நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 14 திருவிளையாடற் புராணம் திருவாலவாய்க் காண்டம் - 1 உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 14 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 328 = 360 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 225/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற்காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரியவர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல்களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை 1. புராண இலக்கியம் தமிழில் தோன்றி வளர்ந்துள்ள இலக்கிய வகைகளில் புராணம் என்பதும் ஒன்றாகும். புராணம் என்ற சொல்லிற்குப் பழமை, தொன்மை என்பது பொருள். தொல்பழங்காலத்திற்கு முன்பிருந்தே மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகள், கற்பனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு படைப்பாற்றல் மிக்க பாவலர்களால் படைக்கப்பெற்றவை புராண இலக்கியங்கள் ஆகும். புராணம் என்ற சொல்லினைப் புராணி, நவீனாம் என்று விரித்துப் பழைய பொருள் பேசப்படினும் புதுப்பொருள் பொருந்தியது என்று ஒரு விளக்கம் கூறப்படுதல் உண்டு. ( It is though old ever new ) . மிகப் பழைய காலத்தில் நடந்ததாகக் கருதப்படும் கதை விளக்க மாகவும், பழைய நம்பிக்கைகளையும் மரபுகளையும் உரைப்பதாகவும் அமைவது புராணம். இவை தெய்வங்கள், முனிவர்கள், அரசர்கள் பற்றிய புனைவுகளாக இலங்குவன. இதிகாசத்துடன் புராணத்தையும் சேர்த்து ஐந்தாம் வேதமாகச் சாந்தோக்கிய உபநிடதத்தில் ஏழாம் இயலில் ( முதற் காண்டம்) சொல்லப்பெற்றது. உண்மையான நண்பன் நல்ல அறிவுரையினை உரிமையோடு கூறி நெறிப் படுத்துதல் போலப் பழைய கதைகளின் வழியே நீதிகளைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துதலின், புராண இதிகாசங்கள் யாவும் சுஹ்ருத் சம்மிதை ஆகும் என்று பிரதாபருத்தரீயம் என்ற அணியிலக்கணப் பனுவலில் வித்தியாநாதர் ( கி.பி.13 நூ.) குறித்துள்ளார். சுஹ்ருத் - நண்பன்; சம்மிதை - போன்றது என்று பொருள் கூறுவர். எல்லாப் புராணங்களையும் வேதவியாசரே தொகுத்துச செய்தனர் என்பது ஒரு கருத்து. இவையாவும் நைமிசாரண்யத்தில் இருந்த முனிவர்களுக்குச் சூதன் என்னும் பாடகன் கூறியவை என்பது மற்றொரு கருத்து. புராணங்களை 1. மகாபுராணம் 2. உபபுராணம் 3. தலபுராணம் என்று மூன்று வகையாகப் பாகுபடுத்துவர். முன்னைய இருவகைப் புராணங்களும் வடமொழியில் தோன்றியவை; அவற்றுள் ஒரு சில தமிழில் மொழி பெயர்க்கப்பெற்றவை. எனின், மூன்றாவதாகக் குறிக்கப் பெற்றுள்ள தலபுராணங்கள் பலவும் தமிழில் மூல இலக்கியமாக முகிழ்த்தவை. இவற்றுள் ஒரு சில வடமொழியில் மொழி பெயர்த்துக் கொள்ளப் பெற்றவை. கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடியுள்ள திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் தமிழில் முழுமையாகக் கிடைத்துள்ள முதல்தல புராணமாக ஆராய்ச்சி அறிஞர்களால் கருதப்படுகின்றது. இறைவன் கோயில் கொண்டுள்ள தலத்தின் சிறப்புக்களையும் அங்குவங்கு வழிபட்டோர் பெற்ற நற்பேறுகளையும் எடுத்துரைக்கும் பாங்கில் கற்பனை வளமும் கருத்து வளமும் சிறக்கச் சீரிய விருத்த யாப்பில் புனையப் பெறும் தலபுராணத்தினைக் காப்பியமாகக் கருதுவோரும் உளர். பிரபந்த மரபியல், “காப்பியம் புராணமாய்க் கருதப் பெறுமே” என்று இயம்புதலின், காப்பியமும் புராணமும ஒருவகை இலக்கியப் படைப்பாக எண்ணப் பெற்றமை புலனாகும். 2. தல புராணங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினாலும் புனிதத் தன்மை பொருந்திய தலத்திற்குப் பாடப் பெற்றுள்ள தல புராணங்களில் அருணாசலப் புராணம், சிதம்பரப் புராணம், சேது புராணம், திருவாரூர்ப் புராணம், திருவானைக்காப் புராணம், திருக்காளத்திப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம், திருவெண்காட்டுப் புராணம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. பெரும்பாலும் தலத்தின் பெயரினாலேயே புராணங்கள் பெயர் பெற்றன. எனின், சிராமலை நாதரின் மீது சைவ எல்லப்ப நாவலர் பாடியது செவ்வந்திப் புராணம் ஆகும். இது தலத்தின் பெயரால் அமையவில்லை. சிராமலையில் (திருச்சி மலைக்கோட்டையில்) கோயில் கொண்டுள்ள ஈசனுக்கு உகப்பான செவ்வந்தி மலரின் பெயரினால் இப்புராணம் வழங்கப்பெற்றது. தல புராணங்களை மிகுதியாகப் பாடிய சிறப்புக்குரியவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவர். 3. திருவிளையாடல் திருவிளையாடற் புராணம் மதுரையில் கோயில் கொண்டுள்ள சொக்கநாதரின் அரும்பெரும் அருள் விளையாடல்களைக் காவியச் சுவையுடனும் கற்பனை வளத்துடன் பத்தி உணர்வுஉடனும் கலைச் சிறப்புடனும் பாரித்துரைக்கும் பாங்கில் பரஞ்சோதி முனிவரால் பாடப்பெற்றது. இப்படைப்பும் தலத்தின் பெயரால் வழங்கப்பெறாமல் இறைவனின் அற்புத விளையாட்டின் பெயரினால் வழங்கிவருதல் நோக்கத்தக்கது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகைத் தொழில்களையும் ஈசன் ஒரு விளையாட்டாக நிகழ்த்துகிறான் என்பதை விளக்க முற்பட்ட மாதவச் சிவஞான முனிவர், “ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தனுக்கு ஒரு விளையாட்டாதல் போல” என்று சிவஞான சித்தியார் உரையில் உவமை கூறித் தெளிவுறுத்தினார். மாணிக்கவாசகர், “காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்று இறைவனின் விளையாட்டினைக் குறித்துள்ளார். ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு படைத்த மாந்தர் வரையுள்ள எல்லா உயிர்க்கும் அருள் சுரக்கும் வரம்பற்ற ஆற்றலும் எல்லைஇல்லாப் பெருங்கருணைத்திறமும் வாய்ந்த முதல்வன் பல்வேறு கோலங்கொண்டு மன்பதைக்கு அருளிய வியத்தகு செயல்களைத் திருவிளையாட்டு, திருவிளையாடல் எனப் பெயரிட்டு வழங்கினர். இதனை வடமொழிவாணர் லீலை என்று கூறினர். பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரை மாநகரில் சிவபிரான் புரிந்துள்ள பற்பல அருள் விளையாடல்களில் அறுபத்து நான்கினை மட்டும் தேர்ந்தெடுத்துச் செல்லி நகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தினைச் செந்தமிழ் அமுதமாகப் பாடினார். இதுவே கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர்க்கு மூலமாதல் வேண்டும். எனினும், தம் நூலுக்கு மூலம் வடமொழியில் ஈசசங்கிதை என்று பாயிரத்தின் தொடக்கத்தில் குறித்துள்ளார். மூலம் தமிழாகவே இருப்பினும், வடமொழியிலிருந்து பாடுவதாகக் கூறுதல் நூலுக்குப் பெருமைதரும் என்று எண்ணிய காலத்தில் வாழ்ந்தவர் பரஞ்சோதியார் எனக் கருத வேண்டியுள்ளது. சைவப் பெருமக்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் என்ற மூன்றினையும் சிவபிரானின் முக்கண்ணாகப் போற்றுதல் மரபு. இவற்றுள் நடுவணதாகிய திருவிளையாடற் புராணத்தினைப் பாடிய பரஞ்சோதியாரின் புலமைத் திறத்தையும் புராணத்தின் அமைப்பியல் அழகினையும் முதற்கண் சுருக்கமாகக் காண்போம். 4. பரஞ்சோதியார் படைப்புக்கள் பரஞ்சோதியார் திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் தோன்றியவர். இவர்தம் தந்தையார் மீனாட்சி சுந்தர தேசிகர் ஆவர். இளமையிலேயே பரஞ்சோதியார் செந்தமிழையும் வடமொழியையும் குறைவறக் கற்றார். இலக்கணம், இலக்கியம், அளவை நூல், நிகண்டு, நீதி நூல், வானூல், கலை நூல்கள் முதலியன பயின்று வரம்பிலாப் புலமை நிரம்பப் பெற்றார். சாத்திர, தோத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றுச் சிவநேசம் பூண்டு விளங்கினார். கவிபாடும் ஆற்றலும் பெற்றனர்.இவர் பாடியவை திருவிளையாடற் புராணம், மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி, வேதாரணிய புராணம் என்பன. இப்படைப்புக்கள் பரஞ்சோதியாரின் புலமை வளத்திற்கும் கற்பனைத் திறத்திற்கும் படைப்பாற்றலுக்கும் கட்டியங் கூறுவன எனலாம். 5. திருவிளையாடற் புராணம் அமைப்பியல் வனப்பு ஒரு பெருங்காப்பியத்திற்குரிய அமைப்பியல் முழுமையும் வாய்க்கப் பெற்ற இலக்கியமாகத் திருவிளையாடற் புராணம் திகழ்கின்றது. மதுரைக்காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களையும் 64 படலங்களையும் இப்புராணம் கொண்டுள்ளது. பெரும்பான்மையும் அறுசீர் ஆசிரிய விருத்தங்களும், கலிநிலைத்துறையில் அமைந்த பாடல்களும், கலிவிருத்தங்களும் செவிக்கின்பம் பயக்கும் பாங்கில் ஓசை நலம் தளும்பப் பரஞ்சோதி முனிவரால் பாடப்பெற்றவை. இப்பாடல்களின் தொகை 3363 ஆகும். இம்முனிவர், “ விரிமுறை விருத்தச் செய்யுள் வகைமையால் விளம்பலுற்றேன் ” என்று இயம்புதல் எண்ணத்தக்கது. நீர்பிரித்துத் தீம்பாலினை மட்டும் பருகக் கூடிய அன்னப் பறவையினைப் போல, இந்நூலினைப் பயில்வோர் குற்றத்தை நீக்கிக் குணத்தினைக் கொள்ளுதல் வேண்டும் என்று முனிவர் அவையடக்கம் கூறுதல் அறியத்தக்கது. இப்புராணத்தின் முதற்பாடல் “சத்தியாய்ச் சிவமாகி ” எனத் தொடங்குவது; விநாயகர்க்கு வணக்கம் கூறுவதாய் அமைந்தது. வாழ்த்துச் செய்யுளும் நூற்பயன் நுவலும் பாடலும் தொடர்ந்து வருவன. பெரும் பாலும் நூற்பயன் கூறுதல் நூலின் முடிவில் இடம் பெறும்; எனின், இங்குத் தொடக்கத்தில் இடம்பெறுதல் சுட்டுதற்குரியது. தொடர்ந்து சிவம், சத்தி உள்ளிட்ட கடவுள் வணக்கப் பாடல்களும், சிவனருட் செல்வராகிய அடியார்க்குரிய பாடல்களும் அமைந்துள்ளன. பாயிரப் பகுதியின் எச்சமாக நூல் செய்தற்குரிய காரணமும், முறையும், அவையடக்கமும், அரங்ககேறிய வரலாறும் சொல்லப்பெற்றன. திருநாட்டுச் சிறப்பு, திருநகரச் சிறப்பு என்ற பகுதிகளில் பாண்டிய நாட்டு வளமும், இயற்கை எழிலும், திணைக் காட்சிகளும், மதுரை மாநகரின் அமைப்பழகும், வீதிகளின் வனப்பும், மக்களின் செழுமையும் சிறப்பாகப் புனையப் பெற்றுள்ளன. இவற்றைப் படிப்பவரின் மனத்தில் சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் இளங்கோவடிகள் படைத்துள்ள மதுரை மாநகரின் மாண்புகள் தோன்றுதல் கூடும். புராண வரலாறு, தலம், தீர்த்தம், மூர்த்தி விசேடங்களும், புராணச் சுருக்கமாக அமையும் பதிகப் பகுதியும் படித்து மகிழத்தக்கவை. பரம்பொருளே விண்ணகத்தினின்றும் மண்ணகத்தில் தோன்றி நீதிநெறி நிலைபெறவும் யாவரும் இன்புறவும் அரசு புரிந்த திருவிளையாடல்கள் சுட்டத்தகுவன. இவற்றை நன்கு கற்றறிந்தவராகிய குமரகுருபரர், தமரநீர்ப் புவனம் முழுதொருங் கீன்றாள் தடாதகா தேவியென் றொருபேர் தரிக்கவந் ததுவும் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவும் குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும் தண்டமிழ் மதுரம் கூட்டுண வெழுந்த வேட்கையால் எனில்; இக் கொழிதமிழ்ப் பெருமையையார் அறிவர்! என வியந்து போற்றுதல் எண்ணி இன்புறத்தக்கது. இறைவன் திருவருட் சிறப்புடன் அருந்தமிழ்ச் சிறப்பும் இப்புராணத்தில் எங்கும் இடம்பெறக் காணலாம். மூவேந்தரும் செந்தமிழ்மொழியைப் பேணி வளர்த்தனர். எனினும், பாண்டியரின் பணியே விஞ்சி நிற்பது. முச்சங்கம் அமைத்துப் புலவர்களைப் புரந்து முத்தமிழ்ப் பணிபுரிந்த பாண்டியரின் சிறப்பு இப்புராணத்தின் பல இடங்களிலும் பரவியும் விரவியும் வந்துள்ளது. சங்கப் பலகை கொடுத்த படலம், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம், சங்கத்தார் கலகம் தீர்த்த படலம், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் என்பன எண்ணற்பாலன. “நெற்றிக் கண்ணினைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற அஞ்சா நெஞ்சம் கொண்ட அருந்தமிழ்க் கவிஞன் நக்கீரனின் குரல் இப்புராணத்தில் ஒலிக்கிறது. அகத்தியர் தென்னாடு வருதற்கு முன்பே செந்தமிழ் வளம் பெற்று விளங்கியது என்ற கருத்தினை, விடைகொடு போவான் ஒன்றை வேண்டினான்; ஏகும்தேயம் தொடைபெறு தமிழ்நாடு என்று சொல்லுப; அந்த நாட்டின் இடைபயில் மனித்த ரெல்லாம் இன்தமிழ ஆய்ந்து கேள்வி உடையவர் என்ப கேட்டார்க்(கு) உத்தரம் உரைத்தல் வேண்டும் காண்க (கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.1) என்ற பாடலில் பரஞ்சோதியார் புலப்படுத்தியுள்ளார். கம்பரும் என்றுமுள தென்தமிழை இயம்பி இசை கொண்டான் என்று தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பினைக் கூறுதல் இயைபு கருதி இவண் எண்ணிப் பார்த்தற்குரியது. தமிழிசையின் தனிப்பெரும் சிறப்பினையும் ஆற்றலையும் விறகுவிற்ற படலத்தில் பரஞ்சோதியார் சுவைபடப் பாடியுள்ளார். தன்னடியார் ஆகிய பாணபத்திரனின் பொருட்டு ஏமநாதன் என்னும் வடநாட்டுப் பாணனை அடக்கி ஆளும் பாங்கில் ஈசன் முதியனாகத் தோன்றிப் பண்ணிசைத்த பாங்கினப் பரஞ்சோதியார், “ பாணர்தம் பிரானைக் காப்பான் பருந்தொடு நிழல்போக் கென்ன யாணரம் பிசைபின் செல்ல இசைத்தவின் னிசைத்தேன் அண்ட வாணர்தம் செவிக்கா லோடி மயிர்த்துள்ள வழியத் தேக்கி யாணரின் அமுத யாக்கை இசைமயம் ஆக்கிற் றன்றே” “ தருக்களும் சலியா; முந்நீர்ச் சலதியும் சலியா; நீண்ட பொருப்பிழி அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா; அருட்கடல் விளைத்த கீத வின்னிசை அமுதம் மாந்தி மருட்கெட அறிவன் தீட்டி வைத்தசித் திரமே ஒத்த” என வரும் பாடல்களில் பயில்வோரின் உள்ளம் இன்புறப் படைத்திருத்தல் காணத்தக்கது. யாழ் + நரம்பு - யாணரம்பு எனப்புணர்ச்சி பெறுதற்கு வீரசோழிய இலக்கண நூலில் விதியுள்ளது. தேவர்க்கும், வேந்தர்க்கும், புலவர்க்கும் அருள் சுரக்கும் முதல்வன் அஃறிணையாகிய பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் பொருட்டுத் தாய்ப் பன்றியாக அவதாரம் கொண்ட அருட்செயலையும் இப்புராணம் ஒரு திருவிளையாடலாகப் போற்றியுள்ளது. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம், பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் என்பன ஆலவாயண்ணலின் அரிய அருள் விளையாட்டிற்குச் சான்றாவன. பரஞ்சோதியார், என்னையா ளுடைய கூடல் ஏகநா யகனே யுங்கட்(கு) அன்னையாய் முலைதந்(து) ஆவி யளித்துமே லமைச்ச ராக்கிப் பின்னையா னந்தவீடு தருமெனப் பெண்ணோர் பாகன் தன்னையா தரித்தோன் சொன்னான் பன்னிருதனயர்தாமும் எனவரும் பாடலில் நான்முகன் கூற்றில் வைத்துக் கூறும் திறம் காணத்தக்கது. மாணிக்கவாசகரின் பொருட்டுச் சோமசுந்தரக்கடவுள் புரிந்த திருவிளையாடல்கள் பற்பல. நரி பரியாக்கிய படலம், பரி நரியாக்கிய படலம், மண் சுமந்த படலம் என்பன எண்ணுதற்குரியன. வந்தி மூதாட்டிக்கு ஏழைபங்காளன் ஆகிய ஈசன் ஏவலனாக மண்சுமந்த திருவிளையாடலையும் பரஞ்சோதியார் பாடியுள்ளார். இத் திருவிளை யாடலை மாணிக்கவாசகப் பெருமான், பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் என்று குழைந்துருகிப் பாடியிருத்தல் இயைபு கருதி இவண் எண்ணத்தக்கது. திருஞானசம்பந்தர் மதுரைமாநகரில் சமணர்களுடன் சொற்போர் புரிந்து சைவத்தினை நிலைநாட்டிய வரலாற்றினையும் பரஞ்சோதி முனிவர் புராணத்தின் இறுதிப்பகுதியில் பாடியுள்ளார். இவர் நோக்கில், மாணிக்கவாசகர்க்குப் பிற்பட்டவராகச் சம்பந்தர் தோன்றுகிறார் எனலாம். கலைக் களஞ்சியமாகக் காட்சிதரும் திருவிளையாடற் புராணத்தில் இறைவனின் அளப்பரிய அருள்திறம், சிவநெறியின் மாட்சி, செந்தமிழின் சிறப்பு, நீதிகள், அரசியல்நெறி, இல்லற நெறி, சமுதாய ஒழுங்கு, பல்வேறு நம்பிக்கைகள், தொன்மங்கள் முதலியன சிறப்பாகப் பாடப்பெற்றுள்ளன. இதில் இடம் பெறும் இயற்கைக் காட்சிகள், கற்பனைகள், அணிகள், யாப்பியல் வனப்பு, ஓசைநலம் என்பன இதன் இலக்கியத் தரத்தினை உயர்த்துவன எனலாம். இத்தகைய சீரிய இலக்கியப் படைப்பிற்கு உரைகள் பல எழுந்தன. இத்திறம் பற்றிச் சுருங்கக் கூறலாம். 6. திருவிளையாடற் புராணம் உரைமரபு இப்புராணம் தோன்றிய காலம் முதல் இதில் இடம் பெறும் கதைகளைப் பொதுமக்களும் கற்றோரும் கேட்டின்புறும் வகையில் சொற்பொழிவு புரிவோர்க்காகப் பெருஞ்செல்வரும் சைவச் சான்றோரும் பொருளுதவி தந்துவந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் உரையில்லாமல் இதில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்குத் தெளிவான பொருள் அறிய முடியாத நிலை ஏற்பட்டது. அதன்விளைவாக உரைகள் தோன்றலாயின. அவற்றுள் ஒரு சிலவற்றைக் குறிப்பிடுதல் தகும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர் சோடசாவதானம் சுப்புராயச் செட்டியாரவர்கள் எழுதிய உரை பலராலும் பயிலப் பெற்று வந்துள்ளது. இவ்வுரையினைப் பின்பற்றி ஈக்காடு இரத்தினவேலு முதலியார் பொழிப்புரை எழுதி வெளியிட்டனர். மதுரைக் காண்டத்திற்கு மட்டும் மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை என்பார் பொழிப்புரை எழுதினார். இவர்கள் உரை திருவிளையாடற் புராணத்தின் பொருளைப் புரிந்து கொள்ளுதற்குப் பயன்தந்தன. எனினும் பல்வேறு பதிப்புக்களையும் ஒப்புநோக்கித் தக்க பாடங்களைத் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் முறையிலும் ஆர்வலர் அனைவரும் பயின்று மகிழும் பாங்கிலும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் மூன்று காண்டங்களுக்கும் முறையாக எழுதிய உரை அட்சய ஆண்டு, தைத்திங்கள் 8 ஆம் நாள் (1927) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் செப்பமுற வெளியிடப் பெற்றது. கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணாக்கர்க்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அறிஞர்க்கும் பெரிதும் பயன்படும் பாங்கில் எழுதப் பெற்றுள்ள இவ்வுரையின் சிறப்புக்களைச் சுருக்கமாக இங்குக் காண்போம். 7. நாவலர் ந.மு.வே. உரைத்திறம் இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற அறிஞர் பெருமக்களில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடத்தக்க புலமைச் செல்வராவர். இவர்களிடம் பயின்ற என் பேராசிரியப் பெருமக்கள் வகுப்பறையில் இவர்தம் நுண்மாண் நுழைபுலச் சிறப்பினையும் உரைகூறும் மாண்பினையும் பன்முறையும் எடுத்துரைத்த நினைவுகள் என் மனத்திரையில் எழுகின்றன. அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழைய இலக்கியங்களுக்குப் பேருரை கண்ட இப்பெருமகனார் திருவிளையாடற் புராணத்திற்கும் சிறந்த உரை வரைந்திருத்தல் எண்ணுதற்குரியது. நாலடியாரில் பொழிப்பு, அகலம், நுட்பம், நூலெச்சம் என்ற நான்கு வகையான் நூலிற்கு உரை அமைதல் வேண்டும் (32.9) என்ற வரையறை காணப்படுகிறது. நாட்டார் ஐயா அவர்கள் உரை இக்கூறுகள் யாவும் பொருந்தி நூலின் சிறப்பினை வெளிக்கொணர்ந்து பயில்பவர் மனத்தில பதியச் செய்தல் சுட்டுதற்குரியது. சங்க இலக்கியப் பாக்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்கள், திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் என்பன இவர்தம் உரையில் மேற்கோளாக எடுத்தாளப் பெறுவன. உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் கருத்துக்களையும் இடையிடையே எடுத்துக் காட்டித் தம்உரைக்கு ஆக்கம் சேர்த்தல் இவர்தம் இயல்பு. பாக்களுக்குரிய யாப்பினைச் சுட்டுதலும் அணிகளை விரித்து விளக்குதலும் தனிச்சிறப்பு. பாக்களில் அகன்று கிடக்கும் சொற்களை அணுகிய நிலையில் கொணர்ந்து பொருளியைந்து முடிய உரைவரைதல் சுட்டுதற்குரியது. ஒருபாடலில் பயின்றுள்ள தொடர்களை இயைபுறுத்தி வினை முடிபு காட்டுதலும், இலக்கணக் குறிப்புக்கள் தருதலும் உரையின் சிறப்பினை மேலும் உயர்த்துவன எனலாம். சைவசித்தாந்தச் செம்பொருளை ஏற்புழி இவர்தம் உரை இயைபுறுத்திக் காட்டுதல் எண்ணி இன்புறத்தக்கது. புலமை விருந்தாக அமையும் இவர்தம் உரையிலிருந்து ஒரு சில பகுதிகளைப் பயில்வார் பார்வைக்கு வழங்குதல் சாலும். பாயிரப்பகுதியில் “ திங்களணி திருவால வாய்எம் அண்ணல் திருவிளையாட்டு இவை” என்ற பகுதிக்கு நாட்டார் அவர்கள் நவிலும் உரைப்பகுதி காண்போம். திங்களணி அண்ணலென இயைக்க. திருவிளையாட்டு என்றது அதனைக் கூறும் நூலுக்கு ஆயிற்று. இறைவன் செய்யும் செயலெல்லாம் எளிதின் முடிதல் நோக்கி அவற்றை அவனுடைய விளையாட்டுக்கள் என்ப. “காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்னும் திருவாசகமும்; “ சொன்னவித் தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னின் முன்னவன் விளையாட் டென்று மொழிதலுமாம்” என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தமும் நோக்குக. இப்பகுதியில் தோத்திரமும் சாத்திரமும் மேற்கோளாக அமைந்து பாடற்பொருளை விளங்க வைத்தன. கல்லாலின் தோத்திரமும் சாத்திரமும் மேற்கோளாக அமைந்து பாடற்பொருளை விளங்க வைத்தன. கல்லாலின் புடையமர்ந்து என்ற தென்முகக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் உரையில், “ வேதம் முதலிய கலைகளெல்லாம் பாச ஞானமாகலானும் இறைவன் ‘பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்’ ஆகலானும் ‘மறைக்கு அப்பாலாய்’ என்றார்.” என்று சாத்திர விளக்கம் தந்து, ‘இருநிலனாய்த்தீயாகி நீருமாகி’ ‘விரிகதிர் ஞாயிறல்லர்’ எனவரும் அப்பரடிகளின் பாடல்களை மேற்கோள் தந்து தம் உரைக்கு வலிமை சேர்த்தனர். ‘உள்ளமெனும் கூடத்தில்’ என்ற பாடலின் உரையில், விநாயகக் கடவுளை வேழம் என்றதற் கேற்ப உள்ளம் முதலியவற்றைக் கூடம் முதலியவாக உருவகப்படுத்தினார் என்று எழுதுதல் எண்ணத்தக்கது. மதுரைக் காண்டத்தில் திருமணப் படலத்தில், “கள்ளவிழ் கோதை” எனவரும் பாட்டின் உரையில், “மிகுதியை உணர்த்தக் காடு என்றார். தெள்விளி - தெளிந்த ஓசை. “ஆம்பலம் தீங்குழல் தெள்விளி பயிற்ற” என்னும் குறிஞ்சிப் பாட்டு அடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய உரை காண்க.” என்று சங்க இலக்கியஉரை மேற்கோள் தருதல் காணத்தக்கது. இதே பாடலைத் தொடர்ந்து வரும், “மீனவன் கொடியும் கான வெம்புலிக் கொடியும் செம்பொன் மானவிற் கொடியும்” என்ற பாடற் பகுதிக்கு நாவலர் நாட்டார் தரும் விளக்கம் காண்போம். “மீன், புலி, வில் இவை முறையே பாண்டிய சோழ சேரர்கட்குக் கொடிகள். மூவேந்தருள் வலியுடைய ஒருவரைக் கூறுங்கால் அவருடைய கொடி முதலியவற்றுடன் ஏனை இருவரின் கொடி முதலியவற்றையும் அவர்க்குரியவாகச் சேர்த்துக் கூறுதல் மரபு. “ வடதிவை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்டலை யேற்ற வரைக வீங்கென” எனச் சிலப்பதிகாரத்து வருதலும் காண்க.” என்பது உரைப்பகுதியாகும். திருவிளையாடற் புராணப் பாடற்பகுதிக்குச் சிலப்பதிகார மேற்கோள் தந்து விளக்குதல் வேந்தரின் வலிமை மரபினைப் புலப்படுத்தும் பாங்கினைப் புரிந்து கொள்ளுதற்கு உதவும். கூடற்காண்டத்தில் “எல்லாம் வல்லசித்தரான படலத்தில்,” அகரமாதி எனத் தொடங்கும் பாடல் உரையில், “இடையிட்டு நின்ற ஏகாரங்கள் எண்ணுப் பொருள் குறித்தன. எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக் குறித்தியலும் என்மனார் புலவர் என்பது தொல்காப்பியம் என்று இலக்கண விளக்கம் கூறுதல் எண்ணற்பாலது. இக்காண்டத்தில் உலவாக்கோட்டை யருளிய படலத்தில், கூடற், படியார்க்கும் சீர்த்திப் பதியேருழவோருள் நல்லான் அடியார்க்கு நல்லான் (38.2) என்ற பாடற் பகுதிக்கு நாவலர் அவர்களின் உரை காண்போம். “ புவிமுழுதும் நிறைந்த கீர்த்தியையுடைய மதுரைப்பதியிலே ஏரான் உழுதலைச் செய்யும் வேளாளரில் சிறந்தவன் ஒருவன் அடியார்க்குநல்லான் என்னும் பெயரினன் .... கூடலின் புகழ் புவிமுழுதும் நிறைதல், “நிலனாவிற்றிரிதரூஉம் நீண்மாடக் கூடலார்” எனக் கலித்தொகையுள்ளும் குறிக்கப்பட்டது. சிலப்பதிகாரத்திற்குப் பேருரை கண்ட அடியார்க்கு நல்லாரும் வேளாண்குடி விழுச்செல்வராதல் கூடும். இப்பெயர் குறித்து மேலும் ஆராய்ந்து, “ அடியார்க்கு நல்லார் என்பது இறைவன் திருப்பெயருமாம், கருவூருள் ஆனிலை, அண்ணலார் அடியார்க்கு நல்லரே என்னும் ஆளுடையபிள்ளையார் திருவாக்கும் காண்க.” என்று நாட்டார் ஐயா தெளிவுறுத்தல் எண்ணி இன்புறத் தக்கது. சங்க வரலாற்றுத் தொடர்புடைய தொன்மங்களைக் கொண்டு விளங்கும் இப்புராணத்தின் மூன்றாம் பகுதியாகிய திருவாலவாய்க் காண்டத்தில் ‘தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில், தண்டமிழ் மூன்றும் வல்லோன் தான்எனக் குறியிட் டாங்கே புண்டர நுதலிற் பூத்துப் பொய்யிருள் கிழித்துத் தள்ள (52.99) என்ற பாடற்பகுதிக்கு அவர்களின் விளக்கம் நோக்குவோம். “ தண்ணிய மூன்று தமிழிலும் வல்லவன்தானே எனக் குறியிட்டது போலத் திரிபுண்டரம் ( - மூன்று கீற்றுத்திருநீறு) நெற்றியின்கண் இடப்பெற்று நிலையில்லாத அஞ்ஞான இருளைக் கிழித்து ஓட்டவும்.” என்பது உரைப்பகுதியாகும். வடமொழியினைத் தேவபாடை எனக் கூறிக்கொண்ட காலத்தில், எங்கள் செந்தமிழும் தெய்வமொழியே என்பதை நிலைநாட்டும் பாங்கில் சிவபிரான் முத்தமிழிலும் வல்லவன் என்றும், தலைச்சங்கத்துப் புலவருடன் கூடியிருந்து தமிழாராய்ந்தான் என்றும் தொன்மச் செய்தி வழங்கி வருதற்கு இறையனார் களவியலுரையும் சான்றாக அமைகின்றது. மேலே சுட்டப்பெற்ற உரைப்பகுதிகள் நாவலர் ந.மு.வே. அவர்களின் கூர்த்த மதிநலத்தினையும் சீர்த்த புலமை வளத்தையும் புரிந்துகொள்ளப் போதுமானவை. கற்றோர்க்குத் தாம் வரம்பாகத் திகழ்ந்த நாட்டார் ஐயா அவர்களின் ஆராய்ச்சித்திறனுக்கு ஒரு சான்று கூறுதல்சாலும். திருவிளையாடற்புராணத்தின் ஆராய்ச்சி முன்னுரையில், திருவிளையாடற் கதைகளில் எவை எவை பழைய இலக்கியங் களில் பொதிந்துள்ளன என்பதை அகழ்ந்தெடுத்துக் காட்டியுள்ள பகுதி அறிஞர்களால் உற்றுநோக்கத்தக்கது. சிலப்பதிகாரம், கல்லாடம், தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களிலிருந்து அவர்கள் கூறியுள்ள திருவிளையாடற் கதைகளை (ப.8) அவர்கள் கூறிய வரிசையிலேயே திருவிளையாடற் புராணப் பதிப்பில் ( அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1991) அதன் பதிப்பாசிரியர் ஆராய்ச்சி முன்னுரை என்ற பெயரில் அமைந்துள்ள பகுதியில் II , III - இல் மாற்றமின்றித்தாமே முதன்முதல் கண்டறிந்து கூறியதுபோல் எழுதியுள்ளார். நாவலர் நாட்டாரின் பெயரினை அவர் சுட்டாது போயினமையினை இங்குச் சுட்டுதல் நம் கடமை ஆயிற்று. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திருவிளையாடற் புராணத்திற்கு நாவலர் ந.மு.வே. அவர்களின் உரையினை ஏழு தொகுதிகளில் தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் காலத்திற்கேற்ற பணி பாராட்டற்பாலது. இப்பணிக்கு உறுதுணையாக விளங்கும் உழுவலன்பு கெழுமிய பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள் நாட்டார் பெயரினால் விளங்கும் திருவருள் கல்லூரியின் தாளாளராக ஆற்றிவரும் அரும்பணி அனைவராலும் பாராட்டற் பாலது. நாட்டார் ஐயாவின் ஏனைய நூல்களையும் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் செய்தியறிந்து உவகையுற்றேன். இந்நூல் வரிசையினைத் தமிழ்மக்களும் நூலகங்களும் பெற்றுப் பயன்கொள்ள வேண்டுகிறேன். 19.07.2007 முனைவர் சோ.ந.கந்தசாமி தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவர் (ஓய்வு) தஞ்சாவூர். பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மையாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக்கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும்போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங்களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடுவதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப்புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன்vbவாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகுகுரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெருமக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iv அணிந்துரை xi பதிப்புரை xxv முன்னுரை 1 49. திருவாலவாயான படலம் 19 50. சுந்தரப்பேரம் பெய்த படலம் 34 51. சங்கப்பலகை தந்த படலம் 59 52. தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் 80 53. கீரனைக் கரையேற்றி படலம் 143 54. கீரனுக்கு இலக்கணமுபதேசித்த படலம் 163 55. சங்கத்தார் கலகந் தீர்த்த படலம் 181 56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் 191 57. வலை வீசின படலம் 217 58. வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் 252 செய்யுள் முதுற்குறிப்பு அகரவரிசை 313 திருவிளையாடற்புராணம் திருவாலவாய்க் காண்டம் - 1 முன்னுரை ஆக்கியோன் (1) திருவிளையாடற் புராணம் என்னும் இந்நூல், சோழவள நாட்டுள்ள திருமறைக்காட்டில் வழிவழிச் சைவ வேளாளர் மரபில் தோன்றிய பரஞ்சோதி முனிவர் என்னும் பாவலர் பெருமானாற் பாடப்பட்டது. இவர் வரலாற்றை முன்னர்க் காண்க. நூல் தோன்றிய வழி ரைச் சிறப்பு (2) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” எனப் புகழப்பட்ட தமிழகத்திற் “செந்தமிழ் நாடு” எனச் சிறப்பாகக் கூறப்படுவது பாண்டிநாடாம் என்பது பலரும் அறிந்ததே. அந்நாட்டு மன்னர் பாண்டியர்க்கு வழிவழி அரசிருக்கையாய தலைநகர் மதுரை. இது திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள் வந்தமர்ந்து தமிழ் ஆராய்ந்த தனிச் சிறப்புடையது; மலையத்துவசன் மகளாகஅங்கயற்கண்ணம்மை பிறந்து வளர்ந்து அரசுபுரிந்த பெருமையுடையது; சிவபெருமானும் முருகவேளும் முறையே சுந்தரமாறனாகவும் உக்கிரப் பெருவழுதியாகவும் பெயர்புனைந்து செங்கோல் செலுத்திய சீர்வாய்ந்தது; தலைச் சங்கமும் கடைச்சங்கமும் தழைத்து வளர்ந்து தமிழாராய்தற்கு நிலைக்களமாயது; எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடலில் (வையை, மதுரை) முப்பது பாடல்களாற் பாராட்டப் பெற்றது; பாண்டி நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற திருப்பதிகளில் “கூடல் புனவாயில்” என முன்வைத்தெண்ணப்பட்ட முதன்மையுடையது; திருவாலவாய், கூடல் எனச் சிறப்புப்பெயர் பெற்றது. இப் பதியில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் அறுபத்து நான்கு என அறிஞர் கூறுவர். திருவிளையாடல் வந்துள்ள நூல்கள் (3) திருவிளையாடல் வரலாற்றிற் பல தமிழ்நாட்டு இலக்கியங் களில் வந்துள்ளன. தமிழன்னை தாட்சிலம்பாகப் போற்றப்படுஞ் சிலப்பதிகாரத்தில் “அடியிற்றன்னள வரசர்க் குணர்த்தி, வடிவேலெறிந்த வான்பகை பொறாது” என்ற அடிகள் “கடல் சுவற வேல்விட்டது”என்ற கதையையும், செங்ணாயிரத்தோன் திறல் விளங்காரம், பொங்கொளி மார்பிற் பூண்டோன் “முடி வளையுடைத்தோன் முதல்வன் சென்னியென், றிடியுடைப் பெருமழை யெய்தா தேகப், பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப, மழைபிணித் தாண்ட மன்னவன்” என்ற அடிகள் இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலத்தில் உள்ள சில கதைகளையும்,“வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தோன்” என்ற அடி வெள்ளி யம்பலத் திருக்கூத்தாடிய கதையையும் சுட்டுகின்றன. கல்லாடர் இயற்றிய கல்லாடம் என்ற நூலில் “கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப் பொற்குவை தருமிக் கற்புடனுதவி” எனவும், “வையைக் கூலஞ்சுமக்கக் கொற்றாளாகி” எனவும்,“ கரிக்குருவிக்குக் கண்ணருள் கொடுத்த” எனவும், “மாமியாடப்புணரி யழைத்த கூடற்கிறைவன்” எனவும், “குறுநரியினத்தினை, யேழிடந் தோன்றி யினனூற் கியைந்து, வாலுளைப் புரவி யாக்கிய பெருமான்” எனவும் வந்துள்ள அடிகள் முறையே தருமிக்குப் பொற்கிழியளித்தது, மண் சுமந்தது, கரிக்குருவிக்குபதேசித்தது, எழுகடலழைத்தது, நரிபரி யாக்கியது என்ற திருவிளையாடல்களைக் காட்டுகின்றன. இன்னும் அந்நூலில், இந்திரன் பழிதீர்த்தது, திருமணம் புரிந்தது, வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது, அன்னக் குழியும் வையையும் அழைத்தது, உக்கிரகுமார பாண்டியர் திருவவதாரம், கடல் சுவற வேல் விட்டது, கல்லானைக்குக் கரும் பருத்தியது, அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, சோழனை மடுவில் வீட்டியது, மாமனாக வந்து வழக்குரைத்தது, திருமுகம் கொடுத்தது, இடைக்காடன் பிணக்குத் தீர்த்தது, வலைவீசியது, ஆய பல திருவிளையாடல்கள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. தேவாரத் திருமுறையில் நான்மாடக் கூடலானது, சங்கப்பலகை தந்தது, தருமிக்குப் பொற்கிழியளித்தது, வலை வீசியது, பாண்டியன் சுரந்தீர்த்தது, சமணரைக் கழுவேற்றியது முதலியன கூறப்படுகின்றன. மணிவாசகப்பெருமான் திருவாய்மலர்ந்த அருளிய திருவாசகம் திருக்கோவையார் என்ற நூல்களில் வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது, மெய்க்காட்டிட்டது, அட்டமாசித்தியுபதேசித்தது, தண்ணீர்ப் பந்தல் வைத்தது, பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்தது, கரிக்குருவிக்குபதேசித்தது, வலைவீசியது, வாதவூரடிகளுக்கு உபதேசித்தது, நரியைப் பரியாக்கியது, மண் சுமந்தது முதலிய திருவிளையாடல்கள் வந்துள்ளன. ஆதலால் இவ்வரலாறுகள் பண்டைக்கால முதல் நிகழ்ந்தவையாகத் தமிழ்நாட்டில் வழங்கியவையே என்பது தேற்றம். திருவிளையாடலை மட்டும் கூறும் சிறப்பு நூல்கள் (4) இனி இத் திருவிளையாடல்களையே விளக்க எழுந்த நூல்கள் சில. செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், (வேம்பத்தூரர் திருவிளையாடல் எனப் பெயர்பெற்றது), தொண்டைநாட்டு இளம்பூர் வீமநாத பண்டிதர் இயற்றிய கடம்பவன புராணம். தொண்டைநாட்டு வாயற்பதி அனதாரியப்பன் இயற்றிய சுந்தரபாண்டியம், பரஞ்சோதி முனிவர் பாடிய இத்திருவிளையாடற் புராணம், இந் நான்கு நூல்களும் மதுரைத் திருவிளையாடல்களையே வகுத்துரைக்கும் நூல்களாம். அவற்றுள் நம்பி, பரஞ்சோதியார் இயற்றிய இரு நூல்களுமே அறுபத்து நான்கு திருவிளையாடல் களையும் விரித்துரைப்பன. விரிந்த நூல் பரஞ்சோதியார் பாடிய இந்நூலேயாம். முதனூல் (5) இந் நூலாசிரியர் பாயிரத்தில், நந்தியடிகள் வியாத முனிவற் குணர்த்த, அவர் சூதமுனிவற்குக் கூறியது பதினெண் புராணம் என்றும்,அப்பதினெட்டிற் காந்தம் என்பது ஒன்றென்றும், அக்காந்தபுராணத்தில் ஒரு பிரிவு ஈச சங்கிதை என்றும், அதில் ஆலவாய்ப் புகழ் கூறப்பட்டுள்ளது என்றும், அவ் வடமொழி நூலைத் தென்மொழியிற் செய்க எனக் கூடற்பதி வாழ்வோர் கூற அதனைக் கடைப்பிடித்து நான் இந்நூலை இயற்றினேன் என்றும் விளக்கி யிருப்பதால் இதற்கு முதனூல் வடமொழி நூலாகிய ஆலாசிய மான்மியம் என்று தோன்றுகின்றது. ஆலாசிய மஸ ன்மியம் முதனூலாய காரணம் (6) இவ் வரலாறு முழுவதும் தமிழ்நாட்டினர் அறிந்து பண்டைக்கால முதல் இலக்கியங்களினும் வரலாற்று நூல்களினும் விளக்கியிருப்பவும் அவற்றையெல்லாம் கற்றுணர்ந்த முற்றுணர்வுடைய பரஞ்சோதி முனிவர் வடமொழியிலுள்ள ஆலாசிய மான்மியம் என்ற நூலை முதனூலாகக் கொண்டு திருவிளையாடல் பாடினரென்றல் பொருந்துமா என்பது ஆராயத் தக்கது. ஆசிரியர் காலம், ஆரியத்தினின்று தமிழ்மொழி தோன்றிற்று என்று கூறுவதைப் பெருமையாகக் கொண்ட காலம்; ஆரியத்தினின்று மொழிபெயர்த்த நூல் இஃது என்றால் அந்நூலை மதித்துப் போற்றுங் காலம்; வடமொழியே தெய்வ மொழி; தமிழ்மொழி அதன் வழிமொழி இழிமொழியென எண்ணிய காலம்; வேதம், புராணம், ஆகமம், இதிகாசம் எல்லாம் ஆரிய மொழியிலுள்ளவையே; அவற்றை மொழிபெயர்த்துத் தான் தமிழ்நாட்டார் கற்கவேண்டும்; தனியாகத் தமிழ்மொழியில் ஒன்றும் இன்று என்று பிழைபடக் கருதிய காலம்; ஆரியர்கள் சூழ்ச்சியாகத் தமிழ்நாட்டினுள் நுழைந்து, நம்நாட்டுக் கதைகளை யாய்ந்து ஆரியத்தில் வரைந்து வைத்துப் பின் எமது மொழியில் இக் கதைகள் முன்னரே எழுதி இலக்கிய வடிவில் இருக்கின்றன என எடுத்துக்காட்டி ஏமாற்றி வாழ்ந்த காலம். அக் காலத்தில் வாழ்ந்த அம்முனிவர் அதனை முதனூலாகக் கொள்ளல் மிகவும் பொருத்தமுடையதேயாகும். இக் காலத்தும் வடமொழி வழிவந்தது செந்தமிழ் எனக் கூறுவோரும் சிலர் உளரன்றோ? ஆரிய மொழிபெயர்ப்பாயினும் இந் நூலிற் கூறப்படுங் கதைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்தவையே. உலக வழக்கினும் செய்யுள் வழக்கினும் பயின்றவை. இக் கதைகளை வடநூற்புலவர் வரைந்ததாற் சில மாறுபாடு காணப்படினும் இந் நூலாசிரியர் தமிழ்நூற் கருத்துக்கு மாறுபாடின்றித் திருத்தியமைத்துள்ளார். சொற்களையும் சொற்றொடர்களையும் தமிழ்மொழிக்கேற்ப இனிமையா யமைத்து எழிலுறப் புனைந்திருப்பது பாராட்டற்பாலது. மொழிபெயர்ப்பு என முன்னுவதற்குத்தக்க காரணம் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டுக் கதையைத் தமிழ் மொழியில் ஆக்கியது இந்நூல் எனக் கோடலே சிறந்தது. ஆயினும் அக்காலநிலை நோக்கி ஆசிரியர் அதனை முதனூல் எனக் கொண்டனர் எனக் கொள்க. வழங்கும் நாடு (7) பாண்டிய நாட்டிற் சிறந்த தென்மதுரைப் பதியில் நிகழ்ந் தவை இவ்வறுபத்து நான்கு திருவிளையாடல்கள்; எனினும் சேர நாடு, சோழ நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு எனப் பகுக்கப்பட்ட நாடுகளிலும் இவ்வரலாற்றினை அறியாத புலவர் எவரும் இரார். “மதிமலி புரிசை மாடக் கூடல்” என்ற திருமுகப் பாசுரம் சேரமான் பெருமாணாயனார்க்கு இறைவன் விடுத்தனர் எனிற் சேர நாடு அறிந்த வரலாறுதான் அது. சோழனை மடுவில் வீட்டிய வரலாறு, சோழநாடறிந்ததுதான்! பாண்டியன் சுரந்தீர்த்தவர் திருஞானசம்பந்தர்; தேவாரத் திருமுறையில் திருநீற்றுப்பதிகமும் ஒன்றன்றோ? மற்றும் பல பதிகங்கள் மதுரையில் திருவாய்மலர்ந்தருளினர் சம்பந்தர்; திருவாலவாய்த் திருப்பதிகம் பாடிய திருஞான சம்பந்தர் சென்று பாடிய சிவத்தலங்கள் எண்ணிறந்தவையன்றோ? அவர் சென்ற தலங்களெல்லாம் மதுரைத் திருவிளையாடலை யறிந்திருக்குமன்றோ? முதற் சங்கமும் கடைச்சங்கமும் கூடலின் முளைத்துத் தழைத்தனவெனத் தமிழிலக்கியம் சாற்றுகின்றன. கடைச்சங்கப் புலவருள் ஒருவன் நக்கீரன்; “கொங்குதேர் வாழ்க்கை” என்ற கவிக்குக் குற்றங் கூறினன். அவ்வரலாறு அச் சங்கப்புலவர் பலரும் அறிந்ததுதானே? புலவர் பலரும் பல நாட்டிலும் பல ஊர்களிலும் இருந்து வந்து கூடித் தமிழ் ஆராயும் அறிஞர்தாம். எனவே அப்புலவர்கள் சென்றவிடமெல்லாம் கதைகளும் சென்றிருக்கும். ஆதலால் இத் திருவிளையாடல் சைவமும் தமிழும் தழைத்திருக்கும் தமிழ்நாடெங்கணும் எஞ்ஞான்றும் வழங்கியது என்பது கூறாமலே விளங்கும். பெயர் (8) இளமைப் பருவமுள்ள சிறார் சிறுமியர் கூடியாடுவதை விளையாடல் என்று கூறுவர். மணலைக் கூட்டி வளைத்துச், சிற்றில் இழைத்து, உழைத்துப், பலபொருள் தேடி அதன்கண் வைத்துக் காத்திருந்து, பின்னர்க் காலால் அழித்துவிடுதல் அவரியற்கை. சிந்தித்தலின்றிச் செய்யுஞ் சிறுதொழில் இது. இதுபோலவே இறைவனும் முத்தொழிலும் சிந்தித்தலின்றி எளிதிற் புரிந்து இன்புறுகின்றான்.“உலகம் யாவையும் தாமுள வாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட்டுடையாரவர், தலைவ ரன்னவர்க் கேசரணாங்களே என்றார் கம்பநாட்டாழ் வாரும். பத்தியிற் சிறந்த அன்பர் பொருட்டு மதுரையிற் பலகாலங் களிற் புரிந்த விளையாடல்கள் எல்லாவற்றையும் விளக்கிய நூல் இது. ஆதலால் இந்நூலுக்குத் திருவிளையாடற் புராணம் எனப் பெயரிட்டார் பரஞ்சோதி முனிவர். திரு - சிறப்பு. புராணம் - பழைமை. சிறந்த விளையாடல் ஆகிய பழைமை வரலாறு என்பது திரண்டபொருள் எனக் காண்க. அமைத்திருக்கும் முறை (9) இவற்றை மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவால வாய்க் காண்டம் என மூன்றாகப் பகுத்தார். முதலிற் கடவுள் வாழ்த்து, பாயிரம், அவையடக்கம் கூறி, நாட்டுப் படலம், நகரப் படலங் கூறிக் கைலாய வருணனை கூறிப் புராண வரலாறும் விளக்கினர். பின் மதுரைக் காண்டத்தில் தலம், தீர்த்தம், மூர்த்திச் சிறப்புக் கூறித் திருவிளையாடல் அறுபத்து நான்கினையும் தொகுத்துரைத்து அதற்குப் பதிகப்படலம் எனப் பெயரிட்டார். பதிகத்திற் கூறிய முறைப்படி “ இந்திரன் பழிதீர்த்தது” முதல் “வருணன் விட்ட கடலை வற்றச் செய்தது” வரையுள்ள பதினெட்டுத் திருவிளையாடல் களையும் விரித்துரைத்தனர். பின் கூடற் காண்டத்தில், நான்மாடக் கூடலானது முதல் நாரைக்கு முத்தி கொடுத்தது வரையுள்ள முப்பது திருவிளையாடல்களையும் முறையே வகுத்துரைத்தனர். திருவாலவாய்க் காண்டத்தில்,‘திருவாலவாயானது முதல் வன்னியுங் கிணறும் இலிங்கமும் அழைத்தது வரையுள்ள பதினாறு திருவிளையாடல் களையும் முறையே பகர்ந்தனர். முதலில் மதுரை என்று பெயர் பெற்றது முதல் நிகழ்ந்தவைகளை மதுரைக் காண்டத்துள் அடக்கினர். நான்மாடக் கூடல் எனப் பெயர் பெற்றது முதல் நிகழ்ந்தவைகளைக் கூடற் காண்டத்துட் கூறினார். திருவாலவாய் எனச் சிறப்புப்பெயர் பெற்றது முதல் நிகழ்ந்தவைகளைத் திருவாலவாய்க் காண்டத்துட் செப்பினர். காண்டங்களின் அடைவும் படலங்களின் அடைவும் அவற்றிற்குக் காரணமும் ஆய்ந்து அறிக. பொருள் (10) எங்கும் நிறைந்த எல்லாம்வல்ல இறைவன் மக்கட்குத் தெய்வவுண்மை தெரித்தல் வேண்டிப் பல தலங்களினும் தன் விளையாடலை அன்பர்கள் காண அருள் செய்தான். மக்களாற் செய்தற்கரிய செயல் ஒன்று ஓரிடத்தில் நிகழ்ந்தால் அதனைத் திருவருட் செயலென்றுதானே கோடல் வேண்டும்! இறைவன் நேர் வந்து நின்று ஒரு செயலும் நிகழ்த்துவதின்றெனினும் வியப்பான செயல் ஒன்று நிகழ்ந்தால் அது தெய்வச் செயலென்றே மக்கள் கருதுவது இயற்கையன்றோ? இம் முறையில் நிகழ்ந்தவையே திருவிளையாடற் கதை யனைத்தும். நம் தமிழ்நாட்டிற் சிவத்தலம் ஒன்று இருந்தால் அங்குத் திருவிளையாடல் ஒன்றிரண்டு நிகழ்ந்த சிறப்பும் அமைந்திருக்கும். திருமால் தலங்களினும் இவை நிகழ்ந் திருத்தல் காணலாம். நாயனார், ஆழ்வார் எனப் பெயர் பெற்ற தொண்டர்கள் அனைவரும் மக்களாற் செய்தற்கரிய செயல்புரிந்தோரேயாவர். அரிய செயல் நிகழ்ந்த தனிச் சிறப்பான இடங்களையும் அத்தகைய செயல் நிகழ்த்திய பெரியோர்களையும் தமிழ்நாட்டு மக்கள் பண்டைக்கால முதற் பாராட்டிக் கோயில் அமைத்துப் பூசை திருவிழாப் புரிந்து கொண்டாடி வந்தனர், வருகின்றனர், வருவார். ஆயிரத்தெட்டுச் சிவத்தலங்கள் நூற்றெட்டுத் திருப்பதிகள் இருந்தனவெனக் கூறுவதும் அதனை நன்கு விளக்கும். தில்லை, காஞ்சி, முதலிய தலங்களில் நிகழ்ந்த திருவிளையாடல் சில; மதுரையில் நிகழ்ந்தவை போல அருமையான செயல்களும் அல்ல; அறுபத்து நான்கிற் குறைந்தவையே. தருமிக்குப் பொற்கிழியளித்தது, திருமுகங்கொடுத்தது, சங்கப்பலகை தந்தது, இடைக்காடன் பிணக்குத் தீர்த்தது, வாதவூரடிகள் பொருட்டுச் செய்த சில விளையாடல்கள் ஆகிய இவை யாவும் தமிழ்மொழிப் பெருமையை விளக்க இறைவனியற்றியவையன்றோ? மதுரைத் திருவிளையாடல் மக்கள் மனத்துப் பதியவேண்டும் என்பது கருதிப் பரஞ்சோதி முனிவர் இந் நூலை யியற்றினர் என எண்ணுக. அறிஞர் அனைவரும் உலகில் நிகழுஞ் செயல் அனைத்தினையும் ஈசன் செயலாகவே கருதுவர். “என்செய லாவதி யாதொன்று மில்லை யினித்தெய்வ வமே, யுன்செய லேயென் றுணரப்பெற்றேன்” என்றும், “ஒன்றை நினைக்கினது வொழிந்திட் டொன்றாகும், அன்றி யது வரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும், எனையாளு மீசன் செயல் ” என்றும் கூறிய கவிகள் இதற்குச்சான்றாம். எல்லாம் இறைவன் செயலென்று துணிந்து மக்கள் தத்தங் கடமையை யாற்றி வாழ்வதற்குரிய வழியாக இந்நூற் பொருள் அமைந்துள்ளது. தகுதியுடையோர் (11) தெய்வம் ஒன்றென்றும் உண்டென்றும் உறுதி கொண்டவர்; உலகில் நிகழுஞ் செயல்கள் முழுவதும் திருவருட் செயலெனச் சிந்தை வைப்பவர்; மக்கட் பிறப்பின் பயன் இறைவனடி வணங்குதலே என்ற எண்ணமுள்ளோர்; நல்வினை தீவினை புரிந்தோர் அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை எய்துதல் வாய்மையென மனங் கொண்டவர்; எஞ்ஞான்றும் இறைவனை வணங்கி யியன்ற நல்வினை யியற்றி வாழும் இயல்புடையவர்; தமிழ் மொழியின் தனிச்சிறப் புணர்ந்தவர் அம் மொழியின் சொற்சுவை, பொருட்சுவை, அருமை, பெருமை, தொன்மை, மென்மை, நன்மை, வனப்பு முதலிய இயற்கையை யாய்ந்தவர். நம் நாட்டுப் பண்பாடு, நாகரிகம், கலை, நிலை தெரிந்தவர்; சைவசமயத்தின் தனிச் சிறப்பும் கொள்கையும் அக் கொள்கைவழி நின்ற சான்றோர் வரலாற்று உண்மையும் நுண்மையின் ஆய்ந்து காணும் நோக்கமுடையார் ஆகிய யாவரும் பயில்வதற்குத் தக்கது இந்நூலாகும். மற்றையோர் பயின்றால் நற்பயன் வாய்ப்பது அரிது. பயன் (12) இந்நூல் கற்பவர் கேட்பவர் எவரும் தெய்வத் திருவருள் கைவரப் பெறுவர். அன்பு, அருள், வாய்மை, மனத்தூய்மை, நிறை, பொறை, அடக்கம் முதலிய மக்கட் பண்பு வாய்க்கப் பெறுவர். இல்லறமாகிய நல்லற வாழ்விற் சிறந்து அதன் பயனாகிய என்றுங் குன்றாப்பொன்றாப் புகழை எய்துவர். பின்னர்த் துறவறம் பூண்டு விரதமும் ஞானமும் வேண்டிய உள்ளத்தரா யொழுகிச் சித்தியும் முத்தியும் பெற்றுத் திகழ்வரென்பது தேற்றம். இந் நூலாசிரியர் காலமும் அரங்கேற்றிய களனும் இதனை இயற்றுதற்குத் தக்க காரணமும் ஆசிரியர் வரலாற்றிற் காண்க. இந்நூல் பதிப்பித்த முறை (13) இந் நூல் மூலமட்டும் தமிழ்மொழிக்கும் சைவ சமயத் திற்கும் உழைத்த நம் பெரியார் யாழ்ப்பாணம் உயர்திரு ஆறுமுக நாவலரவர்களால் முதலிற் பதிப்பிக்கப் பெற்றது. பின்னர்த் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மாணவரில் ஒருவராகிய சோட சாவதானம் சுப்பராயச் செட்டியாரவர்கள் இந் நூலுக்கு உரை யெழுதி அச்சிட்டு வெளிப்படுத்தினர். அதன்பின்னர் அவ்வுரையையே பெரிதும் தழுவி ஈக்காடு இரத்தினவேலு முதலியார் என்பவராற் பொழிப்புரை யெழுதப்பட்டுப் புதிதாக வெளிவந்தது. மதுரை இராமசுவாமிப் பிள்ளையவர்கள் மதுரைக் காண்டத்திற்கு மட்டும் பொழிப்புரை எழுதி வெளிப்படுத்தினார். சிலகாலஞ் சென்றபின் திருவிளையாடற் புராணம் உரையுடன் கிடைப்பது அரிதாகத் தோன்றியது. தமிழ்மொழி நூல்கள் அனைத்தையும் அச்சிட்டு அழகிய வடிவிற் புத்தகமாக்கி வழங்கித் தமிழ்மொழியையும் சைவ சமயத்தையும் வளர்த்துப் பேணிவரும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக அமைச்சர் ஆகிய திருவாளர் வ. திருவரங்கம்பிள்ளை யவர்கள் அந் நூலின் அருமையையறிந் தனர். திருவிளையாடற் புராணம் முழுவதுக்கும் நன்முறையில் உரையெழுதி வெளியிடுவது நம் நாட்டுக்கு நன்மை பயக்குஞ் செயல் எனச் சிந்தித்துத் தெளிந்தார். இலக்கணம், இலக்கியம், சமய நூல் முதலிய பல நூல் கற்றுத் தேர்ந்த ஆசிரியர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்களுக்குத் தெரிவித்து உரை வரைந்துஉதவும்படி வேண்டினர். அவர் அதற்கிணங்கி மூன்று காண்டங்கட்கும் நல்லுரை வரைந்துதவினர். அவ்வுரையுடன் அச்சிட்டு மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க்காண்டம் என்ற மூன்றினையும் மூன்று புத்தகமாகப் பகுத்து 1927 இல் வெளியிட்டுதவினர். அன்று முதல் இன்று வரை தமிழ் கற்பார்க்கும் கற்பிப்பார்க்கும் அவ்வுரையுடன் கூடிய புத்தகம் நற்பயனுதவி யெங்கும் உலவி வருவது எவர்க்குந் தெரிந்ததே. நூற் பெருமை (14) திருவிளையாடல் நூல்களிற் சிறப்புடையது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திரவிளையாடற் புராணமே. வேம்பத்தூரார் திருவிளையாடல் என்பது காலத்தால் இதற்கு முற்பட்டது. பழைய தமிழ் வழக்குக்களையே தழுவிச் செல்வது. இது பிற்பட்டது; வடமொழி வழிவந்தது; வடமொழிப்பெயர்களையே பாண்டியர் களுக்கும் கடவுளர்களுக்கும் இட்டு வழங்குவது. இவ்வேறுபாடு இருப்பினும் முனிவர் பாடல் இனிமையும் தெளிவுமுடையது. மோனையெதுகை முதலிய தொடைநயங்கள் அமைந்தது. பத்திச்சுவை கனிந்தது. ஒழுகிய வோசையும் விழுமிய பொருளும் அமைந்து கற்பார்க்கு மேன்மேலும் விழை வெழுப்புவது. இதனாலன்றோ நம்பி திருவிளையாடல் கற்பார் சிலரும் இதனைக் கற்பார் பலரும் ஆயினர். எடுத்தாண்ட பழைய இலக்கியப் பகுதி (15) பரஞ்சோதி முனிவர் பல நூற் பயிற்சியுடையவர் என்பது அவர் இயற்றிய திருவிளையாடலால் அறியலாம். கலித்தொகை என்னும் நூலில் “வையைதன், நீர்முற்றி மதில் பொரூஉம் பகையல்லா னேராதார், போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்” என வந்துள்ளது. இதன் பொருள் “வையையாற்றுநீர் சூழ்ந்து கோட்டை மதிலைப் பொருகின்ற இப்பகையன்றிப் பகைவர் சூழ்ந்து மதிலை வளைத்துப் போர் செய்வதை யறியாத புனலையுடைய மதுரையை யுடையவன்” என்பது. இப்பொருளை ஆசிரியர், மதுரைநகர் மதிற் சிறப்புக் கூறும் இடத்தில் “அம்மதில் திரைக்கரந் துழாவி, அகழ வோங்குநீர் வையையாலல்லது வேற்றுப் பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே” என அமைத்தனர். சீவக சிந்தாமணியில் “கோட்டிளந்தகர்களும் கொய்ம்மலர்த் தோன்றிபோற், சூட்டுடைச் சேவலும்” எனவும், “பொருவில் யானையின் பழுப்போற் பொங்குகாய்க் குலையவரை” எனவும், “முட்டிலா மூவறுபாடை மாக்களாற் புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய” எனவும், “புதுக்கலம் போலும் பூங்கனியால்” எனவும், திருத்தக்க தேவர் கூறிய உவமை பொருள்களை ஆசிரியர் இந்நூலில் “கொய்ம்மலர்க் குடுமிச் சேவல் கோழிளந் தகர் போர் முட்டி” எனவும், “ஆறிடுமதமால் யானைப் பழுக்குலை யவரை”, எனவும், “பாய தொன்மரப் பறவைபோற் பயன் கொள்வான் பதினெண், டேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சி தான்” எனவும், “கலம்பெய் காட்சி போலுதிர் பழம்” எனவும், முறையே அமைத்திருப்பவற்றைக் காண்க. “தீயில் வீழ்கிலேன் றிண்வரை யுருள்கிலேன்” என்பதனை, “வஞ்சவினைக் கொள்கலனா முடலைத் தீவாய் மடுக்கிலேன் வரையுருண்டு மாய்ப்பே னல்லேன்” எனவும், “மழக்கையிலங்கு பொற்கிண்ண மென்றலா லரியை யென்றுனைக் கருது கின்றிலேன்” என்பதனை, “மழலைதேறாச் சிறியனா மொருதலை கையிற் கொண்ட செம்பொன்மணி வள்ளம்போற் றேவர் யார்க்கும், அறிவரியாய் சிறியேனை யெளிவந்தாண்ட அருமையறியேன்” எனவும், “முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே” என்பதனை, “முன்னா முதுபொருட்கு முன்னா முதுபொருளாய்ப், பின்னாம் புதுமைக்கும் பின்னாகும் பேரொளியாய்” எனவும், “வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி, ஊனாகி யுயிராகி யுண்மையுமா யின்மையுமாய்” என்பதனை, “மண்ணாய்ப் புனலாய்க் கனலாய் வளியாகி, விண்ணா யிருசுடரா யித்தனையும் வேறாகி” எனவும் மணிவாசகர் திருவாசகப் பகுதிகளை ஆசிரியர் யெடுத்தாண்டிருப்பது காண்க. கம்பர் பாடிய இராமாவதாரத்தில் வந்துள்ள “நஞ்சினுங் கொடிய நாட்ட மமுதினும் நயந்து நோக்கிச், செஞ்சவே கமலக் கையாற் றீண்டலும் நீண்ட கொம்பர், தஞ்சிலம் படியின் மென்பூச் சொரிந்துடன் தாழ்ந்த தென்றால், வஞ்சிபோன் மருங்கு லார்மாட் டியாவரே வணங்க லாதார்” என்ற கவியின் கருத்தினை “இம்பர்வீ டளிக்கும் தெய்வ மகளிரே என்பார் கூற்றம், வம்பல மெய்யே போலும் வளைக்கையார் வளைப்பத் தாழ்ந்து, கம்பமுற்றடிப்பூச்சிந்தி மலர்முகங் கண்ணீர் சோரக், கொம்பரும் பணிந்த வென்றா லுலகியல் கூறற்பாற்றோ” என்ற கவியில் இவர் பொருத்தியிருப்பது காண்க. இன்னும் பல நூற் கருத்துக்களும் பொருள்களும் பல விடங்களில் வந்துள்ளன. இவை இவரது புலமையாற்றலை யெடுத்துக் காட்டுவனவாம். கதைச் சுருக்கம் (1) திருவாலவாயான படலம்: கீர்த்தி பூடண பாண்டியன் மதுரையாண்ட நாளில் கருங்கடலேழும் திரண்டெழுந்து வந்து வெள்ளமாகிப் புவியனைத்தையும் மூடி யழித்தொழித்தது. பின் வெள்ளம் வற்றியபோது மதுரையில் அங்கயற்கண்ணி திருக் கோயிலும், இந்திர விமானமும், பொற்றாமரை வாவியும், இடபக் குன்றமும், யானை மலையும், நாகமலையும், பசுமலையும், பன்றிமலையும் அழிவின்றியிருந்தன. வங்கிய சேகரன் பிறந்து வளர்ந்து ஆளத்தொடங்கினன். ஆதியின் மதுரை நகரமைந்திருந்த எல்லை காணக் கருதி இறைவனை இறைஞ்சினான். இறைவன் ஒரு சித்தராய் வந்து தங் கங்கணமாக அமைந்திருந்த பாம்பினை ஏவி எல்லை காட்டும்படி பணித்தார். அப் பாம்பு உடலை வளைத்து வாயில் வால் பொருந்தும்படி புரிந்து முன்னுள்ள எல்லையைத் தன் ஆலவாயான் அளந்து காட்டியது. அன்று முதல் ஆலவாய் எனச் சிறப்புப் பெயர் பெற்றது. (2) சுந்தரப்பேரம் பெய்த படலம்: வங்கியசேகர பாண்டியன் அரசு புரிந்தபோது விக்கிரம சோழன் என்பவன் போர் புரியக் கருதி வந்து, நிரை கவர்ந்து, குளம் ஏரிகளையுடைத்துப் பல குறும்பு செய்தனன். சோழனது படைப் பெருமை கண்டு, பாண்டியன் அஞ்சி, இறைவனை வணங்கிக் குறையிரந்து வேண்டினன். அப்போது இறைவன் “நீ சென்று, வந்த சோழனுடன் போர் புரிவாய்; நாம் வந்து உதவி புரிவோம். வெற்றி உனக்குக் கிட்டும்” என்று அசரீரியாய் நின்று கூறினன். கூறியபடியே வந்து உதவி செய்தனன் இறைவன். சோழ மன்னன் தோற்றான். அச்சோழ மன்னன் இறைவன் எய்த அம்பினை எடுத்துப் பார்த்து அதிற் சுந்தரேசன் என்று பொறித் திருக்கக் கண்டு அஞ்சியோடினன் என்பது. (3) சங்கப்பலகை தந்த படலம் : காசியிற் பிரமன் பரிமகம் புரிந்தது. பின் காயத்திரி, சாவித்திரி, வாணி இவர்களுடன் கூடிக் கங்கையாடச் சென்றான். வாணி வழியில் விஞ்சை மாதொருத்தி பாடிய கானங்கேட்டுத் தாமதித்து வந்தனள். அது குறித்துப் பிரமன் வெகுண்டு நாற்பத்தெட்டுப் புலவராகப் பிறக்கும்படி நாமகளைச் சபித்தனன். அதன்படி சங்கப் புலவராய் வந்தமர்ந்து தமிழ் வளர்த் தனள் வாணி. பாண்டியன் சங்க மண்டபம் அமைத்துத் தந்தனன். வந்து வந்து பல புலவரும் வாது செய்தனர். அவ்வாதத்தாற் புலவருக்குண்டாய வருத்தம் நீங்க இறைவன் சங்கப்பலகை தந்தனன். பின்னர் இறைவன் ஒரு புலவராய் வந்து சங்கப் புலவர் கருத்து மாறுபாட்டினைத் தவிர்த்துத் தலைவராயமர்ந்திருந்து தமிழாய்ந்தனன் என்பது. (4) தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் : இப் படலத்தில் வங்கிய சூடாமணி மாறன் நந்தனவனம் வைத்தனன். சண்பக மலர் புனைந்து சிவனை வணங்கினன். செண்பகமாற னெனப்பெயர் பூண்டனன். இளவேனில் வந்தது. மைந்தரும் மகளிரும் நந்தன வனத்தமர்ந்து இன்பம் நுகர்ந்தனர். நீராடலும் உண்டாட்டும் ஊடலும் கூடலும் ஆகிய விளையாடல் யாவும் நிகழ்ந்தன என முன்னர்க்கூறி, அப் பருவச் சிறப்பும் விளையாடற் சிறப்புங்கூறும் ஆசிரியர் உவமையும் உருவகமும் கற்பனையும் ஆகிய அணிகள்பல அமைத்துக் காட்டுகின்றார். முருக்க மரங்கள் பூத்துச் சூரியனைப் போலத் தோன்றின; காஞ்சிமர மலர்ந்து இந்திரனைப் போல இலங்கின; குங்கும மலர்ந்து சந்திரனைப்போல விளங்கின; காயா மலர்ந்து கண்ணனைப் போலக் கவினுற்று நின்றன என்று உவமை வாயிலாக ஒவ்வொன்றின் இயற்கையைக் கூறுவது புலவர்க்குப் புது விருந்தாகும். வேனிற் பருவத்தைக் கோமகன் ஆகவும், தாமரையைக் களாஞ்சி யேந்துவாராகவும், குயிலை மத்தள முழக்குவோராகவும், கிளியை மங்கலம் பாடுவாராகவும், வண்டுகளைப் பாணர்களாகவும், தாழையை வாளேந்தி நிற்கும் வீரர்களாகவும் உருவகஞ் செய் திருப்பது மிகவும் பாராட்டற்பாலதே. இயற்கையாக ஆடுகின்ற மயிலை மகளிர் கூந்தலை மேக மென்று கருதி ஆடும் என்றும், ஓடுகின்ற மயிலை அவர் கண்களை அம்பென்று கருதி ஓடும் என்றும், குயில்கள் மகளிர் உருவத்தை மாந்தளிர் என்று எண்ணிக் கோதியுண்பதற்கு அருகிற் செல்லும் என்றும், பின் அவர் பண்ணிசையைக் கேட்டு நாணிப் பதுங்கி யொதுங்கும் என்றும் கற்பித்துக் கூறுவது காணக்காண வியப்பூட்டுங் காட்சியன்றோ? காதலி தன் கைக்கு எட்டாத கொம்பை வளைத்து மலர் பறிக்க எண்ணி நிற்பது கண்டு, காதலன் “ஏன் எய்க்கின்றாய்; என் தோள் மேல் ஏறி மலர் பறித்துக் கொள்” எனக் கூறி அவளைத் தோளில் ஏந்தி நின்றான் என்றும், எட்டாத ஒரு கொம்பை வளைத்துப் பிடித்து “ஊடிய மகளிர் போல வளைக்க வளைக்க நில்லாது மேலோடுகிறதோ? நான் பற்றிக் கொள்கிறேன்; மலர் முழுவதும் பறித்துக்கொள்” என்றுரைத்து நின்றான் என்றும் இயம்புவது காதலன் புடையார் இயற்கைப் பண்பினை யெடுத்துக் காட்டுவதாம். புதுமது நுகரப் புக்க மைந்தரும் மகளிரும் மயங்கி யறியாது புரியுஞ் செயல்களாக ஆசிரியர் கூறுவதையும் ஆங்குக் காணலாம். மங்கை யொருத்தி; வள்ளத்திலுள்ள கள்ளிற் சந்திரன் சாயை தோன்றக் கண்டு “சந்திரா! என் காதலன் பிரிந்த காலத்து நீ கனல் போல் என்னைக் காய்ந்தனை; இன்று என் வள்ளத்திற்குள் வந்தகப் பட்டாய்; உன்னை யினிவிடமாட்டேன்; எங்கும்போகாமல் இங்கே படுத்திரு” என்று கூறி அதன்மேல் ஒரு வள்ளத்தை வைத்து மூடினள் என்பதும், கள்ளுண்டு களித்த காரிகை யொருத்தி, கையில் ஆடியெடுத்து நோக்கிக், கண் சிவப்பும்செவ்வாய் வெளுப்புங் கூர்ந்து நோக்கி, “என்னைப் புணர்ந்து இன்பநலம் துய்த்து வஞ்சக மாக மறைந்து செல்கின்றான் ஒருவன். அவன் யார் என நான் அறியேன்” என்று மயங்கி வாய் பிதற்றுகின்றாள் என்றும் முனிவர் மொழிந்தது கட்குடி மயக்கத்திற்குக் காட்டாவனவே! அன்றியும், மது வுண்டு மயங்கிய மங்கையொருத்தி, ஆடியில் தன் வடிவத்தைக் கண்டு ஐயுற்று நானோ அல்லனோ என்றுரைப்பதும், “என்னைக் கைப்பற்றி எவரோ கொண்டோடிவிட்டார். என் கணவன் வந்தென்னைத் தேடினால் யான் என்ன செய்வேன் தோழி! என்னை விரைவில் தேடிக் கண்டு பிடித்துக்கொண்டுவா” என்று சேடியை நோக்கிக் கூறுவதும், மற்றொருத்திதான் கள்ளுண்ணும் வள்ளத்தில் தன்பின் ஒளித்திருந்த காதலனுருவந் தோன்றக் கண் சிவந்து நோக்கி “அயலாள் ஒருத்தியைத் தோய்ந்து இன்ப நுகர்ந்து இருக்கின்றனையோ” என்று கூறிச் சினங்கொண்டு வள்ளத்தையுதைத்துச் சிதைத்தாள் என்றும் செப்பியவற்றை யாய்ந்தால் எவர்க்கும் நகைப்பு மிகைப்படு மன்றோ? நகைச்சுவை நயப்போர் உண்டாட்டுச் செயல்களை ஊன்றி நோக்குக. “இப்பூங்கொம்பும் - ஊடிய மகளிரேயே கொய்யென வளைத்து நின்றான் காதலன்;” கண் முத்தங்கொழிப்ப நின்றாள் காதலி எனவும். செருந்திப்பூச் செருகி நோக்கி இக்குழையழகி தென்றான் காதலன்; இடுவெங்கைக்கிடுதி யென்னா, அக்குழை யோடும்வீசி யன்பனுக் கலக்கண் செய்தாள் காதலி” எனவும், காதலன்மார்பிற் பூந்தாது சிந்திக் கிடந்தது மான்மதமும் சந்தனமும் கலந்த சாந்து போலத் தோன்றக் கண்டு “தையல் யாரைத் தோய்ந்த சாந்தென்றாள்” அவன் உள்ளத்துன்னையும் சுமந்து கொய்த ஆய்ந்த சண்பகத்தா தென்றான் உடனே அத்தையல் “நெய்சொரி யழலினின்றாள்”எனவும் புலவி நுணுக்கம் புகன்றிருப்பதை நோக்குங்கள். ஊடற்குக் காரணம் உய்த்துணர வைத்திருப்பதைக் கண்டு கண்டு களிப்பீர்கள். பின் சண்பக மாறன் சந்திரகாந்தக் கல் மேடையில் மனைவியுடன் தனித்திருந்தது; தென்றல் கூந்தலின் வாசத்தைக் கொணர்ந்தது; இயற்கை மணமா செயற்கை மணமா என ஐயுற்றது; அக் கருத்தைத் தெளிவிக்குங் கவி பாடியவர்க்குப் பொற்கிழி யுரிய தெனத் தூக்கியது. தருமி இறைவனை வேண்டக் “கொங்குதேர் வாழ்க்கை” என்ற கவி பாடியருளியது; நக்கீரன் அக் கவிக்குங் குற்றங் கூறியது; இறைவன் ஒரு புலவனாக வந்து கீரனுடன் உரையாடியது. நெற்றிக் கண் காட்டியது.“ஆகம் முற்று நீர் கண்ணானாலும் மொழிந்த நும் பாடல் குற்றம் குற்றமே” யெனக் கீரன் சாதித்தது; நெற்றிக்கண் நெருப்பின் வெம்மையாற் கீரன் பொற்றாமரைப் பொய்கையுட் போய் விழுந்தது; இறைவன் றிருவுருக் கரந்தது ஆகிய வரலாற்று விளக்கமும் அப்படலத்திற் காணலாம். (5) கீரனைக் கரையேற்றிய படலம் : கீரன் பொற்றாமரைப் பொய்கை வீழ்ந்து துன்புறும் நிலையைச் சங்கப் புலவர் வருந்தி ஆய்ந்து ஆலவாயண்ணல் தாளிணை பணிந்து “திருத்தனே சரணம் மறைச்சென்னி மேல் நிருத்தனே சரணம்” என்று துதித்தனர். நக்கீரன் புரிந்த பிழையைப் பொறுத்து அவனை உய்விக்க வேண்டினர். இறைவன் இறைவியோடு எழுந்தருளி வந்து பொன்னளினப் பூந்தடத்து ஞாங்கர்ப் புலவர் குழாத்துடன் நின்று அருட்கணா னோக்கினன். உடனே கீரன் அன்பு வடிவமாயமர்ந்து “கைலைபாதி காளத்திபாதி” என்னும் அந்தாதி நூல் பாடி யடியிணையிற் சாத்தினன். இறைவன் நேர்வந்து கரம் பற்றி யீர்த்துக்கரையேற்றினன். பின் கோபப் பிரசாதம் என்னும் நூல் பாடினன். திருவருளை நாடினன். பின்னர்ப் பெருந்தேவ பாணியும், திருவெழு கூற்றிருக்கையும் பாடிச் சாத்திப் பணிந்தனன். இறைவன் நல்லருள் சுரந்து “முன்போல நாவலர் குழாத்திடை வதிக” எனக் கூறி மறைந்தான். சங்கப் புலவர் கழகத் தமர்ந்து தருமிக்குப் பொற்கிழியறுத்துக் கொடுத்து மன்னனும் வேறு சில வரிசை யளிக்குமாறு செய்து மகிழ்ந்திருந்தனர் என்பது. (6) கீரனுக் கிலக்கண முபதேசித்த படலம்: சங்கப் புலவர் களுடன் சார்ந்து வதிந்த கீரன் “இப் பொற்றாமரைப் பொய்கையே என்னுயிரைக் காத்தது”என்று கருதி முக்காலமும் அதின் மூழ்கி யெழுந்து மூர்த்தியைத் தொழுதுவரும் நியமம் பூண்டான். அது கண்ட இறைவன் இலக்கணங் கற்பிக்கவெண்ணினன். அங்கயற் கண்ணம்மை அப்போது குறுமுனிவன் வரலாறு கூறி அவனை வருவித்து இவனுக்கு இலக்கணம் உணர்த்துமாறு செய்வதே தக்கதெனக் கூறினள். அவ்வாறே இறைவன் மனத்தி னினைத்தனன் மாதவனை. அம்முனிவனும் தன் பன்னியுடனோடி வந்து பணிந்தான். இலக்கணம் கற்பிக்குமாறு பணித்தான். அவனும் அவ்வாறே கற்பித்து முடித்து விடைபெற்றுத் தன்னிருக்கை சேர்ந்தான். பின் இறைவி இறைவனை நோக்கி, “கீரனுக்கு இலக்கணம் நீ யுணர்த்தாது மாதவனால் உணர்த்திய காரணம் யாது?” என வினவினள். இவன் மனத்து மற்சமிரருப்பதே காரணம் என்று கூறினள். கீரன் தானிழைத்த பிழையை யெண்ணி யெண்ணி வருந்தினான். பிழை பொறுத்தருள் புரிந்த பெருமானுக்கு யான் செய்வதொன்றுமுளதோ என்று நினைத்துத் தான் கற்ற இலக்கணத்'e7çத மற்றையோர்க்கும் உணர்த்தி மகிழ்ந்திருந்தான் என்பது. (7) சங்கத்தார் கலகந் தீர்த்த படலம் : சங்கப் புலவர் நாற்பத் தெண்மரும் வேறு வேறு தமிழ் நூல்களியற்றித் தாம் தாம் செய்த வற்றையே சிறந்ததெனக் கொண்டு பெருமை பேசிச் சோமசுந்தரக் கடவுள் முன் வந்து “யாம் செய்த பாடல்களிற் சிறந்தவை யாவை? எடுத்துக் காட்ட வேண்டும்” என்று வேண்டினர். அவ்வமையத்தில் மூல விலிங்கத் தினின்றும் ஒரு புலவனாகத் தோன்றி “இந்நகரில் ஒரு வணிகன் தனபதி என்ற பெயருடையான் உளன். அவன் மனைவி குணசாலினி என்ற பெயருடையாள். இவ்விருவர்க்கும் புதல்வ னொருவ னுளன். மதன் போலும் வனப்புடையன். அவன் மூங்கைப் பிள்ளை. அவன்பால் நுங்கவியைப் படித்துக் காட்டுங்கள். அவன் மதிக்குந் தமிழே யுயர்ந்த தமிழ் எனக் காணுங்கள்” என்று கூறினன். புலவர்கள் ஐயமுற்று “இறைவா! வணிகனும் ஊமனுமாகிய ஒருவன் எம் கவிகளின் நன்று தீது ஆய்ந்து எங்ஙனம் கூறுவன்” என வினவினர். சொல்லாழம், பொருளாழங் கண்டால் அவன் முடிதுளக்கிக் களிதூங்கு முகத்துடன் இருப்பன்; அவன்செயல் கண்டால் உங்கட்கு மனத்திலெழும் ஐயமெல்லாம் நீங்கும் என்று கூறி இறைவன் மறைந் தான். பின்னர் அவ்வாறே அவ்வணிகனை அழைத்து இருத்திப் பாடல்களைப் புலவர் உரைப்ப அவற்றைக் குறிப்பாலுணர்ந்து காட்ட ஒவ்வொருவருங் கண்டு கண்டு அவரவர் பாடல் அளவறிந்து மகிழ்ந்து ஒருவரோடொருவர் நட்புக் கொண்டாடி நயந்திருந்தார் என்பது. (8) இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் : குலேச பாண்டியன் என்பவன் அரசுபுரிந்தான். அம் மன்னன் இலக்கணம் இலக்கியமாகிய நூல்களின் வரம்பு கண்டவன். எத்தகைய சிறந்த நூலினுட்பமும் அறியும் புலமையுடையவன். ஆதலால் அவனுக்குச் சங்கப்பலகை யிடந்தந்தது. அம் மன்னன் பெருமையைக் கேள்வி யுற்ற இடைக்காடன் கவி பாடிவந்து கண்டு தான் இயற்றிய கவியை யரங்கேற்றினன். தமிழருமையறிந்தவனான அவன் அழுக்காறு மனத்துட்கொண்டு, முடி துளக்காது, முகமலர்ச்சி காட்டாது ஒன்று முரையாது வாளா இருந்தான். இடைக்காடனுக்குச் சின மூண்டெழுந்து இறைவன் சந்நிதியில் வந்து பணிந்து “தமிழறியும் பெருமானே! செல்வமும் கல்வியும் உள்ளவன் என்று மதித்துக் கவிபாடிப் பாண்டியனைக் கண்டேன். அவன் என் கவியை மதித்திலன். கருங்கடல், நெடுங்கழி, கொடு விலங்கு, பறக்கும் புள், பருமரம், பாலைவனம் போன்ற அஃறிணைப் பொருள்களை யொத்திருந்தான். என்னை யிகழ்ந்திலன், சொல் வடிவாம் இமயப்பாவையையும் பொருள் வடிவாகிய நின்னையுமே யிகழ்ந்தனன். எனக்கு மட்டும் இழிவோ? ஆய்ந்து பார் ” என்று தன் குறைகூறிக் கோயிலைவிட்டு நீங்கிச் சென்றான். உடனே இலிங்கவுரு மறைய இறைவன் உமையோடு வையை நதித் தென்பால் ஓர் ஆலயம் தோன்றக் கண்டங்கிருந்தான். இடைக்காடன் முன் சென்றான். இறைவன் பின் சென்றான். இருந்த புலவர் யாவரும் பின்றொடர்ந்து சென்று தங்கினார். விடியலின் அடியார் “இலிங்கவுருக்கண்டிலோம் ” என மன்னற்குக் கூறினர். அவன் எங்குச் சென்றாய்? யான் எப்பிழை செய்தேன் என்று பலவாறு புலம்பிப் பின் இருந்தஇடமறிந்து கண்டு, காரண மறியாது கலங்கி வருந்தினன். அவ்வமயம் இறைவன் தான் இங்கு வந்துறைந்ததற்குக் காரணமும் இடைக்காடன் செய்யுளை யிகழ்ந்ததையுங் கூறக் கேட்டு மீண்டும் கோயிற்கு வரவேண்டினன். அவ்வாறே இறைவன் வந்தமர்ந்தான். இறைவன் ஆலயத்தில் அமர்ந்த பின் புலவோரனைவரையும் போற்றியழைத்துத், தன்னரண்மனையில் இருத்தி, வாழை கமுகு நாட்டித், தோரணம் பூரண கும்பம் பொலிய அலங்கரித்து, இடைக்காடரைப் பொன்னாசனத் திருத்திக், கவிகேட்டுப் பரிசில் நல்கி, அப்புலவர் பின் ஏழடி சென்று மீண்டு வந்தான். மற்றைப் புலவர்களையும் நோக்கி இடைக்காடர்க்குச் செய்த குற்றம் பொறுக்குமாறு கூறி வேண்டிப் புலவர்வாழ்த்துப் பெற்றுப் புவிபுரந்தான் குலேச பாண்டியன் என்பது.எட்டுப் படலங்களினும் அமைந்துள்ள வரலாற்றைச் சுருக்கமாக வரைந்துகாட்டினோம். பரஞ்சோதி முனிவர் பாடலிலமைந்துள்ள சொன்னயமும் பொருணயமும் சந்தமும் தொடையும் தொடை விகற்பமும் ஆகிய எல்லாம் படித்து இன்புறுக. திருச்சிற்றம்பலம் திருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் திருவாலவாய்க் காண்டம் நாற்பத்தொன்பதாவது திருவாலவாயான படலம் [அறுசீரடியாசிரிய விருத்தம்] பாயுடையார் விடுத்தபழி யழல்வழுதி யுடல்குளிப்பப் பதிக மோதும் சேயுடையா ரணந்திளைக்குஞ் செவியுடையா ரளவிறந்த திசைக ளெட்டுந் தோயுடையார் பொன்னிதழித் தொடையுடையார் விடவரவஞ் சுற்று மால வாயுடையார் புகழ்பாடப் பெறுவேமேல் வேண்டுவதிம் மனித யாக்கை. (இதன் பொருள்.) பாய் உடையார் விடுத்த பழி அழல் - பாயை ஆடையாக வுடைய அமணர் (தமது திருமடத்தின்கண்) வைத்த பழிக்கு ஏதுவாகிய நெருப்பு, வழுதி உடல் குளிப்ப - பாண்டியனுடலிற் சென்று பற்றுமாறு, பதிகம் ஓதும் - திருப்பதிகம் பாடியருளும், சேய் உடை ஆரணம் திளைக்கும் செவியுடையார் - ஆளுடைய பிள்ளையாரின் தமிழ் மறையை இடையறாது நுகருஞ் செவியினையுடையாரும், அளவு இறந்த திசைகள் எட்டும் தோய் உடையார் - எல்லையின்றிப் பரந்த எட்டுத் திக்குகளையும் பொருந்திய ஆடையாக வுடையாரும், பொன் இதழித் தொடை உடையார் - பொன் போன்ற கொன்றைமாலையை யுடையாரும், விட அரவம் சுற்றும் ஆலவாய் உடையார் - நஞ்சினையுடைய பாம்பினாற் கோலி வரையறுக்கப்பட்ட திருவாலவாயினை யுடையாருமாகிய சோமசுந்தரக் கடவுளின், புகழ் பாடப் பெறுவே மேல் - புகழைப்பாடும் பேறுபெறுவேமானால், இம்மனித யாக்கை வேண்டுவது - இந்த மனித வுடம்பு வேண்டுவதே யாகும். அழல் வழுதியுடல் குளிப்பப் பதிகமோதிய வரலாற்றை மேல் பாண்டியன் சுரந்தீர்த்த படலத்திற் காண்க. சேய் - பிள்ளையார் - சேயுடை யாரணம் என்புழி ஆறாவது செய்யுட்கிழமைக்கண் வந்தது; கபிலரது பாட்டு என்புழிப்போல. திசைகள் எட்டும் தோயுடையார் - திகம்பரர். “ வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேனெடுங் காலமே ” “ குனித்த புருவமுங் கொவ்வைச் செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும் இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே” என்னும் திருநாவுக்கரசர் திருப்பாட்டுக்கள் இங்கே சிந்திக்கற்பாலன.(1) வேதனெடு மாலாதி விண்ணாடர் மண்ணாடர் விரத யோகர் மாதவர்யா வருங்காண மணிமுறுவல் சிறிதரும்பி மாடக் கூடல் நாதனிரு திருக்கரந்தொட் டம்மியின்மேல் வைத்தகய னாட்டச் செல்வி பாதமல ரெழுபிறவிக் கடனீந்தும் புணையென்பர் பற்றி லாதோர். (இ-ள்.) வேதன் நெடுமால் ஆதி விண்ணாடர் - பிரமனும் நெடியனாகிய திருமாலும் முதலிய தேவர்களும், மண்ணாடர் - புவியிலுள்ளாரும், விரதயோகர் மாதவர் யாவரும் - அரிய நோன்பினை மேற்கொண்ட சிவயோகியரும் பெரிய தவத்தினையுடைய முனிவரும் ஆகிய அனைவரும், காண - காணும்படி, மாடக்கூடல் நாதன் - நான்மாடக் கூடலின் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுள், மணிமுறுவல் சிறிது அரும்பி - அழகிய புன்னகை முகிழ்த்து. இரு திருக்கரம் தொட்டு - இரண்டு திருக்கரங்களாலும் தீண்டி, அம்மியின்மேல் வைத்த - அம்மியின்மேல் வைத்தருளப் பெற்ற, கயல்நாட்டச் செல்வி பாதமலர் - அங்கயற்கண்ணம்மையின் திருவடி மலர்களை, பற்று இலாதோர் - இருவகைப் பற்றுமற்ற பெரியோர், எழுபிறவிக் கடல் நீந்தும் புணை என்பர் - எழுவகைப் பட்ட பிறவியாகிய கடலைக் கடப்பதற்கரிய நாவாய் என்று கூறவார். அம்மியின்மேல் வைத்தமை முன் திருமணப்படலத்திற் காண்க. வைத்த பாதமலர் என்க. பிறவி ஏழாவன தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன. பிறவி காரண காரியத் தொடர்ச்சியாய் அனாதியாக வந்து கொண்டு இருத்தலின் அளவிட முடியாத தென்பார், ‘கடல்’ என்றார். பற்றிலாதோர் - எவ்வகைப் பற்றுமற்று இறைவன் திருவடியைப் பற்றி நின்றோர்; “ முற்றா வெண்டிங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே” “ பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்” என்னும் மறைமொழிகள் இங்கே கருதற் பாலன. (2) ('bcடி வேறு) ஓலவாய் மறைக டேறா வொருவன்றன் னுலகந் தன்னைச் சேலவா யுழலு நாரைக் கருளிய செயலீ தம்ம நீலவாய் மணிநேர் கண்ட னெடியநான் மாடக் கூடல் ஆலவா யாகச் செய்த வருட்டிற மெடுத்துச் சொல்வாம். (இ-ள்.) வாய் ஓலம் மறைகள் தேறா ஒருவன் - வாய் திறந்து ஓலமிடும் மறைகளும் தெளியாத இறைவன், தன் உலகம் தன்னை - தனது சிவலோகத்தை, சேல் அவாய் உழலும் நாரைக் கருளிய செயல் ஈது - சேல்மீனை விரும்பிச் சுழன்று திரியும் நாரைக்கு அருளிய திருவிளையாடல் இதுவாகும்; நீலம் வாய்மணி நேர் கண்டன் - நீலநிறம் வாய்ந்த மணியினை ஒத்த திருமிடற்றையுடைய அவ்விறைவன், நெடிய நான்மாடக்கூடல் - நீண்ட நான்மாடக்கூடலை, ஆலவாயாகச் செய்த அருள் திறம் - திருவாலவாயாகச் செய்த திருவிளையாடலை, எடுத்துச் சொல்வாம் - (இனி) எடுத்துக் கூறுவாம். ஓலமிடுதல் - முறையிடுதல்; “ அருமறை முறையிட் டின்னு மறிவதற் கரியான்” எனவும், ““ மயக்கறு மறையோ லிட்டு மாலயன் றேட நின்றான்” எனவும் திருத்தொண்டர் புராணம் கூறுதல் காண்க. ஓலம், நீலம் என்பன ஈறுகெட்டன. அம்ம : இடைச்சொல். (3) சித்திர மேரு வென்ற திரண்டதோட் சுகுணன் பின்பு சித்திர விரதன் சித்ர பூடணன் றிண்டேர் வல்ல சித்திர துவசன் வென்றிச் சித்திர வருமன் வன்றோட் சித்திர சேனன் சீர்சால் சித்ரவிக் கிரம னென்போன். (இ-ள்.) சித்திரம் மேரு வென்ற திரண்டதோள் சுகுணன் பின்பு- அழகிய மேருமலையை வென்ற திரண்ட தோள்களையுடைய சுகுண பாண்டியனுக்குப் பின், சித்திர விரதன் - சித்திர விரதனும், சித்திர பூடணன் - சித்திர பூடணனும், திண்தேர் வல்ல சித்திர துவசன் - வலிய தேர்ப்போரில் வல்ல சித்திரதுவசனும், வென்றிச் சித்திர வருமன் - வெற்றி பொருந்திய சித்திரவருமனும், வன்தோள் சித்திரசேனன் - வலிய தோள்களையுடைய சித்திரசேனனும், சீர்சால் சித்ரவிக்கிரமன் என்போன் - சிற்ப்பு அமைந்த சித்திரவிக்கிரமன் எனப்படுவானும். சித்ர என்பது தமிழியற்கு மாறாயினும் சீர்நோக்கித் திரியாது நின்றது; பின்வரும் பராக்ரம என்பதும் அது. (4) மணிகெழு தேரி ராச மார்த்தாண்ட னிராச சூடா மணியணி முடியி ராச சார்த்தூல வழுதி சிந்தா மணிநிகர் துவிச ராச குலோத்தமன் மடங்கா வென்றி மணிதிகழ் பொலம்பூ ணாயோ தனப்பிர வீணன் மன்னோ. (இ-ள்.) மணிகெழு தேர் இராசமார்த்தாண்டன் - மணிகள் பதித்த தேரினையுடைய இராசமார்த்தாண்டனும், இராச சூடாமணி - இராச சூடாமணியும், அணிமுடி இராசசார்த்தூலவழுதி - அழகிய முடியினையுடைய இராசசார்த்தூல பாண்டியனும், சிந்தாமணி நிகர் துவிசராச குலோத்தமன் - சிந்தாமணி போன்ற கொடையினை யுடைய துவிசராச குலோத்தமனும், மடங்காவென்றி மணிதிகழ் பொலம் பூண் ஆயோதனப் பிரவீணன் - மடங்காத வெற்றியையும் மணிகள் பதிக்கப்பட்டு விளங்கும் பொன்னணிகளையு முடைய ஆயோதனப் பிரவீணனும், சிந்தாமணி - சிந்தித்தவற்றைக் கொடுக்கும் ஒரு தெய்வமணி. ஆயோதனம் - போர். பிரவீணன் - வல்லன். மன்னும் ஓவும் அசைநிலை. (5) இயம்பருந் திறலி ராச குஞ்சரன் பரவி ராச பயங்கரன் கைக்கும் பைந்தா ருக்கிர சேனன் பாரைச் சயங்கெழு தோண்மே லேந்து சத்துருஞ் சயன்வீ மத்தேர் வயங்கெழு மன்னன் வீம பராக்ரம வழுதி மாதோ. (இ-ள்.) இயம்பரும் திறல் இராச குஞ்சரன் - சொல்லுதற்கரிய வெற்றியையுடைய இராசகுஞ்சரனும், - பரவிராச பயங்கரன் - பரவிராச பயங்கரனும், கைக்கும் பைந்தார் உக்கிரசேனன் - கசக்கும் பசிய வேப்பமலர் மாலையை யணிந்த உக்கிர சேனனும், பாரைச் சயம் கெழு தோள் மேல் ஏந்து சத்துருஞ்சயன் - புவியை வெற்றி பொருந்திய தோளின் கண் தாங்கிய சத்துருஞ்சயனும், வயம் கெழு வீமத்தேர் மன்னன் - வெற்றிபொருந்திய வீமரதன் என்னும் வேந்தனும், வீமபராக்ரமவழுதி - வீமபராக்கிரம பாண்டியனும். மாது, ஓ : அசைகள். (6) பெய்வளை விந்தை சேர்ந்த பிரதாப மார்த்தாண் டப்பேர்த் தெவ்வடு சிலையான் றேர்விக் கிரமகஞ் சுகன்றே ரார்போர் வெளவிய சமர கோலா கலனெனும் வாகை வேலான் அவ்விய மவித்த சிந்தை யதுலவிக் கிரம னென்பான். (இ-ள்.) பெய்வளை விந்தை சேர்ந்த பிரதாப மார்த்தாண்டப் பேர் - இடப்பட்ட வளையலையுடைய வீரமகன் அணைந்த பிரதாப மார்த்தாண்டனென்னும் பெயரினையுடைய, தெவ் அடு சிலையான் - பகைவரைக் கொல்லும் வில்லினையுடையானும் தேர்விக்கிரம கஞ்சுகன் - தேரையுடைய விக்கிரமகஞ்சுகனும், தேரார் போர் வெளவிய- பகைவர் போர் வலியைக் கவர்ந்த, சமர கோலாகலன் எனும் வாகை வேலான் - சமர கோலாகலன் என்னும் வெற்றிவேலையுடையானும், அவ்வியம் அவித்த சிந்தை அதுல விக்கிரமன் என்பான் - பொறாமையை ஒழித்த உள்ளத்தையுடைய அதுல விக்கிரமன் எனப்படுவானும். தேரார் - பகைவர். (7) எழில்புனை யதுல கீர்த்தி யெனவிரு பத்தி ரண்டு வழிவழி மைந்த ராகி வையங் காத்த வேந்தர் பழிதவி ரதுல கீர்த்தி பாண்டியன் றன்பா லின்பம் பொழிதர வுதித்த கீர்த்தி பூடணன் புரக்கு நாளில். (இ-ள்.) எழில் புனை அதுலகீர்த்தி என - அழகுமிக்க அதுல கீர்த்தியும் என்று, இருபத்திரண்டு மைந்தர் வழிவழி ஆகி - இருபத்திரண்டு மைந்தர்கள் வழி வழியாகத் தோன்றி, வையகம் காத்த வேந்தர் - இந்நிலவுலகை ஆண்ட அவ்வேந்தருள், பழிதவிர் அதுலகீர்த்தி பாண்டியர் தன்பால் - பழி நீங்கிய அதுலகீர்த்தி என்னும் வழுதியினிடத்து, இன்பம் பொழிதர உதித்த - இன்பம் மிகும்படி தோன்றிய, கீர்த்திபூடணன் புரக்கும் நாளில் - கீர்த்திபூடண பாண்டியன் செங்கோலோச்சிவருங் காலையில். இருபத்திரண்டு மைந்தர் வழிவழித்தோன்றி வையகம் புரந்தனர். அங்ஙனம் புரந்த வேந்தருள் என விரித்துரைத்துக் கொள்க. புனைதலும் பொழிதலும் மிகுதலை உணர்த்தின. (8) கருங்கட லேழுங் காவற் கரைகடந் தார்த்துப் பொங்கி ஒருங்கெழுந் துருத்துச் சீறி யும்பரோ டிம்ப ரெட்டுப் பொருங்கட கரியு மெட்டுப் பொன்னெடுங் கிரியு நேமிப் பெருங்கடி வரையும் பேரப் பிரளயங் 1கோத்த வன்றே. (இ-ள்.) கருங்கடல் ஏழும் - கரிய கடல்கள் ஏழும், ஒருங்கு பொங்கி எழுந்து - ஒருசேரப் பொங்கி மேலெழுந்து, உருத்துச் சீறி ஆர்த்து - வெகுண்டு சீறி ஆரவாரித்து, காவல் கரைகடந்து - காவலாகிய எல்லையைக் கடந்து, உம்பரோடு இம்பர் - விண்ணுலகும் மண்ணுலகும், பொரும் எட்டு கடகரியும் - போர்செய்யும் மதத்தை யுடைய எட்டு யானைகளும், நெடும் பொன் எட்டுகிரியும் - பெரிய பொன்னையுடைய எட்டு மலைகளும், பெருங்கடி நேமி வரையும்- பெரிய அச்சத்தைத் தரும் சக்கரவாள கிரியும், பேர - நிலைபெயருமாறு, பிரளயம் கோத்த - பிரளயமாக ஒன்றோடொன்று கோத்தன. கருமை - பெருமையுமாம். உறுத்துச்சீறி : ஒருபொருட் பன்மொழி. கடி - காவலுமாம். அன்று, ஏ : அசைகள். (9) அப்பெருஞ் சலதி வெள்ளத் தழுந்தின வழிவி லாத எப்பெரும் பொழிலு மேழு தீபமு மிவற்றுட் டங்கி நிற்பன செல்வ வான திணைகளு நீண்ட சென்னிப் பர்ப்பத வகையு மீறு பட்டன வாக வங்கண். (இ-ள்.) அப்பெருஞ் சலதிவெள்ளத்து அழுந்தின - அந்தப் பெரிய கடல் வெள்ளத்துள் மூழ்கி, அழிவு இலாத எப்பெரும் பொழிலும் - அழிவில்லாத எத்துணைப் பெரிய பூமியும், ஏழு தீபமும் - ஏழு தீவுகளும், இவற்றுள் தங்கி நிற்பன செல்வ ஆன திணைகளும் - இவைகளிலே தங்கி நிற்பனவும் செல்வனவுமாகிய பொருள்களும், நீண்ட சென்னிப் பர்ப்பத வகையும் - உயர்ந்த முடிகளையுடைய மலை வகைகளும், ஈறு பட்டனவாக - ஓழிந்தனவாக; அஙகண் - அப்பொழுது. அழுந்தன : முற்றெச்சம். பொழில் - உலகம். இஃது இப்பொருட்டாதலை, “ செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன்” என்னும் திருவாசகத்திற் காண்க. நிற்பனவான திணை - நிலைத் திணை. செல்வவான திணை - இயங்குதிணை. திணை - குலம்.(10) தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில் வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம் ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத. (இ-ள்.) தேன் இழி குதலைத் தீஞ்சொல் - தேன் ஒழுகும் இனிய குத'e7çலச் சொல்லையுடைய, சேல் நெடுங்கண்ணி கோயில் - சேல்போலும் நீண்ட விழிகளையுடைய உமையம்மையின் திருக்கோயிலும், வான் இழி விமானம் - வானினின்றும் இறங்கிய இந்திர விமானமும். பொற்றாமரை - பொற்றாமரை வாவியும், விளையாட்டின் வந்த கான் இழி இடபக்குன்றம் - இறைவன் திருவிளையாட்டினால் வந்து தங்கிய மணம்வீசும் (சோலைகளையுடைய) இடபமலையும், கரிவரை - யானைமலையும், நாகக்குன்றம் - நாகமலையும். ஆன் இழிவரை - பசுவின் உருத்திரிந்த பசுமலையும், வராக வரை - பன்றி மலையும், முதல் - முதலிய இடங்கள், அழிவு இலாத - (அந்நீரினால்) அழியாதனவாயின. தேன் இழி என்பதற்குத் தேனும் புறங்கொடுக்கும் என்றுரைத்தலுமாம். சேல் நெடுங்கண்ணி - அங்கயற்கண்ணம்மை. கான் இழி சோலைகளையுடைய என வருவித்துரைக்க. முதல் - முதலான. ஆக்கச் சொல்விரித்து அழிவிலாதனவாயின என்க. (11) வெள்ளநீர் வறப்ப வாதி வேதியன் ஞால முன்போல் உள்ளவா றுதிப்ப நல்கி யும்பரோ டிம்ப ரேனைப் புள்ளொடு விலங்கு நல்கிக் கதிருடற் புத்தேண் மூவர் தள்ளரு மரபின் முன்போற் றமிழ்வேந்தர் தமையுந் தந்தான். (இ-ள்.) வெள்ள நீர் வறப்ப - பிரளயநீர் வற்ற, ஆதிவேதியன்- சிவபெருமான், முன் உள்ளவாறு போல் ஞாலம் உதிப்ப நல்கி - முன் இருந்த தன்மை போலவே உலகந் தோன்றுமாறு அருள் புரிந்து, உம்பரோடு இம்பர் ஏனைப் புள்ளொடு விலங்கு நல்கி - தேவர்களையும் மக்களையும் மற்றைப் பறவைகளையும் விலங்குகளையும் தோற்றுவித்து, கதிர் உடல் புத்தேள் மூவர் தள் அரு மரபின் - ஒளி வடிவமுடைய சந்திரனும் சூரியனும் தீக்கடவுளுமாகிய மூவரின் தள்ளுதற்கரிய மரபில், முன்போல் தமிழ் வேந்தர்தமையும் தந்தான்- முன்போலவே மூன்று தமிழ் மன்னர்களையும் தந்தருளினான். போல், அசையுமாம். உம்பர், இம்பர் என்பன அவ்விடங்களிலுள்ளாரை உணர்த்தின. திங்கள் மரபினர் பாண்டியரும், ஞாயிற்றின் மரபினர் சோழரும், அங்கி மரபினர் சேரரும் ஆம். (12) (கலி விருத்தம்) அங்கியை மதிமர பென்னு மாழியுட் டங்கிய கலையெணான் கிரட்டி தன்னொடும் பொங்கிய நிலாமதி போலத் தோன்றினான் வங்கிய சேகர வழுதி மன்னனே. (இ-ள்.) அங்கு இயை மதி மரபு என்னும் ஆழியுள் - அங்ஙன மியைந்த சந்திரன் மரபாகிய கடலுள், தங்கிய எண்ணான்கு இரட்டி கலையொடும் - பொருந்திய அறுபத்துநான்கு கலைகளோடும், பொங்கிய நிலாமதிபோல - விளங்கித் தோன்றிய நிலவினையுடைய சந்திரன்போல, வங்கிய சேகரவழுதி மன்னன் தோன்றினான் - வங்கிய சேகரபாண்டியன் என்னும் வேந்தன் தோன்றினான். தொடக்கமும் ஈறும் தோன்றாது நெடிதாய் வருதலின் மதிமரபை ஆழியாக உருவகித்தார். இவன் அறுபத்துநான்கு கலையும் நிரம்பினான் ஆகலின் எண்ணான்கிரட்டி கலையொடும் பொங்கிய மதிபோல என்றார்; இஃது இல்பொருளுவமை. வங்கியம் - வம்சம்.(13) தாளணி கழலினான் றங்க ணாயகன் கோளணி புரிசைசூழ் கோயில் சூழவோர் வாளணி கடிநகர் சிறிது வைகவைத் தாளரி யேறென வவனி காக்குநாள். (இ-ள்.) தாள் அணி கழலினான் - காலிற் கட்டிய வீரக்கழலையுடைய அவ்வேந்தன், தங்கள் நாயகன் - தங்கள் தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளின், கோள்அணி புரிசைசூழ் கோயில் சூழ - ஒன்பது கோள்களுந் தவழும் மதில் சூழ்ந்த திருகோயிலைச் சூழ , ஓர் வாள் அணி கடிநகர் சிறிது வைகவைத்து - ஒளி பொருந்திய காவலையுடைய ஒரு நகரைச் சிறிதாக ஆக்கிக்கொண்டு, ஆளரி ஏறென அவனி காக்கு நாள் - சிங்கவேறு போலப் புவியைப் பாதுகாத்து வரும்நாளில். கோள் அணிபுரிசை - கோட்களை அணிந்த மதில்; மதிலின் உயர்ச்சி கூறியவாறு. வைக வைத்து - பொருந்த வைத்து; ஆக்கி என்றபடி.(14) செய்யகோன் மனுவழி செலுத்து நீர்மையாற் பொய்கெழு கலிப்பகை புறந்தந் தோடத்தன் வையகம் பல்வளஞ் சுரப்ப வைகலும் மெய்கெழு மன்பதை மிக்க வாலரோ. (இ-ள்.) செய்ய கோல் மனுவழி செலுத்தும் நீர்மையால் - செங்கோலை மனுவறத்தின்வழியே ஓச்சுகின்ற தன்மையால், பொய்கெழு கலிப்பகை புறந்தந்து ஓட - பொய் மிக்க கலி என்னும் பகைவன் புறங்காட்டி ஓட, தன் வையகம் வைகலும் பல்வளம் சுரப்ப - தன் நாடு நாள்தோறும் பல வளங்களையுஞ் சுரத்தலால், மெய்கெழு மன்பதை மிக்க - உண்மை மிக்க மக்கட்கூட்டங்கள் (நாள்தோறும்) மிககன. கலி - வறுமை முதலிய தீமை. வைகலும் என்பதனை ஈரிட துங் கூட்டுக. ஆல், அரோ : அசைகள். (15) பல்குறு மானிடப் பரப்பெ லாமொருங் கல்குற விடங்குறை வாக வாய்மதுப் பில்குறு தாரினான் பிறைமு டித்தவன் மல்குறு கோயிலின் மருங்க ரெய்தினான். (இ-ள்.) பல்குறும் மானிடப் பரப்பு எலாம் - (அங்ஙனம்) பல்கிய மக்கட் பரப்பு அனைத்தும், ஒருங்கு அல்குற இடம் குறைவாக - ஒருங்கு தங்குவதற்கு இடம் குறைவுபட, ஆய்மதுப் பில்குறு தாரினான் - (வண்டுகள்) ஆராயுந் தேன்பிலிற்றும் மாலையை யுடைய பாண்டியன், பிறைமுடித்தவன் மல்குறு கோயிலின் மருங்கர் எய்தினான் - பிறையையணிந்த சோமசுந்தரக் கடவுள் வீற்றிருந்து விளங்குந் திருக்கோயிலின் பக்கத்தை அடைந்தனன். உறுதல் எல்லாம் துணை வினை. வண்டு ஆயும் என விரிக்க. மல்குதல் - விளங்குதன்மேற்று. மருங்கர் : ஈற்றுப்போலி. (16) கறையணி கண்டனைத் தாழ்ந்து கைதொழு திறையவ நின்னருள் வலியி னிந்நிலப் பொறையது வாற்றுவேற் கீண்டிப் போதொரு குறையதுண் டாயின தென்று கூறுவான். (இ-ள்.) கறை அணி கண்டனைத் தாழ்ந்து - நஞ்சக்கறையினை அணிந்த திருமிடற்றினையுடைய இறைவனை வணங்கி. கைதொழுது- கைகூப்பி, இறையவ - தலைவனே, நின் அருள்வலியின் - நினது அருள் வலியினால், இந்நிலப் பொறையது ஆற்றுவேற்கு - இந்நிலச்சுமையைத் தாங்கிவந்த எனக்கு, ஈண்டு இப்போது ஒரு குறையது உண்டாயினது என்று கூறுவான் - இங்கு இப்பொழுது ஒருகுறை உண்டாயிற்றென்று அதனைக் கூறுவானாயினன். பொறையது, குறையது என்பவற்றில் அது பகுதிப்பொருள் விகுதி. (17) இத்தனை மாக்களு மிருக்கத் தக்கதாப் பத்தனங் காணவிப் பதிக்க ணாதியே வைத்தறை செய்திடும் வரம்பு காண்கிலேன் அத்தமற் றதனையின் றறியக்காட் டென்றான். (இ-ள்.) இத்தனை மாக்களும் இருக்கத் தக்கதா - இவ்வளவு மக்களும் இருக்கத் தகுதியுடையதாக, பத்தனம் காண - ஒரு நகரினை ஆக்குவதற்கு, இப்பதிக்கண் ஆதியேவைத்து அறைசெய்திடும் வரம்பு காண்கிலேன் - இந்நகரின்கண் ஆதிகாலத்திலிருந்து வரையறுத்து வைத்த எல்லையை அறியேன்; அத்த அதனை இன்று அறியக்காட்டு என்றான் - (ஆதலால்) அத்தனே அவ்வெல்லையை இன்று யான் அறியுமாறு காட்டியருள்வாயாக வென்று இரந்து வேண்டினன். பத்தனம் - பட்டணம்; நகரம். அறைசெய்துவைத்த என மாறுக. மற்று : அசை. (18) நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர் விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன் திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராப் புண்ணிய வருட்கட லாகிப் போதுவார். (இ-ள்.) நுண்ணிய பொருளினும் நுண்ணிதாயவர் - அணுவினும் அணுவாயுள்ள அச்சோமசுந்தரக்கடவுள், விண் இழி விமானம் நின்று எழுந்து - வானினின்றும் இறங்கிய இந்திர விமானத்தினின்றும் எழுந்து, மீனவன் திண்ணிய அன்பினுக்கு எளிய சித்தராய் - பாண்டியனது வலிய அன்பிற்கு வலிய சித்தமூர்த்தியாகி, புண்ணிய அருள் கடல் ஆகிப் போதுவார் - அறமும் அருளுமாய கடலாகி வருவாராயினர். இறைவன் எவற்றினும் நுண்பொருளாதலை, “ அணுத்தருந் தன்மையி லையோன் காண்க நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க” என்னும் திருவாசகம். அவரைக் கண்ட துணையானே அறக்கடலென்றும் அருட்கடலென்றும் அனைவரும் கருதுமாறு போது வாராயினர் என்க. (19) (கலிநிலைத்துறை) பாம்பி னாற்கடி சூத்திரங் கோவணம் பசுந்தாட் பாம்பி னாற்புரி நூல்சன்ன வீரம்வெம் பகுவாய்ப் பாம்பி னாற்குழை குண்டலம் பாதகிண் கிணிநாண் பாம்பி னாற்கர கங்கணம் பரித்தனர் வந்தார். (இ-ள்.) பாம்பினால் கடிசூத்திரம் கோவணம் - பாம்பினால் அரைஞாணும் கோவணமும், பசுந்தாள் பாம்பினால் - இல்லாத காலையுடைய பாம்பினால், புரிநூல் சன்ன வீரம் - பூணுநூலும் வெற்றிமாலையும், வெம்பகுவாய்ப் பாம்பினால் - கொடிய பிளந்த வாயையுடைய பாம்பினால், குழை குண்டலம் பாதகிண்கிணிநாண் - குழையுங் குண்டலமும் காற் சதங்கை கோத்த கயிறும், பாம்பினால் கரகங்கணம் பரித்தனர் வந்தார் - பாம்பினால் கைவளையும் தாங்கிவந்தார். பசுந்தாட் பாம்பு முதலியவற்றைச் சுட்டாகக் கொள்க. பசுமை இன்மை மேற்று; “அருங்கேடன்” என்புழிப்போல இல்லாத தாளையுடைய பாம்பு என்றார்; ““““ பச்சைத்தா ளரவாட்டி” என்னும் தமிழ்மறையுங் காண்க. சன்னவீரம் - மார்பிலும் முதுகிலும் மாறியணியும் ஒருவகை வெற்றிமாலை; “““ சன்னவீரம் திருமார்பில் வில்லிலக” என்பது திருக்கைலாய ஞானவுலா. பரித்தனர் : முற்றெச்சம். (20) வந்த யோகர்மா மண்டப மருங்குநின் றங்கைப் பந்த வாலவா யரவினைப் பார்த்துநீ யிவனுக் கிந்த மாநக ரெல்லையை யளந்து காட் டென்றார் அந்த வாளரா வடிபணிந் தடிகளை வேண்டும். (இ-ள்.) வந்தயோகர் - அங்ஙனம் வந்த சித்த மூர்த்திகள், மாமண்டபம் மருங்குநின்று - பெரிய மண்டபத்தின் மருங்குநின்று, அங்கைப்பந்த ஆலவாய் அரவினைப் பார்த்து - அழகிய திருக்கரத்திற் கட்டிய நஞ்சுபொருந்திய வாயையுடைய பாம்பைப் பார்த்து, நீ இவனுக்கு இந்த மாநகர் எல்லையை அளந்து காட்டு என்றார் - நி இப் பாண்டியனுக்கு இந்தப் பெரிய நகரத்தின் எல்லையை வரை யறுத்துக் காட்டுவாயாக என்று கூறியருளினார்; அந்த வாள் அரா அடிபணிந்து அடிகளை வேண்டும் - அந்த ஒளிபொருந்திய பாம்பு அடிவணங்கிச் சித்தமூர்த்திகளை இரந்து வேண்டும். பந்தம் - கட்டு; கங்கணம். (21) பெரும விந்நக ரடியனேன் பெயரினால் விளங்கக் கருணை செய்தியென் றிரந்திடக் கருணையங் கடலும் அருண யந்துநேர்ந் தனையதே யாகெனப் பணித்தான் உருகெ ழுஞ்சின வுரகமு1 மொல்லெனச் செல்லா. (இ-ள்.) பெரும - பெருமானே, இந்நகர் அடியனேன் பெயரினால் விளங்க - இந்த நகரம் அடியேன் பெயரினால் விளங்குமாறு,. கருணை செய்தி என்று இரந்திட - அருள்புரிவாயாக வென்று இரந்து வேண்ட, அம் கருணைக்கடலும் - அழகிய கருணைக்கடலும், அருள்நயந்து நேர்ந்து அனையதே ஆக எனப் பணித்தான் - அருளினால் விரும்பி உடன்பட்டு அங்ஙனமே ஆகுக என்று அருளினான்; உருகெழுஞ் சின உரகமும் - (கண்டோர்க்கு) அச்சந்தருதலைப் பொருந்திய சினத்தை யுடைய அப்பாம்பும், ஒல்லெனச் செல்லா - விரைந்து சென்று. செய்தி - செய்வாய்; த் எழுத்துப்பேறு. ஆக என்பதன் அகரந் தொக்கது. உரு - உட்கு; அச்சம். ““ உருவுட்காகும்” என்பது தொல்காப்பியம். ஒல்லென: விரைவுக் குறிப்பு. செல்லா : செய்யா வென்னும் வாய்பாட்டு வினையெச்சம். (22) கீட்டி சைத்தலைச் சென்றுதன் கேழ்கிளர் வாலை நீட்டி மாநகர் வலம்பட நிலம்படிந் துடலைக் கோட்டி வாலைவாய் வைத்துவேற் கொற்றவற் கெல்லை காட்டி மீண்டரன் கங்கண மானது கரத்தில். (இ-ள்.) கீழ்த்திசைத் தலைச் சென்று - கீழைத் திசையின்கட் சென்று, தன் கேழ்கிளர் வாலைநீட்டி - தனது ஒளிபொருந்தி விளங்கும் வாலை நீட்டி மாநகர் வலம்பட நிலம்படிந்து - பெரிய அந்நகருக்கு வலமாக நிலத்திற் படிந்து, உடலைக் கோட்டி - உடலை வளைத்து, வாலை வாய் வைத்து - வாலைத் தனது வாயில் வைத்து, வேல் கொற்றவற்கு எல்லை காட்டி - வேற்படை யேந்திய பாண்டி வேந்தனுக்கு எல்லையைக் காட்டி, மீண்டு அரன் கரத்தில் கங்கணம் ஆனது - மீள இறைவனது திருக்கரத்தின்கட் கங்கணமாயது. கீழ்த்திசை என்பது கீட்டிசை என மருவியது. கோட்டி - வளைத்து. (23) சித்தர் தஞ்சின கரத்தெழுந் தருளினார் செழியன் பைத்த வாலவாய் கோலிய படிசுவ ரெடுத்துச் உழிஸ்ரீவி1உழிஸ்ரீவி0 சுத்த நேமிமால் வரையினைத் தொட்டகழ்ந் தெடுத்து வைத்த தாமென வகுத்தனன் மஞ்சுசூ ழிஞ்சி. (இ-ள்.) சித்தர் - சித்த மூர்த்திகள், தம் சினகரத்து எழுந்தருளினார்- தமது திருக்கோயிலின்கண் எழுந்தருளினார்; செழியன் - வங்கிய சேகர பாண்டியன், பைத்த ஆலவாய் கோலியபடி - படத்தையுடைய பாம்பு வளைந்து எல்லை வரையறுத்தபடி, சுவர் எடுத்து - மதிலுக்கு அடிநிலை பாரித்து, சுத்த மால் நேமி வரையினை - தூய பெரிய சக்கரவாள மலையை, தொட்டு அகழ்ந்து எடுத்து வைத்தது ஆம் என - அடியோடு தோண்டி எடுத்து வைத்ததாகும் என்று கண்டோர் கருதும் வண்ணம், மஞ்சுசூழ் இஞ்சி வகுத்தனன் - முகில் சூழ்ந்த மதில் கட்டி முடித்தனன். சினகரம் - அருகன் கோட்டம்; இது பின் எல்லாக் கடவுளராலயங் களையும் குறிப்பதாயிற்று. பைத்த - படத்தையுடைய; பெயரடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். ஆலவாய் - பாம்பு; ஆலத்தை வாயிலுடையது எனக் காரணக் குறி. தொட்டு அகழ்ந்து என்பன ஒரு பொருளன. தென்றி சைப்பரங் குன்றமும் வடதிசை யிடபக் குன்ற முங்குடக் கேடக நகரமுங் குணபாற் பொன்ற லங்கிழித் தெழுபொழிற் பூவண நகரும் என்று நாற்பெரு வாயில்கட் கெல்லையா வகுத்தான். (இ-ள்.) நால் பெருவாயில்கட்கு - நான்கு பெரிய வாயில்களுக்கும், தென்திசைப் பரங்குன்றமும் - தெற்கின்கண் திருப்பரங்குன்றமும், வடதிசை இடபக் குன்றமும் - வடக்கின்கண் இடபமலையும், குடக்கு ஏடகநகரும் - மேற்கின்கண் திருவேடகப்பதியும், குணபால் - கிழக்கின் கண், பொன்தலம் கிழித்து எழுபொழில் பூவணநகரும் - தேவருலகத்தை ஊடுருவி மேலெழுந்த சோலைகள் சூழ்ந்த திருப்பூவண நகரும், என்றும் எல்லையா வகுத்தான் - எஞ்ஞான்றும் எல்லையாமாறு அம்மதில் வாயில்களை அமைத்தான். என்று நான்கினையும் என வருவித் துரைத்தலுமாம். (25) அனைய நீண்மதி லாலவாய் மதிலென வறைவர் நனைய வார்பொழி னகரமு மாலவாய் நாமம் புனைய லாயதெப் போதுமப் பொன்னகர் தன்னைக் கனைய வார்கழற் காலினான் பண்டுபோற் கண்டான். (இ-ள்.) அனைய நீள்மதில் ஆலவாய் மதிலென அறைவர் - அந்த நீண்ட மதிலை ஆலவாய் மதில் என்று கூறுவர்; நனைய வார்பொழில் நகரமும் - தேனையுடைய நெடிய சோலை சூழ்ந்த அந்த நகரமும், எப்போதும் ஆலவாய் நாமம் புனையலாயது - எஞ்ஞான்றும் ஆலவாயென்னும் பெயரைப் பெறுவதாயிற்று; அப்பொன் நகர்தன்னை - அந்த அழகிய நகரத்தை, கனைய வார்கழல் காலினான் - ஒலித்தலையுடைய நெடிய வீரக்கழலை யணிந்த காலையுடைய அப்பாண்டியன், பண்டு போல் கண்டான் - முன்போல் ஆக்கினன். நனைய, கனைய என்பன குறிப்புவினைப்பெயரெச்சம்; கனைய என்பதில் அகரம் அசையுமாம். (26) கொடிக ணீண்மதின் மண்டபங் கோபுரம் வீதி கடிகொள்1 பூம்பொழி லின்னவும் புதியவாக் கண்டு நெடிய கோளகை கிரீடம்வா ணிழன்மணி யாற்செய் தடிகள் சாத்திய கலன்களும் வேறுவே றமைத்தான். (இ-ள்.) கொடிகள் நீள்மதில் மண்டபம் - கொடிகள் கட்டிய நீண்ட திருமதிலும் திருமண்டபமும், கோபுரம் வீதி - திருக்கோபுரமும் திருவீதியும், கடிகொள் பூம்பொழில் இன்னவும் - மணமிக்க பூக்களையுடைய சோலைகளும் இவைபோன்ற பிறவும், புதியவாக் கண்டு - புதியனவாகச் செய்து, அடிகள் சாத்திய - சோமசுந்தரக் கடவுள் அணியும்படி, நெடிய கோளகை கிரீடம் - நீண்ட கவசமும் முடியும், வாள்நிழல் மணியால் செய்து, - விளங்கும் ஒளியையுடைய மணிகளாற் செய்து வேறுவேறு கலன்களும் அமைத்தான் - இன்னும் வேறுவேறு அணிகளும் செய்தனன். கோளகை - கவசத்தை உணர்த்திற்று. சாத்திய - அணியும்படி: செய்யிய வென்னும் வினையெச்சம்; பெயரெச்சமாகக் கொண்டு, சாத்திய கோளகை கிரீடம் கலன்களும் மணியாற்செய்து அமைத்தான் என்றுரைத்தலுமாம். (27) பல்வ கைப்பெருங் குடிகளின் பரப்பெலா நிரப்பிச் செல்வ வானவன் 1புரந்தரன் புரத்தினுஞ் சிறப்ப மல்லன் மாநகர் பெருவளந் துளும்பிட வளர்த்தான் தொல்லை நாட்குல சேகரன் போல்வரு தோன்றல். (இ-ள்.) பல்வகைப் பெருங்குடிகளின் பரப்பு எலாம் நிரப்பி - பலவகைப்பட்ட சிறந்த குடிகளின் பரப்பு அனைத்தையுங் குடியேற்றி, செல்வ வானவன் புரந்தரன் புரத்தினும் சிறப்ப - செல்வ மிக்க குபேரனும் இந்திரனுமாகிய இவர்கள் நகரத்தினுஞ் சிறந்தோங்க, மல்லல் மாநகர் பெருவளம் துளும்பிட - வளமிக்க பெரிய அந்நகரின் கண் பெரிய செல்வங்கள் நிறைய, தொல்லைநாள் குலசேகரன் போல்வரு தோன்றல் வளர்த்தான் - முன்னாளில் விளங்கிய குலசேகர பாண்டியனைப்போல வந்த வங்கிய சேகர பாண்டியன் வளர்த்தான். வானவனாகிய புரந்தரன் என்றுமாம். குலசேகரன் பண்டு திருநகரங் கண்டானாகலின், ‘குலசேகரன்போல் வருதோன்றல்’ என்றார்; இரு பெயரும் ஒரே பொருளவாதலும் காணற்பாலது. (28) ஆகச் செய்யுள் - 2349. ஐம்பதாவது சுந்தரப்பேரம்பெய்த படலம் (அறுசீரடியாசிரிய விருத்தம்) அங்கண ருரக மணிந்தருள் வடிவ மடைந்தர சகமகிழக் கங்கண விடவர வங்கொடு கடிநகர் கண்டருண் முறையிதுவாஞ் சங்கணி குழையினர் பஞ்சவன் வழிபடு தம்பெய ரெழுதியகூர் வெங்கணை கொடுவள வன்படை முடுகிய வென்றியை யினிமொழிவாம். (இ-ள்.) அங்கணர் - அருட்பார்வையையுடைய இறைவர் - உரகம் அணிந்தருள் வடிவம் அடைந்து - பாம்பினை அணிந்தருளிய சித்த மூர்த்திகள் வடிவம் கொண்டருளி, அரசு அகம் மகிழ - வங்கிய சேகரமன்னன் உள்ளமகிழ, கங்கண விட அரவம் கொடு - கங்கணமாகிய நஞ்சினையுடைய பாம்பினால், கடிநகர் கண்டருள் முறை இதுவாம் - காவ'e7çலயுடைய நகரின் எல்லையை வரையறுத்துக் காட்டியருளிய திருவிளையாடல் இதுவாகும்; சங்கு அணி குழையினர் - அணிந்த சங்கினாலாகிய குழையையுடைய அவ்விறைவர், பஞ்சவன் வழிபடும் தம்பெயர் எழுதிய - பாண்டியன் வழிபடுகின்ற தமது திருப்பெயர் தீட்டிய, கூர் வெங்கணைகொடு - கூரிய கொடிய அம்புகளினால், வளவன்படை முடுகிய வென்றியை - விக்கிரம சோழன் படையைத் துரத்திய திருவிளையாடலை, இனி மொழிவாம் - இனிக் கூறுவாம். கொடு - கொண்டு; மூன்றாம் வேற்றுமைச் சொல். தம் பெயர் - சுந்தரன் என்னும் பெயர். முடுகிய - ஒட்டிய வென்னும் பொருட்டு. (1) வெங்கய னீள்கொடி வங்கிய சேகரன் வெண்குடை நீழலின்வாய் வங்கமு லாவிய தெண்கடன் ஞால மடந்தையு மாசறுசீர்ச் செங்கம லாலய மங்கையும் வாலிய திண்பது மாலயமேல் நங்கையு மோவற மங்கல மான நயம்பெற1 வாழ்வுறுநாள். (இ-ள்.) வெங்கயல் நீள் கொடி வங்கிய சேகரன் - வெவ்விய கயல் எழுதிய நீண்ட கொடியையுயர்த்திய வங்கிய சேகர பாண்டியனது, வெண்குடை நீழலின் வாய் - வெண்கொற்றக் குடையின் நிழலின்கண் வங்கம் உலாவிய தெண்கடல் ஞாலமடந்தையும் - மரக்கலங்கள் உலாவும் தெளிந்த கடல் சூழ்ந்த நிலமகளும், மாசு அறுசீர்ச் செங்கமல ஆலய மங்கையும் - குற்றமற்ற சிறப்பினையுடைய செந்தாமரை மலரைக் கோயிலாக உடைய திருமகளும், வாலிய திண்பதும் ஆலய மேல் நங்கையும் - வெண்மையாகிய திண்ணிய தாமரை மலராகிய கோயிலின்கண் வீற்றிருக்கும் நாமகளும், ஓவுஅற - நீங்குதலில்லாமல், மங்கலம் ஆன நயம் பெற - (அந்நாட்டிலுள்ளார்) மங்கலமான நன்மைகளைப் பெறுமாறு, வாழ்வுறும் நாள் - வாழும் நாளில். நயம்பெறு என்பது பாடமாயின் அம்மூவரும் நன்மை பொருந்திய வாழ்வினைப் பொருந்துநாளில் என்க. கல்வி செல்வங்களானும் பிற நலன்களானும் ஞாலம் பொலிவெய்திய தென்பது கருத்து. (2) வேழ மறப்படை சூழ வெதிர்த்தவர் வீறு கெடுத்தடியிற் றாழ வடர்த்திகல் வாகை தொடுத்தலர் தார்புனை விக்கிரமச் சோழன் மதிக்குல நாயக னைப்பொரு சூள்கரு தித்தொலையா ஆழ்கட லுக்கிணை யாமனி கத்தொடு மாடம ருக்கெழுவான். (இ-ள்.) மறவேழப்படை சூழ எதிர்த்தவர் - கொலைத் தொழிலை யுடைய யானைப்படை சூழ எதிர்த்த பகைவர், அடியில் தாழ - தனது அடியில் வீழ்ந்து வணங்குமாறு, வீறுகெடுத்து அடர்த்து - அவர் தருக்கை யொழித்து வென்று, இகல் வாகை தொடுத்து அலர்தார் புனை விக்கிரமச் சோழன் - வெற்றிக்குரிய வாகை மலராற் றொடுத்து விளங்கிய மாலையையணிந்த விக்கிரமசோழன், மதிக்குலநாயகனைப் பொரு சூள் கருதி - சந்திரமரபிற் றோன்றிய வங்கிய சேகரபாண்டியனைப் பொருது வெல்லும் வஞ்சினத்தை எண்ணி, தொலையா ஆழ்கடலுக்கு இணை ஆம் அனிகத்தொடும் - அழியாத ஆழ்ந்த கடலுக்கு ஒப்பாகிய படையோடும், ஆடு அமருக்கு எழுவான் - அடுதலைச் செய்யும் போருக்கு எழுவானாயினன். பொரு சூள் கருதி என்பதற்குச் சூளுடன் பொருது வெல்லுதல் கருதி என்பது கருத்தாகக்கொள்க. (3) கயபதி காய்சின நரபதி பாய்துர கதபதி யேமுதலா வயமிகு தோள்வட திசையின ராதிபர் வலிகெழு சேனையினோ டியமிடி யேறிமி ழிசையென வாய்விட விரதம தேறிநடாஅய்ப் பயன்மலி காவிரி நதியரு கேயுறை பதிகொடு மேயினனால். (இ-ள்.) கயபதி - கயபதியும், காய்சின நரபதி - வருத்துஞ் சினத்தை யுடைய நரபதியும், பாய் துரகதபதி முதலா - பாய்ந்து செல்லுந் துரகபதியும் முதலாக, வயம்மிகு தோள் வடதிசையின் நராதிபர் - வெற்றி மிக்க தோள்களையுடைய வடதிசை மன்னர்களின், வலிகெழு சேனையினோடு - வலிமைமிக்க படையோடு, இயம் இடியேறு இமிழ் இசையென வாய்விட - பல்லியங்கள் இடியேறு ஒலிக்கும் ஒலிபோல ஒலிக்க, இரதம் ஏறி நடாஅய் - தேரில் ஏறி அதனைச் செலுத்தி, பயன்மலி காவிரிநதி அருகே - பயன்மிக்க காவிரியாற்றின் அருகேயுள்ள, உறைபதி கொடு - தான் உறையும் பதியினின்று, மேயினன் - புறப்பட்டு வந்தனன். கயபதி முதலிய பெயர்கள் யானைகளையுடைய தலைவன் என்பது முதலிய பொருளுடையன. நராதிபர்: வடமொழித் தீர்க்கசந்தி.. இரதமது, அது : பகுதிப்பொருள் விகுதி. நடாஅய் : சொல்லிசை யளபெடை. பதிகொடு - பதியினின்று என்னும் பொருட்டு. (4) சிலைத்தெழு செம்பியன் வெம்படை மள்ளர் செயிர்த்து மதிக்கடவுட் குலத்தவ னாட்டினி ருந்1 தெழி லானிரை கொண்டு குறும்புசெய்து மலர்த்தட மேரி யுடைத்து நகர்க்கு வரும்பல பண்டமுமா றலைத்து முடுக்கி நடுக்கம் விளைத்து மமர்க்கடி யிட்டனரால். (இ-ள்.) சிலைத்து எழு செம்பியன் வெம்படை மள்ளர் - ஆரவாரித்து எழுந்த சோழனுடைய கொடிய படை வீரர், செயிர்த்து - சினந்து, மதிக்கடவுள் குலத்தவன் நாட்டின் இருந்து - திங்கட்புத்தேள் மரபினனாகிய பாண்டியன் நாட்டிற்றங்கி, எழில் ஆன் நிரைகொண்டு குறும்பு செய்தும் - அழகிய பசுநிரைகளைக் கவர்ந்து தீமை புரிந்தும், மலர்த்தடம் ஏரி உடைத்தும் - மலர் நிறைந்த குளங்களையும் ஏரிகளையும் உடைத்தும், நகர்க்கு வரும் பல பண்டமும் ஆறலைத்து முடுக்கி நடுக்கம் விளைத்தும், - நகருக்குள் வருகின்ற பல பொருள்களையும் வழிப்பறித்து அவை கொண்டு வருவோரைத் துரத்தி அவருக்குத் துன்பம் விளைத்தும், அமர்க்கு அடியிட்டனர் - இங்ஙனமாகப் போர்புரிதற்கு அடி கோலினர். ஆனிரைகொண்டும் என உம்மைவிரித்து, குறும்புசெய்து உடைத்து எனக் கூட்டியுரைத்தலுமாம். அடியிடுதல் - தொடக்கஞ் செய்து கொள்ளுதல். (5) மாற னறிந்தினி யென்செய்து நேரியன் வன்படையோ வளவின் றேறி யெதிர்ந்தம ராட லெனக்கரி1 திக்குறை யைப்பிறையோ டாறணி பூரண சுந்தர னெந்தை யடித்தல முன்குறுகாக் கூறியிரந்து வரம்பெறு கென்றிறை கோயி லடைந்தனனால். (இ-ள்.) மாறன் அறிந்து - (அதனை) பாண்டியன் அறிந்து, இனி என் செய்து - இனி யான் யாது செய்வேன்; நேரியன் வன்படையோ அளவு இன்று - சோழனது வலிய படையோ அளவில்லாதது; ஏறி எதிர்ந்து அமர் ஆடல் எனக்கு அரிது - (ஆதலால்) மேற்சென்று எதிர்த்துப் போர் புரிதல் எனக்கு முடியாத தொன்று; இக்குறையை - இந்தக் குறைபாட்டை, பிறையோடு ஆறு அணிபூரண சுந்தரன் எந்தை - சந்திரனோடு கங்கையையு மணிந்த எங்கும் நிறைந்த சோம சுந்தரக் கடவுளாகிய எம் தந்தையினது, அடித்தலம் முன் குறுகா - திருவடிகளின் முன்பெய்தி, கூறி - சொல்லி, இரந்து வரம் பெறுகு - குறை யிரந்து வரம் பெறுவேன்; என்று இறை கோயில் அடைந்தனன் - என்று கருதி அவ்விறைவன் திருக்கோயிலை அடைந்தான். செய்து, பெறுகு என்பன தன்மை யொருமை எதிர்கால முற்றுக்கள்; செய்தும் எனப் பிரித்துப் பன்மை யொருமை விரவி வந்தன எனலுமாம். (6) அடைந்து பணிந்தரு ணாயக னேயடி யேனொடு விக்கிரமன் தொடர்ந்தம ராட வயற்புல மன்னவர் தொகையொடு பாசறைவாய்ப் படர்ந்திறை கொண்டன னேபொர வொத்த பதாதி யெனக்கிலையே மிடைந்து வரும்படை மிக்க விடத்தரண் வேறுளதோ விறைவா. (இ-ள்.) அடைந்து - அங்ஙனம் அடைந்து, பணிந்து - வணங்கி, அருள் நாயகனே - (அடியார் வேண்டியவற்றை) அருளும் பெருமானே, விக்கிரமன் - விக்கிரம சோழனென்பான், அடியேனொடு தொடர்ந்து அமர் ஆட - அடியேனுடன் எதிர்த்துப் போர் புரிய, அயல்புல மன்னவர் தொகையொடு - வேற்று நில மன்னரின் தொகுதியோடும், பாசறை வாய்ப் படர்ந்து இறை கொண்டனன் - பாசறையின்கண் வந்து தங்கினன்; பொர - அவனோடு பொருதற்கு, ஒத்த பதாதி எனக்கு இலையே - தகுதியுடைய சேனை என்னிடத்தில் இல்லையே, மிடைந்து வரும் படைமிக்க விடத்து - நெருங்கி வரும் படை மிகைத்தெழுந்த பொழுது, இறைவா அரண் வேறு உளதோ- இறைவனே எனக்கு அரணாவது வேறு உண்டோ? (இல்லை யென்றபடி.) அருள் நாயகன் - கருணையுடைய நாயகன் என்றுமாம். அயற்புலம் - தனது நாட்டிற்குப் பக்கத்திலுள்ள வேறு நாடுகள். இறைகொண்டனன் - இறுத்தனன். தங்கினன். பதாதி என்பது சேனை என்னும் பொதுப் பொருளில் வந்துளது. அரண் வேறுளதோ என்றது நின்னையன்றி வேறு காவல் இல்லை யென்றபடி. (7) என்னை யினிச்செயு மாறென மாற னிரந்து மொழிந்திடலும் முன்னவன் வானிடை நின்றச ரீரி மொழிந்தருள் வான்முதனீ அன்னவ னோடம ராடுபி னாமு மடைந்துத வித்துணையாய் நின்னது வாகை யெனப்பொரு கின்றன நீயினி யஞ்சலென. (இ-ள்.) இனிச் செயுமாறு என்னை என - இனி என்னாற் செய்யக் கடவது யாது என்று, மாறன் இரந்து மொழிந்திடலும் - பாண்டியன் குறையிரந்து கூறலும், முன்னவன் - முதல்வனாகிய சோமசுந்தரக் கடவுள், வான் இடை நின்று அசரீரி மொழிந்தருள்வான் - விண்ணிலே நின்று அசரீரியாகக் கூறியருளுவான்; முதல் நீ அன்னவனோடு அமர் ஆடு - முதற்கண் நீ அவனுடன் எதிர்த்துப் போர் செய்; பின் நாமூம் அடைந்து - பின்னர் நாமும் அங்குவந்து, உதவித் துணையாய் - நினக்கு உதவிபுரியுந் துணையாகி, வாகை நின்னது எனப் பொருகின்றனம் - வெற்றி உன்னுடைய தென்று கூறும்படி போர்புரிவோம்; நீ இனி அஞ்சல் என - நீ இனி அஞ்சுத லொழிக வென்றருள. துணையாய் அடைந்து பொருகின்றனம் எனக் கூட்டி யுரைத்தலுமாம். பொருகின்றனன் என்பது ஈண்டுப் பொருவாம் என எதிர்காலப் பொருட்டு. அஞ்சல், மகனெனல் என்புழிப்போல எதிர்மறை. (8) சிந்தை களித்திரு கண்க டுளித்திரு செங்கை குவித்திறைவன் அந்தி மதிச்சடை யந்தண னைத்தொழு தன்று புறப்படமுன் வந்தன னொற்றுவ னந்தி வரைக்கயல் வந்தது விக்கிரமன் வெந்தறு கட்படை யென்றர சற்கு விளம்பின னப்பொழுதே. (இ-ள்.) இறைவன் - பாண்டியன், சிந்தை களித்து - (அம்மொழியைக் கேட்டலும்) மனமகிழ்ந்து, இருகண்கள் துளித்து - இரண்டு கண்களிலும் ஆனந்த நீர் பெருக்கி, இருசெங்கை குவித்து- இரண்டு கரங்களையுங் கூப்பி, அந்திமதிச் சடை அந்தணனைத் தொழுது - பிறைமதியினை அணிந்த சடையையுடைய அந்தணனாகிய பெருமானை வணங்கி, அன்று புறப்பட - அப்போது (திருக்கோயிலினின்றும்) வெளிப்பட, ஒற்றுவன் அரசற்கு முன் வந்தனன் - ஒற்றன் அவனுக்கு முன் வந்து, விக்கிரமன் வெந்தறுகண்படை - விக்கிரமசோழனது கொடிய அஞ்சாமையையுடைய படை; நந்தி வரைக்கு அயல் வந்தது என்று விளம்பினன் - இடப மலைக்கு அருகில் வந்தது என்று கூறினன்; அப்பொழுதே - அப்போதே. அந்திமதி - மாலைப் பொழுதிலே செக்கர் வானத்திற் றோன்றும் பிறை. வந்தனன் : முற்றெச்சம் (9) அரச னியல்பல வதிர வலம்புரி யலற வலங்குளைமான் இரத மணைந்திட விசைகொடு சிந்தைபி னிடவல வன்கடவப் புரசை நெடுங்கரி திரையெறி யுங்கடல் பொருபரி விண்டொடுதேர் விரைசெய் நறுந்தொடை விருதர்க ணம்புடை விரவ நடந்தனனால். (இ-ள்.) அரசன் - பாண்டியன், பல இயம் அதிர - பல இயங்கள் ஒலிக்கவும், வலம்புரி அலற - வலம்புரிச் சங்கம் முழங்கவும், அலங்கு உளை மான் இரதம் அணைந்திட - அசைகின்ற தலையாட்டமணிந்த குதிரைகள் பூட்டிய தேரில் ஏற, சிந்தை பின்னிட விசைகொடு வலவன் கடவ - மனவேகமும் பின்னிடுமாறு விசையுடன் பாகன் செலுத்த, புரசை நெடுங்கரி - கழுத்திடு கயிற்றையுடைய பெரிய யானையும், திரை எறியும் கடல் பொருபரி - அலை வீசுங் கடலை யொக்கும் குதிரையும், விண்தொடுதேர் - வானை அளாவுந் தேரும், விரைசெய் நறுந் தொடை விருதர் கணம் - மணம் வீசும் நறிய மாலையை யணிந்த வீரர் கூட்டமுமாகிய நாற்படையும், புடை விரவ நடந்தனன் - அயலிலே சூழ்ந்து வரச் சென்றனன். அலங்கு உளை - அசைகின்ற தலையாட்டம்; ““ அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ” என்னும் புறப்பாட்டடியின் உரையை நோக்குக; உளை - பிடரிமயிருமாம். விருதர் - வீரர். அரசன் இரதம் அணைந்திட வலவன் கடவ அவன் நடந்தனன் என முடிக்க. (10) (எழுசீரடி யாசிரிய விருத்தம்) அளந்து சூழ்திரு வால வாய்மதி லின்பு றத்தக ழாழி போல் வளைந்த சோழ னெடும்ப டைக்கெதிர் வஞ்சி வேய்ந்தெழு பஞ்சவன் கிளர்ந்த சேனை யதிர்ந்து கிட்டின கிட்டி யவ்விரு படைஞருங் களஞ்சி றந்திட வஞ்சி னங்கொடு கைவ குத்தமர் செய்வரால். (இ-ள்.) அளந்து சூழ் - வரையறுக்கப்பட்டுச் சூழ்ந்த, திருவாலவாய் மதிலின் புறத்து - திருவாலவாயின் மதிற் புறத்திலே, அகழ் ஆழி போல் - தோண்டிய கடல்போல், வளைந்த சோழன் நெடும்படைக்கு எதிர் - முற்றிய சோழனது பெரிய படைக்கு எதிரே, வஞ்சி வேய்ந்து எழு பஞ்சவன் - வஞ்சிமாலை யணிந்து போருக்கெழுந்த பாண்டியனது, கிளர்ந்த சேனை அதிர்ந்து கிட்டின - ஊக்கத்துடன் எழுந்த படைகள் ஆரவாரித்து நெருங்கின; கிட்டி அவ்விருபடைஞரும்- அங்ஙனம் நெருங்கி அவ்விருதிறத்துப் படைவீரரும், களம் சிறந்திட வஞ்சினம் கொடு கை வகுத்து அமர் செய்வர் - போர்க் களஞ் சிறக்க வஞ்சினங் கூறிப் படை வகுத்துப் போர்புரிவா ராயினர். அகழ் ஆழிபோல் என்பதற்கு அகழியாகிய ஆழிபோல் என்றுரைத் தலுமாம். அகழ் - அகழியாதலை வையையும் ஒருபுறத் தகழாம் என நகரப் படலத்துட் போந்தமையா லறிக. வஞ்சி - மண்ணசையால் மேற்சேறல். (11) சைய மொத்தெழு தேரி னாரொடு சைய மொத்தெழு தேரரும் மையன் மைக்கரி வீர ரோடெதிர் மையன் மைக்கரி வீரருங் கொய்யு ளைப்பரி வயவ ரொடிகல் கொய்யு ளைப்பரி வ யவருங் கைய ழற்படை வீசி மின்விடு காரெ னப்பொரு வாரரோ. (இ-ள்.) சையம் ஒத்து எழு தேரினாரோடு சையம் ஒத்து எழு தேரரும் - மலையை யொத்தெழுந்த தேரினையுடைய வீரருடன் தேர் வீரரும், மையல் மைக்கரி வீரரோடு எதிர் மையல் மைக்கரி வீரரும் - மதமயக்கத்தையுடைய கரிய யானை வீரருடன் யானைவீரரும், கொய் உளைப்பரி வயவரோடு இகல் கொய் உளைப்பரி வயவரும் - கொய்யப்பட்ட பிடரி மயிரையுடைய குதிரை வீரருடன் மாறுபட்டெழுந்த குதிரை வீரரும், கை அழல் படை வீசி - கைகளால் நெருப்புச் சிந்தும் படைக்கலங்களை வீசி, மின் விடு கார் எனப்பொருவார்- மின்னலை- வீசும் மேகம்போல நின்று போர் புரிவாராயினர். சையம் - மேற்கிலுள்ள ஒரு மலை, அடைகள் தேர் முதலியவற்றிற் குரியன. அரோ : அசை. (12) முடங்கு வெஞ்சிலை வில்ல ரோடு முடங்கு வெஞ்சிலை வில்லரும் விடங்க லுழ்ந்திடு வேல ரோடு விடங்க லுழ்ந்திடு வேலரும் இடங்கை தோல்வல வாள ரோடு மிடங்கை தோல்வல வாளரும் மடங்க லேறு மடங்க லேறு மலைப்ப தென்ன மலைப்பரால். (இ-ள்.) முடங்கு வெஞ்சிலை வில்லரோடு முடங்கு வெஞ் சிலை வில்லரும் - வளைந்த கொடிய வில்லையுடைய வீரருடன் வில் வீரரும், விடம் கலுழ்ந்திடு வேலரோடு விடம் கலுழ்ந்திடு வேலரும் - நஞ்சினை யுமிழும் வேலினையுடைய வீரருடன் வேல்வீரருரும், இடம் கை தோல் வலம் வாளரோடும் - இடக்கையிற் கேடகமும் வலக்கையில் வாட் படையுமுடைய வாள் வீரருடன், இடம் கை தோல் வலம் வாளரும் - அவற்றையுடைய வாள் வீரரும், மடங்கல் ஏறும் மடங்கல் ஏறும் மலைப்பது என்ன - சிங்க வேறும் சிங்க வேறும் போர்புரிவது போல, மலைப்பர் - போர் புரிவர். சிலை என முன் வந்தமையின் வில்லர் என்பது வீரர் என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. (13) அரவி னன்னில மும்பு யம்பொறை யாற்று மீனவ னாற்றல்கூர் புரவி யின்னிரை வைய மேல்கொடு போந்த நேரியர் வேந்தனேர் விரவி மின்னிய முரசி யம்ப மிடைந்து வெஞ்சம ராடுமா றிரவி தன்னொடு மதிய வன்பொர வேகினானிக ராகுமால். (இ-ள்.) அரவின் - அனந்தன் என்னும் பாம்பினைப்போல நல்நிலம் அம்புயம் பொறை ஆற்றும் மீனவன் - நல்ல நிலவுலகத்தை அழகிய தோளினாற் றாங்கும் பாண்டியன், ஆற்றல் கூர் புரவியின் நிரை வையம் மேல் கொடு - வலி மிக்க குதிரைகள் வரிசையாகப் பூட்டப்பட்ட தேரில் ஏறி, போந்த நேரியர் வேந்தன் நேர் விரவி - போருக்கு வந்த சோழமன்னன் எதிர் சென்று கலந்து, மின்னிய முரசு இயம்ப - விளங்கிய போர் முரசு ஒலிக்க, மிடைந்து வெஞ்சமர் ஆடும் ஆறு - நெருங்கி வெவ்விய போர் பரியுந் தன்மை, இரவி தன்னொடு மதிய வன் பொர ஏகினால் நிகர் ஆகும் - சூரியனோடு சந்திரன் போர் புரியச் சென்று புரிந்த'e7çத ஒக்கும். அரவின், இன் : ஒப்புப் பொருட்டு; அரவினாற் சுமக்கப்பட்ட நிலத்தை என விரித்துரைத்தலுமாம். நேரியர் - நேரி வெற்பினையுடையவர்; சோழர். பரிதி மரபினனாகிய சோழனொடு திங்கள் மரபினனாகிய பாண்டியன் பொரச் சென்றது பரிதியொடு திங்கள் பொரச் சென்றது போலும் என்றார்; இதனாற் சோழன் முன் பாண்டியன் ஆற்றல் குன்று மென்பதும் குறிப்பித்தவாறாயிற்று. (14) துள்ளு மாவொலி தான யாறு துளும்பு மாவொலி தூண்டுதேர் தள்ளு மாவொலி படையொடும்படை தாக்கு மாவொலி பொருநரார்த் தெள்ளு மாவொலி மள்ளர் பைங்கழ லேங்கு மாவொலி வீங்கியந் தெள்ளு மாவொலி வேறு பாடு திரிந்து கல்லென லாயதே. (இ-ள்.) துள்ளும் மா ஒலி - தாவிச் செல்லுங் குதிரைகளின் கனைப் பொலியும், தான யாறு துளும்பும் மாஒலி - மத நீரை ஆறு போலப் பெருக்கும் யானைகளின் பிளிறொலியும்; தூண்டு மா தள்ளும் தேர் ஒலி - தூண்டப்படுங் குதிரைகளால் இழுக்கப்படுந் தேர்களின் ஒலியும், படையொடு படை தாக்கும் மா ஒலி - படைகளொடு படை தாக்கும் பேரொலியும், பொருநர் ஆர்த்து எள்ளும் மா ஒலி - வீரர்கள் ஆரவாரித்து ஒருவரை ஒருவர் இகழ்ந்து கூறும் பேரொலியும், மள்ளர் பைங்கழல் ஏங்கும் மா ஒலி - அவ்வீரர்கள் கட்டிய பசிய வீரக்கழல்கள் ஒலிக்கும் பேரொலியும், வீங்கு இயம் தெள்ளும் மா ஒலி - மிக்க இயங்கள் ஒலிக்கும் பேரொலியும், வேறுபாடு திரிந்து கல்லெனல் ஆயது - தம்முள் வேறுபாடு இன்றி ஒன்றாகி எங்கும் கல்லென்னும் ஒலியாயிற்று. மா என்னும் ஓரெழுத்தொரு மொழி குதிரை, யானை, பெருமை என்னும் பல பொருளில் வந்தது. தூண்டு தேர் தள்ளும் மா வொலி என்பதற்குத் தூண்டப்படும் தேர்களால் உண்டாக்கப்படும் பேரொலி என்றுரைத்தலுமாம். (15) துடித்த வாளர வென்ன வீசிய தூங்கு கையின வீங்குநீர் குடித்த காரொடு கார்ம லைந்திடு கொள்கை போல வுடன்றுடன் றிடித்த வாயின வசனி யேறி னிருப்பு லக்கை யெடுத்தெறிந் தடித்த சோரியொ டாவி சோர விழுந்த வெஞ்சின வானையே. (இ-ள்.) துடித்த வாள் அரவு என்ன - துடிக்கும் ஒள்ளிய பாம்பு போல, வீசிய தூங்கு கையின - வீசிய தொங்குகின்ற துதிக்கையை யுடையனவாகி, வீங்கு நீர் குடித்த காரொடு கார் மலைந்திடு கொள்கை போல - மிக்க நீரைப் பருகிய முகிலோடு முகில் போர்புரியுந் தன்மை போல, உடன்று உடன்று அசனி ஏறின இடித்த வாயின - மாறுபட்டு மாறுபட்டு இடியேறுபோல முழங்கின வாயினையுடையனவாகி, இருப்பு உலக்கை எடுத்து எறிந்து அடித்த சோரியொடு - இருப்புலக்கையை எடுத்து வீசி அடித்ததால் வருங் குருதியோடு, ஆவி சோர - உயிருஞ் சோர, வெஞ்சின யானை விழுந்த - கொடிய சினத்தையுடைய யானைகள் விழுந்தன. யானையாற் கழற்றி வீசப்படும் துதிக்கை துடிக்கின்ற பாம்பு போலும் என்றார்; வாளால் எறியப்பட்ட யானைக்கை உருமெறிந்த பாம்புபோற் புரளும் எனக் களவழி நாற்பதில் வந்திருத்தல் நோக்கற்பாலது. ஏற்றின் எனற் பாலது ஏறின் என விகாரமாயிற்று. அடித்த : பெயரெச்சம் காரணப்பொருட்டாயது; ஆறு சென்றவியர் என்புழிப் போல. விழுந்த : அன் பெறாத முற்று. (16) எய்த வாளி விலக்கு வார்பிறி தெய்யும் வாளித மார்புதோள் 1 செய்த போதவ ராண்மை கண்டு சிரித்து வென்றி வியப்பரால் வைத வாவடி வேலெ றிந்திட வருவ தைக்குறி வழியினாற் கொய்த தார்மற வாளெ றிந்துகுறைத்து வேறு படுத்துவார். (இ-ள்.) எய்தவாளி விலக்குவார் - (பகைவர்) எய்த அம்பினை விலக்குவாராகிய வீரர், பிறிது எய்யும் வாளி தம் மார்புதோள் செய்த போது - (மீண்டும் அவர்) எய்த வேறு கணை தமது மார்பினைத் துளைத்தபோது, அவர் ஆண்மை கண்டு சிரித்து - அவரது ஆண்மையினைக் கண்டு மகிழ்ந்து, வென்றி வியப்பர் - அவர் வெற்றியை வியந்து பாராட்டுவார்; வை தவா வடிவேல் எறிந்திட - கூர்மை நீங்காத வடித்த வேற்படையினைப் பகைவர்வீச, வருவதை- வருகின்ற அவ்வேற்படையை, குறிவழியினால் - குறிவைக்கும் நெறியினால், கொய்ததார் மறவாள் எறிந்து - கொய்த மாலையணிந்த வீரவாளை வீசி, குறைத்து வேறுபடுத்துவார் - துண்டித்து அழிப்பார். தோள், தோட்ட என்பதன் முதனிலை : போழ்செய்த என்னும் பாடத்திற்குப் பிளந்த என்றுரைக்க, வாளிமார்பினைத் துளைத்த பொழுது சிரித்து வியப்பர் என்றது அவரது ஊறஞ்சா மறத்தினை விளக்கியபடி. வை - கூர்மை கொய்த்தார் என்புழிச் சினையடை முதலொடு வந்தது. (17) பின்னி டாதிரு படையு மொத்தம ராடு மெல்லை பெரும்படைச் சென்னி தன்றுணை யாய வுத்தர தேய மன்னவர் படையொடுந் துன்னி ஞால முடிக்கு நாளெழு சூறை தள்ள வதிர்ந்தெழும் வன்னி யென்ன வுடன்றெ திர்ந்தனன் வழுதி சேனை யுடைந்ததே. (இ-ள்.) பின்னிடாது இருபடையும் ஒத்து அமர் ஆடும் எல்லை- இங்ஙனம் புறங்காட்டாமல் இருதிறத்துச் சேனைகளும் ஒத்துப் போர் புரியும்போது, பெரும்படைச் சென்னி - பெரிய படையினைlயுடைய சோழன், தன்துணை ஆய உத்தரதேய மன்னவர் படையொடும் துன்னி - தனக்கு உதவியாகிய வடநாட்டுவேந்தர் படையோடும் நெருங்கி, ஞாலம் முடிக்கும் நாள் எழு சூறைதள்ள - உலகத்தை அழிக்கும் நாளில் எழுந்த ஊழிக்காற்று உந்துவதால், அதிர்நது எழும் வன்னி என்ன - முழங்கி யெழுந்த ஊழித் தீயைப்போல, உடன்று எதிர்ந்தனன் - வெகுண்டு எதிர்ந்தான்; வழுதி சேனை உடைந்தது - (அவ்வளவில்) பாண்டியன் சேனை சிதைந்தோடியது. ஞாலம் முடிக்குநாள் - ஊழிக்காலம். சூறை - பெருங்காற்று. (18) மின்ன லங்கிலை 1 வாளொடுஞ்சிலை வில்லி ழந்தனர் வீரரே பன்ன லம்புனை தேரொ டுங்கரி பரியி ழந்தனர் பாகரே தென்ன வன்பொரு வலியி ழந்தன னென்று செம்பியன் வாகையுந் தன்ன தென்று தருக்கு மேல்கொடு சங்கெ டுத்து முழக்கினான். (இ-ள்.) வீரர் - பாண்டியன் படைவீரர், மீன் அலங்கு இலைவாளொடும் சிலைவில் இழந்தனர் - மின்போல விளங்கும் தகட்டு வடிவமாகிய வாட்படையோடு ஒலித்தலையுடைய வில்லையும் இழந்தனர்; பாகர் - பாகர்கள், பல் நலம் புனை தேரொடும் கரிபரி இழந்தனர் - பலவகை நலம்பெற அலங்கரிக்கப்பட்ட தேரோடு யானைகளையும் குதிரைகளையும் இழந்தார்கள்; செம்பியன் - விக்கிரம சோழன், தென்னவன் பொருவலி இழந்தனன் என்று - பாண்டியன் பொருதற்குரிய வலியை இழந்து விட்டனன் என்றும் (அதனால்), வாகையும் தன்னது என்று - வெற்றியும் தன்னுடைய தென்றுங் கருதி, தருக்கு மேல்கொடு சங்கு எடுத்து முழக்கினான் - செருக்கினை மேற்கொண்டு வெற்றிச் சங்கை எடுத்து ஊதினான். (19) அந்த வேலையின் முன்ன ருந்தம தருளெ னக்குளிர் கடிபுனற் பந்தர் நீழ லளித்து மோடை படுத்தி யும்பகை சாயவே பந்த வேடர வண்ண மேயொரு மான வேடர சாய் வலஞ் சிந்த வாகுல மூழ்கு மீனவன் 1 சேனை காவல ராயினார். (இ-ள்.) அந்த வேலையின் - அப்பொழுது, முன்னரும் - முன்னேயும், தமது அருள் எனக்குளிர் கடிபுனல் பந்தர் நீழல் அளித்தும் - தமது அருள்போலக் குளிர்ந்த மணமுள்ள நீரைப் பந்தர் நிழலின்கண் கொடுத்தும், ஓடைபடுத்தியும் பகைசாயவே வந்த வேடர் - சோழனை மடுவில் வீட்டியும் பகைவர் புறங்கொடுக்குமாறு வந்த திருவேடத்தையுடைய அச்சோமசுந்தரக் கடவுள், அவ்வண்ணமே ஒரு மானவேடு அரசாய் - அங்ஙனமே ஒரு பெருமையையுடைய வேட மன்னராய் (வந்து), வலம் சிந்த ஆகுலம் மூழ்கும் - வெற்றி அழிந்ததால் துன்பக் கடலுள் மூழ்கிய, மீனவன் சேனை காவலர் ஆயினார் - பாண்டியனது சேனைக்குத் தலைவர் ஆயினர். புனல் பந்தர் நீழல் அளித்ததைத் தண்ணீர்ப்பந்தல் வைத்த படலத்திலும், ஓடைபடுத்தியதைச் சோழனை மடுவில் வீட்டிய படலத்திலும் காண்க. வேடமுடையர் என்றும் வேட்டுவர் என்றும் இருபொருள்பட ‘வந்த வேடர்’ என்றார்; சோழனை மடுவில் வீட்டிய பொழுது இறைவன் வேட்டுருக்கொண்டு வந்தமை காண்க; அது பற்றியே இங்கு ‘அவ்வண்ணமே யொருமான வேடரசாய்’ என்றார். (20) (அறுசீரடியாசிரிய விருத்தம்) குன்றவில் வேடன் சாபங் குழைவித்துச் சுந்த ரேசன் என்றதன் னாமந் தீட்டி யிட்டகூர்ங் கணைக டூண்டி வென்றன மென்று வாகை மிலைந்துவெண் சங்க மார்த்து நின்றவன் சேனை மீது நெறிப்படச் செலுத்தா நின்றான். (இ-ள்.) குன்ற வில் வேடன் - மேரு மலையை வில்லாகவுடைய இறைவனாகிய வேடன், சாபம் குழைவித்து - வில்லை வளைத்து, சுந்தரேசன் என்ற தனது திருப்பெயர் தீட்டிய கூரிய கணைகளை, வென்றனம் என்று வாகை மிலைந்து - வென்று விட்டோமென்று கருதி வெற்றிமாலை சூடி, வெண்சங்கம் ஆர்த்து - வெள்ளிய சங்கினை முழக்கி, நின்றவன் சேனை மீது - நின்ற விக்கிரம சோழன் சேனையின்மேல், நெறிப்படத் தூண்டிச் செலுத்தா நின்றான் - வரிசைபடத் தொடுத்துவிடா நின்றான். வேடன் கணைகளை நின்றவன் சேனைமீது செலுத்தா நின்றான் என முடிக்க. (21) அம்முனை வாளி யொவ்வொன் றடல்புனை 1நூற்று நூறு தெம்முனை வீரர் தம்மைச் செகுத்துயி ருண்ண நோக்கி இம்முனை வாளி யொன்றுக் கித்துணை வலியா தென்னா வெம்முனை மறவேற் சென்னி வியந்தனு மான மெய்தா. (இ-ள்.) அம்முனை வாளி ஒவ்வொன்று - அந்தக் கூரிய கணை ஒவ்வொன்றும், அடல்புனை தெவ்முனை நூற்று நூறு வீரர்தம்மை - வெற்றி புனைந்த பகைவன் போர்முனையிலுள்ள பதினாயிர வீரர்களை, செகுத்து உயிர் உண்ண - கொன்று உயிரைப் பருக, நோக்கி - அதனைப் பார்த்து, இம்முனை வாளி ஒன்றுக்கு இத்துணை வலி யாது என்னா - இந்தக் கூரிய அம்பு ஒன்றுக்கு இவ்வளவு வலி ஏது என்று, வெம்முனை மறவேல் சென்னி - வெவ்விய கூர்மையுடைய கொலைத்தொழில் பொருந்திய வேலினையேந்திய சோழன், வியந்து அனுமானம் எய்தா - வியந்து அனுமானமுற்று. நூற்று நூறு - நூறான் உறழ்ந்த நூறு; பதினாயிரம். ஒன்றுக்கு - ஓரொன்றுக்கு. யாது - எங்ஙனம் பொருந்தியது. அநுமானம் - கருதல்; ஈண்டு ஐயுறவு என்னும் பொருட்டு. (22) அன்னகூர் வாளி தன்னைக் கொணர்கென வதனை வாசித் தின்னது சுந்த ரேச னெனவரைந் திருப்ப தீது தென்னவற் கால வாயான் றுணைசெய்த செயலென் றஞ்சிப் பொன்னிநா டுடையான் மீண்டு போகுவான் போகு வானை. (இ-ள்.) அன்ன கூர்வாளி தன்னைக் கொணர்க என - அந்த அம்பினைக் கொண்டு வரக்கடவை என ஒருவனை ஏவி, அதனை வாசித்து - (அவனால் கொண்டு வரப்பட்ட) அந்த வாளியைப் படித்து, இன்னது சுந்தரேசன் என வரைந்திருப்பது - இது சுந்தரேசன் என்று எழுதப்பட்டுளது; ஈது - (ஆதலால்) இது, தென்னவற்கு - பாண்டியனுக்கு, ஆலவாயான் துணை செய்த செயல் என்று - ஆலவாய் அண்ணல் துணை புரிந்த செய்தியாகும் என்று கருதி, அஞ்சி - பயந்து, பொன்னிநாடு உடையான் மீண்டு போகுவான் - காவிரி நாடனாகிய சோழன் திரும்பிப் போவானாயினன்; போகுவானை - அங்ஙனம் போகும் அவனை. கொணர்கவென ஏவிக் கொண்டு வந்த அதனை வாசித்து என விரித்துரைத்துக் கொள்க. கொணர்கென : அகரம் தொகுத்தல். (23) செருத்துணை யாகி வந்த வுத்தர தேயத் துள்ளார் துருக்கரொட் டியர்வே றுள்ளார் யாவருஞ் சூழ்ந்து நில்லென் றுருத்தனர் வைது நீபோர்க் குடைந்தனை போதி யீதுன் கருத்தெனி னாண்மை யாவர் கண்ணதுன் மான மென்னாம். (இ-ள்.) செருத்துணையாகி வந்த - போர்த்துணையாகி வந்த, உத்தர தேயத்து உள்ளார் துருக்கர் ஒட்டியர் - வடநாட்டிலுள்ளாராகிய துருக்கரும் ஒட்டியரும், வேறு உள்ளார் யாவரும் சூழ்ந்து - இவரொழிந்த ஏனையோருமாகிய அனைவருங் கூடி, நில் என்று உருத்தனர் வைது - நிற்பாயாக என்று கூறிச் சினந்து வைது, நீ போர்க்கு உடைந்தனை போதி - நீ போருக்குத் தோற்றுப் போகின்றாய்; ஈது உன் கருத்து எனின் - இது உனது கருத்தானால், ஆண்மை யாவர் கண்ணது - ஆண்தன்மை யாரிடத்தது; உன்மானம் என்னாம் - உனது பெருமை என்னாகும். உருத்தனர், உடைந்தனை யென்பன முற்றெச்சங்கள். போதி : எழுத்துப் பேறு. (24) செல்லலை வருதி யென்னாச் செயிர்த்தெழுந் திடியி னார்த்துக் கல்லெழு வனைய திண்டோட் கெளரியன் படைமேற் சென்று வில்லிற வலித்து வாங்கி வேறுவே றாகி நின்று சொல்லினுங் கடிய வாளி தொடுத்தனர் விடுத்தார் தூர்த்தார். (இ-ள்.) செல்லலை வருதி என்னா - (ஆதலால்) நீ செல்லற்க வருவாயாக வென்று கூறி, செயிர்த்து எழுந்து இடியின் ஆர்த்து - சினந்து எழுந்து இடிபோல ஆரவாரித்து, கல் எழு அனைய திண்தோள் கொளரியன் படைமேல் சென்று - கற்றூணை யொத்த திண்ணிய தோளையுடைய பாண்டியன் சேனைமேற் சென்று, வில் இற வலித்து வாங்கி - வில் முறியுமாறு இழுத்து வளைத்து, வேறு வேறு ஆகி நின்று - தனித் தனி ஒவ்வோரிடத்தில் நின்று, சொல்லினும் கடிய வாளி - (முனிவர் சாப மொழியினும் விரைந்து செல்லும் வாளிகளை, தொடுத்தனர் விடுத்தார் தூர்த்தார் - தொடுத்து விடுத்துத் தூர்த்தனர். சொல்லொக்குங் கடியவேகச் சுடுசரம் என்னும் கம்பராமாயணச் செய்யுட்டொடர் ஈண்டுக் கருதற்பாலது. தொடுத்தனர், விடுத்தார் என்பன முற்றெச்சங்கள். (25) வடுத்தவா மருமச் செம்புண் மறமக னாகி நின்ற கடுத்தவா மிடற்று முக்கட் கண்ணுதற் சாமி தான்முன் எடுத்தவா டகவி லன்ன 1 விருஞ்சிலை வாளி யொன்று தொடுத்தவா டவர் தாம் விட்ட சுடுசரந் தொலைத்துப் பின்னும். (இ-ள்.) வடு தவா மருமம் செம்புண் மறமகன் ஆகி நின்ற - வடு நீங்காத மார்பின்கண் செம்புண்ணையுடைய வேடத்திருவுருவங் கொண்டு நின்ற, கடுதவா மிடற்று முக்கண் கண்ணுதல் சாமி - நஞ்சு நீங்காத திருமிடற்றையும் மூன்று கண்களையுமுடைய சோமசுந்தரக் கடவுள், தான் முன் எடுத்த ஆடகவில் அன்ன இருஞ் சிலை - தான் திரிபுர மெரித்த ஞான்று எடுத்த மேரு வில்லைப் போலும் பெரிய வில்லில், வாளி ஒன்று தொடுத்து - ஓர் அம்பினைத் தொடுத்து விடுத்து, அ ஆடவர் விட்ட சுடுசரம் தொலைத்து - அந்த ஆடவர் விட்ட கொடிய கணைகளை அழித்து, பின்னும் - மீண்டும். வடு - தழும்பு. கண்ணுதல் பெயர் மாத்திரமாய் நின்றது. ஆடவர் - வீரர் என்னும் பொருட்டு. “ ஆடவன் கொன்றான் அச்சோ” என்பது பெரிய புராணம். (26) பத்தம்பு தொடுத்து நூற்றுப் பத்துமான் றேரைச் சாய்த்தான் பத்தம்பு தொடுத்து நூற்றுப் பத்துவெங் களிற்றை மாய்த்தான் பத்தம்பு தொடுத்து நூற்றுப் பத்துவாம் பரியைக் கொன்றான் பத்தம்பு தொடுத்து நூற்றுப் பத்துமா னுடரை வென்றான். (இ-ள்.) பத்து அம்பு தொடுத்து - பத்துக் கணைகளை விடுத்து, நூற்றுப்பத்து மான் தேரைச் சாய்த்தான் - குதிரை பூட்டிய ஆயிரந்தேரை அழித்தான்; பத்து அம்பு தொடுத்து - பத்து அம்புகளை ஏவி, நூற்றுப் பத்து வெங்களிற்றை மாய்த்தான் - ஆயிரங் கொடிய யானைகளைக் கொன்றான்; பத்து அம்பு தொடுத்து - பத்து வாளிகளைத் தூண்டி, நூற்றுப் பத்து வாம்பரியைக் கொன்றான் - ஆயிரம் தாவுங்குதிரைகளை மாய்த்தான்; பத்து அம்பு தொடுத்து - பத்துப் பாணங்களைக் கடாவி, நூற்றுப் பத்து மானுடரை வென்றான் - ஆயிரம் வீரர்களைக் கொன்றான். (27) நூறம்பு தொடுத்து நூற்று நூறு1 வெம் பதிமே லெய்தான் நூறம்பு தொடுத்து நூற்று நூறுவெங் கரிமேற் பெய்தான் நூறம்பு தொடுத்து நூற்று நூறுதேர் சிதைய விட்டான் நூறம்பு தொடுத்து நூற்று நூறுசே வகரை யட்டான் (இ-ள்.) நூற்று நூறு வெம்பரி மேல் - வெவ்விய பதினாயிரங் குதிரைகள் மேல், நூறு அம்பு தொடுத்து எய்தான் - நூறுகணைகளை வில்லிற் பூட்டி விடுத்து (அவற்றை அழித்தான்); நுற்று நூறு வெங்கரிமேல் - கொடிய பதினாயிரம் யானைகளின் மேல், நூறு அம்பு தொடுத்துப் பெய்தான் - நூறு வாளிகளை வில்லிற் பூட்டிப் பொழிந்து (அவற்றை அழித்தான்); நூற்று நூறு தேர் சிதைய நூறு அம்பு தொடுத்து விட்டான் - பதினாயிரந் தேர் சிதையுமாறு நூறு அம்புகளை வில்லிற் றொடுத்து விட்டான்; நூறு அம்பு தொடுத்து நூற்று நூறு சேவகரை அட்டான் - நூறுபாணங்களை ஏவிப் பதினாயிரம் வீரர்களைக் கொன்றான். (28) ஆயிரம் வாளி யானூ றாயிரம் பரியைக் கொன்றான் ஆயிரம் வாளி யானூ றாயிரங் கரியை வென்றான் ஆயிரம் வாளி யானூ றாயிரந் தேரைச் சாய்த்தான் ஆயிரம் வாளி யானூ றாயிரம் பேரைத் தேய்த்தான். (இ-ள்.) ஆயிரம் வாளியால் நூறாயிரம் பரியைக் கொன்றான்- ஆயிரம் கணைகளினால் நூறாயிரம் குதிரைகளைக் கொன்றான்; ஆயிரம் வாளியால் நூறாயிரம் கரியை வென்றான் - ஆயிரம் வாளி களால் நூறாயிரம் யானைகளை அழித்தான்; ஆயிரம் வாளியால் நூறாயிரம் தேரைச் சாய்த்தான் - ஆயிரம் அம்புகளினால் நூறாயிரந் தேர்களை உடைத்தான்; ஆயிரம் வாளியால் நூறாயிரம் பேரைத் தேய்த்தான் - ஆயிரம் பாணங்களால் நூறாயிரம் வீரர்களைத் தொலைத்தான். இம்மூன்று செய்யுளிலும் இறுதிச் சீர்கள் இவ்விரண்டு ஒவ்வோரெதுகையாக அமைந்திருத்தல் காண்க. (29) தடிந்தன தோளுந் தாளுந் தகர்ந்தன சென்னி மண்ணிற் படிந்தன மடிந்தோர் யாக்கை பரிந்தன தும்பைத் தாமம் மடிந்தன மையல் யானை மாண்டன தாண்டும் பாய்மான் ஒடிந்தன கொடிஞ்சி மான்றே ரொதுங்கின வொழிந்த சேனை. (இ-ள்.) தோளும் தாளும் தடிந்தன - வீரர்களின் தோள்களும் கால்களும் அறுபட்டன; சென்னி தகர்ந்தன - தலைகள் உடைபட்டன; மடிந்தோர் யாக்கை மண்ணில் படிந்தன - இறந்தவர்களின் உடல்கள் மண்ணிற் கிடந்தன; தும்பைத்தாமம் பரிந்தன தும்பை மாலைகள் அறுந்தன; மையல் யானை மடிந்தன - மதமயக்கத்தையுடைய யானைகள் மடிந்தன; தாண்டும் பாய்மான் மாண்டன - தாவுங் குதிரைகள் இறந்தன; கொடிஞ்சி மான் தேர் ஒடிந்தன - மொட்டையுடைய குதிரை பூண்ட தேர்கள் நொறுங்கின; ஒழிந்த சேனை ஒதுங்கின - எஞ்சிய சேனைகள் ஓடி மறைந்தன. தும்பைத்தாமம் வலிமைகாட்டுதலே பொருளாகப் பொருவார் சூடுவது. தாண்டும் என முன் வந்தமையால் பாய்மான் என்றது பெயர் மாத்திரையாக நின்றது. ஒழிந்த - இறவாது எஞ்சிய. (30) ஆவிமுன் னேகத் தாமு மருக்கமண் டலத்தா றேகத் தாவுவ வென்ன வாடுந் தலைபல சிலைவாள் 1 பட்டுக் கூவிளி யெடுத்து வீழுங் குறைத்தலை யாடப் பாதிச் சாவுட னின்று கைகள் கொட்டுவ தாள மென்ன. (இ-ள்.) ஆவி முன் ஏக - உயிர் முன்னே செல்ல, தாமும் அருக்க மண்டலத்து ஆறு ஏகத்தாவுவ என்ன - தாமுஞ் சூரிய மண்டலத்தின் வழியாகப் போதற்குத் தாவுதல் போல - பல தலை ஆடும், பல தலைகள் ஆடா நிற்கும்; சிலைவாள் பட்டு கூவிளி எடுத்து வீழும் - வாளிகளும் வாளும் பட்டுக் கூவும் ஓசையைச் செய்து வீழ்கின்ற, குறைத்தலை ஆட - கவந்தங்கள் ஆடாநிற்க, பாதிச்சாவுடல் நின்று தாளம் என்ன கைகள் கொட்டுவ - குற்றுயிரோடு கூடிய உடல்கள் நின்று தாளம் போடுதல் போலக் கைகளைக் கொட்டுவன. போரில் உயிர் துறந்தோர் சூரிய மண்டல வழியாக வீரசுவர்க்கம் எய்துவர் என்ப. கூவிளி - கூவும் ஓசை. குறைத்தலை - தலையற்ற உடல். (31) தறைவிழத் தனது சென்னி வீட்டினார் தம்மை நின்ற குறையுடல் கைவேல்1 குத்தி நூக்குவ குரவை பாடி எறிபடு தலைகள் வாய்மென் றெயிறது கறித்து வீழ்ந்து கறுவின மார்பந் தட்டி நிற்பன கவந்த யாக்கை. (இ-ள்.) தனது சென்னி தறை விழ - தனது தலை தரையில் வீழ, வீட்டினார் தம்மை - அறுத்து வீழ்த்தினவரை, நின்ற குறையுடல் - வீழாது நின்ற கவந்தம், கைவேல் குத்தி நூக்குவ - கையிலுள்ள வேலாற் குத்தித்தள்ளுவன; எறிபடு தலைகள் - அறுபட்ட தலைகள், குரவை பாடி - குரவைப்பாட்டுப் பாடி, வாய் மென்று எயிறு கறித்து வீழ்ந்து கறுவின - வாயினை மென்று பல்லைக்கடித்து வீழ்ந்து சினந்தன; கவந்த யாக்கை மார்பம் தட்டி நிற்பன - குறையுடல்கள் மார்பைத் தட்டி நிற்பன. தனது; பன்மையிலொருமை. எயிறது, அது : பகுதிப்பொருள் விகுதி. (32) ஒருவழிப் பட்டு வீழு மிருதலை யொன்றற் கொன்று மருவிய கேண்மை யாகி2வாலெயி றிலங்க நக்குப் பிரிவற வந்தாய் நீயு மென்றெதிர் பேசிப் பேசிப் பரிவுற மொழிந்து மோந்து பாடிநின் றாடல் செய்த. (இ-ள்.) ஒருவழி பட்டு வீழும் இருதலை - ஓரிடத்தில் அறுபட்டு வீழ்கின்ற இரண்டு தலைகள், ஒன்றற்கு ஒன்று கேண்மை மருவிய ஆகி - ஒன்றற்கொன்று நட்பினைப் பொருந்தியனவாய், வால் எயிறு இலங்க நக்கு - வெள்ளிய பற்கள் விளங்கச் சிரித்து, பிரிவு அற நீயும் வந்தாய் என்று எதிர் பேசிப்பேசி - பிரிவின்றி நீயும் வந்தாயென்று எதிரெதிரே பேசி, பரிவு உறமொழிந்து மோந்து - அன்பு மிக (வேறு செய்திகளையும்) கூறி ஒன்றையொன்று மோந்து, பாடி நின்று ஆடல் செய்த - பாடி நின்று ஆடின. செய்த : அன்பெறாத பலவின்பால் முற்று. (33) மாகவா றியங்கு சேனம் வல்லிருட் குவையி னன்ன காகம்வன் கழுகு வெம்போர்க் களனிடை யவிந்து வீழ்ந்தோர் ஆகமேற் சிறக டிக்கொண் டசைவன வேடை நீக்கப் பாகநின் றால வட்டம் பணிப்பன போன்ற வன்றே. (இ-ள்.) மாக ஆறு இயங்குசேனம் - வானின் வழியே உலாவும் பருந்துகளும், வல் இருட்குவையின் அன்ன காகம் - செறிந்த இருளின் திரட்சியை ஒத்த காக்கைகளும், வன் கழுகு - வலிய கழுகுகளும். வெம்போர்க்களன் இடை அவிந்து வீழ்ந்தோர் - கொடிய போர்க்களத்தின்கண் இறந்து வீழ்ந்தவர்களின், ஆகம் மேல் - உடல்களின் மேல், சிறகு அடிக்கொண்டு அசைவன - சிறகுகளை அடித்து அசைதல். வேடை நீக்கப் பாகம் நின்று ஆலவட்டம் பணிப்பன போன்ற - வெப்பத்தைப் போக்கப் பக்கத்தில் நின்று விசிறியை அசைத்தலை ஒக்கும். குவையினன்ன : சாரியை நிற்க உருபு தொக்கது. அடிக்கொண்டு - அடித்தல் பொருந்தி; அடித்து. அன்று, ஏ : அசைகள். (34) வெள்ளமாச் சோரி யீர்ப்ப மிதக்கின்ற தேர்கள் வெம்பேய்ப் பிள்ளைகண் மூழ்கிக் கீழ்போய் மறித்தெனப் பெயர்ந்து வீழ்வ தெள்ளுநீர்க் கடலின் மூதூர் சிதைக்கல நிரையுந் தாக்கித் துள்ளிமற் றவற்றைச் சாய்க்குஞ் சுறவமும் போன்ற வன்றே. (இ-ள்.) மாச்சோரி வெள்ளம் ஈர்ப்ப - பெரிய குருதி வெள்ளம் இழுக்க, மிதக்கின்ற தேர்கள் - மிதந்து செல்லுந்தேர்களும், வெம்பேய்ப் பிள்ளைகள் - கொடிய பேயின் பிள்ளைகளும், மூழ்கிக் கீழ் போய் மறித்தெனப் பெயர்ந்து வீழ்வ - (அப்பிள்ளைகள்) முழுகிக் கீழ்வழியே சென்று தாக்குதலால் (அத்தேர்கள்) செல்லுநிலை பெயர்ந்து வீழ்தலும், தெள்ளும் நீர்க்கடலின் மீது ஊர் சிதைக்கலம் நிரையும் - தெளிந்த நிரையுடைய கடலின்மேல் ஓடாநின்ற வரிசையாகிய பாய்மரத்தையுடைய மரக்கலங்களையும், துள்ளித்தாக்கி அவற்றைச் சாய்க்கும் சுறவமும் - மேலெழுந்து தாக்குதலால் அம்மரக்கலங்களை வீழ்த்தும் சுறாமீன்களையும் (அவற்றால் அவை வீழ்தலையும்), போன்ற - ஒத்தன. தேர்கள் மரக்கலங்களையும் பேய்பிள்ளைகள் சுறவங்களையும், தேர்கள் மறிந்து வீழ்தல் மரக்கலங்கள் சாய்தலையும் ஒத்தன வென்க. பேய்கள் குருதி வெள்ளத்தில் மூழ்குமென்பது ஐதிகம். மறித்தென - மறிக்க : செய்தென என்னும் வாய்பாட்டு வினையெச்சம். (35) கத்திநின் றொருபா லீர்ப்பக் கருங்கொடி சேனந் துண்டங் கொத்திநின் றொருபா லீர்ப்பக் குடவயிற் றழல்கட் பூதப் பத்திநின் றொருபா லீர்ப்பப் பட்டவ ராகங் கூளி பொத்திநின் றொருபா லீர்ப்ப வைம்பொறி போல மன்னோ. (இ-ள்.) ஐம்பொறி போல - (மனத்தைத் தத்தம் வழி இழுக்கும்) ஐம்பொறிகள் போல, பட்டவர் ஆகம் - மடிந்தவர் உடல்களை, கருங்கொடி கத்தி நின்று ஒருபால் ஈர்ப்ப - கரிய காகங்கள் கத்தி நின்று ஒரு பக்கம் இழுக்க, சேனம் - பருந்துகள், துண்டம் கொத்தி நின்று ஒரு பால் ஈர்ப்ப - மூக்கினாற் கொத்தி நின்று ஒருபால் இழுக்க, குடவயிற்று அழல் கண் பூதப்பத்தி - குடம் போன்ற வயிற்றையும் எரிகின்ற கண்களையுமுடைய பூதவரிசைகள், நின்று ஒருபால்ஈர்ப்ப - நின்று ஒருபால் இழுக்க, கூளி பொத்தி நின்று ஒருபால் ஈர்ப்ப - பேய்கள் மொய்த்து நின்று ஒருபால் இழுப்பன. துண்டம் - பறவை மூக்கு. மன், ஓ : அசைகள். (36) துடுவைவான் முறங்கா றள்ளுந் துணைச்செவி யரிசி கோட்டின் உடுவைநேர் மணியின் குப்பை யுரலடி யுலக்கை திண்கோ டடுகலங் கடந்தீச் சோரி மத்தக மடுப்பென் றியானைப் படுகளம் விசயச் செல்வி யடுமடைப் பள்ளி மானும். (இ-ள்.) வால் துடுவை - வாலைத் துடுப்பாகவும், கால் தள்ளும் துணைச் செவி - காற்றைத் திரட்டும் இரண்டு செவிகளையும், முறம்- முறமாகவும், கோட்டின் உடுவை நேர் மணியின் குப்பை அரிசி - தந்தங்களிலுள்ள நாண் மீனை ஒத்த முத்துக் குவியலை அரிசியாகவும், அடி உரல் - அடியை உரலாகவும், திண்கோடு உலக்கை - திண்ணிய கொம்பை உலக்கையாகவும், கடம் அடுகலம் - கதுப்பைச் சமைக்கும் கலமாகவும், சோரி தீ - குருதியை நெருப்பாகவும், மத்தகம் அடுப்பு என்று - மத்தகத்தை அடுப்பாகவும், (கொண்டு), யானைப் படுகளம்- யானைகள் மடிந்த போர்க்களம், விசயச் செல்வி அடும் மடைப்பள்ளி மானும் - வீரத் திருமகள் சமைக்கும் மடைப்பள்ளியை ஒக்கும். (37) பிணத்தினைக் கோலிப் புண்ணீ ராற்றினைப் பெருக்கி யுண்பேய்க் கணத்தினை யுதைத்து நூக்கிக் கரையுடைத் தொருவன் பூதம் நிணத்தொடும் வருமந் நீத்த நேர்பட விருந்து கையால் அணைத்துவாய் மடுக்கும் வையை யருந்திய பூத மென்ன. (இ-ள்.) ஒரு வன் பூதம் - ஒரு வலிய பூதமானது, வையை அருந்திய பூதம் என்ன- வையை நீர்ப் பெருக்கை (இரண்டு கரங்களாலுந்தடுத்துக்) குடித்த குண்டோதரனென்னும் பூதம்போல, பிணத்தினைக் கோலி - பிணங்களை அணையாகக் கோலி, புண்ணீர் ஆற்றினைப் பெருக்கி - சோரியாற்றினைப் பெருக்கி, உண்பேய்க் கணத்தினை உதைத்து நூக்கி - உண்ணுகின்ற பேய்க்கூட்டத்தை உதைத்துத் தள்ளி, கரைஉடைத்து - அவ்வணையை உடைத்து, நிணத்தொடும் வரும் அந்நீத்தம் - நிணங்களோடும் வாராநின்ற அச்சோரிப்பெருக்கினை, நேர்பட இருந்து - நேர்முகமாக இருந்து, கையால் அணைத்து வாய் மடுக்கும் - இரண்டு கைகளாலும் தடுத்துப் பருகும். (38) புரத்தினு ளுயர்ந்த கூடற் புண்ணிய னெழுதி யெய்த சரத்தினி லவிந்தார் சென்னிக் குற்றுழிச் சார்வாய் வந்த அரத்தினை யறுக்கும் வைவே லயற்புல வேந்தர் நச்சு மரத்தினை யடுத்த சந்துங் கதழெரி மடுத்த தென்ன. (இ-ள்.) புரத்தினுள் உயர்ந்த கூடல் புண்ணியன் - முத்தி நகரங்களுள் உயர்ந்த கூடலில் வீற்றிருக்கும் அறவடிவினனாகிய சோமசுந்தரக் கடவுள், எழுதி எய்த சரத்தினில் - தன் பெயர் எழுதி விடுத்த வாளிகளால், சென்னிக்கு உற்றுழிச் சார்வாய் வந்த - சோழனுக்கு இடையூறு நேர்ந்துழி உதவியாகிக் காக்கவந்த, அரத்தினை அறுக்கும் வைவேல் அயல்புல வேந்தர் - அரத்தை அறுக்கும் கூரிய வேற்படையை யுடைய மறுபுல மன்னர் அனைவரும், நச்சு மரத்தினை அடுத்த சந்தும் - நஞ்சு மரத்தை அடுத்த சந்தன மரங்களும், கதழ் எரி மடுத்தது என்ன - விரைந்து பற்றும் நெருப்பினால் எரியுண்டாற் போல, அவிந்தார் - இறந்து பட்டனர். புரம் - காசி முதலிய பதிகள். வேலின் திண்மையும் கூர்மையும் தோன்ற ‘அரத்தினை யறுக்கும் வைவேல்’ என்றார். நச்சு மரத்தையழித்தற்பொருட்டு மூட்டும் எரியால் அதனைச் சார்ந்த சந்தனமரமும் அழிதல்போலச் சோழனை அழித்தற் பொருட்டுப் புரிந்த போரில் அவற்குத் துணையாய் வந்த மன்னர்களும் அழிந்தனர் என்றார்; “ மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த இனத்தா லிகழப் படுப - புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனந் தீப்பட்டக் கால்” என்னும் நாலடிச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (39) மாசறு காட்சி யான்றன் வாளியா லவிந்தோர் தம்மை மூசுவண் டென்னச் சூழ்ந்து மொய்த்தன பைத்த கூளி காய்சினச் சேனங் காகங் கழுகினம் பற்றி யீர்த்துப் பூசலிட் டொன்றோ டொன்று போர்செய்வான் றொடங்கிற் றம்மா. (இ-ள்.) மாசு அறு காட்சியான் தன் வாளியால் - குற்றமற்ற இயற்கை அறிவினையுடைய இறைவன் வாளிகளால், அவிந்தோர் தம்மை - இறந்தவர்களை, பைத்த கூளி - பரந்த பேய்கள், மூசுவண்டு என்னச் சூழ்ந்து மொய்த்தன - மலரில் மொய்க்கும் வண்டுகள் போலச் சூழ்ந்து மொய்த்தன; காய்சினச் சேனம் காகம் கழுகு இனம் பற்றி ஈர்த்து - மிக்க சினத்தையுடைய பருந்துகளும் காகங்களும் கழுகுக் கூட்டங்களும் பிடித்து இழுத்து, பூசல் இட்டு ஒன்றோடொன்று போர் புரிதற்குத் தொடங்கியது. செய்வான்: வானீற்று வினையெச்சம். தொடங்கிற்று : பன்மையிலொருமை. அம்மா : இடைச்சொல். (40) வெஞ்சின மறக்கோ னம்பி விடுகணை வெள்ளத் தாழ்ந்து வஞ்சின முறுதன் சேனை மடிந்தது கண்டு மாழாந் தெஞ்சின படையுஞ் சூழ வேதிலார் நகையுஞ் சூழத் துஞ்சின மறமுஞ் சூழச் சோழனு முடைந்து போனான். (இ-ள்.) வெஞ்சின மறக்கோன் நம்பி - கொடிய சினத்தையுடைய வேடர் தலைவனாகிய நம்பி, விடுகணை வெள்ளத்து ஆழ்ந்து - விடுத்த அம்பு வெள்ளத்து மூழ்கி, வஞ்சினம் உறுதன் சேனை மடிந்தது கண்டு - வஞ்சினங்கூறிப் போருக்கு உற்ற தனது சேனை இறந்தொழிந்தமை கண்டு, மாழாந்து - மயங்கி, எஞ்சினபடையும் சூழ - எஞ்சிய சேனையுந் தன்னைச்சூழ, ஏதிலார் நகையும் சூழ - பகைவர் நகையும் சூழ, துஞ்சின மறமும் சூழ - வீரமின்மையுஞ் சூழ, சோழனும் உடைந்து போனான் - சோழனுந் தோற்றுப் போயினான். வீரம் சிறிதுமின்றி என்பார் ‘துஞ்சின மறமுஞ்சூழ’ என்றார். சோழனும் என்னும் உம்மை எச்சப் பொருட்டு; ஏனைய எண்ணும்மை. (41) வில்லொடு மேக மன்ன வெஞ்சிலை வேட வேந்தன் மல்லொடு பயின்ற தென்னன் மலர்முகச் செவ்வி நோக்கி அல்லொடு மதிவந் தென்ன வருணகை சிறிது பூத்துச் செல்லொடு பகைபோற் கொண்ட திருவுரு மறைந்து போனான். (இ-ள்.) வில்லொடு மேகம் அன்ன வெஞ்சிலை வேட வேந்தன் - வில்லோடு கூடிய முகில்போன்ற கொடிய வில்லையுடைய வேட மன்னன், மல்லொடு பயின்ற தென்னன் - மற்போரிற் பயின்ற பாண்டியனது, மலர்முகச் செவ்வி நோக்கி - தாமரை மலர்போன்ற முகத்தின் பொலிவைப் பார்த்து, அல்லொடு மதிவந்தென்ன - இருளோடு சந்திரன் வந்தாற்போல, அருள்நகை சிறிது பூத்து - அருளோடு கூடிய புன்னகை சிறிது அரும்பி, செல்லொடு பகைபோல் கொண்ட - இடியுடன் பகை கொண்டாற்போலக் கொண்ட, திருஉரு மறைந்துபோனான் - திருவுருவம் மறைந்தருளினான். வேட நம்பியின் கரிய உடலுக்கும் வில்லுக்கும் முறையே மேகமும் இந்திர வில்லும், மற்றும் அவ்வுடற்கும் நகையொளிக்கும் இருளும் மதியும் உவமைகளாயின. முன்பு மேகம் கூறப்பட்டமையின் செல் என்பதற்கு இடி என்று பொருள் கூறப்பட்டது. அச்சம் விளைக்கும் உரு என்பது கருத்தாகக் கொள்க. (42) பாடுவா யளிதே னூட்டும் பைந்தொடைச் செழியன் வென்றிக் கோடுவாய் வைத்திட் டார்த்துக் குஞ்சர முகட்டி லேறித் தோடுவாய் கிழிக்குங் கண்ணார் மங்கலந் துவன்றி யேந்த நீடுவார் திரைநீர் வேலி நீண்மதி னகரிற் புக்கான். (இ-ள்.) பாடு அளிவாய் தேன் ஊட்டும் பைந்தொடைச் செழியன்- இசை பாடும் வண்டுகளின் வாயில் மதுவை ஊட்டும் பசிய மாலையை யணிந்த பாண்டியன், வென்றிக் கோடுவாய் வைத்திட்டு ஆர்த்து - வெற்றிச் சங்கை வாயில் வைத்து முழக்கி, குஞ்சர முகட்டில் ஏறி - யானையின் மத்தகத்தில் ஏறி, தோடுவாய் கிழிக்குங் கண்ணார் - தோட்டின் வாயைக் கிழிக்குங் கண்ணையுடைய மகளிர், மங்கலம் துவன்றி ஏந்த - நெருங்கி அட்டமங்கலங்களையும் ஏந்த, நீடுவார் திரை நீர் வேலி - நீண்ட பெரிய அலைகளையுடைய நீரையே வேலியாகவுடைய, நீண்மதில் நகரில் புக்கான் - நீண்ட மதிலாற் சூழப்பட்ட நகரின்கட் சென்றனன். பாடுவாயளிதே னூட்டும் பைந்தொடைச்செழியன் என்றது பரிசிலர்க்கு வரிசை நல்கும் பண்பினன் என்பதைக் குறிப்பிற் பெற வைத்தவாறு. கோடு - சங்கு. (43) (எண்சீரடியாசிரிய விருத்தம்) சிலைவிற்சே வகஞ்செய்து வாகை வாங்கித் திருவளித்த சேவகற்குச் சிறந்த பூசை நிலைவித்தாய் மணிப்பொலம்பூ ணிறுவிச் சாத்தி நிழல்விரிக்கும் வெயின்மணியா னெடிய மேரு மலைவிற்றா னென்னவரிச் சிலையு நாமம் வரைந்தகடுங் கூர்ங்கணையும் வனைந்து சாத்தி அலைவித்தாழ் கடலுலகுக் ககலச் செங்கோ லறம்பெருக்கும் வங்கியசே கரனா மண்ணல். (இ-ள்.) சிலைவில் சேவகம் செய்து - ஒலித்தலையுடைய வில்லாற் போர் செய்து, வாகை வாங்கி - வெற்றிபெற்று, திரு அளித்த சேவகற்கு - (தனக்கு)அரசியற்றிருவினை அளித்த வீரனாகிய சோமசுந்தரக் கடவுளுக்கு, சிறந்த பூசை நிலைவித்து - சிறந்த பூசனை நிலைபெறச் செய்து. ஆய்மணிப் பொலம்பூண் நிறுவிச் சாத்தி - ஆராய்ந்த மணிகள் அழுத்திய பொன்னாலாகிய அணிகளைச் செய்து சாத்தி, நிழல் விரிக்கும் வெயில் மணியால் - ஒளிபரப்புஞ் சிவந்த மணிகளால், நெடிய மேரு மலை வில்தான் என்ன வரிச்சிலையும் - நீண்ட மேருமலையாகிய வில் இதுதான் என்று கண்டோர் கருதக் கட்டமைந்த வில்லையும், நாமம் வரைந்த கடுங்கூர்ங்கணையும் - (சுந்தரேசன் என்னும்) திருப்பெயர் தீட்டிய கடிய கூரிய கணையையும், வனைந்து சாத்தி - செய்து சாத்தி, இத்தாழ்கடல் உலகுக்கு அலைவு அகல - இந்த ஆழ்ந்த கடல்சூழ்ந்த உலகிற்குத் துன்ப மொழிய, வங்கிய சேகரனாம் அண்ணல் - வங்கிய சேகரன் என்னும் பெருமை பொருந்திய பாண்டியன், செங்கோல்அறம் பெருக்கும் - செங்கோலினால் அறம் தழைத்தோங்கச் செய்து வந்தான். சிலைவில் - மலைபோலும் வில் என்றுமாம். சேவகஞ் செய்து - வீரத்தைக் காட்டிப் பொருது. தன் வழிபாட்டிற்கிரங்கி இறைவன் புரிந்த பேரருட் செயலைப் பின்னுள்ளார் பலரும் அறிந்ததுய்தல் கருதி வில்லும், சுந்தரேசன் என்னும் பெயர் தீட்டிய கணையும் வனைந்து சாத்தினன் என்க. அண்ணல் பூசை நிலைவித்து, நிறுவிச் சாத்தி, வனைந்து சாத்தி, உலகுக்கு அலைவு அகல அறம் பெருக்கும் என வினை முடிக்க. (44) ஆகச் செய்யுள் -2393 ஐம்பத்தொன்றாவது சங்கப்பலகை தந்த படலம் (அறுசீரடியாசிரிய விருத்தம்) வேடுரு வாகி மேரு வில்லிதன் னாமக் கோலெய் தாடம ராடித் தென்ன னடுபகை துரந்த வண்ணம் பாடினஞ் சங்கத் தார்க்குப் பலகைதந் தவரோ டொப்பக் கூடிமுத் தமிழின் செல்வம் விளக்கிய கொள்கை சொல்வாம். (இ-ள்.) மேருவில்லி - மேரு மலையை வில்லாகவுடைய சோமசுந்தரக் கடவுள், வேடு உருவாகித் தன் நாமக்கோல் எய்து - வேட்டுவத் திருமேனி கொண்டு தனது திருப்பெயர் தீட்டிய கணைகளை விடுத்து, ஆடு அமர் ஆடி - வெற்றியையுடைய போர்புரிந்து, தென்னன் அடுபகை துரந்த வண்ணம் பாடினம் - பாண்டியனது கொல்லும் பகையாகி வந்த சோழனைத் துரத்திய திருவிளையாடலைக் கூறினாம்; சங்கத்தார்க்குப் பலகை தந்து (இனி அவ்விறைவனே) சங்கப் புலவர்க்குப் பலகை அளித்தருளி, அவரோடு ஒப்பக்கூடி - அவரோடு வேற்றுமையின்றிக் கூடியிருந்து, முத்தமிழின் செல்வம் விளக்கிய கொள்கை சொல்வாம் - முத்தமிழாகிய செல்வத்தைப் பொலிவுபெறச் செய்த திருவிளையாடலைக் கூறுவாம். கோல் - அம்பு. அடு : பகைக்கு அடை. முத்தமிழ் - இயல், இசை, நாடகம் என்னும் மூவகைத்தமிழ். தமிழின், இன் : சாரியை அல்வழிக்கண் வந்தது. (1) வங்கிய சேக ரன்கோல் வாழுநாண் மேலோர் வைகற் கங்கையந் துறைசூழ் கன்னிக் கடிமதிற் காசி தன்னிற் பங்கய முளரிப் புத்தேள் பத்துவாம் - பரிமா வேள்வி புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறைவழி போற்றிச் செய்தான். (இ-ள்.) வங்கிய சேகரன் கோல் வாழ்நாள் - வங்கிய சேகர பாண்டியனது செங்கோல் நன்கு நடைபெறும் நாளில், மேல் ஓர் வைகல் - முன் ஒரு நாளில், கங்கை அம்துறை சூழ் - கங்கையின் அழகிய துறை சூழ்ந்த, கன்னிக் கடிமதில் காசி தன்னில் - அழியாத காவலையுடைய மதில் சூழ்ந்த காசிப்பதியின்கண், பங்கய முளரிப் புத்தேள் - தாமரை மலரை இருக்கையாக வுடைய பிரமன், வாம்பரி மாவேள்வி பத்து - தாவுகின்ற துரங்க வேள்வி பத்தினை, புங்கவர் மகிழ்ச்சி தூங்க - தேவர்கள் மகிழ்கூர, மறைவழி போற்றிச் செய்தான் - வேதவிதிப்படி பேணிச் செய்தான். வாழுநாள் மதுரை நோக்கி நண்ணுவார் என மேற் பதின்மூன்றாஞ் செய்யுளோடு இயையும். பங்கயமாகிய முளரியென்க. வாம் - வாவும்; பரிக்கு அடை. பரிமா : இருபெயரொட்டு. (2) நிரப்பிய வழிநா ணன்னீ ராடுவா னீண்ட வீணை நரப்பிசை வாணி சாவித் திரியெனு நங்கை வேத வரப்பிசை மனுவாங் காயத் திரியெனு மடவா ரோடும் பரப்பிசைக் கங்கை நோக்கிப் படருவான் படரு மெல்லை. (இ-ள்.) நிரப்பிய வழிநாள் - (அவற்றைச்) செய்து முடித்த பின்னாள், நல்நீர் ஆடுவான் - நல்லநீரின்கண் ஆடுதற் பொருட்டு, நரம்பு இசை நீண்ட வீணை வாணி - நரம்பின் இசை பொருந்திய நெடிய வீணையையுடைய கலைமகளும், சாவித்திரி எனும் நங்கை - சாவித்திரி என்னும் நங்கையும், வேதவரம்பு இசை மனுவாம் - வேதவரம்பாக அமைந்த மந்திர வடிவாகிய, காயத்திரி எனும் மடவாரோடும் - காயத்திரியுமாகிய இம்மூன்று மனைவிகளோடும், இசை பரப்பு கங்கை நோக்கிப் படருவான்; புகழைப் பரப்புகின்ற கங்கையாற்றினை நோக்கிச் செல்வானாயினன், படரும் எல்லை - அங்ஙனஞ் செல்லும் பொழுது. மனு - மந்திரம். (3) நானவார் குழலி னாரம் மூவரு 1 ணாவின் செல்வி வானவா றியங்கும் விஞ்சை மாதரா ளொருத்தி பாடுங் கானவா றுள்ளம் போக்கி நின்றனள் கமல யோனி யானவா லறிவ னேகி யந்நதிக் கரையைச் சேர்ந்தான். (இ-ள்.) நானவார் குழலினார் அம்மூவருள் - மயிர்ச் சாந் தணிந்த நீண்ட கூந்தலையுடைய அந்த மூன்று மகளிருள், நாவின் செல்வி - நாமகள், வான ஆறு இயங்கும் விஞ்சை மாதராள் ஒருத்தி - வானின் வழியே செல்லுதலையுடைய ஒரு விஞ்சைமகள், பாடும் கான ஆறு உள்ளம் போக்கி நின்றனள் - பாடுகின்ற இசை நெறியில் உள்ளத்தைச் செலுத்தி நின்றாள்; கமலயோனி ஆன வால் அறிவன் ஏகி - தாமரையிற் றோன்றினவனாகிய தூய அறிவினையுடைய பிரமன் சென்று; அந் நதிக்கரையைச் சேர்ந்தான் - அந்நதிக் கரையினை அடைந்தான். நின்றனள் - தாழ்த்து நின்றனள். கமல யோனி - திருமாலின் உந்தித் தாமரையில் உதித்தோன். (4) நாமகள் வரவு தாழ்ப்ப நங்கைய ரிருவ ரோடுந் தாமரைக் கிழவன் மூழ்கித் தடங்கரை யேறு மெல்லைப் பாமகள் குறுகி யென்னை யன்றிநீ படிந்த வாறென் னாமென வெகுண்டாள் கேட்ட வம்புயத் தண்ணல் சொல்வான். (இ-ள்.) நாமகள் வரவு தாழ்ப்ப - வாணியின் வரவு தாழ்த்தலி னால், நங்கையர் இருவரோடும் - மற்றை இரண்டு மடந்தையரோடும், தாமரைக் கிழவன் மூழ்கி - தாமரை மலரில் இருக்கும் பிரமன் நீராடி, தடம்கரை ஏறும் எல்லை - பெரிய கரையில் ஏறுங்கால், பாமகள் குறுகி - கலைமகள் சென்று, என்னை அன்றி நீ படிந்தவாறு என்னாம் என வெகுண்டாள் - என்னையல்லாது நீ நீராடியது என்னை என்று சினந்தாள்; கேட்ட அம்புயத்து அண்ணல் சொல்வான் -அதனைக் கேட்ட பிரமன் கூறுவான். (5) குற்றநின் மேல தாக நம்மைநீ கோபங் கொள்வ தெற்றென வினைய தீங்கை யெண்ணறு மாக்க டோற்றம் உற்றனை யொழித்தி யென்னா உரைத்தனன் சாப மேற்கும் பொற்றொடி மடந்தை யஞ்சிப் புலம்புகொண் டவலம் பூண்டாள். (இ-ள்.) குற்றம் நின்மேலது ஆக - குற்றம் நின்கண்ணதாக, நம்மை நீ கோபம் கொள்வது எற்றுஎன - எம்மை நீ வெகுள்வது எத்தன்மைத்து என்று கூறி, இனைய தீங்கை - இந்தக் குற்றத்தை, எண் அறு மாக்கள் தோற்றம் உற்றனை ஒழித்தி என்னா சாபம் உரைத்தனன் - நாற்பத்தெட்டு மக்களாகத் தோன்றி ஒழிப்பா யென்று சாபங் கூறினன்; ஏற்கும் பொன்தொடி மடந்தை - அச்சாபத்தை ஏற்கும் பொன்னாலாகிய வளையை யணிந்த கலைமகள், அஞ்சிப் புலம்பு கொண்டு அவலம் பூண்டாள் - அஞ்சிப் புலம்பித் துன்பமுற்றாள். இனைய தீங்கு - வரவு தாழ்த்த குற்றமும், கோபங் கொண்ட குற்றமும். (6) ஊனிட ரகன்றோ யுன்னா ருயிர்த்துணை யாவே னிந்த மானிட யோனிப் பட்டு மயங்குகோ வென்ன வண்டு தேனிடை யழுந்தி வேதஞ் செப்பும்வெண் கமலச் செல்வி தானிட ரகல நோக்கிச் சதுர்முகத் தலைவன் சாற்றும். (இ-ள்.) ஊன்இடர் அகன்றோய் - உடம்பெடுத்தலாலுளதாகிய துன்பம் நீங்கியோய், உன் ஆர் உயிர்த்துணை ஆவேன் - உனது அரிய உயிர்த்துணை ஆகும் யான், இந்த மானிட யோனிப்பட்டு மயங்குகோ என்ன - இந்த மனித்தப்பிறப்பின் பாற்பட்டு மயங்குவேனோ என்று கூற, வண்டு தேன்இடை அழுந்தி வேதம் செப்பும் - வண்டுகள் தேனில் மூழ்கி வேதம் பாடுவதற்கிடமாயுள்ள, வெண்கமலச் செல்வி - வெண்டாமரை மலரை இருக்கையாகவுடைய அக் கலைமகளின், இடர் அகல நோக்கி - துன்பம் நீங்க நோக்கி, சதுர்முகத்தலைவன் சாற்றும் - நான்முகனாகிய நாயகன் கூறுவான். அயன் பிறப்பில்லாதவன் என்னுங் கருத்தால் ஊனிடரகன்றவன் எனப்பட்டான். மனிதப் பிறப்பின் துன்பத்தையறியாத உனக்கு உயிர்த் துணையாகிய யான் அத்துன்பத்துள் அழுந்துதல் முறையோ என்றாள் என்க. அவள் இருக்கையாகிய கமலத்து வண்டு வேதஞ் செப்பும் எனவே அவள் வேதஞ் செப்புதல் கூறவேண்டாதாயிற்று. (7) முகிழ்தரு முலைநின் மெய்யா முதலெழுத் தைம்பத் தொன்றிற் றிகழ்தரு மாகா ராதி ஹாகார மீறாச் செப்பிப் புகழ்தரு நாற்பத் தெட்டு நாற்பத்தெண் புலவ ராகி அகழ்தரு கடல்சூழ் ஞாலத் தவதரித் திடுவ வாக. (இ-ள்.) முகிழ் தரும் முலை - அரும்பு போலும் முலையை யுடைய மாதே, நின் மெய்யாம் முதல் எழுத்து ஐம்பத்து ஒன்றில் - நினது வடிவமாகிய ஐம்பத்தொரு முதலெழுத்துக்களில், திகழ் தரும் - விளங்கா நின்ற, ஆகாரம் ஆதி ஹாகாரம் ஈறாச் செப்பிப் புகழ் தரும் நாற்பத்தெட்டும் - ஆகாரம் முதல் ஹாகாரம் இறுதியாகக் கூறிப் புகழப்பட்ட நாற்பத்தெட்டு எழுத்துக்களும், நாற்பத்து எண் புலவர் ஆகி - நாற்பத்தெட்டுப் புலவர்களாகி, அகழ்தரு கடல்சூழ் ஞாலத்து - தோண்டிய கடல் சூழ்ந்த நிலவுலகில், அவதரித்திடுவ ஆக - அவதரித்திடுவனவாக. நாற்பத் தெட்டெழுத்து - வடமொழி உயிரெழுத்தில் ஆகாரம் முதலிய பதினைந்தும் ககரம் முதலிய முப்பத்து மூன்றும் ஆம். க்ஷ? முதலியன கூட்டெழுத்து ஆதலின் விலக்கப்பட்டன. சீர் நிரம்புதற்கு ஹாகாரம் என நெடிலாக்கிச் சாரியை கொடுத்தார். (8) அத்தகு வருண மெல்லா மேறிநின் றவற்ற வற்றின் மெய்த்தகு தன்மை யெய்தி வேறுவே றியக்கந் தோன்ற உய்த்திடு மகாரத்திற்கு முதன்மையா யொழுகு நாதர் முத்தமி ழால வாயெம் முதல்வரம் முறையான் மன்னோ. (இ-ள்.) அத்தகு வருணம் எல்லாம் - அத்தகைய எழுத்துக்கள் அனைத்திலும், ஏறி நின்று - ஊர்ந்து நின்று, அவற்று அவற்றின் மெய்த்தகு தன்மை எய்தி - அவ்வெழுத்துக்களின் மெய்யாய தன்மையைப் பொருந்தி, வேறு வேறு இயக்கம் தோன்ற உய்த்திடும் அகாரத்திற்கு - வேறு வேறாக இயங்குமாறு செலுத்தும் அகரத் திற்கு, முதன்மையாய் ஒழுகும் நாதர் - தலைமையாய் ஒழுகும் இறைவர், முத்தமிழ் ஆலவாய் எம் முதல்வர் - மூன்று தமிழையுமுடைய ஆலவாயின்கண் அமர்ந்த எமது சோமசுந்தரக் கடவுள்; அம்முறையால் - அம்மரபினால். வருணம் - வர்ணம்; எழுத்து. “ மெய்யி னியக்கம் அகரமொடு சிவணும்” என்னும் தொல்காப்பியச் சூத்திர வுரையில், ‘இங்ஙனம் மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரம் கலந்து நிற்குமென்பது ஆசிரியர் கூறாராயினர். அந்நிலைமை தமக்கே புலப்படுதலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானும் என்று உணர்க. இறைவன் இயங்கு திணைக் கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற் போல அகரமும் உயிர்க்கண்ணும் தனி மெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது, என நச்சினார்க்கினியர் கூறியிருப்பதும், “ அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு” என்னும் முதற்குறளும், “ அகர வுயிர்போல் அறிவாகி யெங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து ” என்னும் திருவருட்பயன் முதற் செய்யுளும் இங்கு நோக்கற்பாலன. மன்னும் ஓவும் அசைகள். (9) தாமொரு புலவ ராகித் திருவுருத் தரித்துச் சங்க மாமணிப் பீடத் தேறி வைகியே நாற்பத் தொன்ப தாமவ ராகி யுண்ணின் றவரவர்க் கறிவு தோற்றி ஏமுறப் புலமை காப்பா ரென்றனன் கமலப் புத்தேள். (இ-ள்.) தாம் ஒரு புலவர் ஆகித் திரு உருத் தரித்து - தாமும் ஒரு புலவராகத் திருமேனி தாங்கி, சங்கம் மாமணிப் பீடத்து ஏறி - சங்கத்தின் பெருமை பொருந்திய மணிகள் அழுத்திய தவிசில் ஏறி, வைகி - ஒரு சேர வீற்றிருந்து, நாற்பத்தொன்பதாம் அவராகி - நாற்பத்தொன்பதாவது புலவர் என்னும் எண்ணையுடையராய், உள் நின்று அவர் அவர்க்கு அறிவு தோற்றி - அகத்தின்கண் நின்று அந்நாற்பத்தெண்மருக்கும் அறிவை விளக்கி, ஏமுறப் புலமை காப்பார் என்றனன் கமலப்புத்தேள் - அரணாகப் புலமையைக் காத்தருளுவர் என்று பிரமன் கூறினன். சங்கப்பீடம் - சங்கப்பலகை. (10) அக்கர நாற்பத் தெட்டு மவ்வழி வேறு வேறு 1மக்களாய்ப் பிறந்து பன்மாண் கலைகளின் வகைமை தேர்ந்து தொக்கவா ரியமு மேனைச் சொற்பதி னெட்டு மாய்ந்து தக்கதென் கலைநுண் டேர்ச்சிப் புலமையிற் றலைமை சார்ந்தார். (இ-ள்.) அக்கரம் நாற்பத்து எட்டும் - நாற்பத்தெட்டு எழுத்துக் களும், அவ்வழி வேறுவேறு மக்களாய்ப் பிறந்து - அங்ஙனமே வெவ்வேறு மக்களாகத் தோன்ற, பல் மாண் கலைகளின் வகைமை தேர்ந்து - (அவர்கள்) பல மாட்சிமைப்பட்ட கலைகளின் வகைகளைத் தெளிந்து, ஆரியமும் ஏனை தொக்க சொல்பதினெட்டும் ஆய்ந்து - ஆரிய மொழியையும் மற்றைய பதினெட்டாகத் தொகுக்கப் பட்ட மொழிகளையும் ஆராய்ந்து, தக்க தென் கலைநுண் தேர்ச்சிப் புலமையில் - பெருமை வாய்ந்த தமிழ்க் கலையின் நுண்ணிய தேர்ச்சிப் புலமையில், தலைமை சார்ந்தார் - தலைமை பெற்றார். மக்களாய்ப் பிறக்க அங்ஙனம் பிறந்த நாற்பத்தெண்மரும் தேர்ந்து ஆய்ந்து தலைமை சார்ந்தார் என விரித்து முடித்துக் கொள்க. சிறப்புப் பற்றி ஆரியமும் தமிழும் பிரித்தோதப்பட்டன. (11) கழுமணி வயிரம் வேய்ந்த கலன்பல வன்றிக் கண்டிக் கொழுமணிக் கலனும் பூணுங் குளிர்நிலா நீற்று மெய்யர் வழுவறத் தெரிந்த செஞ்சொன் மாலையா லன்றி யாய்ந்த செழுமலர் மாலை யானுஞ் சிவார்ச்சனை செய்யு நீரார். (இ-ள்.) கழுமணி வயிரம் வேய்ந்த - (அவர்கள்) சாணை பிடித்த மணிகளாலும் வயிரங்களாலும் புனைந்த, கலன் பல அன்றி - பல கலன்களே அல்லாமல், கண்டிக் கொழுமணிக் கலனும் பூணும் - உருத்திராக்க மாலையாகிய கொழுவிய மணிக்கலனையும் அணியும், குளிர் நிலா நீற்று மெய்யர் - தண்ணிய நிலாப்போலுந் திருநீறு தரித்த மேனியையுடையார், வழு அறத்தெரிந்த செஞ்சொல் மாலையால் அன்றி - குற்றமற ஆராய்ந்த செவ்விய சொற்களாற் றொடுக்கப் பட்ட பாமாலையாலல்லாமல், ஆய்ந்த செழுமலர் மாலையாலும் - ஆராய்ந்தெடுத்துத் தொடுத்த புதிய மலர் மாலையினாலும், சிவார்ச்சனை செய்யும் நீரார் - சிவவழிபாடு செய்யுந் தன்மையை யுடையார். பாமாலை சூட்டுவதும் அருச்சனையாதலை, “ மற்றுநீ வன்மை பேசி வன்றொண்ட னென்னு நாமம் பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அற்சனை பாட்டே யாகு மாதலான் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார் ” என்ற சிவபிரான் வன்றொண்டர்க்கு அருளினமை கூறும் பெரியபுராணச் செய்யுளால் அறிக. (12) புலந்தொறும் போகிப் போகிப் புலமையால் வென்று வென்று மலர்ந்ததண் பொருநை நீத்த வளங்கெழு நாட்டில் வந்து நிலந்தரு திருவி னான்ற நிறைநிதிச் செழியன் செங்கோல் நலந்தரு மதுரை நோக்கி நண்ணுவார் நண்ணு மெல்லை. (இ-ள்.) புலந்தொறும் போகிப் போகி - நாடுகள் தோறுஞ் சென்று சென்று, புலமையால் வென்று வென்று - புலமைத்திறத்தால் அங்குள்ளவர்களை வென்று வென்று, மலர்ந்த தண் பொருநை நீத்தம் - பரந்த தண்ணிய பொருநை வெள்ளத்தால், வளம் கெழு நாட்டின் வந்து - வளம் மிக்க பாண்டிய நாட்டின்கண் வந்து, நிலம் தருதிருவில் மாற்றாரது நிலத்தைத் தனக்கு நல்கும் போர்த்திருவினால் ஆன்ற நிறை நிதிச் செழியன் - மிகவும் நிறைந்த நிதியினையுடைய பாண்டியனது, செங்கோல் நலம் தரு மதுரை நோக்கி நண்ணுவார் - செங்கோலால் நன்மை பொருந்திய மதுரையை நோக்கி வருவாராயினர்; நண்ணும் எல்லை - அங்ஙனம் வரும்பொழுது. அடுக்கு தொழிற் பயில்வுப் பொருட்டு. தொல்காப்பியப் பாயிரவுரையில், “நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்பதற்கு, ‘மாற்றாரது நிலத்தைக் கொள்ளும் போர்த்திருவினையுடைய பாண்டியன்’ என நச்சினார்க்கினியர் உரை கூறியது இங்கு நோக்கற்பாலது. வேற்று நாட்டு மன்னர்களாலே திறையாகத் தரப்பட்ட திரு என்றுமாம். திருவின் என்பதற்குத் திருவுடன் என்றுரைத்தலுமாம். (13) பற்பல கலைமாண் டேர்ச்சிப் பனுவலின் பயனாய் நின்ற அற்புத மூர்த்தி யெந்தை யாலவா யடிக ளாங்கோர் கற்பமை கேள்வி சான்ற கல்வியின் செல்வ ராகிச் சொற்பதங் கடந்த பாத மிருநிலந் தோய வந்தார். (இ-ள்.) பற்பல கலை - பலவகைப்பட்ட கலைகளையுடைய, மாண் தேர்ச்சிப் பனுவலின் பயனாய் நின்ற அற்புதமூர்த்தி எந்தை - மாட்சிமைப்பட்ட தேர்ச்சியையுடைய மறையின் பயனாய் நிலைபெற்ற ஞானமூர்த்தியும் எம் தந்தையும் ஆகிய, ஆலவாய் அடிகள் - மதுரைப் பிரானாகிய சோமசுந்தரக் கடவுள், ஆங்கு - அங்கு, ஓர் கற்பு அமை கேள்வி சான்ற கல்வியின் செல்வராகி - கற்றலும் அமைந்த கேள்வியும் நிறைந்த ஒரு புலவராகி, சொல்பதம் கடந்த பாதம் இருநிலம் தோயவந்தார் - சொல்லளவைக் கெட்டாத திருவடிகள் இப்பெரிய நிலத்திற் றோய நடந்து வந்தார். கற்பும் அமை கேள்வியும் சான்ற என்க; ““ கற்றல் கேட்ட லுடையார் பெரியார் ” என்பது திருநெறித் தமிழ்மறை. கல்வியின் செல்வர் - கல்வியாகிய செல்வத்தை யுடையர்; சாரியை அல்வழிக்கண் வந்தது. பாதம் சொற்பதங் கடந்ததாதலைப், ““ பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் ” என்னும் திருவாசகத்தானறிக. (14) அவ்விடை வருகின் றாரை நோக்கிநீ ராரை நீவிர் எவ்விடை நின்றும் போது கின்றனி ரென்ன வன்னார் வெவ்விடை யனையீர் யாங்கள் விஞ்சைய ரடைந்தோர் பாவம் வெளவிடு பொருநை நாட்டின் வருகின்றே மென்ன லோடும். (இ-ள்.) அவ்விடை வருகின்றாரை நோக்கி நீர் ஆர் - அங்கு வருகின்றவரை நோக்கி நீவிர் யாவர், நீவிர் எவ்விடை நின்றும் போதுகின்றனிர் என்ன - நீவிர் எங்கிருந்து வருகின்றீர் என்று கேட்க, அன்னார் - அப்புலவர்கள், வெவ்விடை அனையீர் - பெருமிதமுடைய இடபம் போல்வீர், யாங்கள் விஞ்சையர் - யாங்கள் புலவர்களாவேம்; அடைந்தோர் பாவம் வெளவிடு - அடைந்தாரது பாவத்தைப் போக்கும், பொருநை நாட்டின் வருகின்றேம் - பொருநை சூழ்ந்த பாண்டி நாட்டின் கண்ணே வந்து கொண்டிருக்கின்றேம், என்னலோடும் - என்று கூறியவளவில். ஆரை : ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது. வெவ்விடை - விருப்பஞ் செய்யும் விடையுமாம். பொருநை நாட்டின் எல்லையை அடைந்து அங்கு நின்றும் வருகின்றேம் என்றுமாம். (15) தனிவரு புலவர் நீவிர் தண்டமி ழால வாயெங் கனிவரு கருணை மூர்த்தி கனைகழ லிறைஞ்சல் வேண்டும் இனிவரு கென்ன நீரே யெங்களுக் களவில் கோடி துனிவரு வினைக டீர்க்குஞ் சுந்தரக் கடவு ளென்றார். (இ-ள்.) தனிவரு புலவர் - தனியே வந்த புலவராகிய இறைவர், நீவிர் - நீங்கள், தண்தமிழ் ஆலவாய் - தண்ணிய தமிழையுடைய திருவாலவாயில் எழுந்தருளிய, எம் கனிவரு கருணைமூர்த்தி கனைகழல் இறைஞ்சல் வேண்டும் - எமது கனிந்த அருளையுடைய சோமசுந்தரக் கடவுளின் ஒலிக்கும் வீரக்கழலணிந்த திருவடியை வணங்கவேண்டும் (ஆதலால்), இனி வருக என்ன - இப்பொழுதே வரக்கடவீர் என்று கூறியருள, எங்களுக்கு அளவு இல்கோடி துனிவரு வினைகள் தீர்க்கும் - எங்களுக்கு அளவிறந்த கோடி துன்பத்தைத் தரும் வினைகளைப் போக்கி யருளும், சுந்தரக் கடவுள் நீரே என்றார் - சோமசுந்தரக்கடவுள் நீரே என்று (அப்புலவர்கள்) கூறினார்கள். சோமசுந்தரக்கடவுளின் திருவடியை வணங்குமாறு நீர் எதிர்வந்து அழைத்த பேருதவியை உன்னின் எங்கட்கு நீரே அக்கடவுளாவீர் என்றனர்; சமற்காரமாக உண்மையை வெளிப்படுத்தியவாறுங் காண்க. வருகென்ன : அகரந்தொகுத்தல். (16) மறையினா றொழுகும் பன்மாண் கலைகள்போன் மாண்ட கேள்வித் துறையினா றொழுகுஞ் சான்றோர் சூழமீண் டேகிக் கூடற் கறையினார் கண்டத் தாரைப் பணிவித்துக் கரந்தா ரொற்றைப் பிறையினார் மகுடந் தோற்றா தறிஞராய் வந்த பெம்மான். (இ-ள்.) மறையின் ஆறு ஒழுகும் பல்மாண் கலைகள்போல் வேதத்தின் வழியே ஒழுகும் பல மாட்சிமைப்பட்ட கலைகள்போல, மாண்டகேள்வித் துறையின் ஆறு ஒழுகும் சான்றோர் சூழ - மாட்சிமைப்பட்ட கேள்வித் துறையின் வழியே ஒழுகும் புலவர் தம்மைச் சூழ்ந்துவர, ஒற்றைப் பிறையின் ஆர் மகுடம் தோற்றாது - ஒற்றைப் பிறை பொருந்திய சடைமுடியை வெளிப்படுத்தாது, அறிஞராய்வந்த பெம்மான் - புலவராய் வந்த சோமசுந்தரக் கடவுள், மீண்டு ஏகி - திரும்பிச்சென்று, கூடல் கறையின் ஆர் கண்டத்தாரைப் பணிவித்துக் கரந்தார் - கூடலிலெழுந்தருளிய நஞ்சக் கறை பொருந்திய திருமிடற்றையுடைய இறைவனை வணங்குவித்து மறைந்தருளினார். சான்றோர் கலைகள்போற் சூழ என்க. கறையினார், பிறையினார் என்பவற்றில் இன் வேண்டாவழிச் சாரியை. (17) விம்மித மடைந்து சான்றோர் விண்ணிழி விமான மேய செம்மலை வேறு வேறு செய்யுளாற் பரவி யேத்திக் கைம்மலை யுரியி னார்தங் காறொழு திறைஞ்சி மீண்டு கொய்ம்மலர் வாகைச் செவ்வேற் செழியனைக் குறுகிக் கண்டார். (இ-ள்.) சான்றோர் - புலவர்கள், விம்மிதம் அடைந்து - வியப் புற்று, விண் இழி விமானம் மேய செம்மலை - வானினின்றும் இறங்கிய இந்திரவிமானத்தில் எழுந்தருளிய இறைவரை, வேறு வேறு செய்யுளால் பரவி ஏத்தி - வெவ்வேறு செய்யுட்களாலே துதித்துப் புகழ்ந்து, கைமலை உரியினார் தம் கால் தொழுது - யானைத்தோலைப் போர்வையாகவுடைய அவ்விறைவர் திருவடி களைத் தொழுது, இறைஞ்சி - வணங்கி, மீண்டு - திரும்பி, கொய் வாகைமலர் செவ்வேல் செழியனைக் குறுகிக் கண்டார் - கொய்த வாகை மலர்மாலை சூடிய சிவந்த வேலை'e7¥டைய பாண்டியனைச் சென்று கண்டனர். தம்மை அழைத்துவந்து தரிசிப்பித்தவர் அவ்விறைவரேயென உணர்ந்தமையால் விம்மித மெய்தினர் என்க. வாகைமாலை - வெற்றி மாலை. (18) மறமலி நேமிச் செங்கோன் மன்னவன் வந்த சான்றோர் அறமலி கேள்வி நோக்கி யவைக்களக் கிழமை நோக்கித் திறமலி யொழுக்க நோக்கிச் சீரியர் போலு மென்னா நிறைமலி யுவகை பூத்த நெஞ்சினா னிதனைச் செய்தான். (இ-ள்.) மறம் மலி நேமிச் செங்கோல் மன்னவன் - வெற்றிமிக்க சக்கரத்தையும் செங்கோலையுமுடைய வங்கிய சேகர பாண்டியன், வந்த சான்றோர் அறம் மலி கேள்வி நோக்கி - வந்த புலவர்களின் அறம் நிறைந்த கல்வியை நோக்கியும், அவைக்களக் கிழமை நோக்கி - அவைக் களத்தில் இருத்தற்குரிய தகுதியை நோக்கியும், திறம் மலி ஒழுக்கம் நோக்கி - வகையமைந்த ஒழுக்கத்தை நோக்கியும், சீரியர் போலும் என்னா - சிறந்தவர்கள் என்று கருதி, நிறைமலி உவகை பூத்த நெஞ்சினான் இதனைச் செய்தான் - நிறைதல் மிக்க மகிழ்பூத்த உள்ளமுடையனாய் இதனைச் செய்வானாயினன். அவைக்களத்தில் இருத்தற்குரிய தகுதியாவது, “ குடிப்பிறப்புக் கல்வி குணம்வாய்மை தூய்மை நடுச்சொல்லு நல்லணி யாக்கங் - கெடுக்கும் அழுக்கா றவாவின்மை யவ்விரண்டோ டெட்டும் இழுக்கா அவையின்க ணெட்டு”” என வெண்பாமாலையிற் கூறப்பட்ட எண்வகை யியல்பினை உடைத்தாயிருத்தல். போலும் : ஒப்பில் போலி. (19) திங்களங் கண்ணி வேய்ந்த செக்கரஞ் சடில நாதன் மங்கலம் பெருகு கோயில் வடகுட புலத்தின் மாடோர் சங்கமண் டபமுண் டாக்கித் தகைமைசால் சிறப்பு நல்கி அங்கமர்ந் திருத்தி ரென்ன விருத்தினா னறிஞர் தம்மை. (இ-ள்.) திங்கள் அம் கண்ணி வேய்ந்த - சந்திரனாகிய அழகிய மாலையையணிந்த, செக்கர் அம் சடிலநாதன் - சிவந்த அழகிய சடையையுடைய சோமசுந்தரக் கடவுளின், மங்களம் பெருகு கோயில் - மங்கலம் மிக்க திருக்கோயிலின், வடகுடபுலத்தின் மாடு - வடமேற்றிசைப் பக்கத்தில், ஓர் சங்கமண்டபம் உண்டாக்கி - ஒரு சங்கமண்டபம் எடுத்து, தகைமைசால் சிறப்பு நல்கி - தகுதிநிறைந்த பலவரிசைகளை அளித்து. அங்கு அமர்ந்து இருத்திர் என்ன இருத்தினான் அறிஞர் தம்மை - அங்கே தங்கி யிருப்பீராக என்று அப்புலவர்களை இருத்தினான். அமர்ந்திருத்திர் என்பதற்கு விரும்பி யுறைவீர் என்றுரைத்தலுமாம். (20) வண்டமிழ் நாவி னார்க்கு மன்னவன் வரிசை நல்கக் கண்டுளம் புழுங்கி முன்னைப் புலவரக் கழகத் தோரை மண்டினர் மூண்டு மூண்டு வாதுசெய் தாற்றன் முட்டிப் பண்டைய புலனுந் தோற்றுப் படருழந் தெய்த்துப் போனார். (இ-ள்.) வண்தமிழ் நாவினார்க்கு - வளவிய தமிழையுடைய செந்நாப் புலவர்கட்கு, மன்னவன் வரிசை நல்க- பாண்டியன் பலவரிசைகளை அளிக்க (அதனை), முன்னைப் புலவர் கண்டு உளம் புழுங்கி - பழைய புலவர்கள் கண்டு உள்ளம் வெந்து, அக்கழகத்தோரை - அச்சங்கப் புலவரை, மண்டினர் மூண்டு மூண்டு வாது செய்து - நெருங்கிச் சென்று 'd8 சன்று வாது புரிந்து, ஆற்றல் முட்டிப் பண்டைய புலனும் தோற்று - தங்கள் ஆற்றல் குன்ற முன்னுள்ள புலமையையும் இழந்து, படர் உழந்து எய்த்துப் போனார் - துன்புற்று மனமிளைத்துச் சென்றனர். மண்டினர் : முற்றெச்சம். அடுக்கு தொழிற் பயில்வுப் பொருட்டு. முட்டி : செயவெனெச்சத் திரிபு. பழைய புலமை இழுக்குற்றமையால் பண்டைய புலனுந் தோற்று என்றார். (21) இனையர்போல் வந்து வந்து மறுபுலத் திருக்குங் கேள்வி வினைஞரு மதமேற் கொண்டு வினாய்வினாய் வாதஞ் செய்து மனவலி யிளைப்ப வென்று வைகுவோ ரொன்றை வேண்டிப் புனையிழை பாக நீங்க்காப் புலவர்மு னண்ணி னாரே. (இ-ள்.) இனையர்போல் - இந்தப் புலவர்கள்போலவே, மறு புலத்து இருக்கும் கேள்வி வினைஞரும் - வேற்று நாட்டிலுள்ள நூற் கேள்வி வல்ல புலவர்களும். வந்து வந்து மதம் மேற்கொண்டு வினாய் வினாய் வாதம் செய்து - வந்து வந்து தருக்கினை மேற் கொண்டு பலமுறை வினாவி வாதித்து, மனவலி இளைப்ப - மனத்தின் திட்பங்கெட, வென்று - (அவர்களை) வென்று, வைகுவோர் - தங்கியிருக்கும் அக்கழகத்தார், ஒன்றைவேண்டி - ஒரு பொருளைக் கருதி, புனை இழை பாகம் நீங்காப் புலவர்முன் நண்ணினார் - உமையம்மையை இடப்பாகத்தில் நீங்காத புலவராகிய சோமசுந்தரக் கடவுள் திருமுன் சென்றனர். ஈண்டும் அடுக்குகள் அப்பொருளன. நூற்கேள்வியே தொழிலாக வுடையரென்பார் ‘கேள்வி வினைஞரும்’ என்றார். மதம் மேற்கொண்டு என்பதற்கு உடன்படல் முதலிய எழுவகை மதத்தினை மேற்கொண்டு என்றுரைத்தலுமாம். வினாவி என்பது விகார மாயிற்று. ஒன்று : பண்பாகு பெயர். புனையிழை அணியப்பட்ட அணியினை யுடையாள் : அன்மொழித்தொகை. (22) முந்துநூன் மொழிந்தார் தம்மை முறைமையால் வணங்கி யெம்மை வந்துவந் தெவரும் வாதஞ் செய்கின்றார் வரிசை யாக அந்தமில் புலமை தூக்கி யளப்பதா1 வெம்ம னோர்க்குத் தந்தருள் செய்தி சங்கப் பலகையொன் றென்று தாழ்ந்தார். (இ-ள்.) முந்துநூல் மொழிந்தார் தம்மை - முதனூலாகிய வேதாகமங்களை அருளிச் செய்த இறைவனை, முறைமையால் வ ணங்கி - முறைப்படி வணங்கி, எம்மை வரிசையாக வந்து வந்து எவரும் வாதம் செய்கின்றார் - எம்மோடு தொடர்ச்சியாக வந்து வந்து எவரும் வாதிக்கின்றனர்; அந்தம்இல் புலமை தூக்கி அளப்பதா - (ஆதலால்) முடிவில்லாத புலமையைச் சீர்தூக்கி அளக்குங் கருவி யாக, எம்மனோர்க்கு - எமக்கு, சங்கப்பலகை ஒன்று தந்தருள் செய்தி என்று தாழ்ந்தார் - ஒரு சங்கப் பலகை அளித்தருளுவாயாக என்று வேண்டி வணங்கினர். முந்துநூல் - தமிழ் இலக்கண முதனூலுமாம். “ வினையி னீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும்” என்பதுங் காண்க. வரிசையாக - இடையறாது என்றபடி. (23) பாடிய பாணற் கன்று வலியவே பலகை யிட்டார் பாடிய புலவர் வேண்டிற் பலகைதந் தருளார் கொல்லோ பாடிய புலவ ராகும் படியொரு படிவங் கொண்டு பாடிய புலவர் காணத் தோன்றினார் பலகை யோடும். (இ-ள்.) பாடிய பாணற்கு அன்று வலியவே பலகை இட்டார் - தம்மைப் பாடிய பாணபத்திரனுக்கு அன்று வலிந்து பலகை அருளிய சோமசுந்தரக் கடவுள், பாடிய புலவர் வேண்டில் - பாடிய புலவர்கள் தாமே (ஒரு பலகையை) வேண்டினால், பலகை தந்தருளார் கொல்லோ - அதனைத் தாரா திருப்பரோ, பாடியபுலவர் ஆகும்படி ஒரு படிவம் கொண்டு - பாடுகின்ற புலவராம் வண்ணம் ஒரு திருவுருவந் தாங்கி, பாடிய புலவர் காண பலகையோடும் தோன்றினார் - பாடிய அப்புலவர்கள் காணப் பலகையுடன் வெளிவந்தனர். பாணற்குப் பலகை யிட்டமை பலகையிட்ட படலத்திற் காண்க. வலிய - கேளாமலே. இட்டார் : பெயர். கொல்லோ என்பதில் கொல் அசை நிலை; ஓகாரம் எதிர்மறைப் பொருட்டு. இது சொற்பொருட் பின்வரு நிலையணி. (24) சதுரமா யளவி ரண்டு சாணதிப் பலகை யம்ம மதியினும் வாலி தாகு மந்திர வலிய தாகும் முதியநும் போல்வார்க் கெல்லா முழம்வளர்ந் திருக்கை நல்கும் இதுநுமக் களவு கோலா யிருக்குமென் றியம்பி யீந்தார். (இ-ள்.) சதுரமாய் அளவு இரண்டு சாணது இப்பலகை - சதுர வடிவினதாய் இரண்டு சாண் அளவுள்ளதாகிய இந்தப் பலகை, மதியினும் வாலி தாகும் - சந்திரனிலும் வெள்ளியதாகும்; மந்திர வலியது ஆகும் - மந்திர வலியை யுடையதாகும்; முதிய நும் போல்வார்க்கு எல்லாம் - அறிவால் முதிய நும் போன்றார்க்கெல்லாம், முழம் வளர்ந்து இருக்கை நல்கும் - ஒவ்வொரு முழமாக வளர்ந்து இருக்கை யளிக்கும், இது - இப்பலகை, நுமக்கு அளவு கோலாய் இருக்கும் என்று இயம்பி; உங்களுக்கு ஓர் அளவு கருவியாக இருக்குமென்று கூறி, ஈந்தார் - (அதனைத்) தந்தருளினார். சாணது : குறிப்பு முற்று பெயரெச்சமாயது. அம்ம : வியப்பிடைச் சொல். பலகை வெண்ணிறமுடைய தென்பதனை வருஞ் செய்யுளாலுமறிக; அறிவால் அளத்தற்கரிய புலமைத் திறத்தை இஃது அளத்தலால் அறிவினும் தூயதாகும் என்றலுமாம். புலமை முற்றியார்க்கு வளர்ந்து இருக்கை நல்கி ஏனையர்க்கு இடந்தராமையின், மந்திர வலியது என்றார். (25) நாமக ளுருவாய் வந்த நாவலர் தமக்கு வெள்ளைத் தாமரை யமளி தன்னைப் பலகையாத் தருவ தென்னக் காமனை முனிந்தார் நல்கக் கைக்கொடு களிறு தாங்கும் மாமணிக் கோயி றன்னை வளைந்துதங் கழகம் புக்கார். (இ-ள்.) நாமகள் உருவாய் வந்த நாவலர் தமக்கு - கலைமகள் வடிவாக வந்த அப்புலவர்களுக்கு, வெள்ளைத்தாமரை அமளி தன்னை - வெண்டாமரையாகிய தவிசினை, பலகையாத் தருவ தென்ன - ஒரு பலகையாகச் செய்து தருவதுபோல, காமனை முனிந்தார் நல்க - மன்மதனை எரித்த இறைவர் தந்தருள, கைக்கொடு - (அவர்கள்) அதனை ஏற்றுக் கொண்டு, களிறு தாங்கும் மாமணிக் கோயில் தன்னை - யானைகள் சுமக்கும் பெரிய மணிகள் அழுத்திய திருக்கோயிலை, வளைந்து - வலம் வந்து, தம் கழகம் புக்கார் - தமது அவையிற் புகுந்தனர். தருவது : தொழிற் பெயர். (26) நாறுபூந் தாம நாற்றி நறும்பனி தோய்ந்த சாந்தச் சேறுவெண் மலர்வெண் டூசு 1 செழும்புகை தீப மாதி வேறுபல் வகையாற் பூசை வினைமுடித் திறைஞ்சிக் கீரன் ஏறினான் கபில னோடு பரணனு மேறி னானே. (இ-ள்.) நாறு பூந்தாமம் நாற்றி - மணமுள்ள பூமாலைகளைத் தொங்கவிட்டு, நறும்பனி தோய்ந்த சாந்தச்சேறு - நறிய பனிநீர் அளாவிய சந்தனக் குழம்பும், வெண்மலர் வெண்தூசு செழும்புகை தீபம் ஆதி - வெண்மலரும் வெள்ளாடையும் செழிய தூபமும் தீபமும் முதலிய, வேறு பல்வகையால் பூசை வினைமுடித்து - வேறு பலவகையாலும் பூசைவினை முடித்து, இறைஞ்சி - வணங்கி, கீரன் ஏறினான் - நக்கீரன் முன்னர் ஏறினான், கபிலனோடு பரணனும் ஏறினான் - கபிலனோடு பரணனும் ஏறினான். இறைவனால் அருளப்பட்ட தெய்வமாப் பலகை ஆதலின் பூசித்து வணங்கி யேறினர் என்க. முதன்மை பற்றி இம்மூவரையும் விதந்து கூறினார். ஒடு : உடனிகழ்ச்சி. (27) இருங்கலை வல்லோ ரெல்லா மிம்முறை யேறி யேறி ஒருங்கினி திருந்தார் யார்க்கு மொத்திடங் கொடுத்து நாதன் தருஞ்சிறு பலகை யொன்றே தன்னுரை செய்வோர்க் கெல்லாஞ் சுருங்கிநின் றகலங் காட்டித் தோன்றுநூல் போன்ற தன்றே. (இ-ள்.) இருங்கலை வல்லோர் எல்லாம் - பெரியநூல் வல்லோரனைவரும், இம்முறை ஏறி ஏறி ஒருங்கு இனிது இருந்தார் - இங்ஙனமே ஏறியேறி ஒருசேர வீற்றிருந்தனர்; நாதன் தரும் சிறுபலகை ஒன்றே - இறைவன் தந்தருளிய சிறிய பலகை யொன்றே, யார்க்கும் ஒத்து இடம் கொடுத்து - அனைவர்க்கும் ஒக்க இடங் கொடுத்து, தன் உரை செய்வோர்க்கு எல்லாம் - தன் உரை காண்பாரனைவருக்கும், சுருங்கி நின்று அகலம் காட்டித் தோன்றும் நூல்போன்றது - எழுத்தாற் சுருங்கி நின்று பொருள் விரிவு காட்டித் தோன்றும் நூலை ஒத்தது. ஒத்து - ஒக்க. கொடுத்து அதனால் நூல் போன்றது என்க. அகலம் விரிவுரை. அன்று, ஏ : அசைகள். (28) மேதகு சான்றோர் நூலின் விளைபொருள் விளங்கத் தம்மில் ஏதுவு மெடுத்துக் காட்டு மெழுவகை மதமுங் கூறும் போதவை தெளிந்த கிள்ளை பூவையே புறம்பு போந்து வாதுசெய் வார்கள் வந்தான் மறுத்துநேர் நிறுத்து மன்னோ. (இ-ள்.) மேதகு சான்றோர் - மேம்பட்ட அப்புலவர்கள், நூலின் விளைபொருள் விளங்க - நூல்களில் அமைந்த பொருள் விளங்க, தம்மில் - தம்முள், ஏதுவும் எடுத்துக்காட்டும் எழுவகை மதமும் கூறும்போது - ஏதுவும் உதாரணமும் எழுவகை மதமும் கூறும்போது, அவைதெளிந்த கிள்ளை பூவையே - அவற்றைக் கேட்டுத் தெளிந்த கிளியும் நாகணவாய்ப் பறவையுமே, புறம்பு போந்து - வெளியே வந்து, வாது செய்வார்கள் வந்தால் - வாதஞ் செய்வார்கள் வந்தால், மறுத்து நேர் நிறுத்தும் - அவர்கள் கொள்கையை மறுத்துத் தங்கொள்கையை நிலைநாட்டும். ஏதுவும் எடுத்துக்காட்டும் தமது மேற்கோளை நிலைபெறுத்துதற்பயத்தன. எழுவகை மதமாவன - உடன்படல், மறுத்தல், பிறர் மதம் மேற்கொண்டு களைதல், தான் நாட்டித் தனாது நிறுப்பு, இருவர் மாறுகோள் ஒருதலை துணிதல். பிறர் நூற்குற்றங் காட்டல், பிறிதொடுபடான் றன்மதங்கொளல் என்பன. எண்ணும்மை தொக்கன. நூற்பொருள் விளங்க ஏது திருட்டாந்தங்களும் எழுவகை மதம் முதலியவும் இடையறாது கூறுதலின் கிளியும் பூவையும் அவற்றைப் பயின்று கூறுவவாயின என்க. அவையே அங்ஙனஞ் செய்யுமென அச்சான்றோர் பெருமை கூறியவாறு. மன்னும் ஓவும் அசைகள். “ பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலை யாமே”” என்னும் பிள்ளையார் தேவாரமும், “ உள்ள மாருரு காதவர் ஊர்விடை வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாம் தெள்ளு மோசைத் திருப்பதி கங்கள்பைங் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்”” என்னும் பெரிய புராணச் செய்யுளும் இங்கே சிந்திக்கற்பாலன. (29) (கலி விருத்தம்) ஆய வாறெண் புலவரு மாய்ந்துணர் பாய கேள்விப் பயன்பெற மாட்சியாற் றூய பாட றொடங்கினர் செய்துகொண் டேய வாறிருந் தாரந்த வெல்லைவாய். (இ-ள்.) ஆய ஆறு எண் புலவரும் - அந்நாற்பத்தெட்டுப் புலவர்களும். ஆய்ந்து உணர் பாய கேள்விப் பயன் பெற - (தாம்) ஆராய்ந்து தெளிந்த பரந்த நூற்கேள்வியின் பயன் விளங்க, மாட்சியால் தூய பாடல் தொடங்கினர் செய்துகொண்டு - மாண்புடனே தூய பாடல்களைத் தொடங்கிப் பாடிக்கொண்டு, ஏயவாறு இருந்தார் - தம்மிச்சை வழியே இருந்தனர்; அந்த எல்லைவாய் - அப்பொழுது. பயனைப் பிறரும் பெறுதற்பொருட்டு என்றுமாம். தொடங்கினர் : முற்றெச்சம். ஏயவாறு என்பதற்கு இறைவர் பணித்தவாறு என்றுரைத்தலுமாம். (30) பலருஞ் செய்த பனுவலு மாண்பொருண் மலருஞ் செல்வமும் சொல்லின் வளமையுங் குலவுஞ் செய்யுட் குறிப்புமொத் தொன்றியே தலைம யங்கிக் கிடந்தவத் தன்மையால். (இ-ள்.) பலரும் செய்த பனுவலும் - அப்புலவர் பலருஞ் செய்த பாட்டுக்கள் அனைத்தும், மலரும் மாண்பொருள் செல்வமும் - (உரை காண்போர் அறிவிற்கேற்றவாறு) விரியும் மாட்சிமையுடைய பொருள் விழுப்பமும், சொல்லின் வளமையும் - சொல் வளப்பமும், குலவும் செய்யுள் குறிப்பும் - செய்யுளிலே குறிப்பிற்றோன்றும் பொருளும், ஒத்து ஒன்றி - ஒரு நிகரவாகப் பொருந்துதலால், தலைமயங்கிக் கிடந்த - (வேறுபாடு அறிய முடியாது) தலைமயங்கிக் கிடந்தன; அத்தன்மையால் - அதனால். பனுவல் - பாட்டு. குறிப்பு - வியங்கியம். கிடந்த. அன்பெறாத பலவின்பால் முற்று. (31) வேறுபாடறி யாது வியந்துநீர் கூறு பாட லிதுவென்றுங் கோதிலென் தேறு பாட லிதுவென்றுஞ் செஞ்செவே1 மாறு பாடுகொண் டார்சங்க வாணரே. (இ-ள்.) வேறுபாடு அறியாது - வேறுபாடு உணராமல், வியந்து - தம்முள் வியப்புற்று, நீர் கூறு பாடல் இது என்றும் - நீர் கூறிய பாடல் இதுதான் என்றும், கோது இல் என்தேறுபாடல் இது என்றும் - குற்றமில்லாத எனது தெளிந்த பாடல் இதுதான் என்றும், சங்க வாணர் செஞ்செவே மாறுபாடு கொண்டனர் - சங்கப் புலவர்கள் ஒருவருக்கொருவர் நேரே மாறுபாடு கொண்டனர். செஞ்செவே - செவ்வையாக; நன்றாக. வாணர் : மரூஉ. (32) மருளு மாறு மயக்கற வான்பொருள் தெருளு மாறுஞ் செயவல்ல கள்வர்சொற் பொருளு மாமது ரேசர் புலவர்முன் அருளு நாவல ராய்வந்து தோன்றினார். (இ-ள்.) மருளுமாறும் - மயங்குமாறும், மயக்கு அற வான் பொருள் தெருளுமாறும் - அம்மயக்கம் நீங்க உண்மைப் பொருள் தெளியுமாறும், செயவல்ல கள்வர் - செய்தற்கு வல்ல கள்வரும், சொல் பொருளும் ஆம் மதுரேசர் - சொல்லும் பொருளுமாம் மதுரேசருமாகிய சோமசுந்தரக் கடவுள், புலவர் முன் அருளும் நாவலராய் வந்து தோன்றினார் - அப்புலவர்கள் முன் அருளுகின்ற ஒரு புலவராய் வந்து தோன்றினார். இறைவர் சொல்லும் பொருளுமாதலை, “ சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி” என நம்பியாரூரர் தேவாரத்துள் ஓதுதலான் அறிக. (33) வந்த நாவலர் வந்திக்கு நாவலர் சிந்தை யாகுலஞ் செய்ய மயக்குறும் பந்த யாப்பைக் கொணர்கெனப் பாவலர் எந்தை யீங்கிவை யென்றுமுன் னிட்டனர். (இ-ள்.) வந்த நாவலர் - அங்ஙனம் வந்த நாவலராகிய இறைவர், வந்திக்கும் நாவலர் சிந்தை ஆகுலம் செய்ய மயக்குறும் - தம்மை வணங்கும் புலவர்களின் மனம் வருந்த மயக்கும், பந்த யாப்பைக் கொணர்க என - தளையமைந்த செய்யுட்களைக் கொண்டு வருவீராக என்று கட்ட'e7lட, பாவலர் - அப்புலவர்கள், எந்தை - எம் தந்தையே; ஈங்கு இவை என்று முன் இட்டனர் - இங்குள இவையே என்று அவற்றைக்கொண்டு வந்து திருமுன் வைத்தனர். பந்தம் தளை. யாப்பு - செய்யுள் என்னும் பொருட்டு. கொணர்கென : அகரந்தொகுத்தல். (34) தூய சொல்லும் பொருளின் றொடர்ச்சியும் ஆய நாவல ரவ்வவர் தம்முது வாய பாடல் வகைதெரிந் தவ்வவர்க் கேய வேயெடுத் தீந்தன ரென்பவே. (இ-ள்.) தூய சொல்லும் பொருளின் தொடர்ச்சியும் ஆய நாவலர் - தூய சொல்லும் தொடர்ந்த பொருளுமாகிய அந்நாவலர் பெருமான், அவ்வவர்தம் முதுவாயபாடல் - அவ்வப்புலவர்களின் பொருள் முதிர்ச்சி வாய்ந்த பாடல்களின், வகை தெரிந்து - வேறுபாடுகளை அறிந்து, அவ்வவர்க்கு ஏயவே - அவ்வவர்க்கு மனம் பொருந்துமாறு, எடுத்து ஈந்தனர் - எடுத்து அளித்தனர். பொருளின் றொடர்ச்சி என்பதனைத் தொடர்ந்த பொருள் என மாறுக. சொல்லும் பொருளுமாம் என்பதற்கு மேல் எடுத்துக்காட்டினமை காண்க. இதற்குச் சொல்லின் தொடர்ச்சியும் பொருளின்றொடர்ச்சியும் ஆராய என்றுரைப்பாருமுளர். முதுவாய பாடல் என்பதற்கு முதிர்ந்த வாயிடத்தவான பாடல் என்றுரைத் தலுமாம். என்ப : அசை. (35) வாங்கு சங்கப் புலவர் மனங்களித் தீங்கு நீரெம ரோடு மொருத்தராய் ஓங்கி வாழ்திரென் றொல்லெனத் தங்களைத் தாங்கு செம்பொற் றவிசி லிருத்தினார். (இ-ள்.) வாங்கு சங்கப்புலவர் - அவற்றை வாங்கிய சங்கப்புலவர்கள், மனம் களித்து - மனமகிழ்ந்து, நீர் எமரோடும் ஒருத்தராய் ஈங்கு ஓங்கி வாழ்திர் என்று - நீர் எம்முடன் ஒருவராய் இங்கே சிறந்து வாழ்வீராக என்று கூறி, ஒல்லென - விரைந்து, தங்களைத் தாங்கு செம்பொன் தவிசில் இருத்தினார் - தங்களைத் தாங்குகின்ற சிவந்த பொன்னாலாகிய பலகையில் இருத்தினார்கள். ஒல்லென : விரைவுக் குறிப்பு. ஒல்லென இருத்தினார் எனக. (36) பொன்னின் பீடிகை யென்னும்பொன் னாரமேல் துன்னு நாவலர் சூழ்மணி யாகவே மன்னி னார்நடு நாயக மாமணி என்ன வீற்றிருந் தார்மது ரேசரே. (இ-ள்.) பொன்னின் பீடிகை என்னும் - பொற்பலகை என்னும், பொன் ஆரமேல் - பொன்னாரத்தில், துன்னும் நாவலர் சூழ்மணியாக மன்னினார் - பொருந்திய நாற்பத்தெண் புலவரும் சுற்றிலும் பதித்த மணிகளாக இருந்தனர். மதுரேசர் - சோமசுந்தரக் கடவுள், மாநடு நாயகம் மணி என்ன வீற்றிருந்தார் - பெருமை பொருந்திய நடுநாயகமணி என்னுமாறு வீற்றிருந்தனர். நாயகமணி - தலைமை மணி. (37) நதிய ணிந்தவர் தம்மொடு நாற்பத்தொன் பதின்ம ரென்னப் படும்புல வோரெலாம் முதிய வான்றமிழ் பின்னு முறைமுறை மதிவி ளங்கத் தொடுத்தவண் வாழுநாள். (இ-ள்.) நதி அணிந்தவர் தம்மொடும் - கங்கையைத் தரித்த இறைவரோடும், நாற்பத்தொன்பதின்மர் என்னப்படும் புலவோரெலாம் - நாற்பத்தொன்பதின்மரென்று கூறப்படும் புலவர்களனைவரும், பின்னும் முதியவான் தமிழ் - மீண்டும் தொன்மையுஞ் சிறப்புமுடைய தமிழ்ப்பாக்களை, முறை முறை மதிவிளங்கத் தொடுத்து - முறை முறையாகக் கற்போர்க்கு அறிவு விளங்கத் தொடுத்து, அவண் வாழுநாள் - அங்கு வாழும்பொழுது. தமிழ் என்றது தமிழ்ச் செய்யுட்களை யுணர்த்திற்று. முதிய என்றது தமிழுக்கு அடை. மதிவிளங்க என்பதற்குப் புலமைத்திறம் வெளிப்பட என்றுரைத்தலுமாம். (38) (கலிநிலைத்துறை) வங்கிய சேகரன் வங்கிய சூடா மணிதன்னைப் பொங்கிய தேசார் முடிபுனை வித்துப் புவிநல்கி இங்கியல் பாச வினைப்பகை சாய விருந்தாங்கே சங்கியல் வார்குழை யானடி யொன்றிய சார்புற்றான். (இ-ள்.) வங்கிய சேகரன் - வங்கிய சேகரபாண்டியன், வங்கிய சூடாமணி தன்னை - வங்கிய சூடாமணிக்கு, பொங்கிய தேசு ஆர் முடி புனைவித்து - விளங்கிய ஒளி நிறைந்த முடி சூட்டி, புவிநல்கி - புவியாட்சியை அளித்து, இங்கு இயல் பாச வினைப்பகை சாய இருந்து - இம்மையில் அமைந்த வினைப்பாசம் என்னும் பகைமை கெட இருந்து, ஆங்கே சங்கு இயல்வார் குழையான் அடி ஒன்றிய சார்பு உற்றான் - மறுமையிற் சங்கினாலமைந்த நீண்ட குழையினையுடைய சிவபெருமான் திருவடியிற் கலத்தலாகிய வீடுபேற்றை அடைந்தனன். வங்கிய சூடாமணிக்கு என நான்கனுருபாகத் திரிக்க. பாச வினை - வினைக்கயிறு; ““ பாசமாம் வினைப் பற்றறுப்பான்” என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுளும் நோக்குக. சார்பு - முத்தி நிலை என்னும் பொருட்டு. (39) ஆகச் செய்யுள் 2432. ஐம்பத்திரண்டாவது தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் (கலிநிலைத்துறை) சொற்குவை தேரும் பாவலர் மேவத் தொகுபீடம் அற்குவை கண்டத் தண்ண லளித்த தறைந்தேமால் தற்குவை தந்தா லுய்குவ லென்னுந் தருமிக்குப் பொற்குவை நல்கும் வண்ண மெடுத்துப் புகல்கிற்பாம். (இ-ள்.) சொல்குவை தேரும் பாவலர் மேவ - சொற்கூட்டங் களை ஆராய்ந்து தெளியும் புலவர்கள் தங்க, தொகு பீடம் - சங்கப் பலகையை, அல்குவை கண்டத்து அண்ணல் - செறிந்த இருளையுடைய திருமிடற்றினையுடைய இறைவன், அளித்தது அறைந்தேம் - தந்தருளியதைக் கூறினேம்; தற்கு உவை தந்தால் உய்குவல் என்னும் தருமிக்கு - தனக்கு அந்தப் பொற்கிழியிலுள்ள காசுகளை அளித்தாற் பிழைப்பேன் என்று வேண்டுந் தருமிக்கு, பொன்குவை நல்கும் வண்ணம் எடுத்துப் புகல்கிற்பாம் - அப்பொற் காசுகளை ஈந்தருளிய திருவிளையாடலை இனிது விதந்து கூறுவாம். சொற்குவை - பெயர் வினை இடை உரிகள் ஆகும் செஞ்சொல், ஆக்கச் சொல், குறிப்புச் சொல் என்பன. தொகுபீடம் - தொக்கிருக்கும் பீடம்; சங்கப் பலகை. ஆல் : அசை. உவை : சுட்டிடைச் சொல் அடியாகப் பிறந்த பலவின்பாற் பெயர். (1) மன்னவர் மன்னன் வங்கிய சூடா மணிமாறன் தென்னவ ராகித் திகிரி யுருட்டுந் தென்கூடல் முன்னவ ரன்னங் கண்டறி யாத முடிக்கேற்பப்1 பன்மலர் நல்கு நந்தனம் வைக்கும் பணி பூண்டான். (இ-ள்.) மன்னவர் மன்னன் வங்கிய சூடாமணி மாறன் - வேந்தர் வேந்தனாகிய வங்கிய சூடாமணி பாண்டியன், தென்னவராகித் திகிரி உருட்டும் - சுந்தர பாண்டியராய் ஆக்கினா சக்கரஞ் செலுத்திய, தென்கூடல் முன்னவர் - தென்றிசைக் கண்ணதாகிய நான்மாடக் கூடலில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளின், அன்னம் கண்டு அறியாத முடிக்கு ஏற்ப - பிரமனாகிய அன்னப்பறவை காணாத திருமுடிக்குப் பொருந்த, பன்மலர் நல்கும் - பல மலர்களைக் கொடுக்கும், நந்தனம் வைக்கும் பணிபூண்டான் - திருநந்தவனம் வைத்தலாகிய திருப்பணியை மேற்கொண்டான். நந்தவனம் நந்தனம் என மரீஇயது; மகிழ்ச்சியைத் தரும் பூந்தோட்டம் என்பது பொருள். (2) மாதவி பாதிரி தாதகி கூவிள மந்தாரந் தாதவிழ் மல்லிகை முல்லையி லஞ்சி தடங்கோங்கம் வீதவழ் கொன்றை கரந்தைசெ ழுங்கர வீரந்தண் போதவிழ் நந்தி செருந்திகு ருந்தம் புன்னாகம். (இ-ள்.) மாதவி பாதிரி தாதகி கூவிளம் மந்தாரம் - குருக்கத்தியும் பாதிரியும் ஆத்தியும் வில்வமும் மந்தாரமும், தாது அவிழ் மல்லிகை - மகரந்தத்தோடு மலர்ந்த மல்லிகையும், முல்லை இலஞ்சி தடம் கோங்கம் - முல்லையும் மகிழும் பெரிய கோங்கும், வீதவழ் கொன்றை கரந்தை செழுங் கரவீரம் - வண்டுகள் மொய்க்கும் கொன்றையும் கரந்தையும் வளவிய அலரியும், தண்போது அவிழ் நந்தி செருந்தி குருந்தம் புன்னாகம் - தண்ணிய போது விரிந்த நந்தியாவட்டமும் செருந்தியும் குருந்தமும் புன்னாகமும். (3) முண்டக மென்கடி நீலமு தற்பல முப்போதும் எண்டிசை யுங்கம ழும்படி நந்தன மெங்குந்தேன் உண்டிசை வண்டு படிந்துமு ரன்றிட வுண்டாக்கி வண்டிமிர் சண்பக நந்தன முந்தனி வைத்தானால். (இ-ள்.) முண்டகம் மென்கடி நீலம் முதல் பல - தாமரையும் மெல்லிய மணமுள்ள நீலோற்பலமுமாகிய இவை முதலிய பல மலரும், முப்போதும் எண் திசையும் கமழும்படி - மூன்று காலத்தும் எட்டுத்திக்குகளிலும் மணங்கமழுமாறு, நந்தனம் - திருநந்த வனத்தினை, எங்கும் தேன் படிந்து உண்டு வண்டு இசை முரன்றிட - எங்கும் தேனிற்படிந்து அதனைப் பருகி வண்டுகள் இசை பாட, உண்டாக்கி - ஆக்குவித்து, வண்டு இமிர் சண்பக நந்தனமும் - வண்டுகள் ஒலிக்கும் சண்பக நந்தவனமும், தனி வைத்தான் - தனியே வைத்தான். முப்போது - காலை, நண்பகல், மாலை என்பன. கமழ என்பது கமழும் படி என வழக்கில் வந்தது. மகரந்தத்திற் படிந்து என்றுமாம். (4) பொய்த்திடு நுண்ணிடை மங்கல மங்கையர் பொன்பூண்டார் ஒத்தெழு சண்பக மொய்த்தவ ரும்ப ருடைந்தெங்கும் வைத்திடு நந்தன வாசம்வி ழுங்கி மணங்கான்று பைத்து மலர்ந்தன கண்டு மகிழ்ந்து பரித்தேரான். (இ-ள்.) பொய்த்திடு நுண் இடை மங்கல மங்கையர் - இளைத்த நுண்ணிய இடையினையுடைய மங்கல மகளிர், பொன் பூண்டார் ஒத்து - பொன்னணி பூண்டதையொத்து, எழு சண்பகம் - மேலெழுந்த சண்பகங்கள், மொய்த்த அரும்பர் உடைந்து - நெருங்கிய அரும்புடைந்து, எங்கும் வைத்திடு நந்தனவாசம் விழுங்கி - வேறெங்கும் வைத்த நந்தவனத்தின் மணத்தைத் தன்னுட்படுத்தி, மணம் கான்று, மணம் வீசி, பைத்து மலர்ந்தன - பசந்து மலர்ந்தன; பரித்தேரான் கண்டு மகிழ்ந்து - குதிரை பூட்டிய தேரையுடைய பாண்டியன் அதனைக் கண்டு மகிழ்ந்து. புலப்படாமையின் பொய்யென்று கூறத் தக்க இடையென்பார், பொய்த்திடு நுண்ணிடை என்றார். பூண்டார் என்னும் முற்று, தொழில் மேனின்றது. அரும்பர் : ஈற்றுப்போலி. அரும்பருடைந்து என்னுஞ் சினைவினை முதன்மேல் நின்றது. பைத்து : பசுமை யென்னும் பண்படியாகப் பிறந்த வினையெச்சம். (5) செருக்கிய வண்டு விழாமலர் கொய்து தெரிந்தாய்ந்து நெருக்கிய விண்டை நிறைத்தொடை தொங்க னெடுந்தாமம் மருக்கிளர் கண்ணி தொடுத்தணி வித்து வணங்காரூர் கருக்கிய கண்ணுத லார்திரு மேனி கவின் செய்தான். (இ-ள்.) செருக்கிய வண்டு விழா மலர் கொய்து தெரிந்து ஆய்ந்து - கள்ளுண்டு களித்த வண்டுகள் மோவாத மலர்களைக் கொய்து குற்றமில்லன தெரிந்து காம்பு முதலியன ஆய்ந்து. நெருக்கிய இண்டை நிரைத்தொடை தொங்கல் நெடுந்தாமம் - நெருங்கத் தொடுத்த இண்டையும் வரிசையாகிய தொடையும் தொங்கலும் நெடிய தாமமும், மருக்கிளர் கண்ணி தொடுத்து அணிவித்து - மணம் வீசும் கண்ணியும் ஆகிய பலவகை மாலைகளைத் தொடுத்து அணிவித்து. வணங்கார் ஊர் கருக்கிய கண்ணுதலார் திருமேனி கவின் செய்தான்- பகைவரின் திரிபுரத்தை எரித்து நீறாக்கிய நெற்றிக்கண்ணை யுடைய சோமசுந்தரக் கடவுளின் திருமேனியை அழகு செய்தான். இண்டை - தண்ட வடிவமாகத் தொடுத்த மாலை; தொடை- சதுரமாகத் தொடுத்தத மாலை; தாமம் - கோத்த மாலை; கண்ணி - வட்ட வடிவமாகத்தொடுத்த மாலை, தொடை - தொடுக்கப்படுவது; மலை. (6) அன்னவி யன்பொழின் மாமது ரேச ரடித்தாழ்வோன் பொன்னவிர் சண்பக மாலைபு னைந்த புதுக்கோலம் தன்னைவி யந்திவர் சண்பக மாற னென்றேபர் முன்னரி றைஞ்சின னிம்பம ணிந்த முடித்தென்னன். (இ-ள்.) அன்னவியன் பொழில் மாமதுரேசர் - அந்தப் பரந்த சோலை சூழ்ந்த மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளின், அடித்தாழ்வோன் - அடியை வணங்குவோனாகிய, நிம்பம் அணிந்த முடித்தென்னன் - வேப்ப மலர் மாலை சூடிய முடியையுடைய அப்பாண்டியன், பொன் அவிர் சண்பகமாலை புனைந்த புதுக் கோலம் தன்னை வியந்து - பொன்போல விளங்கும் சண்பகமாலை அணிந்த புதிய கோலத்தைக் கண்டு வியப்புற்று, இவர் சண்பக சுந்தரர் என்னா முன்னர் இறைஞ்சினன் - இவர் சண்பக சுந்தரர் என்று கூறித் திருமுன் வணங்கினன். அன்ன : அகரச் சுட்டின் றிரிபு. தாழ்வோனாகிய தென்னன் எனக் கூட்டுக. சண்பகசுந்தரர் என்று பெயர் கூறி வணங்கினன் என்க. (7) அன்னதொர் நாமம் பெற்றன ரின்று மணிக்கூடன் முன்னவ ரந்தத் தாமம வர்க்கு முடிக்கேற்றும் இன்னதொர் நீராற் சண்பக மாற னென்றேபேர் மன்னிவி ளங்கினன் வங்கிய சூடா மணிதானும். (இ-ள்.) அணிக்கூடல் முன்னவர் - அழகிய கூடலில் எழுந் தருளிய முதல்வராகிய சோமசுந்தரக் கடவுள், இன்றும் அன்னது ஓர் நாமம் பெற்றனர் - இது போதும் அந்த ஒரு திருநாமத்தைப் பெற்றார். அந்தத் தாமம் - அந்தச் சண்பக மாலைகளை, அவர் முடிக்கு ஏற்றும் இன்னதொர் நீரால் - அவரது திருமுடிக்கு ஏற்றும் இத்தன்மையால், வங்கிய சூடாமணியும் - வங்கிய சூடாமணி என்னும் பாண்டியனும், சண்பக மாறன் என்றே பேர் மன்னி விளங்கினன் - சண்பக பாண்டியன் எனப் பெயரெய்தி விளங்கினன். அன்னது, இன்னது என்பன சுட்டுத் திரிபுகள். ஓர் : விகாரம். இறுதியிலுள்ள உம்மை எச்சவும்மை. (8) சண்பக மாறன் சண்பக சுந்தரர் தம்மாடே நண்பக மாறா நன்பணி செய்யு நன்னாளிற் பண்பகர் சொல்லார் தம்புடை மாரன் படுபோர்மூண் டெண்பக வெய்வா னாகிய வந்தன் றிளவேனில். (இ-ள்.) சண்பக மாறன் - சண்பக பாண்டியன், சண்பக சுந்தரர் தம்மாடு - சண்பக சுந்தரரிடத்து, நண்பு அகம் மாறா நன்பணி செய்யும் நல்நாளில் - அன்பு உள்ளத்தினின்றும் நீங்காமல் நல்ல திருப்பணி செய்து வரும் நல்ல நாளில், பண்பகர் சொல்லார் தம்புடை - பண்ணும் புகழுஞ் சொல்லினையுடைய மகளிரிடத்து, மாறன் படுபோர் மூண்டு - மதவேள் மிக்க போர்த்தொழிலின் மூண்டு, எண்பக எய்வான் ஆகிய - அளவிறப்ப அம்புகளை எய்ய, இளவேனில் வந்தன்று - இளவேனிற் காலம் வந்தது. நண்பு - நண்ணுதல் என்றுரைப்பாருமுளர். பண்பகர் சொல்லார் என்பதற்குப் பண்போலப் பகர்கின்ற சொல்லார் என்றும், கேட்போர் பண்ணென்று கூறும் சொல்லினையுடையார் என்றும், உரைத்தலுமாம்; எண்பக என்பதற்கு நெஞ்சு பிளக்க என்றுரைத்தலும் ஆம். எய்வானாகிய : ஒரு சொல்; செய்யிய வென்னும் வினையெச்சம். வந்தன்று : உடன்பாட்டு முற்று. (9) [அறுசீரடியாசிரிய விருத்தம்] மனிதர்வெங் கோடை தீர்க்கும் வசந்தமென் காலும் வேறு துனிதவி ரிளங்கால் வேண்டுஞ் சோலையுஞ் சோலை வேண்டும் புனிதநீர்த் தடமும் வேறு புதுமல ரோடை வேண்டும் பனிதரு மதியும் வேறு பான்மதி வேண்டுங் காலம். (இ-ள்.) (அவ்விளவேனில்) மனிதர் வெங்கோடை தீர்க்கும் வசந்த மென்காலும் - மக்களின் கொடிய வெப்பத்தைப் போக்கும் இளந்தென்றலும், துனிதவிர் வேறு இளங்கால் வேண்டும் - (தனது வெப்பத்தாலாகிய) துன்பத்தை நீக்கும் வேறு இளந்தென்றலை விரும்பும், சோலையும் சோலை வேண்டும் - சோலையும் வேறு சோலையை விரும்பும், புனித நீர்த்தடமும் - தூயநீர் நிறைந்த தடாகமும், வேறு புதுமலர் ஓடை வேண்டும் - வேறு நாள்மலர் நிறைந்த நீரோடையை விரும்பும். பனிதரு மதியும் - மக்களுயிர்க்குத் தட்பந் தருஞ் சந்திரனும்,வேறு பால் மதி வேண்டும் - வேறு வெள்ளிய சந்திரனை விரும்பும், காலம் - காலமாயிருந்தது. மனிதர் வெங்கோடை தீர்க்கும் என்னும் அடையைச் சோலை முதலியவற்றோடுங் கூட்டி, வேண்டும் என்னும் பெயரெச்சம் நான்கனையும் காலம் என்பதனோடு தனித்தனி முடிக்க. மக்கள் வெப்பொழிக்கும் தண்ணிய பொருள்களும் தமக்கு வேறு தண்ணிய பொருள்களை விரும்புமெனக் கூறியது வெம்மை மிகுதியைக் குறிப்பாகத் தந்து நிற்றலால் இது குறிப்பு என்னும் குணவணியாகும். பெருங்காப்பியத்திற்குரிய பருவ வருணனை இது முதலிய செய்யுட்களாற் கூறப்படுகின்றது. (10) அண்டவான் றருமேற் சீறிச் சிவந்தெழுந் தாங்குத் தேமாத் தண்டளி ரீன்று வானந் தைவர நிவந்த காசு கொண்டிடை யழுத்திச் செய்த குழையணி மகளிர் போல வண்டிறை கொள்ளப் பூத்து மலர்ந்தன செருந்தி யெல்லாம். (இ-ள்.) தேமா - மாமரங்கள், அண்டவான் தருமேல் சீறிச் சிவந்து எழுந்தாங்கு - வானின்கண் உள்ள சிறந்த கற்பகத் தருவின் மேற் சீறிச் சிவந்தெழுந்தாற்போல, தண் தளிர் ஈன்று - தண்ணிய செந்தளிர்களைத் தந்து, வானம் தைவர நிவந்த - வானுலகை யளாவ உயர்ந்தன; காசு கொண்டு இடை அழுத்திச் செய்த - நீலமணி களைக் கொண்டு இடையிடையிற் பதித்துச் செய்த, குழை அணி மகளிர்போல - காதணியை அணிந்த பெண்கள்போல, செருந்தி எல்லாம் - செருந்திகள் அனைத்தும், வண்டு இறைகொள்ளப் பூத்து மலர்ந்தன - வண்டுகள் இடையிடை தங்கப் பூத்து மலர்ந்தன. சிவத்தல் - வெகுளலும் செந்நிற முறுதலும் ஆம். புளிமா ஒன்றுள தாதலாற் பிறிதினியைபு நீக்கிய விசேடணந் தந்து, தேமா என்றார். தைவர - தடவ. நிவந்த : அன்பெறாத பலவின்பால் முற்று. செருந்தி மலர் பொற்குழை போன்றும், வண்டு நீலமணி போன்றும் விளங்கின வென்க. மாமரங்கள் இயல்பாகத் தளிர்த்து உயர்ந்தமையைத் தேவ தருக்கள்மேற் சீறிச் சிவந்தெழுந்தாற்போல எனக் கற்பித்துக் கூறுதலால் தற்குறிப்பேற்ற வுவமையணி; வானுலகுடன் சம்பந்த மில்லா திருக்கச் சம்பந்தம் கற்பித்து, வானந் தைவர நிவந்த எனக் கூறுதலால் தொடர்புயர்வு நவிற்சியணி; இவ்விரண்டும் விரவுதலால் இச்செய்யுள் கலவையணி. (11) செங்கதிர் மேனி யான்போ லவிழ்ந்தன செழும்ப லாசம் மங்குலூர் செல்வன் போல மலர்ந்தன காஞ்சி திங்கட் புங்கவன் போலப் பூத்த பூஞ்சினை மரவஞ் செங்கை அங்கதி ராழி யான்போ லலர்ந்தன விரிந்த காயா. (இ-ள்.) செழும்பலாசம் - வளவிய முண் முருக்குக்கள், செங்கதிர் மேனியான்போல் அவிழ்ந்தன - செவ்வொளி பொருந்திய மேனியையுடைய சூரியனைப்போலச் செந்நிறமாக மலர்ந்தன; காஞ்சி - காஞ்சி மரங்கள், மங்குல் ஊர் செல்வன்போல மலர்ந்தன - முகிலை ஊர் தியாகக் கொண்டு ஊரும் இந்திரன்போலக் கருநிறமாக மலர்ந்தன;பூஞ்சினை மரவம் - பொலிவுள்ள கிளைகளையுடைய குங்கும மரங்கள், திங்கள் புங்கவன்போலப் பூத்த - சந்திரனைப்போல வெண்ணிறமாக மலர்ந்தன; விரிந்த காயா - விரிந்த காயாஞ்செடிகள், செங்கை அம் கதிர் ஆழியான் போல் அலர்ந்தன - சிவந்த கையில் அழகிய ஒளியையுடைய திகிரியையுடைய திருமால்போல நீலநிறமாக மலர்ந்தன. மரவம் - வெண்கடம்புமாம். பூத்த: முற்று. உவமம் நான்கும் உருவு பற்றியன. “ ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும் பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியும் மீனேற்றுக் கொடியோன்போன் மிநிறார்க்குங் காஞ்சியும் ஏனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலும் ஆனேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமும்””” என்னும் பாலைக்கலியடிகள் இங்கு நோக்கற்பாலன. இதனைப் பலவயிற் போலி யுவமை யணியின்பாற் படுத்தலுமாம். (12) தரைகிழித் தெழுநீர் வையைத் தடங்கரை யெக்க ரல்குல் அரவமே கலைசூழ்ந் தென்ன வலர்ந்துதா துகுப்ப ஞாழல் மரகதந் தழைத்து வெண்முத் தரும்பிப்பொன் மலர்ந்து வாங்குந் திரைகடற் பவளக் காடு செய்வன கன்னிப் புன்னை. (இ-ள்.) தரை கிழித்து எழுநீர் வையைத் தடங்கரை - தரையைக் கிழித்துச் செல்லா நின்ற நீரையுடைய வையையாற்றின் பெரிய கரையாகிய பெண், எக்கர் அல்குல் - மணல்மேடாகிய அல்குலில், அரவம் மேகலை சூழ்ந்தென்ன - ஒலியையுடைய மேகலையை அணிந்தாற் போலத் (தோன்றுமாறு), ஞாழல் அலர்ந்து தாது உகுப்ப - குங்கும மரங்கள் மலர்ந்து மகரந்தத்தைச் சிந்துவன; கன்னிப் புன்னை - இளமையாகிய புன்னைமரங்கள், மரகதம் தழைத்து - மரகதம்போலும் இலைகள் தழைத்து, வெண்முத்து அரும்பி - வெள்ளிய முத்துக்கள் போலும் முகைகள் அரும்பி, பொன் மலர்ந்து - பொன்போலும் பூக்கள் மலர்ந்து, வாங்கும் திரைகடல் பவளக்காடு செய்வன - வளைந்த அலைதலையுடைய கடலிலுள்ள பவளக்காடு போலும் மகரந்தஞ் சிந்துவன. எக்கரை அல்குலாக உருவகஞ்செய்து கரையைப் பெண்ணாக உருவகஞ் செய்யாமையால் இது வியனிலை யுருவகமும்; மரகதம், முத்து. பொன், பவளம் என்னும் உவமைகளால் முறையே இலை, அரும்பு, மலர், மகரந்தம் என்னும் பொருள்களை இலக்கணையாகக் கூறுதலால் உருவக வுயர்வு நவிற்சியணியும் ஆம். உகுப்ப : முற்று. திரைகடல் : வினைத்தொகை. (13) ஊடினார் போல வெம்பி யிலையுதிர்ந் துயிரன் னாரைக் கூடினார் போல வெங்குங் குழைவரத் தழைத்து நீங்கி வாடினார் போலக் கண்ணீர் வாரமெய் பசந்து மையல் நீடினா ரலர்போற் பூத்து நெருங்கின மரங்க ளெல்லாம். (இ-ள்.) மரங்கள் எல்லாம் - மரங்கள் யாவும், ஊடினார்போல வெம்பி இலை உதிர்ந்து - ஊடிய மகளிர்போல வெம்பி இலையை உதிர்த்து, உயிர் அன்னாரைக் கூடினார்போல - உயிரை ஒத்த நாயகர்களைக் கூடிய மகளிர்போல, எங்கும் குழைவரத் தழைத்து - எவ்விடத்தும் குழைகள் தோன்றத் தழைத்து, நீங்கி வாடினார்போல - அத்தலைவரைப் பிரிந்து வாடுகின்ற மகளிர்போல, கண்ணீர்வார மெய்பசந்து - கண்ணீரொழுக உடல் பசந்து, மையல் நீடினார் அலர்போல் பூத்து நெருங்கின - காம மயக்கம் மிக்க மகளிரின் பழிச்சொல்போலப் பூக்கள் மலர்ந்து நெருங்கின. ஊடினார் உளம் வெம்பி அணிகளைக் களைதல்போல எனவும், கூடினார் உடல் தழையத் தழைத்தல்போல எனவும், நீங்கிவாடினார் விழிநீ ரொழுக மெய் பசலை யுறுதல்போல எனவும் உவமைகளை விரித்துரைத்துக் கொள்க. குழைவரத் தழைத்து - குழையாக வளரும்படி தழைகொண்டு, உடல் குழையப் பூரித்து, கண்ணீர் - கண்களினின்று பெருகு நீர், தேனாகிய நீர், பசந்து - பசுமைகொண்டு. பசலை பூத்து. அலர் - மலர், பழிச்சொல். இது பலவயிற் போலியுவமையணி. (14) விழைதரு காத லார்தா மெலிவுற மெலிந்து நெஞ்சங் குழைவுறக் குழைந்து நிற்குங் கோதிலாக் கற்பி னார்போல் மழையறுங் கோடை1 தீப்ப மரந்தலை வாட வாடித் தழைவுறத் தழைத்து நின்ற தழீஇயபைங் கொடிக ளெல்லாம். (இ-ள்.) விழைதரு காதலார் தாம் மெலிவுற மெலிந்து - தம்மால் விரும்பப்பட்ட காதலர் மெலியத் தாமும் மெலிந்து, நெஞ்சம் குழைவுறக் குழைந்து நிற்கும் - அவர் மனங் களிகூரத் தாமுங் களிகூர்ந்து நிற்கும், கோது இலா கற்பினார்போல் - குற்றமற்ற கற்புடைய மகளிர்போல, மழை அறும் கோடை தீப்ப - மழையற்ற கோடை தீத்தலால், மரம் தலைவாட - மரங்கள் தலைவாட, தழீஇய பைங்கொடிகள் எல்லாம் - அவற்றைச் சுற்றிய பசிய கொடிகள் யாவும், வாடி - தாமும் வாடி, தழைவுறத் தழைத்து நின்ற - அவைகள் தழைக்கத் தாமும் தழைத்து நின்றன. கற்புடைய மகளிரும் காதலரும் ஈருடற்கோருயிர்போல் அன்பால் இயைந்து நிற்பராகலின் அவருள் ஒருவரெய்தும் இன்ப துன்பங்கள் ஏனையர்க்கும் எய்துமென்க; “ காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின் றியாவையுமாம் ஏகத் தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில் தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பந் துன்பங்களே ” என்னும் திருக்கோவையார்ப்பாட்டு இங்கே சிந்திக்கற்பாலது. நின்ற: அன் சாரியை பெறாத பலவின்பால் முற்று. இது தொழிலுவமையணி. (15) சேட்டிகைத் தென்கா றள்ளத் தெண்மதுச் சிதறத் தும்பி நீட்டிசை முரலச் சாயா நின்றுபூங் கொம்ப ராடல் நாட்டியப் புலவ னாட்ட நகைமுகம் வெயர்வை சிந்தப் பாட்டிசைத் தாடாநின்ற பாவைமார் போன்ற வன்றே. (இ-ள்.) சேண் தென்திசைக் கால்தள்ள - நெடிய தென்றிசையினின்று வருந் தென்றற் காற்றுத் தள்ளுதலால், தெண் மதுச் சிதற - தெளிந்த தேன் துளிக்க, தும்பி நீட்டிசை முரல - வண்டுகள் நெட்டிசை பாட, சாயா நின்று ஆடல் பூங்கொம்பர் - ஒசிந்து ஆடும் பூங்கொம்புகள், நாட்டியப் புலவன் ஆட்ட - கூத்து வல்லோன் ஆட்டுவிக்க, நகைமுகம் வெயர்வை சிந்த - ஒளிபொருந்திய முகத்தினின்றும் வியர்வை சிதற, பாட்டு இசைத்து ஆடாநின்ற பாவைமார் போன்ற - பாட்டுப்பாடி ஆடாநின்ற நாடக மகளிரை ஒத்தன. திகை - திசை. கொம்பர் : இறுதிப்போலி. கொம்பர் ஆடல் பாவைமார் ஆடல் போன்றன என மாற்றித் தொழிலுவமை யாக்கலுமாம். (16) மலர்ந்தசெவ் வந்திப் போதும் வகுளமு முதிர்ந்து வாடி உலர்ந்துமொய்த் தளிதே னக்கக் கிடப்பன வுள்ள மிக்க குலந்தரு நல்லோர் செல்வங் குன்றினுந் தம்பா லில்லென் றலந்தவர்க் குயிரை மாறி யாயினுங் கொடுப்ப ரன்றோ. (இ-ள்.) மலர்ந்த செவ்வந்திப்போதும் வகுளமும் - விரிந்த செவ்வந்தி மலரும் மகிழம் பூவும், உதிர்ந்து வாடி உலர்ந்தும் - நிலத்தில் உதிர்ந்து வாடிப் புலர்ந்தும், அளிமொய்த்துத் தேன் நக்கக் கிடப்பன - வண்டுகள் மொய்த்துத் தேன் உண்ணக் கிடப்பனவாயின; உள்ளம் மிக்க - உள்ள மிகுதியையுடைய, குலம்தரு நல்லோர் - உயர் குடிப் பிறந்த நல்லோர்கள், செல்வம் குன்றினும் - செல்வஞ் சுருங்கிய விடத்தும், தம்பால் இல் என்று அலந்தவர்க்கு - தம்மிடம் வந்து இல்லை என்று கூறி வருந்தியவர்க்கு, உயிரை மாறியாயினும் கொடுப்பர் அன்றோ - தமதுயிரை மாறியாகிலும் கொடுப்பாரல்லவா? உள்ள மிகுதி - மனவெழுச்சி; சுருங்கா உள்ளமுமாம்; “ உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து வள்ளிய மென்னுஞ் செருக்கு ” என்னும் திருக்குறளும், “ வளன் வலியுறுக்கும் உளமிலாளர்” என்னும் புறப்பாட்டடியும் இங்கு நோக்கற் பாலன. பூக்கள் உலர்ந்து கிடந்தும் அளிதேன் நக்கக்கிடக்கின்றன என்னும் பொருளை நல்லோர் செல்வங் குன்றினும் அலந்தவர்க்கு உயிரை மாறியாயினும் கொடுப்பர் என்னும் பொருளாற் சாதித்தலின் இது வேற்றுப்பொருள் வைப்பணி. (17) நாறிய தண்ணந் தேமா நறுந்தளிர் கோதிக் கூவி ஊறிய காமப் பேட்டை யுருக்குவ குயின்மென் சேவல் வீறிய செங்கோல் வேந்தன் வெளிப்படத் தேயங் காவல் மாறிய வேந்தன் போல வொடுங்கின மயில்க ளெல்லாம். (இ-ள்.) மென்குயில் சேவல் - மெல்லிய ஆண்குயில்கள், நாறிய தண் அம் தேமா நறுந்தளிர் கோதி - தோற்றிய குளிர்ந்த அழகிய தேமாவின் நறிய தளிர்களைக்கோதி, காமம் ஊறிய பேட்டைக் கூவி உருக்குவ - காமமரும்பிய பேட்டினைக் கூவி உருக்குவன; வீறிய செங்கோல் வேந்தன் வெளிப்பட - பெருமிதமுடைய செல்கோலை யுடைய பெருவேந்தன் தோன்ற, தேயம் காவல் மாறிய வேந்தன் போல - நாடு காவல்மாறிய குறுநில மன்னன்போல, மயில்கள் எல்லாம் ஒடுங்கின - மயில்கள் யாவும் ஒடுங்கின. இளவேனிற்காலத்தில் மாமரம் தளிர்த்தலும், குயில்கள் அதன் மீ திருந்து கூவி மகிழ்தலும், மயில்கள் கூவா தொடுங்கலும் இயல்பு. நறுந்தளிர் எனப் பின்வருதலின் நாறிய என்பதற்குத் தோன்றிய என்றுரைக்க. இளவேனிலைச் செங்கோல் வேந்தனாகக் கொள்க. நாடு காவல் மாறி யொடுங்கிய குறுநில மன்னன் என விரித்துக்கொள்க. (18) பொங்கரி னுழைந்து வாவி புகுந்துபங் கயந்து ழாவிப் பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக் கொங்கலர் மணங்கூட் டுண்டு குளிர்ந்துமெல் லென்று தென்றல் அங்கங்கே கலைக டேரு மறிவன்போ லியங்கு மன்றே. (இ-ள்.) தென்றல் - தென்றற் காற்று, அங்கு அங்கே கலைகள் தேரும் அறிவன்போல் - பலவிடங்களிலுஞ் சென்று நூல்களை ஆராய்ந் தறியும் தறிவுடை மாணவன்போல, பொங்கரில் நூழைந்து - சோலையில் நுழைந்து, வாவி புகுந்து - தடாகத்திற் புகுந்து, பங்கயம் துழாவி - தாமரையை, அளாவி, பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவி - பசிய மணமுள்ள இருவாட்சியும் முல்லையும் மல்லிகையுமாகிய இவற்றின் பந்தரிலே தாவி, கொங்கு அலர் மணம் கூட்டுண்டு - மகரந்தத்தையுடைய மலர்களின் மணங்களைக் கவர்ந்து, குளிர்ந்து மெல்லென்று - குளிர்ந்து மெதுவாய், இயங்கும் - உலாவும். நன் மாணாக்கனொருவன் நல்லாசிரியர் பலருழையுஞ் சென்று அவர்கள்பால் நூற்பொருள் பலவும் உணர்ந்து நன்னடை வாய்ந்து சாந்த குணமுடையனாய் ஒழுகுதல் போலத் தென்றல் பலவிடங்களிலுஞ் சென்று தவழ்ந்து அங்கங்குள்ள குணங்களைக் கவர்ந்து தண்ணிதாய் மெத்தென்ற தன்மை வாய்ந்து உலாவும் எனத் தொழிலுவமங்கொள்க. “ அருடருங் கேள்வி யமையத் தேக்கப் பற்பல ஆசான் பாங்குசெல் பவர்போல் மூன்றுவகை யடுத்த தேன்றரு கொழுமலர் கொழுதிப் பாடுங் குணச்சுரும் பினங்காள்””” என்று கல்லாடங் கூறுவது சிந்திக்கற்பாலது. பந்தர் : ஈற்றுப்போலி. (19) தாமரை களாஞ்சி தாங்கத் தண்குயின் முழவ மேங்க மாமரு தமருங் கிள்ளை மங்கல மியம்பத் தும்பி காமர மிசைப்ப முள்வாய் கைதை1வா ளெடுப்ப வேனிற் கோமகன் மகுடஞ் சூடி யிருப்பதக் குளிர்பூஞ் சோலை. (இ-ள்.) தாமரை களாஞ்சி தாங்க - தாமரை களாஞ்சி தாங்கவும், தண் குயில் முழவம் ஏங்க - குளிர்ந்த குயில் முழவம் ஒலிக்கவும், மாமருது அமரும் கிள்ளை - பெரிய மருதமரத்தில் இருக்கும் கிளி, மங்கலம் இயம்ப - மங்கலங் கூறவும், தும்பி காமரம் இசைப்ப - வண்டுகள் இசைப்பாட்டுப் பாடவும், முள்வாய் கைதை வாள் எடுப்ப - முட்களை யுடைய தாழை வாளை ஏந்தவும், வேனில் கோமகன் மகுடம் சூடி இருப்பது - வேனிற்காலத்திற்குரிய மன்மதன் முடிசூடி வீற்றிருக்கப் பெறுவது, அக் குளிர் பூஞ்சோலை - அந்தத் தண்ணிய பூஞ்சோலை. களாஞ்சி - காளாஞ்சி; தாம்பூலமெடுக்குங் கலம். தாமரை, குயில், கிளி, வண்டு, தாழை என்பவற்றை முறையே காளாஞ்சி யேந்துவார், முழவொலிப்பார்; மங்கலங்கூறுவார், இசைபாடுவார், வாளெடுப்பார் ஆகவும், தாமரை மலர், குயிலொலி, கிளிமொழி, வண்டிசை, தாழை மடல் என்பவற்றை முறையே காளாஞ்சி, முழவு, மங்கல வாழ்த்து, இசைப்பாட்டு, வாள் ஆகவும் கொள்க. இங்கே கூறியவெல்லாம் ஓர் அரசற்கும் மன்மதனுக்கும் பொருந்துமாறு காண்க. வேனிற் கோமகன் என்பதற்கு வேனிலாகிய அரசன் என்றுரைப்பாருமுளர். “ தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கள் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்க மாதோ” என்னும் கம்பராமாயணப்பாட்டு இதனுடன் ஒருபுடை ஒத்து நோக்கற்பாலது. இச்செய்யுள் உருவகவுயர்வு நவிற்சி. (20) கலையினா னிறைந்த விந்து காந்தமண் டபத்துஞ்2 செய்த மலையினு மெழுது மாட மருங்கினு நெருங்கு சோலைத் தலையினுங் கமல வாவித் தடத்தினுந் தண்முத் தார முலையினு மன்றிக் கோடை முடிவிடங் காணார் மைந்தர்.3 (இ-ள்.) மைந்தர் - ஆடவர்கள், கலையினால் நிறைந்த இந்துகாந்த மண்டபத்தும் - கலைகளால் நிறைந்த சந்திரகாந்தக் கல்லாலாகிய மண்டபத்திலும், செய்த மலையினும் - செய்குன்றிலும், எழுதும் மாடமருங்கினும் - சித்திரம் வரைந்த மாடத்திடத்தும், நெருங்கு சோலைத்தலையினும் - நெருங்கிய சோலையினிடத்தும், கமலவாவித்தடத்தினும் - தாமரையையுடைய பொய்கையினிடத்தும், தண்முத்து ஆரம் முலையினும் - குளிர்ந்த முத்தாரமணிந்த மகளிர் கொங்கைகளிலும், அன்றி - அல்லாமல், கோடை முடிவு இடம் காணார் - வேனில் வெம்மையை ஆற்றும் இடம் வேறு காணார். கலை நிறைதல் இந்துவுக்கு அடை. இந்து காந்தம் - சந்திரனைக் கண்டு நீர் கக்கும் கல். எழுது மாடம் - சித்திர மண்டபம். சந்திர காந்த மண்டபம் முதலிய இடங்களில் மகளிர் முலைத்தடத்தில் என்பது கருத்தாகக் கொள்க. (21) நிலந்தரு திருவி னான்ற னிழன்மணி 1 மாடக் கூடல் வலந்தரு தடந்தோண் மைந்தர் வானமும் வீழும் போக நலந்தரு மகளி ரோடு நாகநா டவர்தஞ் செல்வப் பொலந்தரு வனைய காட்சிப் பூம்பொழி னுகர்வான் போவார். (இ-ள்.) நிலம்தரு திருவினான்தன் - மாற்றாரது நிலத்தைத்தரும் போர்த்திருவினையுடைய வங்கிய சூடாமணி மாறனது, நிழல் மணி மாடக்கூடல் - ஒளியினையுடைய மணிகள் அழுத்திய மாடங்கள் நிறைந்த கூடலிலுள்ள, வலம் தரு தடம் தோள் மைந்தர் - வெற்றியைத் தரும் பெரிய தோள்களையுடைய காளையர், வானமும் வீழும் போக நலம் தரு மகளிரோடு - விண்ணவரும் விரும்பும் இன்ப நலத்தை அளிக்கும் மாதராருடன், நாகநாடவர்தம் செல்வப் பொலம்தரு அனைய காட்சி - அவ்வான நாடரின் செல்வமிக்க பொன் மயமாகிய கற்பகச் சோலைபோன்ற தோற்றத்தையுடைய, பூம்பொழில் நுகர்வான் போவார் - பூஞ்சோலையின் இன்பத்தை நுகர்தற்குப் போவாராயினர். “ நிலந்தரு திருவிற் பாண்டியன் ” என்னும் தொல்காப்பியப் பாயிரவடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய பொருள் காணற்பாலது; நிலந்தரு திருவினான்ற எனப்பாடமோதி மரக்கலத்தாலுமன்றி, நிலவுலகு தருஞ்செல்வத்தால் நிறைந்த என்று பொருளுரைப்பாருமுளர். மாடக் கூடல் - நான்மாடக்கூடல் என்பது முதல் குறைந்து நின்றது என்றுமாம். வீழும் - விரும்பும். நாகநாடு - விண்ணுலகம். நுகர்வான் : வினையெச்சம். (22) ('bcடி வேறு) மாத்தாண் மதமா னெருத்தின் மடங்க லெனச்செல் வாரும் புத்தா ரொலிவாம் பரிமேற் புகர்மா வெனப்போ வாரும் பாத்தார்1 பரிதி யெனவாம் பரித்தே ருகைத்தூர் வாருந் தேத்தாருளர்வண் டலம்பச் சிலம்பி னடக்கின் றாரும். (இ-ள்.) மாத்தாள் மதமான் எருத்தில் - பெரிய தாளையும் மத மயக்கத்தையுமுடைய யானையின் பிடரில், மடங்கல் எனச் செல்வாரும் - சிங்கத்தைப்போலச் செல்வாரும், பூத்தார் ஒலிவாம் பரிமேல் - அழகிய கிண்கிணி மாலை ஒலிக்கும் தாவுகின்ற குதிரை மேல், புகர்மா எனப் போவாரும் - புள்ளியையுடைய முகத்தை யுடைய யானையைப் போலப் போவாரும், பாத்து ஆர் பரிதிஎன - (பன்னிரண்டாகப்) பகுக்கப்பட்டு நிறைந்த சூரியர்களைப்போல, வாம்பரித்தேர் உகைத்து ஊர்வாரும் - தாவுங்குதிரை பூட்டிய தேரினைத் தூண்டி நடத்துவாரும், தேம்தார் உளர் வண்டு அலம்பச் சிலம்பின் நடக்கின்றாரும் - தேன் நிறைந்த் மாலையிலே கிண்டு கின்ற வண்டுகள் ஒலிக்க மலைபோல நடந்து செல்லாரும். யானைமீது சிங்கம் செல்வது போலவும், குதிரைமீது யானை போவது போலவும், மலை நடப்பது போலவும் என இல்பொருளுவமையாக்கலுமாம். ஆதித்தர் பன்னிருவராகலின், ‘பாத்தார்’ என்றார். தேன் தேம் எனத் திரிந்தது. செல்வாரும் போவாரும் ஊர்வாரும் நடக்கின்றாரும் ஆகிய ஆடவரும் என 25ஆம் செய்யுளோடு இயைக்க. (23) நீலப் பிடிமேற் பிடிபோ னெறிக்கொள் வாருந் தரள மாலைச் சிவிகை மிசைவெண் மலரா ளெனச்செல் வாரும் ஆலைக் கரும்பன் றுணைபோ லணித்தார்ப் பரியூர் வாருங் கோலத் தடக்கை பற்றிக் கொழுந ருடன்போ வாரும். (இ-ள்.) நீலப்பிடிமேல் பிடிபோல் நெறிக்கொள்வாரும் - கரிய பெண்யானைமீது பெண்யானைபோலச் செல்வாரும், தரள மாலைச் சிவிகைமிசை வெண்மலராள் எனச் செல்வாரும் - முத்துமாலைகள் தூக்கிய பல்லக்கின்மேல் வெண்டாமரை யாளாகிய கலைமகள் போலச் செல்வாரும், ஆலைக்கரும்பன் துணைபோல் - ஆலையில் அமையுங் கருப்பு வில்லையுடைய மதவேளின் வாழ்க்கைத் துணையாகிய இரதிதேவியைப் போல, அணித்தார்ப் பரிஊர்வாரும் - அழகிய கிண்கிணி மாலையை யணிந்த குதிரைமேற் செல்வாரும், கோலத் தடக்கை பற்றி - (கொழுநர்களின்) அழகிய பெரிய கையைப் பிடித்து, கொழுநருடன் போவாரும் - அவருடன் நடந்து செல்வாரும். செறிக்கொள்வாரும் செல்வாரும் ஊர்வாரும் போவாரும் ஆகிய படையன்ன மகளிரும் என வருஞ் செய்யுளோடு இயைக்க. (24) கருப்புக் கமழ்தேங் கண்ணித் தொடுபைங் கழலா டவருங் கருப்புச் சிலைமன் னவனாற் கருவிப் படையன் னவரும் விருப்புற் றெறிநீர் வையை வெள்ளைத் தரளந் தெள்ளிப் பொருப்பிற் குவிக்கும் புளினம் புறஞ்சூழ் சோலை புகுவார். (இ-ள்.) சுரும்பு கமழ்தேம் கண்ணி - வண்டு மொய்த்த மணங் கமழும் தேன் நிறைந்த மாலையை யணிந்த, பைங்குழல் தொடு ஆடவரும் - பசிய வீரக்கழல் அணிந்த ஆடவர்களும், கருப்புச்சிலை மன்னவன் - கரும்பு வில்லையுடைய மன்மதனது, நால் கருவிப்படை அன்ன வரும் - நான்கு வகைப்பட்ட படைகளைப் போன்ற மகளிரும், விருப்புற்று - விரும்பி, எறிநீர் வையை - எற்றுகின்ற நீர் நிறைந்த வையையாறு, தரளம் தெள்ளி வெள்ளைப் பொருப்பில் குவிக்கும் - முத்துக்களைக் கொழித்து வெள்ளை மலைபோலக் குவிக்கின்ற, புளினம் புறம் சூழ்சோலை புகுவார் - மணற்குன்றுகள் புறஞ்சூழ்ந்த சோலைகளிற் புகுவாராயினர். சுரும்பு, கரும்பு என்பன வலித்தல் பெற்றன; கருவிப் படை கருவியாகிய படை : இருபெயரொட்டு. (25) கூந்தற் பிடியும் பரியு மூர்வார் கொழுநர் தடந்தோள் ஏந்தச் சயமா தென்னத் தழுவா விழிந்து பொழில்வாய்ப் பூந்தொத் தலர்பொற் கொடிதா துகுமா றென்னப் புனைந்த சாந்தக் கலவை யுகப்போய் வனமங் கையர்போற் சார்ந்தார். (இ-ள்.) கூந்தல் பிடியும் பரியும் ஊர்வார் - புற மயிரையுடைய பெண் யானைகளிலும் குதிரைகளிலும் ஏறிச் சென்ற மகளிர், கொழுநர் தடம் தோள் ஏந்த - தத்தம் கொழுநர்கள் பெரிய தோளால் ஏந்த, சயமாது என்னத் தழுவா இழிந்து - வெற்றிமகளைப் போலத் தழுவி இறங்கி, பொழில்வாய் - சோலையினிடத்து, பூந்தொத்து அலர் பொற்கொடி தாது உகுமாறு என்ன - பூங்கொத்துக்கள் அலர்ந்த பொன்போன்ற கொடியினின்றும் மகரந்தஞ் சிந்துதல் போல, புனைந்த சாந்தக் கலவை உக - அணிந்த கலவைச் சந்தனம் உலர்ந்து சிந்த, போய் - சென்று, வனமங்கை யர்போல் சார்ந்தார் - வனத்தில் வாழுந் தெய்வ மகளிரைப்போல அடைந்தனர். கொழுநரின் தோளைத் தழுவினமையால் அத்தோள்மீது இருக்கும் விசய இலக்குமி போல் விளங்கின ரென்க. ஊர்வார் தழுவா இழிந்து உகப்போய்ச் சார்ந்தார் என வினை முடிக்க. (26) ஏமா சலமென் முலையார் நடையோ வியமே யென்னப் பூமா தவிசேர் வாரும் புன்னை நிழல்சேர் வாருந் தேமா நிழல்சேர் வாருஞ் செருந்தி நிழல்சேர் வாருங் காமா யுதசா லைகள்போற் கைதை நிழல்சேர் வாரும். (இ-ள்.) ஏம அசலம் என் முலையார் - பொன்மலையென்று கூறத்தக்க கொங்கையையுடைய மகளிர், நடை ஓவியம் என்ன பூ மாதவி சேர்வாரும் - நடக்கும் பதுமைபோலச் சென்று பூக்கள் நிறைந்த குருக்கத்தி நிழலை அடைவாரும், புன்னை நிழல் சேர்வாரும் - புன்னைமரத்தின் நிழலை அடைவாரும், தேமா நிழல் சேர்வாரும் - தேமாவின் நிழலை அடைவாரும், செருந்திநிழல் சேர்வாரும் - செருந்தியின் நிழலை அடைவாரும், காம ஆயுத சாலைகள்போல் - மதவேளின் படைச்சாலைகள் போல் (மலர்ந்த), கைதை நிழல் சேர்வாரும் - தாழையின் நிழலை அடைவாரும் (ஆயினர்). ஏமாசலம், காமாயுதம் என்பன வடமொழித் தீர்க்கசந்தி. போல் என இயல்பாகப் பாடமோதி, போலுங் கைதை எனப் பொருளுரைத்தல் சிறப்பு. ஆயினர் என ஒருசொல் வருவித்து முடிக்க. (27) கோடும் பிறைவா ணுதலார் குழலைக் கருவிக் காரென் றாடுந் தோகை யவர்கண் ணோக்கிக் கணையென் றஞ்சி ஓடுங் கொடியி னன்னா ருருமாந் தளிரென் றயில்வான் நாடுங் குயிலன் னவர்பண் ணிசைகேட் டொதுங்கி நாணும். (இ-ள்.) கோடும்பிறைவாள் நுதலார் குழலை - வளைந்த பிறை போன்ற ஒள்ளிய நெற்றியையுடைய மகளிரது கூந்தலை, கருவிக்கார் என்று ஆடும் தோகை - மின்னுமுதலிய தொகுதியையுடைய முகில் என்று கருதி ஆடுகின்ற மயில்கள், அவர்கண் நோக்கிக் கணை என்று அஞ்சி ஓடும் - அவர் கண்களைக் கண்டு அம்பென்று கருதி அஞ்சி ஓடா நிற்கும்; கொடியின் அன்னார் உருமாந்தளிர் என்று அயில் வான் நாடும் குயில் - கொடிபோன்ற அம்மகளிரின் உருவத்தை மாந்தளிரென்று கருதிக் கோதி உண்ணச் செல்லுங் குயில்கள், அன்னவர்பண் இசை கேட்டு ஒதுங்கி நாணும் - அவர் பாடும் பண்ணொலியைக் கேட்டு நாணிச் செல்லாநிற்கும். கருவி - தொகுதி. களிப்பால் ஆடும் என்க. கொடியின் : சாரியை நிற்க உருபு தொக்கது. அயில்வான் : வினையெச்சம். நாணி ஒதுங்கும் என மாறுக. நாணுதல் தம் அறியாமையை உணர்ந்து வெள்குதலும், இசைக்குத் தோற்று நாணலும் ஆம். கூந்தலை மேகம் எனவும் கண்ணை அம்பெனவும் மயிலும், உருவை மாந்தளிரெனக் குயிலும் மயங்கினவெனக் கூறுதலால் இது மயக்கவணி. (28) நீடுந் தரங்க மிரங்கு நிறைநீர் நிலையே யன்றிப் பாடுஞ் சுரும்புண் கழுநீர் பைந்தாட் குமுதம் பதுமங் கோடும் பூத்த வென்னக் கொடியே ரிடையார் குழையுந் தோடுங் கிடந்த வதனத் தொகையாற் பொலிவ சோலை. (இ-ள்.) நீடும் தரங்கம் இரங்கும் நிறை நீர்நிலையே அன்றி - நீண்ட அலைகள் ஒலிக்கும் நிறைந்த ஓடைகளே அல்லாமல், பாடும் சுரும்பு உண்கழுநீர் பைந்தாள் குமுதம் பதுமம் - இசை பாடும் வண்டுகள் மது உண்ணும் குவளையையும் பசிய தாளையுடைய ஆம்பலையும் தாமரையையும், கோடும் பூத்த என்ன - பூங்கொம்புகளும் பூத்தனபோல, கொடி ஏர் இடையார் குழையும் தோடும் கிடந்த வதனத் தொகையால் - கொடிபோன்ற அழகிய இடையையுடைய மகளிரின் குண்டலமும் தோடும் பொருந்திய முகங்களின் தொகுதியால், சோலை பொலிவ - சோலைகள் விளங்காநின்றன. நீரிற் பூத்தற்குரிய குவளை ஆம்பல் தாமரை என்பன கோட்டிற் பூத்தாற் போல மகளிருடைய கண் வாய் முகம் என்பன விளங்கினவென்க. குவளை முதலியவற்றைக் கோடு பூத்தவென்ன என்றது இல் பொருளுவமை. (29) பிடிக ளென்ன நடந்தா ருடன்போய்க் கொழுநர் பெருந்தண் கொடிகண் மிடைந்த வில்லி லியக்கர் போலக் குறுகிக் கடிகொள் பனிநீர் தெளித்து வேடை தணித்துங் கன்றும் அடிகள் பிடித்துஞ் சேடி யவர்கைக் குதவி யாவார். (இ-ள்.) கொழுநர் - கணவர்கள், பிடிகள் என்ன நடந்தாருடன் போய் - பெண் யானைகள் போல நடந்த மகளிருடன் சென்று, பெருந்தண் கொடிகள் மிடைந்த இல்லில் - பெரிய குளிர்ந்த கொடிகள் மிடைந்த இல்லின்கண், இயக்கர் போலக் குறுகி - இயக்கர்கள் போலச் சார்ந்து, கடி கொள் பனிநீர் தெளித்து வெம்மையை ஆற்றியும், கன்றும் அடிகள் பிடித்தும் - நடத்தலாற்கன்றிய அவர்கள் அடிகளைப் பிடித்தும், சேடியர் கைக்கு உதவியாவார் - தோழியர்களின் கைகளுக்கு உதவி புரிவாராவர். கொடிகள் மிடைந்த இல் - இல்போன்று கொடிமிடைந்த இடம்; லதாக் கிருஹம். சேடியர் செய்யும் பணியைத் தாம் செய்தலால் அவர் கைக்குதவியாவார் என்றனர். (30) மைவார் தடங்கண் மடவார் வளைப்பார் கொம்பின் மலரைக் கொய்வார் குமிழ்மோந் துயிர்ப்பார் குழையுஞ் செவியுங் குழலும் பெய்வார் மகிழ்ச்சி செய்வார் பேரா மையல் கூர எய்வார் கணைபோற் றைப்பக் கொழுநர் மார்பத் தெறிவார். (இ-ள்.) மைவார் தடம் கண்மடவார் - மைதீட்டிய நீண்டபெரிய கண்களையுடைய மகளிர், வளைப்பார் கொம்பின் மலரைக் கொய்வார் - கொம்புகளை வளைத்து அவற்றின் மலர்களைக் கொய்து, குமிழ் மோந்து உயிர்ப்பார் - குமிழம்பூப்போன்ற மூக்கில் மோந்து உயிர்த்து, குழையும் செவியும் குழலும் பெய்வார் - குழைகளிலும் காதுகளிலும் கூந்தலிலும் அணிந்து, மகிழ்ச்சி செய்வார் - (நாயகர்களுக்கு) மகிழ்ச்சியை விளைப்பார்கள்; பேரா மையல் கூர - நீங்காத காமமயக்கம் மிக, எய்வார் கணை போல் தைப்ப - (மன்மதன்) எய்யும் நீண்ட கணைபோலப் பாயுமாறு, கொழுநர் மார்பத்து எறிவார் - அவற்றைக் கணவர் மார்பில் எறிவார்கள். வளைப்பார் முதலியவற்றை எச்சமாக்காது தனித்தனி முடித்தலுமாம். குமிழ் - குமிழம் பூப்போலும் மூக்கு. (31) முத்தேர் நகையார் வளைப்ப முகைவிண் டலர்பூங் கொம்பர்ப் புத்தேள் வண்டும் பெடையும் புலம்பிக் குழலிற் புகுந்து தெத்தே யெனப்பாண் செய்து தீந்தே னருந்துந் துணையோ டொத்தே ழிசைபா டிக்க ளுண்ணும் பாண ரொத்தே. (இ-ள்.) முத்து ஏர் நகையார் வளைப்ப - முத்துப்போன்ற அழகிய பற்களையுடைய மகளிர் கொம்புகளை வளைக்க, முகைவிண்டு அலர் பூங்கொம்பர் - அரும்புகள் நெகிழ்ந்து மலர்ந்த அப்பூங் கொம்புகளிலுள்ள, புத்தேள் வண்டும் - புதிய ஆண் வண்டுகளும், பெடையும் - பெண் வண்டுகளும், புலம்பி - ஒலித்து, குழலில் புகுந்து - அவர் கூந்தலிற் புகுந்து, தெத்தே எனப் பாண்செய்து - தெத்தே என்று இசைபாடி, துணையோடு ஒத்து ஏழ் இசைபாடி - விறலியோடு சேர்ந்து ஏழிசைகளையும் பாடி, கள் உண்ணும் பாணர் ஒத்து - கள்ளினை அருந்தும் பாணர் போல, தீந்தேன் அருந்தும் - இனிய தேனைப் பருகும். கொம்பர் : ஈற்றுப்போலி; வருஞ்செய்யுளிலும் இது. புத்தேள்- புதுமை என்னும் பொருட்டு. தெத்தே, அனுகரணம். துணையுடன் ஏழிசைபாடி அதற்குப் பரிசிலாக் கள்ளினைப் பெற்றுண்ணும் பாணர் போல வண்டு பெடையுடன் பாண் செய்து தேனருந்தும் என்க. இது பரிவருத்தனையணி. (32) (வேறு) இம்பர்வீ டளிக்குந் தெய்வ மகளிரே யென்பார் கூற்றம் வம்பல மெய்யே போலும் வளைக்கையார் வளைப்பத் தாழ்ந்து கம்பமுற் றடிப்பூச் சிந்தி மலர்முகங் கண்ணீர் சோரக் கொம்பரும் பணிந்த வென்றா1 லுலகியல் கூறற் பாற்றோ. (இ-ள்.) இம்பர் வீடு அளிக்கும் தெய்வம் - இந்நிலவுலகில் வீடுபேறு அளிக்கும் தெய்வம், மகளிரே என்பார் கூற்றம் - மகளிரே என்றுரைப் பாரது உரை, வம்பு அலை மெய்யே போலும் - பொய்யல்ல மெய்யே போலும், வளைக்கையார் வளைப்பத் தாழ்ந்து - வளையலணிந்த கையை யுடைய அம்மகளிர் வளைக்க வணங்கி, கம்ப முற்று - நடுங்கி, அடிப்பூச்சிந்தி - அவரடிகளில் மலர்களைச் சிதறி, மலர் முகம் கண்ணீர் வார - மலர் முகத்தினின்றும் கண்ணீரொழுக, கொம்பரும் பணிந்த என்றால் - கொம்புகளும் வழிபட்டன என்னின், உலகு இயல் கூறல் பாற்றோ - உலகின் தன்மை கூறும் பகுதியையுடையதோ (அன்று என்றபடி.) மகளிரே தெய்வம் என்பார் உலகாயதர்; “ ஊடுவ துணர்வ துற்ற கலவிமங் கையரை யுள்கி வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின் கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை யேயாய் நீடுவ தின்ப முத்தி யித்தினின் றார்கண் முத்தர்” என உலகாயதன் கூற்றாகச் சிவஞான சித்தியார்ப் பரபக்கத்துள் ஓதுதல் காண்க. மகளிர் வளைப்ப இயல்பாக நடுங்கி மலர்சிந்தித் தேன் சொரியும் கொம்பினை வேட்கையால் உடல் கம்பித்து அவரருளைப் பெற வேண்டி அடிகளில் மலர் தூவிக் கண்ணீருடன் வணங்குவனவாகக் கற்பித்தார். மலர் முகம் - மலரினிடம், மலர் போலும் முகம். கண்ணீர் - கள்ளாகிய நீர், விழி நீர். உலகியல் என்றது ஆடவர் ஒழுகுந்தன்மை. மெய்யே போலும் என்றது தற்குறிப்பு. (33) மைக்கணா ளொருத்தி யெட்டா நிமிர்கொம்பை வளைக்குந் தோறுங் கைக்குநேர் படாமை வாடுங் கடிமலர்க் கொடிபோ னிற்பத் தைக்கும்பூங் கணைவே ளன்னா னொருமகன் றலைப்பட் டென்னை எய்க்கின்றாய் தோண்மே லேறிப் பறியென வேந்தி நின்றான். (இ-ள்.) மைக்கணாள் ஒருத்தி - மைதீட்டிய கண்ணையுடைய ஒரு பெண், நிமிர் கொம்பை எட்டா வளைக்குந் தோறும் - உயர்ந்த கொம்பொன்றை எட்டி வளைக்குந்தோறும், கைக்கு நேர்படாமை- கைக்கு எட்டாமையால், வாடும் கடிமலர்க்கொடி போல் நிற்ப - வாட்டமுற்ற மணமுள்ள மலர்க்கொடி போலச் சோர்ந்து நிற்க, தைக்கும் பூங்கணைவேள் அன்னான் ஒரு மகன் தலைப்பட்டு - பாய்ந்துருவும் மலர்க்கணையையுடைய மன்மதன் போன்றானாகிய ஓர் ஆண்மகன் எதிர்ப்பட்டு, என்னை எய்க்கின்றாய் - என்னை வாடுகின்றாய், தோள்மேல் ஏறிப் பறி என - எனது தோளின் மேல் ஏறி மலர்களைக் கொய்வாயாக வென்று கூறி, ஏந்தி நின்றான் - அவளைத் தாங்கி நின்றான். நேர்படாமையின் என உருபு விரிக்க. யானிருக்க நீ இளைப்ப தென்னை என்றானென்க. இது கலவியைக் குறிப்பாலுணர்த்தலின் உதாரம் என்னும் குணவணியாகும். (34) தையலா ளொருத்தி யெட்டா மலர்க்கொம்பைத் தளிர்க்கை நீட்டி ஐயநுண் மருங்கு னோவ வருந்தலு மாற்றாக் கேள்வன் ஒய்யென விதுவு மென்னை யூடிய மகளி ரேயோ கொய்யென வளைத்து நின்றான் கண்முத்தங் கொழிப்ப நின்றாள். (இ-ள்.) தையலாள் ஒருத்தி - ஒரு பெண், எட்டாமலர்க்கொம்பை - எட்டாத பூங்கொம்பொன்றை வளைக்க, தளிர்க்கை நீட்டி - தளிர் போன்ற தனது கையை நீட்டி, ஐயம் நுண்மருங்குல் நோவ வருந்தலும் (உண்டோ இல்லையோ என்னும்) ஐயம் விளைக்கும் நுண்ணிய இடை வருந்த வருந்தலும், ஆற்றாக்கேள்வன் - அதனைப் பொறாத அவள் கொழுநன், ஒய்யென - விரைந்து, இதுவும் என்னை ஊடிய மகளிரேயோ - என்னை இக்கொம்பும் பிணங்கிய மாதரேயோ, கொய் என வளைத்து நின்றான் - பறிப்பாய் என்று கூறி அதனை வளைத்து நின்றனன்; கண் முத்தம் கொழிப்ப நின்றாள் - அவள் கண்களில் முத்துப்போல நீர் துளிக்க நின்றனள். வளைக்க என ஒரு சொல் வருவிக்க. ஒய்யென : விரைவுக் குறிப்பு. ஓய்யென வளைத்து நின்றான் என இயைக்க. கைக்கு அகப்படாது விலகி நிற்றலால் ஊடிய மகளிர் போலும் எனத் தலைவன் கூறிய தொடர்க்கு என்னுடன் ஊடிய மகளிர் போலும் எனக் கூறினானாகப் பொருள் கொண்டு, அவன் பரத்தையருடன் இன்பம் நுகர்ந்தானெனக் கருதிப் புலந்தழுதாள் என்க. இது தூரகாரிய வேதுவின்பாற்படும். (35) மைக்குழ லொருத்தி காதில் வட்டப்பொன் னோலை யூடே திக்கய மனையான் கொய்த செருந்திப்பூச் செருகி நோக்கி இக்குழை யழகி தென்றா னிடுவெங்கைக்11 கிடுதி யென்னா அக்குழை யோடும் வீசி யன்பனுக் கலக்கண் செய்தாள். (இ-ள்.) மைக்குழல் ஒருத்தி காதில் - கரிய கூந்தலை யுடைய ஒரு பெண்ணின் காதில், வட்டப்பொன் ஓலையூடு - வட்டமாகிய பொன்னாற் செய்த ஓலை யூடே, திக்கயம் அனையான் கொய்த செருந்திப்பூச்செருகி - திக்கு யானை போன்ற ஒருவன் தான் பறித்த செருந்தி மலரைச் செருகி, நோக்கி - அதனைப் பார்த்து, இக்குழை அழகிது என்றான் - இந்தக் குழையானது அழகாயுள்ளது எனக் கூறினான், எங்கைக்கு இடு இடுதி என்னா - எம் தங்கைக்கு, இடுவாய் இடுவாய் என்று கூறி, அக்குழையோடும் வீசி - அந்தக் காதணியோடு மலரையும் எறிந்து, அன்பனுக்கு அலக்கண் செய்தாள் - (அவள்) அந்த அன்பனுக்குத் துன்பம் விளைத்தாள். தலைவன் ஆர்வ மிகுதியால் மலரைச் செருகி அழகிது என்று பாராட்டா நிற்க, அவன் தன்னால் விரும்பப்பட்ட பிறமகளிர்க்கு இக்கோலத்தைக் காட்டுதற் பொருட்டு இங்ஙனஞ் செய்தான் எனத்தலைவி உட்கொண்டு பிணங்கினாள் என்க; “ கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருத்தியைக் காட்டிய சூடினீ ரென்று” என்னுங் குறள் இங்கு நோக்கற்பாலது. முதற்கண் ஊட்டியிருந்த தலைவியது ஊடலைத் தீர்த்தற்கு மலர் கொணர்ந்து செருகினான் என்றும், பரத்தையர்க்கு ஒப்பனை செய்த பயிற்சியால் இங்ஙனம் மலர் செருகினானெனக் கருதினள் என்றும் கோடலுமாம். திக் என்னும் வடசொல் திரியாது நின்றது. எங்கை என்றது பரத்தையை. இடு இடுதி என வெகுளியால் இருகாற் கூறினாள். (36) மயிலிளம் பெடையன் னாளோர் மாதர்மாங் குடம்பை செல்லுங் குயிலிளம் பெடைதன் னாவிச் சேவலைக் கூவ நோக்கி அயிலிளங் களிறன் னானைக் கடைக்கணித் தளியுந் தேனும் பயிலிளஞ் சோலை மாடோர் மாதவிப் பந்தர் சேர்ந்தாள். (இ-ள்.) இளம்பெடை மயில் அன்னாள் ஓர் மாதர் - இளமை பொருந்திய பெண் மயில் போல்வாளாகிய ஒரு பெண், மாங்குடம்பை செல்லும் இளங்குயிற் பெடை - மாமரத்திலுள்ள தனது கூட்டின் கட்செல்லும் இளமையுடைய பெண் குயில், தன் ஆவிச்சேவலைக் கூவ - தன் உயிர்போன்ற ஆண்குயிலைக் கூவி அழைக்க, நோக்கி - அதனைக் கண்டு, அயில் இளங்களிறு அன்னானை - வேற்படை ஏந்திய மழயானை - போன்ற தன் காதலனை, கடைக்கணித்து - கடைக்கண்ணால் நோக்கி, அளியும் தேனும் பயில் இளஞ்சோலை மாடு -ஆண் வண்டும் பெண் வண்டும் பயிலும் இளமரக்காவின் மருங்கு, ஓர் மாதவிப் பந்தர் சேர்ந்தாள் - ஒரு குருக்கத்திப் பந்தரை அடைந்தனள். குயிற்பேடை சேவலைக் கூவிக் குடம்பை சென்றதனை நோக்கிய வளவில் காதலனைக் கூடும் வேட்கை விஞ்சினமையின் தலைவற்குக் குறிப்பா னுணர்த்தி மாதவிப்பந்த ரெய்தினாளென்க. கடைக்கணித்தல் - கடைக்கண்ணோக்கால் கலவிக் குறிப்புணர்த்தல். நாணம் மகளிர்க்கு இயல்பாய குணம் ஆகலின் வாயாற் கூறாளாயினாள். தன் ஆவி : ஆறாம் வேற்றுமை ஒற்றுமைக் கிழமைப் பொருளில் வந்தது. கடைக்கணித்து : பெயரடியாகப் பிறந்த இறந்தகால வினையெச்சம். பந்தர் : போலி. (37) பாசிழை யொருத்தி யாற்றாப் புலவியாள் பைந்தா ரான்முன் பூசகில் வாசங் காலிற் போக்கியும் புனைபூண் காஞ்சி ஓசையைச் செவியி லுய்த்துங் கலவியினுருவந் தீட்டுந் தூசினை யுடுத்தும் போர்த்துந் தூதுவிட் டவள்போ னின்றாள். (இ-ள்.) பாசிழை ஒருத்தி - பசிய அணிகளை யணிந்த ஒரு பெண், ஆற்றாப் புலவியாள் - பொறாத புலவியையுடையவளாய், பைந்தாரான் முன் - பசிய விலையை யணிந்த தலைவன் முன், பூசு அகில் வாசம் காலில், போக்கியும் - பூசிய அகிலின் மணத்தைக் காற்றின் வழிச் செலுத்தியும், புனைபூண் காஞ்சி ஓசையை - இடையில் அணிந்த காஞ்சி யென்னும் அணியின் ஒலியை. செவியில் உய்த்தும் - அவன் காதிற் புகச் செய்தும், கலவியின் உருவம் தீட்டும் தூசினை உடுத்தும் போர்த்தும் - கலவியின் வடிவங்களை எழுதிய ஆடையை உடுத்தும் போர்த்தும், தூதுவிட்டவள் போல் நின்றாள்- தூதனுப்பியவள்போல நின்றனள். பசுமை என்பதன் ஈறுகெட்டு முதல் நீண்டது. ஆற்றாப்புலவியாள் - தலைவனுடன் ஊடிநின்றவள் பின் அவ்வூடல் நீட்டிக்கப்பொறாதவளாய். காஞ்சி - இடையிலணியும் அணிவிசேடம்; எண்கோவையுடையது. கலவியினுருவம் - ‘பற்குறி நகக்குறிகள் பாணி கொடு தட்டல், நற்கமிழ்து துய்த்தல் களி நன்கெழ அணைத்தல்’ முதலியன. இச்செய்யுள் உதாரம் என்னும் குணவணி; தொழில் நுட்பமும் ஆம். (38) வாய்ந்தநாண் மலர்கொய் தீவான் மெய்யிலம் மலர்த்தேந் தாது சாந்தமான் மதம்போற் சிந்திக் கிடப்பவோர் தையல் யாரைத்1 தோய்ந்தசாந் தென்றா ளுள்ளத் துன்னையுஞ் சுமந்து கொய்த ஆய்ந்தசண் பகத்தா தென்றா னெய்சொரி யழலி னின்றாள். (இ-ள்.) ஓர் தையல் - ஒரு பெண்ணானவள், வாய்ந்த நாள்மலர் கொய்து ஈவான் மெய்யில் - மணம் வாய்ந்த புதிய மலரைப் பறித்துக் கொடுக்குந் தலைவன் உடலில், அத்தேன் மலர்த்தாது - அத்தேன் நிறைந்த மலரின் மகரந்தம், சாந்தம்மான்மதம் போல் சிந்திக் கிடப்ப- சந்தனத்தோடு கலந்த கத்தூரி போலச் சிந்திக் கிடக்க (அதனைக் கண்டு), யாரைத் தோய்ந்த சாந்து என்றாள் - இஃது எந்த மாதரைக் கூடினமையா லமைந்த சாந்து என்றாள்; உள்ளத்து உன்னையும் சுமந்து கொய்த - (அவன்) உள்ளத்தின்கண் உன்னையுந் தாங்கிக்கொய்த, ஆய்ந்த சண்பகத்தாது என்றான் - ஆராய்ந்த சண்பக மலரின் மகரந்தம் என்று கூறினான்; நெய்சொரி அழலின் நின்றாள் - (அது கேட்டலும்) நெய்சொரியப்பட்ட நெருப்பைப் போலச் சினமூண்டு நின்றாள். தோய்ந்த என்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு. தலைவியின் பொருட்டே மலர் கொய்தலானும், சண்பக மலரின் நிறம் தலைவியின் மேனியையும் அதன் மணம் அவள் மணத்தையும் காட்டி நிற்றலானும் தலைவியை அகத்தே நினைத்த வண்ணமாக நின்று மலர் கொய்தமையை ‘உள்ளத்துன்னையுஞ் சுமந்து கொய்த’ எனத் தலைவன் கூறினான்; நான் தனித்தன்றி நீயும் உடனிருக்க என்பது தோன்ற இங்ஙனம் கூறினான் என்க. இங்ஙனமாய எச்சவும்மையைப் பிறமகளிரையன்றி உன்னையும் சுமந்து என்னும் பொருட்டாகக் கொண்டு தலைவி வெகுண்டு நின்றாள் என்க. (39) பிணியவிழ் கோதை யாளோர் பேதைதன் பதிதன் னூடல் தணியவந் தடியில் வீழத் தன்னிழ லனையான் சென்னி மணியிடைக் கண்டு கங்கை மணாளனை யொப்பீ ரெம்மைப் பணிவதென் னென்று நக்குப் பரிவுமேற் பரிவு செய்தாள். (இ-ள்.) பிணி அவிழ்கோதையாள் ஓர் பேதை - கட்டு அவிழ்ந்த மலர் மாலையை யணிந்தாளாகிய ஒரு பெண், தன் பதி தன் ஊடல் தணிய வந்து அடியில் வீழ - தன் நாயகன் தன் ஊடல் தணியுமாறு வந்து காலில் வீழ்ந்து வணங்க, தன் நிழல் அனையான் சென்னிமணி இடைக்கண்டு - தனது நிழலை அத்தலைவன் முடியிலுள்ள மணியின்கட் கண்டு, கங்கை மணாளனை ஒப்பீர் - (முடியில் ஒருத்தியை ஒளித்து வைத்திருப்பதால்) கங்கையின் நாயகனாகிய சிவபிரானைப்போல்வீரே, எம்மைப் பணிவது என் என்று நக்கு - எம்மை வணங்குவது என் கருதி என்று கூறிச் சிரித்து, பரிவுமேல் பரிவு செய்தாள் - (தலைவனுக்குந்) துன்பத்தின் மேல் துன்பஞ் செய்தாள். மற்றொருத்தியைத் தலையிடை ஒளித்துவைத்திருக்கின்றீர் என்பாள் ‘கங்கை மணாளனை யொப்பீர்’ எனச் சுருங்கச் சொல்லல் என்னும் அணிதோன்றக் கூறினாள். வெகுளியால் ‘எம்மை’ என்றும், பணிவது கரவு என்பது தோன்றப் ‘பணிவது என்’ என்றும் கூறினாளென்க. முன்னிருந்த துன்பத்தின் மேலும் மிக்க துன்பம் விளைத்தனள் என்பார் ‘பரிவுமேற் பரிவு செய்தாள்’ என்றார். (40) மதுகைவா ளொருவ னங்கோர் மங்கைதன் வடிவை நோக்கிப் பதுமமே யடிகை காந்தள் பயோதரங் கோங்கு காவிப் புதுமலர் விழிவா யாம்பற் போதுநும் மூர லெப்போ ததனைவாய் திறந்து காட்டிப் போமினென் றடுத்து நின்றான். (இ-ள்.) மதுகைவாள் ஒருவன் அங்கு ஓர் மங்கை தன் வடிவை நோக்கி - வலிய வாளையுடைய ஓர் ஆடவன் அங்கு ஒரு பெண்ணின் வடிவத்தை நோக்கி, அடி பதுமமே - (நுமது) பாதம் தாமரைமலரே, கை காந்தள் - கை காந்தள் மலரே, பயோதரம் கோங்கு - கொங்கை கோங்கின் அரும்பே, விழி காவிப் புது மலர் - விழி புதிய நீலோற்பல மலரே, வாய் ஆம்பல் போது - வாய் ஆம்பல் மலரே, நும்மூரல் எப்போது - நுமது பல் எந்த மலரோ (அறியேன்), அதனை வாய்திறந்து காட்டிப்போமின் என்று - அதனை வாய் திறந்து காண்பித்துப் போவீராக என்று கூறி, அடுத்து நின்றான் - நெருங்கி நின்றான். நினது புன்னகையாற் றலையளி செய்ய வேண்டுமென இரப்பான் ‘மூரல் எப்போது அதனை வாய்திறந்து காட்டுக என வேறோராற்றாற்’ கூறினான். நும் என்றும் போமின் என்றும் பன்மையாற் கூறினது தன் எளிமை தோன்ற அவளை உயர்த்துச் சொல்லியவாறு. இது வஞ்ச நவிற்சியணி. (41) விடைத்தனி யேறன் னானோர் விடலையோர் வேற்க ணான்முன் கிடைத்துநும் மிடத்தே னெஞ்சங் கெட்டுவந் தொளித்த தல்குற் றடத்திடை யொளித்த தேயோ தனத்திடை யொளித்த தோபூம் படத்தினைத் திறந்து காட்டிப் போகெனப் பற்றிச் சென்றான். (இ-ள்.) தனிவிடை ஏறு அன்னான் ஓர் விடலை - ஒப்பற்ற இடப வேறு போல்வானாகிய ஒரு விடன், ஓர் வேல்கணாள் முன் கிடைத்து - ஒரு வேல் போன்ற கண்ணையுடைய பெண்ணின் முன் சென்று, என் நெஞ்சம் கெட்டு வந்து நும்மிடத்து ஒளித்தது - என் மனம் (என்னினின்றும்) நீங்கி வந்து நும்பால் ஒளித்தது; அல்குல் தடத்திடை ஒளித்த தேயோ - அது அல்குலிடத்து ஒளித்ததோ, தனத்திடை ஒளித்ததோ - கொங்கையின்கண் ஒளித்ததோ, பூம்படத்தினைத் திறந்து காட்டிப் போக என - (அவற்றை மூடிய) அழகிய ஆடையைத் திறந்து காட்டிப் போவாயாக வென்றுகூறி, பற்றிச் சென்றான் - அவளைப் பின்றொடர்ந்து சென்றான். பூம்படம் - பூத் தொழிலமைந்த ஆடையுமாம். போக என்னும் வியங்கோள் ஈறு தொக்கது. பற்றி என்பதற்கு உடையைப் பற்றிக் கொண்டு என்றுரைத்தலுமாம். (42) மாந்தளி ரடியார் சாய்ப்ப வளைந்தபூஞ் சினைவண் டன்னார் கூந்தலிற் கிடந்த செம்மற் கோதைமேல் வீழ்ந்த கற்பின் ஏந்திழை யவரை நீத்துப் பலர் நுகர்ந் தெச்சி லாக்கும் பூந்தொடி யவரைத் துய்க்கும் பேதையர் போன்ற தன்றே. (இ-ள்.) மாந்தளிர் அடியார் சாய்ப்ப - மாந்தளிர் போன்ற அடிகளையுடைய மகளிர் வளைத்தலால், வளைந்த பூஞ்சினை - வளைந்த மலர்க்கொம்பினின்றும், அன்னார் கூந்தலில் கிடந்த - அம்மகளிரின் குழலிற் றங்கிக்கிடந்த, செம்மல் கோதை மேல் வீழ்ந்த வண்டு - பழம் பூமாலையின் மேல் வீழ்ந்த வண்டு, கற்பின் ஏந்திழையவரை நீத்து - கற்பு நிறைந்த மனைக்கிழத்தியரை விடுத்து, பலர் நுகர்ந்து எச்சில் ஆக்கும் பூந்தொடியவரைத் துய்க்கும் - பலரும் நுகர்ந்து எச்சிலாக்கிய பொருட் பெண்டிரைத் துய்க்கும், பேதையர் போன்றது - அறிவிலிகளை ஒத்தது. செம்மல் - பழம்பூ. சினையினின்றும் கோதை மேல் வீழ்ந்த வண்டு பேதையர் போன்றது என முடிக்க. கொம்பிலுள்ள மலரைக் கற்புடை மகளிராகவும் கூந்தலிலுள்ள வாடிய மலரை விலைமாதராகவும் உவமைக்கேற்பப் பொருளையும் விரித்து ஓருவம வாசகந் தோன்றக் கூறினமையால் இஃது ஒருவயிற்போலி யுவமையணி. அன்று, ஏ : அசை. (43) [கலி விருத்தம்] புல்லி மைந்தர் பொருள்கவர்ந் தாரென வல்லி யன்ன மடந்தையர் கொய்தலின் அல்லி நாண்மல ரற்றபின் கைப்பொருள் இல்லி யென்ன விளைத்தன காவெலாம். (இ-ள்.) புல்லி - தழுவி, மைந்தர் பொருள் கவர்ந்தார் என - ஆடவர் பொருளை விலைமாதர் கவர்ந்ததுபோல, வல்லி அன்ன மடந்தையர் கொய்தலின் - கொடி போன்ற மகளிர் பறித்தலினால், அல்லி நாள் மலர் அற்ற பின் - அகவிதழையுடைய புதிய மலர்கள் ஒழிந்த பின், கைப்பொருள் இல்லி என்ன - (அங்ஙனம் பரத்தை யர்க்குக் கொடுத்தலால்) கைப்பொருள் அற்ற வறியன் போல, கா எலாம் இளைத்தன - சோலைகளெல்லாம் வறங்கூர்ந்தன. கவர்ந்தார் என்பது தொழிலையுணர்த்திற்று. அல்லி - பூவின் அகவிதழ். இல்லி : இகர விகுதி வினைமுதற் பொருள் குறித்தது. குலமகளிர்க்கு விலை மகளிரை உவமை கூறியது உவமை வழு வாயினும் பூக்கொய்தலிற் பெரிது முயன்றனர் என்னும் குணமிக்குத் தோன்றுதலால் வழுவன் றென்க. (44) மையுண் கண்ணியர் மைந்தரோ டம்மலர் கொய்யுஞ் செல்வ நுகர்ந்து கொழுங்கணும் மெய்யுந் தோயிற் கொழுநரின் வேற்றுமை செய்யும் பொய்கை திளைப்பச்சென் றாரரோ. (இ-ள்.) மைஉண் கண்ணியர் - மையுண்ட கண்களையுடைய அம்மகளிர், மைந்தரோடு - ஆடவரோடு, அம்மலர் கொய்யும் செல்வம் நுகர்ந்து - அப்பூக்கொய்யும் செல்வத்தைத் துய்த்து, தோயில் - கலந்தால், கொழுங்கணும் மெய்யும் - மதர்த்த கண்களையும் உடலையும், கொழுநரின் வேற்றுமை செய்யும் - கொழுநர் வேறு படுத்துவதுபோல் வேறுபடுத்தும், பொய்கை திளைப்பச் சென்றார்- பொய்கையின்கண் நீராட்டயரச் சென்றனர். செல்வம் என்றது காமத்தை; சீவகசிந்தாமணியில், “வீணைச் செல்வம்” என்பதற்கு, ‘இசை நாடகம் காமத்தை விளைத்தலின் அவற்றாற் பிறக்கும் காமத்தை வீணைச்செல்வம் என்றார்’ என நச்சினார்க்கினியர் உரைத்திருப்பது நோக்கற்பாலது, கொழுநரைத் தோய்தலால் உண்டாகும் வேறுபாடு பொய்கையிற் றிளைத் தலாலும் உண்டாகுமென்பது கருத்தாகக் கொள்க. அவ்வேறு பாடாவன - கண் சிவத்தல், இதழ் வெளுத்தல், கொங்கை மேற் சந்தனக்கோலம் அழிதல், உடம்பு அலசல் முதலியன. ‘கொழுநரின் வேற்றுமை செய்யும் பொய்கை’ என்றதும் அவர்கள் காமக் குறிப்புடன் திளைப்பச் சென்றன ரென்பதைக் குறித்தற் பொருட்டாம். அரோ : அசை. பெருங்காப்பியத்துட் புனைந்து கூறுதற்குரிய புனல் விளையாட்டு இச்செய்யுள் முதலாகக் கூறுகின்றார். (45) அன்ன மன்னவ ராடுங் கயந்தலை நன்னர் நீல நளினங் குமுதமென் றின்ன வன்றி யெழின்முல்லை சண்பகம் பொன்னங் கோங்கமும் பூத்தது போன்றதே. (இ-ள்.) அன்னம் அன்னவர் ஆடும் கயந்தலை - அன்னம் போன்ற அம்மகளிர் நீர் விளையாடும் பொய்கையானது, நன்னர் நீலம் நளினம் குமுதம் என்று இன்ன அன்றி - நல்ல நீலோற்பலமும் தாமரையும் ஆம்பலுமென்று கூறப்படும் இம்மலர்களையே யன்றி, எழில் முல்லை சண்பகம் பொன் அம் கோங்கமும் - அழகிய முல்லையையும் சண்பகத்தையும் பொன் போன்ற அழகிய கோங்கினையும், பூத்தது போன்றது - பூத்திருத்தலை ஒத்தது. இந்நூலாசிரியர் கயந்தலை என்பதனைக் கயமென்னும் பொருளிற் பலவிடத்தும் வழங்குவர். நன்னர் : பண்புப் பெயர்; நல் : பகுதி நர் : விகுதி. நீர் விளையாடப் புகுந்த மகளிர் பற்களும் உடலும்தனமும் : பொய்கையிலே தோன்றுதலால் அப்பொய்கை நீர்ப் பூவே யன்றிக் கொடிப்பூவும் கோட்டுப்பூவும் பூத்ததை யொத்தது என்பார் ‘இன்ன வன்றி யெழின்முல்லை சண்பகம் பொன்னங் கோங்கமும் பூத்தது போன்றது’ என்றார். கொடிப்பூ முல்லை, ஏனைய கோட்டுப்பூக்கள், முல்லை, சண்பகம், கோங்கு என்னும் உவமைகளால் முறையே பல், மேனி, தனம் என்னும் பொருள்களை இலக்கணையாகக் கூறுதலின் இஃது உருவகவுயர்வு நவிற்சியணி. (46) [கலி நிலைத்துறை] குரவ வோதியர் கயந்தலை குறுகுமுன் கயலும் அரவு மாமையு1 மலவனு மன்னமு மகன்ற பருவ ரால்களு மிரிந்தன பகைஞர்மே லிட்டு வருவ ரேலெதிர் நிற்பரோ வலியிழந் தவரே. (இ-ள்.) குரவ ஓதியர் கயந்தலை குறுகு முன் - குரா மலரையணிந்த கூந்தலையுடைய மகளிர் பொய்கையை அடையுமுன்பே, கயலும் அரவும் ஆமையும் அலவனும் அன்னமும் அகன்ற - சேல் மீனும் பாம்பும் யாமையும் ஞெண்டும் அன்னமும் அஞ்சி அகன்றன; பருவரால்களும் இரிந்தன - பெரிய வரால் மீன்களும் ஓடின; பகைஞர் மேலிட்டு வருவரேல் - பகைவர் மேலெழுந்து போருக்கு வருவரேல், வலி இழந்தவர் எதிர் நிற்பரோ - வலியற்றவர் எதிர்த்து நிற்பரோ (நில்லார் என்றபடி). கயல் மகளிரின் கண்ணுக்கும், அரவு அல்குலுக்கும், ஆமை புறவடிக்கும், அலவன் முழந்தாளுக்கும், அன்னம் நடைக்கும், வரால் கணைக்காலுக்கும் அஞ்சி அகன்றொளித்தன என்றார். அகன்ற : அன்பெறாத பல வறிசொல். ஓகாரம் எதிர்மறை. குறுகு முன் அகன்றன இரிந்தன என்பது விரைவுயர்வு நவிற்சி. முன்னர்க் கூறிய பொருளை முடித்தற்கு, ‘பகைஞர் மேலிட்டு வருவரேல் எதிர் நிற்பரோ வலி யிழந்தவரே’ என உலகியல்பை விதந்து கூறுவது வேற்றுப் பொருள் வைப்பணி. (47) பண்ணெ னுஞ்சொலார் குடைதொறும் பன்மலா வீழ்ந்த தண்ணெ னுந்திரை யலைதொறு நிரைநிரை தாக்கல் கண்ணு நீலமு முகங்களுங் கமலமும் வாயும் வண்ண வாம்பலுந் தத்தமின் மலைவன வனைய. (இ-ள்.) பண் எனும் சொலார் குடைதொறும் - பண் என்று கூறப்படும் சொல்லையுடைய மகளிர் மூழ்குந்தோறும், பல் மலர் - பல மலர்கள், வீழ்ந்த தண்ணெனும் திரை அலைதொறும் - மேலெழுந்து வீழ்ந்த குளிர்ந்த அலைகள் அலைக்குந்தோறும், நிரை நிரை தாக்கல் - வரிசை வரிசையாக மோதுதல், கண்ணும் நீலமும் - கண்களும் நீலோற்பல மலர்களும், முகங்களும் கமலமும் - முகங்களும் தாமரை மலர்களும், வாயும் வண்ண ஆம்பலும் - வாய்களும் அழகிய ஆம்பல் மலர்களும், தத்தமில் மலைவன அனைய - தங்கள் தங்களுக்குள்ளே போர் புரிதலை ஒத்தன. மலர்கள் மகளிர் அவயவங்களோடு தாக்கல் மலைதலை யொத்தன வென்க. தொறும் : தொழிற் பயில்வுப் பொருளில் வந்த இடைச்சொல். மலைவன: தொழிலை யுணர்த்திற்று. (48) கூழை பாசியின் விரிந்திட மகிழ்ந்துநீர் குடையும் மாழை யுண்கணார் கொங்கையு முகங்களு மருங்கர் சூழ ரும்பொடு மலர்ந்தசெந் தாமரைத் தொகுதி ஆழ்த ரங்கநீ ரிடைக்கிடந் தலைவன வனைய. (இ-ள்.) கூழை பாசியின் விரிந்திட - கூந்தல் பாசியைப் போல விரிய, மகிழ்ந்து நீர் குடையும் - மகிழ்ந்து நீராடுகின்ற, மாழை உண்கணார் - மாவடுவின் பிளவு போன்ற மையுண்ட கண்களை யுடைய மகளிரின், கொங்கையும் முகங்களும் - கொங்கைகளும் முகங்களும், ஆழ் தரங்கம் நீரிடைக் கிடந்து அலைவன - ஆழ்ந்த அலைகளை யுடைய நீரின்கட் கிடந்து அசைவனவாகிய, மருங்கர்சூழ் அரும்பொடு - பக்கத்திற்சூழ்ந்த மொட்டுகளோடு, மலர்ந்த செந்தாமரைத் தொகுதி அனைய - மலர்ந்த செந்தாமரைக் கூட்டங்களை ஒத்தன. அலைவனவாகிய அரும்பையும் மலரையும் ஒத்திருந்தன வென்க. கொங்கையும் முகங்களும் அசைதல் அரும்பொடு மலர்த் தொகுதி அலைதலையொத்தன என ஒரு சொல் வருவித்துரைத் தலுமாம். மருங்கர் : போலி. அலைவன : தொழிற் பெயர். (49) தூய நீர்குடைந் தேறுந்தன் றுணைவியைத் துணைவன் வாயுங் கண்களும் வேறுற்ற வண்ணங்கண் டென்கண் ஏய வின்னுயி ரனையவ ளெங்குளா ளென்றான் காயும் வேற்கணாள் முலைகுளிப் பாட்டினாள் கண்ணீர். (இ-ள்.) தூயநீர் குடைந்து ஏறும் தன் துணைவியை - தூயநீரில் மூழ்கிக் கரையேறுந் தன் தலைவியை, துணைவன் - தலைவன், வாயும் கண்களும் வேறுற்ற வண்ணம் கண்டு அவள் வாயும் விழிகளும் வேறு பட்டிருக்குந் தன்மையைக் கண்டு (தன் தலைவி அல்லள் இவள் என்று கருதி), என்கண் ஏய இன் உயிர் அனையவள் எங்குளாள் என்றான் - என்னிடத்துப் பொருந்திய இனிய உயிர் போல்வாள் எங்கே உள்ளாள் என்று வினவினான்; காயும் வேல்கணாள் - (அதனைக் கேட்ட அவள்) கொல்லுலையிற் காயும் வேல்போலுஞ் சிவந்த கண்களையுடையளாய், கண்ணீர் முலை குளிப்பாட்டினாள் - கண்ணீரால் முலைகளைக் குளிப்பாட்டினாள். வாயுங் கண்களும் வேறுற்ற வண்ணம் - செந்நிறமுடைய வாய் வெண்ணிறமாகவும், வெண்ணிறமுடைய கண் செந்நிறமாகவும் மாறிள் தன்மை. தலைவியின் வாயுங் கண்களும் இங்ஙனம் நிறம் மாறினமையாலே அவளை வேறு மாதாகக் கருதி, ‘என் உயிரனையவள் எங்குளாள்’ என வினாவினான். அது கேட்ட தலைவி அவன் மற்றொருத்தியைத் தன் இன்னுயிரனையளாகக் கொண்டு வினாவினன் எனக் கருதி வெகுண்டு அழுதனள் என்க. காயும் - பகைவரைக் கொல்லும் என்றுமாம். காயும் வேற்கணாள் என்றது அவளது வெகுளியைக் குறித்தவாறு. கண்ணீரால் என உருபு விரிக்க. மிக அழுதாள் என்பதனை வேறு வகையாற் கூறினார். (50) மங்கை நல்லவ ளொருத்திநீ ராடுவான் மகிழ்நன் அங்கை பற்றின ளேகுவா ளவன்குடைந்1 தேறும் பங்க யக்கணா ளொருத்தியைப் பார்த்தலுஞ் சீசீ2 எங்கை யெச்சினீ ராடலே னெனக்கரை நின்றாள். (இ-ள்.) மங்கை நல்லவள் ஒருத்தி - மங்கைப் பருவமுடைய ஒரு பெண், நீர் ஆடுவான் - நிராடுதற் பொருட்டு, மகிழ்நன் அம் கை பற்றினள் ஏகுவாள் - கொழுநனது அழகிய கையைப் பிடித்துக் கொண்டு செல்கின்றவள், அவன் - அக்கொழுநன், குடைந்து ஏறும் பங்கயக்கணாள் ஒருத்தியைப் பார்த்தாலும் - அங்கு நீராடிக் கரையேறும் தாமரை போன்ற கண்களையுடைய ஒரு பெண்ணைப் பார்த்தவளவில், சீ சீ எங்கை எச்சில் நீர் ஆடலேன் என - சீச்சீ என் தங்கையின் எச்சிலாகிய நீரில் யான் ஆடேன் என்று கூறி, கரை நின்றாள் - கரையிலே நின்றனள். ஆடுவான் : வானீற்று வினையெச்சம். பற்றினள் : முற்றெச்சம். ஏகுவாள் : பெயர். சீ சீ : இகழ்ச்சிக் குறிப்பு. நீராடச்சென்ற இருவருள் தலைவன் தன்னெதிர்ப்பட்ட ஒருமாதைப் பராக்காக நோக்க, அது கண்ட தலைவி இவள் இவன் காமக்கிழத்தியாகல் வேண்டும் அதனாலன்றோ உவந்து நோக்கினான் எனக் கருதி, அவள் ஆடிய நீரிலே தான் ஆடேனெனப் புலந்து நின்றாள் என்க. (51) வனைந்த பைங்கழ லான்புன லாடலின் மார்பின் நனைந்த குங்குமத் தலையெறி நளினமொட் டழுந்தப் புனைந்த கொங்கையால் வடுப்படப் பொறித்தவள் யாரென் றினைந்த ழுங்கினா ணெய்சொரி யெரியென வொருத்தி. (இ-ள்.) வனைந்த பைங்கழலான் பசிய வீரக்கழலை யணிந்த ஓர் ஆடவன், புனல் ஆடலின் - நீராடுதலால், மார்பில் நனைந்த குங்குமத்து - அவனது மார்பின்கண் நனைந்துள்ள குங்குமக் குழம்பில். அலை எறி நளின மொட்டு அழுந்த - அலைகளால் வீசப்பட்ட தாமரை மொட்டு அழுந்தி வடுப்படுத்த, ஒருத்தி - (அதனைக் கண்ட) கலைவி, புனைந்த கொங்கையால் வடுப்படப் பொறித்தவள் யார் என்று - முத்து மாலை அணிந்த கொங்கைகளால் வடுப்படுமாறு அழுத்தியவள் யார் என்று வினவி, இனைந்து - வருந்தி, நெய்சொரி எரி என இனைந்து அழுங்கினாள் - நெய் சொரிந்த நெருப்புப் போலச் சினம் மிக்கு நைந்து வருந்தினாள். பைங்கழல் - பசும் பொன்னாற் செய்யப்பட்ட கழல். தலைவன் மார்பிலே தாமரை மொட்டு அழுந்திய வடுவைக் காமக்கிழத்தியின் முலைச்சுவடாகக் கருதித் தலைவி புலந்தனள் என்க. எரியெனச் சினமிக்கு என விரித்துரைத்துக் கொள்க. (52) வீழ்ந்த காதலன் செய்ததீங் காகிய வேலாற் போழ்ந்த நெஞ்சினாள் புலவிநோய் பொறாளவன் காண ஆழ்ந்த நீரிடை யழுந்துவாள்1 போன்றயர்ந் தயலே தாழ்ந்த வன்னத்தை நோக்கிக்கை தாவென விரந்தாள். (இ-ள்.) வீழ்ந்த காதலன் -தன்னால்விரும்பப்பட்ட காதலன், செய்த தீங்கு ஆகிய வேலால் - தனக்குச் செய்த தீமை என்னும் வேற்படையால், போழ்ந்த நெஞ்சினாள் - பிளக்கப்பட்ட உள்ளத்தையுடையளாகிய ஒரு மாது, புலவி நோய் பொறாள் - ஊடல் நோய் பொறாதவளாய், அவன் காண - அக்காதலன் பார்க்க, ஆழ்ந்த நீரிடை அழுந்துவாள் போன்று - ஆழமாகிய நீரின்கண் அழுந்துவாள் போலப் பாவனை காட்டி, அயர்ந்து - சோர்ந்து, அயலே தாழ்ந்த அன்னத்தை நோக்கி - அருகிலே (தாமரை மலரில்) தங்கிய அன்னத்தைப் பார்த்து, கைதா என இரந்தாள் - கைகொடு எனக் குறை யிரந்தாள். புலவி துன்பஞ் செய்தலின் அதனைப் பொறாளாயினள் என்க. தலைவன் தன்னை அணைத்து எடுக்குங் கருத்தினளாய் நீரில் அழுந்துவாள் போன்று அயர்ந்து அன்னத்தை நோக்கி இரப்பாளாயினள். தாழ்த்ல் - தாங்குதல். (53) கரும்பு போன்மொழி யாளொரு காரிகை வதனஞ் சுரும்பு சூழ்கம லங்களுட் கமலமாய்த் தோன்ற விரும்பு காதல னையுற்று மெலிந்தனன் மெல்ல அரும்பு முல்லைகண் டையத்தி னீங்கிச்சென் றணைந்தான். (இ-ள்.) கரும்பு போல் மொழியாள் - கருப்பஞ்சாறு போலுஞ் சொற்களை யுடையளாகிய, ஒரு காரிகை - ஒரு பெண்ணினுடைய, வதனம் - முகமானது, சுரும்பு சூழ் கமலங்களுள் கமலமாய்த் தோன்ற - வண்டுகள் சூழ்ந்த தாமரை மலர்களுள் ஒருதாமரை மலராய்த் தோன்ற, விரும்பு காதலன் ஐயுற்று மெலிந்தனன் - அவளை விரும்பிய காதலன் ஐயுறவு கொண்டு மெலிந்து, மெல்ல அரும்பு முல்லை கண்டு - (அது போழ்து) மெல்ல அரும்பிய முல்லையரும்பு போலும் பற்களைக் கண்டு, ஐயத்தின் நீங்கிச் சென்று அணைந்தான் - சந்தேகத்தினின்றும் நீங்கிப் போய்க் காதலியைக் கலந்தான். கரும்பு அதன் சாற்றிற்கும், கமலம் அதன் மலருக்கும், முல்லை அதன் அரும்புக்கும் ஆகுபெயர். முல்லையரும்பு பற்களை உணர்த்திற்று. இது தாமரை மலரோ காதலியின் முகமோ என ஐயுற்று மெலிந்த காதலன் அதனைக் கண்டு அவள் புன்னகை செய்தமையாற் றோன்றிய பற்களால் அவள் முகமெனத் தெளிந்து சென்று அணைந்தனன் என்க. கூந்தலாற் சூழப்பட்ட முகம் வண்டு சூழ்ந்த கமலம் போன்றிருந்தது. இதன்கண் ஐயவணியும், தெரிதருதேற்ற வுவமை யணியும் விரவியுள்ளன. (54) களித்த காதலன் மொக்குள்வாய்த் தன்னிழல் கண்டு தெளித்து வாணகை செய்யமாற் றாளென்று சீறித் தளிர்க்கை நீட்டினள் கண்டில டடவினள் சலத்துள் ஒளித்தி யோவெனா வுதைத்தனள் பேதைமா தொருத்தி. (இ-ள்.) பேதை மாது ஒருத்தி - பேதையாகிய ஒரு பெண், களித்த காதலன் - களிப்புற்ற தலைவன், மொக்குள்வாய் - நீர்க்குமிழியில், தன் நிழல் கண்டு - தனது நிழலைப் பார்த்து, தெளித்து வாள் நகை செய்ய - உரப்பி ஒள்ளிய நகை செய்ய, மாற்றாள் என்று சீறி - (அவள் அந்நிழலைத்) தனது மாற்றாளென்று சினந்து, தளிர்க்கை நீட்டினள் தடவினள் கண்டிலள் - தனது தளிர் போன்ற கைகளை நீட்டித் தடவிக் காணாது, சலத்துள் ஒளித்தியோ எனா உதைத்தனள் - நீருள் மறைந்தனையோ வென்று சொல்லி உதைத்தாள். தன் நிழல் காதலியின் பிரதிபிம்பம், தெழித்து என்பது தெளித்து என்றாயது : அவட்குத் தெளிவித்து என்றும், அதனைக் கலங்காது நிறுத்தி என்றும் உரைத்தலுமாம். நீட்டினள், கண்டிலள், தடவினள் என்பன முற்றெச்சம். சலத்துள் ஒளித்தியோ என்பதனை இரட்டுற மொழிதலாக்கி, வஞ்சத்தால் உள்ளே மறைந்தனையோ என்றும் உரைத்தல் அமையும். இது நிழலை மாற்றாளென மயங்கினமையால் மயக்கவணி. (55) நாறு சுண்ணமென் கலவையு நானமுந் தம்மின் மாறி வீசிநின் றாடுவார் மாலைதா ழகலத் தூறு பாடற வந்தரத் தளிகவர்ந் துண்ப ஆறு செல்பவர் பொருள்வெளவு மரட்டரே போல. (இ-ள்.) நாறுசுண்ணம்மென் கலவையும் நானமும் - நறுமணங் கமழுஞ் சுண்ணப்பொடியையும் மெல்லிய கலவையையும் மான் மதத்தையும், தம்மில் மாறி வீசி நின்று ஆடுவார் - தம்முள் மாறி மாறி வீசி விளையாடும் ஆடவர் மகளிர்களின், மாலை தாழ் அகலத்து - மாலை தங்கிய மார்பின்கண், ஊறுபாடு அற - அவை சென்று பொருந்துதல் இல்லையாக, ஆறு செல்பவர் பொருள் வெளவும் அரட்டர்போல - வழிச்செல்வாரின் பொருளை இடையே பறித்துக்கொள்ளும் ஆறலைப்பார் போல, அளி - வண்டுகள், அந்தரத்து - இடை வெளியுணின்று, கவர்ந்து உண்ப - அவற்றைக் கொள்ளை கொண்டு உண்பன. வீசுகின்ற சுண்ணம் கலவை நானம் என்பன குறித்த இடத்திற்குச் செல்லாமல் இடையே வண்டுகள் கவர்ந்துண்டல் வழிச்செல்வார் பொருளை இடையே ஆறலைப்பார் கவர்ந்துண்டல் போலும் என்க. ஊறுபாடு - உறுதல், பாடு : தொழிற் பெயர் விகுதி. அரட்டர் - ஈண்டு ஆறலைப்பார். (56) கொய்யு நீலமுங் கமலமுங் கொண்டுகொண் டனங்கன் எய்யும் வாளியி னெறிவரா லெறிந்திடு மலரைக் கையி னாற்புடைத் தெறிந்தவர் கதிர்முகம் படக்கண் டைது வாணகை செய்தக மகிழ்ச்சியு ளாழ்வார். (இ-ள்.) கொய்யும் நீலமும் கமலமும் கொண்டு கொண்டு - கொய்த நீலமலரையும் தாமரை மலரையும் கைக்கொண்டு, அளங்கன் எய்யும் வாளியின் எறிவர் - மதவேள் எய்யும் மலர்க் கணைபோல ஒருவர் மேலொருவர் வீசுவர், எறிந்திடு மலரை - அங்ஙனம் வீசிய மலரை, கையினால் புடைத்து - கரத்தினால் (அது எதிர்த்துச் செல்லுமாறு) தாக்கி, எறிந்தவர் முகம் படக்கண்டு - (அது சென்று) எறிந்தவரின் முகத்திற் படுதலைப் பார்த்து. ஐதுவாள் நகை செய்து - அழகிதாக ஒள்ளிய நகை புரிந்து, அகமகிழ்ச்சியுள் ஆழ்வார் - மனமகிழ்ச்சியாகிய கடலில் அழுந்துவார். அனங்கன் - உடம்பில்லாதவன் எனக் காரணப் பெயர். நீலமும், கமலமும் அவற்கு அம்புகளாகலின் அனங்கன் எய்யும் வாளியின் என்றார்; இவர் எறிதலும் காமத்தை மிகுத்தல் கொள்க. ஆல் : அசை. ஐது : இடைச்சொல்லடியாகப் பிறந்த குறிப்பு முற்று எச்சமாயது. (57) வாச மென்பனி நீரோடு சுண்ணமும் வாரி வீசு வாரிளம் பிடியொடு வேழுமா நிரைபோற் காசு லாந்தொடி வில்லிடக் கைகளா லள்ளிப் பூசு சாந்தவை யழிந்திடப் புனிதநீ ரிறைப்பார். (இ-ள்.) இளம் பிடியொடு வேழமா நிரைபோல் - இளமை யாகிய பெண் யானைகளோடு ஆண் யானையின் கூட்டங்கள் நீரை வீசி விளையாடுதல் போல, வாசம் மென்பனி நீரொடு சுண்ணமும் வாரி வீசுவார் - மணமுள்ள மெல்லிய பனி நீருடன் சுண்ணப்பொடியையும் அள்ளி (மகளிரும் ஆடவரும்) வீசி விளையாடுவர்; காசு உலாம் தொடி வில்லிட - மணிகள் அழுத்திய வளைகள் ஒளி வீச; கைகளால் புனித நீர் அள்ளி - கைகளாலே தூய நீரை அள்ளி, பூசு சாந்து அழிந்திட இறைப்பார் - பூசிய சந்தனம் அழியுமாறு வீசுவர். மகளிரும் ஆடவரும் கூடி நின்று நீர் முதலியவற்றை இறைத்தல் பிடிகளும் வேழங்களும் கூடி நின்று நீரினை இறைத்தல் போலு மென்க. தொடி என்பது வீரவளையம் ஆகலின் ஆடவர்க்கும் பொருந்தும்; மகளிர் அள்ளி ஆடவர் மார்பில் இறைப்பர் என்றுமாம். சாந்தவை, அவை : பகுதிப் பொருள் விகுதி. (58) அப்பெ ரும்புனற் றடங்குடைந் தாடுவா ராயத் தொப்ப ருந்தனி யொருமக ளொருவன்றன் முகத்துத் துப்பை வென்றசெந் துவரிதழ்ச் செய்யவாய்த் தூநீர் கொப்ப ளித்தன1 ளாம்பலந் தேனெனக் குடித்தான். (இ-ள்.) அப்பெரும் புனல் தடம் குடைந்து ஆடுவார் ஆயத்து- அந்தப்பெரிய நீர் நிறைந்த வாவியில் குடைந்து நீராடும் மகளிர் கூட்டத்து, ஒப்பு அருந்தனி ஒரு மகள் - ஒப்பற்ற ஒரு மாது, ஒருவன் தன் முகத்து - ஓர் ஆடவன் முகத்தில், துப்பை வென்ற செந்துவர் இதழ்ச் செய்யவாய்த் தூநீர் கொப்பளித்தனள் - பவளத்தை வென்ற செந்நிறம் வாய்ந்த - இதழையுடைய சிவந்த வாயிலுள்ள தூய நீரைக் கொப்பளித்தாள்; ஆம்பல் அம்தேன் எனக் குடித்தான் - (அவன் அந்நீரை) ஆம்பல் மலரிலுள்ள அழகிய தேன் என்று கருதிக் குடித்தான். தனியொரு, செந்துவர் என்பவற்றில் ஒரு பொருண்மேல் இருசொற்கள் வந்தன. வாய் ஆம்பல்மலர் போலுதலின் ‘ஆம்பலந்தே னெனக் குடித்தான்’ என்றார்; அஃது அவனுக்கு இனிமை மிக்கிருந்தது தேன் என்பதனாற் பெற்றாம். (59) ஆழ மவ்விடைச் செல்லலை நில்லென வடுத்தோர் வேழ மன்னவன் விலக்குவான் போலொரு வேற்கண் ஏழை தன்னைக்கை யால்வளைத் தேந்திவண் டறைதார் சூழு மார்பணைத் திரதிதோ டோய்ந்தவ னொத்தான். (இ-ள்.) ஓர் வேழம் அன்னவன் - ஆண்யானை போன்ற ஓர் ஆடவன், ஒரு வேல் கண் ஏழை தன்னை - வேல்போன்ற விழிகளையுடைய ஒரு மாதினை, அவ்விடை ஆழம் செல்லலை நில் என - அவ்விடம் ஆழமுடைத்தாகலின் செல்லாதே நில் என்று, விலக்குவான்போல் அடுத்து - தடுப்பவன்போலச் சென்று, கையால் வளைத்து ஏந்தி - கரங்களால் வளைத்துத் தூக்கி, வண்டு அறை தார் சூழும் மார்பு அணைத்து - வண்டுகள் ஒலிக்கும் மாலைசூழ்ந்த மார்பின்கண் அணைத்து, இரதி தோள் தோய்ந்தவன் ஒத்தான் - இரதியின் தோளைக் கூடின மன்மதனை ஒத்தனன். செல்லலை : எதிர்மறை யொருமை ஏவல் முற்று; அல், எதிர் மறை இடைநிலை; அவன் கருத்து அவளைத் தழுவுவதாகலின் ‘விலக்குவான் போல்’ என்றார். இதனை இலேசவணியின்பாற் படுத்தலுமாம். (60) மாசி னானமுஞ் சூடிய மாலையு மெய்யிற் பூசு சாந்தமு மாரமும் பொய்கைக்குக்1 கொடுத்து வாச மெய்யினி லம்புய வாசமு மயங்க ஆசை மைந்தரோ டிளையவ ரகன்கரை யடைவார். (இ-ள்.) மாசு இல் நானமும் - குற்றமில்லாத மான்மதமும், சூடிய மாலையும் - அணிந்த மாலைகளும், மெய்யில் பூசு சாந்தமும் ஆரமும் - மெய்யினிற் பூசிய சந்தனமும் முத்தாரமுமாகிய இவற்றை, பொய்கைக்குக் கொடுத்து - வாவிக்குக் கொடுத்து, வாசம் மெய்யினில் - மணமிக்க தங்கள் மேனியில், அம்புய வாசமும் மயங்க - தாமரை மலரின் மணமும் விரவ, இளையவர் ஆசை மைந்தரோடு - இளமை வாய்ந்த மகளிர் அன்புள்ள ஆடவருடன், அகன் கரை அடைவார் - அகன்ற கரையை அடைவாராயினர். இளையவர் மகளிரை யுணர்த்திற்று; “ பந்தினை யிளையவர் பயிலிடம் ” எனக் கம்பர் கூறுதலுங் காண்க. அகன், லகரம் னகரமாய்த் திரிந்தது புணர்ச்சியில் விகாரம்; மரூஉ என்றுமாம். நானம் முதலியவற்றைப் பொய்கைக்குக் கொடுத்து அங்குள்ள அம்புயவாசம் பெற்றனர் என்றமையால் இது பரிவருத்தனையணி. (61) தைய லார்சிலர் நனைந்தநுண் டானையுட் பொதிந்த மெய்யெ லாம்வெளிப் படக்கரை யேறுவான் வெள்கி ஐய தாபொலந் துகிலென வன்பரைக் கூய்க்கண் செய்ய மாயனைக் கேட்குமாய்ச் சிறுமிய ரொத்தார். (இ-ள்.) தையலார் சிலர் - மகளிர் சிலர், நனைந்த நுண் தானையுள் - நனைந்த மெல்லிய ஆடையுள்ளே, பொதிந்த மெய் எலாம் - மறைபட்ட உறுப்புக்கள் யாவும், வெளிப்பட - வெளித்தோன்றலால், கரை ஏறுவான் வெள்கி - கரைஏற வெட்கி, அன்பரைக் கூய் - தங்கள் தங்கள் காதலரைக் கூவி, ஐய பொலம் துகில் தா என - ஐயனே பொன்னாடை அளிப்பாயென்று கேட்டலால் (அவர்கள்), செய்ய கண் மாயனைக் கேட்கும் - சிவந்த கண்களையுடைய கண்ணனை (துகில்) கேட்கின்ற, ஆய்ச் சிறுமியர் ஒத்தார் - இடைச் சிறுமியரைப் போன்றார். ஆடை மிக்க மென்மை யுடைமையால் நனைந்த விடத்து அற்றம் வெளிப்படுப்பதாயிற்று. ஏறுவான் : வினையெச்சம். தனித்தனி கூவிக் கேட்டன ரென்பார் ‘ஐயதா’ என ஒருமையாற் கூறினார். யமுனையாற்றில் நீராடிய ஆய்ச்சிறுமியரின் உடைகளைக் கவர்ந்து கண்ணன் குருந்த மரத்தில் ஒளித்தனன் என்பது வரலாறு. (62) உலத்தை வென்றதோ ளாடவ ருச்சிமேற் பொறித்த அலத்த கத்தொடு குங்கும மளைந்துசெம் புனலாய் மலர்த்த டங்குடைந் தவர்க்குநீ ராஞ்சன1 வட்டக் கலத்தை யொத்தன சுற்றிநின்2 றாரொத்த கடிக்கா.3 (இ-ள்.) மலர்த்தடம் - மலர்கள் நிறைந்த பொய்கைகள், உலத்தை வென்ற தோள் ஆடவர் உச்சிமேல் பொறித்த - திரண்ட கல்லை வென்ற தோளையுடைய ஆடவர்களின் முடிமீது தீட்டிய, அலத்தகத்தொடு - செம்பஞ்சுக் குழம்போடு, குங்குமம் அளைந்து- குங்குமமுங் கலந்து, செம்புனல் ஆய் - சிவந்த நீரினையுடை யனவாய், குடைந்தவர்க்கு நீராஞ்சன வட்டக் கலத்தை ஒத்தன - நீராடிக் கரையேறியவர்க்கு (அமைத்த) நீராஞ்சனமெடுக்கும் வட்டக் கலத்தினை ஒத்தன; கடிக்கா - மணமுள்ள சோலைகள், சுற்றி நின்றார் ஒத்த - (அவற்றைச்) சுற்றி நின்ற மகளிரை ஒத்தன. மகளிரின் ஊடல் தீர்த்தற்கு ஆடவர் அவர் காலில் வீழ்ந்து வணங்கும் பொழுது அன்னார் சினமிக்கு ஆடவர் தலைமீது உதைத்தலால் அவர் காலில் ஊட்டிய செம்பஞ்சுக் குழம்பு ஆடவரின் தலைமீது பொறிக்கப்பட்டிருக்கு மென்க. நீராஞ்சனம்- ஆலத்தி. வட்டக்கலம் - வட்டில்; தட்டம். சுற்றி - சுழற்றி. (63) பட்டும் பன்னிறக் கலிங்கமும் பன்மணிக் கலனுங் கொட்டுஞ் சாந்தமு நானமுங் குங்குமச் சேறுங் கட்டுந் தாமமுந் தமதுகட்ட டழகெலாங் கவர மட்டுண் கோதைய ராடவர் மனமெலாங் கவர்ந்தார். (இ-ள்.) பட்டும் பல்நிறக் கலிங்கமும் - பட்டாடைகளும் பல நிறமுள்ள பருத்தி நூலாடைகளும், பல்மணிக் கலனும் - பல மணிகள் அழுத்திய அணிகளும், கொட்டும் சாந்தமும் - நிறையப் பூசிய சந்தனமும், நானமும் - மான்மதமும், குங்குமச் சேறும் - குங்குமக் குழம்பும், கட்டும் தாமமும் - கட்டிய மாலைகளுமாகிய இவைகள், தமது கட்டழகு எலாம் கவர - தங்கள் கட்டழகு முழுதையுங் கவர்ந்து கொள்ள, மட்டு உண் கோதையர் - மணமிக்க மாலையணிந்த மகளிர், ஆடவர் மனம் எலாம் கவர்ந்தார் - ஆடவர்களின் உள்ளமனைத்தையும் கவர்ந்தனர். ஆடையணி முதலியவற்றால் மகளிர் அழகுபெறாது அவரால் அவை அழகு பெற்றன வென அவர்களது இயற்கையழகின் சிறப்புக் கூறுவார் ‘தமது கட்டழகெலாங் கவர’ என்றார். மேல் ‘புதுமது நுகரப்புக்கார்’ என்று கூறுதலின் ஈண்டு மதுவுண்ட மகளிர் என்னலாகாமை யறிக. (64) [அறுசீரடியாசிரிய விருத்தம்] காவியுங் கமலப் போதுங் கள்ளொழு காம்பற் போதும் ஆவியுட் பூத்த போல வாடியுட் பூப்ப நோக்கி ஏவிரண் டன்ன கண்ணா லனங்கனை யேவல் கொள்ளும் பூவிரி பொலங்கொம் பன்னார் புதுமது நுகரப் புக்கார். (இ-ள்.) காவியும் கமலப்போதும் - நீலோற்பல மலரும் தாமரை மலரும், கள் ஒழுகு ஆம்பல் போதும் - தேன் ஒழுகும் ஆம்பல் மலருமாகிய இவை, ஆவியுள் பூத்தபோல - வாவியுள் மலர்ந்தனபோல, ஆடியுள் பூப்ப நோக்கி - கண்ணாடியுள்ளும் மலருமாறு பார்த்து, இரண்டு ஏ அன்ன கண்ணால் - இரண்டு கணைகளை ஒத்த கண்களால், அனங்கனை ஏவல் கொள்ளும் - மதவேளையும் பணிகொள்ளும், பூவிரி பொலம் கொம்பு அன்னார் - பூக்கள் மலர்ந்த பொற்கொம்பு போன்ற அம்மகளிர், புதுமது நுகரப் புக்கார் - புதிய மதுவினைப் பருகப் புகுந்தனர். மகளிர் கண்ணாடியில் முகம் பார்த்த காலையில் அவர் கண் முகம் வாய் என்பன அதனுட் டோன்றுதல் காவி கமலம் ஆம்பல் என்னும் பூக்களை அது பூத்தமை போன்றிருந்த தென்க. பூத்த : தொழிற்பெயர். அனங்கனையும் என்னுஞ் சிறப்பும்மை தொக்கது. (65) பொன்னினும் வெள்ளி யானும் பளிங்கினும் புலவன் செய்த நன்னிறக் கலத்திற் கூர்வா ணட்டென வாக்கிச் சேடி மின்னனா ரளித்த தேறற் சிறுதுளி விரலிற் றெள்ளித் துன்னிவீழ் களிவண் டோச்சித் தொண்டையங் கனிவாய் வைப்பார். (இ-ள்.) சேடி மின் அனார் - மின்போன்ற தோழிகள், பொன்னினும்வெள்ளியானும் பளிங்கினும் - பொன்னாலும் வெள்ளியாலும் பளிங்காலும், புலவன் செய்த நல் நிறக் கலத்தில் - கம்மப் புலவனாற் செய்யப்பட்ட நல்ல ஒளியையுடைய கலங்களில், கூர்வாள் நட்டென வாக்கி அளித்த - கூரிய வாளை நட்டாற்போல வார்த்துக் கொடுத்த, தேறல் - மதுவில், சிறு துளி விரலில் தெள்ளி - சிறிய துளியை விரலாற்றொட்டுத் தெறித்து, துன்னி வீழ் களிவண்டு ஓச்சி- நெருங்கி வீழும் மதிமயக்கத்தையுடைய வண்டுகளை ஒட்டி, அம் தொண்டைக் கனிவாய் வைப்பார் - அழகிய கோவைக் கனிபோன்ற வாயில் வைத்து அருந்துவார். புலவன் - பொன் முதலியவற்றாற் கலம் இயற்றும் அறிவுடை யான்; கம்மியன். கலத்தில் வீழும் மதுவின் இடையறா வொழுக்கு அதில் வாள் நட்டது போன்றிருந்தது. நட்டென : தொகுத்தல். சேடி மின்னார் : பன்மையிலொருமை. வாக்கி - வார்த்து : வாக்கு : பகுதி. கள்ளுண்பார் அதனை விரலாற் றொட்டுத் தெறித்துப் பின் உண்ணுதல் மரபு என்க. (66) வள்ளத்து வாள்போல் வாக்கு மதுக்குடந் தன்பாற் பெய்த கொள்ளைத்தேன் மதுவைக்1 கொள்ளை கொளவந்த வள்ள மீதென் றுள்ளத்து வெகுண்டு வைவா ளூன்றிமார் பிடப்ப தொத்த கள்ளைச்சூழ் காளை வண்டு செருச்செயல் காண்ப வொத்த. (இ-ள்.) வள்ளத்து வாள்போல் வாக்கும் மதுக்குடம் - கிண்ணத்தில் வாளை நட்டாற்போல வார்க்கா நின்ற மதுக் குடமானது (அத்தோற்றத்தால்), தன் பால் பெய்த கொள்ளைத் தேன் மதுவை - தன்னிடத்துப் பெய்துவைத்த மிக்க மணமுள்ள கள்ளினை, கொள்ளை கொளவந்த வள்ளம் ஈது என்று - கவர வந்த வள்ளம் இதுவென்று கருதி, உள்ளத்து வெகுண்டு - மனத்திற் சினங்கொண்டு, வைவாள் ஊன்றி மார்பு இடப்பது ஓத்த - கூரிய வாளை ஊன்றி அதன் மார்பைப் பிளப்பதை ஒக்கும்; கள்ளைச் சூழ் காளை வண்டு - அம்மதுவினைச் சூழ்ந்த இளமையுடைய வண்டுகள், செருச் செயல் காண்ப ஒத்த - அப்போர்ச் செயலைக்காண்பன ஒத்தன. கொள்ளை இரண்டனுள் முன்னது மிகுதிப் பொருட்டு. தேன்- மணம்; தெண்மது எனப் பாடமாயின் தெளிந்த மது என்க. இடப்பது : தொழிற் பெயர். (67) தணியலுண் டுள்ளஞ் சோரு மொருமக டணிய லுண்பான் பிணியவிழ் கோதை யாளோர் பெண்மகள் கலத்தில் வாக்குந் துணிமதுத் தாரை தன்னை வாளெனத் துணிந்து பேதாய் திணிகதிர் வாளால் வள்ளஞ் சிதைத்தியோ வென்று நக்காள். (இ-ள்.) தணியல் உணடு உள்ளம் சோரும் ஒருமகள் - கள்ளினை நுகர்ந்து மதிமயங்கிய ஒரு மாது, தணியல் உண்பான் - கள்ளினைப் பருகுதற் பொருட்டு, பிணி அவிழ் கோதையாள் ஓர் பெண்மகள் - முறுக்கவிழ்ந்த மலர்மாலை யணிந்த ஒருபெண், கலத்தில் வாக்கும் துணிமதுத்தாரை தன்னை - வள்ளத்தில் வார்க்கின்ற தெளிந்த மதுத் தாரையை, வாள் எனத் துணிந்து - வாட்படை என்று துணிந்து, பேதாய் - அறிவில்லாதவளே, திணி கதிர் வாளால் - செறிந்த ஒளியையுடைய வாட்படையினால், வள்ளம் சிதைத்தியோ என்று நக்காள் - வள்ளத்தை அழிக்கின்றாயோ என்று கூறிச் சிரித்தாள். தணியல் - கள். உண்பான் : வினையெச்சம். உண்பான் வாக்கும் தாரையை என்க. துணி - தெளிவு. இது போல்வனற்றை மயக்கவணியின்பாற் படுத்துக. (68) மலர்தொறுஞ் சிறுதே னக்கித் திரிவண்டு மடவார் தங்கைத் தலனெடுத் தோச்ச வோடா தழீஇத்தடஞ் சாடி மொய்ப்ப இலமெனப் பல்லோர் மாட்டு மிரந்திரந் தின்மை நீங்கா தலமரும் வறியோர் வைத்த நிதிகண்டா லகல்வ ரேயோ. (இ-ள்.) மலர்தொறும் சிறு தேன் நக்கித் திரிவண்டு - பூக்கள் தோறுஞ் சென்று சிறிய தேனை நக்கித் திரிகின்ற வண்டுகள், மடவார் - மதுவுண்ணும் மகளிர், தம் கைத்தலன் எடுத்து ஓச்ச - தமது கையை மேலெடுத்து ஓட்டவும், ஓடா - ஓடாமல், தடம் சாடி - பெரிய மதுச்சாடியை, தழீஇமொய்ப்ப - தழுவி மொய்ப்பன வாயின; இலம் எனப் பல்லோர் மாட்டும் இரந்து இரந்து - வறியம் என்று கூறிப் பலரிடத்தும் பலகாலும் இரந்தும், இன்மை நீங்காது அலமரும் வறியோர் - இலம்பாடு நீங்காமல் மனஞ் சுழன்று அலையும் வறுமையுடையோர், வைத்த நிதி கண்டால் - சேமித்து வைத்த நிதியினைக் காணின், அகல்வரேயோ - (யாவர் அகற்றினும் அதனைவிட்டு) நீங்குவரோ (நீங்கார் என்றபடி). மலர்தொறுஞ் சிறுதேன் நக்கித் திரிதல் பல்லோர் மாட்டும் இரந்து திரிதலை யொக்கும். ஓடா : ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தழீஇ : சொல்லிசை யளபெடை. இது வேற்றுப்பொருள் வைப்பணி. (69) உண்டவ ளொருத்தி கள்வா யுதிக்குந்தன் முகமுங் கண்ணுங் கண்டுதா மரைகள் வேலை முளைத்ததக் கள்ளை யார மொண்டுணாப் பேதைத் தும்பி யம்மது முளரி வார்தேன் நுண்டுளி செறிவ தென்னா நொடித்துக்கை புடைத்து நக்காள். (இ-ள்.) உண்டவள் ஒருத்தி - மதுவைப் பருகிய ஒரு பெண் கள்வாய் உதிக்கும் தன் முகமும் கண்ணும் கண்டு - கள்ளின்கண் தோன்றுந் தனது முகத்தையும் கண்ணையுங் கண்டு, தாமரைகள் வேலை முளைத்தது - தாமரை மதுக்கடலில் முளைத்தது, அக்கள்ளை ஆரமொண்டு உணாப் பேதைத் தும்பி - அம்மதுவை நிறைய அள்ளி உண்ணாத அறிவில்லாத வண்டு, அம்மது முளரிவார் தேன் நுண்துளி செறிவது என்னா நொடித்து - அம்மதுக் கடலில் முளைத்த தாமரையினின்று ஒழுகும் மதுவின் சிறு துளியைச் சூழ்கின்றது என்று சொல்லி, கை புடைத்து நக்காள் - கை தட்டிச் சிரித்தாள். கள்ளிலே தோன்றிய முகத்தைத் தாமரையாகவும், கண்ணை வண்டாகவும் மயங்கினாள் என்க. (70) மங்கையா ளொருத்தி தானுண் டெஞ்சிய மதுவுட் டோன்றுந் திங்களை நோக்கி யென்னைப் பிரிவின்கட் டீயாய்ச் சுட்டாய் இங்குவந் தகப்பட் டாயே யினிவிடேன் கிடத்தி யென்னா அங்கொரு வள்ளங் கொண்டு சேமித்தா ளருந்தல் செய்யாள். (இ-ள்.) மங்கையாள் ஒருத்தி - மங்கைப் பருவமுள்ள ஒருபெண், தான் உண்டு எஞ்சிய மதுவுள் - தான் பருகி மிகுந்த கள்ளினுள், தோன்றும் திங்களை நோக்கி - பிரதிபலிக்கும் சந்திரனைப் பார்த்து, பிரிவின்கண் என்னைத் தீயாய்ச் சுட்டாய் - (என் தலைவனைப்) பிரிந்திருந்த காலத்து என்னை நெருப்பாக நின்று காய்ந்தனை; இங்கு வந்து அகப்பட்டாயே - (இன்று) இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டாயே, இனி விடேன் - இனி உன்னை விடமாட்டேன், கிடத்தி என்னா - இங்ஙனே கிடப்பாயாக என்று கூறி, அருந்தல் செய்யாள் - அக்கள்ளைப் பருகாது, அங்கு ஒரு வள்ளம் கொண்டு சேமித்தாள் - அங்கு மற்றொரு வள்ளத்தினால் மூடி வைத்தனள். கிடத்தி, த் : எழுத்துப்பேறு, இ : விகுதி. சேமித்தல் - காவல் செய்தல். (71) வெவ்விய நறவ முண்ட விளங்கிழை யொருத்தி கையிற் கெளவிய வாடி தன்னிற் கருங்கய னெடுங்கட் சேப்புங் கொவ்வைவாய் விளர்ப்பு நோக்கி யென்னலங் கூட்டுண் டேகும் ஒளவிய மனத்தான் யாரென் றயர்கின்றா ளயலா ரெள்ள. (இ-ள்.) வெவ்வியநறவம் உண்ட விளங்கிழை ஒருத்தி - வெம்மை யுடைய கள்ளை உண்ட விளக்கமாகிய அணிகளையணிந்த ஒரு பெண் ;கையில் கெளவிய ஆடிதன்னில் - கையிற்பற்றிய கண்ணாடியில், கருங்கயல் நெடுங்கண் சேப்பும் - கரிய கயல்போன்ற நெடிய கண்களின் சிவப்பையும், கொவ்வைவாய் விளர்ப்பும் நோக்கி - கொவ்வைக் கனி போன்ற வாயின் வெளுப்பையும் பார்த்து, என் நலம் கூட்டுண்டு ஏகும் - எனது இன்பத்தைக் கொள்ளை கொண்டு செல்லும், ஒளவிய மனத்தான் யார் என்று - வஞ்சமனத்தையுடையான் யாவன் என்று கூறி, அயலார் எள்ள அயர்கின்றாள் - அயலவர் நகைக்கச் சோர்கின்றாள். கள்ளுண்டலால் வந்த கண் சிவப்பையும் வாய் விளர்ப்பையும் கலவியால் வந்தனவாக மயங்கினாள் என்க. சேப்பு : செம்மையென்னும் பண்படியாக வந்த தொழிற் பெயர். (72) ஒருத்திகள் ளுண்கின் றாடன் னுருவமந் நறவுட் டோன்ற ஒருத்தியென் னுடன்வந் துண்பாள் காணென வுண்ட தோழி ஒருத்திவந் தென்செய் வாடன் னுருவமு நோக்கிப் பேதாய் ஒருத்தியோ விருவ ரென்றா ளெச்சிலென் றுகுத்து நக்காள். (இ-ள்.) ஒருத்தி கள் உண்கின்றாள் - கள் உண்கின்ற ஒரு பெண், தன் உருவம் அந் நறவுள் தோன்ற - தன் வடிவம் அம் மதுவுள்ளே தோன்ற (கண்டு), ஒருத்தி என்னுடன் வந்து உண்பாள் காண் என - ஒருத்தி என்னோடு வந்து உண்கின்றாள் (இதைக்) காண்பாயாக வென்று கூற, உண்ட தோழி ஒருத்திவந்து - கள்ளுண்ட தோழி ஒருத்தி அங்கு வந்து, என் செய்வாள் - என்ன செய்கின்றாளெனின், தன் உருவமும் நோக்கி - தனது வடிவத்தையும் (அதனுட்) கண்டு, பேதாய் - அறிவில்லாதவளே, ஒருத்தியோ - (உன்னோடு உண்பவள்) ஒருத்தியா (அன்று); இருவர் என்றாள் - இருவர் என்று கூறினாள்; எச்சில் என்று உகுத்து நக்காள் - (அவள்) இது எச்சிற்பட்டதென்று அதனைக் கீழே உகுத்துச் சிரித்தனள். உண்கின்றாளாகிய ஒருத்தி என்க. உருவமும் : எச்சவும்மை. ஒருத்தியோ : ஓகாரம் தெரிநிலை. (73) சாடியு ணறவ முண்டா டன்னுரு வேறு பாட்டை ஆடியு ணோக்கி நானோ வல்லனோ வெனைத்தான் கைக்கொண் டோடினர் பிறரு முண்டோ வுயிரன்னான் வந்திங் கென்னைத் தேடினென் செய்கே னென்னைத் தேடித்தா சேடி யென்றாள். (இ-ள்.) சாடியுள் நறவம் உண்டாள் - சாடியிலேயுள்ள மதுவை உண்ட ஒரு பெண், தன் உருவேறுபாட்டை ஆடியுள் நோக்கி - தனது வடிவத்தின் வேறுபாட்டினைக் கண்ணாடியுட்கண்டு, நானோ அல்லனோ - (இங்கிருப்பது) நான்தானோ வேறுமகளோ, எனைத்தான் கைக்கொண்டு ஓடினர் பிறரும் உண்டோ - பிறர் என்னைக் கைப்பற்றி ஓடினரோ, உயிர் அன்னான் வந்து இங்கு என்னைத் தேடின் என் செய்கேன் - என் உயிர்போன்ற காதலன் வந்து இங்கு என்னைத் தேடினால் யான் என் செய்வேன், சேடி என்னைத் தேடித்தா என்றாள் - தோழியே என்னைத் தேடிக் கண்டு பிடித்துத் தருவாயாக என்று வேண்டினள். (74) களித்தவ ளொருத்தி நின்ற வாடியுட் கணவன் தன்பின் ஒளித்தவ னுருவுந் தானு நேர்பட வுருத்து நோக்கித் துளித்தகண் ணீர ளாகி யேதிலா டோடோய்ந் தின்பங் குளித்தனை யிருத்தி யோவென் றுதைத்தனள் கோப மூண்டாள். (இ-ள்.) களித்தவள் ஒருத்தி நின்ற ஆடியுள் - கள்ளுண்ட ஒரு பெண் தான் நின்று பார்த்த கண்ணாடியுள், தன் பின் ஒளித்தவன் கணவன் உருவும் - தன் பின்னே மறைந்து நின்ற கேள்வன் வடிவமும், தானும் நேர்பட - தன் வடிவமுந் தோன்ற, உருத்து நோக்கி - செயிர்த்து நோக்கி, துளித்த கண்ணீரளாகி - துளிக்கின்ற கண்ணீரை யுடையளாய், ஏதிலாள் தோள் தோய்ந்து இன்பம் குளித்தனை - அயலாள் தோளைப் புணர்ந்து இன்பக் கடலுள் மூழ்கி, இருத்தியோ என்று - இருக்கின்றாயோ வென்று கூறி, கோபம் மூண்டாள் உதைத்தனள் - சினமுதிர்ந்து உதைத்தாள். களித்தல் - கள்ளுண்டு மயங்கல். ஒளித்தவனாகிய கணவன் என்க. கணவன் நிழலைக் கணவனாகவும், தன் நிழலை மற்றொருத்தியாகவும் மயங்கினாள். மதுவுண்டல் கூறிய இச்செய்யுட்களிலே பேதைமை பற்றிய நகைச்சுவை விஞ்சியிருத்தல் காண்க. “ எள்ளல் இளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான் கென்ப ” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும். (75) இளம்புளிந் தயிர்வி ராய வின்சுவை பொதிந்த சோறு வளம்பட விருந்தி னோடு மருந்துவார் வசந்த வீணை களம்படு மெழாலி னோடு கைவிர னடாத்திக் காமன் உளம்புகுந் தலைப்ப வெண்ணெய்ப் பாவைபோ லுருகிச் சோர்வார். (இ-ள்.) இளம் புளிந் தயிர் விராய - இளம் புளிப்பினையுடைய தயிர் கலந்த, இன்சுவை பொதிந்த சோறு - இனிய சுவை நிறைந்த சோற்றினை, விருந்தினோடும் வளம்பட அருந்துவார் - விருந்தினரோடும் வளம்பொருந்த உண்பார்கள்; களம்படும் எழாலினோடு - மிடற்றிலுண்டாகும் ஓசை யமைந்த பண்ணுடன், வசந்த வீணை - வசந்த காலத்துக்குரிய வீணையை, கைவிரல் நடாத்தி - வாசித்து, காமன் உளம் புகுந்து அலைப்ப - மதவேள் உள்ளத்திற் சென்று வருத்துதலால், வெண்ணெய்ப் பாவைபோல் உருகிச் சோர்வார் - வெண்ணெயாற் செய்த பதுமைபோல் உருகித் தளர்வார். “ புளிப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும்” என்பதனால், புளிந் தயிர் என மெலி மிக்கது. விருந்து - புதுமை; அது புதியராய் வந்தார் மேல நின்றது. எழால் - மிடற்றிசை; வெள்ளை காகுளி கீழோசை வெடிகுரல் நாசியின்ன, எள்ளிய வெழாலின் குற்றம்’ என விறகு விற்ற படலத்திற் கூறினமையுங் காண்க. (76) இவ்விள வேனிற் காலத் தின்னுயிர்த் துணைவி யோடும் செவ்விய செங்கோ னேமிச் செண்பக மாற னோர்நாள் கைவினை வல்லோன் செய்த கதிர்விடு காந்தக் குன்றில் வெவ்விய வேடை நீப்பா னிருந்தனன் வேறு வைகி. (இ-ள்.) இவ்விளவேனில் காலத்து ஓர் நாள் - இந்த இளவேனிற் காலத்தில் ஒருநாள், கைவினை வல்லோன் செய்த - சிற்ப நூல் வல்லோன் செய்த, கதிர்விடு காந்தக் குன்றில் - ஒளிவிடும் சந்திரக்காந்தக் கல்லாலாகிய செய்குன்றின்கண், வெவ்விய வேடை நீப்பான் - கொடிய வெப்பத்தைப் போக்கும் பொருட்டு, வெவ்விய செங்கோல் நேமிச் செண்பக மாறன் - திருந்திய செங்கோலையும் ஆணைத் திகிரியையுமுடைய செண்பகமாறன் என்பான். இன் உயிர்த் துணைவியோடும் - தனது இனிய உயிர்போலும் மனைவியோடும், வேறு வைகி இருந்தனன் - வேறாகத் தங்கியிருந்தனன். இவ்விளவேனிற் காலம் - இதுகாறும் வருணித்த இயல்பினையுடைய இளவேனிற்காலம். செவ்விய என முன்வந்தமையின் செங்கோல் என்பது பெயர் மாத்திரையாய் நின்றது. காந்தம் - சந்திரகாந்தம். வெவ்விய வேடை - மிக்க வெப்பம். நீப்பான் : வினையெச்சம். (77) மாந்தளி ரீன்று கோங்கு வண்டள வரும்பித் தண்டேங் காந்தள்செங்கமல மாம்பல் சண்பகங் கழுநீர் பூத்துச் சாய்ந்தமென் கொடியுந் தானுந் தனியிடத் திருப்பா னேரே வாய்ந்ததோர்1 நாற்றந் தோன்ற வசைந்தது வசந்தத் தென்றல் (இ-ள்.) மாந்தளிர் ஈன்று - மாந்தளிர் தளிர்த்து, கோங்கு வண் தளவு அரும்பி - கோங்கு மொட்டும் வளவிய முல்லையரும்பும் அரும்பி, தண் தேம் காந்தள் - தண்ணிய தேன் நிறைந்த காந்தள் மலரும், செங்கமலம் ஆம்பல் சண்பகம் கழுநீர் பூத்து - செந்தாமரை மலரும் குமுதமலரும் சண்பக மலரும் குவளை மலரும் மலர்ந்து, சாய்ந்த மென்கொடியும் தானும் - ஒசிந்த மெல்லிய கொடி (ஒன்று உளதேல் அது) போன்ற தேவியுந் தானுமாக,தனி இடத்து இருப்பான் நேரே - தனியிடத்தில் இருக்கும் அச்சண்பகமாறனுக்கு நேரே, வாய்ந்தது ஓர் நாற்றம் தோன்ற - புதுமை வாய்ந்ததாகிய ஓர் நறுமணந் தோன்றுமாறு, வசந்தத் தென்றல் அசைந்தது - வசந்த காலத்திற்குரிய தென்றல் மெல்லென வீசியது. மாந்தளிர் முதலியவற்றையுடைய கொடியொன்றுளதேல் அது போலும் என விரித்து இல்பொருளுவமை யாக்குக. மாந்தளிர் மேனியையும், கோங்கு தனத்தையும், தளவு பற்களையும், காந்தள் கையையும். கமலம் முகத்தையும், ஆம்பல் வாயையும், சண்பகம் மூக்கையும், கழுநீர் கண்ணையும் இவற்றையுடைய கொடி தலைவியையும் உணர்த்தின. உவமானச் சொற்களால் உவமேயங்களைக் கூறுதலால் உருவகவுயர்வு நவிற்சியணியுமாம். கொடியும் தானும் இருப்பான் என்றது வழுவமைதி; “ தானுந்தன் றையலுந் தாழ்சடையோ னாண்டிலனேல்” என்னுந் திருவாசகத்திற்போல. (78) வெவ்விய வேலான் வீசும் வாசமோந்1 தீது வேறு திவ்விய வாச மாக விருந்தது தென்றல் காவில் வெளவிய வாச மன்று காலுக்கும் வாச மில்லை எவ்வியல் வாச மேயோ விதுவென வெண்ணங் கொள்வான். (இ-ள்.) வெவ்விய வேலான் - கொடிய வேற்படையினையுடைய சண்பகமாறன், வீசும் வாசம் மோந்து - அங்ஙனம் வீசிய மணத்தை உயிர்த்து, ஈது வேறு திவ்விய வாசமாக இருந்த்து - இது வேறு தெய்வத் தன்மை பொருந்திய மணமாக இருந்தது; தென்றல் காவில் வெளவிய வாசம் அன்று - தென்றல் சோலையிற் கவர்ந்த மணம் அன்று; காலுக்கும் வாசம் இல்லை - காற்றுக்கும் இயல்பாக மணமில்லை (ஆயின்), இது எவ்வியல் வாசமேயோ என - இம்மணம் எதன்கட் பொருந்திய மணமோ என்று, எண்ணங்கொள்வான் - எண்ணுவானாகி. திவ்வியம் - தெய்வத் தன்மை. இவ்வுவகத்து இதுகாலம் உணர்ந்த வாசமன்றென்பான் ‘வேறு திவ்விய வாசமாக விருந்தது’ என்றான். காவின் வெளவிய வாசமன்று, வேறு திவ்விய வாசமாக விருந்தது என மாற்றியுரைத்தலுமாம். காற்று ஊறு, ஓசை என்னும் இருகுணமே உடையதாகலின் ‘காலுக்கும் வாசமில்லை’ என்றான். எவ்வியல் என்பதனை எதன்கட் பொருந்திய என விரித்துக் கொள்க. எண்ணங்கொள்வான் : ஒரு சொல்லாய் எச்சமாயிற்று; (79) திரும்பித்தன் றேவி தன்னை நோக்கினான் றேவி யைம்பால் இரும்பித்தை வாச மாகி யிருந்தது கண்டிவ் வாசஞ் சுரும்பிற்குந் தெரியா தென்னாச் சூழ்ந்திறும் பூது கொண்டீ தரும்பித்தைக் கியல்போ செய்கை யோவென வையங் கொண்டான். (இ-ள்.) திரும்பித் தன் தேவி தன்னை நோக்கினான் - திரும்பித் தன் மனைவியைப் பார்த்தான்; தேவி ஐம்பால் இரும்பித்தை வாசமாகி இருந்தது கண்டு - (அந்த மணம்) தேவியின் ஐந்து பகுப்பாக முடிக்கப்படும் பெருமை பொருந்திய கூந்தலின் மணமாயிருத் தலைக் கண்டு, இவ்வாசம் சுரும்பிற்கும் தெரியாது என்னாச் சூழ்ந்து- இம்மணம் வண்டிற்கும் தெரியாது என்று எண்ணி, இறும்பூது கொண்டு - வியப்புற்று, ஈது - இம்மணம், அரும்பித்தைக்கு இயல்போ செய்கையோ என ஐயங்கொண்டான் - அரிய கூந்தலுக்கு இயற்கையோ (அன்றிச்) செயற்கையோ என்று ஐயுற்றான். ஐம்பால் - ஐந்து பகுப்பு : முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்பன. பித்தை பெண் மயிரை உணர்த்தி நின்றது. செய்கை - செயற்கை. (80) ஐயுறு கருத்தை யாவ ராயினு மறிந்து பாடல் செய்யுந ரவர்க்கே யின்ன வாயிரஞ் செம்பொ னென்றக் கையுறை வேலா னீந்த பொற்கிழி கைக்கொண் டேகி மெய்யுணர் புலவர் முன்னாத் தூக்கினர் வினைசெய் மாக்கள். (இ-ள்.) ஐயுறு கருத்தை அறிந்து - யான் ஐயுற்ற கருத்தினை உணர்ந்து, பாடல் செய்யுநர் யாவராயினும் - பாடுகின்றவர் யாவராயிருந்தாலும், அவர்க்கே இன்ன ஆயிரம் செம்பொன் என்று- அவருக்கே இந்த ஆயிரம் செம்பொன் அடங்கிய முடிப்பு உரிய தென்று கூறி, அ கை உறை வேலான் ஈந்த பொற்கிழி - அந்த வேற்படை ஏந்திய கையினனாகிய சண்பக மாறன் கொடுத்த பொன் முடிப்பை, வினைசெய் மாக்கள் கைக்கொண்டு ஏகி - ஏவலாளர் பெற்றுச் சென்று, மெய் உணர் புலவர் முன்னாத் தூக்கினர் - உண்மையை உணர்ந்த சங்கப் புலவர் இருக்கை முன்னே கட்டித் தொங்கவிட்டனர். இன்ன : இகரச் சுட்டின் திரிபு. கையிற் பொருந்திய வேல் எனக் கிடந்தவா றுரைத்தலுமாம். வேலான் ஈந்தனன் அங்ஙனம் ஈந்த என விரித்துரைக்க. முன்னா - முன்னாக. (81) வங்கத்தார் பொருள்போல் வேறு வகை யமை கேள்வி நோக்கிச் சங்கத்தா ரெல்லாந் தம்மிற் றனித்தனி தேர்ந்து தேர்ந்து துங்கத்தார் வேம்ப னுள்ளஞ் சூழ்பொரு டுழாவி யுற்ற பங்கத்தா ராகி யெய்த்துப் படருறு மனத்த ரானார். (இ-ள்.) சங்கத்தார் எல்லாம் - சங்கப் புலவரனைவரும், வங்கத்து ஆர் பொருள் போல் - மரக்கலத்தில் நிறைந்த பொருளின் வகை போல, வேறுவகை அமை கேள்வி - வேறு வேறு வகையாக அமைந்த நூல்களால், தம்மில் நோக்கி - தம்முள் (ஒன்றுபட்டு) ஆராய்ந்தும், தனித் தனி தேர்ந்து தேர்ந்து - ஒவ்வொருவரும் தனித்தனியே பன்முறை ஆராய்ந்தும், துங்கத் தார் வேம்பன் உள்ளம் சூழ் பொருள் துழாவி - சிறந்த வேப்ப மலர் மாலையை யணிந்த சண்பகமாறன் உள்ளத்துக் கருதிய பொருளைத் தேடி (க் காணா மையால்), உற்ற பங்கத்தாராகி - சிறுமையுற்றவராய், எய்த்துப் படர் உறு மனத்தரானார் - இளைத்துத் துன்ப மிக்க மனத்தினையுடையரானார். வங்கத்திலே பல திணைப் பொருள்களும் நிறைந்திருக்கு மாறுபோல பல திணைப் பொருள்களும் நிறைந்த நூல்கள் என்க. கேள்வியால் என உருவு விரிக்க. தார்வேம்பன் என்பதை வேப்பந்தாரான் எனவும், உற்ற பங்கத்தாராகி என்பதைப் பங்க முற்றவராகி எனவும் மாறுக. சூழ்பொருள் - கருதிய பொருள் : வினைத்தொகை. படர் - துன்பம். (82) [கலி விருத்தம்] அந்த வேலையி லாதி சைவரில் வந்த மாணவன் மணஞ்செய் வேட்கையான் முந்தை யாச்சிம முயலும் பெற்றியான் தந்தை தாயிலான் றருமி யென்றுளான். (இ-ள்.) அந்த வேலையில் - அப்பொழுது, ஆதி சைவரில் வந்த மாணவன் - ஆதி சைவ மரபில் வந்த மாணவனும், தந்தை தாய் இலான்- தந்தையும் தாயும் இல்லாதவனும், முந்தை ஆச்சிமம் முயலும் பெற்றியான் - பிரமசரிய நிலையில் வழுவாது ஒழுகுந் தன்மையனும் ஆகிய, தருமி என்றுளான் - தருமி என்ற பெயருள்ள ஒருவன், மணம் செய் வேட்கையான் - மணஞ்செய்யும்விருப்புடையவனாய். ஆதிசைவர் - சிவனை அருச்சிக்கும் சிவ மறையோர். இவர்களைச் சதாசிவமூர்த்தியின் ஐந்து திருமுகங்களினின்றும் தோன்றிய ஐந்து முனிவரின் வழியினர் என்பர். முந்தை - முன். ஆச்சிரமம் என்பது திரிந்து நின்றது. வேட்கையான் என்பதை எச்சமாக்குக. (83) ஒருவ னான்முகத் தொருவன் மார்புறை திருவ னாடருந் தேவ னாலுரு அருவ நாலகன் றானைத் தன்கலி வெருவ நாடிமுன் வீழ்ந்து வேண்டுவான். (இ-ள்.) ஒருவன் - ஒப்பற்றவனும், நான்முகத்து ஒருவன் - நான்கு முகங்களையுடைய பிரமனாலும், மார்பு உறை திருவன் - திருமகள் உறையும் மார்பினையுடைய திருமாலினாலும், நாடரும் தேவன் - தேடிக் காண்பதற்கு அரிய தேவனும், நால் உரு நால் அருவம் அகன்றானை - நான்கு உருவங்களும் நான்கு அருவங்களும் (அருவுருவம் ஒன்றும்) ஆகிய இவற்றைக் கடந்தவனுமாகிய சோமசுந்தரக் கடவுளை, தன் கலிவெருவ நாடி - தன் துன்பம் அஞ்சி ஓடக் கருதி, முன் வீழ்ந்து வேண்டுவான் - திருமுன் வீழ்ந்து வணங்கி வேண்டுவானாயினன். மார்பு உறை திருவன் என்பதனைத் திரு உறை மார்பன் என விகுதி பிரித்துக் கூட்டுக. உருவம் நான்கு : அயன், மால், உருத்திரன், மகேசன். அருவம் நான்கு : விந்து, நாதம், சத்தி, சிவம், உபலக்கணத்தால் அருவுருவாகிய சதாசிவமுங் கொள்க. இவ்வொன்பது பேதங்களிலும் வியாபித்து நின்று தொழில் நடாத்தும் துரிய சிவனாகிய முழு முதல்வன் உண்மையில் இவற்றைக் கடந்து நிற்பன் என்க; “ சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் றிகழு மீசன் உவந்தரு ளுருத்தி ரன்றான் மாலய னொன்றி னொன்றாய்ப் பவந்தரு மருவ நாலிங் குருவநா லுபய மொன்றாய் நவந்தரு பேத மேக நாதனே நடிப்ப னென்பர்” என்னும் சிவஞான சித்தியார்த் திருவிருத்தங் காண்க. (84) தந்தை தாயிலேன் றனிய னாகிய மைந்த னேன்புது வதுவை வேட்கையேன் சிந்தை நோய்செயுஞ் செல்ல றீர்ப்பதற் கெந்தை யேயிது பதமென் றேத்தியே. (இ-ள்.) எந்தையே - எம் தந்தையே, தந்தை தாய் இலேன் - தந்தை தாய் அற்றவனாய், தனியனாகிய மைந்தனேன் - ஒரு பற்றுக்கோடு மில்லாதவனாயுள்ள சிறியேன், புதுவதுவை வேட்கையேன் - கடிமணம்புரியும் விருப்பமுடையேன்; சிந்தை நோய் செயும் செல்லல் தீர்ப்பதற்கு - (அது முடித்தற்குப் பொருளின்மையின்) மனத்தை வருத்தும் வறுமைத் துன்பினை நீக்குவதற்கு, இது பதம் என்று ஏத்தியே - இது தருணம் என்று கூறித் துதித்து. செல்லல் - துன்பம்; வறுமைத் துன்பம். (85) நெடிய வேதநூ னிறைய வாகமம் முடிய வோதிய முறையி 1னிற்கெனும் வடுவி2 லில்லற வாழ்க்கை யின்றிநின் அடிய ருச்சனைக் கருக னாவனோ. (இ-ள்.) நெடிய வேத நூல் நிறைய - உயர்ந்த மறை நூல்கள் முற்றவும், ஆகமம் முடிய - ஆகமங்கள் முற்றவும், ஓதிய முறையில் நிற்கு எனும் - ஓதி அறிந்த முறையில் நிற்பேன் எனினும், வடு இல் இல்லறவாழ்க்கை இன்றி - குற்றமில்லாத இல்லறவாழ்க்கை இல்லாமல், நின் அடி அருச்சனைக்கு அருகன் ஆவனோ - தேவரீரின் திருவடியை அருச்சிப்பதற்கு உரியன் ஆவனோ (ஆகேன்). வேதநூலை நிறைய ஓதிய முறையில், ஆகமங்களை முடிய ஓதிய முறையில் எனத் தனித்தனி கூட்டுக. நிற்கு - நிற்பேன். எனினும் என்பது எனும் என விகாரமாயிற்று. இல்லற வாழ்க்கை உற்றோரே சிவபெருமானை அருச்சித்தற்குரியரென்பது வேதாக மங்களின் துணிபென்பது இதனாற் பெற்றாம். (86) ஐய யாவையு மறிதி யேகொலாம் வையை நாடவன் மனக்க ருத்துணர்ந் துய்ய வோர்கவி யுரைத்தெ னக்கருள் செய்ய வேண்டுமென் றிரந்து செப்பினான். (இ-ள்.) ஐய - ஐயனே, யாவையும் அறிதியே - நீ யாவற்றையும் அறிவாயன்றே, வையை நாடவன் மனக்கருத்து உணர்ந்து - வையை நாட்டையுடைய பாண்டியனது உள்ளக் கருத்தை ஓர்ந்து, உய்ய - யான் உய்தி பெற, ஓர் கவி உரைத்து - ஒரு கவி பாடி, எனக்கு அருள் செய்ய வேண்டும் என்று - அடியேனுக்கு அருளல் வேண்டுமென்று, இரந்து செப்பினான் - குறையிரந்து கூறினான். இல்வாழ்க்கையை மேவியே நின் அடியை அருச்சிக்க வேண்டும் என்பதனையும், மணமுடித்தற்குப் பொருளில்லாது நான் வருந்துதலையும் நீ அறிவாய் என்பான் ‘யாவையும் அறிதி’ என்றான். முற்றுணர்வுடைய நினக்குப் பாண்டியன் மனக்கருத்துணர்தல் அரிதன்றென்பதும் கருத்தாகக் கொள்க. கொல், ஆம் : அசைகள். (87) தென்ன வன்குல தெய்வ மாகிய மன்னர் கொங்குதேர் வாழ்க்கை யின்றமிழ் சொன்ன லம்பெறச் சொல்லி நல்கினார் இன்ன றீர்ந்தவ னிறைஞ்சி வாங்கினான். (இ-ள்.) தென்னவன் குல தெய்வமாகிய - பாண்டியன் குல தெய்வமாகிய, மன்னர் - சுந்தர பாண்டியர், கொங்குதேர் வாழ்க்கை இன்தமிழ் - கொங்குதேர் வாழ்க்கை என்னும் முதலையுடைய இனிய தமிழ்ப்பாவை, சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார் - சொல்லழகு நிரம்பப் பாடித் தந்தருளினார்; இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான் - துன்பம் நீங்கி அத்தருமி என்பவன் (அதனை) வணங்கி வாங்கினான். கொங்குதேர் வாழ்க்கை என்பது, “ கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீயறியும் பூவே.” என்னும் பாசுரத்திற்கு முதற்குறிப்பு. தமிழ் என்பது செய்யுளை உணர்த்திற்று. இச்செய்யுள் நலம்புனைந்துரைத்தல் என்னும் துறையமைந்தது. மணத்தினை ஆராய்ந்து திரியும் வாழ்க்கையையுடைய அழகிய சிறையினைடைய வண்டே, பயிற்சி மிக்க நட்பும், மயில்போற் சாயலும், நெருங்கிய பற்களும் உடைய இவ்வரிவையின் கூந்தல்போல நறுமணமுடையன நீ அறியும் பூக்களுள் உளவோ, விருப்பம் பற்றிக் கூறாது உண்மை கூறுக. என்பது இதன் பொருள். இங்ஙனம் புனைந்துரைக்கு முகத்தால் தலைவன் நயப்புணர்த்தினான் என்க. இதனாற் றலைவிகூந்தல் இயற்கை மண முடைத்தென்பது பெறப்படுதல் காண்க. இச்செய்யுள் குறுந்தொகையிற் கோக்கப் பெற்றுள்ளது. (88) பொற்ற னிச்சடைப்1 புவன நாயகன் சொற்ற பாடல்கைக் கொண்டு தொன்னிதி பெற்ற டுத்தவன் போன்று பீடுறக் கற்ற நாவலர் கழக நண்ணினான். (இ-ள்.) பொன் சடை - பொன் போலுஞ் சடையினையுடைய தனி புவன நாயகன் - ஒப்பற்ற உலக நாயகனாகிய சோமசுந்தரக் கடவுள், சொற்ற பாடல் கைக்கொண்டு - திருவாய்மலர்ந்தருளிய திருப்பாசுரத்தைக் கையிலேற்று, தொல் நிதி பெற்றெடுத்தவன் போன்று - வைப்பு நிதியைப் பெற்றவன் போல (மகிழ்ந்து), பீடு உறக்கற்ற நாவலர் கழகம் நண்ணினான் - பெருமை பொருந்தக் கற்று வல்ல புலவர் சங்கத்தை அடைந்தான். பீடுறக் கற்ற என்றும், பீடுற நண்ணினான் என்றும் இயைத்தல் அமையும். (89) கல்வி யாளர்தங் கையி னீட்டினான் வல்லை யாவரும் வாங்கி வாசியாச் சொல்லின் செல்வமும் பொருளுந் தூக்கியே நல்ல நல்லவென் றுவகை நண்ணினார். (இ-ள்.) கல்வியாளர் தம் கையில் நீட்டினான் - புலவர் கையில் (அத்திருப்பாசுரத்தைக்) கொடுத்தான்; வல்லை வாங்கி - விரைந்து வாங்கி, யாவரும் வாசியா - அனைவரும் அதனைப் படித்து, சொல்லின் செல்வமும்பொருளும் தூக்கியே - சொல் வளத்தையும் பொருள் வளத்தையும் சீர் தூக்கி, நல்ல நல்ல என்று - (அவை) மிகவும் நல்லன என்று கூறி, உவகை நண்ணினார் - மகிழ்ச்சி யுற்றனர். அடுக்கு உவகை பற்றியது ; வியப்புமாம். (90) அளக்கில் கேள்வியா ரரசன் முன்புபோய் விளக்கி யக்கவி விளம்பி னார்கடன் உளக்க ருத்துநே ரொத்த லாற்சிரந் துளக்கி மீனவன் மகிழ்ச்சி தூங்கினான். (இ-ள்.) அளக்கு இல் கேள்வியார் - அளவில்லாத நூற்கேள்வியை யுடைய சங்கப் புலவர்கள், அரசன் முன்பு போய் - பாண்டியன் முன் சென்று, அக்கவி விளம்பி விளக்கினார்கள் - அக்கவியினைக் கூறிப் பொருள் விளக்கினார்கள்; தன் உளக் கருத்து நேர் ஒத்தலால் - தன் உள்ளக் கருத்துடன் (அது) முற்றும் ஒத்திருத் தலால், மீனவன் சிரம் துளக்கி மகிழ்ச்சி தூங்கினான் - பாண்டியன் முடியசைத்துக் களிகூர்ந்தான். அளக்கு : தொழிற்பெயர். விளம்பி விளக்கினார் என மாறுக. நேரொத்தல் - முழுதொத்தல். (91) உணர்ந்த கேள்வியா ரிவரொ டொல்லைபோய்ப் புணர்ந்த வாயிரம் பொன்னு மின்றமிழ் கொணர்ந்த வேதியன் கொள்க வின்றென மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான். (இ-ள்.) உணர்ந்த கேள்வியார் இவரொடு - உண்மை யுணர்ந்த கேள்வி வல்லாராகிய இப்புலவரோடும், ஒல்லை போய் - விரைந்து சென்று, புணர்ந்த ஆயிரம் பொன்னும் - பொருந்திய ஆயிரம் பொன்னையும், இன்தமிழ் கொணர்ந்த வேதியன் இன்று கொள்க என - இனிய பாசுரத்தைக் கொண்டுவந்த வேதியன் இப்பொழுதே கொள்ளக் கடவனென்று, மணந்த தாரினான் - மணம் வீசும் மாலையை யணிந்த பாண்டியன், மகிழ்ந்து நல்கினான் - மகிழ்ந்து அளித்தான்.(92) வேந்த னேவலால் விபுதர் தம்மொடும் போந்து மீண்டவைப் புறம்பு தூங்கிய ஆய்ந்த பொற்கிழி யறுக்கு நம்பியை நேர்ந்து கீரனில் லெனவி லக்கினான். (இ-ள்.) வேந்தன் ஏவலால் - பாண்டியன் ஏவலினால், விபுதர் தம்மொடும் மீண்டு போந்து - புலவரோடும் திரும்பிச் சென்று, அவைப் புறம்பு தூங்கிய - கழகத்தின் வெளியிற் றொங்கிய, ஆய்ந்த பொன் கிழி அறுக்கும் நம்பியை - சிறந்த பொன் முடிப்பை அறுக்கும் அத்தருமியை, கீரன் நேர்ந்து நில் என விலக்கினான் - நக்கீரன் எதிர்ந்து அறுக்காதே நில் என்று தடுத்தான். விபுதர் - புலவர். இதனால் முன்பு கீரன் ஆண்டிருந்தில னென்பது பெற்றாம். (93) குற்ற மிக்கவிக் கென்று கூறலுங் கற்றி லானெடுங் காலம் வெம்பசி உள்ள வன்கலத் துண்ணு மெல்லைகைப் பற்ற வாடினான் பண்பு பற்றினான். (இ-ள்.) இக்கவிக்குக் குற்றம் என்று கூறலும் - இந்தப் பாடலுக்குக் குற்றம் (உண்டு)என்று கூறலும், கற்றிலான் - தமிழ்ப் புலமையில்லானாகிய அவ்வேதியன், நெடுங்காலம் வெம்பசி உற்றவன் - நீண்ட காலமாகக் கொடிய பசி உற்றவனாய், கலத்து உண்ணும் எல்லை - கலத்தின்கண் உணவு பெற்று உண்ணுங்கால், கைப்பற்ற வாடினான் - (உண்ணற்கவெனத் தடுத்து ஒருவன்) கையைப் பற்றிக்கொள்ள வாட்டமடைந்த ஒருவனது, பண்பு பற்றினான் - தன்மையை அடைந்தான். குற்றமின்றெனக் கூறுதற்கேற்ற வலியிலானென்பார் ‘கற்றிலான்’ என்றார். (94) உலந்த நெஞ்சுகொண் டொதுங்கி நாயகன் நலந்த ருங்கழ னண்ணி னானவன் மலர்ந்த பாடல்கொண் டறிஞர் வைகிடத் தலர்ந்த சிந்தைகொண் டடைந்த மைந்தனே. (இ-ள்.) உலர்ந்த நெஞ்சுகொண்டு ஒதுங்கி - வாடிய மனத்துடன் நடந்து, நாயகன் நலம் தரும் கழல் நண்ணினான் - இறைவனது நன்மையைத் தருந் திருவடியை அடைந்தனன்; அவன் மலர்ந்த பாடல் கொண்டு - அவ்விறைவன் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாசுரத்தைப் பெற்றுக்கொண்டு, அறிஞர் வைகு இடத்து - சங்கப் புலவர் இருக்கும் இடத்திற்கு, அலர்ந்த சிந்தையோடு அடைந்த மைந்தன் - மகிழ்ந்த உள்ளத்தோடு சென்ற அத்தருமி என்பான். மலர்ந்த - அருளிச் செய்த. அலர்ந்த சிந்தை - களிப்பு மிக்க சிந்தை, மைந்தன் நண்ணினான் என்க. (95) செய்யுள் கொண்டுபோய்த் திருமுன் வைத்துளப் பையுள் கொண்டவப் பனவ னென்னைநீ மையுண் கண்ட1 விவ் வழுவு பாடலைக் கையு ணல்கினாய் கதியி லேற்கெனா. (இ-ள்.) உளம் பையுள் கொண்ட அப்பனவன் - உள்ளத்திற் கவலை கொண்ட அம்மறையோன், செய்யுள் கொண்டுபோய் திருமுன் வைத்து - திருப்பாசுரத்தைக் கொண்டுபோய்த் திருமுன் வைத்து. மை உண் கண்ட - கருமை பொருந்திய திருமிடற்றை யுடையவனே, நீ இவ்வழுவு பாடலை - நி குற்றமுள்ள இப்பாடலை, கதி இலேற்குக் கையுள் நல்கினாய் என்னை எனா - ஒரு பற்றுமற்ற எனக்குக் கையில் அளித்தருளினையே அது என்னை என்று கூறி. பையுள் - துன்பம். மையுள் கண்ட எனப் பாடமோதி. மையும் கரு நிறம்பெறக் கருதும் கண்டத்தை யுடையாய் என்றுரைப்பாரு முளர். கீரன் இக்கவி குற்றமுடைத்தென்று கூறினமையின் ‘வழுவு பாடல் என்றானென்க. (96) [அறுசீரடியாசிரிய விருத்தம்] வறுமைநோய் பிணிப்பப் பன்னாள் வழிபடு மடியே னின்பாற் பெறுபொரு ளிழந்தே னென்று பேசிலேன் யார்க்கு மேலாங் கறைகெழு மிடற்றோய் நின்றன் கவிக்குற்றஞ் சில்வாழ் நாட்சிற் றறிவுடைப் புலவர் சொன்னா லாருனை மதிக்க வல்லார். (இ-ள்.) வறுமை நோய் பிணிப்ப - வறுமையாகிய பிணி என்னைக் கட்டி வருத்த, பல் நாள் வழிபடும் அடியேன் - பல நாட்களாக வழிபாடு செய்து வரும் அடியேன், நின்பால் பெறு பொருள் இழந்தேன் என்று பேசிலேன் - நின்னிடத்துப் பெறுகின்ற பொருளை இழந்தேன் என்று கூறிற்றிலேன்; யார்க்கும் மேலாம் கறைகெழு மிடற்றோய் - அனைவருக்கும் மேலாகிய நஞ்சக்கறை பொருந்திய திருமிடற்றினையுடைய இறைவனே, நின்றன் கவி - நீ பாடியருளிய பாசுரத்திற்கு, சில் வாழ் நாள் சிற்றறிவு உடைப் புலவர்- சில் வாழ்நாளும் சிற்றறிவுமுடைய புலவர், குற்றம் சொன்னால் - குற்றங் கூறினால், உனை மதிக்க வல்லார் யார் - நின்னை மதிக்கவல்லவர் யாவர் (ஒருவரும் இல்லை யென்றபடி.) யான் பொருளிழந்த வருத்தத்தினும் புலவர் நின் கவிக்குக் குற்றங் கூறியதனாலாகிய வருத்தம் பெரிதுடையே னென்றான் என்க. “ யாவர்க்கு மேலாம் அளவிலாச் சீருடையான்.” என்பது திருவாசகம். (97) எந்தையிவ் விகழ்ச்சி நின்ன தல்லதை யெனக்கியா தென்னாச் சிந்தைநோ யுழந்து சைவச் சிறுவனின் றிரங்க யார்க்கும் பந்தமும் வீடும் வேதப் பனுவலும் பயனு மான சுந்தர விடங்க னங்கோர் புலவனாய்த் தோற்றஞ் செய்தான். (இ-ள்.) எந்தை - எம் தந்தையே, இவ்விகழ்ச்சி நின்னது அல்லது - இந்த நிந்தை நின்னைச் சார்ந்ததல்லது, எனக்கு யாது என்னா - எனக்கு யாதுளதென்று கூறி, சைவச் சிறுவன் - அவ்வாதிசைவ மாணவன், சிந்தைநோய் உழந்து நின்று இரங்க - மனக்கவலையால் வருந்தி நின்று இரங்க, யார்க்கும் பந்தமும் வீடும் - அனைவருக்கும் பந்தமும் வீடும், வேதப் பனுவலும் பயனுமான - மறைநூலும் அதன் பயனுமாகி, சுந்தர விடங்கன் - சோமசுந்தரக் கடவுள், அங்கு ஓர் புலவனாய்த் தோற்றம் செய்தான் - அங்கு ஒரு புலவனாகத் தோற்றுவானாயினன். இவ்விகழ்ச்சி நின்னது என்றது நீ அதனைப் போக்கவேண்டு மென்னும் குறிப்பிற்று. அல்லதை, ஐ : சாரியை. இறைவன் பந்தமும் வீடுமாயினமையும், வேதமும் அதன் பயனுமாயினமையும், “ பந்தமுமாய் வீடுமாயினார்க்கு” எனவும், “ மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே” எனவும் திருவாசகத்திற் கூறப்படுதல் சிந்திக்கற்பாலது. (98) கண்டிகை மதாணி யாழி கதிர்முடி வயிரம் வேய்ந்த குண்டலங் குடிகொண் டாகத் தழகெலாங் கொள்ளை கொள்ளத் தண்டமிழ் மூன்றும் வல்லோன் றானெனக் குறியிட் டாங்கே புண்டர நுதலிற் பூத்துப் பொய்யிருள் கிழித்துத் தள்ள. (இ-ள்.) கண்டிகை மதாணி ஆழி கதிர்முடி - மகரகண்டிகையும் பதக்கமும் மோதிரமும் ஒளி பொருந்திய முடியும், வயிரம் வேய்ந்த குண்டலம் - வயிரங்கள் பதித்த குண்டலமும், ஆகத்துக் குடிகொண்ட அழகு எலாம் கொள்ளை கொள்ள - திருமேனியின்கண் குடியாக இருக்கும் அழகையெல்லாம் கவரவும், தண் தமிழ் மூன்றும் வல்லோன் - தண்ணிய மூன்று தமிழிலும் வல்லவன், தான் எனக் குறியிட்டாங்கே - தானே எனக் குறியிட்டது போல, புண்டரம் - திரிபுண்டரம், நுதலில் பூத்து - நெற்றியின்கண் இடப்பெற்று, பொய் இருள் கிழித்துத் தள்ள - நிலையில்லாத அஞ்ஞான விருளைக் கிழித்து ஓட்டவும். கொண்ட என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது; கண்டிகை முதலியன ஆகத்திற் குடிகொண்டு என்றுரைத்தலுமாம். புண்டரம் - திருநீறு மூன்று கீற்றாக நெற்றியில் இடப்படுவது. முத்தமிழும் வல்லோன் எனக் குறியிட்டாற்போல் இடப்பட்ட திரிபுண்டரம் என்றது தற்குறிப்பு. பொய்யிருள் - ஆணவமலமாகிய இருள்; மும்மல இருள் என்றுமாம். (99) விரிகதிர்ப் படாத்திற் போர்த்த மெய்ப்பையு ளடங்கிப் பக்கத் தெரிமணிக் கடகத் திண்டோ ளிளையவ ரடைப்பை யோடுங் குருமணிக் களாஞ்சி யம்பொற் கோடிகந் தாங்க முத்தாற் புரிமதிக் குடைக்கீழ்ப் பொற்காற் கவரிபால் புரண்டு துள்ள. (இ-ள்.) விரிகதிர் படாத்தில் போர்த்த - விரிந்த ஒளியை யுடைய ஆடையாற் போர்க்கப் பெற்ற, மெய்ப்பையுள் அடங்கி - நிலையங்கியினுள் உடலைக்கரந்து, பக்கத்து - இரு பக்கங்களிலும், எரிமணிக் கடகத் திண் தோள் இளையவர் - நெருப்புப்போலும் மணிகள் அழுத்திய கடகங்கள் அணிந்த கண்ணிய தோள்களையுடைய இளைஞர், அடைப்பையோடும் குருமணிக் களாஞ்சி - அடைப்பையையும் நிறம் பொருந்திய மணிகள் பதித்த களாஞ்சியையும், அம்பொன் கோடிகம் தாங்க - அழகிய பொன்னாலாகிய பூந்தட்டினையும் தாங்கி வரவும், முத்தால் புரிமதிக்குடைக்கீழ் - முத்தாலாகிய சந்திரவட்டக் குடையின்கீழே, பால் பொன்கால் கவரி புரண்டு துள்ள - இருபாலும் பொற்காம்பினையுடைய சாமரை புரண்டு துள்ளவும். போர்த்த என்பது தைத்த என்னும் பொருட்டு. மெய்ப்பை - சட்டை. எரிமணி - மாணிக்கமணி. அடைப்பை - வெற்றிலைப்பை. களாஞ்சி - தாம்பூலத் தட்டு, உமிழுங்கலன். (100) சொல்வரம் பிகந்த பாத மென்பது தோன்ற வேதம் நல்லபா துகையாய்ச் சூட நவின்றன கற்றுப் பாட வல்லவர் மறையி னாறு மனுமுதற் கலைபோற் பின்பு செல்லநூ லாய்ந்ததோர் வைகுந் திருந்தவைக் களத்தைச் சேர்ந்தான். (இ-ள்.) சொல்வரம்பு இகந்த பாதம் என்பது தோன்ற - சொல்லின் எல்லையைக் கடந்த திருவடி யென்பது புலப்பட, வேதம் நல்ல பாதுகையாய்ச் சூட - மறை நல்ல பாதுகை வடிவமாகி (அதனைத் தன் முடியிற்) சூடவும், நவின்றன கற்றுப் பாட வல்லவர்- கூறியருளிய பாசுரங்களைக் கற்றுப் பாடவல்லவர்கள், மறையின் ஆறு மனுமுதல் கலைபோல் பின்பு செல்ல - மறையின் வழியே மனுமுறை முதலிய கலைகள் பின்செல்வதுபோலப் பின் செல்லவும், நூல் ஆய்ந்தோர் வைகும் திருந்து அவைக்களத்தைச் சேர்ந்தான் - நூலாராய்ச்சி வல்ல புலவர் இருக்கும் திருத்தமாகிய கழகத்தை அடைந்தனன். பாதம் சொல்வரம்பிகந்த தென்பதனை, “ பாதாள மேழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர்” என்னுந் திருவாசகத்தாலறிக; வேதத்தின்மேல் நிற்றலால் சொல்லைக் கடந்தமை குறிக்கப்பட்டது. கலை செல்வதுபோல் என விரித்துரைக்க. நவின்றன கற்றுப் பாடவல்லவர் - மாணாக்கர்; கற்றுச் சொல்லிகள் எனப்படுவர். (101) ஆரவை குறுகி நேர்நின் றங்கிருந் தவரை நோக்கி யாரைநங் கவிக்குக் குற்ற மியம்பினா ரென்னா முன்னங் கீரனஞ் சாது நானே கிளத்தினே னென்றா னின்ற சீரணி புலவன் குற்றம் யாதெனத் தேராக் கீரன். (இ-ள்.) ஆர் அவை குறுகி - புலவர் நிறைந்த அவையினைச் சார்ந்து, நேர் நின்று - எதிர் நின்று,அங்கு இருந்தவரை நோக்கி - அங்கிருந்த புலவர்களைப் பார்த்து, நம் கவிக்குக் குற்றம்இயம்பினார் யார் என்னா முன்னம் - எமது கவிக்குக் குற்றம் கூறினவர் யார் என்று கேட்பதற்கு முன்னரே, கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றான் - நக்கீரன் சிறிதும் அஞ்சாது நானே குற்றங் கூறினேன் என்றனன்; நின்ற சீர் அணி புலவன் - அதனைக் கேட்டு நிலைபெற்ற புகழ்வாய்ந்த புலவன், குற்றம் யாது என - குற்றம் யாதென்று வினவ,தேராக் கீரன் - தெளியாத நக்கீரன். ஆரவை - நிறையவை. யாரை : ஐகாரம் சாரியை. நின்ற சீர் - நிலை பெற்ற புகழ்; வந்து நின்று என்றுமாம். தேரா - பொருளுண்மை தெரியாத. (102) சொற்குற்ற மின்று வேறு பொருட்குற்ற மென்றான் றூய பொற்குற்ற வேணி யண்ணல் பொருட்குற்ற மென்னை யென்றான் தற்குற்றம் வருவ தோரான் புனைமலர்ச் சார்பா லன்றி அற்குற்ற குழற்கு நாற்ற மில்லையே யென்றா னையன். (இ-ள்.) சொல் குற்றம் இன்று - சொற்குற்ற மில்லை; வேறு பொருள் குற்றம் என்றான் - வேறே பொருளின் குற்றமென்று கூறினான்; தூய பொற்கு உற்ற வேணி அண்ணல் - தூய பொன்னை யொத்த சடையையுடைய இறைவன், பொருள் குற்றம் என்னை என்றான் - பொருட்குற்றம் என்னை என்று வினவினன், தன் குற்றம் வருவது ஓரான்- தனக்குக் குற்றம் வருவதை அறியாத கீரன், புனைமலர்ச்சார்பால் அன்றி - அணிந்த மலர்ச்சார்பினாலல்லாமல், அற்கு உற்ற குழற்கு - இருளையொத்த கூந்தலுக்கு, நாற்றம் இல்லை என்றான் - இயற்கையாக மணம் இல்லை என்று கூறினான்; ஐயன் - இறைவன். பொற்குற்ற, அற்குற்ற என்பவற்றில் குவ்வுருபை ஐயுருபாகத் திரித்து உற்ற என்பதை உவமவுருபாக்குக; குற்ற எனப் பிரித்து, பறித்த என்று பொருளுரைப்பாரும் உளர். (103) பங்கய முகமென் கொங்கைப் பதுமினி குழலோ வென்ன அங்கது மனைத்தே யென்றா னாலவா யுடையான் றெய்வ மங்கையர் குழலோ வென்ன வன்னது மந்தா ரத்தின் கொங்கல ரளைந்து நாறுங் கொள்கையாற் செய்கைத் தென்றான். பங்கயம் முகம் மென் கொங்கைப் பதுமினி குழலோ என்ன - தாமரை மலர்போன்ற முகத்தையும் மெல்லிய கொங்கையையுமுடைய பதுமினி கூந்தலோ என்று வினவ, அங்கு அதும் அனைத்தே என்றான் - அக்கூந்தலும் அத்தன்மைத்தே எனக் கூறினான்; ஆலவாய் உடையான் தெய்வமங்கையர் சூழலோ என்ன - திருவாலவாயுடைய இறைவன் தேவமகளிரின் கூந்தலோ என்று வினவ, அன்னதும் - அக்கூந்தலும், மந்தாரத்தின் கொங்கு அலர் அளைந்து நாறும் கொள்கையால் - மந்தாரத்தின் மணமுடைய மலர்களைக் கலந்து மணங்கமழுந் தன்மையினால், செய்கைத்து என்றான் - செயற்கை மணமுடையதே என்று கூறினான். பத்தினிப் பெண்டிர் கூந்தலுக்கும், தேவமகளிர் கூந்தலுக்கும் இயற்கை மணமுண்டென்பார் அவற்றை விதந்து வினவினார். அங்கதும் என்பதில் அங்கு அசை; அதும் என முற்றுகரம் கெட்டது. செய்கைத்து - செயற்கையுடையது. (104) பரவிநீ வழிபட் டேத்தும் பரஞ்சுடர் திருக்கா ளத்தி அரவுநீர்ச் சடையார் பாகத் தமர்ந்தஞா னப்பூங் கோதை இரவினீர்ங் குழலு மற்றோ வெனவஃது மற்றே யென்னா வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான். (இ-ள்.) நீ பரவி வழிபட்டு ஏத்தும் - நி துதித்து வழிபட்டு வணங்கும், பரஞ்சுடர் - பரஞ்சோதியாகிய, திருக்காளத்தி அரவு நீர்ச் சடையார் - திருக்காளத்தியிற் கோயில் கொண்டருளிய பாம்பையும் கங்கையையும் அணிந்த சடையையுடைய இறைவரது, பாகத்து அமர்ந்த ஞானப் பூங்கோதை - இடப்பாகத்தில் எழுந்தருளிய ஞானப் பூங்கோதையின், இரவின் ஈர் குழலும் அற்றோ என - இருளை யொத்த தண்ணிய கூந்தலும் அத்தன்மைத்தோவென்று வினவ, அஃதும் அற்றே என்னா - அக்கூந்தலும் அத்தன்மையை உடையதே என்று, வெருவிலான் - சிறிதும் அஞ்சாது, விளைவு நோக்கான் சலமே முற்றச் சாதித்தான் - மேல் வருவதை அறியாமல் முடியவும் சலஞ்சாதித்தான். நீ வழிபட்டேத்தும் சடையார் என்க; ஞானப் பூங்கோதை என்னலுமாம். சலம் - பொய், வஞ்சனை. சலஞ்சாதித்தல் - வைரஞ் சாதித்தல் என்னும் பொருளிலும் வழங்கும். (105) கற்றைவார் சடையா னெற்றிக் கண்ணினைச் சிறிதே காட்டப் பற்றுவா னின்னு மஞ்சா னும்பரார் பதிபோ லாக முற்றுநீர் கண்ணா னாலு மொழிந்தநும் பாடல் குற்றங் குற்றமே யென்றான் றன்பா லாகிய குற்றந் தேரான். (இ-ள்.) கற்றைவார் சடையான் - திரண்ட நீண்ட சடையையுடைய இறைவன், நெற்றிக் கண்ணினைச் சிறிது காட்ட - நுதல் விழியைச்சிறிது திறந்துகாட்ட, பற்றுவான் - அதனாற் பற்றப்படுவானாகியும், இன்னும் அஞ்சான் - இன்னும் அஞ்சாதவனாய், உம்பரார் பதிபோல் ஆகம் முற்றும் நீர் கண்ணானாலும் - தேவேந்ததிரன்போல் உடல் முற்றும் நீர் கண்களை உடையீரானாலும், மொழிந்த நும் பாடல் குற்றம் குற்றமே என்றான் - கூறிய நுமது செய்யுள் குற்றமுடையதே என்று கூறினன்; தன் பால் ஆகிய குற்றம் தேரான் - தன்னிடத்துள்ள குற்றத்தை அறியாத கீரன். அவனைத் தீமை தீர்த்து ஆட்கொள்ளும் கருத்தின ரென்பார் ‘கண்ணினைச் சிறிதே காட்ட’ என்றார். உம்பரார் - விண்ணுலகிலுள்ளவர்; தேவர். வலியுறுத்துவான் ‘குற்றங் குற்றமே’ என்றான். (106) [கலிநிலைத்துறை] தேய்ந்த நாண்மதிக் கண்ணியா னுதல்விழிச் செந்தீப் பாய்ந்த வெம்மையிற் பொறாதுபொற் பங்கயத் தடத்துள் ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தன னவனைக் காய்நத நாவல னிம்மெனத் திருவுருக் கரந்தான். தனக்குப் பிழை செய்தாரும் மீட்டும் வந்தடைந்தால் அவர்க்கு அருள்புரியும் இயல்பினன் என்பது தோன்ற ‘தேய்ந்த நாண்மதிக் கண்ணியான்’ என்றார்; இது கருத்துடை யடையணி. இம்மென : விரைவுக் குறிப்பு. (107) ஆகச் செய்யுள் - 2539. ஐம்பத்து மூன்றாவது கீரனைக் கரையேற்றிய படலம் (கலிநிலைத்துறை) மார னைப்பொடி கண்டவ னந்தண மைந்தனுக் கார நற்கன கக்கிழி யீந்த தறைந்தனம் ஏர னத்திரள் சூழ்மல ரோடை யிடத்தினுங் கீர னைக்கரை யேற்றிய வாறு கிளத்துவாம். (இ-ள்.) மாரனைப்பொடி கண்டவன் - மன்மதனை நீறாக்கிய இறைவன், அந்தண மைந்தனுக்கு - மறைச்சிறுவனாகிய தருமிக்கு, ஆர - மனமகிழ, நல்கனகக் கிழி ஈந்தது அறைந்தனம் - நல்ல பொற்கிழியை அளித்தருளிய திருவிளையாடலைக் கூறினாம்; ஏர் அனத்திரள் சூழ்மலர் ஓடை இடத்தினும் - அழகிய அன்னப்பறவையின் கூட்டம் சூழ்ந்த பொற்றாமரை வாவியினின்றும், கீரனைக் கரையேற்றியவாறு - நக்கீரனைக் கரையேற்றிய திருவிளையாடலை, கிளத்துவாம் - (இனிக்) கூறுவாம். பொடி கண்டவன் - பொடியாக்கியவன்; ஒரு சொல். கிழி பின்னர்க் கொடுக்கப்படுவதாயினும், அதற்கேதுவான 'd8\u2965?்ஷூ3‘காங்குதேர் வாழ்க்கை’ என்னும் பாசுரம் முன்பு அளிக்கப்பெற்றமையின் ‘கனகக் கிழி யீந்தது’ என்றார். (1) தாழ்ந்த வேணிய னெற்றி முளைத்த தழற்கணாற் போழ்ந்த நாவல னாடக பங்கயப் பொய்கைவாய் வீழ்ந்த ரும்படர் வேலையில் வீழ்ந்தனன் விம்முறச் சூழ்ந்த நாவலர் கண்டு பொறாது துளங்குவார். (இ-ள்.) தாழ்ந்த வேணியன் - நீண்ட சடையையுடைய சோமசுந்தரக் கடவுளின், நெற்றி முளைத்த தழல் கணால் - நெற்றியிற்றோன்றிய அனற்கண்ணால், போழ்ந்த நாவலன் - பிளக்கப்பட்ட கீரன், ஆடக பங்கயப் பொய்கைவாய் வீழ்ந்து - பொற்றாமரை வாவியுள் வீழ்ந்து, அரும்படர் வேலையில் வீழ்ந்தனன் விம்முற - கடத்தற்கரிய துன்பக்கடலுள் வீழ்ந்து வருந்த, சூழ்ந்த நாவலர் கண்டு பொறாது துளங்குவார் - சூழ்ந்துநின்ற ஏனைப் புலவர்கள் (அதனைக்) கண்டு பொறுக்கலாற்றாது வருந்துவாராயினர். தாழ்ந்த - தொங்கிய; நீண்ட, போழ்ந்த என்பது பாயப்பட்ட என்னும் கருத்திற்று. படர் - துன்பம். வீழ்ந்தனன் : முற்றெச்சம். (2) ஏன்ற வேந்த னிலாக்குடி யீட்டமு மின்கதிர் கான்ற நாயக மாமணி போகிய கண்டியும் ஆன்ற ஞானமி லாதவர் கல்வியு மானதே சான்ற கீரனி லாதவை கூடிய சங்கமே. (இ-ள்.) சான்ற கீரன் இலாது அவை கூடிய சங்கம் - புலமை சான்ற நக்கீரன் இல்லாது பிற புலவர் கூடிய இச்சங்கமானது, ஏன்ற வேந்தன் இலாக் குடி ஈட்டமும் - பொருந்திய மன்னனில்லாத குடியின் கூட்டத்தையும், இன் கதிர் கான்ற நாயகம் மாமணி போகிய கண்டியும் - இனிய ஒளி வீசும் நடுநாயகமாகிய பெரிய மணியை இழந்த கண்டிகையையும், ஆன்ற ஞானம் இலாதவர் கல்வியும் ஆனது - நிறைந்த மெய்யுணர் வில்லாதவர் கல்வியையும் போன்றது. கவற்சியும், விளக்கமின்மையும், பயனின்மையும உவமைகளாற் கொள்க. இது பலபொருளுவமையணி. (3) ஐய சொற்பொரு டன்வடி வானவ ராலவாய் மைத ழைத்த மிடற்றினர் தம்மொடும் வாதுதான் செய்த விப்பிழை யோபெரி தெப்படி தீருமோ உய்வ தற்புத மேயென யாவரு முன்னினார். (இ-ள்.) சொல் பொருள் வடிவு ஆனவர் - சொல்லும் பொருளும் தனது வடிவமாயுள்ளவரும், ஆலவாய் மைதழைத்த மிடற்றினர் தம்மொடும் - திருவாலவாயின்கண் வீற்றிருக்கும் இருள்மிக்க திருமிடற்றினையுடையவருமாகிய சோமசுந்தரக் கடவுளுடன், வாதுசெய்த இப்பிழையோ பெரிது - வாதஞ்செய்த இந்தப் பிழை மிகப் பெரியது (ஆகலின்), எப்படி தீருமோ - (இஃது) எங்ஙனம் நீங்குமோ, உய்வது அற்புதமே என - இனி பிழைத்தல் அரிதே என்று, யாவரும் உன்னினார் - அனைவரும் கருதினர். ஐய : அசைநிலை; குறிப்புப் பெயரெச்சமாகக் கொண்டு, அழகிய என்றுரைத்தலுமாம். சொற்பொருள் - சொல்லின் பொருள் என்றுமாம். சொற்பொருள் வடிவானவருடன் சொற் பொருள் பற்றி வாதுசெய்யப் பிறர் எங்ஙனம் வல்லுநராவர் என்பது தோன்றச் ‘சொற்பொருள் தன் வடிவானவர்’ என்றார். தான் என்பதும் அசை. (4) எய்தி வெள்ளி மலைபெயர்த் தானு மிறுத்ததன் கையில் வீணைதொட் டின்னிசை பாடக் கனிந்தவன் செய்த தீங்கு பொறுத்தது மன்றித்திண் டேரொடும் மொய்கொள் வாளுங் கொடுத்தனன் புண்ணிய மூர்த்தியே. (இ-ள்.) எய்தி வெள்ளிமலை பெயர்த்தானும் - வெள்ளிமலைக்குச் சென்று (அதனைப்) பெயர்த்த இராவணனும், இறுத்த தன் கையில் வீணைதொட்டு - (அம்மலையைப்) பறித்த தனது கையில் வீணையைத் தழுவி, இன் இசை பாடக்கனிந்து - இனிய இசை பாடத் திருவுள்ளங் கனிந்து, அவன் செய்த தீங்கு பொறுத்ததும் அன்றி - அவன் செய்த பிழையைப் பொறுத்தருளியதும் அல்லாமல், திண்தேரொடும் மொய் கொள் வாளும் கொடுத்தனன் - திண்ணிய தேரும் வலிய வாளும் கொடுத்தருளினன்; புண்ணியமூர்த்தியே - இந்தப் புண்ணிய வடிவாகிய இறைவன். இலங்கையர் வேந்தனாகிய இராவணன் குபேரனை வென்று புட்பகத்தின்மீது இவர்ந்து திருக்கைலையை அடைந்தவழி அவ்விமானம் தடைப்பட்டதாகலின் சினங்கொண்டு அம்மலையைப் பெயர்த் தெடுக்கலுற்றவன் இறைவனது திருவடி விரனுதியால் ஊன்றப்பட்ட மலையின் கீழ்க்கிடந்து உழந்து பின் தெளிந்து இறைவனை இசைபாடி வழுத்த அவர் அவனுக்கு நெடிய வாழ்நாளும். தேரும், வாளும் கொடுத்தருளினர் என்பது வரலாறு. இறைவனது இத்தகைய கருணைத் திறத்தை விளக்கவே திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரையரும் பதிகந்தோறும் இவ்வரலாற்றைக் குறிப்பிப்பாராயினரென்க. (5) யாவ ராலு மகற்றரி திப்பிழை யாவர்க்குந் தேவ ராமவ ரேதிரு வுள்ளந் திரும்பினாற் போவ தேயிது வேதுணி பென்று புகன்றுபோய்ப் பாவ லோர்பரன் றாணிழ லிற்பணிந் தேத்துவார். (இ-ள்.) இப்பிழை யாவராலும்அகற்றரிது - இப்பெரும் பிழையை யாவராலும் நீக்குத லரிது; யாவர்க்கும் தேவராம் அவரே- அனைவர்க்குந் தேவராகிய அப்பொருமானே, திருஉள்ளம் திரும்பினால் - திருவுள்ளம் இரங்குவராயின், இது போவது துணிபே என்று புகன்று - இப்பிழை நீங்குவது உறுதியே என்று கூறி, பாவலோர் போய் பரன் தாள் நிழலில் பணிந்து ஏத்துவார் - புலவர்கள் சென்று சோமசுந்தரக் கடவுளின் திருவடி நீழலில் வீழ்ந்து வணங்கித் துதிப்பாராயினர். அகற்று : முதனிலைத் தொழிற்பெயர் ; அகற்ற என்னும் பெயரெச்சத்து அகரந் தொக்கதுமாம். உள்ளந் திரும்புதல் - செற்றமொழிந்து இரங்குதல். (6) திருத்த னேசர ணஞ்சர ணம்மறைச் சென்னிமேல் நிருத்த னேசர ணஞ்சர ணந்நிறை வேதநூல் அருத்த னேசர ணஞ்சர ணந்திரு வாலவாய் ஒருத்த னேசர ணஞ்சர ணங்க ளுனக்குநாம். (இ-ள்.) திருத்தனே நாம் உனக்குச் சரணம் சரணம் - தூயவனே நாங்கள் உனக்கு அடைக்கலம்; மறைச் சென்னிமேல் நிருத்தனே சரணம் சரணம் - மறைமுடியின்மேல் திருக்கூத்தாடுபவனே உனக்கு அடைக்கலம்; நிறை வேதநூல் அருத்தனே சரணம் சரணம் - நிறைந்த மறைகளின் பொருளாயுள்ளவனே உனக்கு அடைக்கலம்; திருவாலவாய் ஒருத்தனே சரணம் சரணம் - திருவாலவாயின்கண் எழுந்தருளிய ஒப்பற்றவனே உனக்கு அடைக்கலம். அடைக்கலம் - அடைக்கலப் பொருள் என்றவாறு - தமக்கொரு சுதந்தரமுமின்றித் தம்மை ஒப்புவிப்பது அடைக்கலம் புகலாகும். (7) பாயு மால்விடை மேல்வரு வோய்பல் லுயிர்க்கெலாந் தாயுந் தந்தையு மாகுநின் றண்ணளி தாமரைக் கேயு மாதவன் போனல்ல தீய வியற்றினார்க் காயு மின்பமுந் துன்பமு மாக்குவ தாதலால். (இ-ள்.) பாயும் மால்விடை மேல் வருவோய் - பாய்ந்து செல்லும் திருமாலாகிய இடபவூர்தியில் ஏறி (அடியார்க்கருள விரைந்து) வருபவனே, பல் உயிர்க்கு எலாம் தாயும் தந்தையும் ஆகும் நின் தண் அளி - பல வேறு வகைப்பட்ட உயிர்கள் யாவற்றிற்கும் அன்னையும் அத்தனுமாகும் நினது தண்ணிய அருளே. தாமரைக்கு ஏயும் ஆதவன்போல் - தாமரை மலருக்குப் பொருந்திய சூரியன் (மலர்தலையும் வாடுதலையுஞ் செய்தல்) போல, நல்ல தீய இயற்றினார்க்கு - நன்மைகளையும் தீமைகளையுஞ்செய்தார்க்கு, ஆயும் இன்பமும் துன்பமும் ஆக்குவது - ஆராயும் இன்பத்தையும் துன்பத்தையும் செய்வது; ஆதலால் - ஆகையால். மால்விடை - பெரியவிடை என்றுமாம். உயிர்க்கெலாம் தாயும் தந்தையுமாகும் என்றமையால் உயிர்கட்கு இறைவனாலளிக்கப்படும் துன்பங்கள் தாய் தந்தையரால் மக்களுக்கு அளிக்கப்படும் துன்பங்கள் போலும் என்க. “ தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்க டஞ்சொ லாற்றின் வந்திடா விடினு றுக்கி வளாரினா லடித்துத் தீய பந்தமு மிடுவ ரெல்லாம் பார்த்திடிற் பரிவே யாகும் இந்தநீர் முறைமை யன்றோ வீசனார் முனிவு மென்றும்.”” என்னும் சிவஞானசித்தியும் காண்க. தாமரைக்கு ஏயும் ஆதவன் போல் என்றது ஆதவன் சன்னிதியில் தாமரை தன்னியல்பிற்கேற்ப அலர்தலும் உலர்தலும் உடைமைபோல் நன்மை தீமை புரியும் உயிர்கள் இறைவன் சன்னிதியில் இன்ப துன்பங்களை எய்துகின்றன என்றபடி. நல்ல தீய இயற்றினார்க்கு இன்பமும் துன்பமும் என்றது நிரனிறை. (8) அத்த கற்ற செருக்கி னறிவழி கீரனின் வித்த கக்கவி யைப்பழு தென்ற விதண்டையான் மத்த கக்கண் விழித்து வெதுப்பின் மலர்ந்தபொன் முத்த கக்கம லத்திடை வீழ முடுக்கினாய். (இ-ள்.) அத்த - இறைவனே, கற்ற செருக்கின் - கற்றுணர்ந்த இறுமாப்பினால், அறிவு அழி கீரன் - உணர்வழிந்த கீரன், நின் வித்தகக் கவியை - நினது சதுரப்பாடுடைய பாசுரத்தை, பழுது என்ற விதண்டை யால் - குற்றமென்ற விதண்டையினாலே, மத்தகக் கண்விழித்து - நெற்றிக் கண்ணைத் திறந்து, வெதுப்பின் - அதன் வெம்மையால், முத்து அகம் - முத்துக்களைத் தன்னிடத்துள்ள, மலர்ந்த பொன் கமலத்திடை வீழ முடுக்கினாய் - மலர்ந்த பொற்றாமரை வாவியில் வீழுமாறு செலுத்தினாய். கற்ற என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு; முற்றக் கற்றுளேன் என்னுஞ் செருக்கால் என்பது கருத்தாகக்கொள்க. விதண்டை - வாதத்தில் வெல்லும் வேட்கை யுடையார் தமது பக்கத்தைத் தாபித்தலின்றிப் பிறர் பக்கத்தை இகழ்தல் மாத்திரமான கதை. (9) இருணி றைந்த மிடற்றடி கேளினி யிப்பிழை கருணை செய்து பொறுத்தரு ளென்று கபிலனும் பரண னும்முத லாகிய பாவலர் யாவருஞ் சரண மென்று விழுந்திரந் தாரடி சாரவே. (இ-ள்.) இருள் நிறைந்த மிடற்று அடிகேள் - இருள் நிரம்பிய திருமிடற்றினை யுடைய பெரியோய், இனிக் கருணை செய்து - இனி அருள் புரிந்து, இப்பிழை பொறுத்தருள் என்று - இக்குற்றத்தைப் பொறுக்கக் கடவை என்று, கபிலனும் பரணனும் முதலாகிய பாவலர் யாவரும் - கபிலனும் பரணனு முதலான புலவர் அனைவரும், சரணம் என்று அடிசார விழுந்து - அடைக்கலமென்று திருவடியிற் பொருந்த வீழ்ந்து, இரந்தார் - குறை யிரந்து வேண்டினர். பாவலர் யாவரும் இப்பிழை பொறுத்தருள் என்று அடிசார விழுந்து இரந்தார் என முடிக்க. (10) [அறுசீரடியாசிரிய விருத்தம்] அககீர வேலை யால மயின்றவெங் கருணை வள்ளல் இக்கீர மழலைத் துஞ்சொ லிறைவியோ டெழுந்து போந்து நக்கீரன் கிடந்த செம்பொ னளினப்பூந் தடத்து ஞாங்கர்ப் புக்கீர மதுரத் தீஞ்சொற் புலவர்தங் குழாத்து ணின்றான். (இ-ள்.) அக்கீரவேலை ஆலம் அயின்ற - அந்தப் பாற்கடலிற் றோன்றிய நஞ்சினை உண்டருளிய, எம் கருணை வள்ளல் - எமது அருள் வள்ளலாகிய இறைவர், இக்கு ஈர் அம்மழலைத் தீஞ்சொல் - கரும்பின் சுவையினை வென்ற அழகிய மழலையாகிய இனிய சொல்லை யுடைய, இறைவியோடு எழுந்து போந்து - உமைப் பிராட்டியோடு எழுந்து வந்தருளி, நக்கீரன் கிடந்த செம்பொன் நளினப் பூந்தடத்து ஞாங்கர் - நக்கீரன் அழுந்திக் கிடந்த சிவந்த பொற்றாமரை மலர்களையுடைய வாவி யினருகு, புக்கு - அடைந்து, ஈரம் மதுரத்துஞ்சொல் புலவர் தம் குழாத்துள் நின்றான் - அன்புச் சுவைகனிந்த இனிய சொல்லை யுடைய புலவர் கூட்டத்துள் நின்றான். அகரச்சுட்டு உயர்வு குறித்தது. கீரம் - ஷீரம் என்பதன் சிதைவு. நக்கீரன் என்பதில் நகரம் சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல். ‘குலநினையல் நம்பி’ என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையில் நப்பின்னை என்பதனை விளக்குழி நச்சினார்க்கினியர் இங்ஙனம் கூறுதல் காண்க. (11) அனற்கணா னோக்கி னான்பின் னருட்கணா னோக்க வாழ்ந்த புனற்கணே கிடந்த கீரன் பொறிபுலன் கரணமெல்லாந் கனற்கணார் தமவே யாகக் கருணைமா கடலி லாழ்ந்து வினைக்கணே யெடுத்த யாக்கை வேறிலன் புருவமானான். (இ-ள்.) அனல் கணால் நோக்கினான் - முன் அழற் கண்ணால் நோக்கிய இறைவன், பின் அருள் கண்ணால் நோக்க - பின் அருள்விழியால் நோக்கியருள, ஆழ்ந்த புனற்கணே கிடந்த கீரன் - ஆழமாகிய நீரின் கண்ணே கிடந்த நக்கீரன், பொறிபுலன் கரணம் எல்லாம் - பொறியும் புலனும் கரணமுமாகிய அனைத்தும், கனல் கணார் தமவேயாக - நெற்றிக்கண்ணினையுடைய அவ்விறை வருடையவேயாக, கருணைமா கடலில் ஆழ்ந்து - அருளென்னும் பெரிய கடலில் அழுந்தி, வினைக்கணே எடுத்த யாக்கை - வினையினா லெடுத்த உடல், வேறு இல் அன்பு உருவம் ஆனான் - அழிதலில்லாத அன்பு வடிவமானான். அனற் கண்ணால் நோக்கப் பொற்றாமரை வாவியில் அழுந்திக் கிடந்தமைபோல அருட்கண்ணால் நோக்கக் கருணைக் கடலில் ஆழ்ந்தனன் என்றார். பொறி, புலன் கரணமெல்லாம் இறைவருடைய வாதலாவது அளத்திற்பட்ட புற்போலப் பசு கரணமெல்லாம் பதிகரணமாதல். தம : பலவின்பாற் குறிப்பு முற்று; தாம் : பகுதி. வினைக்கணே : வேற்றுமை மயக்கம். “ திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணா முன்னே அங்கணர் கருணைகூர்ந்த வருட்டிரு நோக்க மெய்தித் தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட்ட டகல நீங்கி பொங்கிய வொளியி னீழற் பொருவிலன் புருவ மானார்” எனக் கண்ணப்பர் செய்தி கூறும் பெரிய புராணச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (12) போதையா ருலக மீன்ற புனிதையார் பரஞா னப்பூங் கோதையார் குழற்குத் தீங்கு கூறிய கொடிய நாவின் றீதையார் பொறுப்ப ரேயோ 1 வவரன்றித் திருக்கா ளத்திக் காதையார் குழையி னாரைக் காளத்தி கயிலை யென்னா. (இ-ள்.) போதையார் - ஞானவடிவினரும், உலகம் ஈன்ற புனிதை யார் - உலகத்தைப்பெற்ற தூய்மையுடையாருமாகிய, பரஞானப் பூங்கோதையார் குழற்கு - சிறந்த ஞானப்பூங்கோதையாரின் கூந்தலுக்கு, தீங்கு கூறிய கொடிய நாவின் தீதை - பழுதுசொன்ன கொடிய நாவின் குற்றத்தை, அவர் அன்றிப் பொறுப்பரேயோ - அவ்விறைவர் பொறுப்பரே அல்லாமல் வேறொருவர் பொறுப்பரோ, திருக்காளத்தி காது ஆர் குழையினாரை - திருக்காளத்தியில் எழுந்தருளிய காதிற் பொருந்திய குழையினையுடைய அவ்விறைவரை, காளத்தி கயிலை என்னா - காளத்தி கயிலை என்று. போதை - போதமுடையாள்; போதம் - ஞானம்; “ போதையார் பொற்கிண்ணத் தடிசில் ” என்பது ஆளுடைய பிள்ளையார் திருவாக்கு. அபரஞானமன்றென்பார் பரஞானம் என்றார். அவரன்றிப் பொறுப்பார் யாரென அவரது கருணைத்திறத்தை நினைந்து என விரித்துரைத்துக்கொள்க. காதை ஆர் - காதிற் பொருந்திய கைலைகாளத்தி யென்பது செய்யுளாதலின் மாறி நின்றது. (13) எடுத்தசொன் மாறிமாறி யிசையநே ரிசைவெண் பாவாற் றொடுத்தவந் தாதி சாத்தத் துணைச்செவி மடுத்து நேர்வந் தடுத்தவன் கையைப் பற்றி யகன்கரை யேற்றி னார்தாள் கொடுத்தெழு பிறவி வேலைக் கொடுங்கரை யேற்ற வல்லார். (இ-ள்.) எடுத்த சொல் மாறி மாறி இசைய - எடுத்த சொல் மாறி மாறி வந்து பொருந்த, நேரிசை வெண்பாவால் தொடுத்த அந்தாதி சாத்த - நேரிசை வெண்பாவால் தொடுத்த (கைலை பாதி காளத்தி பாதி என்னும்) அந்தாதி மாலையைச் சாத்த, தாள் கொடுத்து - (அடியார்கட்குத்) திருவடியாகிய புணையை அருளி, எழுபிறவிக் கொடு வேலை - எழுவகைப் பிறவியாகிய கொடிய கடலினின்றும், கரை ஏற்றவல்லார் - வீடு என்னுங் கரையில் ஏற்றவல்ல அவ்விறைவர், துணைச்செவி மடுத்து நேர் வந்து - (அவ்வந்தாதியை) இரண்டு செவிகளாலுங் கேட்டு நேரே வந்து, அடுத்து அவன் கையைப்பற்றி அகன்கரை ஏற்றினார் - நெருங்கி அந்தக் கீரன் கையைப்பிடித்து அகன்ற கரையின்கண் ஏற்றியருளினர். எடுத்த சொல் மாறி மாறியிசைய என்றது ஒரு பாட்டில் கைலையும், அடுத்த பாட்டிற் காளத்தியும் மாறி மாறி அமைய என்றவாறு. “ சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா நல்லிடிஞ்சி லென்னுடைய நாவாகச் - சொல்லரிய வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று” “ பெற்ற பயனிதுவே யன்றே பிறந்தியான் கற்றவர்க ளேத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத் தோளாகத் தாடரவஞ் சூழ்ந்தணிந்த வம்மானுக் காளாகப் பெற்றே னடைந்து” என்பன காண்க. நேரிசைவெண்பா - வெண்பாவின் பொதுவிலக் கணமுடைத்தாய், நான்கடியுள்ளதாய், நான்கடியும் ஓரெதுகையான ஒரு விகற்பத்தாலேனும், முன்னிரண்டடியும் ஓரெதுகையும் பின்னிரண்டடியும் மற்றோரெதுகையுமான இருவிகற்பத்தாவேனும் இரண்டாமடி இறுதிச்சீர் தனிச்சீராகப்பெற்று வருவது. தாளைக் கொடுத்துக் கடலினின்றும் கரையேற்றவல்லார் கையைப்பற்றிப் பொய்கையினின்றும் கரையேற்றினார் என்னும் நயம் சிந்தித்தற்குரியது. (14) கைதந்து கரையே றிட்ட கருணையங் கடலைத் தாழ்ந்து மைதந்த கயற்க ணாளை வந்தித்துந் தீங்கு நன்கு செய்தந்தோர்க் கிகலு மன்புஞ் செய்தமை பொருளாச் செய்யுட் பெய்தந்து பாடு கின்றான், பிரானருள் நாடு கின்றான். (இ-ள்.) கைதந்து கரை ஏறிட்ட கருணை அம் கடலைத் தாழ்ந்து - கைகொடுத்துக் கரையேற்றிய அழகிய கருணைக்கடலாகிய சோமசுந்தரக் கடவுளை வணங்கி, மைதந்த கயல்கணாளை வந்தித்து - மையெழுதிய கயல்போலுங் கண்களையுடைய அங்கயற் கண்ணம்மையையும் வணங்கி, தீங்கு நன்கு செய்தந்தோர்க்கு - தீமையும் நன்மையும் புரிந்தவர்க்கு, இகலும் அன்பும் செய்தமை பொருளா - சினத்தையும் அருளையும் செய்தமையே பொருளாக, செய்யுள் பெய்தந்து - செய்யுளிலமைத்து, பிரான் அருள் நாடுகின்றான் - இறைவன் திருவருளை நாடும் நக்கீரன், பாடுகின்றான் - பாடுவானாயினன். ஏற்றிட்ட என்பது ஏறிட்ட என விகாரமாயிற்று. செய்தந்தோர்- செய்தோர்; பெய்தந்து - பெய்து; தா : துணைவினைப்பகுதி : இகலும் அன்பும் - கோபமும் பிரசாதமும். தீங்கு செய்தோர்க்கு இகலும், நன்கு செய்வோர்க்கு அன்பும் என நிரனிறையாகக் கொள்க. நாடுகின்றான் : பெயர். (15) அறனிலா னிழைத்த வேள்வி யழித்தபே ராண்மை போற்றி மறனிலாச் சண்டிக் கீந்த மாண்பெருங் கருணை போற்றி கறுவிவீழ் கூற்றைக் காய்ந்த கனைகழற் கமலம் போற்றி சிறுவனுக் கழியா வாழ்நா ளளித்தருள் செய்தி போற்றி. (இ-ள்.) அறன் இலான் இழைத்த வேள்வி - அறம் சற்றுமில்லாத தக்கன் செய்த வேள்வியை, அழித்த பேர் ஆண்மை போற்றி - அழித்த பெரிய ஆண்மை (அடியேனைக்) காக்க; மறன் இலாச் சண்டிக்கு - பாவஞ் சற்றுமில்லாத சண்டீசருக்கு, ஈந்த மாண் பெருங்கருணை போற்றி - அளித்தருளிய மாட்சிமைபொருந்திய பெரிய கருணை காக்க; கறுவிவீழ் கூற்றைக் காய்ந்த - சினந்து (மாணியின்மேல்) வீழ்ந்த கூற்றுவனை உதைத்தருளிய, கனைகழல் கமலம் போற்றி - ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த தாமரைமலர் போன்ற திருவடி காக்க; சிறுவனுக்கு அழியா வாழ்நாள் - அச்சிறுவனாகிய மார்க்கண்டனுக்கு அழிவில்லாத ஆயுளை, அளித்தருள் செய்தி போற்றி - அளித்தருளிய செய்தி காக்க. தக்கள் வேள்வி அழித்தமையும் கூற்றைக் காய்ந்தமையும் இகலும், சண்டிக்குக் கருணை பாலித்தமையும் சிறுவனுக்கு வாழ்நாள் அளித்தமையும் அன்பும் ஆகும். தக்கன் வேள்வி புரியினும் அது மறமாதலும், சண்டி வேதியனாகிய தாதையின் தாளைச் சேதிப்பினும் அஃது அறமாதலும், முறையே அரனடிக்கு அன்பின்மையானும் அன்புடைமையானும் என்க; “ அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும், பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும் வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே”” என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தம் காண்க. (16) சலந்தர னுடலங் கீண்ட சக்கரப் படையாய் போற்றி வலந்தரு மதனை மாயோன் வழிபடக் கொடுத்தாய் போற்றி அலர்ந்தசெங் கமலப் புத்தே ணடுச்சிர மரிந்தாய் போற்றி சிலந்தியை மகுடஞ் சூட்டி யரசருள் செல்வம் போற்றி. (இ-ள்.) சலந்தரன் உடலம் கீண்ட சக்கரப் படையாய் போற்றி- சலந்தராசுரன் உடலைப் பிளந்த திகிரிப்படையை யுடையவனே வணக்கம்; வலம் தரும் அதனை - வெற்றி தரும் அப்படையினை, மாயோன் வழிபடக் கொடுத்தாய் போற்றி - திருமால் வழிபாடு செய்ய அளித்தருளியவனே வணக்கம்; அலர்ந்த செங்கமலப் புத்தேள் - மலர்ந்த செந்தாமரையில் இருக்கும் பிரமனின், நடுச்சிரம் அரிந்தாய் போற்றி - நடுத்தலையை அரிந்தவனே வணக்கம்; சிலந்தியை மகுடம் சூட்டி - சிலந்திக்கு முடிசூட்டி, அரசு அருள் செல்வம் போற்றி - அரசு அருளிய செல்வமே வணக்கம். சலந்தரன் உடல் கீண்ட சக்கரத்தை இறைவன் மாயோனுக்கு அருளினமையை, “ செருமேவு சலந்தரனைப் பிளந்தசுட ராழி செங்கண்மலர்ப் பங்கயமாச் சிறந்தானுக் கருளி”” எனத் திருநாவுக்கரசர் தேவாரத்துள் அருளிச்செய்தலாலறிக. இங்ஙனமே இவ்வரலாறுகளனைத்தும் தேவாரம் முதலிய திருமுறைகளில் எடுத்தாளப்படுகின்றன என்க. வலந்தரும் மதனை எனப்பிரித்து, மன்மதனை என்றுரைப்பாருமுளர்; சக்கரப்படை என்பதே ஈண்டுச் சிறந்த பொருளாதல் உய்த்துணர்க. சலந்தர னுடலங் கீண்டமையும் பிரமன் சிரமரிந்தமையும் இகலும், மாயோற்குச் சக்கரம் அளித்தமையும் சிலந்தியை மகுடஞ் சூட்டினமையும் அன்பும் ஆகும். (17) திரிபுர மெரிய1 நக்க சேவகம் போற்றி மூவர்க் கருளிய தலைமை போற்றி யனங்கனை யாகந் தீய எரியிடு நயனம் போற்றி யிரதிவந் திரப்ப மீளக் கரியவன் மகனுக் காவி யுதவிய கருணை போற்றி. (இ-ள்.) திரிபுரம் எரிய நக்க சேவகம் போற்றி - திரிபுரம் எரியுமாறு சிரித்தருளிய வீரம் காக்க; மூவர்க்கு அருளிய தலைமை போற்றி - அப்புரத்திலுள்ள மூவருக்கு அருளிய தலைமை காக்க; அனங்கனை ஆகம் தீய எரியிடும் நயனம்போற்றி - மதவேளை அவன் உடல் நீறாக எரித்தருளிய நுதல்விழி காக்க; இரதி வந்து இரப்ப - இரதிவந்து குறையிரப்ப, மீள - திரும்பவும், கரியவன் மகனுக்கு ஆவி உதவிய கருணை போற்றி - திருமாலின் புதல்வனாகிய அம்மதவேளுக்கு உயிர் அளித்தருளிய கருணை காக்க. திரிபுரம் எரித்த ஞான்று மூவர் உய்ந்தனர் என்பதும் அவர்க்கு இறைவன் அருள் பாலித்தனன் என்பதும், “ மூவெயில் செற்றஞான் றுய்ந்த மூவரி லிருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல் காவ லாளரென் றேவிய பின்னை யொருவ னீகரி காடரங் காக மானை நோக்கியோர் மாநட மகிழ மணிமுழா முழக்க வருள்செய்த தேவ தேவநின் றிருவடி யடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூ ருளானே””” என்னும் நம்பியாரூரர் தேவாரத்து அருளிச் செய்யப்பட்டமை காண்க. (18) நகைத்தட வந்த1 வந்த நகுசிரந் திருகி வாங்கிச் சிகைத்திரு முடிமேல் வைத்த திண்டிறல் போற்றி கோயில் அகத்தவி சுடரைத் தூண்டு மெலிக்கர சாள மூன்று சகத்தையு மளித்த தேவர் தம்பிரான் சரணம் போற்றி. (இ-ள்.) நகைத்து அட வந்த அந்த நகுசிரம் - சிரித்துக் கொல்லுதற்கு வந்த அந்த வெண்டலையை, திருகி வாங்கி - திருகி எடுத்து, சிகைத் திருமுடிமேல் வைத்த திண்திறல் போற்றி - சடையையுடைய அழகிய முடியின்கண் வைத்த மிக்க திறல் காக்க; கோயில் அகத்து அவிசுடரை - திருக்கோயிலினுள் அவிகின்ற விளக்கை, தூண்டும் எலிக்கு - தூண்டிய எலிக்கு, அரசு ஆள மூன்று சகத்தையும் அளித்த - ஆட்சி புரிய மூன்று உலகத்தையும் அளித்தருளிய, தேவர் தம்பிரான் சரணம் போற்றி - தேவ தேவனது திருவடி காக்க. நகுசிரம் - வெண்டலை; இது தாருக வனத்து முனிவர்களால் விடுக்கப்பட்டது. எலி விளக்கைத் தூண்டிய சிவபுண்ணியத்தால் மாவலியாகப் பிறந்து உலகாண்ட தென்பது வரலாறு. (19) பொருப்பகழ்ந் தெடுத்தோன் சென்னி புயமிற மிதித்தாய் போற்றி இருக்கிசைத் தவனே பாட விரங்கிவாள் கொடுத்தாய் போற்றி தருக்கொடு மிருவர் தேடத் தழற்பிழம் பானாய் போற்றி செருக்குவிட் டவரே பூசை செய்யநேர் நின்றாய் போற்றி. (இ-ள்.) பொருப்பு அகழ்ந்து எடுத்தோன் - திருக்கைலையைப் பறித்தெடுத்த இராவணனது, சென்னியம் இறமிதித்தாய் போற்றி - தலைகளும் தோள்களும் முறிய மிதித்தருளியவனே வணக்கம்; அவனே இருக்கு இசைத்துப் பாட - அவ்விராவணனே வேதத்தைக் கூறிப் பாட, இரங்கி வாள் கொடுத்தாய் போற்றி - கருணை கூர்ந்து அவனுக்கு வாட்படை யருளியவனே வணக்கம்; தருக்கொடும் இருவர் தேட - செருக்கோடு திருமாலும் பிரமனும் தேட, தழற் பிழம்பு ஆனாய் போற்றி - அனற் பிழம்பானவனே வணக்கம்; அவரே - அவ்விருவருமே, செருக்கு விட்டுப் பூசை செய்ய - அத்தருக்கினை ஒழித்து வழிபட, நேர் நின்றாய் போற்றி - நேரில் நின்றருளியவனே வணக்கம். இருக்கு என்பது ஈண்டு வேதம் என்னும் பொதுப்பொருளில் வந்துள்ளது. (20) பருங்கைமால் யானை யேனம் பாய்புலி யரிமான் மீனம் இருங்குறள் யாமை கொண்ட விகல்வலி கடந்தாய் போற்றி குரங்குபாம் பெறும்பு நாரை கோழியா ணலவன் றேரை கருங்குரீஇ கழுகி னன்புக் கிரங்கிய கருணை போற்றி. (இ-ள்.) பருங்கைமால் யானை - பருத்த துதிக்கையையுடைய யானையும், ஏனம் பாய் புலி அரிமான் மீனம் - பன்றியும் பாய்கின்ற புலியும் சிங்கமும் மீனமும், இருங்குறள் யாமை கொண்ட இகல்வலி கடந்தாய் போற்றி - பெரிய குறளும் யாமையுங்கொண்ட மிக்க வலியை அடக்கின வனே வணக்கம்; குரங்கு பாம்பு எறும்பு நாரை கோழி - குரங்கும் பாம்பும் எறும்பும் நாரையும் கோழியும், ஆண் அலவன் தேரை கருங்குரீஇ கழுகின் - ஆண் ஞெண்டும் தவளையும் கரிக்குருவியும் கழுகுமாகிய இவற்றின், அன்புக்கு இரங்கிய கருணை போற்றி - அன்புக்கு இரங்கிய கருணையே வணக்கம். யானையும் புலியும் கொண்ட வன்மையை யொழித்து அவற்றின் தோலைப் போர்வையாகவும் உடையாகவும் கொண்டருளினமை முன் கூறப்பட்டது. ஏனம், அரிமான், மீனம், குறள், யாமை, என்பன திருமால் எடுத்த அவதாரங்கள், திருமால், புவியைப் பாயாகச் சுருட்டிப் பாதலத்திலொளித்த இரணியாக்கனை வெள்ளைப் பன்றி யுருவெடுத்துச் சென்று கொன்று புவியை முன்போல் நிறுவியும், எல்லா வுலகங்களையும் தன்னடிப்படுத்து யாவரும் தன் பெயரையே மந்திரமாகக்கூறி வழுத்தும்படி செய்து இடுக்கண் விளைத்த இரணியனை நரசிங்கவுருக்கொண்டு கொன்றும் வேதங்களைக் கவர்ந்து கடலிலொளித்த சோமகன் என்னும் அசுரனை மீனவுருக் கொண்டு சென்று கொன்று வேதங்களை வெளிப்படுத்தியும், எல்லாவுலகங்களையும் தன்னடிப்படுத்துத் தேவர்கள் ஏவல் கேட்ப அரசு செலுத்திய மாவலி யென்பானை வாமனன் என்னும் குறளுருவாகத் தோன்றிச் சென்று மூன்றடிமண் இரந்து வளர்ந்து ஈரடியால் நிலத்தையும் வானத்தையும் அளந்து மூன்றாமடியைத் தலை மீது வைத்துப் பாதலத்தில் அழுத்தியும், பாற்கடல் கடையுங் கால் அமிழ்ந்த மந்தரமலையை ஆமையுருக் கொண்டு தாங்கியும் உலகிற்கு நலம்புரிந்து, பின் அவ்வச்செயலின் முடிவிலே தருக்குற்று உலகிற்கு அச்சமும் இடரும் விளைத்தகாலை சிவபெருமான் திருமாலின் அவ்வத் தோற்றங்களையும் அழிப்பித்தனர் எனப் புராணங்கள் கூறும். திருக்குரங்கணில் முட்டம், குரங்காடுதுறை முதலிய திருப்பதி களில் குரங்கும்; திருநாகேச்சுரம், கீகாளத்தி முதலிய திருப்பதிகளில் பாம்பும்; திருவெறும்பீச்சரத்தில் எறும்பும்; திருக்கழுக்குன்றம், திருப்புள்ளிருக்கு வேளுர் முதலியவற்றில் கழுகும்; பூசித்துப் பேறுபெற்றன. நாரையும் கரிக்குருவியும் மதுரையிற் பேறுபெற்ற செய்திகள் இப்புராணத்துள் முன் ஓதப்பட்டன. கோழி காசியில் முத்தியடைந்தமையும் முன் கூறப்பட்டது. அலவனும் தேரையும் பேறுபெற்றமை வந்த வழிக் காண்க. ஆற்றூர் என்னுந் திருப்பதியிலே சிவதீர்த்தத்தில் இருந்த ஒரு தவளை சிவனிராவில் ஒரு பாம்பால் விழுங்கப்பட்டு உயிர்விடும் அமையத்தில் உமையால் திருவைந் தெழுத்து உபதேசிக்கப்பெற்றுச் சிவசாரூபம் பெற்றதென ஆற்றூர்ப் புராணம் கூறுவதனைத் தேரை அருள் பெற்றமைக்குக் கொள்ளலுமாம். நண்டு கற்கடகேச்சுரத்தில் முத்திபெற்றதென்றும் கூறுப. (21) சாலநா னிழைத்த தீங்குக் கென்னையுந் தண்டஞ் செய்த கோலமே போற்றி பொல்லாக் கொடியனேன்1 றொடுத்த புன்சொன் மாலைகேட் டென்னை யாண்ட மலைமகண் மணாள போற்றி ஆலவா யடிகள் போற்றி யம்மைநின் னடிகள் போற்றி. (இ-ள்.) நான் சால இழைத்த தீங்குக்கு - நான் மிகவும் செய்த குற்றத்திற்கு, என்னையும் தண்டம் செய்த கோலமே போற்றி - அடியேனையும் ஒறுத்தருளிய திருவுருவே வணக்கம்; பொல்லாக் கொடியனேன் - பொல்லாத கொடியவனாகிய யான், தொடுத்த புன்சொல் மாலை கேட்டு - தொடுத்த புல்லிய சொல்மாலையைக் கேட்டு, என்னை ஆண்ட மலைமகள் மணாள போற்றி - அடியேனை ஆண்டருளிய மலைமகளின் மணாளனே வணக்கம்; ஆலவாய் அடிகள் போற்றி - திருவாலவாயில் எழுந்தருளிய பெருமானே வணக்கம்; அம்மைநின் அடிகள்போற்றி - பிராட்டியே நின் திருவடிகட்கு வணக்கம். இப்பாட்டிலே தனக்குச் செய்த இகலும் அன்பும் கூறப்பட்டன. போற்றி என்னுஞ் சொல் வணக்கம் எனவும் காக்க எனவும் பொருள்படும். ஆகையால் இச்செய்யுட்களில் இவ்விரு பொருளும் கூறப்பட்டன. (22) [கலிநிலைத்துறை] ஆவ லந்தனே னடியனேற் கருளரு ளென்னாக் கோவ மும்பிர சாதமுங் குறித்துரை பனுவற் பாவ லங்கலாற் பரனையும் பங்கிலங் கயற்கட் பூவை தன்னையு முறைமுறை போற்றியென் றேத்தா2 (இ-ள்.) ஆ - ஐயோ, அலந்தனேன் - வருந்தினேன், அடியனேற்கு அருள் அருள் என்னா - அடியேனுக்கு அருளாய் அருளாய் என்று வேண்டி, கோவமும் பிரசாதமும் குறித்து உரை - இறைவனுடைய வெகுளியையும் அருளையும் குறித்துக் கூறும், பனுவல் பா அலங்கலால் - நூலாகிய பாமாலையால், பரனையும் - சோமசுந்தரக் கடவுளையும், பங்கில் அங்கயற்கண் பூவை தன்னையும் - அவன் பாகத்திலமர்ந்த அங்கயற்கண் ணம்மையையும், முறை முறை போற்றி என்று ஏத்தா - முறையாகப் போற்றி என்று துதித்து ஆ : இரக்கப்பொருள் குறித்த இடைச்சொல். பனுவல் - கோபப் பிரசாதம் என்னும் பிரபந்தம்; அது, “ தவறு பெரிதுடைத்தே தவறு பெரிதுடைத்தே வெண்டிரைக் கருங்கடன் மேற்றுயில் கொள்ளும் அண்ட வாணனுக் காழியன் றருளியும் உலக மூன்று மொருங்குடன் படைத்த மலரோன் றன்னை வான்சிர மரிந்துங் கான வேடுவன் கண்பரிந் தப்ப வான நாடு மற்றவற் கருளியுங் கடிபடு பூங்கணைக் காம னாருடல் பொடிபட விழித்தும் பூதலத் திசைந்த மானுட னாகிய சண்டியை வானவ னாக்கியும்........” என்பது (23) தேவ தேவனைப் பின்பெருந் தேவபா ணியொடுந் தாவி லேழிசை யேழுகூற்றிருக்கையுஞ் சாத்திப் பூவர் சேவடி சென்னிமேற் பூப்பவீழ்ந் தெழுந்தான் பாவ லோர்களுந் தனித்தனி துதித்தனர் பணிந்தார். (இ-ள். பின் தேவ தேவனைப் பெருந் தேவபாணியொடும் - பின்பு தேவதேவனாகிய அவ்விறைவனுக்குப் பெருந் தேவபாணி யுடன், தாஇல் ஏழ்இசை ஏழு கூற்றிருக்கையும் சாத்தி - கெடு தலில்லாத ஏழிசை யமைந்த திருவெழு கூற்றிருக்கையும் சாத்தி, பூவர் சேவடி சென்னிமேல் பூப்ப - மலர்போன்ற சிவந்த திருவடிகள் தனது முடியின் (மேல்) மலருமாறு, வீழ்ந்து எழுந்தான் - விழுந்து வணங்கி எழுந்தனன்; பாவலோர்களும் தனித்தனி துதித்தனர் பணிந்தார் - ஏனைப் புலவர்களும் தனித்தனியே துதித்து வணங்கினர். தேவபாணி - தெய்வத்தைப் பாடும் பாட்டு. முதற் கடவுளைப் பாடினமையின் பெருந் தேவபாணி எனப்பட்டது. அது, “ சூல பாணியை சுடர்தரு வடிவனை நீல கண்டனை நெற்றியோர் கண்ணனை பால்வெண் ணீற்றனை பரம யோகியை காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை கோல மேனியை கொக்கரைப் பாடலை வேலுடைக் கையனை விண்டோய் முடியனை ஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனை தேவ தேவனை திருமறு மார்பனை கால மாகிய கடிகமழ் தாரனை......””” என்பது. எழுகூற்றிருக்கை - ஒன்று முதல் ஏழுவரையுள்ள எண்களை அமைத்துப் பாடும் ஒருவகைச் சித்திரப் பாட்டு. அது, “ ஓருடம் பீருரு வாயினை யொன்றுபுரிந் தொன்றி னீரிதழ்க் கொன்றை சூடினை மூவிலைச் சூல மேந்தினை சுடருஞ் சென்னி மீமிசை இருகோட் டொருமதி யெழில்பெற மிலைத்தனை ஒருகணை யிருதோள் செவியுற வாங்கி மூவெயி னாற்றிசை முரணரண் செகுத்தனை ஆற்ற முந்நெறி பயந்தனை செறிய விரண்டு நீக்கி ஒன்று நினைவோர்க் குறுதி யாயினை அந்நெறி யொன்று மனம்வைத் திரண்டு நினைவி லோர்க்கு முந்நெறி யுலகங் காட்டினை யந்நெறி நான்கென வூழி தோற்றினை சொல்லு மைந்தலை யரவசைத் தசைந்தனை நான்முகன் மேன்முகங் கபால மேந்தினை நூன்முக முப்புரி மார்பில் இருவ ரங்க மொருங்குட னேந்திய ஒருவ நின்னாதி காணா திருவர் மூவுல குழன்று நாற்றிசை யுழிதர ஐம்பெருங் குன்றத் தழலாய்த் தோன்றினை ஆறுநின் சடையது வைந்துநின் னிலையது நான்குநின் வாய்மொழி மூன்றுநின் கண்ணே இரண்டுநின் குழையே யென்றுநின் னேறே ஒன்றிய காட்சி யுமையவ ணடுங்க இருங்களிற் றுரிவை போர்த்தனை நெருங்கி முத்தீ நான்மறை யைம்புல னடக்கிய அறுதொழி லாளர்க் குறுதி பயந்தனை ஏழி லின்னரம் பிசைத்தனை ஆறி லமுதம் பயந்தனை யைந்தில் விறலியர் கொட்டு மழுத்த வேந்தினை ஆல நீழ லன்றிருந் தறநெறி நால்வர் கேட்க நன்கினி துரைத்தனை நன்றி யில்லா முந்நீர்ச் சூர்மாக் கொன்றங் கிருவரை யெறிந்த வொருவன் தாதை யொருமிடற் றிருவடி வாயினை தரும மூவகை யுலக முணரக் கூறுவ னால்வகை இலக்கண விலக்கிய நலத்தக மொழிந்தனை ஐங்கணை யவனொடு காலனை யடர்த்தனை அறுவகைச் சமயமு நெறிமையில் வகுத்தனை ஏழி னோசை யிராவணன் பாடத் தாழ்வாய்க் கேட்டவன் றலையளி பொருத்தினை ஆறிய சிந்தை யாகி யைங்கதித் தேரொடு திசைசெல விடுத்தோன் நாற்றோ ணலனேய் நந்திபிங் கிருடியென் றேற்ற பூத மூன்றுடன் பாட இருகண் மொந்தை பொருகணங் கொட்ட மட்டுவிரி யலங்கன் மலைமகள் காண நட்ட மாடிய நம்ப வதனாற் சிறியேன் சொன்ன வறிவில் வாசகம் வறிதெனக் கொள்ளா யாக வேண்டும் வெறிகமழ் கொன்றையொடு வெண்ணில வணிந்து கீதம் பாடிய வண்ணல் பாதஞ் சென்னியிற் பரவுவன் பணிந்தே” என்பது. பூவார் எனற்பாலது எதுகை நோக்கிக் குறுகிநின்றது; ஆர் உவமவுருபு; பூவர் என்பதற்குச் சுந்தரர் என்றுரைப்பாருமுளர். துதித்தனர் : முற்றெச்சம். நக்கீரர் பாடிய இந்நான்கு பிரபந்தங்களும், மற்றும் இவர் பாடிய திருவீங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, காரெட்டு, போற்றித் திருக்கலி வெண்பா, திருக்கண்ணப்பர் திருமறம் என்பனவும், திருமுருகாற்றுப்படையும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் பதினொராந் திருமுறையில் அடங்கியுள்ளன. (24) துதித்த கீரனுக் கின்னருள் சுரந்துநீ முன்போன் மதித்த நாவலர் குழாத்திடை வதியென மறைநூல் உதித்த நாவினார் கருணைசெய் துருக்கரந் தயன்சேய் விதித்த கோயில்புக் கிருந்தனர் விளங்கிழை யோடும். (இ-ள்.) மறைநூல் உதித்த நாவினார் - வேதநூல் தோன்றிய நாவினையுடைய சோமசுந்தரக் கடவுள், துதித்த கீரனுக்கு - இங்ஙனம் துதித்த நக்கீரனுக்கு, இன் அருள் சுரந்து - இனிய அருள் சுரந்து, நீ முன்போல் - நீ முன்போலவே, மதித்த நாவலர் குழாத்திடை வதி எனக் கருணை செய்து - நின்னை நன்குமதித்த புலவர் கூட்டத்து நடுவிலே தங்குவாயாக வென்று கூறியருளி, உருக்கரந்து - திருவுருவை ஒளித்து, அயன்சேய் விதித்த கோயில்புக்கு - பிரமன் புதல்வனாகிய தேவதச்சன் அமைத்த திருக்கோயிலினுட்புகுந்து, விளங்கிழையோடும் இருந்தனர் - விளக்கமாகிய அணி களை அணிந்த உமையம்மையோடும் வீற்றிருந்தனர். மதித்த - யாவரானும் மதிக்கப்பட்ட என்றுமாம். விளங்கிழை: வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (25) கற்ற கீரனுங் கலைஞருங் கழகமண் டபத்தில் உற்ற வாடகக் கிழியறுத் தந்தணற் குதவிக் கொற்ற வேந்தனும் வரிசைகள் சிலசெயக் கொடுப்பித் தற்ற நீங்கிய கல்வியின் செல்வரா யமர்ந்தார். (இ-ள்.) கற்றகீரனும் க'e7çலஞரும் - பல கலைகளையுங் கற்ற நக்கீரனும் புலவர்களும், கழக மண்டபத்தில் உற்ற - சங்க மண்டபத்தின்முன் தூக்கிய, ஆடகக்கிழி அறுத்து அந்தணற்கு உதவி - பொன் முடிப்பை அறுத்துத் தருமி என்னும் மறையவனுக்குக் கொடுத்து, கொற்ற வேந்தனும் வரிசைகள் சில செயக் கொடுப்பித்து - வெற்றி வேந்தனாகிய சண்பகமாறனும் சில வரிசைகள் செய்யுமாறு கொடுப்பித்து, அற்றம் நீங்கிய கல்வியின் செல்வராய் அமர்ந்தார் - குற்றம் நீங்கிய கல்விச் செல்வராக இருந்தனர். அற்றம் - சோர்வு; குற்றம். கல்வியின் : இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. (26) [அறுசீரடியாசிரிய விருத்தம்] சம்பக மாற னென்னுந் தமிழ்நர்தம் பெருமான் கூடல் அம்பக நுதலி னானை யங்கயற் கண்ணி னாளை வம்பக நிறைந்த செந்தா மரையடி வந்து தாழ்ந்து நம்பக நிறைந்த வன்பாற் பல்பணி நடாத்தி வைகும். (இ-ள்.)சம்பகமாறன் என்னும் தமிழ்நர்தம் பெருமான் - சண்பகமாறன் என்னும் தமிழர் வேந்தன், கூடல் அம்பகம் நுதலினானை அங்கயற் கண்ணினாளை - கூடலில் வீற்றிருக்கும் நெற்றிக் கண்ணனாகிய சோமசுந்தரக் கடவுளையும் அங்கயற் கண்ணம்மையையும், வம்பு அகம் நிறைந்த செந்தாமரை அடி வந்து தாழ்ந்து - மணம் உள்ளே நிறைந்த செந்தாமரை மலர்போன்ற திருவடிகளில் வந்து வணங்கி, நம்புஅகம் நிறைந்த அன்பால் - சிவமே பொருளெனத் துணிந்த உள்ளத்தின்கண் நிறைந்த அன்பினால், பல்பணி நடாத்தி வைகும் - பல திருப்பணிகள் நடாத்தி இனிதிருப்பானாயினன். தமிழ்நர், நர் : பெயர் விகுதி. அம்பகம் - கண், எண்ணும்மைகள் தொக்கன. ஆறனுருபாகத் திரித்தலுமாம். வம்பு - மணம். நம்பு - விருப்பம்; “ நம்பும் மேவும் நசையா கும்மே” என்பது தொல்காப்பியம். இச்சொல் இக்காலத்து நம்பகம், நம்பிக்கை என உருத்திரிந்து, பொருள் வேறுபட்டு வழங்குகிறது. (27) ஆகச் செய்யுள் - 2566. ஐம்பத்து நான்காவது கீரனுக்கு இலக்கண முபதேசித்த படலம் (அறுசீரடியாசிரிய விருத்தம்) கொன்றையந் தெரியல் வேய்ந்த கூடலெம் பெருமான் செம்பொன் மன்றலங் கமலத் தாழ்ந்து வழிபடு நாவ லோனை அன்றகன் கரையே றிட்ட வருளுரை செய்தே மிப்பாற் றென்றமி ழனையான் றேறத் தெருட்டிய திறனுஞ் சொல்வாம். (இ-ள்.) கொன்றை அம்தெரியல் வேய்ந்த - அழகிய கொன்றை மாலை அணிந்த, கூடல் எம்பெருமான் - கூடலில் வீற்றிருக்கும் எம் பெருமானாகிய சோமசுந்தரக் கடவுள், மன்றல் அம் செம்பொன் கமலத்து ஆழ்ந்து - மணமிக்க அழகிய சிவந்த பொற்றாமரைத் தடத்து வீழ்ந்து அழுந்தி, வழிபடு நாவலோனை - துதித்த நாவலனாகிய நக்கீரனை, அன்று அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம் - அப்பொழுது அகன்ற கரையின்கண் ஏற்றி யருளிய திருவிளை யாடலை உரைத்தேம்; இப்பால் - பின், தென்தமிழ் அனையான் தேற - அழகிய தமிழிலக்கணத்தை அந் நக்கீரன் தெளியுமாறு, தெருட்டிய திறனும் சொல்வாம் - தெளிவித்த திருவிளையாடலையும் உரைப்பாம். தென்றமிழ் என்றது இயற்றமிழ் இலக்கணத்தை, தெருட்டிய : பிறவினைப் பெயரெச்சம்; தெருட்டு : பகுதி. (1) முன்புநான் மாடக் கூடன் முழுமுத லாணை யாற்போய் இன்புற வறிஞ ரீட்டத் தெய்தியாங் குறையுங் கீரன் வன்புறு கோட்டந் தீர்ந்து மதுரையெம் பெருமான் றாளில் அன்புறு மனத்த னாகி யாய்ந்துமற் றிதனைச் செய்வான். (இ-ள்.) நான்மாடக் கூடல் முழுமுதல் ஆணையால் - நான் மாடக் கூடலின் கண் எழுந்தருளிய முழுமுதற் கடவுளாகிய சோமசுந்தரக் கடவுளின் ஏவலால், முன்பு போய் - முன்பு சென்று, இன்பு உற - மகிழ்ச்சி மிக, அறிஞர் ஈட்டத்து எய்தி ஆங்கு உறையும் கீரன் - புலவர் கூட்டத்தை அடைந்து அங்கு வதியும் நக்கீரன், வன்பு உறு கோட்டம் தீர்ந்து - வலிமிக்க அழுக்காறு நீங்கி, மதுரை எம்பெருமான் தாளில் - மதுரையில் அமர்ந்தருளிய எம் பெருமான் திருவடியில். அன்பு உறு மனத்தனாகி - அன்புமிக்க மனமுடையனாய், ஆய்ந்து இதனைச் செய்வான் - ஆராய்ந்து இதனைச் செய்வானாயினன். கோட்டம் - மனக்கோண்; அழுக்காறு. மற்று : அசை. (2) கட்டவிழ் கடுக்கை யண்ணல் கண்ணினா லவிந்த காளை மட்டவிழ் மலரோ னாலு மாயவ னாலுங் காக்கப் பட்டவ னல்ல னன்னா னுதல்விழிப் படுதீ நம்மைச் சுட்டபோ துருப்பந் தீர்த்துக் காத்ததிச் சுவண கஞ்சம். (இ-ள்.) கட்டு அவிழ் கடுக்கை அண்ணல் - முறுக்கு அவிழ்ந்த கொன்றை மலர் மாலையை அணிந்த இறைவனது, கண்ணினால் அவிந்த காளை - நுதற் கண்ணினால் நீறாகிய மதவேள், மட்டு அவிழ் மலரோனாலும் - மணத்தொடு மலர்ந்த தாமரை மலரில் இருக்கும் பிரமனாலும், மாயவனாலும் காக்கப்பட்டவன் அல்லன் -திருமாலினாலும் காக்கப்பட்டிலன்; அன்னான் நுதல்விழிப்படு தீ - அவ்விறைவனது நெற்றிக் கண்ணில் உண்டாகிய நெருப்பு, நம்மைச் சுட்டபோது - நம்மை வெதுப்பிய பொழுது, உருப்பம் தீர்த்து - அவ்வெம்மையைப் போக்கி, இச்சுவண கஞ்சம் காத்தது - இப்பொற்றாமரைத் தடம் ஓம்பியது. காமனைச் சிவபிரானிடத்து ஏவிய பிரமனும், காமனுக்குத் தந்தையாகிய திருமாலும் அவனைக் காக்கும் வலியுடையரேல் காத்திருப்பர்; அவர்களாலும் காக்கவொண்ணாத இறைவனது நுதல்விழிச் செந்தீயின் வெம்மையை மாற்றி இப்பொற்றாமரை காத்தது; என இறைவனது முதன்மையும், பொற்றாமரையின் மேன்மையும் புலப்பட அவ்வரலாறு குறிக்கப்பட்டது. (3) இப்பெருந் தடமே யெம்மை யெம்மையுங் காப்ப தென்னாக் கப்பிலா மனத்தான் மூன்று காலமு மூழ்கி மூழ்கி அப்பனை யால வாயெம் மடிகளை யடியார் சேம வைப்பினை யிறைஞ்சி நித்தம் வழிபடு நியமம் பூண்டான். (இ-ள்.) இப்பெருந்தடமே - இந்தப் பெருமை வாய்ந்த தீர்த்தமே, எம்மை எம்மையும் காப்பது என்னா - எம்மை எப்பிறப்பிலும் ஓம்புவதாகும் என்று கருதி, கப்பு இலா மனத்தால் - பிளவுபடாத (ஒன்றுபட்ட) மனத்துடன், மூன்று காலமும் மூழ்கி மூழ்கி - மூன்று காலங்களிலும் அதில் நீராடி, அப்பனை ஆலவாய் எம் அடிகளை - எல்லா உயிர்கட்கும் அத்தனும் திருவாலவாயில் அமரும் எம் இறைவனும், அடியார் சேமவைப்பினை - அடியார்களின் சேமநிதியுமாகிய சோம சுந்தரக் கடவுளை, இறைஞ்சி நித்தம் வழிபடும் நியமம் பூண்டான் - வணங்கி நாள்தோறும் வழிபடுகின்ற கடப்பாட்டினை மேற்கொண்டான். எம்மையும் - எப்பிறப்பினும்; இம்மையினும் மறுமையினும் என்றுமாம். அடியார் சேம வைப்பினை என்ற கருத்தை, “ காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க” எனத் திருவாசகத்தும், “ நல்லடியார் மனத் தெய்ப்பினில் வைப்பை” என வன்றொண்டர் தேவாரத்தும் காண்க. (4) மையறு மனத்தான் வந்து வழிபடு நியம நோக்கிப் பையர வாரம் பூண்ட பரஞ்சுடர் மாடக் கூடல் ஐயனு மணிய னாகி யகமகிழ்ந் தவனுக் கொன்று செய்யநன் கருணை பூத்துத் திருவுளத் திதனைத் தேர்வான். (இ-ள்.) மை அறும் மனத்தான் - குற்றம் நீங்கிய மனத்தையுடைய நக்கீரன், வந்து வழிபடும் நியமம் நோக்கி - நாள்தோறும் வந்து வழிபடுங் கடப்பாட்டினைப் பார்த்து, பை அரவு ஆரம்பூண்ட பரஞ்சடர் மாடக்கூடல் ஐயனும் - படத்தையுடைய பாம்பினை ஆரமாகப் பூண்ட பரஞ்சோதியாகிய நான்மாடக்கூடல் இறைவனும், அணியனாகி அக மகிழ்ந்து - அண்மையனாய்த் திருவுள்ளம் மகிழ்ந்து, அவனுக்கு ஒன்று செய்ய நன் கருணைபூத்து - அந்தக் கீரனுக்கு ஒன்று புரியத் திருவருள் கூர்ந்து, திருவுளத்து இதனைத் தேர்வான் - திருவுள்ளத்தின்கண் இதனைக் கருதுவானாயினன். அணியனாதல் - அவன் உள்ளத்தே விளங்குதல். (5) இலக்கண மிவனுக் கின்னுந் தெளிகில விதனா லாய்ந்த நலத்தசொல் வழூஉச்சொ லென்ப தறிகில னவைதீர் கேள்விப் புலத்தவர் யாரைக் கொண்டு போதித்து மிவனுக் கென்னா மலைத்தனு வளைத்த முக்கண் மன்னவ னுன்னு மெல்லை. (இ-ள்.) இவனுக்கு இன்னும் இலக்கணம் தெளிகில - இவனுக்கு இன்னும் இலக்கணம் விளங்கவில்லை; இதனால் - இதனாலே, ஆய்ந்த நலத்தசொல் - ஆராய்ந்த நன்மையையுடைய சொல்லும், வழூஉச்சொல் என்பது அறிகிலன் - குற்றமுடைய சொல்லும், இது இது என்பதை அறியாதவனாயினன்; நவைதீர் கேள்விப் புலத்தவர் யாரைக் கொண்டு - குற்றமற்ற நூற்கேள்வியின் புலமையோர் யாவரால், இவனுக்குப் போதித்தும் என்னா - இவனுக்குப் போதிப்போ மென்று, மலைத்தனு வளைத்த முக்கண் மன்னவன் - மலையை வில்லாக வளைத்த மூன்று கண்களையுடைய சுந்தர பாண்டியன், உன்னும் எல்லை - நினைத்தபொழுது. தெளிகில - விளங்கிற்றில. நலத்த : குறிப்புப் பெயரெச்சம். புலத்தவர் - புலமையுடையார். போதித்தும்; போதிப்போம்; தன்மைப்பன்மை எதிர்கால முற்று; பன்மை தலைமை பற்றியது. உன்னினான் அங்ஙனம் உன்னும் பொழுது என விரிக்க. (6) பங்கயச் செங்கை கூப்பிப் பாலினேர் மொழியாள் சொல்வாள் அங்கணா வங்கை நெல்லிக் கனியென வனைத்துங் கண்ட புங்கவா நினது சங்கைக் குத்தரம் புகல வல்லார் எங்குளா ரேனு மென்னெஞ் சுதிப்பதொன் றிசைப்பே னையா. (இ-ள்.) பாலின் நேர்மொழியாள் - பால்போலும் மொழியினை யுடைய உமையம்மையார், பங்கயச் செங்கை கூப்பிச் சொல்வாள் - தாமரை மலர்போன்ற சிவந்த கரங்களைக் குவித்து வணங்கிக் கூறுவாள், அங்கணா - அங்கணனே, அங்கை நெல்லிக்கனி என அனைத்தும் கண்ட புங்கவா - உள்ளங்கை நெல்லிக்கனி போல யாவையும் உணர்ந்த புங்கவனே, நினது சங்கைக்கு உத்தரம் புகலவல்லார் எங்கு உளார் - உனது கேள்விக்கு விடைகூற வல்லவர் எங்கே உள்ளார் (ஒருவருமில்லை), ஏனும் - எனினும், என் நெஞ்சு உதிப்பது ஒன்று - எனது உள்ளத்திலே தோன்றுவதொன்றை, இசைப்பேன் ஐயா - கூறுவேன் ஐயனே, புங்கவன் - உயர்ந்தோன்; தேவன். ஏனும் - அங்ஙனமாயினும். பண்டொரு வைகல்1 வெள்ளிப் பனிவரை யிடத்துன் பாங்கர்ப் புண்டவழ் குலிசக் கோமான் பூமகன் மாயப் புத்தேள் அண்டருஞ் சனக னாதி யருந்தவர் பிறரு மீண்டிக் கொண்டன ரிருந்தா ரிந்தக் குவலயம் பொறாது மாதோ. (இ-ள்.) பண்டு ஒரு வைகல் - முன்னொரு நாள், பனி வெள்ளி வரை இடத்து உன் பாங்கர் - வெள்ளிய இமய மலையின்கண் உன் பக்கலில், புண்தவழ்குலிசக் கோமான் - புலால் விளங்கும் வச்சிரப்படையையுடைய இந்திரனும், பூமகன் மாயப் புத்தேள் அண்டரும்- பிரமனும் திருமாலும் பிற தேவர்களும். சனகன் ஆதி அருந்தவர் பிறரும் - சனகன் முதலிய அரிய முனிவரும் பிறரும், ஈண்டிக்கொண்டனர் இருந்தார் - நெருங்கி இருந்தார்; இந்தக் குவலயம் பொறாது - அதனால் இந்த ஞாலம் பொறுக்கலாற்றாது. பண்டொரு வைகல் என்றது திருக்கல்யாண காலத்தை, மாயப் புத்தேள் முதலிய அண்டரும் பிறரும் என விரிக்க. கொண்டனர் : முற்றெச்சம். மாது, ஓ : அசை. (8) தாழ்ந்தது வடகீ ழெல்லை யுயர்ந்தது தென்மேற் கெல்லை சூழ்ந்தது கண்டு வானோர் தொழுதுனைப் பரவி யைய ஊழ்ந்திடு மரவம் பூண்டோ யொருவனின் னொப்பா னங்கே வாழ்ந்திட விடுத்தா லிந்த வையநேர் நிற்கு மென்றார். (இ-ள்.) வடகீழ் எல்லை தாழ்ந்தது - வடகிழக் கெல்லை தாழ்ந்தது; தென் மேற்கு எல்லை உயர்ந்தது - தென்மேற் கெல்லை உயர்ந்தது; அது கண்டு - அதனைப் பார்த்து, வானோர் உனைச் சூழ்ந்து- தேவர்கள் உன்னைச் சூழ்ந்துகொண்டு, தொழுது பரவி - வணங்கித் துதித்து, ஐய - ஐயனே, ஊழ்ந்திடும் அரவம் பூண்டோய் - ஊருகின்ற பாம்பினை அணிந்தவனே, நின் ஒப்பான் ஒருவன் அங்கே வாழ்ந்திட விடுத்தால் - நின்னையொப்பா னொருவனை அத் தென்மேற் கெல்லையில் வாழும்படி விடுப்பின், இந்த வையம் நேர்நிற்கும் என்றார் - இந்த நிலவுலகம் சமமாக நிற்கும் எனக் கூறினர். சூழ்ந்து - ஆலோசித்து என்றுமாம். ஊழ்ந்திடல் - ஊர்தல் என்னும் பொருட்டு. நின்னை உள்ளத்தே கொண்டிருத்தலால் நின்னொப்பான் என்க. (9) பைத்தலை புரட்டு முந்நீர்ப் பெளவமுண் டவனே யெம்மை ஒத்தவ னனையான் வாழ்க்கைக் குரியளா கியவு லோபா முத்திரை யிமவான் பெற்ற முகிழ்முலைக் கொடியொப் பாளென் றத்திரு முனியை நோக்கி யாயிடை விடுத்தா யன்றே. (இ-ள்.) பைத்து அலைபுரட்டும் முந்நீர்ப் பெளவம் உண்டவனே - பரந்து அலைவீசும் மூன்று நீரினையுடைய கடலைக்குடித்த குறுமுனிவனே, எம்மை ஒத்தவன் - எம்மை ஒப்பான், அனையான் வாழ்க்கைக்கு உரியளாகிய உலோபா முத்திரை - அம்முனிவன் இல்வாழ்க்கைக்கு உரியவளாகிய உலோபா முத்திரை என்பாளே, இமவான் பெற்ற முகிழ் முலைக்கொடி ஒப்பாள் என்று - மலை யரையன் பெற்ற அரும்பிய கொங்கையையுடைய கொடிபோன்ற உமையை ஒத்தவள் என்று கூறி, அத்திருமுனியை நோக்கி - அந்தத் திருமுனிவனைப் பார்த்து, ஆயிடை விடுத்தாய் - அங்குப் போகுமாறு பணித்தனை. பைத்து - விரிந்தென்னும் பொருட்டு. அன்று, ஏ : அசை. (10) விடைகொடு போவா னொன்றை வேண்டினா னேகுந் தேயந் தொடைபெறு தமிழ்நா டென்று சொல்லுப வந்த நாட்டின் இடைபயின் மனித்த ரெல்லா மின்றமி ழாய்ந்து கேள்வி உடையவ ரென்ப கேட்டார்க் குத்தர முரைத்தல் வேண்டும். (இ-ள்.) விடைகொடு போவான் - விடைபெற்றுப் போகும் அம்முனிவன், ஒன்றை வேண்டினான் - ஒன்றை வேண்டுவானாயினன்; ஏகும்தேயம் - யான் செல்லும் நாடு, தொடைபெறு தமிழ்நாடு என்று சொல்லுப - (செய்யுளாகத்) தொடுத்தலைப்பெறும் தமிழ்நாடு என்று கூறுவர்; அந்த நாட்டின் இடைபயில் மனித்தர் எல்லாம் - அந்த நாட்டின்கண் வாழும் மக்களனைவரும், இன்தமிழ் ஆய்ந்து கேள்வி உடையவர் என்ப - இனிய தமிழை ஆராய்ந்து அந் நூற்கேள்வி மிக்கவரென்று கூறுவர்; கேட்டார்க்கு உத்தரம் உரைத்தல் 'bcËண்டும் - (ஆதலால் அத்தமிழ் நூலில்) வினாவினார்க்கு விடைகூறுதல் வேண்டும். தொடை - செய்யுளுறுப்புக்களுள் ஒன்று; அது மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை, நிரனிறை, இரட்டை என்னும் விகற்பங்களுடையது. (11) சித்தமா சகல வந்தச் செந்தமி ழியனூ றன்னை அத்தனே யருளிச் செய்தி யென்றன னனையான் றேற வைத்தனை முதனூ றன்னை மற்றது தெளிந்த பின்னும் நித்தனே யடியே னென்று நின்னடி காண்பே னென்றான். (இ-ள்.) சித்தம் மாசு அகல - மனத்திலுள்ள அறியாமையாகிய குற்றம் நீங்க, அந்தச் செந்தமிழ் இயல்நூல் தன்னை - அச்செந்தமிழின் இலக்கண நூலை, அத்தனே அருளிச் செய்தி என்றனன் - இறைவனே அருளிச் செய்வாயாக என்று வேண்டினன்; அனையான் தேற முதனூல் தன்னை வைத்தனை - அம்முனிவன் தெளியுமாறு முதனூல் அருளினை; அது தெளிந்த பின்னும் - அம் முதல்நூலைத் தேர்ந்துணர்ந்த பின்னும், நித்தனே - அழிவில்லாதவனே, அடியேன் நின் அடி என்று காண்பேன் என்றான் - அடியேன் நினது திருவடியை என்று காண்பேன் என்று வினவினன். மற்று : அசை. (12) கடம்பமா வனத்தி லெம்மைக் கண்டனை யிறைஞ்சி யுள்ளத் திடம்பெற யாது வேட்டா யவையெலா மெம்பாற் பெற்றுத் திடம்பெற மலயத் தெய்தி யிருக்கென விடுத்தாய் சென்று குடம்பெறு முனியு மங்கே யிருக்கின்றான் கொடியினோடும். (இ-ள்.) மா கடம்பவனத்தில் - பெரிய கடம்பவனத்தின்கண், எம்மைக் கண்டனை இறைஞ்சி - எம்மைக் கண்டு வணங்கி, உள்ளத்து இடம் பெற யாது வேட்டாய் - நின் உள்ளத்தின்கண் நிரம்ப யாதனை யாதனை விரும்பினாயோ, அவை எலாம் எம்பால் பெற்று - அவற்றை எல்லாம் எம்மிடத்துப் பெற்று, திடம்பெற மலயத்து எய்தி இருக்க என விடுத்தாய் - மனஞ்சலியாது பொதியின் மலையிற் சென்று இருக்கக் கடவை என்று ஏவினாய்; குடம்பெறு முனியும் அங்கே சென்று - கலச முனியாகிய அவனும் அங்குச் சென்று, கொடியினோடும் இருக்கின்றான் - உலோபா முத்திரை யோடும் இருக்கின்றான். கண்டனை : முற்றெச்சம். அவையெனப் பின் வருதலின் யாது என்பதனை அடுக்கிக் கொள்க; ஒருமையும் பன்மையும் மயங்கின வென்றுமாம். இருக்கென : அகரம் தொக்கது. (13) இனையதுன் றிருவுள் ளத்துக் கிசைந்ததே லிவற்குக் கேள்வி அனையமா தவனைக் கூவி யுணர்த்தென வணங்கு கூற இனையநா ணிகழ்ச்சி1 யெல்லா மறந்திடா தின்று சொன்னாய் அனையதே செய்து மென்னா வறிவனை நினைந்தா னையன். (இ-ள்.) இனையது உன் திருவுள்ளத்திற்கு இசைந்ததேல் - இச்செய்தி நினது திருவுள்ளத்துக்குப் பொருந்துவதாயின், அனைய மாதவனைக் கூவி - அம்முனிவனை அழைத்து, இவற்குக் கேள்வி உணர்த்து என அணங்குகூற - இந்நக்கீரனுக்குத் தமிழிலக்கணத்தை அறிவுறுத்துவாயாக என்று இறைவிகூற, இனையநாள் நிகழ்ச்சி எல்லாம் - இத்துணைநாட் செய்திகளனைத்தையும், மறந்திடாது இன்று சொன்னாய் - மறந்திடாது இன்று கூறினை, அனையதே செய்தும் என்னா - அதனையே செய்வேமென்று கூறி, ஐயன் அறிவனை நினைந்தான் - இறைவன் அம்முனிவனை நினைந்தனன். கூவி அவனால் உணர்த்து என விரிக்க. பாலினேர் மொழியாளாகிய அணங்கு என இயைக்க. சொன்னாயென வியந்து என்க. (14) [கலிநிலைத்துறை] உடைய நாயகன் றிருவுள முணர்ந்தனன் முடிமேல் அடைய வஞ்சலி முகிழ்த்தன னருந்தவ விமானத் திடைபு குந்தனன் பன்னியோ டெழுந்தன னகல்வான் நடைய னாகிவந் தடைந்தன னற்றமிழ் முனிவன். (இ-ள்.) உடைய நாயகன் திருவுளம் உணர்ந்தனன் - எல்லா முடைய இறைவனது திருவுள்ளக் குறிப்பினை அறிந்து, முடிமேல் அடைய அஞ்சலி முகிழ்த்தனன் - முடிமீது பொருந்த அஞ்சலியாகக் கைகளைக் குவித்து, அருந்தவ விமானத்திடை பன்னியோடு புகுந்தனன் - அரிய தவமாகிய விமானத்தில் மனைவியோடும் ஏறி, எழுந்தனன் - மேலே எழுந்து, அகல்வான் நடையன் ஆகிவந்து - அகன்ற வானை வழியாகக் கொண்டு நடப்பவனாய், நல்தமிழ் முனிவன் அடைந்தனன் - நல்ல தமிழ் முனிவன் மதுரையை அடைந்தான். வானிலே செல்லும் தவ ஆற்றலை விமானமாக உருவகித்தார். உணர்ந்தனன் முகிழ்த்தனன். புகுந்தனன் எழுந்தனன் என்பன முற்றெச்சங்கள். (15) இயங்கு மாதவத் தேரினும் பன்னியோ டிழிந்து புயங்க னாலயம் புகுந்துநாற் புயம்புடை கிளைத்துத் தயங்கு செம்பவ ளாசலந் தன்னையு மதன்பால் வயங்கு மிந்திர நீலமால் வரையையும் பணியா. (இ-ள்.) இயங்கும் மாதவத் தேரினும் - இயங்குதலையுடைய பெரிய தவமாகிய தேரினின்றும், பன்னியோடு இழிந்து - மனைவி யோடும் இறங்கி, புயங்கன் ஆலயம் புகுந்து - சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலுட் புகுந்து, புடைநால் புயம் கிளைத்துத் தயங்கு - மருங்கில் நான்கு திருத்தோள்கள் கிளைத்து விளங்கும்; செம்பவள அசலம் தன்னையும் - சிவந்த பவனமலையை ஒத்த இறைவனையும், அதன்பால் வயங்கும் இந்திர நீலமால் வரையையும் பணியா - அதன் மருங்கில் விளங்கும் பெரிய இந்திர நீலமலையை ஒத்த அம்மையையும் வணங்கி. தேரினும் - தேரினின்றும். புயங்கன் - சிவபிரான் றிருப்பெயர்; “புயங்க னாள்வான் பொன்னடிக்கே” என்பது திருவாசகம்; அரவா பரண முடையன் என்றுரைப்பாரு முளர். இறைவன் பவள மலையையும், இறைவன் பக்கத்துள்ள இறைவி பவளமலையின் பாங்கர் விளங்கும் இந்திர நீலமலையையும் போன்று தோன்றினர்; “ வெள்ளி வெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும் தெள்ளு பேரொளிப் பவளவெற் பெனவிடப் பாகங் கொள்ளு மாமலை யாளுடன் கூடவீற் றிருந்த வள்ள லாரைமுன் கண்டனர் வாக்கின்மன் னவனார்”” என்னும் பெரியபுராணச் செய்யுள் சிந்திக்கற்பாலது. (16) பெருகு மன்புளந் துளும்பமெய் யானந்தம் பெருக அருகி ருந்தன னாவயிற் கீரனு மம்பொன் முருக விழ்ந்ததா மரைபடிந் திறைவனை முன்போல் உருகு மன்பினா லிறைஞ்சுவா னொல்லைவந் தடைந்தான். (இ-ள்.) பெருகும் அன்பு உளம் துளும்ப - சுரந்து பெருகும் அன்பானது உள்ளம் நிறைந்து ததும்புவதால், மெய் ஆனந்தம் பெருக - சிவானந்தம் பெருக, அருகு இருந்தனன் - அருகில் இருந்தனன்; கீரனும் - நக்கீரனும், முருகு அவிழ்ந்த தாமரை படிந்து - மணம்விரிந்த அழகிய பொற்றாமரையிற் படிந்து, முன்போல் - முன் போலவே, உருகும் அன்பினால் இறைவனை இறைஞ்சுவான் - உருகுகின்ற அன்பினால் இறைவனை வணங்குதற்பொருட்டு, ஆவயின் ஒல்லைவந்து அடைந்தான் - அங்கு விரைந்து வந்து சேர்ந்தனன். மெய் - ஆக்கை என்றுமாம். அன்பினால் உள்ள முருகுதலும் ஆனந்தம் விளைதலும், “ அன்பினா லடியே னாவியோ டாக்கை யானந்த மாய்க்கசிந் துருக” என்னும் திருவாசகத்தால் அறியப்படும். ஆவயின் : சுட்டு நீண்டது. இறைஞ்சுவான் : வினையெச்சம். (17) இருந்த மாதவச் செல்வனை யெதிர்வர நோக்கி அருந்த வாவிவற் கியற்றமி ழமைந்தில வெம்பாற் றெரிந்த நீயதை யரிறபத் தெருட்டெனப் பிணியும் மருந்து மாகிய பெருந்தகை செய்யவாய் மலர்ந்தான். (இ-ள்.) இருந்த மாதவச் செல்வனை - அருகில் இருந்த பெரிய தவமாகிய செல்வத்தையுடைய அகத்திய முனிவனை, எதிர்வர நோக்கி - திருமுன் வருமாறு கடைக்கண்சாத்தி, அருந்தவா - அரிய தவச் செல்வ, இவற்கு இயல்தமிழ் அமைந்தில - இந்நக்கீரனுக்குத் தமிழிலக்கணம் நிரம்பிற்றில; எம்பால் தெரிந்த நீ - எம்மிடத்துக் கேட்டுத் தெரிந்த நீ, அதை அரில்தபத் தெருட்டு என - அவ்விலக் கணத்தைக் குற்றம் நீங்க இவற்கு விளக்குக என்று, பிணியும் மருந்துமாகிய பெருந்தகை செய்ய வாய்மலர்ந்தான் - பிணியும் மருந்துமாகிய சோமசுந்தரக்கடவுள் செவ்விய திருவாய் மலர்ந்தருளினன். தப - நீங்க; தபு : பகுதி; “ உப்பகார மொன்றென மொழிய இருவயி னிலையும் பொருட்டா கும்மே” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் தபு என்பது தன்வினைக்கும் பிறவினைக்கும் உரித்தாதல் பெறப்படும்; ஈண்டுத் தன்வினைக்கண் வந்தது. தெருட்டு : தெருள் என்பதன் பிறவினை. இறைவன் தன் ஆணை வழிநில்லாத உயிர்கட்குத் துன்பமும், நிற்கும் உயிர்க்ட்கு இன்பமும் அருளுதலின் பிணியும் அதற்கு மருந்துமாகிய பெருந்தகை என்றார். இதனைக் கோபப்பிரசாதத்தாலும் அறிக. (18) வெள்ளை மாமதிப் பிளவணி வேணியங் கருணை வள்ள லார்பணி சிரத்தினு மனத்தினுந் தாங்கிப் பள்ள மேழையும் பருகினோன் பணியுநக் கீரன் உள்ள மாசற வியாகர ணத்தினை யுணர்த்தும்.1 (இ-ள்.) வெள்ளி மாமதிப் பிளவு அணி - வெண்மையாகிய பெருமை பொருந்திய பிறைமதியை அணிந்த, வேணி அம்கருணை வள்ளலார் பணி - சடையையுடைய அழகிய அருள்வள்ளலாகிய சோமசுந்தரக்கடவுள் கட்டளையை, சிரத்தினும் மனத்தினும் தாங்கி - முடியிலும் மனத்திலும் தாங்கி, பள்ளம் ஏழையும் பருகினோன் - கடல் ஏழையுங் குடித்த குறுமுனிவன், பணியும் நக்கீரன் உள்ளம் மாசுஅற - தன்னை வணங்கிய நக்கீரனது உள்ளத்திலுள்ள அறியாமை நீங்க, வியாகரணத்தினை உணர்த்தும் - இலக்கணத்தை அறிவுறுத்தும். வியாகரணம் - இலக்கணம். (19) இருவ கைப்புற வுரைதழீஇ யெழுமத மொடுநாற் பொருளொ டும்புணர்ந் தையிரு குற்றமும் போக்கி ஒருவி லையிரண் டழகொடு முத்தி யெண் ணான்கும் மருவு மாதிநூ லினைத்தொகை வகைவிரி முறையால். (இ-ள்.) இருவகைப்புறவுரை தழீஇ - பொதுவுஞ் சிறப்புமாகிய இருவகைப் புறவுரைகளையும் முன்னர்ப் பொருந்தி, எழுவகை மதமொடு - உடன்படல் முதலிய எழுவகை மதங்களோடும், நாற்பொருளொடும் புணர்ந்து - அறமுதலிய நான்கு பொருளோடும் கூடி, ஐஇரு குற்றமும் போக்கி - குன்றக்கூறல் முதலிய பத்துக் குற்றங்களையும் அகற்றி, ஒரு இல்ஐ இரண்டு அழகொடும் - நீங்குதல் இல்லாத சுருங்கச் சொல்லல் முதலிய பத்து அழகொடும், உத்தி எண்ணான்கும் மருவும் - முப்பத்திரண்டு உத்தியும் பொருந்தும், ஆதி நூலினைத் தொகைவகை விரிமுறையால் - முதனூலினைத் தொகையும் வகையும் விரியுமாகிய முறையினால். புறவுரை - பாயிரம். நாற்பொருள் - அறம்பொருள் இன்பம் வீடு. எழுவகை மதம், பத்துக் குற்றம், பத்தழகு, முப்பத்திரண்டு தந்திரவுத்தி (நூற்புணர்ப்பு) என்பவற்றைப் பின்வருஞ் சூத்திரங் களான் முறையே அறிக : “ எழுவகை மதமே யுடம்படன் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோ ளொருதலை துணிவே பிறர்நூற் குற்றங் காட்ட லேனைப் பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே.” “ குன்றக் கூறன் மிகைபடக் கூறல் கூறியது கூறன் மாறுகொளக் கூறல் வழூஉச்சொற் புணர்த்தன் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தன் மற்றொன்று விரித்தல் சென்றுதேய்ந் திறுத னின்றுபய னின்மை என்றிவை யீரைங் குற்ற நூற்கே.”” “ சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல் ஓசை யுடைமை யாழமுடைத் தாதல் முறையின் வைப்பே யுலகமலை யாமை விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த தாகுத னூலிற் கழகெனும் பத்தே.”” “ நுதலிப் புகுத லோத்துமுறை வைப்பே தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல் முடித்துக் காட்டன் முடிவிடங் கூறல் தானெடுத்து மொழிதல் பிறன்கோட் கூறல் சொற்பொருள் விரித்த றொடர்சொற் புணர்த்தல் இரட்டுற மொழித லேதுவின் முடித்தல் ஒப்பின் முடித்தன் மாட்டெறிந் தொழுகல் இறந்தது விலக்க லெதிரது போற்றல் முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் விகற்பத்தின் முடித்தன் முடிந்தவை முடித்தல் உரைத்து மென்ற லுரைத்தா மென்றல் ஒருதலை துணித லெடுத்துக் காட்டல் எடுத்த மொழியி னெய்த வைத்தல் இன்ன தல்ல திதுவென மொழிதல் எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல் பிறநூன் முடிந்தது தானுடன் படுதல் தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல் சொல்லின் முடிவி னப்பொருண் முடித்தல் ஒன்றின முடித்த றன்னின முடித்தல் உய்த்துணர வைப்பென வுத்தியெண் ணான்கே.”” (20) கருத்துக் கண்ணழி வாதிய காண்டிகை யானும் விருத்தி யானுநூற் கிடைப்பொரு டுளக்கற விளக்கித் தெரித்து ரைத்தன னுரைத்திடு திறங்கண்டு நூலின் அருத்த மேவடி வாகிய வாதியா சிரியன். (இ-ள்.) கருத்துக் கண்ணழிவு ஆதிய காண்டிகையானும் கருத்துரையும் பதவுரையு முதலிய காண்டிகை யுரையானும், விருத்தியானும் - விருத்தி யுரையானும், நூல் கிடைப்பொருள் துளக்கு அற விளக்கி - அம்முதனூலின் உட்கிடைப் பொருளை ஐயமற விளக்கி, தெரித்து உரைத்தனன் - தெருட்டிக் கூறினன்; உரைத்திடு திறம் கண்டு - அவன் கூறிய வன்மையைப் பார்த்து, நூலின் அருத்தமே வடிவு ஆகிய - அந்நூலின் பொருளே திருவுருவ மாகிய, ஆதி ஆசிரியன் - முதற் குரவனாகிய சோமசுந்தரக் கடவுள். காண்டிகையாவது கருத்து, பதப்பொருள், எடுத்துக்காட்டு, வினா, விடை என்னும் ஐந்துங் கொண்டது. விருத்தியாவது பாடம், கருத்து, சொல்வகை, சொற்பொருள், தொகுத்துரை, உதாரணம், வினா, விடை, விசேடம், விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரியவசனம் என்னும் பதினான்கனையும் கொண்டது. (21) தருக்கு மின்பமுங் கருணையுந் தழைய1மா தவனைத் திருக்க ரங்களான் மகிழ்ச்சியுட் டிளைத்திடத் தடவிப்2 பெருக்க வேண்டிய பேறெலாம் பீடுற நல்கி இருக்கை யிற்செல விடுத்தன னாலவா யிறைவன். (இ-ள்.) தருக்கும் இன்பமும் கருணையும் தழைய - களிப்பும் இன்பமும் அருளும் பெருக, மாதவனை - தவப்பெரியானாகிய அவ்வகத்திய முனிவனை, மகிழ்ச்சியுள் திளைத்திட - (அவன்) மகிழ்ச்சிக் கடலுள் திளைக்க, திருக்கரங்களால் தடவி - தனது திருக்கைகளாலே தடவி, வேண்டிய பேறு எலாம் - அவன் பெற வேண்டிய பயன் அனைத்தையும், பெருக்க - நிரம்ப, பீடுஉற நல்கி - சிறக்கக் கொடுத்தருளி, இருக்கையில் செல விடுத்தனன் - அவன் இருக்கையிற் செல்ல விடுத்தருளினான்; ஆலவாய் இறைவன் - திருவாலவாயின்கண் எழுந்தருளிய இறைவன். (22) பொன்ன னாளொடுங் குறுமுனி விடைகொடு போன பின்னை யாருயிர்க் கிழத்திதன் பிரானைநேர் நோக்கி என்னை நீயிவற் குணர்த்திடா தித்தவப் பொதியின் மன்ன னாலுணர்த் தியதென மதுரைநா யகனும். (இ-ள்.) பொன் அனாளொடும் குறுமுனி விடைகொடு போன பின்னை - பொன்னை யொத்த உலோபா முத்திரை யோடுங் குறுமுனி விடைபெற்றுப் போன பின்னர், ஆர் உயிர்க்கிழத்தி - அரிய உயிர் போன்ற பிராட்டியார், தன் பிரானை நேர்நோக்கி - தன் தலைவனாகிய சோமசுந்தரக்கடவுளை எதிரே பார்த்து, இவற்கு நீ உணர்த்திடாது - இந்நக்கீரனுக்கு நீ இலக்கணம் அறிவித்தருளாது, இத்தவப் பொதியின் மன்னனால் உணர்த்தியது என்னை என - இத்தவமுடைய பொதியின் மலைத்தலைவனாகிய அகத்தியனால் உணர்த்திய காரணம் என்னென்று வினவ, மதுரை நாயகனும் - மதுரைப் பெருமானும். கிழத்தி - உரிமை யுடையாள்; கிழமை : பகுதி. (23) தன்னை நித்தலும் வழிபடுந் தகுதியோர் சாலப் பொன்ன ளிப்பவர் தொடுத்தமற் சரமிலாப் புனிதர் சொன்ன சொற்கட வாதவர் துகடவிர் நெஞ்சத் தின்ன வர்க்குநூல் கொளுத்துவ தறனென விசைப்ப. (இ-ள்.) தன்னை நித்தலும் வழிபடுந் தகுதியோர் - தன்னை நாள்தோறும் வழிபடும் தன்மையுடையோரும், சாலப் பொன் அளிப்பவர் - நிறையப் பொருள் கொடுப்போரும், தொடுத்த மற்சரம் இலாப்புனிதர் - அழுக்காறு அடைதலில்லா மனத்தூய்மை உடைய வரும், சொன்ன சொல் கடவாதவர் - சொன்ன சொல்லைக் கடவாத வரும் ஆகிய, துகள் தவிர் நெஞ்சத்து இன்னவர்க்கு - குற்றம் நீங்கிய உள்ள முடைய இவர் போல்வார்க்கு, நூல் கொளுத்துவது அறன்என இசைப்ப - நூல் போதிப்பது அறமென்று கூறுவர் அறிந்தோர். மற்சரம் - மாற்சரியம், அழுக்காறு. (24) இவனெ டுத்தமற் சரத்தினால் யாமுணர்த் தாதத் தவனை விட்டுணர்த் தினமெனச் சாற்றினான் கேட்டுக் கவலை விட்டக மகிழ்ச்சிகொண் டிருந்தனள் கதிர்கால் நவம ணிக்கலம் பூத்ததோர் கொடிபுரை நங்கை. (இ-ள்.) இவன் எடுத்த மற்சரத்தினால் - இவன் கொண்ட அழுக் காற்றினால், யாம் உணர்த்தாது - யாம் அறிவுறுத்தாமல், அத்தவனை விட்டு உணர்த்தினம் எனச் சாற்றினான் - அம்முனிவனை விட்டு அறிவித்தோம் என்று கூறியருளினான்; கேட்டு - அதனைக் கேட்டு, கவலை விட்டு - ஐயமொழிந்து, கதிர்கால் நவமணிக் கலம் பூத்தது ஓர் கொடிபுரை நங்கை - ஒளி வீசும் நவமணிகள் பதித்த அணி களைப் பூத்ததாகிய ஒரு கொடிபோன்ற பிராட்டி, அகம் மகிழ்ச்சி கொண்டு இருந்தனள் - மனமகிழ்ச்சி கொண்டு இருந்தனள். கவலை - முற்றுமுணர்ந்த பெருமான் தான் உணர்த்தாது ஒரு முனிவனால் உணர்த்தியது என்னை என்னும் ஐயம். (25) கற்ற கீரனும் பின்புதான் முன்செய்த கவிகண் முற்று மாய்ந்துசொல் வழுக்களும் வழாநிலை முடிபும் உற்று நோக்கினா னறிவின்றி முழுதொருங் குணர்ந்தோன் சொற்ற பாடலிற் பொருள்வழுச் சொல்லினே னென்னா. (இ-ள்.) கற்ற கீரனும் - அகத்தியர்பால் இலக்கணம் கற்ற நக்கீரனும், பின்பு - பின்னர், தான் முன் செய்த கவிகள் முற்றும் ஆய்ந்து - தான் முன்னே செய்த கவிகள் அனைத்தையும் ஆராய்ந்து, சொல் வழுக்களும் வழாநிலை முடிபும் உற்று நோக்கினான் - வழூஉச் சொல் முடிபும் வழாநிலை முடிபும் ஆகிய இவற்றைச் சிந்தித்துப் பார்த்து, முழுது ஒருங்கு உணர்ந்தோன் சொற்ற பாடலில் - முற்றும் ஒருசேர உணர்ந்த இறைவன் கூறியருளிய பாசுரத்தில், அறிவு இன்றி - அறிவில்லாமையினால், பொருள்வழுச் சொல்லினேன் என்னா - பொருட்குற்றஞ் சொல்லினேன் என்று. சொல்வழுக்கள் - திணைவழு, பால்வழு, இடவழு, காலவழு, வினாவழு, விடைவழு மரபுவழு என எழுவகைப்படும். சொல் வழுக்கள் என்றாரேனும் அகத்திணை வழுவும், புறத்திணை வழுவுமாகிய பொருளிலக்கண வழுக்களும் கொள்க. வழுவமைதி என்பதும் உபலக்கணத்தாற் பெறப்படும். (26) மறையி னந்தமுந் தொடாததா ணிலந்தொட வந்த நிறைப ரஞ்சுடர் நிராமய நிருத்தற்குப் பிழைத்தேன் சிறிய கேள்வியோர் கழியவுஞ் செருக்குடை யோரென் றறிஞர் கூறிய பழஞ்சொலென் னளவிற்றே யம்ம. மறையின் அந்தம் - வேதாந்தம்; உபநிடதம் நிராமயன் - பாசநோயில்லாதவன்; ஆமயம் - நோய். கழிய : உரிச்சொல்லடியாக வந்த வினையெச்சம். சிறிய கேள்வியோர் செருக்குறுவ ரென்பது. “கரையமை கல்வி சாலாக் கவிஞர்போ லிறுமாந்து ” என இவ்வாசிரியராலும் முன் குறிக்கப்பட்டது. அம்ம : இடைச்சொல். (27) அட்ட மூர்த்திதன் றிருவடிக் கடியனேன் பிழைக்கப் பட்ட தீங்கினா லெனையவ னுதல்விழிப் படுதீச் சுட்ட தன்றியென் னெஞ்சமுஞ் சுடுவதே யென்றென் றுட்ட தும்பிய விழுமநோ யுவரியு ளாழ்ந்தான் (இ-ள்.) அட்டமூர்த்தி தன் திருவடிக்கு -அட்டமூர்த்தியாகிய இறைவன் திருவடிகட்கு, அடியனேன் பிழைக்கப்பட்டதீங்கினால் - அடியேன் பிழைசெய்ய நேர்ந்த தீங்கினால், எனை - அடியேனை, அவன் நுதல் விழிப்படு தீ சுட்டது அன்றி - அவ்விறைவனது நெற்றி விழியில் உண்டாகிய நெருப்புச் சுட்டதே அல்லாமல், என் நெஞ்சமும் சுடுவதே என்று என்று - என் உள்ளமும் என்னைச் சுடுகின்றதே என்னு எண்ணி எண்ணி, உள் ததும்பிய விழுமநோய் உவரியுள் ஆழ்ந்தான் - உள்ளே நிரம்பித் ததும்பும் துன்பநோ யென்னுங் கடலுள் ஆழ்ந்தான். அட்டமூர்த்தி - நிலம், நீர், தீ, வளி, வான், ஞாயிறு, திங்கள், உயிர் என்னும் எட்டு வடிவமாகிய இறைவன். நெஞ்சமும் : இறந்தது தழுவிய எச்சவும்மை. நெஞ்சம் சுடுதலை, “ தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்” என்னும் வாயுறை வாழ்த்தானும் அறிக. விழுமம். துன்பம்; கவலை. (28) மகவை யீன்றதாய் கைத்திடு மருந்துவாய் மடுத்துப் பகைப டும்பிணி யகற்றிடும் பான்மைபோ லென்னை இகலி ழைத்தறி வுறுத்தினாற்1 கேழையேன் செய்யத் தகுவ தியாதென வரம்பிலா மகிழ்ச்சியுட் டாழ்ந்தான். (இ-ள்.) மகவை ஈன்றதாய் - பிள்ளையைப் பெற்ற தாய், கைத்திடும் மருந்து வாய் மடுத்து - கசக்கும் மருந்தினை அதன் வாயில் ஊட்டி, பகைபடும் பிணி அகற்றிடும் பான்மைபோல் - பகைத்தலைப் பொருந்திய பிணியை நீக்குந் தன்மைபோல, என்னை இகல் இழைத்து - என்மேற் சினங்கொண்டு, அறிவுறுத்தினாற்கு - அறிவுறுத்திய அவ்விறைவனுக்கு, ஏழையேன் செய்ய தகுவது யாது என - அறிவிலியாகிய என்னாற் செய்யத்தக்க கைம்மாறு யாதென்று, வரம்பு இலா மகிழ்ச்சியுள் தாழ்ந்தான் - எல்லையில்லாத மகிழ்ச்சிக் கடலுள் அழுந்தினான். மகவு மருந்தினை உண்ணாதாகவும் தாய் அதனை வலிதின் ஊட்டிப் பிணி யகற்றுதல்போல என்க. பகைபடும் - உடம்பிற்குப் பகையாகப் பொருந்தும். தன் பிழை கருதித் துன்பத்துள் ஆழ்ந்தவன் பின்பு இறைவன் புரிந்த அருள் கருதி இன்பத்துள் ஆழ்ந்தான். “ கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே உண்டாமோ கைம்மா றுரை” என்றார் மாணிக்கவாசகப் பெருமானும். (29) மாத வன்றனக் காலவாய் மன்னவ னருளாற் போத கஞ்செய்த நூலினைப் புலவரே னோர்க்கும் ஆத ரஞ்செயக் கொளுத்தியிட் டிருந்தன னமலன் பாத பங்கய மூழ்கிய பத்திமைக் கீரன். (இ-ள்.)அமலன் பாதபங்கயம் மூழ்கிய பத்திமைக்கீரன் - நின்மலனாகிய சோமசுந்தரக்கடவுளின் திருவடித் தாமரையில் அழுந்திய அன்பையுடைய நக்கீரன், மாதவன் தனக்கு ஆலவாய் மன்னவன் அருளால் - குறுமுனிவனானவன் தனக்கு அவ்விறை வனருளால், போதகம் செய்த நூலினை - போதித்த இலக்கண நூலை, புலவர் ஏனோர்க்கும் - ஏனைய புலவர்களுக்கும், ஆதரம் செயக் கொளுத்தியிட்டு இருந்தனன் - அன்புமிக அறிவுறுத்தி யிருந்தான். ஆலவாய் மன்னவன் - மதுரையிற் சுந்தர பாண்டியனாக அரசு புரிந்த இறைவன் : சுட்டாகக் கொள்க. (30) ஆகச் செய்யுள் - 2596. ஐம்பத்தைந்தாவது சங்கத்தார் கலகந் தீர்த்த படலம் (அறுசீரடியாசிரிய விருத்தம்) காமனைப் பொடியாக் கண்ட கண்ணுத றென்னூல்1 கீர நாமநற் புலவற் கீந்த நலமிது பொலம்பூங் கொன்றைத் தாமனச் சங்கத் துள்ளார் தலைதடுமாற்றந் தேற ஊமனைக் கொண்டு பாட லுணர்த்திய வொழுக்கஞ் சொல்வாம். (இ-ள்.) காமனைப் பொடியாக் கண்ட கண்ணுதல் - மன்மதனை நீறாக்கிய நெற்றிக் கண்ணையுடைய இறைவன், தென்னூல்- தமிழிலக்கணத்தை, கீர நாம நல் புலவற்கு ஈந்த நலம் இது - கீரனென்னும் பெயரையுடைய நல்ல புலவனுக்கு உபதேசித்த திருவிளையாடல் இது; பொலம்பூங்கொன்றைத் தாமன் - பொன்போன்ற கொன்றைமலர் மாலையையணிந்த அப்பெருமான், அச்சங்கத்து உள்ளார் - அச்சங்கப் புலவர்கள், தலை தடுமாற்றம் தேற - தத்தம் மயக்கத்தினின்றும் தெளிய, ஊமனைக் கொண்டு பாடல் உணர்த்திய ஒழுக்கம் சொல்வாம் - மூங்கை ஒருவனால் பாடல்களின் பெருமை சிறுமையை (அப்புலவர்களுக்கு) அறிவித்தருளிய திருவிளையாடலை (இனிக்) கூறுவாம். (1) அந்தமில் கேள்வி யோரெண் ணறுவரும் வேறு வேறு செந்தமிழ் செய்து தம்மிற் செருக்குறு பெருமை கூறித் தந்தமின் மாறாய்த் தத்தந் தராதர மளக்க வல்ல முந்தைநூன் மொழிந்த வாசான் முன்னர்வந் தெய்தி னாரே. (இ-ள்.) அந்தம் இல் கேள்வியோர் எண்ணறுவரும் - அளவிறந்த புலமை சான்ற நாற்பத்தெட்டுப் புலவர்களும். வேறு வேறு செந்தமிழ் செய்து - தனித் தனியாகச் செவ்விய தமிழ்ப்பாக்கள் செய்து, தம்மில் செருக்குறு பெருமை கூறி - தங்களுள் தருக்குமிக்க பெருமைகூறி, தந்தமில் மாறாய் - தம்முள்ளே ஒருவர்க்கொருவர் பகையாய், தத்தம் தராதரம் அளக்க வல்ல - தத்தம் பெருமை சிறுமையை அளந்தறிய வல்ல, முந்தை நூல் மொழிந்த ஆசான் - முன்னூல் மொழிந்தருளிய குரவனாகிய சோமசுந்தரக்கடவுளின், முன்னர் வந்து எய்தினார் - திருமுன் வந்து சேர்ந்தனர். செந்தமிழ் - செந்தமிழ்ப்பாக்கள். தருக்குறு பெருமை கூறி என்பதனைப் பெருமைகூறித் தருக்குற்று என மாறுக. தராதரம் - பெருமை சிறுமை; தகுதி. (2) தொழுதன ரடிகள் யாங்க டொடுத்தவிப் பாட றம்முள் விழுமிதுந் தீதுந் தூக்கி வேறுபா டளந்து காட்டிப் பழுதறுத் தையந் தீரப் பணிக்கெனப் பணிந்தார் கேட்டு முழுதொருங் குணர்ந்த வேத முதல்வனா முக்கண் மூர்த்தி. (இ-ள்.) தொழுதனர் - வணங்கி, அடிகள் - இறைவ, யாங்கள் தொடுத்த இப் பாடல் தம்முள் - யாங்கள் பாடிய இப்பாடல்களுள், விழுமிதும் தீதும் தூக்கி - வழுவில்லாததனையும் வழுவுள்ளதனையும் சீர்தூக்கி, வேறு பாடு அளந்து காட்டி - அவற்றின் பெருமை சிறுமைகளைத் தெரித்துக்காட்டி, பழுது அறுத்து ஐயம் தீரப் பணிக்க எனப் பணிந்தார் - எம்முள் எழுந்த இறுமாப்பினைப் போக்கி எமது ஐயுறவு நீங்குமாறு பணித்தருளக் கடவை என்று வேண்டி (மீண்டும்) வணங்கினர்; முழுது ஒருங்கு உணர்ந்த வேதம் முதல்வனாம் முக்கண் மூர்த்தி கேட்டு - முற்றும் ஒருசேர உணர்ந்தருளிய மறை முதல்வனாகிய அம்முக்கட்பெருமான் (அதனைக்) கேட்டருளி. தொழுதனர் : முற்றெச்சம். பழுது - குற்றம், செருக்கு. பணிக்கென : அகரந்தொகுத்தல். (3) இருவருந் துருவ நீண்ட வெரியழற் றூணிற் றோன்றும் உருவென வறிவா னந்த புண்மையா யுலகுக் கெல்லாங் கருவென முளைத்த மூல விலிங்கத்து ணின்றுங் காண்டற் கரியதோர் புலவ னாகித் தோன்றியன் றருளிச் செய்வான். (இ-ள்.) இருவரும் துருவ - திருமாலும் பிரமனும் தேட, நீண்ட எரி அழல் தூணில் - எட்டாது நீண்ட தீப்பிழம்பினின்றும், தோன்றும் உரு என - தோன்றியருளிய திருவுருவம்போல, அறிவு ஆனந்த உண்மையாய் - சச்சிதானந்த வடிவமாய், உலகுக்கு எல்லாம் கரு என முளைத்த - உலகத்திலுள்ள இலிங்கங்களுக்கெல்லாம் காரணமாய் முளைத்த, மூல இலிங்கத்துள் நின்றும் காண்டற்கு அரியது ஓர் புலவனாகி - மூலவிலிங்கத்துள் நின்றும் காணுதற்கரிய ஒரு புலவனாகத் திருவுருக்கொண்டு, தோன்றி - வெளிப்பட்டு, ஒன்று அருளிச்செய்வான் - ஒருசெய்தி கூறியருளுவான். அறிவானந்த உண்மையாய் என்பதனை உண்மை யறிவானந்த மாய் என மாறுக; உண்மை - சத்து. இது சச்சிதானந்த வடிவமான தென்பதும், மேரு முதலிய இடங்களிலுள்ள இலிங்கமெல்லாம் தோன்றுதற்கு முன் தோன்றினமையாலும், அவ்விலிங்கமெல்லாம் இதினின்றும் கிளைத்தமையாலும் இது மூலலிங்கம் எனப்படும் என்பதும் மூர்த்தி விசேடப் படலத்திற் கூறப்பட்டமை காண்க. இனி, உலகுக்கெல்லாம் என்பதற்கு உலகத்தின் தோற்றரவுக்கெல்லாம் என்றுரைத்தலுமாம்; இதனை, “ ஆதியி லான்ம தத்துவ மான வலர்மகன் பாகமும் நடுவில் நீதியின் விச்சா தத்துவ மான நெடியவன் பாகமு முடிவில் ஓதிய சிவதத் துவமென லான வுருத்திரன் பாகமு முதிக்கும் பேதியிம் மூன்றி லெண்ணிறத் துவங்கள் பிறக்குமிம் மூன்றினு முறையால்” என்னும் வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலச் செய்யுளாலறிக. (4) [கலி விருத்தம்] இம்மாநக ருள்ளானொரு வணிகன்றன பதியென் றம்மாநிதிக் கிழவோன்மனை குணசாலினி யனையார் தம்மாதவப் பொருட்டால்வெளிற் றறிவாளரைத் தழுவும் பொய்ம்மாசற வினன்போலவ தரித்தானொரு புத்தேள். (இ-ள்.) தனபதி என்று ஒரு வணிகன் - தனபதி என்னும் பெயருடையனாய் ஒரு வணிகன். இம்மாநகர் உள்ளான் - இப்பெரிய நகரில் இருக்கின்றான்; அம்மா நிதிக்கிழவோன் மனை குணசாலினி - அப் பெரிய நிதிக்கிழவன் மனைவி குணசாலினி என்பாள்; அனையார் தம் மாதவப் பொருட்டால் - அவர்கள் செய்த பெரிய தவம் காரணமாக, வெளிற்று அறிவாளரைத் தழுவும் பொய் மாசு அற - வெள்ளறிவினரைத் தழுவிய நிலையுதல் இல்லாத அஞ்ஞானம் ஆகிய இருள் நீங்க, இனன்போல் ஒரு புத்தேள் அவதரித்தான் - சூரியன் தோன்றினாற் போல ஒப்பற்ற முருகக்கடவுள் அவதரித்தான். வெளிற்றறிவு - புல்லறிவு. இனன் - சூரியன். புத்தேள் - தெய்வம்; முருகக்கடவுள் என்பதை இப்புராணத்து வலைவீசிய படலத்திலும்; இறையனாரகப்பொருள் உரைப் பாயிரத்திலும் காண்க. இதனை ஐஞ்சீராகப் பிரித்துக் கலிநிலைத்துறையாக்கலாம் எனினும் அதற்கு ஓசையின்ப மின்மையின் கலிவிருத்தம் எனலே பொருத்தமென்க. (5) ஓயாவிறன் மதனுக்கிணை யொப்பானவ னூமச் சேயாமவ னிடைநீருரை செய்யுட்கவி யெல்லாம் போயாடுமி னனையானது புந்திக்கிசைந் தானன் றாயாவரு மதிக்குந்தமி ழதுவேயென வறைந்தான். (இ-ள்.) ஓயாவிறல் மதனுக்கு இணை ஒப்பானவன் - அவன் இடையீடுபடாத வெற்றியையுடைய மதவேளுக்கு இணையொத்தவன்; ஊமச்சேயாம் அவனிடைபோய் - மூங்கைப் பிள்ளையாகிய அவனிடத்துச் சென்று, நீர் உரை செய்யுள் கவி எல்லாம் ஆடுமின் - நீர் பாடிய கவிகள் அனைத்தையுங் கூறுங்கள்; அனை யானது புந்திக்கு இசைந்தால் - அவனது உள்ளத்திற்குப் பொருந்து மேல், யாவரும் நன்றாய் மதிக்கும் தமிழ் அதுவே என அறைந்தான் - அனைவரும் சிறப்பாகக் கருதிப் பாராட்டும் கவி அதுவேயாகும் என்று கூறியருளினான். செய்யுள் - சூத்திரம், உரை, பாட்டு என்னும் மூன்றற்கும் பொதுவான பெயர். கவி - பாட்டு. செய்யுளாகிய கவியெல்லாம் என்க. ஆடுதல் - கூறுதல். (6) வன்றாண்மழ விடையாயவன் மணிவாணிக னூமன் என்றாலவன் கேட்டெங்ஙன மிப்பாடலிற் கிடக்கும் நன்றானவுந் தீதானவு நயந்தாய்ந்ததன் றன்மை குன்றாவகை யறைவானென மன்றாடிய கூத்தன். (இ-ள்.) வல்தாள் மழவிடையாய் - வலிய கால்களையுடைய இளமையாகிய இடபவூர்தியை யுடையாய், அவன் மணிவாணிகன் ஊமன் என்றால் - அவன் மணிகளின் குணங் குற்றங்களை ஆராயும் வணிகர் மரபினனும் ஊமனுமாகில், அவன் நயந்து கேட்டு - அவன் (இப்பாடலை) விரும்பிக் கேட்டு, இப்பாடலில் கிடக்கும் நன்றானவும் தீது ஆனவும் ஆய்ந்து - இதிற் கிடக்கின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, அதன் தன்மை குன்றாவகை எங்ஙனம் அறைவான் என- அதன் தன்மையைக் குறைவின்றி எவ்வாறு கூறுவான் என்று வினவ, மன்று ஆடிய கூத்தன் - வெள்ளியம்பலத்திலே திருக்கூத்தாடிய பெருமான். மணிவாணிகனா யுள்ளான் பாட்டின் றன்மையை ஆராய்ந்தறிதல் எங்ஙனம், ஊமனாயுள்ளவன் அதனைச் சொல்லுவதெங்ஙனம் என ஐயுற்று வினாவினாரென்க. (7) மல்லார்தடம் புயவாணிக மைந்தன்றனக் கிசையச் சொல்லாழமும் பொருளாழமுங் கண்டான்முடி துளக்காக் கல்லார்புயம் புளகித்துளங் களிதூங்குவன் கலகம் எல்லாமகன் றிடுமுங்களுக் கென்றாலயஞ் சென்றான். (இ-ள்.) மல்ஆர் தடம்புய வாணிக மைந்தன் - வலி நிறைந்த பெரிய தோளையுடைய அவ்வணிக மைந்தன், தனக்கு இசைய - தனக்குப் பொருந்த, சொல் ஆழமும் பொருள் ஆழமும் கண்டால் - சொல்லாழத்தையும் பொருளாழத்தையும் காணின், முடி துளக்கா - முடியை அசைத்து, கல் ஆர் புயம் புளகித்து உளம்களி தூங்குவன் - மலை போன்ற தோள் புளகித்து உள்ளத்தின்கண் மிக மகிழ்வான்; உங்களுக்குக் கலகம் எல்லாம் அகன்றிடும் - உங்களுள் நேர்ந்த கலகம் அனைத்தும் நீங்கும், என்று - என்று கூறியருளி, ஆலயம் சென்றான் - திருக்கோயிலுட் சென்றருளினான். துளக்கா : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.கல் - மலை. ஆர் : உவமவுருபு. (8) பின்பாவல ரெல்லாம்பெரு வணிகக்குல மணியை அன்பாலழைத் தேகித்தம தவையத்திடை யிருத்தா நன்பான்மலர் நறுஞ்சாந்துகொண் டருந்சித்தனர் நயந்தே முன்பாலிருந் தருந்தீந்தமிழ் மொழிந்தாரவை கேளா. (இ-ள்.) பின் - பின்பு, பாவலர் எல்லாம் - புலவர் அனைவரும், பெரு வணிகக்குல மணியை அன்பால் அழைத்து ஏகி - பெரிய வணிகர் குலசிகாமணியை அன்போடு அழைத்துச் சென்று, தமது அவையத் திடை இருத்தா - தங்கள் கழகத்தின்கண் இருத்தி, நன்பால் மலர் நறுஞ் சாந்து கொண்டு நயந்து அருச்சித்தனர் - நல்ல வெண்மலரும் நறிய சந்தனமுமாகிய இவற்றால் விரும்பி அருச்சித்து, முன்பால் இருந்து - முன்னர் இருந்து, அருந்தீந்தமிழ் மொழிந்தார் - அரிய இனிய தமிழ்க் கவிகளை மொழிந்தனர்; அவை கேளா - அவற்றைக் கேட்டு. பால் மலர் - பால் போலும் வெள்ளிய மலர் : வெளியது உடீஇ வெண்பூச்சூட்டி என்று களவியலுரை கூறுதலுங் காண்க. அருச்சித்தனர் : முற்றெச்சம். முன்பால் - முன்பக்கம். முன்பு ஆல் எனப் பிரித்து வேற்றுமை மயக்க மாக்கி முன்பில் என்றுரைத்தலுமாம்.(9) மகிழ்ந்தான்சிலர் சொல்லாழ்ச்சியை மகிழ்ந்தான்சிலர் பொருளை இகழ்ந்தான்சிலர் சொல்வைப்பினை யிகழ்ந்தான்சிலர் பொருளைப் புகழ்ந்தான்சிலர் சொல்லின்பமும் பொருளின்பமு மொருங்கே திகழ்ந்தான்சிலர் சொற்றிண்மையும் பொருட்டிண்மையுந் தேர்ந்தே. (இ-ள்.) சிலர் சொல் ஆழ்ச்சியை மகிழ்ந்தான் - சிலர் சொல்லாழத்தை மகிழ்ந்தான்; சிலர் பொருளை மகிழ்ந்தான் - சிலர் பொருளாழத்தை மகிழ்ந்தான்; சிலர் சொல் வைப்பினை இகழ்ந்தான் - சிலர் சொல் வைத்த முறையினை இகழ்ந்தான்;சிலர் பொருளை இகழ்ந்தான் - சிலர் பொருளமைப்பினை இகழ்ந்தான்; சிலர் சொல்இன்பமும் பொருள் இன்பமும் ஒருங்கே புகழ்ந்தான்- சிலர் சொல்லின்பத்தையும் பொருளின்பத்தையும் ஒரு சேரப் புகழ்ந்தான்; சிலர் சொல் திண்மையும் பொருள் திண்மையும் தேர்ந்து திகழ்ந்தான் - சிலர் சொல்வலியையும் பொருள் வலியையும் ஆராய்ந்தறிந்து (மகிழ்ச்சியுடன்) விளங்கினான். மகிழ்தல் இகழ்தல், புகழ்தல் என்பவற்றை மெய்ப்பாட்டால் வெளிப்படுத்தினனென்க. (10) இத்தன்மைய னாகிக்கலை வல்லோர்தமி ழெல்லாஞ் சித்தங்கொடு தெருட்டுஞ்சிறு வணிகன்றெருள் கீரன் முத்தண்டமிழ் கபிலன்றமிழ் பரணன்றமிழ் மூன்றும் அத்தன்மைய னறியுந்தொறு மறியுந்தொறு மெல்லாம். (இ-ள்.) கலைவல்லோர் தமிழ் எல்லாம் சித்தம் கொடு - கலையில் வல்ல அப்புலவர்களின் கவிகள் அனைத்தையும் உள்ளத்திற் கொண்டு, இத்தன்மையன் ஆகிதெருட்டும் சிறுவணிகன் - (அவற்றினியல்புகளை) இங்ஙனம் மெய்ப்பாட்டினாலே புலபபடுத்திய சிறியவணிகன், தெருள் கீரன் முத்தண்தமிழ் - தெளிந்த நக்கீரனது மூன்று வகைப்பட்ட தண்ணிய தமிழும், கபிலன் தமிழ் பரணன் தமிழ் மூன்றும் - கபிலனது தமிழும் பரணனது தமிழுமாகிய மூன்றினையும், அத்தன்மையன் - அங்ஙனம் உளங்கொண்டு, அறியுந்தொறும் அறியுந்தொறும் எல்லாம் - உணருந்தோறும் உணருந்தோறும். கீரன்றமிழ் முதலியவற்றில் ஆறாவது செய்யுட்கிழமை. அடுக்கு மிகுதிப் பொருள் குறித்தது. (11) நுழைந்தான்பொரு டொறுஞ்சொற்றொறு நுண்டீஞ்சுவை யுண்டே தழைந்தானுடல் புலனைந்தினுந் தனித்தான்சிரம் பனித்தான் குழைந்தான்விழி வழிவேலையுட் குளித்தான்றனை யளித்தான் விழைந்தான்புரி தவப்பேற்றினை விளைத்தான் களிதிளைத்தான். (இ-ள்.) தனை அளித்தான் விழைந்தான் புரிதவப் பேற்றினை புளைத்தான் - தன்னைப் பெற்ற தந்தை விரும்பிச் செய்த தவத்தின் பயனைப் புலப்படுத்திய அவ்வணிக மைந்தன், நுண் பொருள்தொறும் சொல்தொறும் நுழைந்தான் - நுண்ணிய பொருள்தோறும் சொல்தோறும் நுழைந்து, தீஞ்சுவை உண்டு உடல் தழைத்தான் - அவற்றின் இனிய சுவையினை அருந்தி உடல் பூரித்து, புலன் ஐந்தினும் தனித்தான் - ஐம்புலன்களினின்றுந் தனித்து அச்சுவை மயமாயினன்; சிரம் பனித்தான் - முடி துளக்கினான்; குழைந்தான் விழிவழி வேலையுள் குளித்தான் களிதிளைத்தான் - மனங்குழைந்து விழிகளினின்றும் வழிகின்ற ஆனந்தக் கண்ணீராகிய கடலுட் குளித்துக் களிகூர்ந்தனன். பொருட்சுவை - நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சமனிலை என்னும் ஒன்பதுமாம். சொற்சுவை - குணம், அலங்காரம் என்பன. புலனைந்தினும் தனித்தலாவது ஐம்புல வுணர்வு மின்றிச் சுவைமயமாதல். அளித்தான். விளைத்தான் என்பன வினையாலணையும் பெயர்கள். நுழைந்தான், தழைந்தான், குழைந்தான், விழைந்தான் என்பன முற்றெச்சங்கள். (12) பல்காசோடு கடலிற்படு பவளஞ்சுடர் தரளம் எல்லாநிறுத் தளப்பானென வியல்வாணிகக் குமரன் சொல்லாழமும் பொருளாழமுந் துலைநாவெனத் தூக்க நல்லாறறி புலவோர்களு நட்டாரிகல் விட்டார். (இ-ள்.) பல்காசொடு கடலில் படுபவளம் சுடர்தரளம் எல்லாம் - பல மணிகளும் கடலிற்றோன்றும் பவளமும் ஒளிவிடும் முத்துமாகிய அனைத்தையும், நிறுத்தி அளப்பான் என - நிறுத்தி அறுதி யிடுவான் போல, இயல்வாணிகக் குமரன் - அழகிய வணிகமைந்தன், சொல் ஆழமும் பொருள் ஆழமும் நா துலை எனத் தூக்க - சொல்லாழத்தையும் பொருள் ஆழத்தையும் நாவினையே துலையாகக் கொண்டு நிறுத்துக் காட்ட, நல் ஆறு அறிபுலவோர்களும் இகல் விட்டார் நட்டார் - நன்னெறியை அறிந்த புலவர்கள் யாவரும் பகையைவிடுத்து நண்பராயினர். சுடர்தரளம் : வினைத்தொகை. நா என்றது உபசாரம்; துலையினது நாவென்ன என்றுமாம். விட்டார் : முற்றெச்சம். (13) [அறுசீரடியாசிரிய விருத்தம்] உலகினுட் பெருகி யந்த வொண்டமிழ் மூன்றும் பாடற் றிலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வநா வலருந் தங்கள் கலகமா நவையிற் றீர்ந்து காசறு பனுவ லாய்ந்து புலமிகு கோட்டி செய்து பொலிந்தன ரிருந்தார் போலும். (இ-ள்.) அந்த ஒண் தமிழ் மூன்றும் - அவ்வணிக மைந்தனால் முற்றும் பாராட்டப் பெற்ற நக்கீரன் கபிலன் பரணன் என்னும் மூவருடைய பாடல்கள், உலகினுள் பெருகி - உலகத்திற் பரவி, பாடல் திலகமாய்ச் சிறந்த - பாக்களுக்குத் திலகமாக விளங்கின; ஆய்ந்த தெய்வ நாவலரும் - கலைகளை ஆராய்ந்த தெய்வப் புலவர் களும், தங்கள் கலகமாம் நவையில் தீர்ந்து - தங்கள் கலகமாகிய குற்றத்தினின்றும் நீங்கி, காசு அறு பனுவல் ஆய்ந்து - குற்றமற்ற நூல்களை ஆராய்ந்து, புலம்மிகு கோட்டி செய்து பொலிந்தனர் இருந்தார் - அறிவான் மிக்க அளவளாவுதலைச் செய்து விளங்கி இருந்தனர். சிறந்த : அன்பெறாத பல வறிசொல். தெய்வ நாவலர் - தெய்வத்தன்மை வாய்ந்த புலவர். கோட்டி செய்தல் - கூடி அளவளாவுதல்; வாதஞ் செய்தல். பொலிந்தனர்: முற்றெச்சம். போலும் : ஒப்பில் போலி. (14) ஆகச் செய்யுள் 2610. ஐம்பத்தாறாவது இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் (அறுசீரடியாசிரிய விருத்தம்) குடைக்காடன் பசிக்கன்னக் குழியருத்தி வேட்கையறக் கொடுத்த கங்கைச் சடைக்காடன் புலவரிக றணிவித்த முறையிதுமேற் றன்னைப் பாடுந் தொடைக்காடன் பகன்றிகழ்ந்த தென்னவனை முனிந்துதன்னைத் தொழுது போன இடைக்காட னுடன்போய்ப்பின் பெழுந்தருளிப் பிணக்கறுத்த வியல்பு சொல்வாம். (இ-ள்.) குடைக்கு ஆள்தன் பசிக்கு - குடை பிடிப்பதற்கு ஆளாகிய குண்டோதரனது பசியை நீக்குதற்கு, அன்னக்குழி அருத்தி - அன்னக்குழியை வருவித்து ஊட்டி, வேட்கை அறக்கொடுத்த கங்கைச் சடைக்காடன் - அவன் நீர் வேட்கை நீங்கக் கொடுக்கப்பட்ட கங்கையை அணிந்த சடைக் காட்டினையுடைய சோமசுந்தரக்கடவுள், புலவர் இகல் தணிவித்த முறை இது - புலவர்களின் கலகத்தைத் தீர்த்தருளிய திருவிளையாடல் இது, மேல் - இனி, தன்னைப் பாடும் தொடைக்கு ஆடு அன்பு அகன்று இகழ்ந்த - தன்னைப் பாடிய செய்யுளுக்குச் செய்யும் அன்பு நீங்கி அவமதித்த, தென்னவனை முனிந்து - பாண்டியனை வெறுத்து, தன்னைத் தொழுது போன - தன்னை வணங்கிப் பிணங்கிச் சென்ற, இடைக்காடன் உடன்போய் - இடைக்காடனுடன் சென்று, பின்பு எழுந்தருளிப் பிணக்கு அறுத்த இயல்பு சொல்வாம் - பின் எழுந்தருளி அவனது பிணக்குத் தீர்த்த திருவிளையாடலைக் கூறுவாம். ஆள்தன், தன் : சாரியை. தன்னைப் பாடும் - பாண்டியனைப்பாடும். தன்னைத் தொழுது - இறைவனைத் தொழுது. செய்யுளுறுப்பாகிய தொடை என்பது செய்யுளை யுணர்த்திற்று; பாமாலை என்றுமாம். ஆடு - பொருந்திய. (1) இந்திரன்றன் பழிதுரத்தி யரசளித்துப் பின்புகதி யின்ப மீந்த சுந்தரன்பொன் னடிக்கன்பு தொடுத்துநறுஞ் சண்பகத்தார் தொடுத்துச் சாத்தி வந்தனைசெய் திருத்தொண்டின் வழிக்கேற்பச் சண்பகப்பூ மாற வேந்தன் அந்தரசூ டாமணியாஞ் சிவபுரத்து ணிறைசெல்வ மடைந்தா னிப்பால். (இ-ள்.) இந்திரன் தன் பழி துரத்தி அரசு அளித்து - இந்திரன் பழியை நீக்கி அவனுக்கு அரசுரிமையையுந் தந்து, பின்புகதி இன்பம் ஈந்த சுந்தரன் - பின் வீட்டின்பத்தையும் அளித்த சோமசுந்தரக் கடவுளின், பொன் அடிக்கு அன்பு தொடுத்து - பொன்போலுந் திருவடிகட்கு அன்பு கூர்ந்து, நறுஞ்சண்பகத்தார் தொடுத்துச் சாத்தி- நறுமணங் கமழுஞ் சண்பகமாலை தொடுத்து (அக்கடவுளுக்குச்) சாத்த, வந்தனைசெய் திருத்தொண்டின் வழிக்கு ஏற்ப - வழிபாடு செய்துவந்த திருத்தொண்டின் நெறிக்குப் பொருந்த, சண்பகப்பூமாற வேந்தன் - சண்பக மாறனென்னும் மன்னன், அந்தர சூடாமணியாம் சிவபுரத்துள் - (மேலேழுலகங்களுக்கும்) முடிவாயுள்ள சூளாமணி போலுஞ் சிறந்த சிவபுரத்துள், நிறை செல்வம் அடைந்தான் - நிறைந்த செல்வத்தைப் பெற்றான்; இப்பான் - பின். அந்தர சூடாமணியாம் - மேலுள்ள உலகங்கட்குச் சூடாமணி போன்றதாகிய; “ ஏழின் முடியதாஞ் சிவலோகம்” என்றார் முன்னும். (2) ஆற்றன்மிகு பிரதாப சூரியன்வங் கிசத்துவச னளவில் சீர்த்தி சாற்றரிய விரிபுமருத் தனன்சோழ வங்கிசாந் தகன்றான் வென்றி மாற்றரிய புகழ்ச்சேர வங்கிசாந் தகன்பாண்டி வங்கி சேசன் தோற்றமுறு பரித்தேர்வங் கிசசிரோ மணிபாண்டீச் சுரன்றான் மன்னோ. (இ-ள்.) ஆற்றல்மிகு பிரதாப சூரியன் - வலிமிக்க பிரதாப சூரியனும், வங்கிசத்துவசன் - வசங்கிசத்துவசனும், அளவு இல் சீர்த்தி சாற்று அரிய இரிபு மருத்தனன் - அளவிறந்த புகழ்வாய்ந்த சொல்லுதற்கரிய இரிபுமருத்தனனும், சோழவங்கிசாந்தகன் - சோழவங்கிசாந்தகனும், வென்றி மாற்று அரிய புகழ்ச் சேரவங்கிசாந்தகன் - நீக்குதற்கரிய வெற்றியும் புகழும் வாய்ந்த சேரவங்கி சாந்தகனும், பாண்டி வங்கி சேசன் - பாண்டிவங்கிசேசனும், தோற்றம் உறு பரித்தேர் வங்கிச சிரோமணி - பொலிவு மிக்க குதிரைபூண்ட தேரினையுடைய வங்கிச சிரோமணியும், பாண்டீச்சுரன் - பாண்டீச்சரனும். வம்சம் என்பது வங்கிசம் எனத் திரிந்தது. இரிபு மருத்தனன் - பகைவரைக் கொல்பவன். வங்கிசாந்தகன் - வமிசத்திற்குக் காலன் போன்றவன். மன், ஓ : அசைகள். (3) துணிவுடைய குலத்துவசன் வங்கிசபூ டணமாறன் சோம சூடா மணிகுலசூடாமணியே யிராசசூ டாமணியே மாற்றார் போற்றிப் பணியவரும் பூபசூ டாமணியே குலேசபாண் டியனே யென்னக் கணிதமுறு பதினைவர் வழிவழிவந் துதித்துநிலங் காவல் பூண்டார். (இ-ள்.) துணிவுடைய குலத்துவசன் - போர்த்துணிவு மிக்க குலத்துவசனும், வங்கிசபூடண மாறன் - வங்கிசபூடண மாறனும், சோம சூடாமணி - சோம சூடாமணியும், குலசூடாமணி - குலசூடாமணியும், இராச சூடாமணி - இராச சூடாமணியும், மாற்றார் போற்றிப் பணிய வரும் பூப சூடாமணி - பகைவர்கள் துதித்து வணங்குமாறு வருந் தோற்றத்தையுடைய பூப சூடாமணியும், குலேச பாண்டியன் என்னக் கணிதம் உறு பதினைவர் - குலேச பாண்டியனும் என்று எண்ணப்படும் பதினைந்து பாண்டியர்களும், வழிவழி வந்து உதித்து நிலம் காவல் பூண்டார் - ஒருவர் பின் ஒருவராய்த் தோன்றி நிலவுலகினைக் காத்தலை மேற்கொண்டார். (4) அத்தகைய பாண்டியருட் குலேசபாண் டியனென்னு மரசன் றோண்மேல் வைத்தவனி தலம்புரப்போ னிலக்கணமு மிலக்கியமும் வரம்பு கண்டோன் எத்தகைய பெருநூலு மெல்லைகண்டோ னாதலினா லிவனுக் கேற முத்தமிழோர் பயில்சங்க மிடங்கொடுத்த தனையமணி முழவுத் தோளான். (இ-ள்.) அத்தகைய பாண்டியருள் - அத்தன்மையை யுடைய பாண்டியருள், அவனிதலம் தோள்மேல் வைத்து புரப்போன் - நிலவுலகைத் தோளின் கண் வைத்துக் காப்பவனாகிய, குலேச பாண்டியன் என்னும் அரசன் - குலேச பாண்டியன் என்னும் மன்னன், இலக்கணமும் இலக்கியமும் வரம்பு கண்டோன் - இலக்கணமும் இலக்கியமுமாகிய இவற்றின் முடிவைக் கண்டு, எத்தகைய பெருநூலும் எல்லை கண்டோன் ஆதலினால் - வேறு எத்தகைய பெரிய நூலையும் முடிவு கண்டவனாதலால், இவனுக்கு - இப்பாண்டியனுக்கு, முத்தமிழோர் பயில் சங்கம் ஏற இடம் கொடுத்தது - மூன்று தமிழையு முணர்ந்த புலவர் இருக்கும் சங்கப்பலகை ஏறுதற்கு இடந்தந்தது; அனையமணி முழவுத் தோளான் - அந்த அழகிய மத்தளம் போலுந் தோளையுடைய குலேச பாண்டியன். புரப்போனாகிய அரசன் என்க. வரம்பு கண்டு என எச்சமாக்குக. வரம்பு கண்டோனும் எல்லை கண்டோனும் ஆதலினால் என வுரைத்தலுமாம். (5) கழிந்த பெருங் கேள்வியினா னெனக்கேட்டு முழுதுணர்ந்த கபிலன் றன்பாற் பொழிந்தபெருங் காதன்மிகு கேண்மையினா னிடைக்காட்டுப் புலவன் றென்சொன் மொழிந்தரசன் றனைக்காண்டு மெனத்தொடுத்த பனுவலொடு மூரித் தீந்தேன் வழிந்தொழுகு தாரானைக் கண்டுதொடுத் துரைப்பனுவல் வாசித் தானால். (இ-ள்.) கழிந்த பெருங் கேள்வியினான் எனக் கேட்டு - மிகப் பெரிய நூல்வல்லான் என்று (கற்றார் கூறக்) கேட்டு, முழுது உணர்ந்த கபிலன் தன்பால் - கலைகள் முற்றுமுணர்ந்த கபிலனிடத்து, பொழிந்த பெருங் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் - பொழியப்பட்ட பெரிய அன்புமிக்க நட்பினனாகிய இடைக் காட்டுப் புலவன், தென்சொல் மொழிந்து அரசன் தனைக்காண்டும் என - ஒரு தமிழ்ப் பிரபந்தங் கூறிச் சென்று அரசனைக் காண்போமென்று கருதி, தொடுத்த பனுவலொடு - இயற்றிய அந்நூலுடன், மூரித்தீந்தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு - மிகவும் இனிய மது வழிந்தொழுகும் வேப்பமலர்மாலையை யணிந்த அப் பாண்டியனைக் கண்டு, தொடுத்த உரைப்பனுவல் வாசித்தான் - தானியற்றிய உரை யமைந்த செய்யுளைப் படித்தனன். முழவுத் தோளான் கேள்வியினான் எனக் கேட்டு என இயைக்க. கழிந்தபெரு: ஒரு பொருண் மேல் வந்தன. காண்டும் : தன்மைப் பன்மை யெதிர்கால முற்று. மூரி - பெருமை. தொடுத்த என்பதன் ஈற்றகரம் தொக்கது. ஆல் : அசை. (6) வழுக்காத சொற்சுவையும் பொருட்சுவையும் பகிர்ந்தருந்த வல்லோ னுள்ளத் தழுக்காற்றாற் சிரந்துளக்கா னகமகிழ்ச்சி சிறிதுமுகத் தலர்ந்து காட்டான் எழுக்காயுந் திணிதோளா னொன்றுமுரை யான்வாளா விருந்தா னாய்ந்த குழுக்காத னண்புடையான் றனைமானம் புறந்தள்ளக் கோயில் புக்கான். (இ-ள்.) வழுக்காத சொல் சுவையும் பொருள் சுவையும் பகிர்ந்து அருந்தவல்லோன் - குற்றமில்லாத சொல்லின் சுவையையும் பொருளின் சுவையையும் பாகுபடுத்தி நுகரவல்ல அப்பாண்டியன், உள்ளத்து அழுக்காற்றால் - மனத்தின்கண் உள்ள பொறாமையால், சிரம் துளக்கான் - முடியை அசைக்காமலும், அகமகிழ்ச்சி சிறிதும் முகத்து அலர்ந்து காட்டான் - உள்ள மகிழ்ச்சியை முகத்தின்கண் சிறிதும் மலர்ந்து காட்டாமலும், எழுக்காயும் திணிதோளான் - தூணைவென்ற திண்ணிய தோளையுடைய அப்பாண்டியன், ஒன்றும் உரையான் வாளா இருந்தான் - ஒன்றுங்கூறாது சும்மா இருந்தான்; ஆய்ந்த குழுகாதல் நண்பு உடையான் - நூல்களை ஆராய்ந்த புலவர் கூட்டத்தால் விரும்பப்பட்ட நட்பினையுடைய அப்புலவன், தனைமானம்புறம்தள்ளக் கோயில் புக்கான் - தன்னை மானமானது வெளியே தள்ள(ச்சென்று) திருக்கோயிலைச் சார்ந்தான். வல்லோனாகிய தோளான் என இயைக்க; தோளான் வல்லோன் எனினும் என விரித்துரைத்தலுமாம். முகமலர்ச்சியால் அகமகிழ்ச்சியைப் புலப்படுத்தாதென்க. (7) சந்நிதியில் வீழ்ந்தெழுந்து தமிழறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர் நன்னிதியே திருவால வாயுடைய நாயகனே நகுதார் வேம்பன் பொன்னிதிபோ லளவிறந்த கல்வியுமிக் குளனென்று புகலக் கேட்டுச் சொன்னிறையுங் கவிதொடுத்தே னவமதித்தான் சிறிதுமுடி துளக்கா னாகி. (இ-ள்.) சந்நிதியில் வீழ்ந்து எழுந்து - திருமுன் விழுந்து வணங்கி எழுந்து, தமிழ் அறியும் பெருமானே - தமிழை அறியும்பெருமானே, தன்னைச் சார்ந்தோர் நல்நிதியே - சார்ந்தவர்க்கு நல்ல நிதிபோல்வாய், திருவாலவாயுடைய நாயகனே - திருவாலவாயினை உடைய இறைவனே, நகு தார் வேம்பன் - விளங்குகின்ற வேப்பமலர் மாலையையணிந்த பாண்டியன், பொன் நிதிபோல் அளவு இறந்த கல்வியும் மிக்குளன் என்று புகல - பொருட் செல்வ மிக்குடையனாதல் போல அளவிறந்த கல்விச் செல்வமும் மிக்குள்ளான் என்று (கற்றோர்) கூறக், கேட்டு - அதனைக் கேட்டு, சொல் நிறையும் கவிதொடுத்தேன் - சொற்சுவை நிரம்பிய கவிபாடி அவனிடஞ் சென்றேன், சிறிதும் முடிதுளக்கானாகி அவமதித்தான் - சிறிதும் தலைஅசைக்காமல் அவமதித்தான். எனது செய்யுள் எத்தன்மையுடையதென நீ அறிவாய் என்பார் தமிழறியும் பெருமானே என்றார். (8) பரிவாயின் மொழிதொடுத்து வருணித்தோர்க் ககமகிழ்ந்தோர் பயனு நல்கா விரிவாய தடங்கடலே நெடுங்கழியே யடுங்கான விலங்கே புள்ளே பொரிவாய பராரைமர நிரையேவான் றொடுகுடுமிப் பொருப்பே வெம்பும் எரிவாய கொடுஞ்சுரமே யெனவிவற்றோ ரஃறிணையொத் திருந்தா னெந்தாய். (இ-ள்.) எந்தாய் - எம் தந்தையே, பரிவாய் இன்மொழி தொடுத்து வருணித்தோர்க்கு - அன்புடன் இனியமொழியாற் கவி கொடுத்து வருணித்த புலவர்களுக்கு, அகமகிழ்ந்து ஓர் பயனும் நல்கா - மனமகிழ்ந்து ஒரு பயனும் அளிக்காத, விரிவாய தடங்கடலே - விரிந்த பெரியகடலும், நெடுங்கழியே - நெடிய உப்பங்கழியும், அடுங்கான விலங்கே - கொல்லுகின்ற காட்டிலுள்ள விலங்கும், புள்ளே - பறவையும், பொரிவாய பராரை மரநிரையே - பொருக்குவாய்ந்த பருத்த அரையையுடைய மரவரிசையும், வான்தொடு குடுமிப்பொருப்பே - வானை அளாவியமுடியினையுடைய மலையும், வெம்பும் எரிவாய கொடுஞ்சுரமே - வெதுப்புகின்ற அனலைத் தன்னிடத்துடைய கொடிய பாலைநிலமும், என இவற்று ஓர் அஃறிணை ஒத்து இருந்தான் - என்று சொல்லப்பட்ட இவற்றுள் ஓர் அஃறிணைப் பொருளைப் போன்றிருந்தான். கடல் முதலிய அஃறிணைப் பொருள்களை எவ்வளவு வருணிப் பினும், அவை அகமகிழ்தலும் பயனளித்தலும் இல்லாமைபோல் இவனும் இருந்தனன் என்றார். இதனால் அவனது இழிவைப் புலப்படுத்தியவாறுங் காண்க. ஏகாரங்கள் எண்ணுப்பொருளன. பராரை : மரூஉ. (9) என்னையிகழ்ந் தனனோசொல் வடிவாய்நின் னிடம்பிரியா விமையப் பாவை தன்னையுஞ்சொற் பொருளான வுன்னையுமே யிகழ்ந்தனனென் றனக்கியா தென்னா முன்னைமொழிந் திடைக்காடன் றணியாத முனிவீர்ப்ப முந்திச் சென்றான் அன்னவுரை திருச்செவியி னூறுபா டெனவுறைப்ப வருளின் மூர்த்தி. (இ-ள்.) என்னையோ இகழ்ந்தனன் - அவன் என்னையோ இகழ்ந்தான், சொல்வடிவாய் நின் இடம்பிரியா - சொல்லின் வடிவமாக நினதுஇடப்பாகத்தினின்றும் பிரியாத, இமையப்பாவை தன்னையும் - பார்வதி தேவியையும், சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன் - அச்சொல்லின் பொருளான நின்னையுமே இகழ்ந்தனன், என் தனக்கு யாது என்னா - அதனால் எனக்கு வந்த குறை யாது என்று, முன்னைமொழிந்து - திருமுன் நின்று கூறி, இடைக்காடன் தணியாத முனிவுஈர்ப்ப முந்திச் சென்றான் - இடைக்காடன் பொறுத்தற்கரிய சினம் இழுப்ப முன்னே சென்றனன்; அன்னஉரை- அந்தச்சொல், திருச்செவியின் ஊறுபாடு என உறைப்ப - திருச்செவியின்கண் வேற்படைபோலுஞ் சென்று தைக்க, அருளின் மூர்த்தி - கருணை வடிவினனாகிய அச்சோமசுந்தரக் கடவுள். பொருளமைந்த சொற்களாற் றொடுக்கப்பெற்ற செய்யுளை இகழ்ந்தமையின் சொல்வடிவாகிய இறைவியையும் பொருள் வடிவாகிய இறைவனையும்இகழ்ந்தானாம் என்றார். சொல்லும்பொருளும் பேதமும் அபேதமுமின்றி நிற்றல்போல் சத்தியும் சிவனும் இயைந்து நிற்பரென்க; ஊறுபாடு என்பது கருவியை உணர்த்திற்று. (10) போனவிடைக் காடனுக்குங் கபிலனுக்கு மகத்துவகை பொலியு மாற்றான் ஞானமய மாகியதன் னிலிங்கவுரு மறைத்துமையா நங்கை யோடும் வானவர்தம் பிரானெழுந்து புறம்போய்த்தன் கோயிலினேர் வடபால் வையை ஆனநதித் தென்பாலோ ராலயங்கண் டங்கணினி தமர்ந்தான் மன்னோ. (இ-ள்.) போன இடைக்காடனுக்கும் - (அங்ஙனம் கூறிச் சினந்து) சென்ற இடைக்காடனுக்கும், கபிலனுக்கும் அகத்துஉவகை பொலியும் ஆற்றால் - (அவன் உயிர் நண்பனாகிய) கபிலனுக்கும் மனத்தின் கண் மகிழ்ச்சி மிகுமாறு, வானவர் தம்பிரான் - தேவர்கள் தேவனாகிய அவ்விறைவன், ஞானமயமாகிய தன் இலிங்க உருமறைத்து- ஞானமயமாகிய தனது இலிங்கவுருவை மறைத்து, உமையாம் நங்கையோடும் எழுந்து - உமைப் பிராட்டியுடன் எழுந்து புறம்போய் - வெளியே சென்று, தன் கோயிலின்நேர் வடபால் - தனது திருக்கோயிலுக்கும் நேரே வடதிசையில், வையை ஆனநதித் தென்பால் - வையையாற்றின் தென்பக்கத்து, ஓர் ஆலயம் கண்டு இனிது அமர்ந்தான் - ஒரு திருக்கோயிலை ஆக்கி அதன்கண் இனிதாக அமர்ந்தருளினான். மன், ஓ : அசைகள். (11) சங்கவான் றமிழ்த்தெய்வப் புலவோரு முடனெழுந்து சைல வேந்தன் மங்கைநா யகன்போன வழிபோயங் கிருந்தாரவ் வழிநாள் வைகற் கங்குல்வாய் புலரவரும் வைகறையிற் பள்ளியுணர் காலத் தெய்தி அங்கணா யகனடியார் சேவிப்பா ரிலிங்கவுரு வங்குக் காணார். (இ-ள்.) வான் தமிழ்ச் சங்கத் தெய்வப் புலவோரும் - சிறந்த தமிழ்ச் சங்கத்துத் தெய்வத்தன்மை பொருந்திய புலவர்களும், உடன் எழுந்து - ஒரு சேர எழுந்து, சைலவேந்தன் மங்கைநாயகன் போன வழிபோய் - மலை மன்னன் புதல்வியாராகிய உமையின் கேள்வன் சென்ற வழியே சென்று, அங்கு இருந்தார் - அங்குத் தங்கினர்; அவ்வழி நாள் வைகல் கங்குல்வாய் புலரவரும் வைகறையில் - அந்நாளில் பின்னாள் இராப்பொழுது கழியவரும் காலைப்போதில், பள்ளி உணர்காலத்து எய்தி - இறைவனது திருப்பள்ளி எழுச்சிக்காலத்திற் சென்று, அங்கண் நாயகன் அடியார் சேவிப்பார் - அச்சிவபெருமான் அடியார்கள் வணங்கலுற்றவர்கள், அங்கு இலிங்க உருக்காணார் - அத் திருக்கோயிலின்கண் இலிங்கத் திருவுருவத்தைக் காணாதவராய். சேவிப்பாராகிய அடியார் என்றுமாம். (12) என்னவதி சயமோவீ தென்றயிர்த்தா ரிரங்கினா ரிதனை யோடி மன்னவனுக் கறிவிப்பான் வேண்டுமெனப் புறப்பட்டு வருவா ராவி அன்னவரைப் பிரிந்துறையு மணங்களையா ரெனவுமல ரணங்கு நீத்த பொன்னவிர்தா மரையெனவும் புலம்படைந்து பொலிவழிந்த புரமுங் கண்டார். (இ-ள்.) ஈது என்ன அதிசயம் என்று அயிர்த்தார் - இஃது என்ன அதிசயம் என்று ஐயுற்று, இரங்கினார் - வருந்தி, ஓடி இதனை மன்னவனுக்கு அறிவிப்பான் வேண்டும் என - விரைந்து சென்று இச்செய்தியை அரசனுக்கு அறிவிக்க வேண்டுமென்று கருதி, புறப்பட்டு வருவார் - புறப்பட்டுவரும் அடியார்கள், ஆவி அன்னவரைப் பிரிந்து உறையும் அணங்கு அனையார் எனவும் - உயிர்போன்ற கேள்வரைப் பிரிந்து வசிக்கும் தெய்வமகளிர் போன்ற பெண்கள்போலவும், அலர் அணங்குநீத்த பொன் அவிர்தாமரை எனவும் - திருமகள் கைவிட்ட பொன்போல விளங்குந் தாமரை போலவும், புலம்பு அடைந்து - தனிமை அடைந்து, பொலிவு அழிந்த புரமும் கண்டார் - பொலிவழிந்து நிற்கும் நகரத்தினையுங் கண்டனர். அயிர்த்தார் இரங்கினார் என்பவற்றை முற்றாகவே யுரைத்தலுமாம். அறிவிப்பான் : வினையெச்சம். பொன்னவிர் என்பது தாமரைக்கு இயற்கையடை. (13) அரசனிடைப் புகுந்துள்ள நடுநடுங்கி நாவுணங்கி யரசே யாமொன் றுரைசெயவஞ் சுதுமுங்க ணாயகனைத் திருப்பள்ளி யுணர்ச்சி நோக்கி மரைமலர்ச்சே வடிபணியப் புகுந்தனமின் நாங்கவன்றன் வடிவங் காணேம் புரமுநனி புலம்படைந்த தென்றழல்வே லெனச்செவியிற் புகுத்த லோடும். (இ-ள்.) அரசனிடைப் புகுந்து - வேந்தனிடத்துச்சென்று, உள்ளம் நடுநடுங்கி நாஉணங்கி - மனம் பதைபதைத்து நாவுலர்ந்து, அரசே - மன்ன, யாம் ஒன்று உரைசெய அஞ்சுதும் - யாங்கள் ஒரு செய்தியை இங்குக் கூற அஞ்சுகின்றோம்; உங்கள் நாயகனை - உங்கள் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை, திருப்பள்ளி உணர்ச்சி நோக்கி - திருப்பள்ளி எழுச்சியில் நோக்கி, மரைமலர்ச் சேவடி பணியப் புகுந்தனம் - தாமரை மலர்போலுஞ் சிவந்த திருவடிகளைப் பணிதற்குச் சென்றோம் ; இன்று ஆங்கு அவன் தன்வடிவம் காணேம் - இன்று அவ்விடத்தில் அப்பெருமானது திருவடிவத்தைக் கண்டிலேம்; புரமும் நனிபுலம்பு அடைந்தது - நகரமும் மிகவும் பொலிவிழந்தது, என்று செவியில் - என்று (அவன்) செவியின் கண், அழல் வேல் எனப் புகுத்தலோடும் - நெருப்பிற் காய்ச்சிய வேற்படைபோலப் புகுத்தியவளவில். நடுநடுங்கி - மிகநடுங்கி; வழக்கிலே இரட்டைக் கிளவிபோல் இங்ஙனம் வாரா நின்றது. மரை : முதற்குறை. என்று அச் சொற்களை வேலெனச் செவியிற் புகுத்தலோடும் என்க. (14) வழுதியரி யணையிலிருந் தடியிறவீழ் பழுமரம்போன் மண்மேல் யாக்கை பழுதுறவீழ்ந் துயிரொடுங்க வறிவொடுங்கி மட்பாவை படிந்தாங் கொல்லைப் பொழுதுகிடந் தறிவுசிறி தியங்கவெழுந் தஞ்சலிக்கைப் போது கூப்பி அழுதிருகண் ணீர்வெள்ளத் தாழ்ந்தடியே னென்பிழைத்தே னண்ணா லண்ணால். (இ-ள்.) வழுதி - பாண்டியன். அடிஇறவீழ் பழுமரம்போல் - வேர் அற வீழ்ந்த ஆலமரம்போல், அரி அணையில் இருந்து - சிம்மாதனத்தினின்றும், மண்மேல் யாக்கை பழுதுஉற வீழ்ந்து - மண்ணின்மேல் உடலின்கண் வடுப்படுமாறு வீழ்ந்து. உயிர் ஒடுங்க அறிவு ஒடுங்கி - உயிர் ஒடுங்குதலால் அறிவு ஒடுங்கி, மண்பாவை படிந்தாங்கு - சுதையாற் செய்த பிரதிமை கிடந்தாற்போல, ஒல்லைப்பொழுது கிடந்து - சிறிது நேரங் கிடந்து, சிறிது அறிவு இயங்க எழுந்து - சிறிது உணர்ச்சியுண்டாக எழுந்து, அஞ்சலி கைப்போது கூப்பி அழுது - அஞ்சலியாகக் கைத்தாமரைகளைத் தலையின்மேற் குவித்துஅழுது, இருகண் நீர் வெள்ளத்து ஆழ்ந்து - இரண்டு கண்களினின்றும் பொழியும் நீர்ப் பெருக்கில் மூழ்கி, அடியேன் என் பிழைத்தேன் அண்ணால் அண்ணால் - அடியேன் என்ன தவறு இழைத்தேன் பெருமவோ பெருமவோ. பழுமரம் - முதிர்ந்த ஆலமரம்; ஒல்லை - விரைவு; ஈண்டுச் சிறிது என்னும் பொருளில் வந்தது. அவலம், கவலை, கையாறு, அழுங்கல் என்னும் அவத்தைகளை யடைந்தானென்க. (15) கொலையினையோ ரவுணர்புர நொடிவரையிற் பொடியாகக் குனித்த மேருச் சிலையினையோ பழையசிவ புரத்தினையோ வருவிமணி தெறிக்கும் வெள்ளி மலையினையோ தம்மைமறந் துனைநினைப்பார் மனத்தினையோ வாழ்த்தும் வேதத் தலையினையோ வெங்குற்றா யெங்குற்றா யென்றென்று தளரு மெல்லை. (இ-ள்.) கொலையினை ஓர் அவுணர் புரம் - கொலைபுரியும் நெறியை ஆராய்ந்தறியும் அவுணர்களின் திரிபுரம், நொடிவரையில் பொடியாக - நொடிப்பொழுதிலே பொடியாகுமாறு, குனித்த மேருச்சிலையினையோ - வளைத்த மேருவாகிய வில்லை யுடையோய், பழைய சிவபுரத்தினையோ - நீ பழைய சிவலோகத்தின் கண் உள்ளாயோ, அருவிமணி தெறிக்கும் வெள்ளிமலையினையோ - அருவிமணிகளை எறியும் கைலாய மலையின்கண் உள்ளாயோ, தம்மை மறந்து உனை நினைப்பார் மனத்தினையோ - தம்மை மறந்து நின்னை நினைக்கின்ற அடியார்கள் மனத்தின்கண் உள்ளாயோ, வாழ்த்தும் வேதத் தலையினையோ - (நினை இடையறாது) வாழ்த்துகின்ற மறை முடியின்கண் உள்ளாயோ, எங்கு உற்றாய் எங்கு உற்றாய் என்று என்று தளரும் எல்லை - (இவற்றுள்) எங்குச் சென்றாய் எங்குச் சென்றாய் என்று சொல்லிச் சொல்லி வருந்தும் பொழுது. நொடி - கைந்நொடி; மாத்திரைப் பொழுதை யுணர்த்திற்று. சிவபுரத்தினை யுற்றாயோ, வெள்ளி மலையினை யுற்றாயோ என்றிங்ஙனம் கூட்டியுரைத்தலுமாம்; சிவபுரத்தை யுடையாய், வெள்ளி மலையையுடையாய் என்றிங்ஙனம் கூறி, ஓகாரம் புலம்பின்கண் வந்ததென்றுரைத்தலும் பொருந்தும். அடுக்குகள் அவலங் குறித்து நின்றன. (16) சிலர்வந்து மன்னாவோ ரதிசயங்கண் டனம்வையைத் தென்சா ராக அலர்வந்தோன் படைத்தநாண் முதலொருகா லமுங்கண்ட தன்று கேள்வித் தலைவந்த புலவரொடு மாலவா யுடையபிரான் றானே செம்பொன் மலைவந்த வல்லியொடும் வந்திறைகொண் டுறைகின்றான் மாதோ வென்றார்.1 (இ-ள்.) சிலர்வந்து மன்னா ஓர் அதிசயம் கண்டனம் - சிலர் வந்து வேந்தே யாங்கள் ஒரு அதிசயத்தினைக் கண்டோம் (அது யாதெனில்), வையைத் தென்சாராக - வையை யாற்றின் தென்பாலாக, அலர் வந்தோன் படைத்த நாள்முதல் - பிரமன் இவ்வுலகை ஆக்கிய காலமுதல், ஒரு காலமும் கண்டது அன்று - ஒரு காலத் திலேனும் பார்த்திராதது; கேள்வித் தலை வந்த புலவரொடும் - நூலாராய்ச்சியாற் சிறந்த சங்கப் புலவர்களோடும், ஆலவாய் உடைய பிரான் - திருவால வாயினையுடைய சோமசுந்தரக் கடவுள், செம்பொன்மலை வல்லியொடும் தானே வந்து - சிவந்த பொன்னையுடைய மலையரையன் புதல்வியாகிய உமா தேவியாரோடும் தானே வந்து, இறைகொண்டு உறைகின்றான் என்றார் - நிலைபெற்று அமர்ந்திருக்கின்றனன் என்று கூறினர். பண்டு அங்கே கோயில் இருந்த தில்லை யென்பார் ‘பிரமன் படைத்த நாண் முதற் கண்டதன்று’ என்றும், சோமசுந்தரக் கடவுளேயன்றி வேறன் றென்பார், பிரான்றானே என்றும், கூறினார். செம்பொன் மலை : பெயருமாம். மாது, ஓ : அசைகள். (17) அவ்வுரைதன் செவிநுழைந்து புகுந்தீர்ப்ப வெழுந்தரச னச்சத் தாழ்ந்து தெவ்வர் முடித் தொகையிடறுங் கழற்காலா னடந்தேகிச் செழுநீர் வையை கெளவைநெடுந் திரைக்கரத்தாற் கடிமலர் தூஉய்ப் பணியத்தென் கரைமேல்வந்து மெளவலிள முகைமூரன் மாதினொடு மிருக்கின்ற மணியைக் கண்டான். (இ-ள்.) அவ்வுரை தன் செவி நுழைந்து புகுந்து ஈர்ப்ப - அச்சொல்லானது தன் செவி வழியே நுழைந்து உள்ளே புகுந்து இழுக்க, அரசன் எழுந்து - மன்னன் எழுந்து, அச்சத்து ஆழ்ந்து - பயத்தின்கண் அழுந்தி, தெவ்வர் முடித்தொகை இடறும் கழல் காலால் நடந்து ஏகி - பகைவரின் முடித்தொகையினை இடறா நின்ற வீரக் கழலணிந்த காலினால் நடந்துசென்று, செழுநீர் வையை - தெள்ளிய நீரையுடைய வையையாறானது, கெளவைநெடும் திரைக்கரத்தால் கடிமலர் தூஉய்ப்பணிய - ஒலியினையுடைய நீண்ட அலையாகிய கையினால் மணம் பொருந்திய மலர்களைத் தூவி வணங்க, தென் கரைமேல் - அதன் தென்கரை மேல், மெளவல் இளமுகை மூரல் மாதினொடும் வந்து இருக்கின்ற மணியைக் கண்டான் - முல்லையினது இளமை பொருந்திய அரும்பு போன்ற பற்களையுடைய பிராட்டியோடும் வந்திருக்கும் பெருமானைக் கண்டான். யான் செய்த பிழை என்னேவென அச்சமுற்றனனென்க. காலானாகிய அரசன் என்றுமாம். வந்து பணிய இருக்கின்ற மணி என்க. (18) படர்ந்துபணிந் தன்புகுக்குங்1 கண்ணீர்சோர்ந் தானந்தப் பெளவத் தாழ்ந்து கிடந்தெழுந்து நாக்குழறித் தடுமாறி நின்றிதனைக் கிளக்கும் வேதந் தொடர்ந்தறியா வடிசிவப்ப நகர்புலம்ப வுலகீன்ற தோகை யோடிங் கடைந்தருளுங் காரணமென் னடியேனாற் பிழையுளதோ வையா வையா. (இ-ள்.) படர்ந்து பணிந்து - அங்ஙனஞ் சென்று கண்டு வணங்கி, அன்பு உகுக்கும் கண்ணீர் சேர்ந்து - அன்பானது சிந்துகின்ற கண்ணீரைப் பொழிந்து, ஆனந்தப் பெளவத்து ஆழ்ந்து கிடந்து - இன்பக்கடலுள் அழுந்திக் கிடந்து, எழுந்து - பின் எழுந்து, நாக்குழறித் தடுமாறி நின்று இதனைக் கிளக்கும் - நாவானது குழறுற்றுத் தடுமாறி நின்று இதனைக் கூறுவான்; வேதம் தொடர்ந்து அறியா அடி சிவப்ப - மறைகளுந் தொடர்ந்தறியாத திருவடி சிவக்கவும், நகர் புலம்ப - நகரிலுள்ளோர் வருந்தவும், உலகு ஈன்ற தோகையோடு இங்கு அடைந்தருளும் காரணம் என் - உலகினைப் பெற்ற அம்மையோடும் இங்கு வந்து தங்கியருளிய காரணம் யாது, அடியேனால் பிழையுளதோ ஐயா ஐயா - ஐயனே ஐயனே அடியேனால் ஏதாயினும் தவறு ஏற்பட்டதோ? நாக்குழறலும் தடுமாறலும் முதலாயின அன்பின் மிகுதியால் நிகழ்வன. புலம்ப - தனிமையுற என்றுமாம். அடுக்கு முறையிடற்கண் வந்தது. (19) அல்லதையென் றமராலென் பகைஞராற் கள்வரா லரிய கானத் தெல்லைவிலங் காதிகளா லிடையூறின் றமிழ்நாட்டி லெய்திற் றாலோ தொல்லைமறை யவரொழுக்கங் குன்றினரோ தவந்தருமஞ் சுருங்கிற் றாலோ இல்லறனுந் துறவறனும் பிழைத்தனவோ யானறியே னெந்தா யெந்தாய். (இ-ள்.) அல்லது - அன்றி, என் தமரால் - என் பரிசனங்களாலாயினும், என் பகைஞரால் - எனது பகைவரா லாயினும், கள்வரால் - கள்வரா லாயினும், அரிய கானத்து எல்லை விலங்கு ஆதிகளால் - செல்லுதற்கரிய காட்டின்கண் உள்ள விலங்கு முதலாயவைகளா லாயினும், இன்தமிழ் நாட்டில் இடையூறு எய்திற்றோ - இனிய இத்தமிழ் நாட்டின் கண் இடையூறு நேர்ந்ததோ, மறையவர் தொல்லை ஒழுக்கம் குன்றினரோ - வேதியர் தமக்குத் தொன்று தொட்டு வந்த ஒழுக்கத்திற் குறைந்தனரோ, தவம் தருமம் சுருங்கிற்றோ- தவமும்தருமமும் சுருங்கினவோ, இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ - இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியினின்றும் தவறினவோ, எந்தாய் எந்தாய் யான் அறியேன் - எம் தந்தையே எம் தந்தையே (நிகழ்ந்தது யாதென) யான் அறியேன். அல்லதை, ஐ : சாரியை. மாநிலம் புரக்கும் வேந்தன் தன்னாலும் தமராலும் பகைவராலு ஏனை உயிர்களாலும் குடிகட்கு இடையூறு உண்டாகாமற் போக்கி, அறத்தினைப் பாதுகாக்க வேண்டு மென்பவாகலின் இங்ஙனம் கூறினன் என்க; இதற்கேற்ப, மேற்பாட்டில் ‘அடியேனாற் பிழையுளதோ’ என்பதற்கு, என்னாற் குடிகளுக்குத் துன்ப முளதாயிற்றோ என்பது கருத்தாகக் கொள்க. இந்நாட்டில் என்றும் இத்தகைய தீமை நிகழ்ந்ததில்லை யென்பான் ‘இன்றமிழ் நாட்டில் எய்திற்றோ’ என்றான். சுருங்கிற்றோ என்பதைத் தவத்துடனும் தருமத்துடனும் தனித்தனி கூட்டுக. ஆல் : அசை. (20) கள்ளேறு கடுக்கைநறுஞ் சடையானே போற்றிபெருங் கருணை போற்றி வெள்ளேறு கொடியுயர்த்த விடையானே போற்றியருள் விகிர்தா போற்றி புள்ளேறு கொடியுயர்த்த புனிதனயன் றேறாத புனிதா போற்றி வள்ளேறு சிறுகுழவி மதிநுதலங் கயற்கண்ணி மணாள போற்றி. (இ-ள்.) கள் ஏறு நறுங் கடுக்கை சடையானே போற்றி - தேன் நிறைந்த நறிய கொன்றை மாலையை யணிந்த சடையையுடையானே வணக்கம்; பெருங் கருணை போற்றி - பேரருள் உடையானே வணக்கம்; வெள்ஏறு கொடி உயர்த்த விடையானே போற்றி - வெள்ளிய இடபத்தைக் கொடியில் உயர்த்திய இடபவூர்தியை யுடையானே வணக்கம்; அருள் விதிர்தா போற்றி - கருணை விகிர்தனே வணக்கம்; புள் ஏறு கொடி உயர்த்த புனிதன் - கலுழனைக் கொடியின்கண் உயர்த்திய தூயோனாகிய திருமாலும், அயன் - பிரமனும், தேறாத புனிதா போற்றி - அறியாத தூயவனே வணக்கம்; வள் ஏறு சிறு குழவி மதிநுதல் - கூர்மை மிக்க நுனியினையுடைய சிறிய பிறைபோலும் நெற்றியையுடைய, அங்கயற்கண்ணி மணாள போற்றி - அங்கயற்கண்ணம்மையின் கேள்வனே வணக்கம். வெள்ளேறு கொடியுயர்த்த விடையோனே என்பதற்குக் கொடியின்கண் உயர்த்திய வெண்மை மிக்க இடபத்தினையுடையானே என்றுரைத்தலுமாம். புள் ஏறிய கொடியை உயர்த்திய என்றுமாம். குழவி மதி - பிறை. (21) பாதமல ரிணைபோற்றி பன்னிரண்டு கையானைப் பயந்தாய் போற்றி வேதமுடி கடந்தபர ஞானத்தி லானந்த விளைவே போற்றி போதவடி வாய்நால்வர்க் கசைவிறந்து நிறைந்தபரம் பொருளே போற்றி மாதவள நீறணிந்த மன்னாவங் கயற்கண்ணி மணாள போற்றி. (இ-ள்.) பாதமலர் இணைபோற்றி - திருவடித் தாமரைமலர் இரண்டிற்கும் வணக்கம்; பன்னிரண்டு கையானைப் பயந்தாய் போற்றி - பன்னிரண்டு திருக்கரங்களையுடைய அறுமுகக்கடவுளை அளித்தருளியவனே வணக்கம்; வேதமுடி கடந்த பரஞானத்தில் - மறைமுடியைக் கடந்த பரஞானத்தின்கண் விளையும், ஆனந்த விளைவே போற்றி - இன்ப விளைவே வணக்கம்; போதவடிவாய் - உபதேச வடிவமாய், நால்வர்க்கு அசைவு இறந்து நிறைந்த பரம்பொருளே போற்றி - சனகர் முதலிய நால்வருக்கும் அசைவின்றி நிறைந்தருளிய மேலான பொருளே வணக்கம்; மா தவள நீறு அணிந்த மன்னா - பெருமை பொருந்திய வெள்ளிய திருநீற்றை யணிந்தருளிய இறைவனே, அங்கயற்கண்ணி மணாள போற்றி - அங்கயற் கண்ணம்மையின் காதலனே வணக்கம். வேதம் முதலிய கலைகளெல்லாம் பாசஞானமாகிய அபரஞானமாகலானும், பதிஞானமாகிய பரஞானத்தினன்றிச் சிவம் விளங்காதாகலானும், வேத முடி கடந்த பரஞானத்திலானந்த விளைவே என்றார்; தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப் படலத்தில், “ வேதமுடிமே லானந்த வுருவாய் நிறைந்து விளையாடும் மாதரரசே” என்றமையுங் காண்க. வேத முதலியவை பாசஞான மென்பதை, “ வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம் விரும்பசபை வைகரியா தித்திறங்கண் மேலாம் நாதமுடி வானவெலாம் பாச ஞானம்” என்னும் சிவஞான சித்தியார்த் திருவிருத்தத்தால் அறிக. போதவடிவாய் - போதக வடிவாய்; ஞானவடிவாய் நிறைந்த என்றுமாம். அசைவிறந்தமை கடவுள் வாழ்த்தில் உரைத்தவாறுங் காண்க. (22) பொக்கமுடை யார்செய்யும் பூசைதவங் கண்டுநகும் புராண போற்றி தக்கன்மகம் பொடியாகத் திருப்புருவ நெரித்தகொடுந் தழலே போற்றி செக்கமலக் கண்ணிடந்த கண்ணனுக்குத் திகிரியருள் செல்வா போற்றி மைக்குவளை யனையமணி கண்டாவங் கயற்கண்ணி மணாள போற்றி. (இ-ள்.) பொக்கம் உடையார் செய்யும் பூசை தவம் கண்டு நகும் புராண போற்றி - பொய்ம்மையுடையவர் செய்கின்ற பூசையையுந் தவத்தினையுங் கண்டு சிரிக்கும் பழையோய் வணக்கம்; தக்கன் மகம் பொடியாக - தக்கன் செய்த வேள்வி நீறாகுமாறு, திருப்புருவம் நெரித்த கொடுந் தழலே போற்றி - திருப்புருவத்தினை நெரித்தருளிய கொடிய நெருப்பே வணக்கம்; செக்கமலக்கண் இடந்த கண்ணனுக்கு- செந்தாமரை மலர்போன்ற கண்ணை இடந்து அருச்சித்த திருமாலுக்கு, திகிரி அருள் செல்வா போற்றி - சக்கரப்படை அருளிய செல்வனே வணக்கம், மைக்குவளை அனைய மணிகண்டா - கரிய குவளைமலர் போன்ற நீலகண்டனே, அங்கயற்கண்ணி மணாள போற்றி - அங்கயற்கண்ணம்மையின் மனவாளனே வணக்கம். பொக்கம் - பொய்; கரவு. அன்பால் உருகுவார்க்கன்றி, அன்பில்லாது பூசையும் தவமும் புரிவார்க்கு இறைவன் அருளானென்பதை, “ நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்ப னவர்தமை நாணியே”” என்னும் திருநாவுக்கரசர் தேவாரத்தாலறிக. சினந்த வென்பது புருவ நெரித்த என்பதனாற் குறிக்கப்பட்டது. மகத்தைப் பொடியாக்கினமையின் ‘கொடுந்தழலே’ என்றான். செக்கமலம் : வலித்தல் விகாரம். (23) தென்னவ னின்ன வண்ண மேத்தினான் செம்பொற் கூடன் மன்னவன் கேட்டா காய வாணியால் வையை நாட உன்னது சோத்த நாங்கேட் டுவந்தன மினிய தாயிற் றின்னமொன் றுளது கேட்டி யென்றன னருளிச் செய்வான். (இ-ள்.) தென்னவன் இன்ன வண்ணம் ஏத்தினான் - குலேச பாண்டியன் இவ்வாறு துதித்தானாக, செம்பொன் கூடல் மன்னவன் கேட்டு - செம்பொன் நிறைந்த ஆலவாயில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுள் அதனைக் கேட்டு, ஆகாய வாணியால் - அசரீரியால், வையை நாட - வையை நாடனே, உன்னது சோத்தம் நாம் கேட்டு உவந்தனம் - உனது துதியினைக் கேட்டு நாம் மகிழ்ந்தோம்; இனியது ஆயிற்று - (அது எமக்கு) இனிமையுடையதாயிற்று; இன்னம் ஒன்று உளது - (உனக்குக் கூற வேண்டியது) இன்னும் ஒன்று உண்டு; கேட்டி என்றனன் அருளிச்செய்வான் - அதனைக் கேட்பாயாக என்று கூறியருளுவான். வாணி - வாக்கு. உன்னது : னகரம்விரித்தல். சோத்தம் - இழிந்தார் செய்யும் அஞ்சலி ; ஈண்டுத் துதியை உணர்த்திற்று. “ சோத்துன் னடியமென் றோரை” என்னும் திருக்கோவையார் உரையை நோக்குக. இனி என்பது அம் சாரியை பெற்றுத் திரிந்து இன்னம் என வழங்குவதாயிற்று. கேட்டி, கேள் : பகுதி, த் : எழுத்துப்பேறு, இ : விகுதி. என்றனன் : முற்றெச்சம். (24) இயம்பரும் பதிக டம்மு ளாலவா யேற்ற மீங்குச் சயம்புவா யனந்த முள்ள தானவ ரியக்கர் சித்தர் வயம்புரி யரக்கர் வானோர் முனிவரர் மனித ருள்ளார் நயம்பெற விதியாற் கண்ட நங்குறி யனந்த முண்டால். (இ-ள்.) இயம்பரும் பதிகள் தம்முள் - சொல்லுதற்கரிய திருப்பதிகள் பலவற்றுள்ளும், ஆலவாய் ஏற்றம் - திருவாலவாய் சிறந்தது; ஈங்கு சயம்புவாய் அனந்தம் உள்ள - இங்குத் தாமே தோன்றியனவாய் அளவிறந்த அருட்குறிகள் உள்ளன; தானவர் இயக்கர் சித்தர் - அசுரர்களும் இயக்கர்களும் சித்தர்களும், வயம்புரி அரக்கர் வானோர் முனிவரர் மனிதர் உள்ளார் - வெற்றியை விரும்பிய அரக்கர்களும் தேவர்களும் முனிவர்களும் மனிதர்களும், நயம் பெற விதியால் கண்ட - தாங்கள் விரும்பிய நலன்களைப் பெறுதற் பொருட்டு ஆகமவிதிப்படி நிலைபெறுத்திய, நம் குறி அனந்தம் உண்டு - நம் அருட்குறிகளும் பல உள்ளன. சயம்பு - சுயம்பு; தானே தோன்றியது. உள்ள : அன்பெறாத பலவறி சொல். குறி - இலிங்கம். ஆல் : அசை. (25) அக்குறி களின்மேம் பட்ட குறியறு பத்து நான்காம் இக்குறி களின்மேம் பட்ட குறிகளெட் டினைய வெட்டுத் திக்குறை வானோர் பூசை செய்தன விவற்றியாம் வந்து புக்குறை குறிநந் தோழன் பூசித்த குறிய தாகும். (இ-ள்.) அக்குறிகளில் மேம்பட்ட குறி அறுபத்து நான்காம் அவ்வருட்குறிகளிற் சிறந்த குறிகள் அறுபத்து நான்காகும்; இக்குறிகளில் மேம்பட்ட குறிகள் எட்டு - இவ்வறுபத்து நான்கு குறிகளிற் சிறந்த குறிகள் எட்டாகும்; இனைய - இவ்வெட்டுக்குறிகளும், எட்டுத்திக்கு உறை வானோர் பூசை செய்தன - எட்டுத் திசைகளிலும் இருக்கும் தேவர்களாற் பூசிக்கப்பட்டன; இவற்று யாம் வந்து புக்கு உறைகுறி - இவ்வெட்டனுள் யாம் வந்து புகுந்து உறையுங் குறியானது. நம் தோழன் பூசித்த குறியது ஆகும் - நம் நண்பனாகிய குபேரன் வழிபட்ட குறியாகும். குறியது, அது : பகுதிப்பொருள் விகுதி. (26) அறைந்தவித் தெய்வத் தான மனைத்துமோ ரூழிக் காலத் திறந்தநந் தோழன் கண்ட விலிங்கமா மதனா லிங்கே உறைந்தன முறைத லாலே யுத்தர வால வாயாய்ச் சிறந்திடத் தகுவ தின்று முதலிந்தத் தெய்வத் தானம். (இ-ள்.) அறைந்த இத் தெய்வத்தானம் அனைத்தும் - மேற்கூறிய இந்த அருட்குறிகள் உள்ள இடம் அனைத்தும், ஓர் ஊழிக்காலத்து இறந்த - ஓர் ஊழிக்காலத்தில் மறைந்தன; நம் தோழன் கண்ட இலிங்கமாம் அதனால் - இது நம் நண்பன் கண்டு வழிபட்ட இலிங்கமாகுமாதலால், இங்கே உறைந்தனம் - இக்குறியின்கண் உறைந்தருளினோம்; உறைதலாலே - இங்ஙனம் உறைதலால், இந்தத் தெய்வத்தானம் - இத் தெய்வத்தானமானது, இன்று முதல் - இன்று முதலாக, உத்தர ஆலவாயாய்ச் சிறந்திடத் தகுவது - வடதிருவால வாயாகிச் சிறக்கத்தக்கது. இறந்த : அன்பெறாத பலவின்பால் முற்று. உத்தர ஆலவாயாய்ச் சிறந்திடத் தகுவது - வடமதுரை யென்னும் பெயருடன் விளங்கத் தகுவது. (27) ஓங்குதண் பணைசூழ் நீப வனத்தைநீத் தொருபோ தேனும் நீங்குவ மல்லேங் கண்டா யாயினு நீயும் வேறு தீங்குளை யல்லைகாடன் செய்யுளை யிகழ்த லாலே ஆங்கவ னிடத்தியாம் வைத்த வருளினால் வந்தே மென்னா. (இ-ள்.) ஓங்கு தண்பணை சூழ் நீப வனத்தை நீத்து - சிறந்த தண்ணிய வயல்கள் சூழ்ந்த கடம்பவனத்தை விட்டு, ஒரு போதேனும் நீங்குவம் அல்லேம் - ஒரு பொழுதாயினும் நீங்கியிருப்பேமல்லேம்; ஆயினும் - ஆனாலும், நீயும் வேறு தீங்குளை அல்லை - நீயும் வேறு தீங்குடையை அல்லை; காடன் செய்யுளை இகழ்தலால் - இடைக்காடன் செய்யுளை அவமதித்தாயாதலால், ஆங்கு அவனிடத்து யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா - அப்பொழுதே அவன்கண் யாம் வைத்த அருளினால் இங்கு வந்தேமென்று. நீங்குவமல்லேம் நீயும் தீங்குளையல்லை ஆயினும் இகழ்தலாலும் அருளாலும் வந்தேம் என முடிக்க. கண்டாய் : முன்னிலையசை; காடன் : முன்மொழி கெட்டு நின்றது. ஆங்கு : அசையுமாம். இடத்தியாம் : குற்றியலிகரம். (28) பெண்ணினைப் பாகங் கொண்ட பெருந்தகைப் பரம யோகி விண்ணிடை மொழிந்த மாற்ற மீனவன் கேட்டு வானோர் புண்ணிய சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை யன்றோ எண்ணிய பெரியோர்க் கென்னா வேத்தினா னிறைஞ்சி னானே. (இ-ள்.) பெண்ணினைப் பாகம் கொண்ட - உமையை ஒரு பாகத் திற்கொண்ட, பெருந்தகைப் பரமயோகி - பெரிய தகுதியையுடைய மேலான யோகியாகிய இறைவன், விண்ணிடை மொழிந்த மாற்றம்- வானின்கண் அசரீரியாகக் கூறிய வார்த்தையை, மீனவன் கேட்டு - பாண்டியன் கேட்டு, வானோர் புண்ணிய - தேவர்களின் புண்ணியனே, எண்ணிய பெரியோர்க்கு - யாவராலும் நன்கு மதிக்கப்'d8 பறும் பெருமையுடையார்க்கு, சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை அன்றோ என்னா - சிறியோர்கள் செய்த குற்றத்தைப் பொறுத்தருளுவது பெருமையல்லவா என்று, ஏத்தினான் இறைஞ்சினான் - துதித்து வணங்கினான். பெண்ணினைப் பாகங்கொண்ட பரமயோகி என்றது இறைவன் உயிர்கட்குப் போகம் அருளுதற் பொருட்டு உமையை ஒரு கூற்றிற் கொண்டானாயினும் தூயவுடம்பும் இயல்பாகவே பாசமின்மையும் உடையன் என்றவாறு; ““ மங்கையோ டிருந்தே யோகு செய்வானை” என்பது கருவூர்த்தேவர் திருவிசைப்பா. சிறியோர் குற்றம் பொறுப்பது பெரியோர்க்குப் பெருமை என்னும் கருத்தினை, “ வெறுப்பனவே செய்யுமென் சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே” எனவும், ““ பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கடம் பொய்யினையே” எனவும் வரும் திருவாசகங்களிற் காண்க. ஏத்தினான் : முற்றெச்சம். (29) அடிபணிந் தேத்தி னானை யருள்சுரந் தசையு மின்னுக் கொடியணி மனையிற் போக்கிக் கோமள வல்லி யோடும் உடனுறை புலவ ரோடு மொல்லைதன் கோயில் புக்கான் வடதிரு வால வாயில் வந்துவீற் றிருந்த வள்ளல். (இ-ள்.) வடதிரு ஆலவாயில் வந்து வீற்றிருந்த வள்ளல் - வட திருவாலவாயின்கண் (இடைக்காடன் பொருட்டு) வந்து வீற்றிருந்த வள்ளலாகிய சோமசுந்தரக் கடவுள், அடிபணிந்து ஏத்தினானை - அடிவணங்கித் துதித்த அக் குலேசபாண்டியனை, அருள்சுரந்து - கருணை கூர்ந்து, அசையும் மின்னுக்கொடி அணிமனையில் போக்கி - அசைகின்ற மின்போன்ற கொடிகட்டிய மாளிகையிற் போக விடுத்து, கோமள வல்லியோடும் - பசுங்கொடி போன்ற பிராட்டியாரோடும், உடன் உறை புலவரோடும் ஒல்லை தன் கோயில் புக்கான் - உடன் உறைந்த சங்கப் புலவர்களோடும் விரைந்து தனது திருக்கோயிலுட் புகுந்தருளினான். ஏத்தினானைப் போக்கியென்க. மின் உகரச்சாரியை பெறுதலை, “ மின்பின் பன் கன் தொழிற்பெய ரனைய ” என்னும் நன்னூற் சூத்திரத்தாலறிக. (30) மின்மதிச் சடையி னான்பி னடந்துபோய் விடைகொண் டேகும் மன்னவன் றன்னைப் பாடி வந்தவன் றன்னை மாட்சித் தன்மைசால் சங்க வாணர் தம்மொடுங் கொடுபோ யென்றும் பொன்மகள் காணி கொண்ட புரிசைசூழ் கோயில் புக்கான். (இ-ள்.) மின்மதிச் சடையினான் பின் நடந்து போய் - மின்னலை ஒத்த சந்திரனை அணிந்த சடையையுடைய சோமசுந்தரக் கடவுளின் பின் திருக்கோயிலுக்கு நடந்து சென்று, விடை கொண்டு ஏகும் மன்னவன் - விடை பெற்று மீளும் பாண்டியன், தன்னைப் பாடி வந்தவன் தன்னை - தன்னைப் பாடிவந்த இடைக்காடனை, மாட்சித்தன்மை சால் சங்க வாணர் தம்மொடும் கொடு போய் - மாண்பின் தன்மைசிறந்த சங்கப் புலவரோடும் அழைத்துக் கொண்டு சென்று, என்றும் பொன் மகள் காணி கொண்ட - எஞ்ஞான்றுந் திருமகள் தனக்கு ஆட்சியிடமாகக் கொண்ட, புரிசை சூழ் கோயில் புக்கான் - மதில் சூழ்ந்த மாளிகையிற் புகுந்தனன். மின்னையொத்த சடை யென்க. மேற் செய்யுளிலே மனையிற் போக்கிக் கோயில் புக்கான் என்றாரேனும் கோயில் புகுமளவும் பின்னே நடந்து சென்று விடைபெற் றேகினான் என்பது இச்செய்யுளாற் பெற்றாம். (31) விதிமுறை கதலி பூகங் கவரிவால் விதானந் தீபம் புதியதார் நிறைநீர்க் கும்பங் கதலிகை புனைந்த மன்றற் கதிர்மணி மாடத் தம்பொற் சேக்கைமேற் கற்றோர் சூழ மதிபுனை காடன் றன்னை மங்கல வணிசெய் தேற்றி. (இ-ள்.) விதிமுறை - விதிப்படி. கதலி பூகம் கவரி - வாழையும் கமுகும் சாமரையும், வால் விதானம் தீபம் - வெள்ளிய மேல்விதானமும் விளக்கும், புதிய தார் நிறை நீர்க் கும்பம் கதலிகை புனைந்த - அன்றலர்ந்த மலராற்றொடுத்த மாலையும் பூரண கும்பமும் கொடியும் ஆகிய இவைகளால் அலங்கரித்த, மன்றல் கதிர்மணிமாடத்து - விழா நீங்காத ஒளியினையுடைய மணிகள் அழுத்திய மாளிகையின்கண், அம் பொன் சேக்கைமேல் - அழகிய பொன்னாலாகிய இருக்கையின்மேல், கற்றோர் சூழ - புலவர்கள் சூழ, மதிபுனை காடன் தன்னை - அறிவையே அணிகலமாகப் பூண்ட இடைக்காடனை, மங்கல அணிசெய்து - மங்கலமாக அலங்கரித்து, ஏற்றி - அமர்த்தி. மன்றல் - மங்கல விழா. (32) சிங்கமான் சுமந்த பொன்னஞ் சேக்கைமே லிருந்து வெள்ளைக் கொங்கவிழ் தாமந் தூசு குளிர்மணி யாரந் தாங்கி மங்கல முழவ மார்ப்ப மறையவ ராக்கங் கூற நங்கையர் பல்லாண் டேத்த நன்மொழிப் பனுவல் கேட்டு. (இ-ள்.) சிங்கமான் சுமந்த பொன்அம் சேக்கைமேல் - சிங்கஞ் சுமந்த பொன்னாலாகிய அழகிய ஆதனத்தின்மேல், இருந்து - தானும் இருந்து, கொங்கு அவிழ் வெள்ளைத் தாமம் - மகரந்தத் தோடு மலர்ந்த வெண்மலர் மாலையும், தூசு - வெள்ளாடையும், குளிர்மணி ஆரம் தாங்கி - தண்ணிய முத்து மாலையுமாகிய இவற்றை அணிந்து. மங்கல முழவம் ஆர்ப்ப - மங்கல இயங்கள் ஒலிக்கவும், மறையவர் ஆக்கம் கூற - அந்தணர் ஆக்கமொழி கூறவும், நங்கையர் பல்லாண்டு ஏத்த - பாவையர் பல்லாண்டு பாடவும், நன்மொழிப் பனுவல் கேட்டு - நல்ல சொற்கள் புணர்த்தியற்றிய செய்யுளைக் கேட்டு. சிங்கமான் - சிங்கமாகிய விலங்கு : இருபெயரொட்டு. வெள்ளை என்பதனைத் தூசு, ஆரம் என்பவற்றோடும் ஒட்டுக. பாட்டுடைத் தலைவன் வெண்மலர்மாலையும், வெள்ளாடையும், வெள்ளணியும் அணிந்து கேட்டல் மரபாகலின், வெள்ளைக் கொங்கவிழ் தாமந் தூசு குளிர்மணி யாரந் தாங்கி’ என்றார். ஆக்கம் - ஆசி. (33) அறிவுடைக் காட னுக்கு மருமைமாண் புலமை யோர்க்கும் முறைமையா லாரந் தூசு முகிழ்முலைக் கொடியி னன்னார் நிறைநிதி வேழம் பாய்மான் விளைநில நிரம்ப நல்கி அறைகழற் காலிற் பின்னே ழடிநடந் திதனை வேண்டும். (இ-ள்.) அறிவுடைக் காடனுக்கும் - அறிவுடைய இடைக்காடனுக்கும், அருமைமாண் புலமையோர்க்கும் - கிடைத்தற்கரிய மாட்சிமிக்க புலவர்கட்கும், முறைமையால் - வரிசைப்படி, ஆரம் தூசு முகிழ்முலைக் கொடியின் அன்னார் - முத்தாரங்களையும் ஆடைகளையும் அரும்பு போன்ற கொங்கையையுடைய கொடி போன்ற ஏவன் மகளிரையும், நிறை நிதிவேழம் பாய்மான் விளை நிலம் - நிறைந்த பொருளையும் யானைகளையும் குதிரைகளையும் விளைநிலங்களையும், நிரம்ப நல்கி - நிரம்பக் கொடுத்து. அறைகழல் காலில் ஏழ் அடி பின் நடந்து - ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த காலினால் ஏழடி தூரம் அவர்கள் பின் நடந்து சென்று, இதனை வேண்டும் - இதனை வேண்டுவானாயினன். அருமைமாண் - அருமை மிக்க என்றுமாம். “ஞாலத்தின் மாணப் பெரிது” என்புழி ‘மாண்’மிகுதிப்பொருட்டானமை காண்க. “பொது நோக் கொழிமதி புலவர் மாட்டு” என்பவாகலின் ‘முறைமையால்’ என்றார். ஏழடி பின் சேறல் மரபு. பாடும் புலவனியல்பினையும், தலைவன் பாட்டினைக் கேட்கு முறைமையினையும், “ பாடுமுறை தொடர்செய்யுட் டெரிக்க வல்ல பாவலற்குக் குணங்குறிசீ ரொழுக்க மேன்மை நீடழகார் சமயநூல் அறநூன் மற்று நிகழ்த்து நூ லிலக்கணநாற் கவியு ளானாய் நாடுறுப்பிற் குறையிலனாய் நோயி லானாய் நாற்பொருளு முணர்ந்துகலை தெளிந்து முப்பான் கூடுவய திழிந்தெழுபான் வயதி லேறாக் குறியுடைய னாயினவன் கவிதை கொள்ளே”” “ கொள்ளுமிடம் விதானித்துத் தொடைய னாற்றிக் கொடிகதலி தோரணம்பா லிகைநீர்க் கும்பம் துள்ளுபொறி விளக்கொளிர முரசி யம்பத் தோகையர்பல் லாண்டிசைப்ப மறையோர் வாழ்த்த வெள்ளைமலர் துகில்புனைந்து தவிசின் மேவி வேறுமொரு தவிசிருத்திச் செய்யுட் கேட்டே உள்ளமகிழ் பொன்புவிபூ ணாடை மற்று முதவியே ழடிபுலவ னுடன்போய் மீளே.”” என்னும் பொருத்தப் பாட்டியற் செய்யுட்களானறிக. (34) புண்ணியப் புலவீர் யானிப் போழ்திடைக் காட னார்க்குப் பண்ணிய குற்ற மெல்லாம் பொறுக்கெனப் பரவித் தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரு மன்னிநீ நுவன்ற சொல்லாந் தண்ணிய வமுதா லெங்கள் கோபத்தீத் தணிந்த தென்னா. (இ-ள்.) புண்ணியப் புலவீர் - புண்ணிய வடிவாயுள்ள புலவர்களே, யான் - அடியேன், இப்போழ்து இடைக்காடனார்க்கு - இப்பொழுது இடைக்காடருக்கு, பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க என - செய்த குற்றங்களனைத்தையும் பொறுக்கக்கடவீர் என்று, பரவித் தாழ்ந்தான் - துதித்து வணங்கினான், நுண்ணிய கேள்வியோரும் - நுட்பமாகிய நூற்கேள்வி வல்லோரும், மன்ன - மன்னனே, நீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் - நீ கூறிய சொல்லாகிய குளிர்ந்த அமிழ்தத்தால், எங்கள் கோபத் தீ தணிந்தது என்னா - எங்கள் சினமாகிய நெருப்பு அவிந்தது என்று கூறி. பொழுது போழ்தென விகார மாயிற்று. பொறுக்கென : அகரந்தொக்கது. அமுது - நீர் என்றுமாம். (35) இன்னமு மால வாயெம் மிறையவன் கருணை நோக்காற் பன்னரும் புகழ்மை குன்றாப் பாக்கிய முனக்குண் டாக என்னநல் லாக்கங் கூறி யேகினா ராக வந்தத் தென்னவன் குலேசன் செய்த தவமுருத் திரிந்தா லென்ன. (இ-ள்.) இன்னமும் ஆலவாய் எம் இறையவன் கருணை நோக் கால் - இன்னும் ஆலவாயிலுறையும் எம்மையனது அருட்பார்வை யினால், பன் அரும் புகழ்மை குன்றாப் பாக்கியம் - புகலுதற்கரிய புகழ் குன்றாத பெருஞ்செல்வம், உனக்கு உண்டாக என்ன நல் ஆக்கம் கூறி ஏகினார் ஆக - உனக்கு உண்டாகக்கடவது என்று நல்ல ஆக்க மொழி அறைந்து அகன்றனராக; அந்தத் தென்னவன் குலேசன் செய்த தவம் - அந்தக் குலேச பாண்டியன் செய்த தவமானது, உருத்திரிந்தால் என்ன - உருமாறி வந்தாற்போல. புகழ்மை, மை : பகுதிப் பொருள் விகுதி. கேள்வியோரும் ஆக்கங் கூறி ஏகினார், ஏகினபின்பு என விரித்துரைத்துக் கொள்க. (36) எரிமருத் தவனி முன்னா மெண்வகை மூர்த்தி யன்பு புரிமருத் துவனைச் சூழ்ந்த பொருபழி துடைத்தோன் சோதி விரிமருத் துடல்வான் றிங்கண் மிலைந்தவ னருளின் வந்தான் அரிமருத் தனனாந் தென்ன னடலரிக் குருளை யன்னான். (இ-ள்.) எரி மருத்து அவனி முன்னாம் எண்வகை மூர்த்தி - தீயும் காற்றும் நிலனுமுதலாகிய எண்வகை வடிவ முள்ளவனும், அன்பு புரி மருத்துவனைச் சூழ்ந்த - அன்பினால் வழிபாடு செய்யும் இந்திரனைச் சூழ்ந்த, பொரு பழி துடைத்தோன் - வருத்தும் பழியினைப் போக்கினவனும், சோதி விரிமருத்து உடல் வான் திங்கள் மிலைந்தவன் அருளின் - ஒளிவிரிந்த அமிழ்தமயமாகிய உடலையுடைய வான் மதியைச் சூடியவனுமாகிய சோமசுந்தரக்கடவுளின் திருவருளால், அடல் அரிக்குருளை அன்னான் - வலிமிக்க சிங்கக் குட்டி போன்ற, அரிமருத்தனனாம் தென்னன் வந்தான் - அரிமருத்தன னென்னும் பாண்டியன் - மகனாக வந்து தோன்றினான். இறைவன் அட்டமூர்த்தியாதலை, “ இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி யியமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாய மாயட்ட மூர்த்தி யாகி” என்னும் திருத்தாண்டகத்தாலறிக. மருத்துவன் - இந்திரன். மருந்து மருத்து என வலித்தது. திங்கள் மிலைந்தவன் அருளினாலே குலேசன் செய்த தவம் உருத்திரிந்தாலென்ன அரிமருத்தனனாந் தென்னன் வந்தான் என்க. (37) [கலிநிலைத்துறை] பரிசிலைப் புலவருக் கருள்குலே சன்பல பகல்கழீஇத் திரிமருப் பிரலைவெம் மழுவெடுத் தவன்மதிச் சென்னிமேல் வரிசிலைப் படைபொறித் தவனெனப் பெறுவர மைந்தனாம் அரிமருத் தனனிடத் தவனிவைத் தரனடி யெய்தினான். (இ-ள்.)பரிசிலைப் புலவருக்கு அருள் குலேசன் - புலவர்கட்குப் பரிசில் அளித்த குலேசபாண்டியன், பலபகல் கழீஇ - பல காலங்களைக் கழித்து, திரிமருப்பு இரலை வெம்மழு எடுத்தவன் - திரித்த கொம்பினையுடைய மானையும் கொடிய மழுவையும் ஏந்திய இறைவனது, மதிச் சென்னிமேல் - பிறைமுடியின்மேல், வரிசிலைப் படை பொறித்தவன் என - கட்டமைந்த விற்படையினால் அடித்த அருச்சுனன் போல, வரம் பெறு மைந்தனாம் அரிமருத்தனனிடத்து- வரம் பெறும் புதல்வனாகிய அரிமருத்தன னிடத்தில், அவனி வைத்து அரன் அடி எய்தினான் - நிலவுலகை வைத்துவிட்டு இறைவன் திருவடி நீழலை அடைந்தான். இடைக்காடர்க்கும் ஏனைச் சங்கப் புலவர்கட்கும் பரிசில் வழங்கினமையைச் சுட்டி ‘பரிசிலைப் புலவருக் கருள் குலேசன்’என்றார். கழீஇ - கழித்து : சொல்லிசையளபெடை. பாண்டு மைந்தனாகிய அருச்சுனன் பகைவரை வெல்லப் பாசுபதாத்திரம் பெறவேண்டிச் சிவபிரானை நோக்கி அருந்தவம் புரியாநிற்புழி, அவன் தவநிலையைச் சிதைக்குமாறு துரியோதனன் ஏவிய மூகன் என்னும் அசுரன் பன்றியுருவெடுத்து வந்தனனாகச், சிவபிரான் வேட்டுவத் திருவுருக்கொண்டு போந்து அப்பன்றியைக் கொன்று அருச்சுனனுடன் விளையாட்டாகப் போர் புரிந்து அவனது வில்லின் நாணினை யறுக்க. அவன் நாணற்ற விற்கழுந்தால் இறைவன் திருமுடிமீது அடித்துப் பின் இறைவனையறிந்து வழுத்தி வரம்பெற்றன னென்பதனைப் பாரதத்துக் காண்க. அருச்சுனன் வில்லாலடித்து வரம்பெற்றமைபோலப் பிரம்பாலடித்து வரம் பெறுதல் கருதிச் ‘சிலைப்படை பொறித்தவனெனப் பெறுவரமைந்தன் ’ என்றார்; பகைவரைஅழிக்கும் ஆற்றலுங் கொள்க. (38) ஆகச் செய்யுள் - 2648. ஐம்பத்தேழாவது வலைவீசின படலம் (அறுசீரடியாசிரிய விருத்தம்) மின்றிரித் தன்ன வேணி வேதிய னிடைக்கா டன்பின் சென்றுமீண் டனையான்கொண்ட பிணக்கினைத் தீர்த்த வண்ணம் இன்றுரை செய்து முந்நீ ரெறிவலை வீசி ஞாழன் மன்றலங் குழலி னாளை மணந்துமீள் வண்ணஞ் சொல்வாம். (இ-ள்.) மின்திரித்தன்ன வேணிவேதியன் - மின்னலைத்திரித்து விட்டா லொத்த சடையையுடைய அந்தணனாகிய சோமசுந்தரக் கடவுள், இடைக்காடன் பின் சென்று மீண்டு - இடைக்காடன் பின்னே போய் மீண்டு, அனையான் கொண்ட பிணக்கினைத் தீர்த்தவண்ணம் - அவன் கொண்ட பிணக்கினைத் தீர்த்தருளிய திருவிளையாடலை, இன்று உரை செய்தும் - இன்று கூறினேம்; முந்நீர் எறிவலை வீசி - கடலின்கண் எறியும் வலையினை வீசி, ஞாழல் மன்றல் அம் குழலினாளை - புலிநகக் கொன்றைமலரின் மணம் நிறைந்த அழகிய கூந்தலையுடைய உமையம்மையை, மணந்து மீள்வண்ணம் சொல்வாம் - திருமணஞ்செய்து மீண்டருளிய திருவிளையாடலை (இனிக்) கூறுவாம். திரித்தாலன்ன என்பது விகாரமாயிற்று. நெய்தற்றலைவற்குப் புதல்வியாகத் தோன்றியிருந்தமையின் ‘ஞாழல் மன்றலங்குழலினாள்’ என்றார். ஞாழல் - குங்குமமரம் என்பாருமுளர். (1) அந்தமி லழகன் கூட லாலவா யமர்ந்த நீல கந்தர னுலக மீன்றகன்னியங் கயற்க ணாளாங் கொந்தவி ழலங்கற் கூந்தற் கொடிக்குவே றிடத்து வைகி மந்தண மான வேத மறைப்பொரு ளுணர்த்து மாதோ. (இ-ள்.) அந்தம் இல் அழகன் - முடிவில்லாத பேரழகனும், கூடல் ஆலவாய் அமர்ந்த நீலகந்தரன் - கூடலென்னுந் திருவாலவாயில் எழுந்தருளிய நீல கண்டனுமாகிய சோமசுந்தரக் கடவுள், உலகம் ஈன்ற கன்னி - உலகத்தைப் பெற்ற கன்னியாகிய, அங்கயற்கணாளாம் - அங்கயற்கண்ணம்மையாகிய, கொந்து அவிழ் அலங்கல் கூந்தல் கொடிக்கு - கொத்தில் மலர்ந்த மலர் மாலையை யணிந்த கூந்தலையுடைய கொடிபோல்வார்க்கு, வேறு இடத்து வைகி - தனி யிடத்தில் இருந்து. மந்தணமான வேத மறைப்பொருள் உணர்த்தும் - இரகசியமான வேதத்தின் உட்பொருளைக் கூறியருளுவானாயினன். இறைவி உலகமெல்லாம் ஈன்றும் கன்னியாதலை, “ சிவஞ்சத்தி தன்னை யீன்றுஞ் சத்திதான் சிவத்தை யீன்றும் உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும் பவன்பிர மசாரி யாகும் பான்மொழி கன்னி யாகும் தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் றெரியு மன்றே” என்னும் சிவஞான சித்தியார்த் திருவிருத்தத்தாலறிக. மறை - உபநிடதமுமாம். மாது , ஓ அசைகள். (2) நாதனின் னருளாற் கூறு நான்மறைப் பொருளை யெல்லாம் யாதுகா ரணத்தான் மன்னோ வறிகிலே மெம்பி ராட்டி காதர மடைந்தாள் போலக் கவலையுஞ் சிறிது தோன்ற ஆதர மிலளாய்க் கேட்டா ளஃதறிந் தமலச் சோதி. (இ-ள்.) நாதன் இன் அருளால் கூறும் - இறைவன் இனிய திருவருளினாற் கூறுகின்ற, நான்மறைப்பொருளை எல்லாம் - நால்வேதப் பொருள்களையெல்லாம், யாது காரணத்தாலோ அறிகிலேம் - என்ன காரணத்தினாலோ யாம் அறியேம்; எம்பிராட்டி - எம் இறைவி, காதரம் அடைந்தாள்போல - அச்சமுற்றவள்போல, கவலையும் சிறிது தோன்ற - சிறிது வருத்தமும் வெளிப்பட, ஆதரம் இலளாய்க்கேட்டாள் - விருப்பமில்லாதவளாய்க் கேட்டனள்; அமலசோதி அஃது அறிந்து - நின்மலனாகிய இறைவன் அதனை உணர்ந்து. அங்ஙனம் ஆர்வமின்றிக் கேட்குமியல்பினளல்லளென்பார் ‘யாது காரணத்தாலோ யாம் அறிகிலேம்’ என்றார். இறைவன் பரதவர் வேந்தனுக்கு அருள்புரியுங் குறிப்பினனாதல் ஒர்ந்து அதற்கேற்ப இங்ஙனம் கேட்டாளென்று கொள்க. மன் : அசை. (3) அராமுக மனைய வல்கு லணங்கினை நோக்கி யேனை இராமுக மனைய வுள்ளத் தேழைமார் போல வெம்பாற் பராமுகை யாகி வேதப் பயனொருப் படாது கேட்டாய் குராமுகை யவிழ்ந்த கோதா யுற்றவிக் குற்றந் தன்னால். (இ-ள்.) அராமுகம் அனைய அல்குல் அணங்கினை நோக்கி - பாம்பின் படம் போன்ற அல்குலையுடைய பிராட்டியைப் பார்த்து, இராமுகம் அனைய உள்ளத்து ஏனை ஏழைமார்போல - இருள்போன்ற உள்ளத்தினையுடைய ஏனை மகளிர் போன்று, எம்பால் வேதப்பயன் - எம்மிடத்து வேதப்பொருளை, பராமுகையாகி ஒருப்படாது கேட்டாய் - பராமுக முடையையாகி மனம் ஒரு வழிப்படாது கேட்டனை; குராமுகை அவிழ்ந்த கோதாய் - குராவின் அரும்பு விரிந்த மலர் மாலையை யணிந்த கூந்தலையுடையாய், உற்ற இக்குற்றம் தன்னால் - நேர்ந்த இக்குற்றத்தினால். இராமுகம் - இரவினிடம்; இருள். அறியாமையுடைய உள்ள மென்பதனை இங்ஙனம் இலக்கணையாகக் கூறினார்; “ அகம் குன்றி மூக்கிற் கரியார்” எனத் திருக்குறளிலும், “ கூழின் மலிமனம் போன்றிரு ளாநின்ற கோகிலமே” எனத் திருக்கோவையாரிலும் வருதல் காண்க. (4) விரதமு மறனு மின்றி மீன்படுத் திழிர ரான பரதவர் மகளா கென்று பணித்தனன் பணித்த லோடும் அரதன வாரந் தாழ்ந்த வாரமென் முலையா ளஞ்சி வரதநிற் பிரிந்து வாழ வல்லனோ வென்று தாழ்ந்தாள். (இ-ள்.) விரதமும் அறனும் இன்றி மீன்படுத்து - நோன்பும் அறனுமில்லாமல் மீன்களைப் பிடித்துக் கொலைபுரிதலால், இழிஞர் ஆன பரதவர் மகள் ஆக என்று பணித்தனன் - இழிஞராகக் கருதப்படுகின்ற பரதவரின் மகளாகக் கடவை என்று கட்டளையிட்டான்; பணித்தலோடும் - அங்ஙனம் பணித்தவளவில், அரதன் ஆரம் தாழ்ந்த - மாணிக்கமாலை தொங்கியசையும், ஆரம்மென் முலையாள் அஞ்சி - சந்தனக்குழம் பணிந்த மெல்லிய கொங்கையையுடைய தேவி அச்சுற்று, வரத - வள்ளலே, நின் பிரிந்து வாழவல்லனோ என்று தாழ்ந்தாள்- யான் நின்னைப் பிரிந்து வாழவல்லனோ என்று கூறி வணங்கினாள். “ நோன்பென்பது கொன்று தின்னாமை” என்பதனால் கொலை செய்வார் நோன்புடையரல்லராதலையும், “ அறவினை யாதெனிற் கொல்லாமை” என்பதனால் அவர் அறமுடையரல்லராதலையும், “ கொலைவினைஞ ராகிய மாக்கள் புலைவினையர்” என்பதனால் அவர் இழிவெய்துதலையும் அறிக. (5) வீங்குநீர்ச் சடையா னீங்கு மெல்லியல் பிரிவு நோக்கி வாங்குநீர்க் கானல் வாழ்க்கை வலைஞர்கோன் மகளாய் வைகி ஆங்குநீ வளர்நாள் யாம்போந் தருங்கடி முடித்து மென்னாத் தேங்குநீ ரமுதன் னாளைச் செலவிடுத் திருந்தா னிப்பால். (இ-ள்.) வீங்கும் நீர்ச்சடையான் - பெருக்கெடுக்குங் கங்கையை யணிந்த சடையினையுடைய இறைவன், நீங்கும் மெல்லியல் பிரிவு நோக்கி - பிரிகின்ற உமையின் துன்பத்தைக் கண்டு, வாங்கு நீர்கானல் வாழ்க்கை வலைஞர் கோன் - வளைந்த கடற்கரையிலுள்ள சோலையில் வாழும் பரதவமன்னனுக்கு, மகளாய் வைகி ஆங்கு நீ வளர்நாள் -மகளாகப் பொருந்தி அங்கே நீ வளர்கின்ற அப்பொழுது, யாம் போந்து அருங்கடி முடித்தும் என்னா - யாம் வந்து அரிய திருமணத்தை முடிப்போமென்று, தேங்குநீர் அமுது அன்னாளை - நிரம்பிய நீரினையுடைய கடலிற்றோன்றிய அமுதம் போன்ற அம்மையை, செலவிடுத்து இருந்தான் - போகவிட்டு இருந்தனன்; இப்பால் - பின். வாங்குநர், தேங்குநர் என்பன கடல் என்னும் பொருளன. கானல் - கடற்கரைச்சோலை. முடித்தும் - முடிப்போம்; தன்மைப் பன்மை யெதிர்கால முற்று. (6) அன்னது தெரிந்து நால்வா யைங்கரக் கடவு டாதை முன்னர்வந் திதனா லன்றோ மூண்டதிச் செய்தி1 யெல்லாம் என்னவீர்ங் கவளம் போலாங் கிருந்தபுத் தகங்க ளெல்லாந் தன்னெடுங் கரத்தால் வாரி யெறிந்தனன் சலதி மீதால். (இ-ள்.) நால்வாய் ஐங்கரக்கடவுள் - தொங்கிய வாயினையும் ஐந்து திருக்கரங்களையுமுடைய மூத்த பிள்ளையார், அன்னது தெரிந்து - அச்செய்தியை யறிந்து, தாதை முன்னர் வந்து - தன் தந்தையாகிய இறைவன் திருமுன் வந்து. இச்செய்தி எல்லாம் இதனால் அன்றோ மூண்டது என்ன - இந்நிகழ்ச்சி அனைத்தும் இதனாலல்லவா மூண்டது என்று, ஆங்கு இருந்த புத்தகங்கள் எல்லாம் - அங்கிருந்த சுவடிகளையெல்லாம், தன் நெடுங்கரத்தால் - தனது நெடிய கையினால், ஈர்ங் கவளம்போல் வாரி - குளிர்ந்த கவளத்தை அள்ளுவது போல அள்ளி, சலதி மீது எறிந்தனன் - கடலின்கண் வீசினன். கவளம் - யானை யுண்ணும் உணவு. ஆல் : அசை. (7) வரைபக வெறிந்த கூர்வேன் மைந்தனுந் தந்தை கையில் உரைபெறு போத நூலை யொல்லெனப் பறித்து வல்லே திரைபுக வெறிந்தா னாகச் செல்வநான் மாடக் கூடல் நரைவிடை யுடைய நாத னந்தியை வெகுண்டு நோக்கா. (இ-ள்.) வரைபக எறிந்த கூர்வேல் மைந்தனும் - கிரவுஞ்சமலை பிளக்குமாறு எறிந்த கூரிய வேற்படையையுடைய முருகக் கடவுளும், தந்தை கையில் - தந்தையாரின் திருக்கரத்தினின்றும், உரைபெறு போத நூலை ஒல்லெனப் பறித்து - புகழமைந்த சிவஞானபோத நூலை விரைந்து பிடுங்கி, வல்லே திரைபுக எறிந்தானாக - விரைந்து அது கடலில் விழ எறிந்தனன்; செல்வ நான்மாடக்கூடல் நரைவிடை உடைய நாதன் - செல்வமிக்க நான்மாடக்கூடலின்கண் எழுந்தருளிய வெள்ளிய இடபவூர்தியையுடைய சோமசுந்தரக் கடவுள், நந்தியை வெகுண்டு நோக்கா - திருநந்திதேவரைச் சினந்து பார்த்து. போத நூல் - சிவஞானபோதம். ஒல்லென, விரைவுக் குறிப்பு. நரை - வெண்மை. (8) அடுத்துநா மிருக்குஞ் செவ்வி யறிந்திடா திவரை வாயில் விடுத்துநீ யிருந்தாய் தீங்கு விளைந்ததுன் றனக்கு மிந்தத் தொடுத்ததீங் கொழிய வின்றோர் சுறவுரு வாகி வையம் உடுத்தகா ரோத நீர்புக் குழல்கெனப் பணித்தான் மன்னோ. (இ-ள்.) நாம் அடுத்து இருக்கும் செவ்வி அறிந்திடாது - நாம் பொருந்தியிருக்கும் அமயத்தை அறியாமல், இவரை வாயில் விடுத்து நீ இருந்தாய் - இவர்களை வாயிலிற் புகவிட்டு நீ வாளா இருந்தனை; தீங்கு விளைந்தது - அதனால் தீங்கு விளைந்தது; உன்தனக்கும் தொடுத்த இந்தத் தீங்கு ஒழிய - உனக்கும் நேர்ந்த இக் குற்றம் நீங்குமாறு, இன்று ஓர் சுறவு உருவாகி - இப்பொழுதே ஒரு சுறாமீன் வடிவமாகி, வையம் உடுத்த கார் ஓத நீர் புக்கு உழல்க எனப் பணித்தனன் - நிலவுலகைச் சூழ்ந்த கரிய ஒலிபொருந்திய நீரினையுடைய கடலின்கட் புகுந்து வருந்துவாயாக என்று கட்டளையிட்டான். அடுத்து அறிந்திடாது எனக் கூட்டலுமாம். உன்றனக்கும், உம்மை எச்சப் பொருட்டு. உழல்கென, அகரம் தொக்கது. மன், ஓ : அசைகள். (9) வெருவரு செலவின் வேழ முகத்தனை விதித்த சாபப்1 பெருவலி தன்னைச் சாரும் பெற்றியாற் சாபங் கூறான் அருவரை நெஞ்சு போழ்ந்த வள்ளிலை நெடுவேற் செங்கை முருகனை வணிகர் தம்மின் மூங்கையா கென்றா னிப்பால். (இ-ள்.) வெருவரு செலவின் வேழ முகத்தனை - கண்டடோர்க்கு அச்சம் வருதற்கேதுவாகிய நடையினையுடைய யானையின் முகத்தையுடைய மூத்த பிள்ளையார்க்கு, விதித்த சாபப் பெருவலி - இடும் சாபத்தின் பெரிய வலியானது, தன்னைச் சாரும் பெற்றியால்- தன்னையே வந்தடையுந் தன்மையினாலே, சாபம் கூறான் - சாபங் கூறாமல், அருவரை நெஞ்சு போழ்ந்த - வெல்லுதற்கரிய கிரவுஞ்ச மலையின் மார்பினைப் பிளந்த, அள் இலை நெடுவேல் செங்கை முருகனை - கூரிய தகட்டு வடிவாய் நீண்ட வேற்படை ஏந்திய சிவந்த திருக்கரத்தை யுடைய இளைய பிள்ளையாரை, வணிகர் தம்மில் மூங்கை ஆக என்றான் - வணிகர் மரபில் ஊமனாகத் தோன்றக் கடவை என்று சபித்தனன்; இப்பால் - பின். சாபமாகிய பெருவலி என்றுமாம். சாபம் பெருவலி என்பது பாடமாயின், பெருவலி என்பது இறைவனை யுணர்த்தும்;மதவலி என்பது போல. (10) நாயக னேவ லாலே நாயகி வலைஞர் மாதர் ஆயது நந்திப் புத்தே ளடுசுற வாகி முந்நீர் மேயதுங் கருணை வள்ளன் மீன்படுத் தணங்கை வேட்டுப் போயது மவட்குக் கேள்வி புகன்றது முறையிற் சொல்வாம். (இ-ள்.) நாயகன் ஏவலாலே - இறைவனது ஆணையினால், நாயகி வலைஞர் மாதர் ஆயதும் - இறைவி பரதவமாது ஆனதும், நந்திப்புத் தேள் அடுசுறவு ஆகி முந்நீர் மேயதும் - திருநந்திதேவர் கொல்லுகின்ற சுறாமீனாகிக் கடலுட் சென்றதும், கருணைவள்ளல் மீன்படுத்து அணங்கை வேட்டுப் போயதும் - அருள் வள்ளலாகிய அவ்விறைவன் அம்மீனைப் பிடித்து அம் மாதினை மணந்து போனதும், அவட்குக் கேள்வி புகன்றதும் - அவ்வம்மையாருக்குத் திருவுத்தரகோச மங்கையில் உபதேசஞ் செய்தருளியதுமாகிய இவற்றை, முறையில் சொல்வாம் - முறையாகக் கூறுவாம். படுத்து - அகப்படுத்து. (11) [கலிநிலைத்துறை] சூழும் வார்திரை வையையந் துறைகெழு நாட்டுட் கீழை யார்கலி முகத்தது நெய்தலங் கீழ்நீர் ஆழ நீள்கருங் கழியகழ் வளைந்துகா ரளைந்த1 தாழை மூதெயி லுடுத்ததோர் தண்டுறைப் பாக்கம். (இ-ள்.) ஓர் தண் துறைப்பாக்கம் - ஒரு தண்ணிய நீர்த்துறைகள் வாய்ந்த பாக்கம், வார்திரை சூழும் வையை அம் துறைகெழு நாட்டுள் - நீண்ட அலைகள் சூழ்ந்த வையை யாற்றின் அழகிய துறைகள் பொருந்திய பாண்டி நாட்டின்கண், கீழை ஆர்கலி முகத்தது - கீழைக்கடலின் முகத்துள்ளது, நெய்தலம் கீழ்நீர் - (அது) நெய்தனிலத்து உவர்நீரினுடைய, ஆழம் நீள்கருங்கழி அகழ் வளைந்து - ஆழமுடைய நீண்ட கரிய கழியாகிய அகழியினாற் சூழப்பட்டு, கார் அளைந்த தாழை மூதெயில் உடுத்தது - முகிலை அளாவி உயர்ந்த தாழையாகிய பெரிய மதிலாற் சூழப்பட்டது. நெய்தலம், அம் : சாரியை. கீழ்நீர் - உவர்நீர்; கூவல் என்பாரு முளர். கழி - நெய்தனிலத்து நீரோடை. கழி அகழி போலவும் உடுத்ததென்ப. பாக்கம் - கடற் பக்கத்து ஊர். உடுத்ததாகிய பாக்கம் முகத்தது என முடித்தலுமாம். (12) முடங்கு முள்ளிலை யாற்புதைந் தெதிரெதிர் மொய்த்து நுடங்கு கைதைபோ தொடுவளி நூக்கநின் றசைவ மடங்கு மெய்யராய்க் கையிருங் கேடக வட்டத் தடங்கி வாள்பனித் தாடம ராற்றுவாரனைய. (இ-ள்.) முடங்குமுள் இலையால் புதைந்து - மடங்கிய முள்ளையுடைய இலைகளால் மறைபட்டு, எதிர்எதிர் மொய்த்து - தம்முன் எதிரெதிரே நெருங்கி, வளிநூக்க போதொடு நின்று அசைவ - காற்றுத் தள்ளுவதால் மலரோடு நின்று அசைவனவாகிய, நுடங்கு கைதை - வளைந்த தாழைகள், மடங்குமெய்யராய் - வளைந்த மெய்யினை யுடையராய், கை இருங்கேடக வட்டத்து அடங்கி - கையிலுள்ள பெரிய கேடகமாகிய வட்டத்துள் மறைந்து, வாள் பனித்து - வாளை விதிர்த்து, ஆடு அமர் ஆற்றுவார் அனைய - வெற்றிதரும் போரினைப் புரிவாரை ஒத்தன. முள்ளிலை கேடகத்தையும், போது வாளையும், கைதை போர் செய்வாரையும் போன்றிருந்தன என்க. (13) புலவு மீனுணக் கோசையும் புட்களோப் பிசையும் விலைப கர்ந்திடும் மமலையு மீன்கொள்கம் பலையும் வலையெ றிந்திடு மரவமும் வாங்குமா ரவமும் அலையெ றிந்திடு பரவைவா யடைப்பன மாதோ. (இ-ள்.) புலவுமீன் உணக்கு ஓசையும் - புலானாற்றமுடைய மீன்களை உலர்த்தும் ஒலியும், புட்கள் ஓப்பு இசையும் - (அவற்றை உண்ணவரும்) பறவைகளை ஓட்டும் ஒலியும், விலை பகர்ந்திடும் அம'e7çலயும் - (அவற்றை) விலை கூறும் ஒலியும், மீன்கொள் கம்பலையும் - அம்மீன்களை வாங்குவோர் ஒலியும், வலை எறிந்திடும் அரவமும் - பரதவர் வலை வீசும் ஒலியும், வாங்கும் ஆரவமும் - அவ்வலையை இழுக்கும் ஒலியும், அலை எறிந்திடு பரவை வாய் அடைப்பன - அலை வீசும் கடலின் ஒலி வாயை அடைப்பன. ஓசை, இசை, அமலை, கம்பலை, அரவம், ஆரவம், என்பன ஒரு பொருள் குறித்த வேறு பெயர்த் திரிசொற்கள். ஆரவம் - அரவம் என்பதன் விகாரமுமாம். கடலின் ஒலி புலப்படாமற் செய்வன என்க. மாது, ஓ : அசைகள். (14) வாட்டு நுண்ணிடை நுளைச்சியர் வண்டலம் பாவைக் கூட்டு கின்றசோ றருகிருந் துடைந்தபூங் கைதை பூட்டு கின்றன நித்திலம் பொருகடற் றரங்கஞ் சூட்டு கின்றன கடிமலர் சூழல்சூழ் ஞாழல். (இ-ள்.) வாட்டும் நுண் இடை நுளைச்சியர் - (கொங்கைகள்) வருத்தும் நுண்ணிய இடையினையுடைய நுளைச்சிறுமியரின், வண்டல் அம்பாவைக்கு - விளையாட்டிடத்துள்ள பாவைக்கு, உடைந்த பூங்கைதை அருகு இருந்து சோறு ஊட்டுகின்ற - மலர்ந்த மலர்களையுடைய தாழைகள் பக்கத்திலிருந்து சோற்றினை உண்பியாநின்றன; பொருகடல் தரங்கம் - மோதுகின்ற கடலின் அலைகள், நித்திலம் பூட்டுகின்றன - முத்து மாலையைப் பூட்டா நின்றன; சூழல் சூல் ஞாழல் - சோலையைச் சூழ்ந்த புலிநகக் கொன்றை மரங்கள், கடிமலர் சூட்டுகின்றன - மணமிக்க மலர்களைச் சூட்டாநின்றன. வண்டல் - மகளிர் விளையாட்டு. சோறு என்றது மகரந்தத்தை. எழுவாய் மூன்றும் இறுதியிலும், பயனிலை மூன்றும் முதலிலும் நின்றன; “ எச்சப் பெயர்வினை யெய்து மீற்றினும்” என்னும் நன்னூற்சூத்திரம் நோக்குக. (15) நிறைந்த தெண்கட லாடிநீ ணெறியிடைச் செல்வோர்க் கறந்தெ ரிந்தபோற் பொதிந்தசோ றவிழ்ப்பன தாழை சிறந்த முத்தொடு பசும்பொனும் பவளமுந் திரட்டிப் புறந்தெ ரிந்திடக் கொடுப்பன மலர்ந்தபூம் புன்னை. (இ-ள்.) நிறைந்த தெண்கடல் ஆடி - நீர் நிறைந்த தெள்ளிய கடலின்கண் நீராடி, நீள் இடைச் செல்வோர்க்கு - நெடுந்தூரம் வழிச்செல்லும் யாத்திரைக்காரர்களுக்கு, தாழை அறம் தெரிந்தபோல் - தாழைகள் அறநூல் உணர்ந்தனபோல, பொதிந்த சோறு அவிழ்ப்பன - ஊட்டுதற்குப் பொதிந்த சோற்றினை அவிழ்ப்பன; மலர்ந்த பூம்புன்னை - மலர்ந்த பொலிவினையுடைய புன்னை மரங்கள், சிறந்த முத்தொடு பசும்பொனும் பவளமும் திரட்டி - சிறந்த முத்தையும் பசிய பொன்னையும் பவளத்தையும் ஒன்று சேர்த்து, புறம் தெரிந்திடக் கொடுப்பன - அயலோர் அறியுமாறு கொடாநின்றன. அறம் தெரிந்து அழிபசி தீர்ப்பார் போலத் தாழைகள் சோறு அவிழ்ப்பன, பிறர் கண்டு புகழுமாறு கொடுப்பார் போலப் புன்னைகள் கொடுப்பன என்க. பொதிந்த சோறு - பொதி சோறு, மூடிய மகரந்தம், முத்து, பொன், பவளம் என்னும் உவமச் சொற் களால் அரும்பு மலர், பழம் என்னும் பொருள்களைக் கூறுதல் உருவகவுயர்வு நவிற்சி. (16) கொன்று மீன்பகர் பரதவர் குரம்பைக டோறுஞ் சென்று தாவிமேற் படர்வன திரைபடு பவளம் மன்றல் வார்குழ னுளைச்சியர் மனையின்மீ னுணக்கும் முன்றில் சீப்பன கடலிடு முழுமணிக் குப்பை. (இ-ள்.) மீன்கொன்று பகர்பரதவர் - மீன்களைக் கொன்று விற்கும் பரதவர்களின், குரம்பைகள் தோறும் - சிறு குடில் தோறும், திரைபடு பவளம் சென்று தாவிமேல் படர்வன - கடலில் உண்டாகிய பவளம் போய்த் தாவி மேலே படரா நின்றன; மன்றல் வார் குழல் நுளைச்சியர் - மணம் நிறைந்த நீண்ட கூந்தலையுடைய நுளைச்சியர், மனையின் முன்றில் உணக்கும் மீன் - குடிலின் வாயிலிற் புலர்த்தும் மீன்களை, கடல் இடு முழுமணி குப்பை சீப்பன - கடலின் அலைகளால் இடப்படும் பருத்தமுத்தின் கூட்டங்கள் சிதைப்பன. திரை, ஆகுபெயர். முன்றிலில் அலகிட்டுப் போக்கப்படுவன மணிக்குப்பை என்றுமாம். (17) கூற்றம் போன்றகண் ணுளைச்சியர் குமுதவாய் திறந்து மாற்றம் போக்கினர் பகர்தருங் கயற்குநேர் மாறாந் தோற்றம் போக்குவ வவர்விழித் துணைகளக் கயன்மீன் நாற்றம் போக்குவ தவர்குழ னறுமலர்க் கைதை1. (இ-ள்.) கூற்றம் போன்ற கண் நுளைச்சியர் - கூற்றுவன் போன்ற கண்களையுடைய நுளைச்சியர், குமுதவாய் திறந்து மாற்றம் போக்கினர் - ஆம்பல் மலர் போன்ற வாயினைத் திறந்து கூவி, பகர் தரும் கயற்கு - விற்கும் கயல் மீனுக்கு, நேர் மாறாம் அவர் விழித்துணைகள் - நேர்பகையாகிய அவர் இருகண்கள், அக் கயல்மீன் தோற்றம் போக்குவ - அக் கயல் மீன்களின் தோற்றத்தைப் போக்குவன; அவர் குழல் நறுங்கைதை மலர் - அவர் கூந்தலிலுள்ள நறிய தாழை மலர், நாற்றம் போக்குவது - அவற்றின் நாற்றத்தைப் போக்கும். மாற்றம் போக்குதல் - விலை கூறுதல், போக்கினர் : முற்றெச்சம்.(18) அலர்ந்த வெண்டிரைக் கருங்கழிக் கிடங்கரி னரும்பர் குலைந்த விழ்ந்துதேன் றுளும்பிய குமுதமே யல்ல கலந்த ருங்கட லெறிகருங் காற்பனங் கள்வாய் மலர்ந்த ருந்திய குமுதமு மொய்ப்பன வண்டு. (இ-ள்.) அலர்ந்த வெண்திரைக் கருங்கழிக் கிடங்கரின் - பரந்த வெள்ளிய அலைகளையுடைய கரிய கழியாகிய கிடங்கில், அரும்பர் குலைந்து அவிழ்ந்து தேன் துளும்பிய குமுதமே அல்ல - முகையின் கட்டவிழ்ந்து மலர்ந்து தேன் ததும்பிய ஆம்பல் மலரின் மாத்திரமே யல்ல, கலம் தருங் கடல் எறி - மரக்கலங்களையுடைய கடலின் அலை மோதுகின்ற, கருங்கால் பனங்கள் - கரிய அடியையுடைய பனை மரத்தின் கள்ளை, வாய் மலர்ந்து அருந்திய குமுதமும்- வாயைத் திறந்து உண்ட நுளைச்சியரின் வாயாகிய ஆம்பல் மலரிலும், வண்டு மொய்ப்பன - வண்டுகள் மொய்ப்பன. வெண்டிரைக் கருங்கழி என்பது முரண். கிடங்கர், அரும்பர் என்பன ஈற்றுப்போலி, குமுதம் இரண்டிலும் ஏழனுருபு விரிக்க. பின்னதாகிய குமுதம் வாய்க்கு ஆகுபெயர். (19) ஆய பட்டினத் தொருவன்மே லாற்றிய தவத்தாற் றூய வானவர் தம்மினுந் தூயனாய்ச் சிறிது தீய தீவினைச் செய்தியாற் றிண்டிமில் வாணர் மேய சாதியிற் பிறந்துளான் மேம்படு மனையான். (இ-ள்.) ஆயபட்டினத்து ஒருவன் - அந்தப் பட்டினத்தின்கண் ஒருவன், மேல் ஆற்றிய தவத்தால் - முற்பிறப்பில் செய்த தவத்தினால், தூய வானவர் தம்மினும் தூயனாய் - தூய்மையுள்ள தேவர்களினுந் தூய்மையுள்ளவனாய், சிறிது தீய தீவினைச்செய்தியால் - சிறிது கொடிய தீவினையைச் செய்தவதனால், திண்திமில் வாணர் மேயசாதியில் - திண்ணிய தோணியால் வாழ்வோர் பொருந்திய பரதவர் குலத்தில், பிறந்துளான் - பிறந்தனன்; மேம்படும் அனையான் - (அங்ஙனம் பிறந்து) மேம்பட்ட அவன். தீயதீவினை - மிக்க தீமையையுடைய வினை; தீவினை என்றது பெயர் மாத்திரமாக நின்ற தெனினும் அமையும். திமில் வாணர் - தோணியிற் சென்று மீன் பிடித்து வாழ்பவர். வாணர், வாழ்நர் என்பதன் மரூஉ. (20) செடிய காருடற் பரதவர் திண்டிமி னடத்தா நெடிய வாழியிற் படுத்தமீன் றிறைகொடு நிறைக்குங் கடிய வாயிலோ னவர்க்கெலாங் காவலோ னேற்றுக் கொடிய வானவ னடிக்குமெய் யன்புசால் குணத்தோன் (இ-ள்.) செடிய கார் உடல் பரதவர் - முடைநாற்ற முடைய கரிய உடலையுடைய வலைஞர், திண்திமில் நடத்தா - திண்ணிய தோணியை நடத்தி, நெடிய ஆழியில் படுத்தமீன் - நீண்ட கடலிற் பிடித்த மீன்களை, திறைகொடு நிறைக்கும் கடிய வாயிலோன் - திறையாக ஏற்று நிறைக்கப்படும் காவலையுடைய வாயிலை யுடையவன்; அவர்க்கு எலாம் காவலோன் - அப்பரதவர் அனைவருக்கும் காவலன்; ஏற்றுக் கொடிய வானவன் அடிக்கு - இடபக்கொடியை யுடைய சிவபெருமான் திருவடிக்கு, மெய் அன்பு சால் குணத்தோன்- உண்மையன்பு நிறைந்த குணத்தினை யுடையவன். செடிய கொடிய என்பன பெயரடியாகவும், நெடிய என்பது பண்படியாகவும், கடிய என்பது உரியடியாகவும் பிறந்த குறிப்புவினைப் பெயரெச்சம். (21) மகவி லாமையா லாற்றநாண் மறுமையோ டிம்மைப் புகலி லானென வருந்துவா னொருபகற் போது தகவு சால்பெருங் கிளையொடுஞ் சலதிமீன் படுப்பான் அகல வார்கலிக் கேகுவா னதன்கரை யொருசார். (இ-ள்.) ஆற்றநாள் மகவு இலாமையால் - பன்னாட்கள் வரை மகப்பேறு இன்றி, மறுமையோடு இம்மைப்புகல் இலான் என - மறுமைக்கும் இம்மைக்கும் ஒரு பற்றுக்கோடில்லாதவன் போல, வருந்துவான் - வருந்தும் அப் பரதவமன்னன், ஒருபகல் போது - ஒரு நாள், தகவுசால் பெருங்கிளையொடும் - தகுதிமிக்க பெரிய சுற்றத்தாருடன், சலதி மீன்படுப்பான் - கடல்மீனைப் பிடிப்பதற்கு, அகல ஆர் கலிக்கு ஏகுவான் - அகன்ற கடலுக்குச் செல்கின்றவன், அதன் கரை ஒருசார் - அக்கடற்கரையின் ஒரு பக்கத்தில். வருந்துவான் : பெயர். படுப்பான் : வினையெச்சம். (22) தக்க மேருமா மலைமக னோடையிற் றவத்தான் மிக்க மீனவன் வேள்வியில் விரும்பிய மகவாய்ப் புக்க நாயகி தன்பதி யாணையாற் புலவு தொக்க மீன்விலை வலைஞன்மேற் றவப்பயன் றுரப்ப1. (இ-ள்.) தக்கமேருமா மலைமகன் - தகுதி வாய்ந்த பெரிய மலையரையன் செய்த, மிக்க தவத்தால் ஓடையில் - சிறந்த தவத்தினால் மலரோடையிலும், மீனவன் வேள்வியில் - பாண்டியன் செய்த சிறந்த தவத்தினால் வேள்வியிலும், விரும்பிய மகவாய் - அவர்கள் வேண்டிய குழந்தை வடிவமாய், புக்கநாயகி - சென்று வெளிப்பட்ட இறைவி, தளபதி ஆணையால் - தனது பதியாகிய இறைவன் ஆணையினால், புலவு தொக்க மீன்விலை வலைஞன் - புலால்நாற்ற மிக்க மீன்விற்கும் பரதவ மன்னன், மேல் தவப்பயன் துரப்ப - முற்பிறப்பிற் செய்த தவப்பயன் செலுத்த. பொன்னென்னும் ஒற்றுமைபற்றி இமயத்தை மேருவென்றும், மேருவை இமயமென்றும் ஒரோவழிக் கூறுவர்; “ இமயவில் வாங்கிய” என எட்டுத்தொகையுள் வருதலுங் காண்க. மிக்க தவத்தால் என மாறி மலைமகனுக்கும் மீனவனுக்கும் கூட்டுக. மலையரையனுக்கு மகளானமையைக் கந்தபுராணம் பார்ப்பதிப்படலத்திலும், மலயத்து வச பாண்டியனுக்குமகளானமையை இப்புராணத்துத் தடாதகைப் பிராட்டியார்ர திருவவதாரப் படலத்திலும் காண்க. (23) இச்சை யாலவ னன்பினுக் கிரங்குவாள் போலச் செச்சை வாய்திறந் தழுதொரு திருமக வாகி நெய்ச்ச பாசிலைப் புன்னைநன் னீழலிற் கிடந்தாள் மைச்ச காருடற் கொடுந்தொழில் வலைஞர்கோன் கண்டான். (இ-ள்.) இச்சையால் ஒரு திருமகவு ஆகி - தமது இச்சையின் வழியே ஒரு திருமகளாகி, அவன் அன்பினுக்கு இரங்குவாள் போல்- அப்பரதவ மன்னன் அன்பினுக்குத் திருவுள்ள மிரங்குவாள் போல, செச்சைவாய் திறந்து அழுது - தமது செந்நிறமுள்ள திருவாயினைத் திறந்து அழுது, நெய்ச்ச பாசிலைப்புன்னை நல் நீழலில் கிடந்தாள்- நெய்ப்பினையுடைய பசிய இலைகளடர்ந்த புன்னை மரத்தின் குளிர்ந்த நிழலின்கண் கிடந்தனள்; மைச்சகார் உடல் கொடுந்தொழில் வலைஞர் கோன் கண்டான் - கரிய பெரிய உடலையும் கொடிய தொழிலையு முடைய பரதவர் மன்னன் கண்டனன். செச்சை - செந்நிறம். நெய்த்த, மைத்த என்னும் குறிப்புப் பெயரெச்சங்கள் எதுகை நோக்கிப் போலியாயின. கருமை பெருமையுமாகலின் காருடல் என்பதற்குப் பெரிய உடல் என உரைக்கப்பட்டது. (24) கார்கொ ணீர்த்திரு மாதுகொல் கரந்துநீ ருறையும் வார்கொள் பூண்முலை மடந்தைகொல்வனத்துறை வாழ்க்கைத் தார்கொள் பூங்குழ லணங்குகொ றடங்கணு மிமைப்ப ஆர்கொ லோமக வாகியீண் டிருந்தன ளென்னா.1 (இ-ள்.) கார்கொள் நீர்த் திருமாதுகொல் - கரிய கடலின்கண் தோன்றிய திருமகளோ, கரந்துநீர் உறையும் - நீரின்கண் மறைந்து வசிக்கும், வார்கொள் பூண்முலை மடந்தைகொல் - கச்சினை அணிந்த அணிகலன் தங்கிய கொங்கையையுடைய நீரரமகளோ, வனத்துஉறை வாழ்க்கை - கானின்கண் உறையும் வாழ்க்கையினையுடைய,. தார் கொள் பூங்குழல் அணங்குகொல் - மாலையை யணிந்த பொலிவான கூந்தலையுடைய கானரமகளோ, ஆர்கொலோ மகவு ஆகி - இவருள் யாரோ ஒரு பெண் மகவாகி, தடங்கணும் இமைப்ப - பெரிய கண்களும் இமைக்க, ஈண்டு இருந்தனள் - இங்கு இருந்தனள்; என்னா - என்று கூறி. வனத்துறை வாழ்க்கை அணங்கு வனதேவதை. குழவியின் பேரழகால் இங்ஙனம் ஐயுற்றானென்க.தடங்கணும் இமைப்ப என்றது மானுடவுருக் கொண்டிருத்தல் குறிப்பித்தவாறு. கொல், ஐயப்பொருட்டாய இடைச்சொல். (25) பிள்ளை யின்மையேற் கிரங்கியெம் பிரான்றமிழ்க் கூடல் வள்ள னல்கிய மகவிது வேயென வலத்தோள் துள்ள வன்புகூர்ந் தெடுத்திரு தோளுறப் புல்லித் தள்ள ருந்தகைக் கற்பினா டனதுகைக் கொடுத்தான். (இ-ள்.) பிள்ளை இன்மையேற்கு - பிள்ளையில்லாத எனக்கு, எம்பிரான் தமிழ்க்கூடல் வள்ளல் - எம் பெருமானாகிய தமிழையுடைய நான்மாடக் கூடலிலுறையும் சோமசுந்தரக் கடவுள், இரங்கி நல்கிய மகவு இதுவே என - அருள்சுரந்து ஈந்தருளிய மகவே இது என்று கருதி, வலத்தோள் துள்ள - வலது தோள் துடிக்க, அன்பு கூர்ந்து எடுத்து இருதோள் உறப் புல்லி - அன்பு மிகுந்து எடுத்து இரண்டு தோள்களும் பொருந்தத் தழுவி, தன் அருந்தகைக் கற்பினாள் தனது கைகொடுத்தான் - நீங்குதலில்லாத தகுதியையுடைய கற்பினையுடைய மனைவியின் கையிற்கொடுத்தான். இன்மையேன் - இன்மையை உடையேன்; இல்லேன். வேண்டு வார் வேண்டுவதை யீதல் பற்றி ‘வள்ளல்’ என்றான். மகவே என ஏகாரம் பிரித்துக் கூட்டுக. ஆடவர்க்கு வலத்தோள் துடித்தல் நன்னிமித்தமாகும். (26) பிறவி யந்தகன் றெரிந்துகண் பெற்றெனக் கழிந்த வறிய னீணிதி பெற்றென வாங்கினாள் வலைஞர் எறியும் வேலையி னார்த்தனர் கையெறிந் திரட்டிக் குறிய வாணகைவ லைச்சியர் குழறினார் குரவை. (இ-ள்.) பிறவி அந்தகன் தெரிந்து - பிறவிக்குருடன் (பொருள் களை)அறியுமாறு; கண்பெற்றென - கண் பெற்றாற்போலவும், கழிந்த வறியன் நீள்நிதி பெற்றென வாங்கினாள் - மிக்க வறுமையுடையோன் பெரிய வைப்பு நிதியைப் பெற்றாற் போலவும் வாங்கினாள்; எறியும் வேலையின் வலைஞர் ஆர்த்தனர் - அலை வீசுங் கடல் போல வலைஞர் ஆரவாரித்தனர்; குறிய வாள் நகை வலைச்சியர் - ஒளி பொருந்திய சிறிய பற்களையுடைய வலைச்சியர், கை எறிந்து இரட்டி - கையை ஒன்றோடொன்று தாக்கி வீசி, குரவை குழறினார் - குரவைப்பாடல் பாடினார். பிறந்தநாள் தொட்டுக் கண்ணில்லானும் வறியனும் இடையே கண்ணும் நிதியும் பெற்றால் எய்தும் பெருமகிழ்ச்சிபோல மகப்பேறில்லாதவள் மகவு கிடைத்ததென்னும் பெருமகிழ்ச்சியோடு வாங்கினாள் என்க. தெரிந்து - தெரிய; எச்சத்திரிபு. பெற்றென - பெற்றாலென; விகாரம். கழிந்த, உரியடியாகப் பிறந்த பெயரெச்சம். இரட்டி - மாறிவீசி. (27) பிழையில் கற்புடை மனைவியும் பெறாதுபெற் றெடுத்த குழவி யைத்தடங் கொங்கையுங் கண்களுங் குளிரத் தழுவி முத்தமிட் டுச்சிமோந் தன்புளந் ததும்ப அழகி தாகிய மணிவிளக் காமென வளர்ப்பாள். (இ-ள்.) பிழை இல் கற்புடை மனைவியும் - தவறில்லாத கற்பினை யுடைய மனைவியும். பெறாதுபெற்று எடுத்த குழவியை - வருந்திப் பெறாமற் பெற்றெடுத்த மகவினை, தடங்கொங்கையும் கண்களும் குளிரத்தழுவி - பெரிய கொங்கையும் விழிகளுங் குளிருமாறு புல்லி, முத்தமிட்டு உச்சிமோந்து - முத்தங்கொடுத்து உச்சிமோந்து, உளம் அன்பு ததும்ப - உள்ளத்தின்கண் அன்பு நிறைந்து ததும்ப, இது அழகாகிய மணிவிளக்கு ஆம் என வள்ரப்பாள் - இம்மகவு ஓர் அழகிய மாணிக்க விளக்காகும் என்று கருதிப் போற்றி வளர்ப்பாளாயினள். பிழைஇல் கற்பு - கலங்கா நிலைமையுடைய கற்பு. பெறாது - சூலுளைந்து பெறாது. இது அழகாகிய எனப் பிரித்தியைக்க; அழகினையுடையதாகிய என்றுமாம். என்றும் பொலிவு குன்றாமைபற்றி ‘மணி விளக்காமென’ என்றார். (28) புலவு மீன்விலைப் பசும்பொனாற் செய்தபல் பூணும் இலகு மாரமும் பாசியுங் காசிடை யிட்டுக் குலவு கோவையுஞ் சங்கமுங் குலத்தினுக் கிசைய அலகி லாதபே ரழகினுக் கழகுசெய் தணிந்தாள். (இ-ள்.) புலவுமீன் விலைப்பசும் பொனால் செய்த பல்பூணும் - புலால் நாற்றமுடைய மீன்களை விற்றதனால் வந்த பசியபொன்னாற் செய்த பல அணிகளும், இலகும் ஆரமும் பாசியும் - விளங்காநின்ற முத்துக்களும் பாசிகளுமாகிய இவற்றுடன், காசு இடை இட்டு - மணிகள் இடையிற் கோக்கப்பட்டு, குலவுகோவையும் - விளங்கா நின்ற மாலைகளும், சங்கமும் - அக்குமணிகளுமாகிய இவற்றால், குலத்தினுக்கு இசைய - தங் குலத்துக்குப்பொருந்த, அலகு இலாதபேர் அழகினுக்கு அழகு செய்து அணிந்தாள் - அளவிறந்த பெரிய அழகுக்கு ஓர் அழகு செய்து அலங்கரித்தாள். பாசி - பலகறை யென்பாருமுளர். அழகு செய்தணிந்தாள் என்பதற்கு அழகு செய்யாநின்று அணிந்தாள் என்றேனும், அணிந்து அழகு செய்தாள் என்றேனும் பொருள் கொள்க. “ அழகினுக் கழகுசெய்தார்” என்றார் கம்பநாடரும். (29) தொண்டை வாய்வலைச் சிறுமியர் தொகையொடுந் துறைபோய் வண்ட லாடியு நித்தில மாமணி கொழித்துங் கண்டன் ஞாழல்சூழ் கானலங் கடிமலர் கொய்துங் கொண்ட லோதிபின் றாழ்தரக் குரைகடல் குளித்தும். (இ-ள்.) தொண்டை வாய் வலைச்சிறுமியர் தொகையொடும் - கொவ்வைக் கனிபோன்ற வாயினையுடைய பரதவச்சிறுமியர் கூட்டத்தோடும், துறைபோய் வண்டல் ஆடியும் - கடற்றுறைக்குப் போய்ச் சிற்றில் கோலி விளையாடியும், நித்திலமா மணிகொழித்தும் - பெரிய முத்துக்களை (ச் சிறுமுறத்தால்) கொழித்தும், கண்டல் ஞாழல் சூழ்கானல் - தாழைகளும் புலிநகக் கொன்றைகளுஞ் சூழ்ந்த சோலையில், அம்படிமலர் கொய்தும் - அழகிய மணம் பொருந்திய மலர்களைக் கொய்தும், கொண்டல் ஓதி பின் தாழ்தர - முகில் போன்ற கூந்தல் பின்னே தாழ, குரை கடல் குளித்தும் - ஒலிக்குங் கடலின்கண் நீராடியும். வண்டல் விளையாட்டிற்கமைய முத்துக்களை அரிசியாகக் கொண்டு கொழித்தும் என்க. (30) தளர்ந்த பைங்கொடி மருங்குலுந் தன்னுயிர்த் தலைவன் அளந்த வைகலுங் குறைபட வவனிடத் தார்வங் கிளர்ந்த வன்புமொண் கொங்கையுங் கிளரநாட் சிறிதில் வளர்ந்து வைகினாள் வைகலு முயிரெலாம் வளர்ப்பாள். (இ-ள்.) தளர்ந்த பைங்கொடி மருங்குலும் - ஒல்கிய பசிய கொடி போன்ற இடையும், தன் உயிர்த்தலைவன் அளந்த வைகலும் குறைபட - தனது உயிர்த்தலைவனாகிய இறைவன் வரையறுத்துக் கூறிய நாளும் தேயவும், அவனிடத்து ஆர்வம் கிளர்ந்த அன்பும் - அவனிடத்தில் விருப்பமிக்க அன்பும், ஒண்கொங்கையும் கிளர - ஒள்ளிய கொங்கையும் வளரவும், வைகலும் உயிர் எலாம் வளர்ப்பாள் - நாள்தோறும் உயிர்களனைத்தையும் வளர்க்கும் இறைவி, சிறிது நாளில் வளர்ந்து வைகினாள் - சில நாளில் வளர்ந்து தங்கினாள். மருங்குலும் வைகலும் குறைபட, அன்பும் கொங்கையும் கிளர என்றமை புணர்நிலை யணியின்பாற்படும். ஈற்றடியின் நயம் பாராட்டற்குரியது. (31) ஆல வாயுடை நாயக னேவிய வாறே மாலை தாழிள மதிச்சடை மகுடமுங் கரங்கள் நாலு மாகிய வடிவுடை நந்தியுஞ் சுறவக் கோல மாகிவெண் டிரைக்கடல் குளித்தினி திருந்தான். (இ-ள்.) ஆலவாய் உடை நாயகன் - திருவாலவாயுடைய இறைவன், ஏவியவாறே - பணித்த வண்ணமே, மாலை தாழ் இளமதிச் சடை மகுடமும் - மாலை தாழ்ந்த இளம்பிறையணிந்த சடைமுடியும், கரங்கள் நாலுமாகிய வடிவு உடை நந்தியும் - நான்கு திருக்கரங்களும் பொருந்திய வடிவினையுடைய திருநந்திதேவும், சுறவக்கோலமாகி - சுறாமீன் வடிவமாகி, வெண்திரைக்கடல் குளித்து இனிது இருந்தான் - வெள்ளிய அலைகளையுடைய கடலில் மூழ்கி இனிதாக இருந்தனன். நந்தியும், உம்மை எச்சப் பொருட்டு. (32) குன்றெ றிந்தவேற் குழகனுங் கரிமுகக் கோவும் அன்றெ றிந்ததந் திரமெலாஞ் சிரமிசை யடக்காக் கன்றெ றிந்தவ னறிவருங் கழன்மனத் தடக்கா நின்றெ றிந்தகன் மத்தென1 வுழக்கிடா நிற்கும். (இ-ள்.) குன்று எறிந்தவேல் குழகனும் - கிரவுஞ்சமலையைப் பிளந்த வேற்படையையுடைய முருகக்கடவுளும், கரிமுகக் கோவும் - யானை முகத்தையுடைய மூத்த பிள்ளையாரும், அன்று எறிந்த தந்திரம் எலாம் - அன்று கடலின்கண் வீசிய நூல்களனைத்தையும், சிரமிசை அடக்கா - முடியின்கண் அடக்கியும், கன்று எறிந்தவன் அறிவரும் கழல் - விளங்கனி உக-ரக் கன்றினை வீசிய திருமாலும் அறிதற்கரிய திருவடியை, மனத்து அடக்கா நின்று - மனத்தின்கண் அடக்கியும் நின்று, எறிந்த கல் மத்து என உழக்கிடாநிற்கும் - கடலைக் கலக்கிய மந்தரமலையாகிய மத்தைப்போல அதனைக் கலக்கா நின்றது அச் சுறாமீன். தந்திரம் - நூல்; ஆகமம். ஓரசுரன் ஆன்கன்றின் வடிவு கொண்டு தீங்கு புரியவருதலை யறிந்த கண்ணன் அக் கன்றினைக் குணிலாகச் கொண்டு விளவின்கனி யெறிந்து அவனுயிர் செகுத்தனன் என்பது வரலாறு; “ கன்றுகுணிலாக் கனியுகுத்த மாயவன்” என்றார் இளங்கோவடிகளும். (33) கிட்டுந் தோணியைப் படகினைக்1 கிழிபட விசைபோய்த் தட்டுஞ் சோங்கினை மேலிடு சரக்கொடுங் கவிழ முட்டுஞ் சீறிமேல் வரும்பல சுறவெலா முடுக்கி வெட்டுங் கோடுகோத் தேனைய மீனெலாம் வீசும். (இ-ள்.) கிட்டும் தோணியைப் படகினைக் கிழிபட - நெருங்கி வரும் தோணியையும் படகினையும் அவை பிளவுபடுமாறு, விசை போய்த் தட்டும் - விரைந்து சென்று தாக்கும்; சோங்கினை மேல்இடும் சரக்கொடும் கவிழமுட்டும் - சோங்கினை அதன் மேலிட்ட சரக்குடன் கவிழுமாறு (கீழே சென்று) முட்டும்; சீறிமேல் வரும்பல சுறவு எலாம் முடுக்கி வெட்டும் - சினந்து தன்மேல் வருஞ் சுறாமீன்களனைத்தையுந் துரத்தி வெட்டும், ஏனைய மீன் எலாம் கோடுகோத்து வீசும் - மற்றைய மீன்களெல்லாவற்றையும் கொம்பிற் கோத்துப் புறத்தில் வீசும். தோணி, படகு, சோங்கு என்பன மரக்கல விசேடம். (34) தரங்க வாரிநீர் கலக்கலாற் றந்திரங் கொடுமேல் இரங்கு வான்புல வோர்க்கமு தீகையா லெண்ணார் புரங்கண் மூன்றையும் பொடித்தவ னாணையாற் புனலிற் கரங்க ணான்கையுங் கரந்தமீன் மந்தரங் கடுக்கும். (இ-ள்.) எண்ணார்புரங்கள் மூன்றையும் பொடித்தவன் ஆணை யால் - பகைவரின் மூன்று புரங்களையும் எரித்த இறைவனது ஆணையினால், புனலில் - கடலின்கண், கரங்கள் நான்கையும் கரந்தமீன் - நான்கு திருக்கரங்களையும் மறைத்து உறையும் அச்சுறாமீன், தரங்கவாரி நீர் கலக்கலால் - அலைகளையுடைய கடல் நீரைக் கலக்குதலாலும், தந்திரம் மேல்கொடு - நூல்களைச் சிரத்திற்றாங்கி, இரங்குவான் புலவோர்க்கு - மனம் வருந்தும் சிறந்த புலவர்களுக்கு, அமுது ஈகையால் - ஞானாமிர்தத்தை அளித்தலாலும் (கடலைக்கலக்கித் தனது வலிமையைக் கொண்டு வருந்திய சுவர்க்கத்திலுள்ள தேவர்கட்குத் தேவாமிர்தத்தைக் கொடுத்த,) மந்தரம் கடுக்கும் - மந்தரமலையை நிகர்க்கும். தந்திரம் - நூல், தனது வலிமை. மேல் - சென்னி, மேலிடம். வான் - மேன்மை, சுவர்க்கம். புலவோர் - அறிஞர், தேவர். அமுது - ஞானம், தேவாமிர்தம். மேல்கொடு என மாற்றித் தலைமேற் கொண்டு எனவும், மேல்வான் எனக் கூட்டிமேலிடத்ததாகிய சுவர்க்கம் எனவும் உரைக்க. நந்தியாகிய மீன் என்பார் ‘கரங்கள் நான்கையும் கரந்தமீன்’ என்றார். இச்செய்யுள் செம்மொழிச் சிலேடையணி. (35) தள்ளு நீர்த்திரை போய்நுளைச் சேரிகள் சாய்ப்பத்1 துள்ளு நீர்குடித் தெழுமறை சூலிறப் பாயும் முள்ளு நீண்மருப் புடையமீன் மொய்கல மந்தத் தெள்ளு நீர்த்துறை நடையற வின்னணந் திரியும். (இ-ள்.) முள்ளு நீண்மருப்பு உடைய மீன் - முள் வாய்ந்த நீண்ட கொம்பினையுடைய அச்சுறாமீன், தள்ளும் நீர்த்திரை போய் - தள்ளுகின்றநீரின் அலைகள் சென்று, நுளைச்சேரிகள் சாய்ப்பத் துள்ளும் - நுளைச்சேரியிலுள்ள குடில்களை வீழ்த்துமாறு துள்ளும்; நீர்குடித்து எழுமழை சூல் இறப் பாயும் - நீரைப்பருகி மேலே எழுமுகிலின் கருச்சிதையுமாறு பாயும்; அந்தத் தெள்ளும் நீர்த்துறை- அந்தத் தெளிந்த நீரினையுடைய துறையின்கண், மொய்கலம் நடைஅற இன்னணம் திரியும் - நெருங்கிய கப்பல்களின் போக்கு வரவு இல்லையாமாறு இங்ஙனம் உலவும். (36) எற்றி தாலெனத் துறைமகன் யாமிது பிடிக்கும் பெற்றி யாதெனக் கிளையொடும் பெருவலைப் பாசம் பற்றி யாழியூர் படகுகைத்2 தெறிந்தனன் படகைச் சுற்றி வாய்கிழித் தெயிற்றிறப் பாய்ந்தது சுறவம். (இ-ள்.) துறைமகன் - நெய்தனிலத்தலைவன், இது எற்று என - இஃது எத்தன்மைத்து எனவும், யாம் இது பிடிக்கும் பெற்றியாது என - யாம் இதனைப் பிடிப்பது எவ்வாற்றாலெனவும் (கருதி) கிளையொடும் ஆழி ஊர் படகு உகைத்து - தமருடன் கடலின்கண் செல்லும் படகினைச் செலுத்தி, பெருவலைப் பாசம் பற்றி எறிந்தனன் - பெரிய வலை'e7Âகயிற்றைப் பிடித்து வீசினன்; சுறவம் - அச்சுறாமீன், படகைச் சுற்றி வாய் கிழித்து - அப்படகினைச் சூழ்ந்து வாயைப் பிளந்து, எயிற்று இறப் பாய்ந்தது - தனது கொம்பினால் அது சிதையுமாறு பாய்ந்தது. எற்றிதால், ஆல் : அசை. துறைமகன் - துறைவன்; நெய்தற் றலைவன். வாய்கிழித்து - வாய் பிளந்து: “ தீவா யுழுவை கிழித்ததந்தோ” என்னும் திருச்சிற்றம்பலக் கோவையார்ச் செய்யுளிலும்கிழித்த தென்பது இப்பொருட்டாதல் காண்க. எயிற்றால் என மூன்றனுருபு விரிக்க. (37) படவு டைப்பவோர் தோணிமேற் பாய்ந்துமத் தோணி விடவு றத்தெறித் தெறிந்திட விசைத்தொரு சோங்கின் இடைபு குந்துநீள் வலையெறிந் திங்ஙனம் வெவ்வே றுடல்பு குந்துழ லுயிரெனப் பரதனு முழல்வான். (இ-ள்.) படவு உடைப்ப - இங்ஙனம் அப்படகினை உடைக்க, ஓர் தோணிமேல் பாய்ந்தும் - ஒரு தோணிமேற் பாய்ந்து வலைவீசியும், அத்தோணி விடவு உறத்தெறித்து எறிந்திட - அத்தோணியும் பிளவு படுமாறு பாய்ந்து சிதைக்க, விசைத்து ஒரு சோங்கின் இடைபுகுந்து நீள் வலை எறிந்து - விரைந்து ஒரு சோங்கின்கண் ஏறி நீண்ட வலையை வீசியும், இங்ஙனம் - இவ்வாற்றால், வெவ்வேறு உடல் புகுந்து உழல் உயிர் என - வெவ்வேறு உடலின்கட் புகுந்து உழலும் உயிர்போல, பரதனும் உழல்வான் - பரதவமன்னனும் உழன்று திரிவானாயினன். படகினும் தோணியும், தோணியினும் சோங்கும் பெரியனவாமென்க. விடவு - பிளவு. ஓருயிர் வினைவயத்தால் வெவ்வேறுடம் பெடுத்து உழுலுதல்போல் இவன் மீன் பிடிக்கும் வினையால் வெவ்வேறு கலங்களிற் புகுந்து உழன்றான் என்பதனால் இது தொழிலுவமம். (38) முன்னர் வீசினாற் பின்னுற முளைத்தெழு முயன்று பின்னர் வீசினான் முன்னுறப் பெயர்ந்தெழும் வலத்தில் உன்னி வீசினா லிடம்பட வுருத்தெழு மிடத்தின் மன்னி வீசினால் வலத்தெழு மகரவே றதுதான். (இ-ள்.) மகர ஏறு - அச்சுறாமீன், முன்னர் வீசினால் பின்னுற முளைத்து எழும் - முன்னே வலை வீசினால் பின்னே தோன்றி மேலெழும்; முயன்று பின்னர் வீசினால் - முயன்று பின்னே அவ்வலையினை வீசினால், பெயர்ந்து முன்னுற எழும் - (அப்பின்னிடத்து நின்றும்) போய் முன்னே எழும்; வலத்தில் உன்னி வீசினால் - வலப்புறத்தில் (அது இருக்குமிடம்) அறிந்து வீசினால், இடம்பட உருத்து எழும் - இடப்புறத்தின்கண் சினந்து மேலெழும் இடத்தில் மன்னி வீசினால் - இடப்புறத்தில் பொருந்த வீசினால், வலத்து எழும் - வலப்புறத்தில் மேலே எழும். மன்னி என்பதனை மன்ன வெனத் திரிக்க. சுறவின் ஆண் ஏறெனப் படுதலை, “ கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே” என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தானறிக. அது, பகுதிப் பொருள் விகுதி. தான். அசை. (39) எறிவ லைப்படு மகமலர்ந் தீர்ப்பவ னுள்ளம் மறுத லைப்பட வலையினும் வழீஇப்பொரு ளாசை நெறிம லர்க்குழ னல்லவர் நினைவென நினைவுற் றறிப வர்க்கரி தாம்பரம் பொருளென வகலும். (இ-ள்.) எறி வலைப்படும் - வீசிய வலையின் கண் அகப்படும்; அகமலர்ந்து ஈர்ப்பவன் உள்ளம் மறுதலைப்பட - (அகப்பட்டதென) மனமகிழ்ந்து இழுப்பவனுடைய உள்ளம் வருந்த, வலையிலும் வழீஇ- அவ்வலையினின்றும் வழுவி, பொருள் ஆசை நெறிமலர்க்குழல் நல்லவர் நினைவு என - பொருளாசை மிக்க நெறித்த மலரணிந்த கூந்தலையுடைய விலைமகளிர் நினைவுபோலவும், நினைவுற்று அறிபவர்க்கு அரிதாம் பரம்பொருள் என - சிந்தித்து அறிபவர்க்கு அறிதற்கரிய சிவபரம் பொருள்போலவும், அகலும் - நீங்கும். மறுதலைப்பட - மகிழ்ச்சிக்கு மாறாக; துன்பமுண்டாக. வலையினும் - வ'e7çலயினின்றும், விலைமகளிர் மனம் ஒருவழி நில்லாமைபோல ஓரிடத்து நில்லாமையாலும், ஆன்மபோதத்தால் அறிவேமென முயல்வார்க்குப் பரம்பொருள் அறியப்படாத கலுதல்போல அகப்படாது நீங்குதலாலும் பொதுமகளிர் நினை வெனவும் பரம்பொருளெனவும் அகலும் என்றார். பரம்பொருள் ஆன்மபோதத்தால் காணப்படுவதன்றென்பதனை, “ தன்னறி வதனாற் காணுந் தன்மைய னல்ல னீசன்” என்னும் சிவஞான சித்தியால் அறிக. (40) ஏவ லாளரோ டின்னவா றின்னமீன் படுத்தற் காவ தாந்தொழி லியற்றவு மகப்படா தாக யாவ ரேயிது படுப்பவ ரென்றிருங் கானற் காவ லாளனும் பரதருங் கலங்கஞ ருழந்தார். (இ-ள்.)ஏவலாளரோடு இன்னவாறு - ஏவலாளருடன் இங்ஙனம், இன்ன மீன் படுத்தற்கு ஆவது ஆம் தொழில் இயற்றவும்- இந்த மீனைப் பிடிப்பதற்கு ஆவது ஆம் தொழில் இயற்றவும் - இந்த மீனைப் பிடிப்பதற்கு உரிய தொழிலைச் செய்யவும், அகப்படாதாக - அஃது அகப்படாதாக, யாவரே இது படுப்பவர் என்று - இனி யாவரே இதனைப் பிடிக்க வல்லார் என்று கருதி, இருங் கானல் காவலாளனும் - பெரிய நெய்தனிலத்தலைவனும், பரதரும் கலங்கு அஞர் உழந்தார் - பரதவரும் பெருந்துன்பத்தால் வருந்தினார்கள். ஆவதாம் தொழில் - பொருந்திய வினை. கலங்கு அஞர் - நெஞ்சு கலங்குந் துன்பம். (41) சங்க லம்புதண் டுறைகெழு நாடனிச் சலதித் துங்க மந்தர மெனக்கிடந் தலமருஞ் சுறவை இங்க ணைந்தெவன்1 பிடிப்பவ னவனியா னீன்ற மங்கை மங்கலக் கிழானென மனம்வலித் திருந்தான். (இ-ள்.) சங்கு அலம்பு தண்துறை கெழுநாடன் - சங்குகள் ஒலிக்கும் குளிர்ந்த நீர்த்துறைகள் பொருந்திய கடல் நாடன், இச்சலதி - இக் கடலின்கண், துங்க மந்தரம் எனக் கிடந்து அலமரு சுறவை - வலிமிக்க மந்தரமலைபோலக் கிடந்து கலக்கும் சுறாமீனை, இங்கு அணைந்து எவன் பிடிப்பவன் - இங்கு வந்து பிடிப்பவன் எவனோ, அவன் யான் ஈன்ற மங்கை மங்கலக்கிழான் என - அவனே யான் பெற்ற மங்கையின் மணவிழாவுக்கு உரியவன் என்று, மனம் வலித்திருந்தான் - உறுதிகொண்டிருந்தான். கிழான் - உரியவன். வலித்தல் - உறுதியாக எண்ணுதல்.(42) நந்தி நாதனு மினையனா யங்கய னாட்டத் திந்து வாணுத லாளுமங் கனையளா யிருப்பத் தந்தி நாலிரண் டேந்திய தபனிய விமானத் துந்து நீர்ச்சடை யார்மண முன்னினார் மன்னோ. (இ-ள்.) நந்திநாதனும் இனையனாய் - திருநந்திதேவும் இத் தன்மையனாயும், அங்கயல் நாட்டத்து - அழகிய கயல்போலும் கண்களையும், இந்துவாள் நுதலாளும் - பிறைபோன்ற ஒள்ளிய நெற்றியையும் உடைய தேவியும், அங்கு அனையளாய் இருப்ப - அங்கு அத்தன்மையளாயும் இருக்க, நாலிரண்டு தந்தி ஏந்திய - எட்டு யானைகள் தாங்கிய, தபனிய விமானத்து - பொன்விமானத்தின்கண் எழுந்தருளிய, உந்துநீர்ச்சடையார் - தாவுகின்ற கங்கையை யணிந்த சடையையுடைய சோமசுந்தரக்கடவுள், மணம் உன்னினார் - திருமணத்தினைத் திருவுளம் கொண்டருளினர். மன், ஓ : அசைகள். (43) உயர்ந்த சாதியுந் தம்மினு மிழிந்தவென் றுன்னிக் கயந்த நெஞ்சுடை வலைக்குலக் கன்னியை வேட்பான் வியந்து கேட்பதெவ் வாறவர் வெறுக்குமுன் னவருக் கியைந்த மீன்வலை யுருவெடுத் தேகுது மென்னா. (இ-ள்.) உயர்ந்த சாதியும் - உயர்ந்த மரபுகளும், தம்மினும் இழிந்த என்று உன்னி - தங்கள் மரபினும் தாழ்ந்தனவே என்று கருதி, கயந்தநெஞ்சுடை வலைக்குலக்கன்னியை - பெருமையமைந்த உள்ளத்தையுடைய வலைக்குலத்துத் தோன்றிய அம்மையை, வேட்பான் வியந்து கேட்பது எவ்வாறு - மணக்கும் பொருட்டு மேன்மை கூறிக் கேட்பது எங்ஙனம், அவர் வெறுக்குமுன் - அங்ஙனம் கேட்டு அவர் வெறுத்து இல்லையென்பதற்கு முன்னரே, அவருக்கு இயைந்த மீன் வலை உரு எடுத்து ஏகுதும் என்னா - அவருக்குப் பொருந்திய மீன் பிடிக்கும் வலைஞன் உருவினை எடுத்துப் போவோம் என்று கருதி. கயந்த, கய என்னும் உரியடியாகப் பிறந்த பெயரெச்சம்; கய பெருமையாதலை, “ தடவும் கயவும் நளியும் பெருமை” என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தாலறிக; இனி, கசந்த என்பதன் போலியாகக் கொண்டு, பிற குலங்களை, வெறுத்த என்றுரைத் தலுமாம். வேட்பான் : வினையெச்சம், வலை - வலைஞன். (44) [அறுசீரடியாசிரிய விருத்தம்] கருகிருண் முகந்தா லன்ன கச்சினன் கச்சோ டார்த்த சுரிகையன் றோண்மே லிட்ட துகிலினன் குஞ்சி சூட்டும்1 முருகு கொப் பளிக்கு2 நெய்தற் கண்ணியன் மூத்த வானோர் இருவரு மறையுந் தேடி யிளைப்பவோர் வலைஞ னானான். (இ-ள்.) கருகு இருள் முகந்தால் அன்ன கச்சினன் - மிகக் கரிய இருளை முகந்தாலொத்த கச்சினையுடையனாய், கச்சொடு ஆர்த்த சுரிகையன் - அக் கச்சுடன் கட்டிய உடைவாளை யுடையவனாய், தோள்மேல் இட்ட துகிலினன் - தோளின்கண் இட்ட மேலாடையுடையவனாய், குஞ்சி சூட்டும் - மயிரின்கண் சூட்டிய, முருகு கொப் பளிக்கும் நெய்தற்கண்ணியன் - தேன் கொப்பளிக்கும் நெய்தல் மாலையையுடையவனாய், மூத்த வானோர் இருவரும் மறையும் தேடி இளைப்ப - தேவர்களில் மூத்தவராகிய திருமாலும் பிரமனுமாகிய இருவரும் மறைகளும் தேடிக் காணாது இளைக்க, ஓர் வலைஞன் ஆனான் - ஒரு வலைமகன் வடிவங் கொண்டருளினன். கச்சினன் முதலிய குறிப்பு முற்றுக்கள் வினையெச்சமாயின. மூத்த - பெருமையுடைய என்றுமாம். (45) முழுதுல கீன்ற சேற்கண் முதல்வியை யருளி லார்போல் இழிதொழில் வலைமா தாகச் சபித்தவா றென்னே யென்றும் பழிபடு சாப மேறார் பரதராய் வரவும் வேண்டிற் றழகிது நன்று நன்றெம் மாலவா யடிகள் செய்கை. (இ-ள்.) உலகு முழுது ஈன்ற சேல்கண் முதல்வியை - உலக மனைத்தையும் பெற்றருளிய அங்கயற்கண்ணம்மையை, அருளிலார் போல் - அருளில்லாதவர் போல, இழிதொழில் வலைமாது ஆகச் சபித்தவாறு என்னே - இழிந்த தொழிலையுடைய வலைக்குலக்கன்னி ஆகுமாறு சபித்த காரணம் யாதோ (அங்ஙனம் சபித்ததால்), என்றும் பழிபடு சாபம் ஏறார் - எஞ்ஞான்றும் பழிபொருந்திய சாபம் ஏற்காத தாம், பரதராய் வரவும் வேண்டிற்ற - ஒரு வலைஞராக வரவும் வேண்டியதாயிற்று; எம் ஆலவாய் அடிகள் செய்கை - எமது ஆலவாயின்கண் எழுந்தருளிய ஆண்டவன் செய்கை, நன்று நன்று அழகிது - நன்று நன்று அழகாயிருந்தது. ஏனைத் தேவரெல்லாம் சாபத்தாற் பற்றப்படுவாராதலும், சிவபெருமான் ஒருவரே சாபத்தாற் பற்றப்படாராதலும் உணர்த்துவார் ‘பழிபடு சாபமேறார்’என்றார்; “ சங்கையின் முனிவர் யாருஞ் சாற்றிய சாபம் யாவும் எங்கடம் பெருமான் முன்னு மெய்திய தில்லை யன்னோர் அங்கவன் றன்பா லுய்க்கு மளவையி லிறதிநாளிற் பொங்கெரி யதன்மேற் செல்லும் பூனைபோன் மாய்ந்த வன்றே”” என்னும் கந்தபுராணம் - ததீசியுத்தரப்படலச் செய்யுள் காண்க. செய்கை - விளையாட்டு, அழகிது நன்று நன்று என்பன வியப்பின் கண் வந்தன. இது கவிக்கூற்று. (46) தன்பெருங் கணத்து ளானோர் தலைவனுஞ் சலதி வாணன் என்பது தோன்ற வேட மெடுத்தெறி வலைதோ ளிட்டு வென்புற மலைப்பக் காவி மீனிடு குடம்பை தாங்கிப் பின்புற நடந்து செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான். (இ-ள்.) தன்பெருங் கணத்துளான் ஓர் தலைவனும் - தனது சிவகணத்துள் தலைவனாயுள்ள ஒருவனும், சல திவாணன் என்பது தோன்ற வேடம் எடுத்து - நெய்தனில வாழ்க்கையான் என்பது தோன்ற அவ்வுருக்கொண்டு, எறிவலைதோள் இட்டு - வீசும் வலையைத் தோளின் கண் இட்டு, வென்புறம் அ'e7çலப்ப - முதுகின் புறத்தை அலைக்க, மீன் இடு குடம்பை காவீ தாங்கி - மீன் இடும் கூட்டினைத் தொடுத்துத் தாங்கி, பின்புறம் நடந்து செல்ல - பின்புறமாக நடந்துவர, பெருந் துறைப்பாக்கம் புக்கான் - பெரிய கடற்றுறையிலுள்ள பாக்கத்தை அடைந்தனன். காவுதல் - தண்டின் இருபுறத்தும் தொடுத்தல். (47) கழித்தலைக் கண்டற் காடுங் கைதையங் கானு நெய்தற் சுழித்தலை கிடங்கு1 நீத்துச் சுஃறெனுந் தோட்டுப் பெண்ணை வழித்தலை சுமந்து வார்கள் வார்ப்பவர் யங்காந் தாம்பல் குழித்தலை மலர்பூங் கானற் கொடுவலைச் சேரி சேர்ந்தான்2. (இ-ள்.) கழித்தலைக் கண்டல் காடும் கைதையம் கானும் - கழியின்கண் உள்ள முள்ளிக்காட்டினையும் தாழைக்காட்டினையும், நெய்தல் சுழித்து அலை கிடங்கும் நீத்தும் - நெய்தன் மலரைச் சுழித்து அலைக்குங் கிடங்குகளையும் கடந்து, சுஃறெனும் தோட்டுப் பெண்ணை - சுஃறென்று ஒலிக்கும் மடலையுடைய பனையானது, வழி - வழியின்கண் நின்ற, வார் கள் தலை சுமந்து வார்ப்ப - ஒழுகுங் கள்ளினைத் தலையின்கண் சுமந்து வார்க்க, குழித்தலை - குழியின் கண், ஆம்பல்வாய் அங்காந்து மலர் - ஆம்பல் வாய் திறந்து மலரும், பூங்கானல் கொடு வலைச்சேரி சேர்ந்தான் - அழகிய சோலைகள் சூழ்ந்த நுளைச்சேரியை அடைந்தான். கண்டல் - கடல் முள்ளிச்செடி; கண்டலைச் செந்தாழை என்றும், கைதையை வெண்டாழை என்றும் கூறுவாருமுளர். சுஃறெனும், ஒலிக்குறிப்பு. பெண்ணை கள்வார்ப்ப ஆம்பல் வாயங்காந்து மலரும் என்ற வருணனையால் அச்சேரியிலுள்ளார் கள்ளுண்டல் குறிக்கப்பட்டது. கொடுவலை - வளைந்த முடிகளையுடைய வலை; கொடுமையுடைய சேரியுமாம். (48) பெருந்தகை யமுதன் னாளைப் பெறாதுபெற் றெடுப்பா னோற்ற அருந்தவ வலைஞர் வேந்த னதிசய மகத்துட் டோன்ற வருந்தகை யுடைய காளை வலைமகன் வரவு நோக்கித் திருந்தழ குடைய நம்பி யாரைநீ செப்பு கென்றான். (இ-ள்.) பெருந்தகை அமுது அன்னாளை - பெருந்தகைமை வாய்ந்த அமுதம் போலும் உமையம்மையை, பெறாது பெற்றெடுப்பான் நோற்ற அருந்தவ வலைஞர் வேந்தன் - பெறாது பெறுதற்குச் செய்த அரிய தவத்தினையுடைய வலைஞர் மன்னன், அகத்துள் அதிசயம் தோன்ற வரும் - மனத்தின்கண் ஒரு வியப்புத் தோன்று மாறு வருகின்ற கதகை உடைய காளை வலைமகன் வரவு நோக்கி - தகுதியையுடைய காளைப்பருவமுடைய வலைமகனது வருகையைப் பார்த்து, திருந்து அழகு உடைய நம்பி - திருந்திய அழகினையுடைய நம்பி, நீ யார் செப்புக என்றான் - நீ யார் கூறுவாயாக என்று வினவினன். எடுப்பான்: வினையெச்சம். அதிசயம் அகத்துட்டோன்ற நோக்கி என்றுமாம். நம்பி - ஆணிற் சிறந்தவன். யாரை, ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது. செப்புகென்றான், அகரம் தொகுத்தல். (49) சந்தநான் மறைக டேறாத் தனியொரு வடிவாய்த் தோன்றி வந்தமீன் கொலைஞன் கூறு மதுரையில் வலைஞர்க்கெல்லாந் தந்தைபோற் சிறந்து ளானோர் தனிவலை யுழவ னல்ல மைந்தன்யான் படைத்துக் காத்துத் துடைக்கவும் வல்லனாவேன். (இ-ள்.) சந்த நான் மறைகள் தேறாத் தனி ஒரு வடிவாய்த் தோன்றி வந்த - சந்தமமைந்த நான்கு மறைகளும் அறியாத ஒப்பற்ற ஒரு வடிவமாய்த்தோன்றி வந்தருளிய, மீன் கொலைஞன் கூறும் - மீன்கொலைபுரியும் வலைஞன் கூறுவான்; மதுரையில் வலைஞர்க்கு எல்லாம் - மதுரையின்கண் வலைஞர் அனைவருக்கும், தந்தைபோல் சிறந்துள்ள ஓர் தனிவலை உழவன் - தந்தைபோன்று மேம்பட்டான் ஆகிய ஒரு ஒப்பற்ற வலையுழவனது, நல்ல மைந்தன் யான் - நல்லபுதல்வன் யான்; படைத்துக் காத்து துடைக்கவும் வல்லன் ஆவேன் - ஆக்கி அளித்து அழிக்கவும் வல்லனாவேன். சந்தம் - பண். வலையுழவன் - வலையால் உழுதுண்பான்; வாழ்க்கை நடாத்துதற்குரிய எல்லாத்தொழில்களையும் உழவாகச் சார்த்திக் கூறுதல் வழக்கு. தான் இறைவனாதற் கேற்ப முத்தொழிலும் வல்லன் எனவும், வலைஞனாக வந்தமைக்கேற்ப மீன்படுத்து வைத்து விற்க வல்லன் எனவும் கவர் பொருள் படக் கூறினன் என்க; கடல் வாணனாகையால் கடற்குரிய முத்தொழிற்குணமும் தனக்குளவென்பது தோன்றக் கூறினான் எனலுமாம். (50) அல்லது வான்மீ னெல்லா மகப்பட வலைகொண் டோச்ச வல்லவ னாவே னென்ன மற்றிவன் வலைஞன் கோலம் புல்லிய மகன்கொன் முன்னம் புகன்றசொல் வொன்றிப் போது சொல்லிய தோன்றி ரண்டுஞ் சோதனை காண்டு மென்னா. (இ-ள்.) அல்லது - அன்றியும், வான்மீன் எல்லாம் அகப்பட- பெரிய மீன் களனைத்தும் அகப்படுமாறு, வலைகொண்டு ஓச்சவல்லவன் ஆவேன் என்ன - வலைகொண்டு எறிவதிலும் வல்லவனாவேனென்று கூற, இவன் வலைஞர் கோலம் புல்லிய மகன்கொல் - இவன் (உண்மை வலைஞனன்றி) வலைஞர் வடிவெடுத்து வந்த மகனோ, முன்னம் புகன்ற சொல் ஒன்று - முன் கூறிய சொல்ஒன்று; இப்போது சொல்லியது ஒன்று - இப்பொழுது சொன்னசொல் ஒன்று; இரண்டும் சோதனை காண்டும் என்னா - இவ்விரண்டையுஞ் சோதித்துக் காண்போமென்று கருதி. தனது வரம்பிலாற்றலுடைமை தோன்ற விண்மீன்களெல்லாம் அகப்பட வலை வீசுவேன் எனவும், வலைஞனாக வந்தமைக் கேற்பப் பெரிய மீன்களெல்லாம் அகப்பட வலை வீசுவேன் எனவும் கவர் பொருள்படக் கூறினன் என்க. மகன் என்றது ஆடவன் என்னும் துணையாய் நின்றது. முன்னம் புகன்ற சொல் வலையுழவன் மைந்தன் என்றது. இப்போது சொல்லிய சொல் படைத்துக் காத்துத் துடைக்கவும் வல்லேன், வான்மீனெல்லாம் அகப்படுத்தவும் வல்லேன் என்றது. (51) தொண்டுறை மனத்துக் கானற் றுறைமக னஃதே லிந்தத் தண்டுறை யிடத்தோர் வன்மீன் றழலெனக் கரந்து சீற்றங் கொண்டுறை கின்ற தைய குறித்தது பிடித்தி யேலென் வண்டுறை கோதை மாதை மணஞ்செய்து தருவே னென்றான். (இ-ள்.) தொண்டு உறை மனத்து - திருத்தொண்டு உறைந்த மனத்தினையுடைய, கானல் துறைமகன் - அந்நெய்தனிலத் தலைவன், அஃதேல் - அங்ஙனமாயின், இந்தத் தண்துறை இடத்து- இந்தக் குளிர்ந்த துறையின்கண், ஓர் வான் மீன் - ஒரு வலிய மீன், தழல் எனக் கரந்து - வடவைக்கனல் மறைந்திருக்குமாறுபோல மறைந்து, சீற்றம் கொண்டு உறைகின்றது - சினத்தினை மேற்கொண்டு வசிக்கின்றது; ஐய - ஐயனே, அது குறித்துப் பிடித்தியேல் - அதனைக் குறிவைத்து (தவறாது) பிடிக்கவல்லையேல், என் வண்டு உறைகோதை மாதை - என் புதல்வியாகிய வண்டுகள் உறையுங் கூந்தலையுடைய மாதினை, மணஞ்செய்து தருவேன் என்றான் - மணஞ்செய்து கொடுப்பேனென்று கூறினன். (52) அஃதேல் - நீ அங்ஙனம் வல்லையாயின். சிங்கவே றனையான் காலிற் சென்னடைப் படகிற் பாய்ந்து சங்கெறி தரங்கந் தட்பத் தடங்கடல் கிழித்துப் போகிக் கிங்கர னான காளை வரையெனக் கிளைத்த தோண்மேற் றொங்கலிற் கிடந்து ஞான்ற தொகுமணி வலையை வாங்கி. (இ-ள்.) சிங்க ஏறு அனையான் - ஆண் சிங்கத்தையொத்த அவ்வலைஞனாகிய இறைவன், காலில் செல் நடைப்படகில் பாய்ந்து - காற்றைப் போலச் செல்லும் செலவினையுடைய படகின்கண் பாய்ந்து, சங்கு எறிதரங்கம் தட்ப - சங்குகளை வீசும் அலைகள் மேலெழுந்து தடுக்கவும், தடங்கடல் கிழித்துப்போகி - பெரிய கடலைக் கிழித்துக் கொண்டு சென்று, கிங்கரனான காளை - பணி செய்வோனாகிய காளை போன்ற சிவகணத் தலைவனது, வரை எனக் கிளைத்த தோள்மேல் - மலைபோலக் கிளைத்த தோளின்மேல், தொங்கலில் கிடந்து ஞான்ற - மாலைபோலக் கிடந்து அசையும், மணி தொகு வலையை வாங்கி - (விளிம்பிற் கோத்த) ஈயமணிகள் நெருங்கிய வ'e7çலயினை வாங்கி. கிங்கரன் - ஏவல் செய்வோன். (53) செவ்விதி னோக்கி யாகந் திருகநின் றெறிந்தான் பக்கங் கெளவிய மணிவில் வீச விசையொலி கறங்கிப் பாயப் பைவிரித் துயிர்த்து நாகம் விழுங்கவாய்ப் பட்ட மீன்போல் வெவ்வினைச் சுறவே றையன் விடுவலைப் பட்ட தன்றே. (இ-ள்.) செவ்விதின் நோக்கி - (மீன் இருக்குமிடத்தினைத் தப்பாமற் பார்த்து, ஆகம் திருக நின்று - உடல் திருக நின்று, பக்கம் கெளவிய மணிவில் வீச - விளிம்பிற் பொருந்திய மணிகள் ஒளி வீசவும், விசை ஒலி கறங்கிப்பாய எறிந்தான் - வீசிய வேகத் தாலுண்டாகிய ஒலி எங்கும் ஒலித்துப் பரவவும் வீசினன்; பை விரித்து உயிர்த்து நாகம் விழுங்க - படத்தினை விதித்துச் சீறிப் பாம்பானது விழுங்க, வாய்ப்பட்ட மீன்போல் - அதன் வாயில் அகப்பட்ட மீன் போல, வெவ்வினைச் சுறவு ஏறு - கொடுந்தொழிலையுடைய அச் சுறாமீன், ஐயன் விடுவலைப் பட்டது - இறைவன் வீசிய வலையின்கண் அகப்பட்டது. ஆகம் திருக நிற்றல் - வைசாசம், மண்டிலம் முதலிய நிலை வகையுள் அடங்கும். மணிவில் வீசலாலும் விசையொலி கறங்கின மையாலும் அவ்வலை பை விரித்துயிர்த்த நாகம்போன்றது. அன்று, ஏ அசைகள். (54) மாசறு கேளி ரன்பின் வலைப்படு வலைஞர் கோன்றாய்1 வீசிய வலையிற் பட்ட மீனினைச் சுருக்கி வாங்கிக் காசெறி தரங்க முந்நீர்க் கரையிடை யிட்டான் கள்வாய் மூசுதே னென்ன வார்த்து மொய்த்தன பரதச் சாதி. (இ-ள்.) மாசு அறு கேளிர் அன்பின் வலைப்படு வலைஞர் கோன் - குற்றமற்ற அடியார்களது அன்பாகிய வலையின்கண் அகப் படும் வலைஞர் தலைவன், தாய் வீசிய வலையில் பட்ட மீனினை - தாவி வீசிய வலையின்கண் அகப்பட்ட மீனை, சுருக்கி வாங்கி - சுருக்கி இழுத்து, காசு அறி தரங்க முந்நீர்க் கரையிடை இட்டான் - மணிகளை வீசும் அலைகளையுடைய கடலினது கரையின்கண் போட்டான்; கள் வாய் மூசு தேன் என்ன - கள்ளினிடத்து மொய்த்த வண்டுகள்போல, பரதச்சாதி ஆர்த்து மொய்த்தன - வலைஞர் மரபினர் ஆரவாரித்து மொய்த்தனர். இறைவர்க்குக் கேளிராவார் அடியாரென்க. அன்பு வலையிலகப்படுதலை, “ பத்திவலையிற் படுவோன் காண்க” என்னும் திருவாசகத்தாலறிக. தாய், தாவி என்பதன் விகாரம். இறைவன் இங்ஙனம் கானவனாகி மீன்வலை வீசிய திருவிளை யாட்டை, “ அணிமுடி யாதி யமரர் கோமா னானந்தக் கூத்த னறுசமயம் பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப் பிணிகெட நல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன் பெண்பாலுகந்து மணிவலை கொண்டு வான்மீன்விசிறும் வகையறி வாரெம் பிரானாவாரே”” என எடுத்தேத்தும் திருவாசகம். (55) கிளையுநங் கோனும் வீசு வலைஞராய்க் கிளர்தோ ளாற்றல் விளைவொடு முயன்று பன்னாள் வினைசெயப் படாத மீனிவ் விளையவ னொருவன் றானே யொருவிசை யெறிந்தா னீர்த்தான் அளியநங் குலத்தோர் தெய்வ மகனிவ னாகு மென்றார். (இ-ள்.) நம் கோனும் கிளையும் - நம் மன்னனும் அவன் சுற்றத் தாரும், வீசு வலைஞராய் - வீசுகின்ற வலையினையுடையராய், கிளர்தோள் ஆற்றல் விளைவொடு - விளங்குகின்ற தோள்வன்மையின் கிளர்ச்சியொடு, பன்னாள் முயன்று வினைசெயப் படாத மீன் - பல நாட்கள் வரையில் முயன்று வீசியும் அகப்படாத மீனினை, இவ்விளையவன் ஒருவன் தானே - இவ்விளைஞன் ஒருவனே, ஒரு விசை எறிந்தான் ஈர்த்தான் - ஒருமுறை வலையினை வீசிச் சுருக்கி இழுத்துக் கரையிலிட்டான்; இவன் நம் குலத்து அளிய ஓர் தெய்வமகன் ஆகும் என்றார் - இவன் நமது குலத்திற்குரிய அருளையுடைய ஒரு தெய்வ மகனாவான் என்று கூறினார். எறிந்தான், முற்றெச்சம். அளிய - அருளுடைய. (56) கைதைசூழ் துறைவ னோகை கைமிகப் பம்பை யேங்க நொய்தெனு நுசுப்பிற் கள்வாய் நுளைச்சியர் குரவை தூங்கப் பைதழை பகுவாய்க் கச்சைப் பரதவற் கலங்கன் ஞாழல்1 செய்தபூங் கோதை மாதைத் திருமணம் புணர்த்தி னானே. (இ-ள்.) கைதைசூழ் துறைவன் - தாழை சூழ்ந்த நெய்தனிலத் தலைவன், ஓகை கைமிக - மகிழ்ச்சி மிக்கோங்க, பம்பை ஏங்க - நெய்தனிலப்பறை ஒலிக்கவும், நொய்து எனும் நுசுப்பில் - நுண்ணியது என்று சொல்லப்படும் இடையினையும், கள்வாய் - கள்ளுண்ட வாயினையுமுடைய, நுளைச்சியர் குரவை தூங்க - நுளைச்சியர் குரவைக் கூத்தாடவும், பைதழை பகுவாய்க் கச்சைப் பரதவற்கு - படம் விரிந்த பிளந்த வாயையுடைய பாம்பாகிய கச்சினையுடைய வலைஞர் பெருமானுக்கு, ஞாழல் செய்த அலங்கல் கோதைமாதை - புலிநகக் கொன்றை மலராற் றொடுத்த பொலிவுமிகும் மாலையையணிந்த கூந்தலையுடைய தன் புதல்வியை, திருமணம் புணர்த்தினான் - திருமணம் செய்வித்தான். குரவை - கைகோத்தாடும் கூத்து. பகுவாய் - பிளந்த வாயை யுடையது: பாம்பு. ஞாழற் செய்தபூ அலங்கல் என மாறுக. (57) அந்நிலை வதுவைக் கோல மாயின மருக னாரும் மின்லை வேற்க ணாளும் விண்ணிடை விடைமேற் கொண்டு தந்நிலை வடிவாய்த் தோன்றத் தடங்கரை மீனந் தானும் நன்னிலை வடிவே போன்று நந்தியாய் முந்தித் தோன்ற. (இ-ள்.) அந்நிலை - அப்பொழுது. வதுவைக்கோலம் ஆயின மருகனாரும் - மணக்கோலம் பூண்ட மருகனாரும், மின் இலைவேல்கணாளும் - ஒளியினையுடைய தகட்டுவடிவமைந்த வேல்போன்ற கண்களுடைய புதல்வியாரும், விண்ணிடை விடை மேற்கொண்டு- வானின் கண் இடபவூர்தியில் ஏறியருளி, தம் நிலை வடிவாய்த் தோன்ற - தமக்கு உரிய சகளத் திருமேனியுடன் தோன்ற, தடம்கரை மீனம் தானும் - பெரிய கடற்கரையிற் கிடந்த மீனும், நன்நிலை வடிவே போன்று - முன்னுள்ள நல்லவடிவமே போல, நந்தியாய் முந்தித் தோன்ற - திருநந்தி தேவராகித் திருமுன் முற்பட்டுத் தோன்ற. வடிவேபோன்று - வடிவேயாகி. (58) கொற்றவெள் விடைமேற் காட்சி கொடுத்தவர் கருணை நாட்டம் பெற்றலின் மேலைச் சார்பாற் பிணித்தவிப் பிறவி யாக்கைச்1 சிற்றறி வொழிந்து முந்நீர்ச் சேர்ப்பனல் லறிவு தோன்றப் பொற்றனு மேரு வீரன் பூங்கழ லடிக்கீழ்த் தாழ்ந்தான். (இ-ள்.) கொற்றம் வெள் விடைமேல் காட்சி கொடுத்தவர் - (அங்ஙனம்) வெற்றிபொருந்திய வெள்ளிய இடபவூர்தியிற் காட்சி கொடுத்த அவ்விறைவரது, கருணை நாட்டம் பெற்றலின் - அருட் பார்வையைப் பெற்றதனால், முந்நீர்ச் சேர்ப்பன் - கடற்றுறையினையுடைய நெய்தனிலத்தலைவன், மேலைச்சார்பால் பிணித்த- முன்வினைச் சார்பினாற் பந்தித்த. இப்பிறவியாக்கைச் சிற்றறிவு ஒழிந்து - இப்பிறவியின் சிற்றறிவு நீங்கி, நல் அறிவு தோன்ற - நல்லுணர்வு தோன்றா நிற்க. பொன் மேரு தனு வீரன் - பொன்மேருவை வில்லாக வளைத்த வீரனாகிய அவ்விறைவனது, பூங்கழல் அடிக்கீழ்த் தாழ்ந்தான் - அழகிய வீரக் கழலணிந்த திருவடியின்கீழ் வீழ்ந்து வணங்கினான். இறைவர் கருணை நாட்டத்தால் பிறவிச்சார்பு அகலுதலை, “ அங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்தித் தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல” என்னும் பெரிய புராணச் செய்யுளானுமறிக. (59) இரக்கமி லிழிந்த யாக்கை யெடுத்துழ லேழை யேனைப் புரக்கவின் றென்போல் வந்த புண்ணிய வடிவம் போற்றி அரக்கெறி பவளச் செவ்வா யணங்கினை மணந்தென் பாசங் கரக்கவெள் விடைமே னின்ற கருணையே போற்றி யென்றான். (இ-ள்.) இரக்கம் இல் இழிந்த யாக்கை எடுத்து - (உயிர்களின் மாட்டு) அருளில்லாத இழிந்த உடலை எடுத்து, உழல் ஏழையேனை - வருந்தும் அறிவிலியாகிய என்னை, இன்று புரக்க - இன்று காத்தற் பொருட்டு, என்போல் வந்த புண்ணிய வடிவம் போற்றி - என்னைப் போலவே உருவெடுத்து வந்த அருளுருவே வணக்கம்; அரக்கு எறிபவளச் செவ்வாய் அணங்கினை மணந்து - செவ்வொளி வீசும் பவளம் போன்ற சிவந்த வாயினை யுடைய அம்மையைத் திருமணம் புரிந்து, என் பாசம் கரக்க - எனது பாசம் ஒழியுமாறு, வெள்விடைமேல் நின்ற கருணையே போற்றி என்றான் - வெள்ளிய இடபவூர்தியின்மேல் நின்று காட்சி கொடுத்தருளிய கருணையே வணக்கம் என்று கூறித் துதித்தனன். அரக்கு - செந்நிறம். (60) அகவிலான் பரவி நின்ற வன்பனை நோக்கிப் பன்னாள் மகவிலா வருத்த1 நோக்கி யுமையைநா மகளாத் தந்து தகவினான் மணந்தே நீயித் தரணியிற் றனத னென்ன நகவிலாப் போக மூழ்கி நம்முல கடைவா யென்ன. (இ-ள்.) அக இலான் - அடியார்களின் மனமாகிய கோயிலை யுடைய இறைவன், பரவி நின்ற அன்பனை நோக்கி - அங்ஙனம் துதித்து நின்ற அன்பனைப் பார்த்து, பன்னாள் மகவு இலா வருத்தம் நோக்கி - பலநாட்கள் வரை மகப்பேறின்மையாகிய நின் துன்பத்தினைக் கண்டு, நாம் உமையை மகளாகத் தந்து - நாம் உமாதேவியை நினக்குப் புதல்வியாகத் தந்து, தகவினால் மணந்தேம் - முறைப்படி வந்து மணந்து கொண்டோம்; நீ இத்தரணியில் - நீ இந்நிலவுலகின்கண் இருந்து, தனதன் என்ன நகவு இலாப் போகம் மூழ்கி - குபேரனைப் போன்று இகழ்ச்சியில்லாத போகத்திலழுந்தி, நம் உலகு அடைவாய் என்ன - (இறுதியில்) நமது சிவலோகத்தை அடைவாயாக என்று. அகம் - உள்ளம். தகவினால் - மரபுக்கேற்ற முறைமையால். நகவு - நகுதல்; எள்ளுதல். (61) பெண்ணினை வதுவைக் கீந்த பெருந்துறைச் சேர்ப்பற் கன்று தண்ணளி சுரந்து நல்கித் தருமமால் விடைமேற் றோன்றி விண்ணிடை நின்றான் சென்றான் வேத்திரப் படையா னோடும் உண்ணிறை யன்ப ரோடு முத்தர கோச மங்கை. (இ-ள்.) பெண்ணினை வதுவைக்கு ஈந்த பெருந்துறைச் சேர்ப் பற்கு - தன் புதல்வியைத் திருமணம் புரிதற்குக் கொடுத்த பெரிய நெய்தற்றுறை யையுடைய சேர்ப்பனுக்கு, அன்று தண் அளிசுரந்து நல்கி - அன்று பேரருள் சுரந்து அளித்தருளி, தருமமால் விடைமேல்- தருமமாகிய பெரிய இடப மூர்த்தியின் மேல், விண்ணிடை தோன்றி நின்றான் - வானின்கண் வெளிப்பட்டு நின்ற இறைவன், வேத்திரப் படையானோடும் - பிரப்பம் படையினையுடைய திருநந்தி தேவரோடும், உள் நிறை அன்பரோடும் உத்தர கோச மங்கை சென்றான் - உள்ளத்தில் நிறைந்த அன்பினையுடைய அடியாரோடும் உத்தரகோசமங்கைக்குச் சென்றருளினான். நின்றான், பெயர். (62) அங்கிருந் தநாதி மூர்த்தி யாதிநான் மறைக ளேத்துங் கொங்கிருங் கமலச் செவ்விக் குரைகழல் வணங்கிக் கேட்பப் பங்கிருந் தவட்கு வேதப் பயனெலாந் திரட்டி முந்நீர்ப் பொங்கிருஞ் சுதைபோ லட்டிப் புகட்டினான் செவிக ளார. (இ-ள்.)அநாதி மூர்த்தி அங்கு இருந்து - அநாதி மூர்த்தியாகிய இறைவன் அத்தலத்தில் அமைந்தருளி, ஆதி நான் மறைகள் ஏத்தும் - பழைய நான்கு மறைகளும் துதிக்கும், கொங்கு இரும் கமலச்செவ்வி - மணமிக்க பெரிய தாமரை மலர்போலுஞ் செவ்வி வாய்ந்த, குரைகழல் வணங்கிக்கேட்ப - ஒலிக்கும் வீரக்கழலணிந்த தன் திருவடிகளை வணங்கிக்கேட்ப, பங்கு இருந்தவட்கு - ஒரு பாகத்தில் வீற்றிருந்த அம்மையார்க்கு, வேதப்பயன் எலாம் திரட்டி- மறைப் பொருள் அனைத்தையும் ஒரு சேரத் திரட்டி, முந்நீர்ப்பொங்கு இருஞ்சுதை போல் அட்டி - கடலிற்றோன்றிய பெருமையமைந்த அமிழ்தைப்போற் சொரிந்து, செவிகள் ஆர புகட்டினான்- செவிகள் நிரம்புமாறு புகட்டியருளினான். அட்டி - சொரிந்து; “ பூக்கையா லட்டி” எனத் தேவாரத்துள் வருதலுங் காண்க. (63) வேறு அவ்வேலை யன்புடையா ரறுபதினா யிரவருக்கு மளித்துப் பாச வெவ்வேலை கடப்பித்து வீடாத பரானந்த வீடு நல்கி மைவேலை யனையவிழி யங்கயற்க ணங்கையொடு மதுரை சார்ந்தான் இவ்வேலை நிலம்புரக்க முடிகவித்துப் பாண்டியனென் றிருந்த மூர்த்தி. (இ-ள்.) இவ்வேலை நிலம்புரக்க - கடல் சூழ்ந்த இந்நிலவுலகைப் புரந்தருள, முடிகவித்துப் பாண்டியன் என்று இருந்த மூர்த்தி - முடிசூடிச் சுந்தர பாண்டியனாக இருந்தருளிய இறைவன், அவ்வேலை - அப்பொழுது, அன்புஉடையார் அறுபதினாயிரவருக்கும் அளித்து - மெய்யன்புடைய அறுபதினாயிரம்அடியார்களுக்கும் அப்பொருளை அறியுறுத்தி, பாச வெவ்வேலை கடப்பித்து - ஆணவமலமாகிய கொடிய கடலைக் கடக்கச் செய்து, வீடாத பரானந்த வீடுநல்கி - அழியாத பேரின்ப வீட்டினை அருளி, மைவேலை அனையவிழி அங்கயற்கண் நங்கையொடும் மதுரை சார்ந்தான் - மை தீட்டிய வேலை ஒத்த விழிகளையுடைய அங்கயற்கண்ணம்மையாரோடும் மதுரையை அடைந்தருளினான். அறுபதினாயிரர் - திருவுத்தர கோசமங்கையில் இருந்த சிவனடியார் களும் சிவயோகிகளும். வீடாத - அழியாத. பரானந்தம் - மேலாகிய ஆனந்தம், சிவானந்தம். (64) ஆகச் செய்யுள் - 2712. ஐம்பத்தெட்டாவது வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் (கொச்சகக்கலிப்பா) கலைவீசு மதிச்சடையோன் கடற்றுறைவன் றலைச்சென்று வ'e7çலவீசி யவன்பாச வலைவீசும் பரிசிதுமேல் அலைவிசும் புனல்வாத வூரரைவந் தவிச்சைவலி நிலைவீசிப் பணிகொண்ட நெறியறிந்த படிமொழிவாம். (இ-ள்.) கலைவீசும் மதிச்சடையோன் - ஒளி வீசும் சந்திரனைத் தரித்த சடையினையுடைய சோமசுந்தரக்கடவுள், கடல் துறைவன் தலைச்சென்று - நெய்தனிலத் தலைவனிடத்துச் சென்று, வலைவீசி - வலையினை வீசி, அவன் பாசவலை வீசும் பரிசு இது - அவனது பாசமாகிய வலையினை அறுத்தருளிய திருவிளையாடல் இது; மேல் - இனி, வந்து - (அவ்விறைவன் குரவனாக)எழுந்தருளி வந்து, அலைவீசும் புனல் வாதவூரரை - அலைகளை வீசும் நீர் சூழ்ந்த திருவாதவூரடிகளை, அவிச்சை வலி நிலைவீசி - (அவரது) ஆணவ மலத்தின் வலியினது தன்மையைக் கெடுத்து, பணிகொண்ட நெறி- ஆட்கொண்டருளிய திருவிளையாடலை, அறிந்தபடி மொழிவாம்- அறிந்தவாறு கூறுவாம். கலைவீசும் என்பதற்குக் கலைகளையிழந்த என்றுரைப் பாருமுளர். பாசவலை வீசும் என்புழி வீசுதல் போக்குதல் என்னும் பொருட்டு. அவிச்சை - அஞ்ஞானம் : ஆணவம். நிலை - ஆன்மாவின் அறிவிச்சை செயல்களை மறைக்குந் தன்மை. அறிதற்கரிதென்பது தோன்ற அறிந்தபடி என்றார். (1) தொடுத்தவறு மையும்பயனுந் தூக்கிவழங் குநர்போல அடுத்தவயல் குளநிரப்பி யறம்பெருக்கி யவனியெலாம் உடுத்தகட லொருவர்க்கு முதவாத வுவரியென மடுத்தறியாப் புனல்வையைக் கரையுளது வாதவூர். (இ-ள்.)தொடுத்த வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர் போல - ஒருவனைப்பற்றிய வறுமையினையும் அவனாற் பிறர்க்கு ஆகும் பயனையும் சீர்தூக்கிக் கொடுப்பார் போல, அடுத்த வயல் குளம் நிரப்பி - அடுத்துள்ள வயல்களையும் குளங்களையும் நிரம்பச் செய்து, அறம் பெருக்கி - (அதனால்) அறத்தினைப் பெருக்கி, அவனி எலாம் உடுத்த கடல் - நிலவுலகு அனைத்தையும் சூழ்ந்த கடலானது, ஒருவர்க்கும் உதவாத உவரி என்ன - ஒருவருக்கேனும் பயன்படாத உவர் நீரையுடையதெனக் கருதி, மடுத்து அறியாப் புனல் வையைக்கரை - அதிற் பாய்ந்தறியாத நீரினையுடைய வையையாற்றினது கரையின்கண் வாதவூர் உளது - திருவாதவூர் என்னும் திருப்பதி உள்ளது. “ வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து”” என்பது வாயுறைவாழ்த்தாகலின் வறியார்க்கே ஈதல்வேண்டும்; அவருள்ளும் பிறர்க்குப் பயன்படுவார்க்கீதல் சிறந்தது. வயலும் குளமும் வறியனவும் பிறர்க்குப் பயன்படுவனவும் ஆகும். அடுத்த - இருமருங்கும் பொருந்திய. கடலுக்கு வறுமையின்மையும் கொள்க. உவரி - உவர் நீர் உடையது; இ : வினைமுதற்பொருள் விகுதி. வையையாறு இயல்பாகக் கடலிற் கலவாமையைக் கடல் வறுமை யின்மையும் பயன்படாமையும் உடையதென அதில் மடுத்தறியா தெனக் கற்பித்துக் கூறினமையால் இது தற்குறிப்பேற்றவணி. இதனால் ஒரு காலத்தில் வையையாறு கடலிற் கலவாதாயிற்றென அறிக. (2) விழவறா நகரெங்கும் விருந்தறா மனையெங்கும் மழவறா மகிழ்வெங்கு மறையறா கிடையெங்கும் முழவறா வரங்கெங்கு முகிலறா பொழிலெங்கும் உழவறா வயலெங்கு முடம்பறா வுயிரென்ன. (இ-ள்.) உடம்பு அறா உயிர் என்ன - உடலினின்றும் நீங்காத உயிர் போல, நகர் எங்கும் விழவு அறா - நகர் முழுதும் திருவிழாக்கள் நீங்கா; மனை எங்கும் விருந்து அறா - இல்லம் அனைத்தினும் விருந்துகள் நீங்கா; கிடை எங்கு மகிழ்வு அறா - யாண்டும் மகிழ்ச்சியைத் தரும் பிள்ளைகள் நீங்கா; எங்கும் மகிழ்வு மழவு அறா - யாண்டும் மகிழ்ச்சியைத் தரும் பிள்ளைகள் நீங்கா; கிடை எங்கும் மறை அறா - பாடசாலைகள் யாவற்றிலும் வேதங்கள் ஒழியா; அரங்கு எங்கும் முழவு அறா - நாடகசாலை எங்கணும் மத்தள ஒலிகள் ஓயா; பொழில் எங்கும் முகில் அறா - சோலைகள் அனைத்திலும் மேகங்கள் நீங்கா; வயல்எங்கும் உழவு அறா - வயல்கள் எல்லா வற்றிலும் உழவுத் தொழில்கள் ஓயா. விருந்து - புதுமை; இஃது ஆகுபெயராய்ப் புதியராய் வந்தாரை உணர்த்திற்று. மழவு - இளமை; இஃது குழவியை உணர்த்திற்று; ‘முருகு’என்பது போல். மறை - வேத மோதல். கிடை - வேதமோதுஞ் சாலை. உடம்பறாவுயிரென்ன என்ற உவமையால் நகர் முதலிய வற்றிற்கு விழவு முதலியன பொலிவு தருதல் பெற்றாம். (3) ஆயவளம் பதியதனி னமாத்தியரி லருமறையின் றூயசிவா கமநெறியின் றுறைவிளங்க வஞ்சனையான் மாயனிடும் புத்தவிரு ளுடைந்தோட வந்தொருவர் சேயவிளம் பரிதியெனச் சிவனருளா லவதரித்தார். (இ-ள்.) ஆயவளம்பதி அதனில் - அங்ஙனமாகிய வளமிக்க அந்நகரின் கண், அமாத்தியரில் - அமர்த்தியர்மரபில், அருமறையின் தூயசிவாகம நெறியின் துறைவிளங்க - அரிய வேத நெறியும் தூய்மையாகிய சிவாகமத்துறையும் விளங்கவும், மாயன்வஞ்சனையால் இடும் புத்த இருள் உடைந்து ஓட - திருமால் தனது வஞ்சனை யினால் இட்ட புத்த இருளானது சிதறி ஓடவும், சேய இளம் பரிதி என - செந்நிறமுடைய இளஞாயிற்றினைப் போல, ஒருவர் வந்து சிவன் அருளால் அவதரித்தார் - ஒருவர் வந்து சிவபெருமான் திருவருளால் அவதரித்தருளினர். வளம்பதி, மெலித்தல். அமாத்தியர் - மறையோரில் அமைச்சுத் தொழில் பூண்டு வரும் ஒரு குடியினர். மறையின் நெறியும் சிவாகமத்தின் துறையும் விளங்கவெனக் கூட்டுக; “ வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க” என ஆளுடைய பிள்ளையாரின் அவதார விசேடங்கூறும் பெரிய புராணச்செய்யுள் இங்கு நோக்கற்பாலது. திரிபுரத்தவுணர் செய்யும் கொடுமைக் காற்றாது இந்திரன் முதலியோர் விண்டுவைச் சரணடைந்து கூற, திருமால் அவர்களின் வெலற்கருந்திறலையுன்னி ஒரு சூழ்ச்சியால் வெல்லக் கருதிப் புத்த சமயத்தை யுண்டாக்கி அவர்கட்குப் போதித்துச் சிவநேயத்தினின்றும் வழுவுமாறு புரிந்தனன் என்பது புராண கதை; “ சாக்கிய குருவின் மாய னாங்கவர் புரத்திற் சார்ந்து கோக்களிற் றுரிவை போர்த்த கொன்றைவே ணியன்மேலன்பு நீக்கியவ் வவுணர் தம்மை நிகழ்த்துபுன் சமயந் தன்னில் ஆக்கிநல் லிலிங்க பூசை யறிவொடு மகற்றி னானே” என்னும் கூர்ம புராணச்செய்யுள் காண்க. இவர் தந்'e7çதயார் பெயர் சம்புபாதாசிருதர் எனவும், தாயார் பெயர் சிவஞானவதியார் எனவும் திருப்பெருந்துறைப் புராணம் கூறும். (4) பேர்வாத வூரரெனப் பெற்றுத்தம் பிறங்குமறைச் சார்வாய நூல்வழியாற் சடங்கெல்லா நிறைவெய்தி நீர்வாய விளமதிபோ னிரம்புவார் வேதமுதற் பார்வாயெண் ணெண்கலையும் பதினாறாண் டினிற்பயின்றார். (இ-ள்.) வாதவூரர் எனப் பேர் பெற்று - திருவாதவூரர் என்னும் பிள்ளைத் திருநாமம் பெற்று, தம் பிறங்கும் மறைச்சார்வு ஆய நூல் வழியால் - தமது விளங்கும் வேதத்தின் சார்பாகிய நூலிற் கூறும் நெறிப்படி, சடங்கு எல்லாம் நிறைவு எய்தி - சடங்குகள் அனைத்தும் நிறைதலைப் பொருந்தி, நீர்வாய இளமதிபோல் நிரம்புவார் - குளிர்ந்த தன்மை வாய்ந்த இளம்பிறை வளர்வது போல வளருமவர், பார்வாய் வேத முதல் எண்ணெண் கலையும் - புவியின்கண் வேதத்தை, முதலாக வுடைய அறுபத்து நான்கு கலைகளையும், பதினாறு ஆண்டினில் பயின்றார் - பதினாறு வயதளவிற் கற்றுணர்ந்தார். மறைச்சார்வாய நூல் - போதாயனீயம் முதலிய கற்ப சூத்திரங்கள். நிறைவெய்தி - நிறைவிக்கப்பெற்று. “ எக்கலையுங் கற்றுணர்ந்தார் ஈரெட்டாண் டெல்லையினில்” என்றார் கடவுண்மா முனிவரும். (5) இத்தகையோர் நிகழ்செய்தி யறிந்தவர்சென் றியம்பவரி மர்த்தன பாண் டியன்கேட்டு வரவழைத்து மற்றவரைச் சித்தமகிழ் 1வரிசையினாற் சிறப்பளித்துத் தன்கோயில் வித்தகநன் மதியமைச்சின் றொழில்பூட்டி மேம்படுத்தான். (இ-ள்.) இத்தகையோர் நிகழ் செய்தி அறிந்தவர் - இப்பெருமையினை யுடையார் ஒருவர் இருக்குஞ் செய்தியை அறிந்த சிலர், சென்று இயம்ப - போய்ச் சொல்ல, அரிமர்த்தன பாண்டியன் கேட்டு - அரிமர்த்தன பாண்டியனென்பான் (அதனைக்) கேட்டு, அவரை வரவழைத்து - அவரைத் தன்பால் வருவித்து, சித்தம் மகிழ் வரிசையினால் சிறப்பு அளித்து - மனமகிழுதற் கேதுவாகிய வரிசை யோடு மேன்மையும் அளித்து, தன் கோயில் வித்தக நன்மதி அமைச்சின் தொழில் பூட்டி - தனது அரமனையின் சதுரப்பா டமைந்த நல்லமதிமிக்க அமைச்சுத் தொழிலையுந் தந்து, மேம்படுத்தான் - சிறப்பித்தான். வரிசை - நவமணிக்கலன், பொன்னாடை முதலிய சீர்சால் கொடை. சிறப்பு என்பதனைத் தென்னவன் பிரமராயன் என்னும் சிறப்புப் பெயரெனக் கொள்ளின் அமைச்சின் தொழில்பூட்டி அவர் திறம்கண்டு, பின் சிறப்பளித்தான் என்னல் வேண்டும். “ தென்னவன் பிரம ராய னென்றருள் சிறந்த நாமம் மன்னவர் மதிக்க நல்கி வையக முய்வ தாக மின்னவ மணிப்பூ ணாடை வெண்மதிக் கவிகை தண்டு பொன்னவிர் கவரி வேழ மளித்தனன் பொருநை நாடன்” என்பது திருவாதவூரடிகள் புராணம். (6) செற்றமிகுங் கருவிகளின் றிறநூலு மனுவேந்தன் சொற்றபெருந் தொன்னூலுந் துளக்கமற விளக்கமுறக் கற்றறிந்தோ ராதலினாற் காவலற்குக் கண்போன்ற முற்றுணர்ந்த வமைச்சரினு முதலமைச்ச ராய் நிகழ்வார். (இ-ள்.) செற்றம்மிகும் கருவிகளின் திறநூலும் - சினமிக்க கருவி வகைகட்குரிய நூல்களையும், மனுவேந்தன் சொற்ற பெருந்தோல் நூலும் - மனுவென்னும்மன்னனாற் கூறப்பட்ட பெருமையுந் தொன்மையும் உடைய நுலையும், துளக்கம் அற விளக்கமுற - ஐயந்திரிபு நீங்க விளக்கம் பொருந்த, கற்று அறிந்தோர் ஆதலினால் - கற்று உணர்ந்தவர் ஆகலின், காவலற்குக் கண்போன்ற முற்று உணர்ந்த அமைச்சரினும் - மன்னனுக்குக் கண்போன்ற முற்று முணர்ந்த அமைசர்களினும், முதல் அமைச்சராய் நிகழ்வார் - முதல் மந்திரியாக ஒழுகுவாராயினர். கருவி - படைக்கலமும் தானையும், படைக்கலப் பயிற்சிக்குரிய நூல்களும், யானை குதிரை ஊர்தற்குரிய நுல்களும், பிறவு மென்க. தொன்னூல் - நீதிநூல். அமைச்சர் கண்ணாக அரசபாரம் நடத்தலின் ‘காவலற்குக் கண் போன்ற அமைச்சர்’ என்றார்; “ சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்” என்னும் திருக்குறள் நோக்குக. (7) புல்லாதார் முரணடக்கிப் பொருள்கவர்வா ரென்பதெவன் சொல்லாத பல்வேறு தீபத்துச் செங்கோன்மை வல்லாருந் தத்தமதேத் தரியபொருள் வரவிடுத்து நல்லாரா யொப்புரவு நட்படைய நடக்கின்றார். (இ-ள்.) சொல்லாத பல்வேறு தீபத்துச் செங்கோன்மை வல்லாரும் - அடைதற்கரிய பலவேறு வகைப்பட்ட தீவுகளில் கோல்கோணாது குடிகளைப் புரக்கவல்ல மன்னரும், தத்தம தேத்து அரிய பொருள் வரவிடுத்து - தங்கள் தங்கள் நாட்டிலுள்ள அரிய பொருளை அனுப்பி, நல்லாராய் ஒப்புரவு நட்பு அடைய - நல்லவராய் மனமொத்த நட்பினைப் பொருந்துமாறு, நடக்கின்றார் - ஒழுகுவாராகிய திருவாதவூரர், புல்லாதார் முரண் அடக்கி - பகைவரின் வலியினை அடக்கி, பொருள் கவர்வார் என்பது எவன் - அவரது பொருளைக் கவர்வார் என்று கருதுவது என்னை? தீபம் - கடல் நாப்பணிருக்கும் நிலம். தேத்து - தேசத்து; தேசம் என்பது தேம் எனத் தொல்காப்பியம் முதலிய பழைய நூல்களிற் பயின்றுள்ளது. யாவரும் இவருடைய நட்பை விரும்பித் தாமாகவே திறையனுப்புதலின் பகைவர் இலராயினார் என்பதும், பகைவர் இலராகவே முரணடக்குதலும் பொருள் கவர்தலும் இல்லையாயின என்பதும், கருத்தாகக் கொள்க. (8) அண்ணலரி மருத்தனனுக் கடல்வாத வூரமைச்சர் கண்ணுமிகு கவசமும்போற் காரியஞ்செய் தொழுகுவார் தண்ணளிசெய் தவனியெலாந் தன்கிளைபோற் குளிர்தூங்க வண்ணமதிக் குடைநிழற்றி முறைசெய்து வாழுநாள். (இ-ள்.) அடல் வாதவூர் அமைச்சர் - வெற்றி பொருந்திய வாதவூரராகிய அமைச்சர், அண்ணல் அரிமருத்தனனுக்கு - பெருமை பொருந்திய அரிமருத்தன பாண்டியனுக்கு, கண்ணும் இடுகவசமும் போல் - கண்களையும் அணிந்த கவசத்தையும் போல (இருந்து, காரியம் செய்து ஒழுகுவார் - வினை செய்து ஒழுகுவாராய், தண் அளி செய்து - தண்ணிய அருள் புரிதலால், அவனி எலாம் - நிலவுலகிலுள்ள மக்களனைவரும், தன் கிளைபோல் குளிர்தூங்க - தன் கிளைஞர் மகிழுமாறு போல மகிழ்கூர, வண்ணம் மதிக்குடை நிழற்றி - நிறம் வாய்ந்த சந்திரவட்டக் குடையினால் நிழல் செய்து, முறை செய்து வாழு நாள் - முறை புரிந்து வாழும் நாளில். நன்னெறியிற் செலுத்தலால் அரசனுக்குக் கண்ணும், தெய்வத்தால் வரும் இடையூறுகளைச் சாந்தியானும் மக்களால் வரும் இடையூறுகளை நால்வகை உபாயங்களானும் போக்கிப் பாதுகாத்தலின் அவற்குக் கவசமும் போல்வாரென்க. “ காதலித் தறஞ்செய் வோர்க்குக் கவசமுங் கண்ணு மாகி ஏதிலர்க் கிடும்பை யாகி யிறைஞ்சினர்க் கின்ப மாகி ஆதுலர்க் கன்னை யாகி யரனடிக் கன்பு மிக்கார் பூதலத் திறைவ னாணை பொதுவற நடத்து நாளில்” என்பது திருவாதவூரர் புராணம். (9) (கலிநிலைத்துறை) மெய்ம்மை யாம்பொருள் விவேகமும் வேறுபா டாய பொய்ம்மை யாம்பொருள் விவேகமும் புந்தியுட் டோன்ற இம்மை யாசையு மறுமையி லாசையு மிகந்து செம்மை யாகிய கருத்தராய்ப் பரகதி தேர்வார். (இ-ள்.) மெய்ம்மையாம் பொருள் விவேகமும் - மெய்யாகிய பொருளின் உணர்ச்சியையும், வேறுபாடாய - அதற்கு வேறான, பொய்ம்மையாம் பொருள் விவேகமும் - பொய்யாகிய பொருளின் உணர்ச்சியும், புந்தியுள் தோன்ற - உள்ளத்தின்கண் உதிக்க, இம்மை ஆசையும் - இம்மையின்பத்தில் விருப்பமும், மறுமையில் ஆசையும் - மறுமை யின்பத்தில் விருப்பமும், இகந்து - நீங்கி, செம்மையாகிய கருத்தராய் - மனத்தூய்மை யுடையராய், பரகதி தேர்வார் - வீடடையும் நெறியினை ஆராய்வாராயினர். மெய்ம்மையாம் பொருள் - நித்தப் பொருள்; தனக்கோர் ஆக்கக் கேடுகளின்றிச் சுட்டறிவிற் படாது நின்ற சத்துப் பொருள். பொய்ம்மையாம் பொருள் - அநித்தப் பொருள்; ஆக்கக் கேடுகளுடைத்தாய்க் கால தேய முதலியவற்றால் ஏகதேசப் படுதலும் பலவேறு வகைப்படுதலு முடைத்தாய்ச், சுட்டறிவிற் கெட்டி நிற்கும் அசத்துப் பொருள். இம்மை மறுமை யின்பங்கள் இந்திரசாலம் போலத் தோன்றும் போதே இலவாதலும், கனாவைப் போல முடிவு போகாது இடையே யழிதலும், பேய்த்தேர் போல ஒரு காரணங்காட்டி நிலை பெறாமையுமுடைமையால் ‘இம்மை யாசையு மறுமையி லாசையு மிகுந்து என்றார். செம்மையாகிய கருத்தராய் என்றது சிவபுண்ணிய முதிர்ச்சியால் இருவினை யொப்புடையராய் என்றபடி. இனி, நித்தியா நித்திய வஸ்து விவேகம், இகபர போக விராகம், சமம் முதலிய அறுகுணப்பேறு, முமூட்சுத்துவம் எனப்படும் வீட்டிச்சை ஆகிய மோக்க சாதனம் நான்கும் இப்பாட்டில் முறையே கூறப்பெற்றன வெனவுங் கொள்க. (10) புத்த ராதியோர் புறவுரை நெறிகளும் பொய்யா நித்த வேதநூ றழுவிய வகவுரை நெறியுஞ் சித்த மாசறுத் தரனருட் டெளிவியா வதனான் மித்தை யாணவத் தொடக்கறா தில்லையாம் வீடும். (இ-ள்.) புத்தர் ஆதியோர் புற உரை நெறிகளும் - புத்தர் முதலானவர்களின் வேதாகமங்கட்குப் புறம்பாகக் கூறப்படும் நெறிகளும், பொய்யா நித்தவேத நூல் தழுவிய - பொய்யாத உண்மையாகிய மறைநூலைத் தழுவிய, அகஉரை நெறியும் - அகமாகச் சொல்லப்படும் நெறிகளும், சித்தம் மாசு அறுத்து அரன் அருள் தெளிவியா - மனத்தின்கண் உள்ள அழுக்கினைப் போக்கி இறைவன் திருவருளைத் தெளிவுறுத்தமாட்டா; அதனால் - அம்மாட்டாமையினால், மித்தை ஆணவத் தொடக்கு அறாது - சடமாகிய ஆணவப் பிணிப்பு நீங்காது; வீடும் இல்லையாம் - (அதனால்) வீடுபேறும் இல்லையாகும். புறவுரை நெறி புறப்புறம், புறம் என இருவகைப்படும்; உலோகாயதம், நால்வகைப் பெளத்தம் (மாத்திய மிகம், யோகாசாரம், செளத்திராந்திகம், வைபாடிகம்), ஆருகதம் என்பன புறப்புறச் சமயங்கள்; தருக்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் என்பன புறச்சமயங்கள். அகவுரை நெறி அகப்புறம், அகம் என இருவகைப்படும்; பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், அயிக்கியவாதசைவம் என்பன அகப்புறச் சமயங்கள்; பாடாண வாதம், பேதவாதம், சிவசமவாதம், சிவசங்கிராந்த வாதம், ஈசுவர வவிகார வாதம், சிவாத்துவித சைவம் என்பன அகச்சமயங்கள். இந்நாலாறு சமயங்களின் இயல்புகளை யெல்லாம் செந்தமிழ்ச் சிவஞானபோத முதனூலுக்கு மாதவச் சிவஞான யோகிகள் கண்டருளிய திராவிட மாபாடியம் என்னும் பேருரையுட் காண்க. மித்தை - பொய், சடம். (11) பத்தி செய்தர னருள்பெறும் பத்தருக் கன்றி முத்தி யெய்தரி தெனமறை மொழிவதப் பொதுநூற் சத்தி யப்பொருட் டெளிவெலாஞ் சத்திநி பாதர்க் குய்த்து ணர்த்துவ தாகம மென்பர்மெய் யுணர்ந்தோர். (இ-ள்.) பத்தி செய்து அரன் அருள் பெறும் பத்தருக்கு அன்றி - அன்பு செய்து இறைவன் திருவருளைப் பெற்ற அன்பர்கட்கு அன்றி ஏனையோருக்கு, முத்தி எய்து அரிதென மொழிவது மறை - வீடு பேற்றினை எய்தல் இல்லை என்று கூறுவது வேதம்; அப்பொது நூல் சத்தியப் பொருள் தெளிவு எலாம் - அப்பொது நூலின் உண்மைப் பொருட்டெளிவு அனைத்தையும், சத்திநிபாதர்க்கு - திருவருட் பதிவுடையாருக்கு, உய்த்து உணர்த்துவது - விளக்கி அறிவிப்பது, ஆகமம் - சிவாகமம்; என்பர் மெய் உணர்ந்தோர் - என்று கூறுவர் மெய்ப்பொருளை உணர்ந்த பெரியோர். எய்து : முதனிலைத் தொழிற் பெயர். வேதம் யாவர்க்கும் உரித்தாகலின் பொது நூல் எனவும், ஆகமம் சத்திநிபாத முடையார்க்கு உரித்தாகலின் சிறப்பு நூல் எனவும் கூறப்படும்; இதனை, “ வேதநூல் சைவநூ லென்றிரண்டே நூல்கள் வேறுரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூ லநாதியம லன்றருநூ லிரண்டும் ஆரணநூல் பொதுசைவ மருஞ்சிறப்பு நூலாம் நீதியினா னுலகர்க்குஞ் சத்திநிபா தர்க்கும் நிகழ்த்தியது நீண்மறையி னொழிபொருள்வே தாந்தத் தீதில்பொருள் கொண்டுரைக்கு நூல்சைவம் பிறநூல் திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்த மாகும்” என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தா லறிக. சத்திநிபாதர் - சத்திநிபாதம் உடையோர்; சத்திநிபாதம் - திருவருட்சத்தி பதிதல்; தவம் சரியை முதல் நால்வகைப்பட்டு அவற்றுள்ளும் பலவேறு வகைப்பட்டு நிகழ்தற்கேற்பப், பக்குவமாதற் பொருட்டு மலத்திற்கு அநுகூலமாய் நின்று நடாத்திய திரோதான சத்தி மலம் பரிபாக மெய்தியவழி அக்கருணை மறமாகிய செய்கை மாறிக் கருணை யெனப்படும் முன்னைப் பராசத்தி ரூபமேயாய் ஆன்மாக்கண்மாட்டுப் பதிதல்; அதன் வகை பின்பு காட்டப்பெறும். பாதம் - பதிதல்; விழ்ச்சி. நி - ஏற்றமாக வென்னும் பொருள் குறித்து நின்ற இடைச்சொல். (12) வேத வாகமச் சென்னியில் விளைபொரு ளபேதம் பேத மாகிய பிணக்கறுத் திருட்பிணி யவிழ்த்து நாத னாகிய தன்னையு மென்னையு நல்கும் போத னாகிய குருபரன் வருவதெப் பொழுதால். (இ-ள்.) வேத ஆகமச் சென்னியில் - வேதங்களும் ஆகமங்களு மாகிய இவற்றின் முடிவில், விளை பொருள் - விளையும் பொருள், அபேதம் பேதமாகிய பிணக்கு அறுத்து - அபேதம் பேதம் என்று கருதும் மாறுபாட்டினை ஒழித்து, இருள் பிணி அவிழ்த்து - ஆணவமலக்கட்டினை அவிழ்த்து, நாதனாகிய தன்னையும் என்னையும் நல்கும் -இறைவனாகிய தன்னையும் என்னையும் உணர்த்தியருளும், போதனாகிய குருபரன் வருவது எப்பொழுது - ஞானவடிவினனாகிய குருநாதன் வருவது எப்பொழுது? வேத வாகமம், தமிழ் நூன்முறையால் உடம்படுமெய் பெற்றது. வேதச் சென்னியில் விளைபொருள் கடவுளும் ஆன்மாவும் அபேதம் எனவும், ஆகமச் சென்னியில் விளைபொருள் கடவுளும் ஆன்மாவும் பேதம் எனவும், ஆகலான் வேதாந்தமும் சித்தாந்தமும் தம்முள் முரணுவன வெனவும் கருதும் மாறுபாட்டை யொழித்து என்க; கடவுளும் ஆன்மாவும் பொருட்டன்மையால் வேறாயினும் கலப்பால் ஒன்றாதல் பற்றி மலநீக்கத்தின் பொருட்டு அதுவே நான் எனப் பாவிக்கின் கடவுள் ஆன்மாவின் வேறன்றாய்த் தோன்றும் என்பதே வேதமுடிவின் கருத்தாமாகலின் அஃது ஆகம முடிவுடன் முரணாதா மெனப் பிணக்கறுத்தல் கொள்க : இப்பெற்றியை, “ கண்டவிவை யல்லேநா னென்றகன்று காணாக் கழிபரமு நானல்லே னெனக்கருதிக் கசிந்த தொண்டினொடு முளத்தவன்றா னின்றகலப் பாலே சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன் வேறின்றி விண்டகலு மலங்களெல்லாம் கருடதியா னத்தால் விடமொழியு மதுபோல விமலதையு மடையும் பண்டைமறை களுமதுநா னானே னென்று பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே”” என்னும் சிவஞான சித்தியாராலறிக. “ வேதமோ டாகமம் மெய்யா மிறைவனூல் ஓதுவும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக நாத னுரையிவை நாடி லிரண்டந்தம் பேதம தென்னிற் பெரியோர்க் கபேதமே”” என்னும் திருமந்திரமும் இங்கே சிந்திக்கற்பாலது, குருவருளாற் கடவுளைக் கண்டே ஆன்மாவாகிய தன்னைக் காண்டல் இயல்வதாகலின் தன்னையும் என்னையும் நல்கும் என்றார்; இதனை, “ சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல் ஆரியனா மாசான்வந் தருளாற் றோன்ற வடிஞான மான்மாவிற் றோன்றுந் தோன்றத் தூரியனாஞ் சிவன்றோன்றுந் தானுந் தோன்றுந் தொல்லுலக மெல்லாந்தன் னுள்ளே தோன்றும் நேரியனாய்ப் பரியனுமா யுயிர்க்குயிரா யெங்கு நின்றநிலை யெல்லாமுன் னிகழ்ந்து தோன்றும்”” என்னுஞ் சித்தியா ராலறிக. “ ஞான நாட்டம் பெற்றபின் யானும் நின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும் என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன் நின்னிலை யனைத்தையுங் கண்டே னென்னே நின்னைக் காணாமாந்தர் தன்னையுங் காணாத் தன்மை யோரே” என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கு முணர்க. (13) கரவி லாதபே ரன்பினுக் கெளிவருங் கருணைக் குரவ னாரரு ளன்றியிக் கொடியவெம் பாசம் புரையில் கேள்வியாற் கடப்பது1 புணையினா லன்றி உரவு நீர்க்கடல் கரங்கொடு நீந்துவ2 தொக்கும். (இ-ள்.) கரவுஇலாத பேர் அன்பினுக்கு - கள்ளமில்லாத பெரிய அன்பினுக்கு, எளிவரும் கருணைக் குரவனார் அருள் அன்றி - எளிவந்தருளும் அருளையுடைய ஞானாசிரியரது திருவருட் புணையினாலன்றி, இக்கொடிய வெம்பாசம் - இந்தக் கொடிய வெவ்விய பாசமாகிய கடலை, புரைஇல் கேள்வியால் கடப்பது - குற்றமில்லாத நூற் கேள்வியினால் கடக்கக் கருதுதல், உரவு நீர்க்கடல் கரங்கொடு நீந்துவது ஒக்கும் - வலிய நீரினையுடைய கடலைக் கையினால் நீந்திக் கடக்கக் கருதுதலை ஒக்கும். இறைவன் கரவுடையார்க் கறிவரியன் என்பதனை, “ கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானை” “ பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்ப னவர்தமை நாணியே” என்னும் தேவாரங்களானறிக. கொடிய வெம்: ஒரு பொருளில் வந்த இரு சொல். நீந்துவதொக்கும் என்றது முடியா தென்றவாறு. (14) என்றவ் வாதவூர்1 மறையவ ரின்பவீ டெய்தத் துன்று மாசையாற் றொடக்குண்டு சுருதியா கமநூல் ஒன்று கேள்வியோர் வருந்தொறு முணர்ந்தவ ரிடைத்தாஞ் சென்ற காண்டொறு மளவளாய்த் தேர்குவா ரானார். (இ-ள்.) என்று அவ்வாதவூர் மறையவர் - என்று கருதி அவ்வாத வூரராகிய அந்தணர், இன்பவீடு எய்தத்துன்றும் ஆசையால் தொடக்குண்டு - பேரின்ப வீட்டினை அடைய வேண்டுமென்னும் மிக்க ஆசையினாற் கட்டுண்டு, சுருதி ஆகம நூல் ஒன்று கேள்வியோர் வருந்தொறும் - வேதமும் ஆகமமுமாகிய நூல்களிற் பொருந்திய கேள்வி வல்லுநர் தம்மிடம் வருந்தோறும், உணர்ந்தவர் இடை தாம் சென்று காண்தொறும் - அவற்றை உணர்ந்தாரிடந் தாஞ்சென்று காணுந் தோறும், அளவளாய்த் தேர்குவார் ஆனார் - அவர்களோடு கலந்து ஆராய்வாராயினர். மேல் நான்கு பாட்டிலும் சொன்னவற்றைச் சுட்டி ‘என்று’ என்றார். கேள்வியோர் நகர்க்கு வருந்தொறும் உணர்ந்து அவரிடைத்தாம் சென்று காண்டொறும் என்றுரைத்தலுமாம்; “ வளங்கெழு புவியி னுள்ள வாவியுங் காவு மோடி விளங்கிசை வண்டு தண்டேன் மிகுமலர் தேடு மாபோல் உளங்கொள நிமல னன்னூ லோதின ருண்மை யெல்லாம் அளந்தறி வுணர்ந்த நீரார் யாவரென் றாயு நாளில்” என்பது வாதவூரடிகள் புராணம். (15) எண்ணி லாரிடத் தளந்தளந் தறிபொரு ளெல்லாம் உண்ணு நீர்விடாய்க் குவரிநீ ருண்டவ ரொப்ப அண்ண லாரகத் தமைவுறா தரசனுக் குயிருங் கண்ணு மாயமைச் சுரிமையுங் கைவிடா தியல்வார். (இ-ள்.) எண்ணிலார் இடத்து அளந்து அளந்து அறிபொருள் எல்லாம் - (இங்ஙனம்) அளவிறந்த அறிஞரிடத்து ஆராய்ந்தறிந்த பொருளெல்லாவற்றானும், உண்ணும் நீர்விடாய்க்கு -பருகும் நீர் வேட்கையைத் தணிப்பதற்கு, உவரி நீர் உண்டவர் ஒப்ப - கடல் நீரைப் பருகியவரின் வேட்கை தணியாவாறு போல, அண்ணலார் அகத்து அமைவுறாது - பெருமை பொருந்திய வாதவூரர் மனத்தின் கண் அமைதி பொருந்தாதாக, அரசனுக்கு உயிரும் கண்ணுமாய் - மன்னனுக்கு உயிரும் விழியுமாகி, அமைச்சு உரிமையும் கைவிடாது இயல்வார் - அமைச்சுரிமையையும் கைவிடாது நடப்பாராய். அடுக்குப்பன்மை குறித்தது, அறிபொருள் எல்லாவற்றானும் அமைதியுறாதாக என விரித்துரைக்க. கடலின் உவர் நீருண்டால் விடாய் தணியாது மிகுதல்போல இவர்க்கும் அமைதியுண்டாகாது உண்மையுணரும் வேட்கை மிகுவதாயிற்று. “ சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் றன்வசன மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமே - ஆர்த்தகடற் றண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ தெண்ணீர்மை யாயிதனைச் செப்பு” என்னும் திருக்களிற்றுப்படியார்ச் செய்யுள் இங்கு அறிதற்பாலது. அரசன் எல்லாப் போகங்களையும் நுகர்தற்கும் நல்வழியில் நடத்தற்கும் கருவியாயிருந்தனரென்பார் அரசனுக்குயிருங் கண்ணுமாய் என்றார். (16) கள்ளக் காதல னிடத்தன்பு கலந்துவைத் தொழுகும் உள்ளக் காரிகை மடந்தைபோ லும்பரைக் காப்பான் பள்ளக் காரியுண் டவனிடத் துள்ளன்பு பதிந்து கொள்ளக் காவல னிடைப்புறத் தொழிலுமுட் கொண்டார். (இ-ள்.) கள்ளக்காதலனிடத்து - கள்ளநாயகனிடத்தில் உள்ள, அன்பு உள்ளம் கலந்துவைத்து - அன்பினை அகத்தின்கண் பொருந்த வைத்து, ஒழுகும் காரிகை மடந்தை போல் - அழகிய ஒரு பெண் (புறத்தின்கண் கொண்ட நாயகனுக்குச் செய்யும் புறத்தொழிலில் வழுவாது) ஒழுகுமாறு போல, உம்பரைக் காப்பான் - தேவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பள்ளக்காரி உண்டவனிடத்து - கடலின் நஞ்சினை உண்ட இறைவனிடத்து வைத்த; அன்பு உள்பதிந்து கொள்ள - அன்பானது உள்ளத்தின்கண் அழுந்தி (அதனைக் கவர்ந்து) கொள்ள, காவலனிடை புறத்தொழிலும் உட்கொண்டார்- மன்னனிடத்துப் புறத்தொழிலையும் உட்கொண்டு வழுவாது ஒழுகுவாராயினர். பள்ளம் - ஆழம்; கடலுக்காயிற்று. காரி - கருமையுடைய நஞ்சு. பதிஞானம் தலைப்படுவார் எத்தொழிலில் நிற்பினும் தம் நிலைகுலையார் என்பதனை, “ நாடுகளிற் புக்குழன்றுங் காடுகளிற் சரித்து நாகமுழை புக்கிருந்துந் தாகமுத றவிர்ந்தும் நீடுபல காலங்க ணித்தரா யிருந்தும் நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பில் ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே யிடைக்கே யெறிவிழியின் படு கிடந்துமிறை ஞானம் (கடைக்கே) கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக் குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டே யிருப்பர்”” என்னும் சிவஞான சித்தியாரால் அறிக. (17) இன்ன செய்கையி னொழுகுவா ரொருபொழு தேகித் தென்னர் தம்பிரா னவையிடைச் சென்றெதிர் நின்றார் அன்ன போதடு பரிநிறை காப்பவ ரரசன் முன்னர் வந்துதாழ்ந் தொருசிறை நின்றிது மொழிவார். (இ-ள்.) இன்ன செய்கையின் ஒழுகுவார் - இச்செய்கையுடன் ஒழுகுவாராகிய வாதவூரர், ஒரு பொழுது ஏகி - ஒருநாட் சென்று, தென்னர் தம்பிரான் அவையிடைச் சென்று எதிர் நின்றார் - பாண்டியர் தலைவனாகிய அரிமருத்தனனது அவையினைக் குறுகி அவனெதிரே நின்றனர்; அன்னபோது - அப்பொழுது, அடுபரிநிரை காப்பவர் - பகைவரைக் கொல்லும் குதிரைப்பந்தியினைக் காப்பவர், அரசன் முன்னர் வந்து தாழ்ந்து - அவ்வரசன் முன் வந்து வணங்கி; ஒரு சிறை நின்று இது மொழிவார் - ஒரு புறத்தில் ஒதுங்கி நின்று இதனை மொழிவாராயினர். இன்ன, அன்ன என்பன சுட்டுத்திரிபுகள். (18) மறந்த வாதவேல் வலவநம் வயப்பரி வெள்ளத் திறந்த வாம்பரி போகநின் றெஞ்சிய வெல்லாம் நிறைந்த நோயவு நெடிதுமூப் புடையவு மன்றிச் சிறந்த வாம்பரி யொன்றிலை தேர்ந்திடி னென்றார். (இ-ள்.) மறம் தவாத வேல்வலவ - வெற்றி நீங்காத வேற்படை ஏந்திய வீர, நம் வயப்பரி வெள்ளத்து - நமது வெற்றி பொருந்திய குதிரை வெள்ளத்தில், இறந்த வாம்பரி போக - இறந்தொழிந்தவாகிய குதிரைகள் போக, நின்று எஞ்சிய எல்லாம் - எஞ்சி நின்ற குதிரைகள் அனைத்தும், நிறைந்த நோயவும் - நிறைந்த நோயினை யுடையவும், நெடிது மூப்பு உடையவும் அன்றி - கழிந்த மூப்பினை யுடையனவுமே அல்லாமல், தேர்ந்திடின் சிறந்த வாம்பரி ஒன்று இலை என்றார் - ஆராய்ந்து பார்க்குமிடத்துச் சிறந்த தாவுங் குதிரை ஒன்றேனும் இல்லை என்று கூறினர். உரிமைபற்றி ‘நம்’ என்றார். அளவிறந்த குதிரை யென்பார் பரி வெள்ளத்து என்றனர். வாம், வாவும் என்னும் பெயரெச்சத்து உயிர்மெய் கெட்டது. (19) மன்றல் வேம்பனும் வாதவூர் வள்ளலை நோக்கி இன்று நீர்நம தறைதிறந் திருநிதி யெடுத்துச் சென்று வேலையந் துறையில்வந் திறங்குவ தெரிந்து வென்றி வாம்பரி கொடுவரப் போமென்று விடுத்தான். (இ-ள்.) மன்றல் வேம்பனும் - (அதனைக் கேட்ட) மணம் பொருந்திய வேப்பமலர் மாலையை யணிந்த பாண்டியனும், வாதவூர் வள்ளலை நோக்கி - (எதிர் நின்ற) வாதவூர் வள்ளலாரைப் பார்த்து, நீர் இன்று நமது அறை திறந்து - நீர் இன்று நமது கருவூலத்தைத் திறந்து, இருநிதி எடுத்து - பெரும்பொருளை எடுத்துக் கொண்டு, சென்று - போய், வேலையந்துறையில் வந்து இறங்குவ - கடற்றுறையின் கண் வந்து இறங்கும் குதிரைகளில், வென்றி வாம்பரி தேர்ந்து கொடு வரப்போம் என்று விடுத்தான் - வெற்றியைத் தரத்தக்க தாவுங் குதிரைகளை ஆராய்ந்து வாங்கிக் கொண்டு வருதற்குப் போவீராக என்று கூறி அனுப்பினான். அறை - பண்டாரம். போம்: செய்யுமென்னும் வாய்பாட்டேவல்; பிற்கால வழக்கு. (20) உள்ளம் வேறுபட் டமைச்சிய னெறியினின் றொழுகும் வள்ள லார்நிதி யறைதிறந் தரும்பெறல் வயமான் கொள்ள வேண்டிய பொருளெலாங் கொண்டுதா ழிறுக்கி வெள்ளை மாமதி வேந்தனை விடைகொடு போவார். (இ-ள்.) உள்ளம் வேறுபட்டு - மனம் வேறுபட்டு, அமைச்சியல் நெறியில் நின்று ஒழுகும் வள்ளலார் - அமைச்சியற்றுறையில் வழுவாது நின்று ஒழுகும் வாதவூர் வள்ளலார், நிதி அறை திறந்து - கருவூலத்தினைத் திறந்து, அரும்பெறல் வயமான் கொள்ளவேண்டிய - பெறுதற்கரிய வெற்றியினையுடைய குதிரைகள் கொள்ளுதற்கு வேண்டிய, பொருள் எலாம்கொண்டு - பொருள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, தாழ் இறுக்கி - தாழிட்டு, வெள்ளைமாமதி வேந்தனை விடை கொடு போவார் - வெண்மையாகிய பெருமை பொருந்திய சந்திரனது மரபினனாகிய பாண்டியனிடம் விடைபெற்றுச் செல்கின்றவர். உள்ளம் வேறுபடுதல் - மனத்தைச் சிவனிடத்து வைத்தல். அரசன் பொருளைச் சிவபெருமானுக்கும் சிவனடியார்க்குமாக வழங்கி, அரசற்கு இம்மையோடு மறுமையும் வழங்குவாரென்பது குறிப்பார் ‘வள்ளலார்’ என்றார். அரசன் அவ்வடிகள் பெருமையை உள்ளவாறுணரும்அறிவு வலி பெற்றிலா னென்பது குறிப்பிற் றோன்ற ‘வெள்ளை மாமதி வேந்தன்’ என்றார். வேந்தன்பால் என ஏழனுருபாக்குக; விடைகொடு என்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு முடிபாயிற்று என்னலுமாம். (21) எடுத்த பொற்சுமை யொட்டகத் திட்டுமுன் னேக விடுத்து விண்டொடு திண்டிமில்1 விடையவன் கோயில் அடுத்த விழ்ந்தபொன் னம்புயத் தடம்படிந் தனைய மடுத்த டங்கரைச் சித்தியைங் கரத்தனை வணங்கா. (இ-ள்.) எடுத்த பொன்சுமை - கருவூலத்தினின்றும் எடுத்த பொன் சுமையை, ஒட்டகத்து இட்டுமுன் ஏகவிடுத்து - ஒட்டகத்தில் ஏற்றி அவைமுன்னே செல்லுமாறு ஏவி, விண்தொடு - வானை அளாவிய, திண்திமில் விடையவன் கோயில் அடுத்து - திண்ணிய திமிலையுடைய இடபவூர்தியை உடைய சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலுட் சென்று, அவிழ்ந்த பொன் அம்புயத் தடம்படிந்து - மலர்ந்த பொற்றாமரையினையுடைய வாவியின்கண் நீராடி, அனைய மடுத்தடம் கரை - அந்த ஆழமாகிய பொய்கையினது கரையின்கண் எழுந்தருளிய, சித்தி ஐங்கரத்தனை வணங்கா - ஐந்து கைகளையுடைய சித்தவிநாயகனை வணங்கி. விண்டொடு கோயில் எனக் கூட்டுக. திமில் - சூடு; கொண்டை யெனவும் வழங்கும். (22) கருணை நாயகி யங்கயற் கண்ணியெம் பிராட்டி அருண நாண்மலர்ச் செய்யசீ2 றடித்தல மிறைஞ்சி வருண னார்பெரு வயிற்றுநோய் வலிகெடுத் தாண்ட தருண நாண்மதிச் சடையுடை யடிகண் முன்றாழா. (இ-ள்.) கருணை நாயகி அங்கயற்கண்ணி - அருட்சத்தியாகிய அங்கயற் கண்ணி என்னும், எம்பிராட்டி - எம் பெருமாட்டியின், அருணநாள் மலர் - சிவந்த அன்றலர்ந்த தாமரைமலர் போலும், செய்ய சீறடித்தலம்இறைஞ்சி - சிவந்த சிறிய திருவடிகளை வணங்கி, வருணன் ஆர்பெருவயிற்று நோய்வலி கெடுத்து - வருணனது நிறைந்த பெரிய வயிற்றினது நோயின் வன்மையைப் போக்கி, ஆண்ட - ஆண்டருளிய, தருண நாள் மதிச் சடை உடை - இளமையாகிய பிறைமதியினைத் தரித்தசடையினையுடைய, அடிகள் முன்தாழா - இறைவன் திருமுன் வணங்கி. அரணம் - செந்நிறம். வருணனது வயிற்றுநோய் கெடுத்தமையை இப் புராணத்து வருணன் விட்ட கடலை வற்றச்செய்த படலத்திற் காண்க. மலநோயை முருக்கிச் சிவஞானம் பெருக்க வணங்கினார் என்பது குறிப்பிற்றோன்ற வருணனார் பெருவயிற்று நோய் வலிகெடுத்தாண்ட தருண நாண்மதிச் சடையுடையடிகண் முன்றாழா என்றார். (23) ஒன்று வேண்டுமிப் பொருளெலா முனக்குமைம் பொறியும் வென்று வேண்டுநின் னன்பர்க்கு மாக்குக வெள்ளி மன்று வேண்டிநின் றாடிய வள்ளலென் குறையீ தென்று வேண்டிநின் றேத்துவார்க் கிறைவனின் னருள்போல். (இ-ள்.) வெள்ளிமன்று வேண்டி நின்று ஆடிய வள்ளல் - வெள்ளி யம்பலத்தினை விரும்பி நின்று ஆடியருளிய வள்ளால், ஒன்று வேண்டும் - (அடியேனுக்கு) ஒரு வரம் அருளல் வேண்டும், இப்பொருள் எலாம் - (அதாவது) இப்பொருள் அனைத்தையும், உனக்கும் - நினக்கும், ஐம்பொறியும் வென்று வேண்டும் நின் அன்பர்க்கும் ஆக்குக - ஐம்பொறிகளையும் அடக்கி நின்னையே விரும்பும் நின் அடியார்கட்கும் உரியவாக்குக; என்குறை ஈது என்று வேண்டி நின்று ஏத்துவார்க்கு - அடியேன் குறைபாடு இதுவே என்று குறையிரந்து நின்று துதிக்கும் அவ்வாதவூரடிகளுக்கு, இறைவன் இன்அருள் போல் - அவ்விறைவன் தனது இனிய திருவருளை ஈந்தருளியது போல. மன்றுவேண்டி நின்றாடிய வள்ளல் என்றது பதஞ்சலி, புலிக் காலர் என்னும் முனிவர்களின் வேண்டுகோளுக்கு அருள்புரிந்தமை போல அடியேன் வேண்டுகோளுக்கு அருள்புரிக என்னுங் கருத்தை யுட்கொண்டிருத்தலால் வாக்கியரூபமாக வந்த கருத்துடையடை கொளியணி. (24) ஆதி சைவனா மருச்சக னொருவனே ரணைந்து பூதி யீந்தன னமக்கிது போலிலை நிமித்தம் ஈது நன்னெறிக் கேதுவென் றிருகையேற் றணிந்து வேத நாதனை யிறைஞ்சினார் விடைகொடு மீண்டார். (இ-ள்.) ஆதிவைசனாம் அருச்சகன் ஒருவன் நேர் அணைந்து பூதி ஈந்தனன் - ஆதிசைவனாகிய அருச்சகன் ஒருவன் நேரில்வந்து திருநீறு அளித்தனன்; நமக்கு நிமித்தம் இதுபோல் இல்லை - நமக்கு இதுபோல் நன்னிமித்தம் வேறில்லை; ஈது நன்நெறிக்கு ஏது என்று - இது நாம் அடையக் கருதும் நல்வழிக்கு ஓர் ஏதுவாம் என்று கருதி, இருகை ஏற்று அணிந்து - இரண்டு கரங்களிலும் ஏற்ற நெற்றியிற் றரித்து; வேதநாதனை இறைஞ்சினார் - வேத நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை வணங்கி, விடைகொடு மீண்டார் - விடைபெற்று மீண்டனர். ஆதிசைவன் - சிவ மறையோன். இறைஞ்சினார் : முற்றெச்சம். (25) (கலிவிருத்தம்) இன்னிய மதிர்ந்தன வெழுந்தன பதாதி துன்னிய விணைக்கவரி துள்ளின துகிர்க்காற் பொன்னியன் மதிக்குடை நிழன்றன1 பொலங்கொண் மின்னிய மணிச்சிவிகை மேற்கொடு நடந்தார். (இ-ள்.) இன்இயம் அதிர்ந்தன - இனிய வாத்தியங்கள் ஒலித்தன; பதாதி எழுந்தன - கொடிகள் மேல் எழுந்தன; துன்னிய இணைக்கவரி துள்ளின - நெருங்கிய இரட்டைச் சாமரைகள் இருபுறமுந் துள்ளின; துகிர்க்கால் பொன் இயல் மதிக்குடை நிழன்றன - பவளக் காலையுடைய பொன்னாலியன்ற சந்திரவட்டக் குடைகள் நிழல் செய்தன; பொலம் கொள் மின்னிய மணிச்சிவிகை மேற்கொடு நடந்தார் - பொன்னாற் செய்தலைக் கொண்ட ஒளி வீசும் மணிகள் அழுத்திய சிவிகையின் மேலேறிச் சென்றனர். (26) மற்றிவர் வழிப்படுமுன் மாறிநட மாடும் வெற்றிவிடை யாரிவர் வினைத்தொகையி னொப்பும் பற்றிய விருட்டுமல பக்குவமு நோக்கா உற்றடிமை கொண்டுபணி கொண்டருள வுன்னா. (இ-ள்.) இவர் வழிப்படுமுன் - இங்ஙனம் இவர் நடப்பதற்கு முன்னரே, மாறிநடம் ஆடும் வெற்றி விடையார் - கான்மாறி நடித்தருளும் வெற்றியினையுடைய இடபவூர்தியையுடைய சோமசுந்தரக்கடவுள், இவர் வினைத்தொகையின் ஒப்பும் - இவரது இருவினை ஒப்பையும், பற்றிய இருட்டுமல பக்குவமும் நோக்கா - தொடர்ந்த இருளாகிய பல பரிபாகத்தையும் நோக்கி, உற்று அடிமை கொண்டு பணி கொண்டருள உன்னா - குரவனாகிச் சென்று ஆட்கொண்டு தமது திருப்பணியின்கண் நிறுத்தி யருளத் திருவுளங்கொண்டு. இருவினை யொப்பு - நல்வினைப் பயனாகிய இன்பத்தையும் தீவினைப் பயனாகிய துன்பத்தையும் ஒரு பெற்றியே நோக்குவது; புண்ணிய பாவம் இரண்டனையும் அவற்றின் பயன்களையும் ஒப்ப உவர்த்து விடுமாறு அவ்விருவினையும் அறிவின்கண் ஒப்ப நிகழ்தல் என்றுமாம்; பிறவாறு உரைப்பாரு முளர்; சிவஞான போத மாபாடி யத்துள் மாதவச் சிவஞான முனிவரால் இது விரித்துரைக்கப்பட்டுளது; ஆண்டுக்காண்க. மலபக்குவம் - மலமரிபாகம்; ஆணவ மலம் தனது சத்தி தேய்தற்குரிய துணைக்காரணங்க ளெல்லாவற்றோடும் கூடுதல். நோக்கா, உன்னா என்பன செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். (27) சந்தமறை தீண்டரிய தங்கருணை யாலோர் அந்தணர் குலக்குரவ னாகியடி நிங்கா மைந்தர் பலர் தம்மொடு பெருந்துறையில் வந்தோர் கொந்தலர் நெருங்கிய குருந்தடி யிருந்தார். (இ-ள்.) சந்தமறை தீண்டரிய தம் கருணையால் - சந்தமமைந்த வேதமும் தீண்டுதற்கரிய தமது கருணையினால், ஓர் அந்தணர் குலக் குரவனாகி - ஓர் அந்தணர் குலத்து ஆசிரியத் திருமேனி கொண்டு, அடி நீங்கா மைந்தர் பலர் தம்மொடு - திருவடியினைப் பிரியாத பல மைந்தர்களொடும், பெருந்துறையில் வந்து - திருப்பெருந் துறையின் கண் வந்து, அலர்கொந்து நெருங்கிய - பூங்கொத்துக்கள் அடர்ந்த, ஓர் குருந்தடி இருந்தார் - ஒரு குருந்த மரத்தின் அடியில் இருந்தனர். மைந்தர் - மாணவகர்; ஆசிரியனை ஞானபிதா என்றும், மாணாக்கரை ஞானபுத்திரர் என்றும் கூறுதல் மரபு. அடி நீங்கா - நிழல் போலத் திருவடியை விட்டு நீங்காது தொடர்ந்த; “ அருபரத் தொருவ னவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமையைச் சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப் பிறிவினை யறியா நிழலது போல”” எனத் திருவாசகம் போற்றித் திருவகவலில் வருதல் காண்க; திருவடியை இடையறாது சிந்திக்கும் பத்திவலி யமைந்த மாணாக்கர் என்பாருமுளர். (28) பொருங்கட லனீகமொடு போய்ப்புற வடுத்த இருங்கட மளப்பில கடந்தெழு பிறப்பாங் கருங்கடல் கடக்கவரு வார்கருணை வெள்ளப் பெருங்கட னிறைந்துறை பெருந்துறை யடைந்தார். (இ-ள்.) பொருங்கடல் அனீகமொடு போய் - கரையொடு மோதுங் கடல்போன்ற சேனைகளோடுஞ் சென்று, புறவு அடுத்த இருங்கடம் அளப்புஇல கடந்து - முல்லை நிலத்தினை அடுத்த பெரிய காடுகள் அளவிறந்தவற்றைக் கடந்து, எழு பிறப்பாம் கருங்கடல் கடக்க வருவார் - எழுவகைப் பிறப்பு என்னுங் கரிய கடலைக் கடக்க வரும் அவ்வாதவூரடிகள், கருணை வெள்ளப் பெருங்கடல் நிறைந்து உறை - அருள்வெள்ளம் நிறைந்த பெரிய கடல் நிறைந்து உறையும், பெருந்துறை அடைந்தார் - திருப்பெருந் துறையினை அடைந்தனர். கடம் - சுரம்; பாலையாகிய காடு. ஒரு கடல் கடக்க வருவார் மற்றொரு கடல் உள்ள இடத்தை யடைந்தார் என்னும் நயமும், பெருங் கடலிலே பெருந்துறை இருப்பது முறையாகவும் பெருந்துறையில் பெருங்கடல் உறைகின்றது என்னும் நயமும் இன்பம் விளைப்பன. கருணைவெள்ளப் பெருங்கடல் - சிவபெருமான். (29) அடுத்திட வடுத்திட வகத்துவகை வெள்ளம் மடுத்திட முகிழ்த்தகைம் மலர்க்கமல முச்சி தொடுத்திட விழிப்புன றுளித்திட வினைக்கே விடுத்திடு மனத்தருள் விளைந்திட நடந்தார். (இ-ள்.) அடுத்திட அடுத்திட - அப்பெருந்துறை எல்லையை அடுக்க அடுக்க, அகத்து உவகை வெள்ளம் மடுத்திட - மனத்தின்கண் மகிழ்ச்சிப் பெருக்கு நிறையவும், முகிழ்த்த கைமலர்க் கமலம் உச்சி தொடுத்திட - கூப்பிய கைகளாகிய தாமரை மலர்கள் முடியின்கண் ஏறவும், விழிப்புனல் துளித்திட - ஆனந்தக் கண்ணீர் துளிக்கவும், வினைக்கே விடுத்திடும் மனத்து - இறைவன் திருத் தொண்டுக்கே தம்மைச் செலுத்தும் மனத்தின்கண், அருள் விளைந்திட நடந்தார் - திருவருள் விளையவும் நடந்தனர். கமலமலர் என மாறுக. வினை - ஈண்டு இறை பணி; ஏழனுருபு நிற்குமிடத்து நான்கனுருபு நின்றது வேற்றுமை மயக்கம்; வினைக்கு விடை கொடுத்திடும் என்றலுமாம். (30) பித்திது வெனப்பிறர் நகைக்கவரு நாலாஞ் சத்திபதி யத்தமது சத்தறிவு தன்னைப் பொத்திய மலத்தினும் வெரீஇச்சுமை பொறுத்தோன் ஒத்திழி பிணிப்புறு மொருத்தனையு மொத்தார். (இ-ள்.) இது பித்து எனப் பிறர் நகைக்கவரும் - இது பித்து என்று கூறிப் பிறர் நகைபுரியுமாறு வருகின்ற, நாலாஞ் சத்தி பதிய - நான்காவதாகிய தீவிரதர சத்திநிபாதம் உண்டாக, தமது சத்து அறிவு தன்னைப் பொத்திய - தமது உண்மையறிவினை மறைத்த, மலத்தினும் வெரீஇ - மலத்தினின்றும் அஞ்சி, சுமை பொறுத்தோன் ஒத்து - (முன்) சுமைபொறுத்தோனை ஒத்து, இழிபிணிப்புறும் ஒருத்தனையும் ஒத்தார் - (பின்) கட்டு நீங்கியவனையும் ஒத்தார். அருள் வயத்தராய்த் தம் வயமழிந்து நிற்பார் ஒன்றனை ஒருகாற் செய்து ஒருகால் இழத்தலை நோக்கி உலகினர் பித்தென நகையா நிற்பர். “ சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப நாணது வொழிந்து நாடவர் பழித்துரை பூணது வாகக் கோணுத லின்றிச் சதுரிழந் தறிமால் கொண்டு”” பித்தனென்றெனை யுலகவர் பகர்வதோர் காரணமிது கேளீர்” எனவரும் திருவாசகவடிகளை நோக்குக. சத்திநிபாதம் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்கு வகைப்படும்; அரக்கு வெய்யிலில் வெதும்புவது போல்வது மந்தகரம், மெழுகு வெய்யிலில் உருகுவதுபோல்வது மந்தம், நெய்சூட்டி லிளகுவது போல்வது தீவிரம், நெய் நெருப்பிலுருகுவது போல்வது தீவிரதரம் என்க; தைலம் இடையறா தொழுகுவது போல்வது தீவிரதரம் என்றுமாம். மலத்தினும் வெரீஇ - மலத்தினின்றும் அஞ்சி நீங்கி, முன் சுமை பொறுத்தோனையும் கட்டுண்டோனையும் ஒத்திருந்து, இப்பொழுது சுமை யிறக்கியவனையும் கட்டு நீங்கியவனையும் ஒத்தார் என உரைத்துக்கொள்க. இழி என்பதனைச் சுமையொடு கூட்டிச் சுமையிறக்கிய என்றும், பிணிப்புடன் கூட்டிப் பிணிப்பு நீங்கிய என்றும் பொருள் கொள்ள வேண்டும். “ ஆவதெ னிதனைக் கண்டிங் கணைதொறு மென்மேற் பாரம் போவதொன் றுளது போலும்” என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது. (31) நெருப்பிலிடு வெண்ணெயென நெஞ்சுருக வென்னை உருக்குமித னாலெனை யொளித்தமல வாற்றல் கருக்குமவ னாகியெனை யாள்கருணை வெள்ளம் இருக்குமிட னேயிதென வெண்ணிநகர் புக்கார். (இ-ள்.) நெருப்பில் இடுவெண்ணெய் என - நெருப்பிலிட்ட வெண்ணெய் உருகுவதுபோல, நெஞ்சு உருக என்னை உருக்கும் - நெஞ்சு உருகுமாறு அடியேனை உருக்குகின்ற, இதனால் - இவ்வேதுவினால், எனை ஒளித்த மல ஆற்றல் கருக்குமவனாகி - என் அறிவினை மறைத்த ஆணவ மலத்தின் வலியினைத் தீர்ப்பவனாகி, எனை ஆள் கருணை வெள்ளம் - அடியேனை ஆட்கொள்ளும் கருணையங்கடல், இருக்கும் இடன் இதுவே என எண்ணி - வீற்றிருக்கும் இடம் இதுவே என்று கருதி, நகர் புக்கார் - அந்நகருட் புகுந்தனர். கருக்குமவன் - கருக்குவான். இதென : விகாரம். (32) காயிலை யடைந்தகழு முட்படை வலத்தார் கோயிலை யடைந்துகுளிர் வான்புனல் குடைந்து வாயிலை யடைந்துடல மண்ணுற விழுந்து வேயிலை யடைந்தவரை மெய்ப்புகழ் வழுத்தா. (இ-ள்.) காய் இலை அடைந்த கழுமுள் படை வலத்தார் - வருத்து கின்ற தகட்டு வடிவமமைந்த சூலப்படையினை வலக்கரத்தில் ஏந்திய இறைவரது, கோயிலை அடைந்து - திருக்கோயிலைச் சார்ந்து, குளிர்வான் புனல் குடைந்து - தண்ணிய சிறந்த புனலில் நீராடி, வாயிலை அடைந்து - திருவாயிலை அடைந்து. உடலம் மண்ணுற விழுந்து - உடல் மண்ணிற்றோயுமாறு விழுந்து வணங்கி, வேய் இலை அடைந்தவர் மெய்ப்புகழை வழுத்தா - மூங்கிலாகிய திருக்கோயிலை அடைந்த அவ்விறைவரது உண்மையமைந்த புகழினைத் துதித்து. நெல்லைப்பதியில் மூங்கிலிற்றோன்றினா ராதலின் ‘வேயிலையடைந்த வரை’ என்றார். அடைந்தவரை என்பதிலுள்ள ஐகாரத்தைப் பிரித்துப் புகழ் என்பதனோடு கூட்டுக; புகழ் வழுத்தா என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு இரண்டாவதற்கு முடிபாக்கலுமாம். (33) ஆலய மருங்குவல மாகவரு வார்முன் மூலமறை யோதிமுடி யாதபொரு டன்னைச் சீலமுனி வோர்தெளிய மோனவழி தேற்றுங் கோலமுறை கின்றதொர் குருந்தையெதிர் கண்டார். (இ-ள்.) ஆலயம் மருங்கு வலமாக வருவார் - அத்திருக் கோயிலின்கண் வலமாக வரும் அவ்வாதவூரடிகள், முன் - முன்னொரு காலத்தில், மூலம் மறை ஓதி முடியாத பொருள் தன்னை - முதனூலாகிய மறையினை ஓதியும் அறிய முடியாத பொருளை, சீல முனிவோர் தெளிய - தவவொழுங்கினை யுடைய சனகாதி முனிவர்கள் தெளியுமாறு, மோனவழி தேற்றும் கோலம் உறைகின்றது - மெளனநெறியினாற் றெளிவித்த திருக்கோலம் வீற்றிருக்கப் பெற்றதாகிய, ஓர் குருந்தை எதிர் கண்டார் - ஒரு குருந்த மரத்தினை எதிரே கண்ணுற்றார். மோனவழி தேற்றுதல் - திருவாய் மலர்ந்தருளாது மோன முத்திரையத்தனாய் இருந்து காட்டுதல்; கடவுள் வாழ்த்தானுமறிக. ஆல் நிழலில் நால்வர்க்கு ஒளி நெறி காட்டிய அக்கோலத்துடனேயே இங்கே குருந்தினிழலில் எழுந்தருளியிருந்தாரென்க. (34) (கலிநிலைத்துறை) வேத நூலொரு மருங்கினு மெய்வழிச் சைவப் போத நூலொரு மருங்கினும் புராணத்துட் கிடந்த கீத நூலொரு மருங்கினுங் கிளைகெழு சமய பேத நூலொரு மருங்கினும் வாய்விட்டுப் பிறங்க. (இ-ள்.) வேதநூல் ஒரு மருங்கினும் - மறைநூல் ஒரு பாலும், மெய்வழிச் சைவப் போத நூல் ஒரு மருங்கினும் - உண்மை நெறியைக் கூறும் ஆகமமாகிய ஞான நூல் ஒரு பக்கத்தும், புராணத்துள் கிடந்த கீத நூல் ஒரு மருங்கினும் - புராணத்துடன் கிடந்த இசை நூல் ஒரு சிறையும், கிளை கெழு சமய பேதநூல் ஒரு மருங்கினும் - பல கிளைகளையுடைய வேற்றுமைப்பட்ட சமய நூல்கள் ஒரு மருங்கினும், வாய்விட்டுப் பிறங்க - வாய் விட்டு ஒலிக்கவும். புராணத்துடன் கிடந்த கீத நூல் என்க; மூன்றனுருபு நிற்குமிடத்து ஏழுனுருபு நிற்றல் வேற்றுமை மயக்கம். இசை விருப்பினராதலின் கீதநூலுங் கூறினார்; “ அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளுமாறே” என்னும் தமிழ் மறையுங் காண்க. பிறங்க - விளங்க; ஒலித்தல் மேற்று. (35) சுருதி கூறிய வறமுத னான்குமத் தொன்னூற் கரிய தாங்கதிக் கேதுவென் றாகமங் காட்டுஞ் சரியை யாதிநாற் பாதமுந் தலைதெரிந் துணர்ந்த பெரிய மாணவர் கழகமும் வினாவிடை பேச. (இ-ள்.) சுருதி கூறிய அறம்முதல் நான்கும் - மறைகள் கூறிய அறமுதலிய பொருள் நான்கினையும், அத் தொல்நூற்கு அரியதாம் கதிக்கு - அம் முதனூலுக்கு அரியதாகிய வீடுபேற்றுக்கு , ஏது என்று ஆகமம் காட்டும் - கருவி என்று ஆகமங்கள் கூறும், சரியை ஆதிநாற்பாதமும் - சரியை முதலிய பாதங்கள் நான்கினையும், தலைதெரிந்து உணர்ந்த - சிக்கறுத்து உணர்ந்த, பெரிய மாணவர் கழகமும் - பெரிய மாணவர் கூட்டங்களும், வினாவிடை பேச - வினாவும் விடையுமாகப் பேசவும். நாற்பாதம் - சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. சரியை - சிவபிரான், உயிர்கள் சோபான முறையானுணர்ந்து உய்தற் பொருட்டுக் கொண்டருளிய தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என்னும் மூவகை வடிவினுள்ளே நுண்ணுணர் வின்மையிற் சகளமாகிய தூல வடிவ மாத்திரத்தைப் பொருளென்றுணர்ந்து காயத் தொழின் மாத்திரையால் ஆகமத்தின் விதித்தவாறு வழிபடுதல்; கிரியை - அஃது அடிப்பட்டு வரவர நிகழும் பக்குவ விசேடத்தால் நுண்ணுணர்வுடையராய்ச் சகள நிட்களமாகிய சூக்கும வடிவமே பொருள், சகளயாவது இறைவனை வழிபடுதற்கிடமாகிய திருமேனி, என்று இவ்வாறுணர்ந்து புறமாகிய காயத் தொழிலானும் அகத் தொழிலானும் விதித்தவாறே வழிபடுதல்; யோகம் - அஃது அடிப்பட்டு வரவர நிகழும் பக்குவ விசேடத்தால் அதி நுட்ப வுணர்வுடையராய் நிட்களமாகிய அதிசூக்கும வடிவமே பொருள், சகளமும் சகள நிட்களமும் அதனை வழிபடுதற்கிடமாகிய திருமேனிகள், என்று இவ்வாறுணர்ந்து அகத்தொழின் மாத்திரையால் விதித்தவாறே வழிபடுதல்; ஞானம் - மூன்றும் இவ்வாறு முறையே அடிப்பட்டு வரவர நிகழும் பக்குவ முதிச்ச்சியானே உள்ளவாறு உணர்வு விளங்கி எங்கு நிறைந்த சச்சிதானந்தப் பிழம்பே சொரூபம், ஏனைச் சகளம் முதலிய மூன்றும் தூலாருந்ததி நியாயமாக அதனை உணர்த்தற் பொருட்டும் வழிபடுதற்பொருட்டும் கொண்ட திருமேனிகள், என்றிவ்வாறுணர்ந்து காயத்தொழில் மனத்தொழில் இரண்டனையும் கைவிட்டு, கேட்டல் முதலிய அறிவுத் தொழில் மாத்திரையால் வழிபடுதல்; இன்னும் இவற்றின் விரிவைச் சிவஞானபோத மாபாடியத்துட் காண்க. (39) சரியை வல்லமெய்த் தொண்டருஞ் சம்புவுக் கினிய கிரியை செய்யுநன் மைந்தருங் கிளர்சிவ யோகந் தெரியுஞ் சாதகக் கேளிருந் தேசிகத் தன்மை புரியும் போதகச் செல்வரு மளவிலர் பொலிய. (இ-ள்.) சரியை வல்லமெய்த் தொண்டரும் - சரியையில் வல்ல உண்மைத் தாதமார்க்கத்தினரும், சம்புவுக்கு இனிய கிரியை செய்யும் நல்மைந்தரும் - இறைவனுக்கு இனிய கிரியையினைச் செய்யும் நல்ல புத்திர மார்க்கத்தினரும், கிளர் சிவயோகம் தெரியும் சாதகக் கேளிரும் - விளங்கா நின்ற சிவயோகத்தினை அறியுஞ் சாதனையையுடைய சகமார்க்கத்தினரும், தேசிகத்தன்மை புரியும் போதகச் செல்வரும், அளவிலர் பொலிய - ஞானாசிரியத் தன்மையைச் செய்யும் ஞானச் செல்வராகிய சன்மார்க்கத்தாருமாகிய அளவிறந் தவர்கள் விளங்கவும். மேற்பாட்டிலே நாற்பாதத்தையும் ஆராய்ந்த மாணாக்கரைக் கூறி, இப்பாட்டில் அவற்றில் வல்லரா யொழுகுவாரைக் கூறினார் - சரியை முதலிய நான்கும் முறையே தாதமார்க்கம், புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனவும் பெயர் பெறும் எனவும், அந்நெறிகளில் நிற்பார் தொண்டர், மைந்தர், சாதகர், போதகர் எனப் பெய ரெய்துவார் எனவும், அவரெய்தும் பயன் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் பதமுத்தி பரமுத்திகளுமாம் எனவும் கொள்க; இவற்றினியல்பைச் சிவஞான சித்தியார் எட்டாஞ் சூத்திரத்தும், இப்புராணத்து வரகுணனுக்குச் சிவலோகங்காட்டிய படலத்தும் காண்க; “ அழிவி லானுரை யாகம மிலக்கமாய்ந் தவற்றுள் விழுமி தாகிய விதியினும் விலக்கினு மடியைத் தழுவு தொண்டர்கண் மைந்தர்கள் சாதகர் பாசங் கழுவி வீடருள் போதகக் காட்சியர் பலரால்” என்னும் நகரப்படலச் செய்யுளும் இங்கு நோக்கற் பாலது. கேளிர் - சகர், தோழர். (37) ஒழித்த நோன்பின ராடலர் பாடல ருலகம் பழித்த செய்கைய ரழுகையர் நகையினர் பாசங் கழித்த கண்ணினா லரனுருக் கண்டுகொண் டுலகில் விழித்த கண்குரு டாத்திரி வீரரும் பலரால். (இ-ள்.) ஒழித்த நோன்பினர் ஆடலர் பாடலர் - விதி விலக்குக் கடந்த தவத்தினை யுடையராய் ஆடியும் பாடியும், உலகம் பழித்த செய்கையர் - உலகத்தாராற் பழிக்கப்படுஞ் செய்கையையுடையராய், அழுகையர் நகையினர் - அழுகையை யுடையராய், நகையினை யுடையராய், பாசம் கழித்த கண்ணினால் - மலத்தை நீக்கிய ஞானக் கண்ணினால், அரன் உருக் கண்டுகொண்டு - இறைவன் திருவுருவத்தை இடையறாது தரிசித்துக் கொண்டு, உலகில் விழித்த கண் குருடாத்திரி வீரரும் பலர் - உலகின்கண் திறந்த ஊனக்கண் குருடாகத் திரிகின்ற வீரரும் பலர். பசுகரணம் பதிகரணமாக நிகழப் பெற்றுத் தற்செயலிழப்பி னின்று செய்வன யாவும் அவர்க்குத் தவமா மென்பார் ‘ஒழித்த நோன்பினர்’ என்றார்; “ சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்” என்னும் திருவாசகத்தைச் சிந்திக்க. சிவானந்த மேலீட்டால் ஆடல் பாடல் செய்வர். இவர்கள் அறிவொழியும் பாலர் குணத்தையும், ஒருகாற் செய்து ஒருகாலிழக்கும் உன்மத்தர் குணத்தையும், செயலிழப்பினின்று செய்யும் பிசாசர் குணத்தையும் பொருந்தினவராகலின் ‘உலகம் பழித்த செய்கையர் அழுகையர் நகையினர் எனப்பட்டார். பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பார் பதார்த்தங்கள் பாரார் என்றபடி, உலகப் பொருளை முன் நோக்கி யாங்கு நோக்கி நிற்பினும் அப்பொருள் அதற்குத் தோன்றா திருத்தலின் விழித்த கண் குருடா என்றார். பாசம் கழித்த கண் - ஞானக்கண். விழித்த கண் - ஊனக்கண். இது முதல் மூன்று செய்யுட்களால் சன்மார்க்கருள் ஞான நிட்டை யடைந்தா ரியல்புகள் கூறப்படுகின்றன. (38) கரவி லுள்ளமாம் விசும்பிடைக் காசற விளங்கும் பரசி லாச்சுடர்க் குதயமீ றின்மையாற் பகலும் இரவு நேர்படக் கண்டில ரியன்றுசெய் நித்த விரத மாதிநோன் பிழந்துறை விஞ்சையர் பலரால். (இ-ள்.) கரவு இல் உள்ளமாம் விசும்பிடை - கள்ளமில்லாத உள்ளம் என்ற வானில், காசு அற விளங்கும் பரசு இலாச் சுடர்க்கு - களங்கமின்றி விளங்கா நின்ற மழுவில்லாத சிவ சூரியனுக்கு, உதயம் ஈறு இன்மையால் - தோற்றமும் மறைவும் இல்லையாகையால், பகலும் இரவும் நேர்படக் கண்டிலர் - பகலும் இரவுந் தோன்றக் காணாதவராய், இயன்று செய் நித்த விரதம் ஆகி நோன்பு இழந்து உறை - மனம் பொருந்திச் செய்யும் நாட் கடன் முதலிய தவங்கள் நெகிழ்ந்தொழியப் பெற்று உறைகின்ற, விஞ்சையர் பலர் - ஞானிகளும் பலர். உள்ளம் - ஆன்மா, மனமுமாம். காசு அற என்பதற்கு மலமாசு நீங்குதலால் என்றுரைத்தலுமாம். கரசரணாதி அவயவமின்றிச் சுயஞ்சோதியாய்ப் பிரகாசித்தலின் ‘பரசிலாச் சுடர்’ என்றார்; பரசுஇன்மை கூறவே கரம் முதலியன இன்மை பெற்றாம். பகல் இரவு என்பதற்குச் சகல கேவலமும், நாட் கூறாகிய பகல் இரவும் பொருளாகக் கொள்க; அவ்விரண்டுங் காணாமையாவது சாக்கிரத்தே நின்மல துரியா தீதத்தைப் பொருந்தி நிற்றல். நித்தமாதி விரதம் - ஞானத்திற்குக் காரணமாகக் கன்ம காண்டம் பற்றிச் செய்யப்படும் சிரியைகள்; அவை “உறங்கினோன் கை வெறும் பாக்கென”த் தாமே தவிரவேண்டுமெனச் சங்கற்ப நிராகரணத்துள் ஓதுதலின் ‘நோன்பிழந்துறை’ என்றார். விஞ்சையர் - ஞானிகள். இச்செய்யுட்களின் கருத்தை, “ ஞாலமதின் ஞானநிட்டை யுடையோருக்கு நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை சீலமிலை தவமில்லை விரதமொ டாச்சிரமச் செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை கோலமிலை புலனில்லை கரண மில்லை குணமில்லை குறியில்லை குலமு மில்லை பாலருட னுன்மத்தர் பிசாசர்குண மருவிப் பாடலினோ டாடலிவை பயின்றிடினும் பயில்வர்”” என்னும் சிவஞான சித்தியார்த் திருவிருத்தத்தால் நன்கு தெளிக. (39) உடையுங் கோவண முண்டியுங் கைப்பலி யுறவென் றடையுங் கேளிரு மரனடி யார்கண்டி கலன்கண் படையும் பாரிட மாயினும் பகலிரா முதலீ றிடையின் றாமிடத் துறங்குவ திஃதவர் வாழ்க்கை. (இ-ள்.) உடையும் கோவணம் - ஆடையுங் கோவணமே; உண்டியும் கைப்பலி - உணவும் கையிலேற்கும் பலியே; உறவு என்று அடையும் கேளிரும் அரன் அடியார் - உறவினர் என்று அடையுஞ் சுற்றத்தாருஞ் சிவனடியார்களே; கலன் கண்டி - அணிகலனும் உருத்திராக்க மாலையே; கண் படையும் பாரிடம் - துயிலுமிடமும் நிலமே; ஆயினும் - ஆனாலும், உறங்குவது - இவர்கள் தூங்குவது; பகல் இரா முதல் இடைஈறு இன்றாம் இடத்து - பகலும் இரவும் முதலும் நடுவும் முடிவுமில்லாத இடத்தின்கண்; இஃது அவர் வாழ்க்கை - இஃதே அவர் வாழ்க்கையாகும். “ அகலிடமே யிடமாக வூர்க டோறும் அட்டுண்பா ரிட்டுண்பார் விலக்காரையம் புகலிடமா மம்பலங்கள் பூமிதேவி யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே” எனவும், “ உறவாவா ருருத்திரபல் கணத்தினோர்க ளுடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே”” எனவும் வரும் தமிழ்மறைகள் இங்கே சிந்திக்கற் பாலன. முதல் இடை ஈறு என்பதற்குச் சிருட்டி திதி சங்காரம் என்னும் முத்தொழிலும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலமும், முதல் இடை கடை என்னும் மூவிடமும் கொள்க. (40) இத்த கைப்பல தொண்டர்தங் குழாத்திடை யாலம் ஒத்த பைங்குருந் தடியினில் யோகவா சனத்திற் புத்த கத்தெழு தியசிவ ஞானமெய்ப் போதங் கைத்த லந்தரித் திருப்பதோர் கருணையைக் கண்டார். (இ-ள்.) இத்தகைப் பல தொண்டர் தம் குழாத்திடை - இத் தன்மையுடைய பல அடியார் கூட்டத்தின் நடுவில், ஆலம் ஒத்த பைங்குருந்தடியினில் - கல்லால மரம் போன்ற பசிய குருந்த மரத்தினடியில், யோக ஆசனத்தில் - யோகாசனத்தில், புத்தகத்து எழுதிய சிவஞான மெய்ப்போதம் - உண்மையாகிய சிவஞான போதம் எழுதியசுவடியினை, கைத்தலம் தரித்திருப்பதோர் கருணையைக் கண்டார் - திருக்கரத்தின்கண் தாங்கியிருக்கும் ஓர் அருள் வடிவத்தைக் கண்டனர். யோகவாசனம், தமிழ் நூன் முடிபு. எழுதிய புத்தகத்தை என்க. (41) மன்று ளாடிய வானந்த வடிவமும் வடவால் ஒன்றி நால்வருக் கசைவற வுணர்த்திய வுருவும் இன்று நாயினேற் கெளிவந்த விவ்வுரு வென்னா அன்று நாயகன் குறிப்புளத் துணர்த்திட வறிந்தார். (இ-ள்.) அன்று நாயகன் குறிப்பு உளத்து உணர்த்திட - அங்ஙனங் கண்ட காலை இறைவனது திருவருட் குறிப்பு உள்ளத்தின்கண் உணர்த்தியருளுதலால், இன்று நாயினேற்கு எளிவந்த இவ்வுரு - இப்பொழுது நாயேனுக்கு எளிவந்த இக்கருணை வடிவமானது, மன்றுள் ஆடிய ஆனந்த வடிவமும் - அம்பலத்திலே திருக் கூத்தாடியருளிய இன்பவடிவமும், வடவால் ஒன்றி - கல்லாலின் கீழிருந்து, நால்வருக்கு அசைவு அற உணர்த்திய உருவும் - சனகாதி முனிவர் நால்வருக்கும் மன அசைவு நீங்குமாறு உணர்த்தி யருளிய வடிவமுமே, என்னா அறிந்தார் - என்று உணர்ந்தார். அசைவற என்ப'e7çத இரட்டுற மொழிதலாக்கி, அசைவற இருந்து உணர்த்திய என்றுங் கொள்க. திருவருள் முன்னின் றுணர்த்தச் சிவத்தை யுணரு முணர்ச்சி கைகூடிற்றென்பார், நாயகன் குறிப்புளத் துணர்த்திட வறிந்தார் என்றார். (42) முன்ப ணிந்தன ரணிந்தன ரஞ்சலி முடிமேல் என்பு நெக்கிட வுருகின ரினியரா யெளிவந் தன்பெ னும்வலைப் பட்டவ ரருள்வலைப் பட்டார் துன்ப வெம்பவ வலையறுத் திடவந்த தொண்டர். (இ-ள்.) துன்ப வெம்பவ வலை அறுத்திட வந்த தொண்டர் - துன்பமயமாகிய கொடிய பிறவி வலையினை அறுத்தற்கு வந்த தொண்டராகிய வாதவூரடிகள், முன்பணிந்தனர் - திருமுன்னர் வணங்கி, முடிமேல் அஞ்சலி அணிந்தனர் - தலைமேற் கைகளைக் குவித்து. என்பு நெக்கிட உருகினர் - என்பு நெக்குவிட உருகி, இனியராய் எளிவந்து அன்பு எனும் வலைப்பட்டவர் - இனியராகி எளிவந்து அடியார் அன்பாகிய வலையிற்பட்ட அவ்விறைவரது, அருள் வலைப்பட்டார் - அருளாகிய வலையின்கட் பட்டனர். பணிந்தனர், அணிந்தனர், உருகினர் என்பன முற்றெச்சங்கள்; முற்றாகவே யுரைத்தலுமாம். பின்னிரண்டடியின் நயம் மிக்க இன்பம் விளைப்பதாகும். (43) கால முங்கனாக் காட்சியு 1நிமித்தமுங் கடிந்தார் சீல மாணவர் செவ்விதேர் தேசிக னென்ன மூல வாகம மோதினான் முறுக்கவிழ் கழுநீர் மாலை சாந்தணிந் தடியின்மேல் வன்கழல் வீக்கி. (இ-ள்.) காலமும் - தீக்கைக் குரிய நல்லோரையும், கனாக் காட்சியும் - கனாத் தோற்றமும், நிமித்தமும் - நன்னிமித்தங்களுமாகிய இவற்றையறிந்து செய்தற்குரிய பக்குவத்தினை, கடிந்தார் சீலமாணவர் செவ்விதேர் - நீங்கியாராகிய ஞானவொழுக்கத் தினையுடைய மாணவரது பக்குவத்தை நன்கு அறியும், தேசிகன் என்ன - ஞானாசிரியன் என்று அறிஞர் கூறுமாறு, மூல ஆகமம் ஓதினான் - மூலாகமங்களை அருளிச் செய்த அவ்விறைவன், முறுக்கு அவிழ் கழுநீர்மாலை சாந்து அணிந்து - கட்டவிழ்ந்த செங்கழுநீர் மாலையையும் சந்தனத்தையும் அணிந்து, அடியின்மேல் வன்கழல் வீக்கி - திருவடியின்மேல் வலிய வீரக் கழலைக் கட்டி. காலம் - தீக்கைக்கு விதித்த காலம். கனாக்காட்சி - ஆசிரியன் மாணாக்கனைப் பல முகத்தானும் சோதித்த பின்னர்த் தீக்கைக்குக் குறித்த நாட்கு முதல் நாளிரவு தூய நிலத்தில் தருப்பைப் படுக்கையில் அவனைத் துயிலச் செய்ய அப்போது அவன் காணும் கனவு; அது நன்றாயின் அங்கீகரித்தும் தீதாயின் அதன் பொருட்டு ஆகமத்திற்சொல்லப்பட்ட கழுவாய் புரிந்தும் தீக்கை செய்வர் என்பர். நிமித்தம் பல்லி முதலியவற்றால் உணர்த்தப்படும் நற்சகுனம்; “ வந்துநான் வறுமை யுற்றேன் மாற்றென திலம்பா டென்று சிந்தையா குலமுற் றான்கைச் செழும்பொரு ளீதல் செய்வார்க் கிந்தநா ளளிக்க வேண்டு மெனவிதி யின்மை யாலே அந்தநா ளிந்நாளாக வடிமைகொண் டருள வேண்டி” என்பது திருவாதவூரர் புராணம். கழுநீர்மாலை யணிந்தமை “ மூல மாகிய மும்மல மறுக்கும், தூய மேனிச் சுடர்விடு சோதி காதல னாகிக் கழுநீர் மாலை, யேலுடைத் தாக வெழில்பெற வணிந்து”” என அடிகள் தாமே கூறுமாற்றானும் அறியப்படும். (44) அண்ணல் வேதிய ரொழுக்கமு மன்புங்கண் டியாக்கை உண்ணி லாவுயிர் பொருள்புன லுடன்கவர்ந் துள்ளக் கண்ணி னான்மலங் கழீஇப்பத கமலமுஞ் சூட்டி வண்ண மாமலர்ச் செங்கரஞ் சென்னிமேல் வையா. (இ-ள்.) அண்ணல் வேதியர் - பெருமை பொருந்திய மறையவராகிய வாதவூரடிகளின், ஒழுக்கமும் அன்பும் கண்டு - ஞான ஒழுக்கத்தினையும் அன்பினையும் பார்த்து, யாக்கைஉள் நிலாவு உயிர் பொருள் புனலுடன் கவர்ந்து - உடலையும் அதனுள் உலாவும் உயிரையும் பொருளையும் தான நீருடன் ஏற்று, உள்ளக் கண்ணி னால் மலம் கழீஇ - அக நோக்கினால் மலமாசினைக் கழுவி, பத கமலமும் சூட்டி - திருவடித் தாமரையையும் முடியிற் சூட்டி, வண்ணம் மாமலர்ச் செங்கரம் - அழகிய தாமரை மலர்போன்ற சிவந்த திருக் கரத்தினை, சென்னிமேல் வையா - முடியின்மேல் வைத்து. உள்ளக் கண்ணினால் மலங்கழீஇ என்றது மானத தீக்கை. பதகமலமுஞ் சூட்டி என்றது திருவடி தீக்கை. செங்கரஞ் சென்னிமேல் வையா என்றது அத்தமத்தக சையோகமெனப்படும் பரிச தீக்கை. உள்ளக் கண்ணினால் என்பதற்கு ஒளத்திரியின் ஞான தீக்கையால் என உரைத்தலுமாம்; ஞானதீக்கைக் குரியார்க்கும் பரிச தீக்கை விலக்கின் றென்க; தீக்கை வகைகளை, “ பலவிதமா சான்பாச மோசனந்தான் பண்ணும் படிநயனத் தருள்பரிசம் வாசகமா னதமும் அலகில் சாத்திரயோக மவுத்தி ராதி யநேகமுள வவற்றினவுத் திரியிரண்டு திறனாம் இலகுஞா னங்கிரியை யெனஞான மனத்தா லியற்றுவதுகிரியையெழிற் குண்டமண்ட லாதி நிலவுவித்துச் செய்தல் கிரியாவதிதா னின்னும் நிர்ப்பீசஞ் சபீசமென விரண்டாகி நிகழும்”” என்னும் சிவஞான சித்தியார்த் திருவிருத்தத்தா லறிக. இறைவன் தம் உயிர் உடல் பொருள்களை யெல்லாம் ஏற்றருளினமையை, “ அன்றே யென்ற னாவியு முடலு முடைமை யெல்லாமுங் குன்றே யனையா யென்னையாட் கொண்டபோதே கொண்டிலையோ இன்றோ ரிடைபூ றெனக்குண்டோ வெண்டோண் முக்கணெம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ விதற்கு நாயகமே” எனத் திருவாசகத்துள் அடிகள் தாமே அருளிச் செய்தலானுமறிக. (45) சூக்க மாகுமைந் தெழுத்தினிற் சுற்றிய பாச வீக்க நீக்கிமெய் யானந்தம் விளைநிலத் துய்த்துப் போக்கு மீட்சியுட் புறம்பிலாப் பூரண வடிவம் ஆக்கி னானொரு தீபகம் போல்வரு மண்ணல். (இ-ள்.) சூக்கமாகும் ஐந்தெழுத்தினில் - சூக்குமமென்னும் திருவைந்தெழுத்தின் உபதேசத்தினால், சுற்றிய பாச வீக்கம் நீக்கி - வாதவூரரைப் பந்தித்த பாசக் கட்டினைப் போக்கி, மெய் ஆனந்தம் விளைநிலத்து உய்த்து - அழியாத இன்பம் விளையும் நிலத்திற் செலுத்தி, போக்கு மீட்சி உள் புறம்பு இலாப் பூரண வடிவம் ஆக்கினான் - போக்கும் வரவும் உள்ளும் புறம்பு மில்லாத வியாபக வடிவமாகச் செய்தனன்; ஒரு தீபகம்போல் வரும் அண்ணல் - ஒரு பார்வைபோன்று எளிவந்த இறைவன். பஞ்சாக்கரம் தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என மூவகைப் படும் என்றும், தூலம், சூக்குமம், காரணம், மகாகாரணம், முத்தி என ஐவகைப்படும் என்றும் கூறுப; அவற்றுள் சூக்குமம், இங்கு உபதேசித்தமை கூறினார்; அது, “ நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன்” என அடிகள் திருவாசகத்துள் அருளிச் செய்ததாகும் என்பர். சூக்கம், பாகதச் சிதைவு. சுற்றிய பாச வீக்கம் என்பதற்குத்திரோதாயி, ஆணவங்களை யுணர்த்தும் இரண்டக் கரங்கள் என்பாரு முளர். கண்ட வடிவன்றாகையால் போக்கு மீட்சி உட்புறம்பிலாதாயிற்று. பூரண வடிவமாக்கினான் - சிவசொரூபமாக்கினான். தீபகம் - பார்வை; மான்காட்டி மான் பிடிப்பார்போல வாதவூரரை ஆட்கொள்ளுதற்குத் திருவுருக் கொண்டு வந்தனர் என்க. அண்ணல் ஆக்கினான் என முடியும். பல்வகைப் பஞ்சாக்கரங்களி னியல்பும், அவற்றை ஓது முறையும், நிற்குமுறையும் குருமுகத்தால் அறியற்பாலன. (46) பார்த்த பார்வையா லிரும்புண்ட நீரெனப் பருகுந் தீர்த்தன் றன்னையுங் குருமொழி செய்ததுந் தம்மைப் போர்த்த பாசமுந் தம்மையு மறந்துமெய்ப் போத மூர்த்தி யாயொன்று மறிந்திலர் வாதவூர் முனிவர். (இ-ள்.) பார்த்த பார்வையால் - நோக்கிய திருவருள் நோக்கத் தினாலே, இரும்பு உண்ட நீர் எனப் பருகும் - காய்ச்சிய இரும்பு நீரினைப் பருகினாற்போலப் பருகிய, தீர்த்தன் தன்னையும் - தூயவனாகிய அவ்வாசிரியனையும், குருமொழி செய்ததும் - அக்குரவன் உபதேசமொழி அருளியதையும், தம்மை போர்த்த பாசமும் - தம்மை மறைத்த பாசத்தையும், தம்மையும் மறந்து - தம்மையும் மறந்துவிட்டு, மெய்ப்போத மூர்த்தியாய் - மெய்ஞ்ஞான வடிவினராய், ஒன்றும் அறிந்திலர் வாதவூர் முனிவர் - ஒன்றனையும் அறியாதவராயினர் வாதவூர் முனிவர். பருகும் - அத்துவிதமாகத் தம்முள் அடக்கிய; மும்மலங் களையும் சுவற்றிய என்பாருமுளர். பாசத்தை மறத்தலாவது பாசமொழிந்து நிற்றல். தீர்த்தனையும் குருமொழி செய்ததனையும் தம்மையும் மறத்தலாவது ஞேயம் ஞானம் ஞாதுரு என்னும் மூன்றும் நழுவாமல் நழுவி நிற்றல். ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஞானவொளி நிறைந்திருந்தன ரென்பார் ‘மெய்ப்போத மூர்த்தியாய்’ என்றார். ‘முனிவர்’ என உடம்பொடு உணர்த்தும் அவரது ஞான நிட்டை நிலை விளக்கினார். (47) தேனும் பாலுந்தீங் கன்னலு மமுதுமாய்த் தித்தித் தூனு முள்ளமு முருக்கவுள் ளொளியுணர்ந் தின்பம் ஆன வாறு 1தேக் கிப்புறங் கசிவதொத் தழியா ஞான வாணிவந் திறுத்தன ளன்பர்தந் நாவில். (இ-ள்.) தேனும் பாலும் தீங்கன்னலும் அமுதுமாய்த் தித்தித்து- தேனும் பாலும் இனிய கருப்பஞ்சாறும் அமிழ்துமாகத் தித்தித்து, ஊனும் உள்ளமும் உருக்க - உடலையும் உள்ளத்தையும் உருக்க, உள்ஒளி உணர்ந்து - அகத்திற்றோன்றிய அருளொளியை உணர்ந்து, இன்பம் ஆன ஆறு தேக்கி - இன்பமாகிய ஆறு தேக்கப் பட்டு, புறம் கசிவது ஒத்து - புறத்திற் கசிவதுபோல, அழியா ஞானவாணி வந்து அன்பர் தம்நாவில் இறுத்தனள் - அழியாத ஞானக் கலைமகள் தானே வந்து அவ்வன்பருடைய நாவின்கண் தங்கினள். தேனும் பாலுந் தீங்கன்னலு முதுமாய்த் தித்தித்தமை, “ ஊனா யுயிரா யுணர்வாயென் னுட்கலந்து தேனா யமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் வானோ ரறியா வழியெமக்குத் தந்தருளும் தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார்”” எனவும், உள்ளொளி யுணர்ந்தென்பது, “ சீரார் பெருந்துறையில் எளிவந் திருந் திரங்கி யெண்ணரிய வின்னருளால் ஒளிவந்தெ னுள்ளத்தி னுள்ளே யொளிதிகழ அளிவந்த வந்தணனை”” எனவும் அடிகள் திருவம்மானையில் அருளிச் செய்தலானறியப் படும். இன்பவெள்ளம் உண்ணிறைந்து புறங்கசிவதுபோல ஞானமயமான மொழிகள் நாவில் வெளி வரலாயின வென்க. (48) தொழுத கையினர் துளங்கிய முடியினர் துளும்ப அழுத கண்ணினர் பொடிப்புறு மியாக்கையர் நாக்குத் தழுத ழுத்தவன் புரையினர் தமையிழந் தழல்வாய் இழுதை யன்னமெய் யினர்பணிந் தேத்துவா ரானார். (இ-ள்.) தொழுத கையினர் துளங்கிய முடியினர் - கூப்பிய கையினராய் நடுங்கிய தலையினராய், துளும்ப அழுத கண்ணினர்- நீர் ததும்ப அழுத கண்ணினராய், பொடிப்புறும் யாக்கையர் - புளகித்த உடலை யுடையவராய், நாக்குத் தழுதழுத்த அன்பு உரையினர் - நாத்தழுதழுத்த அன்பு மொழியினராய், தமை இழந்து- சீவபோதத்தை இழந்து, அழல்வாய் இழுதை அன்ன மெய்யினர் - நெருப்பிற்பட்ட நெய்போன்ற உடலையுடையராய், பணிந்து ஏத்துவார் ஆனார் - வணங்கித் துதிப்பாராயினர். கையினர் முதலிய குறிப்பு முற்றுக்கள் எச்சமாயின. தலையன் பின் செய்கைகள் இதிற் கூறப்பட்டன. “ திருத்திகழ் கவிகைக் கீழுஞ் சிறந்தபொற் சிவிகை மேலும் வரத்திரு மேவு தானை மன்னவ னென்ன வந்தார் உருத்தெரி யாத நீறுங் கோவண வுடையுங் குஞ்சி விரித்துள சிரமுங் கண்ணீர் மிகப்பொழி விழியு மானார்”” “ அன்புட னோக்கி நிற்ப ரழுவர்கை தொழுவர் வீழ்வர் இன்புற வெழுவர் பின்பா லேகுவ ரிரங்கி மீள்வர் நன்பகல் கங்குல் காணார் ஞானநல் லறிவே கொண்டு கொன்புனை பித்தர் பாலர் பிசாசர்தங் கொள்கை யானார்”” எனவரும் திருவாதவூரர் புராணச் செய்யுட்கள் நோக்கற்பாலன. (49) பழுதி லாதசொன் மணியினைப் பத்திசெய் தன்பு முழுது மாகிய வடத்தினான் முறைதொடுத் தலங்கல் அழுது சாத்துமெய் யன்பருக் ககமகிழ்ந் தையர் வழுவி லாதபேர் மாணிக்க வாசக னென்றார். (இ-ள்.) பழுது இலாத சொல் மணியினை - குற்றமற்ற சொல்லாகிய மாணிக்கங்களை, பத்தி செய்து - வரிசைப்படுத்தி, அன்பு முழுதும் ஆகிய வடத்தினால் முறை தொடுத்த அலங்கல் - முற்றும் அன்பாகிய நாணினால் முறையாகக் கோத்த மாலையை, அழுது சாத்தும் மெய் அன்பருக்கு - அழுது சூட்டிய உண்மை அன்பராகிய அவ்வாதவூரருக்கு, ஐயர் அகமகிழ்ந்து - ஆசிரியர் மனமகிழ்ந்து, வழு இலாதபேர் மாணிக்க வாசகன் என்றார் - குற்றமில்லாத பெயர் மாணிக்கவாசகன் என்று கூறியருளினார். அகவிருளை நீக்கி ஒளிர்வன வாகலின் ‘சொன் மணியினை’ எனவும், ஒவ்வொரு சொல்லும் அன்பால் ஊடுருவப் பட்டிருத்தலின் ‘அன்பு முழுதுமாகிய வடத்தினால்’ எனவும் கூறினார். வாழ்த்துள்ளும் ‘அழுதடி யடைந்த வன்பன்’ எனக் கூறிப் போந்தமை சிந்திக்கற்பாலது. தொடுத்த என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது; தொடுத்து அவ்வலங்கல் எனச் சுட்டு வருவித்துரைத்தலுமாம். ஐயர் அன்பருக்கு வழுவிலாதபேர் மாணிக்க வாசகன் என்றார் எனமுடிக்க. தீக்கையில் மாணவருக்கு ஏற்புடைய பெயர் ஆசிரியரால் வழங்கப் படுவதுண்டாகலின் இஃதும் அங்ஙனம் வழங்கப் பெற்றபெயரென்க. (50) பாட்டிற் கின்புறு குருபரன் பாதமேற் கண்ணீர் ஆட்டிச் சொன்மல ரணிந்துதற் போதவின் னமுதை ஊட்டித் தற்பர ஞானமா மோமவெங் கனலை மூட்டிச் சம்புவின் பூசைமேன் முயற்சிய ரானார். (இ-ள்.) பாட்டிற்கு இன்புறு குருபரன் - பாட்டிற்கு மகிழும் குருநாதனுடைய, பாதமேல் கண்ணீர் ஆட்டி - திருவடிமேல் ஆனந்தக் கண்ணீரால் திருமஞ்சன மாட்டி, சொல்மலர் அணிந்து - சொல்லாகிய மலரைச்சூட்டி, தற்போதஇன் அமுதை ஊட்டி - சீவபோதமாகிய இனிய அமுதினை உண்பித்து, தற்பர ஞானமாம் ஓமவெங் கனலை மூட்டி - பரஞானமாகிய ஓமஞ் செய்தற்குரிய வெப்பமாகிய கனலை மூட்டி, சம்புவின் பூசை மேல் முயற்சியர் ஆனார் - (இவ்வாறு) சிவபூசையில் முயற்சியுடையவர் ஆயினார். கண்ணீர் சொரிதலும், பாடுதலும், தற்போதமிழந்து நிற்றலும், பரஞானமேலிடலும் ஆகிய இவற்றை முறையே திருமஞ்சனமாட்டல், அருச்சித்தல், நிவேதித்தல், ஒமக் கனல் வளர்த்தல் என்பனவாக உருவகித்துச் சிவபூசை யென்றனர்; எனவே, வேறு பூசை யின்றேனும் இவை தாமே உண்மைச் சிவபூசனை யாமென்பது போதரும்; அந்தரியாக பூசை என்பாருமுளர்; “ மறவாமை யானமைத்த மனக்கோயி லுள்ளிருத்தி உறவாதி தனையுணரு மொளிவிளக்குச் சுடரேற்றி இறவாத வானந்த மெனுந்திருமஞ் சனமாட்டி அறவாணர்க் கன்பென்னு மமுதமைத் தர்ச்சனை செய்வார்”” என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் இங்கே கருதற்பாலது. (51) ஆசை வெம்பவ வாசனை யற்றுமா ணிக்க வாச கப்பிரான் றேசிகன் மாணவ ரோதும் ஓசை யாகம வுபநிடப் பொருளெலாங் கேட்டு நேசமங்குவைத் திருந்தன ரதுகண்டு நிருத்தன். (இ-ள்.) ஆசை வெம்பவ வாசனை அற்று - அவாவினால் வரும் கொடிய பிறவி வாசனை நீங்கி, மாணிக்க வாசகப் பிரான் - மணிவாசகப் பெருமானார், தேசிகன் மாணவர் ஓதும் - ஞானாசிரியனது மாணவர்கள் ஓதுகின்ற, ஓசை ஆகம உபநிடப் பொருள் எலாம் கேட்டு - ஒலியினையுடைய ஆகமப் பொருளும் உபநிடதப் பொருளுமாகிய அனைத்தையும் கேட்டு, நேசம் அங்கு வைத்து இருந்தனர் அன்பினை அங்குப் பதிய வைத்து இருந்தனர்; நிருத்தன் அது கண்டு - ஆசிரியனாகிய கூத்தபிரான் அதனைக் கண்டு. ஆசையும், பிறவிக்கேதுவாகிய மலவாசனையும் என்றுமாம். தேசிகனும் மாணவரும் வினா விடைகளாகக் கூறும் என்றுரைத்தலும் பொருந்தும். சித்தாந்தப் பொருளும் வேதாந்தப் பொருளும் கேட்டு என்க. உபநிடதம் எனற்பாலது உபநிடம் என விகாரமாயிற்று. (52) [எண்சீரடி யாசிரிய விருத்தம்] தித்திக்கு மணிவார்த்தை யின்னஞ் சின்னாட் டிருச்செவியி லருந்தவுங்கைச் செம்பொ னெல்லாம் பத்திப்பே ரன்பளித்துக் கவர்ந்து வேண்டும் பணிகொடுபாண் டியனையிவர் பண்பு தேற்றி முத்திக்கே விடுத்திடவும் புத்தை வாது முடித்திடவுந் திருவுள்ள முன்ன மெய்தி எத்தித்தொண் டரைக்கருமஞ் சிறிதுண் டிங்கே யிருத்தியென வுருக்கரந்தா னடிய ரோடும். (இ-ள்.) தித்திக்கும் மணிவார்த்தை இன்னம் சில்நாள் திருச்செவியில் அருந்தவும் - இனிக்கின்ற மாணிக்கம் போலும் வாசகமாகிய அமிர்தினை இன்னும் சில நாட்கள் வரையிலும் தமது திருச்செவியாகிய வாயினால் உண்ணவும், கைச் செம்பொன் எல்லாம் - கையிலுள்ள செம்பொன் அனைத்தையும், பத்திப்பேர் அன்பு அளித்துக் கவர்ந்து - பத்தி என்னும் தலையன்பினைத் தந்து கவர்ந்து கொண்டு, வேண்டும் பணி கொடு - தாம் விரும்பும் பணியை ஏற்றுக்கொண்டு, பாண்டியனை இவர் பண்புதேற்றி - பாண்டியனுக்கு இவர் பண்பினை அறிவித்து, முத்திக்கே விடுத்திடவும் - வீட்டின்கட் செலுத்தவும், புத்தை வாது முடித்திடவும் - புத்தரை வாதின்கண் வென்று அழிக்கவும், திருவுள்ளம் முன்னம் எய்தி - திருவுள்ளத்திற் கருதி, தொண்டரை - வாதவூரடிகளை, கருமம் சிறிது உண்டு - சிறிது காரியம் உளது (ஆதலால்), இங்கே இருத்தி என - இங்கு இருப்பாயாக என்று, எத்தி - விரகு செய்து, அடியாரோடும் உருக்கரந்தான் - அடியார்களோடும் மறைந்தருளினான். வார்த்தை : கருவியாகு பெயர். அன்பு அளித்துச் செம்பொன் கவர்ந்து என்றது பரிவருத்தனை, பாண்டியனை, முத்திக்கு என்பன வேற்றுமை மயக்கம், புத்து, சமண் என்பதுபோல் நின்ற குழூஉப் பெயர் முன்னம் - குறிப்பு. எத்தல் - விரகு செய்தல்; ஏமாற்றலுமாம். இருத்தி - இருப்பாய்; இ விகுதி எதிர்காலங் காட்டிற்று. (53) கனவில்வருங் காட்சியெனக் கருணை மூர்த்தி காட்டிமறைத் தலுமன்பர் கலக்கத் தாழ்ந்து நனவுகொல்லோ கனவுகொல்லோ வின்று நாதன் ஞமலிக்குத் தவிசிட்ட நலம்போ லென்னை நினைவரிய திருமேனி காட்டி யாண்டு நீத்ததையென் றையுற்று நெஞ்சந் தேறி இனவடியா ருடன்கூட்டா தேகி னாயோ வென்னையுமென் வினையையுமிங் கிருத்தி யெந்தாய். (இ-ள்.) கனவில் வரும் காட்சி என - கனவிற்றோன்றும் தோற்றம் போல, கருணைமூர்த்தி காட்டி மறைத்தலும் - அருள்வடிவினராகிய இறைவர் தமதுருவைக் காட்டி மறைத்தவளவில், அன்பர் - வாதவூரடிகள், கலக்கத்து ஆழ்ந்து - துன்பக் கடலுள் அழுந்தி, நாதன் இன்று நினைவு அரிய திருமேனி காட்டி - இறைவன் இன்று நினைத்தற்கரிய தனது திருமேனியைக் காண்பித்து, ஞமலிக்கு தவிசு இட்ட நலம் போல் - நாய்க்குத் தவிசு அளித்து நலம்பட ஆண்டமை போல, என்னை ஆண்டு - என்னை ஆண்டருளி, நீத்தது - நீங்கியருளியது, நனவு கொல்லோ கனவு கொல்லோ என்று ஐயுற்று - நனவோ அன்றிக் கனவோ என்று ஐயுற்று, நெஞ்சம் தேறி - (பின் நனவே என) மனந் தெளிந்து, எந்தாய் - எம் தந்'e7çதயே, இன அடியாருடன் கூட்டாது - உன் இனமாகிய அடியாரொடு சேர்க்காமல், என்னையும் என் வினையையும் இங்கு இருத்தி ஏகினாயோ - அடியேனையும் அடியேன் வினையையும் இங்கு இருத்திச் சென்றனையோ. ஞமலிக்குத் தவிசிட்ட நலம்போல் என்ற கருத்து, “ நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு” எனவும், “ பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேயுன் பொன்னருள” எனவும் திருவாசகத்துள் வருதல் காண்க. நினைவரிய திருமேனி காட்டி ஆண்டமையை, “ வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி மலர்க்கழல்க ளவைகாட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்” எனவும், “ பேணு பெருந்துறையிற் கண்ணார் கழல்காட்டி நாயேனை யாட்கொண்ட” எனவும், “ உருநா மறியவோ ரந்தணனா யாண்டுகொண்டான்” எனவும் அடிகள் திருவாசகத்தில் அருளிச் செய்தலும் காண்க. நீத்ததை, ஐ : சாரியை. (54) வஞ்சவினைக் கொள்கலனா முடலைத் தீவாய் மடுக்கிலேன் வரையுருண்டு மாய்ப்பே னல்லேன் நஞ்சொழுகு வாளாலுங் குறைப்பே னல்லே னாதனே யதுவுநின துடைமை யென்றே அஞ்சினேன் றானேயு மழியா தாவி யையனே நினைப்பிரிந்து மாற்ற கில்லேன் என்செய்கோ வெந்தாயோ வெந்தா யோவென் றிரங்கினார் புரண்டழுதா ரினைய சொல்வார். (இ-ள்.) வஞ்சவினைக் கொள்கலனாம் உடலை - வஞ்ச முடைய வினைகள் நிறைந்த பாண்டமாகிய இவ்வுடலை, தீவாய் மடுக்கிலேன் - நெருப்பின்கண் வீழ்த்திலேன்; வரை உருண்டு மாய்ப்பேன் அல்லேன் - மலையினின்று உருண்டு மாய்ப்பேனல்லேன்; நஞ்சு ஒழுகும் வாளாலும் குறைப்பேன் அல்லேன் - நஞ்சு ஒழுகும் வாளினாலும் சேதிப்பேனல்லேன்; நாதனே - இறைவனே, அதுவும் நினது உடைமை என்றே அஞ்சினேன் - அவ்வுடலும் உனது உடைமையெனக் கருதி அதனைக் கொல்ல அஞ்சினேன்; ஆவி தானேயும் அழியாது - உயிர் தானேயும் அழியாது; ஐயனே - தலைவனே, நினைப்பிரிந்தும் ஆற்றகில்லேன் - நின்னைப் பிரிந்தும் பொறுக்ககில்லேன்; எந்தாயோ எந்தாயோ என்செய்கோ என்று இரங்கினார் - எந்தாயோ எந்தாயோ யான் என்ன செய்வேனென்று புலம்பி, புரண்டு அழுதார் இனைய சொல்வார் - புரண்டு அழுது இத்தன்மையனவற்றைக் கூறுவாராயினர். கொள்கலன் - பாண்டம்; மரக்கலமுமாம். வாளுக்கு நஞ்சு பூசுதலுண்டாகலின் ‘நஞ்சொழுகு வாள்’ என்றார். உடலைத் தீவாய் மடுக்கிலேன் என்பது முதலிய கருத்துக்களை, “ ஓய்விலாதன வுவமனி லிறந்தன வொண்மலர்த் தாடந்து நாயிலாகிய குலத்தினுங் கடைப்படு மென்னை நன்னெறிகாட்டித் தாயிலாகிய வின்னருள் புரிந்தவென் றலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் றிண்வரை யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே”” எனவும், “ அறுக்கிலேனுடல் துணிபடத்தீப்புக் கார்கிலேன்றிரு வருள்வகை யறியேன் பொறுக்கிலேனுடல் போக்கிடங்காணேன் போற்றிபோற்றியென் போர்விடைப்பாகா இறக்கிலேனுனைப் பிரிந்தினிதிருக்க வென்செய்கேனிது செய்கவென் றருளாய் சிறைக்கணேபுன னிலவியவயல்சூழ் திருப்பெருந் துறை மேவியசிவனே””” எனவும் வரும் திருவாசகத் திருப்பாட்டுக்களிற் காண்க. செய்கோ- செய்வேனோ; செய்கு - செய்வேன். (55) 1வறியவனா மொருபிறவிக் குருடன் கையில் வந்தபெரு விலைமணிபோன் மழலை தேறாச் 2சிறியவனா மொருமதலை கையிற் கொண்ட செம்பொன்மணி வள்ளம்போற் றேவர் யார்க்கும் அறிவரியாய் சிறியேனை யெளிவந் தாண்ட வருமையறி யேன்றுன்பத் தழுவத் தாழப் பிறிவறியா வன்பரோடு மகன்றாய் கல்லாப் பேதையேன் குறையலதெம் பிரானா லென்னே. (இ-ள்.) தேவர் யார்க்கும் அறிவரியாய் - தேவரனைவருக்கும் அறிதற் கரியவனே, வறியவனாம் ஒரு பிறவிக்குருடன் கையில் - வறியோனாகிய ஒரு பிறவிக்குருடன் கையில், வந்த பெருவிலைமணிபோல் - தானே வந்து கிடைத்த பெருவிலை யினையுடைய மணியைப்போலவும், மழலை தேறாச் சிறியவனாம் ஒருமதலை - மழலைச்சொல் தெளியாத சிறியவனாகிய ஒரு மதலை, கையில் கொண்ட - தனது கையிற்கொண்ட, செம்பொன்மணி வள்ளம்போல் - சிவந்த பொன்னாலாகிய மணிகள் பதித்த கிண்ணத்தைப் போலவும், சிறியேனை எளிவந்து ஆண்ட அருமை அறியேன் - சிறியேனாகிய என்னை எளிவந்து ஆண்டருளிய அருமையை யான் அறியேன்; துன்பத்து அழுவத்து ஆழு - (அதனால் யான்) துன்பக்கடலுள் அழுந்த, பிறிவறியா அன்பரொடும் அகன்றாய் - பிறிவினை அறியாத அடியாரோடும் மறைந்தருளினை; கல்லாப் பேதையேன் குறை அலது - கல்லாத புல்லறிவினேனது குறையேயன்றி, எம்பிரானால் என் - எம்பிரானால் யாது குறையுளது? பிறவிக்குருடனும், மதலையும் கிடைத்தற்கரிய பெருவிலை மணியும் பொன் வள்ளமும் எளிதிற் கிடைத்த வழியும் அவற்றின் அருமையறியாது கை நெகிழ விடுமாறு போல அடியேனை எளிவந்தாண்ட நினது அருமையை அறியாது நெகிழவிடலானேன் என்றார். மதலை கையிற் கொண்ட பொன் வள்ளம்போல் என்னும் கருத்து. “ மையி லங்குநற் கண்ணி பங்கனே வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக் கையி லங்குபொற் கிண்ண மென்றலால் அரியை யென்றுனைக் கருது கின்றிலேன் மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய் மெய்மை யன்பருன் மெய்மை மேவினார் பொய்யி லங்கெனைப் புகுத விட்டுநீ போவதோ சொலாய் பொருத்த மாவதே””” என்னும் பாசுரத்தாலும், என் குறையன்றி நின்னால் யாதுங் குறையில்லை என்னும் கருத்து, “ என்னா லறியாப் பதந்தந்தா யான தறியா தேகெட்டேன் உன்னா லொன்றுங் குறைவில்லை யுடையா யடிமைக் காரென்பேன் பன்னா ளுன்னைப் பணிந்தேத்தும் பழைய வடியா ரொடுங்கூடா தென்னா யகமே பிற்பட்டிங் கிருந்தே னோய்க்கு விருந்தாயே” என்னும் பாசுரத்தாலும் திருவாசகத்தில் அடிகளால் அருளிச் செய்யப்பட்டிருத்தல் காண்க. துன்பத்து என அத்துச்சாரியை அல்வழிக்கண் வந்தது. அழுவம் - பரப்பு; கடல், எதுகை நோக்கிப் பிறிவு; என வலியாயிற்று. (56) [கலிப்பா] மண்ணாதி யாறாறு மனந்துழாவித் தடுமாறிப் புண்ணாகி யெனைக்காணா துழல்கின்றேனைப் போதவருட் கண்ணா லவைமுழுதுங் கரையநோக்கி யான்யானென் றெண்ணா வெனைத்தந்தா யெங்குற்றாயோ வெந்தாயே. (இ-ள்.) மண் ஆதி ஆறாறும் - நிலம் முதலிய முப்பத்தாறு தத்துவங் களிலும், மனம் துழாவி - மனத்தால் ஆராய்ந்து, எனைக் காணாது - என்னைக் காணமாட்டாது, தடுமாறி புண்ணாகி உழல்கின்றேனை- கலங்கி வருந்திச் சுழலுமென்னை, போத அருள்கண்ணால் - ஞான அருணோக்கினால், அவை முழுதும் கரைய நோக்கி - அத்தத்துவங்கள் முற்றும் கரையும்படி நோக்கியருளி, யான் யான் என்று எண்ணா எனைத் தந்தாய் - யான் யான் என்று கருதாத என்னைக் காட்டியருளினையே; எந்தாய் எங்கு உற்றாயோ - எந்தையே எங்குச் சென்றனையோ? மண்ணாதி ஆறாறு - நிலம் முதல் நாதம் ஈறாகிய முப்பத்தாறு தத்துவங்கள் : ஆறாறு, ஆகுபெயர் : தத்துவங்களில் ஒரோ வொன்றையே நான் என மயங்கிப்பின் ஆராய்ந்து என்னைக் காணாது உழல்கின்றேனை என்க. இச் செய்யுளிலும் வரும் செய்யுள் இரண்டிலும் தத்துவ ரூபம் முதலிய தச காரியங்கள் ஒருவாறு அமைந்திருத்தல் உய்த்துணரற்பாலன. போதமாகிய அருள், தத்துவங்கள் கரைய என்றமையால் மந்திரம், பதம், வன்னம், புவனம், கலை என்னும் ஏனை அத்துவாக்களும் கரைய என உபலக்கணத்தாற் கொள்ளலுமாம். “ மந்திரம் பதங்கள் வன்னம் புவனங்கள் தத்து வங்க்ள் ஐந்துநற் கலைகள் என்னும் அறுவகை யகற்றி யந்தச் சிந்தனைக் கரிய மேலைச் சிவத்துட னறிவு சேரப் பந்தனை யொழிவார் தம்மேற் பரிந்தருட் பார்வை செய்து” என்னும் வாதவூரடிகள் புராணச் செய்யுளுங் காண்க. ஆன்மாவே யான் என்று எண்ணாத என்னை என்க; எண்ணா என்பதனை ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சமாக்கி, அத் தத்துவங்களை யான் யானென்று எண்ணாமல் என்னைத் தந்தாய் எனவும் உரைத்தலுமாம். தந்தாய் என்றது அறிவித்தாய் என்றபடி. என்னை அறிவித்தாய் என்னவே நின்னை அறிவித்தாய் என்பதும் போதரும்; என்னை? “ ஞான நாட்டம்பெற்றபின் யானும் நின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும் என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன் நின்னிலை யனைத்தையும் கண்டேன் என்னே நின்னைக் காணா மாந்தர் தன்னையுங் காணாத் தன்மை யோரே”” என்று பட்டினத்தடிகள் உணர்ந்து கூறுதலின் என்க. இது முதலிய மூன்று செய்யுட்களையும் ஐஞ் சீராகப் பிரித்துக் கலிநிலைத்துறை ஆக்கலுமாம். (57) வானாதி யைந்துமுதல் வகுத்தவோசை முதலைந்தும் ஆனாதி யங்குமன மாதிநான்கும் வழியடைப்பத் தேனாதி யறுசுவையுங் கழியவூறுந் தெள்ளமுதம் யானார நல்கினையா லெங்குற்றாயோ வெந்தாயே. (இ-ள்.) வான் ஆதி ஐந்தும் - வான் முதலிய பூதங்கள் ஐந்தும், முதல் வகுத்த ஒசை முதல் ஐந்தும் - (அவை தோன்றுதற்குக்) காரணமாக வகுக்கப்பட்ட ஓசை முதலிய தன் மாத்திரைகள் ஐந்தும், ஆனாது இயங்கும் - நீங்காது அலையும், மனம் ஆதி நான்கும் - மனமுதலிய அந்தக் கரணங்கள் நான்குமாகிய இவற்றின், வழி அடைப்ப - வழி தூர, தேன் ஆதி அறுசுவையும் கழிய ஊறும் தெள் அமுதம் - தேன் முதலிய அறுவகைச் சுவைப்பொருளினும் சுவைமிக ஊறும் சிவானந்த அமிழ்தினை, யான் ஆர நல்கினை - யான் உண்ணுமாறு நல்கி யருளினையே; எந்தாய் எங்கு உற்றாயோ - எந்தையே எங்குப் புக்கனையோ? ஆன்மதத்துவம் இருபத்து நான்கில் எஞ்சி நின்ற ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்தும் இனம்பற்றிக் கொள்க. வழியடைத்தலாவது பிறவியொழிதல்; கரணங்களும் பொறிகளும் விடய நுகர்ச்சியிற் செல்லும் வழிதூர என்றுமாம்; “ மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னு ளெழுபரஞ் சோதி யுள்ளவா காணவந் தருளாய் தேறலின் றெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த வின்பமே யென்னுடை யன்பே”” என்னும் திருவாசகம் இங்கே சிந்திக்கற்பாலது. தேன் ஆதி அறுசுவை - தேன், பால், கன்னல், கனி, சீனி, கற்கண்டு என்ப. ஐந்து, நான்கு, சுவை என்பன ஆகுபெயர்கள். கழிய, கழி என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம். ஆல் - அசை. (58) மாசாய் மறைக்குமல வலியும்நானும் வேறின்றி ஆசா 1விகாரமல மாயினேனைப் பொருட்படுத்திப் பேசாத 2வின்புருவி னின்னோடென்னைப் பின்வைத்த ஈசா வெனையிங்கிட் டெங்குற்றாயோ வெந்தாயே. (இ-ள்.) மாசு ஆய் மறைக்கும் மலவலியும் நானும் வேறு இன்றி - இருளாகிய மறைக்கும் ஆணவமலவலியும் யானும் அத்துவிதமாய், ஆசாவிகாரமலம் ஆயினேனை - பல திறப்பட்ட ஆசையாகிய மலமான என்னையும், பொருள்படுத்தி - ஒரு பொருளாக்கி, பேசாத இன்பு உருவின் நின்னோடு - உரைக்கப்படாத இன்ப வடிவினையுடைய நின்னோடு, என்னைப் பின் வைத்த ஈசா - என்னைப் பின்னே வைத்த இறைவனே, எந்தாய் - எம் தந்தையே, எனை இங்கு இட்டு எங்கு உற்றாயோ - அடியேனை இங்கு வைத்து எங்கு உற்றனையோ? மறைக்கும் - அறிவு இச்சை செயல்களை மறைக்கின்ற, கேவலாவத்தையில் ஆணவமலத்தோடும், சகலாவத்தையில் தனு கரண புவள போக வடிவாகிய மாயாமலத்தோடும் ஒன்றுபட்டுக் கிடந்த என்னை நின்மலாவத்தையிற் புகுத்தி நின்னைச் சாரவைத்த ஈசனே என்றாரென்க. எதுகை நோக்கி ஆசா என்பது திரியாது நின்றது, பேசப்படாத என்றமையால் நினைக்கப்படாத என்பதும் கொள்க; “ உரைமாண்ட வுள்ளொளி யுத்தமன்வந் துளம்புகலும்” எனவும், “ உள்ளப்படாத திருவுருவை யுள்ளுதலும்” எனவும் திருவாசகத்தில் வருதல் காண்க. (59) [கலிநிலைத்துறை] என்று வாய்திறந் தரற்றினா ரிரங்கினார் புனிற்றுக் கன்று நீங்கிய வானெனக் கரைந்தநெஞ் சினராய்ச் சென்று கோபுர வாயிலின் புறம்புபோய்த் திரண்டு நின்ற காவலன் றமர்களை நேர்ந்தனர் நோக்கா. (இ-ள்.) என்று வாய் திறந்து அரற்றினார் இரங்கினார் - என்று வாய் திறந்து கதறி வருந்தி, புனிற்றுக்கன்று நீங்கிய ஆன் என - இளங்கன்று நீங்கின பசுவைப்போல, கரைந்த நெஞ்சினராய்ச் சென்று- உருகிய மனத்தினை யுடையராய்ச் சென்று, கோபுர வாயிலின் புறம்பு போய் - கோபுர வாயிலுக்கு வெளியே போய், திரண்டு நின்ற காவலன் தமர்களை நேர்ந்தனர் நோக்கா - அங்கே கூடி நின்ற அரசன் பரிவாரங்களை நேர்ந்து பார்த்து. புனிற்றுக் கன்று - ஈன்றணிமையுடைய கன்று. அரற்றினார், இரங்கினார், நேர்ந்தனர் : முற்றெச்சங்கள். (60) துங்க வாரியிற் கடும்பரித் தொகையெலா மாடித் திங்க ளின்றலை வருமென முன்புபோய்த் தென்னர் புங்க வன்றனக் குணர்த்துமின் போமென விடுத்தார் அங்க ணாயகன் பெருந்துறை நாயக னன்பர். (இ-ள்.) கடும் பரித் தொகை எலாம் - விரைந்த செலவினையுடைய குதிரைக் கூட்டங்களெல்லாம், ஆடித் திங்களின் தலை - ஆடி மாதத்தில், துங்கவாரியில் வரும் என - சிறந்த கடற்றுறையின்கண் வந்திறங்குமென்று, முன்புபோய் - முன்னர்ச் சென்று, தென்னர் புங்கவன் தனக்கு உணர்த்துமின் - பாண்டியர் பெருமானுக்குக் கூறுங்கள்; போம் என விடுத்தார் - போமின் என்று கூறி அனுப்பினர்; அங்கண் நாயகன் பெருந்துறை நாயகன் அன்பர் - அழகிய அருட் கண்ணையுடைய தலைவனாகிய பெருந்துறை நாதனுக்கு அன்பராகிய மணிவாசகனார். வாரியினின்று இறங்கும் பரியெல்லாம் ஆடித்திங்களில் வரும் எனவும், பரியெல்லாம் வாரியினின்று ஆடித்திங்களில் இறங்கும் எனவும் இருபொருள் தோன்றக் கூறினமை காண்க. செளரமானத்தால் ஆடிமாதமாவது சாந்திரமானத்தால் ஆவணிமாதமாகுதலின் பரியெல்லாம் ஆடித்திங்களில் வருமென்ற கூற்றும் தவறுபடாமை பெற்றாம். தலை ஏழனுருபு. போமின் எனற்பாலது போம் என நின்றது; வழக்கில் வந்த செய்யுமென்னும் வாய்பாட்டேவலுமாம். (61) புரசை மாவயப் புரவிதேர்ப் பொருநர்போய்ப் பொறிவண் டிரைசெய் தார்முடி வேந்தன்முன் னிறைஞ்சினா ருள்ள துரைசெய் தாரது கேட்டொன்று முரைத்தில னிருந்தான் நிரைசெய் தார்ப்பரி வரவினை நோக்கிய நிருபன். (இ-ள்.) புரசைமாவயப் புரவி தேர்ப்பொருநர் போய் - கழுத்திடு கயிற்றையுடைய யானைகளையும் வெற்றியையுடைய குதிரைகளையும் தேர்களையுமுடைய வீரர்கள் சென்று, பொறிவண்டு இறைசெய் தார் முடிவேந்தன் முன் இறைஞ்சினார் - பொறிகளையுடைய வண்டுகள் ஒலித்தலைச் செய்யும் மாலையையணிந்த முடியினையுடைய அரிமருத்தன பாண்டியன் முன் வணங்கி, உள்ளது உரை செய்தார் - நடந்ததைக் கூறினார்; அது கேட்டு ஒன்றும் உரைத்திலன் இருந்தான் - அதனைக் கேட்டு ஒன்றுங் கூறா திருந்தனன்; நிரைசெய் தார்ப் பரிவரவினை நோக்கிய நிருபன் - வரிசைப்படுத்திய கிண்கிணி மாலையை யணிந்த குதிரைகளின் வரவினை எதிர்பார்த்திருக்கும் அப்பாண்டியன். புரசை - யானைக்கழுத்திடு கயிறு. யானை வீரரும், குதிரை வீரரும், தேர் வீரரும் போய் என்க. இரை : முதனிலைத் தொழிற் பெயர். இறைஞ்சினார், உரைத்திலன் என்பன முற்றெச்சங்கள். நிருபன் உரைத்திலன் இருந்தான் என முடிக்க. (62) வள்ளல் வாதவூர் முனிகளு மன்னவன் பரிமாக் கொள்ள நல்கிய பொருளெலாங் குருந்தில்வந் தாண்ட பிள்ளை வாண்மதிச் சடைமுடிப் பெருந்துறை மறையோர்க் குள்ள வாதரம் பெருகமுன் வேண்டியாங் குய்ப்பார். (இ-ள்.) வள்ளல் வாதவூர் முனிகளும் - வள்ளலாகிய வாதவூரடி களும், மன்னவன் - அரிமருத்தன பாண்டியன், பரிமாக்கொளள நல்கிய பொருள் எலாம் - குதிரை வாங்கக் கொடுத்த பொருள் முழுதையும், குருந்தில் வந்து ஆண்ட - குருந்த மரத்தின் அடியில் வந்து ஆண்டருளிய, பிள்ளைவாள் மதிச்சடைமுடி - ஒள்ளிய குழவித் திங்களைத் தரித்த சடைமுடியினை யுடைய, பெருந்துறை மறையோர்க்கு - பெருந்துறையில் எழுந்தருளிய அந்தணராகிய சிவபெருமானுக்கு, உள்ள ஆதரம் பெருக - உள்ளன்பு பெருக, முன் வேண்டியாங்கு உய்ப்பார் - முன் வேண்டிக் கொண்டது போலவே செலுத்துவாராயினர். சடைமுடிப் பெருந்துறை மறையோர்க்கு என்பதற்குச் சடாமுடியையுடைய பெருமானாரெழுந்தருளிய திருப்பெருந் துறையிலுள்ள ஆதிசைவராகிய அந்தணர்களுக்கு எனப் பிறர் கூறியபொருள் சிறிதும் பொருந்தாமை காண்க. முன் வேண்டி யாங்கு - இப்பொருளெலாம் உனக்கும் ஐம்பொறியும் வென்று வேண்டும் நின்னன்பர்க்கும் ஆக்குக என மேல் வேண்டியவாறு. உய்த்தல் - செலவிடுதல். (63) சிறந்த பூசைக்குந் திருவிழாச் சிறப்புக்குஞ் செல்வம் நிறைந்த வாலயத் திருப்பணித் திறத்துக்கு நிரப்பி அறந்த வாதபே ரன்பர்க்குஞ் செலுத்தியத் தலத்தே உறைந்த வாவற வின்னண மொழுகுநாள் கழிப்பார். (இ-ள்.) சிறந்த பூசைக்கும் திருவிழாச் சிறப்புக்கும் - சிறப்புடைய பூசனைக்கும் திருவிழாவாகிய சிறப்புக்கும், செல்வம் நிறைந்த ஆலயத் திருப்பணித் திறத்துக்கும் - செல்வம் நிறைந்த திருக் கோயிலின் திருப்பணி வகைக்கும், நிரப்பி - நிரம்பக்கொடுத்து, அறம் தவாதபேர் அன்பர்க்கும் செலுத்தி - அறநெறியினின்று நீங்காத பெரிய அன்பர்கட்கும் செலவிட்டு, அத்தலத்தே உறைந்து - அப்பதியின் கண்உறைந்து, அவா அற - அவா என்பதின்றி, இன்னணம் - இவ்வாறு, ஒழுகுநாள் கழிப்பார் - செல்லும் நாட்களைக் கழிப்பாராயினர். திருவிழா சிறப்பெனப் படுதலை, “ சிறப்பொடு பூசனை செல்லாது” என்னுந் திருக்குறளாலறிக; நித்தத்திற் றாழ்வு தீரச் செய்யப் படுதலின் நைமித்தகம் சிறப்பு எனப்படும். (64) எல்லை கூறிய குளிர்மதி யடுக்கவந் தெய்த மல்லல் யானையா னின்னமும் வயப்பரி வந்த தில்லை யாலிது வென்னென வோலையு மெழுதிச் செல்ல வுய்த்தனன் வாதவூ ரமைச்சர்தந் திருமுன். (இ-ள்.) எல்லைகூறிய குளிர்மதி அடுக்க வந்து எய்த - எல்லையாகக் கூறிய ஆடித் திங்கள் பொருந்த வந்து அடைய மல்லல் யானையான் - மதவளமுடைய யானையை யுடைய பாண்டியன், இன்னமும் வயப்பரி வந்தது இல்லை - இன்னும் வெற்றி பொருந்திய குதிரைகள் வரவில்லை; இது என் என ஓலையும் எழுதி - இதற்குக் காரணம் என்ன வென்று ஓலையும் வரைந்து, வாதவூர் அமைச்சர் தம் திருமுன் செல்ல உய்த்தனன் - வாதவூரராகிய அமைச்சரின் திருமுன்னர்ச் செல்ல விடுத்தான். குளிர்மதி - கடகமாதம். ஆடித்திங்கள்; குளிர் - ஞெண்டு; கற்கடகம். இல்லையால், ஆல் : அசை. வாதவூரராகிய அமைச்சர் என விரிக்க; வாதவூரிற்றோன்றியவராகிய அமைச்சர் என்றுமாம்.(65) மன்ன வன்றிரு முகங்கண்டு முறைமையால் வாங்கி அன்ன வாசகந் தெரிந்துகொண் டாதியீ றில்லா முன்ன வன்றிரு வருட்கடன் மூழ்கிய முனிவர் என்னை வேறினிச் செய்யுமா றென்றுநின் றயர்வார். (இ-ள்.) மன்னவன் திருமுகம் கண்டு - பாண்டியனது ஓலையைப் பார்த்து, முறைமையால் வாங்கி - முறைப்படி வாங்கி, அன்ன வாசகம் தெரிந்து கொண்டு - அதிலுள்ள வாசகத்தைத் தெரிந்து கொண்டு, ஆதிஈறு இல்லா முன்னவன் - முதலு முடிவு மில்லாத முன்னவனாகிய இறைவனது, திருவருட் கடல் மூழ்கிய முனிவர் - திருவருட் கடலுள் மூழ்கிய முனிவராகிய மணிவாசகனார், என்னை வேறு இனிச் செய்யுமாறு என்று நின்று அயர்வார் - இனிச் செய்யும் வழி வேறு என்னையெனக் கருதி நின்று சோர்வாராகி. திருமுகவாசகம் வாதவூரடிகள் புராணத்தில், “ தென்னவ னரச னோலை தென்னவன் பிரம ராயன் என்னுநல் லமைச்சன் காண்க வெல்லையி றனங்கொண் டேகிக் கொன்னுறு பரிகொ ளாமற் கோவணங் கொண்டீ ரீது மன்னர்தங் கருமஞ் செய்வார் வண்மையென் றுவகை யுற்றேம்”” “ வையக மன்ன ராகி வாழ்வதின் மனைக டோறும் எய்திய வுதரத் தீயா லிரப்பது பெருமை யென்றும் மெய்தகத் தம்மை யாண்ட வேந்தரைப் பிழைத்து வேறு செய்வது பலிக்கு மென்று தேர்ந்தநூற் றுணிவுங் கண்டேம்”” “ மன்னரை யடைந்து வாழ்தல் வஞ்சநஞ் சுமிழு நாகந் தன்னுடன் மருவி வாழுந் தன்மையென் றுணர்வீ ராயில் துன்னுமிவ் வோலை காணும் பொழுதுநந் தூதர் தம்மோ டிந்நகர் வருக மாற னெழுத்தென வுரைத்து நின்றான்” என விரித்துரைக்கப் பெற்றுள்ளது. (66) சிந்தை யாகிய செறுவினுட் சிவமுத லோங்கப் பந்த பாசம்வே ரறக்களைந் தருட்புனல் பாய்ச்சி அந்த மாதியின் றாகிய வானந்த போகந் தந்த தேசிய வுழவன்றன் கோயிலைச் சார்ந்தார். (இ-ள்.) சிந்தையாகிய செறுவினுள் - உள்ளமாகிய விளைநிலத்துள், சிவமுதல் ஓங்க - அன்பாகிய முளை வளர, பந்தபாசம் வேர்அறக் களைந்து - பந்தமாகிய பாசமென்னும் களையினை வேரறக் களைந்து, அருள் புனல் பாய்ச்சி - அருளாகிய நீரினைக் கால்யாத்து, அந்தம் ஆதி இன்று ஆகிய - முதலு முடிவும் இல்லையாகிய, ஆனந்த போகம் தந்த தேசிக உழவன்தன் - சிவானந்தமாகிய விளைவினைப் புசிக்குமாறு தந்தருளிய குரவனாகிய உழவனது, கோயிலைச் சார்ந்தார் - திருக்கோயிலைச் சார்ந்தனர். சிவம் - அன்பு; பத்தி. பிறவாறும் உருவகஞ் செய்ப, “ அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத் தொண்ட வுழவ ராரத் தந்த அண்டத் தரும்பெறன் மேகன் வாழ்க”” என்னும் திருவாசகமும், “ மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித் தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே”” என்னும் திருநாவுக்கரசர் தேவாரமும், “ அன்பென் பாத்தி கோலி முன்புற மெய்யெனு மெருவை விரித்தாங் கையமில் பத்தித் தனிவித் திட்டு நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சிநேர் நின்று”” என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கும் நோக்குக. இது மிகை குறையில்லாத ஒற்றுமை யுருவகவணி. (67) [அறுசீரடியாசிரிய விருத்தம்] என்னா யகனே பொன்னாட ரேறே யேறு கொடியுயர்ந்த மன்னா தென்னா பெருந்துறையெம் மணியே வழுதி பொருளெல்லாம் நின்னா லயத்து நின்னடியா ரிடத்துஞ் செலுத்து நெறியளித்தாய் பின்னா னவனுக் கென்கொண்டு பரிமாச் செலுத்தப் பெறுமாறே. (இ-ள்.) என் நாயகனே - என் தலைவனே, பொன்னாடர் ஏறே- தேவர்கள் சிங்கவேறே, ஏறு கொடி உயர்த்த மன்னா - இடபத்தைக் கொடியின்கண் உயர்த்தியருளிய மன்னா, தென்னா - சுந்தரபாண்டியனே, பெருந்துறை எம்மணியே - திருப்பெருந் துறையில் எழுந்தருளிய எமது மாணிக்கமே, வழுதி பொருள் எல்லாம் - பாண்டியன் பொருளனைத்தையும், நின் ஆலயத்தும் நின் அடியாரிடத்தும் - நின் திருக்கோயிலின் திருப்பணியிலும் நினது அடியார் திறத்திலும், செலுத்தும் நெறி அளித்தாய் - செலவிடும் நெறியினை எனக்குத் தந்தருளினை; பின் நான் - இனி யான், அவனுக்கு என்கொண்டு பரிமாச் செலுத்தப் பெறுமாறு - அப்பாண்டியனுக்கு எதுகொண்டு குதிரை செலுத்தப்பெறும் வகை? பொன்னாடரேறே என்ற கருத்து நம்பியாரூரர் அருளிச் செய்த திருவாலங்காட்டுத் தேவாரப் பதிகத்தில், “ சிவனே தேவர் சிங்கமே” என வருதல் காண்க. நீயே வழுதி பொருளெல்லாம் செலவிடச் செய்தாயாகலின் பரிமாச் செலுத்தும் வகையும் நீயே காட்டடுல் வேண்டுமென்பார் இங்ஙனம் கூறினாரென்க. (68) என்னா விறைஞ்சி யெழுந்தேத்தி யிரந்தா ரெதிரே பெருந்துறையின் மின்னார் சடைமேற் பிறைமுடித்தோன் விசும்பி னிறைந்த திருவாக்கான் மன்னா னவற்குப் பரியெல்லாம் வருமென் றோலை விடுதியெனச் சொன்னா னதுகேட் டகத்துவகை துளும்பி வரைந்து சுருள்விடுத்தார். (இ-ள்.) என்னா இறைஞ்சி எழுந்து - என்று கூறிக் கீழே வீழ்ந்து வணங்கி எழுந்து நின்று, ஏத்தி இரந்தார் எதிரே - பலபடத் துதித்துக் குறையிரந்த மாணிக்கவாசக ரெதிரே, பெருந்துறையின் மின் ஆர் சடைமேல் பிறைமுடித்தோன் - பெருந்துறையில் எழுந்தருளிய மின்போன்ற சடையின்கண் பிறையினை முடித்தருளிய இறைவன், விசும்பில் நிறைந்த திருவாக்கால் - வானின் கண் நிறைந்த திருவாக்கினால், மன்னானவற்கு - பாண்டியனுக்கு, பரி எல்லாம் வரும் என்று ஓலை விடுதி எனச் சொன்னான் - குதிரைகளெல்லாம் வருமென்று எழுதி ஓலை விடுப்பாயாக என்று கூறியருளினான்; அதுகேட்டு - அதனைக் கேட்டு, அகத்து உவகை துளும்பி வரைந்து சுருள் விடுத்தார் - மனத்தின்கண் மகிழ்ச்சிமிக்கு ஓலை எழுதிப் போக்கினார். விசும்பினிறைந்த திருவாக்கு - அசரீரி. மன்னானவற்கு - மன்னற்கு; ஆனவன் : முதல் வேற்றுமைச் சொல். மன்னற்கு ஓலை விடுதி எனக் கூட்டுக. ஓலையைச் சுருளாகச் செய்து அனுப்புதல் வழக்காகலின் ‘சுருள் விடுத்தார்’ என்றார்; இது முடங்கல் எனவும் கூறப்படும். (69) அந்த வோலைப் பாசுரமு மறையக் கேட்டு நின்றாங்கோர் சிந்தை யானா மகிழ்சிறப்ப விருந்தான் புரவித் தேரோடும் வந்த வாதிச் செங்கதிரோன் மறைந்தா னவனால் வையமெலாம் வெந்த வேடை தணிப்பான்போன் முளைத்தா 1னாதி வெண்கதிரோன். (இ-ள்.) அந்த ஓலைப் பாசுரமும் அறைய - அந்த ஓலையின் வாசகத்தையும் ஒருவன் படிக்க, நின்று கேட்டு - கருத்துடன் நின்று கேட்டு ஓர் ஆங்கு - அதனை அறிந்த பொழுதே, சிந்தை ஆனா மகிழ்சிறப்ப இருந்தான் - மனத்தின்கண் நீங்காத மகிழ்ச்சி மிக இருந்தனன்; புரவித் தேரோடும் ஆதி வந்த செங்கதிரோன் மறைந்தான் - குதிரைகள் பூட்டிய தேருடன் வந்த ஆதியாகிய சூரியன் மறைந்தனன்; அவனால் வையம் எலாம் வெந்த வேடை - அச்சூரியனால் நிலவுலகனைத்தும் வெந்த வெப்பத்தினை, தணிப்பான் போல் - ஆற்றுபவனைப் போல, வெண்கதிரோன் ஆதி முளைத்தான் - சந்திரன் கீழ்த்திசையிற் றோன்றினன். ஆங்கு, ஓர் என்பன அசையுமாம். ஆதி - சூரியன்; ஆதியாகிய செங்கதிரோன் என இருபெயரொட்டு; புரவித் தேரோடும் நேரே வந்த செங்கதிரோன் என்றுமாம்; ஆதி - நேரோடல்; இடப வீதியாகிய முதல் வீதியிற் செல்லும் ஆதித்தன் என்று கூறலும் பொருந்தும், ஆதி முளைத்தான் - முதற்றிசையாகிய கீழ்த்திசையில் உதித்தான். (70) அன்று துயிலும் வாதவூ ரடிகள் கனவிற் சுடர்வெள்ளி மன்று கிழவர் குருந்தடியில் வடிவங் காட்டி யெழுந்தருளி வென்றி வேந்தன் மனங்கவரும் விசயப் பரிகொண் டணைகின்றேம் இன்று நீமுன் னேகுதியென் றருளிச் செய்ய வெழுந்திருந்தார். (இ-ள்.) அன்று துயிலும் வாதவூர் அடிகள் கனவில் - அன்று இரவு துயில்கின்ற வாதவூரடிகள் கனவின்கண், வெள்ளி மன்று கிழவர் - வெள்ளியம்பலத்திற்கு உரிய சோமசுந்தரக் கடவுள், குருந்து அடியில் வடிவம் காட்டி எழுந்தருளி - குருந்த மரத்தடியில் ஆட்கொண்ட ஆசிரியக் கோலங்காட்டி எழுந்தருளி, வென்றி வேந்தன் மனம்கவரும் - வெற்றியையுடைய பாண்டியனது மனத்தைக் கொள்ளை கொள்ளும், விசயப்பரிகொண்டு அணை கின்றேம் - வெற்றியைத்தரத்தக்க குதிரைகளை வாங்கிக்கொண்டு வருவேம்; இன்று நீமுன் ஏகுதி என்று அருளிச்செய்ய - இன்று நீ முன்னே செல்வாயென்று அருள்புரிய, எழுந்திருந்தார் - வாதவூரடிகள் விழித்தெழுந்தார். குருந்தடியில் வடிவம் - குருந்தடியில் எழுந்தருளிய வடிவம். வடிவங் காட்டி-வடிவத்துடன் கனவில் எழுந்தருளி அருளிச்செய்ய என்க. (71) கனவி னிடத்துந் தேவர்க்குங் காண்டற் கரிய கருணையுரு நனவி னிடத்துங் கனவிடத்து மெளிதே யன்றோ நமக்கென்ன நினைவி னிடைக்கொண் டிருக்கின்றார் நிருத்தா னந்தச் சுடருள்ளத் தினவி ருளைத்தின் றெழுவதென வெழுந்தா னிரவி யிரவொதுங்க. (இ-ள்.) கனவினிடத்தும் தேவர்க்கும் காண்டற்கு அரிய கருணை உரு - கனவின் கண்ணும் தேவருக்கும் காணுதற்கரிய அருள் வடிவம், நனவினிடத்தும் கனவிடத்தும் எளிதே அன்றோ நமக்கு என்ன - நனவிலும் கனவிலும் நமக்கு எளிதல்லவா என்று, நினைவினிடைக் கொண்டு இருக்கின்றார் - (வாதவூரர்) கருதிக் கொண்டிரா நின்றார்; உள்ளத்து இனஇருளை - அவ்வடிகளது உள்ளத்தின்கட் செறிந்த ஆணவமலமாகிய இருளை, நிருத்தானந்தச் சுடர்தின்று எழுவது என - ஆனந்தக்கூத்தினை யுடைய இறைவனென்னும் ஞான சூரியன் தின்று எழுந்தாற் போல, இரவி இரவு ஒதுங்க எழுந்தான் - சூரியன் இருள் ஒதுங்க எழுந்தனன். கனவினிடத்தும் தேவர்க்கும் என்னும் உம்மைகள் முறையே இழிவு சிறப்பும், உயர்வு சிறப்பும் ஆம். இறைவன் கனவிலும் தேவர்க்கரியனாதலையும் நனவிலும் தமக்கு எளியனாதலையும், “ கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி நனவிலும் நாயேற் கருளினை போற்றி”” எனவும், “ கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனை கழலோன் புனவே யனவளைத் தோளியொடும் புகுந்தருளி நனவே யெனைப்பிடித் தாட்கொண்டவா நயந்துநெஞ்சம் சினவேற்க ணீர்மல்கத் தெள்ளேணங் கொட்டாமோ”” எனவும் அடிகள் திருவாசகத்தில் அருளிச்செய்திருத்தல் காண்க.(72) எழுந்தா ருடைய பெருந்துறையா ரிருதாள் பணிந்தா ரினிப்பிறப்பில் அழுந்தார் வழிக்கொண் டாரடைந்தா ரகன்றார் நெறிக ளவிர்திங்கட் கொழுந்தார் சடையார் விடையார்தென் கூடலணைந்தார் பாடளிவண் டுழுந்தார் வேந்தன் பொற்கோயி லுற்றா'fa காணப் பெற்றாரால். (இ-ள்.) இனிப் பிறப்பில் அழுந்தார் எழுந்தார் - இனிப் பிறப்பினுள் அழுந்தா தவராகிய வாதவூரடிகள் அப்பொழுது எழுந்து, உடைய பெருந்துறை இருதாள் பணிந்தார் - தம்மை ஆளாகவுடைய பெருந்துறை நாதரின் இரண்டு திருவடிகளையும் பணிந்து, வழிக்கொண்டார் அடைந்தார் நெறிகள் அகன்றார் - வழிக் கொண்டு சென்று சேய நெறிகளைக் கடந்து, அவிர்திங்கள் கொழுந்து ஆர் சடையார் விடையார் - விளங்காநின்ற இளஞ்சந்திரனை அணிந்த சடையினை யுடையாரும் இடப வூர்தியை யுடையாருமாகிய சோமசுந்தரக் கடவுளின், தென்கூடல் அணைந் தார் - மதுரையைச் சார்ந்து, பாடுஅளி வண்டு உழும் தார் வேந்தன் பொற்கோயில் உற்றார் - இசைபாடும் வண்டுகள் கிண்டா நின்ற வேப்பமலர் மாலையை யணிந்த பாண்டியனது பொன்மயமான அரண்மனையை அடைந்து, காணப் பெற்றார் - அரசனைக் காணப் பெற்றனர். அழுந்தார் : வினையாலணையும் பெயர். எழுந்தார், பணிந்தார், வழிக் கொண்டார், அடைந்தார், அகன்றார், அணைந்தார், உற்றார் என்பன முற்றெச்சங்கள். அளி வண்டு -அளியாகிய வண்டு. ஆல் : அசை. (73) மன்னர் பெருமா னெதிர்வந்த மறையோர் பெருமான் வழிபாடு முன்னர் முறையாற் செய்தொழுகி முன்னே நிற்ப முகநோக்கித் தென்னர் பெருமா னெவ்வளவு செம்பொன் கொடுபோ யெவ்வளவு நன்ன ரிவுளி கொண்டதெனக் கேட்டான் கேட்ட நான்மறையோர். (இ-ள்.) மன்னர் பெருமான் எதிர்வந்த மறையோர் பெருமான் - மன்னர் மன்னனாகிய பாண்டியனுக்கு முன்னேவந்த வேதியர் பெருமானாகிய அடிகள், முன்னர் முறையால் வழிபாடு செய் தொழுகி - முன் செய்யும் முறைப்படியே வழிபாடு செய்தொழுகி, முன்னே நிற்ப - எதிரில் நிற்க, தென்னர் பெருமான் முகம்நோக்கி - அப்பாண்டியர் தலைவன் அவர் முகத்தைப் பார்த்து, எவ்வளவு செம் பொன் கொடு போய் - எவ்வளவு செம்பொன்னை எடுத்துச் சென்று, எவ்வளவு நன்னர் இவுளி கொண்டது எனக் கேட்டான் - எவ்வளவு நல்ல குதிரைகள் வாங்கிய தென்று வினவினன்; கேட்ட நான் மறையோர் - அதனைக் கேட்ட அடிகள். முன்னர் முறை - புரவி வாங்கப் புறப்படுமுன் அமைச்சராகிய தாம் அரசர்க்குச் செய்து போந்த முறை. தென்னர் பெருமான், நான்மறையோர் என்பவற்றைச் சுட்டாகக் கொள்க. நன்னர் : பண்புப் பெயர். கொண்டது : தொழிற் பெயர். கேட்டல் இரண்டனுள் முன்னது வினாவுதல், பின்னது செவியுறல். (74) பொன்னு மளவோ விலைகொண்ட புரவித் தொகையு மனைத்தவைதாம் பின்னர் வரக்கண் டருளுதியெம் பெருமா னிதனாற் றுரங்கபதி என்னு நாமம் பெறுதிமதி யென்றா ரென்ற மந்திரர்க்குத் தென்னன் சிறந்த வரிசைவளஞ் செய்து விடுப்பச் செல்கின்றார். (இ-ள்.) பொன்னும் அளவோ - எடுத்துச் சென்ற பொன்னும் ஓர் அளவினை யுடையதோ (அன்று), விலைகொண்ட புரவித் தொகையும் அனைத்து - வாங்கிய குதிரைத் தொகையும் அத்தன்மைத்தே; அவை தாம் பின்னர் வரக்கண்டு அருளுதி - அக் குதிரைகள் பின்பு வரக் கண்டருள்வாய்; எம்பெருமான் - எம் தலைவ, இதனால் துரங்கபதிஎன்னும் நாமம் பெறுதிமதி - இக்காரணத்தினால் துரங்கபதி என்னும் பெயரினைப் பெறுவாயாக; என்றார் - என்று கூறினார்; என்ற மந்திரர்க்கு - என்று கூறிய அமைச்சர்க்கு, தென்னன் - அரிமருத்தன பாண்டியன், வளம் சிறந்த வரிசை செய்து விடுப்ப - வளமிக்க பல வரிசைகள் அளித்து அனுப்ப, செல்கின்றார் - செல்லும் அவ்வடிகள். பொன்னுக்கு எங்ஙனம் அளவின்றோ அங்ஙனமே புரவிக்கும் அளவின்று என்றார். இதனால் - இங்ஙனம் அளவிறந்த குதிரைகளை எய்துதலால், மதி யென்னும் முன்னிலை யசைச்சொல் முன்னிலை முற்றைச் சார்ந்து வந்தது; மதி - இதனைக் கருதுவாயாக என்றலுமாம். தாம் : அசை. (75) பொன்னங் கமலத் தடம்படிந்து புழைக்கை மதமா முகக்கடவுள் தன்னங் கமலச் சரணிறைஞ்சித் தனியே முளைத்த சிவக்கொழுந்தை மின்னங் கயற்கட் கொடிமருங்கில் விளைந்த தேனை முகந்துண்டு முன்னங் கருத்து மொழியுடம்பு மூன்று மன்பாய்த் தோன்றினார். (இ-ள்.) பொன் கமலத் தடம் படிந்து - பொற்றாமரைத் தடத்தில் நீராடி, புழைக்கை மதமா முகக் கடவுள் தன் - துளை பொருந்திய துதிக்கையையும் மதப் பெருக்கினையுமுடைய யானைமுகத்தினையுடைய சித்தி விநாயகக் கடவுளின், அம் கமலச் சரண் இறைஞ்சி - அழகிய தாமரை மலர் போன்ற திருவடிகளை வணங்கி, தனியே முளைத்த சிவக்கொழுந்தை - ஒன்றாய் முளைத்த சிவக் கொழுந்தை, மின் அம் கயற்கண் கொடி மருங்கில் விளைந்த தேனை - மின்போன்ற அழகிய அங்கயற்கண்ணம்மை என்னுங் கொடியின் பக்கத்தில் விளைந்த தேனை, முகந்து உண்டு - கண்ணாகிய வாயினால் மொண்டு பருகி, முன்னம் கருத்து மொழி உடம்பு மூன்றும் - திரு முன்னர் உள்ளமும் உரையும் உடலுமாகிய மூன்று கரணங்களும், அன்பாய்த தோன்றினார் - அன்பு வடிவாய்க் காணப்பட்டார். பொன்னம் : அம் அசை. உமையைக் கொடியாகவும் சிவத்தைத் தேனாகவும் உருவகித்தார். கண்ணாகிய வாயால் என வருவித் துரைக்க. அன்புமயமாகிய சிவத்தேனை உண்டமையால் தாமும் அன்புமயமாயினாரென்க. முன்னங் கருத்து என்பதற்கு முன்னுதலை யுடைய அழகிய கருத்து என்றுமாம். முன்னுதல் - நினைத்தல். (76) மன்னே யென்னை யாட்கொண்ட மணியே வெள்ளி மன்றாடும் அன்னே யடியேன் வேண்டியவா றரச னீந்த நிதியெல்லாம் முன்னே கொண்டென் பணிகொண்டாய் முனியா தரச னனிமகிழ என்னே புரவி வரும் வண்ண மென்று வேண்டி நின்றிடலும். (இ-ள்.) மன்னே - என் இறைவனே, என்னை ஆட்கொண்ட மணியே - என்னை அடிமையாகக் கொண்டருளிய மாணிக்கமே, வெள்ளி மன்று ஆடும் அன்னே - வெள்ளியம்பலத்தில் திருக் கூத்தாடி யருளும் அன்னையே, அடியேன் வேண்டியவாறு - அடியேன் வேண்டிக்கொண்ட வண்ணமே, அரசன் ஈந்த நிதி எல்லாம் - அரசன் அளித்த பொருள் முழுதையும், முன்னே கொண்டு என் பணி கொண்டாய் - முதலில் ஏற்றுக் கொண்டு பின் என் பணியையும் கொண்டருளினை; அரசன் முனியாது நனி மகிழ - மன்னன் சினங் கொள்ளாது மிகவும் மகிழ்ச்சி அடையுமாறு, புரவி வரும் வண்ணம் என்னே என்று வேண்டி இரந்திடலும் - குதிரைகள் வருமாறு எங்ஙன மென்று வேண்டி நின்ற வளவில். எங்ஙனம் புரவி வருமென நான் அறிகிலேன் நீயே அருளிட வேண்டும் எனக் குறையிரத்தலும் என்க. (77) மெய்யன் புடையா யஞ்சலைநீ வேட்ட வண்ணம் விண்ணிரவி வையம் பரிக்கும் பரியனைய வயமாக் கொண்டு வருதுமென ஐயன் றிருவாக் ககல்விசும்பா றெழுந்த தாக வதுகேட்டுப் பொய்யன் பகன்றார் சிவன்கருணை போற்றி மனையிற் போயினார். (இ-ள்.) மெய் அன்பு உடையாய் - உண்மை யன்புடையாய், அஞ்சலை - அஞ்சுதலொழிவாய்; நீ வேட்ட வண்ணம் - நீ வேண்டியவாறே, விண் இரவி வையம் பரிக்கும் பரி அனைய - வானின்கண் உள்ள சூரியனது தேரை இழுக்கும் குதிரையை ஒத்த, வயமாக் கொண்டு வருதும் என - வெற்றியை யுடைய குதிரைகளைக் கொண்டு வருவேம் என்று, ஐயன் திருவாக்கு - இறைவன் திருவாக்கு, அகல் விசும்பு ஆறு எழுந்ததாக - அகன்ற வானின் வழியே (அசரீரியாக) எழா நிற்க, அது கேட்டு - அதனைக் கேட்டு, பொய் அன்பு அகன்றார்- பொய்யன்பு நீங்கிய வாதவூரடிகள், சிவன் கருணை போற்றி மனையில் போயினார் சிவபிரான் கருணையைத் துதித்துத் தமது இல்லிற்குச் சென்றனர். அஞ்சலை, அல் : எதிர்மறையிடை நிலை; ஐ : முன்னிலை விகுதி. வையம் - தேர். எழுந்தது எழ அதனைக் கேட்டு என விரித்துக் கொள்க. (78) ('bcடி வேறு) கடிமனை யடைந்த வெல்லை வாதவூர்க் காவ லோரை மடிமையில் சுற்றத் தோருங் கேளிரு மாண்ட காதல் அடிமையுள் ளாரு மேதி லாளரும் பிறரு மீண்டி இடிமழை வாய்விட் டென்னப் புந்திக ளினைய சொல்வார். (இ-ள்.) கடிமனை அடைந்த எல்லை - விளக்கமமைந்த தமது இல்லினை அடைந்த பொழுது, வாதவூர்க் காவலோரை, - அவ்வாதவூரமைச்சரை, மடிமை இல் சுற்றத்தோரும் கேளிரும் - சோர்வில்லாத கிளைஞரும் நட்பினரும், மாண்டகாதல் அடிமையுள்ளாரும் - சிறந்த அன்பினையுடைய ஏவலாளரும். ஏதிலாளரும் பிறரும் ஈண்டி - அயலாரும் மற்றையோரும் நெருங்கி, இடி மழை வாய் விட்டென்ன - இடிக்கும் மேகம் வாய்திறந்தாற் போல, இனைய புந்திகள் சொல்வார் - இவ்வாறான புத்திகளைச் சொல்வாராயினர். பெரியோர்களை அவர்கள் அவதரித்த ஊர்க்குத் தலைவராகக் கூறுதல் மரபாகலின் ‘வாதவூர்க் காவலோரை’ என்றார். மடிமை - மடியின்றன்மை. பலருந்திரண்டு கழறுதலால் ‘இடி மழை வாய்விட்டென்ன’ என்றார்; வாய்விடுதல் - முழங்குதல்; விட்டாலென்ன என்பது விட்டென்ன எனத் தொக்கது. (79) மந்திரக் கிழமை பூண்டு மன்னவர் கருமஞ் செய்வ தந்தணர்க் கறனே யல்ல வமைச்சிய லறத்து நின்றால் வெந்திற லரசர்க் கேற்ற செய்வதே வேண்டு மென்னத் தந்திர மனுநூல் வல்லோர் சாற்றுவா ரன்றோ வையா. (இ-ள்.) மந்திரக்கிழமை பூண்டு - அமைச்சியலுரிமை பூண்டு, மன்னவர் கருமம் செய்வது - அரசரது வினைசெய்தல், அந்தணர்க்கு அறனே அல்ல - மறையவருக்குரிய அறமே அன்று; அமைச்சியல் அறத்து நின்றால் - அமைச்சியலுக்குரிய அறநெறியில் நின்றால், வெந்திறல் அரசர்க்கு ஏற்ற செய்வதே வேண்டும் என்ன - மிக்க வலியினையுடைய அம்மன்னவர்க்குப் பொருந்திய வினைகளையே செய்ய வேண்டுமென்று, ஐயா - ஐயனே, தந்திரம் மனுநூல் வல்லோர் - தந்திரமாகிய மனுநூல் வல்லவர், சாற்றுவார் அன்றோ - கூறுவார் அல்லவா? மன்னவர் கருமம் - அரசரேவிய வினை, அரச காரியம்; அரசர்க்குரிய தொழில்களுமாம். நூலும் கரகமும் முக்கோலும் மணையும் உடையராய்ப் பிச்சை கொண்டுண்டேனும் தமது பொருளுண்டேனும் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுதொழில் புரிந்தொழுகல் அந்தணர்க்குரிய அறமாகலின் ‘மன்னவர் கருமஞ்செய்வ தந்தணர்க் கறனே யல்ல’ என்றார். செய்வது: தொழிற் பெயர். அரச காரியஞ் செய்வது அந்தணர்க்குரித்தன்று, அங்ஙனம் உரித்தல்லாத அதனையும் அவர் ஒரோ வழி மேற்கொள்ளின், பின்பு அரசர்க்குரிய வினைகளாகிய நாடுகாத்தலும் பகை யொறுத்தலும் முதலியவற்றிற்கு ஏற்றவை களையே புரிதலும், அவனது ஒளியோடு பொருந்த ஒழுகுதலும் செய்தல் வேண்டுமென்க. தந்திரம் வல்லோரும் மனுநூல் வல்லோரும் என்றுமாம்; தந்திரம் - ஆகமம். (80) அரைசிய லமைச்சு நீதி யாய்ந்தநுங் கட்கு நாங்கள் உரைசெய்வ தெவனீர் செய்வ தொன்றுநன் றாவ தில்லை விரைசெறி தாராற் கின்று வெம்பரி வருவ தாக வரையறை செய்தீர் நாளை யென்சொல வல்லீ ரையா. (இ-ள்.) அரைசியல் அமைச்சுநீதி ஆய்ந்த நுங்கட்கு - அரசியலையும் அமைச்சர் நீதியையும் ஆராய்ந்தறிந்த நுமக்கு, நாங்கள் உரைசெய்வது எவன் - நாங்கள் சொல்லக்கிடப்பது யாது, நீர் செய்வது ஒன்றும் நன்றாவது இல்லை - நீர் செய்யுங் காரியம் சிறிதும் அழகிதன்று; விரைசெறி தாராற்கு - மணமிக்க வேப்ப மலர் மாலையை யணிந்த பாண்டியனுக்கு, வெம்பரி இன்று வருவதாக வரையறை செய்தீர் - விரும்பத் தக்க குதிரைகள் இன்று வருமென நாள் வரையறுத்ரீர்; ஐயா - ஐயனே, நாளை என் சொலவல்லீர் - (குதிரை வராவிடில்) நாளை என்ன சொல்ல வல்லீரோ. அரசியல் - அரசனது தன்மை என்றுமாம்; ஆவது, பிழை செய்தாரைக் கண்ணோடாது ஒறுத்தல் முதலிய அவனது பெற்றி. வெம்பரி - கடுஞ்செலவினையுடைய பரி என்றுமாம். வருவதாக - வருமென. பரி இன்று வருவதாக நாளை வரையறை செய்தீர். இனி என் சொலவல்லீர் என மாற்றியும் விரித்தும் உரைத்தலுமாம். (81) தழுவிய கிளைஞர் நட்டோர் சார்வுளோர் தக்க சான்றோர் குழுவினைக் காக்க வேண்டுங் குறிப்பிலீர் போலு நீவிர் ஒழுகுறு செயலி னாலே யுஞ்செய லுமக்கே சால அழகிது போலு மென்னக் கழறினா ரதுகேட் டையன். (இ-ள்.) நீவிர் ஒழுகுறு செயலினாலே - நீவிர் நடக்கலுற்ற செய்கையாலே, தழுவிய கிளைஞர் நட்டோர் - சூழ்ந்துள்ள சுற்றத் தாரும் நட்பினரும், சார்வுளோர் தக்க சான்றோர் - சார்ந்தவர்களும் தகுதி வாய்ந்த பெரியாருமாகிய, குழுவினை - கூட்டத்தை, காக்க வேண்டும் குறிப்பிலீர் போலும் - ஓம்பவேண்டுமென்னும் குறிப்புடையரல்லீர் போலும்; உம்செயல் உமக்கே சால அழகிது போலும் எனக் கழறினார் - உமது செய்கை உமக்கே மிகவும் அழகுடையது போலுமென்று இடித்துக் கூறினார்; ஐயன் அது கேட்டு - அடிகள் அதனைக் கேட்டு. சார்வுளோர் - தம்மைப் பற்றுக்கோடாகச் சார்ந்திருக்கும் ஏனை யோர். நுமது செய்கையை ஆராயின் குறிப்பிலீர் போலும் என்க. கழறுதல் - இடித்துரைத்தல். போலும் இரண்டும் ஒப்பில்போலி. (82) சுற்றமுந் தொடர்பு நீத்தேந் துன்பமு மின்பு மற்றேம் வெற்றுடன் மானந் தீர்ந்தேம் வெறுக்கைமேல் வெறுக்கை வைத்தேம் செற்றமுஞ் செருக்குங் காய்ந்தேந் தீவினை யிரண்டுந் தீர்ந்தேம் கற்றைவார் சடையான் கோலங் காட்டியாட் கொண்ட வன்றே. (இ-ள்.) கற்றைவார் சடையான் - திரண்ட நீண்ட சடையையுடைய இறைவன்,கோலம் காட்டி ஆட்கொண்ட அன்றே - தன் அருட்கோலத்தைக் காட்டி அடிமைகொண்ட அப்பொழுதே, சுற்றமுந் தொடர்பும் நீத்தேம் - சுற்றத்தையும் ஏனைத் தொடர்புகளையும் துறந்தேம்; துன்பமும் இன்பும் அற்றேம் - துன்பத்தையும் இன்பத்தையும் ஒழிந்தேம்; வெறு உடல் மானம் தீர்ந்தேம் - பயனற்ற இவ்வுடம்பின் பற்றையும் நீங்கினேம்; வெறுக்கை மேல் வெறுக்கை வைத்தேம் - பொருளின் மேல் வெறுப்பு வைத்தேம்; செற்றமும் செருக்கும் காய்ந்தேம் - சினத்தையும் மதத்தையும் சினந்து போக்கினேம்; தீவினை இரண்டும் தீர்ந்தேம் - கொடிய நல்வினை தீவினை என்னும் இரண்டினின்றும் நீங்கினேம். மேற்செய்யுளில் கிளைஞர் முதலானோரைக் காக்கவேண்டும் குறிப்பிலீர் போலும் என்றதை அநுவதித்து ‘சுற்றமுந் தொடர்பு நீத்தேம்’ என்றார். தொடர்பு - நட்டோர், சார்வுளோர், சான்றோர் என்னும் தொடர்புகள். இனி, காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், உவகை, மதம், மானம் என்னும் உட்பகை ஆறும் ஒழிந்த வாறுரைத்தலும் ஊன்றியுணர்க. வெறுக்கை இரண்டனுள் முன்னது செல்வம்; யாவும் வந்து செறிதலின் வெறுக்கை யெனப்பட்டது; வெறுத்தல் - செறிதல். பின்னது உவர்த்தல் என்னும் பொருட்டாய தொழிற்பெயர். தீமையுடைய இருவினையும் என்க. நல்வினையும் பிறவிக்கேதுவாகலின் ‘வினையிரண்டும்’ என்றார்; “ இருள்சே ரிருவினை யுஞ் சேரா விறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்னும் தமிழ் மறையுங் காண்க. (83) தந்தைதாய் குரவ னாசான் சங்கர னிராசை பெண்டீர் மைந்தர்பல் லுயிருஞ் சுற்ற மாசிலா வீச னன்பர் அந்தமில் பிறவி யேழு மடுபகை யென்ப தோர்ந்தேம் எந்தையார் கருணை காட்டி யெம்மையாட் கொண்ட வன்றே. (இ-ள்.) எந்தையார் கருணை காட்டி எம்மை ஆட்கொண்ட அன்றே - எம் பெருமானார் தமது அருட்கோலம் காட்டி எம்மை அடிமை கொண்டருளிய அப்பொழுதே, தந்தை தாய் குரவன் ஆசான் சங்கரன் - அப்பனும் அம்மையும் ஞானாசிரியனும் போதகாசிரியனும் அவ்விறைவனே என்பதையும், பெண்டீர் நிராசை - மனைவி நிராசையே என்பதையும, மைந்தர் பல் உயிரும் - மக்கள் பல உயிர்களுமே என்பதையும், சுற்றம் மாசு இலா ஈசன் அன்பர் - சுற்றத்தார் குற்றமில்லாத சிவனடியாரே என்பதையும், அடுபகை - கொல்லும் பகை, அந்தம் இல்பிறவி ஏழும் என்பது - முடிவில்லாத எழுவகைப் பிறப்புமே என்பதையும், ஓர்ந்தேம் - அறிந்தேம். ஞான குரவனும் வித்தியா குரவனும் என்பார் குரவனாசான் என்றார். எண்ணிடைச் சொற்கள் தொக்கன. கருணை திருவுருவை உணர்த்தி நின்றது. நிராசையே பெண்டிரும் மைந்தரும் பல்லுயிருமெனப் பிறர் கூறிய உரை சிறிதும் பொருந்தாமை யுணர்க. என்பது என்னும் சொல்லைத் தனித்தனி கூட்டி முடிக்க. (84) ஊரெலா மட்ட சோறு நம்மதே யுவரி சூழ்ந்த பாரெலாம் பாய றுன்னற் கோவணம் பரிக்கு மாடை சீரெலாஞ் சிறந்த சாந்தந் தெய்வநீ றணிபூண் கண்டி நீரெலாஞ் சுமந்த வேணி நிருத்தனாட் கொண்ட வன்றே. (இ-ள்.) நீர் எலாம் சுமந்த வேணி நிருத்தன் - கங்கை நீர் முற்றுந் தாங்கிய சடையினை யுடைய திருக்கூத்தனாகிய இறைவன், ஆட்கொண்ட அன்றே - அடிமை கொண்ட அப்பொழுதே, ஊர் எலாம் அட்ட சோறு நம்மதே - ஊர் முற்றும் சமைத்த சோறு நம்முடையதே; உவரி சூழ்ந்த பார் எலாம் பாயல் - கடல் சூழ்ந்த நிலவுலகு முற்றும் நமது படுக்கையே; துன்னல் கோவணம் பரிக்கும் ஆடை - தைத்த கோவணம் உடுக்கும் உடையே; சீர் எலாம் சிறந்த சாந்தம் தெய்வ நீறு - சீர் அனைத்தாலும் சிறந்த சந்தனம் தெய்வத்தன்மை பொருந்திய திருநீறே; அணி பூண்கண்டி - அணியும் அணி உருத்திராக்க மாலையே. அட்டசோறு : பெயரெச்சம் செயப்படுபொருட் பெயர் கொண்டது. நம்மதே, மகரம் விரித்தல். உவரி, உவரையுடையது; இ : வினை முதற்பொருள் விகுதி. ‘அட்டுண்டு வாழ்வார்க் கதிதிக ளெஞ்ஞான்றும் அட்டுண்ணா மாட்சியுடையவர்’ ஆகலின் ‘ஊரெலா மட்டசோறு நம்மதே’ என்றார். இவ்விரு செய்யுளிலும் போந்த கருத்துக்களிற் பலவும், “ சின்னச் சீரை துன்னற் கோவணம் அறுதற் கீளொடு பெறுவது புனைந்து சிதவ லொடொன் றுதவுழி யெடுத்தாங் கிடுவோ ருளரெனி னிலையினின் றயின்று படுதரைப் பாயலிற் பள்ளிமேவி யோவாத் தகவெனு மரிவையைத் தழீஇ மகவெனப் பல்லுயி ரனைத்தையு மொக்கப் பார்க்குநின் செல்வக் கடவுட் டொண்டர்”” எனத் திருவிடைமருதூர் மும்மணிக்கோவையுட் பயின்றுள்ளமை காண்க. “ ஆரங் கண்டிகை யாடையுங் கந்தையே” என்னும் திருத்தொண்டர் புராணத்தொடரும் நோக்கற்பாலது.(85) [எழுசீரடி யாசிரிய விருத்தம்] இறக்கினு மின்றே யிறக்குக வென்று மிருக்கினு மிருக்குக வேந்தன் ஒறுக்கினு மொறுக்க வுவகையு முடனே யூட்டினு மூட்டுக வானிற் சிறக்கினுஞ் சிறக்க கொடியதீ நரகிற் சேரினுஞ் சேருக சிவனை மறக்கிலம் பண்டைப் பழவினை விளைந்தான் மாற்றுவார் யாரென மறுத்தார். (இ-ள்.) இறக்கினும் இன்றே இறக்குக - (ஆதலால்) இறந்தாலும் இன்றே இறக்கக்கடவேம்; என்றும் இருக்கினும் இருக்குக - அன்றி எப்பொழுதும் அழியாமல் இருந்தாலும் இருக்கக் கடவேம்; வேந்தன் ஒறுக்கினும் ஒறுக்க - மன்னன் தண்டித்தாலும் தண்டிக்கக்கடவன்; உடனே உவகையும் ஊட்டினும் ஊட்டுக - உடனே மகிழ்ச்சியை ஊட்டினும் ஊட்டக் கடவன்; வானில் சிறக்கினும் சிறக்க - விண்ணுலகிற் சென்று சிறப்புப் பெறினும் பெறக்கடவேம்; கொடிய தீநரகில் சேரினும் சேருக - (அன்றி) கொடிய நெருப்புமயமாகிய நிரயத்தின்கண் சேர்ந்தாலுஞ் சேரக்கடவேம்; சிவனை மறக்கிலம் - சிவபெருமானை மறக்க மாட்டேம்; பண்டைப் பழவினை விளைந்தால் - முன் செய்த பழவினை வந்து விளையின், மாற்றுவார் யார் என மறுத்தார் - அதனை மாற்றவல்லார் யாவருளர் என்று மறுத்துக் கூறினர். இறக்குக, இருக்குக என்பவற்றிற் குகரம் விரிந்து நின்றது. உவகையும் என்பதில் உம் அசை. இறைவன் பழவினைப் பயனை நுகர்விக்குங்கால் அதற்கு அமைந்து நுகர்தலன்றி மாற்றுதல் கூடாதாகலின் ‘பழவினை விளைந்தால் மாற்றுவார் யார்’ என்றார். என என்பதனைச் ‘சுற்றமுந் தொடர்பும்’ என்பது முதலிய செய்யுட் களின் வினைகளோடும் கூட்டி, மறுத்தார் என முடிக்க. அடிகள் தற்சுதந்தரமின்றி இறைவனருள் வழிப்பட்டு நிற்கும் பெற்றியை, “ நரகம் புகினும், எள்ளேன் றிருவருளாலே யிருக்கப் பெறின்” “ நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ விதற்கு நாயகமே” “ காயத்திடுவா யுன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே” என்னும் திருவாசகங்களிற் காண்க. (86) ஆகச் செய்யுள் - 2798. செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை (எண் : பக்க எ ண்) அகவிலான் பரவி 249 அக்கர நாற்பத் 64 அக்கீர வேலை 148 அக்குறிகளின் மேம்பட்ட 208 அங்கண ருரக 34 அங்கியை மதிமர 26 அங்கிருந் தநாதி 250 அங்கண்மா நகர்கண் 261 அங்குள கிளைஞர் 269 அடிபணிந் தேத்தி 210 அடுத்திட வடுத்திட 271 அடுத்துநா மிருக்குஞ் 221 அடைந்து பணிந்தரு 38 அட்ட மூர்த்திதன் 178 அண்டவான் றருமேற் 85 அண்ணலரி மருத்த 257 அண்ணல் வேதிய 282 அத்த கற்ற 147 அத்தகு வருண 63 அத்தகைய பாண்டியருட் 192 அடுத்தாயிரங் குண்டோ 104 அடுத்திடுவர் கண்ணி 29 அந்தமி லழகன்கூட 217 அந்தமில் கேள்வி 181 அந்த வேலையிலாதி 129 அந்த வேலையின் 46 அந்த வோலைப் 301 அந்நிலை வதுவைக் 247 அப்பெருஞ் சலதி 24 அப்பெ ரும்புனற் 115 அம்முனை வாளி 47 அரசனிடைப் புகுந்துள்ள 199 அரச னியம்பல 39 அரவி னன்னில 42 அராமுக மனைய 218 அரைசிய லமைச்சு 308 அலர்ந்த வெண்டிரை 226 அல்லது வான்மீ 243 அல்லதையென்றமராலென் 230 அவ்விடை வருகின் 67 அவ்வுரைதேன் செவிநுழைந் 202 அவ்வேலை யன்புடையா 250 அளக்கில் கேள்வியா 133 அளந்து சூழ்திரு 40 அறனிலா னிழைத்த 152 அறிவுடைக் காட 212 அனற்கணா னோக்கி 148 அனைய நீண்மதி 32 அன்று துயிலும் 302 அன்னகூர் வாளி 47 அன்னது தெரிந்து 220 அன்ன மன்னவ 107 அன்னதொர் நாமம் 83 அன்னவி யன்பொழின் 83 ஆசை வெம்பவ 287 அப்பொழு தரசன் 45 அமுத முண்டவ 88 ஆதி சைவனா 269 ஆய பட்டினத் 227 ஆயவளம் பதியதனி 254 ஆய வாறென் 75 ஆயிரம் வாளி 50 ஆரவை குறுகி 139 ஆலய மருங்குவல 274 ஆல வாயுடை 233 ஆவலந்தனே னடிய 157 ஆவிமுன் னேகத் 51 ஆழ மவ்விடைச் 115 ஆற்றன்மிகு பிரதாப 191 இச்சை யாலவ 229 இத்த கைப்பல 279 இத்தகையோர் நிகழ் 255 இத்தனை மாக்களு 28 இத்தன்மைய னாகிக்கலை 186 இந்திரன்றன் பழி 191 இப்பெரும் தடமே 164 இம்பர் வீடளிக்குந் 98 இம்மா நகருள்ளானொரு 182 இயங்கு மாதவத் 171 இயம்பருந் திறலி 23 இயம்பரும் பதிகடம் 207 இரக்கமி லிழிந்த 248 இருங்கலை வல்லோ 74 இருணி றைந்த 147 இருந்த மாதவச் 172 இருவகைப் புறவுரை 173 இருவருந் துருவ 182 இலக்கண மிவனுக் 165 இவனெடுத் தமற் 177 இவ்விள வேனிற் 125 இளம்புளிந் தயிர்வி 124 இறக்கினு மின்றே 311 இனையதுன் றிருவுள் 170 இனையர்போல் வந்து 70 இன்ன செய்கையி 265 இன்னமு மாலவாயெம் 214 இன்னிய மதிர்ந்தன 269 உடைய நாயகன் 171 உடையுங் கோவண 279 உணர்ந்த கேள்வியா 133 உண்டவ ளொருத்தி 121 உயர்ந்த சாதியுந் 239 உரியவன் றீமுன் 287 உலகினுட் பெருகி 188 உலத்தை வென்றதோ 117 உலர்ந்த நெஞ்சு 134 உள்ள மார நாங் 76 உள்ளம் வேறுபட் 266 ஊடினார் போல 87 ஊரெலா மட்ட 310 ஊனிட ரகன்றோ 62 எடுத்தசொன் மாறி 150 எடுத்த பொற்சுமை 267 எண்ணி லாரிடத் 263 எந்தையிவ் விகழ்ச்சி 136 எய்த வாளி 44 எய்தி வெள்ளி 145 எதி மருத்தவனி 214 எல்லை கூறிய 298 எழில்புனை யதுல 23 எழுந்தா ருடைய 303 எறிவ லைப்படு 237 எற்றி தாலெனத் 235 என்றல் வாதவூர் 263 என்று வாய்திறந் 295 என்னவதிசய மோ 198 என்னா யகனே 300 என்னா விறைஞ்சி 301 என்னையிகழ்ந் தனனோ 196 என்னை யினிச்செயு 38 ஏமா சலமென் 95 ஏவ லாளரோ 238 ஏன்ற வேந்த 144 ஐய சொற்பொரு 144 ஐய யாவையு 131 ஐயுறு கருத்தை 128 ஒருத்திகள் ளுண்கின் 123 ஒருவழிப் பட்டு 52 ஒருவனான்முகத் 129 ஒழித்த நோன்பின 277 ஒன்று வேண்டுமிப் 268 ஓங்குதண் பணைசூழ் 209 ஓயாவிறன் மதனுட்கிணை 184 ஓலவாய் மறைக 21 கடம்பமா வனத்தி 169 கடிமனை யடைந்த 307 கட்டவிழ் கடுக்கை 164 கண்டிகை மதாணி 137 கத்திநின் றொருபா 53 கயபதி காய்சின 36 கரவி லாதபே 262 கரவி லுள்ளமாம் 278 கருகிருண் முகந்தா 240 கருங்கட லேழுங் 24 கருணை நாயகி 267 கருத்துக் கண்ணழி 175 கரும்பு போன்மொழி 112 கலையினா னிறைந்த 91 கலைவீசு மதிச்சடையோன் 252 கல்வி யாளர்தங் 133 கழித்தலைக் கண்டற் 241 கழிந்த பெருங்கேள்வி 193 கழுமணி வயிரம் 65 களித்த காதலன் 113 களித்தவ ளொருத்தி 124 கள்ளக் காதல 264 கள்ளெறு கடுக்கை 204 கறுவிவீழ் காலன் 318 கறையணி கண்டனை 28 கற்ற கீரனுங்கலை 161 கற்ற கீரனும்பின் 177 கற்றைவார் சடையா 141 கனவில்வருங் காட்சி 288 கனவி னிடத்துந் 302 காமனைப் பொடியாக் 181 காயிலை யடைந்தகழு 273 கார்கொ ணீர்த்திரு 229 கால முங்கனா 281 காவியுங் கமல 118 கிட்டுந் தோணியை 234 கிளையுநங் கோனும் 246 கீட்டி சைத்தலை 31 குடைக்காடன் பசிக்கண் 190 குரவ வோதியர் 108 குற்றநின் மேல 61 குற்ற மிக்கவிக் 134 குன்றவில் வேடன் 46 குன்றெறிந்தவேற் 233 கூந்தற் பிடியும் 94 கூழை பாசியின் 109 கூற்றம் போன்றகண் 226 கைதந்து கரையே 151 கைதைசூழ் துறைவ 247 கொடிக ணீண்மதின் 32 கொய்யு நீலமுங் 114 கொலையினையோ ரவுண 200 கொற்றவள் விடைமேற் 248 கொன்று மீன்பகர் 225 கொன்றையந் தெரியல் 163 கோடும் பிறைவா 95 சங்க லம்புதண் 238 சங்கவான் றமிழ் 197 சண்பக மாறன் 83 சதுரமா யளவி 72 சந்தநாண் மறைக 243 சந்தமறை தீண்டரிய 270 சந்நிதியில் வீழ்ந் 195 சம்பகமாற னென்னுங் 162 சரியை வல்லமெய்த் 276 சலந்தர னுடலங் 153 சாடியு ணறவ 123 சாலநா னிழைத்த 157 சிங்கமான் சுமந்த 212 சிங்கவே றனையான் 244 சித்தமா சகல 169 சித்தர் தஞ்சின 31 சித்திர மேரு 22 சிந்தை களித்திரு 39 சிந்தை யாகிய 299 சிலர்வந்து மன்னவோ 201 சிலைத்தெழு செம்பியன் 36 சிலைவிற்சே வகஞ்செய்து 58 சிறந்த பூசைக்கு 297 சிறந்தவருள் சுரந்து 341 சிறையேய் புனல்சூழ் 247 சுருதி கூறிய 275 சுருப்புக் கமழ்தேங் 94 சுற்றமுந் தொடர்பு 309 சூக்க மாகுமை 283 சூழும் வார்திரை 223 செங்கதிர் மேனி 85 செடிய காருடற் 227 செய்யகோன் மனுவழி 27 செய்யுள் கொண்டு 135 செருக்கிய வண்டு 82 செருத்துணை யாகி 48 செல்லலை வருதி 48 செவ்விதி னோக்கி 245 செற்றமிகுங் கருவி 256 சேட்டிகைத் தென்கா 88 சையமொத் தெழு 41 சொல்வரம் பிகந்த 138 சொற்குவை தேரும் 80 சொற்குற்ற மின்று 139 தக்க மேருமா 228 தடிந்தன தோளுந் 51 தணியலுண் டுள்ளஞ் 120 தந்தை தாயிலேன் 130 தந்தைதாய் குரவ 310 தரங்க வாரிநீர் 234 தருக்கு மின்பமுங் 176 தரைகிழித் தெழுநீர் 86 தழுவிய கிளைஞர் 309 தளர்ந்த பைங்கொடி 232 தள்ளு நீர்த்திரை 235 தறைவிழத் தனது 52 தனிவருபுலவர் 67 தன்பெருங் கணத்து 241 தன்னை நித்தலும் 177 தாமரை களாஞ்சி 91 தாமொரு புலவ 64 தாழ்ந்தது வடகீ 167 தாழ்ந்த வேணிய 143 தாளணி கழலினான் 26 திங்களங் கண்ணி 69 தித்திக்கு மணிவார் 288 திரிபுர மெரிய 153 திருத்தனே சரணஞ் 146 திரும்பித்தன் றேவி 127 துங்க வாரியிற் 214 துடித்த வாளர 43 துடுவைவான் முறங்கா 54 துணிவுடைய குலத்து 192 துதித்த கீரனுக் 161 துள்ளு மாவொலி 42 தூய சொல்லும் 77 தூய நீர்குடை 110 தென்றுசைப் பரங் 32 தென்னவன் குல 131 தேய்ந்த நாண்மதிக் 142 தேவ தேவனை 158 தேனிழி குதலை 25 தேனும் பாலுந் 284 தையலார் சிலர் 116 தையலா ளொருத்தி 100 தொடுத்தவறு மையும் 252 தொண்டுறை மனத்து 244 தொண்டை வாய்வலை 232 தொழுத கையினர் 285 தொழுதன ரடிகள் 182 நகைத் தடவந்த 154 நதியணிந்தவர் 78 நந்தி நாதனு 239 நாதனின் னருளாற் 218 நாமகளுரு வாய் 73 நாமகள் வரவு 61 நாயக னேவ 222 நாறிய தண்ணந் 89 நாறு சுண்ணமென் 113 நாறுபூந் தாம 73 நானவார் குழலி 60 நிரப்பிய வழிநா 60 நிலந்தரு திருவி 92 நிறைந்த தெண்கட 225 நீடுந் தரங்க 96 நீலப்பிடி மேற் 93 நுண்ணிய பொருளினு 28 நுழைந்தான் பொரு 187 நூறம்பு தொடுத்து 50 நெடிய வேதநூ 130 நெருப்பிலிடு வெண்ணெ 273 பங்கயச் செங்கை 166 பங்கய முகமென் 140 படர்ந்து பணிந்தன் 202 படவு டைப்பவோர் 236 பட்டும் பன்னிறக் 117 பண்டொரு வைகல் 166 பண்ணெனுஞ் சொலார் 109 பத்தம்பு தொடுத்து 49 பத்தி செய்தர 259 பரவிநீ வழிபட் 141 பரிசிலைப் புலவ 215 பரிவாயின் மொழிதொடுத்து 195 பருங்கைமால் யானை 155 பலருஞ் செய்த 76 பல்கா சொடு 188 பல்குறு மானிட 27 பல்வ கைப்பெருங் 33 பழுதி லாதசொன் 286 பற்பல கலைமாண் 66 பாசிழை யொருத்தி 102 பாடிய பாணற் 72 பாடுவா யளிதே 57 பாட்டிற் கின்புறு 286 பாத மலரிணை போற்றி 205 பாம்பி னாற்கடி 29 பாயுடையார் விடுத்த 19 பாயு மால்விடை 146 பார்த்த பார்வையா 283 பிடிக ளென்ன 96 பிணத்தினைக் கோலிப் 54 பிணியவிழ் கோதை 104 பித்திது வெனப்பிறர் 272 பிழையில் கற்புடை 231 பிள்ளை யின்மையேற் 230 பிறவி யந்தகன் 230 பின்பாவல ரெல்லாம் 185 பின்னி டாதிரு 44 புண்ணியப் புலவீர் 213 புத்த ராதியோர் 259 புரசை மாவய 269 புரத்தினு ளுயர்ந்த 55 புலந்தொறும் போகிப் 65 புலவு மீனுணக் 224 புலவு மீன்விலை 231 புல்லாதார் முரண 257 புல்லி மைந்தர் 106 பெண்ணிளை பாகங் 209 பெண்ணினைப் வதுவை 249 பெய்வளை விந்தை 23 பெருகு மன்புளந் 172 பெருந்தகை யமுதன் 242 'd8ãரும விந்நக 30 பேர்வாத வூரரென 255 பைத்தலை புரட்டு 168 பொக்கமுடை யார்செய் 206 பொங்கரி னுழைந்து 90 பொய்த்திடு நுண்ணிடை 82 பொருங்கட லனீக 271 பொருப்பகழ்ந் தெடு 155 பொற்ற னிச்சடை 132 பொன்னங் கமலத் 305 பொன்ன னாளொடு 176 பொன்னினும் வெள்ளி 119 பொன்னின் பீடிகை 178 பொன்னு மளவோ 304 போதையா ருலக 149 போனவிடைக்காடனுக்கு 197 மகவி லாமையா 228 மகவை யீன்றதாய் 179 மகிழ்ந்தான் சிலர் 186 மங்கை நல்லவ 110 மங்கையா ளொருத்தி 122 மணிகெழு தேவ 22 மண்ணாதி யாறாறு 292 மதுகைவா ளொருவ 104 மந்திரக் கிழமை 307 மயிலிளம் பெடையன் 101 மருளு மாறு 76 மலர் தொறுஞ் சிறிதே 120 மலர்ந்தசெவ் வந்தி 89 மல்லார்தடம் புயவாணிக 185 மறந்த வாதவேல் 265 மறமலி நேமி 69 மறையி னந்தமு 178 மறையினா றொழுகும் 68 மற்றிவர் வழிப்படுமுன் 269 மனிதர் வெங்கோடை 84 மன்றல் வேம்பனும் 266 மன்று ளாடிய 280 மன்னர் பெருமா 304 மன்னவர் மன்னன் 80 மன்ன வன்றிரு 298 மன்னே யென்னை 306 மாகவா றியங்கு 52 மாசறு காட்சி 56 மாசறு கேளி 245 மாசாய் மறைக்குமல 294 மாசி னானமுஞ் 116 மாதவன் றனக் 180 மாதவி பாதிரி 81 மாத்தாண் மதமா 93 மாந்தளிரடியார் 106 மாந்தளி ரீன்று 126 மாரனைப் பொடி 143 மாறனறிந்தினி 37 மின்மதிச் சடை 211 மின்றிரித் தன்ன 217 மின்ன லங்கிலை 45 முகிழ்தரு முலைநின் 62 முடங்கு முள்ளிலை 223 முடங்கு வெஞ்சிலை 41 முண்டக மென்கடி 81 முத்தேர் நகையார் 98 முந்துநூன் மொழிந்தார் 71 முழுதுல கீன்ற 240 முன்ப ணிந்தன 280 முன்பு நான் மாட 163 முன்னர் வீசினாற் 237 மெய்ம்மை யாம்பொருள் 258 மெய்யன் புடையா 306 மேதகு சான்றேஸர் 74 மைக்கணா ளொருத்தி 99 மைக்குழ லொருத்தி 101 மையறு மனத்தான் 165 மையுள் கண்ணியர் 107 மைவார் தடங்க 97 யாவ ராலு 145 வங்கத்தார் பொருள் 128 வங்கிய சேகரன்போல் 59 வங்கிய சேகரன்வங் 79 வஞ்சவினைக் கொள்கலணா 290 வடுத்தவா மரும 49 வண்டமிழ் நாவி 70 வந்த நாவலர் 77 வந்த யோகர்மா 30 வரைபக வெறிந்த 221 வழுக்காத சொற் சுவை 194 வழுதியரி யணையிலிருந் 199 வள்ளத்து வாள்போல் 119 வள்ளல் வாதவூர் 297 வறியவனா மொருபிறவி 291 வறுமைநோய் பிணிப்ப 135 வனைந்த பைங்கழ 111 வன்றான் மழவிடை 184 வாங்கு சங்க 78 வாச மென்பனி 114 வாட்டு நுண்ணிடை 224 வாய்ந்த நாண்மலர் 103 வானாதி யைத்துமுதல் 294 விடைகொடு போவ 168 விடைத்தனி யேறன் 105 விதிமுறை கதலி 211 விம்மித மடைந்து 68 விரதமு மறனு 219 விரிகதிர்ப் படாதிற் 138 வில்லொடு மேக 57 விழ்வறா நகரெங்கும் 253 விழைதரு காத 87 வீங்குநீர்ச் சடையா 220 வீழ்ந்த காதலன் 111 வெங்கய நீள்கொடி 34 வெஞ்சின மறக்கோ 56 சுழிபடு பிறவி 7 சுற்றமாம் பாச 1 வெருவரு செலவின் 222 வெவ்விய நறவ 122 வெவ்விய வேலான் 127 வெள்ளநீர் வறப்ப 25 வெள்ளமாச் சோரி 53 வெள்ளை மாமதி 173 வேடுரு வாகி 59 வேத நூலொரு 274 வேத வாகம 260 வேதனெடு மாலாதி 20 வேந்த னேவலால் 134 வேழ மறப் படை 35 வேறு பாடறி 76 ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியர் உரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் குறிப்புகள் (பாடம்.) 1. கோத்த தன்றே (பாடம்.) 1. உருகெழுஞ் செலவுரகமும். (பாடம்.) 1. சுவடெடுத்து. (பாடம்) 1. கொடி கொள். (பாடம்) 1. வானவர் (பா -ம்) 1. நயம்பெறு. (பா - ம்) 1. நாட்டுமிருந்து 1. ஆடினெனக்கரிது (பா-ம்) 1. மார்பு போழ் (பா-ம்) 1. மின்னிலங்கிலை. (பா-ம்) 1. மீனவர் 1. நூறு நூறு (பா-ம்) 1. வில்லென்ன (பா-ம்) 1. நூறு நூறு (நான்கடியிலும்) (பா-ம்) 1. சிலவாள். (பா-ம்) 1. குறையுடற்கைவேல். (பா-ம்) 2. கேண்மைத்தாகி. (பா-ம்) 1. அம்மூவரில் 1. அக்கரங்கள் மக்களாய்ப் பிறந்தனவாகக் கூறியதன் கருத்து, கபிலர் என்னும் உரை நூலில் விளக்கப்பெற்றுள்ளது. 1. (பா-ம்) அளப்பதாய். 1. (பா-ம்) வண்மலர் வண்டூசு. 1. (பா-ம்) செஞ்சவே. 1. (பா-ம்) முடிக்கேற்ற : முடிக்கேற. 1. (பா-ம்) மழைவறுங்கோடை. 1. முள்வாய்க் கைதை. 2. காந்த மண்டபத்தில் 3. காணார் மாந்தர். (பா-ம்) 1. திருவினான்ற நிழன் மணி. (பா-ம்) 1. பார்த்தார். ( பா-ம்) 1. பணிந்த தென்றால் (பா-ம்) 1. இடுமெங்கை. (பா-ம்) 1. தையலாரை (பா-ம்) 1. அரவும் யாமையும் (பா-ம்) 1. அவண் குடைந்து . (பா-ம்) 2. பார்த்தனன் சீச்சீ (பா-ம்) 1. அமிழ்த்துவாள். (பா-ம்) 1. கொப்புளித்தனள். (பா-ம்) 1. மார்பமும் பொய்கைக்கு. (பா-ம்) 1. நீராசனம் 2. சுற்ற. 3. கடிகா (பா-ம்) 1. தெண்மது. (பா-ம்) 1. ஆய்ந்ததோர். (பா-ம்) 1. வாசமோர்ந்து. (பா-ம்) 1. நிற்பினும் (பா-ம்) 2. வடிவில் (பா-ம்) 1. பொற்றளிர்ச்சடை. (பா-ம்) 1. மையுள் கண்ட. (பா-ம்) 1. பொறுப்பாரேயோ. (பா-ம்) 1. திரிபுரம் பொரிய. (பா-ம்) 1. நகைத்திடவந்த (பா-ம்) 1. போற்றியஞ்சிக் கொடியனேன். (பா-ம்) 2. போற்றி நின்றேத்தா. (பா-ம்) 1. பண்டொரு போது. (பா-ம்) 1. எனைய நாணிகழ்ச்சி. (பா-ம்) 1. வியாகரணத்தினை யுரைக்கும். (பா-ம்) 1. தழைப்ப (பா-ம்) 2. திளைத்திடத் தழுவி (பா-ம்) 1. உருத்தினாய்க்கு. (பா-ம்) 1. தொன்னூல் (பா-ம்) 1. யாதோ வென்றார் (பா-ம்) 1. அன்புருக்கும். (பா-ம்) 1. மூண்ட விச்செய்தி (பா-ம்) 1. சாபம் பெருவலி. (பா-ம்) 1. காரளைந்து; தாதளைந்து. (பா-ம்) 1. நகைமலர்க்கைதை. (பா-ம்) 1. தவப்பயன் றூர்ப்ப. (பா-ம்) 1. இருந்தவளென்னா (பா-ம்) 1. வன்மத்தென. (பா-ம்) 1. படவினை (பா-ம்) 1. சேரிகள் சாய (பா-ம்) 2. படவுகைத்து. (பா-ம்) 1. அங்கணைந்தெவன். (பா-ம்) 1. குஞ்சிச்சூட்டும்; குஞ்சிசூடும் (பா-ம்) 2. கொப்புளிக்கும். (பா-ம்) 1. சுழித்தலைக் கிடங்கு. (பா-ம்) 2. சேரி சார்ந்தான் (பா-ம்) 1. கோன்றான். (பா-ம்) 1. ஞாழற் செய்தெழுங்கோதை. (பா-ம்) 1. பிறவிவாழ்க்கை (பா-ம்) 1. மகவிலாவருமை. (பா-ம்) 1. வரிசை யிறைச் சிறப்பளித்து. (பா-ம்) 1. கேள்வியாற் கழிப்பது (பா-ம்) 2. கரங்கொடு நீங்குவது (பா-ம்) 1. என்றிவ்வாதவூர். (பா-ம்) 1. திண்டிறல் (பா-ம்) 2. சீரடி (பா-ம்) 1. நிழற்றின. (பா-ம்) 1. நிமித்தமுங் கருதார். (பா-ம்) 1. தேக்கிய புறம். (பா-ம்) 1. வறியனாம். (பா-ம்) 2. சிறியனாம் (பா-ம்) 1. விகாரமயம். (பா-ம்) 2. அன்புருவின். (பா-ம்) 1. ஆழிவெண்கதிரோன்.