நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 12 திருவிளையாடற் புராணம் கூடற் காண்டம் - 1 உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 12 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம், பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 328 = 360 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 225/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்விகளிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல்களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25 . நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக் கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 அணிந்துரை 1. புராண இலக்கியம் தமிழில் தோன்றி வளர்ந்துள்ள இலக்கிய வகைகளில் புராணம் என்பதும் ஒன்றாகும். புராணம் என்ற சொல்லிற்குப் பழமை, தொன்மை என்பது பொருள். தொல்பழங்காலத்திற்கு முன்பிருந்தே மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகள், கற்பனைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு படைப்பாற்றல் மிக்க பாவலர்களால் படைக்கப்பெற்றவை புராண இலக்கியங்கள் ஆகும். புராணம் என்ற சொல்லினைப் புராணி, நவீனாம் என்று விரித்துப் பழைய பொருள் பேசப்படினும் புதுப்பொருள் பொருந்தியது என்று ஒரு விளக்கம் கூறப்படுதல் உண்டு. ( It is though old ever new ) . மிகப் பழைய காலத்தில் நடந்ததாகக் கருதப்படும் கதை விளக்கமாகவும், பழைய நம்பிக்கைகளையும் மரபுகளையும் உரைப்பதாகவும் அமைவது புராணம். இவை தெய்வங்கள், முனிவர்கள், அரசர்கள் பற்றிய புனைவுகளாக இலங்குவன. இதிகாசத்துடன் புராணத்தையும் சேர்த்து ஐந்தாம் வேதமாகச் சாந்தோக்கிய உபநிடதத்தில் ஏழாம் இயலில் ( முதற் காண்டம்) சொல்லப்பெற்றது. உண்மையான நண்பன் நல்ல அறிவுரையினை உரிமையோடு கூறி நெறிப்படுத்துதல் போலப் பழைய கதைகளின் வழியே நீதிகளைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துதலின், புராண இதிகாசங்கள் யாவும் சுஹ்ருத் சம்மிதை ஆகும் என்று பிரதாபருத்தரீயம் என்ற அணியிலக்கணப் பனுவலில் வித்தியாநாதர் ( கி.பி.13 நூ.) குறித்துள்ளார். சுஹ்ருத் - நண்பன்; சம்மிதை - போன்றது என்று பொருள் கூறுவர். எல்லாப் புராணங்களையும் வேதவியாசரே தொகுத்துச செய்தனர் என்பது ஒரு கருத்து. இவையாவும் நைமிசாரண்யத்தில் இருந்த முனிவர்களுக்குச் சூதன் என்னும் பாடகன் கூறியவை என்பது மற்றொரு கருத்து. புராணங்களை 1. மகாபுராணம் 2. உபபுராணம் 3. தலபுராணம் என்று மூன்று வகையாகப் பாகுபடுத்துவர். முன்னைய இருவகைப் புராணங்களும் வடமொழியில் தோன்றியவை; அவற்றுள் ஒரு சில தமிழில் மொழி பெயர்க்கப்பெற்றவை. எனின், மூன்றாவதாகக் குறிக்கப் பெற்றுள்ள தலபுராணங்கள் பலவும் தமிழில் மூல இலக்கியமாக முகிழ்த்தவை. இவற்றுள் ஒரு சில வடமொழியில் மொழி பெயர்த்துக் கொள்ளப் பெற்றவை. கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடியுள்ள திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் தமிழில் முழுமையாகக் கிடைத்துள்ள முதல்தல புராணமாக ஆராய்ச்சி அறிஞர்களால் கருதப்படுகின்றது. இறைவன் கோயில் கொண்டுள்ள தலத்தின் சிறப்புக்களையும் அங்குவங்கு வழிபட்டோர் பெற்ற நற்பேறுகளையும் எடுத்துரைக்கும் பாங்கில் கற்பனை வளமும் கருத்து வளமும் சிறக்கச் சீரிய விருத்த யாப்பில் புனையப் பெறும் தலபுராணத்தினைக் காப்பியமாகக் கருதுவோரும் உளர். பிரபந்த மரபியல், “காப்பியம் புராணமாய்க் கருதப் பெறுமே” என்று இயம்புதலின், காப்பியமும் புராணமும ஒருவகை இலக்கியப் படைப்பாக எண்ணப் பெற்றமை புலனாகும். 2. தல புராணங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினாலும் புனிதத் தன்மை பொருந்திய தலத்திற்குப் பாடப் பெற்றுள்ள தல புராணங்களில் அருணாசலப் புராணம், சிதம்பரப் புராணம், சேது புராணம், திருவாரூர்ப் புராணம், திருவானைக்காப் புராணம், திருக்காளத்திப் புராணம், திருவிரிஞ்சைப் புராணம், திருவெண்காட்டுப் புராணம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. பெரும்பாலும் தலத்தின் பெயரினாலேயே புராணங்கள் பெயர் பெற்றன. எனின், சிராமலை நாதரின் மீது சைவ எல்லப்ப நாவலர் பாடியது செவ்வந்திப் புராணம் ஆகும். இது தலத்தின் பெயரால் அமையவில்லை. சிராமலையில் (திருச்சி மலைக்கோட்டையில்) கோயில் கொண்டுள்ள ஈசனுக்கு உகப்பான செவ்வந்தி மலரின் பெயரினால் இப்புராணம் வழங்கப்பெற்றது. தல புராணங்களை மிகுதியாகப் பாடிய சிறப்புக்குரியவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆவர். 3. திருவிளையாடல் திருவிளையாடற் புராணம் மதுரையில் கோயில் கொண்டுள்ள சொக்கநாதரின் அரும்பெரும் அருள் விளையாடல்களைக் காவியச் சுவையுடனும் கற்பனை வளத்துடன் பத்தி உணர்வுஉடனும் கலைச் சிறப்புடனும் பாரித்துரைக்கும் பாங்கில் பரஞ்சோதி முனிவரால் பாடப்பெற்றது. இப்படைப்பும் தலத்தின் பெயரால் வழங்கப்பெறாமல் இறைவனின் அற்புத விளையாட்டின் பெயரினால் வழங்கிவருதல் நோக்கத்தக்கது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகைத் தொழில்களையும் ஈசன் ஒரு விளையாட்டாக நிகழ்த்துகிறான் என்பதை விளக்க முற்பட்ட மாதவச் சிவஞான முனிவர், “ஐங்கலப் பாரம் சுமத்தல் சாத்தனுக்கு ஒரு விளையாட்டாதல் போல” என்று சிவஞான சித்தியார் உரையில் உவமை கூறித் தெளிவுறுத்தினார். மாணிக்கவாசகர், “காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்று இறைவனின் விளையாட்டினைக் குறித்துள்ளார். ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு படைத்த மாந்தர் வரையுள்ள எல்லா உயிர்க்கும் அருள் சுரக்கும் வரம்பற்ற ஆற்றலும் எல்லைஇல்லாப் பெருங்கருணைத்திறமும் வாய்ந்த முதல்வன் பல்வேறு கோலங்கொண்டு மன்பதைக்கு அருளிய வியத்தகு செயல்களைத் திருவிளையாட்டு, திருவிளையாடல் எனப் பெயரிட்டு வழங்கினர். இதனை வடமொழிவாணர் லீலை என்று கூறினர். பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரை மாநகரில் சிவபிரான் புரிந்துள்ள பற்பல அருள் விளையாடல் களில் அறுபத்து நான்கினை மட்டும் தேர்ந்தெடுத்துச் செல்லி நகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தினைச் செந்தமிழ் அமுதமாகப் பாடினார். இதுவே கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர்க்கு மூலமாதல் வேண்டும். எனினும், தம் நூலுக்கு மூலம் வடமொழியில் ஈசசங்கிதை என்று பாயிரத்தின் தொடக்கத்தில் குறித்துள்ளார். மூலம் தமிழாகவே இருப்பினும், வடமொழியிலிருந்து பாடுவதாகக் கூறுதல் நூலுக்குப் பெருமைதரும் என்று எண்ணிய காலத்தில் வாழ்ந்தவர் பரஞ்சோதியார் எனக் கருத வேண்டியுள்ளது. சைவப் பெருமக்கள் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், கந்தபுராணம் என்ற மூன்றினையும் சிவபிரானின் முக்கண்ணாகப் போற்றுதல் மரபு. இவற்றுள் நடுவணதாகிய திருவிளையாடற் புராணத்தினைப் பாடிய பரஞ்சோதியாரின் புலமைத் திறத்தையும் புராணத்தின் அமைப்பியல் அழகினையும் முதற்கண் சுருக்கமாகக் காண்போம். 4. பரஞ்சோதியார் படைப்புக்கள் பரஞ்சோதியார் திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் தோன்றியவர். இவர்தம் தந்தையார் மீனாட்சி சுந்தர தேசிகர் ஆவர். இளமையிலேயே பரஞ்சோதியார் செந்தமிழையும் வடமொழியையும் குறைவறக் கற்றார். இலக்கணம், இலக்கியம், அளவை நூல், நிகண்டு, நீதி நூல், வானூல், கலை நூல்கள் முதலியன பயின்று வரம்பிலாப் புலமை நிரம்பப் பெற்றார். சாத்திர, தோத்திரங்களிலும் தேர்ச்சி பெற்றுச் சிவநேசம் பூண்டு விளங்கினார். கவிபாடும் ஆற்றலும் பெற்றனர்.இவர் பாடியவை திருவிளையாடற் புராணம், மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி, வேதாரணிய புராணம் என்பன. இப்படைப்புக்கள் பரஞ்சோதியாரின் புலமை வளத்திற்கும் கற்பனைத் திறத்திற்கும் படைப்பாற்றலுக்கும் கட்டியங் கூறுவன எனலாம். 5. திருவிளையாடற் புராணம் அமைப்பியல் வனப்பு ஒரு பெருங்காப்பியத்திற்குரிய அமைப்பியல் முழுமையும் வாய்க்கப் பெற்ற இலக்கியமாகத் திருவிளையாடற் புராணம் திகழ்கின்றது. மதுரைக்காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களையும் 64 படலங்களையும் இப்புராணம் கொண்டுள்ளது. பெரும்பான்மையும் அறுசீர் ஆசிரிய விருத்தங்களும், கலிநிலைத்துறையில் அமைந்த பாடல்களும், கலிவிருத்தங்களும் செவிக்கின்பம் பயக்கும் பாங்கில் ஓசை நலம் தளும்பப் பரஞ்சோதி முனிவரால் பாடப்பெற்றவை. இப்பாடல்களின் தொகை 3363 ஆகும். இம்முனிவர், “ விரிமுறை விருத்தச் செய்யுள் வகைமையால் விளம்பலுற்றேன் ” என்று இயம்புதல் எண்ணத்தக்கது. நீர்பிரித்துத் தீம்பாலினை மட்டும் பருகக் கூடிய அன்னப் பறவையினைப் போல, இந்நூலினைப் பயில்வோர் குற்றத்தை நீக்கிக் குணத்தினைக் கொள்ளுதல் வேண்டும் என்று முனிவர் அவையடக்கம் கூறுதல் அறியத்தக்கது. இப்புராணத்தின் முதற்பாடல் “சத்தியாய்ச் சிவமாகி ” எனத் தொடங்குவது; விநாயகர்க்கு வணக்கம் கூறுவதாய் அமைந்தது. வாழ்த்துச் செய்யுளும் நூற்பயன் நுவலும் பாடலும் தொடர்ந்து வருவன. பெரும்பாலும் நூற்பயன் கூறுதல் நூலின் முடிவில் இடம் பெறும்; எனின், இங்குத் தொடக்கத்தில் இடம்பெறுதல் சுட்டுதற் குரியது. தொடர்ந்து சிவம், சத்தி உள்ளிட்ட கடவுள் வணக்கப் பாடல்களும், சிவனருட் செல்வராகிய அடியார்க்குரிய பாடல்களும் அமைந்துள்ளன. பாயிரப் பகுதியின் எச்சமாக நூல் செய்தற்குரிய காரணமும், முறையும், அவையடக்கமும், அரங்ககேறிய வரலாறும் சொல்லப்பெற்றன. திருநாட்டுச் சிறப்பு, திருநகரச் சிறப்பு என்ற பகுதிகளில் பாண்டிய நாட்டு வளமும், இயற்கை எழிலும், திணைக் காட்சிகளும், மதுரை மாநகரின் அமைப்பழகும், வீதிகளின் வனப்பும், மக்களின் செழுமையும் சிறப்பாகப் புனையப் பெற்றுள்ளன. இவற்றைப் படிப்பவரின் மனத்தில் சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தில் இளங்கோவடிகள் படைத்துள்ள மதுரை மாநகரின் மாண்புகள் தோன்றுதல் கூடும். புராண வரலாறு, தலம், தீர்த்தம், மூர்த்தி விசேடங்களும், புராணச் சுருக்கமாக அமையும் பதிகப் பகுதியும் படித்து மகிழத் தக்கவை. பரம்பொருளே விண்ணகத்தினின்றும் மண்ணகத்தில் தோன்றி நீதிநெறி நிலைபெறவும் யாவரும் இன்புறவும் அரசு புரிந்த திருவிளையாடல்கள் சுட்டத்தகுவன. இவற்றை நன்கு கற்றறிந்தவராகிய குமரகுருபரர், தமரநீர்ப் புவனம் முழுதொருங் கீன்றாள் தடாதகா தேவியென் றொருபேர் தரிக்கவந் ததுவும் தனிமுத லொருநீ சவுந்தர மாறனா னதுவும் குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும் தண்டமிழ் மதுரம் கூட்டுண வெழுந்த வேட்கையால் எனில்; இக் கொழிதமிழ்ப் பெருமையையார் அறிவர்! என வியந்து போற்றுதல் எண்ணி இன்புறத்தக்கது. இறைவன் திருவருட் சிறப்புடன் அருந்தமிழ்ச் சிறப்பும் இப்புராணத்தில் எங்கும் இடம்பெறக் காணலாம். மூவேந்தரும் செந்தமிழ்மொழியைப் பேணி வளர்த்தனர். எனினும், பாண்டியரின் பணியே விஞ்சி நிற்பது. முச்சங்கம் அமைத்துப் புலவர்களைப் புரந்து முத்தமிழ்ப் பணிபுரிந்த பாண்டியரின் சிறப்பு இப்புராணத்தின் பல இடங்களிலும் பரவியும் விரவியும் வந்துள்ளது. சங்கப் பலகை கொடுத்த படலம், தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம், சங்கத்தார் கலகம் தீர்த்த படலம், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் என்பன எண்ணற்பாலன. “நெற்றிக் கண்ணினைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற அஞ்சா நெஞ்சம் கொண்ட அருந்தமிழ்க் கவிஞன் நக்கீரனின் குரல் இப்புராணத்தில் ஒலிக்கிறது. அகத்தியர் தென்னாடு வருதற்கு முன்பே செந்தமிழ் வளம் பெற்று விளங்கியது என்ற கருத்தினை, விடைகொடு போவான் ஒன்றை வேண்டினான்; ஏகும்தேயம் தொடைபெறு தமிழ்நாடு என்று சொல்லுப; அந்த நாட்டின் இடைபயில் மனித்த ரெல்லாம் இன்தமிழ ஆய்ந்து கேள்வி உடையவர் என்ப கேட்டார்க்(கு) உத்தரம் உரைத்தல் வேண்டும் காண்க (கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.1) என்ற பாடலில் பரஞ்சோதியார் புலப்படுத்தியுள்ளார். கம்பரும் என்றுமுள தென்தமிழை இயம்பி இசை கொண்டான் என்று தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பினைக் கூறுதல் இயைபு கருதி இவண் எண்ணிப் பார்த்தற்குரியது. தமிழிசையின் தனிப்பெரும் சிறப்பினையும் ஆற்றலையும் விறகுவிற்ற படலத்தில் பரஞ்சோதியார் சுவைபடப் பாடியுள்ளார். தன்னடியார் ஆகிய பாணபத்திரனின் பொருட்டு ஏமநாதன் என்னும் வடநாட்டுப் பாணனை அடக்கி ஆளும் பாங்கில் ஈசன் முதியனாகத் தோன்றிப் பண்ணிசைத்த பாங்கினப் பரஞ்சோதியார், “ பாணர்தம் பிரானைக் காப்பான் பருந்தொடு நிழல்போக் கென்ன யாணரம் பிசைபின் செல்ல இசைத்தவின் னிசைத்தேன் அண்ட வாணர்தம் செவிக்கா லோடி மயிர்த்துள்ள வழியத் தேக்கி யாணரின் அமுத யாக்கை இசைமயம் ஆக்கிற் றன்றே” “ தருக்களும் சலியா; முந்நீர்ச் சலதியும் சலியா; நீண்ட பொருப்பிழி அருவிக் காலும் நதிகளும் புரண்டு துள்ளா; அருட்கடல் விளைத்த கீத வின்னிசை அமுதம் மாந்தி மருட்கெட அறிவன் தீட்டி வைத்தசித் திரமே ஒத்த” என வரும் பாடல்களில் பயில்வோரின் உள்ளம் இன்புறப் படைத்திருத்தல் காணத்தக்கது. யாழ் + நரம்பு - யாணரம்பு எனப்புணர்ச்சி பெறுதற்கு வீரசோழிய இலக்கண நூலில் விதியுள்ளது. தேவர்க்கும், வேந்தர்க்கும், புலவர்க்கும் அருள் சுரக்கும் முதல்வன் அஃறிணையாகிய பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் பொருட்டுத் தாய்ப் பன்றியாக அவதாரம் கொண்ட அருட்செயலையும் இப்புராணம் ஒரு திருவிளையாடலாகப் போற்றியுள்ளது. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்த படலம், பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம் என்பன ஆலவாயண்ணலின் அரிய அருள் விளையாட்டிற்குச் சான்றாவன.பரஞ்சோதியார், என்னையா ளுடைய கூடல் ஏகநா யகனே யுங்கட்(கு) அன்னையாய் முலைதந்(து) ஆவி யளித்துமே லமைச்ச ராக்கிப் பின்னையா னந்தவீடு தருமெனப் பெண்ணோர் பாகன் தன்னையா தரித்தோன் சொன்னான் பன்னிருதனயர்தாமும் எனவரும் பாடலில் நான்முகன் கூற்றில் வைத்துக் கூறும் திறம் காணத்தக்கது. மாணிக்கவாசகரின் பொருட்டுச் சோமசுந்தரக்கடவுள் புரிந்த திருவிளையாடல்கள் பற்பல. நரி பரியாக்கிய படலம், பரி நரியாக்கிய படலம், மண் சுமந்த படலம் என்பன எண்ணு தற்குரியன. வந்தி மூதாட்டிக்கு ஏழைபங்காளன் ஆகிய ஈசன் ஏவலனாக மண்சுமந்த திருவிளையாடலையும் பரஞ்சோதியார் பாடியுள்ளார். இத்திருவிளையாடலை மாணிக்கவாசகப் பெருமான், பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் என்று குழைந்துருகிப் பாடியிருத்தல் இயைபு கருதி இவண் எண்ணத்தக்கது. திருஞானசம்பந்தர் மதுரைமாநகரில் சமணர்களுடன் சொற்போர் புரிந்து சைவத்தினை நிலைநாட்டிய வரலாற்றினையும் பரஞ்சோதி முனிவர் புராணத்தின் இறுதிப்பகுதியில் பாடியுள்ளார். இவர் நோக்கில், மாணிக்கவாசகர்க்குப் பிற்பட்டவராகச் சம்பந்தர் தோன்றுகிறார் எனலாம். கலைக் களஞ்சியமாகக் காட்சிதரும் திருவிளையாடற் புராணத்தில் இறைவனின் அளப்பரிய அருள்திறம், சிவநெறியின் மாட்சி, செந்தமிழின் சிறப்பு, நீதிகள், அரசியல்நெறி, இல்லற நெறி, சமுதாய ஒழுங்கு, பல்வேறு நம்பிக்கைகள், தொன்மங்கள் முதலியன சிறப்பாகப் பாடப்பெற்றுள்ளன. இதில் இடம் பெறும் இயற்கைக் காட்சிகள், கற்பனைகள், அணிகள், யாப்பியல் வனப்பு, ஓசைநலம் என்பன இதன் இலக்கியத் தரத்தினை உயர்த்துவன எனலாம். இத்தகைய சீரிய இலக்கியப் படைப்பிற்கு உரைகள் பல எழுந்தன. இத்திறம் பற்றிச் சுருங்கக் கூறலாம். 6. திருவிளையாடற் புராணம் உரைமரபு இப்புராணம் தோன்றிய காலம் முதல் இதில் இடம் பெறும் கதைகளைப் பொதுமக்களும் கற்றோரும் கேட்டின்புறும் வகையில் சொற்பொழிவு புரிவோர்க்காகப் பெருஞ்செல்வரும் சைவச் சான்றோரும் பொருளுதவி தந்துவந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் உரையில்லாமல் இதில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்குத் தெளிவான பொருள் அறிய முடியாத நிலை ஏற்பட்டது. அதன்விளைவாக உரைகள் தோன்றலாயின. அவற்றுள் ஒரு சிலவற்றைக் குறிப்பிடுதல் தகும். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணாக்கர் சோடசாவதானம் சுப்புராயச் செட்டியாரவர்கள் எழுதிய உரை பலராலும் பயிலப் பெற்று வந்துள்ளது. இவ்வுரையினைப் பின்பற்றி ஈக்காடு இரத்தினவேலு முதலியார் பொழிப்புரை எழுதி வெளியிட்டனர். மதுரைக் காண்டத்திற்கு மட்டும் மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை என்பார் பொழிப்புரை எழுதினார். இவர்கள் உரை திருவிளையாடற் புராணத்தின் பொருளைப் புரிந்து கொள்ளு தற்குப் பயன்தந்தன. எனினும் பல்வேறு பதிப்புக்களையும் ஒப்புநோக்கித் தக்க பாடங்களைத் தேர்ந்தெடுத்து ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் முறையிலும் ஆர்வலர் அனைவரும் பயின்று மகிழும் பாங்கிலும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் மூன்று காண்டங்களுக்கும் முறையாக எழுதிய உரை அட்சய ஆண்டு, தைத்திங்கள் 8 ஆம் நாள் (1927) சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் செப்பமுற வெளியிடப் பெற்றது. கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயிலும் மாணாக்கர்க்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அறிஞர்க்கும் பெரிதும் பயன்படும் பாங்கில் எழுதப் பெற்றுள்ள இவ்வுரையின் சிறப்புக்களைச் சுருக்கமாக இங்குக் காண்போம். 7. நாவலர் ந.மு.வே. உரைத்திறம் இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற அறிஞர் பெருமக்களில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடத்தக்க புலமைச் செல்வராவர். இவர்களிடம் பயின்ற என் பேராசிரியப் பெருமக்கள் வகுப்பறையில் இவர்தம் நுண்மாண் நுழைபுலச் சிறப்பினையும் உரைகூறும் மாண்பினையும் பன்முறையும் எடுத்துரைத்த நினைவுகள் என் மனத்திரையில் எழுகின்றன. அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழைய இலக்கியங்களுக்குப் பேருரை கண்ட இப்பெருமகனார் திருவிளையாடற் புராணத்திற்கும் சிறந்த உரை வரைந் திருத்தல் எண்ணுதற்குரியது. நாலடியாரில் பொழிப்பு, அகலம், நுட்பம், நூலெச்சம் என்ற நான்கு வகையான் நூலிற்கு உரை அமைதல் வேண்டும் (32.9) என்ற வரையறை காணப்படுகிறது. நாட்டார் ஐயா அவர்கள் உரை இக்கூறுகள் யாவும் பொருந்தி நூலின் சிறப்பினை வெளிக்கொணர்ந்து பயில்பவர் மனத்தில பதியச் செய்தல் சுட்டுதற்குரியது. சங்க இலக்கியப் பாக்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்கள், திருமுறைகள், மெய்கண்ட சாத்திரங்கள் என்பன இவர்தம் உரையில் மேற்கோளாக எடுத்தாளப் பெறுவன. உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உள்ளிட்ட உரையாசிரியர்களின் கருத்துக்களையும் இடை யிடையே எடுத்துக் காட்டித் தம்உரைக்கு ஆக்கம் சேர்த்தல் இவர்தம் இயல்பு. பாக்களுக்குரிய யாப்பினைச் சுட்டுதலும் அணிகளை விரித்து விளக்குதலும் தனிச்சிறப்பு. பாக்களில் அகன்று கிடக்கும் சொற்களை அணுகிய நிலையில் கொணர்ந்து பொருளியைந்து முடிய உரைவரைதல் சுட்டுதற்குரியது. ஒருபாடலில் பயின்றுள்ள தொடர்களை இயைபுறுத்தி வினை முடிபு காட்டுதலும், இலக்கணக் குறிப்புக்கள் தருதலும் உரையின் சிறப்பினை மேலும் உயர்த்துவன எனலாம். சைவசித்தாந்தச் செம்பொருளை ஏற்புழி இவர்தம் உரை இயைபுறுத்திக் காட்டுதல் எண்ணி இன்புறத்தக்கது. புலமை விருந்தாக அமையும் இவர்தம் உரையிலிருந்து ஒரு சில பகுதிகளைப் பயில்வார் பார்வைக்கு வழங்குதல் சாலும். பாயிரப்பகுதியில் “ திங்களணி திருவால வாய்எம் அண்ணல் திருவிளையாட்டு இவை” என்ற பகுதிக்கு நாட்டார் அவர்கள் நவிலும் உரைப்பகுதி காண்போம். திங்களணி அண்ணலென இயைக்க. திருவிளையாட்டு என்றது அதனைக் கூறும் நூலுக்கு ஆயிற்று. இறைவன் செய்யும் செயலெல்லாம் எளிதின் முடிதல் நோக்கி அவற்றை அவனுடைய விளையாட்டுக்கள் என்ப. “காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி” என்னும் திருவாசகமும்; “ சொன்னவித் தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னின் முன்னவன் விளையாட் டென்று மொழிதலுமாம்” என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தமும் நோக்குக. இப்பகுதியில் தோத்திரமும் சாத்திரமும் மேற்கோளாக அமைந்து பாடற்பொருளை விளங்க வைத்தன. கல்லாலின் தோத்திரமும் சாத்திரமும் மேற்கோளாக அமைந்து பாடற்பொருளை விளங்க வைத்தன. கல்லாலின் புடையமர்ந்து என்ற தென்முகக் கடவுள் வாழ்த்துச் செய்யுள் உரையில், “ வேதம் முதலிய கலைகளெல்லாம் பாச ஞானமாகலானும் இறைவன் ‘பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்’ ஆகலானும் ‘மறைக்கு அப்பாலாய்’ என்றார்.” என்று சாத்திர விளக்கம் தந்து, ‘இருநிலனாய்த்தீயாகி நீருமாகி’ ‘விரிகதிர் ஞாயிறல்லர்’ எனவரும் அப்பரடிகளின் பாடல்களை மேற்கோள் தந்து தம் உரைக்கு வலிமை சேர்த்தனர். ‘உள்ளமெனும் கூடத்தில்’ என்ற பாடலின் உரையில், விநாயகக் கடவுளை வேழம் என்றதற் கேற்ப உள்ளம் முதலியவற்றைக் கூடம் முதலியவாக உருவகப்படுத்தினார் என்று எழுதுதல் எண்ணத்தக்கது. மதுரைக் காண்டத்தில் திருமணப் படலத்தில், “கள்ளவிழ் கோதை” எனவரும் பாட்டின் உரையில், “மிகுதியை உணர்த்தக் காடு என்றார். தெள்விளி - தெளிந்த ஓசை. “ஆம்பலம் தீங்குழல் தெள்விளி பயிற்ற” என்னும் குறிஞ்சிப் பாட்டு அடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய உரை காண்க.” என்று சங்க இலக்கியஉரை மேற்கோள் தருதல் காணத்தக்கது. இதே பாடலைத் தொடர்ந்து வரும், “மீனவன் கொடியும் கான வெம்புலிக் கொடியும் செம்பொன் மானவிற் கொடியும்” என்ற பாடற் பகுதிக்கு நாவலர் நாட்டார் தரும் விளக்கம் காண்போம். “மீன், புலி, வில் இவை முறையே பாண்டிய சோழ சேரர்கட்குக் கொடிகள். மூவேந்தருள் வலியுடைய ஒருவரைக் கூறுங்கால் அவருடைய கொடி முதலியவற்றுடன் ஏனை இருவரின் கொடி முதலியவற்றையும் அவர்க்குரியவாகச் சேர்த்துக் கூறுதல் மரபு. “ வடதிவை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி மண்டலை யேற்ற வரைக வீங்கென” எனச் சிலப்பதிகாரத்து வருதலும் காண்க.” என்பது உரைப்பகுதியாகும். திருவிளையாடற் புராணப் பாடற்பகுதிக்குச் சிலப்பதிகார மேற்கோள் தந்து விளக்குதல் வேந்தரின் வலிமை மரபினைப் புலப்படுத்தும் பாங்கினைப் புரிந்து கொள்ளுதற்கு உதவும். கூடற்காண்டத்தில் “எல்லாம் வல்லசித்தரான படலத்தில்,” அகரமாதி எனத் தொடங்கும் பாடல் உரையில், “இடையிட்டு நின்ற ஏகாரங்கள் எண்ணுப் பொருள் குறித்தன. எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக் குறித்தியலும் என்மனார் புலவர் என்பது தொல்காப்பியம் என்று இலக்கண விளக்கம் கூறுதல் எண்ணற்பாலது. இக்காண்டத்தில் உலவாக்கோட்டை யருளிய படலத்தில், கூடற், படியார்க்கும் சீர்த்திப் பதியேருழவோருள் நல்லான் அடியார்க்கு நல்லான் (38.2) என்ற பாடற் பகுதிக்கு நாவலர் அவர்களின் உரை காண்போம். “ புவிமுழுதும் நிறைந்த கீர்த்தியையுடைய மதுரைப்பதியிலே ஏரான் உழுதலைச் செய்யும் வேளாளரில் சிறந்தவன் ஒருவன் அடியார்க்குநல்லான் என்னும் பெயரினன் .... கூடலின் புகழ் புவிமுழுதும் நிறைதல், “நிலனாவிற்றிரிதரூஉம் நீண்மாடக் கூடலார்” எனக் கலித்தொகையுள்ளும் குறிக்கப்பட்டது. சிலப்பதிகாரத்திற்குப் பேருரை கண்ட அடியார்க்கு நல்லாரும் வேளாண்குடி விழுச்செல்வராதல் கூடும். இப்பெயர் குறித்து மேலும் ஆராய்ந்து, “ அடியார்க்கு நல்லார் என்பது இறைவன் திருப்பெயருமாம், கருவூருள் ஆனிலை, அண்ணலார் அடியார்க்கு நல்லரே என்னும் ஆளுடையபிள்ளையார் திருவாக்கும் காண்க.” என்று நாட்டார் ஐயா தெளிவுறுத்தல் எண்ணி இன்புறத்தக்கது. சங்க வரலாற்றுத் தொடர்புடைய தொன்மங்களைக் கொண்டு விளங்கும் இப்புராணத்தின் மூன்றாம் பகுதியாகிய திருவாலவாய்க் காண்டத்தில் ‘தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில், தண்டமிழ் மூன்றும் வல்லோன் தான்எனக் குறியிட் டாங்கேபுண்டர நுதலிற் பூத்துப் பொய்யிருள் கிழித்துத் தள்ள (52.99) என்ற பாடற்பகுதிக்கு அவர்களின் விளக்கம் நோக்குவோம். “ தண்ணிய மூன்று தமிழிலும் வல்லவன்தானே எனக் குறியிட்டது போலத் திரிபுண்டரம் ( - மூன்று கீற்றுத்திருநீறு) நெற்றியின்கண் இடப்பெற்று நிலையில்லாத அஞ்ஞான இருளைக் கிழித்து ஓட்டவும்.” என்பது உரைப்பகுதியாகும். வடமொழியினைத் தேவபாடை எனக் கூறிக்கொண்ட காலத்தில், எங்கள் செந்தமிழும் தெய்வமொழியே என்பதை நிலைநாட்டும் பாங்கில் சிவபிரான் முத்தமிழிலும் வல்லவன் என்றும், தலைச்சங்கத்துப் புலவருடன் கூடியிருந்து தமிழாராய்ந்தான் என்றும் தொன்மச் செய்தி வழங்கி வருதற்கு இறையனார் களவியலுரையும் சான்றாக அமைகின்றது. மேலே சுட்டப்பெற்ற உரைப்பகுதிகள் நாவலர் ந.மு.வே. அவர்களின் கூர்த்த மதிநலத்தினையும் சீர்த்த புலமை வளத்தையும் புரிந்துகொள்ளப் போதுமானவை. கற்றோர்க்குத் தாம் வரம்பாகத் திகழ்ந்த நாட்டார் ஐயா அவர்களின் ஆராய்ச்சித்திறனுக்கு ஒரு சான்று கூறுதல்சாலும். திருவிளையாடற்புராணத்தின் ஆராய்ச்சி முன்னுரையில், திருவிளையாடற் கதைகளில் எவை எவை பழைய இலக்கியங் களில் பொதிந்துள்ளன என்பதை அகழ்ந்தெடுத்துக் காட்டியுள்ள பகுதி அறிஞர்களால் உற்றுநோக்கத்தக்கது. சிலப்பதிகாரம், கல்லாடம், தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களிலிருந்து அவர்கள் கூறியுள்ள திருவிளையாடற் கதைகளை (ப.8) அவர்கள் கூறிய வரிசையிலேயே திருவிளையாடற் புராணப் பதிப்பில் ( அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1991) அதன் பதிப்பாசிரியர் ஆராய்ச்சி முன்னுரை என்ற பெயரில் அமைந்துள்ள பகுதியில் II , III - இல் மாற்றமின்றித்தாமே முதன்முதல் கண்டறிந்து கூறியதுபோல் எழுதியுள்ளார். நாவலர் நாட்டாரின் பெயரினை அவர் சுட்டாது போயினமையினை இங்குச் சுட்டுதல் நம் கடமை ஆயிற்று. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திருவிளையாடற் புராணத்திற்கு நாவலர் ந.மு.வே. அவர்களின் உரையினை ஏழு தொகுதிகளில் தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் காலத்திற்கேற்ற பணி பாராட்டற்பாலது. இப்பணிக்கு உறுதுணையாக விளங்கும் உழுவலன்பு கெழுமிய பேராசிரியர் பி.விருத்தாசலம் அவர்கள் நாட்டார் பெயரினால் விளங்கும் திருவருள் கல்லூரியின் தாளாளராக ஆற்றிவரும் அரும்பணி அனைவராலும் பாராட்டற்பாலது. நாட்டார் ஐயாவின் ஏனைய நூல்களையும் தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் செய்தியறிந்து உவகையுற்றேன். இந்நூல் வரிசையினைத் தமிழ்மக்களும் நூலகங்களும் பெற்றுப் பயன்கொள்ள வேண்டுகிறேன். 19.07.2007 முனைவர் சோ.ந.கந்தசாமி தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவர் (ஓய்வு) தஞ்சாவூர். பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங்களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மையாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக்கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களையெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும்போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு ........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங்களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற்குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடுவதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப்புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத்தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகு குரு. செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெருமக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் நூலாசிரியர் வரலாறு திருவிளையாடற் புராணம் என்னும் இந் நூலியற்றிய ஆசிரியர் பெயர் பரஞ்சோதி முனிவர் என்பது. இவர், தமிழ்நாட்டில் த'e7çலசிறந்ததாய வான்பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி பாயுஞ் சோழவள நாட்டிலுள்ள திருமறைக்காடு என்னும் திருநகரில் வழிவழிச் சைவ வேளாள மரபில் மீனாட்சிசுந்தர தேசிகர் என்பவர்க்குப் புதல்வராய்த் தோன்றினர். இளம் பருவத்தில் தென்மொழி வடமொழி கற்றுச் சிறந்த புலமையுடையவராய் விளங்கினர். சிவாகமங்களையும் அவற்றின் சாரமாகிய சித்தாந்த சாத்திரங்களையும் பயின்று தேர்ந்தார். தேவாரம் திருவாசகம் முதலிய பன்னிரு திருமுறைகளையும் ஐயந்திரிபற ஓதியுணர்ந்து சிவநெறிச் செல்வராய்ச் சிறப்பெய்தியிருந்தனர். இவர் தாம் பிறந்த திருநகராகிய மறைக்காட்டுத் தலவரலாறு வடமொழியில் இருந்தது கண்டு முதலில் அதனை மொழிபெயர்த்துத் “திருமறைக்காட்டுத் தலபுராணம்” (வேதாரணிய புராணம்) என வெளிப்படுத்தினர். பின்னர்ச் சிவப்பதிகள் பல காண விருப்புற்றுச் சென்றார். திருவாரூர், திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தில்லை முதலிய பதிகட்குச் சென்று சிவபெருமானை வழிபட்டு வருங்கால் திருவாலவாய் என்னும் மதுரைப் பதி வந்தடைந்தார். அது மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்றானும் சிறப்புற்று விளங்குவது என்பதையும், சிவபெருமான் அன்பர்கள் உய்யும் பொருட்டு நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடலுடையது என்பதையும், இறையனார் முதலிய சங்கப் புலவர் கூடித் தமிழாராய்ந்த பெருமையுடையது என்பதையும் ஆய்ந்து அங்கயற்கண்ணியையும் அண்ணலையும் அல்லும் பகலும் வழிபட்டு ஆங்கு நெடிதுநா ளுறைந்தார். அங்ஙனம் தங்கிய காலத்தில் அந் நகர மாந்தர் பலரும் பரஞ்சோதி முனிவரைக் கண்டு பணிந்து மதுரைத் திருவிளையாடல் அறுபத்து நான்கினையும் தமிழிற் பாடியருள வேண்டும் என வேண்டினர். வேம்பத்தூரராற் செய்யப்பட்டு வழங்கி வரும் திருவிளையாடல் வடமொழிக் கதையோடு பொருத்தமின்றி யிருப்பதையும், சொற்சுவை பொருட்சுவை நிரம்பாது பத்திச் சுவை குன்றிப் பாக்கள் இருப்பதையும் எடுத்து மொழிந்தனர். வடமொழியும் தென்மொழியும் கற்றுவல்ல ஆசிரியராகிய பரஞ்சோதியார் மதுரைப்பதி வரலாறு கூறும் நூல்கள் பலவும் ஆய்ந்து அதனுண்மை கண்டார். காந்தபுராணத்தின் ஒரு பகுதியாகிய ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு பாடத் துணிந்தனர். ஒருநாட் கனவில் அங்கயற்கண்ணியம்மையார் தோன்றி “இறைவன் திருவிளையாடலை இன்னே பாடுக” என ஆணை தந்து மறைந்தார். சத்தியின் ஆணையாற் பாடத் தொடங்கியதற்கு அறிகுறியாகச் “சத்தியாய்ச் சிவமாகி” எனத் தொடங்கிப் பாடி முடித்தார். அந் நூலினைச் சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கோயின் முன் அறுகாற் பீடத்தமர்ந்து வடமொழி தென்மொழிவல்ல புலவர் யாவரும் போற்ற அரங்கேற்றியருளினர். அன்றியும் திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி என்னும் இரு நூல்களும் இவர் இயற்றியருளினர். இவர் பாடிய நூல் கற்பார்க்கு எளிமையும் இனிமையும் உடையதாய் உவமை யுருவக முதலிய அணிகள் நிறைந்து இன்பச் சுவையும் பத்திச் சுவையும் இயைந்து களிப்பூட்டவல்லதாய் ஒளிர்கின்றது. இவர் காலம் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதி யென்பர். உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iii அணிந்துரை x பதிப்புரை xiv நூலாசிரியர் வரலாறு xxviii முன்னுரை 1 உரைநடைச் சுருக்கம் 11 19. நான்மாடக்கூடலான படலம் 23 20. எல்லாம்வல்ல சித்தரான படலம் 41 21. கல்லானைக்குக் கரும்பருத்திய படலம் 54 22. யானையெய்த படலம் 70 23. விருத்தகுமார பாலரான படலம் 94 24. கான்மாறியாடின படலம் 117 25. பழியஞ்சின படலம் 138 26. மாபாதகந் தீர்த்த படலம் 166 27. அங்கம் வெட்டின படலம் 181 28. நாகமெய்த படலம் 205 29. மாயப்பசுவை வதைத்த படலம் 220 30. மெய்க்காட்டிட்ட படலம் 240 31. உலவாக்கிழியருளிய படலம் 262 32. வளையல் விற்ற படலம் 274 33. அட்டமாசித்தி யுபதேசித்த படலம் 296 செய்யுள் முதற்குறிப்பு அகர வரிசை 310 திருவிளையாடற்புராணம் கூடற் காண்டம் - 1 முன்னுரை ஆக்கியோன் (1) திருவிளையாடற் புராணம் என்னும் இந்நூல், சோழவள நாட்டுள்ள திருமறைக்காட்டில் வழிவழிச் சைவ வேளாளர் மரபில் தோன்றிய பரஞ்சோதி முனிவர் என்னும் பாவலர் பெருமானாற் பாடப்பட்டது. இவர் வரலாற்றை முன்னர்க் காண்க. நூல் தோன்றிய வழி மதுரைச் சிறப்பு (2) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு”எனப் புகழப் பட்ட தமிழகத்திற் “செந்தமிழ் நாடு”எனச் சிறப்பாகக் கூறப்படுவது பாண்டிநாடாம் என்பது பலரும் அறிந்ததே. அந்நாட்டு மன்னர் ஆகிய பாண்டியர்க்கு வழிவழி அரசிருக்கையாய தலைநகர் மதுரை. இது திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள், குன்றெறிந்த முருகவேள் வந்தமர்ந்து தமிழ் ஆராய்ந்த தனிச் சிறப்புடையது; மலையத்துவசன் மகளாக அங்கயற்கண்ணம்மை பிறந்து வளர்ந்து அரசுபுரிந்த பெருமையுடையது; சிவபெருமானும் முருகவேளும் முறையே சுந்தரமாறனாகவும் உக்கிரப் பெருவழுதியாகவும் பெயர்புனைந்து செங்கோல் செலுத்திய சீர்வாய்ந்தது; தலைச் சங்கமும் கடைச்சங்கமும் தழைத்து வளர்ந்து தமிழாராய்தற்கு நிலைக்களமாயது; எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடலில் வையையும், மதுரையும் முப்பது பாடல்களாற் பாராட்டப் பெற்றது; பாண்டி நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற திருப்பதிகளில் “கூடல் புனவாயில்” என முன்வைத் தெண்ணப்பட்ட முதன்மையுடையது; திருவாலவாய், கூடல் எனச் சிறப்புப்பெயர் பெற்றது. இப்பகுதியில் இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல் அறுபத்து நான்கு என அறிஞர் கூறுவர். திருவிளையாடல் வந்துள்ள நூல்கள் (3) திருவிளையாடல் வரலாற்றிற் பல தமிழ்நாட்டு, இலக்கியங்களில் வந்துள்ளன. தமிழன்னை தாட்சிலம்பாகப் போற்றப்படுஞ் சிலப்பதிகாரத்தில் “அடியிற்றன்னள வரசர்க் குணர்த்தி, வடிவேலெறிந்த வான்பகை பொறாது” என்ற அடிகள் ‘கடல் சுவற வேல்விட்டது’ என்ற கதையையும், “செங்ணாயிரத்தோன் திறல்விளங்காரம், பொங்கொளி மார்பிற் பூண்டோன்” ‘முடிவளையுடைத்தோன் முதல்வன் சென்னியென் றிடியுடைப் பெருமழை யெய்தா தேகப், பிழையா விளையுட் பெருவளஞ்சுரப்ப, மழைபிணித் தாண்ட மன்னவன்” என்ற அடிகள் இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலத்தில் உள்ள சில கதைகளையும், ‘வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தோன்’ என்ற அடி வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய கதையையும் சுட்டுகின்றன. கல்லாடர் இயற்றிய கல்லாடம் என்ற நூலில் ‘கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப் பொற்குவை தருமிக் கற்புடனுதவி எனவும், வையைக் கூலஞ்சுமக்கக் கொற்றாளாகி’ எனவும், கரிக் குருவிக்குக் கண்ணருள் கொடுத்த எனவும், மாமியாடப் புணரியழைத்த கூடற்கிறைவன் எனவும், குறுநரி யினத்தினை, யேழிடந் தோன்றி யினனூற் கியைந்து, வாலுளைப் புரவியாக்கிய பெருமான் எனவும் வந்துள்ள அடிகள் முறையே தருமிக்குப் பொற்கிழி யளித்தது, மண் சுமந்தது, கரிக்குருவிக்குபதேசித்தது, எழுகடலழைத்தது, நரிபரி யாக்கியது என்ற திருவிளையாடல்களைக் காட்டுகின்றன. இன்னும் அந்நூலில், இந்திரன் பழிதீர்த்தது, திருமணம் புரிந்தது, வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது, அன்னக் குழியும் வையையும் அழைத்தது, உக்கிரகுமார பாண்டியர் திருவவதாரம், கடல் சுவற வேல்விட்டது, கல்லானைக்குக் கரும் பருத்தியது, அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, சோழனை மடுவில் வீட்டியது, மாமனாக வந்து வழக்குரைத்தது, திருமுகம் கொடுத்தது, இடைக்காடன் பிணக்குத் தீர்த்தது, வலைவீசியது, ஆய பல திருவிளையாடல்கள் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. தேவாரத் திருமுறையில் நான்மாடக் கூடலானது, சங்கப்பலகை தந்தது, தருமிக்குப் பொற்கிழியளித்தது, வலை வீசியது, பாண்டியன் சுரந்தீர்த்தது, சமணரைக் கழுவேற்றியது முதலியன கூறப்படுகின்றன. மணிவாசகப் பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருவாசகம் திருக்கோவையார் என்ற நூல்களில் வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது, மெய்க்காட்டிட்டது, அட்டமா சித்தி யுபதேசித்தது, தண்ணீர்ப் பந்தல் வைத்தது, பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்தது, கரிக்குருவிக்குபதேசித்தது, வலைவீசியது, வாதவூரடிகளுக்கு உபதேசித்தது, நரியைப் பரியாக்கியது, மண் சுமந்தது முதலிய திருவிளையாடல்கள் வந்துள்ளன. ஆதலால் இவ் வரலாறுகள் பண்டைக்கால முதல் நிகழ்ந்தவையாகத் தமிழ்நாட்டில் வழங்கியவையே என்பது தேற்றம். திருவிளையாடலை மட்டும் கூறும் சிறப்பு நூல்கள் (4) இனி இத் திருவிளையாடல்களையே விளக்க எழுந்த நூல்கள் சில. செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், (வேம்பத்தூரார் திருவிளையாடல் எனப் பெயர்பெற்றது), தொண்டைா நாட்டு இளம்பூர் வீமநாத பண்டிதர் இயற்றிய கடம்பவன புராணம், தொண்டைநாட்டு வாயற்பதி அனதாரியப்பன் இயற்றிய சுந்தரபாண்டியம், பரஞ்சோதி முனிவர் பாடிய இத்திருவிளையாடற் புராணம், இந்நான்கு நூல்களும் மதுரைத் திருவிளையாடல்களையே வகுத்துரைக்கும் நூல்களாம். அவற்றுள் நம்பியும், பரஞ்சோதியாரும் இயற்றிய இரு நூல்களுமே அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் விரித்துரைப்பன. விரிந்த நூல் பரஞ்சோதியார் பாடிய இந்நூலேயாம். முதனூல் (5) இந் நூலாசிரியர் பாயிரத்தில், நந்தியடிகள் வியாத முனிவற் குணர்த்த, அவர் சூதமுனிவற்குக் கூறியது பதினெண் புராணம் என்றும், அப் பதினெட்டிற் காந்தம் என்பது ஒன்றென்றும், அக் காந்தபுராணத்தில் ஒரு பிரிவு ஈச சங்கிதை என்றும், அதில் ஆலவாய்ப் புகழ் கூறப்பட்டுள்ளது என்றும், அவ் வடமொழி நூலைத் தென் மொழியிற் செய்க எனக் கூடற்பதி வாழ்வோர் கூற அதனைக் கடைப் பிடித்து நான் இந்நூலை இயற்றினேன் என்றும் விளக்கியிருப்பதால் இதற்கு முதனூல் வடமொழி நூலாகிய ஆலாசிய மான்மியம் என்று தோன்றுகின்றது. ஆலாசிய மான்மியம் முதனூலாய காரணம் (6) இவ் வரலாறு முழுவதும் தமிழ்நாட்டினர் அறிந்து பண்டைக்கால முதல் இலக்கியங்களினும் வரலாற்று நூல்களினும் விளக்கியிருப்பவும் அவற்றையெல்லாம் கற்றுணர்ந்த முற்றுணர்வுடைய பரஞ்சோதி முனிவர் வடமொழியிலுள்ள “ஆலாசிய மான்மியம்” என்ற நூலை முதனூலாகக் கொண்டு திருவிளையாடல் பாடினரென்றல் பொருந்துமா என்பது ஆராயத் தக்கது. ஆசிரியர் காலம், ஆரியத்தினின்று தமிழ்மொழி தோன்றிற்று என்று கூறுவதைப் பெருமையாகக் கொண்ட காலம்; ஆரியத்தினின்று மொழிபெயர்த்த நூல் இஃது என்றால் அந்நூலை மதித்துப் போற்றுங் காலம்; வடமொழியே தெய்வ மொழி; தமிழ்மொழி அதன் வழிமொழி, இழிமொழியென எண்ணிய காலம்; வேதம், புராணம், ஆகமம், இதிகாசம் எல்லாம் ஆரிய மொழியிலுள்ளவையே; அவற்றை மொழிபெயர்த்துத் தான் தமிழ்நாட்டார் கற்கவேண்டும்; தனியாகத் தமிழ்மொழியில் ஒன்றும் இன்று என்று பிழைபடக் கருதிய காலம்; ஆரியர்கள் சூழ்ச்சியாகத் தமிழ்நாட்டினுள் நுழைந்து, நம்நாட்டுக் கதைகளை யாய்ந்து ஆரியத்தில் வரைந்து வைத்துப் பின் எமது மொழியில் இக் கதைகள் முன்னரே எழுதி இலக்கிய வடிவில் இருக்கின்றன என எடுத்துக்காட்டி ஏமாற்றி வாழ்ந்த காலம். அக்காலத்தில் வாழ்ந்த அம்முனிவர் அதனை முதனூலாகக் கொள்ளல் மிகவும் பொருத்தமுடையதேயாகும். இக் காலத்தும் வடமொழி வழிவந்தது செந்தமிழ் எனக் கூறுவோரும் சிலர் உளரன்றோ? ஆரிய மொழிபெயர்ப்பாயினும் இந் நூலிற் கூறப்படுங் கதைகள் தமிழ்நாட்டில் நிகழ்ந்தவையே. உலக வழக்கினும் செய்யுள் வழக்கினும் பயின்றவை. இக்கதைகளை வடநூற்புலவர் வரைந்ததாற் சில மாறுபாடு காணப்படினும் இந்நூலாசிரியர் தமிழ்நூற் கருத்துக்கு மாறுபாடின்றித் திருத்தி யமைத்துள்ளார். சொற்களையும் சொற்றொடர்களையும் தமிழ்மொழிக்கேற்ப இனிமையா யமைத்து எழிலுறப் புனைந்திருப்பது பாராட்டற்பாலது. மொழிபெயர்ப்பு என முன்னுவதற்குத்தக்க காரணம் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டுக் கதையைத் தமிழ் மொழியில் ஆக்கியது இந்நூல் எனக் கோடலே சிறந்தது. ஆயினும் அக்காலநிலை நோக்கி ஆசிரியர் அதனை முதனூல் எனக் கொண்டனர் எனக் கொள்க. வழங்கும் நாடு (7) பாண்டிய நாட்டிற் சிறந்த தென்மதுரைப் பதியில் நிகழ்ந்தவை இவ்வறுபத்து நான்கு திருவிளையாடல்கள்; எனினும் சேர நாடு, சோழ நாடு, தொண்டை நாடு, கொங்கு நாடு எனப் பகுக்கப்பட்ட நாடுகளிலும் இவ்வரலாற்றினை அறியாத புலவர் எவரும் இரார். “மதிமலி புரிசை மாடக் கூடல்”என்ற திருமுகப் பாசுரம் சேரமான் பெருமாணாயனார்க்கு இறைவன் விடுத்தனர் எனிற் சேரநாடு அறிந்த வரலாறுதான் அது. சோழனை மடுவில் வீட்டிய வரலாறு, சோழநாடறிந்ததுதான்! பாண்டியன் சுரந்தீர்த்தவர் திருஞானசம்பந்தர்; தேவாரத் திருமுறையில் திருநீற்றுப்பதிகமும் ஒன்றன்றோ? மற்றும் பல பதிகங்கள் மதுரையில் திருவாய்மலர்ந்தருளினர் சம்பந்தர்; திருவாலவாய்த் திருப்பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் சென்று பாடிய சிவத்தலங்கள் எண்ணிறந்தவையன்றோ? அவர் சென்ற தலங்களெல்லாம் மதுரைத் திருவிளையாடலை யறிந்திருக்குமன்றோ? முதற் சங்கமும் கடைச்சங்கமும் கூடலில் முளைத்துத் தழைத்தன வெனத் தமிழிலக்கியம் சாற்றுகின்றன. கடைச்சங்கப் புலவருள் ஒருவன் நக்கீரன்; “கொங்குதேர் வாழ்க்கை” என்ற கவிக்குக் குற்றங் கூறினன். அவ்வரலாறு அச் சங்கப்புலவர் பலரும் அறிந்ததுதானே? புலவர் பலரும் பல நாட்டிலும் பல ஊர்களிலும் இருந்து வந்து கூடித் தமிழ் ஆராயும் அறிஞர்தாம் எனவே அப்புலவர்கள் சென்றவிட மெல்லாம் கதைகளும் சென்றிருக்கும். ஆதலால் இத் திருவிளையாடல் சைவமும் தமிழும் தழைத்திருக்கும் தமிழ்நாடெங்கணும் எஞ்ஞான்றும் வழங்கி வந்ததே என்பது கூறாமலே விளங்கும். பெயர் (8) இளமைப் பருவமுள்ள சிறார் சிறுமியர் கூடியாடுவதை விளையாடல் என்றும் கூறுவர். மணலைக் கூட்டி வளைத்துச், சிற்றில் இழைத்து, உழைத்துப், பலபொருள் தேடி அதன்கண் வைத்துக் காத்திருந்து, பின்னர்க் காலால் அழித்துவிடுதல் அவரியற்கை. சிந்தித்தலின்றிச் செய்யுஞ் சிறுதொழில் இது. இதுபோலவே இறைவனும் முத்தொழிலையும் சிந்தித்தலின்றி எளிதிற் புரிந்து இன்புறுகின்றான்.“உலகம் யாவையும் தாமுள வாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட்டுடையாரவர், தலைவரன்னவர்க் கேசர ணாங்களே” என்றார் கம்பநாட்டாழ்வாரும். பத்தியிற் சிறந்த அன்பர் பொருட்டு மதுரையிற் பலகாலங்களிற் புரிந்த விளையாடல்கள் எல்லாவற்றையும் விளக்கிய நூல் இஃது. ஆதலால் இந் நூலுக்குத் திருவிளையாடற் புராணம் எனப் பெயரிட்டார் பரஞ்சோதி முனிவர். திரு - சிறப்பு. புராணம் - பழைமை. சிறந்த விளையாடல் ஆகிய பழைமை வரலாறு என்பது திரண்டபொருள் எனக் காண்க. அமைத்திருக்கும் முறை (9) இவற்றை மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என மூன்றாகப் பகுத்தார். முதலிற் கடவுள் வாழ்த்து, பாயிரம், அவையடக்கம் கூறி, நாட்டுப் படலம், நகரப் படலங் கூறிக் கைலாய வருணனை கூறிப் புராண வரலாறும் விளக்கினர். பின் மதுரைக் காண்டத்தில் தலம், தீர்த்தம், மூர்த்திச் சிறப்புக் கூறித் திருவிளையாடல் அறுபத்து நான்கினையும் தொகுத்துரைத்து அதற்குப் பதிகப்படலம் எனப் பெயரிட்டார். பதிகத்திற் கூறிய முறைப்படி ‘ இந்திரன் பழிதீர்த்ததுமுதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்தது’ வரையுள்ள பதினெட்டுத் திருவிளையாடல் களையும் விரித்துரைத்தனர். பின் கூடற் காண்டத்தில், நான்மாடக் கூடலானது முதல் நாரைக்கு முத்தி கொடுத்தது வரையுள்ள முப்பது திருவிளையாடல்களையும் முறையே வகுத்துரைத்தனர். திருவாலவாய்க் காண்டத்தில், ‘திருவாலவாயானது’ முதல் ‘வன்னியுங் கிணறும் இலிங்கமும் அழைத்தது’ வரையுள்ள பதினாறு திருவிளையாடல்களையும் முறையே பகர்ந்தனர். முதலில் மதுரை என்று பெயர் பெற்றது முதல் நிகழ்ந்தவைகளை மதுரைக் காண்டத்துள் அடக்கினர். நான்மாடக் கூடல் எனப் பெயர் பெற்றது முதல் நிகழ்ந்தவைகளைக் கூடற் காண்டத்துட் கூறினர். திருவாலவாய் எனச் சிறப்புப்பெயர் பெற்றது முதல் நிகழ்ந்தவைகளைத் திருவாலவாய்க் காண்டத்துட் செப்பினர். காண்டங்களின் அடைவும் படலங்களின் அடைவும் அவற்றிற்குக் காரணமும் ஆய்ந்து அறிக. பொருள் (10) எங்கும் நிறைந்த எல்லாம்வல்ல இறைவன் மக்கட்குத் தெய்வவுண்மை தெரித்தல் வேண்டிப் பல தலங்களினும் தன் விளையாடலை அன்பர்கள் காண அருள் செய்தான். மக்களாற் செய்தற்கரிய செயல் ஒன்று ஓரிடத்தில் நிகழ்ந்தால் அதனைத் திருவருட் செயலென்றுதானே கோடல் வேண்டும்! இறைவன் நேர் வந்து நின்று ஒரு செயலும் நிகழ்த்துவ தின்றெனினும் வியப்பான செயல் ஒன்று நிகழ்ந்தால் அது தெய்வச் செயலென்றே மக்கள் கருதுவது இயற்கையன்றோ? இம் முறையில் நிகழ்ந்தவையே திருவிளையாடற் கதை யனைத்தும். நம் தமிழ்நாட்டிற் சிவத்தலம் ஒன்று இருந்தால் அங்குத் திருவிளையாடல் ஒன்றிரண்டு நிகழ்ந்த சிறப்பும் அமைந்திருக்கும். திருமால் தலங்களினும் இவை நிகழ்ந்திருத்தல் காணலாம். நாயனார், ஆழ்வார் எனப் பெயர் பெற்ற தொண்டர்கள் அனைவரும் மக்களாற் செய்தற்கரிய செயல்புரிந்தோரேயாவர். அரிய செயல் நிகழ்ந்த தனிச் சிறப்பான இடங்களையும் அத்தகைய செயல் நிகழ்த்திய பெரியோர்களையும் தமிழ் நாட்டு மக்கள் பண்டைக்கால முதற் பாராட்டிக் கோயில் அமைத்துப் பூசை திருவிழாப் புரிந்து கொண்டாடி வந்தனர், வருகின்றனர், வருவார். ஆயிரத்தெட்டுச் சிவத்தலங்கள் நூற்றெட்டுத் திருப்பதிகள் இருந்தன வெனக் கூறுவதும் அதனை நன்கு விளக்கும். தில்லை, காஞ்சி, முதலிய தலங்களில் நிகழ்ந்த திருவிளையாடல் சில; மதுரையில் நிகழ்ந்தவை போல அருமையான செயல்களும் அல்ல; அறுபத்து நான்கிற் குறைந்தவையே. தருமிக்குப் பொற்கிழியளித்தது, திருமுகங் கொடுத்தது, சங்கப்பலகை தந்தது, இடைக்காடன் பிணக்குத் தீர்த்தது, வாதவூரடிகள் பொருட்டுச் செய்த சில விளையாடல்கள் ஆகிய இவை யாவும் தமிழ்மொழிப் பெருமையை விளக்க இறைவனியற்றியவையன்றோ? மதுரைத் திருவிளையாடல் மக்கள் மனத்துப் பதியவேண்டும் என்பது கருதிப் பரஞ்சோதி முனிவர் இந்நூலை யியற்றினர் என எண்ணுக. அறிஞர் அனைவரும் உலகில் நிகழுஞ் செயல் அனைத்தினையும் ஈசன் செயலாகவே கருதுவர். ‘என்செய லாவதி யாதொன்று மில்லை யினித்தெய்வவமே, யுன்செய லேயென் றுணரப்பெற்றேன் என்றும், ஒன்றை நினைக்கினது வொழிந்திட் டொன்றாகும், அன்றி யது வரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும், எனையாளு மீசன் செயல்’என்றும் கூறிய கவிகள் இதற்குச் சான்றாம். எல்லாம் இறைவன் செயலென்று துணிந்து மக்கள் தத்தங் கடமையை யாற்றி வாழ்வதற்குரிய வழியாக இந்நூற் பொருள் அமைந்துள்ளது. தகுதியுடையோர் (11) தெய்வம் ஒன்றென்றும் உண்டென்றும் உறுதி கொண்டவர்; உலகில் நிகழுஞ் செயல்கள் முழுவதும் திருவருட் செயலெனச் சிந்தை வைப்பவர்; மக்கட் பிறப்பின் பயன் இறைவனடி வணங்குதலே என்ற எண்ணமுள்ளோர்; நல்வினை தீவினை புரிந்தோர் அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை எய்துதல் வாய்மையென மனங்கொண்டவர்; எஞ்ஞான்றும் இறைவனை வணங்கி யியன்ற நல்வினை யியற்றி வாழும் இயல்புடையவர்; தமிழ் மொழியின் தனிச்சிறப் புணர்ந்தவர் அம் மொழியின் சொற்சுவை, பொருட்சுவை, அருமை, பெருமை, தொன்மை, மென்மை, நன்மை, வனப்பு முதலிய இயற்கையை யாய்ந்தவர். நம் நாட்டுப் பண்பாடு, நாகரிகம், கலை, நிலை தெரிந்தவர்; சைவசமயத்தின் தனிச் சிறப்பும் கொள்கையும் அக் கொள்கைவழி நின்ற சான்றோர் வரலாற்றுண்மையும் நுண்மையின் ஆய்ந்து காணும் நோக்கமுடையார் ஆகிய யாவரும் பயில்வதற்குத் தக்கது இந் நூலாகும். மற்றையோர் பயின்றால் நற்பயன் வாய்ப்பது அரிது. பயன் (12) இந்நூல் கற்பவர் கேட்பவர் எவரும் தெய்வத் திருவருள் கைவரப் பெறுவர். அன்பு, அருள், வாய்மை, மனத்தூய்மை, நிறை, பொறை, அடக்கம் முதலிய மக்கட் பண்பு வாய்க்கப் பெறுவர். இல்லறமாகிய நல்லற வாழ்விற் சிறந்து அதன் பயனாகிய என்றுங் குன்றாப் பொன்றாப் புகழை எய்துவர். பின்னர்த் துறவறம் பூண்டு விரதமும் ஞானமும் வேண்டிய உள்ளத்தரா யொழுகிச் சித்தியும் முத்தியும் பெற்றுத் திகழ்வரென்பது தேற்றம். இந் நூலாசிரியர் காலமும் அரங்கேற்றிய களனும் இதனை இயற்றுதற்குத் தக்க காரணமும் ஆசிரியர் வரலாற்றிற் காண்க. இந்நூல் பதிப்பித்த முறை (13) இந் நூல் மூலமட்டும் தமிழ்மொழிக்கும் சைவ சமயத்திற்கும் உழைத்த நம் பெரியார் யாழ்ப்பாணம் உயர்திரு ஆறுமுக நாவலரவர் களால் முதலிற் பதிப்பிக்கப் பெற்றது. பின்னர்த் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் மாணவரில் ஒருவராகிய சோட சாவதானம் சுப்பராயச் செட்டியாரவர்கள் இந் நூலுக்கு உரை யெழுதி அச்சிட்டு வெளிப்படுத்தினர். அதன்பின்னர் அவ்வுரையையே பெரிதும் தழுவி ஈக்காடு இரத்தினவேலு முதலியார் என்பவராற் பொழிப்புரை யெழுதப்பட்டுப் புதிதாக வெளிவந்தது. மதுரை இராம சுவாமிப் பிள்ளையவர்கள் மதுரைக்காண்டத்திற்கு மட்டும் பொழிப் புரை எழுதி வெளிப்படுத்தினார். சிலகாலஞ் சென்றபின் திருவிளையாடற் புராணம் உரையுடன் கிடைப்பது அரிதாகத் தோன்றியது. தமிழ்மொழி நூல்கள் அனைத்தையும் அச்சிட்டு அழகிய வடிவிற் புத்தகமாக்கி வழங்கித் தமிழ்மொழியையும் சைவ சமயத்தையும் வளர்த்துப் பேணிவரும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக அமைச்சர் ஆகிய திருவாளர் வ. திருவரங்கம் பிள்ளையவர்கள் அந் நூலின் அருமையை யறிந்தனர். திருவிளையாடற் புராணம் முழுவதுக்கும் நன்முறையில் உரையெழுதி வெளியிடுவது நம் நாட்டுக்கு நன்மை பயக்குஞ் செயல் எனச் சிந்தித்துத் தெளிந்தார். இலக்கணம், இலக்கியம், சமய நூல் முதலிய பல நூல் கற்றுத் தேர்ந்த ஆசிரியர் பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்களுக்குத் தெரிவித்து உரை வரைந்துதவும்படி வேண்டினர். அவர் அதற்கிணங்கி மூன்று காண்டங்கட்கும் நல்லுரை வரைந்துதவினர். அவ்வுரையுடன் அச்சிட்டு மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்றினையும் மூன்று புத்தகமாகப் பகுத்து 1927 இல் வெளியிட்டுதவினர். அன்று முதல் இன்று வரை தமிழ் கற்பார்க்கும் கற்பிப்பார்க்கும் அவ்வுரையுடன் கூடிய புத்தகம் நற்பயனுதவி யெங்கும் உலவி வருவது எவர்க்குந் தெரிந்ததே. நூற் பெருமை (14) திருவிளையாடல் நூல்களிற் சிறப்புடையது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணமே. வேம்பத்தூரார் திருவிளையாடல் என்பது காலத்தால் இதற்கு முற்பட்டது. பழைய தமிழ் வழக்குக்களையே தழுவிச் செல்வது. இது பிற்பட்டது; வடமொழி வழிவந்தது; வடமொழிப் பெயர்களையே பாண்டியர்களுக்கும் கடவுளர்களுக்கும் இட்டு வழங்குவது. இவ்வேறுபாடு இருப்பினும் முனிவர் பாடல் இனிமையும் தெளிவுமுடையது. மோனையெதுகை முதலிய தொடைநயங்கள் அமைந்தது. பத்திச்சுவை கனிந்தது. ஒழுகிய வோசையும் விழுமிய பொருளும் அமைந்து கற்பார்க்கு மேன்மேலும் விழை வெழுப்புவது. இதனாலன்றோ நம்பி திருவிளையாடல் கற்பார் சிலரும் இதனைக் கற்பார் பலரும் ஆயினர். எடுத்தாண்ட பழைய இலக்கியப் பகுதி (15) பரஞ்சோதி முனிவர் பல நூற் பயிற்சியுடையவர் என்பது அவர் இயற்றிய திருவிளையாடலால் அறியலாம். கலித்தொகை என்னும் நூலில் “வையைதன், நீர்முற்றி மதில் பொரூஉம் பகையல்லா னேராதார், போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன் ”என வந்துள்ளது. இதன் பொருள் “வையை யாற்றுநீர் சூழ்ந்து கோட்டை மதிலைப் பொருகின்ற இப்பகையன்றிப் பகைவர் சூழ்ந்து மதிலை வளைத்துப் போர் செய்வதை யறியாப் புனலையுடைய மதுரையையுடையவன்” என்பது. இப்பொருளை ஆசிரியர், மதுரைநகர் மதிற் சிறப்புக் கூறும் இடத்தில் “அம்மதில் திரைக்கரந் துழாவி, அகழ வோங்குநீர் வையையா லல்லது வேற்றுப் பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே” என அமைத்தனர். சீவக சிந்தாமணியில் “கோட்டிளந் தகர்களும் கொய்ம்மலர்த் தோன்றிபோற், சூட்டுடைச் சேவலும்” எனவும், “பொருவில் யானையின் பழுப்போற் பொங்குகாய்க் குலையவரை” எனவும், “முட்டிலா மூவறு பாடை மாக்களாற் புட்பயில் பழுமரப் பொலிவிற்றாகிய” எனவும், “புதுக்கலம் போலும் பூங்கனியால்”எனவும், திருத்தக்க தேவர் கூறிய உவமை பொருள்களை ஆசிரியர் இந்நூலில் “கொய்ம்மலர்க் குடுமிச் சேவல் கோழிளந் தகர் போர் முட்டி” எனவும், “ஆறிடு மதமால் யானைப் பழுக்குலை யவரை,” எனவும், பாய தொன்மரப் பறவைபோற் பயன் கொள்வான் “பதினெண், மாந்தருங் கிளந்த சொற் றிரட்சி தான்”எனவும், கலம்பெய்காட்சி போலுதிர் பழம் எனவும், முறையே அமைத்திருப்பவற்றைக் காண்க. “தீயில் வீழ்கிலேன் றிண்வரை யுருள்கிலேன்”என்பதனை, “வஞ்சவினைக் கொள்கலனா முடலைத் தீவாய் மடுக்கிலேன் வரையுருண்டு மாய்ப்பே னல்லேன்”எனவும், “மழக்கை யிலங்கு பொற்கிண்ண மென்றலா லரியையென்றுனைக் கருது கின்றிலேன்” என்பதனை, “மழலை தேறாச் சிறியனா மொரு தலை கையிற் கொண்ட செம்பொன்மணி வள்ளம்போற் றேவர் யார்க்கும், அறிவரியாய் சிறியேனை யெளிவந்தாண்ட அருமையறியேன் ” எனவும், “முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”என்பதனை, முன்னா முதுபொருட்கு “முன்னா முதுபொருளாய்ப், பின்னாம் புதுமைக்கும் பின்னாகும் பேரொளியாய்” எனவும், “வானாகி மண்ணாகி வளியாகியொளியாகி, ஊனாகி யுயிராகி யுண்மையுமா யின்மையுமாய்” என்பதனை, “மண்ணாய்ப் புனலாய்க் கனலாய் வளியாகி, விண்ணா யிருசுடராயித்தனையும் வேறாகி” எனவும் மணிவாசகர் திருவாசகப் பகுதிகளை ஆசிரியர் யெடுத் தாண்டிருப்பது காண்க. கம்பர் பாடிய இராமாவதாரத்தில் வந்துள்ள “நஞ்சினுங் கொடிய நாட்ட மமுதினும் நயந்து நோக்கிச், செஞ்சவே கமலக் கையாற் றீண்டலும் நீண்ட கொம்பர், தஞ்சிலம் படியின் மென்பூச் சொரிந்துடன் தாழ்ந்த தென்றால், வஞ்சிபோன் மருங்கு லார்மாட் டியாவரே வணங்க லாதார்” என்ற கவியின் கருத்தினை “இம்பர்வீ டளிக்கும் தெய்வ மகளிரே என்பார் கூற்றம், வம்பல மெய்யே போலும் வளைக்கையார் வளைப்பத் தாழ்ந்து, கம்பமுற்றடிப் பூச்சிந்தி மலர்முகங் கண்ணீர் சோரக், கொம்பரும் பணிந்த வென்றா லுலகியல் கூறற்பாற்றோ” என்ற கவியில் இவர் பொருத்தியிருப்பது காண்க. இன்னும் பல நூற் கருத்துக்களும் பொருள்களும் பல விடங்களில் வந்துள்ளன. இவை இவரது புலமையாற்றலை யெடுத்துக் காட்டும்வனவாம். உரைநடைச் சுருக்கம் 1. நான்மாடக்கூடலான படலம் அபிடேகபாண்டியன் மதுரை மாநகரிற் செங்கோல் செலுத்திக் கொண்டிருந்த நாளில் வருணன் தான் மதுரை மேற் செலுத்திய கடலைச் சோமசுந்தரக்கடவுள் தம்முடைய சடைமுடியில் உள்ள நான்கு முகில்களை அனுப்பி வற்றச் செய்துவிட்டதைக் கண்டு நாணமுற்றான். சிவபிரானுடைய திருவிளையாடல்களைத் தேறாத அவன், மேலும் ஏழு முகில்களையும் அழைத்துப் பெருமழை பொழிந்து மதுரை நகரத்தை அழியுங்கள் என்று கட்டளையிட்டான். ஏழு முகில்களும் கடல் வற்றுமாறு நீரைக் குடித்து வந்து பெருமழை பொழிலாயின. மதுரைமாநகரைச் சூழ்ந்து பெருமழை பொழிதலைப் பாண்டியனும் நகர மக்களுங் கண்டு இஃது ஊழிக் காலமோ என்று மயங்கி வருந்தினர். பாண்டியனும் நகர மக்களும் திருக்கோயிலை யடைந்து இன்றுஞ் சொக்கலிங்கப் பெருமானே காத்தருள்வரென்று பலவாறு போற்றிப் புகழ்ந்து குறையிரந்து நின்றனர். சிவபிரான் திருவுளம் இரங்கினார். முன்போல் சடைமுடியில் உள்ள நான்கு முகில்களையும் பார்த்து, நீங்கள் போய் மதுரைமா நகரின் நான்கெல்லையையுஞ் சூழ்ந்து நான்கு மாடங்களாகி ஏழு முகில்களையும் விலக்குங்கள் என்று கட்டளை யிட்டருளினார். அவைகள் அவ்வாறே நான்கு திக்குகளினும் சந்து தெரியாமல் சூழ்ந்து மூடிக்கொண்டன. இதனால், அனைவரும் ஊழிக்காலத்தில் இறைவன் திருவடி நீழலில் இன்புற்றிருப்பவர்களைப் போன்று இன்புற்றிருந்தனர். ஏழு முகில்களும் தம்மால் முடிந்தவரை மழை பொழிந்தும் பயன்படாதது கண்டு நாணின. வருணனும் நாணினான். அவனுடைய உள்ளத்தில் நடுக்கமும் ஒருவகை மகிழ்ச்சியும் உண்டாயின. பொற்றா மரைத் திருத்த நீரைக் குறுகு முன்னர்த் தன்நோய் ஒழிய மிகுந்த உள்ளன்போடு சொக்கலிங்கப் பெருமானை வழிபட மனத்தில் எண்ணினான்; பொற்றாமரையில் முழ்கித் திருநீறுஞ் சிவமணியும் அணிந்து கங்கை முதலிய தெய்வப் பெண்கள் பொற்குடங்களேந்தி நீர் சொரிய மலர், சந்தனம், அணிகலம், ஆடை முதலியன கற்பகந்தர ஐவகைக்கனிகள், ஆன் ஐந்துபுகை ஒளி முதலியன காமதேனுவாற் பெற்று அங்கயற்கண்ணி பங்கனை வழிபட்டான். ஆயிரம் பெயர் களைக் கூறிப் போற்றினான். முத்துமாலை சாத்தித் தொழுது நின்றான். வருணனுடைய வழிபாட்டை ஏற்றருளிய சிவபெருமான், “வருணனே! நீ விரும்பிய மேன்மையைக்கேள்” என்று திருவாய் மலர்ந்தருளினார். வருணன் அடிபணிந்து, எவ்வகையிலும் போக்குவதற் கரிதாயிருந்த என்னுடைய வயிற்றுநோய் உன்னுடைய பொற்றா மரைப் புனித நீரில் மூழ்கியவுடனே ஒழியப் பெற்றேன். மறைகள், நான்முகன், திருமால் முதலியவர்களுடைய ஆராய்ச்சியிலும் அகப்படாத உன்னை ஆராயவுந் துணிந்தேன். அறிவற்ற என்னிடத்தில் என்ன குணத்தைக் கண்டு என்னுடைய நோயைப் போக்கியருளினாய்? குற்றத்தைக் குணமாகக் கொள்வது உன்னுடைய குணம் என்று அறிந்துகொண்டேன். “ பொன்னுலகத்துக் கிறைவனாகிய தேவர் கோமான் காலந் தாழ்த்துன்னை வழிபட்டு மனத் தளர்ச்சியோடு சென்றதும், அவனை நான் வினவியதும் அதற்கவன் மறுமாழி கூறியதும் அதன்மேல் பகையுணர்ச்சியோடு அவனைக் கேட்டதும் அவன் சொல்வழி உம்மை ஆராய்ந்து பார்த்ததும் இவை யாவும் இறுதியில் என் நோய்க்கு மருந்தாக முடிந்தன. ஆண்டவனே! என்னுடைய வயிற்று நோயல்லாமல் மலநோயும் ஒழிந்து வீடுபேற்று வழியையும் பெற்றேன். நோய்க்கு மணி மந்திர மருந்துகள் எதற்கு? இப் புனித நீரே எல்லா நோய்களையும் போக்கும். அடியேன் தங்களிடத்தில் செய்த இரண்டு குற்றங்களையும் பொறுத்தருளுதல் வேண்டும்” என்று பன்முறை வணங்கிப் போற்றினான். வேண்டிய மேன்மைகளைப் பெற்றுத் தன்னகரடைந்து வாழ்ந்திருந்தான். வருணன் விட்ட கடலை விலக்கச் சிவபெருமான் சடையினின்றும் விடுத்த முகில்கள் நான்கும் மலைபோல் உயர்ந்து, நான்கு மாடமாகக் கூடிய காரணத்தால் மதுரை நான்மாடக் கூடல் என்று பெயர் பெற்றது. 2. எல்லாம்வல்ல சித்தரான படலம் அபிடேக பாண்டியன் மதுரை நகரில் அரசாட்சி செய்து கொண்டிருக்கும் நாளில் பாண்டியனும் மதுரை நகர மக்களும் இம்மையிற் செல்வமனைத்தும் அடைந்து பிறகு வீடுபேற்றையும் பெற்று இன்புறுமாறு சோமசுந்தரக் கடவுள் திருவுளங்கொண்டார். ஒரு சித்தராகக் கோலம் பூண்டு மதுரை நகரின் கடைத்தெரு, ஓவியச்சாலை, நாற்சந்தி, மேல் மாளிகை, மாளிகை நகர்வாயில், திண்ணை முதலிய இடங்களை அடைந்தார். தெற்கில் இருப்பவர் போற் காட்டி வடக்கே சென்றும் கிழக்குத் திக்கில் உள்ளவர்போல் நடித்து மேற்குத் திக்கில் தோன்றியும், ஒருவராலும் அறிந்துகொள்ள முடியாத மாயவித்தைகள் புரிந்தார். தொலைவில் உள்ள மலையை அண்மையில் வரச்செய்தார். அண்மையில் உள்ள மலையைத் தொலைவில் போகச்செய்தார். முதியவர்களை இளையவர்களாக்கினார். இளையவர்களை முதியவர்களாக்கினார். ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவுஞ் செய்தார். மலடியை மகப்பெறச் செய்தார். கூன், செவிடு, ஊமை, குருடு, முடம் முதலியவைகளைப் போக்கினார். நால்வகை உலோகங்களையும் பொன்னாக்கினார். செல்வர்கள் இல்லத்தில் இருந்த பொருளை வறியவர்கள் வீட்டிற் சேர்த்தார். நண்பர்கள் தங்கட்குள் பகையில்லாமலே போர்புரியச் செய்தார். எட்டிமரத்தில் இனிய கனிகள் உண்டாகச் செய்தார். காலமல்லாத காலத்தில் வையை யாற்றில் நீர்ப்பெருக்கெடுக்கவும் வற்றவுஞ் செய்தார். நன்னீரை உப்புநீராக்கினார். உப்புநீரை நன்னீராக்கினார். தம் கையிலுள்ள கோலை யாதொரு பற்றுக்கோடுமில்லாமல் நிறுத்தி, அதன்மேல் ஊசியை நாட்டி அவ்வூசிமேற் பெருவிரலூன்றி ஊசலாடினார். ஊசியின்மேல் தலைகீழாக நின்றார். விண்ணிற் சேவடியை நீட்டிச் சுழன்றார். கருடனைப்போல் விண்ணில் தாவிப் பறந்து முகில்களைப் பிடித்து இடியுடன் உண்ட நீரைப்பிழிந்து கண்டவர் வியப்படையக் காட்டினார். மீண்டும் அம்முகில்களை விண்ணிற் செலுத்தினார். இரவில் உண்டாகும் பொருளைப் பகலிலும், பகலில் உண்டாகும் பொருளை இரவிலும் உண்டாக்கினார். தீ, நீர், காற்று இவைகளின் ஆற்றலை யடக்கினார். காலமல்லாத காலத்தில், மலர், காய், கனி இவைகளை உண்டாக்கினார். முதியவர் களைப் பிரம்பினால் தடவி இளைஞர்களாக்கினார். அவர் மனைவி யரையும் அவர்கட் கிசைய மங்கைப் பருவத்தினராக்கினார். இழுத்தல் முதலிய புதுமைகளைக் காட்டினார். மறைகளை உணராதவர் கட்கு எல்லாக்கலைகளும் விளங்குமாறு நாவிற் றிரு நீறு சிதறினார். பாண்டியன் பொழிலில் உள்ள தெங்கினைப் பனையாக்கினார். மற்றவைகளையும் ஒன்றை மற்றொன்றாக மாற்றினார். மிக அழகோடு விளங்கினார். வேறு உலகத்துப் பொருள்களை மதுரைக்கு வரவழைத் தார். சிவபிரான் இவ்வாறு பல திருவிளையாடல்களைச் செய்து கொண்டிருந்தார். மதுரை நகரத்தார் சித்தரின் திருவிளையாடல் களில் தங்கள் மனத்தைச் செலுத்தி மற்றைத் தொழிலை மறந்திருந் தார்கள். இச் செய்தியை உணர்ந்த பாண்டியன் சித்தரைத் தன்னிடம் அழைத்து வருமாறு ஏவலரை அனுப்பினான். அவர்கள் போய் அவராடலை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அமைச்சர்கள் சென்று சித்தரை அழைத்தனர். சித்தர் அரசனிடத்தில் நமக்கு வேலையில்லை யென்று கூறி மறுத்து விட்டார். 3. கல்லானைக்குக் கரும்பருத்திய படலம் அபிடேக பாண்டியன் பிறகு அச்சமடைந்தான். அறிவில்லாத படியினால் நான் பெரியோர் என்று எண்ணாமல் என்னிடம் அழைத்து வரக் கட்டளையிட்டேன். அரசர்களிடத்தில் பெறவேண்டிய குறை அவர்க்கு யாதுளது? நானே சென்று அவரைக் காண்பேன் என்று முடிவு செய்தான். தைத்திங்கள் திங்கட் கிழமையன்று மதுரைக் கடவுளை வணங்கி வலம் வந்தான். அப்பொழுது சித்தர் போலச் சிவபெருமான் கோயிலின் சுற்றுப் புறத்தில் வடமேற்குத் திக்கில் எழுந்தருளியிருந்தார். பாண்டியனுடைய ஏவலர்கள் சித்தரை அப்பாற் செல்க என்றனர். பின்னே வந்த பாண்டியன் சித்தரைப் பார்த்து, “உம்முடைய ஊர் எது? பெயர் என்ன? நீர் எதில் வல்லவர்? உமக்கு வேண்டியது என்னை?” என்று கேட்டான். சித்தர் பாண்டியனைப் பார்த்து, “நாம் எந்நாட்டிலும் எவ்வூரிலும் சுற்றுவோம். ஆனாலும் நாம் இப்போதிருப்பது காசுமீர நாட்டில் உள்ள காசிப்பதி. ஐயமேற்றலையே பெரு வாழ்வாகக் கொண்ட சிவபெருமானுடைய உறவினர் நாம். எப்பொழுதும் பல புதுமைகள் செய்து திரிகின்ற சித்தராகவும், காசி முதலாகவுள்ள சிவப்பதிகள் பலவுந் தொழுது வருகின்றேம். இம் மதுரை நகர் இம்மை மறுமைப் பயன்களை ஈதலால் இங்குள்ளோர்கட்கு எம்மாடலைக் காட்டி அவர்கள் வேண்டிய பல சித்திகளையுந் தருவோம். மறை முதலிய அறுபத்து நான்கு கலைகளினும் வல்லமையுடையோம். பொன்னாட்டிலுள்ள எப்பொருளையும் தரவல்ல சித்தர் யாம். உன்னாற் பெறவேண்டியது எமக்கு ஒன்றுமில்லை,” என்று கூறி நகைத்தார். பாண்டியன் இவருடைய இறுமாப்பையும் பெருமையையும் நான் அளவிட்டறிகிறேன் என்று எண்ணினான்.“எல்லாம் வல்ல சித்தர் என்று சொல்லிக் கொள்கிற நீர் இக் கல்லானைக்கு இந்தக் கரும்பை யருத்தினால் நீர் எல்லாவற்றிலும் வல்லவர்தாம். மதுரைக் கடவுளும் நீரே யாவீர். நீர் வேண்டியவைகளை யெல்லாந் தருவேன்” என்று சொன்னான். சித்தர், “கல்லானை கரும்பு தின்பதை நீ பார்”என்று கூறினார். கடைக் கண்ணாற் சிறிது கல்லானையைப் பார்த்தார். உடனே கல்லானை கண் விழித்தது. மும்மதம் பொழியப் பிளிறியது. குறிப்பிட்ட கரும்பைப் பறித்துத் தின்றது. மேலுந் தருக்கிச் சீறி நின்றது. மேலுஞ் சித்தர் சிறிது கடைக்கண் காட்டினார். அவ்வளவில் அது பாண்டியன் கழுத்தில் இருந்த மாலையையும் பறித்தது. பாண்டியனுடைய ஏவலர் யானையை அடிக்கக் கோலை ஓங்கினர். சித்தர் யானையைச் சினந்து பார்த்தார். யானை பாண்டியனுடைய மாலையைத் தின்றுவிட்டது. பாண்டியன் சினந்து ஏவலரைப் பார்த்தான். அவர்கள் சித்தரை அடிக்க வந்தனர். சித்தர் கையை அசைத்தார். அனைவரும் ஓவியப் பதுமை போல நின்றனர். பாண்டியன் சினம் மாறியது. அவன் வியப்புக் கொண்டு சித்தர் அடிகளில் வீழ்ந்து அடியேனுடைய பிழையைப் பொறுக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டான். சித்தர் பாண்டியனுக்கு அருள் செய்தார். அவன் விரும்பியவாறு மக்கட்பேறு வழங்கினார். யானைமீது நோக்கத்தைச் செலுத்த அது மாலையைக் கொடுத்தது. பாண்டியன் அதனை வாங்கி யணிந்து கொண்டான். சித்தர் மறைந்தார். யானை பழைமைபோல் கல்யானையாகவே நின்றது. பாண்டியன் பெருவியப்படைந்தான். இது சிவபெருமானுடைய திருவிளையாடலே என்று உள்ளந் தேறினான். பலவாறு தொழுது போற்றி அரண்மனையை அடைந்தான். விக்கிரம பாண்டியனைப் பெற்றான். பிறகு சிவபெருமானுடைய திருவடிநீழலை யடைந்தான். 4. யானையெய்த படலம் விக்கிரமபாண்டியன் மதுரைமாநகரில் அரசாட்சி நடத்திய காலத்தில் சமண முதலிய புறச்சமயங் களைக் களைந்து சைவப்பயிரை வளரச் செய்தான். சொக்கலிங்கப் பெருமான் வீற்றிருந்தருளும் விமானத்துக்கு வடக்குப் பக்கத்தில் கோயில் எழுப்பிச் சித்தருடைய உருவமைத்துப் பணிசெய்து வாழ்ந்து கொண்டிருந்தான். அந்நாளில் சோழன் ஒருவன் காஞ்சீபுரத்தில் அரசு செய்திருந்தான். அவன் கதிரவனுடைய வழிமுறையில் தோன்றியவன். சமண சமயத்தை மேற்கொண்டு ஒழுகுபவன். அவன் சிவநேசம் பூண்டொழுகும் பாண்டியனோடு போர்புரிய ஆற்றலற்றவனாய் வஞ்சனையால் வெல்ல எண்ணினான். அஞ்சனம், கவுஞ்சம், கோவர்த்தனம், திரிகூடம், காஞ்சி, சையம், ஏமகூடம், விந்தம் என்னும் எட்டு மலைகளினும் வசிக்கின்ற தன் ஆசிரியர்களாகிய சமணர்கட்குத் தனித்தனியே ஓலை எழுதியனுப்பினான். அவர்கள் காஞ்சியை அடைந்து சோழனைக் கண்டார்கள். அவன் முடிமேல் பீலிவைத்து வாழ்த்தினார்கள். சோழன் அவர்களைப் பார்த்துக், “கொடிய வேள்வி செய்து பாண்டியனைக் கொன்றால் உங்கட்கு என் நாட்டில் பாதி தருகிறேன், உடனே செய்யுங்கள்” என்றான். அவர்கள் அதற்கு உடன்பட்டார்கள். பாலாற்றங்கரையில் பெரிய வேள்விச்சாலை அமைத்தார்கள். நஞ்சு பொருந்திய விறகுகளையிட்டு, நஞ்சுடைய உயிர்களின் தசையூறிய வேம்பின் எண்ணெய் சொரிந்து, கொல்லா நோன்புடைய சமணர்கள் வேள்வி செய்தனர். சமணர்கள் செய்த வேள்வியால் காடு சோலை முதலிய யாவுந் தீய்ந்தன குளங்கள் முதலிய நீர்நிலைகள் வற்றின. அவ்வேள்வியில் இருந்து, கொடிய யானை ஒன்று சீறிவந்து நின்றது. சமணர்கள் அதனைப் பார்த்து, “நீ போய்ப் பாண்டியனை மதுரையோடும் அழித்து வருவாயாக” என்று ஏவினார்கள். யானை மதுரையை நோக்கி வந்தது. இதனை யறிந்த பாண்டியன் மதுரைக் கடவுளை வணங்கி, “என்னைக் காத்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். மதுரைக்கடவுள் உருவிலி வாக்கால், நாம் யானையை அழிக் கிறோம். நீ மதுரைக்குக் கீழ்ப்பக்கத்தில் அட்டாலை மண்டபம் ஒன்று செய்வாயாக என்று கூறினார். பாண்டியன் அவ்வாறே ஒரு மண்டபஞ் செய்தான். மதுரைக் கடவுள் போர்க் கோலம் பூண்டு சமணர்களால் அனுப்பப்பட்ட யானையின்மீது நரசிங்கக் கணையைச் செலுத்தினார். அந்த யானை வீழ்ந்து இறந்தது. பாண்டியன் மகிழ்ச்சியடைந்தான். பாண்டியனுடைய படைவீரர்கள் யானைக்குப் பின் வந்த சமணர் களைத் தாக்கினர். அவர்கள் மனந்தளர்ந்து ஓடினார்கள். பாண்டியன் அட்டாலை மண்டபத்தில் போர்க்கோலத்தோடு வீற்றிருந்த சிவபெருமானுடைய திருவடிகளை வணங்கினான். இவ்விடமே எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். சிவபெருமான் பாண்டியனுக்கு வேண்டிய மேன்மைகளை வழங்கி யருளினார். பிறகு பாண்டியன் இராசசேகரன் என்னும் மகனைப் பெற்று அரசாட்சி செய்து வாழ்ந்திருந்தான். 5. விருத்தகுமார பாலரான படலம் விக்கிரம பாண்டியன் மனுநீதி தவறாமல் அரசாட்சி செய்து கொண்டிருக்கும் நாளில் மதுரையில் விரூபாக்கன் என்னும் பெயரையுடைய அந்தணன் ஒருவன் இருந்தான். அவனுடைய மனைவியின் பெயர் சுபவிரதை. இவர்கட்கு நெடுநாள்மக்கட் பேறில்லாமலிருந்தது. பிறகு பல நோன்புகள் இயற்றி ஒரு பெண் குழந்தையைப் பெற்றார்கள். அதற்குக் கெளரி என்று பெயரிட்டார்கள். அப்பெண் அகவை ஐந்தை அடையுங் காலத்தில் தந்தையைப் பார்த்து, “இக்கொடிய பிறவிநோயை ஒழிக்கவல்ல ஒரு தெய்வத் திருமறையை எனக்கு உரைத்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். அந்தணன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். தன்னுடைய அருமைத் திருமகளுக்குத் தேவியின் திருமறையைப் போதித்தான். அவள் அதனை இடைவிடாது உருவேற்றி வந்தாள். தந்தை தன்னுடைய மகளுக்குத் தக்க கணவனை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு அகவை பன்னிரண்டாகியது. ஒருநாள் வேற்றூரில் இருந்து மாணியாகிய வைணவப் பா'faப்பன இளைஞன் ஒருவன் ஐயமேற்க வந்தான். விரூபாக்கன் அம்மாணிக்குத் தன்னுடைய மகளைக் கொடுக்க உடன் பட்டான், மனைவி சுற்றத்தா'fa முதலியவ'faகள் மனம் வருந்தினா'faகள், மாணயின் குலகோத்திரங்களை உசாவினா'faகள். எல்லாம் ஒத்திருந்தன. ஆனால் அவன் வைணவ சமயத்தவனாக இருந்தான். இஃதொன்றுதான் குறையாகவிருந்தது பிறகு மறைமுறைப்படி அவனுக்கு மனஞ்செய்து கொடுத்தா'faகள். வரிசை முதலியன கொடுத்து மணமகனுடைய ஊருக்கனுப்பினா'faகள். மாணியின் தாய் தந்தையர் மிகக் கொடியவர்கள். அவர்கள் சைவசமயத்தவளாகிய கெளரியை வெறுத்தார்கள். பலவாறு துன்புறுத்தினார்கள். வேறாக ஒதுக்கி வைத்தார்கள். ஒருநாள் வேற்றூருக்குச் சென்றபொழுது வீட்டைப் பூட்டிக்கொண்டு சென்றார்கள். கெளரி தனியே இருந்தாள். சிவனடியார்களைக் காண முடியவில்லையே என்று உள்ளம் வருந்தினாள். சிவபெருமான் முதுமைப் பருவத் துறவியாகக் கெளரிமுன் வந்தார்; பசியாக இருக்கின்றதென்றார். கெளரி வீடு பூட்டியிருப்பதாகச் சொன்னாள். “நீ சென்று பூட்டைத் தொடு,” திறந்து கொள்ளும் என்றார் வந்தவர். அவ்வாறே கெளரி வீட்டைத் திறந்து உணவு சமைத்து அடியவர்க்குப் பரிமாறினாள். அச்சமயத்தில் இறைவன் முதுமைப் பருவத்தை யொழித்துக் கட்டழகு மிக்க இளைஞனாகக் காட்சி தந்தார். கெளரி இதனைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கூசிக் குலைந்து ஒருபுறமாக ஒதுங்கி நின்றாள். இச்சமயத்தில் வேற்றூருக்குச் சென்றிருந்த மாமன் மாமி முதலியோர் வீட்டிற்குத் திரும்பி வந்தார்கள். அச்சமயத்தில் இறைவன் ஒரு பச்சிளங் குழந்தையாகத் திருநீறணிந்த நெற்றி யினராய்க் காற்பெருவிரலை வாயில் வைத்துச் சுவைத்துக்கொண்டு துணிகளாலாகிய படுக்கையிற் கிடந்தார். வைணவச் சுற்றத்தினர் “குழந்தை ஏது?”என்று உசாவினர். “தேவதத்தன் என்னும் அந்தணன் மனைவியொடு இங்கு வந்து சிறிது நேரம் வைத்திருக்குமாறு கூறிச் சென்றனன்”என்றாள் கெளரி. இதனைக் கேட்டு அவர்கள் சினவெறி கொண்டனர். “எலும்பணிந்து சுடுகாட்டிலாடும் சிவனிடத்தில் அன்பு பூண்ட தேவ தத்தன் குழந்தையிடத்தில் அன்புகொண்ட நீ எங்கட்காகாய்” என்று கூறிக் கெளரியைக் குழந்தையோடு விரட்டினர். கெளரி குழந்தையோடு வீட்டைவிட்டுச் சென்றாள். தாயில்லாக் குழந்தையின் முகத்தைப் பார்த்து மனந்தளர்ந்தாள். தேவியின் திருமறையை உரைத்தாள். குழந்தையாகவிருந்த சிவபெருமான் தேவியொடு காட்சி கொடுத்தார். கெளரியை உமையவள் வடிவாக்கினார். அனைவருங்கண்டு தொழுதார்கள். தேவர்கள் மலர்மாரி பொழிய விண்ணிற் சென்று மறைந்தார். 6. கான்மாறி யாடின படலம் விக்கிரமபாண்டியன் தன்மகனாகிய இராச சேகரனுக்கு முடிசூட்டினான். திருமால் உலகம் முதலிய எல்லா உலகிற்கும் மேற்பட்டு விளங்கும் சிவலோகத்தை அடைந்தான். அதன் பிறகு இராசசேகர பாண்டியன் பரதநூலைத் தவிர ஏனைய அறுபத்து மூன்று கலைகளையும் பயின்றான். செங்கோல் செலுத்தி அரசாட்சியை நடத்திக்கொண்டிருந்தான். அந்நாளில், திருவானைக்காவில் உள்ள சிவபெருமானிடத்தில் அன்புள்ள ஒரு புலவன் சோழநாட்டில் இருந்து பாண்டிய நாட்டிற்கு வந்தான். பாண்டியனிடம் வந்து, “அரசே! எம் மரசனாகிய சோழனுக்கோ அறுபத்து நான்கு கலைகளுந்தெரியும். உனக்கோ அறுபத்து நான்கு கலைகளுந்தெரியும். உனக்கோ பரதநூலில் ஒன்றுந் தெரியாது”என்று சொன்னான். இதனைக் கேட்ட பாண்டியனுக்கு மனவருத்தம் உண்டாகியது. அதனையுங் கற்றுணர எண்ணினான். பரத நூலில் வல்லவர்களை யழைப்பித்து அவர்கட்குச் செய்ய வேண்டிய சிறப்பைச் செய்து பலநாள் வருந்திக் கற்றான். அதில் உள்ள தொல்லையை அறிந்தான்; இவ் வருத்தம் வெள்ளியம்பலத்தி லாடும் எம்மிறைவனுக்கு முண்டன்றோ என்று மனத்திற் கொண்டான். நான்முகனுந் திருமாலும் பல்லூழி தேடியும் காணரிய திருவடி ஒன்றையே நெடுநாள் தூக்கியாடுதலை நான் பார்த்துச் சும்மா இருப்பது அறமன்று என்று மனம் வருந்தினான். அவ்வாடலைத்தடுப்ப தியலா தாயினும் திருவடி வருந்துமே யென்று கவன்றான். சிவராத்திரி நாளில் நான்கு யாமங்களிலும் சிவபெருமானுக்குச் சிறந்த பூசைகள் செய்து திருக்கூத்தைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தான். “சுவாமி! தூக்கிய திருவடியை நிலத்தில் ஊன்றி ஊன்றிய திருவடியை மேலே தூக்கி மாறியாடியருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். “அவ்வாறு செய்யாதொழியின் உயிரைப் போக்கிக் கொள்வேன்” என்றான். அருட்கடகலாகிய சிவபெருமான் இடத்தாளையூன்றி, வலத்தாளை மேலெடுத்து வீசிமாறியாடி யாருளினார்.பாண்டியன் கண்டு பேரின்பக் கடலில் மூழ்கினான். பலவாறு புகழ்ந்து போற்றினான். இத் திருக்கூத்தை யாவருங் கண்டு களிக்குமாறு எக்காலத்திலும் இவ்வாறே நின்று அருள வேண்டும் என்று குறையிரந்தான். அடியார்க் கெளியவ ராகிய சிவபெருமான் அன்று முதல் இன்றளவும் அந்நிலையிலேயே நின்று ஆடியருள் கின்றார். 7. பழியஞ்சின படலம் இராசசேகர பாண்டியன் தன்னுடைய மகன் குலோத்துங்க பாண்டியனுக்கு முடிசூட்டித் தான் சிவபெருமானுடைய திருவடி களை யடைந்தான். குலோத்துங்க பாண்டியன் சிவபெருமானிடத்தில் அன்புடையவனாய் விளங்கினான். பதினாயிரம் பெண்களை மணந்தான். அறுபதினாயிரம் பிள்ளைகளைப் பெற்றான். அவர்களனைவரும் எல்லாக் கலைகளினும் வல்லவர்களாக விளங்கினார்கள். குலோத்துங்கன் மனமகிழ்ச்சியோடு அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அந்நாளில் திருப்புத்தூரில் இருந்த ஓரந்தணன் தன் மனைவி யோடுங் கைக்குழந்தையோடுங் காட்டு வழியாகத் தன் மாமனுடைய ஊராகிய மதுரைக்குப் புறப்பட்டான். வழியிலே நீர்வேட்கை கொண்ட மனைவிக்குத் தண்ணீர் கொண்டுவரும் பொருட்டு மனைவியையுங் குழந்தையையும் ஒரு பெரிய ஆலமர நிழலில் நிறுத்திவிட்டுச் சென்றான். திரும்பி வருமுன் நெடுநாளைக்குமுன் அம்மரத்தில் தைத்துக்கொண்டிருந்த ஓர் அம்பானது காற்றால் வீழ்ந்து கீழிருந்த அந்தணமாதின் உயிரைப் போக்கியது. அச்சமயத்தில் வேடன் ஒருவன் வில்லுங் கையுமாய் வந்து மரத்தின் வேறொரு பக்கத்தில் இருந்தனன். நீர்கொண்டு வந்த அந்தணன் மனைவி யிறந்து கிடத்தலைக் கண்டு பலவாறு புலம்பினான். இவ்வாறு செய்தவர்கள் யாரென்று சுற்றிப்பார்த்து வேடனைக் கண்டான். அவனே கொன்றவன் என்று முடிவு செய்து மனைவியையுங் குழந்தையையுந் தூக்கிக்கொண்டு அவ்வேடனையும் பாண்டியனிடம் அழைத்துச் சென்றான். பாண்டியனிடஞ் செய்தியைக் கூறினான். இதனைக்கேட்ட பாண்டியன் மனந்தளர்ந்தான். வேடனை நோக்கி, “நீ ஏன் இத்தகைய கொலையைச் செய்தாய்?” என்று உசாவினான். வேடன், “அரசே! அடியேன் இளைப்பாறும் பொருட்டு அம்மரத்தின் ஒரு பக்கத்தில் வந்திருந்தேனே யல்லாமல் கொலை செய்யவில்லை. கொன்றவர் களைப் பார்க்கவும் இல்லை” என்று கூறினான். அமைச்சர்கள் நன்கு ஒறுத்து உண்மையைக் கேட்க வேண்டும் என்றார்கள். எவ்வளவோ துன்புறுத்தியும் வேடன் கூறியதையே கூறினான். அரசனுக்குக் கவலை பெரிதாகியது. வேடன் கூறுவதோ ஒரே தன்மையாக இருக்கிறது. கொலை செய்ததற்கான அறிகுறியும் முகத்தில் தோன்றவில்லை. இவள் எவ்வாறு இறந்திருக்கக்கூடும் என்று பலவாறு எண்ணமிட்டான். பிறகு இதனைத் தெய்வத் திருவருளால் உணரவேண்டுமென்று முடிவு செய்தான். திருக்கோயிலுக்குப் போய்ச் சோமசுந்தரக் கடவுள் திருமுன் முறையிட்டு உண்மையை விளக்கு மாறு வேண்டிக்கொண்டான். மதுரைக் கடவுள், “அன்பனே! இந்நகர்க்கு வெளிப்புறத்தில் வணிகத்தெருவில் ஒரு வீட்டில் திருமணம் ஒன்று நடக்கப் போகின்றது.” நீ அங்கு வருவாயானால் உன்னுள்ளத்தில் உள்ள ஐயத்தைப் போக்குகிறோம் என்று உருவிலி வாக்காக உரைத்தருளினார். இதனைக் கேட்டுப் பாண்டியன் மகிழ்ச்சியடைந்தான். தன்னுடைய அரண்மனைக்குச் சென்றான். மறுநாள் அரசன் மாறுகோலம் பூண்டு அந்தணனையும் அழைத்துக் கொண்டு திருமண இல்லத்திற்குப் போய் ஒரு புறந் தங்கியிருந்தான். இறைவன் அருளால் எமதூதர்கள் அரசன் கண்ணுக்குத் தெரிந்தனர். அவர்கள் மணமகன் உயிர் கவரும் பொருட்டு மறலியால் அனுப்பப் பட்டவர்கள். அவர்களில் ஒருவன் மற்றவனைப் பார்த்து “இவன் உயிர் கவருமாறு வந்த நாம் என்செய்வது? இவனுக்கு நோய் ஒன்றுமில்லையே! எந்தக் காரணத்தைக்கொண்டு இவனுடைய உயிரைக் கவரலாம்? ” என்று கேட்டான். அதற்கு மற்றவன், “ஆலமரத்தில் ஏறுண்டிருந்த கணையைக் காற்றால் வீழ்த்தி மரநிழலில் இருந்த பார்ப்பனி உயிரை எவ்வாறு கவர்ந்தோமோ அதுபோல் பல மங்கலவாத்திய ஒலியினால் இங்குக் கட்டியுள்ள ஆன் மருட்சி யடைந்து கயிற்றையறுத்து மணமகனை முட்டித்தள்ளுமாறு செய்து உயிரைக் கவர்வோம்.” என்றான். இறைவன் அருளால் இவ்வுரையாடல் அரசன் காதுகளிலும் அந்தணன் காதுகளிலும் வீழ்ந்தது. அரசன் அந்தணனைப் பார்த்துக் கேட்டாயோ? என்றான். அந்தணன், இம்மணமகன் அவ்வாறிறந்தால் ஒப்புக் கொள்கிறேன் என்றான். திருமணம் நடைபெறத் தொடங்கியது. மங்கலவாத்தியங்கள் முழங்கின. அவ்வொலியால் மருண்ட ஆன் கயிற்றையறுத் தோடி மணமகனை முட்டித் தள்ளியது. மணமகன் பிணமகனானான். மணக்கோலம் பிணக்கோலமாகியது. மணப்பறை பிணப்பறையாகியது. அந்தணன் இதனைக் கண்டு தன் மனைவி இறந்த துன்பத்திலும் மிகும் துன்பத்தையடைந்தான். அரசன் அந்தணனோடு அரண்மனையை அடைந்தான். அந்தணனை மறுமணம் செய்து கொள்ளுமாறு பொருள் கொடுத்து அனுப்பினான். சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேடனையும் அழைத்துத் தவறாகத் தண்டித்ததற்கு வருந்தி மிகுதி யாகப் பொருள் கொடுத்து அனுப்பினான். பிறகு இவ்வாறு உண்மையை விளக்கிய சிவபிரானுடைய திருக்கோயிலுக்குப் போய் அப்பெருமானைப் போற்றினான். பலகாலம் அரசாட்சி செய்து கொண்டு வாழ்ந்திருந்தான். கூடற்காண்டம் ஏழு படலங்களிலும் அமைந்துள்ள வரலாற்றைச் சுருக்கமாக வரைந்து காட்டினோம். பரஞ்சோதி முனிவர் பாடலிலமைந்துள்ள சொன்னயமும் பொருணயமும் சந்தமும் தொடையும் தொடை விகற்பமும் ஆகிய எல்லாம் படித்து இன்புறுக. திருச்சிற்றம்பலம் திருவிளையாடற் புராணம் மூலமும் உரையும கூடற் காண்டம் பத்தொன்பதாவது நான்மாடக்கூடலான படலம் பரசிவம் [எழுசீரடியாசிரிய விருத்தம்] பூதங்க ளல்ல பொறியல்ல வேறு புலனல்ல வுள்ள மதியின் பேதங்க ளல்ல விவையன்றி நின்ற பிறிதல்ல வென்று பெருநூல் வேதங்கி டந்து தடுமாறும் வஞ்ச வெளியென்ப கூடன் மறுகிற் பாதங்க ணோவ வளையிந்த னாதி பகர்வாரை யாயு மவரே. (இ - ள்.) ஆயுமவர் - உண்மையை ஆராய்ந்தறியும் அறிவுடையார், கூடல் மறுகில் - மதுரைத் திருவீதியில், பாதங்கள் நோவ - திருவடிகள் வருந்த (நடந்து), வளை இந்தன ஆதி பகர்வாரை- வளையலும் விறகும் முதலியவற்றை விற்கும் சோமசுந்தர'82 கடவுளை, பூதங்கள் அல்ல - வான் முதலிய ஐம்பூதங்களுமல்ல; பொறி அல்ல - செவி முதலிய ஐம்பொறிகளுமல்ல; வேறு புலன் அல்ல - ஏனை ஒலி முதலிய ஐம்புலன்களுமல்ல; உள்ளம் மதியின் பேதங்கள் அல்ல - மனமும் புத்தியும் முதலிய அந்தக்கரணங்களின் விகற்பங்களுமல்ல; இவை அன்றி நின்ற பிறிது அல்ல என்று - இவைகளல்லாமல் எஞ்சி நின்ற ஆன்மாவுமல்ல என்றுகூறி, பெருநூல் வேதம் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளி என்ப - பெரு நூலாகிய வேதங்கள் (இதுவெனத் துணிய மாட்டாது) கிடந்து தடுமாறுதற் கேதுவாகிய வஞ்ச வெளி என்று கூறுவர். வேறு என்பது ஏனை யென இடைச் சொற் பொருட்டாய் நின்றது. உள்ளமும் மதியும் முதலியவற்றின் என்க; மதி - அந்தக்கரணத்து ளொன்றாய புத்தி; மதியின் பேதம் - போத விகற்பம் எனினுமாம். இவையன்றி நின்ற பிறிதல்ல என்பதற்கு, இவையல்லாத வேறு பொருளும் அல்ல என்றும், இவற்றை விடுத்து வேறாக நின்ற தல்ல என்றும் பொருள் கூறலுமாம்; ‘ ஒன்று நீயல்லை யன்றி யொன்றில்லை’ என்னும் திருவாசகமஇங்கே சிந்திக்கற்பாலது. இந்நூலாசிரியர், அவையடக்கத்தில், ‘ அல்லையீ தல்லை யீதென மறைகளு மன்மைச் சொல்லினாற் றுதித் திளைக்குமிச் சுந்தரன்’ என்று கூறியதும் இச்செய்யுளும் கருத்தொருமையுடையவாதல் காண்க. பூதங்களும் அதுவல்ல என்றிங்ஙனம் விரித்துக் கொள்க. பிறிதல்ல என்புழிப் பன்மையொருமை மயக்கம். அல்ல என்பன பன்மை குறியாது நின்றன வென்னலுமாம். வேதங்களாலும் அறிய வொண்ணாது கரந்திருத்தலின் ‘வஞ்சவெளி’ என்றார்; மாணிக்க வாசகப்பெருமான‘ஒளிக்குஞ்சோரன்’ எனத் திருவாய் மலர்ந்தருளியதுங் காண்க. இறைவன் இங்ஙனம் மறைகளாலும் அறிதற்கரியனாயினும் அடியார்க்கு மிக எளியனாவன் என்பதனை விளக்குவார் ‘கூடல், மறுகிற் பாதங்கணோவ வளையிந்தனாதி பகர்வார்’ என்றார், ‘எத்தனையும் அரிய நீ எளியையானாய்’ என்றார் திருநாவுக்கரசரும்; இது கூடற் காண்ட மாதலும், இக்காண்டத்து முதற்படலம் கூடலாயின வரலாறுணர்த்தலும் கருதிக் ‘கூடல்’ எனப் பெயர் கூறினார். பாதங்கள் நோவ என்றது ஆராமை மேலிட்டுக் கூறியவாறு. நடந்து என்பது சொல்லெச்சம். ஆதி என்றமையால் மாணிக்கமும் பரியும் விற்றல் கொள்க. இந்தனாதி, வடமொழி : நெடிற்சந்தி. ஆயுமவர் வெளியென்ப என முடிக்க. (1) சிற்சத்தி [அறுசீரடியாசிரிய விருத்தம்] திருமகள் வலக்கண் வாக்கின் சேயிழை யிடக்கண் ஞானப் பெருமக ணுதற்க ணாகப் பெற்றுவான் செல்வங் கல்வி அருமைவீ டளிப்பாள் யாவ ளவளுயிர்த் துணைவன் காண ஒருமுலை மறைந்து நாணி யொசிந்தபூங் கொம்பி னின்றாள். (இ - ள்.) திருமகள் வலக்கண் - பூமகளை வலக்கண்ணும், வாக்கின் சேயிழை இடக்கண் - நாமகளை இடக்கண்ணும், ஞானப்பெருமகள் நுதல் கண் ஆகப் பெற்று - ஞானக்கோமகளை நெற்றிக் கண்ணுமாகப் பெற்று, வான் செல்வம் கல்வி அருமை வீடு அளிப்பாள் யாவள் - சிறந்த செல்வத்தையும் கல்வியையும் எய்துதற்கரிய வீடுபேற்றையும் அருள்பவள் யாவள், அவள் - அம்முதல்வியே, உயிர்த்துணைவன் காண - தன் உயிர்த்துணைவன் கண்டவளவில், ஒரு முலை மறைந்து - ஒரு கொங்கை மறையப்பெற்று, நாணி - நாணுற்று, ஒசிந்த பூங்கொம் பின் நின்றாள் - துவண்ட பூங்கொம்புபோல நின்றாளாவள். வாக்கின் சேயிழை - வாக்கிற்குரிய சேயிழை; சேயிழை - செவ்விய அணிகளையுடையாள். ஞானப் பெருமகள் - உமை; அவள் ஞானந் தருதற்குரியளாதலை, " ஆகமங்க ளெங்கே யறுசமயந் தானெங்கே யோகங்க ளெங்கே யுணர்வெங்கே - பாகத் தருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு" என்று திருக்களிற்றுப்படியார் கூறுவது கொண்டு அறிக. இம்மூன்று சத்திகளையும் இங்ஙனமே இவ்வாசிரியர், திருநகரச் சிறப்பின்கண், ‘ திரும கட்கொரு தாமரைக் கூடமே திருமான் மரும கட்குவெண் டாமரை மாடமே ஞானந் தரும கட்சியோ கத்தனிப் பீடமே’ என எடுத்துரைத்தமை காண்க. சிவபெருமான் ஒருவனே வெவ்வேறுருவில் வேறு வேறு பேர் பெற்று நின்று படைப் பாதித் தொழில்களை நடத்துமாறு போலச் சிவசத்தி யொருத்தியே வெவ்வேறுருவில் அவ்விறைவன் புரியுந் தொழில்கட்குத் துணையாய் நின்று - உயிர்கட்குப் போகம் வீடருளுவளென்க; இந்நூலிலே முன், " ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற வேறு வேறுபேர் பெற்றென" என்றும், " பரையாதி விருப்பறிவு தொழிலாகி யுலகமெலாம் படைத்துக்காத்து வரையாது துடைத்து மறைத்தருளி" என்றும் கூறப்பெற்றமையும் நோக்குக. திருமகளாற் செல்வமும, வாக்கின் சேயிழையாற் கல்வியும், ஞானப்பெருமகளால் வீடும் அளிப்பாள் என நிரனிறையாகக் கொள்க; எனவேதிருமகள் முதலியோரால் அளிக்கப்படுவன வெல்லாம் சிவசத்தியால் அளிக்கப்படுவனவேயாமென்க. இவ்விரண்டு செய்யுளும் பொருளியல்பு கூறிய வாழ்த்துக்களாம். (2) கதிர்மதி மிலைந்த வேணிக் கண்ணுதல் வருண னேய அதிர்கடல் வறப்பச் செய்த வாடலீ தனையா னேய முதிர்மழை யேழின் மேலு முன்னைநான் முகிலும் போக்கி மதுரைநான் மாடக் கூட லாக்கிய வண்ணஞ் சொல்வாம். (இ - ள்.) கதிர்மதி மிலைந்த வேணிக்கண்ணுதல் - ஒளி பொருந்திய சந்திரனைத் தரித்த சடையினையுடைய சோமசுந்தரக் கடவுள், வருணன் ஏய அதிர்கடல் வறப்பச்செய்த ஆடல் ஈது- வருணன் ஏவிய ஒலிக்கின்ற கடலை வற்றச்செய்த திருவிளையாடல் இது; அனையான் ஏய - (இனி) அவ்வருணன் ஏவிய, முதிர் மழை ஏழின் மேலும் - சூல் முதிர்ந்த ஏழு முகிலின் மேலும், முன்னை நாம் முகிலும் போக்கி - முன் விடுத்த நான்குமுகிலையும் போக விடுத்து, மதுரை - மதுரைப்பதியை நான்மாடக்கூடல் ஆக்கியவண்ணம் சொல்வாம் - நான்மாடக் கூடலாகச் செய்தருளிய திருவிளையாடலைக் கூறுவாம். ஏவிய என்பன ஏயவென விகாரமாயின. ஈது, சுட்டு நீண்டது. சூல் முதிர்ந்த வென்க. முன்னைய எனற்பாலது முன்னை என நின்றது. இன்னுருபு விரித்து முன்போல என்னலுமாம். (3) எற்றுதெண் டிரைநீர்ச் சேர்ப்பன் றன்செய லிழுக்கி நாணம் உற்றிரு கண்ணுஞ் சேப்ப வுடன்றெழு கோபச் செந்தீப் பற்றிட வாகம் வெம்பிப் பரவையும் யாறும் வெந்து வற்றிட வெகுண்டு நின்றான் மானமும் வலியுங் குன்றான். (இ - ள்.) எற்று தெள் திரை நீர்ச் சேர்ப்பன் - (கரையை) மோதும் தெள்ளிய அலைகளையுடைய கடற் றலைவனாகிய வருணன், தன் செயல் இழுக்கி நாணம் உற்று - தனது செயல் தவறினமையால் நாணுதலுற்று, மானமும் வலியும் குன்றான் - தன் மானமும் வன்மையும் குறையாதவனாய், இரு கண்ணும் சேப்ப உடன்று எழுகோபச் செந்தீ பற்றிட - இரண்டு விழிகளும் சிவக்க மாறுபட்டெழுந்த சினமென்னும் செந்நெருப்பு மூளுதலால், ஆகம் வெம்பி - உடல்கருகி, பரவையும் ஆறும் வெந்து வற்றிட - கடலும் நதியும் வெந்து வற்றுமாறு, வெகுண்டு நின்றான் - சீறி நின்றான். திரைநீர் - கடல். சேர்ப்பன் - துறைவன்; ஈண்டுத் தலைவன் என்னும் பொருட்டு. இழுக்குதலால் என்பது இழுக்கியென நின்றது. சேப்ப, சிவப்ப என்பதன் மரூஉ, கடலும் யாறும் முதலாயின அவனுக்கு உடம்பாகலின் ‘ஆகம் வெம்பிப் பரவையும் யாறும் வெந்து வற்றிட’ என்றார். இறைவன் கடலை வற்றச் செய்தமை உணர்ந்த பின்னரும் பணிந்துய்தலின்றி, மாண்பிறந்த மானமும் மதமும் உடையனாயினான் என்பார் ‘மானமும் வலியுங் குன்றான்’ என்றார். குன்றான்:முற்றெச்சம். (4) நளிர்புனன் மதுரை மூதூர் நாயக னாட றன்னைத் தெளிகில னாகிப் பின்னுஞ் செழுமுகி லேழுங் கூவிக் குளிர்கடல் வறந்த தென்னக் குடித்தெழுந் திடித்துப் பெய்யா ஒளிவளர் மதுரை முற்று மொல்லெனக் களைமி னென்றான். (இ - ள்.) (அங்ஙனம் நின்ற வருணன்) நளிர் புனல் மதுரை மூதூர் நாயகன் ஆடல் தன்னைத் தெளிகிலனாகி - குளிர்ந்த புனல் சூழ்ந்த மதுரையாகிய தொல்பதியில் எழுந்தருளிய சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலைத் தெளியாதவனாகி, பின்னும் - மீளவும், செழுமுகில் ஏழும் கூவி - செழிய ஏழு முகில்களையும் அழைத்து, குளிர் கடல் வறந்தது என்னக் குடித்து எழுந்து இடித்துப் பெய்யா - (நீவிர்) குளிர்ந்த கடல் வற்றியது என்று சொல்லுமாறு நீரினைக் குடித்து மேலெழுந்து இடித்து மழையினைப் பொழிந்து, ஒளி வளர் மதுரை முற்றும் ஒல்லெனக் களைமின் என்றான் - புகழ்மிக்க மதுரைப் பதி முழுதையும் விரைந்து அழியுங்கள் என்று கூறினான். பெய்யா - பெய்து. ஒளி - புகழ். ஒல்லென: விரைவுக்குறிப்பு. (5) பொள்ளென மேக மேழும் புகுந்துபார் தெரிய முந்நீர்ப் பள்ளமும் வறப்ப முற்றப் பருகிமெய் கருகி மின்னித் தெள்ளருந் திசையும் வானுஞ் செவிடுறப் பிலமும் பாரும் விள்ளமால் வரைக ளெட்டும் வெடிபட மேருச் சாய. (இ - ள்.) மேகம் ஏழும் பொள்ளெனப் புகுந்து - ஏழுமுகிலு'8b விரைந்து சென்று, பார்தெரிய முந்நீர்ப் பள்ளமும் வ'8aப - நிலந் தோன்றக் கடலின் ஆழம் வற்றும்படி, முற்றப் பருகி - (நீரினை) முடியக் குடித்து, மெய் கருகி - உடல் கறுத்து, மின்னி - மின்னல் வீசி, தெள் அருந்திசையும் வானும் செவிடு உற - கண்டு தெளிதற்கரிய திசைகளும் வானும் செவிடு படவும், பிலமும் பாரும் விள்ள - பாதலமும் நிலவுலகும் பிளக்கவும், மால்வரைகள் எட்டும் வெடிபட மேருச்சாய - பெரிய மலைகள் எட்டும் வெடிக்கவும் மேருமலை சாயவும். பொள்ளென: விரைவுக் குறிப்பு; "பொள்ளென வாங்கே புறம் வேரார்" என்பது திருக்குறள. முந்நீராகிய பள்ளம் என்னலுமாம். பள்ளமும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. தெள்ளரும் - எல்லை கண்டு தெளிதலரிய. மால்வரைகள் - மேருவைச் சூழ்ந்த குலவரைகள். மேகம் ஏழும் வரைகள் எட்டும் மதுரைக் காண்டத்திற் கூறப்பட்டன; ஆண்டுக் காண்க. செவிடுற, விள்ள, வெடிபட, சாய என்னும் எச்சங்கள் வருஞ் செய்யுளில் உருமு வீழ என்பது கொண்டு முடியும். (6) ஊழிநாள் வெடிக்கு மண்ட கடாகத்தி னொலிபோ லார்த்துப் பாழிவா னுருமு வீழப் பணாடவி மணிகள் சிந்தி ஆழிநீர் ஞாலந் தாங்கு மராவுட னெளியத் திக்கிற் சூழிமால் யானை நின்ற நிலைகெடத் துணுக்கங் கொளள. (இ - ள்.) ஊழி நாள் வெடிக்கும் அண்ட கடாகத்தின் ஒலிபோல் ஆர்த்துப் பாழிவான்உருமு வீழ - ஊழிக்காலத்தில் வெடிக்கின்ற அண்ட கடாகத்தின் ஓசைபோல ஒலித்து வலிய பெரிய இடியேறுகள் விழவும், ஆழி நீர் ஞாலம் தாங்கும் அரா - கடல் நீராற் சூழப்பட்ட இந்நிலவுலகைத் தாங்குகின்ற அனந்தன், பணாடவிமணிகள் சிந்தி உடல் நெளிய - ஆயிரம் படங்களிலுமுள்ள, மணிகளைச் சிதறி உடலை நெளிக்கவும், திக்கில் - எண்டிசையிலுமுள்ள, சூழிமால் யானை - முகப்படாத்தையுடைய பெரிய யானைகள், நிலை கெடத் துணுக்கம் கொள்ள - நிலையழிய நடுக்கங் கொள்ளவும். ஒலிபோல் ஒளியுண்டாக ஆர்த்து என்க. உரும் என்பது உகரம் பெற்று உருமு என்றாயது; இதற்கு விதி, " ஈமும் கம்மும் உருமென் கிளவியும் ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன" என்னும் தொல்காப்பியச் சூத்திரமாகும். பணம் - படம்; அடவி- காடு; மிகுதியைக் குறித்தது. பணாடவி : நெடிற்சந்தி. நெளிய என்பது பிறவினைப் பொருட்டாயது; உடல் நெளிய என்பதனை ஒரு சொல்லாகக் கொண்டு, அராநெளிய என்னலுமாம். யானை - திக்கயங்கள்; ‘Fசை முகவேழம்’ என்றார் இளங்கோவடிகளும். (7) வெள்ளிய நீறு பூத்து முழவென வீங்கு காய்போற் றெள்ளிய வாலி சிந்தத் திரண்டதிண் பளிக்குத் தூண்போல் ஒள்ளிய தாரைசோர வும்பர்மீன் கணங்க ளோடுந் துள்ளிய திரையி லாடு மீன்கணந் துடித்து வீழ. (இ - ள்.) வெள்ளிய நீறு பூத்து முழவு என வீங்கு காய்போல்- வெண்மையான நீறு பூக்கப்பெற்று மத்தளம் போலப் பருத்த பூசQக் காயைப் போல, தெள்ளிய ஆலி சிந்த - தெளிந்த மழைத் துளிகள் சிந்தவும், திரண்ட திண் பளிக்குத்தூண்போல்- திரட்சியாகிய வலிய பளிங்குத் தூணைப் போல, ஒள்ளிய தாரை சோர - ஒளி பொருந்திய தாரைகள் பொழியவும், உ'8bபர் மீன் கணங்களோடும் - மேலிடத்துள்ள உடுக்களாகிய மீன் கூட்டங்களோடு, துள்ளிய திரையில் ஆடும் மீன்கணம் துடித்து வீழ - மேலெழுந்து வீசிய அலையின்கண் விளையாடும் மீன் கூட்டங்களும் துடித்து வீழவும். ‘வெள்ளிய நீறுபூத்து முழவென வீங்கு’ என்னும் அடையால் பூசணிக்காய் என்பதாயிற்று. ஆலி - ஆலங்கட்டியுமாம். " வெள்ளிவெண், கோல்நிரைத்தன போற்கொழுந் தாரைகள்" " வானம், நீர்த்திரள் பளிக்குத் தூணி சொரிந்திட" என்னும் சிந்தாமணித் தொடர்கள் இங்கு ஒப்பு நோக்கற் பாலன. பருமனைக் குறிக்கத் ‘தூண்போல்’ என்றார். உம்பர் - மேலிடம்; விசும்பிற்காயிற்று. (8) ஆர்த்தெழு கொண்மூ வேழுஞ் சராசர மனைத்துஞ் சூழ்ந்து போர்த்தன ஞால முண்ணப் புக்கதோர் வடிவங் கொண்ட தீர்த்தனில் விசும்பும் பாருந் திசைகளுந் தெரியா வாகப் பார்த்தகண் ணுழையா வாகப் பரந்திருள் கான்ற வன்றே. (இ - ள்.) ஆர்த்து எழு கொண்மூ ஏழும் - ஆரவாரித்து எழுந்த ஏழு மேகங்களும், சர அசரம் அனைத்தும் சூழ்ந்து போர்த்தன- இயங்கியற் பொருளும் நிலையியற் பொருளுமாகிய அனைத்தையும் வளைந்து மூடினவாய், ஞாலம் உண்ணப் புக்கது ஓர் வடிவம் கொண்ட தீர்த்தனில் - உலகத்தை அழிக்கப் புகுந்ததாகிய ஒப்பற்ற வடிவத்தினைக் கொண்ட இறைவனைப் போல, விசும்பும் பாரும் திசைகளும் தெரியாவாக - விண்ணும் மண்ணும் திசைகளும் தோன்றாதவாறும், பார்த்தகண் நுழையாவாக - நோக்கிய கண்கள் (இருட் செறிவால் உள்) நுழையாத வாறும், பரந்து இருள் கான்ற - பரவி இருளைத் தோற்றுவித்தன. மேல் இரண்டு செய்யுளிலும் போந்த செயவெ னெச்சங்களை, இச்செய்யுளிலுள்ள ‘ஆர்த்தெழு’ என்பது கொண்டேனும், ‘போர்த்தன’ என்பது கொண்டேனும் முடிக்க. போர்த்தன : முற்றெச்சம். வடிவம் - பிரளயகால உருத்திரவடிவம். அன்று, ஏ : அசைகள். (9) பைஞ்சுட ரெறிக்கும் பச்சை காரொளி பரப்பு நீலம் புஞ்சவா ளுடுக்க ளன்ன நித்திலம் பொன்னங் குப்பை செஞ்சுடர் மணிக டுப்புச் சிதறுவ கணவரோடும் விஞ்சையர் மகளி ரூடி வெறுத்தெறி கலன்கள் போல. (இ - ள்.) பைஞ்சுடர் எறிக்கும் பச்சை - பசிய ஒளியினை வீசும் மரகதங்களையும், கார் ஒளி பரப்பும் நீலம் - கரிய ஒளியினை வீசும் நீல மணிகளையும், புஞ்சம் வாள் உடுக்கள் அன்ன நித்திலம் - திரண்ட ஒள்ளிய விண் மீன்களை யொத்த முத்துக்களையும், பொன்னம் குப்பை - பொற்குவியலையும், செஞ்சுடர் மணிகள் - சிவந்த ஒளியினையுடைய மாணிக்க மணி களையும், துப்பு - பவளங்களையும், விஞ்சையர் மகளிர் கணவரோடும் ஊடி - விஞ்சையரின் மகளிர்கள் நாயகரோடும் புலந்து, வெறுத்து எறிகலன்கள் போலச் சிதறுவ - வெறுப்புற்று எறிகின்ற அணிகள் போலச் சிந்தாநின்றன. புஞ்சம் - திரட்சி. பொன்னம், அம் : சாரியை. விசும்பினின்று வீழ்தலால் விஞ்சையர் மகளிரைக் கூறினார். ஏழு மேகங்களுள் சம்வர்த்தம் என்பது மணிகளையும், புட்கலாவர்த்தம் என்பது பொன்னையும் பொழிவனவா மென்க. (10) கடியகா லுதைப்பப் பெய்யுங் கடுஞ்செல வெழிலி மாடக் கொடியநீ ணகரைச் சூழ்ந்து புதைத்தலுங் கோலொன் றோச்சிப் படியெலாம் புரக்குங் கோனு நகருளார் பலரு ஞாலம் மடியுநா ளிதுவே யென்னா மயங்கினா ருயங்கி னாரே. (இ - ள்.) கடியகால் உதைப்ப - வேகமாகிய காற்று அடித்துத் தாக்க, பெய்யும் கடுஞ்செலவு எழிலி - மழையைப் பொழியும் கடிய செலவினையுடைய மேகங்கள், கொடிய மாட நீள் நகரைச் சூழ்ந்து புதைத்தலும் - கொடிகளையுடைய மாடங்கள் நெருங்கிய நீண்ட நகரைச் சூழ்ந்து மூடிய வளவில், கோல் ஒன்று ஓச்சி படி எலாம் புரக்கும் கோனும் - தனிச் செங்கோல் நடாத்தி உலக மனைத்தையும் காக்கும் அபிடேக பாண்டியனும், நகர் உளார் பலரும் - நகரத்திலுள்ளவர் பலரும், ஞாலம் மடியும் நாள் இதுவே என்னா மயங்கினார் உயங்கினார் - உலகம் அழியும் நாள் இதுவே யென்று மன மயங்கி வாடினார்கள். கொடிய, கொடி யென்னும் பெயரடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். கோல் ஒன்று ஓச்சல் - தனிச்செங்கோல் செலுத்தல்; பொதுவறப் புரத்தல். உயங்குதல் - வாடுதல். மயங்கினார் : வினையெச்சப் பொருட்டாயது. (11) கண்ணுதல் மூர்த்தி தானே யின்னமுங் காக்கு மென்னாப் புண்ணிய நகரா ரோடும் பொருக்கெனக் கோயி லெய்தி விண்ணிழி விமான வாழ்க்கை விடைய வனடிக்கீழ் வீழ்ந்தான் அண்ணலா ராடன் முன்னு மறிந்துகை கண்ட வேந்தன். (இ - ள்.) அண்ணலார் ஆடல் முன்னும் அறிந்து கைகண்ட வேந்தன் - சோம சுந்தரக் கடவுளின் திருவிளையாடலை முன்னரும் உணர்ந்து கைவந்த பாண்டி மன்னன், கண்ணுதல் மூர்த்தி தானே இன்னமும் காக்கும் என்னா - நெற்றியிற் கண்ணையுடைய அவ்விறைவனே இன்னமும் காத்தருளுவனென்று, புண்ணிய நகராரோடும் பொருக்கெனக் கோயில் எய்தி - அறம் மிகுந்த நகரத்திலுள்ளவரோடும் விரைந்து திருக்கோயிலை யடைந்து, விண் இழி விமான வாழ்க்கை விடையவன் அடிக்கீழ் வீழ்ந்தான் - வானுலகினின்றும் இறங்கிய விமானத்தின்கண் அமர்ந்தருளும் இடப வூர்தியையுடைய சொக்கலிங்க மூர்த்தியின் திருவடியின்கீழ் விழுந்தான். முதற்கண் உலக மழியுங்கால மென்று மயங்கிய பாண்டியன், இறைவன் றிருவிளையாடலை முன் அறிந்து வைத்தவனாகலின் தெளிவுற்றுக் கோயிலை யடைந்தானென்க. தானே, தான. அசை: ஏ : தேற்றம். இன்னமும் : உம்மை இறந்தது தழுவிய எச்சம். புண்ணியம் நகருக்கு அடை. பொருக்கென : விரைவுக்குறிப்பு. (12) விடையினை யால முண்ட மிடற்றினை கங்கை தாங்குஞ் சடையினை கூற்றை வென்ற தாளினை மேருச் சாபப் படையினை யடியேந் துன்பப் பாட்டினை நீக்கி யாளும் நடையினை யாகி1 யெங்க ணல்லுயிர் காத்தல் வேண்டும். (இ - ள்.) விடையினை - இடபவூர்தியையுடையாய், ஆலம் உண்ட மிடற்றினை - நஞ்சை யுண்டருளிய திருமிடற்றினையுடையாய், கங்கை தாங்கும் சடையினை - கங்கையைத் தாங்கிய சடையினை யுடையாய், கூற்றை வென்ற தாளினை - கூற்றுவனை உதைத்த திருவடியை யுடையாய், மேரு சாபப்படையினை - மேரு மலையாகிய விற்படையை யுடையாய், அடியேம் துன்பப்பாட்டினை நீக்கி ஆளும் நடையினையாகி - அடியேங்களின் அல்லற்பாட்டினைப் போக்கி ஆளுகின்ற அருட் செயலை உடையையாகி, எங்கள் நல் உயிர் காத்தல் வேண்டும் - எங்கள் இனிய உயிர்களைப் பாதுகாத்தருளல் வேண்டும். விடையினை, ஆலமுண்ட மிடற்றினை, கங்கை தாங்குஞ்சடையினை, கூற்றை வென்ற தாளினை, மேருச்சாபப் படையினை என்னும் பெயர்கள், அடியேங்களின் துன்பத்தைப் போக்கிக் காத்தருள வல்லாய் என்னும் கருத்தோடு கூடிய விசேடியங்கள் ஆகலின் கருத்துடையடை கொளியணி. விடையினை முதலியவற்றில் இன் : சாரியை. ஐ : முன்னிலை விகுதி. துன்பம் என்னும் பண்புப்பெயர் பாடு என்னும் விகுதி பெற்று ஒரு சொல்லாய்த் தொழிற்பெயராயிற்று. தேவgர்க்குத் தொண்டு செய்து பேரின்ப வாழ்வெய்துதற்குரிய உயிரென்பார் ‘நல்லுயிர்’ என்றாரென்க. (13) என்னலுந் தென்னர்க் கென்று மெய்திய விடுக்கண் டீர்க்கும் முன்னவன் முன்போ னான்கு முகிலையு நோக்கி யின்ன தொன்னக ரெல்லை நான்குஞ் சூழ்ந்துநான் மாட மாகி வின்னெடு மாரி1 யேழும் விலக்குமி னெனவி டுத்தான். (இ - ள்.) என்னலும் - என்று முறையிட்ட வளவில், தென்னர்க்கு எய்திய இடுக்கண் என்றும் தீர்க்கும் முன்னவன்- பாண்டியர்களுக்கு உண்டாகும் துன்பங்களை எப்பொழுதும் போக்கி யருளும் முன்னவனாகிய சோமசுந்தரக் கடவுள், நான்கு முகிலையும் முன்போல் நோக்கி - நான்கு முகில்களையும் முன்போலவே பார்த்து, இன்ன தொல்நகர் எல்லை நான்கும் சூழ்ந்து - இந்தத் தொன்று தொட்டுள்ள மதுரைப் பதியின் நான்கெல்லையையும் வளைந்து, நான் மாடம் ஆகி - நான்கு மாடங்களாகி, வில் நெடு மாரி ஏழும் விலக்குமின் என விடுத்தான் - வில்லினையுடைய நீண்ட ஏழு முகில்களையும் விலக்குங்கள் என்று விடுத்தருளினான். வேந்தன் காத்தல் வேண்டும் என்னலும் என மேலிரண்டு செய்யுட்களோடு இயைத்து ஒரு தொடராக்குக. சோமசுந்தர்கடவுள் இப்பொழுது இத்துன்பத்தைப் போக்குவது புதுமை யன்றென்பார் ‘தென்னர்க் கென்றும் எய்திய இடுக்கண் தீர்க்கும் முன்னவன்’ என்றார். முன்போல் என்றது முந்திய திருவிளையாடலைச் சுட்டிற்று. (14) வந்துநான் மாட மாகி வளைந்துநாற் றிசையுஞ் சூழ்ந்து சந்துவாய் தெரியா தொன்றித் தாமொரு குடிலாய் மாடப் பந்திகோ புரஞ்செய் குன்றங் கால்கள்போற் பரிப்பப் போர்த்த இந்துவார் சடையோ னேய வெழிலிமா நகர மெங்கும். (இ - ள்.) இந்துவார் சடையோன் ஏய எழிலி - சந்திரனை யணிந்த நீண்ட சடையினையுடைய சோமசுந்தரக் கடவுள் ஏவிய முகில்கள், வந்து நான் மாடமாகி வளைந்து - வந்து நான் மாடமாய் வளைந்து, நால் திசையும் சூழ்ந்து சந்துவாய் தெரியாது ஒன்றி - நான்கு திசைகளிலும் சூழ்ந்து பொருத்துவாய் தோன்றாது ஒன்று பட்டு, தாம் ஒரு குடிலாய் - தாம் ஒரு குடிசையாகி, மாடப் பந்தி கோபுரம் செய்குன்றம் கால்கள் போல் பரிப்ப - மாடவரிசைகளும் கோபுரங்களும் கட்டுமலைகளுமாகிய இவைகள் தூண்களைப்போல நின்று தாங்க, மாநகரம் எங்கும் போர்த்த - பெருமையுடைய அந்நகர முழுதையும் மறைத்தன. சந்துவாய் - கூடுமிடம். தெரியாது - தோன்றாவாறு. பரிப்பக் குடிலாய்ப் போர்த்த என்க. குடில் என்றது ஈண்டு மேற்கூரையை. மாடப் பந்தி முதலியவற்றில் எண்ணும்மை விரிக்க. போர்த்த ; அன்பெறாத முற்று, ஏய, ஏவிய என்பதன் விகாரம். (15) அன்னநான் மாடத் துள்ளு நகருளா ரமைச்சர் வேந்தன் தன்னநாற் கருவித் தானை சராசரம் பிறவுந் தாழ்ந்து முன்னைநா டனினு மின்ப மூழ்கிநன் கிருந்தா ரூழிற் பொன்னனாள் பாகன் றாளிற் புக்கமர்ந் திருந்தா ரொத்தார். (இ - ள்.) அன்னநான் மாடத்துள்ளும் - அந்த நான்கு மாடங் களினுள்ளும், நகருளார் அமைச்சர் வேந்தன் - நகரிலுள்ளவரும் மந்திரிகளும் மன்னனும், தன்ன நால் கருவித்தானை - அவனுடைய நால்வகைப்பட்ட கருவியாகிய சேனைகளும், சர அசரம் பிறவும் தாழ்ந்து- இயங்குவனவும் நிற்பனவுமாகிய பிறவுயிர்களும் தங்கி, முன்னை நாள் தனினும் இன்பம் மூழ்கி நன்கு இருந்தார் - முன்னாளினும் இன்பக் கடலிற் றிளைத்து நன்றாக இருந்தனர் (ஆதலின் அவர்), ஊழின் - முறைப்படி, பொன்னனாள் பாகன் தாளில் புக்கு அமர்ந்து இருந்தார் ஒத்தார் - உமைபாகனாகிய சிவபெருமானது திருவடி நீழலிற் புகுந்து மகிழ்ச்சி யுடனிருப்பவரை ஒத்தனர். தன்ன என்பதில் அகரம் ஆறனுருபு, னகரம் விரித்தல். அவன் றன்னுடைய வென்க. கருவித்தானை : இருபெயரொட்டு. பிறவும் என்பதிலுள்ள உம்மையை நகருளார் முதலிய வற்றோடும் கூட்டுக. தாழ்தல் - தங்குதல். முன்னைநாள் என்பதனை முன்னாட் களெனப் பொதுவாகக் கொள்க; வருணன்விட்ட கடலை வற்றச்செய்த நாள் என்பாருமுளர். ஆகலின் அவர் என வருவிக்க. சிவபுண்ணிய முதிர்ச்சியால் இருவினை யொப்பு முதலியன எய்தப்பெற்று அடைய வேண்டுவதாகலின், ஊழிற்புக்கமர்ந்திருந்தார் என்றார். (16) கழைகெழு வரையி னுச்சி கவிழ்கின்ற புயல்போற் கார்சூழ்ந் திழைமணி மாடத் தும்ப ரெறிதுளி யுடைந்து துள்ளத் தழைகடல் வறப்ப வாங்கித் தம்முடல் வறப்பப் பெய்து மழைகளும் வெள்கி நின்ற வருணனும் வெள்கி நின்றான். (இ - ள்.) கழை கெழுவரையின் உச்சி கவிழ்கின்ற புயல்போல் - மூங்கில்கள் நிறைந்த மலையின் உச்சியிற் பெய்கின்ற மழை உடைந்து சிதறுதல்போல, கார் சூழ்ந்து இழைமணி மாடத்து உம்பர் எறிதுளி உடைந்து துள்ள - (சிவபிரான் விடுத்த நான்கு) முகில்களாற் சூழ்ந்தியற்றப்பட்ட அழகிய மாடத்தின்மேல் எறியப்படுகின்ற துளிகள் உடைந்து சிதற, தழை கடல் வறப்ப வாங்கித் தம் உடல் வறப்பப் பெய்து - நீர் நிரம்பிய கடலானது வறளுமாறு நீரினை முகந்து தமது உடல் பசையறுமாறு பொழிந்து, மழைகளும் வெள்கி நின்ற - (வருணன் விடுத்த) முகில்களும் வெள்குற்று நின்றன; வருணனும் வெள்கி நின்றான் - வருணனும் நாணமுற்று நின்றான் எ - று. முகந்த நீரைக் கவிழ்ப்பது போன்று ஒருங்கு பொழியும் மழை யென்பார் ‘கவிழ்கின்ற புயல்’ என்றும், கடுவிசையுடன் வீழ்க்கப்படும் துளியென்பார் ‘எறிதுளி’ என்றும் கூறினார். புயல் மழை யென்னும் பொருள் தருதலை ‘புயலென்னும் வாரி’ என்பதனா னறிக. இழை - இயற்றப்பட்ட. மழைகள் வெள்குதல் நாணுதலும், வெண்ணிற மாதலும், வருணன் வெள்குதலாவது உளங்கூசுதல். (17) நடுங்கினன் கழிந்த வச்ச நாணமீ தூர மானம் ஒடுங்கின னுள்ளத் துள்ளோ ருவகைவந் தெய்தப் பொற்பூத1 தடங்கரை குறுகா முன்னோய் தணிந்துபின் றோய்ந்து பாசம் மடங்கினன் மடங்கா வன்பின் வள்ளலைப்2 பூசை செய்வான். (இ - ள்.) (அங்ஙனம் நின்ற வருணன்) நடுங்கினன் - உடல் நடுங்கி, கழிந்த அச்சம் நாணம் மீதூர - மிகுந்த அச்சமும் நாணமும் மிக, மானம் ஒடுங்கினன் -மானம் குறைந்து, உள்ளத்துள் ஓர் உவகை எய்த - மனத்தின்கண் ஒரு மகிழ்ச்சி வந்து பொருந்த, பொற்பூத் தடம் கரை குறுகாமுன் - பொற்றாமரை வாவியின் கரையை அடைதற்கு முன்னரே, நோய் தணிந்து - பிணி நீங்கப்பெற்று, பின் தோய்ந்து - பின் நீராடி, பாசம் மடங்கினன் - பாசத்தின் வலி மடங்கப்பெற்று, மடங்கா அன்பின் வள்ளலைப் பூசை செய்வான் - குறையாத அன்புடன் வள்ளலாகிய சோமசுந்தரக் கடவுளைப் பூசிக்கத் தொடங்கினான். கழிந்த : கழி என்னும் உரிச்சொல்லடியாகவந்த பெயரெச்சவினை: மீதூர்தல் - மேன்மேல் அடர்தல். மானம் - தாழாமை. முன்பில்லாதோர் உவகை என்பார் ‘ஓர் உவகை’ என்றார். தடங்கரை குறுகி அங்ஙனங் குறுகு முன்னே நோய் தணிந்து என விரிக்க. குறுகுமுன் - குறுகுதற்கு முன்; குறுகாமு'a1 என வழக்குப்பற்றி வந்தது; பண்புத் தொகையுமாம். நோய் என்றது முதற் காண்டத்து இறுதிப் படலத்திற் கூறிய வயிற்று நோயை. பாசம் - ஆணவம் முதலியன. நடுங்கினன், ஒடுங்கினன, மடங்கினன் என்பன முற்றெச்சங்கள். (18) புனிதநீ றாடிக் கண்டி பூண்டுவான் கங்கை யாதி வனிதையர் பசும்பொற் கும்ப வாசநீர் வடித்து நீட்டப் பனிமலர் சந்தங் கந்த மணிக்கலன் பசும்பொன் னாடை இனையன பிறவு மீன்று கற்பக மெடுத்துக் காட்ட (இ - ள்) புனித நீறு ஆடி - தூய திருநீறு தரித்து, கண்டிபூண்டு - உருத்திராக்க வடம் அணிந்து, வான் கங்கை ஆதி வனிதையர் - ஆகாய கங்கை முதலிய மாதர்கள. பசும்பொன் கும்பம் வாசநீர் வடித்து நீட்ட - பசும் பொன்னாலாகிய கலசத்தில் மணம் கலந்த நீரினை வடித்துத் தரவும், பனிமலர் சந்தம் கந்தம் மணிக்கலன் பசும் பொன் ஆடை அனையன பிறவும் ஈன்று - குளிர்ந்த மலரையும் சந்தனத்தையும் ஏனைய மணப் பொருள்களையும் மணிக்கலன்களையும் பசிய பொன்னாடையையும் இவைபோன்ற பிறவற்றையும் பெற்று, கற்பகம் எடுத்துக்காட்ட- கற்பகத்தரு எடுத்துக் கொடுக்கவும் எ - று. கந்தம் : ஆகுபெயர். சந்தம் முதலியவற்றையும் பிறவற்றையும் என்க. (19) ஐங்கனி யமுத மைந்து கௌவிய மமுது தூபஞ் செங்கதிர் விளக்க மின்ன தேவரான் கொடுப்பச் சேற்கண் நங்கைதன் பதியைப் பூசித் தாயிர நாமங் கூறிப் பைங்கதிர் முத்தஞ் சாத்தித் தொழுதடி பணிந்து நின்றான். (இ - ள்.) ஐங்கனி அமுதம் ஐந்து கௌவியம் அமுது தூபம் செங்கதிர் விளக்கம் இன்னதேவர் ஆன் கொடுப்ப - ஐந்து கனிகளையும் ஐந்து அமிர்தங்களையும் ஐந்து கௌவியங்களையும் திருவமுதையும் தூபத்தையும் செவ்வொளியினையுடைய தீபத்தையும் இவை போன்ற பிறவற்றையும் காமதேனு வழங்கவும், சேல்கண் நங்கை தன் பதியைப் பூசித்து - அங்கயற்கண்ணம்மையின் நாயகராகிய சோம சுந்தரக் கடவுளைப் பூசித்து, ஆயிரம் நாமம் கூறிப் பைங்கதிர் முத்தம் சாத்தி - ஆயிரம் திருநாமங்களையும் கூறிப் பசிய ஒளியையுடைய முத்துக்களைச் சாத்தி, தொழுது அடிபணிந்து நின்றான் - திருவடியை வணங்கிக் கும்பிட்டு நின்றான். ஐங்கனி வாழைக்கனி முதலியன. ஐந்து என்பதனை அமுதத் தோடும் கௌவியத்தோடும் கூட்டுக. இன்ன : குறிப்பு வினைப்பெயர். ஒரு திருப்பெயருக்கு ஒரு முத்தாக சாத்தி என்க. (20) அருச்சனை யுவந்த வாதி யமலனீ யாது வேண்டிற் றுரைத்தியென் றோதநீர்க்கோ னொல்லைதாழ்ந் தொன்றி னாலுங் கரைத்திட வரிய விந்தக் கடியவென் வயிற்று நோய்நின் திரைத்தட மாடு முன்னே1 தீர்ந்திடப் பெற்றே னெந்தாய். (இ - ள்.) அருச்சனை உவந்த ஆதி அமலன் - அவன் பூசனையை மகிழ்ந்து ஏற்ற முதல்வனாகிய சொக்கலிங்கக் கடவுள், நீ வேண்டிற்று யாது உரைத்தி என்று ஓத - நீ விரும்பியது யாது அதனை உரைப்பாயென்று கூற, நீர்க்கோன் - கடற்றலைவனாகிய வருணன், ஒல்லை தாழ்ந்து - விரைவில் வணங்கி, எந்தாய் - எந்தையே, ஒன்றினாலும் கரைத்திட அரிய - ஒன்றாலும் போக்குதற்கரிய, இந்தக் கடிய என் வயிற்று நோய் - இந்தக் கொடிய எனது வயிற்று நோயானது, நின் திரைத்தடம் ஆடும் முன்னே தீர்ந்திடப் பெற்றேன் -உன்னுடைய அலைகளையுடைய பொற்றாமரை வாவியில் ஆடுதற்கு முன்னே நீங்கப்பெற்றேன். ஒன்றினாலும் - மணிமந்திரம் மருந்து என்பவற்றுள் எதனாலு'8b, அரிய கடிய நோய் என்க. (21) [அறுசீரடியாசிரிய விருத்தம்] வேதமுதற் கலைகாட்சி முதலளவை விரிஞ்சன்முதல் விண்ணோர் செய்யுஞ் சோதனையு ளகப்படாச் சோதியுனைச் சோதிக்கத் துணிந்தே னந்தோ பேதைமையே னிடத்தென்ன குணங்கண்டென் பிணிதீர்த்தென் பெற்றா யாசை கோதமிலாய் குற்றமே குணமாகக் கொள்வதுநின் குணமோ வையா. (இ - ள்.) வேதம் முதல் கலை - மறைமுதலிய கலைகளுள்ளும், காட்சி முதல் அளவை - காட்சி முதலிய ஏனை அளவைகளுள்ளும், விரிஞ்சன் முதல் விண்ணோர் செய்யும் சோதனையுள் - பிரமன் முதலிய தேவர்கள் செய்யும் ஆராய்ச்சியுள்ளும், அகப்படாச் சோதி - அகப்படாத ஒளி வடிவினனே, அந்தோ உனைச் சோதிக்கத் துணிந்தேன் - ஐயோ நின்னை (ஒன்றுக்கும் பற்றாத யானும்) ஆராயத் துணிந்தேனே, பேதைமையேன் இடத்து என்ன குணம் கண்டு என் பிணி தீர்த்து என் பெற்றாய் - அறிவிலியாகிய என்னிடத்து என்ன குணநலத்தினைக் கண்டு எனது நோயைப் போக்கி அதனால் என்ன பேறு பெற்றனை, ஆசை கோதம் இலாய் - விருப்புவெறுப்பில்லாதவனே, ஐயா - ஐயனே, குற்றம் குணமாகவே கொள்வது நின் குணமோ - அடியார் செய்யும் குற்றங்களைக் குணமாகவே கொள்வது நினது அருட் குணமோ! வேதமுதற்கலை - உரையளவை. காட்சி முதலியவற்றிற்கு எய்தாதவற்றையும் உணர்த்தலின் உரையளவையை வேறு பிரித்தோதினார். கலையானும் அளவையானும் விண்ணோர் செய்யும் சோதனை எனலுமாம்; " மறையினா லயனால் மாலால் மனத்தினால் வாக்கால் மற்றும் குறைவிலா வளவி னாலுங் கூறொணா தாகிநின்ற இறைவனார்" என்று சிவஞான சித்தியார் கூறுவது காண்க. எத்தனையும் அரிய உன்னை இறப்ப இழிந்த யானும் சோதிக்கத் துணிந்தேனே என்றிரங்கி ‘அந்தோ’ என்றான். ‘ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம் உறவு சீலம், வழுக்கிலாத் தவம் தானங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை, அழுக்கிலாத் துறவு அடக்கம் அறிவோடு அர்ச்சித்தல், முதலியவற்றுள் ஒன்றும் உடையனல்லேன் என்பான் ‘என்ன குணங்கண்டு’ என்றான். என்ன குணங்கண்டு என்பிணி தீர்த்தாய், பிணி தீர்த்து என் பெற்றாய் என விரிக்க. கோதம், குரோதம் என்பதன் சிதைவு. " யாதுநீ பெற்றதொன் றென்பால்" " குன்றே யனைய குற்றங்கள் குணமா மென்றே நீ கொண்டால்" என்னும் மணிவாசகங்கள் இங்கே சிந்திக்கற்பாலன. (22) பொன்னகரான் காலந்தாழ்த் துனையருச்சித் தயர்ச்சியொடும் போன வாறும் என்னெனயான் வினவியதும் வலாரியிறை கொடுத்ததுமவ் விறைக்கு நேர்யான் பின்னைவினா யதுமவன்சொல் வழியுன்னைச் சோதித்த பெற்றி தானும் முன்னவனே யுன்னருளா லென்பிணிக்கு மருந்தாகி முடிந்த தன்றே. (இ - ள்.) பொன் நகரான் காலம் தாழ்த்து உனை அருச்சித்து அயர்ச்சியொடும் போனவாறும் - பொன்னுலகை யுடையவனாகிய இந்திரன் காலந் தாழ்த்து உன்னைப் பூசித்தலால் மனக் கவலையோடு போன தன்மையும், என் என யான் வினவியதும் - (அவ்வயர்ச்சிக்குக் காரணம்) யாது என யான் வினவியதும், வலாரி இறை கொடுத்ததும்- இந்திரன் விடை இறுத்தது, அவ்விறைக்கு நேர் - அவ்விடைக்கு நேராக, யான் பின்னை வினாயதும் - யான் பின்பு வினாவியதும், அவன் சொல் வழி உன்னைச் சோதித்த பெற்றி தானும் - (அதற்கு விடையாக) அவன் கூறிய நெறியினின்று நின்னைச் சோதித்த தன்மையும் ஆகிய இவை யனைத்தும், முன்னவனே உன் அருளால் என் பிணிக்கு மருந்து ஆகி முடிந்தது - முதல்வனே! நின் திருவருளால் எனது நோய்க்கு மருந்தாய் முடிந்தது. முடிந்தது : பன்மையிலொருமை. தான், அன்று, ஏ என்பன அசைகள். (23) ஆறுமதி முடியணிந்த வருட்கடலே வயிற்றுநோ யன்றி மேனாள் மாறுபடு மிருவினையு மலவலியுங் கெடவீட்டின் வழியும் பெற்றேன் வேறினிமந் திரமென்னை மணியென்னை மருந்தென்னை மெய்மையாகத் தேறுமவர்க் கிப்புனித தீர்த்தமே பிணியனைத்துந் தீர்ப்ப தன்றோ. (இ - ள்.) ஆறுமதி முடி அணிந்த அருட் கடலே - கங்கையையும் சந்திரனையும் முடியிற் றரித்த கருணைக் கடலே, வயிற்று நோய் அன்றி -என் வயிற்று நோயே அல்லாமல், மேல் நாள் மாறுபடும் இரு வினையும் மல வலியும் கெட வீட்டின் வழியும் பெற்றேன் - அனாதியே என்னுடன் மாறுபட்ட இருவினைகளும் ஆணவ மலத்தின் வலியும் கெட வீட்டு நெறியையும் அடைந்தேன்; வேறு இனி மந்திரம் என்னை மணி என்னை மருந்து என்னை- இனி வேறு மந்திரம் எதற்கு மணி யாதினுக்கு மருந்து எதன் பொருட்டு, மெய்மையாகத் தேறுமவர்க்கு - உண்மையாகத் தெளிய வல்லோருக்கு, இப்புனித தீர்த்தமே - இந்தத் தூய தீர்த்தமே, பிணி அனைத்தும் தீர்ப்பது - நோய் முற்றும் போக்குவதாகும். மந்திரம் மணி மருந்து என்பன நோய் தீர்த்தற்குரியன; இறைவன் சார்பானே எல்லா நோயும் நீங்குமென்றார். " மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்" என ஆளுடைய அரசுகளகூறுமாறுங் காண்க. என்னை - எற்றிற்கு என்னும் பொருட்டு. (24) [மேற்படிவேறு] அடியனேன் முன்னஞ் செய்த வபராத மிரண்டுந் தீரும் படிபொறுத் தருள்வா யென்று பன்முறை பரவித் தாழ்ந்து மடிவிலா மகிழ்ச்சி பொங்க வரங்களுஞ் சிறிது வேண்டிக் கடியதன் னகரம் புக்கான் குடதிசைக் காவல் வேந்தன். (இ - ள்.) அடியனேன் முன்னம் செய்த அபராதம் இரண்டும் தீரும்படி பொறுத்தருள்வாய் என்று - அடியேன் முன் செய்த குற்றமிரண்டும் நீங்குமாறு பொறுத்தருள வேண்டுமென்று, ப'99 முறை பரவித் தாழ்ந்து - பல முறை துதித்து வணங்கி, மடிவு இலா மகிழ்ச்சி பொங்க - அழிவில்லாத மகிழ்ச்சி மேலிட, சிறிது வரங்களும் வேண்டி - சில வரங்களையும் விரும்பிப் பெற்று, கடியதன் நகரம் புக்கான் - காவலையுடைய தனது நகரத்திற் புகுந்தான்; குடதிசைக் காவல் வேந்தன் - மேற்றிசைக் காவலனாகிய வருணன். அபராதம் இரண்டு - மதுரையை யழிக்கக் கடலை யேவியதும், முகில்களை யேவியதும். வேண்டிப் பெற்று என விரிக்க. கடிய, குறிப்புப் பெயரெச்சம். வேந்தன் என்பதனை மேல் 21-ஆம் செய்யுளிலுள்ள நீர்க்கோன் என்பதனோடு கூட்டி, வேந்தனாகிய நீர்க்கோன் என்க. (25) வன்றிறல் வருணன் விட்ட மாரியை விலக்க வீசன் மின்றிகழ் சடையி னின்று நீங்கிய மேக நான்குங் குன்றுபோ னிவந்து நான்கு கூடமாக் கூட லாலே அன்றுநான் மாடக் கூட லானதான் மதுரை மூதூர். (இ - ள்.) வன்திறல் வருணன் விட்ட மாரியை விலக்க - மிக்க வலியினையுடைய வருணன் ஏவிய முகில்களைத் தடுக்கும் பொருட்டு, ஈசன் மின்திகழ் சடையினின்று நீங்கிய மேகம் நான்கும் - இறைவனது மின்போல விளங்கும் சடையினின்று நீங்கிய நான்கு முகில்களும், குன்றுபோல் நிவந்து நான்கு கூடமாக் கூடலால் - மலைபோல உயர்ந்து நான்கு மாடமாகக் கூடுதலால், மதுரை மூதூர் அன்று நான் மாடக் கூடல் ஆனது - மதுரையாகிய பழைய பதியானது அந்நாள் தொட்டு நான்மாடக் கூடல் என்னும் பெயருடையதாயிற்று. வன்றிறல் : ஒருபொருட் பன்மொழி, ஆக வென்பது ஈறுதொக்கது. அன்று தொட்டென்க. ஆல் : அசை. (26) ஆகச் செய்யுள் 1332. இருபதாவது எல்லாம்வல்ல சித்தரான படலம் [கலிநிலைத்துறை] சத்த நான்மறைப் பொருள்வரை தள்ளுநீண் முடிமேல் வைத்த கார்கணான் மாடமாய் மதுரைமேல் வருணன் உய்த்த மாரியைத் தடுத்தவா றுரைத்துமே றுயர்த்தோர் சித்த ராய்விளை யாடியறி செயல்சி துரைப்பாம். (இ - ள்.) சத்தம் நான் மறைப்பொருள் வரைதள்ளும் நீளமுடி மேல் வைத்த - ஒலி வடிவாகிய நான்கு மறைகளின் பொருளினெல்லையைக் கடந்த நீண்ட திருமுடியின்கண் வைத்த, கார்கள் நான் மாடமாய் - முகில்கள் நான்கு மாடங்களாகி, மதுரைமேல் வருணன் உய்த்த மாரியைத் தடுத்தவாறு உரைத்தும் - மதுரையின் மேல் வருணன் ஏவிய முகில்களை விலக்கிய திருவிளையாடலைக் கூறினேம்; ஏறு உயர்த்தோர் - (இனி) இடபக்கொடியையுயர்த்திய சொக்கலிங்க மூர்த்தி, சித்தராய் விளையாடிய செயல் சிறிது உரைப்பாம் - எல்லாம் வல்ல சித்தராகி விளையாடிய திருவிளையாடலைச் சிறிது கூறுவாம். மறைப்பொருள் - மறை கூறும் பொருள. தள்ளுதல் - தாண்டி நிற்றல. மாடமாய்த் தடுத்தவாறு என்க. உரைத்தும் : தனித்தன்மைப் பன்மை இறந்த கால முற்று. அறிந்தவாறென்பார் ‘சிறிது’ என்றார். (1) தேட ருங்கதிர் மணிமுடிச் செழியனும் பாண்டி நாட ருந்திரு வெய்திமே னல்லவீ டெய்தக் கூட லம்பதி மேவிய குணங்குறி கடந்த வேட ரங்கொரு சித்தமெய் வேடராய் வருவார். (இ - ள்.) தேடருங் கதிர்மணி முடிச்செழியனும் - தேடிப் பெறுதற்கரிய ஒளியினையுடைய மணிகளழுத்திய முடியினைத் தரித்த அபிடேக பாண்டியனும், பாண்டி நாடரும் - பாண்டி நாட்டிலுள்ளவர்களும், திரு எய்திமேல் நல்ல வீடு எய்த - இம்மையிற் செல்வத்தை யடைந்து பின்பு நல்ல வீடுபேற்றினை அடைய, கூடல் அம்பதி மேவிய - கூடலாகிய அழகிய பதியில் எழுந்தருளிய, குணம் குறி கடந்த வேடர் - குணத்தையும் குறியையும் கடந்த உருவினையுடைய பெருமான், அங்கு ஒரு சித்தமெய் வேடராய் வருவார் - அம்மதுரைப் பதியில் ஒரு சித்தவடிவமாகிய திருவேடமுடையவராய் வருவாராயினர். எய்த வருவார் என்க. அம் : சாரியையுமாம். குணம் - முக்குணம். குறி - ஒருவன் ஒருத்தி ஒன்று என்னும் பால்வகை; குறிப்புமாம். கடந்த வேடம் - சொரூபம். மெய் - வடிவு. (2) வட்ட வார்சடைக் குஞ்சியும் பூணநூன் மார்பும் இட்ட நீறணி திலகமு மிணைக்குழை தூங்க விட்ட வெள்ளைமுத் திரையுந்தோல் விரித்தபட் டிகையுஞ் சுட்ட வெண்பொடிப் பொக்கணந் தூக்கிய தோளும். (இ - ள்.) வட்டம் வார் சடைக் குஞ்சியும் - வட்டமாகக் கட்டிய நீண்ட சடையாகிய சிகையும், பூணநூல் மார்பும் - பூணூலணிந்த திருமார்பும், இட்ட நீறு அணி திலகமும் - தரித்த திருநீற்றின் மேல் அணிந்த திலகமும், இணைக் குழை தூங்கவிட்ட வெள்ளை முத்திரையும் - இரண்டாகிய குண்டலங்களுடன் தொங்கவிட்ட வெள்ளிய தோடுகளும், தோல்விரித்த பட்டிகையும் - தோலாகிய விரித்த அரைப் பட்டிகையும், சுட்ட வெண்பொடிப் பொக்கணம் தூக்கிய தோளும் - நீற்றிய திருநீற்றினையுடைய பையைத் தொங்க விட்ட தோளும். பூணனூல், அ : அசை; பூணநூல் என்பது பாடமாயின் பூணுதலை யுடைய நூல் என்ப. முத்திரை - அடையாளமாகிய தோடு; வெள்ளை முத்திரை - சங்காலாகிய தோடு. பொக்கணம் - திருநீற்றுப்பை. (3) துய்ய வெண்பொடி யழிந்துமெய் சிவந்திடச் சுவடு செய்யும் வெண்டிரட் படிகநீண் மாலையுஞ் சிவந்த கையி லங்குகட் டங்கமுங் கண்டவர் மனஞ்சென் றுய்ய வன்புற வீக்கிய வுதரபந் தனமும். (இ - ள்.) துய்ய வெண்பொடி அழிந்து மெய் சிவந்திட - தூய திருநீறு அழிந்து திருமேனி சிவக்குமாறு, சுவடுசெய்யும்- தழும்பினைச் செய்யும், வெண்திரள் படிகம் நீள் மாலையும் - வெள்ளிய திரண்ட படிகத்தாலாகிய நீண்ட மாலையும், சிவந்த கை இலங்கு கட்டங்கமும் - சிவந்த திருக்கரத்தில் விளங்கும் மழுப்படையும், கண்டவர் மனம் சென்று உய்ய வன்புற வீக்கிய உதரபந்தனமும் - தரிசித்தோர் உள்ளமானது சென்று பதிந்து உய்தி கூடச் சிக்கெனக் கட்டிய உதரபந்தனமும். திருநீறு அழிதலால் மெய்யின் சிவப்புத் தோன்றுமாறு என்க. கட்டங்கம் - மழு; " சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கம்" என்னும் திருச்சிற்றம்பலக் கோவையார் உரையை நோக்குக. (4) அட்ட வேங்கையீ ருரிவைகீண் டசைத்தகோ வணமும் ஒட்ட வீக்கிய புலியத ளுடுக்கையு மிடத்தோள் இட்ட யோகபட் டிகையும் பொன் னிடையிடை கட்டப் பட்ட சுஃறொலி வேத்திரப் படைக்கையும் படைத்து. (இ - ள்.) அட்ட வேங்கை ஈர் உரிவை கீண்டு அசைத்த கோவணமும் - கொன்ற வேங்கையினின்றும் உரித்த தோலைக் கிழித்துக் கட்டிய கோவணமும், ஒட்ட வீக்கிய புலி அத'9c உடுக்கையும் - இறுகக் கட்டிய புலித்தோலாடையும், இடத்தோள் இட்ட யோக பட்டிகையும் - இடத்தோளிலிட்ட யோக பட்டிகையும் , பொன் இடை இடை கட்டப்பட்ட சுஃறொலி வேத்திரப் படைகையும் படைத்து - பொற்கம்பியால் இடை யிடையே கட்டப்பட்ட சுஃறென்னும் ஒலியினை யுடைய பிரப்புப் படையினை ஏந்திய திருக்கையும் ஆகிய இவற்றை யுடையராய். அடப்பட்ட என்பது அட்ட என நின்றது. கீண்டு - கீழ்ந்து. சுஃறென்னும் ஒலி என்பது சுஃறொலி யென நின்றது. சுஃறென: ஒலிக்குறிப்பு; இது பிரம்பைச் சுழற்றி வீசுவதால் உண்டாவது. (5) வேத கிண்கிணி சிலம்புசூழ்ந் தடிகளின் மிழற்ற ஓத ரும்பத முளரியூ றருண்மது வொழுகப் போத வானந்த மதுநுகர்ந் தலர்முகம் பொலியப் பாத பங்கய முபநிடப் பாதுகை சூட. (இ - ள்.) வேதம் கிண் கிணி சிலம்பு சூழ்ந்து அடிகளின் மிழற்ற- வேதமாகிய கிண்கிணியும் சிலம்பும் சூழ்ந்து திருவடிகளில் ஒலிக்கவும், ஓது அரும்பதம் முளரி ஊறு அருள்மது ஒழுக - சொல்லுதற்கரிய திருவடித்தாமரையிற் சுரக்கின்ற அருட்டேனானது ஒழுகவும், போத ஆனந்த மது நுகர்ந்து அலர் முகம் பொலிய - ஞானானந்தமாகிய தேனைப் பருகி மலர்ந்த திருமுகமானது விளங்கவும், பாதபங்கயம் உபநிடப் பாதுகை சூட - திருவடித் தாமரைகளை உபநிடதமாகிய பாதுகை முடியில் அணியவும். இறைவன் ஞானானந்தமயனாய் இருத்தலை ‘போதவானந்த மது நுகர்ந்து’ என்றார். உபநிடதம் என்பது உபநிடம் என நின்றது. பாதுகையைச் சூட எனலுமாம். (6) சிறிது மூரலும் வெயர்வையுந் திருமுகத் தரும்பக் குறுகி யாவணஞ் சித்திர கூடநாற் சந்தி மறுகு சூளிகை யுபரிகை மாளிகை வாயில் அறுகு சூழ்நிறை தெற்றியிவ் விடந்தொறு மடைந்து. (இ - ள்.) திருமுகத்து சிறிது மூரலும் வெயர்வையும் அரும்ப - திருமுகத்தின்கண் சிறிது புன்னகையும் வெயர்வும் தோன்ற, குறுகி - சென்று, ஆவணம் - கடைவீதியும், சித்திரகூடம் - சித்திரகூடமும், நால்சந்தி - நான்கு தெருக்கள் கூடுமிடமும், மறுகு - வீதியும், சூளிகை உபரிகை - இறப்பினையுடைய மேல்மாடமும், மாளிகை வாயில் - மாளிகையின் வாயிலும், அறுகு நிறை சூழ்தெற்றி - சிங்க வரிசைகள் சூழ்ந்த திண்ணையும் ஆகிய, இவ்விடந்தொறும் அடைந்து - இவ்விடங்கள் தோறும் போய். சித்திரகூடம் - தெற்றியம்பலம். சூளிகை - நிலாமுற்றமுமாம். அறுகு - சிங்கம். (7) தெற்கி ருப்பவர் போல்வட திசைவயிற் சென்று புக்கி ருப்பதுங் கிழக்குளார் போலமேற் றிசையில் நக்கி ருப்பதும் யாவரு நாடின ரறியத் தக்க தன்றியே யிந்திர சாலமாத் தணந்தும். (இ - ள்.) தெற்கு இருப்பவர்போல் வடதிசை வயின்சென்று புக்கு இருப்பதும் - தெற்கில் இருப்பவர்போற் காட்டி வடதிசைக் கண்ணே சென்று அமர்ந்திருப்பதும், கிழக்கு உளார்போல மேல் திசையில் நக்கு இருப்பதும் - கிழக்கிலிருப்பவர்போலக் காட்டி மேற்குத் திசையிற் சென்று மகிழ்ந்திருப்பதும்,யாவரும் நாடினர் அறியத்தக்கது அன்றியே - எவரும் ஆராய்ந்து அறியக்கூடாவாறு, இந்திர சாலமாக தணந்தும் - இந்திர சாலமாக நீங்கியும். நாடினர் : முற்றெச்சம்; நாடினர் யாவரும் என இயைத்து, பார்த்துநின்றவர் யாவரும் என உரைத்தலுமாம். தக்கது - தக்கவாறு. இந்திரசாலம் - சாலங்களிற் றலையாயது. சாலம் - வலை; பிறரை மயக்கி வயப்படுத்தும் விஞ்சையைக் குறிப்பதாயிற்று. ஆக வென்பது தொக்கது. (8) சேய வெற்பினை யணியதாச் செய்துமற் றணித்தாய் மேய வெற்பினைச் சேயதா விடுத்துமெய்ம் முதுமூப் பாய மக்களை யிளையவ ராக்கியுங் குதலை வாய மக்களைக் கழிமுது மக்களா வகுத்தும். (இ - ள்.) சேய வெற்பினை அணியதாச்செய்தும் - தூரத்திலுள்ள மலையை அண்மையி லுள்ளதாகச் செய்தும், மற்று அணித்தாய் மேய வெற்பினைச் சேயதா விடுத்தும் - அதற்கு மாறாக அண்மையிலுள்ள மலையைச் சேய்மையிற் செல்லவிடுத்தும், மெய் முது மூப்பு ஆய மக்களை இளையவர் ஆக்கியும் - உடல் முதுமை யடைந்த விருத்தர்களை இளைஞர்களாக்கியும், குதலை வாய மக்களை கழி முதுமக்களா வகுத்தும் - குதலைச்சொற்கள் பேசும் வாயினையுடைய பாலர்களை மிகுந்த விருத்தர்களாக'84 செய்தும். சேய, வாய என்பன குறிப்புப் பெயரெச்சம். மற்று : வினைமாற்று. மேவிய, ஆகிய ஆக என்பன விகாரமாயின. (9) ஆணைப் பெண்ணுரு வாக்கியும் பெண்ணையா ணுருவா மாணக் காட்டியு மலடியை மகப்பெறச் செய்துங் கோணற் கூன்செவி டூமைகண் குருடுபங் கெவருங் காணத் தீர்த்துநா லுலோகமுங் கனகமாச் செய்தும். (இ - ள்.) ஆணைப் பெண்உரு ஆக்கியும் - ஆண் வடிவத்தினைப் பெண் வடிவமாகச் செய்தும், பெண்ணை ஆண்உருவா மாணக்காட்டியும் - பெண் வடிவத்தினை ஆண் வடிவமாக மாட்சிமைப்படக் காட்டியும், மலடியை மகப்பெறச் செய்தும் - மலடியைப் பிள்ளைப்பேறு அடையச் செய்தும், கோணல் கூன் செவிடு ஊமை கண்குருடு பங்கு எவருங் காணத்தீர்த்தும் - வளைந்த கூனும் செவிடும் ஊமையும் விழிக் குருடும் முடமும் ஆகிய இவற்றை யாவருங் காணப் போக்கியும், நால் உலோகமும் கனகமாச் செய்தும் - நான்கு உலோகங்களையும் பொன்னாகச் செய்தும். நாலு லோகம் என்றது ஐந்து லோகத்துள் பொன் ஒழிந்த இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி என்பனவற்றை; ஐந்து லோகம் இவை யென்பதனை, ‘ தமனியம் இரும்பு தாமிரம் ஈயம் இரசிதம் பஞ்ச லோக மென்ப’ என்னும் பிங்கலத்தானறிக. இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கும் வித்தைக்கு இரசவாதம் என்று பெயர். (10) செல்வர் தம்மனைப் பொருளெலாம் வறுமையிற் சிறந்தோர் இல்ல மெய்தவு நட்டவ ரிகலின்றித் தம்மின் மல்லு வெஞ்சம ரிழைப்பவுங் காஞ்சிர மரத்தின் நல்ல தீங்கனி பழுப்பவும் விஞ்சைக ணயந்தும். (இ - ள்.) செல்வர்தம் மனைப்பொருள் எலாம் வறுமையில் சிறந்தோர் இல்லம் எய்தவும் - செல்வர்கள் இல்லிலுள்ள பொருள்களனைத்தும் வறுமையில் மிக்கோர் வீட்டிற்சென் றடையவும், நட்டவர் - நட்பினை யுடையவர், இகல் இன்றி - பகையில்லாமல், தம்மில் மல்லு வெஞ்சமர் இழைப்பவும் - தம்மிற் கொடிய மற்போர் புரியவும், காஞ்சிர மரத்தில் நல்ல தீங்கனி பழுப்பவும் - எட்டிமரத்தில் நல்ல சுவையினையுடைய பழங்கள் பழுக்கவும்; விஞ்சைகள் நயந்தும் - வித்தைகள் செய்தும்.மல்லு, உகரம் சாரியை. எய்த இழைப்ப பழுப்ப விஞ்சைகள் புரி'89 தென்க. நயந்து - விரும்பி; செய்தென்னும் பொருட்டாயது. (11) பருவ மாறிய பருவத்தில் வையைநீர் பரந்து வருவ தாக்கியு மீளவும் வறந்திடச் செய்தும் பொருவி றீஞ்சுவை யோடையும் பொய்கையு முவர்ப்புத் தருவ வாக்கியு முவரியின் சுவையதாத் தந்தும். (இ - ள்.) பருவம் மாறிய பருவத்தில் - காலமல்லாத காலத்தில் வையை நீர் பரந்து வருவது ஆக்கியும் - வையையாறு நீர்பெருகி வருவதாகச் செய்தும், மீளவும் வறந்திடச் செய்தும் - திரும்பவும் வற்றுமாறு செய்தும், பொருவுஇல் தீஞ்சுவை ஓடையும் பொய்கையும் உவர்ப்புத் தருவ ஆக்கியும் - ஒப்பில்லாத இனிய சுவையினையுடைய ஓடையும் பொய்கையும் உவர்ப்புத் தருவனவாகச் செய்தும்,உவரி இன்சுவையதாத் தந்தும் - கடல் இனிய சுவையினை உடையதாகச் செய்தும். பருவமாறிய பருவம் - முதுவேனிற் பருவம். ஓடை, பொய்கை, உவரி என்பன அவற்றின் நீரைக் குறிப்பன. தந்து -செய்தென்னும் பொருட்டாயது. (12) வீசி மாத்திரைக் கோலினை விண்ணினட் டதன்மேல் ஊசி நாட்டியிட் டூசிமேற் பெருவிர லூன்றி ஆசி லாடியு மூசிமேற் றலைகிழக் காக மாசில் சேவடிப் போதுவான் மலர்ந்திடச் சுழன்றும். (இ - ள்.) மாத்திரைக் கோலினை விண்ணில் வீசிநட்டு அதன் மேல் ஊசி நாட்டி இட்டு - மாத்திரைக் கோலை வானிலே வீசி நிறுத்தி அக்கோலின்மேல் ஊசியை நாட்டிவைத்து, ஊசி மேல் பெருவிரல் ஊன்றி ஆசில் ஆடியும் - அந்த ஊசியின்மேற் பெருவிரலை ஊன்றி நுண்ணிதின் ஆடியருளியும், ஊசிமேல் -அவ் வூசியின்மேல், தலை கிழக்கு ஆக மாசுஇல் சேவடிப் போதுவான் மலர்ந்திடச் சுழன்றும் - தலைகீழாகவும் குற்றமற்ற சிவந்த திருவடித்தாமரை வானின்கண் மலரவும் சுழன்றாடியும். மாத்திரை - அளவு; குறுந்தடியை மாத்திரைக் கோலென்பது வழக்கு; " மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்கும்" என்பது காண்க. இட்டு : அசைநிலை. ஆசு - நுட்பம்; ஆசுஇல்- துன்ப மில்லையாக என்றுமாம். கிழக்கு என்பது முதற்கண் இப் பொருளில் வழங்கியே பின் திசைப் பெயராயிற்று; மேற்கு என்பதும் இவ்வாறே. போது என்றதற் கேற்ப மலர்ந்திட என்றார். மலர்தல் ஈண்டு மேல்நோக்கியிருத்தல். (13) சண்ட வெம்பணிப் பகையெனப் பறந்துவிண் டாவிக் கொண்ட லைப்பிடித் திடியொடுங் குடித்தநீர் பிழிந்து கண்ட வர்க்கதி சயம்பெறக் காட்டியுங் காண விண்ட லத்தினிற் பண்டுபோ லிறைகொள விடுத்தும். (இ - ள்.) சண்ட வெம்பணிப் பகை எனப் பறந்து - கடிய செல வினையுடைய கொடிய பாம்பின் பகையாகிய கலுழனைப்போலப் பறந்து, விண் தாவி - வானிற்றாவி, கொண்டலைப் பிடித்து - முகிலைப் பற்றி, இடியொடும் குடித்த நீர் பிழிந்து - இடியோடு கடலிற் பருகிய நீரினைப் பிழிந்து, கண்டவர்க்கு அதிசயம் பெறக் காட்டியும் - பார்த்தவர்க்கு வியப்புத் தோன்றக் காண்பித்தும், காண - அவர்கள் காண, விண் தலத்தினில் பண்டுபோல் இறை கொள விடுத்தும் - வானின்கண் முன்போலவே தங்கும்படி அதனை விடுத்தும். சண்டம் - வன்மை; கலுழனுக்கு அடை. இடியொடும் பிழிந்து காட்டி யென்க. (14) எல்லி டைப்படும் பொருள்களை யிராவெழப் பார்த்தும் அல்லி டைப்படும் பொருள்களைப் பகல்வர வமைத்தும் வல்ல ழற்புன லுளர்வளி வலிகெடப் பார்த்தும் நல்ல போதுகாய் கனியிலா நாள்படக் கண்டும். (இ - ள்.) எல் இடைப்படும் பொருள்களை இரா எழப் பார்த்தும் - பகலிற்றோன்றும் பொருள்களை இரவிற் றோன்றுமாறு பார்த்தருளியும், அல் இடைப்படும் பொருள்களைப் பகல்வர அமைத்தும் - இரவிற் றோன்றும் பொருள்களைப் பகலில் வரச் செய்தும், வல் அழல் புனல் உளர்வளி வலிகெடப் பார்த்தும் - வலிய நெருப்பும் நீரும் அசைகின்ற காற்றுமாகிய இவைகளின் வலிகெடப் பார்த்தருளியும், நல்ல போது காய் கனி இலா நாள் படக் கண்டும் - நல்ல மலரும் காயும் கனியும் இல்லாத நாளில் உண்டாகச் செய்தும். பகலிற் றோன்றுவன ஞாயிறு முதலியன. இரவிற்றோன்றுவன திங்கள் முதலியன. வலிகெடப் பார்த்தல் - எரித்தல் நனைத்தல் அசைத்தல் முதலிய இயல்பினை இழக்கச் செய்தல். இல்லா நாள் - உரியவல்லாத நாட்கள், பார்த்து, கண்டு என்பன செய்து என்னும் பொருளன. (15) பீளை கால்விழிக் கிழவரைப் பிரம்பினால் வருடிக் காளை யாடவ ராக்கியக் கணவருக் கிசைய ஈளை வாய்முது கற்பினார் கருவடைந் திளமை ஆள வேத்திரம் வருடி நீ றளித்தருள் செய்தும். (இ - ள்.) பீளை கால்விழிக் கிழவரைப் பிரம்பினால் வருடி- பீளை ஒழுகும் விழியினை யுடைய விருத்தரைப் பிரம்பினால் நீவி, காளை ஆடவர் ஆக்கி - காளைப்பருவத்தினையுடைய ஆடவராகச் செய்து, அக்கணவருக்கு இசைய - அந்நாயகருக்குப் பொருந்த, ஈளைவாய் முது கற்பினார் - ஈளை வாய்ந்த முதுமைப் பருவத்தினையுடைய கற்பிற் சிறந்த அவர் மனைவியர், கரு அடைந்து இளமை ஆள - கருவுற்று இளமைப் பருவத்தை அடையுமாறு, வேத்திரம் வருடி நீறு அளித்து அருள் செய்தும்- பிரம்பினாலே தடவித் திருநீறு அளித்துக் கருணை புரிந்தும. கிழவர் என்னுஞ் சொல் உரியவர் என்னும் பொருளில் முன்பு வழங்கிப் பின்பு முதியோரைக் குறிக்கும் பெயராயிற்று. ஈளை - கபத்தா லுண்டாகும் இழைப்பு; பிறர் வீளையெனப் பிரித்தது பொருந்தாமை காண்க. இளமை யெய்த வேத்திரம் வருடியும் கருவடைய நீறளித்தும் என்க. (16) அகர மாதிமூன் றாகிய வாகரு டணமே புகரி லாவதி ரிச்சிய மஞ்சனம் பொருவில் வகர மாதிமூன் றாகிய வசியமே வாதம் இகலி லாவயத் தம்பமென் றின்னவை செய்தும். (இ - ள்.) அகரம் ஆதி மூன்றாகி - அகரத்தை முதலாகவுடைய மூன்றாகிய, ஆகருடணம் புகர் இலா அதிரிச்சியம் அஞ்சனம் - ஆகருடணமும் குற்றமில்லாத அதிரிச்சயமும் அஞ்சனமும், பொருவுஇல் வகரம் ஆதி மூன்றாகிய - ஒப்பில்லாத வகரத்தை முதலாகவுடைய மூன்றாகிய, வசியம் வாதம் இகல் இலா வயத்தம்பம் - வசியமும் வாதமும் மாறுபாடில்லாதவயத்தம்பமும், என்று இன்னவை செய்தும் - என்று சொல்லப்படும் இவைகளைச் செய்தும் குறிLன் விகாரமே நெடிலாதலால் ஆ என்பதனை அகரத்து ளடக்கியும் வா என்பதனை வகரத்துளடக்கியும் ‘அகரமாதி மூன்று,’‘வகரமாதி மூன்று’ என்றார். ஆகருடணம் முதலியவற்றைக் குறிப்பாற் கூறலுறுவார் அவற்றின் முதலெழுத்தால் ‘அகாரம், வகாரம்’ என்றிங்ஙனம் கூறுவ ராகலின், அதனைப் புலப்படுப்பான் வேண்டி ‘அகரமாதி மூன்றாகிய,’ ‘வகரமாதி மூன்றாகிய’ என்று கூறிவைத்துப், பின் பெயர்களையும் கிளந்தோதினா'98 தாமதகுண சித்தி யெனப்படும் எட்டனுள் தம்பனம், மோகனம் என்னும் இரண்டு மொழித்து ஒழிந்தவற்றை இதனுள் ஓதினார். ஆகருடணம் - சேய்மையிலுள்ளதை அண்மையில் வர இழுத்தல். அதிர்ச்சியம் - கட்புலனாவதைப் புலனாகாமல் மறையச் செய்தல். அஞ்சனம் - மறைந்திருப்பதை வெளிப்படுத்திக் காட்டுதல். வசியம் - பகைவரையும் உறவாக்குவது. வாதம் - இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்குவது. வயத்தம்பம் - முதியோரை இளையராகவும் இளையோரை முதியராகவும் செய்வது. இடையிட்டு நின்ற ஏகாரங்கள் எண்ணுப்பொருள் குறித்தன; " எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக் குறித்தியலு மென்மனார் புலவர்" என்பது தொல்காப்பியம். (17) வேத நூறெளி யார்களெக் கலைகளும் விளங்கப் பூதி நாவினிற் சிதறியும் பூழியன் காதன் மாத ராரொடும் பயில்புது மணமலர்க் காவிற் காத நீண்டகோட் டெங்கினைக் கரும்பனை செய்தும். (இ - ள்.) வேத நூல் தெளியார்கள் எக்கலைகளும் விளங்க- மறை நூல் முதலிய யாவுந் தெளியாதவர்களுக்கு எல்லாக்கலைகளும் விளங்க, நாவினில் பூதி சிதறியும் - அவர் நாவிலே திருநீற்றைச் சிதறியும், பூழியன் - பாண்டியனானவன், காதல் மாதராரொடும் பயில் புதுமணம் மலர்க்காவில் - காதல்மகளிலொடும் விளையாடும் புதிய மணமிக்க மலர்கள் நிறைந்த சோலையிலுள்ள, காதம் நீண்ட கோள் தெங்கினைக் கரும்பனை செய்தும் - காத அளவு நீண்டுயர்ந்த கோட்புக்க தெங்கினைக் கரிய பனையாகச் செய்தும். தெளியார்களுக்கு என்னும் நான்கனுருபு தொக்கது. கோட்டெங்கு - கோட்புக்க தெங்கு; காய்த்த தெங்கு. (18) ஏனை வான்றருக் குலங்களைப் புட்களை யிருகோட் டானை யாதிபல் விலங்கினை யொன்றையொன் றாக ஞான நோக்கினா னோக்கியு நாடிய விளையோர் மானி னோக்கிய ராகிலோ மெனவெழில் வாய்ந்தும். (இ - ள்.) ஏனை வான் தருக் குலங்களை - மற்றைய உயர்ந்த மரக் கூட்டங்களையும், புட்களை - பறவைகளையும், இரு கோட்டு ஆனை ஆதி பல்விலங்கினை - இரண்டு கொம்பினையுடைய யானை முதலிய பல விலங்குகளையும், ஒன்றை ஒன்றாக ஞான நோக்கினால் நோக்கியும் - ஒன்று மற்றொன்றாமாறு ஞானப்பார்வையாற் பார்த்தருளியும், நாடிய இளையோர் - பார்த்த இளமைப் பருவத்தினையுடைய ஆடவர், மானின் நோக்கியர் ஆகிலோமென - மான்போன்ற பார்வையினையுடைய மகளிராக நாம் பிறக்க வில்லையே எனக் கவல, எழில் வாய்ந்தும் - கட்டழகினைப் பொருந்தியும். ஒன்றை யென்பதில் ஐகாரம் சாரியை. இவனை அணைதற்கு மாதராகப் பிறந்திலோமேயென என்க; "ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்" என இராமாயணஙகூறுவதுங் காண்க. இது வசியம் எனப்படு'8b (19) நாக நாடுபொன் னாட்டுள பொருளுமந் நகருள் ஆக வாக்கியு மின்னணம் விச்சைக ளனந்தம் மாக நாயகன் மலைமக ணாயகன் மதுரை ஏக நாயகன் றிருவிளை யாடல்செய் திருந்தான். (இ - ள்.) நாக நாடு பொன் நாடு உள பொருளும் அந்நகருள் ஆக ஆக்கியும் - பாதலத்திலும் பொன்னுலகத்திலும் உள்ள பொருள்களும் அம்மதுரைப் பதியில் உண்டாகுமாறு செய்தும், இன்னணம் அனந்தம் விச்சைகள் - இங்ஙனம் அளவில்லாத வித்தைகளை, மாகநாயகன் - சிவலோக நாயகனும், மலைமகள் நாயகன் - பார்வதி தலைவனும், மதுரை ஏகநாயகன் - மதுரையிலெழுந்தருளியுள்ள ஒப்பற்ற இறைவனுமாகிய சோமசுந்தரக் கடவுள், திருவிளையாடல் செய்து இருந்தான் - திருவிளையாடலாகப் புரிந்து இருந்தருளினன். பாதலத்துப் பொருள் பொன்னாட்டுப் பொருளாகவும் பொன்னாட்டுப் பொருள் பாதலத்துப் பொருளாகவும் எனப் பிறர் பொருள் கூறுவாராயினர்; சொற்கள் அதற்கேற்றவாறில்லாமை காண்க. (20) சித்த யோகிகள் செய்கின்ற வாடன்மேற் செலுத்தி வைத்த கண்களுஞ் சிந்தையும் வாங்கலர் திகைத்துத் தத்த மாள்வினைத் தொழிமறந் திருந்தனர் தகைசால் முத்த வேதிய ராதிய முதுநகர் மாக்கள். (இ - ள்.) தகைசால் முத்த வேதியர் ஆகிய முது நகர் மாக்கள் - தகுதிமிக்க முத்தத்தன்மையையுடைய அந்தணர் முதலிய தொன்மை யுடைய மதுரைப் பதியிலுள்ள மாந்தர்கள், சித்த யோகிகள் செய்கின்ற ஆடல்மேல் செலுத்தி வைத்த - யோக சித்தமூர்த்திகள் செய்தருளும் திருவிளையாடலின்மேற் செலுத்தி வைத்த, கண்களும் சிந்தையும் வாங்கலர் - கண் களையும் உள்ளத்தினையும் மீட்க முடியாதவர்களாய், திகைத்து - திகைப்புற்று, தத்தம் ஆள்வினைத் தொழில் மறந்திருந்தனர் - தத்தமக்குரிய தொழில் முயற்சிகளை மறந்திருந்தார்கள் எ -று. வாங்கலர் : எதிர்மறை முற்று எச்சமாயது. வாங்குதல் - மீட்டல. ஆள்வினை - முயற்சி; செங்கடனுமாம். முத்தர் - விடுபட்டோர், சீவன் முத்தி பெற்றோர். (21) இனைய செய்தியை யுழையரா லிறைமக னறிந்தான் அனைய சித்தரை யிங்ஙனந் தருகென வடுத்தார் தனைய கற்றினன் சித்தரைச் சார்ந்தவர் தாமும் வினையை வென்றவ ராடலை வியந்துகண் டிருந்தார். (இ - ள்.) இனைய செய்தியை - இந்நிகழ்ச்சியை, இறைமகன் உழையரால் அறிந்தான் - அபிடேக பாண்டியன் ஒற்றரால் அறிந்து, அனைய சித்தரை இங்ஙனம் தருக என - அவ்வித்தக சித்தரை இ'83கு அழைத்து வாருங்கள் என்று, அடுத்தார் தனை அகற்றினன்- பக்கத்து நின்றவர்களைப் போக்கினன்; சித்தரைச் சார்ந்து அவர்தாமும் - சித்தரை அடைந்து அவரும், வினையை வென்றவர் ஆடலைக் கண்டு வியந்து இருந்தார் - இயல்பாகவே பாசங்களினீங்கிய அச்சித்தரின் திருவிளையாடலைப் பார்த்து வியந்து தம்மை மறந்திருந்தனர். தருகென, அகரந் தொக்கது. தமை எனற்பாலது தொடை நோக்கித் தனையென நின்றது. தம் : சாரியை.; அவர்தாமும் சார்ந்து என்க; தாம் : அசை. (22) அமைச்சர் தங்களை விடுத்தன னமைச்சருஞ் சித்தர் தமைச் சரண்பணிந் தரசன்முன் வருகெனத் தவத்தோர் எமக்கு மன்னனா லென்பய னெனமறுத் திடமண் சுமக்கு மன்னவன் றம்மவர்1 தொழுதனர் போனார். (இ - ள்.) (அவர்கள் வாராமையைக் கண்ட வழுதி பின்னும்) அமைச்சர் தங்களை விடுத்தனன் - மந்திரிகளை ஏவினன்; அமைச்சரும் சித்தர் தமைச்சரண் பணிந்து - அவர்களும் சித்தமூர்த்தியின் திருவடிகளை வணங்கி, அரசன் முன்வருக என - மன்னன் முன் வரக்கடவீர் என வேண்ட, தவத்தோர் - யோகசித்தர், எமக்கு மன்னனால் என்பயன் என மறுத்திட - எமக்கு அரசனாலாம் பயன் யாது என்று மறுக்க, மண் சுமக்கு மன்னவன் தம்மவர் தொழுதனர் போனார் - நிலவுலகினைத் தாங்கும் அரசனுடைய அமைச்சர்கள் தொழுது போயினர். தம் என்பன சாரியை. சரணினை யென உருபை மாற்றுக. வருகென : தொகுத்தல். பெருமிதந்தோன்ற ‘எமக்கு’ எ'a1றார். "வையமும் தவமும் தூக்கின் தவத்திற்கு ஐயவி யனைத்தும் ஆற்றாது" என்பது தோன்றத் ‘தவத்தோர் எனவும், ‘மண்சுமக்கு மன்னவன்’ எனவும் கூறினார். வருதற்கு மறுத்திட வென்க. தம்மவர் - தமர். தொழுதனர் : முற்றெச்சம். (23) [அறுசீரடியாசிரியவிருத்தம்] மன்னன்மு னமைச்சர் சித்தர் மறுத்துரை மாற்றங் கூற முன்னவ னருள்பெற் றிம்மை மறுமையு முனிந்த யோகர் இந்நில வேந்தர் மட்டோ விந்திர னயன்மா லேனோர் தன்னையு மதிப்ப ரோவென் றிருந்தனன் றரும வேந்தன். (இ - ள்.) அமைச்சர் - அமைச்சர்கள், மன்னன்முன் - பாண்டியன் முன் சென்று, சித்தர் மறுத்து உரைமாற்றம் கூற - சித்த மூர்த்திகள் மறுத்துக் கூறிய மொழியினைச் சொல்ல, தரும வேந்தன் - (கேட்ட) அறநெறி பிழையாத பாண்டிவேந்தன், முன்னவன் அருள்பெற்று இம்மை மறுமையும் முனிந்த யோகர் -முதல்வனாகிய சிவபெருமான் திருவருளைப் பெற்று இம்மை மறுமைப் பயன்களை வெறுத்த யோகிகள், இந்நில வேந்தர் மட்டோ - இந்நிலவுலக மன்னரை மாத்திரமோ, இந்திரன் அயன் மால் ஏனோர் தன்னையும் மதிப்பரோ - இந்திரனையும் அயனையும் திருமாலையும் மற்றைத் தேவர்களையும் மதிப்பரோ (மதியார்), என்று இருந்தனன் - என்றெண்ணி இருந்தனன். உரைமாற்றம் : வினைத்தொகை. ‘இகபரத்தாசை கழிந்த யோகியர்’ என்றார் முன்னரும். தன்னையும், ஈண்டும் சாரியை பன்மையி லொருமையாயிற்று. " பாராண்டு பகடேறி வருவார் சொல்லும் பணிகேட்கக் கடவோமா பற்றற் றோமே" எனவும், "சென்றுநாம் சிறுதெய்வஞ் சேர்வோ மல்லோம்" எனவும் திருநாவுக்கரசுகளும், "போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தராதி யின்பமும்" எனவும், "கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு" எனவும் திருவாதவூரடிகளும் கூறிய அருண்மொழிகள் ஈண்டுச் சிந்திக்கற் பாலன. (24) ஆகச் செய்யுள் - 1356. இருபத்தொன்றாவது கல்லானைக்குக் கரும்பருத்திய படலம் [கலிநிலைத்துறை] செல்லார் பொழில்சூழ் மதுராபுரிச் சித்த ரெல்லாம் வல்லா ரவரா டலையாருரை செய்ய வல்லார் எல்லாரும் வியப்புற வித்தனிச் சித்த சாமி கல்லானை தின்னக் கரும்பீந்த கதையுஞ் சொல்வாம். (இ - ள்.) செல் ஆர் பொழில் சூழ் மதுராபுரிச் சித்தர் - மேகங்கள் தவழப் பெற்ற சோலைகள் சூழ்ந்த மதுரைப் பதியில் எழுந்தருளிய சித்தமூர்த்திகள், எல்லாம் வல்லார் - எல்லாம் செய்ய வல்லவர் (ஆகலின்), அவர் ஆடலை உரை செய்யவல்லார் யார் - அவர் செய்தருளும் திருவிளையாடலை உரைக்க வல்லவர் யாவர்; எல்லாரும் வியப்பு உற இத்தனிச் சித்தசாமி - (இனி) அனைவரும் அதிசயமடைய இவ்வொப்பற்ற சித்தமூர்த்திகள், கல்லானை தின்னக் கரும்பு ஈந்த கதையும் சொல்வாம் - கல்லானை தின்னுமாறு கரும்பினைக் கொடுத்த திருவிளையாடலையும் கூறுவாம். வல்லார் ஆகலின் என விரித்துரைக்க; எல்லாம் வல்லாராகிய சித்தர் எனக் கூட்டலுமாம். சிறிது கூறினேமென்பார் ‘யாருரை செய்யவல்லார்’ என்றார். (1) பின்னேய மச்சம் பெருகப்பெரி யோரை யெண்ணா தென்னே யெளியா ரெனயானிகழ்ந் திங்ங னீண்டச் சொன்னே னவர்க்கென் குறையென்னிற் றுருவி நானே தன்னே ரிலாதார் தமைக்காணத் தகுவ னென்னா.1 (இ - ள்.) பின் நேயம் அச்சம் பெருக - பின்பு அன்பும் அச்சமு'8b பெருக, யான் பெரியோரை எண்ணாது எளியாரென இகழ்ந்து இங்ஙன் ஈண்டச் சொன்னேன் - யான் பெரியோரை மதியாது எளியாரைப் போல (க்கருதி) அவமதித்து இங்கு வரும்படி சொல்வித்தேன், என்னே - (என் அறியாமை இருந்தவாறு) என்னே, அவர்க்கு என்னில் குறை என் - அவருக்கு என்னிடம் பெறவேண்டிய குறைபாடு யாதுளது, தன் நேர் இலாதார் - தனக்கொப்பில்லாத அச்சித்த சாமிகளை, நானே துருவிக்காணத் தகுவன் என்னா - யானே தேடிக்காணத் தக்கவனாவேன் என்று கருதி. இகழ்தலாவது அவரை எளியரெனக் கருதினமையே. இங்ஙனம் என்பது ஈறு தொக்கு நின்றது; இவ்விடம் என்னும் பொருட்டாயது. சொன்னேன், சொல்வித்தேன் : பிறவினைப் பொருட்டு. என்னில் - என்கண். பெறத்தக்க குறை என விரிக்க. நானே - குறையெலா முடைய யானே. (2) ஆனந்த சித்தர் தமைக்காண்பலென் றன்பு கூர்ந்த மீனந் தரித்த கொடிவேந்தன் குறிப்பு நோக்கி மோனந் தரித்த சிவயோகரு முந்தித் தம்பொன் மானந் தனக்கு வடமேற்றிசை வந்தி ருந்தார். (இ - ள்.) ஆனந்த சித்தர் தமைக் காண்பல் என்று அன்பு கூர்ந்த - ஆனந்த வடிவாகிய சித்த மூர்த்திகளைத் தரிசிப்பேனென்று அன்பு மிகுந்த, மீனம் தரித்த கொடிவேந்தன் குறிப்பு நோக்கி - கயல் எழுதிய கொடியினை யுயர்த்திய அபிடேக பாண்டியனது உள்ளக் குறிப்பினை உணர்ந்து,, மோனம் தரித்த சிவயோகரும் - மௌனநிலையினைப் பூண்ட சிவயோகியாகிய சித்தரும், முந்தி - முன்னாகவே, தம் பொன் மானம் தனக்கு வடமேல் திசை வந்திருந்தார் - தமது பொன் விமானத்திற்கு வடமேற்குத் திசையின்கண் வந்து இருந்தருளினார். வேந்தன் அன்பு கூர்ந்தான், அவன் குறிப்பு நோக்கி வந்திருந்தார் என வுரைத்துக்கொள்க. மீனத்தைத் தாங்கிய கொடி. மோன முத்திரை தரித்த என்றுமாம். மானம் : முதற்குறை. (3) அருகாத செல்வத் தவனன்றுதைத் திங்க டோற்றம் வருகால மாக மதுரேசனை வந்து வந்தித் துருகா தரத்தாற்1 கழிந்துள்வல மாக மீள2 வருவா னவன்முன் வருகாஞ்சுகி வன்கண் மாக்கள். (இ - ள்.) அன்று தைத் திங்கள் தோற்றம் வரு காலமாக - அந்நாள் தைமாதம் தோன்றுங் காலமாக, அருகாத செல்வத் தவன் - குறையாத செல்வத்தினையுடைய பாண்டியன், வந்து மதுரேசனை வந்தித்து - வந்து மதுரை நாயகனை வணங்கி, உருகு ஆதரத்தால் கழிந்து - உருகும் அன்பினால் மிகுந்து, மீள உள் வலமாக வருவான் - மீண்டு உள்ளே வலமாக வரா நிற்க, அவன் முன் வரு - அவனுக்கு முன்னர் வருகின்ற, வன்கண் காஞ்சுகி மாக்கள் - அஞ்சாமையையுடைய மெய் காப்பாளர். தோற்றம் வரு காலமாக - தோன்றுங் காலமாக நிற்க; அந் நன்னாளிலே என விரித்துக்கொள்க. கழிந்து - விஞ்சி; கழி என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்தது. ஆதரம் கழிந்து என்பதனை ஆதரத்தாற் கழிந்து என்றார். உள் கழிந்து எனக் கூட்டி, உள்ளிடத் தினீங்கி என்றுரைத்தலுமாம். வருவான் என்பதனை வாரா நிற்க எனச் செயவெனெச்சமாக்குக. காஞ்சுகி - சட்டையிட்ட மெய் காவலர்; கஞ்சுகம் - சட்டை. காஞ்சுகியராகிய மாக்கள் என்க. (4) சீறிட்ட வேங்கை யதட்சேக்கையர் சீறி யைந்தும் பாறிட்ட வேடர் யோகபட்டத்தர் கட்டங் கத்தில் ஏறிட்ட கைய ரிறுமாந்திருப் பாரை நோக்கி மாறிட்டு நீக்கி1 யெழப்போகென வந்து சொன்னார். (இ - ள்.) சீறிட்ட வேங்கை அதள் சேக்கையர் - சீறிய வேங்கையின் தோலாகிய தவிசினையுடையராய், ஐந்தும் சீறிப் பாறிட்ட வேடர் - ஐம்புலன்களையும் சினந்து ஓட்டிய திருவேடத்தினை யுடையராய், யோக பட்டத்தர் - யோக பட்டிகை யுடையராய், கட்டங்கத்தில் ஏறிட்ட கையர் - மழுப்படையில் ஏற்றிய திருக்கரத்தினை யுடையராய், இறுமாந்து இருப்பாரை நோக்கி - இறுமாந்திருப்பவரைப் பார்த்து, வந்து - நெருங்கி வந்து, மாறு இட்டு நீக்கி எழப் போக எனச் சொன்னார் - பிரம்பினை நீட்டி அவ்விடத்தை விட்டு எழுந்துபோகக் கடவீர் என்று சொன்னார். சீறிட்ட - Yறிய; இடு : அசை. பாறிட்ட - பாற்றிய. ஏறிட்ட - ஏற்றிய. சேர்க்கையர் முதலிய குறிப்பு முற்றுக்கள் வினையெச்சமாயின. ஐந்து : தொகைக் குறிப்பு. பாற்றின்மை தோற்றுவிக்கும் வேடம். கட்டங்கத்திற்கு முன் உரைத்தமை காண்க. மாறிட்டு நீக்கல் - பிரம்புகொண்டு நீங்குமாறு குறித்துக் காட்டல். எழப் போதல் - அகலப்போதல். போகென : தொகுத்தல். (5) பின்னா வருதென்னர் பிரான்பெரி யோரை நோக்கி என்னாடு நும்மூ1ருமக்கென்வரும் யாது வேண்டும் நுந்நாம மேது நுவன்மின்னென வைய ரெந்த நன்னாடு மெந்த நகருள்ளுந் திரிவ மப்பா. (இ - ள்.) பின்னா வரு தென்னர் பிரான் பெரியோரை நோக்கி- பின்னாக வரும் பாண்டியர் தலைவன் அப்பெரியோரைப் பார்த்து, நும் நாடு ஊர் என் - நுமது நாடும் ஊரும் எவை, உமக்கு என் வரும் - உமக்கு என்ன கைவரும், யாது வேண்டும் - உமக்கு வேண்டியது யாது, நும் நாமம் ஏது - உமது பெயர் யாது, நுவல்மின் என - சொல்வீராக என்று வினவ, ஐயர் - சித்த மூர்த்திகள், அப்பா எந்த நல்நாடும் எந்த நகருள்ளும் திரிவம் - அப்பனே! நாம் எந்த நல்ல நாட்டிலும் எந்த நகரிலும் சஞ்சரிப்போம். நும் நாடு ஊர் என் எனக் கூட்டுக. என் - எவை. எந்நாடு நும்மூர் என்பது பாடமாயின் நுமது ஊர் எந்த நாட்டிலுள்ளது என்று பொருள்படும். நாட்டுள்ளும் என விரிக்க. அப்பா என்பது பெரியோர் கூறும் மரபுச் சொல். இது முதல் ஐந்து செய்யுள் ஒரு தொடர். (6) ஆனாலு மிப்போ தணிகான்மிர நாட்டிற் காசி தானா மிருக்குந் தலமாகு மநாத ராகி ஆனாத பிச்சைப் பெருவாழ் வுடையார் நமரா நாணாளும் விஞ்சை நடாஅய்த்திரி2 சித்த ரேம்யாம். (இ - ள்.) ஆனாலும் இப்போது - ஆயினும் இப்பொழுது, அணி கான்மிர நாட்டில் காசிதான் - அழகிய காசுமீர நாட்டின்கண் உள்ள காசிப்பதியே, நாம் இருக்கும் தலம் ஆகும்- நாம் தங்கும் பதியாகும்; அநாதராகி ஆனாத பிச்சைப் பெரு வாழ்வு உடையார் நமராம் - ஒரு பற்றுமில்லாதவராய் நீங்காத பிச்சை எடுத்தலாகிய பெருவாழ்வினை யுடைய அடியார்களே நம் உறவினராவர்; யாம் நாள் நாளும் விஞ்சை நடா அய்த் திரி சித்தரேம் - யாம் எந்நாளும் வித்தை நடாத்தித் திரிகின்ற சித்தராவேம். ஆனாலும் - எங்குந் திரிவமாயினும். கான்மிரம் - காசுமீரம். அநாதர் -ஆதரவில்லாதவர்; அநாதரர் என்பது தொக்கு நின்றது. எய்துதற்கரிய வாழ்வென்பார் ‘பெருவாழ்வு’ என்றார். நாள் நாளும்- நாடோறும். நடாஅய் - நடாவி; நடாத்தி. ‘அநாதனாகி . . . . . வாழ்வுடையான்’ என்பது பாடமாயின், ஆதியில்லாத சிவபெருமான் எமக்கு உறவாம் என்றுரைக்க. (7) ஆனந்த கானந் தொடுத்திங்குள வான சைவத் தானம் பலவுந் தொழுதற்பர மாகி வந்தேம் ஞானந் தருமிந் நகரிம்மையிற் சீவன் முத்தி மானந் தமான பரமுத்தி மறுமை நல்கும். (இ - ள்.) ஆனந்த கானம் தொடுத்து இங்கு உளவான சைவத் தானம் பலவும் - தில்லைவனம் முதல் இங்கு உள்ளனவான சிவத்தலங்கள் பலவும், தொழுதற் பரம் ஆகி வந்தேம் - வணங்குதற் பொருட்டு வந்தேம்; ஞானம் தரு'8b இந்நகர் - ஞானத்தைப் பாலிக்கும் இந்த நகரமானது, இம்மையில் சீவன் முத்தி - இம்மையிலே சீவன் முத்தியையும், மறுமை மான் அந்தமான பரமுத்தி - மறுமையிலே மாயைக்கு அப்பாற்பட்ட பரமுத்தியையும், நல்கும்- அளிக்கும். தில் என்னும் இடைச்சொல் விழைவுப் பொருளில் வருதல் குறித்துத் தில்லை வனம் என்பதை ஆனந்த கானம் என மொழிபெயர்த்தாராதல் வேண்டும்; தில்லை சிவபெருமான் ஆனந்தத் தாண்வடம் புரியும் இடமாதலுங் கொள்க; ஆனந்த கானம் என்பதற்குக் காசி என்று பொருள் கூறுவாரு முளர். பரம் - பொருட்டு. மான் - பிரகிருதி மாயை; ஈண்டு விந்து மோகினிகளையும் குறிப்பதாகக் கொள்க. (8) ஈண்டுள்ள வர்க்கெம் விளையாடலைக் காட்டி யிச்சை வேண்டும் பலசித் தியுநல் குவம் வேத மாதி மாண்டங்கு மெண்ணெண் கலைஞானமும் வல்ல மல்லாற் சேண்டங்கு மெல்லாப் பொருளும்வல சித்த ரேம்யாம். (இ - ள்.) ஈண்டு உள்ளவர்க்கு எம் விளையாடலைக் காட்டி- இங்குள்ளவர்களுக்கு எமது விளையாடலைக் காண்பித்து, வேண்டும் பல சித்தியும் இச்சை நல்குவம் - (அவர்கள்) விரும்பும் பல பேறுகளையும் விருப்பத்தின்படியே அருளுவோம்; வேதம் ஆதி மாண் தங்கும் எண்ணென் கலை ஞானமும் வல்லம் - மறை முதலான மாட்சி தங்கிய அறுபத்துநான்கு கலை ஞானங்களிலும் வன்மையுடையோம்; அல்லால் - இவையன்றியும், யாம் சேண் தங்கும் எல்லாப் பொருளும் வல சித்தரேம் - யாம் சேய்மையிலுள்ள பொருளனைத்தையும் (அண்மையில் வரச் செய்தலில்) வல்ல சித்தராவேம். பலசித்தி - பலமாகிய பேறு; பலவாகிய சித்தி என்றுமாம். எல்லாப் பொருளும் வல என்பதற்கு எல்லாப் பொருள்களையும் நிருமிக்க வல்ல என்றுரைத்தலுமாம். (9) உன்னால் நமக்குப் பெறல்வேண்டுவ தொன்று மில்லை தென்னா வெனவுண் ணகைசெய்தனர் சித்த யோகர் மன்னா மிவர்தம் மிறுமாப்புஞ் செருக்கும் வீறும் என்னா லளவிட்ட டறிவேனென வெண்ணித் தேர்வான். (இ - ள்.) தென்னா - பாண்டியனே, உன்னால் நமக்குப் பெறல் வேண்டுவது ஒன்றும் இல்லை - உன்னாலே நாம் அடைதற் பாலதாகிய பொருள் ஒன்றுமில்லை, என - என்று கூறி, உள் நகை செய்தனர் சித்த யோகர் - புன்னகை புரிந்து நின்றனர் சித்த மூர்த்திகள்; மன் ஆம் இவர் தம் இறுமாப்பும் செருக்கும் வீறும் - நிலைபெற்ற இவருடைய இறுமாப்பும் செருக்கும் பெருமிதமுமாகிய இவற்றை, என்னால் அளவிட்டு அறிவேன் என எண்ணித் தேர்வான் - யாதினாளலந்து அறிவேன் என்று அரசன் எண்ணி ஆராய்வானாயினன். நமக்கு : நாம் என எழுவாய்ப் பொருட்டு. ‘யாது வேண்டும்’ என அரசன் வினாவியதற்கு ‘விடையாக வேண்டுவ தொன்றுமில்லை’ என்றார். நம்மால் நீ பெறுவதன்றி உன்னால் நாம பெறவேண்டுவதில்லை என்றார். மன்ஆம் - மன்னுதலுடைய. என்னால் - எதனால். (10) தேரும் பொழுதோ ருழவன்னொரு செல்வக் கன்னல் ஆருங் கமுகென்ன வயிர்ப்புறக் கொண்டு தாழப் பாருந் திசையும் புகழ்பங்கயச் செங்கை தாங்கி நீரும் பிறையுங் கரந்தார்தமை நேர்ந்து சொல்வான். (இ - ள்.) தேரும் பொழுது - அங்ஙனம் ஆராயும் பொழுது, ஓர் உழவன் - ஓர் உழவனானவன், ஒரு செல்வக் கன்னல் - செழித்தோங்கிய ஒரு கரும்பினை, ஆரும் கமுகு என்ன அயிர்ப் புறக் கொண்டு தாழ - யாரும் கமுகோ என்று ஐயுறக் கையிற் கொண்டு வணங்க, பாரும் திசையும் புகழ் பங்கயச் செங்கை தாங்கி - (அக் கரும்பினைப்) புவியும் திசைகளும் புகழும்படியான தாமரை மலர் போன்ற சிவந்த கையிற்றாங்கி, நீரும் பிறையும் கரந்தார் தமை நேர்ந்து சொல்வான் - கங்கையையும் மதியையும் ஒளித்து வந்த சித்தசாமிகளைப் பார்த்துக் கூறுவான். செல்வக் கன்னல் - செழுமையுள்ள கரும்பு. ஆரும் : யாரும் என்பதன் மரூஉ. கையுறையாகக் கொண்டு வணங்க. கொடையாற் புகழும் கை யென்க. (11) வல்லாரில் வல்லே மெனவும்மை மதித்த நீரிக் கல்லானைக் கிந்தக் கரும்பை யருத்தி னெல்லாம் வல்லாரு நீரே மதுரைப்பெரு மானு நீரே அல்லா லெவர்நும் மனம்வேட்ட தளிப்ப னென்றான். (இ - ள்.) வல்லாரில் வல்லேம் என உம்மை மதித்த நீர் - வல்லவர்களுள் வல்லே மென்று உம்மை மதித்துக்கொண்ட நீர், இக்கல்லானைக்கு இந்தக்கரும்பை அருத்தின் - இந்தக் கல்லானைக்கு இக் கரும்பினை உண்பித்தால, எல்லாம் வல்லாரும் நீரே - எல்லாம் வல்ல சித்தரும் நீரே, மதுரைப் பெருமானும் நீரே அல்லால் எவர் - மதுரை நாயகனும் நீரேயன்றி வேறு யாவர், நும்மனம் வேட்டது அளிப்பன் என்றான் - பின்பு நுமது மனம் விரும்பியதைக் கொடுப்பேன் என்று கூறினான். வல்லாரெல்லாருள்ளும் யாம் வல்லேமென மதித்த வென்க; ஏழுனுருபு கூட்டிப் பிரித்தற்பொருளில் வந்தது. (12) என்னா முகிலைத் தளையிட்டவன் கூறக் கேட்டுத் தென்னா வருதி யெனப்புன்னகை செய்து சித்தர் நின்னால் வருவ தெமக்கேது நினக்கு நாமே உன்னாசை தீரத் தருகின்ற தலாம லுண்டோ. (இ - ள்.) என்னா முகிலைத் தளை இட்டவன் கூற - என்று மேகத்தைச் சிறையிட்ட பாண்டியன் சொல்ல, சித்தர் கேட்டு - அம்மொழியைச் சித்தமூர்த்திகள் கேட்டு, தென்னா வருதி எனப் புன்னகை செய்து - பாண்டியனே வருவா'8c எனப் புன்னகை புரிந்து, எமக்கு உன்னால் வருவது ஏது - எமக்கு உன்னால் வரும் பயன் யாது உளது, உன் ஆசை தீர - உனது அவா அடங்க, நாமே நினக்குத் தருகின்றது அலாமல் உண்டோ- நாமே உனக்குக் கொடுக்கின்ற தல்லாமல் வேறு உண்டோ? ‘நும் மனம் வேட்டது அளிப்பன்’ என மீட்டுங் கூறியதற்கு விடையாக இங்ஙனம் கூறினார். தருகின்றது : தொழிற்பெயர். நின்பாற் பெறுவதொன்றுண்டோ என்க. (13) செல்லா வுலகத் தினுஞ்சென்றொரு விஞ்சை கற்றோர் பல்லாரு நன்கு மதிக்கப்பய னெய்து வார்கள் எல்லா மறிந்த வெமக்கொன்றிலு மாசை யில்லை கல்லானை கன்னல் கறிக்கின்றது காண்டி யென்றார். (இ - ள்.) ஒரு விஞ்சை கற்றோர் - யாதானும் ஒரு வித்தையினைக் கற்றோர், செல்லா உலகத்தினும் சென்று - போதற்கரிய உலகத்தினும் போய், பல்லாரும் நன்கு மதிக்கப் பயன் எய்துவார்கள்- பலரும் நன்கு மதிக்க (அவ்விஞ்சையைக் காட்டிப்) பயனடைவார்கள்; எல்லாம் அறிந்த எமக்கு ஒன்றிலும் ஆசையில்லை - எல்லா விஞ்சைகளையும் உணர்ந்த எமக்கு ஒன்றிலும் விருப்பம் இல்லை; கல்லானை கன்னல் கறிக்கின்றது காண்டி என்றார் - கல்லானையானது ஈதோ கரும்பினைக் கடிக்கின்றதைக் காண்பாய் என்றார். நன்கு மதிக்கும்படி விஞ்சையைக் காட்டி என விரிக்க. காண்டி : ஏவலொருமை; ட் : எழுத்துப்பேறு. (14) கடைக்கண் சிறிதே குறித்தார்முன் கடாக்கல் யானை மடைக்கண் டிறந்து மதமூன்றும் வழிய விண்வாய் அடைக்கும் படிவாய் திறந்தார்த்துப் புழைக்கை நீட்டித் தொடைக்குன்ற னான்கைச் சுவைத்தண்டைப் பறித்த தன்றே. (இ - ள்.) சிறிது கடைக்கண் குறித்தார் முன் - சிறிது கடைக்கண் வைத்தருளிய சித்தருக் கெதிரே, கடாக்கல் யானை - மதத்தினையுடைய கல்யானையானது, மடைக்கண் திறந்து மத மூன்றும் வழிய - மடை போலக் கண் திறந்து மூன்று மதங்களும் ஒழுக, வின்வாய் அடைக்கும் படி வாய் திறந்து ஆர்த்து - மேகத்தின் வாய் அடைக்குமாறு வாயைத் திறந்து பிளிறிட்டு, புழைக்கை நீட்டி - தொளையினையுடைய துதிக்கையை நீட்டி, தொடைக்குன்று அனான் கைச்சுவைத் தண்டைப் பறித்தது - மாலையை யணிந்த மாலையை ஒத்த பாண்டியன் கையிலிருந்த கரும்பைப் பிடுங்கியது. என்று கூறிக் கடைக்கண் குறித்தார் முன் என்க. கடாக் கல்யானை - கல்லானையாகிய மதயானை. இடியோசையும் கீழ்ப்பட ஆர்த்ததென்றார். தொடைக்குன்று அனான் : இல்பொருளுவமை. சுவைத்தண்டு - கரும்பு. அன்று, ஏ : அசைகள். (15) பறித்துக் கடைவாய் வழிசாறளி பாய்ந்து நக்கக் கறித்துக் குதட்டிப் பருகிக்கர மூச லாட நெறித்துத் தருக்கி நிழல்சீறி நிமிர்ந்து நிற்ப மறித்துக் கடைக்கண் குறித்தார்பினு மாயம் வல்லார். (இ - ள்.) பறித்து- அங்ஙனம் பிடுங்கி, கடைவாய் வழிசாறு அளி பாய்ந்து நக்க - கடைவாயில் வழிகின்ற சாற்றினை வண்டுகள் மொய்த்துப் பருகும்படி, கறித்துக் குதட்டிப் பருகி - கடித்து மென்று தின்று, கரம் ஊசல் ஆட - துதிக்கை ஊஞ்சல்போல ஆடாநிற்க, நெறித்துத் தருக்கி நிழல் சீறி நிமிர்ந்துநிற்ப - நெறித்துத் தருக்குற்று நிழலைச் சீறி நிமிர்ந்து நிற்க, பினும் மாயம் வல்லார்- பின்னும் விஞ்சையில்வல்ல சித்தர், மறித்துக் கடைக்கண் குறித்தார் - மீட்டும் கடைக் கண்ணாற் குறித்தருளினார். பருகி - தின்றென்னும் பொருட்டு. நெறித்து - உடலை நெளித்து. நிழலைச் சீறுதல் மதவேழத்தின் இயல்பு. மாயம் - விசித்திரச் செய்கை. (16) மட்டுற்ற தாரான் கழுத்திற்கண்ட மாலை தன்னை எட்டிப் பறித்த திகல்காஞ்சுகி மாக்கள் சீறிக் கிட்டிக் களிற்றைப் புடைப்பான் கிளர்கோல்கொண் டோச்சச் சிட்டத் தவர்கண் சிவந்தானையைச் சீறி நோக்க. (இ - ள்.) மட்டு உற்ற தாரான் கழுத்தில் கண்ட மாலை தன்னை எட்டிப் பறித்தது - மணமிக்க மாலையையணிந்த பாண்டியன் கழுத்திலு'9cள (முத்தாலாகிய) கண்டமாலையை எட்டிப் பிடுங்கியது; இகல் காஞ்சுகி மாக்கள் சீறி - (உடனே) மாறுபட்ட மெய்காவலர் சீற்றங்கொண்டு, களிற்றைப் புடைப்பான் கிட்டிகோல் கொண்டு ஓச்ச - யானையை அடித்தற்கு நெருங்கிக் கோலினைக் கொண்டு வீச, சிட்டத்தவர் கண் சிவந்து ஆனையைச் சீறி நோக்க - சித்தமூர்த்திகள் கண் சிவந்து யானையைச் சினந்து பார்க்க. கண்டமாலை - கழுத்தணி; பெயர். இகல் - இகலிய. சிட்டராகிய தவர் என்க; சிட்டர் மேலோர். ஓச்சினர் - ஓச்சிய வளவில் என விரித்துரைக்க. (17) கண்டா வளியைக்1 களிறுண்டது கண்கள் சேப்புக்2 கொண்டா னரசன் சிவயோகரிற் கோப மூளத் தண்டா வரசன் றமருட்டறு கண்ணர் சீறி வண்டா ரிதழி மறைத்தாரை யடிக்க வந்தார். (இ - ள்.) களிறு கண்டாவளியை உண்டது - யானையானது கண்ட மாலையை உண்டுவிட்டது; அரசன் கண்கள் சேப்புக் கொண்டான் - மன்னன் கண்கள் சிவந்து, சிவயோகரில் கோபம் மூள - சிவயோக சித்தர்மீது கோபம் மிக, தண்டா அரசன் தமருள்- நீங்காத அரசன் மெய் காப்பாளருள், தறுகண்ணர் சீறி - அஞ்சாமையையுடைய சிலர் சினந்து, வண் இதழித் தார் மறைத் தாரை அடிக்க வந்தார் - செழுமையாகிய கொன்றை மாலையை மறைத்துவந்த சித்தரை அடிக்கும் பொருட்டு நெருங்கி வந்தனர். கண்வடாளி : வடமொழி நெடிற்சந்தி. ஆவலி - மாலை; ஆவளி யெனத் திரியும். சேப்பு - சிவப்பு. கண்கள் சேப்புக் கொண்டான். சினைவினை முதன்மேல் நின்றது. கொண்டான் : முற்றெச்சம். கோபமூளக் கொண்டான் என்றலுமாம். யோகரில்- யோகரிடத்து. தண்டாத தமர் என்க. வண் இதழித்தார் என மாற்றுக; வண்டு மொய்த்த இதழி யென்றல் சிறப்பின்று. (18) அப்போ திளமூர லரும்பியச்சித்த சாமி கைப்போ தமைத்துக் கடிந்தோர்தமை நின்மி னென்ன மைப்போ தகமன் னவர்வைத்தடி பேர்க்க லாற்றா தொப்போ தரிய நிலையோவியம் போல நின்றார். (இ - ள்.) அப்போது அச்சித்தசாமி - அங்ஙனம் வரும்பொழுது அந்தச் சித்த மூர்த்திகள், இளமூரல் அரும்பி - புன்னகை புரிந்து, கடிந்தோர்தமைக் கைப்போது அமைத்து நின்மின் என்ன - வெகுண்டு வந்தோரைக் கைம்மலராலமைத்து நில்லுங்கள் என்று சொல்ல, மைப்போதகம் அன்னவர் - கரிய யானையை ஒத்த அவ்வீரர்கள், வைத்த அடிபேர்க்கலாற்றாது - வைத்த அடியைப் பெயர்க்க முடியாது, ஒப்பு ஓது அரிய நிலை ஓவியம்போல நின்றார் - ஒப்புச் சொல்லுதற்கரிய நிலையினையுடைய ஓவியம்போல நின்றார்கள். அமைத்து நின்மினென்ன வென்க. தருக்குடைமையாற் போதக மன்னா ரென்றார். வைத்த என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது. அரிய ஓவியம் நிலை யோவியம் எனத் தனித்தனி கூட்டுக. நிலை - அசையாது நிற்றல். (19) மத்தக் களிற்றான் வெகுளித்தழன் மாறி யன்பு பொத்தப் புதைந்த மனத்தற்புதம் பொங்கிச் சோரச் சித்தப் பெருமா னடிமாமுடி தீண்டப் பாச பெத்தத் தமியேன் பிழையைப்பொறு மென்று வீழ்ந்தான். (இ - ள்.) மத்தக்களிற்றான் - மத மயக்கத்தையுடைய யானையை யுடைய பாண்டியன், வெகுளித் தழல்மாறி - சினத்தீ அவியப்பெற்று, அன்பு பொத்தப் புதைந்த மனத்து அற்புதம் பொங்கிச் சோர - அன்பு மூடுதலாற் புதைபட்ட மனத்தின்கண் வியப்பானது பொங்கி வழிய, சித்தப் பெருமான் அடி மா முடிதீண்ட - சித்தசாமியின் திருவடிகள் தனது பெருமை பொருந்திய முடியினைத் தீண்ட, பாச பெத்தத் தமியேன் பிழையைப் பொறும் என்று வீழ்ந்தான் - பாசத்தாற் கட்டுண்ட ஏழையேன் பிழையைப் பொறுத்தருளுமென்று வீழ்ந்து வணங்கினான். மத்தம் - உன்மத்தம்; மத்தகமுமாம். சோர - சோராநிற்க. தீண்டுமாறு வீழ்ந்தானென்க. பெத்தம் - கட்டுண்ட நிலைமை. (20) அன்புக் கிரங்குங் கருணைக்கட லான வையர் இன்புற்று வேண்டும் வரங்கேளெனத் தாழ்ந்து வேந்தன் நன்புத் திரப்பே றருள்வாயென நல்கிச் செங்கை வன்புற்ற வேழ மிசைவைத்தரு ணாட்டம் வைத்தார். (இ - ள்.) அன்புக்கு இரங்கும் கருணைக் கடலான ஐயர் - அன்புக்கு இரங்கும் அருட்கடலான பெருமான், இன்புற்று - மகிழ்ந்து, வேண்டும் வரம் கேள் என - விரும்பிய வரத்தினைக் கேட்பாயாக என்று கூற, வேந்தன் தாழ்ந்து - அபிடேக பாண்டியன் வணங்கி, நன் புத்திரப்பேறு அருள்வாய் என - நன்மைவாய்ந்த புதல்வர்ப் பேற்றினை அளிப்பாயாக என்றுவேண்ட, நல்கி - (அங்ஙனமே) அருள் செய்து, வன்பு உற்ற வேழமிசை செங்கைவைத்து அருள் நாட்டம் வைத்தான் - வலிமைமிக்க யானையின் மேலே சிவந்த திருக்கையை வைத்து அருணோக்கம் வைத்தருளினான். இரங்குதல் - எளிவருதல். (21) [கலி விருத்தம்] தழைக்கு நீள்கதிர்த் தண்முத்த மாலையைப் புழைக்கை நீட்டிக் கொடுத்தது போதகம் மழைக்கை நீட்டினன் வாங்கின னீதியிற் பிழைக்க லாத பெருந்தகை வேந்தனே. (இ - ள்.) போதகம் - யானையானது, புழைக்கை நீட்டி - தனது தொளையுடைய துதிக்கையை நீட்டி, தழைக்கு நீள் கதிர் தண் முத்த மாலையைக் கொடுத்தது - தழைக்கின்ற மிக்க ஒளியினையுடைய தண்ணிய முத்துமாலையைக் கொடுத்தது; நீதியில் பிழைக்கலாத பெருந்தகை வேந்தன் - நீதியினின்று தவறாத பெருந் தன்மையை யுடைய பாண்டி மன்னன், மழைக்கை நீட்டினன் வாங்கினன் - முகில் போலுங் கையினை நீட்டி அதனை வாங்கினான். கொடுக்குங் கையால் வாங்கின னென்பார் ‘மழைக்கை நீட்டினன் வாங்கினன்’ என்றார். நீட்டினன் : முற்றெச்சம். நீதி - அரசாளு முறைமை. பிழைக்கலாத : எதிர்மறைப் பெயரெச்சம்; குவ்வும் அல்லும் சாரியை; ஆ : எதிர்மறை யிடைநிலை. (22) முத்த மாலிகை வாங்குமுன் முன்னின்ற சித்த சாமி திருவுருக் கண்டிலன் மத்த யானை வடிவமு மேனைய ஒத்த தாக வுரவோன் வெருவினான். (இ - ள்.) முத்த மாலிகை வாங்கு முன் முன்நின்ற சித்தசாமி திருவுருக் கண்டிலன் - அங்ஙனம் முத்து மாலையை வாங்குதற்கு முன் எதிரே நின்றருளிய சித்த மூர்த்திகளின் திருவுருவத்தைக் காணானாயினன்; மத்தயானை வடிவமும் - மதமயக்கத்தினை யுடைய யானையின் உருவமும், ஏனைய ஒத்ததாக - (அங்கு நின்ற) மற்றைய கல்லானைகளைப் போன்றதாக, உரவோன் - வலியோனாகிய மன்னன,. வெருவினான் - அஞ்சினான். ஒத்ததாயிற்று; அங்ஙனமாகவே வெருவினான் என விரித்துரைக்க. திருவுருவைக் காணாமலும் ஒத்ததாயினமை கண்டும் வெருவினான். வெருவுதலில்லாத மதுகை யுடையான் வெருவினான் என்றார். (23) இந்த வாட லெமக்குயி ராயவிவ் வந்த மில்லி யருள்விளை யாட்டெனா முந்தை வேத முதல்வனை மீளவும் வந்து வந்தனை செய்தனன் மன்னனே. (இ - ள்.) மன்னன் - (அங்ஙனம் அஞ்சிய) அரசனானவன், இந்த ஆடல் - இத் திருவிளையாடல், எமக்கு உயிராய இவ்வந்தம் இல்லி அருள் விளையாட்டு எனா - எமக்கு உயிராகிய இந்த அழிவில்லாத சோமசுந்தரக் கடவுளின் அருள் விளையாடலே என்று, முந்தைவேத முதல்வனை - முன்னவனாகிய வேதநாயகனை, மீளவும் வந்து வந்தனை செய்தனன் - மீண்டும் வந்து வணங்கினன். அந்தம் இல்லி - ஈறில்லாதவன்; இ : வினைமுதற்பொருள் விகுதி. முந்தை வேதத்திற்கு அடையுமாம். முன்பு சோமசுந்தரக் கடவுளை வணங்கித் திருக்கோயிலை வலம்வருகையிற் சிவசித்தரைக் கண்டா னாகலின் ‘மீளவும் வந்துவந்தனை செய்தனன்’ என்றார். (24) முழுது ணர்ந்த முதல்வநின் னாடலை இழுதை யேனறி யாதளந் தேனெனா அழுதி றைஞ்சி யபராத மீந்துகை தொழுது நின்று துதிக்கத் தொடங்கினான். (இ - ள்.) முழுது உணர்ந்த முதல்வ - முற்று முணர்ந்த முதல்வனே, நின் ஆடலை - உன் திருவிளையாடலை, இழுதையேன் அறியாது அளந்தேன் எனா - அறிவிலியாகிய யான் அறியாமையால் அளக்கலுற்றேன் என்று, அழுது இறைஞ்சி அபராதம் ஈந்து - அழுது வணங்கித் தண்டம் இறுத்து, கைதொழுது நின்று துதிக்கத் தொடங்கினான் - கைகூப்பி நின்று துதிக்கத் தொடங்கினான். இழுதையேன் என்பதற்குப் பேயனேன் என்றும் பொய்யினேன் என்றும் கூறலுமாம். அறியாது - அறியாமையால். அபராதம் - குற்றம், குற்றத்திற்குக் கழுவாயாக இறுக்கும் தண்டம்; ஈண்டுத் தண்டத்தை யுணர்த்திற்று. (25) [கொச்சகக் கலிப்பா] வேதியாய் வேத விளைபொருளாய் வேதத்தின் நீதியாய் நீதி நெறிகடந்த நீளொளியாய் ஆதியா யீறாய் நடுவா யவைகழிந்த சோதியாய் நின்றாயென் சோதனைத்தோ நின்னியல்பே. (இ - ள்.) வேதியாய் - வேதத்தை அருளியவனாகியும், வேத விளைபொருளாய் - வேதத்தில் விளையும் பயனாகியும், வேதத்தின் நீதியாய் - வேதங்கூறும் நீதியாகியும், நீதிநெறி கடந்த நீள் ஒளியாய் - அந்நீதி நெறிகளைக் கடந்த நீண்ட ஒளியாகியும், ஆதியாய் ஈறாய் நடுவாய் அவை கழிந்த சோதியாய் - முதலாகியும் முடிவாகியும் இடையாகியும் அவற்றுக்கு அப்பாலான ஒளிவடிவாகியும், நின்றாய் - நின்றவனே, நின் இயல்பு - இங்ஙனமாகிய நினது தன்மை, என் சோதனைத்தோ - என் சோதனையில் அகப்படற்பாலதோ? வேதி - வேதத்தையுடையவன். வேத விளைபொருள் - வேதத்தின் முடிந்த உண்மைப் பொருள். நீதியாய் நின்று அவ்வழி யொழுகும் உயிர்கட்கு ஏற்ற பயனளித்தும் தான் அதனைக் கடந்து நின்றவன் என்றார். சோதனைத்தோ - சோதனை யகத்ததோ. நின்றாய் : பெயர- ஓகாரம் எதிர்மறைப் பொருட்டு. " ஆதி யானை யமரர் தொழப்படும் நீதி யானை நியம நெறிகளை ஓதி யானை யுணர்தற் கரியதோர் சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே" என்னும் தமிழ்மறை இங்குச் சிந்திக்கற்பாலது. (26) நின்னான் மொழிந்தமறை நின்னடிகள் வந்தித்தும் பன்னா ளருச்சித்தும் பாதந் தலைசுமந்தும் உன்னாமம் வாசித்து முன்னையறி யேனென்று சொன்னா லடியனேன்1 சோதனைத்தோ நின்னியல்பே. (இ - ள்.) நின்னால் மொழிந்த மறை - நின்னாலே திருவாய் மலர்ந் தருளப்பட்ட வேதமானது, நின் அடிகள் வந்தித்தும் - உன் திருவடிகளை வணங்கியும், பல்நாள் அருச்சித்தும் - பலநாள் அருச்சனை புரிந்தும், பாதம் தலை சுமந்தும் - உன் திருவடிகளைத் தலையிற் சுமந்தும், உன் நாமம் வாசித்தும் - உன் திருப் பெயர்களைப் படித்தும், உன்னை அறியேன் என்று சொன்னால் - உன்னை அறிகிலேன் என்று முறையிடு மாயின், நின் இயல்பு அடியனேன் சோதனைத்தோ - அங்ஙனமாய நினது தன்மை அடியேனது சோதனையில் அகப்படற் பாலதோ? திருமறைக் காட்டிலே மறை அருச்சித்து வந்தித்தமை கொள்க. பாதம் தலை சுமத்தல் - பாதுகையா யிருந்து சுமத்தல். நாமம் வாசித்தல் - அவன் திருப்பெயர்களையே கூறுதல். உன்னாலும் உன் பெருமை உணர்தற்கரிதென்பார், ‘நின்னால் மொழிந்த மறை உன்னை யறியேனென்று சொன்னால்’ என்றார். வந்தித்தல் முதலிய ஒன்றுஞ் செய்யாத அடியேன் என்க. மறை: சாதியொருமை. மறையும் என்னும் உம்மை தொக்கது. (27) [மேற்படி வேறு] பெரியதினும் பெரியதுமாய்ச் சிறியதினுஞ் சிறியதுமாய் அரியதினு மரியதுமா யெளியதினு மெளியதுமாய்க் கரியதுமாய்க் காண்பானுங் காட்சியுமா யவைகடந்த துரியமுமாய் நின்றாயென் சோதனைத்தோ நின்னியல்பே. (இ - ள்.) பெரியதினும் பெரியதுமாய் - பெரியதினும் பெரிதாகியும், சிறியதினும் சிறியதுமாய் - சிறிதினும் சிறியதாகியும், அரியதினும் அரியதுமாய்- அரிதினும் அரிதாகியும், எளியதினும் எளியதுமாய் - எளிதினும் எளியதாகியும், கரியதுமாய்- சான்றாகியும், காண்பானும் காட்சியுமாய் - காண்பவனும் காட்சியுமாகியும், அவை கடந்த துரியமுமாய் - அவற்றைக்கடந்த துரியமாகியும், நின்றாய் - நின்றவனே, நின் இயல்பு என் சோதனைத்தோ - இங்ஙனமாய நினது தன்மை எனது சோதனையில் அகப்படற்பாலதோ? பெரிதிற் பெரிதாதல் - அண்டமோரணுவாம் பெருமை கொள்ளுதல்; " அண்டப் பகுதியி னுண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் றுன்னணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன்" என்பது திருவாசகத் திருமறை. இவ்வாசிரியர், கடவுள் வாழ்த்திலே, " அண்டங்க ளெல்லா மணுவாக வணுக்க ளெல்லாம் அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்" என்றமையும் காண்க. கரி - சான்று; அறிவித்து உடனிருந் தறிவது. காண்பான் - அறிபவன் ஆன்மா. காட்சி - அறிவு. " அறிவானுந் தானே யறிவிப்பான் றானே அறிவா யறிகின்றான் றானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பா ராகாசம் அப்பொருளுந் தானே யவன்" என்னும் அம்மையாரதிருவாக்கும் நோக்குக. உம்மைகள் மாற்றி யுரைக்கப்பட்டன. (28) [அறுசீரடியாசிரிய விருத்தம்] என்றுபல முறைபழிச்சி மனையெய்தி விக்ரமனை யீன்று பன்னாட் டொன்றுமுறை கோலோச்சி விக்கிரமன் சுவன்மிசைப்பார் சுமத்திப் பாசம் வென்றுகளைந் தருட்சித்த சாமிதிரு வருணோக்கால் விளைபே ரின்ப மன்றன்மது1 வீழ்வண்டிற் கலந்திருந்தா னபிடேக மாறன் மன்னோ. (இ - ள்.) என்று பல முறை பழிச்சி - என்று பலமுறை துதித்து, மனை எய்தி - தனது அரண்மனையை அடைந்து, விக்ரமனை ஈன்று - விக்கிரமனென்னும் புதல்வனைப் பெற்று, பல் நாள் தொன்று முறை கோல் ஓச்சி - பலநாள்வரை பழைய முறைப்படியே செங்கோலை நடத்தி, விக்கிரமன் சுவல்மிசை பார் சுமத்தி - விக்கிரமனது தோளின் மேல் நிலச்சுமையை ஏற்றி, பாசம் வென்று களைந்து - பாசத்தினை வென்று போக்கி, அருட்சித்தசாமி திருவருள் நோக்கால் விளைபேரின்பம் - அருளுருவாகிய சித்தமூர்த்திகளின் திருவருட் பார்வையால் விளைந்த பேரின்பத்தின்கண், மன்றல் மது வீழ் வண்டில் - மணம் பொருந்திய தேனின்கண் வீழ்ந்த வண்டினைப் போல, அபிடேகமாறன் கலந்திருந்தான் - அபிடேக பாண்டியன் இரண்டறக் கலந்திருந்தான். தமிழிலே ககரவொற்றின் பின் வேறுமெய் வந்து மயங்காதாகலின் விக்கிரமன் என்றே வருதல் வேண்டும்; செய்யுளோசை மிகாமற் பொருட்டு ‘விக்ரமன்’ என நின்றது. சோமசுந்தரக் கடவுள் சித்தராக வெளிவந்து அருள் புரிந்தமையால் ‘சித்தசாமி திருவருனோக்கால்’ என்றார். மதுவில் வீழ்ந்த வண்டு அதனையுண்டு பெயராது கிடத்தல்போல வென்க; " அதுவென்றா லெதுவெனவந் தடுக்குஞ் சங்கை யாதலினா லதுவெனலு மறவே விட்டு மதுவுண்ட வண்டெனவுஞ் சனக னாதி மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தார்" என்று தாயுமானவடிகளகூறுமாறுங் காண்க. மன்ற என்பது பாடமாயின் தேற்றமாக என்றுரைக்க. மன்னும் ஓவும் அசைகள். (29) ஆக செய்யுள் - 1385 இருபத்திரண்டாவது யானையெய்த படலம் [கலிவிருத்தம்] கட்டவிழ் கடுக்கையர் கலானை கழைதின்ன இட்டதிது பஞ்சவ னிடத்தமண ரேவி விட்டமத யானைவிழ மேவலர் புரத்தைச் சுட்டகணை விட்டுயிர் தொலைத்தமுறை சொல்வாம். (இ - ள்.) இது - இத் திருவிளையாடல், கட்டு அவிழ் கடுக்கையர் கல் ஆனை கழை தின்ன இட்டது - முறுக் கவிழ்ந்த கொன்றைமலர் மாலையை யணிந்த சித்த மூர்த்திகள் கல்லானையானது கரும்பினைத் தின்னுமாறு அளித்ததாகும்; பஞ்சவன் இடத்து அமணர் ஏவி விட்ட - விக்கிரம பாண்டியன்மேல் சமணர்கள் ஏவிய, மதயானை விழ - மதத்தையுடைய யானையானது விழுமாறு, மேவலர் புரத்தைச் சுட்ட கணை விட்டு - பகைவரின் திரிபுரத்தை நீறாக்கிய அம்பை விட்டு, உயிர் தொலைத்த முறை சொல்வாம் - அதன் உயிரினைப் போக்கிய திருவிளையாடலை இனிக் கூறுவாம். கல்லானை என்பதில் லகரந் தொக்கது. இது வென்றது மேலே கூறியதனை. (1) விக்கிரம பாண்டியன் வெலற்கரிய செங்கோல் திக்குநில னுந்திறைகொள் செல்வநிறை வெய்த அக்கிரம வெங்கலி யரும்பகை யொதுங்கச் சக்கர முருட்டியிடர் சாய்த்துமுறை செய்வான். (இ - ள்.) வெலற்கு அரிய செங்கோல் - பிறரால் வெல்லு தற்கரிய செங்கோலையுடைய, விக்கிரம பாண்டியன் - விக்கிரம வழுதியானவன், திக்கும் நிலனும் திறைகொள் செல்வம் நிறைவு எய்த - எட்டுத் திக்கிலும் புவி முழுதிலும் திறையாகக் கொண்ட செல்வமானது நிறைவினைப் பொருந்தவும், அக்கிரம வெங்கலி அரும்பகை ஒதுங்க - கொடிய கலியாகிய அரிய பகையானது ஓடவும், சக்கரம் உருட்டி - தனது ஆணையாகிய திகிரியைச் செலுத்தி, இடர் சாய்த்து முறை செய்வான் - குடிகளின் துன்பத்தைப் போக்கி முறை செய்வானாயினன். செங்கோலையுடைய பாண்டியன் எனக் கூட்டுக. திக்கு, நிலன் என்பன ஆகு பெயர்கள். அக்கிரமம் - நெறியின்மை. அக்கிரமமும் வெம்மையும் கலிக்கு அடை. கலி - வறுமையும் தீமையும் முதலியன. நீதி திறம்புதலாகிய கலி என்பாருமுளர். (2) புத்தரம ணாதிய1 புறக்களை யகழ்ந்து நித்தமறை யாகம நெறிப்பயிர் வளர்த்து மெய்த்தவிதி பத்தியின் விளைந்தபயன் யாருந் துய்த்திட மனுத்தொழி னடத்திவரு தூயோன். (இ - ள்.) புத்தர் அமண் ஆதிய புறக்களை அகழ்ந்து - புத்தரும் சமணரும் முதலிய புறமதக் களைகளைக் களைந்து, நித்தம் மறை ஆகம நெறிப்பயிர் வளர்த்து - அழியாத வேத நெறியும் ஆகம நெறியுமாகிய பயிரினை வளர்த்து, மெய்த்த விதி பத்தியின் விளைந்த பயன் - (அப் பயிரின்) மெய்ம்மையையுடைய விதியாகவும் பத்தியாகவும் விளைந்த பயனை, யாரும் துய்த்திட - அனைவரும் நுகர, மனுதொழில் நடத்தி வரு தூயோன் - மனு முறைப்படி ஆட்சி புரிந்து வருகின்ற தூயவனாகிய பாண்டியன். புத்தம் சமணம் முதலிய புறச் சமயங்களாகிய களையென்க. மறையாகம நெறிபயிர் - வைதிக சைவமாகிய பயிர். விதி பத்தியின் - விதிநெறியும் பத்தி நெறியுமாக; இன் : சாரியை. மனுத்தொழில் - நீதி ஆட்சி. இஃது உருவகவணி. (3) மருவிதழி யானுறையும் வானிழி விமானத் தருகுவட பக்கமுற வாலய மெழுப்பி உருவரு விரண்டினையு மொருவிவரு சித்தர் திருவுருவு கண்டுபணி செய்தொழுகு2 நாளில். (இ - ள்.) மரு இதழியான் உறையும் வான் இழி விமானத்து அருகு வடபக்கம் உற - மணம் பொருந்திய கொன்றை மலர்மாலையை யணிந்த சோமசுந்தரக் கடவுள் வீற்றிருக்கும் விண்ணுலகி னின்றும் இறங்கிய விமானத்தின் அருகில் வடபக்கத்தில், ஆலயம் எழுப்பி - திருக்கோயில் எடுப்பித்து, உரு அரு இரண்டினையும் ஒருவி வரு சித்தர் திரு உருவு கண்டு - உருவத்தினையும் அருவத்தினையும் நீக்கி அருளுருக் கொண்டுவந்த சித்தசாமிகளின் திருவுருவத்தை ஆக்கி, பணிசெய்து ஒழுகு நாளில் - தொண்டு செய்தொழுகும் காலத்தில். பக்கமுற - பக்கமாக. உருவும் அருவும் மாயையின் காரியமாகலின் அவற்றை ஒருவிவரு என்றார். கண்டு - பிரதிட்டித்து. (4) செய்யகதி ரோன்வழிய செம்பிய னொருத்தன் கையனவன் வென்றிபயில் காஞ்சிநக ருள்ளான் பொய்யமணர் கட்டுரை புறத்துறையி னின்றான் மையின்மதி மாறனொடு மாறுபட நின்றான். (இ - ள்.) செய்ய கதிரோன் வழிய செம்பியன் ஒருத்தன் - சிவந்த கிரணங்களை யுடையவனாகிய சூரியன் வழியில் சோழன் ஒருவன், வென்றி பயில் காஞ்சி நகருள்ளான் - வெற்றி பொருந்திய காஞ்சி நகரத்தில் இருப்பானாயினன்; பொய் அமணர் கட்டுரை புறத்துறையில் நின்றான் - பொய்மையுடைய சமணர்கள், கட்டிக் கூறிய சமண மதமாகிய புறநெறியில் நின்றவனும், கையன் - வஞ்சகனுமாகிய, அவன் - அச்சோழன், மை இல் மதி மாறனொடு - குற்றமில்லாத சந்திரன் மரபில் வந்த பாண்டியனோடு, மாறுபட நின்றான் - மாறுபட்டிருந்தான். வழிய - வழியினையுடைய. கட்டுரை - புனைந்து கூறிய. ஒருத்தன் உள்ளான் புறத்துறையில் நின்றானும் கையனுமாகிய அவன் மாறுபட நின்றான் என முடிக்க. மாறுபட - மாறுபட்டு. (5) முடங்கன்மதி செஞ்சடை முடித்துவிடை யேறும் விடங்கரது சேவடி விழுங்கிய மனத்து மடங்கனிகர் தென்னனெதிர் வந்துபொர லாற்றா தடங்கலனொர் வஞ்சனையி னாலட மதித்தான். (இ - ள்.) முடங்கல் மதி செஞ்சடை முடித்து - வளைவினையுடைய பிறையைச் சிவந்த சடையில் முடித்து, விடை ஏறும் - இடபவூர்தியில் ஏறியருளும், விடங்கரது சேவடி விழுங்கிய மனத்து - அழகராகிய சோமசுந்தரக் கடவுளின் சிவந்த திருவடிகளை உட்கொண்ட மனத்தினையுடைய, மடங்கல் நிகர் தென்னன் எதிர் வந்து பொரல் ஆற்றாது - சிங்கத்தை ஒத்த விக்கிரம பாண்டியனெதிரே வந்து போர் செய்தலாற்றாது, அடங்கலன் ஓர் வஞ்சனையினால் அட மதித்தான் - பகைவனாகிய அச்சோழன் ஒரு வஞ்சனையினாற் கொல்லக் கருதினான். விழுங்கிய - உட்கொண்ட; நன்கு பதித்த. பொரலாற்றாது- போர் செய்தற்கு வலியின்றி. ஓர் : விகாரம். (6) [அறுசீரடியாசிரிய விருத்தம்] அஞ்சனங் கவுஞ்சங் கோவர்த் தனந்திரி கூடங் காஞ்சிக் குஞ்சரஞ் சைய1 மேம கூடமே விந்த மென்னும் மஞ்சிவர் வரைக ளெட்டும் வைகுறு மமணர் தம்மில் எஞ்சலில் குரவர்க் கோலை வேறுவே றெழுதி விட்டான். (இ - ள்.) அஞ்சனம் கவுஞ்சம் கோவர்த்தனம் திரிகூடம் - அஞ்சனமும் கிரவுஞ்சமும் கோவர்த்தனமும் திரிகூடமும், காஞ்சிக் குஞ்சரம் சையம் ஏமகூடம் விந்தம் என்னும் - காஞ்சியிலுள்ள அத்திகிரியும் சையமும் ஏமகூடமும் விந்தமும் என்று சொல்லப்பட்ட, மஞ்சு இவர் வரைகள் எட்டும் - முகில்கள் தவழும் எட்டு மலைகளிலும், வைகுறும் அமணர் தம்மில் - வசிக்கும் சமணர்களுள், எஞ்சல் இல் குரவர்க்கு வேறு வேறு ஓலை எழுதிவிட்டான் குறைதலில்லாத ஆசிரியராயினோர்க்கு வேறு வேறாக ஓலை எழுதி அனுப்பினான். அஞ்சனம் - நீலவெற்பு. கவுஞ்சம், வடசொற் சிதைவு. அத்தி வெற்பினைப் பரியாயப் பெயராற் ‘குஞ்சரம்’ என்றார். எஞ்சல் இல் - மிக்க தொகையினையுடைய. (7) வடிவுபோ லுள்ள மெல்லா மாசிருள் புதைய நின்ற அடிகண்மா ராவா ரெண்ணா யிரவரு மார்த்தார் வேய்ந்த முடிகெழு வேந்தன் விட்ட முடங்கலை நிமிர்த்து வாசித் திடிகெழு கார்போற் குன்றி னிழிந்துவே றிடத்திற் செல்வார். (இ - ள்.) வடிவுபோல் உள்ளம் எல்லாம் மாசு இருள் புதைய நின்ற அடிகள்மார் ஆவார் எண்ணாயிரவரும் - தம் வடிவு போன்றே உள்ள முழுதும் அஞ்ஞானமாகிய இருள்மூட நின்ற குரவராவார் எண்ணாயிரவரும், ஆர்தார் வேய்ந்த முடிகெழு வேந்தன் விட்ட முடங்கலை நிமிர்த்து வாசித்து - ஆத்திமாலையை யணிந்த முடிசூடிய சோழமன்னன் விடுத்த ஓலையைப் பிரித்துப் படித்து, இடிகெழு கார் போல் - இடிமிக்க முகில்போல, குன்றின் இழிந்து வேறு இடத்தில் செல்வார் - மலைகளினின்றும் இறங்கி வேறாகக் குறித்த இடத்திற் செல்வாராயினர். வடிவு அழுக்கால் மூடப்பட்டிருப்பது போன்றே மனம் அறியாமையால் மூடப்பட்ட என்றார்; புறத்தும் அகத்தும் தூய்மையில்லாதவர் என்றவாறு. மாசு - கறை, அறியாமை; இருள் மாசு என மாறி அறியாமையாகிய அழுக்கு எனலுமாம். அடிகள்மார் - சமண குரவர்க்குச் சிறப்பாக வழங்கும் பெயர் : மார் : பெயர் விகுதி : ஆவார் : முதல் வேற்றுமைச் சொல். கருமையாலும் ஆரவாரத்தாலும் மலையினின் றிறங்குதலாலும் ‘இடிகெழு கார்போல்’ என்றார். தம்மிடத்தின் வேறாகிய குறித்த இடத்தில் என்க. (8) யாவரு மொருங்கு கூடி யிருள்வழி கொள்வ தேய்ப்பக் காவல்வல் லரணஞ் சூழ்ந்த காஞ்சிமா நகரத் தெய்திப் பூவலர் தாரான் கோயிற் புறங்கடை புகுந்து வேந்தன் ஏவலர் விடுப்ப வுள்போ யிறைமக னிருக்கை புக்கார். (இ - ள்.) யாவரும் ஒருங்குகூடி - அனைவரும் ஒன்று சேர்ந்து, இருள் வழி கொள்வது ஏய்ப்ப - இருளானது வழிச் செல்வதைப்போல (நடந்து), காவல் வல் அரணம் சூழ்ந்த காஞ்சிமா நகரத்து எய்தி - காவலையுடைய வலிய மதில் சூழ்ந்த பெரிய காஞ்சிப்பதியினை அடைந்து, பூ அலர் தாரான் கோயில் புறங்கடை புகுந்து - ஆத்தி மலரால் விளங்கும் மாலையை யணிந்த சோழனது அரண்மனையின் வாயிலை அடைந்து, வேந்தன் ஏவலர் விடுப்ப உள்போய் இறைமகன் இருக்கை புக்கார்- அரசனுடைய ஏவலாளர் விடுக்க உள்ளே சென்று அரசனிருப்பிடத்தை யுற்றார்கள். இருள்வழி கொள்வ தேய்ப்ப என்றது இல்பொருளுவமை. ஏவலர் - வாயில் காப்போர். (9) மன்னவன் முடிமேற் பீலி வைத்தன ராக்கங் கூற அன்னவ னவரை நோக்கி வசியமுன் னாறும் வல்லீர் தென்னனை யாபி சாரஞ் செய்துயிர் செகுத்தா லுங்கட் கென்னது நாடு பாதி தருவல்போ யியற்று மென்றான். (இ - ள்.) மன்னவன் முடிமேல் பீலி வைத்தனர் ஆக்கம்கூற- (புக்கவர்) சோழனுடைய முடியின்மேல் மயிற்றோகையை வைத்து ஆசிமொழி கூற, அன்னவன் அவரை நோக்கி - அம்மன்னன் அச்சமணக் குரவர்களைப் பார்த்து, வசியம் முன் ஆறும் வல்லீர் - வசியம் முதலாகிய ஆறு தொழிலிலும் வல்லீரே, தென்னனை ஆபிசாரம் செய்து உயிர் செகுத்தால் - (நீவிர்) விக்கிரம பாண்டியனை மரணவேள்வி செய்து கொல்லுவீரேல், உங்கட்கு என்னது நாடு பாதி தருவல் - உங்களுக்கு என்னுடைய நாட்டிற் பாதி தருவேன்; போய் இயற்றும் என்றான் - சென்று அதனைச் செய்யுங்களென்று கூறினான். வசிய முன்னாறு எல்லாம் வல்ல சித்தரான படலத்திற் கூறப் பட்டன. ஆபிசாரம் - அபிசார வேள்வி. என்னது : னகரம் விரித்தல். நாடுபாதி - நாட்டிற் பாதி. (10) தவம்புரிந் தவமே செய்வார் தாமதற் குடன்பட் டேகி நிவந்ததெண் டிரைநீர்ப் பாலி நெடுங்கரைக் காத மூன்றிற் கவர்ந்தகன் சாலை கோலி யோசனை யகலங் கல்லி அவம்படு வேள்விக் குண்டங் கோணமெட் டாகக் கண்டார். (இ - ள்.) தவம் புரிந்து அவமே செய்வார் தாம் - (புறத்திலே) தவஞ் செய்து (அகத்தில்) அவமே செய்வாராகிய அவர்தாம், அதற்கு உடன்பட்டு ஏகி - அச்செய்கைக்கு உடன்பட்டுச் சென்று, நிவந்த தெண்திரை நீர்ப்பாலி நெடுங்கரை - உயர்ந்து வரும் தெள்ளிய அலைபொருந்திய நீரையுடைய பாலியாற்றின் நீண்ட கரையில், காதம் மூன்றில் கவர்ந்த அகன்சாலை கோலி - மூன்று காத அளவினை அகப்படுத்திய அகன்ற வேள்விச் சாலையைக் கோலி, யோசனை அகலம் கல்லி - (அதில்) ஒரு யோசனை அகலம் தோண்டி, எட்டுக் கோணமாக அவம்படு வேள்விக் குண்டம் கண்டார் - எண் கோணமாகப் பழிவிளையும் வேள்விக்குண்டத்தினைச் செய்தனர். தவம்புரிவார் போன்று அவமே புரிவாரென்க. அவம் - தவத்திற்கு மாறாய தீச்செய்கை; " தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வா ராசையுட் பட்டு" என்பது தமிழ்மறை. மூன்றில் - மூன்றினை. கவர்ந்த என்னும் பெயரெச்சத்து அகரந் தொக்கது. கண்டார் என்பதனை எச்சமாக்கலுமாம். (11) விடம்பொதி காட்டம் பெய்து நிம்பநெய் விராய நஞ்சின் உடம்புடை யுயிரின் கோழூன் கறிப்பொடி யூறு மெண்ணெய் இடம்பட வாயங் காந்த வெரிக்குழி புதையப் பெய்து கொடும்பழி வேள்வி செய்தார் கொல்லாத விரதம் பூண்டார். (இ - ள்.) விடம்பொதி காட்டம் பெய்து - (அங்ஙனஞ் செய்து) நஞ்சு பொதிந்த விறகினையிட்டு, நிம்பநெய் விராய - வேம்பின் நெய் கலந்த, நஞ்சின் உடம்பு உடை உயிரின் கோழ்ஊன் - நஞ்சு பொருந்திய உடலையுடைய உயிர்களின் கொழுவிய ஊனையும், கறிப்பொடி ஊறும் எண்ணெய் - மிளகுப் பொடி ஊறிய எள்ளின் நெய்யையும், இடம்பட வாய் அங்காந்த எரிக்குழி புதையப்பெய்து - இடம் பொருந்த வாய் திறந்த தீயினையுடைய வேள்விக் குண்டம் மறையுமாறு சொரிந்து, கொல்லாத விரதம் பூண்டார் கொடும்பழி வேள்வி செய்தார் - கொல்லாமையாகிய விரதத்தை மேற்கொண்ட சமணர்கள் கொடிய பழியினை விளைக்கும் வேள்வியினைச் செய்தார்கள். விடம்பொதி காட்டம் - எட்டி முதலியவற்றின் விறகு. நஞ்சினுடம்புடை உயிர் - பாம்பு முதலியன. கோழூன் - கொழுப்பு. வாய் அங்காந்த - வாய் திறந்தாற்போன்ற. கொல்லாமையாகிய விரதம் என விரிக்க. இவரது கொல்லா விரதம் இருந்தவா றென்னேயென் றிகழுவார் ‘கொடும்பழி வேள்வி செய்தார் கொல்லாத விரதம் பூண்டார்’ என்றார். (12) மாடுள பொதும்பர் நந்தா வனமுள சோலை யுள்ள காடுள கருகிச் சாயக் கயலுள வோடை யுள்ள கோடுள வாவி யுள்ள குளமுள வறப்பத் தாவிச் சேடுள முகிலுந் தீயச் சிகையெழு குண்டத் தீவாய். (இ - ள்.) மாடு உள பொதும்பர் நந்தாவனம் உள - பக்கத்திலுள்ள மரச் செறிவினையுடைய நந்தவனங்களானவும், சோலை உள்ள - சோலைகளானவும், காடுஉள - காடுகளானவும், கருகிச்சாய - கருகித் தீயவும், கயல் உள ஓடை உள்ள - கயல்கள் உள்ள ஓடைகளானவும், கோடு உள வாவி உள்ள - கரையுள்ள வாவிகளானவும், குளம் உள - குளங்களானவும், வறப்ப - வறளவும், சேடு உள முகிலும் தீய - சேய்மையில் உள்ள முகிலுங் கருகவும், தாவி எழுசிகை குண்டத் தீவாய் - தாவி எழுகின்ற சிகையினையுடைய வேள்விக் குண்டத் தீயின்கண். மாடுள, கயலுள, கோடுள, சேடுள என்பவற்றிலுள்ள உள என்பன குறிப்புப் பெயரெச்சம். ஏனைய உள, உள்ள என்பன முதல் வேற்றுமைச் சொல்; நந்தவனம் முதலியவற்றிலுள்ள உயிர்களென்று உரைப்பாருமுளர்; நந்தவனம் முதலியன அழிதல் கூறவே அவற்றிலுள்ள உயிர்களின் அழிவும் பெறப்படுதலானும், கருகிச்சாய, வறப்ப என்பவற்றிற்கு அங்ஙனம் பொருள் கூறுதல் சிறப்பின்றாகலானும் யாம் கூறிய பொருளே பொருத்தமாதல் காண்க. கொல்லா விரதம் பூண்டவர் இவையெல்லாம் அழிவுறும்படியாகத் தீ வளர்த்தனர் என இகழ்ந்துரைத்தவாறு. (13) கூற்றெழு தோற்றம் போல வஞ்சனக் குன்றம் போலக் காற்றெழு செவியு நால்வாய் கௌவிய மருப்பு மாறா ஊற்றெழும மதமு மூச லாடிய வொற்றைக் கையும் ஏற்றெழு விடம்போற் சீறி யெழுந்ததோர் தறுகண் யானை. (இ - ள்.) காற்று எழு செவியும் - காற்றினை எழுப்புகின்ற காதினையும், நால்வாய் கௌவிய மருப்பும் - தொங்குகின்ற வாயினைப் பற்றிய கொம்பினையும், ஆறா ஊற்று எழு மதமும்- ஆறாகச் சுரந்து ஒழுகுகின்ற மதத்தினையும், ஊசல் ஆடிய ஒற்றைக் கையும் - ஊஞ்சல் போல ஆடா நின்ற ஒற்றைத் துதிக்கையும், ஏற்று - பொருந்தி, எழுவிடம்போல் சீறி - (கடலின்கண்) எழுந்த நஞ்சினைப்போல வெகுண்டு, கூற்று எழு தோற்றம்போல அஞ்சனக் குன்றம்போல - கூற்றுவன் எழுந்த தோற்றம் போலவும் நீலமலை எழுந்த தோற்றம் போலவும், ஓர் தறுகண் யானை எழுந்தது - ஓர் அஞ்சாமையையுடைய யானை எழுந்தது. காற்று எழுகின்ற செவி என்றும், வாயாற் கௌவப்பட்ட மருப்பு என்றும் உரைத்தலுமாம். ஆறாக என்றது ஈறு தொக்கது; மாறா எனப் பிரித்தலுமாம். கொலைத் தொழிலுக்குக் கூற்றத்தையும், வடிவிற்கு அஞ்சனமலையையும், சினத்திற்கு விடத்தையும் உவமை கூறினார். (14) அந்தமா வேள்வித் தீயு மவியமும் மதமுஞ் சோர வந்தமா களிற்றை நீபோய் வழுதியை மதுரை யோடுஞ் சிந்தவே தொலைத்தி யென்னாத் தென்றிசைச் செல்ல வேவி முந்தவே விடுத்த மாசு மூழகுட லமணப் பேய்கள். (இ - ள்.) அந்த வேள்வி மாதீயும் அவிய - அந்த வேள்விக் குண்டத்துப் பெரிய தீயும் அவியுமாறு, மும்மதமும் சோரவந்த மாகளிற்றை - மூன்று மதங்களும் சொரிய எழுந்த பெரிய யானையை, மாசு மூழ்கு உடல் அமணப்பேய்கள் - அழுக்கில் மூழ்கிய உடலினை யுடைய சமணப் பேய்கள் (நோக்கி), நீ போய் - நீ சென்று, வழுதியை மதுரை யோடும் சிந்தத் தொலைத்தி என்னா - விக்கிரம பாண்டியனை மதுரைப் பதியோடும் அழியும்படி தொலைப்பாயாக என்று, தென்திசை முந்தவே செல்ல ஏவி விடுத்த - தென் திசைக்கண் முற்படச் செல்லுமாறு பணித்து விடுத்தன. அத்தீயினும் கொடுமையுடைய தென்பார் ‘தீயும் அவிய’ என்றார். அந்தமா அவிய என்றுமாம்; அந்தமா - முடிவாக; அஃது அவிந்து தொலைந்ததென்னும் குறிப்பிற்று. செறலினால் ‘அமணப் பேய்கள் விடுத்த’ என்றார். நிரம்பாத ஆசையுடைமையாலும் கொடுமையாலும் பேய்களாக்கிக் கூறினார். விடுத்த : அன்சாரியை பெறாத பலவின்பால் முற்று. (15) [கலி விருத்தம்] அருளற்றிரு ளுடலிற்புதை யமணக்கய வர்களுட் டெருளற்றரு மறையிற்படர் செயலற்றிக பரமெய்ப் பொருளற்றவ னனிகத்தொடு புறமொய்த்திட மதமா வெருளற்றிடி குரலிற்படி வெடிபட்டிட வருமால். (இ - ள்.) அருள் அற்று உடலில் இருள்புதை அமணக் கயவர்கள்- கருணை சிறிதுமின்றி (கருமையாற் புதைந்த) உடல்போல மற இருளால் மூடப்பெற்ற சமணக் கீழ்மக்கள், உள் தெருள் அற்று- அகத்திலே தெளிந்த அறிவின்றி, அருமறையில் படல் செயல் அற்று - அரிய வேதநெறியிற் செல்லுந் தொழிலின்றி, இகபரம் மெய்ப்பொருள் அற்றவன் - இம்மை மறுமைப் பயனும் வீடுபேறும் இல்லாதவனாகிய சோழனது, அனிகத்தொடு - சேனையுடன், புறம் மொய்த்திட - புறத்தே நெருங்கிவர, மதமா- இந்த மதயானையானது, வெருள் அற்று - அஞ்சுதலின்றி, இடி குரலில் படி வெடிபட்டிட வரும் - முழங்குகின்ற ஒலியால் நிலவுலகம் பிளக்கும்படி வாரா நின்றது. தெருளறுதலும் மறையிற்படர் செயலறுதலும் இகபர மெய்ப் பொருளறுதலுக்குக் காரணமாயின. மெய்ப்பொருள் - நிலையாகிய வீடு பேறு. இடிகுரல் : வினைத்தொகை, ஆல் : அசை. (16) அடியின்னள வகல்பாதல முடியின்னள வண்டம் இடியின்னள வெழுகார்செவி யெறிகாலள வகிலம் மடியும்மள வுளர்கான்மத மழையின்னள வுலக முடிவின்னெழு கடல்கண்ணழ லளவாமுது வடவை. (இ - ள்.) அடியின் அளவு அகல் பாதலம் - அந்த யானையின் அடிகளின் எல்லை அகன்ற பாதலமாகும்; முடியின் அளவுஅண்டம் - முடியின் எல்லை வானுலகமாகும்; இடியின் அளவு எழுகார் - முழக்கத்தின் எல்லை எழுமேகங்களின் ஓசையாகும்; செவி எறிகால் அளவு அகிலம் மடியும் அளவு உளர் கால் - காதுகள் வீசும் காற்றின் எல்லை உலக முழுதும் அழியுங் காலத்தில் வீசும் ஊழிக் காற்றாகும்; மதமழையின் அளவு உலக முடிவின் எழுகடல் - மதமாகிய மழையின் எல்லை உலகம் முடியுங்காலத்திற் பொங்கி யெழும் எழுகடலாகும்; கண் அழல் அளவு முது வடவை ஆம் - விழிகள் சிந்தும் வெகுளித்தீயின் எல்லை பெரிதாகிய வடவைத்தீயாகும். இறுதியிலுள்ள ஆம் என்பதனைப் பாதலம் முதலியவற்றோடு கூட்டுக. ஓசையின் பொருட்டு னகர மகர வொற்றுக்கள் விரிந்து நின்றன. (17) கூற்றஞ்சிய1 வருமிக்கரி குரலஞ்செவி முழைவாய் ஏற்றஞ்செய மடங்குஞ்செவி யெறிகால்வழி விழித்தீ ஊற்றஞ்செய மடைவாயுடைந் தொழுகுங்கட மதநீர் நாற்றஞ்செயத் திசைவேழமு நடுக்கஞ்செய்து நலியும். (இ - ள்.) கூற்று அஞ்சிய வரும் இக்கரி - கூற்றுவனும் அஞ்சுமாறு வருகின்ற இந்த யானை, குரல் அஞ்செவி முழைவாய் ஏற்றம் செய - தனது முழக்கம் அஞ்செவியாகிய முழையின் கண்ணே சென்று தாக்கவும், மடங்கும் செவி எறிகால் வழி விழித்தீ ஊற்றம் செய - மடங்கிய செவிகள் வீசுகின்ற காற்றின் வழியே விழியின் தீமூண்டு சென்று ஊறு செய்யவும், மடைவாய் உடைந்து ஒழுகும் கடமத நீர் நாற்றம் செய - மடை வாய் உடைந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கு நாறுதலைச் செய்யவும், திசைவேழமும் நடுக்கஞ்செய்து நலியும் - (இவற்றால்) திக்கு யானைகளையும் நடுங்கச்செய்து வருத்தும். அஞ்சிய : செய்யிய வென்னும் வினையெச்சம். கரியானது திசை வேழங்களையும் நடுக்கஞ் செய்து நலியும் என்க. திசைவேழங்களின் செவியாகிய முழை. (18) இடிக்கும்புயல் வயிற்றைக்கிழித் திடியேற்றினை யுதிர்க்கும் வெடிக்கும்பிளி றொலியாற்றிசை விழுங்கிச்செவி டாக்குந் துடிக்கும்புழைக் கையோச்சிவிண் டொடுகுன்றினைச் சுற்றிப் பிடிக்குங்கடல் கலக்குந்தனிப் பெருமத்தெனத் திரிக்கும். (இ - ள்.) இடிக்கும் புயல் வயிற்றைக் கிழித்து இடி ஏற்றினை உதிர்க்கும் - இடிக்கின்ற முகிலின் அகட்டினைக் கீண்டு இடியேற்றை உதிர்க்கா நிற்கும்; வெடிக்கும் பிளிறு ஒலியால் திசை விழுங்கிச் செவி டாக்கும் - முழங்குகின்ற பிளிறுதலின் ஓசையினால் திசைகளை விழுங்கிச் செவிடாக்கும்; துடிக்கும் புழைக்கை ஓச்சி - துடிக்கா நின்ற தொளைக் கையை வீசி, விண்தொடு குன்றினைச் சுற்றிப் பிடிக்கும் - வானை யளாவிய மலைகளைச் சுற்றிப் பிடிக்கும்; கடல் கலக்கும் தனிப் பெருமத் தெனத் திரிக்கும் - (அம்மலைகளைக்) கடலைக் கலக்குகின்ற ஒப்பற்ற பெரிய மத்தாகிய மந்தர மலையைப் போலச் சுழற்றா நிற்கும். யானை முழங்குதல் பிளிறுதலெனப்படும். விழுங்கி - அகப்படுத்தி. அவற்றைத் திரிக்கும் என விரித்துரைக்க. (19) உருமுக்குர லொலியிற்றுள ரொலிவிடடெறி செவியிற் றிருமுட்பிறை யெயிறிற்றழ1 லெரிகட்டிரு ளுடலிற் றருமுக்கட வருவித்துர லடியிற்'a4றென நிலமேல் வருமுக்கிர வடவைக்கனல் வரினொப்பத மதமா. (இ - ள்.) உருமுக் குரல் ஒலியிற்று - இடிபோன்ற முழக்கத்தினை யுடையது; உளர் ஒலி விட்டெறி செவியிற்று - சூறைக்காற்றினைவிட்டு வீசும் செவியினையுடையது; இருமுள் பிறை எயற்றிற்று - இரண்டு முட்போலும் முனையையுடைய பிறை போன்ற மருப்புக்களையுடையது; அழல் எரி கட்டு - வெகுளித்தீ எரிகின்ற கண்களையுடையது; இருள் உடலிற்று - இருள் போன்ற உடலினையுடையது; அரு முக்கட அருவித்து- அரிய மூன்று மதங்களாகிய அருவியையுடையது; உரல் அடியிற்று - உரல் போன்ற அடியினையுடையது; அ மதமா - அந்த மதயானையானது, உக்கிர வடவைக்கனல் வரின் ஒப்பது என - கொடுமையுடைய வடவைத்தீயானது நடந்துவரின் அதனை ஒப்பதாம் என்னுமாறு, நிலம்மேல் வரும் - புவியின்மேல் வாராநின்றது. ஒலியிற்று என்பது முதலியன குறிப்பு வினைமுற்றுக்கள். உளரொலி என்பதில் ஒலி காற்று என்னும் பொருளது. உளர்தல்- வீசுதல். எயிற்றிற்று என்பது விகாரமாயிற்று. மதமா கனல்வரின் ஒப்பது என நிலமேல்வரும் எனக்கூட்டி முடிக்க. அம்மதமா என்பதில் மகரந் தொக்கது. (20) தெழிபட்டதிக்2 கயத்தின்செவி தீயப்பகை யோடும் வழிபட்டொரு கடுங்கூற்றென வருகுஞ்சர வரவை விழிபட்டவர் மொழியாலுணர் விரைபட்டலர் வேம்பன் சுழிபட்டலை புனல்போன்மனஞ் சுழன்றானினைந் தழன்றான். (இ - ள்.) தெழிபட்ட திக்கயத்தின் செவி தீய - முழக்கந் தாக்கிய திசையானைகளின் செவிகள் கருக, பகையோடும் வழிபட்டு ஒரு கடுங் கூற்று என வரு குஞ்சர வரவை - பகைமையுடன் வழிக்கொண்டு ஒரு கொடிய கூற்றுவன்போல வருகின்ற யானையின் வரவினை, விழி பட்டவர் மொழியால் உணர் - கண்ணுற்றவர்களின் மொழியாலுணர்ந்த, விரைபட்ட அலர் வேம்பன் - மணம் பொருந்திய மலர்ந்த வேப்ப மலர் மாலையை யணிந்த விக்கிரம பாண்டியன், சுழிபட்டு அலை புனல்போல் மனம் சுழன்றான் - சுழித்தல் கொண்டு அலைகின்ற நீர் போல மனஞ் சுழன்றான், நினைந்து அழன்றான் - எண்ணி வெதும்பினான். தெழி என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஓசைக்காயிற்று. தெழித்தல் - உரப்புதல், ஆர்த்தல். பகை - பகைவராகிய சமணருமாம். விழிபட்டவர் - கண்டவர். உணர் வேம்பன் என்க. சுழன்றான், அழன்றான் என்பனவற்றை எச்சமாக்கலுமாம். (21) மைப்போதகம் பொறையாற்றிய மணிக்கோயின்முன் குறுகாக் கைப்போதக முரித்தான்கழற் காற்போதக முறத்தாழ்ந் திப்போதகந் தனையுந்தொலைத் தெனைக்காத்தியென் றிரந்தான் அப்போதகல் வானின்றொரு திருவாக்கெழுந் தன்றே. (இ - ள்.) மை போதகம் பொறை ஆற்றிய மணிக்கோயில் முன் குறுகா - கரிய யானைகளாற் சுமக்கப்பட்ட மணிகள் அழுத்திய இந்திர விமானத்தின் முன் சென்று, கை போதகம் உரித்தான் கழல் கால் போது அகம் உறத் தாழ்ந்து - துதிக்கையினையுடைய யானையை உரித்தருளிய சோமசுந்தரக் கடவுளின் வீரக்கழலணிந்த திருவடி மலர்களை மனமுற வணங்கி, இப்போதகம் தனையும் தொலைத்து எனைக்காத்தி என்று இரந்தான் - இந்த யானையையும் கொன்று அடியேனைக் காத்தருள்க என்று குறையிரந்தான்; அப்போது அகல் வான் நின்று ஒரு திருவாக்கு எழுந்தன்று - அப்பொழுது அகன்ற விசும்பினின்றும் ஒரு திருவாக்கு எழுந்தது. பொறை ஆற்றிய - பொறுத்தலைச் செய்த. முன்னொரு காலத்தில் யானையை உரித்த பெருமானே இந்த யானையையும் கொன்று அருள வல்லன் என்பார் ‘கைப்போதக முரித்தான் கழற்காற்போதக முறத் தாழ்ந்து’ என்றார். தன் தந்தையின் காலத்தில் வருணன் விட்ட கடலையும் முகிலையும் தொலைத்தமைபோல இந்த யானையையும் தொலைக்கவேண்டு மென்பது தோன்ற நின்றமையின் ‘இப்போதகந் தனையும்’ என்பதிலுள்ள உம்மை இறந்தது தழுவிய எச்சப்பொருட்டு; முன் யானை உரித்தமையைத் தழுவி நின்றதுமாம். எழுந்தன்று - எழுந்தது; அன் : சா'a3'a4யை ஏ : அசை. (22) விட்டார்வலி கெடநாமொரு விற்சேவக னாகி ஒட்டார்விட வருவெங்கரி யுயிர்வௌவுது முதனின் மட்டார்பொழிற் கடிமாநக ரயற்கீட்டிசை மருங்கோர் அட்டாலைமண் டபஞ்செய்யென வதுகேட்டெழுந் தரசன். (இ - ள்.) விட்டார் வலிகெட - விடுத்தவர்களின் மனவன்மை கெடுமாறு, நாம் ஒரு வில் சேவகன் ஆகி - நாம் ஒரு விற்பிடித்த சேவகனாய் (வந்து), ஒட்டார் விடவரு வெங்கரி உயிர் வௌவுதும் - பகைவர்விட வருகின்ற கொடிய யானையின் உயிரைக் கவருவேம்; முதல் - முதலில், நின் மட்டு ஆர் பொழில் கடிமாநகர் அயல் கீழ் திசை மருங்கு - உனது தேன் நிறைந்த சோலை சூழ்ந்த காவலையுடைய பெரிய நகரத்தினருகிலே கீழ்த்திசையில், ஓர் அட்டாலை மண்டபம் செய்என - ஓர் அட்டாலை மண்டபம் செய்வாய் என்று அவ்வாக்கு அருள, அது கேட்டு அரசன் எழுந்து - அதனைக் கேட்டு அரசன் எழுந்து. முதல் - முன்பு. கீழ்த்திசை என்பது மருவிற்று. அட்டாலை- விலங்குகளை வேட்டமாடுவார் ஏறியிருக்கும் பரண். அட்டாலை மண்டபம் - பரண் வடிவாக இயற்றிய மண்டபம். செய்யென எழுந்தன்று என மேற் செய்யுளோடு கூட்டி முடித்தலுமாம். (23) அகங்கவ்விய களிப்பெய்திவந் தட்டாலைமண் டபம்பொன் நகங்கவ்விய தெனத்தூணொரு நானான்கினி லெடுத்தே சகங்கவ்விய புகழான்செயத் தறுகட்கணை மதமா முகங்கவ்விய விற்சேகவன் வருவானது மொழிவாம். (இ - ள்.) அகம் கவ்விய களிப்பு எய்திவந்து - உள்ளத்தை விழுங்கிய மகிழ்ச்சியை அடைந்துவந்து, அட்டாலை மண்டபம்- அட்டாலை மண்டப மொன்றை, பொன் நகம் கவ்வியது எனத்தூண் ஒருநால் நான்கினில் எடுத்து - பொன் மலையே உருமாறிச் சுமக்கின்றது என்று கண்டோர் சொல்லப் பதினாறு தூண்கள் சுமக்குமாறு எடுத்து, சகம் கவ்விய புகழான்செய - உலகத்தைத் தனதகப்படுத்திய புகழையுடைய விக்கிரம பாண்டியன் கட்டி முடிக்க, தறுகண் கணை மதமா முகம் கவ்விய வில் சேவகன் வருவான் - (சோமசுந்தரக் கடவுள்) கொலைத் தொழிலையுடைய அம்பானது அம்மத யானையின் முகத்திலே தைத்துருவ வில்லை யேந்திய சேவகனாகி வாராநின்றான்; அது மொழிவாம் - அதனைக் கூறுவாம். புகழானாகிய அரசன் என மேற்செய்யுளோடு இயைத்துரைக்க. தறுகண்மையுடைய மதமாவின் முகத்தைக் கணை கவ்விய என்றுரைத் தலுமாம். கவ்விய வருவான் என்க; கவ்விய: செய்யிய வென்னும் வினையெச்சம். அது - அங்ஙனம் வருந் தோற்றத்தை. (24) [அறுசீரடியாசிரிய விருத்தம்] நீனிற நீத்த நீந்து நிழன்மதி யிரண்டுண் டென்ன வானிற வலயச் சங்க வார்குழை நுழைவித் தம்பூம் பானிற வெகினங் காணாப் படர்சடை மறைத்துத் தோற்றுங் கானிறை குஞ்சிச் சூட்டிற் களிமயிற் கலாபஞ் சூடி. (இ - ள்.) நீல்நிற நீத்தம் நீந்தும் நிழல் மதி இரண்டு உண்டு என்ன - நீலநிறத்தையுடைய இருளாகிய கடலை நீந்தும் திங்கள் இரண்டுள்ளன என்னும்படி, வால்நிற வலயச் சங்கம் வார்குழை நுழைவித்து - வெண்ணிறத்தையுடைய வட்டமாகிய சங்கினாலாகிய நீண்ட குண்டலங்களை (இருகாதிலும்) புகுத்தி, அம்பூம் பால் நிற எகினம் காணாப் படர்சடை மறைத்து -அழகிய தாமரை மலரில் வசிக்கும் வெண்ணிறத்தையுடைய பிரமனாகிய அன்னப் பறவை காணாத படர்ந்த சடையினை மறைத்து, தோற்றும் கான்நிறை குஞ்சிச் சூட்டில் களிமயில் கலாபம் சூடி - தோன்றுகின்ற மணம் நிறைந்த மயிர் முடியிலே களிக்கின்ற மயிலின் தோகையை அணிந்து. நீலம் என்பது கடை குறைந்தது. நீல நிறத்தையுடைய கடல் எனக்கொண்டு நிழல் மதி இரண்டுண்டாயின் அவற்றை யொப்ப என விரித்துரைத்தலுமாம். காரொளியுடைய உடம்பின் இருபுறத்திலும் குண்டலங்கள் அசையுந் தோற்றம் நீல நிற நீத்தத்தை இரண்டு மதிகள் நீந்துவனபோன்றிருந்தது. சங்க வலயம் வார்குழை நுழை வித்து எனச் சொல்வகை செய்து சங்கக் குண்டலத்தை நெடிய காதில் நுழைவித்து என்றுரைத்தலுமாம். பூவும் நிறமும் அன்னத்திற்கும் பிரமனுக்கும் பொது. சூடு -உச்சியிலுள்ள மயிர் முடி; கண்ணியெனக் கொண்டு, குஞ்சியிலுள்ள கண்ணியுடன் கலாபத்தைச் சூடி என்றுரைப்பினும் அமையும். (25) கருங்கடன் முளைத்த செக்கர்க் கதிரெனக் குருதிக் கச்சை மருங்குற வீக்கிச் சோரி வாயுடை வாளுங் காட்டி இரங்குநான் மறைக ளேங்க விருநிலந் தீண்டு தாளிற் பொருங்கழல் வளைத்து வாளிப் புட்டிலும் புறத்து வீக்கி. (இ - ள்.) கருங்கடல் முளைத்த செக்கர் கதிர் என - கரிய கடலிற் றோன்றிய செவ்வொளியையுடைய பரிதி என்னும்படி, குருதிக் கச்சை மருங்கு உற வீக்கி - செந்நிறத்தையுடைய கச்சையினை அரையிற் பொருந்தக் கட்டி, சோரிவாய் உடைவாளும் கட்டி - குருதி ஒழுகும் வாயினையுடையும் உடைவாளையும் அதன் புறத்தே செறித்து, இரங்கும் நான்மறைகள் ஏங்க இருநிலம் தீண்டு தாளில் - ஒலிக்கின்ற நான்கு மறைகளும் ஏங்கப் பெரிய நிலத்தைத் தீண்டுகின்ற திருவடியில், பொருங்கழல் வளைத்து - போருக்குரிய வீரக்கழலை அணிந்து, வாளிப் புட்டிலும் புறத்து வீக்கி - அம்புக் கூட்டினையும் முதுகிலே கட்டி. குருதிக் கச்சை - குருதிபோலும் செந்நிறமுடைய கச்சை. ஏங்கல் - மனம்வாடி இளைத்தல். ஏங்க - ஏங்கும்படி; ஏங்காநிற்க என்றுமாம். (26) வீங்கிய தடந்தோளிட்ட வார்சிலை வில்லி னோடும் பாங்குறை யிமயப் பாவை பாதியே யன்றி முற்றும் வாங்கிய வண்ணம் போன்று மல்லது மாலு மோர்பால் ஓங்கிய வண்ணம் போன்று மொளிநிறம் பசந்து தோன்ற.1 (இ - ள்.) வீங்கிய தடந்தோள் இட்ட வார்சிலை வில்லினோடும் - பூரித்த பெரிய தோளிற் சாத்திய நீண்ட வில்லோடும், பாங்கு உறை இமயப்பாவை பாதியே அன்றி முற்றும் வாங்கிய வண்ணம் போன்றும் - இடப்பாலில் உறைகின்ற மலைமகள் உடம்பின் பாதி யல்லாமல் முற்றும் பெற்றருளிய தன்மை போலவும், அல்லது - அன்றி, மாலும் ஓர் பால் ஓங்கிய வண்ணம் போன்றும் - திருமாலும் ஒரு பங்கில் எழுந்த தன்மை போலவும், ஒளிநிறம் பசந்து தோன்ற - ஒளியினை யுடைய வடிவம் முழுதும் பசுமையாய்த் தோன்றவும். சிலைவில் : ஒருபொரு ளிருசொல்; மலையாகிய வில்லென்றும், ஒலித்தலை யுடைய வில்லென்றும் கூறலுமாம். வாங்கிய வண்ணம் போலு மென்ன அல்லது ஓங்கிய வண்ணம் போலு மென்ன நிறம் பசந்து என்க. திருமால் இடப்பாலும் சிவன் வலப்பாலுமாக இயைந்திருப்பரென வைணவப் பெரியோர்களும் கூறுவர்; இச் செய்யுளில், மால் வலப்பாலில் ஓங்கிய வண்ணம் போன்று எனக் கொள்ள வேண்டும். (27) காமனுங் காமுற் றஞ்சுங் காளையாம் பருவந் தோன்றத் தாமுல களந்த வென்றித் தனிவிற்சே வகனாய்த் தோன்றி மாமறை மகுட மன்ன மண்டபத் தேறித் தென்னர் கோமக னிடுக்கண் டீர்ப்பான் குஞ்சர வரவு நோக்கா.2 (இ - ள்.) காமனும் காமுற்று அஞ்சும் காளையாம் பருவம் தோன்ற - மதவேளும் விரும்பி அஞ்சுதற் கேதுவாகிய காளைப்பருவந் தோன்றவும், உலகு அளந்த வென்றித் தனிவில் சேவகனாய்த் தோன்றி - உலகினைத் தன்னகப்படுத்திய வெற்றி பொருந்திய ஒப்பற்ற வில்லைத் தாங்கிய வேட்டுவ வீரனாகி எழுந்தருளி, மாமறை மகுடம் அன்ன மண்டபத்து ஏறி - பெருமை பொருந்திய மறைகளின் முடியை ஒத்த அம் மண்டபத்திலேறி, தென்னர் கோமகன் இடுக்கண் தீர்ப்பான் - பாண்டியர் தலைவனாகிய விக்கிரம வழுதியின் துன்பத்தைத் துடைக்கும் பொருட்டு, குஞ்சர வரவு நோக்கா - யானையின் வரவினை நோக்கி. மன்மதனும் விரும்புதற்கும் அஞ்சுதற்கும் ஏதுவாகிய அழகினை யுடைய காளைப்பருவம் என்க. தாம் : அசை. உலக முழுதும் பரந்த தனை ‘உலகளந்த’ என்றார். "ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழும்" என்புழிப் போல, தோன்றி - எழுந்தருளி. தீர்ப்பான் : வினையெச்சம். (28) அஞ்சுகூ விளிச்சேய்த் தென்ன வதுவர வறனி லாதான் வெஞ்சினக் கோலினோன்றாண் மிதித்துமெய் குழைய வாங்கிச் செஞ்சிலை நெடுநாண் பூட்டித் திருவிர றெறித்துத் தாக்கிக் குஞ்சர மெட்டு மஞ்சக் கோளரி முழக்கங் காட்டி. (இ - ள்.) அஞ்சு கூவிளி சேய்த்து என்ன அதுவர - ஐற்து கூப்பிடு தூரம் என்று சொல்லுமாறு அந்த யானையானது வர, அறன் இலா தான் வெஞ்சினக் கோலின் - அறநெறியில்லாத அச்சோழனது கொடிய சினத்தினையுடைய கொடுங்கோலைப் போல, செஞ்சிலை நோன்தாள் மிதித்து மெய்குழைய வாங்கி - செவ்வையாகிய வில்லைத் தனது வலிய தாளால் மிதித்து உடல் வளைய (அதனை) வளைத்து, நெடுநாண் பூட்டி - நீண்ட நாணைப் பூட்டி, திருவிரல் தெறித்துத் தாக்கி - அழகிய விரலாலே தெறித்துக் குணத்தொனி செய்து, குஞ்சரம் எட்டும் அஞ்சக் கோளரி முழக்கம் காட்டி - திசை யானைகள் எட்டும் அஞ்சுமாறு சிங்கத்தொனியைக் காட்டி. கூவிளி - கூப்பீடு. அறன் நிலாதான் எனப் பிரித்தலுமாம். உடையானது சினத்தைக் கோலுக்கேற்றினார். கோல்போல வளைய வளைத்தென்க. தெறித்துக் தாக்கி - தெறித்து நாணொலி எழுப்பி; குணத்தொனி செய்து, வருகின்ற யானையேயன்றித் திசை யானைகளும் அஞ்ச. கோளரிமுழக்கம் - சிங்கநாதம். (29) இங்கித நெடுங்கோ தண்ட மிடங்கையி லெடுத்து நார சிங்கவெங் கணைதொட் டாகந் திருகமுன் னிடத்தாள் செல்ல அங்குலி யிரண்டா லையன் செவியுற வலித்து விட்டான் மங்குலின் முழங்கும் வேழ மத்தகங் கிழிந்த தன்றே. (இ - ள்.) இங்கித நெடுங் கோதண்டம் இடங்கையில் எடுத்து - இனிய நெடிய வில்லை இடக்கையிலெடுத்து, நாரசிங்க வெங்கணை தொட்டு - கொடிய நாரசிங்கக் கணையைப் பூட்டி, ஆகம் திருக இடத்தாள் முன்செல்ல -தனது உடல் திருகவும் இடக்கால் முன்னே செல்லவும், ஐயன் - இறைவன், அங்குலி இரண்டால் செவி உற வலித்துவிட்டான் - இரண்டு விரல்களால் செவி வரையிலும் இழுத்து விட்டான்; மங்குலின் முழங்கும் வேழ மத்தகம் கிழிந்தது - (அக்கணையினால்) முகில் போல முழங்கிவந்த அவ்வியானையின் மத்தகம் பிளந்தது. இங்கிதம் - இனிமை; குறிப்புமாம். இடங்கை, மெலித்தல் விகாரம். முன் இடத்தாள் செல்ல என்றமையால் வலத்தாள் மண்டலித்தலுங் கொள்க; இது பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம் என்னும் வில்லோர் நிலைகளுள் ஆலீடம் எனப்படும். அங்குலி - விரல். விரைவு தோன்ற ‘விட்டான், கிழிந்தது’ என்றார். அன்று, ஏ : அசைகள். (30) கொண்டலி னலறிச் சீறி வீழ்ந்தது கொடிய வேழம் பிண்டது பாருஞ் சேடன் சென்னியும் பிளந்த தண்டம் விண்டது போலு மென்னத் துண்ணென வெருவிப் போன பண்டைய தருக்கும் வீறும் படைத்தன திசைமால் யானை (இ - ள்.) கொடிய வேழம் கொண்டலின் அலறிச்சீறி வீழ்ந்தது - கொடிய அக்களிறானது முகில்போலக் கதறிச் சீறி நிலத்தில் விழுந்தது; பாரும் பிண்டது - (அதைப் பொறுக் கலாற்றாது) புவியும் பிளவு பட்டது; சேடன் சென்னியும் பிளந்தது- அனந்தனுடைய ஆயிர முடிகளும் பிளந்தன; அண்டம் விண்டது போலும் என்ன - அண்டம் வெடித்தது போலு மென்று, துண்ணென வெருவிப்போன - துணுக்குற்று அஞ்சி யோடிய, திசைமால் யானை - பெரிய திசையானைகள, பண்டைய தருக்கும் வீறும் படைத்தன- பழைய செருக்கையும் இறுமாப்பையும் பெற்றன. பிளந்தது : சாதி யொருமை. திசை யானைகள் வெருவிப்போயின, பின்பு இவ்வேழம் வீழ்ந்தமைகண்டு தருக்கும் வீறும் படைத்தன என விரிக்க; போன என்பதைப் பெயரெச்சமாக்கி, போகிய தருக்கும் வீறும் என்னலுமாம். (31) புதைபடக் கரித்தோல் போர்த்த புண்ணிய மூர்த்தி தாளால் உதைபடக் கிடந்த கூற்ற மொத்தது மத்த யானை சுதைபடு மதிக்கோ வேந்தன் றொழுகுலச் சிறுவ னொத்தான் பதைபடு மமணர் கால படரெனப் படரிற் பட்டார். (இ - ள்.) மத்த யானை - (அங்ஙனம் வீழ்ந்த) மத மயக்கத்தை யுடைய யானையானது, புதைபடக் கரித்தோல் போர்த்த புண்ணிய மூர்த்தி தாளால் உதைபடக் கிடந்த கூற்றம் ஒத்தது - (உடல்) மறைய யானைத்தோலைப் போர்த்தருளிய அறவடிவினனாகிய இறைவன் திருவடியால் உதை படுதலாற் கீழே வீழ்ந்து கிடந்த கூற்றுவனை ஒத்தது; சுதைபடு மதிக் கோவேந்தன் - அமிழ்தம் பொருந்திய திங்களின் மரபில் வந்த மன்னனாகிய விக்கிரம பாண்டியன், தொழுகுலச் சிறுவன் ஒத்தான் - சிவ பெருமானை அடைக்கலம் புக்க அழகிய அந்தணச் சிறுவனாகிய மார்க்கண்டனை ஒத்தான்; பதைபடும் அமணர் காலபடர் எனப் படரில் பட்டார் - (யானை இறந்தது கண்டு) பதைக்கின்ற சமணர்கள் எமபடரைப் போலத் துன்பத்திலழுந்தினார்கள். யானையை உரித்ததும் கூற்றினை உதைத்ததும் போல்வன வெல்லாம் இறைவனுடைய அருட் செயல்களென்பது தோன்ற ‘புண்ணிய மூர்த்தி’ என்றார்.கோவேந்தன் - பேரரசன்; "கோவேந்தன் றேவி" எனச் சிலப்பதிகாரத்துளவருதல் காண்க. தொழுகுலச் சிறுவன் - தொழுகின்ற அழகிய சிறுவன், அந்தணச் சிறுவன். படர் - கிங்கரர். துன்பம். (32) இருள்கிடந் தனைய தானை யிட்டசிந் துரங்கார் மாலை இருண்முகத் தொதுங்கிச் செல்லுமிரவிசெங் கிரணம் போன்ற திருண்முழு துண்ணக் காலை யெழுகதிர் வட்ட மன்ன திருளினை மறைத்த கண்ட னெய்தவாய் பெய்யுஞ்1 செந்நீர். (இ - ள்.) ஆனை இருள் கிடந்தது அனையது - (இறந்து கிடந்த) யானையானது இருள் கிடந்தாலொத்தது; இட்ட சிந்துரம் - அதன் நெற்றியில் இட்ட சிந்துரமானது, கார் மாலை இருள் முகத்து ஒதுங்கிச் செல்லும் இரவி செங்கிரணம் போன்றது - கரிய மாலைக்காலத்திலுள்ள இருள் முகத்தில் ஒருபுறஞ் சாய்ந்து செல்லும் சூரியனது சிவந்த கிரணத்தை ஒத்தது; இருளினை மறைத்த கண்டன் எய்தவாய் பெய்யும் செந்நீர் - இருளை மறைத்த திருமிடற்றினையுடைய இறைவன் எய்தவாய் பொழியும் குருதியானது, இருள் முழுது உண்ண காலை எழு கதிர் வட்டம் அன்னது - இருள் முழுதையும் உண்ணுதற்குக் காலையில் எழுந்த வட்டமாகிய இளஞாயிற்றை ஒத்தது. கிடந்தாலனையது என்பது கிடந்தனையது என்றாயிற்று. வேட்டுக் கோலம் பூண்டு வந்தமையால் ‘இருளினை மறைத்த கண்டன்’ என்றார். வாய் - வழி. (33) பொய்யறா மனத்தார் தேற்றும் புன்னெறி யொழுக்கம் பூண்ட வெய்யகோன் கொடுங்கா றன்னை வெண்மருப் பாகத் தாங்கி மையன்மா வடிவங் கொண்டு வந்தவெங் கலியைத் தென்னன் செய்யகோ லையன் சிங்க வாளியாய்ச் சிதைத்த தன்றே. (இ - ள்.) பொய் அறா மனத்தார் தேற்றும் புல்நெறி ஒழுக்கம பூண்ட- பொய் நீங்காத உள்ளத்தினையுடைய சமணர்கள் (அறநெறியெனத்) தெளிவிக்கும் மறநெறியில் ஒழுகுதலை மேற்கொண்ட, வெய்யகோன் கொடுங்கோல் தன்னை - கொடியனாகிய சோழனது கொடுங்கோலை, வெண் மருப்பாகத் தாங்கி - வெள்ளிய கொம்பாக ஏந்தி, மையல் மா வடிவம் கொண்டுவந்த வெங்கலியை - மத மயக்கத்தை யுடைய யானையின் வடிவத்தைக் கொண்டுவந்த கொடிய கலியை, தென்னன் செய்யகோல் - பாண்டியனது செங்கோலானது, ஐயன் சிங்க வாளியாய்ச் சிதைத்தது. - இறைவன் விடுத்தருளிய நாரசிங்கக் கணையாகி அழித்தது. புன்னெறி - புன்மையாகிய சமணநெறி. சோழனுடைய கொடுங் கோலையும் தீச் செயலையும் பாண்டியனது செங்கோல் வென்றது என்க. சிவபெருமான் வேடுருத் தாங்கிவந்து அம்பை விடுத்து யானையைக் கொன்றதற்குப் பாண்டியனது செங்கோல் காரணமாகலின் ‘செய்யகோல் சிதைத்தது’ என அதன்மே லேற்றிக் கூறினார். அன்று, ஏ : அசைகள். (34) உருமுவீழ்ப் புண்ட குன்றி னும்பன்மா1 வம்பு தொட்ட பெருமுழை வாயும் வாயும் பெருகின வருவிச் சோரி கருமுகின் மானச் சேனங் கழுதுகள் பூத மொய்த்த திருமணித் தடந்தோள் வீங்கத் தென்னவ னுவகை பூத்தான். (இ - ள்.) உருமு வீழ்ப்புண்ட குன்றின் உம்பல்மா - இடிவீழப் பட்ட மலையை ஒத்த யானையின், அம்பு தொட்ட பெருமுழை வாயும் வாயும் அருவிச் சோரி பெருகின - அம்பினாலே தொளைக்கப்பட்ட பெரிய முழை போன்ற இடத்தினின்றும் வாயினின்றும் அருவி போலும் குருதிகள் பெருகின; கருமுகில் மான - (அம்மலையிற் றவழும்) கரிய முகிலை ஒக்க, சேனம் கழுதுகள் பூதம் மொய்த்த - பருந்துகளும் பேய்களும் பூதங்களும் (தசையை உண்ணுதற்பொருட்டு) மொய்த்தன; திருமணித்தடம் தோள் வீங்க - வீர மகள் வசிக்கும் அழகிய பெரிய தோள்கள் வளருமாறு, தென்னவன் உவகை பூத்தான் - பாண்டியன் மகிழ் கூர்ந்தான். கணையால் ஏறுண்ட யானைக்கு உருமு வீழ்ந்த குன்றை உவமை கூறினார். உம்பல் - யானை. உம்பல்மா, இருபெயரொட்டு. திரு - வீரலக்குமி. (35) ஆனையின் புண்ணீ ருண்ண வடுத்தகா ருடற்பே யென்னச் சேனைபின் செல்லப் போந்த திணியிரு ளமணர் தம்மை மீனவன் கண்டு சீற வேந்தவன் குறிப்பி னிற்கும் மானவெஞ் சிர்வேன் மள்ளன1வல்லைபோய் முடுக்கலுற்றார். (இ - ள்.) ஆனையின் புண்ணீர் உண்ண அடுத்த கார் உடல்பேய் என்ன - யானையினது குருதியைப் பருகுதற்கு வந்த கரிய உடலையுடைய பேய்கள் போல, சேனை பின் செல்லப் போந்த - சோழனது சேனை பின்னே வர வந்த, திணி இருள் அமணர் தம்மை - செறிந்த இருள்போன்ற அமணரை, மீனவன் கண்டு சீற - பாண்டியன் கண்டு வெகுள, வேந்து அவன் குறிப்பில் நிற்கும் - மன்னனாகிய அவன் குறிப்பின்படி ஒழுகும், மான வெஞ்சின வேல் மள்ளர் - மானத்தையும் கொடிய சினத்தையுமுடைய வேற்படை ஏந்திய வீரர்கள், வல்லை போய் முடுக்கலுற்றார் - விரைந்து சென்று துரத்தத்தொடங்கினார்கள். புண்ணீர் - குருதி. பேயென்னப் போந்த அமணரென்க. வேந்தவன் - அவ்வேந்தன். (36) எடுத்தனர் கையிற் றண்ட மெறிந்தனர் மறிந்து சூழ்போய்த் தடுத்தனர் கரகந் தூளாத் தகர்த்தனர் பீலி யோடுந் தொடுத்தன ருடுத்த பாயைத் துணிபடக் கிழத்துக் கால்வாய் விடுத்தனர் மானம் போக்கி விட்டனர் சில்லோர் தம்மை. (இ - ள்.) கையில் தண்டம் எடுத்தனர் சில்லோர் தம்மை எறிந்தனர் - கையிலே தண்டத்தை எடுத்துச் சிலரை அடித்தனர்; மறிந்து சூழ்போய்த் தடுத்தனர் கரகம் தூளாத் தகர்த்தனர் - (சிலரைக்) குறுக்காக வளைத்து தடுத்து அவர் கமண்டலத்தைத் தூளாக உடைத்தனர்; தொடுத்தனர் உடுத்த பாயைப் பீலியோடும் துணிபடக் கிழித்து - (சிலர்) தொடுத்து உடுத்திய பாயை மயிற்றோகையோடும் துண்டாகக் கிழித்து, கால்வாய் விடுத்தனர்- காற்றின்கண்ணே பறக்கவிட்டனர்; மானம் போக்கி விட்டனர்- (சிலரை) மானத்தைப் போக்கி ஓட்டினர். சில்லோர் தம்மை என்பதைத் தனித்தனிக் கூட்டுக. எடுத்தனர், தடுத்தனர், தொடுத்தனர் என்பன முற்றெச்சங்கள்; விடுத்தனர் என்பதனையும் எச்சமாக்கி யுரைத்தலுமாம். தூளாக வென்பது ஈறு தொக்கது. பீலியோடும் தகர்த்தனர் என்றும், வாய்க்காலில் விடுத்தனர் என்றும் கூறுவாருமுளர். (37) எறியுண்டு செய்த மாய மிழப்புண்டு சேனை யோடு முறியுண்டு நடுக்கம் பாவ மூழ்குண்டு மாழ்கிச் சாம்பிப் பறியுண்ட தலையர் யாரும் பழிப்புண்டு பாயுந் தாமும் உறியுண்ட கரகத் தோடு மொதுங்குண்டு பதுங்கிப் போனார். (இ - ள்.) பறியுண்ட தலையர் யாரும் - மயிர் பறிக்கப்பட்ட தலையினையுடைய சமணரனைவரும், எறியுண்டு - அடிபட்டு, செய்த மாயம் இழப்புண்டு - செய்த மாயத்தை இழந்து, சேனை யோடும் முறியுண்டு - படைகளோடும் முறிபட்டு, நடுக்கம் பாவம் மூழ்குண்டு மாழ்கி சாம்பி - நடுக்கத்திலும் பாவத்திலும் மூழ்கி மயங்கி வாடி, பழிப்புண்டு - பழிப்படைந்து, பாயும் தாமும் உறியுண்ட கரகத்தோடும் ஒதுங்கினர் பதுங்கிப் போனார் - பாயும் தாமும் உறியிற் பொருந்திய கமண்டலத்தோடும் ஒளித்துப் பதுங்கி ஓடினர். முறிதல் - நிலை கெடுதல். உறியுண்ட - உறியுட் கொண்ட பாயும் தாமும் கரகத்தோடும் போனார் என்றது. "தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்" என்புழிப்போலத் திணைவிரவிச் சிறப்பால் உயர்திணை முடிபேற்றது; திணைவழுவமைதி. (38) மாதங்கந் தடிந்தட் டாலை மண்டபத் திருந்த வீரன் பாதங்கள் கையாற் பற்றிப் பாண்டிய னிரந்து வேண்டிப் போதங்கள் கடந்தா யென்றும் பொலியவிங் கிருத்தி யென்ன வேதங்கட் கருத்தஞ் சொன்ன வேதிய னதற்கு நேர்ந்தான். (இ - ள்.) மாதங்கம் தடிந்துஅட்டாலை மண்டபத்து இருந்த வீரன் பாதங்கள் - யானையைக் கொன்று அட்டாலை மண்டபத்தின்கண் நிகரின்றி இருந்த வீரனாகிய இறைவன் திருவடிகளை, பாண்டியன் கையால்பற்றி இரந்து வேண்டி - விக்கிரம பாண்டியன் தன்கைகளாற் பிடித்துக்கொண்டு குறையிரந்து வேண்டி, போதங்கள் கடந்தாய் - பசுஞானம் பாசஞானங்களைக் கடந்தவனே, பொலிய என்றும் இங்கு இருத்தி என்ன - விளக்கமுற எஞ்ஞான்றும் இங்கு வீற்றிருப்பாயாக! என்று விண்ணப்பிக்க, வேதங்கடகு அருத்தம் சொன்ன வேதியன் அதற்கு நேர்ந்தான் - வேதங்களுக்குப் பொருளருளிச் செய்த அந்தணன் அதற்கு இசைந்தருளினான். இரந்து வேண்டி இருத்தியென்ன வென்க. போதங்கள் - பாச பசு ஞானங்கள்; "பாச ஞானத்தாலும் பசுஞானத் தாலும் பார்ப்பரிய பரம்பரனை" என்பது சிவஞானசித்தியார். கண்ணுவர் முதலிய முனிவர்கள் வேண்டிய காலையில் அவர்கள் தெளியுமாறு வேதங்கட்குப் பொருள் கூறிய அந்தணனாகிய சிவபெருமான் என்க. (39) பின்னுஞ்சில் வரங்க ணல்கப் பெற்றுநான் மாடக் கூடல் மன்னுஞ்சின் மயனை வந்து வந்தித்து வருநாட் காமன் என்னுஞ்சின் மலர்ப்பூந் தண்டா ரிராசசே கரனைப் பெற்று மின்னுஞ்சில் லியந்தேர் வேந்தன் மேதினி புரக்கு மன்னோ. (இ - ள்.) பின்னும் சில் வரங்கள் நல்கப் பெற்று - மீண்டும் சில வரங்கள் அருளப்பெற்று, நான்மாடக் கூடல் மன்னும் சின்மயனை வந்து வந்தித்து வருநாள் - நான்மாடக் கூடலில் வீற்றிருந்தருளும் ஞான வடிவினனாகிய சோமசுந்தரக் கடவுளைக் காலந்தோறும் வந்து வழிபட்டு வருநாளில், காமன் என்னும் - மன்மதன் என்று சொல்லப்படும், சில் மலர்ப் பூந்தண்தார் இராசசேகரனைப் பெற்று - மெல்லிய மலர்களாலாகிய பொலிவுள்ள தண்ணிய மாலையை யணிந்த இராச சேகரன் என்னும் புதல்வனைப் பெற்று, மின்னும் சில்லி அம் தேர் வேந்தன் மேதினி புரக்கும்- விளங்கா நின்ற உருள்பூண்ட அழகிய தேரினையுடைய விக்கிரமபாண்டியன் புவியினைப் பாதுகாத்துவந்தான். அழகிற் காமனென்று சொல்லப்படும் இராச சேகரன் என்க. சின்மை ஈண்டு மென்மையை உணர்த்திற்று. சில்லி - உருள். மன், ஓ : அசைகள். (40) வம்புளாய் மலர்ந்த வாரான் வரவிடு மத்தக் குன்றிற் சிம்புளாய் வடிவங் கொண்ட சேவக னேவல் செய்த அம்புளாய்த் தூணம் விள்ள வன்றவ தரித்த வாபோற் செம்புளாய் கொடிய1 நார சிங்கமா யிருந்த தன்றே. (இ - ள்.) வம்பு உள்ளாய் மலர்ந்த ஆரான் - மணத்தைத் தனதகத்துக்கொண்டதாய் மலர்ந்த ஆத்தி மாலையை யணிந்த சோழன், வரவிடும் மத்தக் குன்றில் - வரவிட்ட மத யானையின் மேல், சிம்புளாய் வடிவம் கொண்ட சேவகன் ஏவல் செய்த அம்பு - சிம்புட் பறவையாகத் திருவுருக்கொண் டருளிய சோமசுந்தரக் கடவுள் ஏவிய அம்பு, உள்ளாய் தூணம் விள்ள அன்று அவதரித்த வாபோல் - தூணின் அகத்ததாகி அத்தூண் பிளவுபட அதினின்றும் அப்பொழுது தோன்றிய வாறுபோல, செம்புள் ஆய் கொடிய நாரசிங்கமாய் இருந்தது - பெரிய திருவடியாகிய கலுழன் தியானிக்கின்ற உக்கிர நரசிங்கமாய் வெளிப்பட்டிருந்தது. மத்தக் குன்று - மதமலை; யானை, மத்தம், மதக்களி. சிம்புள் - எண்காற் புள்; இது வருடை யெனவும் சரபமெனவும் கூறப்படும். ஏவல் செய்த - ஏவிய; மத்தக் குன்றில் ஏவிய அம்பு என்க, தூணின் உள்ளிருந்து அது பிளக்க அன்று தோன்றிய நரசிங்கத்தைப்போல இந்நரசிங்கக் கணையானது யானையின் உட்புகுந்து பிளந்து வெளிப்பட்டது என்க. செம்புள்- கலுழன். ஆய்தல் - ஈண்டுச் சிந்தித்தல். செம்புளாய்க் கொடிய என்னும் பாடத்திற்கு, கருடவடிவாய்க் கொடியினை யுடைய என்றுரைக்க. அன்று, ஏ : அசைகள். திருமாலானவர் தம் அடியானாகிய பிரகலாதன் பொருட்டு, அவன் தந்தையாகிய இரணியனால் அறையப்பட்ட தூணினின்றும் தோன்றி அவனைக் கொன்றருளினன் என்பதும், இரணியனைக் கொன்ற நரசிங்கம் செருக்குற்று உலகை யழிக்கத் தொடங்கிய காலையில் சிவபெருமான் சிம்புளின் உருக்கொண்டு அதனைக் கொன்றருளினர் என்பதும் வரலாறு. சரப வடிவங்கொண்டது வீரபத்திரக் கடவுள் என நூல்கள் கூறினும் அவர் சிவ மூர்த்தங்களுள் ஒருவராகலின் அமையுமென்க. நரசிங்கம் தூணினின்றும் போந்ததனை, " நசைதிறந் தலங்கப் பொங்கி நன்றுநன் றென்ன நக்கு விசைபிறந் துருமு வீழ்ந்த தென்னவோர் தூணின் வென்றி இசைதிறந் தமர்ந்த கையா லெற்றினா னெற்ற லோடும் திசைதிறந் தண்டங் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்" " பிளந்தது தூணு மாங்கே பிறந்தது சீயம் பின்னை வளர்ந்தது திசைக ளெட்டும் பகிரண்ட முதல மற்றும் அளந்தமுப் புறத்துச் செய்கை யாரறிந் தறைய கிற்பார் கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது கீழு மேலும்" என்னும் கம்பராமாயணச் செய்யுட்களால் அறிக. (41) [எழுசீரடியாசிரிய விருத்தம்] உலகெலா மழித்து மீளவுண் டாக்கு முருத்திரன் வீரசத் தியினிற் சிலதரித் திறவா வவுணன்மார் பிடந்த சிங்கநா யகனையங்கெய்தி அலகின்மா தவஞ்செய் துரோமசன் றன்பே ரறியவோர் தீர்த்தமுண் டாக்கி இலகுபே றடைந்தான் பிரகலா தனுநோற் றீறிலாப் பெருவர மடைந்தான். (இ - ள்.) உலகு எலாம் அழித்து மீள உண்டாக்கும் உருத்திரன் - எல்லாவுலகங்களையும் அழித்து அவற்றை மீளவும் படைத்தருளும் உருத்திர மூர்த்தியின், வீரசத்தியினில் சில தரித்து - வீரசத்திகளுட் சிலவற்றை அவனருளாற் பெற்று, இறவா அவுணன் மார்பு இடந்த சிங்க நாயகனை - இறவாத அவுணனாகிய இரணியனது மார்பினைப் பிளந்த நரசிம்ம மூர்த்தியை, உரோமசன் அங்கு எய்தி அலகு இல் மாதவம் செய்து - உரோமச முனிவன் அங்கே சென்று (வழிபட்டு) அளவிறந்த பெரிய தவங்களைச் செய்து, தன்பேர் அறிய ஓர் தீர்த்தம் உண்டாக்கி இலகு பேறு அடைந்தான் - தனது பெயர் விளங்க ஒரு தீர்த்தம் உண்டாக்கிப் பெரும் பேற்றினை அடைந்தான்; பிரகலாதனும் நோற்று ஈறு இலாப் பெருவரம் அடைந்தான் - பிரகலாதனும் அங்குத் தவஞ்செய்து அழியாத பெரிய வரங்களைப் பெற்றான். அழித்தல் - காரணத்தில் ஒடுக்குதல். படைத்தல் - காரணத்தினின்றும் தோற்றுவித்தல். "ஒடுங்கின சங்காரத்தின் வழியல்லது உற்பத்தியில்லை" ஆகலின், ‘அழித்து மீளவுண்டாக்கு முருத்திரன்’ என்றார். திருமால் முதலிய தேவர்களெல்லாம் தத்தம் தொழில் நடத்துவது இறைவன் சத்திகளிற் சிலவற்றைப் பெற்றே யென்பார் ’உருத்திரன் வீரசத்தியினிற் சில தரித்து’ என்றார். தரித்து இடந்த வென்க. இறவா அவுணன் - இறவாதிருக்க வரங்கள் பெற்ற அவுணன்; இதனை, " பெண்ணிற் பேரெழி லாணினி லலியினிற் பிறிதும் உண்ணிற் கும்முயி ருள்ளதி னில்லதி னுலவான் கண்ணிற் காண்பன கருதுவ யாவினுங் கழியான் மண்ணிற் சாகிலன் வானினுஞ் சாகிலன் வரத்தால்" என்பது முதலிய கம்பர் செய்யுட்களால் அறிக. நரசிங்கக் கணைக்கு நரசிங்கப் பெருமானை உவமை கூறிய ஆசிரியர் அம்மூர்த்தியினிடத்துள்ள அன்பினால் அவனை வழிபட்டார் பெற்ற பேற்றையும் கூறினார். (42) ஆகச் செய்யுள் - 1427. இருபத்து மூன்றாவது விருத்தகுமார பாலரான படலம் [கலிநிலைத்துறை] தழையு லாங்கைய ரேவிய தந்திமேல் விடைமேல் அழகர் சேவகஞ் செய்தவா றறைந்தன மவரே கிழவ னாகிப்பின் காளையாய்க் கிஞ்சுகச் செவ்வாய்க் குழவி யாய்விளை யாடிய கொள்கையைப் பகர்வாம். (இ - ள்.) தழை உலாம் கையர் ஏவிய தந்திமேல் - மயிற்றோகை பொருந்திய கையையுடைய சமணர்கள் ஏவிய யானையின்மேல், விடை மேல் அழகர் சேவகம் செய்தவாறு அறைந்தனம் - இடப வூர்தியில் ஏறியருளும் பேரழகராகிய சோமசுந்தரக் கடவுள் சேவகஞ்செய்த திருவிளையாடலைக் கூறினோம்; அவரே - (இனி) அவ்விறைவரே, கிழவனாகிப் பின் காளையாய்க் கிஞ்சுகம் செவ்வாய்க் குழவியாய் - முதலில் விருத்தனாகியும் பின்பு குமாரனாகியும் அதன்பின் முருக்கிதழ் போன்ற சிவந்த வாயினையுடைய பாலனாகியும், விளையாடிய கொள்கையைப் பகர்வாம் - விளையாடியருளிய திருவிளையாடலைக் கூறுவாம். தழை - மயிற்பீலி. உலாவும் என்பது உலாம் என்றாயது. கையர் என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, வஞ்சகர் என்றும் உரைத்தலமையும். முறையே குழவியாய்க் காளையாய்க் கிழவனாகும் உலகியற்கு மாறாக விளையாடின ரென்க. (1) தென்னன் விக்கிர மன்புயத் திருநிலச் செல்வி மன்னி வாழுநாண் மதுரையின் மறையவ னொருவன் அன்ன வன்விரூ பாக்கனா மவன்குடி வாழ்க்கை மின்ன னாள்வட மீனனாள் பெயர்சுப விரதை. (இ - ள்.) தென்னன் விக்கிரமன் புயத்து இருநிலச் செல்வி மன்னி வாழு நாள் - பாண்டியனாகிய விக்கிரமன் தோளின்கண் பெரிய நிலமகளானவள் நிலை பெற்று வாழ்கின்ற நாளில், மதுரையில் மறையவன் ஒருவன் - அம் மதுரைப் பதியில் அந்தணன் ஒருவன் இருந்தனன்; அன்னவன் விரூபாக்கன் ஆம் - அவன் விரூபாக்கன் என்னும் பெயருடையனாவான்; அவன் குடி வாழ்க்கை மின் அனாள்- அவன் இல்வாழ்க்கைக்குரிய மனையாள், வடமீன் அனாள் - அருந்ததி போலும் கற்பினை யுடையவள்; பெயர் சுபவிரதை - அவள் பெயர் சுபவிரதை யென்பதாம். ஏற்ற பெற்றி சொற்கள் விரித்துரைக்கப்பட்டன. விரூபாக்கன்- மேல் நோக்கிய விழியையுடையவன்; இது சிவபிரான் திருப்பெயர்களுள் ஒன்று. மின்னனாள் - மின்னலை யொத்தவள்; கிழத்தி என்னுந் துணையாய் நின்றது. சுபவிரதை - நல்ல விரத முடையாள் என்னும் பொருள் பயப்பது. (2) அனையர் தங்களுக் கரும்பெறன் மகவின்றி யனந்தம் புனித நல்லறஞ் செய்தொழி லொழுக்கமும் பூண்டு நனைய வார்குழ லன்னைய ரெழுவர்பா னண்ணி இனிய மாதவஞ் செய்தொரு பெண்மக வீன்றார். (இ - ள்.) அனையர் - அவ்விருவரும், தங்களுக்குப் பெறல் அரும் மகவு இன்றி - தமக்குப் பெறுதற்கரிய மகப்பேறு இன்மை யால், அனந்தம் புனித நல் அறம் செய்தொழில் - அளவிறந்த தூய சிவ புண்ணியஞ் செய்தலாகிய தொழிலையும், ஒழுக்கமும்- சீலத்தையும், பூண்டு - மேற்கொண்டு, நனைய வார்குழல் அன்னையர் எழுவர் பால் நண்ணி - தேனினையுடைய நீண்ட கூந்தலையுடைய அன்னையராகிய சத்தமாதர் திருமுன் பெய்தி, இனிய மாதவஞ்செய்து - இனிய பெரிய தவத்தைச் செய்து, ஒரு பெண்மகவு ஈன்றார் - ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர். பெறலரும் என்பது மாறி நின்றது. நெடுநாள் மகவில்லையாக அதன் பின் என்க. தொழிலும் என உம்மை விரிக்க. ஒழுக்கம்- கடவுள் வழிபாடு முதலியன. நனைய : குறிப்புப் பெயரெச்சம். சத்த மாதர்கள் - பிரமாணி, நாராயணி, மாயேசுரி, கௌமாரி, வராகி, உருத்திராணி, இந்திராணி என்போர்; பிறவாறுங் கூறுவர். (3) பேருங் கௌரியென் றழைத்தனர் பிராயமோ ரைந்திற் சாருங் கௌரியும் பிறவிநோய் தணிப்பதற் குறுதி தேருஞ் சிந்தையா டந்தையை வணங்கியிச் செனனம் ஈருந் தெய்வத மந்திர மியாதென வினவ. (இ - ள்.) பேரும் கௌரி என்று அழைத்தனர் - பெயரும் கௌரி யென்றிட்டு அழைத்தனர்; பிராயம் ஓர் ஐந்தில் சாரும் கௌரியும் - ஐந்து வயதையடைந்த கௌரியம்மையும், பிறவி நோய் தணிப்பதற்கு உறுதி தேறும் சிந்தையாள் - பிறவிப் பிணியைப் போக்குதற்குச் சிறந்த வழியை ஆராயுஞ் சிந்தையை யுடையளாய், தந்தையை வணங்கி - தன் தந்தையாகிய விரூபாக் கனை வணங்கி, இச்செனனம் ஈரும் தெய்வத மந்திரம் யாது என வினவ - இப்பிறவியை ஒழிக்கும் தெய்வத்தன்மை பொருந்திய மந்திரம் யாது என்று வினவ. ஐந்திற் சாரும் - ஐந்தினைப் பொருந்திய, உறுதி - மேலான. சாதனம் யாவென என்று பாடங்கொண்டு, தெய்வமும் மந்திரமும் யாவை? யென வினவ, என்றுரைப்பாருமுளர். (4) அந்த ணாளனு மதிசயித் தரும்பெறன் மகட்குச் சிந்தை யார்வமோ டிறைவிதன் மனுவினைச் செப்பத் தந்தை பாலது தெளிந்துநாத் தழும்புறப் பயின்றாள் முந்தை நாளருந் தவக்குறை முடித்திட வந்தாள். (இ - ள்.) அந்தணாளனும் அதிசயித்து - விரூபாக்கனும் வியப்புற்று, பெறல் அரும் மகட்கு - பெறுதற்கரிய புதல்விக்கு, சிந்தை ஆர்வமோடு இறைவி தன் மனுவினைச் செப்ப - உள்ளத்தி லெழுந்த அன்புடன் பராசத்தியின் திருமந்திரத்தைக் கூற, முந்தை நாள் அருந்தவக் குறை முடித்திட வந்தாள் - முற்பிறப்பிற் செய்த அரிய தவத்தின் குறையை நிரப்புதற்கு வந்த கௌரியம்மை, தந்தைபால் அது தெளிந்து - பிதாவினிடத்தில் அதனைக் கேட்டுத் தெளிந்து, நா தழும்பு உற பயின்றாள் - நாவானது தழும்படையும்படி அதனை ஓதி வந்தாள். குழவிப் பருவத்திலே பிறவியனை யொழிக்க வேண்டு மென்னும் பேரறிவு தோன்றினமை குறித்து அதிசயித்தான். மனு - மந்திரம். தெளிந்து - தெளியக் கேட்டுணர்ந்து; பொருளும், ஓதுமுறையும் நன்கு உணரவேண்டுமாகலின் ‘தெளிந்து’ என்றார். இடைவிடாது பயின்றாள் என்பார் ‘நாத்தழும்புறப் பயின்றாள்’ என்றார். பயிலுதல் - உருவேற்றுதல்; செபித்தல். வந்தாள் : பெயர். வந்தவளாகலின் பயின்றாள் என்பது கருத்து. (5) தாதை தன்றவக் கொழுந்தினுக் கிசையமா சைவ மாத வத்தனா யாதியாச் சிரமத்தில் வழங்கும் வேத வித்துமாய் மரபினான் மேம்படு வானெப் போது போதுமென் றுளத்தொடு புகன்றுகொண்டிருந்தான். (இ - ள்.) தாதை - தந்தையானவன், தன் தவக் கொழுந்தினுக்கு இசைய - தனது தவக்கொழுந்தாகிய புதல்விக்குப் பொருந்த, மாசைவ மாதவத்தனாய் - பெருமை பொருந்திய சைவநெறி நின்ற பெரிய தவத்தினையுடையனாய், ஆதி ஆச்சிரமத்தில் வழங்கும் வேத வித்துமாய் - முதல் நிலையாகிய பிரமசரிய நெறியில் ஒழுகும் வேத வித்துமாகி, மரபினால் மேம்படுவான் - மரபினாலு முயர்ந்த ஒருவன், எப்போது போதும் என்று - எப்பொழுது (மணவாளனாக) வருவான் என்று, உளத்தொடு புகன்று கொண்டு இருந்தான் - மனத்துடன் கூறிக் கொண்டிருந்தான். மாசைவம் - சைவத்தின் ஒரு வகையாகிய மகாசைவம் என்னலுமாம். ஆதி ஆச்சிரமம் - நான்கு நிலைகளுள் முதலது பிரமசரியம். வேத வித்து - வேதங்களை யறிந்தவன். மரபு - குடிப்பிறப்பு; கோத்திரம் முதலியவுமாம். போதும் - வருவான்; புகுதும் என்பதன் மரூஉ. இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருந்தான் என்பதனை இலக்கணை வகையால் ‘உளத்தொடு புகன்று கொண்டிருந்தான்’ என்றார். (6) பருவ நாலிரண் டாகமேற் கடிமணப் பருவம் வருவ தாகவங் கொருபகல் வைணவப் படிவப் பிரம சாரியாய்க் கடைதொறும் பிச்சைபுக் குண்பான் ஒருவன் வந்தனன் பலிக்கவ னயற்புலத்1 துள்ளான். (இ - ள்.) பருவம் நாலிரண்டு ஆக - (புதல்விக்கு) எட்டு வயது ஆக, மேல் கடிமணப் பருவம் வருவது ஆக - மேலே திருமணப் பருவம் வராநிற்க, ஒரு பகல் - ஒருநாள், அயற் புலத்து உள்ளான் - வேற்றூரில் உள்ளவனும், வைணவப் படிவப் பிரமசாரியாய் - வைணவக் கோலமுடைய பிரமசரியனாய், கடைதொறும் பிச்சை புக்கு உண்பான் ஒருவன் - வாயில் தோறும் பலி ஏற்று உண்பவனுமாகிய ஒருவன், அவண் பலிக்கு வந்தனன்- அவ்விடத்திற் பிச்சைக்கு வந்தான். அங்கு - அப்பொழுதில் என்க. வைணவப் படிவ முடையனாயும் பிரமசாரியாயும் என விரித்துக் கொள்க. புக்கு- புகுந்து; ஏற்றலாகிய காரியத்தை யுணர்த்திற்று. (7) பிச்சை வேண்டினா னவற்குத்தன் பெண்ணினைக் கொடுப்பான் இச்சை கூர்ந்தருந் தவத்தினால் வருந்தியீன் றெடுத்த விச்சை வேதியன் மனையொடு சுற்றமும் வினவா தச்ச மின்றிநீ ரெடுத்தவ னங்கையிற் பெய்தான். (இ - ள்.) பிச்சை வேண்டினான் அவற்கு - (அங்ஙனம் வந்து) பிச்சை கேட்ட அப்பிரமசாரிக்கு, தன் பெண்ணினைக் கொடுப்பான் இச்சை கூர்ந்து - தன் புதல்வியைக் கொடுத்தற்கு விருப்பங் கொண்டு, அருந் தவத்தினால் வருந்தி ஈன்றெடுத்த விச்சை வேதியன் - அரிய தவத்தினாலே உடல் வருந்திப் பெற்றெடுத்த கற்றுவல்ல மறையவனாகிய விரூபாக்கன், மனையொடு சுற்றமும் வினவாது - மனைவியையும் சுற்றத்தாரையும் கேளாது, அச்சம் இன்றி நீர் எடுத்து அவன் அங்கையில் பெய்தான் - அச்சமு மில்லாமல் நீரினை எடுத்து அவனுடைய அகங்கையில் வார்த்தான். வேண்டினன், பெயரெச்சமாயிற்று. கொடுப்பான் : வினையெச்சம். புதல்வி மேலுள்ள அன்பும் தனது கல்வியறிவும் இதனைத் தடுத்தில வென்பார் ‘அருந்தவத்தினால் வருந்தி யீன்றெடுத்த விச்சைவேதியன்’ என்றார். ஒரு தலையாக வினவுதற் குரியாரையும் வினாவிற்றிலன் என்பார் ‘மனையொடு சுற்றமும் வினவாது’ என்றார். மனைவி முதலாயினார் இணங்காவிடின் யாது செய்வதென்ற அச்சமும், தன் புதல்வி எத்தகைய இன்னலுறுவாளோ என்ற அச்சமும் இன்றி யென்க, எங்ஙனம் பெய்தான் என்பதனை வருஞ்செய்யுளிற் காண்க. (8) கலிக்கு நூபுரச் சீறடிக் கன்னிதன் விதியும் பலிக்கு வந்தவ னல்வினைப் பகுதியுந் துரப்ப ஒலிக்கு மந்திரச் சிரகநீ ரொழுக்கினான் முந்திச்1 சலிக்கு மன்னையுந் தமர்களுங் கேட்டுளந் தளர்வார். (இ - ள்.) கலிக்கும் நூபுரச் சீறடிக்கன்னிதன் விதியும் - ஒலிக்கின்ற சிலம்பினை யணிந்த சிறிய அடியையுடைய கௌரியின் கன்மமும், பலிக்கு வந்தவன் நல்வினைப் பகுதியும்- பிச்சைக்கு வந்தவனது நல்வினையின் கூறும், துரப்ப - செலுத்துதலால், முந்தி - முற்பட்டு, ஒலிக்கும் மந்திரம் சிரக நீர் ஒழுக்கினான் - ஒலிக்கின்ற மந்திரத்தோடு கமண்டல நீரை வார்த்தான்; கேட்டு சலிக்கும் அன்னையும் தமர்களும் உளம் தளர்வார் - (அதனைக்) கேட்டு வருந்துகின்ற தாயும் உறவினரும் மனந்தளர்வாராயினார். கன்னிதன் விதி - இவனுக்கு மனைவியாக வேண்டு மென்னும் பிராரத்த கன்மம். நல்வினை பலதிறப் படுமாகலின் ‘பகுதி’ என்றார். இவன் தன்வயம் இழந்தனன் என்பார் ‘துரப்ப’ என்றார். முந்தி - விரைந்து. மந்திரத் தோடு என விரிக்க. கன்னிகையைத் தானஞ் செய்தற்குரிய மந்திரத்துடன் தாரை வார்த்தான் என்றவா றாயிற்று. தளர்வார் : முற்றெச்சம். (9) குலனு மோர்கிலன் கோத்திர மோர்கிலன் குடிமை நலனு மோர்கில னொழுக்கமுங் கல்வியு நண்ணுந் தலனு மோர்கிலன் கன்னியைத் தத்தஞ்செய் தானெப் புலனு மோர்ந்தவன் விதிவழி மதியெனப் புலந்தார். (இ - ள்.) குலனும் ஓர்கிலன் - குலத்தையும் ஓராது, கோத்திரம் ஓர்கிலன் - கோத்திரத்தையும் ஓராது, குடிமை நலனும் ஓர்கிலன் - குடிப்பிறப்பின் மேன்மையையும் ஓராது, ஒழுக்கமும் கல்வியும் நண்ணும் தலனும் ஓர்கிலன் - ஒழுக்கத்தையும் கல்வியையும் இருக்கும் இடத்தினையும் ஓராது, எப்புலனும் ஓர்ந்தவன் கன்னியைத் தத்தம் செய்தான் - எல்லா நூல்களையு மறிந்தவன் தன் புதல்வியன் தத்தஞ் செய்து விட்டான், விதிவழி மதி எனப் புலந்தார் - யாவர்க்கும் விதியின் வழியே மதிசெல்லும் என்று வாடினர். ஓர்கிலன் என்னும் எதிர்மறை முற்றுக்கள் எச்சமாயின; கு : சாரியை. அல் : எதிர்மறை இடைநிலை. ஓர்தல் - ஆராய்ந்தறிதல். இவையெல்லாம் ஆராய்தற் குரியவாகவும் இவற்றுள் ஒன்றும் ஆராய்ந்திலன் என்றார். " நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்" என்பவாகலின், ‘எப்புலனு மோர்ந்தவன்’ என்றும், ‘விதிவழி மதி என்றும் கூறினார். (10) மற்ற வன்குடி கோத்திரஞ் சூத்திர மற்றும் உற்ற றிந்துநம் மரபினுக் கொக்குமான் மாயோன் சொற்ற தந்திர வைணவத் தொடக்குண்டு திரியுங் குற்ற மொன்றினி மறுப்பதென் கொடுப்பதென் றிசைந்தார். (இ - ள்.) அவன் குடி கோத்திரம் சூத்திரம் மற்றும் உற்று அறிந்து - அவனுடைய குடியையும் கோத்திரத்தையும் சூத்திரத்தையும் பிறவற்றையும் பொருந்தியறிந்து, நம் மரபினுக்கு ஒக்கும் - (இவன்குடி முதலிய வெல்லாம்) நமது மரபுக்கு ஒத்திருக்கின்றன; மாயோன் சொற்ற தந்திர வைணவத் தொடக்குண்டு திரியும் குற்றம் ஒன்று - (இவன்) திருமால் கூறிய நூலின் வழிப்பட்ட வைணவ மதக் கட்டுண்டு ஒழுகும் குற்ற மொன்று தான் உளது; இனி மறுப்பது என் - (முன்னரே தத்தஞ் செய்தமையால்) இனி மறுப்பது எவ்வாறு, கொடுப்பது என்று இசைந்தார் - கொடுக்க வேண்டுவதே யென்று உடன்பட்டனர். மற்று, ஆல் : அசைகள் : குடி முதலியவற்றில் உம்மை விரித்துரைக்க. அறிந்து - அவனையடைந்து உசாவி யறிந்து. தந்திரம் - பாஞ்சாரத்திரம், வைகானசம் என்னும் வைணவ ஆகமங்கள். ஒன்றே - கொடுப்பதே என ஏகாரங்கள் விரித்துக் கொள்க. கொடுப்பது - கொடுக்கவேண்டுவது. (11) தாயு மொக்கலு மொத்தபின் றாதையும் வேதத் தாயு மெண்மணத் தாதியா மறநிலை யாற்றால் தேயு நுண்ணிடைக் கன்னியைச் செம்பொனாற் புதைத்துக் காயு மாரழன் முன்னரக் காளைகைக் கொடுத்தான். (இ - ள்.) தாயும் ஒக்கலும் ஒத்தபின் - இங்ஙனம் தாயும் சுற்றத்தாரும் இசைந்தபின், தாதையும் - தந்தையும், வேதத்து ஆயும் எண் மணத்து - வேதத்தில் ஆராயப்பட்ட எண்வகை மணங்களுள், ஆதியாம் அறநிலை ஆற்றால் - முதற்கண் உள்ளதாகிய பிரம மண நெறியால், தேயும்நுண் இடைக் கன்னியைச் செம்பொனால் புதைத்து - மெலிகின்ற நுண்ணிய இடையையுடைய கௌரியைச் சிவந்த பொன்னாலாகிய அணிகளால் உடல் மறைய அலங்கரித்து, காயும் ஆர் அழல் முன்னர் அக் காளைகைக் கொடுத்தான் - சுடுகின்ற நிறைந்த ஓமத்தீயின்முன் அக்காளைப் பருவத்தையுடைய பிரமசாரியின் கையிற் கொடுத்தான். எண்மணம் : பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன; இவற்றை, " மறையோர் தேஎத்து மன்ற லெட்டு" என்று தொல்காப்பியமும், " அந்தண ரருமறை மன்ற லெட்டு" என்று இறையனாரகப்பொருளும் கூறும... முதற்கண் உள்ள பிரமம் தமிழில் அறநிலை எனப்படும். பிரமமாவது பிரமசரியங் காத்தானுக்குக் கன்னியைத் தீ முன்னர்க் கொடுப்பது பொன் : அணிக்கு ஆகுபெயர். மிக அணிந்து என்பார் ‘புதைத்து’ என்றார். (12) தெய்வ மங்கல வரிசைகள் செய்துதான் பயந்த மௌவ லங்குழற் கன்னியை மணமக னோடுங் கௌவை யம்புனல் வேலிசூழ் கடிநகர் விடுத்தான் சைவ மங்கல வேதியத் தாபத னிப்பால். (இ - ள்.) சைவ மங்கல வேதியத் தாபதன் - நன்மை பொருந்திய சைவ தவ வொழுக்கத்தையுடைய மறையோனாகிய விரூபாக்கன், தெய்வ மங்கல வரிசைகள் செய்து - தெய்வத் தன்மை பொருந்திய மங்கல வரிசைகள் பலவற்றைச் செய்து, தான் பயந்த மௌவல் அம் குழல் கன்னியை - தான் பெற்ற முல்லைமலர்மாலை சூடிய அழகிய கூந்தலையுடைய கன்னியை, மணமக னோடும் - மணவாளனோடும், கௌவை அம்புனல் வேலி சூழ் கடிநகர் விடுத்தான் - ஒலிக்கின்ற நீர் வேலியாகச் சூழ்ந்த காவலையுடைய நகரின்கண் செல்ல விடுத்தான்; இப்பால் - பின். மங்கல வரிசை - சுப சீதனம்.. முல்லை கற்பிற்குரியது. கௌவையம், அம் : சாரியை. புனல் வேலி - நீர்வளமுடைய கழனியாகிய வேலியுமாம். நகர் விடுத்தான் - நகரிற் செல்லவிடுத்தான். மங்கல சைவத்தாபத வேதியன் என மாற்றுக. இப்பால் - பின்பு என்றபடி; இதனைப் பின் நிகழும் சரிதத்தோடு இயைக்க. (13) [அறுசீரடியாசிரிய விருத்தம்] இல்லார்க்குக் கிழியீடு நேர்பட்டா லெனப்பல்லா ரில்லந் தோறுஞ் செல்லாநின் றிரந்துண்டு திரிந்தமகன் மணமகனாய்ச் செல்வ நல்க வல்லாளை மணந்துவரு வான்போற்றம் மனைபுகுத வன்கட் சீலப் பொல்லாராய் வைணவத்துப் புக்கொழுகு தாய்தந்தை பொறார்க ளாகி. (இ - ள்.) இல்லார்க்குக் கிழியீடு நேர்பட்டாலென - வறியார்க்குப் பொன் முடிப்புக் கிடைத்தாற்போல, பல்லார் இல்லந்தோறும் செல்லாநின்று இரந்து உண்டு திரிந்த மகன் - பலருடைய மனைதோறும் சென்று ஏற்றுண்டு திரிந்த மகன், மணமகனாய் - மணமகனாக, செல்வம் நல்க வல்லாளை மணந்து வருவான்போல் தம் மனைபுகுத - செல்வத்தை அளிக்கவல்ல திருமகளை மணஞ் செய்து வருவான்போல வந்து தமது இல்லத்தையுடைய, வன்கண் சீலப் பொல்லாராய் - கொடுமையையே சீலமாகக்கொண்ட பொல்லாதவராய், வைணவத்துப் புக்கு ஒழுகு தாய் தந்தை பொறார்களாகி - வைணவ மதத்தை மேற்கொண்டு ஒழுகுகின்ற தாயும் தந்தையும் மனம் பொறாதவர்களாகி. கிழியீடு - கிழியில் இடப்பட்டது; பொன் முடிப்பு. நேர்படுதல் - தானே எதிர்ப்படுதல். நேர்பட்டால் அவர் களிப்பது போற் களிப்புற்று என்க. திருமகளை மணந்து வருவாள்போற் கௌரியை மணந்து வந்து புகவென விரிக்க. (14) வந்தமண வாட்டிசிவ சிந்தனையுஞ் சைவதவ வடிவு நோக்கி வெந்தவுடல் போன்மனமும் வெந்தவளை வேறொதுக்கி வேண்டா ராகி நிந்தனைசெய் தொழுகுவா ரவளையொரு நாணீத்து நீங்கி வேற்றூர்த் தந்தமர்மங் கலங்காண்பான்1 றனியேவைத் தகம்பூட்டித் தாங்கள் போனார். (இ - ள்.) வந்த மணவாட்டி சிவசிந்தனையும் சைவத் தவவடிவும் நோக்கி - (தமது இல்லிற்கு) வந்த மணக் கோலத்தையுடைய கௌரியின் சிவ சிந்தனையையும் சைவ தவவேடப் பொலிவையும் நோக்கி, வெந்த உடல்போல் மனமும் வெந்து - (தமது) கருகிய உடலைப் போல மனமும் வெந்து, அவளைவேறு ஒதுக்கி வேண்டா ராகி நிந்தனை செய்து ஒழுகுவார் - அவளை வேறாக ஒதுக்கி வைத்துச் சிறிதும் விரும்பாராய் நிந்தித்து ஒழுகுபவர்கள், தாங்கள் ஒருநாள் வேற்றூர் தம் தமர் மங்கலம் காண்பான் - தாம் ஒருநாள் வேற்றூரில் நடக்கும் தம் சுற்றத்தாரின் மணத்தைக் காணுதற்கு, அவளைத் தனியே வைத்து நீத்து நீங்கி அகம் பூட்டிப் போனார்- அவளைத் தனியாக வைத்து விட்டு நீங்கி இல்லினைப் பூட்டிக்கொண்டு போயினர். மணவாட்டி - மணமகள்; மணவாளனுக்குப் பெண்பால். தவ வடிவு - திருநீறு சாதனமுடைய வடிவு. சங்கு சக்கர முத்திரை பொறிக்கப் பட்டமையால் வெந்த உடம்பு. உளம் அழுக்காற்றாற் புழுங்குதலை ‘வெந்து’ என்றார். (15) உண்மாசு கழுவுவது நீறென்றே யுபநிடத முரைப்பக் கேட்டும் மண்மாசு படப்பூசும் வடிவுடையா ரகன்றதற்பின் மனையில் வைகும் பெண்மாசு கழியவொரு சிவனடியார் தமைக்காணப் பெறாம லின்றென் கண்மாசு படுவதெனக் கனிந்தொழுகு தலையன்பாற் கவலை கூர்வாள். (இ - ள்.) நீறே உள்மாசு கழுவுவது என்று உபநிடதம் உரைப்பக் கேட்டும் - திருநீறே அகத்திலுள்ள அழுக்கைப் போக்கித் தூய்மை செய்வது என்று உபநிடதங் கூறுவதைக் கேட்டும், மண்மாசு படப் பூசும்வடிவு உடையார் அகன்றதன் பின் - மண்ணை அழுக்குண்டாகப் பூசுகின்ற வடிவினையுடைய அவர்கள் போனபின், மனையில் வைகும் பெண் - இல்லில் இருக்கும் கௌரி, மாசு கழிய - குற்றம் ஒழியுமாறு, ஒரு சிவன் அடியார் தம்மைக் காணப் பெறாமல் - ஒரு சிவனடியாரைக் காணப்பெறாமல், இன்று என்கள் மாசு படுவதுஎன - இப்பொழுது என் கண் மாசடைகின்றது என்று, கனிந்து ஒழுகு தலையன்பால் கவலை கூர்வாள் - பழுத்து ஒழுகுந் தலையன்பினாற் கவலை யுறுவாளாயினாள். உண்மாசு - ஆணவம் முதலியன. உபநிடதம் - மறைமுடி. திருநீற்றின் பெருமையை விளக்குவது பஸ்ம ஜாபால உபநிடதமஎன்ப. திருநீறு மாசு போக்குவதனையும், வேதத்தாற் கூறப் படுவதனையும், திருநீற்றுப் பதிகத்தால் அறிக. மண் - திருமண் என்பது. மாசு கழிய - அனாதியே பந்தித்துள்ள பாசவழுக்கு ஒழிய; தீயாருடன் சம்பந்தித்த குற்றம் நீங்க வென்றுமாம். ஒருவரையேனும் காணப் பெறுதல் வேண்டுமென்பார் ‘ஒரு சிவனடியார, என்றார். காணப் பெறாமல் என்றது சிவனடியார் அங்குவரும் வழக்க மின்மையைக் குறிக்கின்றது, காண்டற்குத் தடையில்லாத இன்றும் காணப்பெறாமல் என்பார் ‘இன்று’ என்றார். கண் மாசுபடுவது - கண் குருடாகின்றது. தலையன்பு- தீவிர தரமான அன்பு. (16) சிவனடியார்க் கன்பிலாச் சிந்தையே யிரும்பேவல் செய்து நாளும் அவனடியார் திறத்தொழுகா வாக்கையே மரஞ்செவிக ணாதி யைந்தும் பவனடியா ரிடைச்செலுத்தாப் படிவமே பாவைமறை பரவுஞ் சைவ தவநெறியல் லாநெறியே பவநெறியென் றளியளாய்த் தளர்வாள் பின்னும். (இ - ள்.) சிவன் அடியார்க்கு அன்பு இலாச் சிந்தையே இரும்பு - சிவனடியார்க்கு அன்பில்லாத மனமே இரும்பாகும், அவன் அடியார் திறத்து நாளும் ஏவல்செய்து ஒழுகா ஆக்கையே மரம் - அவ்விறைவனது அடியார் பக்கத்து எந்நாளும் பணிசெய்து ஒழுகாத உடலே மரமாகும், பவன் அடியாரிடை செவி கண் ஆதி ஐந்தும் செலுத்தாப் படிவமே பாவை - அச்சிவபெருமான் அடியாரிடத்துக் காது கண் முதலிய ஐம் பொறிகளையும் செலுத்தாத வடிவமே பாவையாகும், மறை பரவும் சைவ தவநெறி அல்லா நெறியே பவநெறி - வேதந் துதிக்கும் சைவமாகிய தவநெறியல்லாத பிற நெறிகளே பிறவிக்கேதுவாகிய நெறிகளாம், என்று அளியளாய்த் தளர்வாள் - என்று அன்புடையளாய்த் தளர்கின்றாள்; பின்னும் - பின்னரும். சிந்தை இரும்பே, ஆக்கை மரமே, படிவம் பாவையே, அல்லாநெறி பவ நெறியே என ஏகாரங்களைப் பிரித்துக் கூட்டலுமாம.. பவன்- சிவ பெருமான். அவ நெறி என்று பாடமாயின் வீண்நெறி என்க. " ஈசனுக்கன் பில்லா ரடியவர்க்கன் பில்லார் எவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்குமன் பில்லார் பேசுவதென் னறிவிலாப் பிணங்களைநா மிணங்கிற் பிறப்பினொடு மிறப்பினொடும் பிணங்கிடுவர் விடுநீ ஆசையொடு மரனடியா ரடியாரை யடைந்திட் டவர்கரும முன்கரும மாகச் செய்து கூசிமொழிந் தருண்ஞானக் குறியி னின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே" என்னும் சிவஞான சித்தியார் திருவிருத்தம் இங்கு நோக்கற்பாலது. (17) எனைத்துயிர்க்கு முறுதியிக பரமென்ப வவைகொடுப்பா னெல்லாந் தானாய் அனைத்துயிர்க்கு முயிராகு மரனென்ப வவனறிவார்க் கங்கம் வாக்கு மனத்துறுமெய்ப் பத்திவழி வருமென்ப வப்பத்தி வழிநிற் பார்க்கு வினைத்துயர்தீர்த் திடவெடுத்த வடிவென்ப தவனடியார் வேட மன்றோ. (இ - ள்.) எனைத்து உயிர்க்கும் உறுதி இகபரம் என்ப - எல்லா உயிர்களுக்கும் உறுதியாவன இம்மை யின்பமும் மறுமை யின்பமும் என்று கூறுவர்; அவை கொடுப்பான் எல்லாம் தானாய் அனைத்து உயிர்க்கும் உயிர் ஆகும் அரன் என்ப - அவற்றை அருளுபவன் எல்லாமும் தானாகி எவ்வுயிர்க்கும் உயிராயுள்ள சிவபெருமான் என்பர்; அவன் அறிவார்க்கு அங்கம் வாக்கு மனத்து உறு மெய்ப் பத்திவழி வரும் என்ப - அவனை உணர்வார்க்கு உடலும் உரையும் உள்ளமுமாகிய இம்மூன்று கரணங்களாலும் செய்யப்படுகின்ற உண்மையாகிய பத்திநெறி உண்டாம் என்பர், அப்பத்திவழி நிற்பார்க்கு - அவ்வன்பு வினைகளால் வருந் துன்பங்களைப் போக்குதற்கு எடுத்த வடிவமென்று சொல்லப்படுவது, அவன் அடியார் வேடம் அன்றோ - அச்சிவபிரான் அடியார்களின் திருவேடம் அல்லவா? வீட்டினையும் அடக்கி ‘இகபரம்’ என்றார். என்ப என்பனவற்றை அசையென்னலுமாம். அவனறிவார்க்கு, இரண்டனுருபு தொக்கு நின்றது. அறிதலாவது எப்பொழுதும் சிந்தித்தல், இறைவன் எடுத்த வடிவெனப்படுவது என்க; " அறிவரியான் றனையறிய வாக்கை யாக்கி அங்கங்கே யுயிர்க்குயிரா யறிவுகொடுத் தருளாற் செறிதலினாற் றிருவேடஞ் சிவனுருவே யாகும்" என்றும், " தாபர சங்கமங்க ளென்றிரண் டுருவினின்று மாபரன் பூசைகொண்டு மன்னுயிர்க் கருளைவைப்பன்" என்றும் சிவஞானசித்தியாரகூறுவது காண்க. (18) என்னவிருந் தலமருவா ளிருக்குமிடத் தவளுள்ளத் தெண்ணி யாங்கே தென்னவனா யிருந்தரசு செய்தபிரா னவட்கருளுஞ் செவ்வி நோக்கிக் கன்னமுரங் கரஞ்சிரந்தோள் கண்டமுங்கண் டிகைபூண்டு கையிற் றம்போற் பன்னெடுநாட் பழகியதோர் தனிப்பெரிய புத்தகமும் பக்கஞ் சேர்த்தி. (இ - ள்.) என்ன இருந்து அலமருவாள் - என்று கருதியிருந்து மனஞ் சுழலுவாள்; இருக்குமிடத்து - (இங்ஙனமாகக் கௌரி வருந்தி) இருக்குமிடத்தில், அவள் உள்ளத்து எண்ணியாங்கே- அவள் மனத்திற் கருதியவாறே, தென்னவனாய் இருந்து அரசு செய்த பிரான் - சுந்தர பாண்டியனாய் வீற்றிருந்து ஆட்சி புரிந்த சோமசுந்தரக்கடவுள், அவட்கு அருளும் செவ்வி நோக்கி - அவளுக்கு அருள் புரியும் பருவத்தை நோக்கி, கன்னம் உரம் கரம் சிரம் தோள் கண்டமும் கண்டிகை பூண்டு - காதுகளிலும் மார்பிலும் கைகளிலும் சென்னியிலும் தோள்களிலும் கழுத்திலும் உருத்திராக்கம் அணிந்து, தம்போல் பல் நெடுநாள் பழகியது ஓர் தனிப்பெரிய புத்தகமும் - தம்மைப்போலப் பன்னெடுங்காலம் பழகியதாகிய ஓர் ஒப்பற்ற பெரிய புத்தகத்தையும், பக்கம் கையில் சேர்த்தி - பக்கத்தே கையில் வைத்துக்கொண்டு. மேற்செய்யுளிற் கூறியதைச் சுட்டி ‘என்ன’ என்றார். ‘உண்மாசு கழுவுவது’ ‘சிவனடியார்க்கு’ என்னுஞ் செய்யுட்களிலுள்ள ‘கவலை கூர்வாள்’, ‘தளர்வாள்’ என்பவற்றை எச்சமாக்கி, இச்செய்யுளில் ‘அலமருவாள்’ என்பதைப் பெயராக்கலுமாம். எண்ணியாங்கே அருளுஞ் செவ்வி நோக்கி யென்க; கன்னம் முதலியவற்றில் எண்ணும்மை விரித்துக் கொள்க. தம்மைப்போல அனாதியாக விருந்து தம்முடன் பயின்றதாகிய புத்தகம் என்க; இப்பொழுது கொண்ட முதுமைக் கோலத்தைக் கருதி, தம்மைப்போல் நெடுநாட் பழகியதாகத் தோற்றும் புத்தகம் எனக் கூறினார் எனலுமாம். பக்கத்திலே கையில் வைத்துக் கொண்டு என்க. (19) கரிந்தநீள் கயன்முள்ளி னரையுமுது திரைகவுளுங் கனைக்கு நெஞ்சுஞ் சரிந்தகோ வணவுடையுந் தலைப்பனிப்பு முத்தரியந் தாங்கு தோளும் புரிந்தநூல் கிடந்தலையும் புண்ணியநீ றணிமார்பும் பொலிய நீழல் விரிந்ததோர் தனிக்குடையுந் தண்டூன்றிக் கவிழ்ந்தசையு மெய்யுந் தாங்கி. (இ - ள்.) கரிந்த நீள்கயல் முள்ளின் நரையும் - கரிய நீண்ட கயல் மீனின் முள்ளைப் போன்ற நரையும், முதுதிரைகவுளும் - மிகவுந் திரைந்த கபோலமும், கனைக்கும் நெஞ்சும் - அடிக்கடி கனைக்கின்ற மார்பும், சரிந்த கோவண உடையும் - ஒரு புறம் சரிந்துள்ள கோவணம் போக்கிய ஆடையும், தலைப்பனிப்பும் - தலை நடுக்கமும், உத்தரியம் தாங்கு தோளும் - மேலாடை தாங்கிய தோளும், புரிந்த நூல் கிடந்து அலையும் புண்ணிய நீறு அணி மார்பும் - (முப்புரியாகச்) செய்த பூணூல் கிடந்து அசையும் புண்ணிய வடிவாகிய திருநீற்றினை அணிந்த மார்பும், நீழல் பொலிய விரிந்தது ஓ'a3 தனிக்குடையும் - நிழல் விளங்க விரிந்ததாகிய ஓர் ஒப்பற்ற குடையும், தண்டு ஊன்றிக் கவிழ்ந்து அசையும் மெய்யும் - தண்டினை ஊன்றி அதனோடு கவிழ்ந்தசைகின்ற திருமேனியும், தாங்கி - ஆகிய இவைகளைக் கொண்டருளி. கரிந்த நீள்கயல் - புறத்தே கருநிறமுடைய நீண்ட கயல். முள்ளின், இன் ஒப்புப்பொருட்டு. திரைகவுள் : வினைத்தொகை. கனைத்தல் - இருமல். நரை முதலியவற்றைப் பொலிய என்பத னோடு முடித்து, குடையும் மெய்யும் தாங்கி என்றுரைத்தலுமாம். (20) ஒருத்தரா யுண்டிபல பகல்கழிந்த பசியினர்போ லுயங்கி வாடி விருத்தவே தியராய்வந் தகம்புகுதக் கண்டெழுந்து மீதூ ரன்பின் கருத்தளாய்த் தவிசிருத்திக் கைதொழுது சிவனையிங்குக் காண வென்ன வருத்தமா தவமுடையே னெனமுனிவர் பசித்துன்பால் வந்தே மென்றார். (இ - ள்.) விருத்த வேதியராய் - மூப்பினையுடைய மறையவராய், ஒருத்தராய் - தனியராய், பல பகல் உண்டி கழிந்த பசியினர்போல் - பலநாட்கள் உணவு இன்மையால் நேர்ந்த பசியினை யுடையார்போல, உயங்கி வாடி வந்து அகம்புகுத - வருந்தி வாட்டமுற்று வந்து இல்லில் நுழையாநிற்க, கண்டு எழுந்து மீதூர் அன்பின் கருத்தளாய் - (அதனைப்) பார்த்து எழுந்து மேலோங்கும் அன்பினையுடைய எண்ணமுடையவளாய், தவிசு இருத்திக் கைதொழுது - அவரை ஆசனத்தில் அமர்த்திக் கைகூப்பி வணங்கி நின்று, சிவனை இங்குக் காண - சிவபெருமானை இங்குத் தரிசிக்க, என்னவருத்தம் மாதவம் உடையேன் என - என்ன வருந்திச் செய்த பெரிய தவத்தினை உடையேன் என்று சொல்ல, முனிவர் உன்பால் பசித்து வந்தேம் என்றார் - முனிவர் உன்னிடத்திற் பசியுற்று வந்தேம் என்று கூறியருளினார். ஒருத்தராய் - வேறு துணை யில்லாதவராய. கழிந்த என்னும் பெயரெச்சம் காரணப்பொருடடு. சிவனை, முன்னிலையிற் படர்க்கை வந்தது. சிவனடியாரைச் சிவன் என்று கூறுதல் மரபு; தேவரீர் என்பது போல; வைணவர்கள் பெருமாள் என்று கூறுதலுங் காண்க. உண்மையுந் தோன்ற இங்கே ‘சிவனை’ எனக் கூறினார். என்ன தவம் என்க. (21) இற்பூட்டிப் போயினா ரெமரங்க ளெனக்கௌரி யியம்ப மேரு விற்பூட்டிப் புரம்பொடித்த வேதியர்நின் கைதொட்டு விடுமுன் யாத்த கொறபூட்டு விடுந்திறந்து கடிதடிசில் சமைத்தியெனக் குமரி தாளில் அற்பூட்டு மடவரலு மவ்வாறே யட்டில்புகுந் தடிசி லாக்கி. (இ - ள்.) (என்ற வளவில்), கௌரி - கௌரியம்மை, எமரங்கள் இல்பூட்டிப் போயினார் என - எம்மவர் வீட்டினைப் பூட்டிச் சென்றனர் என்று கூற, மேருவில் பூட்டிப் புரம் பொடித்த வேதியர் - மேருவில்லில் (அனந்தனாகிய நாணைப்) பூட்டித் திரிபுரத்தை நீறாக்கிய சிவபெருமானாகிய அந்தணர், நின் கை தொட்டுவிடுமுன் - நினது கையாற் றொட்டு விடுதற்கு முன்னே, யாத்த கொல் பூட்டு விடும் - பந்தித்த கொல்லனாற் செய்த பூட்டு நெகிழ்ந்து விடும்; திறந்து கடிது அடிசில் சமைத்தி என்ன - கதவைத் திறந்து விரைவில் உணவு ஆக்குவாய் என்று கூற, குமரி தாளில் அன்பு ஊட்டு மடவரலும் - இறைவியின் திருவடியில் அன்பினைச் செலுத்திய கௌரியும், அவ்வாறே அட்டில் புகுந்து அடிசில் ஆக்கி - அங்ஙனமே திறந்து அடுக்களையில் நுழைந்து திருவமுது சமைத்து. எமரங்கள், கள் என்னும் விகுதிமேல் விகுதியும் அம் சாரியையும் பெற்று முடிந்தது. விற்பூட்டி - வில்லை வளைத்து என்றுமாம். கையாற்றொடு, அங்ஙனம் தொட்டு விடுமுன் என விரிக்க. கொல்- கொற்றொழில. பூட்டு விடும் - பூட்டு யாப்பு விடும். அற்பூட்டு- அன்பினைச் செலுத்திய; அன்பு அற்பு என வலித்தது. (22) தையன்மா தவக்கொழுந்து புறம்போந்து சிரகநீர் தளிர்க்கை தாங்கி ஐயனே யமுதுசெய வெழுந்தருளு மெனவெழுந்த வடிகள் பாதச் செய்யதா மரைவிளக்கி யந்நீர்தன் சென்னியின்மேற் றெளித்துப் பாச மையன்மா சிருள்கழுவி யகம்புகுவித் தாசனமேல் வைத்துப் பின்னர். (இ - ள்.) மாதவக் கொழுந்து தையல் - பெரிய தவக்கொழுந் தாகிய கௌரி, புறம் போந்து - வெளியே வந்து, தளிர்க்கை சிரக நீர் தாங்கி - தளிர்போன்ற கையிலே கமண்டல நீரையேந்தி, ஐயனே அமுதுசெய எழுந்தருளும் என - ஐயனே! திருவமுது செய்தற்கு எழுந்தருளுவீராக என்று வேண்ட, எழுந்த அடிகள் பாதம் செய்ய தாமரை விளக்கி - அங்ஙனமே எழுந்த பெரியாரின் திருவடியாகிய செந்தாமரை மலர்களை (அக் கமண்டல நீரால்) விளக்கி, அந்நீர் தன் சென்னியின் மேல் தெளித்து- அந்த நீரைத் தனது தலையின்மீது தெளித்து, பாசம் மையல் மாசு இருள் கழுவி - பாசமாகிய மயக்கத்தை விளைவிக்கும் மல விருளைப்போக்கி, அகம் புகுவித்து ஆசன மேல்வைத்து - இல்லிற் புகுவித்துத் தவிசின்மேல் எழுந்தருளியிருக்கச் செய்து, பின்னர் - பின்பு. தெளித்து அங்ஙனம் தெளித்தலாற் கழுவி என்க. இருட் பாச மையல் மாசு எனக் கூட்டி, ஆணவமாகிய மயக்கத்தைச் செய்யும் அழுக்கினை என்றுரைத்தலுமாம். (23) நகைமலரிட் டருச்சித்து நல்லபரி கலந்திருத்தி நறுவீ முல்லை முகையனைய பாலடிசில் வெள்ளிமலை யெனப்பருப்பு முதுகிற் செம்பொற் சிகரமெனப் பல்வேறு கருனைபுறந் தழீஇக் கிடந்த சிறுகுன் றீட்ட வகையெனநெய் யருவியெனப் படைத்தனைய சிற்றுண்டி வகையும் பெய்து. (இ - ள்.) நகை மலர் இட்டு அருச்சித்து - விளக்கமாகிய மலர்களால் அருச்சித்து, நல்ல பரிகலம் திருத்தி - நல்ல உண்கலத்தைத் திருத்தி வைத்து, நறுவீ முல்லை முகைஅனைய பால் அடிசில் வெள்ளி மலை என - நறுமணங்கமழும் மலர்களையுடைய முல்லையின் அரும்பு போன்ற பால் வார்த்துச் சமைத்த சோற்றை வெள்ளிமலை போலவும், பருப்பு முதுகில் செம்பொன் சிகரம் என - பருப்பினை அம்மலையின் முதுகில் உள்ள சிவந்த பொன்னாலாகிய முடிபோலவும், பல்வேறு கருனை - பலவேறு பொரிக்கறிகளை, புறம் தழீஇக் கிடந்த ஈட்டம் சிறு குன்றின் வகை என - அம்மலையின் புறத்திற் சூழ்ந்து கிடந்த கூட்டமாகிய சிறு மலைகளின் வகை போலவும், நெய் அருவி எனப் படைத்து- நெய்யினை (அம்மலையில் ஒழுகும்) அருவி போலவும் படைத்து, சிற்றுண்டி வகையும் அனைய பெய்து - வேறு வேறு சிற்றுண்டிகளையும் அங்ஙனமே படைத்து. பரிகலம் - உண்கலம், திருத்தி - தூய்மையுற வைத்து. நறுவீ, முல்லைக்கு அடை.. பாலடிசில் - வெள்ளிய அடிசிலுமாம். அடிசிலின் மேலிட்ட பருப்பு வெள்ளி மலையின் பொன் முடிபோலவும், அடிசிலைச் சூழவிட்ட கருனைகள் வெள்ளி மலையைச் சூழ்ந்து கிடந்த குன்றுகள் போலவும், அடிசிலின்மேலிருந்து ஒழுகும் நெய் வெள்ளி மலையின் முடியிலிருந்து ஒழுகும் அருவி போலவும் இருக்குமாறு என்க; வடிவும் நிறமும் பற்றி உவமைகள் கூறினார். (24) செய்யவா யிடையிடையே முகமனுரை யின்னமுது செவியி லூட்டத் தையலாள் வளைக்கையறு சுவையமுது வாயூட்டத் தளர்ந்த யாக்கை ஐயர்தாந் திருவமுது செய்தமுதுண் டவரெனமூப் பகன்று பூவிற் கையதே மலர்வாளிக் காளைவடி வாயிருந்தார் கன்னி காண. (இ - ள்.) தையலாள் - கௌரியம்மையின், செய்ய வாய் இடை இடையே முகமன் உரை இன் அமுது செவியில் ஊட்ட - சிவந்த வாயானது அடிக்கடி இன்மொழிகளாகிய இனிய அமுதினைச் செவியில் உண்பிக்கவும், வளைக்கை - வளையலணிந்த கையானது, அறுசுவை அமுது வாய் ஊட்ட - அறுசுவையோடுங் கூடிய அமுதினை வாயில் உண்பிக்கவும், தளர்ந்த யாக்கை ஐயர் - (மூப்பினால்) தளர்ச்சியுற்ற திருமேனியையுடைய அவ்வேதியர், திருவமுது செய்து - உண்டருளி, அமுது உண்டவர் என - தேவாமுதம் உண்டவர் போல, மூப்பு அகன்று- முதுமை யொழிந்து, பூவில் கைய தே மலர் வாளிக்காளை வடிவாய் - மலர்வில்லை ஏந்திய கையினையுடைய தேன் சிந்தும் மலர்க் கணைகளையுடைய மதவேளின் வடிவினை உடையராகி, கன்னி காண இருந்தார் - கௌரி பார்க்குமாறு இருந்தனர். இடையிடையே அமுதம் போலும் இன்மொழிகளைக் கூறிக் கையால் அமுதூட்டினாள் என்க. கையினையுடைய காளை, வாளியை யுடைய காளை எனக் கூட்டுக. மன்மதனுக்கு மலர் வில்லும் உண் டென்பதனை‘புஷ்பதந்வா’ என அவனுக்கு வழங்கும் பெயரானறிக; " பூங், குலை சிலையாக் கொண்டவர் போலும்" என மதுரைக்கலம்பகஙகூறுதலுங் காண்க. (25) பூசியவெண் ணீறுபோய்க் கலவையாய்க் கண்டிகைபோய்ப் பொன்செய் பூணுங் காசணிபொற் குண்டலமுங் கடகமுமாய் மூப்புப்போய்க் காளை யான தேசுருவங் கண்டுநடு நடுங்கிவளைக் கரநெரித்துத் திகைத்து வேர்த்துக் கூசியொரு புறத்தொதுங்கி நின்றாளக் கற்புமலர்க் கொம்ப ரன்னாள். (இ - ள்.) பூசிய வெள்நீறு போய்க் கலவையாய் - அணிந்த வெள்ளிய திரு நீறு மாறிக் கலவைச் சாந்தாகி, கண்டிகை போய் - உருத்தி ராக்கங்கள் மாறி, பொன் செய்பூணும் காசு அணி பொன் குண்டலமும் கடகமும் ஆய் - பொன்னாற் செய்த அணிகளும் மணிகளழுத்திய பொன்னாலாகிய குண்டலங்களும் கடகங்களும் ஆகி, மூப்புப் போய் காளை ஆன தேசு உருவம் - முதுமை மாறிக் கட்டிளமை ஆகிய ஒளி பொருந்திய உருவத்தை, அக்கற்பு மலர்க் கொம்பர் அன்னாள் கண்டு - கற்பினையுடைய பூங்கொம்பு போன்ற அக் கௌரியம்மை பார்த்து, நடுநடுங்கி வளைக்கரம் நெரித்து - நடுநடுங்கி வளையலணிந்த கைகளை நெரித்து, திகைத்து வேர்த்து - மனந்திகைத்து உடல் வெயர்த்து, கூசி ஒருபுறத்து ஒதுங்கி நின்றாள் - அஞ்சி ஒரு பக்கத்தில் ஒதுங்கி நின்றாள். போய் - மாறி, ஆய் என்னும் எச்சங்கள் ஆன என்னும் பெயரெச்ச வினை கொண்டன. மகளிர் அச்சத்தால் கை நெரித்தல் இயல்பு. கொம்பர் : போலி. (26) ஆனபொழு தருங்கடிநன் மணங்குறித்து மனையிற்றீர்ந் தயலூர் புக்க தேனொழுகு துழாயலங்கற் றீர்த்தனுக்கன் புடையார்போற் றிரியும் வஞ்ச மானமுடை யார்மீண்டு மனைபுகலும் பதினாறு வயதின் மேய பானன்மணி கண்டனுதற் காப்பணிந்தோர் பசுங்குழவிப் படிவங் கொண்டான். (இ - ள்.) ஆனபொழுது அருங்கடி நல்மணம் குறித்து - அப்பொழுது அரிய விளக்கத்தையுடைய நல்ல மணத்தினைக் கருதி, மனையில் தீர்ந்து அயல் ஊர் புக்க - மனையை நீங்கி வேற்றூர் சென்ற, தேன் ஒழுகு துழாய் அலங்கல் தீர்த்தனுக்கு அன்பு உடையார் போல் திரியும் - தேன் வழியும் துழாய் மாலையை யணிந்த திருமாலுக்கு அன்பு உடையார்போல் (நடித்துத்) திரிகின்ற, வஞ்சம் மானம் உடையார் - தீய மானமுடைய மாமி முதலியோர், மீண்டு மனை புகலும் - திரும்பி வந்து இல்லிற் புக, பதினாறு வயதில் மேய பானல்மணிகண்டன் - பதினாறு வயதுடன் பொருந்தி யிருந்த நீலோற்பல மலர்போன்ற அழகிய மிடற்றினையுடைய இறைவன், நுதல் காப்பு அணிந்து ஓர் பசுங்குழவிப் படிவம் கொண்டான் - நெற்றியிலே காப்பினை அணிந்து ஒரு பச்சைக் குழவியின் வடிவத்தைக் கொண்டருளினான். புக்க மானமுடையார், திரியும் மானமுடையார் எனத் தனித்தனி கூட்டுக. தீர்த்தன் - தூயன். திருமாலிடத்தும் உண்மை யன்புடைய ரல்ல ரென்பார் ‘அன்புடையார்போல் திரியும்’ என்றார். வஞ்ச மானம்- தீய அபிமானம்; வஞ்சமும் மானமும் என்றுமாம். பானல் - குவளை. பானலும் நீலமணியும் போலும் கண்டம் என்றுமாம். காப்பு - திருநீறு; பொட்டுமாம். பசுமை - இளமை மேற்று. (27) எழுதரிய மறைச்சிலம்பு கிடந்துபுறத் தலம்பவன்ப ரிதய மென்னுஞ் செழுமலரோ டையின் மலர்ந்து சிவானந்தத் தேன்றதும்பு தெய்வக் கஞ்சத் தொழுதகுசிற் றடிப்பெரிய விரல்சுவைத்து மைக்கணீர் துளும்ப வாய்விட் டழுதணையா டையிற்கிடந்தா னனைத்துயிரு மீன்றுகாத் தழிக்கு மப்பன். (இ - ள்.) அனைத்து உயிரும் ஈன்று காத்து அழிக்கும் அப்பன் - எல்லா உயிர்களையும் படைத்துக் காத்துத் துடைத்தருளும் ஐயன, எழுதரிய மறைச்சிலம்பு கிடந்து புறத்து அலம்ப - எழுதற்கரிய வேதமாகிய சிலம்புகள் புறத்திற் சூழ்ந்து கிடந்து ஒலிக்க, அன்பர் இதயம் என்னும் செழுமலர் ஓடையில் மலர்ந்து - அன்பர்களின் நெஞ்சமாகிய செழிய மலரோடையில் மலர்ந்து, சிவானந்தத்தேன் ததும்பு - சிவானந்தமாகிய தேன் ததும்பி வழியும், தெய்வக் கஞ்சம் தொழுதகு சிற்றடி - தெய்வத்தன்மை பொருந்திய தாமரை மலர்போன்ற யாவராலும் வணங்கத் தக்க சிறிய திருவடியின், பெரிய விரல் சுவைத்து - பெருவிரலை வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டு, மைக்கண் நீர் துளும்ப வாய்விட்டு அழுது அணை ஆடையில் கிடந்தான் - மைதீட்டிய கண்களில் நீர் ததும்ப வாயினைத் திறந்து அமுது அணையாக விரித்த ஆடையிலே கிடந்தருளினான். வேதங்கள் புறத்தே ஒலித்துக் கொண்டிருக்க அன்பர்களின் அகத்தில் விளங்குகின்ற திருவடி என்னும் நயமும் தோன்றுமாறு காண்க. தாமரை போலும் அடியென்னும் உவமை இதய ஓடையில் மலர்ந்து சிவானந்தத்தேன் ததும்பும் என்னும் உருவகங்களை அங்க மாகக் கொண்டு வந்தது. காற்பெருவிரல் சுவைத்தல் குழவி யியல்பு. எவ்வுயிர்க்கும் அப்பனாகியவன் தானொரு குழவியாய்க் கிடந்தான் என அவனது திருவிளையாட்டை வியந்து கூறியவாறு. (28) தாய்விட்டுப் போனதொரு தனிக்குழவி யெனக்கலங்கித் தாங்கித் தேடி ஆய்விட்டுப் பிரமனழ மறைகளழ வன்புடையா ளன்பிற் பட்டு வாய்விட்டுக் கிடந்தழுத மகவினைக்கண் டணங்கனையாண் மாமி யென்னுங் காய்விட்டு மதக்கொடியா ளிம்மகவே தெனக்கேட்டாள் கௌரி தன்னை. (இ - ள்.) தாய் விட்டுப் போனது ஒரு தனிக் குழவி எனக் கலங்கி - தாய் கைவிட்டுப் போகப்பட்டதாகிய ஓர் ஒப்பற்ற குழவியைப் போலக் கலங்கி, தாங்கி ஆய்விட்டு பிரமன் அழ - முடியிற்றாங்கி ஆராய்ந்து தேடிப் பிரமன் (ஒருபால்) அழவும், மறைகள் அழ - வேதங்கள் (ஒருபால்) அழவும், அன்பு உடையாள் அன்பில் பட்டு - அன்புடைய கௌரியின் அன்பிலகப்பட்டு, வாய் விட்டுக் கிடந்து அழுத மகவினைக் கண்டு - வாயைத் திறந்து அணையாடையிற் கிடந்தழுகின்ற குழவியைப் பார்த்து, அணங்கு அனையாள் மாமி என்னும் காய்விட்டு மதக்கொடியாள் - திருமகளை ஒத்த கௌரியின் மாமி என்கின்ற பெருஞ் சினத்தையுடைய வைணவ மதக்கொடியவள், கௌரி தன்னை இம்மகவு ஏது எனக் கேட்டாள்- கௌரியை நோக்கி இக்குழவி ஏது என்று கேட்டாள். தாய்தனி விட்டுப் போனதொரு குழவி என்றுமாம். எவ்வுயிர்க்கும் தந்தையே யன்றித் தாயுமாகிய இறைவன் தாய் விட்டுப் பிரிந்த குழவிபோல் அழுதான் என்றும், பிரமன் முதலிய தேவர்களும் மறைகளும் தன்னைத் தேடிக் காணாது அழாநிற்கத் தான் தாயைக் காணாது அழுவான்போல் அழுதான் என்றும் இறைவனுடைய அருமையும் எளிமையும் தோன்றக் கூறிய பொருனயமும் சொன்னயமும் பாராட்டற் குரியன. கலங்கி வாய் விட்டுக் கிடந்தழுத எனக் கூட்டுக. ஆய்வு இட்டு - ஆராய்தலைப் பொருந்தி. பிரமன் ஏனைத் தேவர்க்கும் உபலக்கணம். அன்பாகிய வலையிலகப்பட்டு என்பார் ‘அன்பிற் பட்டு’ என்றார். மாமியென்னும் கொடியாள், காய்கின்ற கொடியாள் எனக் கூட்டுக. விட்டு விஷ்ணு என்பதன் சிதைவு. (29) நத்தனயன் றனக்கரிய நாயகனுக் கன்புடையா ணவில்வா டேவ தத்தனயந் தருமனைவி யொடுபோந்து சிறுபோது தைய லாயீண் டித்தனயன் றனைப்பார்த்துக் கோடியென வைத்தகன்றா னென்னா முன்னஞ் சித்தநய னங்கலங்கச் சீறிமண வாட்டிதன்மேற் செற்றங் கொண்டாள். (இ - ள்.) நத்தன் அயன் தனக்கு அரிய நாயகனுக்கு அன்பு உடையாள் நவில்வாள் - சங்கினை ஏந்திய திருமாலுக்கும் பிரமனுக்கும் காண்டற்கரிய சிவபெருமானுக்கு அன்புடைய கௌரி கூறுவாள், தேவதத்தன் நயம் தரு மனைவியோடு போந்து - தேவதத் தனென்பான் தனக்கு இன்பந்தரும் மனைவியோடும் வந்து, தையலாய்- பெண்ணே, இத்தனயன் தனை ஈண்டு சிறுபோது பார்த்துக் கோடி என வைத்து அகன்றான் - இக்குழவியை இங்குச் சிறிது பொழுது பார்த்துக் கொள்வாயாக என்று வைத்துச் சென்றான், என்னா முன்னம் - என்று சொல்லு முன்னரே, சித்தம் நயனம் கலங்கச் சீறி மணவாட்டி தன்மேல் செற்றம் கொண்டாள் - மனமுங் கண்களுங் கலங்குமாறு சினந்து மருகியாகிய கௌரியின் மேல் மாறாச் சினங் கொண்டாள். நத்து - சங்கு. நவில்வாள் என்பதனைக் கூறுபவள் எனப் பெயராகக் கொள்க. யாரோ ஒருவன் என்பதற்குத் தேவதத்தன் என்று கூறும் வடநூல் வழக்குப்பற்றி ஈண்டுத் தேவதத்தன் என்று கூறிற்றுமாம். கோடி - கொள்ளுதி. என்றாள் என்னாமுனம் என விரித்துரைக்க. தன் சித்தமும் கண்ணும் சினத்தாற் கலங்க என்றும், கௌரியின் சித்தமும் கண்ணும் கலங்க என்றும் இருவகையாகக் கூறுதலும் பொருந்தும். செற்றம் - வைரம்; மாறா வெகுளி. தன் : அசை. (30) என்புபூண் டுகாட்டிற் பொடியாடு முருத்திரனுக் கிடைய றாத அன்புபூண் டான்மகவுக் கன்புடையாய் நீயுமெமக் காகா யென்னாத் துன்புபூண் டயர்வாளை மகவையுங்கொண் டகத்தைவிடத் துரத்தி னார்கள் வன்புபூண் டொழுகுவை ணவம்பூண்டு பொறையிரக்க மான நீத்தார். (இ - ள்.) என்பு பூண்டு இடுகாட்டில் பொடி ஆடும் உருத்திரனுக்கு - என்பினை அணிந்து புறங்காட்டிலே சாம்பலைப் பூசி ஆடுகின்ற உருத்திரனுக்கு, இடையறாத அன்பு பூண்டான்- மகவுக்கு அன்பு உடையாய் - நீங்காத அன்பினை யுடையவன் மகவுக்கு அன்புடையவளே, நீயும் எமக்கு ஆகாய் என்னா - நீயும் எங்களுக்கு ஆகமாட்டாய் என்று, வன்புபூண்டு ஒழுகு - கொடுமையை மேற்கொண்டு ஒழுகாநின்ற, வைணவம் பூண்டு - வைணவ நெறியைக் கைக்கொண்டு, பொறை இரக்கம் மானம் நீத்தார் - பொறுமையையும் கருணையையும் மானத்தையும் அறவே கைவிட்ட அவர்கள், துன்புபூண்டு அயர்வாளை - துன்பத்தை மேற்கொண்டு சோருகின்ற கௌரியை, மகவையும் கொண்டு அகத்தைவிடத் துரத்தினார்கள் - அக்குழவியையும் கைக் கொண்டு மனையினின்று புறம்போக ஓட்டினார்கள். உருத்திரனுக்கு அன்பு பூண்டான் மகவுக்கு அன்புடையாய் என்றது அவர்கள் பொறாமை யென்னும் சிறுமைக் குணத்தைக் காட்டுகின்றது. நீயும் என்னும் உம்மை, அவர்கள் எமக்கு ஆகாத வராதலே யன்றி என்னும் பொருள் தருதலால் எச்சவும்மை. ஆகாமை - பொருந்தாமை; பகைமை. முதலில் அவள் உறுந் துன்பத்தையும் நோக்காது, மருகி யென்றும் எண்ணாது, இளங் குழந்தையின் அழுகையையும் கருதாது துரத்தினமையால் ‘பொறையிரக்க மான நீத்தார்’ என்றார். ஒழுகு என்னும் பெயரெச்ச முதனிலை நீத்தார் என்பதன் விகுதியைக் கொள்ளும். (31) தாயிலாப் பிள்ளைமுகந் தனைநோக்கித் தெருவனிடைத் தளர்வா ளுள்ளங் கோயிலாக் கொண்டுறையுங் கூடனா யகனைமனக் குறிப்பிற் கண்டு வேயிலாக் கியதடந்தோட் கௌரிதிரு மந்திரத்தை விளம்ப லோடுஞ் சேயிலாக் கிடந்தழுத குழவிவிசும் பிடைவிடைமேற் றெரியக் கண்டாள். (இ - ள்.) தாய் இலாப் பிள்ளை முகம்தனை நோக்கித் தெருவினிடைத் தளர்வாள் - தாயில்லாத அப்பிள்ளையின் திருமுகத்தை நோக்கித் தெருவின்கண் வருந்தும் அக்கௌரியானவள், உள்ளம் கோயிலாக் கொண்டு உறையும் கூடல் நாயகனை - தனது உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளி யிருக்கும் மதுரை நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளை, மனக் குறிப்பில் கண்டு - மனத்தின் தியானத்தாலே தரிசித்து, வேயில் ஆக்கிய தடம் தோள் கௌரி திருமந்திரத்தை விளம்பலோடும் - மூங்கிலால் அமைத்தா லொத்த பெரிய திருத்தோள்களையுடைய உமா தேவியின் திருமந்திரத்தை ஓதியவளவில், சேயிலாக் கிடந்து அழுத குழவி - சேய்மை யில்லையாகக் (அண்மையிற்) கிடந்து அழுத அம்மகவு, விசும்பிடை விடைமேல் தெரியக் கண்டாள்- வானிலே இடப வூர்தியின்மேல் விளங்கத் தரிசித்தாள். சிவபெருமானைத் தாயிலாப் பிள்ளை என்று கூறிய நயம் ஓர்க. குறிப்பு - சிந்தனை; தியானம. ஆக்கிய - அமைத்தா லொத்த; வேய் போன்ற என்பது கருத்து. சேய்மை யில்லையாக என்பது ‘சேயிலா’ என்றாயிற்று. விடைமேல் மழவுரு நீத்துத்தெரிய வென்க. (32) மழவுருநீத் தடலேற்றின் வருவார்தம் மிடத்தணங்கின் மனுவை யோதிப் பழகியபார்ப் பனமகளைப் பார்ப்பதியின் வடிவாக்கிப் பலருங் கண்டு தொழவிடைமே லேற்றிவிசும் பாறாக மலர்மாரி சுரர்க டூற்ற அழகரெழுந் தருளினார் களிதூங்கி யதிசயித்தா ரவனி மாக்கள். (இ - ள்.) மழ உரு நீத்து அடல் ஏற்றின் வருவார் - குழவி வடிவத்தை நீக்கி வெற்றி பொருந்திய இடபவூர்தியில் வருகின்றவராகிய, அழகர் - சோமசுந்தரக் கடவுள், தம் இடத்து அணங்கின் மனுவை ஓதிப் பழகிய பார்ப்பன மகளை - தமது இடப்பாகத்திலமர்ந்தருளும் உமாதேவியின் திருமந்திரத்தை உச்சரித்துக் கைவந்த கௌரியம்மையை, பார்ப்பதியின் வடிவு ஆக்கி - உமையின் சாரூபத்தை அளித்தருளி, பலரும் கண்டு தொழ - யாவருங் கண்டு வணங்க, சுரர்கள் மலர்மாரி தூற்ற - தேவர்கள் மலர் மழை பொழிய, விடைமேல் ஏற்றி - இடபவூர்தியில் ஏற்றிக்கொண்டு, விசும்பு ஆறாக எழுந்தருளினார்- வான்வழியாக எழுந்தருளினார்; அவனி மாக்கள் களிதூங்கி அதிசயித்தார் - புவியிலுள்ள மக்கள் களிப்பிலழுந்தி வியப்புற்றார்கள். அழகர் என்பதனை முன்னர்க்கூட்டி, வருவாராகிய அழகர் என்க. பார்ப்பதியின் வடிவு - உமையின் சாரூபம். மகளை ஏற்றி எழுந்தருளினார் என்க. (33) ஆகச் செய்யுள் - 1460 இருபத்து நான்காவது கான்மாறியாடின படலம் [அறுசீரடியாசிரிய விருத்தம்] திருத்த ராய்மது ராபுரி மேவிய சித்தரா கியசெல்வர் விருத்த ராயிளை யவருமாய் மழவுமாய் வேடங்கொண் டடலேற்றின் ஒருத்த ராய்விளை யாடிய வாடலை யுரைத்தன மினிமன்றுள் நிருத்த ராயவர் மாறிநின் றாடிய நிலைசிறி துரைசெய்வாம். (இ - ள்.) திருத்தராய் மதுராபுரி மேவிய சித்தராகிய செல்வர் - நின்மலராய் மதுரை யம்பதியில் எழுந்தருளிய எல்லாம்வல்ல சித்தரான அருட் செல்வத்தையுடைய சோமசுந்தரக் கடவுள், விருத்தராய் இளையவருமாய் மழவுமாய் வேடம் கொண்டு - கிழவனாகியும் காளையாகியும் குழவியாகியும் (உள்ள) திருவேடங்களைக் கொண்டு, அடல் ஏற்றின் ஒருத்தராய் - (பின்பு) வெற்றியையுடைய இடபவூர்தியின்மேல் ஒருவராய் நின்று, விளையாடிய ஆடலை உரைத்தனம் - விளையாடிய திருவிளையாடலைக் கூறினாம்; இனி மன்றுள் நிருத்தராயவர் மாறி நின்று ஆடிய நிலை சிறிது உரை செய்வாம் - இனி வெள்ளியம்பலத்தில் நிருத்தராகிய பெருமான் கான்மாறி யாடியருளிய திருவிளையாடலைச் சிறிது கூறுவாம். உம்மைகள் எச்சப் பொருளன. விருத்தர் முதலிய மூவுருவங் கொண்டவரே பின்பு ஒருத்தராயும் நின்று விளையாடினா ரென்க. ஆயவர் : முதல் வேற்றுமைச் சொல். (1) வேந்தன் மீனவன் கொடியவ1 னாகிய விக்கிர மன்றன்றோள் ஏந்து மண்பொறை யிராசசே கரன்புயத் திறக்கியைந் தருநாடன் பூந்தண் மாமலர் வேதியன் மாதவன் புரத்தின்மேற் பொலிந்தோங்குஞ் சாந்த நீறெனச் சண்ணித்த புண்ணியத் தனிமுத னகர்சார்ந்தான். (இ - ள்.) மீனம் வன் கொடியவனாகிய விக்கிரமன் வேந்தன்- கயல் எழுதிய வலிய கொடியினையுடையவனாகிய விக்கிரமபாண்டிய னென்னும் மன்னன், தன் தோள் ஏந்து மண் பொறை- தனது தோளாற் சுமந்த புவிச்சுமையை, இராச சேகரன் புயத்து இறக்கி - இராச சேகரன் என்னும் புதல்வன் தோளில் இறக்கிவிட்டு, ஐந்தரு நாடன் - பஞ்ச தருக்களையுடைய நாட்டையுடைய இந்திரனும், பூந் தண்மா மலர் வேதியன் - பொலிவினையுடைய தண்ணிய சிறந்த தாமரை மலரில் வசிக்கும் பிரமனும், மாதவன் புத்திரன்மேல் பொலிந்து ஓங்கும் - திருமாலுமாகிய இவர்களுடைய உலகத்திற்கு மேலே பொலிந்து ஓங்கிய, நீறு சாந்தம் என சண்ணித்த புண்ணியத் தனிமுதல் நகர் சார்ந்தான் - திருநீற்றினைச் சந்தனமாகப் பூசிய அற வடிவுடைய ஒப்பற்ற முதற்கடவுளாகிய சிவபிரான் உலகத்தை அடைந்தான். வல் மீனக்கொடியவனாகிய விக்கிரமவேந்தன் என்க. இராச சேகரன் புயத்தில் ஏந்துமாறு இறக்கி, தான் சுமை ஒழிந்தமையால் ‘இறக்கி’ என்றார். புரத்தின்மேற் பொலிந்தோங்கும் நகர் எனக் கூட்டுக. சண்ணித்தல் - பூசுதல்; " மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான்" என்பது திருநாவுக்கரசரதிருவாக்கு. (2) கண்ண கன்புவி யிராசசே கரன்பொதுக் கடிந்துசெங் கோலோச்சி வண்ண வெண்குடை நிழற்றுவா னானந்த வடிவமாய்த் தனிமன்றுள் அண்ண லாடிய திருநடத் தன்பினா லாடனூ லொழித்தேனை எண்ணு மூவிரு பத்துமுக் கலையுங்கற் றிறைமுறை செயுநாளில். (இ - ள்.) இராச சேகரன் கண் அகன்புவி பொதுக்கடிந்து - இராச சேகர பாண்டியன் இடமகன்ற இந்நிலவுலகைப் பொது நீக்கி, செங்கோல் ஓச்சி வண்ணம் வெண்குடை நிழற்றுவான் - செங்கோலை நடாத்தி அழகிய வெண்கொற்றக் குடையால் நிழலைச் செய்து, ஆனந்த வடிவமாய்த் தனி மன்றுள் ஆடிய அண்ணல் திரு நடத்து அன்பினால் - இன்ப வடிவமாய் ஒப்பற்ற மன்றின்கண் ஆடியருளும் இறைவனது திருநடனத்தில் வைத்த பேரன்பினால், ஆடல் நூல் ஒழித்து - பரதநூலை நீக்கி, எண்ணும் ஏனை மூவிருபத்து முக்கலையும் கற்று - எண்ணப்படும் மற்றை அறுபத்து மூன்று கலைகளையும் கற்று, இறைமுறை செயும் நாளில் - அரசியலை முறைப்படி நடாத்தி வருநாளில். அகன், மரூஉ. பொதுக்கடிந்து - தனக்கே உரியதாக்கி. நிழற்று வான: பெயருமாம். இறைவன் புரியும் திருக்கூத்தினைத் தானும் இயற்றுதல் தகவுடைத்தன்று எனக் கருதி யொழித்தான் என்பார் ‘திருநடத்தன்பினால் ஆடனூல் ஒழித்து’ என்றார். (3) சிலம்பி வாயினூ லிழைத்திடு பந்தரிற் செங்கண்மா றொழவைகும் அலம்பு தெண்டிரைப் பொன்னியந் தண்டுறை யானைக்கா விறைக்கன்பு கலந்த சிந்தையான் மூவிரு பத்துநாற் கலைகளும் பயின்றுள்ளம் மலர்ந்த வன்கரி காற்பெரு வளத்தவன் வையகம் புரக்கின்றான். (இ - ள்) சிலம்பி வாயின் நூல் இழைத்திடு பந்தரில் - சிலந்திப் பூச்சியானது வாயின் நூலாற் செய்த பந்தரின்கண், செங்கண்மால் தொழவைகும் - சிவந்த கண்களையுடைய திருமால் வணங்க வீற்றிருக்கும், அலம்பு தெண் திரைப் பொன்னி அம்தண்துறை ஆனைக்கா இறைக்கு - ஒலிக்கின்ற தெள்ளிய அலைகளையுடைய காவிரியாற்றின் அழகிய தண்ணிய நீர்த்துறையையுடைய திருவானைக்காவுடைய செல்வருக்கு, அன்புகலந்த சிந்தையான் - அன்பு கலந்த உள்ளமுடையவனும், மூவிருபத்து நால்கலைகளும் பயின்று உள்ளம் மலர்ந்தவன் - அறுபத்து நான்கு கலைகளையும் கற்று அறிவு விரிந்தவனும் ஆகிய, கரிகால் பெரு வளத்தவன்- கரிகாற்பெருவளத்தா னென்னும் சோழமன்னன், வையகம் புரக்கின்றான் - நிலவுலகை ஆண்டு வருவானாயினான். ஆனைக்கா - யானை பூசித்த காவாகிய பதி. யானை பூசித்ததும், சிலம்பி வாயினூலாற் பந்தரிட்டு வழிபட்டதுமாகிய வரலாறுகளைப் பெரியபுராணத்திலுள்ள கோச்செங்கட் சோழர் புராணத்தாலறிக. கரிகாற் பெருவளத்தான் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின் புதல்வன்; போர் குறித்து வடதிசைச் சென்று, இமயமலை குறுக்கிட்ட தென்று சினந்து அதனைச் செண்டாலடித்த பெருவீரன்; காடுகெடுத்து நாடாக்கியும், காவிரிக்குக் கரையிடுவித்தும், நீர் நிலைகளைப் பெருக்கியும் நாட்டினை வளஞ்செய்வித்தவன்; பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை முதலிய பாட்டுகட்குத் தலைவன்; பட்டினப் பாலை பாடிய உருத்திரங்கண்ணனார் என்ற புலவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் கொடுத்தவன்; மற்றும் இவன் பெருமைகளைப் பட்டினப்பாலை முதலியவற்றா னறிக. (4) பொன்னி நாடவன் வாயிலுள் ளானொரு புலவன்வந் தலர்வேம்பின் கன்னி நாடனைக் கண்டுமுன் பரவுவான் கனைகழற் கரிகாலெம் மன்ன வற்கறு பத்துநாற் கலைகளும் வரும்வரா துனக்கொன்று தென்ன ரேறனை யாயது பரதநூ றெரிந்திலை யெனச் சொன்னான். (இ - ள்.) பொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து - காவிரி நாட்டையுடைய அக் கரிகாற் சோழனது வாயிலினுள்ள வனாகிய ஒரு புலவன் வந்து, அலர் வேம்பின் கன்னிநாடனைக் கண்டு முன் பரவுவான் - அலர்ந்த வேப்ப மலர் மாலையை யணிந்த பாண்டி நாடனாகிய இராச சேகரனைக் கண்டு முன்னின்று துதிக்கின்றவன், தென்னர் ஏறு அனையாய் - பாண்டியருள் ஆண் சிங்கம் போன்றவனே, கனைகழல் கரிகால் எம்மன்னவர்க்கு அறுபத்துநால் கலைகளும் வரும் - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த கரிகாலன் என்னும் எம் அரசனுக்கு அறுபத்துநான்கு கலைகளும் கைவரும்; உனக்கு ஒன்றுவராது - உனக்கு ஒரு கலை வராது; அது பரத நூல் - அது யாதெனில் பரதநூலாகும்; தெரிந்திலை எனச் சொன்னான்- ஆதலால் நீ கலைகள் முழுதும் அறிந்திலை என்று சொன்னான். வாயிலுள்ளான் - அரண்மனைப் புலவன். பரவுவான் : பெயர். கரிகாலன், கரிகால் வளவன் என்றிங்ஙனம் இவன் பெயர் வழங்கும். தீயாற் கரிந்த காலுடைமையால் இப்பெயர் போந்தது; "சுடப்பட் டுயிருய்ந்த சோழன் மகனும்" என்னும் பழமொழ'a4 வெண்பாவும், " முச்சக்கரமும் . . . கரிகாலன் கானெருப்புற்று" என்னும் பத்துப் பாட்டைசசார்ந்துள்ள வெண்பாவும் முதலியவற்றால் தீயால் கால் கருகினமையறிக. அதனை ஏன் தெரிந்திலையெனச் சொன்னான் எனினும் பொருந்தும். (5) கேட்ட மீனவன் மறுபுல விஞ்சையன் கிளத்துசொல் லிகன்மானம் மூட்ட வாகுல மூழ்கிய மனத்தனாய் முதுமறைச் சிரமன்றுள் நாட்ட மூன்றுடை நாயக னாடலை நானுமா டுதற்குள்ளம் வேட்ட தேகொலா மிதுவுமெம் பிரானருள் விதியென வதுகற்பான். (இ - ள்.) கேட்ட மீனவன் - அதனைக் கேட்ட பாண்டியன், மறு புல விஞ்சையன் கிளத்து சொல் இகல் மானம் மூட்ட - வேற்றரசன் வாயிற் புலவன் கூறிய கூற்று பகைமையையும் மானத்தையும் மூள் விக்க, ஆகுலம் மூழ்கிய மனத்தனாய் - துன்பத்துள் அழுந்திய மனத்தை யுடையவனாய், முதுமறைச் சிரம்மன்றுள் - பழமையாகிய வேதமுடியின் வடிவாகிய மன்றின்கண், நாட்டம் மூன்று உடை நாயகன் ஆடலை - கண்கள் மூன்றுடைய இறைவன் ஆடியருளும் திருக்கூத்தினை, நானும் ஆடுதற்கு உள்ளம் வேட்டதே - ஒன்றுக்கும் பற்றாத சிறியனாகிய யானும் ஆடுதற்கு என் உள்ளம் விரும்பிற்றேயோ, இதுவும் எம்பிரான் அருள் விதி என அது கற்பான் - இதுவும் எம் இறைவனுடைய அருளாணையே என்று கருதி அதனைக் கற்பதற்கு. விஞ்சையன் - கல்வி வல்லோன்; புலவன். இகல்மானம் - வலிய மானமும் ஆம். மானம் - தாழ்தற்கு ஒருப்படாமை. மன்றுள் ஆடும் ஆடலை யென விரிக்க. விரும்பியதனை வியந்து ‘வேட்டதே’ என்றான. கொல், ஆம் : அசைகள். விதி - ஆணை, கட்டளை. கற்பான். வினையெச்சம். (6) [எழுசீரடியாசிரிய விருத்தம்] ஆடனூல் வரம்பு கண்டவ ராகி யவ்வழி யாடலும் பயின்ற நாடக நடைதேர் புலவரைத் துருவி நண்ணிய வவர்க்கெலா மகிழ்ச்சி வீடருஞ் சிறப்பா லறுவையும் பூணும் வெறுக்கையும் வெறுத்திடக் கொடுத்துப் பாடல்வண் டரற்றுந் தாரினான் பரதப் பனுவலுங் கசடறப் பயில்வான். (இ - ள்.) ஆடல் நூல் வரம்பு கண்டவராகி - நாடக நூலின் எல்லையைக் கண்டவராய, அவ்வழி ஆடலும் பயின்ற நாடக நடைதேர் புலவரைத் துருவி - அந்நூலிற் கூறிய வழியே ஆடுதலிலும் பழகிய நாடக நடையிற் றேர்ச்சி பெற்ற புலவரைத் தேடி, நண்ணிய அவர்க்கு எலாம் -வந்த அப்புலவரனைவர்க்கும், மகிழ்ச்சி வீடு அருஞ் சிறப்பால் - மகிழ்ச்சி நீங்குதலில்லாத வரிசையினால், அறுவையும் பூணும் வெறுக்கையும் வெறுத்திடக் கொடுத்து - ஆடையும் அணியும் பொன்னுமாகியவற்றை (அவர்கள்) விருப்பமொழியக் கொடுத்து, பாடல் வண்டு அரற்றும் தாரினான் - இசைபாடுதலையுடைய வண்டுகள் ஒலிக்கும் மாலையை யணிந்த பாண்டியன் (அவர்களிடம்), பரதப் பனுவலும் கசடு அறப் பயில்வான் - நாடக நூலையும் குற்றமறக் கற்கத் தொடங்கினான். நாடக நடை - நாடக வொழுக்கம். துருவி - ஆராய்ந்து அழைத்து, சிறப்பால் - வரிசையாக. வெறுத்திட - அவாவடங்க; பின் வேண்டுதலில்லையாக : மிக என்றுமாம். " உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" என்பவாகலின் ‘வெறுத்திடக் கொடுத்து’ என்றார். மீனவனாகிய தாரினான் என்க. பனுவலும், உம்மை எச்சப்பொருட்டு. (7) பாவமோ டராகந் தாளமிம் மூன்றும் பகர்ந்திடு முறையினாற் பரதம் ஆவயி னங்க முபாங்கமே பிரத்தி யாங்கமே யலர்முக ராகம் ஓவறு சீர்சால் கரப்பிர சார முவமையில் சிரக்கர கருமந் தாவறு கரகேத் திரங்கர கரணந் தானக மேசுத்த சாரி. (இ - ள்.) பாவமோடு அராகம் தாளம் இம்மூன்று பகர்ந்திடும் முறையினால் பரதம் - பாவமும் அராகமும் தாளமுமாகிய இந்த மூன்றையுங் கூறும் மரபினால் (அந்நூல்) பரதமென்னும் பெயரதாம்; ஆவயின் அங்கம் உபாங்கமே பிரத்தியாங்கமே அலர் முகராகம் - அந்நூலுட் கூறப்படும் அங்கமும் உபாங்கமும் பிரத்தியாங்கமும் தன்மை மிக்க முகராகமும், ஓவு அறு சீர்சால் கரப்பிரசாரம் - நீங்காத சிறப்பு நிறைந்த கரப்பிரசாரமும், உவமை இல் சிரக்கர கருமம் - ஒப்பில்லாத சிரக்கர கருமமும், தாவு அறு கர கேத்திரம் கரகரணம் தானகமே சுத்தசாரி - கெடுதலில்லாத கரகேத்திரமும் கரகரணமும் தானகமும் சுத்த சாரியும். பாவம், ராகம், தாளம் என்பவற்றின் முதற் குறிப்பாகிய ப, ர, த என்னும் மூன்றெழுத்துக்களாலாயது பரதமென்னும் பெயர்; எனவே நாடகத்திற்கு இன்றியமையாதன இம்மூன்று மென்பது பெற்றாம். பொறி யுணர்வாகிய சுவையும், அதுபற்றி உள்ளத்தே நிகழும் குறிப்பும், அக் குறிப்புப் புறத்தே வெளிப்பட்டுத் தோன்றும் விறல் எனப்படும் மெய்ப்பாடும் பாவம் என்பதில் அடங்கும்; எடுத்த பொருளுக்கியைந்த தன்மையைப் பாவந் தோன்ற நிகழ்த்திக் காட்டுவது பாவகம் அல்லது அவிநயம் எனப்படும். வீரச்சுவை, அச்சச்சுவை, இழிப்புச் சுவை, வியப்புச்சுவை, இன்பச்சுவை, அவலச்சுவை, நகைச்சுவை; வெகுளிச்சுவை, நடுவுநிலைச்சுவை எனச் சுவை ஒன்பது வகைப்படும். விறல் அல்லது சத்துவம் என்பது மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணர் வார்தல், நடுக்க மடுத்தல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விரீத்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு எனப் பத்து வகைப் படும். வெகுண்டோன் அவிநயம், ஐயமுற்றோ னவிநயம், சோம்பினோ னவிநயம், களித்தோ னவிநயம்,உவந்தோனவிநயம், அழுக்காறுடையோ னவிநயம், இன்பமுற்றோ னவிநயம், தெய்வ முற்றோ னவிநயம், அஞ்ஞையுற்றோ னவிநயம், உடன்பட்டோ னவிநயம், உறங்கினோ னவிநயம், துயிலுணர்ந்தோ னவிநயம், செத்தோ னவிநயம், மழை பெய்யப்பட்டோ னவிநயம், பனித்தலைப்பட்டோ னவிநயம். வெயிற்றலைப் பட்டோ னவிநயம், நாண முற்றோ னவிநயம், வருத்த முற்றோ னவிநயம், கண்ணோவுற்றோ னவிநயம், தலைநோவுற்றோ னவிநயம், அழற்றிறம்பட்டோ னவிநயம், சீதமுற்றோ னவிநயம், வெப்பமுற்றோ னவிநயம், நஞ்சுண்டோ னவிநயம் என அவிநயம் இருபத்து நான்கு வகைப் படும்; இவற்றினியல்புகளைச் சிலப்பதிகார அரங்கேற்று காதைக்கு அடியார்க்கு நல்லார் கூறிய உரையிற் காண்க. அராகம் - இசை; இது மூலாதாரந் தொடங்கி ஆளத்தி எனப்பட்டு; பின்பு இசை யென்றும் பண்ணென்றும் சொல்லப்படும்; இஃது - ஆயம், சதுரம், வட்டம், திரிகோணம் என்னும் நால்வகைப் பாலையுள் ஆயப்பாலையாய் நின்ற பதினாற் கோவையிலே செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிபபாலை, மேற்செம் பாலை எனப்பட்ட ஏழுபாலையினையும் இணை நரம்புதொடுத்து நிறுத்த எழுகின்ற நூற்று மூன்று பண்கள் முதலாயினவாகும்; இனி, பைரவி முதலாகச் சொல்லப்படும் இராகங்களுமாம்; நரம்பின் அடைவால் உரைக்கப்பட்ட ஆதியிசை பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்று என்பர். தாளம் - சச்சபுடம் முதலான பஞ்ச தாளமும், அரை மாத்திரையுடைய ஏக தாளம் முதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார்வதிலோசனம் ஈறாகச் சொன்ன நாற்பத்தொரு தாளமும், ஆறன் மட்டம் எட்டன் மட்டம் என்பனவும், தாளவொரியல் தனிநிலை யொரியல் என்பனவும், ஒன்றன் பாணி முதலாக எண்கூத்துப்பாணி இறுதியாகக் கிடந்த பதினொருபாணி விகற்பங்களும், முதனடை வாரம் முதலாயினவுமாம். அங்கம் முதலாகக் கூறப்படுவன நிருத்தத்தின் பொதுவிலக்கண வகைகள்; இவை வருஞ் செய்யுளிற் கூறப்படுவனவற்றோடு சேர்ந்து முடியும். (8) விண்டிடாத் தேசி சாரியே நியாயம் விருத்தியே பிரவிசா ரம்பூ மண்டல முடனா காசமண் டலமே மாசில்சுத் தக்கர ணஞ்சீர் கண்டவுற் புலித கரணமே யங்க காரமே யிரேசித மென்னக் கொண்டநா லைந்து பேதமுங் கற்றுக் கோதறப் பயின்றபி னவற்றுள். (இ - ள்.) விண்டிடாத் தேசிசாரியே - நீங்காத தேசிசாரியும், நியாயம் விருத்தியே பிரவிசாரம் - நியாயமும் விருத்தியும் பிரவிசாரமும். பூ மண்டலமுடன் ஆகாச மண்டலம் - பூ மண்டலமும் ஆகாச மண்டலமும், மாசுஇல் சுத்தக் கரணம் - குற்ற மில்லாத சுத்தக் கரணமும், சீர்கண்ட உற்புலித கரணமே அங்ககாரமே இரேசிதம், என்னக் கொண்ட - என்று சொல்லப்பட்ட, நாலைந்து பேதமும் கற்றுக் கோதறப் பயின்ற பின் - இருபது பேதங்களையுங் கற்றுக் குற்றமறப் பழகிய பின்னர், அவற்றுள் - அவைகளுள. எண்ணேகாரம் இடையிட்டு வந்தன. (9) வருத்தமின் மனோபா வாதியா மெட்டு வகைநிருத் தங்களிற் சாரி நிருத்தமா கியதாண் டவமக மார்க்க நிகழ்த்திடுந் தேசியே வடுகே அருத்தமா கியசிங் களமென மூன்றா மதுநிலை யாறுமூ விரண்டு திருத்தமாம் பதமுந் திகழிரே காதி செப்பிய வங்கமீ ரெட்டும். (இ - ள்.) வருத்தம் இல் மனோபாவ ஆதியாம் எட்டுவகை நிருத்தங்களில் - வருத்தமில்லாத மனோபாவ முதலிய எண்வகை நிருத்தங்களில், சாரி நிருத்தமாகிய தாண்டவம் அகமார்க்கம் ஆம் - சாரி நிருத்தமாகிய தாண்டவம் அகமார்க்க மாகும், நிகழ்த்திடும் தேசியே வடுகே அருத்தமாகிய சிங்களம் என மூன்றாம் - (இன்னும் அவ்வக மார்க்கம்) கூறப்படும் தேசியும் வடுகும் பொருளமைந்த சிங்களமும் என மூன்று வகைப்படும்; அது நிலை ஆறும் - அவ்வக மார்க்கத்திற் குரிய அறுவகை நிலையும், மூவிரண்டு திருத்தம் ஆம் பதமும் - மூன்றும் இரண்டுஞ் சேர்ந்த திருத்தமாகிய ஐந்து பதமும், திகழ் இரேகை ஆதி செப்பிய அங்கம் ஈரெட்டும் - விளங்காநின்ற இரேகை முதலாகச் சொல்லிய அங்கங்கள் பதினாறும். அகக் கூத்துள்ளே சாந்திக் கூத்தின் வகையாகிய சொக்கம், மெய், அவி நயம், நாடகம் என்னும் நான்கனுள் மெய்க்கூத்தானது தேசி, வடுகு, சிங்களம் என மூவகைப்படும் என்பர். அறுவகை நிலை - வைணவம், சமநிலை, வைசாகம், மண்டலம், ஆலீடம், பிரத்தியாலீடம் என்பன. மூவிரண்டு என்பதனை மூன்றும் இரண்டும் எனக் கொள்க. பதம் - பாதம்; ஐவகைப் பாதம் - சமநிலை, உற்கடிதம், சஞ்சாரம், காஞ்சிதம், குஞ்சிதம் என்பன. அங்கம் - அங்கக் கிரியை; அங்கக் கிரியை பதினாறு - சரிகை, புரிகை, சமகலி, திரிகை, ஊர்த்துவகலிகை, பிருட்டகம், அர்த்த பிருட்டகம், சுவத்திகம், உல்லோலம், சூர்த்தனம், வேட்டனம், உபவேட்டனம், தானபதப்பிராய விருத்தம், உக்ஷே பணம் அவக்ஷேபணம், நிகுஞ்சனம் என்பன. ‘திகழரேகாதி’ என்பதனை, திகழி சரிகாதி எனப் பாடங் கொள்ளுதல் பொருத்தம். (10) நால்வகைத் தாகுங் கரணமு மேலோர் நாட்டிய விருவகைக் கரமுங் கால்வகை புரிகை முதற்பதி னாறுங் கவான்மனை யாதியா மிரண்டும் பாலது மடிப்பு வகையெழு நான்கும் பழிப்பறு சுத்தசா ரியெனும் ஏலுறு பூசா ரிகள்பதி னாறு மித்துணைக் ககனசா ரிகளும். (இ - ள்.) நால் வகைத்து ஆகும் கரணமும் - நான்கு வகைப் பட்டதாகிய கரணமும், மேலோர் நாட்டிய இருவகைக் கரமும்- மேலோர் நிலை பெறுத்திய இருவகைக் கைகளும், கால்வகை புரிகை முதல் பதினாறும் - புரிகை முதலிய காலின் செய்கை பதினாறும், கவான்மனை ஆதியாம் இரண்டும் - மனை முதலய தொடையின் றொழில் இரண்டும், பாலது மடிப்புவகை எழு நான்கும் - பக்கங்களின் தொழிலாகிய மடிப்புவகை இருபத்தெட்டும், பழிப்பு அறு சுத்தசாரி எனும் ஏல் உறு பூசாரிகள் பதினாறும் - குற்றமில்லாத சுத்தசாரி என்னப்படும் பொருந்திய பூசாரிகள் பதினாறும், இத்துணைக் ககனசாரிகளும்- பதினாறு ககனசாரிகளும். கரணம் - கைத்தொழில்; இது வட்டணை எனப்படும், வட்டணை நான்கு - அபவேட்டிதம், உபவேட்டிதம், யாவர்த்திதம், பரிவர்த்திதம் என்பன. " தற்சனி முதலாப் பிடித்த லகம்வரின் அத்தொழி லாகும் அபவேட் டிதமே" " தற்சனி முதலா விடுத்தல் புறம்வர உய்த்த லாகும் உபவேட் டிதமே" " கனிட்ட முதலாப் பிடித்த லகம்வர விடுத்த லாகும் வியாவர்த் திதமே" " கனிட்ட முதலா விடுத்தல் புறம்வரப் படுத்த லாகும் பரிவர்த் திதமே" என்பவற்றால் அவற்றி னிலக்கணங்களை யறிக. இருவகைக்கரம் - இணையாவிணைக்கை, இணைக்கை என்பன; இவற்றுள் முன்னது ஒற்றைக்கை யெனவும், பிண்டி யெனவும் பெயர்பெறும்; பின்னது இரட்டைக்கை யெனவும், பிணையல் எனவும் பெயர் பெறும்; ஒற்றைக் கை - பதாகை, திரிபதாகை, கத்தரிகை, தூபம், அராளம், இளம் பிறை, சுகதுண்டம், முட்டி, கடகம், சூசி, கமலகோசிகம், காங்கூலம், கபித்தம், விற்பிடி, குடங்கை, அலாபத்திரம், பிரமரம், தாம்பிரசூடம், பசாசம், முகுளம், பிண்டி, தெரிநிலை, மெய்ந்நிலை, உன்னம், மண்டலம், சதுரம், மான்றலை, சங்கு, வண்டு, இலதை, கபோதம், மகரமுகம், வலம்புரி என முப்பத்துமூன்று வகைப்படும்; இரட்டைக்கை- அஞ்சலி, புட்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கற்கடகம், சுவத்திகம், கடகா வருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந்தம், அபயவத்தம், வருத்தமானம் எனப் பதினைந்து வகைப்படும. பிண்டியும், பிணையலும் அன்றி, எழிற்கை, தொழிற்கை என்ற இரண்டு வகையும் உண்டு. புரிகை என்பது அங்கக்கிரியை பதினாறனுள் ஒன்றாகக் காணப்படுகிறது. வேறு நூலிலுள்ளபடி கால்வகை காட்டுதும் : தேசிக்குரிய கால் - கீற்று, கடிசரி, மண்டலம், வர்த்தனை, கரணம், ஆலீடம், குஞ்சிப்பு, கட்டுப் புரியம், களியம், உள்ளாளம், கட்டுதல், கம்பித்தல், ஊர்த்தல், நடுக்கல், வாங்குதல், அப்புதல், அனுக்குதல், வாசிப்பு, குத்துதல், நெளிதல், மாறுகால், இட்டுப் புகுதல், சுற்றி வாங்குதல், உடற்புரிவு என இருபத்து நான்கு வகைப்படும்; வடுகிற்குரிய கால்கள் - சுற்றுதல், எறிதல், உடைத்தல், ஒட்டுதல், கட்டுதல், வெட்டுதல், போக்கல், நீக்கல், முறுக்கல், அனுக்கல், வீ'a6சல், குடுப்புக்கால், கத்தரிகைக்கால், கூட்டுதல் எனப் பதினான்கு வகைப்படும். கவான் - தொடையின் றொழில். மடிப்பு - பக்கங்களின் அசைவுத் தொழில். முன் அங்கம் முதலாக எண்ணப் பட்ட இருபது பேதங்களும், இச்செய்யுளிற் கூறிய பூசாரி, ககனசாரிகளும், மேல்வரும் தேசிசாரி முதலாயினவும் இன்னவென நன்கு விளங்கவில்லை. (11) ஏற்றதிக் கிராந்த மாதியா முப்பத் திருவகைத் தேசிசா ரிகளுங் காற்றினுங் கடுந்தேர்ச் சக்கர முதலாங் ககனசா ரிகைகளே ழைந்துஞ் சாற்றுவித் துவற்பி ராந்தமா தியவாஞ் சாரிபத் தொன்பது மாகப் போற்றிவை யனைத்து முட்படப் புட்ப புடத்திலக் கணமுதற் பொருள்கள். (இ - ள்.) ஏற்ற திக்கிராந்தம் ஆதியாம் முப்பத்து இருவகைத் தேசிசாரிகளும் - பொருந்திய திக்கிராந்தம் முதலாகிய முப்பத்திரண்டு வகைப்பட்ட தேசிசாரிகளும், காற்றினும் கடுந்தேர்ச் சக்கரம் முதலாம் ககன சாரிகைகள் ஏழைந்தும் - காற்றினும் வேகத்தை யுடைய தேர்ச் சக்கரம் முதலாகிய ககன சாரிகைகள் முப்பத்தைந்தும். சாற்று வித்துவற்பிராந்தம் ஆதிய ஆம் சாரி பத்தொன்பதும் ஆக - சொல்லாநின்ற வித்துவற்பிராந்தம் முதலாகிய சாரி பத்தொன்பதுமாக, போற்று இவை அனைத்தும் உட்பட - சொல்லப்பட்ட இவை யனைத்தும் அகப்பட, புட்பபுடத்து இலக்கணம் முதல் பொருள்கள் - புட்பபுடத்தின் இலக்கணங்களாகிய முதன்மையுள்ள பொருள்களாம். (12) ஆசவாத் தியமுன் பொருண்முதற் களாச மாதியாம் பாடபே தங்கள் பேசிய பதினா றொன்பதும் படக பேதமொன் றொழிந்தநா லைந்தும் மாசறு மளக மாதியாம் பாட வகைகணா லேழுமற் றவற்றிற் பூசல்வார்த் திகந்தொட் டைவகைச் சச்ச புடாதியாந் தாளமாத் திரையும். (இ - ள்.) ஆசவாத்தியம் முன் பொருள் முதல்களாசம் ஆதியாம் பாடபேதங்கள் பேசிய பதினாறு ஒன்பதும் - ஆச வாத்தியமும் முன் பொருளும் முதன்மையாகிய களாசமும் முதலாகிய பாட பேதங்கள் கூறப்பட்ட இருபத்தைந்தும், படக பேதம் ஒன்று ஒழிந்த நாலைந்தும் - படக பேதங்கள் பத்தொன்பதும், மாசு அறும் அளகம் ஆதியாம் பாட வகைகள் நாலேழும் - குற்றமற்ற அளகம் முதலாகிய பாடவகைகள் இருபத் தெட்டும், அவற்றில் - அவைகளுள், பூசல் வார்த்திகம் தொட்டு ஐவகைச் சச்சபுட ஆதியாம் தாள மாத்திரையும் - பூசல் வார்த்திகந் தொட்டு ஐந்துவகைப்பட்ட சச்சபுட முதலாகிய தாள மாத்திரைகளும். இதிற் கூறப்பட்டன வாத்திய வகைகள் போலும். (13) கிளந்தமாத் திரையின் கதிகளுஞ் சொல்லுங் கீதமும் பாடமு மெழுத்தும் வளந்தரு மணிபந் தாதிகீ தத்தின் வகுத்தகட் டளையெழு நான்கும் அளந்திடு சரளை யாதிகட் டளையே ழைந்துநன் கமைந்தபா வாதி விளம்பிய மூன்று கலப்பு மீறாக விளைத்திடுங் கூத்தக மார்க்கம். (இ - ள்.) கிளந்த மாத்திரையின் கதிகளும் - கூறப்பட்ட மாத்திரையின் கதிகளும், சொல்லும் கீதமும் பாடமும் எழுத்தும் - சொற்களும் கீதங்களும் பாடங்களும் எழுத்துக்களும், வளம்தரு மணி பந்தம் ஆதி கீதத்தின் வகுத்த கட்டளை எழு நான்கும் - வளப்பத்தைத் தருகின்ற மணிபந்தம் முதலாகக் கீதத்தின்கண் வகுத்த கட்டளைகள் இருபத்தெட்டும், அளந்திடு சரளை ஆதி கட்டளை ஏழைந்தும் - அளவறுக்கப்பட்ட சரளை முதலிய கட்டளைகள் முப்பத்தைந்தும், நன்கு அமைந்த பாவ ஆதி விளம்பிய மூன்று கலப்பும் ஈறாக விளைத்திடும் கூத்து அகமார்க்கம் - நன்றாக அமைந்த பாவமும் தாளமும் அராகமுமாகப் பரதநூலுட் கூறப்பட்ட இம்மூன்றும் தம்முட் பிளவுபடாமல் ஒத்தபான்மை இறுதியாகச் செய்யப்படுங் கூத்து அகமார்க்கமாகும். தாள மாத்திரையின் கதிகள் - கொட்டு, அசை, தூக்கு, அளவு எனப்படும். சொல் - உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல் என மூவகைப்படும்; உட்சொல் - நெஞ்சொடு கூறல்; புறச்சொல்- கேட்போர்க்கு குரைத்தல்; ஆகாயச்சொல் - தானே கூறல். இனி தற்கூற்று, புறக்கூற்று, முன்னிலைக் கூற்று, விண்ணின் கூற்று எனச் சொல்லை நான்கு வகையாகப் பிரிப்பாருமுளர். கீதம் - இசை. பாடம் - கீதவுரு; இசைப்பாட்டு. எழுத்து? ஆளத்திக்குரிய எழுத்துக்கள். கட்டளை - வரையறை. (14) [அறுசீரடியாசிரிய விருத்தம்] உரைத்தவிக் கூத்துக் கற்கும் போதுதன் னுடம்பிற் சால வருத்தநோ யெய்தி யிந்த வருத்தநான் மறையுந் தேறா அருத்தமா யறிவாய் வெள்ளி யம்பலத் தாடி நின்ற நித்தனார் தமக்கு முண்டே யென்பது நினைவிற் கொண்டான். (இ - ள்.) உரைத்த இக்கூத்துக் கற்கும்போது - கூறிய இந்தக் கூத்தினைப் பயிலும் பொழுதில், தன் உடம்பில் சால வருத்த நோய் எய்தி - தனது உடம்பின்கண் மிகவும் துன்பமாகிய நோய் எய்தப் பெற்று, இந்த வருத்தம் - இத்துன்பமானது, நால்மறையும் தேறா அருத்தமாய் - நான்கு மறைகளாலும் அறியப்படாத பொருளாயும், அறிவாய் - ஞான வடிவாயும், வெள்ளி அம்பலத்து ஆடிநின்ற நிருத்தனார் தமக்கும் - வெள்ளி மன்றின்கண் ஆடி நின்றருளும் கூத்தப்பிரானுக்கும், உண்டே என்பது நினைவிற் கொண்டான் - உளதாமே என்னும் எண்ணத்தை மனதிற் கொண்டான். இந்த வருத்தம் - இத்தன்மையான வருத்தம். எப்பொழுதும் ஆடுகின்றவரென்பார் ‘ஆடி நின்ற’ என்றார். என்பது - என்னும் எண்ணம்; என்று எனக் கொள்ளினுமாம். (15) கரியதா மரைக்கண் ணானுங் கமலநான் முகனுங் காண்டற் கரியதா ளொன்றே நோவ வாற்ற நாணிற்ப தந்தோ உரியதா மிதனைக் கற்று வருத்தமுற் றோர்ந்து மீது தெரியநா னிருப்ப தேயோ வறனெனச் சிந்தை நோவான். (இ - ள்.) கரிய தாமரைக் கண்ணானும் - கரிய நிறத்தைனையுயை தாமரை மலர்போலுங் கண்களையுடைய திருமாலும், கமல நான்முகனும் காண்டற்கு அரிய தாள் ஒன்றே - தாமரை மலரில் வசிக்கும் பிரமனும் காணுதற்கரிய திருத்தாள் ஒன்றே, நோவ - துன்பமுற, ஆற்ற நாள் நிற்பது - பல நாளாக ஆடி நிற்கின்றது; அந்தோ - ஐயோ, உரியது ஆம் இதனைக் கற்று வருத்தம் முற்றும் ஓர்ந்து - உரியதாகிய இப்பரத நூலைக் கற்று அதனால் நேரும் வருத்தம் அனைத்தையும் அறிந்து வைத்தும், ஈறு தெரிய நான் இருப்பதேயோ அறன் எனச் சிந்தை நோவான் - இவ் வருத்தத்தைக் காண நான் உயிருடன் இருப்பதோ அறமாகும் என்று மனம் நோவானாயினன். தாளின் அருமையைப் புலப்படுப்பான் அரியும் அயனும் காண்டற்கரிய தாள் என்றான். தாள் ஒன்றே - தாள்களில் ஒன்றே; ஒன்றே நிற்பது எனக் கூட்டுக. இது தெரிந்து நான் வாளாவிருப்பது அறமோ என்றுரைப்பினும் அமையும். அந்தோ, இரக்கப் பொருள் குறித்த இடைச்சொல். (16) வடுப்படு பிறவிப் பௌவ வரம்புகாண் கின்ற நாள்வந் தடுப்பவர் யாவ ரேனு மவர்க்கெலாம் போகம் வீடு கொடுப்பவர் செய்யு மிந்தக் கூத்தையெப் படிநாஞ் சென்று தடுப்பது தகாதன் றேனும் வருந்துமே சரண மென்னா. (இ - ள்.) வடுப்படு பிறவிப் பௌவம் வரம்பு காண்கின்ற நாள் வந்து அடுப்பவர் யாவரேனும் - குற்றம் பொருந்திய பிறவிக்கடலின் கரையைக் காணுதற்குரிய நன்னாள் வந்து பொருந்தப் பெற்றவர் யாவராயினும், அவர்க்கு எலாம் போகம் வீடு கொடுப்பவர் செய்யும் இந்தக் கூத்தை - அவரனைவர்க்கும் இன்பத்தையும் வீடுபேற்றையும் அளித்தருளும் இறைவன் செய்கின்ற இந்தக் கூத்தினை, நாம் சென்று எப்படித் தடுப்பது- நாம் போய் எங்ஙனம் தடுப்பது; தகாது - தகுதியன்று; அன்றேனும் - தடுப்பதன்றாயின், சரணம் வருந்துமே என்னா - திருவடி வருந்துமே என்று கருதி. வந்து அடுப்பவர் யாவரேனும் அவர்க்கெலாம் போகத்தையும், காண்கின்ற நாள் வீட்டையும் கொடுப்பவர் என்றுரைத்தலுமாம்; காண்கின்ற நாளிலே வந்து அடுப்பவர்க் கெல்லாம் பேரின்பமாகிய வீட்டை யளிப்பவர் என்று கூறுதலும் பொருந்தும்; வந்து அடுக்கும் நாள் பிறவிக்கடலின் வரம்பு காண்கின்ற நாளாகு மென்க. எப்படித் தடுப்பது - தடுப்பது எங்ஙனம் பொருந்தும். அன்றேனும் - தகா தென ஒழியின்; உம் - அசை. (17) இதற்கிது துணிவென் றுன்னி யெழுந்துபோய்ச் சிவனி ராவிற் கதக்களிற் றொருத்த லேந்துங் கதிர்மணிக் குடுமிக் கோயில் மதக்கரி யுரியி னாற்கு வரம்பறச் சிறந்த பூசை விதப்பட யாம நான்கும் விதிவழி யியற்றல் செய்யா. (இ - ள்.) இதற்கு இது துணிவு என்று உன்னி - இதற்கு இதுவே துணிபொருள் என்று ஒன்றைக் கருதி, எழுந்துபோய்- எழுந்து சென்று, சிவன் இரவில் - சிவராத்திரியில், கதக்களிற்று ஒருத்தல் ஏந்தும் கதிர்மணிக் குடுமிக்கோயில் - சினத்தை யுடைய எட்டு யானைகள் தாங்கும் ஒளிபொருந்திய மணிகளிழைத்த சிகரத்தை யுடைய இந்திர விமானத்தில் எழுந்தருளிய, மதக்கரி உரியினாற்கு - மதயானையின் தோலாகிய போர்வையை யுடைய சோமசுந்தரக் கடவுளுக்கு, வரம்பு அறச் சிறந்த பூசை- எல்லை யில்லையாகச் சிறந்த பூசையினை, விதப்பட - வகைப்பட, யாமம் நான்கும் - நான்கு யாமங்களிலும், விதிவழி இயற்றல் செய்யா- (ஆகம) விதிப்படி செய்து. துணிவு - செய்யத்தக்கது. களிறும் ஒருத்தலும் ஆண்பாற் பெயர்; களிறாகிய ஒருத்தலென்க. விதப்பட - பல் வகையாக. இயற்றல் செய்யா - இயற்றுதலைச் செய்து; இயற்றி. (18) விண்டக மலர்த்தா ளேத்தி வெள்ளியம் பலத்து ளன்பர் தொண்டக மலர நின்ற சோதிமெய்ஞ் ஞானக் கூத்தைக் கண்டக மகிழ்ந்து தாழ்ந்து கட்புனல் சோரச் செங்கை முண்டக முடிமே லேற்றி முகிழ்த்துநின் றிதனை வேண்டும். (இ - ள்.) அகம் விண்டு - மனமுருகி, மலர்த்தாள் ஏத்தி - தாமரை மலர் போன்ற திருவடியைத் துதித்து, வெள்ளியம் பலத்துள் அன்பர் தொண்டு அகம் மலர நின்ற சோதி - வெள்ளியம் பலத்திலே அன்பர்களின் தொண்டு பூண்ட உள்ளத் தாமரை மலர நின்ற பேரொளி யாகிய இறைவனது, மெய்ஞ் ஞானக் கூத்தைக் கண்டு - உண்மை ஞானத் திருக்கூத்தைத் தரிசித்து, அகம் மகிழ்ந்து தாழ்ந்து - மனமகிழ்ந்து வணங்கி, கண்புனல் சோர - கண்களில் ஆனந்த வருவி பொழிய, செங்கை முண்டகம் முடிமேல் ஏற்றி முகிழ்த்து நின்று - சிவந்த கையாகிய தாமரை மலர்களைத் தலையின்மேற் கூப்பி நின்று, இதனை வேண்டும் - இதனை வேண்டுவா னாயினன். விண்ட என்னும் பெயரெச்சம் தொக்கதாகக் கொண்டு அகத்தில் மலர்ந்த என்றுரைத்தலுமாம். அம்பலத்துள் நின்ற சோதியின் கூத்தைக் கண்டு என்க. (19) நின்றதா ளெடுத்து வீசி யெடுத்ததா ணிலமீ தூன்றி இன்றுநான் காண மாறி யாடியென் வருத்த மெல்லாம் பொன்றுமா செய்தி யன்றேற் பொன்றுவ லென்னா வன்பின் குன்றனான் சுரிகை வாண்மேற் குப்புற வீழ்வே னென்னா. (இ - ள்.) நின்றதாள் எடுத்து வீசி - (ஐயனே) ஊன்றிய திருவடியை மேலெடுத்து வீசியும், எடுத்த தாள் நிலம்மீது ஊன்றி - தூக்கிய திருவடியை நிலத்தின் மேல் ஊன்றியும், இன்று நான் காண மாறி ஆடி - இன்று அடியேன் காணுமாறு (இங்ஙனம் கால்) மாறி ஆடுதலைப் புரிந்து, என் வருத்தம் எல்லாம் பொன்றுமா செய்து - என் துன்பமனைத்தும் அழியுமாறு செய்தருள்க; அன்றேல்- அங்ஙனஞ் செய்தருளாவிடில், பொன்றுவல் என்னா - நான் இறந்துபடுவன் என்று திருமுன் விண்ணப்பித்துக் கொண்டு, அன்பின் குன்று அனான் - அன்பில் மலையை ஒத்த இராசசேகர பாண்டியன், சுரிகை வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா -உடை வாளின்மேற் குப்புற விழுவேன் என்று கருதி. எடுத்த தாள் - குஞ்சித்த திருவடி, பொன்றுமாறு என்பது ஈறுதொக்கது. சலியாத அன்புடையான் என்பார், ‘அன்பின் குன்றனான்’ என்றார். சுரிகையாகிய வாள் என்க. குப்புற விழுதல்- வாளை எதிரே நிறுத்தி அதன்மேற் பாய்தல். (20) நாட்டினான் குறித்துப் பாய நண்ணுமுன் னிடத்தா ளூன்றி நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி யாடிக் காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாச மூன்றும் வீட்டினான் பரமா னந்த வேலையுள் வீட்டி னானே. (இ - ள்.) நாட்டினான் குறித்துப்பாய நண்ணுமுன் - கீழே அவ்வுடைவாளை நட்டு அதன்மேற் பாய்தற்கு நண்ணு முன்னரே, இடத்தாள் ஊன்றி - இடது தாளைக் கீழே ஊன்றி, வலத்தாள் நீட்டினான் வீசி - வலது திருவடியை மேலெடுத்து வீசி, நிருமலன் -இறைவன், மாறி ஆடிக் காட்டினான் - கால்மாறி ஆடிக்காட்டி, கன்னி நாடன் கவலையும் பாச மூன்றும் வீட்டினான் - கன்னி நாடனாகிய பாண்டியனுடைய கவலையையும் மும்மலங்களையும் அழித்து, பரமானந்த வேலையுள் வீட்டினான் - (அவனைப்) பேரின்பக் கடலுள் வீழ்த்தினான். நான்கடியிலும் முன்னுள்ள முற்றுக்கள் எச்சமாயின - காட்டினான் என்பதனை முற்றாக்கியும் கன்னிநாடன் என்பதனை எழுவாயாக்கியும் பாண்டியனானவன் கவலையும் பாசமூன்றும் வீட்டித், தன்னை வேலையுள் வீழ்த்தினான் என்றுரைத்தலுமாம். வீழ்த்தி என்பது வீட்டியென மருவிற்று. (21) விளைகள்வாய் வீழ்ந்த வண்டின் மெய்யறி வின்ப மென்னும் அளவிலா முந்நீர் வெள்ளத் தாழ்ந்தவ னெழுந்து பின்னும் உளமும்வா சகமு மெய்யு முடையவ னதுவே யாகப் பளகிலா வன்பு தானே படிவமாய்ப் பழிச்ச லுற்றான். (இ - ள்.) விளைகள் வாய் வீழ்ந்த வண்டின் - இனிமை மிக்க மதுவின்கண் வீழ்ந்த வண்டைப்போல, மெய் அறிவு இன்பம் என்னும் அளவு இலா முந்நீர் வெள்ளத்து ஆழ்ந்தவன்- உண்மை யறிவின்பம் என்று சொல்லப்படும் அளவில்லாத கடல் வெள்ளத்தில் மூழ்கிய பாண்டியன், எழுந்து பின்னும் - எழுந்து மீண்டும், உளமும் வாசகமும் மெய்யும் உடையவன் அதுவே ஆக - உள்ளமும் உரையும் உடலுமாகிய இம்மூன்றும் தன்னை ஆளாக வுடையவன் உடைமையாய் விட, பளகு இலா அன்பு தானே படிவமாய் - குற்றமில்லாத அன்பே வடிவமாயிருந்து, பழிச்சலுற்றான் - துதிக்கத் தொடங்கினான். விளைதல் - முதிர்தல்; இனிமை மிகுதல். வண்டின், இன் உருபு ஒப்புப் பொருட்டு. மதுவில் வீழ்ந்த வண்டு அதனை யுண்டு அதிலே மயங்கிக் கிடத்தல் போலச் சச்சிதானந்தமாகிய வெள்ளத்தில் மூழ்கி அதனை யுண்டு தற்போத மிழந்தான் என்றவாறு. கடல் வெள்ளம் போன்று இதுவும் உண்மை அறிவு இன்பம் என்னும் மூன்று நீர்மை யுடையது என்பது போதர ‘முந்நீர் வெள்ளம்’ என்று பெயர் கூறினார். உடையவன் - உலகுயிர்களை யெல்லாம் உடைமையாகவும் அடிமையாகவும் உடையவன்; இறைவன். மூன்று கரணங்களையும் இறைவனிடத்தே ஒப்புவித்தா னென்க. உடையவனது, பன்மை யொருமை மயக்கம். (22) [கலி விருத்தம்] பெரியாய் சரணஞ் சிறியாய் சரணங் கரியா கியவங் கணனே சரணம் அரியா யெளியா யடிமா றிநடம் புரிவாய் சரணம் புனிதா சரணம். (இ - ள்.) பெரியாய் சரணம் - பெரியதினும் பெரியவனே வணக்கம்; சிறியாய் சரணம் - சிறியதினுஞ் சிறியவனே வணக்கம்; கரியாகிய அங்கணனே சரணம் - சான்றாயுள்ள அழகிய கண்களை யுடையவனே வணக்கம்; அரியாய் - தேவர்க்கும் அரியவனே, எளியாய் - அடியார்க்கு எளியவனே, அடிமாறி நடம்புரிவாய் சரணம் - கால் மாறி நடம்புரிவோனே வணக்கம்; புனிதா சரணம்- தூயவனே வணக்கம். இறைவன் அண்ட மோரணுவாம் பெருமையும் அணுவோ ரண்டமாம் சிறுமையும் உடையவனென்பது முன்னுங் கூறப்பட்டது. இறைவன் உயிருக் குயிராயிருந்து காட்டிக் கண்டு நிற்பானாகலின் ‘கரியாகிய’ என்றார். சரணம் - போற்றி யென்பது போல் வணக்கம் எனப் பொருள் படுவதொரு சொல்; அடைக்கலம் என்றுமாம். (23) நதியா டியசெஞ் சடையாய் நகைவெண் மதியாய் மதியா தவர்தம் மதியிற் பதியாய் பதினெண் கணமும் பரவுந் துதியாய் சரணஞ் சுடரே சரணம். (இ - ள்.) நதி ஆடிய செஞ்சடையாய் - கங்கை விளையாடுஞ் சிவந்த சடையை யுடையவனே, நகைவெண் மதியாய் - ஒளிபொருந்திய வெள்ளிய பிறையை அணிந்தவனே, மதியாதவர் மதியில் பதியாய் - கருதாதவர்கள் கருத்திற் பொருந்தாதவனே, பதினெண் கணமும் பரவும் துதியாய் - பதினெண் கணங்களாலும் துதிக்கப்படுந் துதியினை யுடையவனே, சரணம் - வணக்கம், சுடரே சரணம் - பேரொளியா யுள்ளவனே வணக்கம். ஆடிய - பொருந்திய என்றுமாம். மதியாதவர் - சிந்தியாதவர். மதி தற்போதமாகிய அறிவுமாம். பதிதல் - தங்குதல். பதினெண்கணம் முன்பு உரைக்கப்பட்டன. (24) பழையாய் புதியாய் சரணம் பணிலக் குழையாய் சரணங் கொடுவெண் மழுவாள் உழையாய் சரணம் முருகா தவர்பால் விழையாய் சரணம் விகிர்தா சரணம். (இ - ள்.) பழையாய் - எல்லாவற்றினும் பழமையானவனே, புதியாய் - எல்லாவற்றினும் புதுமையானவனே, சரணம் - வணக்கம்; பணிலக் குழையாய் சரணம் - சங்கக் குழையினையுடையவனே வணக்கம்; கொடுவெண் மழுவாள் உழையாய் சரணம் - கொடிய வெள்ளிய மழுப்படையையும் மானையுமுடையவனே வணக்கம்; உருகாதவர்பால் விழையாய் சரணம் - (நின்னை நினைந்து) மனமுருகாத வரிடத்துச் (செல்ல) விரும்பாதவனே வணக்கம்; விகிர்தா சரணம் - விகிர்தனே வணக்கம். இறைவன் பழமையுடைய எவற்றினும் பழமையுடையனும் புதுமையுடைய எவற்றினும் புதுமை யுடையனுமாதலை, " முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே" என்னும் திருவாசகததானறிக; எல்லாம் தோன்றுதற்கு முன்னும் எல்லாம் அழிந்த பின்னும் இருப்பவன் என்பது கருத்து. உருகாதவர் பால் விழையாமையை, " உள்ள முருகி லுடனாவ ரல்லது தெள்ள வரியரென் றுந்தீபற சிற்பரச் செல்வரென் றுந்தீபற" என்னும் திருவுந்தியாராலும், " நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் பொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு நக்கு நிற்ப னவர்தமை நாணியே" என்னும் தேவாரத்தாலுமஅறிக. விகிர்தன்-வேறுபாடுடையவன். (25) இருளாய் வெளியாய் சரணம் மெனையும் பொருளா கநினைந்துபுர ந்தரன்மால் தெருளா தநடந் தெ'a3'a4வித் தெனையாள் அருளாய் சரணம் மழகா சரணம் (இ - ள்.) இருளாய் வெளியாய் சரணம் - இருளாயுள்ளவனே வெளியாயுள்ளவனே வணக்கம்; எனையும் பொருளாக நினைந்து -(ஒன்றுக்கும் பற்றாத) அடியேனையும் ஒரு பொருளாகக் கருதி, புரந்தரன் மால் தெருளாத நடம் தெரிவித்து எனை ஆள் அருளாய் சரணம் - இந்திரனும் திருமாலும் அறியாத திருக்கூத்தினைக் காண்பித்து என்னை ஆளும் அருளை யுடையவனே வணக்கம்; அழகா சரணம் - பேரழகனே வணக்கம். பாசத்தாற் கட்டுண்ட உயிர்களால் அறிய லாகாமையின் ‘இருளாய்’ என்றார்; " அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க் கிருட்கண்ணே பாசத்தார்க் கீசன்" என்னும் மெய்கண்டாரதிருவாக்கினை நோக்குக. ‘யாவர்க்கு மேலாம் அளவிலாச் சீருடையான் யாவர்க்குங் கீழாம் அடியேனை’யும் பொருளாக நினைந்து என்க. இசைப் பொருட்டு மகரம் விரிந்து வருதல் காண்க. (26) அயனத் தனெனப் படுமா டரவச் சயனத் தவனைத் தருதத் துவநால் வயனத் தவவா னவர்வா னவசேல் நயனத் தவணா யகனே சரணம். (இ - ள்.) அயன் நத்தன் எனப்படும் ஆடு அரவச் சயனத்தவனைத் தரு தத்துவ - பிரமனையும் சங்கினை ஏந்தியவனென்று சொல்லப்படும் ஆடுகின்ற அனந்தனைப் பாயலாகக் கொண்ட திருமாலையும் தந்தருளிய தத்துவ வடிவாயுள்ளவனே, நால் வயனத்தவ - நான்கு வேதங்களாகிய திருவாக்கினையுடையவனே, வானவர் வானவ - தேவ தேவனே, சேல் நயனத்தவள் நாயகனே - அங்கயற்கண்ணம்மையின் நாயகனே, சரணம் - வணக்கம். அயனையும் சயனத்தவனையும் என உருபும் உம்மும் விரிக்க அத்தன் எனப்பிரித்து, அயனுக்கு அத்தனெனப்படும் என்றுரைத்தலுமாம். சிவபெருமான் அயன் மால்களைத் தந்தமையை, " மைந்த நின்னையென் வலப்புறத் தளித்தன னறிய பைந்து ழாய்மணி வண்ணனை யெனதிடப் பாலில் தந்த ளித்தன னீவிர்வெங் கரிமுகன் றழல்வேற் கந்த னேரெனக் கருணையி னுச்சிமோந் தளித்தான்" என்பதனானறிக. வயனம் - வசனம்; நான்கு மாவாக்கியங்களின் பொருளா யுள்ளவன் எனலுமாம். (27) கதவெங் கரியின் னுரியாய் சரணம் முதலந் தமிலா முதலே சரணென் றதிர்பைங் கழனூ புரவண் டலறும் பதபங் கயமுன் புபணிந் தரசன். (இ - ள்.) கதவெங் கரியின் உரியாய் சரணம் - சினத்தையுடைய கொடிய யானைத்தோலாகிய போர்வையை யுடையவனே வணக்கம்; முதல் அந்தம் இலா முதலே சரண் - முதலும் முடிவும் இல்லாத முதல்வனே வணக்கம்; என்று - என்று வழுத்தி, அதிர் பைங் கழல் நூபுர வண்டு அலறும் பதபங்கயம் முன்பு அரசன் பணிந்து - ஒலிக்கின்ற ஒளிபொருந்திய வீரக்கழலும் சிலம்புமாகிய வண்டுகள் ஆர வாரிக்கும் திருவடித் தாமரையின் முன்னர் மன்னன் வணங்கி. ஆடுதலால் அலறுமென்க. பத பங்கயம் என்பதற் கேற்பக் கழலையும் சிலம்பையும் வண்டாக உருவகித்தார். பசுமை - பொன்னின் ஒளி மேற்று. பங்கயத்தை முன்பு பணிந்தென்றுமாம். (28) [அறுசீரடியாசிரிய விருத்தம்] என்றுமிப் படியே யிந்தத் திருநடம் யாருங் காண நின்றருள் செய்ய வேண்டு நிருமல மான வெள்ளி மன்றவ வடியேன் வேண்டும் வரமிது வென்று தாழ்ந்தான் அன்றுதொட் டின்று மெங்கோ னந்நட நிலையாய் நின்றான். (இ - ள்.) இந்தத் திருநடம் யாரும் காண - இந்த மாறியாடிய திருக்கூத்தினை யாவருந் தரிசித் துய்யுமாறு, என்றும் இப்படியே நின்று அருள் செய்ய வேண்டும் - எஞ்ஞான்றும் இவ்வாறே நின்று அருள் புரிய வேண்டும்; நிருமலம் ஆன வெள்ளி மன்றவ- தூய்மையாகிய வெள்ளியம்பலத்தை யுடையானே, அடியேன் வேண்டும் வரம் இது என்று தாழ்ந்தான் - அடியேன் வேண்டு கின்ற வரம் இதுவே என்று வணங்கினான்; அன்று தொட்டு இன்றும் எங்கோன் அந்நட நிலையாய் நின்றான் - அன்று முதல் இன்று காறும் எம்பெருமானாகிய வெள்ளியம்பலவாணன் மாறியாடிய அந்நிலையாகவே நின்றருளினான். ஒன்றுக்கும் பற்றாத என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு ஆடிய பெருங் கருணைத் திறத்தை உலகம் அறிந்துய்ய வேண்டும் என்னும் உட்கிடை யுடையனாய் இங்ஙனம் வேண்டினானென்க. தாழ்ந்தான்; தாழ, அங்ஙனமே அருள் செய்து நின்றான்; என விரித்துரைத்துக் கொள்க. (29) ஆகச் செய்யுள் - 1489 இருபத்தைந்தாவது பழியஞ்சின படலம் [அறுசீரடியாசிரியவிருத்தம்] ஈறிலான் செழிய னன்புக் கெளியவ னாகி மன்றுள் மாறியா டியகூத் தென்சொல் வரம்பின தாமே கங்கை ஆறுசேர் சடையான் றானோ ரரும்பழி யஞ்சித் தென்னன் தேறலா மனத்தைத் தேற்றுந் திருவிளை யாடல் சொல்வாம். (இ - ள்.) ஈறு இலான் - அழிவில்லாதவனாகிய இறைவன், செழியன் அன்புக்கு எளியவனாகி - இராசசேகர பாண்டியன் அன்பிற்கு எளியனாய், மன்றுள் மாறி ஆடிய கூத்து - வெள்ளியம்பலத்திலே கான் மாறியாடிய திருக்கூத்து, என் சொல்வரம்பினது ஆமே - எனது சொல்லின் எல்லையுட் படுவதாமோ, கங்கை ஆறுசேர் சடையான் - (இனி) கங்கையாறு பொருந்திய சடையையுடையனாகிய சோமசுந்தரக் கடவுள், ஓர் அரும்பழி அஞ்சி - ஒரு கொடும்பழியை அஞ்சி, தென்னன் தேறலா மனத்தைத் தேற்றும் - குலோத்துங்க பாண்டியனுடைய தெளியாத மனத்தினைத் தெளிவித்த, திருவிளையாடல் சொல்வாம் - திருவிளையாடலைக் கூறுவாம். எளியவனாயினமையாற் கூத்தாடினான் என்பதொரு நயமுங் காண்க. ஏகாரம் எதிர்மறைப் பொருட்டு, தான், அசை : முதல் வேற்றுமைச் சொல்லுமாம், பழியின் கொடுமையை விளக்குவார் ‘ஓர் அரும்பழி’ என்றார்; அறிதற்கரிய பழி எனப்பொருள் படுமாயினும் அத்துணைச் சிறப்பின் றென்க. தேறலா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். (1) இனையநாட் சிறிதுசெல்ல விராசசே கரன்றன் காதற் றனையனாங் குலோத்துங் கற்குத் தன்னர சிருக்கை நல்கி வினையெலாம் வென்று ஞான வெள்ளியம் பலத்து ளாடுங் கனைகழ னிழலிற் பின்னிக் கலந்துபே ரின்ப முற்றான். (இ - ள்.) இனைய நாள் சிறிது செல்ல - இங்ஙனமாய நாட்கள் சில கழிய, இராசசேகரன் தன் காதல் தனையனாம் குலோத்துங்கற்கு - இராசசேகர பாண்டியன் தன் அன்பிற்குரிய புதல்வனாகிய குலோத்துங்கனுக்கு, தன் அரசிருக்கை நல்கி - தனது அரசியலைத் தந்து, வினை எலாம் வென்று - வினைகளை யெல்லாம் வென்று போக்கி, ஞான வெள்ளி அம்பலத்துள் ஆடும் கனைகழல் நிழலில் - ஞானமயமாகிய வெள்ளி மன்றின்கண் ஆடியருளும் ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த திருவடி நீழலில், பின்னிக் கலந்து பேரின்பம் உற்றான் - இரண்டறக் கலந்து பேரின்பத்தை அடைந்தான். சிறிது - சில. அரசிருக்கை - அரியணை. வினையெலாம் வென்று - வினைகளை எஞ்சாமற் கெடுத்து. கழல் : ஆகுபெயர். இரண்டறக் கலந்தென்பார் ‘பின்னிக் கலந்து’ என்றார். (2) குரவன்செங் கோல்கைக் கொண்ட குலோத்துங்க வழுதி செங்கண் அரவங்கம் பூண்ட கூட லாதிநா யகனை நித்தம் பரவன்பின் வழிபா டானாப் பத்திமை நியமம் பூண்டான் இரவஞ்சுங் கதுப்பி னல்லா ரீரையா யிரவ ருள்ளான். (இ - ள்.) குரவன் செங்கோல் கைக்கொண்ட குலோத்துங்க வழுதி - தந்தையினது செங்கோலைக் கையிற்கொண்ட குலோத்துங்க பாண்டியன், செங்கண அரவு அங்கம் பூண்ட கூடல் ஆதி நாயகனை - சிவந்த கண்களையுடைய பாம்புகளைத் திருமேனியில் அணிந்த மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரக்கடவுளை, நித்தம் அன்பின் பரவு வழிபாடு ஆனாப் பத்திமை நியமம் பூண்டான் - நாடோறும் அன்பினாற் பூசிக்கும் வழி பாடாகிய நீங்காத பத்தி நியமத்தை மேற்கொண்டவன்; இரவு அஞ்சும் கதுப்பின் நல்லார் ஈரையாயிரவர் உள்ளான் - இருளும் அஞ்சுங் கூந்தலையுடைய மனைவியர் பதினாயிரவரை யுடையவன். குரவன் - தந்தை. அரவினையும் என்பினையும் அணிந்த என்றுமாம். வழிபாடாகிய நியமம் என்க. நியமம் - செய்கடன். பூண்டான்; அவன் உள்ளவனாயினான்; என முற்றாக வுரைத்தலுமாம். கூந்தலின் கருமைக்கு முன்னிற்கலாற்றாது இரவும் அஞ்சு மென்க. (3) [கொச்சகக்கலிப்பா] அப்பதினா யிரவர்க்கு மொவ்வொருத்திக் கவ்வாறாய் ஒப்பரிய வறுபதினா யிரங்குமர ருளரவருட் செப்பரிய வல்லாண்மைச் சிங்கவிள வேறனையான் வைப்பனையான் முதற்பிறந்த மைந்தன்பே ரனந்தகுணன். (இ - ள்.) ஒவ்வொருத்திக்கு அவ்வாறாய் - ஒவ்வொரு மனைவிக்கும் ஆறு ஆறாக, அப்பதினாயிரவர்க்கும் - அந்தப் பதினாயிரம் மகளிர்க்கும், ஒப்பு அரிய அறுபதினாயிரம் குமரர் உளர் - ஒப்பில்லாத அறுபதினாயிரங் குமார்கள் உளராயினார்; அவருள் - அக்குமரருள் முதல் பிறந்த மைந்தன் - முதலிற் றோன்றிய புதல்வன், செப்பு அரிய வல் ஆண்மைச் சிங்க இள ஏறு அனையான் - சொல்லுதற்கரிய வலிய ஆண்மையையுடைய இளமை பொருந்திய ஆண்சிங்கத்தை ஒத்தவன்; வைப்பு அனையான் - வைப்பு நிதியைப் போன்றவன்; பேர் அனந்த குணன் - அவன் பெயர் அனந்தகுணன். ஒருத்தி, ஆறு என்பன இரட்டித்த வழி ஒவ்வொருத்தி அவ்வாறு என்றாயின; "எண்ணிறையளவும்" "ஒன்ப தொழித்த வெண்ணொன்பது மிரட்டின்" என்னும் நன்னூற் சூத்திரங்களநோக்குக. ஆக்கச் சொற்கொடுத்து உளராயினார் என விரிக்க. வல்லாண்மை - மிக்க ஆண்மை. (4) கலைபயின்று பரிநெடுந்தேர் கரிபயின்று பலகைவாள் சிலைபயின்று வருகுமரர் திறநோக்கி மகிழ்வேந்தன் அலைபயின்ற கடலாடை நிலமகளை யடலணிதோள் மலைபயின்று குளிர்தூங்க மகிழ்வித்து வாழுநாள். (இ - ள்.) கலைபயின்று - கற்றற்குரிய கலைகளைக் கற்று, பரிநெடுந்தேர் கரிபயின்று - குதிரை நெடியதேர் யானை என்பவற்றைச் செலுத்துந் திறமும் பயின்று, பலகை வாள் சிலை பயின்று - கேடகம் வாள் வில் என்பவற்றின் வரிசையையும் கற்று, வருகுமரர் திறம் நோக்கி மகிழ் வேந்தன் - வளர்கின்ற புதல்வர்களின் திறங்களைக் கண்டு மகிழும் அரசன், அலை பயின்ற கடல் ஆடை நிலமகளை - அலைகள் பொருந்திய கடலை ஆடையாகவுடுத்த புவிமகளை, அடல் அணி தோள் மலை பயின்று குளிர் தூங்க மகிழ்வித்து வாழும் நாள் - வெற்றியையே அணியாகப் பூண்ட தோளாகிய மலையின்கண் தங்கி இன்புறுமாறு மகிழ்வித்து வாழுங்காலத்தில். கலை - கற்கும் நூல்கள். பரி முதலியன, அவற்றை ஊருந் தொழிற்கும், பலகை முதலியன அவற்றாற் பொருந்தொழிற்கும் ஆயின. திறம் - கூறுபாடு. நிலமகளை மகிழ்வித்து எனக் கூட்டுக. மலையிலே தங்கிக் குளிர்ச்சியடைய என்பதொரு நயமுங் காண்க. உயிர்களெல்லாம் இன்புற வருத்தமின்றாகப் புரந்தான் என்பதனை இங்ஙனங் கூறினார். (5) செய்யேந்து திருப்புத்தூர் நின்றுமொரு செழுமறையோன் பையேந்து மரவல்குன் மனைவியொடும் பானல்வாய்க் கையேந்து குழவியொடுங் கடம்புகுந்து மாதுலன்பால் மையேந்து பொழின்மதுரை நகர்நோக்கி வருகின்றான். (இ - ள்.) ஒரு செழு மறையோன் - ஓ'a3 அழகிய வேதியன், செய் ஏந்து திருப்புத்தூர் நின்றும் - வயல்கள் சூழ்ந்த திருப்புத்தூரினின்றும், அரவு ஏந்தும் பை அல்குல் மனைவியொடும் - பாம்பு ஏந்திய படத்தினையொத்தஅல்குலையுடைய மனைவியோடும், கை ஏந்து பால் நல்வாய்க் குழவியொடும் கையிலே ஏந்திய பால்மணமறாத நல்ல வாயினையுடைய குழந்தையோடும், குழந்தையோடும் - கடம் புகுந்து - காட்டின் வழியில் நுழைந்து, மாதுலன் பால் - மாமன் வீட்டிற்கு, மை ஏந்து பொழில் மதுரை நகர் நோக்கி வருகின்றான் - முகிலைச் சுமந்திருக்கும் சோலை சூழ்ந்த மதுரைப் பதியை நோக்கி வருகின்றான். செய் ஏந்து - கழனிகளை மிகுதியாகவுடைய. செழுமை குணத்தின் மேற்று. அரவு ஏந்தும் பை என மாறுக. மாதுலனிடத்தை யடைதற்கு நகர் நோக்கி வருகின்றான் என்க. மை - மேகம். (6) வருவானுண் ணீர்வேட்டு வருவாளை வழிநிற்கும் பெருவானந் தடவுமொரு பேராலி னீழலின்கீழ் ஒருவாத பசுங்குழவி யுடனிருத்தி நீர்தேடித் தருவான்போய் மீண்டுமனை யிருக்குமிடந் தலைப்படுமுன். (இ - ள்.) வருவான் - அங்ஙனம் வரும் அம்மறையோன், உண் நீர் வேட்டு வருவாளை - உண்ணும் நீரினை விரும்பி வந்த தன் மனைவியை, வழிநிற்கும் பெருவானம் தடவும் ஒரு பேர் ஆலின் நீழலின் கீழ் - வழியில் நிற்கின்ற பெரிய வானையளாவிய ஒரு பெரிய ஆலமரத்தின் நிழற் கீழே, ஒருவாத பசுங் குழவியுடன் இருத்தி - நீங்காத இளங் குழந்தையோடும் இருக்கச் செய்து, நீர் தேடித் தருவான் போய் - நீரினைத் தேடிக் கொண்டு வரச் சென்று, மீண்டு மனை இருக்கும் இடம் தலைப்படுமுன் - (நீரினைக் கொண்டு) திரும்பி மனைவி யிருக்குமிடத்தை அடைதற்கு முன். வேட்டு வருவாள் என்றது வேட்கையுற்ற பொழுதே பருகுதற்கு நீரின்றி வந்து கொண்டிருப்பவள் என்றவாறு. ஒருவாத பசுங்குழவி - சிறிதும் விட்டுப் பிரியாத பச்சைக் குழந்தை; பசுமை - மிக்க இளமையைக் குறிப்பது. தருவான் : வினையெச்சம். மனை : ஆகு பெயர். (7) இலைத்தலைய பழுமரத்தின் மிசைமுன்னா ளெய்ததொரு கொலைத்தலைய கூர்வாளி கோப்புண்டு கிடந்ததுகால் அலைத்தலைய வீழ்ந்தும்மை வினையுலப்ப வாங்கிருந்த வலைத்தலைய மானோக்கி வயிறுருவத் தைத்தன்றால். (இ - ள்.) இலைத் தலைய பழுமரத்தின் மிசை - இலைகள் பொருந்திய தலையையுடைய அந்த ஆலமரத்தின் மேல், முன்னாள் எய்தது - முன்னொரு நாளில் (ஒரு வேடனால்) எய்யப் பெற்றதாய், கோப்புண்டு கிடந்தது ஒரு கொலைத்தலைய கூர்வாளி - கோக்கப்பட்டுக் கிடந்த கொலைத் தொழிலைத் தன்னிடத்தேயுடைய ஒரு கூரிய வாளியானது, கால் அலைத்து அலைய வீழ்ந்து - காற்றினால் அலைக்கப்பட்டு மரம் அசைதலால் விழுந்து, உம்மைவினை உலப்ப - முன்வினைப் பயன் முடிய, ஆங்கு இருந்த வலைத்தலைய மான் நோக்கி வயிறு உருவத் தைத்தன்று- அங்கே தங்கியிருந்த வலையில் அகப்பட்ட மான் போன்ற கண்ணையுடைய பார்ப்பனியின் வயிற்றிலே ஊடுருவத் தைத்தது. தலைய என்பன குறிப்புப் பெயரெச்சம். பழுமரம் - ஆலமரம். எய்தது, கிடந்தது என்பவற்றை முறையே வினையெச்சமும் பெய்ரெச்சமுமாக்குக. கொலை செய்யும் கூரிய நுதியையுடைய வாளி என்றலுமாம். அலைத்து - அலைக்கப்பட்டு; கடுங்காற்று வீசிற்றென்பது அலைத்தல் என்னும் சொல்லாற்றலாற் பெறப்படும். மரம் அலைதலால் என்க. உம்மை வினை - வாழ்நாட்கு அலகாகிய முன் வினை. உலத்தல் - முடிதல். வலைத்தலைய - வலையினிடத்துள்ள; மருட்சியைக் குறித்தற்கு 'வலைத்தலைய மான்' என்றார். தைத்தன்று - தைத்தது; அன் : சாரியை. ஆல் : அசை. (8) அவ்வாறவ் வணங்கனையா ளுயிரிழந்தா ளவ்வேலைச் செவ்வாளி யேறிட்ட சிலையுடையா னொருவேடன் வெவ்வாளி யேறனையான் வெயிற்கொதுங்கு நிழறேடி அவ்வால நிழலெய்தி யயனின்றா னிளைப்பாற. (இ - ள்.) அவ்வாறு அவ்வணங்கு அனையாள் உயிர் இழந்தாள் - அவ்வண்ணமாக அத்தெய்வ மகளையொத்த பார்ப்பனி உயிர் துறந்தாள்; அவ்வேலை - அப்பொழுது, வெம் ஆளி ஏறு அனையான் ஒரு வேடன் - கொடிய சிங்க வேற்றினை யொத்த வனாகிய ஒரு வேடன், செவ்வாளி ஏறிட்ட சிலையுடையான் - தெரிந்தெடுத்த வாளியினை ஏறிட்ட வில்லையுடையவனாய், வெயிற்கு ஒதுங்கு நிழல் தேடி - வெயிலுக்கு ஒதுங்கி யிருக்கத் தக்க நிழலினைத் தேடி, அவ்வால நிழல் எய்தி இளைப்பு ஆற அயல் நின்றான் - அந்த ஆலமரத்தின் நீழலையடைந்து இளைப்பாறுதற்கு அம்மரத்தின் பக்கலில் நின்றான். செவ்வாளி - வடிவு செவ்விதாகிய அம்பு என்றும், குருதி தோய்ந்து சிவந்த அம்பு என்றும் கூறலுமாகும்; பார்ப்பனியைக் கொன்ற கொடுமையுடையதன்று என்னுங் குறிப்புத் தோன்றக் கூறிற்றுமாம். நிழல்தேடி என்றமையால் அவ்வால் ஒன்றே அங்கே நிழல் மரமாயது என்பது பெறப்படும். பார்ப்பனியைக் கண்டவனுமல்லனென்பார் 'அயல் நின்றான்' என்றார். (9) தண்ணீர்க்குப் போயாவி தலைப்பட்ட மறையவனும் உண்ணீர்கைக் கொண்டுமீண் டொருங்கிருந்த குழவியொடும் புண்ணீர்வெள் ளத்துக்கா றாழ்ந்துயிரைப் புறங்கொடுத்த பண்ணீர மழலைமொழிப் பார்ப்பனியைக் கண்ணுற்றான். (இ - ள்.) தண் நீர்க்குப் போய் ஆவி தலைப்பட்ட மறையவனும்- தண்ணிய நீரினைக் கொணர்தற் பொருட்டுச் சென்று நீரோடையையடைந்த அவ்வந்தணனும், உண் நீர் கைக்கொண்டு மீண்டு - உண்ணும் நீரினைக் கைக் கொண்டு திரும்பி, ஒருங்கு இருந்த குழவியொடும் புண்ணீர் வெள்ளத்துக் கால் தாழ்ந்து - உடன் சேரவிருந்த குழவியோடும் குருதி வெள்ளத்தில் ஆழ்ந்து, உயிரைப் புறம் கொடுத்த - உயிரையிழந்த, பண்நீர மழலை மொழிப் பார்ப்பனியைக் கண்ணுற்றான் - பண்போலும் இனிமைத் தன்மையை யுடைய மழலைச் சொல்லையுடைய தன் மனைவியைப் பார்த்தான். ஆவி - பொய்கை. குழவியொடும் தாழ்ந்திருந்த பார்ப்பனி யென்றும் தன் உயிரைப் புறங்கொடுத்த பார்ப்பனியென்றும் கொள்க. வெள்ளத்துக்கால் என்பதில், அத்து : சாரியை. கால் : ஏழனுருபு. புறங்கொடுத்தல் - புறம்பே போகவிடுத்தல். நீர - நீர்மையுடைய; ஈர எனப் பிரித்து, குளிர்ந்த என்றுரைத்தலுமாம். (10) அயில்போலுங் கணையேறுண் டவ்வழிபுண் ணீர்சோர மயில்போல வுயிர்போகிக் கிடக்கின்றாண் மருங்கணைந்தென் உயிர்போல்வா யுனக்கிதுவென் னுற்றதென மத்தெறிதண் தயிர்போலக் கலங்கியறி வழிந்துமனஞ் சாம்பினான். (இ - ள்.) அயில் போலும் கணை ஏறுண்டு - வேல் போலுங் கூரிய கணை தைத்து, அவ்வழி புண்நீர் சோர - அவ்வழியே குருதியொழுக, உயிர் போகி மயில் போலக் கிடக்கின்றாள் மருங்கு அணைந்து - உயிர் நீங்கி மயில் போன்று கிடக்கின்ற மனைவியின் அருகிற் சென்று, என் உயிர் போல்வாய் - எனது உயிர் போன்றவளே, உனக்கு இது உற்றது என் என - உனக்கு இத்தீமை நேர்ந்தது என்னையென்று, மத்து எறி தண் தயிர் போலக் கலங்கி - மத்தினாற் கலக்கப்பட்ட தண்ணிய தயிர் போலக் கலக்கமுற்று, அறிவு அழிந்து மனம் சாம்பினான் - அறிவிழந்து மனஞ் சோர்ந்தான். வலிய கணையென்பார் 'அயில்போலுங் கணை' என்றார். அவ்வழி - அவ்விடத்தில் என்றுமாம். அம்பு தைத்த மயில் போலவென்க. நினக்கும் இது நேர்ந்ததோவென இரங்கினான். கலங்கி - உடைந்து; திட்பங்கெட்டு. (11) இனையதோர் பெண்பழியை யாரேற்றா ரெனத்தேர்வான் அனையதோர் பழுமரத்தின் புறத்தொருசா ரழல்காலும் முனையதோர் கணையோடு முடக்கியகைச் சிலையேந்தி வினையதோர்ந் தெதிர்நின்ற விறல்வேடன் றனைக்கண்டான். (இ - ள்.) இனையது ஓர் பெண் பழியை ஏற்றார் யார் எனத் தேர்வான் - இங்ஙனமாகிய ஒரு பெண் பழியை ஏற்றுக் கொண்டவர் யார் என்று ஆராயப் புகுந்த அம் மறையோன், அனையது ஓர் பழுமரத்தின் புறத்து ஒரு சார் - அந்த ஆலமரத்தின் புறத்தே ஒரு பக்கத்தில், அழல் காலும் முனையது ஓர் கணையோடும் - நெருப்பினை உமிழும் முனையினையுடைய ஒரு வாளியோடும், முடக்கிய சிலை கை ஏந்தி - வளைத்த வில்லைக் கையிலேந்தி, வினையது ஓர்ந்து எதிர் நின்ற விறல் வேடன் தனைக் கண்டான் - தனக்கு வாய்க்கும் வேட்டை வினையினை ஆராய்ந்து எதிரில் நின்ற வெற்றி பொருந்திய வேடனைக் கண்டான். பெண்பழி - பெண்கொலை புரிந்த பழி; அதன் கொடுமையை விளக்க 'இனையதோர் பெண்பழி' என்றான்; இத்தகைய பழியை யேற்பாரும் உளரோ வென்று கருதினான் என்க. தேர்வான் : பெயர். அனையது, : சுட்டு; ஓர் : அசை. முனையது; குறிப்புமுற்று எச்சமாகியது. வினையது. அது : பகுதிப் பொருள் விகுதி. (12) [கலிநிலைத்துறை] காப்பணி தாளன் வாளொடு வீக்கிய கச்சாளன் கூர்ப்பக ழிக்கோ லேறிடு வில்லன் கொலைசெய்வான் ஏற்பன கைக்கொண் டிவ்விடை நின்றா னிவனேயென் பார்ப்பனி யைக்கொன் றின்னுயி ருண்டு பழிபூண்டான். (இ - ள்.) காப்பு அணிதாளன் - செருப்பினையணிந்த தாளை யுடையனாய், வாளொடு வீக்கிய கச்சாளன் - வாளோடு கட்டிய கச்சினையுடையனாய், கூர் பகழிக்கோல் ஏறிடு வில்லன் - கூரிய அம்பினை ஏறிட்ட வில்லையுடையனாய், கொலை செய்வான் - கொலை செய்தற்கு, ஏற்பன கைக் கொண்டு இவ்விடை நின்றான் இவனே - ஏற்றவற்றைக் கையிற்கொண்டு இங்கு நிற்பவனாகிய இவனே, என் பார்ப்பனியைக் கொன்று இன் உயிர் உண்டு பழி பூண்டான் - என் மனைவியைக் கொன்று அவள் இனிய உயிரைப் பருகிப் பழிபூண்டவன். காப்பு - காலுக்கு அரணாயது; செருப்பு. தாளன் முதலிய குறிப்பு முற்றுக்கள் வினையெச்சமாயின. இவன் கொன்றானென்று துணிதற்குக் காரணம் கொலை செய்தற்குரியவற்றைக் கைக் கொண்டிருத்தலும் அவ்விடத்தில் நிற்றலுமாம். கொலைக் கருவிகளைக் கொண்டிருத்தலேயன்றி அவற்றைக் கொல்லுதற்கேற்ற பெற்றியமைத்துக் கொலையையே குறித்துக் கொண்டுள்ளான் என்பது தோன்ற 'கோல் ஏறிடு வில்லன்' என்றும், 'நின்றான்' என்றும் கூறினான். பகழிக்கோல் : இரு பெயரொட்டு; கோல் என்பதும் அம்பிற்கோர் பெயர். நின்றான் ஆகலால் இவனே கொன்று பழிபூண்டான்; என்று முற்றாக்கி யுரைத்தலுமாம். ஏகாரம் தேற்றம். (13) என்ன மதித்தே யேடா வேடா வென்னேழை தன்னை வதைத்தாய் நீயே யென்னாத் தழல்கால்கண் மின்ன லெயிற்றுக் கூற்றென வல்வாய் விட்டார்த்து மன்னவ னாணைப் பாச மெறிந்து வலித்தேகும். (இ - ள்.) என்ன மதித்தே - என்று கருதி, ஏடா வேடா - ஏண்டா வேடா, நீயே என் ஏழை தன்னை வதைத்தாய் என்னா- நீயே என் மனைவியைக் கொன்றாய் என்று, தழல் கால் கண் மின்னல் எயிற்றுக் கூற்றென - தீயினை உமிழுங் கண்களையும் மின்னல் போன்ற பற்களையுமுடைய கூற்றுவனைப் போல, வல்வாய் விட்டு ஆர்த்து - வலிய வாயினைத் திறந்து முழக்கஞ் செய்து, மன்னவன் ஆணைப் பாசம் எறிந்து வலித்து ஏகும் - வேந்தனது ஆணையாகிய பாசத்தை வீசி இழுத்துச் செல்வானாயினன். மேற்செய்யுளிற் கூறியவற்றைச் சுட்டி 'என்ன மதித்து' என்றார். கண்டவன் இங்ஙனங் கருதியென்க. ஏடா என்பது இக்காலத்தில் ஏண்டா எனத் திரிந்துளது. ஏழை - பெண். மின்னல் : அல், பெயர் விகுதி. கண்ணினையும் எயிற்றினையும் பார்ப்பனனுக்கும், ஆர்த்தலைக் கூற்றுக்கும் கொள்க. ஆணையைப் பாசமாக உருவகித்தார். 'அரசன் ஆணை' என்று கூறி இழுத்தேகினா னென்க. இதனாற் காட்டிலுள்ள வேட்டுவரும் அரசனாணை யென்ற வளவில் அடங்கி நிற்பரென்பது பெறப்படும். (14) மாண்டவ ளைத்தன் வெரிந்நிடை யிட்டான் மகவொக்கற் றாண்டவ ணைத்தான் றாய்முலை வேட்டழு தன்சேயைக் காண்டொறும் விம்மாக் கண்புனல் சோரக் கடிதேகா ஆண்டகை மாறன் கூட லணைந்தா னளியன்றான். (இ - ள்.) அளியன் தான் - இரங்கத் தக்கவனாகிய அம்மறையோன், மாண்டவளைத் தன் வெரிந் இடை இட்டான் - இறந்து போன தன் மனைவியைத் தனது முதுகில் இட்டு, மகவு ஒக்கல் தாண்ட அணைத்தான் - குழந்தையைப் பக்கத்திற் பொருந்த அணைத்து, தாய் முலைவேட்டு அழுதன் சேயைக் காண்தொறும் - தாயின் பாலை விரும்பி அழுகின்ற அக் குழவியைப் பார்க்குந்தோறும், கண்புனல் சோர விம்மா - கண்களில் நீர் ஒழுக அழுது, கடிது ஏகா - விரைந்து சென்று, ஆண்தகை மாறன் கூடல் அணைந்தான் - ஆண்டன்மையையுடைய பாண்டியனது மதுரையை அடைந்தான். ஒக்கல் - அரையின் பக்கம். தாண்ட - தவழ. இட்டான், அணைத்தான் என்பன முற்றெச்சங்கள். அளியன் - பிறர் இரங்கத் தக்கான். (15) மட்டவிழ் தாரான் வாயின் மருங்கே வந்தெய்தா உட்டுக ளில்லா வேடனை முன்விட் டுயிரன்னாள் சட்டக1 நேரே யிட்டெதிர் மாறன் றமர்கேட்பக் கட்டுளி சிந்தா முறையிடு கின்றான் கையோச்சா. (இ - ள்.) மட்டு அவிழ்தாரான் வாயில் மருங்கே வந்து எய்தா - மணத்தொடு மலர்ந்த மலர் மாலையையணிந்த பாண்டியனது கோயில் வாயிலை வந்தடைந்து, உள்துகள் இல்லா வேடனை முன்விட்டு - மனத்திலே குற்றமில்லாத வேடனை முன்னே விட்டு, உயிர் அன்னாள் சட்டகம் நேரே இட்டு - உயிர் போன்ற மனைவியின் உடலை எதிரே கிடத்தி, மாறன் தமர் கேட்ப - பாண்டியன் தமராகிய அமைச்சர் முதலியோர் கேட்ப, எதிர் - அவர்கட்கு நேரே, கை ஓச்சா - கையை மேலே ஓச்சி, கண்துளி சிந்தா முறையிடுகின்றான் - கண்ணீரைச் சொரிந்து முறையிடா நின்றான். உட்டுகளில்லா வேடன் என்றது புறத்தே கொலை செய்யுங் கருவிகளையுடையனாயினும் பார்ப்பனியைக் கொல்லாமையால் அகத்தே குற்றமில்லானாகிய வேடன் என்றவாறு. சட்டகம் - வடிவு; உடம்பு. அரசனுக்குத் தமராவார் அமைச்சர் முதலாயினார். எய்தா, சிந்தா ஓச்சா என்பன செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். (16) கோமுறை கோடாக் கொற்றவ ரேறே முறையேயோ தாமரை யாள்வாழ் தண்கடி மார்பா முறையேயோ மாமதி வானோன் வழிவரு மைந்தர முறையேயோ தீமைசெய் தாய்போற் செங்கை குறைத்தாய் முறையேயோ. (இ - ள்.) கோமுறை கோடாக் கொற்றவர் ஏறே முறையேயோ- அரசியல் முறை கோணாத மன்னருள் ஆண் சிங்கம் போன்றவனே முறையோ, தாமரையாள் வாழ் தண்கடி மார்பா முறையேயோ - தாமரை மலரில் வசிக்குந் திருமகள் வாழ்கின்ற தண்ணிய விளக்கமமைந்த மார்பினை யுடையவனே முறையோ, மாமதி வானோன் வழி வரும் மைந்தா முறையேயோ - பெருமை பொருந்திய திங்கட்புத் தேளின் மரபில் வந்த மைந்தனே முறையோ, தீமை செய்தாய் போல் செங்கை குறைத்தாய் முறையேயோ - குற்றஞ் செய்தவன் போலச் சிவந்த கையைத் தறித்துக் கொண்டவனே முறையோ. கோல் நிலை திரியாத கொற்றத்தினையுடைய அரசருளெல்லாஞ் சிறந்தவனென்க. முறையேயோ என்றது நினது நாட்டிலும் இத்தகைய தீமை நிகழ்வது முறைதானோ என்றவாறு. வலியரால் நலிவுற்றோர் இங்ஙனம் முறையேயோ என்றேனும், ஓலம் என்றேனும் பலகாற் கூறி வேண்டுதல் முறையிடுதல் எனப்படும். கடி - விளக்கம். தீமை செய்தாய்போற் செங்கை குறைத்தாய் என்றது பாண்டியருள் ஒருவன் புரிந்த அருஞ்செயலைக் குறிப்பிட்டவாறு. கை குறைத்த வரலாறாவது : ஒரு காலத்தில் மதுரை மாநகரில் வசித்த அந்தணனொருவன் தான் காசிக்குச் செல்ல விரும்பி அதனை இரவிலே தன் மனைவியிடம் கூறிக் கொண்டிருப்பவன், அவளைத் தேற்றுதற் பொருட்டு, 'பாண்டியனது செங்கோ லாட்சியில் நினக்கு எத்தகைய துன்பமும் உண்டாகாது; நான் மீண்டு வருந்துணையும் நீ அஞ்சாதிருப்பாயாக' என்று கூறினன்; நகரி சோதனையின் பொருட்டு இரவில் தனித்து வந்து கொண்டிருந்த அரசன் அம்மொழிகளைச் செவியுற்று, அன்று முதல் ஒவ்வொரு நாளிரவிலும் அம்மனையைக் கண்காணித்து வந்தனன்; ஒரு நாளிரவிலே காசிக்குச் சென்ற மறையோன் மீண்டு வந்து தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும் அரவங்கேட்ட அரசன் வேற்றுக் குரல் கேட்பதாக நினைந்து கதவைத் தட்டவும், அம்மறையோன் 'கதவு தட்டுவோன் யார்' என உரத்த குரலுடன் வினாவினான்; வந்திருந்தவன் மனைக்குரிய மறையோன் என அரசன் அறிந்து, அவ் வந்தணனுக்குப் பெரியதோர் ஐயம் நிகழுமே யென வருந்தி, ஓரு பாயங் கருதி, அங்குள்ள வேதியர் மனை ஒவ்வொன்றின் கதவையும் தட்டிச் சென்றனன்; விடிந்த பின் மறையோரெல்லோரும் அரசன் திருமுன் வந்து, இரவிலே தங்கள் இல்லங்களின் கதவு தட்டப்பட்டமையை அறிவிக்க, அரசன், அக்குற்றமிழைத்தது தன் கையேயென்று கூறி, அதனைத் துணித்தனன் என்பது. இதனை, " உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தன னோர்நாள் அரைச வேலி யல்லதி யாவதும் புரைதீர் வேலி யில்லென மொழிந்து மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி இன்றவ் வேலி காவா தோவெனச் செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சஞ் சுடுதலி னஞ்சிநடுக் குற்று வச்சிரத் தடக்கை யமரர் கோமான் உச்சிப் பொன்முடி யொளிவளை யுடைத்தகை குறைத்த செங்கோற் குறையாக் கொற்றத்து இறைக்குடிப் பிறந்தோர்க் கிழுக்க மின்மை" என்று சிலப்பதிகாரமும், " எனக்குத் தகவன்றா லென்பதே நோக்கித் தனக்குக் கரியாவான் றானாய்த் - தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் றென்னவனுங் காணா ரெனச்செய் யார்மாணா வினை" என்று பழமொழி வெண்பாவுமகூறுதல் காண்க. பரிமேலழகரும், " முட்டாமற் செலுத்தியவாறு...................... தன்கை குறைத்தான் கண்ணும் காண்க" என்றனர். தீமை செய்தாய் போல் என்றது தீமை செய்யாமையைக் காட்டுகின்றது. (17) பிறங்குங் கோலான் மாறடு கொற்றம் பெறுவேந்தன் உறங்கும் போதுந் தன்னரு ளாணை யுலகெங்கும் அறங்குன் றாவாக் காப்பதை யென்ப வஃதியாதிம் மறங்குன் றாதான் செய்கொலை காவா வழியென்றான். (இ - ள்.) பிறங்கும் கோலால் மாறுஅடு கொற்றம் பெறு வேந்தன் - விளங்குகின்ற செங்கோலினாலே பகைவரை வெல்லும் வெற்றியையுடைய அரசன், உறங்கும் போதும் - தூங்கும் போதும், தன் அருள் ஆணை - அவன் அருளாணையானது, உலகு எங்கும் அறம் குன்றாவா காப்பது என்ப - உலக முற்றும் அறங்கள் குறையா வாகக் காப்பது என்று நூலோர் கூறுவர்; அஃது - அக்கூற்றானது, இம்மறம் குன்றாதான் செய் கொலை காவா வழி - இக் கொலைத் தொழில் குறையாத வேடன் செய்த கொலையைக் காவாவிடத்து, யாது என்றான் - என்ன பயனுடைத்து என்றான். அரசனது வெற்றிக்கு அவனது செங்கோல் காரணம் என்பதை, " வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉம் கோடா தெனின்" என்னும் வாயுறைவாழ்த்தா லறிக. " மாண்ட, அறநெறி முதற்றே யரசின் கொற்றம்" என்றார் பிறரும். கோலான் என்பதற்குக் கோலையுடையன் என்று பிறர் பொருள் கூறியது சிறிதும் சிறப்பின்றாதலறிக. மாறு - பகை; பகைவரை யுணர்த்திற்று. அருளாணை - அருளுடன் கூடிய ஆணை. அரசன் துயிலும் பொழுதும் அவனது தெய்வத் தன்மையாகிய ஆணையானது உலகம் புரத்தலை, " உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்" என்று சீவகசிந்தாமணி கூறுகின்றது. ஆகவென்பது ஈறு தொக்கது. காப்பதை, ஐ : சாரியை. யாது எத்தன்மைத்து. காக்கவில்லை யென்பான் 'காவாவழி' என்றான. அஃது - அவ்வாணை யெனலுமாம். அஃதியாது : குற்றியலிகரம். (18) வாயிலு ளார்த மன்னவன் முன்போய் மன்னாநங் கோயிலின் மாடோர் வேதியன் மாதைக் கொலைசெய்தான் ஆயின னென்றோர் வேடனை முன்விட் டவிந்தாளைத் தாயினன் வந்திங் கிட்டயர் கின்றான் றமியென்றார். (இ - ள்.) வாயில் உளார்தம் மன்னவன் முன் போய் - வாயில் காப்போர் தம் அரசன் முன் சென்று, மன்னா நம் கோயிலின் மாடு - அரசே! நமது அரண்மனை வாயிலின் பக்கத்தில், ஓர் வேதியன் அவிந்தாளைத் தாயினன் வந்து இங்கு இட்டு - ஒரு மறையோன் உயிரிழந்த தன் மனைவியின் உடலை எடுத்து வந்து அங்குப் போட்டு, மாதைக் கொலை செய்தான் ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு - அவளைக் கொலை செய்தானென்று ஒரு வேடனை முன்னே விட்டு, தமி அயர்கின்றான் என்றார் - தனியே வருந்துகின்றான் என்றனர். செய்தான் என்பது செய்தானாயினன் என விரிந்து நின்றது. தாயினன் - தாவினன்; அணைத்தனன்; முற்றெச்சம். வேதியன் வந்து இட்டு முன் விட்டு அயர்கின்றான் என்றும், வாயிலுளார் வேதியன் அயர்கின்றான் என்றார் என்றும் கூட்டுக. (19) இறைமக னஞ்சா வென்குடை நன்றா லென்காவல் அறமலி செங்கோ லஞ்சு பயந்தீர்த் தரசாளும் முறைமையு நன்றான் மண்கலி மூழ்கா1 முயன்றேந்தும் பொறைமையு நன்றா லென்று புலந்து புறம்போந்தான். (இ - ள்.) இறைமகன் அஞ்சா - (அதனைக் கேட்டலும்) அரசன் அஞ்சி, என் குடை நன்று - (உயிர்களுக்குத் தண்ணிய நிழலைத் தரும்) எனது வெண்கொற்றக் குடை நன்றாயிருந்தது; என் காவல் அறம் மலி செங்கோல் - எனது காப்பாகிய அறம் மிக்க செங்கோலானது, அஞ்சு பயம் தீர்த்து அரசு ஆளும் முறைமையும் நன்று - (குடிகளுக்கு) ஐவகை அச்சமும் உண்டாகாமற் போக்கி ஆட்சி புரியும் முறையும் நன்றாயிருந்தது; மண்கலி மூழ்கா முயன்று ஏந்தும் பொறைமையும் நன்று - நிலவுலகம் கலியில் மூழ்காமல் தாளாண்மையுடன் தாங்கும் பொறையும் நன்றாயிருந்தது; என்று புலந்து புறம் போந்தான் - என்று தன்னை வெறுத்துக் கொண்டு புறத்தே வந்தான். செங்கோலால் அரசாளும் முறைமையும் எனவும், என் காவலும் செங்கோலும் முறைமையும் எனவும் விரித்துரைத்தலுமாம். அஞ்சு என்பதனை இரட்டுற மொழிதலாக்கி, அஞ்சு கின்ற எனவும், ஐந்து எனவும் பொருள் கொள்க. ஐந்து பயம் - அரசனாலும், அரசன் றமராலும், பகைவராலும், கள்வராலும், ஏனை உயிர்களாலும் உண்டாகும் அச்சம்; " மாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலை தானதனுக் கிடையூறு தன்னாற்றன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தாற் கள்வரா லுயிர்தம்மால் ஆனபய மைந்துந்தீர்த் தறங்காப்பா னல்லனோ" என்று திருத்தொண்டர் புராணஙகூறுதல் காண்க. கலி - தீமை; துன்பம். மூழ்கா : ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். நன்று என்பது இகழ்ச்சிக் குறிப்பு : ஆல் அசை. (20) வேதிய னிற்குந் தன்மை தெரிந்தான் மெலிவுற்றான் சாதியின் மிக்காய் வந்த துனக்கென் றளர்கின்றாய் ஓதுதி யென்னக் காவல னைப்பார்த் துரைசான்ற நீதியு ளாய்கே ளென்றுரை செய்வா னிகழ்செய்தி. (இ - ள்.) வேதியன் நிற்கும் தன்மை தெரிந்தான் மெலிவுற்றான் - மறையோன் (வந்து) நிற்கும் தன்மையைக் கண்டு மெலிந்து, சாதியின் மிக்காய் - வருணத்தாற் சிறந்தவனே, தளர்கின்றாய் - நீ வருந்துகின்றனையே, உனக்கு வந்தது என் - நினக்கு நேர்ந்த துன்பம் யாது, ஓதுதி என்ன - சொல்லக் கடவாயென்று வினவ, காவலனைப் பார்த்து - அம்மறையோன் மன்னனை நோக்கி, உரை சான்ற நீதியுளாய் கேள் என்று - புகழமைந்த நீதியுடையாய் கேட்பாயாகவென்று, நிகழ் செய்தி உரை செய்வான் - நடந்த செய்தியைக் கூறுவானாயினன. நிற்குந் தன்மை - துன்பத்தில் ஆழ்ந்து நிற்கும் நிலைமை. தெரிந்தான், மெலிவுற்றான் என்பன முற்றெச்சங்கள். மெலிதல் - உளம் வாடுதல். ஓதுதி : ஒருமையேவல்; த் : எழுத்துப்பேறு. அரசன் தெரிந்து மெலிந்து ஓதுதியென்ன மறையோன் உரை செய்வான் என்க. (21) இன்றிவ ளைக்கொண் டோர்வட நீழ லிடையிட்டுச்1 சென்றுத ணீர்கொண் டியான்வரு முன்னிச் சிலைவேடன் கொன்றய னின்றா னென்றுலை யூட்டுங் கொலைவேல்போல் வன்றிறன் மாறன் செவிநுழை வித்தான் மறையோனால். (இ - ள்.) இன்று இவளைக் கொண்டு ஓர் வட நீழல் இடையிட்டுச் சென்று - இன்று இவளை அழைத்துக் கொண்டு வந்து ஓர் ஆலமரத்தின் நிழலின்கண் இருத்தி (நீரின் பொருட்டுச்) சென்று, தண் நீர் கொண்டு யான் வரு முன் - தண்ணீரினை முகந்து கொண்டு யான் வருதற்கு முன்னரே, இச்சிலை வேடன் - இந்த வில் வேடனானவன், கொன்று அயல் நின்றான் என்று - கொலை புரிந்து அருகே நின்று கொண்டிருந்தான் என்று (இச்சொல்லை), உலை ஊட்டும் கொலை வேல் போல் - (கொல்லன்) உலையிற்காய்ச்சிய கொலைத் தொழிலையுடைய வேல் போல, மறையோன் - அவ்வேதியன், வல்திறல் மாறன் செவி நுழைவித்தான் - மிக்க வலியினையுடைய பாண்டியனது செவியில் நுழைவித்தான். தணீர: ணகரம் தொக்கது. கொண்டியான: குற்றியலிகரம். வன்றிறல்: ஒரு பொருளி ருசொல். வேல் நுழைந்தாற் போல் நுழையச் செய்தான் என்க; இச் சொல் செவியுறும் பொழுதே அரசன் அளவற்ற வேதனையெய்தினான் என்றபடி. முற்றுவினை முன் வந்தது. ஆல் : அசை. (22) அந்தணன் மாற்றந் தன்னையு முட்கொண்ட டறநோக்குஞ் சந்தன வெற்பன் மறவனை நோக்கத் தாழ்ந்தன்னான் எந்தை பிரானே நாயடி யேனின் றெய்ப்பாற வந்து புகுந்தே னந்த மரத்தின் மருங்கோர்சார். (இ - ள்.) அறம் நோக்கும் சந்தன வெற்பன் - அறத்திற் பிழை யாமையையே குறிக் கொள்ளும் பொதியின் மலையையுடைய பாண்டியன், அந்தணன் மாற்றம் தன்னையும் உட்கொண்டு - மறையோன் சொல்லையும் கேட்டு மனத்திற் கொண்டு, மறவனை நோக்க - வேடனைப் பார்க்க, அன்னான் தாழ்ந்து - அவ்வேடன் வணங்கி, எந்தை பிரானே - எம் தந்தையாகிய பெருமானே, நாய் அடியேன் - அடி நாயேனாகிய யான், இன்று எய்ப்பு ஆற - இன்று இளைப்பாறுதற் பொருட்டு, அந்த மரத்தின் மருங்கு ஓர் சார் வந்து புகுந்தேன் - அவ்வால மரத்தின் அடியில் ஒரு பக்கத்தில் வந்தடைந்தேன். மாற்றந் தன்னையும், தன் : சாரியை; வேடன் மாற்றத்தையும் கேட்க என்னும் பொருள் குறித்தலால் உம்மை எச்சப் பொருட்டு. உட்கொள்ளல் - கேட்டலும், மனத்திற் கொள்ளலும். நோக்கும் என்னும் பெயரெச்சம் வெற்பன் என்பதன் விகுதியைக் கொள்ளும். சந்தன வெற்பு - சந்தன மரங்களையுடைய மலை; பொதியில். நோக்க - நிகழ்ந்ததைச் சொல்லுமாறு நோக்கினாற் கட்டளையிட. அறத்தை நோக்குவோனாகலின் அந்தணன் சொல்லைக் கேட்ட வளவில் வேடனை ஒறுத்தல் செய்யாது, அவன் வாய் மொழியையும் கேட்டறிய விரும்பினான் என்க. எத்துணையும் சிறுமையுடைய ஏவலாளன் என்பான் 'நாயடியேன்' என்றான். (23) ஐயே நானுங் கொன்றவ னல்லேன் கொன்றாரைக் கையேன் வேறுங் கண்டில னென்றா னிவளாகம் எய்யே றுண்ட வாறெவ னென்றா ரெதிர்நின்றார் மெய்யே யையா யானறி யேனிவ் விளைவென்றான். (இ - ள்.) ஐயே - ஐயனே, நானும் கொன்றவன் அல்லேன்- நானும் இவளைக் கொலை செய்தவ னல்லேன்; கையேன் - கீழ் மகனாகிய யான், வேறு கொன்றாரையும் கண்டிலன் என்றான்- வேறு கொன்ற வரையுங் காணேன் என்று கூறினான்; எதிர் நின்றார் - எதிர் நின்ற அமைச்சர், இவள் ஆகத்து எய் ஏறுண்டவாறு எவன் என்றார் - (ஆயின்) இவள் உடலிலே அம்பு தைத்துருவியது எங்ஙனம் என்றார், ஐயா இவ்விளைவு மெய்யேயான் அறியேன் என்றான் - ஐயா! இந்நிகழ்ச்சியை உண்மையாகவே யான் அறியேன் என்றான். ஐயனே யெனற்பாலது வேட்டுவர் பேசு முறைக்கியைய 'ஐயே' என நின்றது; ஐ என்பது விளியுரு பேற்றதுமாம்; ஐ - தலைவன்; அரசன். கை - சிறுமை. வேறு கொன்றாரையும் என உம்மையை மாறுக. அன்னான் எய்ப்பாற வந்து புகுந்தேன் கொன்றவ னல்லேன் கண்டிலன் என்றான்; என மேற் செய்யுளோடு இயைத்துரைக்க. எய் - எய்யப்படுவது; அம்பு. ஏறுண்டவாறு எவன் - தைத்த விதம் என்னை. நின்றார் : பெயர். ஐயா : பன்மையி லொருமை. (24) இக்கொலை செய்தான் யானல னென்னா துளனென்னத் தக்கவ னேயோ தறுகண் மறவ னுரைமெய்யோ சிக்க வொறுத்தா லல்லதை யுண்மை செப்பானென் றொக்க வுரைத்தார் மந்திர ருள்ளார் பிறரெல்லாம். (இ - ள்.) (என்ற வளவில்) மந்திரர் உள்ளார் பிறர் எல்லாம் - அமைச்சருளிட்ட அனைவரும், தறுகண் மறவன் - வன்கண்மையுடைய வேடனாகிய இவன், இக்கொலை செய்தான் யான் அலன் என்னாது - இந்தக் கொலையினைச் செய்தவன் யானல்லேன் என்று கூறாது, உளன் என்னத் தக்கவனேயோ - யான் செய்தேன் என்று உண்மை கூறுந் தகுதியையுடையவனோ, உரை மெய்யோ - (இவன் கூறும்) சொல் மெய்யாகுமோ, சிக்க ஒறுத்தால் அல்லது உண்மை செப்பான் - மிகுதியாகத் தண்டித்தாலன்றி உண்மையைக் கூறமாட்டான், என்று ஒக்க உரைத்தார் - என்று ஒரு சேரக் கூறினர். அன் விகுதி தன்மைக்கண் வந்தது. உளன் - செய்துளேன். கொடுமையை இயல்பாகவுடைய வேடனாகலின் இவன் அலனென்னாது உளனென்னத் தக்கவனோ என்க. ஏகாரம் இசை நிறை. ஓகாரம் எதிர்மறைப் பொருட்டு. சிக்க - யாப்புடைத்தாக; நன்கு. அல்லதை, ஐ : சாரியை. அமைச்சரும் பிறருமாக உள்ளாரெல்லாரும் சேரவுரைத்தாரென்க. (25) மன்னன் றானு மற்றது செய்ம்மின் னெனமள்ளர் பின்னந் தண்டஞ் செய்தனர் கேட்கப் பிழையில்லான் முன்னஞ் சொன்ன சொற்பெய ரானாய் மொழியாநின் றின்னந் தீரத் தேருமி னென்றா னென்செய்வான். (இ - ள்.) மன்னன் தானும் மற்றது செய்ம்மின் என - அரசனும் அதனைச் செய்யுங்கள் என்று கட்டளையிட, மள்ளர் பின்னம் தண்டம் செய்தனர் கேட்க - ஏவலாளர் பின்பு தண்டத்தினைச் செய்து கேட்க, பிழை இல்லான் - குற்றமற்ற அவ்வேடன், முன்னம் சொன்ன சொல் பெயரானாய் மொழியா நின்று - முன் சொன்ன சொல்லினின்றும் மாறுபடாது கூறாநின்று, இன்னம் தீரத் தேருமின் என்றான் - இன்னும் முற்ற ஆராயுங்கள் என்று கூறினான்; என் செய்வான் - (இதையன்றி) வேறு யாது செய்யவல்லன். தான், மற்று என்பன அசைகள். பின்னம், முன்னம், இன்னம் என்பவற்றில் அம் சாரியை; பகுதிப் பொருள் விகுதியுமாம். செய்தனர் : முற்றெச்சம். தீர - முடிவுற. மொழியா நின்று என்பதனை முற்றாக்கி; பிழையில்லான் மொழியா நின்றான்; பாண்டியன் தேருமின் என்றான், என்று பிறர் பொருள் கூறுவாராயினர். (26) ஆற்ற வொறுக்குந் தண்டமு மஞ்சா னறைகின்ற கூற்றமு மொன்றே கொன்ற குறிப்பு முகந்தோற்றான் மாற்றவ ரேயோ மாவோ புள்ளோ வழிவந்த கோற்றொடி யைக்கொன் றென்பெற வல்லான் கொலை செய்வான். (இ - ள்.) ஆற்ற ஒறுக்கும் தண்டமும் அஞ்சான் - மிகவும் ஒறுக்கும் தண்டத்திற்கும் அஞ்சுகின்றிலன்; அறைகின்ற கூற்றமும் ஒன்றே - இவன் கூறுகின்ற மறுமொழியும் (வேறுபாடின்றி) ஒன்றேயாயுள்ளது; கொன்ற குறிப்பும் முகம் தோற்றான் - கொன்ற குறிப்பும் முகத்திலே தோன்றப் பெற்றிலன்; மாற்றவரேயோ மாவோ புள்ளோ - தனக்குப் பகைவரோ (அன்றி) விலங்கோ பறவையோ, வழி வந்த கோற்றொடியைக் கொன்று என்பெற வல்லான் - வழியில் வந்த பார்ப் பனியைக் கொல்லுதலால் என்ன பயனைப் பெறுவானாய், கொலை செய்வான் - (இவன், அவளைக்) கொலை செய்தற் குரியனாவான். " அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் கடுத்தது காட்டு முகம்" என்பவாகலின், இவன் கொன்றிருப்பானாயின் அக் குறிப்பு முகத்திலே தோன்ற வேண்டும்; அங்ஙனம் தோன்றிற்றில்லை யென்பான் 'கொன்ற குறிப்பு முகந் தோற்றான்' என்றான். பகைவர், விலங்கு, புள் என்பவற்றுள் ஒன்றாயின் இவன் கொல்லுதல் பொருந்தும், அவற்றுள் ஒன்றல்லாத பார்ப்பனியைக் கொல்லுதலால் இவன் கொன்றா னென்பது எங்ஙனம் என்பான் 'மாற்றவரேயோ....கொலை செய்வான்' என்றான். ஓகாரங்கள் தெரிநிலைப் பொருளன. கோற்றொடி - கோல் போற் றிரண்ட வளையினை யுடையாள்; அன்மொழித் தொகை. 'மாற்றவ ரேயோ மாவோ புள்ளோ' என்பதற்கு, அவளைக் கொன்றது அம் மறையோனுக்குப் பகைவராயினாரோ அன்றி விலங்கோ பறவையோ என்றும், 'கொலை செய்வான்' என்பதற்கு வேடன் என்றும் பிறர் பொருள் கூறுவாராயினர். இதுவும் வருஞ் செய்யுளும் அரசன் உட்கோள். (27) கைதவ னாமிக் கானவ னேயோ பிறரேயோ செய்தவர் யாரே யிக்கொலை வேட்டஞ் செய்தோர்மா எய்த விலக்கிற் றப்பிய கோறா னேறுண்டிம் மைதவழ் கண்ணாள் மாய்ந்தன ளேயோ வறியேனால். (இ - ள்.) இக்கொலை செய்தவர் - இந்தக் கொலையினைப் புரிந்தவர், கைதவனாம் இக்கானவனேயோ - வஞ்சனாகிய இவ்வேடன்றானோ, பிறரேயோ - (அன்றிப்) பிறரோ, யாரே -யாரோ, வேட்டம் செய்தோர் மா எய்த இலக்கில் தப்பிய கோல்தான் ஏறுண்டு - (அல்லது) வேட்டையாடுவோர் விலங்கினை எய்த குறிப்பினின்றும் பிழைத்த கணைதான் தைத்தலால், இம் மைதவழ் கண்ணாள் மாய்ந்தனளேயோ - இந்த மை தீட்டிய கண்களையுடையவள் இறந்தனளோ, அறியேன் - அறிந்திலேன். கைதவன் என்றது வேடுவனென்னும் பொதுமை குறித்தது. இவன் கொன்றிலனென்று துணிதலும் அரிதென்பான் 'கைதவனா மிக்கா னவனேயோ' என்றான். ஏகாரங்கள் இசை நிறைக்க வந்தன. தான், ஆல் : அசை. (28) என்னா முன்னித் தென்னவ னின்ன மிதுமுன்னூல் தன்னா லாயத் தக்கதை யென்றான் றகவிற்றன் அன்னா ரந்நூ லாய்ந்திது நூலா லமையாதால் மன்னா தெய்வத் தாலே தேறும் வழியென்றார். (இ - ள்.) என்னா தென்னவன் முன்னி - என்று பாண்டியன் நினைத்து, இன்னம் இது முன்னூல் தன்னால் ஆயத் தக்கது என்றான் - இன்னும் இது அற நூலால் ஆராய்ந்து தெளியத் தக்கது என்றான்; தகவில் தன் அன்னார் அந்நூல் ஆய்ந்து - தகுதியில் தன்னையொத்தவர்களாகிய அமைச்சர்கள் அவ்வற நூலை ஆராய்ந்து, மன்னா - வேந்தனே, இது நூலால் அமையாது - இது நூலாராய்ச்சியாலே தெளியத்தக்கதன்று; தெய்வத்தாலே தேறும் வழி என்றார் - தெய்வத்தினாலே தெளியும் நெறியினையுடையது என்றார்கள். முன்னூல் - தொன்மையாகிய நூல். தக்கதை, ஐ : சாரியை: அரசன் எவ்வளவு தகுதி யுடையனோ அவ்வளவு தகுதியுடைய ரென்பார் 'தகவிற் றன்னன்னார்' என்றார். தன்னன்னார் - புரோகிதருமாம். ஆராய்ந்து, அறியலாகாமையால், இது நூலாலமையாது தெய்வத்தாலே தேறும் வழியென்றா ரென்க. ஆல் : அசை. தேறும் வழி - தெளியும் வழியினை யுடையது; தெய்வத்தின் வழியாற் றெளியற்பாலதென்பது. (29) வேந்தர்கள் சிங்கம் வேதிய னைப்பார்த் திதுதீர ஆய்ந்துன துள்ளக் கவலை யொழிப்பே னஞ்சேனின் ஏந்திழை யீமக் கடனிறு விப்போ தென்றேவித் தேந்துணர் வேங்கைத் தார்மற வோனைச் சிறைசெய்தான். (இ - ள்.) வேந்தர்கள் சிங்கம் - (அதனைக் கேட்ட) மன்னர்களுட் சிங்கம் போன்ற பாண்டியன், வேதியனைப் பார்த்து - மறையவனை நோக்கி, இது தீர ஆராய்ந்து உனது உள்ளக் கவலை ஒழிப்பேன் - இதனை நன்கு ஆராய்ந்து உன் மனக் கவலையைப் போக்குவேன்; அஞ்சேல் - நீ அஞ்சற்க; நின் ஏந்திழை ஈமக்கடன் நிறுவிப் போது என்று ஏவி - நின் மனைவியின் ஈமக் கடன்களை முடித்து வருக என்று போக்கி, தேம்துணர் வேங்கைத் தார் மறவோனைச் சிறை செய்தான் - தேன் சிந்தும் பூங்கொத்துக்களையுடைய வேங்கை மலர் மாலையையணிந்த வேடனைச் சிறைப்படுத்தினான். பகை வேந்தர்களாகிய யானைகளுக்கு ஆண் சிங்கம் போன்றவன் என்றுமாம். ஏந்திழை : அன்மொழித்தொகை. போது- புகுது; வா, இப்போது என்று பிரிக்கலாமெனினும், வருகவென்று கூறல் வேண்டுமாகலின் இது சிறப்பின்று. வேங்கையின் துணர்த்தார் என்று கூட்டலுமாம். (30) மின்னனை யாடன் செய்கடன் முற்றா மீண்டோனைத் தன்னமர் கோயிற் கடைவயின் வைத்துத் தானேகிக் கொன்னவில் வேலான் றங்கள் குடிக்கோர் குலதெய்வம் என்ன விருந்தா ரடிகள் பணிந்தா னிதுகூறும். (இ - ள்.) மின் அனையாள் தன் செய்கடன் முற்றா மீண்டோனை - மின்னலையொத்த மனைவிக்கு இறுக்க வேண்டிய கடன்களைச் செய்து முடித்துத் திரும்பி வந்த மறையோனை, தன் அமர் கோயில் கடைவயின் வைத்து - தன்னால் விரும்பப்பட்ட அரண்மனை வாயிலில் வைத்து விட்டு, கொல்நவில் வேலான் தான் ஏகி - கொலைத் தொழில் பயின்ற வேற்படை யேந்திய பாண்டியன் தான் சென்று, தங்கள் குடிக்கு ஓர் குலதெய்வம் என்ன இருந்தார் - தமது குடிக்கு ஒரு குலதெய்வமாக எழுந்தருளியுள்ள சோம சுந்தரக் கடவுளின், அடிகள் பணிந்தான் இது கூறும் - திருவடிகளை வணங்கி இதனைக் கூறா நின்றான். தவிராது இறுக்கத் தக்கது என்பார் 'செய்கடன்' என்றார். தன் அமர் கோயில் - தன்னால் விரும்பப்பட்ட கோயில்; தனது விருப்பம் பொருந்திய கோயில் என விரித்தலுமாம். அமர்தல் - உளம் மேவுதல். குலதெய்வமென்று உலகங் கூற என்றுமாம். பணிந்தான்: முற்றெச்சம். இது வென்றது பின் வருவதனை. (31) [கொச்சகக் கலிப்பா] மன்றாடு மணியேயிம் மறவன்றான் பார்ப்பனியைக் கொன்றானோ பிறர்பிறிதாற் கொன்றதோ விதுவறநூல் ஒன்றாலு மளப்பரிதாக் கிடந்ததா லுன்னருளால் என்றாழ்வு கெடத் தேற்றா யென்றிரந்தா னவ்வேலை. (இ - ள்.) மன்று ஆடும் மணியே - வெள்ளியம்பலத்தில் ஆடியருளும் மாணிக்கமே, இம்மறவன் தான் பார்ப்பனியைக் கொன்றானோ - இவ்வேடன் தான் அப்பார்ப்பனியைக் கொன்றானோ (அன்றி), பிறர் பிறிதால் கொன்றதோ - பிறர் பிற காரணத்தாற் கொன்றதோ, இது அறநூல் ஒன்றாலும் அளப் பரிதாக் கிடந்தது - இந் நிகழ்ச்சி அறநூல் முதலிய ஒன்றாலும் அளந்தறிதற்கரியதாகக் கிடக்கின்றது; உன் அருளால் என் தாழ்வு கெடத்தேற்றாய் என்று இரந்தான் - உனது திருவருளால் எனது குறைவுதீரத் தெளிவிப்பாயாக என்று குறையிரந்தான்; அவ்வேலை - அப்பொழுது. கொன்றதோ இக்கொலையென்க. அறநூலாலும் வேறொன்றாலும்; அறநூல்களுள் ஒன்றாலும் என்னலுமாம். அரிதாக என்பது ஈறுதொக்கது. ஆல் : அசை. என் தாழ்வு - எனக்கு உண்டாகும் பழி. (32) திருநகரின் புறம்பொருசார் குலவணிகத் தெருவின்கண் ஒருமனையின் மணமுளதங் கந்தணனோ டொருங்குநீ வருதியுன துளந்தேறா மாற்றமெலாந் தேற்றுதுமென் றிருவிசும்பி னகடுகிழித் தெழுந்ததா லொருவாக்கு. (இ - ள்.) திருநகரின் புறம்பு ஒருசார் வணிகர் குலத் தெருவின் கண் - இத் திருநகரத்தின் புறம்பே ஒரு பக்கத்தில் வணிகர் குலத் தெருவிலுள்ள, ஒரு மனையில் மணம் உளது - ஒரு வீட்டில் மணவினை நிகழ்வதுளது; அங்கு அந்தணனோடு ஒருங்கு நீ வருதி - அவ்வில்லிற்கு அம்மறையவனோடு நீ ஒரு சேர வருவாயாக; உனது உளம்தேறா மாற்றம் எலாம் தேற்றுதும் என்று - உன் உள்ளந் தெளியாத மாறுபாட்டினையெல்லாம் தெளிவிப்போமென்று, இரு விசும்பின் அகடு கிழித்து ஒரு வாக்கு எழுந்தது - பெரிய வானினது வயிற்றைக் கீண்டு கொண்டு ஓர் அசரீரிவாக்கு எழுந்தது. திருநகர் - கோயில் எனலும் பொருந்தும். குலம் - சிறப்புமாம். மாற்றம் - செய்தி யென்றுமாம். விசும்பினின்றும் தோன்றியதனை 'விசும்பினகடு கிழித்தெழுந்தது' என்றார். ஆல் : அசை. அவ்வேலை ஒரு வாக்கு எழுந்தது என்க. (33) திருவாக்குச் செவிமடுத்துச் செழியன்றன் புறங்கடையிற் பெருவாக்கு மறையவனோ டொருங்கெய்திப் பெரும்பகல்போய்க் கருவாக்கு மருண்மாலைக் கங்குல்வாய்த் தன்னைவேற் றுருவாக்கிக் கடிமனைபோ யொருசிறைபுக் கினிதிருந்தான். (இ - ள்.) திருவாக்குச் செவிமடுத்து - அத் திருவாக்கினைக் கேட்டு, செழியன் - பாண்டியன், தன் புறங்கடையில் பெருவாக்கு மறையவனோடு ஒருங்கு எய்தி - தனது கடைவாயிலுள்ள மறைகளையுணர்ந்த அந்தணனோடும் ஒருங்கு கூடி, பெரும் பகல் போய் - பெரிய பகற்பொழுது கழிந்து, கரு ஆக்கும் மருள் மாலை கங்குல்வாய் - கருமையை உண்டாக்கும் மயங்கிய மாலைப் பொழுதின் இருளில், தன்னை வேறு உருவாக்கி - தன்னை வேற்றுருவமாக்கிக் கொண்டு, கடிமனை போய் ஒரு சிறைபுக்கு இனிது இருந்தான் - மணவீடு சென்று ஒரு பக்கத்திற் புகுந்து இனிதே இருந்தனன். செவி நிரம்பக் கேட்டான் என்பார் 'செவி மடுத்து' என்றார். புறங்கடை : இலக்கணப் போலி. பெருவாக்கு - பெருமையுடைய வாக்கு; மறை. கரு - கருமை. மருள்மாலை - பகலும் இரவும் மயங்கிய மாலை; மயக்கத்தைச் செய்யும் மாலை. வேற்றுரு வாக்கல் - அரச கோல மின்றி வேறு கோலங் கொள்ளல். பிறரால் அறியப்படாமல் இடையூறின்றி யிருந்தான் என்பார் 'இனிதிருந்தான்' என்றார். (34) அன்றிறைவ னருளாலங் கவர்கேட்க வம்மனையின் மன்றல்மகன் றனக்களந்த நாளுலப்ப மறலியிருட் குன்றமிரண் டெனவிடுத்த கொடும்பாசக் கையினர்வாய் மென்றுவருஞ் சினத்தவரி லொருவனிது விளம்புமால்.1 (இ - ள்.) அன்று இறைவன் அருளால் - அப்பொழுது சோம சுந்தரக் கடவுளின் திருவருளால், அங்கு அவர் கேட்க - அங்கே பாண்டியனும் மறையோனும் கேட்குமாறு, அம்மனையில் - அம்மண வீட்டின்கண், மன்றல் மகன் தனக்கு அளந்த நாள் உலப்ப - மணமகனுக்கு வரையறுத்த வாழ்நாள் முடிதலால், மறலி - கூற்றுவன், இரண்டு இருட்குன்றமென விடுத்த - இரண்டு கரியமலை போல விடுத்த, கொடும் பாசக்கையினர் - கொடிய பாசத்தைக் கையிற் கொண்டவராய், வாய் மென்று வரும் சினத்தவரில் - வாயை மென்று வரும் சினத்தையுடைய காலபடர் இருவருள், ஒருவன் இது விளம்பும் - ஒருவன் இதனைக் கூறுவான். அளந்த - வரையறுத்த; "அளந்தன போக மவரவ ராற்றால்" என்பது காண்க. விடுத்த என்னும் பெயரெச்சம் சினத்தவர் என்பதன் விகுதி கொண்டு முடியும். நாளுலத்தலால் மறலிவிடுத்த சினத்தவரில் ஒருவன் இறைவனருளால் அது கேட்க இது விளம்பும் என முடிக்க. ஆல் :அசை. (35) இன்றேயிங் கிவனுயிரைத் தருதிரெனு மிரும்பகட்டுக் குன்றேறுங் கோனுரையாற் கொள்வதெவன் பிணியுடம்பின் ஒன்றேனு மிலனொருகா ரணமின்றி யுயிர்கொள்வ தன்றேயென் செய்துமென மற்றவனீ தறைகிற்பான். (இ - ள்.) இன்றே இங்கு இவன் உயிரைத் தருதிர் எனும்- இப்பொழுதே இங்கு இம்மணமகன் உயிரைக் கொண்டு வருவீராக என்று கூறிய, இரும்பகட்டுக் குன்று ஏறும்கோன் உரையால் - பெரிய எருமைக் கடாவாகிய மலையிலேறும் நம் தலைவனது ஆணையால், கொள்வது எவன் - இவனுயிரைக் கவர்வது எங்ஙனம்; உடம்பில் பிணி ஒன்றேனும் இலன் - உடலின்கண் ஒரு பிணியும் இல்லாதவனாயுளன், ஒரு காரணம் இன்றி உயிர் கொள்வது அன்றே - ஒரு காரணமுமில்லாமல் ஓருயிரைக் கொள்வது இயல்வதன்றே, என் செய்தும் என - என்ன செய்வோம் என்று வினவ, மற்றவன் ஈது அறைகிற்பான்- மற்றொருவன் இதனைக் கூறுவான். இரும்பகடு - கரிய கடாவுமாம். தருதிரென்பது கோன் உரையாகும்; காரணமின்றி உயிர் கொள்வதன்றே; பிணி ஒன்றேனு மிலன்; ஆகலின் அவனுரையாற் கொள்வது எவன்; என்செய்தும்; என்றிங்ஙனம் உரைத்துக் கொள்க. மற்றவன் - மற்றையான். (36) ஆற்றாலே றுண்டகணை யருகொதுங்கும் பார்ப்பனியைக் காற்றால்வீழ்த் தெவ்வாறு கவர்ந்தேமப் படியிந்தச் சாற்றார வாரத்திற் றாம்பறுத்துப் புறநின்ற ஈற்றாவை வெருளவிடுத் திவனாவி கவர் கென்றான். (இ - ள்.) ஆற்று ஆல் அருகு ஒதுங்கும் பார்ப்பனியை - வழியிலுள்ள ஆலமரத்து நிழலினருகு ஒதுங்கிய பார்ப்பனியின் உயிரை, ஏறுண்ட கணை காற்றால் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் - (அம் மரத்தின் கண் முன்னரே) சிக்கிக் கிடந்த கணையைக் காற்றினால் வீழ்த்தி எங்ஙனம் கவர்ந்தோமோ, அப்படி - அவ்வாறே, புறம் நின்ற ஈற்று ஆவை - புறத்தே நின்ற புனிற்றுப் பசுவினை, இந்தச் சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்து வெருள விடுத்து - இந்த மணவிழாவின் ஆரவாரத்தினாலே கயிற்றையறுத்து வெருண்டோடச் செய்து, இவன் ஆவி கவர்க என்றான் - இவனுயிரை வௌவுவேமாக என்றான். சாறு - விழா. ஈற்றா - கற்றினையீன்ற அணிமையையுடைய பசு; புனிற்றா. கவர்கவென வியங்கோள் தன்மைக்கண் வந்தது; அகரந்தொகுத்தல்; கவர்கும் என்னும் தன்மைப் பன்மை விகாரமாயிற்றுமாம். பார்ப்பனி உயிரை எங்ஙனம் கவர்ந்தேமோ அங்ஙனம் இவனாவியைக் கவர்வேம் என்றானென்க. (37) அந்தமொழி கேட்டரச னருமறையோய் கேட்டனையோ இந்தமொழி யெனப்பனவ னிவனிவ்வா றிறந்தாலென் பைந்தொடியா ளிறந்ததுமப் படியேயென் மனக்கவலை சிந்தவிது காண்பேனென் றொருங்கிருந்தான் றென்னனொடும். (இ - ள்.) அந்த மொழி அரசன் கேட்டு - அவ் வார்த்தையை மன்னவன் கேட்டு, அரு மறையோய் - அரிய வேதங்களையுணரும் அந்தணனே, இந்த மொழி கேட்டனையோ என - இவ் வார்த்தையைக் கேட்டாயோ என வினவ, பனவன் - அப்பார்ப்பனன், இவன் இவ்வாறு இறந்தால் - இம்மணமகன் இங்குக் கூறியவாறே இறந்து படுவானாயின், என் பைந்தொடியாள் இறந்ததும் அப்படியே - என் மனைவி இறந்ததும் அங்ஙனமே தான், என் மனக் கவலை சிந்த இது காண்பேன் என்று - எனது மனத் துன்பங்கெட இந்நிகழ்ச்சியைக் காண்பேனென்று கூறி, தென்னனொடும் ஒருங்கு இருந்தான் - பாண்டியனோடும் ஒரு சேர இருந்தனன். அப்படியே - அங்ஙனமே யென்பது உண்மையாகும். (38) ஒட்டியபல் கிளைதுவன்றி யொல்லொலிமங் கலந்தொடங்கக் கொட்டியபல் லியமுழங்கக் குழுமியவோ சையின் வெருண்டு கட்டியதாம் பிறப்புனிற்றுக் கற்றாவொன்1 றதிர்ந்தோடி முட்டியதான் மணமகனை முடிந்ததா லவனாவி. (இ - ள்.) ஒட்டிய பல் கிளைதுவன்றி ஒல்லொலி மங்கலம் தொடங்க - நெருங்கிய பல சுற்றத்தாரும் சேர்ந்து ஒல்லெனும் ஒலியுடன் மணவினையைத் தொடங்கவும், கொட்டிய பல் இயம் முழங்க - அடிக்கப்பட்ட பல் இயங்களும் ஒலிக்கவும், குழுமிய ஓசையின்- இவை ஒருங்கு தொக்க பேரொலியால், கட்டிய தாம்பு இற - கட்டப்பட்ட கயிறு அறுமாறு, புனிற்றுக் கன்று ஆ ஒன்று - இளங் கன்றினையுடைய பசு ஒன்று, வெருண்டு அதிர்ந்து ஓடி மணமகனை முட்டியது - அஞ்சி அலறி ஓடி மணமகனை முட்டியது; அவன் ஆவி முடிந்தது - அவன் உயிர் முடிந்தது. ஒட்டிய - அணுகிய. மங்கலந் தொடங்க - கடிசூத்திரம் அணியத் தொடங்குகையில் என்றுமாம். கொட்டப் பட்டனவாகி முழங்கவென்று கொள்க. புனிற்றுக் கற்றா - ஈன்றணிய கன்றினையுடைய பசு கன்று என்பது வலித்தது. ஆல் இரண்டும் அசை. (39) மணமகனே பிணமகனாய் மணப்பறையே பிணப்பறையாய் அணியிழையார் வாழ்த்தொலி2போ யழுகையொலி யாய்க்கழியக்3 கணமதனிற் பிறந்திறுமிக் காயத்தின் வரும்பயனை உணர்வுடையார் பெறுவருணர் வொன்றுமிலார்க் கொன்றுமிலை. (இ - ள்.) மணமகனே பிண மகனாய் - மணப் பிள்ளையே உயிர் கழிந்த பிணமாகவும், மணப்பறையே பிணப் பறையாய் - மண வாத்தியமே சாப்பறையாகவும், அணி இழையார் வாழ்த்து ஒலி அழுகை ஒலியாய் போய்க் கழிய - அணியப்பட்ட கலன்களையுடைய மங்கல மகளிரின் வாழ்த்தொலியே அழுகையொலியாகவும் மாறி முடிய, கணம் அதனில் பிறந்து இறும் இக்காயத்தின் வரும் பயனை - கணப்பொழுதிற்றோன்றி மறையும் இவ்வுடலினாலாய பயனை, உணர்வு உடையார் பெறுவர் - அறிவுடையார் அடைவர்; உணர்வு ஒன்றும் இலார்க்கு ஒன்றும் இலை - அறிவு சிறிதும் இல்லாதவர்க்கு அப்பயனெய்துதல் சிறிதும் இல்லை. உயிர் நீங்கிய உடம்பைப் பிணமகன் என்றார்; " படுமகன் கிடக்கை காணூஉ" என்பது புறப்பாட்டு. போய்க்கழிய எனக் கூட்டி, மாறி முடிய வென்றுரைக்க.இந்நிகழ்ச்சியை எடுத்துக் காட்டாகக் கொண்டு, இங்ஙனம் கணத்திற் பிறந்தழியும் காயம் என்றார். இக்காயம் - இத்துணை நிலையாமையுடைய உடம்பு. காயத்தின் வரும் பயனாவது பிறவாமைக் கேதுவாகிய அறத்தினைச் செய்து கோடல். நில்லாதவுடம்பு நிற்கும் பொழுதே நிலையாய அறத்தைச் செய்ய வேண்டுமென்றவாறு. ஒன்றும் என்பது சிறிது மென்னும் பொருட்டு. " மன்றங் கறங்க மணப்பறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் - பின்றை ஒலித்தலு முண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமா மாண்டார் மனம்" என்னும் நாலடியார்ச் செய்யுளின் பொருள் இதில் விளக்கமுற அமைந்திருத்தல் காண்க. (40) கண்டானந் தணனென்ன காரியஞ்செய் தேனெனத்தன் வண்டார்பூங் குழன்மனைவி மாட்சியினுங் கழிதுன்பங் கொண்டான்மற் றவனொடுந்தன் கோயில்புகுந் தலர்வேப்பந் தண்டாரா னமைச்சர்க்கும் பிறர்க்குமிது சாற்றினான். (இ - ள்.) அந்தணன் கண்டான் - மறையோன் அதனைக் கண்டு, என்ன காரியம் செய்தேன் என்று - யாது காரியம் செய்து விட்டேனென்று இரங்கி, தன் வண்டு ஆர் பூங்குழல் மனைவி மாட்சியினும் கழி துன்பம் கொண்டான் - தன் வண்டு மொய்க்கும் பூவையணிந்த கூந்தலையுடைய மனைவியினது இறப்பினும் மிக்க துன்பத்தைக் கொண்டான்; அலர் வேப்பம் தண் தாரான் - மலர்ந்த வேப்பம் பூவாலாகிய தண்ணிய மாலையையணிந்த பாண்டியன், அவனொடும் தன் கோயில் புகுந்து - அவ் வேதியனுடன் தனது மாளிகையை அடைந்து, அமைச்சர்க்கும் பிறர்க்கும் இது சாற்றினான் - அமைச்சர்களுக்கும் ஏனையோர்க்கும் இதனைக் கூறினான். என்ன காரியஞ் செய்தேன் என்றது குற்றமில்லாத வேடன் மேல் இவ்வடாத பழியைச் சுமத்தி அவனையொறுக்குமாறு செய்தேனே என்று கழிந்ததற் கிரங்கியபடி. மாட்சி - இறப்பு; மாள் : பகுதி. மாண்ட துன்பத்தினும் மிக்க துன்பமென்க. மற்று : அசை. வேம்பு என்பது அம்சாரியை பெற்று வலித்தது. (41) மறையவனை யின்னுமொரு மணமுடித்துக் கோடியென நிறையவரும் பொருளீந்து நீபோதி யெனவிடுத்துச் சிறையழுவத் திடைக் கிடந்த செடித்தலைய விடிக்குரல கறையுடல்வே டனைத்தொடுத்த கால்யாப்புக் கழல்வித்து. (இ - ள்.) மறையவனை நீ இன்னும் ஒரு மணம் முடித்துக் கோடி என - அந்தணனை (நோக்கி) நீ இன்னும் ஒரு மணஞ்செய்து கொள்வாயாக என்று, அரும்பொருள் நிறைய ஈந்து - அரிய பொருளை நிறையக் கொடுத்து, போதி என விடுத்து - செல்க என்று விடை கொடுத்தனுப்பி, சிறை அழுவத்து இடைக் கிடந்த - சிறைச்சாலையின் கண் (மனக்கவலையொடுங்) கிடந்த, செடித்தலைய இடிக்குரல கறை உடல் வேடனை - முடைநாற்றம் பொருந்திய தலையினையும் இடி போன்ற குரலினையும் கரிய உடம்பினையுமுடைய வேடனை, தொடுத்த கால் யாப்புக் கழல்வித்து - பூட்டிய கால் விலங்கினைக் கழற்றச் செய்து. கோடி - கொள்ளுதி; பகுதி முதனீண்டது : த் : எழுத்துப் பேறு; போதி என்பதிலும் த் எழுத்துப் பேறே. அழுவம் - பரப்பு, அரண். தலைய, குரல என்பவற்றில் அ - அசை; குறிப்புப் பெயரெச்சமாகக் கொண்டு தனித்தனி கூட்டுவாருமுளர். கறை - கருமை; அழுக்குமாம். கால்யாப்பு - விலங்கு. (42) தெளியாதே யாமிழைத்த தீத்தண்டம் பொறுத்தியென விளியாவின் னருள்சுரந்து வேண்டுவன நனிநல்கி அளியானா மனத்தரச னவனையவ னிடைச்செலுத்திக் களியானை விழவெய்த கௌரியனைப்1 போய்ப் பணிவான். (இ - ள்.) அளி ஆனா மனத்து அரசன் - தண்ணளி நீங்காத மனத்தையுடைய மன்னன், அவனை விளியா - அவனைத் தன்னருகிலழைத்து, தெளியாதே யாம் இழைத்த தீத்தண்டம் பொறுத்தி என - உண்மை அறியாமல் யாஞ்செய்த கொடிய தண்டத்தைப் பொறுக்கக் கடவை என்று கூறி, இன் அருள் சுரந்து - இனிய கருணை சுரந்து, வேண்டுவன நனி நல்கி - அவன் விரும்பிய பொருள்களை மிகவும் அளித்து, அவன் இடைச் செலுத்தி - அவனிடத்திற்குப் போக விடுத்து, களியானை விழ எய்த கௌரியனைப் போய்ப் பணிவான் - (சமணர்கள் ஏவிய) களிப்பினையுடைய யானை விழும்படி அம்பெய்த சோமசுந்தரக் கடவுளைச் சென்று வணங்குவானாயினான். அவனை விளியா எனக் கூட்டுக; விளியா - விளித்து : பெயரெச்சமாக்கி, கெடாத இனிய அருள் என்றுரைத்தலுமாம். வேண்டுவன - வரிசைகளுமாம். கௌரியன் - பாண்டியன்; இறைவன் சுந்தர பாண்டியனாக விருந்து அரசு புரிந்தனனாகலின் 'கௌரியன்' என்றார். (43) [எழுசீரடியாசிரிய விருத்தம்] ஆதரம் பெருகப் பாவியேன் பொருட்டெம் மடிகணீ ரரும்பழி யஞ்சு நாதரா யிருந்தீ ரெந்தையார்க் குண்டோ1 நான்செயத் தக்கதொன் றென்னாக் காதலிற் புகழ்ந்து பன்முறை பழிச்சிக் கரையின்மா பூசனை சிறப்பித் தேதம தகற்றி யுலகினுக் குயிரா யிருந்தன னிறைகுலோத் துங்கன். (இ - ள்.) ஆதரம் பெருக - அன்பு மேலோங்கத் (திருமுன் நின்று), எம் அடிகள் - எம்மிறைவரே, பாவியேன் பொருட்டு நீர் அரும்பழி அஞ்சும் நாதராய் இருந்தீர் - பாவியேன் பொருட் டாகத் தேவரீர் அரிய பழியினை அஞ்சுகின்ற நாதராயிருந்தீர்; எந்தையார்க்கு நான் செயத்தக்கது ஒன்று உண்டோ என்னா - (அங்ஙன மிருந்த) எம் தந்தையாகிய உமக்கு நான் செய்யத் தக்க கைம்மாறு ஒன்று உண்டோ என்று, காதலில் புகழ்ந்து - அன்பினாற் புகழ்ந்து, பல் முறை பழிச்சி - பல முறை துதித்து, கரை இல் மா பூசனை சிறப்பித்து - அளவில்லாத பெரிய பூசைகளைச் செய்வித்து, இறை குலோத்துங்கன் - அரசனாகிய குலோத்துங்க பாண்டியன், ஏதம் அகற்றி - துன்பமுண்டாகாமற் போக்கி, உலகினுக்கு உயிராய் இருந்தனன் - உலகத்திற்கு ஓர் உயிராகி வீற்றிருந்தான். ஆதரம் பெருகத் திருமுன் நின்று கூறிப் புகழ்ந்து என்க. பாவியேனுக்கு வரக்கிடந்த பழிக்கு அஞ்சினமையால், பழியஞ்சு நாதர் என்பதொரு பெயருடையராயினீர் என்பான் 'பழியஞ்சு நாதராயிருந்தீர்' என்றான். எளியேனாற் செய்யத்தக்கதொரு கைம்மாறும் உண்டோவென்க. மா பூசனை - விழா முதலியன. ஏதம் - உலகிற்கு ஐவகையால் வருந்துன்பம். அது : பகுதிப் பொருள் விகுதி. "மன்னனுயிர்த்தே மலர்தலை யுலகம்" என்பவாகலின் 'உலகினுக் குயிராயிருந்தனன்' என்றார். (44) ஆகச் செய்யுள்-1533 இருபத்தாறாவது மாபாதகந் தீர்த்த படலம் [கலிவிருத்தம்] வேத நாயகன் வெம்பழி யஞ்சிய நாத னான நலனிது நல்கிய தாதை யைக்கொலை செய்த தனயன்மா பாத கந்தனைத் தீர்த்தமை பாடுவாம். (இ - ள்.) வேத நாயகன் - வேதங்கட்கு இறைவனாகிய சோம சுந்தரக் கடவுள், வெம்பழி அஞ்சிய நாதன் ஆன நலன் இது - கொடிய பழியினை அஞ்சிய நாதனாகிய திருவிளையாடல் இதுவாகும்; நல்கிய தாதையைக் கொலை செய்த தனயன் மாபாதகம் தனைத் தீர்த்தமை பாடுவாம் - (இனி அக்கடவுள்) பெற்ற தந்தையைக் கொலை புரிந்த புதல்வனது மாபாதகத்தை நீக்கிய திருவிளையாடலைக் கூறுவாம். நலன் - நன்மையாகிய திருவிளையாடல். தந்தையாக எண்ணப்படுவார் பிறருமுளராகலின் 'நல்கியதாதை' என்றார். (1) விரைசெய் மாலைக் குலோத்துங்க மீனவன் திரைசெய் நீர்நிலஞ் செங்கோல் செலத்தனி அரசு செய்யுமந் நாளி லவந்தியென் றுரைசெய் மாநக ரானொரு பூசுரன். (இ - ள்.) விரைசெய் மாலைக் குலோத்துங்க மீனவன் - மணம் வீசும் மாலையை யணிந்த குலோத்துங்க பாண்டியன், திரைசெய் நீர் நிலம் செங்கோல் செல - அலைகள் வீசும் கடல் சூழ்ந்த புவி முழுதும் தனது செங்கோல் செல்ல, தனி அரசு செய்யும் அந்நாளில் - பொதுக் கடிந்து ஆட்சி புரியும் அக்காலத்தில், ஒரு பூசுரன் அவந்தி என்று உரைசெய்மா நகரான் - ஒரு வேதியன் அவந்தி என்று கூறப்படும் பெரிய நகரத்தில் இருந்தனன். மீனவன் - மீனக்கொடியை யுடையவன்; பாண்டியன். உலக முழுதும் இனிதாகச் செங்கோல் நடக்க என்பார் 'திரைசெய் நீர் நிலஞ் செங்கோல் செல' என்றார். நகரான் என்பதனை நகரத்திருப்பானாயினன் என விரிக்க. (2) வெருவுங் காய்சின மாறிய வேதியன் மருவுங் காதன் மனையெனும் பேரினாள் திருவுங் காமனற்1 றேவியு மண்புனை உருவுங் காமுறு மொப்பில் வனப்பினாள். (இ - ள்.) வெருவும் காய் சினம் மாறிய வேதியன் - யாவரும் அஞ்சத்தக்க சுடுகின்ற சினம் நீங்கிய அம் மறையோனுக்கு, காதல் மருவும் மனை எனும் பேரினாள் - விருப்பம் பொருந்திய மனைவி என்ற பெயரினை யுடையவள், திருவும் காமன் நல் தேவியும் - திருமகளும் மதவேளின் நல்ல மனைவியாகிய இரதியும், மண்புனை உருவும் - சுதையாற் செய்த பாவையும், காமுறும் - விரும்பத்தக்க, ஒப்பு இல் வனப்பினாள் - ஒப்பற்ற அழகினையுடையாள். சினம் மாறிய - வெகுளி தன்கண் உண்டாகப் பெறாத. வேதியன் மனையெனக் கூட்டுக. மனை - மனையாள். மனைக்குரிய மாண்பு சிறிதுமிலளென்பார், 'மனையெனும் பேரினாள்' என்றார். திருவும் தேவியும் உருவும் என்னும் உம்மைகள் எண்ணுப் பொருளோடு சிறப்புங் குறித்தன. மண் - சுதை; " மண்மாண் புனைபாவை" என்பது திருக்குறள். (3) படியி லோவியப் பாவையொப் பாகிய வடிவி னாளவள் பான்மக னென்றொரு கொடிய பாவி பிறந்து கொலைமுதற் கடிய பாவக் கலன்போல்2 வளருநாள். (இ - ள்.) படி இல் ஓவியப் பாவை ஒப்பு ஆகிய வடிவினாள் அவள் பால் - ஒப்பில்லாத சித்திரப் பாவையை நிகர்த்த அழகினையுடைய அவளிடத்து, மகன் என்று ஒரு கொடிய பாவி பிறந்து - மகன் என்று ஒரு கொடும்பாவி தோன்றி, கொலை முதல் கடிய பாவக் கலன் போல் வளரு நாள் - கொலை முதலிய கொடிய பாவங்களாகிய சரக்குகளை ஏற்றிய கப்பல் போல வளரு நாளில். படி - ஒப்பு. படியில் என்பதற்குப் புவியில் என்றுரைத்தலுமாம். வடிவினாளாகிய அவளென்க. நன்மக்கட்குரிய பண்பு சிறிதுமில்லானென்பார் 'மகனென்று' என்றார். வளரலுற்றான் அங்ஙனம் வளரும் நாளில் என விரிக்க. (4) கோடி கோடி யடுஞ்சில கோட்டியே கோடி கோடி கொடுங்கணை பூட்டியே கோடி கோடி விகாரமுங் கூட்டியே கோடி கோடி யனங்கரெய் தார்கொலோ. (இ - ள்.) கோடி கோடி அனங்கர் - அநேகங்கோடி காமர்கள், கோடி கோடி அடுஞ்சிலை கோட்டியே - பலகோடி கொல்லுதற் றொழிலை யுடைய விற்களை வளைத்து, கோடி கோடி கொடுங்கணை பூட்டியே - பல கோடி கொடிய அம்புகளைப் பூட்டி, கோடி கோடி விகாரமும் கூட்டி - பல கோடி விகாரங்களைக் கூட்டி, எய்தார் கொலோ - எய்தார்களோ (யாம் அறியேம்). கோடி கோடி என்பன எண்ணிறந்தனவென்னும் பொருளன. பின் கூறப்போகிற தீக் காமத்திற்குக் காரணமாக 'எய்தார் கொலோ' என்றார்; அங்ஙனமில்லையேல் இவன் தன்னையீன்றாளை விரும்பியது என்னையென அதன் கொடுமை விளக்கியபடி. விகாரமாவன, " வேட்கை யொருதலை யுள்ளுதல் மெலிதல் ஆக்கஞ் செப்பல் நாணுவரை யிறத்தல் நோக்குவ வெல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கம் சாக்காடு" என்று தொல்காப்பியத்திற் கூறப்பட்டவை; சுப்பிரயோகம், விப்பிர யோகம், சோகம், மோகம், மரணம் என்றும் உரைப்ப. அனங்கர் - உருவமில்லாதவர். கொல் : அசை. (5) இளமைச் செவ்விய யாக்கையன் மையல்கூர் வளமைக் காமமும் வல்வினை யுந்நிறைத் தளைவிட்1 டீர்த்தலிற் றன்னை வயிற்றிடை விளைவித் தீன்றவ டன்னை விரும்பினான். (இ - ள்.) இளமைச் செவ்விய யாக்கையன் - இளமைப் பருவமுடைய உடலையுடையனாகிய அவன், மையல்கூர் வளமைக் காமமும் வல்வினையும் - மயக்கம் மிக்க குன்றாத காமமும் வலிய தீவினையும், நிறைத் தளை விட்டு ஈர்த்தலில்- நிறையாகிய கட்டினை விடுவித்து இழுத்தலால், தன்னை வயிற்று இடை விளைவித்து ஈன்றவள் தன்னை விரும்பினான் - தன்னைத் தனது வயிற்றின்கண் தோற்றுவித்துப் பெற்ற தாயை விரும்பினான். இளமைச் செவ்வி - இளமைக்குரிய அழகுமாம். வளமை- கொழுமை; மிகுதி. நிறை - ஆடூஉக் குணங்களிலொன்று; மனதை நிறுத்தல. நிறையாகிய தளையை நீக்கியென்க. ஈன்றவடன்னை, தன் : சாரியை. (6) அன்னை யென்னு மழிதகை யாளகத் தின்னு யிர்த்துணை யும்மனக் காவலாய் மன்னு நாண மடமுத னால்வருந் தன்னை நீங்கலிற் றானுமொத் தாளரோ. (இ - ள்.) அன்னை என்னும் அழிதகையாள் - தாய் என்று சொல்லப்படும் அக் கற்பழிந்தவள், அகத்து இன் உயிர்த் துணையும்- உள்ளத்தில் இனிய உயிர்த் துணையாகவும், மனக்காவலாய் - மனத்துக்குக் காவலாகவும், மன்னும் - பொருந்திய, நாணம் மடம் முதல் நால் வரும் தன்னை நீங்கலில் - நாணமும் மடமும் அச்சமும் பயிர்ப்புமாகிய நால்வரும் தன்னை விட்டு நீங்கினமையால், தானும் ஒத்தாள் - தானும் அதற் குடன்பட்டாள். அழிதகையாள் - கற்பழிந்தவள்; தீநெறிப் பட்டவள்; ஆண்பாலில் அழிதகையான் என்று வரும். துணையாகவும் காவலாகவும் மன்னும் என விரிக்க. நாற்குணமும் நான்கு காவலர் போலுதலின் 'நால்வர்' என உயர்திணையாற் கூறினார்; " நாற்குணமும் நாற்படையா" என்பர் புகழேந்தியாரும். தானும் என்பதில் உம்மை இறந்தது தழுவிய எச்சம். அரோ, அசை. (7) இன்ப மோசிறி தாகு மிதில்வருந் துன்ப மோகரை யில்லாத் தொடுகடல் என்ப தாரு மிவனா லறியவிவ் வன்ப தான வினையால் வருந்துவான். (இ - ள்.) இன்பமோ சிறிது ஆகும் (காமத்தால் வரும்) இன்பமோ அற்பமாகும், இதில் வரும் துன்பமோ கரையில்லாத் தொடு கடல் - இதனால் விளையுந் துன்பமோ கரையில்லாத கடலாகும், என்பது - என்னும் உண்மையை, ஆரும் இவனால் அறிய - யாவரும் இப்பாவியினால் அறிந்து கொள்ள, இவ்வன்பது ஆனவினையால் வருந்துவான் - இக் கொடுமையான தீவினையால் வருந்துவானாயினன். கணத்துள் அழிவது என்பார் 'சிறிது' என்றும், அளவிறந்த காலம் நிற்பது என்பார் 'கரையில்லாத் தொடுகடல்' என்றும் கூறினார். தொடு - தோண்டப்பட்ட; கடலுக்கு அடை. வன்பது, அது பகுதிப் பொருள் விகுதி. (8) மைய னாக மதியை விழுங்கவைக் கைய னாயைக் கலந்தொழு குஞ்செயல் ஐயன் றான்குறிப் பாற்கண் டயற்செவிக் குய்ய லாவண்ண முள்ளத் தடக்கினான். (இ - ள்.) மையல் நாகம் மதியை விழுங்க - காம மயக்கமாகிய இராகுவானது அறிவாகிய மதியை விழுங்கலால், அக் கையன் ஆயைக் கலந்து ஒழுகும் செயல் - அந்தக் கீழ்மகன் தாயைக் கூடியொழுகுஞ் செயலினை, ஐயன் குறிப்பால் கண்டு - அவன் தந்தையானவன் குறிப்பாலறிந்து, அயல் செவிக்கு உய்யலா வண்ணம் உள்ளத்து அடக்கினான் - பிறர் செவிக்குச் செல்லாவாறு அதனை மனத்தின்கண் அடக்கியொழுகினான். மதி என்பது இரட்டுற மொழிதலாய் அறிவையும் திங்களையும் குறித்தது; காம மயக்கத்தால் அறிவு முழுதையும் இழந்தானென்க. கையன் -சிறுமையுடையன்; கீழோன். ஆய் - தாய். ஐயன் - தந்தை. உய்யலா - செல்லாத; ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; அல்; எதிர்மறை இடைநிலை. உய் என்னும் பகுதி தன்வினை குறித்து நின்றது. வேறு யாரும் அறியா வண்ணம் என்பார் 'அயற் செவிக்கு' என்றார். (9) வேற்றோர் வைகல் வெளிப்படக் கண்டறஞ் சாற்று நாவினன் வேறொன்றுஞ் சாற்றிலன் சீற்ற மேல்கொடு செல்வன்கொல் வேனென ஏற்றெ ழுந்தன னீன்றாள் விலக்குவாள். (இ - ள்.) வேறு ஓர் வைகல் - மற்றொரு நாளில், வெளிப்படக் கண்டு - புலப்படக் கண்டு, அறம் சாற்றும் நாவினன் - அறநெறியைக் கூறும் நாவினையுடையனாய், வேறு ஒன்றும் சாற்றிலன் - பிறிதொன்றும் கூறானாயினன்; (அங்ஙனமாகவும்), செல்வன் - அவன் புதல்வன், சீற்றம் மேல்கொடு - சினத்தை மேற்கொண்டு, கொல்வேன் என ஏற்று எழுந்தனன் - அவனைக் கொல்வேனென்று எதிர்ந்து எழுந்தான, ஈன்றாள் விலக்குவாள்- பெற்றவள் விலக்குவாளாய். அறங் கூறியதன்றி அவனை இகழ்ந்துரைத்தில னென்க. செல்வன் என்றது இகழ்ச்சி தோன்றக் கூறியது. நாவினன், விலக்குவாள் என்னும் முற்றுக்கள் எச்சமாயின. (10) தாயி லின்ப நுகர்ந்தனை தந்தையைக் காயி லென்பெறு வாயெனக் காமுகர்க் காயி லன்னையி லப்பனி லென்பயன் ஏயி லின்னரு ளென்னற மென்னென்றான். (இ - ள்.) தாயில் இன்பம் நுகர்ந்தனை - தாயினிடத்துக் காம வின்பத்தினை நுகர்ந்தாய், தந்தையைக் காயில் என் பெறுவாய் என - (இன்னும்) தந்தையைக் கொன்றனையாயின் என்ன பயனை அடைவாயோ என்று கூற, காமுகர்க்கு - காமுகர்களுக்கு, ஆயில் - ஆராய்ந்து பார்க்கில், அன்னையில் அப்பனில் என் பயன் - தாயாலும் தந்தையாலும் என்ன பயன், இன் அருள் ஏயில் என் அறம் (ஏயில்) என் என்றான் - இனிய அருளைப் பொருந்திலென்ன பயன் அறத்தைப் பொருந்திலென்ன பயன் என்றனன். தாயில், இல் : ஏழனுருபு. தாயிலின்பம் நுகர்ந்ததே கொடு நிரயத் துன்ப முழத்தற்கு ஏதுவாகும்; அதனோடமையாது தந்தையைக் கொல்லுதலுஞ் செய்யின் நீ யெய்தும் துன்பத்திற்கு அளவில்லை யாகும் என்பாள் 'தாயில்.............என்பெறுவாய்' என்றாள். காய்தல் - சினத்தல்; கோறலை யுணர்த்திற்று. தாய் தந்தையென்னும் முறைமையாலும், அருள் அறம் என்பவற்றாலும் என்ன பயனென்றான். ஏயில் என்பதனை அறம் என்பதனோடுங் கூட்டுக. நேயில் எனப் பிறர் பிரித்தது பொருந்தாமை யோர்க. விலக்குவாள் என அவன் என்னென்றான் எனக் கூட்டியுரைக்க. (11) மண்டொ டுங்கரு விப்படை வன்கையிற் கொண்டு தாதை குரவனென் றோர்கிலான் துண்ட மாகத் 1துணித்தனன் ஆய்முகத் துண்ட காம நறவா லுணர்விலான். (இ - ள்.) மண் தொடும் கருவிப் படை வன் கையில் கொண்டு- மண் வெட்டுங் கருவியாகிய படையினைத் தனது வலிய கையிலேந்தி, தாதை குரவன் என்று ஓர்கிலான் - தன் தந்தையை ஐங்குரவருள் ஒருவனென்று அறியாதவனாய், ஆய் முகத்து உண்ட காம நறவால் உணர்வு இலான் - தாயினிடத்துப் புணர்ந்து நுகர்ந்த காமமாகிய கள்ளினால் அறிவிழந்த பாவி, துண்டமாகத் துணித்தனன் - (அவனைத்) துண்டு பட வெட்டினான். மண்டொடுங் கருவி - மண் வெட்டி. கருவிப்படை : இருபெயரொட்டு. வன்கை - கொலை செய்யுங் கை. ஐங்குரவரிவரென்பதனையும், அவரை வழிபட வேண்டுமென்பதனையும், " அரச னுவாத்தியான் றாய்தந்தை தம்முன் நிகரில் குரவ ரிவரிவரைத்............... தேவரைப் போலத் தொழுதெழுக வென்பதே யாவருங் கண்ட நெறி" என்னும் ஆசாரக்கோவையாலுணர்க. 'தாய்முகம்' - முகம் : ஏழன் உருபு. (12) பமைக்க ருங்கங்குல் வாய்க்கொன்ற தாதைக்குத் தக்க தீத்தவி சிட்டன்னை தன்னொடுங் கைக்க டங்கு பொருளொடுங் கன்னெறி புக்க னன்புடை சூழ்ந்தார் புளிநரே. (இ - ள்.) மைக்கருங் கங்குல்வாய் - மைபோலும் கருமையாகிய இரவின்கண், கொன்ற தாதைக்கு - தன்னாற் கொல்லப்பட்ட தந்தைக்கு, தக்க தீத்தவிசு இட்டு - பொருந்திய தீயாகிய படுக்கையமைத்து, அன்னை தன்னொடும் கைக்கு அடங்கு பொருளொடும் கல்நெறி புக்கனன் - தாயோடும் சுமக்கத் தகுந்த பொருளோடும் கற்கள் பொருந்திய சுர நெறியை அடைந்தனன்; புளிநர் புடை சூழ்ந்தார் - ஆறலைக்கும் வேடர்கள் அவனைச் சுற்றிலும் வளைந்து கொண்டனர். இருள் மைபோலு மென்பது, " எண்ணு மிவ்வுல கத்தவர் யாவரும் துண்ணெ னும்படி தோன்றிமுன் றோய்ந்திடில் வண்ண நீடிய மைக்குழம் பாமென்று நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து" என்னும் பெரியபுராணச் செய்யுளிற் புனைந்துரைக்கப் பட்டிருத்தல் காண்க. கொன்ற : செயப்பாட்டுவினை. தீத்தவிசு- ஈமத் தீயாகிய படுக்கை; ஈமப் பள்ளியிற் கிடத்தி யெரித்தென்க. கைக்கடங்கு பொருள் - கையில் எடுக்கலான பொருள். (13) எய்யுங் கோறொடு வில்ல ரிடிக்குநேர் செய்யுஞ் சொல்லினர் செல்லலை நில்லெனக் கையி லுள்ளவுங் கைக்கொண்டு காரிகைத் தைய றன்னையுந் தாங்கொடு போயினார். (இ - ள்.) எய்யும் கோல் தொடுவில்லர் - எய்யப் பெறும் வாளியை ஏறிட்ட வில்லினையுடையவராய், இடிக்கு நேர் செய்யும் சொல்லினர் - இடியை யொக்குஞ் சொல்லினை யுடையராய், செல்லலை நில் என - செல்லாதே நில் என்று (நிறுத்தி), கையில் உள்ளவும் தாம் கைக் கொண்டு - கையிலுள்ள பொருளையும் தாம் பறித்துக் கொண்டு, காரிகை தையல் தன்னையும் கொடுபோயினார் - அழகிய அம்மாதையுங் கைக்கொண்டு சென்றார்கள். செல்லலை, அல் எதிர்மறையிடைநிலை; ஐ முன்னிலை விகுதி. காரிகை - அழகு. (14) சென்று சேணிடைச் சிக்கற வாழலாம் என்ற வெண்ணமொன் றெய்திய வண்ணமொன் றொன்று நாமெண்ணத் தெய்வமொன் றெண்ணிய தென்ற வார்த்தை யிவனிடைப் பட்டதால். (இ - ள்.) சேண் இடைச் சென்று சிக்கு அற வாழலாம் என்ற எண்ணம் ஒன்று - தூரதேயத்திற் சென்று இடையூறின்றி வாழலாம் என அவன் கருதிய எண்ணம் ஒன்று; எய்திய வண்ணம் ஒன்று - நிகழ்ந்த செய்தி மற்றொன்று; நாம் ஒன்று எண்ணத் தெய்வம் ஒன்று எண்ணியது என்ற வார்த்தை - 'நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது' என்ற பழமொழி, இவன் இடைப்பட்டது - இந்த மாபாதகனிடத்திற் புலப்பட்டது. சிக்கற வாழலாம் - தடையின்றாக இன்பந் துய்த்து வாழலாம். ஆகலான் வார்த்தை இவனிடைப்பட்டதென்க. பட்டது - வெளிப்பட்டது. ஆல் : அசை. (15) தாதை தன்றன யற்கினி யார்துணை மாதர் யாயை மறவர்கைக் கொள்ளவிப் போது தான்றுணை யென்பவன் போன்றுமா பாத கத்துரு வாய்வந்து பற்றினான். (இ - ள்.) தாதை - வெட்டுண்டிறந்த தந்தையானவன், மாதர் யாயை மறவர் கைக்கொள்ள - அழகிய தாயை வேடர் கவர்ந்து கொண்டமையால், தன் தனயற்கு துணை இனியார் - தன் புதல்வனுக்குத் துணையாவார் இனி யாவர் (என்று வருந்தி), இப்போது - துணையை இழந்து வருந்தும் இப்பொழுது, தான் துணை என்பவன் போன்று - யானே துணையாவேன் என்று தொடர்பவனைப் போல, மாபாதகத்து உருவாய் வந்து பற்றினான் -மாபாதக வடிவாய் வந்து அவனைப் பிடித்தான். யாய் - தாய். தந்தையைக் கொன்ற கொலைப் பாவம் வந்து பற்றியதனைத் தந்தை பாதகத்துருவாய் வந்து பற்றினான் என்றார். இது தற்குறிப்பேற்றவணி. (16) ஆவ வென்னு மழுஞ்சிவ தாவெனும் பாவம் பாவம் பழியிது வோவைய கோவெ னுங்கை குலைத்தெறி யுந்நிழற் பாவை போல விடாதுபின் பற்றுமால். (இ - ள்.) ஆவ என்னும் - (அங்ஙனம் பற்றிய கொலைப் பாவமானது) ஐயோ என்று அலறும்; அழும் - அழாநிற்கும்; சிவதா எனும் - சிவதா என்று முறையிடும்; பழி இதுவோ பாவம் பாவம் - கொலைப் பழி இத்தன்மையதோ பாவம் பாவம், ஐயகோ எனும் - ஐயகோ என்று புலம்பும்; கைகுலைத்து எறியும் - கையை அசைத்து நிலத்தில் மோதும்; நிழல் பாவை போல விடாது பின்பற்றும் - உடம்பின் சாயையாகிய நிழல் போல விடாது பின்பற்றிச் செல்லும். சிவதா என்பது சிவபெருமானை நோக்கி முறையிடுஞ் சொல்; திருத்தொண்டர் புராணத்திலே, " களியா னையினீ ருரியாய் சிவதா எளியார் வலியா மிறைவா சிவதா அளியா ரடியா ரறிவே சிவதா தெளிவா ரமுதே சிவதா சிவதா" என வருதல் காண்க. பாவம் பாவம் பழியிதுவோ என்பதனை ஆசிரியர் இரங்கிக் கூறியதாகக் கொள்க. பாவத்தாற் பற்றப்பட்டவனிடத்து நிகழ்வனவற்றிற்கு அதனையே வினைமுதலாகக் கூறினார். ஆல் : அசை. (17) [மேற்படி வேறு] நல்லதீர்த் தஞ்சிவ தலநலோர் பக்கமுஞ் செல்லவொட் டாதரன் சீர்த்திநா மஞ்செவிப் புல்லவொட் டாதுளம் புகுதவொட் டாதுநாச் சொல்லவொட் டாதுகண் டுயிலவொட் டாதரோ. (இ - ள்.) நல்ல தீர்த்தம் சிவதலம் நல்லோர் பக்கமும் செல்ல ஒட்டாது - நல்ல தீர்த்தத்தினருகிலும் சிவதலத்தினருகிலும் நல்லவர்களருகிலும் போக விடாது; அரன் சீர்த்தி நாமம் செவி புல்ல ஒட்டாது - சிவபெருமானின் புகழும் அவன் திருப்பெயரும் செவியிற்பட விடாது; உளம் புகுத ஒட்டாது - (ஒருக்காற்படினும்) உள்ளத்திற் புகவிடாது; நாச்சொல்ல ஒட்டாது - (அவற்றை) நாவினாற் சொல்ல விடாது; கண் துயில ஒட்டாது - கண்ணுறங்க விடாது. ஒட்டாது - இசையாது; தடுக்கும்; " ஒட்டே னரசோ டொழிப்பேன்" என்பது சிலப்பதிகாரம. அப்பாவத்தை யொழிக்க வேண்டித் தீர்த்தம் முதலியவற்றை அடைதல் முதலியன செய்யக் கருதின் அவற்றைச் செய்யவிடாது தடுத்தே விடும். அரோ : அசை. (18) சுற்றுமுன் பின்புறச் சூழ்ந்துதன் கொடுக்கினிற்1 பற்றிநின் றீர்க்குமா பாதகத் தாலலைந் தெற்றினிச் செய்வதென் றாற்றலா திடருழந் துற்றுவே2 றுலகெலா மச்சமுற் றுழலுமால். (இ - ள்.) முன் பின்பு உறச் சுற்றும் - முன்னும் பின்னும் பொருந்தச் சூழும்; சூழ்ந்து தன் கொடுக்கினில் பற்றி நின்று ஈர்க்கும்- (அங்ஙனஞ்) சூழ்ந்து தன் கொய்சகத்தைப் பிடித்து இழுக்கா நின்ற, மாபாதகத்தால் அலைந்து - மாபாதகத்தினா லலைந்து, எற்று இனிச் செய்வது என்று ஆற்றலாது இடர் உழந்து - இனி யாது செய்வதென்று கருதிப் பொறுக்கலாற்றாது துன்பமுற்று, வேறு உலகு எலாம் உற்று அச்சம் உற்று உழலும் - தனியே உலகமெல்லாஞ் சென்று திரிந்து அஞ்சி வருந்துவானாயினன். கொடுக்கு - கொய்சகம்; ஆடையை மடித்து முன்புறந் தொங்கவிட்டிருப்பது. பாதகத்தால் அவன் அலைந்து உழலுவான் ஆயினான். வேறு - தனி. ஆல், அசை. (19) உறுகணோ யாற்றநா ளுற்றுழன் றுலகெலாம் மறுகவே திரியுமா பாதகன் வலியெலாஞ் சிறுகுவான் சிவனருட் செயலினிற்3பாதகங் குறுகுநாள் குறுகுநாள் கூடலைக் குறுகினான். (இ - ள்.) ஆற்ற நாள் உறுகண் நோய் உற்று உழன்று - (இங்ஙனம்) பன்னெடு நாள் மிக்க துன்பமடைந்து வருந்தி, உலகு எலாம் மறுகவே திரியும் மாபாதகன் - உலகின்கண் கண்டோரனை வரும் மனம் இளகி வருந்துமாறு திரியா நின்ற மாபாதகன், வலி எலாம் சிறுகுவான் - தனது வலிமை முழுதுங் குறைந்தவனாய், சிவன் அருள் செயலினில் - சிவபெருமானது திருவருட் செயலினால், பாதகம் குறுகுநாள் குறுகு நாள் கூடலைக் குறுகினான் - அக்கொலைப் பாவமானது குறுகி ஒழியுநாள் வரவே அந்நாளில் மதுரையம்பதியை அடையலாயினான். உலகு என்பது உயிரை யுணர்த்திற்று; உலக முழுதும் சுழன்று திரியும் என்னலுமாம். சிறுகுவான், இறந்த கால எச்சமாயிற்று. செயலினிப் பாதகம் என்னும் பாடத்திற்கு, செயலால் இப்பாதகம் என்று பொருள் கூறிக் கொள்க. பாதகங் குறுகுதல் - பாவங் குறைதல். பின்னுள்ள குறுகுதல் அணுகுதல் என்னும் பொருட்டு. குறுகுநாள் குறுகுநாள் என்றும், கூடலைக் குறுகினான் என்றும் கூறிய ஈற்றடியின் நயம் போற்றற்பாலது; முற்று மோனையாதலுங் காண்க. (20) [அறுசீரடியாசிரிய விருத்தம்] அழிதகன் குறுகு வான்முன் னங்கயற் கண்ணி தந்தக் குழையிரு காதுங் கோத்துக் கொலைகெழு1 புலிப்பற் றாலி நுழைமயிர் நெடுநாண் பின்ன னோன்பிட ரலைப்பப் பூண்டோர் பழிதகை யாத வேடப் பாவையாய்ப் படிவங் கொள்ள. (இ - ள்.) அழிதகன் குறுகுவான் முன் - அத் தீநெறிப்பட்ட பாதகன் அங்கு வருதற்கு முன், அங்கயற்கண்ணி - அங்கயற்கண் அம்மையார், தந்தக் குழை இரு காதும் கோத்து - தந்தத்தாலாகிய குண்டலங்களை இரு செவியிலும் நுழைவித்து, கொலைகெழு புலிப்பல் தாலி நுழை - கொலை பொருந்திய புலியின் பல்லாகிய தாலி கோத்த, மயிர் பின்னல் நெடுநாண் - மயிராற் பின்னிய நீண்ட மங்கல நாணினை, நோன்பிடர் அலைப்பப் பூண்டு - பெருமை பொருந்திய பிடரில் அசைந்தலையத் தரித்து, பழிதகையாத ஓர் வேடப் பாவையாய் படிவம் கொள்ள - பழிக்குந் தன்மையில்லாத ஒரு வேடமகளாய்த் திருவுருவங்கொள்ள. குறுகுவான், எச்சமாயிற்று. நுழை - கோத்தவெனப் பிறவினைப் பொருட்டு. தகையில்லாத என்பது தகையாத என நின்றது.(21) கொலையிரும் பழிக்கன் றஞ்சுங் கூடலெம் பெருமான் கொன்றை மிலையிருங் குஞ்சி வேங்கை மெல்லிணர்க் கண்ணி வேய்ந்து கலையிரு மருப்பிற் கோடிக் காதள வோடுந் தாடிச் சிலையிருந் தடக்கை வேடத் திருவுருக் கொண்டு தோன்றி. (இ - ள்.) கொலை இரும் பழிக்கு அன்று அஞ்சும் கூடல் எம் பெருமான் - கொலையாலாம் பெரிய பழிக்கு அன்று அஞ்சிய மதுரையி லெழுந்தருளிய எம்பெருமானாகிய சோமசுந்தரக் கடவுள், கொன்றைமிலை இருங் குஞ்சி வேங்கை மெல் இணர்க்கண்ணி வேய்ந்து - கொன்றைமாலை யணிந்த நீண்ட சிகையின்கண் வேங்கையின் மெல்லிய பூங்கொத்துக் களாலாகிய மாலையையணிந்து, கலை இரு மருப்பில் கோடி காது அளவும் ஓடும் தாடி - கலைமானின் இரு கொம்பைப் போல் வளைந்து காது மட்டுஞ் சென்ற மீசையையும், சிலை இருந்தடக்கை - வில்லையேந்திய நீண்ட பெரிய கையையுமுடைய, வேடத் திருஉருக்கொண்டு தோன்றி - வேடத் திருவுருவங்கொண்டு தோன்றியருளி. அன்று பழிக்கஞ்சியவர் இன்று பாதகத்திற் கஞ்சினாரென்பது தோன்றக் கூறினார். முறுக்குடன் வளைந்து இருபுறமும் மேலே சென்றிருப்பதற்குக் கலை மருப்பு உவமை. தாடியும் தடக்கையும் உடையவென விரிக்க. (22) கொண்டல்கண் படுக்கு மாடக் கோபுர மருங்கிற் போந்தின் கண்டகக் கருக்கு வாய குரைக்குநாய் கதுவிக் காப்பப் புண்டலை வாளி வில்லோர் புறங்கிடந் திமைப்பத் திங்கட் டுண்டவா ணுதலா ளோடுஞ் சூதுபோ ராடல் செய்வான். (இ - ள்.) கொண்டல் கண் படுக்கும் மாடக்கோபுரம் மருங்கில் - முகில்கள் துஞ்சும் மாடங்களையுடைய கோபுரத்தின் பக்கத்தில், போந்தின் கண்டகக் கருக்கு வாய குரைக்கும் நாய் கதுவிக் காப்ப - பனையினது முட்களையுடைய கருக்குப் போன்ற வாயையுடைய குலைக்கின்ற நாய்கள் சிறிதும் நீங்காது காக்கவும், புண் தலை வாளி வில் ஓர் புறம் கிடந்து இமைப்ப - தசை பொருந்திய நுதியையுடைய கணையும் வில்லும் ஒரு புறத்திற் கிடந்து விளங்கவும், திங்கள் துண்டம் வாள் நுதலாளோடும் சூது போர் ஆடல் செய்வான் - திங்களின் ஒரு பாதியை ஒத்த ஒள்ளிய நெற்றியையுடைய பிராட்டியோடும் சூதாடலாகிய போர்த் தொழிலைச் செய்வானாயினன். கருக்கு - மட்டையின் விளிம்பு. 'வாய' குறிப்புப் பெயரெச்சம்.(23) வெருவரு வேழ முண்ட வெள்ளில்போல் வறிய னாகிப் பருவர லுடனாங் கெய்தும் பாதகன் வரவு நோக்கி ஒருவரு முள்ளத் தாலு முன்னருங் கொடிய பாவி வருவது காண்டி யென்னா மாதரை நோக்கிக் கூறும். (இ - ள்.) வெருவு அரு வேழம் உண்ட வெள்ளில் போல் வறியனாகி - அச்சமில்லாத யானையா லுண்ணப்பட்ட விளாங்கனி போல உள்ளீடில்லாதவனாய், பருவரலுடன் ஆங்கு எய்தும் பாதகன் வரவு நோக்கி - துன்பத்துடன் அங்கு வருகின்ற மாபாதகனது வருகையை நோக்கி, ஒருவரும் உள்ளத்தாலும் உன் அரும் கொடிய பாவி வருவது - ஒருவரும் மனத்தாலும் நினைத்தற்கரிய கொடிய பாவத்தை யுடையவன் வருவதை, காண்டி என்னா - காண்பாயாக என்று. மாதரை நோக்கிக் கூறும் - இறைவியை நோக்கிக் கூறுவான். வெருவரு - அஞ்சத்தக்க என்றுமாம். 'வேழம்' வெள்ளிலுக்கு வருவதோர் நோய் என்பர் நச்சினார்க்கினியர்; " தூம்புடை நெடுங்கை வேழந் துற்றிய வெள்ளில்" என்னும் சிந்தாமணி யடியின் உரையை நோக்குக; ஓர் கொதுகு என்பாருமுளர். வறியன் - மகிழ்ச்சி என்பது சிறிதுமில்லாதவன். காண்டி - காண்பாய், ட் : எழுத்துப் பேறு. (24) அணங்குநோ யெவர்க்குஞ் செய்யு மனங்கனா லலைப்புண் டாவி உணங்கினா ருள்ளஞ் செல்லு மிடனறிந் தோடிச் செல்லா குணங்குல னொழுக்கங் குன்றல் கொலைபழி பாவம் பாரா இணங்குமின் னுயிர்க்கு மாங்கே யிறுதிவந் துறுவ தெண்ணா. (இ - ள்.) எவர்க்கும் அணங்கு நோய் செய்யும் அனங்கனால் அலைப்புண்டு - யாவர்க்குங் காமநோயைச் செய்கின்ற மாரனாலே அலைக்கப்பட்டு, ஆவி உணங்கினார் உள்ளம் - உயிர் சோர்ந்தவர்களின் உள்ளங்கள், செல்லும் இடன் அறிந்து ஓடிச் செல்லா - செல்லுதற்குரிய இடத்தினை அறிந்து சென்று சேரா; குணம் குலன் ஒழுக்கம் குன்றல் - குணமும் குலமும் ஒழுக்கமும் குறைதலையும், கொலை பழி பாவம் - கொலையும் பழி பாவங்களும் உண்டாதலையும், பாரா - பார்க்கமாட்டா; இணங்கும் இன் உயிர்க்கும் ஆங்கே இறுதி வந்து உறுவது எண்ணா - பொருந்திய தம் இனிய உயிர்க்கும் அவ்விடத்தே அழிவு வருதலையும் எண்ணமாட்டா. எவர்க்கும் - எத் தன்மையோர்க்கும். இடங் கழிகாமத்தால் வருந்தினா ரென்பார் 'அலைப்புண்டாவி யுணங்கினார்' என்றார். செல்லுமிடன் - மணத்தற்குரிய கன்னியர் மனைவி காமக் கிழத்தியர் என்னுமிடங்கள். குன்றலையும் கொலை முதலியன உண்டாதலையும் என விரிக்க, ஆங்கே என்பதற்கு அவ்வாறே என்றும்; அப்பொழுதே என்றும் உரைத்தலுமாம். (25) கள்ளுண்டல் காம வென்ப கருத்தறை போக்குச் செய்வ1 எள்ளுண்ட காமம் போல வெண்ணினிற் காணிற் கேட்கிற் றள்ளுண்ட விடத்தி னஞ்சந் தலைக்கொண்டா லென்ன வாங்கே உள்ளுண்ட வுணர்வு போக்கா துண்டபோ தழிக்குங் கள்ளூண். (இ - ள்.) கள்உண்டல் காமம் என்ப கருத்து அறை போக்குச் செய்வ - கள்ளுண்ணலும் காமமும் என்று சொல்லப்படுமிரண்டும் அறிவினை நீங்குமாறு செய்வன; கள் ஊண் - (அவற்றுட்) கள்ளுணவானது, எள்ளுண்ட காமம் போல - இகழப்பட்ட காமத்தைப் போல, எண்ணினில் காணில் கேட்கில் தள்ளுண்ட இடத்தில் - எண்ணினும் காணினும் கேட்கினும் தவறுதலுற்ற இடத்தினும், நஞ்சம்தலைக் கொண்டால் என்ன - நஞ்சு தலைக்கேறியது போல, ஆங்கே - அப்பொழுதே, உள் உண்ட உணர்வு போக்காது - உள்ளே பொருந்திய அறிவினைப் போக்காது, உண்ட போது அழிக்கும் - உண்ட பொழுதில் மட்டுமே அதனை அழிக்கும். என்ப - என்பன; வினைப்பெயர்; என்று கூறுவர் என்றுமாம். அறைபோக்கு - அறை போதல்; உள்ளதுபோல் ஒழிதல். காமத்திற்கேற்றும் பொழுது - காமுறப் பட்டாரை எண்ணுதல் முதலிய செய்த விடத்தென்று கொள்க. எண்ணினில், இன் வேண்டாவழிச் சாரியை. தள்ளுண்ட இடம் - கிடைக்காவழி; விடத்தின் நஞ்சம் எனப் பிரித்து ஒரு பொருளிரு சொல்லாகக் கொள்ளலுமாம். கள்ளுண்டலும் காமமும் உணர்வினை யிழப்பித்தலால் ஒக்கும்; எனினும், கள்ளூண் காமம் போல உணர்வு போக்காது உண்டபோது அழிக்கும் என ஒப்புமையும் வேற்றுமையும் கூறினமையின் இது வேற்றுமையணி. " உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு" என்னுங் குறள் ஒருபுடை யொத்து நோக்கற்பாலது. (26) காமமே கொலைகட் கெல்லாங் காரணங் கண்ணோ டாத காமமே களவுக் கெல்லாங் காரணங் கூற்ற மஞ்சுங் காமமே கள்ளுண் டற்குங் காரண மாத லாலே காமமே நரக பூமி காணியாக் கொடுப்ப தென்றான். (இ - ள்.) காமமே கொலைகட்கு எல்லாம் காரணம் - காமமே கொலைகளுக்கு எல்லாம் காரணமாயுள்ளது; கண்ணோடாத காமமே களவுக்கு எல்லாம் காரணம் - கண்ணோட்டமில்லாத காமமே களவு அனைத்திற்குங் காரணமாகும்; கூற்றம் அஞ்சும் காமமே கள் உண்டற்கும் காரணம் - கூற்றுவனும் அஞ்சுதற்குரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும்; ஆதலாலே, காமமே நரகபூமி காணியாக் கொடுப்பது என்றான் - ஆதலினாலே, காமமொன்றே (அவையனைத்தாலு நேரும்) நரக பூமியைக் காணியாட்சியாகக் கொடுக்க வல்லது என்று கூறியருளினான். காமமே என்பவற்றி னேகாரங்கள் தேற்றமும் பிரிநிலையுமாம். கண்ணோடாத காமம் - தன்னையுடையாரைக் கண்ணோட்டமின்றி வருத்தும் காமம். ஐம்பெரும்பாதகங்களுள் கொலை களவு கள் என்பவற்றை எடுத்தோதினமையின் இனம் பற்றிப் பொய்யையுங் கொள்க. காணியா - உரிமையாக; ஈறு தொக்கது. (27) கொலைப்பழி கோட்பட் டாங்கே குறுகியான் முகங்கண் டேட அலைப்பட ருழந்து சாம்பி யழிவதென் பார்ப்பா னென்னக் கலைப்படு திங்கள் வேணிக் கானவ னருட்க ணோக்கந் தலைப்படச் சிறிது பாவந் தணிந்துதன் னறிவு தோன்ற. (இ - ள்.) கொலைப்பழி கோள்பட்டு ஆங்கே குறுகியான் முகம் கண்டு - கொலைப் பாவத்தால் விழுங்கப்பட்டு அவ்விடத்தை யடைந்தவனது முகத்தை நோக்கி, ஏட பார்ப்பான் - ஏடா பார்ப்பானே, அலைப்படர் உழந்து சாம்பி அழிவது என் என்ன - அலைத்தலையுடைய துன்பத்தால் வருந்தி வாடி மெலிவது என்னை என்று வினாவியருள, கலைப்படு திங்கள் வேணிக் கானவன் அருள் கண் நோக்கம் சிறிது தலைப்பட - ஒரு கலையினைப் பொருந்திய பிறையையணிந்த சடையையுடைய வேடனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவருட்பார்வை சிறிது தலைப்படுதலால், பாவம் தணிந்து தன் அறிவு தோன்ற - பாவங் குறைந்து தனது முன்னை யுணர்வு தோன்றா நிற்க. பழி கோட்பட்டு, தம்மினாகிய தொழிற்சொல் வர வலி யியல் பாயிற்று. அலை : முதனிலைத் தொழிற்பெயர்; "அலைமேற் கொண்டு" என்புழிப்போல. வேணிக் கானவன் - வேணியையுடைய வேடன், வேணியாகிய காட்டையுடையன் என இரு பொருள் தோன்ற நின்றது. பாவம் முழுது மொழிதல் பின் கூறப்படுதலின் ஈண்டுச் சிறிது தணிந்தென்றலுமாம். (28) முற்பக லிழைத்த பாவ முதிர்ச்சியால்1 பிறந்து தந்தை தற்பக2 னான வாறுந் தாதையை வதைத்த வாறும் பிற்பக லந்தப் பாவம் பிடித்தலைத் தெங்குந் தீரா திப்பதி புகுந்த வாறு மெடுத்துரைத் திரங்கி நின்றான். (இ - ள்.) முன் பகல் இழைத்த பாவ முதிர்ச்சியால் பிறந்து - முற்பிறப்பிற் செய்த பாவ முதிர்ச்சியாலே பிறந்து, தந்தை தற்பகன் ஆனவாறும் - தந்தையின் மனைவியை அடைந்த தன்மையும், தாதையை வதைத்தவாறும் - (அது காரணமாகத்) தந்தையைக் கொன்ற தன்மையும், பின் பகல் அந்தப் பாவம் பிடித்து அலைத்து - பின்னாளில் அந்தக் கொலைப் பாவம் பிடித்து வருத்த, எங்கும் தீராது - எங்குந் திரிந்து அது நீங்கப் பெறாமல், இப்பதி புகுந்தவாறும் - இப்பதியை அடைந்த தன்மையும், எடுத்து உரைத்து இரங்கி நின்றான் - எடுத்துக் கூறிக் கவன்று நின்றான். தற்பகன் - தந்தையின் படுக்கையைப் பெற்றவன் என்பர்; தற்பகைஎன்னும் பாடத்திற்கு, தனக்குப் பகையென்பது பொருள். அலைத்து - அலைக்க; எச்சத்திரிபு. (29) மறப்பெரும் படிவங் கொண்டு மனத்தருள் சுரந்து நின்ற அறப்பெருங் கருணை மூர்த்தி யழிதகை யவனைப் பார்த்தித் திறப்பழி யாங்குச் சென்று மீங்கன்றித் தீரா தென்றக் கறைப்பழி தீரும் வண்ணங் கருதியோ ருறுதி கூறும். (இ - ள்.) மறம் பெரு படிவம் கொண்டு - (புறத்தில்) மறத் தொழிலையுடைய பெரிய வேட்டுவ வடிவங் கொண்டு, மனத்து அருள் சுரந்து நின்ற அறப்பெருங் கருணை மூர்த்தி - அகத்தின்கண் அருள் ஊறி நின்ற அறவுருவாகிய பேரருட் பெருமான், அழிதகையவனைப் பார்த்து - அந்த அழிதகைமையுடையவனை நோக்கி, இத் திறப்பழி - இக்கொடிய பழியானது, யாங்குச் சென்றும் ஈங்கு அன்றித் தீராது என்று - எங்கே செல்லினும் இப்பதியிலன்றி நீங்காது என்று கூறி, அக்கறைப் பழி தீரும் வண்ணம் கருதி ஓர் உறுதி கூறும் - அவ்வடுவாகிய பழி தீரும் வகையைக் கருதி ஓர் உபாயம் கூறியருளுவான். இறைவன் கொள்ளுங் கோலங்களில் மறத்தன்மை யுடையன போல்வனவும் அருளுருவங்களே என்பது தோன்றக் கூறியவாறு; "வேகியா னாற்போற்செய்த வினையினை வீட்ட லோரார்" எனச் சிவஞானசித்தி கூறுவது காண்க. திறப்பழி - ஏனைப் பழிகள் போல்வதன்றி வேறாகிய கொடும்பழி. ஈங்கன்றி யாங்குச் சென்றும் தீராது எனக் கூட்டுக. கறை - நீங்காது நிற்கும் மறு. (30) வருதிநின் னாமஞ் சொன்னோர் வருக்கமு நரகில் வீழக் கருதிநீ செய்த பாவங் கழிப்பவ ரெவர்யா நோக்கந் தருதலா லெளிதிற் றீரச் சாற்றுது மையங் கையேற் றொருபொழு துண்டி யீச னுறுதவ1 ரேவல் செய்தி. (இ - ள்.) வருதி - வருவாய், நின் நாமம் சொன்னோர் வருக்கமும் நரகில் வீழ - உனது பெயரைக் கூறினவரின் மரபிலுள்ளோரும் நரகில் வீழுமாறு, நீ கருதி செய்த பாவம் கழிப்பவர் எவர் - நீ அறிந்து செய்த பாவத்தைப் போக்குவார் யாவர, யாம் நோக்கம் தருதலால் எளிதில் தீரச் சாற்றுதும் - நாம் திருவருணோக்கஞ் செய்தமையால் எளிதினில் நீங்குமாறு கூறுகின்றோம்; ஐயம் கை ஏற்று ஒரு பொழுது உண்டி - கையிலே பிச்சையேற்று ஒரு பொழுது உண்பாய், ஈசன் உறுதவர் ஏவல் செய்தி - சிவபெருமானுக்கு அடியார்களாகிய மிக்க தவத்தினையுடையாரின் ஏவலைச் செய்வாய். வருக்கமும் நரகில் வீழ்தல் கூறவே சொன்னோர் வீழ்தலும், நாமஞ் சொன்னோர் வீழ்வர. எனவே இணங்கினார் முதலானவர் வீழ்தலும் கூறவேண்டாவாயின. அறியாமற் செய்த பாவமென்றென்பார் 'கருதி நீ செய்த பாவம்' என்றார். எவராலும் கழித்தற் கரிதாயினும் எமது திருநோக்கிற் கிலக்கானமையின் தீரச் சாற்றுதும் என்றாரென்க. உண்டி - உண்ணுதி. உண்டி, செய்தி என்பவற்றில் த் : எழுத்துப் பேறு; இ எதிர்கால விகுதி. (31) செங்கதிர்க் கடவுள் வானந் தீண்டுமுன் னெழுந்து தீந்தண் பைங்கதி ரறுகு கொய்து பசுக்களை யருத்தி யார்வம் பொங்கமுப் போதுங் கோயிற் புறத்தொட்டித் தீர்த்த மாடிச் சங்கரன் றனைநூற் றெட்டு மெய்வலஞ் சாரச் செய்தி. (இ - ள்.) செங்கதிர்க் கடவுள் வானம் தீண்டு முன் எழுந்து- சிவந்த கிரணங்களையுடைய சூரியன் தோன்றி வானைத் தொடுவதற்கு முன்னமே எழுந்து, தீந்தண் பைங்கதிர் அறுகு கொய்து - இனிய தண்ணிய பசிய ஒளியையுடைய அறுகம் புல்லைக் கொய்து, பசுக்களை அருத்தி - பசுக்களை உண்பிப்பாய்; ஆர்வம் பொங்க முப்போதும் கோயில் புறத்தொட்டித் தீர்த்தம் ஆடி - அன்பு மேலோங்க மூன்று காலமும் திருக்கோயிலின் புறத்திலுள்ள தொட்டித் தீர்த்தத்தின்கண் நீராடி, சங்கரன் தனை நூற்றெட்டு மெய்சாரவலம் செய்தி - சிவபெருமானை நூற்றெட்டு முறை உடம்பாலே பொருந்த வலஞ் செய்வாய். நல்ல நிலத்திலே செழுமையாகவிருக்கும் அறுகென்க. அருத்துதி எனற்பாலது அருத்தி என நின்றது. முப்போது - காலை நண்பகல் மாலை. கோயிற் புறத்தொட்டி - அபிடேக நீர் வந்து விழும் புறத்திலுள்ள தொட்டி. சங்கரன்றன்னை என்பதற்குச் சிவபெருமான் திருக்கோயில் என்பது கருத்தாகக் கொள்க. மெய்வலம் அங்கப் பிரதக்கணம். (32) இத்தவ நெறியி னின்றா லிப்பழி கழியு மென்னாச் சித்தவன் புடைய வேடத் திருவுருக் கொண்ட கொன்றைக் கொத்தவ னுரைத்தான் கேட்டுக் கொடிச்சியா யிருந்த வம்மை மத்தவன் கரித்தோல் போர்த்த மறவனை வினவு கின்றாள். (இ - ள்.) இத் தவநெறியில் நின்றால் இப்பழி கழியும் என்னா - இந்தத் தவ ஒழுக்கங்களி னின்றால் இந்தக் கொலைப் பழி நீங்கும் என்று, சித்தம் அன்பு உடைய வேடத் திருவுருக் கொண்ட கொன்றைக் கொத்தவன் உரைத்தான் - உள்ளத்தில் அன்புடைய வேடத் திருவுருவங் கொண்ட கொன்றைப் பூங்கொத்தினையணிந்த சோமசுந்தரக் கடவுள் கூறியருளினன்; கேட்டுக் கொடிச்சியாய் இருந்த அம்மை - இதனைக் கேட்டு வேட்டுவிச்சியாய் இருந்த உமையம்மையார், மத்தம் வன் கரித் தோல் போர்த்த மறவனை வினவுகின்றாள் - மத மயக்கத்தையுடைய வலிய யானையின் தோலைப் போர்த்தருளிய வேடனை வினவுகின்றார். இத்தவநெறி - மேல் இரு செய்யுளிலும் உண்டி, ஏவல் செய்தி, அருத்தி, செய்தி எனக் கூறியவை. உடைய, கொண்ட என்னும் பெயரெச்சங்களைக் கொத்தவன் என்பதன் விகுதியோடு தனித்தனி கூட்டுக. கொடிச்சி - குறிஞ்சித் தலைமகள்; வேட்டுவனுக்குப் பெண்பால். (33) ஐயவிக் கொடியோன் செய்த பாவத்துக் களவில் காலம் வெய்யநா லேழு கோடி நரகிடை வீழ்ந்தா னேனும் உய்வகை யிலாத பாவி யிவனுக்கென் னுய்யுந் தேற்றஞ் செய்வகை யென்று கேட்பச் செங்கண்மால் விடையோன் செப்பும். (இ - ள்.) ஐய - ஐயனே, இக்கொடியோன் - இத்தீயவன், செய்த பாவத்துக்கு - தான் செய்த பாவத்திற்கு, அளவு இல் காலம் - அளவிறந்த காலம் வரையும், வெய்ய நாலேழு கோடி நரகு இடை வீழ்ந்தானேனும் - கொடிய இருபத் தெட்டுக்கோடி நரகின் கண்ணும் வீழ்ந்தானாயினும், உய்வகை இலாத பாவி - பிழைக்கும் வழி இல்லாத பாவியாவான்; இவனுக்கு உய்யும் தேற்றம் செய்வகை என் என்று கேட்ப - இவனுக்கு உய்யும் தெளிவினைச் செய்யும் வகை என்னை என்று கேட்க, செங்கண்மால் விடையோன் செப்பும் -சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபவூர்தியையுடைய பெருமான் கூறியருளுவான். கொடியோன் பாவியாவான் இவனுக்குச் செய்வகை என்னென்று கேட்பச் செப்பும் என முடிக்க. உய்யுந் தேற்றம் - பிழைக்கும் துணிவு; கடைத்தேற்றம். (34) அடுபழி யஞ்சா நீச ராயினு நினைக்கி னச்சம் படுபழி அஞ்சான் செய்த பாதகத் தொடக்குண் டெங்கும் விடுவகை1 யின்றி வேறு களைகணு மின்றி வீயக் கடவனைக் காப்ப தன்றோ காப்பென்றான் கருணை மூர்த்தி. (இ - ள்.) கருணை மூர்த்தி - அருளேயுருவாகிய சோமசுந்தரக் கடவுள், அடுபழி அஞ்சா நீசர் ஆயினும், - கொல்லும் பழிக்கு அஞ்சாத புலையராயினும் (அவரும்), நினைக்கின் அச்சம் படுபழி அஞ்சான் செய்த - நினைத்தால் அச்சமுண்டாகும் கொடும் பழியை அஞ்சாது செய்த, பாதகத் தொடக்குண்டு - மாபாதகத்தாற் கட்டப் பட்டு, எங்கும் விடுவகை இன்றி - எவ்விடத்தும் தீரும் வகையில்லாமல், வேறு களைகணும் இன்றி - வேறு பற்றுக் கோடுமில்லாது, வீயக்கடவனைக் காப்பது அன்றோ காப்பு என்றான் - அழியக் கடவோனைக் காப்பதல்லவா பாதுகாப்பாகும் என்று கூறியருளினான். நீசர் நினைக்கினும் அவருக்கும் அச்சமுண்டாகும் பழி. அஞ்சான் : முற்றெச்சம். காப்பன்றோ கருணையாற் காக்கும் காப்பென்று சொல்லப்படுவ தென்க. (35) நெய்தற்போ தனைய வுண்க ணேரிழை நீயா தொன்று செய்தற்குஞ் செய்யா மைக்கும் வேறொன்று செயற்கு மாற்றல் மெய்தக்க கருணை வள்ளல் வேண்டினெவ் வினைஞ ரேனும் உய்தக்கோ ராதல் செய்கை யுன்னருள் விளையாட் டன்றோ. (இ - ள்.) நெய்தல்போது அனைய உண்கண் நேரிழை - கருங்குவளை மலரை ஒத்த மையுண்ட கண்களையுடைய உமையம்மையார், நீ யாதொன்று செய்தற்கும் செய்யாமைக்கும் வேறு ஒன்று செயற்கும் மெய் ஆற்றல் தக்க கருணை வள்ளல் - நீ எதுவும் ஒன்றனைச் செய்தற்கும் செய்யாமைக்கும் மற்றொன்று செய்தற்கும் உண்மை வலியுடைய அருள் வள்ளலாகுவை; எவ்வினைஞரேனும் வேண்டின் உய்தக்கோர் ஆதல் செய்கை - எத்தகைய கொடுந்தொழிலினை யுடையரேனும் விரும்பினால் அவர் உய்தி பெறுவதற்குரியராகச் செய்தல், உன் அருள் விளையாட்டு அன்றோ - நினது திருவருள் விளையாட்டல்லவா? நேரிழை : அன்மொழித்தொகை. செய்தல், செய்யாமை, வேறொன்று செய்தல் என்பன முறையே கர்த்திருத்துவம் அகர்த்திருத்துவம் அன்னிய தாகர்த்திருத்துவம் என்று கூறப்படும். மெய் ஆற்றல் தக்க கருணை வள்ளல் நீயென்க. உய்தக்கோராதல் செய்கை -உய்யத் தக்கோராகச் செய்வது. (36) என்றக மகிழ்ச்சி பொங்க வியம்பினா ளியம்ப லோடுங் குன்றக நாட்ட வேடக் குழகனு மறைந்து வெள்ளி மன்றக நிறைந்தான் மேக மறைந்திட மறைந்து செல்லும் மின்றக விடாது பின்போம் விளங்கிழை மடந்தை யோடும். (இ - ள்.) என்று அகம் மகிழ்ச்சி பொங்க இயம்பினாள் - என்று மனக் களிப்பு மீக்கூரக் கூறியருளினார், இயம்பலோடும்- அங்ஙனம் கூறியவளவில், குன்றகம் நாட்ட வேடக் குழகனும் - மலை நாட்டையுடைய வேடனாகிய சோமசுந்தரக் கடவுளும், மறைந்து - திருவுருக்கரந்து, மேகம் மறைந்திட மறைந்து செல்லும் மின்தக - முகில் மறைய உடன் மறைந்து செல்லும் மின் போல, விடாது பின் போம் விளங்கு இழை மடந்தையோடும் - விடாது பின் செல்லும் விளங்கிய அணிகளையுடைய உமைப் பிராட்டியோடும், வெள்ளி மன்று அகம் நிறைந்தான் - வெள்ளியம்பலத்தில் நிறைந்தருளினான். நேரிழை, கருணை வள்ளல் நீ செய்கை உன் அருள் விளையாட்டன்றோ என்று இயம்பினாள் என்க. குன்றக நாடு மலையின் கண்ணுள்ள நாடு. நாட்ட, குறிப்புப் பெயரெச்சம். குழகன் - சுந்தரன். கரிய வேட்டுருக் கொண்டு வந்தமையின் மேகத்தை உவமை கூறினார். மின்தக - மின்னலை யொக்க. இறைவனுடன் இறைவி திருவுருக் கரந்தமைக்குக் கூறிய இவ்வுவமை மிகப் பாராட்டற்குரியது. (37) ஆததா யியுங்கண்1 டானா வற்புத மடைந்து கூடல் நாதனார் நவின்ற வாற்றா னன்னெறி விரதச் செய்கை மாதவ வொழுக்கந் தாங்கி வருமுறை மதிய மூன்றிற் பாதகங் கழிந்து தெய்வப் பார்ப்பன வடிவ மானான். (இ - ள்.) ஆததாயியும் கண்டு ஆனாத அற்புதம் அடைந்து- மா பாதகனும் அதனைப் பார்த்து நீங்காத வியப்பினை எய்தி, கூடல் நாதனார் நவின்ற வாற்றால் - மதுரை நாயகன் கூறியருளிய நெறியே, நல் நெறி விரதச் செய்கை மாதவ ஒழுக்கம் தாங்கி வருமுறை - நல்வழிக் கேதுவாகிய விரதச் செயலையும் பெரிய தவவொழுக்கத்தையும் மேற்கொண்டு செய்து வருமுறைமையால், மதியம் மூன்றில் பாதகம் கழிந்து தெய்வப் பார்ப்பன வடிவமானான் - மூன்று மாதங்களிலே பாதகமுற்றுந் தொலைந்து தெய்வத் தன்மை பொருந்திய பார்ப்பன வடிவமாயினான். ஆததாயி - கொடியோன்; நஞ்சிடுவார், தீக்கொளுவுவார் கருவி யாற் கொல்வார் முதலாயினோரை வடநூலார் ஆததாயிகள் என்ப; "கொலையிற் கொடியாரை வேந் தொறுத்தல்" என்னுங் குறளுரையிற் பரிமேழலகர் எழுதியிருப்பது நோக்குக. ஆதனாங்கது கண்டு என்பது பாடமாயின் அறிவில்லான் அதனைக் கண்டு என்பது பொருளாகும். முன்னுள்ள நிலைமையினும் உயர்ந்த நிலைமை எய்தினானென்பார் 'தெய்வப் பார்ப்பன வடிவ மானான்' என்றார். (38) சொற்பதங் கடந்த வெந்தை சுந்தர நாதன் றாளிற் பற்பல வடசொன் மாலை பத்தியிற் றொடுத்துச் சாத்தித் தற்பர வறிவா னந்தத் தனியுரு வுடைய சோதி பொற்பத மருங்கிற் புக்கான் புண்ணிய மறையோ னம்மா. (இ - ள்.) புண்ணிய மறையோன் - அங்ஙனம் புண்ணிய வடிவாகிய அந்தணன், சொல் பதம் கடந்த எந்தை சுந்தரநாதன் தாளில் - சொல்லி னெல்லையைக் கடந்த எம் தந்தையாகிய சோமசுந்தரக் கடவுள் திருவடியில், பற்பல வட சொல் மாலை பத்தியில் தொடுத்துச் சாத்தி - பற்பல வடமொழியாலாகிய பாமாலைகளைப் பத்தியுடன் தொடுத்து அணிந்து, தற்பர அறிவு ஆனந்தம் தனி உருவு உடைய சோதி - உண்மையறிவானந்த மென்னும் ஒப்பற்ற திருவுருவை யுடைய பரஞ்சுடராகிய சோமசுந்தரக் கடவுளின், பொன் பாதம் மருங்கில் புக்கான் - அழகிய திருவடியின் கண்ணே கலந்தனன். இறைவன் சொற்பதங் கடந்தா னாதலை, " சொற்பதங் கடந்த தொல்லோன்" என்று திருவாசகங் கூறுதல் காண்க. வட நாட்டினனாகலின் வடசொன் மாலை தொடுத்துச் சாத்தினனென்க. பத்தி - அன்பு, வரிசை. தற்பரம் - உண்மை யென்னும் பொருட்டு. அம்மா : வியப்பிடைச் சொல். (39) அன்னையைப் புணர்ந்து தாதை குரவனா மந்த ணாளன் றன்னையுங் கொன்ற பாவந் தணித்துவீ டளித்த தென்றால் பின்னைநீ ரிழிநோய் குட்டம் பெருவயி றீளை வெப்பென் றின்னநோய் தீர்க்குந் தீர்த்த மென்பதோ விதற்கு மேன்மை. (இ - ள்.) அன்னையைப் புணர்ந்து - தாயைப் புணர்ந்து, தாதை குரவன் ஆம் அந்தணாளன் தன்னையும் கொன்ற பாவம் - தந்தையும் குரவனுமாகிய அந்தணனையும் கொன்ற மாபாதகத் தையும், தணித்து வீடு அளித்தது என்றால் - போக்கி வீடு பேற்றை அளித்ததாயின், பின்னை - பின், நீர் இழி நோய் குட்டம் பெருவயிறு ஈளை வெப்பு என்று இன்ன நோய் - நீரிழிவும் குட்டமும் பெருவயிறும் ஈளையும் வெப்புமாகிய இந்த நோய்களை, தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு மேன்மை - போக்குகின்ற தீர்த்தமென்று சொல்லுவதோ இதற்கு மேன்மையாகும். தந்தையும் குரவனும் அந்தணனுமாகியவனைக் கொன்றான் என்றார்; " பாதக மென்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைத் தாளிரண்டும் - சேதிப்ப" என்னுந் திருக்களிற்றுப்படியாரிலதாதையென்றும் வேதியனென்றும் பிரித்தோதினமையுங் காண்க. அவன் புரிந்த தவச் செயல்களுள் கோயிலின் புறத்தொட்டி நீரில் முழுகியதைச் சிறந்தெடுத்து, இஃது அளித்ததென்றால் என்பதோ இதற்கு மேன்மையென்றார். (40) அழிந்தவே தியன்மா பாதகந் தீர்த்த தறிந்துவேந் தமைச்சரூ ருள்ளார் ஒழிந்தபா ருள்ளார் வானுளார் வியப்ப முற்றுநல் லுரையுணர் வெல்லாங் கழிந்தபே ரருளிக் கயவன்மேல் வைத்த காரணம் யாதெனக் கண்ணீர் வழிந்துநான் மாடக் கூடனா யகனை வழுத்தினார் மகிழ்ச்சியுட் டிளைத்தார். (இ - ள்.) வேந்து அமைச்சர் ஊர் உள்ளார் ஒழிந்த பார் உள்ளார் வான் உள்ளார் - மன்னனும் மந்திரிகளும் ஊரிலுள்ளவர்களும் ஏனைய நாட்டிலுள்ளவர்களும் தேவர்களுமாகிய அனைவரும், அழிந்த வேதியன் மாபாதகம் தீர்த்தது அறிந்து - நிலையழிந்த வேதியனது மாபாதகத்தைப் போக்கியதை அறிந்து, வியப்பம் உற்று - வியப்பெய்தி, நல் உரை உணர்வு எல்லாம் கழிந்த பேர் அருள் - நல்ல உரையையும் உணர்வையுங் கடந்த பெரிய திருவருளை, இக்கயவன் மேல் வைத்த காரணம் யாது என - இந்தக் கீழ்மகன் மீது வைத்ததற்குக் காரணம் யாதோ என்று, கண் நீர் வழிந்து - கண்களினின்றும் ஆனந்தவருவி பொழிய, நான்மாடக் கூடல் நாயகனை வழுத்தினார் மகிழ்ச்சியுள் திளைத்தார் - மதுரை நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளைத் துதித்து உவகைக் கடலில் அழுந்தினார்கள். வியப்பு என்பது வியப்பம் என்றாயது. திருவருளையுன்னிக் கண்ணீர் வழியத் திளைத்தார்களென்க. வழிந்து - வழிய; எச்சத் திரிபு. வழுத்தினார: முற்றெச்சம். (41) ஆகச் செய்யுள் - 1574. இருபத்தேழாவது அங்கம் வெட்டின படலம் [அறுசீரடி யாசிரிய விருத்தம்] வேதகந் தரத்து1 முக்கண் வேதியன் மறையோன் செய்த பாதகந் தவிர்த்த வாறு பகர்ந்தனம் விஞ்சை யீந்த போதகன் மனைக்குத் தீங்கு2புந்திமுன் னாகச் செய்த சாதகன் றனைப்போ ராற்றித் தண்டித்த தண்டஞ் சொல்வாம். (இ - ள்.) வேத கந்தரத்து முக்கண் வேதியன் - வேதம் பாடுந் திருமிடற்றினையுடைய மூன்று கண்களையுடைய மறையோனாகிய சோமசுந்தரக் கடவுள், மறையோன் செய்த பாதகம் தவிர்த்தவாறு பகர்ந்தனம் - பார்ப்பனன் புரிந்த மாபாதகத்தினை நீக்கியருளிய திருவிளையாடலைக் கூறினோம்; விஞ்சை ஈந்த போதகன் மனைக்கு - (இனி) வாள் கற்பித்த ஆசிரியன் மனைவிக்கு, புந்தி முன்னாகத் தீங்கு செய்த சாதகன்தனை - அறிவு சான்றாகத் தீங்கு புரிந்த மாணவனை, போர் ஆற்றித் தண்டித்த தண்டம் சொல்வாம் - போர் புரிந்து தண்டித்த திருவிளையாடலைக் கூறுவோம். வேதகந் தரித்த என்னும் பாடத்திற்கு இரத குளிகை போன்று வேதித்தலைக் கொண்ட என்றும், பிரமன் தலையைத் தாங்கிய என்றும் பொருள் கூறலாகும். போதகன் - ஆசிரியன். சாதகன் - மாணாக்கன். புந்தி முன்னாக என்பது மனப்பூர்வமாக என்று வடமொழியிற் கூறப்படும். (1) கூர்த்தவெண் கோட்டி யானைக் குலோத்துங்க வழுதி ஞாலங் காத்தர சளிக்கு நாளிற் கடிமதி லுடுத்த கூடல் மாத்தனி நகருள் வந்து மறுபுலத் தவனா யாக்கை மூத்தவ னொருவன் வைகி முனையவாள் பயிற்றி வாழ்வான். (இ - ள்.) கூர்த்த வெண் கோட்டு யானைக் குலோத்துங்க வழுதி - கூரிய வெள்ளிய கொம்புகளையுடைய யானைப் படையினையுடைய குலோத்துங்க பாண்டியன், ஞாலம் காத்து அரசு அளிக்கு நாளில் - புவியினைப் பாதுகாத்து ஆட்சி புரியுங் காலத்தில், மறுபுலத்தவனாய் யாக்கை மூத்தவன் ஒருவன் - அயல் நாட்டினனாய் மூப்பினால் உடம்பு முதிர்ந்த விஞ்சையனொருவன், கடிமதில் உடுத்த கூடல் மாத்தனி நகருள் வந்து வைகி - காவலையுடைய மதில் சூழ்ந்த கூடல் என்னும் பெரிய ஒப்பற்ற நகரின் கண் வந்து தங்கி, முனையவாள் பயிற்றி வாழ்வான் - கூர்மையுடைய வாட்போர் விஞ்சையினைக் கற்பித்து வாழா நின்றான். கூர்த்த, முனைய என்பன குறிப்புப் பெயரெச்சம். (2) வாள்வினைக் குரவ னன்னான் வல்லமண் விடுத்த வேழந் தோள்வினை வலியா லட்ட சுந்தர விடங்கன் றன்னை ஆள்வினை யன்புந் தானும் வைகலு மடைந்து தாழ்ந்து மூள்வினை வலியை வெல்லு மூதறி வுடைய னம்மா. (இ - ள்.) வாள்வினைக் குரவன் அன்னான் - வாட்டொழில் பயிற்றுங் குரவனாகிய அம் முதியோன், வல் அமண் விடுத்த வேழம் - வலிய சமணர்கள் ஏவிய யானையை, தோள்வினை வலியால் அட்ட சுந்தர விடங்கன் தன்னை - தமது திருத்தோளின் போர்த் தொழில் வன்மையாற் கொன்றருளிய அழகனாகிய சோமசுந்தரக் கடவுளை, வைகலும் - நாள்தோறும், ஆள்வினை அன்பும் தானும் அடைந்து தாழ்ந்து - இடையறாத அன்பும் தானுமாகச் சென்று வணங்குதலால், மூள்வினை வலியை வெல்லும் மூதறிவு உடையன் - மூண்டெழுகின்ற வினையின் வலியை வெல்லும் பேரறிவுடைய னாகும். அமண் :குழூஉப் பெயர். ஆள்வினை - முயற்சி; இடையறாமையை உணர்த்திற்று; அடிமைத் தொழில். அம்மா : இடைச் சொல். (3) கைவினை மறவாள் விஞ்சைக் காவல னவனைத் தாழ்ந்து தெவ்வினை வெல்வான் கற்குஞ் சிங்கவே றனையார் தம்முள் உய்வினை யுணராப் பாவி சித்தனென் றொருவ னுள்ளான் அவ்வினை நிரம்பக் கற்றா னாகலூழ் வலியா லன்னான். (இ - ள்.) மறம் வாள் கைவினை விஞ்சைக் காவலன் அவனைத் தாழ்ந்து - கொலைத் தொழிலையுடைய வாளினைக் கையிற் கொண்டு பொரும் வித்தையில் வல்லனாகிய அம்முதியோனை வணங்கி, தெவ்வினை வெல்வான் கற்கும் சிங்க ஏறு அனையார் தம்முள் - பகையை வெல்லுமாறு வாள் வித்தை பயிலும் சிங்கவேற்றினை ஒத்த மாணவர் பலருள், உய்வினை உணராப் பாவி சித்தன் என்று ஒருவன் உள்ளான் - உய்யு நெறியை அறியாத பாவியாகிய சித்தனென்று ஒருவனுளன்; அன்னான் ஆகலூழ் வலியால் அவ்வினை நிரம்பக் கற்றான் - அவன் ஆகூழின் வலியினால் அத் தொழிலைக் குறைவின்றிக் கற்றான். தெவ் - பகை; பகைவரை யுணர்த்திற்று. வெல்வான் : வினையெச்சம். உய்வு தீ வினையினின்றும் பிழைத்தல். ஆகலூழ்- அவ்விஞ்சை பெருகுதற்குக் காரணமாகிய ஊழ்; "ஆகலூ ழுற்றக் கடை" என்பது திருக்குறள். (4) மானவாள் விஞ்சை யாலே தனைநன்கு மதிக்கத் தக்க தானதோர் செருக்கி னாற்றன் னாசிரி யற்கு மாறாய்த் தானுமோர் விஞ்சைக் கூடஞ் சமைத்துவாள் பலருங் கற்க ஊனுலாம் படைவல் லானி லூதிய மிதப்பக் கொள்வான். (இ - ள்.) மானவாள் விஞ்சையாலே - பெருமை பொருந்திய வாள் வித்தையாலே, தனை நன்கு மதிக்கத்தக்கது ஆனது ஓர் செருக்கினால் தன்னைப் பலரும் நன்கு மதிக்கத்தக்க திறமை பெற்றிருக்கும் ஓர் செருக்கினால், தன் ஆசிரியற்கு மாறாய் - தன் குரவனுக்கு மாறாய், தானும் ஓர் விஞ்சைக் கூடம் சமைத்து- தானும் ஒரு வித்தைக் கூடமமைத்து, பலரும் வாள் கற்க - பலரும் வந்து வாள் விஞ்சை பயிலுமாறு (பயிற்றலால்), ஊண் உலாம் படை வல்லானில் ஊதியம் மிதப்பக் கொள்வான் - புலால் தங்கிய வாள் வல்லானாகிய ஆசிரியனிலும் ஊதியம் நிரம்பப் பெறுவானாயினன். வீரரது மானத்தை வாள்மே லேற்றிக் கூறிற்றுமாம். மதிக்கத்தக்க தன்மை உண்டானதா லாகிய செருக் கென்க. விஞ்சைக் கூடத்தைச் சிலம்பக்கூடம் என்று வழங்குவர். உலாம்- உலாவும்; பொருந்தும். மிதப்ப - மிக. (5) ஒருத்தனே யிருவர் வாளின் விருத்தியு மொருங்கு கொள்ளுங் கருத்தனாய் விருத்த னூரிற் கழிவது கருதி யன்னான் வருத்துவா ளிளையர் தன்பால் வரமனந் திரித்து நாளும் விருத்தமே செய்வான் றாயை விரும்பினோற் கிளையோ னன்னான். (இ - ள்.) ஒருத்தனே இருவர் வாளின் விருத்தியும் ஒருங்கு கொள்ளும் கருத்தனாய் - தான் ஒருவனே இருவரின் வாட்போர் பயிற்றலால் வரும் ஊதியத்தையும் ஒரு சேர அடையும் கருத்தினையுடையவனாய், விருத்தன் ஊரில் கழிவது கருதி - அம் முதியோன் அவ்வூரினின்றும் நீங்குதல் கருதி, அன்னான் வருத்து வாள் இளையர் தன்பால் வர - அவனுடைய வருத்துகின்ற வாட்போர் பயிலும் மாணவர்கள் தன்னிடம் பயில வருமாறு, மனம் திரித்து நாளும் விருத்தமே செய்வான் - அவர்கள் மனத்தை வேறுபடுத்தி நாள்தோறும் பகைமையே செய்து வருவான்; தாயை விரும்பினோற்கு இளையோன் அன்னான் - (அன்றியும் அவன்) தாயை விரும்பிக் கூடிய மாபாதகனுக்கு இளையாள் போல்வானாய். வாளின் விருத்தி - வாள் பயிற்றுதலாற் பெறும் நிவேதனம். இளையர் - இளம் பருவமுடையர்; வீரர் என்றுமாம். அன்னான் என்பது எச்சமாய் வருஞ் செய்யுளிற் கேட்டுக் கேட்டகல்வான் என்பது கொண்டு முடியும். (6) தொடத்தொடப் பொறுக்குந் திண்மைத் தொன்னில மனையா னில்லா இடத்தவன் றேவி பாற்போ யிடனுண்டே யிடனுண் டேயென் றடுத்தடுத் தஞ்சா தென்றுங் கேட்டுக்கேட் டகல்வா னாக நடைத்தொழிற் பாவை யன்ன நங்கைவா ளாவி ருந்தாள்.1 (இ - ள்.) தொடத் தொடப் பொறுக்கும் திண்மைத் தொல் நிலம் அனையான் - தோண்டப் தோண்டத் பொறுக்குந் திண்ணிய பழமையாகிய நிலத்தினைப் போலும் பொறுமையுடைய அவ்வாசிரியன், இல்லா இடத்து அவன் தேவிபால் போய் - இல்லாதபொழுது அவன் மனைவியிடத்துச் சென்று, இடன் உண்டே இடன் உண்டே என்று - சமயமுண்டோ சமயமுண்டோ என்று, என்றும் அடுத்து அடுத்து அஞ்சாது கேட்டுக் கேட்டு அகல்வானாக - நாள்தோறும் அடுத்தடுத்துச் சிறிதும் அஞ்சாது கேட்டுக் கேட்டு நீங்க, நடைத்தொழில் பாவை அன்ன நங்கை வாளா இருந்தாள் - நடக்குந் தொழிலையுடைய பாவை போன்ற அம்மாதராள் ஒன்றும் பேசாது சும்மா இருந்தாள். அடுக்குகள் பன்மைப் பொருளில் வந்தன. தோண்டுந் தோறும் பொறுக்கும் நிலம் போலும் பொறுமையென்னுங் கருத்தினை, " அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்த றலை" என்னுந் திருக்குறளிறகாண்க. இடன் - சமயம.. ஏகாரம் வினா. நடைத் தொழிற் பாவையன்னாள் என்றது இல் பொருளுவமம். (7) பின்னொரு பகற்போய்ச் செங்கை பிடித்தனன் வலிப்பத் தள்ளி வன்னிலைக் கதவ நூக்கித் தாழக்கோல் வலித்து மாண்ட தன்னிலைக் காப்புச் செய்தா டனிமனக் காவல் பூண்டாள் அந்நிலை பிழைத்த தீயோ னனங்கத்தீ வெதுப்பப் போனான். (இ - ள்.) பின் ஒரு பகல் போய் செங்கை பிடித்தனன் வலிப்ப- பின்பு ஒரு நாள் சென்று அவள் சிவந்த கையைப் பிடித்து இழுக்க, தனிமனக் காவல் பூண்டாள் - ஒப்பில்லாத மனமாகிய காவலை யுடைய அந்நங்கை, தள்ளிவல் நிலைக்கதவம் நூக்கித் தாழக்கோல் வலித்து - அவனைப் புறம்பே தள்ளி வலிய நிலையையுடைய கதவினைச் சாத்தித் தாழிட்டு, மாண்ட தன் நிலை காப்புச் செய்தாள் - மாட்சிமைப்பட்ட தனது கற்பு நிலையைக் காத்துக் கொண்டனள்; அந்நிலை பிழைத்த தீயோன் அனங்கத்தீ வெதுப்பப் போனான் - அப்பொழுது தன் எண்ணம் தப்பிய அக்கொடியோன் காமத் தீயானது சுடச் சென்றான். பிடித்தனன் வலிப்ப - வலிதிற் பற்றியிழுக்க. தாழக்கோல் : தாழாகிய கோல்; அக்குச் சாரியையென்று தொல்காப்பியரும், அகரம் சாரியை யென்று நன்னூலாரும் கூறுவர்; " தாழென் கிளவி கோலொடு புணரின் அக்கிடை வருத லுரித்து மாகும்" என்பது தொல்காப்பியம். மனக்காவல் - மனத்தைக் கற்பு நெறியில் நிறுத்துங்காவல்; இது நிறை யெனப்படும்; " சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை" என்பது திருக்குறள். பிழைத்த - தவறு செய்த என்றுமாம். (8) அறங்கடை நின்றா ருள்ளு மாற்றவுங் கடைய னாகிப் புறங்கடை நின்றான் செய்த புலைமைதன் பதிக்குந் தேற்றாள் மறந்தவிர் கற்பி னாடன் மனம்பொதிந் துயிர்க டோறும் நிறைந்தநான் மாடக் கூட னிமலனை நினைந்து நொந்தாள். (இ-ள்.) அறங்கடை நின்றாருள்ளும் ஆற்றவும் கடையனாகி- பாவநெறியில் நின்றாரெல்லாருள்ளும் மிகவுங் கடையனாகி, புறங்கடை நின்றான் செய்த புலைமை - மனையின் வாயிற் புறத்தே வந்து நின்ற அக் கொடியோன் செய்த புலைத் தன்மையை, தன் பதிக்கும் தேற்றாள் - தன் நாயகனுக்குந் தெரிவியாது, மறம் தவிர் கற்பினாள் - மறம் நீங்கிய கற்பினையுடையாள், மனம் பொதிந்து - தன் மனத்தின் கண்ணே மூடி வைத்து, உயிர்கள் தோறும் நிறைந்த நான்மாடக் கூடல் நிமலனை நினைந்து நொந்தாள் - உயிர்கள் தோறும் நிறைந்துள்ள கூடலம்பதியில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுளை நினைந்து வருந்தினாள். அறங்கடை - பாவம்; " அறங்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில்" என்னும் வாயுறைவாழ்த்து இங்கு நோக்கற்பாலது. புலைமை - கீழ்மை. மறந்தவிர் கற்பினாள் - அறக்கற்புடையாள். அறக் கற்பினளாகலின் பதிக்கும் தெரிவியாது கூடனிமலனை நினைந்து நொந்தாள் என்க. (9) தாதக நிறைந்த கொன்றைச் சடையவன் புறம்பு செய்த பாதக மறுக்குங் கூடற் பகவனெவ் வுயிர்க்குந் தானே போதக னாகித் தேற்றும் புண்ணியன் புலைஞன் செய்த தீதக முணர்ந்து தண்டஞ் செய்வதற் குள்ளங் கொண்டான். (இ - ள்.) அகம் தாது நிறைந்த கொன்றைச் சடையவன் - உள்ளே மகரந்தம் நிறைந்த கொன்றை மலர் மாலையை யணிந்த சடையையுடையவனும், புறம்பு செய்த பாதகம் அறுக்கும் கூடல் பகவன் - வேற்று நாட்டிற் செய்த மாபாதகத்தையும் போக்கும் மதுரைப் பிரானும், எவ்வுயிர்க்கும் தானே போதகன் ஆகித் தேற்றும் புண்ணியன் - எவ்வகை உயிர்களுக்குந் தானே உணர்த்துவோனாகி அறிவிக்கும் அறவடிவினனும் ஆகிய சோமசுந்தரக் கடவுள், புலைஞன் செய்த தீது அகம் உணர்ந்து தண்டம் செய்வதற்கு உள்ளம்கொண்டான் - நீசனாகிய சித்தன் செய்த தீங்கினை மனத்தினுணர்ந்து அவனைத் தண்டிப்பதற்குத் திருவுள்ளங் கொண்டருளினான். புறம்பு செய்த பாதக மறுக்கும் என்றதன் கருத்து பிற பதிகளிற் போக்கலாகாத பாவத்தையும் போக்குமென்பதாம். பகவன் - இறைமைக் குணங்கள் ஆறுடையான், போதகனாகி - அறிவினை விளக்குவோனாகி; பக்குவ மெய்திய உயிர்களுக்கெல்லாம் ஆசானாகி மெய்ப்பொருளைத் தெளிவிக்கும் என்றுமாம். (10) கோளுடைக் குரவ னேபோற் சித்தனைக் குறுகிச் சித்தா காளையா நீயுஞ் சாலக் கழியமூப் படைந்த யாமும் வாளம ராடி நந்தம் வலிகளு மளந்து காண்டும் நாளைவா வருது நாமு நகர்ப்புறத் தொருசா ரென்றான். (இ-ள்.) கோள் உடைக் குரவனே போல் சித்தனைக் குறுகி - வலியமைந்த அவ்வாளாசிரியனைப் போலத் திருவுருக் கொண்டு சித்தனை அடைந்து, சித்தா - சித்தனே, காளை ஆம் நீயும் - காளைப் பருவத்தினை யுடைய நீயும், சாலக் கழிய மூப்பு அடைந்த யாமும் - மிக்க மூப்பினையுற்ற யாமும், வாள் அமர் ஆடி - வாட்போர் புரிந்து, நம் தம் வலிகளும் அளந்து காண்டும் - நம் ஆற்றல்களையும் வரை செய்து காண்போம், நகர்ப்புறத்து ஒரு சார் நாளைவா நாமும் வருதும் என்றான் - நகரின் புறத்தே ஒரு பக்கத்தில் நாளை நீ வருவாயாக நாமும் வருவோம் என்று கூறியருளினன். கோள் - வலிமை. சாலக்கழிய, ஒரு பொருட் பன்மொழி; அளவின்றி மூத்த என்றபடி. 'காளையா நீயும் சாலக்கழிய மூப்படைந்த யாமும்' என்றது போரின் கண் அவனுக்கு ஊக்கத்தையும் மானத்தையும் எழுப்ப வேண்டி யென்க. குமரன் வலியையும் விருத்தன் வலியையும் காண்போமென்றான். காண்டும், வருதும் என்பன தன்மைப் பன்மையெதிர்கால முற்றுக்கள். (11) நாதனாங் குரவன் கூற நன்றென வுவந்து நாலாம் பாதக னதற்கு நேர்ந்தான் படைக்கலக் குரவன் மீண்டு பேர்தரு மளவில் வையம் புதையிருள் வெள்ளத் தாழ ஆதவன் வைய முந்நீர் வெள்ளத்து ளாழ்ந்த தம்மா. (இ - ள்.) நாதன் ஆம் குரவன் கூற - இறைவனாகிய வாளாசிரியன் கூற, நாலாம் பாதகன் - நாலாவது பாதகமாகிய காமத்தை மேற்கொண்ட சித்தன், நன்று என உவந்து அதற்கு நேர்ந்தான் - நல்லது என்று மகிழ்ந்து அதனுக்கு உடன்பட்டான்; படைக்கலக் குரவன் மீண்டு போதரும் அளவில் - வாளாசிரியன் மீண்டு போகும் போது, வையம் புதை இருள் வெள்ளத்து ஆழ - புவியானது நிறைந்த இருள் வெள்ளத்தில் முழுகும்படி, ஆதவன் வையம் - சூரியன் தேரானது, முந்நீர் வெள்ளத்துள் ஆழ்ந்தது - கடல் வெள்ளத்தில் முழுகியது. ஐம்பெரும் பாவங்களையெண்ணுமிடத்துக் காமம் நான்காம் எண்ணு முறைக்கண் நிறுத்தப்படுதலின் 'நாலாம் பாதகன்' என்றார். வையம் - புவி, தேர். அம்மா : அசை. (12) ஆசினன் குரவற் கின்னா வாற்றினோன் பாவம் போல மாசிரு டிணிந்த1 கங்குல் வலிகெட வடிவாள் விஞ்சைத் தேசிக னொருவ னன்னான் றிணியுடல் சிதைப்பத் தீட்டுங் காய்சின வாள்போற் கீழைக் கல்லிடை முளைத்தான் வெய்யோன். (இ - ள்.) ஆசு இல் நன்குரவற்கு இன்னா ஆற்றினோன் பாவம் போல - குற்றமில்லாத நல்ல குரவனுக்குத் துன்பஞ் செய்த சித்தனது பாவச் செறிவுபோல, மாசு இருள் திணிந்த கங்குல் வலிகெட - கரிய இருள் நிறைந்த இரவின் வன்மை கெடுமாறு, வடிவாள் விஞ்சைத் தேசிகன் ஒருவன் - கூரிய வாள்வித்தை கற்பிக்கும் குரவனாகிய ஒப்பற்ற இறைவன், அன்னான் திணி உடல் சிதைப்பத் தீட்டும் காய்சின வாள் போல் - அச்சித்தனது வலிய உடலைச் சேதிப்பதற்குத் தீட்டுகின்ற காயும் சினத்தினையுடைய வாட் படை போல, வெய்யோன் கீழைக்கடலிடை முளைத்தான் - ஆதித்தன் கிழக்கு மலையிலே தோன்றினான். இருள் நிறைந்தது; பின் அவ்விருளின் வலிகெட வெய்யோன் முளைத்தான் என்றுரைத்துக் கொள்க. தேசிகன் வடிவுகொண்டு வந்த ஒப்பற்றவன். (13) நன்றியைக் கொன்று தின்றோ னாயக னாணைக் கஞ்சும் வன்றிற லரிமா னூர்தித் தெய்வதம் வழிபட் டேத்தி வென்றிவாள் பரவிக் கச்சு வீக்கிவாள் பலகை யேந்திச் சென்றுவா ளுழவன் சொன்ன செருக்களங் குறுகி னானே. (இ - ள்.) நன்றியைக் கொன்று தின்றோன் - குரவன் செய்த உதவியை முற்றுங் கெடுத்தவனாகிய சித்தன், நாயகன் ஆணைக்கு அஞ்சும் - சிவபெருமான் ஆணைக்கு அஞ்சும், வன்திறல் அரிமான் ஊர்தித் தெய்வதம் வழிபட்டு ஏத்தி - மிக்க வலியினையுடைய சிங்கவூர்தியையுடைய துர்க்கையை வணங்கித் துதித்து, வென்றிவாள் பரவி - வெற்றி பொருந்திய வாட்படையைத் துதித்து, கச்சு வீக்கி வாள் பலகை ஏந்திச் சென்று - கச்சினைக் கட்டி வாளையும் கேடகத்தையுங் கையிலேந்திச் சென்று, வாள் உழவன் சொன்ன செருக்களம் குறுகினான் - வாளாசிரியன் சொன்ன போர்க்களத்தை அடைந்தான். ஆசிரியன் செய்த நன்றியை மறந்து அவனுக்குப் பெருந்தீங்கியற்ற லானான் ஆகலின் 'நன்றியைக் கொன்று தின்றோன்' என்றார். நன்றி கோறல் உய்தியில்லாத பாவமென்பது, " எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்னுந் திருக்குறளாறபெறப்படும். கொற்றந்தரும் தெய்வமாயினும் இறைவனாணைக்கஞ்சு மதனை வழிபட்டு இறைவனை வெல்லுமா றெங்ஙனம் என்பார் 'நாயகனாணைக் கஞ்சும்.................தெய்வதம் வழிபட்டு' என்றார். வன்றிறல; ஒரு பொருட் பன்மொழி. வாளுழவன் - வாளாகிய ஏரால் உழுதுண்போன்; வாளாசிரியன்; "வில்லேருழவர்" என்பது திருக்குறள். (14) மதுகைவா ளமர்க்கு நென்னல் வந்தறை கூவிப் போன முதுகடும் புலியே றன்ன முடங்குடற் குரவன் றானும் அதிர்கழல் வீக்கிக் கச்சு மசைத்துவெண் ணீறுஞ் சாத்திக் கதிர்கொள்வாள் பலகை தாங்கிக் கயவனுக் கெதிரே வந்தான். (இ - ள்.) நென்னல் வந்து மதுகைவாள் அமர்க்கு அறை கூவிப் போன - நேற்று வந்து வலிய வாட்போருக்கு அறை கூவிச் சென்ற, முது கடும் புலி ஏறு அன்ன - முதிய கடிய புலியேற்றினை ஒத்த, முடங்கு உடல் குரவன் தானும் - வளைந்த உடலையுடைய (இறைவனாகிய) ஆசிரியனும், அதிர் கழல் வீக்கி - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்து, கச்சும் அசைத்து - கச்சினையுங் கட்டி, வெள் நீறும் சாத்தி - வெள்ளிய திருநீற்றையுந் தரித்து, கதிர் கொள்வாள் பலகை தாங்கிக் கயவனுக்கு எதிரே வந்தான் - ஒளியினைக் கொண்ட வாளையும் கேடகத்தையும் கையிற்றாங்கி அக்கீழ் மகனுக்கு எதிரே வந்தனன். அறை கூவல் - போருக்கழைத்தல். உடம்பு முதிர்ந்தோனாயினும் ஆண்மையிற் குன்றானென்பார் 'முதுகடும் புலியே றன்ன' என்றார். (15) மடங்கலே றொன்றும் பைங்க ணரியொன்று மலைந்தா லன்ன முடங்கல்வான் றிங்க ளொன்று முக்கணு நான்கு தோளும் விடங்கலுழ் மிடறுந் தோற்றா வென்றிவாள் விஞ்சை வேந்தும் அடங்கலன் றானு நேரிட் டாடம ராடல் செய்வார். (இ - ள்.) மடங்கல் ஏறு ஒன்றும் பைங்கண் நரி ஒன்றும் மலைந்தால் என்ன - சிங்க ஏறு ஒன்றும் பசிய கண்ணையுடைய நரி ஒன்றும் எதிர்த்துப் போர் புரிந்தாற்போல, முடங்கல் வான் திங்கள் ஒன்றும் முக்கணும் நான்கு தோளும் விடம் கலுழ் மிடறும் தோற்றா - வளைந்த வெள்ளிய பிறையும் மூன்று கண்களும் நான்கு திருத்தோளும் நஞ்சக் கறை விளங்குந் திருமிடறுமாகிய இவைகளைத் தோன்றாது மறைத்த, வென்றி வாள் விஞ்சை வேந்தும் - வெற்றி பொருந்திய வாள் வித்தைக் கிறைவனும், அடங்கலன் தானும் நேரிட்டு ஆடு அமர் ஆடல் செய்வார் - பகைவனாகிய சித்தனும் எதிர்ந்து வெல்லும் போரினைச் செய்யத் தொடங்கினர். மலைந்தாலென்ன விஞ்சை வேந்தும் அடங்கலனும் ஆடல் செய்வா ரென்க; மடங்க லேறுபோல் விஞ்சை வேந்தும், நரி போல் அடங்கலனும் என நிரனிறை. 16) எதிர்ப்பர்பின் பறிவர் நேர்போ யெழுந்துவா னேறு போல அதிர்ப்பர்கே டகத்துட் டாழ்வுற் றடங்குவர் முளைப்பர் வாளை விதிர்ப்பர்சா ரிகைபோய் வீசி வெட்டுவர் விலக்கி மீள்வர் கொதிப்பர் போய் நகைப்ப ராண்மை கூறுவர் மாறி நேர்வர். (இ - ள்.) எதிர்ப்பர் - ஒருவரையொருவர் எதிர்ப்பர்; பின்பறிவர் - பின் வாங்குவர்; நேர் போய் எழுந்துவான் ஏறுபோல அதிர்ப்பர் - (மீளவும்) முன் சென்று மேலெழுந்து இடியேறு போல முழங்குவர்; கேடகத்துள் தாழ்வுற்று அடங்குவர் - கேடகத்தினுள்ளே பதுங்கி மறைவர்; முளைப்பர் - மீண்டு வெளிப்படுவர்; வாளை விதிர்ப்பர் - ஏந்திய வாளை அசைப்பர்; சாரிகை போய் வீசி வெட்டுவர் - இடசாரி வலசாரியாகச் சென்று வாளை வீசி வெட்டுவர்; விலக்கி மீள்வர் - அவ்வெட்டினை விலக்கித் திரும்புவர்; கொதிப்பர- வெகுள்வர்; போய் நகைப்பர் - சென்று சிரிப்பர்; ஆண்மை கூறுவர் - நெடு மொழி கூறுவர், மாறி நேர்வர் - சாரிகை மாறி எதிர்ப்பர். பின்பறிதல் - பெயர்தல்; பின் வாங்குதல். வீரரின் தொழிலியற் கையைக் கூறுதலால் இது தொழிற்றன்மையணி. (17) வெந்நிடு வார்போற் போவர் வட்டித்து விளித்து மீள்வர் கொன்னிடு வாண்மார் பேற்பர் குறிவழி பிழைத்து நிற்பர் இந்நிலை நாலைங் கன்ன லெல்லைநின் றாடல் செய்தார் அந்நிலை யடுபோர் காண்பா ரனைவருங் கேட்க வையன். (இ - ள்.) வெந்நிடுவார் போல் போவர் - புறங்காட்டிச் செல்வார் போலப் போவர்; வட்டித்து விளித்து மீள்வர் - சுழன்று போருக்கழைத்துத் திரும்புவர், கொன் இடுவாள் மார்பு ஏற்பர் - அச்சத்தைத் தருகின்ற வாள் வெட்டினைத் தமது மார்பின்கண் ஏற்பர்; குறிவழி பிழைத்து நிற்பர் - தாம் கொண்ட இலக்கின் நெறி தவற நிற்பர்; இந்நிலை நாலைங் கன்னல் எல்லை நின்று ஆடல் செய்தார் - இங்ஙனம் இருபது நாழிகை வரையும் நின்று போர் புரிந்தனர்; அந்நிலை - அப்பொழுது, அடுபோர் காண்பார் அனைவரும் கேட்க - கொல்லுதலையுடைய போரினைக் காண்போரனைவரும் கேட்குமாறு, ஐயன் - இறைவன். வட்டித்தல் - சுழலல். கொன் - அச்சம். பிழைத்து - தப்ப: எச்சத்திரிபு; பகைவர் செய்யுங் குறி தப்பவென்க. கன்னல் - நாழிகை. முதியோனாகி வந்ததற்கேற்ப இருபது நாழிகை வரை போர் செய்வதாக நடித்தான் என்க. (18) குரத்தியை நினைத்த நெஞ்சைக் குறித்துரை நாவைத் தொட்ட கரத்தினைப் பார்த்த கண்ணைக் காத்தனை கோடி யென்றென் றுரைத்துரைத் தவற்றுக் கெல்லா முறுமுறை தண்டஞ்செய்து சிரத்தினைத் தடிந்து வீட்டித் திருவுரு மறைந்து நின்றான். (இ - ள்.) குரத்தியை நினைத்த நெஞ்சை - குருபத்தினியை விரும்பிக் கருதிய உள்ளத்தையும், குறித்து உரை நாவை - அவளை நோக்கித் தகாத மொழிகளைக் கூறிய நாவினையும்; தொட்ட கரத்தினை - பிடித்த கையையும்; பார்த்த கண்ணை - விரும்பிப் பார்த்த கண்களையும; காத்தனை கோடி என்று என்று உரைத்து உரைத்து - காத்துக் கொள்வாய் காத்துக் கொள்வாய் என்று சொல்லிச் சொல்லி, அவற்றுக்கு எல்லாம் உறுமுறை தண்டம் செய்து - அவ்வுறுப்புக்களுக்கெல்லாம் பொருந்துமாற்றால் ஒறுத்தலைச் செய்து, சிரத்தினைத் தடிந்து வீட்டி - பின்பு தலையை யறுத்துக் கீழே தள்ளி, திரு உரு மறைந்து நின்றான் - திருவுருவம் மறைந்தருளினான். குரத்தி - குரவனுக்குப் பெண்பால். காத்தனை : முற்றெச்சம். இப்பொழுது முறையே அவற்றைப் பிளத்தலும் அறுத்தலும் தடிதலும் சூலுதலும் செய்யா நின்றேம் வல்லையேல் காத்துக் கொள்ளுதி என்றவாறு. நெஞ்சு - உளத்திற்கு நிலைக்களமாகிய மார்பு. ஒவ்வொன்றையும் ஒறுக்குங்கால் இங்ஙனம் சொல்லிச் சொல்லியொறுத்தென்க. வீட்டி, வீழ்த்தி யென்பதன் மரூஉ.(19) போர்கெழு களங்கண் டாருட் பொருபடைக் கேள்விச் செல்வர் வார்கெழு கழற்கா லானைக் கண்டிலர் மனையிற் றேடி ஏர்கெழு கற்பி னாளை யெங்குற்றான் குரவ னென்னக் கூர்கெழு வடிவேற் கண்ணாள் போயினார் கோயிற் கென்றாள். (இ - ள்.) போர் கெழு களம் கண்டாருள் - போர் புரிதலைப் பொருந்திய களத்தின்கண் நின்று (அப் போரினைப்) பார்த்தவர் களுள்ளே, பொருபடைக் கேள்விச் செல்வர் - பொருதற்குரிய வாள் வித்தை பயிலும் மாணாக்கர்கள், வார் கெழு கழல் காலானைக் கண்டிலர் - நெடிய வீரக்கழ லணிந்த காலையுடைய குரவனைக் காணாது, மனையில் தேடி - இல்லின்கண் தேடிச் சென்று, ஏர் கெழு கற்பினாளை குரவன் எங்குற்றான் என்ன - அழகு பொருந்திய கற்பினையுடைய குரத்தியை நோக்கி ஆசிரியன் எங்குச் சென்றான் என்று வினவ, கூர்கெழு வடிவேல் கண்ணாள் - கூர்மை வாய்ந்த வடித்த வேல் போன்ற கண்களையுடைய அந் நங்கை, கோயிற்குப் போயினார் என்றாள்- திருக்கோயிலுக்குச் சென்றனர் என்று கூறினாள். களங்கண்டார் - களப்போரின் வினோதங்கண்டு நின்றவர். கேள்விச் செல்வர் - கேள்வியாகிய செல்வத்தை யுடையவர்; மாணாக்கர். வாரிற் கோத்த கழல் என்றுங் கூறுவர். கண்டிலர்: முற்றெச்சம். தேடிச் சென்று, கற்பினாளை நோக்கி என ஏற்ற சொற்கள் வருவித்துரைக்க. (20) என்றவப் போதே கோயிற் கேகினான் மீண்டான் றேடிச் சென்றவர் சித்தன் றன்னைச் செருக்களத் தடுபோர் செய்து வென்றனை யேபின் னந்த வெங்களத் தெங்குந் தேடி நின்றனைக் காணா திங்கு நேர்ந்தனம் யாங்க ளென்றார். (இ - ள்.) என்ற அப்போதே கோயிற்கு ஏகினான் மீண்டான் - என்று கூறிய அப்பொழுதே கோயிலுக்குச் சென்ற குரவன் திரும்பி வந்தனன்; தேடிச் சென்றவர் - அவனைத் தேடிச் சென்ற மாணவர்கள், சித்தன் தன்னை செருக்களத்து அடுபோர் செய்து வென்றனையே - (குரவனை நோக்கி) சித்தனைப் போர்க்களத்திலே கொல்லும் போரினைப் புரிந்து வெற்றி பெற்றாயே, பின் யாங்கள் நின்றனை அந்த வெங்களத்து எங்கும் தேடிக் காணாது இங்கு நேர்ந்தனம் என்றார் - பின்பு யாங்கள் உன்னை அப் போர்க்கள முழுதும் தேடிக் காணாமல் இங்கு வந்தோம் என்றார்கள். ஏகினான் : வினையாலணையும் பெயர். வென்றனையே பின் எங்ஙன் போந்தாயோ என விரித்துரைத்துக் கொள்க. நின்றனை, தன்: சாரியை. (21) விரைசெய்தா ரவன்யா னங்கம் வெட்டினே னல்லே னீங்கள் உரைசெய்வ தெவன்யா ரென்போற் சித்தனை யுடன்று மாய்த்து வரைசெய்தோள் விந்தைக் கீந்தார் மற்றிது சுற்றும் வையைத் திரைசெய்நீர்க் கூட லெந்தை திருவுளச் செயல்கொ லென்றான். (இ - ள்.) விரை செய் தாரவன் - (அதனைக் கேட்டு) மணம் வீசும் மாலையையணிந்த குரவன், யான் அங்கம் வெட்டினேன் அல்லேன் - யான் சித்தனுடைய உடலை வெட்டினேனல்லேன்; நீங்கள் உரை செய்வது எவன் - நீங்கள் இங்ஙனம் கூறுவது என்னை, என்போல் உடன்று சித்தனை மாய்த்து - என் போல் வந்து போர் புரிந்து சித்தனைக் கொன்று, வரை செய்தோள் விந்தைக்கு ஈந்தார் யார் - மலை போலும் தம் தோள்களைக் கொற்றவைக்கு அளித்தார் யாவரோ, இது - இந்நிகழ்ச்சி, சுற்றும் திரை செய் நீர் வையை கூடல் எந்தை திருவுளச் செயல் கொல் என்றான்- சூழ்ந்திரா நின்ற அலைகளை வீசும் நீரினையுடைய வையை யாற்றினையுடைய நான்மாடக் கூடலில் எழுந்தருளிய எம் தந்தையாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவுளச் செயலோ என்று கூறினான். வெட்டிலேன் என்பது வெட்டினேனல்லேன் என விரிந்து நின்றது : வரை செய், செய் : உவமவுருபு. தோள்களை விந்தை குடியிருக்க அளித்தவர். அவன் தோளைத் தறித்துத் துர்க்கைக்குக் கொடுத்தவர் என்று பிறர் கூறுவர்; அது சிறவாமை காண்க. சுற்றும் வையை - மதுரையைச் சூழ்ந்திருக்கும் வையை. கொல்: ஐயப் பொருட்டு. (22) மட்டித்த கலவைக் கொங்கை மனைவியுஞ் சித்தன் றன்னைக் கிட்டிப்பல் காலும் வந்து கேட்டது நெருநல் வாய்வந் தொட்டித்தன் கையைப் பற்றி யீர்த்தது முள்ளம் வெந்து தட்டிப்போய்க் கதவந் தாழிட் டிருந்ததுஞ் சாற்றி னாளே. (இ - ள்.) கலவை மட்டித்த கொங்கை மனைவியும் - கலவை பூசிய கொங்கையையுடைய குரவன் பன்னியும், சித்தன் தன்னைக் கிட்டிப் பல்காலும் வந்து கேட்டதும் - சித்தனானவன் தன்னை நெருங்கி வந்து பல முறையும் (இடனுண்டா என்று) கேட்டதும், நெருநல் வாய் ஒட்டி வந்து தன் கையைப் பற்றி ஈர்த்ததும் - நேற்றைப் பொழுது நெருங்கி வந்து தனது கையைப் பிடித்து இழுத்ததும், உள்ளம் வெந்து தட்டிப் போய்க் கதவம் தாழிட்டு இருந்ததும் - மனம் நொந்து அவனை விலக்கிப் போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டு இருந்ததும், சாற்றினாள் - கூறினாள். தட்டி - அகப்படாது தள்ளி. கதவம், அம் : பகுதிப் பொருள் விகுதி. (23) அம்மனை யருளிச் சொன்ன படியெலா மருளிச் செய்து தெம்முனை யடுவாள் வீரர் சித்தனை மாய்த்தா ரீது மெய்ம்மையா மென்று கண்ட மைந்தரும் விளம்பக் கேட்டான் எம்மையா ளுடைய கூட லிறைவிளை யாட்டே யென்றான். (இ - ள்.) அம்மனை அருளிச் சொன்னபடி எலாம் - எம் அன்னையாகிய இவர் கூறியருளினபடி யெல்லாம், தெவ் முனை அடுவாள் வீரர் அருளிச் செய்து சித்தனை மாய்த்தார் - பகைவர் முனையை மாய்க்கும் வாள் வீரர் கூறியருளிச் சித்தனை வதைத்தனர்; ஈது மெய்மை ஆம் என்று கண்ட மைந்தரும் விளம்பக் கேட்டான் - இஃது உண்மையாம் என்று பார்த்த மாணவர்களுஞ் சொல்லக் கேட்டான் (ஆசிரியன்); எம்மை ஆள் உடைய கூடல் இறை விளையாட்டே என்றான் - (இஃது) எம்மை ஆளுதலையுடைய கூடல் நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலே என்றான். குரவனாவான் தந்தையாகலின் குரவன் பன்னியைத் தாய் என்றும், மாணாக்கரை மைந்தர் என்றும் கூறினார். அருளிச் சொன்ன என்பதைச் சொல்லி யருளின என்று விகுதி பிரித்துக் கூட்டுக. தெம் முனை - போர் முனையில் என்றுமாம். முன் எந்தை திருவுளச் செயல் கொல் என்று ஐயுற்றவன் இப்பொழுது துணிந்தான் என்பார் விளையாட்டே எனத் தேற்றேகாரங் கொடுத்தார். (24) கொடியைநே ரிடையா ளோடுங் கொற்றவா ளிளைஞ ரோடுங் கடியநான் மாடக் கூடற் கண்ணுத லாடிக்கீழ்த் தாழ்ந்து நெடியனான் முகனுந் தேறா நெறியது சிறிய வேழை அடியனே னளவிற் றேநின் னருள்விளை யாட லென்றான். (இ - ள்.) கொடியை நேர் இடையாளோடும் - கொடியை ஒத்த இடையினையுடைய தன் மனைவியோடும், கொற்றவாள் இளைஞரோடும் - வெற்றி பொருந்திய வாள் விஞ்சை பயிலும் மாணவர்களோடும் (சென்று), கடிய நான்மாடக் கூடல் கண்ணுதல் அடிக்கீழ்த் தாழ்ந்து - காவலையுடைய நான்மாடக் கூடலில் எழுந்தருளியுள்ள நெற்றிக் கண்ணையுடைய இறைவனது திருவடியின் கீழ் வணங்கி, நெடியன் நான்முகனும் தேறா நெறியது நின் அருள் விளையாடல் - திருமாலும் பிரமனும் தெளியாத நெறியதாகிய உனது அருள் விளையாட்டு, சிறிய ஏழை அடியனேன் அளவிற்றே என்றான் - ஒன்றுக்கும் பற்றாத அறிவிலியாகிய அடியேன் அளவினதோ என்று துதித்தான். சென்று என ஒரு சொல் வருவிக்க. கடிய - காவலையுடைய: குறிப்புப் பெயரெச்சம். நெடியனும் என உம்மை விரிக்க. யாவர்க்கு மேலாம் இறைவன் எத்துணையும் சிறிய தமக்கு எளிவந்த பேரருளை நினைந்து 'அடியனே னளவிற்றே' என ஆராமை மேலிட்டுக் கூறியவாறு; 'ஏழையேங்களுக் காவதோ எந்தை நின் கருணை' என முன் கூறினமையுங் காண்க. (25) தண்மதி வழிவந் தோனு நகருளார் தாமும் பாதி விண்மதி மிலைந்த வேணி விடையவ னாட னோக்கிக் கண்மலர் வெள்ளத் தாழ்ந்து கனைகழ லடியிற் றாழ்ந்து பண்மலர் கீதம் பாடி யாடினார் பழிச்சி நின்றார். (இ - ள்.) தண்மதி வழிவந்தோனும் - குளிர்ந்த திங்களினது மரபில் வந்தவனாகிய பாண்டியனும், நகர் உளார் தாமும் - நகரில் உள்ளோரும், பாதி விண்மதி மிலைந்த வேணி விடையவன்- வானிலுள்ள பாதி மதியினை யணிந்த சடையையுடைய இடபவூர்தியையுடைய சோமசுந்தரக் கடவுளின், ஆடல் நோக்கி- திருவிளையாடலை நோக்கி, கண்மலர் வெள்ளத்து ஆழ்ந்து - கண்களாகிய மலரினின்று ஒழுகும் ஆனந்தவருவியாகிய வெள்ளத்தில் முழுகி, கனைகழல் அடியில் தாழ்ந்து - ஒலிக்கின்ற வீரக்கழ லணிந்த திருவடியில் வணங்கி, பண்மலர் கீதம் பாடி ஆடினார் பழிச்சி நின்றார் - பண் நிறைந்த இசைப்பாட்டுக்களைப் பாடி ஆடித் துதித்து நின்றார்கள். ஆடல் அடியார்க்கு எளிவரும் திருவிளையாடல். கீதம் -இசைப்பாட்டு. உவகையால் ஆடினாரென்க. (26) [மேற்படி வேறு] அடியவருக் கெளியரிவர் பரதேசி காவலரென் றடிவீழ்ந் தேத்தி வடியயில்வேற் குலோத்துங்கன் மாணிக்க மாலையெனு மளையா ளோடுந் தொடியணிதோண் முதுமகனை களிறேற்றி நகரைவலஞ் சூழ்வித் திப்பால் முடியணிவித் தனந்தகுண பாண்டியற்குத் தன்னிறைமை முழுதுமீந்தான். (இ - ள்.) அடியவருக்கு எளியர் இவர் - அடியார்க் கெளியராகிய இச் சோமசுந்தரக் கடவுள், பரதேசி காவலர் என்று அடி வீழ்ந்து ஏத்தி - தமக்கு ஓர் களைகண் இல்லாதவரைக் காத்தலில் வல்லவர் என்று அவர் அடியில் வீழ்ந்து வணங்கித் துதித்து, வடி அயில் வேல் குலோத்துங்கன் - வடித்த கூரிய வேற்படையேந்திய குலோத்துங்க பாண்டியன், தொடி அணிதோள் முதுமகனை - வீரவளை அணிந்த தோளையுடைய முதியோனை, மாணிக்க மாலையெனும் மனையாளோடும் - மாணிக்க மாலையென்று கூறப்படும் அவன் மனைவியோடும், களிறு ஏற்றி நகரை வலம் சூழ்வித்து - யானையின் மேல் ஏற்றி நகர் வலஞ் செய்வித்து, இப்பால் - பின், அனந்தகுண பாண்டியற்கு முடி அணிவித்து - தன் புதல்வனாகிய அனந்தகுண பாண்டியனுக்கு முடிசூட்டி, தன் இறைமை முழுதும் ஈந்தான் - தனது அரசுரிமை முழுதுங் கொடுத்தனன். பரதேசி - வேற்று நாட்டவன். வேற்று நாட்டினின்றும் போந்து வேறு களைகண் இலனாயிருந்த வாளாசிரியனைக் காத்தமையின் 'பரதேசி காவலர்' என்றானென்க. முதுமகன் - முதியோனாகிய வாளாசிரியன். அவர்கள் தம் பொருட்டு இறைவன் எளிவந்து அருள்புரியும் பேரன்புடையராயினமையின் அவர்களைக் களிறேற்றி நகர் வலஞ் செய்வித்தானென்க. (27) நிலைநிலையாப் பொருளுணர்ந்து பற்றிகந்து கரணமொரு நெறியே செல்லப் புலனெறிநீத் தருள்வழிபோய்ப் போதமாந் தன்வலியைப் பொத்தி நின்ற மலவலிவிட் டகலவரா வுமிழ்ந்தமதி போல்விளங்கி மாறியாடுந் தலைவனடி நிழல்பிரியாப் பேரின்பக் கதியடைந்தான் றமிழர் கோமான். (இ - ள்.) நிலைநிலையாப் பொருள் உணர்ந்து - நிலையுள்ள பொருளையும் நிலையில்லாத பொருளையும் உணர்ந்து, பற்று இகந்து கரணம் ஒரு நெறியே செல்ல - இருவகைப் பற்றினின்றும் நீங்கி அந்தக்கரணம் ஒரு வழிச் செல்ல, புலன் நெறி நீத்து அருள் வழி போய் - ஐம்புலன்களின் நெறியினின்றும் நீங்கித் திருவருள் நெறிச் சென்று, போதம் ஆம் தன் வலியைப் பொத்தி நின்ற மலவலி விட்டு அகல - போதமாகிய தனது வலியினை மறைத்து நின்ற ஆணவ மலவலி கழன்றொழிய, அரா உமிழ்ந்த மதி போல் விளங்கி - இராகுவென்னும் பாம்பால் உமிழப்பட்ட சந்திரனைப் போல விளங்கி, மாறி ஆடும் தலைவன் அடிநிழல் பிரியாப் பேர் இன்பக் கதி - கால் மாறி ஆடிய சோமசுந்தரக் கடவுளின் திருவடி நிழலைப் பிரியாத பேரின்ப வீட்டினை, தமிழர் கோமான் அடைந்தான் - தமிழர் பெருமானாகிய குலோத்துங்க பாண்டியன் அடைந்தான். நிலைநிலையாப் பொருளுணர்ச்சி - நித்தியாநித்திய வத்து விவேகம் என்று கூறப்படும. நிலைப் பொருள் - என்றும் ஒரு பெற்றியே நிற்கும் மெய்ப்பொருள். நிலையாப் பொருள் - மாறியொழியும் பொய்ப் பொருள். இவற்றையுணர்ந்த வழி நிலையாப் பொருளின் மேலுள்ள பற்று ஒழியும்; பின்பு மனம் ஒருவழிப்படும்; அதன் பின் உயிர் அருள் வழிச் செல்லும்; அதனால் மலவலி கெடும்; ஆகலின் அம்முறையே கூறினார். ஆன்மாவின் அறிவு வலியையென்க. ஆணவ மலத்தாற் கட்டுண்டு நீங்கிய ஆன்மாவிற்குப் பாம்பால் விழுங்கப்பட்டு அதினின்றும் நீங்கிய மதியை உவமை கூறியது மிகவும் பொருத்தமுடைத்து. பிரியாமையாகிய கதியென்க. (28) ஆகச் செய்யுள் - 1602. இருபத்தெட்டாவது நாகமெய்த படலம் [எழுசீரடியாசிரிய விருத்தம்] செங்கண் மால்விடை மேல்வி டங்கர் செருக்க ளத்திடை வாளெடுத் தங்கம் வெட்டிய சேவ கத்தை யறைந்த னந்தமிழ் மாறன்மேற் சங்கை யிட்டம ணீச ராற்றிய தறுகண் வேள்வி முளைத்ததோர் வெங்கண் வாளர வைத்து ணித்து விளித்த வாறு விளம்புவாம். (இ - ள்.) செங்கண் மால் விடைமேல் விடங்கர் - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபவூர்தியின்மேல் இவர்ந்தருளும் பேரழகராகிய சோமசுந்தரக் கடவுள், செருக்களத்து இடைவாள் எடுத்து - போர்க் களத்தின்கண் வாட்படையைத் தாங்கி, அங்கம் வெட்டிய சேவகத்தை அறைந்தனம் - அங்கம் வெட்டிய திருவிளையாடலைக் கூறினோம்; தமிழ் மாறன்மேல் சங்கை இட்டு - (இனி) தமிழ் வேந்தனாகிய பாண்டியன் மேல் பகை கொண்டு, அமண் நீசர் ஆற்றிய - சமணராகிய கீழோர் செய்த, தறுகண் வேள்வி முளைத்தது ஓர் வெங்கண் வாள் அரவை - கொடிய வேள்வியின்கண் தோன்றியதாகிய ஒரு வெவ்விய கண்களையுடைய கொடிய பாம்பினை, துணித்து விளித்தவாறு விளம்புவாம் - துண்டு செய்து கொன்றருளிய திருவிளையாடலைக் கூறுவோம். சேவகம் - வீரம்; திருவிளையாடலை யுணர்த்திற்று. சங்கை - பகையென்னும் பொருட்டு. வாளரவு - கொடிய பாம்பு. விளித்த, விளிந்த வென்பதன் பிறவினை. விளித்தவாறும் என உம்மை விரித்துரைத்தலுமாம். (1) கோதி லாத குணத்த னந்த குணப்பெ ருந்தகை மீனவன் ஆதி நாயக னுருவ மாகிய வைந்தெ ழுத்தொடு கண்டிவெண் பூதி சாதன மாவ தேபொரு ளென்று பத்திமை பூண்டுதன் தாதை யேமுத லாய மன்னவர் தம்மி னுந்தலை யாயினான். (இ - ள்.) கோது இலாத குணத்து - குற்றமில்லாத குணத்தினையுடைய, அனந்தகுணப் பெருந்தகை மீனவன் - அனந்தகுணன் என்னும் பெயரினையுடைய பெருந்தகுதியையுடைய பாண்டியன், ஆதிநாயகன் உருவம் ஆகிய ஐந்து எழுத்தொடு - முழுமுதற் றலைவனாகிய சோம சுந்தரக் கடவுளின் திருவுருவாகிய திருவைந்தெழுத்துடன், கண்டி வெண்பூதி சாதனமே - உருத்திராக்கமும் வெள்ளிய திருநீறுமாகிய சாதனமே, பொருள் ஆவது என்று பத்திமை பூண்டு - மெய்ப்பொருளாவது என்று அன்பு கொண்டதால், தன் தாதையே முதல் ஆய மன்னவர் தம்மினும்- தன் தந்தை முதலாகிய அரசர்களினும், தலை ஆயினான் - சிறந்தவனானான். திருவைந்தெழுத்துச் சிவபெருமானுக்கு உருவமாதலைச சிவஞான சித்தியாரமுதற்சூத்திரத்தா லறிக; இது முன்னுங் காட்டப் பெற்றது. சாதனமே பொருளாவது எனப் பிரித்துக் கூட்டுக. தலை - முதல் : முதல்வன். (2) அத்த கைச்1சிவ சாத னந்தனி லன்பு மிக்கவ னொழுகலால் அத்தன் மெய்த்திரு வைந்தெ ழுத்தொலி யாலு நீற்றொளி யாலுமுட் பைத்த வல்லிரு ளும்பு றத்திரு ளுஞ்சி தைந்து பராபரன் வித்த கத்திரு வேட மானது2மீன வன்றிரு நாடெலாம். (இ - ள்.) அத்தகைச் சிவசாதனம்தனில் - அத்தன்மையுடைய சிவசாதனத்தின்கண், அன்பு மிக்கு அவன் ஒழுகலால் - அன்பு மிகுந்து அப் பாண்டியன் ஒழுகி வருதலால், மீனவன் திருநாடு எலாம் - அவன் திருநாடு முழுதும், அத்தன் மெய்த் திரு ஐந்து எழுத்து ஒலியாலும் - இறைவன் திருவுருவமாகிய திருவைந்தெழுத்தின் ஒலியாலும், நீற்று ஒளியாலும் - திருநீற்றினது ஒளியாலும் (முறையே), உள் பைத்த வல் இருளும் - உள்ளே பரந்த வலிய மலவிருளும், புறத்து இருளும் சிதைந்து - புறவிருளும் கெட்டு, பராபரன் வித்தகத் திருவேடம் ஆனது - சிவபெருமானது மேன்மையுடைய திருவேடமாகப் பொலிந்தது. 'மன்ன னெவ்வழி மன்னுயி ரவ்வழி' என்பவாகலின் அரசன் சிவ சாதனத்தால் அன்பு மிக்கானாகவே நாட்டிலுள்ளாரும் அங்ஙனமாயினரென்க. திருவைந் தெழுத்தொலியால் அகவிருளும் திருநீற்றொளியால் அகவிருளுடன் புறவிருளும் சிதைந்து என்றுமாம். புறத்திருள் - பூதவிருள். பைத்த - பரந்த. பராபரன் - பரமும் அபரமும் ஆனவன். (3) நாயி னுங்கடை யான மாசுட னள்ளி ருட்புரை நெஞ்சரெண் ணாயி ரஞ்சமண் வேட ரன்ன தறிந்து கொண்டு வெகுண்டழ றோயி ரும்பென மான வெங்கனல் சுட்டி டத்தரி யார்களாய் மாயி ருந்தமிழ் மாற னைத்தெற வஞ்ச வேள்வி யியற்றுவார். (இ - ள்.) நாயினும் கடை ஆன மாசு உடல் - நாயினுங் கடைப் பட்ட அழுக் குடம்பினையுடைய, நள் இருள் புரை நெஞ்சர் எண்ணாயிரம் சமண் வேடர் - நடு இரவின் இருளையொத்த நெஞ்சினை யுடையவராகிய சமணக்குரவர் எண்ணாயிரவரும், அன்னது அறிந்து கொண்டு வெகுண்டு - அதனை அறிந்து சினந்து, அழல் தோய் இரும்பு என - நெருப்பிற் காய்ச்சிய இரும்பு போல, மான வெங்கனல் சுட்டிட - மானமாகிய கொடிய நெருப்புச் சுடா நிற்க, தரியார்களாய் - பொறார்களாகி, மா இருந்தமிழ் மாறனைத் தெற - பெரிய தமிழை வளர்க்கும் பாண்டியனைக் கொல்லுதற்கு, வஞ்ச வேள்வி இயற்றுவார் - வஞ்ச வேள்வி ஒன்றினைச் செய்வாராயினர். உடலையுடைய நெஞ்சராகிய என விரித்து வேடரென்பதுடன் தனித்தனி கூட்டுக. தங்கள் சமயத்திற்குரிய ஒழுக்கமுடையரல்ல ரென்பார் 'சமண் வேடர்' என்றார். கொண்டு - உளங்கொண்டு என்றுமாம். மா இரு: ஒரு பொருளிரு சொல். வஞ்ச வேள்வி - அபிசார யாகம். (4) எல்லை காத மளந்து சாலை யெடுத்த ழற்படு குண்டமுங் கல்லி யாரழ லிட்டெ ழும்புகை கௌவி யெண்டிசை களுமுறச் செல்ல வான வுடுக்க ளும்பொரி யிற்பொ ரிந்தன சிதறநீண் டொல்லை தாவி விசும்பு தைவர வோட்டி1 வெங்கனன் மூட்டினார். (இ - ள்.) காத எல்லை அளந்து சாலை எடுத்து - ஒரு காத அளவு அளந்து வேள்விச் சாலை கோலி, அழல்படு குண்டமும் கல்லி - தீவளர்க்கும் வேள்விக் குண்டமும் தோண்டி, ஆர் அழல் இட்டு - நிறைந்த தீயினை அதிலிட்டு, எழும் புகை எண் திசைகளும் கௌவி உறச் செல்ல - எழுகின்ற புகையானது எட்டுத் திசைகளையும் தன்னுட்படுத்தி மிகச் செல்லவும், வான உடுக்களும் பொரிந்தன பொரியில் சிதற - வானின்கண் உள்ள உடுக்கூட்டங்களும் பொரிந்து பொரி போற் சிந்தவும், நீண்டு ஒல்லை தாவி விசும்பு தைவர - ஓங்கி விரைந்து தாவி வானுலகத்தைத் தடவவும், வெங்கனல் ஓட்டி மூட்டினார் - கொடிய நெருப்பினை எழுப்பி மூட்டினார்கள். பொரிந்தன : முற்றெச்சம். அழலிட்டு மூட்டினா ரென்க. (5) அத்த ழன்றெரி குண்ட நின்று மகன்பி லத்தெழு வானெனப் பைத்த துஞ்சிருள் வாயும் வாயிரு பாலும் வாலிய பகிர்மதிக் கொத்து நஞ்சின1மொழுகு பற்களு மூழி யாரழல் விழிகளும் வைத்த சைந்தொரு வெற்பு வந்தென வந்து ளானொரு தானவன். (இ - ள்.) அத்தழன்று எரிகுண்டம் நின்றும் - அந்தக் கொதித்து எரிகின்ற வேள்விக் குண்டத்தினின்றும், அகன்பிலத்து எழுவான் என - அகன்ற பிலத்தினின்றும் எழுகின்றவனைப் போல (எழுந்து), பைத்த இருள் துஞ்சு வாயும் - பரந்த இருள் தங்கிய வாயினையும், வாய் இருபாலும் - வாயின் இரண்டு பக்கங்களிலும், வாலிய பகிர்மதிக்கு ஒத்து - வெள்ளிய அரைச்சந்திரனைப் போன்று, நஞ்சு இனம் ஒழுகு பற்களும் - நஞ்சின் பெருக்கு ஒழுகுகின்ற பற்களையும், ஊழி ஆர் அழல் விழிகளும் வைத்து - ஊழிக் காலத்தின் நிறைந்த தீயை உமிழும் கண்களையுங் கொண்டு, ஒரு வெற்பு அசைந்து வந்தென - ஒரு மலை அசைந்து வந்தாற்போல, ஒரு தானவன் வந்துளான் - ஓர் அவுணன் வந்தான். அக் குண்டத்தினின்றும் வாயும் பற்களும் விழிகளும் கொண்டு ஒரு தானவன் வந்தான் என்க. துஞ்சுதல் - தங்குதல், மதிக்கு ஒத்து - மதியையொத்து : வேற்றுமை மயக்கம். வைத்து - கொண்டு என்னும் பொருட்டு. இஃது இல் பொருளுவமையணி. (6) உதித்த செங்க ணரக்க வஞ்ச னுருத்தெ ழுந்தெரி வடவையிற் கொதித்த டும்பசி தாக முங்கொடி தாலெ னக்கொடி யோரைநீர்விதித்தி டும்பணி யாதெ னக்கென மீன வன்றனை மதுரையோ டெதிர்த்தெ டுத்துவி ழுங்கி வாவென வேவி னாருட னேகினான். (இ - ள்.) உதித்த செங்கண் அரக்க வஞ்சன் - (அங்ஙனம்) தோன்றிய சிவந்த கண்களையுடைய அவுணனாகிய கொடியோன், உருத்து எழுந்து - வெகுண்டெழுந்து, எரி வடவையில் - எரிகின்ற வடவைத் தீயைப் போல, கொதித்து அடும்பசி தாகமும் கொடிது என - பொங்கி வருத்துகின்ற பசியும் நீர் வேட்கையும் கொடியவென்று, கொடியோரை நீர் விதித்திடும் பணி எனக்கு யாது என - அக் கொடிய சமணர்களை (நோக்கி) நீவிர் எனக்கு விதிக்கும் ஏவல் யாது என்று வினவ, மீனவன் தனை மதுரையோடு எதிர்த்து எடுத்து விழுங்கிவா என ஏவினார் - பாண்டியனை மதுரையோடு எதிர்த்து எடுத்து விழுங்கி வருவாயாக என்று விடுத்தனர், உடன் ஏகினான்- அவனும் விரைந்து சென்றான். பசியும் என உம்மை விரிக்க. கொடிது : பன்மையிலொருமை. ஆல் : அசை. (7) [அறுசீரடியாசிரிய விருத்தம்] பாயுடை யவர்விட விடநாகப் படிவுகொ ணிசிசர னிலனண்டந் தோயுட லினனுடல் விடமூறிச் சொரிதுளை யெயிறினன் வடவைச்செந் தீயுடை யனவென வெரிகண்ணன் றிணியிருள் வரைமுழை யெனவிண்ட வாயுடை யவனெடு நெறிமுன்னி மழைநுழை வரையென வருகின்றான். (இ - ள்.) பாய் உடையவர் விட - பாயினை உடையாகவுடைய சமணர்கள் ஏவ, விடநாகப் படிவுகொள் நிசிசரன் - நஞ்சினையுடைய பாம்பின் வடிவினைக் கொண்ட அவுணன், நிலன் அண்டம் தோய் உடலினன் - நிலவுலகினின்றும் அண்டத்தை அளாவும் உடலையுடையவனாய், உடல்விடம் ஊறிச் சொரிதுளை எயிறினன் - வருத்துகின்ற நஞ்சு சுரந்து பொழியுந் துளையினையுடைய பற்களையுடையவனாய், வடவைச் செந்தீ உடையன என எரி கண்ணன் - வடவைச் செந்தீயை உடையன என்று சொல்ல எரிகின்ற கண்களையுடையவனாய், திணி இருள் வரை முழை என விண்ட வாய் உடையவன் - இருள் செறிந்த மலையின் குகை போலத் திறந்த வாயினையுடையவனாய், நெடுநெறி முன்னி - நீண்ட வழியில் முற்பட்டு, மழை நுழை வரை என வருகின்றான் - முகில் தவழும் மலை போல வாரா நின்றான். நிசிசரன் - இரவிற் சரிப்போன்; அரக்கன். எயிற்றினன் எனற்பாலது விகாரமாயிற்று. உடலினன், எயிறினன், கண்ணன், வாயுடையவன் என்னும் குறிப்பு முற்றுக்கள் எச்சமாயின. (8) அரவிறை யுறைபிலம் வெளிகாண வரையுடல் புதைபட நிலம்விள்ள1 வருவிழி2யழலெழ வுயிர்கான்முன் வளியுளர் கிளர்வலி விளிவெய்தப் பொருசின விழியெதிர் படுபைங்கூழ் புகையெழ வனமரை பொரிபொங்கர் கருகிட முதுசினை யிறைகொள்ளுங் ககநிரை சிறைசுருள் படவீழ. (இ - ள்.) அரை உடல் புதைபட - பாதி உடல் புதைபடுதலாலே, அரவு இறை உறை பிலம் வெளி காண - பாம்புகளின் தலைவனாகிய அனந்தன் உறையும் பாதலம் வெளியாகத் தெரியும்படி, நிலம் விள்ள - நிலம் பிளக்கவும், விழி வரு அழல் எழ உயிர் கால் முன் - கண்களினின்று வரும் நெருப்பு எழ உயிர்க்கின்ற பெருமூச்சின் முன், உளர்வளி கிளர்வலி விளிவு எய்த - சலிக்கின்ற காற்றினது மிக்க வலியானது இறத்தலைப் பொருந்தவும், பொரு சின விழி எதிர்படு பைங்கூழ் புகையெழ - மாறுபடும் சினத்தினையுடைய விழிகளுக்கு எதிர்ப்பட்ட பயிர்கள் புகைந்து வாடவும், வனம் பொரி அரை பொங்கர் கருகிட - காடுகளும் பொருக்கினையுடைய அடியினையுடைய மரச் செறிவுகளும் கருகவும், முதுசினை இறை கொள்ளும் ககநிரை சிறை சுருள்பட வீழ - பெரிய மரக்கிளைகளில் வசிக்கும் பறவைக் கூட்டங்கள் சிறைகள் கருகிச் சுருண்டு கீழே விழவும். காற்றினால் நெருப்பு மூளுமாகலின் 'விழியழலெழ உயிர்கால்' என்றார். உளர் வலி என்றும், பொரி அரை என்றும் மாறுக. இறை கொள்ளும் - தங்கும். ககம் - பறவை. (9) அகனிலம் வெருவுற நிலனேந்து மரவிறை வெருவுற வெயில் காலும் பகன்மதி வெருவுற விவைகௌவும் பணிகளும் வெருவுற வகறிக்கின் புகர்மலை வெருவுற வடுதண்டப் புரவலன் வெருவுற வருசெங்கண் நகைமதி புரையெயிறவன்மாட நகரெதிர் குடவயின் வருமெல்லை. (இ - ள்.) அகல் நிலம் வெருவுற - அகன்ற நிலவுலகம் அஞ்சவும், நிலன் ஏந்தும் அரவு இறை வெருவுற - அந்நிலத்தைத் தாங்கும் அரவரசன் அச்சமெய்தவும், வெயில் காலும் பகல்மதி வெருவுற - கிரணத்தை வீசும் சூரியனும் சந்திரனும் துணுக்குறவும், இவை கௌவும் பணிகளும் வெருவுற - இவற்றை விழுங்கும் இராகு கேதுக்களாகிய பாம்புகளும் உட்கவும், அகல் திக்கின் புகர்மலை வெருவுற - அகன்ற திசைகளிலுள்ள (முகத்திற்) புள்ளிகளையுடைய மலை போன்ற யானைகள் அஞ்சவும், அடுதண்டப் புரவலன் வெருவுற - கொல்லுகின்ற தண்டினை ஏந்திய கூற்றுவன் அஞ்சவும், வருசெங்கண் நகைமதி புரை எயிறவன் - வருகின்ற சிவந்த கண்களையும் ஒள்ளிய (அரை) மதியினை ஒத்த வளைந்த பற்களையுமுடைய அவுணன், மாடம் நகர் எதிர் குடவயின் வரும் எல்லை - மாடங்கள் நிறைந்த மதுரைப் பதியின் நேரே மேற்றிசைக்கண் வரும் பொழுதில். பகல் - ஞாயிறு. வெயில்காலும் என்பது பகலுக்கு அடை; ஒளிப் பொதுவாக்கி, மதிக்கும் ஏற்றலுமாம். புகர்மலை, யானைக்கு வெளிப்படை. எயிறவன் : ஒற்றிரட்டாது நின்றது. (10) கண்டவர் கடிநகர் கடிதோடிக் கௌரிய னடிதொழு தடிகேணங் கொண்டல்கண் வளர்மதில் வளைகூடற் குடவயி னொருபெரு விடநாகம் அண்டமு மகிலமு மொருவாயிட் டயிறர வருவதை யெனநீள்வாய் விண்டுகொண் டணைவதை யெனலோடும் வெருவலன் மதிகுல மறவீரன். (இ - ள்.) கண்டவர் கடிநகர் கடிது ஓடி - (அதனைப்) பார்த்தவர்கள் காவலையுடைய நகர்க்கண் விரைந்து ஓடி, கௌரியன் அடி தொழுது - பாண்டியன் அடிகளை வணங்கி, அடி கேள் - அடிகளே, நம் கொண்டல் கண்வளர் மதில்வளை - நமது முகில் உறங்கும் மதில் சூழ்ந்த, கூடல் குடவயின் - மதுரைப்பதியின் மேற்றிசையில், ஒரு பெருவிடநாகம் - ஒரு பெரிய நஞ்சினையுடைய பாம்பானது, அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயில்தர வருவது என - அண்டங்களையும் மற்றெல்லாவற்றையும் ஒரு வாயிற்போட்டு உண்ணுதற்கு வருவது போல, நீள் வாய் விண்டு கொண்டு அணைவது எனலோடும் - பெரிய வாயைத் திறந்து கொண்டு வருகின்றது என்று கூறவும், மதிகுல மறவீரன் வெருவலன் - திங்கள் மரபில் வந்த வெற்றியையுடைய வீரனாகிய அனந்தகுணபாண்டியன் அது கேட்டு அஞ்சானாயினன். அடிகேள் - பெருமானீர். நம் கூடற்குடவயின் என்க. அயில வருவது போல அணைவது என்றனர் என்னவும் என விரிக்க. வருவதை, அணைவதை என்பவற்றில் ஐ : சாரியை. (11) மற்றிது முனமத கரிவிட்டோர் வரவிட வருவதை யெனவெண்ணம் உற்றிது தனையும் விளித்தற்கெம் முடையவர் விடையவர் விட நாகஞ் சுற்றிய சடையின ருளரென்னாச் சுரருல கிழிசுட ரெனநிற்குங் கற்றளி யிடையுறை யிறைமுன்போய்க் கனைகழ லடிதொழு தறைகிற்பான். (இ - ள்.) இது முனம் மதகரி விட்டோர் வரவிடவருவது என - இப்பாம்பானது முன்னர் மதயானையை விடுத்த சமணர்கள் ஏவுதலால் வருவதாகும் என்று, எண்ணம் உற்று - கருதி, இது தனையும் விளித்தற்கு - இதனையும் கொல்லுதற்கு, எம் உடையவர் விடையவர் - எம்மை ஆளாக உடையவரும் இடபவூர்தியினை உடையவரும், விடநாகம் சுற்றிய சடையினர் உளர் என்னா - நஞ்சினையுடைய பாம்பினை அணிந்த சடையினை யுடையவருமாகிய சோமசுந்தரக் கடவுள் இருக்கின்றாரென்று, சுரர் உலகு இழிசுடர் என நிற்கும் கல்தளி இடை உறை இறை முன் போய் - தேவருலகினின்றும் இறங்கிய சூரியனைப் போல நிற்கும் மாணிக்க விமானத்தில் எழுந்தருளிய இறைவன் திருமுன் சென்று, கனைகழல் அடிதொழுது அறைகிற்பான் - ஒலிக்கின்ற வீரக் கழலணிந்த திருவடியை வணங்கிக் கூறுகின்றான். மற்று : அசை நிலை. வருவதை, ஐ : சாரியை. விளித்தல் - இறப்பித்தல்; விளிதல் என்பதன் பிறவினை. உடையவர் விடையவர் சடையினர் என ஒரு பொருள் மேற் பல பெயர் வந்தன. சுடரென நிற்கும் என்றமையால் கல் என்பது மாணிக்கத்தை உணர்த்துவதாயிற்று. தளி - கோயில்; விமானம். (12) வழிவழி யடிமைசெய் தொருபோது மறவலன் வழிபடு மடியேனின் மொழிவழி முறைசெய்து வருவேனிம் முதுநக ரடையவு மமணீசர் அழிவது கருதினர் விடுநாக மடைவது னருள்வழி யதனாவி கழிவது கருதிய வடியேனைக் கருணைசெய் தருளிது கடனென்றான். (இ - ள்.) வழி வழி அடிமை செய்து - வழி வழியாகத் தொண்டு பூண்டு, ஒரு போதும் மறவலன் வழிபடும் அடியேன் - ஒரு பொழுதும் மறவாது வழிபடுகின்ற அடியேன், நின் மொழி வழி முறை செய்து வருவேன் - நின் ஆணை வழியே ஆட்சி புரிந்துவாரா நின்றேன், அமண் நீசர் - சமணராகிய கீழோர் இம்முது நகர் அடையவும், அழிவது கருதினர் விடுநாகம் அடைவது - இந்தத் தொன்னகர் முழுதும் அழிவதைக் கருதி விடுத்த பாம்பு வாரா நின்றது; உன் அருள் வழி அதன் ஆவி கழிவது கருதிய அடியேனை - உனது திருவருளின் நெறியே அதன் உயிர் போவதைக் கருதிய அடியேனுக்கு, கருணை செய்தருள் இது கடன் என்றான் - அருள் பாலிப்பாயாக இது நினது கடனாகும் என்று குறையிரந்தான். மொழி - வேதம் முதலியன. அடையவும் - முழுதும். மறவலன், கருதினர் என்பன முற்றெச்சம். அழிவது, கழிவது என்பன தொழிற் பெயர். அடியேனை - அடியேனுக்கு. (13) அனுமதி கொடுதொழு திறைபாத மகமதி1 கொடுபுற னடைகின்ற பனிமதி வழிவரு தமிழ்மாறன் பகழியொ டடுசிலை யினனேகிக் குனிமதி தவழ்தரு மதினீடுங் கொடியணி குடகடை குறுகாமுன் தனிவரை யெனநிகர் தருகோபத் தழல் விழி யரவினை யெதிர்கண்டான். (இ - ள்.) அனுமதி கொடு - அருள் பெற்றுக் கொண்டு, தொழுது - வணங்கி, இறை பாதம் அகம் மதிகொடு - இறைவனது திருவடியை உள்ளத்திற் சிந்தித்தலோடு, புறன் அடைகின்ற புறத்தே வருகின்ற, பனிமதி வழிவரு தமிழ் மாறன் - தண்ணிய சந்திரன் மரபில் வந்த தமிழ் வேந்தனாகிய அனந்தகுண பாண்டியன், பகழியொடு அடுசிலையினன் ஏகி - கணையுடன் கொல்லுதற்குரிய வில்லையுடையவனாய்ச் சென்று, குனிமதி தவழ் தருமதில்- வளைந்த மதி தவழுகின்ற மதிலினது, நீடும் கொடி அணி குடகடை குறுகாமுன் - நெடிய கொடி கட்டிய மேற்கு வாயிலை அடைதற்கு முன்னரே, தனிவரை என நிகர்தரு கோபத்தழல் விழி அரவினை எதிர் கண்டான் - ஒப்பற்ற மலையென்று சொல்லுமாறு எதிர்ந்த சினத்தீ சிந்தும் விழியினையுடைய பாம்பினை நேரே கண்டனன். அனுமதி - உடன்பாடு; அரவினைக் கொல்லுதற்கு இறைவன் அருளிப்பாடு. மதிகொடு - மதித்தல் கொண்டு; சிந்தித்து. அடைகின்ற மாறன் ஏகிக் குறுகாமுன் என்க. நிகர்தரு - எதிர்ந்த; "நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு" என்பது தொல்காப்பியம். (14) [எழுசீரடியாசிரிய விருத்தம்] பல்பொறிப் பகுவாய்ப் படம்புடை பரப்பிப் பக்கமெண் டிசையொடு விசும்பிற் செல்கதிர் புதைத்துத் திணியிருள் பரப்பித் திங்களின் பகிர்புரை நஞ்சம் பில்கெயி றதுக்கிப் பெரிதுயிர்த் தகல்வாய் பிளந்துமா நகரெலா மொருங்கே ஒல்லெனக் கௌவி விழுங்குவான் சீறி யுருத்தன னுரகவா ளவுணன். (இ - ள்.) உரகவாள் அவுணன் - பாம்பின் வடிவாகிய கொடிய அவுணன், பல்பொறிப் பகுவாய்ப் படம்புடை பரப்பி - பல பொறிகளையும் பிளந்த வாயையுமுடைய படங்களைப் பரப்பி, பக்கம் எண் திசையொடு - எட்டுத் திக்குகளாகிய பக்கங்களோடு, விசும்பில் செல் கதிர் புதைத்து - வானிற் செல்லுகின்ற சூரியனையும் மறைத்து, திணி இருள் பரப்பி - செறிந்த இருளை விரித்து, திங்களின் பகிர்புரை - சந்திரனது பிளவினை ஒத்த, நஞ்சம் பில்கு எயிறு அதுக்கி - நஞ்சினை உமிழும் பல்லினை அதுக்கி, பெரிது உயிர்த்து - பெருமூச்சு விட்டு, அகல் வாய் பிளந்து - அகன்ற வாயைப் பிளந்து, மாநகர் எலாம் ஒருங்கே ஒல்லெனக் கௌவி விழுங்குவான் - பெரிய நகர் முழுதையும் ஒரு சேர விரைந்து கௌவி விழுங்குதற்கு, சீறி உருத்தனன் - சீறிச் சினந்தான். ஒல்லென : விரைவுக் குறிப்பு. விழுங்குவான் : வினையெச்சம். (15) அடுத்தன னரச சிங்கவே றிடியே றஞ்சவார்த் தங்கையிற் சாபம் எடுத்தன னெடுநா ணிருதலை வணக்கி யெரிமுகக் கூர்ங்கணை தொடுத்து விடுத்தனன் விடுத்த சரமெலா முரகன் வெறுந்துகள் படக்கறித் துமிழ்ந்து படுத்தனன் பொறாது பஞ்சவன் புராரி பங்கயச் சேவடி நினையா. (இ - ள்.) அரச சிங்க ஏறு அடுத்தனன் இடி ஏறு அஞ்ச ஆர்த்து - அரசருள் ஆண் சிங்கம் போன்ற பாண்டியன் நெருங்கி இடியேறும் அஞ்சப் பெருமுழக்கம் செய்து, அங்கையில் சாபம் எடுத்தனன் நெடு நாண் இருதலை வணக்கி - அழகிய கையில் வில்லை எடுத்து நீண்ட நாணினால் (அவ்வில்லின்) இரண்டு தலையையும் வளைத்து, எரிமுகக் கூர்ங்கணை தொடுத்து விடுத்தனன் - கூரிய தீ முகக் கணைகளைப் பூட்டி விடுத்தனன்; விடுத்த சரம் எலாம் - (அங்ஙனம்) விடப்பட்ட கணைகளனைத்தையும், உரகன் வெறுந்துகள்படக் கறித்து உமிழ்ந்து படுத்தனன் - பாம்பின் வடிவாய அவுணன் வெறிய தூளாமாறு கடித்து உமிழ்ந்து சிதைத்தான்; பஞ்சவன் - (அதனைக் கண்ட) பாண்டியன், பொறாது - மனம் பொறாமல், புராரி பங்கயச் சேவடி நினையா - சோம சுந்தரக் கடவுளின் தாமரை மலர் போன்ற சிவந்த திருவடிகளைச் சிந்தித்து. எடுத்து வணக்கி நாணிலே கணை தொடுத்து என்றுமாம். அடுத்தனன், எடுத்தனன் என்பன முற்றெச்சம். புராரி - புரப்பகைவன்; முப்புரங்களை யெரித்தவன். (16) கொடியதோர் பிறைவா யம்பினை விடுத்துக் கோளரா வளையுட றுணித்தான் இடியதோ வெனவார்த் தெரிநிறக் குருதி யிரங்கிவீ ழருவியிற் கவிழ நெடியதோ ருடலம் புரள்படக் கூர்வா னெளிதர விளிபவன் மேலைக் கடியதோ ரால காலவெள் ளம்போற்1 கக்கினான் கறையிரு ணஞ்சம். (இ - ள்.) கொடியது ஓர் பிறை வாய் அம்பினை விடுத்து - கொடியதாகிய ஒரு பிறை போலும் வாயினையுடைய கணையை ஏவி, கோள் அரா வளை உடல் துணித்தான் - வலிய பாம்பினது நெளிந்த உடலைத் துண்டுபடுத்தினான்; இடியதோ என ஆர்த்து - இடியொலியோ என்று ஐயுறப் பேரொலி செய்து, எரி நிறக்குருதி- தீயின் நிறம் போன்ற குருதி, இரங்கி வீழ் அருவியில் கவிழ - ஒலித்து வீழ்கின்ற அருவி போல ஒழுகவும், நெடியது ஓர் உடலம் புரள்பட - நீண்டதாகிய ஒப்பற்ற உடல் புரளவும், கூர்வால் நெளிதர- கூரியவால் நெளியவும், விளிபவன் - இறக்கின்ற அவ்வவுணன், மேலைக் கடியது ஓர் ஆலகால வெள்ளம் போல் - முன்னாளிற் றோன்றிய கடியதாகிய ஒப்பற்ற ஆலகால நஞ்சின் பெருக்குப் போல், கறை இருள் நஞ்சம் கக்கினான் - கரிய இருள் போன்ற நஞ்சினைக் கக்கினான். இடியதோ, அது : பகுதிப் பொருள் விகுதி. கொடியது, நெடியது, கடியது என்பன எச்சமாயின. ஓர் என்பன அசைகளுமாம். ஆர்த்து விளிபவன் கக்கினான் என்க. (17) தீவிட முருத்துத் திணியிருள் கடுப்பத் திருநக ரெங்கணுஞ் செறிந்த காவிடங் கூவல் கயந்தலை சதுக்கங் கழகமா வணமக ழிஞ்சி கோவிட மாட முபரிகை மேடை கோபுர மரங்கெலாம் பரந்து தாவிட மயங்கி யுறங்கினார் போலச் சாம்பினார் தனிநகர் மாக்கள். (இ - ள்.) தீவிடம் உருத்து - அந்தக் கொடிய நஞ்சானது சினந்து, திணி இருள் கடுப்ப - செறிந்த இருள் பரவியதைப் போல, திருநகர் எங்கணும் - அழகிய நகர் முழுதும், செறிந்த கா இடம் - நெருங்கிய சோலைகளும், கூவல் கயந்தலை - கிணறும் குளமும், சதுக்கம் கழகம் ஆவணம் - நாற்றெருக் கூடுமிடமும் கல்விக் கழகமும் கடை வீதியும், அகழ் இஞ்சி - அகழியும் மதிலும், கோ இடம் அரசன் மாளிகையும், மாடம் உபரிகை மேடை கோபுரம் அரங்கு - மாடமும் உப்பரிகையும் மேடையும் கோபுரமும் நாட்டிய சாலையும், எலாம் பரந்து தாவிட - ஆகிய எல்லாவிடங்களிலும் பரந்து தாவுதலால், தனிநகர் மாக்கள் - ஒப்பற்ற அந் நகரிலுள்ள மாந்தர்கள், மயங்கி உறங்கினார் போலச் சாம்பினார் - நஞ்சினால் மயங்கி உறங்கினவர்கள் போல வாடினார்கள். விடம் உருத்து இருள் கடுப்ப நகர் முழுதும் எல்லாவிடங்களிலும் பரந்து தாவிட என்க. ஆலாலத்தால் உறங்கிய வானோர் போல என்றுரைப்பாருமுளர். (18) நிலைதளர்ந் துடலந் திமிர்ந்துவேர் வரும்பி நிறைபுலன் பொறிகர ணங்கள் தலைதடு மாறி யுரைமொழி குழறித் தழுதழுப் படைந்துநா வுணங்கி மலைதரு கபமே னிமிர்ந்துணர் வழிந்து மயங்கிமூச் சொடுங்கியுள் ளாவி அலைதர வூச லாடினார் கிடந்தா ரன்னதொன் னகருளா ரெல்லாம். (இ - ள்.) நிலைதளர்ந்து உடலம் திமிர்ந்து வேர்வு அரும்பி- நிலை கெட்டு உடல் கம்பித்து வெயர்வை தோன்றி, நிறை புலன் பொறி கரணங்கள் தலை தடுமாறி - நிறைந்த புலன்களும் பொறிகளும் அந்தக் கரணங்களும் தலை தடுமாறி, உரைமொழி குழறி தழுதழுப்பு அடைந்து நா உணங்கி - உரைக்கின்ற மொழிகள் குழறி நாத் தழுதழுப்புற்றுக் காய்ந்து, மலைதரு கபம் மேல் நிமிர்ந்து உணர்வு அழிந்து - பொருகின்ற கபம் மேலோங்கி அறிவழிந்து, மயங்கி மூச்சு ஒடுங்கி - மயங்கி உயிர்ப்பு அடங்கி, உள் ஆவி அலைதர - உள்ளேயுள்ள உயிர் அலைய, அன்னதொல் நகர் உளார் எல்லாம் ஊசல் ஆடினார் கிடந்தார் - அப் பழைய நகரிலுள்ளாரனைவரும் ஊஞ்சல் போல ஆடிக் கிடந்தனர். உடலம், அம் : சாரியை. தலை தடுமாறி - தடுமாற்றமுற்று; ஒரு சொல். உரைமொழி, வினைத்தொகை. ஆடினார் : முற்றெச்சம். (19) தென்னவன் விடங்கண் டஞ்சுமால் போலச் சினகர மடைந்துதாழ்ந் தெந்தாய் முன்னவ வாதி முதல்வ வித்தின்றி முளைத்தவ முடிவிலா முனிவ என்னவ வன்பர்க் கெளியவ யார்க்கு மிறையவ விந்நகர்க் கென்றும் மன்னவ வனாதி மறையவ முக்கண் வானவ நினைச்சர ணடைந்தேன். (இ - ள்.) தென்னவன் - அனந்த குணபாண்டியன், விடம் கண்டு அஞ்சும் மால் போலச் சினகரம் அடைந்து - ஆலால விடத்தைக் கண்டு அஞ்சிய திருமால் போலத் திருக்கோயிலை அடைந்து, தாழ்ந்து - வணங்கி, எந்தாய் - எந்தையே, முன்னவ - யாவர்க்கும் முற்பட்டவனே, ஆதி முதல்வ - ஆதியாகிய முதல்வனே, வித்து இன்றி முளைத்தவ - மூலமின்றித் தோன்றியவனே, முடிவு இலா முனிவ - இறுதியில்லாத முனிவனே, என்னவ - எனக்குரிமையானவனே, அன்பர்க்கு எளியவ - அன்பர்கட்கு எளியவனே, யார்க்கும் இறையவ - எல்லோருக்குந் தலைவனே, இந்நகர்க்கு என்றும் மன்னவ - இம் மதுரைப் பதிக்கு எக்காலத்திலும் மன்னவனே, அனாதி மறையவ - அனாதியாயுள்ள மறையவனே, முக்கண் வானவ - மூன்று கண்களையுடைய தேவனே, நினைச் சரண் அடைந்தேன் - நின்னைப் புகலாக அடைந்தேன். விடங்கண்டஞ்சிய திருமால் திருக்கைலையை அடைந்து சரண்புக் காற்போல என்க. அருகன் கோட்டம் என்னும் பொருளுள்ள சினகரம் என்னும் பெயர் பின் பொதுப்படக் கோயிலைக் குறிப்பதாயிற்று. என்னவ - எனக் குரிமையுடையவனே; "அப்பனீ அம்மைநீ" என்னும் திருத்தாண்டகம் முதலியவற்றுள் இறைவன் தமக்குரிமையுடையார் பலராகவும் கூறப்படுதல் காண்க; என் நவ எனப் பிரித்து, எனக்குப் புதுமையை விளைப்பவனே என்று பிறர் கூறுவாராயினர். (20) அடுத்துவந் தலைக்கு மாழியைத் துரந்து மாழியுண் டேழுமொன் றாகத் தொடுத்துவந் தலைக்கும் பெருமழை தடுத்துந் துளைக்கைவிண் டுழாவவெண் பிறைக்கோ டெடுத்துவந் தலைக்குங் களிற்றினை விளித்து மிந்நகர் புரந்தனை யின்று மடுத்துவந் தலைக்கும் விடத்தினான் மயங்கும் வருத்தமுங் களைதியென் றிரந்தான். (இ - ள்.) அடுத்து வந்து அலைக்கும் ஆழியைத் துரந்தும் - நெருங்கி வந்து வருத்துங் கடலைச் சுவறச் செய்தும், ஆழி உண்டு ஏழும் ஒன்றாகத் தொடுத்து வந்து அலைக்கும் பெருமழை தடுத்தும் - கடல் நீரைப் பருகி ஏழு மேகங்களும் ஒன்றாகத் திரண்டு வந்து பெய்து வருத்தும் பெருமழையைத் தடுத்தும், துளைக்கை விண்துழாவ - துளையையுடைய துதிக்கை வானைத் தடவுமாறு, வெண்பிறைக் கோடு எடுத்து வந்து அலைக்கும் களிற்றினை விளித்தும் - வெள்ளிய பிறை போன்ற கொம்பினிடையே மேலெடுத்து வந்து வருத்தும் யானையைக் கொன்றும், இந்நகர் புரந்தனை - இந்த நகரத்தைப் பாதுகாத்தனை, இன்று மடுத்து வந்து அலைக்கும் - இப்பொழுது அகப்படுத்து வந்து வருத்துகின்ற, விடத்தினால் மயங்கும் வருத்தமும் களைதி என்று இரந்தான் - நஞ்சினாலே மயங்குகின்ற வருத்தத்தையும் நீக்கியருள் வாயென்று வேண்டினான். ஏழ் : தொகைக் குறிப்பு. துளைக்கையெடுத்து வந்தென்க விளித்து - விளியச் செய்து; பிறவினை. மடுத்து - நகரினை அகப்படுத்தி இன்றும் அடுத்து எனப் பிரிப்பாருமுளர். முன்னுண்டாகிய துன்பங்களை யெல்லாம் போக்கி இந்நகரைக் காத்தருளிய நீயே இப்பொழுதும் இத்துன்பத்தினின்றும் காக்கற் பாலையென வேண்டினான். (21) அருட்கட லனைய வாதிநா யகன்ற னவிர்சடை யணிமதிக் கொழுந்தின் பெருக்கடை யமுதத் தண்டுளி சிறிது பிலிற்றினான் பிலிற்றிட லோடும் பொருக்கென வெங்கும் பாலினிற் பிரைபோற் புரையறக் கலந்துபண் டுள்ள திருக்கிளர் மதுரா நகரமாப் புனிதஞ் செய்ததச் சிறுதுளி யம்மா. (இ - ள்.) அருள் கடல் அனைய ஆதி நாயகன் - கருணைக் கடலனைய ஆதி நாயகனாகிய சோம சுந்தரக் கடவுள், தன் அவிர் சடை அணிமதிக் கொழுந்தின் - தனது விளங்கா நின்ற சடையின்கண் அணிந்த இளம்பிறையினது, பெருக்கு அடை அமுதத்தண் துளி சிறிது பிலிற்றினான் - பெருக்கமைந்த அமுதத்தின் தண்ணிய துளியிற் சிறிது சிந்தினான்; பிலிற்றிடலோடும் - அங்ஙனம் சிந்தியவளவில், அச்சிறு துளி - அந்தச் சிறிய திவலையானது, பொருக்கென பாலினில் பிரைபோல் எங்கும் புரை அறக்கலந்து - விரைந்து பாலிற் பிரைபோல எவ்விடத்துங் குற்றமறக் கலந்து, பண்டு உள்ள திருக்கிளர் மதுரா நகரம் ஆக - முன்னுள்ள செல்வமிக்க மதுரை நகர் ஆகுமாறு, புனிதம் செய்தது - தூய்மை செய்தது. புரையற - இடைவெளியின்றி என்றுமாம். முன்பு மதிக்கலையின் அமிழ்தாற் சாந்தி செய்யப் பெற்று அதனால் மதுரையெனப் பெயரெய்தினமை திருநகரங்கண்ட படலத்துட் கூறப்பட்டது; இப்பொழுதும் அவ்வமிழ்தால் நஞ்சினைப் போக்கித் தூய்மை செய்தமையின் பண்டுள்ள மதுரா நகரமா என்றார். அம்மா : வியப்பிடைச்சொல். (22) இரவிமுன் னிருள தெனவிறை யருண்முன் னிருண்மல வலியென வெங்கும் பரவிய வமுதால் விடமகன் றவசப் படிவொழிந் தியாவரு மின்பம் விரவிய களிப்பின் மேவினா ரிருந்தார் மீனவர் பெருந்தகை வேந்தன் அரவணி சடையாற் கன்புருத் தானே யாகிமண் காவல்செய் திருந்தான். (இ - ள்.) இரவி முன் இருளது என - சூரியன் முன்னர் இருள் ஓடுதல் போலவும், இறை அருள் முன் இருள் மலவலி என - இறைவனது திருவருள் முன்னே ஆணவ மலவன்மை கெடுதல் போலவும், எங்கும் பரவிய அமுதால் - எவ்விடத்தும் பரவிய அமுதத்தினால், விடம் அகன்று - நஞ்சு நீங்கப் பெற்று, அவசப் படிவு ஒழிந்து - மயக்க வடிவம் நீங்கி, யாவரும் - அனைவரும், இன்பம் விரவிய களிப்பின் மேவினார் இருந்தார் - இன்பங்கலந்த மகிழ்ச்சியிற் பொருந்தி இருந்தனர்; மீனவர் பெருந்தகை வேந்தன் - பாண்டியர் பெருந்தகையாகிய அனந்த குணமன்னன், அரவு அணிசடையாற்கு அன்பு உருத்தானே ஆகி - பாம்பினை அணிந்த சடையையுடைய சோம சுந்தரக் கடவுளுக்கு அன்பே வடிவமாகி, மண் காவல் செய்து இருந்தான் - நிலவுலகைப் பாதுகாத்திருந்தனன். இருளது, அது : பகுதிப்பொருள் விகுதி. திருவருளால் ஆணவவலி கெடுதற்குக் கூறற்பாலவாய உவமைகளில் ஒன்றாகும. அமுதநல் விட மொழிதல் இங்கு உவமேயமாக, அஃது உவமையாயிற்று. அவசம் - வசமின்மை; மூர்ச்சை. மேவினார் : முற்றெச்சம். (23) ஆகச் செய்யுள் - 1625. இருபத்தொன்பதாவது மாயப் பசுவை வதைத்த படலம் [கலிநிலைத்துறை] சுருதி யின்புறத் தவர்விடு மராவினைச் சுருதி கருத ரும்பர னருளுடைக் கௌரியன் றுணித்த பரிசி தங்கது பொறாதமண் படிறர்பின் விடுப்ப வருபெ ரும்பசு விடையினான் மாய்த்ததும் பகர்வாம். (இ - ள்.) சுருதியின் புறத்தவர் விடும் அராவினை - வேத நெறிக்குப் புறம்பாகிய சமணர்கள் ஏவிய பாம்பினை, சுருதி கருது அரும் பரன் அருள் உடைக் கௌரியன் - வேதமுஞ் சிந்தித்தற்கரிய இறைவனது திருவருளைப் பெற்ற அனந்தகுண பாண்டியன், துணித்த பரிசு இது - துண்டு படுத்திய திருவிளையாடல் இது; அங்கு அது பொறாது - (இனி) அங்கு அதனைப் பொறுக்காது, அமண் படிறர் - சமணராகிய வஞ்சகர், பின் விடுப்ப வரு பெரும்பசு - பின்பு ஏவ வருகின்ற பெரிய (மாயப்) பசுவினை, விடையினால் மாய்த்ததும் பகர்வாம் - (சோமசுந்தரக் கடவுள்) இடபத்தினால் வதைத்தருளிய திருவிளையாடலையுங் கூறுவாம். புறம் - மாறுபாடு. கௌரியன் துணித்ததும் இறைவன் புரிந்த திருவிளையாடலே யென்பார் 'பரனரு ளுடைக் கௌரியன் றுணித்த' என்றார். விடையினான் என்பதனை இரட்டுற மொழி தலாகக் கொண்டு இடபத்தையுடைய சோம சுந்தரக் கடவுள் என்றும், இடபத்தினால் என்றும் உரைத்துக் கொள்க. (1) பணப்பெ ரும்பகு வாயுடைப் பாந்தளை யனந்த குணப்பெ ருந்தகை துணித்தபின் பின்வரு குண்டர் தணப்ப ருங்குழாங் காலினாற் றள்ளுண்டு செல்லுங் கணப்பெ ரும்புயல் போலுடைந் தோடின கலங்கி. (இ - ள்.) பணம் பெரும்பகுவாய் உடைப் பாந்தளை - படம் பொருந்திய பெரிய பிளந்த வாயையுடைய பாம்பினை, அனந்த குணப் பெருந்தகை துணித்தபின் - அனந்தகுணன் என்னும் பெரிய தகுதியை யுடைய பாண்டியன் துணித்த பின்பு, பின்வரு குண்டர் தணப்பு அரும் குழாம் - பின்னே வந்த சமணர்களின் நீங்காத கூட்டங்கள், காலினால் தள்ளுண்டு செல்லும் - காற்றினாற் றள்ளப்பட்டு ஓடும், பெரும்புயல் கணம்போல் - பெரிய முகிற்படலம் போல, உடைந்து கலங்கி ஓடின - இரிந்து மனம் கலங்கி ஓடுவவாயின. குண்டர் குழாங்கள் புயற்கணம் போல் கலங்கியோடின என்க. (2) உடைந்து போனவ ரனைவரு மோரிடத் திருள்போல் அடைந்து நாமுன்பு விடுத்தமால் யானைபோ லின்று தொடர்ந்த பாம்பையுந் தொலைத்தனர் மேலினிச் சூழ்ச்சி மிடைந்து செய்வதை யாதென வினையமொன் றோர்வார். (இ - ள்.) உடைந்து போனவர் அனைவரும் - (அங்ஙனம்) இரிந்து ஓடினவராகிய அச்சமணரனைவரும், ஓர் இடத்து இருள்போல் அடைந்து - ஓரிடத்தில் இருள் செறிந்தது போலச் செறிந்து, நாம் முன்பு விடுத்த மால் யானை போல் - நாம் முன் விடுத்த பெரிய யானையைக் கொன்றது போல, இன்று தொடர்ந்த பாம்பையும் தொலைத்தனர் - இன்று சென்ற பாம்பினையும் அழித்தார்கள்; இனிமேல் மிடைந்து யாது சூழ்ச்சி செய்வது என - இனி நாம் நெருங்கி யாது சூழ்ச்சி செய்வது என்று, வினையம் ஒன்று ஓர்வார் - ஒரு வஞ்சத்தை எண்ணுவாராயினர். செய்வது, ஐ : சாரியை. வினையம் - வஞ்சம். யாதெனக் கருதினவர் பின் ஓர்வாராயின ரென்க. (3) ஆவை யூறுசெய் யார்பழி யஞ்சுவா ரதனை ஏவு வாமிது வேபுணர்ப் பென்றுசூழ்ந் திசைந்து பாவ காரிகள் பண்டுபோற் பழித்தழல் வளர்த்தார் தாவி லாவுரு வாகியோர் தானவன் முளைத்தான். (இ - ள்.) ஆவை ஊறு செய்யார் - பசுவிற்கு துன்பஞ் செய்யார்கள், பழி அஞ்சுவார் - (அதற்குத் துன்பஞ் செய்தலால் வரும்) பழியை அஞ்சுவார்கள் (ஆகலின்), அதனை ஏவுவாம் - அப்பசுவை விடுப்போம், இதுவே புணர்ப்பு என்று சூழ்ந்து இசைந்து - இதுவே தக்க சூழ்ச்சியென்று கருதி யாவருங் கருத்தொத்து, பாவகாரிகள் - பாவகாரிகளாகிய அச்சமணர், பண்டு போல் பழித்தழல் வளர்த்தார் - முன் போலவே கொடிய வேள்வி ஒன்றினைச் செய்தனர்; தாவு இல் ஆ உரு ஆகி ஓர் தானவன் முளைத்தான் - கெடுதலில்லாத பசுவின் வடிவாகி ஓர் அவுணன் தோன்றினான். புணர்ப்பு - சூழ்ச்சி. பாவகாரிகள் - பாவமே செய்வோர்; " பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால் தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே" என்பது தேவாரம். ஆவின் சாதியியற்கை பற்றித் 'தாவில் ஆ' என்றார்; " விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்தநாட் டொட்டுஞ் சிறந்ததன் றீம்பால் அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும் இதனொடு வந்த செற்ற மென்னை" என்று மணிமேகலை கூறுதல் சிந்திக்கற் பாலது. (4) குண்ட ழற்கணின் றெழுந்தவக் கொடியவெம் பசுவைப் பண்டு போலவர் விடுத்தனர் கூடலம் பதிமேல் உண்டு மில்லையு மெனத்தடு மாற்றநூ லுரைத்த பிண்டி யானுரை கொண்டுழல் பேயமண் குண்டர். (இ - ள்.) குண்டு அழல்கண் நின்று எழுந்த அக் கொடிய வெம் பசுவை - வேள்விக் குண்டத்தின் தீயினின்றுந் தோன்றிய அந்தக் கொடிய பசுவினை, கூடலம் பதிமேல் - மதுரைப் பதியின் மேல், உண்டும் இல்லையும் என தடுமாற்ற நூல் உரைத்த பிண்டியான் - அத்தி நாத்தி என்ற தடுமாற்ற நூலினைக் கூறிய அசோக மரத்தினடியினுள்ள அருகனது, உரை கொண்டு உழல் பேய் அமண் குண்டர் அவர் - உரையினைக் கொண்டு உழலுகின்ற பேய் போன்ற சமணக் கீழ் மக்களாகிய அன்னார், பண்டு போல் விடுத்தனர் -முன்போல் விடுத்தார். குண்டு - வேள்விக்குண்டம். கொடிய வெம் : ஒரு பொருளன. பண்டு போல் - முன்பு யானையையும் நாகத்தையும் விடுத்தமைபோல. கூடலம்பதி, அம் : சாரியை. உண்டு இல்லை - அத்தி நாத்தி; அநேகாந்தமாக விரித்துரைக்கும் எழுவகையும் இவ்விரண்டுள் அடங்குதலின் யாண்டும் இவையே கூறப்படும். பிண்டி - அசோகு. குண்டராகிய அவர் பசுவைக் கூடலம்பதிமேல் விடுத்தனர் என்க. (5) [கலி விருத்தம்] மாடமலி மாளிகையி லாடுகொடி மானக் கோடுகளி னோடுமுகில் குத்திமிசை கோத்துச் சேடன்முடி யுங்கதிர்கொள் சென்னிவரை யுந்தூள் ஆடவடி யிட்டுலவை யஞ்சிட வுயிர்த்தே. (இ - ள்.) மாடம் மலி மாளிகையில் ஆடு கொடி மான - மாடங்கள் நிறைந்த மாளிகையின்கண் ஆடுகின்ற கொடியையொப்ப, கோடுகளின் - கொம்புகளினால், ஓடு முகில் குத்திமிசை கோத்து - வானில் ஓடுகின்ற மேகங்களைக் குத்தி மேலே கோத்து, சேடன் முடியும் - அனந்தனது முடியும், கதிர்கொள் சென்னி வரையும் தூள் ஆட - ஒளியினைக் கொண்ட முடியினையுடைய மேருமலையும் புழுதியாட, அடி இட்டு - அடிபெயர்த்து வைத்து, உலவை அஞ்சிட உயிர்த்து - காற்றும் அஞ்சுமாறு மூச்செறிந்து. மாடம் - மேனிலை. (6) விடுத்திடு முயிர்ப்பினெதிர் பூளைநறை வீபோல் அடுத்திடு சராசர மனைத்துமிரி வெய்தக் கடுத்திடு சினக்கனலி னுக்குலக மெல்லாம் மடுத்திடு தழற்கடவுள் வார்புனலை மான. (இ - ள்.) விடுத்திடும் உயிர்ப்பின் எதிர் - விடுகின்ற மூச்சினெதிரே, அடுத்திடு சரஅசரம் அனைத்தும் - நேர்படுகின்ற இயங்கியற் பொருளும் நிலையியற் பொருளுமாகிய எல்லாம், நறை பூளை வீபோல் இரிவு எய்த - தேனையுடைய பூளைப்பூப் போலப் பறக்கவும், கடுத்திடு சினக்கனலினுக்கு - மிக்கெழுகின்ற கோபத்தீயினுக்கு, உலகம் எல்லாம் மடுத்திடு தழல் கடவுள் வார் புனலை மான - உலகமனைத்தையும் அழிக்கும் தீக் கடவுள் பெருகிய நீரினையொப்பதாகவும். சினக்கனலின் வெம்மையை நோக்குழி ஊழித்தீயும் நீர் போலத் தண்ணிதாய்த் தோன்றவென்க. (7) உடன்றிறைகொள் புள்ளொடு விலங்கலறி யோட மிடைந்தபழு வத்தொடு விலங்கலை மருப்பால் இடந்தெறி மருத்தென வெறிந்தளவி லோரைத் தொடர்ந்துடல் சிதைத்துயிர் தொலைத்திடியி னார்த்தே. (இ - ள்.) இறைகொள் புள்ளொடு - தங்கிய பறவைகளோடு, விலங்கு அலறி ஓட - மிருகங்களும் அலறி ஓடுமாறு, மிடைந்த பழுவத்தொடு விலங்கலை - நெருங்கிய வனங்களோடு மலை களையும், உடன்று மருப்பால் இடந்து - வெகுண்டு கொம்பினால் அடியொடு பெயர்த்து, எறி மருத்து என எறிந்து - வீசுகின்ற காற்றைப் போல எறிந்து, அளவிலோரைத் தொடர்ந்து உடல் சிதைத்து உயிர் தொலைத்து - அளவிறந்த மக்களைப் பின் தொடர்ந்து அவர்கள் உடலைச் சேதித்து உயிரைத் தொலைத்து, இடியின் ஆர்த்து - இடிபோலப் பேரொலி செய்து. இறைகொள் - வனங்களிலும் மலைகளிலும் தங்குதலைக் கொண்ட. உடன்று இடந்து எறிந்து எனக் கூட்டுக. (8) மறலிவரு மாறென மறப்பசு வழிக்கொண் டறலிவர் தடம்பொருனை யாறுடைய மாறன் திறலிமலர்1 மங்கையுறை தென்மதுரை முன்னா விறலிவரு கின்றதது மீனவ னறிந்தான். (இ - ள்.) மறலி வருமாறு என மறப்பசு வழிக் கொண்டு - கூற்றுவன் வருந்தன்மை போலக் கொலைத் தொழிலையுடைய பசுவானது வழி நடந்து, அறல் இவர் தடம் பொருனை ஆறு உடைய மாறன் - கருமணல் பரந்த பெரிய பொருனை யாற்றினையுடைய பாண்டியனது, திறலி மலர் மங்கை உறை தென்மதுரை முன்னா- வீரமகளும் திருமகளும் உறைகின்ற தென்றிசைக்கணுள்ள மதுரையை நோக்கி, விறலி வருகின்றது - வெற்றி கொண்டு வாராநின்றது; அது மீனவன் அறிந்தான் - அதனைப் பாண்டியன் அறிந்தான். திறலி - திறல் உடையவள்; கொற்றவை; இ : பெயர் விகுதி. விறலி - விறல் கொண்டு. "மாடமலி" என்பது முதலிய செய்யுட்களிலுள்ள எச்சங்களை 'வருகின்றது' என்பதனோடு முடிக்க. (9) மீனவனு மாநகருண் மிக்கவரு முக்கண் வானவனை மாமதுரை மன்னவனை முன்னோர் தானவனை யாழிகொடு சாய்த்தவனை யேத்தா ஆனதுரை செய்துமென வாலய மடைந்தார். (இ - ள்.) மீனவனும் - அனந்தகுண பாண்டியனும், மாநகருள் மிக்கவரும் - பெரிய அந்நகரத்துள் மேம்பட்டவரும், முக்கண் வானவனை - மூன்று கண்களையுடைய தேவனை, மா மதுரை மன்னவனை - பெரிய மதுரைக்கு மன்னனாகிய சுந்தரபாண்டியனை, முன் ஓர் தானவனை ஆழிகொடு சாய்த்தவனை - முன்னாளிலே சலந்தரன் என்னும் ஓர் அசுரனைத் திகிரிப்படையினால் வதைத்தவனை, ஏத்தா ஆனது உரை செய்தும் என - துதித்து நிகழ்ந்த செய்தியைக் கூறுவேமென்று, ஆலயம் அடைந்தார் - திருக்கோயிலை அடைந்தார்கள். மிக்கவர் - மேலோர். ஒரு பொருள்மேற் பல பெயர் வந்தன. ஆனது - நிகழ்ந்தது. உரை செய்தும் என - உரைப்பேம் என்று. (10) நாதமுறை யோபொதுவின் மாறிநட மாடும் பாதமுறை யோபல வுயிர்க்குமறி விக்கும் போதமுறை யோபுனித பூரண புராண வேதமுறை யோவென விளித்துமுறை யிட்டார். (இ - ள்.) நாதமுறையோ - நாதனே முறையோ; பொதுவில் மாறி நடம் ஆடும் பாத முறையோ - வெள்ளியம்பலத்திலே கால் மாறி ஆடியருளும் திருவடியையுடையவனே முறையோ; பல உயிர்க்கும் அறிவிக்கும் போத முறையோ - எல்லா உயிர்களுக்கும் அறிவிக்கின்ற போதனே முறையோ; புனித - தூயவனே, பூரண - எங்கும் நிறைந்தவனே, புராண - பழம்பொருளானவனே, வேதமுறையோ - வேதத்தை அருளியவனே முறையோ;என விளித்து முறையிட்டார் - என்று கூவி முறையிட்டார்கள். நாதன் - தலைவன்; நாதத்தின் வடிவானவன் என்றுமாம். உயிர்களெல்லாம் இறைவன் அறிவிக்க அறியு மியல்பின வாகலின் 'பலவுயிர்க்கும் அறிவிக்கும் போத' என்றார். நாத, பாத என்றிங்ஙனம் விளித்து, முறையோ என முறையிட்டார் என்க. முறையிடுதல் - பிறரால் நலிதலுறுவார் தம்மைக் காக்க வேண்டுமெனக் கூவி வேண்டுதல். (11) நின்றுமுறை யிட்டவரை நித்தனரு ணோக்கால் நன்றருள் சுரந்திடப நந்தியை விளித்துச் சென்றமண ரேவவரு தீப்பசுவை நீபோய் வென்றுவரு வாயென விளம்பினன் விடுத்தான். (இ - ள்.) நின்று முறையிட்டவரை - (அங்ஙனம் திருமுன்) நின்று முறையிட்டவர்களை, நித்தன் - இறைவன், அருள் நோக்கால் நன்று அருள் சுரந்து - திருவருள் நோக்கத்தாலே மிகவும் கருணை புரிந்து, இடப நந்தியை விளித்து - இடப வடிவாயுள்ள திருநந்தி தேவரை அழைத்து, நீ போய் - நீ சென்று, அமணர் ஏவ சென்று வரு தீப் பசுவை வென்று வருவாய் என - சமணர்கள் ஏவுதலால் வருகின்ற கொடிய பசுவை வென்று வருவாயாக என்று, விளம்பினன் விடுத்தான் - கூறிவிடுத்தான். நன்று - பெரிது. சென்று, வரு என்பன ஒரு பொருளே குறித்தன. விளம்பினன் : முற்றெச்சம். (12) [கலிநிலைத்துறை] தண்டங் கெழுகூற் றமுமஞ்சத் தறுகட் செங்கட் குண்டந் தழன்று கொதிப்பக்கொடு நாக்கெ றிந்து துண்டந் துழாவக் கடைவாய்நுரை சோர்ந்து சென்னி அண்டந் துழாவ வெழுந்தன்றட லேறு மாதோ. (இ - ள்.) தண்டம் கெழு கூற்றமும் அஞ்ச - தண்டப் படையை ஏந்திய கூற்றுவனும் அஞ்சும்படி, தறுகண் செங்கண் குண்டம் தழன்று கொதிப்ப - கொடிய சிவந்த கண்களாகிய குழிகள் அழற்சிகை விட்டுக் கொதிக்கவும், கொடு நாக்கு எறிந்து துண்டம் துழாவ - வளைந்த நாவானது தாவி மூக்கினைத் துழாவவும், கடைவாய் நுரை சோர்ந்து சென்னி அண்டம் துழாவ - கடைவாய் நுரை ஒழுகப் பெற்றுத் தலையானது அண்டத்தைத் தடவவும், அடல் ஏறு எழுந்தன்று - வலி மிக்க இடபம் எழுந்தது. குண்டம் - தீ வளர்க்கும் குழி. எறிந்து - தாவியென்னும் பொருட்டு, துண்டம் - மூக்கு. எழுந்தன்று - எழுந்தது; அன் : சாரியை. மாது, ஓ : அசைகள். (13) நெற்றித் தனியோடை நிமிர்ந்து மறிந்த கோட்டிற் பற்றிச் சுடர்செம் மணிப்பூண்பிறை பைய நாகஞ் சுற்றிக் கிடந்தா லெனத் தோன்றவெள் ளாழியீன்ற கற்றைக் கதிர்போற் பருமம்புறங் கௌவி மின்ன. (இ - ள்.) நெற்றித் தனி ஓடை நிமிர்ந்து - நெற்றியிலுள்ள ஒப்பற்ற பட்டமானது சிறக்கப் பெற்று, மறிந்த கோட்டில் பற்றிச் சுடர் செம்மணிப் பூண் - வளைந்த கொம்பினைப் பொருந்தி ஒளி விடும் சிவந்த மாணிக்கத்தாலாகிய பூணானது, பிறை - மூன்றாம் பிறையை, பைய நாகம் சுற்றிக் கிடந்தாலெனத் தோன்ற - படத்தையுடைய கேதுவென்னும் பாம்பானது வளைந்து கிடந்தாற்போலத் தோன்றவும், வெள் ஆழி ஈன்ற கற்றைக் கதிர் போல் பருமம் புறம் கௌவி மின்ன - வெள்ளிய கடல் பெற்ற நெருங்கிய கிரணத்தையுடைய சூரியனைப் போலப் பொன்னாலாகிய கவசம் உடம்பின் புறத்திலே பொருந்தி விளங்கவும். செம்மணிப் பூணுக்கேற்பச் செம்பாம்பாகிய கேதுவைக் கொள்க. வளைந்த கொம்பிற்குப் பிறையும், பூணுக்குக் கேதுவும், நெற்றிப் பட்டத்திற்கு அதன் படமும் உவமங்களாம். பைய : சினையடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். வெள் ஆழி - வெள்ளிய அலையையுடைய கடல் என்றாவது, பாற்கடல் என்றாவது கொள்க. வெண்ணிற உடம்பிற் கிடந்த பொற் கவசத்திற்கு வெண்கடலில் முளைத்து விளங்கும் ஞாயிறு உவமமாயிற்று. பருமம் - கலனை, கவசம். (14) கோட்டுப் பிறைகால் குளிர்வெண்கதிரக் கற்றை போலச் சூட்டுக் கவரித் தொடைத்தொங்கலு நெற்றி முன்னாப் பூட்டுத் தள முகவட்டும் பொலியப் பின்னல் மாட்டுச் சதங்கைத் தொடைகல்லென வாய்விட் டார்ப்ப. (இ - ள்.) கோட்டுப் பிறைகால் குளிர் வெண்கதிர்க் கற்றை போல - கொம்பாகிய பிறை கக்கிய குளிர்ந்த வெள்ளிய கதிர்த்திரளைப் போல, கவரித் தொடை சூட்டுத் தொங்கலும் - கவரியின் மயிராற்றொடுக்கப்பட்ட சூட்டா கிய தொங்கலும், நெற்றி முன்னாப் பூட்டுத் தரள முகவட்டும் பொலிய - நெற்றிக்கு முன்னாகப் பூட்டுதலையுடைய முத்தாலாகிய முகவட்டும் பொலிந்து விளங்கவும், பின்னல் மாட்டுச் சதங்கைத் தொடை கல்லென வாய் விட்டு ஆர்ப்ப - பின்னலாகிய மாட்டுச் சதங்கை மாலை கல்லென்று வாய்விட்டு ஒலிக்கவும். சூட்டு - உச்சியிலணிவது; ஈண்டுக் கொம்பினுச்சி. தொங்கல் - குஞ்சம். வட்டு - வட்டம். தொங்கலும் முகவட்டும் கதிர்க் கூற்றை போலப் பொலிய என்க. கல்லென : ஒலிக்குறிப்பு. (15) பணிநா வசைக்கும் படியென்னக் கழுத்தில் வீர மணிநா வசைப்ப நகைமுத்தின் வகுத்த தண்டை பிணிநாண் சிறுகிங் கிணிபிப்பல மாலைத் தொங்கல் அணிநா ணலம்பச் சிலம்பார்ப்ப வடிக ணான்கும். (இ - ள்.) பணி நா அசைக்கும்படி என்ன - பாம்பு நாவினை அசைக்குந் தன்மைபோல, கழுத்தில் வீரமணி நா அசைப்ப - கழுத்திலணிந்த வீரகண்டை நாவினை அசைத்து ஒலிக்கவும், நகை முத்தின் வகுத்த தண்டை - ஒளி பொருந்திய முத்தை உள்ளிடு பருக்கையாகக் கொண்டு செய்த தண்டையும், நாண் பிணி சிறு கிங்கிணி - கயிற்றிற் கோத்த சிறு சதங்கை மாலையும், நாண் மாலை அணி பிப்பலம் தொங்கல் - கயிற்றில் வரிசைப்படக் கோத்த அழகிய அரசிலை வடிவமாகச் செய்த மாலையும், அலம்ப- ஒலிக்கவும், அடிகள் நான்கும் சிலம்பு ஆர்ப்ப - நான்கு கால்களிலும் சிலம்புகள் ஒலிக்கவும். பிப்பலம் - அரசு. பிப்பல மாலையாகிய தொங்கல் என்றும், நாணாகிய அணி என்றும் வேறு வேறாகக் கொள்ளலுமாம். (16) அடியிட்டு நிலங்கிளைத் தண்டமெண் டிக்கும் போர்ப்பப் பொடியிட் டுயிர்த்துப் பொருகோட்டினிற் குத்திக் கோத்திட் டிடியிட் டதிர்கா ரெதிரேற்றெழுந் தாங்கு நோக்கிச் செடியிட் டிருகண் ணழல்சிந்த நடந்த தன்றே. (இ - ள்.) அடியிட்டு நிலம் கிளைத்து - அடியினால் நிலத்தைக் கிளைத்து, அண்டம் எண் திக்கும் போர்ப்பப் பொடி இட்டு - அண்டத்தையும் எட்டுத் திசைகளையும் மூடுமாறு புழுதி செய்து, உயிர்த்து - பெருமூச்செறிந்து, பொரு கோட்டினில் குத்திக் கோத்திட்டு - பொருதற்குரிய கொம்பினாற் குத்தி (மண்ணைக்) கோத்துக் கொண்டு, இடி இட்டு அதிர் கார் எதிர் ஏற்று எழுந்தாங்கு நோக்கி - இடித்து முழங்கும் முகிலினை எதிர்த்தெழுந்தது போல (மேல்) நோக்கி, இரு கண் செடி இட்டு அழல் சிந்த நடந்தது- இரண்டு கண்களும் ஒளி கான்று தீயினைச் சிந்த நடந்தது. அடியிட்டு, இட்டு : மூன்றனுருபின் பொருட்டு, பொடியிட்டு- பொடியாக்கி. இடியிட்டு - இடித்து. செடி - ஒளி; கற்றையுமா அன்று, ஏ : அசை. (17) [அறுசீரடியாசிரிய விருத்தம்] பால்கொண்ட நிழல்வெண் டிங்கட் பகிர்கொண்ட மருப்பிற் கொண்மூச் சூல்கொண்ட வயிற்றைக் கீண்டு துள்ளியோர் வெள்ளிக் குன்றங் கால்கொண்டு நடந்தா லென்னக் கடிந்துடன் றாவைச் சீற்றம் மேல்கொண்டு நாற்றம் பற்றி வீங்குயிர்ப் பெறிந்து கிட்டா. (இ - ள்.) பால் கொண்ட நிழல் வெண் திங்கள் பகிர் கொண்ட மருப்பில் - பால் போலும் வெள்ளிய ஒளியினையுடைய திங்களின் பிளவையொத்த கொம்பினால், கொண்மூ சூல் கொண்ட வயிற்றைக் கீண்டு துள்ளி - முகிலினது சூலைக் கொண்ட வயிற்றைக் கிழித்துத் துள்ளிக் கொண்டு, ஓர் வெள்ளிக்குன்றம் கால் கொண்டு நடந்தால் என்னக் கடிந்து - வெள்ளி மலை ஒன்று கால் பெற்று நடந்தாற்போல விரைந்து சென்று, உடன்று - பகைத்து, சீற்றம் மேல் கொண்டு - வெகுளி மீக்கொண்டு, நாற்றம் பற்றி வீங்கு உயிர்ப்பு எறிந்த ஆவைக் கிட்டா - நாற்றம் பிடித்துப் பெருமூச்செறிந்து பசுவினை நெருங்கி. பால் கொண்ட வெண்ணிழல் என்க. பால் கொண்ட, பகிர் கொண்ட என்பவற்றில் கொண்ட என்பது உவமவுருபு. கீண்டு, மரூஉ. நாற்றம் பற்றுதல் - நிலத்தை மோந்து நாற்றமறிதல். நாற்றம் பிடித்தலும் வீங்குயிர்ப் பெறிதலும் ஏற்றின் சாதித்தன்மை. வெள்ளிக் குன்றம் கால் கொண்டு நடந்தாலென்ன என்பது இல் பொருளுவமை. (18) குடக்கது குணக்க தென்னக் குணக்கது குடக்க தென்ன வடக்கது தெற்க தென்னத் தெற்கது வடக்க தென்ன முடுக்குறு மருப்பிற் கோத்து முதுகுகீ ழாகத் தள்ளும் எடுக்குறு மலையைக் கால்பேர்த் தெனத்திசைப் புறத்து வீசும். (இ - ள்.) குடக்கது குணக்கது என்ன - மேலைத் திசையில் உள்ள பசு அப்பொழுதே கீழைத் திசையில் உள்ளது என்று சொல்லவும், குணக்கது குடக்கது என்ன - கிழக்கேயுள்ளது மேற்கேயுள்ளதென்னவும், வடக்கது தெற்கது என்ன - வடக்கிலுள்ளது தெற்கேயுள்ள தென்னவும், தெற்கது வடக்கது என்ன - தெற்கிலுள்ளது வடக்கேயுள்ள தென்னவும், முடுக்குறும் - இந் நான்கு திசைகளிலும் அதனை இடையறாது துரத்தும்; மருப்பில் கோத்து முதுகுகீழ் ஆகத் தள்ளும் - கொம்பிற் கோத்து முதுகு கீழாமாறு தள்ளும்; எடுக்குறும் - மீண்டு எடுக்கும்; மலையைக் கால் பேர்த்து என - மலையைக் காற்றுப் பெயர்த்து வீசியது போல, திசைப்புறத்து வீசும் - திசைகளின் புறத்தில் எறியும். குடக்கது, குணக்கது, வடக்கது, தெற்கது என்பன வினைக்குறிப்புப் பெயர். ஊழிக் காற்றானது மலையினைப் பெயர்த்தெறிந்தாற் போலவென்க. பேர்த்தென; விகாரம். (19) கொழுமணிச் சிகர கோடி சிதைபடக் குவட்டில் வீசும் பழுமரச் செறிவில் வான்றோய் பணையிற வெறியும் வானின் விழுமறப் பசுப்போல் வீழ வேலைவாய் வீசு மிங்ஙன் செழுமதிக் கோட்டு நந்தித் தேவிளை யாடல் செய்து. (இ - ள்.) கொழுமணிச் சிகரகோடி சிதைபடக் குவட்டில் வீசும் - பருத்த உருப்பெற்ற மணிகள் நிறைந்த சிகரவரிசைகள் தூளாகும்படி மலையின்கண் எடுத்து எறியும்; பழுமரச் செறிவில் - ஆலமரங்களின் நெருக்கின்கண், வான் தோய் பணை இற எறியும் - வானையளாவிய அவற்றின் கிளைகள் முறியுமாறு வீசும்; வானின் விழும் அறப் பசுப் போல் வீழ வேலைவாய் வீசும் - வானுலகினின்றும் கடலில் விழும் காம தேனுவைப் போல விழுமாறு கடலின்கண் எடுத்து வீசும்; இங்ஙன் - இங்ஙனம், செழுமதிக் கோட்டு நந்தித்தே விளையாடல் செய்து - செழுவிய (அரை) மதி போன்ற கொம்பினையுடைய திருநந்தியாகிய தேவு போர் விளையாடல் செய்து. துருவாச முனிவன் சாபத்தால் இந்திரன் செல்வமுற்றும் கடலில் ஒளித்த ஞான்று காமதேனுவும் அதன்கண் விழுந்ததாகலின் 'வானின் விழும் அறப் பசுப்போல்' என்றார். வானின், ஐந்தனுருபு நீக்கப் பொருட்டு. அவ்வறப் பசுப் போல் இம் மறப்பசு வீழவென்க. தே - தெய்வம். (20) பூரிய ரெண்ணி யாங்கே பொருதுயி ரூற்றஞ் செய்யா தாரிய விடைதன் மாண்ட வழகினைக் காட்டக் காமுற் றீரிய நறும்பூ வாளி யேறுபட் டாவி யோடும் வீரியம் விடுத்து வீழ்ந்து வெற்புரு வாயிற் றன்றே. (இ - ள்.) பூரியர் எண்ணி யாங்கே - கீழ்மக்களாகிய சமணர்கள் எண்ணிய வண்ணமே, பொருது உயிர் ஊற்றம் செய்யாது - பொருதலினால் உயிர்க்குத் துன்பஞ் செய்யாது, ஆரிய விடை தன் மாண்ட அழகினைக் காட்ட- அழகிய இடபமானது தனது மாட்சிமைப்பட்ட அழகைக் காட்ட, காமுற்று - (அப் பசுவானது) அதனை விரும்பி, ஈரிய நறும் பூவாளி ஏறுபட்டு - குளிர்ந்த நறிய மலரம்புகளால் ஏறுண்டு, ஆவியோடும் வீரியம் விடுத்து - உயிரோடு வீரியத்தையும் விட்டு, வீழ்ந்து வெற்பு உரு ஆயிற்று - கீழே விழுந்து மலை வடிவமாயிற்று. ஆவை யூறு செய்யார் எனக் கருதினராகலின் அவர் எண்ணி யாங்கே என்றார். ஊற்றம் - ஊறு. ஆரிய விடை - அரிய விடையென்றும், குரவுத் தன்மையுடைய விடையென்றும் உரைத்தலுமாம். வீரியத்துடன் ஆவியை விடுத்தென்க. அன்று, ஏ : அசைகள். (21) வாங்கின புரிசை மாட மாநக ரானா வின்பந் தூங்கின வரவாய் வேம்பின் றோடவிழ் தாரான் றிண்டோள் வீங்கின விரவி தோன்ற வீங்கிரு ளுடைந்த தென்ன நீங்கின நாண மோடு நிரையமண் குழாங்க ளெல்லாம். (இ - ள்.) வாங்கின புரிசைமாட மாநகர் - வளைந்த மதிலையுடைய மாடங்கள் நிறைந்த பெரிய மதுரைப்பதி முழுதும், ஆனா இன்பம் தூங்கின - நீங்காத இன்பத்தில் அழுந்தின; அரம் வாய் வேம்பின் தோடு அவிழ் தாரான் திண் தோள் வீங்கின - அரம்போல இரு புறத்தும் வாயுள்ள இலைகளையுடைய வேம்பின் இதழ் விரிந்த மாலையையுடைய அனந்தகுண பாண்டியனின் திண்ணிய தோள்கள் பூரித்தன; இரவி தோன்ற வீங்கு இருள் உடைந்தது என்ன - பரிதி உதித்த காலை செறிந்த இருள் சிதைந்தாற்போல, நிரை அமண் குழாங்கள் எல்லாம் நாணமோடு நீங்கின - வரிசை வரிசையாயுள்ள சமணக் கூட்டங்களனைத்தும் நாணத்துடன் புறங்கொடுத் தோடின. நகரிலுள்ளா ரனைவரும் என்பார் 'நகர்' என்றார். அரம் - வாளரம்; இவ்வுவமம் பழஞ் செய்யுட்களிற் பயின்றுளது. நாணம் - வெள்குதல்; நாணும் நீங்கிற்று அவர்களும் நீங்கினர் எனலுமாம்(22) உலகறி கரியாத் தன்பே ருருவினை யிடபக் குன்றாக் குலவுற நிறுவிச் சூக்க வடிவினாற் குறுகிக் கூடற் றலைவனை வணங்க வீசன் றண்ணருள் சுரந்து பண்டை இலகுரு வாகி யிங்ங னிருக்கென விருத்தி னானே. (இ - ள்.) உலகு அறி கரியா - உலகத்தார் அறியுஞ் சான்றாக, தன் பேர் உருவினை இடபக் குன்றாக் குலவுற நிறுவி - நந்தி தனது பெரிய வடிவினை இடப மலையாக விளங்க நிறுத்தி, சூக்க வடிவினால் கூடல் தலைவனைக் குறுகி வணங்க - நுண்ணிய வடிவினோடு மதுரை நாயகனை அடைந்து வணங்க, ஈசன் தண் அருள் சுரந்து - அவ் விறைவன் தண்ணிய கருணை சுரந்து, பண்டை இலகு உருவு ஆகி இங்ஙன் இருக்க என இருத்தினான் - முன்னைய விளங்கிய வடிவமாகி இங்கு இருப்பாயாகவென்று இருத்தியருளினான். இந்நிகழ்ச்சியை உலகினர் அறியுஞ் சான்றாகவென்க. பேருரு - தூலவடிவம். சூக்கம் - சூக்குமம்; நுண்மை. இருக்கென : அகரந் தொகுத்தல். (23) அந்நிலை நகரு ளாரு மரசனு மகிழ்ச்சி தூங்கிச் சன்னிதி யிருந்த நந்தி தாளடைந் திறைஞ்சிப் போக மின்னவிர் சடையா னந்தி வென்றிசால் வீறு நோக்கி இன்னமு தனையா ளோடுங் களிசிறந் திருக்கு நாளில். (இ - ள்.) அந்நிலை நகருளாரும் அரசனும் மகிழ்ச்சி தூங்கி - அப்பொழுது நகரிலுள்ளாரும் மன்னனும் களிப்பு மிக்கு, சன்னிதி இருந்த நந்தி தாள் அடைந்து இறைஞ்சிப் போக - திரு முன்பே இருந்த திரு நந்தி தேவரின் திருவடியை அடைந்து வணங்கிச் செல்ல, மின் அவிர் சடையான் - மின் போல் விளங்குஞ் சடையையுடைய சோமசுந்தரக் கடவுள், நந்தி வென்றி சால் வீறு நோக்கி - அந் நந்தி தேவரின் வெற்றிமிக்க பெருமிதத்தினைக் கண்டு, இன் அமுது அனையாளோடும் களி சிறந்து இருக்கும் நாளில் - இனிய அமுதத்தையொத்த உமைப் பிராட்டியோடும் களிப்பு மிக்கு இருக்கும்பொழுது. வீறு - பிறிதொன்றற் கில்லாத சிறப்பு. (24) அவ்விடை வரைமேன் முந்நீ ரார்கலி யிலங்கைக் கேகுந் தெவ்வடு சிலையி ராமன் வானர சேனை சூழ மைவரை யனைய தம்பி மாருதி சுக்கி ரீவன் இவ்வடல் வீர ரோடு மெய்தியங் கிறுத்தான் மன்னோ. (இ - ள்.) அவ்விடை வரைமேல் - அந்த இடப மலையின் மேல், முந்நீர் ஆர்கலி இலங்கைக்கு ஏகும் - மூன்று நீர்களையுடைய கடல் சூழ்ந்த இலங்கைக்குச் செல்லா நின்ற, தெவ் அடுசிலை இராமன் - பகைவரைக் கொல்லும் கோதண்டத்தை யேந்திய இராமபிரான், வானர சேனை சூழ - குரக்குப் படைகள் சூழ, மைவரை அனைய தம்பி மாருதி சுக்கிரீவன் - நீல மலையை ஒத்த இலக்குவனும் அனுமானும் சுக்கிரீவனுமாகிய, இவ்வடல் வீரரோடும் எய்தி - இந்த வெற்றியையுடைய வீரர்களோடும் அடைந்து, அங்கு இறுத்தான் - அங்கே தங்கினான். மைவரை - மேகந் தவழும் மலையுமாம். மாருதி - காற்றின் மைந்தன். மாருதம் - காற்று. அவ்விடைவரைமேல் எய்தி அங்கு இறுத்தான் என்க. மன், ஓ : அசைகள். (25) அன்னது தெரிந்து விந்த மடக்கிய முனியங் கெய்தி மன்னவற் காக்கங் கூறி மழவிடைக் கொடியோன் கூடற் பன்னரும் புகழ்மை யோது பனுவலை யருளிச் செய்ய முன்னவன் பெருமை கேட்டு முகிழ்த்தகை முடியோ னாகி. (இ - ள்.) விந்தம் அடக்கிய முனி - விந்த மலையை அடக்கிய அகத்திய முனிவன், அன்னது தெரிந்து அங்கு எய்தி - அதனை உணர்ந்து அங்குச் சென்று, மன்னவற்கு ஆக்கம் கூறி - மன்னனாகிய இராமனுக்கு ஆக்க மொழி கூறி, மழவிடைக் கொடியோன் கூடல் - இளமை பொருந்திய இடபமாகிய கொடியையுடைய சோமசுந்தரக் கடவுளது மதுரைப் பதியின், பன் அரும் புகழ்மை ஓது பனுவலை - சொல்லுதற்கரிய புகழைக் கூறும் நூலை, அருளிச் செய்ய - கூறியருள, முன்னவன் பெருமை கேட்டு - அம் முதல்வனது பெருமையைக் கேட்டு, முகிழ்த்தகை முடியோன் ஆகி - கூப்பிய கையையுடைய முடியையுடையவனாய். விந்தம் அடக்கிய - மேருவோடு இகலிவோங்கிய விந்தத்தின் வீற்றினை யடக்கிய. புகழ்மை, மை: பகுதிப் பொருள் விகுதி. முடியின் மேற் குவித்த கைகளையுடையனாகி என்க. முனி அருளிச் செய்ய இராமன் கேட்டு என இயையும். (26) முனியொடு குறுகிச் செம்பொன் முளரியுண் மூழ்கி யாதித் தனிமுத லடியை வேணி முடியுறத் தாழ்ந்து வேத மனுமுறை சிவாக மத்தின் வழிவழா தருச்சித் தேத்திக் கனிவுறு மன்பி லாழ்ந்து முடிமிசைக் கரங்கள் கூப்பி. (இ - ள்.) முனியொடு குறுகி - அம் முனிவனோடு சென்று, செம்பொன் முளரியுள் மூழ்கி - சிவந்த பொற்றாமரையில் நீராடி, ஆதித் தனி முதல் அடியை வேணி முடி உறத் தாழ்ந்து - யாவர்க்கும் ஆதியாகிய ஒப்பற்ற முதற் கடவுளின் திருவடியைச் சடையுடைய தனது முடி பொருந்துமாறு வணங்கி, வேத மனுமுறை சிவகாமத்தின் வழி வழாது அருச்சித்து ஏத்தி - வேத மனுமுறை சிவாகமத்தின் வழியும் வழுவாது அருச்சித்துத் துதித்து, கனிவுறும் அன்பில் ஆழ்ந்து - கனிந்த பேரன்பில் அழுந்தி, முடிமிசைக் கரங்கள் கூப்பி - முடியின் மேற் கைகளைக் குவித்து நின்று. தனிமுதல் - முழுமுதல். இராமன் தவக்கோலந் தாங்கி வனம் போந்தானாகலின் 'வேணிமுடியுற' என்றார். மனு - மந்திரம். (27) புங்கவ சீவன் முத்தி புராதிப புனித போக மங்கல மெவற்றி னுக்குங் காரண வடிவ மான சங்கர நினது தெய்வத் தானங்க ளனந்த மிந்த அங்கண்மா ஞால வட்டத் துள்ளன வவைக டம்மில். (இ - ள்.) புங்கவ - தேவர் யாவர்க்கும் உயர்ந்தோனே, சீவன் முத்தி புர அதிப - சீவன் முத்தி புரத்திற்குத் தலைவனே, புனித போக மங்கலம் எவற்றினுக்கும் காரண வடிவம் ஆன சங்கர - தூயபோக நலங்கள் எவற்றுக்குங் காரண வடிவாகிய சங்கரனே, இந்த அம் கண்மா ஞால வட்டத்து - இந்த அழகிய இடத்தையுடைய பெருமை பொருந்திய நிலவுலகின்கண், நினது தெய்வத் தானங்கள் அனந்தம் உள்ளன - நின்னுடைய தெய்வத் தன்மை பொருந்திய பதிகள் பல உள்ளன; அவைகள் தம்மில் - அவற்றுள். புங்கவன் - உயர்ந்தோன், வானோன். சீவன் முத்திபுரம் - மதுரை : தலவிசேடத்திற் காண்க. புராதிப : நெடிற் சந்தி. புனித என விளியாக்கித் தூயனே என்றுரைத்தலும், தூய போகங்கட்கும் மங்கலங்கட்கும் காரண வுருவான என்றுரைத்தலும் பொருந்தும். சங்கரன் - சுகத்தை யருளுபவன். அனந்தம் - வரம்பில்லன. ஞால வட்டம் - பூ மண்டலம். (28) [கலிநிலைத்துறை] அற்பு தப்பெரும் பதியிந்த மதுரையீ தாற்றப் பொற்பு டைத்தென்ப தெவன்பல புவனமு நின்பாற் கற்பு வைத்துய நீசெய்த கருமத்தின் விருத்தம் வெற்பு ருக்களாய்ப் புடைநின்று விளங்கலான் மன்னோ. (இ - ள்.) அற்புதப் பெரும்பதி இந்த மதுரை - அற்புதம் பொருந்திய சிறந்த பதியாகும் இந்த மதுரையானது; ஈது ஆற்றப் பொற்பு உடைத்து என்பது எவன் - இது மிக்க மேன்மையுடைத் தென்று கூறுவது என்னை, பல புவனமும் நின்பால் கற்பு வைத்து உய- எல்லாவுலகமும் நின்னிடத்தே தியானம் வைத்துப் பிழைக்குமாறு, நீ செய்த கருமத்தின் விருத்தம் - நீ செய்தருளிய திருவிளையாடல்களின் வரலாறு, வெற்பு உருக்காய்ப் புடை நின்று விளங்கலால்- மலை வடிவங்களாய்ப் பக்கத்தே நின்று விளங்குதலால். கூறுதல் மிகையென்பார் 'எவன்' என்றார். கற்பு - கற்றல்; ஈண்டுத் தியானம். கருமம் - காரியம். விருத்தம் - செய்தி. கொலைத் தொழில் என்பது கொண்டு கருமத்தின் ஒவ்வாமை என்றுரைத்தலுமாம். இங்கு நீ புரிந்த கருமத்தின் விருத்தம் வெற்புருக்களாய் இப்பதியின் மேன்மைக்கு அழியாத சான்றுகளாக விளங்குதலின் இது பொற்புடைத்தென்பது எவன் என விரித்துரைத்துக் கொள்க. மன், ஓ : அசைகள். (29) கண்ட வெல்லையிற் றுன்பங்கள் களைதற்கு மளவைக் கண்ட ரும்பெருஞ் செல்வங்க ளளித்தற்குங் கருணை கொண்டு நீயுறை சிறப்பினாற் குளிர்மதிக் கண்ணி அண்ட வாணவிவ் விலிங்கத்துக் கொப்புவே றாமோ. (இ - ள்.) கண்ட எல்லையில் துன்பங்கள் களைதற்கும் - பார்த்த வளவிலே துன்பங்களைப் போக்குதற்கும், அளவைக்கு அண்டு அரும் பெருஞ் செல்வங்கள் அளித்தற்கும் - அளவைக்குப் பொருந்துதல் இல்லாத பெரிய செல்வங்களை அருளுதற்கும், கருணை கொண்டு நீ உறை சிறப்பினால் - திருவருள் கொண்டு நீ வீற்றிருக்குஞ் சிறப்பினாலே, குளிர்மதிக் கண்ணி அண்ட வாண - குளிர்ந்த பிறையை மாலையாகவுடைய தேவனே, இவ்விலிங்கத்துக்கு வேறு ஒப்பு ஆமோ - இந்தச் சொக்கலிங்கத்துக்கு வேறொன்று ஒப்பாகுமோ? அண்டு - கிட்டுதல்; முதனிலைத் தொழிற் பெயர். அளவைக்கு அண்டு அரும் - அளக்க வொண்ணாத என்றபடி, கண்ணி முடியிற் சூடு மாலை. அண்ட வாணன் - தேவன். வாழ்நன் என்பது வாணன் என மருவிற்று. ஓகாரம் எதிர்மறை. (30) தோய்ந்தி டும்பொழு தீட்டிய தொல்வினைப் படலம் மாய்ந்தி டும்படி மாய்த்துநின் மங்கல போகம் ஈந்தி டும்படிக் கிருந்தமா தீர்த்தத்தி னியல்பை ஆய்ந்தி டும்பொழு ததற்கொரு தீர்த்தமொப் பாமோ. (இ - ள்.) தோய்ந்திடும் பொழுது - (தன்னில்) மூழ்கும் பொழுதில், ஈட்டிய தொல்வினைப் படலம் மாய்ந்திடும்படி மாய்த்து - தேடி வைத்த பழவினைத் தொகுதி நசிக்குமாறு சிதைத்து, நின் மங்கல போகம் ஈந்திடும்படிக்கு இருந்த - நினது நன்மையாகிய போகத்தை அருளும்படி அமைந்த, மாதீர்த்தத்தின் இயல்பை ஆய்ந்திடும் பொழுது - பெருமை பொருந்திய பொற்றாமரைப் பொய்கையின் தன்மையை ஆராயுங்கால், அதற்கு ஒரு தீர்த்தம் ஒப்பு ஆமோ - அதற்கு மற்றொரு தீர்த்தம் ஒப்பாகுமோ? ஈட்டிய - பல பிறவிகளிலும் தேடிய. தொல்வினைப் படலம்- சஞ்சித கன்மத் தொகுதி. நின் மங்கலபோகம் என்றது சிவபோகத்தை. படிக்கு, கு : பகுதிப் பொருள் விகுதி. (31) எத்த லத்தினு மொவ்வொன்று விழுமிதா மிந்த மெய்த்த லத்திலிம் மூவகை விழுப்பமும் விளங்கும் அத்த வாதலா லித்தல மடைந்தவ ரெவர்க்குஞ் சித்த சுத்தியும் பல்வகைச் சித்தியும் பயக்கும். (இ - ள்.) எத்தலத்தினும் ஒவ்வொன்று விழுமிதாம் - எந்தத் தலங்களிலும் மூர்த்தியும் தீர்த்தமும் தலமுமாகிய மூன்றனுள் ஒவ்வொன்று சிறப்புடைத்தாகும்; இந்த மெய்த்தலத்தில் இம் மூவகை விழுப்பமும் விளங்கம் - இந்த உண்மைத்தலத்திண்கண் இம் மூவகைச் சிறப்பும் விளங்கும்; ஆதலால் - ஆதலினால், அத்த- இறைவனே, இத்தலம் - இப்பதியானது, அடைந்தவர் எவர்க்கும்- தன்னைச் சார்ந்தவரனைவருக்கும், சித்தசுத்தியும் பல்வகைச் சித்தியும் பயக்கும் - மனத் தூய்மையையும் அணிமா முதலிய பலவகைச் சித்திகளையும் அருளா நிற்கும். மேல் மூன்று செய்யுட்களால் தலம், மூர்த்தி, தீர்த்தம் என்பவற்றின் சிறப்பு முறையே கூறப் பெற்றமையின் அவற்றைச் சுட்டி 'இம் மூவகை விழுப்பமும்' எனப்பட்டது. (32) அடியனே னெண்ணுங் கருமமுஞ் சரதமே யாக முடியு மாறரி தச்செயன் முடியுமெப் படியப் படிபு ரிந்தருள் கடிதெனப் பணிந்தனன் பரனும் நெடிய வான்படு மமுதென வெதிர்மொழி நிகழ்த்தும். (இ - ள்.) அடியனேன் எண்ணும் கருமமும் சரதமே ஆக முடியுமாறு அரிது - அடியேன் எண்ணிய செயலும் உண்மையாக முடியுந்தன்மை அரிதோ; அச் செயல் எப்படி முடியும் அப்படி- அச் செயலானது எவ்வாறு முடியுமோ அந்நெறியை, கடிது புரிந்தருள் எனப் பணிந்தனன் - விரைந்து செய்தருள வேண்டும் என்று இரந்து வணங்கினான்; பரனும் - சோம சுந்தரக் கடவுளும், நெடிய வான்படும் அமுது என எதிர்மொழி நிகழ்த்தும் - பரந்த வானின்கண் உண்டாகும் அமிழ் தென்னுமாறு எதிர்மாற்றம் கூறியருளுவான். முடியுமா, ஈறு தொக்கது. அரிதோ என ஓகாரம் விரிக்க. புரிதல் - செய்தல்; ஈண்டு உணர்த்துதல்; விரும்பியருள் எனலுமாம். வான் மொழியாகக் கூறுதலின் 'வான்படும் அமுதென' என்றார். இஃது இல்பொருளுவமை. (33) [அறுசீரடியாசிரிய விருத்தம்] இரவிதன் மரபின் வந்த விராமகே ளெமக்குத் தென்கீழ் விரவிய திசையிற் போகி விரிகடற் சேதுகட்டிக் கரவிய வுள்ளக் கள்வன் கதிர்முடி பத்துஞ் சிந்தி அரவமே கலையி னாளை யருஞ்சிறை யழுவ நீக்கி. (இ - ள்.) இரவி தன் மரபில் வந்த இராமகேள் - சூரியன் மரபில் வந்த இராமனே கேட்பாயாக; எமக்குத் தென்கீழ் விரவிய திசையில் போகி - எமக்குத் தென்கிழக்காகப் பொருந்திய திசையிற் சென்று, விரிகடல் சேதுகட்டி - விரிந்த கடலிலே சேதுபந்தனஞ் செய்து, கரவிய உள்ளக்கள்வன் கதிர்முடி பத்தும் சிந்தி - வஞ்சனையையுடைய உள்ளத்தையுடைய இராவணனது விளக்கமுள்ள பத்துத் தலைகளையுந் துணித்து, அரவம் மேகலையினாளை - ஒலிக்கின்ற மேகலையணிந்த சானகியை, அருஞ்சிறை அழுவம் நீக்கி - பொறுத்தற்கரிய சிறைக்கூடத்தினின்றும் நீக்கி. தெற்கும் கிழக்கும் கலந்த திசை என்றுமாம். சேது - அணை. கரவிய - கரந்த. சிந்தி, தன் வினைக்கும் பிற வினைக்கும் பொதுவாய சொல். அழுவம் -பரப்பு, கூடம். (34) மீண்டுநின் னயோத்தி யெய்தி விரிகட லுலகம் பன்னாள் ஆண்டினி திருந்து மேனாள் வைகுண்ட மடைவா யாக ஈண்டுநீ கவலை கொள்ளே லெனு1மச ரீரி கேட்டு நீண்டவன் மகிழ்ந்து தாழ்ந்து நிருத்தனை விடைகொண் டேகி. (இ - ள்.) மீண்டும் நின் அயோத்தி எய்தி - மீளவும் நினது அயோத்தியை அடைந்து, விரி கடல் உலகம் பல் நாள் ஆண்டு இனிது இருந்து - பரந்த கடல் சூழ்ந்த உலகத்தை நெடுங்காலம் ஆட்சி புரிந்து இனிதாக இருந்து, மேல் நாள் வைகுண்டம் அடைவாயாக - பின்னாளில் வைகுண்டத்தைச் சேர்வாயாக; ஈண்டு நீ கவலை கொள்ளேல் - இப்பொழுது நீ கவலை கொள்ளாதே, எனும் அசரீரி கேட்டு - என்னும் அசரீரியுரையைக் கேட்டு, நீண்டவன் மகிழ்ந்து தாழ்ந்து - நெடியவனாகிய இராமன் மகிழ்ந்து வணங்கி, நிருத்தனை விடை கொண்டு ஏகி - சோமசுந்தரக் கடவுளிடத்து விடைபெற்றுச் சென்று. அயோத்தி - யுத்தத்தில் வெல்லப்படாதது என்னும் பொருளது, பதினோராயிரம் ஆண்டு இராமன் அரசு புரிந்தனன் என்பர். மேனாள் - ஆண்டிருந்த பின்பு - ஈண்டு, காலங்குறித்தது. அசரீரி - சரீரம் இல்லது; வானில் எழும் உரை. (35) மறைப்பொரு ளுரைத்தோன் சொன்ன வண்ணமே யிலங்கை யெய்தி அறத்தினைத் தின்ற பாவி யாவிதின் றனையான் செல்வத் திறத்தினை யிளவற் கீந்து திருவிரா மேசங் கண்டு கறைப்படு மிடற்றி னானை யருச்சித்துக் கருணை வாங்கி. (இ - ள்.) மறைப்பொருள் உரைத்தோன் சொன்ன வண்ணமே - வேதத்துக்குப் பொருளருளிச் செய்த சோமசுந்தரக்கடவுள் கூறியருளியபடியே, இலங்கை எய்தி - இலங்கையை அடைந்து, அறத்தினைத் தின்றபாவி ஆவி தின்று - அறத்தை அழித்த பாவியாகிய இராவணனது ஆவியைப் பருகி, அனையான் செல்வத்திறத்தினை இளவற்கு ஈந்து - அவனுடைய செல்வக்கூறுகளை அவன் தம்பியாகிய விபீடணனுக்குக் கொடுத்து, திரு இராமேசம் கண்டு - திருவிராமேச்சுரத்தை ஆக்கி, கறைப்படும் மிடற்றினானை அருச்சித்து - நஞ்சக்கறை பொருந்திய திருமிடற்றையுடைய சிவபெருமானை வழிபட்டு, கருணை வாங்கி - அவனருளைப் பெற்று. அறத்தை அடியொடுங் கெடுத்தவன் என்பார் 'அறத்தினைத் தின்ற பாவி' என்றார். 'அறத்தினைத் தின்றபாவி யாவிதின்று' என்பது மிக்க நயமுடைத்து. தின்னாதவற்றைத் தின்பனவாகக் கூறுதல், " வாரா மரபின வரக்கூ றுதலும்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்து 'அன்னவை யெல்லாம்' என்பதனால் முடியும். காணல் - உண்டாக்கல். (36) பற்றிய பழியி னீந்தி யிந்திரன் பழியைத் தீர்த்த வெற்றிகொள் விடையி னானை மீளவும் வந்து போற்றி அற்றிர ளனைய கோதைக் கற்பினுக் கரசி யோடுஞ் சுற்றிய சடையி ராமன் றொன்னக ரடைந்தா னிப்பால். (இ - ள்.) பற்றிய பழியின் நீந்தி - தன்னைப் பற்றித் தொடர்ந்த கொலைப் பாவத்தினின்றும் நீங்கி, இந்திரன் பழியைத் தீர்த்த வெற்றி கொள் விடையினானை - தேவேந்திரனது பழியினைப் போக்கிய வெற்றி பொருந்திய இடபவூர்தியையுடைய சோமசுந்தரக் கடவுளை, மீளவும் வந்து போற்றி - மீண்டும் வந்து துதித்து, அல்திரள் அனைய கோதைக் கற்பினுக்கு அரசியோடும் - இருளின் திரட்சியை ஒத்த கூந்தலையுடைய கற்புக்கிறைவியாகிய சானகியோடும், சுற்றிய சடை இராமன் - சுற்றிக் கட்டிய சடையினையுடைய இராமன், தொல்நகர் அடைந்தான் - தொன்மையுடைய தனது அயோத்தி நகரத்தை அடைந்தான்; இப்பால் - பின்பு. முனி மரபில் வந்து வேதம் வல்லனாய்ச் சிவ வழிபாட்டினை மேற்கொண்ட இராவணனைக் கொன்றமையின் இராமனைக் கொலபைபழி பற்றிய தென்க. இராமேச்சுரம் இராவணனைக் கொன்ற பழிதீர இராமன் பூசித்த தென்பதனைத் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல திருப்பாட்டுக்களிற் கூறியுள்ளார்கள்; அவற்றுள் முறையே ஒவ்வொன்று பின்வருவன: " தேவியை வல்விய தென்னிலங் கைத்தச மாமுகன் பூவிய லும்முடி பொன்று வித்தபழி போயற ஏவிய லுஞ்சிலை யண்ணல் செய்தவிரா மேச்சுரம் மேவிய சிந்தையி னார்கடம் மேல்வினை வீடுமே" " கோடிமா தவங்கள்செய்து குன்றினார் தம்மையெல்லாம் வீடவே சக்கரத்தா லெறிந்துபின் னன்புகொண்டு தேடிமால் செய்தகோயி றிருவிரா மேச்சுரத்தை நாடிவாழ் நெஞ்ச மேநீ நன்னெறி யாகு மன்றே." சீதையின் கற்பு மாண்பினைக் கம்பராமாயணம், திருவடி தொழுத படலத்தில், அனுமான் இராமனுக்குக் கூறுங் கூற்றுக்களால் உணரலாகும். (37) [கலிநிலைத்துறை] செங்கோ லனந்த குணமீனவன் றேயங் காப்பக் கொங்கோ டவிழ்தார்க் குலபூடணன் றன்னை யீன்று பொங்கோத ஞாலப் பொறைமற்றவன் பாலி றக்கி எங்கோ னருளாற் சிவமாநக ரேறி னானே. (இ - ள்.) செங்கோல் அனந்தகுண மீனவன் - செங்கோலையுடைய அனந்தகுண பாண்டியன், தேயம் காப்ப - நிலவுலகைப் பாதுகாப்பதற்கு, கொங்கோடு அவிழ்தார்க் குலபூடணன் தன்னை ஈன்று - மகரந்தத்தோடு மலர்ந்த மலர் மாலையையுடைய குலபூடணனைப் பெற்று, பொங்கு ஓதம் ஞாலப் பொறை - பொங்குகின்ற கடல் சூழ்ந்த நிலச் சுமையை, அவன்பால் இறக்கி - அக்குலபூடணனிடத்தில் இறக்கி, எங்கோன் அருளால் சிவமாநகர் ஏறினான் - எம்பெருமானாகிய சோம சுந்தரக்கடவுளின் திருவருளால் பெருமை பொருந்திய சிவபுரத்தை அடைந்தான். ஓதம் - கடல்; " ஓதமலி நஞ்சுண்ட வுடையானே" எனத் திருவாசகம் கூறுவது காண்க. மற்று : அசை. பொறையை இறக்கிச் சிவமாநகர் ஏறினான் என நயந்தோன்றக் கூறினார். (38) ஆகச்செய்யுள் - 1663. முப்பதாவது மெய்க்காட்டிட்ட படலம் [கொச்சகக்கலிப்பா] பாவமென வடிவெடுத்த படிற்றமணர் பழித்தழல்செய் தேவவரு மறப்பசுவை யேறுயர்த்தோன் விடைநந்திக் காவலனை விடுத்தழித்த கதையுரைத்து மட்டாலைச் சேவகன்மெய்க் காட்டிட்டு விளையாடுந் திறமுரைப்பாம். (இ - ள்.) பாவம் என வடிவு எடுத்த படிற்று அமணர் - பாவமே என்னும்படி வடிவந்தாங்கிய வஞ்சனையையுடைய சமணர்கள், பழித்தழல் செய்து ஏவவரும் - பழி வேள்வி செய்து (தோற்றுவித்து) ஏவ வந்த, மறப்பசுவை - கொலைத் தொழிலையுடைய பசுவினை, ஏறு உயர்த்தோன் - இடபக் கொடியுயர்த்திய சோமசுந்தரக் கடவுள், விடை நந்திக் காவலனை விடுத்து அழித்த கதை உரைத்தும் - இடப வுருவினையுடைய திரு நந்தியாகிய காவலனை ஏவி வதைத்தருளிய திருவிளையாடலைக் கூறினோம்; அட்டாலைச் சேவகன்- (இனி) அட்டாலைச் சேவகனாகிய அவ்விறைவன், மெய்க்காட்டிட்டு விளையாடும் திறம் உரைப்பாம் - மெய்க் காட்டிட்டு விளையாடின திருவிளையாடலைக் கூறுவோம். பாவம் வடிவெடுத்தாலொத்த என மாறியுரைத்தலுமாம். தோற்றவித்து என்னுஞ் சொல் விரிக்க. காவலன் - காத்தல் வல்லோன்; தலைவன். உரைத்தும் : இறந்தகால முற்று. இறைவன் அட்டாலை மண்டபத்திற் சேவகனாய் வந்தமையை யானையெய்த படலத்திற் காண்க. அட்டாலை - மதிலின் மேலே பரண் போலுள்ள மண்டபம். மெய்க்காட்டிட்டு - திருமேனியைக் காட்டுதலைச் செய்து. (1) வெவ்வியமும் மதயானை விறற்குலபூ டணன்சமணர் அவ்வியவஞ் சனைகடந்த வனந்தகுணச் செழியன்பாற் செவ்வியசெங் கோல்வாங்கித் திகிரிதிசை செலவுருட்டி வவ்வியவெங் கலிதுரந்து மண்காத்து வருகின்றான். (இ - ள்.) வெவ்விய முமமத யானை விறல் குல பூடணன்- கொடிய மும்மதங்களையுடைய யானையையுடைய வெற்றி பொருந்திய குலபூடண வழுதி, சமணர் அவ்விய வஞ்சனை கடந்த அனந்தகுணச் செழியன் பால் - சமணர்களது தீய வஞ்சனையைக் கடந்த அனந்தகுண பாண்டியனிடத்து, செவ்விய செங்கோல் வாங்கி - கோடாத செங்கோலைப் பெற்று, திகிரி திசை செல உருட்டி - ஆணையாகிய நேமியைத் திசை முழுதுஞ் செல்லு மாறு உருட்டி, வவ்விய வெங்கலி துரந்து - உலகினைப் பற்றா நின்ற கொடிய கலியினை ஓட்டி, மண்காத்து வருகின்றான் - புவியினைப் பாதுகாத்து வருகின்றான். அவ்வியம் - தீமை; அழுக்காறுமாம். செவ்விய செங்கோல் - கோடாத செங்கோல்; செங்கோல் என்பதனைப் பெயர் மாத்திரையாகக் கொள்ளலுமாம். வவ்விய என்பதனை நிகழ் காலமாகவுரைக்க; வெம்மை பொருந்திய கலியென்றுமாம். (2) சவுந்தரசா மந்தனெனத் தானைகா வலனொருவன் சிவந்தசடை முடியண்ண லடியவரே சிவமாகக் கவர்ந்தொழுகி யருச்சிக்குங் கடப்பாட்டி னெறிநின்றோன் உவந்தரசற் கிருமைக்குந் துணையாகி யொழுகுநாள். (இ - ள்.) சவுந்தர சாமந்தன் எனதானை காவலன் ஒருவன் - சுந்தர சாமந்தன் என்று சேனாபதி ஒருவன் உள்ளான்; சிவந்த சடைமுடி அண்ணல் அடியவரே - சிவந்த சடாமுடியையுடைய சிவபெருமான் அடியாரையே, சிவமாகக் கவர்ந்து அருச்சித்து ஒழுகும் - அச் சிவபெருமானாக மனத்திற் கொண்டு வழிபட்டொழுகும், கடப்பாட்டின் நெறி நின்றோன் - கடமை நெறியில் நின்றவனாகிய அவன், உவந்து அரசற்கு இருமைக்கும் துணை ஆகி ஒழுகுநாள் - விரும்பி மன்னனுக்கு இம்மைக்கும் மறுமைக்குந் துணையாக நின்று ஒழுகு நாளில். சாமந்தன் - படைத் தலைவன், சவுந்தர சாமந்தன் : சிறப்புப் பெயர். ஒருவன் உளன் எனவும், நின்றோனாகிய அவன் எனவும் விரிக்க. கவர்ந்து - உளங் கொண்டு. அருச்சித்து ஒழுகும் என மாறுக. உவந்து துணையாகி என இயையும். (3) வல்வேடர்க் கதிபதியாய் வருசேதி ராயனெனும் வில்வேட னொருவனவன் விறல்வலியான் மேலிட்டுப் பல்வேறு பரிமான்றேர்ப் பஞ்சவன்மேற் படையெடுத்துச் செல்வேனென் றுறவலித்தான் றென்னர்பிரா னஃதறிந்தான். (இ - ள்.) வல் வேடர்க்கு அதி பதியாய் வரு - வலிய வேடர்களுக்குத் தலைவனாயிருந்து வருகின்ற, சேதிராயன் எனும் வில் வேடன் ஒருவன் - சேதிராயன் என்னும் வில்லையுடைய வேடன் ஒருவன் உளன்; அவன் விறல் வலியால் மேலிட்டு - அவன் வெற்றியின் வலியினால் மேம்பட்டு, பல் வேறு பரிமான் தேர்ப் பஞ்சவன் மேல் - பல வேறு வகைப்பட்ட குதிரைகளையும் தேர்களையுமுடைய பாண்டியன் மேல், படை எடுத்துச் செல்வேன் என்று உற வலித்தான் - படையெடுத்துப் போருக்குச் செல்லுவேன் என்று உறுதியாகக் கருதினான்; தென்னர் பிரான் அஃது அறிந்தான்- பாண்டியர் தலைவனாகிய குலபூடணன் அதனை அறிந்தான். சேதிராயன் - சேதி நாட்டுக்கு அரையன். சேதிநாடு - திருமுனைப் பாடிநாடு : " சேதிநன் னாட்டுநீடு திருக்கோவ லூரின் மன்னி" என்பது பெரியபுராணம். தமிழ் நாட்டு மூவேந்தரல்லாத குறுநில மன்னர்களை வேடர், காடவர் முதலிய பெயர்களால் ஒரு காலத்தில் இழித்துரைத்து வந்தனர் எனத் தெரிகிறது. பரிமான்; இருபெயரொட்டு; விரைந்த செலவினையுடைய குதிரையுமாம். படையெடுத்தல் - சேனையுடன் மேற்சேறல். உற - மிக. அறிந்தான் என்பதனை எச்சமாக்கலுமாம். (4) தன்னதுதா ணிழனின்ற சாமந்தன் றனைப்பார்த்தெம் பொன்னறைதாழ் திறந்துநிதி முகந்தளித்துப் புதிதாக இன்னமுநீ சிலசேனை யெடுத்தெழுதிக் கொள்கென்றான் அன்னதுகேட் டீசனடிக் கன்புளா னென்செய்வான். (இ - ள்.) தன்னது தாள் நிழல் நின்ற சாமந்தன் தனைப் பார்த்து - தனது அடி நிழலில் நின்ற சாமந்தனை நோக்கி, எம் பொன்அறை தாழ் திறந்து நிதிமுகந்து அளித்து - எமது நிதி அறையின் தாழைத் திறந்து பொருளை முகந்து கொடுத்து, புதிது ஆக இன்னமும் நீ சில சேனை எடுத்து எழுதிக் கொள்க என்றான் - புதிதாக இன்னுஞ் சில சேனைகளைச் சேர்த்துப் பதிவு செய்து கொள்வாயாக என்றான்; அன்னது கேட்டு ஈசன் அடிக்கு அன்பு உளான் என் செய்வான் - அதனைக் கேட்டு இறைவன் திருவடிக்கு அன்புள்ளவனாகிய சுந்தரசாமந்தன் என்ன செய்கின்றானென்னில். தன்னது, னகரம் விரித்தல். அடங்கி நின்றமையைத் தாணிழல் நின்ற என்றார். தன் : சாரியை, புதிது - புதுமை; பண்பு மாத்திரையாக நின்றது. எடுத்து - தேர்ந்து திரட்டி, எழுதுதல் - உரிமையைப் பதிவு செய்தல். கொள் கென்றான் : அகரந் தொக்கது. (5) தென்னவர்கோன் பணித்தபணி பின்றள்ளச் சிந்தையிலன் புன்னவர னருள்வந்து முன்னீர்ப்ப வொல்லைபோய்ப் பொன்னறைதாழ் திறந்தறத்தா றீட்டியிடும் பொற்குவையுட் டன்னதுளத் தவாவமையத் தக்கநிதி கைக்கவரா. (இ - ள்.) தென்னவர்கோன் பணித்த பணி பின் தள்ள - பாண்டியர் தலைவனாகிய குலபூடணன் இட்ட பணி பின்னே நின்று தள்ளவும், சிந்தையில் அன்பு உன்ன அரன் அருள் வந்து முன் ஈர்ப்ப - மனத்தில் அன்புடன் நினைத்த வளவிலே சிவபெருமான் திருவருள் வந்து முன்னே இழுக்கவும், ஒல்லைபோய் - விரைந்து சென்று, பொன் அறை தாழ் திறந்து - கருவூலத்தின் தாழைத் திறந்து, அறத்து ஆறு ஈட்டியிடும் பொன் குவையுள் - அறநெறியால் ஈட்டி வைத்த நிதிக் குவியலுள், தன்னது உளத்து அவா அமையத்தக்க - தன்னது உள்ளத்து விருப்பம் அடங்கத்தக்க, நிதிகைக் கவரா - பொருளைக் கைக்கொண்டு. பணி பின்றள்ளவும் அருள் முன்னீர்ப்பவும் ஒல்லைபோய் என்க. அவாவிற்குப் பொருந்த மிகுதியான நிதியைக் கவர்ந்து என்றுமாம். (6) எண்ணிறந்த களிப்பினொடுந் திருக்கோயி லிடத்தணைந்து கண்ணிறைந்த பொன்முளரிக் கயந்தலைநீர் படிந்துதன துண்ணிறைந்த மெய்யன்பி னொளியுருவாய் முளைத்தெழுந்த பண்ணிறைந்த மறைப்பொருளைப் பணிந்திறைஞ்சி யிதுவேண்டும். (இ - ள்.) எண் இறந்த களிப்பினொடும் - அளவிறந்த மகிழ்ச்சியோடும், திருக்கோயில் இடத்து அணைந்து - திருக்கோயிலுட் சென்று, கள் நிறைந்த பொன் முளரிக் கயந்தலை நீர் படிந்து- தேன் நிறைந்த பொற்றாமரை வாவியில் நீராடி, தனது உள் நிறைந்த மெய் அன்பின் - தனது உள்ளத்தின்கண் நிறைந்த உண்மையன்பினாலே, ஒளி உருவாய் முளைத்து எழுந்த - ஒளி வடிவாய்த் தோன்றியருளிய, பண் நிறைந்த மறைப்பொருளைப் பணிந்து இறைஞ்சி - இசை நிறைந்த வேதப் பொருளாகிய சோமசுந்தரக் கடவுளைக் கும்பிட்டு வணங்கி, இது வேண்டும் - இதனை வேண்டுவானாயினன். கண் நிறைந்த எனப் பிரித்துக் கண்ணுக்கு நிறைந்த பொலிவினையுடைய முளரி என்றுரைத்தலுமாம். கயந்தலை : மெலிந்து நின்றது. அன்பினது ஒளியுருவாய் முளைத்தெழுந்த பொருளை என்றுரைப்பாருமுளர். பணிந்து இறைஞ்சி என்பன வணங்கியென்னும் ஒரு பொருள் குறித்தனவுமாம். (7) பண்ணியனான் மறைவிரித்த பரமேட்டி யெங்கோமான் எண்ணியகா ரியமுடிப்பா யிவையுனக்கு முன்னடிக்கீழ் அண்ணியமெய் யடியவர்க்கு மாதக்க வெனவிரந்தப் புண்ணியமா நிதிமுழுது மவ்வழியே புலப்படுப்பான். (இ - ள்.) பண் இயல் நான்மறை விரித்த பரமேட்டி - இசை அமைந்த நான்கு மறைகளையும் வெளிப்படுத்த பரமேட்டியே, எம்கோமான் - எம்பெருமானே, எண்ணிய காரியம் முடிப்பாய் - அடியார் கருதிய கருமங்களை முடித்தருளுபவனே, இவை - இப்பொருள்கள், உனக்கும் - நினக்கும், உன் அடிக்கீழ் அண்ணிய மெய் அடியவர்க்கும் ஆதக்க - நின் திருவடிக்கீழ்ப் பொருந்திய உண்மை யடியார்க்கும் ஆகக்கடவன; என இரந்து - என்று வேண்டி, அப்புண்ணியமா நிதி முழுதும் அவ்வழியே புலப்படுப்பான் - அந்த அறத்தாற்றின் வந்த பெரிய நிதி முழுதையும் அந்நெறியிலேயே செலுத்துவானாயினன். பரமேட்டி - மேலோன்; எங்கோமான் எண்ணிய காரிய முடிப்பாய் என்பதற்கு எம் அரசன் நினைத்த காரியத்தை முற்றுவிப்பாய் என்றுரைத்தலும் பொருந்தும். ஆதக்க - ஆகத் தக்கன; முதனிலை வினையெச்சப் பொருட்டாய் நின்றது; "செய் தக்க" என்புழிப்போல. செலவிடுதலைப் புலப்படுத்தல் என்றார், அதன் பயன் நின்று விளங்குதலின். (8) அண்டமுக டுரிஞ்சிநிமிர் கோபுரமு மாயிரக்கான் மண்டபமுங் கண்டிகையும் வயிரமணிக் கோளகையுங் குண்டலமுந் தண்டரளக் குடைநிரையுங் கொடிநிரையுங் கண்டனன்முன் னவனருளாற் பிறப்பேழுங் கரைகண்டோன். (இ - ள்.) அண்ட முகடு உரிஞ்சி நிமிர் கோபுரமும் - வானத்தின் உச்சியைத் தடவி உயர்ந்த கோபுரமும், ஆயிரக்கால் மண்டபமும் - ஆயிரம் தூண்களையுடைய மண்டபமும், கண்டிகையும் வயிர மணிக் கோளகையும் - கண்டிகையும் வயிரமணியாற் செய்த தோளணியும், குண்டலமும் - குண்டலங்களும், தண் தரளக்குடை நிரையும் - தண்ணிய முத்துக்குடை வரிசைகளும், கொடி நிரையும் - கொடிவரிசைகளும் ஆகிய இவற்றை, முன்னவன் அருளால் ஏழு பிறப்பும் கரை கண்டோன் கண்டனன் - முதல்வனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவருளால் எழுவகைப் பிறப்பென்னுங் கடலின் கரையைக் கண்டவனாகிய சாமந்தன் செய் தமைத்தான். கோளகை - யானைக் கொம்பின் முனையிற் செறிக்கும் குமிழ்; ஈண்டுத் தோள்வலயத்தைக் குறிக்கின்றது போலும்; முன்னவனருளாற் கண்டனன் என்று கூட்டியுரைத்தலும் பொருந்தும். கண்டனன் அதனாற் கரைகண்டோனாயினன் என்னுங் கருத்துங் கொள்க. (9) வானாடர்க் கவியுணவின் வகைமுந்நூன் மன்றல்முதல் நானாவாஞ் சிறுவேள்வி நான்மறையோர்க் கறுசுவையின் ஆனாத பேருண்டி துறவடைந்தோர்க் கருத்துபலி தானாதி பலவேறு தருமநனி தழைவித்தான். (இ - ள்.) வானாடர்க்கு அவி உணவின் வகை - தேவர்களுக்கு ஊட்டும் அவியாகிய உணவின் வகைகளும், முந்நூல் மன்றல் முதல் நானாவாம் சிறு வேள்வி - பூணூல் மங்கலம் முதலிய பல வகையான சிறிய வேள்விகளும், நான்மறையோர்க்கு அறுசுவையின் ஆனாத பேர் உண்டி - நான்கு வேதங்களையுமுணர்ந்த அந்தணர்க்கு அறுசுவையின் நீங்காத பேருண்டிகளும், துறவு அடைந்தோர்க்கு அருத்து பலி - துறவிகளுக்கு ஊட்டுந் திருவமுதும், ஆதி - முதலாகிய, பல வேறு தருமம் நனி தழைவித்தான் - பல வேறு வகையான தருமங்களை மிகவும் பெருகச் செய்தனன். நானா - பல. தான் : அசை. தான ஆதி எனப் பிரித்து, பல்வகைத் தானம் முதலிய என்றுரைத்தலுமாம். (10) எவரேனு முருத்திரசா தனங்கண்டா லெதிர்வணங்கி அவரேநம் பிறப்பறுக்க வடிவெடுத்த வரனென்று கவராத வன்புள்ளங் கசிந்தொழுக வருச்சித்துச் சுவையாறி னமுதருத்தி யெஞ்சியவின் சுவைதெரிவான். (இ - ள்.) எவரேனும் - யாவராயினும், உருத்திர சாதனம் கண்டால் எதிர் வணங்கி - சிவசாதனந் தாங்கினவரைக் காணின் எதிர் சென்று வணங்கி, அவரே நம் பிறப்பு அறுக்க வடிவு எடுத்த அரன் என்று - அவரே நமது பிறப்பைப் போக்கத் திருவுருவ மெடுத்த சிவ பெருமானென்று, கவராத அன்பு உள்ளம் கசிந்து ஒழுக அருச்சித்து - பிளவுபடாத அன்பால் உள்ளம் நெக்குருக வழிபட்டு, சுவை ஆறின் அமுது அருத்தி - அறுசுவையோடு கூடிய திருவமுதை உண்பித்து, எஞ்சிய இன்சுவை தெரிவான் - (அவர் உண்டு) மிஞ்சியவற்றை இனிய சுவை பார்ப்பான். எவரேனும் - உருப்பொலாதவர் இழிகுலத்தவர் முதலானோராயினும். உருத்திர சாதனம் - திருநீறு உருத்திராக்கம். கவராத - ஐயுறாத. எஞ்சிய - மிச்சிலாயுள்ளன : வினையாலணையும் பெயர். சுவை தெரிதல் உண்டலாகிய காரியத்தை உணர்த்திற்று. " எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி உவராதே யவரவரைக் கண்ட போதே யுகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவ ரவர்தேவ ரென்று சொல்லி யிரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே" என்னும் திருத்தாண்டகம் இங்கே சிந்திக்கற்பாலது. (11) இன்றைக்கா யிரநாளைக் கிருமடங்கு வருநாட்கும் அன்றைக்கன் றிருமடங்கா வரசனது1 பொருளெல்லாங் கொன்றைச்செஞ் சடையார்க்கு மடியார்க்குங் கொடுப்பதனைத் தென்றற்கோன் செவிமடுத்தான் சேனைக்கோ னிதுசெய்வான். (இ - ள்.) இன்றைக்கு ஆயிரம் நாளைக்கு இருமடங்கு - இன்றைக்கு ஆயிரம் பொன்னும் நாளைக்கு இரட்டிப்பும், வரு நாட்கும் - மேலே வருகின்ற நாட்களுக்கும், அன்றைக்கு அன்று இரு மடங்கா - அன்றைக் கன்று இரட்டிப்பும் ஆக, அரசனது பொருள் எல்லாம் - மன்னனுடைய பொருள் முழுதையும், கொன்றைச் செஞ்சடையார்க்கும் அடியார்க்கும் கொடுப்பதனை- கொன்றை மாலையையணிந்த சிவந்த சடையையுடைய சிவபெருமானுக்கும் அவனடியார்க்குங் கொடுக்குஞ் செய்தியை, தென்றல் கோன் செவிமடுத்தான் - தென்றல் தோன்றும் பொதியின் மலைக்குத் தலைவனாகிய குலபூடணன் கேள்வியுற்றான்; சேனைக்கோன் இது செய்வான் - சேனையின் தலைவனாகிய சுந்தர சாமந்தன் இதனைச் செய்வானாயினன். இன்றைக்கு நாளைக்கு என்பவற்றில் நான்கனுருபு ஏழாவதன் பொருளில் வந்தது. நாளை - அடுத்து வருநாள்; "நாளைச் செய்குவமஅறமெனில்" எனச் சிலப்பதிகாரத்து வருதல் காண்க. அன்றைக்கு அன்று - அற்றையினும் மற்றைநாள். ஆக வென்பது ஈறு தொக்கது. கொடுப்பது : தொழிற்பெயர். தென்றல் அதற்கிடமாகிய வெற்பினையுணர்த்திற்று. (12) [அறுசீரடியாசிரியவிருத்தம்] காவல னவையத் தெய்திக் காரியஞ் செய்வா ரோடு மேவினன் பிறநாட் டுள்ள வீரர்க்கு வெறுக்கை போக்கிச் சேவகம் பதிய வோலை செலவிடுத் தழைப்பான் போலப் பாவகஞ் செய்து தீட்டிப் பட்டிமை யோலை யுய்ப்பான். (இ - ள்.) காவலன் அவையத்து எய்திக் காரியம் செய்வாரோடு மேவினன் - அரசன் அவைக்குச் சென்று வினையாளரோடு கலந்து, பிற நாட்டு உள்ள வீரர்க்கு வெறுக்கை போக்கி - வேறு நாட்டிலுள்ள வீரர்களுக்குப் பொருளை அனுப்பி, சேவகம் பதிய- போர்ச் செவகத்திற் பதிவு செய்ய, ஓலை செல விடுத்து அழைப்பான் போல - திருமுகம் போக்கி அழைப்பவன் போல, பாவகம் செய்து - பாவனை காட்டி, பட்டிமை ஓலை தீட்டி உய்ப்பான் - பொய்யோலை எழுதி விடுப்பவனாய். காரியஞ் செய்வார் - வினை செய்வார். போக்கி விடுத்து அழைப்பான் போல வென்க. சேவகம், பதிதல் என்பன பொதுச் சொற்களாயினும் படையின் ஊழியத்தையும் அதிற் பதிவு செய்தலையும் சிறப்பாகக் குறிப்பனவாகும். பட்டிமை - படிறு. மேவினன், உய்ப்பான் என்பன முற்றெச்சம். (13) எழுதுக தெலுங்கர்க் கோலை யெழுதுக கலிங்கர்க் கோலை எழுதுக விராடர்க் கோலை யெழுதுக மராடர்க் கோலை எழுதுக கொங்கர்க் கோலை யெழுதுக வங்கர்க் கோலை எழுதுக துருக்கர்க் கோலை யென்றுபொய் யோலை விட்டான். (இ - ள்.) தெலுங்கர்க்கு ஓலை எழுதுக - தெலுங்க நாட்டினர்க்கு ஓலை எழுதுக; கலிங்கர்க்கு ஓலை எழுதுக - கலிங்க நாட்டினர்க்கு ஓலை எழுதுக; விராடர்க்கு ஓலை எழுதுக - விராட நாட்டினர்க்கு ஓலை எழுதுக; மராடர்க்கு ஓலை எழுதுக - மராட நாட்டினர்க்கு ஓலை எழுதுக; கொங்கர்க்கு ஓலை எழுதுக - கொங்க நாட்டினர்க்கு ஓலை எழுதுக; வங்கர்க்கு ஓலை எழுதுக - வங்க நாட்டினர்க்கு ஓலை எழுதுக; துருக்கர்க்கு ஓலை எழுதுக - துருக்க நாட்டினர்க்கு ஓலை எழுதுக; என்று பொய் ஓலை விட்டான் - என்று கூறிப் பொய்யோலை போக்கினான். என்று - எனத் திருமுகம் வரைவானுக்குக் கூறி, அரசன் அறியும்படி இங்ஙனம் கூறியதன்றி, ஓலை யெழுவித்ததுமிலன், அவ்வந் நாடுகட்கு அனுப்பியது மிலன் என்பார் 'என்று பொய்யோலை விட்டான்' என்றார். (14) எங்குமிப் படியே யோலை செலவிடுத் திருப்பவாறு திங்களி னளவு மந்தச் சேவகர் வரவு காணா தங்கதிர் வேலோன் சேனைக் கரசனை யழைத்து நாளை வெங்கதிர் படுமுன் சேனை யாவையும் விளித்தி யென்றான். (இ - ள்.) எங்கும் இப்படியே ஓலை செல விடுத்து இருப்ப- எவ்விடத்தும் இங்ஙனமே பொய்யோலை போக விடுத்து இருக்க, ஆறு திங்களின் அளவும் அந்தச் சேவகர் வரவு காணாது - ஆறு மாதங்கள் வரையும் அந்த வீரர்கள் வரவினைக் காணாமல், அம் கதிர் வேலோன் - அழகிய ஒளியினையுடைய வேற்படையேந்திய குலபூடண பாண்டியன், சேனைக்கு அரசனை அழைத்து - தானைக் காவலனாகிய சுந்தர சாமந்தனை அழைத்து, நாளை வெங்கதிர் படுமுன் - நாளைச் சூரியன் மறையு முன்னே, சேனை யாவையும் விளித்தி என்றான் - படை வீரர்களனைவரையும் அழைப்பாயாக என்று கூறினான். படுதல் - மறைதல். விளித்தி : ஏவலொருமை முற்று. த் : எழுத்துப் பேறு. (15) என்றமன் னவனுக் கேற்கச் சாமந்த னிசைந்து வெள்ளி மன்றவ னடிக்கீழ் வீழ்ந்து வள்ளலே யரச னீந்த குன்றுறழ் நிதிய மெல்லாங் கொண்டெனைப் பணிகொண்டாயே வன்றிறற் சேனை யீட்டும் வண்ணம்யா தென்ன நின்றான். (இ - ள்.) என்ற மன்னவனுக்கு ஏற்கச் சாமந்தன் இசைந்து- என்று கூறிய வேந்தனுக்குப் பொருந்தச் சாமந்தன் உடன்பட்டு, வெள்ளி மன்றவன் அடிக்கீழ் வீழ்ந்து - வெள்ளியம்பலவாணன் திருவடியின் கீழே விழுந்து வணங்கி, வள்ளலே - என் வள்ளால், அரசன் ஈந்த குன்று உறழ் நிதியம் எல்லாம் கொண்டு - மன்னன் அளித்த மலைபோலும் பொருள் முழுதையும் ஏற்றுக் கொண்டு, எனைப் பணி கொண்டாயே - என்னை அடிமை கொண்டனையே, வன் திறல் சேனை ஈட்டும் வண்ணம் யாது என்ன நின்றான் - மிக்க வலியுடைய சேனைகளைத் திரட்டும் வகை யாது என்று குறையிரந்து நின்றான். வள்ளல் - வரையா தளிப்போன். தான் விரும்பியதனை அளிக்க வேண்டுமென்னுங் கருத்தால் 'வள்ளலே' என்றான். மலைபோலும் நிதியமெல்லாம் கொள்ளை கொண்ட வள்ளலே என நகை தோன்றுமாறுங் கொள்க. வன்றிறல் : ஒரு பொருளிருசொல். (16) அடியவர் குறைவு தீர்த்தாண் டருள்வதே விரதம் பூண்ட கொடியணி மாடக் கூடற் கோமகன் காமற் காய்ந்த பொடியணி புராணப் புத்தேட் புண்ணிய னருளி னாலே இடியதிர் விசும்பு கீறி யெழுந்ததோர் தெய்வ வாக்கு. (இ - ள்.) அடியவர் குறைவு தீர்த்து ஆண்டருள்வதே விரதம் பூண்ட - அடியாரின் குறையினைப் போக்கி ஆண்டருள்வதையே விரதமாகக் கொண்ட, கொடி அணி மாடக் கூடல் கோமகன் - கொடிகள் கட்டிய மாடங்களையுடைய கூடலம்பதிக்கு நாயகனும், காமன் காய்ந்த பொடி அணி புராணப் புத்தேள் புண்ணியன் - மன்மதனை எரித்த திருநீறு தரித்த முது தெய்வமாகிய அறவுருவனும் ஆகிய சோமசுந்தரக் கடவுளின், அருளினால் - திருவருளாலே, இடி அதிர் விசும்பு கீறி ஓர் தெய்வ வாக்கு எழுந்தது - இடி முழங்கும் வானைக் கிழித்து ஒரு தெய்வ வாக்கு எழுந்தது. விரதமாகப் பூண்ட என விரிக்க. அடியார்களின் அல்லல் தீர்த்து ஆளுவதையன்றி இறைவனுக்கு வேறு கடப்பாடில்லை என்றவாறாயிற்று. காய்ந்த புண்ணியன், பொடியணிந்த புண்ணியன் எனத் தனித் தனி சென்றியையும். (17) சூழ்ந்தெழு சேனை யோடுந் தோற்றுது நாளை நீயும் வீழ்ந்தர சவையத் தெய்தி மேவுதி யென்ன விண்ணம் போழ்ந்தெழு மாற்றங் கேட்டிப் பொருநரே றுவகை வெள்ளத் தாழ்ந்தனன் முந்நீர் வெள்ளத் தலர்கதி ரவனு மாழ்ந்தான். (இ - ள்.) சூழ்ந்து எழு சேனையோடும் தோற்றுதும் நாளை- சூழ்ந்து எழுகின்ற தானை வீரர்களோடு நாமும் நாளை வருவோம்; நீயும் வீழ்ந்த அரசு அவையத்து எய்தி மேவுதி என்ன - நீயும் (வீரர் வரவை) விரும்பிய அரசனது அவையின்கட் சென்று இருப்பாயாக என்று, விண்ணம் போழ்ந்து எழு மாற்றம் கேட்டு- வானைப் பிளந்தெழுந்த வார்த்தையைக் கேட்டு, பொருநர் ஏறு உவகை வெள்ளத்து ஆழ்ந்தனன் - வீரருள் ஆண்சிங்கம் போன்ற சுந்தரசாமந்தன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினான்; அலர் கதிரவனும் முந்நீர் வெள்ளத்து ஆழ்ந்தான் - விரிந்த கிரணத் தையுடைய சூரியனும் கடல் வெள்ளத்தில் மூழ்கினான். வீழ்ந்த என்னும் பெயரெச்சத்து அகரந் தொக்கது; விரும்பியெய்தி என்றுமாம். விண்ணம், அம் : சாரியை. பொருநர் - வீரர். முந்நீராகிய வெள்ளம் என்க. (18) மீனவன் காண மேரு வில்லிதன் றமரை வன்கண் மானவேன் மறவ ராக்கி வாம்பரி வீர னாகத் தானுமோர் கூத்துக் கோலஞ் சமைத்துவந் தாட விட்ட நீனிற வெழினி போலக் காரிரு ணிவந்த தெங்கும். (இ - ள்.) மீனவன் காண - பாண்டியன் காணுமாறு, மேருவில்லி- மேருவை வில்லாகக் கொண்ட சோமசுந்தரக் கடவுள், தன் தமரை- தன்னுடைய கணங்களை, வன்கண் மான வேல் மறவர் ஆக்கி- அஞ்சாமையையுடைய மான மிக்க வேலையேந்திய வீரர்களாகச் செய்து, தானும் ஓர் வாம் பரி வீரன் ஆகக் கோலம் சமைந்து வந்து - தானும் ஒரு தாவுகின்ற குதிரை வீரனாகக் கோலம் பூண்டு வந்து, கூத்து ஆட இட்ட - திருக்கூத்து ஆடுதற்கு இடப்பட்ட, நீல் நிற எழினி போலக் கார் இருள் எங்கும் நிவந்தது - நீல நிறத்தையுடைய திரை போலக் கரிய இருளானது எங்கும் மிக்கது. தமர் - சிவகணங்கள். ஆட - நடிக்க, திருவிளையாடல் செய்ய. நீலம் என்பது கடைக்குறை யாயிற்று. இது தற்குறிப்பேற்றவணி. (19) புண்ணிய மனையிற் போகிப் புலர்வதெப் போழ்தென் றெண்ணி அண்ணல்சா மந்தன் றுஞ்சா னடிக்கடி யெழுந்து வானத் தெண்ணிறை மீன நோக்கி நாழிகை யெண்ணி யெண்ணிக் கண்ணுத லெழுச்சி காண்பா னளந்தனன் கங்கு லெல்லாம். (இ - ள்.) அண்ணல் சாமந்தன் - பெருமையுடையனாகிய சுந்தரசாமந்தன், புண்ணிய மனையில் போகி - அறம் நிலைபெற்ற தன் இல்லிற் சென்று, புலர்வது எப்போழ்து என்று எண்ணி - விடிவது எப்போது என்று கருதி, துஞ்சான் - தூங்காமல், அடிக்கடி எழுந்து - அடிக்கடி எழுந்தெழுந்து, வானத்து எண் நிறை மீனம் நோக்கி - வானின்கண் உள்ள எண் மிக்க மீன்களை நோக்கி, நாழிகை எண்ணி எண்ணி - நாழிகையை எண்ணி யெண்ணி, கண்ணுதல் எழுச்சி காண்பான் - சோமசுந்தரக் கடவுளின் வருகையைக் காணுதற்கு, கங்குல் எல்லாம் அளந்தனன் - இரவு முழுதையும் அளந்தனன். அண்ணல் சாமந்தன், உயர்திணைப் பெயராகலின் வலி வர இயல்பாயிற்று. மீனம் - நாண் மீன்கள். இருபத்தேழு நாண்மீன்களில் உச்சியில் வருவதனைக் கொண்டு இரவு நாழிகை கணிக்கப்படும். எழுச்சி - எழுந்தருளுகை. இரவில் சென்ற நாழிகை இத்துணை, நின்ற நாழிகை இத்துணை என்று பன்முறையும் எண்ணினமையின் 'கங்குலெல்லாம் அளந்தனன்' என்றார். துஞ்சான் : முற்றெச்சம். காண்பான் : வினையெச்சம். (20) தெருட்டரு மறைக டேறாச் சிவபரஞ் சுடரோ ரன்பன்1 பொருட்டொரு வடிவங் கொண்டு புரவிமேற் கொண்டு போதும் அருட்படை யெழுச்சி காண்பான் போலவார் கலியின் மூழ்கி இருட்டுகள் கழுவித் தூய விரவிவந் துதயஞ் செய்தான். (இ - ள்.) தெருள் தரு மறைகள் தேறாச் சிவபரஞ்சுடர் - அறிவை விளக்குகின்ற மறைகளுந் தெளியாத சிவபரஞ்சோதி, ஓர் அன்பன் பொருட்டு ஒரு வடிவம் கொண்டு - ஓர் அன்பன் காரணமாக ஒரு திருவுருவங் கொண்டு, புரவிமேற் கொண்டு போதும் - குதிரை மேற்கொண்டு வருகின்ற, அருள் படை எழுச்சி காண்பான் போல - அருட்படையெழுச்சியைக் காண வந்தவன் போல, ஆர் கலியில் மூழ்கி - கடலில் முழுகி, இருள் துகள் கழுவி - இருளாகிய அழுக்கினைப் போக்கி, தூய இரவி வந்து உதயம் செய்தான் - தூயனாகிய பரிதி வந்து தோன்றினான். தெருள் - தெளிந்த அறிவு. தெருட்டு எனப் பிரித்து, உயிர்கட்கு விதி விலக்குகளைத் தெளிவிக்கின்ற என்றுரைத்தலுமாம். அருளினாலாகிய படையெழுச்சி என்க. படையெழுச்சி - படையுடன் புறப்படுதல். பெரியாரைக் காண வருவார் நீராடித் தூயவுடம்புடன் வருவராகலின் இரவியும் அங்ஙனம் வந்தான் என்றார். இதுவும் தற்குறிப் பேற்றவணி. (21) பொருநரே றனையா னேர்ந்து போந்துநான் மாடக் கூடற் கருணைநா யகனைத் தாழ்ந்து கைதொழு திரந்து வேண்டிப் பரவிமீண் டொளிவெண் டிங்கட் பன்மணிக் குடைக்கீ ழேகிக் குருமதி மருமான் கோயிற் குறுகினான் குறுகு மெல்லை. (இ - ள்.) பொருநர் ஏறு அனையான் ஏர்ந்து போந்து - வீரருள் ஆண் சிங்கம் போன்ற சுந்தர சாமந்தன் எழுந்து சென்று, நான்மாடக் கூடல் கருணை நாயகனைத் தாழ்ந்து கைதொழுது - நான்மாடக் கூடலில் வீற்றிருக்கும் அருட்கோமானாகிய சோமசுந்தரக் கடவுளைப் பணிந்து கைகூப்பி, இரந்து வேண்டிப் பரவி மீண்டு - குறையிரந்து வேண்டித் துதித்து மீண்டு, ஒளிவெண் திங்கள் பன்மணிக் குடைக் கீழ் ஏகி - ஒளி பொருந்திய வெள்ளிய சந்திரனை ஒத்த முத்துக் குடையின் கீழ்ச் சென்று, குருமதி மருமான் கோயில் குறுகினான் - நிறம் பொருந்திய சந்திரன் மரபினனாகிய பாண்டியன் மாளிகையை அடைந்தான், குறுகும் எல்லை - அங்ஙனம் அடையும்போது. நேர்ந்து எனப் பிரித்து, ஞாயிற்றின் உதயத்தை எதிர்த்து என்றும், செய்கடன் முற்றி என்றும், திருக்கோயிலை நோக்கி என்றும் உரைத்தலுமாம். பன்மணி - பலவாகிய முத்து; விலையேறிய முத்துமாம். திங்கட்குடை என வியையும். குரு - நிறம். மருமான்- வழித் தோன்றல். (22) கரைமதி யெயிற்றுச் சங்கு கன்னன்முன் னான வென்றிப் பிரதம கணமுங் குண்டப் பெருவயிற் றொருவ னாதி வரைபுரை குறுத்தாட்1 பூத மறவருங் குழுமி வீக்கு குரைகழல் வலிய நோன்றாட் கோளுடை வயவ ராகி. (இ - ள்.) கரைமதி எயிற்றுச் சங்கு கன்னன் முன்னான வென்றிப் பிரமத கணமும் - தேய்ந்த மதி போன்ற பற்களையுடைய சங்கு கன்னன் முதலிய வெற்றியையுடைய சிவகணங்களும், குண்டப் பெரு வயிற்று ஒருவன் ஆதி - ஆழ்ந்த பெரு வயிற்றினையுடைய குண்டோதரன் முதலிய, வரை புரை குறுதாள் பூதமறவரும் குழுமி - மலையை ஒத்த குறிய தாளையுடைய பூத வீரருங்கூடி, வீக்கு குரை கழல் வலிய நோன்தாள் - கட்டப்பட்ட ஒலிக்கும் வீரக்கழலையுடைய வலிய பெரிய தாள்களையும், கோள் உடையவர் ஆகி - வலியினையுமுடைய வீரர்களாகி. கரைதல் - தேய்தல்; குறைதல். குண்ட வயிற்றோன் - குண்டோதரன். குறுத்தாள் : வலித்தல் விகாரம். வலிய குரைகழல் வீக்கு நோன்றாள் என இயைத்தலுமாம். (23) நெட்டிலை வடிவாள் குந்தந் தோமர நேமி நெய்த்தோர் ஒட்டிய கணிச்சி சாப முடம்பிடி முதலா வெண்ணப் பட்டவெம் படைமூ வாறும் பரித்தசெங் கையர் காலிற் கட்டிய கழலர் காலிற் கடியராய்ப் புறம்பு காப்ப. (இ - ள்.) நெடு இலை வடி வாள் - நெடிய தகட்டு வடிவமமைந்த வடித்த வாளும், குந்தம் - பெருஞ்சவளமும், தோமரம் - இருப்புலக்கையும், நேமி - திகிரியும், நெய்த் தோர் ஒட்டிய கணிச்சி- குருதி பொருந்திய மழுவும், சாபம் - வில்லும், உடம்பிடி - வேலும், முதலா எண்ணப்பட்ட - முதலாக எண்ணப்பட்ட, வெம்படை மூவாறும் பரித்த செங்கையர் - வெவ்வவிய பதினெட்டுப் படைக்கலங்களையும் ஏந்திய சிவந்த கையை யுடையவரும், காலில் கட்டிய கழலர் - காலிற்கட்டிய வீரக்கழலையுடையவரும், காலில் கடியராய்ப் புறம்பு காப்ப - காற்றினும் விரைந்த செலவினையுடையவருமாய்ப் புறத்திற் சூழ்ந்து காக்கவும். நெய்த்தோர் - குருதி. படைக்கலங்களிற் சிறந்தனவாகக் கொள்ளப்பட்டன பதினெட்டுப் போலும். பிரதம கணமும் பூதமறவரும் இங்ஙனம் புறம்பு காப்பவென்க. (24) வார்கெழு கழற்கா னந்தி மாகாளன் பிருங்கி வென்றித் தார்கெழு நிகும்பன் கும்போ தரன்முதற் றலைவர் யாரும் போர்கெழு கவசங் தொட்டுப் புண்டர நுதலிற் றீட்டிக் கூர்கெழு வடிவா ளேந்திக் குதிரைச்சே வகராய்ச் சூழ. (இ - ள்.) வார் கெழு கழல்கால் நந்தி - நீட்சி பொருந்திய வீரக் கழல் அணிந்த காலையுடைய நந்தியும், மாகாளன் - மாகாளனும், பிருங்கி - பிருங்கியும், வென்றித் தார்கெழு நிகும்பன் - வெற்றி மாலை பொருந்திய நிகும்பனும், கும்போதரன் - கும்போதரனும். முதல் தலைவர் யாரும் - முதுலிய சிவகணத் தலைவர் அனைவரும். போர் கெழு கவசம் தொட்டு - போரிற்குரிய கவசம் பூண்டு, நுதலின் புண்டரம் தீட்டி - நெற்றியிலே திருநீறு தரித்து, கூர்கெழு வடிவாள் ஏந்தி - கூர்மை பொருந்திய வடித்த வாளை ஏந்தி, குதிரைச் சேவகராய்ச் சூழ - குதிரை வீரராய்ச் சூழ்ந்து வரவும். தொட்டு - பூண்டு. (25) கற்றைச்சா மரைகள் பிச்சங் கவிகைபூங் கொடிக்கா டெங்கும் துற்றக்1கா ரொலியு நாணத் தூரிய முழுது மேங்கக் கொற்றப்போர் விடையைத் தானே குரங்குளைப் பரியா மேற்கொண் டொற்றைச்சே வகராய் மாறி யாடிய வொருவர் வந்தார். (இ - ள்.) கற்றைச் சாமரைகள் பிச்சம் கவிகை பூங்கொடிக் காடு எங்கும் துற்ற - திரளாகிய சாமரைகளும் பீலிகளும் குடைகளும் பொலிவினையுடைய துவசக்காடும் எங்கும் நெருங்கவும், கார் ஒலியும் நாணத் தூரியம் முழுதும் ஏங்க - முகிலின் இடியொலியும் நாணுமாறு இயங்கனைத்தும் முழங்கவும், கொற்றப் போர்விடையைத் தானே - வெற்றியையுடைய போருக்குரிய இடபவூர்தியையே, குரங்கு உளைபரியா மேற்கொண்டு - வளைந்த பிடரி மயிரையுடைய குதிரையாக (ஆக்கி), அதில் ஏறியருளி, ஒற்றைச் சேவகராய் - ஒப்பற்ற வீரராய் மாறியாடிய ஒருவர் வந்தார்- கான்மாறியாடிய பெருமானார் வந்தருளினார். சாமரை, பிச்சம், கவிகை, கொடி ஆகிய காடு என்னலுமாம். முற்ற என்னும் பாடத்திற்குச் சூழ என்பது பொருள். தான் : அசை. குரங்கல் - வளைதல்; " குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து" என்பது சிலப்பதிகாரம். (26) பல்லிய மொலிக்கு மார்ப்பும் பாய்பரி கலிக்கு மார்ப்புஞ் செல்லொலி மழுங்க மள்ளர் தெழித்திடு மார்ப்பு மொன்றிக் கல்லெனுஞ் சும்மைத் தாகிக் கலந்தெழு சேனை மேனாள் மல்லன்மா நகர்மேற் சீறி வருகடல் போன்ற தன்றே. (இ - ள்.) பல் இயம் ஒலிக்கும் ஆர்ப்பும் - பல இயங்களும் ஒலிக்கின்ற ஒலியும், பாய் பரி கலிக்கும் ஆர்ப்பும் - பாய்கின்ற குதிரைகள் கனைக்கும் ஒலியும், செல் ஒலி மழுங்க மள்ளர் தெழித்திடும் ஆர்ப்பும் - முகிலின் இடியொலியும் மழுங்கும்படி வீரர்கள் உரப்பும் ஒலியும, - ஒன்றி - கலந்து, கல்லெனும் சும்மைத்து ஆகி கலந்து எழுசேனை, கல்லென்னும் ஓசையையுடையதாகிக் கலந்தெழுந்த சேனையானது, மேல் நாள் - முன்னாளில், மல்லல் மாநகர்மேல் சீறி வருகடல் போன்றது - வளப்பமிக்க பெரிய மதுரையின்மேற் சீறி வந்த கடலை ஒத்தது. தெழித்தல் - உரப்புதல்; அதட்டுதல். ஓசையாலும் பரப்பாலும் கடல் போன்றது. மதுரையை நோக்கி வந்தமையின் முன்பு அங்ஙனம் வந்த கடலைக் கூறினார். அன்று, ஏ : அசைகள். (27) சேனையின் வரவு நோக்கித் திருமகன் திருமுன் னேகுந் தானையந் தலைவன்1 றென்னன் றாணிழல் குறுகிக் கூற மீனவ னுவகை பூத்து வெயின்மணிக் கடையிற் போந்தங் கானமண் டபத்திற் செம்போ னரியணை மீது வைகி. (இ - ள்.) சேனையின் வரவு நோக்கி - தானையின் வருகையைப் பார்த்து, திருமகன் திருமுன் ஏகும் - அரச சமுதாயத்திற்குச் செல்லும், தானை அம் தலைவன் - படைத் தலைவனாகிய சுந்தர சாமந்தன், தென்னன் தாள் நிழல் குறுகிக் கூற - குலபூடண பாண்டியனது அடி நிழலை அடைந்து கூற, மீனவன் உவகை பூத்து - அவ்வழுதியானவன் மகிழ்ந்து, வெயில்மணிக் கடையில் போந்து - ஒளி பொருந்திய மணிகள் பதித்த கடைவாயிலில் வந்து, அங்கு ஆன மண்டபத்தில் - அங்கு இருத்தற்கு அமைந்த மண்டபத்தின் கண், செம்பொன் அரி அணை மீது வைகி - செம்பொன்னாலாகிய சிங்காதனத்தின் மீது அமர்ந்து. திருமகன் - சிறந்தோன், அரசன். அம் : சாரியை. தென்னன், மீனவன் என்பவற்றைச் சுட்டாகக் கொள்க. தெவ்வடு மகிழ்ச்சி பொங்கச் சேனையின் செல்வ1 நோக்கி எவ்வெவ தேயத்2துள்ளா ரிவரென வெதிரே நின்று கௌவையின் மனச்சா மந்தன் கையிற்பொற் பிரம்பு நீட்டி அவ்வவர் தொகுதி யெல்லா மணியணி நிறுவிக் கூறும். (இ - ள்.) தெவ் அடு மகிழ்ச்சி பொங்க - பகைவனாகிய சேதி ராயனைக் கொல்லும் மகிழ்ச்சி மிக, சேனையின் செல்வம் நோக்கி - சேனையின் பெருக்கத்தைப் பார்த்து, இவர் எவ்வெவ தேயத்து உள்ளார் என - இவர்கள் எந்தெந்தத் தேயத்திலுள்ளவர்கள் என்று பாண்டியன் வினவ, கௌவை இல் மனச்சாமந்தன் - துன்பமில்லாத மனத்தினையுடைய சாமந்தன், எதிரே நின்று கையில் பொன் பிரம்பு நீட்டி - எதிரில் நின்று கையிலுள்ள பொற் பிரம்பினை நீட்டி, அவ்வவர் தொகுதி எல்லாம் அணி அணி நிறுவிக் கூறும் - அவரவர் கூட்டங்களையெல்லாம் அணியணியாக நிறுத்திக் கூறுவான். நோக்கி மகிழ்ச்சி பொங்க வினவ என்க; பொங்கு அச்சேனை எனப் பிரித்துரைத்தலுமாம். எவ்வெவ, அ : அசை : அவரவர் என்பது அவ்வவர் என்றாயது. (29) [கலிவிருத்தம்] கொங்கரிவ ரையகுரு நாடரிவ ரைய கங்கரிவ ரையகரு நாடரிவ ரைய அங்கரிவ ரையவிவ ராரியர்க ளைய வங்கரிவ ரையவிவர் மாளவர்க ளைய. (இ - ள்.) ஐய இவர் கொங்கர் - ஐயனே இவர் கொங்க நாட்டினர், ஐய இவர் குருநாடர் - ஐயனே இவர் குருநாட்டினர்; ஐய இவர் கங்கர் - ஐயனே இவர் கங்க நாட்டினர்; ஐய இவர் கருநாடர் - ஐயனே இவர் கருநாட நாட்டினர்; ஐய இவர் அங்கர்- ஐயனே இவர் அங்க நாட்டினர்; ஐய இவர் ஆரியர்கள் - ஐயனே இவர்கள் ஆரிய நாட்டினர்கள்; ஐய இவர் வங்கர் - ஐயனே இவர் வங்க நாட்டினர்; ஐய இவர் மாளவர்கள் - ஐயனே இவர்கள் மாளவநாட்டினர்கள். (30) குலிங்கரிவ ரையவிவர் கொங்கணர்க ளைய தெலுங்கரிவ ரையவிவர் சிங்களர்க ளைய கலிங்கரிவ ரையகவு டத்தரிவ ரைய உலங்கெழு புயத்திவர்க ளொட்டியர்க ளைய. (இ - ள்.) ஐய இவர் குலிங்கர் - ஐயனே இவர் குலிங்க நாட்டினர்; ஐய இவர் கொங்கணர்கள் - ஐயனே இவர்கள் கொங்கண நாட்டினர்கள்; ஐய இவர் தெலுங்கர் - ஐயனே இவர் தெலுங்க நாட்டினர்கள்; ஐய இவர் சிங்களர்கள் - ஐயனே இவர்கள் சிங்களநாட்டினர்கள்; ஐய இவர் கலிங்கர் - ஐயனே இவர் கலிங்க நாட்டினர்; ஐய இவர் கவுடத்தர் - ஐயனே இவர் கவுட நாட்டினர்; ஐய உலம் கெழு புயத்து இவர்கள் ஒட்டியர்கள் - ஐயனே திரண்ட கற்போலும் புயத்தினையுடைய இவர்கள் ஒட்டிய நாட்டினர்கள (31) கொல்லரிவ ரையவிவர் கூர்ச்சரர்க ளைய பல்லரிவ ரையவிவர் பப்பரர்க ளைய வில்லரிவ ரையவிவர் விதேகரிவ ரைய கல்லொலி கழற்புனை கடாரரிவ ரைய. (இ - ள்.) ஐய இவர் கொல்லர் - ஐயனே இவர் கொல்லநாட்டினர்; ஐய இவர் கூர்ச்சரர்கள் - ஐயனே இவர்கள் கூர்ச்சர நாட்டினர்கள்; ஐய இவர் பல்லவர் - ஐயனே இவர் பல்லவநாட்டினர்; ஐய இவர் பப்பரர்கள் - ஐயனே இவர்கள் பப்பர நாட்டினர்கள்; ஐய இவர் வில்லர் - ஐயனே இவர்கள் வில்லர்கள்; ஐய இவர் விதேகர் - ஐயனே இவர் விதேகநாட்டினர்; ஐய இவர் கல் ஒலி கழல்புனை கடாரர் - ஐயனே இவர் கல்லென்னும் ஒலியையுடைய வீரக்கழலையணிந்த கடார நாட்டினர். பல்லவர் என்பது பல்லர் என நின்றது. வில்லர் - விற்கொடியை யுடைய சேரரின் நாட்டினர். கல்லென்னு மொலி என்பது கல்லொலி என நின்றது. (32) கேகயர்க ளி'a3லிவர்கள் கேழ்கிளர் மணிப்பூண் மாகதர்க ளாலிவர் மராடா'a4வர் காஞ்சி நாகரிக ராலிவர்க ணம்முடைய நாட்டோர் ஆகுமிவர் தாமெனமெய்க்1 காட்டியறி வித்தான். (இ - ள்.) இவர்கள் கேகயர்கள் - இவர்கள் கேகயநாட்டினர்கள்; கேழ்கிளர் மணிப்பூண் இவர் மாகதர்கள் - ஒளி விளங்கும் மணிகள் பதித்த அணிகளை யணிந்த இவர்கள் மகத நாட்டினர்கள்; இவர் மராடர் - இவர் மராடநாட்டினர்; இவர்கள் காஞ்சிநாகரிகர் - இவர்கள் காஞ்சி நாட்டிலுள்ள நாகரிகமுடையவர்கள்; இவர் நம்முடைய நாட்டோர் ஆகும் - இவர் நமது நாட்டினராவர்; என என்று, மெய்க் காட்டி அறிவித்தான் - அவரவர் உருவினைக் காட்டித் தெ'a3'a4வித்தான். ஆல் மூன்றும், தாம் என்பதும் அசைகள். காஞ்சி நாகரிகர் என்றது சோழரை யாதல்வேண்டும். (33) இத்தகைய சேட்புல னுளாரையிவ ணுய்த்த வித்தகைமை யென்னென வினாவியருள் செய்யேல் அத்தநின் னரும்பொரு ளனைத்தும்வரை யாதே உய்த்தலி னடைந்தனர்க ளாலென வுரைத்தான். (இ - ள்.) இத்தகைய சேண் புலன் உளாரை - இத்தன்மையுடைய சேய்மை நாடுகளில் உள்ளாரை, இவண் உய்த்த வித்தகைமை என் என - இங்கு வருவித்த சாமார்த்தியம் யாது என்று, வினவி யருள் செய்யேல் - வினாவியருளாதே, அத்த - அப்பெருமானே, நின் அரும் பொருள் அனைத்தும் - நினது அரிய பொருள் முற்றும், வரையாது உய்த்தலின் - வரையறையின்றிச் செலவு செய்தமையால், அடைந்தனர்கள் என உரைத்தான் -இவர்கள் யாவரும் வந்தார்கள் என்று கூறினான். வித்தகம் - சதுரப்பாடு; இது மை என்னும் பகுதிப்பொருள் விகுதிபெற்று வித்தகைமை எனத் திரிந்தது. இவர்கள் வந்தமைக்கு நின் பொருள் காரணமாமன்றி என் வித்தகம் காரணமன்று என அடங்கிக் கூறினான். அரும் பொருள் - பெறுதற்கரிய பொருள், அறநெறியால் வந்தபொருள். ஆல் : அசை. அறிவித்தவன் வினாவற்கு உய்த்தலின் அடைந்தனர் என உரைத்தான் என்க. இவ்வைந்து செய்யுட்களிலும் பலர்பாலில் இரு விகுதிபெற்று வந்த சொற்களுள்ளமை காண்க. (34) [அறுசீராசிரிய விருத்தம்] அந்நெடுஞ் சேனை தன்னுட் சேணிடை யடன்மா வூர்ந்து பின்னுற நிற்கு மொற்றைச் சேவகப் பிரானை நோக்கி மன்னவ னவன்யா ரென்னச் சாமந்தன் வணங்கி யைய இன்னவர் சேனை வெள்ளத் தியாரையென் றறிவ தென்றான். (இ - ள்.) அந் நெடுஞ்சேனை தன்னுள் - அப் பெரிய சேனையின் கண், சேண் இடை அடல்மா ஊர்ந்து பின்உற நிற்கும் - சேய்மையில் வலிய குதிரையைச் செலுத்திப் பின்னாக நிற்கின்ற, ஒற்றைச் சேவகப் பிரானை - ஒப்பில்லாத வீரனாகிய இறைவனை, மன்னவன் நோக்கி - பாண்டி வேந்தன் பார்த்து, அவன் யார் என்ன - அவன் யார் என்று வினவ, சாமந்தன் வணங்கி - சாமந்தன் தொழுது, ஐய - ஐயனே, இன்னவர் சேனை வெள்ளத்து - இவர்களின் சேனைப் பெருக்கத்துள், யார் என்று அறிவது என்றான் - யார் என்று அறிந்து சொல்லக்கூடும் என்று கூறினான். இச் சேனை வெள்ளத்திலே தனித்தனியாக அறியலுறின் யாரை அறியக்கூடும் என்றா னென்க. இன்னவர் யாரென்று அறிவது என இயைத்தலுமாம். (35) அவரையிங் கழைத்தி யென்றா னரசன்றன் வழிச்செல் வார்போற் கவயமிட் டவரும் போந்தார் காவலன் களிகூர்ந் தம்பொன் நவமணிக் கலன்பொன் னாடை நல்கினா னுள்ளத் தன்பு தவறிலான் பொருட்டு வாங்கித் தரித்துத்தன் றமர்க்கு மீந்தார். (இ - ள்.) அவரை இங்கு அழைத்தி என்றான் - அவரை இங்கு அழைப்பாயாக என்றான் வேந்தன்; அரசன் தன் வழிச் செல்வார்போல் - அவனது வழிப்பட்டுச் செல்பவரைப்போல, கவயம் இட்டவரும் போந்தார் - கவசமணிந்த அவ் வீரரும் போந்தார்; காவலன் களி கூர்ந்து- மன்னன் மகிழ்ச்சிமிக்கு, அம்பொன் நவமணிக்கலன் பொன் ஆடை நல்கினான். - அழகிய பொன்னாலாகிய நவமணியிழைத்த அணிகளையும் பொன்னாடைகளையும் கொடுத்தான்; உள்ளத்து அன்பு தவறிலான் பொருட்டு வாங்கித் தரித்து - அவர் மனத்தின்கண் அன்பு நீங்காத சாமந்தன் பொருட்டு அவற்றை வாங்கி அணிந்துகொண்டு, தன் தமர்க்கும் ஈந்தார் - தம் பரிசனங்கட்குங் கொடுத்தருளினார். அழைத்தியென்றான் அழைக்கவே அவரும் போந்தார் என விரித்துரைக்க. அவரது தோற்றத்தால் அரசன் களிகூர்ந்தானாயிற்று. தன்றமர்க்கும் ஈந்தார் என ஒருமைச் சொல்லும் பன்மைச் சொல்லும் விரவி வந்தன. (36) ஆய்ந்தவெம் பரிமாத் தூண்டி யைங்கதி நடத்திக் காட்டி ஏய்ந்ததஞ் சேனை வெள்ளத் தெய்தினா ரெய்து மெல்லை வேய்ந்ததார்ச் சேதி ராயன் வேட்டைபோய்ப் புலிகோட் பட்டு மாய்ந்தன னென்றோ ரொற்றன் வேந்தன்முன் வந்து சொன்னான். (இ - ள்.) ஆய்ந்த வெம் பரிமாத்தூண்டி - ஆராய்ந்துகொண்ட கடிய செலவினையுடைய குதிரையைச் செலுத்தி, ஐங்கதி நடத்திக் காட்டி - ஐவகைக் கதிகளிலும் நடத்திக் காண்பித்து, ஏய்ந்த தம் சேனை வெள்ளத்து எய்தினார் - பொருந்திய தமது தானை வெள்ளத்தை அடைந்தார்; எய்தும் எல்லை - அங்ஙனம் அடையும் பொழுது, தார் வேய்ந்த சேதிராயன் வேட்டைபோய் - மாலையணிந்த சேதிராயன் என்பான் வேட்டைக்குச் சென்று, புலிகோட்பட்டு மாய்ந்தனன் என்று - புலியினாற் கொல்லப்பட்டு இறந்து பட்டனன் என்று, வேந்தன்முன் ஓர் ஒற்றன் வந்து சொன்னான் - மன்னன் முன்னே ஓர் ஒற்றன் வந்து கூறினன். ஐங்கதி இவை யென்பதனை, " விக்கிதம் வற்கிதம் வெல்லு முபகண்டம் மத்திமம் சாரியோ டைந்து" என்பதனா லறிக; கோட்பட்டு : தம்மினாய தொழிற்சொல். (37) முரசதி ரனிக நோக்கி முகமலர்ந் துவகை பூத்த அரசனு மனிக வேந்தற் களவில்சீர்த் தலைமை யோடும் வரிசைகண் மிதப்ப நல்கி வந்துமெய்க் காட்டுத் தந்து பரசிய பதாரி தத்தம் பதிபுகச் செலுத்து கென்றான். (இ - ள்.) முரசு அதிர் அனிகம் நோக்கி - முரசு முழங்குஞ் சேனையைப் பார்த்து, முகம் மலர்ந்து உவகை பூத்த அரசனும்- முக மலர்ந்து மகிழ்ச்சியுற்ற வேந்தனும், அனிக வேந்தற்கு - சேனைத் தலைவனாகிய சுந்தரசாமந்தனுக்கு, அளவு இல் சீர்த்தலைமையோடும் வரிசைகள் மிதப்ப நல்கி - அளவில்லாத சிறப்பினையுடைய தலைமை யோடு வரிசைகளையும் நிரம்பக் கொடுத்து, வந்து மெய்க்காட்டுத் தந்து பரசியபதாதி தத்தம் பதிபுகச் செலுத்துக என்றான் - வந்து மெய்க்காட்டுக் கொடுத்துத் துதிக்கப்பெற்ற சேனைகள் தத்தம் நகரிற் செல்லுமாறு விடுக்க என்று கூறினன். தலைமை - முதன்மைக்குரிய பட்டம்; வேறு சிறந்த வினைத் தலைமையுமாம். மெய்யைக் காட்டிய அளவானே புகழப்பெற்ற. பதாதி - காலாள். செலுத்துகென்றான் : அகரந்தொக்கது. (38) அறைந்தவார் கழற்காற் சேனை காவல னனிகந் தத்தஞ் சிறந்தசே ணாட்டிற் செல்லச் செலுத்துவான் போன்று நிற்ப நிறைந்தநான் மாடக் கூட னிருத்தனந் நிலைநின் றாங்கே மறைந்தனன் மனித்த வேடங்1 காட்டிய மறவ ரோடும். (இ - ள்.) அறைந்த வார்கழல் கால் சேனை காவலன் - ஒலிக்கின்ற நீண்ட வீரக்கழலையணிந்த காலையுடைய படைத்தலைவனாகிய சுந்தர சாமந்தன், அனிகம் - சேனைகள், தத்தம் சிறந்த சேண் நாட்டில் செல்ல - தத்தமக்குரிய சிறந்த சேய்மையிலுள்ள நாடுகளிற் செல்லுமாறு, செலுத்துவான் போன்று நிற்ப - செலுத்துகின்றவனைப் போலப் பாவனை செய்துநிற்க, நிறைந்த நான்மாடக் கூடல் நிருத்தன் - பெருமை நிறைந்த மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக்கடவுள், அந்நிலை நின்றாங்கே- அங்கு நின்றபடியே, மனித்த வேடம் காட்டிய மறவரோடும் மறைந்தனன் - மனித வேடம் காட்டிய வீரராகிய சிவ கணங்களோடும் மறைந்தருளினான். நிறைந்த என்பதனை நிருத்தனுக்கேற்றி யுரைத்தலுமாம். அங்கே தோன்றி நின்றாற்போன்றே மறைந்தனன் என்க. நின்று ஆங்கே எனப் பிரித்து, அந்நிலை நின்றும் அப்பொழுதே மறைந்தனன் என்னலுமாம். (39) கண்டனன் பொருநை நாடன் வியந்தனன் கருத்தா சங்கை கொண்டனன் குறித்து நோக்கி யீதுநங் கூடன் மேய அண்டர்தம் பெருமான் செய்த வாடலென் றெண்ணிக் கண்ணீர் விண்டனன் புளகம் போர்ப்ப மெய்யன்பு வடிவ மானான். (இ - ள்.) பொருநைநாடன் கண்டனன் வியந்தனன் - பொருநை யாறு சூழ்ந்த நாட்டினையுடைய குலபூடண பாண்டியன் இதனைக் கண்டு வியந்து, கருத்து ஆசங்கை கொண்டனன் - கருத்தில் ஐயுறவு கொண்டு, குறித்து நோக்கி - உய்த்துணர்ந்து, ஈது நம் கூடல் மேய அண்டர் தம் பெருமான் செய்த ஆடல் என்று எண்ணி - இது நமது கூடலில் வீற்றிருக்குந் தேவதேவனாகிய சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய திருவிளையாடல் என்று துணிந்து, கண்ணீர் விண்டனன் கண்களில் ஆனந்த அருவி பொழியப் பெற்று, மெய்புளகம் போர்ப்ப அன்பு வடிவம் ஆனான் - உடல் முழுதும் புளகம் மூட அன்பே வடிவமாயினன். முதற்கண் வியப்பும் ஐயமும் எய்தியவன் பின்பு குறித்து நோக்கி ஆடல் என்று துணிந்து அன்பு வடிவமானான் என்க. எண்ணி - துணிந்து என்னும் பொருட்டு. கண்டனன் முதலிய முற்றுக்கள் நான்கும் எச்சமாயின. தம் : சாரியை; மெய் என்பதனை அன்புடன் கூட்டி, உண்மையன்பு என்னலுமாம். (40) தனக்குயிர்த் துணையா நின்ற சாமந்தன் றன்னை நோக்கி உனக்கெளி வந்தார் கூட லுடையநா யகரே யென்றால் எனக்கவ ராவார் நீயே யென்றவற் கியாவு நல்கி மனக்கவல் பின்றி வாழ்ந்தான் மதிவழி வந்த மைந்தன். (இ - ள்.) தனக்கு உயிர்த்துணையா நின்ற சாமந்தன் தன்னை நோக்கி - தனக்கு உயிர்த்துணையாகப் பொருந்தி நின்ற சுந்தரசாமந்தனைப் பார்த்து, கூடல் உடைய நாயகரே - மதுரையில் வீற்றிருக்கும் எல்லா முடைய சோமசுந்தரக்கடவுளே, உனக்கு எளிவந்தார் என்றால் - நினக்கு எளிதில் வந்தருளினாரென்றால், எனக்கு அவராவார் நீயே என்று - எனக்கு அக்கடவுள் நீயே என்று, அவற்கு யாவும் நல்கி - அவனுக்குப் பல சிறப்புக்களையுங் கொடுத்து, மதிவழி வந்த மைந்தன் - சந்திரன் மரபில் வந்த குலபூடண பாண்டியன், மனக்கவல்பு இன்றி வாழ்ந்தான் - மனத்திற் கவலை என்பதில்லாமல் வாழ்ந்து வருவானாயினன். நாயகரே என்பதில் ஏகாரம் சிறப்புணர்த்திற்று. ஆவார் : முதல் வேற்றுமைச்சொல். சிவனடியாரைச் சிவனெனவே தேறி வழிபடுதல் முறையாகலின் ‘அவர் நீயே’ என்றான். (41) ஆகச்செய்யுள் - 1704. முப்பத்தொன்றாவது உலவாக்கிழியருளிய படலம் [அறுசீரடியாசிரிய விருத்தம்] அடியார் பொருட்டுப் பரிவயவ ராகிச் செழியன் காணவிடைக் கொடியார் வந்து மெய்க்காட்டுக் கொடுத்த வண்ண மெடுத்துரைத்துங் கடியார் கொன்றை முடியாரக் கன்னி நாடன் றனக்கிசைந்த படியா லுலவாக் கிழிகொடுத்த படியை யறிந்த படிபகர்வாம். (இ - ள்.) விடைக்கொடியார் - இடபக்கொடியையுடைய சோம சுந்தரக் கடவுள், அடியார் பொருட்டு - அடியாராகிய சாமந்தர் பொருட்டு, பரிவயவராகி - குதிரை வீரராகி, செழியன் காணவந்து - பாண்டியன் காணுமாறு வந்து, மெய்க் காட்டுக் கொடுத்த வண்ணம் எடுத்து உரைத்தும் - மெய்க்காட்டுக் கொடுத்தருளிய திருவிளையாடலைக் கூறினோம்; கடி ஆர் கொன்றை முடியார் - (இனி) மணம் நிறைந்த கொன்றை வேணியராகிய அவரே, அக்கன்னி நாடன் தனக்கு இசைந்த படியால் - அப்பாண்டி நாடன் தனக்கு மனமொத்த அன்பனானபடியினால், உலவாக்கிழி கொடுத்த படியை - (அவனுக்கு) உலவாக்கிழி அளித்த திருவிளையாடலை, அறிந்தபடி பகர்வாம் - அறிந்தவாறு கூறுவாம். உரைத்தும் - உரைத்தாம். கன்னி நாடனுக்குப் பொருந்தியவாறு கொடுத்தபடி என்றலுமாம். உலவாக்கிழி - எடுக்கக் குறையாத பொன் முடிப்பு. (1) வள்ளல் குலபூ டணன்றிங்கள் வாரந் தொடுத்துச் சிவதருமம் உள்ள வெல்லாம் வழாதுநோற் றொழுகும் வலியாற் றன்னாட்டில் எள்ள லில்லா வேதியரை யிகழ்ந்தா னதனான் மழைமறுத்து வெள்ள மருக வளங்குன்றி விளைவஃ கியது நாடெல்லாம். (இ - ள்.) வள்ளல் குலபூடணன் - வள்ளலாகிய குலபூடண பாண்டியன், திங்கள்வாரம் தொடுத்துச் சிவதருமம் உள்ள எல்லாம் - சோமவார விரதம் முதலாக உள்ள சிவபுண்ணியங்களனைத்தையும், வழாது நோற்று ஒழுகும் வலியால் - தவறாமல் நோற்று நடக்கும் வன்மையினால், தன் நாட்டில் எள்ளல் இல்லா வேதியரை இகழ்ந்தான் - தனது நாட்டிலுள்ள இகழ்தற்குரியரல்லாத மறையோரை அவமதித்தான்; அதனால் மழை மறுத்து வெள்ளம் அருக - அதனாலே மழை பெய்யாதொழிதலால் நீர்ப்பெருக்குக் குறைய, நாடு எல்லாம் விளைவு அஃகி வளங்குன்றியது - நாடுமுழுதும் விளைவு சுருங்கி வளங் குறைந்தது. திங்கள் வாரம், நோன்பிற்கு ஆகு பெயர். தொடுத்து - தொடங்கி, திங்கள் வாரந் தொடுத்து என்றும், நோற்று என்றும் கூறினமையால் சிவதருமம் என்றது சிவ விரதங்களைக் குறிக்கும். நோற்றமையாலே தருக்குற்று இகழ்ந்தானென்க. எள்ளலில்லாவேதியர் -மறைகளை யுணர்ந்து அந்நெறி யொழுகும் சிறப்பினையுடைய அந்தணர். மழை வளந்தரும் அழலோம்பாளரை இகழ்ந்தமையின் அவர் அழலோம்புதலைக் கைவிட அதனால் மழை மறுத்ததென்க. மறுத்தலால் என்பது மறுத்து எனத் திரிந்து நின்றது. விளைவஃகி வளங்குன்றியது என விகுதி பிரித்துக் கூட்டப்பட்டது. (2) அறவோ ரெல்லாம் நிரப்பெய்தி யாகங் கிடந்த நூலன்றி மறைநூ லிழந்து முனிவேள்வி வானோர் வேள்வி தென்புலத்தின் உறைவோர் வேள்வி யிழந்திழிந்த தொழில்செய் தாற்றா துயிர்வளர்ப்பான் புறநா டணைந்தார் பசியாலே புழுங்கி யொழிந்த குடியெல்லாம். (இ - ள்.) அறவோர் எல்லாம் நிரப்பு எய்தி - அந்தணரெல்லாம் வறுமையுற்று, ஆகம் கிடந்த நூல் அன்றி மறைநூல் இழந்து - மார்பிற் கிடந்த பூணூலன்றி வேதமாகிய நூலை இழந்து, முனிவேள்வி வானோர் வேள்வி தென்புலத்தின் உறைவோர் வேள்வி இழந்து - முனிவர் வேள்வியும் தேவர் வேள்வியும் பிதிரர் வேள்வியுமாகிய இவற்றைக் கை விட்டு, ஆற்றாது - வறுமைத் துன்பம் பொறுக்காது, இழிந்த தொழில் செய்து உயிர் வளர்ப்பான் புறநாடு அணைந்தார் - இழிவாகிய தொழிலைச் செய்தேனும் உயிரினை ஓம்புதற்பொருட்டு வேற்று நாடு சென்றனர்; ஒழிந்த குடி எல்லாம் பசியாலே புழுங்கி - அவரொழிந்த குடிகளெல்லாம் பசியினாலே மனம் புழுங்கி. அறவோர் - அறநெறி யொழுகுவோர். நிரப்பு, எதிர்மறை யிலக்கணையாக வறுமையைக் குறிக்கும் பெயர். அவரை வேதியரெனக் காட்டுதற்குப் பூணூலன்றிப் பிறிதொன்று மிலதாயிற்று என நகை தோன்றக் கூறினார். முனி வேள்வி முதலாயின அவ்வவர்க்கு இறுக்கப்படும் கடன்கள். முனிவர் கடன் கேள்வியானும், தேவர்கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் இறுக்கப்படும் என்பர்; " வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை வணங்கிய சாயல் வணங்கா வாண்மை இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல்" எனப் பதிற்றுப்பத்துக் கூறுவது காண்க. (3) எந்நா டணைவோ மெனவிரங்க விரங்கி மதிக்கோன் மதிநாளிற் பொன்னாண் முளரித் தடங்குடைந்து சித்திக் களிற்றைப் பூசித்துத் தன்னா தரவாற் கயற்கண்ணி தலைவன் றன்னை யருச்சித்து முன்னா வீழ்ந்து கரமுகிழ்த்துப் பழிச்சி மகிழ்ந்து மொழிகின்றான். (இ - ள்.) எந்நாடு அணைவோம் என இரங்க - எந்த நாட்டிற்குச் செல்வோம் என்று வருநதி, மதிக்கோன் இரங்கி - திங்கள் மரபினனாகிய குலபூடணன் மனங் கவன்று, மதிநாளில்- திங்கட்கிழமையில், நாள் பொன் முளரித் தடம் குடைந்து - அன்றலர்ந்த மலர்களையுடைய பொற்றாமரை வாவியில் நீராடி, சித்திக் களிற்றை பூசித்து - சித்தி விநாயகனை வணங்கி, தன் ஆதரவால் - தனது அன்பினால், கயல் கண்ணி தலைவன் தன்னை அருச்சித்து - அங்கயற்கண்ணி தலைவனாகிய சோமசுந்தரக்கடவுளை அருச்சித்து, முன்னா வீழ்ந்து - திருமுன் வீழ்ந்து, கரம் முகிழ்த்து - கை கூப்பி, பழிச்சி மகிழ்ந்து மொழிகின்றான் - துதித்து மகிழ்ந்து கூறுகின்றான். அரசன் மன்னுயிர்களைத் தன்னுயிர்போற் கருதுபவ னாகலின் ‘இரங்க இரங்கி’ என்றார். முன்னா - முன்னாக. வீழ்ந்து பின் எழுந்து கரமுகிழ்த்து என விரிக்க. (4) அத்த வுலகி லுயிர்க்குயிர்நீ யல்லை யோவவ் வுயிர்பசியால் எய்த்த வருத்த மடியேனை வருத்து மாறென் யானீட்டி வைத்த நிதியந்1 தருமத்தின் வழியே சென்ற தினியடிகள் சித்த மலர்ந்ததென் னிடும்பைவினை தீர வருட்கண் செய்கவென. (இ - ள்.) அத்த - ஐயனே, உலகில் உயிர்க்கு உயிர் நீ அல்லையோ - உலகின்கண் உள்ள உயிர்களுக்கு உயிரா யுள்ளவன் நீ யல்லவோ, அவ்வுயிர் பசியால் எய்த்த வருத்தம் அடியேனை வருத்துமாறு என் - அந்த உயிர்கள் பசியால் இளைத்த வருத்தம் (தேவரீரைச் சாராது) அடியேனைச் சார்ந்து வருத்துங் காரணம் யாது, யான் ஈட்டிவைத்த நிதியம் தருமத்தின் வழியே சென்றது - யான் தேடிவைத்த பொருள் முழுதும் சிவபுண்ணிய நெறியிலே செலவாயது; அடிகள் - தேவரீர், இனி சித்தம் மலர்ந்து என் இடும்பை வினைதீர - இனித் திருவுள்ளமலர்ந்து எனது துன்ப வினை நீங்குமாறு, அருள்கண் செய்க என - திருவருள் நோக்கம் செய்தருளுக என்று குறையிரக்க. உயிர்கட்கெல்லாம் உயிராகிய நீயே அவ்வுயிர்களின் வருத்தத்தையும் அதனால் யானெய்தும் துன்பத்தையும் போக்கியருளவேண்டுமென இரந்தான். என்னால் இயலுமளவு பொருளீட்டி அறம் புரிந்தேன்; பொருளும் சென்றது; இனி யான் செய்யலாவ தொன்றில்லை என விரித்துக் கொள்க. நீ எனவும் அடிகள் எனவும் ஒருமையும் பன்மையும் விரவி வந்தன. நிதியம், அம் : சாரியை. (5) கோளா டரவம ரைக்கசைத்த கூடற் பெருமான் குறையிரக்கும் ஆளா மரசன் றவறுசிறி தகங்கொண் டதனைத் திருச்செவியிற் கேளார் போல வாளாதே யிருப்ப மனையிற் கிடைத்தமலன் தாளா தரவு பெறநினைந்து தரையிற் கிடந்து துயில்கின்றான். (இ - ள்.) கோள் ஆடு அரவம் அரைக்கு அசைத்த கூடல் பெருமான் - கொலைத் தொழிலையுடைய ஆடு பாம்பினை அரையிற் கட்டி யருளிய சோமசுந்தரக் கடவுள், குறை இரக்கும் ஆளாம் அரசன் - குறையிரவா நின்ற அடியனாகிய அரசனது, தவறு சிறிது அகம் கொண்டு - தவற்றினைச் சிறிது திருவுள்ளத்திற் கொண்டு, அதனைத் திருச் செவியில் கேளார்போல வாளாது இருப்ப - அவன் மொழியைத் தனது திருச் செவியிற் கேளாதவர் போலச் சும்மா இருப்ப, மனையில் கிடைத்து - மன்னன் தனது மாளிகையிற் சென்று, அமலன் தாள் ஆதரவுபெற நினைந்து - இறைவனது திருவடியை அன்புமிகச் சிந்தித்து, தரையில் கிடந்து துயில்கின்றான் - தரையிற் படுத்து உறங்குவானாயினன். கோள் என்பதற்கு வலிமை என்றும் ஆடு என்பதற்குக் கொலை என்றும் உரைத்தலுமாம். இரக்கும் அரசன் ஆளாம் அரசன் எனத் தனித்தனி இயையும். வாளா என்னும் சொல் வாளாது வாளாங்கு என்றிங்ஙனம் திரிந்தும் வழங்கும். கிடைத்து - அடுத்து. (6) அங்கண் வெள்ளி யம்பலத்து ளாடு மடிக ளவன்கனவிற் சங்கக் குழையும் வெண்ணீறுஞ் சரிகோ வணமுந் தயங்கவுரன் சிங்க நாதங் கிடந்தசையச் சித்த வடிவா யெழுந்தருளி வெங்கண் யானைத் தென்னவர்கோன் முன்னின் றிதனை விளம்புவார். (இ - ள்.) அங்கண் - அப்பொழுது, வெள்ளி அம்பலத்துள் ஆடும் அடிகள் - வெள்ளியம்பலத்திலே திருநடம் புரியும் சோமசுந்தரக் கடவுள், அவன் கனவில் - அவனது கனவின்கண், சங்கக்குழையும் - சங்கினாலாய குண்டலமும், வெள்நீறும் - வெள்ளிய திருநீறும், சரிகோவணமும் - சரிந்த கோவணவுடையும், தயங்க - விளங்கவும், உரன் சிங்கநாதம் கிடந்து அசைய - மார்பின்கண் சிங்க நாதம் கிடந்து அசையவும், சித்தவடிவாய் எழுந்தருளி - சித்தமூர்த்தியாக எழுந்தருளி, வெங்கண் யானைத் தென்னவர்கோன் முன்நின்று இதனை விளம்புவார் - தறுகண்மையுடைய யானையையுடைய பாண்டிவேந்தனாகிய குலபூடணன் முன்னே நின்று இதனைக் கூறியருளுகின்றார். சிங்க நாதம் - கொம்பினாற் செய்யப்பட்ட ஒருவகைத் துளைக் கருவி. தென்னவர்கோன் : சுட்டு. அடிகள் அவன் கனவில் எழுந்தருளி முன்னின்று இதனை விளம்புவார் என்க. (7) ஏடா ரலங்கல் வரைமார்ப வெம்பா லென்று மன்புடைமை வாடா விரத விழுச்செல்வ முடையாய் வைய மறங்கடிந்து கோடா தளிக்குஞ் செங்கோன்மை யுடையா யுனக்கோர் குறையுளதுன் வீடா வளஞ்சேர் நாட்டிந்நாள் வேள்விச் செல்வ மருகியதால். (இ - ள்.) ஏடு ஆர் அலங்கல் வரைமார்ப - இதழ்கள் நிறைந்த மலர் மாலையணிந்த மலை போலும் மார்பினை உடையானே, என்றும் எம்பால் அன்பு உடைமை - எப்பொழுதும் என்னிடம் அன்புடைமையும், வாடா விரதம் - கெடாத விரதமும் ஆகிய, விழுச்செல்வம் உடையாய் - சிறந்த செல்வத்தினை உடையவனே, வையம் மறம் கடிந்து கோடாது அளிக்கும் செங்கோன்மை உடையாய் - புவியை மறத்தினைக் கடிந்து கோடுதலின்றிப் புரக்கும் செங்கோலை உடையாய், உனக்கு ஒரு குறை உளது - நின்பால் ஒரு குறை உண்டு; உன் வீடாவளம் சேர் நாட்டு - அதனால் உனது அழியாத வளம் பொருந்திய நாட்டின்கண், இந்நாள் வேள்விச் செல்வம் அருகியது - இப்பொழுது வேள்வியாகிய செல்வம் குறைந்தது. வரை - உத்தம விலக்கணமாகிய கீற்றுமாம். அன்புடைமை- கெடாத விரதம் என்றுமாம். நீ இத்தன்மையை ஆயினும் நின்பால் ஓர் குறையுளது அதனால் அருகியது என விரித்துரைக்க. வாடா வீடா, என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் ஒரு பொருள் குறித்தன. ஆல் : அசை. (8) மறையே நமது பீடிகையா மறையே நமது பாதுகையாம் மறையே நமது வாகனமா மறையே நமது நூபுரமாம் மறையே நமது கோவணமா மறையே நமது விழியாகும் மறையே நமது மொழியாகு மறையே நமது வடிவாகும். (இ - ள்.) மறையே நமது பீடிகை ஆம் - வேதமே நமது ஆதன மாகும்; மறையே நமது பாதுகை ஆம் - வேதமே நமது பாதுகையாகும்; மறையே நமது வாகனம் ஆம் - வேதமே நமது ஊர்தியாகும்; மறையே நமது நூபுரம் ஆம் - வேதமே நமது காற்சிலம்பாகும்; மறையே நமது கோவணம் ஆம் - வேதமே நமது கோவணமாகும்; மறையே நமது விழி ஆகும். வேதமே நமது கண்ணாகும்; மறையே நமது மொழி ஆகும் - வேதமே நமது மொழியாகும்; மறையே நமது வடிவு ஆகும் - வேதமே நமது திருவுருவமாகும். (9) வேதந் தானே நமதாணைச் சத்தி வடிவாய் விதிவிலக்காய்ப் போதங் கொளுத்தி நிலைநிறுத்திப் போகங் கொடுத்துப் பல்லுயிர்க்கும் பேதஞ் செய்யும் பிணியவிழ்த்தெம் பிரியா வீடு தருவதுதேன் நாதஞ் செய்யுந் தார்வேந்தே நமது செங்கோ லதுவாகும். (இ - ள்.) வேதம் தானே நமது ஆணைச்சத்தி வடிவாய் - வேதமே நமது ஆணையாகிய சத்தி வடிவாகியும், விதிவிலக்காய் - விதி விலக்குகளாகியும், போதம் கொளுத்தி நிலை நிறுத்தி - அறிவு கொளுத்தி நன்னெறியில் நிறுத்தி, போகம் கொடுத்து - போகத்தை அளித்து, பேதிம் செய்யும் பிணி அவிழ்த்து - திரிபினை விளைக்கும் ஆணவ மலக்கட்டினை அவிழ்த்து, பல் உயிர்க்கும் - ஆன்ம கோடிகளுக்கெல்லாம், எம்பிரியா வீடு தருவது - எமது பிரியாத வீடுபேற்றை அருளுவதாகும்; தேன் நாதம் செய்யும் தார் வேந்தே - வண்டுகள் ஒலிக்கும் மாலையையணிந்த மன்னனே, அது நமது செங்கோல் ஆகும் - அவ்வேதமே நமது செங்கோலுமாகும். போகம் - இம்மை மறுமையின்பங்கள். பேதஞ்செய்யும- அறிவை வேறுபடுத்தும். எம்மைப் பிரியாதிருத்தலாகிய எமது வீடு என்க. (10) அந்த மறைக டமக்குறுதி யாவா ரந்நூல் வழிகலிநோய் சிந்த மகத்தீ வளர்த்தெம்பாற் சிந்தை செலுத்து மந்தணரால் இந்த மறையோர் வேள்விமழைக் கேது வாகு மிவர்தம்மை மைந்த விகழ்ந்து கைவிட்டா யதனான் மாரி மறுத்தன்றால். (இ - ள்.) அந்த மறைகள் தமக்கு உறுதியாவார் - அந்த வேதங்களுக்கு உறுதி யாவார், அந்நூல் வழி - அந்த வேதநூல் வழியே, கலி நோய் சிந்த மகத்தீ வளர்த்து - கலித்துன்பம் கெடு மாறு வேள்வித் தீயினை வளர்த்து, எம்பால் சிந்தை செலுத்தும் அந்தணர் - எம்மிடத்துச் சிந்தையைச் செலுத்துகின்ற அந்தணராவர்; இந்த மறையோர் வேள்வி மழைக்கு ஏதுவாகும் - இவ்வந்தணர் வேட்கும் வேள்வியே மழைக்குக் காரணமாகும்; மைந்த இவர் தம்மை இகழ்ந்து கை விட்டாய் - மைந்தனே நீ இவர்களை இகழ்ந்து கை விட்டனை, அதனால் மாரி மறுத்தன்று - அதனால் மழை பெய்யா தொழிந்தது. உறுதியாவார் - பாது காவலாவார். சிந்தை செலுத்தல் - தியானித்தல். மறுத்தன்று: உடன்பாட்டு வினைமுற்று ஆல் இரண்டும் அசை. (11) மும்மைப் புவனங் களுமுய்ய முத்தீ வேட்கு மிவர்தம்மை நம்மைப்போலக் கண்டொழுகி நாளு நானா வளம்பெருக்கிச் செம்மைத் தருமக் கோலோச்சித் திகிரி யுருட்டி வாழ்தியென உம்மைப் பயன்போ லெளிவந்தா ருலவாக் கிழியொன் றுதவுவார். (இ - ள்.) மும்மைப் புவனங்களும் உய்ய - மூன்று உலகங்களும் உய்திபெற, முத்தீ வேட்கும் இவர் தம்மை - மூன்று தீயையும் வளர்க்கும் இவ்வந்தணரை, நம்மைப்போல கண்டு ஒழுகி - நம்மைப்போலவே கருதி ஒழுகி, நாளும் நானாவளம் பெருக்கி - எப்பொழுதும் பல வளங்களையும் பெருகச் செய்து, தருமம் செம்மைகோல் ஓச்சித் திகிரி உருட்டி- அறவடிவான செங்கோலைச் செலுத்தி ஆக்கினா சக்கரத்தை நடத்தி, வாழ்தி என - வாழ்வாயாக வென்று, உம்மைப்பயன்போல் எளிவந்தார் - முற்பிறப்பிற் செய்த நல்வினைப் பயன்போல எளிவந்த அவ்விறைவர். உலவாக்கிழி ஒன்று உதவுவார் - உலவாக்கிழி ஒன்று தந்தருளுவார். மும்மை - மூன்று; மை: பகுதிப்பொருள் விகுதி. முத்தீ - காருக பத்தியம், ஆகவனீயம், தென்றிசையங்கி என்பன. சிவனை வழிபடும் திருமறையோராகலின் அவரைச் சிவனைப்போற் காணவேண்டும் என்றவாறு. உம்மை - முற்பிறப்பு; தவத்திற்காயிற்று. (12) இந்தக் கிழியி லெத்துணைப்பொன் னெடுத்து வழங்குந் தொறுநாங்கள் தந்த வளவிற் குறையாத தன்மைத் தாகு மிதுகொண்டு1 வந்த விலம்பா டகற்றென்று கொடுத்து வேந்தன் மனக்கவலை சிந்தித் திருநீ றதுசாத்தி மறைந்தா ரையர் திருவுருவம். (இ - ள்.) இந்தக் கிழியில் எத்துணைப்பொன் எடுத்து வழங்கும் தொறும் - இந்தப் பொற்கிழியில் எவ்வளவு பொன்னாயினும் எடுத்து வழங்குந் தோறும், நாங்கள் தந்த அளவில் குறையாத தன்மைத்து ஆகும் - அது நாம் கொடுத்த அளவினின்றும் குறையாத தன்மை யுடையதாகும்; இது கொண்டு வந்த இலம்பாடு அகற்று என்று கொடுத்து - இதனைக்கொண்டு வந்த வறுமையைப் போக்குவாயாக என்று கொடுத்தருளி, வேந்தன் மனக்கவலை சிந்த - மன்னனது மனக்கவலைகெட, திருநீறு சாத்தி - திருநீறு தரிப்பித்து, ஐயர் திரு உருவம் மறைந்தார் - இறைவர் திருவுருக் கரந்தருளினார். எத்துணைப்பொன் எடுத்து வழங்கினும் வழங்குந்தோறும் என விரித்துரைக்க. நாம் என்பது நாங்கள் என நின்றது. திருநீறது, அது : பகுதிப்பொருள் விகுதி. (13) கண்ட கனவு நனவாகத் தொழுதா னெழுந்து கௌரியர்கோன் அண்டர் பெருமான் றிருவடிபோலம்பொற் கிழியை முடித்தலைமேற் கொண்டு மகிழ்ச்சி தலைசிறப்ப நின்றோர் முகூர்த்தங் கூத்தாடித் தண்டா வமைச்சர் படைத்தலைவர் தமக்குங் காட்டி யறைவித்தான். (இ - ள்.) கௌரியர்கோன் கண்ட கனவு நனவு ஆக எழுந்து தொழுதான் - குலபூடண பாண்டியன் தான் கண்ட கனவு நனவாக எழுந்து வணங்கி, அண்டர் பெருமான் திருவடிபோல் - தேவ தேவனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடியைப் போல, அம் பொன்கிழியை முடித் தலைமேல் கொண்டு - அழகிய பொன் முடிப்பினை முடியினை யணிந்த தலைமேற் கொண்டு, மகிழ்ச்சி தலைசிறப்ப நின்று - மகிழ்ச்சி மேலோங்க நின்று, ஓர் முகூர்த்தம் கூத்து ஆடி - ஒரு முகூர்த்தநேரம் வரை ஆனந்தக்கூத்தாடி, தண்டா அமைச்சர் படைத்தலைவர் தமக்கும் காட்டி அறிவித்தான் - நீங்காத மந்திரிகளுக்கும் படைத்தலைவர்களுக்கும் அதனைக் காண்பித்து நிகழ்ந்த செய்தியைத் தெரிவித்தான். விழித்தவுடன் கனவிற் கண்டவாறே தனது நெற்றியில் திருநீறு சாத்தப் பெற்றிருந்ததனாலும், உலவாக்கிழி கைவரப் பெற்றமையாலும் ‘கண்டகனவு நனவாக’ என்றார். சிவபெருமான் திருவடியைத் தனது முடிமேற் கொள்ளுமாறுபோல அவன் திருவருளாற் கிடைத்த கிழியையும் முடிமேற் கொண்டான் என்க. அமைச்சர் அரசனை நீங்கா ராகலின் ‘தண்டா வமைச்சர்’ என்றார்; "உழையிருந்தான்" என்று தெய்வப் புலவரகூறுதலுங் காண்க. (14) செங்க ணரிமான் பிடர்சுமந்த தெய்வ மணிப்பூந் தவிசேற்றிச் சங்க முழங்க மறைமுழங்கச் சாந்தந் திமிர்ந்து தாதொழுகத் தொங்க லணிந்து தசாங்கவிரைத் தூப நறுநெய்ச் சுடர்வளைத்துக் கங்கை மிலைந்த கடவுளெனக் கருதிப் பூசை வினைமுடித்தான். (இ - ள்.) செங்கண் அரிமான்பிடர் சுமந்த - சிவந்த கண்களை யுடைய சிங்கத்தின் பிடர் சுமந்த, தெய்வமணிப் பூந்தவிசு ஏற்றி - தெய்வத் தன்மை பொருந்திய மணிகளிழைத்த அழகிய ஆதனத்தில் ஏற்றி, சங்கம் முழங்க - சங்கங்கள் (ஒரு பால்) முழங்கவும், மறை முழங்க - வேதம் (ஒருபால்) ஒலிக்கவும், சாந்தம் திமிர்ந்து - சந்தனக் குழம்பைப் பூசி, தாது ஒழுகத் தொங்கல் அணிந்து - மகரந்தஞ் சிந்த மாலையைச் சூட்டி, தசாங்கம் விரைத்தூபம் நறுநெய்ச் சுடர் வளைத்து - தசாங்கத் தாலாகிய நறும் புகையினையும் நறுமணங் கமழும் நெய் விளக்கினையும் விளைத்து, கங்கை மிலைந்த கடவுளெனக் கருதி - கங்கையைத் தரித்த சோமசுந்தரக் கடவுளைப்போல அவ் வுலவாக்கிழியைக் கருதி, பூசைவினை முடித்தான் - பூசையாகிய தொழிலை முற்றுவித்தான். தசாங்கம் - சந்தனம் அகில் முதலிய பத்துவகைப் பொருள் கலந்தது; தசாங்க உபசார மென்றுரைப் பாருமுளர்; தசாங்க வுபசார மாவன : ஆவாகனம், தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், அவ குண்டனம், தேனுமுத்திரை, பாத்தியம், ஆசமனீயம், அருக்கியம், புட்பதானம் என்பன. (15) அடுத்து வணங்கி வலஞ்செய்திட் டம்பொற் கிழியைப் பொதிநீக்கி எடுத்து முததீ வினைஞர்க்கும் யாகங் களுக்கும் யாவர்க்கும் மடுத்து நாளும் வரையாது வழங்க வழங்க வடியார்க்குக் கொடுக்கக் குறையா வீட்டின்ப மாயிற் றையர் கொடுத்தகிழி. (இ - ள்.) அடுத்து வணங்கி வலஞ் செய்திட்டு - நெருங்கி வணங்கி வலஞ்செய்து, அம்பொன் கிழியைப் பொதி நீக்கி எடுத்து - அழகிய பொன் முடிப்பைக் கட்டவிழ்த்து எடுத்து, முத்தீவினைஞர்க்கும் யாகங்களுக்கும் யாவர்க்கும் மடுத்து நாளும் வரையாது வழங்க வழங்க - முத்தீயினை ஓம்பும் அந்தணர்கட்கும் வேள்விகளுக்கும் அனைவருக்கும் முகந்து நாள்தோறும் வரைவின்றிக் கொடுக்கக் கொடுக்க, ஐயர் கொடுத்த கிழி - சோம சுந்தரக்கடவுள் கொடுத்த அப் பொற்கிழியானது, அடியார்க்குக் கொடுக்கக் குறையா வீட்டு இன்பம் ஆயிற்று - அடியார்கட்குக் கொடுத்தலாற் குறைவுபடாத முத்தி யின்பம் போலாயிற்று. எடுத்து மடுத்து வழங்கவென்க. தீவினைஞர் - தீ வளர்த்தலாகிய தொழிலையுடையார். அடுக்கு பன்மைப் பொருட்டு. சிவபோகமாகிய வீட்டின்பமானது எல்லையற்ற பூரணமாகலின் எண்ணிறந்த அடியார்கள் நுகரினும் அது குறைவின்றியே யுள்ளதாகும். இன்பமாயிற்று - இன்பம் போல்வதாயிற்று. (16) ஆய பொதியில் விளைபொன்னா1 லசும்பு செய்து விசும்பிழிந்த கோயி லதனை யகம்புறமுங் குயின்று ஞானக் கொழுந்தனைய தாயி லறுகாற் பீடிகைவான் றடவு கொடிய நெடியபெரு வாயில் பிறவு மழகெறிப்ப வேய்ந்தான் மறையின் வரம்பறிந்தான். (இ - ள்.) ஆய பொதியில் விளை பொன்னால் - அந்த உலவாக் கிழியில் விளைந்த பொன்னினால், அசும்பு செய்து விசும்பு இழிந்த கோயில் அதனை - ஒளி வீசி விண்ணினின்று மிழிந்த இந்திர விமானத்தை, அகம் புறமும் குயின்று - உள்ளும் புறமும் இழைத்து, ஞானக்கொழுந்து அனைய தாய் இல் - ஞானக்கொழுந்துபோலும் அங்கயற்கண்ணம்மையின் திருக்கோயிலும், அறுகால் பீடிகை - அறு காற் பீடமும், வான் தடவு கொடிய நெடிய பெருவாயில் - விண்ணினைத் தடவுகின்ற கொடியையுடைய நீண்ட பெரிய கோபுர வாயிலும், பிறவும் - மற்றுள்ளனவும், அழகு எறிப்ப - அழகு வீச, மறையின் வரம்பு அறிந்தான் - வேதத்தின் எல்லையை அறிந்தவனாகிய குலபூடண பாண்டியன், வேய்ந்தான் - தகடு வேய்ந்தான். ஆய - ஆகிய; அத்தன்மையுடைய. அசும்பு - ஒளியின் கசிவு. கொடிய : பொருட் பெயரடியாக வந்த குறிப்புப் பெயரெச்சம். வாயில் : இலக்கணப்போலி. (17) முந்திக் குறையா நிதிக்கடலை முகந்து முகந்து நாடோறுஞ் சிந்திக் குலபூ டணக்கொண்ட றெய்வ தருமப் பயிர்வளர்ப்பப் பந்தித் திரைமுந் நீர்மேகம் பருகிச் சொரியப் பல்வளனும் நந்திக் கன்னி நாடளகை நகர்போற் செல்வந் தழைத்தன்றே. (இ - ள்.) குலபூடணக் கொண்டல் - குலபூடண வழுதி என்னும் முகிலானது, முந்தி - முற்பட்டு, குறையா நிதிக்கடலை முகந்து முகந்து - குறையாத நிதியாகிய கடலினை மொண்டு மொண்டு, நாள்தோறும் சிந்தி தெய்வ தருமப்பயிர் வளர்ப்ப - நாள்தோறும் பொழிந்து தெய்வத் தன்மை பொருந்திய தருமமாகிய பயிரை வளர்க்க, மேகம் - முகில்கள், பந்தித்திரை முந்நீர் பருகிச் சொரிய - வரிசையாய் வரும் அலைகளையுடைய கடல்நீரைக் குடித்து மழையினைப் பொழிய, பல்வளனும் நந்தி - பல வளங்களும் மிகுந்து. கன்னிநாடு - பாண்டி நாடானது, அளகை நகர்போல் செல்வம் தழைத்தன்று - அளகாபுரியைப்போலச் செல்வந் தழைத்தது. குலபூடணன் அளவின்றி அறத்தினை வளர்க்கவே பின்பு மேகமும் மழை பொழிந்தது; நாடும் தழைத்தது என்க. அடுக்கு மிகுதிப் பொருட்டு. தெய்வதருமம் - சிவபுண்ணியம் என்றுமாம். அளகைநகர் நிதியின் கிழவனாகிய குபேரனுடையது ஆகலின் குறையாத செல்வ முடையதாம். தழைத்தன்று - தழைத்தது; அன் : சாரியை. நாடு செல்வம் தழைத்தது என இடத்து நிகழ் பொருளின்றொழில் இடத்தின் மேல் நின்றது. முன்னிரண்டடியும் உருவகம். (18) [எழுசீரடியாசிரிய விருத்தம்] வையா கரணர்க ணையா யிகர்மறை வல்லோர் மறைமுடி சொல்லாய்வோர் மெய்யா மிருதிகள் பொய்யா விரதிகள் வேள்வித் தழல்களை வாழ்விப்போர் பையா டரவணி யையா னனனுரை பகர்வோ ருலகிய லகல்வோர்கள் எய்யா துறைதலி னையா தளகைய தென்னப் பொலிவது தென்னாடு. (இ - ள்.) வையாகரணர்கள் - வியாகரண பண்டிதர்களும், நையாயிகர் - நியாயநூற் புலவர்களும, மறை வல்லோர் - வேத முணர்ந்தவர்களும், மறைமுடி சொல் ஆய்வோர் - உபநிடதம் கூறுவதனை ஆராய்வோரும், பொய்யாம் மிருதிகள் - உண்மையாகிய மிருதிநூல் கற்றவர்களும், பொய்யா விரதிகள் - பொய்யா நோன்பினர்களும் - வேள்வித்தழல்களை வாழ்விப்போர் - வேள்வித்தீக்களை ஓம்புவோர்களும், பை ஆடு அரவு அணி ஐ ஆனனன் உரை பகர்வோர் - படம் விரித்து ஆடுகின்ற பாம்பினை அணிந்த ஐந்து முகங்களை உடையனாகிய சிவபெருமானது உரையாகிய ஆகமங்களைப் போதிப்பவர்களும், உலகு அயல் அகல்வோர்கள் - உலகியலினின்றும் நீங்கியவர்களும், எய்யாது உறைதலின் - வறுமையால் வருந்தாது வசிப்பதனால், தென்னாடு நையாத அளகையது என்னப் பொலிவது - பாண்டிநாடானது வறுமையால் வருந்தாத அளகையைப்போல விளங்காநின்றது. வையாகரணர், நையாயிகர் என்பன வடமொழித் தத்திதாந்தங்கள், வியாகரணம் - இலக்கணம். நியாயம் - ஆறு தரிசனங்களில் ஒன்று; அக்கபாதர் என்னும் முனிவரால் உரைக்கப்பட்டது. சொல் : முதனிலைத் தொழிற்பெயர். மறை முடிசொல் என்பதற்கு வேதத்தின் முடிந்த பொருளையுணர்த்தும் மாவாக்கியம் என்றுரைத்தலுமாம். மிருதிகள் - மிருதியைக் கற்றவர்கள்; வினைமுதற் பொருளுணர்த்தும் விகுதி புணர்ந்து கெட்டது. பொய்யா - பயன் பொய்த்தலில்லாத. இன்னோரெல்லாம் வருந்தாது உறையச் செல்வம் மிக்கிருத்தலால் அளகை யென்னப் பொலிவ தென்க. நையாத என்னும் பெயரெச்சத்து அகரந் தொக்கது. அளகையது, அது : பகுதிப்பொருள் விகுதி. (19) ஆகச் செய்யுள் 1723. முப்பத்திரண்டாவது வளையல் விற்ற படலம் [அறுசீரடியாசிரிய விருத்தம்] வேதந் தனது வடிவென்று விண்ணின் றிழிந்த விமானமறைக் கீதன் செழியன் றனக்குலவாக் கிழிதந் தளித்த வழியிதுவப் போதங் கடந்த பொருள்வணிகப் புத்தேண் மாட மணிமறுகு பாதந் தடவ நடந்துவளை பகர்ந்த பரிசு பகர்கிற்பாம். (இ - ள்.) வேதம் தனது வடிவு என்று - மறையே தனது திரு வுருவம் என்று கூறியருளி, விண் நின்று இழிந்த விமானம் மறைக்கீதன் - வானினின்றும் இறங்கிய விமானத்தின்கண் வீற்றிருக்கும் வேதகீதனாகிய சோமசுந்தரக்கடவுள், செழியன் தனக்கு உலவாக்கிழி தந்தளித்த வழி இது - பாண்டியனுக்கு உலவாக்கிழி தந்தருளிய திருவிளையாடல் இதுவாகும்; அப் போதம் கடந்த பொருள் - (இனி) சுட்டறிவினைக் கடந்த அவ்விறைவன், புத்தேள் வணிகன் - தெய்வத்தன்மையையுடைய வணிகனாய், மாடம் மணி மறுகு பாதம் தடவ நடந்து - மாடங்கள் நிறைந்த அழகிய வீதியிலே திருவடிகள் தோய நடந்தருளி, வளை பகர்ந்த பரிசு பகர்கிற்பாம் - வளையல் விற்ற திருவிளையாடலைக் கூறுவாம். ‘வேதந் தனது வடிவென்று’ என்றது மேற்படலத்தில் ‘மறையே நமது வடிவாகும்’ என்றதைச் சுட்டிற்று; வேதமே தனது வடிவ மென்று இழிந்த என விமானத்திற்கு அடையாக்கி யுரைத்தலுமாம். வணிகரது தெய்வத் தன்மையுடைய மறுகில் என்றுரைத்தலும் பொருந்தும். போதங் கடந்த பொருள் பாதந் தடவ நடந்து என அருமையும் எளிமையும் தோன்றக் கூறினார். (1) இறைவன் குலபூ டணன்றிகிரி யிவ்வா றுருட்டு நாண்முன்னாட் சிறைவண் டறையுந் தாருவன தெய்வ முனிவர் பன்னியர்தந் நிறையன் றளந்து1 காட்டுகென நெடியோன் மகனைப் பொடியாக்கும் அறவன் றானோர் காபாலி யாகிப் பலிக்கு வருகின்றான். (இ - ள்.) இறைவன் குலபூடணன் திகிரி இவ்வாறு உருட்டுநாள் - மன்னனாகிய குலபூடணன் தனது ஆணையாகிய திகிரியை இங்ஙனம் செலுத்தும்பொழுது, முன்னாள் - முன்னொரு காலத்தில், சிறைவண்டு அறையும் தாருவன தெய்வமுனிவர் பன்னியர்தம் - சிறைகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் தாருகவனத்துத் தெய்வத்தன்மை பொருந்திய முனிபத்தினிகளின், நிறை - கற்பினை, அளந்து காட்டுகு என- அளந்து காட்டுவேனென்று, நெடியோன் மகனைப் பொடி ஆக்கும் அறவன் - திருமாலின் புதல்வனாகிய மதவேளைப் பொடியாக்கிய அறவடிவினனாகிய இறைவன், அன்று தான் ஓர் காபாலி ஆகிப் பலிக்கு வருகின்றான் - அப்பொழுது தான் ஒரு தலைக்யோட்டை ஏந்தினவனாய்ப் பலிக்கு வருவானாயினான். இவ்வாறுருட்டுநாள் என்றது பின்சென்று இயையும். தாருகவனம் என்பது விகாரமாயிற்று. பன்னி - பத்தினி. காட்டுகு - காட்டுவேன்; கு : தன்மை யொருமை முற்றுவிகுதி. மறவன் எனப் பிரித்து, வீரத்தை யுடையான் என்றுரைத்தலுமாம். காபாலி - கபாலத்தையுடையவன்; தத்திதாந்தம். தம் : சாரியை. தான் : அசை. (2) வேத மசைக்குங் கோவணமு மெய்யி னீறு முள்ளாளக் கீத மிசைக்குங் கனிவாயு முள்ளே நகையுங் கிண்கிணிசூழ் பாத மலரும் பாதுகையும் பலிகொள் கலனுங் கொண்டிரதி மாதர் கணவன்1 றவவேட மெடுத்தா லொத்து வருமெல்லை. (இ - ள்.) அசைக்கும் வேத கோவணமும் - கட்டிய வேதமாகிய கோவணமும், மெய்யில் நீறும் - திருமேனியிலே திருநீறும், உள்ளாளக் கீதம் இசைக்கும் கனிவாயும் - உள்ளாளமாகிய கீதத் தினைப் பாடும் கொவ் வைக்கனிபோன்ற வாயும், உள்ளே நகையும்- உள்ளே அரும்பிய புன் முறுவலும், கிண்கிணிசூழ் பாதமலரும் - கிண்கிணி சூழ்ந்த திருவடித் தாமரையும், பாதுகையும் - திருவடியிற் றரித்த பாதுகையும், பலி கொள் கலனும் கொண்டு - பலியேற்கும் கலனுமாகிய இவற்றைக் கொண்டு, இரதி மாதர் கணவன் தவவேடம் எடுத்தால் ஒத்து வரும் எல்லை - அழகிய இரதியின் நாயகனாகிய மதவேள் தவவேடம் எடுத்து வந்தாற்போன்று வரும் பொழுது. உள்ளாளம் - காற்றினை உள்வாங்கிப் பாடும் பாட்டு; இது பதினொருவகைப்படும்; " உள்ளாளம் விந்துவுட னாத மொலியுருட்டுத் தள்ளாத தூக்கெடுத்த றான்படுத்தல் - மெள்ளக் கருதி நலிதல்கம் பித்தல் குடிலம் ஒருபதின்மே லொன்றென் றுரை" " கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா பண்ணளவும் வாய்தோன்றா பற்றெரியா - எண்ணிலவை கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்தருவர் உள்ளாளப் பாட லுணர்" என்னும் இசை மரபுச் செய்யுட்களால் உள்ளாளத்தின் வகையும் இயல்பும் உணர்க. கொண்டு - உடையவனாய். காமக் குறிப்புத் தோற்றும் பேரழகும் தவவேடமும் உடையனாய் வருதலின் ‘இரதி மாதர் கணவன் றவவேட மெடுத்தாலொத்து’ என்றார். (3) விள்ளுங் கமலச் சேவடிசூழ் சிலம்பி னொலியு மிடறதிரத் துள்ளுங் கீத வொலியுங்கைத் துடியி னொலியுஞ் செவித்துளைகீண் டுள்ளம் பிளந்து நிறைகளைந்தீர்த் தொல்லை வருமுன் வல்லியர்கள் பள்ளங் கண்டு வருபுனல்போற் பலிகொண் டில்லின் றம்போந்தார். (இ - ள்.) விள்ளும் கமலச் சேவடிசூழ் சிலம்பின் ஒலியும் - மலர்ந்த தாமரை மலர்போன்ற சிவந்த திருவடியிற் சூழ்ந்த சிலம்பின் ஒலியும், மிடறு அதிரத் துள்ளும் கீதவொலியும் - திருமிடறானது துடிக்கத் துள்ளுகின்ற கீத ஒலியும், கைத்துடியின் ஒலியும் - திருக்கரத்திலேந்திய உடுக்கையின் ஒலியும், செவித்துளை கீண்டு - செவியின் துளையைக் கிழித்து, உள்ளம் பிளந்து - மனத்தை ஊடறுத்து, நிறை களைந்து ஈர்த்து ஒல்லை வருமுன் - நிறையினைப் போக்கி இழுத்து விரைய வருதற்கு முன்னரே, வல்லியர்கள் - அம்முனி பன்னியர்கள், பள்ளம் கண்டு வருபுனல்போல் - பள்ளத்தைக் கண்டு வருகின்ற நீரைப் போல, பலிகொண்டு இல்லின் புறம் போந்தார் - பலியினைக் கொண்டு மனையின் புறத்தே வந்தார்கள். செவித் துளையில் மண்டிச் சென்றதனை ‘செவித்துளை கீண்டு’ என்றும், உள்ளத்தை வெளி செய்ததனை ’ உள்ளம் பிளந்து’ என்றும் கூறினார். இவ் வொலிகள் செவி வழியே உள்ளம் புகுமுன் வல்லியர் நிறையினை யிழந்து விரைந்து பலிகொண்டு புறம் போந்தார் என்பது கருத்தாகக் கொள்க. தடுமாற்ற முற்று விரைந்து வருதலின் ‘பள்ளங் கண்டு வருபுனல் போல்’ என்றார். (4) [மேற்படி வேறு] ஐயங்கொண் டணைவா ரையர் பரிகலத் தைய மன்றிக் கையம்பொன் வளையும் பெய்வார் கருத்துநா ணன்றிக் காசு செய்யும்பொன் மருங்கு னாணு மிழப்பர்வேள் சிலையம் பன்றிக் கொய்யுந்தண் மலர்க்க ணம்புங் கொங்கையிற் சொரியச் சோர்வார். (இ - ள்.) ஐயம் பொண்டு அணைவார் - அங்ஙனம் பலிகொண்டு வருபவராகிய அம்முனி பன்னியர், ஐயர் பரிகலத்து ஐயம் அன்றி - இறைவனது பலி ஏற்குங் கலத்தின்கண் அப்பலியை யன்றி, கை அம் பொன் வளையும் பெய்வார் - கையிலணிந்த அழகிய பொன்னாலாகிய வளையலையும் சொரிவார்கள்; கருத்து நாண் அன்றி - மனத்தின்கண் உள்ள நாணினை அன்றி, காசு செய்யும் பொன் மருங்குல நானும் நாணினை அன்றி, இழப்பர் - மணிகள் அழுத்திய பொன்னாலாகிய இடை நாணையு மிழப் பார்கள்; வேள்சிலை அம்பு அன்றி - மன்மதனது வில்லிலிருந்து வரும் கணைகளன்றி, கொய்யும் தண் மலர்க்கண் அம்பும் - கொய்யப் பெறுகின்ற தண்ணிய மலர்போன்ற கண்களினின்றும் வரும் அம்பும், கொங்கையில் செ'a3'a3'a4யச் சோர்வார் - தம் கொங்கைகளிற் சிந்த நிலை தளர்வார்கள். கருத்து நாண் - மகளிர் நாற்குணத்து ளொன்றாகிய நாண். மருங்குல் நாண் - மேகலை. சிலையம்பு - கருப்பு வில்லி லேறிட்ட மலர்க்கணை, கண்ணம்பு - கண்ணீர். வேட்கை நோயால் உடல் மெலிந்தமையால் வளைகளும் மேகலையும் கழன்றன. விரகவேதனை பொறுக்கலாற்றாது கண்ணீர் சொரிந்து சோர்ந்தனர். இதனால் மெலிதலும் நாணுவரை யிழத்தலும், மயக்கமும் கூறினார். (5) மடமயி லனையா ரெங்கள் வளையினைத் தருதி ரென்றார் கடல்விட மயின்றா னுங்கள் கந்தரத் துள்ள தென்றான் தடமதிக் கொம்ப னாரெங் கலையினைத் தருதி ரென்றார் முடமதி மிலைந்தா னுங்கண் முகமதி யிடத்த தென்றான். (இ - ள்.) மடமயில் அனையார் - இளமையாகிய மயிலை யொத்த அம்மகளிர், எங்கள் வளையினைத் தருதிர் என்றார் - எங்கள் வளையைத் தாரும் என்று கேட்டனர்; கடல் விடம் அயின்றான் - கடலிற்றோன்றிய நஞ்சினையுண்ட நாயகன், உங்கள் கந்தரத்து உள்ளது என்றான் - (அது) உங்கள் கழுத்தில் உள்ளது என்று விடையிறுத்தான்; தடம் மதிக் கொம்பு அன்னார் - நிறைந்த மதியினையுடைய பூங்கொம்புபோன்ற அம்மாதரார், எம் கலையினைத் தருதிர் என்றார் - எமது கலையைக் கொடுத்து விடுமென்று கேட்டனர்; முடம்மதி மிலைந்தான் - வளைவாகிய பிறையை யணிந்த பெருமான். நுங்கள் முகமதி இடத்தது என்றான் - (அது) உங்கள் முகமாகிய சந்திரனிடத்துள்ளது என்று விடையிறுத்தான். வளை என்பது வளையலுக்கும் சங்கிற்கும், கலை என்பது மேகலைக்கும் சந்திரகலைக்கும் சிலேடை. மகளிர் கழுத்துச் சங்குபோல்வ தாகலின் ‘உங்கள் கந்தரத்துள்ளது’ என்றானென்க. தடமதிக் கொம்பனார் என்றது இல்பொருளுவமை. கலை : முதற்குறை. ஆடை யென்றுமாம். நீர் வவ்விய எம் வளையையும் கலையையும் தருவீராக என்று மகளிர் தம் காமவேட்கை புல படக் கூறாநிற்க, அவ்வேட்கை சிறிதும் பற்றப் பெறாதவனாகிய இறைவன் அவர் கூறியவற்றுக்கு வேறு பொருள் கற்பித்துக் கொண்டு, வளையும் கலையும் நும்மிடத்தவே யாகவும் நீர் எம்மை வினாவுவ தென்னையென நகையாடினன். காமக் குறிப்பிலனாய இறைவன் அக்குறிப்புடையான் போன்று நடித்தன னென்க. (6) இடையறிந் தெம்மைச் சேர்மி னென்றன ரிளைய ரெங்கோன் கடலமு தனையீர் நுங்கட் கிடையினிக் காணா தென்றான் மடநலா ரஃதேற் பண்டை வண்ணமீந் தில்லிற் செல்ல விடையளித் தருண்மி னென்றார் வேலைபுக் குறங்கு மென்றான். (இ - ள்.) இளையர் - அம்மங்கையர், இடை அறிந்து எம்மைச் சேர்மின் என்றனர் - செவ்வி யறிந்து எம்மைச் சேரும் என்று வேண்டினர்; எம் கோன் - எம் பெருமான், கடல் அமுது அனையீர் - கடலிற் றோன்றிய அமுதத்தை ஒத்த பெண்களே, நுங்கட்கு இனி இடை காணாது என்றான் - உங்களுக்கு இனி இடைகாணப்பெறாது என்று கூறினன்; மடநலார் - மடப்பத்தையுடைய அம் மகளிர், அஃதேல் பண்டை வண்ணம் ஈந்து - அங்ஙனமாயின் எமது முன்னை நிறத்தைக் கொடுத்து, இல்லில் செல்ல விடை அளித் தருண்மின் என்றார் - எங்கள் வீட்டிற் செல்ல விடை கொடுத்தருளும் என்று வேண்டினர்; வேலை புக்கு உறங்கும் என்றான் - (அவன் அது) கடலிற் சென்று தூங்கும் என்று கூறினான். இடை என்பது சமயத்திற்கும் மருங்குலுக்கும், விடை என்பது உத்தரவிற்கும் இடபத்திற்கும் சிலேடை. இடை சமயம் என்னும் பொருளாதலை "உடையோர்போல இடையின்று குறுகி" என்பத னாலறிக. காணாது - காணப்படாது. மடம் - மகளிர் நாற்குணத்துளொன்று. நல்லார் என்பதுதொக்கது. இப்பொழுது நிறம் பசந்து வேறுபட்டிருத்தலின் ‘பண்டை வண்ண மீந்து’ என்றார். கூடினாலன்றிப் பண்டை வண்ணம் எய்துமாறின்மையின், அதனையே வேறோராற்றாற் கூறினாராயிற்று. வண்ணம் -தன்மை யென்றுமாம். இறைவர்க்கு ஊர்தியாகிய விடை திருமால் ஆகலின் ‘வேலைபுக் குறங்கும்’ என்றனன். கடலமுதனையீர் என்றது நயப்புத் தோன்றக் கூறியது. (7) நங்கையர் கபாலிக் கென்று நடுவிலை போலு மென்றார் அங்கண னடுவி லாமை நும்மனோர்க் கடுத்த தென்றான் மங்கைய ரடிக ணெஞ்சம் வலியகற் போலு மென்றார் கொங்கலர் கொன்றை யானுங் கொங்கையே வன்க லென்றான். (இ - ள்.) நங்கையர் - அம்மகளிர், கபாலிக்கு என்றும் நடு இலை போலும் என்றார் - இக்காபாலிக்கு எப்பொழுதும் நடுவில்லைபோலும் என்றனர்; அங்கணன் - இறைவன், நடு இலாமை நும் அன்னோர்க்கு அடுத்தது என்றான் - நடுவில்லாமை நும்மைப்போல்வார்க்கே பொருந்தியது என்றனன்; மங்கையர் - அப்பெண்கள், அடிகள் நெஞ்சம்வலிய கல்போலும் என்றார் - அடிகளின் நெஞ்சமானது வலிய கல்லை யொக்கும் என்று கூறினார்; கொங்கு அலர் கொன்றையான் - மகரந்தத்தோடு மலர்ந்த கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான், நும் கொங்கையே வன்கல் என்றான் - நுங்கள் கொங்கையே வலிய கல்லாகும் என்று கூறினன். நடு என்பது நடுவு நிலைமைக்கும் இடைக்கும் சிலேடை. நடுவுடைய ராயின் பிறர் துன்பத்தைத் தம்மையுற்ற துன்பம்போற் கருதி நீக்க லுறுவர்; இவன் அங்ஙனஞ் செய்யாமையின் நடுவினாவன் என்று மகளிர் கூற, நடு என்பதற்கு மருங்குல் என்று பொருள் கொண்டு நடுவிலாமை நும்மனோர்க்கே அடுத்ததென்று இறைவன் கூறினன். இடை இல்லை யென்னுமாறு நுண்ணிதாதல் குறித்து ‘நடுவிலாமை’ என்றார். ‘கற்போலும்’ என்றதில் போலும் ஒப்பில் போலியுமாம். வன்கல் - மலை, கொங்கைக்கு மலை உவமமாகலின் ‘கொங்கையே வன்கல்’ என்றனனென்க. (8) காதுவே லன்ன கண்ணார் கங்கைநீர் சுமந்த தேதுக் கோதுமி னென்றா நும்பா லுண்பலி யேற்க வென்றான் ஏதுபோ லிருந்த தைய னிசைத்தசெப் பென்றா ரீசன் கோதுறா வமுதன் னீர்நுங் கொங்கைபோ லிருந்த தென்றான். (இ - ள்.) காதுவேல் அன்ன கண்ணார் - கொலைபுரியும் வேலினை ஒத்த கண்களையுடைய அம் மகளிர், கங்கை நீர் சுமந்தது ஏதுக்கு ஓதுமின் என்றார் - நீர் கங்கை தாங்கியது எதன் பொருட்டு என்று வினவினர்; நும்பால் உண் பலி ஏற்க என்றான் - (இறைவன்) அது நும்மிடத்து உண்ணும் பலியை ஏற்பதற்கு என்று விடை யிறுத்தான்; ஐயன் இசைத்த செப்பு ஏது போலிருந்தது எனறார் இவ்வையன் உரைத்த செப்பு யாது போலிருந்தது என்று கூறினர்; ஈசன் - இறைவன், கோது உறா அமுது அன்னீர் - குற்றமில்லாத அமுதம் போன்றவர்களே, நும் கொங்கைபோல் இருந்தது என்றான் - (அது) நுமது கொங்கை போல இருந்ததென்று கூறினன். கங்கை, செப்பு என்பன சிலேடைப் பொருளன. கங்கை நீர் சுமந்தது - நீர் கங்கையாற்றைத் தரித்தது, நீர் கையிலே பிரம கபாலத்தை ஏந்தியது; கம் - தலை. செப்பு - விடை, கிண்ணம். நீர் கங்கை யாற்றினைத் தரித்திருந்தும் தண்ணளியுடையீரல்லீர் என்பது தோன்ற ‘கங்கை நீர் சுமந்த தேதுக்கு’ என மங்கையர் கூறினர். தம் வினாவிற்கு ஏற்ற விடையன் றென்பார் ‘ஏதுபோலிருந்ததைய னிசைத்த செப்பு’ என்றனர். (9) கறுத்ததை யெவன்கொ லைய கந்தர மென்றார் வேளை வெறுத்தவன் மாரி பெய்தற் கென்றனன் விழியால் வேலை ஒறுத்தவர் யாவ தென்றீ ருத்தர மென்றார் கூற்றைச் செறுத்தவன் றென்பா னின்று நோக்கினாற் றெரிவ தென்றான். (இ - ள்.) ஐய - ஐயனே, கந்தரம் கறுத்தது எவன் கொல் என்றார் - கந்தரம் கறுத்தது யாது காரணம் என்று மங்கையர் வினவினர்; வேளை வெறுத்தவன் - மன்மதனை யெரித்த பெருமான், மாரி பெய்தற்கு என்றனன் - மழை பெய்தற்கு என்று விடை யிறுத்தான்; விழியால் வேலை ஒறுத்தவர் - கண்களால் வேற்படையை வென்ற அம்மகளிர், உத்தரம் யாவது என்றீர் என்றார் - உத்தரம் எதுவென்று கூறினீர் என்றனர்; கூற்றைச் செறுத்தவன் - காலனை உதைத்த இறைவன், தென்பால் நின்று நோக்கினால் தெரிவது என்றான் - (அது) தெற்கே நின்று எதிர் முகமாக நோக்கின் தெரியப் பெறுவது என்று கூறினன். கந்தரம் மிடற்றுக்கும் மேகத்திற்கும், உத்தரம் விடைக்கும் வடக்கிற்கும் சிலேடை.. இவற்றை முறையே மிடறு விடை என்னும் பொருள்களில் வைத்து மகளிர் வினவ, இறைவன் இவற்றுக்கு மேகம் வடக்கு எனப் பொருள் கொண்டு விடையிறுத்தனன். கறுத்ததை, ஐ : சாரியை. கொல் : அசை. (10) செக்கரஞ் சடையான் கண்ணிற் றம்முருத் தெரிய நோக்கி இக்கொடி யார்போற் கண்ணு ளெம்மையு மிருத்தி ரென்றார் நக்கனுந் தனையன் னார்கண் ணிடைக்கண்டு நகைத்து நம்மின் மிக்கவர் நுங்க ணுள்ளார் விழித்தவர்க் காண்மி னென்றான். (இ - ள்.) செக்கர் அம் சடையான் கண்ணில் - (அம்மகளிர்) சிவந்த அழகிய சடையையுடைய இறைவன் கண்களில், தம் உருத் தெரிய நோக்கி - தங்கள் வடிவம் புலப்பட நோக்கி, இக்கொடியார் போல் - இந்தக் கொடிபோன்ற மகளிரைப்போல, கண்ணுள் எம்மையும் இருத்திர் என்றார் - நும் விழியுள் எம்மையும் வைத்துக்கொள்ளும் என்று வேண்டினர்; நக்கனும்- இறைவனும், தனை அன்னார் கண் இடைக்கண்டு - தன்னை அப்பெண்களின் விழியுட் கண்டு, நகைத்து- சிரித்து, நம்மின் மிக்கவர் நும்கண் உள்ளார் - நம்மைப்போல் அழகில் மிக்கார் நும் கண்களில் உள்ளார், விழித்து அவர்க் காண்மின் என்றான்- செவ்வனே விழித்து அவரைப் பாருங்கள் என்று கூறினன். தமக்கு மாறாக இருக்கின்றனர் என்னுங் கருத்தால் கொடுமை யுடையார் என்னும் பொருள் தோன்றவும் ‘கொடியார்’ என்றார். இருத்திர் - இருத்துவீர். நும் கண்ணுளே பிறரை வைத்துக் கொண்டிருக்கும் நீவிர் எம்மை இங்ஙனம் வேண்டுவதென்னென்று இறைவன் நகைத்தனன். இவற்றால் ஒருவரை யொருவர் பருகுவார்போல் நோக்கினமை புலனாம். இறைவன் காம மயக்கமின்றியே விளையாடுகின்றானாகலின் நகைத்தனன் என்க. நம்மைக் காட்டினும் மிக்கவர் என்று பொருள் கொண்டு, நீர் பிறரைக் கண்ணுள் வைத்திருப்பது நம்மினும் மிக்காரென்னுங் கருத்தாலாம் என்பது தோன்றக் கூறினானென்னலுமாம். கண்ணுள் இருப்பவரை விழித்துக் காண்மின் என்றது நகைச்சுவையுடைத்து. "கண்ணுளார் நுங்காதலர்" என்னும் சிந்தாமணிச் செய்யுள் இங்கு நினைக்கற்பாலது. (11) அஞ்சலிப் போது பெய்வார் சரணமென் றடியில் வீழ்வார் தஞ்செனத் தளிர்க்கை நீட்டித் தழுவிய கிடைக்குந் தோறும் எஞ்சுவா னெஞ்சா தேத்தி யெதிர்மறை யெட்டுந் தோறும் வஞ்சனா யகல்வான் மையல் வஞ்சியர்க் கணிய னாமோ. (இ - ள்.) அஞ்சலிப் போது பெய்வார் - (அம் மகளிர்) அஞ்சலியாகிய மலரைச் சொரிவாராய், சரணம் என்று அடியில் வீழ்வார் - அடைக்கல மென்று திருவடியில் வீழ்ந்து, தஞ்சம் எனத் தளிர்க்கை நீட்டி- பின்பு நீரே துணை என்று தளிர் போன்ற கைகளை நீட்டி, தழுவிய கிடைக்குந் தோறும் -தழுவ நெருங்குந்தோறும், எஞ்சுவான் அப்பாற் படுவானாயினன், எஞ்சாது ஏத்தி எதிர்மறை எட்டுந்தோறும் வஞ்சனாய் அகல்வான் - சலிக்காது துதித்து எதிர்கின்ற வேதங்கள் எட்டுந்தோறும் வஞ்சனாய் அகப்படாது நீங்கும் பெருமான், மையல் வஞ்சியர்க்கு அணியன் ஆமோ - காம மயக்கத்தையுடைய பெண்களுக்கு அண்மையனாவானோ? மலர் போன்ற கைகளைச் சென்னியிற் கூப்பி வணங்கினவர்கள் அங்ஙனம் கூப்பியவாறே அடியில் வீழ்வதனை அஞ்சலப்போது பெய்வார் வீழ்வார் என்றனர். குவித்த கையிலுள்ள மலரைச் சொரிந் தென்றுமாம். பெய்வார், வீழ்வார் என்பன முற்றெச்சங்கள். தஞ்சம் - பற்றுக்கோடு; ஈறு தொக்கது. தழுவிய : செய்யின் வென்னும் வினையெச்சம். எஞ்சுவான் - கடப்பான் என்னும் பொருள் குறித்தது. ‘இரக்குவாரேன் எஞ்சிக்கூறேன்’ எனப் பதிற்றுப்பத்திலும் இப் பொருளில் வந்துள்ளமை காண்க. நேர் நின்று துதித்து எட்டுந் தோறும் அகப்படா தொழிதலின் ‘வஞ்சனா யகல்வான்’ என்றார். ஓகாரம் எதிர்மறை. இது வேற்றுப் பொருள் வைப்பின்பாற்படும் (12) அடுத்தெமைத் தழாதி ரேனீ ரவிழ்த்தபூங் கலையை மீள உடுத்துமி னும்பால் யாங்கண் மையனோ யுழப்ப நோக்கிக் கடுத்தெமர் முனியா முன்னங் கழற்றிய வளையுங் கையில் எடுத்திடு மென்றார் நாளை யிடுதுமென் றேகினானே. (இ - ள்.) நீர் எமை அடுத்துத் தழாதிரேல் - நீர் எம்மை நெருங்கித் தழுவாது போவீராயின், அவிழ்த்த பூங்கலையை மீள உடுத்துமின் - அவிழ்த்த அழகிய கலையை யேனும் மீள உடுத்தும்; நும்பால் யாங்கள் மையல் நோய் உழப்ப - நும்மிடத்து யாங்கள் கொண்ட காம மயக்கத்தாலே துன்பமுற, எமர் நோக்கிக் கடுத்து முனியா முன்னம் - எம் கணவர் அதனை நோக்கி எங்களைச் சினந்து வெறுக்கா முன், கழற்றிய வளையும் கையில் எடுத்து இடும் என்றார் - கழற்றிய வளையும் எடுத்துக் கையில் இடும் என்று வேண்டினர்; நாளை இடுதும் என்று ஏகினான் - நாளை வந்து இடுவோம் என்று சென்றனன். தழுவாதிர் என்பது தழாதிர் என்றாயிற்று. கடுத்து என்பதற்கு விரைந்து என்றும், மிக்கு என்றும் பொருள் கூறலுமாம். கலை அவிழ்தலும் வளை கழலுதலும் அவர் காரணமாக நிகழ்ந்தமையின், நீர் அவிழ்த்த கலை என்றும் கழற்றிய வளை என்றும் கூறினர். அத்துணைப் பரிச வின்பேனும் நுகருங் கருத்தால் இங்ஙனம் வேண்டினர். மறுபிறப்பில் அவர்கட்கு வளையிடுதல் குறித்து நாளை யிடுதுமென்றேகினான் என்க. தாருக வானத்து முனிவர்கள் சிவ வழிபாட்டைக் கைவிட்டு வேள்வியே பொருளெனக் கொண் டிறு மாந்திறுக்க, அவர் மனைவியரும் கற்பிலே தமக்கு நிகராவார் யாருமிலரெனச் செருக்குற்றிருந்தனர்; அன்னாரின் தருக்கை யொழிக்கும் பொருட்டுச் சிவபெருமான் பிச்சைப் பெருமானாகப் போந்து முனிபன்னியர் கற்பினின்றும் நெகிழுமாறு செய்தனர் என்பது புராண வரலாறு. (13) பிள்ளைவெண் டிங்கள் வேய்ந்த பிரான்கொண்டு போன நாணும் உள்ளமு மீட்க லாற்றா துயங்கினார் கலையுஞ் சங்குந் துள்ளவைங் கணையான் வாளி துளைப்பவெம் பசலை யாகங் கொள்ளைகொண் டுண்ண நின்றா ரந்நிலை கொழுநர் கண்டார். (இ - ள்.) பிள்ளை வெண் திங்கள் வேய்ந்த பிரான் கொண்டு போன - வெள்ளிய இளமதியை அணிந்த இறைவன் கொண்டுபோன, நாணும் உள்ளமும் மீட்கலாற்றாது உயங்கினார் - நாணினையும் மனத்தையும் மீட்கமுடியாமல் அம்மகளிர் வாட்டமுற்று, கலையும் சங்கும்துள்ள - ஆடையும் வளையும் சரியவும், ஐங்கணையான் வாளி துளைப்ப - பஞ்சபாணனுடைய கணைகள் உடலைத் துளைக்கவும், வெம்பசலை ஆகம் கொள்ளை கொண்டு உண்ண- காம விருப்பாலாகிய நிற வேறுபாடு உடம்பு முழுதையும் கவர்ந்து படரவும், நின்றார் - நின்றனர்; அந்நிலை - அங்ஙனம் நின்ற நிலைமையை, கொழுநர் கண்டார் - அவர்கள் கணவராகிய தாருகவன முனிவர்கள் கண்டனர். உயங்கினார் : முற்றெச்சம். கலை - மேகலையுமாம். துள்ள - சரிய என்னும் பொருட்டு. ஐங்கணையான் : காமன்; பெயர். வெம்மை - விருப்பம்; கொடுமையுமாம். உடல் முழுதும் போர்த்து வருத்துதலை ‘ஆகங்கொள்ளை கொண் டுண்ண’ என்றார். (14) பொய்தவ வடிவாய் வந்து நம்மனைப் பொன்னி னன்னார் மெய்தழை கற்பை நாணை வேரொடுங் களைந்து போன கைதவன் மாடக் கூடற் கடவுளென் றெண்ணித் தேர்ந்தார் செய்தவ வலியாற் கால மூன்றையுந் தெரிய வல்லார். (இ - ள்.) செய்தவ வலியால் காலம் மூன்றையும் தெரிய வல்லார் - செய்கின்ற தவத்தின் வன்மையால் முக்கால நிகழ்ச்சிகளையும் அறிய வல்ல அத்தாருகவன முனிவர், பொய்தவ வடிவாய் வந்து - பொய்த்த தவவேடத்துடன் வந்து, நம்மனைப் பொன்னின் அன்னார் - நமது மனையிலுள்ள திருமகள்போலும் மனைவியரின், மெய்தழைக் கற்பை நாணை - உண்மை மிக்க கற்பினையும் நாணையும், வேரொடும் களைந்து போன கைதவன் - அடியொடும் களைந்து சென்ற வஞ்சகன், மாடக் கூடல் கடவுள் என்று எண்ணித் தேர்ந்தார் - மாடங்கள் நெருங்கிய கூடலில் வீற்றிருக்கும் சோமசுந்தரக் கடவுளே என்று சிந்தித்துணர்ந்தார்கள். பொய்தவ வடிவு, வினைத்தொகை யாகலின் இயல்பாயிற்று. தொடை நோக்கித் தகரம் தொக்க தென்றுமாம். பொன்னினன்னார். சாரியை நிற்க உருபு தொக்கது. எண்ணும்மைகள் தொக்கன. மாடக் கூடல் - நான்மாடக் கூடல் எனலுமாம். காலம் : ஆகுபெயர். கால மூன்றையும் தெரிய வல்லாரை "மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியி னாற்றிய அறிவர்" எனக் கூறுவர் தொல்காப்பியர். (15) [மேற்படி வேறு] கற்புத் திரிந்தார் தமைநோக்கிக் கருத்துத் திரிந்தீர் நீராழி1 வெற்புத் திரிந்த மதிற்கூடன் மேய வணிகர் கன்னியராய்ப் பொற்புத் திரியா தவதரிப்பீர் போமென் றிட்ட சாபங்கேட் டற்புத் திரிந்தா ரெங்களுக்கீ தகல்வ தெப்போ தெனமுனிவர். (இ - ள்.) கற்புத் திரிந்தார் தமை நோக்கி - கற்புநிலை மாறுபட்ட தம் மனைவியரைப் பார்த்து, நீர் கருத்துத் திரிந்தீர் - நீவிர் மனம் வேறுபட்டீர்கள் (ஆதலால்), ஆழி வெற்புத்திரிந்த மதில்கூடல் மேய - சக்கரவாளகிரி தனது வடிவந் திரிந்து வந்தாலொத்த- மதில் சூழ்ந்த கூடலில் வசிக்கும். வணிகர் கன்னியராய்ப் பொற்புத்திரியாது அவதரிப்பீர் - வணிகர் மகளிராய் அழகு சிறிதும் குறைபடாது தோன்றுவீர்கள, போம்- செல்லுங்கள், என்று இட்ட சாபம் கேட்டு - என்று அளித்த சாபத்தினைக் கேட்டு, அன்பு திரிந்தார் - நாயகனிடத்து வைத்த அன்பு வேறுபட்ட அம்மகளிர், எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என - எங்கட்கு இச் சாபம் நீங்குவது எப்பொழுது என்று வினவ, முனிவர் - அம் முனிவர்கள். கருத்து திரிந்தீர் என்பது விளியுமாம். திரிந்தாலனைய என்பது திரிந்த என நின்றது. அவதரிப்பீர் - பிறக்கக் கடவீர்கள். போம் - போமின்; பன்மையேவல். அற்பு : வலித்தல். திரிந்தார்: பெயர். (16) அந்த மாட மதுரைநகர்க் கரசா கியசுந் தரக்கடவுள் வந்து நும்மைக் கைதீண்டும் வழியிச் சாபங் கழியுமெனச் சிந்தை தளர்ந்த பன்னியருந் தென்னர் மதுரைத் தொன்னகரிற் கந்த முல்லைத் தார்வணிகர் காதன் மகளி ராய்ப்பிறந்தார். (இ - ள்.) அந்த மாட மதுரை நகர்க்கு அரசு ஆகிய சுந்தரக் கடவுள் வந்து - மாடங்கள் நெருங்கிய அம் மதுரைப் பதிக்கு இறைவனாகிய சோமசுந்தரக் கடவுள் வந்து, நும்மைக் கைதீண்டும் வழி இச் சாபம் கழியும் என - உங்களைக் கைதீண்டும் பொழுது இந்தச் சாபம் நீங்குமென்று கூற, சிந்தை தளர்ந்த பன்னியரும்- (அச்சாபத்தால்) மனம் வாடிய முனி பன்னியரும், தென்னர் மதுரைத் தொல் நகரில் - பாண்டியரின் மதுரையாகிய தொன்மையுடைய நகரின்கண், கந்த முல்லைத் தார் வணிகர் - மணம் பொருந்திய முல்லை மலர் மாலையை யணிந்த வணிகர்களின், காதல் மகளிராய்ப் பிறந்தார் - அன்புடைய புதல்வியராய்த் தோன்றினார்கள். கைதீண்டல் - கையாற்றொடுதல் : சாபத்தாற் சிந்தை தளர்ந்த வென்க; தம் கற்பிற்கு இழுக்குண்டானமை கருதித் தளர்ந்த என்றுமாம். முல்லைமாலை வணிகர்க்குரித்து. (17) வளர்ந்து பேதை யிளம்பருவ மாறி யல்குற் புடையகன்று தளர்ந்து காஞ்சி மருங்கொசியத் ததும்பி யண்ணாந் தரும்புமுலை கிளர்ந்து செல்லும் பருவத்திற் கிடைத்தா ராக விப்பான்மண் அளந்த விடையான் வந்துவளை பகரும் வண்ண மறைகிற்பாம். (இ - ள்.) வளர்ந்து பேதை இளம் பருவம் மாறி - வளர்ந்து இளமையாகிய பேதைப்பருவங் கடந்து, அல்குல் புடை அகன்று- அல்குலானது புடை பரக்க, காஞ்சிமருங்கு தளர்ந்து ஒசிய - மேகலை யணிந்த இடையானது தளர்ந்து வளையுமாறு, அரும்புமுலை - அரும்பிய கொங்கைகள், ததும்பி அண்ணாந்து கிளர்ந்து செல்லும் - விம்மி நிமிர்ந்து பூரித்து ஓங்கும், பருவத்தில்- மங்கைப் பருவத்தில், கிடைத்தாராக - அடைந்தாராக; இப்பால் - இப்புறம், மண் அளந்த விடையான் வந்து - புவியை அளந்த திருமாலாகிய இடப வூர்தியையுடைய இறைவன் வந்து, வளை பகரும் வண்ணம் அறைகிற்பாம் - வளையல் விற்குந் தன்மையைக் கூறுவாம். அகன்று - அகல; எச்சத்திரிபு. அகல ஒசிய கிளர்ந்து செல்லும் என்க. அரும்புபோலும் முலை என்றுமாம். பருவத்திற் கிடைத்தார் - பருவ மெய்தினார். இப்பால் - இனி; அது நிற்க என்றபடி. குல பூடணன் திகிரியுருட்டுநாள் விடையான் வந்து வளைபகரும் வண்ணம் என இயையும். (18) கங்கை கரந்து மணிகண்டங் கரந்து நுதற்கண் கரந்தொருபால் மங்கை வடிவுங் கரந்துழையு மழுவுங் கரந்து மழவிடையூர் அங்க ணழகர் வளைவணிக ராகி யேன மளந்தறியாச் செங்க மலச்சே வடியிரண்டுந் திரைநீர் ஞால மகள்சூட. (இ - ள்.) மழவிடை ஊர் அம்கண் அழகர் - இளமையாகிய இடபத்தை ஊர்ந்தருளும் அழகிய கண்களையுடைய சோம சுந்தரக்கடவுள், கங்கை கரந்து - கங்கையை மறைத்து, மணிகண்டம் கரந்து - நீலமிடற்றினை ஒளித்து, நுதல் கண்கரந்து - நெற்றிக் கண்ணை மறைத்து, ஒரு பால் மங்கை வடிவும் கரந்து - ஒரு கூறாகிய உமை வடிவையும் மறைத்து, உழையும் மழுவும் கரந்து- மானையும் மழுவையும் ஒளித்து, வளை வணிகர் ஆகி - வளையல் விற்கும் வணிகராய், ஏனம் அளந்து அறியாச் செங்கமலச் சேவடி இரண்டும் - திருமாலாகிய பன்றியினால் தேடி அறியப்படாத செந்தாமரை போன்ற சிவந்த இரண்டு திருவடிகளையும், திரைநீர் ஞால மகள் சூட - அலைகளையுடைய கடல் சூழ்ந்த புவிமாது (தனது முடியிற்) சூட. யாவர்க்கும் மேலோனாகிய இறைவன் ஈண்டு எளிவந்தருளும் அருமைப்பாட்டை வியந்து ‘கங்கை கரந்து மணிகண்டங் கரந்து’ என்றிங்ஙனம் தனித்தனி கூறினார். ஊர்தற்கு விடை யிருக்கவும் தாளால் நடந்துவந்தா ரென்பார் ‘விடையூர் அழகர்’ என்றார். மணி கண்டம் - நீல மணிபோலும் திருமிடறு. கரந்து : தன்வினை பிறவினைக்குப் பொது; ஈண்டுப் பிறவினை. இது பல்கால் வந்தது பின்வரும் நிலை என்னும் அணி. இதுவும் வருஞ் செய்யுளும் ஒரு தொடர். (19) பண்டு முனிவர் பன்னியர்பாற் கவர்ந்த வளையே பட்டுவடங் கொண்டு தொடுத்து மீண்டவரக்கே யிடுவே மெனுமுட் கோளினர்போற் றொண்டர் தொடுத்த வைவண்ணத் துணர்த்தார் போலத் தோள்சுமந்து மண்டு வளையை விலைபகர்ந்து வணிக மறுகில் வருகின்றார். (இ - ள்.) பண்டு முனிவர் பன்னியர் பால் கவர்ந்த வளையே- முன்னே முனிவரின் மனைவியரிடத்துக் கவர்ந்த வளைகளையே, பட்டு வடம் கொண்டு தொடுத்து - பட்டுக் கயிற்றாற் கோத்து வந்து, மீண்டு அவர்க்கே இடுவேம் எனும் உட்கோளினர்போல் - மீள அம் மகளிர்க்கே இடுவேம் என்னுங் கருத்துடையார் போல, தொண்டர் தொடுத்த ஐவண்ணத் துணர்த்தார் போலத் தோள் சுமந்து - அடியார்கள் தொடுத்துச் சூட்டிய ஐந்து நிறங்களை உடைய பூங்கொத்துக் களாலமைத்த மாலையைப்போலத் தோளிற் றாங்கி, மண்டு வளையை விலை பகர்ந்து வணிக மறுகில் வருகின்றார். நெருங்கிய வளையல்களை விலை கூறி வணிக வீதியில் வருகின்றார. வேறெங்குஞ் செல்லாது வணிக மறுகில் வருதலின் ‘அவர்க்கே யிடுவே மெனும் உட்கோளினர் போல்’ என்றார். வளையை உட்கோனினர் போற் சுமந்து என்றும் தார்போலச் சுமந்து எனறும் தனித்தனிகூட்டுக. பட்டுக் கயிற்றிலே பல நிற வளைகள் கோத்திருப்பது ஐவண்ணத் துணர்த்தார் போன்றது. அதனைச் சுமத்தற்கண் உள்ள விருப்பம் புலப்பட ‘தொண்டர் தொடுத்த தார்போல்’ என்றார். (20) மன்னு மறையின் பொருளுரைத்த மணிவாய் திறந்து வளைகொண்மின் என்னு மளவிற் பருவமுகி லிமிழின் னிசைகேட் டெழுமயில்போற் றுன்னு மணிமே கலைமிழற்றத் தூய வணிக குலமகளிர் மின்னு மணிமா ளிகைநின்றும் வீதி வாயிற் புறப்பட்டார். (இ - ள்.) மன்னும் மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து - நிலைபெற்ற வேதத்தின் பொருளை அருளிச் செய்த அழகிய திருவாயைத் திறந்து, வளைகொண்மின் என்னும் அளவில் - வளையல் கொள்ளுங்கள் என்று கூறிய வளவில், பருவம் முகில் இமிழ் இன் இசை கேட்டு எழு மயில்போல் - கார் காலத்துச் சூற்கொண்ட மேகம் ஒலிக்கும் இனிய ஒலியினைக் கேட்டு (ஆடுதற்கு) எழும் மயில்போல, துன்னும் மணிமேகலை மிழற்ற - நெருங்கிய மணிகளையுடைய மேகலை ஒலிக்க, தூய வணிககுல மகளிர் - களங்க மில்லாத வணிககுல மகளிர், மின்னும் மணி மாளிகை நின்றும் - ஒளி விடுகின்ற மணிக ளழுத்திய மாளிகையி னின்றும், வீதி வாயில்புறப்பட்டார் - வீதியின்கண் புறப்பட்டனர். முனிபுங்கவர்களாலும் உணர்தற்கரிய மறைப்பொருளை அவர்கட்கு உணர்த்தியருளிய திருவாயால் அறிவு சிறிது மில்லாரும் கூறிவிற்கும் மொழிகளைக் கூறுவானாயிற்று, அவனது அருள் இருந்தவாறென்னே என வியந்துரைத்தவாறு. வளைவாங்குவாருளரோ எனக் கூவி விற்குமளவில் என்க. மயில் சாயலால் மகளிர்க்கு உவமம், ஈண்டு உவகை மிகுதியைக் குறிக்க முகிலிசை கேட்டெழும் மயிலைக் கூறினார். மாளிகை நின்றும் என்பதற்கியைய மலையினின்றெழும் மயில் போல் என விரித்துரைத்தலும் பொருந்தும். வாய் - இடம். (21) வளைக ளிடுவா ரெனத்தங்கண் மனமெல் லாந்தம் புடை யொதுங்கத் தளைக ளிடுவார் வருகின்றார. தம்மைக் கொம்மை வெம்முலையார் துளைக ளிடுதீங் குழலிசைபோற் சுரும்பு பாடக் கருங்குழன்மேல் விளைக ளொழுக நுடங்கிவரு மின்போ லடைந்து கண்டார்கள். (இ - ள்.) வளைகள் இடுவார் என - கைக்கு வளையல் இடுவார் போன்று, தங்கள் மனம் எல்லாம் தம்புடை ஒதுங்க - தங்கள் மனம் முழுதும் தம்மிடம் ஒதுங்குமாறு, தளைகள் இடுவார் வருகின்றார் தம்மை - (அவற்றை) விலங்கிடுதற்கு வருகின்ற அவ்வணிகரை, கொம்மை வெம்முலையார் - திரட்சியுடைய விருப்பந்தரும் கொங்கையையுடைய அம்மகளிர், துளைகள் இடு தீங்குழல் இசைபோல் சுரும்பு பாட - துளைகளிட்ட இனிய வேய்ங்குழலின் இசைபோல வண்டுகள் பாடவும், கருங்குழல்மேல் விளைகள் ஒழுக - கரிய கூந்தலின்மே னின்று சுரங்குந் தேன் ஒழுகவும், நுடங்கிவரும் மின்போல் அடைந்து கண்டார்கள் - அசைந்து வருகின்ற மின்னல்போலச் சென்று பார்த்தார்கள். இடுவார் இரண்டனுள் முன்னது பெயர்; பின்னது வினையெச்சப் பொருட்டு. வெம்மை - விருப்பம், குழல்மேல் சுரும்புபாடவும் கள் ஒழுகவும் என்க. நுடங்கி வருமின்போல் என்றது இல்பொருளுவமை.(22) கண்ட வடிவாற் றிளைப்பதற்குக் கழிபே ரன்பு காதல்வழிக் கொண்டு செல்ல வொருசார்தங் குணனா நாண முதனான்கும் மண்டி யொருசார் மறுதலைப்ப மனமு முழன்று தடுமாற அண்டர் பெருமான் விளையாடற் கமையச் சூழ்ந்தா ரமுதனையார். (இ - ள்.) கண்ட வடிவால் திளைப்பதற்கு - நோக்கிய அவ்வடிவுடன்கூடி இன்பம் நுகர்தற்கு, கழிபேர் அன்பு - மிகவும் பெரிய அன்பானது, ஒருசார் காதல் வழிக்கொண்டு செல்ல - ஒரு பக்கம் ஆசையின் வழியே கொண்டுபோக, ஒரு சார் தம் குணன் ஆம் நாணம் முதல் நான்கும் மண்டி மறுதலைப்ப - மற்றொரு பக்கம் தங்கள் குணமாகிய நாண் முதலிய நான்கும் நெருங்கித் தடுப்ப, மனமும் உழன்று தடுமாற- (அதனால்) மனமும் சுழன்று தடுமாற, அண்டர் பெருமான் விளையாடற்கு அமைய - தேவர் பிரானாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலுக்குப் பொருந்த. அமுது அனையார் சூழ்ந்தார்- அமுதினை ஒத்தஅம்மகளிர் சூழ்ந்து மொய்த்தனர். வடிவால் - வடிவோடு கூடி; ஆல் ஒடுவின் பொருட்டாயது. அகண்டனாகிய இறைவனைத் தமது கண்ட வடிவால் திளைப்பதற்கு என்னும் தொனிப்பொருளும் கொள்க. கழி என்னும் உரிச்சொல் அன்பின் பெருமையைச் சிறப்பித்து நின்றது. நான்கு - நாண், மடம், அச்சம், பயிர்ப்பு. ஒரு சார் கொண்டு செல்ல ஒருசார் மறுதலைப்ப அதனால் மனம் தடுமாறா நிற்கவும் சூழ்ந்தார் என்க. மறுதலைப்ப என்பது மறுதலிப்ப என வழங்கும். (23) [கலிவிருத்தம்] இரங்குமே கலைசிலம் பன்றி யேனைய விரும்பிய குழைதொடி மின்செய் கண்டிகை மருங்கிறச் சுமப்பினும் வளைகைக் கில்லெனின் அரும்பிய முலையினார்க் கழகுண் டாகுமோ. (இ - ள்.) இரங்கும் மேகலை சிலம்பு அன்றி - ஒலிக்கின்ற மேகலையும் சிலம்பும் அல்லாமலும், ஏனைய - அவை ஒழிந்த, விரும்பிய குழைதொடி மின்செய் கண்டிகை - விரும்பப்பட்ட குழையும் தொடியும் ஒளிவீசுங் கண்டிகையுமாகிய இவற்றை, மருங்கு இறச் சுமப்பினும் - இடை முறியுமாறு தாங்கினாலும், கைக்கு வளை இல் எனின் - கைகளுக்கு வளையல் இல்லையானால், அரும்பிய முலையினார்க்கு - முகிழ்த்த தனங்களை யுடைய மகளிர்க்கு, அழகு உண்டாகுமோ - அழகுண்டாகுமோ? தொடி- ஈண்டுக் கங்கணம். கண்டிகை - கழுத்தணி. அரும்பிய - கோங்கரும்புபோல் முகிழ்த்த. ஓகாரம் : எதிர்மறை. இச்செய்யுளை மகளிர் கூற்றாக்கி, ஆதலால் என விரித்து, வருஞ் செய்யுளோடு கூட்டி முடிக்க; கவிக் கூற்றுமாம். (24) செல்வநல் வணிகிரெஞ் செங்கைக் கேற்பன நல்வளை தெரிந்திடு மென்று நாய்கர்முன் வல்வள ரிளமுலை மகளிர் மின்னுமிழ் கல்வளர் கடகமென் காந்த ணீட்டினார். (இ - ள்.) செல்வ நல்வணிகிர் - செல்வ மிக்க நல்ல வணிகீரே, எம் செங்கைக்கு ஏற்பன - எம்முடைய சிவந்த கைகளுக்குப் பொருந்திய, நல் வளை தெரிந்து இடும் என்று - நல்ல வளைகளை ஆராய்ந்து இடு வீராக என்று, வல் வளர் இளமுலை மகளிர் - சூதாடு கருவிபோலக் குவிந்து வளர்ந்த இளமையாகிய கொங்கையையுடைய மகளிர், நாய்கர் முன் - வணிகர் முன்னே, மின் உமிழ் கல்வளர் கடகம் மென் காந்தள் நீட்டினார் - ஒளிவீசும் கற்கள் அழுத்திய கடகத்தையுடைய காந்தள் மலர் போன்ற கையை நீட்டினார்கள். ஏற்பனவும் நல்லனவுமாகிய வளை என்றுமாம். கணந்தோறும் வேட்கை மிகலால் உடல் மெலிந்து வளை கழலுதலின் ‘ஏற்பன நல்வளை தெரிந்து இடும்’ எனக் காமக் குறிப்புத் தோன்றக் கூறினாரென்க. கல் - மாணிக்கம் முதலியன. கல்வளர் - கற்கள்பொருந்திய. (25) பண்டருங் கிளவியங் கயற்கட் பாவைகைத் தண்டளிர் பற்றிய தடக்கை மாதர்கைம் முண்டகம் பற்றியே முகிழ்த்துப் பல்வரி வண்டுக ளேற்றுவார் மைய லேற்றுவார். (இ - ள்.) பண்தரும் கிளவி அங்கயற்கண் பாவை - இசைபோலு மினிமையைத்தரும் சொற்களையுடைய அங்கயற்கண் ணம்மையினது, கைத்தண் தளிர் பற்றிய தடக்கை - திருக்கர மாகிய குளிர்ந்த தளிரைப் பிடித்த நெடிய கையால், மாதர் கைம்முண்டகம் பற்றியே முகிழ்த்து - வணிக மகளிரின் கைகளாகிய தாமரை மலரைப் பிடித்து முகிழ்ப்பித்து, பல்வரி வண்டுகள் ஏறறுவார் மையல் ஏற்றுவார் - பல வரிகளையுடைய வளையல்களைச் செறிப்பாராய்க் காம மயக்கத்தை மிகுவிப்பாராயினர். மாதர் - வணிக மாதர். வண்டு - வளை. முண்டகம் என்பதற்கேற்ப வண்டு என நயமுறக் கூறினார். வளையலைக் கையில் ஏற்றுவதுடன் மயக்கத்தை மனத்தில் ஏற்றினார் என்க. (26) புங்கவ னிடுவளை புடைத்து மீளவந் தெங்களுக் கிடவிலை யிடுதி ராலெனக் கொங்கவிழ் பைங்குழ லெருத்தங் கோட்டிநின் றங்கர நீட்டுவா ராசை நீட்டுவார். (இ - ள்.) புங்கவன் இடுவளை புடைத்து மீளவந்து - இறைவனாகிய அவ்வணிகன் இட்ட வளையைஉடைத்துவிட்டு மீளவும் வந்து, எங்களுக்கு இடவிலை - எங்களுக்கு இன்னும் இடவில்லை, இடுதிர் என - இப்பொழுது இடுவீராக என்று, கொங்கு அவிழ் பைங்குழல் எருத்தம் கோட்டி நின்று - மணம் விரிந்த பசிய கூந்தல் சரிந்த கழுத்தினை வளைத்து (முகத்தை மறைத்து) நின்று, அம் கரம் நீட்டுவார் - அழகிய கைகள் நீட்டுவாராய், ஆசை நீட்டுவார் - தமது வேட்கையைத் தோற்றுவிப்பார்கள். அவனது கையைப் பரிசித்தலாகிய இன்பத்தை மேன்மேல் நுகர விரும்பி இங்ஙனம் வளையை உடைத்து வந்து மீள இட வேண்டுவர் என்க. முன்பு வளையல் இடப் பெற்றவராகலின் தமதுருவைக் காட்டாது முகத்தை மறைத்தற்கு எருத்தங் கோட்டுவாராயினர. கூந்தலின் முகம் மறைய என்பார் ‘பைங்குழல் எருத்த கோட்டி’ என்றார். நாணாற் கோட்டுதலுங் கொள்க. ஆசை நீட்டுதல் - ஆசையைத் தோற்றுவித்தல்; மிகுவித்தலுமாம். ஆல் : அசை. மேற்செய்யுளில் ‘வண்டுகளேற்றுவார் மையலேற்றுவார்’ என்றும், இச்செய்யுளில், ‘அங்கர நீட்டுவார் ஆசை நீட்டுவார்’ என்றும் கூறிய அழகு பாரட்டாற் பாலது. (27) எமக்கிடு மெமக்கிடு மெனப்பின் பற்றியே அமைத்தடந் தோளினா ரனங்கன் பூங்கணை தமைத்துளை படுத்துவோர் சார்பி லாமையாற் கமைப்புறு நாண்முதற் காப்பு நீங்கினார். (இ - ள்.) எமக்கு இடும் எமக்கு இடும் எனப் பின்பற்றி - எங்களுக்கு இடும் எங்களுக்கு இடும் என்று பின் தொடர்ந்து, அமைதடம் தோளினார் - மூங்கிலை ஒத்த பருத்த தோளையுடைய வணிககுல மகளிர், அனங்கன் பூங்கணை தமைத் துளைபடுத்த - மத வேளின் மலர் வாளிகள் தம்மைத் துளைக்க, ஓர் சார்பு இலாமையால் - (அதனை நீக்கி) ஒரு பற்றுக்கோ டில்லாமையால், கமைப்பு உறு நாண்முதல் காப்பு நீங்கினார் - பொறுத்தலையுற்ற நாண முதலாகிய காவலாகிய காவலினின்றும் நீங்கினார்கள். சார்பு - துணை. கமைப்பு - பொறுத்தல்; தம்மாற் பொறுக்கப் பெற்றிருந்த நாண்முதலாகிய என்க. நாண்முதலியன காவலாதலையும் காமமானது அதனை யழிப்பதனையும், " காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு" என்னும் முப்பாலால் அறிக. (28) முன்னிடு வளையெலாங் கழல முன்புசூழ்ந் தின்னவை பெரியவே றிடுமென் றிட்டபின் அன்னவு மனையவே யாக மீள்வந் தின்னமுஞ் சிறியவா விடுமென் றேந்துவார். (இ - ள்.) முன் இடுவளை எலாம் கழல - முன்னே இட்ட வளைகளனைத்துங் கழன்றுவிட; முன்பு சூழ்ந்து - (அம்மகளிர்) வணிகர் முன்பு மொய்த்து, இன்னவை பெரிய - இவ்வளைகள் அளவிற் பெரியன (ஆதலின் கழன்றன); வேறு இடும் என்று - வேறு வளைகள் இடுமென்று கூறி, இட்டபின் - அங்ஙனம் இட்டபின், அன்னவும் அனையவே ஆக - அவையும் அங்ஙனமே கழல, மீளவந்து - மீண்டும் வந்து; இன்னமும் சிறியவா இடும் என்று ஏந்துவார் - இன்னுஞ் சிறிய வளைகளாக இடும் என்று கையை ஏந்துவார். பெரிய : அன்பெறாத பலவின்பாற் குறிப்புமுற்று. சிறியவாக என்பது விகாரமாயிற்று. ஏந்துதல் கையை நிமிர்த்தி நீட்டுதல். (29) பின்னிடு வளைகளுஞ் சரியப் பேதுறா மன்னெதிர் குறுகிநீர் செறித்த மொய்வளை தன்னொடு கலைகளுஞ் சரிவ தேயென மின்னென நுடங்கினார் வேனெ டுங்கணார். (இ - ள்.) பின் இடுவளைகளும் சரிய - பின் இட்ட வளைகளுங் கழல, பேதுறா - மனமயங்கி, முன் எதிர் குறுகி - வணிகர் முன் சென்று எதிர் நின்று, நீர் செறித்த மொய்வளை தன்னொடு- நீர்செறிய இட்ட நெருங்கிய வளையோடு, கலைகளும் சரிவதே என - மேகலைகளுங் கழல் கின்றனவே என்று, வேல் நெடுங்கணார்- வேல்போன்ற நெடிய கண்களையுடைய அம்மகளிர், மின் என நுடங்கினார் - மின்னல்போலத் துவண்டு (வெள்கினார்கள்). பேது - மயக்கம். பேதுறா : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம், சரிவது எனப் பன்மையில் ஒருமை வந்தது. சரிவதே என - சரியா நிற்கின்றது, இஃதொரு வியப்பிருந்த வாறென்னே என்று. நுடங்குதல் நாணினாலாயது. (30) இவ்வளை போல்வளை1 யாமுன் கண்டிலேம் மெய்வளை வணிகிரிவ் வரிய வெள்வளை எவ்வயி னுள்ளவின் றினிய வாகியெம் மெய்ம்மயிர் பொடிப்பெழ2 வீக்கஞ் செய்தவே. (இ - ள்.) வளைவணிகிர் - வளையல் விற்கும் வணிகீரே, இவ் வளைபோல் வளையாம் முன் கண்டிலேம் - இந்த வளையல்போன்ற வளைகளை யாம் முன்னே பார்த்திலோம்; மெய் - இது உண்மை; இவ்வரிய வெள்வளை எவ்வயின் உள்ள - இந்த அருமையான வெள்ளிய வளையல்கள் எவ்விடத்தில் உள்ளன, இன்று இனிய ஆகி எம் மெய் மயிர் பொடிப்பு எழு வீக்கம் செய்த - இன்று இனியனவாய் எம் உடம்பினை மயிர் முகிழ்ப்பு உண்டாகப் பூரிக்கச் செய்தன. உடல்கூனிய வணிகரே எனப் பொருள்கூறுவாருமுளர்; அது பொருந்தாமை யுணர்க. உள்ள, இனிய, செய்த என்பன அன்சாரியை பெறாது நின்றன. வீக்கஞ்செய்த என்பது ஒரு சொல்லாகி மெய்யை என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. (31) நாளையும் வளையிட நண்ணுமிங் கென்பார் கோள்வளை விலையிது கொண்டுபோ மென்பார் வாள்விழி யீர்பினாள் வாங்கிக் கோடுமென் றாளரி யேறனா ராடிப் போயினார். (இ - ள்.) நாளையும் வளை இட இங்கு நண்ணும் என்பார் - நாளையும் வளை இடுதற்கு இங்கு வருவீராக என்பார்கள் (மற்றும்), கோள்வளை விலை இது கொண்டு போம் என்பார் - நாங்கள் கொண்ட வளைக்கு விலையாகும் இதனைக் கொண்டுபோம் என்பார்கள்; ஆள் அரி ஏறு அனார் - ஆண்மையுடைய சிங்கவேறு போன்ற வணிகேசர் (அம் மகளிரை நோக்கி), வாள் விழியீர் - வாள்போலும் கண்களை யுடையவர்களே, பின் நாள் வாங்கிக் கோடும் என்று - நாளை வாங்கிக் கொள்வேம் என்று கூறி, ஆடிப் போயினார் - திருவிளையாடல் செய்து சென்றருளினர். கோள் : முதனிலை திரிந்தது. கோடும் - கொள்ளுதும். ஆள் - ஆண்மை. ஆடி என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, உரைத்து என்று கூறுதலுமாம். (32) போயின வணிகர்தம் புடையின் மின்னெனப் பாயின மகளிரும் பலருங் காணமுன் மேயின விண்ணிழி விமானத் துள்ளொளி ஆயின திருவுரு வாகித் தோன்றினார். (இ - ள்.) போயின வணிகர் - அங்ஙனஞ் சென்ற வணிகராகிய பெருமானார், தம்புடையில் மின் எனப் பாயின மகளிரும் பலரும் காண - தமது பக்கத்தில் - மின்னலைப் போலப் பரந்து நின்ற மகளிரும் ஏனை யோருங் கண்டு வியக்க, முன் மேயின - முன் தாம் எழுந்தருளி யிருந்த, விண் இழி விமானத்துள் ஒளி ஆயின திரு உரு ஆகித் தோன்றினார் - விசும்பினின்று மிழிந்த விமானத்தின்கண் ஒளி மயமாகிய திருவுருவமாகித் தோன்றி யருளினார். பாயின - பரந்த. மேயின - மேவின : பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது, சென்றவர் மறைந்து சிவலிங்கத் திருவுருவிற் கலந்தருளினார் என்க. (33) [எழுசீரடியாசிரிய விருத்தம்] மட்ட லம்பு கோதை யார்முன் வளைப கர்ந்த வணிகர்தாம் பட்டி சைந்த வல்கு னங்கை பாக ராகு மெனவியந் துட்ட தும்பு முவகை வெள்ள முற்றெ ழுந்த குமிழிபோற் கட்ட தும்பு புனலி லாழ்ந்து களிய டைந்த நகரெலாம். (இ - ள்.) மட்டு அலம்பு கோதையார் முன் - தேன் ததும்பு மாலையை யணிந்த மகளிர் முன்னே, வளைபகர்ந்த வணிகர் தாம் - வளையல் விற்ற வணிகரானவர், பட்டுஇசைந்த அல்குல் நங்கை பாகர் ஆகும் என வியந்து - பட்டாடை பொருந்திய அல்குலையுடைய உமா தேவியை ஒரு பாகத்திலுடைய இறைவராவார் என்று வியப்புற்று, உள் ததும்பும் உவகை வெள்ளம் உற்று எழுந்த குமிழிபோல் - உள்ளத்திற் றதும்பிய மகிழ்ச்சி வெள்ளத்திற் பொருந்தி யெழுந்த குமிழி போல, கண்ததும்பு புனலில் ஆழ்ந்து - கண்களிலே ததும்புகின்ற நீரில் அமிழ்ந்து, நகர் எல்லாம் களி அடைந்த - நகரிலுள்ளா ரனைவரும் களிப்புற்றனர். அலம்புதல் - ஈண்டுத் ததும்புதல். அல்குல் - அரை; "பட்டிசைந்த வல்குலாள்" என்பது தேவாரம். குமிழிபோலத் ததும்புகின்ற புனல் என்க. அடைந்த: அன்பெறாத முற்று, நகரிலுள்ளார் அனைவரும் களிப்படைந்தார் என்பதனை ‘நகரெலாம் களியடைந்த’ என்றார். (34) உருவி லாளி யுடல் பொடித்த வொருவர் கூட லிருவரான் மருவி லார்தி ருக்கை தொட்டு வளைசெ றித்த நீர்மையாற் கருவின் மாத ராகி நாய்கர் கன்னி மார்கண் மின்னுவேற் பொருவில் காளை யெனவ ரம்பில் புதல்வ ரைப்ப யந்தனர். (இ - ள்.) உருவிலாளி உடல் பொடித்த ஒருவர் - மன்மதனுடைய உடலை நீறாக்கிய ஒருவரும், கூடல் இருவரால் மருவிலார் - திருமாலும் அயனுமாகிய இருவராலும் அடையப் படாத கூடல் நாயகருமாகிய சோமசுந்தரக்கடவுள், திருக்கை தொட்டு வளை செறித்த நீர்மையால் - தமது திருக்கையாலே தொட்டு வளையல் இட்ட தன்மையால், நாய்கர் கன்னிமார்கள் - வணிக மங்கையர்கள், கருவின் மாதராகி - கருவுற்ற மகளிராகி, மின்னுவேல் பொருவு இல் காளை என - ஒளி விடுகின்ற வேலினையுடைய ஒப்பில்லாத காளையாகிய முருகவேளைப் போல. வரம்பு இல் புதல்வரைப் பயந்தனர் - அளவில்லாத மைந்தர்களைப் பெற்றார்கள். உருவிலாளி - உருவின்மையை ஆள்பவன்; அனங்கன்; ஈண்டு மதனன் என்னும் பெயர் மாத்திரையாக நின்றது. இறைவர் காமவயத்தராய் அம்மகளிரைப் பரிசித்தாரல்லர் என்பது தோன்ற ‘உருவிலாளியுடல் பொடித்த வொருவர்’ என்றார். மருவு - அடையப்படுதல். வளை செறித்த நீர்மையால் என்னும் ஏதுவைக் கருவின் மாதரானமைக்கும், வேற்காளை யெனப் புதல்வரைப் பயந்தமைக்கும் தனித்தனி கொள்க. (35) பிறந்த மைந்த ரளவி றந்த பெருமை கொண்ட பெருமிதஞ் சிறந்த வீர மாற்ற லேற்ற திறல்பு னைந்து வைகினார் மறந்த தும்பு வேனெ டுங்கண் வணிக மாதர் சிறிதுநாள் துறந் தரன்ற னருள டைந்து துணைய டிக்கண் வைகினார். (இ - ள்.) பிறந்த மைந்தர் - (அங்ஙனம்) தோன்றிய புதல்வர்கள், அளவு இறந்த பெருமை கொண்ட பெருமிதம் - அளவற்ற பெருமை கொண்ட களிப்பும், சிறந்த வீரம் - மிக்க வீரமும், ஆற்றல் - வலிமையும், ஏற்ற திறல் - தக்க வெற்றியும் (ஆகிய இவற்றை), புனைந்து வைகினார் - அணிகலமாகச் சூடி வாழ்ந்தனர்; மறம் ததும்பு வேல் நெடுங்கண் வணிகமாதர் - கொலை மிக்க வேல்போலும் நீண்ட விழிகளையுடைய வணிக மகளிர், சிறிது நாள் துறந்து - சின்னாட் கழித்து, அரன் தன் அருள் அடைந்து - சிவபெருமானது திருவருளைப் பெற்று, துணை அடிக்கண் வைகினார் - அவருடைய இரு திருவடிக்கண்ணும் கலந்து தங்கினார்கள். பெருமிதம் ஈண்டுக் களிப்பினை யுணர்த்திற்று. பெருமைகொண்ட, பெருமிதஞ் சிறந்த, வீரம் ஆற்றல் ஏற்ற எனப் பிரித்துத் திறலுக்கு அடையாக்கித் தனித்தனி கூட்டி யுரைத்தலுமாம். சிறிது நாள் - சின்னாள். (36) ஆகச்செய்யுள் - 1759. முப்பத்து மூன்றாவது அட்டமாசித்தி யுபதேசித்த படலம் [எழுசிரடி யாசிரிய விருத்தம்] கொத்தி லங்கு கொன்றை வேயந்த கூட லாதி மாடநீள் பத்தி யம்பொன் மறுக ணைந்து வளைப கர்ந்த பரிசுமுன் வைத்தி யம்பி னாமி யக்க மாதர வேண்ட வட்டமா சித்தி தந்த திறமி னித்தெ ரிந்த வாறு செப்புவாம். (இ - ள்.) இலங்கு கொன்றைக் கொத்து வேய்ந்த கூடல் ஆதி - விளங்கா நின்ற கொன்றையினது பூங்கொத்தினை யணிந்த கூடற் பதியில் எழுந்தருளிய முதல்வராகிய சோமசுந்தரக்கடவுள், நீள்மாட பத்தி அம்பொன் மறுகு அணைந்து - நீண்ட மாட வரிசை களையுடைய அழகிய செல்வத்தையுடைய வீதியிற் சென்று, வளைபகர்ந்த பரிசு முன் வைத்து இயம்பினாம் - வளையல் விற்ற திருவிளையாடலை முன் எடுத்துக் கூறினாம்; இயக்க மாதர் வேண்ட- இயக்க மகளிர் குறையிரக்க, அட்டமா சித்தி தந்த திறம் - பெரிய எட்டுச் சித்திகளையும் உபதேசித்த திருவிளையாடலை, இனி தெரிந்தவாறு செப்புவாம் - இனி அறிந்தவாறு கூறுவோம் எ - று. அம்பொன் மாடம் என இயைத்தலுமாம். பரிசு, திறம் என்பவற்றைத் திருவிளையாடல் என்றுரைத்துக் கொள்க. (1) மின்ன லங்கல வாகை வேல்வி ழுப்பெருங் குலத்தினிற் றென்ன வன்ற னாணை நேமி திசையெ லாமு ருட்டுநாள் முன்னை வைக லூழி தோறு மோங்கு மொய்வ ரைக்கணே மன்னு தன்ப ராரை2யால நிழன்ம ருங்கு மறைமுதல். (இ - ள்.) வாகை அலங்கல் மின்வேல் - வெற்றி மாலை சூடிய மின் போலும் வேற்படையினை ஏந்திய, விழுப்பெருங்குலத்தினில் - மேன்மை மிக்க பாண்டியர் குலத்தில் வந்த, தென்னவன்- குலபூடண வழுதி யானவன், தன் ஆணை நேமி திசை எலாம் உருட்டு நாள் - தனது ஆணைத் திகிரியைத் திசை முழுதும் செலுத்தி வருநாளில், ஊழிதோறும் ஓங்கும் மொய் வரைக்கண்- ஊழிக்காலந் தோறும் வளருகின்ற வலிய திருக்கைலாய மலையின்கண், மன்னு தன் பராரை ஆல நிழல் மருங்கு - நிலைபெற்ற தனது பருத்த அரையினையுடைய வடவாலின் நிழலின்கண், மறைமுதல்- வேத முதல்வனாகிய இறைவன், முன்னை வைகல் - முன்னொரு நாள். தன் குலத்திற்கு அணிகலன் போன்றவன் என்னும் காரணப் பெயருடையான் என்பார் ‘விழுப்பெருங் குலத்தினிற் றென்னவன்’ என்றார். திருக்கைலை ஊழிதோறு முயர்தல், " ஊழிதோ றூழிமுற்று முயர்பொன் னொடித்தான் மலையே" என்று தம்பிரான் றோழரால் அருளிச் செய்யப்பெற்றுளது; முன்பும் வந்தமை காண்க. பராரை : மரூஉ முடிபு. (2) அடுப்ப மாசில் வெள்ளி வெற்பி னருகி ருக்கு மரகதங் கடுப்ப வாம மிசை யிருந்து கனக வெற்பன் மகளெனும் வடுப்ப டாத கற்பி னாண்ம டித்து வெள்ளி லைச்சுருள் கொடுப்ப நேச மூறுபோக குரவ னாகி வைகினான். (இ - ள்.) அடுப்ப - தங்கியருள,மாசு இல் வெள்ளி வெற்பின் அருகு இருக்கும் மரகதம் கடுப்ப - குற்றமில்லாத வெள்ளி மலையின் பக்கத்திலிருக்கும் மரகதத்தையொப்ப, வாமமிசை இருந்து - வலப்பாகத்திலிருந்து, கனக வெற்பன் மகளெனும் வடுப்படாத கற்பினாள் - மலையரையன் புதல்வியாகிய குற்றமில்லாத கற்பினையுடைய உமையம் மையார், வெள்ளிலைச் சுருள்மடித்துக் கொடுப்ப - வெற்றிலைச் சுருளை மடித்துக் கொடா நிற்க, நேசம் ஊறுபோக குரவனாகி வைகினான் - (அவ்விறைவன்) அன்பு சுரக்கும் போக குரவனாய் இருந்தருளினான். நிழல் மருங்க அடுப்ப எனக் கூட்டுக. இமயம் பொன்மலை யெனப்படும் ஆகலின் மலையரையனைக் ‘கனக வெற்பன்’ என்றார். வெள்ளிலை வெறுவிதாகிய இலை. இறைவன் போகம் நுகர்தல் உயிர்களுக்குப் போக நுகர்ச்சி காட்டுங் கருத்தால் ஆகலின் ‘போக குரவனாகி’ என்றார்; "போகமா யிருந்துயிர்க்குப் போகத்தைப் புரித லோரார்" என்பதுங் காண்க. (3) பிருங்கி நந்தி யேமு தற்பெ ருந்த கைக்க ணத்தரும் மருங்கி ருந்த சனக னாதி மாத வத்தர் நால்வரும் ஒருங்கி றைஞ்சி யுண்ண வுண்ண வமுத மூறு சிவகதைக் கரும்ப ருந்த வாய்ம லர்ந்து கருணை செய்யு மெல்லைவாய். (இ - ள்.) பிருங்கி நந்தி முதல் பெருந்தகைக் கணத்தரும் - பிருங்கியும் திருநந்தி தேவரும் முதலிய பெருந்தகுதியையுடைய சிவகணத்தலைவரும், மருங்கு இருந்த சனகன் ஆதி மாதவத்தர் நால்வரும் - அருகில் இருந்த சனகன் முதலிய பெரிய தவத்தினையுடைய முனிவர் நால்வரும், ஒருங்கு இறைஞ்சி - ஒரு சேர வணங்கி, உண்ண உண்ண அமுதம் ஊறு - உண்ணுந்தோறும் அமுதம் ஊற்றெடுக்கும், சிவகதைக் கரும்பு அருந்த - சிவகதையாகிய கரும்பினைச் (செவிவாயால்) உண்ண, வாய் மலர்ந்து கருணை செய்யும் எல்லைவாய்- திருவாய் மலர்ந்து அருள் புரியும் பொழுதில். ஒருங்கிறைஞ்சி அருந்த எனக் கூட்டுக. (4) பௌவ மூழ்கு சூர்த டிந்த பால னுக்கு முலைகொடுத் தெவ்வ மாய வினைக டீரி யக்க மாத1ரறுவருந் தெய்வ நீறு முழுத ணிந்து செய்ய வேணி கண்டிகைச் சைவ வேட மாதவந் தரித்து வந்து தோன்றினார். (இ - ள்.) பௌவம் மூழ்கு சூர் தடிந்த பாலனுக்கு - கடலின் கண் மூழ்கியொளித்த சூரபன்மனை வதைத்தருளிய முருகக்கடவுளுக்கு, முலை கொடுத்து - பால் கொடுத்தலினால், எவ்வம் ஆய வினைகள் தீர் இயக்கமாதர் அறுவரும் - துன்பமாகிய வினைகள் நீங்கப்பெற்ற இயக்க மகளிர் அறுவரும், தெய்வ நீறு முழுது அணிந்து - தெய்வத் திருநீற்றினை உடல் முழுதும் பூசி, செய்ய வேணி கண்டிகை - சிவந்த சடையையும் உருத்திராக்க வடத்தையும் (தாங்கி,) மா சைவ தவ வேடம் தரித்து - (இங்ஙனமாகப்) பெருமை பொருந்திய சைவத் தவக்கோலம் பூண்டு, வந்து தோன்றினார் - வந்து தோன்றினார்கள். துன்பத்திற்குக் காரணமாகிய வினையைத் துன்பமாகிய வினையென உபசரித்தார். அறுவர் கார்த்திகை மகளிர் என்று கூறப்படுவோர். வேணியும் கண்டிகையும் தாங்கி என ஒருசொல் வருவித்துரைக்க. (5) மந்தி ரச்சி லம்ப லம்பு மலர டிக்கண் வந்திசெய் தெந்தை யட்ட சித்தி வேண்டு மெங்க ளுக்கெ னத்தொழா அந்த ளிர்க்கை யவரி ரப்ப வண்ண றன்ம டித்தலந் தந்தி ருக்கு மாதை யங்கை சுட்டி யீது சாற்றுமால். (இ - ள்.) அம் தளிர்க்கையவர் - (அங்ஙனம் தோன்றிய) அழகிய தளிர் போலும் கையையுடைய அம் மகளிர், மந்திரச் சிலம்பு அலம்பும் - வேதமாகிய சிலம்பு ஒலிக்கும், மலர் அடிக்கண் வந்தி செய்து - மலர் போன்ற திருவடியின் கண் (வீழ்ந்து) வணங்கி, தொழா - தொழுது, எந்தை - எம் தந்தையே, எங்களுக்கு அட்ட மாசித்தி வேண்டும் என - அடியேங்களுக்கு அட்டமாசித்தியைத் தெரிவித்தருள வேண்டு மென்று, இரப்ப - குறையிரப்ப, அண்ணல் - இறைவன், தன் மடித்தலம் தந்து இருக்கும் மாதை - தனது மடித்தலத்தினைப் பெற்றிருக்கும் உமை நங்கையை, அம் கை சுட்டி ஈது சாற்றும் - அழகிய கையினாற் சுட்டி இதனைக் கூறியருளுவானாயினன். மந்திரம் என்றது ஈண்டு வேதத்தை. கை அவர் எனப் பிரித்துரைத்தலுமாம். தந்து - தரப்பெற்று. ஆல் : அசை. (6) [அறுசீரடியாசிரிய விருத்தம்] அலர்பசும் பொலங்கொம் பன்ன வணங்கிவ ணிறைவா லெங்கும் மலர்பரா சத்தி யாகி மகேசையா யணிமா வாதிப் பலர்புகழ் சித்தி யெட்டும் பணிந்துகுற் றேவல் செய்யுஞ் சிலதிய ராகிச் சூழ்ந்து சேவகஞ் செய்ய வைகும். (இ - ள்.) அலர் பசும் பொலம் கொம்பு அன்ன அணங்கு இவள் - மலர்ந்த பசிய பொற்கொம்பு போன்ற இவ்வுமை நங்கை, நிறைவால் - பூரணத்தன்மையால், எங்கும் மலர் பராசத்தி ஆகி- எங்கும் வியாபித்த பராசத்தி யாகியும், மகேசை ஆய் - மகேச்சுவரி எனப் பெறுவாளாகியும், அணிமா ஆதி - அணிமா முதலிய, பலர் புகழ் சித்தி எட்டும் - பலரும் புகழ்கின்ற எட்டுச் சித்திகளும், பணிந்து குற்றேவல் செய்யும் சிலதிய ராகி - வணங்கிக் குற்றேவல் புரியும் சேடியராகி, சூழ்ந்து சேவகம் செய்ய - சூழ்ந்து நின்று பணிசெய்யா நிற்க, வைகும் - வீற்றிருப்பாள். நிறைவு - பூரணம். மலர்தல் - பரத்தல், வியாபித்தல். பராசத்தி, மகேசை என்னும் சத்திகளாய் நிற்பவள் இவ்வுமையே என்றார்; " சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி ஒத்துறு மகேசை யாகி யுமைதிரு வாணி யாகி வைத்துறுஞ் சிவாதிக் கிங்ஙன் வருஞசத்தி யொருத்தி யாகும் எத்திற நின்றா னீச னத்திற மவளு நிற்பள்" என்று சிவஞானசித்தியார் கூறுதல் காண்க. (7) இவளைநீர் சிந்தித் தான்முன் னீட்டிய வினையை நீக்கித் தவலருஞ் சித்தி யெட்டுந் தருமெனக் கருணை பூத்துச் சிவபரஞ் சோதி யெட்டுச் சித்தியுந் தெளித்தல் செய்தான் அவரது மறந்தா ரும்மை யாழ்வினை வலத்தான் மன்னோ. (இ - ள்.) இவளை நீர் சிந்தித்தால் - இப்பிராட்டியை நீவிர் சிந்திப் பீராயின், முன் ஈட்டிய வினையை நீக்கி - முற்பிறப்புக்களிலே செய்து தொகுத்த வினையைப் போக்கி, தவல் அரும் சித்தி எட்டும் தரும் என - கெடுதலில்லாத எட்டுச் சித்திகளையும் தந்தருளுவாளென்று, கருணை பூத்து - அருள் புரிந்து, சிவபரஞ்சோதி எட்டுச் சித்தியும் தெளித்தல் செய்தான்- சிவபரஞ்சுடர் எட்டுச் சித்திகளையுந் தெளிவித்தருளினான்; அவர் உம்மை ஆழ்வினை வலத்தால் அது மறந்தார் - அம்மகளிர் பிராரத்த வினையின் வலியால் அதனை மறந்தனர். அது மறந்தார் என்பதற்கு உமையைச் சிந்தியாமல் அச்சித்தியை மறந்தார் என்க. உம்மை யென்றது ஈண்டு முற்பிறப்புக்களை. ஆழ்வினை - ஆழமாகிய வினை. மன்னும் ஓவும் அசைகள். (8) செழுமதிப் பிளவு வேய்ந்த தேவுமக் குற்ற நோக்கி முழுமதி முகத்தி னாரை முனிந்துநீர் பட்ட மங்கைப் பழுமர முதலஞ் ஞானப் பாறையாய்க் கிடமி னென்னக் கழுமலுற் றவர்தாழ்ந் தென்று கழிவதிச் சாப மென்றார். (இ - ள்.) செழுமதிப் பிளவு வேய்ந்த தேவும் - செழுமையாகிய மதியின் பிளவினை அணிந்த இறைவனும், அக்குற்றம் நோக்கி - அப் பிழையை நோக்கி, முழுமதி முகத்தினாரை முனிந்து - நிறைமதி போன்ற முகத்தினையுடைய அப்பெண்களைச் சினந்து, நீர் - நீவிர், பட்டமங்கைப் பழுமர முதல் - பட்டமங்கை யென்னும் பதியிலே ஆலமரத்தினடியில், அஞ்ஞானப் பாறையாய்க் கிடமின் என்ன - அசேதனமாகிய கற்பாறையாய்க் கிடப்பீராக என்று சபிக்க, கழுமல் உற்று அவர் தாழ்ந்து - அவர்கள் மயக்கமுற்று வணங்கி, இச்சாபம் என்று கழிவது என்றார் - இந்தச் சாபம் நீங்குவது எப்பொழுது என்று வினவினர். உபதேசத்தை மறந்த குற்றத்தால் அறிவில்லாத பாறையாய்க் கிடக்குமாறு சபித்தார். கழுமல் - மயங்கல். உற்றவர் என வினைப் பெயருமாம். (9) இப்படிக் கருங்க லாகிக் கிடத்திரா யிரமாண் டெல்லைக் கப்புற மதுரை நின்று மடுத்துமைத் தொடுத்த சாபத் துப்பற நோக்கி நுங்க டொல்லுரு நல்கிச் சித்தி கைப்படு கனிபோற் காணக் காட்டுதும் போதி ரென்றான். (இ - ள்.) ஆயிரம் ஆண்டு எல்லைக்கு - ஆயிரம் ஆண்டளவு காறும், இப்படிக் கருங்கல் ஆகி கிடத்திர் - இங்ஙனங் கருங்கற் பாறையாய்க் கிடப்பீர், அப்புறம் - அதன்மேல், மதுரை நின்றும் அடுத்து - மதுரையினின்றும் வந்து, உமைத் தொடுத்த சாபத்துப்பு அற நோக்கி - உங்களைத் தொடுத்த சாபத்தின் வலிமை நீங்குமாறு கடைக்கணித்து, நுங்கள் தொல் உரு நல்கி - உங்கள் பழைய வடிவையுங் கொடுத்து சித்தி - எட்டுச் சித்திகளையும், கைப்படு கனிபோல் காணக் காட்டுதும் - கையிலுள்ள நெல்லிக்கனிபோல ஐயந்திரிபின்றிக் காணுமாறு காட்டுவோம்; போதிர் என்றான் - செல்வீர் என்று அருளிச் செய்தான். எல்லைக்கு - எல்லைகாறும். துப்பு - வலி. கிடத்திர, போதிர் என்பனவற்றில் த் : எழுத்துப்பேறு. (10) [வஞ்சித்துறை] கொடியனார்க ளறுவரும் நெடியவானி மிர்ந்துகார் படியும்பட்ட மங்கையால் அடியிற்பாறை யாயினார். (இ - ள்.) கொடி அனார்கள் அறுவரும் - பூங்கொடி போன்ற அம்மாதர் அறுவரும், நெடிய வான் நிமிர்ந்து - நீண்ட விசும்பின்கண் உயர்ந்து, கார்படியும் - மேகம் பொருந்தப்பெற்ற, பட்ட மங்கை ஆல் அடியில் - பட்ட மங்கை என்னும் பதியில் உள்ள ஆலமரத்தினடியில், பாறை ஆயினார் - கருங்கற் பாறையாயினார்கள். நிமிர்ந்து படியும் ஆல் என்க. இதனை முச்சீரடியாக்கி வஞ்சி விருத்தம் என்னலுமாம். (11) கதிர்கலம்பெய் காட்சிபோல் உதிர்பழத்தி னுடலெலாம் புதைபடக் கிடந்தனர் மதரரித் தடங்கணார். (இ - ள்.) மதர் அரி தடங்கணார் - மதர்த்த அரி பரந்த பெரிய கண்களையுடைய அம்மகளிர், கதிர் கலம்பெய் காட்சிபோல் உதிர் பழத்தின் - (வேட்கோவர் வனைந்த) ஒளிவிடுகின்ற புதுக்கலம் வீழுந் தோற்றம்போல உதிர்கின்ற ஆலம் பழத்தினால், உடல் எலாம் புதை படக் கிடந்தனர் - உடல் முழுதும் புதையக் கிடந்தனர். கதிர் கலம் : வினைத்தொகை; இயல்பாகலின். " புதுக்கலத் தன்ன கனிய வாலம்" என ஐங்குறு நூற்றிலும், " புதுக்கலம் போலும் பூங்கனி யாலும்" எனச் சீவகசிந்தாமணியிலும் ஆலம் பழத்திற்குப் புதுக்கலம் உவமையாக வந்துள்ளமை காண்க. (12) பருவமா யிரங்கழிந் தொருவமாட மதுரையெங் குரவனெண் குணத்தினான் திருவுளந் திரும்பினான். (இ - ள்.) ஆயிரம் பருவம் கழிந்து ஒருவ - ஆயிரம் ஆண்டும் கழிந்துபோக, மாடமதுரை எம் குரவன் - மாடங்கள் நிறைந்த மதுரையின்கண் எழுந்தருளியுள்ள எம் குரவனும், எண் குணத்தினான் - எட்டுக் குணங்களை யுடையவனுமாகிய சோமசுந்தரக் கடவுள், திருவுளம் திரும்பினான் - தனது திருவுளத்திற் கருணை கொண்டருளினான். பருவம் என்றது ஈண்டு ஆண்டினை. நீங்க அதன்பின் என்க. உளந் திரும்புதல் - கருணை கூர்தல். (13) தன்னதிச்சை கொண்டதோர் இன்னருட் குரவனாய் அந்நெடுங்க லாயினார் முன்னர்வந்து தோன்றினான். (இ - ள்.) தன்னது இச்சை கொண்டது ஓர் இன் அருள் குரவனாய் - தனது இச்சையினாலே திருமேனி கொண்டருளிய இனிய கருணைக் குரவனாகி, அந்நெடுங்கல் ஆயினார் முன்னர் வந்து தோன்றினான் - நீண்ட கருங்கல்லாய்க் கிடக்கும் அப்பெண்களின் முன்வந்து தோன்றியருளினான். தன்னது, னகரம் விரித்தல். கொண்டது - கொண்ட திருமேனியை யுடைய. இறைவன் சுதந்தர னாகலின் அவன் கொள்ளும் திருமேனி அவனது இச்சையாலாவதென்க; " நிறுத்துவ னினைந்த மேனி நின்மல னருளி னாலே" எனச் சிவஞான சித்தியார் கூறுதல் காண்க. (14) இருட்டதும்பு கோதையார் மருட்டதும்பு வினைகெட அருட்டதும்பு கண்ணினாற் றெருட்டதுமப நோக்கினான். (இ - ள்.) இருள் ததும்பு கோதையார் - இருள் மிக்க கூந்தலை யுடைய அப் பெண்களின், மருள் ததும்பு வினைகெட- அஞ்ஞானத்தால் வந்த பெருந்தீவினை கெடுமாறு, அருள் ததும்பு கண்ணினால் - அருள் நிறைந்த திருவிழியால், தெருள் ததும்ப நோக்கினான் - ஞானமிக நோக்கி யருளினான். ததும்புதல் - நிறைதல். மருள் - அஞ்ஞானம். தெருள் - ஞானம். இசைப் பொருட்டு நான்கடியிலும் டகரம் விரிந்து நின்றது. (15) அடிகணோக்க வம்புயங் கடிகொணெய்தல் காந்தள்பைங் கொடிகொண்முல்லை குமுதமேற் படியப்பூத்த பாறையே. (இ - ள்.) அடிகள் நோக்க - இறைவன் அங்ஙனம் நோக்கியருள, பாறை - அக் கற்பாறைகள், அம்புயம் - தாமரை மலர்களையும், கடி கொள் நெய்தல் - மணத்தினைக் கொண்ட நெய்தல் மலர்களையும், காந்தள் - காந்தட் பூக்களையும், பைங்கொடி கொள் முல்லை - பசிய கொடியிற் பொருந்திய முல்லையரும்புகளையும், குமுதம் - ஆம்பல் மலர்களையும், மேல் படியப் பூத்த - தம்மேற் பொருந்துமாறு பூத்தன. அடிகள் நோக்க பாறை பூத்தன வென்க. அம்புயம் முதலியவற்றை எழுவாயாக்கி, பாறையின்மேற் படியப் பூத்தன என்னலுமாம். கல்லுரு நீங்கிப் பெண்ணுரு வெய்தினமையை இங்ஙனங் கூறினார். அம்புயம் முதலிய உவமைகளால் முகம், கண், கை, பல், வாய் என்னும் பொருள்களை இலக்கணையாகச் சொல்லினமையின் இச் செய்யுள் உருவகவுயர்வு நவிற்சியணி. (16) தாக்கவேத கத்திரும் பாக்கமுற்ற பொன்னென நீக்கமற்ற விருண்மல வீக்கமற்று விட்டதே. (இ - ள்.) வேதகத்து இரும்பு தாக்க - பரிசவேதியில் இரும்பு தாக்குற, ஆக்கம் உற்ற பொன் என - (அவ்விரும்பின் றன்மை கெட்டு) ஆகிய பொன்னைப்போல, நீக்கம் அற்ற இருள் மலவீக்கம் அற்றுவிட்டது - (இறைவன் திருவருட் பார்வையால்) நீங்காத ஆணவமலத்தின் கட்டு அற்று விட்டது. மேற் செய்யுளிலுள்ள ‘அடிகள் நோக்க’ என்பதனை ஈண்டும் கூட்டியுரைக்க. நீக்க மற்ற - பிரிப்பின்றியிருந்த. வீக்கம் - செறிவுமாம். (17) நிறையுமன் பெனுந்நதி பொறையெனுங் கரைகடந் திறைவனின் னருட்கடற் றுறையின்வாய் மடுப்பவே. (இ - ள்.) நிறையும் அன்பு எனும் நதி - நிறைந்த அன்பு என்னும் யாறானது, பொறை எனும் கரை கடந்து - பொறுமை யென்னும் கரையைக் கடந்து, இறைவன் இன் அருள் கடல் துறையின்வாய் மடுப்ப - சிவபெருமானது இனிய திருவருளாகிய கடலின் துறையின் கண் (சென்று) கலக்க. அடக்கலாற்றாது பொங்கி யெழுந்த தென்பார் ‘பொறை யெனுங் கரை கடந்து’ என்றார். (18) எழுந்திறை யடிக்கணே அழுந்துநேச மொடுதவக் கொழுந்தனார்க ளறுவரும் விழுந்திறைஞ்சி னரரோ. (இ - ள்.) தவக்கொழுந்து அனார்கள் அறுவரும் - தவத்தின் கொழுந்து போன்றாராகிய அம்மகளிரறுவரும், எழுந்த - எழுந்த, அழுந்து நேசமொடு - ஆழ்ந்த அன்புடன், இறை அடிக்கண் விழுந்து இறைஞ்சினார் - இறைவன் திருவடியின்கண் வீழ்ந்து வணங்கினார்கள். அறுவரும் எழுந்து நேசமொடு இறைஞ்சினார் என்க. அரோ : அசை. (19) குமரற்கூட்டு மிளமுலை உமையொப்பார்கள் சென்னிமேல் அமலச்சோதி யங்கையாங் கமலப்போது சூட்டினான். (இ - ள்.) குமரற்கு ஊட்டும் இளமுலை உமை ஒப்பார்கள் சென்னிமேல் - முருகக் கடவுளுக்குப் பால் அருத்தும் இளமையாகிய கொங்கையையுடைய உமையம்மைபோலும் அப்பெண்களின் முடியின் மேல், அமலச்சோதி - தூய ஒளிவடிவினனாகிய இறைவன், அம்கை ஆம் கமலப்போது சூட்டினான் - அழகிய கையாகிய தாமரை மலரைச் சூட்டினான். சென்னியிற் கை வைத்தல் பரிச தீக்கை. போது என்றதற்கேற்பச் சூட்டினான் என்றார். (20) சித்தியெட்டு மந்நலார் புத்தியிற்கொ ளுந்தவே கைத்தலத்தில் வைத்ததோர் முத்தெனத்தெ ருட்டுவான். (இ - ள்.) சித்தி எட்டும் - எட்டுச் சித்திகளையும், அந்நலார் புத்தியில் கொளுந்த - அம்மகளிரின் அறிவிற் பொருந்த, கைத்தலத்தில் வைத்தது ஓர் முத்து எனத் தெருட்டுவான் - கையின்கண் வைத்த முத்தினைப் போலத் தெளிவிப்பானாயினன். கைக்கனி என்பதுபோல் மணி முதலியவும் கூறப்படும். ஓர்: இசை நிறைக்க வந்தது. (21) [அறுசீரடியாசிரிய விருத்தம்] அணிமா மகிமா விலகிமா வரிய கரிமா பிராத்திமலப் பிணிமா சுடையோர்க் கடைவரிய பிராகா மியமீ சத்துவமெய் துணிமா யோகர்க் கெளியவசித் துவமென் றெட்டா மிவையுளக்கண் மணிமா சறுத்தோர் விளையாட்டின் வகையா மவற்றின் மரபுரைப்பாம். (இ - ள்.) அணிமா மகிமா இலகிமா அரிமா கரிமா பிராத்தி- அணிமாவும் மகிமாவும் இலகிமாவும் அருமையையுடைய கரிமாவும் பிராத்தியும், மலப்பிணி மாசு உடையோர்க்கு அடைவு அரிய பிராகாமியம் ஈசத்துவம் - மல நோயாகிய குற்றமுடையார்க்கு அடைதலரிய பிராகாமியமும் ஈசத்துவமும், மெய்துணிமா யோகர்க்கு எளிய வசித்துவமுகி என்று எட்டு ஆம் - மெய்ப்பொருளை யுணர்ந்த பெரிய யோகியருக்கு எளிய வசித்துவமும் என்று அச்சித்தி எட்டு வகைப்படும்; இவை உளக் கண்மணி மாசு அறுத்தோர் விளையாட்டின் வகையாம் - இவைகள் உள்ளத்தின்கண் கரிய அவிச்சையை நீக்கினவர்களின் விளையாட்டின் வகையாகும்; அவற்றின் மரபு உரைப்பாம் - அவற்றின் தன்மையைக் கூறுவாம். மாயோகர்க்கு எளிய என்றது ஏளையோர்க்கு அரிய என்றபடி. மணி - கருமை. (22) அறவுஞ் சிறிய வுயிர்தொறுந்தான் பரம காட்டை யணுவாய்ச்சென் றுறையுஞ் சிறுமை யணிமாவா முவரி ஞால முதன்மேலென் றறையுஞ் சிவாந்த மாறாறு முள்ளும் புறனு மகலாதே நிறையும் பெருமை தனையன்றோ மகிமா வென்னு நிரம்பியநூல். (இ - ள்.) அறவும் சிறிய உயிர் தொறும் - மிகவும் நுண்ணிய உயிர்கள் தோறும், தான் பரமகாட்டை அணுவாய்ச் சென்று உறையும் சிறுமை அணிமா ஆம் - தான் (சிறுமையில்) முடிவாகிய பரமாணுவாய்ச் சென்று தங்கும் நுண்மையே அணிமாவாகும்; நிரம்பிய நூல் - பொருள் நிரம்பிய நூல்கள், உவரி ஞால முதல் மேல் என்று அறையும் சிவ அந்தம் ஆறாறும் - கடல் சூழ்ந்த நில முதலாக எல்லாவற்றினும் மேல் என்று கூறப்படும் சிவம் ஈறாகவுள்ள முப்பத்தாறு தத்துவங்களின், உள்ளும் புறனும் அகலாது நிறையும் பெருமைதனை - அகத்தும் புறத்தும் நீங்காது உறையும் பெருமையை, மகிமா என்னும் - மகிமா என்று கூறாநிற்கும். காட்டை - முடிவு; வரம்பு. பிருதிவி தத்துவத்தை ஞாலம் என்றதற் கேற்ப உவரியென அடைகொடுத்துக் கூறினார். சிவம் - சிவதத்துவம். சிவாந்தம் : நெடிற்சந்தி. நிரம்பிய நூல் - மெய்ந்நூல். அன்று, ஓ : அசைகள். (23) இலகு மேரு பாரம்போ லிருக்கும் யோகி தனையெடுத்தால் இலகு வான பரவணுப்போ1 லிருப்ப திலகி மாவாகும் இலகு வான பரவணுப்போ லிருக்கும் யோகி தனையெடுத்தால் இலகு மேரு பாரம்போ லிருப்ப தன்றோ கரிமாவாம். (இ - ள்.) இலகு மேரு பாரம்போல் இருக்கும் யோகிதனை எடுத்தால் - விளங்கா நின்ற மேருமலையின் பாரம்போலக் கனத்திருக்கும் யோகியை எடுத்தால், இலகு ஆன பர அணுப்போல் இருப்பது இலகிமா ஆகும் - இலேசான பரமாணுவைப் போலக் கனமற்று இருப்பது இலகிமாவாம்; இலகு ஆன பர அணுப்போல் இருக்கும் யோகிதனை எடுத்தால் - இலேசான பரமாணுவைப்போல மெலிந்திருக்கும் யோகியை எடுத்தால், இலகு மேரு பாரம்போல் இருப்பது கரிமா ஆம் - விளங்கா நின்ற மேரு மலையின் கனம்போலக் கனமாக இருப்பது கரிமாவாம். அன்று, ஓ : அசைகள். தூலம் என்பது பாடமாயின் பஞ்சு என்பது பொருளாம். (24) பிலத்தி லிருந்தோ னயனுலகிற் புகுதன் மீண்டும் பிலமடைதல் பலத்தின் மிகுந்த பிராத்தியதாம் பரகா யத்தி னண்ணுதல்வான் புலத்தி னியங்க லிச்சித்த போக மனைத்துந் தானிருக்குந் தலத்தி னினைந்த படிவருதல் பிராகா மியமாந் தவக்கொடியீர். (இ - ள்.) தவக் கொடியீர் - தவக்கொடிபோலும் நங்கையீர், பிலத்தில் இருந்தோன் அயன் உலகில் புகுதல் - பிலத்தின்கண் இருந்தவன் பிரமனுலகில் அடைதலும், மீண்டும் பிலம் அடைதல் - மீளவும் பிலத்திற் புகுதலும், பலத்தின் மிகுந்த பிராத்தியதாம் - பயனால் மிக்க பிராத்தியாகும்; பரகாயத்தில் நண்ணுதல் - வேறு உடலிற் புகுதலும், வான் புலத்தின் இயங்கல் - வானின்கண் சஞ்சரித்தலும், இச்சித்த போகம் அனைத்தும் - விரும்பிய போகமெல்லாம், தான் இருக்கும் தலத்தில் நினைந்தபடி வருதல் - தான் இருக்குமிடத்தில் நினைந்த வண்ணமே வரச்செய்தலும், பிராகாமியம் ஆம் - பிராகாமிய மாகும். அது : பகுதிப்பொருள் விகுதி. வருவித்தல் என்பது வில்விகுதி குன்றி நின்றது. (25) விண்ணி லிரவி தன்னுடம்பின் வெயிலா லனைத்தும் விளக்குதல்போல் மண்ணி லுளவாம் பொருள்பலவுங் கால மூன்றும் வானத்தின் கண்ணி லுளவாம் பொருளுந்தன் காயத் தொளியா லிருந்தறிதல் எண்ணி லிதுவு மறையொருசார் பிராகா மியமென் றியம்புமால். (இ - ள்.) விண் இல் இரவி தன் உடம்பின் வெயிலால் - வானின் கண் உள்ள சூரியன் தனது உடலின் ஒளியால், அனைத்தும் விளக்குதல் போல் - எல்லாவற்றையும் விளங்கச் செய்தல்போல, மண்ணில் உளவாம் பொருள் பலவும் - நிலவுலகில் உள்ள பொருளனைத்தையும, காலம் மூன்றும் - மூன்று காலங்களையும், வானத்தின் கண்ணில் உளவாம் பொருளும் - விண்ணுலகிலுள்ள பொருள்களையும், தன் காயத்து ஒளியால் இருந்து அறிதல் - தனது உடம்பின் ஒளியினால் (விளங்கச் செய்து) தானிருந்த வண்ணமே அறிதலாகிய, இதுவும் - இதனையும், எண்ணில் - ஆராயுமிடத்து, மறை ஒருசார் பிராகாமியம் என்று இயம்பும் - வேதம் ஒருபுடை பிராகாமியம் என்று கூறா நிற்கும். தான் ஓரிடத்திருந்தே யாவற்றையும் தன் காயத்தொளியால் விளங்கச் செய்து அறிதல் என்க. (26) ஈச னெனமுத் தொழிலுந்தன் னிச்சை வழிச்செய் தெழுபுரவித் தேசன் முதற்கோள் பணிகேட்பத் திகழ்வ தீசத் துவமாகும் பூச லவுணர் புள்விலங்கு பூத மனிதர் முதலுலகும் வாச வாதி யெண்மருந்தன் வசமாக் கொள்கை வசித்துவாம். (இ - ள்.) ஈசன் என முத்தொழிலும் தன் இச்சை வழிச்செய்து- - சிவபெருமானைப்போல ஆக்கலும் அழித்தலும் காத்தலுமாகிய மூன்று தொழில்களையும் தன் இச்சையின்படியே இயற்றி, எழு புரவித் தேசன் முதல் கோள் பணி கேட்ப - ஏழு குதிரைகளையுடைய சூரியன் முதல் ஒன்பது கோள்களும் ஏவல் கேட்க, திகழ்வது ஈசத்துவம் ஆகும் - விளங்குவது ஈசத்துவமாகும்; பூசல் அவுணர் புள்விலங்கு பூதம் மனிதர் முதல் உலகும் - போர்த் தொழிலையுடைய அவுணரும் பறவையும் விலங்கும் பூதமும் மனிதரும் முதலிய பல்வகை உயிர்களையும், வாசவ ஆதி எண்மரும் - இந்திரன் முதலிய திக்குப்பாலர் எண்மரையும், தன் வசமாகக் கொள்கை வசித்துவம் ஆம் - தன் வசமாகச் செய்து கொள்வது வசித்துவம் ஆகும். தேசன் - ஒளியுருவன்; ஆதித்தன். உலகு என்பது ஈண்டு உயிர் என்னும் பொருட்டு. வாசவாதி : தீர்க்க சந்தி. (27) எம்மை யுணர்ந்த யோகியர்க ளிவற்றை விரும்பா ரெனினுமவர் தம்மை நிழல்போ லடைந்துலகர்க் கனையார் பெருமை தனையுணர்த்தும் செம்மை யுடைய விவையென்னச் சித்தி யெட்டுந் தெளிவெய்தக் கொம்மை முலையா ரறுவருக்குங் கொளுத்தி னானெண் குணச்செல்வன். (இ - ள்.) எம்மை உணர்ந்த யோகியர்கள் - எம்மை யறிந்த சிவயோகியர், இவற்றை விரும்பார் எனினும் - இச் சித்திகளை விரும்பா ராயினும், அவர் தம்மை நிழல்போல் அடைந்து - அவர்களை உடம்பின் நிழல்போலத் தொடர்ந்து, உலகர்க்கு அனையார் பெருமைதனை உணர்த்தும் செம்மையுடைய இவை என்ன - உலகினருக்கு அவர் பெருமையை அறிவிக்கும் தகுதியை யுடையனவாம் இச் சித்திகள் என்று, சித்தி எட்டும் தெளிவு எய்த - அவ்வெண் சித்திகளையும் தெளிவுபட, கொம்மை முலையார் அறுவருக்கும் - திரண்ட கொங்கை களையுடைய மகளிர் அறுவருக்கும், எண்குணச் செல்வன் கொளுத்தினான் - எட்டுக் குணங்களாகிய செல்வத்தினையுடைய இறைவன் அறிவித்தான். சிவஞானச் செல்வமுடைய பெரியார் இச்சித்திகளை விரும்பா ராதலை, " இந்திரச் செல்வமு மெட்டுச் சித்தியும் வந்துழி வந்துழி மறுத்தன ரொதுங்கி" என்று பட்டினத்தடிகள் கூறுமாறு காண்க. செம்மையுடைய இவை உணர்த்தும் என முடித்தலுமாம். (28) [மேற்படி வேறு] தேவதே வுபதே சித்த சித்தியைச் சிலம்பன் செல்வி பாவனை வலத்தா னன்கு பயின்றுவான் வழிக்கொண் டேகிப் பூவலர் கதுப்பி னல்லா ரறுவரும் புரமூன் றட்ட காவலன் விரும்பி வைகுங் கயிலைமால் வரையிற் புக்கார். (இ - ள்.) பூ அலர் கதுப்பின் நல்லார் அறுவரும் - மலர்கள் நிறைந்த கூந்தலையுடைய மகளிரறுவரும், தேவதே உபதேசித்த சித்தியை - தேவ தேவனாகிய சோமசுந்தரக்கடவுள் உபதேசித்தருளிய அட்டமாசித்தியையும், சிலம்பன் செல்வி பாவனை வலத்தால் நன்கு பயின்று - மலையரையன் புதல்வியாகிய உமையம்மையின் தியான வலியால் நன்றாகப் பயின்று, வான் வழிக்கொண்டு ஏகி - வான் வழியாற் சென்று, புரம் மூன்று அட்ட காவலன் விரும்பி வைகும் - திரிபுரங்களை எரித்த இறைவன் விரும்பி வீற்றிருக்கும், கயிலை மால் வரையில் புக்கார் - கைலை என்னும் பெரிய மலையிற் புகுந்தனர். தேவு எனப் பிரித்தலுமாம். சிவன் தேவ தேவனாதலை, " தேவதேவன் சிவன்பெருந் தன்மையே" என்னும் திருநாவுக்கரசர் தேவாரத்தா லறிக. " இவளைநீ'a3 சிந்தித் தால்முன் னீட்டிய வினையை நீக்கித் தவலருஞ் சித்தி யெட்டுந் தரும்" என முன்பு சிவபெருமான் அருளிச்செய்தமையால் உமையின் பாவனை வலத்தால் நன்கு பயின்றா ரென்க. இங்ஙனம் பட்டமங்கையில் அட்டமாசித்தி உபதேசித்த வரலாறு, " பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங் கட்டமா சித்தி யருளிய வதுவும்" எனத் திருவாசகத்திறகுறிப்பிடப்பெற்றது. (29) ஆகச் செய்யுள் - 1788 செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை (எண் : பக்க எண்) அகங்கவ்விய களிப் 82 அகர மாதிமுன் 48 அகனிலம் வெருவுற 210 அங்கண் வெள்ளி 266 அஞ்சலிப் போது 281 அஞ்சனங் கவுஞ்சங் 73 அஞ்சுகூ விளிச்சேய்த் 85 அடிகணோக்க 303 அடியவருக் கெளியரிவர் 203 அடியவர் குறைவு 249 அடியனே னெண்ணுங் 235 அடியனேன் முன் 39 அடியார் பொருட்டுப் 262 அடியிட்டு நிலங்கிளைத் 227 அடியின்னள வகல்பாதல 78 அடுத்தன னரச 214 அடுத்து வணங்கி 270 அடுத்துவந் தலைக்கு 217 அடுத்தெமைத் தழாதி 282 அடுபழி யஞ்சா 184 அடுப்ப மாசில் 297 அட்ட வேங்கையீ 43 அணங்குநோ யெவர்க்குஞ் 178 அணிமா மகிமா 305 அண்டமுக டுரிஞ்சிநிமிர் 244 அத்த கைச் 206 அத்த வுலகி 264 அத்த ழன்றெரி 208 அந்தணன் மாற்றந் 152 அந்த ணாளனு 96 அந்த மறைக 268 அந்த மாட 284 அந்தமா வேள்வித் 77 அந்தமொழி கேட்டரச 160 அந்நிலை நகரு 231 அந்நெடுஞ் சேனை 257 அப்பதினா யிரவர்க்கு 139 அப்போ திளமூர அமைச்சர் தங்களை 52 அம்மனை யருளிச் 201 அயனத் தனெனப் 136 அயில்போலுங் கணை 143 அரவிறை யுறை 209 அருகாத செல்வத் 55 அருச்சனை யுவந்த 36 அருட்கட லனைய 218 அருளற்றிரு ளுடலிற்புதை 78 அலர்பசும் பொலங் 299 அவரையிங் கழைத்தி 258 அவ்வாறவ் வணங்கனையா 142 அவ்விடை வரைமேன் 231 அழிதகன் குறுகு 176 அழிந்தவே தியன்மா 187 அறங்கடை நின்றா 193 அறவுஞ் சிறிய 306 அறவோ ரெல்லாம் 263 அறைந்தவார் கழற் 259 அற்பு தப்பெரும் 233 அனுமதி கொடுதொழு 212 அனையர் தங்களுக் 95 அன்புக் கிரங்குங் 64 அன்றிறைவ னருளாலங் 158 அன்னது தெரிந்து 232 அன்னநான் மாடத் 33 அன்னை யென்னு 169 அன்னையைப் புணர்ந்து 187 ஆசவாத் தியமுன் 128 ஆசினன் குரவற் 195 ஆடனூல் வரம்பு 121 ஆணைப் பெண்ணுரு 45 ஆத்தா யியுங்கண் 185 ஆதரம் பெருகப் 164 ஆய பொதியில் 271 ஆய்ந்தவெம் பரிமாத் 258 ஆர்த்தெழு கொண்மூ 29 ஆவவென்னு 174 ஆவை யூறுசெய் 221 ஆறுமதி முடியணிந் 38 ஆற்ற வொறுக்குந் 154 ஆற்றாலே றுண்டகணை 160 ஆனந்த கானந் 58 ஆனந்த சித்தர் 55 ஆனபொழு தருங்கடிநன் 111 ஆனாலு மிப்போ 57 ஆனையின் புண்ணீ 89 இக்கொலை செய்தான் 153 இங்கித நெடுங்கோ 86 இடிக்கும்புயல் வயிற்றைக் 79 இடையறிந் தெம்மைச் 278 இதற்கிது துணிவென் 131 இத்தகைய சேட்புல 257 இத்தவ நெறியி 183 இந்தக் கிழியி 269 இந்த வாட 65 இப்படிக் கருங்க 301 இரங்குமே கலைசிலம் 289 இரவிதன் மரபின் 236 இரவிமுன் னிருள 219 இருட்ட தும்பு 303 இருளாய் வெளியாய் 135 இருள்கிடந் தனைய 87 இலகு மேரு 306 இலைத்தலைய பழுமரத்தின் 142 இல்லார்க்குக் கிழியீடு 101 இவளைநீர் சிந்தித் 300 இவ்வளை போல்வளை 292 இளமைச் செவ்விய 168 இறைமக னஞ்சா 150 இறைவன் குலபூ 274 இற்பூட்டிப் போயினா 107 இனைய செய்தியை 51 இனையதோர் பெண்பழியை 144 இனையநாட் சிறிதுசெல்ல 138 இன்ப மோசிறி 169 இன்றிவ ளைக்கொண் 151 இன்றேயிங் கிவனுயிரைத் 159 இன்றைக்கா யிரநாளைக் 246 ஈச னெனமுத் 308 ஈண்டுள்ள வர்க்கெம் 58 ஈறிலான் செழிய 138 உடைந்து போனவ 221 உண்மாசு கழுவுவது 102 உருமுக்குர லொலியிற் 80 உருமுவீழ்ப் புண்ட 88 உருவி லாளி 294 உரைத்தவிக் கூத்துக் 129 உலகறி கரியாத் 231 உலகெலா மழித்து 93 உறுகணோ யாற்றநா 175 உன்னால் நமக்குப் 59 ஊழிநாள் வெடிக்கு 28 எங்குமிப் படியே 248 எடுத்தனர் கையிற் 89 எண்ணிறந்த களிப் 243 எதிர்ப்பர்பின் பறிவர் 198 எத்த லத்தினு 235 எந்நா டணைவோ 264 எமக்கிடு மெமக்கிடு 291 எம்மை யுணர்ந்த 308 எய்யுங் கோறொடு 173 எல்லி டைப்படும் 47 எல்லை காத 207 எவரேனு முருத்தி 245 எழுதரியமறைச்சிலம்பு 112 எழுதுக தெலுங் 247 எழுந்திறை 304 எறியுண்டு செய்த 90 எற்றுதெண் டிரை 26 எனைத்துயிர்க்கு முறுதியிக 104 என்புபூண் டிடுகாட்டிற் 114 என்றக மகிழ்ச்சி 185 என்றமன் னவனுக் 248 என்றவப் போதே 200 என்றுபல முறைபழிச் 68 என்றுமிப் படியே 137 என்ன மதித்தே 145 என்னலுந் தென்னர் 32 என்னவிருந் தலமருவா 105 என்னா முகிலைத் 60 என்னா முன்னித் 155 ஏடா ரலங்கல் 266 ஏற்றதிக் கிராந்த 127 ஏனை வான்றருக் 50 ஐங்கனி யமுத 36 ஐயங்கொண் டணைவா 277 ஐயவிக் கொடியோன் 183 ஐயே நானுங் 152 ஒட்டியபல் கிளை துவன்றி 161 ஒருத்தரா யுண்டிபல 107 ஒருத்தனே யிருவர் 191 கங்கை கரந்து 285 கடியகா லுதைப்ப 30 கடைக்கண் சிறிதே 61 கட்டவிழ் கடுக்கையர் 70 கண்ட கனவு 269 கண்ட வடிவாற் 288 கண்டவர் கடிநகர் 211 கண்ட வெல்லையிற் 234 கண்டனன் பொருநை 260 கண்டா வளியைக் 62 கண்டானந் தணனென்ன 162 கண்ண கன்புவி 118 கண்ணுதல் மூர்த்தி 31 கதவெங் கரியின் 136 கதிர்கலம்பெய் 301 கதிர்மதி மிலைந்த 26 கரிந்தநீள் கயன்மு 106 கரியதா மரைக்க 129 கருங்கடன் முளைத்த 83 கரைமதி யெயிற்றுச் 252 கலிக்கு நூபுரச் 98 கலைபயின்று பரிநெடுந் 140 கழைகெழு வரையி 34 கள்ளுண்டல் காம 179 கறுத்ததை யெவன்கொ 280 கற்புத் திரிந்தார் 284 கற்றைச்சா மரைகள் 253 காதுவே லன்ன 279 காப்பணி தாளன் 144 காமமே கொலைகட் 179 காமனுங் காமுற் 84 காவல னவையத் 247 கிளந்தமாத் திரையின் 128 குடக்கது குணக்க 228 குண்ட ழற்கணின் 222 குமரற் கூட்டு 304 குரத்தியை நினைத்த 199 குரவன்செங் கோல்கைக் 139 குலனு மோர்கிலன் 99 குலிங்கரிவ ரையவிவர் 255 கூர்த்தவெண் கோட்டி 189 கூற்றஞ்சிய வருமிக்கரி 79 கூற்றெழு தோற்றம் 76 கேகயர்க ளாலிவர்கள் 256 கேட்ட மீனவன் 121 கைதவ னாமிக் 155 கைவினை மறவாள் 190 கொங்கரிவ ரையகுரு 255 கொடியதோர் பிறைவா 214 கொடியனார்க 301 கொடியைநே ரிடையா 202 கொண்டலி னலறிச் 86 கொண்டல்கண்ட படுக்கு 177 கொத்தி லங்கு 296 கொலைப்பழி கோட்பட் 180 கொலையிரும் பழிக்கண் 177 கொல்லரிவ ரையவிவர் 256 கொழுமணிச் சிகர 229 கோடி கோடி 168 கோட்டுப் பிறைகால் 227 கோதி லாத 205 கோமுறை கோடாக் 147 கோளா டரவம 565 கோளுடைக் குரவ 194 சண்ட வெம்பணிப் 47 சத்த நான்மறைப் 41 சவுந்தரசா மந்தனெனத் 241 சித்த யோகிகள் 51 சித்தியெட்டு 305 சிலம்பி வாயினு 119 சிவனடியார்க் கன்பிலாச் 103 சிறிது மூரலும் 44 சீறிட்ட வேங்கை 56 சுருதி யின்புறத் 220 சுற்றுமுன் பின்புறச் 175 சூழ்ந்தெழு சேனை 249 செக்கரஞ் சடையான் 280 செங்க ணரிமான் 270 செங்கண் மால்விடை 205 செங்கதிர்க் கடவுள் 182 செங்கோ லனந்த 238 செய்யகதி ரோன்வழிய 72 செய்யவா யிடையிடையே 110 செய்யேந்து திருப்புத்தூர் 141 செல்லார் பொழில் சூழ் 54 செல்லா வுலகத் 60 செல்வநெல் வணிகரெஞ் 289 செல்வர் தம்மனைப் 46 செழுமதிப் பிளவு 300 சென்று சேணிடைச் 173 சேய வெற்பினை 45 சேனையின் வரவு 254 சொற்பதங் கடந்த - வெ 186 தண்டங் கெழுகூற் 225 தண்ணீர்க்குப் போயாவி 143 தண்மதி வழிவந் 202 தவம்புரிந் தவமே 75 தழைக்கு நீள்கதிர்த் 64 தழையு லாங்கைய 94 தனக்குயிர்த் துணையா 260 தன்னதிச்சை கொண் 302 தன்னதுதா ணிழனின்ற 242 தாயிலாப் பிள்ளைமுகந் 115 தாயி லின்ப 171 தாயு மொக்கலு 100 தாய்விட்டுப் போனதொரு 113 திருத்த ராய்மது 117 திருநகரின் புறம் 157 திருமகள் வலக்கண் 24 திருவாக்கு செவிமடுத்துச் 158 தீவிட முருத்துத 215 துய்ய வெண்பொடி 42 தெய்வ மங்கல 100 தெருட் டருமறைக 251 தெழிபட்டதிக் கயத்தின் 80 தெளியாதே யாமிழைத்த 163 தெற்கி ருப்பவர் 44 தென்னவர்கோன் பணித்த 243 தென்னவன் விடங்கண் 216 தென்னன் விக்கிர 94 தேட ருங்கதிர் 41 தேரும் பொழுதோ 59 தேவதே வுபதே 309 தையன்மா தவக்கொழுந் 108 தொடத் தொடப்பொறுக் 192 தோய்ந்தி டும்பொழு 234 நகைமலரிட் டருச்சித்து 109 நங்கையர் கபாலிக் 279 நடுங்கினன் கழிந்த 34 நதியா டியசெஞ் 134 நத்தனயன் றனக்கரிய 113 நல்லதீர்த் தஞ்சிவ 174 நளிர்புனன் மதுரை 27 நன்றியைக் கொன்று 196 நாக நாடுபொன் 50 நாட்டினான் குறித்துப் 132 நாதமுறை யோபொது 225 நாதனாங் குரவன் 195 நாயி னுங்கடை 207 நால்வகைத் தாகுங் 125 நாளையும் வளையிட 292 நிலைதளர்ந் துடலந் 216 நிலைநிலையாப் பொருளுணர் 204 நிறையு மன் 304 நின்றதா ளெடுத்து 132 நின்றுமுறை யிட்டவரை 225 நின்னான் மொழிந் 66 நீனிற நீத்த 83 நெட்டிலை வடிவாள் 252 நெய்தற்போ தனைய 184 நெற்றித் தனியோடை 226 படியி லோவியப் 167 பணப்பெ ரும்பகு 220 பணிநா வசைக்கும் 227 பண்டருங் கிளவியங் 290 பண்டு முனிவர் 286 பண்ணியனான் மறை 244 பருவ நாலிரண் 97 பருவமா யிரங் 302 பருவ மாறிய 46 பல்பொறிப் பகுவாய்ப் 213 பல்லிய மொலிக்கு 254 பழையாய் புதியாய் 134 பறித்துக் கடைவாய் 61 பற்றிய பழியி 237 பாயுடை யவர்விட 209 பால் கொண்ட 228 பாவமென வடிவெடுத்த 240 பாவமோ டராகந் 122 பிச்சை வேண்டினா 97 பிருங்கி நந்தி 297 பிலத்தி லிருந்தோ 307 பிள்ளைவெண் டிங்கள் 283 பிறங்குங் கோலான் 148 பிறந்த மைந்த 295 பின்னா வருதென் 57 பின்னிடு வளைகளுஞ் 292 பின்னுஞ்சில் வரங்க 91 பின்னேய மச்சம் 54 பின்னொரு பகற்போய்ச் 193 பீளை கால்விழிக் 48 புங்கவ சீவன் 233 புங்கவ னிடுவளை 290 புண்ணிய மனையிற் 250 புதைபடக் கரித்தோல் 87 புத்தரம ணாதிய 71 புனிதநீ ராடி 35 பூசியவெண் ணீறுபோய்க் 110 பூதங்க ளல்ல 23 பூரிய ரெண்ணி 230 பெரியதினும் பெரியது 67 பெரியாய் சரணஞ் 133 பேருங் கௌரியென் 95 பைஞ்சுட ரெறிக் 30 பொய்தவ வடிவாய் 283 பொய்யறா மனத்தார் 88 பொருநரே றனையா 251 பொள்ளென மேக 27 பொன்னகரான் காலந் 38 பொன்னி நாடவன் 120 போயின வணிகர் 293 போர்கெழு களங்கண் 198 போற்றி மன்னநம் 12 பௌவ மூழ்கு 298 மடங்கலே றொன்றும் 197 மடமயி லனையா 277 மட்ட லம்பு 293 மட்டவிழ் தாரான் 146 மட்டித்த கலவைக் 201 மட்டுற்ற தாரான் 62 மணமகனே பிணமகனாய் 161 மண்டொ டுங்கரு 171 மதுகைவா ளமர்க்கு 197 மத்தக் களிற்றான் 63 மந்தி றச்சி 298 மருவிதழி யானுறையும் 71 மழவுருநீத் தடலேற்றின் 116 மறப்பெரும் படிவங் 181 மறலிவரு மாறென 224 மறைப்பொருளுரைத் 237 மறையவனை யின்னுமொரு 163 மறையே நமது 267 மற்ற வன்குடி 99 மற்றிது முனமத 211 மன்றாடு மணியே 157 மன்னவன் முடிமேற் 74 மன்னன்மு னமைச்சர் 52 மன்னன் றானு 154 மன்னு மறையின் 287 மாடமலி மாளிகையி 222 மாடுள பொதும்பர் 76 மாண்டவ ளைத்தன் 146 மாதங்கந் தடிந்தட் 90 மானவாள் விஞ்சை 191 மின்ன லங்கல் 296 மின்னனை யாடன் 156 மீண்டுநின் னயோத்தி 236 மீனவனு மாநகருண் 224 மீனவன் காண 250 முடங்கன்மதி செஞ்சடை 72 முத்த மாலிகை 65 முந்திக் குறையா 271 மும்மைப் புவனங் 268 முரசதி ரனிக 259 முழுது ணர்ந்த 65 முற்பக லிழைத்த 181 முனியொடு குறுகிச் 232 முன்னிடு வளையெலாங் 291 மைக்க ருங்கங்குல் 172 மைப்போதகம் பொறை 81 மையனாக 170 யாவரு மொருங்கு 74 வடிவுபோ லுள்ள 73 வடுப்படு பிறவிப் 130 வட்ட வார்சடைக் 42 வந்தமண வாட்டிசிவ 102 வந்துநான் மாட 33 வம்புளாய் மலர்ந்த 91 கேட்டின்ப மெய்திக் 73 கேட்டு வேந்தன் 5 கைத்தலம் புடைத்து 231 கைவரும் பொருளைத் 178 வருதிநின் னாமஞ் 182 வருத்தமின் மனோபா 124 வருவானுண் ணீர்வேட்டு 141 வல்லாரில் வல்லே 60 வல்வேடர்க் கதிபதியாய் 241 வழிவழி யடிமைசெய் 212 வளர்ந்து பேதை 285 வளைக ளிடுவா 287 வள்ளல் குலபூ 262 கொடுப்பா ரவரே 69 கொடுவந்த வளவன் 35 வன்றிறல் வருணன் 39 வாங்கின புரிசை 230 வாயிலு ளார்த 149 வார்கெழு கழற்கா 253 வாள்வினைக் குரவ 190 வானாடர்க் கவியுணவின் 245 விக்கிரம பாண்டியன் 70 விடம்பொதி காட்டம் 75 விடுத்திடு முயிர்ப் 223 விடையினை யால 31 விட்டார்வலி கெட 81 விண்டக மலர்த்தா 131 விண்டிடாத் தேசி 124 விண்ணி லிரவி 307 விரைசெய்தா வன்யா 200 விரைசெய் மாலைக் 166 விளைகள்வாய் வீழ்ந்த 133 விள்ளுங் கமலச் 275 வீங்கிய தடந்தோ 84 வீசி மாத்திரைக் 46 சத்திப் படைமேல் 249 சந்து சூழ்மல 1 சம்பு மதுரைப் 17 வெந்நிடு வார்போற் 198 வெருவரு வேழ 178 வெருவுங் காய்சின 167 வெவ்வியமும் மதயானை 240 வெள்ளிய நீறு 29 வேதகந் தரத்து 189 வேத கிண்கிணி 43 வேத நாயகன் 166 வேத நூறெளி 49 வேதந் தனது 274 வேதந் தானே 267 வேத மசைக்குங் 275 வேதமா கமம்பு 114 வேதிய னிற்குந் 151 வேதியாய் வேத 66 வேந்தர்கள் சிங்கம் 156 வேந்தன் மீனவன் 117 வேற்றோர் வைகல் 170 சீறியா யிரம்ப 61 சுகலனென் றொருவே 230 சுந்தரச் செம்மல் 290 சுந்தரப் புத்தேள் 34 வையா கரணர்க 272 ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியர் உரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் L L L குறிப்புகள் குறிப்புகள் குறிப்புகள் (பாடம்.) 1. நடையினையாகில். (பாடம்.) 1. இந்நெடுமாரி. (பாடம்.) 1. உவகைவந் தேமக்கஞ்சத் (பாடம்.) 2. அடங்கின னடங்கா வன்பினண்ணலை (பாடம்.) 1. ஆடியின்னே. (பா-ம்,) 1. தம்மனோர். (பாடம்.) 1. தகுவதென்னா. (பாடம்.) 1. உருகாதரத்தான். (பாடம்.) 2. வலமாக முன்பு (பாடம்.) 1. நீட்டி (பாடம்.) 1. எந்நாடு நும்மூர் எந்நாடு நுந்நாடு. (பாடம்.) 2. நடாத்திடுஞ். (பாடம்.) 1. கண்டாவலி. (பாடம்.) 2. கண்கள் சேப்பக். (பாடம்.) 1. அடியேன்றன், அடியேனென். (பாடம்.) 1. மன்றமது. (பாடம்.) 1. ஆதியர் (பாடம்.) 2. செய்து வரு. (பாடம்.) 1. காஞ்சி குஞ்சர சையம் (பாடம்.) 1. கூற்றஞ்சிட (பாடம்.) 1. அழலெறி. (பாடம்.) 2. தெழப்பட்ட. வழிப்பட்டடொரு. விழிப்பட்டவர். கழிப்பட்டலை (பாடம்.) 1. பசந்து தோன்றி (பாடம்.) 2 நோக்கி (பாடம்.) 1. வாய்ப் பெய்யும் (பாடம்.) 1. உம்பன்மான் : மால். வீங்கி (பாடம்.) 1. மன்னர் (பாடம்.) 1. செம்புளாய்க் கொடிய (பாடம்.) 1. னயற்புலத் (பாடம்.) 1. முந்தச் (பாடம்.) 1. காண்பார் (பாடம்.) 1. மீனவண் கொடியவ .(பாடம்.) 1. கட்டழல் (பாடம்.) 1. மூழ்க (பாடம்.) 1. இடைவிட்டு (பாடம்.) 1. வினவுமால் (பாடம்.) 1. எதிர்ந்தோடி (பாடம்.) 2 வாழ்த்தொலியே (பாடம்.) 3. கழிந்த (பாடம்.) 1. எய்த காவலனை (பாடம்.) 1. உண்டே (பாடம்.) 1. காமன்றன் றேவியும் (பாடம்.) 2 கனல்போல் (பாடம்.)1. தளையிட்டு (பாடம்.) 1. துணித்தானாய் வாய்முகத் (பாடம்.) 1. கொடுக்கிறப் (பாடம்.) 2. உற்றவே (பாடம்.) 3. செயலினிப் (பாடம்.) 1. கொலையெழு (பாடம்.) 1. செய்வது (பாடம்.) 1. பாவமுயற்சியால் (பாடம்.) 2. தற்பகை (பாடம்.) 1. ஈசனுற்றவர் (பாடம்.) 1. விடுவதை (பாடம்.) 1. ஆதனாங்கது கண்டு. (பாடம்.) 1. வேதகந் தரித்த (பாடம்.) 2. போதகன் றனக்கு (பாடம்.) 1. வாளாதிருந்தாள் (பாடம்.) 1. மாசிரு டணிந்த (பாடம்.) 1. இத்தகை (பாடம்.) 2. வேடமாயின (பாடம்.) 1. ஒட்டி (பாடம்.) 1. கொடுத்த டுஞ்சினம் (பாடம்.) 1. விள்ளா (பாடம்.) 2. வருவழி (பாடம்.) 1. அகமதிற் கொடு (பாடம்.) 1. ஆலாகல வெள்ளம்போலக் (பாடம்.) 1. திற மரைமங்கை (பாடம்.) 1. கொள்ளேலென (பாடம்.) 1. அரசனருள் பொருள் (பாடம்.) 1. சுடரோ னன்பன் (பாடம்.) 1. குறுந்தாள் (பாடம்.) 1. எங்கு முற்ற (பாடம்.) 1. தானையர் தலைவன் (பாடம்.) 1. சேனையின் செவ்வி (பாடம்.) 2. எவ்வெத் தேயத்திலுள்ளார் (பாடம்.) 1. மெய்காட்டி (பாடம்.) 1. மனித வேடம் (பாடம்.) 1. வைத்த பொருளும் (பாடம்.) 1. அது கொண்டு. (பாடம்.) 1. வளை பொன்னால் (பாடம்.) 1. நிறைவன்றளந்து (பாடம்.) 1. மாது கணவன். (பாடம்.) 1. நீளாழி (பாடம்.) 1. இவ்வளை போல்வன (பாடம்.) 2. மெய்வளர் பொடிப்பெழ (பாடம்.) 1. இயக்கி மாதர் (பாடம்.) 2. தண்பராரை. (பாடம்.) 1. இயக்கி மாதர் (பாடம்.) 1. இலகுவான தூலமென