஒருவனை ஏற்படுத்து தலினாலேயே ஒழுக்கத்திற் பிறழ்ச்சி உண்டாகு மென்பதையும், அதைப்பார்க்கிலும் தனக்கு இழிவு வேறில்லை யென்பதையும் அம்மன்னன் நன்கு உணர்ந்துள்ளமையும் புலனாகின்றது. இனித் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வஞ்சினங் கூறுமிடத்து, 'எனது ஆண்மையை மதியாமல் சிறுமொழி கூறிய பகை வேந்தர்களைப் போரின்கண் சிதறும்படிபொருது, முரசத்தோடு அவர்களைக் கைப்பற்றேனாயின், என்குடை நிழலில் வாழும் குடிமக்கள், எனது கொடுங்கோன்மையால் வருந்தித் தாங்கள் சென்றடையும் நிழல் காணாமல் எம்முடைய வேந்தன் மிகவும் கொடியன் என்று கண்ணீர் விடுத்துப் பழி தூற்றும் தன்மை யுடையேனாகுக' என்கின்றான். பின்வருவது அது, " சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது கொடியன்எம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேனாகுக."2 இதிலிருந்து, குடிகள் வருத்தமுற்றுப் பழிதூற்றுதலை இம் மன்னன் எவ்வளவு வெறுத்திருக்கின்றான் என்பது புலனாகும். இவ்வேந்தனது ஆட்சியிலும் குடிகளுக்கு ஏதேனும் துன்பமுண்டா யிருத்தல்கூடுமோ? உண்டாயின் அதனை இவ்வேந்தர் பெருமான் பொறுத்திருத்தல் கூடுமோ? இங்ஙனம் தாயொக்கும் அன்புடன் குடிகளைப் புரந்துவரும் மன்னரது பெருமைக்கும் ஓர் எல்லை யுண்டே? இனிக் காஞ்சி நகரத்திலிருந்து அரசுபுரிந்த தொண்டைமான் இளந்திரையன் என்னும் வேந்தன் 'அரசாட்சியாகிய வண்டியை நடாத்துகின்றவன் மாட்சிமை யுடையனாயின் அது இடையூறின்றி இனிதாக நடக்கும்; அவன் அதனை இனிதாகச் செலுத்த அறியா னாயின் அந்த வண்டியானது எப்பொழுதும் பகையாகிய சேற்றிலே அகப்பட்டு மிகப்பலவாய துன்பத்தை மேன்மே லுண்டாக்கும்' என்று கூறுகின்றான். பின்வருவது அவன் கூறிய பாட்டு, " கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்; காவற் சாகாடு உகைப்போன் மாணின் ஊறின் றாகி ஆறினிது படுமே; உய்த்தல் தேற்றா னாயின் வைகலும் பகைக்கூ ழள்ளற் பட்டு மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே."1 சோழன் கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியபாட்டில் 'கேடின்றி மறம் பொருந்திய சோழனது உறையூரிலே யுள்ள அவைக்களத்து அறம் நின்று நிலைபெற்றது. ஆதலால் முறைசெலுத்தல் என்பது நினக்கு இயற்கையன்றிப் புகழுமாகாது' என்கின்றார். " மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம்நின்று நிலையிற் றாகலி னதனால் முறைமைநின் புகழு மன்றே."2 இவ்வாறே "அறங்கெழு நல்லவை யுறந்தை யன்ன" என்று வேறு நூலிலும் (அகம்.93) கூறப்படுகிறது. இவ்வாற்றால் தமிழ் நாட்டு வேந்தர் யாவரும் அறநெறி தவறாத அரசவை அமைத்து ஆட்சி நடாத்தினமை இனிது புலனாகும். இனி, அரசியல் நடாத்துதற்கண் அன்றி உலகப்பொது வாழ்விலும் அக்காலத்துத் தமிழ் வேந்தர்கள் மிக விரிந்த மனநிலை யடைந்திருந்தனரென அவர்கள் வாய்மொழியாலேயே விளங்கு கிறது. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் பாண்டி வேந்தன் கூறியதொருபாட்டு பொன்னெழுத்தாற் பதித்து ஒவ்வொரு வரும் போற்றவேண்டிய தாகும். அது, " உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமிய ருண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி யனையராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுநர் உண்மையானே."1 என்பது. இப்பாட்டின் பொருள், 'இவ்வுலகம் உளதாகா நின்றதுயார் இருத்தலால் எனில், இந்திரர்க்குரிய அமிழ்தமானது தெய்வத் தாலோ தவத்தாலோ அருமையாகத் தமக்குக் கிடைப்பதாயினும் அதனை இனிதென்று தனித்து உண்டலும் இலர்; யாரோடும் வெறுப்பின்றி யிருப்பர்; பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அதனைத் தீர்க்காது மடிந்திருத்தலொல்லார்; மெய்யான புகழின் பொருட்டுத் தம்உயிரையும் கொடுப்பர்; பழி வருவதாயின் அதனால் உலகம் முழுதும் கிடைப்பினும் ஏற்றுக் கொள்ளார், எத்தகைய துன்பத்திற்கும் மனங்கவலார், தாம் இடைவிடாது செய்யும் வலிய முயற்சியெல்லாம் தம்பொருட்டாக வன்றிப் பிறர் பொருட்டாகவே செய்வர், இப்பெற்றியுடைய மாண்புடையோர் இருத்தலால் தான் என்க என்பது.  18. குறிஞ்சிப்பாட்டின் உள்ளுறை இப்பாட்டு, 261 அடிகளையுடைய அகவற்பா ஆகும். தமிழ்ச் செய்யுளின் ஓசையமைதிக்குப் பா என்று பெயர். பாவையுடைய செய்யுளும் ஆகுபெயரால் 'பா' என வழங்கப்படுகின்றது. செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் எனச் செய்யுளோசை நான்கு வகைப்படும் செப்பலாவது, ஒருவன் கேட்ப மற்றொருவன் மாறுகூறுவதுபோல் இடையிடை நின்று செல்லும் இயற்கை யோசையாம். அகவலாவது, ஒருவன் தான் கருதியவாறெல்லாம் வரையாது கூற, இடையிடை நிற்றலின்றிக் தொடர்புபட்டுச் செல்லும் இயற்கை யோசையாம். துள்ளலாவது, இசை தோன்றத் துள்ளிச்செல்லும் செயற்கை யோசையாம். தூங்கலாவது, சீர்தொறும் நிறைந்து செல்லும் செயற்கையோசையாம். செப்பலோசையுடையது வெண்பா எனவும், அகவலோசையுடையது அகவற்பா எனவும், துள்ளலோசை யுடையது கலிப்பா எனவும், தூங்கலோசையுடையது வஞ்சிப்பா எனவும் கூறப்படும். இவையன்றிச் செப்பலும், அகவலும் விரவிவருவது மருட்பா எனவும், செப்பலோசையேனும் எல்லாவோசையுமேனும் பெற்றுக் கலிக்குரிய உறுப்புக்களுடையதாய் வருவது பரிபாட்டு எனவும் கூறப்படும். இப்பாட்டு முழுதும் ஒரே தொடர்ச்சியாய்க் செல்லும் அகவலோசை உடைத்தாயிருத்தலின், இது அகவற் பாவாமென்பது அறிக. குறிஞ்சித் திணைக்குரிய பொருள் கூறுதலின், இதற்குக் குறிஞ்சிப்பாட்டு என்று பெயர் கூறினார். உலகத்துப் பொரு ளெல்லாவற்றையும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூவகைப்படுத்துக் கூறுவது தமிழ்நூல்வழக்கு. நிலனும் காலமும் முதற்பொருள் எனப்படும். நீர்,தீ முதலிய மற்றைப் பூதங்களும் நிலனென அடங்கும். பிறபொருளெல்லாம் இவற்றைச் சார்ந்து தோன்றுதலின், இவை முதற்பொருள் எனப்பட்டன. தேவர், மக்கள், விலங்கு, புள், மரம் முதலாயினவும் கருப்பொருள் எனப்படும். நிலத்தினும், காலத்தினும் தோற்றுதலின், இவை கருப்பொருள் எனப்பட்டன. (கரு - தோற்றம்). அவ்வந் நிலத்து மக்கட்கு வேறு வேறாய்த் தோற்றி நிற்றலின், தெய்வமும் கருப் பொருளாயிற்று, மக்கள் எய்தற்பாலனவாகிய அறம். பொருள், இன்பம், வீடு என்பன உரிப்பொருள் எனப்படும். உரிய பொருள் களாகலின் உரிப் பொருள் எனப்பட்டன இவற்றை அகப்பொருள் புறப்பொருள் என இரண்டாக அடக்கிக் கூறுவது தமிழ் நூன்முறை. இன்பம் அகப்பொருள். அறமும் பொருளும் புறப் பொருள். வீடு, அகம், புறம் இரண்டினும் அடங்கும். இன்பம் தானே யுணர்த லன்றிப் பிறர்க்கு இன்ன தன்மைத்தெனக் கூறலாகாமையின், அகம் என்றும், அறமும், பொருளும் பிறர்க்குக் கூறப்படுதலின், புறம் என்றும் பெயர் பெறுவவாயின. இன்பமும் பலவாயினும், ஒருகாலத்து ஒரு பொருளால் ஐம்புலனும் நுகரும் சிறப்புடைய காமவின்பமே இங்குக் கொள்ளப்பட்டது. அவ்வின்பந்தானும், சுவை மிகுதி தோன்ற உலக நடையோடு ஒத்தலும், ஒவ்வாமையும் உடையதாக்கிக் கூறப்படுகின்றது. உருவும், திருவும், பருவமும், குடியும், குணனும், அன்பும், முதலியவைகளால் தம்முள் ஒப்புமை யுடையராய தலைவனும், தலைவியும் பிணி, மூப்பாதியவின்றி நுகரும் இன்பமே அகம் எனக் கூறப்படும் இன்பமென்க. அவ்வின்பத்துக்குக் காரணமாய ஒழுக்கம் அகத்திணை எனப்படும். அது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என எழுவகைப்படும். அறம், பொருளுக்குக் காரணமாய ஒழுக்கம் புறத்திணை எனப்படும். அதுவும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை என ஏழுவகைப் படும். சிற்சில ஒப்புமைபற்றிக் குறிஞ்சி முதலிய அகத்திணை ஏழுக்கும், வெட்சி முதலிய புறத்திணையேழும் முறையே இனமாக ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ளார். அகத்திணையுள், பெருந்திணையும், கைக்கிளையும் அல்லாத ஐந்துமே சிறப்புடையன. குறிஞ்சி யென்பது, கூடலும் கூடல் நிமித்தமுமாம் முல்லை என்பது, பிரிவின்கண் ஆற்றியிருத்தலும், இருத்தல் நிமித்தமுமாம். மருதமென்பது, ஊடலும், ஊடல் நிமித்தமுமாம். நெய்தலென்பது, இரங்கலும், இரங்கல் நிமித்தமுமாம். பாலை யென்பது, பிரிதலும், பிரிதல் நிமித்தமுமாகும் குறிஞ்சி முதலிய திணைகளுக்கு, முதற் பொருளாகிய நிலம், பொழுதுகளும், கருப்பொருளாகிய தெய்வம் முதலியவும் வேறு வேறு வகுக்கப்பட்டுள்ளன. குறிஞ்சிக்கு நிலன் மலையும், மலை சார்ந்த இடமும் ஆம். பெரும் பொழுது ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிர்ப் பருவமும், மார்கழியுந் தையுமாகிய முன்பனிப் பருவமும் ஆம். சிறு பொழுது அப்பருவங்களது இரவின் நடுக்கூறாகிய யாமம் ஆம். கருப்பொருள் முருகவேள் ஆகிய தெய்வமும், குறவர் முதலிய மக்களும், புலி முதலிய விலங்குகளும், மயில் முதலிய புட்களும், வேங்கை முதலிய மரங்களும், மற்றும் இந்நிலத்தினும் காலத்தினும் தோன்றும் பொருள்களும், பிறவும் ஆம். இவ்வாற்றால் இப்பாட்டின்கட் கூறப்படும் பொருள் இவையாதல் வேண்டும் என்றறிக. இவற்றுள் உரிப்பொருள் இன்றேல் பொருட்பேறு இன்றாம் ஆகலின், அஃது ஒருதலையாகக் கூறப்படுவதாம். அதனைச் சிறப்பிக்கவே முதற்பொருள் கருப்பொருள்களும் கூறப்படும். இனி, இப்பாட்டில் உரிப்பொருளின் எப்பகுதி கூறப்படுவது எனவும், இது யார் யாருக்கு எப்பொழுது எவ்வாறு கூறுவதாக இயற்றப்பட்டுள்ளது எனவும் முதற்கண் அறிந்து கோடல் வேண்டும். குறிஞ்சி முதலிய அகவொழுக்கமெல்லாம் களவு, கற்பு என இரு வகைப்படுத்துக் கூறப்படும். இவற்றிற் களவின்றிக் கற்பு நிகழுமா றில்லை யெனவும், களவே சிறப்புடைத்தெனவும் கூறுப. களவாவது, முற்கூறிய உருவும் திருவும் முதலியவற்றால் தம்முள் ஒப்புமையுடையராய தலைவனும் தலைவியும், கொடுப்பாரும் அடுப்பாருமின்றி ஊழ்வகையால் தாமே யெதிர்ப்பட்டு இன்பம் துய்த்து வருவது. முதலில் இவ்வாறு ஒரு பொழிலில் எதிர்ப் பட்டுச் சேர்வது இயற்கை எனவும், அதன்பின் அவர்கள் பிரிந்து சென்று முன்போன்று மீட்டும் அவ்விடத்தே கூடப்பெறின் அஃது இடந்தலைப்பாடு எனவும், பாங்கனாற் கூடப்பெறின் அது பாங்கற் கூட்டம் எனவும் தோழியாற் கூடப்பெறின் அது தோழியிற் கூட்டம் எனவும் கூறப்பட்டுக் களவு நால்வகைப்படும். பாங்கனும் தோழியும் தலை மக்கட்கு உயிர்போற் சிறந்தாராகலின், அவர் களறிவது பிறரறிவதாகாது, தலை மக்களறிவதே போலும் என்க. இப்பாட்டு, இயற்கையும், பின்னிகழும் கூட்டங்களுக்கு நிமித்தமும் கூறுவது என்பர் நச்சினார்க்கினியர். இயற்கையின் பின்பு தோழியிற் கூட்டம் நிகழ்ந்து வருங்கால், இரவுக்குறியிடை யீடுபட்டுத் தலைமகன் பன்முறை வறிதே மீளாநிற்பத் தலைவி ஆற்றாமை பெரிதுடையளாய் உடல் மெலிவுறலானாள். தலைவியின் மேனி இளைத்து வேறுபட்டிருத் தலைக்கண்ட செவிலியானவள், இவ்விளைப்புக்குக் காரணமான நோய் இன்னதென அறியும் பொருட்டுக், குறிசொல்லுவாரை வினாவி, அவர்கள் தெய்வத் தானாயிற்று எனக்கூறலின் தெய்வங்கட்குச் சிறப்புச் செய்து, பின்னும் நோய் நீங்காமை கண்டு வருந்துகின்றாள். அந் நிலையில், தலைவி மேலும் ஆற்றாமையுடையளாய், 'எமக்குள் நிகழ்ந்த இம்மன்றலை நாம் தாய்க்கு அறிவுறுத்தலால் பழியும் வருவதுண்டோ?' என்று தோழிக்கு உணர்த்த, அவள் செவிலிக்கு அறத்தொடு நிற்பதாக, இயற்றப்பட்டுளது இப்பாட்டு. அறத்தொடு நிற்றல் என்பது, தலைவனுக்கும் தலைவிக்கும் நிகழ்ந்த கூட்டத்தை வெளிப்படுத்தல். இந்த நிலைமையில் இதனை வெளிப்படுத்தலே அறத்தொடு பொருந்திய செயலாகலின், இஃது அறத்தோடு நிற்றல் எனப்பட்டது. எனவே, இப்பாட்டிற்குத் திணை குறிஞ்சி எனவும், துறை தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல் எனவும் கொள்க. தோழியானவள், உயர்குடிப் பிறந்த தலைவியது களவொழுக்கத்தை வெளிப்படுத்தும் பொழுது, செவிலிக்குச் சினமுண்டாகாவாறும், தலைவியிடத்தாதல், தன்னிடத்தாதல், தலைவனிடத்தாதல், அவளிடத்தாதல் சிறிதும் குற்றமின்றென அவளுணருமாறும், இங்ஙனம் நிகழ்ந்தது நல்வினைப் பயனேயெனத் தோற்றுமாறும் படைத்து மொழியும் திறப்பாடு பெரிதும் வியக்கத்தக்கதாகும். இப்பாட்டின் பொருளுணரவே, அது நன்கு விளங்குமாதலின், ஈண்டு அதனைச் சுருக்கிக் கூறுகின்றாம். "தாயே! யான் கூறுவதனை விரும்பிக்கேட்பாயாக! நீ தான், ஒள்ளிய நெற்றியையுடைய என் தோழியது இழையினை நெகிழச்செய்த பொறுத்தற்கரிய நோயைக்கண்டு அலமந்து, கட்டினாலும் கழங்கினாலும் அறிந்து குறி சொல்லுவாரை வினாவி, அவர் தெய்வத்தான் வந்த வருத்தமென்றலின் பல்வேறு தெய்வங்களை வழிபட்டும் அதனாற் றீராமையின், இந்நோயை அறியாத மயக்கத்தை உடையையாய் வருந்தா நின்றாய். இவளோ, தனது நல்ல வனப்புக்குன்றவும், தோள்மெலியவும், கூறுதற்கு அருமையாலே தன்மனத்துள்ளே மறைத்திருக்கும் ஆற்றுதற்கரிய நோயினைக் குறித்து யான் நெருங்கிக் கேட்கலுற்ற பொழுது, என்னை நோக்கி, 'முத்தானும், மணியானும், பொன்னானுமியன்ற அருங்கலன் கெட்டதாயினும், பின்னும் வந்து பொருந்தும். அஃதன்றிக், குணங்களின் அமைதியும், மேம்பாடும், ஒழுக்கமும் கெட்டால், உண்டாய மாசுபோம்படி கழுவி, முன்போலப் புகழை நிறுத்தல், குற்றமற்ற அறிவினையுடைய முனிவர்க்கும் எளிய தன்றென்று தொன்னூலறிஞர் கூறுவர். யாங்கள் இருவேமும் ஆய்ந்த மன்றல் இதுவென நாம் தாய்க்கு அறிவுறுத்தின், நமக்குப் புகழன்றிப் பழிவருவது முண்டோ? அஃதில்லையே. இங்ஙனம் வெளிப்படுத்த பின்பு, தலைவர்க்கே நம்மைக்கொடுக்க நேர்ந்திலராயினும், நாம் உயிர் போந்துணையும் இவ்வருத்தத்தைப் பொறுத்திருப்பின், நமக்கு மறுமையினும் இக்கூட்டம் கூடுவ தொன்றாகுமே.' எனக்கூறி, ஆற்றரு நோயினை யுடையாளாய் மையல் நோக்கங் கொண்டு, செயலொழிந்து அயர்ந்து மெலியா நின்றாள். யானுந்தான், மாறுபட்டு அமரிலே மிக்குச் செல்லும் இரண்டு பெரிய அரசரைச் சந்துசெய்விக்கும் தொழிலில் நின்ற சான்றோர் போல, நினக்கும் இவளது வருத்தத்திற்கும் அஞ்சும் இரண்டு பெரிய அச்சத்தாலே வருந்தாநின்றேன். கொடுப்பின் எல்லாவற்றானும் நன்றாகி முடிதலும், குடியும் குணமும், சுற்றத்துதவியும் எனுமிவற்றை ஒப்பித்துப் பார்த்துப் பலருடனும் எண்ணாமலும், நும்மையின்றியும் யாங்களே துணிந்த உயிர்க்குப் பாதுகாவலான, இவ்வரிய மணம் முன்பு நிகழ்ந்த வாற்றை நீ நன்றாக வுணரும்படி கூறுதற் கமைந்தேன். அது கேட்டுச் சினவா திருப்பாயாக! தாயே! நீ தான், 'விளைந்த தினையின் கண் வீழும் கிளிகளை யோட்டி, மாலைப்பொழுதில் வருவீராக'. எனச் சொல்லி, எம்மை அனுப்புகையாலே, யாங்களும் சென்று மரத்தி னுச்சியில், இரவு காத்திருப்போன் பண்ணின, புலி யஞ்சும் பரணிலேயேறிக், கவணும் தட்டையும் முதலியவற்றை முறை முறை கைக்கொண்டு, கிளிகளை யோட்டினேம். பின்பு ஞாயிற்றின் வெம்மை மிகுகின்ற பகற்பொழுதிலே, வானிற் பறக்கும் பறவைகளெல்லாம் தாம் விரும்பும் சேக்கையிற் செல்லா நிற்க, யாங்கள் நெடிய மலையுச்சியினின்றும் குதிக்கும் தெளிந்த நீரையுடைய வெளிய துகில்போலும் அழகிய அருவியிலே, தவிராத விருப்புடன் மேலும் மேலும் விளையாடி, அதன் பின்பு, பளிங்கினைக் கரைத்துச் சொரிந்து வைத்தாற்போலும் சுனையிற் குடைந்துவிளையாடுங்கால், எங்கள் மனத்திற்கு விருப்பமான பல பாடல்களைப் பாடினேம். ஆனபின், எமது பின்னிய கூந்தலின் நீரைப் பிழிந்து, ஈரம்புலர்த்தி உள்ளிடம் சிவந்த கண்ணினேமாய், ஆம்பல் அனிச்சம் செங்கழுநீர் குறிஞ்சி வெட்சி முதலிய பல்வகைப் பூக்களையும் மிக்க வேட்கையுடன் பலகாலும் திரிந்து பறிந்து வந்து, தூய்தான அகன்ற பாறையிலே குவித்துப் பறவைகளின் ஓசையாகிய பல்லியங்களையுடைய மலைப்பக்கத்திற் புனத்தே, தெளிந்த இசையுடன் கூடிய சொற்களால் இடையிடை கிளிகளை யோப்பியும், புறவிதழ்களைக் களைந்தெறிந்து ஒழுங்குபெறக் கொய்து இயற்றிய தழையென்னும் உடையினை இடையிலே உடுத்தியும், பல்வேறுருவின் அழகமைந்த மாலைகளை எம்முடைய மெல்லிருங் கூந்தலில் அழகுபெறச் சுற்றியும், நெருப்புப்போலும் நிறத்துடன் விளங்கும் அழகிய தளிரையுடையஅசோகினது தாது உதிர்கின்ற தண்ணிய நிழலிலே மேவியிருந்தேம். அங்ஙனம் இருக்கையில், ஆண்டு ஓர் தோன்றல் பன்னிறமுள்ள பல்வகைப் பூக்களாலும் தொடுக்கப்பெற்ற தொடையினையும் வெள்ளிய தாழை மடலிற் பொருந்தச் செய்த கண்ணியையும் சென்னியில் அழகுறச் சூடியும், பிச்சி மலராற் றொடுத்த ஒரு சரமாகிய மாலையைச் சுற்றியும், அசோகினது தளிரைத் தோளில் வீழ்ந்தசையும்படி ஒரு காதிலே செருகியும், சந்தனம் பூசப்பெற்று அகன்று உயர்ந்து விளங்குகின்ற செம்பொறியையுடைய மார்பில் தொன்றுபட்டு வரும் சிவந்த அணிகலங்களோடே நறிய மாலைகளைப் பொலிவுற அணிந்தும், நுண்டொழிலமைந்த கச்சினை உடையின் மேல் இறுகக்கட்டியும், கையிலே வில்லை யெடுத்து அம்புகளைத் தெரித்துப் பிடித்தும், பொன்னாற்செய்த வீரக்கழல், பெயரும் பொழுதெல்லாம் திருந்திய அடியிலே ஏற்றிழிவு செய்து விளங்கும் படியாகப் போந்தனன். போந்தவன், அணுகுதற்கரிய வலியமைந்த பகைவரைப் புறங்கண்ட வீரர்போலே செருக்கும் சினமுமுடைய நாய்கள் இமையாத கண்ணினவாய் எம்மை வளைத்துக்கொண்டு மேன்மேல் நெருங்கி வருதற்கு யாங்கள் அஞ்சி அடிதளர்ந்து, வருத்தம் மிக்க மனத்துடன் வேறு புலத்தேறச் செல்லா நிற்பதனைக் கண்ணுற்றானாய், மாறாய விடைகளை யெல்லாம் பொருதோட்டியதும் வேறு புலத்திருக்கும் புதிய ஆவினைக் காணலுற்றதுமாகிய ஏறுபோலே அழகுபெறத் தோன்றி, யாங்கள் அஞ்சுதற்குத் தான் அஞ்சி, மென்மையும் இனிமையுமுடைய சொற்களை எமக்குப் பொருந்துமாறு சொல்லி, எம் கூந்தலையும் அழகையும் புகழ்ந்து, 'ஒள்ளிய தொடியும், மெல்லிய சாயலும், அழகிய உந்தியும், மதரிய கண்ணும் உடைய இளைஞரே! என்னைத் தப்பி இவ்விடத்துப் போந்த யானை முதலியவற்றைக் கண்டீரோ?', என வினாவினான். அதற்கு யாங்கள் மறுமொழி தந்திலேமாகையால், அவ்வாண்டகை நெஞ்சழிந்து 'நீவிர் அவற்றைக் காட்டித்தாரீ ராயினும் எம்முடன் ஒரு சொல்சொல்லுதலும் நுமக்குப் பழி யாமோ?' எனச் சொல்லி, வண்டு மூசும் பூக்களையுடைய தழை பரந்த கொம்பை முறித்தும் பரிக்கோலைக் கைகடந்த மதயானை போல ஓச்சிக், கல்லென்னும் ஓசைபடக் கத்தும் வேட்டை நாய்களின் கடுங்குரலை மாற்றி, யாங்கள் பேசுவதோர் காலத்தைப் பார்த்து நின்றனன். அப்பொழுது, வேறு புனத்திலே, காவலாளர்கள் கள்ளுண்டு காவன் மடிந்திருந்த வளவில், ஓர் வேழமானது புனத்தினைத் தின்று நொக்கிவிடுகையினாலே அவர்கள் வருத்தம்மிக்குத் தமது பாம்பு போலும்வில்லை நாணேற்றி அம்பினை யெய்து, காடெல்லாம் கல்லென் ஓசை பிறக்க வாயை மடித்து வீளையோசை யெழுப்பி அதனைப் புனத்தினின்றும் ஓட்ட, அக்களிறு மதச்செருக்கினை யுடைத்தாகி, உருமேறு போல முழங்கி மரங்களை முறித்துக் கையைச் சுருட்டி நிலத்தே யெறிந்து கூற்றுவனைப்போல எங்கள் மீது கடுக வந்தது. யாங்கள், உயிர் கொண்டு பிழைப்பதோரிடம் அங்கு வேறுணரேமாகி, உலைவுற்ற மனத்துடன், உயிரினுஞ் சிறந்த நாணினைப் பாதுகாத்தலை மறந்து, வளைக ளொலிக்கும்படி விரைந்து சென்று அவனைச்சேர்ந்து தெய்வமேறின மயில்போல நடுங்கா நிற்க, அவன் கடுவிசைப் பகழியை நிரம்ப வலித்து அவ்வியானையின் முகத்தே யெய்தமையால், அம்புபட்டுருவின. புண்ணினின்றும் குருதி யொழுகா நிற்க, அது தன்னை மறந்து ஆண்டு நிற்கலாற்றாது புறங்கொடுத்தோடிற்று, அதன்பின், யாங்கள், முருகவேளுக்கு வரை மகளிர் கைகோத்தாடுவது போன்று, கடம்பின் அரையினை நெருங்கச் சூழ்ந்த மாலைபோல், கைகோத்துக் கொண்டு, யாற்றின் பெருக்கிலே குதித்து விளையாடலுற்று, இடிகரையினின்ற வாழைபோலே கால்தளர்ந்து நீரிற் செல்லலுற் றேமாக, அது கண்டு விரைந்து வந்தெடுத்து அழகிய மலை பொருந்தின நாட்டையுடையனான அவ்வாண்டகை, 'யான் நினது அழகிய நலத்தை நுகர்வேன். நின்னை நீங்குவேனெனச் சிறிதும் அஞ்சாதே' என்று சொல்லி, ஒளிபொருந்திய நுதலினைத் துடைத்து, நெடுநாள் இக்களவொழுக்கம் நிகழவேண்டுமென நினைத்து, என்முகத்தை நோக்கிச் சிரித்தான். அப்பொழுது, தனக்கு இயல்பாகிய நாணமும் அச்சமும்வந்து தோன்றுகையால், இவள் தன்னிடத்து நின்று விரைந்து நீங்கவும் விடானாய், அங்ஙனம் நின்ற நிலையிலே கையாலணைத்து, இவள் மார்பு தன் மார்பிலே யொடுங்கும்படி தழுவாநின்று, பின், இவளுள்ளக் கருத்து மேல் வரைந்துகொண்டு இல்லறம் நிகழ்த்துதலாயிருக்குமென உட்கொண்டு இவளை நோக்கி, 'ஆருயிர்ப் பாவாய், பலரும் வந்துண்ணுமாறு கதவு அகலத் திறந்துகிடக்கும் வாயிலைஉடையதாய் மிடாச்சோற்றை வருவார்க்கெல்லாம் வரையாமலிடுகின்ற விழாக் கொண்டாடினாற் போலும் செல்வத்தையுடைய மனையகம் பொலிவு பெறும்படி பைந்நிணமொழிய நெய்ம்மிக்க அடிசிலை நீ இடா நிற்கக் குற்றமில்லாத உயர்குடிப் பிறந்தோர் தமது சுற்றத்தோடே விருந்துண்டு, எஞ்சியுள்ள மிச்சிலை நீயும் யானும் உண்ணுதல் மேன்மையுடைத்து' என்று சொல்லி, இல்லறம் தங்களைக் கரை யேற்றுவதாகத் தெளிவித்து, மலையுச்சியிலுறையும் முருகவேளை வாழ்த்தி வணங்கி, அவன் முன்பு வஞ்சினங்கூறி, அழகிய இனிய நீரைக் குடித்தனன். அதனால் இவள் நெஞ்சு பொருந்தியிருக்கக், களிற்றினால் தரப்பட்ட கூட்டத்தைத் தேவர்களும் விரும்பும் பூக்கள் நிறைந்த சோலையில் அன்றைப் பகற்பொழுதெல்லாம் போக்கி, ஞாயிறு மலையின்கண் மறைய, மாலைப்பொழுது வருதல்கண்டு, 'இலங்கிழையீர்! நும்முடைய சுற்றத்தார் நுமது நேரிறை முன்கைப்பற்றி எமக்குத்தர, நாடறியும் நன்மணத்தினைப் பின்பு நிகழ்த்துவோம், யாம் இக்களவொழுக்கத்தாற் பெறும் பேரின்பம் நுகர்தற்குச் சிறிதுநாள் இங்ஙனம் ஒழுகுவதுபற்றி நெஞ்சு கலங்காதிருப்பீராக' என்று அருளுடைத்தாகிய நன்மொழியை இவள் வருத்தந் தீரும்படி சொல்லி, ஆவைப் புணர்ந்த ஏறு போலே விடாமல் எம்முடன் கூடவந்து குழலோசையறாத நம் ஊர்வாசலில் பலரும் நீருண்ணுந் துறையில் எம்மை நிறுத்தி மீண்டுபோனான். அது முதலாக, அன்றுபோலும் விருப்பத்தோடே, எந்நாளும் இரவுக்குறியில் வருதலைத் தனக்கியல்பாகவுடையன். அங்ஙனம் வரும்போதெல்லாம், ஊர்க்காவலர் கடுகிக் காத்தாராயினும் சினத்தினையுடைய நாய் குரைத்தாயினும், நீ துயிலுணர்ந்தாயாயினும், நிலவு வெளியாக எறித்த தாயினும், மூங்கிலையொத்த மென்றோளிற்பெறும் இன்றுயில் பெறாது போவன். அங்ஙனம் வாளாபெயரினும் அதற்கு வெறுத்தலைச் செய்யான். அவன்றான் இளமைப் பருவத்தைக் கடந்ததுமிலன். செல்வச் செருக்கால் எந்நாளும் தன் குலத்திற்குரிய நற்குணங்களின் நீங்கியதுமிலன். அலர் முதலியவற்றால் அச்சத்தையுடைய இவ்'d2வூரின்கண், தனக்குப் பொய்யாயிருக்கின்ற இரவுக் குறியில் வருந்தன்மையை இஃதொழுக்கமன்றென்று நினைத்து, அவன் வரைந்துகொண்டு இல்லறம் நிகழ்த்துதலே நல்லொழுக்கமென்று துணிகையினாலே, இவளுடைய பெரிய மதர்த்த குளிர்ந்த கண்கள் பெருந்துளியெறிந்து, மழைபெய்யப்பட்ட மலர்போல் அழகு கெட்டு இமைசோர்ந்து ஈரத்தினையுடையவாய்க் கலங்கா நிற்கும். அதற்கு மேலே, இவள், அவர் வருகின்ற மலையிடம் புலியும் யாளியும் முதலிய 'இடும்பை செய்வனவுடையவா யிருக்குமென்று நினைக்குந் தோறும், வலையிலகப்பட்ட மயில்போலே தனது நலம் போம்படி மெலிந்து, கண்ணில் அரித்து வீழ்கின்ற நீர் நாள் தோறும் மார்பிலே துளிப்பக் கலங்கா நிற்கும். இதுகாண் நல்வினை நிகழ்ந்தவண்ணம் என்றாள்" என்பது.  19. சாத்தனார் பாத்திறல் நம் தண்டமிழ் மொழியைப் பண்டு வளம்படுத்த நல்லிசைப் புலவருள்ளே மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் வித்தகக் கவித்திறம் வாய்ந்த மேதக்காராவர். "வள்ளுவர் முப்பாலால் தலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு" என்பதனாற் குறிக்கப்படும் வரலாறு இவர் தமிழ்ச் செய்யுட்கள் எத்தகைய விழுப்பமுடையவாயிருக்க வேண்டுமென்னும் கருத்துடையா ரென்பதனைப் புலப்படுத்தும், பழுதற்ற முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரமளித்த சேரமுனியாகிய இளங்கோவடிகள் "தண்டமிழ்ச் சாத்தன்" (சிலம்பு:பதிகம்.10) எனவும் "தண்டமிழாசான் சாத்தன்" (சிலம்பு: காட்சிக்காதை.66) எனவும் தமது வண்டமிழ்ச் செய்யுளில் இவரை வாயாரப் புகழ்வரேல் இவரது தமிழ்ப்புலமை அற்றை நாளில் எத்துணை நன்கு மதிக்கப் பட்டிருத்தல் வேண்டும்? ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாயதும், 'மணிமேகலை நூனுட்பம் கொள்வதெங்ஙன்' (திருவெங்:கோவை:107) என்று கவிஞர் பெருமானாகிய துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவராற் பாராட்டப்பெற்றதுமாகிய இவரது மணிமேகலைக் காப்பியத்திலிருந்து இவர் தமிழ் இலக்கிய இலக்கணத் துறைபோயவர் என்பதும், அக்காலத்து நிலவிய சமயங்கள் பலவற்றையும் ஆராய்ந்து தெளிந்தவரென்பதும், அளவை (தருக்க) நூலின் எல்லை கண்டவரென்பதும், மற்றும் பல திறப்பட்ட கலைகளிலும் வல்லுநரென்பதும் விளங்குகின்றன. படிப்பவர் நேரிலிருந்து கண்டு களிப்பதுபோலத் தோன்றும்படி மலை, கடல், வனம், நாடு, நகர் முதலியவற்றை இனிய செஞ்சொற் களால் இவர் புனைந்துரைக்கும் அழகு மிகப் பாராட்டற்குரியது. இங்ஙனம் விழுப்பமுடைய செந்தமிழ்ச் செய்யுட்களை யெல்லாம் படித்துச் சுவைத்தன்றோ கவிப்பெருவேந்தராகிய கம்ப நாடர் "செஞ்சொற்கவியின்பம்" (மிதிலைக்:23) எனச் சீதையைப் புகழ்வாராயினர். சாத்தனாரின் இத்தகைய கவித்திறத்தை மணிமேகலையிலுள்ள ஓர் காதையிலிருந்து சிறிது விளக்குதும். மணிமேகலையில், 'மலர்வனம் புக்ககாதை' என ஓர்காதையுளது. கோவலன் மதுரையிற் கொலையுண்டமை கேட்டு அவன் காதற்கணிகையாகிய மாதவி புத்தசமயஞ் சார்ந்து துறவுபூண்டு தன்மகள் மணிமேகலையுடன் தொண்டு செய்து கொண்டிருக் கின்றனள். காவிரிப்பூம் பட்டினத்தில் நடைபெற்ற இந்திர விழாவிற்கும் வழக்கப்படி ஆடுதற்கு அவர்கள் வராமையால் மாதவியின் நற்றாயாகிய சித்திராபதி மனம் புழுங்கி, அவள் தோழியாகிய வயந்தமாலையை அனுப்ப, அவள் மணிமேகலையுடன் மாதவியிருந்த மலர்மண்டபத்தையடைந்து மாதவியின் வாடிய மேனிகண்டு வருந்தி, 'நீ உன் மகளுடன் இந்திர விழாவிற்கு' வராமலும், உன் மரபிற்கு ஒவ்வாத தவ வொழுக்கம் பூண்டு மிருத்தல் பற்றி ஊரார் கூறும் பழிமொழிகள் இன்னவை' என்று அவட்குக் கூறுகின்றனள். அதனைக் கேட்ட மாதவி கணவன் கொலையுண்ட கடுந்துயரைப் பொறாளாய்க் காவலன் பேரூர் கனையெரியூட்டிய மாபெரும் பத்தினியாகிய கண்ணகியின் மகள் மணிமேகலை தவத்திற்குரியளன்றி இழிந்த பரத்தைமைத் தொழிலுக்கு உரியளல்லள்' என்றும், 'இங்குள்ள அறவணவடிகளால் நால்வகை வாய்மையும் ஐவகைச் சீலமும் அறிவுறுத்தப் பெற்றுத் தவவழியிற் புகுந்துளேனாதலின் யானும் அங்கு வருதற்கு உரியளல்லேன்' என்றும் கூறிவிடுகின்றனள். இதன் பின்னரே மேலே குறிப்பிட்ட காதை தொடங்குகின்றது. வயந்தமாலைக்கு மாதவி கூறிய சொற்கள் வாயிலாக மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி (வினை பயன்றருங்காலம்) எதிர்ந்துளதாகலின், அவள் தன் தந்தையாகிய கோவலனுக்கும், தாயாகிய கண்ணகிக்கும் மதுரையில் நேர்ந்த வெந்துயரிடும்பை செவியகம் வெதுப்ப நெஞ்சுகலங்கி அழுது கண்ணீருகுத்துத் தான் தொடுத்துக் கொண்டிருந்த மாலையை நனைத்து விட்டனள். இங்கே மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்ததெனக் கூறப்புக்க ஆசிரியர், " மாமலர் நாற்றம்போல் மணிமேகலை கேதுநிகழ்ச்சி யெதிர்ந்துள தாதலின்"1 என அதனை ஓர் அழகிய உவமையுடன் படுத்துக் கூறுகின்றார். பூ அரும்பாயிருந்த ஞான்று அடங்கி யிருந்து பின் போதாய் மலரும் பொழுது மணம் வெளிப்படுதலை, வினை பயன்றருங் காலம் வருந்துணை மறைந்திருந்து அக்காலம் வந்துழி வெளிப் படுதற்கு உவமை கூறியது எவ்வளவு பொருத்தமாக விருக்கிறது. இங்கே பயன்றரும்வினை மிக்க தூய்மையுடைய தொன்றாகலின் அதற்கேற்பத் தூய மலரையே தெரிந்தெடுத்து உவமை கூறுவாராயினர். மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் மெல்லியலின் நல்ல மெல்வினை வெளிப்படுதற்கு மென்மையுடைய மலர் மணம் வெளிப்படுதலை உவமை கூறியது மிக்க இன்பம் விளைக்கின்றது. இங்ஙனம் மணிமேகலை வருந்துவதைக் கண்ணுற்ற மாதவி அவள் கண்ணீரைத் துடைத்து, அவளெய்திய துயரை ஒருவாறு மாற்றக் கருதி 'இத்தூய மாலை நின் கண்ணீரால் தூய்மை யிழந்ததாகலின் வேறுமாலை தொடுத்தற்கு நீ சோலை சென்று புதுமலர் பறித்து வருவாய்' என்கின்றனள். இங்கே மாதவி தன் செங்கையால் மணிமேகலையின் ஒண்முகக் கண்ணீரை மாற்றினமையைத் " தாமரை தண்மதி சேர்ந்தது போலக் காமர் செங்கையிற் கண்ணீர் மாற்றி."1 என்று ஆசிரியர் கூறுகின்றார். அப்பொழுதலர்ந்த நறுமலரால் அழகுபெறத் தொடுக்கப்பெற்ற மாலை போன்று செஞ்சொற் களாலே தெளிவும் இனிமையும் பொருந்த யாத்த இத்தொடர் கற்றார்க்குக் கழிபேரின்பம் பயப்பதாகும். இதன்கண், தெளிவு, சமநிலை என்னுங் குணங்களும், சித்திரவண்ணமும், இல் பொருளுவமை என்னும் பொருளணியும் இயைந்துள்ளமை காண்க. மாதவி கூறிய இம்மொழியைக் கேட்டலும், மணிமேகலையுடன் மலர் தொடுத்துக் கொண்டிருந்த சுதமதியானவள் மாதவி முகம் நோக்கி 'மணிமேகலையின் கண்ணீரைக் காணின் காமன் தன் படைக்கலத்தை யெறிந்து விட்டு நடுங்குவன்; இத்துணைப் பேரழகுடையாள் தனியே சென்று மலர் கொய்யுந் தன்மையளல்லள். இலவந்திகைச்சோலை, உய்யானம், சம்பாதி வனம் கவேரவனம் என்னும் பூஞ்சோலைகட்குச் செல்ல அறிவுடையோர் அஞ்சுவர். அருளும் அன்புமுடைய பகவனது ஆணையாலே பன்மரங்களும் எப்பொழுதும் பூத்துத் திகழும் உவவனம் என்பதொன்றுண்டு; அவ்வனத்திற்கன்றி நின்மகள் செல்லும் தகுதியளல்லள்; யானும் அவளுடன் செல்வேன்' என்று கூறி, அழகிய பூங்கொம்பு போலும் மணிமேகலையுடன் கூடி மணித்தேர் வீதியிற் செல்லுகின்றனள். அங்ஙனம் அவர்கள் செல்லுதலைக் கூறு முகத்தானே ஆசிரியர் தமது புலமைத் திறத்தினை எங்ஙனம் வெளிப்படுத்துகின்றன ரெனக்காட்டுதலே இச்சிற்றுரையின் நோக்கம். மணிமேகலையும் சுதமதியும் காவிரிப்பூம்பட்டினத்து மறுகிற் செல்லும் பொழுது, அங்கே பற்பல காட்சிகளைக்கண்டு குழாம் குழாமாய் நிற்கும் மாந்தர்கள், முன்னம் விராடன் பேரூர்க்கண் பேடி வடிவங்கொண்டு சென்ற விசயனைக்கண்டு சூழ்ந்தமாக்களைப் போல மணிமேகலையைச் சூழ்ந்து கொண்டு 'பேரழகுடைய இவளை அருந்தவப்படுத்திய தாய் மிகக்கொடியவள், அவள் மலர்பறித்தற்கு வனம் புகுவளாயின் அங்குள்ள அன்னப்புள் முதலியன இவள் நடை முதலியவற்றைக் கண்டு என்னபாடுபடா' என்று இவை போல்வன சொல்லி அவள் அழகைப் பாராட்டி வருந்தி நிற்க, அவ்விருவரும் மலர்வனத்தையடைந்தனர்; என இக்காதையை நடாத்தி முடிக்கின்றனர் ஆசிரியர். யாதேனும் ஒரு கதை நிகழ்ச்சியைத் தலைக்கீடாகக்கொண்டு உலக இயற்கை களையும் பல்வேறு வகைப்பட்ட மக்களின் ஒழுகலாறு முதலிய வற்றையும் உள்ளவாறு உணர்த்தி இன்பம் விளைப்பது நல்லிசைப் புலவரின் சிறந்த நோக்கமாகும். நகரங்களும், சீறூர், பட்டி முதலியவை களும் அவற்றின் அமைப்பினாலன்றி அங்கு வாழும் மக்களின் நடையுடை முதலியவற்றாலும் வேற்றுமை யுறுகின்றன. செல்வப் பெருக்கும், செயற்கை வனப்பும், எழில் விளையாட்டும், இன்பச் செலவும் நகரங்களில் விஞ்சிக் காணப்படுகின்றன. நாம் ஒரு நகரப் பெருந்தெருவிலே மாலைப்பொழுதில் உலா வருவோமாயின் இடையே எத்தனையோ பல காட்சிகள் எதிர்ப்படுகின்றன. அற்றை நாளிலே மிகப் பெரியதொரு நகரமாய் விளங்கிய புகாரின் மறுகிலும் பலதிறப்பட்ட காட்சிகள் எதிர்ப்படுதல் இயல்பே அன்றோ? அவையிற்றையே தண்டமிழாசானாகிய சாத்தனாரும் ஓவியம் வரைந்து காட்டினாற் போல் நம் உளக்கண்ணுக்குப் புலனாகுமாறு செழுந்தமிழ்ப் பாவாக யாத்து வைத்தனர். சமண் சமயத்து உண்ணா நோன்பி யொருவன் உறியிற் பொருந்திய குண்டிகையும் பிரப்பங்கோலும் உடையவனாய்க் கழுவாத மேனியனாய் வருந்துதலை யுடையயானை போன்று அசைந்த நடையுடன் அவ்வீதியில் வந்துகொண்டிருக்கின்றனன். அவன் உயிர்கள் மாட்டு எத்தனை இரக்க முடையனென்பதனை, "காணாவுயிர்க்குங் கையற் றேங்கி" 1 என்னும் சிறு தொடரால் ஆசிரியர் அழகு பெற விளக்கியுள்ளார். கண்ணுக்குப் புலனாகாத நுண்ணுடம்புடைய உயிர்களும் தனது நடத்தல் முதலிய செயல்களால் என்ன துன்பமுறுமோ என்று செயலற்று ஏங்கிப் பையப்பைய நடந்து செல்லும் அந்நோன்பியை ஓர் களிமகன் கண்டு வழிமறித்து, " வந்தீர் அடிகள்! நும் மலரடி தொழுதேன்!! எந்தம் அடிகள் எம்முரை கேண்மோ" 2 எனப் பீடிகை போட்டுக் கொண்டு, தன் கையிலுள்ள மதுச் சாடியை அவள் முன் நீட்டி, இஃது இம்மையும் மறுமையும் இறுதியிலின்பமும் தருவது, என் தலை மகன் உரைத்தது, அழுக்குடையாக்கையிற் புகுந்த நும்முயிர் புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது இதனை உண்பீராக, என்னக் கள்ளும் ஊனும் கடிந்தவனாகிய அந்நோன்பி, சீல மில்லாரொடு வாயாற் பேசுதலும் நேரிதன்றாகலின் அவன் அப்புறஞ் செல்லுமாறு கையைஅசைத்துச் சைகை செய்யவும், அவன் செல்லானாய்த் 'தெங்கின் கொழுமடலில் விளைந்த இத்தேறலின் கண்கொலையும் உண்டோ, இதனை உண்டு தெளிந்து இந்தயோகத்தின் உறு பயனைக் கண்டால் பின்பு எம்மைக் கையாலகற்றுதிர், இதனை ஒரு முறையேனும் உண்பீர்' என்று சூளுற்று இரக்கின்றனன்; இதனைப் பார்த்துக்கொண்டு நிற்கின்றது ஓர் குழு. சிறிது அப்பாற் செல்வுழி, மையலுற்றவன் (பித்தன்) ஒருவன் அலரி மாலையாற் கட்டிய தோள்களை யுடையனாய், எருக்க மாலை யணிந்தவனாய், கந்தையுடன் சுள்ளிகளைச் சேர்த்துக் கட்டிய உடையினையுடையனாய், உடல் முழுதும் நீற்றினைப் பூசிக்கொண்டு, பலரோடும் பொருத்தமில் சொற்களைப் பேசி, அழுதலும் விழுதலும் அரற்றுதலும் கூவுதலும் தொழுதலும் எழுதலும் சுழலுதலும் ஓடுதலும் ஒதுங்கி நிற்றலும் நிழலொடு சினத்தலும் போல்வன செய்கின்றான்; இவனை இரக்கத்துடன் பார்த்து நிற்கின்றது ஓர் குழு. பித்தேறியவன் செய்கைகள் இதிற் பட்டாங்கு புலப்பட வைத்திருத்தல் வியக்கற்பாலது. இன்னும் சிறிது தூரஞ் செல்லுங்கால், பகற்கூத்தியற்றுவார் பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு விரவிய பேடிக்கோலம் பூண்டு நடிக்க அதனைக் கண்டு நிற்கின்றது ஓர் குழு. மற்றும், உயரிய நிலையினையுடைய மனைகள் தோறும் ஒள்ளிய சுதைகொண்டு வித்தகர் இயற்றிய பலதிறப்பட்ட கண்கவர் ஓவியங்களை ஆண்டாண்டுக் கண்டு நிற்கின்ற மாந்தரும் பலர். பின்னும், விழாச்செய்து முடித்த வீதியின் கண்ணே செல்வ மகளிர் சிலர் கூடி நின்று, பொன்னாணிற் கோத்த நன்மணிக் கோவையும் ஐயவி யப்பிய நெய்யணி முச்சியும் செவ்வாய்க்கு தலையும் மெய்பெறா மழலையும் விளங்கும் பூணுமுடைய இளம் புதல்வரை மயிரிடத்தே சுற்றிய மூன்று கோவையாகிய முத்துவடம் பிறை போலும் அணியின்மீது தாழவும், அற்றங்காவாச் சுற்றுடைப் பூந்துகிலுடன் தொடுத்த மணிக்கோவை அசையவும் பொற்றேரின் மேலுள்ள யானையில் ஏற்றி வைத்து, 'ஆலமர் செல்வன் மகனாகிய முருகன் விழாவிற்குக் கால் கொள்ளுதலைக் காண்பீராக' என்று கூற, அதனைக் கண்டு நிற்பாரும் பலர். சிவபெருமான் இங்கே 'ஆலமர் செல்வன்' என்று கூறப்பட்டிருத்தல் போன்றே சிலப்பதிகாரத்தும் எட்டுத் தொகை, பத்துப்பாட்டுக்களினும் கூறப்பட்டிருத்தலை நோக்கின், ஆலின் கீழே தென்முகமாகவ மர்ந்து நால்வர்க்கு ஒளிநெறி காட்டிய இத்திருவுருவினைப் பண்டு தொட்டுத் தமிழர்கள் சிந்தித்து வழிபாடாற்றிப் பயனெய்தி வந்தமை புலப்படும். மற்றும், அவன் மகனாவான் என்றும் இளநல முடையனாகலின் 'முருகன்' எனப்படுவான் என்பதும், அவற்கும் அங்ஙனமே விழாச் செய்து வழிபாடாற்றி வந்தனர் என்பதும் பண்டைச் செந்தமிழ்ப் பனுவல் பலவற்றானும் பெறப்படும்; " ஆலமர் செல்வன் அணிசான் மகன்விழாக் கால்கோளென் றூக்கிக் கதுமென நோக்கி"1 என மருதக் கலியுள் வருதலுங் காண்க. இங்ஙனம் களிமகன் பின் னிற்பார் முதல் ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோளெனக்கண்டு நிற்பார் இறுதியாகக் கூறிய அனைவரும் மணிமேகலையைப் புறஞ்சூழ்ந்து அவளைத் தவநெறிப் படுத்திய தாயை இகழ்ந்து, 'இவள் மலர்வனம் புகில் ஆங்குள்ள அன்னங்கள் இவள் நடைக்கு நாணாது நடக்க வல்லுநகொல்லோ, மயில்கள் இவள் சாயலைக் கற்பனகொல்லோ, கிளிகள் இவள் கிளவிக்கு எஞ்சலகொல்லோ என்றிவைபோல்வன சொல்லி இனைந்துக, " குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும் பிடவமும் தளவமும் முடமுட் டாழையும் குடசமும் வெதிரமும் கொழுங்கா லசோகமும் செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும் எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி"2 வித்தகர் இயற்றிய சித்திரப்படாம் போர்த்தது போலத் தோன்றிய உவ வனத்தைச் சேவடி நிலம் வடுவுறாமல் சுதமதியோடும் மணிமேகலை அடைந்தனள்; எனக் கூறியுள்ள இச்சிறு பகுதியிலிருந்தே சாத்தனாரின் புனைந்துரை யாற்றலும், தண்டமிழ்த்திறலும் இனிது விளங்குமாறு காண்க.  20. சங்க நூல்களும் சைவமும் பல்லாயிரம் ஆண்டுகள் சங்கங்களால் ஆராய்ந்து தூய்மையுடன் வளர்க்கப்பெற்ற பெருமை தமிழ்மொழிக்குரியது. அதனாலேயே தமிழைக் குறிக்குமிடத்துச் "சங்கத்தமிழ்" என்று கூறும் வழக்கும் ஏற்படலாயிற்று. முச்சங்கத்தாரால் இயற்றப்பட்டனவாகிய முத்தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் எண்ணிறந்தன. வானநூல், எண்ணூல், மருந்துநூல் முதலிய கலைகளும் அக்காலத்தே சிறந்து விளங்கின. அக் கலைகளே யன்றி, இசை நாடக நூல்களிற் பெரும்பாலனவும் இறந்தொழிந்தன. தொல்காப்பியம், இறையனார் களவியல் என்னும் இலக்கணங்களும், எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இலக்கியங்களுமே இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள சங்க நூல்களாகும். இவை யெல்லாம் இயற்றமிழின்பாற்பட்டவை. தொல்காப்பியம் இயற்றமிழ்ப்பகுதி யனைத்தையும் முற்ற வெடுத்து வரையறை செய்யும் விழுமிய முழு நூலாகும். இறையனார் களவியல் இயற்றமிழின் ஒரு பகுதியாகிய அகப்பொருளொன்றினையே இனிது விளக்குவது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பன பற்பல புலவர்கள் பாடிய பாட்டுக்களைச் சிலமுறைபற்றித் தொகுத்து வைத்தவை. பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நாலடியாரும் அத்தகையதே. அத் தொகுப்பிலுள்ள திருக்குறள் என்னும் தெய்வச் செந்தமிழ் நூலைத் தனியாக நினைவு கூர்தல் வேண்டும். மேற்காட்டியவை யன்றி, மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்னும் சங்கப்புலவரியற்றிய மணிமேகலைக் காப்பியமும், அவரோடு ஒரு காலத்தவரும், பரணர் முதலிய சங்கப் புலவர்களாற் பாடப்பட்ட சேரன் செங்குட்டுவனுக்குத் தம்பியாருமாகிய இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும் சங்கநூல்களுடன் சேர்த்தெண்ணத் தக்கனவாகும். இவையெல்லாம் தமிழகத்தின் பண்டைய வரலாற்று நூல்களென மதிக்கத்தக்கவை. மிகப் பழைய நாளிலே தமிழகத்தின் அரசியல் நிலை எவ்வாறிருந்தது, அக்காலத்துத் தமிழ் வேந்தர்கள் வீரத்திலும், நீதியிலும், வண்மையிலும் எங்ஙனம் சிறந்து விளங்கினார்கள், அற்றை நாளிலே சமய நிலை, சமுதாய நிலைகள் எவ்வாறிருந்தன, வேளாண்மை, வாணிகம், கைத்தொழில்கள் எப்படி உயர்நிலை அடைந்திருந்தன, ஆடவரும் மகளிரும் எங்ஙனம் கல்வியிற் சிறந்து விளங்கினர் என்பன போன்றவைகளை அறிந்து கொள்ளு தற்குச் சங்க நூல்களே சிறந்த கருவிகளாகவுள்ளன. அக் கருவிகள் கொண்டு தமிழகத்திலே பண்டு சைவ சமயம் எந்நிலையிலிருந்த தென்பதனை விளக்குவதே இவ்வுரையின் நோக்கம். இடைக் காலத்தும் பிற்காலத்தும் தோத்திரங்களாகவும் சாத்திரங்களாவும் புராணங்களாகவும் சமய நூல்கள் பலப்பல தோன்றியுள்ளன. சங்க விலக்கியங்களில் அத்தகைய நூல் ஒன்றும் காணப்படவில்லை யென்பது உண்மையே. சங்ககாலத்தில் அத்தகைய நூல்கள் தோன்றாமைக்கும், பின்னர் அவை தோன்றினமைக்கும் தக்க காரணங்கள் உண்டு. ஒரு நாட்டின் வரலாற்றையும், அந்நாட்டு மொழி வரலாற்றையும் நுணுகி ஆராயின் அவ்விரண்டும் ஒத்தியங்குதல் காணப்படும். எனவே தமிழ் மொழியானது நாளடைவில் எய்தியிருக்கும் வேற்றுமைகளி லிருந்து தமிழகமானது எங்ஙனம் வேற்றுமையடைந்து வரலாயிற்று என்பது புலப்படும் என்க. இனி, சங்கவிலக்கியங்களிலே சமய நூலாக ஒன்றும் காணப்படாவிடினும், அக்காலத்தே சமய மானது திண்ணிய நிலையிலிருந்த தென்பதற்குரிய சான்றுகள் உள்ளன. சங்கச் செய்யுட்களெல்லாம் தமிழுக்கே சிறப்பாகவுள்ள பொருளிலக் கணத்திற்கு இலக்கியமாக அமைந்தவை. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் அகமும் புறமு மாகிய பொருட் பகுதியில் அடங்குகின்றன. வேதமுதலிய கலைகளெல்லாம் அந்நாற் பொருளையும் உணர்ததவே யெழுந்தன. எனவே சங்கவிலக்கியமனைத்தும். சமய சாரமாகவேயுள்ளன வென்பது பெற்றாம். இனி, நுணுகிய ஆராய்ச்சி வழியை விடுத்து வெளிப்படையாகவுள்ள குறிப்புக்களைக் கொண்டு சைவ சமய நிலையை நோக்குதும். முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிவேந்தன் பஃறுளியாறு கடல் கொள்ளப்படு முன் இருந்தோனாகலின் மிகு தொன்மைக் காலத்தினனாவன்; அவனைப் பாடிய ஒரு புலவர் "நின்குடையானது முனிவர்களாற் பரவப்படும் முக்கட் செல்வர் கோயிலை வலஞ் செய்தற்கண் தாழக்கடவது" என்று கூறுவாராயினர். செங்குட்டுவன் என்னும் சேரர் பெருவேந்தன் சிவபிரான் அருளாற் பிறந்தவன் என்றும், சிவபெருமானையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவோன் என்றும் சிலப்பதிகாரம் விளங்க வுரைக்கின்றது. சோழர்குல முன்னோரான மனு, முசுகுந்தன் முதலானவர்கள் சிவபத்தி மிக்கோரெனப் புராணங்கள் கூறுகின்றன. கரிகாலன், கோச்செங்கண்ணார் என்பவர்கள் பற்பல சிவாலயத் திருப்பணிகள் செய்த சிவனடியார்களென்பது வெளிப்படை. இங்ஙனமாகத் தமிழகத்திலே பண்டு தொட்டுச் செங்கோலோச்சி வந்த முடியுடை வேந்தர்மூவரும் வழிவழியாகச் சிவவெருமானை வழிபடும் சைவ ரென்பது பெறப்படவே, அவராட்சியுட் பொருந்திய தமிழகத்திலே தலைசிறந்து நிலவிய சமயம் சைவமென்பதும் பெறப்படும். தொகையிலும், கீழ்க்கணக்கிலும் சிலப்பதிகாரம் முதலிய வற்றிலும் சிவபிரான், செவ்வேள், பலராமன், கண்ணன் என்னும் நான்கு தேவர்கள் சேரவெடுத்துக் கூறப்படுகின்றனர். காவிரிப்பூம் பட்டினத்திலும், மதுரையிலும், இந்நால்வர்க்கும் கோயில் களிருந்தமை சிலப்பதிகாரத்தால் அறியப்படுகின்றது. இவற்றிலிருந்து இந்நான்கு தேவர்களையும் தமிழ் மக்கள் சிறப்பாக வழிபட்டு வந்தனரென்பது பெறப்படும். அங்ஙனமாயினும் அவர்கள் சிவவெருமானையே முழுமுதற் கடவுளாக் கொண்டனரென்பதில் எத்துணையும் ஐயமில்லை. நால்வரையும் ஒருங்கெடுத்துக் கூறுமிடங்களில் பின்மூவரையும் வெவ்வேறு முறையாகவும் கூறிவந்த ஆசிரியன்மாரனை வரும் சிவபிரானை மாத்திரம் யாண்டும் முதற்கண் வைத்துக் கூறுவது அவர்கள் கொள்கையை நன்கு புலப்படுத்துகின்றது. " பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும்"1 என்னும் சிலப்பதிகார அடிகளோடு பிறாண்டு இங்ஙனம் வருவன வற்றை ஒத்து நோக்கி இவ்வுண்மையை உணர்க. இங்கெடுத்துக் காட்டிய மேற்கோளில் ஆனேறு, மழுப்படை, முக்கண் முதலிய அடையாளங்களையாவது, நிறத்தையாவது, வேறு பெயரையாவது கொண்டு சிவபிரானைக் குறியாமல் 'பிறவாயாக்கைப் பெரியோன்' என்னும் தொடரால் குறித்திருத்தல் ஒன்றே சிவபெருமான் ஒருவரே பிறப்பில்லாத முதற்கடவுளாவ ரென்னும் உண்மையை நன்கு வலியுறுத்துதல் காண்க. வேறொரு தெய்வம் பிறப்பில்லாத தாயிருப்பின் 'பிறவாயாக்கைப் பெரியோன்' என்னுந் தொடர் சிவபெருமானுக்கே செல்வதாகாது. அங்ஙனம் இன்மையினாற்றான் அது சிவனைக் குறிப்பதாயிற்றென்க. இங்ஙனம் சிவபிரானுக்குப் பிறவாமையைச் சிறப்பியல்பாகக் கிளந்தெடுத்தோதிய ஆசிரியர் இளங்கோவடிகள் மற்றோரிடத்து இறவாமையைச் சிறப்பியல் பாகச் கூறியிருப்பதும் கண்டு மகிழ்தற்குரியது. சிவ சத்தியாகிய கொற்றவையைப் பரவுதல் கூறுமிடத்து. " விண்ணோ ரமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்"1 என இறைவன் செயலை ஏற்றிக் கூறினமை காண்க. இறப்பினைத் தவிர்க்கும் அமிழ்துண்டும் ஏனைத் தேவரெல்லாம் இறவாநிற்க, இறப்பினைச் செய்யும் நஞ்சினையுண்டும் இறைவன் இறவா திருந்து யாவர்க்கும் அருள் செய்குவன் எனக் கூறியிருக்கும் அருமைப்பாட்டை எங்ஙனம் பாராட்ட வல்லேம்! இவ்வாற்றால் பிறவாமையும் இறவாமையும் ஆகிய கடவுட்டன்மையுடைய முதற்பொருள் சிவபெருமானே என்னும் உண்மை யாதொரு தடையுமின்றிச் சங்க காலத்து நன்மக்களுள்ளத்தே நிலவிய தென்பது போதரும். " நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்போ டைந்துட னியற்றிய மழுவாள் நெடியோன் தலைவ னாக மாசற விளங்கிய யாக்கையர்."2 என மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியிலும், " நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக"3 எனக் கூலவாணிகன் சாத்தனார் மணிமேகலையிலும் சிவபெருமானையே கடவுளரில் முதல்வராக வைத்துக் கூறியிருத்தலும் காண்க. இதுகாறும் கூறியனவெல்லாம் ஒரு சமயத்தை உயர்த்திப் பேசுங் கருத்துடன் எழுந்தன வல்ல என்பதும், தமிழகத்தின் பழைய வரலாற்றுண்மையை விளக்கவே போந்தனவென்பதும் நல்லறிவுடையார்க்கு இனிது விளங்கா நிற்கும். சமண பௌத்தர் உள்ளிட்ட அனைவரும் இவ்வரலாற் றுண்மையை மறுக்காது ஒத்தொழுகி வந்தமை யாற்றான் சங்க காலத்திலே சமயப்பூசல் சிறிதும் இல்லாதிருந்தது. பல சமயத்தினரும் நேர்மையுடன் கலந்து வாழ்ந்து வந்தனர். பிற்றை நாளிலே பிற சமயத்தினர் பழைய உண்மைக்கு மாறாகத் தாம் தாம் கருதியவாறெல்லாம் உரைக்கவே சமயப்பூசல் மிகுவதாயிற்றென்க. இனி, மணிமேகலை, சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதையில், (89-95) சைவவாதி கூற்றாகவுள்ள, " இருசுட ரோடிய மானனைம் பூதமென் றெட்டு வகையு முயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போனும் கலையுருவி னோனும் படைத்து விளையாடும் பண்பி னோனும் துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும் தன்னில் வேறு தானொன் றிலோனும் அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன்" என்னும் பகுதியில் இறைவன் அட்ட மூர்த்தியாதலும், முத்தொழிற்கும் முதல்வனாதலும், எங்கும் நிறைந்தவனாதலும் முதலிய சைவ சித்தாந்தக் கருத்துக்கள் தெளிவாகக் காணப்படுதலின் சங்க காலத்தில் சைவ தத்துவங்களும், கொள்கைகளும் நன்கு உருப்பெற்றிருந்தன வென்பதும் பெறப்படும்.  21. இளங்கிளை அரசாங்கத்தார் வெளியிட்டுவரும் தமிழ் அகராதியில் (Tamil Lexicon ) இளங்கிளை என்பதற்குத் தங்கை என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இதற்குத் தங்கை என்பதே பொருளன்று. தம்பி, தங்கை, மகன், மகள், மைத்துனன், தோழன், மாணாக்கன் முதலிய இளஞ்சுற்றத்தினர் பலரையும் இது குறிப்பதாகும். " ஏவாது மாற்று மிளங்கிளையும்" (திரிகடுகம்)1 என்பதில் மக்கள் என்னும் பொருளிலும், சீல மறிவா னிளங்கிளை (திரிகடுகம்)2 என்பதில் மாணாக்கன் என்னும் பொருளிலும், மாலவற் கிளங்கிளை" (சிலப்பதிகாரம்)3 என்பதில் தங்கை யென்னும் பொருளிலும், " எழுமையும் பெறு வின்ன இளங்கிளைச் சுற்றமென்றாள்" (சீவகசிந்தாமணி)4 என்பதில் மைத்துனன் என்ற பொருளிலும் இத்தொடர் வந்துள்ளமை காண்க. ‘ஏவாது மாற்று மிளங்கிளையும்' என்பதில் இது மக்கள் என்னும் பொருளேயன்றித் தம்பி யென்னும் பொருளும் பயப்ப தாகும். இனி, " இளங்கிளை யாரூரன்" (தேவாரம்)5 என நம்பியாரூரர் தம்மைக் கூறிக் கொள்ளுதலின், இது தோழன், தொண்டன் என்னும் பொருள்களும் பயப்பதாகும். பலராலும் பயிலப்பெற்றுவரும் தமிழ் இலக்கியங்களில் இங்ஙனம் விரிந்த பொருளுடையதாகப் பயின்றுவரும் தொடரைக் குறுகிய பொருளுள்ளதாகக் கொண்டு, பெரும் பொருட்செலவானும் பல பேரறிவாளர்களின் உழைப்பானும் வெளிவரும் அரசாங்க வெளியீட்டகராதியில் ‘தங்கை' என்று பொருள் குறித்திருப்பது மிக்க வியப்பைத் தருகின்றது. குறுகிய கால வெல்லையில் விரைந்து முடிக்குங் கருத்தால் இத்தகைய தவறுகள் நேர்வனபோலும்!  22. புறநானூற்றில் கண்ட சில பழைய வழக்குகளும் வரலாறுகளும் சங்கப் புலவர்களாலே பாடித்தொகுக்கப்பெற்று நமக்கு எய்ப்பினில் வைப்பாகக் கிடைத்திருக்கும் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய புறநானூற்றை ஆராயின் எத்தனையோ பல வழக்கு களும் வரலாறுகளும் காணப்படுகின்றன. அவற்றுட் சில இங்கே காட்டப்படும். காரிகிழார் என்னும் புலவர் முதுகுடுமிப்பெரு வழுதி என்னும் பழைய பாண்டி வேந்தனை நோக்கி, " பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே"1 என அறிவுறுத்ததிலிருந்து, அக்காலத்து வேந்தர்கள் கண்ணுதற் பெருமான் திருக்கோயிலை வலம் வரும்பொழுது தம் குடையைத் தாழச் செய்வர் என்பது புலனாகின்றது. அரசர்கள் படைக்கலங் களுக்கு நெய்பூசி மயிற்றோகை அணிந்து மாலை சூட்டி வைப்ப ரென்பது, அதியமான் அஞ்சியிடமிருந்து தொண்டைமானுழைத் தூது சென்ற ஒளவையார் அவன் படைக்கலக்கொட்டிலைப் பார்த்து, " இவ்வே, பீலியணிந்து மாலை சூட்டிக் கண்டிரள் நோன்காழ் திருத்தி நெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே"2 என்று கூறியதனாற் பெறப்படும். தமிழ் மன்னர்கள் தம் வீரமுரசினை மலரணை பொருந்திய கட்டிலில் வைத்திருப்பரென்பதும், அம்முரசினை மயிற் பீலியும் உழிஞைமாலையும் முதலியவற்றால் அலங்கரித்து நீராட்டி வருவரென்பதும் பெருஞ்சேரலிரும் பொறையை மோசிகீரனார் பாடிய ருய-ஆம் புறப்பாட்டில், " ஒலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை யெண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை அறியா தேறிய வென்னை"1 என வருவதால் அறியலாகும். அரசர்கள் போரில் இறவாது நோயால் இறப்பின் அவர்கள் துறக்கம் புகவேண்டிய அன்ன வருடம்பைத் தருப்பையிற் கிடத்தி, வாளாற் பிளந்து அடக்கஞ் செய்தல் மரபென்பது ஒளவையார் அதியமானைப் பாடிய 'திண்பிணி முரசம்' என்னும் பாட்டில். " திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர்"2 எனக் கூறப்படுதலால் அறியலாகும். போரிலிறந்த வீரனது பெயரும் பீடும் எழுதிய நடுகல்லை நிறுவி அதற்கு மயிற்பீலி சூட்டி, அவ்விடத்துப் புடைவையாலே சிறிய பந்தர் போடுவித்தலுண் டென்பது, 'வளரத்தொடினும்' என்னும் பாட்டிலே " பெயரே மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி இடம் பிறர் கொள்ளாச் சிறுவழிப் படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே"3 என்று கூறப்படுதலாற் போதரும். இறந்தோனுக்கு அவன் மனைவி கோமயத்தால் மெழுகிய சிறிய இடத்தில் தருப்பையின் மேற்பிண்டம் வைப்பளென்பது 'நோகோயானே'4 'கதிர் மூக்காரல்'5 என்னும் பாடல்களால் அறியப்படுகின்றது. 'அருநரையுருமின்' (புறம்:58) என்பதனால் இடி வெண்ணிறமுடைய தென்னும் கொள்கையும், " பொய்யா வெழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வற்புலஞ் சேரும் சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்ப"6 என்பதனால் எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்யுமென்னும் கொள்கையும், 'கடவுளாலத்து'7 'கள்ளி நீழற் கடவுள்'8 என்பவற்றால் ஆலமரத்தின் கண்ணும் கள்ளி நிழலிலும் தெய்வமுறையுமென்னும் கொள்கையும் அந்நாளிலிருந்தமை பெறப்படும். "புதல்வர் பூங்கண் முத்தி"1 என்பதனால் குழந்தைகளின் கண்களில் முத்தமிடுதலுண் டென்பதும், " புதல்வன் - அழக்கண்டு மறப்புலியுரைத்து மதியங்காட்டியும்"2 என்பதனால் புலி வருகின்றதெனக் கூறி அச்சுறுத்தியும், அம்புலி காட்டியும் குழந்தைகளின் அழுகை தீர்ப்பரென்பதும் பெற்றாம். சூலுற்ற மகளிர் மண்ணினை விரும்பி யுண்ப ரென்பது " வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவ ருண்ணா அருமண் ணினையே"3 என்பதனாலும், குறவர்கள் நன்னாளிலே தினை விதைத்தலும், முற்பட விளைந்த கதிரை நன்னாளிற் கொய்து வந்து புதிதுண்டலும் உடையரென்பது " நன்னாள் வருபத நோக்கிக் குறவர் உழாஅது வித்திய பரூஉக்குரல் சிறுதினை முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார்"4 என்பதனாலும் விளங்கும். இளஞ்சிறார்கள் நீருக்கணித்தாகப் படிந்த மரக் கோட்டிலேறி ஆழமாகிய மடுவிற் பாய்ந்து முழுகி மணலைக் கொணர்ந்து காட்டி விளையாடுவரென்பது, " நீர்நணிப் படிகோ டேறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்து மணற்கொண்ட கல்லா விளமை"5 என்பதனாற் பெறப்படும். குறவர்கள் கடவுட்குப் பலி தூவி வழிபட்டு மழையை வேண்டும் பொழுது அழைத்தலும் வேண்டாவழி ஒழித்தலுஞ் செய்வரென்பது " மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய் மாரியான்று மழைமேக் குயர்கெனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண் மாறிய வுவகையர்"6 என்பதனாற் போதரும் " விளைபதச் சீறிட நோக்கி"1 என்னும் பாட்டால் புலி இடப்பக்கத்து வீழ்ந்த விலங்கினை உண்ணா தென்னுங் கொள்கையும், " போழ்வாய்க் கூகை சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும்"2 என்பதனால் பேராந்தை செத்தோரை அழைக்குமென்னுங் கொள்கையும் உடைய ரென்பது பெறப்படும். படைக்கலப் பயிற்சி செய்வோர் முருக்க மரத்தாற் செய்த தூணினை இலக்காக நிறுத்தி அதிற்படைக்கலங்களை வழங்கிப் பயில்வரென்பது " இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் இகலின ரெறிந்த அகலிலை முருக்கின் பெருமரக் கம்பம் போல"3 என்பதனால் அறியப்படும். இன்னும் வடக்கிருத்தல், இறந்தோரைச் சுடுதல், தாழியாற் கவித்தல், கணவனையிழந்த மகளிர் தீப்பாய்தல், கைம்மை நோன்பு நோற்றல் முதலாய பல வழக்கங்கள் புறப்பாட்டுக் களால் அறியப்படுகின்றன. அவற்றால் அறியப்படும் வரலாறுகள் பின்வரும்.  23. ஆசிரியரும் மாணாக்கரும் அரிய மனிதப் பிறப்பையடைந்திருப்பவர்கள் தாம் தாம் பிறந்த தேசத்தானும், பேசும் மொழியானும், பிறவற்றானும், வேறு வேறு கூட்டத்தவராகப் பகுக்கப்படுகின்றனர். அக்கூட்டத் தவருள்ளும், தம்தம் அறிவு, தொழில் முதலியவைகளாற் சிறப்பு மேம்பாடுற்று, அவ்வச்சிறப்பிற்கும், அவை நிகழும் அவசரத்திற்கும் தக்கவாறு, பல்வேறு சிறப்புப் பெயர்களால் வழங்கப்படுபவர் உண்டு. பல கலைகளையும் கற்றுணர்ந்தவர்களாய்த் தாம் அறிந் தவைகளைப் பிறரும் அறிந்து பயனெய்துமாறு அருள் சுரந்தூட்டு பவர்கள், 'ஆசிரியர்' என்னும் சிறப்புப் பெயர்க்கு உரியராகின்றனர். அவர்கள் தாம் அறிந்தவைகளை நூல் இயற்றுதலானும், உரை எழுதுதலானும், நேரிற் போதித்தலானும், பிறர்க்கு உரிமைப் படுத்தி முறையே 'நூலாசிரியர்', 'உரையாசியர்', 'போதகாசிரியர்' என்னும் பெயர்க்கு உரியராகின்றனர். 'நூல்உரை போதகாசிரியர் மூவரும்' என்பது இலக்கணக் கொத்து. இவர்களன்றி, உலகில் தீவினை தலையெடுக்குங் காலங்களிற்றோன்றி, அதனை அழித்துத் தருமத்தை நிலைநிறுத்துவோர்களும், சமயஸ்தாபனஞ் செய்து ஆன்மஞானம் அல்லது பதிஞானத்தைப் பரவச்செய்வோர்களும், தனித்தனி ஆன்மாக்களின் பரிபாக காலத்தில் வெளிப்பட்டுத், தீக்ஷையானும் உபதேசத்தானும் ஆன்ம சுத்தியையும் ஆன்ம லாபத்தையும் அருளுவோர்களும் கடவுட்டன்மை வாய்ந்த 'ஆசிரிய'ராகின்றனர். ஆசிரியர்; யான், இவண் ஆசிரியரெனக் கருதியது போதகாசிரியரையே. நெடுங்கணக்குமுதல், பெருங்கலைகள் வரை எப்பாடத்தையும் ஒவ்வொருவர்க்கேனும் ஒவ்வொரு தொகுதியாயுள்ளவர்க்கேனும் போதிப்பவரனைவரும், போதகாசிரியர்களே. இவர்கள் 'உபாத்தியாயர்' என்னும் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றனர். 'ஓதுவித்தற் கண் உதவியாயுள்ளவர்கள்' என்னும் பொருள் படும் 'உப - அத்தியயனர்' என்னுந் தொடர், சொல்லும் பொருளும் சிறிது திரிந்து 'உபாத்தியார், உவாத்தியாயர்' என வழங்குகிறது. பரத கண்டத்தவராகிய நம் முன்னோர்கள், கல்வியே மக்களுக்குக் கண்ணெனக் கருதிப் போற்றி வந்துள்ளார்கள். குழந்தைகட்கு மிக்க இளம்பிராயத்தில் வித்தியாரம்பஞ் செய்வித்தலை, இன்றியமையாத ஒரு சடங்காகவும் நம்மவர் கொண்டிருக்கின்றனரன்றோ! 'இளைமையிற் கல்' (ஆத்தி:29) 'வித்தை விரும்பு' (ஆத்தி:100) 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' (கொன்றைவேந்தன்:7) என்பன போல்வன நம்நாட்டு மூதுரைகளாகும். இத்தமிழ்நாட்டில் மிகப் பழங்காலந்தொட்டே சிறுபள்ளிக் கூடங்களும், பெரிய கலாசாலைகளும், கல்விச் சங்கங்களும் இருந்திருக்கின்றன. அக்காலத்தில் உபாத்தியாயர், 'கணக்காயர்' என்னும் பெயரால் வழங்கப்பட்டனர். 'கற்றதூஉமின்றிக் கணக்காயர் பாடத்தால்' என்பது நாலடியார். (31) சங்கப் புலவர்களுள் பலரானும் அறியப்படும் பெருமை வாய்ந்த 'நக்கீரனார்'க்குத் தந்தையானவர் மதுரையிலிருந்த ஓர் உபாத்தியாயரான காரணத்தால், 'மதுரைக் கணக்காயனார்' என வழங்கப்பட்டார். மணிகேலைக் காப்பியத்தால் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், காவிரிப்பூம் பட்டினத்தில் வித்தியாமண்டப முதலியன இருந்தமை புலனாகின்றது. பாண்டி நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்கள் சங்கமிருந்து தமிழை வளர்த்தது உலகப் பிரசித்தம். கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பர், தமது இராமாயணத்தில் கோசல நாட்டை வருணிக்குமிடத்து. " பந்தினை இளையவர் பயிலிடம் மயிலூர் கந்தனை அனையவர் கலைதெரி கழகம்"1 என்று கூறியது, அந்நாட்டிற்கும் பொருந்துவதாயினும், தமிழகத்தின் ஞாபகத்தால் அங்ஙனம் கூறினாரெனக் கொள்ளலும் தவறாகாது. இதனால் தக்க பருவம் வரப் பெற்ற வாலிபர்கள் சிறந்த கலை களைப் பயின்றுவந்த கலாசாலைகள் இப்பரத பூமியில் அக்காலத்திலிருந்தமை புலனாகின்றது. பல சொல்லி என்? அயோத்தியானது, 'கல்வியாகிய ஒரே முளை முளைத்தெழுந்து, கேள்வியாகிய கவடுகளைப் போக்கித், தவமாகிய சாகந் தழைத்து, அன்பாகிய அரும்பு அரும்பி, தருமமாகிய மலர் மலர்ந்து, போகமாகிய பழம் பழுத்தது போலும், (நகரப்:75) என்பரேல், அக்காலத்துக் கல்வியானது எவ்வளவு மகோன்னத நிலையில் இருந்திருத்தல் வேண்டும்? பழைய தமிழ் நூல்களில் முகவுரையாக உபாத்தியாயர் இயல்பும் அவர் பாடம் போதிக்கும் முறைமையும், மாணாக்கரியல்பும், அவர் பாடங்கேட்கும் முறைமையும், விளக்கமுற எழுதப்பட்டு வந்திருக்கின்றன. இந்நான்கிலக்கணமும் சேர்ந்த முகவுரையானது 'பொதுப்பாயிரம்' எனப்படும். நன்னூலாசிரியர், நூலின் இலக்கணத்தையும், பொதுப் பாயிரத்திற் (நூற்பா:3) சேர்த்திருக் கிறார். அவரும், அவர்க்கு முன்னாகப் பின்னாகவுள்ளவர்களும் கூறியிருக்கும் 'ஆசிரியர்-மாணாக்கரியல்பு'களைப் படிக்குங்கால், எல்லையில்லாத வியப்பும் உவப்பும் நமக்கு உண்டாகும் நன்னூலாசிரியர் 'நற்குடிப் பிறப்பு, சீவகாருண்யமும், கடவுள் வழிபாடும், பல நூல்களையும் கற்றுத் தேர்ந்த அறிவின் தெளிவும், போதனாசக்தியும், உலகியலறிவும் முதலாகிய உயர்குணங்களை உடையனாதலோடு, பொறை முதலியவற்றால் புவியினையும், உயர்ச்சி முதலியவற்றால் மலையினையும், நடுவுநிலை முதலியவற்றால் நிறைகோலையும், முகமலர்ச்சி முதலியவற்றால் மலரினையும் ஒத்து விளங்குபவனே ஆசிரியனாவான்,' (நூற்:26) என்று கூறுகின்றார். புறத்திணையியலில் 'எட்டு வகை நுதலிய அவையத்தானும்' என்பதற்கு, நச்சினார்க்கினியர் காட்டியுள்ள ஓர் செய்யுளானது ஐயன் ஆரிதனார் கூறிய அவையமாந்தரிலக் கணத்தோடும், ஆத்திரேயன் பேராசிரியன் கூறிய ஆசிரிய இலக்கணத்தோடும் கருத்தொருமையுற்று, அழகுபெற உருவகஞ் செய்யப்பட்டு விளங்குகிறது. 'குடிப்பிறப்பாகிய உடையையுடுத்து, நூலுணர் வாகிய மலரைச் சூடி, நல்லொழுக்கமாகிய அணியைப் பூண்டு, சத்தியமாகிய உணவையுண்டு, தூய்மையாகிய ஆதனத்தமர்ந்து, நடுவு நிலையாகிய நகரிற்றங்கி, அழுக்காறின்மை, அவாவின்மை யென்கிற இருபெரு நிதியத்தையும் மேன்மேலும் ஈட்டுகின்ற தோலா நாவினையுடைய மேலோரின் பேரவைக்கண் ஒருநாள் சேர்ந்திருத்தல் கிட்டுமாயின் யான் மகிழ்வுடன் பெறுவேனாக, புலவு நாறுவதாய் நிலையற்றதாயுள்ள யாக்கையுடன் பொருந்தி, உலகின்கண் சுழலா நின்ற இப்பிறவியினை." (ஆசிரியமாலை-புறத்திரட்டு-அவையறிதல்) இவற்றானெல்லாம், ஆசிரியரென்போர், பண்டமாற்றுச் செய்யும் வாணிகரையும், தாம் பெறும் சம்பளத்திற்கேற்ப வேலை செய்யும் கூலித் தொழிலாளர் அல்லது உத்தியோகஸ்தரையும் போன்றவரல்லரென்பதும், புனித சிந்தையும், புனிதவொழுக்க முடையவராய்த் தம்மைச் சார்ந்தாரையெல்லாம் புனிதராக்கி வாழ்விக்கும் பேரருளாளர் என்பதும் விளக்கமாகின்றன. இனி, ஆசிரியராவார் பன்னூலுங் கற்றறிருந்தவராதலோடு உலகத்தோடு பொருந்த நடத்தலிலும் வல்லராதல் வேண்டும். தாம் கற்றுணர்ந்த அரும் பொருள்களைப் பிறர் எளிதிலுணருமாறு போதிக்குந் திறனுடையராதல் வேண்டும். இன்றேல், அவர் கொம்பினிடத்து நன்றாகப் பூத்திருந்தும், மணம் வீசுதலில்லாத மலரையொப்பாரெனச் செந்தாப்போதார் கூறுகின்றார். ஆசிரியன் பாடங்கற்பிக்குங்கால், தான் கற்பிக்கப் போகும் விஷயங்களை மனத்திலமைத்துக் கொண்டு, விரையாமலும், வெகுளாமலும், பிரியத்துடனும், முகமலர்ச்சியுடனும் கற்பித்தல் வேண்டும். தம்முடைய தெளிவும் இனிமையும் பொருந்திய குற்றமற்ற சொற்களினால் மாணாக்கர்களை வசீகரித்து, அவர்களுக்கு மேலும் மேலும் கேட்க வேண்டுமென்னும் ஆர்வத்தையும் மனவெழுச்சியையும் உண்டு பண்ணுதல் ஆசிரியர்க்கு இன்றியமையாத இலக்கணங் களில் ஒன்று. தமது பேசுந்திறமையொன்றையே நோக்காது, கேட்பாரது நிலைமையறிந்து சொல்லித் தாம் சொல்லு கின்றவைகளை ஏற்றுக் கொள்ளுகின்றார்களாவெனக் கவனித்தலும், ஏற்றுக் கொள்ளவில்லையெனத் தெரிந்தால், அதன் காரணத்தையறிந்து, அவர்கள் ஏற்கும் விதத்தால் மீட்டுஞ் சொல்லலும், மாணாக்கர்கள் ஐயுற்று வினாவியவைகளுக்கு இனிதின் விடை கூறி ஐயத்தைப் போக்குதலும், ஆசிரியர் கடமை யாகும். மாணாக்கர்கள் ஐயுற்று, வினாவியவைகளுக்கு உத்தரங் கூறாமலும், அவர்கள் அவ்வப்பொழுது நேரும் ஐயப்பாட்டினைத் தாராளமாகத் தெரிவித்துக் கொள்ளுதற்கு இடங்கொடாமலும், தமது கோரமான தோற்றத்தாலும் வன்சொல்லாலும் அச்சுறுத்தி அவர்கட்கு ஏலாத தண்டங்களையெல்லாம் விதித்து, அன்னார் பால் அன்பின்றியேயொழுகுபவர்கள், மாணாக்கர்களின் அறிவு வளர்ச்சிக்குப் பிரதிபந்தமாக வந்த பிசாசங்களேயன்றி, ஆசிரியர்களாக மாட்டார்கள். மக்களுக்கியற்கையறிவானது முற்பிறப்பை யொட்டியிருத்தலின், இப்பிறப்பின் வயதளவிற்கேற்ப அறிவிருத்தல் வேண்டுமெனும் நியமமில்லை. இம்முறைப்படி மாணாக்கர்கள் ஆசிரியரினும் அறிவு மிக்குடையராய் ஒரோவழித் தமது சாதுரிய அறிவை வெளிப்படுத்தலுங் கூடும்; அங்ஙனமாயின், ஆசிரியராயினார் அவரது அறிவிற்கு வியந்து மகிழ்ந்து இன்புறுதலே தக்கதாகும். ஆசிரியரானவர், குறிப்பிட்டயாதானுமொரு பாடத்தைப் போதிப்பவராக மாத்திரமன்றி மாணாக்கர்களுக்கு உயர்நலமுள்ள பொதுவுணர்ச்சியை உண்டுபண்ணி, அவரது பொதுநல வாழ்க்கைக்குக் காரணராயிருத்தல் வேண்டும். சுருங்கச் சொல்லின், மாணாக்கர்பால் அன்பும் அநுதாபமுடையராய் அவரது இகவாழ்வு பரவாழ்வுகளில் தம்மைச் சம்பந்தப்படுத்திக் கொள்வோரே உண்மையான ஆசிரியராவர். உபாத்தியாயர்கள் நல்லொழுக்க நெறியினின்றும் விலகாமல் முதலில் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். என்னை? அவர், தமது போதனையால் மாத்திரமன்று; தமது நடத்தைகளினாலும், தம்மைச் சூழ்ந்துள்ள மாணாக்கர்களையும் பிறரையும் நல்வழிப் படுத்த வேண்டும். 'மாந்தர்க்கு இனத்தியல்பதாகும் அறிவு' (குறள்:452) ஆதலின், பலகாலும் ஆசிரியனை அடுத்து இருந்து, அவனது போதனையை ஏற்று வரும் மாணாக்கர்களுக்கு ஆசிரியனது குணமும் செயலும் பற்றாமற்போகா. 'சிரேஷ்டனானவன் எதனை ஆசரிக்கின்றானோ அதனை இதரர்களும் ஆசரிக்கின்றார்கள்,' அவன் எதனைப் பிரமாணமாகக் கொள்ளுகின்றானோ, அதனை உலகமும் கொள்ளுகின்றது", எனக் கண்ணபிரான் கூறியபடி, சூழ்ந்துள்ளவர்கள் அவனைப்பின்பற்றி நடக்க முயலுகின்றார்கள். ஆக, ஒரு ஆசிரியன் தவறி நடப்பானாயின், அவன் தான் கெடுவ தன்றி, உலகத்தையும் கெடுப்பவனாகின்றான். முற்காலத்து ஆசிரியர்கள் அன்பே உருவெடுத்தாற் போன்றவர் களாய்க், குன்றா ஒழுக்கமுடையராயிருந்த காரணத்தாலன்றோ, பெற்றோர்கள் தம் குழந்தைகளை நம்பிக்கையுடனும் விசுவாசத் துடனும் குருக்களிடம் ஒப்பித்தனர்; குழந்தைகளும் ஆசிரியனே தஞ்சமாகக் குருகுலவாசஞ் செய்து வந்தார்கள். குருக்களும் குழந்தைகட்கு உடற்பிணி உண்டாகாமல் பாதுகாத்தும், உயிர்ப் பிணியாகிய அஞ்ஞானத்தைக் கெடுத்தும், சுக வாழ்வளித்து, அவர்கட்குத் தாய் தந்தையாகவும், மருத்துவனாகவும், தெய்வமே யாகவும் விளங்கினார்கள். தசரதரானவர், தம் குழந்தைகளான இராமலெட்சுமணரைக் கௌசிகரிடம் ஒப்புவிக்கும் பொழுது, 'நல் தந்தை நீ' தனித்தாயும் நீ இவர்க்கு, எந்தை தந்தனன்; இயைந்த செய்க', எனக் கூறிவிடுத்தனர். மற்றும் கௌசிகர், இராம லட்சுமணர்களின் பூரணமான யோக்கியதைக்கு அநுகுணமாக விருந்தோர் அவர்கட்குக் குருவாகிய வசிட்டரே என்பதனை, " திரை யோடும் அரசிறைஞ்சுஞ் செறிகழற்கால் தசரதனாம் பொறையோடுந் தொடர்மனத்தான் புதல்வரெனும் பெயரே காண் உறையோடு நெடுவேலாய் உபநயன விதிமுடித்து மறையோது வித்திவரை வளர்த்தானும் வசிட்டன்காண்"1 என்று ஜனகனிடத்திற் கூறியிருக்கும் அருமைப்பாட்டைப் படிக்கும்பொழுது நம் உள்ளம் களி ததும்புகின்றது. மாணாக்கர்; இனி, முற்கூறிய சொலற்கருஞ் சிறப்பினையுடைய நல்லா சிரியனையடுத்து, வழிபாடு முதலியன குறைவறப் புரிந்து, பாடங் கேட்போரே மாணாக்கராவர். நல்லாசிரியனையடுத்துக் கேட்டில ராயின், அவரது கல்வி, கேட்டலினால் ஆம் அத்துணை உறுதி யுடைத்தாக மாட்டாது. 'குருவிலார்க்கு வித்தை இல்லை' யென்பது பொய்யாகாது. 'உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்' (குறள்:595) உயர்ந்தோரேயென்பது. பொய்யா மொழியாகலின், ஆசிரியர்க்கு எவ்வளவும் கீழ்ப்படிந்து ஊழியஞ் செய்தாலும், அவையெல்லாம் மாணாக்கரது உயர்ச்சிக்குக் காரணமே தவிர வேறில்லை. சோம்பல், மறதி, மாறுபாடு, வஞ்சம், மானம், சினம் முதலிய தீக்குணங்களுடையோரும், தீத் தொழில் புரிவோரும், மாணாக்கராக மாட்டார்கள். மாணாக்கர்கள், கல்வியில் நிறைந்த விருப்பமும் ஊக்கமுமுடையராதல் வேண்டும். மழைத்துளியானது முத்துச்சிப்பியின் வாயில் விழுந்தால் முத்தாகப் பரிணமிக்கின்றது. தாமரை இலையில் விழுந்தால் விழுந்த அளவினதாக இருக்கின்றது. பழுக்கக் காய்ச்சிய இரும்பில் விழுந்தால் சுவறிவிடுகின்றது. அங்ஙனமே ஆசிரியன் கற்பிக்கும் நூற்பொருள், உத்தம மாணாக்கரைச் சார்ந்தால் விசேஷ நலத்துடன் வெளிப்படுகின்றது; மத்திமரைச் சார்ந்தால் அவ்வளவில் நிற்கின்றது. அதமரைச் சார்ந்தால் பயனின்றி அழிந்து விடுகின்றது. நீரைப் பிரித்துப் பாலைப் பருகும் அன்னம் போன்று, ஆசிரியன் கற்பித்தவற்றில் நலமுள்ள பொருள்களைப் பகுத்து மனத்திலமைத்துக் கொள்வோரும், உணவு கிடைத்தவிடத்து வயிறார மேய்ந்து, பின் சிறிது சிறிதாக வாயிற்கொணர்ந்து சீரணிப்பிக்கும் பசுவைப் போன்று, மிகுதியான பொருள்களைக் கேட்டுக் கொண்டு, பின் அவற்றைச் சிறிது சிறிதாகத் தம் கவனத்திற்குக் கொண்டு வருவோரும் உத்தமர்களாவார்கள். பாடங்கேட்கு முறையைப் பற்றி நன்னூலாசிரியர் கூறுவது " கோடல் மரபே கூறுங் காலைப், பொழுதொடு சென்று வழிபடல் முனியான், குணத்தொடு பழகி, அவன் குறிப்பிற் சார்ந்து, "இரு"என இருந்து சொல் எனச் சொல்லிப், பருகுவன் அன்ன ஆர்வத்த னாகிச் சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச், செவிவா யாக, நெஞ்சுகளன் ஆகக், கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப், 'போ'எனப் போதல் என்மனார் புலவர்"1 என்பது. மாணாக்கர்கள், கேட்ட பாடங்களைச் சிந்தித்துப் போற்றலும், நூல் வழக்கு, உலக வழக்குகளை ஆராய்ந்தறிதலும், தம் போன்ற மாணாக்கர்களுடன் பயிலுதலும் அவசியமாகும். கற்றார்பால் தாம் கற்றவைகளை ஏற்குமாறு சொல்லி, தம்மின் மிகுதியாகக் கற்றவரிடத்திருந்து அம்மிகுதியான பொருள்களைக் கொள்ளுதல் வேண்டும். ஆசிரியன்பால் அன்பும் அச்சமும் உடையாராய் அகலாமலும், மிக நெருங்காமலும், நிழல் போற்றொடர்ந்து, மரியாதையுடன் ஒழுகுதல் வேண்டும். மற்றும் ஆசிரியர்க்கு, 'உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாதும்' கற்றல் நன்றே; (புறம்:183) நூற்பொருளேயாயினும் வழிபாட்டுமுறையானன்றி, வஞ்சனையாற் கொள்ளக்கருதுதல் அதிபாதகமாகும். தம்பாலுள்ள பிழைகளைத் தீர்த்தற் பொருட்டும், தமக்கு நல்லறிவு கொளுத்தற் பொருட்டும், ஆசிரியன் ஒரோவழி இடித்துக் கூறுதலும், தண்டித்தலும் கூடும். அப்பொழுது அவை தம் நன்மையினிமித்தமெனக் கருதித் திருந்தலுறுவோரே விவேக முள்ள பிள்ளைகளாவார். ஆசிரியன் கற்பிக்கும் அரும்பொருளையும் எளிதின் உணர்ந்து கொள்வதனாலேயே அவனது அன்பைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். "நெஞ்சுற அருங்கலைகள் கற்பவர்கள் தம்மளவில் நேயமிலாதவர்கள் யார்?" மாணவர்களுக்குக் குரு பக்தியானது, எல்லாவற்றினுஞ் சிறந்தது. 'எழுத்தறிவித்தவன் இறைவனாகும்' அன்றோ? ஒரு குழந்தை இயல்பாகவே தன் தாயையும், பின் தாயுணர்த்தத் தந்தையையும், தந்தையுணர்த்தக் குருவையும், குருவுணர்த்தத் தெய்வத்தையும் அறியும் முறைபற்றி, 'மாதா பிதா, குரு, தெய்வம்' என வழங்குவராயினர். இதனால் குருவானவர், தெய்வத்திற்கடுத்த படியிலுள்ளாரெனத் தெரிகிறது. அன்றி, 'மாதா, பிதா, குரு' என்ற மூவரும் தெய்வமாவர் என இத்தொடர்க்குப் பொருள் சொல்லினும் பொருந்தும், அரசனும் உபாத்தியாயனும், தாயும், தந்தையும், தமையனும் குரவர்களாவார்களென்றும், இவர்களைத் தெய்வமாகக் கருதித் தொழ வேண்டுமென்றும் நம் நூல்கள் விரிக்கின்றன. நம் நாட்டுச் சிறுவர்கள் சுவடியையெடுத்துப் படிக்கத் தொடங்கும் பொழுதும், படித்து நிறுத்தும் பொழுதும், 'குருவாழ்க, குருவேதுணை' என்று கூறிவந்த வழக்கம் நமது குருபக்தியை எவ்வளவு தெளிவாகக் காட்டுகிறது! குருநிந்தை செய்வோரினும் அதிபாதகர் யாருமில்லை. " ஓரெழுத் தொருபொருள் உரைக்கக் கூடிய சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைக் சுணங்கனாய்ப் பிறந்து அங்(கு) ஓர்உகம் பாரிடைக் கிருமியாய்ப் படிவர் மண்ணிலே"1 என்று தவராஜ யோகிகளான திருமூலர் கூறுகின்றார். ஆசிரியன் ஒவ்வொன்றையும் தனக்குக் கற்பிக்காவிடினும் ஆசிரியன்பாற் செலுத்தும் அன்பு மிகுதியானே எல்லாக் கலையுணர்வும் எளிதின் வந்துவிடும். ஏகலைவன் துரோண விக்கிரகத்தை அன்புடன் வழிபட் டன்றோ ஒப்புயர்வற்ற வில்லாளியானான்? உதங்கன் முதலியோரது குருபக்தி, மகாபாரதத்தால் எவ்வளவு கொண்டாடப்படுகிறது! குருவாக்கிய பரிபாலனமே மாணாக்கர்களுக்கு உண்மையான அறமாகும். தாடகையின் கொடுமைகளை எடுத்துக் கூறி, அவளைக் கொல்லுமாறு கௌசிகர் பணித்தவளவில், முன்பு அவளைப் பெண்ணென நினைந்து ஒதுங்கியிருந்த பெருந்தகையாகிய இராமன், அவர்க்கு எதிர் கூறுமாறு கம்பர் கூறுவது, " ஐயன் அங்கது கேட்(டு) அறன் அல்லவும் எய்தி னால்அது செய்கவென் றேவினால் மெய்ய நின்னுரை வேதம் எனக்கொடு செய்கை யன்றோஅறஞ் செய்யுமா றென்றான்,"2 என்பதுங் காண்க, மாணாக்கர்கள், ஆசிரியன் திருமுன், வாய்மையுடனும் ஆசாரத் துடனும் ஒழுகுதல் வேண்டும். தாம் கல்வி பயிலும் நிலையின் நீங்கி எவ்வளவு உயர்ந்த பதவியை யெய்திய காலத்தும், தம் ஆசிரியரை நினைத்து உருகுதலும், அவர்கள் எதிர்ப்படின் அளவிலன்புடன் உபசரித்தலும், தம் நல்வாழ்விற்குக் காரணங் களாகும். வனவாசங் கழித்துவந்த பாண்டவனான அர்ச்சுனன், விராட நகர்ப்புறத்து நிரைமீட்கப் போர்க்கோலம் தாங்கி வந்த பொழுது, துரியோதனன் படையில் நின்ற தனது ஆசிரியர்கட்கு முதலில் அஸ்திர வாயிலாகத் தன் வழிபாட்டினைத் தெரிவித்துக் கொண்டதும், துரோணர் தன்னுடன் போர் புரிய வந்தடுத்த பொழுது, " யாதுமொன் றறியாஎன்னை இவனலா(து) இலையென்றிந்த மேதினி மதிக்குமாறு வில்முதற் படைகள் யாவும் தீதறத் தந்த உண்மைத் தெய்வம்நீ என்றால், பஞ்ச பாதகந் தன்னிலொன்(று)உன் பதயுகம் பிழைப்ப(து) ஐயா"3 'என அன்பு மயமான சொற்களைச் சொல்லிப் போர் செய்ய மறுத்ததும், ஒப்புயர்வற்ற வில்லாளியும் சிவபக்தி சிரோமணியுமான அவ்வருச்சுனனது குருபக்தியின் மேன்மையை விளக்குகின்றன. சில ஆண்டுகட்குமுன் நடைபெற்ற கல்கத்தா யூனிவர்ஸிடியின் பட்டமளிப்புத் திருநாள் ஒன்றில் வங்காள கவர்னராகிய லார்டு கார்மிக்கேல், மாணாக்கர்களுக்குக் குரு நிந்தையால் வருந்தீங்கையும் குருபக்தியின் மேன்மையையும் நமது மநுதர்ம சாஸ்திரத்திலிருந்து எடுத்துக்காட்டி வற்புறுத்தியதும், நமது இராஜப்பிரதிநிதியா யிருந்து இங்கிலாந்து சென்ற லார்டு ஹார்டிஞ்சு, பம்பாய் யூனிவர்ஸிடியார் தமக்கு 'எல்.எல்.டி. பட்டம் சூட்டியபொழுது 'மாணாக்கர்கள் தன்னடக்கமும் தன்னல மறுப்பும் உடையராய் விளங்கவேண்டு' மென்று பரிந்து பேசியதும், நம் தேயத்து மாணாக்கர் ஒவ்வொருவர் மனத்திலும் வேரூன்றியிருத்தல் வேண்டும். இப்பொழுது மாணாக்கர்களாயிருப்போர்களே இனிப் பெரியோர்களாதலின், இத்தேசத்தின் உன்னத வாழ்விற்குக் காரணராக இருப்பவர்கள் இவர்களே. பொது; ஆசிரியரும் மாணாக்கர்களும் ஒருவருக்கொருவர் அன்புடையராய், பரோபகார சிந்தையுடையராய் இருப்பரேல், இவ்வுலகம் எவ்வளவு மேனிலை யடைந்துவிடும். "ஒவ்வொரு சிறந்த முயற்சியும் தம் பொருட்டாக இல்லாமல் பிறர் பொருட்டாகவே முயலும் பெருமையுடையோர் இருத்தலினாற்றான், இவ்வுலகம் நிலைபெற்று வருகின்றது! எனப் புறநானூற்றில்" 1 ஒரு பெரியவர் கூறுவதைச் சிந்தித்தொழுகுக.  24. இந்தியை இந்தியாவுக்குப் பொதுமொழியாக்குதல் பொருந்தாது அரசியல் கிளர்ச்சி காரணமாக இந்தியநாடு முழுதுக்கும் இந்தியைப் பொது மொழியாக்க வேண்டும் என்னும் கொள்கை யொன்று தோற்றுவிக்கப்பட்டு, அதன் பொருட்டுச் சில ஆண்டு களாக வலிய முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன. உலகிலேயே பெரியாராக விளங்கும் காந்தியடிகள் போன்றவர்களின் ஆதரவி னால் இம்முயற்சி மிக்க வலிமையும் ஆக்கமும் பெற்று வருகிறது. இந்நாடு உரிமை பெறுதற்குரிய சாதனங்களில் 'ஹிந்தி' பொது மொழியாவதும் ஒன்றாகும் என்னும் சிறந்த எண்ணங்கொண்டே காந்தியடிகள் போல்வார் இதனைத் தோற்றுவித்திருப்பர். அவர்கள் கருதுமாறு இதனானும் சிறிதுபயன் விளையினும் விளையலாம். எனினும் இதனால் விளையக்கூடிய நலம் தீங்குகளையெல்லாம் நன்கு ஆராய்ந்து பாராது, பிறர் சொல்லும் வழியெல்லாம் ஒழுகுவதென்பது பெரிதும் ஏதம் தருவதாம். 'இந்திய தேசிய மகாசபை' சம்பந்தப்பட்ட வரையில் பார்க்கினும் சில ஆண்டு களாகச் சென்னை மாகாணத்தினர் யாதும் செல்வாக்கில்லாதவர் களாய் நீர்வழிப்பட்ட புணை போல் ஏனையோர் வழியில் ஒழுகுபவர்களாய்க் காணப்படுவது இரங்கத்தக்கதாகும். தமிழ் மக்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தம் முன்னோர்களின் அறிவு, ஆண்மை, கொடை, நீதி முதலிய வற்றை அறிந்து கொள்ளவும், இம்மை மறுமை வீட்டின் பங்களைப் பெறுதற்குரிய வழிகளைத் தெரிந்து கொள்ளவும், இறைவனை மனமுருகத்துதித்துப் பேரின்பமடையவும் கருவியா யிருப்பது தமிழ் மொழியாகும். தமிழ் மக்களில் இதனைப் பயிலாதவர் யாவரும் வாழ்க்கையின் பயனை இழந்தவர் ஆவர். அங்ஙனமாகவும் தமிழ் மக்களனைவரும் தமிழ் கற்கவேண்டும் என்பதற்குரிய முயற்சியைச் சிறிதும் மேற்கொள்ளாது அரசியற் கிளர்ச்சி யாளர்கள் 'ஹிந்தியைப்பரப்புவதற்கு முயல்வது அன்னாரது நேர்மையின்மையைக் காட்டுகிறது.' காசி 'இந்து யுனிவர்சிடி'யில் படிக்கும் தமிழனொருவன் கட்டாயமாகத் தமிழ் படிக்க வேண்டும் என்ற விதி அங்குள்ளது. ஆனால் சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களிலோ, தமிழ் நாட்டுப்பள்ளிக் கூடங்களிலோ அத்தகைய விதியில்லை. இந்த நிலைமையில் ஹிந்தியைக் கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங் களிலும் விருப்பப்பாடமாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்ஙனமாகுமாயின் தமிழின் நிலை பின்னும் இரங்கற் குரியதேயாகும். ஹிந்தி இன்னும் 150 ஆண்டுகள் போதிக்கப் படினும் இப்பொழுது ஆங்கிலம் இருக்கும் நிலையைத்தான் எட்ட முடியும். யாவரும் அதனைக் கற்றல் இயல்வதன்று. அப்படியே இந்தியாவிற்கு அது பொதுமொழியாயினும் உலகப் பொது மொழியாக ஆங்கிலம் கற்கப்படல் வேண்டும். தாய்மொழியோடு ஆங்கிலம் கற்பதே இயலாததாயிருப்ப ஹிந்தியும் கற்க வேண்டும் என்பது பொருந்துமா? எனவே ஹிந்தியைப் பொதுமொழியாக்கும் முயற்சியானது பயனிலதாவதே யன்றிக் கேடுபயப்பதுமாகுமெனத் தோன்றுகிறது. யான்தமிழைக் குறிப்பிட்டுச் சொல்லிய சில செய்திகள் தெலுங்கு முதலிய நாட்டு மொழிகட்கும் பொருந்தும்.  25. தமிழவேள் தனிமாண்பு செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள்,திரு.த.வே.உமாமகேசுவரம் பிள்ளை யவர்கள் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் அரசர்க்குரிய பண்புகள்1 இயல்பிலே அமைவரப் பெற்றவர். அவர், செல்வம், பதவி, ஆணை என்பவற்றிற் பிறர் எத்துணைச் சிறந்தோராயினும் அவை கருதியே அவர்க்கு வழிமொழிதலுடைய ரல்லர் செய்தக்க செய்யாக் குறையோ, செய்தக்க வல்லன செய்யுங் குற்றமோ2 அவர் பாற்காணின் அவர் கண்ணெதிரே கழற்றுரை கூறித் தெருட்டு நீர்மையர். முற்கூறிய மூன்று மில்லாரை அவையின்மை யேதுவாக மீக் கூறுதலுடையருமல்லர்; அவர்பாற் கடப்பாடறியும் பண்புடமை காணின் அவர்க்கு வழிமொழிதலுஞ் செய்வர்; மற்று, எனக்கிது செய்கவென எக்காலத்தும் யாரொருவர் கண்ணும் யாதொன்றனையும் இரத்தலறியார்; ஒல்லுவ தொன்றனைப் பிறர் இரந்த வழி அதனை மறுத்தலு மறியார்;3 இன்னவாற்றால், புறப்பாட்டிலே, நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் கூறிய "வலிய ரென வழிமொழியலன், மெலிய ரென மீக்கூறலன், பிறரைத் தான் இரப்பறியலன், இரந்தோர்க்கு மறுப்பறியலன்"4 என்னும் ஏத்துரைகள் நம் தமிழவேளுக்கும் நற்கியையுமென்க. மற்று சால்பு என்னும் பொறையினைத் தாங்கிய தூண்களென வள்ளுவனார் தெள்ளியுரைத்த அன்பு, நாண், ஓப்புரவு கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐங்குணங்களும்5 தமிழவேளை அணிசெய்யாநின்றன", "பெருமை பெருமிதமின்மை"6 என்னும் அறிவுறூஉக்கண்டு அவர் அடங்கினரோ, அவரது தருக் கின்மையானாம் பெருமையை நோக்கி அவ்வுரை யெழுந்ததோ என்னுமாறு அவரது அடக்கம் சிறந்து திகழ்ந்தது. தெய்வப் புலவர் நட்பியலின் மறைமுகத்தாற் கூறியவரைவின் மகளிர், கள் சூது என்பன அவரிருந்த திசையினும் சென்றறியாதன. மற்றும், "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்"1 "அறிவறிந்தாள் வினையின்மை பழி"2 என்னும் மறைமொழிகளைக் கடைப்பிடித்து, இது அருமையுடைத்தென்று அசாவாது,3 வினை செய்தலானாம் இன்னாமையை இன்பமெனக் கொண்டு4 இடையறாது முயலும் அவரது மீக்கோளும் ஊக்கமும் விளம்புதற்கரியன. அவர் அங்ஙனம் முயறற்கு மேற்கொண்ட வினைதான் தண்டமிழ் புரத்தலே. இரவன் மனையில் எழுந்த குழவியாம் கரந்தைத் தமிழ்ச்சங்கம் இப்பொழுது கந்தனையனையவர் கலை பயில் கழகமும், பந்தினை யிளையவர் பயிலிடமும்,5 மன்றமும், பொதியிலும் மருத்துக் கூடமும், ஆர்தமரற்றோர் சேர்தருமில்லமும், பட்டிமண்டபமும், பரந்த நூல் நிலையமும், பிறவுமாம் உறுப்புக்கள் திறவிதிற்பெற்ற பேரரண் உற்ற பெற்றிதான் செந்தமிழ்ப் புரவலர் நந்தா முயற்சியின் வந்ததோர் பயனேயன்றோ? அவர் எவ்வுழிச் செல்லினும், யாருடன் பேசினும், யாது புரியினும் யாவும் தமிழின் பொருட்டே யாகும். இங்ஙனம் சிந்தையும், உரையும் செய்கையு மெல்லாம் செந்தமிழ்க்காக்கிய திண்டிறற் குரிசில். செந்தமிழ்ப் பயனாம் சிவநெறி பேணுந் தவமுடையாருமாயினர். கனிந்த அன்பின் நனைந்தவுள்ளமொடு திருப்பதி தோறும் விருப்புடன் நடந்து கண்ணுதற் கடவுளை நண்ணி வழிபடும் ஆர்வம் இவர்பால் அளவின்றாயது. ஐயாறப்பர் திருவுலாப்போதும் ஏழ்பதிவிழாவில் மெய்ப்பையின்றியும் மேலுடையின்றியும் வெம்மை மீதுறத் தண்மையின் நடக்கும் இவரது எளிய தகைமையைப் பல்லாயிரவர் பார்த்துளம் நெகிழ்வர். மற்றும், யாவர்க்கும் இன்னா செய்யாமையும், எளியார்பால் இரக்கங்கோடலும், கற்றாரைக் காதலித்தலும், நட்டாரை உயர்வு கூறலும்,6 பெரியோரைப் பேணியொழுகலும் முதலிய இவர் பண்பனைத்தும் உரையில் அடங்குவனவல்ல. சுருங்க உரைக்கின் அவரது வாழ்க்கை ஒரு கல்விக்கூடம், உயர்நிலை விரும்புமொருவன் அதனிற் புகுந்து பயிறல் வேண்டும். ஆ! இப்பெருந்தகையாம் அருந்துணையைப் பிரிந்தேயும் இருந்தேம் யாம்! எம் அன்பிருந்த வாறென்னே! 26. தமிழில் கலைச்சொற்கள் மாணாக்கர்கட்கு அறிவு நூல்களை நாட்டுமொழி வாயிலாகக் கற்பிக்கும் பொருட்டு அரசியலார் கலைச்சொற்களைத் தொகுக்க விரும்பியது பொதுவாகப் பாராட்டற்குரியதே. ஆனால் அவ்விருப்பம் பயன்றரத்தக்க முறையில் முயற்சி நடைபெறவில்லை. தென்னிந்திய மொழிகளிற் கலைச்சொல் லாக்குதற்பொருட்டு 1923ஆம் ஆண்டில் சென்னை அரசாங்கத்தினர் நியமித்த கழகத்தின் வேலை பயனற்றதாய் ஒழிந்ததன் காரணத்தை ஆராய்ந்து அக்குறை மீட்டும் நேர்தற்கிடமில்லாதபடி சென்ற ஆண்டிலே சென்னை அரசாங்கத்தார் கலைச்சொல் வெளியீட்டு ஆலோசனைக் குழுவை அமைத்திருத்தல் வேண்டும். சென்னைக் குழுவினர் கண்ட முடிபுகளும் எவ்வாற்றானும் பயன்றரத் தக்கனவல்ல. பல தேய ஒருமைப்பாட்டின் பொருட்டுப் பொது மொழி ஒன்றிருக்கக் கூடுமாயின் நன்றே. ஆங்கிலத்திலுள்ள கலைச்சொற்களை அப்படியே இந்திய நாட்டுமொழிகளில் எடுத்துக் கொள்வது பல தேய ஒருமையை ஏற்படுத்துவதாகாது. அம்மொழியின் சொல்லோசையை அவ்வாறே பிறமொழிகளில் அமைத்தல் இயல்வதன்று. அமைப்பினும் அவ்வோசையே உடைய பிறமொழிச் சொல்லோடு வேற்றுமை யறியாது மயங்குதற்கிடனாகும், Air என்னும் சொல்லைத் தமிழில் ‘ஏர்' என்று எழுதினால் எவ்வளவு குழப்பமுண்டாகும்? அன்றியும் ஒரு மொழியிலுள்ள கலைநூலை அம்மொழி கற்றாரன்றி ஏனையோர் அறிதல் இயலாது. அவ்வாறிருக்கப் பல மொழிகளிலும் கலைச் சொற்களைமட்டில் பொதுவாக்குதலால் விளையும் பயன்யாது? தென்னிந்திய மொழி அல்லது திராவிட மொழிகளில் கலைச் சொற்களை வடமொழியிலிருந்து அமைப்பது என்பதும், முறை யற்ற செய்கை, திசைபற்றி வடமொழிக்கு எதிராகத் தென்மொழி என்று கூறப்படுவதும், எவ்வகையிலும் வடமொழிக்குத் தாழ்ந்த தல்லாததும், கலைகட்கு வேண்டிய சொற்களை யெல்லாம் தன்னகத்துக் கொண்டிருப்பதும், தரவல்லதும் ஆகிய தமிழுக்கு வடமொழியிலிருந்து சொற்களை ஏன் கடன் வாங்குதல் வேண்டும்? மற்றும் இவ்விரு கொள்கையும் நாட்டுமொழி வாயிலாகக் கல்வி கற்பிப்பது என்னுங் கொள்கைக்கு முரணானவை. மொழிப் பயிற்சியை அன்றிக் கலைப் பயிற்சியையுங் குறைக்கக் கூடியவை. சிறப்பாகத் தமிழுக்கு ஊறு செய்வன. தமிழ் மக்கள் எதனை இழந்தாலும் தங்கள் மொழியின் தூய்மையை இழக்க ஒருப்படார். ஆகலின் அவர்கள் கருத்துக்கு மாறாக வலிதிற் புகுத்தப்படும் இம்முறையால் எத்துணையும் பயன் விளையாது. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம், 1934-ஆம் ஆண்டில் இவ்வேலையை மேற்கொண்டு பல்கலைகளிலும், தமிழிலும் பயிற்சி யுடையவர்களின் உதவியால், வெவ்வேறு கலைகட்குரிய சொற்களைத் தமிழில் எழுதி, 1936-ஆம் ஆண்டில் ஓர் பெரிய மகாநாட்டையுங் கூட்டி, அறிஞர் பலருடைய ஒப்புதல் பெற்று "கலைச்சொற்கள்" என்னும் பெயரால் ஓர் புத்தகவுருவில் வெளிப்படுத்திற்று. எல்லாக் கல்வி நிலையங்களும், வெளியீடுகளும் அவற்றை ஏற்றுக் கொள்ளும்படி செய்யச் சென்னை அரசியலாரே முன்வந்தனர். நூல் எழுதுவோரும், கற்பிக்கும் ஆசிரியரும், முதலாக அனைவரும் அவற்றை மேற்கொண்டமையால் அவை பெரிதும் வழக்காற்று நிலையை அடைந்துள்ளன. தமிழைப் பொறுத்த மட்டிலாவது அவற்றையே ஏற்றுக்கொள்ளும்படி செய்வதும், அவை போதாவிடில் அம்முறையைப் பின்பற்றி மேலும் சொற்கள் ஆக்குமாறு செய்வதும் அரசாங்கத்தின் கடமையாகும்.  27. தொண்டைமான் இளந்திரையன் தொண்டைமான் இளந்திரையன் என்பவன் தொண்டை நாட்டின் தலைநகராகிய கச்சிப்பதியிலிருந்து அரசுபுரிந்த ஓர் சிற்றரசன்; சங்க காலத்துப் பாட்டுடைத் தலைவர்களில் ஒருவன்; கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சான்றோர் பாடிய பெரும்பாணாற்றுப்படை கொண்டவன்; சங்கச் செய்யுட்களியற்றிய நல்லிசைப்புலவர் வரிசையிற் சேர்ந்த தொல்லிசையுடையவன். இவன் பெயர் ஒரோவிடங்களில் தொண்டைமான் எனவும், இளந்திரையன் எனவும், திரையன் எனவும் வழங்கும். தொண்டைமான் என்னும் பெயர் தொண்டையர் குடியிலே தோன்றிய அரசன் என்னும் பொருளதாகும். தொண்டையர் தொண்டை நாட்டில் வாழ்ந்த குறுமுடிக் குடியினர். இளந்திரையன் என்பது அம் மன்னன் பெயர். பண்டைநாளிலே அரசர் முதலாயினார் பெயர்க்கு அடையாக வருவனவற்றுள் இளமைப் பண்பும் ஒன்றென்பது இளஞ்சேட்சென்னி, இளம்பெருவழுதி, இளஞ்சேரலிரும் பொறை, இளவெளிமான், இளங்கீரன் முதலிய பெயர்களான் அறியப்படும். பெரும்பாணாற்றுப் படையிலே, " இருநிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த் திரைதரு மரபி னுரவோ னும்பல் மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும் முரசுமுழங்குதானை மூவருள்ளும் இலங்குநீர்ப் பரப்பின் வளைமீக் கூறும் வலம்புரியன்ன வசைநீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம்புரி செங்கோற் பல்வேற் றிரையன்"1 என்னும் பகுதி திரையனது குடிப்பிறப்பையும், பெயர் வரலாற்றையும் உணர்த்துகின்றது. இப்பாட்டிற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் இதிலுள்ள சொற்களைக் கொண்டுகூட்டி 'மூவேந்தருள்ளும் தலைமைவாய்ந்தோனும், திருமாலின் பின் வந்தோனுமாகிய சோழன்குடியிற் பிறந்தோன், கடலின் திரை கொண்டு வந்தமையால் திரையன் என்னும் பெயரையுடையவன்' என்று பொருள் கூறி, 'என்றதனால், நாகபட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து, அவள், 'யான்பெற்ற புதல்வனை என் செய்வேன்' என்றபொழுது, 'தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலேவிட, அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பல்' என்று அவன் கூற, அவளும் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரை தருதலின் திரையனென்று பெயர் பெற்ற கதை கூறினார்' என ஓர் வரலாறும் குறித்துள்ளார். அவர், "தொண்டையை அடையாள மாகக் கட்டிவிட" என்றமையின், தொண்டைமான் என்ற பெயரின் காரணமும் அதுவென நினைந்தாராகல் வேண்டும். மணிமேகலையின் 24-ஆவது காதையில், நெடுமுடிக்கிள்ளி யென்னும் சோழமன்னன் இன்னிள வேனிற் பொழுதிற் புன்னையங்கானலில் எதிர்ப்பட்ட எழில்மிக்க இளையாளொருத்தியைக் களவிற் கூடி, சின்னாளின் பின் அன்னவளைக் காணாது தேடுங்கால், சாரணன் ஒருவன் தோன்றி, "நாகநாடாளும் வளைவணன் என்னும் அரசன் மனைவியாகிய வாசமயிலை வயிற்றுதித்த பீலிவளை என்பாள் பிறந்தபொழுது, 'இவள் பரிதிகுலத்தொருவனை மருவிக் கருவுடன் வருவள்' எனக் கணிவன் கூறியதனைக் கேட்டுளேன்; அவளே நின்னை மணந்து தணந்தவளாவள்; இனி, அவள் பெறும் புதல்வன் வருவானன்றி, அவள் வாராள்" எனக் கூறினனென ஓர் வரலாறு காணப்படுகின்றது. இதிற் குறிக்கப்பட்ட பீலிவளையும், அவள் புதல்வனுமே நாககன்னியும் இளந்திரையனுமாவ ரெனச் சிலர் கருதுவர். (பத்துப்பாட்டு, பாடப்பட்டோர் வரலாறு காண்க.) ஆயின், முற்காட்டிய பெரும்பாணாற்றின் பகுதிக்கு நச்சினார்க் கினியர் உரைத்தவுரை பொருத்தமுடைத்தெனத் தோன்றவில்லை. 'முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த்திரைதரு மரபின் உரவோன் உம்பல்' என்பதற்கு, 'கடல் வண்ணனாகிய திருமாலின் பின் வந்தோனும், கடல் நீர்த்திரையால் தரப்பட்ட மரபினையுடைய உரவோனுமாகிய சோழனது வழித்தோன்றல்' என்பதே நேரிய பொருளாகும். திரையன் என்பது சோழனுக் குரியதோர் பெயரெனக் கொள்ளல் வேண்டும். 'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முந்திய தமிழர்' என்னும் நூலியற்றிய கனகசபைப் பிள்ளையவர்களும் திரையர் என்னும் பெயரைச் சோழர்க்கே உரியதாக்குகின்றனர். தொண்டைமான் என்னும் பெயரும் தொண்டைக்கொடியை அடையாளமாகக் கட்டிவிட்டமையின் இளந்திரையனுக்கு வந்ததென்பது பொருந்தாது. குறுந்தொகையில், "அண்ணல் யானை, வண்டேர்த் தொண்டையர்" (260) எனவும், அகநானூற்றில், "வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்" (213) எனவும் தொண்டையர் என்பது ஓர் குடிப்பெயராக வந்துள்ளமை காண்க. பெரும்பாணாற்றிலேயே இளந்திரையன் "தொண்டையோர் மருகன்" என்று கூறப்படுகின்றான்; இஃதொன்றுமே இளந்திரையனுக்கு முன்பே தொண்டையர் என்னும் வழக்குண்மை நிறுத்தப் போதியதாகும். இவ்வாற்றால் தொண்டையர் என்னும் பெயர் காஞ்சி, திருவேங்கடம் முதலியவற்றைத் தன்னகத்தேயுடைய நாட்டிலே தொன்று தொட்டு ஆட்சி புரிந்த ஓர் குடியினரைக் குறிப்பதாமென்றும், இளந்திரையனென்பான் சோழனொருவன் தொண்டையர் மகளை மணந்து பெற்ற மைந்தனாவான் என்றும், அவனே தொண்டை நாட்டுக்கு அரசனாகித் தாய்வழியில் தொண்டைமான் என்னும் பெயரும், தந்தை வழியில் திரையன் என்னும் பெயரும், எய்தினான் என்றும் கருதுதல் சாலும். இனி, திரையர் என்னும் பெயர் சோழர்க்குரித்தன்றாய்த் தொண்டையர்க்குரியதொன்றாயினும், 'திரைதரு மரபின் உரவோன் உம்பல்' என்பதற்குத் திரையாலே தரப்பட்ட முறைமையினை யுடையோனது வழித்தோன்றல் என்பதே பொருளாகலின், சோழன் மகனாதல்பற்றி முந்நீர் வண்ணன் பிறங்கடை என்றும், திரையர் குடிக்குரியனாதல் பற்றித் திரையன் என்றும் இவன் கூறப்பட்டானெனக் கோடல் வேண்டும். இனி, மணிமேகலை 29-ஆவது காதையில், நெடுமுடிக் கிள்ளிக்குப் பீலிவளை பெற்ற புனிற்றிளங் குழவியை நாகநாட்டரசன் தனிமரக் கலத்திற்போந்த கம்பளச் செட்டியின்கையிற் கொடுக்க, அவன் அக்குழவியை ஏற்று மரக்கலத்திற் கொண்டு மீண்டு வரும்பொழுது புகார் நகரின் கடற்கரைக்கு அணித்தாகக் கப்பல் முழுகியதென்றும், அதனைக் கேள்வியுற்ற கிள்ளி மகனைத் தேடுதலால் இந்திரவிழாச் செய்தலை மறந்து விட்டனனென்றும், இந்திரன் கட்டளையால் மணிமேகலா தெய்வம் கம்பளச் செட்டியைப் பாதுகாத்ததென்றும், இந்திரவிழாச் செய்யப் படாமையால் காவிரிப்பூம்பட்டினம் கடலாற் கொள்ளப்பட்ட தென்றும் கூறப்பட்டுள்ளது. பீலிவளை மகனுக்குத் தொண்டைக் கொடியை அடையாளமாகக் கட்டிவிட்ட செய்தியோ, அவன் கரையேறினான் என்ற செய்தியோ அதிற் கூறப்படவில்லை. அவன் கரையேறி வளர்ந்து அரசுக்குரியவனாயினும் அவனது காலம் இளந்திரையன் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு பிந்தியதாகல் வேண்டும். சோழன் கரிகாற் பெருவளவனைப் பட்டினப்பாலையாற்பாடிய உருத்திரங்கண்ணனாரே ஆற்றுப்படையால் இளந்திரையனைப் பாடியிருத்தலின், இளந்திரையன் காலம் கி.பி.முதல் நூற்றாண்டின் இறுதியாகல் வேண்டும். மணிமேகலை காஞ்சியை அடைந்த பொழுது அங்கிருந்தவர்கள் தொடுகழற்கிள்ளி, துணையிளங் கிள்ளி என்னும் சோழர்களென்பது தெரிதலின், பீலிவளையின் மகன் வந்து அரசாண்டான் என்னின் அன்னோர் காலத்தின் பின்னர்க் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியிலோ மூன்றாம் நூற்றாண்டின் முதலிலோ ஆதல் வேண்டும். எனவே, எவ்வாற்றானும் தொண்டைமான் இளந்திரையன் பீலிவளையின் மகனல்லன் என்பது பெற்றாம். இனி, தொண்டைநாட்டிலிருந்து ஆட்சிபுரிந்த பல்லவ மன்னர்களும் தொண்டையரும் ஓரினத்தவரே யெனப் பல ஏதுக்கள் காட்டிக் கள்ளர் சரித்திரத்தில் யான் எழுதியுள்ளேன். தொண்டைமான் இளந்திரையன் சோழன் மகனும், முடியுடைய வேந்தரொடு சேர்த்தெண்ணத்தகும் பெருமையுடையனு மாகவும் பண்டைச் சான்றோர்கள் அவனைக் குறுநில மன்னனாகவே கருதியிருந்தனரென்பது "வில்லும் வேலும்" என்னும் மரபியற் (நூற்.84) சூத்திரவுரையில் 'மன்பெறு மரபின் ஏனோர்' எனப்படுவார், அரசுபெறு மரபிற் குறுநிலமன்னர் எனக் கொள்க; அவை, பெரும்பாணாற்றுள்ளும் பிறவற்றுள்ளும் காணப்படும்' எனப் பேராசிரியர் உரைத்தமையாற் பெறப்படும். பண்டையோர் அங்ஙனம் கொண்டமைக்குக் காரணம் அவன் தொண்டையர் குடிக்குரியனாய்த் தொண்டை நாடாட்சி பெற்றமையே யாகும். பிற்றைநாளிலே பல்லவர்கள் தமிழகத்தின் பெரும் பகுதியை அடிப்படுத்தி ஆட்சி செய்தவழியும் அன்னவர் குறுநிலமன்னர் வகுப்பிலேயே சேர்த்தெண்ணப் பெற்றனரென்பது பெரிய புராணத்தில் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் பல்லவர் குலத் துதித்து நாடாண்ட கழற்சிங்கர் முதலாயினார் அங்ஙனம் கொள்ளப்பெற்றமையாற் போதரும். இனி, பெரும்பாண் முதலிய வற்றால் அறியப்படும் இளந்திரையன் பண்புகளை உளங் கொள்வோமாக.  28. பதிற்றுப்பத்து பதிற்றுப்பத்து என்பது சங்கப் புலவர்களாலே பாடித் தொகுக்கப் பெற்ற எட்டுத் தொகையுள் ஒன்று, புறப்பொருள் பற்றிய நூறு அகவற்பாக்களால் ஆகியது. பப்பத்துப் பாட்டுக்கள் உள்ள பத்துப் பகுதியாக அமைந்திருத்தலின் இதற்குப் பதிற்றுப் பத்து என்பது பெயராயிற்று. ஒவ்வொரு பத்தும் தனித்தனியே ஒவ்வோர் அரசரைக் குறித்து ஒவ்வொரு புலவர் பாடியன வாகலின் இந்நூல் பத்துப் பகுதியுடையதாயிற்று என்க. இந்நூல் முழுதும் சேரமன்னர்களையே பாராட்டுவதும், ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்பன குறிக்கப்பட்டிருப்பதும், ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் வரலாற்றுக் குறிப்புக்கள் அடங்கிய பதிகம் ஒவ்வொன்று அமைந்திருப்பதும் ஏனைத் தொகைநூல்களில் இன்றி இதன்கண் காணப்படும் சிறப்பியல்புகளாகும். ஐங்குறு நூற்றின் நெய்தல் எட்டாம் பத்துப்போல இந்நூலின் நாலாம் பத்து அந்தாதியாக அமைந்துள்ளது. எனவே, அந்தாதி பாடுவதற்குச் சங்கப் புலவர்களே அடிகோலியுள்ளார்கள் என்பது போதரும். ஒவ்வொரு பாட்டிலும் உள்ள சிறப்புடைய தொடர் ஒன்று அவ்வப்பாட்டிற்குப் பெயராக அமைந்திருத்தலை நோக்கின், அக்காலத்திருந்த அஞ்சொல் நுண்டேர்ச்சிப் புலவர்கள் செய்யுட்களிலே சொற்களையும் பொருள்களையும் நுண்ணிதின் ஆராய்ந்து சிறப்புடையன கண்டு களிகூர்ந்தனர் என்பது புலனாம். பத்துப்பாட்டில் ஒன்றாய கூத்தராற்றுப்படைக்கு மலைபடு கடாம் என்ற பெயர் வந்ததும் அறியற்பாலது. பதிகங்கள் அவ்வப் பத்தின் பாட்டுடைத் தலைவன் பெயர், அவன் புரிந்த அரிய செயல்கள், பாடின புலவர் பெயர், செய்யுட்கள் பத்தின் பெயர் என்னும் இவற்றைப் புலப்படுத்துகின்றன. பதிக இறுதியில் பாடிய புலவர் பெற்ற பரிசிலும், அரசன் ஆண்ட காலவளவும் குறிக்கப்பட்டுள்ளன. இக்கால அளவானது பாடினோரால் அன்றிப் பின்வந்தோரால் எழுதப்பட்டிருத்தல் ஒருதலை. மற்றும், பதிகங்களில் பாட்டுடைத்தலைவர் பெயரே யன்றி, அன்னோரை ஈன்ற தந்தை தாயர் பெயரும் காணப்படுதல் வியத்தற்குரியது. இவ்வாற்றால் பழைய சேர வேந்தர் சிலருடைய வரலாறு துணிதற்கு இந் நூற்பதிகச் செய்யுட்கள் பெரிதும் துணைசெய்யாநிற்பன. பதிகங்கள் யாவும் முன்னர் ஆசிரிய நடையும் இறுதியிற் கட்டுரை நடையும் கொண்டிருத்தலின் உரைச் செய்யுட்களாம். இந்நூலின் முதற்பத்தும் இறுதிப்பத்தும் இறந்தன. ஏனைய இரண்டு முதலிய எட்டுப் பத்துக்களிலும் முறையே பாடப் பெற்றவர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழுகுட்டுவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செல்வக் கடுங்கோவாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர வேந்தர் எண்மருமாம். பாடிய புலவர்கள் முறையே குமட்டூர்க் கண்ணனார், பாலைக் கௌதமனார், காப்பியாற்றுக் காப்பியனார், பரணர், காக்கைபாடினியார் நச்செள்ளையார், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் என்னும் எண்மருமாம். இவர்களுள், காக்கைபாடினியார் நச்செள்ளையார் பெண்பாற் புலவராவர். இப்புலவர்கள் பத்துப்பத்துப் பாட்டுக்கள் பாடியதற்காக அவ்வேந்தர்களிடம் பெற்ற பரிசில்கள் மருட்சியை விளைக்கக் கூடியன. குமட்டூர்க் கண்ணனார் உம்பற்காட்டு ஐந்நூறு ஊர் பிரமதாயமும், முப்பத்தெட்டு ஆண்டு தென்னாட்டு வருவாயிற் பாகமும் பெற்றார். காக்கைபாடினியார் அணிகலனுக்கென்று ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பரிசிலாகப் பெற்றார். இவ்வாறே ஏனோரும் பெற்றுள்ளார்கள். இவ்வரசர் களுடைய கொடைமடம் இருந்தவாறென்னே! இக் கொடைத்திறத்தில் இன்னும் வியக்கத்தக்க நிகழ்ச்சியும் உண்டு. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தன்னைப் பாடிய பாலைக் கௌதமனாரை நோக்கி 'நீர் வேண்டியது கொண்மின்' என அவர், 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என்றுரைக்க, அவ்வரசன் சான்றோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்க, பத்தாம் பெருவேள்வியில் கௌதமனாரும் அவர் மனைவியும் சுவர்க்கமடைந்து விட்டனராம். இச்செய்தி, 'நான்மறையாளன் செய்யுட் கொண்டு, மேனிலையுலகம் விடுத்தோனாயினும்' எனச் சிலப்பதிகாரத்திலும் குறிக்கப் பெற்றுள்ளது. சோழன் படையாளர் சேரர் படையுடன் பொருது தோற்றுப் போகட்ட வேல் செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் கபிலன் பெற்ற ஊரிலும் பல என்று பதிற்றுப்பத்திலேயே பெருங் குன்றூர் கிழார் பாடியுள்ளார். இவ்வாறே பதிகங்களிற் கூறப்பட்ட செய்திகள் பலவற்றிற்கு வேறு சான்றுகளும் இருத்தலின், பதிகச்செய்திகள் பெரும்பாலும் உண்மை வரலாறுகளேயாதல் வேண்டும். பதிக ஆராய்ச்சி தனியே விரித்துரைக்கற்பாலதாகலின் அதனை, இவ்வளவில் நிறுத்தி, நூலுட் புகுந்து நோக்குவோம். இந்நூற் செய்யுட்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் பாட்டுடைத்தலைவர்களாகிய சேரமன்னர்களின் வீரவாழ்க்கையும், கொடைச்சிறப்பும், ஆட்சிமுறையும் கூறப்பட்டுள்ளன. அவ்வரசர்கள் தம் முன்னோர் ஒழுகிய நெறியிலேயே தாமும் நடந்து, நல்லமைச்சர்களையும் சான்றோர்களையும் துணையாகக் கொண்டு, தம் கீழ்வாழும் குடிகளை அவர்கட்கு எவ்வகை இன்னலும் நேராவண்ணம் பாதுகாத்து வந்தனர்; தமக்குச் சின மூட்டிய பகைவர்களைப் பொருது தொலைத்து அவர்கள் நாட்டினை அழித்துப் பாழ்செய்து ஆண்டுக் கவர்ந்த பொருள்களை இரவலர்க்கு வாரி வழங்கினர்; தம் புகழைப் பரப்பும் புலவர்கட்கு நாடும் ஊரும் கானமும் நல்கினர்; ஆடல்பாடல்களால் தம் அவையை அணிசெய்து இன்புறுத்தும் பொருநர்க்கும் பாணர்க்கும் களிறும் பரியும் பொற்றாமரையும், விறலியர்க்குப் பிடியும் அணியிழையும் வழங்கினர்; அழகிலும் கற்பிலும் மிகச்சிறந்த தேவியருடன் கூடி இன்புற்று முதுநூன்முறைப்படி விருந்தோம்புதல் முதலியன செய்து இல்லறம் இனிது நடத்தினர்; கோட்களின் நிலையால் பருவம் மாறி உலகெங்கும் வற்கடமுற்றகாலையும் அரசருடைய செங்கோன்மையால் அந்நாட்டு மக்கள் வேண்டும் பொருள்களைக் குறைவின்றிப் பெற்றுப் பசியும் பிணியுமின்றி இனிது வாழ்ந்துவந்தனர்; என்னும் இவைபோன்ற செய்திகள் மற்றும் பல இந்நூற் செய்யுட்களால் அறியப்படுகின்றன. 'ஆரியர் துவன்றிய பேரிசையிமயம், தென்னங் குமரியோடாயிடை, மன்மீக் கூறுநர் மறந்தபக் கடந்தே'1 என்பதனால் நெடுஞ்சேரலாதனும்' 'வடதிசையெல்லை யிமய மாகத்தென்னங் குமரியொ டாயிடை யரசர்- சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த, போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ,' என்பதனால் செங்குட்டுவனும் இமயமுதல் குமரி வரையுள்ள அரசர்களை வென்று விளங்கினர் என்பது பெறப்படும். 'அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை, தெறல் கடுமையொடு பிறவுமிவ் வுலகத்து, அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும், தீதுசே ணிகந்து நன்றுமிகப் புரிந்து'2 என்பது, அறவழி செல்லுதற்குத் தடையாகும் அச்சம் பொய் பொருட் பற்று கடுந்தண்டம் முதலிய தீயகுணஞ் சிறிதுமின்றி நல்லனவே புரிந்து செல்கெழுகுட்டுவன் குடியோம்புதலையும், 'உயிர்போற்றலையே செருவத்தானே, கொடைபோற்றலையே இரவலர் நடுவண், பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி, நின்வயிற் பிரிந்த நல்லிசை கனவினும், பிறர்நசை யறியா,1என்பது, பெருஞ் சேரல் இரும்பொறையின் வீரம், கொடை, அடக்கம், இரக்கம், புகழ் என்பவற்றையும் இனிது புலப்படுத்துகின்றன. பொய்யா நாவிற் கபிலர் என்னும் புலவர் பெருமான் செல்வக்கடுங்கோவின் வாய்மையைப்பற்றி, 'நிலந்திறம் பெயருங் காலை யாயினும், கிளந்த சொல்நீ பொய்ப்பு அறியலையே'2 என்றும், 'நகையினும் பொய்யா வாய்மை' 3 என்றும் கூறியிருப்பதும், அவனது ஈகையைக் குறித்து 'ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான்'4 என்றும், 'மழையினும் பெரும்பயம் பொழிதி'5 என்றும் கூறியுள்ளதும் அறிந்து மகிழற்பாலன. மற்றும், அவர் தம் ஆருயிர் நண்பனும் வள்ளண்மைக்கு எடுத்தக்காட்டாகிய வனும் ஆய வேள்பாரி துஞ்சியபின், செல்வக்கடுங்கோவின் உயரிய பண்புகளால் ஈர்க்கப்பட்டு வந்தாராகக் கூறுவது நெஞ்சினை உருக்கும் நீர்மையது. நெடுஞ்சேரலாதனது ஈகையின் சிறப்பு, 'மாரி பொய்க்குவதாயினும், சேரலாதன் பொய்யலன் நசையே'6 எனவும், 'எமக்கும் பிறர்க்கும் யாவ ராயினும், பரிசின் மாக்கள் வல்லாராயினும், கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன்'7 எனவும் பாராட்டப்பெற்றுள்ளது. மற்றும், 'வாய்ப் பறியலனே வெயிற்றுகள் அனைத்தும், மாற்றோர் தேஎத்தும் மாறிய வினையே'8 எனவும் 'கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா, நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே'9 எனவும் போந்தன அவனுடைய வினைத் தூய்மையையும் வாய்மையையும் நன்கு விளக்குகின்றன. ஆடுகோட்பாட்டுச் சேரலாதனது ஈகைத்திறம், அவன் தன்னாட்டில் வறுமையின்மையால் இரவலர் வாராராயினும், பிற நாடுகளிலுள்ள இரவலர்களைத் தேரில் ஏற்றி வரச்செய்து அவர்கட்கு உணவளிப்பன் என்றும், அவன் ஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும் பார்க்கில் இரவலர் புன்கணுக்கு அஞ்சுவன்10 என்றும் பாராட்டப்பெற்றுள்ளது. இனி, அவ்வரசர்களின் தேவிமாருடைய எழில், இன்குணம், கற்பு முதலியன எங்ஙனம் புகழ்ப்படுகின்றன என்பதனை நோக்கு வோம். 'வானுறை மகளிர் நலன்இகல் கொள்ளும், வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின், கொடுங்குழை'1 எனவும், 'ஆறிய கற்பின் அடங்கிய சாயல், ஊடினும் இனிய கூறும் இன்னகை, அமிர்து பொதி துவர்வாய் அமர்த்த நோக்கின், சுடர்நுதல் அசைநடை'2 எனவும், 'ஒலித்த கூந்தல் அறஞ்சால் கற்பின், குழைக்கு விளக்காகிய அவ்வாங் குந்தி, விசும்புவழங்கு மகளிருள்ளுஞ் சிறந்த, செம்மீன் அனையள்'3 எனவும், 'அடங்கிய கொள்கை, ஆன்றவறிவிற் றோன்றிய நல்லிசை, ஒண்ணுதல் மகளிர்'4 எனவும், 'வேய்புரைபு எழிலிய விளங்கிறைப் பணைத் தோள், காமர் கடவுளும் ஆளுங் கற்பின், சேணாறு நறுநுதற் சேயிழை'5 எனவும், 'வாழ்நாளறியும் வயங்குசுடர் நோக்கத்து, மீனொடு புரையுங் கற்பின், வாணுத லரிவை'6 எனவும், 'ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை, வண்டார் கூந்தல் ஒண்டொடி'7 எனவும் வந்துள்ளன. மற்றும் இவ்வாறு வருவன பலவுள. இவற்றிலிருந்து, அவர்கள் தேவ மாதரினும் விஞ்சிய அழகுடையர், அருந்ததியினும் மேம்பட்ட கற்புடையர், ஊடற்காலத்தும் இனிய மொழியே கூறுபவர், இத்தகைய பண்புகளால் மிக்க புகழ் மேவப்பெற்றவர் என அறியப்படுகின்றனர். அவர்கள் நெற்றி காதணியாகிய குழைக்கு விளக்கந் தருமாம்! மேனியின் அழகு அணிகலங்களுக்கு ஒளியை நல்குமாம்! அவர்கள் கற்பானது அறஞ்சால் கற்பு எனவும், ஆறிய கற்பு எனவும் போற்றப் படுகின்றது. மற்றும், அன்னோருடைய கூந்தல், நுதல், வாய், தோள், மார்பு, நடை முதலியவற்றை நல்லிசைப்புலவர்கள் சுருக்கமும் தெளிவும் இனிமையும் உடைய சொற்றொடர்களால் இயற்கைவரம்பு கடவாது பாராட்டுந் திறன் கற்போர்க்குக் கழிபேரின்பம் பயப்பதாகும். புலவர்கள் அம் மாதராரின் பண்புகளைக் கூறி, அத்தகைய ஆயிழைகணவ, ஒண்டொடி கணவ என்றிங்ஙனம் அரசர்களை விளிப்பது அவ்வரசர்களும் புலவர்களும், அம் மகளிரை மிக நன்கு மதித்துப் போற்றினமைக்குச் சான்றாகும். இனி, இங்ஙனம் கற்பிற் சிறந்த பொற்புறு மனைவியருடன் கூடி இல்லறம் நடத்தும் இவ் வேந்தர்கள் வைதிகவொழுக்கம் தலைநின்று, தேவர்கடன், முனிவர்கடன், பிதிரர்கடன் என்பவற்றை ஆற்றி வந்தனரென்பது, 'வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி, உயர்நிலை யுலகத்து ஐயர் இன்புறுத்தினை, வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை, இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த வெல்போ ரண்ணல்,'1 'கேள்வி கேட்டுப் படிவமொடியாது, வேள்வி வேட்டனை உயர்ந்தோருவப்ப,2 'காவற்கமைந்த அரசு துறைபோகிய, வீறுசால் புதல்வர்ப் பெற்றனை, இவணர்க்கு, அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப'3 என்றிங்ஙனம் வருவனவற்றால் அறியப்படும். மற்றும் இவ்வரசர்களிலே மெய்யுணர்வும் தவவொழுக்கமும் உடையராய் விளங்கினாரும் உளர். அரிசில்கிழார் என்னும் புலவர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை நோக்கி, நீ முன்னூலின் விதியை அறிந்து விரதங்களில் வழுவாது நின்று வானோருவக்கும் வண்ணம் வேள்வி வேட்டல் முதலிய கடன்களையெல்லாம் ஆற்றியுள்ளாய்; ஆயின், அவற்றை யான் வியந்திலேன்; கலையெலாமுணர்ந்த நரை மூதாளனாகிய நின் புரோகிதனுக்குத் தவத்தின் சிறப்பை எடுத்துக் கூறி, அதன்கண் ஏவிய நின் தவவொழுக்கத்தையும் பேரறிவையும் கண்டு வியந்தேன் என்பார், 'அன்னவை மருண்டனன் அல்லேன் நின்வயின், முழுதுணர்ந்தொழுக்கு நரை மூதாளனை, வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடையோர்க் கென, வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை, பெருமநின் படிமையானே'4 என்று பாடியுள்ளமை காண்க. மற்றும், இதன்கண், சேரவேந்தர்கள் நால்வகைப் படையுடன் சென்று மாற்றாரொடு பொருதலும், பகைவருடைய காவல்மரங் களைத் தடிந்து அவற்றால் முரசு செய்தலும், கள வேள்வி வேட்டலும், மகளிரொடு துணங்கையாடுதலும், அயிரை மலையில் உள்ள கொற்றவையை வழிபடுதலும் முதலாய எத்தனையோ பல செய்திகள் கூறப்பட்டுள்ளன.புலவரொருவர் ஓர் அரசனை வாழ்த்துமாறு காட்டி இவ்வுரையினை முடிப்போமாக.'நின்னாள், திங்களனையவாக; திங்கள், யாண்டோரனையவாக; யாண்டே, ஊழியனையவாக; ஊழி, வெள்ளவரம்பினவாக, என உள்ளிக் காண்கு வந்திசின்.'5  29. சமய அணிகலன் தமிழகத்திலே பண்டுதொட்டு வழங்கிவரும் சமயங்கள் சைவம், வைணவம் என்னும் இரண்டுமாம். சங்க நூல்களிலெல்லாம் சைவத்திற்கே முதன்மை கூறப்படினும் மால்வழிபாடு யாண்டும் கடியப்பட்டிலது சைவ நன்மக்களெல்லாரும் திருமாலிடத்தும் அன்புடையராகவே ஒழுகி வந்தனர் அது சமயப்பற்றுக்கு மெலிவு தருவதாகக் கருதப்படவில்லை. சங்க நாளிலே தமிழ்மக்கள்பாற் சமயப்பற்று அழுத்தமாக இருந்ததென்பதற்குப் பல குறிப்புக்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றே இங்குக் காட்டப் புகுந்தது. தமிழர்கள் தம் மக்கள் குழவிப்பருவத்து நோய் முதலிய வற்றால் நலிவின்றி வாழ்தல் கருதி அவர்கட்குக்காப்பாக அணியும் அணிகலன்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று சிவபிரானோடியை புடையது; மற்றொன்று திருமாலோடியை புடையது. பின்னது பிற்காலத்திற் பலரானும் கைக்கொள்ளப் பெற்று வந்தமையின் இலக்கியங்களிற் பெரிதும் பயில்வதாயிற்று. இத் திருமாலின் வளை, திகிரி, தண்டு, வாள், வில் என்னும் ஐந்து படைகளின் உருவமைந்தது. இதனை ஐம்படை எனவும், தாலி எனவும், ஐம்படைத் தாலி எனவும் வழங்குவர். புறப்பாட்டிலே, பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது இளமை மிகுதியைக் குறிக்குங்கால். " தாலி களைந்தன்று மிலனே; பால்விட்டு அயினியும் இன்றயின் றனனே"1 என இடைக்குன்றூர் கிழார் இதனை விதந்து கூறினர். மணிமேகலையிலே, " செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப அற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில் தொடுத்த மணிக்கோவை யுடுப்பொடு துயல்வரத் தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரை"2 எனவும், " தளர்நடை யாயமொடு தங்கா தோடி விளையாடு சிறுதே ரீர்த்துமெய் வருந்தி அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு"1 எனவும் இளம்புதல்வரியல்பை விளக்குழிக் கூலவாணிகன் சாத்தனார் இவ்வணிகலனைச் சிறந்தெடுத்தோதினார். இவ்வாற்றால் இது சங்கநாளிலே பயின்றமை பெற்றாம். " தாலி யைம்படை தழுவு மார்பிடை மாலை வாயமு தொழுகு மக்களைப் பாலி னூட்டுவோர் செங்கைப் பங்கயம் வால்நி லாவுறக் குவிவ மானுமே"2 எனக் கம்பநாடர் கூறுவது பிற்காலத்திலும் இது பயின்று வந்தமையைக் காட்டும். " தம்பிரா னருளி னாலே தவத்தினான்மிக்கார் போற்றும் நம்பியா ரூர ரென்றே நாமமுஞ் சாற்றி மிக்க ஐம்படை சதங்கை சாத்தி யணிமணிச் சுட்டி சாத்திச் செம்பொனா ணரையின் மின்னத் தெருவிற்றே ருருட்டு நாளில்"3 என்னும் பெரிய புராணத் திருவிருத்தம் சைவ மக்களும் இதனை அணிந்து வந்தமைக்குச் சான்றாகும். பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்து மாமனாக வந்து வழக்குரைத்த படலத்தில், " ஐம்படை மார்பிற் காணேன் சிறுசிலம் படியிற் காணேன் மொய்ம்புடை மதாணி காணேன் முகத்தசை சுட்டி காணேன் மின்படு குழைகள் காணேன் வெற்றுடல் கண்டே னப்பா என்பெறு மென்று பிள்ளைப் பணிகளுங் கவர்ந்தாரென்னா"4 என்று கூறுவது முதலியனவுங் காண்க. இனி, முன்னதாகிய சிவனோடியைபுடைய அணிகலன் கலித்தொகையில் பலவிடத்துக் கூறப்பெற்றுள்ளது. மருதக்கலியில் ஓர் இளமைந்தனுடைய காலணி, இடையணி, கையணி, தலையணி என்பன கூறுமிடத்தில், " பூண்டவை எறியா வாளும் எற்றா மழுவும் செறியக் கட்டி யீரிடைத் தாழ்ந்த பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின் மையற விளங்கிய ஆனேற் றவிர்பூண்"1 என மார்பணி கூறப்பெற்றுள்ளது. இடையே ஆனேற்றின் உருவமும், அதன் இரண்டு புறத்தும் வாள், மழு என்பவற்றின் உருவமும் அமைக்கப் பெற்ற அணிகலன் இதில் கூறப்பட்டுளது. வாள் என்றது முத்தலை வேல் (சூலம்) ஆகும். சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவ மக்கட்கு இவற்றின் உருவுகள் சிறப்புடைய அடையாளமாதல், " பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவு கொண்டல் துன்னார் கடந்தையுட் டூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே". " கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான் படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பனி மால்வரைபோல் இடபம்பொறித்தென்னை யேன்றுகொள் ளாயிருஞ் சோலைதிங்கள் தடவும் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் தத்துவனே".2 எனத் திருநாவுக்கரசு நாயனார் சிவபெருமானை வேண்டி அவற்றைப் பெற்றமையால் அறியப்படும். இப் பதிகத்து, மூன்று திருப்பாட்டே இஞ்ஞான்றிருத்தலின், ஆளுடைய அரசுகள் வேண்டிய ஏனை அடையாளங்களை அறிதற்கியலவில்லை. "திருவடிநீறென்னைப் பூசும்" எனமற்றொரு திருப்பாட்டில் வேண்டுகின்றனர்.  30. பிற்காலப் புலவர்களின் சுடுசொல் ஆட்சி மக்கட்கு நாவினால் உண்டாகும் குற்றங்கள் பொய், குறளை, வன்சொல், பயனில்சொல் என்ற நான்குமாம். இவற்றுள் வன்சொல் என்பது, உண்மைக்கு மாறாகவும், அன்பின்றியும், செற்றம்பற்றிப் 'பிறரை இகழ்ந்துரைக்குமிடத்துக் குற்றமாகுமன்றி, எவ்வழியும் குற்றமாகாது. பிறர் தீமைகளை மென்சொற்களால் மாற்ற இயலா விடத்துப் பழித்தலும் இடித்துரைத்தலும் இன்றியமையாதனவே. " புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன்"1 என்றார் திருவள்ளுவரும். மருத்துவன் கைப்பும் காரமுமுடைய மருந்துகளால் நோய் தீர்க்குமாறுபோலச் சான்றோர்கள் வெஞ் சொற்களால் பிறருடைய குற்றங்களைப் போக்குவர். ஆசிரியர் தொல்காப்பியனார் இக்கருத்துடன் இதற்கு 'வாயுறைவாழ்த்து' என்று பெயர் கூறி, " வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்குத லின்றி வழிநனி பயக்குமென்று ஒம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே"2 என அதற்கு இலக்கணம் இயம்பினார். திருக்குறட்பாக்களிற் பல இவ்வியல்பினை உடையனவாதலின் அந்நூலுக்கே வாயுறை வாழ்த்து எனவும் ஒரு பெயருண்டு. பிறரை எள்ளியுரைக்கும் சொல் அவருள்ளத்தைக் கருகச் செய்தலினால் அதனை வெஞ்சொல் எனவும், சுடுசொல் எனவும் கூறுதல் பொருந்தும். 'நாவினாற் சுட்ட' என்றார் வள்ளுவனாரும். தீயின்வினையாகிய சுடுதலைச் சொல்லுக்கு ஏற்றியுரைப்பது ஓர் இலக்கணை வழக்கு. பிறர் தம் பிழையை நினைந்து உளையுமாறு இகழ்ந்துரைத்தல் என்னும் கருத்து ஒன்றாயினும், புலவர்கள் அதனை உரைக்குந் திறன் பலவாகும். அவை அவ்வக்காலத்துப் புலவர்களின் மன நிலையாலும், மொழிநடையாலும் வேறுபடுதலும் உண்டு. தமிழ் வரலாற்றில் பிற்காலத்தன என்று கருதற்குரிய இலக்கியங்களில் சுடுசொல் அமைந்துள்ள முறையை ஆராய்ந்து காண்போம். சுடுசொல்லானது நடுநிலையுடைய சான்றோர்கள் மக்களை நன்னெறிப்படுத்தப் பொதுப்படக் கூறியதும், வரலாற்றில் இயைபுபட்ட ஒருவரை நோக்கிக் கூறியதும் என இருவகைப்படும். அறுசுவை யுணவுகளை வயிறார உண்டும், தம் உடம்பினைப் பல வகையாலும் ஒப்பனை செய்தும், அறிஞர் கூறும் உறுதிமொழி களைக் கேளாமலும், மதத்தினால் அவர்களை நோக்காமலும் இருக்கும் புன்செல்வர்களைக் குறித்து நீதிநெறி விளக்க ஆசிரியர் கூறும் செய்யுள் இது. " முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி உடுப்ப உடுத்துண்ப உண்ணா-இடித்திடித்துக் கட்டுரை கூறில் செவிக்கொளா கண்விழியா நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம்"1 இதன் கருத்தும் சொல்லும் உள்ளத்தைச் சுடும் இயல்பினவாதல் காண்க. இவ்வளவு திட்பநுட்பமின்றி, யாவரும் அறியும் எளிய நடையிலே சிலர் பாடியுள்ளனர். " பெண்புத்தி கேட்கின்ற மூடரும், தந்தைதாய் பிழைபுறஞ் சொலு மூடரும், பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது பிதற்றிடும் பெரு மூடரும், - - - - - - - - - - - - - - - - - - கற்றறிவி லாதமுழு மூடருக் கிவரெலாம் கால்மூடர் அரைமூடர் காண்"2 என்பது அதற்கு உதாரணமாகும். சிறிதும் கூசுதலின்றியே சிற்சிலரைக் கால் மூடர், அரைமூடர், முழுமூடர் என வெளிப்படையாக இவர் இகழ்ந்துரைக்கின்றார். இவ்விரு மேற்கோளும் பொதுப்பட நீதியாகக் கூறியவை. ஒளவையார் ஒரு காலத்தில் தம்மைப் பாடுமாறு வேண்டிய கயவர் சிலரை நோக்கி, " மூவர் கோவையும் மூவிளங் கோவையும் பாடிய எம்தம் பனுவல் வாயால் எம்மையும் பாடுக என்றனிர் நும்மை எங்ஙனம் பாடுதும் யாஅம்; களிறுபடு செங்களம் கண்ணிற் காணீர் வௌத்றிலா நல்யாழ் விரும்பிக் கேளீர் புலவர் வாய்ச்சொல் போற்றீர் மற்றும் இலவ வாய்ச்சியர் இளமுலை புல்லீர் உடீஇர் உண்ணீர் கொடீஇர் கொள்ளிர் ஓவாக் கானத் துயர்மர மதனில் தூவாக் கனியில் தோன்றி னீரே"1 என்று கூறியது ஒரு வரலாற்றில் தொடர்புடையதற்கு உதாரண மாகும். இங்ஙனம் வெளிப்படையாகவன்றிக் குறிப்பால் உணருமாறு கூறுதலும் உண்டு. ஒருவரைப் புகழ்வதுபோலப் பழிப்பது, ஒருவரைப் புகழ்வதனால் மற்றொருவரைப் பழிப்பது முதலியன குறிப்பில் அடங்கும். அணி நூலில் இது வஞ்சப் புகழ்ச்சி என்று கூறப்படும். இந்த நாகரிக முறையானது மேன்மையுடையதாகத் தோன்றினும் உள்ளத்தில் ஊடுருவிப் பாயும் இயல்பினது. 'நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும்' (நல்வழி-33) என்றாற்போல, வன்சொல்லாற் கலங்காத நெஞ்சத்தையும் இம் மென்சொல் கலங்கச் செய்யும். 'கயவர்கள் தம்மை நியமிப்பாரின்றித்தாம் விரும்பியவாறு ஒழுகுதலால் தேவரை ஒப்பர்' என்றும், 'பேதையார் கேண்மை பிரிவின்கண் யாதொரு துன்பமும் செய்யாதிருத்தலால் மிகவும் இனிமையுடையது' என்றும் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரே இம் முறையை மேற்கொண்டிருத்தலின் இது புலவர்கள் கையாளும் சிறந்த நெறி என்பது போதரும். " இரவறியா; யாவரையும் பின்செல்லா; நல்ல தருநிழலும் தண்ணீரும் புல்லும்-ஒருவர் படைத்தனவும் கொள்ளா; இப் புள்ளிமான் பார்மேல் துடைத்தனவே யன்றோ துயர்".2 இஃது ஒரு மானைப் புகழ்வதுபோல் இருப்பினும் இரத்தற் றொழிலையுடைய ஒருவனை நிந்திக்கும் கருத்தினது. பாரதப்போரில் அபிமன்னன் இறந்தபொழுது தங்கள் வெற்றியைப் பாராட்டிக் கொண்டிருந்த துரியோதனாதியரை நோக்கி, 'வீரராயினார் ஒருவரோடு ஒருவர் நேர் நின்று போர் செய்தல் உலகியற்கை; அவ்வாறன்றி, நீவிர் எல்லீரும் கூடிப் போர் புரிந்தும் பருவமெய்தாத ஒரு பாலனுக்கு ஆற்றாமல் பறந்து போனீர்கள்; பின்பு ஒருவன் பின்னே நின்று தேரை அழிக்க, ஒருவன் கையைத் துணிக்க, ஒருவன் போர் செய்ய, இவ்வாறு வஞ்சத்தால் பொன்று வித்தீர்கள்; இதுகொண்டோ பெருமிதம் பேசுகின்றீர்கள்' என்றிவ்வாறு வீமன் மகனாகிய கடோற்கசன் கூறாநிற்க, அதனைக் கேட்ட அரவக்கொடியோன் அவனை வெகுண்டு நோக்கி, 'இருந்த அவைக்கேற்ப உரைக்காமல் தருக்கினால் இயம்புகின்ற இந்த அரக்கி மகனுடன் ஒன்றும் பேசன்மின்' என அங்கிருந்த அரசர் யாவர்க்கும் கூறினன். அப்பொழுது கடோற்கசன் கூறும் சுடுசொற்கள் அறியற்பாலன. " அந்தவுரை மீண்டவன்கேட் டாங்கவனை நகைத்துரைப்பான் அரக்க ரேனும் சிந்தனையில் விரகெண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா வெந்திறல்கூர் துணைவருக்கு விடமருத்தார் நிறைகழுவில் வீழச் சொல்லார் உந்துபுன லிடைப்புதையார் ஓரூரில் இருப்பகற்றார் உரையுந் தப்பார்" " செழுந்தழல்வாழ் மனைக்கொளுவார் செய்ந்நன்றி கொன்றறியார் தீங்கு பூணார் அழுந்துமனத் தழுக்குறார் அச்சமுமற் றருளின்றிப் பொய்ச்சூ தாடார் கொழுந்தியரைத் துகிலுரியார் கொடுங்கானம் அடைவித்துக் கொல்ல எண்ணார் எழுந்தமரின் முதுகிடார் இவையெல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான்"1 இத்தகைய தீமையெல்லாம் அரக்கர்கள் செய்யார் என்ற புகழ்ச்சியால், துரியோதனன் இவையெல்லாம் செய்தவன் என்று இகழ்ந்தவாறு காண்க. மற்றும், ஒருவரை இகழ்வதுபோல் மற்றொருவரை இகழ்தலும் உண்டு; இது வஞ்சப் பழிப்பணி எனப்படும். ஒருநாள் ஒளவைப் பிராட்டிக்கு ஒரு மாது அன்புடன் உணவளிக்க, அவள் கணவன் அதனைப் பொறாது இகழ்ந்தானாக, அப்பொழுது அவர் கூறியது, " அற்ற தலைபோக அறாததலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ-வற்றல் மரமனையா னுக்கிந்த மானை வகுத்த பிரமனையான் காணப் பெறின்"1 என்பது. இதில் பிரமனைப் பழிப்பதுபோல் ஓர் பண்புடைய மனைவிக்குப் பொருத்தமற்ற அன்பில்லாத கொடியனை இகழ்ந்த வாறு காண்க. குற்றமுடையவர்களை அறிஞர்கள் இகழ்ந் துரைக்கும் திறங்கள் மற்றும் பலவாகும். மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீதி நூலில் உலோபியை இழித்துக் கூறியபாட்டு ஒன்று அறிந்து இன்புறற்பாலது. " பொன்னைமா நிலத்தில்யான் புதைக்கும் ஏல்வையில் அன்னையே யனையபார் அருளின் நோக்கிநற் சொன்னம்என் வாயிடைச் சொரியும்உன் நன்வாய்க்கு என்னையே இடுவனென்று இசைத்திட் டாளரோ"2 இப்பாட்டினை, உலோபியானவன் தானே கூறுவதாக அமைத்து, (பொன்னைப் புதைத்துவைத்தவன் வாயில் மண்விழும்) என்ற கருத்தைச் சாதுரியமாகப் புலப்படுத்தியிருப்பது நகைச்சுவை விளைவிக்கின்றது. " கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்றன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும்-குத்தி உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும்"3 என்ற காளமேகத்தின் செய்யுளும் நகையினைத் தோற்றுவிக்கும் வசையாக உள்ளது காளமேகப் புலவர் வசைச் செய்யுள் இயற்றுவதில் வல்லுநர் என்னும் கருத்துப், பரவை வழக்காக இருந்து வருகிறது. 'வெண்பாவிற் புகழேந்தி' என்று தொடங்கும் செய்யுளில் 'வசைபாடக் காளமேகம்' எனப் பிற்காலப் புலவரொருவர் கூறியிருப்பதும் இதனை வலியுறுத்தும். ஆனால் காளமேகம் பாடியவையாக அறியப்படும் செய்யுட்களிற் பெரும்பாலனவும் தெய்வங்களைக் குறித்துப் பழிப்பதுபோல் வழுத்தினவாகும்; உண்மையிற் பழிப்புரைகள் அல்ல; இதனையும் வஞ்சப் புகழ்ச்சி என்றே கூறுவர். கருட'd2வூர்தியில் திருமால் உலா வரும் காட்சியை, - "பெருமாள் இருந்திடத்திற் சும்மா இராமையினால் ஐயோ பருந்தெடுத்துப் போகிறது பார்."1 என்றும், மூத்தபிள்ளையார் மூடிக வாகனத்தில் உலா வருதலை, " வலிமிகுத்த மும்மதத்து வாரணத்தை ஐயோ எலியிழுத்துப் போகின்ற தென்"2 என்றும் கூறினர். அடியார்கள் இவ்வாறு இறைவனை இகழ்வது போல் நகை தோன்றப் பாடி இன்புறும் இயல்பு தேவாரம், திருவாசகம் முதலியவற்றிலும் காணப்படுகின்றது. இதுவரை எடுத்துக் காட்டிய சுடுசொல்லின் வகை பல அண்மைக் காலத்து விளங்கிய கவியாகிய சுப்பிரமணிய பாரதியின் பாடல்களில் அமைந்துள்ளன; அவற்றுள் ஒன்றினை எடுத்துக் காட்டி இவ்வுரையைமுடிப்போம். 'முரசு' என்ற பகுதியில், பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை யென்பதை அவர் சமத்காரமாக வற்புறுத்துந்திறம் அறிந்து மகிழற்குரியது. " வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள் வீட்டில் வளருது கண்டீர்; பிள்ளைகள் பெற்றதப் பூனை-அவை பேருக் கொருநிற மாகும்; சாம்பல் நிறமொரு குட்டி-கருஞ் சாந்து நிறமொரு குட்டி பாம்பு நிறமொரு குட்டி-வெள்ளைப் பாலி னிறமொரு குட்டி எந்த நிறமிருந் தாலும்-அவை யாவு மொரேதர மன்றோ? இந்த நிறம்சிறி தென்றும்-இஃ தேற்றமென்றுஞ் சொல்ல லாமோ? வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில் மானுடர் வேற்றுமை இல்லை; எண்ணங்கள் செய்கைக ளெல்லாம்-இங்கு யாவர்க்கு மொன்றெனல் காணீர்."3  31. இளவேனிற் கவியின்பம் பரிதியஞ்செல்வன் மேட இடப இருக்கைகளில் நிலவும் பெரும்பொழுது இளவேனில் எனப்படும். மழை, பனி என்பவற்றான் எய்தும் குளிரின்றியும், ஞாயிற்றின் வெம்மை முருகாதும், இளந் தென்றலொடு கூடியும் இருத்தலின் அனைத்துயிரும் அமிழ் துண்டனவெனத் தளிர்ப்பதற்குரியது இப்பருவமாகும். யாற்றிடைக் குறை, பொய்கை, இளமரக்கா, உய்யானம் முதலியவற்றிலுள்ள மரம், புதர், கொடி முதலியன தளிர்த்துப் பூத்து நறுமணம் வீசிப் பொலிவுறா நிற்பதும், குயில்கள் கூவுவதும், வண்டுகள் முரல்வதும், தென்றல் தவழ்வதும், தேன் பில்குவதும் ஆகிய இன்னோரன்ன வற்றால் இயல்பாகவே மக்கட்கு ஐம்புல இன்பங்களும் விளைதற் கிடனாவது இவ் விருதுவாகும். காமதேவனும் இதனையே தக்க பொழுதெனக் கொண்டு தன் வினையாண்மையை நடாத்தி வசந்தன் எனப் பெயர் சிறக்கின்றனன். ' மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. 1 என்னும் திருப்பாட்டால் இறைவனது திருவடி நீழலின் இன்பத் திற்கும் திருநாவுக்கரசர் இவ்விளவேனில் நிகழ்ச்சிகளை உவமங் கூறியுள்ளமை இதன் சிறப்பினை இனிது புலப்படுத்தாநிற்கும். இளவேனிலின் மாண்பயன் பலவற்றையும் நல்லிசைப் புலவர்கள் பாராட்டியுள்ள செய்யுட்கள் தமிழில் அளவற்றன உள்ளன. சங்கச் சான்றோராய தண்டமிழ்ப் புலவர்கள் தம் செய்யுட்களில் இயற்கைப் பொருள்களையும், அவற்றின் நிகழ்ச்சிகளையும் தன்மை பிறழாமல் பட்டாங்கு எடுத்துரைக்கும் பான்மையும், ஏற்ற உவமங்களோடு சார்த்தி எழில்பெற இயம்பும் இயல்பும் கற்பார்க்குக் கழிபேரின்பம் பயப்பனவாகும். கலித்தொகை (பாலைக்கலி-33) என்னும் நறுமலர்க்காவிலுள்ள தோர் செய்யுட் பூங்கொம்பர் ஈண்டு நம் காட்சியை ஈர்த்து நிற்கின்றது. கார்காலம் முதலாக நீரினை அளித்துப் பல வளங்களையும் விளைத்து நாட்டிற்கு வீறுபடு சிறப்பினை உண்டாக்கிய யாறு அவ்வழகினைத் தன் கண்களை விழித்துக் காண்டல்போல இளவேனிற் காலத்து யாற்றின் மருங்குள்ள குளங்கள் நீர் நிறைந்து பூக்களாற் பொலிவுற்றிருக்கின்றன. அக் குளங்களின் நீர் பளிங்குபோல் விளங்காநிற்க, கரையிலுள்ள முருக்கின் சேயிதழ்கள் அந்நீரிலே வீழ்ந்துகிடப்பன கண்ணாடிக்குள்ளே பதிக்கப்பட்ட பவழம் போலும் கவினுடன் திகழ்கின்றன. மற்றும் கரையினின்ற பல்வகை மரங்களும் பன்னிற மணிகளை அணிந்திருப்பது போல அரும்பு விரிந்த மலர்களை மிலைந்திருக்கின்றன. அம்மலர்களிலே தாதினை ஊதும் வண்டுகள் தம்மையும் அம் மலர்களையும் தெளிவுமிக்க குளங்களின் நிழலிற்கண்டு மருண்டு அவ்விடத்தை அண்மி ஆரவாரிக்கின்றன. இவற்றையெல்லாம் கண்டு நிற்கின்றாள் எழிலும் இளமையும் வாய்ந்த மையுண்கண் மடந்தை யொருத்தி. அவள் கண்கள் கலங்குகின்றன. அதற்குக் காரணம் அவள் தன் காதலனைத் தணந்திருத்தலேயாகும். வினையாண்மையை மேற்கொண்டு சேணிடைப் பிரியும் காதலர் இளவேனிற்கண் வருதும் எனப் பருவங்குறித்துச் செல்வதும், அவ்வாறு வருவதும் இயல்பு. இளவேனிலானது 'செந்தாமரை விரியத் தேமாங் கொழுந்தொழுக மைந்தா ரசோகம் மடலவிழும்' பருவமன்றோ? அப்பருவத்தில் ஊடினீரெல்லாம் உருவிலான் றன்னாணை கூடுமின் என்று குயில் சாற்றாநிற்குமே. (சிலம்பு-வேனிற்காதை இறுதிவெண்பா 1, 2) அக்காலத்தே தன் ஆருயிர்க் காதலனைப் பிரிந்து தனித்திருக்கும் மான் விழியுடைய மங்கையொருத்தி அவன் குறித்த பருவவரவில் வாராவிடத்து எங்ஙனம் ஆற்றியிருக்க வல்லுநள்? மணந்தவர் மெய்புகு வன்ன கைகவர் முயக்கம் (அகநானூறு பா - 11) பெற்று இன்புறூஉம் இப்பருவத்தில் தான் தன் காதலனைத் தணந்து தனித்திருப்பதை உன்னி வெய்துயிர்க்கின்றாள். அப்பொழுது அவளது அருமைத் தோழி - இருதலைப்புள்ளி னோருயிர் போன்று பிரிவின்றியைந்த துவரா நட்பினள் (அகநானூறு பா - 12) வாளா இருப்பளோ? தலைவியை நோக்கி 'அன்னாய், நம் காதலர் குறித்த பருவம் வந்தும் வாராதிருப்பாரல்லர்; இன்னேவருகுவர்; நீ கவலுத லொழிக' என ஏதுக்கள் பல கூறி ஆற்றுவிக்கின்றனள்; எனினும் தலைவியின் ஆற்றாமை மேலும் மிகுகின்றது. 'தாதவிழ் வேனிலோ வந்தது, ஆ! என் அருமைத் தலைவர் வந்திலர்!' என்று கூறி இனைகின்றாள். இக்கருத்தினை நல்லிசைப்புலவர் வழி நோக்குதும். " வீறுசால் ஞாலத்து வியலணி காணிய யாறுகண் விழித்தபோல் கயம்நந்திக் கவின்பெற, மணிபுரை வயங்கலுள் துப்பெறிந் தவைபோலப் பிணிவிடு முருக்கிதழ் அணிகயத்து உதிர்ந்துக, துணிகயம் நிழல்நோக்கித் துதைபுடன் வண்டார்ப்ப, மணிபோல அரும்பூழ்த்து மரமெல்லாம் மலர்வேய,- காதலர்ப் புணர்ந்தவர் கவவுக்கை நெகிழாது- தாதவிழ் வேனிலோ வந்தன்று; வாரார்! நம் போதெழில் உண்கண் புலம்ப நீத்தவர்.' 1 மற்றும் அவள் அங்குள்ள தருக்களை நோக்குகின்றாள்; இலவ மரங்கள் நெருப்புப்போலும் உருவினையுடைய பூக்கள் பூத்திருக் கின்றன. புன்கு மரங்கள் பொரிகள் போல மலர்களை உதிர்க் கின்றன. கோங்க மரங்கள் புது மலர்களில் பொன்போலும் தாதினை வெளிப்படுத்துகின்றன. மணந்தார்க்கு இன்பம் விளைப்பனவாகிய அவையெல்லாம் தணந்திருக்கும் அவட்குத் துன்பம் விளைப்பனவாயின. அதனால், அவள், 'ஆ! இவ் விளவேனிலானது தனித்திருப்பாரைப் புறத்தே தள்ளி இகழ்ந்து அலர் தூற்றுவாரைப் போலே கொடுமையுடைத்தாய் இராநின்றது. என் அழகோ பசலையால் மூடப்பட்டு ஒழிகின்றது. இதற்கு என்செய்வேன்!' என்று அங்கலாய்க்கின்றாள். ' எரியுரு உறழ இலவம் மலரப் பொரியுரு உறழப் புன்குபூ வுதிரப் புதுமலர்க் கோங்கம் பொன்னெனத் தாதூழ்ப்பத் தமியார்ப் புறத்தெறிந் தெள்ளி முனியவந்து ஆர்ப்பது போலும் பொழுது! என் அணிநலம் போர்ப்பது போலும் பசப்பு !'2 பின்னும் அந்நங்கை ஆண்டுள்ள கொம்புகளிற் பூக்கள் நிறைந்திருத் தலையும், மயில்கள் ஆடுதலையும் கண்டு, 'இக்கொம்புகள் நம்மை எள்ளி நகுதற்குக் காலம் வரவில்லையே என நொந்திருந்து, அது வந்தபின்னர் நம் வருத்தங் கண்டு சிரிப்பன போலத் தோன்று கின்றன; அதனைக் கண்டு என் நெஞ்சம் தலைவரை நினைந்து நைந்து உருகுகின்றது. இம் மயில்கள் நம்மை இகழ்ந்தன்றோ காலமன்றியும் ஒருங்குதிரண்டு ஆடுகின்றன?' என்றுரைத்து, நம் கைவளைகள் நாம் காப்பவும் கழல்கின்றனவே! யாற்றின் நீர் என் கண்கள்போல் அறல்பட்டு ஒழுகும் இளவேனிற் காலத்தும் தலைவர் வந்திலரே! இனி, இந்நோய் இந்நிலையினும் மிகும் போலும்! என்றிரங்குகின்றாள். " நொந்து, நகுவனபோல் நந்தினகொம்பு; நைந்து உள்ளி உகுவது போலும் என்னெஞ்சு; எள்ளித் தொகுபுடன் ஆடுவ போலும்மயில்; கையில் உகுவன போலும்வளை; என்கண்போல் இகுபு அறல்வாரும் பருவத்தும் வாரார் மிகுவது போலும் இந் நோய்."1 இன்னணம் இரங்கிய தலைமகள் பின்னரும் 'குழல் போலும் ஓசையையுடைய ஞிமிறும் தும்பியும் தாதினை ஊதாநிற்க, நமக்கு நோவு மிகும்படி கரிய குயில்கள் கூவாநிற்கும்; இவ்வளவிற்கும் தலைவர் ஒரு தூதாயினும் வரவிடாராய் நம்மைத் துறப்பாரோ' எனப் புலந்து கவலுகின்றாள். அந்நிலையில் தலைவனது தேரொலி கேட்கப்படுகின்றது. தோழி தலைவியைப்பார்த்து, 'நீல மலர் போலும் மையுண்ட கண்ணினையுடையாய்! நம்மை இகழும் குயிலையும் அவரையும் நீ வெறாதே; மாலையணிந்த மார்பினையுடைய நம் தலைவர் தாம் கூறிய சொற்கள் பொய்யல்லவாகக் காற்றை யொக்கும்கடிய திண்டேரை விரையச் செலுத்திவந்து, நமது கூந்தலைப் பின்னின பின்னல் விடும்படி நாம் விரைந்து எதிர்கோடலை நமக்குத் தந்தனர்காண்' என்று கூறுகின்றாள். அப்பொழுது தலைவியின் துன்பம் இன்பமாக, அழுகை உவகையாக மாறியது. " மாலைதாழ் வியன் மார்பர் துனைதந்தார் காலுறழ் கடுந்திண்டேர் கடவினர் விரைந்தே"2 இளவேனில் வளமும், தலைவியின் அன்பும் இச்செய்யுளில் எத்துணை நலம்பெறக் கூறப்பட்டுள்ளன? இதிலுள்ள உவமைகளின் அழகு எவ்வளவு இன்பம் பயக்கின்றது! இத்தகைய செய்யுட்கள் நூற்றைம்பது கொண்ட கலித்தொகையின் மாண்பு அளத்தற்கரி தாகும் என்க.  32. கம்பர் காட்டும் ஒழுக்க நெறிகளில் சில நாவலந் தீவிலே பண்டு தொட்டுப் பயிற்சி மிக்குடையன பாரத இராமாயணக் கதைகள். வடமொழியிலே வான்மீகியார் இயற்றிய இராமாயணந்தான் ஆதி காவியமாக உள்ளது. தமிழ் நாட்டிலே இராமாயணக் கதை பண்டே பயின்றுளதென்பது, 'வென்வேற் கவுரியர் தொன்முதுகோடி, முழங்கிரும் பௌவம் இரங்கு முன்றுறை, வெல்போர் இராமன் அருமறைக் கவித்த, பல் வீழாலம் போல ஒலியவிந் தன்றிவ் வழுங்க லூரே' (அகம் 70). 'மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை தாங்காது பொழி தந்தோனே அதுகண்டு இலம்பா டுழந்த வென்விரும்பேரொக்கல், விரற்செறி மரபின செவித் தொடக்குநரும், செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும், அரைக்கமை மரபின மிடற்றியாக்குநரும், மிடற்றமை மரபின அரைக்கியாக்குநரும், கடுந்தெற லிராமனுடன் புணர் சீதையை வலித்தகை யரக்கன்வௌவிய ஞான்றை, நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின், செம்முகப் பெருங்கிளையிழைப் பொலிந் தாஅங்கு, அறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே' (புறம் 378) என்பன ஆதி சங்கச்செய்யுட்களாலும்; பழங்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில், 'பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும், அரசே தஞ்சமென்றருங்கா னடைந்த, அருந்திறல் பிரிந்தவ யோத்தி போல' (புறஞ்சேதி:63-65) எனவும், 'தாதை யேவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துயருழந்தோன், வேதமுதல்வற் பயந்தோனென்பது நீயறிந்திலையோ' (ஊர்க்காண்:46-48) எனவும், 'தம்பியொடுங் கான் போந்து - தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்' (ஆய்ச்.படர்க்:1) எனவும் வந்திருத்தலானும் அறியப்படும். மற்றும் புறத் திரட்டிலுள்ள ஆசிரிய மாலைச் செய்யுட்கள் முதலியவற்றிலிருந்து சங்கநாளிலேயே தமிழ் இராமாயணம் ஒன்று வழங்கி வந்ததெனவும் கருதப்படுகிறது. பின்னர் இடைக்காலத்தில் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் விளங்கிய பெருங்கவி வேந்தராகிய கம்பர் தம் காலத்துக்கேற்ற விருத்தயாப்பினாலே இராமாயணத்தை இயற்றிக் காப்பிய அரசாகத் திகழுமாறு செய்தார். 'ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்' பொன்றாது நிற்ப தொன்றில்' (குறள்: 233) என்னும் பொருளுரைக்கேற்ப அவரது உயர்ந்த புகழ் உலகமுள்ள அளவும் பொன்றாது நிற்குமென் பதற்கு ஐயமில்லை. அவரது காப்பியமும் அன்னதே. இவ்வுலக முழுதும் ஆளும் அரசாட்சியைப் பெற்றாலும் வானுலக அரசாட்சியைப் பெற்றாலும் அவற்றானெல்லாம் இராம கதையைக் கம்பநாடன் கவிதையால் நுகர்ந்து களிப்பது போலக் கற்றோர்க்கு இதயங்களியாது' 1 என ஒருவர் கூறியது, அவரது உள்ளத்தே பொங்கி யெழுந்த உணர்ச்சியை உள்ளவாறு வெளிப்படுத்தவேயாகும். 'திருமால் பாற்கடலைக் கடைந்து வானோர்க்கு அமிழ்தம் ஈந்ததுபோலக் கம்ப நாடுடைய வள்ளல் தமிழ்க்கடலைக் கடைந்து மக்களுக்கு அமிழ்தம் ஈந்தார்'2 என ஒருவர் கூறினார். அங்ஙனமே நுண்ணறிவுடைய புலவர்கள் கம்பராமாயண மாகிய கடலைக் கடையின் தம்மைக் களிப்பிக்கும், அணி செய்யும், நன்னெறிப்படுத்தும், நிலைபெறுவிக்கும் எத்தனையோ அரும்பொருள்களைக் காணா நிற்பர். சுருங்கிய அறிவும் ஒடுங்கிய வலியுமுடைய யான் என்னியல்புக்கேற்ப அறிந்த ஒழுக்க நெறிகளில் ஒன்றை மட்டும் ஈண்டுக் கூறுவானமைந்தேன். கம்பர் தமிழ்க் கடலைக் கடைந்து அமுத மீந்தார் என்றவர் ஓருண்மையை வெளிப்படுத்தாராவர். அவ்வுண்மையாவது, கம்பர் தமிழ் நூல்கள் வாயிலாகவும் கண்கூடாகவும் அறிந்த தமிழருடைய பழக்க வழக்கங்களையும் நாகரிகத்தையும் கொள்கைகளையும் வெளியிட்டுள்ளார் என்பதே. கவிகள் தம் காப்பியத்தை நடத்திச் செல்லுகையில் கதைக் குரியவர்களின் ஒழுகலாறு வாயிலாகவோ, அன்னோர் ஒருவருக் கொருவர் அறிவுறுத்தல் வாயிலாகவோ, உலக மக்கள் அறிந்து பயனடையக் கூடிய பல உண்மைகளை வெளிப்படுத்துதல் இயல்பு. அவ்வுண்மைகளே காப்பியத்தின் பண்பாகும். அதனைப் பாவிகம் என்பர் அணி நூலார். அரசர் - குடிகள், பெற்றோர் - பிள்ளைகள், ஆசிரியர் - மாணாக்கர், தமையன் - தம்பி, காதலன் - காதலி, என்போர் ஒருவருக்கொருவர் எத்தகைய அன்பும் அருளும் உடையராயிருக்க வேண்டு மென்பதும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதும், வியப்பும் மகிழ்ச்சியும் அடையும் வண்ணம் கம்பரால் வெளிப் படுத்தப் பெற்றுள்ளன. மற்றும், நட்பினர் திறத்து எங்ஙனம் அன்பு செய்ய வேண்டுமென்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். கம்பர் காட்டிய இத்தகைய ஒழுக்க நெறிகளெல்லாம் குடிப் பிறந்தார்மாட்டு இயல்பாக அமைவன என்பது, திருக்குறளிற் குடிமையென்னும் அதிகாரத்தானும் நாலடியாரிற் குடிப்பிறப்பு என்னும் அதிகாரத்தானும் புலனாகும். " நகையீகை யின்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு"1 " இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப வொழிதலோ டின்ன-குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார்"2 என்பன காண்க. இனி, கம்பர் வாய்மொழியிற் சிறிது சுவைத்து இன்புறுவோம். மிதிலா நகரத்தில், சனகர் பெருமான் வேள்வியை முடித்துவிட்டு மணி மண்டபத்தில் வீற்றிருக்கின்றனன். கௌசிக முனிவர் இராமனுடைய வரலாற்றைச் சொல்லி முடித்த பின்னர், சதானந்தர் சீதையின் வரலாற்றையும், சிவ தநுசை வளைத்தாற்கே அவள் உரியாளென விதித்திருப்பதனையும், சீதையைக் காதலித்த நிலவேந்த ரெல்லாரும் அவ்வில்லை வளைக்கலாற்றாது ஒழிந்ததனையும் தெரிவித்து, 'அன்று முதல் இன்றளவும் ஆரும் இந்தச் சிலையருகு சென்று மிலர்; போயொளித்தார்' என்றும், 'இனி மணமும் இல்லை யென்றிருந்தேம்; இவன் வளைப்பின் சீதையின் நலம் பழுதாகாது' என்றும் கூறி முடித்தார். உடனே கௌசிகர் கருத்தின்படி இராமன் வில் வளைக்கப் புகுதலை அள்ளுறு தீஞ்சொற் கவிதையால் நம் அகக்கண்முன் கம்பர் காட்டுகின்றார்; " நினைந்தமுனி பகர்ந்தவெலாம் நெறியுன்னி அறிவனுந்தன் புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான் வனைந்தனைய திருமேனி வள்ளலும்அம் மாதவத்தோன் நினைந்தவெலாம் நினைந்தந்த நெடுஞ்சிலையை நோக்கினான்."3 இதில் முனியென்றது சதானந்தரை. அறிவன் என்றது கௌசிகரை. சதானந்தர் நினைந்து பகர்ந்தது போலவும், அறிவன் நெறி யுன்னி முடிதுளக்கியது போலவும், இராமன் மாதவத்தோன் நினைந்தவற்றையெல்லாம் நினைந்து சிலையை நோக்கியது போலவும், கம்பரும் சொற்களெல்லாம் நோக்குடையவாக நினைந்தே இச்செய்யுளை ஆக்கியுள்ளனர். 'தக்கன் வேள்வி தகர்த்த முக்கணான் வில்லை, நிலவேந்தர் எல்லாரும் அருகு திரிதற்கும் அஞ்சி ஒதுங்கிய வில்லை, அறுபதினாயிரர் அளவிலாற்றலர் சுமந்து வந்த வில்லைப் பன்னீராட்டைப் பிராயத்தனாகிய இராமன் வளைக்குமாறு பணித்தல் ஒல்லுமோ' என ஆசங்கியாவாறு செய்வது 'அறிவன்' என்னுஞ் சொல்லாகும். அவன் 'மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்' (தொல்.பொருள் - புறத்திணையியல் நூற்பா -16) ஆதலின் இராமனுடைய எல்லை யெல்லாம் அறிவன் என்பார், அறிவனும் என்றார். அவன் நன்றாக நினைந்து, தான் ஒப்பனை செய்து முடித்த சடைமுடியைத் துளக்கினானாம். துளக்குதல்-குலுக்குதல், அசைத்தல், அதன் பொருளை என்னென்று உரைப்பது! நாமும்தானும் இல்லையாயிற்று. இராமனது பேராற்றலை உணர்ந்த உள்ளக்கிளர்ச்சியை வெளிப்படுத்துவதாக நாம் ஒருவாறு பொருள் கொள்வோம். 'முடி துளக்கிப் போரேற்றின் முகம் பார்த்தான்'ஒரு சொல்லினும் ஒரு சொல் ஒரு படி விஞ்சியே காணப்படுகிறது. இராமனை ஈண்டுப் போரேறு என்றதும் சிந்திக்கற்பாலது. தசரதன்பால் இராமனைக் கையடையாகப் பெற்று வந்த முனிவன் இப்பொழுது வில்லை வளைக்குமாறு அவனுக்குக் கட்டளை யிடுகின்றான். எங்ஙனம்? சடைமுடியைத் துளக்கி இராமன் முகத்தைப் பார்த்தான், அவ்வளவே. 'முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி, உற்றதுணர்வார்ப் பெறின்'1 என்றார் வள்ளுவனாரும். அறிவன் இராமன் முகத்தை நோக்க, இராமன் வில்லை நோக்கினான். யாதொரு குறிப்புமின்றி வில்லை நோக்கினானல்லன்; மாதவத்தோன் நினைந்தவற்றையெல்லாம் நினைந்து வில்லை நோக்கினானாம். மாதவன் என்ன என்ன நினைந்தானென்று நாம் எங்ஙனம் அறிவோம்; இங்ஙனம் குறிப்பினாற் கூறிக் கற்பார் மனத்தில் ஆராய்ச்சியைத் தோற்றுவிப்பது கம்பர் இயல்பாகக் காணப்படுகிறது. முன்னர், " போதக மனையவன் பொலிவு நோக்கிஅவ் வேதனை தருகின்ற வில்லை நோக்கித்தன் மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய கோதமன் காதலன் கூறன் மேயினான்"1 என்று இவ்வாறு கூறியிருப்பதும் காண்க. கண்ணினாலுரைக்கும் மன்னர்கள்பாலும், அவரனைய பெருமக்கள்பாலும் பயின்றவராகலின், கம்பருக்கு இவ்வாற்றல் இயல்பின் அமைந்தது போலும்! கௌசிக முனிவன் நினைந்தவற்றை நாம் நன்கறியோமாயினும், இராமன் நன்கறிந்தானென்பது 'நினைந்த வெலாம் நினைந்து' என்பதனாற் போதருகின்றது. எனவே குறிப்பறியும் அவனது பேராற்றல் இனிது விளக்கமாம். இனி, 'வனைந்தனைய திருமேனி வள்ளல்' என இச்செய்யுளில் இராமன் கூறப்படுகின்றான். இதன் பொருள் சித்திரத்தில் எழுதினாற் போலும் சிறந்த அழகுடையவன் என்பதுதானே? என்னில், அன்று; நிந்திக்குமிடத்தும், 'ஓவியத் தெழுத வொண்ணா உருவத்தாய்' என வாலியாற் கூறப்பெற்ற இராமனது திருமேனியழகை ஓவியம் போலும் அழகு என ஈண்டுரைப்பதிற் சிறப்பொன்றுமில்லை. இராமனது ஒழுகலாறு ஒன்று இதிற் காட்டப்படுகின்றது. அதனைத் தெரித்தற்கே இச் செய்யுள் ஈண்டு எடுத்துக்கொள்ளப்பெற்றது. ஓவியம் அல்லது ஓவியப்பாவை அசைவற இருத்தல்போல, அசைவின்றி இருந்த அழகிய மேனியையுடையவன் என்பது இதிற் கருதப்பட்ட பொருளாகும். மாணாக்கரியல்பு உணர்த்துமிடத்தில் 'சித்திரப் பாவையினத்தக வடங்கி' (நன்னூல் பாயிரம் நூ.40) எனப் பிறர் கூறுமாறும் காண்க. முனிவரும் மன்னரும் முதலாய பெரியோர்கள் கூடியிருக்கும் பேரவையில், 'தந்தை நீ தனித் தாயும் நீ' (கம்ப. பாலகாண்டம், கையடைப் படலம் பா.18) எனக் கூறித் தந்தையால் ஒப்பிக்கப் பெற்றமையாலும், மந்திரம் முதலாயின அருளினமையாலும் தனக்குத் தந்தையும் தாயும் குரவனுமாக விளங்கும் கௌசிகர் திருமுன்பு தான் எவ்வளவு அடக்கத்துடன் இருக்க வேண்டுமென்பதனை ஓர்ந்து இராமன் அமைந்திருந்தவனை 'வனைந்தனைய திருமேனி' என்பதனாற் கம்பர் குறிப்பிட்டார் என்க. அடக்கத்திலும் பல வகையுண்டு. இராமனுடைய அடக்கமோ உள்ளக் கிளர்ச்சியோடும் பெருமிதத் தோடும் கூடியதென்பது 'போரேறு' என்பதனாற் பெற்றாம். அத்தகைய அடக்கத்தோடும்யாது செய்தான் இராமன் என்னின், கௌசிகருடைய குறிப்பை எதிர்நோக்கி, அவரது முகத்தைப் பார்த்த வண்ணமாக இருந்தானென்க. இவ்வாற்றால் ஆசான் முதலான ஆன்றோர்கள் முன்னிலையில் அடங்கியிருத்தலும், கூறாமை நோக்கிக் குறிப்பறிதலும், அறிந்து வினை செய்தலும் போல்வன நன்மக்களுடைய ஒழுலாறுகளாமென்க. இச்செய்யுள் கம்பருடைய நாடகத்தில் ஓர் சிறந்த காட்சி யாகும். அவருடைய ஓவியங்களில் அமைதியும், பெருமிதமும், சூழ்ச்சியும் நிறைந்ததோர் உயிரோவியமாகும். சுருக்கமும் தெளிவும் இனிமையுமுடைய செஞ்சொற் கவியின்பத்தைப் பலகாலும் சிந்தித்து இன்புறுதலன்றி, அதனை இப்பெற்றியதென எங்ஙனம் எடுத்துரைக்கலாகும்!.  33. பசிப்பிணி மருத்துவன் அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி1 உலகில் மக்களை உடற்றும் பிணி பலவற்றுள்ளும் பசிப்பிணி கொடியதாகும். அஃது ஓர் உடம்பினின்று, 'குடிப்பிறப் பழித்து, விழுப்பங் கொன்று', பிடித்த கல்விப் பெரும் புணை அகற்றி,2 மற்றும் இன்ன பல தீமை செய்து, அதனால், மேல் வரும் உடம்பு கட்கும் துன்பம் செய்வதாகலின் 'பசியென்னுந் தீப்பிணி'3 எனத் தெய்வப் புலவராற் கூறப்பட்டது. அப்பிணிக்கு மருந்தாவது, சோறும் நீருமாகிய உண்டியேயாகும். ஆதலின், அவ்'வுண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' 4 யாவர். பண்டை நாள் தொட்டுத் தமிழகத்தே செங்கோலோச்சி வந்த முடியுடை வேந்தருள்ளும், குறு நில மன்னருள்ளும், பிறருள்ளும், மன்பதைகளின் பசியை வீட்டி, இசையை நாட்டிய உரவோர் பல்லாயிரவ ராவர். அவருள், இப்பொழுது எம் உள்ளத்தைக் கவர்ந்து நிற்பான் ஒருவனது வரலாற்றை ஈண்டியம்ப விழைகின்றாம். 'ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு'5 எனச் சிறப்பிக்கப் பெறுஞ் சோணாட்டின் கண்ணே, வான் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரியின் மருங்கு' சிறுகுடி என்னும் பதி யொன்று உளது. அப்பகுதியின் கண், ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகளின்முன், பண்ணன் என்னும் நன்னராளன் ஒருவன், மிக்க படையாண்மையும், மேம்படு கொடையாண்மையும் உடையனாய் வாழ்ந்திருந்தனன் வீரம், வண்மை என்னும் இரு பெருங் குணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாகும். தொல்காப்பியர் பெருமிதம் தோன்றுதற் குரிய தறுகண் முதலியவற்றோடு கொடையையும் சேர்த்துக் கூறியிருப்பதும், "கொடை மடம் படுதல் அல்லது, பாரி படை மடம் படான்" (புறம்:142) என வருவது போல்வனவும் இவ்வுண்மையை விளக்காநிற்கும், "ஈயென விரக்குவ ராயின் சீருடை, முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம், இன்னுயிராயினும் கொடுக்குவன், என் உள்ளம் எள்ளிய மடவோன், துஞ்சுபுலி யிடறிய சிதடன் போல, உய்ந்தனன் பெயர்தலோ அரிதே" (புறம்:73) எனச் சோழன் நலங்கிள்ளி கூறிய வஞ்சினக் காஞ்சியில், அவனுடைய வண்மையும், தறுகண்மையும் எவ்வளவு சிறந்து காணப்படுகின்றன! இவ் வாற்றால், 'கொடையுளு மொருவன், கொல்லுங் கூற்றினுங் கொடிய வாட்போர்ப் படையுளு மொருவன்' என்னுஞ் சிந்தாமணித் (464) தொடர்கட்கு, 'இனி, நிலையாமையை யுணர்ந்து கொடைக்கு நிகரில்லாதவன் அதனாற் படைக்கு நிகரிலனாவன் என்று சொல்லிற்றுமாம்' என நச்சினார்க்கினியர் கூறிய இரண்டாம் பொருளே சாலச் சிறப்புடைத்தாதல் பெற்றாம். இனி, பண்ணனது படை வீரத்தை 'வென் வேல், இலை நிறம் பெயர ஓச்சி மாற்றார், மலைமருள் யானை மண்டமர் ஒழித்த, கழற்காற் பண்ணன்' என வரும் அகப்பாட்டடிகளால் (177) அறியலாகும். அவனுடைய ஒப்புரவும் ஈகையும் ஆகிய செப்பருங் குணத்தினை இனிச் சிந்தை செய்வோமாக, காவிரியின் வடவயின் உள்ள சிறுகுடிக் கண், பூஞ்சோலையும், மாந்தோப்பும், நெல்லிக் காவும் அவனுக்கிருந்தன என அறுதியிட்டுரைத்தல் சாலா தெனினும், வள்ளன்மை செலுத்திய ஒண்ணிதிச் செல்வனாகிய அன்னான், அவை நனி மிகவுடையன் என எண்ணுதல் தவறாகாது. ஆனால், அப்பெருந்தகை, அவை யனைத்தையும் தனக்கெனப் பேணுந் தன்மையன் அல்லன். அச்சிறுகுடிக்கட் போதரும் பாணரா யினும், புலவராயினும், மற்றினவராயினும், அவனது பூம்பொய்கையிற் சென்று குளிப்பர்; பூங்காவினுட் புக்கு மலர்பறித்து மிலைவர்; காவினுள்ளும் தோப்பினுள்ளும் எய்தி, இனிய தீவிய நெல்லிக் கனிகளையும் மாங்கனிகளையும் பறித்து உண்பர். அவனது மனையின்கண்ணே இரவலர் எண்ணில்லாதவர் இடையறாது வந்தீண்டி அடிசில் ஆர்வர். 'கைவள் ளீகைப் பண்ணன் சிறு குடிப் பாதிரி கமழும் ஓதி,' (புறம்:70) 'கழற்காற் பண்ணன் காவிரி வடவயின், நிழற்கயந் தா'a6இய நெடுங்கான் மாவின், தளிரேர் ஆகம்,' (அகம்: 177) 'பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப் புன்காழ் நெல்லிப்பைங்காய் தின்றவர், நீர்குடி சுவையின்'(அகம்:54) என அகத்தினும், புறத்தினும் நல்லிசைப் புலவர்கள் பாடியிருப்பன காண்க. இவனது அளிநிலை பெற்ற உள்ளத்தின் உயர்வையும், ஒப்பற்ற வாழ்வையும் குறித்தற்கு, 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், பண்ணன்' (அகம்:54) எனச் சான்றோ ரொருவர் வாயாரப் புகன்ற அகப்பாட்டடியே அமைவதொன்றாகும். ஆ! 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்!!' இதனிலும் எய்தற் கரிய புகழ்ச்சி யாது? இப் புகழ் தனக்கே யாகத் தனியுரிமை படைத்த இவனது பெருமை தான். என்னே! இனி, இப்பெருந் தக்கானைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்னுஞ் சோழர் பெருமான் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் உளது. கிள்ளிவளவன் எவ்வளவு பேரரசன்! எத்துணை வீரமும் வண்மையும் உடையவன்! நல்லிசைப் புலவர்கள் எத்துணையோரால் புகழ்ந்து பாடப்பெற்றவன்! 'செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்டிங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை' (புறம்:30) எனவும், 'மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி, நிலவரையிழிதரும் பல்யாறு போலப் புலவரெல்லாம் நின்னோக்கினரே' (புறம்:42) எனவும் பாராட்டப்பெற்ற வளவர்தோன்றல், பண்ணனுடைய ஈகையின் சிறப்பை உள்ளம் உருக உயர்த்துரைத்தனன் என்றால் அவ்வள்ளலுடைய ஈகையும் தூய்மையும், அவ்வரசனுக்கு அவனோடிருந்த நட்பின் சீர்மையும் எத்தகையவென்று யாரால் இயம்பலாகும்? புலவர்பாடும் புகழுடைப் பெருநில வேந்தனாகிய வளவன், தன்னை ஒரு பாணனாக வைத்துப் பண்ணனது ஈகையைப் பாராட்டிப் பாடியிருப்பதனை நினைத்தால், யாவருடைய நெஞ்சுதான் உருகாதிருக்கும்? அப்பாட்டிலே, 'யான்வாழு நாளும் பண்ணன் வாழிய' என்பது முதலடியாகும். யான் உயிர்வாழு நாளையும் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக என்பது அதன் பொருள். அஃதொரு பாணன் கூற்றில் அமைந்திருப்பினும், கிள்ளிவளவன் உள்ளக்கிடையன்றோ அது? நாட்டில் வாழும் உயிர்கட் கெல்லாம் உயிராக விளங்கும் இறைவன், தான் வாழ்வதற்குரிய நாளையுமப் பண்ணன் பெற்று வாழவேண்டும் எனக் கருதினான் என்னில், பண்ணன்பால் அவனுக் கிருந்த அன்பின்றிறத்தை என்னென்றியம்புவது? பழுத்த மரத்தின்கட் புள்ளினம் ஒலித்தாற்போலப் பண்ணனுடைய இல்லத்தில் ஊண் உண்டலா லாகிய ஆரவாரம் கேட்கும் என்றும், மழை பெய்யுங் காலத்தைப் பார்த்துத் தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்திலே அடையுஞ் சிற்றெறும்பின் ஒழுக்கினை யொப்பப் பெரிய சுற்றத்துடன் கூடிய பாண் சிறுவர்கள், சோற்றுத் திரளை பொருந்திய கையினராய், வேறு வேறு வரிசையாக அவன் இல்லில் நின்றும் செல்வரென்றும் அப்பாட்டிலே கூறப்பட்டுள்ளன. அம்மட்டோ! 'பசிப்பிணி மருத்துவன்' என்னும் அருமருந் தன்ன பெயரால் பண்ணன் கூறப்பெற்றுள்ளான். ஆதலின், யாமும் அப்பெயரையே அவன் பெயராகக் கொள்ளலாயினம். இனி, அச் செய்யுள் யாவரும் படித்து இன்புறற் பாலதாகலின் அதனை ஈண்டுத் தருதும். " யான்வாழு நாளும் பண்ணன் வாழிய பாணர் காண்கிவன் கடும்பினது இடும்பை யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன ஊணொலி அரவந் தானுங் கேட்கும் பொய்யா எழிலி பெய்விட நோக்கி முட்டை கொண்டு வற்புலஞ் சேருஞ் சிறுநுண் எறும்பின் சில்லொழுக் கேய்ப்பச் சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டும் மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப் பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே.1  34. பரிமேலழகர் பண்டைச் செந்தமிழ்ப் பனுவல்கட்குரையியற்றிய பேரறிஞர் பலருள்ளும் தம் உரையோவிய நுட்ப வினைத்திறத்தால் எம் உள்ளங் கவர்ந்து நிற்பவர் பரிமேலழகராவர். உலகளந்த மேன்மை யுடைய தெய்வச் செந்தமிழ்ப் பொதுமறையாகிய திருக்குறட்கு உரையியற்றினார் பலராயினும் அன்னாருரையனைத்தையும் கீழ்ப்படுத்து ஒளி விரித்து விளங்குவது கச்சி உலகளந்த பெருமாள் திருவடித் தொழும்பர் கண்டவுரையே. எட்டுத்தொகையுளொன் றாகிய பரிபாடற்கும் அவரன்றி வேறியாவர் உரைகாண வல்லார்? " வள்ளுவர் சீர் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை - ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி யோராறும் தண்டமிழின் மேலாந் தரம்".1 எனத் தகைசான்ற தமிழ் நூற்களில் வகைதொறும் ஒன்றினை யெடுத்துப் பாராட்டிய பெரியார் பரிமேலழகர் உரையை அந்நூற்களோடொப்ப வைத்துப் போற்றியிருப்பது அதன் பெருமைக்கு ஏற்ற சான்றாகும். சொல்வன்மை கூறுமதிகாரத்தே 'கேட்டார்ப் பிணிக்கும் தகை' என்பதனை விளக்குழி, 'அக்குணங் களாவன வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல், இனிதாதல், விழுப்பயன்றருதல் என்றிவை முதலாயின' என்றியம்பிய பரிமேலழகர் அவற்றிற்கு எடுத்துக்காட்டாகுமாறே தம் உரையை ஆக்கியுள்ளமை கண்கூடு. கண்கவர் வனப்பிற்றாயதோர் படிவமமைக்கும் ஓவியப் புலவன் ஏற்புடைய வண்ணங்களை இடனறிந்து அளவானுய்க்குமாறுபோல இவரும் அவ்வவ்விடங் கட்கு ஏற்ற சொற்களை மிகை குறையின்றி அளவானே பெய்து அணிநலம் விளங்கத் தம் உரையை யாத்தமைத்துள்ளார். அதனால் இவரது உரையின்கண் உள்ள ஒவ்வொரு சொல்லும் "நல்லியற் கவிஞர் நாவிற் பொருள் குறித்தமர்ந்த நாமச் சொல்லெனவே"* விளங்கும் பெற்றியன. கற்போர்க்குச் சான்றோரது செஞ்சொற் கவிதையிற்போன்றே இவ்வுரையானும் ஒருகாலைக்கொருகால் இன்பம் மிகுதல் ஒருதலை. இத்தகைய செவ்விய விழுப்பமுடைய தீவிய உரை தோன்றுதற்கு இவரது இயற்கை நுண்ணறிவும், எல்லையில்லா நூலறிவும், கலக்கமில் சிந்தையும் காரணங்களாகும். இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்கள் யாவற்றினும் துறைபோய கல்வியுடையவர் என்பதும், வடமொழி வேதம், வேதாங்கம் என்பவற்றின் கருத்துக் களையும், சாங்கியம், மீமாஞ்சம் முதலிய வைதிகநூற்களின் நுண் பொருள்களையும், பொருணூல் முதலியவற்றையும் அறிந்தவர் என்பது இவருரைக் குறிப்புக்களால் வெளிப்படுகின்றன. ' உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து'.1 என்னும் குறள் முதலியவற்றுக்கு இவரெழுதிய சில குறிப்புக் களிலிருந்து ஆயுள்வேதம் முதலிய பிற கலைகளினும் இவருக்குப் பயிற்சியுண்மை புலனாகின்றது. நல்லிசைப் புலவர்களின் செய்யுட்களையும், செய்யுட் பகுதி களையும் இன்றியமையாத இடங்களில் மேற்கோளாக எடுத்துக் காட்டுவதேயன்றி, அவற்றைச் சிறிது திரித்தும் திரியாமலும் ஏற்ற பெற்றி உரைநடையில் அமைத்து அழகுபடுத்துஞ் சதுரப்பாடு இவரதுசிறப்பியல்புகளினொன்றாம்."சிறுகையானளாவலாவது இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடையடிசில் மெய்பட விதிர்த்தல்" எனவும், "என்பு முரியராதல் தன்னகம்புக்க குறுநடைப் புறவின் றபுதியஞ்சிச் சீரைபுக்கோன் முதலாயினார்கட் காண்க" எனவும், புறப்பாட்டுப் பகுதிகளையும், "பொருளளவுதான் சிறிதாயினும் தக்கார் கைப்பட்டக்கால் வான் சிறிதாப்போர்க்கும் ஆகலின் இனைத்துணைத்தென்ப தொன்றில்லையென்றுங் கூறினார்" எனவும், "ஈட்டியவொண் பொருளைக் காத்தலு மாங்கே கடுந்துன்பம் ஆகலின் பரிந்தோம்பி யென்றார்" எனவும் நாலடிச் செய்யுட் பகுதிகளையும், "பிறவும் தமபோற் செய்தலாவது கொள்வது மிகையும் கொடுப்பது குறையுமாகாமல் ஒப்பநாடிச் செய்தல்" எனப் பட்டினப்பாலையடிகளையும், "உருவின் மிக்கதோ ருடம்பது பெறுதலும் அரிது ஆகலான் எழினலங்களும் ஓர் பயனேயெனினும் நூலறிவில்வழிச்சிறப்பில வென்பதாம்" எனச் சிந்தாமணிச் செய்யுளடியையும் இவர் உரைநடைப்படுத்தி இருப்பது காண்க. "மன்னனுயிர்த்தே மலர்தலை யுலகம்" என்னும் புறப் பாட்டடியினை, "மலர்தலை யுலகிற் குயிரெனச் சிறந்த அரசன்" என்றாங்கு, ஊன்றி யுணருமாறு இவர் மாற்றியமைப்பனவுமுள. இங்ஙனம் செய்யுட்டொடர்களைத் தம் உரையில் வேற்றுமையின்றி விளக்குமாறு இவர் அமைத்திருப்பது கொண்டே இவ்வுரை பாவின்றெழுந்த கிளவியாயினும் பாக்கள் போலும் பண்பிற்றென அறிதல்சாலும். " சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு".1 என்னுங் குறளில் சாங்கிய நூலோதும் தத்துவமனைத்தும் அடங்கியிருக்கு மாற்றை உய்த்துணர்ந்து விளக்குவதும், அங்ஙனமே பரிபாடல் மூன்றாஞ் செய்யுளிலுள்ள " பாழெனக் காலெனப் பாகென வொன்றென இரண்டென மூன்றென நான்கென வைந்தென ஆறென வேழென வெட்டெனத் தொண்டென நால்வகை யூழியெண் ணவிற்றுஞ் சிறப்பினை."2 என்னும் பகுதியில் இருபத்தைந்து தத்துவங்களும் அமைந் திருக்குமாற்றை எடுத்தியம்புவதும் போல்வன இவரது நுண்மா ணுழைபுல மேன்மையை இனிது தெரிப்பனவாகும். இதிலுள்ள 'கால்' என்னுஞ் சொல்லுக்கு ஆகாயமுதற் பூதங்களைந்தும் என்றும், 'பாகு' என்னுஞ் சொல்லுக்குக் கன்மேந்திரியங் களைந்தும் என்றும் இவர் பொருள்கூறி விளக்கியிருப்பதும் அங்ஙனமே இப்பாட்டிலுள்ள "ஏஎ இன கிளத்தலின்" என்னுந் தொடருக்கு "நின்னைச் சாமவேதம் இத்தன்மையை எனச் சொல்லுதலின்" என்று பொருளுரைத் திருப்பதும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பின் எல்லையைக் கடந்து நிற்கின்றன. பரிபாடலின் பதினொன்றாஞ் செய்யுளில் வரும் எரி, சடை, வேழம் என்னுஞ் சொற்களுக்கு முறையே கார்த்திகை, திருவாதிரை, பரணி எனப் பொருள் கொண்டு, அவற்றால் இடபம், மிதுனம், மேடம் என்பன குறிக்கப்பட்டவாகக் கூறியிருப்பது போல் வனவும் இவரது மதி நுட்பத்தைக் காட்டுவனவாகும். இனி, இவ்வாசிரியர் விண்டு சமயத்தினரேனும், சமயச் சார்பு பற்றி ஒருபாற் கோடுதலின்றித் துலைநாவன்ன சமனிலை உடைய ராய், எவ்வெக் கொள்கைகள் எவ்வெத்திறத்தினர்க்கு மிக்க உரிமைப்பாடுடையன என்பதனை ஆய்ந்தறிந்து அந்நெறியே கூறிச்செல்லுமியல்புடையர். திருக்குறளுரையில் இறைவற்குரிய தன்வயத்தனாதல் முதலிய எண்குணங்களை யெடுத்துக் காட்டி, 'இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டன' என இயம்பியதும், பரிபாடலில் "தீ வளி விசும்பு நிலனீரைந்தும், ஞாயிறுந் திங்களுமறனும்" என்புழிச் சிவனைக் குறிக்குஞ் சொல்லொன்றும் ஆண்டில்லாதிருப்பவும் "ஈசற்கு வடிவாகிய அட்டமூர்த்தங்கள் கூறுகின்றார்" என்றுரைத்ததுவும் இதற்கு உதாரணங்களாம். அட்டமூர்த்தம் சிவபெருமானுக்குக் கூறுதலே தொன்றுதொட்ட வழக்காதலை, மணிமேகலையின் சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதையில் சைவவாதி கூற்றாகவுள்ள, " இருசுட ரோடிய மானனைம் பூதமென் றெட்டு வகையு முயிரும் யாக்கையுமாய்க் கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும் படைத்து விளையாடும் பண்பி னோனுந் துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனுந் தன்னின் வேறு தானொன் றிலோனு மன்னோ னிறைவ னாகும்"1 என்னும் பகுதியானறிக. ஈசன் என்னும் பெயரும் சிவனுக்கே காரண விடுகுறியாதலை நன்குணர்ந்து பரிபாடலுரையிற் பல விடத்தும் அப்பெயரால் அவ்விறைவனைக் கூறிச் செல்லுதலும் அறியற்பாற்று. 'அறனெனப்பட்டதே'2 என்னுங் குறளுரையில் 'அது' என்பதனாற் சுட்டப்படுவது துறவறமெனக்கொண்டு, அது முரணாகாமை காட்டி நிறுவுவதும், "அறம் பொருள் கண்டார்கணில்"3 என்புழி 'அறம் பொருள்' என்பதனை உம்மைத்தொகை என்னாது, 'செவ்வெண்ணின் றொகைவிகாரத் தாற்றொக்கு நின்றது' எனக் கூறுவதும், 'நாளென வொன்றுபோற் காட்டி'4 'அதி நுட்பம் யாவுள'5 'கேட்டார்ப்பிணிக்குந் தகையவாய்' 6 'கோட்டிகொளல்'7 என்னுந் தொடர்களுக்குப் பிறர் கூறியஉரைகளை நியாயங் காட்டி மறுத்துச் செல்வதும் போல்வனவற்றால் இவரது இலக்கணவறிவின் நுண்மை விளங்குகின்றது. 'ஒளி' என்னுஞ் சொல்லுக்குப் 'புகழ்'8 என்றும், 'உறங்காநிற்கவும் தாம் உலகங் காக்கின்ற அவர் (அரசர்) கடவுட்டன்மை'1 என்றும், 'தானுளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை'2 என்றும், அவ்வவ்விடங்களுக்கேற்ப வெவ்வேறு பொருள் கூறி இன்றியமையாத மேற்கோள் காட்டிச் செல்வதும், அங்ஙனமே 'சிறப்பு' முதலிய சொற்களுக்குப் பொருள் விளக்குவதும், இவரது கருத்தின் ஆழத்தைத் தெரிக்கின்றன. இனி, 'வகையறச் சூழாது'3 என்னுங் குறளுரையில் 'அத்திறங் களாவன வலி, காலம், இடனென்றிவற்றால் தனக்கும் பகைவர்க்கு முளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனாற்பெறும் பயனும் முதலாயின' என்றும், 'செய்தக்க வல்ல'4 என்னுங் குறளுரையில் 'செய்யத்தக்கன வல்லவாவன-பெரிய முயற்சியினவும், செய்தாற் பயனில்லனவும், அது சிறிதா யினவும், ஐயமாயினவும், பின்றுயர் விளைப்பனவுமென இவை; செய்யத்தக்கனவாவன-அவற்றின் மறுதலையாயின' என்றும், விரித்து விளக்கியிருப்பனபோல்வன பயன் மிக்கனவும், பாராட்டப் படுவனவுமாகும். மற்றும் 'பிறப்பென்னும் பேதைமை நீங்க'5 'ஈன்றாள் பசி காண்பானாயினும்'6 என்பனவாதிய பாக்களுக்கு இவர் கூறியிருக்கும் உரையின் சொல்லும் பொருளும் சுவைத்துச் சுவைத்து இன்புறற்பாலன. 'சூதென்னு முகடி'7 என்பதற்குத் 'தன் பெயர் சொல்லல் மங்கலமன்மையிற் சூதென்று சொல்லப்படும் முகடி' என்றும், 'இரையான்'8 என்பதற்கு 'இரையை அளவின்றி யெடுத்து அதனான் வருந்தும் விலங்கோடொத்தலின் இரை யானென்றார்' என்றும், பரிபாடலில் 'தொடிமுன்கைக், காரிகை யாகத் தன் கண்ணி திருத்தினாள், நேரிறை முன்கை நல்லவள் கேள் காண்மின்' என்பதற்கு 'முன்கையாலே தன் கூந்தலிற் கண்ணியை அழகுடைத்தாகத் திருத்தினாள்; இவள் செய்த இக்குறிப்புத் தொழிலால், இவன் இந் நல்லவள் கொழுநனா யிருந்தான்; இதனைக் காண்மின்' 'நெஞ்சம் பிணிப்பதோர் அவயவங் காண்டல் குறித்து அவள் செய்தலால், இது குறிப்புத் தொழி லாயிற்று' என்றும், உரைத்திருப்பன போல்வன உன்னுந்தொறும் இன்பம் விளைப்பன. இவருரையிற் காணப்படுஞ் சிறப்பியல்புகள் எத்தனையோ பல. விரிவஞ்சி ஒரு சில ஈண்டுச் சுருங்கவுரைக்கப்பெற்றன. செவ்விய உரைநடையை விரும்பும் மாணாக்கர்கள் இவருரையைப் பலகாலும் பயிறல் நன்று. இங்ஙனம் சிறப்பித்துரைத்தல் கொண்டு, இவருரையிற் சிறிதும் வழுவின்று என்றாதல், இவர் கூறிய யாவற்றையும் ஆராய்வின்றியே கொள்ளவேண்டுமென்றாதல் யாம் கருதியுள்ளோமென அறிஞரெவரும் மதியாரென்னுந் துணிபுடையேம். " அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை யரிதே வெளிறு".1 என்பது வறிதாகாவாறு இப்பேரறிவாளரும் இழுக்கிய இடங்கள் பலவுள. அவையிற்றை மறுத்து நற்பொருள் காண்டல் குற்ற மாகாது. இச்சிற்றுரை அவற்றை ஆராய்தல் கருதியதன்று. " பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ-நூலிற் பரித்த வுரையெல்லாம் பரிமே லழகன் றெரித்த வுரையாமோ தெளி."2  35. கணம்புல்ல நாயனாரது திருப்பதி *'செந்தமிழ்ச் செல்வி' சிலம்பு-21, பரல் 3-ல் என் கெழுதகை நண்பர் திருவாளர் T.V சதாசிவ பண்டாரத்தாரவர்கள் ‘கணம் புல்ல நாயனாரது திருப்பதி’ என்னும் பொருள் பற்றி எழுதியிருப் பதனைக் கண்ணுற்றேன். பண்டாரத்தாரவர்கள் எழுதும் கட்டுரை களை விருப்புடன் படித்துப் புதியன கண்டு, ‘பழந்தனம் இழந்தன படைத்தவரை யொப்ப’ மகிழும் வழக்கமுடையே னாகலின், அப்பெற்றியே இதனை விருப்புடன் படித்தேன். ஆயின், இதன்கண், அவர்கள் துணிபு என் கருத்துக்கு இயையவில்லை. அதனை வெளியிடுவது கடனெனக் கருதி இதனை எழுதுகிறேன். நம்பியாண்டார் நம்பிகள் தாமியற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் ‘நன்னகராய இருக்கு வேளூர்தனில்.....எந்தை தந்தைபிரான் எங் கணம்புல்லனே’ எனவும், ‘இருக்கு வேளூர்மன் இடங்கழியே’ எனவும் கணம்புல்லர் பதியையும், இடங்கழியார் பதியையும் இருக்குவேளூர் என்று குறித்துள்ளார். சேக்கிழார் பெருமான் கணம்புல்லர் பதியைக்குறிக்குமிடத்தில், “ பெருக்குவட வெள்ளாற்றுத் தென்கரைப்பால் பிறங்குபொழில் வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன் மடுநிறைத்து வயல்விளைக்கும் இருக்குவே ளூரென்ப திவ்வுலகில் விளங்குபதி”1 எனவும், இடங்கழியார் பதியைக் குறிக்குமிடத்தில், “ மாதவிச் சூழல், குருகுறங்குங் கோனாட்டுக் கொடிநகரம் கொடும்பாளூர்”2 எனவும் கூறியுள்ளார். மற்றும் அவர் இடங்கழியாரைப்பற்றி, “ அந்நகரத் தினிலிருக்கு வேளிர்குலத்தரசளித்து மன்னியபொன் னம்பலத்து மணிமுகட்டிற்பாக்கொங்கின் பன்னுதுலைப் பசும்பொன்னாற் பயில்பிழம்பாமிசையணிந்த பொன்னெடுந்தோ ளாதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்”3 என்று கூறியுள்ளார். நம்பியாண்டார் நம்பிகள் கூறியன கொண்டு அப்பதிகள் இன்னவெனத் துணிதல் அருமையே. “ஒரே பெயருடைய பல ஊர்களிருப்பின் அவற்றுள் சிவனடியார் பிறந்தருளிய பேறு பெற்றது யாது என்பதைச் சேக்கிழாரடிகள் மிகத் தெளிவாக விளக்கியிருப்பது பெரிதும் பாராட்டற்பாலதாகும்.” என்று பண்டாரத்தாரவர்கள் கூறியிருப்பது யாவரும் போற்றத்தக்க உண்மையாகும். சேக்கிழாரடிகளின் வரலாற்றாராய்ச்சியின் தெளிவுக்கும், அவர் தாம் கண்ட உண்மைகளை மயக்கற விளக்கியருளுவதற்கும் இவ்'d2வூர்களைப் பற்றி அவர் கூறியனவே அமையுஞ் சான்றாகும். இனி, பண்டாரத்தாரவர்கள் மேலே காட்டிய செய்யுட்களை எடுத்து ஆராய்ந்து, கொடும்பாளூரே இருக்குவேளூராம் எனவும், அதுவே கணம்புல்லர், இடங்கழியர் என்னும் இரு பெரியாரும் பிறந்த பதியாமெனவும் துணிந்துள்ளார்கள். இக்காலத்தில் இருக்குவேளூர் எனப் பெயரிய ஊர்யாண்டும் காணப்பட வில்லையெனக் கொண்டதும், நம்பிகள் அந்தாதியில் இரண்டு பதிகட்கும் இருக்குவேளூர் என்றே பெயர் கூறியிருப்பதும், பெரிய புராணத்திலே கொடும்பாளூர் அரசராகிய இடங்கழியாரை ‘அந்நகரத்தினிலிருக்கும் வேளிர்குலத் தரசளித்தார்’ என்பதனால் கொடும்பாளூருக்கு இருக்குவேளூர் என்னும் பெயருண்மை பெறப்படுதலும் அத்துணிபிற்குக் காரணங்களாக வுள்ளன. வேறு தடையில்வழி இம்முடிபே பொருத்த முடைத்தாகும். இருக்குவேளூர் வடவெள்ளாற்றுத் தென்கரைப்பால் உள்ள தாகத் திருத்தொண்டர் புராணம் கூறுவது இதற்குத் தடையாயிருக் கின்றது. இதனையும் அவர்கள் எடுத்தாராய்ந்து, சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள வெள்ளாறு சேக்கிழாரடிகள் காலத்தில் நிவா என வழங்கி வந்ததென்பது பெரிய புராணப் பாடல்களால் நன்குணரப்படுதலின், அவ்வடிகள் கணம்புல்ல நாயனார் புராணத்திற் கூறியுள்ள வெள்ளாறு வேறு ஓர் ஆறாக இருத்தல் வேண்டுமென்பது திண்ணம் எனவும், ‘புதுக்கோட்டை இராச்சியத்திலுள்ள குடுமியான் மலையில் காணப்படும் கல்வெட்டுக்களால் அவ்'d2வூர்க்கருகில், வெள்ளாறு என்ற பெயருடைய ஆறு ஒன்று ஓடுகின்றது என்பது புலனாகின்றது’ எனவும் கூறி, அதன் மருங்கிலுள்ளதே இருக்கு வேளூர் என முடிவுகட்டியுள்ளார்கள். ஈண்டும் வெள்ளாற்றுக்குக் கொடுத்துள்ள வடக்கு என்னும் அடை தடையாகத் தோன்றுதலின், அதனையும் ‘பாண்டி மண்டலத்து வடவெள்ளாற்றுக் கூற்றத்து ஆத்தம்பூரில்’ என்னும் கல்வெட்டு ஆதரவு கொண்டு, “அது பாண்டி நாட்டிற்கு வடவெல்லையாக இருத்தல் பற்றி அதனை முற்காலத்தில் வட வெள்ளாறு என வழங்கியுள்ளனர்” எனக் கூறி மாற்றி யுள்ளார்கள். இங்ஙனம் ஒவ்வொன்றும் அவர்களுடைய சிறந்த ஆராய்ச்சியைப் புலப்படுத்தி இன்புறுத்துகின்றன. எனினும், இன்னும் இன்றியமையாத சில செய்திகளை நன்கு சிந்தியாது விட்டமையால் முடிபு தவறியது எனக் கருதுகின்றேன். சேக்கிழார் கணம்புல்லர் தோன்றிய பதியை ‘வடவெள்ளாற்றுத் தென்கரைப்பால்......இருக்குவேளூர் என்றும், இடங்கழியார் தோன்றிய பதியைக் ‘கோனாட்டுக் கொடி நகரங் கொடும்பாளூர்’ என்றும் கூறியுள்ளார். இரண்டு பதிகளும் வேறு வேறாம் என்பதனை உணர்ந்த தெளிவினாலேயே அவற்றுள் ஒன்றிருக்குமிடத்தை ஆற்றின் சார்பாலும், மற்றொன்றிருக்கு மிடத்தை நாட்டின் சார்பாலும் விளக்கியுள்ளார். அன்றியும் வடவெள்ளாறு, தென் கரை என்னும் தொடர்களை ஊன்றி நோக்கின் தென்கரை வடகரையின் வேறாயதுபோல் வடவெள்ளாறு தென்வெள்ளாற்றின் வேறாய தெனவே பொருள் கொள்ளக்கிடக்கும். கல்வெட்டிலுள்ள ‘பாண்டி மண்டலத்து வடவெள்ளாற்றுக் கூற்றம்’ என்பதில் வடக்கு என்பது கூற்றத்திற்கு அடையாகலாம். ஆண்டு வெள்ளாற்றுக்கே அடையாயினும் இழுக்கின்று. அதுகொண்டே அதற்கு வடவெள்ளாறு என்று பெயர் கூறுவது அமைவதன்று. இனி, சிதம்பரத்திற்கு வடக்கே ஓடும் ஆறு குறிப்பிட்ட சில இடங்களில் நிவா என்னும் பெயரால் திருமுறைகளில் வழங்கப் பட்டிருப்பினும் அதற்கு வெள்ளாறு என்னும் பெயர் பண்டே உண்டென்பது தேற்றம். தென்னார்க்காடு மாவட்டத்தில் தென்பெண்ணையை அடுத்துப் பெரிய யாறாகவுள்ளது வட வெள்ளாறே. மணிமுத்தா நதியும் கூடலையாற்றூரில் வந்து அதனுடன் கலந்து விடுகின்றது. கூடலையாற்றூர் என்னும் பெயரின் காரணமும் அதுவே; அருணகிரியார் திருக் கூடலையாற்றூர்த் திருப்புகழில், “ கூட்டுநதித் தேங்கியவெ ளாறுதர ளாறுதிகழ் நாட்டிலுரைச் சேர்ந்தமயி லாவளிதெய் வானையொடு கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர தம்பிரானே”1 எனக் கூறியிருப்பது ஈண்டு அறியற்பாலது. இனி, பிறிதோருண்மையை அறியின் இவ்வாராய்ச்சி யெல்லாம் இதற்கு மிகையாதல் பெறப்படும். அவ்வுண்மையாவது புதுக்கோட்டைச் சீமையில் ஓடும் வெள்ளாற்றின் தென்கரையில் கொடும்பாளூர் இல்லையென்பதே. வெள்ளாறு புதுக் கோட்டைக்குத் தெற்கில் நான்கு கல் தொலைவில் உள்ளது. கொடும்பாளூர் புதுக்கோட்டைக்கு வடமேற்கில் இருபத்தைந்து கல்தொலைவில் உள்ளது. வெள்ளாற்றுக்கு வடக்கே இருபத்து நான்கு காத வட்டகையுள்ள நிலப்பகுதி கோனாடு எனப்படும். கோனாட்டின் வடபகுதியில் கொடும்பாளூர் உள்ளது. சேக்கிழார் பெருமான் வடவெள்ளாற்றுத் தென்கரைப்பால் இருக்குவேளூர் உள்ளதாகக் கூறியிருத்தலின் அவ்வியாறும் ஊரும் இவற்றின் வேறாயினவென்பது போதரும். கோனாட்டின் தெற்கெல்லையாக ஒரு வெள்ளாறு அமைந்திருத்தல்போல வடவெல்லையாக அமைந்துள்ள பிறிதொரு வெள்ளாறே ஈண்டு வடவெள்ளாறு எனப்பட்டதென்க. இவ்வாற்றால் அதனைச் சேக்கிழாரடிகளும் வெள்ளாறு என ஆண்டுள்ளமை பெற்றாம். வடவெள்ளாற்றின் தென்மருங்கில் பச்சைமலைப் பக்கத்திலே கணம் புல்லர் பிறந்த'd2வூராகிய இருக்குவேளூர் உள்ளதெனத் தெரிகின்றது. சேக்கிழாரடிகள் ஒவ்வோரிடத்தையும் நேரிற் சென்று கண்டாங்கு இயற்கை பிறழாமல் வருணனைகளையும் அமைத்திருப்பது இறும்பூது விளைப்பதாகும். அவர் இப்பதியினை வளமிக்க மலைச்சாரலில் இருப்பதென்பது புலப்படக் கூறியிருக்கும் செய்யுளைப் படித்து இன்புறுவோமாக. “ திருக்கிளர்சீர் மாடங்கள் திருந்துபெருங் குடிநெருங்கிப் பெருக்குவட வெள்ளாற்றுத் தென்கரைப்பால்பிறங்குபொழில் வருக்கைநெடுஞ் சுளைபொழிதேன் மடுநிறைத்து வயல்விளைக்கும் இருக்குவே ளூரென்ப திவ்வுலகில் விளங்குபதி.”1 என் இனிய நண்பர் திரு. பண்டாரத்தாரவர்கள், யான் எழுதிய இச்சிற்றுரை அவர்கள் கருத்திற்கு மாறாயினும், உண்மையொடு பொருந்தியதாயின் அதற்கு உவத்தலே செய்வார்கள் என்னும் துணிபுடையேன். என் உள்ளமும் அவர்களால் நன்கு அறியப் பட்டதொன்றே.  நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் தமிழாராய்ச்சி இதழ்களில் வெளிவந்த விவரம் வ. கட்டுரையின் கட்டுரை வெளிவந்த தொகுதி இதழ் கட்டுரை வெளிவந்த எண் பெயர் இதழின் பெயர் எண் எண் ஆண்டும் திங்களும் 1. சீவான்மா செந்தமிழ் தொகுதி - 9 இதழ் - 9 1912 - செப்டம்பர் 2. திருவள்ளுவரும்,சமரசசன்மார்க்கமும் செந்தமிழ் தொகுதி - 10 இதழ் - 11 1913 - நவம்பர் 3. பொய்கையார் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 2 பரல் - 6.8.10 1924 - சூன் - சூலை 1924 - ஆகஸ்டு - செப்டம்பர் 1924 - அக்டோபர் - நவம்பர் 4. சேக்கிழார் செய்யுள்மாட்சி செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 3 பரல் - 1 1924-சனவரி- பிப்பிரவரி 5. தெய்வமணக்குஞ் செய்யுளெலாம் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 3 பரல் - 4 1925 - ஏப்பிரல்-மே 6. கோயில் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 3 பரல் - 8 1925-அக்டோபர்1927 சனவரி 7. வள்ளவர் கலித்துறை தமிழ்ப்பொழில் துணர் - 1 மலர் - 11.12 1926 - ஏப்பிரல் -மே 8. ஆளுடைய பிள்ளையார் செந்தமிழ்செல்வி சிலம்பு - 4 பரல் - 10, 11,12 1926-அக்டோபர்- 1927 சனவரி 9. திருவிழா தமிழ்ப்பொழில் துணர் - 2 மலர் - 9, 12 1926 - டிசம்பர், 1927 - மார்ச்சு - ஏப்பிரல் 10, சிந்தாமணியின் நந்தாவொளிகள் தமிழ்ப்பொழில் துணர்- 3 மலர் - 1 1927 - ஏப்பிரல் - மே 11. பரஞ்சோதி முனிவரும். திருவிளையாடலும். செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 5 பரல் - 1 1926 - சனவரி - பிப்பிரவரி 12. ஐயவினாவுக்கு விடை செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 5 பரல் - 1 1926 - சனவரி - பிப்பிரவரி 13. மார்க்கண்டேயர் அல்லது முயற்சியின் வெற்றி தமிழ்ப்பொழில் துணர் - 4 மலர் - 1, 2 1928 - - ஏப்பிரல் - மே மே - சூன் 14. பண்டைத்தமிழ்ச்சான்றோரின் வானநூற்புலமை செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 6 பரல் - 7 1928 - சூலை - ஆகஸ்ட்டு, ஆகஸ்ட்டு - செப்டம்பர் 15. அளவைகள் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 5 பரல் - 10 1928 - அக்டோபர் 16. பதிற்றுப்பத்து மூலமும், உரையும் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 6 பரல் - 10,11 1925 -அக்டோபர் - நவம்பர் நவம்பர் - டிசம்பர் 17. புறநானூற்றின் ஆராய்ச்சி செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 5 பரல் - 11 1928-நவம்பர் 18. குறிஞ்சிப்பாட்டின் உள்ளுறை செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 5 மலர் - 12 1928 - டிசம்பர் 19. சாத்தனார் பாத்திறல் செந்தமிழ்செல்வி சிலம்பு - 6,7 பரல் - 12,2 1928- டிசம்பர்- 1929 சனவரி 20. சங்கநூல்களும். சைவமும் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 7 பரல் - 5 1929 - மே - சூன் 21. இளங்கிளை தமிழ்ப்பொழில் துணர்- 5 மலர் - 4 1929 - சூலை - ஆகஸ்ட்டு 22. புறநானூற்றில் கண்ட சில பழைய வழக்குகளும், வரலாறும் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 8 பரல் - 1 1930 - சனவரி - பிப்பிரவரி 23. ஆசிரியரும், மாணாக்கரும் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 11 பரல் - 5 1933 - மே - சூன் 24. இந்தியை இந்தியாவுக்குப் பொதுமொழியாக்குதல் பொருந்தாது செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 15 பரல் - 12 1937 - டிசம்பர் - சனவரி 25. தமிழவேள் தனிமாண்பு துன்பமாலை 26. தமிழில் கலைச்சொற்கள் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 19 பரல் - 5 1941 - மே - சூன் 27. தொண்டைமான் இளந்திரையன் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 20 பரல் - 1 1943- சனவரி - பிப்பிரவரி 28. பதிற்றுப்பத்து செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 21 பரல் - 1 1943 - சனவரி - பிப்பிரவரி 29. சமய அணிகலன் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 20 பரல் - 8 1943 - ஆகஸ்ட்டு - செப்டம்பர் 30. பிற்காலப் புலவர்களின் சுடுசொல் ஆட்சி செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 20 பரல் - 9 1943 - செப்டம்பர் - அக்டோபர் 31. இளவேனிற் கவியின்பம் 32. கம்பர் காட்டும் ஒழுக்க நெறிகளில் சில 33. பசிப்பிணி மருத்துவன் 34. பரிமேலழகர் 35. கணம்புல்ல நாயனாரது திருப்பதி செந்தமிழ்ச்செல்வி சிலம்பு - 21 பரல் - 6 1944 - சூன் - சூலை * இது மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் பதின்மூன்றாவது வருஷக்கூட்டத்திற் (ஆண்டு விழாவில்) படிக்கப்பெற்றது. 1. பெரும்பாணாற்றுப்படை - அடிகள் 83 - 85 2. சிறுபாணாற்றுப்படை - அடிகள் 154 - 155 3. முல்லைப்பாட்டு - அடிகள் 69, 70 4. மலைபடுகடாம் - அடிகள் 107, 108 5. மேலது - அடிகள் 109, 110 6. மேலது - அடிகள் 111, 112 7. ஐங்குறுநூறு பா - 30 8. ஐங்குறுநூறு பா - 43 1. ஐங்குறுநூறு பா - 12 1. கம்பராமாயணம் - ஆரணிய காண்டம் - சூர்ப்பநகைப்படலம் பா - 122 2. ந.மு.வே. பாட்டு 1. திருக்குறள் - 1229 * இக்கட்டுரை நாட்டாரையா அவர்களால் 27.10.1919இல் திரிசிரபுரத்தில் எழுதப் பெற்றது. 1. இலக்கணக்கொத்துப் பாயிரம் 1. இலக்கண விளக்கச் சிறப்புப்பாயிரம் 1. பிரயோக விவேகம் செய்யுள் - 3. 1. நன்னூல் எழுத்தியல் - நூற்பா - 2 2. இலக்கண விளக்கம் 1. திருக்குறள் 503 1. திருக்குறள் 423 1. தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் உரையில் தமிழ்த்தெய்வ வணக்கம். 2. மனோன்மணீயம் - தமிழ்த்தாய் வாழ்த்து. 1. பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணம் - மதுரைக்காண்டம் - பா - 122 1. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - மொழிமரபு - நூ - 42 2. மேலது - நூற்பா - 43 3. மேலது - நூற்பா - 46 4. மேலது - நூற்பா - 47 5. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - தொகைமரபு நூற்பா - 28 1. ந.மு.வே.பட்டு 1. பெரியபுராணம் - மூர்த்தி நாயனார் புராணம் - பா - 5 2. மேலது - பா - 7 3. பெரியபுராணம் - திருஞானசம்பந்தமூர்த்தி புராணம் பா - 667 1. பெரியபுராணம் - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் பா - 18 2. மேலது - பா - 7 1. மேலது - பா - 9 2. பத்துப்பாட்டு பட்டினப்பாலை - அடிகள் - 86, 87 3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் - நூற்பா 2. 4. சிலப்பதிகாரம் - காடுகாண்காதை - அடிகள் 62-66 5. பெரியபுராணம் - திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் பா - 15. 1. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நூன்மரபு நூற்பா - 1 2. மேலது - நூற்பா - 2 1. தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - உரியியல் - நூற்பா - 34 1. நன்னூல் - எழுத்ததிகாரம் - எழுத்தியல் - நூற்பா - 5. 1. திருக்குறள் - 235 1. திருக்குறள் - 235 1. திருக்குறள் - 220 2. கம்பராமாயணம் - பாலகாண்டம் - வேள்விப்படலம் - பா - 29 1. சீவக சிந்தாமணி - காந்தருவ தத்தையார் இலம்பகம்- பா- 35 2. சூளாமணி - மந்திரமாலைச் சருக்கம் - பா - 17 1. சீவகசிந்தாமணி - இலக்கணையார் இலம்பகம் - 36. 1. திருக்குறள் - 2 1. சீவகசிந்தாமணி - சுரமஞ்சரியார் இலம்பகம் பா - 69 2. இறையனார் அகப்பொருள் - நூற்பா - 15 3. பரிபாடல் - பா - 9 1. சீவகசிந்தாமணி - பதுமையார் இலம்பகம் - பா - 163 2. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல்-நூற்பா- 38 3. திருக்குறள் - 1137 4. திருமங்கை மன்னன் பெரிய திருமடல் - பா - 20 1. ஐந்திணை ஐம்பது - பா - 38 2. திருநாவுக்கரசர் தேவாரம் - திருவையாற்றுத் திருப்பதிகம் பா - 1 3. மேலது பா - 3 1. மேலது பா - 5 2. மேலது பா - 8 3. திருவையாற்றுத் திருப்பதிகம் பா - 1 - 11 வரை ஈற்றடி 4. இன்னிலை பா - 30 5. திருஞானசம்பந்தர் தேவாரம் - திருச்செங்காட்டங்குடித் திருப்பதிகம் பா - 2 6. திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரம்மபுரத் திருப்பதிகம் பா - 10 1. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் - நூற்பா - 14 2. மேலது நூ - 15 3. மேலது நூ - 21 4. நம்பியகப்பொருள் - ஒழிபியல் - நூற்பா - 42 1. சிலப்பதிகாரம் - நீர்ப்படைக்காதை - அடி - 224 2. மேலது அடி - 230 3. மேலது அடி - 241 4. மேலது அடி - 242 5. மேலது அடி - 250 6. மேலது அடி - 251 7. பொருநராற்றுப்படை - அடிகள் 214 - 226 1. சூளாமணிச் செய்யுள் - 33 2. சூளாமணிச் செய்யுள் - 34 1. பெரியபுராணம் - திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் - பா - 44 2. சிலப்பதிகாரம் - காடுகாண் காதை - அடிகள் 64 - 66 3. பெரியபுராணம் - திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் - பா - 15 1. மனோன்மணீயம் - அங்கம் - 2- களம் - 1 - அடிகள் 75 - 109 1. சிலப்பதிகாரம் - இந்திராவிழ'd2வூரெடுத்த காதை - அடிகள் 89-98 1. புறப்பொருள் வெண்பாமாலை - வஞ்சிப்படலம் - வாள்நிலை 2. மேலது - குடைநிலை 3. மேலது - வாள்நிலை - வெண்பா 4. மேலது - குடைநிலை - வெண்பா 1. சிலப்பதிகாரம் - கால்கோட் காதை - அடிகள் 28-33 1. புறநானூறு - 50 : 3-6 2. புறப்பொருள் வெண்பா மாலை - முரசவுழிஞைக் கொளு 3. புறநானூறு - 50 1. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - மொழிமரபு நூற்பா - 43 1. மேலது - நூற்பா - 33. 2. மேலது - நூற்பா - 39 3. மேலது - நூற்பா - 46 5. மேலது - நூற்பா - 47 6. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - பிறப்பியல் நூற்பா - 20 1. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - மெய்ப்பாட்டியல் நூற்பா - 9 2. மேலது - நூற்பா - 11 3. தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - பெயரியல் நூற்பா - 8 4. மேலது - நூற்பா - 13 1. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் நூற்பா - 107 2. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - புள்ளி மயங்கியல் - நூற்பா - 82. 3. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் நூற்பா - 85 4. மேலது - நூ - 40. 5. மேலது - நூ - 39. 1. இலக்கண விளக்கப்பாட்டியல் - நூற்பா - 78 2. மேலது - நூற்பா - 79 1. பக்கம் - 42 1. பக்கம் - 43. 2. அந்த என்பது மணிமேகலையில்மட்டும் ஓரிடத்தில் வந்துளது 3. நீங்கள் என்பது நீம் என்பதனோடு கள் விகுதி சேர்ந்த சொல். நாட்டாரவர்களும் இவ்வாறு, ஒரு சொற்பொழிவிற் கூறியிருக்கின்றார்கள். நீம் என்பது பழங் கன்னடச்சொல். இது நச்சினார்க்கினியருரையால் (சீவக. 1932) அறியலாகும். நான் என்னுஞ் சொல்லை மேற்கொண்ட நன்னூலாரும் கொள்ளாத நீங்கள் என்னுஞ் சொல்லை வழங்குதல் நாட்டாரவர்கள் கருத்திற்கு அமையாததாகும். 4. தமிழ்ப்பொழில் 12, பக்கம் 41, காண்க. 5. தெலுங்கில், பறுப்பு, பப்பு என்றும் (அவற்றின் திரிபாகும்) அனுப்பு, அம்ப்பு என்றும் வழங்குதலின், அனுப்பு என்பது தெலுங்கினின்று வந்ததாதல் அறியப்படும். 7. ‘ ஆங்கனந் தணிகுவதாயின்' நற்.322 ‘ ஈங்கனஞ் செல்க தானென' புற.208 ‘ஈங்கனம் வருபவர்' குறு.336 ‘யாங்கனம்' புற. 8, 49; அகம். 27, 90, 378. சிந்தாமணியிலும் (1942) ஈங்கனம் என்பது வந்துளது. 1. கருத்தா செய்யும் செயலின் பயனுக்குச் சார்பாயிருப்பது கருமம் என்பர் வடநூலார். 2. கேரளபாணினீயம். சூ. 119 உரை. 3. கேரளபாணினீயம். சூ. 81. உரை. 1. ஸாஹித்யஸாஹ்யம். பக்கம். 215. 2. சன்னடலேகனலக்ஷணம். பக். 26. 3. தொறவெ ராமாயணம். பாலகாண்டம். 1. தமிழ்க்கடல் வாசகம் மூன்றாம் புத்தகம் பக்கம் 3 15. தமிழ்க்கடல் வாசகம் மூன்றாம் புத்தகம் பக்கம் 5 16. தமிழ்க்கடல் வாசகம் மூன்றாம் புத்தகம் பக்கம் 7 17. தமிழ்க்கடல் வாசகம் மூன்றாம் புத்தகம் பக்கம் 20 1. கலித்தொகை. முன்னுரை பக்கம். 2. அகம் 232, நற். 128. 3. அகம் 92. 4. நற். 133. 1. தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - எச்சவியல் - நூற்பா - 4 2. சீவகசிந்தாமணி - பதுமையார் இலம்பகம் - பா - 194 1. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் - நூற்பா - 89 2. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நூன்மரபு - 30 1. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் - நூற்பா - 2 1. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் - நூற்பா - 33 2. மேலது - நூற்பா - 34 3. மேலது - நூற்பா - 52 4. மேலது - நூற்பா - 53 5. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நூன்மரபு - 29 1. மேலது - நூற்பா - 23 2. மேலது - நூற்பா - 29 1. மேலது - நூற்பா - 30 2. மேலது - நூற்பா - 15 ** இப்பொழுது அச்சிடப்பெற்ற நூல்களில் "மூன்றுமுன்ஒற்ற" என்னும் பாடவேறுபாடு உள்ளது. 1. நளவெண்பா - பா - 3-54 2. சிலப்பதிகாரம் - மனையறம்படுத்தகாதை - அடிகள் 77-80 1. வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகைக் கடவுள் வாழ்த்து 1. சிவஞான சித்தியார் சுபக்கம் நூ - 210 1. சிவஞான சித்தியார்ச் செய்யுள் நூற்பா 127 1. சிவஞான சித்தியார் நூற்பா 134 1. திருவள்ளுவமாலை பா - 9 2. திருக்குறள் - 259 3. திருக்குறள் - 280 4. திருக்குறள் - 328 1. திருக்குறள் - 550 2. திருக்குறள் - 656 1. தாயுமானவர் - ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம் - பா - 12. 1. திருக்குறள் - 331 2. திருக்குறள் - 346 3. திருக்குறள் - 351 1. திருக்குறள் - 368 12. நெஞ்சுவிடுதூது - அடிகள் 23 - 26 13. நீதிநெறி விளக்கம் - பா - 7 14. நல்வழி - பா - 40 1. முதல் திருவந்தாதி - பா - 11 2. முதல் திருவந்தாதி - பா - 88 1. திருநறையூர்த் திருப்பதிகம் பா 3 : 3 2. திருநறையூர்த் திருப்பதிகம் பா 3 : 4 * இச்செய்யுள் இன்னிலைப் பதிப்பிலே “ உடைமையறா தீட்ட லுறுதுணையாம் யாண்டு முடைமையாரச் சென்றக்கா லூரெல்லாஞ் முடைமைக்கோ லின்றங்குச் சென்றக்காற் சுற்ற முடையவரும் வேறுபடும்.” என்றும் யாப்பருங்கல விருத்திப் புத்தகத்திலே “ உடையராய்ச் சென்றக்கா லூரெல்லாஞ் சுற்ற முடவராய்க் கோலூன்றிச் சென்றக்காற் - சுற்ற முடைவயிறும் வேறுபடும்.” என்றும் பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. 1. பெரியபுராணம் தடுத்தாட்கொண்ட புராணம் பா - 96 1. பெரியபுராணம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் பா 158 2. மேலது பா - 160 1. பெரிய புராணம் - திருநாட்டுச் சிறப்பு - பா - 7 1. பெரியபுராணம் - திருநகரச்சிறப்பு - பா - 8 1. பெரியபுராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - பா - 162 1. சிலப்பதிகாரம் - இந்திரவிழவூரெடுத்த காதை - அடிகள் 169 173 2. சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை - அடிகள் 9 - 13 1. சிலப்பதிகாரம் - பதிகம் - அடிகள் 1, 2 2. சிலப்பதிகாரம் - ஊர்காண்காதை - அடிகள் 7-10 1. பெரிய புராணம் - திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் - பா - 70 1. திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பிரம்மபுரம் திருப்பதிகம் - பா. 1. பெரியபுராணம் - திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் - பா - 9 1 2. மேலது பா - 92 3. மேலது பா - 93 1. பெரியபுராணம் - திருஞானசம்பந்த சுவாமிகள் புராணம் - பா - 216 1. திருக்குறள் - 738 * *இத்தொடர்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டிலும் இடம் பெற்றுள்ளன, அ. சிலம்பு : 5 : 72,73 ஆ. மணிமே : 1 : 70,71 1. மணிமேகலை - விழாவறைக் காதை - அடிகள் 62, 63 2. திருநாவுக்கரசர் தேவாரம் - திருவாவூர் - திருவாதிரைத் திருப்பதிகம் பா-1 3. மேலது பா - 3 4. மேலது பா - 9 1. சீவகசிந்தாமணி - நாமகள் இலம்பகம் - பா - 2 2. மேலது - பா - 53 3. மேலது - பா - 48 1. மேலது - பா - 135 2. மேலது - பா - 151 3. மேலது - பா - 183 1. மேலது - பா - 240 2. மேலது - பா - 240 3. மேலது - பா - 241 1. மேலது - பா - 274 2. மேலது - பா - 280 3. மேலது - பா - 281 1. மேலது - பா - 346 2. மேலது - பா - 347 3. மேலது - பா - 348 1. மேலது - பா - 349 2. மேலது - பா - 352 1. நீதிநெறி விளக்கம் - பா - 51 1.. கந்தபுராணம் - மார்க்கண்டேயப் படலம் - பா - 42 1. மேலது - பா - 47 1. புறநானூறு - பா - 30 1. புறநானூறு - பா -229 1. பரிபாடல் - பா - 11 1. தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - எச்சவியல் - நூற்பா - 5 2. மேலது - நூற்பா - 6 1. சிவஞான சித்தித் திருவிருத்தம் - பா - 7 1. புறநானூறு - பா 10 2. புறநானூறு - பா - 17 1. புறநானூறு - பா -20 2. புறநானூறு - பா - 5 1. புறநானூறு - பா - 35 1. புறநானூறு - பா - 55 1. புறநானூறு - பா - 184 2. புறநானூறு - பா - 186 3. புறநானூறு - பா - 448 1. புறநானூறு - பா - 71 2. புறநானூறு - பா - 72 1. புறநானூறு - பா - 185 2. புறநானூறு - பா - 39 1. புறநானூறு - பா - 182 1. மணிமேகலை - மலர்வனம் புக்க காதை - அடிகள் - 3,. 4 1. மேலது - அடிகள் 12,13 1. மேலது - அடி - 89 2. மேலது - அடி - 92, 93 1. கலித்தொகை - மருதக்கலி - பா - 18 2. மணிமேகலை - மலர்வனம்புக்காதை - அடிகள் 160 - 166 1. சிலப்பதிகாரம் - இந்திரவிழவூரெடுத்த காதை - அடிகள் 169 - 172 1. சிலப்பதிகாரம் - வேட்டுவவரி பா - 21 2. மதுரைக்காஞ்சி - அடிகள் - 436 - 456 3. மணிமேகலை - விழாவறைகாதை அடிகள் - 54 - 55 1. திரிகடுகம் பா - 49 2 மேலது - பா - 13 3. சிலப்பதிகாரம் - வேட்டுவவரி -அடி 68 4. சீவகசிந்தாமணி - கனகமாலை இலம்பகம் - பா - 174 5. சுந்தரர் தேவாரம் - திருக்குருகாவூர்ப்பதிகம் - பா - 10 1. புறநானூறு - பா - 6 2. புறநானூறு - பா - 95 1. புறநானூறு - பா - 50 2. புறநானூறு - பா - 93 3. புறநானூறு - பா - 260 4. புறநானூறு - பா - 234 5. புறநானூறு - பா - 249 6. புறநானூறு - பா - 173 7. புறநானூறு - பா - 199 8. புறநானூறு - பா - 260 1. புறநானூறு - பா - 41 2. புறநானூறு - பா - 160 3.புறநானூறு - பா - 20 4. புறநானூறு - பா - 168 5. புறநானூறு - பா - 243 6.புறநானூறு - பா - 143 1. புறநானூறு - பா - 190 2. புறநானூறு - பா - 240 3. புறநானூறு - பா - 169 1. கம்பராமாயணம் - பாலகாண்டம் - நாட்டுப்படலம் - பா - 48 1. கம்பராமாயணம் - பாலகாண்டம் - குலமுறைகிளத்து படலம் - பா - 24 1. நன்னூல் - பொதுப்பாயிரம் - நூற்பா - 40 1. திருமந்திரம் - குருநித்தை - பா - 531 2. கம்பராமாயணம் - பாலகாண்டம் - தாடகை வதைப்படலம் - பா - 48 3. வில்லிபாரதம் - நிரைமீட்சிச்சருக்கம் - பா - 87 1. புறநானூறு பாட்டு - 182 1. திருக்குறள் - 382 2. திருக்குறள் - 466 3. புறநானூறு - 196 4. புறநானூறு - 239 5. திருக்குறள் - 9830 6. திருக்குறள் - 9791 1. திருக்குறள் - 596 2. திருக்குறள் - 618 3. திருக்குறள் 4- 611 4. திருக்குறள் - 630 5. கம்பராமாயணம் - பாலகாண்டம் - நாட்டுப்படலம் - பா - 48 6. புறநானூறு - 239 1. பெரும்பாணாற்றுப்படை - அடிகள் - 29 - 37 1. பதிற்றுப்பத்து பா - 11 : 23- 25 2. பதிற்றுப்பத்து பா - 22 : 2- 5 1. பதிற்றுப்பத்து பா - 79 : 1 - 5 2. பதிற்றுப்பத்து பா - 63 : 6 - 7 3. மேலது பா 70 : 12 ஆவது வரி 4. மேலது பா 61 : 12 ஆவது வரி 5. மேலது பா 64 : 19 ஆவது வரி 6. மேலது பா 18 : 12 -1 3 7. மேலது பா 20 : 21 - 23 8. மேலது பா 20 : 7 - 8 9. மேலது பா 20 : 9 - 10 10. பதிற்றுப்பத்து பா - 57 : 13- 14 1. மேலது பா 14 : 13 -15 2. மேலது பா 16 : 10 -13 3. மேலது பா 31 : 24 -28 4 மேலது பா 57 : 11 - 13 5. மேலது பா 65 : 8 -10 6 மேலது பா 89 : 18 -20 7. மேலது பா 90 : 49 -50 1. பதிற்றுப்பத்து பா 70 : 18-20 2. மேலது பா 74 : 1 -2 3. மேலது பா 74 : 20 -22 4. மேலது பா 74 : 23 - 28 5. பதிற்றுப்பத்து பா 90 : 51 -55 1. புறநானூறு - பா - 77 2. மணிமேகலை - மலர் வனம் புக்ககாதை - அடிகள் 137 - 141 1. மணிமேகலை - துயிலெழுப்பியகாதை - அடிகள்54- 57 2. கம்பராமாயணம் - பாலகண்டம் - நாட்டுப்படலம் - பா - 58 3. பெரியபுராணம் - தடுத்தாட் கொண்ட புராணம் - பா - 4 4. திருவிளையாடல் புராணம் - மாமனாக வந்து வழக்குரைத்த படலம். 1. கலித்தொகை - மருதக்கலி - பா - 20 2. திருநாவுக்கரசர் தேவாரம் - திருத்தூங்கானைமாடத் திருப்பதிகம் - அடிகள் - 1- 10 1. திருக்குறள் - 237 2. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் - நூற்பா - 106 1. நீதிநெறி விளக்கம் - பா - 31 2. அறப்பளீசுர சதகம் - பா - 35 1. தனிப்பாடல் திரட்டு - ஒளவையார் பாடல் - பா - 67 2. தண்டியலங்காரம் - மாறுபடுபுகழ் நிலையணி மேற்கொள் 1. வில்லிபாரதம் 13 ஆம் போர்ச் சருக்கம் பா - 243, 244 1. தனிப்பாடல் - ஒளவையார் பாட்டு - பா - 13 2. நீதிநூல் - உலோபம் - அதிகாரம் - 23 - பா - 2 3. தனிப்பாடல் திரட்டு - காளமேகப்புலவர் பாட்டு - பா - 67 1. தனிப்பாடல் திரட்டு - காளமேகப்புலவர் பாட்டு - பா - 64 2. மேலது - பா - 70 3. பாரதியார் கவிதைகள் - முரசு - பா. 14, 15, 16, 17 1. திருநாவுக்கரசர் தேவாரம் - தனித் திருக்குறுந்தொகை : பா - 1 1. கலித்தொகை - பா - 33 அடிகள் (1-9) 2. கலித்தொகை - பாலைக்கலி - பா - 33 - அடிகள் (10-15) 1. கலித்தொகை - பாலைக்கலி - பா - 33 - அடிகள் 16 - 21 2. கலித்தொகை - பாலைக்கலி - பா - 33 - அடிகள் 30 - 31 1. “ இம்பங்h நாட்டின் செல்வமெல்லாம் எய்யித அரசாண்டிருந்தாலும் உம்பர் நாட்டின் கற்பகக்கா ஓங்கும் நீழல் இருந்தாலும் செம்பொன்மேரு அனைய புயத்தின் டேர் இராமன் திருக்கதையில் கம்பநாடன் கவிதையைப் போல் கற்றோர்க் கிதயம் கனியாதே” 2. “ அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாலை நாட்டி கம்பநாடுடைய வள்ளல் கவிசக்ரவர்த்தி பார்மேல் நம்பு பாமாலையாலே நரத்க்கும் இன்னமுதம் ஈந்தான் கம்பராமாயணம் தனியன் : 13.2” 1. திருக்குறள் - 953 2. நாலடியார் - பா - 143 3. கம்பராமாயணம் - பாலகாண்டம் - கார்முகப்படலம் - பா - 25 1. திருக்குறள் - 708 1. கம்பராமாயணம் - பாலகண்டம் - கார்முகப்படலம் - பா - 11 1. திருக்குறள் - 226 2. மணிமேகலை : 11 : 76, 77 3. திருக்குறள் : 227 4. புறநானூறு : 18 5. புறநானூறு : 40 1. புறநானூறு : 173 1. உமாபதி சிவாசாரியார் * கம்பராமாயணம் - யுத்தகாண்டம் - முதல் போர் புரிபடலம் பா - 22 1. திருக்குறள் - 950 1. திருக்குறள் - 27 2. பரிபாடல் 3 : 76 - 78 1. மணிமேகலை - சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை அடிகள் (89 - 95) 2. திருக்குறள் - 49 3. மேலது - 141 4. மேலது - 334 5. மேலது - 636 6. மேலது - 643 7. மேலது - 401 8. மேலது - 970 1. மேலது - 678 2. மேலது - 971 3. மேலது - 465 4. மேலது - 466 5. மேலது - 358 6. மேலது - 656 7. மேலது - 936 8. மேலது - 946 1. திருக்குறள் - 503 2. பெருந்தொகை - 1545 * திரு. நாட்டாரவர்கள் 28 - 3- 44 இல் காலஞ் சென்றனர்; இக்கட்டுரை 26-3-44 ல் அவர்களால் அனுப்பப் பெற்று 27 - 3- 44 இல் கழகத்திற் கிடைத்தது. 1. பெரியபுராணம் - கணம்புல்ல நாயனார் புராணம் - பா - 1 2. பெரியபுராணம் - இடங்கழியார் புராணம் - பா - 2 3. மேலது - பா - 3 1. அருணகிரியார் - திருக்கூடலையாற்றூர்த் திருப்புகழ் - பா - 766 1. பெரியபுராணம் - கணம்புல்ல நாயனார் - புராணம் - பா - 1.