நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 15 திருவிளையாடற் புராணம் திருவாலவாய்க் காண்டம் - 2 உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 15 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 360 = 392 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 245/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற்காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள் கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை 1. புராண இலக்கியம் தமிழில் தோன்றி வளர்ந்துள்ள இலக்கிய வகைகளில் புராணம் என்பதும் ஒன்றாகும். புராணம் என்ற சொல்லிற்குப் பழமை, தொன்மை என்பது பொருள். தொல்பழங்காலத்திற்கு முன்பிருந்தே மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகள், கற்பனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு படைப்பாற்றல் மிக்க பாவலர்களால் படைக்கப்பெற்றவை புராண இலக்கியங்கள் ஆகும். புராணம் என்ற சொல்லினைப் புராணி, நவீனாம் என்று விரித்துப் பழைய பொருள் பேசப்படினும் புதுப்பொருள் பொருந்தியது என்று ஒரு விளக்கம் கூறப்படுதல் உண்டு. ( It is though old ever new ) . மிகப் பழைய காலத்தில் நடந்ததாகக் கருதப்படும் கதை விளக்கமாகவும், பழைய நம்பிக்கைகளையும் மரபுகளையும் உரைப்பதாகவும் அமைவது புராணம். இவை தெய்வங்கள், முனிவர்கள், அரசர்கள் பற்றிய புனைவுகளாக இலங்குவன. இதிகாசத்துடன் புராணத்தையும் சேர்த்து ஐந்தாம் வேதமாகச் சாந்தோக்கிய உபநிடதத்தில் ஏழாம் இயலில் ( முதற் காண்டம்) சொல்லப்பெற்றது. உண்மையான நண்பன் நல்ல அறிவுரையினை உரிமையோடு கூறி நெறிப் படுத்துதல் போலப் பழைய கதைகளின் வழியே நீதிகளைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துதலின், புராண இதிகாசங்கள் யாவும் சுஹ்ருத் சம்மிதை ஆகும் என்று பிரதாபருத்தரீயம் என்ற அணியிலக்கணப் பனுவலில் வித்தியாநாதர் ( கி.பி.13 நூ.) குறித்துள்ளார். சுஹ்ருத் - நண்பன்; சம்மிதை - போன்றது என்று பொருள் கூறுவர். எல்லாப் புராணங்களையும் வேதவியாசரே தொகுத்துச செய்தனர் என்பது ஒரு கருத்து. இவையாவும் நைமிசாரண்யத்தில் இருந்த முனிவர்களுக்குச் சூதன் என்னும் பாடகன் கூறியவை என்பது மற்றொரு கருத்து. புராணங்களை 1. மகாபுராணம் 2. உபபுராணம் 3. தலபுராணம் என்று மூன்று வகையாகப் பாகுபடுத்துவர். முன்னைய இருவகைப் புராணங்களும் வடமொழியில் தோன்றியவை; அவற்றுள் ஒரு சில தமிழில் மொழி பெயர்க்கப்பெற்றவை. எனின், மூன்றாவதாகக் குறிக்கப் பெற்றுள்ள தலபுராணங்கள் பலவும் தமிழில் மூல இலக்கியமாக முகிழ்த்தவை. இவற்றுள் ஒரு சில வடமொழியில் மொழி பெயர்த்துக் கொள்ளப் பெற்றவை. கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடியுள்ள திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் தமிழில் முழுமையாகக் கிடைத்துள்ள முதல்தல புராணமாக ஆராய்ச்சி அறிஞர்களால் கருதப்படுகின்றது. இறைவன் கோயில் கொண்டுள்ள தலத்தின் சிறப்புக்களையும் அங்கு வங்கு வழிபட்டோர் பெற்ற நற்பேறுகளையும் எடுத்துரைக்கும் பாங்கில் கற்பனை வளமும் கருத்து வளமும் சிறக்கச் சீரிய விருத்த யாப்பில் புனையப் பெறும் தலபுராணத்தினைக் காப்பியமாகக் கருதுவோரும் உளர். பிரபந்த மரபியல், “காப்பியம் புராணமாய்க் கருதப் பெறுமே” என்று இயம்புதலின், காப்பியமும் புராணமும ஒருவகை இலக்கியப் படைப்பாக எண்ணப் பெற்றமை புலனாகும். 2. தல புராணங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினாலும் புனிதத் தன்மை பொருந்திய தலத்திற்குப் பாடப் பெற்றுள்ள தல புராணங்களில் அருணாசலப் புராணம், சிதம்பரப் புராணம், சேது புராணம், திருவாரூர்ப் புராணம், திருவானைக்காப் புராணம், திருக்காளத்திப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம், திருவெண்காட்டுப் புராணம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. பெரும்பாலும் தலத்தின் பெயரினாலேயே புராணங்கள் பெயர் பெற்றன. எனின், சிராமலை நாதரின் மீது சைவ எல்லப்ப நாவலர் பாடியது செவ்வந்திப் புராணம் ஆகும். இது தலத்தின் பெயரால் அமையவில்லை. சிராமலையில் (திருச்சி மலைக்கோட்டையில்) கோயில் கொண்டுள்ள ஈசனுக்கு உகப்பான செவ்வந்தி மலரின் பெயரினால் இப்புராணம் வழங்கப்பெற்றது. தல புராணங்களை மிகுதியாகப் பாடிய சிறப்புக்குரியவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவர். 3. திருவிளையாடல் திருவிளையாடற் புராணம் மதுரையில் கோயில் கொண்டுள்ள சொக்கநாதரின் அரும்பெரும் அருள் விளையாடல்களைக் காவியச் சுவையுடனும் கற்பனை வளத்துடன் பத்தி உணர்வு உடனும் கலைச் சிறப்புடனும் பாரித்துரைக்கும் பாங்கில் பரஞ்சோதி முனிவரால் பாடப்பெற்றது. இப்படைப்பும் தலத்தின் பெயரால் வழங்கப்பெறாமல் இறைவனின் அற்புத விளையாட்டின் பெயரினால் வழங்கிவருதல் நோக்கத்தக்கது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகைத் தொழில்களையும் ஈசன் ஒரு விளையாட்டாக நிகழ்த்துகிறான் என்பதை விளக்க முற்பட்ட மாதவச் சிவஞான முனிவர், “ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தனுக்கு ஒரு விளையாட்டாதல் போல” என்று சிவஞான சித்தியார் உரையில் உவமை கூறித் தெளிவுறுத்தினார். மாணிக்கவாசகர், “காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்று இறைவனின் விளையாட்டினைக் குறித்துள்ளார். ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு படைத்த மாந்தர் வரையுள்ள எல்லா உயிர்க்கும் அருள் சுரக்கும் வரம்பற்ற ஆற்றலும் எல்லை இல்லாப் பெருங்கருணைத்திறமும் வாய்ந்த முதல்வன் பல்வேறு கோலங்கொண்டு மன்பதைக்கு அருளிய வியத்தகு செயல்களைத் திருவிளையாட்டு, திருவிளையாடல் எனப் பெயரிட்டு வழங்கினர். இதனை வடமொழிவாணர் லீலை என்று கூறினர். பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரை மாநகரில் சிவபிரான் புரிந்துள்ள பற்பல அருள் விளையாடல் களில் அறுபத்து நான்கினை மட்டும் தேர்ந்தெடுத்துச் செல்லி நகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தினைச் செந்தமிழ் அமுதமாகப் பாடினார். இதுவே கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர்க்கு மூலமாதல் வேண்டும். எனினும், தம் நூலுக்கு மூலம் வடமொழியில் ஈசசங்கிதை என்று பாயிரத்தின் தொடக்கத்தில் குறித்துள்ளார். மூலம் தமிழாகவே இருப்பினும், வடமொழியிலிருந்து பாடுவதாகக் கூறுதல் நூலுக்குப் பெருமைதரும் என்று எண்ணிய காலத்தில் வாழ்ந்தவர் பரஞ்சோதியார் எனக் கருத வேண்டியுள்ளது. சைவப் பெருமக்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் என்ற மூன்றினையும் சிவபிரானின் முக்கண்ணாகப் போற்றுதல் மரபு. இவற்றுள் நடுவணதாகிய திருவிளையாடற் புராணத்தினைப் பாடிய பரஞ்சோதியாரின் புலமைத் திறத்தையும் புராணத்தின் அமைப்பியல் அழகினையும் முதற்கண் சுருக்கமாகக் காண்போம். 4. பரஞ்சோதியார் படைப்புக்கள் பரஞ்சோதியார் திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் தோன்றியவர். இவர்தம் தந்தையார் மீனாட்சி சுந்தர தேசிகர் ஆவர். இளமையிலேயே பரஞ்சோதியார் செந்தமிழையும் வடமொழியையும் குறைவறக் கற்றார். இலக்கணம், இலக்கியம், அளவை நூல், நிகண்டு, நீதி நூல், வானூல், கலை நூல்கள் முதலியன பயின்று வரம்பிலாப் புலமை நிரம்பப் பெற்றார். சாத்திர, தோத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றுச் சிவநேசம் பூண்டு விளங்கினார். கவிபாடும் ஆற்றலும் பெற்றனர்.இவர் பாடியவை திருவிளையாடற் புராணம், மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி, வேதாரணிய புராணம் என்பன. இப்படைப்புக்கள் பரஞ்சோதியாரின் புலமை வளத்திற்கும் கற்பனைத் திறத்திற்கும் படைப்பாற்றலுக்கும் கட்டியங் கூறுவன எனலாம். 5. திருவிளையாடற் புராணம் அமைப்பியல் வனப்பு ஒரு பெருங்காப்பியத்திற்குரிய அமைப்பியல் முழுமையும் வாய்க்கப் பெற்ற இலக்கியமாகத் திருவிளையாடற் புராணம் திகழ்கின்றது. மதுரைக்காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களையும் 64 படலங்களையும் இப்புராணம் கொண்டுள்ளது. பெரும் பான்மையும் அறுசீர் ஆசிரிய விருத்தங்களும், கலிநிலைத் துறையில் அமைந்த பாடல்களும், கலிவிருத்தங்களும் செவிக்கின்பம் பயக்கும் பாங்கில் ஓசை நலம் தளும்பப் பரஞ்சோதி முனிவரால் பாடப்பெற்றவை. இப்பாடல்களின் தொகை 3363 ஆகும். இம்முனிவர், “ விரிமுறை விருத்தச் செய்யுள் வகைமையால் விளம்பலுற்றேன் ” என்று இயம்புதல் எண்ணத்தக்கது. நீர்பிரித்துத் தீம்பாலினை மட்டும் பருகக் கூடிய அன்னப் பறவையினைப் போல, இந்நூலினைப் பயில்வோர் குற்றத்தை நீக்கிக் குணத்தினைக் கொள்ளுதல் வேண்டும் என்று முனிவர் அவையடக்கம் கூறுதல் அறியத்தக்கது. இப்புராணத்தின் முதற்பாடல் “சத்தியாய்ச் சிவமாகி ” எனத் தொடங்குவது; விநாயகர்க்கு வணக்கம் கூறுவதாய் அமைந்தது. வாழ்த்துச் செய்யுளும் நூற்பயன் நுவலும் பாடலும் தொடர்ந்து வருவன. பெரும் பாலும் நூற்பயன் கூறுதல் நூலின் முடிவில் இடம் பெறும்; எனின், இங்குத் தொடக்கத்தில் இடம்பெறுதல் சுட்டுதற் குரியது. தொடர்ந்து சிவம், சத்தி உள்ளிட்ட கடவுள் வணக்கப் பாடல்களும், சிவனருட் செல்வராகிய அடியார்க்குரிய பாடல்களும் அமைந்துள்ளன. பாயிரப் பகுதியின் எச்சமாக நூல் செய்தற்குரிய காரணமும், முறையும், அவையடக்கமும், அரங்ககேறிய வரலாறும் சொல்லப்பெற்றன. திருநாட்டுச் சிறப்பு, திருநகரச் சிறப்பு என்ற பகுதிகளில் பாண்டிய நாட்டு வளமும், இயற்கை எழிலும், திணைக் காட்சிகளும், மதுரை மாநகரின் அமைப்பழகும், வீதிகளின் வனப்பும், மக்களின் செழுமையும் சிறப்பாகப் புனையப் பெற்றுள்ளன. இவற்றைப் படிப்பவரின் மனத்தில் சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் இளங்கோவடிகள் படைத்துள்ள மதுரை மாநகரின் மாண்புகள் தோன்றுதல் கூடும். புராண வரலாறு, தலம், தீர்த்தம், மூர்த்தி விசேடங்களும், புராணச் சுருக்கமாக அமையும் பதிகப் பகுதியும் படித்து மகிழத் தக்கவை. பரம்பொருளே விண்ணகத்தினின்றும் மண்ணகத்தில் தோன்றி நீதிநெறி நிலைபெறவும் யாவரும் இன்புறவும் அரசு புரிந்த திருவிளையாடல்கள் சுட்டத்தகுவன. இவற்றை நன்கு கற்றறிந்தவராகிய குமரகுருபரர், தமரநீர்ப் புவனம் முழுதொருங் கீன்றாள் தடாதகா தேவியென் றொருபேர் தரிக்கவந் ததுவும் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவும் குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும் தண்டமிழ் மதுரம் கூட்டுண வெழுந்த வேட்கையால் எனில்; இக் கொழிதமிழ்ப் பெருமையையார் அறிவர்! என வியந்து போற்றுதல் எண்ணி இன்புறத்தக்கது. இறைவன் திருவருட் சிறப்புடன் அருந்தமிழ்ச் சிறப்பும் இப்புராணத்தில் எங்கும் இடம்பெறக் காணலாம். மூவேந்தரும் செந்தமிழ்மொழியைப் பேணி வளர்த்தனர். எனினும், பாண்டியரின் பணியே விஞ்சி நிற்பது. முச்சங்கம் அமைத்துப் புலவர்களைப் புரந்து முத்தமிழ்ப் பணிபுரிந்த பாண்டியரின் சிறப்பு இப்புராணத்தின் பல இடங்களிலும் பரவியும் விரவியும் வந்துள்ளது. சங்கப் பலகை கொடுத்த படலம், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம், சங்கத்தார் கலகம் தீர்த்த படலம், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் என்பன எண்ணற்பாலன. “நெற்றிக் கண்ணினைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற அஞ்சா நெஞ்சம் கொண்ட அருந்தமிழ்க் கவிஞன் நக்கீரனின் குரல் இப்புராணத்தில் ஒலிக்கிறது. அகத்தியர் தென்னாடு வருதற்கு முன்பே செந்தமிழ் வளம் பெற்று விளங்கியது என்ற கருத்தினை, விடைகொடு போவான் ஒன்றை வேண்டினான்; ஏகும்தேயம் தொடைபெறு தமிழ்நாடு என்று சொல்லுப; அந்த நாட்டின் இடைபயில் மனித்த ரெல்லாம் இன்தமிழ ஆய்ந்து கேள்வி உடையவர் என்ப கேட்டார்க்(கு) உத்தரம் உரைத்தல் வேண்டும் காண்க (கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.1) என்ற பாடலில் பரஞ்சோதியார் புலப்படுத்தியுள்ளார். கம்பரும் என்றுமுள தென்தமிழை இயம்பி இசை கொண்டான் என்று தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பினைக் கூறுதல் இயைபு கருதி இவண் எண்ணிப் பார்த்தற்குரியது. தமிழிசையின் தனிப்பெரும் சிறப்பினையும் ஆற்றலையும் விறகுவிற்ற படலத்தில் பரஞ்சோதியார் சுவைபடப் பாடியுள்ளார். தன்னடியார் ஆகிய பாணபத்திரனின் பொருட்டு ஏமநாதன் என்னும் வடநாட்டுப் பாணனை அடக்கி ஆளும் பாங்கில் ஈசன் முதியனாகத் தோன்றிப் பண்ணிசைத்த பாங்கினப் பரஞ்சோதியார், “ பாணர்தம் பிரானைக் காப்பான் பருந்தொடு நிழல்போக் கென்ன யாணரம் பிசைபின் செல்ல இசைத்தவின் னிசைத்தேன் அண்ட வாணர்தம் செவிக்கா லோடி மயிர்த்துள்ள வழியத் தேக்கி யாணரின் அமுத யாக்கை இசைமயம் ஆக்கிற் றன்றே” “ தருக்களும் சலியா; முந்நீர்ச் சலதியும் சலியா; நீண்ட பொருப்பிழி அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா; அருட்கடல் விளைத்த கீத வின்னிசை அமுதம் மாந்தி மருட்கெட அறிவன் தீட்டி வைத்தசித் திரமே ஒத்த” என வரும் பாடல்களில் பயில்வோரின் உள்ளம் இன்புறப் படைத்திருத்தல் காணத்தக்கது. யாழ் + நரம்பு - யாணரம்பு எனப்புணர்ச்சி பெறுதற்கு வீரசோழிய இலக்கண நூலில் விதியுள்ளது. தேவர்க்கும், வேந்தர்க்கும், புலவர்க்கும் அருள் சுரக்கும் முதல்வன் அஃறிணையாகிய பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் பொருட்டுத் தாய்ப் பன்றியாக அவதாரம் கொண்ட அருட்செயலையும் இப்புராணம் ஒரு திருவிளையாடலாகப் போற்றியுள்ளது. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம், பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் என்பன ஆலவாயண்ணலின் அரிய அருள் விளையாட்டிற்குச் சான்றாவன. பரஞ்சோதியார், என்னையா ளுடைய கூடல் ஏகநா யகனே யுங்கட்(கு) அன்னையாய் முலைதந்(து) ஆவி யளித்துமே லமைச்ச ராக்கிப் பின்னையா னந்தவீடு தருமெனப் பெண்ணோர் பாகன் தன்னையா தரித்தோன் சொன்னான் பன்னிருதனயர்தாமும் எனவரும் பாடலில் நான்முகன் கூற்றில் வைத்துக் கூறும் திறம் காணத்தக்கது. மாணிக்கவாசகரின் பொருட்டுச் சோமசுந்தரக்கடவுள் புரிந்த திருவிளையாடல்கள் பற்பல. நரி பரியாக்கிய படலம், பரி நரியாக்கிய படலம், மண் சுமந்த படலம் என்பன எண்ணு தற்குரியன. வந்தி மூதாட்டிக்கு ஏழைபங்காளன் ஆகிய ஈசன் ஏவலனாக மண்சுமந்த திருவிளையாடலையும் பரஞ்சோதியார் பாடியுள்ளார். இத்திருவிளையாடலை மாணிக்கவாசகப் பெருமான், பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் என்று குழைந்துருகிப் பாடியிருத்தல் இயைபு கருதி இவண் எண்ணத்தக்கது. திருஞானசம்பந்தர் மதுரைமாநகரில் சமணர்களுடன் சொற்போர் புரிந்து சைவத்தினை நிலைநாட்டிய வரலாற்றினையும் பரஞ்சோதி முனிவர் புராணத்தின் இறுதிப்பகுதியில் பாடியுள்ளார். இவர் நோக்கில், மாணிக்கவாசகர்க்குப் பிற்பட்டவராகச் சம்பந்தர் தோன்றுகிறார் எனலாம். கலைக் களஞ்சியமாகக் காட்சிதரும் திருவிளையாடற் புராணத்தில் இறைவனின் அளப்பரிய அருள்திறம், சிவநெறியின் மாட்சி, செந்தமிழின் சிறப்பு, நீதிகள், அரசியல்நெறி, இல்லற நெறி, சமுதாய ஒழுங்கு, பல்வேறு நம்பிக்கைகள், தொன்மங்கள் முதலியன சிறப்பாகப் பாடப்பெற்றுள்ளன. இதில் இடம் பெறும் இயற்கைக் காட்சிகள், கற்பனைகள், அணிகள், யாப்பியல் வனப்பு, ஓசைநலம் என்பன இதன் இலக்கியத் தரத்தினை உயர்த்துவன எனலாம். இத்தகைய சீரிய இலக்கியப் படைப்பிற்கு உரைகள் பல எழுந்தன. இத்திறம் பற்றிச் சுருங்கக் கூறலாம். 6. திருவிளையாடற் புராணம் உரைமரபு இப்புராணம் தோன்றிய காலம் முதல் இதில் இடம் பெறும் கதைகளைப் பொதுமக்களும் கற்றோரும் கேட்டின் புறும் வகையில் சொற்பொழிவு புரிவோர்க்காகப் பெருஞ் செல்வரும் சைவச் சான்றோரும் பொருளுதவி தந்துவந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் உரையில்லாமல் இதில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்குத் தெளிவான பொருள் அறிய முடியாத நிலை ஏற்பட்டது. அதன்விளைவாக உரைகள் தோன்றலாயின. அவற்றுள் ஒரு சிலவற்றைக் குறிப்பிடுதல் தகும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர் சோடசாவதானம் சுப்புராயச் செட்டியாரவர்கள் எழுதிய உரை பலராலும் பயிலப் பெற்று வந்துள்ளது. இவ்வுரையினைப் பின்பற்றி ஈக்காடு இரத்தினவேலு முதலியார் பொழிப்புரை எழுதி வெளியிட்டனர். மதுரைக் காண்டத்திற்கு மட்டும் மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை என்பார் பொழிப்புரை எழுதினார். இவர்கள் உரை திருவிளையாடற் புராணத்தின் பொருளைப் புரிந்து கொள்ளு தற்குப் பயன்தந்தன. எனினும் பல்வேறு பதிப்புக்களையும் ஒப்புநோக்கித் தக்க பாடங்களைத் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் முறையிலும் ஆர்வலர் அனைவரும் பயின்று மகிழும் பாங்கிலும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் மூன்று காண்டங்களுக்கும் முறையாக எழுதிய உரை அட்சய ஆண்டு, தைத்திங்கள் 8 ஆம் நாள் (1927) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் செப்பமுற வெளியிடப் பெற்றது. கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணாக்கர்க்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அறிஞர்க்கும் பெரிதும் பயன்படும் பாங்கில் எழுதப் பெற்றுள்ள இவ்வுரையின் சிறப்புக்களைச் சுருக்கமாக இங்குக் காண்போம். 7. நாவலர் ந.மு.வே. உரைத்திறம் இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற அறிஞர் பெருமக்களில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடத்தக்க புலமைச் செல்வராவர். இவர்களிடம் பயின்ற என் பேராசிரியப் பெருமக்கள் வகுப்பறையில் இவர்தம் நுண்மாண் நுழைபுலச் சிறப்பினையும் உரைகூறும் மாண்பினையும் பன்முறையும் எடுத்துரைத்த நினைவுகள் என் மனத்திரையில் எழுகின்றன. அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழைய இலக்கியங்களுக்குப் பேருரை கண்ட இப்பெருமகனார் திருவிளையாடற் புராணத்திற்கும் சிறந்த உரை வரைந் திருத்தல் எண்ணுதற்குரியது. நாலடியாரில் பொழிப்பு, அகலம், நுட்பம், நூலெச்சம் என்ற நான்கு வகையான் நூலிற்கு உரை அமைதல் வேண்டும் (32.9) என்ற வரையறை காணப்படுகிறது. நாட்டார் ஐயா அவர்கள் உரை இக்கூறுகள் யாவும் பொருந்தி நூலின் சிறப்பினை வெளிக்கொணர்ந்து பயில்பவர் மனத்தில பதியச் செய்தல் சுட்டுதற்குரியது. சங்க இலக்கியப் பாக்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்கள், திருமுறைகள், மெய் கண்ட சாத்திரங்கள் என்பன இவர்தம் உரையில் மேற்கோளாக எடுத்தாளப் பெறுவன. உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் கருத்துக்களையும் இடை யிடையே எடுத்துக் காட்டித் தம்உரைக்கு ஆக்கம் சேர்த்தல் இவர்தம் இயல்பு. பாக்களுக்குரிய யாப்பினைச் சுட்டுதலும் அணிகளை விரித்து விளக்குதலும் தனிச்சிறப்பு. பாக்களில் அகன்று கிடக்கும் சொற்களை அணுகிய நிலையில் கொணர்ந்து பொருளியைந்து முடிய உரைவரைதல் சுட்டுதற்குரியது. ஒருபாடலில் பயின்றுள்ள தொடர்களை இயைபுறுத்தி வினை முடிபு காட்டுதலும், இலக்கணக் குறிப்புக்கள் தருதலும் உரையின் சிறப்பினை மேலும் உயர்த்துவன எனலாம். சைவசித்தாந்தச் செம்பொருளை ஏற்புழி இவர்தம் உரை இயைபுறுத்திக் காட்டுதல் எண்ணி இன்புறத்தக்கது. புலமை விருந்தாக அமையும் இவர்தம் உரையிலிருந்து ஒரு சில பகுதிகளைப் பயில்வார் பார்வைக்கு வழங்குதல் சாலும். பாயிரப்பகுதியில் “ திங்களணி திருவால வாய்எம் அண்ணல் திருவிளையாட்டு இவை” என்ற பகுதிக்கு நாட்டார் அவர்கள் நவிலும் உரைப்பகுதி காண்போம். திங்களணி அண்ணலென இயைக்க. திருவிளையாட்டு என்றது அதனைக் கூறும் நூலுக்கு ஆயிற்று. இறைவன் செய்யும் செயலெல்லாம் எளிதின் முடிதல் நோக்கி அவற்றை அவனுடைய விளையாட்டுக்கள் என்ப. “காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்னும் திருவாசகமும்; “ சொன்னவித் தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னின் முன்னவன் விளையாட் டென்று மொழிதலுமாம்” என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தமும் நோக்குக. இப்பகுதியில் தோத்திரமும் சாத்திரமும் மேற்கோளாக அமைந்து பாடற்பொருளை விளங்க வைத்தன. கல்லாலின் தோத்திரமும் சாத்திரமும் மேற்கோளாக அமைந்து பாடற்பொருளை விளங்க வைத்தன. கல்லாலின் புடையமர்ந்து என்ற தென்முகக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் உரையில், “ வேதம் முதலிய கலைகளெல்லாம் பாச ஞானமாகலானும் இறைவன் ‘பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்’ ஆகலானும் ‘மறைக்கு அப்பாலாய்’ என்றார்.” என்று சாத்திர விளக்கம் தந்து, ‘இருநிலனாய்த்தீயாகி நீருமாகி’ ‘விரிகதிர் ஞாயிறல்லர்’ எனவரும் அப்பரடிகளின் பாடல்களை மேற்கோள் தந்து தம் உரைக்கு வலிமை சேர்த்தனர். ‘உள்ளமெனும் கூடத்தில்’ என்ற பாடலின் உரையில், விநாயகக் கடவுளை வேழம் என்றதற் கேற்ப உள்ளம் முதலியவற்றைக் கூடம் முதலியவாக உருவகப்படுத்தினார் என்று எழுதுதல் எண்ணத்தக்கது. மதுரைக் காண்டத்தில் திருமணப் படலத்தில், “கள்ளவிழ் கோதை” எனவரும் பாட்டின் உரையில், “மிகுதியை உணர்த்தக் காடு என்றார். தெள்விளி - தெளிந்த ஓசை. “ஆம்பலம் தீங்குழல் தெள்விளி பயிற்ற” என்னும் குறிஞ்சிப் பாட்டு அடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய உரை காண்க.” என்று சங்க இலக்கியஉரை மேற்கோள் தருதல் காணத்தக்கது. இதே பாடலைத் தொடர்ந்து வரும், “மீனவன் கொடியும் கான வெம்புலிக் கொடியும் செம்பொன் மானவிற் கொடியும்” என்ற பாடற் பகுதிக்கு நாவலர் நாட்டார் தரும் விளக்கம் காண்போம். “மீன், புலி, வில் இவை முறையே பாண்டிய சோழ சேரர்கட்குக் கொடிகள். மூவேந்தருள் வலியுடைய ஒருவரைக் கூறுங்கால் அவருடைய கொடி முதலியவற்றுடன் ஏனை இருவரின் கொடி முதலிய வற்றையும் அவர்க்குரியவாகச் சேர்த்துக் கூறுதல் மரபு. “ வடதிவை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்டலை யேற்ற வரைக வீங்கென” எனச் சிலப்பதிகாரத்து வருதலும் காண்க.” என்பது உரைப் பகுதியாகும். திருவிளையாடற் புராணப் பாடற்பகுதிக்குச் சிலப்பதிகார மேற்கோள் தந்து விளக்குதல் வேந்தரின் வலிமை மரபினைப் புலப்படுத்தும் பாங்கினைப் புரிந்து கொள்ளுதற்கு உதவும். கூடற்காண்டத்தில் “எல்லாம் வல்லசித்தரான படலத்தில்,” அகரமாதி எனத் தொடங்கும் பாடல் உரையில், “இடையிட்டு நின்ற ஏகாரங்கள் எண்ணுப் பொருள் குறித்தன. எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக் குறித்தியலும் என்மனார் புலவர் என்பது தொல்காப்பியம் என்று இலக்கண விளக்கம் கூறுதல் எண்ணற்பாலது. இக்காண்டத்தில் உலவாக்கோட்டை யருளிய படலத்தில், கூடற், படியார்க்கும் சீர்த்திப் பதியேருழவோருள் நல்லான் அடியார்க்கு நல்லான் (38.2) என்ற பாடற் பகுதிக்கு நாவலர் அவர்களின் உரை காண்போம். “ புவிமுழுதும் நிறைந்த கீர்த்தியையுடைய மதுரைப்பதியிலே ஏரான் உழுதலைச் செய்யும் வேளாளரில் சிறந்தவன் ஒருவன் அடியார்க்குநல்லான் என்னும் பெயரினன் .... கூடலின் புகழ் புவிமுழுதும் நிறைதல், “நிலனாவிற்றிரிதரூஉம் நீண்மாடக் கூடலார்” எனக் கலித்தொகையுள்ளும் குறிக்கப்பட்டது. சிலப்பதிகாரத்திற்குப் பேருரை கண்ட அடியார்க்கு நல்லாரும் வேளாண்குடி விழுச்செல்வராதல் கூடும். இப்பெயர் குறித்து மேலும் ஆராய்ந்து, “ அடியார்க்கு நல்லார் என்பது இறைவன் திருப்பெயருமாம், கருவூருள் ஆனிலை, அண்ணலார் அடியார்க்கு நல்லரே என்னும் ஆளுடையபிள்ளையார் திருவாக்கும் காண்க.” என்று நாட்டார் ஐயா தெளிவுறுத்தல் எண்ணி இன்புறத் தக்கது. சங்க வரலாற்றுத் தொடர்புடைய தொன்மங்களைக் கொண்டு விளங்கும் இப்புராணத்தின் மூன்றாம் பகுதியாகிய திருவாலவாய்க் காண்டத்தில் ‘தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில், தண்டமிழ் மூன்றும் வல்லோன் தான்எனக் குறியிட் டாங்கே புண்டர நுதலிற் பூத்துப் பொய்யிருள் கிழித்துத் தள்ள (52.99) என்ற பாடற்பகுதிக்கு அவர்களின் விளக்கம் நோக்குவோம். “ தண்ணிய மூன்று தமிழிலும் வல்லவன்தானே எனக் குறியிட்டது போலத் திரிபுண்டரம் ( - மூன்று கீற்றுத்திருநீறு) நெற்றியின்கண் இடப்பெற்று நிலையில்லாத அஞ்ஞான இருளைக் கிழித்து ஓட்டவும்.” என்பது உரைப்பகுதியாகும். வடமொழியினைத் தேவபாடை எனக் கூறிக்கொண்ட காலத்தில், எங்கள் செந்தமிழும் தெய்வமொழியே என்பதை நிலைநாட்டும் பாங்கில் சிவபிரான் முத்தமிழிலும் வல்லவன் என்றும், தலைச்சங்கத்துப் புலவருடன் கூடியிருந்து தமிழாராய்ந்தான் என்றும் தொன்மச் செய்தி வழங்கி வருதற்கு இறையனார் களவியலுரையும் சான்றாக அமைகின்றது. மேலே சுட்டப்பெற்ற உரைப்பகுதிகள் நாவலர் ந.மு.வே. அவர்களின் கூர்த்த மதிநலத்தினையும் சீர்த்த புலமை வளத்தையும் புரிந்துகொள்ளப் போதுமானவை. கற்றோர்க்குத் தாம் வரம்பாகத் திகழ்ந்த நாட்டார் ஐயா அவர்களின் ஆராய்ச்சித்திறனுக்கு ஒரு சான்று கூறுதல்சாலும். திருவிளையாடற்புராணத்தின் ஆராய்ச்சி முன்னுரையில், திருவிளையாடற் கதைகளில் எவை எவை பழைய இலக்கியங்களில் பொதிந்துள்ளன என்பதை அகழ்ந்தெடுத்துக் காட்டியுள்ள பகுதி அறிஞர்களால் உற்றுநோக்கத்தக்கது. சிலப்பதிகாரம், கல்லாடம், தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களிலிருந்து அவர்கள் கூறியுள்ள திருவிளையாடற் கதைகளை (ப.8) அவர்கள் கூறிய வரிசையிலேயே திருவிளையாடற் புராணப் பதிப்பில் ( அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1991) அதன் பதிப்பாசிரியர் ஆராய்ச்சி முன்னுரை என்ற பெயரில் அமைந்துள்ள பகுதியில் II , III - இல் மாற்றமின்றித்தாமே முதன்முதல் கண்டறிந்து கூறியதுபோல் எழுதியுள்ளார். நாவலர் நாட்டாரின் பெயரினை அவர் சுட்டாது போயினமையினை இங்குச் சுட்டுதல் நம் கடமை ஆயிற்று. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திருவிளையாடற் புராணத்திற்கு நாவலர் ந.மு.வே. அவர்களின் உரையினை ஏழு தொகுதிகளில் தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் காலத்திற்கேற்ற பணி பாராட்டற்பாலது. இப்பணிக்கு உறுதுணையாக விளங்கும் உழுவலன்பு கெழுமிய பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள் நாட்டார் பெயரினால் விளங்கும் திருவருள் கல்லூரியின் தாளாளராக ஆற்றிவரும் அரும்பணி அனைவராலும் பாராட்டற் பாலது. நாட்டார் ஐயாவின் ஏனைய நூல்களையும் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் செய்தியறிந்து உவகையுற்றேன். இந்நூல் வரிசையினைத் தமிழ்மக்களும் நூலகங்களும் பெற்றுப் பயன்கொள்ள வேண்டுகிறேன். 19.07.2007 முனைவர் சோ.ந.கந்தசாமி தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவர் (ஓய்வு) தஞ்சாவூர். பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகுகுரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv அணிந்துரை xi பதிப்புரை xxv 59. நரி பரியாக்கிய படலம் 1 60. பரி நரியாக்கிய வையை யழைத்த படலம் 70 61. மண் சுமந்த படலம் 106 62. பாண்டியன் சுரந்தீர்த்த படலம் 176 63. சமணரைக் கழுவேற்றிய படலம் 220 64. வன்னியுங் கிணறும் இலிங்கமு மழைத்த படலம் 265 65. அருச்சனைப் படலம் 299 செய்யுள் முதுற்குறிப்பு அகரவரிசை 345 திருவிளையாடற்புராணம் திருவாலவாய்க் காண்டம் - 2 ஐம்பத்தொன்பதாவது நரி பரியாக்கிய படலம் (அறுசீரடி யாசிரிய விருத்தம்) அரிகணை தொடுத்து வேழ மட்டவன் செழியன் வாயிற் றெரிகலை யமைச்ச ரேற்றைத் தேசிக வடிவத் தீண்டி வரிகழல் சூட்டி யாண்ட வண்ணமிவ் வண்ண மையன் நரிகளைப் பரிக ளாக்கி நடத்திய வாறுஞ் சொல்வாம். (இ-ள்.) அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் - நரசிங்க பாணத்தை விடுத்து (சமணர் ஏவிய) யானையை அழித்த சோம சுந்தரக் கடவுள், செழியன் வாயில் தெரிகலை அமைச்சர் ஏற்றை - பாண்டியன் வாயிலிலுள்ள கலைகளை ஆராய்ந்த அமைச்சருள் ஆண் சிங்கம் போல் வாராகிய வாதவூரடிகளை, தேசிக வடிவத்து ஈண்டி - குருவடிவத்துடன் வந்து, வரிகழல் சூட்டி ஆண்டவண்ணம் இவ்வண்ணம் - (வீரகண்டையைக்) கட்டிய திருவடியை அவர் முடியிற் சூட்டி ஆட்கொண்டருளிய திருவிளையாடல் இது, ஐயன் - அச்சோமசுந்தரக்கடவுள், நரிகளைப் பரிகள் ஆக்கி நடத்திய வாறும் சொல்வாம் - நரிகளைக் குதிரைகளாக்கி நடத்தியருளிய திருவிளையாடலையும் (இனிக்) கூறுவாம். அரிக்கணை எனற்பாலது எதுகை நோக்கி இயல்பாயிற்று. வடிவத்து - வடிவத்துடன், கழல் : ஆகு பெயர். (1) சுற்றமாம் பாச நீவித் துகளறுத் திருந்தார் தம்மை மற்றைநா ளழைத்து வேந்தன் வந்தில போலு மின்னங் கொற்றவாம் பரிக ளென்னக் குறுமதி முடித்தா னன்பர் இற்றைநாண் முதனாண் மூன்றி லீண்டுவ விறைவ வென்னா. (இ-ள்.) சுற்றமாம் பாசம் நீவி - சுற்றமாகிய பாசத்தைத் துடைத்து, துகள் அறுத்து இருந்தார் தம்மை - ஆணவமலத்தை அறுத்துச் சிவயோகத்திலிருந்த அவ் வாதவூரடிகளை, வேந்தன் மற்றை நாள் அழைத்து - அரிமருத்தன பாண்டியன் மறுநாள் தன்னிடம் அழைத்து, கொற்றவாம் பரிகள் இன்னம் வந்திலபோலும் என்ன - வெற்றியையுடைய தாவுங் குதிரைகள் இன்னும் வந்தில போலுமென்று வினவ, குறுமதிமுடித்தான் அன்பர் - பிறைமதி யினை முடித்த இறைவன் அடியாராகிய மணிவாசகனார், இறைவ - மன்னனே, இற்றை நாள் முதல் நாள் மூன்றில் - இன்று முதல் ஓன்று நாட்களுள், ஈண்டுவ - வருவனவாகும்; என்னா - என்று கூறி. சுற்றத்தார் பாசம்போல் வீடெய்தாமல் தடை செய்து நிற்றலின் ‘சுற்றமாம் பாசம்’ என்றார். மேல், “ சுற்றமுந் தொடர்பு நீத்தேம்” என அடிகள் அருளிச் செய்தமையுங் காண்க. நீவுதல் - ஒழித்தல், துகள் - காம வெகுளி மயக்கமுமாம்.போலும், ஒப்பில் போலி. இனி என்பது அம் பெற்று இன்னம் என்றாயது. குறுமதி - சிறுமதி; பிறை. (2) சிந்துர நுதன்மால் யானைச் செல்வவப் பரிக்கு வேறு மந்துரை யகன்ற வாக1 வகுக்கசூழ் தண்ணீ ரூட்ட நந்துறை தடங்கள் வேறு தொடுக2நீ ணகர மெங்கும் இந்துறை மாட மெல்லா மழகுசெய் திடுக3 வென்றார். (இ-ள்.) சிந்துர நுதல்மால் யானைச் செல்வ - சிந்துர மணிந்த நுதலையும் மதமயக்கத்தையு முடைய யானையையுடைய செல்வனே, அப்பரிக்கு - அங்ஙனம் வருங் குதிரைகளுக்கு, அகன்றவாக வேறு மந்துரை வகுக்க - அகற்சி யுள்ளனவாக வேறு குதிரைப் பந்திகள் வகுத்திடுக; தண்ணீர் ஊட்ட - அவைகட்கு நீர் ஊட்டுதற் பொருட்டு, நந்து உறை தடங்கள் வேறு சூழ் தொடுக - சங்குகள் உறையுந் தடாகங்கள் வேறு சூழத் தோண்டுக; நீள் நகரம் எங்கும் - நீண்ட நகரின் எல்லா விடங்களிலுமுள்ள, இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக - சந்திரன் தவழும் மாளிகை களனைத்தையும் ஒப்பனை செய்க; என்றார் - என்று கூறினார். சிறந்த பரிகள் மிகுதியாக வருமென்னுங் கருத்தால் இங்ஙனம் கூறினார். மந்துரை - குதிரை கட்டுமிடம். தொடுதல் - தோண்டுதல்.(3) காவலன் கருமஞ் செய்வோர் கந்துகப் பந்தி யாற்றி ஓவற நகர மெங்கு மொளிபெற வழகு செய்யத் தாவுதெண் கடலேழ் கண்ட சகரர் போல் வைகன் மூன்றில் வாவியுங் குளனுந் தொட்டார் மண்டொடு கருவி மாக்கள். (இ-ள்.) காவலன் கருமம் செய்வோர் - (மன்னன் ஆணைப்படி) அவன் கருமஞ் செய்யும் ஏவலாளர், கந்துகப் பந்தி ஆற்றி - குதிரைப் பந்தி அமைத்து, நகரம் எங்கும் ஓவு அற ஒளிபெற அழகு செய்ய - நகரமனைத்தும் நீங்காமல் ஒளிவிடுமாறு அலங்கரிக்க, மண்தொடு கருவி மாக்கள் - மண் தோண்டுங் கருவியினை யுடைய மக்கள், தாவு தெண்கடல் ஏழ்கண்ட சகரர்போல் - அலைகள் தாவுந் தெள்ளிய ஏழு கடலையும் சகரர்கள் தோண்டினமைபோல, வைகல் மூன்றில் - மூன்று நாட்களில், வாவியும் குளனும் தொட்டார் - பல வாவிகளையுங் குளங்களையுந் தோண்டினர். கடலேழ் என்றது உபசாரம்; சகரர் தொட்டது கிழக்குக் கடல் என்ப; “ குணாஅது கரை பொரு தொடுகடற் குணக்கும் குடாஅது தொன்று முதிர் பெளவத்தின் குடக்கும்”” என்னும் புறப்பாட்டடிகளும், அவற்றின் உரையும் நோக்குக.சகரன் என்னும் பரிதிகுல வேந்தன் துரங்க வேள்வி இயற்றிய காலை இந்திரன் அவ்வேள்விக் குதிரையைப் பற்றிப் பாதலத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த கபில முனிவரின் பின் புறத்தே ஒளித்து வைக்க, குதிரையின் பின் சென்ற அஞ்சுமானால் அதனையறிந்த சகரன் புதல்வர் அறுபதினாயிரவர் அதனை மீட்பதாக நிலத்தைத் தோண்டிப் பாதல மடைந்தனரென்பது வரலாறு. (4) வரையறை செய்த மூன்று வைகலுங் கழிந்த பின்னாட் கரையறு பரிமா வீண்டக் கண்டில மின்ன மென்னா விரையறை வண்டார் தண்டார் வேம்பனும் விளித்து வந்த உரையறை நாவி னாரை யொறுப்பவ னொத்துச் சீறா. (இ-ள்.) வண்டு அறை விரை ஆர் தண்தார் வேம்பனும் - வண்டுகள் ஒலிக்கும் மணம் நிறைந்த தண்ணிய வேப்ப மலர் மாலையை யணிந்த பாண்டியனும், வரையறை செய்த மூன்று வைகலும் கழிந்த பின்னாள் - வரையறுத்துக் கூறிய மூன்று நாட் களும் கழிந்த வழிநாள், இன்னம் கரை அறு பரிமா ஈண்டக் கண்டிலம் என்னா - இன்னும் அளவிறந்த குதிரைகள் வரக் கண்டில மென்று கருதி, விளித்து - அழைத்தலால், வந்த உரை அறை நாவினாரை - வந்த (மாணிக்கம் போலுஞ்) சொற்களைக் கூறும் நாவினையுடைய அவ்வமைச்சரை, ஒறுப்பவன் ஒத்துச் சீறா - தண்டிப்பவன் போன்று சினந்து. பரிமா : இருபெய ரொட்டு. வண்டு அறை விரை ஆர் எனச் சொற்களை மாறுக. தார் வேம்பன் என்பதில் விகுதி பிரித்துக் கூட்டுக. உரை - திருவாசகம் என்னும் பொருட்டு. (5) என்னிவன் பரிமாக் கொண்ட தென்றவை வருவ தென்னாத்1 தன்னெதிர் நின்ற வஞ்சத் தறுகணார் சிலரை நோக்கிக் கொன்னுமிக் கள்வன் றன்னைக் கொண்டுபோய்த் தண்டஞ் செய்தெம் பொன்னெலா மறுவு கொண்டு வாங்குமின் போமி னென்றான். (இ-ள்.) என் இவன் பரிமாக் கொண்டது - இவன் குதிரைகள் வாங்கியவாறு என்னே, அவை வருவது என்று என்னா - அவை வருதல் எப்பொழுதோ என்று கூறி, தன் எதிர் நின்ற வஞ்சத்தறு கணார் சிலரை நோக்கி - தனக்கெதிரில் நின்ற வஞ்ச மிக்க தறுகண்மை யுடைய தண்டலாளர் சிலரைப் பார்த்து, கொன்னும் இக்கள்வன் தன்னைக் கொண்டு போய் - (நினைக்கினும்) அச்சத்தைத் தரும் இத்திருடனைக் கொண்டு சென்று, தண்டம் செய்து - தண்டித்து, எம்பொன் எலாம் அறுவு கொண்டு வாங்குமின் - எமது பொன் முழுதையும் அறுதியாக வாங்குங்கள், போமின் - விரைந்து செல்லுங்கள், என்றான் - என்று கட்டளை யிட்டான். எவன் என்பது என் என்று ஆகி இகழ்ச்சி குறித்து நின்றது. கொன், அச்சப் பொருட்டாய இடைச்சொல்; “ அச்சம் பயமிலி காலம் பெருமையென் றப்பா னான்கே கொன்னைச் சொல்லே” என்பது தொல்காப்பியம். மறுவு எனப் பிரித்து. மச்சம் என்றுரைத் தலுமாம். (6) கற்றிணி தோளான் சீற்றங் கண்டெதிர் நில்லா தஞ்சிச் சுற்றிய பாசம் போலத் தொடர்ந்துகொண் டேகி மள்ளர் எற்றினி வகைதான் பொன்னுக் கியம்புமென் றதிர்த்துச் சீறிச்2 செற்றமில் சிந்தை யார்மேற் செறிந்தகல் லேற்றினாரே. (இ-ள்.) கல்திணி தோளான் - மலைபோலுந் திண்ணிய தோளையுடைய மன்னனது, சீற்றங்கண்டு மள்ளர் அஞ்சி - சினத்தினை ஏவலாளர் கண்டு பயந்து, எதிர் நில்லாது - எதிரே நில்லாமல், சுற்றிய பாசம் போலத் தொடர்ந்து கொண்டு ஏகி - விடாது பாசஞ் சூழ்ந்தாற் போலச் சூழ்ந்து தொடர்ந்து சென்று, இனி பொன்னுக்கு வகைதான் எற்று இயம்பும் என்று அதிர்த்துச் சீறி - இனிப் பொருள் கொடுப்பதற்கு வகை யாது கூறுமென்று கழறிச் சினந்து, செற்றம் இல் சிந்தையார் மேல் செறிந்த கல் ஏற்றினார் - சினமிறந்த மனமுடைய அடிகளின் மேல் பாரஞ்செறிந்த கல்லை ஏற்றினார். பாசம் சூழ்ந்தாற்போலச் சூழ்ந்து என்க. தான் : அசை. (7) பொன்னெடுஞ் சயிலங் கோட்டிப் புரம்பொடி படுத்த வீரர் சொன்னெடுந் தாளை யுள்கி நின்றனர் சுமந்த பாரம் அந்நெடுந் தகையார் தாங்கி யாற்றினா ரடைந்த வன்பர் தந்நெடும் பார மெல்லாந் தாங்குவா ரவரே யன்றோ. (இ-ள்.) நெடும் பொன் சயிலம் கோட்டி - நெடிய பொன் மலையை வில்லாக வளைத்து, புரம்பொடி படுத்தவீரர் - முப்புரங் களையும் நீறாக்கிய வீரராகிய இறைவரது, சொல் நெடுந்தாளை உள்கி நின்றனர் - புகழமைந்த நீண்ட திருவடியை (மணிவாசகனார்) மனத்தின்கண் நினைத்துத் (துன்பமின்றி) நின்றனர்; சுமந்த பாரம் - அவர் சுமந்த பாரத்தினை, அந்நெடுந்தகையார் தாங்கி ஆற்றினார் - அப்பெருந்தகையாராம் இறைவர் தாங்கிச் சுமந்தனர்; அடைந்த அன்பர் தம் நெடும் பாரம் எல்லாம் - தம்மை அடைந்த அன்பர் களின் பெரிய சுமையனைத்தையும், தாங்குவார் அவரே அன்றோ - தாங்குவார் அவரே அல்லவா? சயிலம், சைலம் என்பதன் போலி. சொல் நெடுந்தாள் - சொல் வரம் பிறந்த பாதம் என்றுமாம்; “ பாதாள மேழி னுங்கீழ் சொற்கழிவு பாதமலர்” என்னும் திருவாசகமும் காண்க. இது வேற்றுப்பொருள் வைப் பணியின் பாற்படும். (8) சிலையது பொறைதோற் றாது சிவனடி நிழலி னின்றார் நிலையது நோக்கி மாய நெறியிது போலு மென்னாக் கொலையது வஞ்சா வஞ்சர் கொடுஞ்சினந் திருகி வேதத் தலையது தெரிந்தார் கையுந் தாள்களுங் கிட்டி யார்த்தார். (இ-ள்.) சிலையது பொறை தோற்றாது - கல்லின்பாரம் தோன் றாமல், சிவன் அடி நிழலில் நின்றார் நிலையது நோக்கி - சிவபெருமான் திருவடி நிழலின் கண் நின்ற அடிகளின் தன்மையைப் பார்த்து, இது மாயநெறி போலும் என்னா - இது ஒரு மாய வழிபோலும் என்று கருதி, கொலையது அஞ்சா வஞ்சர் - கொலை யினைச் சிறிது மஞ்சாத வஞ்சத் தறுகணாளர், கொடுஞ்சினம் திருகி - கொடிய சினம் முறுகி, வேதத்தலையது தெரிந்தார் - மறையின் முடியினை அரிந்த அடிகளின், கையும் தாள்களும் கிட்டி ஆர்த்தார் - கைகளிலும் கால்களிலும் கிட்டி கட்டினார். சிலையது, அது : ஆறனுருபு. நிலையது முதலிய மூன்றினும் அது பகுதிப் பொருள் விகுதி. (9) அக்கொடுந் தொழிலு மஞ்சா திருந்தன ரரனை யுள்கி இக்கொடுந் தொழிலி னார்தா மினிநனி யொறுப்ப ரென்னாப் புக்கது காண்டற் குள்ளம் பொறானென விரவிப் புத்தேள் மிக்கதன் னொளிகண் மாழ்கி விரிகட வழுவத் தாழ்ந்தான். (இ-ள்.) அக் கொடுந்தொழிலும் அஞ்சாது - அந்தக் கொடிய செய்கைக்கும் அஞ்சாமல், அரனை உள்கி இருந்தனர் - இறைவனை நினைந்து ( துன்பின்றி) இருந்தனர்; இக்கொடுந் தொழிலினார் தாம் - இந்தக் கொடிய தண்டலாளர், இனி நனி ஒறுப்பர் என்னா - இனி மிகவுந் தண்டிப்பர் என்று கருதி, அது காண்டற்கு உள்ளம் பொறான் என - அதனைப் பார்த்தற்கு உள்ளம் பொறுக்கலாற்றாதவனைப் போல, இரவிப்புத்தேள் - சூரியதேவன், மிக்க தன் ஒளிகள் மாழ்கி - தன்னுடைய மிகுந்த கிரணங்கள் கெட்டு, விரிகடல் அழுவத்துப் புக்கு ஆழ்ந்தான் - விரிந்தகடற் பரப்பின்கட் சென்று அழுந்தினன். தாம் : அசை. இயல்பாக அத்தமித்த சூரியனை அது காண்டற்கு உள்ளம் பொறானென ஆழ்ந்தான் என்றமையால் இது தற்குறிப் பேற்றவணி. (10) சுந்தர விடங்க ரன்பர் சூழ்துய ரகற்ற நேரே வந்தெழு காட்சி போல வந்தது செக்கர் வானம் இந்தவர் மார்பந் தூங்கு மேனவெண் கோடு போன்ற தந்தர வுடுக்க ளெல்லா மயன்றலை மாலை யொத்த. (இ-ள்.) சுந்தர விடங்கர் - சோமசுந்தரக் கடவுளாகிய பேரழகுடையார், அன்பர் சூழ்துயர் அகற்ற - அன்பரின் சூழ்ந்த துன்பத்தை அகற்றுதற்கு, நேரே வந்து எழுகாட்சிபோல - நேரே வந்து எழுந்த தோற்றம் போன்று, செக்கர்வானம் வந்தது - செவ்வானம் வந்தது; இந்து - மதியானது, அவர் மார்பம் தூங்கும் - அவரது திருமார்பின்கண் கிடந்து அசையும், ஏனவெண் கோடு போன்றது - பன்றியினது வெள்ளிய கொம்பினை ஒத்தது; அந்தர உடுக்கள் எல்லாம் - வானின்கண் உள்ள நாண்மீன்களனைத்தும், அயன் தலை மாலை ஒத்த - பிரமனது தலை மாலையை ஒத்தன. இச்செய்யுள் மாலையுவமை யணியின் பாற்படும். (11) சுழிபடு பிறவித் துன்பத் தொடுகட லழுவத் தாழ்ந்து கழிபடு தனையுங் காப்பான் கண்ணுதன் மூர்த்தி பாதம் வழிபடு மவரைத் தேரான்1 வன்சிறைப் படுத்த தென்னன் பழிபடு புகழ்போ லெங்கும் பரந்தது கங்கு லீட்டம். (இ-ள்.) சுழிபடு பிறவித்துன்பத் தொடுகடல் அழுவத்து ஆழ்ந்து - சுழி பொருந்திய பிறவித்துன்பமாகிய கடற்பரப்பின்கண் அழுந்தி, கழிபடுதனையும் காப்பான் - கொன்னே கழிகின்ற தன்னையும் ஓம்புதற்பொருட்டு, கண்ணுதல் மூர்த்தி பாதம் வழிபடும் அவரை - நெற்றிக்கண்ணையுடைய இறைவன் திருவடியை வழிபடும் அவ்வடிகளை, தேரான் - அறியாதவனாய், வன்சிறைப்படுத்த தென்னன் - வலிய சிறைப்படுத்திய பாண்டியனது, பழிபடு புகழ்போல் - பழிபட்ட புகழ் பரந்தது போல, கங்குல் ஈட்டம் எங்கும் பரந்தது - செறிந்த இருள் எங்கும் பரவியது. சுழிபடு, தொடு என்பன கடலுக்கு இயற்கை யடைகள். தனை - அரசனை. காப்பான் : வினையெச்சம். அவரது பெருமையைத் தேரான் என்க. இது தற்குறிப்பின் பாற்படும். (12) கங்குல்வந் திறுத்த லோடுங் கருஞ்சிறை யறையிற் போக்கிச் சங்கிலி நிகளம் பூட்டித் தவத்தினைச் சிறையிட் டென்னச் செங்கனல் சிதற நோக்குஞ் சினங்கெழு காவ லாளர் மங்குலி னிருண்ட கண்டர் தொண்டரை மறுக்கஞ் செய்தார். (இ-ள்.) கங்குல் வந்து இறுத்தலோடும் - இருள் வந்து நிலை பெற்ற வளவில், கருஞ்சிறை அறையில் போக்கி - பெரிய சிறைச் சாலையிற் புகுத்தி, தவத்தினைச் சிறையிட்டென்ன - தவத்தினை விலங்கு பூட்டிச் சிறைப்படுத்தினாற் போல, சங்கிலி நிகளம் பூட்டி - சங்கிலியாகிய விலங்கினைப் பூட்டிச் சிறைப்படுத்தி, செங்கனல் சிதற நோக்கும் சினம்கெழு காவலாளர் - சிவந்த நெருப்புப் பொறி சிதறப் பார்க்கும் சினமிக்க தண்டலாளர், மங்குலின் இருண்ட கண்டர் தொண்டரை - முகில் போலும் இருண்ட திருமிடற்றினை யுடைய இறைவரது அடியாராகிய வாதவூரடிகளை, மறுக்கம் செய்தார் - துன்பஞ்செய்தனர். கருஞ்சிறை - பெரிய சிறை; இழிந்த சிறையுமாம். தவமே உருவாயினாரென்பார் தவத்தினைச் சிறையிட்டென்ன என்றார். காவலாளர் தொண்டரை அறையிற் போக்கி நிகளம்பூட்டி மறுக்கஞ் செய்தார் என வினைமுடிவு செய்க. (13) மிடைந்தவர் தண்டஞ் செய்ய வெஞ்சிறை வெள்ளத் தாழ்ந்து கிடந்தவர் கிடந்தோன் பூமே லிருந்தவன் றேடக் கீழ்மேல் நடந்தவர் செம்பொற் பாத நகைமலர் புணையாப் பற்றிக் கடந்தனர் துன்ப வேலை புலர்ந்தது கங்குல் வேலை. (இ-ள்.) அவர் மிடைந்து தண்டம் செய்ய - அத்தண்டலாளர் நெருங்கி அங்ஙனம் ஒறுத்தலைப்புரிய, வெஞ்சிறை வெள்ளத்து ஆழ்ந்து கிடந்தவர் - வெவ்விய சிறையாகிய கடலில் அழுந்திக் கிடந்த அடிகள், கிடந்தோன் - பாற்கடலிற் கிடந்த திருமாலும், பூமேல் இருந்தவன் - தாமரை மலர் மேல் இருந்த பிரமனும், கீழ் மேல் தேட - முறையே கீழும் மேலுந் தேடா நிற்க, நடந்தவர் - நீண்டவரது, செம்பொன் பாத நகைமலர் - சிவந்த பொன்போன்ற திருவடியாகிய ஒளி பொருந்திய மலரை, புணையாப் பற்றி - புணை யாகப் பிடித்து, துன்ப வேலை கடந்தனர் - துன்பமாகிய கடலைக் கடந்தனர்; கங்குல் வேலை புலர்ந்தது - இராக்காலம் விடிந்தது. பாற்கடலிற் கிடந்தோன் என ஒரு சொல் வருவித்துரைக்க. கிடந்தவர் பாதமலர் புணையாப்பற்றித் துன்பவேலை கடந்தனர் என முடிக்க. கங்குல் வேலை என்பதில் வேலை - பொழுது. (14) அந்தமி லழகன் றன்னை யங்கயற் கண்ணி யோடுஞ் சுந்தர வமளிப் பள்ளி யுணர்த்துவான் றொண்டர் சூழ வந்தனை செய்யு மார்ப்பு மங்கல சங்க வார்ப்பும் பந்தநான் மறையி னார்ப்பும் பருகினார் செவிக ளார. (இ-ள்.) அந்தம் இல் அழகன் தன்னை - அளவில்லாத பேரழகனாகிய சோமசுந்தரக் கடவுளை, அங்கயற் கண்ணியோடும் - அங்கயற் கண்ணம்மையுடன், சுந்தர அமளி - அழகிய படுக்கையினின்றும், பள்ளி உணர்த்துவான் தொண்டர் சூழ - துயிலுணர்த்துதற் பொருட்டு அடியார்கள் நெருங்க, வந்தனை செய்யும் ஆர்ப்பும் - அவர்கள் வழிபடும் ஒலியும், மங்கல சங்க ஆர்ப்பும் - மங்கலமாகிய சங்கு களின் ஒலியும், பந்தம் நான் மறையின் ஆர்ப்பும் - பந்தமமைந்த நான்கு வேதங்களின் ஒலியுமாகிய இவற்றை, செவிகள் ஆரப் பருகினார் - செவிகள் நிறையுமாறு அடிகள் பருகினார். உணர்த்துவான் : வினை யெச்சம். திருப்பள்ளி யெழுச்சியின் பொருட்டுத் தொண்டர் சூழ என்க. சூழ்ந்து நின்று வந்தனை செய்யும் என்றுமாம். மங்கல சங்கம் - வலம்புரிச் சங்கம். பந்தம் - தளை. (15) போதவா னந்தச் சோதி புனிதமெய்த் தொண்டர்க் காக நாதமா முரச மார்ப்ப நரிப்பரி வயவர் சூழ வேதவாம் பரிமேற் கொண்டு வீதியில் வரவு காணுங் காதலான் போலத் தேர்மேற் கதிரவ னுதயஞ் செய்தான். (இ-ள்.) போத ஆனந்தச் சோதி - ஞானானந்த ஒளிப்பிழம் பாகிய இறைவன், புனித மெய்த்தொண்டர்க்காக - தூய உண்மைத் தொண்டராகிய மாணிக்கவாசகர் பொருட்டு, நாதமாம் முரசம் ஆர்ப்ப - நாத தத்துவமாகிய முரசு ஒலிக்கவும், நரிப்பரி வயவர் சூழ - நரியாகிய குதிரையின் வீரர் சூழவும், வேதவாம் பரிமேற் கொண்டு - வேதமாகிய தாவுங் குதிரைமேல் ஏறி யருளி, வீதியில் வரவுகாணும் காதலான் போல - வீதியின்கண் வருதலைக் காணும் விருப்புடை யவன் போல, கதிரவன் தேர்மேல் உதயம் செய்தான் - சூரியன் தேரின் மேல் ஏறி உதயமாயினன். இறைவற்கு முரசம் நாததத்துவ மென்பதனை, “ மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்” “ வேத மொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர் நாதப் பறையின ரன்னே யென்னும்””” என வரும் திருவாசகத் திருப்பாடல்களானறிக. இது தற்குறிப் பேற்றவணி. (16) கயனெடுங் கண்ணி யோடுங் கட்டவிழ் கடிப்பூஞ் சேக்கைத் துயிலுணர்ந் திருந்த சோம சுந்தரக் கருணை வெள்ளம் பயினெடுஞ் சிகர நோக்கிப் பங்கயச் செங்கை கூப்பி நயனபங் கயநீர் சோர நாதனைப் பாட லுற்றார். (இ-ள்.) கட்டு அவிழ் கடிப்பூஞ் சேக்கை - முறுக்கு அவிழ்ந்த மணம் பொருந்திய மலரமளியினின்றும், கயல் நெடுங் கண்ணி யோடும் - கயல் போலும் நீண்ட கண்ணையுடைய பிராட்டி யோடும், துயில் உணர்ந்திருந்த - துயில் நீங்கியிருந்த, சோமசுந்தரக் கருணை வெள்ளம் பயில் - சோமசந்தரராகிய அருள் வெள்ளம் எழுந்தருளிய, நெடுஞ் சிகரம் நோக்கி - நீண்ட விமானத்தை நோக்கி, பங்கயச் செங்கை கூப்பி - தாமரை மலர்போலுஞ் சிவந்த கரங்களைக் குவித்து, நயன பங்கயம் நீர் சோர - கண்ணாகிய தாமரையினின்றும் ஆனந்த வருவி ஒழுக, நாதனைப் பாடலுற்றார் - இறைவனைப் பாடத் தொடங்கினார். சுந்தரனாகிய கருணை வெள்ளம் உயர்திணைப் பெயர் ஈறு கெட்டு வலிமிக்கது. (17) [கொச்சகக் கலிப்பா] எந்தா யனைத்துலகு மீன்றாயெத் தேவர்க்குந் தந்தாய் செழுங்குவளைத் தாராய் பெருந்துறையில் வந்தாய் மதுரைத் திருவால வாயுறையுஞ் சிந்தா மணியே சிறியேற் கிரங்காயோ. (இ-ள்.) எந்தாய் - எமது தந்தையே, அனைத்து உலகும் ஈன்றாய் - உலகமனைத்தையும் பெற்றவனே, எத்தேவர்க்கும் தந்தாய் - எல்லாத் தேவர்கட்கும் தந்தையே, செழுங்குவளைத் தாராய் - செழிய குவளைமலர் மாலையை அணிந்தவனே, பெருந்துறையில் வந்தாய் - அங்ஙனம் அணிந்து அடியேனை ஆட்கொள்ளுதற் பொருட்டுத் திருப்பெருந்துறையின்கண் வந்தருளியவனே, மதுரைத் திருவாலவாய் உறையும் சிந்தாமணியே - மதுரை என்னுந் திருவால வாயின்கண் வீற்றிருக்கும் சிந்தாமணி போல்வானே, சிறியேற்கு இரங்காயோ - சிறியேனாகிய எனக்கு இரங்கியருளாயோ. தந்தாய், விளியின் ஐ ஆயாகத் திரிந்தது. குவளை கழுநீரெனவும் படும். “ காதலனாகிக் கழுநீர் மாலை ஏலுடைத் தாக வெழில்பெற வணிந்தும்” என்பது திருவாசகம். திருவாலவாய் - இறைவன் கோயிலுமாம். சிந்தாமணி - சிந்தித்தவற்றைத் தரும் மணி; சிந்தாத மணி என்றுமாம். “ ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித் தாழைப் பறித்தவா தோணோக்க மாடாமோ” என்னும் திருவாசகமுங் காண்க. (18) மூவா முதலாய் முதுமறையா யம்மறையுந் தாவாத சோதித் தனிஞான பூரணமாய்த் தேவாதி தேவாய்த் திருவால வாயுறையும் ஆவார் கொடியா யடியேற் கிரங்காயோ. (இ-ள்.) மூவா முதலாய் - கெடாத முதலாகியும், முது மறையாய் - பழைய வேதமாகியும், அம்மறையும் தாவாத சோதித் தனிஞான பூரணமாய் - அவ்வேதமும் பற்றாத ஒளியுருவாகிய ஒப்பற்ற ஞான நிறைவாகியும், தேவாதி தேவாய் - தேவாதி தேவனாகியும், திருவாலவாய் உறையும் - திரவாலவாயின்கண் எழுந்தருளிய, ஆவார் கொடியாய் - நீண்ட இடபக்கொடியை யுடையவனே, அடியேற்கு இரங்காயோ - அடியேனாகிய எனக்கு இரங்கியருளாயோ? தேவாதி தேவன் - தேவர்கட்கு ஆதியாகிய தேவன். ஆய் என்னும் செய்தெனெச்சங்கள் உறையும் என்னும் பெயரெச்ச வினை கொண்டன. ஆ - ஈண்டு இடபம். ஆர் கொடி எனப் பிரித்துப் பொருந்திய கொடி என்னலுமாம். (19) முன்னா முதுபொருட்கு முன்னா முதுபொருளாய்ப் பின்னாம் புதுமைக்கும் பின்னாகும் பேரொளியாய்த் தென்னா மதுரைத் திருவால வாயுறையும் என்னா யகனே யெளியேற் கிரங்காயோ. (இ-ள்.) முன்னாம் முது பொருட்கும் முன்னாம் முது பொருளாய்- முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய், பின்னாம் புதுமைக்கும் பின்னாகும் பேர் ஒளியாய் - பின்னைப் புதுமைக்கும் பின்னாகும் பெரிய ஒளிவடிவாய், தென் ஆம் மதுரைத் திருவாலவாய் உறையும் என் நாயகனே - தெற்கின் கண் உள்ளதாகிய மதுரை என்னுந் திருவாலவாயின்கண் எழுந்தருளிய, என் நாயகனே, எளியேற்கு இரங்காயோ - எளியேனாகிய எனக்கு இரங்கி யருளாயோ? இச்செய்யுளின் முன்னிரண்டடிகள், “ முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே” என்னும் திருவாசக வடிகளைத் தழவி வந்தன, தென் - அழகு என்றுமாம். (20) மண்ணாய்ப் புனலாய்க் கனலாய் வளியாகி விண்ணா யிருசுடரா யித்தனையும் வேறாகிப் பண்ணா யிசையாய்ப் பனுவலா யெங்கண்ணுங் கண்ணானா யென்னுறுகண் காணாவா றென்கொலோ. (இ-ள்.) மண்ணாய்ப் புனலாய்க் கனலாய் வளியாகி - நிலனாகியும் நீராகியும் நெருப்பாகியும், காற்றாகியும், விண்ணாய் இருசுடராய் - வானாகியும் இரண்டு சுடர்களாகியும், இத்தனையும் வேறாகி - இத்தனைக்கும் வேறாகியும், பண்ணாய் இசையாய்ப் பனுவலாய் - பண்ணாகியும் இசையாகியும் பாட்டாகியும், எங்கண்ணும் கண் ஆனாய் - எவ்விடத்தும் கண்ணாகியும் நின்றவனே, என் உறுகண் காணாவாறு என்கொலோ - எனது துன்பத்தை நீ காணாதவாறு என்னையோ (அறியேன்). இருசுடர் - ஞாயிறு திங்கள். இறைவன் எல்லாப் பொருளிலும் கலந்து நிற்றலின் ‘மண்ணாய்......இருசுடராய்’ என்றும், எல்லா வற்றையும் கடந்து நிற்றலின் இத்தனையும் வேறாகி என்றுங் கூறினார். “ பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும் உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே ” “ வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே” என்று திருஞான சம்பந்தப்பெருமான் அருளிச் செய்தலுங் காண்க. எங்கண்ணும் : மெலித்தல் விகாரம். உறுகண் - துன்பம். எவ்விடத்தும் கண்ணுடைய நீ எனது துன்பத்தைக் காணாவாறென்னையென்றார். (21) பொங்குஞ் சினமடங்கல் போன்றுருத்து வெங்கூற்றம் அங்கும் புரியா வருந்துன்பத் தாழ்ந்துநான் மங்கும் படியறிந்தும் வந்தஞ்ச லென்கிலையால் எங்குஞ் செவியுடையாய் கேளாயோ வென்னுரையே. (இ-ள்.) வெங்கூற்றம் - கொடிய கூற்றுவன், சினம் பொங்கும் மடங்கல் போன்று உருத்து - சினமிக்க ஊழித்தீப்போன்று கொதித்து, அங்கும் புரியா அரும்துன்பத்து - அவனுலகத்துஞ் செய்யாத பொறுத்தற்கரிய துன்பக்கடலுள், நான் ஆழ்ந்து மங்கும்படி அறிந்தும் - அடியேன் அழுந்தி மங்குந் தன்மையை அறிந்து வைத்தும், வந்து அஞ்சல் என்கிலை - வந்து அஞ்சாதே என்றருளிச் செய்கிலை; எங்கும் செவி உடையாய் - எங்குங் காதுடையவனே, என் உரை கேளாயோ - எனது முறையீட்டினைக் கேட்டருளாயோ. மடங்கல் - ஊழித்தீ; சிங்கமுமாம். மங்குதல் - மாழ்குதல். “எங்கும் கண்ணையும், முகத்தையும், எங்கும் கையையும், எங்கும் அடியையும் உடையராய், தம்முடைய கரங்களினாலும் சிறகுகளினாலும் மண்ணையும் விண்ணையும் இயைத்துப் படைப்பவர் அந்தக் கடவுள் ஒருவரே” என இருக்கு மறை கூறுதலின் ‘எங்கண்ணும் கண்ணானாய்’ என்றும், ‘எங்குஞ் செவியுடையாய்’ என்றும் கூறினார். “ எண்ணில்பல் கோடி சேவடி முடிகள் எண்ணில்பல் கோடிதிண் டோள்கள் எண்ணில்பல் கோடிதிருவுரு நாமம் ஏர்கொண்முக் கண்முக மியல்பும் எண்ணில்பல் கோடி யெல்லைக்கப் பாலாய் நின்றைஞ்ஞூற் றந்தண ரேத்தும் எண்ணில்பல் கோடி குணத்தரேர் வீழி யிவர்நம்மை யாளுடை யாரே”” என்னும் திருவிசைப்பாவும் காண்க. (22) பூட்டியருட் பாசமிரு பாதம் பொறித்துடலிற் கூட்டி யடியாரு ளகப்படுத்தாட் கொண்டருமை காட்டியவோ வின்றென்னைக் கைவிட்டாய் வெய்யரெனை ஆட்டி யொறுக்குமிடத் தாரேன்று கொள்வாரே. (இ-ள்.) அருள்பாசம் பூட்டி - அருளாகிய பாசத்தால் பிணித்து. உடலில் இருபாதம் பொறித்து - முடியின்கண் இரண்டு திருவடி களையும் பொறித்து, அடியாருள் கூட்டி அகப்படுத்து - அடியாருள் ஒருவனாகக் கூட்டி அகப்படுத்தி, ஆட்கொண்டு அருமை காட்டியவோ- ஆட்கொண்டு நினதருமையைக் காட்டியவனே, இன்று என்னைக் கைவிட்டாய் - இப்பொழுது அடியேனைக் கைவிட்டனை; வெய்யர் - கொடிய இத்தண்டலாளர், எனை ஆட்டி ஒறுக்கு மிடத்து - என்னைத் துன்புறுத்தித் தண்டிக்குங் காலத்து, ஏன்று கொள்வார் ஆர் - தாங்குபவர் யாவர்? உடல் தலைக்கு ஆகுபெயர். “ விச்சைதா னிதுவொப்ப துண்டோ கேட்கின் மிகுகாத லடியார்தம் மடிய னாக்கி அச்சந்தீர்த் தாட்கொண்டா னமுத மூறி யகநெகவே புகுந்தாண்டா னன்பு கூர” என அடிகள் திருவாசகத்தில் அருளிச்செய்தல் இங்கே சிந்திக்கற் பாலது. (23) ஊரா ருனைச்சிரிப்ப தோராயென் றுன்னடிமைக் காரா யடியே னயர்வே னஃதறிந்தும் வாரா யரசன் றமரிழைக்கும் வன் கண்ணோய் பாராயுன் றன்மை யிதுவோ பரமேட்டி. (இ-ள்.) ஊரார் உனைச் சிரிப்பது ஓராய் என்று - ஊரிலுள்ளார் உன்னை எள்ளி நகையாடுதலை அறியாமலிருக்கின்றாய் என்று கருதி, உன் அடிமைக்கு ஆராய் - உன் அடிமைக்கு ஆராகியோ (அடியார் போன்று), அடியேன் அயர்வேன் - அடியேன் அயர் கின்றேன்; அஃது அறிந்தும் வாராய் - அதனை நீ அறிந்து வைத்தும் வந்தருளினாயல்லை; அரசன் தமர் இழைக்கும் வன்கண் நோய் பாராய் - மன்னனுடைய ஏவலாளர் செய்யுங் கொடிய துன்பத் தினைப் பார்த்தருளினாயல்லை; பரமேட்டி உன் தன்மை இதுவோ - பரமேட்டியே உனது தன்மை இதுவோ? “ ஏசா நிற்ப ரென்னையுனக் கடியா னென்று பிறரெல்லாம் பேசா நிற்ப ரியான்றானும் பேணா நிற்பே னின்னருளே” “ தெருளார் கூட்டம் காட்டாயேற் செத்தே போனாற் சிரியாரோ” என்னும் திருவாசகப்பகுதிகள் இங்கே சிந்திக்கற்பாலன. உன் கருணையிருந்தவா றிதுவோ என்றார். பரமேட்டி - பரமன். (24) [கலிநிலைத்துறை] என்றி ரங்குவோ ரிரங்கொலி யிளஞ்சிறா ரழுகை சென்று தாயர்தஞ் செவித்துளை நுழைந்தெனச் செல்லக் குன்றி ருஞ்சிலை கோட்டிய கூடனா யகன்கேட் டன்று வன்சிறை நீக்குவான் றிருவுளத் தமைத்தான். (இ-ள்.) என்று இரங்குவோர் இரங்கு ஒலி - என்று கூறி வருந்தும் வாதவூரடிகளின் முறையீட்டொலி, இளஞ்சிறார் அழுகை சென்று - இளஞ்சிறுவர்களின் அழுகை ஒலிபோய், தாயர்தம் செவித்துளை நுழைந்தெனச் செல்ல - தாயாருடைய செவித் துளையின்கண் நுழைந்தாற் போலத் தன் திருச்செவியின்கண் நுழைய, குன்று இருஞ்சிலை கோட்டிய - மேரு மலையைப் பெரிய வில்லாக வளைத்த, கூடல் நாயகன் கேட்டு - கூடல் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுள் அதனைக் 'bcÂட்டு, அன்று வன்சிறை நீக்குவான் திருவுளத்து அமைத்தான் - அப்பொழுது வலிய சிறையை நீக்குதலைத் திருவுள்ளத்திற் கொண்டருளினான். இரங்கொலி செல்ல நாயகன் கேட்டு உளத்தமைத்தான் என்க. நுழைந்தென; விகாரம். நீக்குவான் : தொழிற்பெயர். (25) நந்தி யாதியாம் பெருங்கண நாதரை விளித்தான் வந்தி யாவரும் பணிந்தனர் மன்னவற் கின்று முந்தி யாவணி மூலநாள் வந்தது முனிவு சிந்தி யாமுனம் பரியெலாஞ் செலுத்துவான் வேண்டும். (இ-ள்.) நந்தி ஆதியாம் பெரும் கணநாதரை விளித்தான் - திருநந்திதேவர் முதலிய பெரிய கணத்தலைவர்களை அழைத் தருளினன்; யாவரும் வந்து பணிந்தனர் - அவரனைவரும் வந்து வணங்கினர்; ஆவணி மூலநாள் முந்தி வந்தது - ஆவணித்திங்கள் மூலநாள் முற்பட்டே வந்துவிட்டது; முனிவு சிந்தியாமுனம் - மன்னன் சினத்தல் கருது முன்னரே, மன்னவற்கு இன்று பரி எலாம் செலுத்துவான் வேண்டும். - அவனுக்கு இன்று குதிரைகள் அனைத்தையும் செலுத்துதல் வேண்டும். ஆதி என்றதனால் பிருங்கி, மாகாளர் முதலியோர் கொள்க. வந்தி யாவரும் : இகரம் குறுகாது நின்றது. (26) யாவ ரும்புனத் தியங்குறு நரியெலா மீட்டித் தாவ ரும்பரி யாக்கியத் தாம்பரி நடாத்துஞ் சேவ கஞ்செய்வோ ராகிமுன் செல்லுமின் யாமும் பாவ கம்பட வருதுமப் படியெனப் பணித்தான். (இ-ள்.) யாவரும் - நீவிரனைவரும், புனத்து இயங்குறும் நரி எலாம் ஈட்டி - காட்டின்கண் உலவும் நரிகளனைத்தையுங் கொண்டு வந்து, தாவு அரும்பரி ஆக்கி - தாவுகின்ற அரிய குதிரைகளாகச் செய்து, அ தாம்பரி நடாத்தும் சேவகம் செய்வோராகி - அத்தாவும் குதிரைகளை நடாத்துகின்ற குதிரைச் சேவகராகி, முன் செல்லுமின்- முன்னே செல்லுங்கள்; யாமும் - நாமும், பாவகம்பட - (நோக்கு வோர்க்குக் குதிரைச்செவகர் என்னும்) கருத்து உண்டாக. அப்படி வருதும் எனப் பணித்தான் - அவ்வாறே வருவோம் என்று பணித் தருளினன். தா வரும் எனப் பிரித்தலும் பொருந்தும். தாம், தாவும் என்பதன் விகாரம். (27) ஏக நாயக னாணைபூண் டெழுகணத் தவரும் நாக நாடரும் வியப்புற நரியெலாந் திரட்டி வேக வாம்பரி யாக்கியவ் வெம்பரி நடாத்தும் பாக ராயினா ரவர்வரும் பரிசது பகர்வாம். (இ-ள்.) ஏக நாயகன் ஆணை பூண்டு - ஒப்பற்ற இறைவனது ஆணையை மேற் கொண்டு, எழுகணத்தவரும் - எழுந்த கணத் தலைவரும், நாக நாடரும் வியப்புற - வான நாடரும் வியப்புறு மாறு, நரி எலாம் திரட்டி - நரிகளை எல்லாம் ஓரிடஞ் சேர்த்து, வேகவாம்பரி ஆக்கி - விரைவுள்ள தாவுங் குதிரைகளாகச் செய்து, அவ்வெம்பரி நடாத்தும் - அந்த வேகமாகிய பரிகளை நடாத்து கின்ற, பாகராயினார் - சேவகராயினர்; அவர் வரும் பரிசது பகர்வாம் - அப்பாகர் வருந்தன்மையைக் கூறுவாம். நாகநாடரும் என்பதில் உம்மை சிறப்பு. பரிசது, அது பகுதிப் பொருள் விகுதி. (28) தூக்கி யார்த்தசெம் பட்டினர் சுரிகையர் தொடுதோல் வீக்கு காலின ரிருப்புடற் காப்பினர் வெருளின் நோக்கு பார்வையர் புண்டர நுதலின ரிடியிற் றாக்கி யார்ப்பெழு நகையினர் தழன்றெழு சினத்தோர். (இ-ள்.) தூக்கி ஆர்த்த செம்பட்டினர் - தூக்கிக் கட்டிய செம் பட்டாடையை யுடையவர்; சுரிகையர் - உடைவாளை யுடையவர்; தொடுதோல் வீக்கு காலினர் - தொடு தோல் கட்டிய காலை யுடையவர்; இருப்பு உடற் காப்பினர் - இருப்புக் கவசத்தினை யுடையவர்; வெருளின் நோக்கு பார்வையர் - (கண்டோர்) அஞ்சுமாறு பார்க்குங் கண்களையுடையவர்; புண்டர நுதலினர் - திரிபுண்டர மணிந்த நெற்றியினை யுடையவர்; இடியில் தாக்கி ஆர்ப்பு எழு நகையினர் - இடிபோலுந் தாக்கி ஒலி எழும் நகையினையுடையவர்; தழன்று எழு சினத்தோர் - கொதித் தெழுஞ் சினத்தினையுடையவர். தொடுதோல் - செருப்பு. உடற்காப்பு - கவசம். செம்பட்டினர் முதலியோராய் ஆயினர் என்க. (29) வட்டத் தோல்வரி புறங்கிடந் தசையவை வடிவாள் தொட்ட கையினர் சிலர்நெடுந் தோமரஞ் சுழல விட்ட கையினர் சிலர்வெரி னிடைநெடு விசிகப் புட்டில் வீக்கிவிற் றூக்கிய புயத்தினர் சிலரால். (இ-ள்.) (அவருள்) வட்டத் தோல் - வட்டமாகிய பரிசை, வரிபுறம் கிடந்து அசைய - (கவசம்) வரிந்த முதுகிற் கிடந்து அசைய, வைவடிவாள் தொட்ட கையினர் சிலர் - கூரிய வடித்த வாட்படை யினைத் தொட்ட கையினையுடையார் சிலர்; நெடுந்தோமரம் சுழல விட்ட கையினர் சிலர் - நீண்ட தண்டத்தைச் சுழலவிட்ட கையினையுடையார் சிலர்; வெரின் இடை நெடுவிசிகப் புட்டில் வீக்கி - முதுகினிடத்து நீண்ட அம்புக் கூட்டினைக் கட்டி, வில் தூக்கிய புயத்தினர் சிலர் - வில்லைத் தொங்கவிட்ட தோளை யுடையார் சிலர். விசிகம் - அம்பு. புட்டில் - தூணி. (30) செம்ப டாஞ்செய்த போர்வையர் சிலர்பசும்1 படத்தான் மொய்ம்பு வீக்கிய கவயத்தர் சிலர்கரு முகில்போல் அம்பு யம்புதை காப்பினர் சிற்சில ரவிரும் பைம்பொன் வாணிறப் படாஞ்செய்குப் பாயத்தர் சிலரால். (இ-ள்.) செம்படாம் செய்த போர்வையர் சிலர் - சிவந்த ஆடையாற் செய்த போர்வையினை யுடையார் சிலர்; பசும் படத்தால் மொய்ம்பு வீக்கிய கவயத்தர் சிலர் - பசிய ஆடையால் தோளில் இறுகக் கட்டிய கவசமுடையார் சிலர்; கருமுகில் போல் - கரிய மேகம்போல; அம்புயம் புதை காப்பினர் சிற்சிலர் - அழகிய தோளை மறைத்த (நீல ஆடையாற் செய்த) கவசமுடையார் சிலர்; அவிரும் பைம்பொன்வாள் நிறப்படாம் செய் குப்பாயத்தர் சிலர் - விளங்கா நின்ற பசிய பொன்போலும் ஒள்ளிய நிறத்தினையுடைய ஆடையாற் செய்த சட்டையுடையார் சிலர். படாம் - ஆடை. குப்பாயம் - சட்டை. (31) பிச்ச வொண்குடை யார்பலர் கவரிவால் பிறங்கத் தைச்ச தண்குடை யார்பலர் சல்லிசூழ் நாற்றி வைச்ச வண்குடை யார்பலர் வாணிலா முத்தம் மொய்ச்ச வெண்குடை யார்பலர் மொய்ம்பின ரிவருள். (இ-ள்.) பிச்ச ஒண்குடையார் பலர் - பீலிக்குஞ்சங் கட்டிய ஒள்ளிய குடையினை யுடையார் பலர்; கவரிவால் - கவரிமாவின் வாலால், பிறங்க - விளங்க, தைச்ச தண்குடையார் பலர் - தைத்த தண்ணிய குடையினையுடையார் பலர்; சல்லி சூழ் நாற்றி வைச்ச வண்குடையார் பலர் - சல்லிகளைச் சூழத் தொங்கவிட்டு வைத்த வளப்பமிக்க குடையினை யுடையார் பலர்; வாள் நிலாமுத்தம் மொய்ச்ச வெண்குடையார் பலர் - வெள்ளிய ஒளியினையுடைய முத்துக்கள் நெருங்கிய வெண்குடையினையுடையார் பலர்; மொய்ம்பினர் இவருள் - வலியினையுடையராய இவர் நடுவே. தைச்ச, வைச்ச, மொய்ச்ச என்பன போலி. (32) தரும மாதிநாற் பொருளெனுந் தாளது ஞான கரும காண்டமாஞ் செவியது காட்சியைக் கடந்த ஒருமை யாம்பர மபரமா முணர்வெனுங் கண்ண தருமை யாம்விதி முகத்தது நிடேதவா லதுவால். (இ-ள்.) தருமம் ஆதி நால் பொருள் எனும் தாளது - அற முதலிய நான்கு பொருளாகிய நான்கு கால்களை யுடையது; ஞான கரும காண்டமாம் செவியது - ஞான காண்டமும் கரும காண்டமும் ஆகிய இரண்டு காதுகளை யுடையது; காட்சியைக் கடந்த ஒருமையாம் - சுட்டறிவினைக் கடந்த ஒருப்பாடாகிய, பரம் அபரமாம் உணர்வு எனும் கண்ணது - பரஞானமும் அபர ஞானமுமாகிய இரண்டு கண்களை யுடையது; அருமையாம் விதிமுகத்தது - அருமையாகிய விதியாகிய முகத்தினையுடையது; நிடேத வாலது - விலக்காகிய வாலையுடையது. இது முதல் நான்கு செய்யுளால் இறைவன் இவர்ந்து வரும் வேதப் புரவியை வருணிக்கின்றார். வேதமானது அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளால் நிலை பெறுவதும், ஞானகாண்டம் கருமகாண்டம் என இரு பகுதிப் படுவதும், பரஞான அபரஞானங் களை விளைவிப்பதும், விதிவிலக்கு வடிவினதும் ஆம் என்க. (33) தந்தி ரங்களாற் புறவணி தரித்தது விரித்த மந்தி ரங்களாற் சதங்கை தார் மணிச்சிலம் பணிந்த தந்த ரஞ்சுழல் சோமனு மருக்கனு மிதிக்குஞ் சுந்த ரப்பதம் பொறைகொளத் தூங்கிரு புடைத்தால். (இ-ள்.) தந்திரங்களால் புற அணி தரித்தது - ஆகமங்களால் புறத்திலணியும்அணிகளைப் பூண்டது; விரித்த மந்திரங்களால் - அவ்வாகமங்கள் விரித்த மந்திரங்களால்; சதங்கை தார் மணிச் சிலம்பு அணிந்தது - சதங்கை மாலையையும் கிண்கிணி மாலையையும் மணிகள் அமைந்த சிலம்பினையும் அணிந்தது; மிதிக்கும் சுந்தரப் பதம் பொறை கொள - மிதிக்கின்ற அழகிய திருவடிகளைத் தாங்க, அந்தரம் சுழல் சோமனும் அருக்கனும் தூங்கு இருபுடைத்து - வானின்கண் சுழலும் சந்திரனும் சூரியனுமாகிய அங்கவடிகள் தொங்குகின்ற இருமருங்கினையுடையது. தந்திரம் - ஆகமம். வேதத்தை விளக்குவன ஆகமங்களாதலின் தந்திரங்களால் புறவணி தரித்தது என்றார். மேற் செய்யுளில் உறுப்புகள் கூறி, இதில் அணிகள் கூறினார். சோமனும் அருக்கனு மாகிய அங்கவடிகள் என விரிக்க. புடைத்து - பக்கங்களை உடையது; குறிப்பு முற்று. (34) மாண்ட தாரகப் பிரமமாங் கலினம்வாய் கிழியப் பூண்ட தாற்புறச் சமயமாம் பொருபடை முரிய மூண்டு போரெதிர் விளைத்திகன் முடிப்பது முளரி ஆண்ட கோமுக மந்துரை யாகமே வியதால். (இ-ள்.) மாண்ட தாரகப் பிரமமாம் கலினம் - மாட்சிமைப் பட்ட பிரணவமாகிய கடிவாளத்தை, வாய் கிழியப் பூண்டது - வாய்கிழியுமாறு பூண்டது; புறச் சமயமாம் - புறச்சமயங்களாகிய, பொருபடைமுரிய - போர் செய்யும் படைகள் புறங் கொடுக்கு மாறு, மூண்டு எதிர் போர் விளைத்து இகல் முடிப்பது - சினமிக்கு எதிர்நின்று போர் செய்து பகையை முடிப்பது; முளரி ஆண்ட கோ முகம் - தாமரை மலரைத் தவிசாக ஆண்ட பிரமனது நான்கு முகங்களையும், மந்துரையாக மேவியது - பந்தியாகக் கொண்டு பொருந்தியது. தாரகப்பிரமம் - எல்லா மந்திரங்கட்கும் ஆதாரமாகிய பிரணவ மந்திரம் . கோ - பிரமன். (35) அண்ட கோடிக ளனைத்துமோர் பிண்டமா வடுக்கி உண்ட நீரதா முதுகின்மே லுபநிடக் கலணை கொண்ட வாலிய வைதிகப் புரவிமேற் கொண்டான் தொண்டர் பாசவன் றொடரவிழ்த் திடவருஞ் சோதி. (இ-ள்.) அண்ட கோடிகள் அனைத்தும் - அண்ட கோடிகள் அனைத்தையும், ஓர் பிண்டமா அடுக்கி நீண்ட நீரதாம் முதுகின் மேல் - ஒரு பிண்டமாக அடுக்கி அமைத்த தன்மையை யுடைய தாகிய முதுகின்மேல், உபநிடக்கலணை கொண்ட - மறைமுடி வாகிய கலணையினைக் கொண்ட, வாலிய வைதிகப் புரவிமேற் கொண்டான் - தூய வேதமாகிய குதிரைமேல் ஏறியருளினான்; தொண்டர் பாச வன்தொடர் அவிழ்த்திட வரும் சோதி - அடியாரது பாசமாகிய வலிய கட்டினை அவிழ்க்க எழுந்தருளிவரும் பரஞ்சோதியாகிய கடவுள். உபநிடதம் என்பது உபநிடம் எனத் தொக்கு நின்றது. உபநிடதம் - வேதத்தின் ஞானகாண்டம்; வேத முடிபு. கலணை - குதிரை மேற்றவிசு; சேணம்; இது கலனையெனவும் படும். (36) ஆன மந்திரக் கிழார் பொருட் டன்றியும் வென்றி மீன வன்பிறப் பறுக்கவும் வார்கழல் வீக்கி வான நாயக னேந்திய மறையுறை கழித்த ஞான வாள்புற விருளையு நக்கிவா ளெறிப்ப. (இ-ள்.) வான நாயகன் - (அங்ஙனம் ஏறியருளிய) தேவர் பெருமானாகிய சோமசுந்தரக் கடவுள், ஆன மந்திரக் கிழார் பொருட்டு அன்றியும் - அமைச்சுரிமையுடையரான வாதவூரடிகள் பொருட்டல்லாமலும், வென்றி மீனவன் பிறப்பு அறுக்கவும் - வெற்றியையுடைய அரிமருத்தன பாண்டியன் பிறப்பினை அறுக்கும் பொருட்டும், வார்கழல் வீக்கி ஏந்திய - நீண்ட வீரகண்டயைக் கட்டித் திருக்கரத்திலேந்திய, மறை உறை கழித்த ஞானவாள் - வேதமாகிய உறையினின்றும் கழித்த ஞானமாகிய வாள், புறஇருளையும் நக்கி வாள் எறிப்ப - அகவிருளையே அன்றிப் புறவிருளையும் போக்கி ஒளி வீசவும். பகையறுக்கலுறுவார் வீரக்கழலணிந்து வாளேந்துமாறே இறைவனும் அடியாரின் பிறவியாகிய பகையை அறுக்கக் கழலணிந்து வாளேந்தினனென்றார். இறைவற்கு ஞானமே வாளாதலை, “ ஞானவா ளேந்துமையர் நாதப் பறையறைமின் ” என்னும் திருவாசகத்தாலறிக. புறவிருளையும், உம்மை எச்சப் பொருட்டு. (37) சாய்ந்த கொண்டையுந் திருமுடிச் சாத்தும்வாள் வைரம் வேய்ந்த கண்டியுந் தொடிகளுங் குழைகளும் வினையைக் காய்ந்த புண்டர நுதலும்வெண் கலிங்கமுங் காப்பும் ஆய்ந்த தொண்டர்த மகம்பிரி யாதழ கெறிப்ப. (இ-ள்.) சாய்ந்த கொண்டையும் - ஒரு புறஞ்சாய்ந்த கொண்டையும், திருமுடிச்சாத்தும் - திருமுடிப்பாகையும், வாள்வைரம் வேய்ந்த கண்டியும் - ஒளி பொருந்திய வைரம் பதித்த கண்டிகைகளும், தொடிகளும் குழைகளும் - வீரவளைகளும் குண்டலங்களும், வினையைக் காய்ந்த புண்டரநுதலும் - வினைகளைச் சினந்து போக்கும் திருநீற்றினை மூன்று கீற்றாக அணிந்த திருநுதலும், வெண்கலிங்கமும் காப்பும் - வெள்ளிய ஆடையும் கவசமும், ஆய்ந்த தொண்டர்தம் அகம்பிரியாது அழகு எறிப்ப - (மெய்ப்பொருளை) ஆராய்ந்தறிந்த தொண்டர்கள் மனத்தினின்றும் நீங்காது அழகினை வீசவும். திருமுடிச்சாத்து - தலைப்பாகை. குதிரைச் சேவகனானமைக் கேற்பச் சாய்ந்த கொண்டையும், திருமுடிச்சாத்தும் முதலியன உடையனானானென்க. (38) பிறக்கு மாசையோர் மறந்துமிங் கணுகன்மின் பிறப்பை மறக்கு மாசையோ ரிம்மென வம்மினன் பரைவேந் தொறுக்கு நோய்களை வானென வொருவனும் பிறவி அறுக்க வந்தன னென்பபோற் பரிச்சிலம் பலம்ப. (இ-ள்.) பிறக்கும் ஆசையோர்மறந்தும் இங்கு அணுகன்மின் - பிறக்கும் விருப்புடையவர்கள் மறந்தேயும் இங்கு வாராதீர்கள்; பிறப்பை மறக்கும் ஆசையோர் - பிறப்பினைப் போக்கும் விருப்புடை யவர், இம்மென வம்மின் - விரைந்து வாருங்கள்; அன்பரை - மணிவாசகனாரை, வேந்து ஒறுக்கும் நோய் களைவான்என - பாண்டியன் ஒறுக்குந் துன்பத்தினைப் போக்குதற்பொருட்டு வருதல் போல, ஒருவன் நும் பிறவி அறுக்க வந்தனன் - இறைவன் நுமது பிறப்பினை ஒழிக்க வந்தனன்; என்ப போல் - என்று சொல்லுவ போல், பரிச்சிலம்பு அலம்ப - குதிரைச் சிலம்புகள் ஒலிக்கவும். இம்மென : விரைவுக் குறிப்பு. “ செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் றென்னனன்னாட் டிறைவன் கிளர்கின்ற காலமிக் காலமெக் காலத்துள்ளும் அறிவொண் கதிர்வா ளுறைகழித் தானந்த மாக்கடவி எறியும் பிறப்பை யெதிர்ந்தார் புரள விருநிலத்தே ” என்னும் திருவாசகம் இங்கே சிந்திக்கற் பாலது. ஒருவனும் எனக் கொண்டுரைத்தலுமாம். இது தற்குறிப்பேற்றவணி. (39) கங்கை யைச்சடை முடியின்மேற் கரந்தனை யவள்போல் எங்க டம்மையுங் கரந்திடென் றிரந்துகா வேரி துங்க பத்திரை யாதியா நதிகளுஞ் சூழப் பொங்கி வீழ்வபோ லொலியலுங் கவரியும் புரள. (இ-ள்.) கங்கையைச் சடை முடியின் மேல் கரந்தனை - கங்கையைச் சடைமுடியின்மேல் ஒளித்தருளினை; அவள்போல் எங்கள் தம்மையும் கரந்திடு என்று இரந்து - அவளை ஒளித்தது போல எங்களையும் ஒளித்தருளுவாயாக என்று குறையிரந்து, காவேரி துங்கபத்திரை ஆதியாம் நதிகளும் - காவேரியும் துங்கபத் திரையு முதலாகிய நதிகளும், சூழப்பொங்கி வீழ்வபோல் - சூழவும் பொங்கி வீழ்வன போல, ஒலியலும் கவரியும் புரள -மேலாடையுஞ் சாமரையும் புரளவும். ஒலியல் - ஈச்சோப்பி என்பாரு முளர்; ஈச்சோப்பி - ஈயோட்டுங் கருவி. தற்குறிப்பணி. (40) வாவி நாறிய வாலிதழ்த் தாமரை மலரோன் நாவி னாளுமை நாயக னான்மறை பரியா மேவி னானெனத் தானொரு வெண்குடை யாகிப் பாவி னாலென முடியின்மேற் பானிலாக் கால. (இ-ள்.) வாவி நாறிய வால் இதழ்த் தாமரை மலரோன் - தடாகத் தின்கண் தோன்றிய தூய இதழ்களை யுடைய தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனது, நாவினாள் - நாவில் வசிக்குங் கலைமகள், உமை நாயகன் நான்மறை பரியா மேவினான் என - உமைகேள்வனாகிய சோமசுந்தரக் கடவுள் நான்கு மறைகளையும் குதிரையாகக் கொண்டு வந்தனன் என்று கருதி, தான் ஒரு வெண் குடையாகிப் பாவினால் என - தான் ஒரு வெள்ளிய குடையாகிக் கவிந்தாற் போல, முடியின் மேல் பால்நிலாக்கால - (வெண் கவிகை) திருமுடியின் மேல் பால் போன்ற நிலவினை வீசவும். நாறுதல் - தோன்றுதல் : தற்குறிப்பு. (41) முறையி னோதிய புராணமூ வாறுநா மொழியும் இறைவ னாமிவன் படைத்தளித் தழிப்பவ னிவனே மறையெ லாமுறை யிடுபரம் பொருளென வாய்விட் டறையு மாறுபோ லியங்களீ ரொன்பது மார்ப்ப. (இ-ள்.) முறையின் ஓதிய புராணம் மூவாறும் - முறைப்பட ஓதிய புராணங்கள் பதினெட்டும், இவன் நாம் மொழியும் இறைவனாம் - இவன்றான் நாங்கள் கூறும் இறைவனாவான்; படைத்து அளித்து அழிப்பவன் இவனே - ஆக்கி அளித்து அழிப்பவனாகிய இவனே தான், மறை எலாம் முறையிடும் பரம்பொருள் என - வேதங் களெல்லாம் ஓலமிடும் பரம்பொருளுமென்று, வாய்விட்டு அறையுமாறு போல் - வாய்திறந்து கூறுமா போல, இயங்கள் ஈரொன்பதும் ஆர்ப்ப - இயங்கள் பதினெட்டும் ஒலிக்கவும். பதினெண் புராணங்கள் : பிரமம், பதுமம், வைணவம், சைவம், பாகவதம், பெளடியம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்கினேயம், பிரமகைவர்த்தம், இலிங்கம், வராகம், கரந்தம், வாமனம், மற்சம், கூர்மம், காருடம், பிரமாண்டம் என்பன. புராணங்கள் வேதப் பொருளைத் துணிந்துரைக்கும் உபப்பிருங்கணமாதலின் ‘இவனே மறையெலா முறையிடு பரம்பொருளென அறைதற்கு முரியன வென்க. தற்குறிப்பு. (42) மிடைந்த மாயவாம் பரித்திரண் மேற்றிசை நோக்கி நடந்த நாயக னான்மறைப் புரவியு நாப்பண் அடைந்த தாலெழுந் தூளிக ளண்டமுந் திசையும் படர்ந்த போம்வழி யாதென மயங்கினான் பரிதி. (இ-ள்.) மிடைந்த மாயவாம் பரித்திரள் - நெருங்கியமாய மாகிய தாவும் குதிரைக்கூட்டங்கள், மேல் திசை நோக்கி நடந்த - மேற்குத் திசையை நோக்கி நடந்தன; நாயகன் நான்மறைப் புரவியும் நாப்பண் அடைந்தது - இறைவனது நான்மறையாகிய குதிரையும் நடுவே வந்தது; எழும் தூளிகள் அண்டமும் திசையும் படர்ந்த - மேலெழுந்த புழுதிகள் அண்டங்களினும் திக்குகளினும் சென்று பரவின; பரிதிபோம் வழி யாது என மயங்கினான் - (அதனால்) சூரியன் தான் செல்லும் வழி யாதென்று மயக்கமுற்றனன். வாவும்பரி, போகும்வழி என்பன விகாரமாயின. மேல் ஆறு செய்யுளிலும் போந்த செயவெனெச்சங்கள் அடைந்தது என்னும் முற்று வினை கொண்டன. நடந்த என்பதையும் எச்சப்படுத்துக. (43) பள்ள மாக்குவ திடரினைப் பள்ளத்தை மேடு கொள்ள வாக்குவ பாரெலாம் விலாழிகொப் பளித்து வெள்ள மாக்குவ தூளியால் வெள்ளத்தை வெறிதாய் உள்ள தாக்குவ புள்ளுவ வுருக்கொண்ட பரிமா. (இ-ள்.) புள்ளுவ உருக்கொண்ட பரிமா - வஞ்சக வடிவங் கொண்ட குதிரைகள், திடரினைப் பள்ளமாக்குவ - மேட்டினைப் பள்ளம் ஆக்குவன; பள்ளத்தை மேடு கொள்ள ஆக்குவ - பள்ளத்தை மேடாகுமாறு ஆக்குவன; பார் எலாம் விலாழி கொப்பளித்து வெள்ளம் ஆக்குவ - புவி முழுதும் வாய் நுரையைக் கொப்பளித் தலால் வெள்ளமாக்குவன; தூளியால் - குரத்தில் எழும் புழுதியால், வெள்ளத்தை வெறிதாயுள்ளது ஆக்குவ - வெள்ளத்தைச் சுவற்றி நிலமாக்குவன. விலாழி - குதிரை வாய் நுரை. வெறிதாயுள்ளது - வெறுநிலம். (44) கொய்யு ளைப்பரி யெழுந்ததூள் கோப்பவான் கங்கை வையை யொத்ததேழ் பசும்பரி செம்பரி மாவாச் செய்த தொத்தது சிந்துரந் திசைக்கய முகத்துப் பெய்த தொத்ததா லொத்தது பெரும்பகன் மாலை. (இ-ள்.) கொய் உளைப்பரி எழுந்ததூள் கோப்ப - கொய்த புற மயிரினையுடைய குதிரைகளால் எழுந்த புழுதி எங்குங் கோத்தலினால், வான் கங்கை வையை ஒத்தது - ஆகாய கங்கை வைகையாற்றினை ஒத்தது; ஏழ் பசும் பரி - சூரியனுடைய ஏழு பச்சைக் குதிரைகளும், செம்பரிமாவாச் செய்தது ஒத்தது - செய்ய குதிரைகளாகப் படைக் கப்பட்டமை ஒத்தது; திசைக்கயம் சிந்துரம் முகத்துப் பெய்தது ஒத்தது - திக்கு யானைகள் சிந்துரத்தை முகத்திற் பெய்ததை ஒத்தது; பெரும் பகல் மாலை ஒத்தது - நடுப்பகல் மாலைப்பொழுதை ஒத்தது. பரி, கயம் என்னும் சாதிபற்றி ஒருமை வினை கொடுத்தார்.(45) விளம்பு கின்றவச் சம்புவெம் பரித்திரண் மிதிக்குங் குளம்பு கிண்டிய வெழுந்ததூள் குன்றிற கரிந்தோன் வளம்பு குந்தடை வார்குர வழிபுரி வேள்விக் களம்பு கைந்தெழு தோற்றமே யல்லது கடாதால். (இ-ள்.) விளம்புகின்ற அச்சம்பு வெம்பரித்திரள் - கூறப்படு கின்ற அந்த நரியாகிய வெவ்விய குதிரைக் கூட்டங்கள், மிதிக்கும் குளம்பு கிண்டிய எழுந்த தூள் - மிதிக்கின்ற குளம்பு கிண்டுதலால் புழுதி எழுந்த தோற்றத்தை, குன்று இறகு அரிந்தோன் வளம்புகுந்து அடைவார் - மலைகளின் சிறகுகளை அரிந்த இந்திரன் பதவியிற் சென்றடையுங் கருத்தினையுடையார், குரவழிபுரி வேள்விக் களம் புகைந்து எழுதோற்றமே அல்லது - குதிரையின் குளம்புபட்ட இடந்தோறும் புரிகின்ற வேள்விச் சா'e7çலயினின்றும் புகை புகைந்தெழுந் தோற்றமே ஒப்பதல்லாமல், கடாது - (மற்றொன்று) ஒவ்வாது. சம்பு - நரி; சிவனது பரித்திரள் என்பதும் தோன்ற நின்றது. கிண்டிய : செய்யிய வென்னும் வினையெச்சம். கடாது - ஒவ்வாது; கடுத்தல் - ஒத்தல். (46) மட்பு லந்திசை வான்புதை பூழியுண் மறைந்து கொட்பு றும்பரி சதங்கைதா ரொலியினுங் குளிர்வான் பெட்பு றுங்குர லொலியினுஞ் செவியினிற் பிறிது கட்பு லங்களாற் கண்டிலர் வழிவரக் கண்டோர். (இ-ள்.) மண்புலம் திசை வான்புதை பூழியுள் மறைந்து - நிலவுலகினையும் திக்குகளையும் வானுலகினையும் மூடிய புழுதியுள் மறைந்து, கொட்புறும் பரி - சுழன்றுவருங் குதிரைகள், வழிவர வழியில்வருதலை, சதங்கைதார் ஒலியினும் - (அவற்றின்) சதங்கை மாலையும் கிண்கிணி மாலையுமாகிய இவற்றின் ஒலியாவும், குளிர்வான பெட்புறும் குரல் ஒலியினும் - (நீருண்டு) குளிர்ந்த முகிலும் விரும்பும் கனைப்பொலியாலும், செவியினில் கண்டோர் - காதினாற் கண்டோரும், பிறிது கட்புலங்களால் கண்டிலர் - வேறு கண்களாற் காணாதவராயினர். வழி வரக் கண்டோர் செவியாலன்றிக் கண்ணாற் கண்டிலர் எனினும் அமையும். (47) [கொச்சகக் கலிப்பா] தரங்கமெறி முத்திவை விலாழியல தார்மா இரங்குமொலி யல்லதிரை யேங்குமொலி யின்ன1 துரங்கமல மற்றிவை சுரர்க்கரச னின்றும் புரங்கொல விடுத்திட வரும்புணரி யென்பார். (இ-ள்.) இவை விலாழி அல - இவை வாய் நுரைகள் அல்ல; தரங்கம் எறி முத்து - கடலினலைகள் வீசும் முத்துக்களாம்; இன்ன தார்மா இரங்கும் ஒலி அல்ல - இவை கிண்கிணி மாலையை யணிந்த குதிரைகளின் கனைப்பொலி யல்ல; திரை ஏங்கும் ஒலி - அலைகள் ஒலிக்கும் ஒலியாம்; இவை துரங்கம் அல - இங்கு வருபவை குதிரைகள் அல்ல; சுரர்க்கு அரசன் இன்றும் புரம் கொல விடுத்திட - தேவேந்திரன் இப்பொழுதும் இந்நகரத்தைஅழித்தற்பொருட்டு விடுத்தலால்; வரும்புணரி என்பார் - வருகின்ற கடலாம் என்று கூறுவர். முன்பு இந்திரன் கடலை ஏவினமையால் இன்றும் என்றார். புரம் - இந்நகர்; சுட்டு வருவிக்க. விலாழி முதலிய பொருள்களை மறுத்து முத்து முதலியனவாக உருவகப் படுத்தினமையால் இச் செய்யுள் அவநுதி யுருவகவணி. (48) இம்பருல குள்ளவல பண்டினைய பாய்மா உம்பருல காளிபரி யேகொலது வொன்றே வெம்பரிதி வெம்பரிகொ லேழவைக ளேழும் பைம்பரிகள் யாவினைய பாய்பரிக ளென்பார். (இ-ள்.) இனைய பாய்மா - இந்தத் தாவுங் குதிரைகள், பண்டு இம்பர் உலகு உள்ள அல - முன் இந்நில வுலகில் உள்ளன அல்ல; உம்பர் உலகு ஆளி பரியே கொல் - மேலுலகை ஆளும் இந்திரன் குதிரையோ, அது ஒன்றே - அது ஒன்றே (ஆதலின் அதுவல்ல); வெம்பரிதி வெம்பரி கொல் - வெம்மையை யுடைய சூரியனுடைய கடிய குதிரைகளோ, அவைகள் ஏழ் - அவைகள் ஏழேதாம்; ஏழும் பைம்பரிகள் - (அதுவன்றி) அவ்வேழும் பச்சைக் குதிரைகள் (ஆகலின் அவையுமல்ல); இனைய பாய்பரிகள் யா என்பார் - (ஆயின்) இத்தாவுங் குதிரைகள் யாவை என (ஒருவரை ஒருவர்) வினவுவார். இந்திரன் பரி உச்சைச் சிரவம் எனப்படும்; அஃது எண்ணால் ஒன்றாதலும், சூரியன் பரி எண்ணால் ஏழாதலுடன் பசிய நிறத்தவாயிருத்தலும் இவற்றொடு வேற்றுமையாம். இச் செய்யுள் ஐயவிலக்கணையின் பாற்படும். (49) வெம்பணிக ளைப்பொர வெகுண்டெழுவ தேயோ பைம்புன லுடுத்தமுது பார்முதுகு கீறும் உம்பருல கைப்பொர வுருத்தெழுவ தேயோ அம்பர முகட்டள வடிக்குர மழுத்தும். (இ-ள்.) பைம் புனல் உடுத்த - கரிய கடலை ஆடையாக வுடுத்த முது பார் முதுகு கீறும் - பழைய நில மகளின் முதுகினைக் குளம்பாற் கிழிக்கும் (ஆதலின்), வெம்பணிகளைப்பொர - கொடிய (அனந்தன் முதலிய பாதலத்தில் வசிக்கும்) பாம்புகளைப் பொருது அழிப் பதற்கு, வெகுண்டு எழுவதேயோ - சினந்து எழுவதோ (அன்றி), அம்பரம் முகட்டு அளவு - வானின் முடிவரையும், அடிக்குரம் அழுத்தும் - அடிக்குளம்பினால் அழுத்தும் (ஆதலின்), உம்பர் உலகைப் பொர - மேலுலகைப் பொருது அழித்தற்கு, உருத்து எழுவதேயோ - சினந்து எழுவதோ (அறியோ மென்றும்). கீறும் ஆகலின், அழுத்தும் ஆகலின் எனக் காரணச் சொல் விரிக்க. (50) உத்தர திசைப்புரவி தெற்கடையு மாறும் அத்தகைய தெற்குள வடக்கடையு மாறும் அத்தகை1 குடக்கொடு குணக்கடையு மாறுஞ் சித்தர்விளை யாடலின் வெளிப்படுதல் செய்யா. (இ-ள்.) சித்தர் விளையாடலின் - சித்தருடைய விளையாட்டுப் போல, உத்தர திசைப்புரவி - வடதிசையிலுள்ள குதிரைகள், தெற்கு அடையுமாறும் - தென்றிசையை அடையும்வகையும், தெற்கு உள அத்தகைய - தெற்கின் கண் சென்றுள்ள அங்ஙனமாய அவை, வடக்கு அடையுமாறும் - வடக்கின்கண் அடையும் வகையும், அத்தகை குடக்கொடு குணக்கு அடையுமாறும் - அங்ஙனமே கிழக்குத் திசையினின்று மேற்கிலும் மேற்கிலிருந்து கிழக்கிலும் செல்லுந் தன்மையும், வெளிப்படுதல் செய்யா - தோன்றவில்லை (என்றும்). குடக்கொடு குணக்கடைதல் - கிழக்கிலிருந்து மேற்கிலும் மேற்கிலிருந்து கிழக்கிலும் அடைதல். (51) மறைமரபு சாலவரும் வன்னியிவை பொன்னித் துறைவனுள முஞ்சுடு மிரும்பனை தொடுக்கும் அறவனுள முஞ்சுடு மமைச்சரை யொறுக்கும் இறைவழுதி யுள்ளமு மினிச்சுடுவ தென்பார். (இ-ள்.) மறை மரபு சாலவரும் வன்னி இவை - பரிநூலிற் கூறும் இலக்கணங்கள் நிரம்பவராநின்ற இக்குதிரைகளாகிய நெருப்பு, பொன்னித்துறைவன் உளமும் சுடும் - காவிரியின் நீர்த்துறை யினையுடைய சோழன் மனத்தையுஞ் சுடும்; இரும்பனை தொடுக்கும்- கரிய பனையின் மலராற்றொடுத்த மாலையை யணிந்த, அறவன் உளமும் சுடும் - சேரன் உள்ளத்தையும் சுடும்; இனி - மேல், அமைச்சரை ஒறுக்கும் - வாதவூரடிகளை வருத்தும், இறை வழுதி உள்ளமும் சுடுவது என்பார் - பாண்டி மன்னன் உள்ளத்தையும் சுடும் என்றுங் கூறுவாராயினர். மறை என்பது ஈண்டுப் புரவிநூலை. வன்னி - குதிரை. தீ : இரட்டுற மொழிதல். குதிரையைத் தீயாக உருவகித்துச் ‘சுடும்’ என்றார். இருமை - கருமை. பாண்டியற்கு மாற்றாராகலின் சோழனுளத்தையும் சேரனுளத்தையும் சுடுமென்றார். வாதவூரரை ஒறுத்தமை பற்றிப் பாண்டியன் தானே வருந்துவனென்பார் ‘வழுதியுள்ளமுமினிச் சுடுவதென்பார்’ என்றார். முன் இரண்டு செய்யுட்களையும் இதிலுள்ள என்பார் என்பதனோடு முடிக்க. (52) முந்தையொரு மந்திரி பொருட்டரசன் முன்னா அந்தமி லனீகமொ டரும்பரியில் வந்தாங் கிந்தமறை மந்திரி யிடும்பைதணி விப்பான் வந்தனர்கொ லிப்பரி வரும்பொருந ரென்பார். (இ-ள்.) முந்தை ஒரு மந்திரி பொருடடு - முன்னொரு காலத்தில் செளந்தர சாமந்தன் என்னும் ஒரு சேனைத் தலைவன் பொருட்டு; அரசன் முன்னா - பாண்டியன் முன்னே, அந்தமில் அனீகமொடு - அளவிறந்த சேனைகளோடு, அரும்பரியில் வந்தாங்கு - அரிய புரவிமீது வந்ததுபோல, இப்பரி வரும் பொருநர் - இக்குதிரையில் வரும் வீரர், இந்த மறை மந்திரி இடும்பை தணிவிப்பான் - இன்று இந்த மறையவராகிய மந்திரியாரின் துன்பத்தைத் தணிவித்தற் பொருட்டு, வந்தனர் கொல் என்பார் - வந்தனரோ என்றுங் கூறுவார். அமைச்சுரிமையும் தானைத் தலைமையும் ஒருங்குடையாரு முளராகலின் ‘மந்திரி பொருட்டு’ என்றார். செளந்தர சாமந்தர் பொருட்டு இறைவன் பரியில் வந்தமையை முன் மெய்க்காட்டிட்ட படலத்திற் காண்க. தணிவிப்பான் : வினையெச்சம். (53) காமனிவ னேகொலறு காலுழு கடப்பந் தாமனிவ னேகொல்பொரு தாரகனை வென்றோன் மாமனிவ னேகொன்மலை வன்சிற கரிந்த நாமனிவ னேகொலென நாரிய ரயிர்த்தார். (இ-ள்.) இவன் காமன் கொல் - இக்குதிரை வீரனாகிய பேரழகன் மதவேளோ, இவன் - (அன்றி) இவ்விளையோன், அறு கால் உழு கடப்பம் தாமன் கொல் - வண்டுகள் கிளறுங் கடப்ப மாலையையணிந்த முருகனோ, இவன் - (அன்றி) நம்மனத்தைத் தனது மாயையினால் கவருமிவன், பொரு தாரகனை வென்றோன் மாமன் கொல் - போர் புரிந்த தாரகனைக் கொன்ற அம்முருகக் கடவுளின் மாமனாகிய மாயனோ, இவன் - (அன்றி) பெரும் போகமுடைய இவன், மலை வன் சிறகு அறிந்த நாமன் கொல்என- மலைகளின் வலிய சிறகினை அரிந்த இந்திரனோ என்று, நாரியர் அயிர்த்தார் - பெண்கள் ஐயுற்றனர். அறுகால் - ஆறாகிய கால்களையுடையது; வண்டு. பொரு தாரகனை வென்றோன், சுட்டு மாத்திரையாகக் கொள்க. நாமன் - பகைவர்க்கு அச்சத்தைச் செய்பவன். (54) அடுத்திடுவர் கண்ணிறைய வண்ணலழ கெல்லாம் மடுத்திடுவர் கைவளையை மாலைவிலை யென்னக் கொடுத்திடுவர் மாலைகள் கொடுத்திடுதி யன்றேல் எடுத்திடுதி யெங்கள்வளை யெங்கள்கையி லென்பார். (இ-ள்.) அடுத்திடுவர் கண்நிறைய அண்ணல் அழகு எல்லாம் மடுத்திடுவர் - (அம்மகளிரிற் சிலர் அவ்வண்ணலை) அடுத்து அவன் அழகு அனைத்தையும் கண்ணாகிய வாயினால் நிறையப் பருகுவர்; கை வளையை மாலைவிலை என்னக் கொடுத்திடுவர் - கையிலுள்ள வளைகளை மாலைக்கு விலையெனக் கொடுப்பார்; மாலைகள் கொடுத்திடுதி - நின் மார்பிலணிந்த மாலைகளைக் கொடுப்பாயாக; அன்றேல் - கொடாயேல், எங்கள் வளை எடுத்து - (அவற்றின் விலையாகக் கொடுத்த) எங்கள் வளைகளை எடுத்து, எங்கள் கையில் இடுதி என்பார் - எங்கள் கையில் இடுவாயாக என்று கூறுவர். வேட்கை நோயால் உடல் மெலிதலின் வளை கழன்று விழுதலை ‘மாலை விலை யென்னக் கொடுத்திடுவர்’ என்றார். மாலைகள் கொடுத்திடுதி என்றதனால் அவனது மாலையைச் சூடிக்கொள்ளும் விருப்பமும், எடுத்திடுதி எங்கள் வளை என்றதனால் அவன் தம்மைத் தொடவேண்டுமென்னும் விருப்பமும் உடையரானமை பெற்றாம். இவை போல்வன மகளிர்கண் நிகழும் அகமெய்ப்பாடுகள். (55) ஏந்தன்முடி மாலைமலர் சிந்தினவெ டுத்துக் கூந்தலின்மி லைந்துமதன் வாகைமலர் கொள்வார் சாந்தனைய சிந்தின தனந்தடவி யண்ணற் றோய்ந்தளவி லாமகிழ் துளும்பினவ ராவார். (இ-ள்.) ஏந்தல் முடிமாலை சிந்தின மலர் எடுத்து - இறைவன் திருமுடியின் கணுள்ள மாலையினின்றும் சிந்திய மலர்களை எடுத்து, கூந்தலில் மிலைந்து - (சிலர்) தங்கள் குழலிற்சூடி, மதன் வாகைமலர் கொள்வார் - மதவேளை வென்று வெற்றிமாலை கொள்வார்; அனைய சிந்தின சாந்து தனம் தடவி - (சிலர்) அவ்வாறு திருமார்பினின்றுஞ் சிந்தின சாந்தினைத் தங்கள் கொங்கைகளிற் பூசி, அண்ணல் தோய்ந்து அளவு இலா மகிழ் துளும்பினவர் ஆவார் - அவ்வண்ணலைக் கூடி அளவிறந்த மகிழ்ச்சி மீதூர்ந்தவரை ஒத்தார். கூடினவர் போலும் மகிழ்ச்சியெய்துதலின் மதன் வாகைமலர் கொள்வார் என்றார். அனைய - அவ்வாறாக. (56) பொட்டழகன் மார்பிலிடு போர்வைகவ சப்பேர் இட்டதுமெய் நம்முயிர்த டுத்தமையி னென்பார் கட்டழகன் மாலையது கண்ணியென வோதப் பட்டதுமெய் நம்முயிர் படுத்தமையி னென்பார். (இ-ள்.) பொட்டு அழகன் மார்பில் இடு போர்வை - பொட்டினை யணிந்த இவ்வழகன் மார்பிலணிந்த போர்வை, நம் உயிர் தடுத் தமையின் - நமது உயிரை (அம்மார்பு கவராது) தடுத்ததினால், கவசப்பேர் இட்டது மெய் என்பார் - அதற்குக் கவசமென்னும் பெயர் இட்டது மெய்யே என்று சிலர் கூறுவர்; கட்டழகன் மாலை - இப்பேரழகன் மாலை, நம் உயிர் படுத்தமையின் - நமது உயிரை அகப்படுத்தினமையின், கண்ணி என ஓதப்பட்டது மெய் என்பார் - அது கண்ணி என்று ஓதப்பட்டது உண்மையே என்று சிலர் கூறுவர். கவசம் - சட்டை, மெய்யுறை. கண்ணி - மாலை, வலை. படைக்கலம் புகாது காப்பது போன்று நம்முயிர் புகாது காத்தலாலும், பறவை முதலியவற்றை அகப்படுத்தல் போன்று நம்முயிரை அகப்படுத்தலாலும் கவசம், கண்ணி என்னும் பெயர்கள் முறையே அவற்றுக்குப் பொருந்தினவென்றாரென்க. மெய் - பொருந்தியது. மாலையது, அது : பகுதிப்பொருள் விகுதி. (57) [கலிநிலைத்துறை] இச்சை யால்வடி வெடுப்பவ னிந்திர சால விச்சை காட்டுவா னெனப்பரி வீரனி லுலகைப் பிச்ச தேற்றிட மயக்கியுங் காமனிற் பெரிது நச்சு1 மாதரை மயக்கியு மிங்ஙன நடந்தான். (இ-ள்.) இச்சையால் வடிவு எடுப்பவன் - தனது இச்சையள வானே திருவுருவமெடுக்கும் இறைவன், இந்திரசால விச்சை காட்டுவான் என - இந்திரசால வித்தை காட்டுவானைப்போல, பரிவீரனில் - குதிரை வீரனைப்போல் (தன்னைக் காட்டி), உலகைப் பிச்க ஏற்றிட மயக்கியும் - உலகினர் பித்தை ஏற்குமாறு அவரை மயக்கியும், காமனில் - மதவேளைப்போல் (காணப்பட்டு), பெரிது நச்சு மாதரை மயக்கியும் - மிகவும் விரும்பும் மகளிரை மயக்கியும், இங்ஙனம் நடந்தான் - இவ்வாறு நடந்தருளினன். இறைவன் வினைவயத்தாற் பிறத்தலின்றித் தான் விரும்பிய வடிவை விரும்பியவாறு எடுப்பவனாகலின் ‘இச்சையால் வடிவெடுப்பவன்’ என்றார். விச்சை காட்டுவான் என மயக்கியும், மயக்கியும் நடந்தான் என்க. விச்சை, பிச்சு என்பன போலி. பிச்சது, அது பகுதிப் பொருள் விகுதி. ஏற்றிட - ஏற்க. (58) தாவு கந்துக மிந்திய மொத்தன சயமா வாவு திண்கண மள்ளர்கண் மனங்களை யொத்தார் மேவி யம்மனந் தொறுமிடை விடாதுநின் றியக்கும் ஆவி யொத்தது நடுவரு மருமறைப் பரியே. (இ-ள்.) தாவு கந்துகம் இந்தியம் ஒத்தன - தாவுகின்ற குதிரைகள் ஐம்பொறிகளை ஒத்தன; சயமா வாவு திண் கண மள்ளர்கள் - வெற்றி பொருந்திய அக்குதிரைகளை நடாத்தும் திண்ணிய வீரர்களாகிய சிவகணத்தவர், மனங்களை ஒத்தார் - மனங்களை ஒத்தனர்; அம்மனந் தொறும் மேவி நின்று - அம்மனங்கடோறும் பொருந்தி நின்று, இடைவிடாது இயக்கும் ஆவி - இடையறாமல் இயக்குகின்ற உயிரினை, நடுவரும் அருமறைப் பரி ஒத்தது - நடுவில் வரும் - அரிய வேதமாகிய குதிரை ஒத்தது. வாவு சயமா என மாறுக. மனம் கூடாவழிப் பொறிகள் புலன்களிற் செல்லாமையானும், ஆன்ம வறிவின்றி மனத்திற்கு இயக்கமின்மையானும், ‘கந்துகம் இந்திய மொத்தன. மள்ளர்கள் மனங்களை யொத்தார், மறைப்பரி ஆவி யொத்தது’ என்றார். மறைப்பரி என்றது இலக்கணையால் இறைவனைக் குறிக்கும். (59) துன்னு மின்னிய முழுக்கமுந் துரகத வொலியும் அன்ன வீரர்வா யரவமுந் திசைசெவி டடைப்பக் கன்னி மாமதில் சூழ்கடி நகர்க்கரைக் காதம் என்ன வெய்தினான் மறைப்பரிப் பாகனவ் வெல்லை. (இ-ள்.) துன்னும் இன் இய முழக்கமும் - நெருங்கிய இயங்களின் பேரொலியும், துரகத ஒலியும் - குதிரைகளின் கனைப் பொலியும், அன்ன வீரர்வாய் அரவமும் - அக்குதிரை வீரர்களின் வாய் ஒலியும், திசை செவிடு அடைப்ப - திக்குகளைச் செவிடாக்க, மறைப்பரி பாகன் - வேதப் புரவியின் பாகனாகிய இறைவன், கன்னி மாமதில் சூழ் கடி நகர்க்கு - அழியாத பெருமதில் சூழ்ந்த காவலையுடைய அம் மதுரைக்கு, அரைக்காதம் என்ன எய்தினான் - அரைக்காத தூரம் உளதென்னுமாறு வந்தனன்; அவ்வெல்லை - அப்பொழுது. கன்னி - அழிவின்மை. (60) கொச்சகக் கலிப்பா கண்டவர் கடிதோடிக் கடிநகர் குறுகிக்கார் விண்டவழ் மணிமாடத் தடுசிறை மிடைகின்ற கொண்டலி னனையார்முன் குறுகினர் மலர்செவ்வி முண்டக வதனத்தார் முகிழ்நகை யினர்சொல்வார். (இ-ள்.) கண்டவர் - பார்த்தவர்கள், கடிது ஓடி - விரைந்து ஓடி, கடிநகர் குறுகி - காவலையுடைய நகரினை அடைந்து, விண்கார் தவழ் மணி மாடத்து - வானின்கண் உள்ள முகில்கள் தவழும் அழகிய மாடத்தையுடைய, அடுசிறை மிடைகின்ற - வருத்துஞ் சிறையின்கண் காவலாளரால் நெருக்கப் பட்டிருக்கின்ற, கொண்டலின் அனையார் முன் குறுகினர் - முகிலை ஒத்த வாதவூரடிகளின் திருமுன் சென்று, மலர் செவ்வி முண்டக வதனத்தார் -மலர்ந்த செவ்வியை யுடைய தாமரை மலர்போன்ற முகமுடையராய், முகிழ் நகையினர் சொல்வார் - அரும்பிய நகையினையுடையராய் (இதனைக்) கூறுவாராயினர். பேரின்பப் பயன் விளைக்கும் திருவாசக மழையைக் கைம்மாறு கருதாது பொழிவாராகலின் ‘கொண்டலி னனையார்’ என்றார். கொண்டலின், சாரியை நிற்க உருபு தொக்கது. மலர் செவ்வி - அப்பொழுதலர்ந்த செவ்வி. குறுகினர், வதனத்தார், நகையினர் : முற்றெச்சங்கள். (61) மன்னவ னெறிகோடா மந்திர ரடலேறே பன்னிற வெழுமுந்நீர்ப் பரவைகள் வருமாபோற் றுன்னின வருகின்ற துரகத முளவெல்லாம் பொன்னெயின் மணிவாயில் புகுவன விதுபோதில். (இ-ள்.) மன்னவன் நெறிகோடா மந்திரர் அடல் ஏறே - பாண்டியனது அரசியல் நெறியினின்றும் வழுவாத அமைச்சர்களுள் வெற்றி பொருந்திய ஆண் சிங்கம்போன்றவரே, முந்நீர் பல் நிற எழு பரவைகள் வருமாபோல் - மூன்று நீர்களையுடைய பல நிறமுள்ள எழு கடல்களும் வருந் தன்மையைப் போல, உள துரகதம் எல்லாம் - உலகிலுள்ள குதிரைகள் அனைத்தும், துன்னின வருகின்ற - நெருங்கி வருகின்றன; இது போதில் - இப்போது, பொன் எயில் மணி வாயில் புகுவன - பொன்னாலாகிய மதிலின் அழகிய வாயிலின் கண் புகுதா நிற்கும். குதிரைகளும் பல நிறத்த வாகலின் பன்னிற ....... பரவைகள் என்றார். துன்னி வருகின்ற துரகதமான வெல்லாம் இது போதில் புகுவன என்றுரைத்தலுமாம். (62) ஒல்லையி லதுமன்னற் குரையுமி னெனமேரு வில்லவ னருள்பெற்ற வேதியர் பெருமான்போய்ச் செல்லது தளையிட்ட திருமக னருகெய்தி மல்லணி திணிதோளாய் வருவன பரியென்றார். (இ-ள்.) அது எல்லையில் மன்னற்கு உரையுமின் என - அதனை விரைவில் வேந்தனுக்கு விளம்புவீராக என்று கூற, மேரு வில்லவன் அருள் பெற்ற - மேரு மலையை வில்லாக வுடைய இறைவனது திருவருளைப் பெற்ற, வேதியர் பெருமான்போய் - மறையவர் தலைவராகிய அடிகள் சென்று, செல்லது தளை இட்ட திருமகன் அருகு எய்தி - முகிலை விலங்கு பூட்டிச் சிறைப்படுத்திய பாண்டியன் பக்கலிற் சென்று, மல் அணி திணி தோளாய் - மற்போர் வல்ல அழகிய திண்ணிய தோளையுடைய மன்னா, பரிவருவன என்றார் - குதிரைகள் வருகின்றன என்று கூறினர். செல்லினைத் தளையிட்டவன் வழிவந்தோனாகலின் ‘தளை யிட்ட திருமகன்’ என்றார். செல்லது, அது : பகுதிப் பொருள் விகுதி. வருவன - வாராநின்றன. (63) மருத்தென வருகின்ற மாக்கட லெனமன்னன் திருத்தணி கடகப்பூண் டெறித்திட வுடல்வீங்கிப்1 பெருத்தெழு மகிழ்தூங்கிப் பெருவிலை மணியாரம் அருத்திகொள் கலைநல்கி யமைச்சரை மகிழ்வித்தான். (இ-ள்.) மாக்கடல் மருத்து என வருகின்ற என - குதிரை வெள்ளம் காற்றைப்போல விரைந்து வருகின்றன என்று கூற, மன்னன் - அரிமருத்தன பாண்டியன், திருத்து அணி கடகப்பூண் தெறித்திட - திருத்திய அழகிய கடகமாகிய அணி தெறிக்குமாறு, உடல் வீங்கி - உடல் பூரித்து, பெருத்து எழு மகிழ் தூங்கி - ஓங்கி எழுந்த மகிழ்ச்சி மீதூர்ந்து, பெருவிலை மணி ஆரம் - பெரிய விலையுள்ள முத்து மாலைகளையும், அருத்தி கொள்கலை நல்கி - விரும்பத் தக்க ஆடைகளையும் கொடுத்து, அமைச்சரை மகிழ்வித்தான் - மந்திரியா ராகிய வாதவூரடிகளை மகிழ்வித்தனன். மாக்கடல் - குதிரையாகிய கடல். வருகின்றன என என்க. திருத்து - திருந்த அணிந்த. (64) ஏந்தரி யணைநீங்கி யெழுதிய தலைவாயிற் போந்தரு கொளிர்மாடம் புகுந்தரி யணைமேவிக் காந்தளின் விரனல்லார் கவரிகள் புடைவீச ஆய்ந்தவர் புறஞ்சூழ வடுபரி வரவேற்பான். (இ-ள்.) அரி ஏந்து அணை நீங்கி - சிங்கஞ் சுமந்த ஆதனத் தினின்றும் எழுந்து, எழுதிய தலைவாயில் போந்து - சித்திரம் எழுதிய தலைவாயிலில் வந்து, அருகு ஒளிர் மாடம் புகுந்து - அதனருகில் ஒளி வீசும் மாடத்திற் புகுந்து, அரி அணை மேவி - சிங்காதனத்திலிருந்து, காந்தளின் விரல் நல்லார் - செங்காந்தள் மலர் போன்ற விரல்களை யுடைய பெண்கள், புடை கவரிகள் வீச - இருமருங்கிலும் கவரிகள் வீசவும், ஆய்ந்தவர் புறம் சூழ - நூலாராய்ந்த அமைச்சர் முதலியோர் புறத்தில் சூழவும், அடுபரி வரவு ஏற்பான் - வெற்றி பொருந்திய பரிகளை வரவேற்பானாயினன். ஆய்ந்தவர் - நூல்களை ஆராய்ந்தறிந்த அமைச்சர், புரோகிதர், புலவர் முதலாயினார். (65) பரனருள் விளையாடல் காட்டிய பரிவெள்ளம் வருவன சிறுகாலந் தாழ்த்தலு மதிவேந்தர் புரவலன் மனம்வெள்கிப் பொய்யிது வெனவுள்கி அருகணை யுழையோரைக் குறித்தன னழல்கண்ணான். (இ-ள்.) பரன் அருள் விளையாடல் காட்டிய - இறைவன் தனது திருவிளையாடலைக் காட்டா நிற்க, வருவன பரிவெள்ளம் - வரு கின்ற குதிரை வெள்ளம், சிறுகாலம் தாழ்த்தலும் - சிறிது போது வரவு தாழ்த்த வளவில், மதிவேந்தர் புரவலன் - மதிவழி மன்னருட் சிறந்த வனாகிய அரிமருத்தன பாண்டியன், மனம் வெள்கி - உள்ளம் நாணி, இது பொய் என உள்கி - இது பொய் என்று கருதி, அருகு அணை உழை யோரை அருகிலிருந்த தண்டலாளரை, அழல் கண்ணான் குறித்தனன் - நெருப்புப்போலுஞ் சிவந்த கண்களையுடையனாய் நோக்கினன். காட்டிய : செய்யிய வென்னும் வினையெச்சம். உழையோர் - தண்டலாளர். குறித்தனன் - குறிப்புடன் நோக்கினன். (66) மன்னவ னினைவாற்றான் மந்திரர் பெருமானைத் துன்னினர் கொடுபோயத் தோள்வலி மறமள்ளர் உன்னரி தெனவஞ்சா தொறுத்தன ருரவோர்தந் தென்னவர் தமையுள்கிச் சேவடி துதிசெய்வார். (இ-ள்.) மன்னவன் நினைவு ஆற்றால் - பாண்டியன் கருத்தின் படியே, அத்தோள்வலி மறமள்ளர் - அந்தத் தோள் வலிமையும் கொலைத் தொழிலையு முடைய ஒறுப்பாளர், மந்திரர் பெருமானை - அமைச்சர் பெருமானாகிய அடிகளை, துன்னினர் கொடுபோய் - நெருங்கிக் கொண்டு போய், அஞ்சாது - சிறிதும் பழிபாவங்கட்கு அஞ்சாமல், உன் அரிது என ஒறுத்தனர் - கண்டோர் நினைப்ப தற்கும் அரிய கடுந்தண்ட மென்று கூறுமாறு ஒறுத்தனர்; உரவோர் - சிவஞானச் 'd8 சம்மலாகிய அடிகள், தம் தென்னவர் தமை உள்கி - தமது சுந்தர பாண்டியராகிய சோமசுந்தரக் கடவுளை நினைந்து, சேவடி துதிசெய்வார் - அவரது சிவந்த திருவடியைத் துதிப்பாராயினர். அரசரது நோக்கத்தால் அவன் உள்ளக் கருத்தினை உணர்ந்தன ரென்பார், மன்னவன் நினைவாற்றால் என்றனர்; “ நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற் கண்ணல்ல தில்லை பிற” என்னும் திருக்குறள் நோக்குக. உன் : முதனி'e7çலத் தொழிற் பெயர்; உன்ன என்பது தொக்கதுமாம். உரவோர் - பத்தி ஞான வலியுடையோர். தம் தென்னவர் - தம் பெருமானாகிய சுந்தரபாண்டியர். (67) கலிநிலைத்துறை பூவார் முளரிப் புத்தே ளறியா நெறிதந்தாய் பாவார் தென்சொற் பனுவன் மாலைப் பணிகொண்டாய் தேவா தேவர்க் கரசே சிறியே னுறு துன்பம் ஆவா வென்னா யஞ்சே1 லென்னா யறனேயோ. (இ-ள்.) முளரிப்பூ ஆர் புத்தேள் அறியா - தாமரை மலரில் வசிக்கும் பிரமனும் அறியாத, நெறி தந்தாய் - சன்மார்க்கத்தை அளித்தருளினை; பாஆர் தென் சொல் பனுவல் மாலைப் பணி கொண்டாய் - பா அமைந்த தமிழ் மொழியாகிய மலராற்றொடுத்த பாட்டாகிய மாலையைச் சாத்தும் பணியை அடியேன்பாற் கொண்டருளினை; தேவா - தேவனே, தேவர்க்கு அரசே - திருமால் முதலிய தேவர்கட்கு அரசனே, சிறியேன் உறு துன்பம் - கடையேன் படுந் துன்பத்திற்கு, ஆவா என்னாய் - ஐயோ வென்று இரங்கு கின்றாயில்லை; அஞ்சேல் என்னாய் - அங்ஙனம் இரங்கி அஞ்சற்க என்று கூறியருளுகின்றாயில்லை; அறனேயோ - இது உனக்கு அறமாமோ? பா - செய்யுளுறுப்புக்களுள் ஒன்று; அஃதாவது சேட்புலத்தி லிருந்து ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடமோதுங் கால் இஃது இன்ன செய்யுள் என அறிதற்கு ஏதுவாய்ப பரந்து பட்டு வரும் ஓசை. பனுவல் - பாட்டு, பதிகமுமாம். ஆவா : இரக்கப் பொருள் படும் இடைச்சொல். “ தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி ஆவா வென்ன ஆசைப் பட்டேன் கண்டா யம்மானே” எனவும், “ பஞ்சே ரடியாள் பாகத் தொருவாபவளத் திருவாயால் அங்சே லென்ன ஆசைப் பட்டேன் கண்டா யம்மானே” எனவும் திருவாசகம் ஆசைப்பத்துள் அடிகள் அருளிச் செய்தல் காண்க. ஆவாவென்னா என்னும் பாடத்திற்கு ஆவா என்றிரங்கி எனப்பொருள் கூறுக. (68) நெஞ்சே யுரையே செயலே யெல்லா நினவென்றாய் வஞ்சே போலு மஃதே லின்று வாராயோ பஞ்சே ரடியாள் பாகா கூடற் பரமேட்டீ அஞ்சே லென்னா யிதுவோ1 வருளுக் கழகையா. (இ-ள்.) நெஞ்சே உரையே செயலே எல்லாம் நின என்றாய் - உள்ளமும் உரையும் உடலுமாகிய அனைத்தும் உன்னுடையன என்று கூறியருளினை; வஞ்சே போலும் - அது பொய்யே போலும்; அஃதேல் இன்று வாராயோ - அஃது உண்மையானால் இப்பொழுது வராதிருப்பாயோ, பஞ்சு ஏர் அடியாள் பாகா - செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய அழகிய திருவடிகளையுடைய பிராட்டியாரை ஒரு கூற்றிலுடையவனே, கூடல் பரமேட்டீ - கூடலில் எழுந்தருளிய இறைவனே, அஞ்சேல் என்னாய் - அஞ்சற்க என்று அருளுகின்றா யில்லை; ஐயா - ஐயனே, இதுவோ அருளுக்கு அழகு - இங்ஙனம் வாளாவிருப்பதோ நின்னருளுக்கு அழகாகும்? (ஆகாது.) வஞ்சகம் என்பது வஞ்சு எனக் கடைக்குறையாயிற்று. (69) காவி நேருங் கண்டா நாயிற் கடையான பாவி யேனைப் பொருளாக் கொண்டென் பணிகொண்டாய் ஆவி யோடிவ் வுடலு நினதே யன்றோவின் றோவி வாளா திருந்தா லாரென் னுடையானே. (இ-ள்.) காவிநேரும் கண்டா - நீலோற்பல மலரை ஒத்த திருமிடற்றினை யுடையவனே, நாயில் கடையான பாவியேனை - நாயினுங் கடைப்பட்ட பாவியாகிய என்னையும், பொருளாக் கொண்டு என்பணி கொண்டாய் - ஒரு பொருளாக ஏற்றுக் கொண்டு எனது பணியையும் கொண்டருளினை; ஆவியோடு இவ்வுடலும் நினதே அன்றோ - இவ்வுயிரும் உடலும் நின்னுடையன அல்லவா, இன்று ஓவி வாளாது இருந்தால் - இன்று என்னை நீங்கி வாளா இருந்தாயானால், என் உடையானே யார் - என்னை உடையானே என்னைக் காப்பவர் வேறு யாவர்? (ஒருவருமில்லை என்றபடி). “ நாயிற் கடையான பாவியேனைப் பொருளாக் கொண்டு என்றது நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே யாட்கொண்டாய்” எனவும், ஆவியோ டிவ்வுடலு நினதேயன்றோ என்றது, “ அன்றே யென்ற னாவியு முடலு முடைமை எல்லாமும் குன்றே யனையா யென்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ” எனவும் அடிகள் திருவாசகத்துள் அருளிச்செய்தலாற் பெறப் படுவன. ஆவி உடல் என்பவற்றைத் தனித்தனி வட்டி நினதே என்க. ஓவி - ஒழிந்து. என்னைக் காப்பார் யார் என விரித்துரைக்க. (70) அறுசீரடி யாசிரிய விருத்தம் என்றிரந் திரங்கு மன்ப ரிருசெவி யூடே யேங்குங் கன்றிளஞ் செவியி னல்லான் கனைகுர லோசை போல ஒன்றிய சின்னங் காளங் காகள மொலிக்கு மோசை வென்றிகொள் புரவிச் செந்தூ டிசையெலாம் விழுங்கக் கண்டார். (இ-ள்.) என்று இரந்து இரங்கும் அன்பர் - என்று குறையிரந்து வருந்தும் வாதவூரடிகள், இருசெவி ஊடே -தமது இரண்டு செவியுள்ளும், ஏங்கும் இளங்கன்றின் செவியில் - (தாயைப்பிரிந்து) வருந்தும் இளங்கன்றின் காதில், நல்லான் கனைகுரல் ஓசை போல - நல்ல தாய்ப்பசு கதறுங்குரலொலி சென்றடைதல்போல, ஒன்றிய சின்னம் காளம் காகளம் ஒலிக்கும் ஓசை - பொருந்திய சின்னமும் காளமும் காகளமும் ஒலிக்கும் ஓசை சென்று விழுங்கவும், வென்றி கொள் புரவிச் செந்தூள் பகைவரை வென்று வெற்றி கொள்ளுங் குதிரைகள் வருதலால் மேலெழுந்த சிவந்த புழுதி, திசை எலாம் விழுங்கக் கண்டார் - திக்குகள் அனைத்தையும் விழுங்கவும் பார்த்தனர். விழுங்க என்பதனை முன்னுங்கூட்டி, நல்லான் ஓசை போல இரு செவியூடே சென்று விழுங்க என்க. சின்னம் முதலிய மூன்றும் ஊதும் எக்காளவகை. கேட்டலையும் காண்டலாகக் கூறியது இலக்கணை வகை;‘நாற்றங் கேட்டலும்’என்புழிப்போல. (71) வழுதியு மறிந்து வாத வூரரை விளித்து வந்த தொழுகுல வமைச்சர் தம்பாற் றுகடவி ரன்பு கூர்ந்தெம் பழுதறு கரும நும்போற் பரிக்குநர் யாரை யென்னா எழுதரு மகிழ்ச்சி மேற்கொண் டளவளா யிருக்கு மெல்லை. (இ-ள்.) வழுதியும் அறிந்து - பாண்டியனும் அதனை அறிந்து, வாதவூரரை விளித்து - வாதவூரடிகளை அழைப்பித்து, வந்த தொழுகுல அமைச்சர் தம் பால் - வந்த மறையவர் குலத்தினராகிய மந்திரியார் பால், துகள் தவிர் அன்பு கூர்ந்து - குற்றமில்லாத அன்பு மீதூர்ந்து, எம் பழுது அறு கருமம் - எமது குற்ற மற்ற அரசியல் வினைகளை, நும் போல் பரிக்குநர் யாரை என்னா - உம்மைப்போல ஏற்றுச் செய்து முடிப்பவர் யார் என்று கூறி, எழுதரு மகிழ்ச்சி மேற்கொண்டு - மிக்க மகிழ்ச்சியைப் பொருந்தி, அளவளாய் இருக்கும் எல்லை - அவருடன் அளவளாவியிருக்கும்போது. தொழுகுலம் - தெய்வமுமாம். யாரை, ஐ : சாரியை. எழுதரு - மிகுகின்ற; தரு துணைவினை. (72) பாயிருட் படலங் கீறிப் பல்கதிர் பரப்பித் தோன்றுஞ் சேயிளம் பரிதி வானோ ரனையராய்ச் சிறந்த காட்சி மேயின பாக ரோடும் விலாழியாற் பரவை செய்யும் வாயின வாகி வந்த மாயவாம் பரிக ளெல்லாம். (இ-ள்.) மாய வாம்பரிகள் எல்லாம் - மாயமாகிய தாவுங் குதிரைகள் அனைத்தும், பாய் இருள் படலம் கீறி - பரந்த இருட்படலத்தைக் கிழித்து, பல் கதிர் பரப்பித் தோன்றும் - பல கிரணங்களைப் பரப்பித் தோன்றுகின்ற, சேய் இளம் பரிதி வானோர் அனையராய் - சிவந்த இளஞ்சூரியர்களை ஒத்தவராய், சிறந்த காட்சி மேயின பாகரோடும் - சிறந்த தோற்றத்தைப் பொருந்தின பாகர்களோடும், விலாழியால் பரவை செய்யும் வாயினவாகி வந்த - விலாழியாற் கடலினைச் செய்யும் வாயினையுடையனவாகி வந்தன. ஆதித்தர் பன்னிருவராகலின் பரிதி வானோர் என்றார். விலாழி யாற் பரவை செய்யும் என்றமையால் பரிகளெல்லாம் கடலினலை போன்றன எனவும், பாகரெல்லாரும் கடலிலுதித்த ஆதித்தர்கள் போன்றனர் எனவும் கொள்க. வந்த, அன் பெறாத முற்று. (73) வண்டுழு தாரி னான்றன் மரபின்மன் னவரு முன்னாட் கண்டறி யாத காட்சிக் கவனவாம் பரியை நோக்கி அண்டர்நா யகன்போ னாமு மாயிரங் கண்பெற் றாலும் உண்டமை யாவென் றுள்ளக் குறிப்பொடு முவகை பூத்தான். (இ-ள்.) வண்டுஉழு தாரினான் - வண்டுகள் கிண்டுகின்ற வேப்ப மலர் மாலையை யணிந்த பாண்டியன், தன் மரபின் மன்னவரும் முன்னாள் கண்டறியாத - தன் மரபிற்போந்த மன்னவர்களும் முற்காலத்துப் பார்த்தறியாத, காட்சி கவன வாம்பரியை நோக்கி - தோற்றத்தையும் விரைந்த செலவினையுமுடைய தாவுங் குதிரை களைப் பார்த்து, நாமும் அண்டர் நாயகன் போல் ஆயிரம் கண்பெற்றாலும் - நாமும் தேவேந்திரனைப் போல ஆயிரம் விழிகளைப் பெற்றாலும், உண்டு அமையா என்ற உள்ளக்குறிப் பொடும் - (அவற்றாலும் இவற்றின் பொலிவு) பருகி முடியா என்ற மனக்குறிப்புடன், உவகை பூத்தான் - மகிழ்ந்தான். கவனம் - வேகம். அண்டர் - தேவர். நோக்குதலை உண்டலாகக் கூறினார்; “ உண்டற் குரிய வல்லாப் பொருளை உண்டன போலக் கூறலு மரபே” என்பது தொல்காப்பியம்; இனி, இதனை வாரா மரபின வரக் கூறுதலும் என்னும் எச்சவியற் சூத்திரத்து ஒன்றென முடித்தலாற் கொள்ளலுமாம். (74) தானென மகிழ்ச்சி யென்னத் தலைதடு மாறி வேந்தன் மானவெம் பரிமேல் வந்த வயவரை வியந்து மிக்கார் ஆனவ ரிவருள் யாரென் றமைச்சரை வினவ வையா யானது வறியே னென்றார் யாவையு மறிய1 வல்லார். (இ-ள்.) வேந்தன் - பாண்டியன், தான் என மகிழ்ச்சி என்னத் தலைதடுமாறி - தான் என்றும் மகிழ்ச்சி என்றும் பாகுபடுத்து உணர முடியாமல் மயங்கி, மான வெம்பரி மேல் வந்த வயவரை வியந்து - பெருமை பொருந்திய வெய்ய குதிரைகளின் மேல் ஏறிவந்த வீரரை நோக்கி வியப்புற்று, இவருள் மிக்கார் ஆனவர் யார் என்று அமைச்சரை வினவ - இவருள்ளே தலைவர் யார் என்று மந்திரியா ராகிய அடிகளை வினாவ, யாவையும்அறியவல்லார் - அனைத்தையும் அறிய வல்ல அவ்வடிகள், ஐயா - ஐயனே, யான் அது அறியேன் என்றார் - யானும் அதனை அறியேனென்று கூறினர். தான் வேறு மகிழ்ச்சி வேறு என்னுமாறின்றி மகிழ்ச்சியே வடிவாயினன் என்பார் - தானென மகிழ்ச்சி யென்னத் தலைதடு மாறி என்றார். ஆனவர் : எழுவாய்ச் சொல். எப்பொருளை அறிந் தால் மற்றெல்லாம் அறிந்தனவாகுமோ அப்பரம் பொருளையே அறியவல்லாராகலின் யாவையு மறிய வல்லார் என்றார். (75) எண்சீரடியாசிரிய விருத்தம் அண்டமெலா மாதார மாகத் தாங்கு மானந்தத் தனிச்சோதி யண்டந் தாங்குஞ் சண்டமறைப் பரிதனக்கா தார மாகித் தரிக்கவொரு காலத்து மசைவி லாத புண்டரிகத் தாளசையப் பாச நீக்கும் புனைகரத்தாற் பரிபூண்ட பாசம் பற்றிக் கொண்டரச னெதிர்போந்து மன்னா வெங்கள் குதிரையேற் றஞ்சிறிது காண்டி யென்றார். (இ-ள்.) அண்டம் எலாம் ஆதாரமாகத் தாங்கும் - அண்டங் களனைத்தையும் ஆதாரமாக நின்று தாங்கியருளும், ஆனந்தத் தனிச்சோதி - இன்பவடிவாகிய ஒப்பற்ற ஒளிமயமாகிய இறைவர், அண்டம் தாங்கும் சண்ட மறைப்பரி - அண்டத்தால் தாங்கப்படும் வேகமுடைய வேதப் புரவி, தனக்கு ஆதாரமாகித் தரிக்க - தமக்கு ஆதாரமாகித் தம்மைத் தாங்கா நிற்க, ஒரு காலத்தும் அசைவு இலாதபுண்டரிகத்தாள் அசைய - ஒரு காலத்தினும் அசையாத தாமரை மலர் போலுந் திருவடிகள் அசைய, பாசம் நீக்கும் புனைகரத்தால் - உயிர்களின் பாசத்தைப் போக்கும் அழகிய திருக்கையினால், பரிபூண்ட பாசம் பற்றிக்கொண்டு - குதிரைவாயிற் பூண்ட பாசத்தைப் பிடித்துக் கொண்டு, அரசன் எதிர் போந்து - அரசனெதிரே போய், மன்னா - மன்னனே, எங்கள் குதிரை ஏற்றம் சிறிதுகாண்டி என்றார் - எங்கள் குதிரை ஏற்றத்தினைச் சிறிது காண்பாயாக என்று கூறியருளினர். அண்டங்களுக்கெல்லாம் சார்பாகித் தனக்கொரு சார்பின்றி நிராதாரனாயுள்ள இறைவன் அண்டத்தினாலும் தரிக்கப்படும் ஆதேயமாகிய வேதப்பரி தனக்கு ஆதாரமாகி நின்று தாங்குமாறு வந்தான் என அவனது அருள் விளையாடலை வியந்து கூறியவாறு. சண்டம் - வலிமை, வேகம். “இறைவன் போக்கும் வரவும் புணர்வும் இலான்” ஆகையால் ‘ஒரு காலத்தும் அசை விலாத புண்டரி கத்தாள்’ என்றார். பாசம் நீக்கும் கரத்தாற் பாசம்பற்றி என நயம்படக் கூறினார். (76) அறுசிரடியாசிரிய விருத்தம் இசைத்தவைங் கதியுஞ் சாரி யொன்பதிற் றிரட்டி யான1 விசித்திர விகற்புந் தோன்ற வேந்தனு மவையு மன்றித் திசைப்புலத் தவரு மேலைத் தேவரு மருள மேற்கொண் டசைத்தன ரசைவற் றெல்லா வுலகமு மசைக்க வல்லார். (இ-ள்.) இசைத்த ஐங்கதியும் - (பரிநூலிற்) கூறிய மல்லகதி முதலிய ஐந்து கதிகளும், ஒன்பதிற்று இரட்டியான விசித்திர சாரி விகற்பும் - பதினெட்டாகிய விசித்திர நடை விகற்பங்களும், தோன்ற - வெளிப்பட, வேந்தனும் அவையும் அன்றி - மன்னனும் அவன் அவையிலுள்ளாரு மல்லாமல், திசைப்புலத்தவரும் மேலைத் தேவரும் மருள - திக்குப்பாலகரும் விண்ணுலகிலுள்ள தேவர்களுங் கண்டு மருளுமாறு, அசைவு அற்று எல்லா உலகமும் அசைக்க வல்லார் - தான் அசைதலின்றி உலகமனைத்தையும் அசைக்க வல்லராகிய அவ்விறைவர், மேற்கொண்டு அசைத்தனர் - அக் குதிரைமேல் இவர்ந்தருளி அதனை நடத்திக் காட்டினர். ஐங்கதி - மல்லகதி. மயூரகதி, வானரகதி, வல்லியகதி, சரகதி என்பன; இவற்றுள் சரகதி நீக்கி இடபகதி கொள்வாரும், பிறவாறு வேறுபட வுரைப்பாருமுளர். சாரி - குதிரை நடை. சுக்கிரநீதி இரண்டாம் அத்தியாயத்தில் குதிரை நடை பதினொரு வகை யாகவும், நான்காம் அத்தியாயத்தில் ஆறுவகையாகவும் கூறப் பட்டுள. இவ்வாசிரியர் பதினெட்டாகக் கூறுகின்றனர். தொகுத்தும் விரித்தும் கூறுமுறைபற்றி நூல்கடோறும் இங்ஙனம் வேறுபடுவன பலவுள. திசைப்புலத்தவர் - எண்டிக்கிலுள்ளாரும் என்றுமாம். தாம் அசைவற இருந்தே எல்லாவுலகமும் அசைக்க வல்லவர் தாமும் அசைந்து ஒரு குதிரையை அசைப்பது வியப்பின்றென்பார் ‘மேற் கொண் டசைத்தன ரசைவற் றெல்லா வுலகமு மசைக்க வல்லார்’ என்றார். (77) ஆண்டகை யவர்போ னின்ற வடுகணத் தவருந்தத்தங் காண்டகு புரவி யெல்லா நடத்தினர் காட்டக் கண்டு பாண்டிய னவரை நோக்கி நுங்களிற் பதியாந்தன்மை பூண்டவர் யாவ ரென்றா னிவரென்றார் புரவிவீரர். (இ-ள்.) ஆண்தகை அவர் போல் - ஆண்டன்மையையுடைய அவ்விறைவர் நடத்திக் காட்டினமைபோல், நின்ற அடுகணத்தவரும் - சூழ்ந்து நின்ற வெற்றி மிக்க சிவகணத்தவராகிய குதிரை வீரரும், தத்தம் காண் தகுபுரவி எல்லாம் நடத்தினர் காட்ட - தங்கள் தங்கள் அழகிய குதிரைகள் அனைத்தையும் நடத்திக்காட்ட, பாண்டியன் கண்டு - பாண்டியன் அதனைக் கண்டு, அவரை நோக்கி - அவர் களைப் பார்த்து, நுங்களில் பதியாம் தன்மை பூண்டவர் யாவர் என்றான் - உங்களுள்ளே தலைமைத் தன்மை பூண்டவர் யாவர் என்று வினவினன்; புரவிவீரர் இவர் என்றார் - குதிரைவீரர் இவரென்று காட்டினர். காண்டகு - காணத்தக்க; அழகு பொருந்திய. நடத்தினர், முற்றெச்சம். (78) சுட்டுதற் கரிய சோதி சுருதிவாம் புரவி யோடு மட்டவிழ் தாரி னான்முன் வருதலுங் கருணை நாட்டம் பட்டுள மயங்கித் தன்னை மறந்தெழீஇப் பாண்டி வேந்தன் தட்டவிழ் கமலச் செங்கை தலைமிசைக் கூப்பி நின்றான். (இ-ள்.) சுட்டுதற்கு அரிய சோதி - சுட்டுதற்கரிய பரஞ்சோதியாகிய இறைவர், வாம்சுருதிப் புரவியோடு - தாவுகின்ற வேதப் பரியுடன், மட்டு அவிழ் தாரினான் முன்வருதலும் - மணம் விரிந்த வேப்பமலர் மாலையையணிந்த பாண்டியன் முன்வந்த வளவில், கருணை நாட்டம்பட்டு - அவரது அருட் பார்வை படுதலால், உளம் மயங்கி- மனமயங்கி, தன்னை மறந்து எழீஇ - தன்னை மறந்து எழுந்து, பாண்டி வேந்தன் - அப்பாண்டி மன்னன், தட்டு அவிழ் கமலச் செங்கை- தட்டம் போல் மலர்ந்த தாமரை மலர்போன்ற சிவந்த கைகளை, தலைமிசைக் கூப்பி நின்றான் - தலையின்மேற் குவித்து நின்றனன். சுட்டுதற்கரிய - மாற்றம் மனம் கழிய நின்ற; சுட்டறிவைக் கடந்துநின்ற; இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்றியம்பவொண்ணாத. பட்டு - படுதலால்; எச்சத்திரிபு. தட்டு - தட்டம், வட்டில்; இதழுமாம். தான் அரசனென்பதனை மறந்து கூப்பி நின்றான். (79) பின்னவ னாணை யாலே மறைப்புண்ட பெருநீர்க் கூடன் மன்னவ னறிவு தோன்ற வின்றொரு வயமா வீரன் தன்னைநாங் கண்டெ ழுந்து தடங்கரங் கூப்பி நின்ற தென்னெனத் தவிசின் மீள விருந்திட நாணி நின்றான். (இ-ள்.) பின் அவன் ஆணையால் மறைப்புண்ட - பின் அவ்விறைவன் ஆணையினால் மறைக்கப்பட்ட, பெருநீர்க்கூடல் மன்னவன் - வையையாறு சூழ்ந்த நான் மாடக் கூடலின் மன்ன வனாகிய பாண்டியன், அறிவு தோன்ற - தன்னறிவு தோன்ற, இன்று - இப்பொழுது. ஒரு வயமாவீரன் தன்னைக் கண்டு - ஒரு வெற்றி மிக்க குதிரை வீரனைப் பார்த்து, நாம் எழுந்து தடம் கரம் கூப்பி நின்றது என்என - நாம் சிம்மாசனத்தினின்றும் எழுந்து பெரிய கைகளைத் தலைமேற் குவித்து வணங்கி நின்றது என்னே என்று கருதி, மீள - மீண்டும், தவிசின் இருந்திட நாணி நின்றான் - அவ்வாதனத்தின்கண் அமருவதற்கு வெள்கி நின்றனன். மறைப்புண்ட - பழைய அறிவு மறைக்கப்பெற்றுத் தன்னை மறந்திருந்த. பெருநீர்; ஆகுபெயர். ஆணையாலே அறிவு தோன்ற என்க. அறிவு - பழைய பாச அறிவு. (80) நிற்கின்றான் முகத்தை நோக்கி நேர்நின்ற மறைமா வீரர் பொற்குன்றாம் புயத்தா யுன்றன் பொருளெலாங் கொண்டு போந்துன் சொற்குன்றா வமைச்சன் றானே நமக்குநஞ் சூழ னீங்கா மற்குன்றா நமர்க்கு மார வழங்கினான் வழங்க லாலே. (இ-ள்.) நிற்கின்றான் முகத்தை நோக்கி - அங்ஙனம் நிற்கும் பாண்டியன் முகத்தைப் பார்த்து, நேர் நின்ற மறைமா வீரர் - அவனெதிரே நின்ற வேதப் பரியினையுடைய வீரர், பொன்குன்று ஆம் புயத்தாய் - பொன்மலைபோலுந் தோளையுடையாய், உன்றன் பொருள் எலாம் கொண்டு போந்து - உன்றன் பொருள் எலாம் கொண்டு வந்து, உன்சொல் குன்றா அமைச்சன் - உனது சொல்லைக் கடவாத அமைச்சனாகிய வாதவூரன், தானே - தானாகவே, நமக்கும் - எமக்கும், நம் சூழல் நீங்கா மல் குன்றா நமர்க்கும் - எமது அருகினின்றும் நீங்காத வலிகுறையாத பரிசனங்கட்கும், ஆர வழங்கினான் - தெவிட்டக் கொடுத்தனன்; வழங்கலால் - அங்ஙனம் கொடுத்தலினால். மறைமாவீரர் என்பது மேல் ‘பரிவிலை வழக்கீ தென்றார் ’ என்பது கொண்டு முடியும். உன் சொல் குன்றா அமைச்சன் என்பதற்கு உனது புகழ் குன்றாமைக்குக் காரணமாகிய அமைச்சன் என்றும் பொருள் கொள்க. குதிரை வீரர்க்கும் அடியார்க்கும் பொருந்துமாறு ‘நம் சூழல் நீங்கா நமர்’ என்றார். (81) வானவர் தமக்கே யன்றி மனிதருக் கிசையத் தக்க வானவன் றறிஞ ரிட்ட விலைவரம் பகன்ற நூலின் மானமுள் ளனவாய் நல்ல வாசிக ளுனக்கு வந்த ஊனமில் பரிமா விற்கும் வாணிக முரைப்பக் கேட்டி. (இ-ள்.) வானவர் தமக்கே அன்றி - தேவர்களுக்கு இசைவதே யல்லாமல், மனிதருக்கு இசையத்தக்கவான அன்று - மக்களுக்கு இசையத்தக்கனவல்ல; அறிஞர் இட்டவிலை வரம்பு அகன்ற - பரிநூற்புலவர் மதிக்கும் விலையின் எல்லையைக் கடந்தன; நுலின் மானம் உள்ளனவாய் - பரிநூலிற் கூறும் பெருமை உள்ளனவாய், நல்ல வாசிகள் உனக்கு வந்த - நன்மையமைந்த குதிரைகள் உனக்கு வந்தன; ஊனம் இல் பரிமா விற்கும் வாணிகம் உரைப்பக் கேட்டி - குற்றமில்லாத குதிரைகளை விற்கும் வாணிகமுறையினைச் சொல்லக் கேட்பாயாக. மனிதருக்கிசையத்தக்கன வல்ல, அறிஞரிட்ட விலைவரம்ப கன்றன என்பன அவற்றைப் புகழ்ந்துரைப்பன வன்றி, உண்மையைக் குறிப்பிடுவன வாதலும் காண்க. இசையத்தக்கவல்ல, விலைவரம்ப கன்றன அத்தன்மையவான நல்ல வாசிகள் என்க. அகன்ற, வந்த என்பன அன்பெறாத பலவின்பால் முற்றுக்கள். (82) இன்னவாம் பரிக ளென்பா லின்றுநீ கயிறு மாறி நின்னவாக் கொள்ளு நீரா னின்னவாம் பரியே நாளை என்னவா யிருந்த வேனு மெனக்குமுன் றனக்குங் கொண்டு மன்னவா கரும மில்லை பரிவிலை வழக்கீ தென்றார். (இ-ள்.) மன்னவா - மன்னனே, இன்ன வாம் பரிகள் - இந்தத் தாவுங் குதிரைகளை, இன்று நீ என்பால் - இப்பொழுது நீ என்னிடத்தில், கயிறுமாறி நின்னவாக் கொள்ளும் நீரால் - கயிறுமாறி நின்னுடையனவாக ஏற்றுக்கொள்ளு முறையினால், பரி நின்னவே ஆம் - இக்குதிரைகள் நின்னுடையனவே யாகும்; நாளை என்னவாய் இருந்த வேனும் - (அங்ஙனம் ஆதலினால்) நாளை இவை என்ன தன்மையை அடைந்தனவாயினும், எனக்கும் உன்தனக்கும் - எனக்கும் உனக்கும், கொண்டு - இது பற்றி, கருமம் இல்லை - யாதொரு வழக்குமில்லை; பரிவிலை வழக்கு ஈது என்றார் - குதிரை வியாபார முறைமை இது வாகும் என்று கூறியருளினார். இன்ன ஆம் பரிகள் எனப் பிரித்து இத்தன்மையனவாகிய புரவிகள் என்றும் பொருள்கொள்க. கயிறுமாறுதல், மாடு, குதிரை முதலியன வாங்குவோர் அவை தமக்குரிமையானமைக்கு அடையாளமாக வேறு கயிறு பூட்டிக் கொள்ளுதல். இது கொண்டு என வருவித்துரைக்க. (83) அப்பொழு தரசன் றானு மகமகிழ்ந் ததற்கு நேர்ந்தெம் மெய்ப்புக ழமைச்சர் தம்மின் மேம்படு வாத வூரர் ஒப்பருந் திறத்த ராகி யும்மிடை நட்பான் மிக்க துப்புர வுடைய ரானா ரெனநனி சொல்லி னானே. (இ-ள்.) அபபொழுது அரசன் தானும் அகமகிழ்ந்து - அது போது மன்னனும் மனமகிழ்ந்து, அதற்கு நேர்ந்து - அதற்கு உடன்பட்டு, எம்மெய்ப்புகழ் அமைச்சர் தம்மில் - எமது உண்மைப் புகழினையுடைய அமைச்சருள், மேம்படு வாதவூரர் - சிறப்பெய்திய திருவாதவூரர், ஒப்பு அருந் திறத்தராகி - ஒப்பற்ற திறமுடையராய், உம்மிடை நட்பால் - உம்மிடத்துப்பூண்ட நட்பினால், மிக்க துப்புறவு உடையரானார்என - மிக்க தூய்மையுடைய வரானாரென்று, நனி சொல்லினான் - மிகப் பாராட்டிக் கூறினான். துப்புரவு - தூய்மை. ஒழுங்கு. நனிசொல்லினான் - மிகப் பாராட்டினான். (84) உரகத வாரந் தோற்றா துயர்மறைப் பரிமேல் வந்தார் மரகத நிறத்து நிம்ப மாலைதாழ் மார்பி னாற்குக் குரகதங் கயிறு மாறிக் கொடுப்பவர் பொதுமை யாய1 துரகத விலக்க ணங்கள் சொல்லுவான் றொடங்கி னாரே. (இ-ள்.) உரகத ஆரம் தோற்றாது - பாம்பணியைக் காட்டாமல் மறைத்து, உயர் மறைப் பரிமேல் வந்தார் - உயர்ந்த வேதக் குதிரைமேல் வந்த இறைவர், மரகத நிறத்து நிம்பமாலை தாழ் மார்பினாற்கு - மரகதம் போன்ற நிறத்தினையுடைய வேப்ப மலர்மாலை தொங்கும் மார்பினையுடைய பாண்டியனுக்கு, குரகதம் கயிறுமாறிக் கொடுப்பவர் - குதிரைகளைக் கயிறுமாறிக் கொடுக்கலுறுவார், பொதுமையாய துரகத இலக்கணங்கள் - பொதுவாகிய குதிரை இலக்கணங்களை, சொல்லுவான் தொடங் கினார் - சொல்லத் தொடங்கினார். உரகதம் - பாம்பு; மார்பால் ஊர்வது என்னும் பொருட்டு. வந்தார், பெயர், கொடுப்பவர் - கொடாநின்றவர். (85) காயும்வேன் மன்ன வோரிக் கடும்பரி யமையம் வந்தான் ஞாயிலுந் தாண்டிச் செல்லு நாட்டமு நுழையாச் சால வாயிலு நுழையுங் கண்ட வெளியெலாம் வழியாச் செல்லுந் தீயவெம் பசிவந் துற்றாற் றின்னாத வெனினுந் தின்னும். (இ-ள்.) காயும்வேல் மன்ன - பகைவரைச் சினக்கும் வேற்படையை யுடைய வேந்தனே, ஓர் இக்கடும்பரி - ஒப்பற்ற இந்த வேகமுடைய குதிரைகள், அமையம் வந்தால் - போர் புரிதற்குரிய சமையம் நேரின், ஞாயிலும் தாண்டிச் செல்லும் - மதிலுறுப்பையும் தாவிச் செல்லும்; நாட்டமும் நுழையாச் சால வாயிலும் நுழையும் - பார்வையும் நுழையாத பலகணி வாயிலிலும் நுழைந்து செல்லும்; கண்ட வெளி எலாம் வழியாச் செல்லும் - பார்த்த வெளி களனைத்தையும் வழியாகக் கொண்டு செல்லும்; தீய வெம்பசி வந்துற்றால் - மிகக் கொடியபசி வந்துற்றால், தின்னாத எனினும் தின்னும் - தின்னப்படாத வைக்கோல் முதலியவற்றையுந் தின்னும். ஓர் - அறிவாயாக என்றுமாம். ஓரியாகிய பரி என உண்மை புலப்படுத்துரைக்கும் நயம் பாராட்டற்பாலது; ஓரி - நரி. ஞாயில்- சூட்டு என்னும் மதிலுறுப்பு. நரியாதற்கேற்ப, ஞாயிலும் என்பதற்கு நாயைக் காட்டிலும் என்னும் பொருளும், சாலவாயில் என்பதற்கு வலையின் துவாரம், மனையின் நீர் வழிவாயில் என்னும் பொருள்களும் கொள்ளுதலும் பொருந்தும். காடு கரை முதலிய வெல்லாம் வழியாகச் செல்லும் என்றும், பிணம் முதலியனவும் தின்னும் என்றும் நரிக் கேற்பப் பொருள் கொள்க. தின்னாத - தின்னப்படாதன; வினையாலணையும் பெயர். பொதுவான குதிரையிலக்கணங்கள் சொல்லத் தொடங்கினவர் இடையே தாம் கொணர்ந்த குதிரைகளின் தொழிற் பண்புகள் சில கூறினார். (86) கலிவிருத்தம் பொருவில்சீ ரிலக்கணப் புரவி யொன்றுதான் ஒருவன திடைவதிந் துறையி னொல்லென மருவுறுந் திருமகண் மல்லற் செல்வமும் பெருகுறுங் கீர்த்திகள் பல்கும் பெற்றியால். (இ-ள்.) பொருவு இல் சீர் இலக்கணப்புரவி ஒன்று தான் - ஒப்பில்லாத சிறந்த இலக்கணம் நிறைந்த ஒரு குதிரை, ஒருவனது இடை வதிந்து உறையின் - ஒருவனிடத்துத் தங்கி உறையுமாயின், ஒல்லெனத் திருமகள் மருவுறும் - விரைந்து திருமகள் வந்து அவனைப் பொருந்துவாள்; மல்லல் செல்வமும் பெருகுறும் - வளப்பமிக்க செல்வமும் பெருகும்; கீர்த்திகள் பெற்றியால் பல்கும் - புகழ்களும் பல திறத்தால் மிகா நிற்கும். (87) ஒல்லென : விரைவுக் குறிப்பு. நெய்த்திடு மாந்தளிர் நிறத்த நாவின வைத்திடு குளம்புக ளுயர்ந்த வார்ந்துநேர் ஒத்திடு மெயிற்றின வுரமுங் கண்டமும் பைத்திடு மராப்படம் போன்ற பாடலம். (இ-ள்.) நெய்த்திடும் மாந்தளிர் நிறத்த நாவின - பசையினை யுடைய மாந்தளிர் போன்ற நிறத்தினையுடைய நாவினையுடை யனவாய், வைத்திடு குளம்புகள் உயர்ந்த - நிலத்தில் வைக்குங் குளம்புகள் உயர்ந்தனவாய், வார்ந்து நேர் ஒத்திடும் எயிற்றின - நீண்டு தம்முளொத்த பற்களை யுடையனவாய், உரமும் கண்டமும் பைத்திடும் அராப்படம் போன்ற - மார்பும் மிடறும் பரந்த பாம்பின் படம் போன்றனவாய குதிரைகள், பாடலம் - பாடலமெனப் பெயர் பெறும். நாவினவும்உயர்ந்தனவும் எயிற்றினவும்போன்றனவும் ஆகிய குதிரைகள் என விரித்துரைத்தலுமாம். குளம்புகள் உயர்ந்த, உரமும் கண்டமும் அராப்படம் போன்ற எனச் சினை வினைகள் முதலோடு பொருந்தின. இது பாடலம் என்னும் குதிரையின் இலக்கணம் கூறிற்று.(88) அகலிய நுதலின வாய்ந்த குஞ்சிபோல் நிகரறு கொய்யுளை நிறமொன் றாயின புகரறு கோணமூன் றாகிப் பொற்புறு முகமுடை யனவய மொய்கொள் கோடகம். (இ-ள்.) அகலிய நுதலின - அகன்ற நெற்றியை யுடையனவாய், ஆய்ந்த குஞ்சிபோல் நிகர் அறு கொய்யுளை - சிக்கறுத்த மயிர் போல (வாய்ந்து) ஒப்பற்ற புறமயிர், நிறம் ஒன்று ஆயின - ஒரே நிறம் வாய்ந்தனவாய், புகர் அறு கோணம் மூன்று ஆகி - குற்றமற்ற மூன்று கோணமுடையதாய், பொற்பு உறு முகம் உடையன - அழகு பொருந்திய முகத்தை யடைனவாய குதிரைகள், வயம் மொய் கொள்கோடகம்- வெற்றியும் வலியுமுடைய கோடகம் எனப்பெயர் பெறும். கொய்உளை - கத்தரித்த பிடரிமயிர். முக்கோணமாகிப் பொற்புறும் முகம் என்க. மொய் - வலிமை. இது கோடகம் என்னும் குதிரையின் இலக்கணம் கூறிற்று. (89) முட்டிய சமரிடை முகத்தில் வாளினால் வெட்டினு மெதிப்பதாய்க் குரங்கு வேங்கைதோல் பட்டிமை நரியரி சரபம் பாய்முயல் எட்டிய கதியின விவுளி யென்பவே. (இ-ள்.) முட்டிய சமரிடை - நெருங்கிய போரின்கண், முகத்தில் வாளினால் வெட்டினும் - தம் முகத்தில் வாளினால் வெட்டினாலும், எதிர்ப்பதாய் - எதிர்த்துப் போர் புரிவதாய், குரங்கு வேங்கை தோல் - குரங்கும் புலியும் யானையும், பட்டிமை நரி அரிசரபம் பாய்முயல் - வஞ்சகமுள்ள நரியும் சிங்கமும் சரபப்புள்ளும் பாய்கின்ற முயலுமாகிய இவற்றின், எட்டிய கதியின - மிக்க கதியினையுடைய குதிரைகளை, இவுளி என்ப - இவுளி என்று கூறுவர். தோல் - யானை, பட்டிமை - படிறு, சரபம் - சிம்புள், எதிர்ப் பதாய் கதியின என ஒருமையும் பன்மையும் விரவிவந்தன. இஃது இவுளி என்னும் குதிரையின் இலக்கணம் கூறிற்று. (90) உன்னத நீளமுண் டாகிச் சங்குவெண் கன்னலின் வாலிய விலாழி கால்வதாய்ப் பின்னமா கியதனி வன்னம் பெற்றுமை வன்னமு முடையது வன்னி யாவதே. (இ-ள்.) உன்னதம் நீளம் உண்டாகி - உயரமும் நீளமுமுடைய தாய், சங்குவெண் கன்னலின் - சங்கும் வெள்ளைச் சருக்கரையும் போல, வாலிய விலாழி கால்வதாய் - வெண்மையாகிய வாய் நுரையைக் கக்குவதாய், தனிபின்னமாகிய வன்னம் பெற்று - ஒப்பற்ற பிங்கல நிறம் பெற்று, மைவன்னமும் உடையது - அதனோடு கருநிறமுமுடைய குதிரை, வன்னியாவது - வன்னி என்று சொல்லப் படுவதாகும். பொருந்திய உயரமும் நீளமும் உடையதாகி என்க. இது வன்னி என்னும் குதிரையின் இலக்கணம் கூறிற்று. (91) திணிதரு கழுத்தினிற் சிறந்த தெய்வத மணியுள தாகியெண் மங்க லத்ததாய் அணிதரு பஞ்சகல் யாண முள்ளதாய்க் குணிதரு நீரது குதிரை யாவதே. (இ-ள்.) திணிதரு கழுத்தினில் - திண்ணிய கழுத்தில், சிறந்த தெய்வதமணி உளதாகி - சிறந்த தெய்வமணியுள்ளதாய், எண்மங்கலத்த தாய் - அட்டமங்கல முடையதாய், அணிதரு பஞ்சகல்யாணம் உள்ளதாய் - அழகிய பஞ்சகல்யாணமுள்ளதாய், குணிதரு நீரது - இங்ஙனம் வரையறுக்கப்பட்ட பெற்றியையுடைய பரி, குதிரை ஆவது - குதிரை என்னும் பெயருடையதாகும். தெய்வமணி - கழுத்தில் வலமாகச் சுழித்திருக்கும் சுழி; இதனை இப்படலத்து 111-ஆம் செய்யுளிலும், எண்மங்கலம், பஞ்ச கல்யாணம் என்பவற்றின் இலக்கணங்களை 110-ஆம் செய்யுளிலும் காண்க. குதிரை யென்பது ஒரு வகைக்குச் சிறப்புப் பெயருமாயிற்று. இது குதிரை என்னும் குதிரையின் இலக்கணம் கூறிற்று. (92) குங்குமங் கருப்புரங் கொழுந்திண் காரகிற் பங்கமான் மதமெனக் கமழும் பாலதாய்ச் சங்கமு மேகமுஞ் சரப முங்கொடுஞ் சிங்கமும் போலொலி செய்வ தாம்பரி. (இ-ள்.) குங்குமம் கருப்புரம் கொழுந் திண்கார் அகிற்பங்கம் மான்மதம் என - குங்குமமும் கருப்பூரமும் கொழுவிய திண்ணிய கரிய அகிற்குழம்பும் மான்மதமுமாகிய இவற்றின் மணமென, கமழும் பாலதாய் - நறுமணங்கமழும் பான்மையை யுடையதாய், சங்கமும் மேகமும் சரபமும் - சங்கும் முகிலும் சிம்புட் புள்ளும் - கொடுஞ் சிங்கமும்போல் ஒலிசெய்வது - கொடிய சிங்கமுமாகிய இவற்றைப் பொல் ஒலிக்குங் குதிரை, பரி ஆம் - பரி என்னும் பெயருடையதாகும். பங்கம் - சேறு, மான்மதம் - கத்தூரி. இது பரி என்னும் குதிரையின் இலக்கணம் கூறிற்று. (93) நாலுகால் களுங்கடைந் தெடுத்து நாட்டினாற் போல்வதாய்க் கொட்புறும் போது சுற்றுதீக் கோலையொப் பாகிமேற் கொண்ட சேவகன் காலினு ளடங்குவ தாகுங் கந்துகம். (இ-ள்.) நாலுகால்களும் கடைந்து எடுத்து நாட்டினால் போல்வதாய் - நான்கு கால்களும் கடைந்து எடுத்து நாட்டி வைத்தாற் போல்வதாய், கொட்புறும் போது - சுழலும் போதில், சுற்று தீக்கோலை ஒப்பாகி - கொள்ளிவட்டம் ஒப்பதாகி, மேற் கொண்ட சேவகன் காலினுள் அடங்குவது - ஏறிய வீரனுடைய காலினுள் அடங்கும் குதிரை, கந்துகம் ஆகும் - கந்துகம் என்னும் பெயருடையதாகும். கொட்புறல் - வட்டமாகச் சாரிவருதல். விரைவு மிகுதியால் குதிரையின் வடிவு புலப்படாது வட்டவடிவே தோன்றுதலின் சுற்று தீக்கோலை உவமங் கூறினார். ஒப்பாகி - ஒப்பதாகி, இது கந்துகம் என்னும் குதிரையின் இலக்கணம் கூறிற்று. (94) அரணமுந் துருக்கமு மாறுந் தாண்டிடும் முரணின வாகியிம்1 முற்றி லக்கணப் புரணமெல் லாநிறை புரவி போந்தன இரணவே லாய்வய தெட்டுச் சென்றவால். (இ-ள்.) அரணமும் துருக்கமும் ஆறும் தாண்டிடும் முரணின வாகி - மதிலும் மலைமேற் கோட்டையும் நதியுமாகிய இவற்றைத் தாண்டிடும் வலியினையுடையனவாய், இம்முற்று இலக்கணப் புரணம் எல்லாம் நிறைபுரவி போந்தன - இம்முழு இலக்கணமும் ஒளியும் நிறைந்த குதிரைகள் வந்தன; இரண வேலாய் - பகைவரைப் புண்படுத்தும் வேற்படையேந்திய பாண்டியனே, வயது எட்டு சென்ற - இவைகள் எட்டு வயதாயின வாகும். துருக்கம் - கோட்டை; காடுமாம். இலக்கணமும் புரணமும் என்க. புரணம் - ஒளி; கதியுமாம். ஆல் : அசை. (95) பகைத்திற முருக்குமிப் பரிகண் மன்னநீ உகைத்திடத் தக்கவென் றோதி வேதநூற் சிகைத்தனிச் சேவகர் திரும்பித் தம்மனோர் முகத்தினை நோக்கினார் மொய்த்த வீரரும். (இ-ள்.) பகைத்திறம் முருக்கும் இப்பரிகள் - வலிமிக்க பகைவர்களைக் கொல்லும் இக்குதிரைகள், மன்ன - வேந்தனே, நீ உகைத்திடத்தக்க வென்று ஓதி - நி செலுத்தத் தக்கவை என்று சொல்லி, வேதநூல் சிகைத்தனிச் சேவகர் - மறைநூலின் முடிவாகிய உபநிடதத்தின் உட்பொருளாகிய இறைவர், தம்மனோர் முகத்தினைத் திரும்பி நோக்கினார் - தமது கணங்களின் முகத்தைத் திரும்பிப் பார்த்தனர்; மொய்த்த வீரரும் - சூழ்ந்துள்ள குதிரை வீரரும். வேதப் புரவியின்மீது வந்தமையுந் தோன்ற ‘வேதநூற் சிகைத் தனிச் சேவகர்’ என்றார். தம்மனோர் - தமர் ; கணங்கள். (96) வாம்பரி மறைக்கெலாம் வரம்பு காட்டுவ தாம்படி கண்டவ ரறிவும் பிற்படப் போம்படி முடுக்கினார் புரவி யாவையும் வேம்பணி தோளினான் வியப்பு மெய்தியே.1 (இ-ள்.) வாம்பரி மறைக்கு எலாம் வரம்பு காட்டுவதாம்படி - தாவுகின்ற குதிரைகளின் இலக்கணங்களைக் கூறும் பரிநூலனைத் திற்கும் எல்லை காட்டுவதாம்படி, கண்டவர் அறிவும் பிற்படப் போம் படி - கண்டவர்கள் மனமும் பின்னிடப்போமாறு, புரவி யாவையும் முடுக்கினார் - குதிரைகளனைத்தையும் விரையச் செலுத்தினார்கள்; வேம்பு அணி தோளினான் - வேப்பமலர் மாலையை யணிந்த தோளையுடைய பாண்டியன், வியப்பும் எய்தியே - மகிழ்வேயன்றி வியப்பு மெய்தி. பரிமறை - புரவிநூல். அறிவு - ஈண்டு மனம். (97) ஆத்தராய் மருங்குறை யமைச்சர் யாரையும் பார்த்தசை யாமுடி யசைத்துப் பைப்பையப் பூத்தவா ணகையொடு மகிழ்ச்சி பொங்கினான் தீர்த்தனு நடத்தினான் றெய்வ மாவினை. (இ-ள்.) ஆத்தராய் மருங்கு உறை அமைச்சர் யாரையும் பார்த்து - தனக்கு உறுதி சூழ்பவராய் அருகு சூழ்ந்த மந்திரிகளளைவரையும் நோக்கி, அசையா முடி அசைத்து - துளங்காத முடியினைத் துளக்கி, பைப்பைய பூத்தவாள் நகையொடு மகிழ்ச்சி பொங்கினன் - மெல்ல அரும்பிய ஒள்ளிய புன்னகையுடன் மகிழ்ச்சி கூர்ந்தனன்; தெய்வ மாவினை தீர்த்தனும் நடத்தினான் - தெய்வத்தன்மையையுடைய குதிரையை இறைவனும் நடத்தியருளினான். ஆத்தர் - ஆப்தர்; உறுதிநாடுவோர், பைப்பைய, விகாரம். தீர்த்தன் - தூயன். (98) இருவகைச் சாரியு மெதிர்ந்து வட்டமாய் வருவழி ஞெகிகழிபோன் மறுகெ லாமொரு துரகத மேநிலை நின்ற தோற்றமொத் தொருவற நடத்தினா ரொருக ணத்தினே. (இ-ள்.) இருவகைச் சாரியும் எதிர்ந்து - இடசாரியும் வல சாரியுமாக எதிர்ந்து, ஞெகிழிபோல் வட்டமாய் வருவழி - கொள்ளி வட்டம் போல் வட்டமாக வருமிடத்து, மறுகு எலாம் ஒரு துரகதமே நிலை நின்ற தோற்றம் ஒத்து - வீதியனைத்தும் ஒரு குதிரையே நிலைத்து நின்ற தோற்றம் போன்று, ஒருவு அற - அத்தோற்றம் நீங்குதலில்லையாக, ஒரு கணத்தின் நடத்தினார் - ஒரு கணப்பொழுதில் நடத்திக் காட்டினர். ஞெகிழி - கொள்ளி. (99) இந்நிலை யலமரு மிவுளி மேலொரு மின்னிலை வேலினான் வினவத் தங்கையின் மன்னிய கங்கணம் விடுத்து மாநகர் தன்னிலை காட்டிய தன்மை யொத்தது. (இ-ள்.) இந்நிலை அலமரும் இவுளி - இங்ஙனம் சுழலும் குதிரையின் தன்மை, மேல் - முன்னாளில், ஒரு மின் இலை வேலினான் வினவ - மீன்போன்ற தகட்டு வடிவினையுடைய வேற்படையேந்திய வங்கிய சேகரபாண்டியன் இரந்து கேட்க, தம் கையில் மன்னிய கங்கணம் விடுத்து - இறைவன் தமது திருக்கரத்தில் நிலை பெற்ற கங்கணமாகிய பாம்பினை விடுத்து, மாநகர் தன்நிலை காட்டிய தன்மை ஒத்தது - பெரிய நகரின் பழைய எல்லையாகிய நிலை யினைக் காட்டிய தன்மையை ஒத்தது. அலமரல் - சுழலல்; வட்டமாக வருதல். கங்கணம் விடுத்து நகர் எல்லை காட்டியதனைத் திருவாலவாயான படலத்திற் காண்க. (100) பன்னிற முடையவாம் பரியும் வீதியுட் பின்னிய வாவெனப் பின்னி வட்டமாய்த் தன்னிகர் மதுரையாந் தையல் கையணி துன்னிய பன்மணித் தொடியும் போன்றவே. (இ-ள்.) பல் நிறம் உடைய வாம் பரியும் - பல நிறங்களை யுடைய தாவுங் குதிரைகளும், பின்னியவா என வீதியுள் வட்ட மாய்ப் பின்னி - பின்னிவைத்தவாறு போல வீதியுள் வட்டமாகப் பின்னி, தன் நிகர் மதுரையாம் தையல் - தனக்குத்தானே ஒத்த மதுரையாகிய பெண், கை அணி - கையில் அணிந்த, பல் மணி துன்னிய தொடியும் போன்ற - பல மணிகள் பதித்த வளையையும் போன்றன. வீதி கையாகவும், அதில் வட்டமாய் நின்ற பன்னிறக் குதிரைகள் பன்னிற மணி பதித்த வளையாகவும் தோன்றின. (101) இந்திய னுதலினா ரிடித்த பொற்சுணஞ் சிந்திய மறுகிடை நடக்குந் திண்பரிப் பந்தியி னெழுந்ததூள் சுவணப் பாரின்மா உந்திய வெழுந்தபொற் பூழி யொத்ததே. (இ-ள்.) இந்து இயல் நுதலினார் - சந்திரனை ஒத்த நெற்றியை யுடைய பெண்கள், இடித்த பொற்சுணம் சிந்திய மறுகு இடை - இடித்த பொற்சுண்ணஞ் சிந்திய வீதியின்கண், நடக்கும் திண்பரி பந்தியின் எழுந்த தூள் - நடக்கின்ற திண்ணிய குதிரைகளின் வரிசையால் எழுந்த தூள், சுவணப் பாரில் மா உந்திய எழுந்த - பொன்னுலகில் (உச்சைச் சிரவம் என்னும்) குதிரை செல்லுதலால் மேலெழுந்த, பொன்பூழி ஒத்தது - பொற்பராகத்தை ஒத்தது. பார் - உலகமென்னும் பொருட்டு. உந்திய - உந்த: செய்யிய வென்னும் எச்சம். (102) தேவரு மனிதருந் திருந்து கூடலார் யாவரு முவப்புற விவுளி விட்டுமண் காவலன் முன்குறீஇக் கருணை மாக்கடல் மாவருந் திறனெலாம் வகுத்துத் தேற்றுமால். (இ-ள்.) தேவரும் மனிதரும் திருந்து கூடலார் யாவரும் - தேவர்களும் பிற நகரிலுள்ள மக்களும் கூடல் நகராருமாகிய அனைவரும், உவப்புற இவுளிவிட்டு - மகிழுமாறு குதிரையைச் செலுத்தி, கருணை மாக்கடல் - பெருங் கருணைக் கடலாகிய இறைவர், மண்காவலன் முன் குறீஇ - நிலவுலகைக் காப்பவனாகிய பாண்டியன் முன்சென்று, மாவரும் திறன் எலாம் வகுத்துத் தேற்றும்- குதிரைகள் வரும் வகை அனைத்தையும் வகுத்துத் தெரிவிப் பாராயினர். விட்டு - செலுத்தி. குறுகி என்பது விகாரமாயிற்று. (103) எழுசீரடி யாசிரிய விருத்தம் வளங்கொள் காம்போச மிப்பரி யிம்மா மந்தர மிந்தவாம் புரவி விளங்கு காந்தார மிக்குரங் குளைவான் மீகமிக் கந்துகஞ் சிந்து துளங்கில் பாஞ்சால மிக்கன வட்டந் துளுவமிக் குதிரையித் துரகங் களங்கமி லிமயம் பருப்பத மிந்தக் கற்கியிம் மண்டிலங் கலிங்கம். (இ-ள்.) இப்பரி வளம் கொள் காம்போசம் - இக்குதிரைகள் வளம் பொருந்திய காம்போச நாட்டிலுள்ளவை; இம் மா மந்தரம் - இக்குதிரைகள் மந்தர மலையிலுள்ளவை; இந்த வாம்புரவி விளங்கு காந்தாரம் - இந்தத் தாவுங் குதிரைகள் தோற்றம் அமைந்த காந்தார நாட்டிலுள்ளவை; இக்குரங்கு உளை வான்மீகம் - இந்த வளைந்த பிடர் மயிரினை யுடைய குதிரைகள் வான்மீக நாட்டிலுள்ளவை; இக்கந்துகம் சிந்து - இக் குதிரைகள் சிந்து நாட்டிலுள்ளவை; இக்கனவட்டம் துளங்கு இல் பாஞ்சாலம் - இக்குதிரைகள் (பகைவரால்) கலங்குதலில்லாத பாஞ்சால நாட்டிலுள்ளவை; இத்துரகம் களங்கம் இல்இமயம் - இக் குதிரைகள் குற்றமில்லாத பனிமலையிலுள்ளவை; இக்கற்கி பருப்பதம் - இக்குதிரைகள் திருப்பருப்பதத்திலுள்ளவை; இம் மண்டிலம் கலிங்கம் - இக்குதிரைகள் கலிங்க நாட்டிலுள்ளவை. குரங்கல் - வளைதல். குரங்குவளை : ஆகுபெயர். இப்பரி காம் போசம் என்றாற்போல் வருவனவெல்லாம் பிறந்தவழிக் கூறல் என்னும் ஆகுபெயராகும். இது முதல் நான்கு செய்யுட்களில் குதிரையின் பரியாயப் பெயர்கள் பலவற்றையும் ஆசிரியர் எடுத்தமைத்திருக்கும் திறன் பாராட்டற்குரியது. (104) ஆரிய மிந்தப் பாடல மிந்த வச்சுவங் 1கூர்ச்சர மிந்தச் சீரிய துரங்கங் கேகய மிந்தத் திறலுறு கொய்யுளை யவனம் வேரியம் பணைசூழ் மக்கமிக் கொக்கு விரிபொழில் வனாயுச மிந்தப் போரிய லிவுளி பல்லவ மிந்தப் பொலம்புனை தார்நெடும் பாய்மா. (இ-ள்.) இந்தப் பாடலம் ஆரியம் - இக்குதிரைகள் ஆரிய நாட்டிலுள்ளவை; இந்த அச்சுவம் கூர்ச்சரம் - இக்குதிரைகள் கூர்ச்சர நாட்டிலுள்ளவை; இந்த சீரிய துரங்கம் கேகயம் - இந்தச் சிறந்த தகுதி குதிரைகள் கேகய நாட்டிலுள்ளவை. இந்த திறலுறு கொய்யுளை யவனம் இந்த வலிமிக்க பிடர்மயிரையுடைய குதிரைகள் யவன நாட்டிலுள்ளவை; இக்கொக்கு வேரி அம் பணை சூழ் மக்கம் - இக்குதிரைகள் மணம் நிறைந்த அழகிய வயல்கள் சூழ்ந்த மக்க நாட்டிலுள்ளவை; இந்தப் போர் இயல் இவுளி விரிபொழில் வனாயுசம் - போர்புரியும் வன்மை அமைந்த இக்குதிரைகள் விரிந்த பொழில்சூழ்ந்த வனாயுச நாட்டிலுள்ளவை; இந்தப் பொலம் புனைதார் நெடும் பாய்மா பல்லவம் - இந்தப் பொன்னாலாகிய அழகிய கிண்கிணிமாலை யணிந்த நீண்ட பாய்கின்ற குதிரைகள் பல்லவ நாட்டி லுள்ளவை. (105) கற்றவர் புகழ்சவ் வீரமிக் கோரங் கன்னிமா ராட்டமிவ் வன்னி கொற்றவர் பயில்வா சந்திக மிந்தக் கோடகங் காடகங் கன்னல் உற்றகான் மீர மிவ்வய மிந்த வுத்தம கோணமா ளவமிவ் வெற்றிசேர் குந்தங் கந்தர மிந்த விறல்புனை யரிசவு ராட்டம். (இ-ள்.) இக்கோரம் கற்றவர் புகழ் சவ்வீரம் - இக்குதிரைகள் புலவர் புகழுஞ் சவ்வீர நாட்டிலுள்ளவை; இவ்வன்னி கன்னிமா ராட்டம் - இக்குதிரைகள் அழியாத மாராட்ட நாட்டிலுள்ளவை; இந்தக் கோடகம் கொற்றவர் பயில் வாசந்திகம் - இக் குதிரைகள் மன்னர்கள் வதியும் வாசந்திக நாட்டிலுள்ளவை; இவ்வயம் காடு அகம் கன்னல் உற்ற கான்மீரம் - இக்குதிரைகள் காட்டிடமெல்லாம் கரும்புகள் நிறைந்த கான்மீர நாட்டிலுள்ளவை; இந்த உத்தமகோணம் மாளவம் - இந்த மேலான குதிரைகள் மாளவ நாட்டிலுள்ளவை; இவ் வெற்றிசேர் குந்தம் கந்தரம் - இவ்வெற்றி பொருந்திய குதிரைகள் கந்தரநாட்டிலுள்ளவை; இந்த விறல்புனை அரி சவுராட்டம் - இந்த வெற்றியும் அழகுமுள்ள குதிரைகள் சவுராட்ட நாட்டிலுள்ளவை. மாராட்டம் - மகாராஷ்டிரம். கான்மீரம் - காஸ்மீரம். இவ்வயம் - இந்த அயம். சவுராட்டம் - செளராஷ்டிரம். (106) விரிபொழிற் சாலி வேய்மிகு கிள்ளை வேறுதீ வாந்தர மிந்தத் துரகத மிந்தக் குரகதங் கொண்டல் சூழ்குருக் கேத்திர மின்ன பரவுபல் வேறு தேயமு முள்ள பரியெலா மிவன்றரு பொருளின் விரவிய நசையாற் கொணர்ந்திவர் வந்தார் வேந்தகே ளிந்தவாம் பரியுள். (இ-ள்.) வேய்மிகுகிள்ளை - ஒப்பனை மிக்க இக்குதிரைகள், விரிபொழில்சாலி - விரிந்த சோலைசூழ்ந்த சாலி நாட்டிலுள்ளவைகள்; இந்தத் துரகதம்வேறு தீவாந்தரம் - இக்குதிரைகள் வேறு தீவாந்தரங் களிலுள்ளவை; இந்தக் குரகதம் கொண்டல் சூழ் குருக்கேத்திரம் - இக்குதிரைகள் முகில் சூழ்ந்த குருக்கேத்திரத்திலுள்ளவை; இன்ன பரவு பல்வேறு தேயமும் உள்ள பரி எலாம் - இந்தப் பரந்த பல்வேறு வகைப்பட்ட தேயங்களிலுமுள்ள குதிரைகளையெல்லாம், இவன் தருபொருளின் விரவிய நசையால் - இவ்வாதவூரன் கொடுத்த பொருளினாற் போந்த விருப்பத்தால், இவர் கொணர்ந்து வந்தார் - இவர்கள் கொண்டு வந்தனர்; வேந்த கேள் - மன்னனே கேட்பாயாக; இந்த வாம்பரியுள் - இந்தத் தாவுங் குதிரைகளுள். வேய் - ஒப்பனை. குருக்கேத்திரம் - குருமே-த்திரம். “ தறுக ணாண்மைய தாமரை நிறத்தன தகைசால் மறுவில் வான்குளம் புடையன மாளவத் தகத்த பறையி னாலுவ படுசினை நாவலின் கனிபோற் குறைவில் கோலத்த குளிர்புனற் சிந்துவின் கரைய” “ பார சூரவம் பல்லவ மெனும்பதிப் பிறந்த வீர வாற்றல விளைகடுந் தேறலி னிறத்த பாரிற் றேர்செலிற் பழிபெரி துடைத்தென நாணிச் சோரும் வார்புய றுளங்கவிண் புகுவன துரகம்” “ பீலி மாமயி லெருத்தெனப் பெருவனப் புடைய மாலை மாரட்டத் தகத்தன வளரிளங் கிளியே போலு மேனிய பொருகடற் கலத்தின்வந் திழிந்த கோல நீர்ப்பவ ளக்குளம் புடையன குதிரை” என்னும் சிந்தாமணிச் செய்யுட்கள் இங்கே நோக்கற்பாலன. (107) வெண்ணிறஞ் சிவப்புப் பொன்னிறங் கறுப்பு வேறற விரவிய நான்கு வண்ணமுள் ளனவும் வேறுவே றாய மரபுமை வண்ணமும் வந்த எண்ணிய விவற்றின் சிறப்பிலக் கணத்தை யியம்புதுங் கேளென விகல்காய் அண்ணலங் களிற்றாற் கருமறைப் பரிமே லழகியா ரடைவுடன் விரிப்பார். (இ-ள்.) வெண்ணிறம் சிவப்பு பொன்னிறம் கருப்பு நான்கு - வெள்ளை நிறமும் சிவப்பு நிறமும் பொன்னிறமும் கருப்பு நிறமு மாகிய இந்நான்கும், வேறு அற விரவிய வண்ணம் உள்ளனவும் - வேறுபாடு இன்றிக் கலந்த நிறத்தையுடையகுதிரைகளும், வேறு வேறு ஆய மரபும் - அந்நிறங்களைத் தனித்தனியுடைய குதிரைகளும், ஐவண்ணமும் வந்த - ஐந்து நிறங்களையுடைய குதிரைகளும் வந்தன, எண்ணிய இவற்றின் - மதிக்கத் தக்க இக்குதிரைகளின், சிறப்பு இலக்கணத்தை இயம்புதும் கேள் என - சிறப்பிலக்கணங்களைக் கூறுவோம் கேட்பாயாக என்று, இகல்காய் அண்ணல் அம் களிற்றாற்கு - பகைவரைச் சினக்கும் பெருமையும் அழகுமுடைய யானையினையுடைய பாண்டியனுக்கு. அருமறைப் பரிமேல் அழகியார் - அரிய வேதப்பரிமேல் வந்தருளிய விடங்கர், அடைவுற விரிப்பார் - முறைப்பட விரித்துக் கூறுவார். ஐவண்ணம் : ஆகுபெயர். (108) வெள்ளிநித் திலம்பால் சந்திரன் சங்கு வெண்பனி போல்வது வெள்ளைத் துள்ளிய புரவி மாதுளம் போது சுகிர்ந்தசெம் பஞ்சியின் குழம்பிற் றெள்ளிய நிறத்த செம்பரி மாமை சிறைக்குயில் வண்டுகார் முகில்போல் ஒள்ளிய கரிய பரியெரி யழலா னுரோசனை நிறத்தபொற் பரியே. (இ-ள்.) வெள்ளி நித்திலம் பால் சந்திரன் - வெள்ளியும் முத்தும் பாலும் மதியும், சங்கும் வெண்பனி போல்வது சங்கும் வெள்ளிய பனியும் போன்றது, துள்ளிய வெள்ளைப் புரவி - தாவுகின்ற வெள்ளைக் குதிரையாகும்; மாதுளம் போது சுகிர்ந்த செம்பஞ்சியின் குழம்பின் - மாதுளம் பூவும் சீவிய செம்பஞ்சியின் குழம்பும்போல, தெள்ளிய நிறத்த செம்பரி - தெளிந்த நிறத்தினையுடையவை சிவப்புக் குதிரைகளாகும், மாமை சிறைக்குயில் வண்டு கார்முகில் போல் ஒள்ளிய கரிய பரி - கரிய மையும் சிறையையுடைய குயிலும் வண்டும் கரிய முகிலும் போல ஒளியையுடையன கருங்கு திரை களாகும்; எரி அழல் ஆன் உரோசனை நிறத்தபொன் பரி - எரிகின்ற அனலும் கோரோசனையும் போன்ற நிறமுடையன பொன்மைக் குதிரைகளாகும். எண்ணும்மைகள் தொக்கன - நிறத்த, ஒள்ளிய என்பன குறிப்பு வினைப்பெயர்கள். மா - கருமை. ஆன்உரோசனை - கோரோசனை. (109) தெரிதர வகுத்த விந்நிற நான்குஞ் செறிந்தது 1மிச்சிர மெனப்பேர் உரைசெய்வர் முகமார் புச்சிவால் காலென் றுரைத்தவெட் டுறுப்பினும் வெண்மை விரவிய தட்ட மங்கலந் தலைவால் வியனுர மென்றவிம் மூன்றும் ஒருவிய வுறுப்போ ரைந்திலும் வெள்ளை யுள்ளது பஞ்சகல் யாணி. (இ-ள்.) தெரிதர வகுத்த இந்நிறம் நான்கும் செறிந்தது - தெரியுமாறு வகுக்கப்பட்ட இந்நான்கு நிறங்களும் கலந்து செறிந்த குதிரைக்கு, மிச்சரம் எனப் பேர் உரை செய்வர் - மிச்சரமென்று பெயர் கூறுவர், முகம் மார்பு உச்சி வால் கால் என்று உரைத்த - முகமும் மார்பும் உச்சியும் வாலும் நான்கு கால்களும் என்று உரைக்கப்பட்ட, எட்டு உறுப்பினும் வெண்மை விரவியது அட்டமங்கலம் - இவ்வெட்டு உறுப்புக்களினும் வெண்மை கலந்தது அட்டமங்கலமாகும்; தலை வால்வியன் உரம் என்ற இம்மூன்றும் ஒருவிய - தலையும் வாலும் சிறந்த மார்புமாகிய இம்மூன்றும் நீங்கப்பெற்ற, உறுப்பு ஓரைந்திலும் வெள்ளை உள்ளது பஞ்ச கல்யாணி - ஓரைந்து உறுப்புக்களிலும் வெண்மையுள்ளது பஞ்ச கல்யாணியாகும். மிச்சரம் - கலவை. உறுப்பு ஐந்து - முகமும் நான்கு கால்களும். (110) அணிகிளர் கழுத்தில் வலஞ்சுழித் திருந்தா லறிந்தவ ரதனையே தெய்வ மணியென விசைப்பர் முகந்தலை நாசி மார்பமிந் நான்குமிவ் விரண்டு பணிதரு சுழியு நுதனடுப் 1பின்னைப் பக்கமு மொவ்வொரு சுழியுந் துணிதர விருப்ப திலக்கண முளதிச் சுழியில திலக்கண வழுவே. (இ-ள்.) அணிகிளர் கழுத்தில் வலம் சுழித்து இருந்தால் - அழகு விளங்குங் கழுத்தின்கண் வலமாகச் சுழித்திருப்பின், அறிந்தவர் - பரிநூலினைக் கற்றுணர்ந்தவர், அதனையே தெய்வமணி என இசைப்பர்- அச்சுழியினையே தேவமணி என்று கூறுவர்; முகம் தலை நாசி மார்பம் இந்நான்கும் - முகமும் தலையும் மூக்கும் மார்புமாகிய இந்நான்கு உறுப்புக்களிலும், பணிதரு இவ்விரண்டு சுழியும் - நலமென்று கூறப்படும் இரண்டிரண்டு சுழிகளும், நுதல் நடு பின்னைப் பக்கமும்- நெற்றி நடுவிலும் பின் பக்கத்திலும், ஒவ்வொரு சுழியும் துணிதர இருப்பது - ஒவ்வொரு சுழியும் ஐயமற விருப்பது, இலக்கணம் உளது - இலக்கணமுடைய குதிரையாகும்; இச்சுழி இலது இலக்கணவழு - இச்சுழிகளில்லாதது இலக்கணக் குற்ற முடையதாகும். பணிதரு - அடங்கித் தோன்றும் என்றுமாம். துணிதர - தெளிய. வழு - வழுவுள்ளது. (111) பிரிவுற வுரத்தி லைஞ்சுழி யுளது பேர்சிரீ வற்சமா நுதலில் இருசுழி யாதன் முச்சுழி யாத லிருக்கினு நன்றது வன்றேல் ஒருவற நான்கு சுழிவலம் புரியா வுள்ளது நல்லது வன்றி இருசுழி முன்னங் கால்களின் மூலத் திருக்கினு நல்லதென் றிசைப்பார். (இ-ள்.) பிரிவு உற உரத்தில் ஐஞ்சுழி உளது - (ஒன்றோ டொன்று நெருங்காமல்) பிரிவினைப் பொருந்த மார்பின்கண் ஐந்து சுழியுள்ள குதிரை, பேர் சிரீ வற்சமாம் - சிரீவற்சம் என்னும் பெயருடையதாகும்; நுதலில் இருசுழி ஆதல் முச்சுழி ஆதல் இருக்கினும் நன்று - நெற்றியின் கண் இரண்டு சுழியாவது மூன்று சுழியாவது இருந்தாலும் நலமாகும்; அது அன்றேல் - அங்ஙனமில்லையானால், ஒருவு அற நான்கு சுழிவலம்புரியா உள்ளது நல்லது - நீங்குதலின்றி (ஒன்றோடொன்று தொடர்ந்து) நான்கு சுழி வலம்புரியாக இருப்பது நன்மையாம்; அன்றி - அல்லாமல், முன்னம் கால்களின் மூலத்து - முன் கால்களின் அடியில், இருசுழி இருப்பினும் நல்லது என்று இசைப்பார் - இரண்டு சுழி இருந்தாலும் நலமென்று கூறுவர். ஆதல் - ஆவது; இடைச் சொல். (112) களநடு விரட்டைச் சுழியுடைப் பரிதன் கருத்தனுக் கறமிடி காட்டும் அளவறு துன்ப மரணமுண் டாக்கு மவைகணைக் காலுள வாகில் உளபயந் துன்ப நிகளபந் தனமே லுதடுமுற் காலடி கபோலம் வளர்முழந் தாளிந் நான்கினுஞ் சுழிகண் மன்னினுந் தலைவனை வதைக்கும். (இ-ள்.) களம் நடு இரட்டைச்சுழியுடைப் பரி - கழுத்து நடுவில் இரட்டைச் சுழியினையுடைய குதிரை, தன் கருத்தனுக்கு அறமிடி காட்டும் - தன்தலைவனுக்கு மிகவும் வறுமையை உண்டாக்கும்; அளவு அறு துன்பம் மரணம் உண்டாக்கும் - (இன்னும்) அளவிறந்த துன்பத்தினையும் மரணத்தினையும் உண்டாக்கும்; அவை கணைக் கால் உளவாகில் - அச்சுழிகள் கணைக்காலிலுள்ளனவாயின், பயம் துன்பம் நிகள பந்தனம் உள - அச்சமும் துன்பமும் விலங்கு பூணுதலும் உளவாகும்; மேல் உதடு முன்கால் அடி கபோலம் வளர் முழந்தாள்- மேலுதடும் முன் காலின் அடியும் கபோலமும் வளர்ந்த முழந்தாளு மாகிய, இந்நான்கினும் சுழிகள் மன்னினும் தலைவனை வதைக்கும்- இந்நான்குறுப்பினும் சுழிகள் இருந்தாலும் தலைவனைக் கொல்லும். உளபயம் - மனோபயம் என்றுமாம். (113) இசசுழி யுடைய புரவிபந் தியில்யாத் திருக்கினும் பழுதிவை கிடக்க அச்சமில் பரிக்குப் பிராயநா லெட்டா மவத்தைபத் தாகுமொவ் வொன்றில் வைச்சது மூன்று வருடமு மிரண்டு மதியமும் பன்னிரு நாளும் நிச்சயித் தளந்தா ரின்னமு மொருசார் நிகழ்த்திடு மிலக்கண மதுகேள். (இ-ள்.) இச்சுழி உடைய புரவி - இந்தக் குற்றமுள்ள சுழியினை யுடைய குதிரைகள், பந்தியில் யாத்து இருக்கினும் - பந்தியில் கட்டப்பட்டிருப்பினும், பழுது - தீங்கு விளையும்; இவை கிடக்க- இவை நிற்க; அச்சம் இல் பரிக்குப் பிராயம் நாலெட்டாம் - போரின்கண் அஞ்சுதலில்லாத குதிரைக்கு வயச முப்பத்திரண்டாகும் அவத்தை பத்து ஆகும் - பருவம் பத்தாகும்; ஒவ்வொன்றில் வைச்சது - ஒவ்வொரு பருவத்திலும் வைத்த காலவளவு, மூன்று வருடமும் இரண்டு மதியமும் பன்னிரு நாளும் நிச்சயித்து அளந்தார் - மூன்றாண்டும் இரண்டு திங்களும் பன்னிரண்டு நாளுமெனத் துணிந்து வரையறை செய்தனர்; இன்னமும் ஒரு சார் நிகழ்த்திடும் இலக்கணம் கேள் - இன்னமும் ஒரு வகையாகப் பரிநூலார் கூறும் இலக்கணத்தைக் கேட்பாயாக. அச்சமில் என்றது பரிக்குப் பொதுவான அடை, அவத்தை - பருவம். வைச்சது: போலி. பரிநூலோர் நிச்சயித்தளந்தார் என்க. இலக்கணமது, அது : பகுதிப் பொருள் விகுதி. (114) அறுசீரடி யாசிரிய விருத்தம் எவ்வண்ண பேதமிகுந் திருந்தாலும் வெள்ளைகலந் திருந்த தானால் அவ்வண்ணப் பரிநன்று கரும்புரவிக் ககடேனு மகன்மார் பேனுஞ் செவ்வண்ண மிருக்கினது சயமுளதப் படிவெண்மை சேர்ந்தா லந்த மைவண்ணப் பரியின்பேர் வாருணமாஞ் சயங்கொடுக்கு மாற்றார் போரில். (இ-ள்.) எவ்வண்ண பேதம் மிகுந்து இருந்தாலும் - எந்த நிறத்தின் வகை மிக்கிருந்தாலும், வெள்ளை கலந்து இருந்தது ஆனால் - வெண்ணிறங் கலந்திருக்கு மாயின், அவ்வண்ணப் பரிநன்று - அந்நிறத்தையுடைய குதிரை நல்லது: கரும் புரவிக்கு அகடேனும் அகல் மார்பேனும் - கரிய குதிரைக்கு வயிற்றிலேனும் அகன்ற மார்பி லேனும், செவ்வண்ணம் இருக்கின் - செந்நிற மிருக்குமாயின், அது சயம் உளது - அக்குதிரை வெற்றியை யுடையது, அப்படி வெண்மை சேர்ந்தால் - அங்ஙனமே வெண்ணிற மிருப்பின், அந்த மை வண்ணப் பரியின்பேர் - அந்த மை போலுங் கரிய நிறத்தினை யுடைய குதிரையின் பெயர், வாருணம் ஆம் - வாருண மென்ப தாகும்; மாற்றார் போரில் சயம் கொடுக்கும் - அது பகைவருடன் புரியும் போரின்கண் தன் தலைவனுக்கு வெற்றியைக் கொடுக்கும். அகடு, மார்பு என்பவற்றில் ஏழனுருபு விரிக்க. அது சயங் கொடுக்கும் எனச் சுட்டு வருவிக்க. சயம், வடமொழித்தற்பவம். (115) மகவளிக்கும் பிடர்வெளுப்பு மகிழ்வளிக்கு முரவெளுப்பு மணித்தார்க் கண்டத் தகவெளுப்புப் பொருள்கொடுக்கு முகவெளுப்புச் சயங்கொடுக்கு மதன்பின் பக்கத் தகவெளுப்புச் சுகம்பயக்கு மிடவெளுப்புச் சந்தானந் தழைக்குஞ் செல்வம் மிகவளர்க்குந் தனம்பலதா னியநல்கும் வலப்புறத்து வெள்ளை மாதோ. (இ-ள்.) பிடர் வெளுப்பு மகவு அளிக்கும் - பிடர் வெளுப்புள்ள குதிரை தன் தலைவனுக்கு மகப்பேற்றினைக் கொடுக்கும்;உரவெளுப்பு மகிழ்வு அளிக்கும் - மார்பு வெளுப்புள்ள குதிரை மகிழ்ச்சியைக் கொடுக்கும், மணித்தார்கண்டத்து அக வெளுப்பு - மாணிக்க மாலையை யணிந்த கழுத்தின்கண் வெண்மையுள்ள குதிரை, பொருள் கொடுக்கும் - பொருளைக் கொடுக்கும்; முகவெளுப்பு சயம் கொடுக்கும் - முகவெளுப்புள்ள குதிரை வெற்றியைக் கொடுக்கும்; அதன்பின் பக்கம் தகவெளுப்பு - அம்முகத்தின் பின்பக்கத்தின்கண் பொருந்த வெளுப்பமைந்த குதிரை, சுகம் பயக்கும் - இன்பத்தைக் கொடுக்கும்; இடவெளுப்பு சந்தானம் தழைக்கும் செல்வ மிக வளர்க்கும் - இடப் பக்கத்தில் வெண்மையுள்ள குதிரை மகப்பேறு மிகுதலாகிய செல்வத்தை மிகப் பெருக்கும்; வலப்புறத்து வெள்ளை - வலப் பக்கத்தின்கண் வெண்மையுள்ள குதிரை, தனம் பல தானியம் நல்கும் - திரவியத்தையும் பல விளைபொருளையும் அளிக்கும். வெளுப்பு, வெள்ளை என்பன பரிக்கு ஆயின. மணித்தார் - கிண்கிணிமாலையுமாம். தழைக்கும் - தழைவிக்கும் எனப் பிறவினை முற்றுமாம். (116) நற்புறம்வான் முகமூன்றும் வெளுத்தபரி வென்றிதரு1 நாபி தொட்டு முற்புறமெ லாம்பரிதி யெனச்சிவந்து மதியெனப்பின் முழுதும் வெள்கும் பொற்புடைய வயப்பரிக்குப் பகல்விசய மதியெனமுற் புறம்பு வெள்கிப் பிற்புறமெல் லாங்கதிர்போற் சிவந்த பரிக் கிராவிசயம் பெருகு2 மன்றே. (இ-ள்.) நல்புறம் வால் முகம் மூன்றும் வெளுத்தபரி வென்றி தரும் - நல்ல முதுகும் வாலும் முகமுமாகிய இம்மூன்றிலும் வெண்ணிறமுள்ள குதிரை (தன் தலைவனுக்கு) வெற்றியைத் தரும்; நாபி தொட்டு - உந்தி முதலாக, முன்புறம் எலாம் பரிதி எனச் சிவந்து- முன் பக்கமனைத்தும் சூரியனைப்போல் செந்நிறம் பெற்று, பின் முழுதும் மதி என வெள்கும் - பின்புறமனைத்துஞ் சந்திரனைப் போல வெளுத்திருக்கும், பொற்பு உடைய வாம்பரிக்குப் பகல் விசயம் - அழகுடைய தாவுங்குதிரைக்குப் பகற்போரில் வெற்றியும், முன்புறம்பு மதிஎன வெள்கி - முன்புறமுற்றும் சந்திரனைப் போன்று வெண்ணிறம் பெற்று, பின்புறம் எல்லாம் கதிர்போல் சிவந்த பரிக்கு - பின்புறமனைத்தும் சூரியனைப்போலச் சிவந்த குதிரைக்கு, இராவிசயம் பெருகும் - இராப்போரில் வெற்றியும் பெருகும். வெள்கல் - வெளுத்தல்; வெண்மையாதல். புறம்பு - புறம், பக்கம். பகல் விசயமும் இராவிசயமும் பெருகும் என்க. (117) வந்தனவா லிவ்விரண்டு வகைப்பரியும் புரவியடி வைத்தா லொத்த பந்தெனவு நின்றாலோ மலையெனவு மொலித்தாலோ பகடு சீறும் வெந்தறுக ணரியெனவும் வேகத்தாற் காற்றெனவு மிதிக்குங் கூத்தாற் சந்தநட மகனெனவு நடக்கிலரி களிறெனவுந் தகைய தாகி.1 (இ-ள்.) இவ்விரண்டு வகைப் பரியும் வந்தன - இந்த இரண்டு வகைக் குதிரைகளும் வந்தன; புரவி அடிவைத்தால் ஒத்த பந்து எனவும் - குதிரை அடி வைத்தால் ஒத்த பந்தைப் போலவும், நின்றால் மலை எனவும் - நின்றதானால் மலை போலவும், ஒலித்தால் - கனைத்ததானால், பகடு சீறும் வெம்தறுகண் அரி எனவும் - யானையைச் சீறிக் கொல்லும் கொடிய அஞ்சாமையுடைய சிங்கம் போலவும், வேகத்தால் காற்று எனவும் - வேகத்தினால் காற்றைப் போலவும், மிதிக்கும் கூத்தால் சந்தம்நடமகன் எனவும் - மிதித்து நடக்கும் கூத்தினால் அழகிய கூத்தனைப் போலவும், நடக்கில் அரி களிறு எனவும் தகையதாகி - நடந்தால் சிங்கத்தையும் யானையையும் போலவும் தன்மையையுடைய தாய். இரண்டு வகைப்பரி - பகல் வெற்றி தருவதும், இராவெற்றி தருவதும். ஒத்த - ஒன்றையொன் றொத்த. அடி வைத்தால் குளம்பு பந்தெனவும், நின்றால் உடல் மலையெனவும், ஒலித்தால் ஒலி அரியெனவும் என இங்ஙனம் விரித்துரைத்துக்கொள்க. குளகம். (118) குலமகள்போற் கவிழ்முகமுங் கருநெய்த லெனக்கண்ணுங் கொண்டு கார்போல் நிலவியசீர் வண்ணமுங்கார் நெய்தலெனக் கடிமணமு நிறைந்து நாற்ற மலரகில்சந் தெரிமணிப்பூ ணலங்கரிக்கி லானாத மகிழ்ச்சி யெய்தி இலகுவதுத் தமவாசி யென்றுரைப்பர் பரிவேத மெல்லை கண்டோர். (இ-ள்.) குலமகள் போல் கவிழ்முகமும் - உயர்குடியிற் பிறந்த கற்புடை மகள்போலக் கவிழ்ந்த முகத்தையும், கருநெய்தல் எனக் கண்ணும் கொண்டு - கருங்குவளை மலர்போலும் கண்ணையும் கொண்டு, கார் போல் நிலவிய சீர் வண்ணமும் - கருமுகில் போல் விளங்கிய சிறந்த நிறமும், கார் நெய்தல் எனக் கடிமணமும் நிறைந்து - கருநெய்தல் போல மிக்க மணமும் நிறைந்து, நாற்றமலர் அகில் சந்து எரிமணிப்பூண் அலங்கரிக்கில் - மணமிக்க மலரும் அகிற்குழம்பும் சந்தனக் குழம்பும் நெருப்புபோன்ற மணிகள் அழுத்திய அணிகளு மாகிய இவற்றால் ஒப்பனை செய்யின், ஆனாத மகிழ்ச்சி எய்தி இலகுவது - நீங்காத மகிழ்ச்சியை அடைந்து விளங்குவது, உத்தம வாசி என்று - உத்தமக் குதிரை என்று பரிவேதம் எல்லை கண்டோர் உரைப்பர்; புரவி நூலின் வரம்பினைக் கண்டறிந்தவர் கூறுவர். தகையதாகி, கொண்டு, நிறைந்து, எய்தி, இலகுவது உத்தம வாசி என்றுரைப்பர் என வினை முடிவு செய்க. (119) நூறுவிர லுத்தமவாம் பரிக்குயர்வீ ரெட்டுவிர னூறு நீக்கிக் கூறுவிரன் மத்திமவாம் பரிக்கறுபத் தொன்றதமக் குதிரைக் கென்ப ஈறில்புக ழாய்பொருந ரிப்பரியைப் பூசனஞ்செய் திறைஞ்சிப் பாசம் மாறுவரா லெனமணித்தார் சதங்கைசிலம் பணிவித்து மதிக்கோ மாறன். (இ-ள்.) உத்தம வாம்பரிக்கு உயர்வு நூறு விரல் - தாவுகின்ற உத்தமக் குதிரைக்கு உயரம் நூறுவிரலளவாகும், மத்திம வாம்பரிக்கு நூறு ஈரெட்டு விரல் நீக்கிக் கூறுவிரல் - தாவுகின்ற மத்திமக் குதிரைக்கு உயரம் அந்நூறு விரலில் பதினாறு விரல் நீக்கி மீதமாகக் கூறப்படும் எண்பத்து நான்கு விரலளவாகும், அதமக்குதிரைக்கு அறுபத்தொன்று என்ப - அதமக்குதிரைக்கு உயரம் அறுபத்தொரு விரலளவாகும் என்று கூறுவர்; ஈறு இல் புகழாய் - அழிவில்லாத புகழையுடையோய், பொருநர் - வேந்தர்கள், இப்பரியைப் பூசனம் செய்து இறைஞ்சிப் பாசம் மாறுவர் என - இக்குதிரைகளைப் பூசித்து வணங்கிக் கயிறுமாறுவார்களென்று கூறியருள, மணித்தார் சதங்கை சிலம்பு அணிவித்து - அழகிய கிண்கிணி மாலையும் சதங்கை மாலையும் சிலம்பும் அணிவித்து, மதிக்கோமாறன் - சந்திரன் மரபினனாகிய அரிமருத்தன பாண்டியன். என்ப என்பதனை முன்னும் கூட்டுக. பொருநர் - ஈண்டு வேந்தர். பூசனஞ் செய்து - பூசித்து, மாறுவர் - மாறும் வழக்க முடையர். பொருகின்ற நரிப் பரியை என உண்மை புலப்பட வைக்கும் நயம்பாராட்டற்குரியது.(120) கொத்தவிழ்தார் நறுஞ்சாந்தங் கொண்டுசெழும் புகைதீபங் கொடுத்துப் பூசை பத்திமையாற் செய்திறைஞ்சி யெதிர்நிற்ப வாலவாய்ப் பரனை நோக்கிக் கைத்தலந்தன் சிரமுகிழ்த்து வாழியெனப் பரிகொடுத்தான் கயிறு மாறி முத்தொழிலின் மூவராய் மூவர்க்குந் தெரியாத முக்கண் மூர்த்தி. (இ-ள்.) கொத்து அவிழ்தார் நறுஞ்சாந்தம் கொண்டு - கொத் தொடு மலர்ந்த மலர்களாற் றொடுத்தமாலையும் நறிய சந்தனமுங் கொண்டு, செழும்புகை தீபம் கொடுத்து - செழிய தூபமும் தீபமுங் கொடுத்து, பத்திமையால் பூசை செய்து - அன்புடன் வழிபட்டு, இறைஞ்சி எதிர் நிற்ப - வணங்கி எதிரே நிற்க, முத்தொழிலின் மூவராய் - மூன்று தொழில்களையுடைய மூன்று தேவராகியும், மூவர்க்கும் தெரியாத முக்கண் மூர்த்தி - அம்மூவருக்கும் தெரியாத மூன்று கண்களையுடைய இறைவன், ஆலவாய்ப் பரனை நோக்கி - திருவாலவாயில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளை நோக்கி, கைத்தலம் தன் சிரம் முகிழ்ந்து - கைத்தலங்களைத் தன் முடியிற் குவித்து, வாழி என கயிறு மாறிப் பரிகொடுத்தான் - மன்னன் வாழக்கடவன் என்று வேண்டிக் கயிறு மாறிக் குதிரைகளைக் கொடுத்தனன். முத்தொழில் - படைத்தல் காத்தல் அழித்தல். முத்தொழிலின் - முத்தொழில் புரிதற்பொருட்டு என்றுமாம். “ படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திக ளாயினை” எனத் திருவெழுகூற்றிருக்கையுள் வருதலுங் காண்க. இறைவன் மூவர்க்கு முதலான துரிய மூர்த்தி என்பதனை, “ தேவர்கோ வறியாத தேவதேவன் செழும் பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன்” என்னும் திருவாசகத்தானும் அறிக. கருணை மாக்கடல் இறைஞ்சிப் பாசம் மாறுவர் என்று கூற, மாறன் அணிவித்துப் பூசைசெய்து இறைஞ்சி நிற்ப, மூர்த்திபரனை நோக்கி முகிழ்த்து மாறிப் பரி கொடுத்தான் என முடிக்க. (121) வேறு உவநிடக் கலணை வாசி யொன்றலா னின்ற மாயக் கவனவாம் புரவி யெல்லாங் கொடுத்திடக் கவர்ந்து வீறு தவனனில் விளங்குந் தென்னன் றன்பெருங் கோயி லுய்ப்பப் பவனமுங் கடலும் போலக் கொண்டுபோய்ப் பந்தி சேர்த்தார். (இ-ள்.) உவநிடக் கலணை வாசி ஒன்று அலால் - மறைமுடியாகிய கல்லணையையுடைய வேதப் பரி ஒன்றை யல்லாமல், நின்ற கவன மாயவாம் புரவி எல்லாம் கொடுத்திட - வேறு நின்ற வேகமுடைய வஞ்சகமாகிய தாவுகின்ற குதிரைகளனைத்தையுங் கொடுத்திட, வீறு தவனனில் விளங்கும் தென்னன் - ஒப்பற்றெழுந்த சூரியனைப்போல விளங்கும் பாண்டியன், கவர்ந்து - வாங்கி, தன் பெருங்கோயில் உய்ப்ப - தனது அரண்மனையிற் செலுத்துமாறு கட்டளையிட, பவனமும் கடலும் போலக் கொண்டுபோய் - (ஏவலாளர்) காற்றையும் கடலையும் கொண்டுபோவது போலக் கொண்டுபோய், பந்தி சேர்த்தார் - மந்துரையிற் சேர்த்தனர். உபநிடதம் எனற்பாலது திரிந்து நின்றது. கவனம் - வேகம். வீறு- பிறிதொன்றற் கில்லாத சிறப்பு. உய்ப்ப - உய்க்குமாறு கட்டளையிட. வேகத்தாற் பவனமும், பரப்பாலும் தோற்றத்தாலும் ஒலியாலும் கடலும் போன்றதென்க. (122) வாசிவா ணிகர்க்குத் தென்னன் வெண்டுகில் வரிசையாக வீசினான் பாணற் கேவல் செய்தவர் வெள்கு வாரோ கூசிலா நேசர்க் காப்பான் குதிரையி னிழிந்தேற் றந்தத் தூசினை யிரண்டாங் கங்கை யெனமுடி சூடி நின்றார். (இ-ள்.) வாசி வாணிகர்க்குத் தென்னன் வரிசையாக வெண் துகில் வீசினான் - குதிரை வணிகராகிய இறைவருக்குப் பாண்டியன் வெள்ளிய ஆடை ஒன்றினைப் பரிசிலாகக் கொடுத்தனன், பாணற்கு ஏவல் செய்தவர் வெள்குவாரோ - பாணபத்திரனுக்கு அடிமை என்று கூறி அவன் பணியைச் செய்தவர் (இதனை வாங்குதற்கு) நாணு வாரோ, கூசுஇலா - சிறிதும் நாணமில்லாமல், நேசர்க் காப்பான் - அன்பராகிய வாதவூரரைக் காத்தற் பொருட்டு, குதிரையின் இழிந்து அந்தத் தூசினை ஏற்று - குதிரையினின்றும் இறங்கி அந்த ஆடையை வாங்கி, இரண்டாம் கங்கை என முடி சூடி நின்றார் - இரண்டாவது கங்கை ஒன்றினைச் சூடியதுபோல முடியின்கண் சூடி நின்றனர். எல்லா முழு முதன்மையுமுடைய இறைவன் பாண்டியன் அளித்த ஆடையைத் தாழ்ந்து நின்று வாங்குவரோ என்னும் ஆசங்கையைப் பரிகரித்தற்கு ஒரு பாணனுக்கும் ஏவல் செய்தவர் அரசன்பால் இதனை வாங்க வெள்குவரோ என்றார். இது பழிப்பது போல இறைவனது அடியார்க் கெளியனாம் கருணைத்திறத்தை வியந்து கூறியவாறு. பாணபத்திரனுக்கு எவல் செய்தமையை விறகு விற்ற படலத்திற் காண்க. கூசு: முதனிலைத் தொழிற் பெயர். இலா: ஈறுகெட்ட எதிர் மறை வினையெச்சம். கங்கை வெண்ணிற முடையதாகலின் ‘கங்கை யென என்றார்.’ துகிலின் தூய்மை கூறியவாறு மாயிற்று. (123) இனையதூ சிவன்பா லூர்தி யிழிந்துநின் றேற்றுச் சென்னி புனைவதென் னிவர்கை யோடும் புனைந்ததிக் குடையும் பூண்ட கனலராப் பூணு மன்னன் கவருமோ வென்று தம்மின் வினவினர் வெகுண்டு சொன்னார் கணத்தனி வீர ரெல்லாம். (இ-ள்.) கணத்தனிவீரர் எல்லாம் - ஒப்பற்ற கண வீரரனைவரும், இனைய தூசு இவன்பால் ஊர்தி இழிந்து நின்று ஏற்றுச் சென்னி புனைவது என் - இவ் விழிந்த ஆடையை இம் மன்னனிடம் குதிரையினின்றும் இறங்கி எளியன் போல நின்று வணக்கத்துடன் வாங்கி முடியின்கண் சூடியது எதன் பொருட்டு, இவர்கை ஓடும் புனைந்த திக்கு உடையும் - (அங்ஙனம் ஏற்காவிடின்) இவர் கையிலுள்ள ஓட்டினையும் அணிந்த திக்காடையையும், பூண்ட கனல் அராப்பூணும் - அணிந்த அனல் போலும் சினமுடைய பாம்பணிகளையும், மன்னன் கவருமோ - இவன் கொள்ளை கொள்வானோ, என்று வினவினர் வெகுண்டு சொன்னார் - என்று ஒருவரோ டொருவர் வினவிச் சினந்து கூறினர். தூசினையும் அரசனையும் சிறுமைப்படுத்து ‘இனைய தூசு ’ எனவும், இவன்பால் எனவும் கூறினர். ஊர் தியிழிதல் நிற்றல் ஏற்றல், சென்னி புனைதல் ஆகிய யாவும் இவர் பெருமைக் கொவ்வாதன என்றாரென்க. அங்ஙனம் ஏற்காவிடில் இவர் கையோடு முதலிய வற்றைக் கவர்வான் என்று அஞ்சினரோ என வெகுளியில் நகை தோன்றக் கூறினர். இதனால் ஆண்டவனுடைய இறைமையை விளக்கியவாறு மாயிற்று. திக்குடை - திசையாகிய உடை ; ஆடையின்மை. (124) அறந்தரு கோலான் வெவ்வே றடுபரி வயவர் யார்க்கும் நிறந்தரு கலிங்க மீந்தா னோர்தவை வங்கி யன்பிற் சிறந்தருள் வடிவாய் வந்தார் செழுமறைப் புரவி யோடு மறைந்தனர் மறைந்தா ரொக்க மாயவாம் பரிமேல் வந்தார். (இ - ள்) அறம் துரு கோலான் - அறநெறியினின்றும் வழுவாது பேணுதலால் குடிகட்கு இன்பந்தருஞ் செங்கோலை யுடைய பாண்டியன், வெவ்வேறு அடு பரி வயவர் யார்க்கும் நிறம் தருகலிங்கம் ஈந்தான் - வேறு வேறு வெற்றி பொருந்திய பரிவீரரனை வருக்கும் ஒளியினையுடைய ஆடைகளைக் கொடுத்தான்; அன்பில் சிறந்து அருள் வடிவாய் வந்தார் - அன்பினாற் சிறந்து அருளுருவாய் வந்த இறைவர், நேர்ந்து அவை வாங்கிக் செழுமறைப் புரவியோடு மறைந்தனர் - முன் சென்று அவற்றை வாங்கிக் கொண்டு அழகிய வேதப்பரியுடன் மறைந்தருளினர்; மாய வாம்பரிமேல் வந்தார் - மாயமாகிய தாவுகின்ற மறைந்தனர். வெவ்வேறு நிறந்தரு கலிங்கம் என்றுமாம். அவர்கள் வெகுண்டு நின்றமையால் இறைவனே அவற்றையும் நேர்ந்து வாங்கினர் என்க. வாங்கி என்பதனை வாங்க என எச்சத்திரிபாக்கி உரைப்பாருமுளர். அன்பிற் சிறந்த - அன்பிற்கு ஈடுபட்டு. ஒக்க - உடன் சேர. இறைவன் இங்ஙனம் நரிகளைக் குதிரைகளாகக்கிக் கொணர்ந்த திருவிளையாட்டை, “ அரியொடு பிரமற் களவறி யொண்ணான் நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்” எனவும் “ நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லா நிகழ்வித்துப் பெரிய தெள்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்” எனவும் அடிகள் திருவசாகத்தில் அருளிச் செய்தல் காண்க. (125) (இ -ள்) இருமைக்கும் துணையாய் நின்ற இருபிறப்பாளர்க்கு இம்மையு மறுமையுமாகிய இரண்டிற்குந் துணையாய் நின்ற மறையவராகிய வாதவூர்க்கு, ஏற்ப - பொருந்துமாற்றால், அருமைத்து ஆம் சிறப்பு நல்கி - அருமையை யுடையதாகிய வரிசையை அளித்து, அவரை அவரிடத்து உய்த்து - அவரை அவரிடத்திற்குச் செல்ல விடுத்து, பருமத்த யானை வேந்தன் - தவிசினையுடைய யானையையுடைய மன்னன், பகல் கதிர் வானத்து உச்சிவரும் அப்போது எழுந்து - சூரியன் வானில் உச்சியில் வருகின்ற அப்பொழுதில் எழுந்து, செம்பொன் மாடம் நீள் கோயில் புக்கான் - சிவந்த பொன்னாலாகிய மாடத்தையுடைய நீண்ட அரமனையிற் புகுந்தனன். பருமத்த குறிப்புப்பெயரெச்சம்; பருமம் - யானை மேற்றவிசு; பருமத்த எனப் பிரித்துப் பருத்த மதமயக்த்தையுடைய யானை என்றலுமாம். (126) ஏனைமந் திரருந் தத்த மில்புகப் புரவி பார்த்த மாநக ராருந் தத்த மனைபுகப் பரியின்பாகர் ஆனவர் தாமுங் கோயி லடைந்துதம் விளையாட் டெல்லாம் மீனெடுங் கண்ணி னாட்கு விளம்பின ரிருந்தா ரன்றே. (இ-ள்.) ஏனை மந்திரரும் தத்தம் இல்புக - மற்றைய அமைச்சர் களுந் தந்தம் வீட்டிற்குச் செல்ல, புரவி பார்த்த மாநகராரும் தத்தம் மனைபுக - குதிரைக் காட்சியைக் காணவந்த பெரிய நகரமாந்தரும் தந்தம் மனையிற் செல்ல, பரியின் பாகர் ஆனவர் தாமும் - குதிரை வீரராகிய இறைவரும், கோயில் அடைந்து - திருக்கோயிலை அடைந்து, தம் விளையாட்டு எல்லாம் - தமது திருவிளையாடல் அனைத்தும், மீன் நெடுங் கண்ணினாட்கு விளம்பினர் இருந்தார் - மீன்போன்ற நீண்ட கண்களையுடைய அம்மையாருக்குக் கூறியிருந்தருளினார். ஏனைமந்திரர் - வாதவூரரை யொழிந்த அமைச்சர்கள். பாகரானவர் - பாகராய் வந்தவர். தாம் : அசை. மீனெடுங் கண்ணினாள் - அங்கயற்கண்ணம்மை. விளம்பினர் : முற்றெச்சம். (127) ஆகச் செய்யுள் 2625. அறுபதாவது பரி நரியாக்கி வையை யழைத்த படலம் கலிநிலைத்துறை ஞான நாயக னாணையா னரிபரி வெள்ளம் ஆன வாறுரை செய்துமீண் டப்பரி நரியாய்ப் போன வாறுகண் டமைச்சரைப் புரவலன் கறுப்ப வான வாறுபோல் வையைநீர் வந்தவா றுரைப்பாம். (இ-ள்.) ஞான நாயகன் ஆணையால் - அறிவுருவாகிய இறைவன் ஆணையினால், நரி பரிவெள்ளமானவாறு உரை செய்தும் - நரிகள் குதிரைப் பெருக்காகி வந்த திருவிளையாடலைக் கூறினேம்; மீண்டு - மீள, அப்பரி நரியாய்ப் போனவாறு கண்டு - அக்குதிரைகள் நரிகளாய்ப் போனதன்மையைப் பார்த்து, அமைச்சரைப் புரவலன் கறுப்ப - மந்திரியாராகிய வாதவூரடிகளை மன்னவன் ஒறுக்க, வான ஆறுபோல் - வான் யாற்றினைப்போல, வையை நிர் வந்தவாறு உரைப்பாம் - வையையாறு நீர் பெருகிவந்த திருவிளையாடலை (இனிக்) கூறுவாம். கறுத்தல் - வெகுளல்; ஒறுத்தலை யுணர்த்திற்று. பதிகத்துள் பரிகள் நரியாக்கியது என்றே இருப்பினும், இச்செய்யுள் வையை நீர் வந்தவா றுரைப்பாம் என்று கூறுதலானும், படலமுடிவில் வையை வந்தமை உரைக்கப்பட்டிருத்தலானும் பரிநரியாக்கி வையை யழைத்த படலம் என்னும் பெயர் பொருந்துமாறு காண்க. (1) நெருங்கு தூரிய முழக்கமுந் தானையு நிமிர மருங்கி லாதவர் வந்தெதிர் மங்கல மேந்த அரங்கொல் வேலினா னருளிய வரிசையோ டணைந்து புரங்கொல் வேதியர்க் கன்பர்தந் திருமனை புகுந்தார். (இ-ள்.) நெருங்கு தூரிய முழக்கமும் தானையும் நிமிர - நெருங்கிய இயங்களின் பேரொலியும் சேனைகளின் ஆரவாரமும் ஓங்க, மருங்கு இலாதவர் எதிர்வந்து மங்கலம் ஏந்த - இடையில்லாத பெண்கள் எதிரே வந்து எட்டு மங்கலங்களையும் ஏந்த, புரங்கொல் வேதியர்க்கு அன்பர் - திரிபுரங்களை யழித்த அந்தணராகிய இறைவர்க்கு அன்பராகிய வாதவூரர், அரம்கொல் வேலினான் அருளிய வரிசையோடு அனைந்து - அரத்தையும் மழுக்கும் வைரவேற் படையினையுடைய பாண்டியன் அளித்த சிறப்புடன் சென்று, தம் திருமனை புகுந்தார் - தமது தெய்வத்தன்மை பொருந்திய மனையிற் புகுந்தனர். மிக நுண்ணிய மருங்குலை யுடையாரென்பார் அதிசயவகையால் மருங்கிலாதவர் என்றார். அரங்கொல் வேல் - அரத்தால் அராவப்பட்ட வேலுமாம். (2) உடுத்த சுற்றமுங் கழகமு மொட்டிய நட்பும் அடுத்த கேண்மையால் வினவுவா ரவரவர்க் கிசைய எடுத்த வாய்மையான் முகமனு மகிழ்ச்சியு மீந்து விடுத்த வாதவூ ராளிகள் வேறிடத் திருந்து. (இ-ள்.) உடுத்த சுற்றமும் கழகமும் ஒட்டிய நட்பும் - சூழ்ந்துள்ள சுற்றத்தவரும் கற்றோரும் நெருங்கிய நண்பருமாய், அடுத்த கேண்மையால் வினவுவார் அவரவர்க்கு - பொருந்திய கேண்மையினால் வினவுவாராகிய அவரவர்க்கு, இசைய - பொருந்த, எடுத்த வாய்மை யால் - எடுத்துக்கூறிய இன்சொற்களால், முகமனும் மகிழ்ச்சியும் ஈந்து - முகமனையும் மகிழ்வையும் அளித்து, விடுத்த வாதவூராளிகள் - அவரவர் இருக்கைக்குச் செல்லவிடுத்த வாதவூரடிகள், வேறு இடத்து இருந்து - தனியிடத்தில் அமர்ந்து. கழகம் - கற்றோர் கூட்டம். நட்பு என்னும் பெயர் அதனை யுடையாரை உணர்த்திற்று. சுற்றமாகியும் கழகமாகியும் நட்பினராகியும் வினவலுறும் அவரவர்க்கு என விரிக்க. வாய்மை : வாய்மொழி. முகமன் - உபசாரம். ஆளி - ஆளுதலையுடையார் ; தலைவர்; கள் விகுதி உயர்வுப் பன்மையில் வந்தது. (3) கரந்தை சூடிய வாலவாய்க் கண்ணுத னாமன் றிரந்த வண்ணமே யாங்கொடு போகிய வெல்லாம் பரந்த வன்பருந் தானுங்கொண் டெம்மையும் பணிகொண் டரந்தை தீர்த்தன னன்றியு மரசனுக் கிசைய. (இ-ள்.) கரந்தை சூடிய ஆலவாய்க் கண்ணுதல் - கரந்தை மலரினை அணிந்த திருவாலவாயில் எழுந்தருளிய சோமசுந்தரக்கடவுள், நாம் அன்று இரந்த வண்ணமே - நாம் முன்பு குறையிரந்து வேண்டிய வண்ணமே, யாம் கொடுபோகிய எல்லாம் - யாம் கொண்டுபோன பொருளெல்லாவற்றையும், பரந்த அன்பரும் தானும் கொண்டு - மிக்க அன்பர்களும் தானும் ஏற்றுக் கொண்டு, எம்மையும் பணி கொண்டு அரந்தை தீர்த்தனன் - எம்மையும் அடிமை கொண்டு என் பிறவித் துன்பத்தையும் போக்கினன்; அன்றியும் - அல்லாமலும், அரசனுக்கு இசைய - மன்னனுக்கு மனம் பொருந்த. அன்பரும் தானும் கொண்டு அரந்தை தீர்த்தனன் என்பது, “ தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான் ” என்புழிப் போல வந்த வழுவமைதி. (4) நல்ல வாம்பரி செலுத்தின னமக்கினிக் கவலை இல்ல வாம்படி யாக்கின னின்னமொன் றுலகை வெல்ல வாம்படி தன்னருள் விளைக்குமா னந்தம் புல்ல வாம்படி யெமைத்தவம் பூட்டுவான் வேண்டும். (இ-ள்.) நல்ல வாம்பரி செலுத்தினன் - நல்ல தாவுகின்ற குதிரைகளைச் செலுத்தி வந்தனன்; நமக்கு இனிக் கவலை இல்ல வாம்படி ஆக்கினன் - (அதனால்) நமக்கு இனித் துன்பமில்லை யாமாறு செய்தருளினன்; இன்னம் ஒன்று - (ஆனால்) இன்னும் செய்ய வேண்டியது ஒன்றுளது; உலகை வெல்ல ஆம்படி - (அதாவது) உலகினை வெல்லத்தக்க வண்ணம், தன் அருள் விளைக்கும் - தனது திருவருள் உண்டாக்கும், ஆனந்தம் புல்ல ஆம்படி - இன்பம் பொருந்தத் தக்க வண்ணம், எமைத் தவம் பூட்டுவான் வேண்டும் - எம்மைத் தவநெறியிற் செலுத்துதல் வேண்டும். இல்லவாம்படி - இலவாமாறு. வெல்லவும் புல்லவும் ஆகும் வண்ணம் என்க. வெல்லலாம்படி, புல்லலாம்படி எனப் பாடங் கொள்வது சிறப்பு. பூட்டுவான், தொழிற் பெயர். (5) என்ற வாதரந் தலைக்கொள விகபரத் தாசை ஒன்று மின்றியே யுணர்வினுக் குள்ளுணர் வாகத் துன்று பூரண மாகிய சுந்தரச் சோதி மன்று ளாடிய சேவடி மனம்புதைத் திருந்தார். (இ-ள்.) என்ற ஆதரம் தலைக்கொள - என்ற விருப்பமீக்கூர, இகபரத்து ஆசை ஒன்றும் இன்றியே - இம்மை மறுமை யின்பங்களில் ஆசை சிறிதும் இல்லாமல், உணர்வினுக்குள் உணர்வாகத் துன்று - அறிவுக்குள் அறிவாகப் பொருந்திய, பூரணமாகிய சுந்தரச் சோதி- எங்கும் நிறைந்த பரம்பொருளாகிய சோமசுந்தரக் கடவுளின், மன்றுள் ஆடிய சே அடி - வெள்ளியம்பலத்தில் ஆடியருளும் சிவந்த திருவடியை, மனம் புதைத்து இருந்தார் - தமது உள்ளத்துட் கொண்டிருந்தனர். முன்னரும் இம்மையாசையும் மறுமையிலாசையும் இகந்து எனப் போந்தமை காண்க. ஒன்றும் - சிறிதும். உள்ளுணர்வாக எனப் பிரித்துரைத்தலுமாம். (6) நாளை யுந்திரு வாலவாய் நாயகன் றமரை ஆள மண்சுமந் தருளுமென் றதனையுங் காண்பான் ஊளைவெம்பரிப்1 பூழிபோர்ப் புண்டமெய் கழுவி மீள வேண்டுவான் போற்கடல் குளித்தனன் வெய்யோன். (இ-ள்.) நாளையும் திருவாலவாய் நாயகன் - நாளைப் பொழுதும் திருவாலவாய்ப் பெருமான், தமரை ஆள - தமது அடியாராகிய வாதவூரரை ஆண்டருளும் பொருட்டு, மண் சுமந்தருளும் என்று - மண் சுமந்தருளுவானென்று கருதி, அதனையும் காண்பான் - அதனையுங் காண, ஊளை வெம்பரிப் பூழி போர்ப்புண்டமெய் கழுவிமீள - ஊளையிடுங் கொடிய நரிப் பரிகளால் மேலெழுந்த புழுதியாற் போர்க்கப்பட்ட உடலைக் கழுவித் திரும்பி வருதற்கு, வேண்டுவான்போல் - விரும்பினவனைப்போல, வெய்யோன் கடல் குளித்தனன் - சூரியன் மேலைக் கடலில் மூழ்கினன். காண்பான் : வினையெச்சம். ஊளை யென்னும் குறிப்பால் நரி யென்பது போந்தது. ஊளை - நரியின் கூக்குரல். இது தற்குறிப்பேற்ற வணி. (7) ஈச னாடல்வெம் பரிக்குழாத் தெழுந்தசெந் தூளான் மாசு மூழ்கிய வண்டத்தை வானிலா 'd8 வன்னுந் தூசி னாலறத் துடைப்பவ னெனமணித் தொகுதி வீசு மாழியுண் முளைத்தனன் வெண்மதிக் கடவுள். (இ-ள்.) ஈசன் ஆடல் வெம்பரிக் குழாத்து எழுந்த - இறைவன் திருவிளையாடலாற் போந்த கொடிய பரிக் கூட்டத்தினால் எழுந்த, செம்தூளால் மாசு மூழ்கிய அண்டத்தை - செம்புழுதியால் அழுக்குப் படிந்த அண்டத்தினை, வால்நிலா என்னும் தூசினால் அறத்துடைப்பவன் என - வெள்ளிய நிலவாகிய ஆடையினால் முற்றுந் துடைக்கத் தோன்றியவனைப்போல, மணித் தொகுதி வீசும் ஆழியுள் - முத்துக்குவியல்களை அலைகளால் வீசுங் கடலின்கண், வெண்மதிக் கடவுள் முளைத்தனன் - வெள்ளிய திங்கட் புத்தேள் தோன்றினான். அண்டம் - வான்முகடு, தூசு - வெள்ளாடை. வெண்மதி, தன்னோடியைபின்மை மாத்திரை நீக்கிய விசேடணம். (8) சேய தாரகை வருணமாத் தீட்டிய வானம் ஆய வேட்டினை யிருளெனு மஞ்சனந் தடவித் தூய வாணிலா வென்னும்வெண் டூசினாற் றுடைப்பான் பாய வேலையின் முளைத்தனன் பனிமதிக் கடவுள். (இ-ள்.) சேயதாரகை வருணமாத் தீட்டிய - சேய்மையிலுள்ள உடுக் கூட்டங்களையே எழுத்தாக எழுதப்பட்ட, வானம் ஆய ஏட்டினை - வானமாகிய ஏட்டினை, இருள் எனும் அஞ்சனம் தடவி - இருளாகிய மையினைத் தடவி, தூய வாள் நிலா என்னும் வெண் தூசினால் - தூய ஒள்ளிய நிலாவாகிய வெள்ளாடையினால், துடைப்பான் - துடைப்பதற்கு, பனிமதிக்கடவுள் - குளிர்ச்சி பொருந்திய திங்களாகிய தேவன், பாய வேலையில் முளைத்தனன் - பரந்த கடலின்கண்ணே தோன்றினன். வருணன் - எழுத்து, பனையேட்டில் ஆணிகொண்டெழுதிய எழுத்துக்கள் நன்கு விளங்குமாறு மை பூசித்துடைப்பது வழக்க மாகலின் இருளெனும்அஞ்சனந் தடவி நிலா வென்னும் தூசினால் துடைப்பான் என்றார். இவ்விரண்டு செய்யுளும் உருவகத்தை அங்கமாகக் கொண்டு வந்த தற்குறிப்பேற்றம். (9) கள்ளொழுக்குதார் மீனவன் கடிமனை புகுந்த புள்ளு வப்பரி நள்ளிருட் போதுவந் தெய்தப் பிள்ளை யாகிய மதிமுடிப் பிரான்விளை யாட்டால் உள்ள வாறுதம் வடிவெடுத் தொன்றொடொன் றுசாவும். (இ-ள்.) கள் ஒழுக்குதார் மீனவன் கடிமனை புகுந்த - தேனைச் சொரிகின்ற வேப்ப மலர் மாலையை யணிந்த பாண்டியனது காவலையுடைய மனையின்கண் புகுந்த, புள்ளுவப்பரி - வஞ்சக வுருக்கொண்ட குதிரைகள், நள் இருள் போது வந்து எய்த - நடுவிராப் பொழுது வந்து பொருந்த, பிள்ளையாகிய மதிமுடிப் பிரான் விளையாட்டால் - பிறை மதியினைச் சூடிய முடியினை யுடைய இறைவன் திருவிளையாடலினால், உள்ளவாறு தம் வடிவு எடுத்து - தமது வடிவத்தை முன் உள்ளபடியே எடுத்து, ஒன்றோடு ஒன்று உசாவும் - ஒன்றோடொன்று உசாவா நிற்கும். பிள்ளையாகிய மதி - பிறைமதி. (10) சங்கி னோசையும் பிணப்பறை யோசையுஞ் சரிந்த மங்கு லோதிய ரழுகுர லோசையும் வடந்தாழ் கொங்கை சேப்புறக் கையெறி யோசையுங் குளிர1 எங்கு நாஞ்செவி பருகுவ மின்னமு தென்ன. (இ-ள்.) சங்கின் ஓசையும் பிணப்பறை ஓசையும் - சங்கின் ஒலியினையும் சாக்காட்டுப் பறையின் ஒலியினையும், சரிந்த மங்குல் ஓதியர் அழுகுரல் ஓசையும் - பின்புறஞ் சரிந்த முகில் போலுங் கூந்தலையுடைய மகளிர் அழுகுரலின் ஒலியினையும், வடம்தாழ் கொங்கை சேப்புறக் கை எறி ஓசையும் - (அவர்கள்) முத்துமாலை தங்கிய கொங்கைகள் சிவக்குமாறு கையினால் அடித்துக் கொள்ளும் ஒலியினையும், இன்அமுது என்ன - இனிய அமுதினை வாய்குளிரப் பருகுவது போல, நாம் எங்கும் செவி குளிரப் பருகுவம் - நாம் எவ்விடத்தும் செவிகள் குளிருமாறு நுகர்வோம். சங்கோசையும் சாக்காடு குறித்தது. சரிந்த - துயரத்தால் முடியாது கிடக்கின்ற என்றுமாம். சேப்பு - சிவத்தல். எங்கும் - புற்ஙகாட்டிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும், பருகும் இயற்கை யுடையேம் என்க. குளிற என்னும் பாடத்திற்கு ஒலிக்க என்று பொருள் கொள்க. (11) வாம்ப ரித்திர ளாகிநா மனித்தரைச் சுமந்து தாம்பு சங்கிலித் தொடக்குண்டு மத்திகை தாக்க ஏம்ப லுற்றனம் பகலெலா மிப்பொழு தீண்டு நாம்ப டைத்தன நம்முரு நம்விதி வலத்தால். (இ-ள்.) நாம் பகல் எலாம் - நாம் பகல் முழுதும், வாம்பரித் திரள் ஆகி - தாவுகின்ற குதிரைக் கூட்டங்களாகி, மனித்தரைச் சுமந்து - மக்களைச் சுமந்து, தாம்பு சங்கிலித் தொடக்குண்டு - கயிற்றினாலும் சங்கிலியினாலும் கட்டப்பட்டு, மத்திகை தாக்க ஏம்பல் உற்றனம் - கோலாலடிக்க வருந்தினோம்; இப்பொழுது ஈண்டு - இப்பொழுது இங்கு, நாம் நம் விதி வலத்தால் நம் உருப் படைத்தனம் - நாம் நமது நல்வினையின் வலியினால் நமது பழைய வடிவினைப் பெற்றோம். மத்திகை - குதிரைச் சம்மட்டி. ஏம்பல் - வருத்தம். அத்தகைய நாம் பரித்திரளாகி ஏம்பலுற்றனம் என விரித்துரைக்க. (12) கான கந்தனி லொழுகுநாண் முதலிந்தக் கவலை யான துன்பநா மறிந்தில மின்னமு மார்த்த மான வன்றொடர் வடுக்களு மத்திகைத் தழும்பும் போன வன்றினிப் புலருமுன் போவதே கருமம். (இ-ள்.) கானகம் தனில் ஒழுகும் நாள் முதல் - காட்டின்கண் சஞ்சரிக்கத் தொடங்கிய நாள் முதல் நேற்றுவரையும், இந்த கவலையான துன்பம் நாம் அறிந்திலம் - இந்தக் கவலைக்கு ஏதுவாகிய துன்பத்தை நாம் அறிந்திலோம்; ஆர்த்த மானவன் தொடர்வடுக்களும் - கட்டிய பெரிய வலிய சங்கிலியின் தழும்பு களும், மத்திகைத் தழும்பும் - குதிரைச் சம்மட்டியின் வடுக்களும், இன்னமும் போன அன்று - இன்னும் நீங்கவில்லை; இனிப் புலரு முன் போவதே கருமம் -இனி விடிவதற்குமுன் இவ்விடத்தினின்றும் போவதே செய்யத்தக்க காரியம். நாம் என்றது நரியாகிய சாதியை. போன அன்று - போயின அல்ல. (13) உள்ள மாரநாந் தின்பதற் கூன்சரிந் தொழுகும் நொள்ளை நாகில நந்தில நுழைந்தளை யொதுங்கும் கள்ள நீள்கவைக் கான்ஞெண்டு மிலவினிக் கடலை கொள்ளி னோடுபைம் பயறுபுற் கொள்வதை1 யடாதால். (இ-ள்.) உள்ளம் ஆர நாம் தின்பதற்கு - மனமார நாம் தின்பதற்கு, ஊன் சரிந்து ஒழுகும் நொள்ளை நாகு இல - தசை சரிந்து தொங்கும் கட்பொறியில்லாத நத்தைகள் இங்கில்லை; நந்து இல - சங்குகளும் இல்லை; அளை நுழைந்து ஒதுங்கும் கள்ளம் - வளையில் நுழைந்து பதுங்கும் கள்ளத்தையும், நீள் கவைக்கால் ஞெண்டும் இல - நீண்ட பிளவுபட்ட கால்களையுமுடைய ஞெண்டுகளும் இல்லை; இனி கடலை கொள்ளினோடு பைம்பயறு புல்கொள்வது அடாது - இனிக் கடலையும் கொள்ளும் பசிய பயறும் புல்லுந் தின்னுவது நமக்குப் பொருந்தாது. ஆர் - நிறைய; திருப்தியுற. நொள்ளை - குருடு. கொள்வதை, ஐ : சாரியை. (14) நாடிக் காவலன் றமருளார் நகருளார் கண்டாற் சாடிக் காய்வ்ரே புலருமுன் சங்கிலித் தொடர்நீத் தோடிப் போவதே சூழ்ச்சியென் றூக்கமுற் றொருங்கே கூடிப் பேசின வூளைவாய்க் குறுநரிக் குழாங்கள். (இ-ள்.) காவலன் தமருளார் நகருளார் நாடிக் கண்டால் - மன்னன் சேனைகளும் நகரிலுள்ளவர்களும் நம்மை நாடிக் காண்பா ராயின், சாடிக் காய்வர் - அடித்துக் கொல்லுவர்; புலருமுன் சங்கிலித் தொடர் நீத்து ஓடிப் போவதே சூழ்ச்சி என்று - (ஆதலால்) விடியுமுன் சங்கிலிக் கட்டினை ஒழித்து ஓடிப்போவதே தக்க உபாயமென்று, ஊக்க முற்று - மன வூக்கத்துடன், ஊளைவாய்க் குறுநரிக் குழாங்கள் - ஊளையிடும் வாயினையுடைய சிறிய நரிக் கூட்டங்கள், ஒருங்கே கூடிப் பேசின - ஒரு சேரக் கூடிப் பேசி முடிவு செய்தன. காய்ந்து சாடுவர் என மாறுதலுமாம். தொடர் - கட்டு. (15) வெறுத்த காணமுங் கடலையும் விரும்பின கோழூன் துறுத்த நாகுநந் தலைவனைச் சங்கிலித் தொடரை முறித்த கால்களிற் கட்டிய கயிற்றொடு முளையைப் பறித்த வூளையிட் டெழுந்தன போம்வழி பார்ப்ப. (இ-ள்.) காணமும் கடலையும் வெறுத்த - கொள்ளையுங் கடலையையும் வெறுத்து, கோழ் ஊன் துறுத்த நாகு நந்து அலவனை விரும்பின - கொழுவிய தசை துறுத்திய நத்தையையுஞ் சங்கினையும் நண்டையும் விரும்பி, சங்கிலித் தொடரை முறித்த - சங்கிலித் தொடக்கை முறித்து, - கால்களிற் கட்டிய கயிற்றொடு முளையைப் பறித்த - கால்களிற் கட்டிய கயிற்றுடன் தறியையும் பிடுங்கி, ஊளையிட்டு எழுந்தன - ஊளையிட்டு எழுந்து, போம்வழி பார்ப்ப - போதற்கு வழி தேடுவவாயின. வெறுத்த, துறுத்த, முறித்த. பறித்த என்னும் அன்பெறாத முற்றுக்களும், விரும்பின, எழுந்தன என்னும் முற்றுக்களும் எச்சமாயின. பார்ப்பனவாயின என ஆக்கச் சொல் வருவித்துரைக்க. (16) நின்ற நீணிலைப் பந்தி1யு ணெருங்குமா நி'e7çரயைச் சென்று தாவிவா ளெயிறுறச் சிதைபடக் கடித்து மென்று சோரியைக் குடிப்பன வீக்கிய முளையோ டொன்ற வோடவே யண்டத்தி லூறுசெய் வனவால். (இ-ள்.) நின்றநீள் நிலைப்பந்தியுள் - தாம் நின்ற நீண்ட நிலையினையுடைய மந்துரையில். நெருங்கு மா நிரையைச் சென்றுதாவி - நெருங்கிய குதிரை வரிசைகளைப் போய்த்தாவி, வாள் எயிறு உற - ஒள்ளிய பற்கள் அழுந்துதலால், சிதைபட - ஊறுபட, கடித்து மென்று சோரியைக் குடிப்பன - கடித்துமென்று குருதியைக் குடிப்பனவாயின சில; வீக்கிய முளையோடு ஒன்ற ஓடவே - சில கட்டிய முளையோடு பொருந்த ஓடுதலால். அண்டத்தில் ஊறு செய்வன - அவற்றின் அண்டங்களில் ஊறு செய்வனவாயின. மாநிறை - முன்பிருந்த குதிரைகள். அண்டம் - பீசம். (17) ஊளை யோசைகேட் டிம்மென வுறக்கநீத் தெழுந்து காளை வீரராம் மந்துரை காப்பவர் நெருநல் ஆளி போல்வரு பரியெலா நரிகளாய் மற்றை ஒளி மாநிரை குடர்பறித் துண்பன கண்டார். (இ-ள்.) காளை வீரராம் மந்துரை காப்பவர் - மந்துரைக் காவலாளராகிய காளைப் பருவமுடைய வீரர்கள், ஊளை ஓசை கேட்டு - நரிகளின் ஊளை யொலியைக் கேட்டு, இம்மென உறக்கம் நீத்து எழுந்து - விரைந்து துயில் நீத்து எழுந்து, நெருநல் ஆளிபோல் வரு பரி எலாம் - நேற்றுச் சிங்கம்போல வந்த குதிரைகளெல்லாம், நரிகளாய் - நரிகளாகி, மற்றை ஒளி மாநிரை குடர் பறித்து உண்பன கண்டார் - ஏனைய வரிசையாகக் கட்டிய குதிரைக் கூட்டங்களின் குடரினைப் பறித்துண்ணுதலைக் கண்டனர். இம்மென : விரைவுக் குறிப்பு. ஒளி - வரிசை. குடர் : போலி. உண்பன: தொழிற் பெயர். (18) காண்ட லுஞ்சில வலியுள கடியமுள் ளரணந் தாண்டி யோடின சிலநரி சாளர முழையைத் தூண்டி யோடின சிலநரி சுருங்கையின் வழியால் ஈண்டி யோடின நூழில்புக் கேகின சிலவே. (இ-ள்.) காண்டலும் சில வலி உள - அங்ஙனங் கண்ட வளலில் சில வலியுள்ள நரிகள், கடியமுள் அரணம் தாண்டி ஒடின - கூரிய இருப்பு முட்களைத் தலையிற் செறித்து வைக்கப்பட்ட மதில்களைத் தாண்டியோடின; சில நரி சாளர முழையைத் தூண்டி ஓடின - சில நரிகள் பலகணியின் துளைகளைத் தள்ளி ஓடின; சில நரி சுருங் கையின் வழியால் ஈண்டி ஓடின - சில நரிகள் நுழைவாயில் வழியினால் நெருங்கி ஓடின, சில நூழில்புக்கு ஏகின - சில நரிகள் கரந்துறை வழியாற்புகுந்து ஓடின. கடிய - கூர்மையுடைய; கடி என்னும் உரிச்சொல்லடியாக வந்த குறிப்புப் பெயரெச்சம். முள் - இருப்புமுள். சுருங்கை - நுழைந்து செல்லும் சிறிய வாயில்; நிலவறையுமாம். (19) முடங்கு காலுடைச் சம்புவு மூப்படைந் தாற்றல் அடங்கு மோரியுங் கண்குரு டாகிய நரியும் ஒடுங்கி நோயுழந்1 தலமரு மிகலனு மோடும் இடங்கள் கண்டில பந்தியிற் கிடந்தன வேங்கி. (இ-ள்.) முடங்கு கால் உடைச் சம்புவும் - வளைந்த காலினை யுடைய நரிகளும், மூப்பு அடைந்து ஆற்றல் அடங்கும் ஓரியும் - மூப்புற்று வலி ஒடுங்கிய நரிகளும், கண் குருடாகிய நரியும் - கண் தெரியாத நரிகளும், ஒடுங்கி நோய் உழந்து அலமரும் இகலனும் - உடல் இளைத்து நோயினால் வருந்திச் சுழலும் நரிகளும், ஓடும் இடங்கள் கண்டில - ஓடும் வழிகளைக் காணாதவைகளாய், பந்தியில் ஏங்கிக் கிடந்தன - மந்துரையிலேயே மனமேங்கிக் கிடந்தன. முடங்குகால் - முடம் பட்ட கால். சம்பு, ஓரி, இகலன் என்பன நரி என்னும் பொருள் குறித்த பல பெயர்த் திரிசொல். (20) கிட்டி யோடினர் வெருட்டுவோர் கீழ்விழக் கடித்துத் தட்டி யோடுவ சிலவெதிர் தடுப்பவ ரடிக்கீழ் ஒட்டி யோடுவ சிலகிடந் தூளையிட் டிரங்குங் குட்டி யோடணைத் தெயிலிறக் குதிப்பன சிலவே. (இ-ள்.) சில - சில நரிகள், கிட்டி ஓடினர் வெருட்டுவோர் கீழ் விழ - தம்மை நெருங்கி ஓடிவந்து அச்சுறுத்துவோர் கீழே விழுமாறு, கடித்துத்தட்டி ஓடுவ - கடித்து அவர் கையில் அகப்படாமல் ஓடுவன; சில எதிர் தடுப்பவர் அடிக்கீழ் ஒட்டி ஓடுவ - சில நரிகள் எதிரே வந்து தடைப் படுத்துகின்றவரின் காலின் கீழே பதுங்கி ஓடுவன; சிலசில நரிகள், கிடந்து ஊளையிட்டு இரங்கும் குட்டி யோடு அணைத்து - செயலின்றிக் கிடந்து ஊளையிட்டு வருந்து கின்ற குட்டிகளை அணைத்து, எயில் இறக் குதிப்பன - மதில் சிதைவுபடக் குதிப்பன. தட்டி - தவறி. குட்டியோடு : வேற்றுமை மயக்கம்.(21) மறம்பு னைந்தவேன் மீனவன் மாளிகை தள்ளிப் புறம்ப டைந்தவிந் நரியெலாம் பொய்கையுய் யானம் அறம்ப யின்றநீண் மனைமறு காலயங் கவலைத் திறம்ப டர்ந்தபன் மாடநீ ணகரெலாஞ் செறிந்த. (இ-ள்.) மறம்புனைந்த வேல்மீனவன் மாளிகைதள்ளி - வெற்றி மாலைசூடிய வேற்படையேந்திய பாண்டியனது மாளிகையைக் கடந்து, புறம்பு அடைந்த இந்நரி எலாம் - வெளியே சென்றடைந்த் இந்நரிகளெல்லாம், பொய்கை உய்யானம் - குளக்கரையும் பூந்தோட்டங்களும், அறம் பயின்ற நீண்மனை - அறம் விளங்கும் நெடிய சாலைகளும், மறுகு ஆலயம் கவலைத் திறம் படர்ந்த - வீதிகளும் திருக்கோயில்களும் சந்தி வகைகளும் ஆகிய இடங்களிற் சென்றனவாய், பல்மாடம் நீள் நகர் எலாம் செறிந்த - பல மாடங்களையுடைய நெடிய நகர் முழுதும் நெருங்கின. தள்ளி - கடந்து; நீங்கி. அறம்பயின்ற மனை - அறச்சாலை; தரும சத்திரம். கவலை - இரண்டு மூன்று தெருக்கள் கூடுமிடங்கள்; கவர் வழியுமாம். படர்ந்த : முற்றெச்சம். (22) மன்றுஞ் சித்திர கூடமு மாடமு மணிசெய் குன்றுந் தெற்றியு முற்றமு நாளொடு கோள்வந் தென்றுஞ் சுற்றிய பொங்கரு மெங்கணு நிரம்பி ஒன்றுஞ் சுற்றமோ டூளையிட் டுழல்வன நரிகள். (இ-ள்.) நரிகள் - நரிக்கூட்டங்கள், மன்றும் சித்திர கூடமும் மாடமும் - மன்றங்களும் சித்திர மெழுதிய கூடங்களும் மாடங்களும், மணி செய்குன்றும் தெற்றியும் முற்றமும் - மணிகளாற் கட்டிய செய்குன்றுகளும் திண்ணைகளும் முன்றில்களும், நாளொடு கோள் வந்து என்றும் சுற்றிய பொங்கரும் எங்கணும் நிரம்பிய - நாண்மீனொடு கோள்களும் எஞ்ஞான்றுஞ் சுற்றப் பெறும் சோலைகளுமாகிய எல்லா விடங்களிலும் நிறைந்து, ஒன்றும் சுற்றமோடு ஊளையிட்டு உழல்வன - நெருங்கிய சுற்றத்தோடு ஊளையிட்டுத் திரியா நின்றன. மன்று - ஊர்க்கு நடுவே எல்லாருங் கூடி யிருக்கும் மரத்தடி என்றும், தெற்றி - அம்பலம் என்றும் கொள்ளலுமாம். (23) கரியி னோசையும் பல்லிய வோசையுங் கடுந்தேர்ப் பரியி னோசையு மின்றமி ழோசையும் பாணர் வரியி னோசையு நிரம்பிய மணிநக ரெங்கும் நரியி னோசையாய்க் கிடந்தது விழித்தது நகரம். (இ-ள்.) கரியின் ஓசையும் பல்இய ஓசையும் - யானைகளின் பிளிறொலியும் பலவகை வாத்தியங்களின் ஒலியும், கடுந்தேர்ப்பரியின் ஓசையும் - விரைந்த செலவினையுடைய தேரிற்பூட்டிய குதிரைகளின் கனைப்பொலியும், இன்தமிழ் ஓசையும் - இனிய தமிழின் ஒலியும், பாணர் வரியின் ஓசையும் - பாணர்களின் இசைப் பாட்டொலியும், நிரம்பிய மணிநகர் எங்கும் - நிறைந்த அழகிய நகர் முழுதும், நரியின் ஓசையாய்க் கிடந்தது - நரிகளின் ஊளை யொலி மயமாய்க் கிடந்தது; நகரம் விழித்தது - நகரிலுள்ளோர் விழித்தனர். தமிழோசை - புலவர்கள் தமிழாராய்ச்சி செய்யும் ஓசை. வரி - இசைப் பாட்டு. நகரம் என்னும் இடப்பெயர் இடத்திலுள்ளாரை உணர்த்தி நின்றது. (24) விழித்த ஞாளிகள் விழித்தன கேகயம் வெருவி விழித்த கோழிகள் விழித்தன மதுகரம் வெருண்டு விழித்த வோதிமம் விழித்தன குருகினம் விரைய விழித்த வாரணம் விழித்தன கருங்கொடி வெள்ளம். (இ-ள்.) ஞாளிகள் விழித்த - நாய்கள் விழித்தன; கேகயம் வெருவி விழித்தன - மயில்கள் அஞ்சி விழித்தன; கோழிகள் விழித்த - கோழிகள் விழித்தன; மதுகரம் வெருண்டு விழித்தன - வண்டுகள் பயந்து விழித்தன; ஓதிமம் விழித்த - அன்னப் பறவைகள் விழித்தன; குருகு இனம் விரைய விழித்தன - நாரையின் கூட்டங்கள் விரைந்து விழித்தன; வாரணம் விழித்த - யானைகள் விழித்தன; கருங்கொடி வெள்ளம் விழித்தன - கரிய காக்கைக் கூட்டங்கள் விழித்தன. கொடி - காக்கை. விழித்தற்குரிய பொழுது வருமுன் யாவும் நள்ளிரவில் விழித்தன என்க. (25) அட்டில் புக்கன நிணத்தினை யழற்பசி யுருக்கப் பட்ட டுக்கிய கருங்கல முருட்டுவ பாகு சுட்ட சோறுபல் லுணவுவாய் மடுப்பன சூழ்ந்த குட்டி யுண்ணவுங் கொடுப்பன கூவிளி கொள்வ. (இ-ள்.) நிணத்தினை அழல் பசி உருக்கப்பட்டு - சில நரிகள் தங்கள் தசையினை அழல் போன்ற பசி உருக்குவதால், அட்டில் புக்கன - சமையலறையிற் புகுந்து, அடுக்கிய கருங்கலம் உருட்டுவ - அடுக்கப்பட்ட பழைய மட்பாண்டங்களை உருட்டி, பாகு சுட்ட சோறு பல் உணவு வாய் மடுப்பன - குழம்பும் வெந்த சோறும் பல உணவுமாகிய இவற்றைத் தின்று, சூழ்ந்த குட்டி உண்ணவும் கொடுப்பன - சூழ்ந்துள்ள குட்டிகள் உண்ணுதற்கும் கொடுத்து. கூவிளி கொள்வ - பேரொலி செய்வன. உருக்கப்பட்டு - உருக்க என்னும் பொருளதாய் நின்றது. புக்கன முதலிய முற்றுக்களை எச்சமாக்குக. பல் லுணவு - களி, பழம் முதலாயின. கூவிளி - கூக்குரல். (26) புறவு பூவைபைங் கிள்ளைகள் பூத்தலைச் சேவல் பிறவும் வாருவ வுறங்கிய பிள்ளையைக் கொடுபோய் நறவு நாறிய குமுதவாய் நகையெழ நக்கி உறவு போல்விளை யாடுவ வூறுசெய் யாவால். (இ-ள்.) புறவு பூவை பைங் கிள்ளைகள் - (சில நரிகள்) புறாக்களையும் நாகணவாய்ப் பறவைகளையும் பசிய கிளிகளையும், பூத்தலைச் சேவல் பிறவும் வாருவ - முண்முருக்கமலர் போன்ற சூட்டுப் பொருந்திய த'e7çலயினையுடைய சேவல்களையும் இவை போன்ற பிறவற்றையும் வாருகின்றன; உறங்கிய பிள்ளையைக் கொடு போய் - (சில நரிகள்) வீட்டிற் றூங்கிய பிள்ளைகளைக் கொண்டு போய், நறவு நாறிய குமுதவாய் நகை எழ நக்கி - தேன் ஊறும் குமுதமலர் போன்ற வாயினின்றும் புன்னகை தோன்ற நக்கி, உறவு போல் விளையாடுவ - உறவைப்போற் கருதி விளையாடுவன; ஊறு செய்யா - துன்பஞ் செய்யமாட்டா. பூ - பூப்போலும் சூட்டு; உச்சிக் கொண்டை. வாருதல் - அள்ளுதல்; கவர்தல். பிள்ளை - மக்கட்குழவி. இறைவன் திருவருட் குறிப்பால் குழவிகளை ஊறு செய்யாது விளையாடுவனவாயின. (27) பறிப்ப வேரொடு முன்றில்வாய்ப் படர்பசுங் கொடியைக் கறிப்ப நாகிளங் காயெலாங் கரும்புதேன் கவிழ முறிப்ப வாயிட்டுக் குதட்டுவ வண்டுவாய் மொய்ப்பத் தெறிப்ப வூளையிட் டாடுவ திரிவன பலவே. (இ-ள்.) பல - பலநரிகள், முன்றில்வாய்ப்படர் பசுங்கொடியை வேரொடு பறிப்ப - முற்றத்தின்கண் படர்ந்த பசுங்கொடிகளை வேரோடு பிடுங்கி, நாகு இளம் காய் எலாம் கறிப்ப - அவற்றிலுள்ள மிக்க இளமையாகிய காய்கள் அனைத்தையுங் கடித்து, கரும்பு தேன் கவிழ முறிப்ப - தேன் கவிழ்ந்தொழுகுமாறு கரும்புகளை முறித்து, வாய் இட்டுக் குதட்டுவ - வாயிற்போட்டுக் குதட்டி, வாய் வண்டு மொய்ப்பத் தெறிப்ப - வாயில் வண்டுகள் மொய்க்கக் கீழே உமிழ்ந்து, ஊளையிட்டு ஆடுவ திரிவன - ஊளையிட்டு விளையாடித் திரிவன. பறிப்ப முதலியவற்றை முற்றாகவே உரைத்தலுமாம். தண்மையும் பொலிவுங் கருதி முன்றிலில் பசுங்கொடிகள் படரவிட்டிருப்பர்; அவரை முதலிய கறிதருங் கொடியுமாம். கறித்தல் - கடித்தல்: வண்டு வாய் மொய்ப்ப வாயிட்டுக் குதட்டுவ எனக்கூட்டியுரைத்தலும், தெறிப்ப என்பதற்குக் குதிப்பன என்றுரைத்தலும் பொருந்தும். (28) ஆயி ரம்பொரி திரிமருப் படல்கெழு மேடம் ஆயி ரங்கருந் தாதுநே ராக்கைய வேனம் ஆயி ரங்கவி ரனையசூட் டவிர்தலைக் கோழி ஆயி ரங்குறும் பார்ப்பொடு மாருயிர் செகுப்ப. (இ-ள்.) பொரிதிரிமருப்பு அடல்கெழு ஆயிரம் மேடம் - பொருக்குப் பொருந்திய திருகிய கொம்பினையுடைய வலிமிக்க ஆயிரம் ஆட்டுக்கிடாய்களையும், கருந்தாது நேர் ஆக்கைய ஆயிரம் ஏனம் - இரும்பினை ஒத்த உடலையுடைய ஆயிரம் பன்றிகளையும், கவிர் அனையசூட்டு அவிர்தலை ஆயிரம் கோழி - முண்முருக்கு மலரொத்த சூட்டு விளங்குந் தலையினை யுடைய ஆயிரங் கோழிகளையும், ஆயிரம் குறும் பார்ப்பொடும் - சிறிய ஆயிரம் கோழிக்குஞ்சுகளையும், ஆர் உயிர் செகுப்ப - அவற்றின் அரிய உயிரினைப் போக்கிக் கொள்வன. பொரி - பொருக்கு. கருந்தாது - இரும்பு. கவிர் - பலாசு. பார்ப்பு -குஞ்சு; “ பார்ப்பும் பறழும் பறப்பவற் றிளமை” என்பது தொல்காப்பியம். (29) பின்றொ டர்ந்துநாய் குரைப்பொடு துரந்திடப் பெயர்ந்து முன்றொ டர்ந்துயிர் செகுப்பன வெஞ்சின மூட்டி வன்ற டம்புய மள்ளர்போய் வலிசெயப்பொறாது கன்றி வந்துசெம் புனலுகக் கடிப்பன வனந்தம். (இ-ள்.) அனந்தம் - அளவில்லாத நரிகள், நாய் குறைப்பொடு பின் தொடர்ந்து துரந்திட - நாய்கள் குரைத்தலுடன் தம்மைப் பின் தொடர்ந்து துரந்திட, பெயர்ந்து முன் தொடர்ந்து உயிர் செகுப்பன- திரும்பி முன்னே தொடர்ந்து போய் அவற்றின் உயிரைப் போக்குவன; வெஞ்சினம் மூட்டி வன் தடம்புய மள்ளர் போய் வலிசெய - கொடிய சினம் மூட்டப்பட்டு வலிய பெரிய தோளை யுடைய வீரர்கள் போய்த் துன்பஞ்செய்ய, பொறாது கன்றிவந்து செம்புனல் உகக்கடிப்பன - பொறுக்காது சினந்து வந்து குருதி ஒழுக அவர்களைக் கடிப்பன. மூட்டி - மூட்டப்பட்டு; செயப்பாட்டு வினைப்பொருளில் வந்த செய்வினை. கன்றி - சினம் முதிர்ந்து. (30) பன்றி வாய்விடு மிரக்கமும் பல்பொறி முள்வாய் வென்றி வாரணச் சும்மையு மேழகத் தொலியும் அன்றி நாய்குரைப் போசையு மாடவ ரார்ப்பும் ஒன்றி யூளைவாய் நரிக்குரற் கொப்பதுண் டொருசார். (இ-ள்.) பன்றி வாய்விடும் இரக்கமும் - பன்றிகள் வாய் விடும் ஒலியும், பல்பொறி முள்வாய் வென்றி வாரணச் சும்மையும் - பலபொறிகளையும் முள் போன்ற வாயினையும் வெற்றியையு முடைய கோழிகளின் ஒலியும், மேழகத்து ஒலியும் அன்றி - ஆடுகளின் ஒலியுமாகிய இவையேயல்லாமல், நாய் குரைப்பு ஓசையும், ஆடவர் ஆர்ப்பும் ஒன்றி - நாய்களின் குரைப்பொலியும் மள்ளர்களின் ஆரவாரவொலியும் ஒன்றுபட்டு, ஊளைவாய் நரிக்குரற்கு ஒருசார் ஒப்பது உண்டு - ஊளையிடும் வாயினை யுடைய நரிகளின் ஒலிக்கு ஒருபுடை ஒப்பதுண்டு. இரக்கம், சும்மை என்பன ஒலியென்னும் பொருளன. அன்றி என்பதற்கு மாறுபட்டு என்றுரைத்தலுமாம். இவை எல்லாவற்றி னொலியும் சேர்ந்தும் நரிகளின் ஒலிக்கு ஒருபுடை யொக்குமேயன்றி முழுதும் ஒவ்வா என்றார். (31) கங்கு லெல்லைகா ணியநகர் கண்விழித் தாங்கு மங்கு றோய்பெரு வாயில்க டிறத்தலு மாறா தெங்கு மீண்டிய நரியெலா மிம்மென வோடிப் பொங்கு காரிருட் டுணியெனப் போயின கானம். (இ-ள்.) கங்குல் எல்லை காணிய நகர் கண்விழித்தாங்கு - இரவின் முடிவைக் காணுதற்கு நகரம் கண்விழித்தாற் போல, மங்குல் தோய் பெருவாயில்கள் திறத்தலும் - முகில் தவழுகின்ற பெரிய வாயில்கள் திறந்தவளவில், எங்கும் மாறாது ஈண்டிய நரி எலாம் - எங்கும் இடமின்றி நெருங்கிய நரிகள் அனைத்தும், இம்மென - விரைய, பொங்கு கார் இருள்துணி என - நிறைந்தகரிய இருளின் துண்டங்கள் காட்டில் ஓடினாற்போல, கானம் ஓடிப்போயின - காட்டிற்கு ஓடிப்போயின. வாயில்கள் - நகரின் மதில் வாயில்கள். வாயில்கள் திறந்தமை நகர்கண் விழித்தாற் போன்றிருந்தது. இம்மென : விரைவுக்குறிப்பு. (32) ஈறி லாச்சிவ பரஞ்சுட ரிரவிவந் தெறிப்பத் தேறு வாரிடைத் தோன்றிய சிறுதெய்வம் போல மாறி லாதபன் செங்கதிர் மலர்ந்துவா ளெறிப்ப வீறு போயொளி மழுங்கின மீன்கண மெல்லாம். (இ-ள்.) தேறுவாரிடை - கேட்டல் முதலிய உபாயங்களால் மெய்யுணர்வு பெறாநின்ற ஞானிகளிடத்து, ஈறு இலாச் சிவபரஞ்சுடர் இரவி வந்து எறிப்ப - முடிவில்லாத சிவப்பரஞ்சோதியாகிய சூரியன் தோன்றி அருட்கிரணத்தை வீச, தோன்றிய சிறு தெய்வம் போல - அங்குத் தோன்றிய சிறு தெய்வங்கள் வலு குறைந்து ஒளி மழுங்குதல் போல, மாறுஇல் ஆதபன் செங்கதிர் மலர்ந்து வாள் எறிப்ப - மாறுதல் இல்லாத சூரியனுடைய ஆயிரங்கிரணங்களும் பரவி ஒளியை வீச, மீன்கணம் எல்லாம் வீறுபோய் ஒளிமழுங்கின - விண்மீன்களின் கூட்டமெல்லாம் வலிகுன்றி ஒளிமழுங்கின. முன் சிறுதெய்வங்களைப் பொருளெனக் கொண்டிருந்தவர்கள் மெய்யுணர்வு பெற்றுச் சிவபெருமானே பரம்பொருளென உணர்ந்த காலை “ சென்று நாம் சிறு தெய்வஞ் சேர்வோ மல்லோம் சிவபெரு மான் றிருவடியே சேரப் பெற்றோம்” என அவற்றை அவமதித்து விடுத்தலை “ ஈறிலாச் சிவபரஞ்சுடரிரவி வந்தெறிப்பத்தேறு வாரிடைத் தோன்றிய சிறு தெய்வம்போல” என்றார். ஞாயிறு என்றும் ஒருபெற்றியே வந்து கொண்டிருப்பதன்பார் “மாறிலாதபன்” என்றார். மாறு, முதனிலைத் தொழிற் பெயர். எறிப்ப என்னும் எச்சமிரண்டும் காரணப் பொருளன. (33) அண்ட ருக்கரி தாகிய மறைப்பொரு ளழுகைத் தொண்ட ருக்கெளி தாகிமண் சுமந்தருள் வருத்தங் கண்ட ருட்கழல் வருடுவான் கைகளா யிரமுங் கொண்ட ருக்கவெங் கடவுளுங் குணகட லுதித்தான். (இ-ள்.) அண்டருக்கு அரிதாகிய மறைப்பொருள் - தேவர் கட்கு அரிதாகிய வேதத்தின் உட்பொருளானது, அழுகைத் தொண்டருக்கு எளிதாகி - அழுதலை மேற்கொண்ட தொண்டராகிய வாதவூரடிகளுக்கு எளிதாகி, மண்சுமந்தருள் வருத்தம் கண்டு - மண் சுமந்தருளும் வருத்தத்தை நோக்கி, அருள்கழல் வருடுவான் - திருவருளாகிய திருவடிகளை வருடும் பொருட்டு, கைகள் ஆயிரமும் கொண்டு - ஆயிரங் கரங்களையுங் கொண்டு, அருக்க வெங்கடவுளும் - வெவ்விய சூரிய தேவனும், குணகடல் உதித்தான் - கீழைக்கடலில் வந்து தோன்றினான். அண்டருக்கும் என்னும் சிறப்பும்மை தொக்கதுமாம். மறைப் பொருள் என்னும் பெயருக்கேற்ப அரிதாகிய எளிதாகி என அஃறிணை வாய்பாடு கூறினார். வாதவூரர் தலையன்பால் இடையறாது அழுது கொண்டிருந்தாரென்பது திருவாசகத்தால் நன்கு விளங்குதலின் “அழுகை தொண்டர்” என்றார். இப்புராணத்து வாழ்த்தினுள்ளும் “துளும்பு கண்ணீருள் மூழ்கி அழுதடியடைந்த அன்பன்” என்று கூறினமை காண்க. இறைவனுடைய அங்கமெல்லாம் அருளேயாகலின் “அருட் கழல்” என்றார். வருடுவான்; வினையெச்சம். கைகள் என்றது கிரணங்களை; அதற்குக் கரம் என்னும் பெயருண்மையும் காண்க. கொண்டு தோன்றினாற் போல என விரித்துரைத்துக் கொள்க. இது தற்குறிப்பேற்ற அணி. (34) கவன வெம்பரி செலுத்திமேற் கவலைதீர்ந் துள்ளே சிவமு ணர்ந்தவர் சிந்தைபோன் மலர்ந்தசெங் கமலம் உவமை யில்பரம் பொருளுணர்ந் துறையிறந் திருந்தோர் மவுன வாயென வடங்கின மலர்ந்தபைங் குமுதம். (இ-ள்.) வெம் கவன பரிசெலுத்தி - மிக்க வேகத்தினையுடைய குதிரைகளைப் பாண்டியனுக்குச் செலுத்துதலால், மேல் கவலை தீர்ந்து இனி வருங் கவலை நீங்கி, உள்ளே சிவம் உணர்ந்தவர் சிந்தைபோல் - அகத்தின்கண் சிவபிரானை யுணர்ந்த மணிவாசகனார் இதயம் போல, செங்கமலம் மலர்ந்த - செந்தாமரைகள் மலர்ந்தன; உவமைஇல் பரம்பொருள் உணர்ந்து - உவமையில்லாத அப் பரம்பொருளை உணர்ந்து உரைஇறந்து இருந்தோர் மவுனவாய் என - சொல்லிறந்திருந்த அவ்வடிகளின் மவுனத்தையுடைய வாய் போல, மலர்ந்த பைங்குமுதம் - ---- (இரவில்) மலர்ந்திருந்த பசிய குமுதமலர்கள் கூம்பின. வாதவூரர் பொருட்டே இறைவன் பரி செலுத்தினமையால் அவர் மேலேற்றிக் கூறினார்; இறுத்து என்றுமாம். பரிசெலுத்தி என்பதற்கு வாசியை மேனோக்கிச் செலுத்தி எனவும் ஒரு பொருள் கொள்க. உள்ளே சிவமுணர்ந்தவர் என்றது சிவயோகிகளையும், பரம்பொருளுணர்ந்து உரையிறந்திருந்தோர் என்றது சிவஞானி களையும் பொதுமையில் உணர்த்துவனவாகக் கோடலுமாம். மலர்ந்த இரண்டனுள் முன்னது முற்று பின்னது எச்சம். (35) பந்தி யாளர்கள் யாதெனப் பகர்துமென் றச்சஞ் சிந்தி யாவெழுந் தொல்லைபோய்த் திரண்மதங் கவிழ்க்குந் தந்தி யானர சிறைகொளு மிருக்கையைச் சார்ந்து வந்தி யாவுடல் பனிப்புற வந்தது மொழிவார். (இ-ள்.) பந்தியாளர்கள் யாது எனப் பகர்தும் என்று அச்சம் சிந்தியா - மந்துரைக் காவலாளர்கள் என்னெனக் கூறுவேமென்று அச்சத்துடன் கருதி, எழுந்து ஒல்லைபோய் - எழுந்து விரையச் சென்று, திரள்மதம் கவிழ்க்கும் தந்தியான் - திரண்ட மதத்தைக் கவிழ்க்கும் யானையையுடைய மன்னன், அரசு இறைகொளும் இருக்கையைச் சார்ந்து - அரசு வீற்றிருக்குங் கொலுமண்டபத்தினை அடைந்து, வந்தியா - வணங்கி, உடல்பனிப்புற வந்ததுமொழிவார் - உடல் நடுங்கி நடந்ததைக் கூறுவாராயினர். அச்சத்துடன் என மூன்றனுருபு விரிக்க. சிந்தியா, வந்தியா, என்பன செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். இறைகொளும் - இருத்தல் செய்யும். வந்தது - நிகழ்ந்தது. (36) காற்றி னுங்கடுங் கதியவாய்க் கண்களுக் கினிதாய்1 நேற்று வந்தவாம் பரியெலா நின்றவாம் பரிக்குக் கூற்றெ னும்படி நரிகளாய் நகரெலாங் குழுமி ஊற்றஞ் செய்துபோய்க் காட்டகத் தோடிய வென்றார். (இ-ள்.) காற்றினும் கடுங்கதியவாய் - காற்றினைப்பார்க்கிலும் மிக்க வேகமுடையனவாய், கண்களுக்கு இனிதாய் - பார்ப்போர் கண்களுக்கு இன்பம் பயப்பனவாய், நேற்று வந்த வாம் பரி எலாம் - நேற்று வந்த தாவுகின்ற குதிரைகள் அனைத்தும், நின்ற வாம்பரிக்குக் கூற்று எனும்படி - பந்தியில் நின்ற பழைய குதிரைகளுக்கெல்லாம் கூற்றுவன் என்று சொல்லுமாறு, நரிகளாய் - நரிகளாகி, நகர் எலாம் குழுமி ஊற்றம் செய்து - நகர் முழுதுங்கூடிப் பலதுன்பங்கள் செய்து விட்டு, காட்டகத்துப்போய் ஓடிய வென்றார் - காட்டின் கண்ணே ஓடிப்போயினவென்று கூறினார். இனிதாய் : பன்மையிலொருமை வந்தது. ஊற்றம் - ஊறு. ஓடிப்போயின என விகுதி பிரித்துக் கூட்டுக. (37) கருத்து றாதவிச் சொல்லெனுங் கடியகால் செவியாந் துருத்தி யூடுபோய்க் கோபமாஞ் சுடுதழன் மூட்டி எரித்த தீப்பொறி சிதறிடக் கண்சிவந் திறைவன் உருத்த வாறுகண் டமைச்சரும் வெருவினா ரொதுங்கி. (இ-ள்.) கருத்துறாத இச்சொல் எனும் கடிய கால் - நினைக் கவுமாகாத இச்சொல்லாகிய கொடியகாற்று, செவியாம் துருத்தி ஊடு போய் - செவியாகிய துருத்தி வழியாகச் சென்று, கோபமாம் சுடுதழல் மூட்டி - சினமாகிய சுடுகின்ற நெருப்பினை மூட்டி, எரித்த தீப்பொறி சிதறிட - எரிக்கப்பட்ட நெருப்புப் பொறி சிதறிட, இறைவன் கண் சிவந்து உருத்தவாறு கண்டு - மன்னன் கண்கள் சிவந்து வெகுண்ட தன்மையைக் கண்டு, அமைச்சரும் வெருவி ஒதுங்கினார் - மந்திரிகளும் பயந்து ஒதுங்கினார்கள். துருத்தி - கொல்லனுலையில் நெருப்பு மூட்டுந் தோற்றுருத்தி. அமைச்சரும் என்னும் சிறப்பும்மையால் ஏனையர் வெருவின்மை கூற வேண்டாவாயிற்று. இஃது உருவகவணி. (38) அமுத முண்டவ னஞ்சமுண் டாலென முதனாட் சமர வெம்பரி மகிழ்ச்சியுட் டாழ்ந்தவ னவையே திமிர வெங்குறு நரிகளாய்ச் சென்றவே யென்னா அமர ரஞ்சிய வாணையா னாரஞ ராழ்ந்தான். (இ-ள்.) அமரர் அஞ்சிய ஆணையான் - தேவர்களும் அஞ்சும் ஆணையையுடைய அரிமருத்தன பாண்டியன், அமுதம் உண்டவன் நஞ்சம் உண்டால் என - அமுதினை நுகர்ந்தவன் நஞ்சினை உண்டாற் போல, முதல் நாள் வெம் சமரம் பரி மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் - முதல் நாள் கொடிய போர்புரியுங் குதிரைகளைக் கண்ட மகிழ்ச்சிக் கடலுள் மூழ்கியவனாகி, அவையே - அக்குதிரைகளே, திமிர வெங்குறு நரிகளாய்ச் சென்றவே என்னா - இருள்போலுங் கொடிய சிறிய நரிகளாய் ஓடிப்போயினவே என்று கருதி, ஆர் அஞர் ஆழ்ந்தான் - நிறைந்த துன்பக்கடலுள் அழுந்தினான். மகிழ்ச்சியுட் டாழ்ந்தவனாகிய ஆணையான் என்று கூட்டி யுரைத்தலுமாம். ஆர் - பொறுத்தற்கரிய என்றுமாம். (39) அறுசீரடி யாசிரிய விருத்தம் அருகிருக்குந் தொல்லமைச்சர் தமைநோக்கி வாதவூ ராளி யென்னும் கருகிருட்டு மனக்கள்வ னம்முடைய பொருண்முழுதுங் கவர்ந்து காட்டிற் குருதிநிணக் குடர்பிடுங்கித் தின்றுதிரி நரிகளெல்லாங் குதிரை யாக்கி வரவிடுத்தா னிவன்செய்த மாயமிது கண்டீரோ மதிநூல் வல்லீர். (இ-ள்.) அருகு இருக்கும் தொல் அமைச்சர் தமை நோக்கி - பக்கத்தில் இருக்கும் பழைய மந்திரிகளைப் பார்த்து, வாதவூராளி என்னும் கருகு இருட்டு மனக்கள்வன் - வாதவூரன் என்னும் கருகிய இருள்போலு மனமுடைய கள்வன், நம்முடைய பொருள் முழுதும் கவர்ந்து - நம்முடைய பொருள் அனைத்தையுங் கொள்ளை கொண்டு, குருதி நிணக்குடர் பிடுங்கித்தின்று காட்டில் திரி நரிகள் எல்லாம் - குருதி ஒழுகும் நிணத்துடன் கூடிய குடர்களைப் பிடுங்கித் தின்று இடுகாட்டில் திரியும் நரிகளை எல்லாம், குதிரை யாக்கி வரவிடுத்தான் - குதிரைகளாக்கி வரவிடுத்தனன்; மதிநூல் வல்லீர் இவன் செய்த மாயம் இது கண்டீரோ - மதிநூல் வல்லீர்காள் இவன் செய்த இவ்விந்திர சாலத்தைக் கண்டீர்களா? அருகிருக்கும் என்றது அமைச்சரியல்பினை விளக்கியவாறுமாம். உழையிருந்தான் என்றார் வள்ளுவனாரும். இருட்டுமனம் - வஞ்சமனம்; “ அகங் குன்றி - மூக்கிற் கரியா ருடைத்து” என்னும் திருக்குறளிலுங் காண்க. மதிநூல் - நீதிநூல்; இயற்கை யறிவுடன் நூலறிவு சான்றவர் என்றுமாம். (40) இம்மாயஞ் செய்தானை யென்செய்வ தெனவுலகி லெமருக் கெல்லாம் வெம்மாசு படுபாவம் பழியிரண்டும் படவிழுக்கு விளைத்துத் தீய கைம்மாறு கொன்றான்றன் பொருட்டினியா மேதுரைக்கக் கடவே மென்று சும்மாது சிரந்தூக்கி யெதிராடா திருந்தாரச் சூழ்வல் லோர்கள். (இ-ள்.) இம்மாயம் செய்தானை - இவ்வஞ்சகஞ் செய்த வாதவூரனை, என் செய்வது என - என்ன செய்யலாமென்று மன்னன் வினவ, அச்சூழ்வல்லோர்கள் - அச்சூழ்ச்சி வல்லுநராகிய அமைச்சர்கள், உலகில் - இந்நிலவுலகின்கண், எமருக்கு எல்லாம் - எம்போன்ற அமைச்சருக்கெல்லாம், வெம் மாசுபடு பாவம் பழி இரண்டும்பட - கொடிய களங்கம் பொருந்திய பாவமும் பழியுமாகிய இரண்டும் உண்டாக, இழுக்கு விளைத்து - குற்றம் செய்து, தீய கைம்மாறு கொன்றான் தன் பொருட்டு - கைம்மாறு கொன்ற தீயோனாகிய வாதவூரன் பொருட்டு, இனி நாம் ஏது உரைக்கக் கடவேம் என்று - யாம் இனி என்ன சொல்லக் கடவேமென்று கருதி, எதிராடாது சும்மாது சிரம் தூக்கி இருந்தார் - விடைகூறாது வாளா தலை குனிந்து இருந்தனர். அமைச்சருள் ஒருவர் புரிந்த தீமையால் அமைச்சர் சாதிக்கே பாவமும் பழியு முண்டாமெனக் கருதினர். கைம்மாறு - எதிர் நன்றி; ஈண்டு நன்றியென்னும் பொருட்டு. கோன்ற தீயன் என விகுதி பிரித்துக் கூட்டுக. சும்மாது, து : பகுதிப் பொருள் விகுதி; வாளாது என்புழிப்போல. தூக்கல் - தொங்கவிடல்,. சூழ் - சூழ்ச்சி : முதனிலைத் தொழிற்பெயர். அமைச்சர் தமை நோக்கி என் செய்வதென அவர்கள் எதிராடா திருந்தனர் என முடிக்க. (41) அவ்வேலை மனக்கினிய பரிசெலுத்தி யரசகா ரியநன் றாக்கி வெவ்வேலை மனக்கவலை விடுத்தனமென் றகமகிழ்ச்சி விளைவு கூர மைவ்வேலை விடமுண்ட வானவனை நினைந்தறிவு மயமா மின்ப மெய்வேலை யிடைவீழ்ந்தார் விளைந்ததறி யார்வந்தார் வேந்தன் மாடே. (இ-ள்.) அவ்வேலை - அப்பொழுது, மனக்கு இனிய பரிசெலுத்தி - மனத்துக்கு இனிய குதிரைகளைச் செலுத்தி, அரசகாரியம் நன்றாக்கி - அரச கருமத்தைச் செவ்வனே முடித்து, வெவ்வேலை மனக்கவலை விடுத்தனம் என்று - கடல்போன்ற கொடிய மனக்கவலையை நீக்கினேமென்று கருதி; அகம் மகிழ்ச்சி விளைவுகூர - மனவகத்தின்கண் மகிழ்ச்சி மிக, மை வே'e7çல விடம் உண்ட வானவனை நினைந்து - கரிய கடலின் நஞ்சினை உண்ட இறைவனை நினைந்து, அறிவுமயமாம் மெய் இன்பவேலை யிடை வீழ்ந்தார் - ஞானமயமாகிய அழியாத பேரின்பக் கடலுள் வீழ்ந்த அடிகள் விளைந்தது அறியார் - நிகழ்ந்த செயலினை அறியாமல், வேந்தன்மாடு வந்தார் - அரசனிடம் வந்தனர். மனக்கு, அத்துச்சாரியை தொக்கது. மெய் அறிவு இன்ப மயமாம் வேலை எனக்கொண்டு கூட்டி, சச்சிதானந்த சொரூப மாகிய கடல் என்றுரைத்தலுமாம். (42) வந்தவரைச் சிவந்தவிழிப் பொறிசிதறக் கடுகடுத்து மறவோ னோக்கி அந்தமிலாப் பொருள்கொடுபோய் நல்லவயப் பரிகொடுவந் தழகி தாகத் தந்தனையன் றோவரச கருமமுடித் திசைநிறுத்தத் தக்கோர் நின்போல் எந்தவுல குளரேயோ வெனவெகுண்டா னதுகேட்ட வீசன் றொண்டர். (இ-ள்.) வந்தவரை - அங்ஙனம் வந்த வாதவூரடிகளை, சிவந்த விழிப்பொறி சிதற - சிவந்த கண்களினின்றும் தீப்பொறி சிதறுமாறு, மறவோன் கடுகடுத்து நோக்கி - மறத்தினையுடைய பாண்டியன் சினந்து பார்த்து, அந்தம் இலாப் பொருள் கொடுபோய் - அளவிறந்த பொருள்களை எடுத்துக் கொண்டுபோய், நல்ல வயப்பரி கொடுவந்து - நல்ல வெற்றியையுடைய குதிரைகளைக் கொண்டுவந்து, அழகிதாகத் தந்தனை அன்றோ - அழகாகக் கொடுத்தாயல்லவா, அரசகருமம் முடித்து இசைநிறுத்தத் தக்கோர் - (அதனால்) வேந்தன் வினைகளை முடித்துப் புகழை நிறுவவல்ல தக்கோர், நின்போல் எந்த உலகு உளரேயோ என வெகுண்டான் - நின்னைப் போல் எந்தவுலகில் உள்ளாரோவென்று சினந்து கூறினான்; அதுகேட்ட ஈசன் தொண்டர் - அதனைக் கேட்ட இறைவன் தொண்டராகிய அடிகள். அழகிதாகத் தந்தனையன்றோ, இசை நிறுத்தத்தக்கோர் நின்போல் எந்த வுலகுளரேயோ என்பன வெகுளியால் வந்த இகழ்ச்சிக் குறிப்பு. மறவோன் வந்தவரை நோக்கி அன்றோ உளரேயோ என வெகுண்டான் என முடிக்க. (43) குற்றமே தப்புரவிக் கெனக்கேட்டார் கோமகனுங் குற்ற மேதும் அற்றதா லரையிரவி னரியாகி யயனின்ற புரவி யெல்லாஞ் செற்றுவார் குருதியுக நிணஞ்சிதறக் குடர்பிடுங்கித் தின்று நேர்வந் துற்றபேர்க் கூற்றமிழைத் தூர்கலங்கக் காட்டகத்தி லோடிற் றன்றே. (இ-ள்.) அப்புரவிக்குக் குற்றம் ஏது எனக் கேட்டார் - அக் குதிரைகளுக்குக் குற்றம் என்ன வென்று கேட்டனர்; கோமகனும் - மன்னனும், அரை இரவில் நரியாகி - நள்ளிரவில் நரிகளாய், அயல் நின்ற புரவி எல்லாம் செற்று - மருங்கில் நின்ற குதிரைகளை எல்லாம் கொன்று, வார்குருதிஉக நிணம் சிதற - நிறைந்த குருதி ஒழுகவும் நிணங்கள் சிதறவும், குடர் பிடுங்கித் தின்று - அவற்றின் குடர்களைப் பிடுங்கித் தின்றுவிட்டு, நேர்வந்து உள்ள பேர்க்கு ஊற்றம் இழைத்து - நேரில் வந்த மக்களுக்கு இடையூறு செய்து, ஊர்கலங்கக் காட்டகத்தில் ஓடிற்று - ஊரிலுள்ளவர்கள் மனங்கலங்கக் காட்டின்கண் ஓடின; குற்றம் ஏதும் அற்றது - (இதுவன்றி) குற்றஞ் சிறிதுமில்லாதனவே. புரவி: தொகுதியொருமை. குற்றமேதும் அற்றது என்றது இகழ்ச்சிக்குறிப்பு. குடர்: போலி. பேர்: உலக வழக்கு. (44) கண்ணுமிடு கவசமும்போற் காரியஞ்செய் தொழுகியதுங் காலம் பார்த்தெம் எண்ணரிய நிதியீட்டங் கவர்வதற்கோ நின்னமைச்சி னியற்கை நன்றாற் புண்ணியவே தியர்மரபிற் பிறந்தனமென் றொருபெருமை பூண்டா யேநீ பண்ணியகா ரியம்பழுது பிறராகிற் றண்டிகக்கப் படுவ ரென்றான். (இ-ள்.) கண்ணும் இடுகவசமும் போல் காரியம் செய்து ஒழுகியதும் - எனக்குக் கண்ணும் இடுகின்ற கவசமும் போல இதுவரை என் கருமங்களைச் செவ்வனே செய்து வந்ததனைத்தும், காலம் பார்த்து - சமயம் பார்த்து, எம் எண்ணரிய நிதி ஈட்டம் கவர் வதற்கோ - எமது அளவிறந்த பொருட்குவியல்களைக் கவருதற்காக வோ, நின் அமைச்சின் இயற்கை நன்று - நின்னமைச்சிலக்கணம் நன்று; புண்ணிய வேதியர் மரபில் பிறந்தனம் என்று ஒரு பெருமை பூண்டாயே - புண்ணிய மறையோர் மரபில் தோன்றினோமென்று ஒரு பெருமையைப் பூண்டனையே, நீ பண்ணிய காரியம் பழுது - நீ செய்த காரியம் மிகவுந் தவறுடைத்து; பிறராகில் தண்டிக்கப்படுவர் என்றான் - மற்றொருவராயின் தண்டிக்கப்படுவர் என்று கூறி. கண்ணும் கவசமும்போல் என்னும் உவமை முன்பு விளக்கப் பட்டது. நன்று என்றது இகழ்ச்சி. பொருளுக்காக வன்றி வஞ்சகச் செயலுக்காவும் தண்டிக்கப்படுவர் என்றான் என்க. (45) தண்டலா ளர்களிவனைக் கொடுபோய்நம் பொருண்முழுதுந் தடுத்து மீர்த்தும் மிண்டினால் வலிசெய்தும் வாங்குமென வெகுண்டரசன் விளம்பக் கூற்று மண்டுமேன் மறஞ்செய்யும் வலியுடையார் கதிரையிரு ளடுத்துப் பற்றிக் கொண்டுபோ னாலென்னக் கொடுபுறம்போ யறவோரைக் கொடுமை செய்வார். (இ-ள்.) தண்டலாளர்கள் - தண்டற்காரர்களே, இவனைக் கொடு போய் - இவனைக் கொண்டுபோய், தடுத்தும் ஈர்த்தும் மிண்டினால் வலி செய்தும் - (எங்குஞ் செல்ல வொட்டாமல்) தடுத்தும் இழுத்தும் (உங்கள் ஆணையைக்) கடந்தால் வேறு ஒறுத்தும், நம் பொருள் முழுதும் வாங்கும் என அரசன் வெகுண்டு விளம்ப - நமது பொருள் முழுதையும் வாங்குவீராகவென்று மன்னன் சினந்துகூற, கூற்றும் மண்டுமேல் மறம் செய்யும் வலியுடையார் - கூற்றுவனும் எதிர்ப்பானேல் போர்புரிந்து வெற்றியடையும் வலியுடைய அவர், கதிரை இருள் அடுத்துப் பற்றிக்கொண்டு போனால் என்ன - சூரியனை இருள் நெருங்கிப் பிடித்துக் கொண்டு போனாற் போல, புறம் கொடு போய் - வெளியிற் கொண்டு போய், அறவோரைக் கொடுமை செய்வார் - அறவடிவாய அடிகளைத் துன்புறுத்துவாராயினர். தண்டலாளர் - இறை வாங்கும் ஏவலாளர்கள், தண்டலாளர்கள், அண்மைவிளி. மிண்டுதல் - மீறுதல், கூற்று மண்டுமேல் மறஞ்செய்யும் என்ற கருத்தினை, “ கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை” என்னும் திருக்குறளிற் காண்க. கதிரையிருளடுத்துப் பற்றிக் கொண்டுபோனாலென்ன என்றது இல்பொருளுவமை. (46) கதிர்நோக்கிக் கனன்மூட்டுங் கடும்பகலுச் சியிலிரவிக் கடவு ணேர்நின் றெதிர்நோக்க நிலைநிறுத்திக் கரங்களினு நுதலினுங்கல் லேற்றிச் செந்தீப் பிதிர்நோக்கத் தவரொறுப்ப வாற்றாராய் வீழ்ந்திருளைப் பிளப்போன் செந்தீ மதிநோக்கத் தனிச்சுடரை யழைத்தழுது துதிசெய்வார் வாத வூரர். (இ-ள்.) கதிர் நோக்கிக் கனல் மூட்டும் கடும்பகல் உச்சியில் - சூரியனை நோக்கி அழலை மூட்டுகின்ற கடிய உச்சிப்பொழுதில், இரவிக்கடவுள் நேர்நின்று எதிர் நோக்க - அச்சூரிய தேவனுக்கு நேரே நின்று எதிராக அவனைப் பார்க்குமாறு, நிலை நிறுத்தி - அசையாமல் நிற்கச்செய்து, கரங்களினும் நுதலினும் கல் ஏற்றி - இரண்டு கைகளிலும் நெற்றியினும் கற்களை ஏற்றி, செந்தீப் பிதிர் நோக்கத்தவர் ஒறுப்ப - சிவந்த நெருப்புப் பொறி பறக்குங் கண்ணினை யுடைய அத்தண்டலாளர்கள் ஒறுக்க, ஆற்றாராய் வீழ்ந்து - பொறுக்கலாற்றாது கீழே வீழ்ந்து, இருளைப் பிளப்போன் செந்தீ மதி நோக்கத் தனிச்சுடரை அழைத்து அழுது - இருளைப் பிளக்குஞ் சூரியனும் சிவந்த அனற்கடவுளும் சந்திரனுமாகிய கண்களையுடைய ஒப்பற்ற ஒளி வடிவினனாம் இறைவனை அழைத்து அழுது, வாதவூரர் துதி செய்வார் - வாதவூரர் துதிப்பாராயினர். வைக்கோல் முதலிய துரும்புகளை வெய்யிலில் வைத்து நெருப்பு மூட்டும் பகல் எனப் பகலின் வெம்மை மிகுதி கூறியவாறு. நோக்கி - நோக்குவித்து; எதிராக்கி. நிலை நிறுத்தல் - அடி பெயர்த்து வையாது கோடிட்ட இடத்தில் நிற்கச் செய்தல். (47) கொச்சகக் கலிப்பா நாதவோ நாத முடிவிறந்த நாடகஞ்செய் பாதவோ பாதகனா மென்னைப் பணிகொண்ட வேதவோ வேத முடிவின் விளைந்ததனிப் போதவோ போத நெறிகடந்த பூரணவோ. (இ-ள்.) நாதவோ - நாததத்துவத்திலுள்ளவனே, நாத முடிவு இறந்த நாடகம் செய் பாதவோ - அந்நாததத்துவத்தின் முடிவைக் கடந்த ஞானநடனஞ் செய்யுந்திருவடிகளை யுடையவனே, பாதகனாம் என்னைப் பணிகொண்ட வேதவோ - பாதகனாகிய என்னையும் அடிமை கொண்டருளிய மறைவடிவானவனே, வேத முடிவின் விளைந்த தனிப்போதவோ - அம்மறையின் முடிவில் விளைந்த ஒப்பற்ற ஞானவடிவினனே, போத நெறிகடந்த பூரணவோ - பாசஞான பசுஞானங்களின் வழியைக் கடந்த பூரண வடிவானவனே. நாதம் என்றது சிவதத்துவத்தை; இறைவன் அதனை அதிட்டித்து நிற்றலின் நாத என்றார்; தலைவன் என்றுமாம். நாத முடிவிறந்த என்றது நாதத்தின் எல்லையாகிய குடிலை என்னும் மகாமாயையைக் கடந்த என்றபடி. நாத முடிவிறந்த பாத என இயைக்க; “ பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்” என்னும் திருவாசகமும் இக்கருத்தே பற்றியது. நாதமுடிவிறந்த நாடகம் எனக் கொண்டு சுத்தமாயையைக் கடந்த சிற்சத்தியாகிய ஞானவெளியிலே புரியும் ஞான நாடகம் என்றுரைத்தலுமாம். போதநெறி என்றது பாசஞான பசுஞானங்களை; “ பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனை” என்பது சிவஞான சித்தி. நான்கடியிலும் இணையெதுகை வந்துள்ளன. இச்செய்யுளிலும் பின்னிரண்டு செய்யுளிலும் ஓகாரங்கள் புலம்பல் விளியில் வந்தன. (48) ஐயவோ வென்னுடைய வன்பவோ வன்பர்க்கு மெய்யவோ மெய்யில் வினையேன் றலைவைத்த கையவோ செய்யகழற் காலவோ காலனைக்காய் செய்யவோ வேதப் பரியேறுஞ் சேவகவோ. (இ-ள்.) ஐயவோ - ஐயனே, என்னுடைய அன்பவோ - என்னுடைய அன்பனே, அன்பர்க்கு மெய்யவோ - நின் அன்பர்க்கு மெய்யாயுள்ளவனே, மெய் இல் வினையேன் தலைவத்தகையவோ- மெய்யில்லாத (பொய் நிறைந்த) தீவினையேன் தலையின்கண் வைத்தருளிய திருக்கரத்தை யுடையவனே, செய்ய கழல் காலவோ- (அங்ஙனம் வைத்த) சிவந்த வீரகண்டையை யணிந்த திருவடியையுடையவனே, காலனைக் காய் செய்யவோ - கூற்றுவனை உதைத்தருளிய செம்மேனியுடையவனே, வேதப்பரி ஏறும் சேவகவோ - வேதப்புரவியில் ஏறியருளும் வீரனே. இறைவன் அன்பர்க்கு அன்பனாதலையும் அன்பர்க்கு மெய்யனாதலையும், “ தீர்ந்தவன் பாயவன்பர்க் கவரினு மன்ப போற்றி” “ ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த வின்பமே என்னுடை அன்பே” “ மெய்மை யன்பருன் மெய்மை மேவினார்” என்னும் திருவாசகங்களால் அறிக. அத்தமத்தக சையோக தீக்கையும் திருவடி தீக்கையும் செய்தமை தோன்ற வினையேன் றலைவைத்த கையவோ காலவோ, என்றார். (49) அத்தவோ கல்லாக் கடையேனை யாட்கொண்ட பித்தவோ பொய்யுலகை மெய்யாகப் போதிக்குஞ் சித்தவோ சித்தந் தெளிவித் தெனைத்தந்த முத்தவோ மோன மயமான மூர்த்தியவோ. (இ-ள்.) அத்தவோ - எப்பொருட்கும் இறைவனே, கல்லாக் கடையேனை ஆட்கொண்ட பித்தவோ - கல்லாத புல்லறிவினையுடைய என்னை ஆண்டு கொண்ட பித்தனே, பொய் உலகை மெய்யாகப் பேதிக்கும் சித்தவோ - பொய்யாகிய உலகினை மெய்யாகக் கருதும் வண்ணம் பேதப்படுக்குஞ் சித்த வடிவினனே, சித்தம் தெளிவித்து எனைத் தந்த முத்தவோ - அடியேன் மயக்க வுணர்வினைத் தெளிவித்து என்னை யுணர்த்திய முத்தி வடிவானவனே, மோன மயமான மூர்த்தியவோ - மெளனவடிவினையுடைய மூர்த்தியே. “ கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை” என அடிகள் திருவாசகத்தில் அருளிச் செய்தல் காண்க. கரணங் களெல்லாவற்றிலும் இறைவன் கலந்து நிற்றலின் சித்தவோ என்றார். “ கூறு நாவே முதலாகக் கூறுங் கரண மெல்லாநீ தேறும் வகைநீ திகைப்புநீ தீமை நன்மை முழுதுநீ” என்னுந் திருவாசங் காண்க. சித்தன் - சித்தி வல்லோன் என்றுமாம். எனைத் தந்த என்பதற்கு எனக்குச் சிவமாந் தன்மையைத் தந்தருளிய என்றுரைத்தலுமாம். “ சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த வித்தகத் தேவர்” “ சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத்தன்” என்னும் திருவாசகங்கள் இக்கே சிந்திக்கற் பாலன. (50) ஓருபோகு கொச்சகக் கலிப்பா என்றேறிய புகழ்வேதிய ரிரங்குந்துதி செவியிற் சென்றேறலும் விடையேறுசுந் தரன்மற்றிவர் செயலை மன்றேறவு முடிமேனதி மண்ணேறவு முதியாள் அனறேறிய தேரோடும்விண் ணடைந்தேறவு நினைந்தான். (இ-ள்.) என்று ஏறிய புகழ் வேதியர் இரங்கும்துதி - என்று மிக்க புகழ் வாய்ந்த மறையோராகிய வாதவூரடிகள் அழுது முறையிடுந் துதி, சென்று செவியில் ஏறலும் - சென்று திருச் செவியின்கண் புகுந்த வளவில், விடை ஏறு சுந்தரன் - ஆனேற்றின் மேல் ஏறியருளுஞ் சோமசுந்தரக் கடவுள், இவர் செயலை மன்தேறவும் - இவ்வடிகள் செயலை அரசன் தெளியவும்; முடிமேல் நதி மண் ஏறவும் - தனது திருமுடியின்கண் வையையாற்றின் மண் ஏறவும், முதியாள் - முதுமைப் பருவமுடைய வந்தி யென்பாள், அன்று - அஞ்ஞான்று, ஏறிய தேரோடும் விண் அடைந்து ஏறவும் - தான் ஏறிய விமானத்துடன் சிவபுரத்தை அடையவும், நினைந்தான் - திருவுளங் கொண்டருளினான். ஏறிய புகழ் - மிக்க புகழ். செயல் - பெருமை. (51) கங்கைப்புனல் வடிவாகிய கவ்வைத்திரை வையைச் சங்கச்சரி யறலாமலர்த் தாரோதியை நோக்கா வங்கக்கடல் பேரூழியில் வருமாறென வெவரும் இங்கற்புத மடையப்பெரு கென்றானருள் குன்றான். (இ-ள்.) கங்கைப்புனல் வடிவாகிய - கங்கை நீரின் வடிவாகிய, கவ்வைத் திரை வையை - ஒலியினை யுடைய அலைகள் வீசும் வையை நதியாகிய, சங்கச்சரி - சங்காகிய வளையலையும், அறலாம் மலர்த்தார் ஓதியை நோக்கா - கருமணலாகிய மலர் மாலையை யணிந்த கூந்தலையுமுடைய பெண்ணை நோக்கி, வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என - கப்பல்களையுடைய கடல் பெரிய ஊழிக் காலத்தின் கண் பெருகிவருந் தன்மைபோல, இங்கு எவரும் அற்புதம் அடைய -இவ் வுலகிலுள்ளாரனைவரும் வியப்பினை அடையுமாறு, பெருகு என்றான் - பெருகி வரக்கடவை யென்றருளிச் செய்தனன்; அருள்குன்றான் - பேரருள் குன்றாத இறைவன். வையை கங்கைப் புனல் வடிவாகியதனை அன்னக்குழியும் வையையும் அழைத்த படலத்திற் காண்க. ஓதி : ஆகு பெயர். (52) தும்பைச்சடை முடியானொரு சொல்லாடவு முன்னாள் வம்பைப்பொரு முலையால்வரி வளையால்வடு வழுத்துங் கொம்பைத்தவங் குலைப்பான்கடுங் கோபங்கொடு நடக்குங் கம்பைப்பெரு நதியிற்கடுங் கதியால்வரும் வையை. (இ-ள்.) தும்பைச்சடை முடியான் ஒரு சொல் ஆடவும் - தும்பை மலர் மாலையை யணிந்த சடை முடியையுடைய அச்சோமசுந்தரக் கடவுள் இங்ஙனம் ஒரு சொல்லினைச் சொன்னவளவில், முன் நாள் - பண்டொரு நாளில், வம்பைப் பொரு முலையால் வரி வளையால் - கச்சினைப் பொருகின்ற கொங்கைகளாலும் வரியமைந்த வளைகளாலும், வடு அழுத்தும் கொம்பை - இறைவன் மேனியில் வடுப்படுமாறு அழுத்திய உமைப் பிராட்டியின், தவம் குலைப்பான் - தவத்தை அழிக்கும் பொருட்டு, கடும் கோபம் கொடு நடக்கும் - மிக்க சினங்கொண்டு நடக்கும், பெருங்கம்பை நதியில் - பெரிய கம்பை யாற்றைப் போல, வையை கடுங்கதியால் வரும் - வையையாறு கடிய செலவுடன் வாரா நின்றது. முலையாலும் வளையாலும் என்னும் எண்ணும்மைகள் தொக்கன. கொம்பு - பூங்கொம்புபோல்வாராகிய உமாதேவியார். தவம் குலைப்பான் என்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு இரண்டாவதற்கு முடிபாக்கலுமாம். குலைப்பான் : வினையெச்சம். கதியால் - கதியுடன். ஒரு காலத்தில் இறைவனைப் பிரியலுற்ற இறைவி மீண்டும் இறைவனை அடைதற் பொருட்டுக் காஞ்சிப் பதியிலே மணலாற் சிவலிங்கம் தாபித்து வழிபட்டு வந்த காலை இறைவனால் ஏவப்பெற்ற கம்பை நதி பெருகி வந்து அதனை அழிக்கலுற, அம்மை சிவலிங்கப் பெருமானைக் கட்டியணைத் தமையால் இறைவற்கு முலைத்தழும்பும் வளைத்தழும்பும் உண்டாயின என்பது வரலாறு. (53) பத்திக்குளிர் கமுகின் குலை பரியக்கரை முரியக்1 குத்திப்பழஞ் சிதறச்செறி கோட்டங்களை வீட்டி முத்திக்கொடு கதலிப்புதன் முதுசாலிக ளரித்துத் தத்திப்பல தருவேரொடுந் தள்ளிக்கடு கியதே. (இ-ள்.) பத்திக்குளிர் கமுகின்குலை பரிய - வரிசையாயுள்ள குளிர்ந்த பாக்குமரத்தின் பழக்குலை அறவும், கரை முரியக் குத்தி - கரைகள் உடையவுங் குத்தியும், பழம் சிதற - பழங்கள் சிதறுமாறு, செறிகோட்டங்களை வீட்டி - நெருங்கிய மரக் கிளைகளைக் கீழே வீழ்த்தியும், முத்து இக்கொடு கதலிப்புதல் முது சாடிகள் அரித்து - முத்தையுடைய கரும்புகளையும் வாழையாகிய புல்லையும் முற்றி விளைந்த நெற்கதிர்களையும் அரித்துக்கொண்டும், தத்தி - தாண்டி, பல தரு - பல மரங்களை, வேரொடும் தள்ளி - வேருடன் வீழ்த்தியும், கடுகியது - விரைந்து சென்றது. கோடு என்பது அம் சாரியை பெற்று டகரம் இரட்டித்துக் கோட்டம் என்றாயது. வீட்டி, வீழ்த்தி என்பதன் மரூஉ. (54) பல்லாயிரஞ் செந்தாமரை பரப்பிக்கொடு வரலால் நல்லாயிரங் கண்ணானெழி னயக்குங்குளிர் நளினங் கல்லாரமுங் கடிமுல்லையுங் கரும்புங்கொடு வரலால் வில்லாயிரங் கொடுபோர்செயும் வேள்வீரனு மானும். (இ-ள்.) பல் ஆயிரம் செந்தாமரை பரப்பிக் கொடுவரலால் - பலவாகிய ஆயிரஞ் செந்தாமரை மலர்களைப் பரப்பிக் கொண்டு வருதலால், நல் ஆயிரம் கண்ணான் எழில் நயக்கும் - நல்ல ஆயிரங் கண்களையுடைய இந்திரன் தோற்றத்தை ஒக்கும்; குளிர் நளினம் - குளிர்ந்த தாமரை மலரையும், கல்லாரமும் கடிமுல்லையும் கரும்பும் கொடுவரலால் - குவளை மலரையும் மணம் பொருந்திய முல்லை மலரையும் கரும்பினையும் கொண்டு வருவதால், வில் ஆயிரம் கொடு போர் செயும் - அளவிறந்த விற்களைக் கொண்டு போர் புரியும், வேள் வீரனும் மானும் - வீரனாகிய மன்மதனையும் ஒக்கும். தாமரை முதலியன முதலிற் கூறும் சினையறிகிளவி. நயக்கும்- ஒக்குமென்னும் பொருட்டு. நளினம் குவளை முல்லை யென்னும் மலர்கள் மன்மதனுக்கு அம்பும், கரும்பு ஆகலின் வேள்வீரனு மானும் என்றார். (55) மணிமாலையு மலர்மாலையுஞ் சிதறாவிறு மருங்கே அணிகாஞ்சியு மொளிர்சங்கமு மலறப்புடை யெறியாக் கணியாவெழின் முகதாமரை கண்ணீரொடுங் கவிழாத்1 தணியாமுனி வுடனூடிய தடங்கண்ணியர் போலும். (இ-ள்.) மணிமாலையும் மலர்மாலையும் இறுமருங்கே சிதறா- மணிகளின் வரிசையையும் மலர் வரிசையையும் உடைந்த கரையின்கண் சிதறி, அணி காஞ்சியும் ஒளிர் சங்கமும் - அழகிய காஞ்சி மரங்களையும் விளக்கமாகிய சங்குகளையும், அலற புடைஎறியா - ஒலிக்கும்படி பக்கங்களில் வீசி, கணியா எழில் முகதாமரை - அளவிடப்படாத அழகைத் தன்னிடத்துள்ள தாமரை மலர்களை, கள் நீரொடும் கவிழா - கள்ளாகிய நீருடன் கவிழ்த்து (வைகையாறு வருதலால், முத்த மாலையையும் பூமாலையையும் அறுத்துச் சிதறி ஓடியும் இடையின்கண் அணிந்த எண் கோவையையும் ஒளிவிடும் வளைகளையும் புடைத்து எறிந்து அளவிடப் படாத அழகையுடைய முகமாகிய தாமரையைக் கண்களிலிருந்து வரும் நீருடன் கவிழ்த்து), தணியா முனிவுடன் ஊடிய தடம் கண்ணியர் போலும் - ஆனாத சினத்துடன் பிணங்கிய பெரிய கண்களையுடைய மகளிரை ஒக்கும். மாலை - வரிசை, தார். மருங்கு - கரை, இடை. காஞ்சி - காஞ்சி மரம்,இடையிலணி யும் எண் கோவை. சங்கம் - சங்கு, வளை, முகம் - இடம், வதனம். கண்ணீர் - கள்ளாகிய நீர், விழிநீர், சிதறா, எறியா, கவிழா என்பன செய்யா என்னும் வாய்பாட்டு வினை யெச்சங்கள். இது சிலேடை பற்றி வந்த உவமை. (56) வரையுந்திய மதுமுல்லையி னெய்பாறயிர் மருதத் தரையுந்திய கரும்பின்குறை சாறோடுவ ராறோ டிரையுந்தெழு தூநீர்வையை யிந்நன்னகர் வைகுந் திரையுந்தெழு கடறம்மிடஞ் சென்றாலவை போலும். (இ-ள்.) வரை உந்திய மது - மலையினின்றும் பெருகிய மதுவும், முல்லையின் நெய் பால் தயிர் - முல்லை நிலத்தின் நெய்யும் பாலுந் தயிரும், மருதத்தரை உந்திய கரும்பின் குறை சாறோடு - மருத நிலத்தினின்றும் பெருகிய கரும்பினைக் குறைத்தலாலாகும் சாறும், உவர் ஆறோடு - நெய்தனிலத்து உப்பாறுமாகிய இவற்றுடன், இரையுந்து எழு தூநீர் வையை - பேரொலிசெய்து எழுந்த தூய நீரினையுடைய வையையாறு, இந் நல்நகர் வைகும் - (சோமசுந்தரக் கடவுளால் அழைக்கப்பட்டு) இந்த நல்ல நகரின்கண் பொருந்தி யுள்ள, திரை உந்து எழுகடல் - அலை வீசுகின்ற எழு கடல்களும், தம்மிடம் சென்றால் அவை போலும் - தத்தம் இடம் சென்றால் அங்ஙனம் செல்லும் அவற்றை ஒக்கும். நெய்தனிலத்து உவராறு என வருவித்துரைக்க. மலை முதலிய நானிலத்து மது முதலிய ஆறனோடு வையையின் தூநீரும் சேர்ந்து மதுக்கடல் முதலிய எழு கடலும் போன்றன வென்க. இரையுந்து - இரையும்; உம் உந்தாயிற்று; “ உம்முந் தாகும் இடனுமா ருண்டே” என்பது விதி. (57) கல்லென்றதிர் சும்மைப்புனல் கடிமாமதிற் புறம்போய் இல்லங்களுஞ் சிறுதுச்சிலு மறித்திட்டிருங் கடல்வாய்ச் செல்லுங்கல நாவாய்பல திமில் போற்சுமந் தேகிப் புல்லும்புரி சையுந்தள்ளியுள் புகுகின்றதை யன்றே. (இ-ள்.) கல் என்று அதிர் சும்மைப்புனல் - கல்லென்று ஒலிக்கும் ஒலியையுடைய அவ்வெள்ளநீர், கடிமாமதில் புறம்போய் - காவலையுடைய பெரிய மதிலின் புறத்தே சென்று, இல்லங்களும் சிறு துச்சிலும் மறித்திட்டு - இல்லங்களையும் சிறிய குடில் களையும் கீழ் மேலாகத் தள்ளி (அவற்றை), இருங்கடல் வாய்ச் செல்லும் கலம் நாவாய் பல திமில் போல் - பெரிய கடலின்கண் ஓடும் மரக்கலங்களாகிய நாவாய்களையும் பல தோணிகளையும் போல, சுமந்து ஏகி - சுமந்து சென்று, புல்லும் புரிசையும் தள்ளிஉள் புகுகின்றது - பொருந்திய மதிலையுந் தள்ளி உள்ளே செல்லாநின்றது. கல்லென்று: ஒலிக்குறிப்பு. துச்சில் - குடிசையென்னும் பொருட்டு. புகுகின்றதை, ஐ : சாரியை. (58) மறுகும்பல பொருளாவண மணிவீதியு மன்றுஞ் சிறுகுங்கண மதமாநிரை சேருந்தெரு வும்போய் முறுகுஞ்சின மொடுதெண்டிரை மூரிப்புன றாவிக் குறுகும்படி கண்டஞ்சினர் கொடிமாநக ருள்ளார். இ-ள்.) தெள்திரை மூரிப்புனல் - தெள்ளிய அலைகளையுடைய வெள்ளநீர், முறுகும் சினமொடு - கன்றிய சினத்துடன், மறுகும் பல பொருள் மணி ஆவண வீதியும் - வீதிகளிலும் பல பொருள் நிறைந்த அழகிய கடைத் தெருக்களிலும், மன்றும் - அம்பலங்களிலும், சிறுகும் கண மதம் மாநிரைசேரும் தெருவும் போய் - சிறிய கண்களையுடைய மதமயக்கங்கொண்ட யானைக்கூட்டங்கள் சேர்ந்த தெருக்களிலுஞ் சென்று, தாவிக் குறுகும்படி - தாவி வருந்தன்மையை, கொடி மாநகர் உள்ளார் கண்டு அஞ்சினர்- கொடிகள் நெருங்கிய பெரிய நகரிலுள்ளவர்கள் பார்த்து அஞ்சினார்கள். கண - கண்ண; கண்ணினை உடையவாகிய, மூரி - பெருமை. படி - தன்மை. (59) சிலர்மைந்தரை யெடுப்பார்களுஞ் சிலர்மைந்தரைக் காணா தலமந்தழு வாருஞ்சில ரங்கைத்தளிர் பற்றிக் குலமங்கையர் தமைக்கொண்டுயப் போவார்களும் குறுகுந் தலமெங்கெனத் திகைப்பார்களுந் தடுமாறுகின் றாரும். (இ-ள்.) சிலர் மைந்தரை எடுப்பார்களும் - புதல்வர்களை எடுப்பார் சிலரும், சிலர் மைந்தரைக் காணாது அலமந்து அழுவாரும் - புதல்வர்களைக் காணாமல் சுழன்று அழுவார் சிலரும், அம் கைத்தளிர் பற்றி - அழகிய கையாகிய தளிரைப் பிடித்து, குலமங்கையர் தமைக் கொண்டு உயப்போவார்கள் சிலரும் - மனைக்கிழத்தியாரை அழைத்துக் கொண்டு உயிர்தப்பப் போவார் சிலரும், குறுகும் தலம் எங்கு எனத் திகைப்பார்களும் - நாம் சென்றடையும் இடம் எங்குள்ள தெனக் கருதித் திகைப்பார் (சிலரும்), தடுமாறுகின்றாரும் - (எதுவுந் தோன்றாமல்) தடுமாறுபவர் (சிலரும்). சிலர் எடுப்பவர்களும் என்றிங்ஙனம் நேரே கூறுதலுமாம். சிலர் என்பதனைப் பிறவற்றோடும் கூட்டி, ஈற்றில் ஆகி என்னுஞ்சொல் விரித்து முடிக்க. (60) பொன்னுள்ளன பணியுள்ளன பொருள்பேணல்செய் வாரும் மன்னுஞ்சில பொருள்கைக்கொள மறப்பார்களு மாடம் மின்னுங்கொடி நெடுமாளிகை மேலேறுகின் றாரும் இந்நன்னகர் துயர்மூழ்குதற் கேதேதுவென் பாரும். (இ-ள்.) உள்ளனபொன் உள்ளன பணிபொருள் பேணல் செய்வாரும் -தமக்குள்ளனவாய பொன்களையும் உள்ளனவாய அணிகளையும்பிறபொருள்களையும் பேணுவாரும், மன்னும் சில பொருள் கைக்கொள மறப்பார்களும் - பொருந்திய சில பொருள்களைக் கைப்பற்றுதற்கு மறப்பவர்களும், மாடம் மின்னும் கொடி நெடு மாளிகை மேல் ஏறுகின்றாரும் - மாடங்களிலும் விளங்கா நின்ற கொடிகள் கட்டிய நீண்ட மாளிகைகளிலும் ஏறுகின்றவர்களும், இந்நல் நகர் துயர் மூழ்குதற்கு ஏது ஏது என்பாரும் - இந்தப்புண்ணிய நகரம் இத்துன்பக்கடலுள் மூழ்குதற்குக் காரணம் யாது என்று கூறுவார்களும். ஏது - காரணம், யாது. (61) நேற்றும்பரி நரியாயின நெடுமாநக ரெங்கும் ஊற்றஞ்செய்த வென்பார்களு மொருகாலமு மிந்த ஆற்றின்பெருக் கிலையென்றயர் வாருங்கட லரசன் சீற்றங்கொடு முன்போல்வருஞ் செயலேகொலென் பாரும். (இ-ள்.) நேற்றும் பரி நரி ஆயின - நேற்றும் குதிரை களெல்லாம் நரிகளாகி, நெடுமாநகர் எங்கும் ஊற்றம் செய்த என்பார்களும் - நீண்டபெரிய நகரனைத்திற்கும் ஊறு செய்தன என்று கூறுவார்களும், ஒரு காலமும் இந்த ஆற்றின் பெருக்கு இலை என்று அயர்வாரும் - முன்னொரு காலத்திலும் இவ்வாறான ஆற்றின் பெருக்கு இல்லை என்று கூறி வருந்துவாரும், கடல் அரசன் சீற்றம் கொடு முன்போல்வரும் செயலே கொல் என்பாரும் - கடல் வேந்தனாகிய வருணன் சினங் கொண்டு முன் போல்வருஞ் செயலோ என்று ஐயுற்றுக் கூறுவாரு மாகி. இங்ஙனம் தொடர்ந்து துன்பம் விளைதற்குக் காரணம் என்ன வென்பாராய் நேற்றும் பரிநரியாயின ஊற்றஞ்செய்தன என்றனரென்க. இந்த - இத்தன்மையான. வருணன் ஏவலாற் கடல் வருதலைக் கடலரசன் வருதலாகக் கூறினர். (62) நங்கோமகன் செங்கோல்பிழைத் தனனோவென நவில்வார் அங்கோல்வளை பங்கன்விளை யாட்டோவென வறைவார் இங்காரிது தணிப்பாரென விசைப்பாரிது தணிப்பான் பொங்காலமுண் டருள்சுந்தர னலதியாரெனப் புகல்வார். (இ-ள்.) நம் கோமகன் செங்கோல் பிழைத்தனனோ என நவில்வார் - (பின்னும்) நம் மன்னன் நீதி முறை தவறினனோ என்று கூறுவார்; அம்கோல் வளை பங்கன் விளையாட்டோ என அறைவார் - அழகிய திரண்ட வளையலை யணிந்த உமையம்மை யின் ஒரு கூறனாகிய சோம சுந்தரக்கடவுளின் திருவிளையாடலோ என்று சொல்லுவார்; இது தணிப்பார் இங்கு யார் என இசைப்பார் - இவ்வெள்ளத்தை வற்றச் செய்பவர் இந்நிலவுலகில் யாவருளர் என்று கூறுவார்; இது தணிப்பான் - இதனைத் தணிக்கின்றவன், பொங்கு ஆலம் உண்டருள் சுந்தரன் அலது யார் எனப் புகல்வார் - கொதித்தெழுந்த ஆலாலம் என்னும் நஞ்சினை உண்டருளிய சோமசுந்தரக் கடவுளையல்லாது வேறு யாவருளர் என்று புகல்வார். காவலன் முறை தவறின் இயற்கையல்லன செயற்கையிற் றோன்றுமாகலின் நங்கோமகன் செங்கோல் பிழைத்தனனோ என்றனரென்க. யார் ஆரென் மருவிற்று. அலதியார்: குற்றிய லிகரம் அலகு பெறாது நின்றது. (63) அடுத்தாயிரங் குண்டோதர ரெதிரேற்றிருந் தகல்வாய் மடுத்தாலுமி தடங்காதென மதிப்பாரிது தனையும் எடுத்தாயிர முககங்கையி னிறைவன்சடை யேறக் கொடுத்தாலல தடங்காதிதன் கொடுங்கோபம தென்பார். (இ-ள்.) ஆயிரம் குண்டோதரர் அடுத்து எதிர் ஏற்று இருந்து - அளவிறந்த குண்டோதரர்கள் இதனை அடுத்து எதிரே மறித்து நின்று, அகல்வாய் மடுத்தாலும் இது அடங்காது என மதிப்பார் - அகன்ற தங்கள் வாய்களை வைத்துப் பருகினாலும் இது அடங்காதென்று கருதுவார்; ஆயிரமுக கங்கையின் - ஆயிர முகங்களை யுடைய கங்கையை எடுத்து வைத்தது போல, இதுதனையும் - அதனையும், இறைவன் எடுத்து சடை ஏறக்கொடுத்தால் அலது - இறைவன் எடுத்துத் தன் சடையின்கண் ஏறுமாறு கொடுத்தால் அல்லாமல், இதன் கொடுங்கோபம் அடங்காது என்பார் - இதன் கொடியசினம் அடங்காது என்று கூறுவர். இதடங்காது: விகாரம். கோபமது, அது : பகுதிப் பொருள் விகுதி. (64) வானாறிழி நதியாயிர முகத்தால்வரு வதுபோல் ஆனாதெழு நீத்தந்தணி யாவாறுகண் டன்பு தானாகிய சிவனன்பரை யொறுக்குந்தறு கண்ணர் போனார்தம தகத்தேயுள பொருள்பேணுதல் கருதா. (இ-ள்.) வான் ஆறு இழி நதி - வானின் வழியே இழியும் கங்கையாறு, ஆயிர முகத்தால் வருவதுபோல் - ஆயிர முகத்தோடு வருவதைப்போல, ஆனாது எழு நீத்தம் - உடையறாது பெருகும் நீர்ப் பெருக்கு, தணியாவாறு - குறையாத தன்மையை, அன்புதான் ஆகிய சிவன் அன்பரை ஒறுக்கும் தறுகண்ணர் கண்டு - அன்பே வடிவாகிய சிவனடியாராகிய வாதவூரரை ஒறுக்கும் வன்கணாளர்கள் பார்த்து, தமது அகத்தே உள பொருள் பேணுதல் கருதா போனார் - தங்கள் இல்லின்கண் உள்ள பொருளைப் பாதுகாத்தல் கருதிச் சென்றனர். அன்பு தானாகிய அன்பரை என்க. (65) அறுசீரடி யாசிரிய விருத்தம் வழுதிதன் றமர்விட் டேக மதுரைநா யகன்பா லேகி அழுதிசை பாடுந் தொண்டி லகப்படும் பாதம் போற்றி தொழுதுகொண் டறிவா யூறுஞ் சுகப்பெருங் கடலின் மூழ்கி எழுதுசித் திரம்போன் மன்னி யிருந்தனர் வாத வூரர். (இ-ள்.) வாதவூரர் - வாதவூரடிகள், வழுதி தன்தமர் விட்டு ஏக - பாண்டியன் தமராகிய தண்டலாளர் தம்மை விட்டுப்போக, மதுரை நாயகன்பால் ஏகி - மதுரை நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளிடத்துச் சென்று, அழுது இசைபாடும் தொண்டில் அகப்படும் பாதம் போற்றி - அன்பால் அழுது இசைத்தமிழால் வழுத்து தலாகிய திருத்தொண்டின்கண் அகப்படுகின்ற திருவடியை துதித்து, தொழுதுகொண்டு - வணங்கி, அறிவாய் ஊறும் சுகப்பெருங் கடலில் மூழ்கி - அறிவுமயமாய்ச் சுரக்கும் இன்பக்கடலுள் மூழ்கி, எழுது சித்திரம்போல் மன்னி இருந்தனர் - எழுதி வைத்த சித்திரத்தைப்போல் அசைவற்று இருந்தருளினர். பத்திவலையில் அகப்படும் பாதம் என்றபடி. அறிவாய் மூழ்கி எனஇயைத்தலுமாம். (66) ஆகச் செய்யுள் - 2691. அறுபத்தொன்றாவது மண் சுமந்த படலம் எழுசீரடி யாசிரிய விருத்தம் பண்சு மந்தமறை நாட ரும்பொருள் பதஞ்சு மந்தமுடி யார்மனம் புண்சு மந்ததுயர் தீர வந்தபரி நரிக ளாயடவி போனபின் விண்சு மந்தசுர நதி யெனப் பெருகு வித்த வையையிது விடையவன் மண்சு மந்திரு மேனி மேலடி வடுச்சு மந்தகதை போதுவாம். (இ-ள்.) மண்சுமந்த மறை நாடரும் பொருள் - இசையினைத் தாங்கிய மறைகளும் நாடுதற்கு அரிய மெய்ப்பொருளாகிய இறைவனது, பதம் சுமந்த முடியார் - திருவடியைத் தாங்கிய முடியினையுடைய வாதவூரடிகளின், மனம்புண் சுமந்த துயர் தீரவந்த பரி - மனம் புண்படுதற்குக் காரணமாகிய துயரம் நீங்குமாறு வந்த குதிரைகள், நரிகளாய் அடவிபோனபின் -நரிகளாகிக் காட்டிற்குச் சென்ற பின்னர், விண் சுமந்த சுரநதி எனப் பெருகுவித்த வையை இது - வானாற் சுமக்கப்பட்ட தேவயாறாகிய கங்கையைப் போலவையையைப் பெருகுவித்த திருவிளையாடல் இது; விடையவன் - ஆனேற்றினையுடைய அவ்விறைவன், மண்சுமந்து திருமேனிமேல் அடிவடுச் சுமந்த கதை ஓதுவாம் - மண்ணைச் சுமந்து திருமேனியின்கண் பிரம்படியின் தழும்பினைத் தாங்கிய திருவிளையாடலை (இனிக்) கூறுவாம். புண்சுமந்த துயர் - புண்படுதற்கு ஏதுவாகிய துயர்; பெயரெச்சம் காரியப் பொருட்டு. (1) கருங்க டற்றிரை யிடைக்கி டந்துசுழல் கலமெ னககன முகடளாய் வரும்பு னற்பரவை யுட்கி டந்துநகர் மறுகி யுட்கமற வேலினான் ஒருங்க மைச்சரை விளித்து நீர்கரை சுமந்தொதுக்கிவரு மோதநீர்ப் பொருங்க தத்தினை யடக்கு வீரென வமைச்சருந் தொழுது போயினார். (இ-ள்.) ககன முகடு அளாய்வரும் புனல் பரவையுள் - வானின் முடியை அளாவிவரும் புனற் பரப்பினுள், கருங்கடல் திரையிடைக் கிடந்து சுழல் கலம் என - கரிய கடலின் அலையினூடு கிடந்து சுழலும் கப்பலைப்போல, நகர் கிடந்து மறுகி உட்க - நகரமானது கிடந்து சுழன்று வருந்தா நிற்க, மறவேலினான் - கொலைத் தொழிலையுடைய வேற்படை யேந்திய பாண்டியன், ஒருங்கு அமைச்சரை விளித்து - மந்திரிகளை ஒருசேர அழைத்து, நீர் கரை சுமந்து - நீர் கரை போட்டு, வரும் ஓதநீர் ஒதுக்கி - பெருகிவரும் வெள்ள நீரை ஒதுக்கி, பொரும் கதத்தினை அடக்குவீர் என - கரையை மோதும் அதன் விரைவினை அடக்குவீராக என்று கூற, அமைச்சரும் தொழுது போயினார் - மந்திரிகளும் வணங்கிப் போனார்கள். பரவை - பரப்பு. கரை சுமந்து - கரைபோட்டு; இயற்றுதற் கருத் தாவின் தொழிலை ஏவுதற் கருத்தாவின்மேல் வைத்துக் கூறினார். பொரும் - மோதும், போர்செய்யும். கதம் - விரைவு, கோபம். (2) வெறித்த டக்கைமத யானை மந்திரிகள் வேறு வேறுபல குடிகளுங் குறித்தெ டுத்தெழுதி யெல்லை யிட்டளவு கோல்கி டத்திவரை கீறியே அறுத்து விட்டுநக ரெங்க ணும்பறை யறைந்த ழைத்துவிடு மாளெலாஞ் செறித்து விட்டவ ரவர்க்க ளந்தபடி செய்மி னென்றுவரு வித்தனர். (இ-ள்.) வெறித்தடக்கை மதயானை மந்திரிகள் - மதவெளி யினையும் பெரிய துதிக்கையினையுமுடைய யானையையுடைய அமைச்சர்கள், வேறு வேறு பல குடிகளும் - வெவ்வேறு வகைப்பட்ட பல குடிகளையும், குறித்து எடுத்து எழுதி - ஆராய்ந்து எடுத்து எழுதி, எல்லையிட்டு - தொகை முடிவுகட்டி, அளவுகோல் கிடத்தி வரைகீறி அறுத்து விட்டு - அளவுகோல் போட்டு அளந்து கோடு கிழித்து வரையறுத்து, நகர் எங்கணும் பறை அறைந்து அழைத்து - நகர் முழுதும் பறை சாற்றி அழைத்து, விடும் ஆள் எலாம் செறித்து விட்டு - அவ்வக் குடிகள் விட்ட கூலியாட்களை யெல்லாம் ஓரிடத்தில் தொகவைத்து, அவர் அவர்க்கு அளந்தபடி செய்மின் என்று வருவித்தனர் - அவரவர்க்கு அளந்து வரையறுத்தபடி செய்யுங்கள் என்று கூறி அவ்வவ்விடத்துக்கு அவரவரை வரவழைத்தனர். அவரவர் அணைகோலுதற்குரிய பங்கினை அளந்து வரை யறுத்து என்க. பறை யறைந்து என்பது அரசனெடுத்த ஆலயம் என்புழி போலப் பிறவினை விகுதி தொக்கு நின்றது. மண்டொ டுங்கருவி கூடை யாளரு மரஞ்சு மந்துவரு வார்களும் விண்டொ டும்படி நிமிர்ந்து வண்டுப டு விரிபசுந் தழைப லாலமுங் கொண்ட திர்த்துவரு வாரும் வேறுபல கோடி கூடிய குழாமுநீர் மொண்ட ருந்தவரு மேக சாலமென வருபு னற்கரையின் மொய்த்தனர். (இ-ள்.) மண்தொடும் கருவி கூடையாளரும் - மண்வெட்டுங் கருவி யுடன் கூடையுங் கொண்டு வருவார்களும், மரம் சுமந்து வருவார் களும் - மரங்களைச் சுமந்து வருவார்களும், விண்தொடும் படி நிமிர்ந்து வண்டுபடு விரிபசு ந்தழை - வானையளாவுமாறு ஓங்கி வண்டுகள் மொய்த்த விரிந்த பசிய தழையையும், பலாலமும்கொண்டு அதிர்த்து வருவாரும் - வைக்கோலையும் சுமந்து கொண்டு ஆரவாரஞ் செய்து வருவார்களும், வேறுபல கோடி கூடிய குழாமும் - இவர்கட்கு வேறாகப் பலகோடிகயாகத் திரண்ட கூட்டங்களுமாய், நீர் மொண்டு அருந்த வரும் மேகசாலம் என - நீரினை முகந்து பருகுதற்கு வரும் முகிற் கூட்டம் போல, வரு புனல் கரையில் மொய்த்தனர் - பெருகிவரும் புனற் கரையின்கண் மொய்த்தார்கள். நிமிர்ந்து என்னும் முதல்வினை சினையின்மேலேற்றிக் கூறப்பட்டது. மொண்டு, முகந்து என்பதன் மரூஉ. புனற்கரை - யாற்றின் கரை. (4) கிட்டு வார்பரி நிறுத்து வாரரவு ருட்டு வாரடி கிடத்துவார் இட்டு வார்தழை நிரப்பு வார்விளி யெழுப்பு வார்பறை யிரட்டுவார் வெட்டு வார்மண லெடுத்து வார்செல வெருட்டு வார்கடிது துடுமெனக் கொட்டு வார்கரை பரப்பு வாருவகை கூரு வார்குரவை குழறுவார். (இ-ள்.) கிட்டுவார்பரி நிறுத்துவார் - நெருங்கிக் குதிரைமரம் நிறுத்தி, அரவு உருட்டுவார் அடி கிடத்துவார் - வைக்கோலாற் பாம்பு போல உருட்டி அக்குதிரை மரத்தினடியிற் கிடத்தி, வார் தழை இட்டு நிரப்புவார் - நீண்ட தழைகளையிட்டு நிரப்பி, விளி எழுப்புவார் பறையிரட்டுவார் - மகிழ்ச்சியால் ஓசையை எழுப்பிப் பறையடிப்பார்கள், வெட்டுவார்மணல் எடுத்து வார் செல வெருட்டுவார் - வெட்டி மணலை கூடையில் எடுத்துச் செல்வள் விரைந்து செல்ல அச்சுறுத்தவார், கடிது துடுமென கொட்டுவார்கரை பரப்புவார். விரைந்து துடுமென்று மணலைக் கொட்டி கரையின்கண் பரப்பு பரப்புவார்கள் உவகை கூருவார் குரலை குழறுவார் - மகிழ்ச்சி மிக்குச் குரவைப் பாடலை பாடுவார்கள். திரையிடைக் கிழவியவற்றை முற்றாகவே உரைத்தலுமாம். பரினூடு கிடந்து சுழலூய்ச்சலாக மரங்களை நிறுத்துதல்; இங்ஙனம் நிறுத்திய மரம் குதிரைமரம் எனப்படும். அரவு உருட்டுதல் - வைக்கோல் முதலியவற்றைப் பாம்புபோல் உருட்டுத்ல்; இது பாம்பு எனப்படும். பரி, அரவு என்பன ஆகுபெயர். விளியெழுப்புதல் - கூவுதல்; சீழ்க்கை யொலி எழுப்புதலுமாம். எடுத்துவார் - எடுப்பார். துடுமென : ஒலிக்குறிப்பு. (5) கட்டு வார்கரை யுடைப்ப1 நீர்கடுகல் கண்டு நெஞ்சது கலங்குவார் மட்டி லாதமுனி வென்னை யன்னையினி யாறு கென்றெதிர் வணங்குவார் கொட்டு வார்மண லுடைப்ப டங்கமகிழ் கொள்ளு வார்குரவை துள்ளுவார் எட்டு மாதிரமு மெட்ட வாயொலி யெழுப்பு வார்பறை யிரட்டுவார். (இ-ள்.) கட்டு வார் கரை உடைப்ப நீர் கடுகல் கண்டு - கட்டிய நீண்ட கரையை உடைப்பதற்கு நீர் விரைந்து வருதலைக் கண்டு, நெஞ்சது கலங்குவார் - உள்ளங் கலங்கி, அன்னை - தாயே, மட்டு இலாத முனிவு என்னை - எங்கள்மேல் அளவில்லாத சினம் எதற்கு, இனி ஆறுக என்று எதிர் வணங்குவார் - இனி ஆறக்கடவை என்று வேண்டி எதிரே வணங்கி, மணல் கொட்டுவார் - மணலைக் கொட்டுவார்கள்; உடைப்பு அடங்க மகிழ் கொள்ளுவார் குரவை துள்ளுவார் - உடைப்பு அடங்க அதனைக் கண்டு மகிழ்ச்சி கொண்டு குரவையாடுவர்; எட்டு மாதிரமும் எட்ட வாயொலி எழுப்புவார் பறை இரட்டுவார் - எட்டுத்திக்குகளுக்கும் எட்டுமாறு வாயினால் ஒலி செய்து பறையடிப்பார்கள். நெஞ்சது, அது : பகுதிப்பொருள் விகுதி. ஆறுகென்று : அகரந் தொக்கது. எட்ட - அணைய. (6) அறுசீரடி யாசிரிய விருத்தம் இந்நிலை யூரி லுள்ளார் யாவர்க்குங் கூலி யாளர் துன்னிமுன் னளந்த வெல்லைத் தொழின்முறை மூண்டு செய்வார் அந்நிலை நகரின் றென்கீழ்த் திசையுளா ளளவி லாண்டு மன்னிய நரைமூ தாட்டி யொருத்திபேர் வந்தி யென்பாள். (இ-ள்.) இந்நிலை - இங்ஙனமாக, ஊரில் உள்ளார் யாவர்க்கும் - ஊரிலுள்ள அனைவருக்கும், கூலியாளர் துன்னி முன் அளந்த எல்லை - கூலியாட்கள் வந்து செறிந்து முன்னரே அவரவர்க்கு அளந்து விட்ட எல்லையின்கண் நின்று, முறை தொழில் மூண்டு செய்வார் - முறைப்படி தொழிலை மேற்கொண்டு செய்வாரா யினர்; அந்நிலை - அப்போது, நகரின் தென்கீழ்த் திசையுளாள் - அந்த நகரத்தின் தென்கிழக்குத் திசையிலுள்ளவளும், அளவு இல் ஆண்டு மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி - அளவில்லாத ஆண்டுகள் பொருந்திய நரைத்த முதுமையளுமாகிய ஒருத்தி, பேர் வந்தி என்பாள் - வந்தி என்னும் பெயருடையவள். அளவில் ஆண்டு மன்னிய - அளவற்ற யாண்டுகள் கழிந்த. மூதாட்டி - முதுமையை ஆள்பவள். (7) செவியுண வான வேத சிரப்பொரு ளுணர்ந்து செந்தீ அவியுண வூட்டு மீச னன்பரி னாற்ற நோற்ற தவநிறை பேறு துய்ப்பா டாயிலார்க் கன்னை யொப்பாள் சுவையுறு பிட்டு விற்றுண் டொழிலினா டமிய ளாவாள். (இ-ள்.) செவி உணவு ஆன வேத சிரப்பொருள் உணர்ந்து - செவியுணவாகிய மறை முடியின் பொருளினை உணர்ந்து, செந்தீ அவியுணவு ஊட்டும் ஈசன் அன்பரின் - சிவந்த வேள்வித் தீயின்கண் அவியாகிய உணவினை உண்பிக்கும் இறைவன் அடியார்களினும், ஆற்ற நோற்ற தவம் - மிகச் செய்த தவத்தினது, நிறை பேறு துய்ப்பாள் - நிறைந்த பயனை நுகருவாள்; தாய் இலார்க்கு அன்னை ஒப்பாள் - அன்னையில்லாதவர்கட்கு அன்னைபோல்வாள்; சுவை உறு பிட்டு விற்று உண்தொழிலினாள் - சுவை மிக்க பிட்டினை விற்று உண்ணுந்தொழிலினை யுடையாள்; தமியளாவாள் - யாருமற்ற தனியள். இறைவற்கு அன்பினாற் பிட்டருத்தி ஏனோர் பெறுதற்கரிய பேறு பெறுவாளாகலின் அவியுணவூட்டு மீசனன்பரின் ஆற்ற நோற்ற தவநிறை பேறு துய்ப்பாள் என்றார். தாயிலார்க்கு அன்னை யொப்பாள் என்றது தாயில்லாத சிவபெருமானுக்கும் ஓர் அன்னைபோல்வாள் என்பதொரு பொருளுந் தோன்ற நின்றது; மேல் தந்தையொடு தாயின்றித் தனிக்கூலி யாளாக, வந்தவெனக் கொரு தாயாய் என இறைவன் கூறுமாறுங் காண்க. (8) வைகலு மவித்த செவ்விப் பிட்டினை மருங்கு நான்கு கைகளாய் முளைத்த முக்கட் கரும்பினை யரும்பு மூரற் செய்கதிர் முகத்தா னந்தத் தேறலை யால வாயெம் ஐயனை யகத்தா னோக்கி யன்பினா லருத்தி விற்பாள். (இ-ள்.) வைகலும் - நாள்தோறும், அவித்த செவ்விப்பிட்டினை - அவித்த பக்குவமமைந்த பிட்டினை, மருங்கு நான்கு கைகளாய் முளைத்த முக்கண் கரும்பினை - பக்கத்தில் நான்கு கைகளாக முளைத்த மூன்று கண்களையுடைய கரும்பினை, அரும்பு மூரல் செய் - அரும்பிய புன்னகையினைச் செய்யும், கதிர் முகத்து ஆனந்த தேறலை - விளக்கமாகிய திருமுகத்தினையுடைய இன்பத் தேனை, ஆலவாய் எம்ஐயனை - திருவாலவாயில் எழுந்தருளிய எம்முடைய சோமசுந்தரக் கடவுளை, அகத்தால் நோக்கி அன்பினால் அருத்திவிற்பாள் - உள்ளக் கண்ணால் நோக்கி அன்பினால் முன் ஊட்டிப் பின் விற்பாள். கண் - விழி, கணு, மூரலையுடைய கதிர் செய்யும் முகம் என்றுமாம். கரும்பும் தேனுமாகிய ஐயனை. நோக்கி, நோக்க னோக்கம். (9) வளைந்தமெய் யுடைய வந்த மாதவ நரைமூ தாட்டிக்1 களந்தபங் கடைப்பான் கூலி யாள்கிடை யாம லாற்றத் தளர்ந்தினி யென்னே மன்னன் றண்டிக்கி னென்செய் கேனென் றுளந்தடு மாறிக் கூட லுடையநா யகனை யுன்னா. (இ-ள்.) வளைந்த மெய்யுடைய அந்த மாதவ நரை மூதாட்டிக்கு - கூனிய உடலையுடைய அந்தப் பெரிய தவத்தை யுடைய நரைத்த முதியாள் தனக்கு, அளந்த பங்கு அடைப்பான் - அளந்துவிட்ட பங்கினை அடைப்பதற்கு, கூலியாள் கிடையாமல் - கூலியாள் கிடைக்காமல், ஆற்றத் தளர்ந்து - மிகவும் தளர்ந்து, இனி என்னே மன்னன் தண்டிக்கின் என்செய்கேன் என்று - இனி என்னை வேந்தன் ஒறுத்தானாயின் யான் யாது செய்வேனென்று, உளம்தடுமாறி - மனந்தடுமாறி, கூடல் உடைய நாயகனை உன்னா - மதுரை நாயகனை நினைத்து. மூதாட்டி தனக்கு என விரித்துக் கொள்க. அடைப்பான்: வினையெச்சம். கூடல் நாயகன் தன்னை அடிமையாகவுடைய நாயகன் என்க. (10) பிட்டுவிற் றுண்டு வாழும் பேதையே னிடும்பை யென்ப தெட்டுணை யேனு மின்றி யிரவியெங் கெழுகென் றிந்நாண் மட்டுநின் னருளா லிங்கு வைகினேற் கின்று வந்து விட்டதோ ரிடையூ றைய மீனவ னாணை யாலே. (இ-ள்.) ஐய - ஐயனே, பிட்டு விற்று உண்டு வாழும்பேதையேன் - பிட்டினை விற்று அதனால் வரும் ஊதியங்கொண்டு உண்டு உயிர் வாழும் பேதையேனாகிய யான், இந்நாள் மட்டும் - இந்நாள் வரையிலும், நின் அருளால் இடும்பை என்பது எள் துணையேனும் இன்றி - நினது திருவருளால் துன்பம் என்பதுஎள்ளளவேனுமில்லாமல், இரவி எங்கு எழுக என்று இங்கு வைகினேற்கு - சூரியன் எங்கேனும் எழக்கடவன் என்று கருதி இங்கு இருந்த எனக்கு, மீனவன் ஆணையால் இன்று வந்து விட்டது ஓர் இடையூறு - பாண்டியன் ஆணையினால் இன்று ஓர் இடையூறு வந்து விட்டது. எங்கேனும் என்பது எங்கு எனத் தொக்குநின்றது. எழுக என்பதன் அகரந் தொக்கது. எங்கு எழுந்தால் எனக்கு வருவ தென்னை என்பது கருத்து; “ எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய் ” என்னும் திருவாசகமும் காண்க. வந்து விட்டது, வீடு துணிவுப் பொருட்டு. (11) துணையின்றி மக்க ளின்றித் தமரின்றிச் சுற்ற மாகும் பணையின்றி யேன்று கொள்வார் பிறரின்றிப் பற்றுக்கோடாம் புணையின்றித் துன்பத் தாழ்ந்து புலம்புறு பாவி யேற்கின் றிணையின்றி யிந்தத் துன்ப மெய்துவ தறனோ வெந்தாய். (இ-ள்.) துணை இன்றி மக்கள் இன்றி - நாயகனுமில்லாமல் மக்களுமில்லாமல், தமர் இன்றி - கிளைஞருமில்லாமல், சுற்றமாகும் பணைஇன்றி - நட்பினராய கூட்டமுமில்லாமல், ஏன்று கொள்வார் பிறர்இன்றி - ஏன்று கொள்ளும் பிறருமில்லாமல், பற்றுக்கோடாம் புணை இன்றி துன்பத்து ஆழ்ந்து புலம்புறு பாவியேற்கு - (இவ்வாற்றால்) பற்றுக்கோடாகிய புணையின்றித் துன்பமாகிய கடலுள் அழுந்திப் புலம்பும் பாவியாகிய எனக்கு, இன்று - இப்பொழுது, இந்தத் துன்பம் இணை இன்றி எய்துவது - இந்தத் துன்பம் ஒப்பின்றி வருவது, எந்தாய் - எம் தந்தையே, அறனோ - அறமாகுமோ. துணை - கணவன். பணை - கூட்டம். இணையின்றி - இணையில்லையாக. (12) தேவர்க்கு மரிய னாகுந் தேவனே யன்ப ராவார் யாவர்க்கு மெளிய னாகு மீசனே வேந்த னாணைக் காவற்செங் கோலார் சீற்றங் கடுகுமுன் கூலி யாளாய் ஏவற்செய் வாரைக் காணே னேழையே னினியென் செய்கேன். (இ-ள்.) தேவர்க்கும்அரியன் ஆகும் தேவனே - தேவர்கட்கும் அரியனாகிய தேவனே, அன்பராவார் யாவர்க்கும் எளியன் ஆகும் ஈசனே - அன்பராவார் அனைவருககும் எளியனாகிய இறைவனே, வேந்தன் ஆணைக் காவல் செங்கோலார் சீற்றம் கடுகு முன் - மன்னனது ஆணையை மேற்கொண்டு காக்கும் செங்கோலை யுடைய அமைச்சர்களின் சினம் என்பால் விரைந்து வருமுன், கூலியாளாய் ஏவல் செய்வாரைக் காணேன் - கூலி யாளாக வந்து எனது ஏவலைச் செய்பவரைக் கண்டிலேன்; ஏழையேன் இனி என் செய்கேன் - ஏழையாகிய யான் இனி என்ன செய்வேன்? இறைவன் தேவர்க்கும் அரியனாதலையும் அன்பர்க்கு எளியனா தலையும், “ மூவ ராலு மறியொணாமுத லாய வானந்த மூர்த்தியான் யாவ ராயினு மன்ப ரன்றி யறியொணா மலர்ச் சோதியான்” என்னும் திருவாசகத்தா லறிக. அமைச்சர் சீற்றத்துடன் கடுகி வந்து ஒறுக்குமுன் என்பாள் சீற்றங் கடுகு முன் என்றாள். (13) கூலியாள் வருவ துண்டோ வென்றுதன் கொங்கை முற்றத் தாலிபோற் கண்ணீர் சோர்வாள் குறித்துமுன் பருத்தும் பிட்டை வேலைநீர் ஞாலங் காண மிசைந்தவ ளிடும்பை தீர்ப்பான் பாலினேர் மொழியாள் பாக மறைத்தருட் படிவங் கொள்வார். (இ-ள்.) கூலியாள் வருவது உண்டோ என்று - கூலியாள் வருவதுண்டோவென்று கருதி, தன் கொங்கை முற்றத்து - தனது கொங்கை யிடத்தில், ஆலி போல் கண் நீர் சோர்வாள் - மழைத்துளிபோலக் கண்ணீர் சிந்தும் அவ்வந்தி, முன்பு குறித்து அருத்தும் பிட்டை - முன்பு மனத்தால் நினைத்து (யாரும் அறியாமல்) உண்பிக்கும் பிட்டினை, வேலை நீர் ஞாலம் காண மிசைந்து - கடல்நீர் சூழ்ந்த இப்புவியிலுள்ளார் காண உண்டு, அவள் இடும்பை தீர்ப்பான் - அவள் துன்பத்தை நீக்கும் பொருட்டு, பாலின்நேர் மொழியாள் பாகம் மறைத்து - பாலை யொத்த மொழியினை யுடைய பிராட்டியாரின் பாகத்தை மறைத்து, அருள் படிவம் கொள்வார் - அருளால் உருவங் கொள்வாராயினர். குறித்து - உள்ளத்தாற் சிந்தித்து. உலகினர் அறியாது முன்பு அருந்திய பிட்டை இப்பொழுது அறிய உண்டு என்க. பாலினேர், சாரியை நிற்க உருபு தொக்கது. (14) குறட்குநீ ரருத்தி வையைக் குடிஞையா யொழுகுங் கங்கை அறற்குழல் பிரிவி னாற்றா தன்பினா லவளைக் காண்பான் மறக்கய னெடுங்க ணாளை வஞ்சித்து வடிவ மாறிப் புறப்படு வாரைப் போலப் போதுவார் போத மூர்த்தி. (இ-ள்.) குறட்கு நீர் அருத்தி - குண்டோதரனுக்கு நீரினை ஊட்டி, வையைக் குடிஞையாய் ஒழுகும் - வையையாறாகச் செல்லா நிற்கும், கங்கை அறல் குழல் பிரிவின் ஆற்றாது - கங்கை என்னும் கருமணலாகிய கூந்தலையுடைய நாயகியின் பிரிவினைப் பொறுக்கலாற்றாது, அவளை அன்பினால் காண்பான் - அந்நங்கையை அன்போடு காணுதற்கு, மறக்கயல் நெடுங்கணாளை வஞ்சித்து - தருக்குடைய கயல் போலும் நீண்ட கண்களையுடைய உமையம்மையை வஞ்சித்து, வடிவம் மாறி - திருவுருவம் மாறி, புறப்படுவாரைப்போல - புறப்படுவாரைப்போல, போதமூர்த்தி போதுவார் - ஞான மூர்த்தியாகிய சோம சுந்தரக்கடவுள் செல்வாராயினர். குடிஞை - யாறு. அறற்குழல் - பெண் என்னுந் துணையாய் நின்றதுமாம். பிரிவின் - பிரிவினால் எனலும் பொருந்தும். இது தற்குறிப்பேற்றவணியின்பாற் படும். (15) கொச்சகக் கலிப்பா அழுக்கடைந்த பழந்துணியொன் றரைக்கசைத்து விழுத்தொண்டர் குழுக்கடந்த விண்டைநிகர் சுமையடைமேற் கூடைகவிழ்த் தெழுக்கடந்து திசைகடந்திட் டிணைகடந்த திருத்தோண்மேன் மழுக்கடைந்து விளங்கியவாய் மண்டொடுதிண் படையேந்தி. (இ-ள்.) அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து - அழுக்குச் சேர்ந்த பழைய துணி ஒன்றினை இடையிற் கட்டி, விழுத்தொண்டர் குழுக்கள் தந்த இண்டை நிகர் சுமையடைமேல் - சீரிய தொண்டர் கூட்டங்கள் கட்டிச் சாத்திய இண்டை மாலையை ஒத்த சும்மாட்டின்மேல், கூடை கவிழ்த்து - கூடை யினைக் கவிழ்த்து, எழுக்கடந்து திசை கடந்திட்டு இணைகடந்த திருத்தோள் மேல் - துணை வென்று திக்குகளைக் கடந்து உவமையைக் கடநத் அழகிய தோளின்மேல், மழுக்கு அடைந்து விளங்கிய வாய் - மழுங்குதலையுற்று விளங்கிய வாயினையுடைய, திண் மண்தொடு படை ஏந்தி - திண்ணிய மண்வெட்டியை ஏந்தி. மழுங்கு - மழுக்கு என வலித்தது. பலகாலும் மண்ணை வெட்டுதலால் மழுங்கிய வாய் என்க. (16) திடங்காதல் கொண்டறவோர் திருவேள்வி தருமமுதும் இடங்காவல் கொண்டுறைவா ளருத்தமுது மினிதுண்டும் அடங்காத பசியினர்போ லன்னைமுலைப் பாலருந்த மடங்காத பெருவேட்கை மகவுபோற் புறப்பட்டார். (இ-ள்.) அறவோர் திடம் காதல் கொண்டு - முனிவர்கள் உறுதியாகிய அன்பினைக் கொண்டு, திருவேள்விதரும் அமுதும் - சிறந்த வேள்வியின்கண் தருகின்ற அவியையும், இடம் காலம் கொண்டு உறைவாள் அருத்து அமுதும் - இடப்பாகத்தின்கண் காவல் கொண்டு உறைபவராகிய பிராட்டியார் ஊட்டும் அமுதையும், இனிது உண்டும் - நன்றாக உண்டும், அடங்காத பசியினர் போல் - அடங்காத பசியினையுடையார் போல, அன்னை முலைப்பால் அருந்த மடங்காத பெருவேட்கை மகவுபோல் புறப்பட்டார் - தாயின் முலைப்பாலைப் பருகுதற்கு மடங்காத பேரவா வினையுடைய மகவு போலப் புறப்பட்டருளினர். அடங்காத பசியினர் என்னும்படி மகவுபோற் புறப்பட்டார் என்க. (17) ஆலுமறைச் சிரமுடியா ரடிக்கமல நிலஞ்சூடக் கூலிகொடுத் தென்வேலை1 கொள்வாருண் டோவென்றென் றோலமறைத் திருமொழிபோ லுரைபரப்பிக் கலுழ்கண்ணீர் வேலையிடைப் படிந்தயர்வாள் வீதியிடத் தணைகின்றார். (இ-ள்.) ஆலும் மறைச் சிரம் முடி ஆர் அடிக்கமலம் - ஒலிக்கின்ற வேத முடியின் உச்சியிலுள்ள திருவடித் தாமரையை, நிலம் சூட - நிலமகள்தரிக்குமாறு,கூலிகொடுத்து என் வேலை கொள்வார் உண்டோ என்று என்று - கூலியைக் கொடுத்து என் வேலையை வாங்கிக் கொள்பவருண்டோ வென்று, ஓலமறைத் திருமொழிபோல் உரைபரப்பி - ஒலிவடிவாகிய சிறந்த வேத மொழிபோலக் கூறி, கலுழ் கண்ணீர் வேலையிடைப் படிந்து அயர்வாள் - அழுகின்ற கண்ணீராகிய கடலிற் படிந்து துன்புறுவாளாகிய வந்தியினது, வீதி யிடத்து அணைகின்றார் - வீதியின்கண் வருகின்றார். வேத முடியின் மேலுள்ள திருவடி நிலந்தோயுமாறு நடந்து வருகின்றார் என அருமையும் எளிமையும் தோன்றக் கூறியபடி. உரை பரப்பி அடிக்கமலம் நிலஞ்சூட வீதியிடத்து அணைகின்றார் என வினைமுடிக்க. எனை வேலை கொள்வார் என்னும் பாடத்திற்கு என்னை வேலை வாங்குவார் என்று உரைக்க. (18) தந்தைதாய் பிறரின்றி வருகின்ற தனிக்கூலி மைந்தனார் வாய்மலருங் குரல்கேட்டு வந்தியுந்தன் சிந்தையா குலமிழந்து நல்கூர்ந்தார் செல்வமகத்1 தந்தபோ தெழுமகிழ்ச்சி தலைக்கொள்ளப் புறம்போந்தாள். (இ-ள்.) தந்தை தாய் பிறர் இன்றி வருகின்ற - தந்தையும் தாயும் வேறொருவரின்றி வருகின்ற, தனிக் கூலி மைந்தனார் வாய் மலரும் குரல் கேட்டு - தனித்த கூலி மகனார் கூறிவரும் குரலைக் கேட்டு, வந்தியும் தன் சிந்தை ஆகுலம் இழந்து - வந்தியும் தனது மனக்கவலை யொழிந்து, நல்கூர்ந்தார் செல்வம் மகத்தந்தபோது - மக்கட் பேறின்மையாகிய வறுமையையுடையார் மக்கட் பேறாகிய செல்வத்தைப் பெற்ற காலத்து, எழுமகிழ்ச்சி தலைக்கொள்ளப் புறம் போந்தாள் - அவர்க்குண்டாம் மகிழ்ச்சி தனக்கு வந்து கூட வெளியே வந்தாள். தாம் எல்லார்க்கும் தந்தையும் தாயும் ஆவதன்றித் தமக்கு வேறொருறாருவர் தந்தை தாயாகப் பெறாத என்க. நல்கூர்ந்தார் - பிள்ளையால் மிடிப்பட்டார்; “ நல்கூர்ந்தார் செல்வ மகள்” என்னும் கலித்தொகை யடிக்கு நச்சினார்க்கினியர் இவ்வாறு பொருள் கூறுதல் காண்க. வந்தியும் மகப்பெற்றாற் போலும் மகிழ்ச்சி யெய்தினாள்; வந்தி என்பதற்கு மலடி யென்பதொரு பொருளு முண்மையின் இது மிக்க நயமுடைத்து. (19) அன்னையெனத் தன்பாலின் னருள்சுரந்து வருகாளை தன்னையழைத் தெனக்களந்த கரையடைத்துத் தருவாயோ என்னவிசைத் தனளாக வடைக்கின்றே னெனக்கன்னை பின்னையதற் கிடுங்கூலி யாதென்றார் பெருமுதியாள். (இ-ள்.) அன்னை எனத் தன்பால் இன் அருள் சுரந்து வருகாளை தன்னை அழைத்து - தாய்போலத் தன்கண் இனிய அருள் சுரந்து வரும் காளைப் பருவ முடையாரை அழைத்து, எனக்கு அளந்த கரை அடைத்துத் தருவாயோ என்ன இசைத்தனளாக - என் பங்குக்கு அளந்து விட்ட கரையினை அடைத்துத் தருவாயோ என்று வினவினளாக; அன்னை - தாயே, அடைக்கின்றேன் - அடைத்துத் தருவேன், பின்னை - அடைத்தபின், எனக்கு அதற்கு இடும் கூலி யாது என்றார் - எனக்கு அதற்காகக் கொடுக்குங் கூலி யாது என்று கேட்டனர்; பெருமுதியாள் - பெரிய அம்முதியவள். அன்னை யென அருள் சுரந்து எனலும், அன்னை யென அழைத்து எனலும் பொருந்தும். (20) பிட்டிடுவே னுனக்கென்றா ளதற்கிசைந்து பெரும்பசியாற் சுட்டிடநான் மிகமெலிந்தேன் சுவைப்பிட்டி லுதிர்ந்தவெலாம் இட்டிடுவா யதுமுந்தத் தின்றுநா னிளைப்பாறிக் கட்டிடுவே னின்னுடைய கரையென்றார் கரையில்லார். (இ-ள்.) உனக்குப் பிட்டு இடுவேன் என்றாள் - உனக்குக் கூலியாகப் பிட்டுத் தருவேனென்று கூறினள்; கரை இல்லார் அதற்கு இசைந்து - எல்லையில்லாத இறைவர் அதற்கு உடன் பட்டு, பெரும் பசியால் சுட்டிட நான் மிகமெலிந்தேன் - பெரிய பசித்தீ என்னைச் சுட அதனால் யான் மிக இளைத்தேன்; முந்த - யான் வேலை செய்தற்கு முன்னரே, சுவைப் பிட்டில் உதிர்ந்த வெலாம் - சுவைமிக்க பிட்டில் உதிர்ந்த பிட்டு முழுதும், இட்டிடுவாய் - தருவாயாக; அது தின்று நான் இளைப்பாறி - அதனைத் தின்று நான் சிறிது இளைப்பாறிக் கொண்டு, நின்னுடைய கரை கட்டிடுவேன் என்றார் - நினது பங்குக் கரையைக் கட்டுவேனென்று கூறினர். பசி சுட்டிட அதனால் எனச் சுட்டுப் பெயர் வருவித்து உருபு பிரித்தொட்டுக. சுட்டிட முதலியவற்றில், இடு : துணைவினை. கரையில்லார் - அளவைகளால் அளக்கப்படும் வரம்பு இல்லாதவர். (21) தெள்ளியடு சிற்றுண்டி சிக்கடைந்த பொதிநீக்கி அள்ளியெடுத் தருந்தப்பா வென்றிட்டா ளரைக்கசைத்த புள்ளியுடைத் துகினீத்தார் புறத்தானை விரித்தேந்தி ஒள்ளியதென் றவளன்பு முடன்கூட்டி யமுதுசெய்வார். (இ-ள்.) தெள்ளிஅடு சிற்றுண்டி - மாவினைத் தெள்ளிச் செய்த பிட்டினை, சிக்கு அடைந்த பொதி நீக்கி - அழுக்கடைந்த மூடிய ஆடையை நீக்கி, அள்ளி எடுத்து அப்பா அருந்து என்று இட்டாள் - அள்ளி யெடுத்து அப்பனே உண்பாயாக என்று கூறி அளித்தனள்; அரைக்கு அசைத்த புள்ளி உடைத் துகில் நீத்தார் - இடையிற் கட்டிய புள்ளியை யுடைய புலித்தோலுடையை நீக்கி வந்தவர், புறத்தானை விரித்து ஏந்தி - முன்றானையை விரித்து ஏந்தி, ஒள்ளியது என்று - இது மிக நன்றாயிருக்கிற்தென்று, அவள் அன்பும் உடன் கூட்டி அமுது செய்வார் - அவளது அன்பையும் ஒருங்கு சேர்த்து அருந்துவாராயினர். சிக்கு - அழுக்கு. பொதி - மூடு துணி. அன்பினால் அப்பா என்றாள். ஒள்ளியது - சிறந்தது. உண்டலை அமுது செய்தல் என்பது பெரியோர் சம்பிரதாயம். (22) அன்னைமுலைத் தீம்பாலி னரியசுவைத் திஃதந்தத் தென்னவனா யுலகாண்ட திருவால வாயுடைய1 மன்னர்பிரான் றனக்கேயா மென்றென்று வாய்ப்பெய்து சென்னியசைத் தமுதுசெய்தார் தீவாய்நஞ் சமுதுசெய்தார். (இ-ள்.) அன்னை முலைத் தீம்பாலின் அரிய சுவைத்து இஃது - தாயின் முலைப்பாலைவிட அரிய சுவையை யுடையதாகிய இப்பிட்டு, அந்தத் தென்னவனாய் உலகு ஆண்ட - அந்தச் சுந்தர பாண்டியனாய் இந்நிலவுலகை ஆண்டருளிய, திருவாலவாயுடைய மன்னர் பிரான் தனக்கேயாம் என்று என்று - திருவாலவாயினையுடைய மன்னர் பெருமானுக்கே உரியதாகும் என்று சொல்சி சொல்லி, வாய்ப்பெய்து - வாயிற்போட்டு, தீவாய் நஞ்சு அமுது செய்தார் - தீயைப்போலும் வெம்மை வாய்ந்த நஞ்சினை யுண்ட அவ்விறைவர், சென்னி அசைத்து அமுது செய்தார் - முடிதுளக்கி அருந்தினர். அந்த மன்னர் பிரான் எனக் கூட்டுக. திருவாலவாயுடைய மன்னர் பிரானுக்கே ஆகுமென்று பிட்டினைப் புகழ்ந்துரைப்பார் போன்று உண்மை கூறும் நயம் பாராட்டற்குரியது. உவப்பாலும் வியப்பாலும் சென்னியசைத்தார். கொடிய நஞ்சினையும் அமுது செய்தவர் இப்பிட்டினை விடுவரோ என்னும் நயந் தோன்ற தீவாய்நஞ் சமுது செய்தார் எனப் பெயர் கூறினார். (23) தந்தையொடு தாயின்றித் தனிக்கூலி யாளாக வந்தவெனக் கொருதாயா யருள்சுரந்து மாறாத இந்தவிளைப் பொழித்தனையே யினிவேலைத் தலைச்சென்றுன் சிந்தைகளிப் பெழவேலை செய்வேனென் றிசைத்தெழுந்தார். (இ-ள்.) தந்தையொடு தாய் இன்றி - தந்தையும் தாயுமில்லாமல், தனிக் கூலியாளாக வந்த எனக்கு - தனித்த கூலியாளாக வந்த எனக்கு, ஒரு தாயாய் அருள் சுரந்து - ஓர் அன்னையாகி அருள் சுரந்து, மாறாத இந்த இளைப்பு ஒழித்தனையே - நீங்காத இந்த இளைப்பினை நீக்கினையே (ஆனதால்), இனி வேலைத்தலைச் சென்று -இனி வேலை நடக்குமிடஞ் சென்று, உன் சிந்தை களிப்பு எழ - உன் மனம் மகிழ்ச்சி மிக, வேலை செய்வேன் என்று இசைத்து எழுந்தார் - வேலை செய்வேனென்று கூறி எழுந்தனர். ‘தந்தை தாய் இல்லாத எனக்கு’ எனக் கூறுவது அழகிது; இறைவன் “பிறவா யாக்கைப் பெரியோன்” ஆகலின் அவற்குத் தந்தை தாய் இன்மை அறிக; “ தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடி” என்பது திருவாசகம். வேலைத்தலை - வேலை செய்யுமிடம். (24) தந்திவாய் மருப்பிடறி வருங்குடிஞைத் தடங்கரையில் வந்தியான் வந்தியா ளென்றேட்டில் வரைவித்துப் புந்தியா லுரையானூற் பொருளினா லளப்பரிய அநதிவான் மதிச்சடையார் கரையடைப்பா ராயினார். (இ-ள்.) தந்திவாய் மருப்பு இடறிவரும் - யானையின் வாயிலுள்ள கொம்பினை இடறிக் கொண்டு வருகின்ற, குடிஞைத் தடம் கரையில் வந்து - வையை யாற்றினது பெரிய கரையின்கண் வந்து, யான் வந்தி ஆள் என்று ஏட்டில் வரைவித்து - யான் வந்தியின் கூலியாள் என்று கணக்கில் எழுதுவித்து. புந்தியால் உரையால் நூற்பொருளினால் அளப்பரிய -மனத்தினாலும் மொழியாலும் நூற்பொருளினாலும் அளந்து காண்டற் கரிய, அந்திவான் மதிச் சடையார் - செக்கர் வானிற் றோன்றும் பிறையினை யணிந்த சடையை யுடைய இறைவர், கரை அடைப்பார் ஆயினார் - கரையினை யடைக்கத் தொடங்கினார். வந்தியான் என்பதில் குற்றியலிகரம் அலகு பெற்றது. எண்ணும் மைகள் தொக்கன. (25) வெட்டுவார் மண்ணைமுடி மேல்வைப்பார் பாரமெனக் கொட்டுவார் குறைத்தெடுத்துக் கொடுபோவார் சுமடுவிழத் தட்டுவார் சுமையிறக்கி யெடுத்ததனைத் தலைபடியக் கட்டுவா ருடன்சுமந்து கொடுபோவார் கரைசொரிவார். (இ-ள்.) மண்ணை வெட்டுவார் - மண்ணினை வெட்டுவார்; முடிமேல் வைப்பார் - அதனைத் தூக்கி முடியின்கண் வைப்பார்; பாரம் எனக் கொட்டுவார் - பாரம் அதிகமென்று கூறிக் கீழே கொட்டுவார்; குறைத்து எடுத்துக் கொடுபோவார் - அதனைக் குறைத்து எடுத்துக் கொண்டு போவார்; சுமடுவிழத்தட்டுவார் - சும்மாடு விழுமாறு தட்டுவார்; சுமை இறக்கி அதனை எடுத்துத் தலைபடியக் கட்டுவார் சுமையைக் கீழே இறக்கி வைத்து அச்சும்மாட்டினை எடுத்துத் தலையிற் படியுமாறு கட்டுவார், உடன் சுமந்து கொடுபோவார் கரை சொரிவார் - விரைந்து சுமந்து கொண்டு போய்க் கரையிற் கொட்டுவார். சுமடு - சுமையடை; சும்மாடு. (26) இவ்வண்ண மிவரொருகா லிருகான்மண் சுமந்திளைத்துக் கைவண்ண மலர்கன்றக் கதிர்முடிமேல் வடுவழுந்த மைவண்ண னறியாத மலரடிசெம் புனல்சுரந்து செவ்வண்ணம் படைப்பவொரு செழுந்தருவின் மருங்கணைந்தார். (இ-ள்.) இவர் இவ்வண்ணம் ஒரு கால் இரு கால் மண் சுமந்து இளைத்து - இவர் இங்ஙனம் ஒருமுறை இருமுறை மண்ணைச் சுமத்தலால் உடல் மெலிந்து, கைவண்ணமலர் கன்ற - திருக்கைகளாகிய செந்நிறமுடைய தாமரை மலர்கள் கன்றவும், கதிர்முடிமேல் வடு அழுந்த - ஒளி பொருந்திய முடியின்கண் வடு அழுந்தவும், மைவண்ணன் அறியாத மலர் அடி - முகில் போலும் நிறமுடைய திருமாலறியாத தாமரை மலர்போலுந் திருவடிகள், செம்புனல் சுரந்து செவ்வண்ணம் படைப்ப - குருதி சுரந்து செந்நிறத்தைப் பெறவும், ஒரு செழுந்தருவின் மருங்கு அணைந்தார் - ஒரு செழிய மரத்தினது நிழலை அடைந்தனர். கன்ற முதலிய எச்சங்கள் காரணப்பொருளன. கொன்றை நீழல் என்பர் கடவுள் மாமுனிவர். (27) தருமேவு மலைமகளுஞ் சலமகளு மறியாமற் றிருமேனி முழுதுநில மகடீண்டித் திளைப்பெய்தக் குருமேவு மதிமுடியைக் கூடையணை மேற்கிடத்தி வருமேரு வனையார்தம் வடிவுணர்ந்து துயில்கின்றார். (இ-ள்.) தருமேவும் மலைமகளும் - மரங்கள் பொருந்திய மலையரையன் புதல்வியாராகிய உமையம்மையாரும், சலமகளும் அறியாமல் - கங்காதேவியாரும் அறியாமல், திருமேனி முழுதும் - தமது திருவுடல் முழுதையும், நிலமகள் தீண்டி திளைப்பெய்த - நிலமகள் பரிசித்துத் திளைக்க, குருமேவும் மதிமுடியை - நிறம் பொருந்திய சந்திரனை யணிந்த முடியினை, கூடை அணைமேல் கிடத்தி - கூடையாகிய அணையின் மேல் வைத்து, வருமேரு அனையார் - வளருகின்ற மேருமலையையொத்த இறைவர், தம் வடிவு உணர்ந்து துயில்கின்றார் - தமது வடிவினை உணர்ந்து துயில் கொள்கின்றார். தருமேவு என்றது மலைக்கு அடை. குரு - நிறம்; ஒளி. அணை- தலையணை. துயிலுதல் ஒரு விளையாட்டேயன்றி, ஏனையோர் போல மயக்கத்தால் துயில்கின்றாரல்லர் என்பார் தம் வடிவுணர்ந்து துயில்கின்றார் என்றார். வடிவுணர்ந்து - சொரூபத்தை உணர்ந்து கொண்டு. (28) அத்தருவே யாலநெடுந் தருவாக வலைபுரட்டித் தத்திவரும் புனலடைப்பார் சனகாதி முழுதுணர்ந்த மெய்த்தவராய்க் கண்களிப்ப மெய்யுணர்ச்சி மோனமயச் சுத்தவுருத் தெளிவிப்பா ரெனத்துயிலுந் துயிலுணர்ந்தார். (இ-ள்.) அத்ருவே நெடும் ஆலந்தருவாக - அந்த மரமே நீண்ட வடவால மரமாக, அலைபுரட்டித் தத்திவரும்புனல் அடைடப்பார் அலைகளை வீசித் தத்திக் கொண்டு வரும் நீரை அடைப்பவர்களே, சனக ஆதி முழுது உணர்ந்த மெய்த்தவராய்க் கண் களிப்ப - சனகன் முதலாகிய முற்று முணர்ந்த உண்மைத்தவ முடையாராகிக் கண் களிகூர, மெய் உணர்ச்சி மோனமய சுத்த உருத் தெளிவிப்பார் என- மெய்யுணர்வால் பெறப்படும் மோனமயமாகிய தமது தூய அருளுருவினைத் தெளி விப்பாரைப் போல, துயிலும் துயில் உணர்ந்தார் - தூங்கும் தூக்கத்தினின்றும் விழித்தனர். முழுதுணர்ந்த சனகாதி மெய்த்தவராய் என மாறுக. மோன நிலையிலிருந்து தெளிவிப்பாரெனத் துயிலும் துயில் என்க (29) ஆடுவார் சாமமெனத் தித்திக்கு மமுதவிசை பாடுவார் நகைசெய்வார் தொழில்செய்வார் பராக்கடையக் கோடுவார் மணல்குவிப்பார் குதிப்பார்தூ ளெழவடிபாய்ந் தோடுவா ருடன்மீள்வா ருன்மத்த ரெனவிருப்பார். (இ-ள்.) ஆடுவார் - கூத்தாடுவார்; சாமம் எனத் தித்திக்கும் அமுத இசை பாடுவார் - சமாவேதத்தைப்போலச் சுவைபயக்கும் அமுதம் போலும் இசையினைப் பாடுவார்; நகை செய்வார் - சிரிப்பார்; தொழில் செய்வார் பராக்கு அடைய - வேலை செய்பவர்கள் பராக்கினை அடையுமாறு, வார் கோடு மணல் குவிப்பார் குதிப்பார் - நீண்ட கரையின்கண் மணலைக் குவித்துத் தாண்டுவார்; அடிதூள் எழ பாய்ந்து ஓடுவார் - காலிலுள்ள துகள் மேலே எழுமாறு பாய்ந்து ஓடுவார்; உடன் மீள்வார் - உடனே திரும்புவார்; உன்மத்தர் என இருப்பார் - உன்மத்தரைப் போலப் பேசாமல் இருப்பார். பராக்கடைய என்பதனை ஆடுவார் முதலியவற்றுக்கும் காரிய மாக்குக. பராக்கு அடைய - பராக்குப் பார்க்க; தமது தொழிலை விட்டு வேடிக்கை பார்க்க. (30) வேலையினா லறவருந்தி யிளைத்தார்போன் மெய்வேர்வை காலமிசை மூச்செறிந்து வாயொலியாற் காற்றழைத்துச் சாலநெடும் பசியினர்போற் றளர்ந்தடியா ளிடும்பிட்டின் மேலடைந்த விருப்பினராய் மீண்டுமவள் பாலணைவார். (இ-ள்.) வேலையினால் அறவருந்தி இளைத்தார் போல் - வேலையினாலே மிகவும் வருந்தி மெலிந்தவர் போல, மெய் வேர்வை கால - உடல் வேர்வையினைச் சிந்த, மிசை மூச்சு எறிந்து - மேல் மூச்சு விட்டு, வாய் ஒலியால் காற்று அழைத்து - வாயைக் குவித்துச் செய்யும் ஒலியினால் காற்றினை அழைத்து, சால நெடும் பசியினர் போல் தளர்ந்து - மிகவும் நீண்டகாலத்துப் பசியுடையார்போலத் தளர்வுற்று, அடியாள் இடும்பிட்டின் மேல் அடைந்த விருப்பினராய் - அடியாளாகிய வந்தி கொடுக்கும் பிட்டின்கண் சென்றடைந்த விருப்பினை யுடையவராய், மீண்டும் அவள்பால் அணைவார் - மீளவும் அவளிடஞ் செல்வாராயினார். இளைத்தார் போல் என்றும், பசியினர் போல் என்றும் கூறியது இவையெல்லாம் நாடகமாத்திரமேயன்றி உண்மையல்ல என்றற்கு வாயைக் குவித்து எழுப்பும் சீழ்க்கை யொலியால் காற்று வருவித்தல் பணியாளரிடைக் காணப்படும் வழக்கு. (31) அறுசீரடியாசிரிய விருத்தம் இடும்பைநோய் வெள்ள நீந்தி யின்பநீர் வெள்ளத் தாழ்ந்த கொடும்புற முதியாண் முன்போய்க் கூறுவார் கோலுக் கேற இடம்படு கரைக ளெல்லா மடைபடு கின்ற வின்னங் கடும்பசி யுடையே னன்னே பிட்டிடு கடிதி னென்றார். (இ-ள்.) இடும்பை நோய் வெள்ளம் நீந்தி - துன்ப நோயாகிய வெள்ளத்தினை நீந்திக் கடந்து, இன்பநீர் வெள்ளத்து ஆழ்ந்த - இன்பமாகிய வெள்ளத்தில் அழுந்திய, கொடும்புறம் முதியாள் முன்போய் - வளைந்த முதுகினையுடைய முதியவளாகிய வந்தியின் முன் சென்று, கூறுவார் - சொல்லுவார்; கோலுக்கு ஏற இடம்படு கரைகள் எல்லாம் அடைபடுகின்ற - அளந்து விட்ட கோலுக்குப் பொருந்த இடமகன்ற கரைகளெல்லாம் அடைபடுகின்றன; அன்னே - தாயே, இன்னம் கடும் பசி உடையேன் - யான் இன்னும் மிக்க பசியுடையேன் (ஆகலின்), கடிதின் பிட்டு இடு என்றார் - விரைவில் பிட்டு இடுவாயாக என்று கூறியருளினர். நீர் வெள்ளத்துக்கு அடை. ஏற - பொருந்த. கடும்பசி - மிக்க பசி. (32) ஆங்கவ ளப்போ தட்ட சிற்றுண வளித்தா ளையர் வாங்கியங் கையு நாவுங் கனலெழ வாயிற் பெய்து பாங்கிரு கொடிறு மொற்றிப் பதமுறப் பருகிக் கொண்டு நீங்கிமுன் போலப் போந்து நெடுங்கரை யடைக்க லுற்றார். (இ-ள்.) ஆங்கு அவள் அப்போது அட்ட சிற்றுணவு அளித்தாள் - அவ்விடத்தில் அவ்வந்தி அப்பொழுது செய்த பிட்டினைக் கொடுத்தாள்; ஐயர் - இறைவர், வாங்கி அங்கையும் நாவும் கனல் எழ வாயில் பெய்து - அதனை வாங்கி அகங்கையும் நாவும் தீயெழ வாயிற் போட்டு, இருபாங்கு கொடிறும் ஒற்றி - இரண்டு பக்கங்களிலு முள்ள கொடிற்றினைக் கையால் ஒற்றி, பலம்உற - அது உண்ணும் பதத்தினைப் பொருந்த, பருகிக்கொண்டு நீங்கி - அதனை அருந்திக் கொண்டே அவ்விடத்தினின்றும் நீங்கி, முன் போலப் போந்து - முன்போல் வந்து, நெடுகரை அடைக்கலுற்றார் - நீண்ட கரையினை அடைக்கத் தொடங்கினார். பசி மிகுதியால் விரைந்துண்போர்போலச் சூட்டினைக் கொண்ட பிட்டினை வாயிற் போட்டனர் என்க. வாங்கினமையாற் கையும், வாயிலிட்டமையால் நாவும் வெம்மையுற. கனல் - தழல் போலும் வெம்மை. கொடிறு - கவுள். (33) பிட்டுவாய் மிதப்ப வுண்பார் பெருவலி யுடையார் போல வெட்டுவா ரெடுத்த மண்ணைக் கொண்டுபோய் வேற்றுப் பங்கிற் கொட்டுவா ருடைப்பு மாறுங் கொள்கைகண் டார்த்து திண்டோள் தட்டுவா ரயனின் றாரைத் தழுவுவார் களிப்புத் தாங்கி. (இ-ள்.) பிட்டு வாய் மிதப்ப உண்பார் - பிட்டினை வாய் நிறையப்போட்டு உண்பார்; பெருவலி உடையார் போல வெட்டுவார் - பெரிய வலிமையுடையார் போல வெட்டுவார்; எடுத்த மண்ணைக் கொண்டுபோய் வேற்றுப்பங்கில் கொட்டுவார் - அங்ஙனம் வெட்டியெடுத்த மண்ணைத் தூக்கிக் கொண்டு போய் வேறு பங்கில் கொட்டுவார்; உடைப்பு மாறும் கொள்கை கண்டு - அந்த உடைப்பு மாறுந் தன்மையைப் பார்த்து, ஆர்த்துத் திண்தோள் தட்டுவார் - ஆரவாரஞ் செய்து திண்ணிய தோளினைத் தட்டுவார்; களிப்புத் தாங்கி அயல் நின்றாரைத் தழுவுவார் - களிப்பு மிக்குப் பக்கத்தில் நின்றவரைக் கட்டித் தழுவுவார். (34) எடுத்தமண் கூடை யோடு மிடறிவீழ் வார்போ லாற்றின் மடுத்திட வீழ்வர் நீந்தி வல்லைபோய்க் கூடை தள்ளி எடுத்தகன் கரைமே லேறி யடித்தடித் தீரம் போக்கித் தொடுத்தகட் டவிழ்ப்பர் மீளத் துன்னுவர் தொடுவர் மண்ணை. (இ-ள்.) எடுத்த மண்கூடையோடும் - எடுத்த மண்ணை யுடைய கூடையுடன், இடறி வீழ்வார்போல் ஆற்றின் மடுத்திட வீழ்வார் - காலிடறி விழுபவரைப் போல ஆற்றில் அழுந்த விழுவார்; வல்லை நீந்திப்போய் - விரைந்து நீந்திச்சென்று, கூடை தள்ளி எடுத்து - கூடையைத் தள்ளி வந்து எடுத்து, அகன் கரைமேல் ஏறி - அகன்ற கரையின் மேலேறி, அடித்து அடித்து ஈரம் போக்கி - அக்கூடையைப் பல முறை அடித்து ஈரத்தைப்போக்கி, தொடுத்த கட்டு அவிழ்ப்பர் - அதன் தொடுத்த கட்டினை அவிழ்ப்பர்; மீளத் துன்னுவர் - மீளவும் அக்கட்டினைக் கட்டுவர்; மண்ணைத் தொடுவர் - மண்ணை வெட்டுவர். அகன்: மரூஉ. துன்றாதல்; தைத்தல்; கட்டுதல். (35) கொட்டுமண் சுமந்து செல்வர் கூடையை யுடைப்பில் வீழத் தட்டுவ ரெடுப்பார் போலத் தாவிவீழ்ந் தலையி லோட விட்டொரு மரத்தைப் பற்றி மிதப்பர்திண் கரையி லேற முட்டுவர் சுழியி லாழ்வர் சேட்சென்று முளைப்பர் மீள்வர். (இ-ள்.) கொட்டுமண் சுமந்து செல்வர் - ஒரு கொட்டு மண்ணைச் சுமந்து கொண்டு போவார்; கூடையை உடைப்பில் வீழத் தட்டுவர் - கூடையை உடைப்பில் வீழுமாறு தட்டுவார்; எடுப்பார்போலத் தாவி வீழ்ந்து அலையில் ஓடவிட்டு - அதனை எடுப்பார்போலத் தாவி நீரில் வீழ்ந்து அது அலையில் ஓடுமாறு விட்டு, ஒரு மரத்தைப் பற்றி மிதப்பர் - ஒரு மரத்தினைப் பிடித்து மிதப்பர்; திண்கரையில் ஏற முட்டுவர் - திண்ணிய கரையிலேறப் பல பக்கங்களினுஞ் சென்று மோதுவர்; சுழியில் ஆழ்வர் - நீர்ச்சுழியில் அழுந்துவர், சேண்சென்று முளைப்பர் மீள்வர் - நெடுந்தூரம் போய் மேலே எழுந்து மீளுவர். கொட்டு - மண்வெட்டியின் வாயாகிய தகடு. முளைப்பர் - நீரிலிருந்து மேலே தோன்றுவர். (36) கொட்டினைக் கழலப் பார்ப்பர் கோப்பர்கோ லிடையாப் பிட்டுத் தட்டுவ ருயிர்ப்பு வீங்கித் தள்ளநின் றிளைப்பர் கச்சிற் பிட்டினை நுகர்வர் வேலை வினைகெடப் பிறர்க்கு மள்ளி இட்டுமா றோச்ச நோக்கி நகைப்பர்கை யிரண்டுந் தாக்கி.1 (இ-ள்.) கொட்டினைக் கழலப் பார்ப்பர் - மண்வெட்டி கழலும்படி செய்வர்; கோல் இடையாப்பு இட்டுக்கோப்பர் தட்டுவர் - காம்பினிடத்தில் ஆப்பினைச் செருகிக்கோத்துத் தட்டுவர்; உயிர்ப்பு வீங்கித்தள்ள நின்று இளைப்பர் - மூச்சு மேலோங்கிச்செல்ல நின்று வருந்துவர்; கச்சில் பிட்டினை நுகர்வர் - கச்சிலுள்ள பிட்டினை அள்ளி அருந்துவர்; வேலைவினை கெடப் பிறர்க்கும் அள்ளி இட்டு - வேலையாகிய வினை கெடுமாறு வேலைசெய்யும் பிறர்க்கும் அள்ளிக்கொடுத்து, மாறு ஓச்ச நோக்கி - வேலை வாங்குவோர் பிரம்பினை ஓங்க அதனைப் பார்த்து, கை இரண்டும் தாக்கி நகைப்பர் - இரண்டு கரங்களையும் ஒன்றோடொன்று தாக்கிச் சிரிப்பர். பார்ப்பர் - செய்வர். பிறர்க்கும் அள்ளிக் கொடுத்து வினைகெடச் செய்வதால் மாறு ஓச்ச என்க. மாறு - பிரம்பு; வளாருமாம். (37) வானத்தின் மண்ணிற் பெண்ணின் மைந்தரிற் பொருளி லாசை தானற்றுத் தமையு நீத்துத் தத்துவ முணர்ந்த யோகர் ஞானக்கண் கொண்டே யன்றி நாடருஞ் சோதி மண்ணோர் ஊனக்கண் கொண்டுங் காண வுடன்விளை யாடல் செய்வார். (இ-ள்.) வானத்தில் மண்ணில் பெண்ணில் மைந்தரில் பொருளில் - இந்திரன் முதலிய இறையவர் பதங்களிலும் மண்ணிலும் மகளிரிலும் மைந்தரிலும் பொருளிலும், ஆசை தான் அற்று - விருப்பமற்று, தமையும் நீத்து - தற்போதத்தையும் இழந்து, தத்துவம் உணர்ந்த யோகர் - உண்மை நிலையினை யுணர்ந்த யோகிகள், ஞானக்கண் கொண்டே அன்றி நாடரும் சோதி - ஞானக்கண்ணாற் காண்டலன்றிப் பிறவாற்றால் நாடுதற்கரிய பரஞ் சுடராகிய சோமசுந்தரக்கடவுள், மண்ணோர் ஊனக்கண் கொண்டும் காண - புவியிலுள்ளார் ஊனக்கண்ணாலுங் கண்டு களிக்க, உடன் விளையாடல் செய்வார் - அவருடன் தாமுமொருவராய் விளையாடுவாராயினர். எண்ணும்மைகள் தொக்கன. தான்: அசை. தமையும் நீத்து என்பதற்கு இருவகை உடம்பின் கண்ணும் பற்று விட்டு என்றுமாம். பற்றறுத்து மெய்யுணர்ந்த சிவயோகிகளாலும் ஞானக்கண்ணாலன்றி அறியலாகாத பெருமான் மண்ணில் வாழும் ஏனைப்பொதுமக்களும் ஊனக்கண்ணாலும் காணும்படி அவருடன் விளையாடுவாராயினார் என அன்பிற்கு எளியரான இறைவரது அருமைப்பாட்டை விளக்கினார். (38) அருளினா லுலக மெல்லா மாக்கியு மளித்து நீத்தும் பெருவிளை யாடல் செய்யும் பிறைமுடிப் பெருமா னிங்ஙன் ஒருவிளை யாடல் செய்ய வோச்சுகோற் கைய ராகி அருகுநின் றேவல் கொள்வா ரடைகரை நோக்கப் புக்கார். (இ-ள்.) அருளினால் உலகம் எல்லாம் ஆக்கியும் அளித்தும் நீத்தும் - பேரருளினாலே உலகமனைத்தையும் ஆக்கியும் காத்தும் அழித்தும், பெருவிளையாடல் செய்யும் பிறைமுடிப் பெருமான் - பெரிய விளையாடலைப் புரியும் பிறையை யணிந்த முடியினையுடைய இறைவன், இங்ஙன் ஒரு விளையாடல் செய்ய -- இங்கே இவ்வண்ணம் ஒரு விளையாடலைச் செய்யா நிற்க, ஓச்சு கோல் கையராகி அருகுநின்று ஏவல் கொள்வார் - வீசுகின்ற கோலையுடைய கையினையுடையராய்ப் பக்கத்தில் நின்று வேலை வாங்குவோர், அடைகரை நோக்கப் புக்கார் - அடைபட்ட கரையினைப் பார்க்கப் போயினார். நீத்து - ஒழித்து என்னும் பொருட்டு. இங்ஙனம் என்பது ஈறு தொக்கது. (39) நெட்டலை யொதுங்கி யோட நிவப்புற வரைபோ லிட்டுக் கட்டிய கரைக ளெல்லாங் கண்டுகண் டொப்பு நோக்கி அட்டமே செல்வார் திங்க ளாயிரந் தொழுதாள் பேரால் விட்டபங் கடைப டாமை கண்டனர் வெகுளி மூண்டார். (இ-ள்.) நெடு அலை ஒதுங்கி ஓட - நீண்ட அலைகள் ஒதுங்கி ஓடுமாறு, நிவப்பு உற வரை போல்இட்டுக் கட்டிய கரைகள் எல்லாம் - உயர்தலைப் பொருந்த மலைபோல் மண்இட்டுக் கட்டிய கரைகளனைத்தையும், கண்டு கண்டு ஒப்பு நோக்கி - பார்த்துப் பார்த்துக் கணக்குடன் ஒத்திருத்தலையும் நோக்கி, அட்டமே செல்வார் - குறுக்கே செல்லுமவர், திங்கள் ஆயிரம் தொழுதாள் பேரால் விட்ட பங்கு - ஆயிரம் பிறையினைக் கண்டு வணங்கிய வந்தியின் பெயரால் அளந்து விட்ட பங்கு, அடைபடாமை கண்டனர் வெகுளி மூண்டார் - அடைபடாதிருத்தலைக் கண்டு சீற்றமிக்கனர். வரைபோல் நிவப்புறக் கட்டிய என இயைக்க. அட்டம் - வளைவு, குறுக்கு; அருகு என்றுமாம். நூறாண்டு புக்காள் என்பார் திங்களாயிரந் தொழுதாள், என்றார்; பத்துத்திங்கள் ஓராயுளாகக் கொள்ளுதலு முண்டென்க. மகளிர் பிறை தொழுத லியல்பாகலின் அதன் மேலிட்டு ஆயுள் நீட்சி கூறினார். (40) வந்திக்குக் கூலி யாளாய் வந்தவன் யாரென் றோடிக் கந்தர்ப்ப னெனநேர் நின்ற காளையை நோக்கி யேடா அந்தப்பங் குள்ள வெல்லா மடைபட்ட தெவனீ யின்னம் இந்தப்பங் கடையாய் வாளா திருத்தியா றம்பீ யென்றார். (இ-ள்.) வந்திக்குக் கூலியாளாய் வந்தவன் யார் என்று ஓடி - வந்திக்குக் கூலியாளாக வந்தவன் யாவன் என்று வினாவி ஓடி, கந்தர்ப்பன் என நேர்நின்ற காளையை நோக்கி - மன்மதனைப்போல எதிரில் நின்ற காளை போன்றாரைப் பார்த்து, ஏடா - ஏண்டா, அந்தப் பங்கு உள்ள எல்லாம் அடைபட்டது - அந்தப் பங்கு உள்ளன முற்றும் அடைபட்டது; நீ இன்னம் - நீ இன்னமும், இந்தப் பங்கு அடையாய் - இந்தப் பங்கினை அடையாமல், வாளாது இருத்தி எவன் தம்பீ என்றார் - சும்மா இருக்கின்றனையே அதற்கு யாது காரணம் தம்பீ என்று வினவினர். ஏடா தம்பீ எனக் கூட்டி யுரைக்க. அந்தப் பங்கு - ஏனோர் பங்குகள். வாளாது, து : பகுதிப்பொருள் விகுதி. காளையின் அழகில் ஈடுபட்டுத் தம்பியென அருமை பாராட்டிக் கூறினர். (41) வேறுரை யாது தம்மை யுணர்ந்தவர் வீறு தோன்ற ஈறிலா னிறுமாப் பெய்தி யிருந்தன னாக மேலிட் டாறுவந் தடுத்த பங்கி லடைகரை கல்லிச் செல்ல மாறுகொண் டோச்ச வஞ்சி மயங்கினார் வலிய கோலார். (இ-ள்.) ஈறு இலான் வேறு உரையாது - அழிவில்லாத இறைவன் அதற்கு வேறொன்றும் விடைகூறாது, தம்மை இணர்ந்தவர் வீறு தோன்ற - தம்மையுணர்ந்த அடியாரின் வீறு வெளிப்பட, இறுமாப்பு எய்தி இருந்தனன் ஆக - இறுமாப்புற்று இருந்தானாக; ஆறு மேலிட்டு வந்து - ஆறானது மேற்கொண்டு வந்து, அடுத்த பங்கில் அடைகரை கல்லிச் செல்ல - அடுத்த பங்கில் அடைபட்டிருக்கும் கரையையும்தோண்டிச் செல்லாநிற்க, வலிய கோலார் மாறுகொண்டு ஓச்ச அஞ்சி மயங்கினார் - வலிய கோலையுடையவர் கோலினால் அடிக்க அஞ்சிமயங்கினர். வீறு - பெருமை. இச்செய்யுளிலும் அவரது தோற்றத்தில் ஈடுபட்டமை கூறினார். (42) பித்தனோ விவன்றா னென்பா ரல்லது பேய்கோட் பட்ட மத்தனோ விவன்றா னென்பார் வந்தியை யலைப்பான் வந்த எத்தனோ விவன்றா னென்பா ரிந்திர சாலங் காட்டுஞ் சித்தனோ விவன்றா னென்பா ராரென்றுந் தெளியோ மென்பார். (இ-ள்.) இவன் தான் பித்தனோ என்பார் - இவன் பித்துடைய வனோ வென்று கூறுவர்; அல்லது இவன் தான் பேய் கோட்பட்ட மத்தனோ என்பார் - அன்றி இவன் பேயாற் பிடிக்கப்பட்ட உன்மத்தனோவென்று சொல்லுவர்; இவன் தான் வந்தியை அலைப்பான் வந்த எத்தனோ என்பார் - (அன்றி) இவன் வந்தியை வருத்துதற்கு வந்த எத்தனோ வென்று இயம்புவர்; இவன் தான் இந்திர சாலம் காட்டும் சித்தனோ என்பார் - (அன்றி) இவன் இந்திரசாலங் காட்டுகின்ற சித்தனோ வென்று செப்புவர்; ஆர் என்றும் தெளியோம் என்பார் - இவருள் யாரென்றுந் தெரிந்திலோம் என்று கூறுவர். தான் நான்கும் அசை. பேய்கோட்பட்ட, தம்மினாகிய தொழிற் சொல் வர வலி இயல்பாயிற்று. அலைப்பான்: வினையெச்சம். எத்தன் - ஏமாற்றுவோன். (43) பாடல்விஞ் சையனோ வென்பார் பண்ணினாற் பாணிக் கேற ஆடல்விஞ் சையனோ வென்பா ரரும்பெறற் செல்வத் தாழ்ந்து வாடிய மகனோ வென்பா ரிசைபட வாழ்ந்து கெட்ட ஏடவிழ் தாரி னாருள் யார்மக னிவன்கொ லென்பார். (இ-ள்.) பாடல் விஞ்சையனோ என்பார் - பாடலில் வல்ல கந்தருவனோ வென்று பகருவார்; பண்ணினால் பாணிக்கு ஏற ஆடல் விஞ்சையனோ என்பார் - பண்ணோடு தாளத்துக்குப் பொருந்த ஆடுதலில் வல்ல பரதநூற் புலவனோ வென்று அறைகுவார்; அரும்பெறல் செல்வத்து ஆழ்ந்து - (முன்னே) பெறுதற்கரிய செல்வப் பெருக்கில் அழுந்தி, வாடிய மகனோ என்பார் - (பின்) அச்செல்வங்குன்றிய மகனோ வென்று செப்புவார்; இசைபட வாழ்ந்து கெட்ட ஏடு அவிழ் தாரினாருள் - புகழுண்டாக வாழ்ந்து பின் அவ்வாழ்க்கை கெட்ட இதழ்விரிந்த மாலையை யணிந்த மன்னருள், இவன் யார் மகன்கொல் என்பார் - இவன் யார் மகனோ என்று சொல்லுவார். ஆல் ஒடுவின் பொருட்டு. பாணி - தாளம். ஏற - பொருந்த. கெட்ட என்னும் பெயரெச்சம் தாரினார் என்பதன் விகுதியோடியையும். இவன் யார் மகன் கொல் என மாறுக. (44) கரும்பனும் விரும்ப நின்ற கட்டழ குடைய னென்பார் அரும்பெற லிவன்றான் கூலிக் காட்செய்த தெவனோ வென்பார் இரும்பெருங் குரவ ரற்ற தமியனோ வென்பார் வேலை புரிந்தவ னல்ல னென்பா ரதுமேனி புகலு மென்பார். (இ-ள்.) கரும்பனும் விரும்ப நின்ற கட்டழகு உடையன் என்பார் - மதவேறும் விரும்புமாறு நின்ற பேரழகுடையனென்று பேசுவார்; அரும்பெறல் இவன் தான் - பெறுதற்கரிய இவன், கூலிக்கு ஆட்செய்தது எவனோ என்பார் - கூலியின் பொருட்டு ஆளாக வந்து வேலை செய்தது யாது காரணமோ என்று கூறுவார்; இரும்பெரும் குரவர் அற்ற தமியனோ என்பார் - தாயும் தந்தையுமாகிய இருமுது குரவரும் இல்லாத தனியனோவென்று சாற்றுவார்; வேலை புரிந்தவன் அல்லன் என்பார் - இவன் இதற்கு முன் வேலை செய்தவனல்லனென்று விளம்புவார்; அது மேனி புகலும் என்பார்- அதனை இவன் திருமேனியே செப்புகின்றது எனச் சொல்லுவார். அரும்பெறல் - பெறலரும். இரும் என்பதில் உம் : இசைநிறை மேனிபுகலும் என்றது சொல்லாததனைச் சொல்வதுபோற் கூறியது. (45) கூலியுங் கொண்டான் றானே கணக்கிலுங் குறிக்கச் சொன்னான் வேலையுஞ் செய்யா னின்சொல் விளம்பினுங் கேளான் கல்லின் பாலறை முளையே யாகிப் பராமுகம் பண்ணி நின்றான் ஏலநா மிதனை வேந்தற் குணர்த்துது மென்று போனார். (இ-ள்.) கூலியும் கொண்டான் - (வேலை தொடங்குதற்கு முன்னரே வந்தியிடம்) கூலியும் வாங்கிக் கொண்டான்; தானே கணக்கிலும் குறிக்கச்சொன்னான் - தானே இங்கு வந்து யான் வந்தியின் ஆளென்று கணக்கிலும் பதிவு செய்யுமாறு கூறினான்; வேலையும் செய்யான் - வேலையும் செய்யாமலிருக்கிறான்; இன்சொல் விளம்பினும் கேளான் - இனியவை கூறினுங் காது கொடான்; கல்லின் பால் அறை முளையே ஆகிப் பராமுகம் பண்ணி நின்றான் - கல்லிலடித்த முளையே போலச் சிறிதும் அசையாது நம்மையும் ஒரு பொருட்படுத்தாமல் நின்றனன்; நாம் இதனை வேந்தற்கு ஏல உணர்த்துதும் என்று போனார் - நாம் இச்செய்தியை மன்னற்கு இசையக் கூறுவோ மென்று கருதிச்சென்றனர். ஆகி என்பதனை ஆக வெனத் திரித்து, நாம் கூறுஞ்சொல் கல்லில் அறையும் முளைபோன்று செவியில் ஏறாதாக என்றுரைத்தலுமாம்; “ குன்றின்மேற் கொட்டுந் தறிபோற் ற'e7çலதகர்ந்து சென்றிசையா வாகுஞ் செவிக்கு” எனப் பிறர் உவமங் கூறியிருத்தலுங் காண்க. (46) தலைமகன் றிருமுன் றாழ்ந்து சாற்றுவா ரடிகே ளிந்த அலைபுன னகரார் தத்தம் பங்கெலா மளந்த வாற்றான் மலையினும் வலிய வாகச் சுமந்தனர் வளைந்த சிற்றூண் விலைநரை யாட்டி தன்பங் கடைத்திலள் வென்றி வேலோய். (இ-ள்.) தலைமகன் திருமுன் தாழ்ந்து சாற்றுவார் - மன்னனது திருமுன்னே வணங்கிக் கூறுவார்; அடிகேள் - அடிகளே, இந்த அலைபுனல் நகரார் - இந்த வருத்தும் வெள்ளத்தையுடைய நகரத்திலுள்ளார், அளந்த வாற்றான் - அளந்து விட்டபடியே, தத்தம் பங்கு எலாம் - தத்தமக்குரிய பங்காகிய கரை முழுதையும், மலையினும் வலியவாகச் சுமந்தனர் - ம'e7çலயைக் காட்டிலும் வலியவாக உயர்த்தனர்; சிற்றூண் விலை வளைந்த நரையாட்டி - பிட்டு விற்கும் உடல் வளைந்த முதியவளாகிய வந்தி என்பாள், தன்பங்கு - தன்பங்கினை, வெற்றி வேலோய் அடைத்திலள் - வெற்றி பொருந்திய வேற்படை ஏந்திய வேந்தனே இன்னமும் அடைத்தாளில்லை. சுமந்தனர் - உயர்த்தனர் என்னும் பொருட்டு. வளைந்த என்னும் பெயரெச்சம் நரையாட்டி என்பதன் விகுதியோடியையும். (47) வேளையும் வனப்பி னாலே வென்றவ னொருவன் வந்தி ஆளென வங்கே வந்து பதிந்தன னரசர் செல்வக் காளைபோற் களிப்பன் பாடு மாடுவன் காலம் போக்கி நீளுவன் வேலை யொன்று நெஞ்சினு நினைதல் செய்யான். (இ-ள்.) வேளையும் வனப்பினாலே வென்றவன் ஒருவன் - மதவேளையும் தன் அழகினாலே வென்ற ஒருவன், வந்தி ஆள் என அங்கே வந்து பதிந்தனன் - வந்தியின் ஆள் என்று, அங்கே வந்து கணக்கிற் பதிவு செய்தனன்; அரசர் செல்வக் காளை போல் களிப்பன் - மன்னர்களின் செல்வமிக்க புதல்வர்களைப் போலக் களி கூர்வன்; பாடும் - பாடுவான்; ஆடுவன் - கூத்தாடுவான்; காலம் போக்கி நீளுவன் - காலத்தை வேலை செய்யாமற் போக்கி நீட்டிப்பன்; வேலை ஒன்றும் நெஞ்சினும் நினைதல் செய்யான் - வேலையை மட்டு மனத்திலுங் கருதான். காளை - காளை போலும் மைந்தர். நீளுவன் - நீட்டிப்பன் என்னும் பொருட்டு. (48) ஆண்டகை வனப்பை நோக்கி யடிக்கவுங் கில்லே மஞ்சி ஈண்டினே மென்று கூற விம்மென வமைச்ச ரோடும் பாண்டிய னெழுந்து நாம்போய்ப் பங்கடை பட்ட வெல்லாங் காண்டுமென் றெறிநீர் வையைக் குடிஞையங் கரையைச் சார்ந்தான். (இ-ள்.) ஆண்டகை வனப்பை நோக்கி அஞ்சி அடிக்கவும் கில்லேம் - அவ்வாண்டகையின் பேரழகினைப் பார்த்து அஞ்சி அடித்தலும் ஆற்றேமாய், ஈண்டினேம் என்று கூற - இங்க வந்தோமென்று சொல்ல, பாண்டியன் இம்மென அமைச்சரோடும் எழுந்து- பாண்டியன் விரைந்து மந்திரிகளோடும் எழுந்து, நாம் போய்ப் பங்கு அடைபட்ட எல்லாம் காண்டும் என்று - நாம் சென்று அடைபட்டன வாய பங்குகளை யெல்லாம் காண்பேமென்று கூறி, எறிநீர் வையைக் குடிஞை அம் கரையைச் சார்ந்தான் - அலைவீசும் நீரினையுடைய வையையின் அழகிய கரையினைச் சேர்ந்தான். ஆண்டகை: அன்மொழித் தொகை. கில் : ஆற்றலுணர்த்தும் இடைநிலை; பொதுவே செய்தலென்னும் பொருட்டாயும் வரும். ஈண்டுதல் - அணுகுதல். இம்மென, விரைவுக் குறிப்பு. அடைபட்ட பங்கு எல்லாம் என மாறுக. (49) எடுத்ததிண் கரைக ளெல்லா மிறைமக னுள்ளத் தோகை மடுத்தன னோக்கிச் செல்வான் வந்திபங் கடைப்பா ரின்றி அடுத்தநோன் கரையுங் கல்லி யழித்தெழு வெள்ள நோக்கிக் கடுத்துநின் றெங்குற் றானிக் கரைசுமந் தடைப்பா னென்றான். (இ-ள்.) எடுத்ததிண் கரைகள் எல்லாம் - உயர்த்தி அடைக்கப்பட்ட திண்ணிய கரைகளனைத்தையும், நோக்கி உள்ளத்து ஓகைமடுத்தனன் செல்வான் இறைமகன் - கண்டு மனமகிழ்ச்சி யுற்றுச் செல்பவனாகிய மன்னன், வந்திபங்கு அடைப்பார் இன்றி - வந்தியின் பங்கு அடைப்பவ ரில்லாமையால், அடுத்த நோன் கரையும்கல்லி அழித்து எழுவெள்ளம் நோக்கி - அதனை அடுத்துள்ள வலிய கரையினையும் கல்லி அழித்து மேன்மே லெழுகின்ற வெள்ளத்தைப் பார்த்து, கடுத்து நின்று - சினந்து நின்று, இக்கரை சுமந்து அடைப்பான் எங்குற்றான் என்றான் - இந்தக் கரையினைச் சுமத்தி அடைப்பவன் எங்குச் சென்றானென்று வினாவினான். நோக்கி ஓகை மடுத்தனன் செல்வானாகிய இறைமகன் என்க. இன்றி - இல்லாமையால். நோன்மை - திண்மை. (50) வள்ளறன் கோபங் கண்ட மாறுகோற் கைய ரஞ்சித் தள்ளருஞ் சினத்த ராகித் தடக்கைதொட் டீர்த்துப் பற்றி உள்ளொடு புறங்கீழ் மேலா யுயிர்தொறு மொளித்து நின்ற கள்வனை யிவன்றான் வந்தி யாளெனக் காட்டி நின்றார். (இ-ள்.) வள்ளல்தன் கோபம் கண்ட மாறுகோல் கையர் - பாண்டியன் சினத்தைக் கண்ட பிரப்பங்கோலைக் கையிலேந்திய ஏவலாளர், அஞ்சி - பயந்து, தள் அரும் சினத்தராகி - நீக்குதற்கரிய சினமுடையவராய், உள்ளொடு புறம் கீழ் மேலாய் - அகமும் புறமும் கீழும் மேலுமாகி, உயிர்தொறும் ஒளித்து நின்ற கள்வனை - உயிர்கடோறும் கரந்து நின்ற கள்வனாகிய இறைவனை, தடக்கை தொட்டுப் பற்றி ஈர்த்து - பெரிய கையைத் தொட்டுப்பிடித்து இழுத்து, இவன்றான் வந்தி ஆள் எனக் காட்டி நின்றார் - இவன்றான் வந்தி ஆள் என்று காண்பித்து நின்றனர். வள்ளல் அரசன் என்னுந் துணையாய் நின்றது. அரசன் சினத்திற்கு அஞ்சி அடிகள்மேற் சினமுடையராயினர். கையால் தொட்டு ஈர்த்து என்றலுமாம். “ நள்ளுங் கீழுளு மேலுளும் யாவுளும் எள்ளு மெண்ணெயும் போனின்ற வெந்தையே” “ மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க” “ பண்டே பயிறொறு மின்றே பயிறொறும் ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்” என்னும் திருவாசகப் பகுதிகள் இங்கே சிந்திக்கற் பாலன. (51) கண்டனன் கனன்று வேந்தன் கையிற்பொற் பிரம்பு வாங்கி அண்டமு மளவி லாத வுயிர்களு மாக மாகக் கொண்டவன் முதுகில் வீசிப் புடைத்தனன் கூடை யோடு மண்டனை யுடைப்பிற் கொட்டி மறைந்தன னிறைந்த சோதி. (இ-ள்.) வேந்தன் கண்டனன் கனன்று - அதிமருத்தன பாண்டியன் கண்டு சினந்து, கையில் பொன் பிரம்பு வாங்கி - கையில் பிரம்பினை வாங்கி, அண்டமும்அளவு இலாத உயிர்களும் ஆகமாகக் கொண்டவன்- அண்டங்களையும் அளவிறந்த உயிர்களையும் தனது திருமேனியாகக் கொண்ட இறைவனது, முதுகில் வீசிப் புடைத்தனன் - முதுகின்கண் வீசி அடித்தனன்; நிறைந்த சோதி - எங்கும் நிறைந்த ஒளிவடிவின னாகிய அவ்விறைவன், கூடையோடு மண்தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் - கூடையுடன் மண்ணை உடைப்பிற் போட்டு விட்டு மறைந்தருளினன். அளவிலாத அண்டமும் அளவிலாத உயிர்களும் என்க. இறைவன் உலகுயிர்கள் எல்லாவற்றுள்ளும் நிறைந்து அவற்றை இயக்குவித்தலின் அவையெல்லாம் இறைவனுக்கு ஆகமாகும்; அங்ஙனம்அவை இறைவற்குத் திருமேனியாதல் பற்றியே எல்லாம் அவனே என நூல்கள் உபசரித்துக் கூறா நிற்கும். (52) எழுசீரடி யாசிரிய விருத்தம் பாண்டியன் முதுகிற் பட்டது செழியன் பன்னிய ருடம்பினிற் பட்ட தாண்டகை யமைச்சர் மேனிமேற் பட்ட தரசிளங் குமரர்மேற் பட்ட தீண்டிய கழற்கால் வீரர்மேற் பட்ட திவுளிமேற் பட்டது பருமம் பூண்டவெங் கரிமேற் பட்டதெவ் வுயிர்க்கும் போதன்மேற் பட்டவத் தழும்பு. (இ-ள்.) எவ்வுயிர்க்கும் போதன்மேல் பட்ட அத் தழும்பு - எவ்வகை உயிர்கட்கும் அறிவுக் கறிவாயுள்ள அவ்விறைவன்மேற்பட்ட அவ்வடித் தழும்பு, பாண்டியன் முதுகில் பட்டது - அரிமருத்தன பாண்டியன் முதுகிற்பட்டது; செழியன் பன்னியர் உடம்பினில் பட்டது - அப்பாண்டியன் மனைவியர்களின் உடல் மேற்பட்டது; ஆண்டகை அமைச்சர் மேனிமேல் பட்டது - அவ்வாண்டகையின் உடம்பின்மேற் பட்டது; அரசு இளம் குமரர்மேற் பட்டது - இளமை வாய்ந்த அரசகுமாரர்கள் மேற்பட்டது; ஈண்டிய கழல் கால்வீரர் மேல் பட்டது - நெருங்கிய வீரகண்டையை யணிந்த காலை யுடைய வீரர்கள் மேற் பட்டது; இவுளி மேல் பட்டது - குதிரைகளின் மேற்பட்டது; பருமம் பூண்ட வெங்கரி மேல் பட்டது - கவசமணிந்த வெவ்விய யானைகளின் மேற்பட்டது. (53) பரிதியு மதியும் பாம்புமைங் கோளும் பன்னிறம் படைத்தநாண் மீனும் இருநிலம் புனல்கா லெரிகடுங் கனல்வா னென்னு மைம் பூதமுங் காருஞ் சுருதியு மாறு சமயவா னவருஞ் சுரர்களு முனிவருந் தொண்டடின் மருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரைநா யகனடித் தழும்பு. (இ-ள்.) மதுரை நாயகன் அடித்தழும்பு - மதுரேசனாகிய சோமசுந்தரக் கடவுளின் மேற்பட்ட அடித்தழும்பினை, பரிதியும் மதியும் பாம்பும் ஐங்கோளும் - சூரியனும் சந்திரனும் இராகு கேதுக்களாகிய பாம்புகளும் இவை ஒழிந்த செவ்வாய் முதலிய ஐந்து கோள்களும், பல்நிறம் படைத்த நாள் மீனும் - பல நிறங்களைப் பெற்ற நட்சத்திரங்களும், இருநிலம் புனல் கால் எரி கடுங்கனல் வான் என்னும் ஐம்பூதமும் - பெரிய நிலனும் நீரும் காற்றும் எரிகின்ற கடிய தீயும் வானுமாகிய ஐந்து பூதங்களும், காரும் - முகிலும், சுருதியும் - வேதங்களும், ஆறுசமய வானவரும் - அறுவகைச் சமயங்கட்கு முதல்வராய தேவர்களும், சுரர்களும் - ஏனை வானோர்களும், முனிவு அரும் தொண்டின் மருவிய முனிவர் கணங்களும் பட்ட - வெறுப்பில்லாத திருத்தொண்டில் மருவிய முனிவர் கூட்டங்களும் பெற்றன. ஒன்பான் கோட்களில் பரிதியும் மததியும் பாம்புகளும் வேறு கூறப்பட்டமையின் ‘ஐங்கோள்’ என்றார். ஐங்கோள் - செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி. ஆறு சமய வானவர் - அறுவகைச் சமயங்கட்கும் முத்தித்தானமாயுள்ள தேவர்கள்; “ அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும் வீடுபே றாய்நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையுங் கிழவோன்” எனத் திருவாசகம் கூறுவதுங் காண்க. அஃறிணையும் உயர்திணையும் விரவி பட்ட என அஃறிணை முடிபேற்றன. பட்டது என்பதில் துவ்வீறு தொக்கதாகக் கொண்டு பரிதி முதலியவற்றிற்கு ஏழனுருபு விரித்து முடித்தலுமாம். (54) வானவர் மனிதர் நரகர்புள் விலங்கு மாசுணஞ் சிதலெறும் பாதி ஆனபல் சரமு மலைமரங் கொடிபுல் லாதியா மசரமும் பட்ட ஊனடை கருவும் பட்டன தழும்போ டுதித்தன வுயிரிலோ வியமுந் தானடி பட்ட சராசர சடங்க டமக்குயி ராயினோன் றழும்பு. (இ-ள்.) சரஅரச சடங்கள் தமக்கு உயிர் ஆயினோன் தழும்பு -இயங்குவனவும் நிற்பனவுமாகிய சேதனங்களுக்கும் அசேதனங்களுக்கும் உயிராயுள்ள இறைவன் அடித்தழும்பினை, வானவர் மனிதர் நரகர் - தேவரும் மக்களும் நரகரும், புள் விலங்கு மாசுணம் சிதல் எறும்பு ஆதி ஆன - பறவையும் விலங்கும் பாம்பும் செல்லும் எறும்பும் முதலாகிய, பல்சரமும் - இயங்கு திணை பலவும், மலைமரம் கொடி புல் ஆதியாம் அசரமும் பட்ட - மலையும் மரமும் கொடியும் புல்லும் முதலாகிய நிலைத்திணைகளும் பட்டன; ஊன் அடைகருவும் பட்டன தழும்போடு உதித்தன - கருப்பையுட்டங்கிய கருக்களும் அடிபட்டுத் தழும்புடன் தோன்றின; உயிர் இல் ஓவியமும் தான் அடிபட்ட - உயிரில்லாத சித்திரங்களும் அடிபட்டன. சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சமெல்லாம் இறைவன் வியாபித்து அவற்றிற்கு உயிராய் நிற்றலின் அவனடித் தழும்பை வானவர் முதல் புல் இறுதியாகவுள்ள உயிர்ப்போருள்களும், மலை ஓவியம் முதலிய உயிரில் பொருள்களும் பட்டன. உயிராயினோன் தழும்பு சரமும் அசரமும் பட்ட, கருவும் தழும்போடுதித்தன, ஓவியமும் அடிபட்ட என முடிக்க. பட்ட, இரண்டும் முற்று. பட்டன, முற்றெச்சம். தான் : அசை. (55) துண்ணென மாயோன் விழித்தனன் கமலச் சோதியும் யாதென வியந்தான் விண்ணவர் பெருமான் வெருவினான் வானோர் வேறுளார் மெய்பனிப் படைந்தார் வண்ணயா ழியக்கர் சித்தர்சா ரணர்தம் வடுப்படா வுடம்பினிற் பட்ட புண்ணையா தென்று தத்தமிற் காட்டி மயங்கினார் புகுந்தவா றறியார். (இ-ள்.) மாயோன் துண்ணென விழித்தான் - திருமால் திடுக்கிட்டு விழித்தனன்; கமலச்சோதியும் யாது என வியந்தான் - தாமரை மலரிலிருக்கும் பிரமனும் இது யாதென்று வியந்தனன்; விண்ணவர் பெருமான் வெருவினான் - தேவேந்திரன் பயந்தான்; வானோர் வேறு உளார் மெய்பனிப்பு அடைந்தார் - மற்றைத் தேவர்களும் உடல் நடுங்கினார்; வண்ணம் யாழ் இயக்கர் சித்தர் சாரணர் - இலக்கணம் அமைந்த யாழினையுடைய இயக்கர்களும் சித்தர்களும் சாரணர்களும், தம் வடுப்படா உடம்பினில் பட்ட புண்ணை - தங்கள் தழும்பு படாத உடல்களிற் பட்ட புண்ணினை, யாது என்று தத்தமில் காட்டி - இது யாது என்று தங்கள் தங்களுள்ளே காண்பித்து, புகுந்தவாறு அறியார் மயங்கினார் - நிகழ்ந்த தன்மையை அறியாதவர்களாய் மயங்கினார்கள். துண்ணென : குறிப்பு. மாயோன் துயில்புரிவோனாகலின் விழித்தனன் என்றார். வேறுளாராகிய வானோர் என்க. வண்ணம் - இலக்கணம்; பெருவண்ணம் முதலிய பாடற் றொழிலமைந்த என்றுமாம். இதனால் மாயோன் முதலிய கடவுளர்க்கும், கணங் கட்கும் இறைவன் உயிராதல் பெறப்பட்டது. (59) ஏகநா யகனெவ் வுயிர்களுந் தானே யென்பது மன்பினுக் கெளியன் ஆகிய திறனுங் காட்டுவா னடிபட் டங்கொரு கூடைமண் கொட்டி வேகநீர் சுருங்கக் கரையினை யுயர்த்தி மிகுத்துடன் வேலைநீத் தொளித்துப் போகிய வாறு கண்டுகோற் கையர் போய்நரை யாட்டியைத் தொடர்ந்தார். (இ-ள்.) ஏகநாயகன் - தனி முதல்வனாகிய இறைவன், எவ்வுயிர் களும் தானே என்பதும் - எல்லா வுயிர்களும் தானே என்பதனையும், அன்பினுக்கு எளியன் ஆகிய திறனும் - தான் அன்பிற்கு எளியனாகிய தன்மையையும், காட்டுவான் - அனைவருக்குங் காட்டும் பொருட்டு, அடிபட்டு - பிரம்படி பட்டு, அங்கு ஒரு கூடை மண் கொட்டி - அவ்வுடைப்பில் ஒரு கூடை மண்ணைக் கொட்டி, நீர் வேகம் சுருங்கக் கரையினை மிகுத்து உயர்த்தி - நீரின் விரைவு குறையுமாறு கரையை மிகுத்து உயர்த்தி, உடன் வேலை நீத்து ஒளித்துப் போகியவாறு கண்டு - உடனே வேலை செய்தலை நீத்து மறைந்துபோன தன்மையைக் கண்டு, கோல் கையர் போய் நரையாட்டியைத் தொடர்ந்தார் - கோலை ஏந்திய கையினையுடைய ஏவல் கொள்ளும் வினையாளர் சென்று முதியவளாகிய வந்தியைத் தொடர்ந்தனர். எல்லா வுலகங்களையும் படைத்துக் காத்தழிக்கும் பரமன் ஒரு கூலியாளாய் வந்து மண் சுமந்து அடியும் பட்டமையால் அன்பினுக்கு எளியன் என்பது காட்டினார்; அவ்வடி எல்லா உயிர்களின் மீதும் பட்டமையால் எவ்வுயிர்களும் தானே என்பது காட்டினார் என்க. எவ்வுயிர்க்கும் உயிரானவன் தானே என்பார் எவ்வுயிர்களுந் தானே, என்றார். காட்டுவான் : வினையெச்சம். (57) வன்புதாழ் மனத்தோர் வலிசெய வின்ன மன்னனான் மறுக்கமுண் டேயோ முன்புபோ கியவா ளென்செய்தா னென்னாய் முடியுமோ வினியெனத் திரங்கி எண்புபோல் வெளுத்த குழலினாள் கூட லிறைவனை நோக்கிநின் றிரங்க அன்புதே னாக வருத்திய சிற்றூ ணமுதுசெய் தருளினா ரருளால். (இ-ள்.) வன்புதாழ் மனத்தோர் வலிசெய - வன்மை தங்கிய மனத்தினையுடைய ஒறுப்பாளர் துன்பஞ் செய்ய, திரங்கி என்புபோல் வெளுத்த குழலினாள் - திரைந்து என்பைப் போல் வெளுத்த கூந்தலையுடைய அவ்வந்தி, இன்னம் மன்னனால் மறுக்கம் உண்டேயோ - இன்னமும் பாண்டியனால் துன்பமுண்டோ, முன்பு போகிய ஆள் என் செய்தான் - முன்னர் எனக்காக வேலை செய்யப் போன ஆள் என்ன செய்தானோ, இனி என்னாய் முடியுமோ என - இனி யாதாய் முடியுமோ வென்று கருதி, கூடல் இறைவனை நோக்கி நின்று இரங்க - நான்மாடக் கூடலின் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை நோக்கி நின்று வருந்த, அன்புதேனாக அருத்திய சிற்றூண் - அன்பையே தேனாக அளைந்து ஊட்டிய பிட்டினை, அமுது செய்தருளினார் அருளால் - அமுது செய்தருளிய அவ்விறைவரது திருவருளினால். வன்பு - வன்கண்மை. தாழ்த்தல் - தங்குதல். தோள் திரங்கிக் குழல் வெளுத்தவள் என்க.குளகம். (58) கண்ணுத னந்தி கணத்தவர் விசும்பிற் கதிர்விடு திப்பிய விமானம் மணணிடை யிழிச்சி யன்னைவா வென்று வல்லைவைத் தமரர் பூ மழையும் பண்ணிறை கீத வோதையும்வேதப் பனுவலும் துந்துபி யைந்தும் விண்ணிடை நிமிரச் சிவனரு ளடைந்தோர் மேவிய சிவபுரத் துய்த்தார். (இ-ள்.) கண்ணுதல் நந்தி கணத்தவர் - சிவகணத்தவர், கதிர் விடு திப்பிய விமானம் - ஒளி விசும் சிறந்த விமானத்தினை, விசும்பின் மண்ணிடை இழிச்சி - வானினின்றும் புவியின்கண் இறக்கி, அன்னைவா என்று வல்லை வைத்து - தாயே வருகவென்று விரைந்து அதில் ஏற்றி, அமரர் பூ மழையும் - தேவர்களின் மலர் மழையும், பண் நிறை கீத ஓதையும் - பண்ணிறைந்த இசையின் ஒலியும், வேதப்பனுவலும் - வேதமந்திரங்களின் ஒலியும், துந்துபி ஐந்தும் - பஞ்ச தூரியங்களின் முழக்கமும், விண்ணிடை நிமிர - வானின்கண் ஓங்க, சிவன் அருள் அடைந்தோர் மேவிய சிவபுரத்து உய்த்தார் - சிவபெருமான் திருவருளைப் பெற்றோர்கள் சென்றடைந்த சிவலோகத்தின்கண் செலுத்தினர். கண்ணுதலின் நந்திகணத்தவர். திப்பியம் - ஒளி, தெய்வத் தன்மை. விசும்பின் விமானம் எனக் கூட்டி வானவூர்தி என்றுரைத் தலும் பொருந்தும். அன்னை, அண்மைவிளி. (59) மன்றுடை யானோர் கூடைமண் கொட்டி மறைந்தது மடைகரை நீண்ட குன்றென வுயர்ந்த தன்மையுந் தம்மேற் கோலடி பட்டது நோக்கி என்றன்மேற் பட்ட தென்றன்மேற் பட்ட திதுவென வதுவென வமைச்சர் நின்றவ ருணத்து நிகழ்ச்சியும் பிறர்பா னிகழ்ச்சியு நோக்கியந் நிருபன். (இ-ள்.) மன்று உடையான் ஓர் கூடைமண் கொட்டி மறைந்ததும் - வெள்ளியம்பலத்தையுடைய சோமசுந்தரக் கடவுள் ஒரு கூடை மண்ணைக் கொட்டி மறைந்தருளியதையும், அடை கரை நீண்ட குன்றென உயர்ந்த தன்மையும் - அடைக்கலுற்ற கரையானது நீண்ட மலைபோல் உயர்ந்த தன்மையும், தம்மேல் கோல் அடிபட்டது நோக்கி - தங்கள்மேல் பிரம்படி பட்டதைப் பார்த்து, அமைச்சர் நின்றவர் - அங்கு நின்ற அமைச்சர்கள், இது என்மேல் பட்டதுஎன அது என்மேல் பட்டது என - இத்தழும்பு என்மேற்பட்டது அத்தழும்பு என்மேற்பட்டது என்று சுட்டிக் காட்டி, உணர்த்தும் நிகழ்ச்சியும் - பிறர்களிடத்து நிகழும் நிகழ்ச்சியையும், அந்நிருபன் நோக்கி - அவ்வரிமருத்தன பாண்டியன் கண்டு. மன்றுடையான் என்றது கவியின் கருத்து. அடை என்பது கரைக்கு அடையாக வந்திருப்பினும் கரை அடைபட்டதும் என்பது கருத்தாகக் கொள்க. அரசன் தம்மீது கோலடி பட்டதும் நோக்கி நின்றவருணர்த்து நிகழ்ச்சியும் பிறர்பால் நிகழ்ச்சியும் நோக்கி என்றுரைத்தலுமாம். தன் இரண்டும் அசை. (60) அறுசீரடியாசிரிய விருத்தம் உள்ளத்தா சங்கை பூண்டா னாகமண் ணுடைப்பிற் கொட்டிக் கள்ளத்தா ராகிப் போனார் ககனத்தா ராகிச் சேனை வெள்ளத்தார் பிறருங் கேட்ப மீனவற் குவகை வெள்ளங் கொள்ளத்தா மழைத்தா காய வாணியாற் கூற லுற்றார். (இ-ள்.) உள்ளத்து ஆசங்கை பூண்டானாக - மனத்தின்கண் ஐயுறவு கொண்டானாக; மண் உடைப்பில் கொட்டி - மண்ணை உடைப்பினிற் போட்டு, கள்ளத்தாராகிப் போனார் - மறைந்து சென்றருளிய அவ்விறைவர், ககனத்தாராகி - வானிடத்தாராகி, சேனை வெள்ளத்தார் பிறரும் கேட்ப - சேனைப் பெருக்கினரும் பிறரும் கேட்குமாறு, மீனவற்கு உவகை வெள்ளம்கொள்ள அழைத்து - பாண்டியனுக்கு மகிழ்ச்சிப் பெருக்கு உண்டாக அவனை விளித்து, ஆகாயவாணியால் கூறலுற்றார் - அசரீரியாற் சொல்லத் தொடங்கினார். மண்கொட்டி மறைந்ததும், ஒரு கூடை மண்ணால் கரை அடைபட்டு மலைபோல் உயர்ந்ததும், யாவர் மேலும் பிரம்படி பட்டதும் ஆசங்கைக்குக் காரணமாயின. பூண்டான் என்னும் முற்றினை ஆக என்னும் இடைச்சொல் அடுத்து எச்சமாக்கிற்று. போனார் : வினையாலணையும் பெயர். வாணி - வாக்கு. (61) மறத்தாறு கடந்த செங்கோல் வழுதிநின் பொருள்க ளெல்லாம் அறத்தாற்றி னீட்டப் பட்ட வனையவை புனித மான திறத்தாலே நமக்கு நம்மைச் சேர்ந்தவர் தமக்கு மார்வம் உறத்தாவில் வாத வூர னுதவினா னாதலாலே. (இ-ள்.) மறத்து ஆறு கடந்த செங்கோல் வழுதி - மறநெறியைக் கடந்த செங்கோலையுடைய பாண்டியனே, நின் பொருள்கள் எல்லாம் - நின்னுடைய பொருள்களனைத்தும், அறத்து ஆற்றில் ஈட்டப்பட்ட - அறநெறியிலே தேடப்பட்டன; அனையவை புனிதமான திறத்தாலே - அப்பொருள்கள் தூயவாயுள்ள தன்மையினாலே, நமக்கும் நம்மைச் சேர்ந்தவர் தமக்கும் - நமக்கும் நம்மையடைந்த அடியார்கட்கும், ஆர்வம் உற - அன்பு பொருந்த, தாவு இல் வாதவூரன் உதவினான் - குற்றமில்லாத வாதவூரன் கொடுத்தனன்; ஆதலால் - அதனால். அறநெறியால் ஈட்டப்பட்டன. அங்ஙனம் ஈட்டப்பட்டமையின் அவை புனிதமான திறத்தால் என்க. ஆதலால் - அங்ஙனம் உதவினமை காரணமாக. (62) அனையனை மறுக்கஞ் செய்தா யரும்பிணப் புலவுத் தீவாய் வனநரித் திரளை யீட்டி வாம்பரி யாகிக்கித் தந்தேங் கனையிருட் கங்குற் போதிற் கழிந்தன பின்னுந் தண்ட வினையர்பால் விடுத்துத் துன்பம் விளைத்தனை யதுபொ றாதேம். (இ-ள்.) அனையனை மறுக்கம் செய்தாய் - அவ்வாதவூரனைத் துன்பஞ் செய்தனை; அரும்பிணப் புலவுத்தீவாய் வனநரித்திரளை ஈட்டி - அணுகுதற்கரிய பிணங்களின் புலாலையுடைய கொடிய வாயினையுடைய வனத்திலுள்ள நரிகளைத் தொகுத்து, வாம்பரி ஆக்கித்தந்தேம் - தாவுகின்ற குதிரைகளாக்கிக் கொடுத்தேம்; கனை இருள் கங்குற்போதில் கழிந்தன - செறிந்த இருளையுடைய இராப்பொழுதில் (அவையாவும் நரிகளாகி) ஓடின; பின்னும் - மீளவும், தண்ட வினையர்பால் விடுத்துத் துன்பம் விளைத்தனை - ஒறுப்பாளரிடம் விடுத்து அவரால் துன்பம் விளைவித்தனை; அது பொறாதேம் - அதனைப் பொறுக்கமாட்டேமாகி. மறுக்கஞ் செய்தாய் ஆதலின் ஆக்கித் தந்தேம் என்க. அவை கழிந்தன எனச் சுட்டுப்பெயர் வருவித்துரைக்க. (63) வருபுனல் பெருகப் பார்த்தேம் வந்திகைப் பிட்டு வாங்கிப் பருகிவந் தாளாய் மாறு பட்டன மண்போ கட்டுப் பொருகரை யுயரச் செய்து போகியவ் வன்னை போல்வாள் பெருகிய விடும்பை தீர்த்தெம் பேருல கடையச் செய்தேம். (இ-ள்.) வருபுனல் பெருகப் பார்த்தேம் - வையையாற்றில் வரும் நீர் பெருகுமாறு செய்தேம்; வந்திகைப் பிட்டுவாங்கிப் பருகி வந்து ஆளாய் - வந்தியின் கையிற் பிட்டினை வாங்கி அருந்திக் கொண்டே வந்து கூலியாளாகி, மாறுபட்டனம் - பிரம்படியும் பட்டேம்; மண் போகட்டுப் பொருகரை உயரச் செய்து - ஒரு கூடை மண்ணைப் போட்டு அலைகள் மோதப்பெறும் கரையினை உயருமாறு செய்து, போகி - மறைந்து சென்று, அவ்வன்னை போல்வாள் - அத்தாய் போன்றவளின், பெருகிய இடும்பை தீர்த்து - மிக்க துன்பத்தினை நீக்கி, எம்பேர் உலகு அடையச் செய்தேம் - எமது பெரிய உலகினை அடையுமாறு செய்தேம். மாறு - பிரம்படி : ஆகுபெயர். போகட்டு என்பது போட்டு என மருவி வழங்குகிறது. இடும்பை - பிறவித்துன்பம். (64) இத்தனை யெல்லாஞ் செய்த திவன்பொருட் டிந்த வேத வித்தகன் றன்மை யொன்று மறிந்திலை வேட்கை யெம்பால் வைத்துனக் கிம்மை யோடு மறுமையுந் தேடித் தந்த உத்தமன் றொடைசந் தாதிப் புறப்பற்று மொழிந்த நீரான். (இ-ள்.) இத்தனை எல்லாம் செய்தது இவன் பொருட்டு - இவ்வளவெல்லாம் செய்தது இவ்வாதவூரன் பொருட்டே; இந்த வேத வித்தகன் தன்மை - இந்த மறை நூலுணர்ந்த சதுரப்பாடுடையவன் தன்மையை, ஒன்றும் அறிந்திலை - சிறிதும் நீ அறிந்தாயில்லை, எம்பால் வேட்கை வைத்து - இவன் எம்மிடம் விருப்பம் வைத்ததால், உனக்கு இம்மையோடு மறுமையும் தேடித்தந்த உத்தமன் - உனக்கு இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் தேடிக்கொடுத்த உத்தமன்; தொடை சந்து ஆதி புறப்பற்றும் ஒழிந்த நீரான் - மாலையும் சந்தனமும் முதலாகிய புறப்பற்றினையும் (அகப்பற்றினையும்) துறந்த தன்மையையுடையவன். செய்தது : தொழிற்பெயர். புறப்பற்றும் என்னும் உம்மை எச்சப் பொருட்டு. (65) நிறையுடை யிவனை யிச்சை வழியினா னிறுத்தி யான்ற மறைவழி நின்று நீதி மன்னவர்க் களந்த வாழ்நாள் குறைபடா தானாச் செல்வ வாரியுட் குளித்து வாழ்கென் றிறையவன் மொழிந்த மாற்ற மிருசெவி நிரம்பத்1 தென்னன். (இ-ள்.) நிறைஉடை இவனை - மனத்தை ஒருவழி நிறுத்தும் இவ்வாதவூரனை, இச்சை வழியினால் நிறுத்தி - அவன் விருப்பத்தின்படியே செலுத்தி, ஆன்ற மறைவழி நின்று - நீ பெருமை நிறைந்த மறையின் வழியே நின்று, நீதி மன்னவர்க்கு அளந்த வாழ்நாள் - நீதியோடு பொருந்திய வேந்தர்களுக்கு வரையறுத்த ஆயுள் நாள், குறைபடாது - குறைவு படாமல், ஆனாச்செல்வ வாரியுள் குளித்து வாழ்க என்று - நீங்காத செல்வப்பெருக்கிலே திளைத்து வாழக் கடவை என்று, இறையவன் மொழிந்த மாற்றம் - இறைவன் கூறியருளிய மொழி, இருசெவி நிரம்ப - இரண்டு செவிகளிலும் நிரம்ப, தென்னன் - பாண்டியன். வாழ்கென்று : அகரம் தொகுத்தல். கூறலுற்ற இறையவன் மொழிந்த மாற்றம் என்க. (66) அச்சமுற் றுவகை யீர்ப்ப வதிசய வெள்ளத் தாழ்ந்து பொச்சமி லன்ப ரெங்குற் றாரெனப் புகுந்து தேடி நச்சர வசைத்த கூட னாயகன் கோயி னண்ணி இச்சையி2 லிருக்கின் றாரைக் கண்டுபோ யிறைஞ்சி வீழ்ந்தான். (இ-ள்.) அச்சம் உற்று உவகை யீர்ப்ப - அஞ்சுதலைப் பொருந்தி மகிழ்ச்சியானது இழுக்க, அதிசய வெள்ளத்து ஆழ்ந்து - வியப்பாகிய வெள்ளத்துள் அழுந்தி, பொச்சம் இல் அன்பர் எங்கு உற்றார் என - பொய்யில்லாத (மெய்) அன்பினையுடைய அடிகள் எங்குச் சென்றாரென்று, புகுந்து தேடிப்போய் - பலவிடங்களிலும் தானே புகுந்து தேடிச் சென்று, நச்சு அரவு அசைத்த கூடல் நாயகன் கோயில் நண்ணி - நஞ்சினையுடைய பாம்பினைக் கச்சாகக் கட்டிய நான்மாடக் கூடலில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலை அடைந்து, இச்சையில் இருக்கின்றாரைக்கண்டு - தமது விருப்பின்படியே சிவயோகத்திலிருக்கும் வாதவூரடிகளைப் பார்த்து, இறைஞ்சி வீழ்ந்தான் - வீழ்ந்து வணங்கினான். அச்சமும், உவகையும், அதிசயமும் ஒன்றினொன்று மிக என்றபடி. நஞ்சு நச்சு என வலித்தது. நண்ணி இருக்கின்றாரை எனவும், நண்ணிக் கண்டு எனவும் இயையும். இச்சையில் - விரும்பியவாறு. (67) தொல்லைநீ ருலக மாண்டு சுடுதுயர் நரகத் தாழ வல்லவென் னறிவுக் கேற்ற வண்ணமே செய்தே னீரென் எல்லைதீர் தவப்பே றாய்வந் திகபர வேது வாகி அல்லல்வெம் பிறவி நோய்க்கு மருமருந் தானீ ரையா. (இ-ள்.) ஐயா - ஐயனே, தொல்லை நீர் உலகம் ஆண்டு - பழைய கடல் சூழ்ந்த இந்நிலவுலகினை ஆண்டு, சுடுதுயர் நரகத்து ஆழவல்ல - வருத்துந் துன்பத்தையுடைய நிரயத்தின்கண் அழுந்து தற்கு வல்ல, என் அறிவுக்கு ஏற்றவண்ணமே செய்தேன் - எனது புல்லறிவுக்குப் பொருந்தியபடியே உமக்குத் தீங்கு செய்தேன்; நீர் என் எல்லை தீர்தவப் பேறுஆய் - நீவிர் எனது அளவிறந்த தவப்பயனாகி, வந்து - அமைச்சராக வந்து, இகபர ஏதுவாகி - இம்மைப் பயனுக்கும் மறுமைப் பயனுக்கும் காரணமாய், அல்லல் வெம்பிறவி நோய்க்கும் - துன்பமயமாகிய கொடிய பிறவிப் பிணிக்கும், அருமருந்து ஆனீர் - அரிய மருந்து ஆகாநின்றீர். உலக மாளுதல் நரகத் துன்பத்திற்கு ஏதுவாமென அதனை வெறுத்துக் கூறியவாறு. நோய்க்கு அருமருந்தும் ஆனீர் என உம்மை பிரித்துக் கூட்டுதல் சிறப்பு. ஆனீர் ஐயா : பன்மை யொருமை மயக்கம். (68) செறுத்துநா னும்மை யெண்ணா திழைத்தவித் தீங்கு தன்னைப் பொறுத்துநீர் முன்போ னுங்கள் புவியெலாங் காவல் பூண்டு மறுத்துடைத் தாள் வ தாகென் றிரந்தனன் மண்ணி லாசை வெறுத்தவர் நகையுட் டோன்ற வேந்தனை நோக்கிச் சொல்வார். (இ-ள்.) நான் உம்மை எண்ணாது - அடியேன் உமது உயர் வினைச் சிறிதுங் கருதாது, செறுத்து இழைத்த இத்தீங்கு தன்னைப் பொறுத்து - சினந்து செய்த இத்தீமையைப் பொறுத்தருளி, நீர் முன்போல் நுங்கள் புவிஎலாம் காவல் பூண்டு - நீவிர் முன் போலவே நுமது புவி அனைத்தையும் காத்தலை மேற்கொண்டு, மறு துடைத்து ஆள்வது ஆக என்று இரந்தனன் - குற்றத்தைப் போக்கி ஆளக்கடவீராக என்று இரந்து வேண்டினன்; மண்ணில் ஆசை வெறுத்தவர் - மண்ணின்கண் உள்ள விருப்பினை நீக்கிய வாதவூரடிகள், நகை உள்தோன்ற - உள்ளே நகை தோன்ற, வேந்தனை நோக்கிச் சொல்வார் - அரசனை நோக்கிச் சொல்வாராயினர். நும்மை யெனப் பிரித்தலுமாம். இறைவனது திருவருளுக்குரியாரே புவி முழுதுக்கும் உரியராவர் என்னுங் கருத்தால் நுங்கள் புவியெலாங் காவல் பூண்டு என அரசன் கூறினன். ஆள்வதாக - ஆள்க. ஆள்வது என்னுந் தொழிற்பெயருடன் ஆக என்பது சேர்ந்து வியங்கோளாயிற்று. ஆகென்று, அகரந் தொகுத்தல். மண்ணிலாசை வெறுத்தவர் என்பது அவர் புவியாளார் என்பது தோன்ற நின்றமையின் கருத்துடன் கூடிய விசேடியமாகும். (69) பாய்திரை புரளு முந்நீர்ப் படுகட லுலகுக் கெல்லாம் ஆயிரஞ் செங்க ணான்போ லரசுவீற் றிருப்பீ1 ருங்கள் நாயக னருளிச் செய்த வண்ணமே நயந்து செய்வீர் தூயவ ரன்றோ நுங்கள் சூழல்சேர்ந் தொழுக வல்லார். (இ-ள்.) பாய் திரைபுரளும் முந்நீர்படு கடல் உலகுக்கு எல்லாம் - பரந்த அலைகள் புரளுகின்ற மூன்று நீர்களையுடைய ஆழமாகிய கடல்சூழ்ந்த உலகமனைத்திற்கும், ஆயிரம் செங்கணான்போல் அரசு வீற்றிருப்பீர் - சிவந்த ஆயிரங் கண்களையுடைய இந்திரன்போல் தனியரசாக வீற்றிருப்பீர்; உங்கள் நாயகன் அருளிச் செய்த வண்ணமே - உங்கள் இறைவனாகிய சோமசுந்தரக் கடவுள் கட்டளையிட்டருளிய படியே, நயந்து செய்வீர் - விரும்பிச் செய்வீர்; நுங்கள் சூழல் சேர்ந்து ஒழுகவல்லார் - உங்கள் இடத்தைச் சார்ந்து நடக்க வல்லவர், தூயவர் அன்றோ - தூய்மையுடையாரல்லவா? படுகடல் - ஒலிக்குங் கடலுமாம். உலகுக் கெல்லாம் அரசாக வீற்றிருப்பீர் என்க. சோமசுந்தரக் கடவுள் தென்னர் குலமுழுதாளும் பெருமானாயும் தென்னவனாயும் இருத்தலின் உங்கள் நாயகன் என்றார்; “ பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்” “ பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே” “ பரவிய வன்பரை யென்புருக் கும்பரம் பாண்டியனார்” என்றிங்ஙனம் இறைவனைப் பாண்டி வேந்தாகவே அடிகள் அருளிச் செய்தலுங் காண்க. (70) உம்மைநா னடுத்த நீரா லுலகியல் வேத நீதி செம்மையா லிரண்டு நன்றா த் தெளிந்தது தெளிந்த நீரான் மெய்ம்மையாஞ் சித்த சுத்தி விளைந்தது விளைந்த நீராற் பொய்ம்மைவா னவரி னீந்திப் போந்தது சிவன்பாற் பத்தி. (இ-ள்.) உம்மை நான் அடுத்த நீரால் - நான் உம்மை அடைந்த தன்மையால், உலகியல் வேதநீதி இரண்டும் - உலக நடையும் வேதவொழுக்கமுமாகிய இரண்டும், செம்மையால் நன்றாத் தெளிந்தது - முறைப்படி நன்கு தெளியப் பெற்றது; தெளிந்த நீரால் - அங்ஙனம் தெளிந்தபடியால், மெய்ம்மையாம் சித்தசுத்தி விளைந்தது - உண்மையாகிய மனத்தூய்மை உண்டாயது; விளைந்த நீரால் - அங்ஙனம் உண்டான படியால், பொய்ம்மை வானவரின் நீந்தி - அழிகின்ற தேவர்களினின்றுங் கடந்து, சிவன்பால் பத்திபோந்தது - சிவபெருமானிடத்து அன்பு விளைந்தது. லெளகிகம் வைதிகம் இரண்டும் என்க. இரண்டும் தெளிந்தது, பன்மையிலொருமை; இரண்டனையும் உள்ளம் தெளிந்தது என்றுமாம். சில்லாண்டிற் சிதையும் சிலதேவர் சிறு நெறியைக் கடந்து பல்லாண்டென்னும் பதங்கடந்த இறைவன் பால் அன்புவிளைந்த தென்றாரென்க; “ அத்தேவர் தேவ ரவர்தேவ ரென்றிங்ஙன் பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே பத்தேது மில்லாதென் பற்றற நான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ” எனவும், “ அவமாய தேவ ரவகதியி லழுந்தாமே பவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி” எனவும் அடிகள் திருவாசகத்தில் அருளிச் செய்தலுங் காண்க. (71) வந்தவிப் பத்தி யாலே மாயையின் விருத்தி யான பந்தமாம் பவஞ்ச வாழ்க்கை விளைவினுட் பட்ட துன்பம் வெந்தது கருணை யாகி மெய்யுணர் வின்பந் தன்னைத் தந்தது பாதஞ் சூட்டித் தன்மய மாக்கிற் றன்றே. (இ-ள்.) வந்த இப் பத்தியாலே - இங்ஙனம் விளைந்த இவ்வன்பினாலே, மாயையின் விருத்தியான - மாயையின் விருத்தியாகிய, பந்தமாம் பவஞ்ச வாழ்க்கை விளைவினுள் பட்ட துன்பம் வெந்தது - கட்டாகிய உலகவாழ்க்கை நிகழ்ச்சியில் உண்டாகிய துன்பம் வெந்து நீறாகியது; மெய் உணர்வு இன்பம் கருணை ஆகி - சச்சிதானந்தப் பரம்பொருள் அருள்வடி வெடுத்துவந்து, தன்னைத் தந்தது - தன்னை எனக்குக் கொடுத்து, பாதம்சூட்டி - தனது திருவடியை எனது முடியிற் சூட்டி, தன்மயம் ஆக்கிற்று - தன்மய மாக்கியது. விருத்தி - படம் குடிலானாற் போல்வது; ஈண்டுப் பரிணாமமும் கொள்க. பிரபஞ்சம் என்பது பவஞ்சம் என்றாயிற்று. பிரபஞ்சம் மாயேய மலமாதலின் பந்தமாம் பவஞ்சம் என்றார். மெய் உணர்வு இன்பம் - சத்து சித்து ஆனந்தம்; சச்சிதானந்தம். தன்மயமாக்கல் - சிவமாக்கல்; “ சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே” என்னும் திருவாசகமும் காண்க. (72) சச்சிதா னந்த மாமத் தனிப்பர சிவனே தன்ன திச்சையா லகில மெல்லாம் படைத்தளித் தீறு செய்யும் விச்சைவா னவரைத் தந்த மேலவன் பிறவித் துன்பத் தச்சமுற் றடைந்தோர்க் கானா வின்பவீ டளிக்கு மன்னோன். (இ-ள்.) சச்சிதானந்தமாம் அத்தனிப் பரசிவனே - சச்சிதானந்தமாகிய அந்த ஒப்பற்ற பரசிவனே, தன்னது இச்சையால் - தனது இச்சையினாலே, அகிலம் எல்லாம் படைத்து அளித்து ஈறுசெய்யும் விச்சை வானவரை - உலகமனைத்தையும் ஆக்கி அளித்து அழிக்கும் தொழிலையுடைய அயனும் அரியும் அரனுமாகிய தேவர்களை, தந்த மேலவன் - உண்டாக்கிய மேலோன்; பிறவித்துன்பத்து அச்சமுற்று அடைந்தோர்க்கு - பிறவித்துன்பத்திற்கு அஞ்சி வந்தவர்களுக்கு, ஆனா இன்பவீடு அளிக்கும் அன்னோன் - நீங்காத இன்பத்தையுடைய வீடுபேற்றினை அளிக்கின்ற அவ்விறைவன். தன்னது, னகரம் விரித்தல். விச்சை - ஞானம்; ஈண்டுத் தொழில். இச்சையால் தந்த மேலவன் என்க. துன்பத்து என்பதனோடு இரண்டனுருபேனும் ஐந்தனுருபேனும் விரித்துரைத்தலுமாம்; “ அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும் எச்ச மிலவே பொருள்வயி னான” என்பது தொல்காப்பியம். (72) மந்தரங் கயிலை மேருப் பருப்பதம் வார ணாசி இந்தநல் லிடங்க டோறு மிகபர போகம் யார்க்குந் தந்தருள் செய்தெம் போல்வார் தம்மனம் புறம்போ காமற் சிந்தனை திருத்தி ஞானத் திருவுரு வாகி மன்னும். (இ-ள்.) மந்தரம் கயிலை மேரு பருப்பதம் வாரணாசி - மந்தரமலையும் கயிலைமலையும் மேரும'e7çலயும் ஸ்ரீபருப்பதமும், காசியுமாகிய, இந்த நல் இடங்கள் தோறும் - இந்த நல்ல இடங்கடோறும், ஞானத் திருஉருவாகி - அழகிய ஞானவடிவினையுடையனாகி, யார்க்கும் இகபர போகம் தந்தருள்செய்து - அனைவர்க்கும் இம்மை மறுமையின்பங்களை அளித்தருளி, எம்போல்வார் தம்மனம் புறம் போகாமல் - எம்மனோர் மனம் புறத்தே செல்லாமல், சிந்தனை திருத்தி மன்னும் - உள்ளத்தைத் திருத்தி வீற்றிருப்பான். புறம் போகாமல் - விடயங்களிற் செல்லாமல். அன்னோன் மன்னும் என்க. (74) ஒப்பவர் மிக்கோர் வேறற் றொருவனா யெங்குந் தங்கும் அப்பரஞ் சுடரே யிந்த வாலவா யுறையுஞ் சோதி கைப்படு கனிபோன் மேனாட் கண்ணுவ னாதி யோர்க்கு மெய்ப்பொருள் விளங்கித் தோன்றா வேதத்தை விருத்தி செய்தான். (இ-ள்.) ஒப்பவர் மிக்கோர் வேறு அற்று ஒருவனாய் - ஒப்பாரும் மிக்காரும் வேறு யாரும் இன்றித் தனி முதல்வனாய், எங்கும் தங்கும் அப்பரஞ்சுடரே - எங்கும் நிலைபெற்ற அந்தப் பரஞ்சோதியே, இந்த ஆலவாய் உறையும் சோதி - இந்த ஆலவாயின்கண்ணே உறைகின்ற சோமசுந்தரக் கடவுள்; மேல்நாள் - முன்னொரு காலத்தில், கண்ணுவன் ஆதியோர்க்கு - கண்ணுவன் முதலிய முனிவர்களுக்கு, மெய்ப்பொருள் விளங்கித் தோன்றா வேதத்தை - உண்மைப் பொருள் வெளிப்பட்டுத் தோன்றாத வேதத்தை, கைப்படு கனிபோல் - உள்ளங்கை நெல்லிக் கனிபோல் அதன் உண்மைப் பொருள் விளங்குமாறு, விருத்தி செய்தான் - விரித்துக் கூறினான். கைப்படு கனிபோல் விருத்தி செய்தான் என்க; விருத்தி செய்தல் - விரித்துரைத்தல். கண்ணுவனாதியோர்க்கு வேதத்தை விருத்தி செய்தமை வேதத்துக்குப் பொருளருளிச் செய்தபடலத்திற் காண்க. (75) தன்னரு ளான ஞானத் தபனிய மாகுந் தில்லைப் பொன்னக ரிடத்தி லென்னைப் போகெனப் பணித்தா னீரும் அன்னதற் கிசைதி ராகென் றாலவா யடிக டம்மைப் பன்னருந் துதியா லெத்தி விடைகொடு பணிந்து போவார். (இ-ள்.) தன் அருளான ஞானத்தபனியம் ஆகும் - (அவனே) தனது அருள் மயமாகிய ஞான வெளியாம் பொன்னம்பல மென்னும், பொன் தில்லை நகரிடத்தில் என்னைப் போக எனப் பணித்தான் - அழகிய தில்லைப் பதியின்கண் என்னைப் போகக் கடவை என்று கட்டளையிட்டான்; நீரும் அன்னதற்கு இசைதிராக என்று - நீவிரும் அதற்கு உடன்படக் கடவீராக என்று கூறி, ஆலவாய் அடிகள் தம்மை - திருவாலவாயில் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுளை, பன் அரும் துதியால் ஏத்தி - சொல்லுதற்கரிய துதிகளாற் பரவி, பணிந்து விடை கொடு போவார் - வணங்கி விடைபெற்றுக் கொண்டு செல்வாராயினர். போகென, ஆகென்று என்பவற்றில் அகரம் தொகுத்தல். துதி - தோத்திரப்பாடல். (76) தன்றொடக் கறுத்த நாதன் றாட்டொடக் குண்டு போவார் பின்றொடர்ந் தரசன் செல்லப் பெருந்தவர் நின்மி னின்மின் என்றவர் செலவுங் கூப்பி டெல்லைசென் றணிய னாகிச் சென்றடி பணிந்து தென்னன் விடைகொடு திரும்பி னானே. (இ-ள்.) தன் தொடக்கு அறுத்த நாதன் - தனது கட்டினை அறுத்த இறைவனது, தாள் தொடக் குண்டு போவார் பின் - திருவடி நேயத்தாற் கட்டப்பட்டுச் செல்வாராகிய அடிகளின் பின், அரசன் தொடர்ந்து செல்ல - அரசன் தொடர்ந்து போக, பெருந்தவர் - பெரிய தவத்தினையுடைய அடிகள், நின்மின் நின்மின் என்றவர் - நில்லும் நில்லும் என்று கூறினவராய், செலவும் - செல்லா நிற்கவும், கூப்பிடு எல்லை சென்று - கூப்பிடு தூரஞ் சென்று, அணியனாகிச் சென்று அடிபணிந்து - பின் நெருங்பிப் போய் அடிவணங்கி, தென்னன் விடை கொடு திரும்பினான் - பாண்டியன் விடை பெற்றுக் கொண்டு மீண்டனன். தாள் - அடிநேயம்; திருவருளுமாம். (77) துறந்தவர் போக மீண்டு தொன்னக ரடைந்து தென்னன் அறந்தரு பங்கி னாரை யடைந்துதான் பிரம்பு நீட்டப் புறந்தரு கருணை வெள்ளம் பூரிப்பத் தாழ்ந்து நெஞ்ச நிறைந்தது வாய்கொள் ளாம னின்றெதிர் துதிப்ப தானான். (இ-ள்.) துறந்தவர் போக - முற்றத் துறந்தவராகிய அடிகள் செல்ல, தென்னன் மீண்டு தொல்நகர் அடைந்து - பாண்டியன் மீண்டு தனது பழமையான நகரினை அடைந்து, அறம் தரு பங்கினாரை அடைந்து - அறங்களை ஈன்ற உமையாகிய பாகத்தை யுடைய சோமசுந்தரக் கடவுளை அடைந்து, தான் பிரம்பு நீட்டப் புறம்தரு கருணை வெள்ளம் பூரிப்பத் தாழ்ந்து - தான் பிரம்பினை ஓச்ச முதுகு தந்தருளிய அவ்வருள் வெள்ளமாகிய இறைவர் மகிழுமாறு வீழ்ந்து வணங்கி, நெஞ்சம் நிறைந்தது வாய் கொள் ளாமல் - நெஞ்சத்தின்கண் நிறைந்த ஆர்வம் வாய்கொள்ளாமல் வெளி வருதல் போல, எதிர் நின்று துதிப்பது ஆனான் - திருமுன் நின்று வழுத்துவானாயினன். துறந்து அவர் போக என்று பிரித்தலுமாம். அறந்தருபங்கு - உமையாகிய பங்கு. கருணை வெள்ளம் - இறைவன். ஆனாது வாய் விட்டுத் துதித்தலின் வாய் கொள்ளாமல் என்றார். துதிப்பது, தொழிற் பெயர். (78) கொச்சகக் கலிப்பா அடையாளம் படவொருவ னடித்தகொடுஞ் சிலைத்தழும்புந் தொடையாக வொருதொண்டன் றொடுத்தெறிந்த கல்லும்போற் கடையானேன் வெகுண்டடித்த கைப்பிரம்பு முலகமெல்லாம் உடையானே பொறுத்ததோ வுன்னருமைத் திருமேனி. (இ-ள்.) உலகம் எல்லாம் உடையானே - உலக மனைத்தையும் உடைய பெருமானே, உன் அருமைத் திருமேனி - உனது அருமைத் திருமேனியானது, அடையாளம்பட ஒருவன் அடித்த கொடுஞ்சிலைத் தழும்பும் - வடுப்படுமாறு அருச்சுனன் என்னும் ஒருவன் அடித்த வளைந்த வில்லின் தழும்பையும், ஒரு தொண்டன் - ஒரு தொண்டனாகிய சாக்கிய நாயனார், தொடையாகத் தொடுத்து எறிந்த கல்லும் போல் - மாலையாகத் தொடுத்து வீசிய கல்லையும் பொறுத்தது போல, கடையானேன் - கடையவனாகிய யான், வெகுண்டு அடித்த கைப் பிரம்பும் பொறுத்ததோ - சினந்து அடித்த கைப் பிரம்பினையும் பொறுத்தருளியதோ. ஒருவன்: அருச்சுனன்: பாண்டு மைந்தனாகிய அருச்சுனன் பாசுபதப்படை வேண்டிச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்த காலையில் அவனது தவத்தை அழித்தற்குத் துரியோதனனது ஏவலால் பன்றியுருவெடுத்து வந்த மூகன் என்னும் அசுரனை இறைவன் வேட்டுருக்கொண்டு துரந்து வந்து அம்பெய்து வீழ்த்தி அருச்சுனனோடு வழக்காடிப் போர் புரிந்து அவனது வில்லின் நாணை அறுக்க, அவன் விற்கழுந்தால் இறைவனை அடித்தான் என்பது வரலாறு. ஒரு தொண்டன் திருத்தொண்டர் புராணத்துக் கூறப்பட்ட தனியடியார் அறுபத்து மூவருள் ஒருவராகிய சாக்கிய நாயனார்; திருச்சங்க மங்கையிலே வேளாளர் குலத்துதித்த ஒருவர் மெய்யுணர்வு பெறக் கருதிச் சாக்கிய (புத்த) மதத்'e7çத அடைந்து, பின்பு சிவனருளால் சைவ நெறியே உண்மை நெறியெனத் தெளிந்து “எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும், மன்னிய சீர்ச் சங்கரன்றாள் மறவாமை பொருள்” என்று கருதிச் சாக்கிய வேடத்துடனிருந்தே சிவபிரான்பால் அன்புடையராய் ஒழுகுகின்றவர் நாடோறும் சிவலிங்க தரிசனஞ் செய்து உண்ண விரும்பி வெள்ளிடையிலிருந்த ஒரு சிவலிங்கத்தைக் கண்டு உவகை மீதூர்ந்து திருவருட் குறிப்பால் அதன்மீது தம்மையறியாமலே ஒரு கல்லினை யெடுத் தெறிந்து அன்று முதல் அதுவே நியமாமகக் கல்லெறிந்து வழிபட்டு முத்தியடைந்தனர் என்பது வரலாறு. பொறுத்ததோ, ஓகாரம் இரக்கத்தில் வந்தது. (79) கடியேறு மலர்மகன்மான் முதலாய கடவுளரும் படியேழு மளவிறந்த பல்லுயிரு நீயேயோ முடியேற மண்சுமந்தாய் முதுகிலடி வடுப்பட்ட தடியேனும் பட்டேனின் றிருமேனி யானேனோ. (இ-ள்.) முடி ஏற மண் சுமந்தாய் - முடியின்கண் ஏற மண்ணைச் சுமந்த இறைவனே, கடி ஏறும் மலர் மகன்மால் முதலாய கடவுளரும் - மணம் பொருந்திய தாமரை மலரில் இருக்கும் பிரமனும் திருமாலும் முதலிய தேவர்களும், படி ஏழும் - ஏழு உலகங்களும், அளவு இறந்த பல் உயிரும் நீயேயோ - அவற்றிலுள்ள அளவில்லாத பல உயிர் களும் நீயே போலும்; முதுகில் அடிவடு பட்டது - (அதனாற்றான்) நின்திருமுதுகிற்பட்ட அடித்தழும்பு அவை எல்லாவற்றின் மேலும் பட்டது; அடியேனும் பட்டேன் - அவ்வடியை அடியேனும் பட்டேன் (ஆதலால்), நின் திருமேனி ஆனேனோ - யானும் நினது திருமேனி ஆனேனோ. படி - உலகம் என்னும் பொருட்டு ஆனேனோ என்பதில் ஓகாரம் வியப்பின்கண் வந்தது. கடையேனாகிய யானும் உனக்குத் திருமேனியானேன் போலும் என வியந்து கூறியவாறு. (80) கைக்குமருந் தின்சுவைபின் காட்டுமா றெனவினைக்கும் பொய்க்குமருங் கலனாகி மண்ணாண்டு புலைநரகந் துய்க்குமருந் துயர்களைவான் மாறாய்நின் றுணையடிக்கே உய்க்குமருந் தவரிவரென் றறியாமை யொறுத்தேனே. (இ-ள்.) கைக்கும் மருந்து - முன்னே கசக்கும் மருந்து, பின் இன்சுவை காட்டுமாறு என - பின் தனது இனிய பயனைக் காட்டுவதுபோல, வினைக்கும் பொய்க்கும் அருங்கலனாகி - தீவினையும் பொய்யுமாகிய பண்டங்களை ஏற்றும் அரிய மரக்கலமாகி, மண் ஆண்டு - இந்நிலவுலகினை ஆள்வதால், புலைநரகம் துய்க்கும் அருந்துயர் களைவான் - புல்லிய நிரயத்தில் நுகரும் கொடிய துன்பத்தைக் களையும் பொருட்டு, மாறாய் - முன்னே பகையாகி, நின்துணை அடிக்கே உய்க்கும் - பின் நின் இரண்டு திருவடிகளிலே செலுத்தும், அருந்தவர் இவர் என்று அறியாமை ஒறுத்தேன் - அரிய முனிவர் இவரென்று அறியாமல் ஒறுத்தேன். சுவை - உறுதி என்னும் பொருட்டு. கலனாகி - அணிகலனாகி என்றுமாம். புலை - புன்மை. துய்க்கும் நரகத்துயர் என இயைத்தலுமாம்; நரகந் துய்த்தற்கு ஏதுவாகிய பிறவிப்பிணியைக் களைய என்றுரைத்தலும் பொருந்தும். இவர் : வாதவூரர். காட்டு மாறெனமாறாய் நின்று உய்க்கும் அருந்தவர் என்க. (81) பாதியுமை யுருவான பரமேட்டீ யெனக்கிம்மை ஊதியமும் பரகதியு முறுதிபெற விளைவிக்கும் நீதியினான் மந்திரியாய் நின்னருளே யவதரித்த வேதியரை யறியாதே வெறுத்துநா னொறுத்தேனே. (இ-ள்.) பாதி உமை உருவான பரமேட்டீ - ஒரு பாதி உமையம் மையின் வடிவான இறைவ, எனக்கு - அடியேற்கு, இம்மை ஊதியமும் பரகதியும் - இம்மைப் பயன்களையும் வீடு பேற்றினையும், உறுதிபெற விளைவிக்கும் நீதியினால் - திண்ணமாக உண்டாக்கும் நீதியுடன், நின் அருளே மந்திரியாய் அவதரித்த வேதியரை - நினது திருவருளே அமைச்சராய்த் தோன்றிய அந்தணரை, அறியாது வெறுத்து நான் ஒறுத்தேன் - அறியாமல் வெறுத்து அடியேன் ஒறுத்தேன். ஊதியம் - பேறு. நீதியினால் - நீதியுடன். நினது திருவருளே வாதவூரராகத் தோன்றிற்றென அவர் பெருமையை வியந்துரைத்தான். அருளால் என மூன்றனுருபு விரித்து, அவதரித்து மந்திரியாகிய என விகுதி பிரித்துக் கூட்டுதலுமாம். (82) மாயா விருத்தியினான் மாழாந்து மாதவரை ஆயா தொறுத்தே னருநரகத் தாழ்ந்துநான் வீயாம லின்றனையார் மெய்ம்மையெலாந் தேற்றியவென் தாயானாய் தண்ணளிக்கென் றமியேன்செய் கைம்மாறே. (இ-ள்.) மாயா விருத்தியினால் மாழாந்து - மாயையின் விருத்தி யினால் மயங்கி, மாதவரை ஆயாது ஒறுத்தேன் - தவசிரேட்டராகிய வாதவூரரை ஆராயாது ஒறுத்தேன் (அதனால்), நான் அரு நரகத்து ஆழ்ந்து வீயாமல் - அடியேன் கரையேறுதற்கரிய நரகத்தின்கண் அழுந்திக்கெடாமல், இன்று - இப்பொழுது, அனையார் மெய்ம்மை எலாம் தேற்றியஎன் தாயானாய் - அவ்வடிகளின் உண்மை களனைத்தையும் தெளிவித்த என் அன்னைபோல்வாய், தண் அளிக்கு தமியேன் செய்கைம்மாறு என் - நினது குளிர்ந்த அருளுக்கு அடியேன் செய்யுங் கைம்மாறு யாது (ஒன்றுமில்லை). விருத்தி - செய்கை, அவரது மெய்ம்மை அறிந்து வழிபட்டு வீயாமல் உய்ந்தேன் என்பான் நரகத் தாழ்ந்து வீயாமல் தேற்றிய என்றான். (83) நின்னையுணர்ந் தவர்வேத நெறிவேள்வி செய்தூட்டும் இன்னமுதிற் கழிசுவைத்தோ விவளிடும்பிட் டெவ்வுயிர்க்கும் மன்னவனே செந்துவர்வாய் மலர்ந்தமுது செய்தனையால் அன்னையிலா வுனக்கிவளோ ரன்னையாய் வந்தாளோ. (இ-ள்.) நின்னை உணர்ந்தவர் - நின்னியல்பினை அறிந்த முனிவர்கள், வேத நெறி - மறையிற் கூறிய வழியே, வேள்வி செய்து ஊட்டும் இன் அமுதில் - வேள்வி புரிந்து அதில் உண்பிக்கும் அவியுணவினும், இவள் இடும் பிட்டு கழிசுவைத்தோ - இவ்வந்தி இட்ட பிட்டு மிகவுஞ் சுவையுடையதோ, எவ்வுயிர்க்கும் மன்னவனே- எல்லா உயிர்கட்கும் இறைவனே, செந்துவர்வாய் மலர்ந்து அமுது செய்தனை - மிகவும் சிவந்த திருவாயினைத் திறந்து அமுது செய்தருளினை; அன்னை இலா உனக்கு - தாயில்லாத உனக்கு, இவள் ஓர் அன்னையாய் வந்தாளோ - இவளொரு தாயாகி வந்தனளோ. மன்னவனே அமுது செய்தனை, இது கழி சுவைத்தோ, இவள் அன்னையாய் வந்தாளோ என வினை முடிவு செய்க. (84) அன்றுசிறுத் தொண்டரிடும் பிள்ளைக் கறியமுதும் மென்று சுவைதெரிந்த வேடனிட்ட வூனும்போல் நன்றுநரை யாட்டியிடு பிட்டு நயந்தருந்தி என்று மடியார்க் கெளிவந்தா யெந்தாயே. (இ-ள்.) அன்று - அந்நாளில், சிறுத் தொண்டர் இடும் பிள்ளைக்கறி அமுதும் - சிறுத்தொண்ட நாயனார் இட்ட பிள்ளைக்கறியமுதினையும், வேடன் இட்ட - கண்ணப்பநாயனார் இட்ட, மென்று சுவை தெரிந்த ஊனும் போல் - அவரால் மென்று சுவை தெரியப்பெற்ற ஊனமுதினையும் போல, நரையாட்டி இடுபிட்டும் நன்று நயந்து - நரை முதியாளாகிய வந்தி இட்ட பிட்டினையும் பெரிதும் விரும்பி நுகர்ந்து, எந்தாய் - எந்தையே, என்றும் - எக்காலத்தும், அடியார்க்கு எளிவந்தாய் - அடியார் திறத்தில் எளியனாயினாய். சிறுத்தொண்டர் - சிவனடியார்க்கு மிகச் சிறியரா யொழுகும் தொண்டர் : காரணப் பெயர்; “ சீதமதி யரவினுடன் செஞ்சடைமேற் செறிவித்த நாதனடியார் தம்மை நயப்பாட்டு வழிபாட்டான் மேதகையா ரவர்முன்பு மிகச்சிறிய ராயடைந்தார் ஆதலினாற் சிறுத்தொண்ட ரெனநிகழ்ந்தா ரவனியின்மேல்” என்னுந் திருத்தொண்டர் புராணச் செய்யுள் நோக்குக. சிறுத் தொண்டர் பிள்ளைக்கறி யமுதிட்ட வரலாற்றையும், கண்ணப்பர் மேன்று சுவை தெரிந்த ஊன் இட்ட வரலாற்றையும் பெரிய புராணத்திற் காண்க. பிள்ளைக் கறியமுதினை இறைவன் உண்டமை கேட்கப்பட்டிலதேனும் அந் நிவேதனங் காரணமாக இறைவன் அவர்கட்கு அருள் புரிந்தமையின் பிள்ளைக்கறியமுதும்போல் என்றார். கண்ணப்பர் ஊன் சுவை தெரிந்திட்டமை, “ ஊனமுது கல்லையுடன் வைத்திதுமுன் னையினன்றால் ஏனமொடு மான்கலைகண் மரைகடமை யிவையிற்றில் ஆனவுறுப் பிறைச்சியமு தடியேனுஞ் சுவைகண்டேன் தேனுமுடன் கலந்ததிது தித்திக்கு மெனமொழிந்தார்.” “ வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ வெனுமன்பால் நையுமனத் தினிமையினி னையமிக மென்றிடலாற் செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில் எய்யும் வரிச் சிலையவன்றா னிட்டவூ னெனக்கினிய” என முறையே கண்ணப்பர் கூற்றாகவும் சிவபெருமான் கூற்றாகவும் வந்துள்ள செய்யுட்களாலறிக. திருஞானசம்பந்தப் பிள்ளையார் வாரவூரடிகட்குப் பிற்காலத்தினர் என்பது இந்நூலாசிரியர் கருத்தாகலின் பிள்ளையார் காலத்திருந்த சிறுத்தொண்டரும் பிற்காலத்தினரென்பது இவர்க்கு உடன்பாடாதல் பெறப்படும். அங்ஙன மாயினும் இவ்வரலாறெல்லாம் இவர்க்கு முற்காலத்தினவாகலின் சிறுத்தொண்டர் செய்தியையும் இங்குக் கூறினார். இங்ஙனம் நூலாசிரியர்கள் பிறழக் கூறுதல் பலவிடத்துக் காணப்படும். அன்று என்பதற்கு வருங்காலத்தில் எனப் பொருள் கொள்ளுதல் சிறப்பின்று. நன்று - பெரிது; தொல்காப்பியத்து உரியியலிற் காண்க.(85) நரியாவும் பரியாக்கி நடத்தியுமம் பரமன்றித் தரியாயான் றருதுகிலைத் திருமுடிமேற் றரித்துமறைக் கரியாய்நீ யென்பாச மறுக்கவருந் திருமேனி தெரியாதே பரியாசை திளைத்திறுமாந் திருந்தேனே. (இ-ள்.) மறைக்கு அரியாய் நீ - வேதங்களுக்கு அரியவனாய நீ, நரியாவும் பரியாக்கி நடத்தியும் - நரிகளை யெல்லாம் குதிரைகளாக்கி நடத்தியும், அம்பரம் அன்றித்தரியாய் - திசை வெளியன்றி வேறொன்றையும் உடுக்காத நீ, யான் தரு துகிலைத் திருமுடிமேல் தரித்தும் - அடியேன் கொடுத்த ஆடையை வாங்கித் திருமுடியின்கண் தரித்தும், என் பாசம் அறுக்கவரும் திருமேனி தெரியாதே - எனது கட்டினை அறுக்க வரும் நினது திருமேனியை உணராமல், பரி ஆசை திளைத்து இறுமாந்து இருந்தேனே - குதிரைகளில் வைத்த விருப்பத்துள் அழுந்தி இறுமாந்திருந்தேனே. அம்பரம் - திசை. ஆகாயம்; இறைவன் திசையே ஆடையாகவுடையனாதலைத் திகம்பரன் என்னும் பெயரானுமறிக. அம்பரம் ஆடையுமாகலின் இரட்டுற மொழிதலாகக் கொண்டு, திசையாகிய ஆடையன்றி என உரைத்தலுமாம். திருமேனியின் அருமையைத் தெரியாதே என்க. தெரியாது : எதிர்மறை வினையெச்சம். இறுமாத்தல் - தருக்குதல். தருக்கியிருந்தேன் இஃது என்ன புன்மை என இசையெச்சம் விரித்துரைக்க. (86) விண்சுமக்கும் புள்ளாய் விலங்காய்ச் சுழன்றுமனம் புண்சுமக்குஞ் சூழ்ச்சி வலியுடைய புத்தேளிர் மண்சுமக்கு மள்ளராய் வந்திலரே வந்தக்காற் பண்சுமக்குஞ் சொல்லிபங்கன் பாதமுடி காண்பாரே. (இ-ள்.) விண் சுமக்கும் புள்ளாய் - வானாற் சுமக்கப்படும் பறவையாகியும், விலங்காச் சுழன்று - விலங்காகியும் தேடி வருந்தி, மனம் புண் சுமக்கும் - (காணாமையின்) மனம் புண்பட்ட, சூழ்ச்சி வலி உடைய புத்தேளிர் - ஆராய்ச்சி வலியினையுடைய பிரமனுந் திருமாலுமாகிய தேவர்கள், மண் சுமக்கும் மள்ளராய் வந்திலரே - மண்ணைச் சுமக்கும் ஏவலாளராய் வந்திலரே, வந்தக்கால் - வந்திருப்பார்களானால், பண் சுமக்கும் சொல்லிபங்கன் - பண்ணின் சுவையினைத் தாங்கிய இன்சொல்லையுடைய உமையம்மையை ஒரு பாகத்தில் வைத்த இறைவனது, பாதம் முடி காண்பாரே - திருவடியையும் திருமுடியையுங் கண்டிருப்பாரே. வேறு ஆதரவன்றி விண்ணின் இயங்குதலின் விண் சுமக்கும் புள் என்றார். புள் - அன்னம். விலங்கு - பன்றி. சூழ்ச்சி வலியுடைய என்றது நகுதற் குறிப்பு. பிரமனையும் திருமாலையும் முன்னர்க் கூறி, பாதம் முடி காண்பார் எனப் பிற்கூறினமையின் இது மயக்க நிரனிறை. வந்திலரே காண்பாரே என இரங்கிக் கூறுவது போன்று இறைவன் பிரமன்மால் காணாப் பெரியன் ஆதலையும், அடியார்க்கு எளியனாத'e7çலயும் விளக்கினமை காண்க. (87) அறுசீரடி யாசிரிய விருத்தம் என்றுபல முறையாலே துதித்தடைந்தோர்க் கன்பரிவ ரிவரைத் தேறின் நன்றுமிக பரபோகம் வீடுபெற லெளிதென்று நகைத்தார் வேந்தன் அன்றுதிருப் பணிபூசை பிறவுநனி வளம்பெருக்கி யழகார் வெள்ளி மன்றுடையா னடிக்கன்பு முயிர்க்கன்புஞ் சுரந்தொழுகி வாழு நாளில். (இ-ள்.) என்று பல முறையாலே துதித்து - என்று பல முறையி னாலே வழுத்தி, அடைந்தோர்க்கு அன்பர் இவர் - தன்னடியினை அடைந்தவர்க்கு அன்பராவாரிவர்; இவரைத் தேறின் - இவரைத் தெளிந்தால், இகபர போகம் - இம்மை மறுமையின்பங்களையும், வீடு - முத்தியின்பத்தையும், நன்றும் பெறல் எளிது என்று - பெரிதும் அடைதல் எளிதென்று கருதி, நகைத்தார் வேந்தன் - ஒளி பொருந்திய மாலையையணிந்த மன்னன், அன்று - அந்நாள் முதல், திருப்பணி பூசை பிறவும் - திருப்பணியும் பூசனையும் பிறவும், நனிவளம் பெருக்கி - மிகவும் பொலிவுற நடத்தி, அழகு ஆர் வெள்ளிமன்று உடையான் அடிக்கு அன்பும் - அழகு நிறைந்த வெள்ளியம் பலமுடைய இறைவனது திருவடிக்கண் அன்பும், உயிர்க்கு அன்பும் சுரந்து ஒழுகி வாழும் நாளில் - உயிர்களிடத்து அன்பும் சுரந்து வாழ்ந்தொழுகும்போது. பிறவும் என்றது திருவிழா முதலியவற்றை. அடிக்கு உயிர்க்கு என்பவற்றில் நான்கனுருபு ஏழன் பொருளில் வந்தன. உயிர்க்கன்பு என்புழி அன்பு அருளுமாம். (88) முன்புபெருந் துறையார்க்கு மடியார்க்கு மறந்தெரிந்த முறையா லீட்டுந் தன்பொருள்போ யுடன்பலவாய்த் தழைத்துவரு பயனேபோற் றலையு வாவின் நன்பனிகான் மதிகண்ட வுவரியெனப் பலசெல்வ நாளு மோங்க இன்புறுவான் சகநாத னெனுமகப்பெற் றின்பத்து ளின்பத் தாழ்ந்தான். (இ-ள்.) அறம் தெரிந்த முறையால் ஈட்டும் தன் பொருள் - அறநெறியினை ஆராய்ந்தறிந்த முறையினால் ஈட்டிய தனது பொருள், முன்பு பெருந்துறையார்க்கும் அடியார்க்கும் போய் - முன்னம் பெருந்துறை இறைவரிடத்தும் அவரடியாரிடத்தும் வாதவூரடிகளாற் சென்று, உடன் - உடனே, பலவாய் தழைத்து வருபயனே போல் - பல வகையாய்த் தழைத்து வரும் பயனேபோல, தலை உவாவின் நன்பனி கால் மதிகண்ட உவரி என - பூரணையில் நல்ல குளிர்ந்த நிலவினை வீசும் சந்திரனைக் கண்ட கடல் பொங்குதல்போல, பல செல்வம் நாளும் ஓங்க - பல வகைப்பட்ட செல்வம் நாள்தோறும் மிக்கோங்க, இன்புறுவான் - இன்பமுறும் அவ் அரி மருத்தன பாண்டியன், சகநாதன் எனும் மகப்பெற்று - சகநாதன் என்னும் புதல்வனைப் பெற்று, இன்பத்துள் இன்பத்து ஆழ்ந்தான் - சிறந்த மகிழ்ச்சிக் கடலுள் அழுந்தினான். அமாவாசையும் உவா எனப்படுமாகலின் பூரணையைத் தலையுவா என்றார். உவரி என ஓங்க எனவும், பயனே பால் ஓங்க மகப்பெற்று எனவும் கூட்டுக. இன்பத்துள் இன்பம் - இடையறா இன்பம். (89) அம்மகனை முடிசூட்டி யரசாக்கி வாதவூ ரமைச்சர் சார்பான் மெய்ம்மைநெறி விளங்கியிரு வினையொப்பி லரன்கருணை விளைந்த நோக்கான் மும்மைமலத் தொடர்நீந்திச் சிவானந்தக் கடற்படிந்து முக்கண் மூர்த்தி செம்மலர்த்தா ணிழலடைந்தான் றிறலரிமர்த் தனனென்னுந் தென்பார் வேந்தன். (இ-ள்.) திறல் அரிமர்த்தனன் என்னும் தேன்பார் வேந்தன் - ஆற்றல் பொருந்திய அரிமருத்தனனென்னும் பாண்டி நாட்டு மன்னன், அம்மகனை முடிசூட்டி அரசு ஆக்கி - அம் மகனுக்கு முடிசூட்டி அவனை அரசனாக்கி, வாதவூர் அமைச்சர் பால் - வாதவூரடிகளாகிய அமைச்சரது சம்பந்தத்தால், மெய்ம்மை நெறி விளங்கி - உண்மைநெறி விளங்கப்பெற்று, இருவினை ஒப்பில் அரன் கருணை விளைந்த நோக்கால் - இருவினையொப்பின்கண் உண்டாகிய இறைவனது அருள் நோக்கால், மும்மைமலத் தொடர் நீந்தி - மூன்று மலங்களாகிய தொடரினைக் கடந்து, சிவானந்தக் கடல் படிந்து - சிவானந்தமாகிய கடலில் மூழ்கி, முக்கண்மூர்த்தி செம்மலர்த்தாள் நிழல் அடைந்தான் - மூன்று கண்களையுடைய சோமசுந்தரக் கடவுளின் சிவந்த தாமரை மலர் போன்ற திருவடி நிழலை அடைந்தனன். சார்பால் - சார்ந்திருந்தமையால், சம்பந்தத்தால். இருவினை யொப்பு - நல்வினைப் பயனாகிய இன்பத்தையும் தீ வினைப் பயனாகிய துன்பத்தையும் ஒப்ப நோக்குதல். மும்மை, மை : ;பகுதிப் பொருள் விகுதி. மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை. (90) மேற்படி வேறு வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிக டம்மைப் பழுதிலாப் பாடல் கொள்வார் பதிபல பணிந்து போந்து முழுதுணர் மறையோர் வேள்விப் புகையண்ட முடிகீண் டூழி எழுவட வரைபோற் றோன்று மெழிற்றில்லை மூதூர் சேர்ந்தார். (இ-ள்.) வழுதியால் விடுக்கப்பட்ட வாதவூர் முனிகள் - பாண்டியனால் விடுக்கப்பட்ட வாதவூர் முனிவர், தம்மைப் பழுதுஇலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து - தம்முடைய குற்றமில்லாத பாடல்களை ஏற்றுக்கொள்ளும் இறைவர் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிச்சென்று, முழுது உணர் மறையோர் வேள்விப் புகை - முற்றும் உணர்ந்த மறையவராகிய மூவாயிரவரின் வேள்விப் புகையானது, அண்டமுடி கீண்டு - அண்ட முகட்டைக் கிழித்து, ஊழி எழு வடவரைபோல் தோன்றும் - ஊழிக்காலத்தில் உயரும் வடக்கின் கண்ணுள்ள கைலைமலை போலக் காணப்படும், எழில் தில்லை மூதூர் சேர்ந்தார் - அழகிய தில்லையென்னும் பழம் பதியினை அடைந்தார். வாதவூரர் சோமசுந்தரக் கடவுளை வணங்கி விடைபெற்று மதுரையினின்றும் புறப்பட்ட பொழுது பாண்டியன் அவர் கருத்தைத் தடுக்கலாற்றாது விட்டமையின் வழுதியால் விடுக்கப் பட்ட என்றார். அடிகள் என்றாற்போலக் கள்விகுதி தந்து முனிகள் என்றார். பாடல் கொள்வார் என்பதனை ஒரு சொன்னீரதாக்கித் தம்மை என்னும் இரண்டாவதற்கு முடிபாக்கலுமாம். பாடல் கொள்வார் - பாடற்றொண்டு கொள்வார். வடவரை என்றது கைலை என்னும் திருநொடித்தான் மலையை, அஃது ஊழியில் உயரும் என்பதனை ஊழிதோ றோங்குமவ் வோங்கல் எனத் திருக்கைலை வருணணையிலும் இவ்வாசிரியர் கூறியிருத்தல் காண்க. (91) மேற்படி வேறு வீதிதொறும் வீழ்ந்துவீழ்ந் திறைஞ்சியா லயத்தெய்தி மெய்ம்மையான சோதியறி வானந்தச் சுடருருவாஞ் சிவகங்கை தோய்ந்து மேனி பாதிபகிர்ந் தவள்காணப் பரானந்தத் தனிக்கூத்துப் பயிலா நிற்கும் ஆதியரு ளாகியவம் பலங் கண்டு காந்தநே ரயம்போற் சார்ந்தார். (இ-ள்.) வீதிதொறும் வீழ்ந்து வீழ்ந்து இறைஞ்சி - வீதிகடோறும் வீழ்ந்து வீழ்ந்து வணங்கி, ஆலயத்து எய்தி - திருக்கோயிலை அடைந்து, மெய்ம்மையான சோதி அறிவு ஆனந்தச் சுடர் உருவாம் - உண்மையான ஒளியும் அறிவும் இன்பமுமாகிய இறைவரது திருவுருவமாகிய, சிவகங்கை படிந்து - சிவகங்கையில் நீராடி, மேனி பாதி பகிர்ந்தவள் காண - திருமேனியில் ஒரு பாதியைப் பங்கிட்டுக் கொண்ட சிவகாமியார் பார்க்க, பர ஆனந்தத் தனிக்கூத்துப் பயிலா நிற்கும் - மேலான இன்பமாகிய ஒப்பற்ற திருக்கூத்தினைப் பயிலும், ஆதி அருளாகிய அம்பலம் கண்டு - இறைவரது திருவருளாகிய அம்பலத்தைக் கண்டு, காந்தம் நேர் அயம்போல் சார்ந்தார் - காந்தத்தினை எதிர்ந்த இரும்புபோலச் சார்ந்தனர். இறைவன் திருக்கூத்தியற்றும் சிற்றம்பலத்தைத் தன்னகத் துடைய தெய்வப்பதி ஆகலானும், அங்கு வதியும் அந்தணர் மூவாயிரவரும் சிவகணநாதராகலானும் ‘வீதிதொறும் வீழ்ந்து வீழ்ந்திறைஞ்சி’ச் சென்றார் என்க. அடுக்கு தொழிற்பயில்வு குறித்தது. சச்சிதானந்தமாகிய சுடரின் உருவாம் சிவகங்கை என்க. இறைவனது சத்தியொன்று தானே அருளும் ஞானமும் முதலிய பெயர்களைப் பெறுதலின் ‘அருளாகிய அம்பலம்’ என்றார். ஈர்க்கப்பட்டமை தோன்றக் ‘காந்தநேர் அயம்போல்’ என்றார். (92) அன்றுகுருந் தடியிலடி வைத்தாண்ட கோலமே யருளா னந்த மன்றினிடத் தெதிர்தோற்றி வாவென்பா ரெனமூரன் மணிவாய் தோற்றி1 நின்றதனிப் பெருங்கூத்தர் நிலைகண்டா ரஞ்சலித்தார் நிலமேல் வீழ்ந்தார் ஒன்றரிய புலன்கரண வழிநீந்தி மெய்யன்பி னுருவ மானார். (இ-ள்.) அன்று குருந்து அடியில் அடி வைத்து ஆண்ட கோலமே - அன்று திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் அடியில் திருவடியை முடியின்கண் சூட்டி ஆட்கொண்டருளிய திருக்கோலமே, அருள் ஆனந்தமன்றினிடத்து எதிர் தோற்றி - அருளானந்த மயமாகிய அம்பலத்தின்கண் எதிரே தோன்றி, வா என்பார் என - வா என்று அழைப்பார் போல, மணிவாய் மூரல் தோற்றி நின்ற - அழகிய திருவாயின்கண் புன்னகை காட்டி நின்றருளிய, தனிப் பெருங்கூத்தர் நிலை கண்டார் - ஒப்பற்ற பெரிய கூத்தப் பெருமானது திருக்கோலத்தினைக் கண்டு, அஞ்சலித்தார் நிலமேல் வீழ்ந்தார் - கைகளை முடியிற் குவித்து நிலத்தின்மேல் வீழ்ந்து, ஒன்று அரிய புலன்கரண வழி நீந்தி - ஒன்று படுதலில்லாத ஐம்புலன்களும் அந்தக்கரணங்களுமாகிய இவற்றின்வழிச் செல்லுதலைக் கடந்து, மெய் அன்பின் உருவம் ஆனார் - உண்மையன்பின் வடிவமாயினார். கோலமே நின்ற என இயையும். வா வென்பாரென என்னுங் கருத்தை, “ சென்று தொழுமின்கள் தில்லையுட்சிற்றம் பலத்து நட்டம் என்று வந்தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே ” என்னும் திருநாவுக்கரசர் தேவாரத்திற் காண்க. (93) வண்டுபோற் புண்டரிக மலரில்விளை சிவானந்த மதுவை வாரி உண்டுவா சகம்பாடி யாடியழல் வெண்ணெயென வுருகுந் தொண்டர் விண்டுழா வியகுடுமி மன்றுடையான் றிருவாக்கான் மிகுந்த நேயங் கொண்டுபோய்க் குணதிசையி லருந்தவர்வாழ் தபோவனத்தைக் குறுகி யங்கண். (இ-ள்.) வண்டுபோல் - வண்டினைப்போல, புண்டரிகமலரில் விளை சிவானந்த மதுவை வாரி உண்டு - தில்லைவனமாகிய தாமரை மலரில் விளைந்த சிவானந்தமாகிய தேனை வாரி உண்டு, வாசகம் பாடி ஆடி - திருவாசகம் பாடி இன்பக் கூத்தாடி, அழல் வெண்ணெய் என உருகும் தொண்டர் - நெருப்பிற்பட்ட வெண்ணெய் போல மனமுருகுந் தொண்டராகிய மாணிக்க வாசகர், விண் துழாவிய குடுமி மன்று உடையான் திருவாக்கால் - வானையளாவிய முடியினையுடைத்தாகிய பொன்னம்பலத்தை யுடைய இறைவனது திருவாக்கினால், மிகுந்த நேயம் கொண்டு போய் - மிகுந்த அன்பு கொண்டு சென்று, குணதிசையில் அருந்தவர் வாழ்தபோவனத்தைக் குறுகி - கீழ்த்திசையில், அரிய தவத்தையுடைய முனிவர்கள் வாழும் தவவனத்தை அடைந்து, அங்கண் - அவ்விடத்தில். புண்டரிக மலர் என்பது இரட்டுற மொழிதலால் தில்லை வனத்தையும் தாமரை மலரையும் குறிக்கும். சாந்தோக்கிய உபநிடதத்திலே ‘பிரமபுரமாகிய இச்சரீரத்திலுள்ள தகரமாகிய புண்டரீக வீட்டினுள் இருக்கும் ஆகாசம்’ என்பது முதலாகத் தகர வித்தை கூறப்பட்டது. அதுபோல இப்பிரமாண்டத்தினுள் இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடு எனவும், இத்தில்லை வனத்தில் நிருத்தஞ் செய்யும் சிவம் ஆகாசம் எனவும் கூறப்படும் என்க; ஆறுமுக நாவலரவர்கள் எழுதிய பெரிய புராண வசனத்தில் இது விரித்துரைக்கப் பெற்றமை காண்க. வண்டு போல் உண்டு என இயையும். (94) குறிகுணங்கள் கடந்ததனிக் கூத்தனுரு வெழுத்தைந்தின் கொடுவா ளோச்சிப் பொறிகரணக் காடெறிந்து வீசிமனப் புலந்திருத்திப் புனிதஞ் செய்து நிறைசிவமாம் விதைவிதைத்துப் பசுபோதங் களைந்தருணன் னீர்கால் பாய அறிவுருவாய் விளைந்ததனிப் பரானந்த வமுதருந்தா தருந்தி நின்றார். (இ-ள்.) குறி குணங்கள் கடந்ததனிக் கூத்தன் உரு - குறியையுங் குணத்தையுங் கடந்த ஒப்பற்ற கூத்தப் பெருமானது வடிவமாகிய, எழுத்து ஐந்தின் - திருவைந் தெழுத்தென்னும், கொடுவாள் ஓச்சி - வளைந்த வாளினை ஓச்சி, பொறி கரணக்காடு எறிந்து வீசி - ஐம்பொறிகளும் அந்தக்கரணமுமாகிய காட்டினை முற்றும் அழித்து, மனப்புலம் திருத்தி - மனமாகிய நிலத்தினைச் செப்பஞ் செய்து, புனிதம் செய்து - தூய்மை செய்து, நிறை சிவமாம் விதைவிதைத்து - எங்கும் நிறைந்த சிவமாகிய வித்தினை விதைத்து, பசுபோதம் களைந்து - சீவபோதமாகிய களையினைக் களைந் தெடுத்துவிட்டு, அருள் நல்நீர்கால் பாய - அருளாகிய நல்ல நீர் பாய் தலால், அறிவு உருவாய் விளைந்த - அறிவே வடிவமாய் விளைந்த, தனிப்பரானந்த அமுது - ஒப்பற்ற சிவபோகமாகிய அமுதினை, அருந்தாது அருந்தி நின்றார் - இடையறாமல் அருந்தி நின்றனர். இறைவன் குறி குணங்கள் கடந்தவனாதலை, “ குறியொன்று மில்லாத கூத்தன் ” “ குணங்கள்தா மில்லா இன்பமே” என்னும் திருவாசகங்களானறிக. கூத்தன் உரு ஐந்தெழுத்தாதலை, “ ஆடும் படிகேணல் லம்பலத்தா னையனே நாடுந் திருவடியி லேநகரம் - கூடும் மகர முதரம் வளர்தோள் சிகரம் பகருமுகம் வாமுடியப் பார்” என்னும் உண்மை விளக்கத்தாலறிக. திருநாவுக்கரசர் “ படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்செ னாவிற் கொண்டேன்” எனத் திருவைந்தெழுத்தை வாளாக உருவகப் படுத்தினமை இங்கே சிந்திக்கற் பாலது. ஐந்தெழுத்தின் என்பதில் இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. கால் பாய, கால் : துணைச் சொல். அருந்தாது அருந்தல் - தற்போதங் கொண்டு நுகராது திருவருள் வழி நின்று நுகர்தல். இஃது இயைபுருவக அணி. (95) மானிரையுங் குயவரியும் வந்தொருங்கு நின்றுரிஞ்ச மயங்கு கானத் தானிரைகன் றெனவிரங்கி மோந்துநக்க வானந்த வருட்கண் ணீரைக் கானிறைபுள் ளினம்பருகக் கருணைநெடுங் கடலிருக்குங் காட்சி போலப் பானிறவெண் ணீற்றன்ப ரசைவின்றிச் சிவயோகம் பயிலு நாளில். (இ-ள்.) மயங்கு கானத்து - இருள் செறிந்த அக்காட்டின்கண், மான் நிரையும் குயவரியும் வந்து ஒருங்கு நின்று உரிஞ்ச - மான் கூட்டங்களும் புலிகளும் வந்து ஒருசேர நின்று உரிஞ்சவும், ஆன்நிரை - பசுக்கூட்டங்கள், கன்று என இரங்கி மோந்து நக்க - கன்று என்று இரங்கிமோந்து நக்கவும், ஆனந்த அருள் கண்ணீரை - அருள்மயமாகிய இன்பக் கண்ணீரை, கான் நிறை புள் இனம் பருக - அக்காட்டில் நிறைந்த பறவைக் கூட்டங்கள் பருகவும், கருணை நெடுங்கடல் இருந்த காட்சிபோல - நீண்ட அருட்கடல் இருந்த தோற்றம்போல, பால்நிற வெண்நீற்று அன்பர் - பால் போன்ற நிறத்தினையுடைய வெண்ணீற்றினை யணிந்த அடிகள், அசைவு இன்றிச் சிவயோகம் பயிலும் நாளில் - சலிப்பற்றுச் சிவயோகம் பயிலாநின்ற நாளில். குயம் - அரிவாள். குயவரி - குயம்போலும் வரிகளையுடைய புலி; அன்மொழித்தொகை. தல விசேடத்தாலும் தவச்சிறப்பாலும் தம்முட் பகையுள்ள விலங்குகளுங் பகைமையொழிந்தன என்பார் மானிரையும் குயவரியும் வந்தொருங்கு நின்றுரிஞ்ச என்றார். உரிஞ்சவும் நக்கவும் பருகவும் பயிலுநாளில் என்றது சாந்தமயமான சிவயோக நிலையை -விளக்கியபடி. (96) புத்தர்சில ரிலங்கையினும் போந்துமூ வாயிரமெய்ப் போத வேத வித்தகரோ டேழுநாள் வரையறுத்துச் சூளொட்டி விவாதஞ் செய்வார் இத்தகைய நாளேழில் யாமிவரை வேறுமெனு மெண்ணம் பூண்ட சித்தமுடை யவராக வவர்கனவி லெழுந்தருளித் தேவ தேவர். (இ-ள்.) புத்தர் சிலர் இலங்கையினும் போந்து - சில புத்தர்கள் இலங்கை யினின்றும் வந்து, மெய்ப்போத மூவாயிர வேத வித்தகரோடு - உண்மை ஞானமுடைய மறையவர் மூவாயிரவரோடும், ஏழு நாள் வரையறுத்து சூள்ஒட்டி விவாதம் செய்வார் - ஏழு நாள் வரையறுத்துக்கொண்டு வஞ்சினங்கூறி வாதஞ் செய்வாராயினர்; இத்தகைய நாள் ஏழில் - இங்ஙனம் வரையறுத்த ஏழு நாளில், இவரை வேறும் எனும் எண்ணம் பூண்ட சித்தமுடையவராக - யாம் இவரை வெல்வோமென்னும் நினைவை மேற்கொண்ட உள்ளமுடையவராக; அவர் கனவில் தேவதேவர் எழுந்தருளி - அவர் கனவின்கண் தேவதேவராகிய இறைவர் எழுந்தருளி. இலங்கையினும் - இலங்கையினின்றும், வேறும்: தன்மைப் பன்மை முற்று; வெல்: பகுதி தும்: விகுதி. சைவ மாதவரொருவர் ஈழ நாட்டுக்குச் சென்றவர் பொன்ம்பலம் வாழ்க என்று யாண்டும் கூறிக்கொண்டு செல்லா நிற்கையில் அதனை அறிந்த புத்தர் சிலர் அதனைத் தம் அரசனுக்கு அறிவிக்கவே அவன் அவரை வருவித்து நீர் கூறும் பொன்னம்பலம் என்பது யாது? அதனைத் தெரியக் கூறுவீராக என்றதும், அவர் பொன்னம்பலத்தின் மான்மியங்களை எடுத்துக் கூறும் பொழுது அவ்வரசனோ டொருங்கிருந்த புத்தகுரு கேட்டுச் சினங்கூர்ந்து, அக்கோயிலை வாதில் வென்று புத்தன் பள்ளியாக்குவேனென்னத் தன் மாணாக்கர்களுடன் சென்றனன்; எனப் புத்தர்கள் இலங்கையினின்றும் வந்த வரலாறு திருவாதவூரர் புராணத்திற் கூறப்பெற்றுள்ளது. (97) வாதவூ ரனைவிடுத்து வாதுசெய்வீ ரெனவிழித்து மறையோ ரந்தப் போதவே தியரைவனம் புகுந்தழைத்தா ரப்போது பொதுவி லாடும் வேதநா யகன்பணித்த வழிநின்றா ரெதிர்மறுப்ப மீண்டு போந்து காதரா குலமூழ்கி யிருந்தார்முத் தழனிமிர்த்துக் கலியைக் காய்வார். (இ-ள்.) வாதவூரனை விடுத்து வாது செய்வீர் என - நமது திருவாதவூரனை விடுத்து வாதஞ் செய்யுங்கள் என்று கூறியருள, மறையோர் விழித்து - வேதியர்கள் விழித்து, அந்தப் போதவேதியரை - அந்த ஞான மறையோரான வாதவூரரை, வனம்புகுந்து அழைத்தார்- அவ்வனத்திற் சென்று அழைத்தனர்; அப்போது - அப்பொழுது, பொதுவில் ஆடும் வேதநாயகன் பணித்தவழி நின்றார் - பொன்னம் பலத்தில் ஆடியருளும் வேதநாயகனாகிய இறைவன் கட்டளை யிட்ட நெறியில் நிற்பவராகிய அடிகள், எதிர்மறுப்ப - தடுத்துக்கூற, முத்தழல் நிமிர்த்துக் கலியைக் காய்வார் - முத்தீயை வளர்த்து உயிர்களின் துன்பத்தைப் போக்குபவராகிய அம்மூவாயிரவரும், மீண்டு போந்து - திரும்பிவந்து, காதர ஆகுலம் மூழ்கி இருந்தார் - அச்சந்தருந் துன்பக் கடலுள் மூழ்கியிருந்தனர். மன்றுடையான் திருவாக்கால் தபோவனத்தைக் குறுகிச் சிவயோகம் பயின்றனர் என முற்கூறினமையின் ஈண்டும் வேத நாயகன் பணித்த வழி நின்றார் என்றார். காதரம் - அச்சம். காதராகுலம்: வடமொழி நெடிற்சந்தி. முத்தழல் காருகபத்தியம். ஆகவனீயம், தென்றிசையங்கி யென்பன. நிமிர்த்தல் - வளர்த்தல் என்னும் பொருட்டு, காய்வார்: வினைப்பெயர். (98) பின்னுமவர் கனவின்கண் மன்றுணடம் பிரியாத பெருமான் வந்து முன்னவனைப் பெருந்துறையிற் குருந்தடியி லாட்கொண்ட முறையி னானும் இன்னிசைவண் டமிழ்மணிபோற் பாடுங்கா ரணத்தானும் யாமன் றிட்ட மன்னியபேர் மாணிக்க வாசகனென் றழைமின்கள் வருவ னென்றார். (இ-ள்.) மன்றுள் நடம்பிரியாத பெருமான் - பொன்னம் பலத்தில் நீங்காது நடம்புரியும் இறைவன், பின்னும் அவர் கனவின்கண் வந்து - மீண்டும் அவர் கனவிலே வந்து, அவனை முன் பெருந்துறையில் குருந்து அடியில் ஆட்கொண்ட முறையினானும்- அவனை முன்னே திருப்பெருந் துறையில் குருந்தமரத்தின் நிழலில் ஆட்கொண்டருளிய முறையாலும், இன் இசை வண்தமிழ் - இனிய இசையோடு கூடிய வளம் நிறைந்த தமிழ்ப் பாட்டுக்களை, மணிபோல் பாடும் காரணத்தானும் - மாணிக்கம் போலப் பாடுகின்ற காரணத்தாலும், யாம் அன்று இட்ட மன்னிய பேர் மாணிக்க வாசகன் என்று அழைமின்கள் யாம் அன்று இட்ட நிலைபெற்ற பெயர்மாணிக்கவாசகனாகும் ஆதலால் அப்பெயரைக் கூறி அழையுங்கள்; வருவன் என்றார் - வருவா னென்று அருள் செய்தார். மாணிக்கவாசகனாகும் ஆதலால் அப்பெயரைக்கூறி அழையுங்கள் என விரித்துரைக்க; அப்பெயரினைத் தாமும் வாதவூரரும் அன்றிப் பிறர் அறியாராகலின் அதனைக் கூறியழைப்பின் தமது ஆணையென அறிந்து வருவரென்பார் ‘மாணிக்க வாசக னென்றழைமின்கள் வருவன்’ என்று கூறினாரென்க. இட்டபேர், மன்னியபேர் எனத்தனித்தனி இயையும். (99) உறக்கமொழிந் தறவோர்சென் றவர்நாம மொழிந்தழைப்ப வுணர்ந்து நாதன் அறக்கருணை யிதுவோவென் றவரோடு மெழுந்துநக ரடைந்து மண்ணுந் துறக்கமுநீத் தருவருத்தார் மன்றாடுந் துணைக்கமலந் தொழுது மீண்டோர் நிறக்கனக மண்டபத்திற் புக்கிருந்தா ரறிஞர்குழா நெருங்கிச் சூழ. (இ-ள்.) அறவோர் உறக்கம் ஒழிந்து சென்று - அவ்வந்தணர் தூக்கம் நீங்கிப் போய், அவர் நாமம் மொழிந்து அழைப்ப - அவர் பெயரைக்கூறி அழைப்ப, மண்ணும் துறக்கமும் நீத்து அருவருத்தார் - நிலவுலக இன்பினையும் துறக்க வுலகஇன்பினையும் அருவருத்துத் துறந்த அடிகள், உணர்ந்து - அதனை யறிந்து, நாதன் அறக்கருணை இதுவோ வென்று - இறைவன் அறக்கருணை இதுவோவென்று கருதி, அவரோடும் எழுந்து நகர் அடைந்து - அம்மறையவரோடும் எழுந்து நகரத்தை அடைந்து, மன்று ஆடும் துணைக்கமலம்தொழுது - பொதுவின்கண் ஆடுகின்ற இரண்டு திருவடித் தாமரைகளையும் வணங்கி, மீண்டு ஓர் நிறக்கனக மண்டபத்தில் புக்கு - திரும்பி ஓர் ஒளியினையுடைய பொன்மண்டபத்திற் புகுந்து, அறிஞர் குழாம் நெருங்கிச் சூழ இருந்தார் - அறிஞர் கூட்டம் நெருங்கிச் சூழாநிற்க இருந்தருளினார். மாணிக்க வாசகர் என்பது இறைவனளித்த பெயராகலின் அதனையே அவர் நாமம் என்றார். நாயினேனை நலமலி தில்லையுட், கோலமார்தரு பொதுவினில் வருக என இறைவன் பணித்த காரணங்களில் இதுவும் ஒன்றோவெனக் கருதின ரென்பார், நாதன் அறக்கருணை இதுவோ வென்று புக்கிருந்தார் என்றார் மன்னும் துறக்கமும் நீத்து அருவருத்தமையை, “ வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்து மிரேன்” என்றற்றொடக்கத்தனவாக அடிகள் திருவாசகத்தில் அருளிச்செய்த லானறிக. (100) மேற்படி வேறு தத்துநீர்க் கலத்திற் போந்த சீவரப் போர்வை தாங்கும் புத்தரை வேறு வைத்துப் புகன்மினும் மிறையு நூலும் அத்தலை நின்றோ செய்துங் கதியுமென் றாய்ந்த கேள்வி மெய்த்தவ நெறிமா ணிக்க வாசகர் வினவி னாரே. (இ-ள்.) தத்தும் நீர்க்கலத்தில் போந்த - அலைகள் தாவும் கடலில் மரக்கலத்தில் வந்த, சீவரப்போர்வை தாங்கும் - கடுக்காய் நீரிற்றோய்த்த போர்வையைத் தாங்கும், புத்தரை வேறு வைத்து - புத்தர்களை வேறாக இருத்தி, நும் இறையும் நூலும் அத்தலை நின்றோர் எய்தும் கதியும் புகல்மின் என்று - நுமது கடவுளையும் நூலையும் அந்நெறியில் நின்றவர் செல்லுங் கதியையும் கூறுங்களென்று, ஆய்ந்த கேள்வி - ஆராய்ந்த கேள்வியினையும், மெய்த்தவ நெறி - உண்மைத்தவ வொழுக்கத்தையுமுடைய, மாணிக்கவாசகர் வினவினார் - மணிவாசகனார் வினாவியருளினர். சீவரப் போர்வை - மருதந்தளிர் கூறிய துவர்நீரிற்றொய்த்த போர்வை என்றும் கூறுவர். நூல் - கடவுள் கூறிய முதனூல். அத்தலை - அந்நூல்வழி. (101) கனவினு நீறு காணாக் கைதவர் காட்சி யானும் மனவனு மானத் தானும் வாசகப் பெருமான் றம்மை வினவிய மூன்று முத்தே சாதியின் விரித்தார் வேதம் அனையவர் கேட்டம் மூன்று மனுவாதஞ் செய்துட் கொள்ளா. (இ-ள்.) கனவினும் நீறுகாணாக் கைதவர் - கனவிலும் திருநீற்றைக் காணாத வஞ்சகராகிய அப்பத்தர்கள், காட்சியானும் மன அனுமானத் தானும் - காட்சியளவையினாலும் கருதலளவையினாலும், வாசகப் பெருமான் தம்மை வினவிய மூன்றும் - மணிவாசகப் பெருமானார் தம்மைக் கேட்ட மூன்றையும், உத்தேச ஆதியின் விரித்தார் - உத்தேச முதலியவற்றால் விரித்துக் கூறினர்; வேதம் அனையவர் கேட்டு - மறைபோல்வாராகிய அடிகள் கேட்டு, அம்மூன்றும் அனுவாதம் செய்து உட்கொள்ளா - அம்மூன்றினையும் அனுவதித்து மனத்துட் கொண்டு. புத்தர்கட்குக் காட்சியும் அநுமானமுமே பிரமாண மாதலால் ‘காட்சியானு மனவநுமானத்தானும்’ என்றார். மனத்தாற் கருதியறிதலே அநுமானம் என்பார் ‘மனவனு மானத்தானும்’ என்றார் என்க. வினவிய மூன்று - இறை, நூல், கதி என்பன. உத்தேசாதியின் - உத்தேசம், இலக்கணம், பரீக்கை என்பனவற்றால்.; உத்தேசம் - கூறும் பொருளைப் பெயர் மாத்திரையான் எடுத்தோதல்: இலக்கியம், இலக்கணம் - சிறப்பியல்பு; அவ்வியாத்தி அதிவியாத்தி அசம்பவம் என்னும் முக்குற்றங்களும் இல்லாத தன்மை. பரீக்கை - இலக்கியத்தில் இலக்கணம் உளதாதலை ஆராய்தல். உத்தேசாதி, தீர்க்கசந்தி. அறிவு நிறைவானும், தூய்மையானும் வேதத்தை உவமை கூறினார். அனுவாதஞ்செய்தல் - பிறர் கூறியவற்றை ஒருபயன் நோக்கித் தான் எடுத்து மொழிதல். ஆதியுத்தேசத்தானு மிலக்கணவமைதியானும் சோதனை வகைமையானுஞ் சொன்ன நூலனுவாதித்து என்னும் தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப்படலச் செய்யுளுரையில் உரைத்தமையுங் காண்க. (102) இன்றிவர்க் கனுமா னாதி யெடுப்பதென் னென்று காட்சி ஒன்றுகொண் டவர்க டாமே யுடம்படன் மறுத்தார் காட்சி அன்றியே தின்மை யாலே யனுமான வளவை யாலும் நின்றவன் றுங்கோ னாதி நிறுத்திய மூன்று மென்றார். (இ-ள்.) இன்று இவர்க்கு அனுமான ஆதி எடுப்பது என் என்று- இப்பொழுது இவர்கட்குக் கருதல் முதலிய அளவைகளை எடுத்துக் கூறுதல் எதற்கு என்று கருதி, காட்சி ஒன்று கொண்டு காட்சியளவை ஒன்றினாலே, அவர்கள் தாமே உடம்படல் மறுத்தார் - அவர்களே உடம்படுமாறு மறுத்து, காட்சி அன்றி ஏது இன்மையாலே - காட்சியளவை இன்றி ஏது இல்லையாகலின், உங்கோன் ஆதி நிறுத்திய மூன்றும் - உமது கடவுள் முதலாக நீர் நிலைநிறுத்திய மூன்றும், அனுமான அளவையாலும் நின்ற அன்று என்றார் - கருதலளவை யாலும் நின்றன அல்ல என்று கூறியருளினார். அனுமானாதி - அனுமானமும் உரையளவையும் உடம்படல் - உடம்படுங் கொள்கையை என்றுமாம். இறை முதலிய மூன்றும் காட்சிக் கெய்தாமையின் காட்சியளவையானும், காட்சியின்றி அனுமானத்திற்குச் சிறந்த கருவியாகிய ஏது பெறப்படாமையின் அனுமானவளவையானும் அவர் அவற்றை நிறுவலாகாமையுணர்க. தீக்கும் புகைக்குமுள்ள உடனிகழ்ச்சியை அடுக்களை முதலியவற்றிற் கண்டிருந்தாலன்றி இம்மலை தீயுடைத்து; புகையுடைமையால் என அனுமானித்தல் செல்லாதென்க. புத்தர் கூறும் இறை முதலிய மூன்று பொருள்களின் இயல்பினையும், சைவர்களால் அவை மறுக்கப்படுமாற்றையும் சிவஞான சித்தியார் பரபக்கத்திற் காண்க. (103) பொன்றுதன் முத்தி யென்பார் பூசுரர் பிரானை நோக்கி இன்றெமைக் காட்சி யொன்றால் வென்றன மென்றீ ரானால் நன்றுநுங் கடவு டன்னை யளவையா னாட்டி யெம்மை வென்றிடு மென்றா ரைந்தும் வென்றவர் முறுவல் செய்யா. (இ-ள்.) பொன்றுதல் முத்தி என்பார் - பஞ்சகந்தங் கெடுதலே வீடுபேறு என்னும் அப்புத்தர்கள், பூசுரர் பிரானை நோக்கி - அந்தணர் பெருமானாகிய அடிகளை நோக்கி, இன்று எமைக்காட்சி ஒன்றால் வென்றனம் என்றீர் ஆனால் - இப்பொழுது எங்களைக் காட்சியளவை ஒன்றினாலே வென்றோமென்று கூறினீராயின், நன்று - நல்லது, நும் கடவுள் தன்னை அளவையால் நாட்டி - நுமது கடவுளை அளவையால் நிலைநாட்டி, எம்மை வென்றிடும் என்றார் - எங்களை வெல்லும் என்று கூறினார்; ஐந்தும் வென்றவர் முறுவல் செய்யா - ஐம்புலன்களையும் வென்றவராகிய மணிவாசகர் நகைத்து. உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, அறிவு என்னும் ஐந்து கந்தங்களும் பொன்றக் கெடுதலே முத்தியென்பர் புத்தராகலின் பொன்றுதல் முத்தி யென்பார் என்றார்; “ ஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பி னோடும் தாங்குபா வனைவிஞ் ஞானந் தாமிவை யைந்துங் கூடிப் பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம் ஆங்கவை பொன்றக் கேடா யழிவது முத்தி யின்பம்” என்னும் சிவஞானசித்தியாரின் பராபரக்கன்னியில்ச் செய்யுள் காண்க. நன்று என்பது அனுவதித்தற் குறிப்பாக வழங்குவது. ஐந்தும் : தொகைக் குறிப்பு. (104) பிறவியந் தகர்க்கு வெய்யோன் பேரொளி காட்ட லாமோ மறைகளா லளவை தன்னாற் றேவரான் மனத்தால் வாக்கால் அறிவருஞ் சோதி யெங்கோ னவன்றிரு நீற்றுத் தொண்டின் குறிவழி யன்றிக் காணுங் கொள்கையா னல்ல னென்றார். (இ-ள்.) பிறவி அந்தகர்க்கு வெய்யோன் பேர் ஒளி காட்ட லாமோ - பிறவிக்குருடர்க்குச் சூரியனது பெரிய ஒளியினைக் காட்டலொண்ணுமோ, மறைகளால் அளவைதன்னால் - மறைகளாலும் அளவைகளாலும், தேவரால் மனத்தால் வாக்கால் அறிவரும் சோதி எங்கோன் - தேவர்களாலும் மனத்தாலும் மொழியினாலும் அறிதற்கரிய ஒளிவடிவினன் எமது இறைவன்; அவன் - அவ்விறைவன், திருநீற்றுத் தொண்டின் குறிவழி அன்றி - திருநீற்றுத் தொண்டாகிய குறி வழியே நிற்பார்க்கு அல்லாமல், காணும் கொள்கையான் அல்லன் என்றார் - ஏனையோராற் காணுந் தன்மையையுடையனல்லான் என்று கூறினர். அளவை - காட்சி முதலியன. எண்ணும்மைகள் தொக்கன. அடியார்க்கு அடியாராதலைத் ‘திருநீற்றுத் தொண்டு’என்றார். (105) தேற்றமில் லாத ருங்கள் சிவனுக்குந் திருநீற் றுக்குந் தோற்றமெப் படித்திட் டாந்தஞ் சொல்லுமி னென்றார் தூயோர் வேற்றுமை யறநா மின்னே விளக்குது மதனை நீங்கள் தோற்றபி னுமக்குத் தண்டம் யாதுகொல் சொன்மி னென்றார். (இ-ள்.) தேற்றம் இல்லாதார் - தெளிவில்லாத அப்புத்தர்கள், உங்கள் சிவனுக்கும் திருநீற்றுக்கும் - உங்கள் சிவபெருமானுக்குந் திருநீற்றுக்கும் உள்ள இயைபுக்கு, தோற்றம் எப்படி திட்டாந்தம் சொல்லுமின் என்றார் - காட்சியளவை யாது உதாரணஞ் சொல்லுங் களென்றார்; தூயோர் - புனிதராகிய அடிகள், நாம் இன்னே அதனை வேற்றுமை அற விளக்குதும் - நாம் இப்பொழுதே அதனை வேற்றுமை நீங்க விளக்கிக் காட்டுவோம்; நீங்கள் தோற்றபின் - நீவிர் தோல்வியுற்ற பின்னர், நுமக்குத் தண்டம் யாது கொல் சொல்மின் என்றார் - நுமக்குத் தண்டனை யாது சொல்லுங்களென்று வினவினார். திருட்டாந்தம் எனற்பாலது விகாரமாயிற்று. திருட்டாந்தம் - காணப்பட்ட முடிபுடையது. உதாரணம், கொல்: அசை. (106) செக்குர லிடையிட் டெம்மைத் திரிப்பது தண்ட மென்னா எக்கராம் புத்தர் தாமே யிசைந்தன1 ரெரிவாய் நாகங் கொக்கிற கணிந்தா ரன்ப ருலர்ந்தகோ மயத்தை வாங்கிச் செக்கரந் தழல்வாய்ப் பெய்து சிவந்திட வெதுப்பி வாங்கி. (இ-ள்.) செக்கு உரலிடை எம்மை இட்டுத் திரிப்பது தண்டம் என்னா - செக்காகிய உரலின்கண் எம்மைப் போட்டுத் திரிப்பதுவே தண்டனை என்று, எக்கராம் புத்தர் தாமே இசைந்தனர் - இறுமாப்புடையராகிய புத்தர்கள் தாமே கூறி உடன்பட்டனர்; எரிவாய் நாகம் கொக்கு இறகு அணிந்தார் அன்பர் - நஞ்சினையுடைய வாயையுடைய பாம்பினையும் கொக்கினிறகினையும் அணிந்த சிவபெருமானுக்கன்பராகிய மாணிக்கவாசகர், உலர்ந்த கோமயத்தை வாங்கி - காய்ந்த கோமயத்தை எடுத்து, செக்கர் அம் தழல் வாய்ப்பெய்து - சிவந்த நெருப்பின்கண் போட்டு, சிவந்திட வெதுப்பி வாங்கி - அது சிவக்குமாறு எரித்து அதனை எடுத்து. எரி என்றது நஞ்சினை, கோமயம் - ஆவின் சாணம். செக்கர் - செம்மை: பண்புப் பெயர். (107) இவ்வண்ண மிருக்கு மெங்க ளிறைவண்ண வடிவு மந்தச் செவ்வண்ண மேனி பூத்த திருவெண்ணீ றதுவு மென்னா மெய்வ்வண்ண முணர்ந்த வேத வித்தக ரவைமுன் காட்ட உய்வ்வண்ண மறியா மூட ருள்ளமு முயிருந் தோற்றார். (இ-ள்.) எங்கள் இறை வண்ண வடிவும் - எங்கள் இறைவனது ஒளி பொருந்திய வடிவமும், அந்தச் செவ்வண்ணம் மேனி பூத்த - அந்தச் செவ்வொளியுடைய திருமேனியில் மலர்ந்த, திருவெண்ணீறு அதுவும் - திருவெண்ணீறும், இவ்வண்ணம் இருக்கும் என்னா - இவ்வாறு இருக்கும் என்று, மெய்வண்ணம் உணர்ந்த வேத வித்தக'fa- மெய்யின் தன்மை உண'faந்த அந்தணராகிய அடிகள், அவை முன் காட்ட - அவையோர் முன் காண்பிக்க, உய்வண்ணம் அறியா மூடர்- பிழைக்கும் நெறியினை அறியாத மூடர்களாகிய அப்புத்தர்கள், உள்ளமும் உயிரும் தோற்றார்- மன வூக்கத்தையும் உயிரையும் ஒருங்கே தோற்றனர். கோமயத்திற் பற்றிய தீயே திருமேனியாகவும், அத்தீயின் மேற்பூத்த நீறு திருமேனியிற் பூத்த நீறாகவும் இயைபு காட்டினர் என்க. அது, பகுதிப் பொருள் விகுதி. உள்ளம் - ஊக்கம். செக்கி லிட்டரைப்பது எனத் தாம் இசைந்தபடி உயிரிழப்பது திண்ண மாகலின் உயிருந் தோற்றார் என்றார். (108) இங்கிவர் தோற்ற வண்ணங் கேட்டவ ரிறப்ப தின்பந் தங்குவீ டென்று தேற்றுஞ் சமயத்தி லாழ்ந்த வாத்திக் கொங்கிவர் தாரான் மூங்கைக் குயிற்பெடை யெனத்தா னீன்ற மங்கையைக் கொண்டு தில்லை மல்லன்மா நகரில் வந்தான். (இ-ள்.) இங்கு இவர் தோற்றவண்ணம் கேட்டு - இங்கு இவர்கள் தோல்வியுற்ற தன்மையைக் கேட்டு, அவர் இறப்பது இன்பம் தங்கு வீடு என்று தேற்றும் சமயத்தில் - அப்புத்தர்களால் பஞ்சகந்தங் கெடுதலே இன்பம் நிலைபெற்ற வீடு என்று தேற்றப் படுஞ் சமயப் படுகுழியில், ஆழ்ந்த - அழுந்திய, ஆத்திக் கொங்கு இவர் தாரான் - ஆத்திமலராலாகிய மணம் விரிந்த மாலையை யணிந்த சோழன், மூங்கைக் குயில் பெடை எனத் தான் ஈன்ற - கூவாத பெண் குயில் போலத் தான் பெற்ற, மங்கையை 'd8 காண்டு- மங்கையை உடன் கொண்டு, தில்லை மல்லல்மா நகரில் வந்தான் - தில்லை யென்னும் வளமிக்க பெரிய பதியின்கண் வந்தனன். இறப்பது என்றது பஞ்சகந்தங் கெடுதலை. அவர் தேற்றும் சமயத்தில் எனக் கூட்டுக. மங்கையைக் குயிற்பெடை யெனக் கொண்டு என இயைத்தலுமாம். (109) யாவரே யாக வின்றிங் கென்மகண் மூங்கை தீர்த்தோர் ஆவரே வென்றோ ரென்றா னாற்றவு மானம் பூண்டு சாவதே முத்தி யென்பார் மணிமுதன் மூன்றுந் தங்கள் தேவரே யென்றென் றுள்கிச் செய்யவுந் தீரா தாக. (இ-ள்.) யாவரே ஆக - யாவராயினுமாக, இன்று - இப்பொழுது, இங்கு என் மகள் மூங்கை தீர்த்தோர் ஆவரே - இவ்விடத்தில் என் புதல்வியின் மூங்கையைத் தீர்த்தவரே, வென்றோர் என்றான் - வெற்றி பெற்றவர் என்று கூறினன்; சாவதே முத்தி என்பார் - பஞ்சகந்தங் கெடுதலே வீடு என்று கூறும் அப்புத்தர், ஆற்றவும் மானம் பூண்டு - மிகவும் மானத்தை மேற்கொண்டு, மணி முதல் மூன்றும் தங்கள் புத்தரே என்று என்று உள்கி - மணி முதலிய மூன்றும் தங்கள் புத்தரே என்று பன்முறையுங் கருதி, செய்யவும் தீராதாக -வேண்டுவன புரியவும் அது நீங்காதாக. வென்றோர் ஆவரே எனக் கூட்டியுரைத்தலும் ஆம். சாவதே முத்தி யென்பார் - ஐங்கந்தம் அழிதலே முத்தியென்பார்; எள்ளுங் கருத்தால் இங்ஙனங் கூறினார். மணி முதல் மூன்று - மணி, மந்திரம், மருந்து. தங்கள் தேவரே மெய்த் தேவரென்று உள்கி மூன்றும் செய்யவும் என்றுரைத்தலுமாம். (110) அந்தணர் பெருமான் முன்போ யரசன்றன் மகளைப் போகட் டிந்தநோய் நீரே தீர்க்க வேண்டுமென் றிரந்தா னையன் சுந்தர நாதன் மன்று ளாடிய துணைத்தா டன்னைச் சிந்தைசெய் தருட்க ணோக்காற் றிருந்திழை யவளை நோக்கா. (இ-ள்.) அந்தணர் பெருமான் முன் அரசன் போய் - அந்தணர் பிரானாகிய அடிகளின் முன் அரசன் சென்று, தன் மகளைப் போகட்டு - தன் புதல்வியை இருத்தி, இந்த நோய் நீரே தீர்க்க வேண்டும் என்று இரந்தான் - இந்தப் பிணியினை அடிகளே நீக்கவேண்டு மென்று குறையிரந்தான்; ஐயன் - அடிகள், சுந்தர நாதன் மன்றுள் ஆடிய துணைத்தாள் தன்னைச் சிந்தை செய்து - சோம சுந்தரக் கடவுளின் மன்றுளாடும் இரண்டு திருவடிகளையும் மனத்திலிருத்தி, அருள் கண்நோக்கால் திருந்து இழை அவளை நோக்கா - அருட் பார்வையினால் திருத்தமாகிய அணிகளையணிந்த அம்மங்கையை நோக்கி. போகட்டு - போட்டு, கிடத்தி. ஐயனாகிய சுந்தர நாதன் என்று மாம். திருவாலவாயில் எழுந்தருளிய பெருமானே தில்லை மன்றுள் நடிப்பவரும் என்று கருதினாரென்பார், ‘சுந்தரநாதன் மன்றுளாடிய துணைத்தாள் தன்னைச் சிந்தை செய்து’என்றார். (111) வேறுவே றிறைவன் கீர்த்தி வினாவுரை யாகப் பாடி ஈறிலா னன்பர் கேட்ப விறைமொழி கொடுத்து மூங்கை மாறினாள் வளவன் கன்னி மடவரல் வளவன் கண்டு தேறினான் சிவனே யெல்லாத் தேவர்க்குந் தேவ னென்னா. (இ-ள்.) இறைவன் வேறு வேறு கீர்த்தி - இறைவனது வேறு வேறாகவுள்ள புகழ்களை, வினா உரையாகப் பாடி - வினா மொழியாகப் பாடி, ஈறு இலான் அன்பர் கேட்ப - முடிவில்லாத அப்பெருமானுக்கு அன்பராகிய வாதவூரடிகள் கேட்க, வளவன் கன்னி மடவரல் - சோழன் புதல்வியாகிய அந்நங்கை, இறைமொழி கொடுத்து மூங்கை மாறினாள் - அவற்றுக்கு மறுமொழி கொடுத்து மூங்கைத் தன்மை நீங்கினாள், வளவன் கண்டு - சோழன் அதனைப் பார்த்து, சிவனே எல்லாத் தேவர்க்கும் தேவன் என்னாத் தேறினான் சிவபெருமானே எல்லாத் தேவர்களுக்கும் தேவனாவ னென்று தெளிந்தான். ஈறிலான் - சுட்டு. இறை - விடை. வாதவூரடிகள் தாம் வினாவியவற்றையும் அந் நங்கையின் விடைகளையும் ‘திருச்சாழல்’ என்னும் பதிகமாகப் பாடியருளினார் என்க. “ பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதுந் திருவாயான் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை ஈசனவ னெவ்வுயிர்க்கு மியல்பானான் சாழலோ” என்னும் பாட்டில் முன்னிரண்டடியும் வினாவாகவும் பின்னிரண் டடியும் விடையாகவும் கொள்க. (112) பின்பர வாரம் பூண்ட பிரானருள் விளையப் பாடும் அன்பரை முனிவர் மூவா யிரவரை யடியிற் றாழ்ந்து முன்பவர் சொன்ன வாறே மூர்க்கரைத் தடிந்து மன்றுள் இன்பரை நடங்கண் டேத்தி யிறைமகன் சைவனானான். (இ-ள்.)பின்பு - பின், அரவு ஆரம் பூண்டபிரான் அருள் விளையப் பாடும் அன்பரை - பாம்பை ஆரமாக அணிந்த ஆண்டவனது திருவருள் விளையுமாறு பாடும் அன்பராகிய மாணிக்கவாசகரையும், முனிவர் மூவாயிரவரை - அந்தணர் மூவாயிரவரையும், அடியில் தாழ்ந்து - அடிகளில் வீழ்ந்து வணங்கி, மூர்க்கரை அவர் முன்பு சொன்னவாறே தடிந்து - மூர்க்கர்களாகிய புத்தர்களை அவர் முன் சொல்லியபடியே ஒறுத்து, மன்றுள் இன்பரை - பொதுவிலாடும்இன்ப வடிவினரை, நடம் கண்டு ஏத்தி - அவர் திருக்கூத்தினைக் கண்டு வழுத்தி, இறைமகன் சைவன் ஆனான் - சோழமன்னன் சைவனாயினன். அடியிற்றாழ்ந்து என்பது ஒரு சொல்லாய் அன்பரை மூவாயிர வரை என்பவற்றுக்குத் தனித்தனி முடிபாயிற்று. அவர் சொன்ன வாறே - அப்புத்தர்கள் தாமே சொன்னவாறு, கொண்டதுவிடார் என்பார் ‘மூர்க்கரை’ என்றார். சைவனாகி அடியிற்றாழ்ந்து ஏத்தினான் என்று கருத்துக்கொள்க. மாணிக்கவாசகர் பணியால் நாமகள் புத்தர்களின் நாவை விட்டகல அவர்கள் மூகையானமை அறிந்த ஈழத்தரசன் தனது ஊமைப் பெண்ணை அழைத்து அவளது ஊமைத் தன்மையைத் தீர்க்குமாறு வேண்ட அவர் அங்ஙனமே புத்தர் கூறிய தருக்கத்திற் கெல்லாம் அப்பெண் மாறு கூறுமாறு செய்து ஊமை தீர்த்தனர் என்றும், அதனை அறிந்து ஈழமன்னன் சைவனாயினான் என்றும், புத்தர்களின் ஊமைத் தன்மையையும் இங்ஙனமே தீர்த்தருளுமாறு ஈழத்தரசனம், சோழ மன்னனும் முதலாயினார் வேண்டிக் கொள்ள அடிகள் அவர்களது மூகையையும் போக்கினர் என்றும், பின் புத்தரெல்லாரும் சிவவேடம் பூண்டு சைவராயினர் என்றும் திருவாதவூரடிகள் புராணம் கூறும். (113) மாசறு மணிபோற் பன்னாள் வாசக மாலை சாத்திப் பூசனை செய்து பன்னாட் புண்ணிய மன்று ளாடும் ஈசன தடிக்கீ ழெய்தி யீறிலா வறிவா னந்தத் தேசொடு கலந்து நின்றார் சிவனருள் விளக்க வந்தார். (இ-ள்.) சிவன் அருள் விளக்க வந்தார் - சிவபெருமான் திருவருளை விளக்கிக் காட்ட வந்த வாதவூரடிகள், பலநாள் மாசு அறுமணி போல் வாசகமாலை சாத்தி - பலநாள் வரை குற்றமற்ற மாணிக்க மாலை போலும் திருவாசக மாலையைச் சாத்தி, பல்நாள் பூசனைசெய்து - பன்னாட்கள்வரை வழிபாடு செய்து, புண்ணிய மன்றுள் ஆடும் ஈசனது அடிக்கீழ் எய்தி - அறவடிவாகிய அம்பலத்தி லாடியருளும் திருக் கூத்தனது திருவடி நிழலை அடைந்து, ஈறு இலா அறிவு ஆனந்தத் தேசொடு கலந்து நின்றார் - அழிவில்லாத சிவானந்த ஒளியுடன் கலந்து நின்றருளினார். மணிபோலும் வாசகங்களாகிய மாலை என விரித்தலுமாம். மாணிக்கவாசகர் தில்லைப்பதியிலே மற்றும் பற்பல திருப்பதிகங்கள் பாடியருளிப் பன்னசாலையில் எழுந்தருளி யிருக்கும்போது, இறைவர் ஒரு மறையோர் கோலந்தாங்கி வந்து, ‘யாமிருப்பது பாண்டிநாடு; மாலும் அயனும் காணவரிய இறைவரைப் பரி மீதேறிவரச் செய்த நும் பெருமையாலே பாண்டி நாடு பெரு வாழ்வுற்றது; நீர் திருப் பெருந்துறையில் ஐயன் திருவடியைச் சேவித்துத் திருக்கழுக்குன்றம் சென்று தில்லை மன்றடைந்து புத்தரை வாதில் வென்றீர் என்பது கேட்டு யாவரும் மகிழ்ச்சி யடைந்தனர்; நீர் அன்பினாலே இறைவனைப் பாடிய பாடல்களை ஓதவெண்ணி இங்கு வந்தனம்; அவற்றை விளங்கச் சொல்லியருளும்’ என வேண்ட, அவரும் உவந்து தாம் பாடிய திருவாசகம் முழுதும் சொல்ல ஐயர் அவற்றை யெல்லாம் ஏட்டிலெழுதிக் கொண்டு, பின்னும் அவரை நோக்கி, “நீர் திருச்சிற்றம் பலமுடைய பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ஓர் அகப்பொருட் கோவை பாட வேண்டும்” என்று கூறி, அங்ஙனமே அவர் பாடிய கோவையையும் எழுதிக் கொண்டு மறைந்தனர்; மாணிக்கவாசகர் வந்தவர் இறைவ ரென்றறிந்து அன்பினால் அகங்குழைந்தழுது ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார்; மறைந்தருளிய இறைவர் தாம் எழுதிய திருவாசக திருக்கோவைத் திருமுறை முடிவில் ‘மாணிக்கவாசகர் கூற எழுதிய இத்திருமுறை அழகிய திருச்சிற்றம்பல முடையார் எழுத்து’ என்று கைச்சாத்திட்டு மைக்காப்புச் சேர்த்துத் திருவம்பலத்தின் வாயிற் படியில் வைத்தருளினார்: திருவாயிற்படியில் வைத்த திரு முறையைக் கண்ணுற்ற தில்லை மூவாயிரவரும் வியப்புடன் அதனை யெடுத்துப் படித்து, முடிவில் திருச்சிற்றம்பல முடையார் கைச்சாத்திட்டிருந்ததனையும் கண்டு அளவிலா ஆனந்தங்கொண்டு, அத்திருமுறையின் பொருளையறிய விரும்பி வாதவூரடிகளை அடைந்து, அங்கு நிகழ்ந்தவற்றைக் கேள்வியுற்று மனங்களி கூர்ந்து நீர் பெருமான்மீது பாடிய இத் தமிழ் மாலைக்குப் பொருள் தெரித்தருள்வீராக என வேண்ட, மாணிக்கவாசகப் பிரானும் அவர்கள் உடன்வரச் சென்று பொன்னம்பலத்தை அடைந்து ‘இத் தமிழ் மாலைப் பொருளாவார் இவரே’ என அங்குத் திருநிருத்தம் புரியும் இறைவரைக் காட்டி, யாவருங் காணத் திருவடி நீழலிற் கலந்தருளினர்; என்று திருவாதவூரடிகள் புராணம் கூறுவது அறியற்பாலது. (114) ஆகச் செய்யுள் 3105. அறுபத்திரண்டாவது பாண்டியன் சுரந்தீர்த்த படலம் (அறுசீரடி யாசிரிய விருத்தம்) வான லமுத மதிமுடிமேன் மதுரைப் பெருமான் மண்சுமந்து தேன லமுத வாசகரைக் கதியில் விடுத்த திறனிதுமேற் பானன்மணிவாய்க் கவுணியனை விடுத்துச் சமணர் படிற்றொழுகுங் கூனல் வழுதி சுரந்தணித்தாட் கொண்ட கொள்கை கூறுவாம். (இ-ள்.) மதுரைப் பெருமான் - திருவாலவாயில் எழுந்தருளிய சோம சுந்தரக் கடவுள், வான் நல் அமுத மதி முடிமேல் - வானின் கண் உலவும் குளிர்ந்த அமிழ்தினையுடைய சந்திரனைத் தரித்த முடியின் மேல், மண் சுமந்து - மண்ணைச் சுமந்து, தேன் நல் அமுத வாசகரை - தேனும் அமிழ்தமும் போலும் இனிய திருவாசக முடைய மணிவாசகனாரை, கதியில் விடுத்த திறன் இது - வீட்டுலகிற் செலுத்திய திருவிளையாடல் இது; மேல் - இனி, பால் நல்மணிவாய்க் கவுணியனை விடுத்து - பால் மண மறாத நல்ல அழகிய திருவாயினையுடைய ஆளுடைய பிள்ளையாரை விடுத்து, சமணர் படிற்று ஒழுகும் கூனல் வழுதி சுரம் தணித்து - சமணர்களின் பொய் நெறியில் ஒழுகும் கூன் பாண்டியனுடைய வெப்பு நோயைத் தணித்து, ஆட் கொண்ட கொள்கை கூறுவாம் - அடிமை கொண்டருளிய திருவிளையாடலைக் கூறுவோம். வான் அல் எனப் பிரித்து இரவில் இயங்கும் மதி என்பாருமுளர். சுவை மிகுதியால் தேனையும் உறுதி பயத்தலால் அமிழ்தையும் போலும் வாசகம் என்க. “ பானல் வாயொரு பாலனீங்கிவ னென்றுநீ பரிவெய்திடேல்” என்று பிள்ளையார் மங்கையர்க்கரசியாரை நோக்கிக் கூறுதலானும் பால் மணம் நீங்காத வாய் என்பது கடைப்பிடிக்க. கவுணியன் என்றது கோத்திரத்தாற் பெற்ற பெயர். இது பிள்ளையார் புரிந்த செயலேனும் இறைவனருள் பெற்றுச் சென்று செய்தமையின் இறைவனது திருவிளையாடலாகக் கொண்டு கவுணியனை விடுத்து வழுதி சுரந்தணித்தாட் கொண்ட என்று கூறினார். (1) வாகு வலத்தான் சகநாத வழுதி வேந்தன் மகன்வீர வாகு வவன்சேய் விக்கிரம வாகு வவன்சேய் பராக்கிரம வாகு வனையான் மகன்சுரபி மாற1 னனையான் றிருமைந்தன் வாகு வலத்தான் மறங்கடிந்து மண்ணா ளுங்குங் குமத்தென்னன். (இ-ள்.) வாகுவலத்தான் சகநாத வழுதி வேந்தன் மகன் - தோள் வலியுடையானாகிய சகநாத பாண்டிய மன்னன் புதல்வன், வீரவாகு - வீரவாகு என்பான்; அவன் சேய் விக்கிரமவாகு - அவன் மகன் விக்கிரமவாகு என்பான்; அவன் சேய் பராக்கிரமவாகு - அவன் புதல்வன் பராக்கிரமவாகு என்பான்; அனையான் மகன் சுரபிமாறன் - அவன் சேய் சுரபிமாறனென்பான்; அனையான் திருமைந்தன் - அவனது அழகிய புதல்வன், வாகுவலத்தால் மறம் கடிந்து - தனது தோள் வலியினால் தீமையைப் போக்கி, மண் ஆளும் குங்குமத் தென்னன் - நிலவுலகை ஆளுங் குங்கும பாண்டியனென்பான். சகநாதவழுதி அரிமருத்தனன் மகனென்பது முற்படலத்தாற் பெறப்பட்டது. (2) அன்னான் குமரன் கருப்புரபாண் டியனா மவன்சேய் காருணிய மன்னா மவன்றன் மகன் புருடோத் தமனா மவன்றன் மகனாகும் மின்னார் மெளலிச்1 சத்துருசா தனபாண் டியனாம் விறல்வேந்தன் இன்னான் மகன்கூன் பாண்டியனா மிவன்றோள் வலியா லிசைமிக்கான். (இ-ள்.) அன்னான் குமரன் கருப்புர பாண்டியனாம் - அவன் மகன் கருப்பூர பாண்டியனாவான்; அவன் சேய் காருணிய மன்னாம் - அவன் புதல்வன் காருணிய பாண்டியனாவான்; அவன்தன் மகன் புருடோத்தமனாம் - அவன் மகன் புருடோத்தம பாண்டியனாகும்; அவன் தன் மகனாகும் - அவன் மகனாவான், மின் ஆர் மெளலிச் சத்துரு சாதன பாண்டியனாம் - ஒளி நிறைந்த முடியினையுடைய சத்துரு சாதன பாண்டியனாகிய, விறல் வேந்தன் - வெற்றியையுடைய மன்னன்; இன்னான் மகன் கூன் பாண்டியனாம் - இவன் புதல்வன் கூன்பாண்டியனென்பான்; இவன் தோள் வலியால் இசை மிக்கான் - இவன் தனது தோள் வலியினால் மிக்க புகழுடையனாயினான். தன் என்பன அசைகள் (3) திண்டோள் வலியாற் குடநாடார் செம்ம றனையு மாரலங்கல் வண்டோ லிடுதா ரிரவிகுல மருமான்றனையு மலைந்துபுறங் கண்டோர் குடைக்கீழ் நிலமூன்றுங் காவல் புரிந்து கோலோச்சிப் புண்டோய் குருதி மறக்கன்னிப் புகழ்வேல் வழுதி நிகழ்நாளில். (இ-ள்.) திண் தோள் வலியால் குடநாடார் செம்மல் தனையும் - திண்ணிய தோளின் வலியால் மேற் புலத்தார் மன்னனாகிய சேரனையும், ஆர் அலங்கல் வண்டு ஓலிடுதார் இரவிகுல மருமான் தனையும் - ஆத்தி மாலையில் வண்டுகள் ஒலிக்கும் வரிசையை யுடைய சூரியகுலத் தோன்றலாகிய சோழனையும், மலைந்து புறம் கண்டு - போர் புரிந்து புறங்கண்டு, ஓர் குடைக்கீழ் நிலமூன்றும் காவல்புரிந்து - ஒரு குடை நீழலில் இம்மூன்று நிலங்களையும் காத்து, கோல் ஓச்சி - செங்கோல் நடாத்தி, புண்தோய் குருதி - பகைவருடலிற்பட்ட புண்ணின் குருதியிற்றோய்ந்த, மறக்கன்னி - கொற்றவை வாழும், புகழ்வேல் - புகழ் பொருந்திய வேலையுடைய, வழுதி நிகழ் நாளில் - பாண்டியன் அரசு புரிந்து வரும் நாளில். குடநாடு - மலைநாடு. அலங்குதலையுடைய ஆர்த்தார் என்னலுமாம்; அலங்கல் - அசைதல். மருமான் - வழித்தோன்றல். குருதியையுடைய வேல், மறக்கன்னி வாழும் வேல், புகழ்வேய் எனத் தனித்தனி இயைக்க. வேலில் கொற்றவை வாழும் என்பர். (4) விண்டு ழாவுங் கைம்மாவும் வெறுக்கைக் குவையுமணிக் குவையும் வண்டு வீழுந் தாரளக் வல்லி யாய மொடுநல்கிக் கண்டு கூடற் கோமகனைக் காலில் வீழ்ந்து தன்னாடு பண்டு போலக் கைக்கொண்டு போனான் றேனார் பனந்தாரான். (இ-ள்.) தேன் ஆர் பனந்தாரான் - தேன் நிறைந்த பனம்பூ மாலையை யணிந்த சேரன், கூடல் கோமகனைக் கண்டு - கூடற்றலைவனாகிய கூன் பாண்டியனை நேரிற் கண்டு, காலில் வீழ்ந்து - அவன் காலில் வீழ்ந்து வணங்கி, விண்துழாவும், கைம்மாவும் - மேகத்தைத் துழாவும் துதிக்கையினையுடைய யானைகளையும், வெறுக்கைக் குவையும் - பொற் குவியல்களையும், மணிக்குவையும் - மணிக் குவியல்களையும், வண்டு வீழும் தார் அளகவல்லி ஆயமோடு நல்கி- வண்டுகள் மொய்க்கும் மாலையை யணிந்த கூந்தலையுடைய கொடிபோன்ற பெண்கள் கூட்டத்தையுங் கொடுத்து, தன் நாடு - தனது நாட்டினை, பண்டுபோலக் கைக்கொண்டு போனான் - முன்போலப் பெற்றுக் கொண்டு சென்றனன். குவை- திரள். கைம்மா முதலியவற்றைத் திறையாக நல்கினான். வல்லி ஆயம் - பரிசன மகளிர். கோமகனைக் கண்டு நல்கி வீழ்ந்து கைக்கொண்டு போனான் என்க. (5) சென்னிக் கோனுந் தானீன்ற திலகப் பிடியை யுலகமெலாம் மின்னிக் கோதில் புகழொளியால் விளக்குஞ் சைவ மணிவிளக்கைக் கன்னிக் கோல மங்கையருக் கரசி தன்னைக் கெளரியற்கு வன்னிக் கோமுன் மணம்புணர்த்தி வாங்கி னான்றன் வளநாடு. (இ-ள்.) சென்னிக்கோனும் - சோழ மன்னனும், தான் ஈன்ற திலகப் பிடியை - தான் பெற்ற திலதமணிந்த பெண்யானை போல் வாரும், கோது இல்புகழ் ஒளியால் - குற்றமற்ற புகழாகிய ஒளியினால், உலகமெலாம் மின்னி விளங்கும் சைவமணி விளக்கை - உலகமனைத்தையும் ஒளி வீசி விளக்குகின்ற சைவ மாணிக்க விளக்குப் போல்வாருமாகிய, கன்னிக்கோல மங்கையர்க்கரசி தன்னை - கன்னிப் பருவமுடைய அழகிய மங்கையர்க்கரசியாரை, கெளரியற்கு - அப்பாண்டியனுக்கு, வன்னிக் கோ முன் மணம் புணர்த்தி - தீக்கடவுள் முன்னே மணஞ் செய்து கொடுத்து, தன் வளநாடு வாங்கினான் - தனது வளப்ப மிக்க நாட்டினைப் பெற்றுக் கொண்டான். இதிற்கூறிய கெளரியனாகிய கூன் பாண்டியனுக்கு நெடுமாறன் என்பது பெயரென்பதும், இவன் நெல்வேலியில் நிகழ்ந்த போரிலே மாற்றாரை வென்றவன் என்பதும் “ நிறைக்கொண்ட சிந்தையா னெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்” என்னும் திருத்தொண்டத் தொகையால் அறியப்படும். இவ்வரசன் சேர சோழர்களை வென்று அடிப்படுத்தவன் என்பது இறையனாரகப் பொருளுரை மேற்கோட் செய்யுள்கள் முதலியவற்றால் அறியப் படுகின்றன. இவ்வேந்தனுடன் நெல்வேலியில் எதிர்த்த பகைஞர் தமிழ்நாட்டின் வடக்கிலுள்ளவர் என்பது, “ ஆயவர சளிப்பார்பா லமர்வேண்டி வந்தேற்ற சேயபுலத் தெவ்வரெதிர் நெல்வேலிச் செருக்களத்துப் பாயபடைக் கடன்முடுகும் பரிமாவின் பெருவெள்ளம் காயுமதக் களிற்றினிரை பரப்பியமர் கடக்கின்றார்” “ இனையகடுஞ் சமர்விளைய விகலுழந்த பறந்தலையிற் பனைநெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குடைந்து முனையழிந்த வடபுலத்து முதன்மன்னர் படைசரியப் புனையுநறுந் தொடைவாகை பூழியர்வேம் புடன்புனைந்து” என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுட்களாலும், சாசனங் களாலும் அறியப்படுகின்றது. அரிகேசரி மாறவன்மன் என்று கூறப்படும் இந்நெடுமாறன் கி.பி.667-க்கு முன் ஆட்சி புரிந்தோன் என்பது சாசனங்களால் அறியப்படுதலின் இவனுடன் நெல்வேலியில் எதிர்த்த வடபுல வேந்தன் சளுக்க மன்னனாகிய இரண்டாம் புலிகேசியோ, அன்றி அவன் மகனாகிய முதலாம் விக்கிரமாதித்தனோ ஆதல் வேண்டும் என்க. மங்கையர்க்கரசியார் சோழன் மகளார் என்பதும் மானி என்னும் பெயருடையார் என்பதும் “ மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி” என்னும் திருஞான சம்பந்தர் திருவாக்கானும், பெரிய புராணம் முதலியவற்றானும் பெறப்படும். (6) மேற்படி வேறு வளவர்கோன் செழியன் கற்பின் மங்கையர்க் கரசி யாருக் களவறு நிதியுஞ் செம்பொற் கலிங்கமு மணியும் போகம் விளைநில மனைய வாய வெள்ளமும் பிறவுந் தென்னன் உளமகிழ் சிறப்ப வேந்தர் வரிசையா லுதவிப் பின்னர். (இ-ள்.) வளவர் கோன் - சோழ மன்னன், செழியன் கற்பின் மங்கையர்க்கரசியாருக்கு - பாண்டியன் வாழ்க்கைத் துணையாகிய கற்பினையுடைய மங்கையர்க்கரசியாருக்கு, அளவு அறுநிதியும் - அளவற்ற திரவியமும், செம்பொற் கலிங்கமும் - சிவந்த பொன்னாடைகளும், அணியும் - அணிகலங்களும், போகம் விளைநிலம் அனைய ஆயவெள்ளமும் பிறவும் - இன்பம் விளையும் நிலத்தினை யொத்த சேடியர் கூட்டமும் ஏனையவும், தென்னன் உளம் மகிழ் சிறப்ப - பாண்டியன் உள்ளங்களிகூர, வேந்தர் வரிசையால் உதவி - மன்னர் முறைப்படி கொடுத்து, பின்னர் - பின்பு. (7) கோதறு குணத்தின் மிக்க குலச்சிறை யென்பா னங்கோர் மேதகு கேள்வி யானை விடுத்தனன் மீண்டு தென்னன் காதலி யோடு காவற் கடவுள்1செம் பதுமக் கோயின் மாதரை மணந்து செல்வான்போல் வந்து மதுரை சேர்ந்தான். (இ-ள்.) கோது அறு குணத்தின் மிக்க குலச்சிறை என்பான் - குற்றமற்ற குணத்தினால் மேம்பட்ட குலச்சிறை என்னப்படும், ஓர் மேதகுகேள்வியானை அங்கு விடுத்தனன் - சிறந்த நூல்வல்லானொருவனை அங்கு விடுத்தான்; தென்னன் - கூன்பாண்டியன், செம்பதுமக்கோயில் மாதரை மணந்து செல்வான் - சிவந்த தாமரைக் கோயிலில் வீற்றிருக்குந் திருமகளை மணந்து செல்லும், காவற் கடவுள்போல் - காத்தற் கடவுளாகிய திருமாலைப் போல, காதலியோடு மீண்டு மதுரை வந்து சேர்ந்தனன். குலச்சிறையார் பாண்டி நாட்டிலுள்ள மணமேற்குடி என்னும் பதியிற் றோன்றியவ ரென்று, “ பன்னு தொல்புகழ்ப் பாண்டிநன் னாட்டிடைச் செந்நெ லார்வயற் றீங்கரும் பின்னயல் துன்னு பூகப் புறம்பணை சூழ்ந்தது மன்னு வண்மையி னார்மண மேற்குடி” “ அப்ப திக்கு முதல்வர்வன் றொண்டர்தாம் ஒப்ப ரும்பெரு நம்பியென் றோதிய செப்ப ருஞ்சீர்க் குலச்சிறை யார்திண்மை வைப்பி னாற்றிருத் தொண்டின் வழாதவர்” என்னும் பெரியபுராணச் செய்யுட்களாற் பெறப்படுகின்றது. மேதகு - மேன்மை பொருந்திய. கேள்வியானை அங்கு விடுத்தனன் என்க. (8) மலர்மகள் மார்பன் பொன்னின் மன்னவன் பயந்த தெய்வக் குலமக ளுடனே வந்த குலச்சிறை குணனுங் கேள்வித் தலைமையு மதியின் மிக்க தன்மையுந் தூக்கி நோக்கி நலமலி யமைச்ச னாக்கி நானிலம் புரக்கு நாளில். (இ-ள்.) மலர்மகள் மார்பன் - திருமகள் தங்கும் மார்பினை யுடைய பாண்டியன், பொன்னி மன்னவன் பயந்த - காவிரி நாடாளும் சோழமன்னன் பெற்றெடுத்த, தெய்வக்குல மகளுடனே வந்த - தெய்வத் தன்மை பொருந்திய மங்கையர்க்கரசியாருடனே வந்த, குலச்சிறை குணனும் கேள்வித் தலைமையும் - குலச்சிறையாரின் நற்குணங்களையும் நூற்கேள்வியின் சிறப்பினையும், மதியின் மிக்க தன்மையும் - இயற்கையறிவின் மேம்பட்ட தன்மையினையும், தூக்கி நோக்கி - சீர்தூக்கிக் கண்டு, நலம்மலி அமைச்சனாக்கி - அவரைத் தனக்கு நன்மை நிறைதற்கேதுவாகிய முதன் மந்திரியாக்கி, நானிலம் புரக்கும் நாளில் - புவியினைப் பாதுகாத்து வரும் நாளில். நிலம் ஆளுந் திருவுடை வேந்தன் காவற் கடவுள் அமிசம் என்பவாகலின் மலர் மகள் மார்பன் என்றார். “திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே யென்னும்” என்று பெரியார் கூறுதலுங் காண்க. அமைச்சராவார் இயற்கை மதி நுட்பமும் நூலறிவும் ஒருங்குடையராதல் வேண்டுமென்பது, “ மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை”” (திருக்குறள் - 636) என்னும் திருக்குறளால் பெறப்படுதல் காண்க. குறிஞ்சி முதலாக நான்கு பகுதிப் படுதலின் புவி நானிலம் எனப்படும். (9) வல்வினை வலியான் மெய்யில் வலியகூ னடைந்தான் போலக் கொல்வினை யிலராய் வஞ்சங் கொண்டுழன் றுடுத்த பாசம் வெல்வினை யறியா நக்க வேடர்சொல் வலையிற் பட்டு நல்வினை யுதவாத் தென்ன னான்மறை யொழுக்க நீத்தான். (இ-ள்.) வல்வினை வலியால் - தீவினையின் வன்மையால், வலிய மெய்யில் கூன் அடைந்தான் போல - திண்ணிய உடலிற் கூனை அடைந்தான் போல, கொல்வினை இலராய் வஞ்சம் கொண்டு உழன்று - கொல்லுதற்றொழில் இல்லாதவராய் வஞ்சகங் கொண்டு சுழன்று, உடுத்த பாசம் வெல்வினை அறியா - சூழ்ந்துள்ள பாசக் கட்டினை அறுக்கும் நற்கரும மறியாத, நக்க வேடர் சொல்வலையில் பட்டு - வெற்றரையினையுடைய அருகர்களின் சொல்வலையிற்பட்டு, நல்வினை உதவாத் தென்னன் - முன்னை நல்வினை வந்து உதவப் பெறாத பாண்டியன், நால்மறை ஒழுக்கம் நீத்தான் - நான்மறை வழி ஒழுகுதலைத் துறந்தான். வலிய கூன் எனக்கொண்டு மருந்து முதலியவற்றால் தீராத வன்மையுடைய கூன் என்றுரைத்தலுமாம். அடைந்தான் என்பதனை முற்றாக்கி, அதுபோல எனச் சுட்டு வருவித்தலுமாம். அவர் கொல்லாமையை விரதமாகக் கொண்டதும் செம்மை யாகாது கரவாம் என்பார் ‘கொல்வினையிலராய் வஞ்சங் கொண்டு’ என்றார். வெல்வு எனத் தொழிற் பெயராக்கி, வெல்லுதலை என்றுரைத்தலும் பொருந்தும். சிறிதும் இலரென்பார் ‘அறியா’ என்றார். நக்கர் - ஆடையுடாதவர். வேடர் என்றதற்கேற்பச் சொல்லை வலையாக்கி நயன்படக் கூறினார். சைவ நெறி நின்று சிவனது திருவருள் கூடும் நல்வினை முன்பு செய்துள்ளானாயினும் அஃது இப்பொழுது கூடிற்றிலதென்பார் நல்வினை உதவா என்றார். நான்மறை ஒழுக்கம் - வைதிக சைவ வொழுக்கம். வல்வினை வலியால் வலையிற்பட்டு ஒழுக்கம் நீத்தான் என இயைக்க. (10) போதவிழ் தாரா னக்கர் புன்னெறி யொழுக்கம் பூண்டோ னாதலிற் கன்னி நாடு மமணிருண் மூழ்கிப் பூதி சாதன நெறியாஞ் சைவ சமயமு முத்திச் செல்வ மாதவ நெறியுங் குன்ற மறைந்தது வேத நீதி. (இ-ள்.) போது அவிழ் தாரான் - மலர் விரிந்த மாலையை யணிந்த பாண்டியன், நக்கர் புல் நெறி ஒழுக்கம் பூண்டோன் ஆதலின் - அருகரது புல்லிய மதத்தின் ஒழுக்கங்களை மேற்கொண்டானாதலினால், கன்னி நாடும் அமண் இருள் மூழ்கி - பாண்டி நாடும் சமண இருளில் அழுந்தப் பெற்று, பூதிசாதன நெறியாம் சைவ சமயமும் - பூதி சாதன நெறியாகிய சைவ சமயமும், முத்திச் செல்வம் மாதவ நெறியும் குன்ற - விடுபேறாகிய செல்வத்தை அடைவிக்கும் பெரிய தவவொழுக்கமும் குறைவுபட, வேத நீதி மறைந்தது - வேத நெறி மறைந்தது. அரசன் வழிப்பட்டது உலக மாதலின் கன்னி நாடும் அமணிருள் மூழ்கிற்று என்க. பூதி சாதனம் - திரு நீறாகிய சாதனம்; திருநீறும் உருத்திராக்கம் முதலிய சாதனமும் என்றுமாம். மாதவ நெறி - சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நெறிகள். வேத நீதி - வேத சிவாகமங்களிற் கூறப்பட்ட விதி விலக்கு முறைமை. சிவகாமமும் வேத மெனப்படும் எனவுணர்க. (11) பறிபடு தலையும் பாயி னுடுக்கையும் பாசிப் பல்லும் உறிபொதி கலனு மத்தி நாத்தியென் றுரைக்கு நாவு அறிவழி யுளம்போ னாணற் றழிந்தவெற் றரையுங் கொண்டு குறிகெடு மணங்கு சூழ்ந்தாங் கமணிறை கொண்ட தெங்கும். (இ-ள்.) பறிபடுதலையும் - மயிர் பறிக்கப்பட்ட தலையும், பாயின் உடுக்கையும் - பாயாகிய உடையும், பாசிப்பல்லும் - பசுமை படர்ந்த பல்லும், உறி பொதி கலனும் - உறியிற் பொதிந்த கமண்டலமும், அத்தி நாத்தி என்று உரைக்கும் நாவும் - உண்டாம் இல்லையாம் என்று கூறும் நாவும், அறிவு அழி உளம் போல் - அறிவழிந்த உள்ளம் போல், நாண் அற்று அழிந்த வெற்று அரையும் கொண்டு - வெட்கம் சிறிதுமின்றி அழிந்த ஆடையில்லாத அரையும் உடையதாய், குறிகெடும் அணங்கு சூழ்ந்தாங்கு - பொலி விழந்த தவ்வை சூழ்ந்து தங்கினாற் போல, அமண் எங்கும்இறை கொண்டது - சமண் எங்குஞ் சூழ்ந்து தங்கியது. பாசிப்பல் - விளக்காமையால் அழுக்கேறிப் பசுமை படர்ந்த பல். அத்தி - உண்டு. நாத்தி - இல்லை. ஆருகதர் சீவன் முதலாகக் கூறும் பதார்த்தங்கள் உண்டோ இல்லையோ என வினாவிய வழி, உண்டாம், இல்லையாம், உண்டும் இல்லையுமாம்,சொல்லொணாதாம், உண்டுமாம் சொல்லொனாததாம். இல்லையுமாம் சொல்லொணாததுமாம். உண்டும் இல்லையுமாம் சொல்லொணாத துமாம் என எழு வகையான் இறுப்பர்; இவை எல்லாம் உண்டு, இல்லை என்னும் இருவாய்பாட்டுள் அடங்குதலின் அத்தி நாத்தி யென்றுரைக்கு நாவும் என்றார். நாண் அற்று அழிந்த என்பதற்கு அரை ஞாணின்றிப் பீடழிந்த என்றும் உரைத்துக் கொள்க. குறிகெடும் அணங்கு - மூதேவி; பேயுமாம். அமண் : குழுஉப் பெயர். இறை கொள்ளல் - தங்கல். (12) அருந்தமிழ்ப் பாண்டி வேந்தற் குருதியா யாக்கஞ் செய்யும் மருந்தினிற் சிறந்த கற்பின் மங்கையர்க் கரசி யாரும் பெருந்தகை யமைச்சு நீரிற் குழைத்தன்றிப் பிறங்கப் பேறு தருந்திரு நீறிடாராய்ச் சிவனடிச் சார்பி னின்றார். (இ-ள்.) அருந்தமிழ்ப் பாண்டி வேந்தற்கு - அரிய தமிழை யுடைய பாண்டி மன்னனுக்கு, உறுதியாய் ஆக்கம் செய்யும் மருந்தினில் சிறந்த - பற்றுக் கோடாக நின்று வீடுபேறாகிய செல்வத்தை அளிக்கும் அமிழ் தொன்று உளதேல், அதனினும் சிறந்த, கற்பின் மங்கையர்க்கரசியாரும் - கற்பின் மிக்க மங்கையர்க்கரசியாரும், பெருந்தகை அமைச்சும் - பெரிய தகுதியை யுடைய மந்திரியாராகிய குலச்சிறையாரும், பேறுதரும் திருநீறு - எல்லாப் பேற்றினையும் அளிக்குந் திருநீற்றினை, நீரில் குழைத்தன்றி - நீரிற் குழைத்து வெளியே தோன்றாவண்ணம் இடுதலேயன்றி, பிறங்க இடாராய் - வெளித் தோன்றுமாறு இடாதவராய், சிவன் அடிச் சார்பில் நின்றார் - சிவபெருமானது திருவடிச் சார்பில் நின்றனர். ஆக்கஞ் செய்யும் மங்கையர்க் கரசியார் எனவும், மருந்தினிற் சிறந்த கற்பு எனவும், கூட்டி யுரைத்தலுமாம். திரு நீறு பிறங்க இடாமை, “ ஓங்கிய சைவ வாய்மை யொழுக்கத்தி னின்ற தன்மை பூங்கழற் செழியன் முன்பு புலப்படா வகைகொண் டுய்த்தார் ” எனத் திருத்தொண்டர் புராணங் கூறுதலானும் பெறப்படுதல் காண்க. அடிச் சார்பில் நின்றார் - திருவடியே பற்றுக் கோடாக நின்றார். (13) பொய்யுரை பிதற்று மிந்தப் புன்சமண் களைகட் டீண்டு மெய்யுரை வேத நீதி வியன்பயிர் தலைச்செய் தோங்கச் செய்யுந ரெவரோ வென்று1 சிந்தையிற் கவலை பூண்டு நையுந ராகிக் கூட னாதனை வணங்கப் போனார். (இ-ள்.) ஈண்டு - இவ்விடத்தில், பொய் உரை பிதற்றும் இந்தப் புன் சமண் களை கட்டு - பொய் மொழியைப் பிதற்றுகின்ற இந்தப் புல்லிய சமணாகிய களையினைப் பிடுங்கி, மெய் உரை வேதநீதி வியன் பயிர் தலைச் செய்து ஓங்க - உண்மையை உரைக்கும் வேத நெறி என்னுஞ் சிறந்த பயிர் தலையெடுத்து ஓங்குமாறு, செய்யுநர் எவரோ என்று - செய்யவல்லுநர் எவரோ என்று கருதி, சிந்தையில் கவலை பூண்டு நையுநராகி - மனத்திற் கவலையை மேற்கொண்டு நைதலையுடையராய், கூடல் நாதனை வணங்கப் போனார் - கூடலிறைவனாகிய சோம சுந்தரக் கடவுளை வணங்குதற்குச் சென்றனர். பிதற்றல் முன்னொடு பின் மலைவுபடக் கூறல். கட்டு - பிடுங்கி. (14) பேதுற்ற முனிவர்க் கன்று பெருமறை விளக்கஞ் செய்த வேதத்தின் பொருளே யிந்த வெஞ்சமண் வலையிற் பட்டுப் போதத்தை யிழந்த வேந்தன் புந்தியை மீட்டிப் போதுன் பாதத்தி லடிமை கொள்வா யென்றடி பணியு மெல்லை. (இ-ள்.) பேதுற்ற முனிவர்க்கு அன்று - பொருள் தெரியாமல் மயங்கிய முனிவர்களுக்கு அந்நாளில், பெருமறை விளக்கம் செய்த வேதத்தின் பொருளே - பெரிய வேதத்திற்குப் பொருள் விளக்கிய மறைப் பொருளே, இந்த வெம் சமண் வலையில் பட்டு - இந்தக் கொடிய சமணாகிய வலையிற் பட்டு, போதத்தை இழந்த வேந்தன் - அறிவினை இழந்த அரசனது, புந்தியை மீட்டு - புத்தியைத் திருப்பி, இப்போது உன் பாதத்தில் அடிமை கொள்வாய் என்று - இப்போது உனது திருவடிக்கு அடிமை யாக்கிக் கொள்வா யென்று குறையிரந்து, அடிபணியும் எல்லை - திருவடியை வணங்கும்போது. பேதுறல் - மயங்கல். வேதப் பொருளறியாது மயங்கிய முனிவர்க்கு அதனைத் தெளிவித்த நீரே சமண் வலையிற் பட்டு மயங்கிய அரசனுக்கும் உண்மை விளக்கம் செய்யவல்லீர் என்பார் ‘பெருமறை விளக்கஞ் செய்த வேதத்தின் பொருளே’என விளித் தாராகலின் இது கருத்துடையடைகொளியணி. (15) வேதிய னொருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யிற் பூதியன் புண்டரீக புரத்தினும் போந்தோன் கூடல் ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க் கரசி யாரும் நீதிய வமைச்ச ரேறு நேர்பட வவனை நோக்கா. (இ-ள்.) புண்டரீக புரத்தினும் போந்தோன் - புலியூராகிய சிதம்பரத்தினின்றும் வந்தவனாகிய, வேதியன் ஒருவன் - மறையவனொருவன், கண்டி வேடமும் பூண்டோன் - உருத்திராக்கமணிந்த திருவேடமு முடையவனாய், மெய்யில் பூதியன் - உடலில் திருநீறு தரித்தவனாய், கூடல் ஆதியைப் பணிவான் வந்தான் - கூடலிலிறை வனாகிய சோமசுந்தரக் கடவுளை வணங்கத் திருக்கோயிலுக்கு வந்தனன்; மங்கையர்க்கரசியாரும் நீதிய அமைச்சர் ஏறும் - மங்கையர்க்கரசியாரும் நீதியையுடைய அமைச்சருள் ஏறு போல்வாராகிய குலச்சிறையாரும், அவனை நேர்பட நோக்கா - அவனை நேரிற் கண்டு. புரத்தினும் - புரத்தினின்றும்; வருஞ் செய்யுளில் நாட்டினும் என்பதும் இத்தகைத்து. பணிவான் : வினையெச்சம். (16) எங்கிருந் தந்த ணாளிர் வந்தனி ரென்றா ராய்ந்த புங்கவன் சென்னி பொன்னி நாட்டினும் போந்தே னென்றான் அங்கவ ரங்குண் டான புதுமையா தறைதி ரென்றார் சங்கரற் கன்பு பூண்டோ னுண்டென்று சாற்று கின்றான். (இ-ள்.) அந்தணாளிர் எங்கு இருந்து வந்தனிர் என்றார் - அந்தணாளரே எங்கிருந்து வந்தீரென்று வினாவினர்; ஆய்ந்த புங்கவன் - கலைகளை ஆராய்ந்த தூயவனாகிய அம்மறையவன், சென்னி பொன்னி நாட்டினும் போந்தேன் என்றான் - சோழனது காவிரி நாட்டிலிருந்து வந்தேனென்று கூறினன்; அவர் அங்கு உண்டான புதுமை யாது அறைதிர் என்றார் - அவர் அங்கு உண்டாகிய புதுமை யாது அதனைக் கூறுமென்று கேட்டனர்; - சங்கரனுக்கு அன்பு பூண்டோன் உண்டு என்று சாற்றுகின்றான் - சங்கரனுக்கு அன்பு பூண்ட அவ்வந்தணன் புதுமை உண்டு என்று அதனைக் கூறத் தொடங்கினான். அன்பு பூண்டவனும் புங்கவனுமாகிய அவன் என்க. அங்கவர் என்புழி அங்கு அசைநிலை. அங்கு யாதேனும் புதுமையுளதாயின் அதனைக் கூறுதி ரென்றார் என்பது கருத்தாகக் கொள்க. (17) ஏழிசை மறைவல் லாளர் சிவபாத விதய ரென்னக் காழியி லொருவ ருள்ளார் காரமண் கங்குல் சீப்ப ஆழியி லிரவி யென்ன வொருமக வளித்தி யென்னா ஊழியி லொருவன் றாளை யுள்கிநோற் றொழுகி நின்றார். (இ-ள்.) காழியில் - சீகாழிப்பதியின்கண், ஏழ் இசை மறை வல்லாளர் ஒருவர் சிவபாத இதயர் என்ன உள்ளார் - ஏழு இசைகளையுடைய மறையில் வல்ல வேதிய ரொருவர் சிவபாத விருதய ரென்னும் பெயருடையராய் இருக்கின்றார்; கார் அமண் கங்குல் சீப்ப - (அவர்) கரிய அமணாகிய இருளை ஓட்ட, ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி என்னா - கடலிற் றோன்றிய இளஞ் சூரியனைப் போல ஒரு புதல்வனை அளிக்கக் கடவை என்று, ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி நின்றார் - ஊழிக்காலத்தில் ஒருவனா யுள்ள இறைவன் திருவடியை நினைந்து தவஞ் செய்தனர். பேரூழிக் காலத்தில் உலகுயிரனைத்தையும் தம்முளொடுக்கிக் கொண்டு தாம் ஒருவராகவே யிருத்தலின் ஊழியிலொருவன் என்றார். (18) ஆயமா தவர்பா லீச னருளினா லுலக முய்யச் சேயிளங் கதிர்போல் வந்தான் செல்வனுக் கிரண்டாண் டெல்லை போயபின் மூன்றா மாண்டிற்1 பொருகடன் மிதந்த தோணி நாயகன் பிராட்டி யோடும் விடையின்மே னடந்து நங்கை. (இ-ள்.) ஆயமாதவர்பால் - அந்தத் தவப் பெரியாரிடத்து, ஈசன் அருளினால் - இறைவன் திருவருளால், உலகம் உய்ய - உலகம் உய்தி பெறுதற் பொருட்டு, சேய் இளங் கதிர்போல் வந்தான் - ஒரு புதல்வன் இளஞ் சூரியனைப்போல அவதரித்தான்; செல்வனுக்கு இரண்டு ஆண்டு எல்லை போயபின் - அச் செல்வனுக்கு இரண்டு ஆண்டின் அளவு போனபின், மூன்றாம் ஆண்டில் - மூன்றாவது ஆண்டின்கண், பொருகடல் மிதந்த தோணி நாயகன் - அலைகள் மோதும் கடலின் மேல் மிதந்த தோணிபுரத்து இறைவன், பிராட்டியோடும் விடையின் மேல் நடந்து - இறைவியுடன் ஆனேற்றி லேறி வந்து, நங்கை - அப்பிராட்டியினது. பிரளய காலத்தில் நீரின்மீது தோணிபோல் மிதந்தமையால் தோணிபுரம் எனப் பெயர் பெற்ற பதி என்பார் ‘பொருகடன் மிதந்த தோணி’ என்றார். (19) திருமுலைப் பாலி னோடு ஞானமுந் திரட்டிச் செம்பொற் குருமணி வள்ளத் தேந்திக் கொடுப்பவப் பாலன் வாங்கிப் பருகியெண் ணிறந்த வேதா கமமிவை பற்றிச் சார்வாய் விரிகலை பிறவு மோதா துணர்ந்தனன் விளைந்த ஞானம். (இ-ள்.) திருமுலைப்பாலினோடு ஞானமும் திரட்டி - திருமுலைப் பாலுடன் சிவஞானத்தையுங் குழைத்து, செம்பொன் குருமணி வள்ளத்து ஏந்திக் கொடுப்ப - சிவந்த பொன்னாலாகிய நிறம் பொருந்திய மணிகள் பதித்த கிண்ணத்திலேந்திக் கொடுத்தருள, அப்பாலன் வாங்கிப் பருகி - அப்பாலன் அதனை வாங்கி அருந்தி (அதனால்), எண் இறந்த வேத ஆகமம் - அளவிறந்த மறைகளையும் ஆகமங்களையும், இவை சார்வாய் பற்றி விரிகலை பிறவும் - இவற்றைப் பற்றிச் சார்பு நூல்களாக விரிந்த பிற கலைகளையும், ஓதாது உணர்ந்தனன் - ஓதுதலின்றியே உணர்ந்தனன்; ஞானம் விளைந்த - ஞானங்கள் விளைந்தன. இறைவன் ஆணையால் இறைவி ஊட்டினளாகலின் அதனை இறைவன்மீது ஏற்றிக் கூறினார். பருகி, காரணப் பொருட்டாய வினையெச்சம். சார்வாய் விரிகலை - வேதாங்கம், புராணம் முதலாயின. விரிகலையும் பிறவும் என்றுமாம். “ சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் பவமதனை யறமாற்றும் பாங்கினிலோங் கியஞானம் உவமையிலாக் கலைஞான முணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்” என்று திருத்தொண்டர் புராணங் கூறுமாறு அனைத்து ஞானமும் எய்தப் பெற்றாராகலின் விளைந்த ஞானம் எனப் பன்மை கூறினார். பிள்ளையார் மூன்றாம் ஆண்டில் ஞானம் பெற்ற வரலாற்றைப் பெரிய புராணத்தால் விளங்க வறிக. (20) நம்பந்த மறுப்போன் ஞான நாயகன் ஞானத் தோடு சம்பந்தஞ் செய்து ஞான சம்பந்த னாகி1 நாவில் வம்பந்த முலைமெய்ஞ் ஞான வாணியுங் காணி கொள்ள அம்பந்த மறைக ளெல்லா மருந்தமி ழாகக் கூறும். (இ-ள்.) நம்பந்தம் அறுப்போன் ஞான நாயகன் - நமது கட்டினை அறுக்கும் ஞான நாயகனாகிய இறைவனது, ஞானத் தோடு சம்பந்தம் செய்து - சிவஞானத்துடன் சம்பந்தஞ் செய்தலால், ஞான சம்பந்தனாகி - ஞான சம்பந்தன் என்னும் பெயருடையராய், நாவில் - தமது நாவின்கண், வம்பு அந்தம் முலை மெய்ஞ்ஞான வாணியும் காணி கொள்ள - கச்சினை யணிந்த அழகிய கொங்கையை யுடைய உண்மை வடிவாகிய ஞானவாணி உறைவிடமாகக் கொண்டு தங்க, அம்பந்தம் மறைகள் எல்லாம் - அழகிய பந்தம் அமைந்த மறைகளனைத்தையும், அரும் தமிழாகக் கூறும் - அரிய தமிழ்ப் பாடல்களாகக் கூறுவாராயினர். “ யாவருக்குந் தந்தைதா யெனுமிவரிப் படியளித்தார் ஆவதனா லாளுடைய பிள்ளையா ராயகில தேவருக்கு முனிவருக்குந் தெரிவரிய பொருளாகுந் தாவிறனிச் சிவஞான சம்பந்த ராயினார்” என்னும் பெரிய புராணச் செய்யுளால் இவருக்கு ஆளுடைய பிள்ளையார், திருஞானசம்பந்தர் என்னும் பெயர்கள் உண்டாய காரணம் அறியப்படும். வம்பு அந்தம் - கச்சினைக் கிழிக்கும் என்றுமாம். காணி கொள்ள - காணியாகக் கொண்டு தங்க. பந்தம் - தளை. மறைகளெல்லாம் அருந்தமிழாகக் கூறும் என்ற கருத்து, “ எல்லையிலா மறைமுதன்மெய் யுடனெடுத்த வெழுதுமறை மல்லனெடுந் தமிழாலிம் மாநிலத்தோர்க் குரைசிறப்ப” என்பது முதலாகத் திருத்தொண்டர்புராணத்துப் பயின்று வருதல் காண்க. (21) கரும்பினிற் கோது நீத்துச் சாறடு கட்டி யேபோல் வரம்பிலா மறையின் மாண்ட பொருளெலா மாணத் தெள்ளிச் சுரும்பிவர் கொன்றை வேணிப் பிரானிடந் தோறும் போகி விரும்பிய தென்சொன் மாலை சிவமணம் விளையச் சாத்தி. (இ-ள்.) கரும்பினில் கோது நீத்து - கரும்பினின்றுங் கோதினை ஒழித்து, சாறு அடு கட்டியே போல் - சாற்றினைக் காய்ச்சுதலாலுண்டாகும் சருக்கரைக் கட்டியை ஆக்குதல் போல, வரம்புஇலா மறையின் மாண்ட பொருள் எலாம் - அளவிறந்த மறைகளின் சிறந்த பொருள்களனைத்தையும், மாணத் தெள்ளி - மாட்சிமைப்படக் கொழித்தெடுத்து, சுரும்பு இவர் கொன்றை வேணிப் பிரான் இடந்தோறும் போகிவண்டுகள் ஏறும் கொள்றை மலராலாகிய மா'e7çலயை யணிந்த முடியினையுடைய சிவபெருமான் எழுந்தருளிய திருப்பதிகடோறுஞ் சென்று, விரும்பிய தென்சொல்மாலை - அவ்விறைவனால் விரும்பப் பெற்ற தமிழ் மாலையாகச் செய்து, சிவமணம் விளையச் சாத்தி - சிவமணம் கமழ அவ்விறைவனுக்குச் குசாத்தி. தேவாரம் வேதத்தின் சாரமென்பார் கரும்பினிற் கோது நீத்துச் சாறடு கட்டியே போல் என உவமை கூறினார்; “ வேதம் பசுவதன்பால் மெய்யா கமநால்வர் ஓதுந் தமிழதனி னுள்ளுறு நெய்” என்னும் ஆன்றோர் வாக்குங் காண்க. (22) பருமுத்த முலையாள் பங்க னருளினாற் பசும்பொற் றாளந் திருமுத்தின் சிவிகை காளந் தெண்முத்தின் பந்த ரின்ன நிருமித்த வகைபோற் பெற்றுப் பாலையை நெய்த லாக்கிப் பொருமுத்த நதிசூழ் வீழிப் பொற்படிக் காசு பெற்று. (இ-ள்.) பரு முத்தம் முலையாள் பங்கன் அருளினால் - பரிய முத்து மா'e7çலயை யணிந்த கொங்கையையுடைய உமையம்மையை ஒரு பாதியிலுள்ள இறைவனருளினால், பசும்பொன் தாளம் - பசிய பொற்றாளமும், திருமுத்தின் சிவிகை காளம் - அழகிய முத்துச்சிவிகையும் திருச்சின்னமும், தெள்முத்தின் பந்தர் இன்ன - தெள்ளிய முத்துப் பந்தரும் இவைபோல்வன பிறவும், நிருமித்தவகை போல் பெற்று - புதிதாக ஆக்கிய தன்மை போலப் பெற்று, பாலையை நெய்தலாக்கி - பாலை நிலத்தை நெய்தனிலமாக்கி, பொரு முத்தம் நதி சூழ் வீழி - கரையை மோதும் அலைகளையுடைய முத்துக்களையுடைய காவிரிநதி சூழ்ந்த திருவீழிமிழலையில், படி பொற் காசு பெற்று - திருப்படியிற் பொற் காசு பெற்று. திருக்கோலக்கா என்னும் பதியிற் பொற்றாளமும், திருவரத் துறைக்குச் செல்லுகையில் மாறன் பாடியில் முத்துச் சிவிகை முத்துக் குடை முத்துச் சின்னங்களும், திருச்சத்தி முற்றத்திலிருந்து திருப்பட்டீச்சுரத்துக்கு எழுந்தருளுகையில் முத்துப் பந்தரும், திருநாவுக்கரசருடன் திருவீழி மிழலையில் எழுந்தருளியிருக்கும் பொழுது பொற் காசும் இறைவர்பாற் பெற்றனர்; இவ்வரலாறுகளைத்த திருத்தொண்டர் புராணத்தால் விளக்கமுற அறிக. அவை உடன் தோன்றியவாற்றை வியந்து நிருமித்த வகைபோல் என்றார்; நிருமித்தல் - படைத்தல். பாலையை நெய்தலாக்கியது, “ பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும் காலனையன் றேவிக் கராங்கொண்ட - பாலன் மரணந் தவிர்த்ததுவு மற்றவர்க்கு நந்தம் கரணம்போ லல்லாமை காண்” எனத் திருக்களிற்றுப்படியாரில் எடுத்துப் போற்றப் பெற்றுளது. பிள்ளையார் தமது திருத்தாயார் பிறந்த தலமாகிய திருநனிபள்ளியை முன்பு பாலையாக்கி, பின் அதனை நெய்தலாக்கினர் என்று, “ கள்ளம் பொழில்நனி பள்ளி தடங்கட மாக்கியஃதே வெள்ளம் பணிநெய்த லாக்கிய வித்தகன் வெண்குருகுப் புள்ளொண் டவளப் புரிசங்கொ டாலக் கயலுகளத் தள்ளந் தடம்புனற் சண்பையர் காவலன் சம்பந்தனே” என்னும் திருச்சண்பை விருத்தத்தால் அறியப்படுகின்றது. (23) அருமறை வணங்குங் கோயிற் கதவினை யடைக்கப் பாடிப் பரனுறை பதிக ளெங்குந் தொழுதனர் பாடிப் பாடி வருமவர் நுங்க ணாட்டு வணங்கவும் வருவ ரென்னத் தருமநூ லணிந்த தெய்வத் தாபதன் சாற்ற லோடும். (இ-ள்.) அருமறை வணங்கும் கோயில் கதவினை அடைக்கப் பாடி - அரிய வேதங்கள் வழிபடுந் திருக்கோயிற் கதவு அடைக்கு மாறு பாடியருளி, பரன் உறை பதிகள் எங்கும் தொழுதனர் - இறைவன் எழுந்தருளிய திருப்பதிகளனைத்திலும் சென்று வணங்கி, பாடிப்பாடி வருமவர் - திரு நெறித் தமிழ்மறை பாடிப்பாடி வருகின்ற அவ்வாளுடைய பிள்ளையார், நுங்கள் நாட்டும் வணங்க வருவர் என்ன - நுமது நாட்டிற்கும் சோமசுந்தரக் கடவுளை வணங்க வருவர் என்று, தரும நூல் அணிந்த தெய்வத்தாபதன் சாற்றலோடும்- அறநெறி வழாத முந்நூலணிந்த தெய்வத் தன்மை பொருந்திய அம்முனிவன் சொல்லிய வளவில். திருமறைக்காட்டிலே வேதங்களாற் பூசித்துத் திருக் காப்பிடப் பெற்ற திருக்கோயிற் கதவினைத் திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடித் திறக்க, இருவரும் அவ்வாயிலால் உட்சென்று இறைவரைத் தரிசித்துப் புறம் போந்தபின் திருஞான சம்பந்தர் பதிகம்பாடி அதனைத் திருக்காப்பிட்டனர் என்னும் வரலாற்றைப் பெரியபுராணத்தா லறிக. தரும நூல் - அறவடிவாகிய நூல் என்றுமாம். (24) கற்பலர் கொடியன் னாருந் தென்னவன் கண்போல் வாரும் அற்புரை யமண்பே யோட்டி யன்றுதங் கோமான் மெய்யிற் பொற்புறு நீறு கண்டு பூதிசா தனத்தா லெய்துஞ் சிற்பர வீடு கண்ட மகிழ்ச்சியுட் டிளைத்தோ ரானார். (இ-ள்.) கற்பு அலர் கொடி அன்னாரும் - கற்பாகிய மலர் மலர்ந்த கொடி போல்வாராகிய மங்கையர்க்கரசியாரும், தென்னவன் கண் போல்வாரும் - பாண்டியன் கண்போல்வாராகிய குலச்சிறையாரும், அன்று - அப்பொழுதே, அல் புரை அமண் பேய் ஓட்டி - இருளை யொத்த சமணப் பேயினைத் துரத்தி, தம் கோமான் மெய்யில் பொற்பு உறு நீறு கண்டு - தமது தலைவன் மேனியில் அழகு மிக்க திரு நீற்றினையுங் கண்டு, பூதி சாதனத்தால் எய்தும் - பூதி சாதனத்தாலடையும், சிற்பர வீடு கண்ட மகிழ்ச்சியுள் - ஞானமயமாகிய பரவீட்டினைக் காணுதலால் விளையுஞ் சிவானந்தத்தில், திளைத்தோர் ஆனார் - அழுந்தியவராயினர். மங்கையர்க்கரசியாரின் கற்பு மேம்பாட்டை வியந்துரைப்பார் கற்பு அலர் கொடியன்னார் என்றார். இஃது இல்பொருளுவமை. அரசன் தீ நெறியிற் செல்லின் தடுத்து நன்னெறிச் செலுத்தும் இயல்புடையாரென்பார் குலச்சிறையாரைத் தென்னவன் கண் போல்வார் என்றார். அவ்வுரை கேட்டவளவில் அமணினை ஓட்டுதலும் அரசன் நீறு தரித்தலும் யாவரும் பரவீடெய்துதலும் உறுதி யெனத் தெளிந்தாராகலின் அவை அப்பொழுதே எய்தினாற் போல மகிழ்ச்சியடைந்தனர் என்க. (25) தங்கள்பேர் தீட்டி யோலை விண்ணப்பஞ் சண்பை நாடர் புங்கவர்க் குணர்த்த வந்தப் பூசுரன் கையிற் போக்கி மங்கையர்க் கரசி யாரு மரசற்கு மருந்தன் னானும் அங்கயற் கண்ணி கோனைப் பணிந்துதம் மகத்திற் புக்கார். (இ-ள்.) சண்பைநாடர் புங்கவர்க்கு உணர்த்த - காழி நாட்டினர் தலைவராகிய திருஞான சம்பந்தருக்குத் தெரிவிக்க, ஓலை விண்ணப்பம் தங்கள் பேர் தீட்டி - விண்ணப்ப ஓலை யொன்று தங்கள் பேராலெழுதி, அந்தப் பூசுரன் கையில் போக்கி - அம்மறையவன் கையிற் கொடுத்து அவனை அனுப்பி, மங்கையர்க் கரசியாரும் அரசற்கு மருந்து அன்னானும் - மங்கையர்க்கரசியாரும் மன்னனுக்கு அமிழ்தினை யொத்த குலச்சிறையாரும், அங்கயற்கண்ணி கோனைப் பணிந்து தம் அகத்தில் புக்கார் - அங்கயற் கண்ணி தலைவனைப் பணிந்து தமது இல்லிற் சென்றனர். விண்ணப்ப ஓலை தங்கள் பேரால் தீட்டி என்க. பதியும் நாடு எனப்படுதல் வழக்கு. புங்கவர் - உயர்ந்தோர்; தலைவர். அரசன் உடற்பிணியும் உயிர்ப்பிணியும் நீங்கி உறுதி யெய்துதற்குக் காரணராகலின் அரசற்கு மருந்தன்னான் என்றார். (26) பண்படு வேதச் செல்வன் வல்லைபோய்ப் பழன வேலிச் சண்பையர் பிரானைக் கண்டு பறியுண்டு தலைக ளெல்லாம் புண்படத் திரியுங் கையர் பொய்யிருள் கடந்தார் தந்த எண்படு மோலை காட்டிப் பாசுர மெடுத்துச் சொன்னான். (இ-ள்.) பண்படு வேதச் செல்வன் - பண்ணமைந்த மறைச் செல்வனாகிய அவ்வந்தணன், வல்லைபோய் - விரைந்து சென்று, பழனவேலி சண்பையர் பிரானைக் கண்டு - கழனிகள் சூழ்ந்த காழியின் வேந்தராகிய திருஞானசம்பந்தரைத் திருமறைக்காட்டிற் கண்டு, தலைகள் எல்லாம் புண்படப் பறியுண்டு திரியும் கையர் - தலைகள் முழுதும் புண்படுமாறு மயிர்கள் பறிக்கப்பட்டுத் திரியும் கீழ் மக்களாகிய சமணர்களின், பொய் இருள் கடந்தார் தந்த - பொய் நெறியாகிய இருளினைக் கடந்த மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாருங் கொடுத்த, எண்படும் ஓலை காட்டி - மதிக்கத்தகும் ஓ'e7çலயினைக் காட்டி, பாசுரம் எடுத்துச் சொன்னான் - அதிலுள்ள பாசுரத்தை எடுத்துக் கூறினார். திருஞான சம்பந்தர் திருமறைக்காட்டில் எழுந்தருளி யிருத் தலை அரசியாரும் அமைச்சரும் கேள்வியுற்றுப் பரிசனங்களை விடுக்க அவர்கள் சென்று அப்பதியிற் கண்டு வணங்கி அவர்கள் விண்ணப்பத்தைத் தெரிவித்தனரெனப் பெரிய புராணங் கூறும். பாசுரம் - திருமுகவாசகம். பிள்ளையார் கட்டளையால் எடுத்துச் சொன்னான் என்க. (27) எழுசீரடி யாசிரிய விருத்தம் வெங்குரு வேந்த ரடிபணிந் தடியேன் குலச்சிறை விளம்புவிண் ணப்பம் இங்கெழுந் தருளிச் சமணிரு ளொதுக்கி யெம்மிறை மகற்குநீ றளித்துப் பொங்கிரும் பணைசூழ் தென்றமிழ் நாட்டைப் பூதிசா தனவழி நிறுத்தி எங்களைக் காக்க வென்றபா சுரங்கேட் டெழுந்தனர் கவுணியர்க் கிறைவர். (இ-ள்.) அடியேன் குலச்சிறை வெங்குருவேந்தர் அடிபணிந்து - அடியேன் குலச்சிறை காழிமன்னரின் திருவடியை வணங்கி, விளம்பு விண்ணப்பம் - கூறும் விண்ணப்பமாவது, இங்கு எழுந்தருளி - தேவரீர் இந்த நாட்டிற்கு எழுந்தருளி, சமண் இருள் ஒதுக்கி - சமணாகிய இருளை ஓட்டி, எம் இறைமகற்கு நீறு அளித்து - எமது அரசனுக்குத் திருநீறு கொடுத்து, பொங்கு இரும்பணைசூழ் - நிறைந்த பெரிய வயல் சூழ்ந்த. தென் தமிழ்நாட்டை - தமிழையுடைய இத்தென்னாட்டை, பூதிசாதன வழி நிறுத்தி - பூதிசாதன நெறியில் நிறுத்தி, எங்களைக் காக்க - அடியேங்களைக் காக்கக் கடவீர், என்ற பாசுரம் கேட்டு - என்னும் பொருளமைந்த பாசுரத்தைக் கேட்டு, கவுணியர்க்கு இறைவர் எழுந்தனர் - கவுணியர் தலைவராகிய ஆளுடைய பிள்ளையார் எழுந்தனர். வெங்குரு சீகாழியின் பன்னிரு பெயர்களில் ஒன்று; அசுர குரு பூசித்தமையால் வந்த பெயர். பன்னிரு பெயர்களின் வரலாறும் மேல் அருச்சனைப் படலத்திற் கூறப்படும். பாண்டிநாடு முற்றும் பூதி சாதனங்கள் இழந்தன என்பார் தென்றமிழ் நாட்டைப் பூதி சாதன வழி நிறுத்தி என்றார். கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர். (28) ஆதகா திதுவென் றோதுவார் நாவுக் கரையர்நீர் சிறியவ ரவரோ பாதக மஞ்சார் தம்மொடும் பன்னாட் பழகிய வெனையவர் செய்த வேதனை யளந்து கூறுவ தென்னை விடுகதில் லம்மவோ வுமக்கிப் போதுநாள் கோள்கள் வலியில வென்னப் புகலியர் வேந்தரும் புகல்வார். (இ-ள்.) நாவுக்கரையர் - அவருடனிருந்த திருநாவுக்கரசுகள், ஆதகாது இது என்று ஓதுவார் - ஆ இது தகாது என்று கூறுபவர், நீர் சிறியவர் - நீரோ பாலர்; அவரோ பாதகம் அஞ்சார் - அவரோ தீவினைக்கு அஞ்சாதவர்; தம்மொடும் பன்னாள் பழகிய என்னை - தம்மோடும் பலவாண்டுகள் பழகிய எனக்கு, அவர் செய்த வேதனை அளந்து கூறுவது என்னை - அவர்கள் செய்த துன்பத்தை வரையறுத்துக் கூறுதல் எங்ஙனம்; உமக்கு இப்போது நாள் கோள்கள் வலிஇல - உமக்கு இப்போது நாள்களும் கோள்களும் வலியுடையனவாகவும் இல்லை; விடுகதில் - (ஆதலின்) போதலைத் தவிர்க; என்ன - என்று கூற, புகலியர் வேந்தரும் புகல்வார் - காழிப்பதி யார்க்குத் தலைவராகிய திருஞான சம்பந்தரும் கூறுவாராயினர். ஆ என்பதும், அம்மவோ என்பதும் இரக்கத்தில் வந்தன. அம்ம : கேட்பித்தற் பொருட்டுமாம். அவர் சமயத்திற் புகுந்து அவரோ டிடைவிடாது பழகிய பயிற்சியையும் கருதாது இரக்கமின்றி நீற்றறையிலிடுதல் ஆதிய கொடுந் துன்பங்கள் செய்த பாதகர் என்பார் தம் மொடும் பன்னாட் பழகிய வெனையவர் செய்த வேதனை அளந்து கூறுவதெவன் என்றார். தில் ஒழியிசை இடைச் சொல். நாள் - நக்கத் திரம். கோள் - நவக்கோள். வலியில - நலந்தரும் நிலையினவல்ல. (29) எந்தையெம் பெருமா னருளிலார் போல வின்னண மிசைப்பதென் னவர்செய் வெந்த வேதனையி னுய்ந்தநீர் நாள்கோள் விளங்குபுள் ளவுணர்பேய் பூதம் அந்தமில் பலவு மம்மையோ டப்ப னாணையா னடப்பன வவர்நஞ் சிந்தையே கோயில் கொண்டுவீற் றிருப்பத் தீங்கிழை யாவென வெழுந்தார். (இ-ள்.) எந்தை அவர் செய் வெந்த வேதனையின் உய்ந்தநீர் - எம்மப்பரே அச்சமணர் செய்த கொடிய துன்பத்தினின்றும் இறைவனருளாற் றப்பிய நீவிர், எம்பெருமான் அருள் இலார் போல - எம்பெருமான் திருவருளைப் பெறாதார் கூறுவதுபோல, இன்னணம் இசைப்பது என் - இங்ஙனம் கூறுவது என்னோ, நாள் கோள் விலங்கு புள் - நாள்களுங் கோள்களும் விலங்குகளும் பறவைகளும், அவுணர் பேய் பூதம் அந்தம்இல் பலவும் - அவுணர்களும் பேய்களும் பூதங்களும் இவை போன்ற அளவிறந்த பலவும், அம்மையோடு அப்பன் ஆணையால் நடப்பன - அம்மையோடு அப்பனாயுள்ள இறைவன் ஆணையினாலே நடப்பன; அவர் நம் சிந்தையே கோயில் கொண்டு வீற்றிருப்ப - அவ்விறைவர் நமது மனத்தையே கோயிலாகக் கொண்டு வீற்றிருத்தலால், தீங்கு இழையா என எழுந்தார் - அவை தீங்கு புரியாவெனப் பதிகங் கூறிப் புறப்பட்டனர். எந்தையாகிய எம்பெருமான் என்றுமாம். இறைவனருளுடை யார்க்கு யாதொன்றானும் துன்பமுண்டாகா தென்பதற்குச் சமணர் புரிந்த கொடுந்துன்பங்களினின்றும் உய்ந்த நீரே சான்றாக இருப்பவும் இங்ஙனம் கூறுவதென்னென்பார் ‘எம்பெருமானருளிலார் போல இன்னண மிசைப்பதென் அவர் செய் வெந்த வேதனையின் உய்ந்த நீர்’ என்று பிள்ளையார் கூறினரென்க.நாள் கோள் முதலியன இறைவனடியார்க்கு இன்னல் விளையாது நல்லனவேயாம் என்று அப்பொழுது பிள்ளையார் பாடிய பதிகம் ‘வேயுறு தோளி பங்கன்’ என்னும் கோளறு பதிகமாகும்; “ வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தெ னுளமே புகுந்த வதனால் ஞாயிறு திங்கள்செவ் வாய்புதன் வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல வடியா ரவர்க்கு மிகவே” என்னும் முதற் பாட்டால் கோட்களும், ஏனைய பாட்டுக்களாற் பிறவும் நல்லன வாதல் கூறப்பட்டமை காண்க. ஒவ்வொரு பாட்டிலும் இறைவன் அம்மையோடு உளம் புகுந்திருத்தல் கூறப்படுதலின் ஈண்டும் அம்மையோடப்பன் என இந்நூலாசிரியர் கூறின ரென்க. (30) அறுசீரடி யாசிரிய விருத்தம் மாமுர சொலிப்பச் சங்கங் காகளம் வாய்விட் டேங்கச் சாமறை பனிப்ப முத்தின் பந்தரிற் றரளத் தெய்வக் காமரு சிவிகை மேற்கொண்1 டமணிருள் கழுவுஞ் சோதி யாமென நெறிக்கொண் டீச னிடந்தொறு மடைந்து பாடி. (இ-ள்.) மாமுரசு ஒலிப்ப - பெரிய முரசங்கள் முழங்கவும், சங்கம் காகளம் வாய்விட்டு ஏங்க - சங்கங்களும் திருச்சின்னமும் வாய்விட்டு ஒலிக்கவும், சாமரை பனிப்ப - இருபுறங்களிலும் சாமரை அசையவும், முத்தின் பந்தரில் - முத்துப் பந்தரின் கீழ், தெய்வக் காமரு தரளச் சிவிகை மேற்கொண்டு - தெய்வத் தன்மை பொருந்திய அழகிய முத்துச் சிவிகையி லேறியருளி, அமண் இருள் கழுவும் சோதியாம் என - அமணாகிய இருளைப்போக்குஞ் சூரியனாகும் என்று கண்டோர் சொல்லுமாறு, நெறிக்கொண்டு ஈசன் இடந்தொறும் அடைந்து பாடி - வழிக் கொண்டு இறைவன் திருப்பதிகடோறுஞ் சென்று பாடியருளி. காமரு, உ: சாரியை; காமம் மரு காமரு என்றாயதெனக் கொண்டு, விருப்பம் பொருந்திய என்றுரைத்தலுமாம். முத்துச் சிவிகை முதலியவற்றின் ஒளியும், திருநீற்றினொளியும் விரவி மிகுதலால் ‘அமணிருள் கழுவுஞ்சோதியாமென ’என்றார் என்னலுமாம்; “ துன்னுமுழு வுடற்றுகளாற் சூழுமுணர் வினிற்றுகளால் அன்னெறியிற் சென்றடைந்த வமண் மாசு கழுவுதற்கு மன்னியொளிர் வெண்மையினாற் றூய்மையினால் வழுதியர் தங் கன்னிநாட் டிடைக்கங்கை யணைந்ததெனுங் கவின் காட்ட” என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது, கழுவுதல் - போக்குதல். (31) செம்பிய னாடு நீந்தித்1 தென்னவ னாடு நண்ணி வெம்பிய சுரமு முல்லைப் புறவமு மேக வில்லைத் தும்பிகை நீட்டி வாங்கு மலைகளுந் துறந்து பாகத் தம்பிகை யுடையான் கூட னகர்ப்புற னணுகச் செல்வார். (இ-ள்.) செம்பியன் நாடு நீந்தி - சோழன் நாட்டினைக் கடந்து, தென்னவன் நாடு நண்ணி - பாண்டியன் நாட்டினை அடைந்து, வெம்பிய சுரமும் முல்லைப்புறவமும் - வெப்பமிக்க பாலை நிலத்தையும் முல்லை நிலத்தையும், மேகவில்லைத் தும்பி கைநீட்டி வாங்கும் மலைகளும் துறந்து - முகிலிலுள்ள இந்திர வில்லை யானை தனது துதிக்கையை நீட்டி வளைக்கும் மலைகளையும் கடந்து, பாகத்து அம்பிகை உடையான் - ஒரு பாதியில் உமையையுடைய இறைவனது, கூடல் நகர்ப்புறன் அணுகச் செல்வார் - கூடலம்பதியின் அண்மையிற் செல்வாராயினர். முல்லையாகிய புறவம் என்க. மலைகளின் உயர்ச்சி கூறுவார் மேகவில்லைத் தும்பிகை நீட்டி வாங்கு மலைகள் என்றார். இது தொடர்புயர்வு நவிற்சி. (32) புண்ணிய நீற்றுத் தொண்டர் குழாத்தினுட் புகலி வேந்தர் நண்ணிய சிவிகை மீது நகைவிடு தரளப் பந்தர் கண்ணிய றோற்றந்2 தீம்பாற் கடல்வயிற் றுதித்துத் தீர்ந்து விண்ணியன் முழுவெண் டிங்கள் விளக்கமே யொத்த தன்றே. (இ-ள்.) புண்ணிய நீற்றுத் தொண்டர் குழாத்தினுள் - புண்ணியமாகிய திருநீற்றினை யணிந்த அடியார் கூட்டத்தினுள், புகலிவேந்தர் நண்ணிய சிவிகை மீது - காழிவேந்தர் ஏறியருளிய சிவிகையின்மேல், நகைவிடு தரளப் பந்தர் - ஒளிவிடும் முத்துப் பந்தரின், கண் இயல் தோற்றம் - பார்த்தற்கு அமைந்த காட்சி, தீம்பால் கடல் வயிறு உதிர்த்து - இனிய பாற் கடலின் நடுவிற்றோன்றி, தீர்ந்துவிண் இயல் முழுவெண் திங்கள் - மேற் போந்து வானிலுலாவும் வெள்ளிய முழுமதியினது, விளக்கமே ஒத்தது - காட்சியையே ஒத்தது. புண்ணியமே வடிவாயது திருநீறு என்பது, “ புண்ணிய மாவது நீறு” என்னும் திருநீற்றுப் பதிகத்தாலறிக. நீறு பூசிய தொண்டர் குழாம் பாற்கடல் போன்றும், முத்துப் பந்தர் அப் பாற்கடலிலுதித்து வானிலுயர்ந்த முழுமதிபோன்றும் விளங்கின என்க. பந்தர்: போலி. அன்று, ஏ: அசைகள். (33) தேம்படு குமுதச் செவ்வாய்ச் சிரபுரச் செல்வர் முன்னம் போம்பரி சனத்தார் தம்மிற் பொன்னெடுஞ் சின்ன மார்ப்போர் தாம்பர சமய சிங்கஞ் சமணிருள் கிழியப் பானு வாம்படி வந்தா னென்றென் றார்த்தெழு மோசை கேளா. (இ-ள்.) தேம்படு குமுதச் செவ்வாய்ச் சிரபுரச் செல்வர் முன்னம் - தேன் பொருந்திய குமுத மலர்போன்ற சிவந்த வாயினை யுடைய காழிச் செல்வருக்கு முன்னே; போம் பரிசனத்தார் தம்மில் - போகும் பரிசனங்களுள், பொன் நெடுஞ் சின்னம் ஆர்ப்போர் - பொன்னா லாகிய நீண்ட திருச்சின்னம் ஊதுவோர், பரசமய சிங்கம் - எங்கள் பரசமய கோளரி, சமண் இருள் கிழிய - சமணாகிய இருள் கிழிந்தோட, பானுவாம்படி வந்தான் என்று என்று ஆர்த்து எழும் ஓசை கேளா - சூரியன் போன்று வந்தனன் என்று பல முறை கூறி ஆரவாரித்து எழும் ஒலியினைக் கேட்டு. தாம் : அசை. பரசமய சிங்கம் - புறச் சமய வாதியராகிய வேழங்களை அடக்கும் சிங்கம்; “ உரைசெய்திருப் பேர் பலவு மூதுமணிச் சின்னமெலாம் பரசமய கோளரிவந் தானென்று பணிமாற” என்றார் அருண்மொழித் தேவரும். ஒலிப்பிக்க எழும் ஓசை என்க. (34) நின்றுண்டு திரியுங் கைய ரெதிர்வந்து நீவிர் நுங்கள் கொன்றறஞ் சொன்ன தேவைக் கும்பிட வந்தா லிந்த வென்றிகொள் சின்ன மென்கொல் வீறென்கொல் யாரைவென்றீர் என்றனர் தடுத்தா ரென்று மீறிலா னடியார் தம்மை. (இ-ள்.) நின்று உண்டு திரியும் கையர் - நின்ற வண்ணமே உணவு அருந்தித் திரியுங் கீழ்மக்களாகிய சமணர்கள், எதிர் வந்து - நேரில் வந்து, கொன்று அறஞ் சொன்ன நுங்கள் தேவை - உயிர்களைக் கொன்று அறங் கூறிய உங்கள் தேவனை, நீவிர் கும்பிட வந்தால் - நீவிர் வணங்குதற்கு வந்தால், இந்த வென்றி கொள் சின்னம் என் கொல் - இந்த வெற்றி பொருந்திய சின்னம் எதற்கு, வீறுஎன் கொல் - இறுமாப்பு எதற்கு, யாரை வென்றீர் என்றனர் - யாவரை வென்றீ ரென்று கூறி, என்றும் ஈறு இலான் அடியார் தம்மைத் தடுத்தார் - எஞ்ஞான்றும் அழிவில்லாத இறைவனடியார்களைத் தடுத்தனர். கொன்று அறஞ் சொன்ன - தான் கொலை புரிந்து பிறர்க்குக் கொலை தீதென்று அறஞ் சொன்ன. கொல்லுந் தொழிலுடையான் ஓதிய அறமும் அறமாகாது, அவனும் தேவனாகான் என இழித்துக் கூறுவாராய் ‘நுங்கள் கொன்றறஞ் சொன்ன தேவை’என்றார். ஈண்டுக் கொல்லுதலாவது சருவ சங்காரஞ் செய்தல்; யானை, பசு, நாகம், காமன், காலன் முதலியோரைக் கொன்றமையுமாம்; இவற்றுள் முன்னது உயிர்களை இளைப்பாற்றுதற்கும், பின்னது தம்மை யடைந்தார் வினை தீர்ப்பதற்கும் என்றுணர்க. என்றனர்: முற்றெச்சம். (35) மாமத மொழுகச் செல்லுந் திண்டிறன் மத்த வேழந் தாமரை நூலிற் கட்டத் தடைபட வற்றோ கொற்றக் காமனை முனிந்தார் மைந்தர் கயவர்தந் தடையை நீத்துக் கோவணி மாட மூதூ ரடைந்தரன் கோயில் புக்கார். (இ-ள்.) மாமதம் ஒழுகச் செல்லும் - கரிய மதநீர் ஒழுகச் செல்லா நிற்கும், திண்திறம் மத்த வேழம் - மிக்க வலியுடைய மதயானையானது, தாமரை நூலில் கட்டத் தடைபட வற்றோ - தாமரை நூலினாற் கட்டுதலால் தடை பட்டுப் போக்கொழியும் வன்மைக் குறைவுடையதோ? (இல்லை); கொற்றக் காமனை முனிந்தார் மைந்தர் - வெற்றி பொருந்திய மதவேளை எரித்தவரின் திருமைந்தர், கயவர் தம் தடையை நீத்து - அக் கீழ்மக்களின் தடையை நீக்கி, கோமணி மாடம் மூதூர் அடைந்து - தலைமை பெற்ற மணிகள் அழுத்திய மாடங்களையுடைய தொன்னகராகிய மதுரையை அடைந்து, அரன் கோயில் புக்கார் - சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலுட் புகுந்தார். மத்தம் - மதச்செருக்கு; மத்தகமும் ஆம். வற்றோ - வல்லதோ; வன்மைக் குறைவுடையதோ என்பது கருத்தாக் கொள்க; “ வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின் தந்துவினாற் கட்டச் சமைவ தொக்கும்” எனப் பிறரும் உவமை கூறினமை காண்க. இறைவன் ஞானப் பாலூட்டுவித்தும், சிவிகை முதலியன தந்தும் பிள்ளைமை பாராட்டு தலானும், இவரும் சற்புத்திர நெறி நின்று அம்மையப்பரையே தமக்குத் தாய் தந்தையராகப் போற்றி யொழுகலானும் ‘காமனை முனிந்தார் மைந்தர்’என்று கூறப்படுதற்குப் பிள்ளையார் உரிமையுடையராதல் பெற்றாம். (36) கைம்மலைச் சாபந் தீர்த்த கருணையங் கடலைத் தாழ்ந்து மும்முறை வளைந்து ஞான முகிழ்முலைப் பாலி னோடு செம்மணி வள்ளத் தீந்த திருவொடுந் தொழுதா னந்த மெய்ம்மய வெள்ளத் தாழ்ந்து நின்றனர் வேதச் செல்வர். (இ-ள்.) வேதச் செல்வர் - மறையாகிய செல்வத்தையுடைய திருஞானசம்பந்தப் பெருமானார், ஞானம் - சிவஞானத்தை, முகிழ் முலைப் பாலினோடு - தாமரையரும்பினையொத்த திருமுலைப் பாலினோடுங் குழைத்து, செம்மணி வள்ளத்து ஈந்த திருவொடும் - சிவந்த மணிகள் பதித்த பொற்கிண்ணத்தில் கொடுத்தருளிய அம்மையோடும், கைம்மலைச் சாபம் தீர்த்த கருணையங்கடலை - வெள்ளை யானையின் சாபத்தைப் போக்கியருளிய அருட்கடலாகிய அப்பனை, மும்முறை வளைந்து தாழ்ந்து தொழுது - மூன்று முறை வலம் வந்து வீழ்ந்து வணங்கி, மெய்ம்மய ஆனந்த வெள்ளத்து ஆழ்ந்து நின்றனர் - உண்மை மயமாகிய சிவானந்தப் பெருக்கிலழுந்தி நின்றனர். கடலைத் தாழ்ந்து வெள்ளத்து ஆழ்ந்து நின்றனர் என்பது சொன்னயம். (37) மறைவழி நின்று நின்னை வந்திசெய் துய்ய மாட்டா நிறைவழி வஞ்ச நெஞ்சச் சமணரை நெறிக ளெல்லாஞ் சிறைபட வாது செயத் திருவுள்ளஞ் செய்தி கூற்றைக் குறைபட வுதைத்தோ யென்று குறித்துரை பதிகம் பாடி. (இ-ள்.) கூற்றைக் குறைபட உதைத்தோய் - கூற்றுவனை அவனுயிர் சிதையுமாறு உதைத்தருளியவனே, மறைவழி நின்று நின்னை வந்தி செய்து உய்யமாட்டா - வேத நெறியினின்று உன்னை வணங்கிப் பிழைக்கமாட்டாத, நிறைவு அழிவஞ்ச நெஞ்சச் சமணரை - அறிவழிந்த வஞ்சம் நிரம்பிய உள்ளத்தையுடைய சமணரை, நெறிகள் எல்லாம் சிறைபட - அவர் வழிகளெல்லாம் சிறைபடுமாறு, வாது செய்யத் திருவுளம் செய்தி என்று - வாது செய்யத் திருவுள்ளஞ் செய்யக்கடவை என்று, குறித்து உரைபதிகம் பாடி - அதனைக் குறித்து உரைக்கும் திருப்பதிகம் பாடியருளி. நெறிகள் எல்லாம் சிறைபட - அவர்கள் புன்னெறி யெல்லாம் மறைந்தொடுங்க. சமணரொடு வாது செய்யவும், அவர்களை வாதில் வென்றழிக்கவும் இறைவர் திருக்குறிப்பினை யுணர்தல் வேண்டிப் பிள்ளையார் பாடிய பதிகம் இரண்டு; அவை முறையே, “ காட்டு மாவ துரித்துரி போர்த்துடல் நாட்ட மூன்றுடை யாயுடை செய்வனான் வேட்டு வேள்வி செயாவமண் கையரை ஓட்டி வாது செயத்திரு வுள்ளமே” “ வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி யமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதிமாதுட னாய பரமனே ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென் னால வாயி லுறையுமெம் மாதியே” என்னும் பாடல்களை முதலாக வுடையன. இவற்றுட் பின்னது வரும் படலத்திற் கூறப்படுதலின் ஈண்டு முதற்பதிகத்தைக் கொள்க. அடியவர்க்காக இயமனை உதைத்தருளிய பேரருளுடையை ஆகலின் சமணரை வாதில் வெல்ல அருள் புரிவை என விசேடியம் கருத்துடன கூடியிருத்தலின் இது கருத்துடை யடை கொளியணி; “ ஆலமே யமுத மாக வுண்டுவா னவர்க் களித்துக் காலனை மார்க்கண் டற்காக் காய்ந்தனை யடியேற் கின்று ஞாலநின் புகழே யாக வேண்டுநான் மறைக ளேத்துஞ் சீலமே யால வாயிற் சிவபெரு மானே யென்றார்” என்னும் பெரிய புராணச் செய்யுள் இங்கே சிந்திக்கற்பாலது. (38) வேண்டுகொண் டருளைப் பெற்று மீளுமப் போது கண்டு மூண்டவைம் பொறியும் வென்ற வாகீச முனிக ளென்ன1 ஆண்டுளா ரொருவர் வேண்ட வவர்திரு மடத்தி லன்பு பூண்டெழு காத லோடும் போயினார் புகலி வேந்தர். (இ-ள்.) வேண்டு கொண்டு அருளைப்பெற்று மீளும் அப்போது - வேண்டிக்கொண்டு திருவருளைப் பெற்றுத் திரும்பும் அப்பொழுது, மூண்ட ஐம்பொறியும் வென்ற - மூளுகின்ற ஐம்பொறியும் வென்ற - வாகீச முனிகளென்ன ஆண்டு உளார் ஒருவர் கண்டு வேண்ட - வாகீச முனிகளென்று அங்குள்ள ஒருவர் கண்டு வேண்டி யழைக்க, அவர் திருமடத்தில் - அவர் திருமடத்திற்கு, அன்பு பூண்டு எழு காதலோடும் - அன்பு பூண்டு மேலெழும் விருப்பத்தோடும், புகலிவேந்தர் போயினார் - காழியரசர் சென்றருளினார். வேண்டுகொண்டு - வேண்டுதல் செய்து; வேண்டு : முதனிலைத் தொழிற் பெயர். மூண்ட - புலன்களிற் செல்ல மூளும். வாகீச முனிகள் - பிள்ளையார் காலத்தில் மதுரையில் திருமட மமைத்து அதில் வசித்து அம்மையப்பரை வழிபாடு செய்து கொண்டிருந்த ஒரு சிவயோகியாராவர்; திருநாவுக்கரசுகளைப்போல அங்குள்ள ஒரு சிவயோகியார் வேண்ட என்றுரைப்பாருமுளர். (39) அங்கெழுந் தருளி யெல்லி னமுதுசெய் திருப்ப வற்றைக் கங்குல்வா யமணர் செய்யுங் கருதருஞ் செயலுந் தங்கள் மங்கல மரபின் வந்தாள் வருத்தமுங் காண வஞ்சிச் செங்கதி ரவன்போய் மேலைச் செழுங்கடல் வெள்ளத் தாழ்ந்தான். (இ-ள்.) அங்கு எழுந்தருளி எல்லின் அமுது செய்து இருப்ப - பிள்ளையார் அங்கு எழுந்தருளிப் பகற்பொழுதில் திருவமுது செய்து இருக்க, அற்றைக் கங்குல்வாய் - அன்று இரவின்கண், அமணர் செய்யும் கருதரும் செயலும் - சமணர்கள் செய்யும் நினைத்தற்கரிய செயலையும், தங்கள் மங்கலமரபின் வந்தாள் வருத்தமும் - தமது மங்கலமாகிய மரபிற்றோன்றிய மங்கையர்க்கரசியாரின் வருத்தத்தையும், காண அஞ்சி - பார்க்க அஞ்சி, செங்கதிரவன் போய் - சிவந்த கிரணங்களையுடைய சூரியன் சென்று, மேலைச் செழுங்கடல் வெள்ளத்து ஆழ்ந்தான் - மேற்குத் திசையிலுள்ள செழிய கடற் பெருக்கி லழுந்தினன். கருதருஞ் செயல் - மனத்தால் நி'e7[ததற்குமரிய கொடுஞ் செயல், சூரியனையும் அவன் மரபினர் பிறரையும் கருதித் தங்கள் என்றார். ஆதித்தர் பன்னிருவரென்பது பற்றித் தங்கள் என்றார் எனலுமாம். இயல்பிலே அத்தமித்த சூரியனை அமணர் செயலும் மரபின் வந்தாள் வருத்தமும் காண அஞ்சிக் கடல் வெள்ளத் தாழ்ந்தான் என்றமையால் இது தற்குறிப்பேற்ற அணி. (40) மாறுகொ ளமணர் செய்யும் வஞ்சனைக் கிடனா யொத்து வேறற நட்புச் செய்வான் வந்தென விரிந்த கங்குல் ஈறற முளைத்த வான்மீ னினமவர் பறித்த சென்னி ஊறுபட் டெழுந்த மொக்கு ளொத்தவக் கங்கு லெல்லை. (இ-ள்.) மாறுகொள் அமணர் செய்யும் வஞ்சனைக்கு இடனாய் - மாறுபாட்டினைக் கொண்ட சமணர்கள் புரியும் வஞ்சவினைக்கு இடமாகி, வேறு அற ஒத்துநட்புச் செய்வான் வந்தென - வேறுபாடு நீங்க ஒன்றுபட்டு நட்புச் செய்ய வந்தாற்போல, கங்குல் விரிந்தது - இருள் வந்து பரவியது; அக்கங்குல் எல்லை - அவ்விரவின் கண், ஈறு அற முளைத்த வான் மீன் இனம் - முடிவு இல்லையாக முளைத்த விண்மீன் கூட்டங்கள், அவர் பறித்த சென்னி - அவர்களுடைய மயிர் பறிக்கப்பட்ட தலைகளில், ஊறுபட்டு எழுந்த மொக்குள் ஒத்த - புண்பட்டு எழுந்த கொப்புளங்களை ஒத்தன. செய்வான் : வினையெச்சம். வந்தென : விகாரம். விரிந்தது என்னும் வினைமுற்றின் இறுதி தொக்கது. ஈறு அற - அளவில்லையாக என்றபடி. (41) கலிநிலைத்துறை வைதி கத்தனி யிளஞ்சிறு மடங்கலே றடைந்த செய்தி யைத்தெரிந் தயன்மலை யிடங்களிற் றிரண்ட கைத வத்தவெண் ணாயிரங் கயவரு மொருங்கே எய்தி முத்தமிழ் விரகர்மேற் பழித்தழ லிழைத்தார். (இ-ள்.) வைதிகம் தனி இளஞ் சிறு மடங்கலேறு - வேதநெறியிற் செல்லும் ஒப்பற்ற மிக்க இளமையையுடைய சிங்கவேறுபோல்வாராகிய திருஞானசம்பந்தர், அடைந்த செய்தியைத் தெரிந்து - அப்பதிக்கு வந்து சேர்ந்த செய்தியை அறிந்து,அயல் மலை இடங்களில் திரண்ட - பக்கங்களிலுள்ள மலையிடங்களிற் கூடியுள்ள, கைதவத்த எண்ணாயிரம் கயவரும் - வஞ்சக வொழுக்கத்தையுடைய எண்ணாயிரங் கயவர்களும், ஒருங்கே எய்தி - ஒருசேர மதுரைக்கு வந்து, முத்தமிழ் விரகர்மேல் பழித்தழல் இழைத்தார் - முத்தமிழ் வித்தகர்மேற் பழி வேள்வி செய்தனர். வைதிக மடங்கலேறு என்க. அயல்மலை இடங்கள் - ஆனை மலை முதலிய எண் குன்றங்கள்; “ ஆனை மாமலை யாதி யாய விடங்க ளிற்பல வல்லல்சேர் ஈனர் கட்கெளி யேன லேன்றிரு வால வாயர னிற்கவே” என்று பிள்ளையார் அருளிச்செய்தலுங் காண்க. பழித்தழல் - அபிசார வேள்வி. (42) மெய்யில் சிந்தையா ரத்தழற் கடவுளை விளித்தாங் கெய்தி யெம்பகை யாயினோ ரிருக்கையை யமுது செய்து வாவெனப் பணித்தனர்1 சிறுவிதி மகத்துக் கையி ழந்தவன் செல்லுமோ வஞ்சினான் கலங்கி. (இ-ள்.) மெய்இல் சிந்தையார் - உண்மையில்லாத உள்ளத்தை யுடைய சமணர், அத்தழற் கடவுளை விளித்து - அத்தீக் கடவுளை அழைத்து, ஆங்கு எய்தி - அங்குச் சென்று, எம் பகையாயினோர் இருக்கையை அமுது செய்துவா எனப் பணித்தனர் - எமது பகைவரின் இருப்பிடத்தை உண்டு வருவாயாகவென்று கட்டளை யிட்டனர்; சிறுவிதி மகத்தில் கை இழந்தவன் - தக்கன் வேள்வியில் கை அறுபட்ட அவன், செல்லுமோ - செல்வானோ, கலங்கி அஞ்சினான் - மனங்கலங்கி அஞ்சினான். மெய்யில் சிந்தை - பொய் குடிகொண்ட சிந்தை. மந்திரத்தால் அத்தீக் கடவுளை அழைத்து என்க. சிவபிரானுக்கு மாறாகத் தக்கன் புரிந்த வேள்வியில் சென்று கை குறைபட்டவன் சிவகுமாரராகிய திருஞான சம்பந்தர்க்கு மாறாக அவர் இருக்கையிற் றுணிந்து செல்வனோ என அவன் செல்லாமைக்கு ஏதுக் காட்டினர்; “ தவமறைந் தல்ல செய்வார்தங்கண்மந் திரத்தாற் செந்தீ சிவநெறி வளர்க்க வந்தார் திருமடஞ் சேரச் செய்தார்” “ ஆதி மந்திர மஞ்செழுத் தோதுவார் நோக்கு மாதி ரத்தினு மற்றைமந் திரவிதி வருமே பூதி சாதனர் மடத்திற்றாம் புனைந்தசா தனைகள் சாதி யாவகை கண்டமண் குண்டர்க டளர்ந்தார்” என்னும் சேக்கிழார் திருவாக்குகளும் காண்க. (43) ஈனர் தாஞ்சடத் துயினை யெடுத்தன ரேகி ஞான போனகர் மடத்தினிற் செருகினார் நந்தா தான தீப்புகை யெழுவதை யடியவர் கண்டு வான நாயகன் மைந்தருக் குணர்த்தினார் வல்லை. (இ-ள்.) ஈனர்தாம் சடத் துயினை எடுத்தனர் ஏகி கீழோராகிய அச்சமணர் தாமே சடமாகிய நெருப்பினை எடுத்துச் சென்று, ஞானபோனகர் மடத்தினில் செருகினார் - சிவஞானத்தை அமுது செய்த பிள்ளையார் இருக்குந் திருமடத்திற் செருகினர்; ஆன தீப்புகை நந்தாது எழுவதை - அதனாலாகிய நெருப்பின் புகை குறைவு படாது மேலெழுவதை, அடியவர் கண்டு - அடியார்கள் பார்த்து, வான நாயகன் மைந்தருக்கு வல்லை உணர்த்தினார் - வீட்டுலகிற்குத் தலைவனாகிய இறைவனது திருப்புதல்வருக்கு விரைய அறிவித்தனர். சடத்தீ - பூதாக்கினி. ஞான போனகர் - சிவஞானமாகிய உணவினையுண்டவர். வானவர்க்கு நாயகன் என்றுமாம்.(44) சிட்டர் நோக்கியத் தீயினைத் தென்றமிழ்க் கூடல் அட்ட மூர்த்தியை யங்கிருந் தருமறைப் பதிகந் துட்டர் பொய்யுரை மேற்கொண்டு தொன்முறை துறந்து விட்ட வேந்தனைப் பற்றெனப் பாடினார் விடுத்தார். (இ-ள்.) சிட்டர் அத்தீயினை நோக்கி - மேலோராகிய பிள்ளையார் அந்நெருப்பினைப் பார்த்து, அங்கு இருந்து - அங்கு இருந்த வண்ணமே, துட்டர் பொய் உரைமேற் கொண்டு - தீச் செயலையுடையவர்களாகிய சமணர்களின் பொய் மொழியை மேற்கொண்டு, தொல்முறை துறந்து விட்ட வேந்தனைப் பற்று என - பழைய முறைகளைக் கைவிட்ட மன்னனைப் பையச் சென்று பற்றக் கடவை என, தென்தமிழ்க் கூடல் அட்ட மூர்த்தியை - தமிழையுடைய தெற்கின் கண்ணுள்ள கூடலில் எழுந்தருளிய அட்டமூர்த்தியாகிய சோமசுந்தரக் கடவுள்மேல், அருமறைப்பதிகம் பாடினார் விடுத்தார் - அரிய தமிழ்மறைப் பதிகம் பாடி விடுத்தனர். அட்ட மூர்த்தியைப் பாடி வேந்தனைப்பற்று என அத்தீயினை விடுத்தார் எனக் கூட்டுக. நிலம் முதலிய எட்டு மூர்த்தங்களினும் உள்ளிருந்து அவற்றின் செயல்களை நிகழ்விப்போன் இறைவனாகலின் அவனைப் பாடித் தீயினை விடுத்தார் என்க. அரசன் முறை வழுவிய காரணத்தால் இது நிகழ்ந்தாகலின் பேரருளாளராகிய பிள்ளையார் சமணர்மீது தீயினை ஏவாது அரசன்மேல் ஏவினர். பிள்ளையார் அப்பொழுது பாடிய பதிகம், “ செய்ய னேதிரு வாலவாய் மேவிய ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர் பைய வேசென்று பாண்டியற் காகவே” என்னும் திருப்பாட்டை முதலாக வுடையது. அமணர் கொளுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியற்காக எனப் பிள்ளையார் பாடியதற்குரிய காரணங்களை, பாண்டிமா தேவியார் தமது பொற்பிற் பயிலுநெடு மங்கலநாண் பாது காத்தும் ஆண்டகையார் குலச்சிறையா ரன்பி னாலு மரசன்பா லபராத முறுத லாலும் மீண்டுசிவ நெறியடையும் விதியி னாலும் வெண்ணீறு வெப்பகலப் புகலி வேந்தர் தீண்டியிடப் பேறுடைய னாத லாலுந் தீப்பிணியைப் பையவே செல்க வென்றார் என அருண்மொழித் தேவர் பாடிய அருமைச் செய்யுளாலறிக. (45) அடுத்த தக்கணத் தரசனை வெப்புநோ யாகித் தொடுத்த திட்டபல் கலன்களுந் துகளெழப் பனிநீர் மடுத்த சாந்தமுங் கலவையு மாலையுங் கருகப் படுத்த பாயலுஞ் சருகெழப் புரவலன் பதைத்தான். (இ-ள்.) அக்கணத்து அரசனை அடுத்தது - (அத்தீயானது) அவ்விநாடியிலே கூன்பாண்டியனை அடைந்து, வெப்பு நோய் ஆகித் தொடுத்தது - சுரநோயாகிப் பற்றியது; (அதனால்), இட்ட பல்கலன்களும், துகள் எழ- அவன் அணிந்த பல அணிகளும் பொரிந்து தூளாக பனிநீர் மடுத்த சாந்தமும் கலவையும் மாலையும் கருக - பனிநீர் விட்டு மட்டித்த சந்தனமும் கூட்டுவர்க்கமும் மாலையுங் கருகித் தீயவும், படுத்த பாயலும் சருகு எழு - படுத்திருக்கும் படுக்கையும் வெந்து சருகாகவும், புரவலன் பதைத்தான் - அவ்வேந்தன் பதைத்தனன். அடுத்தது: முற்றெச்சம். துகளெழ முதலிய வினை யெச்சங்கள் நிகழ்காலத்தில் வந்தன. துகளெழ, கருக, சருகெழத் தொடுத்தது என முடித்தலுமாம். (46) வளவர் கோன்றிரு மடந்தையு மந்திர ரேறுந் தளர்வ டைந்துநன் மருத்துநூல் விஞ்சையர் தமைக்கூஉய்ப் பளகில் பன்பமருந் தருத்தவும் பார்வையி னாலும் விளைவதே யன்றி வெஞ்சுரந் தணிவது காணார். (இ-ள்.) வளவர் கோன் திரு மடந்தையும் - வளவர் கோன் பாவையாகிய மங்கையர்க்கரசியாரும், மந்திரர் ஏறும் - அமைச்சரே றாகிய குலச்சிறையாரும், தளர்வு அடைந்து - தளர்ச்சியுற்று, நல் மருத்து நூல் விஞ்சையர் தமைக் கூய் - நல்ல மருத்துவ நூல் வல்லாரை அழைத்து, பளகுஇல் பல் மருந்து அருத்தவும் - குற்றமில்லாத பல மருந்துகளை அருத்துவதனாலும், பார்வையினாலும் - மந்திரித்தலினாலும், விளைவதே அன்றி - மேலும் மேலும் முதிர்வதேயல்லாமல், வெஞ்சுரம் தணிவது காணார் - கொடிய அவ்வெப்பு நோய் தணிவதைக் கண்டிலர். கூவி என்பது விகாரமாயிற்று. அருத்தவும் - ஊட்டுதலினாலும். பார்வை - மந்திரித்தல். விளைதல் - முதிர்தல். (47) சவலை நோன்புழந் திம்மையு மறுமையுஞ் சாரா அவல மாசரை விடுத்தன ரனைவரும் பார்த்துத் தவவ லத்தினு மருந்தினுந் தணிந்தில தாகக் கவலை யெய்தினா ரிருந்தனர் விடிந்தது கங்குல். (இ-ள்.) சவலை நோன்பு உழந்து - உடல் மெலிதற் கேதுவாகிய நோன்பினால் வருந்தி, இம்மையும் மறுமையும் சாரா - இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் அடையாத, அவலம் மாசரை விடுத்தனர் - தவவலியற்ற இருவகை அழுக்கினையுமுடைய சமணர்களை விடுத்தனர்; அனைவரும் - அவரனைவரும், தவவலியினும் மருந்தினும் பார்த்து தணிந்திலதாக - தமது தவவன்மையினாலும் மருந்தினாலும் பார்த்தும் அந்நோய் தணியாதாக, கவலை எய்தினார் இருந்தனர் - கவலையுற்று இருந்தனர்; கங்குல் விடிந்தது - இரவு விடிந்தது. கவலை நோன்பு - சுடுபாறையிற் கிடத்தல் முதலிய நோன்பு. அவலம் - துன்பம் என்றுமாம். மாசர் - அக வழுக்கும் புறவழுக்குமுடையவர். விடுத்தனர் என்பதற்குப் பரிசனங்கள் என எழுவாய் வருவித்துக் கொள்க. அவரனைவரும் எனச் சுட்டுப் பெயர் விரிக்க. தங்கள் மதத்திற்கு யாது தீங்கு நேருமோ எனக் கவலை யெய்தின ரென்க. எய்தினார்: முற்றெச்சம். (48) வட்ட வாழியொன் றுடையதேர்ப் பரிதிதன் மருமான் பெட்ட காதல்கூர் மருகனைப் பற்றிய பிணிகேட் டிட்ட காரிரு ளெழினியை யெடுத்தெடுத் தங்கை தொட்டு நோக்குவான் வந்தெனத் தொடுகடன் முளைத்தான். (இ-ள்.) வட்ட ஆழி ஒன்று உடைய தேர்ப்பரிதி - வட்டமாகிய உருள் ஒன்றையுடைய சூரியன், தன் மருமான் பெட்ட காதல் கூர்மருகனை - தனது வழித் தோன்றலாகிய சோழனால் விரும்பப் பட்ட அன்பு மிக்க மருமகனாகிய பாண்டியனை, பற்றிய பிணிகேட்டு - தொடுத்த நோயினைக் கேட்டு, இட்ட இருள் எழினியை - இடப்பட்ட கரிய இருளாகிய திரையினை, எடுத்து எடுத்து அகங்கை தொட்டு நோக்குவான் வந்தென - எடுத்துவிட்டு அகங்கையாற் றொட்டுப் பார்ப்பதற்கு வந்தாற்போல, தொடுகடல் முளைத்தான் - தோண்டப் பட்ட கீழைக்கடலின்கண் தோன்றினான். பெட்ட - விரும்பிய. இருள் சிறிது சிறிதாக நீங்குதலின் எடுத்தெடுத்து என்றார். சகரர் தோண்டியது கீழ்கடலாதலின் தொடு கடல் என்றார். (49) வாலி தாகிய சைவவான் பயிரினை வளர்ப்பான் வேலி யாகியோ ரிருவரும் வேந்தனை நோக்கிக் கால பாசமுஞ் சுடுமிந்நோ யருமறைக் காழிப் பால ராலன்றித் தீர்த்திடப் படாதெனப் பகர்ந்தார். (இ-ள்.) வாலிதாகிய சைவவான் பயிரினை வளர்ப்பான் - தூயதாகிய சிறந்த சைவமாகிய பயிரினை வளர்த்தற்கு, வேலியாகியோர் இருவரும் - வேலியாயுள்ள மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும், வேந்தனை நோக்கி - அரசனைப் பார்த்து, காலபாசமும் சுடும் இந்நோய் - கூற்றுவனது பாசத்தையும் வெதுப்பும் இப்பிணியானது, அருமறைக்காழிப் பாலரால் அன்றி - அரிய தமிழ்மறையையுடைய காழிப் பிள்ளையாரால் தீர்க்கப்படுமல்லாமல் ஏனையோரால், தீர்த்திடப்படாதெனப் பகர்ந்தார் - நிக்கப்படாது என்று கூறினர். புறச்சமயிகளாகிய பட்டிகளால் அழியாது பாதுகாப்பவரென்பார் வேலி யாகியோர் என்றார். காழியில் வந்த மறைப்பாலரால் என்க. மறைப்பாலர் - அந்தணச் சேயும் ஆம். (50) பொய்யா சார்பினை விடாதவ னீங்குநீர் புகன்ற சைவர் நீறிட்டுப் பார்ப்பது தகுவதோ வென்ன ஐய நீயெனைத் திறத்தினா லாயினு நோய்தீர்ந் துய்ய வேண்டுமே யிதனில்யா துறுதியென் றுரைத்தார். பொய்யர் சார்பினை விடாதவன் - பொய்யர்களாகிய சமணர்களின் சார்பினைவிட்டு நீங்காத பாண்டியன், நீங்கு நீர் புகன்ற சைவர் - இப்பொழுது நீர் கூறிய அச்சைவர், நீறுஇட்டுப் பார்ப்பது தகுவதோ என்ன - திருநீறிட்டு என்னைப் பார்ப்பது தகுவதொன்றே என்று கூற, ஐய - ஐயனே, நீ எனைத் திறத்தினால் ஆயினும் - நீ எந்த வகையினலாவது, நோய் தீர்ந்து உய்ய வேண்டுமே - நோய் நீங்கிப் பிழைக்க வேண்டுமல்லவா, இதனில் உறுதி யாது என்று உரைத்தார் - இதனினும் நன்மை யாது உளதென்று உரைத்தனர். நீர் புகன்ற - நும்மாற் கூறப்பட்ட நீறு இட்டுப் பார்ப்பது திருநீறு போட்டு நோய் தீர்ப்பது; திருநீறு பூசி வந்து பார்ப்பது என்றுமாம். எனைத்து என்பது எனை என நின்றது. சைவர் நீறிடுதலால் உய்வது உறுதியாமன்றி அது தகாதென மறுத்து உயிரிழப்பது உறுதி யாகா தென்பார், ‘இதனில் யாது உறுதி’ என்றார் என்க (51) அழைமி னீண்டென வரசனு மிசைந்தன னார்வந் தழையு மந்திரத் தலைமகன் றனிநக ரெங்கும் விழவு தூங்கநன் மங்கல வினைகளால் விளக்கி மழலை யின்றமிழ் விரகர்தம் மடத்தில்வந் தெய்தா. (இ-ள்.) ஈண்டு அழைமின் என அரசனும் இசைந்தனன் - இங்கு அழையுங்கள் என்று அரசனும் உடன்பட்டனன்; ஆர்வம் தழையும் மந்திரத் தலைமகன் - விருப்ப மிகும் அமைச்சர் தலைவனாகிய குலச்சிறையார், தனிநகர் எங்கும் விழவு தூங்க - ஒப்பற்ற நகர் முழுவதும் திருவிழாப் பொலிவுற, நல்மங்கலவினைகளால் விளக்கி - நல்ல மங்கலச் செயல்களால் நகரை அலங்கரித்து, இன் மழலை தமிழ் விரகர் தம் மடத்தில் வந்து எய்தா - இனிய மழலை மொழியினையுடைய முத்தமிழ் விரகர் எழுந்தருளிய திருமடத்தில் வந்து சேர்ந்து. அவர் உரைத்தமை கேட்டு அரசனும் இசைந்தனன் எனவும், அதனால் ஆர்வந்தழையும் மந்திரத் தலைமகன் எனவும் விரித்துரைக்க. மங்கல வினைகள் - கொடியெடுத்தல், தோரணங் கட்டுதல், மாலை தூக்கல் முதலாயின. மழலை போலும் இனிய தமிழ் என்றுமாம். (52) அன்று கேள்வியா லருந்திய ஞானவா ரமுதை இன்று கண்களா லுண்டுகண் பெற்றபே றெய்திச் சென்றி றைஞ்சினா னெழுந்திருந் தீயமண் சூழ்ச்சி வென்ற சிந்தையீ ரென்றனர் பூந்தராய் வேந்தர். (இ-ள்.) அன்று கேள்வியால் அருந்திய ஞான ஆரமுதை - அந்தணனாற் கூறப்பட்ட அன்று செவியினாற் பருகிய நிறைந்த ஞானஅமிழ்தினை, இன்று கண்களால் உண்டு - இப்பொழுது கண்களாற் பருகி, கண் பெற்ற பேறு எய்தி - கண் பெற்ற பயனை அடைந்து, சென்று இறைஞ்சினான் - நெருங்கிப்போய் வீழ்ந்து வணங் கினான்; பூந்தராய் வேந்தர் - காழிமன்னர், தீ அமண் சூழ்ச்சிவென்ற சிந்தையீர் - கொடிய அமணர்களின் சூழ்ச்சியை வென்ற சிந்தையையுடையீர், எழுந்திரும் என்றனர் - எழுந்திருப்பீராக என்று கூறியருளினர். ஞான அமுது - ஞானமே உருவமாகிய அமிழ்தம் போல்வார்; ஞானத்தின் றிருவுருவை நான்மறையின் றனித்துணையை வானத்தின் மிசையன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைத் தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தி னெழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள் என்னும் அருண்மொழித் தேவர் அமுதவாக்கு இங்கே நோக் கற்பாலது. பூந்தராய் - சீகாழியின் பன்னிரு பெயருள் ஒன்று. (53) நன்றி ருந்தனி ரேயென நகைமலர்த் தடந்தார் வென்றி மீனவன் கற்பினார் தம்மையும் வினவ என்று நும்மரு ளுடையவர்க் கெவன்குறை யென்னா ஒன்று கேண்மைகூ ரன்பினா ரிதனையு முரைப்பார். (இ-ள்.) நன்று இருந்தனிரே என - நலமுற இருக்கின்றீரோ என்று, நகைமலர்த் தடம்தார் - ஒளி பொருந்திய மலர்களாலாகிய பெரிய மாலையையணிந்த, வென்றி மீனவன் கற்பினார் தம்மையும் - வெற்றியையுடைய பாண்டியன் தேவியாகிய மங்கையர்க்கரசியாரைக் குறித்தும், வினவ - உசாவ, நும் அருள் உடையவர்க்கு என்றும் குறை எவன் என்னா - நுமது அருளையுடையவர்க்கு முக்காலத்தும் தீங்கு ஏது என்று கூறி, ஒன்று கேண்மை கூர் அன்பினார் - பொருந்திய நட்பு மிகுதற் கேதுவாகிய அன்பினையுடைய குலச்சிறையார், இதனையும் உரைப்பார் - இதனையுங் கூறுவாராயினர். மங்கையர்க்கரசியாரும் நீரும் நலமே என உடன் சேர்த்து வினாவினரென்பார் ‘நன்றிருந்தனிரே யென - மீனவன் கற்பினார் தம்மையும் வினவ என்றார்; இங்ஙனம்’ பொருள் கூறுவதே இவ்வாசிரியர் கருத்துக்கு இயைந்ததாகும்; மங்கையர்க்கரசியாரை நோக்கி வினவினரெனவும், அவர் இதனையும் உரைப்பார் எனவும் பிறர் கூறும் பொருள் பொருந்தாதென்க. “ செம்பியர் பெருமான் குலமக ளார்க்குந் திருந்திய சிந்தையீ ருமக்கும் நம்பெரு மான்றன் றிருவருள் பெருகு நன்மைதான் வாலிதே யென்ன வம்பல ரலங்கன் மந்திரி யாரு மண்மிசைத் தாழ்ந்தடி வண்ங்கித் தம்பெருந் தவத்தின் பயனனை யார்க்குத் தன்மையா நிலையுரைக்கின்றார்” சென்றகாலத்தின் பழுதிலாத் திறமு மினியெதிர் காலத்தின் சிறப்பும் இனறெழுந் தருளப் பெற்றபே றிதனா லெற்றைக்குந் திருவரு ளுடையோம் நன்றியி னெறியி லழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனு முய்ந்து வென்றிகொ டிருநீற் றொளியினில் விளங்கு மேன்மையும் படைத்தன மென்பார் என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுட்கள் ஈண்டுச் சிந்திக் கற்பாலன. (54) கையர் மாளவு நீற்றினாற் கவுரியன் றேயம் உய்வ தாகவு மின்றுநும் மருளினா லொலிநீர் வையை நாடன்மேல் வெப்புநோய் வந்ததா லதனை ஐய தீர்த்திடல் வேண்டுமென் றடியில்வீழ்ந் திரந்தார். (இ-ள்.) ஐய - ஐயனே, இன்று நும் அருளினால் - இன்று நுமது திருவருளினால், கையர் மாளவும் - கீழ்மக்களாகிய சமணர்கள் அழியவும், கவுரியன் தேயம் நீற்றினால் உய்வது ஆகவும் - பாண்டியன் நாடானது திருநீற்றினால் உய்தி பெறுதலை அடையவும், ஒலிநீர் வையை நாடன்மேல் வெப்பு நோய் வந்தது - ஒலியினையுடைய நீர் நிறைந்த வையை நாடனாகிய பாண்டியன் உடலில் வெப்பு நோய் வந்தடைந்தது; அதனைத் தீர்த்திடல் வேண்டும் என்று - அப்பிணியை நீக்கியருள வேண்டுமென்று, அடியில் வீழ்ந்து இரந்தார் - திருவடியில் வீழ்ந்து குறையிரந்தனர். ஒலிநீர் வையைக்கு அடை. ஆல் : அசை. (55) இரந்த வன்பருக் கன்னதா கென்றருள் சுரந்து பரந்த நித்தில யானமேற் பனிக்கதிர் மருமான் சுரந்த ணிப்பலென் றேகுவா னொத்துமெய்ச் சுருதி புரந்த ளிப்பவர் பாண்டியன் கோயிலிற் புகுவார். (இ-ள்.) மெய்ச்சுருதி புரந்து அளிப்பவர் - உண்மையாகிய மறை களைப் பாதுகாத்தளிப்பவராகிய பிள்ளையார், இரந்த அன்பருக்கு அன்னது ஆக என்று அருள் சுரந்து - அங்ஙனங் குறையிரந்த அன்பருக்கு அங்ஙனமே ஆகுக என்று அருள் கூர்ந்து, பரந்த நித்தில யானமேல் - ஒளி பரந்த முத்துச்சிவிகையி லேறியருளி, பனிக்கதிர் - குளிர்ந்த ஒளியினையுடைய சந்திரன், மருமான் சுரம் தணிப்பல் என்று ஏகுவான் ஒத்து - தனது வழித்தோன்றலாகிய பாண்டியனது வெப்பு நோயைத் தணிப்பேனென்று கருதிப் போதல்போல, பாண்டியன் கோயிலில் புகுவார் - பாண்டியனது மாளிகையுட் போவாராயினர். ஆகென்று அகரம், தொக்கது. ஏகுவான்: தொழிற்பெயர். சுருதியைப் பாதுகாப்பவர் என்பதனை நான்மறையின் தனித் துணையை என்பதனாலுமறிக. (56) வாயி லெங்கணுந் தூபமு மங்கல விளக்குந் தோய கும்பமுங் கொடிகளுஞ் சுண்ணமுந் துவன்றச்1 சேய காகள வொலிமன்னன் செவிப்புலன் சுவைப்பக் கோயி லெய்தினா ரமணர்தங் கோளரி யனையார். (இ-ள்.) வாயில் எங்கணும் - வாயில்கள் எங்கும், தூபமும் மங்கல விளக்கும் - தூபங்களும் மங்கல விளக்குகளும், தோயகும்பமும் - நீர் நிறைந்த குடங்களும், கொடிகளும் சுண்ணமும் துவன்ற - கொடிகளும் சுண்ணப் பொடிகளும் நெருங்கவும், சேய காகள ஒலி- சேய்மையிலுள்ள திருச்சின்ன ஒலியாகிய அமுதினை, மன்னன் செவிப்புலன் சுவைப்ப - பாண்டியனது செவிப் புலனானது சுவையுடன் அருந்தவும், அமணர் தம் கோளரி அனையார் சமணர்களாகிய யானைகட்குச் சிங்கம் போன்ற பிள்ளையார், கோயில் எய்தினார் - அரசனது மாளிகையை அடைந்தனர். தோயம் - நீர். சேயகாகளம் பொன்னாற் செய்தமையின் செம்மையுடைய காகளம் என்றுமாம். (57) காவ லோன்மருங் கிட்டதோர் கதிர்மணித் தவிசின் மேவி னாரவா நோக்கினான் மீனவன் றெளிந்து வாவி தாழ்செழுந் தாமரை யெனமுக மலர்ந்து பாவி யேன்பிணி தணித்தெனைப் பணிகொண்மி னென்றான். (இ-ள்.) காவலோன் மருங்கு இட்டது ஓர் கதிர்மணித் தவிசில் மேவினார் - அரசன் பக்கத்தில் இட்டதாகிய ஒளி பொருந்திய மணிகளழுத்திய ஒருதவிசின்கண் இருந்தனர்; அவர் நோக்கினால் மீனவன் தெளிந்து - அவரது பார்வையினாற் பாண்டியன் தேறி, வாவிதாழ் செழுந்தாமரை என - தடாகத்திற் றங்கிய செழுந்தாமரை மலரென, முகமலர்ந்து - முகமலர்ச்சியுடையவனாய், பாவியேன் பிணி தணித்து - பாவியாகிய எனது நோயைத் தணித்து, எனைப் பணிகொள் மின் என்றான் - என்னை அடிமையாக்கிக் கொள்வீர் என்று குறையிரந்தனன். அவர் மேவினார் எனவும், மீனவன் நோக்கினான் எனவும் கூட்டியுரைத் தலுமாம். பிள்ளையாரைத் தரிசித்தமையாலும் அவரது அருள் நோக்கத்தாலும் சிறிது பிணி தவிர்ந்து அறிவு தெளிந்தான் என்க.(58) புலைத்தொ ழிற்குவித் தாயினோர் கேட்டுளம் புழுங்கிக் கலைத்த டங்கட னீந்திய காவலோ யுன்றன் வலப்பு றத்துநோ யிவரையு மற்றைநோ யெமையுந் தொலைத்தி டப்பணி யென்றனர் கைதவன் சொல்வான். (இ-ள்.) புலைத்தொழிற்கு வித்தாயினோர் - கொல்லுதல் முதலிய இழிதொழிலுக்கு விதையாயுள்ள சமணர்கள், கேட்டு உளம் புழுங்கி - அதனைக் கேட்டு உள்ளம் வெந்து, கலைத்தடம் கடல் நீந்தி காவலோய் - நுல்களாகிய பெரிய கடலை நீந்திக் கரைகைண்ட மன்னனே, உன்றன் வலப்புறத்து நோய் இவரையும் - உனது வலப்பக்கத்திலுள்ள நோயினை இவரையும், மற்றை நோய் எமையும் - இடப்புறத்து நோயினை எம்மையும், தொலைத்திடப் பணி என்றனர் - நீக்குதற்குக் கட்டளை யிடுவாயாக வென்றனர்; கைதவன் சொல்வான் - பாண்டியன் கூறுவானாயினன். ஆடவ ருடம்பின் வலப்புறத்து நோய் வலிதும் இடப்புறத்து நோய் எளிதுமாம் என்னும் மருத்துநூற் கொள்கையுணர்ந்து இங்ஙனம் கூறினர் போலும். வலப்புறத்து நோய் தொலைத்திட இவரையும் மற்றைநோய் தொலைத்திட எம்மையும் பணி யென்றனர் எனக் கூட்டியுரைக்க. (59) அனைய செய்திரென் றிசையுமுன் சமணரு1 மசோகன் றனைநி னைந்துகைப் பீலியாற் றடவியுங் கரத்துக் கனைகொ ளாலிநீர் சிதறியு நெய்சொரி கனல்போற சினவி மேலிடக் கண்டனர் தீர்ந்திடக் காணார். (இ-ள்.) அனைய செய்திர் என்று இசையுமுன் - அங்ஙனமே செய்யுமென்று உடன்படுமுன்னே, சமணரும் அசோகன் தனை நினைந்து - அமணர்களும் அருகனை நினந்து, கைப்பீலியால் தடவியும் - கையிலுள்ள மயிற் பீலியினால் தடவியும், கரத்துக் கனைகொள் நீர் ஆலி சிதறியும் - கமண்டலத்திலுள்ள ஒலித்தலைக் கொண்ட நீர்த்துளியினைச் சிதறியும், நெய் சொரி கனல்போல் - (அவற்றால் அந் நோய்) நெய் சொரிந்த நெருப்புப்போல, சினவி மேலிடக் கண்டனர் - சினந்து மேலிடுதலைக் கண்டாரேயன்றி, தீர்ந்திடக் காணார் - நீங்கக் கண்டிலர். அசோகன் - அசோக மரத்தின் நிழலில் இருக்கும் அருக தேவன். கரகம் என்பது கரம் என விகாரமாயிற்று. ஆலி - நீர்த்துளி. (60) தீயர் மானமிக் குடையராய்ச் செருக்கழிந் திருப்பப் பாய கேள்வியோர் புண்ணியப் பையுணீ றள்ளிக் காயு நோயது தணித்திடக் கருதினா ரதனை மாய நீறென விலக்கினார் மாயைசெய் தழிவார். (இ-ள்.) தீயர் - அக்கொடியவர், மானம் மிக்குடையராய் - மிகுதியும் மானமுடையவராய், செருக்கு அழிந்து இருப்ப - இறுமாப்பு அழிந்துவாளாவிருப்ப, பாயகேள்வியோர் - பரந்த நூற்புலமையுடைய பிள்ளையார், புண்ணியப் பையுள் நீறு அள்ளி - அறவடிவினதாகிய பையுளுள்ள திருநீற்றினை அள்ளி, காயும் நோயது தணித்திடக் கருதினார் - வெதுப்புகின்ற நோயினை நீக்கக் கருதினார்; அதனை மாயநீறு என - அதனை மாயநீறு என்று கூறி, மாயை செய்து அழிவார் விலக்கினார் - வஞ்சகம் புரிந்து அழியும் அவ்வமணர் தடுத்தனர். புண்ணியப்பை - நீற்றுப்பை. நோயது, அது: பகுதிப்பொருள் விகுதி கருதினாராக அதனை என்க. மாயநீறு - பொய்யாகிய நீறு; நீறு அல்லது. (61) அண்ட நாயகன் றிருமடைப் பள்ளிநீ றள்ளிக் கொண்டு வாருமென் றருமறைக் கவுணியர் கூறக் கண்டு காவல ரேவலர் கைக்கொடு வந்தார் வண்டு லாவுதார் வழுதிநோய் தணிப்பவர் வாங்கி. (இ-ள்.) அண்டநாயகன் திருமடைப்பள்ளி நீறு - தேவநாய கனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருமடைப்பள்ளியிலுள்ள சாம்பலை, அள்ளிக்கொண்டு வாரும் என்று - அள்ளிக்கொண்டு வாருங்களென்று, அருமறைக் கவுணியர் கூற - அரிய தமிழ்மறை பாடும் பிள்ளையார் கூறியருள, காவலர் ஏவலர் கண்டு - மன்னன் ஏவலாளர் அதனைக் கேட்டு, கைக்கொடு வந்தார் - கையிலள்ளிக் கொண்டு வந்தனர்; வண்டு உலாவுதார் வழுதிநோய் தணிப்பவர் வாங்கி - வண்டுகள் உலாவும் மலர் மாலையையணிந்த பாண்டியனது பிணியினை நீக்கும் பிள்ளையார் அதனை வாங்கி, அண்டர் நாயகன் என்பது அண்ட நாயகன் என்றாயிற்று; அண்டங்கட்கு நாயகன் என்றுமாம். (62) மருந்து மந்திரம் யாவையு மறையுரைப் பதுவும் பொருந்து மின்பவீ டளிப்பதும் போகமும் பொருளுந் திருந்து மாலவா யான்றிரு நீறெனச் சிறப்பித் தருந்து மின்னமு தனையசொற் பதிகம தறைந்து. (இ-ள்.) மருந்து மந்திரம் யாவையும் - மருந்தும் மந்திரமும் முதலிய அனைத்தும், மறை உரைப்பதும் - வேதத்தினால் உரைக்கப் படுவதும், பொருந்தும் இன்ப வீடு அளிப்பதும் - பொருந்திய இன்பினையுடைய வீடுபேற்றினை அளிப்பதும், போகமும் பொருளும் - போகமாயுள்ளதும் பொருளாயுள்ளதும், திருந்தும் ஆலவாயான் திருநீறு என சிறப்பித்து - திருந்திய ஆலவாயான் திருநீறே என்று சிறப்பித்து, அருந்தும் இன்அமுது அனைய சொல்பதிகமது அறைந்து - உண்ணும் இனிய அமிழ்தினை யொத்த சொற்களை யுடைய திருப்பதிகம் பாடியருளி. பதிகமது, அது : பகுதிப்பொருள் விகுதி. பதிகம், “ மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் பெறுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் றிருநீறே” என்னும் திருப்பாட்டை முதலாகவுடைய திருநீற்றுப்பதிகம். இப்பதிகத்துள்,“ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந்தருவது நீறு” என்பதனால் மருந்தும், “மந்திர மாவது நீறு” என்பதனால் மந்திரமும், “வேதத்திலுள்ளது நீறு” என்பதனால் மறையுரைப்பதும், “முத்தி தருவது நீறு” என்பதனால் வீடளிப்பதும், “ இருமைக்குமுள்ளது நீறு” என்பதனால் போகமும், “ அருத்தமதாவது நீறு” என்பதனால் பொருளும் ஆமென்று அருளிச் செய்தமை காண்க. (63) மெய்யி லிட்டனர் வருடலும் வெஞ்சுரந் துறந்த மையில் சிந்தையோர் வெகுளியிற் றணிந்தது வாசஞ் செய்த தண்பனி நீர்விரைச் சந்தனந் திமிர்ந்தால் எய்து தண்மைய தாயின திறைவலப் பாகம். (இ-ள்.) மெய்யில் இட்டனர் வருடலும் - பாண்டியனது உடம்பில் இட்டுத் தடவியவளவில், வெஞ்சுரம் - அக் கொடிய வெப்பு நோய், துறந்த மை இல் சிந்தையோர் வெகுளியில் தணிந்தது - முற்றத் துறந்த குற்றமில்லாத சிந்தையினை யுடையோர் சினம் போல விரையத் தணிந்தது; இறை வலப்பாகம் - (ஆதலால்) அரசனது வலப்பாகம், வாசம் செய்த தண் பனிநீர் விரையச் சந்தனம் திமிர்ந்தால் - மணம் வீசிய குளிர்ந்த பனிநீரிற் குழைத்த மணமுடைய சந்தனத்தைப் பூசினால், எய்து தண்மையது ஆயினது - உண்டாகும் குளிர்ச்சியை உடையதாயிற்று. இட்டனர் : முற்றெச்சம். வஞ்சம் தணிந்தது எனக் கூட்டுக. நற்குணங்களின் முடிவில் நின்ற துறந்தோரிடத்து ஒரோ வழி வெகுளியுண்டாயின் அது மெய்யுணர்வால் அப்பொழுதே அழியுமாதலின் ‘துறந்த மையில் சிந்தையோர் வெகுளியில் தணிந்தது’ என்றார்; “ குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது” என்னுங் குறளும், அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையுங் காண்க. (94) பொழிந்த தண்மதுத் தார்புனை பூழியர் கோனுக் கிழிந்த செய்கையர் கைதொட வெரியிடு சுரத்தாற் கழிந்த துன்பமுங் கவுணியர் கைதொடச் சுரந்தீர்ந் தொழிந்த வின்பமு மிருவினை யொத்தபோ லொத்த. (இ-ள்.) தண் மதுப்பொழிந்த தார்புனை பூழியர்கோனுக்கு - தண்ணிய தேனைப் பொழியும் மாலை யணிந்த பாண்டியர் மன்னனுக்கு, இழிந்த செய்கையர் கைதொட - இழிந்த தொழிலை யுடைய சமணர்கள் கைதொட, எரிஇடு சுரத்தால் கழிந்த துன்பமும் - அனல் போலக் காந்தும் வெப்பு நோயால் மிகுந்த துன்பமும், கவுணியர் கைதொட - பிள்ளையார் திருக்கரந்தொடுதலால், சுரம் தீர்ந்து ஒழிந்த இன்பமும் - வெப்பு நோய் நீங்கி ஒழிதலாகிய இன்பமும், இருவினை ஒத்தபோல் ஒத்த - இரண்டு வினைகளுந் தம்முளொத்தனபோல ஒத்தன. தொட - தொடுதலால். கழிந்த - மிக்க; கழி என்னும் உரியடியாக வந்த பெயரெச்ச வினை. ஒழிந்த : பெயரெச்சம் காரணப் பொருட்டு. ஒத்த, அன்பெறாத பலவறி சொல். துன்பமும் இன்பமும் ஒத்த என்றது அமணர் தொட்ட பாகத்து எத்துணைத்துன்ப மிகுந்ததோ அத் துணை இன்பம் பிள்ளையார் தொட்ட பாகத்து மிகுந்தது என இரண்டும் அளவால் ஒத்தமை கூறியவாறாம். இருவினை யொப்பு என்பதற்கு நல் வினையும் தீவினையும் ஓரளவினவாதல் என ஒரு சாரார் பொருள் கூறுவராகலின் அம்முறைபற்றி ‘இருவினை யொத்தபோல்’ என்றார். “ மன்னவன் மொழிவா னென்னே மதித்தவிக் கால மொன்றில் வெந்நர கொருபா லாகும் வீட்டின்ப மொருபா லாகும் துன்னுநஞ் சொருபா லாகுஞ் சுவையமு தொருபா லாகும் என்வடி வொன்றி லுற்றே னிருதிறத் தியல்பு மென்பான்” என்னும் பெரிய புராணச் செய்யுளும் நோக்குக. (65) ஐய விச்சுர மாற்றரி தாற்றரி தென்னா வையை நாடவன் வல்லமண் மாசுதீர்ந் தடியேன் உய்ய வேண்டுமே லதனையு மடிகளே யொழித்தல் செய்ய வேண்டுமென் றிரந்தனன் சிரபுரக் கோனை. (இ-ள்.) வையை நாடவன் - வையை நாட்டினையுடைய பாண்டியன், ஐய - ஐயனே, இச்சுரம் ஆற்றரிது ஆற்றரிது என்னா - இவ்வெப்பு நோய் பொறுத்தற் கரியது பொறுத்தற்கரியது என்று கூறி, வல் அமண் மாசு தீர்ந்து அடியேன் உய்ய வேண்டுமேல் - வலிய அமணர்களின் சார்பாயுள்ள குற்றத்தினின்றும் நீங்கி அடியேன் பிழைக்க வேண்டுமானால், அதனையும் அடிகளே ஒழித்தல் செய்ய வேண்டும் என்று - அவ்விடப் புறத்து வெம்மையையும் அடிகளே நீக்கியருள வேண்டுமென்று, சிரபுரக்கோனை இரந்தனன் - காழி வேந்தனைக் குறையிரந்து வேண்டினன். அடுக்கு அச்சப் பொருட்டு. ஒழித்தல் செய்ய - ஒழிக்க. (66) பிள்ளை யாரிடப் பாகமும் பண்டுபோற் பெருமான் வெள்ளை நீறுதொட்ட டங்கையா னீவுமுன் மேனாள் உள்ள கூனொடு வெப்புநோ யொழிந்துமீ னுயர்த்த வள்ளன் மாசறக் கடைந்தவிண் மணியெனப் பொலிந்தான். (இ-ள்.) பிள்ளையார் - ஆளுடைய பிள்ளையார், இடப்பாகமும் பண்டு போல் பெருமான் வெள்ளை நீறு தொட்டு - இடப்புறத்தையும் முன்போலவே இறைவன் வெண்ணீற்றினைத் தொட்டு, அங்கையால் நீவுமுன் - அகங்கையாற் றடவிய வளவில், மேல்நாள் உள்ள கூனொடு வெப்பு நோய் ஒழிந்து - முன்னரே இருந்த உடற் கூனுடன் வெப்பு நோயும் நீங்கி, மீன் உயர்த்த வள்ளல் - மீனக்கொடி யுயர்த்திய வள்ளலாகிய பாண்டியன், மாசுஅறக் கடைந்த விண்மணி எனப் பொலிந்தான் - குற்றம் நீங்கக் கடையப் பட்ட சூரியனைப்போல விளங்கினான். பண்டு - காலத்தின் சேய்மையைக் குறியாது சிறிது முன் என்னும் பொருளில் வந்தது. விண்மணி - ஆதித்தன்; ஆதித்தனிலும் சிறந்து விளங்கினான் என்பார் ‘மாசறக் கடைந்த விண்மணி’என்றார். (67) அறுசீரடி யாசிரிய விருத்தம் அன்னதொரு காரணத்தாற் சவுந்தரிய பாண்டியனென் றாகி யன்ன தென்னவர்கோன் கவுணியர்கோன் றிருநோக்காற் பரிசத்தாற் றெருட்டும் வாக்காற் பொன்னடிதாழ்ந் தைந்தெழுத்து முபதேசப் பேறடைந்த பொலிவால் வஞ்சந் துன்னமணர் நெறியிகழ்ந்து தொல்வேத நெறியடைந்து தூய னானான். (இ-ள்.) அன்னதென்னவர் கோன் - அந்தப் பாண்டியர் பெருமான், அன்னது ஒரு காரணத்தால் - அந்தக் கூன் நீங்கிய ஒரு காரணத்தினால், சவுந்தரிய பாண்டியன் என்று ஆகி - சவுந்தரிய வழுதி என்னும் பெயருடையனாய், கவுணியர் கோன் திருநோக்கால் பரிசத்தால் - கவுணியர் பெருமானது திருப் பார்வையினாலும் தொடுதலினாலும், தெருட்டும் வாக்கால் - மெய்ப்பொருளைத் தெளிவிக்குந் திருவார்த்தையினாலும், பொன் அடி தாழ்ந்து - அவர் பொன்போலுந் திருவடியில் வீழ்ந்து வணங்கி, ஐந்தெழுத்தும் உபதேசப் பேறு அடைந்த பொலிவால் - திருவைந்தெழுத்தையும் உபதேசிக்கப் பெறுதலை யடைந்த விளக்கத்தாலும், வஞ்சம் துன் அமணர் நெறி இகழ்ந்து - வஞ்சஞ் செறிந்த சமணர்கள் பொய் நெறியை இகழ்ந்து, தொல் வேதநெறி அடைந்து தூயன் ஆனான் - பழைய வேதநெறியினை அடைந்து புனிதனானான். திருஞானசம்பந்தப் பெருமானின் திரு நோக்கம் முதலாயின வெல்லாம் பாண்டி வேந்தன் பாசத்தைப் போக்கும் தீக்கைகளாயின என்பார் கவுணியர் கோன் திருநோக்கால் பரிசத்தால் தெருட்டும் வாக்கால் என்றார். “ பலவிதமா சான்பாச மோசனந்தான் பண்ணும் படிநயனத் தருள்பரிசம் வாசகமா னதமும் அலகில்சாத் திரம்யோக மவுத்தி ராதி அநேகமுள” என்னும் சிவஞான சித்தியால் நயனதீக்கை, பரிச தீக்கை, வாசக தீக்கை என்பவற்றின் உண்மை காண்க. பொன்னடி தாழ்ந்து வாக்கினாலே உபதேசப் பேறடைந்த பொலிவால் என்று இயைத் துரைத்தலுமாம். தொல் என்பது வேதத்திற்கும் வேத நெறியாகிய சைவத்திற்கும் அடையாதலே யன்றி, அவனும் அவன் குலத்தினரும் தொன்று தொட்டுக் கைக்கொண்டு ஒழுகிய வேதநெறி என்னும் பொருட்டுமாம். (68) ஆகச் செய்யுள் 3173. அறுபத்துமூன்றாவது சமணரைக் கழுவேற்றிய படலம் அறுசீரடி யாசிரிய விருத்தம் பஞ்சவ னடைந்த நோயைப் பாலறா வாயர் தீர்த்து நஞ்சணி கண்ட னீறு நல்கிய வண்ணஞ் சொன்னேம் அஞ்சல ராகிப் பின்னும் வாதுசெய் தடங்கத் தோற்ற வஞ்சரைக் கழுவே றிட்ட வண்ணமுஞ் சிறிது சொல்வாம். (இ-ள்.) பால் அறாவாயர் - பால்மணம் நீங்காத திருவாயினை யுடைய ஆளுடைய பிள்ளையார், பஞ்சவன் அடைந்த நோயைத் தீர்த்து - பாண்டியன் அடைந்த வெப்பு நோயை நீக்கி, நஞ்சு அணிகண்டன் நீறு நல்கியவண்ணம் சொன்னேம் - நஞ்சினையணிந்த திருமிடற்றினையுடைய இறைவனது திருநீற்றினை (அவனுக்கு) அளித்தருளிய திருவிளையாடலைக் கூறினேம்; பின்னும் அஞ்சலராகி - மீண்டும் அஞ்சாதவராய், வாது செய்து அடங்கத் தோற்ற வஞ்சரை - வாது புரிந்து ஒருசேரத் தோல்வியுற்ற வஞ்சகராகிய சமணரை, கழு ஏறிட்ட வண்ணமும் - கழுவில் ஏற்றிய திருவிளையாடலையும், சிறிது சொல்வாம் - சிறிது கூறுவாம். தாம் ஏவிய மந்திரத் தீயானது பிள்ளையார் திருமடத்திற் செல்லாமையும், தாம் திருமடத்தில் இட்ட சடத்தீயால் பாண்டியனுக்கு வெப்பு நோய் உண்டானமையும், தம்மால் தீர்க்கலாகாத அந்நோயைப் பிள்ளையார் தீர்த்தமையும் கண்டு வைத்தும் அஞ்சிற்றிலராய் வாதிட்டனர் என அவரது தறுகண்மை மிகுதி கூறுவார் அஞ்சலராகி என்றார். ஏறிட்ட - ஏற்றிய. (1) தென்னவன் றேவி யாரு மமைச்சருட் சிறந்த சிங்கம் அன்னவன் றானுங் காழி யந்தண ரடியில் வீழ்ந்தெம் மன்னவன் வெப்புங் கூனும் பாசமு மாற்றி னீரே இன்னமு மடியேம் வேண்டுங் குறைசெயத் தக்க தென்றார். (இ-ள்.) தென்னவன் தேவியாரும் - பாண்டியன் தேவியாராகிய மங்கையர்க் கரசியாரும், அமைச்சருள் சிறந்த சிங்கம் அன்னவன் தானும் - மந்திரிகளுள் மேம்பட்ட சிங்கத்தினை ஒத்த குலச்சிறையாரும், காழி அந்தணர் அடியில் வீழ்ந்து - சீகாழிப் பதியில் திருவவதாரஞ் செய்தருளிய அந்தணராகிய ஆளுடைய பிள்ளையார் திருவடியில் விழுந்து வணங்கி, எம்மன்னவன் வெப்பும் கூனும் பாசமும் மாற்றினீர் - எம் அரசனுடைய வெப்பு நோயையும் உடல் வளைவையும் பாசத்தினையும் போக்கியருளினீர்; இன்னமும் அடியேம் வேண்டும் குறை செயத்தக்கது என்றார் - இன்னும் அடியேங்கள் விரும்பும் குறையினை முடிக்கக் கடவீராக என்று இரந்து வேண்டினர். இனி என்னும் இடைச் சொல் அம் பெற்று இன்னம் என்றாயது. குறை - முடிக்கப்படும் பொருள்; “ பயக்குறை யில்லைத்தாம் வாழுநாளே” என்னும் புறப்பாட்டடியில் இஃது இப் பொருட்டாதல் காண்க. செயத்தக்கது - முடிப்பது; ‘மறப்பதறிவிலென் கூற்றுக்களே ’ என்புழிப் போல் துவ்விகுதி வியங்கோளில் வந்தது. (2) கன்னிநா டெங்கு மிந்தக் காரமண் காடு மூடித் துன்னின திதனை யின்னே துணித்திடல் வேண்டு மென்றார் அன்னவ ரால வாயார் திருவுள்ள மறிவே னென்னா உன்னிய மனத்த ராகி யொய்யெனக் கோயில் புக்கார். (இ-ள்.) கன்னி நாடு எங்கும் இந்தக் கார் அமண் காடுமூடித் துன்னியது - இக் கன்னி நாடு முற்றும் இந்தக் கரிய சமண் காடு மூடிச் செறிந்தது; இதனை இன்னே துணித்திடல் வேண்டும் என்றார் - இக்காட்டினை இப்பொழுதே வெட்டியழிக்க வேண்டு மென்று கூறினர்; அன்னவர் - அவ்வாளுடைய பிள்ளையார், ஆலவாயார் திருவுள்ளம் அறிவேன் என்னா - திருவாலவாயுடையார் திருவுள்ளக்கிடையை அறிவேனென்று, உன்னிய மனத்தராகி - கருதிய உள்ளத்தை யுடையவராய், ஒய்யெனக் கோயில் புக்கார் - விரைந்து திருக் கோயிலுட் புகுந்தனர். காடு என்றதற் கேற்பத் ‘துணித்திடல் வேண்டும்’ என்றார். ஒய்யென: விரைவுக் குறிப்பு. (3) அவ்விரு வோருங்1 கூட வடைந்துபொற் கமலம் பூத்த திவ்விய தீர்த்தந் தோய்ந்து சேனெடுங் கண்ணி பாக நவ்வியங் கமலச் செங்கை நாதனைத் தாழ்ந்து வேந்தன் வெவ்விய வெப்பு நீத்தார் தொழுதிது வினவு கின்றார். (இ-ள்.) அவ்விருவோரும் கூட அடைந்து - அவ்விருவரும் உடன் வரச்சென்றருளி, பொன் கமலம் பூத்த - பொற்றாமரை மலர்ந்த, திவ்விய தீர்த்தம் தோய்ந்து - திப்பிய தடாகத்தில் நீராடி, சேல் நெடுங்கண்ணி பாகம் - மீன்போன்ற நீண்ட கண்களையுடைய உமையினை ஒரு கூற்றிலுடைய, நவ்வி அம் கமலச் செங்கை நாதனை - மானை அழகிய தாமரை போன்ற சிவந்த திருக்கரத்திலேந்திய இறைவனை, தாழ்ந்து - பணிந்து, வேந்தன் வெவ்விய வெப்பு நீத்தார் - மன்னனது கொடிய வெப்பு நோயை நீக்கியருளிய பிள்ளையார், தொழுது இது வினவுகின்றார் - வணங்கி இதனை வினவுகின்றார். கூட - உடன் வர. திவ்வியம் - தெய்வத்தன்மை. நீத்தார் - வினைப்பெயர். (4) காயமே யொறுத்து நாளுங் கைதவம் பெருக நோற்கும் பேயரை யிம்மை யோடு மறுமையும் பேறற் றாரை நீயுரை செய்த வேத வேள்வியை நிந்தை செய்யுந் தீயரை யொறுத்தல் செய்யத் திருவுளஞ் செய்தி யென்றார். (இ-ள்.) காயமே ஒறுத்து நாளும் கைதவம் பெருக நோற்கும் பேயரை - உடலை வருத்தி எஞ்ஞான்றும் வஞ்சகமே வளர நோற்கும் பேய்போல்வாரும், இம்மையோடு மறுமையும் பேறு அற்றாரை - இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் இழந்தவரும், நீ உரை செய்த - நீ திருவாய் மலர்ந்த்ருளிய, வேத வேள்வியை நிந்தை செய்யும் தீயரை - மறையையும் (அதன்கட் கூறப்படும்) வேள்வியையும் நிந்தனை புரியும் தீயவருமாகிய சமணர்களை, ஒறுத்தல் செய்யத் திருவுளம் செய்தி என்றார் - ஒறுப்பதற்குத் திருவுளம் புரிய வேண்டு மென்று இரந்தனர். உடம்பினை ஒறுத்து வஞ்சம் பெருக அவர்கள் புரியும் தவத்தின் பயன் உடலை யொறுத்தலால் இம்மைப் பயனையும் வஞ்சம் பெருகலால் மறுமைப் பயனையும் இழத்தலன்றிப் பிறிதில்லை என்றார். வேத வேள்வியை நிந்தை செய்யுந் தீயர் என்ற கருத்தினை, “ வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி யமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுட னாய பரமனே ஞால நின்புக ழேமிக வேண்டுந் தென் ஆல வாயி லுறையு மெம் மாதியே” எனப் பிள்ளையார் பாடியருளிய திருப்பதிகத்திற் காண்க. பதிகத்தில் தேரரையும் குறித்திருப்பது சிந்தித்தற் குரியது. (5) வெம்மத வேழங் காய்ந்த விடையவர் விசும்பிற் சொல்வார் எம்மனோ ராவீர் நுங்கட் கிசைந்ததே யெமக்கும் வேண்டுஞ் சம்மத மதனால் வெல்லத் தக்கவ ராக நீரே அம்மத முடையார் தோற்கத் தக்கவ ராக வென்றே. (இ-ள்.) வெம்மத வேழம் காய்ந்த விடையவர் - கொடிய மத மயக்கமுடைய யானையைக் கொன்ற இடபவூர்தியினையுடைய இறைவர், விசும்பில் சொல்வார் - வானின்கண் அசரீரியாகக் கூறுவார், எம்மனோராவீர் - எமது அடியார்களே, நுங்கட்கு இசைந்ததே - நுங்கள் கருத்துக்குப் பொருந்திய தொன்றே, எமக்கும் வேண்டும் சம்மதம் - எமக்கும் வேண்டிய உடன் பாடு; அதனால் நீரே வெல்லத் தக்கவராக - அதனால் நீங்களே வெல்லத் தக்கவராக, அம்மதமுடையார் - அந்தச் சமண் மதமுடையார், தோற்கத் தக்கவராக என்று - தோல்வி பெறத் தக்கவராக என்று கூறியருளி. எம்மனோர் - எமர்; எம் அடியார். அம்மத முடையார் - அந்தத் தருக்கினையுடையார் என்றுமாம். (6) எம்மொழி தேறி னீர்போ யிறைமக னவையத் தெய்திச்1 செம்மையி லாரை வாது செய்திர்நீ ரனையார் தோற்று வெம்முனைக் கழுவி லேறி விளிகுவ ரென்னக் கேட்டு மைம்மலி களத்தான் மைந்தர் தொழுதுதம் மடத்திற் போந்தார். (இ-ள்.) எம்மொழி தேறினீர் - எமது மொழியாகிய வேதாக மங்களைத் தெளிந்தவர்களே, நீர் போய் - நீவிர் சென்று, இறைமகன் அவையத்து எய்தி - பாண்டி மன்னன் அவையினை அடைந்து, செம்மையிலாரை வாது செய்திர் - ஒழுக்கமில்லாத அச்சமணருடன் வாதம் புரிமின்; அனையார் தோற்று - அவர் தோல்வியுற்று, வெம்முனைக் கழுவில் ஏறி விளிகுவர் - கூரிய முனையையுடைய கழுவில் ஏறி இறந்து படுவர்; என்ன - என்று கூறியருள, கேட்டு - அதனைக் கேட்டு, மைம்மலி களத்தான் மைந்தர் -கருமை நிறைந்த திருமிடற்றினையுடைய இறைவனது புதல்வராகிய ஆளுடைய பிள்ளையார், தொழுது வணங்கி, தம்மடத்தில் புக்கார் - தமது மடத்திற் புகுந்தருளினார். விசும்பிற் சொல்வார் விளிகுவர் என்று சொல்ல என இயைக்க. (7) இருவரு மீண்டு தத்த மிருக்கையிற் போகி யற்றைப் பருவமங் ககலப் பின்னாட் பாண்டிமா தேவி யாரும் பெருமதி யமைச்ச ரேறும் பிள்ளையார் மடத்திற் போகி அருகரை வெல்லுஞ் சூழ்ச்சி யாதென வளந்து தேர்வார். (இ-ள்.) இருவரும் மீண்டும் தத்தம் இருக்கையில் போகி - மற்றை இருவரும் திரும்பித் தங்கள் தங்கள் இருப்பிடஞ் சென்று, அற்றைப் பருவம் அங்கு அகல - அற்றைப் பொழுது அங்கு நீங்க, பின்னாள் - மறுநாள், பாண்டி மாதேவியாரும் - மங்கையர்க் கரசியாரும், பெருமதி அமைச்சர் ஏறும் - கூர்த்த மதியினையுடைய அமைச்சருள் ஏறுபோல்வாராகிய குலச்சிறையாரும், பிள்ளையார் மடத்தில் போகி - ஆளுடைய பிள்ளையார் திருமடத்திற்குப் போய், அருகரை வெல்லும் சூழ்ச்சி யாது என - சமணரை வெல்லுதற்குரிய வழி யாது என்று, அளந்து தேர்வார் - ஆராய்ந்து தெளிவாராயினர். தேவியாரும் அமைச்சரேறும் ஆகிய இருவரும் எனக் கூட்டி, இருவரும் இருக்கையிற் போகிப் பின்னாள் மடத்திற் போகி அளந்து தேர்வார் என முடிக்க. (8) பேரரு ணிறைந்த காழிப் பெருந்தகை யுடன்போய்த் தங்கோன் சீரவை குறுகி யீது செப்புவார் செய்ய கோலாய் காரமண் காடே யெங்குங் கழியவு மிடைந்த வின்ன1 வேரொடுங் களைந்தாற் சைவ விளைபயி ரோங்கு மென்றார். (இ-ள்.) பேர் அருள் நிறைந்த காழிப்பெருந்தகையுடன் போய்- பெரிய அருள் நிறைந்த சீகாழிப் பெருந்தகையாராகிய பிள்ளை யாருடன் சென்று, தம்கோன் சீர் அவை குறுகி - தம் அரசனது சிறந்த அவையினை அடைந்து, ஈது செப்புவார் - இதனைக் கூறுவார்; செய்ய கோலாய் - செங்கோலை யுடையாய், கார் அமண்காடே எங்கும் கழியவும் மிடைந்த - கரிய அமண்காடுகளே எங்கும் மிகவும் செறிந்தன; இன்ன வேரொடும் களைந்தால் - இவற்றை வேரோடும் அகழ்ந்தெறிந்தால், சைவ விளைபயிர் ஓங்கும் என்றார் - சைவமாகிய விளையும் பயிரானது ஓங்கி வளருமென்று கூறினர். சமண் காட்டைக் களைந்தால் சைவப்பயிர் ஓங்கு மென்றமை யால் இஃது இயைபுருவகவணி. (9) அவ்வண்ணஞ் செய்வ தேயென் றரசனு மனுச்சை செய்யச் செவ்வண்ண வெண்ணீற் றண்ண லனுச்சையுந் தெரிந்து தேயம் உய்வண்ண மிதுவென் றங்ங னுண்மகிழ்ந் திருந்தார் நீண்ட பைவண்ண வாரம் பூண்டார் புகழெங்கும் பரப்ப வல்லார். (இ-ள்.) அவ்வண்ணம் செய்வது என்று அரசனும் அனுச்சை செய்ய - அங்ஙனமே செய்கவென்று வேந்தனும் அனுமதிக்க, செவ்வண்ணம் வெண்ணீற்று அண்ணல் அனுச்சையும் தெரிந்து - செம்மேனியில் வெண்ணீ றணிந்த இறைவனது உடன்பாட்டையும் உணர்ந்து, தேயம் உய்வண்ணம் இது என்று உண் மகிழ்ந்து - நாடு உய்தி பெறுதற்குரிய காலம் இதுவே யென்று மனமகிழ்ந்து, நீண்ட பைவண்ண ஆரம்பூண்டார் - நீண்ட படத்தையுடைய அழகிய பாம்பார மணிந்த இறைவரது, புகழ் எங்கும் பரப்ப வல்லார் அங்ஙன் இருந்தார் - புகழினை யாண்டும் பரவச் செய்ய வல்லு நராகிய பிள்ளையார் அங்கு இருந்தருளினார். அனுச்சை - அனுமதி. அங்ஙன் - அவ்விடம் என்னும் பொருட்டு. (10) கலி விருத்தம் அந்த வேலை யருகந்தக் கையரைக் குந்த வேற்கட் குலமட மாதரும் மைந்த ராகிய மக்களுங் கண்ணழல் சிந்த நோக்கி யிகழ்ந்திவை செப்புவார். (இ-ள்.) அந்த வேலை - அப்பொழுது, அருகந்தக் கையரை - அருகராகிய கீழ்மக்களை, குந்தவேல் கண் குல மடமாதரும் - கூரிய வேற்படை போன்ற கண்களையுடைய அவர் மனைவியரும், மைந்தராகிய மக்களும் - புதல்வராகிய மக்களும், கண் அழல் சிந்த நோக்கி - கண்களில் நெருப்புப் பொறி சிதற நோக்கி, இகழ்ந்து இவை செப்புவார் - நிந்தித்து இவற்றைக் கூறுவாராயினர். அருகந்தர் - அருகர். திண்மையுடையராகிய புதல்வர்களும் என்றுமாம். (11) செழியர் கோமகன் மூழ்கிய தீப்பிணி கழிய மாற்றும் வலியின்றிக் கற்றிலா மழலை வாயொரு மைந்தற்குத் தோற்றுவெம் பழிவி ளைத்தீர் பகவன் றமர்க்கெலாம். (இ-ள்.) செழியர் கோமகன் மூழ்கிய தீப்பிணி - பாண்டியர் மன்னன் மூழ்கிய வெப்பு நோயினின்றும், கழிய மாற்றும் வலி இன்றி - நீங்குமாறு அதனைப் போக்கும் வலியிலீராய், கற்றிலா மழலைவாய் ஒரு மைந்தற்குத் தோற்று - கல்லாத மழலைச் சொல்லையுடைய வாயினையுடைய ஒரு பிள்ளைக்குத் தோற்று, பகவன் தமர்க்கெலாம் வெம்பழி விளைத்தீர் - அருகக் கடவுளின் அடியார்கட்கெல்லாம் கொடிய பழியை விளைத்தீர். கற்றிலா - ஆசிரியனிடத்து ஓதாத, கல்வி பயிலாத கற்றிலா. மைந்தன் எனவும் மழலைவாய் மைந்தன் எனவும் கூட்டுக. பகவன் - ஈண்டு அருகதேவன். தமர் - அடியார். (12) சாம்ப ராடுஞ் சமயம் புகுந்துவெம் பாம்ப ணிந்தவ னேபக வானென வேம்ப னுங்கள் விரத நெறியெலாஞ் சோம்ப லெய்தத் துறந்தா னிகழ்ந்தரோ. (இ-ள்.) வேம்பன் - வேப்பமலர் மாலையையுடைய பாண்டியன், சாம்பர் ஆடும் சமயம் புகுந்து - சாம்பலைப் பூசுஞ் சமயத்திற் புகுந்து, வெம்பாம்பு அணிந்தவனேபகவான் என - கொடிய பாம்பினை யணிந்த சிவனே இறைவனென்று கொண்டு, உங்கள் விரத நெறிஎலாம் சோம்பல் எய்த - உங்கள் விரதநெறி முற்றும் சோர்வடைய, இகழ்ந்து துறந்தான் - இகழ்ந்து கைவிட்டான். திருநீற்றினை இகழ்ந்துரைக்குங் கருத்தால் ‘சாம்பர்’ என்றார். சாம்பர்: ஈற்றுப் போலி. பகவான் - ஆறு குணங்களையுடையவன். பகம் - ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் அறுகுணங்கள். சோம்பல் - வாடுதல், சமண் சமயத்தைத் துறந்தான் என்க. அரோ : அசை. (13) ஏது மக்கு நி'e7çலயினி1 யென்றவப் போது மற்றவர் தம்மைப் புறகிட வாது செய்தற் கெழுந்தனர் வஞ்சகர் போது மென்னத் தடுத்தனர் பூவைமார். (இ-ள்.) இனி உமக்கு நிலை ஏது என்ற அப்போது - இனி உமக்குப் பற்றுக்கோடு ஏது என்று கூறிய அப்பொழுது, அவர் தம்மைப் புறகிட வாது செய்தற்கு - ஆளுடைய பிள்ளையாரை அவர் புறகிடுமாறு வாது செய்தற்கு, வஞ்சகர் எழுந்தனர் - அவ்வஞ்சகர்கள் எழுந்தார்கள்; பூவைமார் போதும் என்னத் தடுத்தனர் - அவர் மனைவியர் (நீவீர் பெற்ற வெற்றி) போதுமென்று தடைப்படுத்தினர். (14) செல்லன் மின்க ணுமக்கிது செவ்வியன் றல்லல் கூர வருந்துன்பத் தாழநாம் எல்லி கண்ட கனவுண் டிதனையாஞ் சொல்லு கேமின்று கேண்மெனச் சொல்லுவார். (இ-ள்.) செல்லன்மின்கள் - போதலொழியுங்கள்; நுமக்கு இது செவ்வி அன்று - நுமக்கு இது வெற்றி தருங் காலமன்று; நாம் அல்லல் கூர அருந் துன்பத்து ஆழ - நாங்கள் கவலைமிகக் கடத்தற்கரிய துன்பக் கடலுள் அழுந்த, எல்லி கண்ட கனவு உண்டு- இரவிற் கண்டகனா உண்டு; யாம் இதனை இன்று சொல்லுகேம் - யாம் இக்கனவினை இப்பொழுது சொல்லுவேம்; கேண்ம் எனச் சொல்லுவார் - கேளுங்களென்று கூறுவாராயினர். செல்லன்மின்கள்: விகுதிமேல் விகுதி வந்தது. செவ்வி - தருணம். கேண்ம், கேளும் என்னும் வினைமுற்றின் ஈற்றயலுகரம் கெட்டது. (15) கலி நிலைத்துறை இடைய றாதுநம் பாழியும் பள்ளியு மெங்குஞ் சடையர் முஞ்சியர் சாம்பலர் தாங்கிய சூலப் படையர் தீவிழிப் புலவுவாய்ப் பாய்பெரும் புலித்தோல் உடைய ராய்ச்சிலர் வந்துவந் துலாவுதல் கண்டேம். (இ-ள்.) இடையறாது - இடைவிடாது, நம் பாழியும் பள்ளியும் எங்கும் - நமது தவச்சாலையும் கோயிலுமாகிய எங்கும், சடையர் முஞ்சியர் சாம்பலர் - சடையினையுடையராயும் முஞ்சிப் புல்லையுடையராயும் சாம்பற் பூச்சினையுடையராயும், தாங்கிய சூலப்படையர் - சூலப் படையினைத் தாங்கியவராயும், தீவிழி புலவுவாய் பாய் பெரும் புலித்தோல் உடையராய் - நெருப்புப் போலும் விழிகளையும் புலால் நாறும் வாயினையுமுடைய பாய்கின்ற பெரிய புலியின் தோலை ஆடையாக வுடையவருமாகி, சிலர் வந்து வந்து உலாவுதல் கண்டேம் - சிலர் வந்து வந்து உலாவுதலைப் பார்த்தேம். பள்ளி - அருகன் கோயில், பாழி - சமண் முனிவர் இருப்பிடம். தவச்சாலை பள்ளியெனப் படுதலுமுண்டு. முஞ்சி - ஒரு வகைப் புல்; அதனால் அரைஞாண் தரித்துக் கொள்வர் - தோளிலே சூலப்படையின் குறியினையுடையரும் என்றுமாம். சடை முதலிய வெல்லாம் சைவ தாபதக் கோலமாதல் காண்க. (16) கன்னி யிற்றுற வன்னங்கள் கணவனிற் றுறவின் மன்னு மாரியாங் கனைகணூல் வாங்குமக் குசைகள் என்ன மூவகைப் பெண்டவப் பள்ளிக ளெல்லாஞ் சின்ன வெண்பிறைக் கோட்டுமா சிதைக்கவுங் கண்டேம். (இ-ள்.) கன்னியில் துறவு அன்னங்கள் - மணமில்லாத கன்னிப் பருவத்திலே துறவுபூண்ட அம்சங்களும், கணவனில் துறவின் மன்னும் ஆரியாங்கனைகள் - நாயகனோடு கூடியிருக்கும் பொழுதே துறவில் நிலை பெற்ற ஆரியாங்கனைகளும், நூல்வாங்கும் அக்குசைகள் என்ன - மங்கல நாண் இழந்து துறவுபூண்ட அக்குசைகளும் என்று சொல்லப்பட்ட, மூன்று வகைப் பெண் தவப் பள்ளிகளெல்லாம் - மூன்று வகைப் பெண்களின் தவஞ் செய்யு மிடங்களனைத்தையும், சின்னவெண் பிறைக் கோட்டுமா சிதைக்கவும் கண்டேம் - சிறிய வெள்ளிய பிறைபோன்ற கொம்பினையுடைய யானை ஒன்று அழிக்கவும் கண்டேம். கன்னிப்பருவத்தில் ஆசிரியனிடத்து உபதேசம் பெற்றுத் துறந்து தவம் பூணும் பெண்கள் அம்சங்கள் எனவும், கணவனுடன் கூடி இல்லறத்திருக்குங்காலத்து உபதேசம் பெற்றுத் தவம்பூணும் பெண் கள் ஆரியாங்கனைகள் எனவும், மங்கலநாண் இழந்தபின் உபதேசம் பெற்றுத் துறந்து தவம்பூணும் பெண்கள் அக்குசைகள் எனவும் வழங்கப்படுவர் என்ப. சின்ன வெண்பிறைக் கோட்டுமா என்பது பிள்ளையாரைக் குறிப்பினுணர்த்தல் காண்க. (17) முண்டி தஞ்செய்த தலையராய் முறுக்குறி தூங்கு குண்டி கைத்தடங் கையராய்க் கோவணம் பிணித்த தண்டு தாங்கிய சுவலராய்ச் சடையன்பேர் நாவிற் கொண்ட சைத்தன ராயெங்குங் குலாவுதல் கண்டேம். (இ-ள்.) முண்டிதம் செய்த தலையராய் - முண்டிதஞ் செய்த தலையினையுடையராய், முறுக்கு உறிதூங்கு குண்டிகைத்தடம் கையராய் - முறுக்கிய உறியிற்றொங்குங் கமண்டலத்தை யுடைய பெரிய கையினை யுடையராய், கோவணம் பிணித்த தண்டு தாங்கிய சுவலராய் - கோவணங் கட்டிய கோலினைத் தாங்கிய பிடரினையுடையராய், சடையன் பேர் நாவில் கொண்டு அசைத்தனராய் - சிவன் பெயரை நாவிற்கொண்டு கூறுபவராய்ப் பலர், எங்கும் குலாவுதல் கண்டேம்- எங்கும் உலாவுதலைப் பார்த்தேம். உறியிற் றொங்கும் கமண்டலம் சைவத் துறவிகட்கும் உண்டென உணர்க; “ உறித் தாழ்ந்த கரகமும் ” என்பது கலித்தொகை. சடையன் - சிவன்; புறச் சமயத்தார் சிவபிரானை இங்ஙனங் கூறுதல் பெரு வழக்கு. (18) காந்து வெங்கத முடையதோர் கயந்தலை வந்து சூழ்ந்து கொண்டுநம் மடிகண்மார் கணமெலாந் துரத்தி ஏந்து பூஞ்சினை யலைந்திட1 விரங்கிவண் டிரியப் பாய்ந்து பிண்டியை வேரொடும் பறிக்கவுங் கண்டேம். (இ-ள்.) காந்து வெங்கதம் உடைய தோர் கயந்தலை வந்து - சுடுகின்ற கொடுஞ் சினமுடைய ஒரு யானைக் கன்று வந்து, சூழ்ந்து கொண்டு நம் அடிகண்மார் கணமெலாம் துரத்தி - வளைத்துக் கொண்டு நமது அடிகள்மார் கூட்டங்களை யெல்லாம் துரத்தி, ஏந்து பூஞ்சினை அலைந்திட - ஏந்திய பூங்கொத்துக்களலையவும், இரங்கிவண்டு இரிய - வண்டுகள் ஒலித்து நீங்கவும், பாய்ந்து பிண்டியை வேரொடும் பறிக்கவும் கண்டேம் - பாய்ந்து அசோக மரத்தினை வேரொடும் பறித்தலையும் பார்த்தேம். கயந்தலை - யானைக்கன்று; இது பிள்ளையாரைக் குறிப்பின் உணர்த்துதல் காண்க. பிண்டி அருகன் உறையுந் தருவாகலின் அதனை வேரொடும் பறித்தல் என்பது பிள்ளையார் சமண மதத்தை அடியுடன் அழிப்பதைக் குறிக்கின்றது. சினை அலைதற்கும் வண்டு இரிதற்கும் பறித்தல் காரணம். “ மழவிடை யிளங்கன் றொன்று வந்துநங் கழகந் தன்னை உழறிடச் சிதறி யோடி யொருவருந் தடுக்க வஞ்சி விழவொரு புகலு மின்றி மேதினி தன்னை விட்டு நிழலிலா மரங்க ளேறி நின்றிடக் கண்டோ மென்பார்” என்னும் பெரியபுராணச் செய்யுள் காணற்பாலது. (19) அந்த மூவிலை வேலினு மயின்முனைக் கழுவின் பந்தி மீதுநீ ரேறவுங் கண்டுளம் பனிப்பச் சந்த மார்பகஞ் சேப்பவந் தளிர்க்கரம் புடைத்துக் கந்த வார்குழல் சோரவுங் கலுழவுங் கண்டேம். (இ-ள்.) அந்தம் மூவிலை வேலினும் - இறுதியைத் தரும் மூவிலைச் சூலங்களிலும், அயில் முனைக் கழுவின் பந்தி மீதும் - கூரிய முனைகளையுடைய கழுமர வரிசைகளின் மேலும், நீர் ஏறவும் - நீவிர் ஏறவும், கண்டு உளம் பனிப்ப - அதனைக் கண்டு எங்கள் உள்ளம் நடுங்க, சந்த மார்பகம் சேப்ப - சாந்தணிந்த மார்பினிடம் சிவக்குமாறு, அம் தளிர்க்கரம் புடைத்து - அழகிய தளிர் போன்ற கையினால் அடித்துக் கொண்டு, கந்தவார் குழல் சோரவும் கலுழவும் கண்டேம் - மணம் பொருந்திய நீண்ட கூந்தல் சரியவும் அழுது புலம்பவுங் கண்டேம். சேப்ப - சிவப்ப. எங்கள் குழல் சோரவும் நாங்கள் மார்பகம் புடைத்துக் கலுழவும் என்க. (20) தள்ள ருந்திற லிந்திர சாலமோ காதி உள்ள விஞ்சையிவ் வெல்லைவந் துதவில வொன்றுங் கள்ள ராற்பறி பட்டவோ கனலில்வெந் தனவோ வெள்ளங் கொண்டவோ சேமத்திற் கிடப்பவோ விளம்பீர். (இ-ள்.) தள் அரும் திறல் இந்திர சாலம் மோக ஆதி உள்ள விஞ்சை - பிறரால் நீக்குதற் கரிய வலியினையுடைய இந்திரசாலமும் மோகன முதலாகவுள்ள வித்தைகளும், இவ்வெல்லை வந்து ஒன்றும் உதவில - இது போது வந்து சிறிதும் உதவில; கள்ளரால் பறிபட்டவோ - அவை திருடராற் பறிக்கப்பட்டனவோ, கனலில் வெந்தனவோ - நெருப்பில் வெந்துபட்டனவோ, வெள்ளம் கொண்டவோ - வெள்ளத்தாற் கொள்ளப்பட்டனவோ, சேமத்தில் கிடப்பவோ விளம்பீர் - காவலில் வைக்கப்பட்டுக் கிடக்கின்றனவோ கூறுமின். மோகாதி விஞ்சை - மோகனம், ஆகருடணம், வசியம், அதிரிச்சியம், அஞ்சனம், தம்பனம், வாதம் என்பன. உதவில என்றதும் கனவு நிலையாகக் கொள்க. (21) தாவு தீவளர்த் தெழுகரி தன்னையா டரவை ஆவை யேவிமுன் னம்மனோர் பட்டது மறந்தீர் காவ லன்பிணி தணித்தலீ ரினிச்செயுங் கருமம் யாவ தாகுமோ வதனையு மெண்ணுமி னென்றார். (இ-ள்.) தாவு தீ வளர்த்து - தாவுகின்ற நெருப்பினை வளர்த்து, எழுகரி தன்னை ஆடு அரவை - அதில் எழுந்த யானையையும் கொல்லுந் தொழிலையுடைய அரவினையும், ஆவை - பசுவையும், முன் நம்மனோர் ஏவி பட்டதும் அறிந்தீர் - முன்னொரு காலத்தில் விடுத்து நம்மவர் பட்டதையும் அறிந்தீர்; காவலன் பிணி தணித் திலீர் - பாண்டியன் வெப்பு நோயையுந் தணித்திலீர்; இனிச் செயுங் கருமம் யாவது ஆகுமோ - இனிச் செய்யப் போகும் வினை யாதாய் முடியுமோ, அதனையும் எண்ணுமின் என்றார் - அதனையுஞ் சிறிது எண்ணிப் பாருங்கள் என்றனர். அடு என்னும் முதனிலை நீண்டு ஆடு என்றாயது. கரி, அரவு, ஆ இவற்றை ஏவினமையை இப்புராணத்து யானை யெய்த படலம், நாகமெய்த படலம், மாயப் பசுவை வதைத்த படலம் என்பவற்றில் முறையே காண்க. பட்டது - எய்தியது; அழிந்தது என்றுமாம். முற்காலத்தில் நம்மளு கண்மார் பல மாயங்கள் செய்து தோல்வியுற்றமையும் அறிவீர், நீவிரும் இப்பொழுது காவலன் பிணி தணித்திலீர். இனி நீங்கள் செய்யுங் காரியம் உங்கட்கு வெற்றி தருவது எங்ஙனம்? இதனைச் சிந்தித்துப் பாருங்கள் என்றார். (22) இற்றை வையகலுக் கேகன்மி னென்றன ரறத்தைச் செற்ற வஞ்சகர் செல்லுவார் திரும்பவுங் கையைப் பற்றி யீர்த்தனர் பெண்டிர்சொற் கேட்பது பழுதென் றுற்ற தீவினை வழிச்செல்வா ரொளித்தனர் செல்வார். (இ-ள்.) இற்றை வைகலுக்கு ஏகல்மின் - இந்த நாளில் செல்லன்மின், என்றனர் - என்று கூறினர்; அறத்தைச் செற்ற வஞ்சகர் அறத்தை கொன்ற வஞ்சகராகிய அச்சமணர், திரும்பவும் செல்லுவார் - மீளவுஞ் செல்லுவாராயினர், கையைப்பற்றி ஈர்த்தனர் - அவர் கையைப் பிடித்து அம்மகளிர் இழுக்கவும், பெண்டிர் சொல் கேட்பது பழுதென்று - மகளிர் சொல்லைக் கேட்பது பழுதாகு மென்று கருதி, உற்ற தீவினை வழிச் செல்வார் - வந்தடைந்த தீவினையின் வழியே செல்லுமவர், ஒளித்தனர் செல்வார் - மறைந்து செல்வாராயினர். வைகலுக்கு: வேற்றுமை மயக்கம். ஒரு காரியத்தின் பொருட்டுச் செல்வாரைச் செல்லன்மின் என்று கூறுதலும் கையைப்பற்றி ஈர்த்தலும் தீ நிமித்தமாதலுங் காண்க. ஈர்த்தனர் என்பதை ஈர்க்கவும் என எச்சப்படுத்துக. ஒளித்தனர் : முற்றெச்சம். (23) கொங்க லர்க்குழல் சரிந்திடக் குரத்தியர் பின்னும் எங்கள் சொற்கொளா தேகுவீர் பரிபவ மெய்தி உங்க ளுக்கிடை யூறுவந் துறுகெனச் சபித்தார் அங்க தற்கும்ஞ் சார்செல்வா ரழியுநா ளடுத்தார். (இ-ள்.) குரத்தியர் கொங்கு அலர்க்குழல் சரிந்திடப் பின்னும் - மனைவிமார் மணம் பொருந்திய மலரையணிந்த கூந்தல் சரிய மீண்டும், எங்கள் சொல் கொளாது ஏகுவீர் - எங்கள் சொல்லை ஏற்றுக் கொள்ளாது செல்கின்றீர்; பரிபவம் எய்தி உங்களுக்கு இடையூறு வந்து உறுக எனச் சபித்தார் - பரிபவம் உண்டாக உங்களுக்குத் துன்பம் வந்துறக் கடவதென்று சபித்தனர்; அழியும் நாள் அடுத்தார் - அழியுங் காலம் வந்து பொருந்தப்பெற்ற அச்சமணர்கள், அங்கு அதற்கும் அஞ்சார் - அங்கு அதற்கும் பயப்படாமல், செல்வார் - போவாராயினர். குரத்தியர் - குரவன்மார் மனைவியர். குரத்தியர் குரவன்மாரைச் சபித்தனரென்க. பின்னும் என்றது முன்பு ஏகன்மின் என்று கூறிக் கையைப்பற்றி ஈர்த்தமையைத் தழுவி நின்றது. பரிபவம் - இழிவு, துன்பம். உறுகென: அகரந்தொகுத்தல், அழியுநா ளடுத்தாராகலின் செல்வார் என்க. (24) புட்க ளும்பல விரிச்சியும் போகலென் றெதிரே தட்க வுங்கடந் தேகுவார் தடங்கய லுகைப்பக் கட்க விழ்ந்தலர் கிடங்கர்சூழ் கடிநகர்ப் புறம்போய் உட்கு நெஞ்சரா யாவரு மோரிடத் தீண்டி. (இ-ள்.) புட்களும் பலவிரிச்சியும் போகல் என்று எதிரே தட்கவும் - பறவைகளும் பல தீச்சகுனங்களும் போகன்மின் என்று தடுக்கவும், கடந்து ஏகுவார் - கடந்து செல்லுகின்றவர், தடம் கயல் உகைப்ப கள் கவிழ்ந்து அலர் கிடங்கர் சூழ் - பெரிய கயல் மீன்கள் எழுந்து பாய்தலால் தேனைச் சிந்தித் தாமரைகள் மலரும் அகழி சூழ்ந்த, கடிநகர்ப்புறம்போய் - காவலையுடைய நகரின் புறத்தே போய், உட்கும் நெஞ்சராய் - அஞ்சிய நெஞ்சினை யுடையராய், யாவரும் ஓரிடத்து ஈண்டி - அவரனைவரும் ஓரிடத்திற் கூடி. புட்களும் மற்றும் பலவும் விரிச்சியும் என்றுரைத்தலுமாம். செம்போத்து, காகம் முதலிய பறவைகளும், பூனை, பாம்பு முதலியனவும் இடமாதல், வலமாதல், குறுக்கிடுதல் முதலியன பின் வரும் நன்மை தீமைகளை அறிவிக்கும் நிமித்தங்களாகும். விரிச்சி - வாய்ப்புள் என்றுங் கொள்க; அஃது இயல்பாகப் பிறர் வாயிற் பிறக்குஞ் சொல் தமது காரியத்தின் நன்மையையோ தீமையையோ அறிவிப்ப தாதல். தட்க என்றமையால் ஈண்டு இவையெல்லாம் தீயனவாதல் கொள்க. போகன்மின் என்பது விகுதி கெட்டு வந்தது. கிடங்கு கிடங்கர் என்றாயது போலி. (25) யாது சூழ்ச்சியென் றெண்ணுவா ரிறைவனைக் கண்டீ தோதி நாமவ னனுமதி யுறுதிகொண் டனைய ஏதி லாளனை வாதினால் வேறுமென் றிசைந்து போது வார்நகர் புகுந்துவேத் தவைக்களம் புகுவார். (இ-ள்.) குழ்ச்சி யாது என்று எண்ணுவார் - வெல்லுஞ் சூழ்ச்சி யாது என்று எண்ணுவாராகி, நாம் இறைவனைக் கண்டு ஈது ஓதி - நாம் அரசனைக் கண்டு அவனுக்கு இதனைச் சொல்லி, அவன் அனுமதி உறுதி கொண்டு - அவனது உடம்பாட்டின் உறுதியைப் பெற்று, அனைய ஏதிலாளனை வாதினால் வேறும் என்று - அந்த அயலானை வாதத்தினால் வெல்லுவோ மென்று, இசைந்து போதுவார் - தம்முளொருப்பட்டுப் போகும் அச்சமணர், நகர் புகுந்து வேத்து அவைக்களம் புகுவார் - நகரிற் புகுந்து மன்னன் அவைக்களஞ் செல்வார். வேறும் - வெல்வோம். வேத்து: வலிக்கும்வழி வலித்தல். (26) ஆய போதிளங் காலையிற் கவுணிய ரால வாயர் சேவடி பணிந்துதம் மடத்தினிற் செல்லக் காயு மாதவச் செல்வனைக் கங்குல்சூழ்ந் தாங்கு மாய வஞ்சகர் வந்திடை வழித்தலை மறித்தார். (இ-ள்.) ஆயபோது - அப்பொழுது, இளங்காலையில் - மிக்க காலைப் பொழுதில், கவுணியர் ஆலவாயர் சேவடி பணிந்து தம் மடத்தினில் செல்ல - ஆளுடைய பிள்ளையார் திருவாலவாயுடையவரின் சிவந்த திருவடியினைப் பணிந்து தமது மடத்திற்குச் செல்லா நிற்க, காயும் ஆதவச் செல்வனை - சுடுகின்ற சூரிய தேவனை, கங்குல் சூழ்ந்தாங்கு - இருள் சூழ்ந்தாற்போல, மாயவஞ்சகர் வந்து இடை வழித்தலை மறித்தார் - மாய வஞ்சகராகிய அச்சமணர் வந்து வழி நடுவின் மறித்தனர். சூழ்ந்தாங்கு : விகாரம். மாய வஞ்சகம் - மிக்க வஞ்சகம் : ஒரு பொருளிரு சொல். வழித்தலை, தலை : ஏழனுருபு. ஆதவச் செல்வனைக் கங்குல் சூழ்ந்தாங்கு என்றது இல்பொருளுவமை. (27) மறித்த கையர்பின் செல்லமுன் மன்னவை குறுகிக் குறித்த வாளரித் தவிசின்மேற் கொச்சையர் பெருமான் எறித்த சேயிளம் பரிதியி னேறிவீற் றிருந்தார் பறித்த சீத்தலைப் புலையர்கள் பொறாதிவை பகர்வார். (இ-ள்.) மறித்த கையர் பின் செல்ல - அங்ஙனம் வழிமறித்த அக்கீழ் மக்கள் பின்னே செல்ல, கொச்சையர் பெருமான் - காழியர் பெருமானாகிய பிள்ளையார், முன் மன் அவை குறுகி - முன்னே மன்னன் அவையினை அடைந்து, குறித்த ஆளரித் தவிசின்மேல் - அவனாற் காட்டப்பட்ட சிங்காதனத்தின்மேல், எறித்த சேய் இளம் பரிதியின் ஏறி வீற்றிருந்தார் - ஒளி வீசும் சிவந்த இளஞ் சூரியனைப் போல ஏறி வீற்றிருந்தருளினார்; பறித்த சீத்தலைப் புலையர்கள் - பிடுங்குதலாற் சீப்பட்ட தலையினையுடைய புலையர்கள், பொறாது இவை பகர்வார் - பொறுக்காமல் இவற்றைக் கூறுவாராயினர். கொச்சை - சீகாழியின் பன்னிரு பெயர்களில் ஒன்று. சீழ்த்தலை எனற்பாலது சீத்தலை என்றாயது. புலையர் - புன்மையுடையோர். (28) மழலை யின்னமுந் தெளிகிலா மைந்த1கண் மணியொன் றுழல்க ருங்கொடி யிருந்திடக் கனியுதிர்ந் தாங்குன் சுழல்கொள் விஞ்சையி னகன்மையான் மன்னனைத் தொடுத்த தழல வித்தன மென்றுநீ தருக்குறத் தகுமோ. (இ-ள்.) மழலை இன்னமும் தெளிகிலா மைந்த - இன்னும் மழலை தேறாத சிறுவனே, கண்மணி ஒன்று உழல் கருங்கொடி இருந்திட - இரண்டு கண்களுக்கு ஒரு மணி இருந்து சுழலும் கரிய காக்கை ஏறியிருக்க, கனி உதிர்ந்தாங்கு - பனம்பழம் விழுந்தாற்போல, உன் சுழல் கொள் விஞ்சையின் நன்மையால் - உனது நிலையில்லாத வித்தையின் நன்மையினால், மன்னனைத் தொடுத்த தழல் அவித்தனம் என்று - அரசனைத் தொடுத்த வெப்பு நோயை நீக்கினேம் என்று கருதி, நீ தருக்குறத்தகுமோ - நீ தருக்கினையடையத் தகுமோ? கல்வியில்லாத சிறுவன் என இழித்துரைக்குங் கருத்தால் மழலையின்னமுந் தெளிகிலா மைந்த என்றனர். மணி - கருவிழி. கொடி - காக்கை. கருமை என்றும் அடை தன்னோ டியைபின்மை மாத்திரை நீக்கியது. காகத்தின் இரண்டு கண்ணிற்கும் கருவிழி ஒன்றென்பது, “ காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்து ளோருயிர் கண்டம்” எனத் திருச்சிற்றம்பலக் கோவையாரிலும் கூறப்பட்டுள்ளது. உழல் என்னுஞ் சினை வினை முதல்மேல் நின்றது. தானே உதிருஞ் செவ்வியிலிருந்த பனம் பழம் காக்கை யேறிய பொழுது இயல்பாக உதிர்ந்த தேனும் ‘காக்கை யேறப் பனம் பழம் உதிர்ந்தது’என்று கூறுவர்; இது வடமொழியில் காகதாலிய நியாயம் எனப்படும். காக்கையேறக் கனியுதி ந்தாற்போல நீ தீர்க்கத் தொடங்கிய பொழுது இயல்பாக நீங்கிய அரசனது வெப்பு நோயை நின் விஞ்சை வலியால் நீக்கியதாகக் கருதித் தருக்குதல் தகுமோ என்றாரென்க. சுழல் கொள்விஞ்சை - மயக்க வித்தையுமாம். (29) நந்து நாகுநீர் வண்டுசென் னடைவழி யெழுத்தாய் வந்து வீழினும் வீழுமவ் வழக்கினின் கையிற் சிந்து சாம்பருஞ் சிறுசொலு மருந்துமந் திரம்போற் சந்து சூழ்மலை யான்சுரந் தணித்தன கண்டாய். (இ-ள்.) நந்துநாகு நீர்வண்டு செல் நடைவழி - சங்கும் நத்தையும் நீர் வண்டும் செல்லும் வழி, எழுத்தாய் வந்து வீழினும் வீழும் - எழுத்தாக வந்து வீழினும் வீழும்; அவ்வழக்கின் - அவ்வழக்கைப்போல, நின்கையில் சிந்து சாம்பரும் சிறு சொலும் - நினது கையிலிருந்து சிந்திய சாம்பலும் பொருளில்லாத சிறு சொல்லும், மருந்து மந்திரம் போல் - முறையே மருந்தையும் மந்திரத்தையும் போல, சந்து சூழ்மலையான் சுரம் தணித்தன கண்டாய் - சந்தன மரங்கள் நெருங்கிய பொதியின் மலையினையுடைய பாண்டியன் வெப்பு நோயைப் போக்கின. நந்து நாகு நீர் வண்டு, மருந்து மந்திரம் என்பவற்றில் செவ் வெண்கள் தொகை பெறாவாயின. செல் நடை, ஒரு பொருட் பன் மொழி. வீழ்தல் - தற்செயலாய்ப் பொருந்துதல். இழித்துரைக்குங் கருத்தால் சிந்து சாம்பலும் சிறு சொலும் என்றார். கண்டாய், முன்னிலையசை. நந்து முதலியவை கடற்கரை மணல் முதலியவற்றில் ஊர்ந்து செல்லுங்கால் உண்டாகும் கீற்றுக்கள் அழுத்தாய் அமையினும் அமையும். அங்ஙனம் அமையினும் அதனை அவை அறிந்து எழுதின வெனல் சாலாது என்க; இது குணாக்கர நியாயம் எனப்படும். மேல், இயல்பாக நீங்கிய சுரத்தை நீர் தீர்த்ததாகக் கருதல் தகாது என்று கூறியவர், நீ சிந்திய சாம்பலும் சொல்லிய சொல்லும் மருந்தும் மந்திரமும் போலாகி அரசன் வெப்பினைப் போக்கி யிருப்பினும் நீ மருந்து எனவும் மந்திரம் எனவும் அவற்றை அறிந்து வழங்கினாயல்லை என இப்பொழுது கூறினார் எனக. (30) உங்கண் மந்திர மேடொன்றிற் றீட்டுக வோரேட்1 டெ;ங்கண் மந்திரந் தன்னையுந் தீட்டுக விரண்டும் அங்கி வாயிடின் வெந்தது தோற்றதவ் வங்கி நுங்கி டாதது வென்றதென் றொட்டியே நுவலா.2 (இ-ள்.) உங்கள் மந்திரம் ஏடு ஒன்றில் தீட்டுக - நுங்கள் மந்திரத்தை ஒரு பனையேட்டில் தீட்டக் கடவீர்; எங்கள் மந்திரம் தன்னையும் ஓர் ஏட்டு தீட்டுக - எங்கள் மந்திரத்தையும் ஓர் ஏட்டில் வரையக் கடவேம்; இரண்டும் அங்கிவாய் இடின் - இவ் விரண்டேட்டினையும் நெருப்பின்கண் இட்டால், வெந்தது தோற்றது - வெந்த ஏடு தோல்வியடைந்தது; அவ்வங்கி நுங்கிடாதது வென்றது என்று - அத்தீயினால் உண்ணப்படாத ஏடு வெற்றி பெற்றது என்று, ஒட்டியே நுவலா - வஞ்சினங் கூறி. சைவ சமயிகள் பிறரையும் உளப்படுத்தி ‘உங்கள் மந்திரம்’ என்றனர். தீட்டுக என்னும் வியங்கோள் முற்றுக்கள் முறையே முன்னிலையிலும் தன்மையிலும் வந்தன. அங்கிவாய், வாய்: ஏழுனுருபு. வெந்த ஏட்டில் வரையப்பெற்ற மந்திரத்தையுடைய சமயம் தோற்றது எனவும், அதற்கு எதிரானது வென்றது எனவும் கருத்துக் கொள்க. ஓட்டல் - பணையம் (பந்தயம்) விதித்தல். (31) செக்க ரஞ்சடை யானுறை பதிகளிற் செய்யத் தக்க தன்றவ னடுநிலை பிழைத்துநுஞ் சார்வாய் விக்க மெம்மனோர்க் கியற்றுவான் வேறொரு தலத்திற் புக்க மர்ந்து வாதஞ்செயப் போதுக மென்னா. (இ-ள்.) செக்கர் சடையான் உறைபதிகளில் - சிவந்த சடையை யுடைய சிவன் உறையும் பதிகளில், செய்யத்தக்கது அன்று - (இவ்வாதம்) செய்யத்தக்கது அன்று; அவன் நடுநிலை பிழைத்து - அச்சிவன் நடுவு நிலைமை தவறி, நும் சார்வாய் எம்மனோர்க்கு விக்கம் இயற்றுவான் - நுமது சார்பில் நின்று எம்மவர்க்குக் கெடுதி செய்வான் (ஆகலின்), வேறு ஒரு தலத்தில் புக்கு அமர்ந்து வாதம் செய் - மற்றொரு தலத்திற் போயிருந்து வாது புரிதற்கு, போதுகம் என்னா - போகக் கடவோம் என்று கூறி. விக்ளகினம் எனற்பாலது விக்கம் எனத் திரிந்தது. (32) வென்றி மாமுர சுறங்கிடா வியனகர்ப் புறம்போய் மன்றல் வேம்பன்முன் கதழெரி மடுத்திடிற் பிழைப்ப தொன்று வேவதொன் றீதுகொண் டுமர்களு மெமரும் இன்று வெல்வதுந் தோற்பதுங் காண்டுமென் றெழுந்தார். (இ-ள்.) வென்றிமாமுரசு உறங்கிடா வியன் நகர்ப்புறம் போய் - பெரிய வெற்றிமுரசு இடையறாது ஒலிக்கும் இடமகன்ற இந்நகரின் வெளியே சென்று, மன்றல் வேம்பன் முன் கதழ் எரி மடுத்திடில் - மணம் பொருந்திய வேப்ப மலர் மாலையை யணிந்த பாண்டியன் முன் மிக்கெரியும் தீயின்கண் நம்மேடுகளையிட்டால், பிழைப்பது ஒன்று வேவது ஒன்று ஈது கொண்டு - வேவாதது ஒன்று வேவது ஒன்றாகிய இவ்வே துவினாலேயே, உமர்களும் எமரும் இன்று வெல்வதும் தோற்பதும் காண்டும் என்று எழுந்தார் - உம்மவரும் எம்மவரும் இன்று வெற்றி பெறுவதும் தோல்வி யுறுவதும் பார்ப்போமென்று எழுந்தனர். உறங்கிடாமை - எப்பொழுதும் ஒலித்தல். கதழ்எரி - வேகமுடைய நெருப்பு. (33) ஒரு போகு கொச்சகம் ஈட்டுவஞ்ச நெஞ்சரே யெழீஇநகர்ப் புறம்புபோய்க் கீட்டிசைக்க ணோரழற் கிடங்குதொட் டெழுந்துவான் நீட்டுகோ டரங்குறைத்து நிறையவிட்டு நெட்டெரி மூட்டினார்த மாதரார் வயிற்றுமிட்டு மூட்டினார். (இ-ள்.) வஞ்சம் ஈட்டு நெஞ்சரே எழீஇ - வஞ்சகத்தையே தேடித் தொகுக்கும் உள்ளத்தையுடைய அச்சமணர்களே முன்னர் எழுந்து, நகர்ப்புறம்பு போய் - நகருக்கு வெளியே சென்று, கீழ் திசைக்கண் ஓர் அழல் கிடங்கு தொட்டு - கீழைத் திசையின்கண் ஒரு தீக்குழி தோண்டி, எழுந்து வான் நீட்டு கோடரம் குறைத்து - மேலெழுந்து வானை அளாவிய மரக்கிளைகளை வெட்டி, நிறைய இட்டு நெட்டெரி மூட்டினார் - அக்குழி நிறையப் போட்டுப் பெரிய நெருப்பை மூட்டினார்; தம் மாதரார் வயிற்றும் இட்டு மூட்டினார் - அவ்வனலைத் தம் மனைவியர் வயிற்றிலும் இட்டு மூட்டினார். கீட்டிசை, கீழ்த்திசை என்பதன் மரூஉ. கோடரம் - கிளை. இவர்கள் மூட்டும் இத்தீயானது இவர் தம் மனைவியர் வயிற்றில் சோகத்தீ மூளுவதற்குக் காரணமாயிற்று என்பார் ‘தம் மாதரார் வயிற்றுமிட்டு மூட்டினார்’ என்றார். (34) ஞானமுண்ட முனிவர்தம்மை யெள்ளியெள்ளி நாயினும் ஈனரங்கி யைத்தடுத் திருப்பவெண் ணிராயிரர் ஆனதொண்ட ருடனெழுந்து சண்பைவேந்து மரசனும் மானனாரு மந்திரக் கிழானும்வந்து வைகினார். (இ-ள்.) ஞானம் உண்ட முனிவர் தம்மை எள்ளி எள்ளி - சிவஞானம் பருகிய முனிவராகிய ஆளுடைய பிள்ளையாரை இகழ்ந்த திகழ்ந்து, நாயினும் ஈனர் - நாயினும் கடையராகிய அச்சமணர், அங்கியைத் தடுத்து இருப்ப - அவ்வனலைத் தமது மந்திரத்தாற் கட்டிக் கொண்டிருக்க, எண்ணிராயிரர் ஆன தொண்டருடன் எழுந்து - பதினாறாயிரமாகிய தொண்டருடன் எழுந்து, சண்பை வேந்தும் அரசனும் மான் அனாரும் - காழி வேந்தரும் பாண்டியனும் மான் போன்ற மங்கையர்க்கரசியாரும், மந்திரக் கிழானும் வந்து வைகினார் - குலச் சிறையாரும் வந்து தங்கினார். அடுக்கு பன்மை குறித்தது. தடுத்தல் - மந்திரத்தால் தம்பனஞ் செய்தல். (35) உள்ளவிழ்ந்த முலைசுரந் தொழுக்குபா லருந்தியே துள்ளியோடு கன்றுபின் றொடர்ந்துசெல்லு மானென வெள்ளியம்ப லத்துளாடும் வேதகீதர் காதல்கூர்1 பிள்ளைபோன வாறுதம் பிராட்டியோடு மெய்தினார். (இ-ள்.) உள் அவிழ்ந்த முலை சுரந்து ஒழுக்குபால் அருந்தி - உள்ளம் நெகிழ்தலால் முலை சுரந்து சொரியும் பாலைப்பருகி, துள்ளியோடு கன்று பின்தொடர்ந்து செல்லும் ஆன் என - துள்ளியோடுகின்ற கன்றின்பின்னே தொடர்ந்து போகும் பசுவைப் போல, வெள்ளியம்பலத்துள் ஆடும் வேத கீதர் - வெள்ளி மன்றுள் ஆடியருளும் சாமவேத விருப்பினராகிய இறைவர், தம் பிராட்டியோடும் - தமது இறைவியாரோடும், காதல் கூர் பிள்ளை போனவாறு எய்தினார் - அன்பு மிக்க பிள்ளையார் சென்ற வழியிற் சென்றடைந்தனர். அவிழ்ந்த என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு. பிள்ளையார் உமையின் பாலருந்தித் துள்ளியோடு கன்றாதல் உணர்க. ஆன் தொடர்ந்து செல்லுதல் போல எய்தினார் என்றமையின் இது தொழிலுவமை. (36) ஆறினோ டிரண்டடுத்த வாயிரஞ் சமணரும் வேறுவேறு தாமுயன்ற மந்திரங்கள் வேறுவே றூறுநீர் சுரந்தவோலை யிற்பொறித் தொருங்குபோய்ச் சீறிவா னிமிர்ந்தெழுந்த தீயின்வாய் நிரப்பினார். (இ-ள்.) ஆறினோடு இரண்டு அடுத்த ஆயிரம் சமணரும் - ஆறு என்னும் எண்ணுடன் இரண்டு சேர்ந்த ஆயிரம் (எண்ணாயிரம்) சமணரும், வேறு வேறு தாம் முயன்ற மந்திரங்கள் - தாம் முயன்று கற்ற வேறு வேறு மந்திரங்களை, ஊறு நீர் சுரந்த வேறு வேறு ஓலையில் பொறித்து - ஊறுகின்ற நீர் சுரந்த வெவ்வேறாகிய ஓலையில் எழுதி, ஒருங்கு போய் - ஒரு சேரச் சென்று, சீறிவான் நிமிர்ந்து எழுந்த தீயின் வாய் நிரப்பினார் - சினந்து வானின் கண் ஓங்கி யெழுந்த அனலின்கண் நிரப்பினார்கள். முயன்ற - முயன்று பயின்ற. நீர் சுரந்த வோலை - சிறிதும் நீர் வற்றாத பச்சோலை. வேறு வேறு ஓலையில் என்க. எண்ணிறந்த மந்திரங்களை எண்ணிறந்த ஓலையிற் பொறித்து எண்ணிறந்தோர் ஒருங்கு சென்று தீயிற் போட்டனர் என்றார். (37) அக்கிவாய் மடுத்தவே டனைத்துமக் கணத்தினே இக்குவா யுலர்ந்ததோ டெனக்கரிந்து சாம்பராய் உக்கவாறு கண்டுநீச ருட்கிடந்து பொங்கவே திக்குளார்கள் கண்டபேர் சிரித்துளார்க ளாயினார். (இ-ள்.) அக்கிவாய் மடுத்த ஏடு அனைத்தும் - அவ்வனல் வாய் மடுத்த ஏடு முற்றும், அக்கணத்தினே - அந்தக் கணப்பொழுதிலேயே, இக்குவாய் உலர்ந்த தோடெனக் கரிந்து சாம்பராய் -- கரும்பிலுள்ள காய்ந்த தோட்டைப்போலக் கரிந்து சாம்பராகி, உக்கவாறு கண்டு - அழிந்த தன்மையைக் கண்டு, நீசர் உள்கிடந்து பொங்க - புலையர்களாகிய அச்சமணரது உள்ளம் புழுங்கிப் பொங்க, திக்குளார்கள் கண்ட பேர் - அதனைக் கண்டவர்களாகிய அத்திசை யிலுள்ளாரனைவரும், சிரித்துளார்கள் ஆயினார் - சிரிப்பார் களாயினர். அங்கி எனற்பாலது அக்கி என வலித்தது; அக்கினி என்பதன் கடைக்குறையுமாம். கரும்பின் உலர்ந்த தோடு நெருப்பிலிட்டாற் கரிதல் போன்று என்க. கண்டபேர் - கண்டவர்; வழக்குப் பற்றி வந்தது; சிரித்துளார்கள் - சிரித்தவர்கள், சிரிப்பவர்கள். (38) விரிந்தவேத நாவர்தாம் விரித்தவேத மெய்ப்பொருள் வரைந்தபுத்த கத்தைவண் கயிற்றினால் வகிர்ந்துதாம் அருந்தஞான வமுதளித்த வம்மைபே ரகப்படத் தெரிந்தவே டெடுத்தடுத்த தீயின்வாயி லிட்டனர். (இ-ள்.) வேதம் விரிந்த நாவர் - மறைகள் விரிந்த நாவினை யுடைய பிள்ளையார், தாம் விரித்த வேதம் மெய்ப்பொருள் வரைந்த புத்தகத்தை - தாம் விரித்துக் கூறிய மறையின் உண்மைப் பொருள் எழுதிய திருமுறையை, வண்கயிற்றினால் வகிர்ந்து - வளவிய கயிற்றினால் வகிர்ந்து, தாம் அருந்த ஞான அமுது அளித்த அம்மை பேர் அகப்படத் தெரிந்த ஏடு - தாம் அருந்துதற்கு ஞானப்பால் கொடுத்த அம்மையாரின் திருபெயர் கிடைக்க விளங்கிய ஏட்டினை, எடுத்து அடுத்த தீயின் வாயில் இட்டனர் - எடுத்து அடுத்துள்ள அனல் வாயில் இட்டனர். பரந்துள்ள வேதம் பயின்ற நாவர் என்றுமாம். வேத மெய்ப் பொருள் - வேதத்தின் சாரமாகிய தமிழ் மறை; மெய்ப்பொருள் வேதம் என மாறி உண்மைப் பொருளையுடைய தமிழ்மறை என்றுரைத்தலுமாம். கயிற்றினால் வகிர்தல் - கயிறு சாத்தி எடுத்தல். அம்மை பேர் முற்படப் பொருந்திய ஏடு அகப்பட அதனை எடுத்து என்க. அம்மை பேர் அமைந்த ஏடாவது “போகமார்த்த பூண் முலையாள்” என்னும் திருநள்ளாற்றுப் பதிகம் வரைந்த ஏடு: “ போகமார்த்த பூண்முலையா டன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த பைங்கண்வெள்ளேற் றண்ணல் பரமேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே” என்பது அப்பதிகத்தின் முதற் பாட்டு. அவ்வேட்டினைத் தீயின்கண் இடும்பொழுது பிள்ளையார் பாடிய நள்ளாற்றுப் பதிகமொன்று முளது; அது, “ தளிரிள வளரொளி தனதெழி றருதிகழ் மலைமகள் குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின் நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தந் நாமமே மிளிரிள வளரொளி யிடிலவை பழுதிலை மெய்ம்மையே” என்னும் திருப்பாட்டை முதலாக வுடையது. (39) மறைபுலப் படுத்தநூல் வரைந்தவே டனந்தநாள் அறைபுனற் கிடந்ததா மெனப்பசந்த தரசனும் நிறையமைச்சு மரசியாரு நின்றபேரு மந்தணர்க் கிறைவரைப் புகழ்ந்தளப்பி லின்பவெள்ள மூழ்கினார். (இ-ள்.) மறை புலப்படுத்த நூல் வரைந்த ஏடு - வேதத்தின் மெய்ப்பொருளை வெளிப்படுத்திய திருமுறையினின்றுங் கைக்கொண்ட அவ்வேடு, அனந்தநாள் அறை புனல் கிடந்ததாம் எனப் பசந்தது - மிகப் பலநாள் ஒலிக்கின்ற நீரின்கண் கிடந்ததுபோலப் பசந்தது; அரசனும் நிறை அமைச்சும் அரசியாரும் நின்ற பேரும் - பாண்டியனும் அமைச்சிலக்கணம் நிறைந்த குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியாரும் அங்கு நின்ற மற்றவரும், அந்தணர்க்கு இறைவரைப் புகழ்ந்து - மறையவர்க்கு மன்னராகிய பிள்ளையாரைப் புகழ்ந்து, அளப்பில் இன்ப வெள்ளம் மூழ்கினார் - அளவில்லாத இன்பப் பெருக்கில் மூழ்கினார். நூல் வரைந்த - திருமுறையினின்றும் கொண்ட; பதிகம் எழுதிய என்றுமாம். (40) வெந்தசிந்தை யமணர்வாது வெல்வதற்கு வேறிடம் புந்திசெய்து வந்தவப் பொதுத்தலம் பொதுக்கடிந் தந்தணாளர் வாதுவென்ற வன்றுதொட்டு ஞானசம் பந்தனென்ற நாமமே படைத்துயர்ந்த தின்றுமே. (இ-ள்.) வெந்த சிந்தை அமணர் வாது வெல்வதற்கு - புழுங்கிய உள்ளத்தை யுடைய சமணர் வாதில் வெல்வதற்கு, வேறு இடம் புந்தி செய்து வந்த அப்பொதுத்தலம் - வேறு இடம் வேண்டுமெனக் கருதி வரப் பெற்ற அப்பொது விடமானது, அந்தணாளர் வாது வென்ற அன்று தொட்டு - ஆளுடைய பிள்ளையார் வாதில் வென்ற அன்று முதல், இன்றும் - இற்றைக்கும், பொதுக்கடிந்து - பொதுமை நீங்கி, ஞான சம்பந்தன் என்ற நாமமே படைத்து உயர்ந்தது - ஞான சம்பந்தன் என்ற பெயரையே படைத்துச் சிறந்தது. கடிந்து - நீக்கி; நீங்கி என்னும் பொருட்டாயது. ஞானசம்பந்தர் வென்றதற்கு அடையாளமாக அவர் திருப் பெயரிட்டு அவ்விடத்தை வழங்கலாயின ரென்க. அது ‘சம்பந்த நத்தம்’ என வழங்கி இக் காலத்தில் ‘சாம்ப நத்தம்’ என வழங்குகின்றது. (41) அன்னவேடு முறையினோ டிறுக்கியந்த ணாளர்கோன் மன்னைநோக்க வினையினோடு பாயுடுத்த மாசர்தாஞ் சொன்னசூள் புலப்படத் துணிந்தும்வாய்மை நாணொரீஇக் கன்னிநாட னவைசிரிக்க வாற்றலாது கத்துவார்.1 (இ-ள்.) அன்ன ஏடு முறையினோடு இறுக்கி - அந்த ஏட்டினைத் திருமுறையுடன் சேர்த்து இறுக்கிக் கட்டி, அந்தணாளர்கோன் மன்னை நோக்க - மறையவர் பெருமானாகிய பிள்ளையார் மன்னனைப் பார்க்க, விளையினோடு பாய் உடுத்த மாசர் - தீவினையுடன் பாயையும் உடுத்த அழுக்கினையுடைய அச்சமணர், தாம் சொன்ன சூள் புலப்படத் துணிந்தும் - தாங்கள் கூறிய வஞ்சினத்தை விளங்க அறிந்து வைத்தும், வாய்மை நாண் ஒரீஇ - வாய்மையையும் வெட்கத்தையும் விட்டு நீங்கி, கன்னி நாடன் அவை சிரிக்க - பாண்டி மன்னன் அவையிலுள்ளார் சிரிக்க, ஆற்றலாது கத்துவார் - பொறுக்கலாற்றாது கத்துவார். பாய் உடையாகச் சூழ்ந்தாற்போல வினையாலும் சூழப் பெற்றவர் என்பார் விளையினோடு பாயுடுத்த என்றார். வெந்த ஏட்டில் வரைந்த மந்திரத்தையுடைய சமயம் தோற்றது எனவும், அங்ஙனமல்லாதது வென்றது எனவும் தாமே கூறிய வஞ்சினம் தமக்கு நன்கு தெரிந்திருந்தும், தமது ஏடு வெந்தவுடன் தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் மீட்டும் வாதிற்கு எழுதலின் வாய்மையும் நாணும் இல்லார் என்பார் ‘தாம் சொன்னசூள் புலப்படத் துணிந்தும் வாய்மை நாணொரீஇ’ என்றார். (42) ஏடநாங்க ளெழுதியிட்ட பச்சையேடெ ணாயிரம் வீடவந்த நீவரைந்து விட்டவோலை யொன்றுமென் வாடலின்றி நீரிலிட்ட வண்ணமான தாலிதுன் பாடவஞ்செய் விஞ்சைகொண்டு பாவகற் பிணித்ததே. (இ-ள்.) ஏட - ஏடா, நாங்கள் எழுதி இட்ட எணாயிரம் பச்சை ஏடு வீட - நாங்கள் எழுதியிட்ட எண்ணாயிரம் பச்சை யேடுகளும் வெந்து சாம்பராக, நீ வரைந்து விட்ட அந்த ஓலை ஒன்றும் - நீ எழுதிப் போட்ட அந்த ஓரோலை மட்டும், வாடல் இன்றி - சிறிது வாடுதலும் இல்லாமல், நீரில் இட்ட வண்ணமானது என் - நீரிலிட்டது போன்ற நிறத்தை யடைந்தது என்ன காரணம், இது உன் பாடவம் செய் விஞ்சை கொண்டு - இது உன்னுடைய (பிறருக்கு) மகிழ்ச்சியை விளைக்கும் வித்தையைக் கொண்டு, பாவகன் பிணித்ததே - அனலைக் கட்டியதேயாகும். அந்த ஓலை எனவும், வண்ணமானது என் எனவும் கூட்டுக. ஆல்: அசை. விஞ்சை - அக்கினித் தம்பன வித்தை. (43) உங்களேடு மெங்களேடு மும்பர்வா னளாய்விரைஇப் பொங்கியோடும் வையைநீரி லிடுகவிட்ட போதுதான் அங்குநீ ரெதிர்க்குமோலை வெல்லுமோலை யன்றியே துங்கவேலை செல்லுமோலை தோற்குமோலை யாவதே. (இ-ள்.) உங்கள் ஏடும் எங்கள் ஏடும் - நுமது ஏட்டினையும் எமது ஏட்டினையும், உம்பர்வான் அளாய் விரைஇப் பொங்கி ஓடும் - வானின்மேல் அளாவி விரைந்து கரைவழிந்து ஓடா நின்ற, வையை நீரில் இடுக - வையையாற்றின் நீரினில் இடுவேமாக; இட்டபோது - அங்ஙனம் இட்டபொழுது, அங்கு நீர் எதிர்க்கும் ஓலை வெல்லும் ஓலை - அவண் நீரில் எதிர்த்துச் செல்லும் ஓலையே வென்ற ஓலை; அன்றி - அங்ஙனமின்றி, துங்க வேலை செல்லும் ஓலை - பெரிய கடலிற் செல்லும் ஓலை, தோற்கும் ஓலை ஆவது - தோல்வியுறும் ஓலையாகும். உம்பர் வான்: ஒருபொருட் பன்மொழி; வானினது உச்சி என்றுரைத்தலுமாம். விரைஇ - விரைந்து : சொல்லிசை யளபெடை. தான்: அசை. சமயத்தின் வெற்றி தோல்வியை ஓலையின்மேல் ஏற்றி வெல்லுமோலை தோற்குமோலை என்றார். (44) வென்றுவீ றடைந்தவர்க்கு வீறழிந்து தோற்றபேர் என்றுமேவ லடிமையாவ தென்றிசைந்து கைதவக் குன்றுபோலு நின்றகுண்டர் கூறலோடு மீறிலா மன்றுளாடு மடிகண்மைந்தர் வாய்மலர்ந்து பேசுவார். (இ-ள்.) வென்று வீறு அடைந்தவருக்கு - வெற்றி பெற்றுப் பெருமை அடைந்தவருக்கு, வீறு அழிந்து தோற்றபேர் - தோல்வியுற்றுப் பெருமையிழந்தவர்கள், என்றும் ஏவல் அடிமையாவது என்று இசைந்து - எப்பொழுதும் ஏவல் புரியும் அடிமையாவதென்று உடன்பட்டு, கைதவக் குன்றுபோலும் நின்ற குண்டர் கூறலோடும் - வஞ்சமலை போலும் நின்ற கீழ்மக்களாகிய அச்சமணர் கூறியவளவில், ஈறு இலா மன்றுள் ஆடும் அடிகள் மைந்தர் - முடிவில்லாத பொதுவில் ஆடியருளும் இறைவன் புதல்வராகிய பிள்ளையார், வாய் மலர்ந்து பேசுவார் - திருவாய் மலர்ந்து கூறுவாராயினர். தோற்று வீறழிந்தபேர் என மாற்றுக. பேர் என்பது வழக்கு. ஈறிலா அடிகள் எனக் கூட்டுக. (45) அறுசீரடி யாசிரிய விருத்தம் அடியார் பதினா றாயிரவ ருள்ளார் சிவனை யவமதித்த கொடியார் நீவி ருமக்கேற்ற தண்ட மிதுவோ கொன்றைமதி முடியா ரருளா லுங்களைநாம் வென்றே மாயின் மூவிலைவேல் வடிவா னிரைத்த1 கழுமுனையி லிடுவே மதுவே வழக்கென்றார். (இ-ள்.) அடியார் பதினாறாயிரவர் உள்ளார் - நமக்கு ஏவல் புரியும் அடியார்கள் பதினாறாயிரவர் உள்ளார்கள் (அவரேயமையும்); நீவிர் சிவனை அவமதித்த கொடியார் - நீங்கள் சிவபெருமானை இகழ்ந்த கொடியவர்கள்; உமக்கு ஏற்ற தண்டம் இதுவோ - (ஆகலின்) உமக்கியைந்த தண்டம் இதுவன்று; கொன்றை மதி முடியார் அருளால் - கொன்றை மாலையையும் பிறைமதியையும் அணிந்த முடியினையுடைய இறைவரது திருவருளால், நாம் உங்களை வென்றேமாயின் - யாம் உங்களை வென்றோமானால், மூவிலை வேல் வடிவால் நிரைத்த கழுமுனையில் - மூன்றுதகட்டு வடிவமைந்த சூலப்படையின் உருவத்தோடு வரிசைப் படுத்தி நட்ட கழுமுனையில், இடுவேம் - இடா நிற்பேம்; அதுவே வழக்கு என்றார் - அதுவே தக்க முறையாகும் என்றனர். தோற்றவர் வென்றவர்க்கு அடிமையாவதென்று சமணர் கூறினமையின் இங்கே அடியார் பதினாறாயிரவர் உள்ளாராகலின் நுங்கள் அடிமை வேண்டற் பாலதன்று, நுமக்கேற்ற தண்டமும் இதுவன்று எனப் பிள்ளையார் கூறினரென்க. இவ்வாதிலே தோற்றவர் செய்வது இன்னதென்பதனை ஒட்டி வாது செய்யவேண்டுமெனக் குலச்சிறையார் கூற, அமணர்கள் தாமே வாதிலழிந்தோமாகில் இவ்வரசன் கழுவேற்றுவானாக என்றனர் எனப் பெரிய புராணம் கூறுகின்றனது; “ என்றமண் கையர் கூற வேறுசீர்ப் புகலி வேந்தர் நன்றது செய்வோ மென்றங் கருள்செய நணுக வந்து வென்றிவே லமைச்ச னார்தாம் வேறினிச் செய்யு மிவ்வா தொன்றினுந் தோற்றார் செய்வ தொட்டியே செய்வ தென்றார்” “ அங்கது கேட்டு நின்ற வமணரு மவர்மேற் சென்ற பொங்கிய வெகுளி கூரப் பொறாமைகா ரணமே யாகத் தங்கள் வாய் சோர்ந்து தாமே தனிவாதி லழிந்தோ மாகில் வெங்கழு வேற்று வானிவ் வேந்தனே யென்று சொன்னார்” என்பன காண்க. (46) ஊழின் வலியா லமணரதற் குடன்பட் டார்க ளஃதறிந்து சூழி யானைக் குலச்சிறையுந் தச்சர் பலரைத் தொகுவித்துக் காழி னெடிய பழுமரத்திற் சூல வடிவாய்க் கழுநிறுவிப் பாழி நெடிய தோள்வேந்தன் முன்னே கொடுபோய்ப் பரப்பினார். (இ-ள்.) ஊழின் வலியால் அமணர் அதற்கு உடன்பட்டார்கள் - தீவினையின் வலியினால் சமணர் அதற்கு இசைந்தார்கள்; சூழியானைக் குலச்சிறையும் - முக படாத்தையுடைய யானையையுடைய குலச்சிறையாரும், அஃது அறிந்து தச்சர் பலரைத் தொகுவித்து - அதனை யறிந்து பல தச்சர்களைக் கூட்டி, காழின் நெடிய பழுமரத்தில் - வயிரமுடைய நீண்ட முதிர்ந்த மரங்களில், சூல வடிவாய்க் கழு நிறுவி - சூலவடிவாகக் கழுக்களை நிறுத்தி, பாழி நெடிய தோள் வேந்தன் முன்னே கொடுபோய்ப் பரப்பினார் - வலிய நீண்ட தோளையுடைய பாண்டி மன்னன் முன்னே அவற்றைக் கொண்டு போய்ப் பரப்பினார். (47) தேற லாதார் தமைக்காழிச் செம்ம னோக்கி யினிவம்மின் நீறு பூசிக் கண்டிகையும் பூண்டு நிருத்த ரெழுத்தைந்தும் கூற வோதிப் பாசமொழித் துய்மி னென்னா வறநோக்கிக் கூறினார்மற் றதுகேட்டுக் குண்ட ரெரியிற் கொதித்துரைப்பார். (இ-ள்.) தேறலாதார்தமை - பொருளை யறியாத அச்சமணர்களை, காழிச் செம்மல் நோக்கி - சீர்காழித் தோன்றாலாகிய பிள்ளையார் பார்த்து, இனி வம்மின் - இனியேனும் இங்கு வருவீராக; நீறு பூசிக் கண்டிகையும் பூண்டு - திருநீறு தரித்து உருத்திராக்க மாலையும் அணிந்து, நிருத்தர் எழுத்து ஐந்தும் ஊற ஓதி, - திருக்கூத்தருடைய திருவைந்தெழுத்'e7¥ம் நாவிற் சுவையூற ஓதி, பாசம் ஓழித்துஉய்மின் என்னா - பாசபந்தத்தை ஒழித்துப் பிழையுங்கள் என்று, அறம் நோக்கிக் கூறினார். அறநெறி'e7 நோக்கிக் கூறியருளினார்; அது கேட்டு எரியில் கொத்தி உரைப்பார் - அத'e7Â கேட்டு அக் கீழ்மக்கள் நெருப்பைப் போலச் சினந்துரைப்பாராயினர். தேறலாதார் - தெளிவில்லாதவர்;பகைமையுடையார் என்றKVம். ஊற ஓதி - பயில ஓதி என்றுமாம். (48) முன்பு தீயில் வென்றனமே நீரில் யாதாய் முடியுமென அன்பு பேசி யெமையிணக்கி யகல நினைத்தா யல்லதைநீ பின்பு வாது செயத்துணியும் பெற்றி யுரைத்தா யல்லைபுலால் என்பு பூணி யடியடைந்த வேழாய் போதி யெனமறுத்தார். (இ-ள்.) முன்பு தீயில் வென்றனம் - முன்பு அனல் வழக்கில் வென்றுவிட்டோம், நீரில் யாதாய் முடியும் என - இனி நீர் வழக்கில் யாதாக முடியுமோ வெனக் கருதி, அன்பு பேசி எமை இணக்கி அகல நினைத்தாய் அல்லது - இன்மொழி கூறி எங்களை உடன்படுத்தி ஓடிப் போக நினைத்தாயே யல்லாமல், நீ பின்பு வாது செயத் துணியும் பெற்றி உரைத்தாய் அல்லை - நீ பின்பு வாது புரிதற்கு மனந்துணியுந் தன்மையைக் கூறினாயல்லை; புலால் என்பு பூணி அடி அடைந்த ஏழாய் - புலாலையுடைய எலும்பினை யணிந்த சிவனடியினை யடைந்த அறிவில்லாதவனே, போதி என மறுத்தார் - (வாதஞ் செய்ய) வரக் கடவா யென்று மறுத்துக் கூறினர். அல்லதை, திரிசொல். பூணி - பூண்டவன்; இ : வினை முதற் பொருள் விகுதி. பிள்ளையாரையும் அவரது கடவுளையும் இழித்துரைக்குங் கருத்தால் புலால் என்பு பூணி யடியடைந்த வேழாய் என்றார். போதி - போவாய் என்றுமாம். (49) ஊகந் தவழும் பழுமரத்தை யுதைத்துக் கரைமா றிடவொதுக்கிப் பூகந் தடவி வேர்கீண்டு பொருப்பைப் பறித்துப் புடைபரப்பி மாகந் துழாவிக் கடுகிவரும் வையைப் புனலை மந்திரத்தால் வேகந் தணிவித் தேடெழுதி விடுத்தார் முன்போல் வெள்காதார். (இ-ள்.) ஊகம் தவழும் பழுமரத்தை உதைத்து - கருங்குரங்கு தாவுகின்ற ஆலமரங்களைக் கல்லி, கரைமாறிட ஒதுக்கி - கரைகள் உடைபட அங் கொதுக்கி, பூகம் தடவி வேர் கீண்டு - பாக்கு மரங்களின் முடியை யளாவி அவற்றின் வேர்களைக் கல்லி, பொருப்பைப் பறித்துப் புடைபரப்பி - மலைகளை அகழ்ந்து பக்கங்களிற் பரப்பி, மாகம் துழாவிக் கடுகிவரும் வையைப் புனலை - வானைத் தடவிக் கொண்டு விரைந்து வரும் வைகை நீரினை, வேகம் மந்திரத்தால் தணிவித்து - வேகத்தை மந்திரவலியினால் தணித்து, முன்போல் ஏடு எழுதி வெள்காதார் விடுத்தார் - முன்போலவே ஏடுகள் எழுதி வெட்கமில்லாதவராய் விட்டனர். வேகம் - கடுகிய செலவு. (50) சிறையேய் புனல்சூழ் வேணுபுரச் செல்வர் யாருந் தெளிவெய்த மறையே வாய்மை யுரையாகின் மறைகண் முழுதுந் துணிபொருடான் பிறையேய் வேணிப் பிரானாகிற் பெருநீ ரெதிரே செல்கவென முறையே பதிக மெடுத்தெழுதி விட்டார் முழங்கி வருபுனலில். (இ-ள்.) சிறை ஏய் புனல் சூழ் வேணுபுரச் செல்வர் - கரை பொருந்திய நீர் சூழ்ந்த காழிச் செல்வர், யாரும் தெளிவு எய்த - அனைவரும் தெளிவடைய, மறையே வாய்மை உரையாகில் - வேதமே உண்மையுரையானால், மறைகள் முழுதும் துணி பொருள்- அம்மறைகள் அனைத்தும் துணிந்து கூறும் மெய்ப்பொருள், பிறை ஏய் வேணிப் பிரான் ஆகில் - பிறைமதியை யணிந்த சடையையுடைய சிவபிரானேயானால், பெருநீர் எதிரே செல்க என - இந்த வெள்ளநீரின் எதிரேறிச் செல்லக் கடவது என்று, முறையே பதிகம் எடுத்து எழுதி - முறையாகப் பதிகம் எடுத்து எழுதி, முழங்கிவரு புனலில் விட்டார் - ஆரவாரித்து வரும் நீரில் விட்டனர். யாரும் தெளிவெய்தப் பதிகம் எடுத்தெழுதி விட்டார் என இயைக்க. எழுதிவிட்ட பதிகமாவது, “ வாழ்க வந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே” என்னும் பாசுரத்தை முதலாகவுடையது. (51) தேசம் பரவுங் கவுணியர்கோன் விடுத்த வேடு செழுமதுரை ஈச னருளாங் கயிறுபிணித் தீர்ப்ப நதியி லெதிரேற நாசஞ் செய்யும் பொறிவழியே நடக்கு1 முள்ள மெனச்சென்று நிச ரேடெண் ணாயிரமு நீத்த வழியே யொழுகியவால். (இ-ள்.) தேசம் பரவும் கவுணியர் கோன் விடுத்த ஏடு - உலகத்தார் துதிக்கும் ஆளுடைய பிள்ளையார் விடுத்த ஏடானது, செழுமதுரை ஈசன் அருளாம் - செழிய மதுரைப் பிரானாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவருளாகிய, கயிறு பிணித்து ஈர்ப்ப - கயிறானது கட்டியிழுத்தலால், நதியில் எதிரேற - நதியில் எதிரேறிச் செல்லா நிற்க, நீசர் ஏடு எண்ணாயிரமும் - புலைஞராகிய சமணர்களின் எண்ணாயிர ஏடுகளும், நாசம் செய்யும் பொறிவழியே நடக்கும் உள்ளமென - அழிவைத் தரும் ஐம்புலன்களின் வழியே நடக்கும் உள்ளம் போல, நீத்த வழியே சென்று ஒழுகிய - வெள்ளஞ் செல்லும் வழியே சென்று நடந்தன. பொறியானது உள்ளத்தை ஈர்த்துச் செல்லுதலின் நீத்தத்திற்குப் பொறியையும், அதன் வழிச் சென்ற சமணர் ஏட்டிற்கு உள்ளத்தையும் உவமை கூறினார். தீயோராகிய சமணரது ஏட்டிற்குப் பொறி வழிச் செல்லும் உள்ளத்தை உவமை கூறியது பெரிதும் பொருத்த முடைத்தாதல் காண்க. (52) சிங்க மனையா ரெழுதுமுறை யெதிராற் றேறத் தெரிந்தமரர் அங்க ணறும்பூ மழைபொழிந்தா ரறவோர் துகில்விண்ணெறிந் தார்த்தார் கங்கை யணிந்தார் திருத்தொண்டர் கண்ணீர்க் கடலி லமிழ்ந்தினார் வெங்க ணமணர் நடுங்கியுடல் வெயர்வைக் கடலி லமிழ்ந்தினார். (இ-ள்.) சிங்கம் அனையார் எழுதும் முறை ஆற்று எதிர் ஏற - பரசமயங்களாகிய யானைகட்குக் கோளரி போல்வாராகிய பிள்ளையார் எழுதி விட்ட திருமுறை ஆற்றின்கண் எதிரேறிச் செல்லாநிற்க, அமரர் தெரிந்து அங்கண் நறும்பூ மழை பொழிந்தார் - தேவர்களதனையுணர்ந்து அவ்விடத்தில் நறிய மலர்மழை பொழிந்தனர்; அறவோர் துகில்விண் எறிந்து ஆர்த்தார் - முனிவர்கள் ஆடையை வானில் வீசி ஆரவாரித்தனர்; கங்கை அணிந்தார் திருத்தொண்டர் கண்ணீர்க் கடலில் அமிழ்ந்தினார் - கங்கையை யணிந்த சிவபிரான் அடியார்கள் கண்களிலிருந்து வரும் இன்ப நீர்க்கடலில் அழுந்தினார்கள்; வெம்கண் அமணர் உடல் நடுங்கி வெயர்வைக்கடலில் அமிழ்ந்தினார் - வன்கண்மையுடைய அமணர்கள் உடல் நடுங்கி வெயர்வைக்கடலுள் அழுந்தினார்கள். கள் நறும்பூ எனப் பிரித்து மதுவையுடைய நறிய பூ என்றுரைத் தலுமாம். திருத்தொண்டர்க்கு ஆனந்தத்தாற் கண்ணீரும், அமணர்க்கு அச்சத்தால் வெயர் நீரும் பெருகின என்க. (53) வேமே யென்ப தறியாதே வெல்வே மென்றே சூளொட்டி நாமே யிட்ட வேடெரியில் வேவக் கண்டு நதிக்கெதிரே போமே யின்னம் வெல்வெமென் றிட்ட வேடும் புணரிபுகத் தாமே தம்மைச் சுடநாணி நின்றா ரமணர் தலைதூக்கி. (இ-ள்.) வேம் என்பது அறியாது வெல்வே மென்று சூள் ஒட்டி - வெந்து போகும் என்பதனை அறியாமல் வெல்லுவோம் என்று வஞ்சினங் கூறி, நாமே இட்ட ஏடு எரியில் வேவக்கண்டும் - நாமே கொண்டுபோய்ப் போட்ட ஏடுகள் அனலில் வேதலைப் பார்த்து வைத்தும், நதிக்கு எதிரே போம் இன்னம் வெல்வேமென்று - நதியினெதிரே நம்மேடு போகும் (அதனால்) இன்னமும் வெல்லுவோ மென்று, இட்ட ஏடும் புணரிபுக - இட்ட ஏடும் கடலில் சென்று புக்கனவே என, தாமே தம்மைச் சுட - தம் உள்ளமே தம்மைச் சுட்டு வருத்துவதால், அமணர்தலை தூக்கி நாணி நின்றார் - அமணர்கள் தலையிறக்கி வெட்கி நின்றனர். வேகு மென்பது அறியாமல் ஏட்டினைத் தீயிலிட்ட அறியாமை மேலும், அதனைக் கண்ட பின்னரும் நம் ஏடு ஆற்றெதிரே செல்லுமெனக் கருதி யிட்ட அறியாமையும் உடையமாயினேம் எனக் கருதுதலால் அவர்கள் உள்ளமே அவர்களைச் சுடலாயின வென்க. புக என்பதற்குப் புக்கெனவேயென என்று விரித்துரைக்க. தூக்குதல் - தொங்கவிடுதல்; கவிழ்த்தல். (54) பொருப்பே சிலையாய்ப் புரங்கடந்த புனித னேயெத் தேவர்க்கும் விருப்பேய் போகம் வீடுதரு மேலாங் கடவு ளெனநான்கு மருப்பேய் களிற்றான் முடிதகர்த்தான் மருமா னறியக் குருமொழிபோல் நெருப்பே யன்றி வேகவதி நீரும் பின்னர்த் தேற்றியதால். (இ-ள்.) பொருப்பே சிலையாய்ப் புரம் கடந்த புனிதனே - மேரு மலையையே வில்லாகக் கொண்டு திரிபுர மெரித்த தூயோ னாகிய சிவபெருமானே, எத்தேவர்க்கும் - எல்லாத் தேவர்களுக்கும், விருப்பு ஏய் போகம் வீடுதரும் மேலாம் கடவுள் என - விருப்பம் பொருந்திய இன்பத்தையும் வீடுபேற்றையும் அளித்தருளும் முதற் கடவுளென்று, நான்கு மருப்பு ஏய் களிற்றான் முடிதகர்த்தான் மருமான் அறிய - நான்கு கொம்புகளையுடைய வெள்ளை யானையையுடைய இந்திரன் முடியினைத் தகர்த்தெறிந்த உக்கிரப் பெருவழுதியின் வழித்தோன்றலாகிய சவுந்தரிய பாண்டியன் அறியுமாறு, குருமொழி போல் - குருவின் உபதேச மொழிபோல, நெருப்பே அன்றி - முன்னர் அனல் தெளிவித்ததே யல்லாமல், பின்னர் வேகவதி நீரும் தேற்றியது - பின்னர் வையையின் புனலுந் தெளிவித்தது. போகம் - இம்மை, மறுமை யின்பங்கள். எத்தேவர்க்கும் மேலாங் கடவுள் என இயைத்தலுமாம். உறுதி பெறத் தெளிவித்த தென்பார் ‘குருமொழிபோல்’என்றார். (55) பொய்யின் மறையின் புறத்தமணர் புத்தர்க் கன்றி வாய்மையுரை செய்யு மறைநூல் பலதெரிந்தும் சிவனே பரமென் றறியாதே கையில் விளக்கி னொடுங்கிடங்கில் வீழ்வார் போலக் கலங்கிமனம் ஐய மடைந்த பேதையர்க்கு மறிவித் தனவே யவையன்றோ.1 (இ-ள்.) பொய் இல் மறையின் புறத்து அமணர் புத்தர்க்கு அன்றி - பொய்யில்லாத மறைக்குப் புறம்பினராகிய சமணர் புத்தர்களுக்கே யல்லாமல், வாய்மை உரை செய்யும் மறை நூல் பல தெரிந்தும் - வாய்மையை யுரைக்கும் பல மறை நூல்களை ஓதியும், சிவனே பரம் என்று அறியாது - சிவபெருமானே முழுமுதற் கடவுளென் றுணராமல், கையில் விளக்கினொடும் கிடங்கில் வீழ்வார் போல் - கையிலுள்ள விளக்கோடும் குழியில் வீழ்பவரைப் போல, மனம் கலங்கி ஐயம் அடைந்த பேதையர்க்கும் -அறிவு கலங்கி ஐயுறவுற்ற மூடர்களுக்கும், அவை அறிவித்தன அன்றோ - அவை தெரிவித்தன அல்லவா? மறையின் புறத்தமணர் புத்தர் - வேதபாகியராகிய சமணர் புத்தர்கள் ஐயமடைந்த பேதையர் என்றது வைதிகருள்ளே சைவரல்லாத ஏனையரை வேதத்தைப் பயின்று வைத்தும் சிவனே பரமெனத் தெளியாமையால் கையில் விளக்கினொடும் என்றார். கிடங்கு - கிணறும் ஆம். (56) கண்டுகூடற் கோமகனுங்1 கற்பு நிறைந்த பொற்புடைய வண்டு கூடுந் தாரளக வளவன் மகளு மந்திரியுந் தொண்டு கூடு மடியாருங் காழிக் கரசைத் தொழுதுதுதி2 விண்டு கூடற் கரிய3மகிழ் வெள்ளத் தழுந்தி வியந்தனரால். (இ-ள்.) கூடல் கோமகனும் - கூடல் மன்னனாகிய பாண்டியனும், கற்பு நிறைந்த பொற்பு உடைய - கற்புநிறைந்த அழகினையுடைய, வண்டுகூடும் தார் அளகவளவன் மகளும் - வண்டுகள் கூடும் மாலையை யணிந்த கூந்தலையுடைய வளவர்கோன் பாவையாகிய மங்கையர்க்கரசியாரும், மந்திரியும் தொண்டு கூடும் அடியாரும் கண்டு - குலச்சிறையாரும் தொண்டுபூண்ட அடியார்களும் இந்நிகழ்ச்சியைக் கண்டு, காழிக்கு அரசைத் தொழுது துதிவிண்டு - காழி மன்னராகிய பிள்ளையாரை வணங்கித் துதிமொழி கூறி, கூடற்கு அரிய மகிழ்ச்சி வெள்ளத்துள் அழுந்தி வியந்தனர் - பிறரடைதற்கு அரிய மகிழ்ச்சி வெள்ளத்துள் அழுந்தி வியப்புற்றனர். அளகத்தையுடைய மகள் என்க. விண்டு - விளம்பி. (57) நன்றி தேறார் பின்புள்ள மான மிழந்து நாணழிந்து குன்று போலுந் தோணிபுரக் கோமா னெதிரே யாங்களுமக் கின்று தோற்றே மெமையீண்டு நீரே வென்றீ ரெனநேர்ந்து நின்று கூறக் கவுணியர்கோ னனையா ருய்யு நெறிநோக்கா. (இ-ள்.) நன்றி தேறார் பின்பு உள்ள மானம் இழந்து நாண் அழிந்து - செய்ந் நன்றி தேறாத அச்சமணர் பின் எஞ்சியுள்ள மானத்தை இழந்து நாணமும் அழிந்து, குன்று போலும் தோணிபுரக் கோமான் எதிரே - மலைபோலும் தோணிபுரத்தோன்றலாகிய பிள்ளையார் திருமுன் வந்து, இன்று யாங்கள் உமக்குத் தோற்றேம் - இன்று யாம் உமக்குத் தோற்றோம்; ஈண்டு எமை நீரே வென்றீர் என - இவ்விடத்தில் எம்மை நீரே வென்றீரென்று, நேர்ந்து நின்று கூற - உடன்பட்டுச் சொல்ல, கவுணியர்கோன் - கவுணியர் தலைவராகிய பிள்ளையார், அனையார் உய்யும் நெறிநோக்கா - அச் சமணர் உய்தி பெறும் வழியைக் கருதி. திருமடத்திலே தீயிட்ட தீச்செயலுக்கு ஒறுக்காது விடுத்த நன்றியை அவர்கள் அறியாமையால் நன்றிதேறார் என்றார்; உறுதி இன்னதென்றறியா தவர் என்றுமாம். உள்ள மானம் - மனமானம் எனலும் பொருந்தும். குன்றுபோலும் கோமான் எனக் கூட்டுக. சலியாமையும் பெருமையும் யாவராலும் அறியப்படுதலும் முதலிய வற்றால் பிள்ளையார்க்கு மலை உவமமாயிற்று. நேர்ந்து நின்று : ஒரு சொல். (58) இன்ன மறத்தா றிசைக்கின்றே நீரேன் வாளா விறக்கின்றீர் அன்னை யனையா னெம்மிறைவ னவனுக் காளா யுய்மின்கள் என்ன வேட சிறியாய்நீ யெவ்வா றெங்கட் கடாதமொழி சொன்ன தென்று மானமுளார் கழுவி லேறத் தொடங்கினார். (இ-ள்.) இன்னம் அறத்தாறு இசைக்கின்றேம் - இன்னமும் அறநெறி கூறுகின்றேம்; நீர் ஏன் வாளா இறக்கின்றீர் - நீவிர் ஏன் வீணாக இறந்துபடுகின்றீர், எம் இறைவன் அன்னை அனையான் - எம் இறைவன் எல்லா வுயிர்கட்குந் தாய் போல்பவன், அவனுக்கு ஆளாய் உய்மின்கள் என்ன - அவனுக்கு ஆட்பட்டுப் பிழையுங்களென்று கூறியருள, ஏட - ஏடா, சிறியாய் நீ - சிறியவனாகிய நீ, எங்கட்கு அடாத மொழி சொன்னது எவ்வாறு என்று - எங்களுக்குப் பொருந்தாத மொழியைச் சொன்னது எங்ஙனமென்று, மானம் உளார் கழுவில் ஏறத் தொடங்கினார்கள் - மானம் மிக்காராகிய அச்சமணர்கள் தாமே கழுவில் ஏறத் தொடங்கினார்கள். அறநெறி நோக்கிக் கூறுகின்றேம் என்றுமாம். மானமுளார் - கொண்டது தவறாயினும் அதனை விடுதற் கொல்லாத தீமானமுடையவர்; ஈண்டுச் சைவமே மெய்ச் சமயமென அறிந்து வைத்தும் தமது சமயத்தை விடமாட்டாராய் உயிர் துறக்கவுந் துணிந்தாராகலின் மானமுளார் கழுவிலேறத் தொடங்கினார்கள் என்றார். (59) மதத்தினின் மான மிக்கார் தாங்களே வலிய வேறிப் பதைத்திட விருந்தா ரேனைப் பறிதலை யவரைச் சைவ விதத்தினி லொழுக்கம் பூண்ட வேடத்தார் பற்றிப் பற்றிச் சிதைத்திடர் செய்தே றிட்டார் திரிதலைக் கழுக்கோ றன்னில். (இ-ள்.) மதத்தினில் மானம் மிக்கார் தாங்களே வலிய ஏறி - தங்கள் சமயத்தில் பற்று மிக்க சமணர் சிலர் தாங்களாகவே கழுவில் வலிய ஏறி, பதைத்திட இருந்தார் - உயிர் பதைக்க இருந்தனர்; பறிதலை ஏனையவரை - அங்ஙனம் ஏறாத பறிக்குந் தலையினையுடைய ஏனைச் சமணரை, சைவவிதத்தினில் ஒழுக்கம்பூண்ட வேடத்தார் - சைவப் பாகுபாட்டுள் ஒழுக்கமேற்கொண்ட திருவேடமுடையார், பற்றிப் பற்றி - பிடித்துப் பிடித்து, சிதைத்து - இடர் செய்து, அலைத்து - துன்புறுத்தி, திரிதலைக் கழுக்கோல் தன்னில்ஏறிட்டார் - மூன்று தலையையுடைய கழுமரத்தில் ஏற்றினார்கள். (60) வழிவழி வருமா ணாக்கர் சாதற்கு வருந்தி நெஞ்சம் அழிபவர் திருநீ றிட்டா ரதுகிட்டா தயர்வா ராவின் இழிவில்கோ மயத்தை யள்ளிப் பூசினா ரிதுவுங் கிட்டா தொழிபவ ராவின் கன்றைத் தோளிலிட் டுயிரைப் பெற்றார். (இ-ள்) வழிவழி வரு மாணாக்கர் - வழி வழியாக வந்த மாணாக்கர்களுள், சாதற்கு வருந்தி நெஞ்சம் அழிபவர் - சாதலுக்கு வருந்தி உள்ளம் நைபவர், திருநீறு இட்டார் - திரு நீற்றினைத் தரித்தனர்; அது கிட்டாது அயர்வார் - அவர்களுள் அந்நீறு கிடைக்காது வருந்துபவர், ஆவின் இழிவு இல் கோமயத்தை அள்ளிப் பூசினார் - பசுவினது குற்றமில்லாத கோமயத்தை வாரிப் பூசினார்; இதுவும் கிட்டாது ஒழிபவர் - இதுவுங் கிடைக்காம லொழிபவர், ஆவின் கன்றைத் தோளில் இட்டு உயிரைப் பெற்றார் - பசுவின் கன்றினைத் தோளிற் றாங்கி உயிரைப் பெற்றனர். (61) கூறிட்ட மூன்றுங் கிட்டா தயர்பவர் குற்றந் தீர நீறிட்டார் நெற்றி யோடு நிருமல கோம யத்தின் சேறிட்டார் நெற்றி யோடு நெற்றியைச் செறியத் தாக்கி மாறிட்ட பாசந் தன்னை மறித்திட்டுப் பிறப்பை வெல்வார். (இ-ள்) கூறிட்ட மூன்றும் கிட்டாது அயர்பவர் - இங்குக் கூறிய மூன்றுங் கிடைக்காமல் வருந்துபவர், குற்றம் தீர நீறு இட்டார் நெற்றியோடும் - குற்றம் நீங்கத் திருநீறிட்டவரின் நெற்றியோடும், நிருமல கோயமத்தின் சேறு இட்டார் நெற்றியோடும் - தூய கோமயக் குழம்பினை யிட்டவரின் நெற்றியோடும், நெற்றியைச் செறியத் தாக்கி- தமது நெற்றியைப் பொருந்தத் தாக்கி, மாறு இட்ட பாசம் தன்னை மறித்திட்டு - தம்மோடு மாறுதலைக் கொண்ட பாசத் தளையைப் போக்கி, பிறப்பை வெல்வார் - பிறப்பினை யொழிப்பார்கள். கூறிட்ட - கூறிய, மாறிட்ட - மாறுகொண்ட, மறித்திட்டு -மடங்கச் செய்து, வலியை அழித்து என்றபடி - திருநீற்றுச் சார்புற்றமையால் பாசத்தை நீக்கிப் பிறப்பைப் யொழிப்பாராயினர் என்க (62) மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் மடிந்தோர் யாருஞ் சுற்றிய சேனங் காக நரிகணாய் தொடர்ந்து கேள்விப் பற்றிநின் றீர்த்துத் தின்னக் கிடந்தனர் பரும யானை வெற்றிகொள் வேந்தன் காழி வேந்தரைத் தொழுது நோக்கா. (இ-ள்) இவர் தம்மை ஊற்றம் செய்திலர் - இன்னோரைச் சிவவேடத்தினர் ஊறு செய்யாது விட்டனர்; மடிந்தோர் யாரும் - இறந்தவரனைவரும், சுற்றிய சேனம் காகம் நரிகள் நாய் தொடர்ந்து- சூழ்ந்த பருந்தும் காக்கையும் நரிகளும் நாய்களுந் தொடர்ந்து, கெளவிப்பற்றி நின்று ஈர்த்துத் தின்னக் கிடந்தனர் - வாயாற் கெளவிப் பிடித்து நின்று இழுத்துத் தின்னக் கிடந்தனர்; பருமம் யானை வெற்றி கொள் வேந்தன் - கவச மணிந்த யாணையை யுடைய வெற்றி பொருந்திய பாண்டிய மன்னன், காழி வேந்தரைத் தொழுது நோக்கா காழி மன்ன ராகிய பிள்ளையாரை வணங்கி நோக்கி. மற்று:அசை. ஊற்றம் - ஊறு (63) இன்றுநீ ரிட்ட வேடிங் கியாவருங் காண நேரே சென்றதே யெங்கே யென்றா னதனையாஞ் செம்பொற் கூடன் மன்றவ ரருளா லின்னே வருவிப்ப மென்று வாது வென்றவர் நதியின் மாடே மேற்றிசை நோக்கிச் செல்வார். (இ-ன்) இன்று நீர் இட்ட ஏடு - இப்பொழுது நீர் போட்ட ஏடானது. யாவரும் காண நேரே சென்றதே எங்கே என்றான் - அனைவரு மறிய நேரே போயிற்றே அஃது எங்கே என்று வினவினான்; வாது வென்றவர் - வழக்கில் வெற்றிப் பெற்ற பிள்ளையார், செம்பொன் கூடல் மன்றவர் அருளால் - சிவந்த பொன்மயமாகிய கூடலில் வீற்றிருக்கும் வெள்ளியம்பலவர் திருவருளால், யாம் அதனை இன்னே வருவிப்பமென்று - யாம் அவ்வேட்டினை இப்பொழுதே வருவிப்போமென்று கூறியருளி, நதியன் மாடே மேற்றிசை நோக்கிச் செல்வார்- ஆற்றின் கரையிலேயே மேற்றிசைசை நோக்கிச் செல்வாராயினர். நேரே சென்றது - எதிர்த்துச் சென்றது. (64) செல்லுநர் காண வோலை காவதஞ் செல்வ தப்பால் ஒல்லையங் கொளித்த லோடும் வியந்தவ னொருங்கு கூடிக் கொல்லையான் மேய்த்து நின்றார் சிலர்தமைக் குறித்து நீரிவ் வெல்லையுள் விசேட முண்டோ விவண்கண்ட திசைமி னென்றார். (இ-ள்) செல்லுநர் காண- அங்ஙனம் போகின்றவர் காணுமாறு, காவதம் செல்வது ஓலை - ஒரு காவததூரஞ் சென்றதாகிய அவ்வேடு, அப்பால் அங்கு ஒல்லை ஒளித்தலோடும் - பின் அவ்விடத்தில் விரைந்து மறைந்த வளவில், வியந்து- வியப்புற்று, அவண் ஒருங்கு கூடி - அங்கு ஒருசேரத் திரண்டு, கொல்லை ஆன் மேய்த்து நின்றார் சிலர் தமைக் குறித்து - முல்லைநிலப் பசுக்களை மேய்த்து நிற்குஞ் சிலரை நோக்கி, இவ்வெல்லையுள் விசேடம் உண்டோ - இந்த எல்லைக்குள் வியக்கத்தகும் நிகழ்ச்சி ஏதேனும் உண்டோ. இவண் கண்டது நீ'fa இசைமின் என்றார் - இங்குக் கண்டதை நீவிர் கூறுமின் என்று வினவினர். கூடி மேய்த்து நின்றார் எனவும், நீர் இவண் கண்டது இசைமின் எனவும் இயைக்க. விசேடம் - புதுமை. (65) அவ்விடைச் சிறார்கள் யாங்க ளொன்றையு மறியே மென்ன இவ்விடை விசேடங் காணல் வேண்டுமெத் திறத்து மென்னாத் தெவ்விடை வாது செய்யத் திருவுளக் கருணை செய்த வெவ்விடைக் கொடியினரைப் பாடினார் வேத நாவார். (இ-ள்) அவ்விடைச்சிறார்கள் - அந்த இடைச் சிறுவர்கள், யாங்கள் ஒன்றையும் அறியேம் என்ன - யாங்கள் ஒரு நிகழ்ச்சியையும் அறியேம் என்று கூற, இவ்விடை எத்திறத்தும் விசேடம் காணல் வேண்டும் என்னா - இவ்விடத்தில் எவ்வகையாலேனும் ஒரு விசேடங்காண வேண்டுமென்று, தெவ் இடை வாது செய்ய - பகைவராகிய சமணரிடத்து வழக்குப் புரிதற்கு, திருவுளக் கருணை செய்த - திருவுளம்பற்றி அருள் செய்த, வெவ்விடைக் கொடியினாரை - விரைந்த செலவினையுடைய இடபக்கொடியை யுயர்த்திய சிவ பெருமானை, வேதநாவார் பாடினார் - தமிழ் வேதம் பாடும் நாவினையுடைய பிள்ளையார் திருப்பதிகம் பாடினார். காணல் வேண்டும் என்னாப் பாடினார் என இயைக்க, பாடிய பதிகம், “ வன்னியு மத்தமு மதிபொதி சடையினன் பொன்னிய றிருவடி புதுமல ரவைகொடு மன்னிய மறையவர் வழிபட வடியவர் இன்னிசை பாடல் ரேடகத் தொருவனே ” “ கோடுசந் தனமகில் கொண்டிழி வையைநீர் ஏடு சென் றணைதரு மேடகத் தொருவனை நாடுதென் புகலியுண் ஞானசம் பந்தன பாடல்பத் திவைவல்லார்க் கில்லையாம் பாவமே” என்பது (66) பாட்டின் மேற் கருணை வைத்தார் சாயம் புவாய்ப் பராரை வில்லக் காட்டினு ளிருப்ப நேரே கண்டு தாழ்ந் தெழுந்து சண்பை நாட்டினார் வலங்கொண் டேத்தி யெதிர்நின்றார் நகைத்தார் நிம்பத் தோட்டினா னதுகேட் டங்கே தோன்றினான் றனை யோடும். (இ-ள்) பாட்டின் மேல் கருணை வைத்தார் - திருப்பதிகத்தின் மேல் அருள் வைத்த இறைவர், சயம்புவாய் பராரை வில்லக் காட்டினுள் இருப்ப - சுயம்புமூர்த்தியாய்ப் பருத்த அரையையுடைய வில்வக் காட்டினுள்ளே இருக்க, நேரே கண்டு தாழ்ந்து எழுந்து - நேரிற் கண்டு வீழ்ந்து வணங்கி எழுந்து, சண்பை நாட்டினர் வலம் கொண்டு ஏத்தி எதிர்நின்றார் - காழிநாட்டினையுடைய பிள்ளையார் வலம் வந்து துதித்துத் திருமுன் நின்றனர்; நகைத்தார் நிம்பத் தோட்டினான் - விளங்கும் இதழையுடைய வேப்ப மலர்மாலையை யணிந்த பாண்டியன், அது கேட்டு தானையோடும் அங்கே தோன்றினான் - அதனைக் கேட்டுத் தன் சேனையுடன் அங்கு வந்தனன். பரு அரை - பராரை என்றாயது மரூஉ முடிபு. நகைத்தோட்டு நிம்பத்தாரினான் என மாறுக. (67) அந்தமா விலிங்கத் தீச னாயிர மதியங் கண்ட முந்தையை தியராய்த் தோன்றி முத்தமிழ் கரசை நீசேன் மைந்தனா மிளையோ னொப்பாய் வருகென நீறு சாத்திச் சிந்தைநீ ளார்வங் கூரத் திருவருள் சுரந்து நின்றார் (இ-ள்) அந்தமா இலிங்கத்து - அந்தச் சிறந்த இலிங்கத்தினின்றும், ஈசன் இறைவன், ஆயிரம் மதியம் கண்ட முந்தை வேதியராய்த் தோன்றி - ஆயிரம் பிறைகளைக் கண்ட முதிய மறையவனாகத் தோன்றி, முத்தமிழ்க்கு அரசை - மூன்று தமிழுக்கும் அரசராகிய பிள்ளையாரை, நீ என் மைந்தனாம் இளையோன் ஒப்பாய் - நீ என் புதல்வனாகிய இளையவனைப் போல்வாய்; வருக என நீறு சாத்தி - வரக்கடவாயென்று திருநீறு சாத்தி, சிந்தைநீள் ஆர்வம் கூர உள்ளத்தின் கண் பேரன்பு மிக, திருவருள் சுரந்து நின்றார் - திருவருள் பாலித்து நின்றருளினர். வருகென அருகணைத்து நீறுசாத்தி என்க. (68) நின்றவந் தணரை யன்று நிருமல ஞான மீந்தார் என்றுகண் டிறைஞ்சி யைய நீரில்யா னிட்ட வேடு சென்றங் கெடுத்தீர் நீரே யஃதுநுஞ் செல்வர்க் கேற்ற தன்றதைத் தருதி ரென்ற ரறுமுகச் செம்ம லன்னார். (இ-ள்) அறுமுகச் செம்மல் அன்னார்- ஆறுமுகங்களையுடைய முருகக்கடவுளைப் போல் வாராகிய பிள்ளையார், நின்ற அந்தணரை தமக்கு எதிரே தோன்றி நின்ற அந்தணரை, அன்று நிருமல ஞானம் ஈந்தார் என்று கண்டு - முன் தூய சிவஞானத்தினைத் தமக்கு அளித்தருளியவரென்று உணர்ந்து, இறைஞ்சி வணங்கி, ஐய - ஐயனே நீரில் யான் இட்ட ஏடு இங்கு சென்றது - நீரிலே யான் விட்ட ஏடு இங்கு வந்தது, எடுத்தீர் நீரே - அதனை யெடுத்தவர் நீரே யாவீர்; அஃது நும் செல்வர்க்கு ஏற்றது அன்று - அது நும் புதல்வர் விளையாடுதற்கேற்ற தன்று; ‘அதைத் தருதிர்’ என்றா'fa (ஆகலின்) அதனைத் தந்தருள்வீராக என்று கேட்டனர். ‘நீ என் மைந்தனும் இளையோ னொப்பாய்’ என முன்பு வேதியர் கூறினாராகலின் அம்மைந்தன் பொருட்டு அதனை நீர் வைத்திருத்தல் வேண்டா என்பார் ‘அஃது நும் செல்வர்க் கேற்ற தன்று’ எனப் பிள்ளையார் கூறினரென்க. (69) இன்னமும் பன்னா ளெம்மை யிடந்தொறும் பாடி யெஞ்சும் புன்னெறி யொழுகு வாரை வென்றுநம் புனித வீடு பின்னர்நீ பெறுதி யென்னா வேடுதந் தாசி பேசி மின்னென மறைந்து நின்றார் வேதிய ராய வேடர். (இ-ள்.) வேதியர் ஆய வேடர் - மறையவராகிய திருவேடமுடையார், இன்னமும் பன்னாள் எம்மை இடந்தொறும் பாடி - இன்னமும் பலநாள்வரை எம்மைத் திருப்பதிகடோறுஞ் சென்று பாடி, எஞ்சும் புல் நெறி ஒழுகுவாரை வென்று - எஞ்சியுள்ள புல்லிய நெறியில் ஒழுகுவாரையும் வென்று, பின்னர் நம் புனித வீடு பெறுதி என்னா - பின் நமது தூய வீட்டுலகினையடைவா யென்று, ஏடு தந்து ஆசி பேசி மின் என மறைந்து நின்றார் - ஏட்டினைக் கொடுத்து ஆக்க மொழி கூறி மின்போல மறைந்து நின்றனர். ஏடு தந்து என்னா ஆசி பேசி மறைந்து நின்றார் என்க. வேதியராய ஏடர் எனப் பிரித்து ஏடகர் என்பது ஏடர் என்றாயிற்று எனலும் பொருந்தும். (70) தாதையார் கவர்ந்து மீளத் தந்தவே டதனை வாங்கிப் போதையார் ஞான முண்டார் புரிசடைப் பிரானார் வெளவி ஈதையா மிரந்து வேண்டத் தந்தன ரென்று கூறிக் கோதையார் வேலி னாற்குக் காட்டவக் கொற்கை வேந்தன். (இ-ள்.) தாதையார் கவர்ந்து மீளத் தந்த ஏடு அதனை - தந்தையார் கைப்பற்றித் திரும்பக் கொடுத்த அவ்வேட்டினை, போதையார் ஞானம் உண்டார் வாங்கி - ஞானவடிவினராகிய அம்பிகை அளித்த ஞானவமுதினையுண்ட பிள்ளையார் வாங்கி, ஈதை - இவ்வேட்டினை, புரிசடைப் பிரானார் வெளவி - முறுக்கிய சடையினையுடைய இறைவர் கவர்ந்து, யாம் இரந்து வேண்டத் தந்தனர் என்று கூறி - (பின்) யாம் குறையிரந்து வேண்டக் கொடுத்தருளினாரென்று கூறி, கோதை ஆர் வேலினாற்குக் காட்ட - மாலையையணிந்த வேற்படையுடைய பாண்டியனுக்குக் காண்பிக்க, அக் கொற்கை வேந்தன் - அந்தக் கொற்கை மன்னனாகிய பாண்டியன். சிவபெருமான் பிள்ளையார்க்குத் தந்தை முறையால் அருள் செய்தலின் தாதையார் என்றார். போதையார் - போதவுருவினராகிய உமாதேவியார்; “ போதையார்பொற்கிண்ணத் தடிசில்பொல் லாதெனத் தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்” எனப் பிள்ளைார் அருளிச் செய்த தேவாரமும் காண்க. கொற்கை, பாண்டியர் தலைநகரங்களுள் ஒன்றாகலின் கொற்கை வேந்தன் என்றார். (71) கச்சான வரவ மார்த்தத கருணையங் கடலிற் றோன்றும் விச்சான ஞான முண்டீ ராற்றலின் விளைவு தேறா தச்சான வலியா னும்மை யளந்தன னடியே னிந்தத் துச்சான பிழைதீர்த் தாள்கென் றிறைஞ்சினான் றுணர்த்தார் வேம்பன். (இ-ள்.) கச்சான அரவம் ஆர்த்த கருணை அம்கடலில் தோன்றும் - கச்சாகிய பாம்பினைக் கட்டிய அருட்கடலிற் றோன்றிய, விச்சு ஆன ஞானம் உண்டீர் - வீட்டிற்குக் காரணமான ஞானவாரமுதினை உண்டீரே, ஆற்றலின் விளைவு தேறாது - நுமது ஆற்றலின் பெருமையை அறியாது, அச்சு ஆன வலியால் நும்மை அடியேன் அளந்தனன் - தற்போத வலியினால் நும்மை அடியேன் அளந்தேன்; இந்தத் துச்சான பிழை தீர்த்து ஆள்க என்று - இந்த இழிவாகிய குற்றத்தை நீக்கி ஆளக் கடவீரென்று, துணர்த்தார் வேம்பன் இறைஞ்சினான் - கொத்துக்களாகிய வேப்பமாலையை யணிந்த பாண்டியன் வணங்கினான். விச்சு - வித்து; போலி. விஞ்ஞானம், அஞ்ஞானம் என்பன முறையே விச்சானம், அச்சானம் எனத் திரிந்தன என்னலுமாம். துச்சம் என்பதன் ஈறு கெட்டது. ஆள்கென்று : அகரம் தொகுத்தல். (72) அந்நெடு மேரு வாகு மாடகச் சிலையி னார்க்குப் பொன்னெடுஞ் சிகரக் கோயின் மண்டபம் புயலைக் கீண்டு மின்னெடு மதியஞ் சூடுங் கோபுர மேகந் தாவுங் கன்னெடும் புரிசை வீதி யாவையுங் களிப்பக் கண்டான். (இ-ள்.) அந்நெடு மேருவாகும் ஆடகச் சிலையினார்க்கு - நீண்ட மேருவாகிய பொன் மலையை வில்லாகக் கொண்ட அக்கடவுளுக்கு, பொன் நெடுஞ் சிகரக் கோயில் - பொன்னாலாகிய நீண்ட முடியினையுடைய திருக்கோயிலும், மண்டபம் - திருமண்டபங் களும், புயலைக் கீண்டு மின் நெடும் மதியம் சூடும் கோபுரம் - முகில் மண்டிலத்தைக் கிழித்து ஒளி பொருந்திய பெரிய சந்திரனைத் தரிக்குங் கோபுரங்களும், மேகம் தாவும் கல் நெடும்புரிசை வீதி யாவையும் - முகில் தவழும் கல்லாலாகிய நீண்ட திருமதில்களும் வீதியும் முதலிய அனைத்தையும், களிப்பக் கண்டான் - கண்டோர் கண்களிப்ப ஆக்கினான். சிலையையுடைய அவர்க்கு என்க. கீண்டு - கீழ்ந்து; மரூஉ. கண்டான் - இயற்றினான். (73) அற்றைநா ளாதி யாக வேடக மென்னு நாமம் பெற்றதா லேட கத்தின் மேவிய பிரானைப் பாண்டிக் கொற்றவன் சமண ரோடுங் கூடிய பாவ மெல்லாம் பற்றறப் பூசை செய்து பாசமுங் கழியப் பெற்றான்.1 (இ-ள்.) அற்றை நாள் ஆதியாக - அந்நாள் முதலாக, ஏடகம் என்னும் நாமம் பெற்றது - (அப்பதி) திருவேடகம் என்னுந் திருப்பெயரைப் பெற்றது; ஏடகத்தில் மேவிய பிரானை - அத்திரு வேடகத்தில் எழுந்தருளிய இறைவனை, பாண்டிக்கொற்றவன் - பாண்டி மன்னன், சமணரோடும் கூடிய பாவம் எல்லாம் பற்று அற - சமணரோடும் சேர்ந்ததனா லாகிய பாவங்களனைத்தும் பசையற (சிறிது மில்லையாக,) பூசை செய்து - பூசித்து, பாசமும் கழியப் பெற்றான் - மும்மலமாகிய பாசமும் நீங்கப் பெற்றான். அன்று என்பது ஐ பெற்று அற்றை என்றாயது. பாசமும் என்பதிலுள்ள உம்மை எச்சப் பொருளோடு சிறப்புப் பொருளும் குறித்தது. ஆளுடைய பிள்ளையார் திருப்பாசுர மெழுதி இட்ட ஏடு ஆற்று நீரிலே எதிர்த்து செல்லும் பொழுது அதனைத் தொடர்ந்து எடுக்கவேண்டிக் குலச்சிறையார் பரிமீதேறிச் சென்றார் என்றும், பிள்ளையார் ஏடு தங்குதற் பொருட்டு வன்னியு மத்தமும் என்னும் பதிகம் பாடாநின்றமையின் காடிடமாக ஆடும் கண்ணுதல் கோயிலின் பக்கத்தே நீரிலே சென்று நின்ற ஏட்டினைக் குலச்சிறையார் சேர்ந்து எடுத்துத் தலைமிசை வைத்துக் கொண்டு வந்து பிள்ளையாரை வணங்கி ஏட்டினை அனைவருக்கும் காட்டினர் என்றும் திருத்தொண்டரபுராணம் கூறா நிற்கும். (74) நறைகெழு துழாயி னானுங் கலுழனு நாகர் வேந்தும் முறையினா லுகங்கண் மூன்றும் பூசித்து முடியா வின்ப நிறையருள் பெற்றா ரன்ன நிராமய விலிங்கந் தன்னை இறுதியா முகத்திற் பாண்டி யிறைமகன் பூசை செய்தான். (இ-ள்.) நறைகெழு துழாயினானும் கலுழனும் நாகர் வேந்தும்- மணம் பொருந்திய துழாய் மாலையையணிந்த திருமாலும் கருடனும் பாம்புகளுக்கு வேந்தனாகிய அனந்தனும், முறையினால் உகங்கள் மூன்றும் பூசித்து - முறையே உகங்கள் மூன்றிலும் வழிபாடு செய்து, முடியா இன்பம்நிறை அருள்பெற்றார் - அழியாத இன்பம்நிறைந்த திருவருளைப் பெற்றனர்; அன்ன நிராமய இலிங்கம் தன்னை - அந்த நோயற்ற இலிங்க மூர்த்தியை, இறுதியாம் உகத்தில் - இறுதியாகிய இக்கலியுகத்தில், பாண்டி இறைமகன் பூசை செய்தான் - பாண்டி மன்னன் வழிபாடாற்றினான். உகம் - யுகம். (75) அங்கண்மா நகர்கண் டாங்கோ ராண்டிறை கொண்டு காழிப் புங்கவ ரோடும் பின்னாட் பூழியர் பெருமான் மீண்டு மங்கல மதுரை சே'faந்து வைகுநா ணீற்றுச் செல்வம் எங்கணும் விளங்கச் சின்னா ளிருந்துபின் ஞானச் செல்வர். (இ-ள்.) அங்கண் மாநகர் கண்டு - அழகிய இடமகன்ற ஒரு நகரமமைத்து, ஆங்கு காழிப் புங்கவரோடும் ஓராண்டு இறைகொண்டு - அவ்விடத்தே சீகாழித் தோன்றலாருடன் ஓர் ஆண்டளவு தங்கி, பூழியர் பெருமான் - செளந்தரிய பாண்டியன், பின் நாள் மீண்டு மங்கல மதுரை சேர்ந்து வைகுநாள் - பின்னர் மீள மங்கலம் நிறைந்த மதுரைப் பதியை யடைந்து தங்கும் நாள், ஞானச்செல்வர் - சிவஞானச் செல்வராகிய பிள்ளையார், நீற்றுச் செல்வம் எங்கணும் விளங்கச் சின்னாள் இருந்து - திருநீற்றுச் செல்வம் எங்கும் விளங்கச் சிலநாளங்கிருந்து, பின் - பின்பு. இறைகொண்டு - தங்கி. எங்கணும் - பாண்டிநாடு முழுதும். (76) வடபுலத் துள்ள வீசன் பதிகளும் வணங்கிப் பாடக் கடவமென் றெழுந்து கூடற் கண்ணுதற் பெருமான் றன்னை இடனுறை கயற்க ணாளை யிறைஞ்சிப்பல் வரனும் பெற்று விடைகொடு தமிழ்நா டெங்கும் பணிந்தனர் மீண்டு போவார். (இ-ள்.) வடபுலத்து உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக்கடவம் என்று எழுந்து - வடநாட்டிலுள்ள இறைவன் திருப்பதிகளையும் வணங்கிப் பாடக் கடவேமென்று கருதி எழுந்து, கூடல் கண் நுதல் பெருமான் தன்னை - கூடலில் எழுந்தருளிய நெற்றிக் கண்ணையுடைய பெருமானையும், இடன் உறை கயற்கணாளை இறைஞ்சி - அவனிடப்பாகத்தி லுறையும் அங்கயற்கண்ணம்மையையும் வணங்கி, பல் வரனும் பெற்று - பல வரங்களையும் பெற்று, விடை கொடு - விடைபெற்று, தமிழ் நாடு எங்கும் பணிந்தனர் மீண்டு போவார் - தமிழ் நாட்டிலுள்ள பதிகளனைத்தையும் பணிந்து மீண்டு செல்வாராயினர். பெருமான் றன்னையும் கயற்கணாளையும் என எண்ணும்மை விரிக்க. பணிந்தனர் : முற்றெச்சம். (77) தன்பெருங் கற்பி னாளு மமைச்சனுந் தமிழ்நர் கோனும் பின்புமு னந்தண் காழிப் பிரானடி பிரிவாற் றாராய் அன்புதந் தவர்பா னட்ட வன்றுதொட் டானாக் கேண்மை இன்பமுந் துன்ப மாகி விளைந்துமுன் னீர்ப்பப் போனார். (இ-ள்.) தமிழ்நர்கோனும் தன்பெருங் கற்பினாளும் அமைச்சனும் - பாண்டியனும் அவனது பெருங் கற்பினராகிய மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும். முன் அந்தண் காழிப் பிரான் பின்பு அடி பிரிவு ஆற்றாராய் - முன்னே செல்லும் அழகிய குளிர்ந்த சீகாழித் தலைவராகிய பிள்ளையார் பின்னே அவர் திருவடியின் பிரிவினைப் பொறாதவராகி, அவர்பால் அன்பு தந்து நட்ட அன்று தொட்டு - அவரிடத்தி லன்பு செய்து நட்ட அன்று முதல், ஆனாக் கேண்மை இன்பமும் - நீங்காத கேண்மையாலாகிய இன்பமும், துன்பமாகி விளைந்து முன் ஈர்ப்பப் போனார் - துன்பமாக விளைந்து முன்னின் றிழுக்கச் சென்றனர். தமிழ்நர்கோன் - தமிழ் நாட்டினர்க்குத் தலைவன், ஈர்ப்பப் பின்பு போனார் என்றியையும். பெரியார் கேண்மை பிரிவின்கட் பீழை தருவதாகலின் ‘துன்பமாகி விளைந்து’ என்றார். (78) சண்பையர் றலைவர் தாமு மனையராய்த் தம்பின் செல்லும் நண்புடை யவரை நோக்கி நம்மிடத் தன்பு நீங்காப் பண்பின ராகி நீறு பாதுகாத் தீசன் கீர்த்தி மண்பட வாழ்மி னீது மறுக்கன்மி னின்மி னென்றார். (இ-ள்.) சண்பையர் தலைவர் தாமும் அனையராய் - காழியர் பெருமான் தானும் அத்தன்மை யுடையோராய், தம்பின் செல்லும் நண்புடை யவரை நோக்கி - தமது பின்னே வரும் கேண்மையுடைய அவர்களைப் பார்த்து, நம்மிடத்து அன்பு நீங்காப் பண்பினராகி - நம்மிடத்தில் அன்பு நீங்காத குணமுடையவராய், நீறு பாதுகாத்து - திருநீற்றினைப் பாதுகாத்து, ஈசன் கீர்த்தி மண்பட வாழ்மின் - இறைவன் புகழ் நிலவுலகமுற்றும் வளர்ந்து பரவுமாறு வாழுங்கள், ஈது மறுக்கன்மின் நின்மின் என்றார் - இதனை மறுக்காமல் நில்லுங்கள் என்று கூறியருளினார். அனையராய் - அவர்போல் வருந்தினவராய்; அனையராய்த் தம்பின் செல்லும் நண்புடையவரை என்றியைத்துரைத்தலுமாம். பட - உண்டாக; பரக்க. (79) ஆளுடைப் புகலி வேந்த ரருண்மொழி மறுக்க வஞ்சித் தாளுடைப் பதுமச் செந்தா டலையுறப் பணிந்து மீண்டு வாளுடைத் தானைத் தென்னன் மதுரையில் வந்தான் கஞ்சத் தோளுடைச் சிங்க மன்னார் சோழர்கோ னாடு புக்கார். (இ-ள்.) ஆளுடைப் புகலி வேந்தர் - தம்மை ஆளாகவுடைய காழி வேந்தரின், அருள் மொழி மறுக்க அஞ்சி - அருள் நிரம்பிய மொழியினை மறுப்பதற்கு அஞ்சி, தாள் உடைப் பதுமச் செந்தாள் தலையுறப் பணிந்து - தண்டையுடைய தாமரை மலர்போன்ற சிவந்த திருவடிகள் த'e7çலயிற் பொருந்துமாறு வணங்கி, வாள் உடைத் தானைத் தென்னன் மீண்டு மதுரையில் வந்தான் - வாட்படை ஏந்திய தானையையுடைய பாண்டியன் திரும்பி மதுரைப் பதியை யடைந்தான்; கஞ்சத் தோள் உடைச் சிங்கம் அன்னார் - தாமரை மாலையை யணிந்த தோளையுடைய சிங்கம் போல்வாராகிய பிள்ளையார், சோழர்கோன் நாடு புக்கார் - சோழர் மன்னனது நாட்டினுட் புகுந்தனர். ஆளுடைப் புகலிவேந்தர் - ஆளுடைய பிள்ளையார் என்றுரைத் தலுமாம். அருள் மொழி - ஆணை. தோளையுடையதொரு சிங்கம் போல்வார் எனக் கொண்டு இல்பொருளுவமை யாக்கலுமாம். (80) ஞானமா மதநீர் சோர ஞானசம் பந்த ரென்னும் மானமா யானை வந்து கடம்பமா வனத்திற் றுன்னும் ஊனமாஞ் சமண ரென்னுந் தருக்களை யொடித்து வெண்ணீ றானமாப் பூழி யள்ளித் தூற்றிய தவனி யெங்கும். (இ-ள்.) ஞானமாம் மதநீர் சோர - ஞானமாகிய மதநீர் ஒழுக, ஞானசம்பந்தர் என்னும் மானம் மா யானை வந்து - ஞான சம்பந்தராகிய சிறந்த பெரிய யானை வந்து, கடம்பமா வனத்தில் துன்னும் - பெரிய கடம்ப வனத்திற் செறிந்த, ஊனமாம் சமணர் என்னும் தருக்களை ஒடித்து - குற்றமுடைய சமணராகிய மரங்களை ஒடித்து, வெண்ணீறு ஆன மரப் பூழி அள்ளி - திருநீறாகிய சிறந்த பூழியை வாரி, அவனியெங்கும் தூற்றியது - உலகமுற்றும் தூற்றியது. புவி முழுதும் திருநீறு விளங்கச் செய்தன ரென்பார் ‘வெண்ணீறான பூழியள்ளித் தூற்றிய தவனி யெங்கும்’ என்றார். இது மிகை குறையின்றி வந்த ஒற்றுமை யுருவகவணி. (81) கலிநிலைத்துறை ஆதி யாலயத் தடலைகொண் டாழிசூழ் காழிச் சோதி வேதியர் பாண்டியன் சுரந்தணித் துடலிற் பேதி யாதகூ னிமிர்த்தலாற் பிறங்குகற் பாதிப் பூதி யாவினுஞ் சிறந்ததவ் வட்டில்வாய்ப் பூதி. (இ-ள்.) ஆதி ஆலயத்து அடலை கொண்டு - முதற்கடவுளாகிய சோமசுந்தரப் பெருமான் திருக்கோயிற் சாம்பலினால், ஆழிசூழ் காழிச்சோதி வேதியர் - கடல் சூழ்ந்த காழியில் அவதரித்த புகழொளியினையுடைய மறையவராகிய பிள்ளையார், பாண்டியன் சுரந்தணித்து - பாண்டியன் வெப்பு நோயை நீக்கி, உடலில் பேதியாத கூன் நிமிர்த்தலால் - உடலில் மாறுபடாத கூனை நிமிர்த்தியதால், பிறங்கு கற்ப ஆதி பூதி யாவினும் - விளங்காநின்ற கற்பமுதலிய திருநீறு அனைத்தினும், அவ்வட்டில் வாய்ப்பூதி சிறந்தது - அம்மடைப்பள்ளிப் பூதியே மேலானது. கற்பம் ஆதி கற்பாதி என்றாயிற்று. திருநீறு கற்பம், அநுகற்பம், உபகற்பம், அகற்பம் என நால்வகைப்படும் ஆகலின், கற்பாதிப் பூதி யாவினும் என்றார். கற்பம் முதலியவற்றின் இயல்பைச் சைவ சமய நெறி முதலிய நூல்களானறிக. (82) ஆகச் செய்யுள் - 3255. அறுபத்து நான்காவது வன்னியுங் கிணறும் இலிங்கமு மழைத்த படலம் எழுசீரடி யாசிரிய விருத்தம் சென்னிவெண் டிங்கண் மிலைச்சிய மதுரைச் சிவனரு ளடைந்தசம் பந்தர் துன்னிருஞ் சமணைக் கழுமுனை யேற்றித் துணித்தவா றிசைத்தனம் வணிகக் கன்னிதன் மன்றற் கரியினை மாற்றாள் காணவக் கண்ணுத லருளால் வன்னியுங் கிணறு மிலிங்கமு மாங்கு வந்தவா றெடுத்தினி யுரைப்பாம்.1 (இ-ள்.) சென்னி வெண் திங்கள் மிலைச்சிய - முடியின்கண் வெள்ளிய பிறையை யணிந்த, மதுரைச் சிவன் அருள் அடைந்த சம்பந்தர் - மதுரைப் பதியில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளின் திருவருளைப் பெற்ற திருஞான சம்பந்தர், துன் இரும் சமணை - செறிந்த கூட்டமாகிய சமணர்களை, கழுமுனை ஏற்றி - கழுநுனியில் ஏற்றி, துணித்தவாறு இசைத்தனம் - துண்டித்த திருவிளையாடலைக் கூறினேம்; வணிகக்கன்னி தன் மன்றல் கரியினை - ஒரு வணிகமகளின் மணச் சான்றினை, மாற்றாள் காண - அவள் மாற்றாள் காணுமாறு, அக்கண்ணுதல் அருளால் - அவ்விறைவன் திருவருளால், வன்னியும் கிணறும் இலிங்கமும் - வன்னிமரமும் கேணியும் சிவலிங்கமும், ஆங்கு வந்தவாறு - அங்கு வந்த திருவிளையாடலை, இனி எடுத்து உரைப்பாம் - இனி எடுத்துக் கூறுவாம். சமண் : குழூஉப் பெயர். வென்றவர் சம்பந்தராகலின் சம்பந்தர் சமணைக் கழுமுனையேற்றித் துணித்தவாறு என உபசரித்துக் கூறினார். (1) பொன்மலர்க் கைதை வேலிசூழ் வேலைப் புறத்தொரு பட்டினத் துள்ளான் மின்மணிக் கொடும்பூ ணொருகுல வ ணிகன் வேறுவே றாம்பல செல்வத் தன்மையிற் சிறந்தோன் மகவில னாகித் தன்மனக் கினியதோர் காட்சி நன்மனைக் கொடியோ டறம்பல புரிந்தோர் நகைமதிக் கொம்பையீன் றெடுத்தான். (இ-ள்.) பொன்மலர்க் கைதை வேலிசூழ் - பொன்போலு மலரையுடைய தாழையாகிய வேலிசூழ்ந்த, வேலைப் புறத்து ஒரு பட்டினத்து உள்ளான் - கடற்கரையிலுள்ள ஒரு பட்டினத்திலுள்ளவனாகிய, மின்மணிக் கொடும்பூண் ஒரு குலவணிகன் - ஒளிபொருந்திய மணிகளழுத்திய வளைந்த அணிகளை யணிந்த சிறப்புடைய வணிகனொருவன், வேறு வேறு ஆம் பல செல்வத் தன்மையில் சிறந்தோன் - வெவ்வேறு வகையாகிய பல செல்வங்களின் மிக்கோனாயிருந்தான்; மகவு இலனாகி - அவன் மகப் பேறில்லாதவனாய், தன் மனக்கு இனியதோர் காட்சி - தன் மனத்துக்கு இனியதொரு தோற்றத்தையுடைய, நல்மனைக் கொடியோடு -ந ல்ல மனைக் கிழத்தியுடனே, பல அறம் புரிந்து - பலவகை அறங்களைப் புரிந்து, ஓர் நகை மதிக் கொம்பை ஈன்று எடுத்தான் - ஒளிபொருந்திய மதியை ஏந்திய பூங்கொம்பு போன்ற ஒரு புதல்வியைப் பெற்றெடுத்தான். பொன்மலர் என்றமையின் கைதை செந்தாழையாகும். பொன்- அழகுமாம். கொடுமை - வளைவு. மனக்கு : அத்துச்சாரியை தொக்கது. நகைமதிக் கொம்பு : இல்பொருளுவமை. (2) அத்தன வணிகற் குரியநன் மருக னவன்முதற் கடிமண முடித்தோன் முத்தமிழ் மதுரைப் பதியுளா னவற்கே முறையினா னோற்றுநான் பயந்த வித்தக மயிலைக் கொடுப்பலென் றனைய வியற்குல வணிகர்கோன் றன்னோ டொத்தபல் கிளைஞர் யாவரு மறிய வுணர்த்தினான் சிலபகல் கழிய. (இ-ள்.) அத்தனவணிகற்கு உரிய நல் மருகன் - அந்தத் தனவணி கனுக்கு உரிமையுடைய நல்ல மருகனொருவன், முத்தமிழ் மதுரைப் பதி உளான் - மூன்று தமிழையுமுடைய மதுரை நகரிலிருந்தனன்; அவன் முதல் கடிமணம் முடித்தோன் - அவன் முன்பே மணம்புரிந்து கொண்டவன் (ஆயினும்), அவற்கே - அவனுக்கே, நான் நோற்று பயந்த - நான் தவங்கிடந்து பெற்றெடுத்த, வித்தக மயிலை முறையினால் கொடுப்பல் என்று - சதுரப்பாடுடைய மயில்போன்ற புதல்வியை முறைப்படி மணஞ்செய்து கொடுப்பேனென்று, அனைய வியன்குல வணிகர்கோன் - அந்தச் சிறந்த குலவணிகர் தலைவன், தன்னோடு ஒத்த பல் கிளைஞர் யாவரும் அறிய உணர்த்தினான் - தன்னுடன் ஒத்த பல கிளைஞ ரனைவரும் அறியத் தெரிவித்தான். சில பகல் கழிய - சின்னாட்கள் நீங்க. மருகன் - தங்கை மகன். வியன் குலம் என்பது வலித்தலாயிற்று. கிளைஞர் - ஞாதியரும் சுற்றத்தாரும். (3) ஊழ்வினை வலியா லாருயி ரிழந்தா னுயிர்க்குடம் பனையதன் கற்பின் சூழ்கதிர் மணிப்பூண் மனைவியு மிறப்பத் துணிந்தன ளவரிரு வோர்க்கும் ஆழ்கடற் கிளைஞர் செயத்தகு கடன்க ளாற்றியச் செய்தியை மதுரை வாழ்தரு மருகற் குணர்த்துவா னோலை விடுத்தனர் மருமகன் வாங்கா. (இ-ள்.) ஊழ்வினை வலியால் ஆருயிர் இழந்தான் - பழவினையின் வலியினாலே தனது அரிய உயிரைத் துறந்தனன்; உயிர்க்கு உடம்பு அனைய - உயிருக்கு உடல்போன்ற, தன் கற்பின் சூழ்கதிர் மணிப்பூண் மனைவியும் - அவனது கற்பினையுடைய ஒளிமிக்க மணிகளழுத்திய அணிகளையணிந்த மனைவியும், இறப்பத் துணிந்தனள் - இறக்கத் துணிந்து விட்டனள்; அவர் இருவேர்க்கும் - அவரிரு வருக்கும், ஆழ்கடல் கிளைஞர் செயத்தகு கடன்கள் ஆற்றி - ஆழ்ந்த கடல்போன்ற சுற்றத்தார் செய்யத்தகுந்த கடன்களைச் செய்து முடித்து, அச் செய்தியை மதுரைவாழ்தரு மருகற்கு உணர்த்துவான்- அந்தச் செய்தியை மதுரையில் வாழும் அவன் மருகனுக்கு அறிவிக்கும் பொருட்டு, ஓலை விடுத்தனர் - ஓலை எழுதிப் போக்கினர்; மருமகன் வாங்கா - மருமகன் அந்த ஓலையை வாங்கி. தன் கருத்து முற்றுப் பெறுமுன் உயிர்துறந்தா னாகலின் ஊழ்வினை வலியால் என்றார். அனைய மனைவியும் கற்பின் மனைவியும் எனக் கூட்டுக. துணிந்து இறந்தனள் என்க. கடன்கள் - அபரக் கிரியைகள். உணர்த்துவான் : வினையெச்சம். (4) தன்னருண் மாமன் றுஞ்சினான் கூடத் தாரமுந் துஞ்சிய திப்பால் அன்னவற் களவின் றாகிய தனமுண் டவனனி நாண்மக வின்றிப் பின்னொரு பெண்ணைப் பெற்றன னவளைத் தனக்கெனப் பேசினா னனைய கன்னியை மணந்து செல்கென முடங்கற் கழறிய பாசுரந் தெரியா. (இ-ள்.) தன் அருள் மாமன் துஞ்சினான் - நினது கருணையை யுடைய மாமன் இறந்தனன்; கூடத் தாரமும் துஞ்சியது - அவனுடன் அவன் மனைவியும் இறந்தனள்; இப்பால் - பின், அன்னவற்கு, அளவு இன்றாகிய தனம் உண்டு - அவனுக்கு அளவில்லாத நிதியம் உண்டு; அவன் நனிநாள் மகவு இன்றி - அவன் நெடுநாள் காறும் மகப்பேறில் லாதவனாய், பின் ஒரு பெண்ணைப் பெற்றனன் - பின் ஒரு பெண் மகவினைப் பெற்றெடுத்தான்; அவளைத் தனக்கெனப் பேசினான் - அவளை உனக்கு மணஞ் செய்து கொடுப்பதாகச் சொன்னான் (ஆகலின்), அனைய கன்னியை மணந்து செல்க என - அந்தப் பெண்ணை மணஞ் செய்து கொண்டு செல்லக்கடவா யென்று, முடங்கல் கழறிய பாசுரம் தெரியா - ஓலையிற் கூறியுள்ள வாசகத்தைத் தெரிந்து. தன், தனக்கு என்பன முன்னிலையில் வந்தமையால் இடவழுவ மைதி. தாரம் என்பது சொல்லால் அஃறிணையெனக் கொண்டு துஞ்சியது என அஃறிணைவினை கொடுத்தார். இப்பால் - இனிக் கூறத் தகுவன என்றபடி. பேசினான் - கிளைஞர் பலரோடும் சொல்லினான். செல்கென : அகரம் தொக்கது. முடங்கல் கழறிய என்று பாடமிருப்பின் ஓலை கூறிய என்றுரைக்க. பாசுரம் - ஈண்டு வாசகம். (5) வீழ்ந்தனன் றரைமேற் புரண்டன னுயிர்ப்பு வீங்கினன் விழிப்புனல் வெள்ளத் தாழ்ந்தனன் விம்முற் றம்மவோ வென்றென் றரற்றினன் கிளைஞர்நட் படைந்து வாழ்ந்தவர் தழுவத் தழீஇத்தழீஇக் கரைந்தான் மற்றவர் தேற்றிடத் தெளிந்து சூழ்ந்தவெந் துயர்நீத் தொருதலை மாமன் றொன்னகர்க் கேகுவான் றுணிந்தான். (இ-ள்.) தரைமேல் வீழ்ந்தனன் புரண்டனன் - தரையில் வீழ்ந்து புரண்டு, உயிர்ப்புவீங்கினன் - பெருமூச்செறிந்து, விழிப் புனல் வெள்ளத்து ஆழ்ந்தனன் - கண்களிலிருந்து வரும் நீர்ப்பெருக்கி லழுந்தி, விம்முற்று அம்மவோ என்று அரற்றினன் - விம்மி அம்மவோ வென்று புலம்பினன்; கிளைஞர் நட்பு அடைந்து வாழ்ந்தவர் - சுற்றத்தாரும் நட்பினைப் பெற்று வாழ்கின்றவரும் வந்து, தழுவத் தழீஇத் தழீஇக் கரைந்தனன் - தழுவ எதிராகத் தானும் தழுவித்தழுவி அழுது, மற்றவர் தேற்றிடத் தெளிந்து - அவர்கள் தேற்றத் தெளிந்து சூழ்ந்த வெந்துயர் நீத்து - சூழ்ந்த கொடிய துயரினைத் துறந்து, மாமன் தொல்நகர்க்கு ஏகுவான் ஒருதலை துணிந்தான் - மாமனுடைய பழம்பதிக்குச் செல்ல ஒருதலையாகத் துணிந்தனன். வீழ்ந்தனன் முதலிய வினைமுற்று நான்கனையும் எச்சமாக்குக. அம்ம, ஓ என்பன புலம்பலில் வந்த இடைச்சொற்றகள். (6) அங்குள கிளைஞர் சிலரொடுங் கூடி யருங்கடி மதுரைநீத் தேகிப் பொங்கிருங் கழிசூழ் பட்டினங் குறுகிப் புகுதுவான் வரவறிந் தங்குத் தங்குதங் கிளைஞர் வினவநேர் வாரைத் தழீஇத் தழீஇச் செல்விடுத் தேகிக் கொங்கிவர் தளவத் தாரினான் மாமன் கோயில்புக் கிருந்தன னாக. (இ-ள்.) அங்கு உள கிளைஞர் சிலரொடும் கூடி - அங்குள்ள சில சுற்றத்தாருடன் சேர்ந்து, அருங்கடி மதுரை நீத்து - அரிய காவலையுடைய மதுரையை விட்டு, ஏகி - சென்று, பொங்கு இருங்கழி சூழ் பட்டினம் குறுகி - பொங்குகின்ற பெரிய உப்பங்கழி சூழ்ந்த பட்டினத்தை நெருங்கி, புகுதுவான் வரவு அறிந்து - அதில் புகுகின்றவனது வரவினை யறிந்து, அங்குத் தங்கு தம்கிளைஞர் வினவ நேர்வாரை - அங்கு வசிக்கும் சுற்றத்தவராய் அச்செய்தியைக் கேட்க வருகின்றவரை, கொங்கு இவர் தளவத் தாரினான் - மகரந்தம் பரந்த முல்லை மாலையை யணிந்த அவ்வணிகன், தழீஇத் தழீஇச் செலவிடுத்து ஏகி - தழுவித்தழுவிச் செல்ல விடுத்துச் சென்று, மாமன் கோயில்புக்கு இருந்தனனாக - மாமன் மாளிகையிற் புகுந்து இருந்தானாக. புகுவானாயினன் அங்ஙனம் புகுகின்றவனது வரவினையறிந்து வினவ நேரும் கிளைஞரை என உரைக்க. துயரம் வினவுவாரும் வினவப் படுவாரும் தழுவிக்கொள்ளுதல் ஒருசாராரிடைக் காணப்படும் வழக்கம். (7) அறுசீரடி யாசிரிய விருத்தம் நாள்சில கழிந்த பின்னர் நாய்கரே றனையா னன்ன வாள்புரை கண்ணி னாளை மதுரையிற் கொடுபோ யங்கென் கேளிர்முன் வேட்ப லென்று கிளந்துதன் மாம னீட்டு நீள்பெரும் பொருள்கண் மற்றுங் கைக்கொண்டு நெறியிற் செல்வான். (இ-ள்.) சிலநாள் கழிந்த பின்னர் - சிலநாட்கள் சென்றபின், நாய்கர் ஏறு அனையான் - வணிகருள் ஏறுபோல்வானாகிய அவன், அன்ன வாள்புரை கண்ணினாளை - அந்த வாள்போலுங் கண்களையுடைய மங்கையை, மதுரையில் கொடுபோய் - மதுரைக்கு அழைத்துக் கொண்டு போய், அங்கு என் கேளிர் முன் வேட்பல் என்று கிளந்து - அங்கு எனது கிளைஞர் முன்னிலையில் மணஞ் செய்வேனென்று கூறி, தன் மாமன் ஈட்டும் நீள் பெரும் பொருள்கள் மற்றும் - தன் மாமன் தேடிய மிகப் பெரிய பொருள்களையும் பிறவற்றையும், கைக்கொண்டு நெறியில் செல்வான் - கைப்பற்றிக் கொண்டு வழியிற் செல்வானாயினன். முன் மணமுடித்தோனாகலின் மதுரையிலுள்ள கிளைஞர் ஐயுறாவண்ணம் அவர் முன் இவளை வேட்டல் கருதினான். மற்றும் என்றது ஆடை அணி முதலியவற்றை. (8) வழிவிட வருவார் தம்மை நிறுத்திப்பின் மதுரை மூதூர்க் கெழுதரு சுற்றத் தாரை முன்சென்மி னென்று போக்கித் தொழுபரி சனமுந் தானுந் தோகையும் வைக லொன்றிற் கழிவழி யரைமேற் பெய்த காவத மாகப் போவான். (இ-ள்.) வழிவிட வருவார் தம்மை நிறுத்தி - வழிவிட வருகின்ற வரை நிற்கச் செய்து, பின் மதுரை மூதூர்க்கு எழுதரு சுற்றத்தாரை - பின் பழைய மதுரைப் பதிக்குப் புறப்படும் கிளைஞர்களை, முன்சென்மின் என்று போக்கி - முன்னே செல்லுங்களென்று அனுப்பி, தொழு பரிசனமும் தானும் தோகையும் - தன்னை வணங்கும் ஏவலாளரும் தானும் மங்கையுமாக, வைகல் ஒன்றில் கழிவழி - நாள் ஒன்றில் நீங்கும் வழி, அரைமேல் பெய்த காவதமாகப் போவான் - ஒன்றரைக் காவதமாகப் போவானாயினன். பரிசனமும் தானும் தோகையும் போவான் என்றது பால்விரவிச் சிறப்பால் ஆண்பால் முடிபு பெற்றமையின் வழுவமைதி; “தானும் தன்றையலுந் தாழ்சடையோ னாண்டிலனேல்” என் புழிப்போல. கழிவழி - கடந்து செல்லும் தூரம். (9) வெங்கதிர் வேலை செல்லும் வேலைவந் தணையு முன்னம் இங்கிருந் தொழிக மென்னாப் புறம்பய மூதூ ரெய்தி அங்கிறை கோயின் முன்னிக் கூவனீ ராடி யங்குத் தங்கிய வன்னி மாடே போனகஞ் சமைத்துண் டெல்வாய். (இ-ள்.) வெங்கதிர் வேலை செல்லும் வேலைவந்து அணையு முன்னம் - சூரியன் மேலைக் கடலிற் செல்லும் காலம் வந்து பொருந்து முன்னரே, இங்கு இருந்து ஒழிகம் என்னா - இங்கே தங்கிச் செல்வேமென்று கருதி, புறம்பய மூதூர் எய்தி - திருப்புறம்பயமென்னும் பழம்பதியினை யடைந்து, அங்கு இறை கோயில் முன்னி - அங்குள்ள இறைவன் திருக்கோயிலை அடைந்து, கூவல் நீராடி - கிணற்றில் நீராடி, அங்குத் தங்கிய வன்னிமாடே - அங்குள்ள வன்னிமரத்தடியில், போனகம் சமைத்து உண்டு - உணவு சமைத்து உண்டு, எல்வாய் - அவ்விரவின்கண். வேலை - கடல், பொழுது. புறம்பயம் - சோழநாட்டிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற திருப்பதிகளிலொன்று. (10) மலைவைத்த சிலையான் கோயின் மருங்கொரு படியி னும்பர்த் தலைவைத்துத் துயிலு மெல்லைவிதிவழிச் சார வந்தோர் கொலைவைத்த விடவாய் நாகங் கடித்தது கொதித்து நீண்ட விலைவைத்த கொடும்பூ ணாய்கன் விடந்தலைக் கொண்டு மாய்ந்தான். (இ-ள்.) மலைவைத்த சிலையான் கோயில் மருங்கு - ம'e7çலயை வில்லாக வைத்த சிவபெருமான் திருக்கோயிலின் அருகே, ஒரு படியின் உம்பர் - ஒருபடியின்மேல், தலைவைத்துத் துயிலும் எல்லை - தலைவைத்துத் தூங்கும்போது, விதிவழி - ஊழின் வழியே, சாரவந்து - பொருந்த வந்து, ஓர் கொலை வைத்த விடவாய் நாகம் கொத்திக் கடித்தது - கொல்லுதற்கு வைத்த நஞ்சினையுடைய வாயையுடைய ஒரு பாம்பானது சினந்து கடித்தது; நீண்ட விலைவைத்த கொடும் பூண் நாய்கன் - பெரிய விலைமதிப்புள்ள வளைந்த அணியினை யணிந்த அவ்வணிகன், விடம் தலைக்கொண்டு மாய்ந்தான் - அந்நஞ்சு தலைக்கேறி இறந்தான். நாகம் வந்து கொதித்துக் கடித்தது என்க. (11) அங்குள பரிச னங்க ளாவலித் திரங்கிச் சூழக் கொங்கைகள் புடைத்துச் சேடிக் குற்றிடை மகளி ரேங்கச் சிங்கவே றனையா னாகந் தீண்டிடா தொதுங்கிப் போந்த பங்ய மலர்க்கொம் பன்னாள் பாவைபோற் புறம்பு நின்றாள். (இ-ள்.) அங்குள பரிசனங்கள் ஆவலித்து இரங்கிச் சூழ - அங்கே யுள்ள ஏவலாளர் அவலமுற்று அழுது சூழாநிற்க, சேடிக் குற்றிடை மகளிர் - தோழிகளாகிய சிறிய இடையினையுடைய பெண்கள், கொங்கைகள் புடைத்து ஏங்க - தங்கள் கொங்கைகளில் அடித்துக் கொண்டு அழாநிற்க, போந்த பங்கய மலர்க் கொம்பு அன்னாள் - உடன் வந்த தாமரை மலரையுடைய கொம்பு போல்வாள், சிங்க ஏறு அனையான் ஆகம் தீண்டிடாது, ஆண் சிங்கம் போல் வானாகிய அவ்வணிகன் உடலைத் தீண்டாது புறம்பு ஒதுங்கிப் பாவை போல் நின்றாள் - ஒரு புறமாக ஒதுங்கிப் பாவைபோல் நின்றனள். பங்கய மலர்க் கொம்பன்னாள், இல்பொருளுவமை. செயலற்று அசையாது நின்றாள் என்பார் பாவைபோற் புறம்பு நின்றாள் என்றார். (12) கலிநிலைத்துறை ஆளியே றன்னவ னரவின்வாய்ப் பட்டது மவிந்ததும் மீளிவே லுண்கணார் கைகுலைத் தழுவதும் விழுவதுங் கேளிர்சூழ்ந் தயர்வது மழுவதுங் கண்டிளங் கிளியனாள் வாளியே றுண்டதோர் மயிலின்வீழ்ந் துயங்கினாண் மயங்கினாள். (இ-ள்.) ஆளி ஏறு அன்னவன் - ஆளியேற்றினை யொத்த வணிகன், அரவின் வாய்ப்பட்டதும் அவிந்ததும் - பாம்பின் வாய்ப்பட்டதையும் இறந்ததையும், மீளிவேல் உண்கணார் - பெருமை பொருந்திய வேல்போன்ற மையுண்ட கண்களையுடைய மகளிர், கை குலைத்து அழுவதும் விழுவதும் - கைநெரித்து அழுவதையும் விழுவதையும், கேளிர் சூழ்ந்து அயர்வதும் சோர்வதும் - சுற்றத்தார் சூழ்ந்து அயர்வதையும் சோர்வதையும், இளம்கிளி அனாள் கண்டு - இளம்கிளிபோன்ற அவ்வணிக மகள் பார்த்து, வாளி ஏறுண்டது ஓர் மயிலின் வீழ்ந்து உயங்கினாள் மயங்கினாள் - அம்புபாயப்பெற்றதாகிய ஒரு மயிலைப்போல வீழ்ந்து சோர்ந்து மயங்கினான். அரவின் வாய்ப்பட்டது - பாம்பாற் கடிக்கப்பட்டது. உண்கணார் - சேடியர். (13) வடிக்கணுட் செருகின 1வருகின வுயிர்ப்பழல் வாய்ப்படுந் தொடுத்தபூங் கோதைபோற் சோர்ந்ததா கங்கரஞ் சோர்ந்தன அடித்தளிர் சோர்ந்தன கன்னியன் னப்பெடை யன்னவள் இடிக்கெதிர்ப் பட்டுவீழ்ந் தாளெனக் கிடந்தன ளென்செய்வாள். (இ-ள்.) வடிக்கண் உள் செருகின - மாவடு போன்ற கண்கள் உள்ளே செருகின; உயிர்ப்பு அருகின - மூச்சுகள் குறைந்தன; அழல் வாய்ப்படும் தொடுத்த பூங்கோதைபோல் - நெருப்பின்வாய்ப்பட்ட கட்டிய பூமாலைபோல, ஆகம் சோர்ந்தது - உடல் வாடியது, கரம் சோர்ந்தன - கைகள் சோர்ந்தன. அடித்தளிர் சோர்ந்தன - அடியாகிய தளிர்கள் வாடின; கன்னி அன்னப்பெடை அன்னவள் - இளமை பொருந்திய அன்னப்பேட்டினை யொத்த அவ்வணிகமாது. இடிக்கு எதிர்ப்பட்டு வீழ்ந்தாள் எனக் கிடந்தனள் - இடிக்கு எதிர்ப்பட்டு வீழ்ந்தவளைப்போல வீழ்ந்து கிடந்தனள்; என் செய்வாள் - வேறு என் செய்வாள். அன்னப்பெடை யன்னவளாகிய கன்னி என்றுமாம். (14) சாயும்பூங் கொம்பரிற் சூழ்ந்திறந் தான்புறஞ் சார்ந்தழூஉம் ஆயமென் மகளிர்முண் டென்பனோ டெங்கைதன் னாவியும் போயதே கொல்லென மடியுறக் கொடுங்கையாற் புறந்தழீ இத் தூயதூ செறிந்திளைப் பாற்றினார் சிறிதுயிர் தோற்றவே. (இ-ள்.) சாயும்பூங் கொம்பரில் - வளைகின்ற பூங்கொம்பு களைப் போல, இறந்தான் புறம் சார்ந்து சூழ்ந்து அழூஉம் - இறந்தவனருகிற் சார்ந்து சுற்றி நின்று அழுகின்ற, ஆயமென் மகளிர்- மெல்லிய தோழிப் பெண்கள், மீண்டு - திரும்பிப் பார்த்து. அன்பனோடு எங்கை தன் ஆவியும் போயதே கொல் என - அன்பனோடு எம் தங்கையின் உயிரும் போயிற்றோவென்று கருதி, கொடுங்கையால் மடிஉறப் புறம் தழீஇ - வளைந்த கையால் மடியிற் பொருந்த அவளுடம்பைத் தழுவி, தூய தூசு எறிந்து இளைப்பு ஆற்றினார் - தூய்மையான ஆடையால் வீசி இளைப்பினைப் போக்கினர்; சிறிது உயிர் தோற்ற - அதனால் சிறிது உயிர்ப்பு வெளிப்பட. உயிர்தோற்றஇளைப்பாற்றினார் என்றுமாம். (15) மெய்கழிந் தின்னுயிர் மீண்டுதன் யாக்கையின் மெல்லவே கைகலந் தாங்கிரு காலியங்குற்றன கண்களும் பொய்கைநீ லஞ்சிறி தவிழ்ந்தென வலர்ந்தன பூவையை மைகழி நாண்முத னான்குநால் வேலியாய் வளைந்தவே. (இ-ள்.) மெய்கழிந்த இன் உயிர் - உடலினின்றம் நீங்கிய இனிய உயிரானது, மீண்டு தன் யாக்கையில் மெல்ல கைகலந்தாங்கு - திரும்பவும் தனது உடலின் கண் மெல்ல வந்து கலந்தாற்போல, இருகால் இயங்குற்றன - இரண்டு கால்களும் அசைந்தன; பொய்கை நீலம் சிறிது அவிழ்ந்தென - பொய்கையின்கண் நீல மலர் சிறிது மலர்ந்தாற்போல, கண்களும் அலர்ந்தன - கண்களும் சிறிது திறந்தன; பூவையை - அம்மாதினை, மைகழி நாண் முதல் நான்கும், நால் வேலியாய் வளைந்த - நான்கு வேலிகளாக வளைந்தன. கழிந்த என்னும் பெயரெச்சத் தகரம் தொக்கது. கைகலத்தல், ஒரு 'd8 சால். நான்கு - நாண், மடம், அச்சம், பயிர்ப்பு. நாண் முதலிய நான்கும் கற்பு வழுவுறாமற் காப்பனவாகலின் நால் வேலியாய் வளைந்த என்றார். வளைந்த : அன்பெறாத பலவின்பால் முற்று. (16) கையெறி யுங்குழற் கற்றைசோ ருந்திரி காறுளி நெய்யெனக் கண்புனல் கொங்கைமுற் றத்துக நெஞ்சுகும் பையவாய் விடும்புறம் பார்க்குநா ணெடுந்தளைப் படுஞ்சிறு தெய்வந்தொட்டாளெனத் தேம்பிவிம் மாந்தொளி தேயுமால். (இ-ள்.) கை எறியும் - நிலத்திற் கையினை மோதுவாள்; குழல் கற்றை சோரும் - திரண்ட கூந்தல் சோருவாள்; திரிகால் நெய்துளி என - திரி சிந்தும் நெய்த்துளியைப் போல, கண்புனல் கொங்கை முற்றத்து உக நெஞ்சு உகும் - கண்ணீர் கொங்கையின் முன்றிலிற் சிந்த மனமுடைவாள்; பைய வாய் விடும் - மெல்ல வாய் திறந்து புலம்பக் கருதுவாள்; புறம் பார்க்கும் - புறத்திற் பார்ப்பாள்; நாண் நெடுந்தளைப் படும் - நாணாகிய நீண்ட விலங்கிற் படுவாள்; சிறு தெய்வம் தொட்டாள் என - சிறிய தெய்வத்தாற் பற்றப் பட்டவளைப் போல, தேம்பி விம்மாந்து ஒளி தேயும் - தேம்பி விம்மி ஒளி குறைவாள். கட்புனல் வெப்பமுற் றுதிர்தலின் விளக்கின் திரிசிந்தும் நெய்யை உவமை கூறினார். கன்னியாகிய தான் புலம்பின் பிறர் அலர் தூற்றுவரோ என்னும் நாணத்தால் வாய்விட்டுப் புலம்பா தொழிவாள் என்பார் ‘நாணெடுந் தளைப்படும்’ என்றார். தொட்டாள் - தீண்டப்பட்டாள். சோரும், உகும், தேயும் என்னும் சினைவினைகள் முதன்மேல் நின்றன.(17) வணங்கில்செல் வந்தழீஇப் பிறந்தநா டொட்டொரு வைகலும் அணங்கெனக் கனவிலுங் கண்டிலா ளன்பன்மே லன்பென இணங்குதன் னுருவமாய் நிறைவாரம் பிற்றென விருந்தொர்பெண் அணங்குவாய் விட்டழு தாலெனப் புலம்பலுற் றாளரோ. (இ-ள்.) வணங்கு இல் செல்வம் தழீஇ - குறைதலில்லாத, செல்வத்தைப் பொருந்தி, பிறந்தநாள் தொட்டுப் - பிறந்தநாள் முதலாக ஒருவைகலும் - ஒரு நாளேனும், அணங்கு எனக் கனவிலுங் கண்டிலாள் - துன்பமென்று கனவிலுங் கண்டறியாத அம் மாது, அன்பன் மேல் இணங்கு அன்பு - அன்பன் மேற் பொருந்திய அன்பானது, தன் உருவமாய் நிறைவரம்பிற்று என - தன் வடிவமாய் நிறைந்த அளவினையுடையதாயிற்று என்று கண்டோர் கூற, ஓர் பெண் அணங்கு இருந்து வாய்விட்டு அழுதால் என - ஒரு பெண் தெய்வம் இருந்து வாய்விட்டு அழுதாற் போல, புலம்பல் உற்றாள்- புலம்பத் தொடங்கினாள். வணங்கு : முதனிலைத் தொழிற் பெயர்; வணங்கல் குறைதல். அன்பென என்பதிலுள்ள என : அசை. ஒர் : விகாரம். அரோ : அசை.18) அறுசீரடி யாசிரிய விருத்தம் என்னா யகனேயோ வென்னிருகண் மணியேயோ வென்னை யீன்றான் தன்னாவி யன்னதனி மருகாவோ முருகாவோ தாரார் முல்லை மன்னாவோ வணிகர்குல மணியேயோ விடவரவின் வாய்ப்பட் டாயோ உன்னாக நிழலான வென்னைவிடுத் தெவ்வண்ண மொளிப்ப தேயோ. (இ-ள்.) என் நாயகனேயோ - என் நாயகனே, என் இருகண்மணியேயோ - என் இரண்டு கண்களின் மணியே, என்னை ஈன்றான் தன் ஆவி அன்னதனி மருகாவோ - என்னைப் பெற்ற தந்தை யினது உயிர் போன்ற ஒப்பற்ற மருகனே, முருகாவோ - இளமைப் பருவமுடையவனே, முல்லைத்தார் ஆர் மன்னாவோ - முல்லை மாலையையணிந்த மன்னனே, வணிகர்குல மணியேயோ - வணிகர் மரபிற்கு ஒரு மணி போல்வானே, விட அரவின் வாய்ப்பட்டாயோ - நீ நஞ்சினையுடைய பாம்பின்வாய்ப் பட்டனையோ, உன் ஆக நிழலான என்னை விடுத்து - உனது உடலின் நிழலாகிய என்னைவிட்டு, ஒளிப்பது எவ்வண்ணம் - நீ மறைவது எங்ஙனம்? தன் தந்தையால் கணவனாக நிச்சயிக்கப்பட்டவன் ஆதலால் ‘என்னாயகனே’ என்றாள். நிழல் போன்ற என்னை விடுத்து ஒளிப்பது பெரியதொரு வியப்பு என்பாள் ‘உன்னாக நிழலான என்னைவிடுத் தெவ்வண்ண மொளிப்பது’ என்றாள். ஓகாரங்கள் புலம்பலில் வந்தன. (19) பொன்னாட்டின் மடவாரைப் புணர்வதற்கோ நம்மளகா புரத்து வேந்தன் நன்னாட்டின் மடவாரை மணப்பதற்கோ வுனைக்கடித்த நாகர் வேந்தன் தன்னாட்டின் மடவாரைத் தழுவுதற்கோ வென்னாவித் தலைவா வென்னை இந்நாட்டி லிருத்தியெனை வஞ்சித்துப் போயினவா றென்னே யென்னே. பொன்னாட்டின் மடவாரைப் புணர்வதற்கோ - பொன் னாட்டிலுள்ள மகளிரைக் கூடுவதற்கோ (அன்றி), நம் அளகாபுரத்து வேந்தன் - நமது அளகாபுரத்து அரசனாகிய குபேரனது, நல் நாட்டின் மடவாரை மணப்பதற்கோ - நல்ல நாட்டிலுள்ள பெண்களை மணம்புரிவதற்கோ (அன்றி), உனைக் கடித்த நாகர் வேந்தன் தன் நாட்டின் - உன்னைக்கடித்த பாம்புகளின் வேந்த னாகிய அனந்தனது நாட்டிலுள்ள, மடவாரைத் தழுவுதற்கோ - மாதர்களைக் கூடுவதற்கோ, என் ஆவித்தலைவா - எனது உயிர்த்தலைவனே, என்னை இந்நாட்டில் இருத்தி. எனை வஞ்சித்துப் போயினவாறு என்னே என்னே - என்னை இந்த நாட்டிலேயே இருத்தி என்னை வஞ்சித்துப் போன காரணம் என்னே என்னே--- பொன்னாட்டு அரமகளிர் இன்பமும், அளகைவாழும் இயக்க மகளிர் இன்பமும், நாக நாட்டு நாக மகளிர் இன்பமும் புவிமகளிர் இன்பத்தினும் சிறந்ததென்னுங் கருத்தால் ஏகினையோ என்பாள் இங்ஙனம் கூறினாள். தனவணிகர் நிதிக்கிழவன் வழியினர் என்னுங் கருத்தால் ‘நம்மளகாபுரத்து வேந்தன்’ என்றாள் என்க. (20) தென்னுலகிற் புகுந்தனையோ பணிந்தனையோ மாதுலனைத் தேவி யோடும் தன்னிருதோ ளுறவாரத் தழுவினனோ நானுமுடன் சார்ந்தே னாகில் என்னுரிய குரவரையுங் கண்ணாரக் காணேனோ வெனை1 யீங் கிட்டாய் பின்னுரிய பரிசனமுங் 2கைவிட்டாய் 3தனிப்போயென் பெற்றா யையா. (இ-ள்.) தென்னுலகில் புகுந்தனையோ - பிதிரருலகத்துப் புகுந்தனையோ, மாதுலனைத் தேவியோடும் பணிந்தனையோ - உன் மாமனையும், மாமியையும் வணங்கினையோ, தன் இருதோள் உற ஆரத் தழுவினனோ - அவன் தன் இரண்டு தோள்களும் பொருந்த நின்னை நன்கு தழுவினானோ, நானும் உடன் சார்ந்தேனாகில்- யானும் உடன் வந்திருப்பேனாயின், என் உரிய குரவரையும் கண்ணாரக் காணேனோ - எனது உரிய குரவ ரிருவரையும் கண்களிக்கக் காணேனோ, எனை ஈங்கு இட்டாய் - என்னை இங்கு விட்டனை, பின் உரிய பரிசனமும் கை விட்டாய் - பின் நினக்குரிய ஏவலாளரையுங் கைவிட்டனை, தனிப்போய் என் பெற்றாய் ஐயா - தனியே சென்று என்ன பயனைப் பெற்றாய் ஐயனே? குரவர் - தந்தை தாயர். (21) வரிசைமரு மகனரவால் விளிந்ததுநா னறைபோய மனத்தோ டிங்குப் பரிவுறலு மெனைப்பயந்தார் நோற்றதவ நன்றாகப் பலித்த தேயோ பெரிதவரிக் 1கட்கலக்கங் காணாமு னிறந்தன்றோ பிழைத்தா ரந்தோ அரியதிலு மரியபய னிதுவன்றோ வெவர்பெற்றா ரவர்போ லம்மா. (இ-ள்.) வரிசை மருமகன் அரவால்விளிந்ததும் - சிறந்த மருமகன் பாம்பினால் இறந்து பட்டதையும், நான் அறைபோய மனத்தோடு இங்குப் பரிவுறலும் - நான் உள்ளீடற்ற உள்ளத்துடன் இங்கிருந்து துன்புறுவதையும் (நோக்கின்), எனைப் பயந்தார் நோற்ற பயன் நன்றாகப் பலித்தது - என்னைப் பெற்றவர் தவஞ்செய்த பயன் நன்றாகப் பலித்தது; அவர் - அத்தாய் தந்தையர், பெரிது இக் கண்கலக்கம் காணாமுன் இறந்து அன்றோ பிழைத்தார் - பெரிதாகிய இந்தக் கண் கலக்கத்தைக் காணுதற்கு முன்னரேயே இறந்தன்றோ தப்பினர்; அந்தோ - ஐயோ, இது அன்றோ அரியதிலும் அரிய பயன் - இது வல்லவா அரிதினும் அரிதான பயன்; அவர் போல் எவர் பெற்றார் - அவர் பெற்றது போல வேறு யார் பெற்றனர்? வரிசை மருமகன் - பாராட்டிற்குரிய மருமகன். அறைபோய மனம் - அறிவின்றிப் புரைபட்ட மனம்; தானும் உயிர் துறவாது இருத்தற்கு நொந்து ‘நான் அறை போய மனத்தோடிங்குப் பரி வுறலும்’என்றாள். நோக்கின் என ஒரு சொல் விரித்துரைக்க. பிழைத்தார் - துன்பத்தினின்றும் தப்பினார். ‘நோற்ற பயன் நன்றாகப் பலித்தது’ என்பதும், ‘அரியதிலு மரிய பயன் இது’ என்பதும், ‘எவர் பெற்றார் அவர்போல்’ என்பதும் குறிப்பினால் எதிர்மறைப்பொருள் பயப்பன. அந்தோ, அம்மா என்பன இரக்கப் பொருளில் வந்த இடைச் சொற்கள். (22) உன்காதன் மாமனெனைப் பயந்தவன்றே யுறவறிய வுனக்கே பேசிப் பின்காதன் மனைவியொடு முயிரிழந்தான் யானுமந்தப் பெற்றி யாலே என்காத லுயிர்போக வெற்றுடம்போ விருக்குமுட னிறப்பே னென்னாத் தன்காதற் றுணையிழந்த வன்றிலென விருந்தழுதா டமிய ளானாள். (இ-ள்.) உன் காதல் மாமன் எனைப் பயந்த அன்றே - உனது அன்புள்ள மாமன் என்னைப் பெற்ற காலத்திலேயே, உறவு அறிய உனக்கே பேசி - சுற்றத்தாரறிய உனக்கே மணஞ் செய்து கொடுப் பதாகப் பேசி, பின் காதல் மனைவியொடும் உயிர் இழந்தான் - பின்பு தன் அன்புள்ள மனைவியொடும் உயிர் நீத்தனன்; யானும் அந்தப் பெற்றியாலே - யானும் அந்தத் தன்மையினாலே, உடன் இறப்பேன் - நின்னுடன் இறப்பேனாவேன்; என் காதல் உயிர்போக - என் காதலுள்ள உயிராகிய நீ சென்று விட, வெறு உடம்போ இருக்கும் என்னா - உயிரற்ற உடம்பாகிய யானோ இங்கிருப்பேன் என்று கூறி, தமியள் ஆனாள் - துணையற்றவளாகிய அவ்வணிக மங்கை, தன் காதல் துணை இழந்த அன்றில் என இருந்து அழுதாள் - தனது காதலுள்ள ஆணன்றிலை இழந்த அன்றிற்பேடுபோல இருந்து அழுதனள். உறவு - உறவினர்க்காயிற்று. (23) மேற்படி வேறு நன்னக ருறக்க நீங்கி நடுக்கமுற் றழுங்கக் காழித் தென்னகர் ஞானச் செல்வர் சிவனகர் தொறும்போய்ப் பாடி அந்நக ரடைந்தா ரங்கோ ரணியமடத் திருந்தார் கேட்டீ தென்னென வாள்விட் டாய்ந்து கோயிலி னிடைவந் தெய்தி. (இ-ள்.) நல் நகர் உறக்கம் நீங்கி நடுக்கமுற்று அழுங்க - அந்த நல்ல நகரிலுள்ளவர்கள் துயில் நீங்கி நடுங்கி வருந்தா நிற்க, காழித் தென் நகர்ஞானச் செல்வர் - சீகாழியாகிய அழகிய நகரின்கண் அவதரித்த சிவஞானச் செல்வராகிய ஆளுடைய பிள்ளையார், சிவன் நகர் தொறும் போய்ப் பாடி - சிவபிரான் எழுந்தருளிய திருப்பதிகடோறுஞ் சென்று பதிகம் பாடி, அந்நகர் அடைந்தார் - அத்திருப்பதியை யடைந்து, அங்கு ஓர் அணிமடத்து இருந்தார் - அங்கு ஓர் அழகிய மடத்தின்கண் இருந்தவர், கேட்டு - இவ்வழுகை யொலியைக் கேட்டு, ஈது என்னென ஆள்விட்டு ஆய்ந்து - இஃது என்னவென்று ஆள்விட்டு ஆராய்ந்து தெரிந்து கொண்டு, கோயிலினிடை வந்தெய்தி - கோயிலின் பக்கல் வந்து சேர்ந்து. வணிகன் உயிர் நீத்ததும் வணிகக்கன்னி அழுது வருந்துவதும் அறிந்து நகரிலுள்ளாரும் துயிலுதலின்றி வருந்தின ரென்க. பிறர் துயரையும் தம் துயர்போற் கருதினாராகலின் ‘நன்னகர்’ என்றார். நகர் என்றது நகரிலுள்ளாரைக் குறித்தது. அடைந்தார், முற்றெச்சம். இருந்தார்: வினைப்பெயர். ஆள் - ஏவலாள். (24) கன்னிநீ யாரை யுற்ற தென்னெனக் கன்னி தாழ்ந்து தன்னரு மரபு மீன்றார் தம்மையு மருகற் கென்றே உன்னினர் மன்றல் பேசி யிறந்தது முயிரன் னானோ டிந்நெறி யடைந்தீங் குற்ற நிகழ்ச்சியு மெடுத்துச் சொன்னாள். (இ-ள்.) கன்னி நீ யார் என் உற்றது என - கன்னியே, நீ யார் உனக்கு என்ன நேர்ந்தது என்று வினவ, கன்னி தாழ்ந்து - அம்மாது வணங்கி, தன் அரு மரபும் ஈன்றார் தம்மையும் - தனது அரிய மரபினையும் தன்னைப் பெற்றோர்களையும், மருகற்கு என்றே உன்னினர் மன்றல் பேசி இறந்ததும் - இந்த மருமகனுக்கே தன்னைக் கொடுப்ப தென்று கருதி மணம்பேசி இறந்தொழிந்ததனையும், உயிர் அன்னானோடு இந்நெறி அடைந்து - உயிர்போல்வானுடன் இவ்வழியினை அடைய, ஈங்கு உற்ற நிகழ்ச்சியும் எடுத்துச் சொன்னாள் - இங்கு நேர்ந்த நிகழ்ச்சியினையும் எடுத்துக் கூறினாள். யாரை, ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது. அக்கன்னி தாழ்ந்து எனச் சுட்டு வருவிக்க. மரபு முதலியவற்றிலும் இரண்டனுருபு விரிக்க. (25) தந்தையுந் தாயு மன்னார் தமியளா யிரங்கும் பேதைப் பைந்தொடி யாவி காப்பான் பாம்புகோட் பட்டான் மாடே வந்தவ னாக மெல்லா மருந்துரு வாகும் வண்ணஞ் சிந்'e7çதசெய் தருட்கண் வைத்தார் குதித்தது தீவாய் நஞ்சம். (இ-ள்.) தந்தையும் தாயும் அன்னார் - உயிர்களுக்கு அப்பனும் அம்மையும் போல்வாராகிய ஆளுடைய பிள்ளையார், தமியளாய் இரங்கும் பேதைப் பைந்தொடி - தனியாய் வருந்தும் பேதையாகிய பசிய வளையலை யணிந்த அவ்வணிகமாதின், ஆவி காப்பான் - உயிரைக் காக்கும்பொருட்டு, பாம்பு கோட்பட்டான் மாடே வந்து- பாம்பினாற் கொள்ளப்பட்டவன் அருகே வந்து, அவன் ஆகம் எல்லாம் மருந்து உருவாகும் வண்ணம் சிந்தை செய்து - அவன் உடல் முற்றும் அமிர்தமயமாகுமாறு திருவுள்ளங்கொண்டு, அருள் கண் வைத்தார் - அருட் பார்வையை வைத்தருளினார்; தீவாய் நஞ்சம் குதித்தது - நெருப்பின் றன்மை வாய்த்த நஞ்சு தான் ஏறிய விடத்தினின்றுங் குதித்தோடியது. தந்தையும் தாயும் அற்ற வணிக மாதுக்கு உதவிபுரிய வந்த பேரருளாளர் ஆகலின் ‘தந்தையும் தாயு மன்னார்’ என்றார். காப்பான் : வினையெச்சம். பாம்புகோட்பாட்டான், தம்மினாகிய தொழிற் சொல் முன்வர வலி இயல்பாயிற்று. விரைந்து இறங்கிற்று என்பார் குதித்தது என்றார். (26) எழுந்தன னுறங்கி னான்போ லிறந்தவன் யாருங் கண்டு தொழுந்தகை ஞான வேந்தைத் தொழுதனர் துதிசெய் தார்வத் தழுந்தினர் கன்னி யன்ன மனையவ ளின்பத் தீந்தேன் பொழிந்தொரு புறத்தே கஞ்சம் பூத்ததோர் கொம்பி னின்றாள். (இ-ள்.) இறந்தவன் உறங்கினான்போல் எழுந்தனன் - இறந்த அவ்வணிகன் உறங்கியவன் எழுந்தாற்போல எழுந்தான்;யாரும் கண்டு - அதனை அனைவரும் பார்த்து, தொழும் தகை ஞானவேந்தைத் தொழுதனர் - அனைவரும் வணங்குந் தகுதியை யுடைய ஞானவேந்தரை வணங்கி, துதி செய்து ஆர்வத்து அழுந்தினர் - துதி மொழி கூறி மகிழ்ச்சிக் கடலுள் மூழ்கினர்; கன்னி அன்னம் அனையவள் - கன்னி யன்னப் பேட்டினை ஒத்த அம்மாது, இன்பத் தீந்தேன் பொழிந்து கஞ்சம் பூத்தது ஓர் கொம்பின் - இன்பமாகிய இனிய தேனைப் பொழிந்து தாமரை மலரப் பெற்றதாகிய ஒரு கொம்புபோல, ஒருபுறத்தே நின்றாள் - ஒருபுறமாக ஒதுங்கி நின்றனள். தொழுதனர் : முற்றெச்சம். கஞ்சம் பூத்ததோர் கொம்பின் என்றது இல்பொருளுவமை. (27) தலைவனை யிறந்த போதுந் தனியுயிர் பெற்ற போதுஞ் சிலைநுதல் காதன் மாமன் செல்வியா யிருந்துந் தீண்டா நிலைமையு மன்புங் கற்பி னீர்மையும் வியந்து நோக்கி மலைமகண் ஞான முண்டார் வணிகனை நோக்கிச் சொல்வார். (இ-ள்.) சிலை நுதல் - விற்போலும் நெற்றியையுடைய அவ்வணிக மாது, காதல் மாமன் செல்வியாய் இருந்தும் - காதல் மிக்க மாமன் மகளா யிருந்தும், இறந்த போதும் தனி உயிர் பெற்றபோதும் - தன் தலைவன் இறந்த காலத்திலும் அவன் தனித்த உயிரினைப் பெற்ற காலத்திலும், தலைவனைத் தீண்டா நிலைமையும் - அவனைத் தொடாதிருந்த தன்மையையும், அன்பும் - அவளது அன்பினையும், கற்பின் நீர்மையும் - கற்பின் தன்மையையும், மலைமகள் ஞானம் உண்டார் நோக்கி வியந்து - உமையம்மையின் ஞானப் பாலைப் பருகியருளிய பிள்ளையார் கண்டுவியந்து, வணிகனை நோக்கிச் சொல்வார் - அவ்வணிகனைப் பார்த்துக் கூறுவாராயினர். சிலை நுதல்: அன்மொழித் தொகை. தீண்டுதற்குரிய முறைமையும் தீண்டத்தகும் தருணமும் உடையளாயிருந்தும், தன் காதற்கிழமையுடையானது துஞ்சிய உடலைத் துயரத்தாற்றொடு தலும் எவ்வாற்றானும் பழியன்றாகவும் தீண்டா திருந்தமையின் அவளது தற்காக்கும் பண்பினையும், அங்ஙனம் அவனுட'e7çலப் பரிசியாது நிற்பினும் அவன் மாட்டுக் குன்றுதலின்றி வளரும் அன்புடையளா யிருக்குந் தன்மையையும், அவ்வாற்றால் அவளது கற்பின் பெற்றியையும் பிள்ளையார் நோக்கி வியந்தனர் என்க. (28) வருதிநின் மரபுக் கெல்லா மணியனா யுன்றான் மாமன் தருதிரு வளையா னிப்ஞ் சாருநா டுன்பம் வந்து பெருகுநா ளன்றி யென்றுள் மெய்தொடப் பெறுவ ளீண்டே திருமண முடித்துக் கொண்டு போகெனச் செப்ப லோடும். (இ-ள்.) நின் மரபுக்கு எல்லாம் மணி அனாய் வருதி - நினது மரபு முழுதுக்கும் மணிபோல்வாய் வருக; உன்றன் மாமன் தரு திரு அனையாள் - உன் மாமன் பெற்ற திருமகள் போன்ற இம்மாது, இன்பம் சாரும் நாள் - நினக்கு இன்பம் வந்து பொருந்தும் நாளிலும், துன்பம் வந்து பெருகு நாள் அன்றி - துன்பம் வந்து மிகு நாளிலு மல்லாமல், என்று - வேறெந்நாளில், உன் மெய் தொடப் பெறுவள் - உனது உடலினைத் தீண்டப் பெறுவாள்; ஈண்டே - (ஆதலால்) இவ்விடத்திலேயே, திருமணம் முடித்துக் கொண்டு போக எனச் செப்பலோடும் - திருமணத்தை முடித்துக் கொண்டு போவாயாக வென்று சொல்லியவளவில். அவன் அரவு கடித் திறத்தலாகிய துன்பமும், உயிர்த்தெழுதலாகிய இன்பமும் எய்திய பொழுதுகளில் அவனைத் தீண்டாது நின்றாளாகலின் இன்பஞ் சாரு நாள் துன்பம் வந்து பெருகு நாள் அன்றி என்று உன் மெய்தொடப் பெறுவள் என்றும், அவள் கன்னியா யிருப்பதே நின்னைத் தொடுதற்குத் தடையா யிருத்தலின் அத்தடை நீங்க ஈண்டே திருமணம் முடித்துக்கொண்டு போக என்றும் பிள்ளையார் அருளினார் என்றார் - போகென என்பதில் அகரம் தொக்கது. (29) செங்கணே றனையா னையன் றிருமொழி தலைமேற் கொண்டு பங்கயன் படைத்த சாதி நான்கையும் பாது காப்பீர் எங்குல வணிக நின்றிக் கரிகளு மின்றி யீங்கே மங்கல முடிக்கும் வண்ணம் யாதென வணங்கிச் சொன்னான். (இ-ள்.) செங்கண் ஏறு அனையான் - சிவந்த கண்களையுடைய ஏறு போல்வானாகிய அவ்வணிகன், ஐயன் திருமொழி தலைமேல் கொண்டு - பிள்ளையாரின் திருமொழியினை முடிமேற்கொண்டு, பங்கயன் படைத்த சாதி நான்கையும் பாதுகாப்பீர் - பிரமன் படைத்த நான்கு வருணத்தையும் பாதுகாப்பவரே, ஈங்கே - இங்கு, எம் குலவணிகர் இன்றி - எமது குல வணிக ரில்லாமல், கரிகளும் இன்றி - பிற சான்றுகளுமில்லாமல், மங்கலம் முடிக்கும் வண்ணம் யாது என - மணமுடிக்கும் வண்ணம் எங்ஙன மென்று, வணங்கிச் சொன்னான் - வணங்கிக் கூறினான். நாற்பாற் குலத்தினரும் ஒழுக்கத்தின் வழுவாமற் காக்கும் இயல்புடையீர் என்பான் ‘சாதி நான்கையும் பாதுகாப்பீர்’ என்றும், அப்பெற்றியராய தேவரீரே யாங்கள் முறைமை வழுவாமல் மண முடித்துக் கொள்ளும் உபாயமும் உரைத்தருள வேண்டுமென்பான் ‘மங்கல முடிக்கும் வண்ணம் யாது’ என்றும் அவ் வணிகன் கூறினான் என்றார். (30) கன்னியை யீன்ற ஞான்றே யுனக்கென்றுன் காதன் மாமன் உன்னிய துறவி னுள்ளா ரறிவரே யுனக்கீ தன்றி வன்னியுங் கிணறு மிந்த விலிங்கமுங் கரிகண் மைந்தா இந்நிலை வதுவை செய்தி யெம்முரை கடவா தென்றார். (இ-ள்.) உன் காதல் மாமன் - உன் அன்புள்ள மாமன், கன்னியை ஈன்ற ஞான்றே - இக் கன்னியைப் பெற்றபொழுதே, உனக்கு என்று உன்னியது உறவின் உள்ளார் அறிவரே - உனக்கே யென்று கருதிப் பேசியதை உறவினர் பலர் அறிவாரே, உனக்கு ஈது அன்றி - உனக்கு இதுவே யல்லாமல், இந்த வன்னியும் கிணறும் இலிங்கமும் கரிகள் - இந்த வன்னி மரமுங் கிணறும் இலிங்கமும் சான்றுகளாகும்; மைந்தா - புதல்வனே, எம் உரை கடவாது இந்நிலை வதுவை செய்தி என்றார் - எமது சொல்லைக் கடவாமல் இவ்விடத்திலேயே மணமுடிப்பாயாக என்றருளினர். எங்குல வணிகரின்றி என அவன் கூறியதற்கு மாற்றமாக ‘கன்னியை ஈன்ற ஞான்றே யுனக்கென்றுன் காதன் மாமன் உன்னிய துறவினுள்ளா ரறிவரே’என்றும், கரிகளுமின்றி என்றதற்கு மாற்ற மாக ‘வன்னியும் கிணறும் இந்த விலிங்கமும் கரிகள்’ என்றும் அருளிச் செய்தா ரென்க. இந்நிலை என்பதற்கு இரட்டுற மொழிதலால் இப்பொழுதே என்றும் பொருள் கொள்க. (31) மாசறு மனத்தான் காழி வள்ளலைப் பணிந்து நீரே தேசிகர் குரவர் நட்டோர் தெய்வமுங் கிளையு மென்னாப் பேசிய வாறே வேள்வி பெற்றியா னிறீஇத்தான் வேட்ட பாசிழை யோடு தாழ்ந்து விடைகொடு பரவிப் போனான். (இ-ள்.) மாசு அறு மனத்தான் - குற்றமற்ற மனத்தினையுடைய அவ்வணிகன், காழி வள்ளலைப் பணிந்து - சீகாழி வள்ளலாகிய பிள்ளையாரை வணங்கி, நீரே தேசிகர் குரவர் நட்டோர் தெய்வமும் கிளையும் என்னாப் பேசி - நீரே எமக்கு ஆசிரியருங் குரவரும் நட்பினரும் கடவுளும் சுற்றத்தாருமாவீ ரென்று கூறி, அவாறே வேள்வி பெற்றியால் நிறீஇ - அங்ஙனமே திருமணத்தை முறைப்படி முடித்து, தான் வேட்ட பாசிழையோடு தாழ்ந்து - தான் மணந்த பசிய அணிகளையணிந்த அம்மாதுடன் அவரை வணங்கி, விடைகொடு பரவிப் போனான் - விடைபெற்றுக் கொண்டு துதித்துச் சென்றான். குரவர் - ஐங்குரவர். தேசிகர், குரவர் என்பவற்றுக்கு ஞானா சிரியரும், விஞ்சையாசிரியரும் என்றுரைத்தலுமாம். என்னா - என்று கூறி, பேசியவாறே - அவர் உரைத்தவாறே, எனப் பிரித்துப் பொருளுரைத்தலுமாம். வேட்ட - வேட்கப்பட்ட. பாசிழை: அன்மொழித்தொகை. வைப்பூரின்கண் ஏழு புதல்விகளையுடைய தாமன் என்னும் வணிகன் தன் மருகனுக்கு மூத்த புதல்வியை மணஞ் செய்விப்பதாகக் கூறிப் பின்பு பிறனொருவனுக்குப் பொருளாசையால் அளித்து, இங்ஙனமே மருகனை வஞ்சித்துப் பின் ஐந்து பெண்களையும் பிறர்க்கு அளித்துவிட, அஃதுணர்ந்த அவனுடைய ஏழாவது புதல்வி மனம் வருந்திப் பெற்றோரறியாமல் அவனுடன் புறப்பட்டு வழிச்செல்லுங்கால் ஓரிரவில் திருமருகல் என்னும் திருப்பதியில், திருக்கோயிலின் பக்கத்துள்ளதொரு மடத்தின்கண் துயிலும்பொழுது, அவ்வணிகன் அரவு தீண்டி யிறக்க, அதுகண்ட அக்கன்னி நெஞ்சம் பதைபதைத்து வருந்தி ஆற்றாது மருகற்பெருமானை விளித்துப் புலம்பாநிற்க, அப்பொழுது இறைவனை வழிபடுதற்கு அவண் எழுந்தருளிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருகு வந்து, நிகழ்ந்ததை அவள் சொல்ல அறிந்து, அவளது துயரினை யொழிக்கக் கருதித் திருமருகலில் வீற்றிருக்கும் இறைவன்மீது “சடையா யெனுமால்” என்னும் திருப்பதிகம் பாடி அவ்வணிகனை உயிர்ப் பித்து அவர்களை ஆண்டே மணம் பொருந்தச் செய்து விடுத் தருளினர் என்று திருத்தொண்டர் புராணம் கூறாநிற்கும். பெரும்பற்றப் புலியூர் நம்பியானவர் தாமியற்றிய திருவிளை யாடற் புராணத்தில், “மருத்தாயில் பாப்புக் காப்பு வள்ளலை மனத்து வைத்துத் தருக்கமார் காழி வேந்தர் சடையெனும் யாப் பெடுத்து விரைத்திரு மருக றன்னில் வெவிடந் தீர்த்த தன்றித் திருப்புறம் பயத்த லத்திற் றீர்த்தனர் திருக்கண் சாத்தி” என்னுஞ் செய்யுளால் திருமருகலில் நிகழ்ந்த வரலாற்றையும் உடன்பட்டு, திருஞானசம்பந்தப் பெருமான் திருப்புறம்பயத்தில் விடந்தீர்த்து வணிகனை உயிர்ப்பித்தது அதனின் வேறாய வரலாறு என்று குறிப்பிடுவாராயினர். ஆளுடையபிள்ளையார்க்குச் சில நூற்றாண்டுகளின் முன்னும் இத்தகையதொரு சரிதம் நிகழ்ந்துள தென்பது கடைச்சங்க காலத்ததாகிய சிலப்பதிகாரத்து வஞ்சினமாலையில், காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த கற்புடை மகளிரைக் கண்ணகி யெடுத் துரைக்குமிடத்து. “ வன்னி மரமு மடைப்பளியுஞ் சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள்” என்று கூறியிருத்தலால் அறியப்படும். சிலப்பதிகாரம் கூறும் நிகழ்ச்சியும் திருவிளையாடற்புராணங் கூறும் நிகழ்ச்சியும், சிறிது வேறுபாட்டுடன் காணப்படினும் வன்னி மரம் முதலியவற்றைச் சான்றாகக் காட்டினள் என்பதனை உன்னின் இரண்டும் ஒன்றே போலுமெனக் கருதுதல் இழுக்காகாது. ஆனால், இரு திருவிளையாடற்புராண ஆசிரியரும் இதற்கு மாறுபட்ட கருத்தினர் என்பதில் ஐயமில்லை. அவர்கள் கருதுமாறு திருப்புறம்பயத்தில் விடந்தீர்த்தது ஆளுடைய பிள்ளையாரேயாயின் சிலப்பதிகாரம் குறிப்பிடும் வரலாறு அதனின் வேறாய தொன்றாகும். (32) ஏவல்செ யாயத் தாரு மடியரு மீண்ட வீண்டிக் காவல்செய் மதுரை மூதூர் குறுகித்தன் காதன் மாமன் பூவையை மணந்த வண்ணங் கேட்டங்குப் புடைசூழ் சுற்றம் யாவரும் முவப்ப வின்புற் றிருந்தன னிளங்கோ மன்னன். (இ-ள்.) இளங்கோ மன்னன் - வணிகர் த'e7çலவன், ஏவல் செய் ஆயத்தாரும் அடியரும் - பணிபுரியும் மகளிர் கூட்டமும் ஏவலாளரும் நெருங்கிவர, ஈண்டிக் காவல் செய் மதுரைமூதூர் குறுகி - (காவலாளர்) நெருங்கிக் காவல்புரியும் மதுரையாகிய பழம்பதியினை யடைந்து, தன் காதல் மாமன் பூவையை மணந்த வண்ணம் கேட்டு - தனது அன்புள்ள மாமன் புதல்வியை மணந்த தன்மையைக் கேட்டு, அங்குப் புடைசூழ் சுற்றம் யாவரும் உவப்ப - அங்கு வந்து அருகிற் சூழ்ந்த சுற்றத்தாரனைவரும் மகிழ, இன்புற்று இருந்தனன் - இன்பமெய்தி இருந்தனன். மன்னர் பின்னோராகிய வணிகர் இளங்கோக்கள் எனப்படுதற் குரியராகலின் ‘இளங்கோ மன்னன்’ என்றார். (33) தன்பெருந் தனமு மாம னீட்டிய தனமு மீட்டி மன்பெரு நிதிக்கோ னென்ன வாணிகம் பெருக்கி நாய்கன் இன்புறு காத லார்க ளிருவரு மீன்ற காதல் நன்பொருண் மகிழ்ச்சி செய்ய நலம்பெற வாழு நாளில். (இ-ள்.) தன்பெருந் தனமும் மாமன் ஈட்டிய தனமும் ஈட்டி - தனது பெரும் பொருளையும் மாமன் தேடிவைத்த பொருளையும் ஓரிடத்திற் றொகுத்து, மன்பெரு நிதிக்கோன் என்ன - நிலைபெற்ற பெரிய குபேரனைப்போல, வாணிகம் பெருக்கி - வாணிகத்தாற் பொருள் பெருக்கி, நாய்கன் - அவ்வணிகன், இன்புறு காதலார்கள் இருவரும் ஈன்ற - இன்ப மிக்க காதலையுடைய இரண்டு மனைவி யரும் பெற்ற, காதல் நன்பொருள் மகிழ்ச்சி செய்ய - அன்புள்ள மக்கள் மகிழ்ச்சியை விளைக்க, நலம் பெற வாழும் நாளில் - நலமாக வாழுங்காலத்தில். நிதிக்கோனென்ன ஈட்டி என்றியைத்தலுமாம். பொருள் - பிள்ளை. “ தம்பொரு ளென்ப தம்மக்கள்” என்னும் குறளும், “ ஒப்புடைய மாதரு மொண் பொருளு நீ” என்னும் தேவாரமும் காண்க. மகிழ்ச்சி செய்தலை, “ மக்கண் மெய்தீண்ட லுடற்கின்பம் மற்றவர் சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு” என்பது முதலியவற்றா லறிக. (34) மூத்தவள் சிறுவர் சால மூர்க்கரா யுள்ளா ரேனை மாத்தளி ரியலி னாட்கோர் மைந்தனுண் டிவனு மன்ன தீத்தொழி னாக மன்ன சிறார்களு மல்லற் செல்வம் பூத்தநீ ணியமத் தூடு போய்விளை யாடல் செய்வார். (இ-ள்.) மூத்தவள் சிறுவர் சால மூர்க்கராய் உள்ளார் - மூத்தாள் புதல்வர் மிகவுங் கொடியராயுள்ளவர், ஏனை மாத்தளிர் இயலினாட்கு ஓர் மைந்தன் உண்டு - மாந்தளிர் போன்ற மென்மையுடைய இளையாளுக்கு ஒரு புதல்வன் உளன்; இவனும் - இம்மைந்தனும், அன்ன தீத்தொழில் நாகம் அன்ன சிறார்களும் - அந்தக் கொடுந் தொழிலையுடைய பாம்புபோன்ற சிறுவர்களும், மல்லல் செல்வம் பூத்த நீள் நியமத்தூடு போய் - பெருஞ் செல்வம் நிறைந்த நீண்ட கடைவீதி யூடு சென்று, விளையாடல் செய்வார் - விளையாடுவாராயினர். எதுகை நோக்கி மாத்தளிர் என வலித்தது. நியமம் - கடைத்தெரு. (35) முந்திய மணாட்டி மைந்தர் முகிழ்முலை யிளைய பாவை மைந்தனை யொருநாட் சீறி யடித்தனர் வருந்தி யீன்ற சந்தணி முலையாண் மாற்றா டனையரை வைதா ளீன்ற பைந்தொடி தானுஞ் சீறி யிளையளைப் பழித்து வைவாள். (இ-ள்.) முந்திய மணாட்டி மைந்தர் - முந்திய மனைவியின் புதல்வர்கள், முகிழ்முலை இளையபாவை மைந்தனை - தாமரை மொட்டினை யொத்த கொங்கைகளையுடைய இளைய மனைவியின் புதல்வனை, ஒரு நாள் சீறி அடித்தனர் - ஒருநாள் சினந்து அடித்தனர்; வருந்தி ஈன்ற சந்து அணி முலையாள் மாற்றாள் தனையரை வைதாள் - அவனை வருந்திப் பெற்ற சாந்து அணிந்த கொங்கையையுடைய அவ்விளையாள் மூத்தாள் புதல்வர்களை வைதனள்; ஈன்ற பைந்தொடி - அப்பிள்ளைகளைப் பெற்ற பசிய வளையலை யணிந்த மூத்தாள், தானும் சீறி இளையளைப் பழித்து வைவாள் - தானுஞ் சினந்து இளையவளை இகழ்ந்து நிந்திப்பாளாயினள். மணவாட்டி எனற்பாலது மணாட்டி என்றாயது. அவனை வருந்தி யீன்ற என்றும், அவர்களை யீன்ற என்றும் விரித்துரைக்க. மாற்றாள் - சக்களத்தி. (36) எந்தவூ ரெந்தச் சாதி யார்மகள் யாவர் காணச் செந்தழல் சான்றா வெங்கோன் கடிமணஞ் செய்து வந்த கொந்தவிழ் கோதை நீயென் கொழுநனுக் காசைப் பட்டு வந்தவ ளான காமக் கிழத்திக்கேன் வாயும் வீறும். (இ-ள்.) நீ எந்த ஊர் எந்தச் சாதி - நீ எந்த வூரினள், என்ன மரபினள், யார் மகள் - யாவர் புதல்வி, யாவர்காணச் செந்தழல் சான்றா - யாவர் முன்னிலையில் சிவந்த அனல் சான்றாக, எம்கோன் கடிமணம் செய்து வந்த கொந்து அவிழ் கோதை - எம் நாயகன் திருமணஞ் செய்துவந்த பூங்கொத்துக்கள் மலர்ந்த மாலையை யணிந்த பெண்ணாவாய், என் கொழுநனுக்கு ஆசைப்பட்டு வந்தவளான காமக்கிழத்திக்கு - என் கொழுநனை விரும்பி வந்தடைந்த காமக் கிழத்தியாகிய உனக்கு, வாயும் வீறும் ஏன் - பேச்சும் இறுமாப்பும் எதற்கு? ஊர், சாதி என்பன ஊரினள், சாதியினள் என்னும் பொருளில் வந்தன. ஊர், குலம், பெற்றோர் அறியப் பெறாதவளும், உறவினர் முதலானோர் காண அங்கி சான்றாக என் கணவனால் மணக்கப்படாதவளும், என் கணவனின்பத்தை விரும்பி வலிதிலடைந்த காமக்கிழத்தியுமான நினக்கு இவ்வளவு வாயும் பெருமிதமும் ஏன் என நிந்தித்தனள் என்க. வாய் பேச்சுக்காயிற்று. (37) உரியவன் றீமுன் னாக வுன்னைவேட் டதற்கு வேறு கரியுள தாகிற் கூறிக் காட்டெனக் கழற லோடும் எரிசுட வாடிச் சாய்ந்த விணர்மலர்க் கொம்பிற் சாம்பித் தெரியிழை நாணஞ் சாய்ப்ப நின்றிது செப்பு கின்றாள். (இ-ள்.) உரியவன் - எனக்கு உரிய நாயகன், தீ முன்னாக உன்னை வேட்டதற்கு வேறு கரி உளதாகில் - அனல் முன்னாக நின்னை மணந்ததற்கு வேறு சான்று உளதேல், கூறிக் காட்டு எனக் கழறலோடும் - அதனைக் கூறிக் காட்டுவாயெனச் சொல்லிய வளவில், எரிசுட - நெருப்புச் சுடுதலால், வாடிச் சாய்ந்த இணர் மலர்க் கொம்பின் - வாடிச் சாய்ந்த கொத்துக்களையுடைய பூங்கொம்பு போல, சாம்பி - வாடி, தெரி இழை நாணம் சாய்ப்ப நின்று - ஆராய்ந்த அணிகளையுடைய அம்மாது நாணம் தன்னைச் சாய்க்க நின்று, இது செப்புகின்றாள் - இதனைக் கூறுகின்றாள். காட்டுதல் - மெய்ப்பித்தல். தெரியிழை : அன்மொழித் தொகை. (38) அரவின்வாய்ப் பட்ட வைக லாருயி ரளித்த ஞானப் புரவல ரருளா லெங்கோன் புறம்பய நாதன் வன்னித் தருவொடு கிணறுகாணச் செய்தனன் சாறம் மூன்று கரிகளு முள்ள வென்றாள் கற்பினா லொப்பி லாதாள். (இ-ள்.) அரவின் வாய்ப்பட்ட வைகல் - (என் கொழுநன்) பாம்பின் வாய்ப்பட்ட போது, ஆருயிர் அளித்த ஞானப் புரவலர் அருளால் - அரிய உயிரினைக் கொடுத்தருளிய ஞானவேந்தராகிய ஆளுடைய பிள்ளையாரின் ஆணையால், எம் கோன் - எம் தலைவன், புறம்பய நாதன் வன்னித் தருவொடு கிணறு காண - திருப்புறம் பயத்திலுள்ள சிவலிங்கப் பெருமானும், வன்னி மரமுங் கிணறுங் காண, சாறு செய்தனன் - மணம் புரிந்தான்; அம்மூன்று கரிகளும் உள்ள என்றாள் - அந்த மூன்று சான்றுகளும் உள்ளன வென்று கூறினள், கற்பினால் ஒப்பிலாதாள் - கற்பினால் ஒப்பற்றவள். சாறு - விழா, மன்றல். ஒப்பிலாதாள் உள்ள வென்றாள் என முடிக்க. (39) மாற்றவ ணகைத்து நன்று நன்றுநின் மன்றல் வேள்விக் கேற்றன கரியே சொன்னா யிங்குமக் கரிகள் மூன்றுந் தோற்றுமே லதுவு மெய்யே யென்றன டோகை யோடும் வேற்றுமை யிலாத சாய லிளையவள் விழுமங் கூரா. (இ-ள்.) மாற்றவள் நகைத்து - அதனைக் கேட்டு மாற்றாள் சிரித்து, நன்று நன்று நின் மன்றல் வேள்விக்கு ஏற்றன கரியே சொன்னாய் - நன்று நன்று, நினது மண வேள்விக்கு ஏற்றனவாய சான்றுகளையே கூறினை; அக் கரிகள் மூன்றும் இங்கும் தோற்றுமேல் - அச் சான்று மூன்றும் இங்கும் தோற்றுமாயின், அதுவும் மெய்யே என்றனள் - அந்த மணமும் உண்மையே யாகும் என்று கூறினன்; தோகையோடும் வேற்றுமை இலாத சாயல் இளையவள்- மயிலுடன் வேற்றுமை யில்லாத சாயலையுடைய இளையாள், விழுமம் கூரா - துன்ப மிகுந்து. நன்று நன்று : இகழ்ச்சி குறித்தது. நினது மன்றல் பொய்ம்மை யாதல்போல் கரியும் பொய்யென்பாள் ‘நின் மன்றல் வேள்விக் கேற்றன கரியே சொன்னாய்’ என்றாள். தோற்றா வென்னுங் கருத்தால் ‘தோற்றுமேல்’என்றா ளென்க. (40) வெவ்வுயிர்ப் பெறிய வில்போய் மெல்விர னெரிக்குங் கையால் அவ்வயி றதுக்கும் வீழுங் கண்புனல் வெள்ளத் தாழுங் கொவ்வைவாய் துடிக்கு நாணந் தலைக்கொளுங் கூசு மன்னோ தெய்வமே யாவா வென்னு மென்செய்கேன் சிறியே னெனும். (இ-ள்.) வெவ்வுயிர்ப்பு எறிய - வெம்மையாகிய பெருமூச்செறிய, இல்போய் - வீட்டினுட் சென்று, மெல் விரல் நெரிக்கும் - மெல்லிய விரல்களை நெரிப்பாள்; கையால் அவ்வயிறு அதுக்கும்- கையினால் அம் மெல்லிய வயிற்றைப் பிசைவாள்; வீழும் - கீழே விழுவாள்; கண் புனல் வெள்ளத்து ஆழும் - கண்ணீர்ப் பெருக்கில் அழுந்துவாள்; கொவ்வை வாய் துடிக்கும் - கொவ்வைக் கனி போன்ற உதடு துடிப்பாள்; நாணம் தலைக்கொளும் கூசும் - வெட்கந் தலைக் கொள்ளுவாள், கூசுவாள்; ஆ ஆ தெய்வமே என்னும் - ஐயோ தெய்வமே என்பாள்; என் செய்கேன் சிறியேன் என்னும் - என்ன செய்வேன் சிறியே னென்பாள். அவ் வயிறு - அழகிய வயிறு. வாய் துடிக்கும், சினை வினை முதன்மேல் நின்றது. அன்னோ, ஆ ஆ என்பன இரக்கப் பொருளில் வந்த இடைச் சொற்கள். (41) தாதைதா யிறந்த வன்றே தமியளா யிங்குப் போந்த பேதையேற் காருண் டைய பேதுறும் வணிகற் கன்று மாதுல னாகி ஞாதி வழக்கறுத் துரிமை யீந்த நாதனே யேதி லாள்வாய் நகையினிற் காத்தி யென்னா. (இ-ள்.) தாதை தாய் இறந்த அன்றே - அப்பனும் அம்மையும் இறந்த பொழுதே, தமியளாய் இங்குப் போந்த பேதையேற்கு - தனியளாகி இங்கு வந்த அறிவில்லாத எனக்கு, ஐய - ஐயனே, யார் உண்டு - (நின்னை யன்றி வேறு துணை) யார் உளர்; பேதுறும் வணிகற்கு - மனமயங்கி வருந்திய வணிகனுக்கு, அன்று - முன்னொரு காலத்தில், மாதுலனாகி - மாமனாக வந்து, ஞாதி வழக்கு அறுத்து - பங்காளிகளின் வழக்கினை ஒழித்து, உரிமை ஈந்த நாதனே - அவன் உரிமையைக் கொடுத்தருளிய இறைவனே, ஏதிலாள் வாய் நகையினில் காத்தி என்னா - மாற்றாள் வாயிலிருந்து வரும் இகழ்ச்சி மொழியினின்றும் என்னை நீக்கிக் காத்தருள்வாயாக வென்று குறையிரந்து வேண்டி. அன்று ஞாதியரால் வருந்துதலுற்ற வணிகனொருவனுக்கு மாதுலனாகி வந்து வழக்கறுத்து உரிமை யீந்தீர் ஆகலின், இன்று மாற்றவளால் வருந்தலுறும் வணிகமாதாகிய எனக்கும் எளிவந்து உரிமை யீவீர் என்றாள் என்க. வணிகற்கு மாதுலனாகி ஞாதி வழக்கறுத் துரிமை யீந்த வரலாற்றை இப் புராணத்து, மாமனாக வந்து வழக்குரைத்த படலத்திற் காண்க. (42) அன்றிர வுண்டி யின்றித் துயிலின்றி யழுங்கிப் பின்னாட் பொன்றிணி கமல வாவிப் புண்ணியப் புனறோய்ந் தண்ட நின்றிழி விமானக் கோயி னிரம்பிய வழகர் முன்னாச் சென்றிரு தாளில் வீழ்ந்து தன்குறை செப்பி வேண்டும். (இ-ள்.) அன்று இரவு உண்டியின்றித் துயில் இன்றி அழுங்கி - அன்று இரவு உணவு மின்றி உறக்கமுமின்றி வருந்தி, பின்னாள் - மறு நாள், பொன்திணி கமலவாவி - செறிந்த பொற்றாமரைகளையுடைய வாவியில், புண்ணியப் புனல் தோய்நது - அறவடிவாகிய நீரில் முழுகி, அண்டம் நின்று இழி விமானக் கோயில் - வானி னின்றும் இறங்கிய விமானமாகிய திருக்கோயிலில் எழுந்தருளிய, நிரம்பிய அழகர் முன்னாச்சென்று - பேரழகராகிய சோமசுந்தரக் கடவுளின் திருமுன் சென்று, இருதாளில் வீழ்ந்து - அவருடைய இரண்டு திருவடிகளிலும் வீழ்ந்து வணங்கி, தன் குறை செப்பி வேண்டும் - தனது குறையைக் கூறி இதனை வேண்டுவாள். கோயிலில் எழுந்தருளிய என விரித் துரைக்க. (43) அன்றெனைக் கணவன் வேட்ட விடத்தினி லதற்குச் சான்றாய் நின்றபைந் தருவு நீயுங் கிணறுமந் நிலையே யிங்கும் இன்றுவந் தேதி லாள்வாய் நகைதுடைத் தெனைக்கா வாயேற் பொன்றுவ லென்றாள் கற்பின் புகழினை நிறுத்த வந்தாள். (இ-ள்.) அன்று எனைக் கணவன் வேட்ட இடத்தினில் - அன்று என்னை நாயகன் மணம் புரிந்த இடத்தில், அதற்குச் சான்றாய் நின்ற பைந்தருவும் நீயும் கிணறும் - அதற்குச் சான்றாகி நின்ற பசிய வன்னி மரமும் சிவலிங்கமாகிய நீயும் கிணறும், அந்நிலையே இன்று இங்கும் வந்து - அங்ஙனமே இன்று இங்கும் வந்து; ஏதிலாள் வாய்நகை துடைத்து எனைக் காவாயேல் - மாற்றாளின் இகழ்மொழியை விரையப் போக்கி அடியேனைக் காத்தருளாவிடின், பொன்றுவல் என்றாள் - இறந்துபடுவே னென்று கூறினாள், கற்பின் புகழினை நிறுத்த வந்தாள் - கற்பினது புகழை உலகில் நிலைநிறுத்த வந்த அவ்வணிக மாது. தருவும் கிணறும் என்னும் அஃறிணைப் படர்க்கை யொருமைப் பெயர்களும், நீயும் என்னும் முன்னிலை யொருமைப் பெயரும் விரவி வந்து காவாயேல் என்னும் முன்னிலை யொருமைவினை கொண்டது இடவழுவமைதியும் பால்வழுவமைதியும் ஆகும். கற்பின் புகழ் - கற்பாலுளதாகும் புகழ். (44) அல்லலுற் றழுங்கி நின்றாள் பரிவுகண் டந்தண் கூடல் எல்லையில் கருணை மூர்த்தி யருளினா லெவருங் காணத் தொல்லையின் படியே யன்னாள் சொல்லிய கரிகண் மூன்றும் ஒல்லைவந் திறுத்த கோயி லுத்தர குணபா லெல்லை. (இ-ள்.) அல்லல் உற்று அழுங்கி நின்றாள் பரிவுகண்டு - துன்பமுற்று வாடி நிற்கும் அவ்வணிகமாதின் வருத்தத்தை நோக்கி, அம் தண்கூடல் எல்லை இல் கருணை மூர்த்தி அருளினால் - அழகிய குளிர்ந்த கூடற்பதியில் எழுந்தருளிய அளவிறந்த கருணை வடிவினனாகிய இறைவன் அருளினால், எவரும் காண - அனைவருங் காணுமாறு, தொல்லையின்படியே - முன்பிருந்தவாறே, அன்னாள் சொல்லிய கரிகள் மூன்றும் - அம்மாது சொன்ன சான்றுகள் மூன்றும், கோயில் உத்தரகுணபால் எல்லை ஒல்லை வந்து இறுத்த - திருக்கோயிலின் வட கீழ்த் திசையில் விரைய வந்து தங்கின. கண்டு என்னும் வினையெச்சம் வந்திறுத்த என்னும் வினை கொண்டது; கண்ட என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது என்றுமாம். தொல்லையின் படியே - முன்பு திருப்புறம்பயத்தில் இருந்தவாறே, அன்னாள் சொல்லிய - அவள் மாற்றாளுக்குக் கூறிய, இறுத்த : அன் பெறாத பலவின்பால் முற்று. (45) அன்னபோ திளையாள் மூத்தாட் கொண்டுபோ யால வாயெம் முன்னவன் றிருமுன் றாழ்ந்து காட்டுவாண் முகிறோய் சென்னி வன்னியீ திலிங்க மீது கிணறிதென் மன்றற் சான்றாய்த் துன்னிய வென்றாள் கண்டாண் முடித்தலை தூக்கி நின்றாள். (இ-ள்.) அன்னபோது - அப்போது, இளையாள் மூத்தாள் கொண்டுபோய் - இளையவள் மூத்தவளை அழைத்துக்கொண்டு போய், ஆலவாய் எம் முன்னவன் திருமுன் தாழ்ந்து - ஆலவாயி லெழுந்தருளிய எம் முன்னவனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருமுன் வீழ்ந்து வணங்கி, காட்டுவாள் - காட்டுவாளாய், என் மன்றல் சான்றாய்த் துன்னிய முகில் தோய் சென்னி வன்னி ஈது - எனது மணத்திற்குச் சான்றாகிப் பொருந்திய முகிலை யளாவிய முடியினையுடைய வன்னி மரம் இது; இலிங்கம் ஈது - இலிங்கம் இது; கிணறு இது என்றாள் - கிணறு இதுவாகு மென்று சுட்டிக் காட்டிக் கூறினள்; கண்டாள் முடித்தலை தூக்கி நின்றாள் - பார்த்த மூத்தாள் தனது தலையைக் கீழேயிறக்கி நின்றனள். நான் கூறிய வன்னி இது, இலிங்கம் இது, கிணறு இது, இவை என் மன்றற் சான்றாய்த் துன்னியன; என்றுரைத்தலுமாம். தூக்கி - கீழிறக்கிட்டு. (46) அவ்விடைத் தருவு நீரு மன்றுபோ லின்றுஞ் சான்றாய் இவ்விடைப் பட்ட வென்ன வதிசய மெவர்க்குந் தேறாத் தெய்வமு மெளிவந் தங்கைக் கனியினித் திருவி னன்னாள் கைவசப் பட்ட தென்றாற் கற்பினுக் கரிதே தம்மா. (இ-ள்.) அவ்விடை - அவ்விடத்திலுள்ள, தருவும் நீரும் - வன்னி மரமுங் கிணறும், அன்றுபோல் இன்றும் சான்றாய் - அக்காலத்தைப் போல இக்காலத்திலும் சான்றாகி, இவ்விடைப் பட்ட - இவ்விடத்து வந்திருந்தன; என்ன அதிசயம் - இஃதென்ன வியப்பு; எவர்க்கும் தேறாத் தெய்வமும் - எவராலும் அறியமுடியாத இறைவனும், எளிவந்து அங்கைக் கனியின் - எளிதாக வந்து உள்ளங்கை நெல்லிக் கனிபோல, இத்திருவின் அன்னாள் கைவசப்பட்டது என்றால் - இத் திருமகள் போன்றாளின் கையிலகப்பட்ட தென்றால், கற்பினுக்கு அரிது ஏது - கற்பினுக்கு அரிய பொருள் ஏது? (ஒன்றுமில்லை). நீர் என்னும் தானியின் பெயர் கிணற்றுக்கு ஆயிற்று. ஒரு காலத்து ஓரிடத்திருந்த நிலையியற் பொருள்களாகிய வன்னி மரமும் கிணறும் பிறிதொரு காலத்துப் பிறிதோரிடத்தில் அவ்வாறே வந்து தோன்றுதல் பெரியதொரு புதுமையாகலின் என்ன வதிசயம் என வியந்தார். சான்று மூன்றனுள் சிறப்பு நோக்கித் தெய்வத்தை வேறு பிரித் தோதினார். “காண்டகைய தங்கணவ ரைக்கடவு ளார்போல் வேண்டலுறு கற்பினர்த மெய்யுரையி னிற்கும் ஈண்டையுள தெய்வதமு மாமுகிலு மென்றால் ஆண்டகையி னோர்களு மவர்க்குநிக ரன்றே” என்னும் கந்தபுராணச் செய்யுள் இங்கு நோக்கற் பாலது. அம்ம, வியப்பிடைச் சொல். இது கவிக் கூற்று. (47) மங்கைதன் கற்பு மீச னிடத்தவள் வைத்த வன்பும் அங்கண னவட்குச் செய்த வருளையும் வியந்து நோக்கி மங்கல நகரா ரெல்லா மகிழ்ச்சியு ளாழ்ந்தார் முல்லைத் தொங்கலான் முதுமணாட்டி யொருத்தியுந் துன்பத் தாழ்ந்தாள். (இ-ள்.) மங்கல நகரார் எல்லாம் - மங்கலம் நிறைந்த மதுரை நகரிலுள்ளாரனைவரும், மங்கை தன் கற்பும் - அவ் வணிக மாதின் கற்பினையும், ஈசன் இடத்து அவள் வைத்த அன்பும் - இறைவன் மாட்டு அவள் வைத்துள்ள அன்பினையும், அங்கணன் அவட்குச் செய்த அருளையும் - அவ்விறைவன் அவளுக்குச் செய்த அருளையும், நோக்கி வியந்து மகிழ்ச்சியுள் ஆழ்ந்தார் - கண்டு வியந்து மகிழ்ச்சிக் கடலுள் அழுந்தினார்; முல்லைத் தொங்கலான் முதுமணாட்டி ஒருத்தியும் முல்லை மாலையை யணிந்த வணிகன் மூத்த மனைவி யொருத்தியும், துன்பத்து ஆழ்ந்தாள் - துன்பக் கடலுள் அழுந்தினாள். கற்பும், அன்பும் என்புழியும் இரண்டனுருபு விரிக்க. மங்கல நகர் - சிவநகர் என்றுமாம்; மதுரைக்குச் சிவநகரம் என்னும் பெயருண்மை தலவிசேடப் படலத்திற் காண்க. (48) மேதகு வணிகர் மூத்த வினைக்கொடி யாளைப் பொல்லாப் பாதகி யிவளா மென்று பழித்தனர் படிறு பேசிக் கோதறு குணத்தி னாளைக் குடிப்பழு துரைத்தாய் நீயென் காதலி யாகா யென்று கணவனுந் தள்ளி விட்டான். (இ-ள்.) மேதகு வணிகர் - அங்குள்ள சிறந்த வணிகர்கள், மூத்த வினைக் கொடியாளை - மூத்தாளாகிய தீவினையையுடைய கொடியவளை, இவள் பொல்லாப் பாதகியாம் என்று - இவள் பொல்லாத பாவியாவாள் என்று, பழித்தனர் - இகழ்ந்தார்கள்; கோது அறு குணத்தினாளை - குற்றமற்ற குணத்தினையுடைய இளையாளை, படிறு பேசிக் குடிப்பழுது உரைத்தாய் - பொய் பேசிக் குடிக்குற்றங் கூறினை; நீ என் காதலியாகாய் என்று - (ஆகையால்) நீ என் மனைவியாகமாட்டா யென்று, கணவனும் தள்ளிவிட்டான் - நாயகனும் அவளைத் தள்ளிவிட்டனன். கொடிய மூத்தாளை என விகுதி பிரித்துக் கூட்டுக. ஏனை வணிகர் பழித்ததன்றி என்னும் பொருள் தருதலின் கணவனும் என்பதிலுள்ள உம்மை எச்சவும்மை. (49) அந்நிலை யிளையாள் கேள்வ னடியில்வீழ்ந் திரப்பா ளைய என்னது கற்பை யின்று நிறுத்தினா ளிவண்மாற் றாளன் றன்னையி லாதேற் கன்னை யாயினா ளிவளும் யானும் இன்னுயி ருடல்போல் வாழ்வோ மெனத்தழீஇத் தம்மி னட்டார். (இ-ள்.) அந்நி'e7çல - அப்பொழுது, இளையாள் கேள்வன் அடியில் வீழ்ந்து இரப்பாள் - இளையவள் நாயகன் திருவடியில் வீழ்ந்து இரந்து வேண்டுவாள்; ஐய - ஐயனே, இவள் என்னது கற்பை இன்று நிறுத்தினாள் - இவள் என்னுடைய கற்பை இன்று நிலைநிறுத்தினாள்; மாற்றாள் அன்று - (ஆகையால் இவள் எனக்கு) மாற்றா ளல்லள்; அன்னை இலாதேற்கு அன்னை ஆயினாள் - அன்னை இல்லாத எனக்கு அன்னையாயினாள்; இவளும் யானும் இன் உயிர் உடல்போல் வாழ்வோம் என - இனி இவளும் யானும் இனிய உயிரும் உடலும் போலப் பிரிவின்றி வாழ்வோமென்று கூறி, தம்மில் தழீஇ நட்டார் - தங்களுள் ஒருவரை யொருவர் தழுவி நட்புப் பூண்டனர். நிறுத்தினா ளாகலின் மாற்றாளல்லள் அன்னையாயினாள் என்க. என்னது : னகரம் விரித்தல். (50) உடம்பினா லிரண்டே யன்றி யுயிர்ப்பொரு ளிரண்டற் றுள்ளம் மடம்படு மழுக்கா றற்று மைந்தரு மனைய ராக விடம்படு மைவாய் நாகம் விழுங்கிரை யொத்துத் தம்மில் இடம்படு மன்புற் றின்புற் றிருவரு மிருந்தார் மன்னோ. (இ-ள்.) இருவரும் - அவ்விருவரும், உடம்பினால் இரண்டே அன்றி - உடலினா லிரண்டே யல்லாமல், உயிர்ப் பொருள் இரண்டு அற்று - உயிர்ப் பொருளால் இரண்டாகாமல், உள்ளம் மடம்படும் அழுக்காறு அற்று - உள்ளத்தின்கண் அறியாமையால் உண்டாகும் பொறாமை யின்றி, மைந்தரும் அனையராக - புதல்வர்களும் அத் தன்மையரேயாக, விடம்படும் ஐவாய் நாகம் விழுங்கு இரை ஒத்து- நஞ்சினையுடைய ஐந்தலைப் பாம்பு விழுங்கும் இரையைப் போன்று, தம்மில் இடம்படும் அன்புற்று இன்புற்று இருந்தார் - தங்களுள் மிகுந்த அன்பினைப் பொருந்தி இன்பமெய்தி இருந்தனர். உயிர்ப்பொருள் - உயிராகிய பொருள். ஐவாய் நாகம் ஐந்து வாயாலும் இரை விழுங்கினும் அஃது ஐ வேறு பாம்பாகாமை போல இவர்களும் இருவேறு உடலினராயினும் அன்பால் இருவராகாதிருந்தனர் என்றார். இடம்படும் - அகன்ற. மன், ஓ அசைகள். (51) அருந்ததி யனையாள் கேள்வற் காயுளு மானாச் செல்வப் பெருந்தன நிறைவுஞ் சீரு மொழுக்கமும் பீடும் பேறு தருந்தவ நெறியுங் குன்றாத் தருமமும் புகழும் பல்க இருந்தனள் மலச் செல்வி யென்னவீற் றிருந்து மன்னோ. (இ-ள்.) அருந்ததி அனையாள் - அருந்ததி போன்றாளாகிய அவ்விளைய நங்கை. கேள்வற்கு ஆயுளும் ஆனாச் செல்வப் பெருந்தன நிறைவும் - தன் நாயகனுக்கு வாணாளும் நீங்காத பொருட் செல்வ நிறைவும், சீரும் ஒழுக்கமும் பீடும் - சிறப்பும் ஒழுக்கமும் பெருமையும், பேறு தரும் தவநெறியும் - பயன் தரும் தவ வொழுக்கமும், குன்றாத் தருமமும் புகழும் பல்க - குன்றாத அறமும் புகழும் மேலோங்க, கமலச்செல்வி வீற்றிருந்தென்ன இருந்தனள் - பூமகள் வீற்றிருந்தாற் போல வாழ்ந் திருந்தனள். வீற்றிருந்தென்ன என மாறுக. திருமகள் உறையுங்கால் இவை யெல்லாம் பல்குமாதலின் ‘கமலச் செல்வி வீற்றிருந்தென்ன இருந்தனள்’ என்றார். (52) பொன்னவிர் கமலம் பூத்த பொய்கைசூ ழால வாயெம் முன்னவன் விளையாட் டெல்லை கண்டியார் மொழிய வல்லார் இன்னமு மளவின் றென்ப வெங்குரு நாத சாமி சொன்னவா றுங்கட் கெண்ணென் காதையுஞ் சொன்னே னம்ம. (இ-ள்.) பொன் அவிர் கமலம் பூத்த பொய்கைசூழ் ஆலவாய்- பொன்போல விளங்குந் தாமரைகள் மலர்ந்த பொய்கைகள் சூழ்ந்த திருவாலவாயில் எழுந்தருளியுள்ள, எம் முன்னவன் விளையாட்டு எல்லை கண்டு மொழியவல்லார் யார் - எம் முதல்வனது திருவிளையாட்டின் முடிவைக் கண்டு மொழிய வல்லவர் யாவருளர்; இன்னமும் அளவு இன்று என்ப - இன்னும் அளவில்லை என்று கூறுவர்; எம் குருநாதசாமி சொன்னவாறு - எம் குருநாதனாகிய முருகப் பெருமான் கூறியருளியவாறே, எண்ணெண்காதையும் - உங்கட்குச் சொன்னேன் - அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் உங்களுக்குச் சொன்னேன். பொற்றாமரைப் பொய்கை பொருந்திய என்றுமாம். கண்டியார்: இகரம் குறுகாது நின்றது. குருநாதனாகிய சாமி என்க. அம்ம: வியப்பின்கண் வந்தது : மேல்புராண வரலாற்றில், அத்தலத் தனைய மூவகைச் சிறப்பு மளவிலா வுயிர்க்கெலாங் கருணை வைத்தவன் செய்த திருவிளை யாட்டும் வரையுரங் கிழியவே லெடுத்த வித்தக னெனக்கு விளம்பிய வாறே விளம்புவ னுமக்கென வந்த உத்தம முனிவர் யாவருங் கேட்க வுணர்த்துவான் கடலெலா முண்டான் என்று கூறியிருத்தலுங் காண்க. (53) எழுசீரடி யாசிரிய விருத்தம் என்றுதென் மலைமே லிருந்தமா தவத்தோ னின்னருட் குருபரன் றனையும் அன்றவன் றிருவாய் மலர்ந்தவா சகமு மருள்கனிந் தொழுகவுள் ளடக்கித் தென்றமி ழால வாய்த்தனிப் பதியைச் சென்னிமேற் பன்னிரண் டும்பர் ஒன்றவைத் திமையா வங்கயற் கண்ணி யுடனுறை யொருவனை நினைந்தான். (இ-ள்.) என்று - என்று கூறி, தென் மலைமேல் இருந்த மாதவத்தோன் - பொதியின் மலைமேல் இருந்த பெருந் தவத்தினனாகிய குறுமுனிவன், இன் அருள் குருபரன்தனையும் - இனிய அருளையுடைய குருநாதனையும், அன்று அவன் திருவாய் மலர்ந்த வாசகமும் - அன்று அக்குருநாதன் திருவாய்மலர்ந்தருளிய உபதேச மொழியையும், அருள் கனிந்து ஒழுக உள் அடக்கி - அருள் பழுத்து ஒழுகுமாறு உள்ளத்தின் கண் அடக்கி, தென் தமிழ் ஆலவாய்த் தனிப்பதியை - அழகிய தமிழையுடைய திருவாலவாயில் எழுந் தருளிய ஒப்ற்ற இறைவனும், இமையா அங்கயல் கண்ணியுடன் உறை ஒருவனை - இமையாத அங்கயற்கண்ணியுடன் உறைகின்ற ஒருவனுமாகிய சோமசுந்தரக் கடவுளை, சென்னிமேல் பன்னிரண்டு உம்பர் ஒன்ற வைத்து - முடியின் மீது பன்னிரண்டு அங்குலத்திற்கு அப்பால் பொருந்த வைத்து, நினைந்தான் - தியானித்தான். அருள்கனிந் தொழுகத் திருவாய்மலர்ந்த வாசகமும் என்று மாறுதலுமாம். சென்னி - பிரமரந்திரம். பன்னிரண்டு உம்பர் - துவாதசாந்தம், இறைவனும் இறைவியும் துவாதசாந்தத்தில் இருந்தலை, “ உயிர்த் துணையாந் தோன்றாத் துணைக்கோர் துணையாகித் துவாதசாந்தப் பெருவெளியிற் றுரியங்கடந்த பரநாத மூலத்தலத்து முளைத்த முழுமுதலே” எனக் குமரகுருபர வடிகள் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அருளிச் செய்தலானு மறிக. ஆலவாயாகிய திருப்பதி எனக் கொண்டு, அஃது அண்டத்தில் துவாதசாந்தத்தலம் எனப்படுமாகலின் அதனைப் பிண்டத்தினுள்ளே துவாதசாந்தத்துடன் ஒன்றவைத்து ஆண்டு அங்கயற் கண்ணியுடன் உறை ஒருவனை நினைந்தான் என்றுரைத்தலுமாம். (54) பரவச மடைந்து வழிகவர்ந் துண்ணும் பழிப்புல வேடர்போ யொளிப்ப இருள்வெளி கடந்து திருவருள் வழிச்சென் றெண்ணிலாச் சராசர மனைத்தும் புரையற நிறைந்து காட்சிகண் காண்பான் புதைபடத் தனித்தபூ ரணமாய் உரையுணர் விறந்த வுண்மையா னந்த வுணர்வினை யுணர்வற நினைந்தான். (இ-ள்.) பரவசம் அடைந்து - சிவகரணம்பெற்று, வழிகவர்ந்து உண்ணும் பழிப்புல வேடர்போய் ஒளிப்ப - ஆறலைத் துண்ணுகின்ற பழிமிக்க ஐம்புல வேடர்கள் போய் மறைய, இருள் வெளிகடந்து - கேவல சகல அவத்தைகளைக் கடந்து, திருவருள் வழிச்சென்று - திருவருளின் வழியே சென்று, எண் இலாச் சர அசரம் அனைத்தும் நிறைந்து - அளவிறந்த இயங்கியற் பொருளும் நிலையியற் பொருளுமாகிய அனைத்திலுங் குற்றமற நிறைந்து, காண்பான் காட்சி கண்புதை பட - காண்பானுங் காட்சியும் காட்சிப் பொருளு மறைய, தனித்த பூரணமாய் - ஒப்பற்ற பூரணவடிவாய், உரை உணர்வு இறந்த உண்மை ஆனந்த உணர்வினை - மாற்றமு மனமுங் கழிய நின்ற சச்சிதானந்த வடிவினை, உணர்வு அற நினைந்தான் - இடையறாது தியானித்தான். புலம் - பொறி. வழிகவர்ந்துண்ணும் வேடர் போலும் ஐம்பொறிகள் என்க; “ ஐம்புல வேடரி னயர்ந்தனை” எனச் சிவஞான போதம் கூறுவதுங் காண்க. ஆன்மா இச்சை ஞானக்கிரியைகளின் நிகழ்ச்சி சிறிதுமின்றி ஆணவ மலத்தால் மறைப்புண்டு நிற்பது கேவலம் ஆகலின் அதனை இருள் என்றும், மாயேயமாகிய தநுகரண புவன போகங்களைப் பொருந்தி இச்சை ஞானக் கிரியைகள் சிறிது விளங்கப்பெற்று நரகொடு சுவர்க்கம் நானிலங்களிற் போக்குவரவு புரிவது சகலம் ஆகலின் அதனை வெளி என்றும் கூறினார்: எனவே நின்மலாவத்தையை யெய்தி என்றவாறு. அவனருளே கண்ணாகக் காண்பார்க்கன்றி இறைவன் அறியவாரானாகலின் ‘திருவருள் வழிச்சென்று’என்றார். சென்று உணர்ந்தான் புதைபட உணர்ந்தான் என இயையும். புரையற என்பதற்கு வெற்றிடம் சிறிது மில்லையாக என்றலுமாம். காட்சி - காணப்படுபொருள். கண் - காணுங்கருவி காண்பான் முதலியவற்றை அறிபவன், அறிவு, அறியப்படுபொருள் என்று கொள்க; இவை ஞாதிரு, ஞானம், ஞேயம் என்று கூறப்படும். புதைபட - ஞாதிரு என்றும் ஞானம் என்றும் ஞேயம் என்றும் அறியும் சங்கற்ப ஞானம் மறைய. இவை மூன்றும் நழுவாமல் நழுவி நிற்க வேண்டுமென்பர் பெரியோர். உரை உணர்வு இறந்த என்பதற்கு வேதாகமங்களாகிய பாசஞானத்தையும், சுட்டறிவாகிய பசுஞானத்தையும் கடந்த என்றும். உணர்வு அற என்பதற்குத் தற்போதமற என்றும் உரைத்தலுமாம். காண்பான் கண்காட்சி எனவும், உண்மை உணர்வு ஆனந்தம் எனவும் நிற்கற்பாலன செய்யுளாதலின் மாறி நின்றன வென்க. (55) ஆகச் செய்யுள் - 3310. அறுபத்தைந்தாவது அருச்சனைப் படலம் எழுசீரடி யாசிரிய விருத்தம் கன்னிதன் வதுவைக் கரிகளா யிலிங்கக் கடவுளுங் கவைக்கருங் கோட்டு வன்னியும் படுநீர்க் கூவலும் வந்த வழியிது மதுரைநா யகனைச் சென்னியில் வைத்த முனிவனைப் பூசை செய்துமா தவரொருங் கெய்திப் பன்னிற மலர்தூ யாலவா யானைப்1 பரவிய பரிசது பகர்வாம். (இ-ள்.) கன்னிதன் வதுவைக் கரிகளாய் - வணிக மங்கையின் மணச்சான்றுகளாய், இலிங்கக் கடவுளும் - சிவலிங்க மூர்த்தியும், கருங்கவைக் கோட்டு வன்னியும் - கரிய பிளவு பட்ட கிளைகளையுடைய வன்னிமரமும், நீர்படு கூவலும் வந்தவழி இது - நீர்ஊறுங் கிணறுமாகிய இவை வந்த திருவிளையாடல் இது; மதுரை நாயகனைச் சென்னியில் வைத்த முனிவனை - (இனி) சோமசுந்தரக் கடவுளை முடிக்குப் பன்னிரண்டு அங்குலத்திற்கு மேல் வைத்துத் தியானித்த அக் குறுமுனிவனை, பூசைசெய்து - பூசித்து, மாதவர் ஒருங்கு எய்தி - அம்மாதவர்கள் ஒருசேரச் சென்று, ஆலவாயானை - திருவாலவாயுடைய இறைவனை, பல் நிற மலர்தூய்ப் பரவிய பரிசது பகர்வாம் - பல நிறங்களையுடைய மலர்களைத் தூவி வழிபட்ட தன்மையைக் கூறுவாம். படுநீர் - ஆழமாகிய நீர் என்றுமாம். மேலைப் படலத்துக் கூறியதனை அநுவதித்து மதுரை நாயகனைச் சென்னியில் வைத்த முனிவனை என்றார். பரிசது, அது : பகுதிப் பொருள் விகுதி. (1) போதவா னந்தத் தனிக்கடல் பருகும் புயல்புரை முனிவனை வசிட்ட மாதவ னாதி முனிவரு முலோபா முத்திரை தன்னொடும் வரித்துப் போதொடு சாந்த மான்மதந் தீபம் புகைமுதற் கருவிகைக் கொண்டு மேதகு சிறப்பா லருச்சனை செய்து பின்னுமோர் வினாவுரை செய்வார். (இ-ள்.) போத ஆனந்தத் தனிக்கடல் பருகும் புயல்புரை முனிவனை - ஞானானந்தமாகிய ஒப்பற்ற கடலைக் குடிக்கும் முகில் போன்ற அகத்திய முனிவனை, உலோபா முத்திரை தன்னொடும் வரித்து - உலோபாமுத்திரையுடன் இருத்தி, வசிட்டன் ஆதி முனிவரும் - வசிட்டன் முதலிய முனிவ ரனைவரும், போதொடு சாந்தம் மான் மதம் தீபம் புகை முதற் கருவிகைக் கொண்டு - மலர், சந்தனம் மான் மதம் தீபம் தூபம் முதலிய உபகரணங்களைக் கையிற் கொண்டு, மேதகு சிறப்பால் அருச்சனை புரிந்து - மேம்பட்ட சிறப்பினால் அருச்சித்து, பின்னும் ஓர் வினாவுரைசெய்வார் - மீண்டும் ஒரு வினாவினை நிகழ்த்துவார். அகத்தியர் கடலுண்டவராகலின், அஃதேயன்றி இக்கடலும் பருகினரென ஒரு நயந்தோன்றக் கூறினார். உலோபாமுத்திரை - அகத்தியனாரின் மனைவியார்; மனைவியாரையும் கூறினமையின் வரித்து என்றார்; வரித்தல் - அழைத்தல்; ஈண்டு அழைத்து ஆதனத் திருத்தி என்க. (2) கொச்சகக் கலிப்பா கோட்டஞ் சிலைவளைத்த கூடற் பிரானாடல் கேட்டஞ் செவிபடைத்த பேறடைந்தேங் கேட்டபடி நாட்டங் களிப்ப நறுமலர்தூய்க் கண்டிறைஞ்ச வேட்டங்கள் யாங்களென வோதினார் மெய்த்தவரே. (இ-ள்.) கோடு அம் சிலை வளைத்த கூடல்பிரான் ஆடல் - மேருமலையை அழகிய வில்லாக வளைத்த நான்மாடக் கூடலின் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடல்களை, கேட்டு அம்செவி படைத்த பேறு அடைந்தேம் - கேட்டதனால் அழகிய செவிகளைப் படைத்த பயனைப் பெற்றோம்; கேட்டபடி - கேட்டவண்ணமே, நாட்டம் களிப்பக் கண்டு - கண்கள் களிப்பக் கண்டு, நறுமலர்தூய் இறைஞ்ச - நறிய மலர்களை யிட்டு வணங்குதற்கு, யாங்கள் வேட்டங்கள் என - யாங்கள் விரும்பினோமென்று, மெய்த்தவர் ஓதினார் - அவ்வுண்மைத் தவமுடைய முனிவர்கள் கூறினார்கள். கோடு - சிமயம்; மலைக்கு ஆகுபெயர். கோட்டஞ்சிலை என்புழி டகரம் விரித்தல்; மலையாகிய சிலையை என்றுமாம். அஞ்செவி - அகஞ்செவி என்றுமாம். வேட்டங்கள், யாங்கள் என்பவற்றில் கள்: அசை. (3) என்ற வறவோ ரெதிரே முகமலர்ந்து குன்ற மடக்குங் குறுமுனிவன் கூறுவான் நன்றுமுனி காளிதனை நானுள்ளத் தெண்ணியாங் கொன்றமொழிந் தீரென்றான் பின்னும்வியந் தோதுவான். (இ-ள்.) என்ற அறவோர் எதிரே - என்று கூறிய முனிவர்கள் முன்னே, குன்றம் அடக்கும் குறுமுனிவன் முகமலர்ந்து கூறுவான் - விந்தமலையை அடக்கிய அகத்திய முனிவன் முகமலர்ந்து கூறுவானாயினன், நன்று முனிகாள் - முனிவர்களே நன்று, நான் உள்ளத்து எண்ணியாங்கு - யான் எனது மனத்தில் நினைத்தவண்ணமே, இதனை ஒன்ற மொழிந்தீர் என்றான் - இதனைப் பொருந்த வுரைத்தீரென்று கூறி, பின்னும் வியந்து ஓதுவான் - பின்னும் வியந்து கூறுவானாயினன். அகத்தியர் விந்தமலையை அடக்கிய வரலாற்றைக் கந்த புராணத்து விந்தம் பிலம் புகு படலத்திற் காண்க. என்றான்: முற்றெச்சம். வியக்க என்பது வியந்து எனத் திரிந்தது எனலுமாம். (4) பண்ணான் மறைமுடியுந் தேறாப் பரசிவனை எண்ணா லளவிறந்த வெக்கலையாற் கண்டுமுளக் கண்ணா லறியாதார் வீட்டின்பங் காண்பரோ மண்ணாதி யாறாறு நீத்ததனி மாதவரே. (இ-ள்.) மண் ஆதி ஆறாறும் நீத்ததனி மாதவரே - மண் முதலிய முப்பத்தாறு தத்துவங்களையும் களைந்த பெருந்தவத்தினையுடைய முனிவர்களே, பண் நால் மறைமுடியும் தேறாப் பரசிவனை - இசையமைந்த நான்கு மறைகளின் அந்தமுங் கண்டறியாத பரசிவத்தை, எண்ணால் அளவு இறந்த எக்கலையால் கண்டும் - எண்ணினால் அளவில்லாத எந்தக் கலைகளின் உணர்வினாற்கண்டு வைத்தும், உளக்கண்ணால் அறியாதார் - உள்ளக் கண்ணினால் அறியாதவர், வீட்டு இன்பம் காண்பரோ - முத்தியின்பத்தைக் காண்பார்களோ (காணார்) என்றபடி. எண்ணால் என்பதற்குத் தருக்கத்தால் என்றும், கருதலளவை யால் என்றும் உரைத்தலும் பொருந்தும். உளக்கண் என்றது பரஞானத்தை, இறைவனை அபரஞானத்தால் அறிந்து வைத்தும் பரஞானத்தாற் காணாதவர் வீட்டின்பம் காணார் என்றார். ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், வித்தியாதத்துவம் ஏழும், சுத்த த்துவம் ஐந்தும் என்பார் ‘ஆறாறும்’ என்றார். எல்லாத் தத்துவங்கட்கும் கீழாகவுள்ளது மண் ஆகலின் ‘மண்ணாதி’என்றார். நீத்தலாவது தத்துவங்களை ஒரோவொன்றாகக் கண்டு அவற்றி னியல்பை யறிந்து களைந்து அவற்றின் வேறாக ஆன்மாவாகிய தன்னை அறிதல். மாதவரே என்பதில் ஏகாரம் விளி. (5) அஞ்செவியி லூறுபடக் கேட்டபடி யாலவாய்ப் பஞ்சமுகச் சோதிப் பரனைப்போ யர்ச்சித்து நெஞ்சநெகக் கண்டு நினையா வழிநினைந்து வஞ்சவினை வேர்களைவான் வம்மின்க ளென்றானே. (இ-ள்.) அஞ்செவியில் ஊறுபடக் கேட்டபடி - அகஞ் செவியில் அழுந்தக் கேட்ட வண்ணமே, ஆலவாய்ப் பஞ்சமுகச் சோதிப் பரனை - திருவாலவாயி லெழுந்தருளிய ஐந்து திருமுகங் களையுடைய ஒளி வடிவினனாகிய சோமசுந்தரக் கடவுளை, போய் அர்ச்சித்து - அங்குச் சென்று அருச்சித்து, நெஞ்சம் நெகக் கண்டு - நெஞ்சு நெக்குவிட்டுருகத் தரிசித்து, நினையா வழி நினைந்து - (முன்னொரு காலத்தும்) நினையாத திருவருள் வழியே நினைந்து, வஞ்சவினை வேர்களைவான் வம்மின்கள் என்றான் - வஞ்சித்துப் பிறவியிற் செலுத்தும் வினைகளுக்கு மூலமாகிய ஆணவத்தைப் போக்குதற்கு வருவீராக வென்று கூறினான். ஊறுபட - நன்கு பொருந்த. ஊறு : முதனிலை திரிந்த தொழிற் பெயர். பஞ்ச முகம் - ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்பன. வினையை வேரொடுங் களைய என்று மாம். களைவான் : வினையெச்சம். வம்மின்கள், கள் : அசை. (6) மங்கல வோரை வருதினத்தில் வானிழிந்த கங்கை படிந்துலக நாயகனைக் கைதொழுது புங்கவர்முன் சங்கற்பஞ் செய்தனுச்சை பூண்டொழுகி அங்கவர்வா யாசி மொழிகேட் டகமகிழ்ந்தே. (இ-ள்.) புங்கவர் - வசிட்டர் முதலிய முனிவர்கள், அங்கு அவர் முன் சங்கற்பம் செய்து - அவ்விடத்தில் அவ்வகத்திய முனிவர்முன் சங்கற்பஞ் செய்து கொண்டு, வாய் ஆசி மொழி கேட்டு - அவர் வாயிலிருந்து வரும் வாழ்த்துரையைக் கேட்டு, அகமகிழ்ந்து அனுச்சை பூண்டு ஒழுகி - மன மகிழ்ந்து விடை பெற்றுச் சென்று, மங்கல ஓரை வருதினத்தில் - மங்கலமான நல்லோரை வரும் நாளில், வான் இழிந்த கங்கை படிந்து - வானி னின்றும் இழிந்த கங்கையில் நீராடி, உலக நாயகனைக் கைதொழுது - விசுவநாதனைக் கையாற் றொழுது. ஓசை - முழுத்தம். உலக நாயகன் - விச்சுவநாதன்; வாரணாசியில் எழுந்தருளி யிருக்கும் பெருமான். புங்கவர் அங்கு அவர் முன் என மாறுக. சங்கற்பம் நீராடற் பொருட்டும் தலயாத்திரையின் பொருட்டும் செய்தா ரென்க. அனுச்சை - உடன்பாடு; அநுக்ஞை என்பதன் சிதைவு. (7) ஐம்புலனுங் கூடற் பெருமா னடியொதுக்கி நம்பனுரு வெழுத்தைந்து நாவாடக் கைகூப்பித் தம்புனித சைவத் தவத்தெய்வத் தேர்மேற்கொண் டும்பர் வழிநடக்க லுற்றார்க ணற்றவரே. (இ-ள்.) நல் தவர் - நல்ல தவத்தினையுடைய அம்முனிவர்கள், ஐம்புலனும் கூடல் பெருமான் அடி ஒதுக்கி - ஐந்து பொறிகளையும் கூடல் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடியிற் பதியுமாறு ஒதுக்கி, நம்பன் உரு எழுத்து ஐந்தும் நா ஆட - அவ் விறைவன் திருவுருவமாகிய திருவைந் தெழுத்தையும் நா உருவேற்ற, கைகூப்பி - கைகளை முடியிற் கூப்பி, தம்புனித சைவ தவத் தெய்வத் தேர் மேற் கொண்டு - தமது தூய சைவ நெறியிற் றப்பாத தவமாகிய தெய்வத் தன்மை பொருந்திய தேரில் ஏறி, உம்பர் வழி நடக்க லுற்றார்கள் - வான் வழியாக நடக்கத் தொடங்கினர். நா ஆட - நா உச்சரிக்க. தவ வலியால் விசும்பு நெறிச் செல்லு தலை தவத் தெய்வத் தேர் மேற்கொண்டு உம்பர் வழி நடக்கலுற்றார் என்றார்; மேல் கீரனுக்கிலக்கண முபதேசித்த படலத்தில், “ உடைய நாயகன் றிருவுள முணர்ந்தனன் முடிமேல் அடைய வஞ்சலி முகிழ்த்தன னருந்தவ விமானத் திடைபு குந்தனன் பன்னியோ டெழுந்தன னகல்வான் நடைய னாகிவந் தடைந்தன னற்றமிழ் முனிவன்” எனவும், “ இயங்கு மாதவத் தேரினும் பன்னியோ டிழிந்து” எனவும் கூறியிருத்தல் காண்க. மேல் வம்மின்க ளென்றானே என்ற மையின் அகத்தியனாரும் ஒருங்கு சென்றமை பெறப்படும். (8) செய்ய சடையர் திருநீறு சண்ணித்த மெய்யர்தவ நோற்றிளைத்த மேனியின ருட்புறம்புந் துய்யரணி கண்டிகையர் தோலு மருங்குடையர் ஐயர் தவத்துக் கணிகலம்போற் போதுவார். (இ-ள்.) தவத்துக்கு அணிகலம்போல் ஐயர் - தவத்திற்கு அணிகலம் போலும் முனிவர்கள், செய்ய சடையர் - சிவந்த சடையினை யுடையராய், திருநீறு சண்ணித்த மெய்யர் - திருநீறு தரித்த உடலினை யுடையராய், தவம் நோற்று இளைத்த மேனியினர் - தவம் புரிதலால் இளைத்த உருவினை யுடையராய், உள் புறம்பும் துய்யர் - அகமும் புறமும் தூய்மை யுடையராய், அணி கண்டிகையர் - அணிந்த உருத்திராக்க மாலையை யுடையராய், தோலும் மருங்கு உடையர் போதுவார் - தோலையும் இடையில் உடையராய்ப் போவாராயினர். தவ எனப் பிரித்து உரிச்சொல்லாக்கி மிக நோற்று என்றுரைப் பாரும், ஐய தவத்துக்கு எனப் பாடங்கொண்டு அழகிய தவத்துக்கு என்றுரைப்பாரும் உளர். தோலும் என்பதன் உம்மை எச்சப் பொருட்டு. தவமும் இவராற் சிறப்படைந்த தென்பார் ‘தவத்துக் கணிகலம்போல்’ என்றார். ஐயர் அணிகலம்போற் போதுவார் எனக் கிடந்தாங்கு உரைத்தலுமாம். “ மானின், உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந் தியங்கும் யாக்கையர்” என்று திருமுருகாற்றுப்படையும், “ மாசிலாத மணிதிகழ் மேனிமேற் பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்கள்” என்று பெரியபுராணமும் கூறுவன இங்கு நோக்கற் பாலன. (9) அறுசீரடியாசிரிய விருத்தம் புண்ணியந் தழைக்குந் தெய்வத் தலங்களும் புலன்கள் வென்றோர் நண்ணிய வனமுந் தீர்த்த நதிகளுந் தவத்தோர் நோற்கும் வண்ணமு நோக்கி நோக்கி மலயமா முனிவன் காட்டக் கண்ணிணை களிப்ப நோக்கிக் கைதொழு திறைஞ்சிச் செல்வார். (இ-ள்.) புண்ணியம் தழைக்கும் தெய்வத் தலங்களும் - அறத்தைப் பெருக்குந் தெய்வத் திருப்பதிகளையும், புலன்கள் வென்றோர் நண்ணிய வனமும் - ஐம்புலன்களையும் வென்றடக்கிய முனிவர்கள் வசிக்கும் காடுகளையும், தீர்த்த நதிகளும் - தூயநதிகளையும், தவத்தோர் நோற்கும் வண்ணமும் நோக்கி நோக்கி - முனிவர்கள் தவம் புரியுந் தன்மையையும் ஆராய்ந்து கண்டு, மலயமா முனிவன் காட்ட - பொதியின் மலையை யுடைய குறுமுனிவன் காட்ட, கண் இணை களிப்ப நோக்கி - கண்க ளிரண்டும் களிப்பக் கண்டு, கைதொழுது இறைஞ்சிச் செல்வார் - கைகூப்பி வணங்கிச் செல்வாராயினர். அங்கே புரியும் புண்ணியம் ஒன்று பலவாகப் பல்கும் என்பார் புண்ணியந் தழைக்குந் தெய்வத் தலங்கள் என்றார். தீர்த்தங்களும் நதிகளும் என்றுமாம். (10) சீறுகொ ளிலங்கை வேந்தைச் செகுத்திட விராமன் பூசித் தாறணி விரூபக் கண்ண னருள்பெறு தலமீ தும்பர் ஏறிவீழ்ந் திறந்தோர் முன்ன மெண்ணிய வெண்ணி யாங்கே மாறிய பிறப்பி னல்கு மலையிது காண்மின் காண்மின். (இ-ள்.) சீறுகொள் இலங்கை வேந்தைச் செகுத்திட - சினத்தலைக்கொண்ட இலரங்கை மன்னனாகிய இராவணனைக் கொல்லுதற்கு, இராமன் பூசித்து - இராமன் வழிபட்டு, ஆறு அணி விரூபக்கண்ணன் அருள்பெறு தலம் ஈது - கங்கையை யணிந்த விரூபாக்கனாகிய சிவபெருமானது திருவருளைப் பெற்ற ஏமகூடம் இத்திருப்பதியாம்; உம்பர் ஏறி வீழ்ந்து இறந்தோர் - உச்சியில் ஏறிக் கீழே வீழ்ந்து இறந்தவர்கள், முன்னம் எண்ணிய எண்ணியாங்கு - முன் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைய, மாறிய பிறப்பில் நல்கும் மலை இது - மறுபிறவியில் அவர்கட்கு அளிக்குந் திருப் பருப்பதம் இது; காண்மின் காண்மின் - இவற்றைப் பாருங்கள் பாருங்கள். சீறு : முதனிலைத் தொழிற் பெயர் - விரூபக் கண்ணன் - விரூபாக்கன்; ஏனைக் கண்களின் வேறுபட மேனோக்கிய அனற் கண்ணனாகலின் இறைவன் விரூபாக்கன் எனப் பெறுவன். இப்பதி விரூபாக்கம் எனவும் ஏமகூடம் எனவும் வழங்கப்பெறும்; இதனை, “ கொந்தொளி மணியுந் தபனியத் திரளுங் கோழரைச் சந்தனக் குறடும் கந்தமிக் குயிர்க்குங் காழகிற் றுணியுங் கையரிக் கொண்டுவீ ழருவி மைந்துடைத் திசையெண் கரிகளு நடுக்கு மண்டுபே ரோதையி னொழுகும் அந்தர நிவந்த வேமகூ டத்தி னமர்விரூ பாக்கனே யெனவும்” என்னும் காஞ்சிப் புராணச் செய்யுளா னறிக. எண்ணி யாங்கே அடைய என ஒரு சொல் விரித் துரைக்க. மலை - ஸ்ரீசைலம்; திருப்பருப்பதம். இது மல்லிகார்ச்சுனம் என்னும் பெயரு முடைத்து. இது மூவர் தேவாரமும் பெற்ற வடநாட்டுத் திருப்பதி. அடுக்கு உவகை பற்றியது விரைவு பற்றியதுமாம். (11) சுரபிநீள் செவியி லிங்கச் சுடருரு வாயி னான்றன் இரவினிற் றிருத்தேர் மன்றல் நடக்குமூ ரிவ்வூர் மேலை உரவுநீர்க் கரைத்தேண் மாதத் துயர்ந்தகார்த் திகையிற் றேரூர்ந் தரவுநீர்ச் சடையான் வேள்வி நடக்குமூ ரவ்வூர் காண்மின். (இ-ள்.) சுரபி நீள் செவி சுடர் இலிங்க உருவாயினான்றன் இரவினில் - பசுவினது நீண்ட காதைப்போல ஒளியினையுடைய இலிங்க வடிவாகிய இறைவனது சிவநிசியில், திருத்தேர் மன்றல் நடக்கும் ஊர் இவ்வூர் - திருத்தேர் விழா நடக்கும் திருக்கோகர்ணம் இத்திருப்பதியாம்; மேலை உரவு நீர்க்கரை - மேலைக் கடற் கரையில், தேள் மாதத்து உயர்ந்த கார்த்திகையில் - கார்த்திகைத் திங்களில் சிறந்த கார்த்திகை நாளில், அரவுநீர்ச் சடையான் தேர் ஊர்ந்து - பாம்பையுங் கங்கையையு மணிந்த சிவபெருமான் தேரில் ஏறியருள, வேள்வி நடக்கும் ஊர் அவ்வூர் - திருவிழா நடக்கும் திருவஞ்சைக்களம் அத்திருப்பதியாம்; காண்மின் - பாருங்கள். சுரபி நீர் செவி - ஆனின் நெடிய காது; கோகர்ணம். இராவணன் இலங்கையில் நிறுவுமாறு சிவபிரான்பாற் பெற்றுக் கொணர்ந்த சிவலிங்கத்தை வானோர் வேண்டுகோளின்படி விநாயகர் வாங்கிக் கீழ்வைத்துப் பிரதிட்டை செய்துவிடலும், இராவணன் அதனைப் பெயர்த் தெடுக்கத் தன் ஆற்றல்கொண்டு இழுத்தகாலை அவ்விலிங்கம் பசுவின் காதுபோற் குழைந்தமையின் ‘கோகர்ணம்’எனப் பெறுவதாயிற்று. சுடருருவாயினான்றன் இரவு- மகா சிவராத்திரி. தேர் மன்றல் - இரதோற்சவம். இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவர் பாடல்பெற்ற துளுவ நாட்டுத் திருப்பதி. உரவு நீர் - வலிய நீர், கடல். தேள் மாதம் - விருச்சிக ராசியில் ஆதித்தன் இருக்கும் கார்த்திகைத் திங்கள். உயர்ந்த கார்த்திகை - கார்த்திகைத் திங்களில் வரும் திருக்கார்த்திகை. ஊர்ந்து என்பதை ஊர எனத் திரிக்க. அஞ்சைக்களம் என்பது சுந்தரர் பாடல் பெற்ற மலைநாட்டுத் திருப்பதி. வேள்வி நடக்கும் ஊர் சோமநாதம் என்பாரு முளர். (12) விற்பயி றடக்கை வேடன் மென்றவூன் பாகம் பார்த்தோன் பொற்புறு கிரியீ தண்டம் புழைபட விடத்தா ணீட்டி அற்புதன் காளி தோற்க வாடிய திதுமா நீழற் கற்புடை யொருத்தி நோற்கும் பிலமிது காண்மின் காண்மின். (இ-ள்.) வில்பயில் தடக்கைவேடன் மென்ற ஊன் - வில்லை யேந்திய பெரிய கையையுடைய வேடர் குலத்தினராகிய கண்ணப்பர் மென்ற ஊனினை, பாகம் பார்த்தோன் பொற்பு உறு கிரி ஈது - சுவை பார்த்த இறைவன் எழுந்தருளிய அழகிய திருக்காளத்திமலை இது; புழைபட அண்டம் இடத்தாள் நீட்டி - அண்டந் தொளைபடுமாறு- இடக்காலை நீட்டி, அற்புதன்ஞானவடிவினனாம் இறைவன், காளி தோற்க ஆடியது இது - காளி தோல்வியடைய ஆடியருளிய திருவாலங்காடு இது; மாநீழல் - மாமரத்தின் நிழலில். கற்புடை ஒருத்தி நோற்கும் பிலம் இது காண்மின் காண்மின் - கற்புடைய காமாட்சியம்மை தவஞ் செய்யும் பிலத்துவாரமாகிய காஞ்சிபுரம் இது பாரும் பாரும். பாகம் பார்த்தல் - சுவை பார்த்தல்; ஈண்டுத் திருவமுது செய்தல் என்னும் பொருட்டு. கண்ணப்பர் ஊனினை மென்று அளித்தமையை, “ வெய்யகனற் பனங்கொள்ள வெந்துளதோ வெனுமன்பால் நையுமனத் தினிமையினி னையமிக மென்றிடலாற் செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில் எய்யும்வரிச் சிலையவன்றா னிட்டவூ னெனக்கினிய” என்னும் பெரியபுராணச் செய்யுளா னறிக. இத்தலம் பாம்பும் யானையும் வழிபட்டமையால் காளத்தி யென்னும் பெயர் பெற்றது; விராட் புருடனுக்கு விசுத்தித்தானமாகவும், ஐம்பூதத் தலங்களுள் வாயுத்தலமாகவும், தென் கயிலாயம் என்று சிறப்பிக்கப் பெறுவதாகவும் உள்ளது; அன்பு பிழம்பாகிய கண்ணப்பர் ஆறு நாளிலே முத்தி பெற்று இறைவற்கு வலப்பத்தில் எழுந்தருளி யிருக்கும் பெருமையுடையது; மூவர் தேவாரமும் பெற்ற தொண்டை நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. அற்புதன் காளி தோற்க ஆடியது - சிவபெருமான் தம்மோடு வாது செய்த காளியை ஊர்த்துவ தாண்டவம் புரிந்து தோல்வியுறுவித்த தலம்; திருவாலங்காடு; ஐந்து மன்றங்களுள் வடக்கிலுள்ளதாகிய இரத்தின மன்றம்; காரைக் காலம்மையார் தலையாலே நடந்துவந்து இறைவனுடைய திருவடிக் கீழ் என்றுமிருக்கும் பெருமை சான்றது; மூவர் தேவாரங்களுடன் அம்மையார் பாடிய பதிகங்களும் பெற்றுள்ள தொண்டை நாட்டுத் திருப்பதி; இஃது அடுத்துள்ள பழையனூருடன் சேர்த்துப் பழையனூ ராலங்காடு என்று பதிகங்களிற் கூறப்பெற்றுள்ளது. காரைக் காலம்மையார் தலையால் நடந்து வந்து பதிகங்கள் பாடித் திருவடிக்கீழ் இருத்தலை, “ அப்பரி சருளப் பெற்ற வம்மையுஞ் செம்மை வேத மெய்ப்பொரு ளானார் தம்மை விடைகொண்டு வணங்கிப் போந்து செப்பரும் பெருமை யன்பாற் றிகழ்திரு வாலங் காடாம் நற்பதி தலையி னாலே நடந்துபுக் கடைந்தா ரன்றே” “ ஆலங்கா டதனி லண்ட முறநிமிர்ந் தாடு கின்ற கோலங்காண் பொழுது கொங்கை திரங்கியென் றெடுத்துத் தங்கு மூலிங்கா ணாதார் தம்மை மூத்தநற் பதிகம் பாடி ஞாலங்கா தலித்துப் போற்று நடம்போற்றி நண்ணு நாளில்” “ மட்டவிழ்கொன் றையினார்தந் திருக்கூத்து முன்வணங்கும் இட்டமிகு பெருங்காத லெழுந்தோங்க வியப்பெய்தி எட்டியில வம்மீகை யெனவெடுத்துத் திருப்பதிகம் கொட்டமுழ வங்குழக னாடுமெனப் பாடினார்” “ மடுத்தபுனல் வேணியினா ரம்மையென மதுரமொழி கொடுத்தருளப் பெற்றாரைக் குலவியதாண் டவத்திலவர் எடுத்தருளுஞ் சேவடிக்கீ ழென்றுமிருக் கின்றாரை அடுத்தபெருஞ் சீர்பரவ லாரளவா யினதம்மா” என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுட்களானறிக. கற்புடை யொருத்தி நோற்கும் பிலம் - உமாதேவியார் திருக்கைலையினின்றும் எழுந்தருளி வந்து இறைவனைப் பூசித்து எண்ணான்கு அறங்களும் செய்து கொண்டு தவம்புரியும் பிலம்; காஞ்சிபுரம். இது சத்தபுரிகளுள் ஒன்று; கச்சியேகம்பம், கச்சிமேற்றளி, கச்சிய னேகதங்காவதம். கச்சிமயானம், ஓணகாந்தன்றளி, கச்சிநெறிக் காரைக்காடு என்னும் திருப்பதிகளைத் தன்னகத்துடையது. மூவர் தேவாரமும் பெற்ற தொண்டை நாட்டுப் பெரும்பதி. இதன் பெருமைகள் அளவிறந்தன. அவற்றைக் காஞ்சிப் புராணம் முதலியவற்றானறிக. பிலம் : ஆகுபெயர்; (13) திருமறு மார்பன் காவற் செயல்பெற வரனைப் பூசித் திருகர முகிழ்த்து நேர்நின் றேத்திட மிதுவா மோத்தின் உரைவரம் பகன்ற முக்க ணுத்தமன் சந்தை கூட்டி அருமறை யறவோர்க் கோது வித்திட மதனைக் காண்மின். (இ-ள்.) திருமறு மார்பன் - திருமகளையும் மறுவினையுமுடைய மார்பினையுடைய திருமால், காவல் செய்ல்பெற - காவற்றொழிலைப் பெறுவதற்கு, அரனைப் பூசித்து - சிவபெருமானை வழிபட்டு, இருகரம் முகிழ்த்து நேர்நின்று ஏத்து இடம் இது - இரண்டு கைகளையுங் கூப்பி எதிர்நின்று துதித்த திருமாற் பேறென்னும் பதியிது; ஓத்தின் உரைவரம்பு அகன்ற முக்கண் உத்தமன் - மறையின் பொருளெல்லையைக் கடந்த முக்கண்ணிறைவன், அறவோர்க்கு சந்தை கூட்டி அருமறை ஓதுவித்த இடம் அதனைக் காண்மின் - முனிவருக்குச் சந்தை கூட்டி அரிய மறையினை ஓதுவித்த இடமாகிய அத்திருவோத்தூரைக் காணுங்கள். மறு - ஸ்ரீவத்ஸம். திருவாகிய மறு என்றுமாம். ஏத்திடம் - திருமாற்பேறு; திருமால் கண்ணினை இடந்து பூசித்து இறைவன்பாற் சக்கரம் பெற்றது; இது திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர் என்னும் இருவர் தேவாரம் பெற்ற தொண்டை நாட்டுத் திருப்பதி. சந்தை அநுட்டுப் முதலிய சந்தசுகள்; சந்தை கூட்டி என்பதற்கு வேதவாக்கியங்களை ஒரு சேரச் சொல்வித்து என்றுரைப் பாருமுளர். ஓதுவித்த என்பதன் அகரம் விகாரத்தால் தொக்கது. ஓதுவித்த இடம் - சிவபெருமான் தேவர்கட்கும் முனிவர்கட்கும் வேதத்தை ஓதுவித்த தலம்; திருவோத்தூர்; இது திருஞான சம்பந்தப் பெருமான் பதிகம்பாடி ஆண்பனையைப் பெண்பனையாக்கிய அற்புதம் நிகழப்பெற்றது; திருஞானசம்பந்தர் தேவாரம் பெற்ற தொண்டை நாட்டுத் திருப்பதி. “ குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர் அரும்பு கொன்றை யடிகளைப் பெரும்பு கலியுண் ஞானசம் பந்தன்சொல்ல விரும்பு வார்வினை வீடே” என்னும் சம்பந்தர் திருக்கடைக் காப்பு நோக்கற்பாலது. (14) அடிமுடி விலங்கும் புள்ளு மளந்திடா தண்டங் கீண்டு நெடுகிய நெருப்பு நின்ற நிலையிது முள்வாய்க் கங்க வடிவெடுத் திருவர் நோற்கு மலையிது பல்வே றூழி இடையுற முன்னும் பின்னு மிருக்குமக் குன்றைக் காண்மின். (இ-ள்.) அடிமுடி விலங்கும் புள்ளும் அளந்திடாது - அடியையும் முடியையும் பன்றியாகிய திருமாலும் அன்னமாகிய பிரமனும் அளந்து காணாமல், அண்டம் கீண்டு நெடுகிய நெருப்பு நின்ற நிலை இது - அண்டத்தைக் கிழித்து நீண்ட அனல் வடிவாய் நிலைபெற்ற அண்ணாமலை இது; இருவர் முள்வாய்க் கங்கவடிவு எடுத்து நோற்கும் மலை இது - இருவர் முள்போலும் வாயினையுடைய கழுகுவடிவமெடுத்துத் தவம்புரியும் திருக்கழுக்குன்றம் இது; பல்வேறு ஊழி இடை உற - பலவேறாகிய ஊழிகள் இடையில் வர, முன்னும் பின்னும் இருக்கும் அக்குன்றைக் காண்மின் - அவற்றுக்கு முன்னும் பின்னும் இருக்கும் அப்பழ மலையைப் பாருங்கள். நெடுகிய நெருப்பு நின்ற நிலை - தாம் தாமே பரமெனத் தருக்குற்ற திருமாலும் பிரமனும் முறையே பன்றியுருவும் அன்னவுருவுங் கொண்டு தேடி அடியும் முடியுங் காணாது அயர்க்குமாறு நீண்ட அக்கினியுருவாகிய சிவபெருமான் நின்ற இடம்; திருவண்ணாமலை; இது தேயுவி லிங்கத்தலம்; திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர் என்னும் இருவர் தேவாரம் பெற்ற நடுநாட்டுத் திருப்பதி. கங்கம் - கழுகு. கங்கவடி வெடுத்து இருவர் நோற்கும் மலை - நான்கு யுகங்களிலும் முறையே சண்டன் பிரசண்டன், சம்பாதி சடாயு, சம்புகுந்தன் மாகுத்தன், பூடா விருத்தா என்னும் இவ்விருவர் கழுகுருக் கொண்டு சிவபெருமானைப் பூசிக்கப்பெற்ற மலை; திருக்கழுக்குன்றம்; இற்றைக்கும் இரு கழுகுகள் பூசித்தலைப் பல்லோ ரறிவர். இது மூவர் தேவாரம் பெற்ற தொண்டை நாட்டுத் திருப்பதி. பல்வே றூழி இடையுற முன்னும் பின்னும் இருக்கும் குன்று - எண்ணிறந்த பிரளயங்கள் இடையே வந்து கழிய அவற்றின் முன்னும் பின்னும் அழிவின்றி நிலைபெற்றிருக்கும் பழமையுடைய மலை; திருமுது குன்றம், விருத்தாசலம். இப்பகுதியில் நம்பியாரூரர். இறைவனைப் பாடிப் பொன்பெற்று மணி முத்தாநதியி லிட்டுத் திருவாரூர்க் கமலாலயத்தில் எடுத்த அற்புதச் செய்தி பெரிய புராணத்தால் அறியப்படும். இது மூவர் தேவாரமும் பெற்ற நடுநாட்டுத் திருப்பதி. (15) அவுணரிற் கள்வ னான வந்தகற் காய்ந்து மூன்று புவனமுங் கவலை தீர்த்த புண்ணியன் புரமீ தாகும் தவலரும் புரங்கண் மூன்றுந் தழனுதற் றிருக்கண் சாத்திப் பவமறு மூவ ரன்பிற் பட்டவன் பதியைக் காண்மின். (இ-ள்.) அவுணரில் கள்வனான அந்தகன் காய்ந்து - அவுணருள் வஞ்சமிக்குடையவனாகிய அந்தகாசுரனைக் கொன்று, மூன்று புவனமும் கவலைதீர்த்த புண்ணியன் புரம் ஈது ஆகும் - மூன்று உலகங்களிலுள்ளவர்களின் துன்பத்தையும் நீக்கிய அறவடிவினனாகிய சிவபெருமானது திருக்கோவலூர் வீரட்டானம் இஃதாகும்; தவல் அரும் புரங்கள் மூன்றும் - அழிதலில்லாத மூன்று புரங்களிலும், நுதல் திரு தழல் கண்சாத்தி - நெற்றியிலுள்ள அழகிய நெருப்பு விழியைச் சாத்தி (அவற்றை அழித்து, ஆங்குள்ள), பவம் அறு மூவர் அன்பில் பட்டவன் பதியைக் காண்மின் - பிறப்பற்ற மூவர்களின் அன்புவலையில் அகப்பட்ட அவ்விறைவன் பதியாகிய திருவதிகை வீரட்டானத்தைப் பாருங்கள். அந்தகற் காய்ந்த வரலாறாவது, இரணியாக்கன் புதல்வனாகிய அந்தகாசுரன் என்பான் பிரமனை நோக்கித் தவம்புரிந்து வரம்பெற்று இந்திரன் முதலிய இமையவர்களை வருத்தும் பொழுது அவர்கள் சிவபெருமானைச் சரண்புக இறைவன் போரிலெதிர்த்த அவுணர்களை யெல்லாங்கொன்று அவ்வந்தகனைச் சூலத்தாற் குத்தியேந்தி அமரரைக் காத்தனர் என்பது, சத்தியும் சிவமுமாயிருந்து உயிர்கட்குப் போக முத்திகளை நல்குதலின் புண்ணியன் என்றார். பிற சமயத்தாசிரியரும், “ போக மீன்ற புண்ணியன்” எனச் சிவபிரானைக் கூறுதல் காண்க. புண்ணியன் புரம் - திருக்கோவலூர் வீரட்டம்; இஃது அட்ட வீரட்டத்து ளொன்று; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரையர் என்னும் இருவர் பாடல்பெற்ற நடுநாட்டுத் திருப்பதி. மூவர் - சுதன்மன், சுசீலன், சுபுத்தி என்பார். இறைவன் முப்புரம் எரித்த ஞான்று மூவர்க்க அருள் செய்தமையை, “ பூவார் மலர்கொண் டடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள் மூவார் புரங்க ளெரித்த வன்று மூவர்க் கருள் செய்தார் தூமா மழைநின் றதிர வெருவித் தொறுவின் னிரையோடும் ஆமாம் பிணைவந் தணையுஞ் சார லண்ணா மலையாரே” என்னும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்கா லறிக. மூவரன்பிற் பட்டவன் பதி - திருவதிகை வீரட்டம்; அட்ட வீரட்டத்து ளொன்று; மருணீக்கியார் தமக்கையாராகிய திலகவதியம்மையாரைப் பணிந்து திருநீறு பெற்றுக் ‘கூற்றாயினவாறும்’ என்னும் பதிகம்பாடிச் சூலைநோய் நீங்கி, இறைவனளித்த திருநாவுக்கரசர் என்னும் பெயரினை யெய்திப் பாடற்றொண்டுடன் உழவாரத் தொண்டு புரிந்த பதி. மூவர் தேவாரமும் பெற்ற நடுநாட்டுத் திருப்பதி. (16) சத்திய ஞானா னந்த தத்துவ மசைவற் றாடும் நித்திய பரமா னந்த நிறையருண் மன்ற மீது முத்தியங் குதித்தோ ரெய்தும் பதியது முதனூ னான்கும் பத்தியிற் பூசித் தேத்தும் பதியிது வாகும் பார்மின். (இ-ள்.) சத்திய ஞான ஆனந்த தத்துவம் - சச்சிதானந்த மெய்ப்பொருளாகிய திருக்கூத்தப்பெருமான், அசைவு அற்று ஆடும் - அசைவின்றி ஆடியருளப்பெற்ற, பரம ஆனந்த நிறை நித்திய அருள்மன்றம் ஈது - சிவானந்தம் நிறைந்த அழியாத அருண்மன்றமாகிய சிதம்பரம் இது; அங்கு உதித்தோர் முத்தி எய்தும் பதி அது - தன்கட் பிறந்தவர் வீடுபேற்றினை அடையப்பெறும் திருப்பதியாகிய திருவாரூர் அது; முதல் நூல் நான்கும் - முதல் நூலாகிய மறைகள் நான்கும், பத்தியில் பூசித்து ஏத்தும் - அன்போடு வழிபட்டுத் துதிக்கும், பதி இது ஆகும் - திருமறைக்காடு இதுவாகும்; பார்மின் - பாருங்கள். சத்தியம் ஞானம் ஆனந்தம் - சச்சிதானந்தம். தத்துவம் - மெய்ப் பொருள். தாம் அசைதலின்றியே எவ்வுயிரையும் அசைவிப்பாராகலின் அசைவற்றாடும் என்றார்; வியாபகப் பொருட்கு அசைவு கூடாமை அறிக. மன்றம் - பொற்சபை; திருச்சிற்றம்பலம்; அதனையுடைய தில்லைப்பதி. இஃது ஆகாய விலிங்கத்தலம்; விராட் புருடனுக்கு அநாகதமாகிய இதய கமலமாகவுள்ளது. சகல வேதாகமாதி மெய்ந் நூல்களாற் போற்றப்படும் இதன் பெருமை அளவிட முடியாதது. இது மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டு முதற்றிருப்பதி. முத்தி அங்கு உதித்தோர் எய்தும் பதி - திருவாரூர்; இது பிறக்க முத்திதரும் தலமென்பது மெய்ந்நூற் கொள்கை. இப்பதி விராட் புருடனுக்கு மூலாதாரத் தானமாகவும், பிருதிவிலிங்கத் தலமாகவும் உள்ளது; இலக்குமி பூசித்தமையாற் கமலையென்னும் பெயருமுடையது; மனுநீதிச் சோழர் உயிர்துறந்த ஆன்கன்றின் பொருட்டுத் தன் மகனைத் தேர்க்காலி லூர்ந்து முறைசெய்து திருவருள் பெற்றது; முசுகுந்தச் சக்கரவர்த்தி திருமால் முதலானோரால் பூசிக்கப்பெற்ற ஆன்மார்த்த மூர்த்தியாகிய தியாகேசரை இந்திரன்பாற் பெற்றுக் கொணர்ந்து பிரதிட்டிப்பித்தது; நம்பியாரூரர் சிவபெருமானால் அழைக்கப்பெற்றுச் சென்று பரவையாரை மணந்து தம்பிரான்றோழர் என்னும் பெயரும் பெற்று இன்புற்றிருந்தது; அவரால் திருத்தொண்டாகள் வரலாற்றுக் கெல்லாம் மூலமாகிய திருத்தொண்டத் திருத்தொகை அருளப் பெற்றது; மற்றும் எண்ணிறந்த சிறப்புக்களுடையது. இது மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. முதல் நூல் நான்கும் - நான்கு வேதங்களும், ஏத்தும் பதி - திரு மறைக்காடு; வேதாரணியம். இது வேதங்கள் பூசித்துத் திருக்காப்பிட்ட திருக்கதவினைத் திருநாவுக்கரசர் பதிகம் பாடித் திறந்தும், திருஞான சம்பந்தர் பதிகம் பாடி அடைத்தும் தமிழ் வேதமெய்ம்மை தெரித்தருளப் பெற்றது; மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. (17) பிரமன்மான் முதலாந் தேவர் பிரளயத் திறவா வண்ணம் பரமனார் தோணி யேற்றும் பன்னிரு நாமம் பெற்ற புரமிது சடாயு சம்பா திகள்பெரும் பூசை செய்ய வரமளித் திருணோய் தீர்க்கு மருந்துறை பதியீ தாகும். (இ-ள்.) பிரமன் மால் முதலாம் தேவர் - பிரமனுந் திருமாலு முதலிய தேவர்கள், பிரளயத்து இறவாவண்ணம் பரமனார் தோணி ஏற்றும் - பிரளய காலத்தில் இறந்துபோகாவாறு இறைவனார் தோணியின்கண் ஏற்றப்பெறும், பன்னிருநாமம் பெற்ற புரம் இது - பன்னிரண்டு திருப்பெயர்களைப் பெற்ற நகரமாகிய சீகாழிப்பதி இது; சடாயு சம்பாதிகள் பெரும்பூசை செய்ய - சடாயுவும் சம்பாதியும் பெரிய வழிபாடியற்ற, வரம் அளித்து இருள் நோய் தீர்க்கும் மருந்து உறை பதி ஈது ஆகும் - அவர்கட்கு வேண்டிய வரங்கொடுத்து ஆணவ இருளொடு கூடிய பிறவிநோயைத் தீர்க்கும் மருந்து உறையும் புள்ளிருக்கு வேளூராகிய பதி இதுவேயாகும். தோணி யேற்றும் புரம், பன்னிரு நாமம் பெற்ற புரம் எனத் தனித்தனி கூட்டுக. பன்னிரு நாமம் இவை யென்பதனை, “ பிரமபுரம் வேணுபுரம் பெரும்புகலி வெங்குருநீர்ப் பொருவிறிருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன் வருபுறவஞ் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம் பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்” என்னும் பெரியபுராணச் செய்யுளா லறிக. இப் பன்னிரு பெயரினையும் திருஞானசம்பந்தப் பெருமான் பல பதிகத்தும் பாராட்டுதலுங் காண்க; பிரமன் பூசித்தமையாற் பிரமபுரம்; சூரபன்மன் போருக்குடைந்த இந்திரன் பூசித்த காலை இறைவன் வேணுவாய் முளைத்து அருள் செய்தமையின் வேணுபுரம்; சூரபன்மனால் துன்புற்ற வானோர்கள் பிரமேசரைப் புகலடைந்து வழிபட்டமையாற் புகலி; அசுர குருவாகிய சுக்கிரன் பூசித்தமையால் வெங்குரு; கற்பாந்தத்தில் அழியாது தோணியாக மிதந்தமையின் தோணிபுரம்; வெள்ளைப் பன்றி யுருக்கொண்டு இரணியாக்கனைக் கொன்று, பூமியைக் கொம்பிலேற்று நிறுவிய திருமால் பூசித்தமையின் பூந்தராய்; வெட்டுண்ட தலைக் கூறாகிய இராகு பூசித்தமையின் சிரபுரம்; சிபியின்பாற் புறாவுருக் கொண்டுவந்து சோதித்த அக்கினி பூசித்தமையிற் புறவம்; சண்பைப் புல்லை ஆயுதமாகக் கொண்டு பொருது மடிந்த யாதவர் கொலைப்பழி தன்னை அணுகா வண்ணம் கண்ணன் பூசித்தமையிற் சண்பை; காளி பூசித்தமையாற் காழி; பராசரர் மச்சகந்தியைச் சேர்ந்து பெற்ற முடை நாற்றமும் பழியும் போகப் பூசித்தமையின் கொச்சைவயம்; உரோமச முனிவர் ஞானோபதேசம் பெற்று மலங்கழுவப் பெற்றமையின் கழுமலம் எனப் பெயர்க் காரணங் காண்க; இன்னும் வெவ்வேறு காரணங் கூறப்படுவனவும் உள. இப்பதி சைவசமய முதற்குரவராகிய திருஞானசம்பந்தர் திருவவதாரஞ் செய்து மூன்றாம் ஆண்டிலே சிவபெருமான் உமா தேவியாருடன் எழுந்தருளிச் சிவஞானம் கலந்த திருமுலைப்பால் ஊட்டியருளப் பெற்றுத் ‘தோடுடைய செவியன்’ என்னும் பதிகம் பாடி இறைவனைச் சுட்டி காட்டிய பெருமை வாய்ந்தது; மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. இருள் நோய் தீர்க்கும் - உயிர்ப் பிணியாகிய ஆணவ இருளையும் உடற் பிணியையும் தீர்க்கும் என்றுமாம். மருந்து என்றது வைத்திய நாதனாகிய இறைவனை, மருந்துறைபதி - திருப்புள்ளிருக்கு வேளூர்; வைத்தீசுவரன் கோயில்; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர் பாடல் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. நோய் தீர்க்கும் மருந்து என்ற கருத்தினை, “ பேராயி ரம்பரவி வானோ ரேத்தும் பெம்மானைப் பிரிவிலா வடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானை மந்திரமுந் தந்திரமு மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத் திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே யாற்றநாள் போக்கி னேனே” என்னும் திருத்தாண்டகத்திற் காண்க. (18) மதிநுத லிமயச் செல்வி மஞ்ஞையாய் வழிபட் டேத்தும் இதுதுலாப் பொன்னித் தான மெம்மனோர் மூன்று கோடி மதிபெறு முனிவர் வந்து வழிபடு மூதூ ரீதிப் பதியறக் கடவுள் பூசை பண்ணிய தானங் காண்மின். (இ-ள்.) மதி நுதல் இமயச் செல்வி - பிறைச் சந்திரனை யொத்த நெற்றியை யுடைய பனிமலையின் புதல்வியாகிய உமையம்மையார், மஞ்ஞையாய் வழிபட்டு ஏத்தும் இது - மயிலுருக் கொண்டு வழிபட்டுப் பரவும் இப்பதி, துலாப் பொன்னித்தானம் - ஐப்பசித் திங்களில் தன்னில் மூழ்குவோருக்கு வீடுபேற்றினை யருளுங் காவிரியை யுடைய மாயூர மென்பதாகும்; எம்மனோர் மூன்றுகோடி மதிபெறும் முனிவர் வந்து வணங்கும் மூதூர் இது - எம்மைப் போன்றாராகிய மூன்று கோடி அறிவுள்ள முனிவர்கள் வந்து வணங்குகின்ற பழம்பதியாகிய திருக்கோடிகா இதுவாகும்; இப்பதி அறக் கடவுள் பூசை பண்ணிய தானம் - இப்பதி அறக்கடவுளாகிய கூற்றுவன் வழிபட்ட தருமபுரமாகும்; காண்மின் - பாருங்கள். உமாதேவியார் மயிலுருக் கொண்டு பூசித்தமையால் மயிலாடுதுறை என்றும் மாயூரம் என்றும் பெயர் பெற்றது இப்பதி என்க. துலா - துலா விராசியில் யாவரும் நீராடும் தீர்த்த விசேடத்தை யுடைய இடம். ஐப்பசி அமாவாசையில் எல்லாத் தீர்த்தங்களும் இதன்கண் வந்து நீராடும் என இதன் சிறப்புக் கூறப்பெற்றுளது. மயிலாடுதுறை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர் தேவாரம் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. மூன்று கோடி முனிவர் வழிபடும் மூதூர் - திருக்கோடிகா; இதுவும் அவ்விருவர் தேவாரம் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. அறக்கடவுள் - இயமதருமன். தருமன் பூசித்தமையால் தருமபுரம் எனப்பட்டது. இது திருஞானசம்பந்தர் (யாழ்முரி) பதிகம் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. (19) கோடுநான் குடைய வேழந் தானவன் குறைத்த கோட்டைப் பாடற நோற்றுப் பெற்ற பதியிது மாலை சாத்துந் தாடகை மானங் காப்பான் றாழ்ந்துபூங் கச்சிட் டீர்க்கும் பீடுறு கலய னன்பி னிமிர்ந்தவெம் பிரானூ ரீதால். (இ-ள்.) கோடு நான்கு உடைய வேழம் - நான்கு கொம்பினை யுடைய ஐராவத மென்னும் யானை, தானவன் குறைத்த கோட்டை- அவுணனாகிய பானுகோபன் வெட்டிய தன் கொம்புகளை, பாடு அற நோற்றுப் பெற்ற பதி இது - துன்பம் நீங்கத் தவஞ் செய்து பெற்ற திருவெண்காடு இது; மாலை சாத்தும் தாடகை மானம் காப்பான் - மாலை சூட்டும் தாடகை என்னும் மாதின் மானத்தைக் காக்கும் பொருட்டு, தாழ்ந்து - வளைந்து, பூங்கச்சு இட்டு ஈர்க்கும் - அழகிய கச்சினைப் பூட்டி இழுத்த, பீடு உறு கலயன் அன்பின் நிமிர்ந்த - பெருமை பொருந்திய குங்கிலியக்கலய நாயனார் அன்பினால் நிமிர்ந்த, எம்பிரான் ஊர் ஈது - எம் பிரான் ஊராகிய திருப்பனந்தாள் இதுவாகும். வெள்ளை யானை பூசித்தமையால் வெண்காடு எனப்பெற்றது, யானை வழிபட்டதனை, “ சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும் அக்கரைமே லசைத்தானு மடைந்தயிரா வதம்பணிய மிக்கதனுக் கருள்சரக்கும் வெண்காடு வினைதுரக்கும் முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே” என்னும் சம்பந்தர் திருவாக்கானறிக. திருவெண்காடு மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. தாழ்ந்து பின் நிமிர்ந்த என்க. தாடகை மானங் காப்பான் தாழ்ந்த வரலாறாவது அன்பிற் சிறந்த தாடகை யென்னும் மாதராள் இறைவனை வழிபட்டு வருங்காலை ஒருநாள் திருப்பள்ளித்தாமத்தைக் கையிற் கொண்டு சாத்தலுற்ற பொழுது உடுத்திருந்த உடை நெகிழலுற்றமையின் அதனை இரு முழங்கையாலும் இடுக்கிக் கொண்டு மாலையைச் சாத்தலாற்றாது வருந்தி நிற்க, இறைவன் அம் மாதின் அன்புக் கிரங்கித் திருமுடி சாய்த்து மாலையை ஏற்றருளினர் என்பது. தாடகை பூசித்தமையால் அது தாடகையீச்சரம் எனப்பெற்றது. கலயன் - மெய்யடியார் அறுபத்து மூவருள் ஒருவராகிய குங்கிலியக் கலயனார். தாடகை பொருட்டுச் சாய்ந்து நின்ற சிவலிங்கப் பெருமானைச் செவ்வே நிறுத்தி வழிபட விரும்பிய அரசன் தன்சேனை யெல்லாம் பூட்டி இழுப்பிக்கவும் நிமிராத திருவுருவம் கலயனார் கழுத்திற் கயிறு பூண்டு இழுக்க நிமிர்ந்த வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க. திருப்பனந்தாள் திருஞான சம்பந்தர் பதிகம் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. காப்பான் : வினையெச்சம். தாபதன் என்று பாட மோதுவாரு முளர். இயபாடத்திற்குத் துருவாச முனிவன் குறைத்த இரு கொம்புகளையும் நோற்றுப் பெற்ற என்க. அம் முனிவன் சாபத்தால் இரு கொம்புடை காட்டானையான வரலாற்றை வெள்ளை யானைச் சாபந் தீர்த்த படலத்தாலறிக. சிவப்பிரியன் என்னும் முனிவன் என்றுமாம். (20) கரிமுகத் தவுணற் காய்ந்து கரிமுகத் தண்ணல் பூசை புரிசிவ நகர மீது தாரகற் பொருது செவ்வேள் அரனையர்ச் சித்த தார்க்கீழ் மணற்குறி யான்பா லாட்டிப் பரன்முடி மாலை சூடுஞ் சேய்வளம் பதியீ தாகும். (இ-ள்.) கரிமுகத்து அண்ணல் - யானை முகத்தையுடைய மூத்த பிள்ளையார், கரிமுகத்து அவுணன் காய்ந்து - கயமுகாசூரனைக் கொன்று, பூசைபுரி சிவநகரம் ஈது - வழிபாடாற்றிய திருச்செங்காட்டங்குடி இது; செவ்வேள் தாரகன் பொருது - முருகக்கடவுள் தாரகனைக் கொன்று, அரனை அர்ச்சித்தது - சிவபெருமானை வழிபட்டதும், ஆர்க் கீழ் மணல் குறி ஆன்பால் ஆட்டி - ஆத்தி மரத்தி னடியி லமைத்த மணலாலாகிய சிவலிங்கத்திற்குப் பசுவின் பாலா லாட்டி, பரன் முடிமாலை சூடும் சேய்வளம் பதி ஈது ஆகும் - அவ்விறைவன் திருமுடியிலுள்ள மாலையை அணியும் சண்டீசர் திருவவதாரஞ் செய்ததுமாகிய திருச்சேய்ஞலூர் இதுவாகும். கரிமுகத் தவுணனது குருதி பரந்தமையால் அப்பதி செங்காடு எனவும், கணபதி தாபித்துப் பூசித்தமையால் அங்குள்ள திருக்கோயில் கணபதீச்சரம் எனவும் பெயர் பெற்றன. சிவநகரம் - திருச்செங்காட்டங்குடி; சிறுத்தொண்டர் தம் புதல்வராகிய சீராளதேவரைக் கறிசெய் தூட்டிப் பேறு பெற்ற தலம்; திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர் என்னும் இருவர் பாடல் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. சேய்வளம் பதி - சேய்நல் ஊர்; திருச்சேய்ஞலூர்: இது முருகக் கடவுள் பூசித்தமையால் போந்த பெயர். இது திருஞானசம்பந்தர் தேவாரம் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. ஆர் - ஆத்தி. கணபதி யானைமுகத் தசுரனைக் கொண்று சிவபெருமானைப் பூசித்த வரலாற்றையும், முருகவேள் தாரகனைக் கொன்று இறைவனைப் பூசித்த வரலாற்றையும் கந்தபுராணத்திலும், சண்டீசர் அரனை வழிபட்டு மாலை சூடுந்தலைமைபெற்ற வரலாற்றைப் பெரிய புராணத்திலும் காண்க. (21) கறுவிவீழ் காலன் மார்பிற் சேவடிக் கமலஞ் சாத்திச் சிறுவனுக் காயு ளீந்த சேவகப் பெருமான் மேய அறைபுனற் பழன மூதூ ரதுவிது வானை தந்த குறையுடற் போர்வை போர்த்த கொற்றவன் கோயில் காண்மின். (இ-ள்.) கறுவி வீழ் காலன் மார்பில் - சினந்து மார்க்கண்டன் மேல் வீழ்ந்த காலனுடைய மார்பில், சேவடிக் கமலம் சாத்தி - சிவந்த திருவடித் தாமரையைச் சாத்தி, சிறுவனுக்கு ஆயுள் ஈந்த - அம்மாணிக்கு வாணாளைக் கொடுத்தருளிய, சேவகப் பெருமான் மேய - வீரனாகிய சிவபெருமான் எழுந்தருளிய, அறை புனல் பழனம் மூதூர் அது - ஒலிக்கும் நீரினையுடைய வயல்கள் சூழ்ந்த பழம் பதியாகிய திருக்கடவூர் அது; இது - இப்பதி, ஆனை தந்த குறை உடல் போர்வை போர்த்த கொற்றவன் கோயில் காண்மின் - யானை கொடுத்த அதனுடலினின்றும் நீங்கிய தோலாகிய போர்வையைப் போர்த்தருளிய வீரன் திருக்கோயிலையுடைய வழுவூ ரென்பது பாருங்கள். மூதூர் - கடவூர்; திருமால் முதலிய தேவர்கள் கொணர்ந்து வைத்த அமுதகடம் இலிங்கமானமையின் இப் பெயர் பெற்றது. இத்தலத்திலே மார்க்கண்டன் பொருட்டுச் சிவபிரான் இயமனை உதைத்தருளினர் என்பதனை, “ சேலினே ரனைய கண்ணார் திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப் பாலுநற் றயிர்நெய் யோடு பலபல வாட்டி யென்றும் மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற் காக வன்று காலனை யுதைப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே” என்னும் திருநாவுக்கரசர் தேவாரம் முதலியவற்றா லறிக. இஃது அட்ட விரட்டத்து ளொன்று, மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. கொற்றவன் கோயில் - திருவழுவூர்; தாருக வனத்து முனிவர்கள் பழிவேள்வியி னின்றும் தோற்றுவித்து விடுத்த யானையைச் சிவபெருமான் கொன்று அதன் தோலைப் போர்த்தருளிய தலம்; அட்ட வீரட்டத்து ளொன்று. கோயிலையுடைய பதியைக் கோயில் என்றார். (22) பங்கயக் கடவு ளீந்த பரிகலம் வாங்கிக் கொண்ட அங்கண னிடமீ தாட லனங்கனை யமுது செய்த செங்கணா னிருக்கை யீது மேழகச் 'd8 சன்னி தன்னை மங்கல மாமற் கீந்த மருகனா ரிருக்கை காண்மின். (இ-ள்.) பங்கயக் கடவுள் ஈந்த பரிகலம் வாங்கிக் கொண்ட - தாமரை மலரிலிருக்கும் பிரமன் கொடுத்த பலிக்கலனை வாங்கித் திருக்கரத்தில் வைத்துக் கொண்ட, அங்கணன் இடம் ஈது - இறைவனிடமாகிய திருக்கண்டியூர் இது; ஆடல் அனங்கனை யமுது செய்த செங்கணான் இருக்கை ஈது - வெற்றி பொருந்திய மன்மதனை நீறாக்கிய தழற் கண்ணையுடைய சிவபெருமான் இருப்பிடமாகிய திருக்குறுக்கை இது; மேழகச் சென்னி தன்னை - ஆட்டுத் தலையை, மங்கல மாமற்கு ஈந்த மருகனார் இருக்கை - மங்கலமுள்ள மாமனாகிய தக்கனுக்குக் கொடுத்த மருகனாராகிய சிவபெருமான் இருக்கும் திருப்பறியலூர் (இது), காண்மின் - பாருங்கள். பரிகலம் - பிரமன் தலையாகிய பலிக்கலம். கொய்து கொண்ட தனை ஈந்த பரிகலம் வாங்கிக்கொண்ட என்றது உபசாரம். அங்கணன் இடம் - திருக்கண்டியூர்; அட்டவீரட்டத்து ளொன்று; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர் பாடல் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. அமுது செய்த செங்கண் என்க. செங்கணான் இருக்கை - திருக்குறுக்கை; அட்டவீரட்டத்து ளொன்று; திருநாவுக் கரசர் பாடல் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. மங்கலம் என்றது குறிப்பு. மருகனார் இருக்கை - திருப்பறியலூர்; அட்ட வீரட்டத்து ளொன்று; திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற சோணாட்டுத் திருப்பதி; இருக்கை இது எனச் சுட்டு வருவித்துரைக்க. (23) திண்டிற லவுணன் றன்னைப் பெருவிரற் றீட்டு நேமி உண்டிட விருந்தாக் கொண்டோ னுறையதா மொருத்தி மன்றல் கண்டிடு கரியாய்க் கூவல் கண்ணுத லிலிங்கம் வன்னி எண்டிசை யறியக் காட்ட நின்றிட மிதனைக் காண்மின். (இ-ள்.) திண் திறல் அவுணன் தன்னை - மிக்க வலியினை யுடைய சலந்தராசுரனை, பெருவிரல் தீட்டு நேமி விருந்தா உண்டிட- காற்பெருவிரலால் வரைந்த திகிரிப் படை விருந்தாக உண்ண - கொண்டோன் - அதனைக் கொண்ட சிவபெருமான், உறை அது ஆம் - இருப்பிடமாகிய திருவிற்குடி அதுவாகும்; ஒருத்தி மன்றல் கண்டிடு கரியாய் - ஒரு வணிக மகள் தன் மணத்தைக் கண்ட சான்றுகளாய்; கூவல் கண்ணுதல் இலிங்கம் வன்னி - கிணறும் சிவலிங்கமும் வன்னியுமாகிய மூன்றையும், எண்திசை அறியக் காட்ட - எட்டுத் திக்கிலுள்ளவரும் அறியுமாறு காண்பிக்க, நின்ற இடம் இதனைக் காண்மின் - அவை நின்ற இடமாகிய திருப்புறம் பயமாகு மிதனைப் பாருங்கள். சிவபிரான் காற் பெருவிரலால் வரைந்த புவியின் பகுதியைப் பெயர்த்தெடுக்க அது திகிரியாய்ச் சலந்தரனைத் தேடிந்த தென்பதும், அதனையே திருமால் சிவபிரான்பாற் பெற்றன ரென்பதும் வரலாறு. உறை, ஆகுபெயர். விருந்தாகக் கொண்டோன் உறை - திருவிற்குடி; அட்டவீரட்டத்து ளொன்று; திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. கண்ணுத லிலிங்கம் - சிவலிங்கம். ஒருத்தி காட்ட என இயைக்க. வணிகமாது வன்னி, கிணறு, இலிங்கம் என்னும் மூன்றையும் கரியாய்க் காட்டினமையை மேலைப் படலத்தாலறிக. நின்றிடம் - திருப்புறம்பயம்; மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. நின்ற இடம் என்பது நின்றிடம் என விகாரமாயிற்று. (24) சாமகண் டத்தன் றன்னைத் தானருச் சித்த தென்னர் கோமகன் பிரம சாயை குறைத்ததிப் பதியாங் கங்கை மாமகந் தோறும் வந்து வந்துதற் படிந்தோர் விட்டுப் போமகம் போக மூழ்கும் புனிதநீர்ப் பதியைக் காண்மின். (இ-ள்.) சாமகண்டத்தன் தன்னைத் தான் அருச்சித்த - சாமவேத முழங்கும் திருமிடறினையுடைய இறைவன் தன்னைத் தானே அருச்சித்ததும், தென்னர் கோமகன் பிரமசாயை குறைத்தது- பாண்டியர் மன்னனாகிய வரகுண பாண்டியனது பிரமக் கொலைப் பாவத்தைப் போக்கியதுமாகிய திருவிடைமருதூர், இப் பதியாம் - இந்தப் பதியாகும்; கங்கைதன் படிந்தோர் விட்டுப் போம் அகம் போக - கங்கையானது தன்னிடம் வந்து நீராடியவர் விட்டுப்போன பாவங்கள் போமாறு, மாமகம் தோறும் வந்து வந்து மூழ்கும் புனித நீர்ப் பதியைக் காண்மின் - மாமகந்தோறும் வந்து வந்து நீராடும் தூய தடாகத்தையுடைய திருக்குடந்தையைப் பாருங்கள். இடை மருதில் இறைவன் தன்னைத் தான் அருச்சித்ததனை, “ எமையா மருச்சித் திருக்குந்தலத் தெய்து வாயால்” என வரகுணபாண்டியற்குச் சிவபிரான் அருளிச் செய்ததாக இப்புராணத்து வந்திருத்தலா னறிக. தான் என்பதனை அசையாக்கி, இறைவனை அருச்சித்த தென்னர் கோமகன் என்றுரைத்தலுமாம். வரகுணனது பிரமசாயை நீங்கிய வரலாற்றை வரகுணனுக்குச் சிவலோகங் காட்டிய படலத்தானறிக. இப்பதி தமிழில் திருவிடை மருதூர் எனவும், வடமொழியில் மத்தியார்ச்சுனம் எனவும் கூறப்படும். வடக்கே மல்லிகார்ச்சுனமும் தெற்கே புடார்ச்சுனமும் இருக்க இஃது இடையே அமைந்தமையின் இப்பெயரினதாயிற்று என்ப; தைப்பூசத் தீர்த்த விசேட முடையது; இது, “ பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள் வாச நாண்மலர் கொண்டடி வைகலும் ஈச னெம்பெரு மானிடை மருதினில் பூச நாம்புகு தும்புன லாடவே” எனத் தேவாரத்திலும் குறிக்கப்பெற்றுளது. இது மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. மாமகம் - பன்னிரண்டாண்டிற் கொருமுறை வியாழன் சிங்கவிராசியில் இருக்குங் காலத்து வரும் மாசி மகம். அகம் - பாவம். யாவர் பாவத்தையும் போக்கும் கங்கை தன்னை யடைந்த பாவத்தைப் போக்குதற்கு வந்து முழுகும் மாமக தீர்த்தத்தையுடைய பதி யெனத் தீர்த்தவிசேடம் கூறியவாறாயிற்று. உபலக்கணத்தால் ஏனைய புண்ணிய நதிகளும் கொள்க; “ கங்கை யானவள் கன்னி யெனப்படும் கொங்கை யாளுறை யுங்குட மூக்கிலே” என்றும், “ கோதா விரியுறை யுங்குட மூக்கிலே” என்றும் திருக்குறுந்தொகையுள் வருதல் காண்க. புனிதநீர்ப் பதி - திருக்குடமூக்கு; இது கும்பகோணம் எனவும், திருக்குடந்தை எனவும் கூறப்படும்; ஒரு பிரளய வெள்ளத்தில் எல்லா வுயிர்களையும் சேமித்து இட்ட குடத்தின் மூக்கு இருந்த இடமாதலின் இப்பெய ரெய்திற்று என்ப; இது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர் பாடல் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. (25) குருமொழி தந்தைக் கீந்தெங் குருவுறை மலையீ தெங்கோன் கருமுகில் வண்ணத் தண்ணல் கண்ணிடந் தடியிற் சாத்தப் பொருவிற லாழி யீந்த புரமிது நந்தி யெந்தை திருவுரு வடைய நோற்ற தலமிது தெரிந்து காண்மின். (இ-ள்.) குருமொழி தந்தைக்கு ஈந்து எம்குரு உறைமலை ஈது - உபதேசமொழியினைத் தன் தந்தையாருக்கு அருளி எம் குருவாகிய சாமிநாதன் உறையும் சுவாமிமலை இதுவாகும்; கருமுகில் வண்ணத்து அண்ணல் - கரிய முகில் போன்ற நிறத்தினையுடைய திருமால், கண் இடந்து அடியில் சாத்த - கண்ணைத் தோண்டித் திருவடியிற் சாத்த, பொருவிறல் ஆழி ஈந்த எங்கோன் புரம் இது - பொருதற் குரிய வலியினையுடைய திகிரிப் படையை அளித்தருளிய எம் சிவபெருமான் எழுந்தருளிய திருவீழிமிழலை இதுவாகும்; நந்தி - திருநந்தி தேவர், எந்தை திருஉரு உடைய நோற்ற தலம் இது தெரிந்து காண்மின் - எம் தந்தையாகிய சிவபெருமான் திருவுருவத்தைப் பெறுதற்குத் தவம்புரிந்த திருவையாறென்னும் இப்பதியினை ஆராய்ந்து காணுங்கள். அகத்தியனார் தமக்குத் தமிழறிவுறுத்த செந்தமிழ்ப் பரமா சாரியராகலின் முருகப் பெருமானை எங்குரு என்றார். குருவுறை மலை - சுவாமிமலை; திருவேரகம். ஆழியீந்த புரம் - திருவீழிமிழலை; திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இறைவன்பாற் படிக்காசுபெற்று அடியார்கட்கு அமுதூட்டிய தலம்; மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத்திருப்பதி. நந்தி நோற்ற தலம் - திருவையாறு; திருநாவுக்கரசர் திருக்கைலாய தரிசனம் பெற்ற தலம்; மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. (26) முடங்குகாற் சிலந்தி யானை மலைமகண் முளரி நாட்டத் தடங்கல் வண்ண னோற்ற தவநக ரிதுமுச் சென்னி மடங்கலே றனையா னாம வரையிது குடைந்தோர் பாவம் அடங்கலும் பருகும் பொன்னி யாறிது காண்மின் காண்மின். (இ-ள்.) முடங்குகால் சிலந்தி யானை மலைமகள் - வளைந்த காலையுடைய சிலந்தியும் யானையும் உமையம்மையும், முளரிநாட்டம் தடம் கடல் வண்ணன் - தாமரைமலர் போன்ற கண்களையும் பெரிய கடல் போலுங் கரிய நிறத்தினையு முடைய திருமாலும், தவம் நோற்ற நகர் இது - தவஞ் செய்த திருவானைக்கா என்னும் பதி இதுவாகும்; முச்சென்னி மடங்கல் ஏறு அனையான் நாம வரை இது - மூன்று தலைகளையுடைய சிங்கவேறு போல்வானாகி திரிசிரன் பெயரைப் பெற்ற திரிசிராமலை இதுவாகும்; குடைந்தோர் பாவம் அடங்கலும் பருகும் பொன்னியாறு இது - மூழ்கியோரின் பாவமனைத்தையும் உண்ணுங் காவிரியாறு இது வாகும். காண்மின் காண்மின் - இவற்றைப் பாருங்கள் பாருங்கள். நோற்றல் - தவஞ்செய்தல்; இறைவனை வழிபடுதல். தவ நகர் - ஞான நகர் என்றுமாம். சிலந்தியும் யானையும் பூசித்த வரலாற்றைப் பெரிய புராணத்துக் கோச்செங்கட் சோழர் வரலாற்றா னறிக. கடல் வண்ணன் நோற்றமை, “ ஆழி யாற்கரு ளானைக் காவுடை யாதி” எனச் சுந்தரர் தேவாரத்தும் குறிக்கப்பெற்றுளது. இஃது ஆனை பூசித்தமையால் திருவானைக்கா எனப்பெற்றது நாவல் தலவிருக்கமாகலின் சம்புகேசுவரம் எனவும் வழங்கப் பெறுவது; ஐம்பூதங்களில் அப்புலிங்கத்தலமாக வுள்ளது. மூவர் தேவாரமும் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. முச்சென்னியான் - திரிசிரன்; அவன் பூசித்தமையின் இது திரிசிராமலை எனவும் திருச்சிராப்பள்ளி எனவும் பெயரெய்திற்று. இது திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர் பதிகம் பெற்ற சோணாட்டுத் திருப்பதி. (27) இந்நதி வெண்முத் தார மெனக்கிடந் திலங்குஞ் சென்னி மன்னவ னாடீ தென்ப தமிழறி வையைப் பேர்யா றந்நதி துறக்க மண்மேல் வழுக்கிவீழ்ந் தாங்கத் தோற்றித் தென்னவ னாடு சேய்த்தாத் தெரிவதே காண்மி னென்றான். (இ-ள்.) இந்நதி வெண்முத்து ஆரம் எனக்கிடந்து இலங்கும்- இந்நதியானது வெள்ளிய முத்துமாலையைப் போலக் கிடந்து விளங்கும், சென்னி மன்னவன் நாடு ஈது என்ப - சோழ மன்னன் நாடு இது என்று சொல்லுவர்; அந்நதி - அந்த நதியானது, தமிழ் அறி வையைப் பேர்யாறு - தமிழ் மறையின் சுவையினை அறிந்த வையை யென்னும் பெயரினையுடைய நதி; துறக்கம் மண்மேல் வழுக்கி வீழ்ந்தாங்கு தோற்றி - பொன்னுலகமானது இம்மண்ணின் மேல் வழுக்கி வீழ்ந்ததுபோல விளங்கி, சேய்த்தாத் தெரிவதே தென்னவன் நாடு - தூரத்தே காணப்படுவதே பாண்டியன் நாடு; காண்மின் என்றான் - அதனைப் பாருங்களென்று கூறினான். இந்நதி - பொன்னிநதி. அந்நதி, அகரம் சேய்மைச்சுட்டு. தோற்றி - தோன்றி; தன்வினை. (28) பொங்கர்மென் புதல்க ளென்னப் பொருநதி சிறுகா லென்னக் கொங்கலர் தடஞ்சிற் றூறற் குழியெனப் பழனஞ் சில்லி தங்குமென் பாத்தி யென்னத் தாழைதாழ் சிறுபுல் லென்னப் பைங்குலைக் கதலி மஞ்சட் பாத்திபோற் றோற்றக் கண்டார். (இ-ள்.) பொங்கர் மென் புதல்கள் என்ன - மரச்செறிவுகள் மெல்லிய சிறு செடிகளைப் போலவும், பொருநதி சிறு கால் என்ன - கரையோடு மோதும் அலைகளையுடைய நதி சிறிய கால்வாயைப் போலவும், கொங்கு அலர் தடம் - மணம் பரந்த தடாகங்கள், சிறு ஊறல் குழி என - சிறிய ஊற்றுக் குழிகளைப் போலவும், பழனம் - வயல்கள், மென்சில்லி தங்கும் பாத்தி என்ன - மெல்லிய சிறு கீரைகள் தங்கும் பாத்திகளைப் போலவும், தாழை தாழ் சிறுபுல் என்ன - தென்னைகள் தாழ்ந்த சிறிய புற்களைப் போலவும், பைங்குலைக் கதலை மஞ்சள் பாத்திபோல் - பசிய குலையை யுடைய வாழைகள் மஞ்சட் பாத்திகளைப் போலவும், தோற்றக் கண்டார் - (தங்கள் கண்களுக்குப்) புலப்படக் கண்டார்கள். பாத்தி - வரம்பு கோலிப் பகுக்கப்பட்டது என்னும் பொருட்டு. தாழை - தென்னை. கதலி - வாழைத் தோட்டம் என்க. சேய்மையினின்று பார்க்கப்படும் பொருள்கள் சிற்றுருவுடன் தோற்றுமாகலின் இங்ஙனம் தோற்றக் கண்டா ரென்க. (29) பன்னிற மாட மாலை யுபரிகைப் பந்தி செய்குன் றன்னம்வெண் குருகு செம்போத் தழகுபைங் கிள்ளை மஞ்ஞை இன்னபுள் வேறு வேறா யொழுங்குபட் டிருப்ப தொப்ப மின்னுபூங் கொடியப் புட்கள் சிறகென விதிர்ப்பக் கண்டார். (இ-ள்.) பல்நிற மாடமாலை - பலநிறங்களையுடைய மாட வரிசைகளும், உப்பரிகைப்பந்தி - உப்பரிகைகளும், செய்குன்று - கட்டு மலைகளும், அன்னம் வெண்குருகு செம்போத்து அழகு பைங்கிள்ளை மஞ்ஞை - அன்னங்களும் வெள்ளிய நாரைகளும் செம்போத்துகளும் அழகிய பசிய கிளிகளும் மயில்களும், இன்ன புள் - இவை போன்றபிற புட்களும், வேறுவேறாய் ஒழுங்குபட் டிருப்பது ஒப்ப - வேறுவேறாக வரிசைப்பட்டிருப்பதை ஒக்க, மின்னுபூங் கொடி - அம்மாளிகைகளிற் கட்டிய விளக்கமாகிய அழகிய கொடிகள், அப்புட்கள் சிறகென விதிர்ப்பக் கண்டார் - அப்பறவைகளின் சிறகு அசைதலைப்போல அசையக் கண்டனர். மாலை - வரிசை. உபரிகை - மேன்மாடம். மாடமாலை முதலியன அன்னம் முதலியவற்றின் வரிசைகளைப் போலாநிற்க, அவற்றிற் கட்டப்பெற்ற கொடிகள அப்புட்களின் சிறகுகளைப்போல் அசையக் கண்டனர். சேய்மையவாதலின் இவையும் இங்ஙனம் தோன்றினவென்க. (30) கண்டு நாட்டு நகர்வளங்க ணடந்து நடந்து கண்கள்விருந் துண்டு மீள வகல்விசும்பா றொழுகி வலமா வருமுனிவர் விண்டு ழாவுங் கொடுங்குன்றுந் தளிப்புத் தூரும் விரிபொழில்வாய் வண்டு பாட மயிலாடல் பயிலா டானை வளநகரும். (இ-ள்.) நாடு நகர் வளங்கள் - நாட்டு வளம் நகர வளங்களை, கண்கள் நடந்து நடந்து கண்டு விருந்து உண்டு மீள - கண்கள் சென்று சென்று கண்டு விருந்தருந்தி மீளா நிற்க, அகல்விசும்பு ஆறு ஒழுகி வலமாவரு முனிவர் - அகன்ற வானின் வழியாகச் சென்று வலமாக வரும் முனிவர்கள், விண்துழாவும் கொடுங்குன்றும் - வானையளாவிய திருக்கொடுங்குன்றமும், தளிப்புத்தூரும் - திருத்தளிப்புத்தூரும், விரிபொழில் வாய் வண்டு பாட - விரிந்த சோலையின்கண் வண்டுகள் பாடா நிற்க, மயில் ஆடல் பயில் ஆடானை வளநகரும் - மயில்கள் ஆடலைச் செய்யும் திருவாடானை யென்னும் வளமிக்கபதியும். கொடுங்குன்று - திருக்கொடுங்குன்றம்; பிரான்மலை; திருஞானசம்பந்தர் பதிகம்பெற்ற பாண்டிநாட்டுத் திருப்பதி. தளி - கோயில்; திருப்புத்தூரிலுள்ள கோயில் திருத்தளி என்றே வழங்கப் பெறுதலை, “ திருப்புத்தூரிற் றிருத்தளியான் காணவனென் சிந்தையானே” என்னும் அப்பர் தேவாரத்தா லறிக. இது திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர் தேவாரம் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. ஆடானை - திருவாடானை; பிருகு முனிவர் துருவாசர் சாபத்தால் ஆட்டுத் தலையும் யானை யுடலும் பெற்றுப் பூசித்துச் சாபம் நீங்கினமையால் இப்பெய ரெய்திற் றென்ப. இது திருஞான சம்பந்தர் பதிகம் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. (31) சரத வேதம் பரவுபுன வாயி னகருந் தவசித்தர் இரத வாதஞ் செய்துசிவ னுருவங் கண்ட வெழினகரும் வரத னாகி யரனுறையுங் கானப் பேரு மலைமகளை விரத யோக நெறிநின்று மணந்தார் சுழியல் வியனகரும். (இ-ள்.) சரத வேதம் பரவுபுனவாயில் நகரும் - உண்மையாகிய மறை துதிக்கும் திருப்புனவாயி லென்னுந் திருப்பதியும், தவ சித்தர் - தவ வடிவுடைய சித்த மூர்த்திகள், இரத வாதம் செய்து - பொன்னனையாள் பொருட்டு இரசவாதஞ் செய்து, சிவன் உருவம் கண்ட எழில் நகரும் - சிவபிரான் திருவுருவங் கண்ட அழகிய திருப்பூவணமும், அரன் வரதனாகி உறையும் கானப்பேரும் - இறைவன் அருட்கொடை யுடையனாய் எழுந்தருளிய திருக்கானப்பேரும், மலைமகளை விரத யோக நெறி நின்று மணந்தார் - பார்வதி தேவியாரை விரதத்தையுடைய யோக நெறியில் நின்று மணஞ் செய்தருளிய சிவபெருமானது, சுழியில் வியன் நகரும் - திருச்சுழிய லென்னும் சிறந்த பதியும். புனவாயில் - திருப்புனவாயில்; திருஞானசம்பந்தர், நம்பியாரூரர் என்னும் இருவர் தேவாரம்பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. சிவனுருவங் கண்ட எழினகர் - திருப்பூவணம். தவ சித்தர் இரசவாதஞ் செய்த வரலாற்றை இப் புராணத்து இரசவாதஞ் செய்த படலத்தாலறிக. தமிழ் நாட்டு மூவேந்தரும் இறைவனை வழி பட்டன ரென, “ முறையார் முடிசேர் தென்னர் சேரர் சோழர்க டாம்வணங்கும் திறையா ரொளிசேர் செம்மை யோங்குந் தென்றிருப் பூவணமே” என்னும் ஆளுடைய பிள்ளையார் திருவாக்கா லறியலாகும்; சுந்தர மூர்த்திகள் இத்தலத்தை மூவேந்தரோடும் தரிசித்தனரெனத் திருத்தொண்டர் புராணம் கூறும்; இது மூவர் தேவாரமும் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. கானப்பேர் - திருக்கானப்பேர். நம்பியாரூரர் சேரமான் பெருமாளுடன் திருச்சுழியலில் இறைவனைத் தரிசித்துக் கொண்டு எழுந்தருளியிருக்கும் பொழுது கானப்பேருடையார் காளை வடிவங்கொண்டு கையிற் பொற்செண்டும் முடியிற் சுழியமும் உடையராய் ஆரூரர் கனவிற்றொன்றி நாம் இருப்பது கானப்பேர் என்று அருளிச் செய்ய, அவர் ‘தொண்டரடித் தொழலும்’ என்ற பதிகந் தொடங்கி, ‘கண்டு தொழப் பெறுவ தென்றுகொலோ வடியேன் கார்வயல்சூழ் கானப்பேருறை காளையையே’ என்று பாடிக் கொண்டு வந்து தரிசித்தமையின் இது காளையார்கோயில் என வழங்கும். இத்தலம் திருஞானசம்பந்தர், நம்பியாரூரர் என்னும் இருவர் பாடல் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி.சுழியல்- திருச்சுழியல்; நம்பியாரூரர் பதிகம் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. (32) மறவா ளிலங்கை யிறைமகனை வதைத்த பழியான் மருண்டரியன் றறவா ணேமி யளித்தவனை யர்ச்சித் தகன்ற வணிநகரும் நிறவாண் முத்தும் வயிடூய நிரையும் பொன்னும் விளைபொருநைத் துறைவாய் பிறவாக் கடவுள்வேய் வயிற்றிற் பிறந்த தொன்னகரும். (இ-ள்.) மறவாள் இலங்கை இறைமகனை - கொலைத் தொழிலை யுடைய வாட்படையுடைய வேந்தனாகிய இராவணனை, வதைத்த பழியால் - கொன்ற பாவத்தினால், அரி மருண்டு - திருமால் மனமயங்கி, அன்று அறவாள் நேமி அளித்தவனை - முன்னொருகாலத்து அறம் பொருந்திய ஒளியினையுடைய திகிரிப் படையினைக் கொடுத்தருளிய இறைவனை, அர்ச்சித்து அகன்ற அணி நகரும் - வழிபட்டு அப்பழியின் நீங்கிய அழகிய திருவிராமேச்சுரமும், நிறம் வாள் முத்தும் வயிடூரிய நிரையும் - மிக்க ஒளியினையுடைய முத்துக்களும் வயிடூரிய வரிசைகளும், பொன்னும் விளை பொருநைத் துறைவாய் - பொன்னும் விளைகின்ற பொருநைத் துறையின்கண், வேய் வயிற்றில் - மூங்கிலின் வயிற்றில், பிறவாக் கடவுள் பிறந்த தொல் நகரும் - யாண்டும் பிறவாத இறைவன் வந்து பிறக்கப் பெற்ற பழமையையுடைய திருநெல்வேலியும். அரி - திருமாலின் அவதாரமாகிய இராமன். சிவபக்தியுடைய இராவணனைக் கொன்ற பழி தீருமாறு இராமன் சிவலிங்கம் தாபித்துப் பூசித்தமையால் இஃது இராமேச்சுரம் எனப் பெற்றது; இவ்வரலாற்றைச் சேதுபுராண முதலியவற்றா லறிக; “ மானன நோக்கியை தேவிதன் னையொரு மாயையால் கானதில் வவ்விய காரரக் கன்னுயிர் செற்றவன் ஈனமி லாப்புக ழண்ணல் செய்தவிரா மேச்சுரம் ஞானமு நன்பொரு ளாகிநின்ற தொரு நன்மையே” என ஆளுடைய பிள்ளையாரும், “ பாசமுங் கழிக்க கில்லா வரக்கரைப் படுத்துத் தக்க வாசமிக் கலர்கள் கொண்டு மதியினான் மால்செய் கோயில் நேசமிக் கன்பி னாலே நினைமினீர் நின்று நாளும் தேசமிக் கானி ருந்த திருவிரா மேச்சுரமே” என அப்பரும் அருளிச் செய்தலுங் காண்க. இத்தலம் பரதகண்டத்தாரனைவரும் அறிந்து போற்றும் பெருமையுடையது; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர் தேவாரம் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. வைடூரியம் எனற்பாலது வயிடூயம் என்றாயிற்று. பொருநை - தாம்பிரபன்னி. “ பிறவா யாக்கைப் பெரியோன் ” எனப் பிற சான்றோரும் சிவபிரானைக் கூறுதல் காண்க. துறைவாய் வேய் வயிற்றிற்பிறந்த என இயையும். என்றும் பிறவாத கடவுளும் பிறந்த நகர் என அத்தலத்தின் சிறப்புக் கூறியவாறு. பிறந்த தொன்னகர் - திருநெல்வேலி; வேதசன்மர் என்னும் அன்பர் தமது நிவேதனத்திற்கு வைத்திருந்த நெல்லை வெள்ளங் கவராதவாறு சிவபெருமான் காத்தமையின் இப்பெய ரெய்திற் றென்ப. இறைவன் மூங்கிலடியில் முளைத்தமையின் இது வேணுவனம் எனவும் கூறப்படும் இஃது, ஐந்து மன்றங்களில் தாமிரமன்றம் உள்ளது; திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. (33) துளபக் குன்றைக் கொன்றைமுடிக் குன்ற மாக்குந் தொன்னகரும் அளகைப் பொறித்த கொடியிளையோன் மானேர் நோக்கி னானைமகள் புளகக் குன்றை மணந்துமுத லிருந்த பொருப்பும் போர்விசயன் வளைவிற் றாக்க வடுக்கிடந்த முடியோன் மேய வளநகரும். (இ-ள்.) துளபக் குன்றைக் கொன்றை முடிக் குன்றம் ஆக்கும் தொல் நகரும் - துளப மாலையை யணிந்த நீலமலை போலுந் திருமாலைக் கொன்றை மாலையணிந்த முடியினையுடைய மாணிக்க மலைபோலுஞ் சிவபிரான் ஆக்கிய பழைய திருக் குற்றாலமும், அளகைப் பொறித்த கொடி இளையோன் - கோழியை எழுதிய கொடியினை யுயர்த்திய முருகக் கடவுள், மான் நேர் நோக்கின் ஆனைமகள் புளகக் குன்றை மணந்து - மான் போன்ற பார்வையினை யுடைய தெய்வயானையாரின் புளகரும்பிய கொங்கையாகிய மலையை அணைந்து, முதல் இருந்த பொருப்பும்- முதலில் வீற்றிருந்தருளிய திருப்பரங்குன்றமும், போர் விசயன் வளைவில் தாக்க - போர் வெற்றியையுடைய அருச்சுனன் வளைந்த வில்லா லடித்ததா லாகிய, வடுக் கிடந்த முடியோன் - தழும்பு கிடந்த முடியினையுடைய இறைவன், மேய வளநகரும் - வீற்றி ருக்கும் வளம் பொருந்திய திருவேடகமும். குன்று என்பன குறிப்பு மொழிகள். அளகு என்பது ஈண்டு கோழியின் சேவலை யுணர்த்திற்று. தென்றிசைக்கட் போந்த அகத்தியர் திருக்குற்றாலம் என்னும் பதியை அடைந்த காலையில் அங்குள்ள வைணவர்கள் அவரது சிவவேடப் பொலிவை நோக்கி இகழாநின்றமையின் அவர் வைணவ குருக்கொண்டு திருமால் கோயிலையடைந்து திருமாலுருவின் திருமுடியிற் கைவைத்துக் குழைத்துச் சிவவுரு வாக்கினர் என்பது கந்தபுராண முதலியவற்றால் அறியப்படுவது; “ அறுகுமதி நதிபுனையுஞ் செஞ்சடையெம் பெருமானை யகத்துட் கொண்டு சிறுகுமுரு வுடையமுனி நாரணனார் திருமுடிமேற் செங்கை யோச்சிக் குறுகுகுறு கெனவிருத்தி யொள்ளரக்கிற் புனைபாவைக் கோல மீது மறுகுதழ லுற்றென்னக் குழைவித்தோர் சிவலிங்க வடிவஞ் செய்தான்” என்னும் கந்தபுராணச் செய்யுள் காண்க. தல விருக்கம் குறும்பலா ஆதலின் இப்பதி திருக்குறும்பலா எனவும் படும். இஃது ஐந்து மன்றங்களுள் சித்திரமன்றம் உள்ளது; திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. முதல் இருந்த பொருப்பு - திருப்பரங்குன்றம்; முருகக்கடவுள் மகேந்திரபுரியிலிருந்து மீண்ட பொழுது முதலில் வீற்றிருந்து தெய்வயானையை மணந்த இடமாகலின், இங்ஙனம் கூறினார். முருகவேள் பரனை (சிவனை) அருச்சித்த இடமாகலின் பரங்குன்று எனப்பட்டது; முருகக்கடவுளின் படைவீடாகிய தலங்களுள் முதன்மையானது. இப்பதியில் சுந்தர மூர்த்தி நாயனார் தமிழ் மூவேந்தருடன் சென்று தரிசித்துப் பதிகம் பாடின ரென்பது, அவர் பதிகத்துத் திருக்கடைக்காப்பின்கண் “முடியா லுலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்தாறு மோர்நான்கு மோரொன்றினையும், படியா விவைகற்று வல்லார்” என அருளிச் செய்தலா னறியலாகும். இது திருஞானசம்பந்தர், நம்பியாரூரர் என்னும் இருவர் தேவாரம் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. வடுக்கிடந்த முடியோன் மேய வளநகர் - திருவேடகம் என்ப; இது திருஞானசம்பந்தர், புனல் வாதத்தில் பாசுரம் எழுதி யிட்ட திருவேடு சமணரைக் கழுவேற்றிய படலத்தாலறிக. இது திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாண்டி நாட்டுத் திருப்பதி. (34) கொண்டல் படியுந் திருவாப்ப னூருந் தொழுது குளிர்திரைக்கை வண்டு படியுங் கமலமுக வையைப் பிராட்டி யெதிர்வணங்கிக் கண்டு பணிந்து திசை யெட்டும் விழுங்கி யண்டங் கடந்துலகம் உண்ட நெடியோ னெனவுயர்கோ புரமுன் னிறைஞ்சி யுள்புகுதா.1 (இ-ள்.) கொண்டல் படியும் திருவாப்பனூரும் தொழுது - முகில்கள் படியுஞ் (சோலைசூழ்ந்த) திருவாப்பனூருமாகிய இப்பதிகளை வணங்கி, குளிர்திரைக் கை வண்டுபடியும் கமலமுக வையைப் பிராட்டி - குளிர்ந்த அலைகளாகிய கையையும் வண்டுகள் படியுந் தாமரையாகிய முகத்'e7¥ங் கொண்ட வையை யாகிய பெருமாட்டியை, எதிர்கண்டு பணிந்து வணங்கி - எதிரிற் கண்டு வீழ்ந்து வணங்கி, திசை எட்டும் விழுங்கி - எட்டுத் திசைகளையும் விழுங்கி, அண்டம் கடந்து - அண்டத்தைக் கடந்து, உலகம் உண்ட நெடியோன் என - உலகத்தை உண்ட திருமாலைப்போல, உயர்கோபுரம் முன் இறைஞ்சி - உயர்ந்த கோபுரத்தை முன் வணங்கி, உள் புகுதா - உள்ளே சென்று. கொண்டல் படியும் சோலை சூழ்ந்த என விரித்துரைக்க; கொண்டல் படியும் கோயில் என்றுமாம். ஒரு பாண்டி வேந்தன் பொருட்டு இறைவன் ஆப்பினிடத்திற்றோன்றி யருளினமையால் இது திருவாப்பனூர் எனப்பட்டது. கொடுங்குன்று முதலாக எண்ணி வந்தவற்றை இரண்டனுருபு விரித்துத் தொழுது என்பது கொண்டு முடிக்க. திருவாலவாய்க் கோபுரத்தை இறைஞ்சி மதுரைத் திருப்பதியின் உள்புகுந்து என்க. இப்பதியிலே சோமசுந்தரக் கடவுள் புரிந்த அற்புதத் திருவிளையாடல்களை உணர்த்த வெழுந்தது இப்புராணமாகலின் இதன் சிறப்பை இப்புராணத்து ஆண்டாண்டுக் காண்க. இது விராட் புருடனுக்குத் துவாதசாந்தத் தலமாக வுள்ளது; ஐந்து மன்றங்களில் வெள்ளிமன்றம் உடையது; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் இருவர் தேவாரம் பெற்ற பாண்டிநாட்டுத் திருப்பதி. (35) மறுகு தோறும் பணிந்தெழுந்து வளைந்து வளைந்து பொற்கோயில் குறுகி விதியாற் பொற்கமலங் குடைந்து செய்யுங் குறைநிறுவி உறுதி பெறவைந் தெழுத்தெண்ணி யூற்று மதத்து நாற்றடந்தோட் சிறுகு கண்ண வைங்கரத்துச் சித்தி யானை யடிவணங்கா. (இ-ள்.) மறுகு தோறும் பணிந்து எழுந்து வளைந்து வளைந்து, வீதிகடோறும் விழுந்து வணங்கி எழுந்து பலமுறை வலம் வந்து - பொன் கோயில் குறுகி - பொன்மயமாகிய திருக்கோயிலை அடைந்து, பொற்கமலம் விதியால் குடைந்து - பொற்றாமரையில் விதிப்படி நீராடி, செய்யும் குறை நிறுவி - செய்ய வேண்டிய இன்றியமையா வினைகளைச் செய்து, உறுதிபெற ஐந்தெழுத்து எண்ணி - உறுதிப் பயனை யடையத் திருவைந் தெழுத்தைச் செபித்து, ஊற்று மதத்து நால்தடந்தோள் - கொட்டும் மதநீரையும் பெரிய நான்கு திருத்தோள்களையும், சிறுகு கண்ண ஐங்கரத்துச் சித்தியானை அடி வணங்கா - சிறிய கண்களையும் ஐந்து திருக்கரங் களையு முடைய சித்திவினாயகரின் திருவடிகளை வணங்கி. குறை - இன்றியமையாக் கடன். உறுதிபெற எண்ணி என்பதற்கு ஊனிலுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர் ஞான விளக்கினை யேற்றி நன்புலத் தேனை வழி திறந்து திட்பமுடன் எண்ணி என்றுரைத்தலுமாம். கண்ண என்பது குறிப்புப் பெயரெச்சம்; அதனை ஐங்கரத்தையு முடைய என இறுதிக்கண் மாறியுரைக்க. (36) மும்மை யுலகு நான்மறையு முறையா லீன்ற வங்கயற்கண் அம்மை யடிகண் முடியுறத்தாழ்ந் தன்பு கொடுத்தின் னருள்வாங்கி வெம்மை யொளிகான் மணிக்கனக விமானத் தமர்ந்த தனிச்சுடரின் செம்மை யடித்தா மரைவேணிச் சிரமேன் மலரப் பணிந்தேத்தா. (இ-ள்.) மும்மை உலகும் நான்மறையும் முறையால் ஈன்ற - மூன்று உலகங்களையும் நான்கு மறைகளையும் முறையாற் பெற்ற, அங்கயற்கண் அம்மை அடிகள் முடிஉறத் தாழ்ந்து - அங்கயற்கண்ணம்மையாரின் திருவடிகள் முடியிற் பொருந்த வீழ்ந்து வணங்கி, அன்பு கொடுத்து இன் அருள் வாங்கி - அன்பினைக் கொடுத்து இனிய அருளைப்பெற்று, வெம்மை ஒளிகால் மணிக் கனக விமானத்து அமர்ந்த - விரும்பத்தக்க ஒளியினை வீசும் மணிகள் அழுத்திய பொன்னாலாகிய விமானத்தின்கண் எழுந்தருளிய, தனிச்சுடரின் செம்மை அடித்தாமரை - ஒப்பற்ற ஒளிவடிவினனாகிய சோமசுந்தரக் கடவுளின் சிவந்த திருவடித் தாமரைகள், வேணிச்சிரமேல் மலரப் பணிந்து ஏத்தா - சடையினையுடைய முடியின் மேல் மலராநிற்க வணங்கித் துதித்து. அம்மையடிகள் முடியில், உற அவற்றைத் தாழ்ந்து என்றும், அடித்தாமரை சிரமேல் மலர அவற்றைப் பணிந்து என்றும் விரித்துரைக்க. நிறை அன்புடன் வணங்கி அருள்பெற்று என்பார் அன்பு கொடுத்து இன்னருள் வாங்கி என்றார். அம்மையினருள் பெற்று அப்பனை வணங்கச் சென்றார் என்க. அன்பு கொடுத்து அருள்பெற்று என்பது பரிவருத்தனையணி. (37) மேற்படி வேறு அன்றிரு போது முண்டி துறந்திரா வறக்குந் தீவாள் என்றெழு முன்னீ ராடி நியதிக ளியற்றி யைந்தும் வென்றுளத் தன்பு பாய விளைமுழு முதலைப் பார்மேல் மின்றிரண் டென்ன நின்ற விமானமீ திருப்பக் கண்டார். (இ-ள்.) அன்று இருபோதும் உண்டி துறந்து - அன்று இரண்டு வேளையும் உணவை நீத்து, இரா அறுக்கும் தீவாள் என்று - இரவைப் போழும் வெவ்விய வாளையுடைய சூரியன், எழுமுன் நீராடி - எழுவதற்கு முன்னே நீராடி, நியதிகள் இயற்றி - நாள் வினைகளை முடித்து, ஐந்தும் வென்ற உளத்து - ஐம்புலன்களையும் வென்ற உள்ளமாகிய வயலில், அன்புபாய - அன்பாகிய நீர் பாய்தலால். வினை முழுமுதலை - இன்னருள் விளையாநின்ற முழுமுதலை, பார்மேல் மின் திரண்டென்ன நின்ற - நிலவுலகின் மேல் மின் திரண்டு நின்றாற்போல நின்ற, விமான மீது இருப்பக் கண்டார் - விமானத்தின் மேல் இருக்கப் பார்த்தனர். அறுக்கும் என்பதற்கேற்ப வாள் என்றார். வாள் - வாட்படை, கிரணம். என்று - சூரியன். வென்ற என்பதன் அகரம் தொக்கது. ஐந்தும் வென்ற என்பதற்கு ஐம்புல வாசைகளாகிய களைகளைக் களைந்து என விரித்துரைத்தலுமாம். முதல் - பயிர். முதற்கடவுள்; “ அன்புறு பத்தி வித்தி யார்வநீர் பாய்ச்சந் தொண்டர்க் கின்புறு வான வீச னின்னருள் விளையு மாபோல்” என இவ்வாசிரியர் நாட்டுப்படலத்தில் உரைத்தமையுங் காண்க. உள்ளத்தே விளையும் சிவபோகமானது புறத்தே விமானத் திலிருக்கத் தரிசித்தன ரென்க. (38) வாசமஞ் சனந்தேன் கன்னல் பைங்கனி மறுவி லானைந் தாசறு மமுத மைந்து தென்மலை யாரம் வாசம் வீசுதண்1 பனிநீர் வெள்ள மான்மதம் விரைமென் போது தூசணி மணிப்பூ ணல்ல சுவையமு தின்ன தாங்கா. (இ-ள்.) வாச மஞ்சனம் தேன் கன்னல் - மணம் ஊட்டிய திருமஞ்சனமும் தேனும் கருப்பஞ்சாறும், பைங்கனி மறு இல் ஆன் ஐந்து - பசிய பழங்களின் சாறும் குற்றமற்ற பஞ்ச கவ்வியமும், ஆசு அறும் அமுதம் ஐந்து - குற்றமற்ற பஞ்சாமிர்தமும், தென்மலை ஆரம் - பொதியின் மலைச்சாந்தும், வாசம் வீசு தண்பனிநீர் வெள்ளம் - மணம் வீசுங் குளிர்ந்த பனிநீர்ப் பெருக்கும், மான்மதம் விரைமென்போது - கத்தூரியும் நறிய மெல்லிய மலர்களும், தூசு அணிமணிப்பூண் - ஆடையும் அழகிய மணிப்பூண்களும், நல்ல சுவை அமுது - நல்ல சுவையினையுடைய அமுதும், இன்ன தாங்கா - இவற்றைக் கையிலேந்தி. மஞ்சனம் - திருமுழுக்கு; அதன் நீருக்காயிற்று. அமுதம் ஐந்து - பால், தயிர், நெய், தேன், சருக்கரை என்பன. சுவை அமுது - இனிய நைவேத்தியங்கள்; சருக்கரைப் பொங்கல் முதலிய அன்ன வகையும், பிட்டு முதலிய பலகார வகையும் பால் முதலியனவுமாம். (39) சதவுருத் திரத்தா லாட்டி மட்டித்துச் சாத்திப் பூட்டிப் பதமுற மனுவா லட்ட பாலமு தருத்திப் பஞ்ச விதமுறு வாசம் பாகு வெள்ளிலை யளித்துப் போகம் உதவுறு தூப தீபா திகள்பல வுவப்ப நல்கா. (இ-ள்.) சத உருத்திரத்தால் ஆட்டி - சதருத்திர மனுவினால் அபிடேகஞ் செய்து, மட்டித்து - மான்மதத்தைப் பூசி, சாத்தி - மலர் ஆடைகளைச் சாத்தி, பூட்டி - அணிகளைப் பூட்டி, பதம் உற மனுவால் அட்ட பால் அமுதுஅருத்தி - பதமமைய மனுவினால் சமைத்த பாலுணவினை ஊட்டி, பஞ்சவிதமுறு வாசம் பாகு தெள்ளிலை அளித்து - ஐவகையான மணப்பொருள்களையும் பாக்கையும் வெற்றிலையையுங் கொடுத்து, போகம் உதவுறு தூப தீப ஆதிகள்பல - விரும்பிய போகங்களை அளிக்கும் தூபமுந் தீபமும் முதலிய பலவற்றை, உவப்ப நல்கா - மகிழ்கூரத் தந்து. சதவுருத்திரம் - எசுர்வேதத்துட் கூறப்பட்ட மந்திர விசேடம். மேலைச் செய்யுளிற் கூறியவற்றுள் மஞ்சனம் முதல் பனிநீர்காறு முள்ளவற்றால் ஆட்டி, ‘மான்மதம் மட்டித்து, போதும் தூசும் சாத்தி, மணிப்பூண் பூட்டி, சுவையமுது அருத்தி என முறையே கொள்க. பதமுற அட்ட என்றும், மனுவால் அருத்தி என்றும் கூட்டலுமாம். பால் அமுது - பகுதிப்பட்ட அமுது; பாலுடன் கூடிய அமுது என்றும், அட்ட அன்னவகையும் பாலுமாகிய அமுது என்றும் கொள்ளலுமாம். பஞ்ச விதமுறு வாசம் - ஏலம், இலவங்கம், பச்சைக் கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்பன. போகம் - இம்மை மறுமை வீட்டின்பங்கள்; “ விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்” என்பது முதலிய அருண்மொழிகளா னுணர்க. தீபாதி : தீர்க்கசந்தி (40) ஐம்முகச் சைவச் செந்தீ யகத்தினுந் துடுவை யார நெய்ம்முகந் தருக்கிப் பூசை நிரப்பிநால் வேதஞ் சொன்ன மெய்ம்மனு நூற்றுப் பத்தான் மூவிலை வில்ல நீலங் கைம்மல ரேந்திச் சாத்திக் கடவுளை யுவப்பச் செய்து. (இ-ள்.) ஐம்முகச் சைவச் செந்தீ அகத்தினும் - ஐந்து முகங்களையுடைய சிவபெருமான் திருவுருவமாகிய சிவந்த வேள்வித் தீயின் கண்ணும், துடுவை ஆர நெல் முகந்து அருத்தி - துடுப்பு நிறைய நெய்யை முகந்து வார்த்து ஆகுதி செய்து, பூசை நிரப்பி - சிவபூசையை முடித்து, நால் வேதம் சொன்ன - நான்கு மறைகளுங் கூறிய, மெய்ம் மனு நூற்றுப் பத்தால் - சிவபெருமானது ஆயிரந் திருப்பெயரினால், மூவிலை வில்லம் நீலம் கைம்மலர் ஏந்தி - மூன்று இலைகளையுடைய வில்வத்தையும் நீலோற்பல மலரையும் கையாகிய மலரில் ஏந்தி, சாத்தி - அருச்சித்து, கடவுளை உவப்பச் செய்து - இறைவனை மகிழச் செய்து. ஐம்முகம் சிவத்திற்கு அடை. சைவச் செந்தீ - சிவாக்கினி. ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் பஞ்சமந்திரங்களால் அருத்தி என்றுமாம். மனு நூற்றுப் பத்தால் - சகத்திரநாம மந்திரத்தால். அகத்தினும் என்னும் உம்மை எச்சப் பொருட்டு. (41) வாசமஞ் சனநீ ரோடு மந்திர மலர்கைக் கொண்டு பூசையின் பயனை முக்கட் புண்ணியன் கையி னல்கி நேசநெஞ் சூறக் கண்க ணிறையநீ ரூறிச் சோர ஈசனை யிறைஞ்சி யாரு மஞ்சலித் தேத்தல் செய்வார். (இ-ள்.) வாச மஞ்சன நீரோடு மலர்கைக் கொண்டு - மணம் ஊட்டிய திரு மஞ்சன நீருடன்மலரையுங் கைக்கொண்டு, மந்திரம்- அவற்றுடன் சிவமூல மந்திரத்தால், பூசையின் பயனை - வழிபாட்டின் பயனை, முக்கண் புண்ணியன் கையில் - மூன்று கண்களையுடைய அறவடிவினனாகிய இறைவன் திருக்கரத்தில், நல்கி - கொடுத்து, நெஞ்சு நேசம் ஊற - உள்ளத்தின்கண் அன்பு சுரக்க, கண்கள் நிறைய நீர் ஊறிச் சோர - கண்கள் நிறைய நீர் சுரந்து ஒழுக, யாரும் - யாவரும், ஈசனை இறைஞ்சி - சோமசுந்தரக் கடவுளை வணங்கி, அஞ்சலித்து ஏத்தல் செய்வார் - கைகூப்பித் துதிப்பாராயினர். நல்குதல் - அர்ப்பணஞ் செய்தல். (42) எண்சீரடி யாசிரிய விருத்தம் பழியொடு பாச மாறு கெடவாச வன்செய் பணிகொண்ட வண்ட சரணம் வழிபடு தொண்டர் கொண்ட நிலைகண்ட வெள்ளி மணிமன்று ளாடி சரணம் செழியனவி ளிந்தி டாத படிமாறியாட றெளிவித்த சோதி சரணம் எழுகடல் கூவி மாமி யுடன்மாம னாட விசைவித்த வாதி சரணம். (இ-ள்.) பழியொடு பாசம் மாறு கெட - பழியும் பாசமுமாகிய பகை கெட, வாசவன் செய் பணி கொண்ட அண்ட சரணம் - இந்திரன்; செய்த பணியினை ஏற்றுக் கொண்டருளிய தேவனே அடைக்கலம்; வழிபடு தொண்டர் கொண்ட நிலை கண்டு - வழிபடும் அடியாராகிய புலிக்கான் முனியும் பதஞ்சலியும் உள்ளத்திற் கொண்ட உறுதியைக் கண்டருளி, மணிவெள்ளி மன்றுள் ஆடி சரணம் - அழகிய வெள்ளியம்பலத்தின்கண் திருக்கூத்தாடி யருளியவனே அடைக்கலம்; செழியன் விளிந்திடாதபடி மாறி யாடல் தெளிவித்த - இராசசேகர பாண்டியன் இறவாவாறு கான்மாறி யாடிக் காட்டியருளிய, சோதி சரணம் - ஒளி வடிவினனே அடைக்கலம்; எழு கடல் கூவி - ஏழு கடல்களையும் அழைத்து. மாமியுடன் மாமன் ஆட இசைவித்த ஆதி சரணம் - மாமியாகிய காஞ்சனமாலையுடன் மாமனாகிய மலயத்துவசனும் ஆடுதற்கு அவனை அழைத்தருளிய கடவுளே அடைக்கலம். இந்திரன் உற்ற பழியையே யன்றி அவனது அனாதி பாசத் தையும் போக்கினரென்பார் ‘பழியொடு பாச மாறு கெட’ என்றார். மன்றுள் ஆடி:பெயர். இச்செய்யுளிலும், வருஞ் செய்யுள்களிலும் கூறப்படுகின்ற வரலாறுகளை இப்புராணத்து ஆண்டாண்டுக் காண்க. (43) வெங்கரி யாவி சோர நரசிங்க வாளி விடுவேட ரேறு சரணம் புங்கவர் தேற வாதி மறையுட் கிடந்த பொருளோது போத சரணம் வங்கம தேறி வேலை மகரம்பிடித்த வலையாண் மணாள சரணம் கங்கண நாகம் வீசி நகரெல்லை கண்ட கறைகொண்ட கண்ட சரணம். (இ-ள்.) வெம் கரி ஆவி சோர - (சமணரேவிய) கொடிய யானையின் உயிர் நீங்க, நரசிங்கவாளி விடு வேடர் ஏறு சரணம் - நரசிங்க பாணத்தை விட்ட வேடரேறு போலுந் திருக்கோல முடையவனே அடைக்கலம்; புங்கவர் தேற - கண்ணுவர் முதலிய முனிவர்கள் தெளிய, ஆதி மறையுள் கிடந்த பொருள் ஓது போத சரணம் - முதனூலாகிய வேதத்தினுள் மறைந்து கிடந்த பொருளை அருளிச் செய்த ஞான வடிவினனே அடைக்கலம்; வங்கமது ஏறி - தோணியில் ஏறி, வேலை மகரம் பிடித்த - கடலிலுள்ள சுறாமீனைப் பிடித்த, வலையாள் மணாள சரணம் - நெய்த னிலத்தலைவன் புதல்வியாகிய இறைவியை மணந்த மணவாளனே அடைக்கலம்; கங்கண நாதம் விசி நகர் எல்லை கண்ட - கையிற் கங்கணமாகிய பாம்பை விடுத்து நகரின் எல்லையைக் காட்டி யருளிய, கறை கொண்ட கண்ட சரணம் - நஞ்சக் கறையினைக் கொண்டருளிய திருமிடற்றினை யுடையவனே அடைக்கலம். வங்கமது, அது : பகுதிப்பொருள் விகுதி. மகரம் பிடித்த வலையாள் மணாள - மகரத்தைப் பிடித்து அதனால் வலையாளை மணந்த மணாள என்க. (44) மைந்தனி லாழி மேரு மகவா னகந்தை மடிவித்த நித்த சரணம் சுந்தர நாம வாளி பணிகொண்டு கிள்ளி தொகைவென்ற வீர சரணம் வெந்திறன் மாறன் முன்க லுருவானை கன்னன் மிசைவித்த சித்த சரணம் முந்திய கல்லின் மாதர் பெறவட்ட சித்தி முயல்வித்த யோகி சரணம். (இ-ள்.) மைந்தனில் - புதல்வனாகிய உக்கிரகுமார வழுதி யினால், ஆழிமேரு மகவான் அகந்தை மடிவித்த நித்த சரணம் - கடலின் செருக்கையும் மேரு மலையின் செருக்கையும் இந்திரன் செருக்கையும் அழித்தருளிய அழிவில்லாதவனே அடைக்கலம்; சுந்தர நாமவாளி பணிகொண்டு - சுந்தரப் பேரம்பினை ஏவல் கொண்டு, கிள்ளி தொகை வென்ற வீர சரணம் - விக்கிரம சோழனுடைய படைத் தொகுதியை வென்றருளிய வீரனே அடைக் கலம்; வெந்திறல் மாறன் முன் - மிக்க வலியினையுடைய அபிடேக பாண்டியன் முன்னர், கல் உரு ஆனை கன்னல் மிசைவித்த சித்த சரணம் - கல்லானைக்குக் கரும்பினை அருத்திய சித்தனே அடைக்கலம்; முந்திய கல்லின் மாதர் அட்டசித்தி பெற - முற்பட்ட கல் வடிவாகக் கிடந்த இயக்கிய ரறுவரும் அட்டமாசித்திகளையும் அடைய, முயல்வித்த யோகி சரணம் - செய்வித்த யோகியே அடைக்கலம். (45) திருமணி மைந்தன் மைந்தன் முடிசூட விற்ற திருமல்கு செல்வ சரணம் மருமக னென்று மாம னுருவாய் வழக்கு வலிபேசு மைந்த சரணம் குருமொழி தந்து நாரை குருவிக்கு வீடு குடிதந்த வெந்தை சரணம் வருபழி யஞ்சி வேட மகனுக் கிரங்கு மதுரா புரேச சரணம். (இ-ள்.) மைந்தன் மைந்தன் முடிசூட - வீரபாண்டியன் புதல்வனாகிய அபிடேக பாண்டியன் முடி சூடும் பொருட்டு, திருமணி விற்ற திருமல்கு செல்வ சரணம் - சிறந்த மாணிக்கங்களை விற்ற சிறப்பு மல்கிய செல்வனே அடைக்கலம்; மருமகன் என்று மாமன் உருவாய் - மாமன் வடிவெடுத்து வந்து (ஒரு வணிகச் சிறுவனை) மருமக னென்று கூறி, வழக்கு வலி பேசும் மைந்த சரணம் - வன்மையாக வழக்குப் பேசிய வீரனே அடைக்கலம்; குருமொழி தந்து - உபதேச மொழியை அருளி, நாரைக் குருவிக்கு - நாரைக்குங் கரிக்குருவிக்கும், வீடு குடி தந்த எந்தை சரணம் - வீட்டுலகினைக் காணியாகக் கொடுத்தருளிய எம் தந்தையே அடைக்கலம்; வரு பழி அஞ்சி - தென்னனுக்கு வரும் பழியினை அஞ்சி, வேட மகனுக்கு இரங்கும் மதுராபுர ஈச சரணம் - வேட மகனுக்கு இரங்கியருளிய மதுரைப் பதியின் தலைவனே அடைக்கலம். முன்னுள்ள மைந்தன் என்பதற்கு வீரன் என்று பொருள் கொள்க; மேலைச் செய்யுளிற் கூறிய மைந்தனுக்கு மைந்தன் மைந்தனாகியவன் என்றுரைத்தலுமாம் புரேச : குணசந்தி. (46) விருத்தகு மார பால வருண்மேனி கொண்டு விளையாடு மண்ணல் சரணம் குரத்தியை நச்சு பரவி யுயிருண்டு சோரி குடைவாகை வேல சரணம் கருத்திசை பாண னாளி னிசைபாடி மாறு களைவேத கீத சரணம் நரித்திரண் மாவை மீள நகரங்கலங்க நரிசெய்த நம்ப சரணம். (இ-ள்.) விருத்த குமார பால அருள் மேனி கொண்டு விளையாடும் அண்ணல் சரணம் - விருத்தகுமார பாலராகிய அருட் டிருமேனி கொண்டு திருவிளையாட்டுப் புரியும் அண்ணலே அடைக்கலம்; குரத்தியை நச்சு பாவி உயிர் உண்டு - ஆசிரியன் மனைவியாகிய மாணிக்க மாலையை விரும்பிய பாவியாகிய சித்தன் உயிரை உண்டு, சோரி குடைவாகை வேல சரணம் - அவன் குருதியில் மூழ்கிய வெற்றி மாலையை யணிந்த வேற்படையோனே அடைக்கலம்; கருத்து இசை பாணன் ஆளின் - நின் திருவடியில் கருத்தை இசைத்த பாணபத்திரன் அடிமைபோலச் சென்று, இசை பாடி மாறு களை வேதகீத சரணம் - இசை பாடி அவன் பகைவனாகிய ஏமநாதனை ஓட்டிய வேதகீதனே அடைக்கலம்; நரித் திரள் மாவை - நரிக் கூட்டங்களாகிய குதிரைகளை, நகரம் கலங்க மீள நரி செய்த நம்ப சரணம் - நகரிலுள்ளவர்கள் கலங்குமாறு மீளவும் நரிகளாக்கிய நம்பனே அடைக்கலம். நரித் திரளைக் குதிரைக ளாக்கி அவற்றை மீள நரிகளாக்கிய என்க. (47) முற்பக லாறி ரண்டு சிறுபன்றி யுண்ண முலைதந்த வன்னை சரணம் பொற்புறு மாய வாவை யடலேறு கொண்டு பொருதட்ட சிட்ட சரணம் பற்பல ஞால மெங்கு மடையப் பிரம்பு படுமட்ட மூர்த்தி சரணம் கற்பினொ ருத்தி மன்ற லறிவிக்க மூன்று கரிதந்த வள்ளல் சரணம். (இ-ள்.) முற்பகல் - முன்னொரு காலத்தில், ஆறிரண்டு சிறு பன்றி உண்ண முலை தந்த அன்னை சரணம் - பன்னிரண்டு பன்றிக் குட்டிகள் பால் பருகுமாறு முலை கொடுத்தருளிய தாயே அடைக் கலம்; பொற்பு உறு மாய ஆவை - அழகுமிக்க மாயப்பசுவினை, அடல் ஏறு கொண்டு - வலிய திருநந்தி தேவராகிய ஆனேற்றினால், பொருது அட்ட சிட்ட சரணம் - போர்புரிந்து கொன்ற மேலான வனே அடைக்கலம்; பற்பல ஞாலம் எங்கும் அடைய - பலப்பல ஞாலங்களைனைத்தும் வடுவினைப் பெற, பிரம்புபடும் அட்ட மூர்த்தி சரணம் - பிரம்படிபட்ட அட்ட மூர்த்தியே அடைக்கலம்; கற்பின் ஒருத்தி மன்றல் அறிவிக்க - கற்பினையுடைய ஒரு வணிகமாதின் மணத்தை அவள் மாற்றாளுக்கு அறிவிக்க, மூன்று கரி தந்த வள்ளல் சரணம் - மூன்று சான்றுகள் கொடுத்தருளிய வள்ளலே அடைக்கலம். ஞானமெங்கும் வடுப்படுதற்குக் காரணங் கூறுவாராய் அட்ட மூர்த்தி என்றார். (48) அளவைக ளாலும் வேத முதனூல் களாலு மயன்மாய னாலு1 மளவாக் களவையு னக்கு நாம குணசின்ன சாதி கதிசெய்தி யில்லை யவையும் உளவென யாம றிந்து துதிசெய்ய வேகொ லுலகஞ்செ யன்பி னெளிதாய் விளையருண் மேனி கொண்டிவ் வறுபத்து நாலு விளையாடல் செய்த படியே. (இ-ள்.) அளவைகளாலும் வேத முதல் நூல்களாலும் - காட்சி முதலிய அளவைகளாலும் வேதங்களாகிய முதனூல்களாலும், அயன்மாயனாலும் அளவாக் களவை - அயனாலுந் திருமாலாலும் அளந்து காணமுடியாத மறைவையுடையை; உனக்கு நாமம் குணம் சின்னம் சாதி கதி செய்தி இல்லை - உனக்குப் பெயரும் குணமும் குறியும் சாதியும் பிறப்பும் தொழிலும் இல்லையே; யாம் அறிந்து துதி செய்யவே கொல் - யாம் அறிந்து துதிப்பதற்குப் போலும், உலகம் செய் அன்பின் எளிதாய் - உயர்ந்தோர் செய்யும் அன்பிற்கு எளிதாக, அவையும் உள என - அவையும் நினக்கு உள்ளன வென்று கூறுமாறு, விளை அருள்மேனி கொண்டு - விளையும் அருட்டிருமேனி கொண்டு, இவ்வறுபத்து நாலு விளையாடல் செய்தபடி - இந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களுஞ் செய்தருளிய தன்மை. வேதத்தை வேறு பிரித்தமையின் அளவைகள் என்றது காட்சி அறுமானங்களை. வேதம் முதலாகிய நூல்களாலும் என்றுமாம். “ மறையினா லயனால் மாலால் மனத்தினால் வாக்கால் மற்றும் குறைவிலா வளவி னாலும் கூறொணா தாகி நின்ற இறைவர்” என்று சிவஞான சித்தியார் கூறுவதுங் காண்க. களவை - களவினையுடைய; ஐ : முன்னிலை விகுதி. ஒளிக்குஞ் சோரனை என மாணிக்கவாசகரும், வேதங் கிடந்து தடுமாறும் வஞ்சவெளி என இந்நூலாசிரியரும் கூறுதல் காண்க. நீ பற்பல நாம குண சின்ன சாதி கதி செய்தி உடையையாய் விளையாடல் செய்தபடி என விரிக்க. (49) அறுசீரடி யாசிரிய விருத்தம் எனத்துதித்த வசிட்டாதி யிருடிகளைக் குறுமுனியை யெறிதே னீப வனத்துறையுஞ் சிவபெருமா னிலிங்கத்தின் மூர்த்தியாய் வந்து நோக்கிச் சினத்தினைவென் றகந்தெளிந்தீர் நீர்செய்த பூசைதுதி தெய்வத் தானம் அனைத்தினுக்கு மெனைத்துயிர்க்கு நிறைந்துநமக் கானந்த மாயிற் றென்னா. (இ-ள்.) எனத் துதித்த வசிட்ட ஆதி இருடிகளை - என்று துதித்த வசிட்டர் முதலிய முனிவர்களையும், குறுமுனியை - அகத்திய முனிவனையும், எறிதேன் நீ பவனத்து உறையும் சிவபெருமான் - தேன் பொழியுங் கடம்பவனத்தின்கண் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள், இலிங்கத்தில் மூர்த்தியாய் வந்து நோக்கி - சிவலிங்கத் தினின்றும் உருவத்திருமேனியுடன் வெளிவந்து பார்த்து, சினத்தினை வென்று அகம் தெளிந்தீர் - சினத்தை வென்று உள்ளந் தெளிந்தவர்களே, நீர் செய்த பூசை துதி - நீவிர்செய்த வழிபாடும் துதிமொழியும், தெய்வத்தானம் அனைத்தினுக்கும் எனைத்து உயிர்க்கும் நிறைந்து- தெய்வம் இருக்கும் திருப்பதிகள் அனைத்திற்கும் உயிர்கள் அனைத்திற்கும் நிறைந்து, நமக்கு ஆனந்தம் ஆயிற்று என்னா - நமக்கு இன்பத்தைத் தந்தன என்று. வசிட்டாதி : தீர்க்க சந்தி. மூர்த்தியாய் - சகளமூர்த்தியாய். சினம் என்றது காமம் முதலியவற்றுக்கும் உபலக்கணம். பூசையும் துதியும் என எண்ணும்மை விரிக்க. தெய்வத்தானம் அனைத்தினும் நிறையுங் காரணத்தை மூர்த்தி விசேடத்திற் காண்க. எல்லா வுயிருள்ளுங் விரவி யுடனிற்றலால் அனைத்துயிர்க்கும் நிறைந்த தென்க. ஆயிற்று - ஆயின. (50) சிறந்தவருள் சுரந்துகுரு முனியைவரு கென்றுகரஞ் சிரமேல் வைத்துப் புறந்தடவி யெமையொப்பாய் நீயேநின் கற்புடைய பொலங்கொம் பன்னாள் அறந்தழையு முமையொப்பா ளாதலினா லுமையொப்பா ரகிலத் தியாரே நிறைந்ததவம் புரிந்தோனுந் தவத்துறுதி பெற்றோனு நீயே யன்றோ. (இ-ள்.) சிறந்த அருள் சுரந்து - மேம்பட்ட திருவருள் சுரந்து, குறுமுனியை வருக என்று கரம் சிரமேல் வைத்து - அகத்திய முனிவனை வரக்கடவாயென்று (அருகில் அழைத்து) திருக்கரத்தை அவன் முடியின் மேல் வைத்து, புரம் தடவி - முதுகினைத் தடவி, நீயே எமை ஒப்பாய் - நீயே எம்மை ஒப்பாய்: நின் கற்புடைய பொலம் கொம்பு அன்னாள் - நினது கற்புடைய பொற்கொம்பு போன்ற உலோபா முத்திரையே, அறம் தழையும் உமை ஒப்பாள் - முப்பத்திரண்டு அறங்களையும் வளர்க்கும் உமையைப் போல்வாள்; ஆதலினால் உமை ஒப்பார் அகிலத்து யார் - ஆகையால் உம்மை ஒப்பவர் உலகத்தின்கண் வேறு யாவர் (ஒருவருமில்லை); நிறைந்த தவம் புரிந்தோனும் - நிறைந்த தவஞ் செய்தவனும், தவத்து உறுதி பெற்றோனும் நீயே அன்றோ - அத்தவத்தினாற்பயனடைந்தோனும் நீயே யல்லவா? வருகென்று:அகரந் தொக்கது. அகத்தியன் இறைவ னொப்பா னென்றும், உலோபாமுத்திரை உமையொப்பாளென்றும் மேல் கீரனுக் கிலக்கண முபதேசித்த படலத்திலும் கூறியிருத்தல் காண்க. (51) உனக்கரிய வரமினியாந் தருவதெவ னுனக்கரிதா வொன்றுங் காணேம் எனக்கருணை செய்திலிங்கத் திடையிச்சை வடிவாய்ச்சென் றிருந்தா னாகத் தனக்கரிய வரநல்குஞ் சிவலிங்கந் தன்பெயராற் றாபித் தான்றன் இனக்கருணை வசிட்டாதி முனிவர்களுந் தம்பெயரா லிலிங்கங் கண்டார். (இ-ள்.) உனக்கு அரிதா ஒன்றும் காணேம் - உனக்கு அரிதாக ஒன்றையுங் கண்டிலேம் ஆகலின், உனக்கு அரிய வரம் இனி யாம் தருவது எவன் - உனக்கு அரிய வரத்தினை இனி யாம் தருவது எங்ஙனம், எனக் கருணை செய்து - என்று அருள்புரிந்து, இச்சை வடிவாய் இலிங்கத்திடை சென்றிருந்தானாக - இச்சை வடிவாய்ச் சிவலிங்கத்தினுள் சென்றிருந்தனனாக; தனக்கு அரிய வரம் நல்கும் சிவலிங்கம் - (அக்குறுமுனிவன்) தனக்கு அரிய வரத்தினை நல்கியருளுஞ் சிவலிங்க மொன்றினை, தன்பெயரால் தாபித்தான் - தனது பெயரினால் நிறுவினான்; தன் இனக் கருணை வசிட்டாதி முனிவர்களும் - அவன் இனமாகிய அருளையுடைய வசிட்டன் முதலிய முனிவர்களும், தம் பெயரால் இலிங்கம் கண்டார் - தந்தம் பெயரினால் ஒவ்வோ ரிலிங்கத்தினை நிறுவினார்கள். இச்சைவடிவு - சுதந்திர வடிவு. (52) ஏத்தியருச் சனைசெய்து நினைவிலரி தாயன்பி லெளிய வட்ட மூர்த்தியையங் கயற்கண்ணி யன்பனைமுப் போதும்போய் முடிதாழ்ந் தின்பம் பூத்தமனத் தினராகிக் கருவித்தேன் பொதிந்தசிறு புட்போ லந்த மாத்தலனில் வசிட்டாதி முனிவர்தபோ வனஞ்செய்து வதிந்தார் மன்னோ. (இ-ள்.) ஏத்தி அருச்சனை செய்து - (தாம் நிறுவிய சிவலிங்கங் களைத்) துதித்து அருச்சித்து, நினைவில் அரிதாய் அன்பில் எளிய அட்ட மூர்த்தியை - நினைத்தற்கு அரிதாகி அன்பிற்கு எளிய அட்டமூர்த்தியும், அங்கயற்கண்ணி அன்பனை - அங்கயற்கண்ணம்மையின் தலைவருமாகிய சோமசுந்தரக் கடவுளை, முப்போதும் போய் முடிதாழ்ந்து - மூன்று காலங்களிலுஞ் சென்று தலை வணங்கி, இன்பம் பூத்த மனத்தினராகி - இன்பம் நிறைந்த மனத்தினை யுடையராய், கருவித் தேன் பொதிந்த சிறு புள்போல் - மிக்க தேனடையில் மொய்த்த வண்டுகள் போல, அந்த மாத் தலனில் - அந்தச் சிறந்த பதியின்கண், வசிட்ட ஆதி முனிவர் - வசிட்டர் முதலிய முனிவர்கள், தபோவனம் செய்து வதிந்தார் - தவவனமொன் றாக்கி அதிற்றங்கி யிருந்தனர். கருவி - தொகுதி. சிறுபுள் - ஈ, வண்டு. தேனிலே மொய்த்த வண்டு அதனை நுகர்ந்து சலனமற்றிருந்தாற் போன்று சிவானந்தம் நுகர்ந்து சலிப்பற் றிருந்தனர் என்க. (53) திருவாலவாய்க் காண்டம் முற்றிற்று. ஆகச் செய்யுள் 3363. திருவிளையாடற் புராணம் முற்றுப்பெற்றது. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்திற்கு நடுக்காவிரி மு. வேங்கடசாமி நாட்டார் எழுதிய உரை முற்றிற்று. திருச்சிற்றம்பலம். செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை (எண் : பக்க எண்) அகலிய நுதலின 48 அக்கிவாய் மடுத்தவே 239 அக்கொடுந் தொழிலு 6 அங்குள பரிச 272 அங்கெழுந் தருளி 202 அச்சமுற் றுவகை 142 அஞ்செவியி 302 அடிமுடி விலங்கும் 310 அடியார் பதினா 244 அடுத்த தக்கணத் 206 அடையாளம் படவொருவ 149 அட்டில் புட்கன 82 அணிகிளர் கழுத்தில் 58 அண்ட கோடிக 19 அண்ட நாயகன் 214 அண்டமெலா மாதார 40 அண்ட ருக்கரி 86 அத்தருவே யாலநெடுந் 121 அத்தவோ கல்லாக் 96 அத்தன வணிகற் 266 அந்தணர் பெருமான் 172 அந்தமா விலிங்கத் 256 அந்தமி லழகன் றன்னை 8 அந்த மூவிலை 230 அந்த வேலை 225 அந்நிலை யிளையாள் 294 அந்நெடு மேரு 259 அம்மகனை முடிசூட்டி 157 அரணமுந் துருக்கமு 50 அரவின்வாய்ப் பட்ட 288 அரிகணை தொடுத்து 1 அருகிருக்குந் தொல்ல 89 அருந்ததி யனை 295 அருந்தமிழ்ப் பாண்டி 184 அருமறை வணங்குங் 191 அருளினா லுலக 126 அல்லலுற் றழுங் 291 அவுணரிற் கள்வ 311 அவ்வண்ணஞ் செய்வ 225 அவ்விடைச் சிறார்கள் 255 அவ்விடைத் தரு 292 அவ்விரு வோருங் 222 அவ்வேலை மனக்கினிய 90 அழுக்கடைந்த பழந்துணி 114 அழைமி னீண்டென 209 அளவைக ளாலும் 340 அறந்தரு கோலான் 68 அற்றைநா ளாதி 259 அனைய செய்திரென் 213 அனையனை மறுக்கஞ் 140 அன்றிர வுண்டி 290 அன்றிரு போது 332 அன்றுகுருந் தடியிலடி 159 அன்று கேள்வியா 209 அன்றுசிறுத் தொண்டரிடும் 153 அன்றெனைக் கண 290 அன்னதொரு காரண 218 அன்னவேடு முறையினோ 242 அன்னான் குமரன் 177 அன்னைமுலைத் தீம்பாலி 118 அன்னையெனத் தன்பாலின் 117 ஆங்கவ ளப்போ 123 ஆடுவார் சாமமெனத் 122 ஆண்டகை யவர்போ 42 ஆண்டகை வனப்பை 131 ஆதகா திதுவென் 194 ஆதி யாலயத் 263 ஆத்தராய் மருங்குறை 52 ஆயமா தவர்பா 187 ஆய போதிளங் 233 ஆயமா தவர்பா 187 ஆயி ரம்பொரி 83 ஆரிய மிந்தப் 55 ஆலுமறைச் சிரமுடியா 115 ஆளியே றன்னவ 272 ஆளுடைப் புகலி 262 ஆறினோ டிரண்டடுத்த 239 ஆன மந்திரக் 20 இங்கிவர் தோற்ற 171 இசைத்தவைங் கதியுஞ் 41 இச்சுழி யுடைய 60 இச்சை யால்வடி 30 இடும்பைநோய் வெள்ள 123 இடைய றாதுநம் 227 இத்தனை யெல்லாஞ் 141 இந்திய னுதலினா 53 இந்நதி வெண்முத் 323 இந்நிலை யலமரு 52 இந்நிலை யூரி 110 இம்பருல குள்ளவல 26 இம்மாயஞ் செய்தானை 90 இரந்த வன்பருக் 211 இருவகைச் சாரியு 52 இருவரு மீண்டு 224 இவ்வண்ண மிருக்கு 170 இவ்வண்ண மிவரொருகா 120 இற்றை வைகலுக் 231 இனையதூ சிவன்பா 67 இன்றிவர்க் கனுமா 167 இன்றுநீ ரிட்ட 254 இன்ன மறத்தா 252 இன்னமும் பன்னா 257 இன்னவாம் பரிக 45 ஈச னாடல்வெம் 73 ஈட்டுவஞ்ச நெஞ்சரே 237 ஈறி லாச்சிவ 85 ஈனர் தாஞ்சடத் 204 உங்கண் மந்திர 236 உங்களேடு மெங்களேடு 243 உடம்பினா லிரண்டே 294 உடுத்த சுற்றமுங் 71 உத்தர திசைப்புரவி 27 உம்மைநா னடுத்த 145 உரகத வாரந் 46 உவநிடக் கலணை 66 உள்ளத்தா சங்கை 139 உள்ளவிழ்ந்த முலைசுரந் 238 உறக்கமொழிந் தறவோர் 165 உனக்கரிய வரமினியா 342 உன்காதன் மாமனெனைப் 278 உன்னத நீளமுண் 49 ஊகந் தவழும் 246 ஊரா ருனைச்சிரிப்ப 14 ஊழின் வரியா 245 ஊழ்வினை வலியா 267 ஊளை யோசைகேட் 78 எங்கிருந் தந்த 186 எடுத்ததிண் கரைக 132 எடுத்தமண் கூடை 124 எந்தவூ ரெந்தச் 287 எந்தா யனைத்துலகு 10 எந்தையெம் பெருமா 195 எம்மொழி தேறி 223 எவ்வண்ண வேதமிகு 61 எழுந்தன னுறங்கி 280 எனத்துதித்த வசிட்டாதி 341 என்ற வறவோ 301 என்ற வாதரந் 72 என்றி ரங்குவோ 14 என்றிரந் திரங்கு 37 என்று தென் 296 என்றுபல முறையாலே 155 என்றேறிய புகழ் 97 என்னா யகனேயோ 275 என்னிவன் பரிமா 4 ஏக நாயக 16 ஏகநா யகனெவ் 136 ஏடநாங்க ளெழுதியிட்ட 243 ஏது மக்கு 227 ஏத்தியருச் சனைசெய்து 343 ஏந்தரி யணைநீங்கி 34 ஏந்தன்முடி மாலை 29 ஏவல்செ யாயத் 285 ஏழிசை மறைவல் 187 ஏனைமந் திரருந் 69 ஐம்புலனுங் கூடற் 303 ஐம்முகச் சைவ 334 ஐய விச்சுர 217 ஐயவோ வென்னுடைய 95 ஒப்பவர் மிக்கோர் 147 ஒல்லையி லதுமன்னற் 33 கங்குலெல்லைகா 85 கங்குல்வந் திறுத்த 7 கங்கைப்புனல் வடி 97 கங்கை யைச்சடை 22 கச்சான வரவ 258 கடியேறு மலர்மகன் 150 கட்டு வார்கரை 109 கண்டவர் கடிதோடிக் 32 கண்டனன் கனன்று 133 கண்டு கூடற் 250 கண்டு நாட்டு 325 கண்ணுத னந்தி 138 கண்ணுமிடு கவசமும் 92 கதிர்நோக்கிக் கனன் 94 கயனெடுங் கண்ணி 9 கரந்தை சூடிய 71 கரிமுகத் தவுணற் 317 கரியி னோசையும் 81 கருங்க டற்றிரை 106 கருத்து றாதவிச் 88 கரும்பனும் விரும்ப 129 கரும்பினிற் கோது 189 கல்லென்றதிர் சும்மைப் 101 கவன வெம்பரி 86 களநடு விரட்டைச் 60 கள்ளொ ழுக்குதார் 74 கற்பலர் கொடியன் 192 கற்றவர் புகழ்சவ் 55 கற்றிணி தோளான் 4 கனவினு நீறு 166 கன்னிநா டெங்கு 221 கன்னிநீ யாரை 279 கன்னி யிற்றுற 228 கன்னியை யீன்ற 282 காண்ட லுஞ்சில 78 காந்து வெங்கத 229 காமனிவ னேகொலறு 28 காயமே யொறுத்து 222 காயும்வேன் மன்ன 46 காவலன் கருமஞ் 2 காவ லோன்மரு 212 காவி நேருங் 37 காற்றி னுங்கடுங் 87 கான கந்தனி 76 கிட்டி யோடினர் 79 கிட்டு வார்பரி 108 குங்குமங் கருப்புரங் 49 குருமொழி தந்தை 322 குலமகள்போற் கவிழ்முக 64 குறட்குநீ ரருத்தி 114 குறிகுணங்கள் கடந்ததனி 161 குற்றமே தப்புரவிக் 92 கூலியாள் வருவ 113 கூலியுங் கொண்டான் 130 கூறிட்ட மூன்றுங் 253 கைக்குமருந் தின்சுவை 151 கைம்மலைச் சாபந் 200 கையர் மாளவு 211 கையெறி யுங்குழற் 274 கொங்க லர்க்குழல் 232 கொட்டினைக் கழலப் 125 கொட்டுமண் சுமந்து 125 கொண்டல் படியுந் 330 கொத்தவிழ்தார் நறுஞ்சா 65 கொய்யு ளைப்பரி 24 கோடுநான் குடைய 316 கோட்டஞ் சிலைவளை 300 கோதறு குணத்தின் 180 சங்கி னோசையும் 75 சச்சிதா னந்த 146 சண்பையர் தலைவர் 262 சதவுருத் திரத்தா 333 சத்திய ஞான 312 சரத வேதம் 326 சவலை நோன்புழந் 207 சாமகண் டத்தன் 320 சாம்ப ராடுஞ் 226 சாயும் பூங் கொம்பரிற் 273 சாய்ந்த கொண்டையுந் 21 சிங்க மனையா 248 சிட்டர் நோக்கியத் 205 சிந்துர நுதன்மால் 2 சிலர்மைந்தரை யெடு 102 சிலையது பொறைதோற் 5 சீறு கொளில 305 சுட்டுதற் கரிய 42 சுந்தர விடங்க 6 சுரபிநீள் செவியி 306 செக்க ரஞ்சடை 237 செக்குர லிடையிட் 170 செங்கணே றனையா 282 செம்ப டாஞ்செய்த 17 செம்பிய னாடு 196 செல்லன் மின்க 227 செல்லுநர் காண 255 செவியுண வான 110 செழியர் கோமகன் 226 செறுத்துநா னும்மை 143 சென்னிக் கோனுந் 179 சென்னிவெண் டிங்கண் 265 சேய தாரகை 74 ஞான நாயக 70 ஞானமா மதநீர் 263 ஞானமுண்ட முனிவர் 238 தங்கள்பேர் தீட்டி 192 தண்டலா ளர்களி 93 தத்துநீர்க் கலத்திற் 166 தந்திரங்களாற் 18 தந்திவாய் மருப்பிடறி 119 தந்தைதாய் பிறரின்றி 116 தந்தையுந் தாயு 279 தந்தையொடு தாயின்றி 119 தரங்கமெறி முத்திவை 25 தரும மாதிநாற் 18 தருமேவு மலைமகளுஞ் 121 தலைமகன் றிருமுன் 130 தலைவனை யிறந்த 280 தள்ள ருந்திற 230 தன்பெருங் கற்பி 261 தன்பெருந் தனமு 285 தன்றொடக் கறுத்த 148 தன்னருண் மாமன் 248 தன்னரு ளான 148 தாதையார் கவர்ந்து 258 தாவு கந்துக 31 தாவு தீவளர்த் 231 தானென மகிழ்ச்சி 40 திடங்காதல் கொண்ட 115 திணிதரு கழுத்தினிற் 49 திண்டிற லவுணன் 320 திண்டோள் வலியாற் 178 திருமணி மைந்தன் 337 திருமறு மார்பன் 309 திருமுலைப் பாலி 188 தீயர் மானமிக் 214 துணையின்றி மக்க 112 துண்ணென மாயோன் 136 தும்பைச்சடை முடியா 98 துளபக் குன்றை 328 துறந்தவர் போக 149 துன்னு மின்னிய 31 தூக்கி யார்த்த 16 தெரிதர வகுத்த 58 தெள்ளியடு சிற்றுண்டி 118 தென்னவன் றேவி 220 தென்னுலகிற் புகுந்த 276 தேசம் பரவுங் 248 தேம்படு குமுதச் 198 தேவரு மனிதருந் 54 தேவர்க்கு மரிய 113 தேற லாதார் 245 தேற்றமில் லாத 169 தொல்லைநீ ருலக 143 நங்கோமகன் செங்கோல் 130 நந்தி யாதியாம் 15 நந்தி நாகுநீர் 235 நம்பந்த மறுப்போன் 189 நரியாவும் பரியாக்கி 154 நல்ல வாம்பரி 72 நறை கெழு துழாயி 260 நற்புறம்வான் முக 62 நன்றி தேறார் 251 நன்றி ருந்தனி 210 நன்னக ருறக்க 278 நாடிக் காவலன் 77 நாதவோ நாத 94 நாலுகால் களுங்கடை 50 நாளையுந்திரு 73 நாள்சில கழிந்த 270 நிறையுடை யிவனை 142 நிற்கின்றான் முகத்தை 43 நின்ற நீணிலைப் 78 நின்றவந் தணரை 257 நின்றுண்டு திரியுங் 198 நின்னையுணர்ந் தவர்வேத 152 நூறுவிர லித்தமவாம் 64 நெஞ்சே யுரையே 36 நெட்டலை யொதுங்கி 127 நெய்த்திடு மாந்தளிர் 47 நெருங்கு தூரிய 70 நேற்றும்பரி நரியாயின 103 பகைத்திற முருக்கு 51 பங்கயக கடவு 319 பஞ்சவ னடைந்த 220 பண்சு மந்தமறை 106 பண்ணான் 301 பண்படு வேத 293 பத்திக்குளிர் கமுகின் 98 பந்தி யாளர்கள் 87 பரனருள் விளையாடல் 34 பரிதியு மதியும் 134 பருமுத்த முலையாள் 190 பல்லாயிரஞ் செந்தாமரை 99 பழியொடு பாச 335 பள்ள மாக்குவ 24 பறிபடு தலையும் 183 பறிப்ப வேரொடு 83 பன்றி வாய்விடு 84 பன்னிற மாட 324 பன்னிற முடையவாம் 53 பாடவிஞ் சையனோ 129 பாட்டின் மேற் கருணை 256 பாண்டியன் முதுகிற் 133 பாதியுமை யுருவான 151 பாயிருட் படலங் 38 பாய்திரை புரளு 144 பிச்ச வொண்குடை 17 பிட்டிடுவே னுனக்கென்றா 117 பிட்டுவாய் மிதப்ப 124 பிட்டுவிற் றுண்டு 112 பித்தனோ விவன்றா 128 பிரமன் மான் முதலாந் 313 பிரிவுற வுரத்தி 59 பிள்ளை யாரிட 218 பிறக்கு மாசையோர் 21 பிறவியந் தகர்க்கு 169 பின்பர வாரம் 173 பின்றொ டர்ந்துநாய் 84 பின்னவ னாணை 43 பின்னுமவர் கனவின்கண் 164 புட்களும் பல 232 புண்ணிய நீற்றுத் 197 புத்தர் சில ரிலங்கையினும் 163 புலைத்தொ ழிற்குவித் 213 புறவு பூவைபைங் 82 பூட்டியருட் பாசமிரு 13 பூவார் முளரி 35 பேதுற்ற முனிவர் 185 பேரரு ணிறைந்த 224 பொங்கர்மென் புதல்க 325 பொங்குஞ் சினமடங்கல் 12 பொட்டழகன் மார்பிலிடு 30 பொய்யர் சார்பினை 208 பொய்யின் மறையின் 250 பொய்யுரை பிதற்று 185 பொருப்பே சிலையாய் 250 பொருவில்சீ ரிலக்கண 47 பொழிந்த தண்மது 216 பொன்மலர்க் கைதை 266 பொன்றுதன் முத்தி 168 பொன்னவர் 295 பொன்னாட்டின் மடவாரை 276 பொன்னுள்ளன பணி 102 பொன்னெடுஞ் சயிலங் 5 போதவா னந்தச் 300 போதவா னந்தத் 9 போதவிழ் தாரா 183 மகவளிக்கும் பிடர்வெ 62 மங்கலவோரை 302 மங்கை தன் கற்பு 293 மட்பு லந்திசை 25 மணிமாலையு மலர்மாலையுஞ் 334 மண்டொ டுங்கருவி 108 மண்ணாய்ப் புனலாய் 12 மதத்தினின் மான 253 மதிநுத லிமய 315 மந்தரங் கயிலை 147 மருத்தென வருகின்ற 33 மருந்து மந்திரம் 215 மலர்மகள் மார்பன் 181 மலைவைத்த சிலையான் 271 மழலை யின்னமுந் 234 மறத்தாறு கூந்த 140 மறம்பு னைந்தவேன் 80 மறவா ளிலங்கை 326 மறித்த கையர்பின் 234 மறுகு தோறும் 331 மறுகும்பல பொருளா 101 மறைபுலப் படுத்தநூல் 241 மறைமரபு சால 27 மறைவழி நின்று 200 மற்றிவர் தம்மை 254 மன்றுஞ் சித்திர 80 மன்றுடை யானோர் 139 மன்னவ னினைவாற்றான் 35 மன்னவ னெறிகோடா 32 மாசறு மணிபோற் 174 மாசறு மனத்தான் 283 மாண்ட தாரக 19 மாமத மொழுக 199 மாமுர சொலிப்பச் 196 மாயா விருத்தியினான் 152 மாறுகொ ளமணர் 203 மாற்றவ ணகை 288 மானிரையுங் குயவரியும் 162 மிடைந்தவர் தண்டெஞ் 8 மிடைந்த மாயவாம் 23 முடங்கு காலுடைச் 79 முடங்குகாற் சிலந்தி 322 முட்டிய சமரிடை 48 முண்டி தஞ்செய்த 229 முந்திய மணாட்டி 286 முந்தையொரு மந்திரி 28 மும்மை யுலகு 331 முறையி னோதிய 23 முற்பக லாறி 339 முன்பு தீயில் 246 முன்புபெருந்துறை 156 முன்னா முதுபொருட்கு 11 மூத்தவள் சிறுவர் 286 மூவா முதலாய் 11 மெய்கழிந் தின்னுயிர் 274 மெய்யி லிட்டனர் 216 மெய்யில் சிந்தையா 204 மேதகு வாணிகர் 293 மைந்தனி லாழி 337 யாது சூழ்ச்சியென் 233 யாவ ரும்புன 15 யாவரே யாக 171 வடபுலத் துள்ள 261 வடிக்கணுட் செருகின 273 வட்டத் தோல்வரி 17 வட்ட வாழியொன் 207 வணங்கில்செல் வந்தழீஇப் 275 வண்டுபோற் புண்டரிக 160 வண்டுழு தாரி 39 வந்தவரைச் சிவந்த 91 வந்தவிப் பத்தி 146 வந்தனவா லிவ்விரண்டு 63 வந்திக்குக் கூலி 127 வரிசைமரு மகனரவால் 277 வருதிநின் மரபுக் 281 வருபுனல் பெருகப் 141 வரையறை செய்த 3 வரையுந்திய மதுமுல்லை 100 வல்வினை வலியான் 183 வழிவழி வருமா 253 வழிவிட வருவார் 270 வழுதிதன் றமர்விட் 105 வழுதியால் விடுக்கப் 158 வழுதியு மறிந்து 38 வளங்கொள் காம்போச 54 வளவர்கோன் செழியன் 180 வளவர் கோன்றிரு 206 வளைந்தமெய் யுடைய 111 வள்ளறன் கோப 132 வன்புதாழ் மனத்தோர் 137 வாகு வலத்தான் 177 வாசமஞ் சனநீ 335 வாசமஞ் சனந்தேன் 333 வாசிவா ணிகர்க்கு 67 வாதவூ ரனைவிடுத்து 163 வாம்ப ரித்திர 75 வாம்பரி மறைக்கெலாம் 51 வாயி லெங்கனுந் 212 வாலி தாகிய 208 வாவி நாறிய 22 வானத்தின் மண்ணிற் 126 வான லமுத 176 வானவர் தமக்கே 44 வானவர் மனிதர் 135 வானாறிழி நதியாயிர 104 விண்சுமக்கும் புள்ளாய் 155 விண்டு ழாவுங் 178 விரிந்தவேத நாவர்தாம் 240 விரிபொழிற் சாலி 56 விருத்தகு மார 338 விழித்த ஞாளிகள் 81 விளம்பு கின்றவ 24 விற்பயி றடக்கை 307 வீங்குநீர்ச் சடையா 220 வீதிதொறும் வீழ்ந்து 158 வீழ்ந்தனன் றரைமேற் 268 வெங்கதிர் வேலை 271 வெங்கரி யாவி 336 வெங்குரு வேந்த 193 வெட்டுவார் மண்ணைமுடி 120 வெண்ணிறஞ் சிவப்புப் 57 வெந்தசிந்தை யமணர் 241 வெம்பணிக ளைப்பொர 26 வெம்மத வேழங் 223 வெவ்விய வேலான் 289 வெள்ளிநித் 57 வெறித்த டக்கைமத 107 வெறுத்த காணமுங் 77 வென்றி மாமுர 237 வென்றுவீ றடைந்த 244 வேண்டுகொண் டருளை 201 வேதிய னொருவன் 186 வேமே யென்ப 249 வேலையினா லறவருந்தி 122 வேளையும் வனப்பி 131 வேறுரை யாது 128 வேறிவே றிறைவன் 172 வைகலு மவித்த 111 வைதி கத்தனி 203 ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியர் உரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) L L L நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் L L L குறிப்புகள் (பா-ம்) 1. மந்துரை யகலிதாக வகுப்பது (பா-ம்) 2. வேறு தொடுவது (பா-ம்) 3. அழகு செய்திடுவது. (பா-ம்) 1. வருவ வென்னா (பா-ம்) 2. எதிர்த்துச்சீறி. (பா-ம்) 1. தேறான். (பா-ம்) 1. சிலர்சிலர். (பா-ம்) 1. இன்னும் (பா-ம்) 1. இத்தகை (பா-ம்) 1. நச்ச (பா-ம்) 1. உடல் வீங்க. (பா-ம்) 1. ஆவா வென்னா வஞ்சே. (பா-ம்) 1. அஞ்சா லென்னா விதுவோ. (பா-ம்) 1. யாரையு மறிய. (பா-ம்) 1. இரட்டியாதி. (பா-ம்) 1. பொதுமைத்தாய. (பா-ம்) 1. முரணது வாகி. (பா-ம்) 1. வியப்ப மெய்தியே. வியப்ப மெய்தினான். (பா-ம்) 1. குர்ச்சரம் (பா-ம்) 1. மிச்சர மிதன் பேர். (பா-ம்) 1. பின்பு பக்கமும். (பா-ம்) 1. நன்றி தரும். (பா-ம்) 2. விசயம் பெருக்கும். (பா-ம்) 1. தகையவாகி. (பா-ம்) 1. வெம்பரித் தூளி (பா-ம்) 1. குளிற. (பா-ம்) 1. கொள்வகை. (பா-ம்) 1. நீணிரைப்பந்தி (பா-ம்) 1. ஓடுங்கு நோய். (பா-ம்) 1. கட்ணகினியனவாய் (பா-ம்) 1. பரித்துக் கரை முரித்து. (பா-ம்) 1. கவிழ (பா-ம்) 1. கரையுடைப்பு (பா-ம்) 1. மூதாட்டி (பா-ம்) 1. என்ன வேலை (பா-ம்) 1. செல்வமிக. செல்வமகம் (பா-ம்) 1. வாய் மலர்ந்து. (பா-ம்) 1. தாங்கி (பா-ம்) 1. நிரப்ப (பா-ம்) 2. விச்சையில் (பா-ம்) 1. அரசு செய்திருப்பீர் (பா-ம்) 1. தோன்றி (பா-ம்) 1. இசைத்தனர். (பா-ம்) 1. சுரதமாறன் (பா-ம்) 2. மின்னார் மோலி. (பா-ம்) 1. மாயக்கடவுள் (பா-ம்) 1. எவரே யென்று. (பா-ம்) 1. போயின மூன்றமாண்டில். (பா-ம்) 1. செய்யு ஞானசம்பந்தனாக. (பா-ம்) 1. மேல் கொண்டு. (பா-ம்) 1. செம்பியனாடு நீங்கி. (பா-ம்) 2. கண்ணிய தோற்றம். (பா-ம்) 1. முனிவரென்ன. (பா-ம்) 1. வாவென விடுத்தனர். (பா-ம்) 1. துவன்றி. (பா-ம்) 1. இசைத்தலுமமணரும். (பா-ம்) 1. அவ்விரு பேரும். (பா-ம்) 1. அவையத் தேறி. (பா-ம்) 1. மிடைந்ததின்ன. (பா-ம்) 1. நினை வினி. (பா-ம்) 1. சினையலறிட. (பா-ம்) 1. தேர்கிலா மைந்த (பா-ம்) 1. உங்கள் மந்திர மோரேட்டிற் றீட்டுகவோ ரேட்டில். (பா-ம்) 1. நுவல்வார். (பா-ம்) 1. வாய்மை கூர். (பா-ம்) 1. கதறுவார் (பா-ம்) 1. வடிவாணிரைத்த (பா-ம்) 1. பொறிவழி போய். (பா-ம்) 1. மனத்தைய மடைந்த அறிவித்தஃதேயது வன்றோ (பா-ம்) 1. கோமானும் (பா-ம்) 2. காழிக்கரசைத் துதித்திறைஞ்சி. (பா-ம்) 3. விண்டுகூறற்கரிய. (பா-ம்) 1. கழியப்பட்டான். (பா-ம்) 1. எடுத்தினி துரைப்பாம். (பா-ம்) 1. அருகிய துயிர்ப்பு. (பா-ம்) 1. ஈங்கிட்டு (பா-ம்) 2. கைவிட்டு. (பா-ம்) 3. தனிபோய் (பா-ம்) 1. கண்கலக்கம். (பா-ம்) 1. ஆலவாயாணை. (பா-ம்) 1. உள்புகுந்தார். (பா-ம்) 1. வீசுதெண். (பா-ம்) 1. அறியாக்களவை.