நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 11 திருவிளையாடற் புராணம் மதுரைக் காண்டம் - 3 உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 11 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 336 = 352 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 220/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்\கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த் தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர் களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக்கொள் கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகு குரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை iii பதிப்புரை x 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 1 7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் 18 8. அன்னக்குழியும் வையையு மழைத்த படலம் 30 9. எழுகடலழைத்த படலம் 47 10. மலயத்துவசனை யழைத்த படலம் 56 11. உக்கிரகுமாரபாண்டியரது திருவவதாரப் படலம் 72 12. உக்கிரபாண்டியருக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் 101 13. கடல் சுவற வேல்விட்ட படலம் 143 14. இந்திரன் முடிமேல் வளை யெறிந்த படலம் 155 15. மேருவைச் செண்டாலடித்த படலம் 191 16. வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம் 215 17. மாணிக்கம் விற்ற படலம் 248 18. வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் 309 செய்யுள் முதற் குறிப்பு அகராதி 321 திருவிளையாடற்புராணம் மதுரைக் காண்டம் - 3 ஆறாவது வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் (அறுசீரடியாசிரியவிருத்தம்) உலகிய னிறுத்து வான்வந் தொருபரஞ் சுடர்வான் றிங்கட் குலமணி விளக்கை வேட்டுக் கோமுடி கவித்துப் பாராண் டிலகுறு தோற்ற மீதான் முனிவர ரிருவர் தேற அலகிலா னந்தக் கூத்துச் செய்தவா றறைய லுற்றாம். (இ-ள்.) ஒரு பரஞ் சுடர் - ஒப்பற்ற பரஞ்சோதியாகிய இறைவன், உலகு இயல் நிறுத்துவான் வந்து - உலகியலை நிறுத்துதற் பொருட்டுச் சுந்தர பாண்டியனாய் வந்து, வான் திங்கள் குல மணி விளக்கை - வானின்கண் உலவும் சந்திரன் மரபுக்கு மாணிக்க விளக்காகிய தடா தகைப் பிராட்டியாரை, வேட்டு - திருமணஞ் செய்து கொண்டு, கோமுடி கவித்துப் பார் ஆண்டு - அரசமுடிசூடி உலகை ஆண்டு; இலகுறு தோற்றம் ஈது - விளங்கும் வரலாறு இது; முனிவரர் இருவர் தேற - இரண்டு முனிவர்கள் தெளிந்துய்யுமாறு, அலகு இல் ஆனந்தக்கூத்து செய்தவாறு - அளவில்லாத ஆனந்தக் கூத்தை ஆடியளிருளி திருவிளையாடலை, அறையலுற்றாம் - இனிக் கூறத்தொடங்கினேம் எ-று. உலகியல் - உலகம் நடத்தற்கேதுவாகிய அறம் பொருள் இன்பங்கள்;‘உலகிய னிறுத்தும் பொருண்மர பொடுங்க,’உலகியல் கூறிய பொருளிது வென்ற வள்ளுவன்’ என்னும் கல்லாடப் பகுதி களிலும் உலகியல் என்பதற்குப் பொருள் இதுவாகல் வேண்டும். நிறுத்துவான்: வினையெச்சம். ஒரு என்றது தனி முதல் என்றபடி. குலத்தை என்றும் விளங்கச் செய்தமையின் ‘குலமணி விளக்கு’ என்றார். கோமுடி என்றது நிலமுழுதாளும் பெரு வேந்தர்க் குரிய முடியென்ற வாறு. ஆல் : அசை. முனிவரர் - முனிவருள் மேலாயவர். (1) புண்ணிய மலர்மென் கொம்பை வேட்டபின் புவனந் தாங்குங் கண்ணுதன் மூர்த்தி யாய கவுரியன் மணத்தில் வந்த மண்ணியல் வேந்தர் வானோர் மாதவர் பிறரு முண்ண நண்ணுதி ரென்ன லோடு நண்ணுவார் விரைவி னெய்த. (இ-ள்.) புண்ணியம் மலர் மென் கொம்பை - அறவடிவமாகிய மெல்லிய பூங்கொம்புபோலும் பிராட்டியை, வேட்டபின் புவனம் தாங்கும் - திருமணம் செய்து கொண்டபின் உலகையாளும், கண்நுதல் மூர்த்தியாய கவுரியன் - நெற்றிக் கண்ணையுடைய இறைவனாகிய சுந்தரபாண்டியன், மணத்தில் வந்த - திருமணத்தில் வந்த, மண் இயல் வேந்தர் - மண்ணுலகை ஆளுதலமைந்த மன்னர்களும், வானோர் - தேவர்களும், மாதவர் - முனிவர்களும், பிறரும் - ஏனையோர்களும், உண்ண நண்ணுதிர் என்னலோடும் - அமுதுண்ண வருவீர் எனக் கட்டளையிட, விரைவின் எய்த நண்ணுவார் - விரைந்து அடைதற்கு வருகின்றவர்கள் எ-று. இறைவி அறவுருவின ளென்பது ‘அறப்பெருஞ் செல்வி, எனமுற் கூறியிருத்தலானுமறிக.’ புண்ணியக்கொடி வண்டார்ப்பப் பூத்தல்போல் ‘என முற்போந்த தொடருடன்‘ புண்ணிய மலர்மென் கொம்பை என்னு மிதனை ஒத்து நோக்குக. நண்ணுதிர்: படர்க்கையில் முன்னிலை வந்தவழு வமைதி. என்னலோடும் - என்று அவர்கட்குக் கட்டளை யிட்டவளவில். நண்ணுவார் : பெயர். (2) பொன்னவிர் கமலம் பூத்த புனிதநீ ராடித் தத்தம் நன்னெறி நியம முற்றி நண்ணினார் புலிக்கா லோனும் பன்னக முனியுந் தாழ்ந்து பரவியம் பலத்து ளாடும் நின்னரு ணடங்கண் டுண்ப தடியேங்க ணியம மென்றார். (இ-ள்.) அவிர் பொன் கமலம் பூத்த புனித நீர் ஆடி - விளங்கா நின்ற பொற்றாமரை மலர்ந்த தூய வாவியில் நீராடி, நல் நெறி தத்தம் நியமம் முற்றி நண்ணினார் - நல்ல நெறிப்படியே தங்கள் தங்கள் நியமங்களை முடித்து வந்தனர்; புலிக்காலோனும் பன்னக முனியும் - வியாக்கிரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும், தாழ்ந்து பரவி - விழுந்து வணங்கித் துதித்து, அம்பலத்துள் ஆடும் - சிற்றம்பலத்தின் கண் ஆடப்பெறுகின்ற, நின் அருள் நடம் கண்டு - தேவரீரது கருணைத் திருக் கூத்தினைக் கண்டபின், உண்பது அடியேங்கள் நியமம் என்றார் - அருந்துவது அடியேங்களுடைய நியமம் என்று கூறினர் எ-று. நியமம் - கடன், முறைமை. அருள் நடம் - உயிர்களை வாழ்விக்கும் பெருங் கருணையாற் புரியும் திருக்கூத்து. உண்பது : தொழிற்பெயர். (3) என்னலு மந்தந் கூத்தை யிங்குநாஞ் செய்துந் தில்லைப் பொன்னக ருலகமெல்லா முருவமாம் புருடற் குள்ளம் இன்னதாந் துவாத சாந்த மென்றிறை யருளிச் செய்ய மன்னவ வேனை யங்கம் யாவென மன்னன் சொல்வான். (இ-ள்.) என்னலும் - என்று கூறிய வளவிலே, இறை - இறைவன், அந்தக் கூத்தை இங்கு நாம் செய்தும் - அந்நடத்தினை இம்மதுரைப் பதியிலே யாம் செய்வோம்; உலகம் எல்லாம் உருவம் ஆம் புருடற்கு - உலக மனைத்தும் வடிவமாகிய புருடனுக்கு, பொன் தில்லை நகர் உள்ளம் - அழகிய தில்லையம்பதியானது இதயமாகும்; இன்னது துவாத சாந்தம் ஆம் என்று அருளிச் செய்ய இம் மதுரைப்பகுதி துவாத சாந்தமாகும் என்று அருளிச் செய்ய (முனிவர்கள்), மன்னவ ஏனையங்கம் யா என - அரசே மற்றைய உறுப்புக்கள் யாவை என்று கேட்க, மன்னன் சொல்வான் - இறைவனாகிய சுந்தர பாண்டியன் கூறுவான் எ-று. செய்தும் - செய்வோம்; தன்மைப் பன்மை யெதிர்காலமுற்று. உலக மெல்லாம் உருவமாம் புருடன் - உலக புருடன்; விராட்புருடன். துவாத சாந்தம் - உச்சிக்குமேற் பன்னிரண்டு அங்குல அளவிலுள்ளது:தீர்க்க சந்தி; தல விசேடப் படலம் 21-ஆம் செய்யுளுரை நோக்குக. (4) அரைக்குமே லுலகே ழென்று மரைக்குக் கீழுலகே ழென்றும் உரைக்கலா லுலக மெல்லா முருவமாம் புருடற் கிந்தத் தரைக்குமே லனந்தந் தெய்வத் தானமுண் டனைத்துங் கூறின் வரைக்குறா சிலதா னங்கள் வகுத்துரை செய்யக் கேண்மின். (இ-ள்.) அரைக்கு மேல் உலகு ஏழ் என்றும் - இடைக்குமேல் ஏழுலக மென்றும், அரைக்குக் கீழ் உலகு ஏழ் என்றும் - இடைக்குக் கீழ் ஏழுலகென்றும், உரைக்கலால் - சொல்லப்படுதலால், உலகம் எல்லாம் உருவம் ஆம் புருடற்கு - உலகமனைத்தும் உருவமாகிய புருடனுக்கு. இந்தத் தரைக்குமேல் அனந்தம் தெய்வத்தானம் உண்டு - இந்நிலவுலகில் அளவிறந்த தெய்வத்தன்மை பொருந்திய தானங்கள் உள; அனைத்தும் கூறின் வரைக்கு உறா - அவை முழுதும் எடுத்துச் சொல்லப்புகின் ஓரளவுக்கு உட்படா; சில தானங்கள் வகுத்து உரை செய்யக் கேண்மின் - (ஆதலான்) சில திருப்பதிகளை மட்டும் வகுத்துக் கூறக்கேளுங்கள் எ-று. அரை: இடைக்கு எண்ணலளவையால் வந்தபெயர். உரைக் கலால் - நூல்களிற் கூறப்படுதலால்; நூல்கள் கூறுதலால் எனலுமாம்; கு: சாரியை, அல்: தொழிற் பெயர் விகுதி. உலகமெல்லாம் - பதினான்கு உலகங்களும். தரைக்குமேல் - தரையில்; கு: சாரியை, மேல்: ஏழனுருபு. வரைக்கு - அளவுக்கு. உறா - உட்படா. (5) திருவள ராரூர் மூலந் திருவானைக் காவே குய்யம்1 மருவளர் பொழில்சூ ழண்ணா மலைமணி பூர நீவிர் இருவருங் கண்ட மன்ற மிதயமாந் திருக்கா ளத்தி பொருவருங் கண்ட மாகும் புருவமத் தியமாங் காசி. (இ-ள்.) திருவளர் ஆரூர் மூலம் - செல்வமோங்கும் திருவாரூர் மூலத்தானமாம்; திருவானைக்காவே குய்யம் - திருவானைக்கா சுவாதிட்டானத்தானமாம்; மருவளர் பொழில் சூழ் அண்ணாமலை மணி பூரம் - மணம் ஒங்கும் சோலைகள் சூழ்ந்த திருவண்ணாமலை மணிபூரத்தானமாம்; நீவிர் இருவரும் கண்ட மன்றம் இதயம் ஆம் - நீங்கள் இருவரும் தரிசித்த தில்லைப்பதி இதயத்தானமாகும்; திருக்காளத்தி பொருவு அரும் கண்டம் ஆகும் - திருக்காளத்தி ஒப்பில்லாத கண்டத்தானமாகும், காசி புருவ மத்தியம் ஆம் - காசிபுருவ மத்தியத்தானமாகும் எ-று. குய்யம் - மறைவிடம்; சுவாதிட்டானத்தைக் குறிக்கின்றது. இதயம் - அநாகதம். கண்டம் - விசுத்தி. புருவமத்தியம் - ஆஞ்ஞை. ஆதார முறையாற் கூறப்பட்டமையின் பஞ்சபூதத்தானங்களுள் ஆகாயத்தானம் வாயுத்தானத்தினும் முற்கூறப்பட்டது. மன்றத்தை யுடைய பதியை மன்ற மென்றார். ஆம் என்பதனை மூலம் முதலியவற்றோடும் கூட்டிக்கொள்க. ஏ: அசை. (6) பிறைதவழ் கயிலைக் குன்றம் பிரமரந் திரமாம் வேதம் அறைதரு துவாத சாந்த மதுரையீ ததிக மெந்த முறையினா லென்னின் முன்னர்த்தோன்றிய முறையாலென்றக் கறையறு தவத்த ரோடு கவுரியன் கோயில் புக்கான். (இ-ள்.) பிறை தவழ் கயிலைக்குன்றம் பிரம ரந்திரம் ஆம் - சந்திரன் தவழும் திருக்கயிலைமலை பிரமரந்திரத்தானம் ஆகும்; வேதம் அறை தரு மதுரை துவாத சாந்தம் - மறைகள் கூறுகின்ற இம் மதுரைப்பதி துவாதசாந்தத் தானமாகும், ஈது எந்த முறையினால் அதிகம் என்னில் - இஃது எந்த வகையினால் மேலாகிய தென்றால், முன்னர்த்தோன்றிய முறையால் என்று - முதலில் உண்டாகிய காரணத்தாலென்று கூறி, அகறை அறு தவத்தரோடு - அந்தக் குற்றமற்ற தவத்தினையுடைய முனிவரோடு, கவுரியன் கோயில் புக்கான் - சுந்தர பாண்டியன் திருக்கோயிலுட் புகுந்தருளினான் எ-று. பிரமரந்திரம் - பிரமநாடி; சுழுமுனையின் உச்சியாகிய இடம். ஈது அதிகமாம் என வேறு தொடராக்கலும் பொருந்தும். (7) தன்னரு ளதனா னீத்த தன்னையே தேடிப் போந்த மின்னவிர் கயிலை தானோ விடையுரு மாறி யிங்ஙன் மன்னிய தேயோ திங்கண் மண்டல மேயோ வென்னப் பொன்னவிர் விமானக் கீழ்பால் வெள்ளியம் பொதுவுண் டாக. (இ-ள்.) தன் அருளதனால் நீத்த தன்னையே தேடிப்போந்த - தனது திருவருளால் தன்னை விடுத்து வந்த சிவபெருமானையே தேடி வந்தமர்ந்த, மின் அவிர் கயிலை தானோ - ஒளி விளங்கும் திருக் கயிலைமலைதானா (அன்றி), விடை உருமாறி இங்ஙன் மன்னியதோ - இடபவூர்தியானது தனது வடிவம் வேறாகி இம்மன்றமாய் நிலை பெற்றதோ (அன்றி), திங்கள் மண்டலமோ என்ன - சந்திர மண்டலமோ என்று கூறுமாறு, பொன் அவிர் விமானம் கீழ்பால் - பொன்னாலாகி விளங்கும் விமானத்தின் கீழ் பக்கத்தில், வெள்ளியம் பொது உண்டாக - வெள்ளியம்பலம் ஒன்று தோன்ற எ-று. தன் - சிவபெருமான். நீத்த - கயிலையை விடுத்துவந்த. தான் ஏ: அசைகள். என்ன - என்று ஐயுற, என்று நினைக்க; என்று கூற: (8) மின்பயில் பரிதிப் புத்தேள் பாற்கடல் விளங்கி யாங்குப் பின்பதன் மிசைமா ணிக்கப் பீடிகை தோன்றிற் றன்ன தன்பர்த முளமே யாகு மல்லது வேதச் சென்னி என்பதா மஃதே யன்றி யாதென விசைக்கற் பாற்றே. (இ-ள்.) பால் கடல் - திருப்பாற் கடலின்கண், மின்பயில் பரிதிப்புத் தேள் விளங்கி யாங்கு - ஒளிதங்கிய சூரியதேவன் தோன்றினாற் போல, பின்பு அதன் மிசை மாணிக்கப் பீடிகை தோன்றிற்று - வெள்ளியம்பலம் தோன்றிய பின் அதன்மேல் மணிப்பீடம் ஒன்று தோன்றியது; அன்னது அன்பர்தம் உளமே ஆகும் - அஃது அடியார்களின் உள்ளத் தாமரையே ஆகும்; அல்லது வேதச்சென்னி என்பது ஆம் - அன்றி மறை முடி என்று சொல்லப்படுவதாகும்; அஃதே அன்றி - இங்ஙனம் கூறுவதல்லாமல், யாது என இசைக்கற் பாற்று - வேறுயாதெனக் கூறும் பகுதியை யுடையது எ-று. என்பது: அசையுமாம். ஈற்றிலுள்ள ஏகாரம் அசை. (9) அன்னதோர் தவிசி னும்ப ராயிரங் கரத்தா லள்ளித் துன்னிருள் விழுங்குங் கோடி சூரிய ரொரு காலத்து மன்னின ருதித்தா லொப்ப மனமொழி பக்கங் கீழ்மேற் பின்முதல் கடந்த ஞானப் பேரொளி வடிவாய்த் தோன்றி. (இ-ள்.) அன்னது ஓர் தவிசின் உம்பர் - அத் தன்மையதாகிய ஒப்பற்ற பீடிகையின் மேல், ஆயிரம் கரத்தால் அள்ளித் துன் அருள் விழுங்கும் - ஆயிரங் கைகளினால் அள்ளிச் செறிந்த இருளை விழுங்கு கின்ற, கோடி சூரியர் ஒருகாலத்து மன்னினர் உதித்தால் ஒப்ப - கோடி சூரியர்கள் ஒரே காலத்தில் நிலைபெற்று உதித்தாற் போல, மனம் மொழி பக்கம் கீழ்மேல் பின் முதல் கடந்த - உள்ளம் உரை பக்கம் கீழ் மேல் பின் முன் என்னும் இவற்றைக் கடந்த, ஞானப் பேர் ஒளி வடிவாய்த் தோன்றி - மெய்ஞ்ஞானமாகிய பெரிய ஒளி வடிவமாகத் தோன்றி எ-று. கரம் - கை, கிரணம். இறைவன் எல்லாவற்றையும் கடந் திருக்கும் மியல்பினை, “ ஒன்றன் றிரண்டன் றுளதன் றிலதன்று நன்றன்று தீதன்று நானன்று - நின்ற நிலையன்று நீயன்று நின்னறிவு மன்று தலையன் றடியன்று தான் ” எனத் திருக்களிற்றுப்படியார் கூறுகின்றது. (10) முந்துறு கணங்கள் மொந்தை தண்ணுமை முழக்கஞ் செய்ய நந்திமா முழவந் தாக்க நாரண னிடக்கை யார்ப்ப வந்துகந் தருவ நூலின் மரபுளி யிருவர் பாட ஐந்துதுந் துபியுங் கல்லென் றார்கலி முழக்கங் காட்ட. (இ-ள்.) முந்துறு கணங்கள் - முதன்மையான சிவகணங்கள், மொந்தை தண்ணுமை முழக்கம் செய்ய - மொந்தை தண்ணுமை களை முழக்கவும், நந்திமா முழவம் தாக்க - திருநந்திதேவர் பெரிய மத்தளத்தை அடிக்கவும், நாரணன் இடக்கை ஆர்ப்ப - திருமால் இடக்கையை ஒலிக்கவும், இருவர் வந்து - தும்புரு நாரதர் என்னு மிருவரும் வந்து, கந்தருவ நூலின் மரபுளிபாட - இசை நூலின் வழியேபாடவும், துந்துபி ஐந்தும் கல்லென்று ஆர்கலி முழக்கம் காட்ட - ஐந்து துந்துபிகளும் கல்லென்னும் ஒலியோடு கடலின் ஒலியைக் காட்டவும் எ-று. ஆர்ப்பிக்கவென்பது, ஆர்ப்பவென நின்றது. கந்தருவநூல் - இசைநூல். மரபுளி - முறையால்; உளி மூன்றன் பொருள்படும் இடைச்சொல். கல்லென்று : ஒலிக் குறிப்பு. (11) மதுமுகத் தலர்ந்த வெண்டா மரைமகள் சுருதி கூட்டச் சதுமுகத் தொருவன் சாம கீதயாழ் தடவிப் பாட விதுமுகத் தருகு மொய்க்கு மீனென ஞான வெள்ளிப் பொதுமுகத் தமரர் தூற்றும் பூமழை யெங்கும் போர்ப்ப (இ-ள்.) மதுமுகத்து அலர்ந்த வெள்தாமரை மகள் சுருதி கூட்ட - தேன் ஒழுகும் முகத்தொடு மலர்ந்த வெள்ளிய தாமரை மலரில் வசிக்குங் கலைமகள் சுருதி கூட்டவும், சதுமுகத்து ஒருவன் - நான்கு முகங்களையுடைய பிரமன், யாழ் தடவி சாமகீதம் பாட - யாழினைத் தடவிச் சாமகீதம் பாடவும், விதுமுகத்து அருகு மொய்க்கும் மீன் என - திங்கள் மண்டிலத்தின் அருகிற் சூழும் உடுக்களைப் போல, ஞான வெள்ளிப் பொதுமுகத்து - ஞானமயமாகிய வெள்ளியம்பலத்தில், அமரர் தூற்றும் பூமழை எங்கும் போர்ப்ப - தேவர்கள் பொழியும் மலர்மாரி எங்கும் மூடவும் எ-று. கீதம் என விரிக்க. தடவல் - நரம்பினை வருடல். விதுமுகத்து. பொது முகத்து என்பவற்றில் முகம் ஏழனுருபு. (12) பொருங்கட னிறத்த செந்தீப் பொங்குளைக் குறளின் மீது பெருங்கடல் வடவைச் செங்கண் பிதுங்கமேற் றிரிந்து நோக்கி முருங்கட லெரியிற் சீற முதுகிற வலத்தா ளூன்றிக் கருங்கடன் முளைத்த வெய்யோன் காட்சியிற் பொலிந்து நின்று (இ-ள்.) பொரும் கடம் நிறத்த - (அலை) மோதுங் கடல் நிறம் போலும் நிறத்தையுடைய, செந்தீ பொங்கு உளை குறளின் மீது - சீவந்த தீப்போலும் விளங்கும் புறமயிரையுடைய முயலகன் மேல், பெரு கடல் வடவை செங்கண் பிதுங்க - பெரிய கடலின் வடவைத் தீப்போல அவன் சிவந்த கண்கள் பிதுங்கவும், மேல் திரிந்து நோக்கி - மேலே சுழன்று பார்த்து, முருங்கு அடல் எரியில் சீற - (உலகினை) அழிக்கும் வலியினையுடைய அவ்வடவைபோற் கோபிக்கவும், முதுகு இற - அவன் முதுகு முறிய, வலத்தாள் ஊன்றி - வலது திருவடியை ஊன்றி, கருங்கடல் முளைத்த வெய்யோன் காட்சியில் பொலிந்து நின்று - கரிய கடலின்கண் தோன்றிய சூரியனது தோற்றம்போல விளங்கி நின்று எ-று. நிறத்த என்னும் குறிப்புப் பெயரெச்சம் குறளன் என்பதன் விகுதியைக் கொண்டு முடியும். குறளன் - குறியவடிவுடையவன்; முயலகன். மீது ஊன்றி யென்க. முருக்கு என்பது மெலிந்து நின்றது. (13) கொய்யுஞ்செங் கமலப் போது குவிந்தென வெடுத்துக் கூத்துச் செய்யும்புண் டரிகத் தாளுந் திசைகடந் துளவீ ரைந்து கையுந்திண் படையுந் தெய்வ மகளிர்மங் கலநாண் காத்த மையுண்ட மிடறுஞ் சங்க வார்குழை நுழைந்த காதும். (இ-ள்.) கொய்யும் செங்கமலப் போது குவிந்தென - கொய்தற் குரிய செந்தாமரை மலர் குவிந்தாற் போல, எடுத்து - தூக்கி, கூத்துச் செய்யும் புண்டரிகத் தாளும் - திருக்கூத் தியற்றுகின்ற திருவடித் தாமரையும், திசை கடந்துள ஈரைந்து கையும் - திக்குகளைக் கடந்தபத்துத் திருக்கைகளும், திண் படையும் - (அவற்றிலுள்ள) வலிய படைகளும், தெய்வ மகளிர் - தெய்வப் பெண்களின், மங்கல நாண்காத்த - மங்கல நாணைக் காத்தருளிய, மை உண்ட மிடறும் - கருநிறம் பொருந்திய திருமிடறும், வார் சங்கம் குழை நுழைந்த காதும் - நீண்ட சங்க குண்டலம் பூண்ட திருச்செவியும் எ-று. எடுத்து - குஞ்சித்து. அயன்மால் உள்ளிட்ட தேவர்கள் பொன்றாமற் காத்த வென்பார் ‘தெய்வ மகளிர் மங்கல நாண் காத்த என்றார்; “செற்றால முயிரனைத்து முண்டிடவே நிமிர்ந்தெழலுஞ் சிந்தை மேற்கொள் பற்றாலங் கதுநுகர்ந்து நான்முகனே முதலோர்தம் பாவைமார்க்குப் பொற்றாலி தனையளித்தோன்” என்னும் கந்தபுராணச் செய்யுள் இங்கே நோக்கற்பாலது. காத்த மிடறென மிடற்றின்மே லேற்றிக் கூறினார்; முன்பும் இங்ஙனம் வந்தமையோர்க. (14) செக்கரஞ் சடையுந் தேசார் வெண்டிரு நீறுந் தெய்வ முக்கணு முரகக் கச்சு முள்ளெயி றிமைக்கு மார்பும் மைக்கருங் கயற்கணங்கை வல்லியி னொதுங்கி நிற்கும் பக்கமு மவண்மேல் வைத்த பார்வையு நகையுந் தோன்ற. (இ-ள்.) அம் செக்கர் சடையும் - அழகிய சிவந்த சடையும், தேசு ஆர் வெள் திருநீறும் - ஒளி நிறைந்த வெள்ளிய திருநீறும், தெய்வ முக்கணும் - தெய்வங்களாகிய மூன்று கண்களும், உரகக் கச்சும் - அரவக் கச்சையும், முள்எயிறு இமைக்கும் மார்பும் - முள்போன்ற பன்றிக் கொம்பு விளங்கும் திருமார்பும், மைக்கருங்கயல் கண் நங்கை - மை எழுதிய கரிய கயல்போலுங் கண்களையுடைய உமையம்மையார், வல்லியின் ஒதுங்கி நிற்கும் பக்கமும் - கொடிபோன்று ஒதுங்கி நிற்கும் பக்கமும், அவள்மேல் வைத்த பார்வையும் நகையும் - அவ்வம்மை மேல் வைத்த நோக்கமும் புன்னகையும், தோன்ற - தோன்றவும் எ-று. செக்கர் - செவ்வானம் போலும் என்றுமாம். ஆதித்தன் திங்கள் அங்கி யென்னும் தெய்வங்கள் கண்களாதலின் ‘தெய்வமுக்கணும்’ என்றார். இவ்விரு செய்யுளிலும் எண்ணி வந்த தாள் முதலிய வற்றைத் தோன்ற என்பதனோடு முடிக்க. (15) கங்கையா றலம்பு மோசை கடுக்கைவண் டிரங்கு மோசை மங்கல முழவி னோசை மந்திர வேத வோசை செங்கையா டெரியி னோசை திருவடிச் சிலம்பி னோசை எங்கணு நிரம்பி யன்ப ரிருசெவிக் கமுத மூற்ற. (இ-ள்.) கங்கை ஆறு அலம்பும் ஒசை - கங்கையாறு ஒலிக்கும் ஒலியும், கடுக்கை வண்டு இரங்கும் ஒசை - கொன்றை மாலையிலுள்ள வண்டுகள் ஒலிக்கும் ஒலியும், மங்கல முழவின் ஒசை - மங்கலமாகிய மத்தள ஒலியும், மந்திர வேத ஒசை - மந்திர ஒலியும் மறை ஒலியும், செங்கை ஆடு எரியின் ஒசை - சிவந்த கையின்கண் அசைகின்ற தீயின் ஒலியும், திருவடிச் சிலம்பின் ஒசை - திருவடியிலுள்ள சிலம் பின் ஒலியும் ஆகிய இவைகள், எங்கணும் நிரம்பி - எங்கும் பரவி, அன்பர் இரு செவிக்கு அமுதம் ஊற்ற - அடியார்களின் இரண்டு செவிகளுக்கும் அமுதத்தைப் பொழியவும் எ-று. கங்கையொலி, வண்டொலி, எரியொலி, சிலம்பொலி என்னும் இவை ஆடுதலால் நிகழ்வன. எரியினோசை - தீயிலுண்டாகும் சடுலவொலி. செவிக்கு மென்னும் முற்றும்மை தொக்கது. (16) ஆடினா னமல மூர்த்தி யஞ்சலி முகிழ்த்துச் சென்னி சூடினா ரடியில் வீழ்ந்தார் சுருதியா யிரநா வாரப் பாடினார் பரமா னந்தப் பரவையிற் படிந்தா ரன்பு நீடினார் நிருத்தா னந்தங் காண்பது நியமம் பூண்டார். (இ-ள்.) அமல மூர்த்தி ஆடினான் - தூயனாகிய சோமசுந்தரக் கடவுள் திருக்கூத்தாடியருளினான்; நிருத்தானந்தம் காண்பது நியமம் பூண்டார் - ஆனந்தக் கூத்தைக் காண்பதையே நியமமாக மேற்கொண்ட முனிவரிருவரும், அஞ்சலி முகிழ்த்துச் சென்னி சூடினார் - கைகளைக் கூப்பி முடியின்கண் தரித்தார்கள்; அடியில் வீழ்ந்தார் - திருவடியில் வீழ்ந்து வணங்கினார்கள்; நா ஆர ஆயிரம் சுருதிபாடினார் - நா நிரம்ப அளவற்ற சுருதிகளைப் பாடினார்கள்; பரமானந்தப் பரவையில் படிந்தார் - பேரின்பக் கடலில் மூழ்கினார் கள்; அன்பு நீடினார் - அன்பு விஞ்சினார்கள் எ-று. ‘அன்னதோர் தவிசினும்பர்’ என்னுஞ் செய்யுண் முதல் இதில் ‘ஆடினா னமல மூர்த்தி’ என்பது காறும் ஒரு தொடர். செயவெனெச்ச மெல்லாம் ஆடினான் என்னும் முற்றுவினை கொண்டு முடியும். பரமானந்தம், நிருத்தானந்தம் என்பன தீர்க்க சந்திகள். காண்பது: தொழிற்பெயர். (17) முனிவர்கந் தருவர் வானோர் தானவர் மோன யோகர் புனிதகிம் புருட ராதிப் புலவரு மிறைஞ்சி யன்பின் கனிதரு மின்பத் தாழ்ந்தார் திருமணங் காண வந்த மனிதருங் காணப் பெற்றார் மாதவர் பொருட்டான் மன்னோ. (இ-ள்.) மாதவர் பொருட்டால் - அம் முனிவரிருவர் பொருட்டால், முனிவர் - முனிவர்களும், கந்தருவர் - கந்தருவர்களும், வானோர் - தேவர்களும், தானவர் - அவுணர்களும், மோன யோகர் - மவுன நிலையையுடைய யோகிகளும், புனித கிம்புருடர் ஆதிப்புலவரும் - தூயகிம்புருடர் முதலிய தேவ கணங்களும், இறைஞ்சி - வணங்கி, அன்பின் கனிதரும் இன்பத்து ஆழ்ந்தார் - அன்பின் முதிர்ந்த இன்பத்திலமிழ்ந்தினார்கள்; திருமணம் காணவந்த மனிதரும் காணப் பெற்றார் - திருமணத்தைக் காணுதற்கு வந்த மக்களும் அதனைக் காணப்பெற்றார்கள் எ-று. புலவர் - தேவர். சிறப்பிலராகிய மக்களுமென்பார் ‘காணவந்த மனிதரும்’ என உம்மை கொடுத்தார். மாதவராற் கண்டமையை மாதவர் பொருட்டாற் கண்டாரென்றார்; மாதவர் நிமித்தமாயினமையா லென்க. மன்னும் ஓவும் அசைகள். (18) அனந்தனா முனிவர் வேந்த னளவிலா னந்த மூறி மனந்தனி நிரம்பி மேலும் வழிவது போல மார்பம் புனைந்தபுண் ணியவெண் ணீறுகரைந்திடப் பொழிகண் ணீருள்1 நனைந்திரு கரமுங் கூப்பி நாதனைப் பாடு கின்றான். (இ-ள்.) அனந்தனாம் முனிவர் வேந்தன் - சேடனாகிய முனிவர் மன்னன், அளவு இல் ஆனந்தம் ஊறி - அளவில்லாத இன்பமானது ஊற்றெடுத்து, மனம் தனில் நிரம்பி - உள்ளத்தில் நிரம்பி, மேலும் வழிவதுபோல - மேலேயும் வழிந்து வருவதுபோல, மார்பம் புனைந்த புண்ணிய வெள் நீறு கரைந்திட - மார்பில் தரித்த புண்ணியமாகிய வெள்ளிய திருநீறு கரையுமாறு, பொழிகண் நீருள் நனைந்து - பொழிகின்ற ஆனந்தக் கண்ணருவியில் நனைந்து, இருகரமும் கூப்பி - இரண்டு கைகளையும் குவித்து, நாதனைப் பாடுகின்றான் - இறைவனைத் துதிப்பாராயினர் எ-று. ஆதிசேடனே பதஞ்சலியாக வந்தனனென்பார் ‘அனந்தனா முனிவர் வேந்தன்’ என்றார். வழிவதுபோலப் பொழி கண்ணீ ரென்க. திருநீறானது புண்ணியராற் பூசப்படுவதும் புண்ணியத்தைப் பயப்பதுமாகலின் ‘புண்ணிய வெண்ணீறு’ என்றார். “ புண்ணிய மாவது நீறு” “ புண்ணியர் பூசும்வெண் ணீறு” எனத் தமிழ் மறை கூறுதல் காண்க. கண்ணீரும் என்னும் பாடம் சிறப்பின்றென்க. (19) பராபர முதலே போற்றி பத்தியில் விளைவாய் போற்றி சராசர மாகி வேறாய் நின்றதற் பரனே போற்றி கராசல வுரியாய் போற்றி கனகவம் பலத்து ளாடும் நிராமய பரமா னந்த நிருத்தனே போற்றி போற்றி. (இ-ள்.) பராபர முதலே போற்றி - முன்னும் பின்னுமாகிய முதல்வனே வணக்கம்; பத்தியில் விளைவாய் போற்றி - அன்பின் விளைவானவனே வணக்கம்; சராசரம் ஆகி வேறாய் நின்ற தற்பரனே போற்றி - சரமும் அசரமும் ஆகியும் அவற்றின் வேறாகியும் நின்ற சிவபரம் பொருளே வணக்கம்; கராசல உரியாய் போற்றி - யானைத்தோலைப் போர்த்தவனே வணக்கம்; கனக அம்பலத்துள் ஆடும் -பொன்னம் பலத்தின்கண் திருநிருத்தம் செய்தருளும், நிராமய பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி - பிறவிப் பிணியைப் போக்கும் பேரின்பத் திருக்கூத்தினை உடையவனே வணக்கம் வணக்கம் எ-று. பரம் - முன்; அபரம் - பின்; பராபரன் - முன்னும் பின்னுமானவன்; “ முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே” என்பது திருவாசகம். பத்தியாகிய வித்தின் விளைவானவ னென்க; “ அருச்சனை வயலு ளன்பு வித்திட்டு” என மணிவாசகப் பெருமானும், “ பத்தித்தனி வித்திட்டு” எனப் பட்டினத்துப் பிள்ளையாரும் அருளிச் செய்தமை காண்க; இவ்வாசிரியரும் “அன்புறு பத்தி வித்தி” என முற்கூறினார். தற்பரம் - யாவற்றையும் கடந்து நிற்கும் சிவம், “ தற்பரமு மல்லை தனி” எனச் சிவஞான போதத்துள் வருந் தொடர்க்குச் சிவஞான முனிவர் கூறியபொருளை நோக்குக. கராசலம் - கைம்மலை; யானை. நிராமயம் - நோயின்மை. (20) ஒன்றாகி யைந்தா யையைந் துருவாகி வருவாய் போற்றி இன்றாகிச் சென்ற நாளா யெதிர்நாளா யெழுவாய் போற்றி நன்றாகித் தீய தாகி நடுவாகி முடிவாய் மன்றுள் நின்றாடும் பரமா னந்த நிருத்தனே போற்றி போற்றி. (இ-ள்.) ஒன்று ஆகி ஐந்து ஆய் ஐயைந்து உருவாகி - ஓருருவாகியும் ஐந்து உருவாகியும் இருபத்தைந்து உருவாகியும், வருவாய் போற்றி - (உயிர்களின் பொருட்டு) வந்தருளுபவனே வணக்கம்; இன்றாகி சென்ற நாளாய் எதிர் நாளாய் எழுவாய் போற்றி - நிகழ் காலமாகியும் இறந்த காலமாகியும் எதிர் காலமாகியும் தோன்றுபவனே வணக்கம்; நன்றாகி தீயதாகி - நன்மையாகியும் தீமையாகியும், நடுவாகி முடிவாய் - நடுவாகியும் முடிவாகியும், மன்றுள் நின்று ஆடும் பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி - அம்பலத்தில் நின்று ஆடியருளும் பேரின்ப மயமாகிய திருக் கூத்தினை உடையவனே வணக்கம் வணக்கம் எ-று. ஒன்று - சுத்த சிவம். ஐந்து - நிட்களமும், சகள நிட்களமும், சகளமு மாகிய சிவன், நாத சிவன், சதாசிவன், மகேசன், உருத்திரன் என்னும் ஐந்தும் ஐயைந்து - சந்திர சேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கலியாண சுந்தரர், பிச்சாடனர், காமாரி, அந்தகாரி, திரிபுராரி, சலந்தராரி, விதித்துவம்சர், வீரபத்திரர், நரசிங்க நிபாதனர், அர்த்த நாரீசர், விக்கிராதரர், கங்காளர், சண்டேசானுக்கிரகர், நீலகண்டர், சக்கராபயப்பிரதர், கசமுகானுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், அனந்த சுகவிருது, தக்கிணாமூர்த்தி, இலிங்கோற்பவர் என்னும் இருபத்தைந்து மூர்த்தமுமாம். உயிர்களின் பிராரத்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்னும் வினைகளின் பயன்களை நுகர்வித்தலின் ‘இன்றாகிச் சென்ற நாளா யெதிர் நாளாய்’என்றார்; இருவினைப் பயன்களாகிய துறக்க நிரய இன்ப துன்பங்களை நுகர்வித்தலின் ‘நன்றாகித் தீயதாகி’ என்றார்; நின்ற திருத்தாண்டகத்துள், “ நெருநலையா யின்றாகி நாளையாகி” “ பெருநலமுங் குற்றமும்” ” எனக் கூறப்பட்டிருத்தலுங் காண்க. நடுவும் முடிவுங் கூறினமையின் முதலுங் கொள்க. (21) அடியரேம் பொருட்டு வெள்ளி யம்பலத் தாடல் போற்றி பொடியணி தடந்தோள் போற்றி புரிசடை மகுடம் போற்றி கடியவிழ் மலர்மென் கூந்தற் கயல்விழி பாகம் போற்றி நெடியதற் பரமா னந்த1 நிருத்தனே போற்றி போற்றி. (இ-ள்.) அடியரேம் பொருட்டு - அடியேங்கள் நிமித்தமாக, வெள்ளி அம்பலத்து ஆடல்போற்றி - வெள்ளியம்பலத்தின்கண் ஆடப்பெறும் திருக்கூத்துக்கு வணக்கம்; பொடி அணி தடம் தோள் போற்றி - திருநீறு தரித்த பெரிய திருத் தோள்களுக்கு வணக்கம்; புரிசடை மகுடம் போற்றி - முறுக்கமைந்த சடைமுடிக்கு வணக்கம்; கடி அவிழ் மலர் மென் கூந்தல் கயல்விழி பாகம் போற்றி - மணத் தொடு மலர்ந்த மலர்களை அணிந்த மெல்லிய கூந்தலையுடைய அங்கயற்கண்ணம்மையார் அமர்ந்திருக்கும் இடப்பாகத்துக்கு வணக்கம்; நெடியதற் பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி - என்று அழியாத மேலான சிவானந்தத் திருக்கூத்தினை உடையவனே நினக்கு வணக்கம் வணக்கம் எ-று. அடியரேம்: படர்க்கை விகுதி கெடாது தன்மை விகுதியும் பெற்றது. தற்பரம ஆனந்தம் - மேலாகிய சிவானந்தம். (22) என்றுநின் றேத்தி னான்பின் னிருவரை நோக்கி வெள்ளி மன்றுணின் றாடா நின்ற மறைமுதல் கருணை கூர்ந்து நன்றுநீர் வேட்ட தென்னென் றருள்செய நாதன் பாதந் துன்றுமெய் யன்பிற் றாழ்ந்து தொழுதுநின் றிதனைச் சொல்வார். (இ-ள்.) என்று நின்று ஏத்தினான் - என்று வணங்கி நின்று துதித் தான்; வெள்ளி மன்றுள் நின்று ஆடாநின்ற மறைமுதல் - வெள்ளியம் பலத்துள் நின்று திருக்கூத்தாடும் வேதமுதல்வனாகிய இறைவன், பின் - பின்பு, இருவரை நோக்கி கருணை கூர்ந்து - பதஞ்சலி வியாக்கிர பாதர் இருவரையும் பார்த்துக் கருணைமிகுந்து, நன்று - நல்லது; நீர் வேட்டது என்னென்று அருள் செய - நீவிர் விரும்பியது யாதென்று வினவியருள, நாதன் பாதம் துன்றும் மெய் அன்பில் - அவ்விறைவன் திருவடியில் மிக்க உண்மை யன்பினால், தாழ்ந்துதொழுது நின்று இதனைச் சொல்வார் - விழுந்து வணங்கி நின்று இதனை வேண்டு வாராயினர் எ-று. நன்று என்றது உவப்பின் குறிப்பு; நன்று வேட்ட தென்னலுமாம். (23) எந்தையித் திருக்கூத் தென்று மிந்நிலை நின்றியா வர்க்கும்1 பந்தவெம் பாச நீங்கப் பரிந்தருள்2 செய்தி யென்னச் செந்தமிழ்க் கன்னி நாடு செய்தமா தவப்பே றெய்தத் தந்தன மென்றான் வேதந் தலைதடு மாற நின்றான். (இ-ள்.) எந்தை - எம் தந்தையே, இத் திருக்கூத்து - இந்தத் திருக் கூத்துடன், என்றும் இந்நிலை நின்று - எப்பொழுதும் இவ்வெள்ளியம் பலத்துளே நின்று, யாவர்க்கும் பந்த வெம் பாசம் நீங்க - யாவருக்கும் பந்தமாகிய வெய்ய பாசம் நீங்குமாறு, பரிந்து அருள்செய்தி என்ன - இரங்கி அருள் செய்வாயென்று வேண்ட, வேதம் தலைதடுமாற நின்றான் - மறைகள் (தன்னைத் துருவித்) தட்டழிய நின்ற இறைவன், செந்தமிழ்க் கன்னிநாடு செய்த - செந்தமிழுக்கு நிலைக்களமாகிய கன்னிநாடு செய்த, மாதவப்பேறு எய்த - பெரிய தவப்பயன் அதற்குப் பொருந்த, தந்தனம் என்றான் - அங்ஙனமே அளித்தோம் என்று அருள் புரிந்தான் எ-று. வெம் பாசபந்தமென மாறுக; பாசபந்தம் - பாசத்தொடக்கு. செந்தமிழ் நாடாகிய கன்னிநாடு என விரித்தலுமாம். (24) அராமுனி யீது வேண்டு மாதியெம் பெரும விந்த நிராமய பரமா னந்த நிருத்தநேர் கண்டோ ரெல்லாந் தராதல மிசைவந் தெய்தாத் தனிக்கதி பெறுதல் வேண்டும் பராபர வென்று தாழ்ந்தான் பகவனு மதற்கு நேர்ந்தான். (இ-ள்.) அராமுனி ஈதுவேண்டும் - பதஞ்சலி முனிவன் இதனை வேண்டுவான்; ஆதி எம்பெரும - ஆதியாகிய எம்பெருமானே, பராபர - பரமும் அபரமுமானவனே, இந்த நிராமய பரமானந்த நிருத்தம் நேர் கண்டோர் எல்லாம் - நிராமயமாயும் பரமானந்தமாயும் உள்ள இத்திருக்கூத்தை நேரே தரிசித்தவரனைவரும், தராதலம் மிசை வந்து எய்தாத் தனிக்கதி பெறுதல் வேண்டும் - பூமியில் மீண்டும் வந்து பிறவாத ஒப்பற்ற சிவகதியை அடைதல் வேண்டும், என்று தாழ்ந்தான் - என்று கூறி வணங்கினான்; பகவனும் அதற்கு நேர்ந்தான் - இறைவனும் அதற்கு உடன்பட்டான் எ-று. ஈது - பின்வருவது. ஈது வேண்டும் என்பதனை எச்சப்படுத்து முடிக்க. பிறவிநோயை யொழிக்கும் திருக்கூத்தை நோயில்லதெனக் கூறினார். தராதலம் - தரையாகிய தலம். (25) ஆர்த்தனர் கணத்தோர் கைகோத் தாடின ரலர்பூ மாரி தூர்த்தனர் விண்ணோர் கண்ணீர் துளும்பினர் முனிவ ராகம் போர்த்தனர் புளக மன்பிற் புதைந்தனர் விழுங்கு வார்போற் பார்த்தனர் புல்லிக் கொண்டார் பரவியவ் விருவர் தம்மை. (இ-ள்.) கணத்தோர் ஆர்த்தனர் கைகோத்து ஆடினர் - சிவகணத் தவர் ஆரவாரித்துக் கைகளைக் கோத்துக் குரவையாடினர்; விண்ணோர் அலர் பூமாரி தூர்த்தனர் - தேவர்கள் மலர்ந்த மலர் மழையைப் பொழிந் தனர்; முனிவர் - முனிவர்கள், கண் நீர் துளும்பினர் - கண்ணீர் ததும்பி, ஆகம் புளகம் போர்த்தனர் - உடல் புளகம் போர்த்து, அன்பில் புதைந்தனர் - அன்பினால் மூடப்பட்டு, அவ்விருவர் தம்மைப் பரவி - அந்த இரண்டு முனிவரையும் துதித்து, விழுங்குவார் போல் பார்த்தனர் - கண்களால் விழுங்குகின்றவரைப் போலப் பார்த்து, புல்லிக் கொண்டார் - தழுவிக் கொண்டனர் எ-று. ஆர்த்தனர் என்னும் முற்றும் துளும்பினர் என்பது முதலிய நான்கு முற்றுக்களும் எச்சமாயின. விருப்பத்துடன் இமையாது நோக்குதலை விழுங்குதல்போற் பார்த்தல் என்பர்; “ பருகுவன்ன வருகா நோக்கமொடு” என்பது பொருநராற்றுப்படை. (26) (மேற்படி வேறு) அனித்த மாகிய பூதமைம் பொறிபுல னாதியா றாறாகி இனித்த மாயையோ டிருவினைத் தொடக்கினு மிருளினும் வேறாகித் தனித்த யோகிக ளகநிறைந் தாடிய தனிப்பெருந் திருக்கூத்தைக் குனித்த வண்ணமாக் கண்டவர்க் கிகபரங் கொடுத்தவ ணுரைகின்றான்.1 (இ-ள்.) அனித்தம் ஆகிய பூதம் ஐம்பொறி புலன் ஆதி ஆறாறாகி - நிலையுடைய வல்லவாகிய பூதமைந்தும் பொறியைந்தும் புலனைந்தும் முதலிய முப்பத்தாறு தத்துவங்களாய், இனித்த மாயை யோடு - (உயிர்களுக்குச்) சுவையைக் கொடுக்கும் மாயையோடு, இருவினைத் தொடக்கினும் இருளினும் வேறாகித் தனித்த - இருவினைக் கட்டினின்றும் ஆணவத்தினின்றும் வேறாகித் தனித்து நிற்கும், யோகிகள் அகம் நிறைந்து - யோகிகளின் உள்ளத்தில் நிறைந்து, ஆடிய தனிப்பெரும் திருக்கூத்தை - ஆடியருளும் ஒப்பற்ற பெரிய திருக்கூத்தினை, குனித்த வண்ணமாக் கண்டவர்க்கு - ஆடிய கோலமாகப் புறத்தில் தரிசித்தவருக்கு, இகபரம் கொடுத்து அவன் உறைகின்றன் - இம்மை மறுமைப் பயன்களைக் கொடுத்து அவ்வெள்ளியம்பலத்துள் எழுந்தருளியிருக்கின்றான் எ-று. புலன் என்றது ஈண்டுத் தன்மாத்திரையை. முப்பத்தாறு தத்து வங்களாவன :- நிலம், நீர், தீ, வளி, வான் என்னும் பூதங்கள் ஐந்தும்; மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஞானேந்திரியங்கள் ஐந்தும்; வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் என்னும் கன்மேந்திரியங்கள் ஐந்தும்; நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை, என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும்; மனம், அகங்காரம், புத்தி, சித்தம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கும் ஆகிய ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும்; காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை ஆகிய வித்தியா தத்துவங்கள் ஏழும்; சுத்தவித்தை, ஈகரம், சாதாக்கியம், சத்தி, சிவம் ஆகிய சுத்த தத்துவங்கள் ஐந்தும் ஆம். ஆறாறு என்பதற்குச் சுத்த தத்துவம் ஐந்துமொழிந்த முப்பத்தொரு தத்துவங்களோடு பூத குணங்களாகிய சத்தம் முதலிய புலன்கள் ஐந்தையும் கூட்டி யுரைத்தலுமாம். போகத்தில் விருப்பினை யுண்டாக்கி மயக்குதலின் ‘இனித்த’ என்றார். தனித்த வென்றது பாசங்களின் நீங்கிய நிலைமையைக் குறிப்பிட்டவாறு. (27) குனிவி லாதிரைத் தினந்தொடுத் தெதிர்வரு கொடுவிலா திரையெல்லை புனித வாடக முளரிதோய்ந் தத்தனிப் பொதுநடந் தரிசித்தங் கினித மர்ந்துநூற் றெண்மடங் கைந்தெழுத் தெண்ணியிந்1 நிலைநிற்குங் கனியு மன்பினா ரெண்ணியாங் கெய்துவர் கருதிய வரமெல்லாம். (இ-ள்.) குனிவில் ஆதிரைத் தினம் தொடுத்து - வளைந்த தனுசாகிய மார்கழித் திங்கள் ஆதிரை நாள் தொட்டு, எதிர்வரு கொடுவில் ஆதிரை எல்லை - எதிர்வருகின்ற மார்கழித் திருவாதிரை காறும், புனித ஆடக முளரி தோய்ந்து - தூய்மையுடைய பொற்றா மரையில் நீராடி, அத்தனிப் பொதுநடம் தரிசித்து - அவ்வொப்பற்ற வெள்ளியம்பலத் திருக்கூத்தைத் தரிசித்து, அங்கு இனிது அமர்ந்து - அங்கே இனிது தங்கி, நூற்றெண்மடங்கு ஐந்து எழுத்து எண்ணி - நூற்றெட்டு முறை திருவைந்தெழுத்தை உச்சரித்து, இந்நிலை நிற்கும் கனியும் அன்பினார் - இந்நிலையில் வழுவாது நிற்கும் முதிர்ந்த அன்பினையுடையவர், கருதிய வரம் எல்லாம் எண்ணி யாங்கு எய்துவர் - எண்ணிய வரங்களை யெல்லாம் எண்ணியபடியே அடைவர் எ-று. வில் - தனுசுராசி; இவ்விராசியில் ஆதித்தன் நிற்கும் மார்கழித் திங்களை வில் என்றார்; வில் என்னும் பெயருக் கேற்பக் குனி, கொடு என்னும் அடைகள் கொடுக்கப்பட்டன; குனிவில்; வினைத் தொகை; கொடுவில்; பண்புத்தொகை. இவ்விரு செய்யுளும் ஆசிரியர் கூற்று; பாடபேதப்படி சிவபிரான் கூற்றாகும். (28) ஆகச் செய்யுள் - 825. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் (கலிநிலைத்துறை) பன்ன கேசனு மடுபுலிப் பாதனும் பணிய மின்னு வார்சடை மன்னவன் வெள்ளிமன் றாடல் சொன்ன வாறிது பசித்தழல் சுடவொரு பூதம் அன்ன மாமலை தொலைத்தவா றெடுத்தினி யறைவாம். (இ-ள்.) மின்னுவார் சடை மன்னவன் - ஒளிவீசும் நீண்ட சடையையுடைய இறைவனாகிய சுந்தரபாண்டியன், பன்னகேசனும் - பாம்புகளின் இறையாகிய பதஞ்சலி முனியும், அடு புலிப் பாதனும்- கொல்லும் புலியின் காலையுடைய வியாக்கிரபாத முனியும், பணிய- வணங்க, வெள்ளி மன்று - வெள்ளியம்பலத்துள், ஆடல் சொன்னவாறு இது - ஆடி யருளிய திருவிளைாடலைக் கூறிய வரலாறு இதுவாகும்; பசித்தழல் சுட ஒரு பூதம் - பசித் தீயானது சுட்டு வருத்துதலால் ஒரு பூதமானது, அன்னம் மாமலை தொலைத்தவாறு - அன்னமாகிய பெரிய மலையை உண்டொழித்த திருவிளையாடலை. எடுத்து இனி அறைவாம் - இனி எடுத்துக் கூறுவாம் எ-று. பன்னகேசன் - அரவரசன்: குணசந்தி. அடு: புலிக்கு அடை, சோமசுந்தரக் கடவுளே சுந்தரபாண்டியனாகலின் சடைமன்னவன் என்றார். இவ்வரலாறு ஆடலைச் சொன்னபடி யெனலுமாம். உண்டு தீர்த்தலைத் தொலைத்தல் என்பது வழக்கு; “வெங்கட் டொலைச்சியும்” “மான்கணந் தொலைச்சிய” என்பன புறநானூறு. (1) கன்னி யர்க்கர சாயினாள் கடிமனை புகுந்த மின்னி யற்சடை மாதவர் வேதிய ரேனோர் எந்நி லத்துள மன்னவர் யாவர்க்கு முறையே பொன்னி யற்கலத் தறுசுவைப் போனக மருத்தா. (இ-ள்.) கன்னியர்க்கு அரசு ஆயினாள் - மங்கையர்க்கு அரசி யாகிய தடாதகைப் பிராட்டியார், கடிமனை புகுந்த - (திருமணத்தின் பொருட்டு) அரண்மனையில் வந்த, மின் இயல் சடை மாதவர் - மின் போலும் ஒளி பொருந்திய சடையையுடைய முனிவரும், வேதியர் - மறையயோரும், ஏனோர் - ஏனையரும், எந்நிலத்துள மன்னவர் - எந்நாட்டிலுமுள்ள மன்னவருமாகிய, யாவர்க்கும் - அனைவருக்கும், முறையே - முறைப்படி, பொன் இயல் கலத்து - பொன்னாலமைந்த கலங்களில், அறுசுவைப் போனகம் அருத்தா - அறுசுவையுடன் கூடிய உணவை உண்பித்து எ-று. மின்னியல் - மின்னின்தன்மை. எந்நிலத்தும் என உம்மை விரித்து, ஏனோரென்பதனை மன்னவரென்பதன் பின்னே கூட்டுக. உண்டற்குச் சிறந்தது பொற்கலமென்பதனை, “ பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்” “ பொற்கலத் தூட்டிப் புறந்தரினும் ” என்பவற்றாலறிக. அருத்தா: செய்யா என்னும் உடன்பாட்டெச்சம். (2) பூசு கின்றவு முடுப்பவும் பூண்பவும் பழுக்காய் வாச மெல்லிலை யேனவு மம்முறை வழங்காத் தேச மன்னவ ரேனையோர்ச் செல்லுநர்ச்1 செலுத்தி ஈச னன்புறு கற்பினா ளிருக்குமவ் வேலை. (இ-ள்.) பூசுகின்றவும் - பூசப்படும் சாந்த முதலியவைகளையும், உடுப்பவும் - உடுக்கப்படும் பொன்னாடை முதலியவைகளையும், பூண்பவும் -பூணப்படும் இரத்தினாபரணம் முதலிய அணிகலன் களையும், பழுக்காய் வாசம் மெல்லிலை ஏனவும் - பாக்கும் வாசமும் வெற்றிலையும் பிறவும் ஆகியவற்றையும், அம்முறை வழங்கா - அந்த முறையே கொடுத்து, தேசமன்னவர் ஏனையோர் - பல நாட்டு மன்னர் களுள்ளும் பிறருள்ளும், செல்லுநர் செலுத்தி - போகும் குறிப்பினரைப் போக்கி, ஈசன் அன்பு உறு கற்பினாள் இருக்கும் அவ்வேலை - சோம சுந்தரக் கடவுளாகிய வேந்தனால் அன்பு செய்யப்பட்ட கற்பினை யுடைய தடாதகைப் பிராட்டியார் இருக்கும் அப்பொழுதில் எ-று. “ தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கர்ப்பூரம் சாதியோ டைந்து” என்பதனாலறிக. மெல்லிலைக்கு முன் உரைத்தமை காண்க. (3) மடைவளத் தொழிற் புலவர்வந் தடியிணை வணங்கி அடிய ரேமட்ட போனக மாயிரத் தொன்றின் இடைய தாயினுந் தொலைந்தில தியாங்கண்மேற் செய்யக் கடவ தேதெனப் பிராட்டிதன் கணவர்முன் குறுகா. (இ-ள்.) மடைவளத் தொழில் புலவர் - சமைத்தலாகிய வளப்ப மிக்க தொழிலில் வல்ல புலவர்கள், வந்து அடியிணை வணங்கி - வந்து திருவடிகளை வணங்கி, அடியரேம் அட்ட போனகம் - அடியேங்கள் சமைத்த அடிசிலில், ஆயிரத்து ஒன்றின் இடையது ஆயினும் - ஆயிரத்தில் ஒரு கூறு அளவுடையதாயினும், தொலைந் திலது - அழியவில்லை; யாங்கள் - அடியேம், மேற்செய்யக் கடவது ஏது என - மேலே செய்யத் தகுவது யாதென்று வினவ, பிராட்டி தன் கணவர் முன் குறுகா - பிராட்டியார் தம் நாயகராகிய சவுந்தர பாண்டியர் திருமுன் சென்று எ-று. மடை - சோறு. ஒன்றினிடையது - ஒன்றி னிடைப்பட்டது; அவ்வளவிற்று என்றபடி. (4) பணிந்தொ துங்கிநின் றடிகண்முப் பத்துமுக் கோடி கணங்க டம்மொடு மிங்கெழுந் தருள்வது கருதி இணங்கு மின்சுவைப் போனக மெல்லையின் றாக்கி உணங்கு கின்றதுண் டெஞ்சிய தெனைத்தென வுரைக்கின். (இ-ள்.) பணிந்து ஒதுங்கி நின்று - வணங்கி ஒரு சிறை ஒதுங்கி நின்று, அடிகள் - தேவரீர், முப்பத்து முக்கோடி கணங்கள் தம்மொடும் - முப்பத்து முக்கோடி தேவகணங்களோடும், இங்கு எழுந்தருள்வது கருதி - இங்கு எழுந்தருளுவதைக் குறித்து, இன்சுவை இணங்கு போனகம் எல்லை இன்று ஆக்கி - இனியசுவை பொருந்திய அமுது அளவின்றிச் சமைத்து, உணங்குகின்றது - வறிதே உணங்கா நின்றது; உண்டு எஞ்சியது எனைத்தென உரைக்கின் - உண்டு மிகுந்தது எவ்வளவிற் றென்று கூறப்புகின் எ-று. இன்றியென்னும் வினையெச்சத் திகரம் உகரமாயிற்று. ஆக்கி- அடப்பட்டு. உண்ண எஞ்சியது என்பது உண்டெஞ்சிய தெனத் திரிந்தது. (5) இமையக் குன்றமு மடைகலா யிதன்புறங் கிடந்த சிமையக் குன்றுக ளீட்டமுஞ் சேர்ந்தென நிமிரச் சமையக் கொட்டிய வாலரிப் புழுக்கலுஞ் சாதக் கமையக் கொட்டிய கறிகளின் வருக்கமு மாகும்.1 (இ-ள்.) இமையக் குன்றமும் - இமயமலையும், இதன்புறம் அடைகலாய் கிடந்த - இதன் புறத்தே அடுக்கமாய்க் கிடந்த, சிமையக் குன்றுகள் ஈட்டமும் சேர்ந்தென - உச்சியையுடைய மலைக் கூட்டமும் சேர்ந்தாற்போல, நிமிரச் சமையக் கொட்டிய வால் அரிப்புழுக்கலும் - வானையளாவப் பொருந்தச் சமைத்துக் கொட்டிய வெள்ளிய அரிசியாலமைந்த சோறும், சாதக்கு அமையக் கொட்டிய கறிகளின் வருக்கமும் ஆகும் - அப் புழுக்கலுக்குப் பொருந்தக் கொட்டிய கறிகளின் வகைகளும் ஆகும் எ-று. அடைகல் - பக்கமலை; அடுக்க மென்னும் பெயரானு மறிக; தாங்குங் கல்லுமாம். சேர்ந்தென ஆகும் என்க. அரி - அரிசி; சாதக்கு: அத்துச் சாரியை தொக்கது. (6) என்ற போதிறை யெம்பிரான் றேவியா ரிடத்தில் ஒன்று மன்பினா லொருவிளை யாடலை நினைத்தோ தன்ற னிக்குடைப் பாரிடத் தலைவன தாற்றல் அன்றி யாவரு மறிந்திடக் காட்டவோ வறியேம். (இ-ள்.) என்றபோது - என்று கூறியபோது, இறை எம்பிரான் - சுந்தர பாண்டியனாகிய எம் பெருமான், தேவியார் இடத்தில் ஒன்றும் அன்பினால் - பிராட்டியாரிடத்தில் பொருந்திய அன்பினாலே, ஒரு விளையாடலை நினைத்தோ - ஒரு திருவிளையாடலைக் கருதியோ (அன்றி), தன் தனிக் குடைப்பாரிடத் தலைவனது ஆற்றல் - தனது ஒப்பற்ற குடையைத் தாங்கிவரும் பூதகணத் தலைவனாகிய குண்டோதரனது வன்மையை, அன்று யாவரும் அறிந்திடக் காட்டவோ - அப்பொழுது யாவரும் அறியுமாறு காட்டக் கருதியோ, அறியேம் - (யாம்) அறியகில்லேம் எ-று. அறியேம் என்றது பின் நிகழச் செய்ததன் காரணத்தை. அன்றியெனப் பிரித்துநினைத்தோ வென்பதனுடன் இயைத் துரைத்தலுமாம். (7) சிறிது வாணகை செய்துமூ வேந்தரிற் சிறந்த மறுவின் மீனவ னரும்பெறன் மகளுனக் கரிதிற் பெறுவ தேதுவான் றருவுநின் பணிசெயப் பெற்றிங் குறைவ தேற்பிறர் திருவெலா முன்னதே யன்றோ. (இ-ள்.) சிறிதுவாள் நகை செய்து - சிறிது ஒள்ளிய புன் முறுவல் செய்து, மூவேந்தரில் சிறந்த - மூவரசருள் மேம்பட்ட, மறு இல்மீனவன் - குற்றமற்ற மலயத்துவச பாண்டியனுக்கு, அரும் பெறல் மகள் - அரும் பெரும் புதல்வியாகிய, உனக்கு அரிதில் பெறுவது ஏது -நினக்கு அரிதிற் பெறும் பொருள் யாது, வான் தருவும் நின்பணிசெயப்பெற்று இங்கு உறைவதேல் - கற்பகத் தருவும் நினது பணிசெய்யும் பேற்றினைப் பெற்று இங்கு இருப்பதாயின், பிறர் திருவெலாம் உன்னதே அன்றோ - ஏனையோர் செல்வமெல்லாம் உன்னுடையதேயல்லவா எ-று. மூவேந்தர் - சேர பாண்டிய சோழர். சேர சோழரினும் பாண்டியன் சிறந்தவனென்றார்; பாண்டியர் பிறரினும் மலையத் துவசன் மேம்பட்டவனென்பார் ‘மூவேந்தரிற் சிறந்த’ என்றா ரெனலுமாம். அரும்பெறல் என்பதற்குப் பெறாது பெற்ற என்றுரைப் பாருமுளர். தருவும் நின் பணிசெய் துறைவதாயின் பிறர் திருவெலாம் நின்னுடைய வெனல் கூறவேண்டா என்றவாறு; விரும்பியவெல்லாந் தரும் கற்பகத்தரு பணிசெய்தலின் பிறர் செல்வமெல்லாம் வேண்டிடின் அஃதளிக்கு மென்னுங் கருத்தாற் கூறியதூஉமாம். உன்னதே: னகரம் விரித்தல்; ஏ: தேற்றம்; பன்மையி லொருமை வந்தது. (8) அளவி லாதநின் செல்வத்தின் பெருக்கைநா மறிய விளைவு செய்தனை போலுநின் விருந்துணப் பசியாற் களைய டைந்தவ ராகி1நங் கணத்தினுட் காணேந் தளவ மூரலா யாஞ்செயத் தக்கதே தென்றான். (இ-ள்.) தளவ மூரலாய் - முல்லை யரும்புபோலும் பல் வரிசையையுடையாய், அளவு இலாத நின் செல்வத்தின் பெருக்கை - அளவிலாத நினது செல்வத்தின் மிகுதியை, நாம் அறிய விளைவு செய்தனைபோலும் - நாம் அறியுமாறு இங்ஙனம் செய்தனைபோலும்; நின் விருந்து உண - நினது விருந்தை உண்ணுதற்கு, பசியால் களை அடைந்தவராகி - பசியால் களைப்புற்றவராகி யிருப்பாரை, நம் கணத்தினுள் காணேம் - நம் கணங்களுள்ளே கண்டிலேம்; யாம் செயத் தக்கது ஏது என்றான் - எம்மாற் செய்யத் தக்கது யாது என்று கூறி யருளினான் எ-று. நின் விருந்து - நீ அளிக்கும் விருந்து; விருந்தினர்க் களிக்கும் உணவுக்கு விருந்தென்பது ஒரு பெயராயிற்று. இருப்பாரை யென ஒரு சொல் வருவிக்கப்பட்டது. (9) அடுக்க நின்றகுண் டோதர னகட்டிடை வடவை மடுக்க வுன்னினா னதுவந்து வயிற்றெரி பசியாய்த் தொடுக்க வாலமுண் டாங்குடல் சோர்ந்து1 வேர்த் தாவி ஒடுக்க முற்றைய பசியினா லுயங்கினே னென்றான். (இ-ள்.) (அங்ஙனங்கூறி) அடுக்க நின்ற குண்டோதரன் அகட்டிடை - அயலில் நின்ற குண்டோதரன் வயிற்றினிடத்து, வடவை மடுக்க உன்னினான் - வடவைத்தீப் புகுமாறு திருவுள்ளங் கொண்டான்; அது வந்து வயிற்று எரி பசியாய்த் தொடுக்க - அத் தீ வந்து வயிற்றின் கண் காந்துகின்ற பசியாய்த் தொடர, ஆலம் உண்டாங்கு - நஞ்சுண்டவன்போல, உடல் சோர்ந்து ஆவி ஒடுக்க முற்று - உடல் தளர்ந்து உயிர் ஒடுங்கி, ஐய - பெருமானே, பசியினால் உயங்கினேன் என்றான். பசியினால் வாடினேன் என்று கூறினான் எ-று. அடுக்க - அணுக. தொடுக்க - வளைத்துக் கொள்ள. மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை பதிப்பில் இச் செய்யுள் மிக்க பேதத்துடன் காணப்படுகின்றது. (10) குடையெ டுக்குமிக் குறியதாட் குறட்கொரு பிடிசோ றிடுமி னப்புறஞ் சோறுமா லெனத்தொழு தெல்லாம் உடைய நாயகி போயினாள் குறியனு முடனே நடைத ளர்ந்துகண் புதைந்துவாய் புலர்ந்திட நடந்தான். (இ-ள்.) மின் -மின்போன்ற பெண்ணே, குடை எடுக்கும் குறிய தாள் இக்குறட்கு - எனது குடையைத் தாங்கிவரும் சிறிய காலை யுடைய இப்பூதத்திற்கு, ஒரு பிடி சோறு இடு - ஒரு பிடிசோறு கொடுப்பாயாக. அப்புறம் சோறும் என - பின்னர்க் கூறுவேம் என்று கூறியருள, எல்லாம் உடைய நாயகி தொழுது போயினாள் - எல்லாவற்றையும் உடைய பிராட்டியார் வணங்கிப்போயினார்; குறியனும் உடனே - குண்டோதரனும் பின்னாகவே, நடை தளர்ந்து கண்புதைந்து வாய்புலர்ந்திட நடந்தான் - நடை சோர்ந்து கண் குழிந்து வாய் புலர நடந்தான் எ-று. குறள் - குறிய பூதம். இடுமின் என மதுரையிலுள்ளார் பிறரையும் உளப்படுத்திக் கூறிற்றுமாம். அப்புறம் - இட்டபின். சோறும்: தன்மைப் பன்மை யெதிர்கால வினை முற்று; சொல் பகுதி, தும்விகுதி. ஆல்: அசை. தளர்ந்து, புதைந்து என்னும் சினை வினையாய செய்தெ னெச்சங்கள் நடந்தான் என்னும் முதல் வினையைக்கொண்டு முடிந்தன. (11) படைக்க ணேவல ரிறைமகள் பணியினாற் பசிநோய் தொடுத்த வன்றனைக் கொண்டுபோய்ச் சொன்றிமுன் விடுத்தார் அடுத்தி ருந்ததே கண்டன ரன்னமா மலையை எடுத்த யின்றது மடிசிலங் கிருந்ததுங் காணார். (இ-ள்.) படைக்கண் ஏவலர் - வாட்படைபோலுங் கண்களை யுடைய ஏவல் மகளிர், இறைமகள் பணியினால் - தங்கள் இறைவியின் ஏவலால், பசிநோய் தொடுத்தவன் தனை - பசிநோயாற் பீடிக்கப்பட்ட குண்டோதரனை, கொண்டுபோய்ச் சொன்றி முன் விடுத்தார் - அழைத்துக் கொண்டுபோய்ச் சோற்றின் முன் விட்டார்கள்; அடுத்து இருந்ததே கண்டனர் - (அங்ஙனம் விட்டவர்கள்) அவன் போய் அச்சோற்றை அடுத்து இருந்ததையே கண்டனர்; அன்னம் மாமலையை எடுத்து அயின்றதும் - அன்னமாகிய பெரிய மலையை எடுத்து உண்டதையும், அங்கு இருந்த அடிசிலும் காணார் - அங்கிருந்த அன்னத்தையும் கண்டிலர் எ-று. படை யென்பதை முதனிலைத் தொழிற் பெயராகக் கொண்டு படைத்தற் றொழினின்ற ஏவலர் என்றுரைப்பாருமுளர்; வரும் பாட்டிலும் மகளிரையே கூறுதலின் அவ்வுரை பொருந்தாதென்க. சொன்றி: திசைச் சொல். அன்னம் ஆம் மலையெனப் பிரித்தலுமாம். எடுத்தயின்றதுங் காணார் என்றது உண்ட விரைவினைக் குறிப் பிட்டவாறு. (12) சிலம்பு நூபுரச் சீறடிச் சேடியர் சில்லோர் அலம்பு வால்வளைக் கைநெரித் ததிசய மடைந்தார் புலம்பு மேகலை யார்சிலர் பொருக்கென வெருண்டார் கலம்பெய் பூண்முலை யார்சிலர் கண்புதைத் திரிந்தார்.1 (இ-ள்.) சிலம்பும் நூபுரம் சிறு அடிச் சேடியர் சில்லோர் - ஒலிக்கும் சிலம்பினை யணிந்த சிறிய அடியையுடைய பணிப்பெண்டிர் சிலர், அலம்பு வால் வளைக்கை நெரித்து அதிசயம் அடைந்தார் - ஒலிக்கும் வெள்ளிய வளையணிந்த கையை நெரித்து வியப்புற்றார்; புலம்பு மேகலையார் சிலர் - ஒலிக்கும் மேகலை யணிந்த சிலர், பொருக்கென வெருண்டார் - பொருக்கென்று பயந்தார்; கலம் பெய் பூண் முலையார் சிலர் - அணிகலம் அணிந்த கொங்கை களையுடைய சிலர், கண்புதைத்து இரிந்தார் - கண்களை மூடிக்கொண்டு ஓடினார் எ-று. கை நெரித்தலும் கண் புதைத்தலும் அச்சத்தால் நிகழ்வன; அச்சம் மகளிர்க்கு இயல்பாய குணங்களி லொன்றாதலும் நோக்குக. பொருக்கென, விரைவுக் குறிப்பு. பூண் கலம் எனக் கூட்டுக. (13) முரவை போகிய முருவில்வான் மூரல்பால் வறையல் கருனை தீம்பய றடுதுவை பலவகைக் கறிகள் விரவு தேம்படு பாறயி ரிழுதுதேன் வெள்ளம் வரைவி லாதன மிடாவொடு வாரிவாய் மடுத்தான். (இ-ள்.) முரவை போகிய - வரி நீங்கிய, முரிவு இல் வால்மூரல் - முரிதலில்லாத வெள்ளிய அரிசியாலாகிய அன்னத்தையும், பால் வறையல் - பால் பெய்து அட்டதுவட்டலும், கருனை - பொரிக் கறியும், தீம்பயறு அடுதுவை பலவகைக் கறிகள் - இனிய பயற்றொடு கலந்து சமைத்த புளியங்கறியும் ஆகிய பலவகைக் கறிகளையும், விரவு தேம்படு பால் தயிர் இழுது தேன் வெள்ளம் - பொருந்திய இனிமை பெற்ற பாலும் தயிரும் நெய்யும் தேனுமாகிய இவற்றின் பெருக்கினையும், வரைவு இலாதன - (மற்றும்) அளவில்லாத பண்டங்களையும், மிடாவொடு வாரி வாய் மடுத்தான் - மிடாக் களோடு வாரி வாரி உண்டான் எ-று. முரவை - தவிடு நீங்குமுன் அரிசியிலிருக்கும் சிவந்த வரி. “ முரவை போகிய முரியா வரிசி” என்னும் பொருநராற்றுப்படையடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய பொருள் காண்க; அதிலுள்ள “பால்வறைக் கருனை” என்பதற்கு அவர் பாலைப் பொரித்ததனோடே கூட்டிய பொரிக்கறிகள் என்பர். துவை - இக்காலத்துத் துவையலென வழங்கும். (14) பல்ப ழக்குவை வேற்றுருப் பண்ணியங் கன்னன் மெல்சு வைத்தண்டு தெங்கிவை யன்றியும் வேவா வல்சி காய்களின் வருக்கமு நுகர்ந்துமா றாமல் எல்லை தீர்நவ பண்டமு மெடுத்துவாய் மடுத்தான். (இ-ள்.) பல் பழக் குவை - பல கனிக் குவியல்கள், வேறுஉரு பண்ணியம் - வெவ்வேறு வடிவப் பண்ணிகாரங்கள், கன்னல் - சருக்கரை, மெல் சுவைத் தண்டு - மெல்லுதற்குரிய சுவையினை யுடைய கரும்பு, தெங்கு - தேங்காய், இவை அன்றியும் - ஆகிய இவை அல்லாமலும், வேவா வல்சி - அரிசியும், காய்களின் வருக்கமும் - காய்களின் கூட்டமும் என்னும் இவற்றையெல்லாம், நுகர்ந்தும் மாறாமல் - உண்டும் பசி தீராமையினால், எல்லைதீர் நவபண்டமும் எடுத்துவாய் மடுத்தான் - அளவிறந்த நவதானியங்களையும் வாரி உண்டான் எ-று. பண்ணியம் - பண்ணிகாரம்; சுவைத் தண்டு எனப்பின்வருதலின் கன்னல் என்பது சருக்கரைக்காயிற்று. மெல் சுவைத் தண்டு: வினைத் தொகை. தெங்கு ஆகுபெயர். வல்சி - உணவு; வேவாவல்சி - அரிசி. நவபண்டம் - எள் முதலியன; புதியபண்டம் என்றுமாம். (15) பாரித் துள்ளவிப் பண்டமும் பரூஉக்குறுங் கையால் வாரித் தன்பெரு வயிற்றிடை வைப்பவுந் துடுவை பூரித் தாகுதி பண்ணிய தழலெனப் பொங்கிக் கோரித் தொன்பது வாயிலும் பசித்தழல் கொளுத்த. (இ-ள்.) பாரித்துள்ள இப்பண்டமும் - நிறைந்துள்ள இப்பொருள் களையும், பரூஉ குறுங்கையால் - பரிய குறிய கையினால், வாரிதன் பெரு வயிற்றிடை வைப்பவும் - அள்ளித் தனது பெரிய வயிற்றின் கண் போடவும், துடுவை பூரித்து - துடுவையால் (நெய்யை) நிரப்பி, ஆகுதி பண்ணிய தழல் என - ஆகுதி செய்த வேள்வித்தீயைப் போல, பசித்தழல் பொங்கிக் கோரித்து - பசித் தீயானது கோரமாய்ப் பொங்கி, ஒன்பது வாயிலும் கொளுத்த -நவத்துவாரங்களிலும் கொளுத்த எ-று. பாரித்து - பரந்து; இது தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவானசொல். மரூஉ வென்பதுபோற் பரூஉ வென்றாயது. பூரித்தல் - நிரப்புதல். கோரித்து - கொடுமையுற்று; கோரம் என்னும் பெயரடியாகப் பிறந்தவினை. (16) அலங்க லோதிகண் டதிசய மடைந்துதன் னன்பின் நலங்கொ ணாயகன் முன்புபோய் நாணமுட் கிடப்ப இலங்கு பூங்குழல் சுவன்மிசை யிறக்கியிட் டொல்கி நிலங்கி ளைத்துநின் றாணிலை கண்டனன் நிருபன். (இ-ள்.) அலங்கல் ஓதி கண்டு அதிசயம் அடைந்து - மாலையை யணிந்த கூந்தலையுடைய பிராட்டியார் இதனைக் கண்டு வியப்புற்று, தன் அன்பின் நலம்கொள் நாயகன் முன்பு போய் - தம் அன்பினது நலத்தைக் கொள்ளும் நாயகனது திருமுன் சென்று, நாணம் உட்கிடப்ப - நாணம் உள்ளத்திற் கிடப்ப, இலங்கு பூங்குழல் - விளங்குகின்ற பூவையணிந்த கூந்தலை, சுவல்மிசை இறக்கியிட்டு - தோளிலே தாழ்த்தி, ஒல்கி நிலம் கிளைத்து நின்றாள் - துவண்டு (திருவடிப் பெருவிரலால்) நிலத்தைக் கிண்டிக்கொண்டு நின்றார்; நிலை நிருபன் கண்டனன் - அந்நிலைமைய அரசனாகிய சுந்தர பாண்டியன் கண்டனன். ‘போனகம் எல்லையின்றாக்கி உணங்குகின்றது’எனக் கூறியவர் அவையனைத்தும் ஒருவன் பசியை யாற்றுதற்கும் போதாமை கண்டமையின் நாணமுடையராயினார். தலை சாய்த்தலும் நிலங்கிளைத் தலும் நாணத்தால் நிகழ்வன. (17) அஞ்சி லோதியை வினவுவா னறிகலான் போலக் குஞ்சி யாரழ லன்னவக் குடவயிற் றவனுண் டெஞ்சி யுள்ளவேற் பூதங்க ளின்னமும் விடுத்துன் நெஞ்சு வப்பவே யருத்துது மென்னலு நிமலை. (இ-ள்.) அம்சில் ஒதியை - அழகிய சிலவாகிய கூந்தலை யுடைய பிராட்டியாரை, அறிகலான் போல வினவுவான் - தெரியாதவன் போல வினவுகின்றவன், ஆர் அழல் அன்ன குஞ்சி - நிறைந்த நெருப்பைப் போலும் சிகையினையுடைய, அக்குட வயிற்றவன் - அக்குண்டோதரன், உண்டு எஞ்சி உள்ளவேல் - உண்டு உணவு எஞ்சியிருக்குமாயின், இன்னமும் பூதங்கள் விடுத்து - இன்னும் பூத கணங்களை அனுப்பி, உன் நெஞ்சு உவப்ப அருத்துதும் என்னலும் - உன் உள்ளம் மகிழுமாறு உண்பிப்போம் என்று கூறலும், நிமலை - பிராட்டியார் எ-று. அஞ்சிலோதியென்பதற்கு யாம் கூறியதே பொருளாதலை, “ அஞ்சிலோதிசையல்” என்னும் குறிஞ்சிப்பாட்டிக்கு நச்சினார்க்கினியர் கூறிய வுரையானறிக; சில - வட்டத் தகட்டணி யென்பர் சிலர்; அது சிறப்பின்றென்க. அறிகலான் - கு: சாரியை, அல்: எதிர்மறை யிடை நிலை. குடவயிறு - குடம் போலும் ஆழமாகிய வயிறு. (18) ஐய வின்னுமிக் குறட்பசி யடங்கிடா வேறு வெய்ய பாரிட வீரரை விடுத்தியே லெடுத்து வையம் யாவையும் வயிற்றிடை வைப்பரே யிதனாற் செய்ய காலருத் திரப்பெயர் தேற்றமா முனக்கே. (இ-ள்.) ஐய - ஐயனே, இக்குறள் பசி இன்னும் அடங்கிடா - இக்குறிய பூதத்தின் பசிதானும் இன்னும் அடங்கவில்லை; வேறு வெய்ய பாரிட வீரரை விடுத்தியேல் - வேறு கொடிய பூதகண வீரரை விடுப்பாயானால் (அவர்), வையம் யாவையும் எடுத்து வயிற்றிடை வைப்பர் - உலகம் அனைத்தையும் எடுத்து வயிற்றின் கண் வைத்து விடுவர்; இதனால் - இந்நிகழ்ச்சியினால், உனக்குச் செய்ய கால ருத்திரப் பெயர் தேற்றம் ஆம் - உனக்குச் செந்நிற முடைய கால உருத்திர னென்னும் பெயர் உறுதியாம் எ-று. குறள், சொல்லால் அஃறிணையாகலின் ஈறு திரிந்தது. அடங்கிடா: துவ்வீறு தொக்கது. ஏ: தேற்றம். (19) சங்க வார்குழைக் குறண்மகன் றன்செய றானே இங்கு வந்துரை செய்திட வறிதியென் றிறைமுன் மங்கை நாயகி குமுதவாய் மலர்பொழு தெயிற்றுத் திங்கள் வாய்முழை யான்பசித் தீச்சுட வந்தான். (இ-ள்.) சங்க வார் குழைக் குறள் மகன் - சங்காலாகிய நீண்ட குண்டலத்தையுடைய குண்டோதரன், தன் செயல்தானே இங்கு வந்து உரை செய்திட அறிதி என்று - தன் செயலைத் தானே இங்கே வந்து கூற அறிவாய் என்று, இறை முன் - இறைவன் முன், மங்கை நாயகி - மங்கையர்க் கரசியாகிய பிராட்டியார், குமுத வாய் மலர்பொழுது - சேதாம்பல் போன்ற திருவாய் மலர்ந்து கூறும்பொழுது, எயிற்றுத் திங்கள் வாய் முழையான் - கோணற் பல்லாகிய அரை மதியையும் வாயாகிய குகையினையுமுடைய குண்டோதரன், பசித் தீச்சுட வந்தான் - பசித்தழல் கொளுத்த வந்தான் எ-று. குறள்மகன் - குறளாகிய மகன்; ஈண்டு மகன் என்றது பாலுணர்த்து மாத்திரையாய் நின்றது. வாய்மலர்தலாகிய காரணம் கூறுதலாகிய காரியத்தை உணர்த்தும். (20) நட்ட மாடிய சுந்தர நங்கையெம் பிராட்டி அட்ட போனகம் பனிவரை யனையவாய்க் கிடந்த தொட்டு வாய்மடுத் திடவுமென் சுடுபசி தணியா திட்டு ணாதவர் வயிறுபோற் காந்துவ தென்றான். (இ-ள்.) நட்டம் ஆடிய சுந்தர - வெள்ளியம்பலத்தில் திருக் கூத்தாடிய சுந்தரபாண்டிய, நங்கை எம்பிராட்டி - மகளிருட் சிறந்த எம் பிராட்டியார், அட்ட போனகம் - சமைப்பித்தருளிய அமுது வகைகள், பனிவரை அனையவாய்க் கிடந்த - இமயமலைபோற் கிடந்தன; தொட்டுவாய் மடுத்திடவும் - அவற்றை எடுத்து உண்ணவும், என் சுடுபசி தணியாது - எனது சுடுகின்ற பசி தணியாமல், இட்டு உணாதவர் வயிறுபோல் - (முற்பிறப்பில்) ஐயமிட்டு உண்ணாதவர் வயிறு (இப்பிறப்பில் வறுமையினால் காந்துவது) போல, காந்துவது என்றான் - எரிகின்றது என்றான் எ-று. கிடந்தவெனப் பன்மை வினை வந்தமையின் உணவுகள் எனக் கொள்க. பிறர்க்கு ஈயாது சேமித்து வைத்தவர் அப்பொருளை யிழந்த பொழுது அவர் வயிறு எரிவதுபோல் என வுரைப்பாரு முளர். (21) கையர் முப்புரத் திட்டதீக் கடும்பசி யுருவாய்ப் பொய்ய னேன்வயிற் றிடைக்குடி புகுந்ததோ வென்னுங் கையெ றிந்திடு மண்டங்கள் வெடிபடக் கதறும் ஐய கோவெனும் முயிர்த்திடு மாவிசோர்ந் தயரும். (இ-ள்.) கையர் முப்புரத்து இட்ட தீ - வஞ்சகர்கள் மூன்று புரங்களிலும் இட்ட நெருப்பானது, கடும்பசி உருவாய் - கடிய பசி வடிவமாய் (வந்து), பொய்யனேன் வயிற்றிடை - பொய்மையேனது வயிற்றின்கண், குடி புகுந்ததோ என்னும் - குடி புக்கதோ என்பான், கை எறிந்திடும் - கையை ஒன்றோடொன்று தாக்குவான்; அண்டங்கள் வெடிபடக் கதறும் - அண்டங்கள் பிளக்குமாறு கதறுவான்: ஐயகோ எனும் - ஐயகோ என்பான்; உயிர்த்திடும் - பெருமூச்செறிவான்; ஆவிசோர்ந்து அயரும் - உயிர் சோர்ந்து அயருவான் எ-று. ஐயகோ;இரக்க விடைச் சொல்; ஐயோவென வழங்கும்.(22) ஆகச் செய்யுள் - 847. அன்னக்குழியும் வையையும் அழைத்த படலம் வேத நாயகன் பாரிட வேந்தனுக் கமையா ஓத னாதிக ளருத்திய தன்மையீ துவையும் போத ராமையா லமைவுறப் போனகக் குழிதந் தோத மாநதி யருத்திய செய்தியு முரைப்பாம். (இ-ள்.) வேத நாயகன் - மறை முதல்வனாகிய சோமசுந்தரக் கடவுள், பாரிட வேந்தனுக்கு - பூதகணத் தலைவனாகிய குண்டோ தரனுக்கு, அமையா ஓதன ஆதிகள் அருத்திய முறை ஈது - நிரம்பாத அன்ன முதலியவைகளை உண்பித்த திருவிளையாடல் இது; உவையும் போதராமையால் - அவை போதாமையால், அமைவு உற - நிரம்புதல் பொருந்த, போனகக் குழி தந்து - அன்னக்குழியைத் தந்தருளி, ஓதம்மா நதி அருத்திய செய்தியும் உரைப்பாம் - பெரிய வெள்ளத்தினையுடைய நதியை அழைத்து உண்பித்த திருவிளை யாடலையும் கூறுவாம் எ-று. அமைதல் - பசியினளவுக்குப் பொருந்துதல். போதாமை யென்பது விரிந்து நின்றது. பசிக்கு அன்னக்குழியும், நீர் வேட்கைக்கு நதியுமென்க. (1) கவன மால்விடை யாளிபின் கடிகமழ் தென்றற் பவன மாமலை யாட்டியைப் பார்த்துளே நகைத்துத் தவன மாபசி யுடையவன் றன்பொருட் டன்ன புவன மாதினை நினைத்தன னினைக்குமுன் போந்தாள். (இ-ள்.) கவனம் மால் விடை யாளி - விரைந்த செலவினை யுடைய பெரிய இடப வூர்தியையுடைய சோமசுந்தரக் கடவுள், பின் - பின்பு, கடிகமழ் தென்றல் பவனம் மா மலையாட்டியைப் பார்த்து - மணங்கமழுந் தென்றற்காற்றினையுடைய பெரிய பொதியின் மலையையுடைய தடாதகை பிராட்டியாரை நோக்கி, உள்ளே நகைத்து - திருவாய்க்குள்ளே முறுவலித்து, தவனம் மா பசி உடையவன் தன் பொருட்டு - எரிக்கின்ற பெரிய பசியை யுடைய குண்டோதரன் பொருட்டு, அன்ன புவன மாதினை - (தனது சத்தியாகிய) அன்ன புவனத்திற்குரிய அன்ன பூரணியை, நினைத்தனன் - கருதியருளினான்; நினைக்குமுன் போந்தாள் - நினைத்தவளவில் (அன்ன வடிவமாய்) வருகின்றாள் எ-று. மலையாட்டி - மலையை ஆள்பவள். சிறிதே நகைத் தென்பார் ‘உள்ளே நகைத்து’ என்றார். தவனம் என்பதற்குத் தாகம் என்றும், அன்ன புவன மாது என்பதற்கு அன்னந் தரும் பூமிதேவி என்றும் உரைப்பாரு முளர். (2) நாற்ற டந்திசைத் தயிர்க்கட னனந்தலை நிலங்கீண் டூற்றெ ழுந்துநாற் கிடங்கரா யுதித்தெழுந் தாங்கு மாற்ற ருஞ்சுவைத் தீந்தயிர் வாலரிப் பதத்தோ டேற்றெ ழுந்தது நாற்குழி யிடத்திலும் பொங்கி. (இ-ள்.) நால் தடந்திசை - நான்கு பெரிய திசைகளினுஞ் சூழ்ந்த, தயிர்க் கடல் - தயிர்க்கடலானது, நிலம் நனந்தலை கீண்டு - பூமியின் நடுவைக் கிழித்து, ஊற்று எழுந்து நால் கிடங்கராய் உதித்து எழுந்தாங்கு - ஊறுதலுற்று நான்கு குழிகளாய்த் தோன்றி யெழுந்தாற் போல, மாற்று அறுசுவைத் தீந்தயிர் - நீங்குதல் இல்லாத சுவையினை யுடைய தயிர், வால் அரிபதத்தோடு - வெள்ளிய அரிசியாலாகிய அன்னத்தோடு, நால்குழி இடத்திலும் ஏற்று பொங்கி எழுந்தது - நான்கு குழிகளிலும் உயர்ந்து பொங்கி எழுந்தது எ-று. மாறு அரும் என்பது மாற்றரும் என்றாயது; நீக்க வொண்ணாத என்றுமாம். கீண்டு மரூஉ. கிடங்கர் : போலி. (3) குரும திக்குல மன்னவன் மருகனக் குண்டப் பெருவ யிற்றிரு பிறையெயிற் றெரிசிகைப் பேழ்வாய் ஒருகு றட்குடை வீரனை யுன்பசி தணியப் பருகெ னப்பணித் தருளலும் பாரிடத் தலைவன். (இ-ள்.) குரு மதி குல மன்னவன் - நிறம் பொருந்திய சந்திர குலத்தில் வந்த மலயத்துவச பாண்டியனுக்கு, மருகன் - மருகனாகிய சுந்தரபாண்டியன், அக் குண்டப் பெருவயிற்று - அந்தக்குழிந்த பெரிய வயிற்றினையும், இருபிறை எயிற்று - இரண்டு பிறை போலும் வளைந்த பற்களையும், எரி சிகை - நெருப்புப்போலும் சிகையினையும், பேழ்வாய் - பிளந்த வாயினையுமுடைய, ஒரு குடை குறள் வீரனை- ஒப்பற்ற குடை தாங்கிவரும் பூத வீரனை (நோக்கி), உன் பசி தணிய- உன் பசி நீங்குமாறு, பருகு எனப் பணித்தருளலும் - உண்பாய் என்று கட்டளையிட் டருளலும், பாரிடத் தலைவன் - பூதகணத் தலைவனாகிய குண்டோதரன் எ-று. குரு - நிறம்; ஒளி; திருமுகப்பாசுரத்தில் “குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்” என வருதலுங் காண்க. பருகென்பது ஒரோ விடங்களில் பொது வினையாயும் வரும். (4) அத்த யிர்ப்பதக் கிடங்கரி லலைகடல் கலக்கும் மத்தெ னக்கரம் புதைத்தெடுத் தெடுத்துவாய் மடுத்துத் துய்த்தி டப்பசி விடுத்தது சுருதிநா யகன்றாட்1 பத்தி வைத்துவீ டுணர்ந்தவர் பழவினைத் தொடர்போல். (இ-ள்.) அத்தயிர்ப் பதக் கிடங்கரில் - அந்தத் தயிர்ச் சோற்றுக் குழியிலே, அலைகடல் கலக்கும் மத்து என - அலைக்கின்ற கடலைக் கலக்கும் மத்தைப் போல, கரம் புதைத்து எடுத்து எடுத்து வாய்மடுத்துத் துய்த்திட - கையைச் செருகி வாரி வாரி வாயில் வைத்து உண்ண, சுருதி நாயகன் தாள் பத்தி வைத்து வீடு உணர்ந்தவர் - வேத நாயகனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளில் அன்பு செய்து வீட்டினை யுணர்ந்த பெரியாரது, பழவினைத் தொடர் போல் - சஞ்சித வினையின் தொடர்ச்சி ஒழிதல்போல், பசி விடுத்தது - பசிநோய் விட்டொழிந்தது எ-று. அலைத்தல் - அலைவீசுதல். கையாற் சுழற்றி யெடுத்தலின் ‘மத்தென‘ என்றார். அடுக்கு ஆர்வத்தில் வந்தது. (5) வாங்கி வாங்கிவாய் மடுத்தலு முடம்பெலாம் வயிறாய் வீங்கி னான்றரை கிழிபடப் பொருப்பென வீழ்ந்தான் நீங்கு நீளுயிர்ப் பிலனுடல் புரண்டன னீர்வேட் டாங்கு நீர்நிலை தேடுவா னாயினா னெழுந்தான். (இ-ள்.) வாங்கி வாங்கி வாய் மடுத்தலும் - அங்ஙனம் வாரி வாரி உண்ட வளவில், உடம்பு எலாம் வயிறாய் வீங்கினான் - உடலெல்லாம் வயிறாகப் பருத்து, தரை கிழிபட பொருப்பு என வீழ்ந்தான் - பூமி கிழியுமாறு மலைபோல விழுந்து, நீங்கும் நீள் உயிர்ப்பு இலன் - வெளியே செல்லும் நீண்ட உயிர்ப்பில்லாத வனாய், உடல் புரண்டனன் - உடம்பு புரண்டனன்; நீர் வேட்டு எழுந்தான் ஆங்கு நீர் நிலை தேடுவானயினான் - பின் நீரை விரும்பி எழுந்து அவ்விடத்துள்ள நீர் நிலைகளைத் தேடுவானாயினான் எ-று. வயிறுபோலாதலை ‘வயிறாய்’ என்றார். வீங்கினான், வீழ்ந்தான், எழுந்தான் என்னும் தெரிநிலை வினை முற்றுக்களும், இலன் என்னும் எதிர் மறைக் குறிப்பு முற்றும் எச்சங்களாயின. (6) ஆவி யன்னவர்ப் பிரிந்துறை யணங்கனார் போலக் காவி நாண்மலர் தாமரைக் கடிமலர் வாட வாவி யோடையுங் குளங்களும் வறப்பவாய் வைத்துக் கூவ நீணிலை நீர்களும் பசையறக் குடித்தான். (இ-ள்.) ஆவி அன்னவர்ப் பிரிந்து உறை அணங்கு அனார் போல - உயிரினை யொத்த தலைவரைப் பிரிந்துறையும் அணங் கனைய தலைவியரைப்போல, நாள் காவி மலர் தாமரைக் கடி மலர் வாட - அன்றலர்ந்த நீலோற்பல மலர்களும் நறிய தாமரை மலர்களும் வாட்டமடைய, வாவி ஒடையும் குளங்களும் வறப்ப வாய் வைத்து - நடை கிணறுகளும் ஓடைகளும் குளங்களும் வறளுமாறு வாயினை வைத்து உரிஞ்சி, கூவம் நீள் நீர்நிலைகளும் பசை அறக் குடித்தான் - கிணறுகளும் நீண்ட நீர் நிலைகளும் பசையில்லையாகக் குடித்தான் எ-று. அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வப்பெண் என்பர். அணங்கனார் வாடுதல் போல வாடவென்க. நிலை நீர் என்பதனை நீர் நிலையென மாற்றுக. கூவனீணிலை எனப் பாடங் கொள்ளலுமாம். (7) அனைய னாகியு நீர்நசை யாற்றலன் வருந்தும் வினைய னாகிவா னதிச்சடை வேதியன் பாதத் தினைய நாதனுந் தன்றிரு முடியின்மீ திருக்கும் நனைய நாண்மல ரோதியைப்1 பார்த்தொன்று நவில்வான். (இ-ள்.) அனையன் ஆகியும் - அங்ஙனம் குடித்தலை யுடைய னாகியும், நீர் நசை ஆற்றலன் வருந்தும் வினையனாகி - நீர் வேட்கையைப் பொறாதவனாகி வருந்துந் தன்மையுடையவனாய், வான் நதிச்சடை வேதியன் பாதத்து இனைய - சிறந்த கங்கை யாற்றினை யுடைய சடையையுடைய அந்தணனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடிகளில் வீழ்ந்து வருந்த, நாதனும் - அவ்விறைவனும், தன் திருமுடியின் மீது இருக்கும் - தனது திருமுடியின்கண் இருக்கின்ற, நனைய நாள் மலர் ஓதியைப் பார்த்து ஒன்று நவில்வான் - தேனையுடைய புதிய மலரையணிந்த கூந்தலையுடைய கங்கையை நோக்கி ஒன்று கூறுவான் எ-று. ஆற்றலன் : எச்சமாயிற்று. வினை - ஈண்டு தன்மை. பாதத்தில் விழுந்து என விரிக்க. நனைய : குறிப்புப் பெயரெச்சம். நீர் வேட்கையைத் தணிக்கவல்லவ னென்பது தோன்ற ‘வானதிச்சடை வேதியன்’ என அபிப்பிராயத்தோடு கூடிய விசேடணந் தந்தமையின் கருத்துடையடையணி. (8) தேங்கு நீர்த்திரை மாலிகைச் செல்விநீ யிந்த வாங்கு நீர்த்தடம் புரிசைசூழ் மதுரையின் மாடோர் ஓங்கு நீத்தமா யொல்லென வருதியென் றுரைத்தான் நீங்கு நீர்த்திரு மாதவ ணொருமொழி நிகழ்த்தும். (இ-ள்.) தேங்கும் நீர் திரை மாலிகைச் செல்வி - ததும்புகின்ற நீரினையும் அலை மாலையினையுமுடைய நங்காய், நீ இந்த வாங்கு நீர்த்தடம்புரிசை சூழ் மதுரையின் மாடு - நீ இந்த வளைந்த அகழியும் பெரிய மதிலும் சூழ்ந்த மதுரைப் பதியின் அருகில், ஒர் ஓங்கு நீத்தமாய் ஒல்லென வருதி என்று உரைத்தான் - ஒரு பெரிய வெள்ளமாக விரைந்து வருவாய் என்று கட்டளையிட் டருளினான்; நீங்கு நீர்திருமாது - உடன் சடையினின்றும் நீங்கா நின்ற தெய்வத் தன்மையையுடைய கங்கா தேவி, அவண் ஒரு மொழி நிகழ்த்தும் - அங்கு ஒருவார்த்தை கூறுவாள் எ-று. வாங்கு நீர் - வளைந்த தன்மை யெனலுமாம். (9) அன்று மெம்பிரா னாணையாற் பகீரதன் பொருட்டுச் சென்று நீயொரு தீர்த்தமாய்த் திளைப்பவர் களங்கம் ஒன்று தீவினைத் தொடக்கறுத் தொழுகெனப் பணித்தாய் இன்று மோர்நதி யாகெனப் பணித்தியே லென்னை. (இ-ள்.) எம்பிரான் - எம் பெருமான், அன்றும் - அக்காலத்தும், ஆணையால் - நம் கட்டளையால், நீ பகீரதன் பொருட்டு சென்று - நீ பகீரதன் நிமித்தமாகப் போய், ஒரு தீர்த்தம் ஆய் - ஒரு தீர்த்தமாகி, திளைப்பவர் - முழுகுவோரின், களங்கம் ஒன்று தீவினைத் தொடக்கு - குற்றம் பொருந்திய பாவத்தொடக்கினை, அறுத்து ஒழுகு என - போக்கி நடப்பாய் என்று, பணித்தாய் - பணித்தருளினாய்; இன்றும் என்னை - இப்பொழுதும் என்னை, ஓர் நதி ஆகு என - ஒருநதியா வாய் என்று, பணித்தியேல் - கட்டளை யிடுவாயாயின் எ-று. எம்பிரானாகிய நீ ‘நம் ஆணையாற் சென்று அறுத்து ஒழுகு’ எனப் பணித்தாய் என்க. எம்பிரான்: வினையுமாம். ‘பகீரதன் பொருட்டுச் சென்று’ என்றமையால் அதற்கு முன்னும் கங்கை சிவபிரான் திருமுடிமேல் தரிக்கப்பட்டிருந்த தென்பது போதரும்; உமாதேவியாரின் திருக்கை விரல்களிற் றோன்றிய கங்கையைச் சிவபெருமான் தமது திருச்சடையிற் றரித்தருளி, தம்மை யடைந்து வேண்டிய திருமால் பிரமன் இந்திரன் என்பவர்கட்கு அதனிற் சிறிதுதவ, அவர்கள் அதனைத் தத்தம் உலகிற் கொண்டு சென்று செலுத்தினர் எனவும், பிரமனுலகிலுள்ள கங்கையே பகீரதன் தவத்தால் நிலவுலகில் வந்தது எனவும் கந்தபுராணம் கூறாநிற்கும்; “ அந்நதி மூன்று தன்னி லயனகர் புகுந்த கங்கை தன்னருந் திறலின் மிக்க பகீரதன் றவத்தான் மீளப் பின்னரு மிமையா முக்கட் பெருந்தகை முடிமேற் றாங்கி இந்நில வரைப்பிற் செல்ல விறையதில் விடுத்தல் செய்தான்” என்பது கந்தபுராணம், ததீசி யுத்தரப் படலம். (10) தெரிசித் தோர்படிந் தாடினோர் செங்கையா லேனும் பரிசித் தோர்பவத் தொடர்ச்சியின் பற்றுவிட் டுள்ளத் துருசித் தோர்வுறு பத்தியும் விச்சையு முணர்வாய் விரிசித் தோர்வுறு மெய்யுணர் வால்வரும் வீடும். (இ-ள்.) தெரிசித்தோர் - கண்ணாற் கண்டவர், படிந்து ஆடினோர் - திளைத்து மூழ்கினவர், செங்கையாலேனும் பரிசித்தோர் - சிவந்த கையினாலேனும் தொட்டவர் ஆகிய இவர்கட்கு, பவத் தொடர்ச்சியின் பற்றுவிட்டு - பிறவித் தொடர்பின் பற்று நீங்க, உள்ளத்து உருசித்து - உள்ளத்தில் இனிக்க, ஓர்வுறு பத்தியும் - சிந்தித்தல் பொருந்திய அன்பும், விச்சையும் - மெய்ஞ்ஞானமும், உணர்வாய் விரிசித்து ஓர்வுறும் - அறிவாகி (எங்கும்) விரிந்த சித்தாகிய (நின்னை) உணரும், மெய் உணர்வால் வரும் வீடும் - அம் மெய்ஞ்ஞானத்தால் வரும் வீடு பேறும் எ-று. விட்டு, உருசித்து என்பன செயவெனெச்சத் திரிபுகள், உணர்வாய் அதனாற் சித்தெனப்படுவது; விரிசித்து - வியாபகசித்து; “ அகர வுயிர்போ லறிவாகி யெங்கும் நிகரிலிறை நிற்கு நிறைந்து” என்பது திருவருட் பயன். பத்தி, ஞானம், வீடு ஆகிய மூன்றையு மென்க. (11) தந்தி டப்பணித் தருளெனாத் தடம்புனற் செல்வி சுந்தர ரப்பெருங் கடவுளை வரங்கொண்டு தொழுது வந்த ளப்பிலா வேகமொ டெழுந்துமா நதியாய் அந்த ரத்துநின் றிழிபவ ளாமென வருமால். (இ-ள்.) தந்திட பணித்தருள் எனா - (யான்) தருமாறு கட்டளை யிட்டருள்வாய் என்று, தடம் புனல் செல்வி - பெரிய கங்கை யானவள், சுந்தரப் பெருங் கடவுளைத் தொழுதுவரம் கொண்டு - ஒப்பற்றசோம சுந்தரக் கடவுளை வணங்கி அவ்வரத்தினைப் பெற்றுக்கொண்டு, வந்து அளப்பிலா வேகமோடு எழுந்து - வந்து அளவிறந்த வேகத்துடன் எழுந்து, மாநதியாய் - பெரிய நதிவடி வாய், அந்தரத்து நின்று இழிபவள் ஆம் என வரும் - வானினின்றும் இறங்குபவள் போல வருகின்றாள் எ-று. கடவுளை வணங்கி அவர்பால் வரங்கொண்டென்க. பெருக் கெடுத்துக் கீழ் மேலாக வருதலை யுணர்த்த ‘அந்தரத்துநின் றிழிபவளாமென’ என்றார். ஆல் : அசை. (12) (கலி விருத்தம்) திரைவளையணி கரமுடையவள் செழுமணிநகை யுடையாள் நுரைவளைதுகி லுடையவள்கொடி நுணுகிடையவ ளறனீள் விரைவளைகுழ லுடையவள்கயல் விழியுடையவள் வருவாள் வரைவளைசிலை யவன்முடிபட வரனதிவடி வினுமே. (இ-ள்.) வரை வளை சிலையவன் - மேரு மலையாகிய வளைந்த வில்லையுடைய இறைவனது, முடி படவரல் - முடியின்கண் உள்ள கங்கையானவள், நதிவடிவினும் - ஆற்றின் வடிவமாக வரும் பொழுதும், திரை வளை அணி கரம் உடையவள் - அலைகளாகிய வளையணிந்த கைகளை யுடையவளாகியும், செழு மணி நகை உடையவள் - கொழுவிய முத்துக்களாகிய பல் வரிசைகளை யுடையவளாகியும், நுரைவளைதுகில் உடையவள் - நுரைகளாகிய வளைந்த ஆடை களை யுடையவளாகியும், கொடி நுணுகு இடையவள் - பூங்கொடி யாகிய சிறுகிய இடையை யுடையவளாகியும், அறல் நீள் விரை வளை குழல் உடையவள் - கருமணலாகிய நீண்ட மணம் பொருந்திய கடைகுழன்ற கூந்தலை யுடையவளாகியும், கயல் விழி உடையவள் - கயல்களாகிய கண்களை யுடையவளாகியும், வருவாள் - வருகின்றாள் எ-று. கங்கைநங்கை நதியாகிய விடத்தும் பெண்ணியல்பு குன்றாமல் வந்தன ளென்பார் திரை முதலியவற்றை வளைக்கை முதலியவாக உருவகித்து ‘நதி வடிவினும் வருவாள்’ என்றார். வளையைத் திரைக்குங் கொள்க. இதுமுதல் ‘ஆரொடுமடலவிழ்’ என்னும் செய்யுள்காறும் ஐஞ்சீரடியாக வகை செய்தற்கும் இயையுமேனும் உருட்டு வண்ணமாகிய ஓசை நோக்கி நாற்சீரடி நான்கு கொண்ட கலிவிருத்தமாகக் கொள்ளப்பட்டன. “ உருட்டு வண்ணம் அராகந் தொடுக்கும்” என்பது தொல்காப்பியம். (13) விரைபடுமகி லரைபொரிதிமில் வெயில்விடுமணி வரையோ டரைபடமுது சினையலறிட வடியொடுகடி தகழாக் குரைபடுகடி லிறவுளர்சிறு குடியடியொடு பறியாக் கரைபடவெறி வதுவருவது கடுவிசைவளி யெனவே. (இ-ள்.) விரைபடும் அகில் - மணம் பொருந்திய அகிலும், பொரி அரை திமில் - பொருக்கினையுடைய அடியையுடைய வேங்கையும், வெயில் விடுமணி வரையோடு அரைபட - ஒளிவீசும் மணிகளையுடைய மலையோடு (தாக்கி) அரைபடவும், முது சினை அலறிட - அவற்றின் பெரிய கிளைகள் புலம்பவும், அடியொடு கடிது அகழா - அவற்றை அடியோடு விரைந்து பறித்தும், குரைபடு கழல் இறவுளர் சிறுகுடி - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த வேட்டுவர்களின் சீறூரை, அடியொடு பறியா - அடியோடு பெயர்த்தும், கரைபட எறிவது - கரைகளிற் பொருந்த வீசுவதாகிய அந்நதி, கடுவிசை வளி என வருவது - மிக்க விரைவினையுடைய பெருங் காற்றுப் போல வாராநின்றது எ-று. பொரியரை என மாறுக. திமில் - வேங்கையின் ஒரு சாதி; திமிசு எனவும் படும். சிறுகுடி குறிஞ்சி நிலத்தூர்; ஈண்டு ஊரிலுள்ள குடிசைகள். எறிவது பெயர். (14) பிணையொடுகலை பிடியொடுகரி பிரிவிலவொடு பழுவப் பணையொடுகரு முசுவயிறணை பறழொடுதழு வியதன் றுணையொடுகவி பயின்மரநிரை தொகையொடுமிற வுளர்வெங் கணையொடுசிலை யிதணொடுமெறி கவணொடுகொடு வருமால். (இ-ள்.) பிரிவில பிணையொடு கலை - சேர்ந்திருப்பனவாகிய பெண் மானோடு ஆண் மானையும், பிடியொடு கரி - பெண் யானையோடு ஆண் யானையையும், பழுவம் ஒடு பணையொடு - காட்டிலுள்ள ஒடு மரத்தைக் கிளைகளோடும், கரு முசு - கரிய ஆண் முசுவை, வயிறு அணை பறழொடு தழுவிய தன் துணையொடு - வயிற்றில் பற்றிய குட்டியோடு கூடிய அதன் பெண் குரங்கோடும், கவி பயில் மரம் நிரை தொகையொடு - குரங்குகள் உலாவும் மரங்களை வரிசையாகிய தொகுதியோடும், இறவுளர் சிலை வெங்கணை யொடு - வேடர்கள் வில்லைக் கொடிய அம்பு களோடும், இதணொடும் எறி கவணொடு - (அவர்கள் தினைப்புனத்துப்) பரணினை வீசும் கவணோடும், கொடு வரும் - வாரிக்கொண்டு வரும் (அந்நதி) எ-று. பிணையொடு கலையும் பிடியொடு கரியும் பிரிவில்லாத வற்றோடு என்றும், பறழொடு தழுவிய துணையொடு கூடிய முசுவைப் பணையொடு என்றும், முசுவைப் பெண்ணும் கவியை ஆணுமாக்கி, பறழொடு முசுவையும் துணையொடு கவியையும் என்றும், கவிகளைத் தொகையொடு என்றும் இறவுளரைச் சிலை யொடும் இதணொடும் என்றும், பிறவாறும் இயைத் துரைத் தலுமாம். முசு - குரங்கின் ஓர்வகை. உம்மை விரித்துக் கொள்க. ஆல் : அசை. (15) அடியிறநெடு வரைதைவன வகழ்வனவகழ் மடுவைத் திடரிடுவன மழைசெருகிய சினைமரநிரை தலைகீழ் படவிடிகரை தொறுநடுவன படுகடலுடை முதுபார் நெடுமுதுகிரு பிறவுறவரு நெடுநதியின வலையே. (இ-ள்.) படுகடல் உடை முதுபார் - கடலாகிய ஆடையினை யுடைய பெரிய பூமியின், நெடுமுதுகு இரு பிளவு உற - நீண்டமுதுகு இரண்டு பிளவுபட, வரும் நெடு நதியின் அலை - வருகின்ற நீண்ட நதியின் கூட்டமாகிய அலைகள், நெடுவரை அடி இற உதைவன அகழ்வன - பெரிய மலைகளின் அடிகெட மோதித் தோண்டுவனவும், மடுவைத் திடர் இடுவன - பள்ளங்களை மேடாக்குவனவும், மழை செருகிய சினைமரம் - மேகத்தை ஊடுருவிய கிளைகளையுடைய மரங்களை, இடிகரை தொறும் நிரை தலை கீழ்பட நடுவன - இடிந்த கரைகள் தோறும் வரிசையாகத் தலை கீழாக நடுவனவும் ஆயின எ-று. படுதல் - ஒலித்தல்; “ படுகண் முரசங் காலை யியம்ப” என்னும் மதுரைக்காஞ்சி யடியின் உரையை நோக்குக. நதியின - நதியினுடைய வென அகரம் ஆறனுருபுமாம். ஏ : அசை. (16) பிளிறொலியின முதுமரமகழ் பெருவலியின வசையா வெளிறடிவன வெறிமணியின விரைசெலவின மதமோ டொளிறளியின நுரைமுகபட முடையனவென வரலால் களிறனையன மதுவிதழிகள் கவிழ்சடையணி குடிஞை. (இ-ள்.) மது இதழிகள் கவிழ்சடை அணி குடிஞை - இறைவனது தேனொழுகும்கொன்றை மலர் மாலைகள் தொங்குகின்ற சடையிலணிந்த கங்கை யாற்றின் அலைகள், பிளிறு ஒலியின - ஒலிக்கும் போரொலியை உடையனவும், முது மரம் அகழ்பெரு வலியின - பெரிய மரங்களைப் பறிக்கும் பெரிய வலியினை உடையனவும், அசையா வெளில் தடிவன - அசையாத விளாமரங்களை முறிப்பனவும், எறிமணியின - வீசா நின்ற முத்துக்களை உடையனவும், விரை செலவின - விரைந்த செலவினை யுடையனவும், மதமோடு ஒளிறு அளியின - மான் மதத்தோடு விளங்கும் வண்டுகளை உடையனவும், நுரை முக படம் உடையன என வரலால் -நுரையாகிய முதன்மை யான ஆடையை உடையனவுமாக வருதலால், (பிளிறு ஒலியின - பேரொலியை யுடையனவும், முது மரம் அகழ்பெரு வலியின - பெரிய மரங்களைப் பெயர்க்கும் பெரிய வலியினை யுடையனவும், விரைசெலவின - விரைந்த செலவினை யுடையனவும், மதமோடு ஒளிறு அளியின - மதத்துடன் (அதை உண்ணவரும்) ஒள்ளிய வண்டு களை யுடையனவும், நுரைமுகபடம் உடையன - நுரைபோலும் (வெள்ளிய) முகபடாத்தை யுடையனவுமாகிய) களிறு அனையன - யானைகளை ஒத்தன எ-று. ஒலியன, வலியன, செலவின என்பன யாற்றின் அலைக்கும் களிற்றுக்கும் பொது. வெளில் தடிவன, எறிமணியின, மதமோடு ஒளிறு அளியின, நுரை முகபட முடையன என்பன செம்மொழிச் சிலேடையாய் யாற்றுக்கும் களிற்றுக்கும் இயைய வெவ்வேறு பொருள் தருவன. என : ஆக வென்னும் பொருட்டு. இதழி மாலைக்கும், குடிஞை அலைக்கும் ஆகுபெயர்கள். இதழிகள் மதுவைக் கவிழ்க்கும் என்னலுமாம். ஒலியின என்பது முதல் யாவும் பன்மையாகலின் குடிஞை என்பதற்கு அலைகள் என்று பொருள் கூறப்பட்டது. விளா என்னும் பொருளில் வெள்ளில் என்பது வெளில் எனத் தொக்கதாகக் கொள்க. (17) நீடியபில முறுநிலையன நிருமலன்மதி முடிமீ தாடியசெய லினவெயிலுமி ழருமணிதலை யினநீள் கோடியகதி யினநிரைநிரை குறுகியபல காலின் ஓடியவலி யினவளையுட லுரகமுமென வருமால். (இ-ள்.) (அந்நதியின் அலைகள்) நீடிய பிலம் உறு நிலையின - ஆழ்ந்த பாதலத்திற் பொருந்தும் தன்மையையுடையனவும், நிருமலன் மதி முடிமீது ஆடிய செயலின - இறைவனது பிறையை யணிந்த முடியின் மேல் அசையும் செயலையுடையனவும், வெயில் உமிழ் அருமணி தலையின - ஒளி வீசும் அரிய மணிகளைத் தம்மிடத் துடையனவும், நீள்கோடிய கதியின் - மிக்க வளைந்த நடையினை யுடையனவும், நிரைநிரை குறுகிய பலகாலின் ஓடிய வலியின - வரிசை வரிசையாக நெருங்கிய பல கால்களின் வழியாக ஓடுகின்ற வலியினை யுடையனவுமாய், (நீடிய பிலம் உறும் நிலையின - ஆழ்ந்த பிலத்திற் பொருந்தும் நிலையினையுடையனவும், நிருமலன் மதி முடிமீது ஆடிய செயலின - இறைவன் மதியணிந்ததிருமுடி மேல் ஆடுகின்ற செயலினையுடையனவும், வெயில் உமிழ் அரு மணி தலையின் - ஒளி விசும் அரிய மணிகளைச் சுடிகையிலுடை யனவும், நீள் கோடி கதியின - மிக்க வளைந்த செலவினையுடை யனவும், நிரை நிரை குறுகிய பலகாலின் ஓடிய வலியின - வரிசை வரிசை யாய்ச் சிறுத்துள்ள (கண்ணுக்குப் புலனாகாத) பல்கால்களினால் ஓடும் வலியினையுடையனவுமாகிய) வளை உடல் உரகமும் எனவரும் - வளைந்த உடலினையுடைய பாம்புகள் போலவும் வரும் எ-று. பிலம் - பாதலமும், வளையும். நீள் - மிக்க: வினைத்தொகை. உரகமெனவும் என உம்மையை மாற்றுக. ஆல் : அசை. இதுவும் செம்மொழிச் சிலேடை. (18) மண்ணகழ்தலின் வளையணிகரு மாவனையது மிசைபோய் விண்ணளவலி னவுணர்களிறை விடுபுனலொடு நெடுகும் அண்ணலையனை யதுசுவையிழு தளையளைவுறு செயலாற் கண்ணனையனை யதுநெடுகிய கடுகியகதி நதியே. (இ-ள்.) கடுகிய கதி நெடுகிய நதி - விரைந்த செலவினையுடைய நீண்ட அந் நதியானது, மண் அகழ்தலின் - மண்ணைத் தோண்டிச் செல்லுதலால், வளை அணி கருமா அனையது - சங்கினை ஏந்தியவராக மூர்த்தியை ஒத்தது; மிசைபோய் விண் அளவலின் - மேலேபோய் வானுலகத்தைத் தடவலால், அவுணர்கள் இறைவிடு புனலொடு நெடுகும் அண்ணலை அனையது. அவுணர்கள் தலைவனாகிய மாபலிச்சக்கரவர்த்தி தாரை வார்த்த நீரோடு பேருருக் கொண்ட வாமனமூர்த்தியை ஒத்தது; சுவை இழுது அளை அளைவுறு செயலால் கண்ணனை அனையது - சுவையையுடைய வெண்ணெயும் தயிரும் அளைந்து வருதலாற் கண்ணபிரானை ஒத்தது எ-று. கருமா - பன்றி; சிவபெருமான் திருவடியைக் காண்டற்கு நிலத்தைக் கீழ்ந்து சென்ற திருமாலாகிய பன்றி. புனலொடு - நீர்வார்த்த உடனாக. திருமால் வாமனனாக விருந்து மாபலியின்பால் மூன்றடி மண்இரந்து பெற்றுத் திரிவிக்கிரமனாக வளர்ந்து, புவியையும் வானத்தையும் இரடண்டியால் அளந்த கதை கூறிற்று; நெடுகும் அண்ணல் - திரிவிக்கிரமன் என்னலுமாம். இழுது - நெய்; அளை - தயிர்; அளைதல் - முல்லை நிலத்திலுள்ளன நீரில் விரவி வருதலும், ஆய்ச்சியர் இல்லங்களிற் கையாற் பிசைதலும் ஆம். ஒன்றற்கே பலபொருள் உவமையாகக் கூறப்படுதலின் பல் பொருளுவமையும், ஏதுவுடம் கூடி வருதலின் ஏதுவுவமையும் ஆம்; மேல் இங்ஙனம் வருவனவும் இவை. (19) திகழ்தருகரி பரிகவரிகள் செழுமணியொடு வருமா றிகழ்தருகுட புலவரசர்க ணெறிசெய்துகவர் திருவோ டகழ்தருபதி புகுமதிகுல வரசனையதை யலதேற் புகழ்தருதிறை யிடவருகுட புலவரசனு நிகரும் (இ-ள்.) திகழ்தரு கரி பரி கவரிகள் செழுமணியொடு வரும் ஆறு - விளங்கா நின்ற யானைகள் குதிரைகள் சாமரைகள் கொழுவிய முத்துக்களாகிய இவைகளோடும் வருகின்ற அந்நதி, இகழ்தரு குடபுல அரசர்கள் நெறிசெய்து - இகழ்ந்த மேற்புல மன்னர்களை (வெற்றியினால் தன்) ஆணை வழிப்படுத்தி, கவர் திருவோடு அகழ்தரு பதிபுகும் - அவர்கள்பா னின்றும் கவர்ந்த செல்வங்களோடும் அகழி சூழ்ந்த மதுரைப்பதியிற் புகும், மதி குல அரசு அனையது - சந்திரகுலத்து அரசாகிய பாண்டியனை ஒத்தது; அலதேல் - அல்லதாயின், திறை இடவரு புகழ்தரு குடபுல அரசனும் நிகரும் - (மதுரைப்பதிக்குத்) திறை இறுக்க வரும் புகழமைந்த மேற்புல மன்னனையும் ஒக்கும் எ-று. அகழ்தரு - அகழி பொருந்திய. மதிகுலம் : வடநூன் முடிபு. அனையதை, ஐ: சாரியை. அலது, அன்றென்னுந் துணையாய் நின்றது. புகழ்தரு, திறைக்கு அடையமாம். குடபுலவரசன் - சேரன். (20) ஆரொடுமட லவிழ்பனையொடு மரநிகரிலை நிம்பத் தாரொடுபுலி யொடுசிலையொடு தகுகயலொடு தழுவாப் பாரொடுதிசை பரவியதமிழ் பயிலரசர்கள் குழுமிச் சீரொடுபல திருவொடுவரு செயலனையது நதியே. (இ-ள்.) நதி - அந் நதியானது, ஆரொடும் - ஆத்தி மாலை யோடும், மடல் அவிழ் பனையொடும் - இதழ் விரிந்த பனை மாலையோடும், அரம் நிகர் இலை நிம்பத்தாரொடு - அரத்தினை ஒத்த இலையை யுடைய வேப்ப மாலையோடும், புலியொடு சிலையொடு தகு கயலொடு தழுவா - புலியோடும் வில்லோடும் தக்க கயலோடும் தழுவி வருதல், பாரொடுதிசை பரவிய தமிழ் பயில் அரசர்கள் - மண்ணுலகுடன் எட்டுத்திக்குகளினும் புகழ் பரவிய தமிழ் பயிலும் மன்னர்களாகிய சோழ சேர பாண்டியர்கள், குழுமி - தம்முட்கூடி, சீரொடு பல திருவொடுவரு செயல் அனையது - சிறப்போடும் பல செல்வங் களோடும் வருகின்ற செயலினை யொத்திருந்தது எ-று. ஆர், பனை, நிம்பம் என்பன முறையே சோழ சேர பாண்டியர்க்கு கண்ணியும்; புலி, சிலை, கயல் என்பன கொடியு மாகலின் நதி அவற்றை அடித்துக்கொண்டு வருதல் அம் மூவேந்தரும் சேனை யோடு வருதல் போலு மென்க. அரம் நிகர் இலை - வாளரத்தின் வாயை நிகர்த்த இலை; “ அரவாய் வேம்பி னங்குழைத் தெரியலும்” என்பது பொருநராற்றுப்படை. தழுவா, செய்யா என்னும் வாய்பாட் டெச்சம்; வருதல் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. புகழ் பரவியவென்க; பரவிய - போற்றிய என்னலுமாம்; தமிழ், புவி முழுதும் பரவி யிருந்தென வரலாறு கூறிற்றுமாம். தமிழ் தமிழ்நாடென்னலும் பொருந்தும். ஒடுக்களில் உம்மை யில்வழி விரிக்க. (21) (கலிநிலைத்துறை) கல்லார் கவிபோற் கலங்கிக்கலை மாண்ட கேள்வி வல்லார் கவிபோற் பலவான்றுறை தோன்ற வாய்த்துச் செல்லாறு தோறும் பொருளாழ்ந்து தெளிந்து தேயத் தெல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள விறுத்த தன்றே. (இ-ள்.) கல்லார் கவிபோல் கலங்கி - (நூல்களை முறையே) கல்லாதவர் இயற்றிய கவி (தெளிவின்றிக் கலங்கி நிற்றல் போல முதலிற்) கலங்கி, கலைமாண்ட கேள்வி வல்லார் கவிபோல் - கலைகளில் மாட்சிமைப்பட்ட கேள்வி வல்லுநர் இயற்றிய செய்யுள் (பலசிறந்த அகப்புறத்துறைகள் பொருந்தப் பெற்றுச் செல்லுந் துறைதோறும் நுண் பொருளுடைத்தாய்த் தெளிந்து அனைவரும் விரும்பிஅற முதலிய பயன் கொள்ளத் தங்கியது) போல, பல வான் துறைதோன்ற வாய்த்து - பலவாகிய பெரிய நீர்த்துறைகள் பல விடங்களிலும் காணப் பொருந்தி, செல் ஆறு தோறும் பொருள் ஆழ்ந்து தெளிந்து - செல்லுமிடந்தோறும் மணி பொன் முதலிய பொருள்களை யுடையதாய் ஆழமுடைத்தாகிப் (பின்) தெளி வடைந்து, தேயத்து எல்லாரும் வீழ்ந்து பயன் கொள்ள - தேயத்தி லுள்ள அனைவரும் விரும்பிப் பயனைப் பெறுமாறு, இறுத்தது - நிலைபெற்றது (அந்நதி) எ-று. ‘கல்லார் கவிபோற் கலங்கி’என்பது இராமாயணத்தில் வரும் ‘புன்கவி யெனத் தெளிவின்றி’என்னுந் தொடருடன் ஒத்துளது. ‘பலவான் துறை......பயன் கொள்ள’என்பது வல்லார் செய்யுளுக்கும் யாற்றுக்கும் பொது, செய்யுளுக்குச் செல்லாறு தோறும் பொருளாழ்தலாவது ஆராயுந் தோறும் வெளிப்படும் நுண் பொருளுடைத்தாதல்; புலவன் கருதியவற்றின் மேலும் நோக்குடைத் தாதலுமாம். அன்று, ஏ : அசை. (22) வண்டோதை மாறா மலர்வேணியின் வந்த நீத்தங் கண்டோத நஞ்சுண் டருள்கண்ணுதல் மூர்த்தி பேழ்வாய் விண்டோ தணியாதென் விடாயென வெம்பி வீழ்ந்த குண்டோ தரனை விடுத்தானக் குடிஞை ஞாங்கர். (இ-ள்.) வண்டு ஒதை மாறா மலர் வேணியின் வந்த - வண்டு களின் ஒலி நீங்காத (கொன்றை) மலரை யணிந்த சடையினின்றும் வந்த, நீத்தம் - வெள்ளத்தை, ஓதம் நஞ்சு உண்டருள் கண்ணுதல் மூர்த்தி கண்டு - கடலிற் றோன்றிய நஞ்சினை உண்டருளிய நெற்றிக் கண்ணனாகிய இறைவன் நோக்கி, பேழ் வாய் விண்டு ஓ என் விடாய் தணியாது என வெம்பி வீழ்ந்த குண்டோதரனை - பெரிய வாயைத்திறந்து ஐயகோ என் நீர் வேட்கை தணிந்திலது என்று வெதும்பி வீழ்ந்த குண்டோதரனை, அக் குடிஞை ஞாங்கர் விடுத்தான் - அந்நதியின் பக்கலிற் செல்ல விடுத்தான் எ-று. யாவரும் உண்ணாத அரு நஞ்சுண்டு வானோரைப் புரந்த பேரருளாளன் இப்பூதத்தின் துயரை யொழித்தல் ஒருதலை யென்பார், நஞ்சுண்டருள் கண்ணுதன் மூர்த்தி என்றார். ஓகாரம் அரற்றின் கண் வந்தது. (23) அடுத்தா னதியின் னிடைபுக்கிருந் தாற்ற லோடும் எடுத்தான் குறுங்கை யிரண்டுங்கரை யேற நீட்டித் தடுத்தான் மலைபோ னிமிர்தண்புனல் வாயங் காந்து மடுத்தான் விடாயுங் கடலுண்ணு மழையு நாண. (இ-ள்.) அடுத்தான் நதியின் இடைபுக்கு இருந்து - அடுத்து நதியின்கண் போயிருந்தும், ஆற்றலோடும் குறுங்கை இரண்டும் எடுத்தான் - வலிமையோடும் தனது குறிய இரண்டு கைகளையும் எடுத்து, கரை ஏற நீட்டி தடுத்தான் - கரையிற் செல்ல நீட்டி (நீரைத்) தடுத்து, வாய் அங்காந்து - வாயைத் திறந்து, விடாயும் கடல் உண்ணும் மழையும் நாண - நீர் வேட்கையும் கடல் குறைபடப் பருகும் முகிலும் நாணுமாறு, மலைபோல நிமிர் தண்புனல் மடுத்தான் - மலைபோல உயர்ந்த குளிர்ந்த புனலைப் பருகினான் எ-று. தன்வலி குன்றினமையின் விடாயும், தன்னினும் மிகுதியாகப் பருகினமையின் மழையும் நாணின என்றார். அடுத்தான், எடுத்தான், தடுத்தான் என்னும் முற்றுக்கள் எச்சமாயின. (24) தீர்த்தன் சடைநின் றிழிதீர்த்த மருந்தி வாக்குக் கூர்த்தின்பு கொண்டு குழகன்றிரு முன்ன ரெய்திப் பார்த்தன் பணிந்த பதமுன்பணிந் தாடிப் பாடி ஆர்த்தன் புருவாய்த் துதித்தானள வாத கீதம் (இ-ள்.) தீர்த்தன் சடை நின்று இழி தீர்த்தம் அருந்தி - இறைவன் சடையினின்றும் இறங்கிய அந்நீரைப் பருகி, வாக்குக் கூர்த்து - வாக்கு மிகுத்து, இன்பு கொண்டு - மகிழ்ந்து, குழகன் திருமுன்னர் எய்தி - இறைவன் திருமுன் சென்று, பார்த்தன் பணிந்த பதமுன் அன்பு உருவாய்ப் பணிந்து - அருச்சுனன் வழிபட்ட திருவடிகளில் அன்புருவாய் வணங்கி, ஆடி - கூத்தாடி, ஆர்த்து - முழக்கஞ் செய்து, அளவாத கீதம் பாடித் துதித்தான் - அளவில்லாத கீதங்களைப் பாடித்துதித்தான் எ-று. தீர்த்தன் - தூயன், உயிர்களின் அழுக்கைப் போக்குவோன். கூர்த்தல் - துதித்தற்கு முற்படல்; தழுதழுத்தலுமாம். பார்த்தன் - அருச்சுனன்; பிருதை மைந்தன் என்னும் பொருட்டு; தத்திதாந்தம். பிருதை - பாண்டுவின் மனைவி. அருச்சுனன் சிவபெருமானைக் குறித்து அருந்தவம் புரிந்து பாசுபதம் பெற்ற சிவபத்தனாகலின் ‘பார்த்தன் பணிந்த பதம்’ என்றார்; சிவபெருமான் வேடுருத்தாங்கிச் சென்று அருச்சுனற்கு அருள் புரிந்த செய்தி திருமுறைகளிற் பலவிடத்துப் பயின்றுளது. “ ஏவார்சிலை யெயினன் னுருவாகி யெழில்விசயற் கோவாத வின்னருள் செய்தவெம் மொருவற்கிடம்” என்பது ஆளுடைய பிள்ளையார் திருவாக்கு. அளவிலாத என்பது அளவாத என நின்றது. (25) பாட்டின் பொருளா னவன்பாரிட வீரன் பாடல் கேட்டின்ப மெய்திக் கணங்கட்குக் கிழமை நல்கி மோட்டின் புனன்மண் முறைசெய் திருந்தா னளகக் காட்டின் புறம்போய் மடங்குங் கயற் கண்ணி யோடும். (இ-ள்.) பாட்டின் பொருளானவன் - சொல்லின் பொருளாயுள்ள சுந்தர பாண்டியனாகிய இறைவன், பாரிடவீரன் பாடல் கேட்டு - பூதப்படை வீரனாகிய குண்டோதரன் பாடலைக்கேட்டு, இன்பம் எய்தி - இன்புற்று, கணங்கட்குக்கிழமை நல்கி - பூதகணங்களுக்குத் தலைமையாம் உரிமையைத் தந்தருளி, அளகக்காட்டின் புறம் போய் மடங்கும் கயல் கண்ணியோடும் - கூந்தலாகிய காட்டின் பக்கத்திற் சென்று மீளும் கயல்போன்ற கண்ணையுடைய பிராட்டி யோடும், மோட்டின் புனல் மண் முறை செய்து இருந்தான் - பெருமையையுடைய கடலாற் சூழப்பட்ட நிலவுலகைச் செங்கோன் முறை புரிந்து வீற்றிருந்தான் எ-று. பாட்டு - சொல்; இறைவி சொல் வடிவும் இறைவன் பொருள் வடிவு மாகலின் ‘பாட்டின் பொருளானவன்’ என்றார். பண்ணின் பயனாயுள்ளவன் என்னலுமாம். தலைமையாங் கிழமை யென்க. மோடு - பெருமை; முதுமையுமாம். இன் சாரியை. (26) (அறுசீரடியாசிரியவிருத்தம்) தீர்த்த னிதழிச் சடைநின்று மிழிந்து வரலாற் சிவகங்கை தீர்த்த னுருவந் தெளிவோர்க்கு ஞானந் தரலாற் சிவஞான தீர்த்தங் காலிற் கடுகிவரு செய்தியாலே வேகவதி தீர்த்தங் கிருத மாலையென வையை நாமஞ் செப்புவரால். (இ-ள்.) தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால் - இறைவனது கொன்றை மாலையை யணிந்த சடையினின்றும் இறங்கி வருதலால், சிவகங்கை -சிவகங்கை எனவும், தீர்த்தன் உருவம் தெளிவோர்க்கு - இறைவன் எண்வகை உருவங்களில் இஃது ஒன்று எனத் தெளிகின்றவருக்கு, ஞானம் தரலால் சிவஞான தீர்த்தம் - ஞானத்தை அருளுவதால் சிவஞான தீர்த்தம் எனவும். காலில் கடுகி வரு செய்தியாலே - காற்றைப் போல விரைந்து வருகின்ற செய்கையாலே, வேகவதி தீர்த்தம் - வேகவதி ஆறு எனவும், கிருதமாலை என - (செய்யப்பட்ட மாலை போல மதுரைப்பதியைச் சூழ்ந்து வருதலால்) கிருதமாலை எனவும், வையை நாமம் செப்புவர் - வையை நதிக்குப் பெயர் கூறுவர் பெரியோர் எ-று. என வென்பது சிவகங்கை முதலியவற்றோடும் சென்று இயையும். கிருதமாலை யென்னும் பெயர்க்கு ஏது வருவித் துரைக்கப்பட்டது. ஆல் : அசை. (27) ஆகச் செய்யுள் - 874. எழுகடலழைத்த படலம் (கொச்சகக்கலிப்பா) முடங்கன்மதி முடிமறைத்த முடித்தென்னன் குறட்கன்னக் கிடங்கரொடு நதியழைத்த கிளர்கருணைத் திறனிதுமேன் மடங்கல்வலி கவர்ந்தான்பொன் மாலைபடிந் தாடவெழு தடங்கடலு மொருங்கழைத்த தன்மைதனைச் சாற்றுவாம். (இ-ள்.) முடங்கல் மதி முடிமறைத்த முடித்தென்னன் - வளைந்த பிறையை யணிந்த சடை முடியை மறைத்த மகுடத்தை யுடைய சுந்தரபாண்டியன், குறட்கு - குண்டோதர பூதத்துக்கு, அன்னக் கிடங்கரொடு நதி -அன்னக்குழியையும் வையையையும், கிளர் கருணை - விளங்கும் கருணையினாலே, அழைத்த திறன் இது - அழைத்த திருவிளையாடல் இது; மேல் - பின், மடங்கல் வலி கவர்ந்தான் - நரசிங்கத்தின் வலியைக் கவர்ந்த அச் சுந்தரபாண்டியன், பொன்மாலை படிந்து ஆட - காஞ்சன மாலை திளைத்து நீராடுதற் பொருட்டு, எழுதடங் கடலும் ஒருங்கு அழைத்த தன்மைதனைச் சாற்றுவாம் - ஏழு பெரிய கடலையும் ஒரு சேர அழைத்தருளிய திருவிளையாடலைக் கூறுவாம் எ-று. கிடங்கர்: ஈற்றுப் போலி. திருமால் நரசிங்க வுருவாய்த்தோன்றி இரணியனைக் கொன்று செருக்கிய காலையில் இறைவன் சரபவுரு வெடுத்து அந் நரசிங்கத்தின் வலி தொலைத்தான் என்பது வரலாறு; மடங்கல் - இயமனுமாம். (1) ஓதவரும் பொருள் வழுதி யுருவாகி யுலகமெலாஞ் சீதளவெண் குடைநிழற்றி யறச்செங்கோல் செலுத்துநாள் போதவரும் பொருளுணர்ந்த விருடிகளும் புனிதமுனி மாதவரும் வரன்முறையாற் சந்தித்து வருகின்றார். (இ-ள்.) ஓத அரும் பொருள் - சொல்லுதற்கரிய மெய்ப்பொரு ளாகிய சோமசுந்தரக் கடவுள், வழுதி உருவாகி - பாண்டியனுருத் தாங்கி, உலகம் எலாம் சீதள வெண் குடை நிழற்றி - உலகமனைத் திற்கும் குளிர்ந்த வெள்ளிய குடையால் நிழல் தந்து, அறம் செங்கோல் செலுத்து நாள் - அற நூல் வழியே செங்கோலோச்சி வருங் காலத்து, போத அரும் பொருள் உணர்ந்த இருடிகளும் - ஞான நூலின் அரிய பொருளை யுணர்ந்த இருடிகளும், புனித முனி மாதவரும் - (ஏனைய) தூய முனிவராகிய தவப்பெரியாரும், வரன் முறையால் சந்தித்து வருகின்றார் - வரன் முறைப்படி (அப் பாண்டிய மன்னனைச்) சந்தித்து வருகின்றார்கள் எ-று. அறம், போதம் என்பன நூலுக்கும் ஆகுபெயர். அறவடிவாகிய செங்கோல் என்றும், அறக்கடவுள் போலச் செங்கோல் செலுத்து நாள் என்றும் கூறுதலுமாம். புறப்பாட்டில் ‘அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து ’என வருதலுங் காண்க; இருடிகள் - சத்த விருடிகள் எனக் கொள்க. (2) வேதமுனீ கோதமனுந் தலைப்பட்டு மீள்வானோர் போதளவில் கற்புடைய பொன்மாலை மனைபுகுந்தான் மாதவளும் வரவேற்று முகமனுரை வழங்கிப்பொன் ஆதனமிட் டஞ்சலிசெய் தரியதவத் திறங்கேட்பாள். (இ-ள்.) வேதமுனி கோதமனும் தலைப்பட்டு மீள்வான் - வேதங்களை யுணர்ந்த முனிவனாகிய கோதமனும் சந்தித்துத் திரும்பு கின்றவன், ஓர் போது - ஒரு நாள், அளவு இல் கற்பு உடைய பொன் மாலை மனை புகுந்தான் - அளவில்லாத கற்பினையுடைய காஞ்சன மாலை மனையின்கட் சென்றான்; மாது அவளும் வரவு ஏற்று - அக்காஞ்சன மாலையும் அவன் வருகையை எதிர்கொண்டு, முகமன் உரை வழங்கிப் பொன் ஆதனம் இட்டு - உபசார மொழிகள் கூறிப் பொற்றவிசிட்டு (இருத்தி), அஞ்சலி செய்து - வணங்கி, அரிய தவத்திறம் கேட்பாள் - அரிய தவத்தின் பாகுபாடுகளைக் கேட்கின்றவள் எ-று. தவத்திறங் கேட்டல் - தவத்தின் வகைகளைக் கூறக் கேட்டல் (3) கள்ளவினைப் பொறிகடந்து கரைகடந்த மறைச்சென்னி உள்ளபொருள் பரசிவமென் றுணர்ந்தபெருந் தகையடிகேள் தள்ளரிய பவமகற்றுந் தவமருள்செ யெனக்கருணை வெள்ளமென முகமலர்ந்து முனிவேந்தன் விளம்புமால். (இ-ள்.)கள்ளவினைப் பொறி கடந்து - வஞ்ச வினைகளை யுடைய ஐம்பொறிகளைக் கடந்து, கரைகடந்த மறைச் சென்னி உள்ள பொருள் - அளவு கடந்த மறை முடிவில் உள்ள பொருள், பரசிவம் என்று உணர்ந்த பெருந்தகை அடிகேள் - பரசிவமே என்று தெளிந்த பெரிய தகுதியை யுடைய அடிகளே, தள் அரிய பவம் அகற்றும்தவம் அருள் செய் என - நீக்குதற்கரிய பிறப்பினை நீக்கும் வலியினையுடைய தவத்தினைக் கூறி யருள்க என்று கேட்ப, கருணை வெள்ளம் என முகமலர்ந்து - கருணை வெள்ளம் போல முகமலர்ச்சி யுடையனாய்,முனிவேந்தன் விளம்பும் - முனி மன்னனாகிய கோதமன் கூறுகின்றான் எ-று. ஐம்பொறிகளின் வஞ்சத்தை ‘மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்து’ என வாதவூரடிகள் கூறுதலுங் காண்க. பொறி கடத்தல் பொறியை வென்று அடக்குதல். அடிகேள் அருள் செய் என்றது பன்மை யொருமை மயக்கம். ஆல் : அசை. (4) தவவலியா லுலகீன்ற தடாதகைக்குத் தாயானாய் சிவபெருமான் மருகனெனுஞ் சீர்பெற்றாய் திறன்மலயத் துவசனருங் கற்புடையாய் நீயறியாத் தொல்விரதம் அவனியிடத் தெவரறிவா ரானாலு மியம்பக்கேள். (இ-ள்.) திறல் மலயத்துவசன் அருங் கற்புடையாய் - வெற்றி பொருந்திய மலயத்துவச பாண்டியனுக்கு வாழ்க்கைத் துணையாகிய அரிய கற்பினையுடைய பொன்மாலையே, தவ வலியால் உலகு ஈன்ற தடாதகைக்குத் தாய் ஆனாய் - (நீ முன் செய்த) தவத்தின் வலிமை யால் உலகங்களை யெல்லாம் ஈன்றருளிய தடாதகைப் பிராட்டி யாருக்குத் தாய் ஆனாய்; சிவபெருமான் மருகன் எனும் சீர் பெற்றாய் - சிவ பெருமானே உனக்கு மருகன் என்று கூறப்படும் சிறப்பினைப் பெற்றாய்; நீ அறியாத தொல்விரதம் அவனி யிடத்து அறிவார் எவர் - (ஆதலால்) நீ அறியாத பழைய விரதங்களை இவ் வுலகின்கண் அறிபவர் வேறுயாவர், ஆனாலும் இயம்பக் கேள் - அங்ஙனமாயினும் நீ வினவினமையால் யான் சொல்லுதலைக் கேட்பாயாக எ-று. தவ வலியால் ஆனாய் என வியையும். எவர் என்றது என் போலும் சிற்றறிவுடையார் யாவர் என்றபடி. (5) மானதமே வாசிகமே காயிகமே யெனவகுத்த ஈனமில்சீர்த்த தவமூன்றா மிவற்றின்மா னதந்தரும தானமிசை மதிவைத்த றயைபொறுமை மெய்சிவனை மோனமுறத் தியானித்த லைந்தடக்கன் முதலனந்தம். (இ-ள்.) வகுத்த ஈனம் இல் சீர்தவம் - (நூல்களால்) வகுக்கப் பட்ட குற்றமில்லாத சிறப்பினையுடைய தவம், மானதமே வாசிகமே காயிகமே என மூன்றாம் - மானதமெனவும் வாசிகமெனவும் காயிகமெனவும் மூன்று வகைப்படும்; இவற்றில் - இம்மூன்றில், மானதம் - மனத்தாற் செய்யப்படுவன, தருமதானமிசை மதிவைத்தல் - தருமமும் தானமும் செய்வதிற் கருத்து வைத்தல், தயை - பிறவுயிர் களுக்கு இரங்கல், பொறுமை - பிறர் தீமையைப் பொறுத்தல், மெய்- உண்மை கூறல், மோனம் உறச்சிவனைத் தியானித்தல் - மோன நிலை பொருந்த இறைவனைச் சிந்தித்தல், ஐந்து அடக்கல் - ஐம் பொறிகளை அடக்குதல், முதல் அனந்தம் - முதலாக அளவில்லா தனவாம் எ-று. மானதம் - மனத்தாற் செய்யப்படுவன. வாசிகம் - வாக்காற் செய்யப்படுவன. காயிகம் - காயத்தாற் செய்யப்படுவன. தானம் - அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடு அளிப்பது. மோனம் - சங்கற்ப விகற்ப மில்லாமை. ஏகாரங்கள் எண்ணுப் பொருளன. (6) வாசிகமைந் தெழுத்தோதன் மனுபஞ்ச சாந்திமறை பேசுசத வுருத்திரந்தோத் திரமுரைத்தல் பெருந்தருமங் காசகல வெடுத்தோதன் முதலனந்தங் காயிகங்கள் ஈசனருச் சனைகோயில் வலஞ்செய்கை யெதிர்வணங்கல். (இ-ள்.) வாசிகம் - வாக்காற் செய்யப்படுவன, ஐந்து எழுத்து ஓதல் - திருவைந் தெழுத்தைச் செபித்தலும், பஞ்சமனு சாந்தி - பஞ்சப் பிரம மந்திரங்களையும் உபநிடதப் பகுதிகளையும், மறை பேசு சதஉருத்திரம் - வேதங் கூறும் சத உருத்திர மந்திரங்களையும் ஓதுதலும், தோத்திரம் உரைத்தல் - துதிப்பாட்டுக்களைக் கூறலும், பெருந்தருமம் காசு அகல எடுத்து ஓதல் - பெரிய அறங்களைக் குற்றமற எடுத்துக்கூறலும், முதல் அனந்தம் - முதலாக அளவில்லாதனவாம்; காயிகங்கள் - உடலாற் செய்யப்படுவன, ஈசன் அருச்சனை - சிவ பெருமானைப் பூசித்தலும், கோயில் வலம் செய்கை - திருக்கோயில் வலம்வருதலும், எதிர் வணங்கல் - இறைவன் திருமுன் வணங்கலும் எ-று. பஞ்சமனு என்பது முன் பின்னாக மாறி விகாரமாயிற்று. சாந்தியைச் செய்தலால் உபநிடதத்தைச் சாந்தி யெனவும், உபநிடதம் விசாரித்தலைச் சாந்திபாடம் எனவும் வழங்குவர். (7) நிருத்தனுறை பதிபலபோய்ப் பணிதல்பணி நிறைவேற்றல் திருத்தன்முடி நதியாதி தீர்த்தயாத் திரைபோய்மெய் வருத்தமுற வாடலிவை முதற்பலவவ் வகைமூன்றிற் பொருத்தமுறு காயிகங்கள் சிறந்தனவிப் புண்ணியத்துள். (இ-ள்.) நிருத்தன் உறை பதி பல போய்ப் பணிதல் - சிவபெருமான் உறையும் பல திருப்பதிகளிலும் சென்று வணங்கலும், பணி நிறை வேற்றல் - திருப்பணி முடித்தலும், திருத்தன் முடி நதி ஆதி தீர்த்தயாத்திரை மெய்வருத்தமுறப் போய் ஆடல் - இறைவன் முடி நதியாகிய கங்கை முதலிய நதிகளில் யாத்திரையாக உடல் வருந்தச் சென்று நீராடலும், இவை முதல் பல -ஆகிய இவை முதலாகப் பலவாம்; அவ்வகை மூன்றில் - அம் மூவகையுள்ளும், பொருத்த முறுகாயி கங்கள் சிறந்தன - பொருந்திய காயிகங்கள் சிறந்தன; இப்புண்ணியத்துள் - (உடம்பாற் செய்யப்படும்) இவ்வறங்களுள்ளே எ-று. இப் புண்ணியத்துள் திருத்த யாத்திரை அதிகம் என வருஞ் செய்யுளோடு இயையும். (8) திருத்தயாத் திரையதிக மவற்றதிகஞ் சிவனுருவாந் திருத்தமாங் கங்கைமுதற் றிருநதிக டனித்தனிபோய்த் திருத்தமா டுவதரிதத் திருநதிக1 ளவைவந்து திருத்தமாய் நிறைதலினா லவற்றதிகந் திரைமுந்நீர். (இ-ள்.) திருத்தயாத்திரை அதிகம் - தீர்த்தங்களிற் சென்று நீராடல் சிறந்தது; அவற்று அதிகம் - அவ்வெல்லாத் தீர்த்தங் களினும் சிறந்த, சிவன் உருவு ஆம் திருத்தம் ஆம் கங்கை முதல் திருநதிகள் - சிவபெருமானுருவாகிய திருத்தம் பெற்ற கங்கை முதலிய நதிகளுக்கு, தனித்தனி போய் திருத்தம் ஆடுவது - தனித்தனியே சென்று நீராடுவது, அரிது - மேன்மையுடைத்து; அத் திருநதிகள் அவை வந்து திருத்தமாய் நிறைதலினால் - அவ்வழகிய நதிகள் வந்து செப்பமாய் நிறைதலினால், அவற்று அதிகம் திரை முந்நீர் - அந்நதிகளில் ஆடுவதினும் அலைகளையுடைய கடலில் ஆடுவது சிறந்தது எ-று. தீர்த்தமென்பது திருத்த மெனத் திரிந்தது. ஆடுவது அவற்றதிகம் என முடித்து, அரிதாகிய அத்திருநதி என்னலுமாம். அவை : பகுதிப் பொருள் விகுதி, முந்நீரில் ஆடுவது என விரிக்க. அவற்றென்னும் பன்மைக்கேற்ப யாத்திரைகள் ஆடுதல்கள் எனக் கொள்ளல் வேண்டும். (9) என்றுமுனி விளம்பக்கேட் டிருந்தகாஞ் சனமாலை துன்றுதிரைக் கடலாடத் துணிவுடைய விருப்பினளாய்த் தன்றிருமா மகட்குரைத்தாள் சிறிதுள்ளந் தளர்வெய்திச் சென்றிறைவற் குரைப்பலெனச் செழியர்தவக் கொழுந்தனையாள். (இ-ள்.) என்று முனி விளம்பக் கேட்டிருந்த காஞ்சன மாலை - என்று கோதம முனி கூறக்கேட்ட பொன் மாலை, துன்று திரைக் கடல் ஆடத் துணிவு உடைய விருப்பினளாய் - நெருங்கிய அலைகளையுடைய கடலில் ஆடுவதற்குத் துணிந்த விருப்பத்தை யுடையவளாய், தன் திரு மா மகட்கு உரைத்தாள் - தன்னுடைய செல்வப் புதல்வியாருக்குக் கூறினாள்; செழியர் தவக்கொழுந்து அனையாள் - பாண்டியர்களின் தவக் கொழுந்து போல்வாராகிய பிராட்டியார், சிறிது உள்ளம் தளர்வு எய்தி - சிறிது உள்ளந் தளர்ந்து, இறைவற்கு உரைப்பல் எனச் சென்று - இறைவனுக்கு இதனைக் கூறுவேன் என்று கருதிப்போய் எ-று. உள்ளந் தளர்வெய்தியது தாய் புறம் போதலும், தாம் அவளைப் பிரிந்திருத்தலுங் கருதி யென்க. (10) தன்றன்னை யுடையபெருந் தகைவேந்தர் பெருமான்முன் சென்றன்ன மெனநின்று செப்புவாள் குறள்வீரற் கன்றன்னக் குழியினொடு மாறழைத்த வருட்கடலே இன்றன்னை கடலாட வேண்டினா ளென்றிரந்தாள். (இ-ள்.) தன்னை உடைய பெருந்தகை வேந்தர் பெருமான் முன் சென்று - தன்னைக் கிழத்தியாகவுடைய பெரிய தகுதியையுடைய மன்னர் பெருமானாகிய சுந்தர பாண்டியர் திருமுன் சேர்ந்து, அன்னம் என நின்று செப்புவாள் - அன்னம்போல நின்று கூறுவாள், குறள் வீரற்கு அன்று அன்னக் குழியினொடு ஆறு அழைத்த அருட் கடலே - பூத வீரனுக்கு அன்று அன்னக் குழியையும் வையையையும் அழைத்துத் தந்த கருணைக்கடலே, இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று - இதுபோது என் தாய் கடலிற் சென்று நீராட விரும்பினாள் என்று கூறி, இரந்தாள் - குறையிரந்தாள் எ-று. தன்றன்னை என்பதில் இரண்டாவது தன் சாரியை. அன்று ஒருபூத வீரனுக்கு ஆற்றினை யழைத்த நீ இன்று என் அன்னை நீராடுதற்குக் கடலினை அழைத்துத் தருதல் தகவுடைத் தென்பார் ஆறழைத்த அருட் கடலே என்றார். (11) தேவிதிரு மொழிகேட்டுத் தென்னவராய் நிலம்புரக்குங் காவிதிகழ் மணிகண்டர் கடலொன்றோ வெழுகடலுங் கூவிவர வழைத்துமென வுன்னினான் குணபாலோர் வாவியிடை யெழுவேறு வண்ணமொடும் வருவனவால். (இ-ள்.) தேவி திருமொழி கேட்டு - தேவியாரின் திருவார்த்தையைக் கேட்டு, தென்னவராய் நிலம் புரக்கும் காவி திகழ் மணிகண்டர் - பாண்டி மன்னராய் நிலவுலகைக் காக்கும் நீலமலர்போல விளங்கும் அழகிய மிடற்றினையுடைய இறைவர், கடல் ஒன்றோ - ஒரு கடல் மாத்திரமோ, எழுகடலும் கூவி வரவழைத்தும் என - ஏழு கடலையும் கூவி வரவழைப்போம் என்று கூறி, உன்னினார் - அவை வருமாறு நினைத்தார் (நினைத்தலும்), குணபால் - அம் மதுரைப் பதியின் கீழ்பாலுள்ள, ஓர் வாவி இடை எழு வேறு வண்ணமொடும் வருவன - ஒரு வாவியிடத்தே எழுவகைப்பட்ட நிறங்களோடும் அவை வாராநின்றன எ-று. கூவிவர - முழங்கிவர என்னலுமாம். அழைத்தும் : தனித் தன்மைப் பன்மை வினைமுற்று. ஆல் : அசை. (12) துண்டமதித் திரளனைய சுரிவளைவாய் விடவுதைத்து1 வெண்டவள நுரைததும்பச் சுறாவேறு மிசைகொட்பத் தண்டரள மணித்தொகுதி யெடுத்தெறியுந் தரங்கநிரை அண்டநெடு முகடுரிஞ்ச வார்த்தெழுந்த கடலேழும். (இ-ள்.) மதித் துண்டத் திரள் அனைய - சந்திரனது துண்டத்தின் தொகுதிபோலும், சுரிவளை வாய்விட உதைத்து - சுரிந்த முகத் தினையுடைய சங்குகள் வாய்விட் டொலிக்குமாறு தள்ளி, வென்தவள நுரை ததும்ப - மிக வெள்ளிய நுரைகள் ததும்பவும், சுறா ஏறுமிசை கொட்ப - ஆண் சுறாக்கள் மேலலே சுழலவும், தண் தரள மணித்தொகுதி எடுத்து எறியும் - குளிர்ந்த முத்துக் கூட்டங்களை எடுத்து வீசுக்கின்ற, தரங்க நிரை - அலை வரிசைகள், அண்ட நெடு முகடு உரிஞ்ச - அண்டத்தின் நெடிய முகட்டினைத் தடவவும், கடல் ஏழும் ஆர்த்து எழுந்த - ஏழு கடல்களும் ஆரவாரித்து எழுந்தன எ-று. வெண் தவளம் : ஒரு பொருட் பன்மொழி. சுறவு ஏறெனப் படுதலை, “ கடல் வாழ் சுறவும் ஏறெனப் படுமே” என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தா னறிக. உதைத்து எறியும் தரங்க நிரை யெனவும், ததும்பவும் கொட்பவும் உரிஞ்சவும் ஆர்த்தெழுந்த எனவும் முடிக்க. எழுந்த: அன்பெறாத முற்று. (13) காணுமா நகர்பனிப்பக் கலிமுடிவி னயன்படைப்புக் கோணுமா றெழுந்ததெனக் கொதித்தெழுந்த கடலரவம் பூணுநா யகனகில புவனமெலாங் கடந்ததிரு ஆணையா லவனடிசென் றடைந்தார்போ லடங்கியதால். (இ-ள்.) காணும் மா நகர் பனிப்ப - (அவ்வரவைக்) கண்ட (மதுரைப்) பெரும் பதியிலுள்ளார் நடுங்க, கலி முடிவின் அயன் படைப்புக் கோணுமாறு எழுந்தது என - கலியுக முடிவின்கண் பிரமனது படைப்புப் பொருள்கள் அழியுமாறு எழுதல் போல, கொதித்து எழுந்த கடல் - பொங்கி எழுந்த ஏழு கடல்களும், அரவம் பூணும் நாயகன் - பாம்பினை யணிந்த சிவபெருமானது, அகில புவனம் எலாம் கடந்த திரு ஆணையால் - எல்லாப் புவனங் களையும் கீழ்ப்படுத்திய திரு ஆணையினாலே, அவன் அடி சென்று அடைந்தார் போல் - அவ்விறைவனது திருவடியைச் சென்று அடைந்தவர் போல, அடங்கியது - (வாவியற் சென்று) அடங்கின எ-று. பனிப்ப வெழுந்த வென்க. எழுந்த தென - தாம் பொங்கி எழுதல்போல. அகிலம், எல்லாம் என்பன ஒரு பொருளன. கடந்த - சென்ற என்னலுமாம். கடல் என்பதனைச் சாதி பற்றிய ஒருமையாகக் கொண்டு, அடங்கியது என ஒருமை வினை கொடுத்தார். ஆல் : அசை. (14) தன்வண்ண மெழுகடலின் றனிவண்ண மொடுகலந்து பொன்வண்ண நறும்பொகுட்டுப் பூம்பொய்கை பொலிவெய்தி மின்வண்ணச் சடைதாழ வெள்ளிமணி மன்றாடும்1 மன்வண்ண மெனவெட்டு வண்ணமொடும் வயங்கியதால். (இ-ள்.) பொன் வண்ணம் நறும் பொகுட்டுப் பூம் பொய்கை - பொன்னிறமுடைய நறிய பொகுட்டினை யுடைய தாமரை பொருந்திய அவ்வாவியானது, தன் வண்ணமொடு எழு கடலின் தனி வண்ணம் கலந்து பொலிவு எய்தி - தன் நிறத்தோடு ஏழு கடலின் வெவ்வேறு நிறங்களும் கலந்து பொலிவுற்று, மின் வண்ணச் சடை தாழ மணி வெள்ளி மன்று ஆடும் மன் வண்ணமென - மின்போலும் நிறமுடைய சடைகள் தாழ அழகிய வெள்ளியம் பலத்துள் ஆடுகின்ற சிவபெருமானுடைய எண்வகை வண்ணங்கள் போல, எட்டு வண்ணமொடு வயங்கியது - எண்வகை நிறங் களோடும் விளங்கியது எ-று. மன் - இறைவன். அட்ட மூர்த்தி யாகலின் மன் வண்ணமும் எட்டாயின. மேற் செய்யுளில் பொற்றாமரைப் பொய்கையைத் திருவடியோடு ஒப்பித்து, இதில் இறைவன் திருவுருவோடு ஒப்பித்தமை பாராட்டற் பாலது. ஆல் : அசை. (15) ஆகச் செய்யுள் 889. மலையத்துவசனை யழைத்த படலம் (கலிவிருத்தம்) எழுகட லழைத்தவா றியம்பி னாமினிச் செழுமதி மரபினோன் சேணி ழிந்துதன் பழுதில்கற் பில்லொடும் பரவை தோய்ந்தரன் அழகிய திருவுரு வடைந்த தோதுவாம். (இ-ள்.) எழு கடல் அழைத்தவாறு இயம்பினாம் - ஏழு கடலையும் அழைத்த திருவிளையாடலைக் கூறினாம்; இனி - மேல், செழுமதி மரபினோன் - குளிர்ந்த சந்திரனது குலத்து வந்த மலயத்துவச பாண்டியன், சேண் இழிந்து - வானுலகினின்றும் இறங்கி, தன் பழுது இல் கற்பு இல்லொடும் - குற்ற மற்ற கற்பினையுடைய தன் மனைவியோடும், பரவை தோய்ந்து - கடலிலே நீராடி, அரன் அழகிய திருவுரு அடைந்தது - சிவபெருமானது அழகிய திருவுருவத்தைப் பெற்ற திருவிளையாடலை, ஓதுவாம் - கூறுவாம் எ-று. திருவுரு வடைதல் - சாரூபம் பெறுதல். (1) புரவலன் தடாதகைப் பூவை யோடும்வந் துரவுநீர்க் கடன்மருங் குடுத்த சந்தனம் மரவமந் தாரமா வகுளம் பாடலம் விரவுநந் தனத்தரி யணையின் மேவினான். (இ-ள்.) புரவலன் - சுந்தர பாண்டியனாகிய இறைவன், தடா தகைப்பூவையோடும் வந்து - தடாதகைப் பிராட்டியாராகிய பூவையோடும் வந்து, உரவு நீர்க்கடன் மருங்கு உடுத்த - வலிய நீரினையுடைய எழுகடல் வாவியின் அருகிற் சூழ்ந்த, சந்தனம் மரவம் மந்தாரம் மா வகுளம் பாடலம் விரவு நந்தனத்து - சந்தன மரமும் குங்கும மரமும் மந்தாரை மரமும் மாமரமும் பாதிரி மரமும் கலந்து நெருங்கிய நந்தவனத்தின்கண், அரி அணையில் மேவினான் - சிங்காதனத்தில் அமர்ந்தருளினான் எ-று. மரவம் - குங்கும மரம். பாடலம் - பாதிரி மரம். (2) தாதவிழ் மல்லிகை முல்லை சண்பகப் போதுகொய் திளைஞருஞ் சேடிப் பொற்றொடி மாதருங் கொடுத்திட1 வாங்கி மோந்துயிர்த் தாதர மிரண்டற வமரு மெல்லையில். (இ-ள்.) தாது அவிழ் மல்லிகை முல்லை சண்பகப்போது - மகரந்தத்தோடு மலர்ந்த மல்லிகை மலரையும் முல்லை மலரையும் சண்பகமலரையும், இளைஞரும் சேடிப் பொன் கொடி மாதரும் கொய்து கொடுத்திட - பணியாளரும் தோழிகளாகிய பொன் வளைய லணிந்த மகளிரும் பறித்துக் கொடுக்க, வாங்கி மோந்து உயிர்த்து - (அம்மலர்களை) வாங்கி முகந்து சுவாசித்து, ஆதரம் இரண்டு அற - அன்பு இரண்டில்லையாக, அமரும் எல்லையில் - எழுந்தருளியிருக்கும் காலத்தில் எ-று. இளைஞர் - ஏவல் செய்வார்; ‘யான்கண் டனையரென் னிளையரும்’ என்பது புறம். முகந்து என்பது மோந்து என மருவிற்று. இருவர் அன்பும் ஒன்றாக என்பார் ‘ஆதரம் இரண்டற’ என்றார். அன்பால் ஒன்றுபட்டு என்னலுமாம். (3) தன்னமர் காதலி தன்னை நோக்கியே மன்னவ னுன்பொருட் டேழு வாரியும் இந்நக ரழைத்தன மீண்டுப் போந்துநின் அன்னையை யாடுவா னழைத்தியா லென்றான். (இ-ள்.) மன்னவன் - சுந்தரபாண்டியன், தன் அமர் காதலி தன்னை நோக்கி - தன்னால் விரும்பப்பட்ட காதலியாகிய பிராட்டியாரைப் பார்த்து, உன் பொருட்டு - நினது பொருட்டு, ஏழுவாரியும் இந்நகர் அழைத்தனம் - ஏழு கடலையும் இப்பதியில் வருமாறு அழைத்தேம், ஈண்டுப் போந்து ஆடுவான் நின் அன்னையை அழைத்தி என்றான் - இங்கு வந்து கடலாடுதற்கு உன் தாயை அழைப்பாயாக என்று கூறி யருளினான் எ-று. தன்னால் என விரிக்க. தன் : சாரியை. ஆல் :அசை. (4) மடந்தையு மன்னையைக் கொணர்ந்து வாவிமா டடைந்தன ளாகமற் றவள்பு ராணநூற் படர்ந்தகேள் வியர்தமை நோக்கிப் பெளவநீர் குடைந்திடும் விதியெவன் கூறுமென்னவே. (இ-ள்.) மடந்தையும் - பிராட்டியாரும், அன்னையைக் கொணர்ந்து வாவி மாடு அடைந்தனளாக - தாயை அழைத்து வந்து பொய்கையின் பக்கத்தே அடைந்தனராக, அவள் புராண நூல் படர்ந்த கேள்வியர் தமை நோக்கி - அவ்வன்னையானவள் புராண முதலிய நூல்களின் பரந்த கேள்வியை யுடைய முனிவர்களை நோக்கி, பெளவ நீர் குடைந்திடும் விதி எவன் - நீரில் ஆடுதற் குரிய விதியாது, கூறும் என்ன - கூறுவீராக என்று வினவ எ-று. படர்ந்த - சென்ற என்னலுமாம். எவன் : வினாப் பெயர். கூறும்: ஏவலில் வந்த செய்யு மென்னும் வாய்பாட்டுச் சொல். (5) கோதறு கற்பினாய் கொழுநன் கைத்தலங் காதலன் கைத்தல மன்றிக் கன்றினவால் ஆதலிம் மூன்றிலொன் றங்கை பற்றியே ஓதநீ ராடுதன் மரபென் றோதினார். (இ-ள்.) (அதற்கு அவர்), கோது அறு கற்பினாய் - குற்றமற்ற கற்பினையுடைய காஞ்சன மாலையே, கொழுநன் கைத்தலம் - நாயகன் கையும், காதலன் கைத்தலம் - புதல்வன் கையும், அன்றி - அல்லாமல், கன்றின் வால் - ஆணினது கன்றின் வாலும் ஆகிய, இம்மூன்றில் ஒன்று ஆதல் - மூன்றனுள் ஒன்றினையாவது, அங்கை பற்றியே - அழகிய கையாற்பிடித்துக் கொண்டே, ஓதநீர் ஆடுதல் மரபு என்று ஒதினார் - கடல் நீர் ஆடுதல் விதி என்று கூறினார். கொழுநன் கைத்தலமே சிறந்த தென்பார் ஒன்றாதல் என்றார். அங்கை - அகங்கையுமாம் பற்றியே என்பதன் ஏகாரம் தேற்றம்.(6) மறையவர் வாய்மைபொன் மாலை கேட்டுமேற் குறைவறத் தவஞ்செயாக் கொடிய பாவியேற்1 கிறைவனுஞ் சிறுவனு மில்லை யேயினிப் பெறுவது கன்றலாற் பிறிதுண் டாகுமோ. (இ-ள்.) மறையவர் வாய்மை - அந்தணரது மெய்ம்மொழியை, பொன்மாலை கேட்டு - காஞ்சனமாலை கேட்டு, மேல் குறைவு அறத்தவம் செயாக் கொடிய பாவியேற்கு - முற்பிறப்பில் குறைவின்றித் தவஞ் செய்யாத கொடிய பாவியாகிய எனக்கு, இறைவனும் சிறுவனும் இல்லையே - நாயகனும் புதல்வனும் இல்லையே, இனிப்பெறுவது கன்று அலால் பிறிது உண்டாகுமோ - இனியான் பெறுவது கன்றின் வாலல்லாமல் வேறுளதோ எ-று. பிராட்டியாரைப் பெறும் தவஞ்செய்திருந்தும் இன்று இறைவனும் சிறுவனும் இல்லாத குறையை நோக்கிக் ‘குறைவறத் தவஞ்செயா’ என்றார். உண்டாகுமோ - உளதோ என்னும் பொருட்டு. ஏகாரம் இரக்கத்திலும், ஓகாரம் எதிர்மறையிலும் வந்தன. (7) ஆதலாற் கன்றின்வால் பற்றி யாடுகோ மாதரா யென்றுதன் மகட்குக் கூறலும் வேதன்மால் பதவியும் வேண்டி னார்க்கருள் நாதனா ருயிர்த்துணை யாய நாயகி. (இ-ள்.) ஆதலால் - ஆகையால், மாதராய் - மடந்தையே, கன்றின் வால் பற்றி ஆடுகோ - கன்றினது வாலைப்பற்றியே நீராடுவேனோ, என்று தன் மகட்குக் கூறலும் - என்று தன் புதல்வியாருக்குச் சொல்லியவளவில், வேதன் மால் பதவியும் - பிரமன் பதவியையும், திருமால் பதவியையும், வேண்டினார்க்கு அருள் - விரும்பி வழிபட்ட வருக்கு அளித்தருளும், நாதனார் உயிர்த்துணையாய நாயகி - தலைவ ராகிய சிவபெருமானுக்கு உயிர்த் துணையாகிய பிராட்டியார் எ-று. உலக நாயகியாகிய நின்னை மகளாகவும், சிவபரஞ்சுடரை மருகனாகவும் பெற்று வைத்தும் கன்றின்வால் பற்றி ஆடுதல் முறையோ என்பாள் ‘ஆடுகோ ’என்றாள்; ஓகாரத்தை அசையாக்கி, ஆடுவேன் என்று பொருளுரைத்தலுமாம். ஆடுகு: தன்மை யொருமை யெதிர்கால முற்று. (8) தன்னுயிர்க் கிழவனை யடைந்து தாழ்ந்துதன் அன்னைதன் குறையுரை யாட வாண்டகை மன்னவன் வலாரியோ டொருங்கு வைகிய தென்னவன் மேன்மனஞ் செலுத்தி னானரோ. (இ-ள்.) தன் உயிர்க் கிழவனை அடைந்து - தம் உயிருக்கு உரிமை பூண்ட நாயகனை அடைந்து, தாழ்ந்து - வணங்கி, தன் அன்னை தன் குறை உரையாட - தம் தாயின் குறையைக் கூறவும், ஆண் தகை மன்னவன் - ஆண்டன்மை யுடைய வேந்தனாகிய அச் சுந்தரபாண்டியன், வலாரி யோடு ஒருங்கு வைகிய தென்னவன் மேல் - இந்திரனோடு ஒரு சேர இருந்த மலயத்துவச பாண்டியன் மேல், மனம் செலுத்தினான் - உள்ளத்தைச் செலுத்தினான் எ-று. கிழவன் - உரியவன்; கிழமை பகுதி. உயிர் போலும் கிழவன் என்னலுமாம். உற்றார் குறை முடிக்க வல்ல னென்பார் ‘ஆண்டகை’ என்றார். மனஞ் செலுத்தல் - நினைத்தல். அரோ : அசை. (9) (மேற்படி வேறு) சிலையத் திரியார் திருவுள் ளமுணர்ந் தலையத் திரியட் டவனா தனநீத் துலையத் திரியொத் தவிமா னமொடு மலயத் துவசச் செழியன் வருமால். (இ-ள்.) சிலை அத்திரியார் திருவுள்ளம் உணர்ந்து - மேரு மலையை வில்லாக உடைய இறைவர் திருவுள்ளத்தினை அறிந்து, அலை அத்திரி அட்டவன் ஆதனம் நீத்து - பறக்கின்ற மலைகளை வென்ற இந்திரனது ஆதனத்தை விடுத்து, உலை அத்திரி ஒத்த விமானமொடு - சஞ்சரிக்கின்ற மலைபோன்ற விமானத்தின் கண், மலையத்துவசச் செழியன் வரும் - மலையத்துவச பாண்டியன் வருகின்றான் எ-று. அத்திரிச் சிலையார் எனப் பிரித்துக் கூட்டுக. அத்திரி மூன்றும் மலை யென்னும் பொருளன. உலை அத்திரி என்பதற்குக் கொல்லன் உலை மூக்கிலுள்ள துருத்தி எனப் பொருள் கூறினாருமுளர். ஒடு : ஏழனுருபின் பொருளில் வந்தது. ஆல் : அசை. (10) மண்பே றடைவான் வருமேழ் கடல்வாய் எண்பே றடையா வருளின் னமுதைப் பெண்பே றதனாற் பெறுபே றிதெனாக் கண்பே றடைவா னெதிர்கண் டனனே. (இ-ள்.) மண்பேறு அடைவான் - நிலவுலகிலுள்ளார் பயன் அடைய, வந்த எழு கடல் வாய் - வந்த எழு கடல் வாவியினிடத்து, எண்பேறு அடையா - அளவு பெறுதலை யெய்தாத, இன் அருள் அமுதை - இனிய அருளமுதமாகிய தன் மருகரை, பெண்பேறு அதனால் பெறு பேறு இது எனா - பெண் பெற்றதனால் பெற்ற பயன் இதுவென்று, கண் பேறு அடைவான், கண்கள் (தம்) பயனைப் பெறுமாறு, எதிர் கண்டனன் - நேரே கண்டான் எ-று. அடைவான் இரண்டும் வினையெச்சம். எழு கடலுங் கூடிய பொய்கையின் பக்கத்தே யிருந்த இறைவனைக் கடல் வாய் அமுதென நயம்படக் கூறினார். எண் பேறடையா - அளவறுப்பதற் கரிய என்றபடி. அருளையுடைய அமுதென்னலுமாம். இது வெனா என்பது விகாரமாயிற்று. (11) வந்தான் மருகன் சரணம் பணிவான் முந்தா முனமா மனெனும் முறையால் அந்தா மரையங் கையமைத் துமகட் டந்தா னையெதிர்ந் துதழீஇ யினனால். (இ-ள்.) வந்தான் - (அங்ஙனம் கண்டு) வந்த மலயத்துவச பாண்டியன், மருகன் சரணம் பணிவான் முந்தா முனம் - மருகனுடைய திருவடிகளை வணங்க முற்படுமுன்னே, மாமன் எனும் முறையால் - மாமன் என்ற முறையினால், அம் தாமரை அங்கை அமைத்து - அழகிய தாமரை மலர் போன்ற கைகளால் தடுத்து, மகள் தந்தானை எதிர்ந்து தழீஇனன் - மகட்கொடை நேர்ந்தானாகிய அம்மலயத்து வசனைச் சுந்தரபாண்டியன் எதிர்ந்து தழுவினான் எ-று. முந்துமுனம் எனற்பாலது வழக்கால் முந்தாமுனம் என நின்றது. கை அமைத்து - கையின் சைகையால் தடுத்து. ஆல் : அசை (12) ஆத்தன் றிருவுள் ளமகிழ்ந் தருளாற் பார்த்தன் புநிரம் பியபன் னியொடுந் தீர்த்தம் புகுந்தா டியசெல் கவெனப் பூத்தண் பொருநைப் புனனா டவனும். (இ-ள்.) ஆத்தன் திருவுள்ளம் மகிழ்ந்து - இறைவனாகிய சுந்தரபாண்டியன் திருவுள்ளங் களித்து, அருளால் பார்த்து - அருளால் நோக்கி, அன்பு நிரம்பிய பன்னியொடும் - (உம்) அன்பு நிறைந்த மனைவியாரொடும், தீர்த்தம் புகுந்து ஆடிய செல்க என - தீர்த்தத்தையடைந்து ஆடுதற்குச் செல்லக் கடவீரென்று கட்டளை யிட பூத்தண்பொருநைப் புனல் நாடவனும் - மலர்களையுடைய குளிர்ந்த பொருநையாற்றின் நீர்வள மிக்க பாண்டி நாட்டையுடைய மலயத்துவச பாண்டியனும் எ-று. ஆத்தன் - பரமாத்தனாகிய சிவபெருமான். ஆடிய : செய்யியவென்னும் வாய்பாட்டு வினையெச்சம். (13) முன்னைத் தவமெய் திமுயன் றுபெறும் அன்னப் பெடையன் னவள்வந் தெதிரே தன்னைத் தழுவத் தழுவிக் கிரிவேந் தென்னக் குறையா மகிழ்வெய் தினனே. (இ-ள்.) முன்னை - முற்பிறப்பில், தவம் எய்தி முயன்று பெறும் - தவங்கிடந்து அரிதிற் பெற்ற, அன்னப் பெடை அன்னவள் - பெண் அன்னம் போன்ற பிராட்டியார், எதிரே வந்து தன்னைத் தழுவ - எதிரில் வந்து தன்னைத் தழுவ, தழுவி - தானுந் தழுவி, கிரிவேந்து என்னக் குறையா மகிழ்வு எய்தினன் - மலையரையனைப் போலக் குறையாத மகிழ்ச்சியை எய்தி எ-று. மலையரையன் பிராட்டியை மகவாகப் பெற்று மகிழ் கூர்ந்தவனாகலின் ‘கிரிவேந்தென்ன’ என்றார். (14) தண்டே மொழிவேள் விதவக் குறையாற் கண்டே னிலனென் றுகருத் தவலம் உண்டே யஃதிவ் வுவகைக் களிதேன் வண்டே யெனவுண் டுமறந் தனனால். (இ-ள்.) தண் தேம் மொழி வேள்வி - தண்ணிய தேன் போலும் மொழியினை யுடைய புதல்வியாரின் திருமணக் கோலத்தை, தவக்குறையால் கண்டேன் இலன் என்று - தவத்தின் குறைவினால் காணப்பெற்றிலேனென்று, கருத்து அவலம் உண்டே - (தன்) உள்ளத்தே கவலையுண்டன்றே, அஃது - அதனை, இ உவகைக் களிதேன் வண்டே என உண்டு - இம் மகிழ்ச்சியாகிய களிப்பைத் தரும் மதுவை வண்டு போலப் பருகி, மறந்தனன் - மறந்தான் எ-று. தேமொழி: அன்மொழித் தொகை. உவகை, பிராட்டியும் பெருமானும் உடனிருந்த திருக்கோலத்தைக் கண்டமையா லாயது. தேமொழியைவிளியாக்கி மறந்தேன் என்றுரைப்பாருமுளர்; இதற்கு, என்று கூறினான் என வருவித்து முடித்தல் வேண்டும். ஆல்: அசை. (15) சேணுற் றவனைச் சிலநாள் கழியக் காணு ற் றவள் போ னிறைகற் புடையாள் பூணு ம் றுமலர்க் ததொர்பொற் கொடிபோல் நாணுற் றெதிர்நண் ணியிறைஞ் சினளால். (இ-ள்) சேண் உற்றவனை - தூரத்தே சென்ற தலைவனை, சில நாள் கழிய - சில காலம் நீங்க, காணுற்றவள் போல் - கண்ட தலைவியைப் போல, நிறை கற்பு உடையாள் - நிறைந்த கற்பினை யுடைய காஞ்சனமாலை, பூண் உற்று - மங்கல நாண் முதலிய அணிகள் அணிந்து (விளங்கி) மலர்ந்தது ஒர் பொன் கொடிபோல் எகிர் நண்ணி - மலர்ந்ததாகிய ஒரு பொற் கொடிபோல எதிர் சென்று, நாண் உற்று இறைஞ்சினள் - நாண மடைந்து வணங்கினாள் எ - று. மஞ்சோ தியகாஞ் சனமா லைகையிற் பைஞ்சோ திவிளங் குபவித் திரையாய்ச் செஞ்சோ திமுடிச் சிவநா மவெழுத் தஞ்சோ திநெடுங் கடலா டுமரோ. (இ-ள்.) மஞ்சு ஓதிய காஞ்சனமாலை- முகில் போலுங் கூந்தலையுடைய காஞ்சனமாலை, கையில் பைஞ்சோதி விளங்கு பவித்திரையாய் - (தனது) கையில் பசிய ஒளி விளங்கும் பவித்திரத்தை உடையவளாய், செஞ்சோதி முடி - சிவந்த ஒளியினையுடைய சடை முடியையுடைய, சிவநாம எழுத்து அஞ்சு ஓதி - சிவபெருமானது திருநாமமாகிய திருவைந்தெழுத்தையும் செபித்து, நெடுங்கடல் ஆடும் - நெடிய கடலின்கண் மூழ்கத் தொடங்குவாள் எ-று. ஓதிய : குறிப்புப் பெயரெச்சம். பவித்திரம் - தருப்பையினாற் செய்யப்பட்டது. சிவனது நாமம் என விரிக்க. திருவைந் தெழுத்துச் சிவபிரானது நாமம் என்பதனை, “ நாத னாம நமச்சி வாயவே” “ திருநாம மைந்தெழுத்துஞ் செப்பா ராகில்” என்னும் தமிழ் மறைகளா னறிக. அரோ : அசை. (17) துங்கக் கலைவே தியர்தொன் மறைநூற் சங்கற் பவிதிப் படிதன் றுணைகை அங்கைத் தளிர்பற் றியகத் துவகை பொங்கப் புணரிப் புனலா டினளே. (இ-ள்.) துங்கக் கலை வேதியர் - உயர்ந்த கலைகளை உணர்ந்த அந்தணர் (கூறிய), தொல் மறை நூல் சங்கற்ப விதிப்படி - பழைய வேத நூலின் சங்கற்ப முறைப்படி, தன் துணை கை - தன் நாயகன் கையை, அம் கைத் தளிர் பற்றி - (தனது), அழகிய கையாகிய தளிராற் பிடித்துக்கொண்டு, அகத்து உவகை பொங்க - மனத்தின் கண் மகிழ்ச்சி மீக்கூர, புணரிப்புனல் ஆடினள் - கடல் நீரில் ஆடினாள் எ-று. தளிராற் பற்றி யென மூன்ற னுருபு விரிக்க. (18) குடைந்தார் கரையே றினர்கொன் றைமுடி மிடைந்தார் கருணைக் கண்விழிக் கமலம் உடைந்தா ரனைமா ருதரங் குறுகா தடைந்தா ருமைபா கரருட் படிவம். (இ-ள்.) குடைந்தார் கரை ஏறினர் - நீராடிக் கரை யேறியவ ராகிய காஞ்சனமாலையும் மலயத்துவச பாண்டியனும், கொன்றைமுடி மிடைந்தார் - கொன்றை மாலையை முடியின்கண் சூடினவ ராகிய சுந்தரேசர், கருணைக்கண் விழிக் கமலம் உடைந்தார் - திருவருள் நோக்கஞ் செய்தலாலே பாசம் ஒழிந்தவர்களாய், அனைமார் உதரம் குறுகாது - தாய்மாரின் கருப்பத்திற் புகுதலில்லை யாக, உமை பாகர் அருள்படிவம் அடைந்தார் - உமையொரு பாகரது கருணை வடிவத்தைப் பெற்றார்கள் எ-று. உமைபாகர் என்றமையால் காஞ்சனமாலை உமையின் உருவினையும், மலயத்துவசன் சிவபிரான் உருவினையும் பெற்றனராவர் என உரைப்பாருமுளர். விழிக்க - விழித்தலால்: செயவெனெச்சம் காரணப் பொருட்டு. குடைந்தார் உடைந்தார் என்பன முற்றெச்சம். (19) ஒண்கொண் டன்மிடற் றொளியும் மொருநால் எண்கொண் டபுயத் தெழிலும் மழல்சேர் கண்கொண் டநுதற் கவினும் பொலியா மண்கண் டுவியப் பவயங் கினரால். (இ-ள்.) ஒண் கொண்டல் மிடற்று ஒளியும் - ஒள்ளிய முகில் போன்ற திருமிடற்றின் ஒளியும், ஒரு நால் எண் கொண்ட புயத்து எழிலும் - ஒரு நான்கு என்னும் எண்ணைக்கொண்ட புயங்களின் எழுச்சியும், அழல் சேர்கண் கொண்ட நுதல் கவினும் - நெருப்பினைப் பொருந்திய கண்ணையுடைய நெற்றியின் அழகும் ஆகிய இவை களால், பொலியா - பொலிந்து, மண் கண்டு வியப்ப வயங்கினர் - மண்ணுலகத்தார் கண்டு வியக்குமாறு விளங்கினர் எ-று. இவற்றால் என மூன்றனுருபு விரிக்க; மிடற்றொளி முதலிய வற்றைச் சினையெனக்கொண்டு, சினைவினை முதலொடு முடிந்த தென்னலுமாம். மண் : ஆகுபெயர். ஆல் : அசை. (20) விண்ணின் றுவழுக் கிவிழுங் கதிர்போற் கண்ணின் றநுதற் கருணா கரன்வாழ் எண்ணின் றபுரத் தினிழிந் திமையா மண்ணின் றதொர்தெய் வவிமா னமரோ. (இ-ள்.) விண் நின்று வழுக்கி விழும் கதிர்போல் - வானினின்றும் நழுவி நிலமிசை விழுகின்ற சூரியனைப்போல, கண்நின்ற நுதல் - கண் நிலைபெற்ற நெற்றியையுடைய. கருணாகரன் வாழ் - கருணைக்கு உறையுளாகிய சிவபெருமான் வீற்றிருக்கும், எண் நின்ற புரத்தின் - மதிக்கத்தக்க சிவலோகத்தினின்றும், ஓர் தெய்வ விமானம் இழிந்து - ஒரு தெய்வத் தன்மையையுடைய விமானம் இறங்கி, இமையா - ஒளிவீசி, மண் நின்றது - மண்ணுலகில் நின்றது எ-று. கருணாகரன் - கருணைக்கு ஆகரமானவன்; ஆகரம் - சுரங்கம். இமையா: செய்யா வாய்பாட்டு வினையெச்சம். ஓர்; விகாரம். அரோ : அசை. (21) அத்தெய் வவிமா னமடுத்த திடலும் முத்தெய் வதமுக் கணவன் பணியால் நத்தெய் வதருக் கரனங் கையொடும் எத்தெய் வதமுந் தொழவே றினனால். (இ-ள்.) அ தெய்வ விமானம் அடுத்திடலும் - அந்தத் தெய்வ விமானம் வந்தவுடன், மு தெய்வத முக்கணவன் - மூன்று தெய்வங் களை மூன்று கண்களாகவுடைய சிவபெருமான், பணியால் ஆணையால், ந தெய்வ தரு கரன் - உயர்ந்த தெய்வத் தன்மை பொருந்திய கற்பகத்தருப்போன்ற (கொடைக்) கையையுடைய மலயத்துவச பாண்டியன், நங்கை யொடும் - மனைவியோடும், எ தெய்வதமும் தொழ ஏறினன் - தெய்வங்களும் வணங்க ஏறினன் எ-று. முத்தெய்வதம் - இரவி, மதி, எரி என்பன. அகரம் விரிந்து கணவன் என்றாயது. ந: சிறப்புப் பொருள் தரும் இடைச்சொல்; நப்பின்னை, நக்கீரன் என்பவற்றிற்போல கணவனும் மனைவியுமாய் இருந்தமைக் கேற்ப நங்கை யொடும்.....ஏறினன் என்றார்; காஞ்சனமாலை உமையுரு வெய்தினமையால் நங்கையொடு மென்றார் எனவும் கூறுப. ஆல் : அசை. (22) தேமா ரியெனும் படிசிந் தநறும் பூமா ரிபொழிந் ததுபொன் னுலகந் தூமா மறையந் தரதுந் துபிகார் ஆமா மெனவெங் குமதிர்ந் தனவால். (இ-ள்.) மாரி என்னும்படி - (மண்ணுலகில்) மழை என்று சொல்லுமாறு, பொன் உலகம் - பொன்னுலகத்தார், தேம் சிந்தநறும் பூமாரி பொழிந்தது - தேன் பொழிய நறிய பூமழை பொழிந்தனர்; தூமா மறை அந்தர துந்துபி - தூய பெரிய மறைகளும் தேவ துந்துபி களும், கார் ஆம் ஆம் என - மேக முழக்கமாம் மேக முழக்கமாம் என்று சொல்லுமாறு, எங்கும் அதிர்ந்தன - எங்கும் ஒலித்தன எ-று. தேம் சிந்த எனக் கூட்டுக. தேமாரி - இனிய மாரி என்னலுமாம். எண்ணும்மைகள் தொக்கன. அடுக்கு துணிவின்கண் வந்தது. ஆல் : அசை. (23) (அறுசீரடியாசிரியவிருத்தம்) எழுந்தது விமானம் வான மெழுந்ததுந் துபியு நாணி விழுந்தது போலு மென்ன வரவொலி யெங்கும் விம்மத் தொழுந்தகை முனிவ ரேத்தச் சுராதிகள்1 பரவத் திங்கட் கொழுந்தணி வேணிக் கூத்தர் கோநகர் குறித்துச் செல்வார். (இ-ள்.) விமானம் எழுந்தது - அத்திப்பிய விமானம் மேலே எழுந்தது; வானம் எழுந்த துந்துபியும் நாணி விழுந்தது போலும் என்ன - வானின்கண் எழுந்த தேவ துந்துபிகளின் ஒலியும் நாணித் தோற்றதுபோலு மென்று கூறுமாறு, அர ஒலி எங்கும் விம்ம - அரகர வென்னும் முழக்கம் எங்கும் பரவவும், தொழும் தகை முனிவர் ஏத்த - எவரும் வணங்கும் தகுதியையுடைய முனிவர்கள் வாழ்த்தவும், சுர ஆதிகள் பரவ - தேவர் முதலியோர் துதிக்கவும், திங்கள்கொழுந்து அணி வேணிக் கூத்தர் - மதியின் கொழுந்தினை அணிந்த சடையை யுடைய கூத்தப் பெருமானது, கோநகர் குறித்துச் செல்வார் - தலை நகரினை (சிவலோகத்தை) நோக்கிச் செல்வாராயினர் எ-று. நாணி நிலத்தில் விழுந்தது போலும் என்று உரைப்ப. இளம் பிறையை மதியின் கொழுந்தென்றார். கோ - தலைமை; சிறப்புமாம்.(24) முன்புதம் முருவாய் வைய முறைபுரி கோல்கைக் கொண்டு பின்புதன் னுருவந் தந்த மருகனும் பெருகு கேண்மை அன்புதந் தருகு நின்ற தடாதகை யணங்கு மீண்டு பொன்புனை குடுமிக் கோயில் புகுந்துநன் கிருப்பக் கண்டார். (இ-ள்.) (அங்ஙனம் செல்வார்), முன்பு - முதலில், தம் உருவாய் - தம் வடிவமாகி, வையம் முறை புரி கோல் கைக்கொண்டு - உலகினை முறைசெய்கின்ற செங்கோலைக் கையிலேற்றுக் கொண்டு, பின்பு தன் உருவம் தந்த மருகனும் - பின் தனது வடிவத்தைக் கொடுத்தருளிய மருகனாகிய சிவபெருமானும், பெருகுகேண்மை அன்பு தந்து - மிக்க நட்போடு அன்பு செய்து, அருகு நின்ற தடாதகை அணங்கும் - அருகில் நின்ற தடாதகைப் பிராட்டியாரும், மீண்டு - திரும்பி, பொன்புனை குடுமிக்கோயில் புகுந்துநன்கிருப்பக. பொன்புனை சிகரத்தையுடைய அரண்மனையிற் சென்று இனிது வீற்றிருக்க, கண்டார் - தரிசித்தார்கள் எ-று. இறைவன் பாண்டியார் கோலந் தாங்கியதனைத் ‘தம்முருவாய்’ என்றார். பின்பு தன்னுருவ மென்றது சிவ சாரூபத்தினை. தம் முருவந்தந்த எனப் பாடமோதிப் பிராட்டி உருவளித்தமை கூறுவாருமுளர். (25) முன்னைவல் வினையால் யாக்கை முறைதடு மாறித் தோற்றம் மன்னிய மனிதர் போலப் பண்டைய வடிவ மாறி அன்னையே மகளா வீன்ற வப்பனே மருக னாக என்னயா நோற்றே மியார்க்கு மியற்றருந் தவந்தா னென்னா. (இ-ள்.) முன்னை வல் வினையால் - தொன்று தொட்டுள்ள வலிய கன்மத்தினாலே, யாக்கை முறை தடுமாறி - உடம்பாலாய முறைகள் தடுமாற்ற மெய்தி, தோற்றம் மன்னிய மனிதர்போல - பிறப்பினைப் பொருந்திய மனிதர்போல. பண்டைய வடிவம் மாறி - பழைய திருவுருவம்மாறி, ஈன்ற அன்னையே மகளா - உலகங்களை ஈன்ற தாயே புதல்வியாகவும், அப்பனே மருகன் ஆக - தந்தையாகிய சிவபெருமானே மருகனாகவும் (வந்தருளுமாறு), யார்க்கும் இயற்றரும் என்ன தவம் தான் - எவருக்கும் செய்தற்கரிய தவங்களுள் என்ன தவத்தினை, யாம் நோற்றேம் என்னா - யாம் செய்தேமோ என்று கருதி எ-று. யாக்கைமுறை தடுமாறலாவது தந்தை தாய் மகன் மகள் மருகன் மருகி முதலிய முறைகளுள் ஒன்றினை யுடையார் பிறிதொரு முறையினை யுடையாராக மாறிப் பிறத்தல். மகளாக வென்பது குறைந்து நின்றது. ஈன்ற என்பதனை அன்னையொடுங் கூட்டுக. என்ன எவன் என்பத னடியாகப் பிறந்த குறிப்புவினையா லணையும் பெயர், தான்; அசை. (26) கன்றக லான்போ லையன் கனைகழல் விடாது பற்றி ஒன்றிய வன்பு பின்னின் றீர்த்தெழ வுள்ளத் தோடுஞ் சென்றிரு கண்ணு முட்டி யடிக்கடி திரும்பி நோக்கக் குன்றுறழ் விமானந் தன்னை யஞ்சலி கூப்பிச் செல்வார். (இ-ள்.) கன்று அகல் ஆன்போல் - கன்றினை நீங்கிய பசு (அடிக்கடி திரும்பிப் பார்த்தல்) போல, ஐயன் கனைகழல் விடாது பற்றி ஒன்றிய அன்பு - இறைவனுடைய ஒலிக்கும் வீரகண்டையணிந்த திருவடிகளை விடாது பற்றிக் கலந்த அன்பானது, பின் நின்று ஈர்த்து எழ - பின்னே நின்று இழுத்தலால், உள்ளத்தோடும் இரு கண்ணும் சென்று முட்டி அடிக்கடி திரும்பி நோக்க - (தமது) உள்ளத்துடன் இரண்டு விழிகளும் சென்று நெருங்கி அடிக்கடி திரும்பிப் பார்க்க, குன்று உறழ் விமானம் தன்னை - மலையை யொத்த விமானத்தை, அஞ்சலி கூப்பிச்செல்வார் - கை கூப்பி வணங்கிச் செல்லா நின்றார் எ-று. “ போதுவர் மீண்டு செல்வர் புல்லுவர் மீளப் போவர் காதலி னோக்கி நிற்பர் கன்றகல் புனிற்றாப் போல்வர்” என்னும் பெரியபுராணத் திருவிருத்தம் ஈண்டுச் சிந்திக்கற்பாலது. ஈர்த்தெழ - ஈர்க்க வென்னும் மாத்திரையாய் நின்றது. அஞ்சலியாகக் கைகூப்பி யென்க. அஞ்சலி கூப்பி யென்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு முடிபாயிற்று. (27) (மேற்படி வேறு) புவலோகங் கடந்துபோய்ப் புண்ணியருக் கெண்ணிறந்த போக மூட்டுஞ் சுவலோகங் கடந்துபோய் மகலோகஞ் சனலோகந் துறந்து மேலைத் தவலோகங் கடந்துபோய்ச் சத்தியலோ கங்கடந்து தண்து ழாயோன் நவலோகங் கடந்துலக நாயகமாஞ் சிவலோக நண்ணி னாரே. (இ-ள்.) புவலோகம் கடந்துபோய் - (பூலோகத்தி னீங்கிப்) புவலோகத்தைக் கடந்து சென்று, புண்ணியருக்கு எண் இறந்த போகம் ஊட்டும் - அறஞ் செய்தவருக்கு அளவிறந்த இன்பத்தை நுகர்விக்கும், சுவலோகம் கடந்துபோய் - சுவலோகத்தைக் கடந்து சென்று, மகலோகம் சனலோகம் துறந்து - மகலோகத்தையும் சனலோகத் தையும் கடந்து, மேலைத் தவலோகம் கடந்துபோய் - அவற்றின் மேலுள்ள தவலோகத்தையும் கடந்து சென்று, சத்தியலோகம் கடந்து - சத்திய லோகத்தையும் கடந்து, தண் துழாயோன் நவலோகம் கடந்து - தண்ணிய துழாய் மாலை அணிந்த திருமாலின் நவலோகத்தையும் கடந்து, உலக நாயகம் ஆம் சிவலோகம் நண்ணினார் - உலகங்களுக் கெல்லாம் தலைமையாகிய சிவலோகத்தினை அடைந்தார் எ-று. புவலோகம் முதலியவற்றின் அளவையும், அவற்றில் வசிப் போரையும் பின் வரும் சிவதருமோத்தரச் செய்யுட்களால் அறிக. “ தரைக்கு மேற்புவ லோக மதுதனில் அருக்கன் சோம னெனுமிவ ராதியர் இருப்பர் தத்தம் பலத்தினை யெய்தியே பரித்த நீளம் பதினைந் திலக்கமே” “ அதற்கு மேலம ரேச னரும்புரி அதற்கு நீளம் அசீதியு மைந்துமாம். அதற்கு மேன்மக லோக மதுதனில் வதிப்பர் மாதவ ராதி மரீசியும்” “ உயரந் தானிரு கோடி யுறுமதற் குயரு மெல்லை சனதல முன்னதம் உயரு நாலிரு கோடியென் றுன்னுக உயரு மாபிதிர் தேவ ருறைவரே” “ அதற்கு மேற்றவ லோக மருந்தவர் அதற்குள் வாழ்வர் சனகனை யாதியர் அதற்கு நீளமு மாறிரு கோடியாம் அதற்கு மேலயன் றேசமென் றாய்கவே”” “ அதற்கு நீளமு மாறுடன் பத்துறும் அதற்கு மேலரி தேசமென் றாய்க்வே அதற்கு நீளநாற் கோடியென் றாய்கவே அதற்கு மேற்சிவ லோகமோ ராறுறும்”” (28) அறக்கொடி பின் னிறைமகனை யடிபணிந்து தனையீன்றார்க் காதி வேத மறைப்பொருடன் வடிவளித்த வருளின்மன நிறைமகிழ்ச்சி வாய்கொள் ளாமற் புறப்படுவ தெனவிரண்டு திருசெவிக்குஞ் செங்குமுதம் பொதிந்த தீந்தேன் நிறைப்பதெனப் பன்முறையாற் றுதிசெய்து தொழுதொன்று நிகழ்த்தா நின்றாள். (இ-ள்.) அறக் கொடி - தருமவல்லியாகிய பிராட்டியார்,பின் இறைமகனை அடி பணிந்து - பின்பு தம் தலைவனை அடி வணங்கி, தனை ஈன்றார்க்கு - தம்மைப் பெற்றவர்க்கு, ஆதி வேத மறைப் பொருள் தன்வடிவு அளித்த அருளின் - முதன்மையாகிய வேதத்தின் உட்பொருளாகிய பெருமான் தனது சாரூபத்தைக் கொடுத்தருளிய கருணைபற்றி, மனம் நிறை மகிழ்ச்சி வாய் கொள்ளாமல் புறப்படுவது என - உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியானது வாயுளடங் காது வெளிப்படுகின்ற தேன்னும்படி, இரண்டு திருச்செவிக்கும் செங்குமுதம் பொதிந்த தீம் தென் நிறைப்பது என் - இரண்டு திருச் செவிகளிலும் (தமது திருவாயாகிய) செவ்வாம்பல் மலரின் மிக்க இனிய தேனை நிறைப்பது போல, பன் முறையால் துதி செய்து தொழுது - பலவகையாகத் துதித்து வணங்கி, ஒன்று நிகழ்த்தா நின்றாள் - ஒன்று கூறுகின்றாள் எ-று. அடி பணிந்து என்பது ஒரு சொல்லாய் இறைமகனை யென்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று; இறை மகனது அடியை எனவிரித்தலுமாம். மறைப்பொருள் - மறையாகிய பொருள்; உட்பொருள்; வேதமாகிய மறை யென்னலுமாம். உவகை மிகுதியால் நிரம்பப் பேசுதலை வாய் கொள்ளாமற் பேசுதல் என்பர். செவிக்கும் - செவியினிடத்தும்: வேற்றுமை மயக்கம். (29) எண்ணிறந்த தேவர்க்கும் யாவர்க்கும் பயன்சுரக்கு மிமையோர் நாட்டுப் புண்ணியவான் றன்புனிற்றுக் கன்றுக்குக் குறைவேதென் பொருட்டென் னீன்றாள் எண்ணியது கடலொன்றே யெழுகடலு மீண்டழைத்தா யீன்றா ளாட விண்ணிருந்த கணவனையும் விளித்துனருள் வடிவளித்துன் மேனா டீந்தாய். (இ-ள்.) எண் இறந்த தேவர்க்கும் - அளவில்லாத தேவர் களுக்கும், யாவர்க்கும் - மற்றுள்ளார் பலர்க்கும், பயன் சுரக்கும் - வேண்டிய பயனைத் தரும், இமையோர் நாட்டுப் புண்ணிய ஆன் புனிற்றுக் கன்றுக்கு - தேவருலகத்துப் புண்ணிய வடிவமாகிய காம தேனுவின் இளங்கன்றுக்கு, குறைவு ஏது - குறைவு யாது (அது போல நின்னை யடுத்த எனக்கும் ஒரு குறைவுமில்லை; ஆதலால்), என் ஈன்றாள் - எண்ணியது கடல் ஒன்றே - என் தாய் நீராட விரும்பியது ஒரு கடலே யாகவும், என் பொருட்டு - என்னிமித்தமாக, எழு கடலும் ஈண்டு அழைத்தாய் - ஏழு கடலையும் இங்கு வரவழைத்தாய்; ஈன்றாள் ஆட விண் இருந்த கணவனையும் விளித்து - அவள் நீராடுதற்கு வானுலகத்திலிருந்து அவள் நாயகனையும் அழைத்து, உன் அருள் வடிவு அளித்து - உனது கருணையுருவத்தையும் தந்து, உன் மேல் நாடு ஈந்தாய் - உனது மேலாகிய சிவலோகத்தையும் கொடுத் தருளினாய் எ-று. யாவர்க்கும் என்றது முனிவர் முதலாயினாரை. பயன் - பால், உண்டி. தன் : சாரியை; அசையுமாம். புனிற்றுக் கன்று - ஈன்றணிமை யுடைய கன்று; “ புனிறென் கிளவியீன் றணிமைப் பொருட்டே” என்பது தொல்காப்பியம். ஒன்றே யாகவும் என விரித்து, என் பொருட்டு அழைத்தாய் என இயைக்க. அருள் வடிவு - சாரூபம்ஆன் கன்றுக்குக் குறைவேது என உவமை கூறிப் பொருள் தொகவைத் தது பிறிது மொழிதல் என்னும் அணி. (30) தென்னர்மர பிறந்ததெனப் படுபழியி லாழவருஞ் செவ்வி நோக்கிப் பொன்னவிர்தார் முடிபுனைந்து கோலோச்சி வருகின்றாய் போலு மேலும் இந்நிலைமைக் கிடையூறு மினியின்றே யெனத்தலைவி யியம்ப லோடுந் தன்னிறைவி யுட்கோளை யகங்கொண்டு மகிழ்ந்திருந்தான் றமிழர் கோமான். (இ-ள்.) தென்னர் மரபு - பாண்டியர் குலம், இறந்தது எனப்படு பழியில் - ஒழிந்த தென்று சொல்லப்படும் பழியில், ஆழவரும் செவ்வி நோக்கி - அழுந்தவருங் காலத்தை நோக்கி. பொன் அவிர் தார் முடி புனைந்து - பொன்னாற் செய்யப்பட்டு விளக்கும் மாலையை யணிந்த முடியினைச் சூடி, கோல் ஒச்சி வருகின்றாய் போலும் - செங்கோல் செலுத்தி வருகின்றாய் போலும், இனிமேலும் இந் நிலைமைக்கு இடையூறு இன்றே என - இனியும் வழி வழியாய் வரும் இவ்வரசியல் நிலைமைக்கு இடையூறு இல்லையே என்று, தலைவி இயம்ப லோடும் - பிராட்டியார் விண்ணப்பித்த வளவில், தமிழர் கோமான் - பாண்டியர் பெருமானாகிய இறைவன், தன் இறைவி உட்கோளை அகம் கொண்டு - தன் நாயகியின் உள்ளக் கிடையைத் திருவுளத்திற் கொண்டு, மகிழ்ந்திருந்தான் - மகிழ்ச்சி யுற்றிருந்தான் எ-று. தென்னர் மர பென்பது இறந்த தென்பத னோடும் ஆழ என்பத னோடும் தனித் தனி இயையும்; படு பழி எனப் பிரித்து, இறந்ததென்று சொல்ல மிக்கபழியில் ஆழவரும் என்றுரைத்தலுமாம். அவிர்முடி யென்க. போலும் என்பது கட்டுரைச் சுவைபட நின்ற அசைச் சொல். இனிமேலும் என்றது வழக்கு நோக்கியாம். இடையூறும், உம்: அசை. உட்கோள் - புதல்வற்பேறு வேண்டு மென்னும் எண்ணம். (31) ஆகச் செய்யுள் 920. உக்கிரகுமாரபாண்டியரது திருவவதாரப் படலம் (கலிநிலைத்துறை) மன்ன வன்குல சேகரன் றிருமகன் மனைவி தன்னொ டுங்கட லாடிய தகுதியீ தந்தத் தென்ன வன்றனித் திருமக டிருவுளங் களிப்ப உன்ன ருந்திற லுக்கிர னுதித்தவா றுரைப்பாம். (இ-ள்.) மன்னவன் குலசேகரன் - குலசேகரனென்னும் வேந்தனுடைய, திருமகன் - சிறந்த புதல்வனாகிய மலயத்துவச பாண்டியன், மனைவி தன்னொடும் - தன் மனைவியோடும், கடலாடிய தகுதி ஈது - கடலாடிய திருவிளையாடல் இது; அந்தத் தென்னவன் தனித் திருமகள் - அம் மலயத்துவச பாண்டியனுக்கு ஒப்பற்ற திருமகளாகிய தடாதகைப் பிராட்டியார், திருவுளம் களிப்ப - திருவுள்ளம் மகிழ, உன் அருந்திறல் உக்கிரன் - நினைத்தற்கரிய வெற்றியை யுடைய உக்கிரகுமார பாண்டியன், உதித்தவாறு உரைப்பாம் - அவதரித்த திருவிளையாடலை இனிக் கூறுவாம் எ-று. மன்னவனாகிய திருமகன் என்பதும் பொருந்தும். தகுதி - தக்க செய்தி. (1) (அறுசீரடி யாசிரிய விருத்தம்) தண்ணிலா மெளலி வேய்ந்த சுந்தர சாமி ஞாலத் தெண்ணிலா வைக றன்ன திணையடி நிழல்போல் யார்க்குந் தெண்ணிலாக் கவிகை நீழல் செய்தருட் செங்கோ லோச்சி உண்ணிலா வுயிர்தா னாகி முறைபுரிந் தொழுகு நாளில். (இ-ள்.) தண் நிலா மெளலி வேய்ந்த சுந்தரசாமி - தண்ணிய பிறையை முடியில் அணிந்த சுந்தரபாண்டியனாகிய இறைவன், ஞாலத்து எண் இலா வைகல் - நிலவுலகில் அளவிறந்த காலம், தன்னது இணை அடி நிழல்போல் - தன்னுடைய இரண்டு திருவடிகளின் நிழலைப்போல, யார்க்கும் - அனைவர்க்கும், தெள் நிலாக் கவிகை நீழல் செய்து - தெளிந்த ஒளியை யுடைய வெண் கொற்றக் குடையால் நிழல் செய்து, அருள் செங்கோல் ஓச்சி - கருணையுடன் கூடிய செங்கோல் நடாத்தி, உள் நிலா உயிர் தானாகி- உள்ளே விளங்கும் உயிர் தானேயாகி, முறை புரிந்து ஒழுகு நாளில் - முறைசெய்து வருநாளில் எ-று. சாமி - இறைவன். சுந்தரசாமி என்னும் இருபெய ரொட்டுப் பண்புத் தொகை வடநூன் முடிபு, தன்னது: னகரம் விரித்தல். அடிநிழலின் மிக்க தொன்றின்மையால் அதனையே உவமை கூறினார். நிலாக் கவிகை - திங்கள்போலும் குடையுமாம். உயிர்கட் கெல்லாம் உயிராம் இயல்பினை யுடைய இறைவன் அரசு நடத்துங்காலும் அங்ஙனமே உயிரா யுள்ளான் என்றார்; “ நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே மன்ன னயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால் யானுயி ரென்ப தறிகை வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே” என்னும் புறப்பாட்டு இங்கு நோக்கற் பாலது. முறையாவது இஃதென்பதனை, “ ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை” என்னும் திருக்குறளா னறிக. கரியவன் கமலச் செம்மன் மறைமுதற் கலைகள் காண்டற் கரியவ னன்பர்க் கென்று மெளியவ னாகு மேன்மை தெரியவன் பகன்ற சிந்தைத் தென்னவன் றனக்குங் கற்பிற் குரியவ டனக்குங் காதன் மகளென வுமையைத் தந்தான். (இ-ள்.) கரியவன் கமலச் செம்மல் மறை முதல் கலைகள் காண்டற்கு அரியவன் - திருமாலும் தாமரை மலரில் வசிக்கும் பிரமனும் வேதம் முதலிய கலைகளும் காணுதற்கு அரியவனும், என்றும் அன்பர்க்கு எளியவன் ஆகும் மேன்மை - எஞ்ஞான்றும் அன்பர்களுக்கு எளியவனுமாகிய (தனது) பெருமையை, தெரிய - அனைவரும் அறியுமாறு, அன்பு அகன்ற சிந்தை தென்னவன் தனக்கும் - அன்பு பெருகிய உள்ளத்தினை யுடைய மலயத்துவச பாண்டியனுக்கும், கற்பிற்கு உரியவள் தனக்கும் - அவன் கற்பினுக் குரிய மனைவியாகிய காஞ்சன மாலைக்கும், உமையை மகள் எனத் தந்தான் - உமாதேவியைப் புதல்வியாகுமாறு அருளினான் எ-று. இறைவன் இங்ஙனம் அரியனும் எளியனுமாம் தன்மையை, “ மூவராலு மறியொ ணாமுத லாய தானந்த மூர்த்தியான் யாவராயினு மன்ப ரன்றி யறியொ ணாமலர்ச் சோதியான்” என்னும் திருவாசகத்தாலும் அறிக. “ தன்னடியார்க், கென்று மெளிவரும் பெருமை யேழுலகு மெடுத்தேத்தும்” எனத் திருத்தொண்டர் புராணங் கூறுவதும் ஈண்டுச் சிந்திக் கற்பாலது. அரியனாகியும் என விரித்தலுமாம். அகன்ற - விரிந்த; அஃகி யகன்ற வறிவு என்புழிப் போல. (3) மற்றதற் கிசையத் தானு மருமக னாகி வையம் முற்றும்வெண் குடைக்கீழ் வைக முறைசெய்தா னாக மூன்று கொற்றவர் தம்மிற் றிங்கட் கோக்குடி விழுப்ப மெய்தப் பெற்றது போலு மின்னும் பெறுவதோர் குறைவு தீர்ப்பான். (இ-ள்.) அதற்கு இசைய - அதற்குப் பொருந்த, தானும் மருமகனாகி - தானும் மருமகனாகி, வையம் முற்றும் வெண்குடைக் கீழ்வைக - உலகம் முழுதும் வெண்கொற்றக் குடையின் நிழலிலே தங்கியிருக்க, முறைசெய்தானாக - முறை புரிந்து வருதலால், மூன்று கொற்றவர் தம்மில் - சேர சோழ பாண்டிய ரென்னும் மூன்று மன்னர்களில், திங்கள் கோக்குடி விழுப்பம் எய்தப் பெற்றது - சந்திரகுலத்துத் தோன்றிய பாண்டியர் குடியானது மேன்மை யடைந்தது; இன்னும் பெறுவது ஓர் குறைவு தீர்ப்பான் - (அவ்விறைவனே) இன்னமும் அம்மரபு பெறக் கடவதாகிய ஒரு குறையை நீக்கு வானாயினன் எ-று. ஆக - ஆதலால்; உமையைத் தந்து மருகனாகி முறை செய்தமை யால் என்க. திங்களின் வழிவந்த கோக்களின் குடியென விரிக்க. எய்தற் பாலதாகிய குறைவாவது வழிபொன்றி அரசு நிலை கெடல். மற்று, போலும் என்பன அசைச் சொற்கள். (4) ஒன்றினைச் செய்கை செய்யா தொழிகைவே றொன்று செய்கை என்றிவை யுடையோ னாதி யீறிலாப் பரம யோகி நன்றுதீ திகழ்ச்சி வேட்கை நட்பிகல் விளைக்கு மாயை வென்றவன் செய்யு மாயை விருத்தியா ரளக்க வல்லார். (இ-ள்.) ஒன்றினைச் செய்கை - ஒன்றைச் செய்தலும், செய்யாது ஒழிகை - அதனைச் செய்யாது தவிர்தலும், வேறு ஒன்று செய்கை - மற்றொன்று செய்தலும், என்று இவை உடையோன் - என இவற்றை உடையவனும், ஆதி ஈறு இலாப் பரமயோகி - முதலு முடிவு மில்லாத பரமயோகியும், நன்று தீது இகழ்ச்சி வேட்கை நட்பு இகல் விளைக்கும் மாயை வென்றவன் - நன்மையும் தீமையும் வெறுப்பும் விரும்பும் நட்பும் பகையுமாகிய இவற்றை விளைக்கின்ற மாயையை இயல் பாகவே வென்றவனுமாகிய சிவபெருமான், செய்யும் மாயை விருத்தி அளக்க வல்லார் யார் - செய்கின்ற மாயையின் விருத்தியை அளந்துகாண வல்லவர் யாவர்? (ஒருவருமில்லை என்றபடி) எ-று. ஒன்றினைச் செய்கை முதலிய மூன்றும்வடமொழியில் கர்த்திருத்துவம், அகர்த்திருத்துவம், அந்நியதா கர்த்திருத்துவம் என்று கூறப்படும்; இவற்றால் தன்வயத்தனாதலாகிய இறைமைக் குணம் கூறியவாறாயிற்று; “ ஒன்றை நினைக்கி னது வொழிந்திட் டொன்றாகும் அன்றி யதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் ஏனையாளு மீசன் செயல்” என்னும் நல்வழி வெண்பாவில் இறைவனது தன்வய முடைமையும், உயிரினது தன்வய மின்மையும் ஒருங்கே கூறப்படுதல் காண்க. மாயை விருத்தி - விசித்திரச் செயல்கள். ‘மாயை வென்றவன் செய்யுமாயை’ விருத்தி என முரணயந் தோன்றக் கூறினார். (5) இந்திர சால விச்சை காட்டுவா னென்னத் தன்பாற் செந்தழ னாட்ட மீன்ற செல்வனைக் கருப்ப மெய்தா தந்தமி லுயிரு ஞால மனைத்தையு மீன்ற தாயாஞ் சுந்தர வல்லி தன்பாற் றோன்றுமா றுள்ளஞ் செய்தான். (இ-ள்.) இந்திர சால விச்சை காட்டுவான் என்ன - இந்திரசால வித்தை காட்டுபவனைப்போல, தன்பால் செந்தழல் நாட்டம் ஈன்ற செல்வனை - தன்னிடத்துள்ள சிவந்த அனற்கண் தந்தருளிய செல்வனை, கருப்பம் எய்தாது - கருப்ப முறாமல், அந்தம் இல் உயிரும் - அளவிறந்த உயிர்களையும், ஞாலம் அனைத்தையும் - உலக முழுதையும், ஈன்ற தாயாம் சுந்தரவல்லி தன்பால் - பெற்றருளிய அம்மையாகிய தடாதகைப் பிராட்டியாரிடத்தே, தோன்றுமாறு உள்ளம் செய்தான் - உதிக்கும்படி திருவுள்ளங் கொண்டான் எ-று. சாலம் - வலை; வலைபோல் அகப்படுத்தலின் விச்சைக்குச் சால மென்பது பெயராயிற்று. இந்திரசாலம் - சாலங்களிற் றலையாயது; “ இந்திர சாலங் காட்டிய வியல்பும்” என்பதும் திருவாசகம். தன்பால் நின்றும் நாட்டத்தால் ஈன்ற என விரித்தலுமாம். செல்வனைத் தோற்றுமாறு உள்ளஞ் செய்தான் என இயையும். செல்வன் - முருகன் வல்லி தன்பால் என்பதில் தன்சாரியை. (6) அங்கவன் வரவுக் கேற்ப வாயமும் பிறருந் தாழ்ந்து மங்கைநின் வடிவுக் கேற்பக் கருவுரு வனப்புஞ் சீருந் திங்கடோ றாற்று மன்றற் செவ்வியுங் காண வாசை பொங்கிய தெங்கட் கென்றார் புனிதையப் படிபோ லானாள். (இ-ள்.) அங்கு அவன் வரவுக்குப் ஏற்ப - அங்கு அச்செல்வன் வருகைக்கு இசைய, ஆயமும் பிறரும் தாழ்ந்து - தோழிகளும் மற்றவர் களும் வணங்கி, மங்கை - பிராட்டியாரே, நின் வடிவுக்கு ஏற்பக்கரு உரு வனப்பும் சீரும் - நினது திருவுருவத்திற்குப் பொருந்த (உண்டாகிய) கருப்பத் தோற்றத்தின் அழகையும் சிறப்பையும், திங்கள்தோறு ஆற்றும் மன்றல் செவ்வியும் - மாதந்தோறும் செய்யும் திருவிழாப் பொலிவையும், காண எங்கட்கு ஆசை பொங்கியது என்றார் - கண்டு களிக்க எங்களுக்கு விருப்பம் மேலோங்கியது எனக் கூறினார்கள்; புனிதை அப்படி ஆனாள் - பிராட்டியாரும் அங்ஙனம் ஆயினார் எ-று. மன்றல் - சடங்கு. போல் : அசை. (7) கருமணிச் சிகரச் செம்பொற் கனவரை யனைய காட்சித் திருமுலை யமுதம் பெய்த செப்பிரண் டனைய வாக வருமுலை சுமந்து மாய்ந்த மருங்குலும் வந்து தோன்ற அருள்கனிந் தனையா ணாவிற் கின்சுவை யார்வம் பொங்க. (இ-ள்.) கருமணிச் சிகரச் செம்பொன் கனவரை அனைய காட்சி - கருமணியாகிய சிகரத்தையுடைய சிவந்த பொன் மலை போலும் தோற்றத்தையுடைய, திருமுலை - அழகிய கொங்கைகள், அமுதம் பெய்த செப்பு இரண்டு அனையவாக - அமுதம் நிரப்பிய இரண்டு செப்புகள் போலாகவும், வருமுலை சுமந்து மாய்ந்த மருங்குலும் வந்து தோன்ற - வளர்கின்ற கொங்கைகளைச் சுமத்தலால் மறைந்த இடையும் வெளிப்பட்டுத் தோன்றவும், அருள் கனிந்தனையாள் - அருள் பழுத்தாலொத்த பிராட்டியார், நாவிற்கு இன் சுவை ஆர்வம் பொங்க - நாவினுக்கு இனிய சுவையின் கண்விருப்பம் ஓங்கவும் எ-று. கருமணிபோலும் முலைக்கண்ணைக் கருமணி யென்றார். நீலமணிச் சிகரத்தையுடைய பொன் மலைபோலும் என இல்பொருளு வமையாக்கிச், சூசுகத்தையுடைய என வருவித்துரைத்தலுமாம். பொன், கனம் என்பன ஒரு பொருளன; கனவரை - பெரிய மலை யென்னலு மாம். மாய்ந்த - மறைந்த மருங்குலும் சுமந்து தோன்ற வென இயைத் தலுமாம். கனிந்தாலனையாள் என்பது கனிந்தனையாள் என்றாயிற்று. “ விரும்பார் முலைக்கண் திங்கள் வெண்கதிர்கள் பெய்திருந்த பொற்செப்பே போல் அரும்பால் பரந்து நுசுப்புங் கண்ணின் புலனாயிற்று” என்னும் சிந்தாமணியின் கருத்து இதனுடன் ஒத்து நோக்கற்பாலது. (8) என்னவு மெளிய வேனு மரியன வென்ன வேட்டாள்1 அன்னவும் போக பூமி யரும்பெற லுணவு நல்கிப் பன்னக ரமுதுந் திங்கட் படுசுவை யமுதுந் தெய்வப் பொன்னக ரமுது மாசை புதைபடக் கணங்க ணல்க. (இ-ள்.) என்னவும் - எத்துணையும், எளியவேனும் - எளிமை யுடைய பொருள்களாயினும், அரியன என்ன வேட்டாள் - அவற்றை அரியனவாகக் கருதி விரும்பினார்; அன்னவும் - அங்ஙனம் விரும்பும் பொருளையும், போகபூமி அரும் பெறல் உணவும் நல்கி - போக பூமியிலுள்ள பெறுதற்கரிய உணவுகளையும் கொடுத்தும், பன்னகர் அமுதும் - நாகருகலத்திலுள்ள அமிழ்தினையும், திங்கள் படுசுவை அமுதும் - சந்திர மண்டலத்துண்டாகும் சுவை மிக்க அமிழ்தினையும், தெய்வப் பொன் நகர் அமுதும் - தேவருடைய பொன்னுலகத்திலுள்ள அமிழ்தினையும், ஆசை புதைபட - விருப்பம் நீங்க, கணங்கள் நல்க - சிவகணங்கள் கொடுக்கவும் எ-று. எனையவும் என்பது என்னவும் என்று திரிந்தது. வயாவுற்ற மகளிர் எளிய பொருள்களையும் அரியனபோல் விரும்புதல் இயல்பு. போகபூமி - உத்தர குரு முதலியன. பன்னக ருலகத்தைப் பன்னகர் என்றார். நாகருலகம் போகத்திற் சிறந்த தென்பதனை, “ நாக நீணகரொடு நாகநா டதனொடு போகநீள் புகழ் மன்னும் புகார்நக ரதுதன்னில் ” என்னும் சிலப்பதிகார அடிகளின் உரைநோக்கியுணர்க. பாரதத் திலும் நாகருலகத் தமிழ்து கூறப்பட்டுளது. பெறலரும் என்பது முன் பின்னாகத் தொக்கது. மேற் செய்யுளிலுள்ள ஆக, தோன்ற, பொங்க என்னுஞ் செயவெனெச்சங்கள் வேட்டாள் என்பதனைக்கொண்டு முடியும். (9) புண்ணிய முனிவர் வேத பண்டிதர் போந்து வேந்தர்க் கண்ணிய சடங்குமூதூ ரருங்கடி வெள்ளத் தாழ எண்ணிய திங்க டோறு மியற்றவிக் கன்னித் தேயம் பண்ணிய தருமச் சார்பாற் படுபயன் றலைப்பா டெய்த. (இ-ள்.) புண்ணிய முனிவர் - புண்ணியமே வடிவாகிய முனிவர்களும், வேத பண்டிதர் - வேதங்களில் வல்ல மறையோர் களும், போந்து - வந்து, வேந்தர்க்கு அண்ணிய சடங்கு - அரச மரபினர்க்குப் பொருந்திய சடங்குகளை, முது ஊர் அருங்கடி வெள்ளத்து ஆழ பழமையாகிய மதுரைப் பதியானது அரிய திருவிழா வென்னும் பெருக்கில் அழுந்த, எண்ணிய திங்கள்தோறும் இயற்ற - வரையறுத்த மாதங்கடோறும் செய்து முடிக்கவும், இ கன்னித் தேயம் பண்ணிய தருமைச் சார்பால் படு பயன் தலைப்பாடு எய்த - இந்தக் கன்னி நாடானது இயற்றிய அற நெறியால் வரும் பயனை அடையவும் எ-று. முனிவரும் பண்டிதரும் போந்து சடங்கினை இயற்றவு மென்க. நகர் முழுதும் விழாவற் பொலிந்த தென்பார் ‘மூதூர் அருங்கடி வெள்ளத்தாழ’ என்றார்; ஊரிலுள்ளார்க்கு ஆகுபெயருமாம். எண்ணிய - இன்ன சடங்கு இன்ன திங்களிற் செயற்பாலதென எண்ணப்பட்ட; செய்யிய வென்னும் எச்சமாக்கி, மதிக்கும்படி யென்றலுமாம். தலைப்பாடு - தலைப்படுதல்: ஒரு சொல். (10) மாசறத் துறந்தோ ருள்ள மானவான் களங்க நீங்க ஈசர்தங் கிழமை யென்னு மிந்துவா திரைநாள் செய்த பூசையின் பயன்றா னெய்த வெரிபசும் பொற்கோள் வந்து தேசொடு கேந்தி ரத்திற் சிறந்தநல் லோரை வாய்ப்ப. (இ-ள்.) மாசு அறத் துறந்தோர் உள்ளம் மான - குற்றமறத்துறந்த பெரியாரின் மனத்தையொப்ப, வான் களங்கம் நீங்க - ஆகாயம் களங்கமின்றி விளங்கவும், ஈசர் தம் கிழமை என்னும் இந்து ஆதிரை நாள் - சிவபெருமானுக்கு உரியதெனப்படும் திங்கட் கிழமையும் திரு ஆதிரைநாளும், செய்த பூசையின் பயன் எய்த - செய்த வழிபாட்டின் பயனை பொருந்தவும், எரி பசும் பொன் கோள் வந்து - விளங்கா நின்ற பசிய பொன்னாகிய கோள்வந்து, கேந்திரத்தில் தேசொடு சிறந்த - கேந்திரத்தில் ஒளியுடன் விளங்கப்பெற்ற, நல்ஓரை வாய்ப்ப - நல்ல முழுத்தம் வாய்க்கவும் எ-று. இந்து - திங்கள். சிவபிரானுக் குரிய கிழமை யெனப்படும் திங்கட் கிழமை யென விரிக்க; சோமன் என்பதற்குச் சிவனென்னும் பொருளுண்மையும் காண்க, ஈசர்க்குரிய தாதல் ஆதிரைக்கும் கொள்க; “ மன்னிய நாண்மீன் மதிகனலி யென்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும் ஆதிரையா னாதிரையா னென்றென் றயர்வுறுமீ ஊர்திரைநீர் வேலி யுலகு” என்பது முத்தொள்ளாயிரம். பொன் - வியாழன்; பொன் என்பதற்கேற்ப அடைகள் கொடுத்தார். பண்டைத் தமிழ்நூலோர் கோட்களினியல்பை நன்கறிந்து செந்நிற முடையதனைச் சேய் என்றும் செவ்வாய் என்றும், பொன்னிற முடையதனைப் பொன் என்றும், வெண்ணிற முடையதனை வெள்ளி என்றும், கருநிற முடைய சனியைக் கரியன் என்றும் பெயரிட்டும் வழங்குவா ராயினரென்க. வியாழனாகிய நற்கோள் கேந்திர மேறியிருப்பது நன்மை பயப்பதாமெனல் குறிநூற் கொள்கை; கேந்திரம் - இலக்கினத்திற்கு ஒன்று நான்கு ஏழு பத்து ஆம் இராசிகள். சனி முதலிய தீக்கோளின் இயைபின்றியென்பார் ‘தேசொடு சிறந்த’ என்றார். ஓரை யென்றது ஈண்டு இலக்கினத்தை. தம் : சாரியை. தான் : அசை. (11) முந்தைநான் மறைக டாமே முழங்கமந் தார மாரி சிந்தநாண் மலர்பூத் தாடு மின்னெனத் திசைக டோறும் அந்தர மகளி ராடத் துந்துபி யைந்து மார்ப்ப விந்தையுந் திருவும் வெள்ளைக் கிழத்தியும் வீறு வாய்ப்ப. (இ-ள்.) முந்தைநால் மறைகள் தாமே முழங்க - முதன்மை பெற்ற நான்கு வேதங்களும் தாமே ஒலிக்கவும், மந்தாரம் மாரிசிந்த - (தேவர்கள்) மந்தார மலர்மழையைப் பொழியவும். நாள்மலர் பூத்து ஆடும் மின் என - புதிய மலர்களைப் பூத்துப் ஆடுகின்ற மின்னலைப் போல, திசைகள் தோறும் - திக்குகள் தோறும், அந்தர மகளிர் ஆட- தேவமகளிர் ஆடவும், துந்துபி ஐந்தும் ஆர்ப்ப - ஐவகை இயங்களும் ஒலிக்கவும், விந்தையும் திருவும் வெள்ளைக் கிழத்தியும் வீறு வாய்ப்ப- வீர மகளும் திருமகளும் கலைமகளும் இறுமாக்கவும் எ-று. மறைகள் முழங்கலும், விந்தை முதலாயினார் வீறெய்துதலும் தத்தமக்கு உளவாகும் ஆக்கங் கருதிய யென்க. மலர் பூத்தாடும் மின்னென என்றது இல்பொருளுவமை. வீறு - பிறி தொன்றற் கில்லாத சிறப்பு என்பர் நச்சினார்க்கினியர். (12) அந்தணர் மகிழ்ச்சி தூங்க வடுத்தவர் வளர்க்கு முன்னே மந்திர வேள்விச் செந்தீ வலஞ்சுழித் தெழுந்தார்த் தாட சிந்துர நுதன்மா வெட்டுஞ் சேடனும் பொறை யெய்ப்பாற இந்திரன் மேருப் புத்தேள் புனலிறைக் கிடத்தோ ளாட. (இ-ள்.) அந்தணர் மகிழ்ச்சி தூங்க - மறையவர்கள் களிகூரவும், அவர் அடுத்து வளர்க்கு முன்னே - அவர்கள் வந்து ஆகுதி செய்து வளர்ப்பதற்கு முன்னரே, மந்திர வேள்விச் செந்தீ வலம் சுழித்து எழுந்து ஆர்த்து ஆட - மந்திரப்படி செய்யும் வேள்விக்குண்டத் தின்கண் சிவந்த தீயானது வலமாகச் சுழித்து ஓங்கி ஒலித்தாடவும், சிந்துரம் நுதல் மா மட்டும் சேடனும் பொறை எய்ப்பு ஆற - சிந்துரம் நெற்றியையுடைய திசை யானைகள் எட்டும் அனந்தனும் சுமத்தலினின்று இளைப்பாறவும், இந்திரன் மேருப் புத்தேள் புனல் இறைக்கு இடத்தோள் ஆட - இந்திரனுக்கும் மேருமலைக்கும் வருணனுக்கும் இடத்தோள் துடிக்கவும் எ-று. மகிழ்ச்சி இயல்பாலுண்டாயது. மாவெட்டும் சேடனும் பொறுக்கும் பாரத்தை இக் குமாரன் பொறுத்தலின் அவன் இளைப்பாறவென்றார். பொறுத்தலினீங்கி இளைப்பாற வென்க; புரத்தலினருமை நோக்கி அதனைப் பொறுத்தல் என்ப. ஆடவர்க்கு இடத்தோள் ஆடுதல் தீங்கின் குறி; இந்திரன் முடிமேல் வளை யெறிந்தும், மேருவைச் செண்டாலடித்தும், கடல் சுவறவேல் விடுத்தும் அன்னார் செருக்கை யொழித்தலின், அவர்க்கு இடத்தோள் ஆட என்றார். மேரு முதலியவற்றைத் தெய்வமாக்கியுரைத்தலும் மரபு; “ அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே” என்பது இதனை வலியுறுத்தும். (13) ஆலத்தை யமுத மாக்கு மண்ணலு மணக்குங் கொண்ட கோலத்துக் கேற்பக் காலைக் குழந்தை வெங்கதிர்போ லற்றைக் காலத்தி லுதித்த சேய்போற் கண்மழை பிலிற்று நிம்ப மாலைத்தோட் செழியன் செல்வ மகள்வயிற் றோன்றி னானே. (இ-ள்.) ஆலத்தை அமுதம் ஆக்கும் அண்ணலும் அணங்கும் - நஞ்சினை அமுதாக்கிய இறைவனும் பிராட்டியும், கொண்ட கோலத்துக்கு ஏற்ப - எடுத்த திருக்கோலத்திற்கு இசைய, காலைக் குழந்தை வெங்கதிர்போல் - காலையிலுதித்த விருப்பஞ் செய்யும் இள ஞாயிற்றைப் போலவும், அற்றைக் காலத்தில் உதித்த சேய் போல் - அந்நாளில் அவதரித்த கந்தவேள் போலவும், கள்மழை பிலிற்றும் நிம்பமாலை - தேனாகிய மழையைப் பொழியும் வேப்ப மலர் மாலையை அணிந்த, தோள் - தோளையுடைய, செழியன் - மலயத்துவச பாண்டியனது, செல்வமகள் வயின் - செல்வப் புதல்வியாகிய தடாதகைப் பிராட்டியாரிடத்தே, தோன்றினான் - (உக்கிர குமாரன்) அவதரித் தருளினான் எ-று. நஞ்சின் றன்மை யொழிந்து அமிழ்தஞ் செய்யும் காரியத்தைச் செய்தலின் அமுத மாக்கும் என்றார்; உணவாக்கிய என்னலுமாம். “ ஆலத்தி னாலமிர் தாக்கிய கோன்றில்லை யம்பலம்போல்” என்னும் திருச்சிற்றம்பலக் கோவையாரின் அடியும், அதற்குப் பேராசிரியர் எழுதிய உரைக் குறிப்பும் இங்கு நோக்கற் பாலன. வெம்மை - விருப்பம். கதிர், ஞாயிற்றுக்கு ஆகுபெயர். அற்றையென்பது காலத்தின் முன்மை சுட்டுவது. சேயின் அமிச மென்பார் சேய்போல் என்றார். எழுவாய் வருவிக்க. வேல் எட்டாஞ் செய்யுள் முதலாக வந்த நல்க, இயற்ற, எய்த, நீங்க, எய்த, வாய்ப்ப, முழங்க, சிந்த. ஆட, ஆர்ப்ப, வாய்ப்ப, தூங்க, ஆற, ஆட என்னும் செயவெனெச்சங்கள் இப்பாட்டில் தோன்றினான் என்பது கொண்டு முடிந்தன; இவ்வெச்சங்களின் காலங்களை ஒர்ந்துணர்க. ஏ:அசை. (14) எடுத்தனண் மோந்து புல்லி யேந்தினள் காந்தன் கையிற் கொடுத்தனள் வாங்கி வீங்கு கொங்கையின் றிழிபால் வெள்ளம் விடுத்தனள் குமுதப் போதில் வெண்ணிலா வெள்ளம் போல்வாய் மடுத்தன ளருத்தி னாடன் மைந்தனை யெம்பி ராட்டி. (இ-ள்.) எம்பிராட்டி - எங்கள் பிராட்டியார், தன் மைந்தனை- அங்ஙனம் தோன்றிய தம் புதல்வனை, எடுத்தனள் மோந்து புல்லி ஏந்தினள் - எடுத்து உச்சி மோந்து தழுவி ஏந்தி, காந்தன் கையில் கொடுத்தனள் வாங்கி - தம் நாயகன் கையிற் கொடுத்து மீள வாங்கி. வீங்கு கொங்கை நின்று இழிபால் வெள்ளம் - பருத்த கொங்கை களினின்றும் சொரியும் பால் வெள்ளத்தை, விடுத்தனள் - சொரிந்து, குமுதப் போதில் வெள் நிலா வெள்ளம்போல் - செவ்வாம்பல் மலரில் சந்திரன் தனது வெள்ளிய நிலவின் பெருக்கை (மடுத்தல்) போல, வாய்மடுத்தனள் அருத்தினாள் - திருவாயிற் புகட்டி உண்பித்தார் எ-று. குழவியைக் கணவன் கையிற் கொடுத்தல் மரபு. பால் வெள்ளத்தை வள்ளத்தில் விடுத்தென்க; “ வரையுரங் கிழித்த வேளும் வாய்வைத் தருந்தாத விளமுலை” எனப் பிராட்டி திருவவதாரத்திற் கூறியிருத்தல் காண்க. சந்திரன் நிலா வெள்ளத்தை மடுத்தல்போல எனவிரிக்க; இவ்வுவமை மிக்க சிறப்புடைத்து. எடுத்தனள், ஏந்தினள், கொடுத் தனள், விடுத்தனள், மடுத்தனள் என்பன முற்றெச்சங்கள். (15) சலத்தலைக் கிடக்கைப் புத்தே டருநிழல் வாழ்க்கைப் புத்தேள் அலர்த்தலை யிருக்கைப் புத்தே ளாதிப்புத் தேளிர் வேதப் புலத்தலைக் கேள்வி சான்ற புண்ணிய முனிவ ரேனோர் குலத்தலை மகளி ரோடுங் கோமகன் கோயில் புக்கார். (இ-ள்.) சலத்தலைக் கிடக்கைப் புத்தேள் - திருப்பாற்கடலின் கண் அறிதுயில் கொள்ளும் திருமாலும், தரு நிழல் வாழ்க்கைப் புத்தோள் - கற்பகத் தருவின் நீழலில் வாழும் இந்திரனும், அலர்த்தலை இருக்கைப் புத்தேள் - தாமரை மலரின்கண் இருக்கும் பிரமனும், ஆதி - முதலாகிய, புத்தேளிர் - தேவர்களும், வேதப் புலத்தலைக்கேள்வி சான்ற புண்ணிய முனிவர் - வேதத்தின்கண் மிக்க கேள்வியால் மாட்சிமைப்பட்ட முனிவர்களும், ஏனோர் - மற்றவர்களும், குலத்தலை மகளிரோடும் - தலைமைபெற்ற குலமகளிரோடும், கோமகன் கோயில் புக்கார் - சுந்தரபாண்டியரது கோயிலுட் புகுந்தார்கள் எ-று. கிடக்கை - கிடத்தலையுடைய. வேதப்புலம் - வேதத்தினிடம் தலைக் கேள்வி - மிக்க கேள்வி. (16) குடபுலத் தரசும் பொன்னிக் குளிர்புனற் கோழி வேந்தும் வடபுலத் தரசர் யாருங் குறுநில வாழ்க்கைச் செல்வத் தடல்கெழு தொண்டைத் தண்டா ரரசொடு மனிகஞ் சூழக் கடல்கணாற் றிசையும் பொங்கி வருவபோற் கலிப்ப வந்தார். (இ-ள்.) குட புலத்து அரசும் - மேற்புலத் தரசனாகிய சேரனும், பொன்னிக் குளிர் புனல் கோழி வேந்தும் - காவிரியின் தண்ணிய நீர் சூழ்ந்த உறையூரிலுள்ள சோழ மன்னனும், வடபுலத்து அரசர் யாரும் - வடக்கின்கண் உள்ள அரசரனைவரும், குறுநில வாழ்க்கைச் செல்வத்து - குறுநில வேந்தரின் வாழ்க்கைச் செல்வத்தினையுடைய, அடல்கெழு - வலிமை பொருந்திய, தண்தார் - தண்ணிய மாலையை யணிந்த, தொண்டை அரசொடும் - தொண்டை மன்னனோடும், அனிகம் சூழ - சேனைகள் சூழ, கடல்கள் நால் திசையும் பொங்கி வருவபோல் - கடல்கள் நான்கு திக்குகளிலும் புடை பெயர்ந்து வருவனபோல, கலிப்ப வந்தார் - ஆரவார முண்டாக வந்தார்கள் எ-று. குளிர் புனலையுடைய பொன்னியென மாற்றலுமாம். ஒரு கோழி யானையைப் போர்தொலைத்த விடத்துக் கண்ட நகர மாதலின் உறையூர்க்குக் கோழி யென்பது ஒரு பெயர்; “ முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய புறஞ்சிறை வாரணம் புக்கனர்.” என்று சிலப்பதிகாரம் கூறுவதுங் காண்க. வடபுலத்தரசர் - வடுக வரசர் முதலாயினார். தொண்டை அரசு - தொண்டை நாடாளும் அரசன்; தொண்டைமான். தமிழகத்தில் முடியுடை வேந்தர் மூவரு மொழிந்த ஏனை யரசரெல்லாம் குறுநில மன்னரெனப் படுவர். படைப் பெருமையாலும் ஆரவாரத்தாலும் கடல்கள் பொங்கி வருவபோல் என்றார். வருவ என்பது தொழிற் பெயராய் நின்றது. (17) மன்னனைத் தேவி தன்னை முறையினால் வழுத்தி வாழ்த்தி நன்னர்கோ ளாகி யோகை நவின்றுவெண் மழுமா னீத்த தென்னவர் பெருமான் றேவி திருமுகக் கருணை பெற்றுப் பொன்னடி பணிந்து தம்மூர்ப் போகுவா ரினைய சொல்வார். (இ-ள்.) மன்னனைத் தேவி தன்னை - சுந்தர பாண்டியரையும் தடாதகைப் பிராட்டியாரையும், முறையினால் வழுத்தி வாழ்த்தி - முறைப்படி துதித்து வாழ்த்தி, நன்னர்கோள் ஆகி - (அவர்களால்) நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாய், ஓகை நவின்று - மகிழ்ச்சி மொழிகளைப் பேசி, வெண் மழுமான் நீத்த தென்னவர் பெருமான் தேவி திருமுகக் கருணைபெற்று - வெள்ளிய மழுவையும் மானையும் நீத்துவந்த அப் பாண்டியர் தலைவனும் பிராட்டியாருமாகிய இவர்களின் திருமுகக் கருணையைப்பெற்று, பொன் அடி பணிந்து தம்ஊர் போகுவார் - (அவர்களுடைய) பொன்போலுந் திருவடி களை வணங்கித் தத்தம் இடங்களுக்குச் செல்கின்றவர்கள், இனைய சொல்வார் - இத்தன்மையவற்றைக் கூறலுற்றார்கள் எ-று. நன்னர் - நன்கு : பண்புப் பெயர். கோள் என்பது ஆகு பெயராய்க் கொள்ளப்பட்டவர் என்னும் பொருளில் வந்தது. ஓகை - உவகை; மொழிகளுக்காயிற்று. நவிலுதல் - வினாவியும் விடுத்தும் அளவளாவுதல், பெருமான் கருணையும் தேவி கருணையும் எனக் கூட்டுக. ஊர் புகுவார்: ஏழாம் வேற்றுமையில் இயல்பாயிற்று; வாய்புகுவதனினும் என்புழிப்போல. புகுவார் வினைப் பெயர். (18) வழுதியர் பெருமான் றன்பாற் கந்தனே வந்தா னென்பார் பழுதறு கற்பி னாடன் பாக்கிய மிதுவே யென்பார் அழகினான் மதனும் பெண்மை யவாவுறு மிவன்கோ லாணை எழுகட லுலகோ வைய மேழையுங் காக்கு மென்பார். (இ-ள்.) வழுதியர் பெருமான் தன்பால் - இப்பாண்டியர் பெருமானிடத்து, கந்தனே வந்தான் என்பார் - முருகனே வந்து தோன்றினான் என்று (சிலர்) கூறுவர்; பழுது அறு கற்பினாள் தன் பாக்கியம் இதுவே என்பார் - குற்றமற்ற கற்பினையுடைய தடாதகைப் பிராட்டியாரின் புண்ணியம் இம்மகப்பேறே என்று (சிலர்) கூறுவர்; அழகினால் மதனும் பெண்மை அவாவுறும் இவன் கோல் ஆணை - கட்டழகினால் மன்மதனும் பெண்தன்மையை விரும்பற்கொத்த இக்குமாரனது செங்கோலின் ஆணையானது, எழுகடல் உலகோ - ஏழு கடலாற் சூழப்பட்ட இந்நில வுலகம் ஒன்றனை மட்டுமா காப்பது, வையம், ஏழையும் காக்கும் என்பார் - ஏழுலகங்களையும் பாதுகாக்குமென்று (சிலர் கூறுவர்) எ-று. கந்தன் - ஆறு திருவுருவமும் ஒன்றாகச் சேர்க்கப் பட்டவன். பாக்கியமே இது என ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டலுமாம். மன்மதனும் பெண்ணாகி நுகர்தற்கு விரும்பும் அழகு; “ அனங்கனுக் கவலஞ் செய்யு மண்ணல்” எனச் சிந்தாமணியும், “ ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்” எனக் கம்பராமாயணமும் கூறுவன இங்கு நோக்கற்பாலன. உலகென்பது நிலமென்னும் சிறப்புப் பொருளிலும், வைய மென்பது உலகமென்னும் பொதுப்பொருளிலும் வந்தன. (19) மனிதர்வான் றவமோ தென்பார் வைகுவோர் தவமோ வானப் புனிதர்வான் றவமோ வேள்விப் பூசுரர் தவமோ கேள்வி முனிவர்வான் றவமோ வீறு முதலிலா முதல்வ னுள்ளக் கனிதரு கருணை போலிக்காதலன் றோற்ற மென்பார். (இ-ள்.) ஈறு முதல் இலா முதல்வன் - முடிவும் முதலுமில்லாத இறைவனது, உள்ளம் கனிதரு கருணைபோல் - திருவுள்ளத்தின் கனிந்த கருணைபோலும், இ காதலன் தோற்றம் - இப்புதல்வனது அவதாரத்திற்குக் காரணம், மனிதர்வான் தவமோ - மக்களின் உயர்ந்த தவமோ, தென்பார் வைகுவோர் தவமோ - பாண்டி நாட்டிலுள்ளோர் செய்ததவமோ, வானப் புனிதர் வான் தவமோ - வானுலகத்துள்ள தூய தேவர்களின் மேலாய தவமோ, வேள்விப் பூசுரர் தவமோ - வேள்வி வேட்கும் மறையோரின் தவமோ. கேள்வி முனிவர் வான் தவமோ - கேள்வியில் வல்ல முனிவர்களின் சிறந்த தவமோ, என்பார் - என்று (பலர்) கூறுவார் எ-று. நிலவுலகிலுள்ள எல்லா மக்களும் புரிந்த தவமோ என்பார் மனிதர் வான் றவமோ என்றார். மனிதர் முதலாகக் கூறிய இவற்றுள் யாதோ என்க; இவை யெல்லாமும் காரண மாகல் வேண்டு மென்பது குறிப்பு. உள்ளக் கருணையென இயையும். தோற்றம் என்பது அதன் காரணத்திற்காயிற்று. போல் என்பது போலும் எனப்பெயரெச்சப் பொருட்டு. (20) தருமமா தவத்தின் பேறோ அருத்தமா தவத்தின் பேறோ பெருமைசால் காம நோற்ற பெருந்தவப் பேறோ வெய்தற் கருமையாம் வீடு நோற்ற வருந்தவப் பேறோ விந்தத் திருமக னென்று தம்மில் வினாய்மகிழ் சிறப்பச் சென்றார். (இ-ள்.) இந்த திருமகன் - இச்செல்வப் புதல்வனின் (தோற்றம்) தருமம் மாதவத்தின் பேறோ - அறத்தினது பெரிய தவத்தின் பயனோ, அருத்தம் மாதவத்தின் பேறோ - பொருளினது பெருந் தவத்தின் பயனோ, பெருமை சால் காமம் நோற்ற பெருந்தவப் பேறோ - பெருமை மிக்க இன்பமானது புரிந்த பெரிய தவத்தின் பயனோ, எய்தற்கு அருமையான வீடுதோற்ற அருந்தவப் பேறோ - அடைதற்கு அரிய வீடானது இயற்றிய அரிய தவத்தின் பயனோ, என்று தம்மில் வினாய் - என்று தம்முள் (ஒருவருச்கொருவர்) வினாவிக்கொண்டு, மகிழ் சிறப்ப சென்றார் - மகிழ்ச்சி மிகச் சென்றார்கள் எ-று. இத்திருமகன் உறுதிப் பயன்களாகிய அறம் முதலிய நான் கனையும் நிலவச் செய்வானென்பது கருதி அவற்றின் தவப் பேறோ என்றாரென்க. பெருமை சால் காமம் - ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஈருடம்பிற் கோருயிரனையராய்க் கூடி நுகரும் இன்பம். மேற் செய்யுளில் உரைத்தாங்கும் உரைத்துக் கொள்க. இவ்விரு செய்யுளிலும் ஓகாரங்கள் வினாப் பொருளன. வினாவி யென்பது வினாய் எனத் திரிந்தது. (21) அவ்வவர் மனைக டோறு மங்கல வணிக ளாகக் கெளவைமங் கலங்க ளார்ப்பக்1 கடிநக ரெங்கும் பொங்க நெய்விழா வெடுப்பக் கேள்வி நிரம்பிய மறையோர்க் கீந்த தெய்வமா தான நீத்தந் திரைக்கடன் மடுத்த தம்மா. (இ-ள்.) அவ்வவர் மனைகள் தோறும் - அவரவர்கள் இல்லங்கள் தோறும், மங்கல அணிகளாக - மங்கல விழாவாகக் கொள்ளுதலால், கெளவை மங்கலங்கள் ஆர்ப்ப - (யாவர் மனையிலும்) ஒலியை யுடைய மங்கல வாத்தியங்கள் முழங்கவும், கடி நகர் எங்கும் - காவலையுடைய மதுரைப்பதி முற்றும், பொங்க நெய் விழா எடுப்ப - சிறக்க எண்ணெயாட்டு விழா எடுக்கவும், கேள்வி நிரம்பிய மறையோர்க்கு ஈந்த - கேள்வியில் வல்ல அந்தணர்களுக்குக் கொடுத்த, தெய்வ மாதான நீத்தம் - தெய்வத்தன்மை பொருந்திய பெரிய தான நீரின் பெருக்கு, திரைக்கடல் மடுத்தது - அலைகளை யுடைய கடலிற் புகுந்தது எ-று. மங்கல வணிகளாகக் கொள்ளப்படுதலால் என்க. ஆர்ப்பு எனப்பாடமோதி. ஆர்ப்புப் பொங்க என முடிப்பாரு முளர். நெய்விழா - கருவுயிர்த்த பத்தாம்நாளிற் செய்யப்படும் எண்ணெ யாட்டு விழா; இதனை நெய்யணி மயக்கம் என்பர் தொல்காப்பியர்; “ புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதில் நெய்யணி மயக்கம் புரிந்தோ ணோக்கி ” என்பது காண்க; “கோமறுகு களிதூங்கச் சுண்ணமொடு மெண்ணெய் விழாக் குளிப்ப நல்கி எனப் பிராட்டியார்” திருவவதாரத்திற் கூறுதலும் நோக்குக. ஆர்ப்ப, எடுப்ப என்னும் செயவெனெச்சங்கள் ஈந்த என்னும் பெயரெச்சவினை கொண்டன. தானம் - ஈண்டுத் தானஞ் செய்தற்கு வார்த்தநீர். அம்மா : வியப்பிடைச் சொல். (22) சுண்ணமும் பொரியுந் தூவெள் ளரிசியுந் தூர்வைக் காடுந் தண்ணறுஞ் சிவிறி வீசு தண்பனி நீருஞ் சாந்தும் எண்ணெயு நானச் சேறும் பசையற வெடுத்து வாரிக் கண்ணக னகர மெங்குங் கழுவின தான வெள்ளம். (இ-ள்.) தான வெள்ளம் - அந்தத் தான நீர் வெள்ளமானது, சுண்ணமும் - (மகிழ்வாற் சிந்திய) பொற் சுண்ணத்தையும், பொரியும் - நெற் பொரியையும், தூவெள் அரிசியும் - தூய வெள்ளிய அரிசியையும், தூர்வைக் காடும் - அறுகின் குப்பையையும், சிவிறி வீசும் தண் நறும் பனி நீரும் - துருத்தியால் வீசப்பெற்ற குளிர்ந்த மணமுள்ள பனி நீரையும், தண் சாந்தும் - தட்பமுள்ள சந்தனத்தையும், எண்ணெயும் - எண்ணெயையும், நானச்சேறும் - கத்தூரிக் குழம்பையும், பசை அற வாரி எடுத்து - பசை இல்லையாக வாரியெடுத்து, கண் அகல் நகரம் எங்கும் கழுவினது - இடமகன்ற நகரம் முழுதையும் தூய்மை செய்தது எ-று. தூர்வை - அறுகம்புல். சிவிறி - துருத்தி. கழுவினது என்னும் துவ்வீறு தொக்கது. (23) செம்பொன்செய் துருத்தி தூம்பு செய்குழல் வட்டமாக அம்பொன்செய் சிவிறி வெண்பொ னண்டைகொண் டாரந் தூங்கும் வம்பஞ்சு முலையி னாரு மைந்தரு மாறி யாட அம்பஞ்சு மாறி மாறி யனங்கனு மாடல் செய்வான். (இ-ள்.) ஆரம் தூங்கும் வம்பு அஞ்சும் முலையினரும் - முத்தாரம் தொங்கி யசையும் கச்சு அஞ்சும் தனங்களையுடைய மகளிரும், மைந்தரும் - ஆடவரும், செம்பொன் செய் துருத்தி - சிவந்த பொன்னாற் செய்த துருத்தியையும், தூம்பு செய்குழல் - தொளைசெய்த குழலையும், வட்டம் ஆக அம் பொன் செய் சிவிறி - வட்டமாக அழகிய பொன்னாற் செய்த சிவிறியையும், வெண் பொன் அண்டைகொண்டு - வெள்ளியாலாகிய அண்டையையுங் கொண்டு, மாறி ஆட - ஒருவர்மே லொருவர் மாறி மாறி வீச, அனங்கனும் - மதவேளும், அம்பு அஞ்சும் மாறி மாறி ஆடல் செய்வான் - ஐந்து பாணங்களையும் (அவர்கள் மேல்) மாறி மாறி விடுவானாயினான் எ-று. துருத்தி, குழல், சிவிறி, அண்டை யென்பன நீர் வீசுங் கருவி விசேடங்கள், ஆரந் தூங்கும் முலை, அஞ்சு முலை யெனத் தனித்தனி கூட்டுக கிழித்துவிடுமென வம்பு அஞ்சு மென்க. ஐந்து அஞ்சு எனப்போலியாயிற்று. வெவ்வேறம்புகளை விடுத்தா னென்பார் ‘மாறி மாறி’ என்றார்; மகளிர் மேலும் மைந்தர்மேலும் மாறி விடுத்தான் என்னலுமாம். ஆடல் செய்தல் - போர் புரிதல். (24) இன்னணங் களிப்ப மூதூ ரிந்துவா திரைநன் னாளிற் பொன்னவன் கேந்தி ரித்த புனிதலக் கினத்திற் போந்த தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி யாதி மன்னவர்க் கியன்ற வேத மரபினால் வயங்க வாற்றி. (இ-ள்.) முது ஊர் இன்னணம் களிப்ப - பழமையாகிய மதுரைப் பதி இவ்வாறு மகிழ, இந்து ஆதிரை நல் நாளில் - திருவாதிரையோடு கூடிய திங்கட்கிழமையாகிய நல்ல நாளில், பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினத்தில் போந்த - வியாழ கேந்திரித்த தூய லக்கினத்தில் அவதரித்த, தென்னவர் பெருமான் சேய்க்கு - செழியர் பெருமானாகிய சுந்தர பாண்டியரின் திருக் குமாரருக்கு, சாதகச்செய்தி ஆதி - சாதகன்ம முதலியவற்றை, மன்னவர்க்கு இயன்ற வேதமரபினால் வயங்க ஆற்றி - அரசர் களுக்குப் பொருந்திய வேத நெறியினால் விளங்கச்செய்து எ-று. ‘இந்து வாதிரை நன்னாளிற் பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினம்’ முன்னரே பெறப்படினும், ஈண்டுச் சாதகச்செய்தி ஆற்றி யென்பதற்கேற்ப அநுவதித்தார். ஆதி வேதமென இயைத்தலுமாம். (25) கரியவெண் டிரைநீர்ச் செல்வன் கல்லிற கரிந்த வென்றித் தெரியல னுலகந் தாங்கு தெய்வத வரைக்கோ னாதித் தரியலர் வீரஞ் சிந்தத் தருக்கழிந் தச்சந் தோற்றற் குரியகா ரணத்தா னாம முக்கிர வரும னென்பார்.1 (இ-ள்.) கரிய வெள்திரை நீர்ச் செல்வன் - பெரிய வெள்ளிய அலைகளையுடைய கடற் செல்வனாகிய வருணனும், கல் இறகு அரிந்த வென்றித் தெரியலன் - மலையின் சிறைகளை அறுத்த வெற்றி மாலையைத் தரித்த இந்திரனும், உலகம் தாங்கு தெய்வத வரைக்கோன் - உலகினைத் தாங்குகின்ற தெய்வத்தன்மை பொருந்திய மேருவென்னும் மலையரசனும், ஆதி தரியலர் - முதலிய பகைவர்கள், வீரச் சிந்ததருக்கு அழிந்து அச்சம் தோற்றற்கு உரிய காரணத்தால் - தன்னைக் கண்ட பொழுதே (தங்கள்) வீரங்கெடச் செருக்கழிந்து அச்சந்தோன்றச் செய்தற்குரிய காரணத்தினால், நாமம் உக்கிர வருமன் என்பார் - பெயர் உக்கிர வருமன் என்றார்கள் எ-று. கருமை - பெருமை; கரிய செல்வன் என இயைத்தலுமாம். அரிந்த வென்னும் பெயரெச்சம் தெரியலன் என்பதன் விகுதியைக் கொண்டது. மலைகள் உலகினைத் தாங்குதலைப் பூதரம் என்னும் பெயரானுமறிக. அழிந்து என்னும் வினையெச்சம் தோன்றுதலாகிய தன் வினை கொண்டு முடியும்; அழிய வெனத் திரித்தலுமாம். மேல் ‘இந்திரன் மேருப்புத்தேள் புனலிறைக் கிடத்தோ ளாட ’ என்றதன் உரையை நோக்குக. வருமன் ஆகும் என விரிக்க. (26) நாலாகு மதியிற் சந்தி மிதிப்பது நடாத்தி யாறாம் பாலாகு மதியி லன்ன மங்கலம் பயிற்றி யாண்டின் மேலாகு மதியிற் கேச வினைமுடித் தைந்தா மாண்டில் நூலாறு தெரிந்து பூண நூற்1கடி முடித்துப் பின்னர். (இ-ள்.) நால் ஆகும் மதியில் சந்தி மிதிப்பது நடாத்தி - நான் காந் திங்களில் சந்தி மிதித்தலாகிய சடங்கினை முடித்து, ஆறாம் பால் ஆகும் மதியில் - ஆறாம் பகுதியாகிய திங்களில், அன்ன மங்கலம் பயிற்றி - சோறு ஊட்டலாகிய விழாவை நடாத்தி, ஆண்டின் மேல் ஆகும் மதியில் - ஓர் ஆண்டின் மேலாகிய திங்களில், கேசவினை முடித்து - மயிர் வினையை முடித்து, ஐந்தாம் ஆண்டில் - ஐந்தாவது ஆண்டில், நூல் ஆறு தெரிந்து பூண நூல் கடி முடித்து - மறைநெறி யுணர்ந்து (அவ்வழியே) பூண நூல் விழாவை முடித்து, பின்னர் - பின்பு எ-று. ஆண்டின் மேலாகு மதி - பதின் மூன்றாந் திங்கள். சந்தி மிதித்தல், அன்ன மங்கலம், கேச வினை, பூண நூற் கடி இவற்றை முறையே பிரவேசம், அன்னப்பிரசனம், செளளம், உபநயனம் என வடமொழியிற் கூறுவர். (27) பதநிரை பாழி சாகை யாரணம் பணைத்த வேதம் முதனிரைக் கலையும் வென்றி மூரிவிற் கலையும் வாளும் மதநிரை யொழுகு மையன் மாநிரை வையம் பாய்மா விதநிரை யேற்ற மற்று முணர்த்தினான் வியாழப் புத்தேள். (இ-ள்.) பதம் நிரை பாழி சாகை ஆரணம் பணைத்த - பத வொழுங்கும் பாழியும் சாகையும் ஆரணமும் நிரம்பிய, வேதம் முதல் நிரைகலையும் - மறைகள் முதலாக வரிசைப்பட கலைகளையும், வென்றி மூரிவில் கலையும் - வெற்றியைத் தரும் வலிய விற்றொழிலுக் குரிய கலையையும், வாளும் - வாட் பயிற்சியையும், மதம் நிரை ஒழுகும் மையல்மா ஏற்றம் - தொடர்ந்து மதநீர் ஒழுகும் மயக்கத்தையுடைய யானையின் ஏற்றத்தையும், நிரைவையம் ஏற்றம் - வரிசைப்பட்ட தேரின் ஏற்றத்தையும், விதம் நிரை பாய்மா ஏற்றம் - பலவகைப்பட்ட வரிசை யாகிய குதிரையின் ஏற்றத்தையும், மற்றும் - பிறவற்றையும், வியாழப் புத்தேள் உணர்த்தினான் - வியாழ பகவான் உணர்த்தினான் எ-று. பாழி - பதங்களை உச்சரிக்கும் முறையாகிய கனமும் சடையும். சாகை - கிளை. ஆரணம் - வேதத்தின் பகுதியாகிய பிராம்மணத்தின் ஒரு பகுதி; இச் சொல் ஆரண்யகம் என்பதன் திரிபென்றும், இப்பகுதி வனத்திற் சொல்லப் பட்டமையால் இப்பெயர் பெற்றதென்றும் கூறுப. பணைத்த - மிக்க. விற் கலை - வில் வேதம். வாள் ஏனைய படைகட்கும் உபலக்கணம். ஏற்ற மென்பதனை மையன்மா, வையம் என்பவற்றோடும் ஒட்டுக. (28) குருமுகத் தறியே வேண்டு மென்பதோர் கொள்கை யாலே ஒருமுறை கேட்டாங் கெண்ணெண் கலைகளு மொருங்கு தேறி அரனல தொருவ ராலுந் தேற்றுவ தருமை யாலப் பரனிடைத் தெளிந்தான் பாசு பதாத்திரப் படையு மன்னோ. (இ-ள்.) குருமுகத்து அறியவேண்டும் என்பது ஓர் கொள்கையாலே - (நூல்களை) ஆசான் வாயிலாக அறிந்து கொள்ளல் வேண்டு மென்னும் ஒரு கோட்பாட்டினால், ஒரு முறை கேட்டு ஆங்கு - ஒரு முறை கேட்டு அவ்வளவிலே, எண்ணெண் கலைகளும் ஒருங்கு தேறி - அறுபத்து நான்கு கலைகளையும் ஒருசேரத் தெளிந்து, அரன் அலது ஒருவராலும் தேற்றுவது அருமையால், சிவபெருமான் அல்லது வேறு யாவராலும் அறிவிப்பதற்கு அருமையால் - அப்பரனிடை பாசுபதாத்திரப் படையும் தெளிந்தான் - அம்முதல்வனிடத்துப் பாசுபதப் படைப் பயிற்சியையும் உணர்ந்தான் எ-று. முகம் - வாயில்; வழி. மெய்ந்நூற் பொருள்களைத் தாமாக அறியலுறின் பொருளல்லவற்றைப் பொருளெனத் திரிய வுணர்ந்து ஐயுற்றும் இடர்ப்படல் கூடுமாகலின் குரு முகமாக அறியவேண்டு மென்பது ஒரு கொள்கையாயிற்று. குருவாவான் அஞ்ஞானத்தை நீக்கி மெய்ஞ்ஞானத்தை உதிப்பிக்கவல்லான். குரு என்பது வியாழனுக்குச் சிறப்புப் பெயராகியதொரு நயமும் உணரற்பாலது. இயற்கையாகவே எல்லா முணர்ந்த குருபரனாகிய குமரவேளுக்குப் பிறர்பால் ஓதியுணர்வ தொன்றில்லையேனும் ஆன்றோரொழுக்கத்தைப் பாதுகாத்தலாகிய கடனை உலகினர்க்கு அறிவுறுத்தற்பொருட்டு ஒரு முறைகேட்டான் என்க. அலது, அன்றியென்னும் பொருட்டு. பாசுபதம் - பசுபதியாகிய சிவனுக்குரியது. மன்னும் ஓவும் அசைகள். (29) எல்லையில் கலைக ளெல்லா மகவைநா லிரண்டின் முற்றத் தொல்லறி வுடையா னாகிக் குரவரைத் தொழுது போற்ற வல்லவ னாகி யன்னார் மகிழ்ச்சிகொள் கலனாய் வென்றிச் செல்வவேற் றிளைஞ ரோடுந் திருவிளை யாடல் செய்வான். (இ-ள்.) எல்லை இல் கலைகள் எல்லாம் அகவை நாலிரண்டில் முற்ற - அளவிறந்த கலைகள் அனைத்தும் எட்டுவயதிலே நிரம்ப, தொல் அறிவு உடையான் ஆகி - பழைய முற்றுணர்வுடையவனாகியும், குரவரைத் தொழுது போற்ற வல்லவனாகி - இரு முதுகுரவரையும் வணங்கி வாழ்த்த வல்லுநனாகியும், அன்னார் மகிழ்ச்சி கொள் கலனாய் - அவர்கள் மகிழ்ச்சிகொள்ளும் பாத்திரமாகியும், வென்றிச் செல்வ ஏறு இளைஞரோடும் திருவிளையாடல் செய்வான் - வெற்றிச் செல்வத்தையுடைய ஆண் சிங்கம் போன்ற இளைஞர் களோடும் (சென்று) திருவிளையாடல் செய்வானாயினன் எ-று. தகுதியுடையானைப் பாத்திரம் என்பவாகலின் ‘கலனாய்’ என்றார்; அணிகலனாய் என்னலுமாம். “ நன்கலன் நன்மக்கட் பேறு” என்பதும் நோக்குக. வென்றியையும் செல்வத்தையுமுடைய என்றும், வேற்றிளைஞரோடும் என்றும் கூறலுமாகும். (30) புகர்மத வேழ முட்டிப்1 போர்விளை யாடி வென்றுந் தகரொடு தகரைத் தாக்கித்த தருக்கம ராடி வென்றும் வகிர்படு குருதிச் சூட்டு வாரண மாடி வென்றுந் நகைமணிப் பலகை செம்பொ னான்குறுப் பாடி வென்றும். (இ-ள்.) புகர் மத வேழம் முட்டிப் போர்விளையாடிவென்றும்- புள்ளிகளையுடைய முகத்தையும் மதத்தையுமுடைய யானை களைப் பொருத்திப் போர்செய்வித்து வெற்றி பெற்றும், தகரொடு தகரைத் தாக்கி தருக்கு அமர் ஆடிவென்றும் - ஆட்டுக் கிடாய்களோடு ஆட்டுக்கிடாய்களைப் பொருத்திச் செருக்குடன் போர்புரிவித்து வெற்றியடைந்தும், வகிர்படு குருதிச் சூட்டு வாரணம் ஆடிவென்றும் - பிளவுபட்ட உதிரம்போலும் செந்நிறம் வாய்ந்த உச்சிக் கொண்டையை யுடைய சேவல்களைப் போர் செய்வித்து வெற்றிபெற்றும், நகைமணிப் பலகை - ஒளியினையுடைய மணிகள் அழுத்திய பலகை வரையிலுள்ள, செம்பொன் நான்கு உறுப்பு ஆடி வென்றும் - சிவந்த பொன்னாற் செய்த தேரும் யானையும் குதிரையும் காலாளுமாகிய நான்கு உறுப்புக்களாற் பொருது வெற்றியடைந்தும் எ-று. ஆடுவித்தலை ஆடி யென்றார்; அவற்றின் வெற்றியும் தோல்வியும் செய்விப்போர் மேலவாகலின் முட்டுவித்து தாக்குவித்து என்பன, முட்டி தாக்கியென நின்றன. வாரணமென்னும் பலபொருளொருசொல் குருதிச் சூட்டு என்னுங் குறிப்பால் சேவலையுணர்த்திற்று. நான்குறுப்பு - சதுரங்கம். (31) காற்றினுங் கடிய மாவிற் காவதம் பலபோய் மீண்டும் கூற்றினுங் கொடிய சீற்றக் குஞ்சர முகைத்தும் வையை யாற்றினுய் யானத் தாவி யகத்தினு ளின்பந் துய்த்தும் வேற்றிறன் மைந்த ரோடு மல்லமர் விளைத்து வென்றும். (இ-ள்.) காற்றினும் கடியமாவில் காவதம் பலபோய் மீண்டும்- காற்றைக் காட்டினும் விரைந்த செலவினையுடைய குதிரையிலேறிப் பலகாத வழி சென்று திரும்பியும், கூற்றினும் கொடிய சீற்றக்குஞ்சரம் உகைத்தும் - கூற்றுவனிலும் கொடிய சினத்தையுடைய யானையைச் செலுத்தியும், வையையாற்றின் உய்யானத்து ஆவிஅகத்தினுள் இன்பம் துய்த்தும் - வையை நதியிலும் பூங்காவிலும் பொய்கை யிடத்தும் இன்பம் நுகர்ந்தும், வேல் திறல் மைந்தரோடுமல் அமர் விளைத்து வென்றும் - வேற்படையையுடைய வலிய இளைஞர் களோடு மற்போர் புரிந்து வெற்றி பெற்றும் எ-று. ஆவி - பொய்கை; இயந்திரவாவியுமாம். யாற்றிலும் பொய்கை யிலும் நீராடல் முதலியவற்றாலும், உய்யானத்தில் மலர்கொய்தல் முதலியவற்றாலும் இன்பந் துய்த்தென்க; உருபும். உம்மையும் விரிக்க. அகத்தினுள், இன் : சாரியை. (32) சந்தவெற் படைந்து வேட்டஞ் செய்துமச் சைல வாழ்க்கை அந்தண ராசி கூற வவர்தொழில் வினாயு மன்னார் கந்தமென் கனிவி ருத்தூண்1 கைதழீஇக் களித்து மீண்டும் இந்தவா றைம்மூ வாண்டு கழியமேலெய்து மாண்டில். (இ-ள்.) சந்தவெற்பு அடைந்து வேட்டம் செய்தும் - சந்தன மரங்களையுடைய பொதியின் மலையைச் சார்ந்து வேட்டை யாடியும், அசைல வாழ்க்கை அந்தணர் ஆசிகூற - அம் மலையில் வாழ்தலையுடைய முனிவர்கள் வாழ்த்துக் கூற, அவர் தொழில் வினாயும் - அவர் தவத்தொழில் (முட்டின்றி முடிதலை) வினவியும், அன்னார் கந்தம் மென்கனி விருத்து ஊண் கைதழீஇ களித்து மீண்டும் - அம்முனிவர் (மகிழ்ந்தளிக்கும்) கிழங்கும் மெல்லிய பழமும் ஆகிய விருந்துணவைக் கைக்கொண்டு மகிழ்ந்து திரும்பியும், இந்தவாறு ஐம்மூவாண்டு கழிய - இவ்வாறாகப் பதினைந்து ஆண்டுகள் செல்ல, மேல் எய்தும் ஆண்டில் - பதினாறாம் ஆண்டின்கண் எ-று. சைலம் - மலை; சிலையாலாயது. அந்தணர் - துறவோர்; “அந்தண ரென்போ ரறவோர்” என்பது திருவள்ளுவப் பயன். தொழில் - தவத் தொழிலின் நடைபேறு. வினாவி தழுவியென்பன வினாய் தழீஇ எனத் திரிந்தன. விருந்து விருத்து என வலித்தல் விகாரமாயிற்று. பதினைந்தின்மேலெய்தும் ஆண்டாவது பதினாறாம் ஆண்டு. (33) சூர்முத றடிந்த தங்க டோன்றலே யிவனென் றெண்ணிக் கார்முக மயிலும் வேலுங் கைவிடாக் காக்கு1 மாபோல் வார்முக முலையி னாரும் வடிக்கணு மருங்கு மொய்ப்பக் கூர்முக வேலா னின்ன கொள்கைய னாகத் தாதை. (இ-ள்.) சூர் முதல் தடிந்த தங்கள் தோன்றலே இவனென்று எண்ணி - சூரபன்மனாகிய மாமரத்தின் அடியைத் துணித்த தங்கள் தலைவனாகிய முருகக்கடவுளே இவனென்று கருதி, கார்முக மயிலும் வேலும் கைவிடாக் காக்குமாபோல் - கரிய முகமுள்ள மயிலும் வேற்படையும் நீங்காது காக்கின்ற தன்மைபோல, வார்முக முலையினாரும் - கச்சணிந்த இடத்தினையுடைய கொங்கைகளையுடைய மகளிரும், வடிக்கணும் - (அவர்) மாவடுவின் பிளவையொத்த கண்களும், மருங்கு மொய்ப்ப - பக்கத்தே சூழ, கூர்முக வேலான் இன்ன கொள்கையனாக- கூரிய முனைபொருந்திய வேற்படையையுடைய உக்கிரவழுதி இத்தன்மை யுடையராக, தாதை - தந்தையாகிய சுந்தரபாண்டியர் எ-று. “ சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேல் ” என்பது திருமுருகாற்றுப்படை. மேகத்தை விரும்புதலையுடைய மயில் என்னலுமாம்; இப்பொருட்கு முக என்பது முகத்தல் என்பதன் முதனிலை. விடா : ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். காக்குமா: விகாரம். (34) பங்கயச் செவ்வித் தாகிக் கண்மனம் பருகு காந்தி அங்கழற் காலுஞ் சொன்ன வடைவினிற் றிரண்டு நீண்ட சங்கையும் வட்டந் தோன்றாச் செழுமுழந் தாளு நால்வாய்த் துங்கவீர்ங் கவுண்மால் யானைத் துதிக்கைபோற் றிரள்க வானும். (இ-ள்.) பங்கயச் செவ்வித்து ஆகி - தாமரை மலர்போலும் அழகினையுடையதாய், கண் மனம் பருகு காந்தி அம் கழல் காலும் - (கண்டவர்) கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒளியையுடைய அழகிய வீரகண்டையணிந்த அடியையும், சொன்ன அடைவினில் திரண்டு நீண்ட சங்கையும் - (உறுப்பிலக்கண நூலில்) கூறியமுறைப்படி திரண்டு நீண்ட கணைக்காலையும், வட்டம் தோன்றாச் செழு முழம் தாளும் - என்பின் வட்டவடிவு தோன்றாது தசைந்த முழங்காலையும், நால்வாய் - தொங்கிய வாயும், துங்க ஈர்ங்கவுள் - உயர்ந்த குளிர்ந்த கபோலமும் உடைய, மால்யானைத் துதிக்கைபோல் - மதமயக்கத்தையுடைய யானையின் துதிக்கை போல, திரள்கவானும் - திரண்ட தொடையையும் எ-று. சங்கை - கணைக்கால்; இது சங்கு எனவும் படும். ஈர்ங்கவுள் - மதத்தால் நனைந்த ஈரிய கவுள். (35) சிறுகிய வயிறுந் தாழ்ந்த நாபியுஞ் செவ்வி நோக்கும் மறுவில்கண் ணடியி னன்ன கடியகல் வரைகொண் மார்பும் எறியிசை வீணைத் தண்டி னிணைந்தநீண் டிழிந்த கையும் வெறியதார் கிடந்த மேரு வெற்பிரண் டனைய தோளும். (இ-ள்.) சிறுகிய வயிறும் - சிறுத்த வயிற்றினையும், தாழ்ந்த நாபியும் - ஆழ்ந்த உந்தியையும், செவ்வி நோக்கும் - அழகைப் பார்த் தற்குக் கருவியாகிய, மறு இல் கண்ணடியின் அன்ன - குற்றமில்லாத கண்ணாடியை ஒத்த, கடி - விளக்கத்தையுடைய, வரைகொள் அகல் மார்பும் - மூன்று வரிகளைக் கொண்ட அகன்ற மார்பினையும், எறிஇசை வீணைத் தண்டின் - வருடுதலால் இசை எழுகின்ற வீணையினது கோல்போல, இணைந்து நீண்டு இழிந்த கையும் - தம்மு ளொத்து நீண்டு (முழந்தாளளவும்) தாழ்ந்த கைகளையும், வெறிய தார்கிடந்த - மணத்தினையுடைய மாலைதங்கிய, மேரு வெற்பு இரண்டு அனைய தோளும் - இரண்டு மேருமலையை ஒத்த தோள்களையும் எ-று. கண்ணடியின், இன் : சாரியை. வரை - மார்பின்கண்ணுள்ள உத்தம விலக்கணமாகிய மூன்றுவரிகள்; “ ஆரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற் செம்பொறி வாங்கிய மொய்ம்பின் ” என்று திருமுருகாற்றுப்படையிலும், “ வரையகன் மார்பிடை வரியு மூன்றுள ” என்று சிந்தாமணியிலும் கூறப்படுதல் காண்க; மலையையொத்த என்றுமாம். வெறி - மணம்; வெறிய: குறிப்புப் பெயரெச்சம். (36) வலம்புரி யென்ன வாய்ந்த கண்டமு மலராண் மன்னும் பொலம்புரி கமல மன்ன வதனமும் பொதுவா னோக்கி நிலம்புரி தவப்பே றன்னான் வடிவெலா நின்று நின்று நலம்புரி நூலா னோக்கிச் சோதிப்பா னடிக்க வல்லான். (இ-ள்.) வலம்புரி என்ன வாய்ந்த கண்டமும் - வலம்புரிச் சங்கினைப்போல அமைந்த கழுத்தையும், மலராள் மன்னும் பொலம் புரி கமலம் அன்ன வதனமும் - திருமகள் வதியும் பொன்னாற் செய்த தாமரை மலரையொத்த முகத்தையும், நடிக்க வல்லான் - திருக்கூத்தாட வல்லனாகிய சுந்தரபாண்டியன், பொதுவால் நோக்கி - (முன்) பொதுவகையாற் பார்த்துப் (பின்), நிலம்புரி தவப்பேறு அன்னான் வடிவு எலாம் - நிலவுலகத்தார் செய்த தவப்பயனை ஒத்த அவ்வுக்கிரவழுதியினது உறுப்புக்களனைத்தையும், நலம்புரி நூலால் நின்று நின்று நோக்கிச் சோதிப்பான் - அழகினைச் சொல்லுகின்ற நூலிற் கூறிய முறைப்படி உற்றுற்று நோக்கிச் சோதிப்பானாயினான். எ-று. நிலம் - நிலமகளுமாம். நலம்புரிநூல் - சாமுத்திரிகை நூல். (37) உன்னத மாறு நீண்ட வுறுப்பைந்து சூக்கந் தானும் அன்னது குறுக்க நான்கா மகலுறுப் பிரண்டே ழாகச் சொன்னது சிவப்பு மூன்று கம்பீரந் தொகுத்த வாறே இன்னவை விரிக்கி லெண்ணான் கிலக்கண வுறுப்பா மென்ப. (இ-ள்.) உன்னதம் ஆறு - உயர்ந்த உறுப்புக்கள் ஆறும், நீண்ட உறுப்பு ஐந்து - நீண்ட உறுப்புக்கள் ஐந்தும், சூக்கம் தானும் அன்னது - சிறுகிய உறுப்புகள் ஐந்தும், குறுக்கம் ஆம் நான்கு - குறுக்க மாகிய உறுப்புக்கள் நான்கும், அகல் உறுப்பு இரண்டு - அகன்ற உறுப்புக்கள் இரண்டும், சொன்னது சிவப்பு ஏழு - நூலிற் கூறிய சிவந்த உறுப்புக்கள் ஏழும், கம்பீரம் மூன்று - ஆழ்ந்த உறுப்புக்கள் மூன்றும், ஆக எண் நான்கு உறுப்பு இலக்கணம் என்ப - ஆக முப்பத் திரண்டு உறுப்புக்கள் இலக்கண முடையன என்று பெரியோர் கூறுவார்; தொகுத்தவாறே - (இங்ஙனம்) தொகுத்துக் கூறிய முறையே, இன்னவை விரிக்கின் - இவற்றை விரித்துக் கூறுங்கால் எ-று. அன்னது - அத்தொகையினது தான் ஆம் என்பன - அசைகள். (38) வயிறுதோ ணெற்றி நாசி மார்புகை யடியிவ் வாறும் உயரில்வான் செல்வ னாகு மொளிகவர் கண்க போலம் புயல்புரை வள்ளற் செங்கை புதுமணங் கவருந் துண்டம் வியன்முலை நடுமார் பைந்து நீண்டவேல் விளைக்கு நன்மை. (இ-ள்.) வயிறு தோற் நெற்றி நாசி மார்பு கைஅடி இவ்வாறும் உயரில் - வயிறும் தோளும் நெற்றியும் மூக்கும் மார்பும் கையினடி யுமாகிய இந்த ஆறு உறுப்புக்களும் உயர்ந்திருந்தால், வான் செல்வன் ஆகும் - சிறந்த செல்வமுடையவனாவான்; ஒளி கவர் கண் கபோலம் - ஒளியைக்கொள்கின்ற கண்ணும் கபோலமும், புயல் புரை வள்ளல் செங்கை - முகிலை ஒத்த வண்மையையுடைய சிவந்த கையும், புதுமணம் கவரும் துண்டம் - புதிய மணத்தினை நுகரும் மூக்கும், முலைநடு வியன்மார்பு ஐந்தும் - முலையின் நடுவிலுள்ள பரந்த மார்பும் ஆகிய ஐந்து உறுப்புக்களும், நீண்டவேல் நன்மை விளைக்கும் - நீண்டுள்ளனவாயின் (அவை) நன்மையைக் கொடுக்கும் எ-று. வள்ளல் என்றது ஈண்டு வண்மையை யுணர்த்திற்று. நாசி யென்றது மூக்கின் அடியை யெனவும், துண்டம் என்றது மூக்கின் முனையை யெனவும் கொள்க. (39) நறியபூங் குஞ்சி தொக்கு விரற்கணு நகம்பல் லைந்துஞ் சிறியவே லாயுள் கோசஞ் சங்கைநா முதுகிந் நான்குங் குறியவேற் பாக்கி யப்பே றாஞ்சிரங் குளமென் றாய்ந்தோர் அறியுமிவ் வுறுப்பி ரண்டு மகன்றவே லதுவு நன்றாம். (இ-ள்.) நறிய பூங்குஞ்சி - நன்மணங் கமழும் மலரையணிந்த சிகையும், தொக்கு - தோலும், விரல்கணு - விரலின்கணுவும், நகம்- நகமும், பல் - பல்லும், ஐந்தும் சிறிய வேல் ஆயுள் - ஆகிய ஐந்துறுப்பு களும் சிறுகியவாயின் ஆயுள் (மிகும்); கோசம் சங்கை நா முதுகுஇ நான்கும் - ஆண்குறியும் கணைக்காலும் நாவும் முதுகும் ஆகீய இந்நான் குறுப்புக்களும், குறியவேல் பாக்கியப் பேறு ஆம் - குறுகிய வாயின் செல்வப்பயன் ஆகும்; ஆய்ந்தோர் அறியும் சிரம் குளம் என்று இவ்வுறுப்பு இரண்டும் அகன்றவேல் - தெளிந்தோர் அறியும் தலையும் நெற்றியும் ஆகிய இவ்விரண்டுறுப்புகளும் அகன்றன வாயின், அதுநன்றாம் - அவ்வகற்சியும் நன்மையாகும் எ-று. ஆய்ந்தோர் - நூல்களை ஆராயந்தோர். குளம் - நெற்றி. அதுவும், உம் : அசை. (40) அகவடி யங்கை நாட்டக் கடையித ழண்ண நாக்கு நகமிவை யேழுஞ் சேந்த நன்மையாற் பெறுமா வின்பம் இகல்வலி யோசை நாபி யென்றிவை மூன்று மாழ்ந்த தகைமையா லெவர்க்கு மேலா நன்மைசா றக்கோ னென்னா. (இ-ள்.) அக அடி அங்கை நாட்டக் கடை இதழ் அண்ணம் நாக்கு நகம் இவை ஏழும் - உள்ளங்காலும் உள்ளங்கையும் கடைக் கண்ணும் உதடும் மேல்வாயும் நாவும் நகமும் ஆகிய இவ்வேழுறுப் புக்களும், சேந்த நன்மையால் மா இன்பம் பெறும் - சிவந்திருக்கும் நன்மையினாலே பெரிய இன்பத்தை அடைவான் : இகல் வலிஓசை நாபி என்ற இவை மூன்றும் - மிக்க வலியும் ஓசையும் கொப்பூழும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும், ஆழ்ந்த தகைமையால் - ஆழ்ந்திருக்குந் தகுதியாலே, எவர்க்கும் மேலாம் நன்மை சால் தக்கோன் - யாவருக்கும் மேலாகிய நலம் நிறைந்த தக்கோனாவன்; என்னா - என்று கருதி எ-று. அங்கை - அகங்கை; “ அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை யின்றே ஆசிரியற்க மெல்லெழுத்து மிகுத லாவயி னான” என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். சேந்த, சிவந்த என்பதன் மரூஉ. வலிக்குத் திட்பமும், ஓசைக்குக் கம்பீரமும் ஆழமாமென்க. (41) எல்லையின் மூர்த்தி மைந்த னிலக்கண நிறைவி னோடு நல்லவாங் குணனு நோக்கிப் பொதுவற ஞாலங் காக்க வல்லவ னாகி வாழ்நாண னிபெற வல்ல னென்னா அல்லணி மிடற்றான் பின்னு மனத்தினா லளந்து சூழும். (இ-ள்.) எல்லை இல் மூர்த்தி - (அளவைகளால்) அளந்தறியப் படாத இறைவனாகிய, அல் அணி மிடற்றான் - (நஞ்சினால்) இருள்போன்ற அழகிய திருமிடற்றையுடைய சிவபெருமாள், மைந்தன் இலக்கண நிறைவினோடு - புதல்வனுடைய நிறைந்த இலக்கணத்துடன், நல்லவாம் குணனும் நோக்கி - நல்லனவாகிய குணங்களையும் ஆராய்ந்தறிந்து, பொது அற ஞாலம் காக்க வல்லவனாகி - பிறர்க்குப் பொதுவின்றாக உலகத்தைப் புரப்பதற்கு வன்மையுடையவனாகி, வாழ் நாள் நனிபெற வல்லன் என்னா - வாழ்நாளை மிகப் பெறவும் வல்லனாவன் என்று கருதி, பின்னும் - மேலும், மனத்தினால் அளந்து சூழும் - மனத்தினால் அளவிட்டு ஆலோசிக்கின்றார் எ-று. எல்லையில் மூர்த்தி - வரம்புபடாத வியாபகவுருவினன் என்னலுமாம். பெறவும் என எச்சவும்மை விரிக்க. அல்லினை அணிந்த என்றுமாம்; அணியென்பதனை உவமவுருபாக்கலு மொன்று. (42) இத்தகு பண்பு சான்ற நீர்மையா லிசைமை நீதி வித்தக நல்ல வுள்ள முடைமைமெய் வீறு தெய்வ பத்திமை யுலகுக் கெல்லா மகிழ்ச்சிசெய் பண்பு சாந்த சித்தமெவ் வுயிர்க்கு மன்பு செய்கைநல் லீகை கல்வி. (இ-ள்.) இத்தகு பண்பு சான்ற நீர்மையால் - இந்தத் தகுதியாய குணங்கள் நிறைந்த இயல்பினால், இசைமை - புகழும், நீதி - நீதியும், வித்தகம் - சதுரப்பாடும், நல்ல உள்ளம் உடைமை - நன்மன முடைமையும், மெய்வீறு தெய்வபத்திமை - மெய்மை மிக்க பரசிவ பத்தியும், உலகுக்கு எல்லாம் மகிழ்ச்சிசெய் பண்பு - உலக முழுதுக்கும் மகிழ்ச்சி விளைக்கும் தன்மையும், சாந்த சித்தம் - அசைவிலாத சிந்தையும், எவ்வுயிர்க்கும் அன்பு செய்கை - எல்லா வுயிர்கள்மேலும் அருள் செய்தலும், நல் ஈகை - நல்ல வண்மையும், கல்வி - கல்வியும் எ-று. நீர்மை, இசைமை, பத்திமை யென்பவற்றில் மை பகுதிப்பொருள் விகுதி. மெய் வீறு தெய்வபத்திமை - மெய்ம்மையும் பெருமையும் தெய்வபத்தியும் என்றுரைத்தலுமாம். சாந்த சித்தம் - திரையற்ற நீர்போல் அமைந்த சிந்தை. அருளும் அன்பும் வேற்றுமையின்றியும் வழங்கும். (43) வெல்லுதற் கரியார் தம்மை வெல்லுத றேவராலுஞ் செல்லுதற் கரிய தேத்துஞ் சென்றிடு திறையுங் கோடல் புல்லுதற் கரிய ஞால மாலைபோற் புயத்தி லேந்திச் சொல்லுதற் கரிய வீர1 முலகெலாஞ் சுமப்ப வைத்தல். (இ-ள்.) வெல்லுதற்கு அரியார் தம்மை வெல்லுதல் - யாவராலும் வெல்ல வொண்ணாதவரை வெல்லுதலும், தேவ ராலும் செல்லுதற்கு அரிய தேத்தும் சென்று - அமரர்களாலும் செல்லமுடியாத தேயங்களினுஞ் சென்று ( அத்தேயத்தாரை வென்று), இடுதிறையும் கோடல் - அவரால் அளக்கப்பட்ட திறையையும் கைக் கொள்ளலும், புல்லுதற்கு அரிய ஞாலம் - (யாவராலும் ஒரு சேர) அடைதற் கரிய உலகத்தினை, மாலைபோல் புயத்தில் ஏந்தி - பூமாலையைப்போல் தோளிற் றாங்கி, சொல்லு தற்கு அரிய வீரம் உலகு எலாம் சுமப்ப வைத்தல் - சொல்லுதற் கொண்ணாத (தனது) ஆணையை உலகத்தாரனைவரும் சுமக்குமாறு வைத்தலும் எ-று. தேம் என்னும் இடப்பெயர் அத்துச் சாரியை பெற்று மகர வீறும் சாரியை அகரமும் கெட்டுத் தேத்து என்றாயது. எளிதினேந்தி யென்பார். ‘மாலைபோல் ஏந்தி’ என்றார். வீரம் என்றது ஈண்டு ஆணையை. இவ்விருசெய்யுளிலும் எண்ணும்மைகள் விரிக்க. (44) என்றிவை யாதி யாய வியற்குண முடைய னாகி நன்றிசெய் துலகுக் கெல்லா நாயக னொருவ னாகி நின்றிடு மிவற்குப் பின்னர் நீண்முடி கவித்து முன்னர் மன்றல்செய் கென்று சூழ்ந்து மதிஞரோ டுசாவி னானே. (இ-ள்.) என்று இவை ஆதியாய இயல் குணம் உடையனாகி - என்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கைக் குணங்கள் உடையவனாகி, உலகுக்கு எல்லாம் நன்றி செய்து - உலக முழுதிற்கும் நன்மை புரிந்து, நாயகன் ஒருவனாகி நின்றிடும் - ஒரே தலைவனாகி நிற்பான்; இவற்கு - (இங்ஙனமாய) இவனுக்கு, நீண்முடி பின்னர் கவித்தும் - பெரிய மகுடத்தினைப் பின்பு சூட்டுவோம்; முன்னர் மன்றல் செய்க என்று சூழ்ந்து - முதற்கண் திருமணம் செய்யப் பெறுக என்று ஆலோசித்து, மதிஞரோடு உசாவினான் - அமைச்ச ரோடும் ஆராய்ந்தார் எ-று. என்ற செய்க என்பவற்றின் அகரம் தொக்கது. என்று என்பதனை எண்ணிடைச் சொல்லெனக் கொண்டு மேல் எண்ணிய எல்லா வற்றோடும் கூட்டலுமாம். கவித்தும்: தன்மைப் பன்மை. செயப் படுகவென்பது செய்கவென நின்றது; செய்கும் என்பது விகார மாயிற்றெனலுமாம். மதிஞர் - மதி நுட்பம் நூலோடுடைய அமைச்சர். (45) ஆகச் செய்யுள் - 965. உக்கிரபாண்டியருக்கு வேல்வளைசெண்டு கொடுத்த படலம் (அறுசீரடி யாசிரிய விருத்தம்) உருக்குந் திறலுக் கிரவழுதி யுதய மிதுவான் மதியுநதிப் பெருக்குங் கரந்த சடைக்கற்றைப் பெருந்தேர்ச் செழியர் பிரானவற்குச் செருக்குஞ் செல்வ மணமுடித்துச் செவ்வேல் வளைசெண் டளித்துள்ளந் தருக்கு முடிதந் தரசுரிமை தந்த செயலுஞ் சாற்றுவாம். (இ-ள்.) உருக்கும் திறல் உக்கிர வழுதி உதயம் இது - (பகை வரைக்) கெடுக்கும் வலியுடைய உக்கிரகுமார பாண்டியனது திருவவதாரமாகிய திருவிளையாடல் இதுவாகும்; வால் மதியும் நதிப் பெருக்கும் கற்றைச் சடை கரந்த - வெள்ளிய சந்திரனையும் கங்கையாற்றின் பெருக்கையும் திரண்ட சடையையும் மறைத் தருளிய, பெருந் தேர்ச் செழியர் பிரான் - பெரிய தேரினையுடைய தென்னர் பெருமானாகிய சுந்தரபாண்டியர், அவற்கு - அவ்வுக்கிர வழுதிக்கு, செருக்கும் செல்வ மணம் முடித்து - களிப்பிற்குரிய திருமண முடித்து, செவ்வேல் வளைசெண்டு அளித்து - சிவந்த வேற்படையையும் வளையையும் செண்டையும் கொடுத்து, உள்ளம் தருக்கும் முடி தந்து - மனங் களிப்பதற் கேதுவாகிய திரு முடி சூட்டி, அரசு உரிமை தந்த செயலும் சாற்றுவாம் - அரச வுரிமையும் கொடுத்தருளிய திருவிளையாடலையும் கூறுவாம் எ-று. உருக்கும் - புவியிலுள்ளாரை அன்பால் உருகச் செய்யும் என்றுமாம்; ‘மண் கனிப்பான்’ என்னும் சிந்தாமணித் தொடர்க்குக் ‘குழவிப் பருவத்தாலும் அரச நீதியாலும் வீடுபேற்றாலும் மண்ணை யுருக்கு மவன்’என்று நச்சினார்க்கினியர் கூறியவுரை இங்கு நோக்கற்பாலது. வான்மதி - வானிலுள்ள மதி யென்றுமாம். இது வால் எனப் பிரித்து, ஆல் அசை யெனினும் பொருந்தும் மதியும் நதியும் கரந்த சடையை யுடைய சிவன் என்று கொண்டு, சிவபெருமானாகிய செழியற்கு என்றுரைத்தலுமாம். பெருந்தேர் - மகாரதம். குருதி தோய்வேலென்பார் ‘செவ்வேல்’ என்றார். உரிமையும் என உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. (1) வையைக் கிழவன் றன்னருமைக் குமரன் றனக்கு மணம்புணர்ச்சி செய்யக் கருதுந் திறனோக்கி யறிஞ ரோடுந் திரண்டமைச்சர் மையற் றழியா நிலத்திருவு மரபுங் குடியும் புகழ்மையுநம் ஐயற் கிசையத் தக்ககுலத் தரசர் யாரென் றளக்கின்றார். (இ-ள்.) வையைக் கிழவன் - வையை யாற்றுக் குரியனாகிய சுந்தரபாண்டியன், தன் அருமைக் குமரன் தனக்கு - தன் அருமைப் புதல்வனுக்கு, மணம் புணர்ச்சி செய்யக் கருதும் திறன் நோக்கி - திருமண முடிக்கக் கருதிய தன்மையை நோக்கி, அமைச்சர் அறிஞ ரோடும் திரண்டு - மந்திரிகள் மூதறிஞரோடும் கூடி, மை அற்று - குற்றமற்று, அழியா நிலத்திருவும் - அழியாத நிலச் செல்வமும், மரபும் குடியும் புகழ்மையும் - மரபும் குடிப்பிறப்பும் புகழும் ஆகிய இவற்றால், நம் ஐயற்கு இசையத் தக்க குலத்து அரசர் - நம் இறைவனுக்குப் பொருந்தத் தக்க குலத்தினையு முடைய மன்னர், யார் என்று அளக்கின்றார் - யாவர் என்று ஆராய்கின்றார் எ-று. நதிகளை மகளிராக்கி அரசர்களை வையைக் கிழவன், காவிரிக் கிழவன் என்றிங்ஙனம் கூறுதல் மரபு; “ கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி” என்னும் ஆற்றுவரியுங் காண்க. அரச குமாரர்க்கு மணம்புரிதல். முடிசூட்டுதல் முதலியவற்றை அமைச்சரும் நகரத்து மாசனங்களும். உள்ளிட்டாருடன் கலந்து சூழ்ந்து முடிப்பது பண்டு தொட்டுள்ள வழக்கமாகும். அற்று என்னும் வினையெச்சம் அழியா என்பதன் விகுதி கொண்டு முடியும்; இசையத் தக்க என்பதனோடு இயைத்தலுமாம். மரபு - திங்கள் மரபு, பரிதி மரபு என்றாற் போல்வன. ஆலுருபு விரித்துக் கொள்க. அளத்தல் - அறிவான் ஒத்துப் பார்த்தல். (2) தீந்தண் புனல்சூழ் வடபுலத்து மணவூ ரென்னுந் திருநகர்க்கு வேந்தன் பரிதி திருமரபின் விளங்குஞ் சோம சேகரனென் றாய்ந்த கேள்வி யவனிடத்துத் திருமா தென்ன வவதரித்த காந்தி மதியை மணம்பேச விருந்தா ரற்றைக் கனையிருள்வாய். (இ-ள்.) (ஆராய்ந்த வழி எல்லா வகையாலும் ஒத்தவன்), தீந்தண் புனல் சூழ் வட புலத்து மணவூர் என்னும் திரு நகர்க்கு வேந்தன் - இனிய தண்ணிய நீரால் சூழப்பட்ட வடக்கண் உள்ள கல்யாண புரம் என்னும் அழகிய நகரத்துக்கு மன்னனாகிய, பரிதி திருமரபின் விளங்கும் சோம சேகரன் என்று - சூரியனது திருக் குலத்தில் வந்து விளங்கா நின்ற சோமசேகரனென்னும் அரசனா வான் என்று கருதி, ஆய்ந்த கேள்வி அவனிடத்து - ஆராய்ந்த கேள்வியினையுடைய அம்மன்னனிடத்து, திருமாது என்ன அவதரித்த காந்தி மதியை மணம் பேச இருந்தார் - திருமகளைப் போல அவதரித்திருந்த காந்திமதியை மணம் பேசக் கருதி யிருந்தார்கள்; அற்றைக் கனை இருள்வாய் - அன்று செறிந்த இருளை யுடைய நள்ளிரவில் எ-று. வேந்தனாகிய சோமசேகரனென்று கருதி யென விரிக்க. திருமாது - திருவாகிய மாது. கனைதல் - செறிதல். வடி வணங்கு என்று பெயர் கூறுவர் பெரும்பற்றப் புலியூர் நம்பி. (3) வெள்ளைக் களிற்றின் பிடர்சுமந்த குடுமிக் கோயின் மேயவிளம் பிள்ளைக் கதிர்வெண் மதிமெளலிப் பெருமா னிரவி மருமானாம் வள்ளற் கரத்தான் கனவிலெழுந் தருளி வானோர் நனவிற்குங் கள்ளத் துருவாந் திருமேனி காட்டி யிதனை விளம்புவார். (இ-ள்.) வெள்ளைக் களிற்றின் பிடர் சுமந்த குடுமிக்கோயில் - வெள்ளை யானையின் பிடர் சுமந்த சிகரத்தை யுடைய திருக்கோயிலில், மேய - வீற்றிருந்த, இளம்பிள்ளை - இளங் குழவியாகிய, வெள் கதிர் மதி - வெள்ளிய ஒளியை யுடைய சந்திரனையணிந்த, மெளலிப் பெருமான் - சடையை யுடைய சோமசுந்தரக் கடவுள், இரவி மருமான் ஆம் வள்ளல் கரத்தான் - சூரியன் வழித்தோன்றலாகிய வள்ளன்மையை யுடைய கையையுடைய சோமசேகரனது, கனவில் எழுந்தருளி - கனவின்கண் எழுந்தருளி, வானோர் நனவிற்கும் கள்ளத்து உருவாம் திருமேனி காட்டி - தேவர்கள் நனவிற்கும் கிட்டாது மறையும் திருவுருவமாகிய திருமேனியைக் காட்டி, இதனை விளம்புவார் - இதனைக் கூறுவார் எ-று. மேய பெருமான் என வியையும். மருமான் - வழித் தோன்றல். வள்ளல் வண்மை யென்னும் பொருளில் முன்னும் வந்தது. வெளிப் பட்டு நின்ற வழியும் வானோரால் அறியலாகாத உருவ மென்பார் ‘வானோர் நனவிற்கும் கள்ளத் துருவாம் ’ என்றார்; மன்றுளே மாலயன் றேட ஐயர்தாம் வெளியே யாடுகின்றாரை என்பதன் நயமும் ஓர்ந்துணர்க. (4) அன்ன மிறைகொள் வயன்மதுரைச் சிவன்யா மரச நீயீன்ற பொன்னை யனையா டனைமதுரா புரியிற் கொடுபோய் மறுபுலத்து மன்னர் மகுட மணியிடற மழுங்குங் கழற்காற் சுந்தரனாந் தென்னர் பெருமான் குமரனுக்குக் கொடுத்தி யென்று செப்புதலும். (இ-ள்.) அரச - மன்னனே, யாம் அன்னம் இறைகொள் வயல் மதுரைச் சிவன் - யாம் அன்னங்கள் தங்குதலைக் கொண்ட கழனிகள் சூழ்ந்த மதுரைப் பதியிலிருக்கும் சிவபிரான், நீ ஈன்ற பொன்னை அனையாள் தனை - நீ பெற்ற திருமகளை யொத்த காந்திமதியை, மதுராபுரியில் கொடுபோய் - மதுரைப் பதிக்கு அழைத்துக் கொண்டு சென்று, மறு புலத்து மன்னர் மகுடமணி இடற - வேற்று நாட்டு மன்னர்களின் முடியிலுள்ள மணிகள் (அவர்கள் வணங்குங் கால்) இடறுதலால், மழுங்கும் கழல்கால் - தேய்கின்ற வீரக் கழலை யணிந்த காலினையுடைய, சுந்தரன் ஆம் தென்னர் பெருமான் குமரனுக்கு - செழியர் பெருமானாகிய சுந்தரபாண்டியனுடைய திருக்குமாரனுக்கு, கொடுத்தி என்று செப்புதலும் - கொடுப்பாய் என்று கூறிய வளவில் எ-று. “ அன்னம் பயில்பொழி லாலவாயின் மன்னிய சிவன்யான்” எனத்திருமுகப் பாசுரத்தில்வரும் தொடர் ஈண்டுச் சிந்திக்கற்பாலது; ஆம் என்பது பிரித்துக் கூட்டப்பட்டது. கொடுத்தி : ஏவலொருமை. இ: விகுதி; த் எழுத்துப் பேறு. செப்புதலும் : வினையெச்சம். (5) உள்ளக் கமல முககமல முடனே மலர விருதடங்கண் அள்ளற் கமல மலர்ந்துதன தங்கைக் கமல முகிழ்த்தெழுந்து வள்ளற் பரமன் கருணையெளி வந்த செயலை நினைந்தன்பின் வெள்ளத் தழுந்தி யெழுந்திரவி வேலை முளைக்கும் வேலையினில். (இ-ள்.) உள்ளக் கமலம் முக கமலம் உடனே மலர - நெஞ்சத் தாமரை முகத்தாமரை யுடனே மலரா நிற்க, இருதடம் கண்அள்ளல் கமலம் மலர்ந்து - சேற்றிலுண்டாகிய தாமரை மலர் போலும் பெரிய இரு கண்களும் விழித்து, தனது அம் கைக்கமலம் முகிழ்த்து எழுந்து - தனது அழகிய கைத் தாமரைகளைக் கூப்பி எழுந்து; வள்ளல் பரமன் கருணை எளி வந்த செயலை நினைந்து - வள்ள லாகிய சிவபெருமான் கருணை தனக்கு எளிதிற் கிட்டிய செயலை நினைந்து, அன்பின் வெள்ளத்து அழுந்தி எழுந்து - அன்பாகிய வெள்ளத்தில் மூழ்கி யெழுந்து, இரவி வேலை முளைக்கும் வேலையினில் - சூரியன் கடலிற் றோன்றும் வேளையில் எ-று. கமலக் கண் மலர்ந்து என வியைக்க. கண் மலர்தல் - விழித்தல். எளிவந்த: ஒரு சொல். தடங்கண் அள்ளற் கமலம் மலர்ந்து அங்கைக் கமலம் முகிழ்த்து என்பது பொருள் முரண். வேலை முளைக்கும் வேலையினில் என்பது ஓர் வகை எதுகை நயம். (6) நித்த நியமக் கடனிரப்பி நிருப னமைச்ச ரொடுநான்கு பைத்த கருவிப் படையினொடு பலவே றியமுங் கலிப்பத்தன் பொய்த்த மருங்குற் றிருமகளைப் பொன்ன னாரோ டிரதமிசை வைத்துமணஞ்சேர் திருவினொடும் மதுரைநோக்கி வழிக்கொண்டான். (இ-ள்.) நித்தம் நியமக் கடன் நிரப்பி - நாடொறுஞ் செய்யும் நியமமாகிய கடன்களைக் குறைவின்றி முடித்து, நிருபன் - சோமசேகரன், அமைச்சரொடு நான்கு பைத்த கருவிப் படையி னொடு - மந்திரிகளோடும் நான்காகிய பரந்த சேனைகளோடும், பலவேறு இயமும் கலிப்ப - பல வேறு பட்ட இயங்களும் ஒலிக்க, தன் பொய்த்த மருங்குல் திருமகளை - பொய்யாகிய இடையினை யுடைய தன் புதல்வியாகிய காந்திமதியை, பொன் அனாரோடு - திருமகள் போலும் தோழிகளோடு, இரத மிசை வைத்து - தேரின்மேல் வைத்து, மணம் சேர் திருவினொடு மதுரை நோக்கி வழிக்கொண்டான் - திருமணத்திற்குப் பொருந்திய செல்வத்தோடு மதுரைப்பதியை நோக்கிச் செல்லுதலுற்றான் எ-று. பைத்த - பரந்த வென்னும் பொருட்டு, கருவியாகிய படையென இரு பெயரொட்டு; கருவி ‘சேனை யாதலை’ பொருள் கருவி காலம் என்னும் திருக்குறளானறிக. பொய்த்த - இடை யுண்டென்பதே பொய்யாகிய; இடை மிகவும் சிறிதா யிருத்தலை அதிசயோக்தி வகையால் இங்ஙனம் கூறுவர்; “ கண்கொளா நுடங் கிடையை உண்டெனத் தமர்மதிப்பர் நோக்கினார் பிறரெல்லாம் உண்டில்லை யெனவைய மல்லதொன் றுணர்வரிதே” என்பது சீவகசிந்தாமணி. (7) நென்ன லெல்லை மணம்பேச நினைந்த வாறே யமைச்சர்மதி மன்னர் பெருமான் றமரோடு மணவூர் நோக்கி வழிவருவார் அன்ன வேந்தன் றனைக்கண்டா ரடல்வேற் குமர னனையானெந் தென்னர் பெருமான் குமரனுக்குன் றிருவைத் தருதி யெனவனையான். (இ-ள்.) அமைச்சர் - மந்திரிகள் ‘நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே - நேற்றைப் பொழுதில் மணவினை பேசுதற்கு நினைந்த வண்ணமே, மதி மன்னர் பெருமான் தமரோடும் - சந்திர மரபில் வந்த அரசர் பெருமானாகிய சுந்தரபாண்டியனுடைய சுற்றத்தாரோடும், மணவூர் நோக்கி வழி வருவார் - மணவூரை நோக்கி வழிக்கொண்டு வருகின்றவர்கள், அன்னவேந்தன் தனைக் கண்டார் - அச்சோமசேகர மன்னனைக் கண்டு, அடல் வேல் குமரன் அனையான் - வெற்றி பொருந்திய வேலை யேந்திய முருகக் கடவுளை ஒத்தவனாகிய, எம் தென்னர் பெருமான் குமரனுக்கு - எம் பாண்டியர் பெருமான் திருப்புதல்வனாகிய உக்கிரவழுதிக்கு, உன் திருவைத் தருதி என - உன் புதல்வியைத் தருவாய் என்று கூற, அனையான் - அம் மன்னன் எ-று. அமைச்சர் வருகின்றவர் கண்டு தருதியென என்றும், குமரனனையானாகிய குமரனுக்கு என்றும் இயைக்க. வருவார்: வினைப்பெயர். கண்டார் : எச்சமுற்று. (8) குலனுங் குடியுங் கனவின்கட் கொன்றை முடியார் வந்துரைத்த நலனுங் கூறி மணநேர்ந்து நயப்ப வதனை நன்முதியோர் புலனொன் றுழையர் தமைவிடுத்துப் பொருனைத் துறைவர்க் குணர்த்திவரு வலனுந் தயில்வேன் மன்னனொடு மதுரை மூதூர் வந்தணைந்தார். (இ-ள்.) கனவின்கண் கொன்றை முடியார் வந்து உரைத்த - (நேற்றிரவு) கனவினிடத்துக் கொன்றை வேணியர் எளிவந்து கூறியருளிய, குலனும் குடியும் நலனும் கூறி - குலமும் குடிப்பிறப்பும் மேம்பாடும் கூறி, மணம் நேர்ந்து நயப்ப - (வினவிய) மணத்திற்கு உடன்பட்டு விரும்ப, அதனை - அச்செய்தியை, நல் முதியோர் - நல்லறிவுடைய முதியோர்கள், புலன் ஒன்று உழையர் தமை விடுத்து - அறிவு பொருந்திய தூதரை அனுப்பி. பொருனைத் துறைவற்கு உணர்த்தி - பொருனை நீர்த்துறையையுடைய சுந்தரபாண்டியனுக்கு அறிவித்து, வருவலன் உந்து அயில் வேல் மன்னனொடும் - தம்மொடு வருகின்ற வெற்றியுண்டாகப் (பகைவர்மேற்) செலுத்தப் படும் கூரிய வேற்படையையுடைய சோமசேகர மன்னனோடும், மதுரை மூது ஊர் வந்தணைந்தனார் - தொன்மையுடையதாகிய மதுரை நகரத்தை வந்தடைந்தார்கள் எ-று. குலனும் குடியும் நலனும் கொன்றை முடியார் வந்துரைத் தமையைக் கூறியென்பது; கருத்தாக கொள்க தன் குலனையும், குடியையும், உரைத்த நலனையும் கூறி யென்றுமாம். புலனொன்றல் - மனம் வேறுபடாமையுமாம். (9) இரவி மருமான் மதிமருமா னெதிரே பணியத் தழீஇமுகமன் பரவி யிருக்கை செலவுய்த்துப் பாண்டி வேந்த னிருந்தான்மேல் விரவி யமைச்சர் திருமுகங்கள் வேந்தர் யார்க்கும் விடுத்துநகர் வரைவு நாள்செய் தணிசெய்ய மன்றன் முரச மறைவித்தார். (இ-ள்.) இரவி மருமான் மதி மருமான் எதிரே பணிய - சூரியன் வழித்தோன்றலாகிய சோமசேகரன் சந்திரன் வழித்தோன்றலாகிய சுந்தரபாண்டியனை எதிரே சென்று வணங்க, பாண்டி வேந்தன் - அப்பாண்டிமன்னன், தழீஇ முகமன் பரவி - அவனைத் தழுவி உபசார மொழிகள் கூறி, இருக்கை செல உய்த்து இருந்தான் - அவனுக்கு அமைத்த இருப்பிடத்திற் செல்லுமாறு அனுப்பியிருந் தான்; மேல் - பின்பு, அமைச்சர் விரவி - மந்திரிகள் தம்முட்கூடி, வரைவுநாள் செய்து - திருமணநாளை வரையறுத்து, வேந்தர் யார்க்கும் திருமுகங் கள்விடுத்து - அரச ரனைவருக்கும் திருமண வோலை போக்கி, நகர் அணி செய்ய மன்றல் முரசம் அறைவித்தார்- நகரை அலங்கரிக்குமாறு மண முரசம் அறைவித்தார்கள் எ-று. முகமன் பரவி - இன்மொழி கூறி. வரைவுநாள் - மணநாள். செய்தல் - அறுதியிடல். (10) மாடம் புதுக்கிப் பூகதமுங் கதலிக் காடு மறுகெங்கும் நீட நிரைத்துப் பாலிகையு நிறைபொற் குடமு முறைநிறுத்தி ஆடு கொடியுந் தோரணமும் புனைவித் தழகுக் கழகாகக் கூட நெருங்கு நகரைமணக் கோலம் பெருகக் கொளுத்தினார். (இ-ள்.) மாடம் புதுக்கி - (அந்நகரத்தார்) தங்கள் தங்கள் மாளிகைகளைச் சுண்ணமுதலியவற்றாற் புதுக்கி, பூகதமும் கதலிக் காடும் மறுகு எங்கும் நீட நிரைத்து - கமுகமரங்களையும் வாழை மரக் காடுகளையும் வீதிகளெங்கும் மிக வரிசையாக நிறுத்தி, பாலிகையும் பொன்நிறை குடமும் முறை நிறுத்தி - முளைப் பாலிகையையும் பொன்னாலாகிய நிறை குடங்களையும் முறைப்படி வேதிகைதோறும் அமைத்து, ஆடு கொடியும் தோரணமும் புனைவித்து - அசைகின்ற கொடிகளையும் தோரணங்களையும் கட்டி, அழகுக்கு அழகாக - அழகுக்கு அழகு செய்பவராக, கூடம் நெருங்கும் நகரை - கூடங்கள் நெருங்கிய அப்பதியை, மணக்கோலம் பெருகக் கொளுத்தினார் - திருமண அழகு பொலிய அலங்கரித்தார்கள் எ-று. பூகதம், தகரம் விரித்தல். மிகுதி தோன்றக் ‘காடு ’ என்றார். நீட - மிக. இயற்கையின் அழகெல்லாம் முற்றுப்பெற்ற அந்நகர்க்கு மேலும் அழகு செய்தாரென்பார் ‘அழகுக் கழகாக ’என்றார். கூடம் மண்டபம் முதலாயின. (11) தென்ற னாடன் றிருமகளைத் தேவர் பெருமான் மணம்புரிய மன்ற லழகா லொருநகரொப் பதிக மின்றி மதுரைநகர் அன்று தானே தனக்கொப்ப தாகும் வண்ண மணியமைத்தார் இன்று தானே தனக்கதிக மென்னும் வண்ண மெழிலமைத்தார். (இ-ள்.) தென்றல் நாடன் திருமகளை - தென்றல் தோன்றும் பாண்டி நாட்டினை உடையவனாகிய மலயத்துவசன் திருமகளாகிய தடாதகைப் பிராட்டியாரை, தேவர் பெருமான் மணம்புரிய - தேவ தேவனாகிய சுந்தரபாண்டியன் திருமணம் புரிய, மன்றல் அழகால் - அத் திருமண அழகினால், ஒரு நகர் ஒப்பு அதிகம் இன்றி - மற்றொரு நகரம் ஈடும் எடுப்புமில்லையாக, மதுரை நகர் தனக்குத் தானே ஒப்பது ஆகும் வண்ணம் - மதுரைப்பதியானது தனக்குத் தானே ஒப்பாகுமாறு, அன்று அணி அமைத்தார் - அந்நாளில் அணி செய்தார்கள்; இன்று - இப்பொழுது, தனக்குத்தானே அதிகம் என்னும் வண்ணம் எழில் அமைத்தார் - தனக்குத்தானே மிக்கது என்னும்படி அழகு செய்தார்கள் எ-று. தென்றல் - தெற்கிலிருந்து வரும் காற்று. பாண்டி நாடு தெற்கெல்லையிலுள்ள தாகலின் அதனைத் தென்றல் நாடு என்றார். ஒரு நகர் - பிறிதொரு நகரும். ஒப்பதிகம் இன்றி யென்றமையாலே தனக்குத்தானே ஒப்பென்பது பெறப்படுமாயினும் விளங்குதற்குப் பின்னும் கூறினார். ஒப்பது, அது : பகுதிப்பொருள் விகுதி; தன்னை யொப்பது தானேயாகும் வண்ணம் எனினுமாம். தனக்கு அதிகம் - தன்னினும் அதிகம். (12) (கலிவிருத்தம்) முன்னர் மாலை முடியணி சுந்தரத் தென்ன ரேற்றின் றிருமுகங் கண்டுதாழ்ந் தன்ன வாசக முட்கொண் டயற்புல மன்னர் மாதவர் யாரும் வருவரால். (இ-ள்.) மாலைமுடி அணி - மாலை சூழ்ந்த முடியினை அணிந்த, சுந்தரத்தென்னர் ஏற்றின் திருமுகம் - ஆண்சிங்கம்போலும் சுந்தர பாண்டியனது திருமுகத்தை, முன்னர் கண்டு தாழ்ந்து - தமது முன்கண்டு வணங்கி, அன்ன வாசகம் உட்கொண்டு - அதில் வரைந்த வாசகங்களை மனத்திற் கொண்டு, அயல்புல மன்னர் மாதவர் யாரும் வருவர் - வேற்று நாட்டு மன்னர் யாவரும் பெரிய தவத்தினையுடைய முனிவர் யாவரும் வருகின்றார்கள் எ-று. மாலையினையும் முடியினையும் அணிந்த வென்றுமாம். பாண்டியருள் ஏறாகிய சுந்தரனென்க. திருமுகம் - திருமணவோலை. கண்டு முன்னர்த்த தாழ்ந்து என்றலுமாம். யாவரும் என்பது யாருமென்றாயிற்று: எஞ்சாமைப் பொருட்டு; யாருமென்பதனை மன்னரோடுங் கூட்டுக. ஆல் : அசை. (13) புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும் வரவிற் கால்வலி1 மள்ளரின் வெள்ளமும் விரவி யாழிய வெள்ளமு முள்ளுற இரவி தன்வழித் தோன்றல்வந் தெய்தினான். (இ-ள்.) புரவி வெள்ளமும் போர்க்கரி வெள்ளமும் - குதிரை வெள்ளமும் போர் செய்தலையுடைய யானை வெள்ளமும், வரவில் கால்வலி மள்ளரின் வெள்ளமும் - விரைந்த செலவில் காற்றினைப் போலும் வலியினையுடைய வீரர்களின் வெள்ளமும் ஆகிய இவற்றுடன், ஆழிய வெள்ளம் விரவி உள்ளுற - தேர் வெள்ளமும் கலந்து உள்ளே பொருந்த (இந்நால்வகைச் சேனையுடன்), இரவிதன் வழித்தோன்றல் வந்து எய்தினான் - சூரியன் வழித்தோன்றலாகிய சோழ மன்னன் வந்து சேர்ந்தான் எ-று. வெள்ளம் : ஒரு பேரெண்; ஈண்டு அளவில்லன வென்னும் பொருட்டு. கால்வலி - தாள் வலியுமாம். ஆழிய வெள்ளம் - உருள்களையுடைய வெள்ளம். ஆவது தேர் வெள்ளம்; அ : அசையுமாம்; கடல் வெள்ளமும் கீழ்ப்பட வென்றுரைப்பாருமுளர். வரைவில் கால்வலி என்று பாடங்கொண்டு, அளவில்லாத கால்வலி யையுடைய என்றுரைப்பர் ஒரு சாரார். (14) கோடு வில்லொடு மேகக் குழாங்கண்மின் நீடு வாளொடு நேர்ந்தென மார்புதாழ்ந் தாடு குண்டலக் காதுடை யாடவர் சேட னீகத்துச் சேரன்வந் தீண்டினான். (இ-ள்.) மேகக் குழாங்கள் - மேகக் கூட்டங்கள், கோடு வில்லொடும் மின் நீடு வாளொடும் நேர்ந்தென - வளைந்த வில்லோடும் மின்னலாகிய மிக்க வாளோடும் வந்தாற்போல (வில்லோடும் வாளோடும் வந்த), மார்பு தாழ்ந்து ஆடு குண்டலக் காது உடை - மார்புவரை தொங்கி அசையும் குண்டலத்தை யணிந்த காதுகளையுடைய, ஆடவர் - வீரர்களாகிய, சேடு அனீகத்து - பெரிய சேனையையுடைய, சேரன் வந்து ஈண்டினான் - சேரமன்னன் வந்து சேர்ந்தான் எ-று. கருநிறமுடைய வீரர்கள் வில்லும் வாளும் ஏந்தி வருதற்குக் கரிய முகில் இந்திர வில்லோடும் மின்னலோடும் வருதல் உவமம். உவமையின்கண் வில்லொடும் வாளொடும் என அடையடுத் தமையால் அவை பொருளுக்குங் கொள்ளப்பட்டன. நேர்ந்தென : விகாரம் உடைய என்பது ஈறு தொக்கது. ஆடவர் - வீரர். சேடு - பெருமை. (15) கடலு முள்ளமுங் காற்றும்பல் வண்ணமும் உடலுங் கொண்டென1 வுந்துறு வாம்பரிப் படுக டற்குட் பரிதியிற் றோன்றினான் அடுப ரிப்பதி யாகிய வேந்தனே. (இ-ள்.) கடலும் உள்ளமும் காற்றும் - கடலும் மனமும் காற்றுமாகிய இம்மூன்றும், பல் வண்ணமும் உடலும் கொண்டென - பலநிறமும் பல உடலும் கொண்டாற்போல, உந்துறு வாம்பரி படுகடற்குள் - செலுத்தப்படுகின்ற தாவும் குதிரைப்படையாகிய ஆழ்ந்த கடலினுள், அடு பரிப்பதி ஆகிய வேந்தன் - கொல்லுதலை யுடைய துரகபதியாகிய மன்னன், பரிதியில் தோன்றினான் - ஆதித்தனைப் போலத் தோன்றி வந்தான் எ-று. குதிரைகள் அணியணியாய் அளவின்றி யிருத்தலின் அலை வரிசையுடன் கூடிய அளவில்லாத கடல்உருவு கொண்டாற்போல எனவும், விரைந்த செலவுடைமையால் உள்ளமும் காற்றும் உருவுகொண்டாற் போல எனவும் உரைக்கப்பட்டன. குதிரைகள் பலநிறமுடையவாகலின், பல்வண்ணமும் உடலுங் கொண்டென என்றார். கொண்டாலென என்பது விகாரமாயிற்று. உந்துதல் - செலுத்துதல் வாவும் என்பதன் ஈற்றய லுயிர்மெய் கெட்டது. படு, அடு என்பன முறையே கடலுக்கும் பரிக்கும்அடை. இச்செய்யுள் இல்பொருளுவமையணி. (16) அலகி லாவுத யந்தொறு மாதவர் அலகி லாருதித் தென்னப்பொன் னோடைசேர் அலகி லானைய னீகமொ டெய்தினான் அலகி லாற்றற் கயபதி யண்ணலே. (இ-ள்.) அலகு இலா உதயம் தொறும் - அளவில்லாத உதயமலைதோறும், அலகு இலார் ஆதவர் உதித்தென்ன - அளவில்லாத சூரியர் தோன்றினாற்போல, பொன் ஓடை சேர் அலகு இல் ஆனை அனீகமொடு - பொன்னாலாகிய பட்டமணிந்த அளவிறந்த யானைப் படையொடும், அலகு இல் ஆற்றல் கயபதி அண்ணல் எய்தினான் - அளவற்ற வலியையுடைய கயபதி என்னும் மன்னன் வந்து சேர்ந்தான் எ-று. உதயம் என்பது உதயஞ் செய்யும் மலைக்காயிற்று. ஓடை - நெற்றியிலணியும் பட்டம். யானைகட்கு உதய வெற்புக்களும், பொன்னோடைகட்கு ஆதித்தர்களும் உவமம். அலகிலாராகிய ஆதவர் என்க. உதித்தென்ன: விகாரம். யானை ஆனை யென்றாயிற்று. இதுவும் இல்பொருளுவமையணி. (17) தொக்க மள்ள ரடிப்படு தூளிபோய்த் திக்க டங்க விழுங்கித் திரைக்கடல் எக்கர் செய்ய வெழுந்தியங் கல்லென நக்க வேற்கை நரபதி நண்ணினான். (இ-ள்.) தொக்க மள்ளர் அடிப்படு தூளிபோய் - நெருங்கிய வீரர்களின் அடிகளாலெழுந்த புழுதிபோய், திக்கு அடங்க விழுங்கி - திசைகள் அனைத்தையும் மூடி, திரைக்கடல் எக்கர் செய்ய - அலைகளையுடைய கடலைத் திடர் செய்யவும், எழுந்து இயம் கல்லென - எங்கும் பரவி இயங்கள் கல்லென்று ஒலிக்கவும், நக்க வேல் கை நரபதி நண்ணினான் - விளங்கிய வேற்படையை ஏந்திய கையையுடைய நரபதி யென்னும் அரசன் வந்து சேர்ந்தான் எ-று. நகுதல் - ஒளிவிடுதல். இச் செய்யுள் உயர்வு நவிற்சியணி. (18) மீன வேலையிற் கந்துக மேற்கொடு கூனல் வார்சிலை வஞ்சக் கொடுஞ்சமர்க் கான வாழ்க்கை யரட்டக் கரும்படை மான வேற்குறு மன்னவர் நண்ணினார். (இ-ள்.) மீனவேலையில் கந்துகம் மேற்கொடு - மீன்களை யுடைய கடலையொத்த குதிரைமேற் கொண்டு, கூனல் வார்சிலை - வளைந்து நீண்ட வில்லாற்புரியும், கொடும் வஞ்ச சமர் - கொடிய வஞ்சப்போரினையும், கான வாழ்க்கை - காட்டில் வாழும் வாழ்க்கையையும் உடைய, அரட்டக் கரும்படை - குறும்பராகிய கரிய படையுடன், மானவேல் குறுமன்னவர் நண்ணினார் - வலிய வேற் படையையுடைய குறுநில மன்னர்கள் வந்து சேர்ந்தார்கள் எ-று. மீன் என்னுந் தமிழ்ச் சொல் மீனமென வடமொழியிற் றிரிந்தது. வேலை போலும் கரும்படையெனக் கூட்டலுமாம். சிலையையும் என எண்ணுதலும், சமர்க்கு ஆன எனப் பிரித்துப் போருக்கமைந்த என்று கூறுதலும் ஆம். அரட்டர் - துட்டர்; “ அரட்ட ரைவரை யாசறுத் திட்டு” என்பது தேவாரம்; அரட்டராகிய குறுமன்னவர் என இயைத்தலுமாம்; இதற்கு அரட்டர் குறுநில மன்னர் என்னும் பொருட்டு. (19) சீனர் சோனகர் சிங்களர் கொங்கணர் மான வேல்வல மாளவர் சாளுவர் தான மாநிரைச் சாவக ராதியாம் ஏனை நாட்டுள மன்னரு மீண்டினார். (இ-ள்.) சீனர் சோனகர் சிங்களர் கொங்கணர் - சீனரும் சோனகரும் சிங்களரும் கொங்கணரும், மானவேல் வல மாளவர் சாளுவர் - வலிய வேற் போரில் வல்ல மாளவரும் சாளுவரும், தானம் மா நிரைச் சாவகர் ஆதியாம் - மத நீரினையுடைய யானைக் கூட்டத்தையுடைய சாவகரும் முதலாகிய, ஏனை நாட்டு உள மன்னரும் ஈண்டினார் - மற்றை நாட்டிலுள்ள அரசர்களும் வந்து சேர்ந்தார்கள் எ-று. மானம் பெருமையுமாம் சாவகம் - தெற்கே கடல் நடுவண் உள்ளதொரு நாடு. (20) நூலொ டுந்துவக் குண்டு நுடங்குமான் றோலர் தூங்கு சுருக்குடைத் தானையர் கோல முஞ்சியர் கிஞ்சுகக் கோலினர் நாலு நூல்பயி னாவினர் நண்ணினார். (இ-ள்.) நூலொடும் துவக்குண்டு நுடங்கும் மான்தோலர் - பூணூலுடன் கட்டுண்டு அசையும் மான்றோலையுடையவரும், தூங்கு சுருக்குடைத் தானையர் - (முன்னே) தொங்குகின்ற மடித்தலையுடைய ஆடையினரும், கோல முஞ்சியர் - அழகிய முஞ்சிப் புல்லாலாகிய அரைஞாணை யுடையவரும், கிஞ்சுகக் கோலினர் - முள் முருக்கங்கோலினை யுடையவரும், நாலு நூல் பயில் நாவினர் நண்ணினார் - நான்கு மறைகளையும் பயிலுகின்ற நாவினையுடையவரும் ஆகிய மாணவகர்கள் வந்து சேர்ந்தார்கள் எ-று. சுருக்கு - கொய்சகம். முஞ்சி - ஒருவகைப் புல். கிஞ்சுகம் - பலாசம். மாணவகராவார் பிரமசாரிகள்; இவர் ஆசாரியனிடத்திருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய ஒழுக்கத்தினையுடையர். (21) வட்ட நீர்க்கலக் கையினர் வார்ந்துதோள் விட்ட குண்டலக் காதினர் வேட்டதீத் தொட்ட கோலினர் வேள்வியிற் சுட்டநீ றிட்ட நெற்றிய ரில்லொடு நண்ணினார். (இ-ள்.) வட்டம் நீர்க்கலம் கையினர் - வட்டமாகிய கமண்டல மேந்திய கையினரும், வார்ந்து தோள்விட்ட குண்டலக் காதினர் - நீண்டு தோள்வரையும் தொங்கவிட்ட குண்டலத்தையுடைய செவியினரும், வேட்ட தீ தொட்ட கோலினர் - வேள்வி செய் வதற்குக் கருவியாகிய தீக்கடை கோலினரும், வேள்வியில் சுட்ட நீறு இட்ட நெற்றியர் - வேள்வியின்கண் நீற்ற திருநீற்றினையணிந்த நெற்றியினரும் ஆகிய வானப் பிரத்தர்கள், இல்லொடு நண்ணினார் - மனைவிய ரோடும் வந்து சேர்ந்தார்கள் எ-று. நீர்க்கலம் - நீரினையுடைய கமண்டலம்; இது கரகமெனவும் குண்டிகையெனவும் படும்; இதனை உறியின்கண் வைத்து எடுத்துச் செல்வர். தோள்காறும் தொங்குமாறிட்டவென்க. வேட்ட என்பது வேட்கும் கருவியாகிய வென்னும் பொருளில் வந்தது. தீத்தொட்ட கோல் - தீப்பொருந்திய கோல்; தீக்கடைகோல். வானப்பிரத் தராவார் இல்லை விட்டுத் தீயொடு வனத்தின்கட் சென்று மனைவி வழிபடத் தவஞ்செய்யும் ஒழுக்கத்தினையுடையர். (22) முண்ட நெற்றியர் வெண்ணிற மூரலர் குண்டி கைக்கையர் கோவணம் வீக்கிய தண்டு கையர்கற் றானையர் மெய்யினைக் கண்டு பொய்யினைக் காய்ந்தவர் நண்ணினார். (இ-ள்.) முண்டம்நெற்றியர் - திருநீ றணிந்த நெற்றியினரும், வெள் நிற மூரலர் - வெள்ளிய நிறத்தினையுடைய பல்லினரும், குண்டிகை கையர் - கமண்டல மேந்திய கையினரும், கோவணம் வீக்கிய தண்டு கையர் - கோவணம் யாத்த கோலினை யேந்திய கையினரும், கல் தானையர் - கல்லாடையினரும், மெய்யினைக் கண்டு பொய்யினைக் காய்ந்தவர் - மெய்ப்பொருளை யுணர்ந்து பொய்ப் பொருளை வெறுத்தவரும் ஆகிய துறவினர், நண்ணினார் - வந்து சேர்ந்தார்கள் எ-று. மூரல் - புன்னகையுமாம். கற்றானை - காவிக்கற் குழம்பிற் றோய்த்த ஆடை; “ கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் ” என்பது முல்லைப்பாட்டு. பொய்யாவன நிலையில்லாதன. துறவின ராவார் முற்றத் துறந்த யோக வொழுக்கத்தினர்; சன்னியாசிகள். (23) தீந்தண் பாற்கடல் செந்துகிர்க் காட்டொடும் போந்த போன்மெயிற் புண்ணியப் பூச்சினர் சேந்த வேணியர் வேத சிரப்பொருள் ஆய்ந்த கேள்வி யருந்தவ ரெய்தினார். (இ-ள்.) தீந்தண்பால் கடல் செந்துகிர்க் காட்டொடும் போந்த போல் - இனிய குளிர்ந்த பாற்கடலானது சிவந்த பவளக்காட் டொடும் வந்ததுபோல், மெய்யில் புண்ணியப் பூச்சினர் - மேனியில் திருநீறு தரித்தவரும், சேந்த வேணியர் - சிவந்த சடையினை உடையவரும் ஆகிய, வேதசிரப்பொருள் ஆய்ந்த கேள்வி - உபநிடதப் பொருளை ஆராய்ந்த கேள்வியையுடைய, அருந்தவர் எய்தினார் - அரிய தவத்தினையுடைய சைவ முனிவர்கள் வந்து சேர்ந்தார்கள் எ-று. நீறு பூசிய திருமேனிக்குப் பாற்கடலும், செஞ்சடைக்குத் துகிர்க்காடும் உவமம்; புண்ணியம் நீறாதல். “ புண்ணியமாவது நீறு” என்னும் தமிழ்மறையானு மறிக; முன்னும் உரைக்கப்பட்டது. போந்தது என்பது ஈறு தொக்கது. சேந்த ; சிவந்த என்பதன் மரூஉ. கேட்டு ஆராய்ந்ததனை ‘ஆய்ந்த கேள்வி’என்றார். உபநிடதப் பொருளாகிய சிவபிரானை ஆராய்தற் கேதுவாகிய சிவாகமக் கேள்வியுடைய என்றுரைப்பாருமுளர். இல் பொளுவமை. (24) ஆதி சைவர் முதற்சைவ ரைவருங் கோதி லாவகச் சைவக் குழாங்களும் பூதி மேனியர் புண்ணிய வைந்தெழுத் தோது நாவின ரொல்லைவந் தெய்தினார். (இ-ள்.) ஆதிசைவர் முதல் சைவர் ஐவரும் - ஆதிசைவர் முதலிய ஐவகைச் சைவர்களும், கோது இலா அகச் சைவக் குழாங்களும் - குற்றமில்லாத அகச் சமயிகளாகிய அறுவகைச் சைவக் கூட்டத் தாரும். பூதி மேனியர் - நீறு பூசிய மேனியராயும், புண்ணிய ஐந்து எழுத்து ஓது நாவினர் - புண்ணிய வடிவமாகிய திருவைந் தெழுத்தினைப் பயிலும் நாவினையுடையராயும், ஒல்லை வந்து எய்தினார் - விரைவில் வந்து சேர்ந்தார்கள் எ-று. சைவ ரைவராவார் ஆதி சைவர், மகா சைவர், அநுசைவர், அவாந் தரசைவர், பிரவரசைவர் என்போரென்றும்; அநாதி சைவனாகிய சிவனை யருச்சிக்கும் சிவவேதியர் ஆதி சைவரென்றும்; சிவ தீக்கை பெற்ற வைதிகப் பிராமணர் மகா சைவரென்றும், இங்ஙனமே சிவதீக்கை பெற்ற ஏனையர் ஏனைய சைவப் பெயர் கட்கு உரிய ராவாரென்றும் கூறுப. ஆதி சைவப் பெயரொன்றுமே இப்பொழுது வழக்கிலுள்ளது. அகச்சமயங்களாகிய அறுவகைச் சைவமாவன: சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என்பன; இவ்வாறனையுமே உட்சமயமெனப் பிங்கல நிகண்டு கூறிற்று; இவற்றுள் சைவமும், காளாமுகம் ஒழிந்த நான்கும் காபாலமும் ஐக்கிய வாத சைவமும் ஆகிய ஆறும் அகப்புறச் சமயமெனச் சிவஞான போத மாபாடியத்தில் உரைக்கப்பட்டுள; அவற்றின் இலக்கணங்களை ஆண்டுக்காண்க; சங்கற்ப நிராகரணத்துள் ஓதிய பாடாணவாத சைவம் முதலிய ஆறு சமயங்கள் அகச்சமய மென்று கூறப்படும். (25) வெண்க ளிறறவன் வேரியந் தாமரைப் பெண்க ளிப்புறு மார்பன் பிரமனோ டொண்க ளிப்புற வும்பர் முதற்பதி னெண்க ணத்தவர் யாவரு மீண்டினார். (இ-ள்.) வெண்களிற்றவன் - வெள்ளையானையையுடைய இந்திரனும், வேரி அம் தாமரைப் பெண் களிப்புறு மார்பன் - தேனையுடைய அழகிய தாமரை மலரை இருக்கையாகவுடைய திருமகள் இருந்து களிக்கும் மார்பினையுடைய திருமாலும், பிரமனோடு - பிரமனும், உம்பர் முதல் பதினெண் கணத்தவர் - தேவர் முதலாகிய பதினெண் கணத்தவரும், யாவரும் - மற்றை யரும், ஒள் களிப்பு உற - சிறந்த மகிழ்ச்சி பொருந்த, ஈண்டினார் - வந்து சேர்ந்தார்கள் எ-று. ஓடு: எண்ணிடைச் சொல்; பிறவழியும் பிரிந்து சென்றியையும். ஒண்மை - சிறப்பு. பதினெண் கணத்தவர்: தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளர், தாராகணம், ஆகாய வாசிகள், போக பூமியோர் எனும் இவர்கள். (26) அணைந்து கோயி லடைந்தரிச் சேக்கைமேற் குணங்க டந்தவன் கோமள வல்லியோ டிணங்கி வைகு மிருக்கைகண் டேத்தினார் வணங்கி னார்வணங் கும்முறை வாழ்த்தினார். (இ-ள்.) அணைந்து கோயில் அடைந்து - வந்து திருக்கோயிலைச் சேர்ந்து, அரிச் சேக்கை மேல் - சிங்கா தினத்தின்மேல், குணம் கடந்தவன் கோமளவல்லியோடு இணங்கி வைகும் இருக்கை கண்டு - குணங்களைக் கடந்த சுந்தர பாண்டியர் இளங்கொடிபோலும் தடாதகைப் பிராட்டியாரோடும் சேர வீற்றிருக்கும் இருப்பினைத் தரிசித்து, ஏத்தினார் வணங்கும் முறை வணங்கினார் வாழ்த்தினார் - துதித்து வணங்கு முறையால் வணங்கி வாழ்த்தினார்கள் எ-று. குணம் - மாயையின் காரியமாகிய முக்குணம். கோமளம் - இளமை அழகு. ஏத்தினார், வணங்கினார் என்பன முற்றெச்சங்கள். (27) விரைசெய் தார்முடிச் சுந்தர மீனவன் சுரர்கண் மாதவர் வேந்தர்க்குத் தொன்முறை வரிசை நல்கி யிருந்தனன் மன்னவன் திரும கன்மணஞ் செய்திறஞ் செப்புவாம். (இ-ள்.) விரைசெய் தார் முடிச் சுந்தர மீனவன் - மணம் பொருந்திய மாலையை யணிந்த முடியினையுடைய சுந்தர பாண்டியன், சுரர்கள் மாதவர் வேந்தர்க்கு - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அரசர்களுக்கும், தொன்முறை வரிசை நல்கி - தொன்று தொட்டுள்ள முறைப்படி வரிசை அளித்து, இருந்தனன் - வீற்றிருந்தான்; மன்னவன் திருமகன் மணம் செய்திறம் செப்புவாம் - (இனி) அப்பாண்டியன் திருமகனாகிய உக்கிரவழுதி திருமணம் புரியும் தன்மையைக் கூறுவாம் எ-று. குவ்வுருபும் எண்ணும்மையும் விரிக்க. வரிசை - தகுதிக்கேற்ற சிறப்பு. (28) சோம சேகரன் றோகை வனப்பெலாங் கோம கன்கண் டுவப்பக் கொள்கைகண் டேம மேனிய னூல்வழி யார்க்குமத் தேமன் கோதை யுறுப்பிய றேற்றுவான். (இ-ள்.) சோமசேகரன் தோகை வனப்பு எலாம் - சோமசேகரன் புதல்வியின் அழகு முழுவதையும், கோமகன் கண்டு உவப்ப - சுந்தரபாண்டியன் அறிந்து மகிழாநிற்க, அக் கொள்கை கண்டு - அத்தன்மையினை யுணர்ந்து, ஏம மேனியன் - பொன்மேனியனாகிய குரு, நூல் வழி - உறுப்பியல் நூலின்படியே, யார்க்கும் - யாவருக்கும், அத்தேமன் கோதை-அந்தத் தேன்பொருந்திய மாலையை யணிந்த கூந்தலையுடைய காந்திமதியின், உறுப்பு இயல் தேற்றுவான் - உறுப்புக்களின் இலக்கணத்தைத் தெளிவிக்கின்றான் எ-று. சோமசேகரன் பெற்ற தோகை போல்வா ளென்க. உவப்ப வென்பதற்கு உவக்குமாறென்றும். அக்கொள்கை யென்பதற்கு அதனை யுரைக்கவேண்டு மென்னும் அக்குறிப் பென்றும் பொருளுரைத் தலுமாம். (29) (எழுசீரடி யாசிரிய விருத்தம்) பெருகநீண் டறவுங் குறுகிடா வாகிப்1 பிளந்திடாக் கடையவாய்த்2 தழைந்து கருவிவான் வண்டின் கணமெனக் கறுத்துக் கடைகுழன் றியன்மணங் கான்று புரையறச் செறிந்து நெறித்துமெல் லென்று புந்திகண் கவரநெய்த் திருண்ட மருமலர்க் குழலாடன்பதிக் கினிய மல்லல்வான் செல்வமுண் டாகும். (இ-ள்.) பெருக நீண்டு அறவும் குறுகிடா வாகி - மிக நீளாமலும் மிகக் குறுகாமலும், பிளந்திடாக் கடையவாய்த் தழைந்து - பிளவுபடாத நுனியினை யுடையவாய்த் தழைவுற்று, கருவிவான் வண்டின் கணம் எனக் கறுத்து - தொகுதியாகிய முகில்போன்றும் வண்டின் றிரள்போன்றும் கறுத்து, கடை குழன்று - நுனி குழற்சி யுற்று, இயல்மணம் கான்று - இயல்பாக மணம் வீசி, புரை அறச் செறிந்து - குற்றமற நெருங்கி, நெறித்து - அறல்பட்டு, மெல்லென்று - மெத்தென்று, புந்தி கண் கவர - (கண்டோர்) மனத்தையும் கண்களையும் கொள்ளை கொள்ள, நெய்த்து இருண்ட - நெய்ப் புற்று இருண்ட, மருமலர்க்குழலாள் - மணம் பொருந்திய மலர் களை யணிந்த கூந்தலையுடையவளின், பதிக்கு - நாயகனுக்கு, இனிய - இனிமையாகிய, வான் - சிறந்த, மல்லல் செல்வம் உண்டாகும் - மிக்க செல்வ முண்டாகும் எ-று. பெருக - மிக. மிக நீளாமலுமென்க; நீண்டு என்னில் குறுகிடா வாகி யென்பது பயனிலதாம். நெய்த்தல் - பசையுறல். தன் : சாரியை. மல்லல், செல்வம் என்பன ஒரு பொருளன. இனிய வளனும் சிறந்த செல்வமும் என்னலுமாம், (30) திண்மத வேழ மத்தகம் போலத் திரண்டுயர் சென்னியா ளவடன் உண்மகிழ் கணவ னாயுணீண் டகில வுலகர சுரியனா மெட்டாந் தண்மதி போன்று மயிர்நரம் பகன்று தசைந்துமூ விரலிடை யகன்ற ஒண்மதி நுதறன் பதிக்குநற் றிருவோ டுலப்பிலா ரோக்கிய முண்டாம். (இ-ள்.) திண் மத வேழ மத்தகம் போல - திண்ணிய மத யானை யின் மத்தகம் போன்று, திரண்டு உயர் சென்னியானவள் - திரண்டு உயர்ந்த தலையினை யுடையாளின். உள் மகிழ் கணவன் - மனமகிழும் நாயகன், ஆயுள் நீண்டு அகில உலகு அரசு உரியனாம் - வாழ்நாள்மிக்கு எல்லா வுலகங்களையும் அரசாளுதற் குரியனாவான்; தண் - குளிர்ச்சி பொருந்திய, எட்டாம் மதிபோன்று, எண்ணாட் பக்கத்து மதியைப் மயிர் நரம்பு அகன்று - மயிரும் நரம்பும் இல்லாமல், தசைந்து - தசைப்பற்றுடையதாய், மூவிரல் இடை அகன்ற - மூன்று விரல் அளவு இடையே விரிந்த, ஒள்மதி நுதல் தன்பதிக்கு - ஒள்ளிய மதிக்கின்ற நெற்றியை யுடையாளின் நாயகனுக்கு, நல் திருவோடு உலப்பு இல் ஆரோக்கியம் உண்டாம் - நல்ல செல்வமும் கெடுதலில்லாத உடல் நலமும் உண்டாகும் எ-று. சென்னியாள் யாவள் அவளுடைய என விரிக்க. மதிக்கத்தக்க ஒள்ளிய நெற்றி. தன் இரண்டும் சாரியை. (31) கண்கடை சிவந்தான் பாலென வெளுத்து நடுவிழி கழியவுங் கரிதாய் எண்கவி னடைந்து கோமளமாகி யிமைகரு மயிர்த்தெனி னினிய1 ஒண்கரும் புருவங் குனிசிலை யொத்த தத்தமி லொத்திரு தொளையும் பண்கொள வுருண்டு துண்டமெட் போது பதுமமேற் பூத்தது போலும். (இ-ள்.) கண் கடை சிவந்து - கண்ணானது கடையிற் சிவந்து, ஆன்பாலென வெளுத்து - பசுவின் பால்போல வெளுத்து, நடுவிழி கழியவும் கரிதாய் - விழியின் நடு மிகவும் கருமையாயிருக்கப் பெற்று, எண் கவின் அடைந்து - மதிக்கத்தக்க அழகுபெற்று, கோமளம் ஆகி - (நோக்குவார்க்குப்) பொலிவினை யுடையதாய், இமை கரு மயிர்த்து எனின் - இமையானது கருமயிரினை யுடையவாக இருக்கப் பெற்றால், இனியது - (அது) இன்பந்தருவ தாம்; ஒண் கரும் புருவம் - ஒள்ளியகரிய புருவங்கள், குனிசிலை ஒத்த - வளைந்த வில்லைப்போன்றன (ஆயின் நல்லனவாம்); துண்டம் - நாசியானது, இரு தொளையும் தத்தமில் ஒத்து - இரண்டு தொளையும் வேறுபாடின்றித் தம்மில்ஒத்து, பண் கொள உருண்டு - அழகு பெற உருட்சியுடைத்தாகி, எள் போதுபதும மேல் பூத்ததுபோலும் - எள்ளின் மலர் தாமரை மலரின் மேல் மலர்ந்தது போலும் (முகத்தில் விளங்குமாயின் நன்மையாம்) எ-று. இச்செய்யுளின் முதலடியை, “ சேலனைய சில்லரிய கடைசிவந்து கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படியவாய்” என்னும் சிந்தாமணிச் செய்யுளோடும், “ பாலிற் கிடந்த நீலம் போன்று” என்னும் திருவிடை மருதூர் மும்மணிக்கோவை யடியோடும் ஒப்பிடுக. கண்ணென்னும் சினை ஈண்டு முதலாகக் கடை நடுவிழி இமை என்பன அதற்குச் சினையாகியும், துண்டமென்னும் சினை ஈண்டு முதலாகத் தொளை அதற்குச் சினையாகியும் வந்தமையின், சிவந்து முதலிய சினை வினைகள் முதலொடு பொருந்தின வெனக்கொள்க. சில சொற்கள் வருவித்துரைக்கப்பட்டன. இனியது என்பதில் துவ் வீறு தொக்கது. (32) வள்ளைபோல் வார்ந்து தாழ்ந்திரு செவியு மடற்சுழி நல்லவாய் முன்னர்த் தள்ளிய காது மனோகர மாகுந் தன்மையா னன்மையே தழைக்கும் ஒள்ளிய கபோலம் வட்டமாய்த் தசைந்திட் டுயர்ந்துகண் ணாடிமண் டிலம்போ றெள்ளிய வூற்ற மினியது நன்றென் றோதினான் றிரைகடற் செல்வன். (இ-ள்.) இருசெவியும் - இரண்டு செவிகளும், வள்ளைபோல் வார்ந்து - வள்ளைத் தண்டுபோல வார்தலையுடையனவாய், தாழ்ந்து மடல் சுழி நல்லவாய் - தாழ்ந்து மடலின் சுழிகள் நல்லனவாய், முன்னர்த் தள்ளிய காது - முன்னே தள்ளியன - (ஆயின் அச்) செவிகள், மனோகரமாகும் தன்மையால் நன்மையே தழைக்கும் - அழகியனவாந் தன்மையால் நன்மையே தழையச் செய்யும்; ஒள்ளிய கபோலம் - ஒளிபொருந்திய கபோலமானது. வட்டமாய் - வட்டவடிவினதாய், தசைந்திட்டு உயர்ந்து - தசைப்பற்றுடையதாய் உயர்ந்து, கண்ணாடி மண்டிலம் போல - கண்ணாடி வட்டம் போல, தெள்ளிய ஊற்றம் இனியது நன்று என்று, - தெளிவுடைய பரிசம் இனியதாயின் நன்மை என்று - திரை கடல் செல்வன் ஓதினான் - அலைதலையுடைய செல்வனாகிய வருணன் கூறினான் எ-று. தள்ளியவாயின் அக் காது என விரிக்க. மனோகரம் - மனத் திற்கு மகிழ்ச்சி விளைக்கும் அழகு முதலியன. தழைக்கும் தழை விக்கும்: பிறவினை; உடையார்க்கு நன்மை பெருகுமென்றலுமாம். ஊற்றம் இனியது - சருச்சரையில்லாத இனிய பரிசமுடையது. வருணன் உறுப்பியல் நூலுட் கூறினானென்க. (33) கொவ்வைவா யதரந் திரண்டிரு புடையுங் குவிந்துசேந் திரேகைநேர் கிடந்தால் அவ்வணி யிழைதன் னன்பனுக் கென்று நண்புரு வாகுமெண் ணான்கு வல்லவா ளெயிறு மிடைவெளி யின்றி வார்ந்துமேல் கீழிரண் டொழுங்குஞ் செவ்வனேர்ந் தாவின் பாலென வெள்கித் திகழினன் றென்பா1 நூ றெளிந்தோர். (இ-ள்.) கொவ்வை வாய் அதரம் - கொவ்வைக் கனிபோலும் வாயின் இதழ், திரண்டு இருபுடையும் குவிந்து சேந்து - திரண்டு இரண்டு பக்கமும் குவிந்து சிவந்து, நேர் இரேகை கிடந்தால் - நேரில் இரேகை இருக்குமாயின், அவ்வணி இழை - அந்த அழகிய அணியினையுடைய பெண், தன் அன்பனுக்கு என்றும் நண்பு உருவாகும் - தன் நாயகனுக்கு எஞ்ஞான்றும் நட்பின் வடிவாகி யிருப்பாள்; வல்ல வாள் எண்ணான்கு எயிறும் - வலிய ஒளியுள்ள முப்பத்திரண்டு பற்களும், இடைவெளி இன்றி வார்ந்து - இடை வெளியில்லாமல் நெருங்கிய ஒழுங்கினவாய், மேல் கீழ் இரண்டு ஒழுங்கும் - மேலும் கீழுமாகிய இரண்டு வரிசைகளும், செவ்வன் நேர்ந்து - நேராகத் தம்முள் ஒத்து; ஆவின் பாலென வெள்கி - பசுவின் பால்போல் வெண்மையுடையனவாய், திகழின் - விளங்கு மாயின், நூல் தெளிந்தோர் நன்று என்பர் - உறுப்பு நூலுணர்ந்தோர் நன்மை என்று கூறுவர் எ-று. அணி - அழகு; அணியிழை: அன்மொழித் தொகை. வல்ல - வன்மையுடைய. வெள்கி - வெண்ணிறமுற்று. (34) மெல்லிதாய்ச் சிவந்து கோமள மான நாவினாள் வேட்டவேட் டாங்கே வல்லைவந் தெய்த நுகர்ந்திடுந் தசைந்து வட்டமா யங்குல மிரண்டின் எல்லைய தாகி மஞ்சுள மாகி யிருப்பது சுபுக1 நான் றென்பர் அல்லியங் கமலம் போன்மணந் திருடீர்ந் தவிர்மதி போல்வது முகமே. (இ-ள்.) மெல்லிது ஆய் சிவந்து கோமளம் ஆன நாவினாள் - மென்மையுடைதாயச் சிவந்து இளமைபொருந்திய நாவினையு டையாள், வேட்ட வேட்டாங்கே வல்லை வந்து எய்த நுகர்ந்திடும் - விரும்பியன விரும்பியவாறே விரைய வந்து பொருந்த நுகருவாள்; சுபுகம் - மோவாயானது, தசைந்து வட்டமாய் - தசைப் பற்றுடைய தாய் வட்டமாய், அங்குலம் இரண்டின் எல்லையது ஆகி - இரண்டங்குல அளவினை யுடையதாய், மஞ்சுளமாகி இருப்பது நன்று என்பர் - அழகியதாயிருத்தல் நன்மை என்று கூறுவர் பெரியார்; முகம் - முகமானது, அல்லி அம் கமலம் போல் மணந்து - அகவிதழையுடைய அழகிய தாமரை மலர்போல மணம் வீசி, இருள் தீர்ந்து அவிர் மதி போல்வது - களங்கமின்றி விளங்கும் திங்களைப்போன்று (தண்ணொளி) உடைத்தாயிருத்தல் (நன்மை யாம்) எ-று. வேட்ட : வினையாலணையும் பெயர்; வேள்: பகுதி. வேட்டவாங் கென்பது வேட்டாங் கென்றாயிற்று; ஆங்கு: உவமச்சொல். இருப்பது, போல்வது என்பன தொழிற்பெயர்கள். (35) திரைவளைக் கழுத்துத் தசைந்துநால் விரலி னளவதாய்த் திரண்டுமூன் றிரேகை வரைபடிற் கொழுந னகிலமன் னவனா மார்பகந் தசைந்துமூ வாறு விரலள வகன்று மயிர்நரம் பகன்று மிதந்ததேல் விழுமிதாம் வேய்த்தோள் புரையறத் தசைந்து மயிரகன் றென்பு புலப்படா மொழியகோ மளமாம். (இ-ள்.) திரைவளைக் கழுத்து - கடலிற்றோன்றிய சங்கு போலும் கழுத்து, தசைந்து - தசைவுற்று, நால்விரலின் அளவது ஆய் - நான்கு அங்குல அளவினையுடையதாய், திரண்டு - உருட்சியாய், மூன்று இரேகை வரைபடின் - மூன்று இரேகையாகிய வரையினைப் பொருந்தியிருக்குமாயின், கொழுநன் அகில மன்னவன் ஆம் - அப்பெண்ணின் கணவன் எல்லா வுலகிற்கும் அரசனாவான்; மார்பகம் - மார்பிடமானது, தசைந்து - தசையுடையதாய், மூவாறு விரல் அளவு அகன்று - பதினெட்டங்குல அளவுபரந்து, மயிர் நரம்பு அகன்று மிதந்ததேல் விழுமிது ஆம் - மயிரும் நரம்புமில்லாமல் உயர்ந்திருக்குமாயின் நன்மையுடையதாம்; வேய்த்தோள் - மூங்கில்போன்ற தோள்கள், புரை அறத் தசைந்து - குற்றமறத் தசைப்பற்று உடையனவாய், மயிர் அகன்று - மயிரில்லாமல், என்பு புலப்படா மொழிய - எலும்பு தோன்றாத மொழிகளையுடைய (ஆயின்), கோமளம் ஆம் - நன்மையாம் எ-று. திரை கடலுக்கு ஆகுபெயர். இரேகை, வரை யென்பன ஒருபொருளன. மொழி, தோள் முதலியவற்றிலுள்ள கரடு; இது முளியெனவும் வழங்கும், மொழியவாயின் என விரிக்க. (36) செங்கைநீண் டுருண்டு கணுக்கள்பெற் றடைவே சிறுத்திடிற்1 செல்வமோ டின்பந் தங்கும்வள் ளுகிர்சேந் துருண்டுகண் ணுள்ளங் கவர்வதாய்ச் சரசரப் பகன்றால் அங்கவை நல்ல வகங்கைமெல் லெனச்சேந் திடைவெளி யகன்றிடை யுயர்ந்து மங்கல மாய்ச்சில் வரைகளி னல்ல விலக்கண வரையுள மாதோ. (இ-ள்.) செங்கை - சிவந்த கைகள், நீண்டு உருண்டு கணுக்கள் பெற்று அடையவே சிறுத்திடில் - நீண்டு உருண்டு கணுக்களை யுடையன வாய் முறையே சிறுத்திருக்குமாயின்; செல்வமோடு இன்பம் தங்கும் - பொருளோடு இன்பமும் நிலைபெறும்; வள் உகிர் சேந்து உருண்டு - கூரிய நகங்களை சிவந்து உருண்டு, கண் உள்ளம் கவர்வதாய் - (கண்டோரின்) கண்ணையும் மனத்தையும் கொள்ளை கொள்வனவாய், சரசரப்பு அகன்றால் - சருச்சரை ஒழிந்துளவாயின், அவை நல்ல - அவை நல்லனவாம்; அகங்கை - அகங்கைகள், மெல்லெனச் சேந்து - மென்மையுடையவாய்ச் சிவந்து, இடைவெளி அகன்று இடை உயர்ந்து - இடைவெளியின்றி நடுவில் உயர்ந்து, மங்கலமாய் - பொலிவையுடையனவாய், சில் வரைகளின் இலக்கண வரை உள - சிலவாகிய இரேகைகளின் உத்தம இலக்கணம் வாய்ந்த இரேகைகள் உள்ளன (ஆயின்), நல்ல - நன்மையுடையனவாம் எ-று. கவர்ந்து; பன்மையிலொருமை வந்தது, அங்கு மாது, ஓ என்பன அசைகள். ‘செங்கையங் குலிநீண் டுருண்டுகண் மரீஇ நேர் சிறுத் திடில்’ எனப் பாடங்கொண்டு, சிவந்த கைவிரல்கள் நீண்டு திரண்டு கணுக்கள் பொருந்தி முறையே சிறுத்துளவாயின் எனப் பொரு ளுரைப்பர் மதுரை இராமசுவாமிப் பிள்ளை. (37) முத்தணி தனங்கள் கடினமாய்த் தசைந்து வட்டமாய் முகிழ்த்திரு கடநேர் ஒத்திரு மாந்தீர்க் கிடையற நெருங்கி யுள்ளன மெலிந்தமர்ந் துரோம பத்திபெற் றயலே மயிர்நரம் பகன்ற பண்டியா ளுண்டிவேட் டாங்கே துய்த்திடு நாபி வலஞ்சுழித் தாழ்ந்தாற் றொலைவிலாத் திருவளம் பெருகும். (இ-ள்.) முத்து அணி தனங்கள் - முத்துமாலை அணிந்த கொங்கைகள், கடினமாய் - இறுகியனவாய், தசைந்து - தசைப் பற்றுடையன வாய், வட்டமாய் முகிழ்த்து - வட்டமாக அரும்பி, இருகடம் நேர்ஒத்து - இரண்டு குடங்களைப் போன்று, இறுமாந்து - இறுாமத்தலுற்று, ஈர்க்கு இடை அறநெருங்கி உள்ளன - ஈர்க்கானது இடையில் புகாத வண்ணம் நெருங்கி யிருப்பன (ஆயின் நன்மை யுடையனவாம்); மெலிந்து அமர்ந்து - குழைவுடையதாய்ப் பொருந்தி, உரோம பத்தி பெற்று - (நடுவில்) மயிர் வரிசை பெற்று, அயலே மயிர் நரம்பு அகன்ற பண்டியாள் - பக்கத்தே மயிரும் நரம்பும் இல்லாத வயிறுடையவள், வேட்டாங்கே உண்டி துய்த் திடும் - விரும்பியபடியே சிறந்த உணவினை நுகர்வாள்; நாபி வலம் சுழித்து ஆழ்ந்தால் - நாபியானது வலமாகச் சுழித்து ஆழ முடையதாயின், தொலைவு இலாத் திருவளம் பெருகும் - கெடு தலில்லாத செல்வ வளம் பெருகும் எ-று. நேர் ஒத்து - நன்கொத்து. ஈர்க்கு இடையற நெருங்கி யென்ற கருத்து, “ ஈர்க்கிடை போகா விளமுலை” எனத் திருவாசகத்திற் போந்துளது. நாபி வலஞ் சுழித்தல், “ அங்கைபோல் வயிறணிந்த வலஞ்சுழி யமைகொப்பூழ்” என்று சிந்தாமணியிற் கூறப்பட்டுள்ளது. உள்ளன வென்பதன் பின் சில சொற்கள் வருவிக்கப்பட்டன. (38) இடைமயிர் நரம்பற் றிருபதோ டொருநான் கெழில்விர லளவொடு வட்ட வடிவதாய்ச் சிறுகி மெலிவது நிதம்ப மத்தகம் யாமையின் புறம்போற் படிவநே ரொத்த னன்றிரு குறங்கும் படுமயி ரென்பகன் றியானைத் தடவுடைக் கையுங் கரபமுங் கதலித் தண்டுமொத் திருக்கினன் றென்ப. (இ-ள்.) இடை - மருங்குலானது, மயிர் நரம்பு அற்று - மயிரும் நரம்பும் இன்றி, இருபதோடு ஒரு நான்கு எழில் விரல் அளவொடு - இருபத்து நான்கு அழகிய விரலினளவினோடு, வட்ட வடிவதாய்ச் சிறுகி மெலிவது - வட்ட வடிவினதாய்ச் சிறுத்துத் தளர்வது (ஆயின் நன்மையாம்); நிதம்பம் - அல்குலானது, மத்தகம் யாமையின் புறம் போல் - யானையின் மத்தகமும் யாமையின் முதுகும் போல, படிவம் நேர் ஒத்தல் நன்று - வடிவு சமமாயிருத்தல் நன்மையாம்; இருகுறங்கும்- இரண்டு தொடையும், படுமயிர் என்பு அகன்று - உண்டாகும் மயிரும் எலும்பும் நீங்கி, யானை தட உடைக் கையும்- யானையினது பெருமை பொருந்திய துதிக்கையையும், கரபமும் - கையினடியையும்; கதலித்தண்டு - வாழைத் தண்டையும், ஒத்திருக்கில் நன்று என்ப - ஒத்திருக்குமாயின் நன்மை என்று கூறுவர் எ-று. நிதம்பம் - இடையின் கீழ்ப்பக்கம்; பின்புறமாகிய சகன மென்றும் உரைப்பர். தட - பெருமை; “ தடவுங் கயவு நளியும் பெருமை” என்பது தொல்காப்பியம். (39) அங்கமுண் மறைந்து வட்டமாய்த் தசைவ தணிமுழந் தாண்மயிர் நரம்பு தங்கிடா தடைவே யுருட்சியாய்ச் சிறுத்துச் சமவடி வாயழ கடைந்த சங்கையாஞ் சிரையென் பறத்தசைந் தியாமை முதுகெனத் திரண்டுயர்ந் தழகு மங்கலம் பொலிந்த புறவடி மடந்தை மன்னவன் பன்னியா மன்னோ. (இ-ள்.) அணி முழந்தாள் - அழகிய முழங்கால், அங்கம் உள்மறைந்து - எலும்பு வெளித்தோன்றாமல் உள்ளே மறைந்து, வட்டமாய் -வட்ட வடிவாய், தசைவது - தசைப்பற்றுடையதாயின் (நன்மையாம்); சங்கை - கணைக்கால்கள், மயிர் நரம்பு தங்கிடாது- மயிரும் நரம்பும் இல்லாமல், உருட்சியாய் அடைவே சிறுத்து - திரண்டு முறையே சிறுத்து, சமவடிவாய் அழகு அடைந்தவாம் - (தம்மில்) ஒத்த வடிவாய் அழகுடையனவாயின் (நன்மை) ஆகும்; சிரை என்பு அறத் தசைந்து - நரம்பு எலும்பும் இன்றித் தசைந்து, யாமை முதுகு எனத் திரண்டு உயர்ந்து - யாமையின் முதுகுபோலத் திரண்டு உயர்ந்து, அழகு மங்கலம் பொலிந்த - அழகினாலும் பொலிவினாலும் விளங்கிய, புற அடி மடந்தை - புறவடியினை யுடைய பெண், மன்னவன் பன்னி ஆம் - அரசனுக்கு மனைவி யாவாள் எ-று. ஆம் என்பதனை அடைந்தவாம் எனப் பிரித்துக் கூட்டுக. சிரை - நம்பு. மன்னும் ஓவும் அசைகள். (40) அல்லியங் கமலக் கால்விர லுயர்ந்து தூயவா யழக வாய்க் கழுநீர் மெல்லிதழ் நிரைத்தாங் கொழுங்குறத் திரண்டு வாலுகிர் வெண்மதிப் பிளவு புல்லிய போன்று மெல்லிய வாகிப் புகரறத் தசைந்தன வகத்தாள் சொல்லிய தசைவு மென்மையுஞ் சமமுந் துகளறப் படைத்தன நன்றால். (இ-ள்.) அல்லி அம் கமலக் கால் விரல் - அகவிதழையுடைய அழகிய தாமரை மலர் போன்ற காலின் விரல்கள், உயர்ந்து தூயவாய் அழகவாய் - உயர்ந்து தூய்மையுடையனவாய் அழகியனவாய், கழு நீர் மெல் இதழ் நிரைத்தாங்கு - செங்கழுநீர் மலரின் மெல்லிய இதழ்களை வரிசைப்பட வைத்தாற்போல, ஒழுங்கு உறத் திரண்டு- ஒழுங்கு பெறத் திரண்டு, வால் உகிர் - வெள்ளிய நகங்கள், வெள்மதிப் பிளவு புல்லிய போன்று - வெள்ளிய மதியின் பிளவுகள் அவ்விரல்களைப் பொருந்தியன போலப் (பொருந்தப் பெற்று), மெல்லியவாகி - மென்மையுடையனவாய், புகர் அறத் தசைந்தன (நன்று) - குற்றமின்றித் தசையுடையனவாயின் நன்மையாம், அகத்தாள் - உள்ளங் கால்கள், சொல்லிய தசைவும் மென்மையும் சமமும் துகள் அறப் படைத்தன நன்று - நூலிற் கூறிய தசைப் பற்றும் மென்மைத் தன்மையும் சமனாதலும் குற்றமறப் பெற்றனவாயின் நன்மையாம் எ-று. திரண்டு உகிர் பொருந்தப் பெற்று மெல்லியவாகி யென்க. நன்று என்பது முன்னும் கூட்டப்பட்டது. ஆல் : அசை. (41) வண்ணமாந் தளிர்போற் சிவந்தெரி பொன்போல் வைகலும் வெயர்வையற் றாகம் உண்ணமா யிருக்கிற் செல்வமுண் டாகு மொண்மணம் பாடலங் குவளை தண்ணறா முளரி மல்லிகை நறுந்தண் சண்பகம் போல்வன வாகும் பண்ணவாங் கிளவி குயில்கிளி யாழிற் படின்வரும் பாக்கிய மென்னா. (இ-ள்.) ஆகம் - உடம்பு, வண்ணம் மாந்தளிர் போல் - செந்நிறமுடைய மாந்தளிர் போலவும், எரி பொன் போல் சிவந்து - விளங்கும் பொன் போலவும் செந்நிறம் வாய்ந்து, வைகலும் வெயர்வை அற்று - எஞ்ஞான்றும் வெயர் வரும்பாமல், உண்ணமாய் இருக்கில் - வெம்மையாய் இருக்குமாயின், செல்வம் உண்டாகும் - செல்வம் உளதாகும்; ஒள்மணம் - (அவ்வுடலின்) மிக்க மண மானவை, பாடலம் - பாதிரி மலரும், குவளை - நீலோற்பல மலரும், தண் அறா முளரி - தட்பம் நீங்காத தாமரை மலரும், மல்லிகை - மல்லிகை மலரும், நறுந் தண் சண்பகம் - இனிய குளிர்ந்த சண்பக மலரும் ஆகிய இவற்றின் மணங்களை, போல்வன ஆகும் - ஒத்தன வாதல் வேண்டும்; பண்அவாம் கிளவி - இசையும் விரும்புகின்ற மொழி, குயில் கிளி யாழின் படின் - குயிலும் கிளியும் யாழுமாகிய இவற்றின் ஓசை போல இருக்கின், பாக்கியம் வரும் என்னா - பாக்கியம் வரும் என்று கூறி எ-று. உண்ணம், உஷ்ணமென்பதன் சிதைவு. பாடலம் முதலியன அவற்றது மலரின் மணத்திற்கும், குயில் முதலியன அவற்றின் ஓசைக்கும் ஆயின. அவாவுமென்பது விகாரமாயிற்று. படின் - பொருந்தின். மேலைச் செய்யுளில் ‘துகளிலா வழகுமே யன்றி’ என்றும், இச் செய்யுளில், உண்ணமுஞ் சிவப்பு முள்ளதாய் வேர்வை யொழிந்ததேற் செல்வமா மாகம், வண்ணமார்பொன்போ னன்னிறம் வாய்தல் வண்மணம் என்றும், ‘சம்பகம் போல்வது நன்றாம்’ என்றும் பாடங்கொண்டனர் இராமசுவாமிப் பிள்ளை. (42) (அறுசீரடி யாசிரிய விருத்தம்) கருங்குழற் கற்றை தொட்டுச் செம்மலர்க் காலி னெல்லை மருங்குனல் கூர்ந்த கன்னி வடிவெலாம் வாக்கின் செல்வன் ஒருங்குநூ லுணர்வாற் றெள்ளி யிம்பரின் றும்பர் தேத்தும் இரங்குமிக் குயிலன் னாண்மெய் யிலக்கண மரிய தென்றான். (இ-ள்.) நல்கூர்ந்த மருங்குல் கன்னி - சிறுகிய இடை யினையுடைய காந்திமதியின், கற்றைக் கருங்குழல் தொட்டு - திரண்டகரிய கூந்தல் முதல், செம்மலர்க்காலின் எல்லை வடிவு எல்லாம் - செந்தாமரை மலர் போன்ற காலின் வரையுள்ள உறுப்பு களனைத்தையும், வாக்கின் செல்வன் - மொழிச் செல்வனாகிய வியாழ குரவன், நூல் உணர்வால் ஒருங்கு தெள்ளி - உறுப்பு நூலின் உணர்ச்சியால் ஒரு சேர ஆராய்ந்து, இரங்கும் இக்குயில் அன்னாள் மெய் இலக்கணம் - கூவுகின்ற குயில் போன்ற இக் காந்திமதியின் உறுப்பிலக்கணமும், இம்பர் இன்று - இவ்வுலகத்தில் இல்லை; உம்பர் தேத்தும் அரியது என்றான் - விண்ணுலகத்தும் இல்லை என்று கூறினான் எ-று. வாக்கின் செல்வன் - சொல்லாலாகிய செல்வத்தையுடையவன்; “ யார்கொலிச் சொல்லின் செல்வன்” என்பது இராமாயணம். உம்பர் தேத்தும் என்பதனை உம்பராகிய தேத்து மென்றாவது, உம்பரது தேத்து மென்றாவது விரித்துரைத்துக் கொள்க: தேம் - இடம்; தேத்துமென்னும் உம்மை எச்சமும் சிறப்புமாம். இரங்கல் - ஒலித்தல்; கூவுதல். (43) அங்கது கேட்டோர் யாரு மகங்களி துளும்ப விப்பாற் கொங்கலர் நறுந்தார்க் குஞ்சி யுக்கிர வழுதி1 போந்து மங்கல வரிசை மாண மத்தமான்2 சுமந்த வையைச் சங்கெறி துறைநீ ராடித் தகுங்கடி வனப்புக் கொள்வான். (இ-ள்.) அங்கு அது கேட்டோர் யாரும் அகம் களி துளும்ப - அங்கு அதனைக் கேட்ட அனைவரும் மனம் மகிழ் சிறந்திருக்க, இப்பால் - பின்பு, கொங்கு அலர் நறுந்தார்க் குஞ்சி உக்கிர வழுதி போந்து - மகரந்தத்துடன் மலர்ந்த நறுமணமுடைய மலர் மாலையை அணிந்த சிகையினையுடைய உக்கிர வழுதி (அவணின்றும்) எழுந்து, மங்கல வரிசை மாண - அட்ட மங்கல வரிசைகளும் சிறக்க, மத்த மான் சுமந்த - மதச் செருக்குடைய யானையால் சுமந்து வரப் பெற்ற, வையை - வையை யாற்றின், சங்கு எறிதுறை நீர் ஆடி - சங்குகளை வீசும், துறையின் நீரில் ஆடி, தகும் கடி வனப்புக் கொள்வான் - சிறந்த திருமணக்கோலம் கொள்ளத் தொடங்கினான் எ-று. களி துளும்ப வென்னும் சினைவினை முதல் மேல் நின்றது. மத்தம் - மயக்கம்; மதக்களி. சுமந்த நீரி லென்க. (44) கட்டவிழ் கண்ணி வேய்ந்து மான்மதக் கலவைச் சாந்தம் மட்டனஞ் செய்து முத்தான் மாண்கலன் முழுதுந் தாங்கி விட்டவிர் கலைவான் றிங்கள் வெண்கதிர்ச் செல்வன் போல்வந் திட்டபூந் தவிசின் மேற்கொண் டிருந்தனன் சங்க மேங்க. (இ-ள்.) கட்டு அவிழ் கண்ணி வேய்ந்து - முறுக்கு அவிழ்ந்த மலர் மாலை சூடி, மான்மதக் கலவைச் சாந்தம் மட்டனம் செய்து - மிருக மதங் கலந்த கலவையாகிய சந்தனத்தை அப்பி, முத்தால் மாண்கலன் முழுதும் தாங்கி - முத்துக்களால் மாட்சிமைப் பட்ட அணிகளனைத்தையும் அணிந்து, விட்டு அவிர் கலைவான் திங்கள் வெண் கதிர்ச் செல்வன் போல் வந்து - விட்டு (விட்டு) விளங்கும் கலையினையுடைய வானின்கண் உள்ள திங்களாகிய வெள்ளிய கிரணத்தையுடைய சந்திரன் போல வந்து, இட்ட பூந்தவிசின் - கல்யாண மண்டபத்தில் இட்ட அழகிய ஆதனத்தின் மேல், சங்கம் ஏங்க மேற்கொண்டு இருந்தனன் - சங்கங்கள் ஒலிக்க ஏறி யிருந்தான் எ-று. கண்ணி - முடியிற் சூடுமாலை. மட்டனஞ் செய்து - மட்டித்து; பூசி, முத்தானியன்ற கலன்களை முழுதுந் தாங்கியிருத்தலின் திங்கட் செல்வன்போ லென்றார்; தன் குல முதல்வனென்பது தோன்றக் கூறினார். (45) அந்நிலை மணநீ ராட்டி யருங்கலப் போர்வை போர்த்த கன்னியைக் கொணர்ந்து நம்பி வலவயிற் கவின வைத்தார் பன்னியோ டெழுந்து சோம சேகரன் பரனும் பங்கின் மன்னிய வுமையு மாக மதித்துநீர்ச் சிரகந் தாங்கி. (இ-ள்.) அந்நிலை - அப்பொழுது, மணநீர் ஆட்டி - மணம் பொருந்திய நீரில் மூழ்குவித்து, அருங்கலப் போர்வை போர்த்த கன்னியைக் கொணர்ந்து - அரிய அணிகலனாகிய போர்வையில் போர்க்கப்பட்ட காந்திமதியைக் கொண்டு வந்து, நம்பி வலவயின் கவின வைத்தார் - உக்கிரகுமாரனது வலப்பக்கத்தில் அழகு பெற வைத்தனர்; சோம சேகரன் பன்னியோடு எழுந்து - சோம சேகரனானவன் தன் மனைவியோடு மெழுந்து, பரனும் பங்கில் மன்னிய உமையுமாக மதித்து - (அம் மண மக்களைச்) சிவபிரானும் அவன் பாகத்தில் நிலைபெற்ற உமைப் பிராட்டியுமாகக் கருதி, நீர்ச் சிரகம் தாங்கி - நீர் நிறைந்த கரகத்தைக் கையில் ஏந்தி எ-று. மணநீர் - பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத்திரு வகை ஓமாலிகையினும் ஊறிய நன்னீர்; மன்றலுக் குரிய நீராட்டுச் செய்து என்றுமாம். சிவனும் உமையுமாக மதித்துப் பூசித்தல் மரபு. சிகரம் - கமண்டலம். (46) மங்கல நீரா னம்பி மலரடி விளக்கி வாசக் கொங்கலர் மாலை சூட்டிக் குளிர்மது பருக்க மூட்டி நங்கைதன் கையைப் பற்றி நம்பிதன் கையி லேற்றிப் புங்கவ ரறிய நன்னீர் மந்திரம் புகன்று பெய்வான். (இ-ள்.) மங்கல நீரால் நம்பி மலர் அடி விளக்கி - நலன் நிறைந்த அந்நீரினால் உக்கிர வழுதியின் மலர் போன்ற திருவடி களை விளக்கி, வாசக் கொங்கு அலர்மாலை சூட்டி - மணம் பொருந்திய மகரந்தத்தொடு மலர்ந்த மலர் மாலையை அணிவித்து, குளிர் மது பருக்கம் ஊட்டி - குளிர்ந்த மது பருக்கத்தினை உண்பித்து, நங்கை தன் கையைப் பற்றி - பெண்ணின் கையைப் பிடித்து, நம்பி தன்கையில் ஏற்றி - மண மகன் கையில் வைத்து, புங்கவர் அறிய - தேவர்கள் அறிய, மந்திரம் புகன்று நல் நீர் பெய்வான் - மந்திரங் கூறி நல்ல நீரினை வார்ப்பவன் எ-று. மதுபருக்கம் - பாலும் பழமும். நம்பி - ஆடவரிற் சிறந்தோன். நங்கை - பெண்டிரிற் சிறந்தவள். நீர் பெய்பவனென்க. தன் இரண்டும் சாரியை. (47) இரவிதன் மருமான் சோம சேகர னென்பேன்1 றிங்கள் மரபினை விளக்க வந்த சுந்தர மாறன் மைந்தன் உரவுநீர் ஞாலந் தாங்கு முக்கிர வருமற் கின்றென் குரவலர்க் கோதை மாதைக் கொடுத்தன னெனநீர் வார்த்தான். (இ-ள்.) இரவி தன் மருமான் சோம சேகரன் என்பேன் - சூரியன் மரபினனாகிய சோம சேகரனென்னும் பெயரையுடையயான், திங்கள் மரபினை விளக்க வந்த சுந்தர மாறன் மைந்தன் - சந்திர குலத்தை விளக்கும்படி வந்தருளிய சுந்தர பாண்டியரின் திருப்புதல்வ னாகிய, உரவு நீர் ஞாலம் தாங்கும் உக்கிர வருமற்கு - கடல் சூழ்ந்த உலகத்தைப் பாதுகாக்கும் உக்கிரவன்மனுக்கு, என் குரவு அலர் கோதை மாதை - என் புதல்வியாகிய குராமலரை யணிந்த கூந்தலை யுடைய காந்திமதியை, இன்று - இப்பொழுது, கொடுத்தனன் என நீர் வார்த்தான் - கொடுத்தே னென்று தாரை வார்த்தான் எ-று. என்பேன் - என்று பெயர் கூறப்படுவேன்: வினைப்பெயர்; என்பேர் என்னும் பாடம் சிறப்பின்றாதல் காண்க. உரவு நீர் - வலிய நீர்; கடல். மைந்தனாகிய உக்கிரவருமற் கென்க. தன் : சாரியை. (48) மைந்துறு மடங்கற் றிண்கான் மணிவட வயிர வூசல் ஐந்துடன் பதஞ்செய் பஞ்சி யணையினோ டன்னத் தூவிப் பைந்துகி லணையீ ரைந்து பவளவாய்ப் பசும்பொன் மேனி இந்திர மணிக்கட் பாவை விளக்குநான் கிரட்டி யென்ப. (இ-ள்.) மைந்து உறு மடங்கல் திண் கால் - வலிமை மிக்க சிங்கத்தின் திண்ணிய கால் போன்ற காலுள்ள, மணிவட வயிர ஊசல் ஐந்துடன் - முத்துவடம் பூட்டிய வயிரத்தாலாகிய ஊசல் ஐந்தும், பதம் செய் பஞ்சி யணையினோடு - பதஞ் செய்த பஞ்சு பெய்த அணை (பத்தும்), அன்னத்தின் தூவி பைந்துகில் அணை ஈரைந்தும் - அன்னத்தின் தூவி பெய்த மெல்லிய ஆடையாலமைந்த அணை பத்தும், பவளவாய் - பவளத்தாலாகிய வாயும், பசும் பொன்மேனி - பசிய பொன்னாலாகிய உடலும், இந்திரமணிக்கண்- இந்திர நீலக்கல்லாலாகிய கண்களும் உடைய, பாவை விளக்கு நான்கு இரட்டி - பாவை விளக்கு எட்டும் எ-று. ஊசல், இக்காலத்து ஊஞ்சலென வழங்கும். பஞ்சி - பஞ்சு. தூவி - அன்னத்தின் சிறையடியிலுள்ள மெல்லிய மயிர். அணைதற் குரியதாகலின் அணையெனப் பெயரெய்திற்று; இதனை மெத்தை யென்பர். பவள முதலியவற்றால் வாய் முதலிய செய்யப்பட்ட பாவை. பாவையானது விளக்கினை யேந்தி நிற்குமாறு அமைத்த படிவம் பாவைவிளக்கெனப்படும். ஊசல் முதலாக எண்ணப்படுவன பின் ‘விளைவொடு’ என்னுஞ் செய்யுளில், வழங்கினான் என்பது கொண்டு முடியும். என்ப: அசைநிலை; வருஞ்செய்யுளிலும் அது. (49) அட்டில்வா யடுக்குஞ் செம்பொற் கலங்கணூ றம்பொன் வாக்கி இட்டிழை மணிக்க ளாஞ்சி யேழுபொற் கவரி யெட்டு விட்டொளிர் பசும்பொற் கிண்ணப் பந்திசூழ் விளங்க நாப்பண் நட்டபொற் காலி னோடு நகைமணிக் கலநூ றென்ப. (இ-ள்.) அட்டில் வாய் அடுக்கும் செம்பொன் கலங்கள் நூறு- அடுக்களையில் அடுக்கப்பெறும் சிவந்த பொன்னாலாகிய பாத்திரங்கள் நூறும், அம்பொன் வாக்கி - அழகிய பொன்னால் வார்த்து, மணி இட்டு இழை களாஞ்சி ஏழு - மணிகளைப்பதித்து இழைத்த படிக்கம் ஏழும், பொன் கவரி எட்டு - பொன்னாலாகிய காம்பினையுடைய சாமரை எட்டும், விட்டு ஒளிர் பசும் பொன் கிண்ண பந்தி சூழ்ந்து விளங்க - ஒளி விட்டு விளங்கும் பசும் பொன்னாலாகிய கிண்ண வரிசை சூழ்து விளங்க, நாப்பண் நட்ட பொன் காலினோடு - நடுவே நட்ட பொன்னாலாகிய காலுடன் கூடிய, நகை மணிக்கலம் நூறு - ஒளி பொருந்திய மாணிக்கப் பாத்திரங்கள் நூறும் எ-று. வாக்கி - கருக்கட்டி வார்த்து. சூழ் விளங்க நட்ட காலுடன் கூடிய கலம் என்க. (50) பெருவிலை யாரப் பேழை யாயிரம் பெற்ற நுண்டூ சருவிலைப் பட்டு வெவ்வே றமைத்தன பேழை முந்நூ றுருவமு தெழுதிச் செய்த வோவியப் பாவை யன்னார் திருமணிக் கலனோ டேவற் சேடிய ரெழுநூற் றைவர். (இ-ள்.) பெருவிலை ஆரப் பேழை - மிக்க விலையுள்ள முத்து மாலை வைத்திருக்கும் பெட்டி (முந்நூறும்), ஆயிரம் பெற்ற நுண்தூசு - ஆயிரம் பொன் விலையுடைய மெல்லிய வெண்டுகிலும், அருவிலைப்பட்டு - மதித்தற்கரிய விலையுள்ள பட்டும் ஆகிய இவைகளை, வெவ்வேறு அமைத்தன பேழை முந்நூறு - வேறு வேறாக வைக்கப் பெற்ற பெட்டி முந்நூறும், திருமணிக் கலனோடு- சிறந்த மாணிக்க அணிகளோடு, அமுது உருவு எழுதிச் செய்த ஓவியப் பாவை அன்னார் - அமிழ்தத்தில் (கோலினைத் தோய்த்து) உருவம் வரைந்து செய்த சித்திரப் பாவையை ஒத்தவராகிய, ஏவல் சேடியர் எழுநூற்று ஐவர் - ஏவல் செய்யும் சிலதியர் எழுநூற்றைவரும் எ-று. ஆயிரம் காணம் விலைபெற்ற வென்க; ஆயிரம், மிகுதிக்கு ஓர் எடுத்துக் காட்டு. தூசு - பருத்தியாடை; துகிலெனவும் வழங்கும். “ பட்டுநீக்கித் துகிலுடுத்து” என்பது பட்டினப்பாலை. அமுதால் உருவெழுதுதல் “ ஆதரித் தமுதிற் கோல்தோய்த் தவயவ மமைக்குந் தன்மை” என இராமாயணத்தில் வந்துளது. (51) விளைவொடு மூன்று மூதூர் மின்னுவிட் டெறியுஞ் செம்பொன் அளவிரு கோடி யின்ன வரும்பெறன் மகட்குச் செல்வ வளமுற வரிசை யாக வழங்கினான் முழங்கி வண்டு திளைமதுக் கண்ணிச் சோம சேகர மன்னன் மாதோ. (இ-ள்.) விளைவொடு மூன்று மூதூர் - விளைந்த கழனிகளுடன் கூடிய மூன்று பெரிய ஊர்களும், மின்னு விட்டு எறியும் செம்பொன் அளவு இரு கோடி - ஒளிவிட்டு வீசும் செம் பொன் இரண்டு கோடி அளவும், இன்ன - இவை போல்வன பிறவும், அரும் பெறல் மகட்கு- பெறுதற்கரிய தன் புதல்விக்கு, வண்டு முழங்கித் திளை மது கண்ணிச் சோமசேகர மன்னன் - வண்டுகள் ஒலித்துத் திளைக்கின்ற தேனினையுடைய மாலையை யணிந்த சோமசேகர மன்னன், செல்வவளம் உற வரிசையாக வழங்கினான் - செல்வ வளத்திற்கேற்ப வரிசையாகக் கொடுத்தான் எ-று. மாது, ஓ : அசைகள். (52) ஆர்த்தன வியங்க ளெல்லா மமரர்மந் தார மாரி தூர்த்தனர் வேள்விச் செந்தீச் சுழித்தது வலமாய்த் துள்ளி வார்த்தன மடவார் நாவின் முளைத்தன வாழ்த்து மன்றல் பார்த்தனர் கண்க ளெல்லாம் பெற்றன படைத்த பேறு. (இ-ள்.) இயங்கள் எல்லாம் ஆர்த்தன - பலவகை இயங் களெல்லாம் ஒலித்தன; அமரர் மந்தார மாரி தூர்த்தனர் - தேவர்கள் கற்பகமலர் மழையைப் பொழிந்தனர்; வேள்விச் செந்தீ வலமாய்த் துள்ளிச் சுழித்தது - வேள்விக் குண்டத்தின்கண் சிவந்த தீயானது வலமாகச் சுழன்று குதித் தெழுந்தது; வார் தனம் மடவார் நாவின் வாழ்த்து முளைத்தன - கச்சணிந்த கொங்கைகளையுடைய மகளிர் நாவின்கண் வாழ்த்துப் பாடல்கள் அரும்பின; மன்றல் பார்த்தனர் கண்கள் எல்லாம் - திருமண விழாவைப் பார்த்தவர்களின் கண் களனைத்தும், படைத்த பேறு பெற்றன - படைக்கப் பெற்ற தனாலாகிய பயனை அடைந்தன எ-று. சுழித்துத் துள்ளியது என விகுதி பிரித்துக் கூட்டுக. மன்றல் வாழ்த்து முளைத்தன எனலுமாம். (53) பொதியவிழ் கடப்பந் தண்டார்ப் புயத்திளங் காளை யன்னான் முதியவர் செந்தீ யோம்ப வின்னிய முழங்கக் காந்தி மதியைமங் கலநாண் பூட்டி வரிவளைச் செங்கை பற்றி விதிவழி யேனை மன்றல் வினையெலா நிரம்பச் செய்தான். (இ-ள்.) பொதி அவிழ் கடப்பம் தண்தார் - முறுக் கவிழ்ந்த கடப்பமலரின் தண்ணிய மாலையணிந்த, புயத்து இளங்காளை அன்னான் - திருத்தோளினையுடைய முருகக்கடவுளை யொத்த உக்கிர வழுதி, முதியவர் செந்தீ ஓம்ப - மூதறிவுடைய முனிவர் ஓமம் வளர்க்கவும், இன் இயம் முழங்க - இனிய இயங்கள் ஒலிக்கவும், காந்திமதியை மங்கல நாண் பூட்டி - காந்திமதி யம்மையை மங்கல நாண் அணிந்து, வரிவளை செங்கைபற்றி - வரிகளையுடைய வளையலமைந்த சிவந்த கையைப்பற்றி, ஏனைமன்றல் வினை எலாம் - மற்றைய மண வினைகளனைத்தையும், விதிவழி நிரம்பச் செய்தான் - வேத விதிப்படி நிரம்புமாறு செய்து முடித்தான் எ-று. கடம்பு என்பது வலித்து அம் சாரியை பெற்றது. நாண் பூட்டியென்பதும் செங்கை பற்றி யென்பதும் ஒரு சொன்னீரவாய் இரண்டாவதற்கு முடிபாயின. எலாம் - எல்லாமும். (54) (மேற்படி வேறு) எண்ணி லாத வளத்தினொடு மிரவி மருமான் மடப்பிடியைப் பண்ணி லாவி மறையொழுக்கம் பயப்ப வேள்வி வினைமுடித்துத் தண்ணிலா வெண் கலைமதியுந் தாரா கணமுந் தவழ்ந்துழல விண்ணி லாவு மணிமாட வீதி வலமாய் வருமெல்லை. (இ-ள்.) எண் இலாத வளத்தினொடும் - அளவில்லாத செல்வத்துடன், இரவி மருமான் மடப் பிடியை - சூரியன் மரபில் வந்த சோம சேகரன் புதல்வியாகிய காந்திமதியை, பண் நிலாவு மறை ஒழுக்கம் பயப்ப வேள்வி வினை முடித்து - இசையமைந்த வேதத்தின் விதி நிரம்ப மண வினையை முடித்து, தண் நிலா வெண்கலை மதியும் தாரா கணமும் தவழ்ந்து உழல - தண்ணிய ஒளி பொருந்திய வெள்ளிய கலையையுடைய திங்களும் உடுக்கணங் களும் தவழ்ந்து வருமாறு, விண் நிலாவும் - வானின் கண் (உயர்ந்து) விளங்கும், மணிமாட வீதி - அழகிய மாடங்களையுடைய வீதியை, வலமாய் வரும் எல்லை - வலமாக உலாவரும் பொழுது எ-று. மடப் பிடி - இளமை பொருந்திய பெண்யானை போல்வாள்; பிடி நடையாலுவமம். வேள்வி வினை முடித்து என்றது அநுவாதம் உழல நிலாவுமென்க. அணி மாடமெனப் பிரித்தலுமாம். வலமாக வெனத் திரிக்க. (55) மின்னேர் பொன்னந் தொடியினரு மென்செம் பஞ்சி யடியினரும் பொன்னேர் மணிப்பூண் முலையினரும் புலம்பு மணிமே கலையினரும் அன்னே ரோதித் தாரினரு மாகிக் கண்ணு மனமுமவன் முன்னே தூது நடப்பதென நடப்ப நடந்தார் முகிழ்முலையார். (இ-ள்.) மின்நேர் பொன் அம்தொடியினரும் - மின்னலை யொத்த பொன்னாலாகிய அழகிய வளையலை அணிந்தவரும், மென் செம்பஞ்சி அடியினரும் - மெல்லிய செம்பஞ்சிக் குழம்பூட்டிய அடியினையுடைய வரும், பொன் ஏர் மணிப்பூண் முலையினரும் - பொன்னாலாகிய அழகிய மணிக்கலன் விளங்கும் கொங்கையை யுடையவரும், புலம்பும் மணி மேகலையினரும் - ஒலிக்கின்ற அழகிய மேகலையை அணிந்த வரும், அல் நேர் ஓதித்தாரினரும் ஆகி - இருள்போன்ற கூந்தலில் மாலையை யணிந்தவரும் ஆகி, கண்ணும் மனமும் அவன் முன்னே தூது நடப்பதென நடப்ப - கண்களும் மனமும் அவன் முன்னே தூது செல்லுதல்போல முன்னேசெல்ல, முகிழ் முலையார் நடந்தார் - தாமரையரும்பினை யொத்த தனங்களை யுடைய மகளிர் சென்றார்கள் எ-று. தொடியினரும் அடியினரும் எனவும், முலையினரும் கலை யினரும் எனவும் இயைபெதுகை நயம் அமைந்திருத்தல் காண்க. ஏர்: உவமவுருபுமாம். நடப்பது : தொழிற் பெயர். முகிழ் - கோங் கரும்புமாம்; முகிழ்த்த வெனினும் பொருந்தும். (56) சுருங்கு மிடையார் தன்பவனி தொழுது வருவார் தமக்கிரங்கி மருங்குற் பாரங் கழிப்பான்போற் கலையைக் கவர்ந்தும் வளைத்தோண்மேல் ஒருங்கு பாரங் கழிப்பான்போல் வளையைக் கவர்ந்து முள்ளத்துள் நெருங்கு பாரங் கழிப்பான்போ னிறையைக் கவர்ந்து நெறிச்செல்வான். (இ-ள்.) தன் பவனி தொழுது வருவார் - (உக்கிர குமாரன்) தனது திருவுலாவைத் தரிசித்து வருவாராகிய, சுருங்கும் இடையார் தமக்கு இரங்கி - சிறுகிய இடையினையுடைய மகளிர்க்கு இரங்கி, மருங்குல் பாரம் கழிப்பான் போல் - அவரது இடையின் பாரத்தைக் கழிப்பவன் போல, கலையைக் கவர்ந்தும் - மேகலையை வெளவியும், வளைத்தோள் மேல் பாரம் ஒருங்கு கழிப்பான் போல் - மூங்கிலை யொத்த தோளின் பாரத்தை ஒரு சேர நீக்குபவன் போல, வளையைக் கவர்ந்தும் - வளையல்களை அபகரித்தும், உள்ளத்துள் நெருங்கு பாரம் கழிப்பான் போல் - உள்ளத்தின்கண் மிக்க பொறையை ஒழிப்பவன்போல, நிறையைக் கவர்ந்தும் - கற்பினைக் கவர்ந்தும், நெறிச் செல்வான் - வீதியிற் செல்வான் எ-று. வருவாராகிய இடையார் தமக் கென்க. கலை - மேகலை; முதற்குறை. மகளிர் வேட்கை நோயால் உடல் மெலிந்து கலையும் வளையும் கழலப் பெறுதலையும், நிறையிழத்தலையும் உக்குர குமாரன் அவர் மேல் இரக்கமுற்று மருங்குல் முதலியவற்றின் பாரத்தைப் கழிப்பான் போற் கவர்ந்து செல்வான் எனக்கூறினார். இது தற்குறிப்பேற்றவணி. (57) வான மதிசேர் முடிமறைத்த வழுதி மகனே யிவனென்றால் ஆனை யெருத்திற் சிங்கவிள வடலே றென்ன வயல்வேந்தர் சேனை தழுவ வரும்பவனிக் கொப்பே தொப்புச் செப்புங்கால் யானை மகளை மணந்துவரு மிளையோன் பவனிச் செல்வமே. (இ-ள்.) வானமதி சேர் முடி மறைத்த வழுதி மகனே இவன் என்றால் - வானின்கண் உள்ள பிறையை யணிந்த சடையை மறைத்து வந்தருளிய சுந்தர பாண்டியன் புதல்வனே இவ் வுக்கிரகுமர னென்றால், ஆனை எருத்தில் - யானையின் பிடரியில், இள அடல் சிங்க ஏறு என்ன - இளமையாகிய வலிய ஆண் சிங்கம்போல இவர்ந் தருளி, அயல் வேந்தர் சேனை தழுவ - வேற்று மன்னரின் படைகள் சூழ, வரும் பவனிக்கு ஒப்பு ஏது - வருகின்ற திருவுலாவிற்கு ஒப்பாவது வேறுயாது, செப்புங்கால் - சொல்லுமிடத்து, யானை மகளை மணந்து வரும் இளையோன் பவனிச் செல்வமே - தெய்வ யானையாரைத் திருமணஞ் செய்து வருகின்ற முருகக் கடவுளின் திருவுலாச் சிறப்பே, ஒப்பு - ஒப்பாகும் எ-று. எருத்தில் ஏறி வரும் பவனி யென்க; யானை யெருத்தில் ஏறி வரும் சிங்க வேறு போல என இல்பொருளுவமை யாக்கலும் ஆம். செப்புங்கால் செல்வமே, ஒப்பு என மாறுக. செப்புங்கால் - உவமை கூறவேண்டு மென்னின், முடி மறைத்த வழுதி மகனே இவன் என்பதனால் இவன் இளையோனின் வேறல்லன் என்பது தோன்ற நின்றமையின் இவனது பவனியும் தானே தனக்கு ஒப்பென்ப தாயிற்று. இந்திரனது வெள்ளை யானையால் வளர்க்கப்பட்ட மையால் ‘யானை மகளை ‘ என்றார். யானை ஆனை யெனத் திரிந்தது. (58) இம்மை தனிலு நன்மைதரு மீசன் றனையும் வாசவற்கு வெம்மை தருவன் பழிதவிர்த்த விமலன் றனையு மங்கயற்கண் அம்மை தனையும் பணிந்துமீண் டரசன் கோயி லடைந்தீன்றோர் தம்மை முறையா லடிக்கமலந் தலையிற் பணிந்தான் றனிக்குமரன். (இ-ள்.) இம்மை தனிலும் நன்மை தரும் ஈசன் தனையும் - இம்மையிலேயே பயனை அளிக்கும் சிவபெருமானையும், வாச வற்கு வெம்மைதரு வன் பழி தவிர்த்த விமலன் தனையும் - இந்திரனுக்குத் துன்பந் தந்த வலிய பழியை நீக்கி யருளிய சோம சுந்தரக் கடவுளையும், அங்கயற்கண் அம்மைதனையும் - அங்கயற் கண் ணம்மையாரையும், தனி குமரன் பணிந்து மீண்டு - ஒப்பற்ற உக்கிரகுமாரன் வணங்கித் திரும்பி, அரசன் கோயில் அடைந்து - அரசன் மாளிகையை அடைந்து - ஈன்றோர் தம்மை அடிக்கமலம் - தன்னைப்பெற்ற தந்தை தாயரின் திருவடித் தாமரைகளை, முறையால் தலையின் பணிந்தான் - முறைப்படி தலையினால் வணங்கினான் எ-று. இம்மைதனிலும் நன்மை தரும் ஈசன் என்பது சுந்தர பாண்டியனாகிய இறைவனால் நடூவூரில் நிறுவி வழிபடப் பெற்ற சிவலிங்கப் பெருமான் திருப்பெயர்; இதனை, “ மெய்ம்மை நூல் வழியே கோயில் விதித்தருட்குறி நிறீஇப்பேர் இம்மையே நன்மை நல்கும் இறையென நிறுவி” என வரும் திருமணப்படலச் செய்யுளாலறிக. உம்மையை அசைநிலை யாக்கி ஏகாரம் விரிக்க. தம்மை - தம்முடைய; வேற்றுமை மயக்கம்; பொருந்தவென ஒரு சொல் வருவித்து, அடிக் கமலம் தலையிற் பொருந்த ஈன்றோர் தம்மைப் பணிந்தான் என்றுரைத்தலுமாம்.(59) ஆனா வாறு சுவையடிசி லயில்வோர் தம்மை யயில்வித்து நானா வரிசை வரன்முறையா னல்கி விடையு நல்கிப்பின் வானா டவர்க்கும் விடைகொடுத்து மதிக்கோ னொழுகி வைகுநாள் தேனார் கண்ணித் திருமகனுக் கிதனைச் செப்பி யிதுசெய்வான். (இ-ள்.) மதிக்கோன் - திங்கள் மரபுக்கு இறைவனாகிய சுந்தர பாண்டியன், ஆறுசுவை ஆனா அடிசில் - அறுவகைச் சுவையும் நீங்காது பொருந்திய உணவினை, அயில்வோர் தம்மை அயில்வித்து- உண்போரை உண்பித்து, வரன்முறையால் நானாவரிசை நல்கி - முறைப்படி பலவரிசைகளையும் அளித்து, விடையும் நல்கி விடையும் கொடுத்து, பின்- பின்பு, வானடவர்க்கும் விடை கொடுத்து - தேவர்களுக்கும் விடை தந்து, ஒழுகி வைகு நாள் - ஆட்சி புரிந்துவரும் காலத்தில், தேன் ஆர் கண்ணித் திருமகனுக்கு இதனைச் செப்பி இது செய்வான் - தேன் நிறைந்த மாலையை யணிந்த புதல்வனுக்கு இதனைக் கூறி இதனைச் செய்வான் எ-று. ஆறென்னும் எண்ணுப் பெயர் திரியாது நின்றது. செயப்படு பொருள் இரண்டாயின; பகைவரைச் சிறைச்சாலையை அடை வித்தான் என்பது போல. நானா - பல. இதுவென்பன பின்வருவன. (60) மைந்த கேட்டி யிந்திரனுங் கடலு முனக்கு வான்பகையாஞ் சந்த மேருத் தருக்கடையுஞ் சதவேள் விக்கோன் முடிசிதற இந்த வளைகொண் டெறிகடலி லிவ்வேல் விடுதி யிச்செண்டால் அந்த மேருத் தனைப்புடையென் றெடுத்துக் கொடுத்தா னவைமூன்றும். (இ-ள்.) மைந்த - புதல்வனே, கேட்டி - கேட்பாயாக, இந்திரனும் கடலும் உனக்கு வான்பகையாம் - தேவேந்திரனும் கடலும் நினக்குப் பெரிய பகையாகும்; சந்தம் மேரு தருக்கு அடையும் - அழகிய மேருமலை இறுமாப்புறும் (ஆகலின்), சதவேள்விக் கோன்முடி சிதற - இந்திரன் முடி சிதறுமாறு, இந்த வளை கொண்டு எறி - இந்த வளையினைக்கொண்டு எறிவாய், கடலில் இவ் வேல்விடுதி - கடலின் கண் இந்த வேற்படையை விடுவாய், இச்செண்டால் - இந்தச் செண்டினால், அந்த மேருதனைப் புடை - அந்த மேருவைத் தாக்குவாய், என்று - என்று கூறி, அவை மூன்றும் எடுத்துக் கொடுத்தான் - அம்மூன்றையும் எடுத்துக் கொடுத்தருளினான் எ-று. கேட்டி, இகரவீற்று வியங்கோள். சதவேள்விக் கோன் - சதமகன்; இந்திரன். (61) அன்ன மூன்று படைக்கலமுந் தொழுது வாங்கி யடலேறு தன்னை நேரா யெதிர்நிற்குந் தனயன் றனையுக் கிரவழுதி என்ன வாதி மறைமுழங்க வியங்க ளேங்க முடிகவித்துத் தன்ன தாணை யரசுரிமைத் தனிச்செங் கோலுந்1 தானல்கா. (இ-ள்.) அன்ன மூன்று படைக்கலமும் தொழுது வாங்கி - அந்த மூன்று படைக்கலங்களையும் வணங்கி வாங்கிக்கொண்டு, அடல் ஏறு தன்னை நேராய் எதிர் நிற்கும் தனயன்தனை - வலிய ஆண் சிங்கத்தைப் போன்று எதிரே நிற்கும் புதல்வனை, உக்கிர வழுதி என்ன- உக்கிர பாண்டிய வேந்தன் என்று கூறும்படி, ஆதிமறை முழங்க - முதன்மை யுடைய வேதங்கள் முழங்கவும், இயங்கள் ஏங்க - பல்லியங்கள் ஒலிக்கவும், முடி கவித்து - முடிசூட்டி, தன்னது ஆணை அரசு உரிமைத் தனிச் செங்கோலும் நல்கா - தனது ஆணையையும் அரசாட்சிக்குரிய ஒப்பற்ற செங்கோலையும் கொடுத்தருளி எ-று. பாண்டி வேந்தாக உலகங்கூற வென்பார்,‘உக்கிர வழுதி யென்ன’ என்றார். தன்னை, தன் : சாரியை. தன்னது, னகரம் விரித்தல். ஆணை - ஆக்கினையாகிய சக்கரம். தான், அசை; எழுவாயுமாம். (62) சூட்சி வினையிற் பொன்னனைய சுமதி தன்னைத் தொன்னூலின் மாட்சி யறிஞர் தமைநோக்கி வம்மி னிவனைக் கண்ணிமைபோற் காட்சி பயக்குங் கல்விபோற் காப்பீ ரிதுநுங் கடனிம்மண் ஆட்சி யிவன தென்றிளைய வரியே றனையான் றனைநல்கா. (இ-ள்.) சூட்சி வினையில் பொன் அனைய சுமதி தன்னை - ஆலோசனைத் தொழிலில் பிருகற்பதியை ஒத்த சுமதியையும், தொல்நூலின் மாட்சி அறிஞர் தமை - பழமையாகிய நீதிநூல் ஆராய்ச்சியின் மாட்சியுடைய அறிஞரையும், நோக்கி - பார்த்து, வம்மின் - வாருங்கள். இவனை - இவ்வுக்கிர வழுதியை, கண் இமை போல் - கண்ணின் இமைபோலவும், காட்சி பயக்கும் கல்விபோல் - அறிவினைக் கொடுக்கும் கல்விபோலவும், காப்பீர் - காக்கக் கடவீர்; இதுநும் கடன் - இது நுமது கடமையாகும், இம் மண் ஆட்சி இவனது என்று - இந்நிலவுலகின் ஆட்சி இவனுடையதாம் என்று கூறி. இளைய அரி ஏறு அனையான் தனை நல்கா - இளைய ஆண் சிங்கம் போன்ற அவ்வுக்கிர வழுதியை அவரிடத்தில் அளித்து எ-று. சூட்சி: சூழ்ச்சி யென்பதன் மரூஉ. சுமதி - முதலமைச்சன். கண்ணை இமை காப்பது போலவும், கல்வியுடையாரை அக்கல்வி காப்பது போலவும் இவனைக் காப்பீர் என்றான்; இம்மைக்கும் மறுமைக்கும் இடருண்டாகாமற் காக்க வேண்டும் மென்றுதாயிற்று. நல்கா - கையடையாகத் தக்கது; இதனை ஒப்புவித்தல் என்பர். (63) (மேற்படி வேறு) வெய்யவேற் காளை யன்னான் றன்னையும் வேறு நோக்கி ஐயவிவ் வையந் தாங்கி யளித்தன நெடுநா ளிந்த மையறு மனத்தார் சொல்லும் வாய்மையா றொழுகி நீயுஞ் செய்யகோன் முறைசெய் தாண்டு திருவொடும் பொலிக வென்றான். (இ-ள்.) வெய்வேல் காளை அன்னான் தன்னையும் வேறு நோக்கி - வெவ்விய வேற்படையை யுடைய முருகனை யொத்த புதல்வனையும் தனியாக நோக்கி, ஐய - ஐயனே, இவ்வையம் தாங்கி நெடுநாள் அளித்தனம் - இவ்வுலகினைச் சுமந்து நெடுங் காலம் ஆட்சி புரிந்தனம்; நீயும் - (இனி) நீயும், இந்த மை அறு மனத்தார் சொல்லும் வாய்மையாறு ஒழுகி - இந்தக் குற்றமற்ற உள்ளத்தினை யுடையார் சொல்லும் உண்மை வழியே நடந்து, செய்ய கோல் முறை செய்து ஆண்டு - செங்கோலால் முறை புரிந்து ஆண்டு, திருவொடும் பொலிக என்றான் - செல்வத்தோடும் விளங்குக என வாழ்த்தியருளினான் எ-று. வேறு நோக்கி - சிறப்பாக நோக்கி. நெடுநாள் அளித்தனம் என்றது இனி நீ அளிக்க வேண்டு மென்னும் குறிப்பிற்று. முறை செய்தல் - நீதி செலுத்தல். வாய்மையாறொழுகி முறை செய்து என்றது உறுதி யுரைத்தலும், திருவொடும் பொலிக என்றது வாழ்த்து தலும் ஆம். தன்னையும், நீயும் என்பவற்றிலுள்ள உம்மைகள் எச்சப்பொருளன. (64) பன்னருங் கணங்க ளெல்லாம் பண்டைய வடிவ மாகத் தன்னருட் டுணையாய் வந்த தடாதகைப் பிராட்டி யோடும் பொன்னெடுங் கோயில் புக்குப் பொலிந்தன னிச்சை தன்னால் இன்னருட் படிவங் கொள்ளு மீறிலா வின்ப மூர்த்தி. (இ-ள்.) இச்சை தன்னால் - தனது இச்சையானே, இன் அருள் படிவம் கொள்ளும் - இனிய அருளுருவம் கொள்ளா நிற்கும், ஈறு இலா இன்ப மூர்த்தி - முடிவில்லாத இன்பவடிவான சுந்தர பாண்டியனாகிய இறைவன், பன் அரும் கணங்கள் எல்லாம் - சொல்லுதற்கரிய கணங்களனைத்தும், பண்டைய வடிவமாக - முன்னைய வடிவமாக, தன் அருள் துணையாய் வந்த - தனது அருட்டுணையாக வந்தருளிய, தடாதகைப் பிராட்டியோடும் - தடாதகைப் பிராட்டியாரோடும், பொன் நெடுங் கோயில் புக்குப் பொலிந்தனன் - பொன்னாலாகிய பெரிய திருக்கோயிலினுட் சென்று விளங்கினன் எ-று. மேல், திருமணப் படலத்தில், “ திண்டிற்ற சங்கு கன்னன் முதற்கணத் தேவர் தாமும் பண்டைய வடிவ மாறிப் பார்த்திபன் பணியி னின்றார்.” என்றாராகலின், ஈண்டு அவர் பண்டைய வடிவமாயினரென்றார். இறைவனது சத்தியே அவனுக்குத் துணையாகலின் ‘தன்னருட் டுணையாய் வந்த’ என்றார். புக்குப் பொலிந்தனன் - சிவலிங்கப் பெருமானை அதிட்டித்து விளங்கினான். இறைவன் கொள்ளும் வடிவிற்கு அவனதிச்சையே காரணமென்பார் ‘இச்சை தன்னால்’ என்றார்; பிறரால் உண்டாக்கப் படுபவன் அல்லனென்றவாறு. அவன் வடிவம் அருளாதலை. “ நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளி னாலே ” என்னும் சிவஞானசித்தியா லறிக. (65) (கலிவிருத்தம்) பின்ன ருக்கிரப் பெயர் தரித்தவத் தென்னர் கோமகன் றெய்வ நான்மறை மன்னு நல்லறம் வளர வையகந் தன்ன தாணையாற் றாங்கி வையினான். (இ-ள்.) பின்னர் - பின்பு, உக்கிரப் பெயர் தரித்த அத் தென்னர் கோமன் - உக்கிரனென்னும் பெயரைத் தாங்கிய அப்பாண்டியர் பெருமான், தெய்வ நான்மறை மன்னு நல் அறம் வளர - தெய்வத் தன்மை பொருந்திய நான் மறைகளிற் கூறிய நிலைபெற்ற நல்ல அறங்கள் வளருமாறு, வையகம் தன்னது ஆணையால் தாங்கி வைகினான் - நிலவுலகத்தைத் தனது ஆணையினாலே பாதுகாத்து அரசாண்டிருந்தான் எ-று. தன்னது : விரித்தல். பகைவர் முதலாயினோரால் நலிவுண்டாகா மற் புரந்தா னென்பார் ஆணையாற்றாங்கி என்றார். (66) ஆகச் செய்யுள் - 1031 கடல்சுவற வேல்விட்ட படலம் (கலிவிருத்தம்) வளையொடு செண்டுவேன் மைந்தற் கஞ்சுரும் பளையவேம் பணிந்தகோ னளித்த வாறிதத் தளையவிழ் தாரினான் றனயன் வேலைமேல் இளையவ னென்னவே லெறிந்த தோதுவாம். (இ-ள்.) அம் சுரும்பு அளைய வேம்பு அணிந்த கோன் - அழகிய வண்டுகள் மூச வேப்ப மலர் மாலையை யணிந்த சுந்தர பாண்டியன், மைந்தற்கு - புதல்வனாகிய உக்கிர வழுதிக்கு, வளையொடு செண்டுவேல் அளித்தவாறு இது - வளையும் செண்டும் வேலும் அளித்த திருவிளையாடல் இதுவாகும்; அத்தளை அவிழ் தாரினான் தனயன் - அந்தமுறுக்கவிழ்ந்த மலர் மாலையை யணிந்த சுந்தரபாண்டியன் புதல்வனாகிய உக்கிரவழுதி, வேலை மேல் இளையவன் என்ன வேல் எறிந்தது ஓதுவாம் - கடலின் மேல் முருகக் கடவுளைப் போல் லேற் படையைவிடுத்த திருவிளை யாடலை (இனிக்) கூறுவாம் எ-று. கோன் மைந்தற்கு அளித்தவாறு இது வென்க. அத்தளை யவிழ்தாரினான் தனயன் - அம்மைந்தன். இளையவன் - இளையபிள்ளை யாராகிய முருகப்பிரான். அவன் சூரபன்மனாகிய மாவினைத் தடி தற்குக் கடலின்கண் வேல் விடுத்ததுபோல் என விரித்ததுக்கொள்க.(1) திங்களி னுக்கிரச் செழியன் வெண்குடை எங்கணு நிழற்றவீற் றிருக்கு நாள்வயிற் சங்கையில் லாதமா தரும வேள்விகள் புங்கவர் புடைதழீஇப் போற்ற வாற்றுநாள். (இ-ள்.) உக்கிரச் செழியன் - உக்கிர வழுதி, திங்களின் - சந்திரன்போல, வெண்குடை எங்கணும் நிழற்ற வீற்றிருக்கும் நாள்வயின் - தனது வெள்ளைக் குடையானது எங்கும் நிழல்செய்ய வீற்றிருக்கும் நாளில், சங்கை இல்லாத மா தருமம் வேள்விகள் - அளவில்லாத பெரிய தருமங்களையும் வேள்விகளையும், புங்கவர் புடைதழீஇப் போற்ற - தேவர்கள் புறம்பே சூழ்ந்து போற்ற, ஆற்றும் நாள் - செய்யும்பொழுது எ-று. எங்கணும் - புவிமுழுதும். அரச வீற்றிருக்கும் நாளிலென்க. வயின் : ஏழனுருபு. சங்கை - எண். மா உரிச்சொல்லாகலின் வலியியல்பாயிற்று. (2) அரும்பரி மகந்தொணூற் றாறு செய்துழிச் சுரும்பரி பெரும்படைத் தோன்ற1 றண்ணறா விரும்பரி முரன்றுசூழ் வேம்பி னங்குழைப் பொரும்பரி வீரன்மேற் பொறாது பொங்கினான். (இ-ள்.) அரும்பரி மகம் தொண்ணூற்றாறு செய்துழி - செய்தற்கரிய பரிவேள்வி தொண்ணூற்றாறு செய்த விடத்து, சுரும்பு அரிபெரும்படைத் தோன்றல் - மலைகளின் சிறகினை அரிந்த பெரியவச்சிரப் படையினையுடைய இந்திரனானவன், தண் நறா விரும்பு அரிமுரன்று சூழ் - குளிர்ந்த தேனை விரும்பும் வண்டுகள் ஒலித்துச் சூழ்கின்ற, வேம்பின் அம் குழை - வேம்பினது அழகிய தளிரை யணிந்த, பொரும் பரிவீரன் மேல் - போர் செய்யும் குதிரைகளையுடைய வீரனாகிய உக்கிர வழுதியின் மேல், பொறாது - மனம் பொறாது, பொங்கினான் - வெகுண்டான் எ-று. தொண்ணூ றென்பது விகாரமாயிற்று. வேம்பின் றளிராற் றொடுக்கப்பட்ட கண்ணி;“வேம்பினொண்டளிர்”எனப் புறப்பாட்டில் வருவது காண்க. நூறு வேள்வி புரிந்திடின் தன் பதவிக் குரியனாவன் என்னுங் கருத்தாற் பொறாதவனாயினான். (3) மன்னிய நாடெலாம் வளஞ்சு ரந்துவான் பொன்னிய னாடுபோற் பொலித லாலிந்த மின்னிய வேலினான் வேள்வி செய்வதென் றுன்னிய மனத்தனோர் சூழ்ச்சி யுன்னினான். (இ-ள்.) மன்னிய நாடு எலாம் - நிலைபெற்ற தன் நாடு முழுதும், வான்வளம் சுரந்து - மழை வளம் மிகுந்து, இயல் பொன் நாடுபோல் பொலிதலால் - அழகிய பொன்னுலகம் போல விளங்குதலானன்றே, இந்த மின்னிய வேலினான் - இந்த ஒளி பொருந்திய வேற்படையையுடைய உக்கிரவழுதி, வேள்வி செய்வது என்று உன்னிய மனத்தன் - வேள்வி செய்கின்றது என்று கருதிய மனத்தினனாய், ஓர்சூழ்ச்சி உன்னினான் - ஒரு வஞ்சனையை நினைத்தான் எ-று. செய்வது பொலிதலானன்றே என்றுன்னிய வென்க. செல்வம் மிக்கு வானிலுள்ள பொன்னாடு போல் எனலுமாம். செய்வது : தொழிற்பெயர். (4) பொருங்கடல் வேந்தனைக் கூவிப் பொள்ளென இருங்கட லுடுத்தபா ரேழு மூழிநாள் ஒருங்கடு வெள்ளமொத் துருத்துப் போய்வளைந் தருங்கடி மதுரையை யழித்தியா லென்றான். (இ-ள்.) பொரும் கடல் வேந்தனை - அலைகள் மோதும் கடலின் மன்னனாகிய வருணனை, கூவி - அழைத்து, பொள்ளென - விரைந்து, இருங்கடல் உடுத்த பார் ஏழும் - பெரிய கடல் சூழ்ந்த ஏழு தீவுகளையும், ஊழிநாள் ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து - ஊழிக்காலத்தில் ஒருசேர அழிக்கும் வெள்ளத்தைப் போன்று, உருத்துப்போய் வளைந்து - சினந்துபோய் வளைந்து, அருங்கடி மதுரையை அழித்தி என்றான் - அரிய காவலையுடைய மதுரையை அழிப்பாயாக என்று கூறினான் எ-று. பொள்ளென அழித்தி யெனக்கூட்டுக. பொள்ளென: விரைவுக் குறிப்பு. “ பொள்ளென வாங்கே புறம் வேரார்” என்பது திருக்குறள். ஆல் : அசை. (5) விளைவது தெரிகிலேன் வேலை வேந்தனும் வளவயன் மதுரையை வளைந்திட டிம்மெனக் களைவது கருதினான் பேயுங் கண்படை கொளவரு நனந்தலைக் குருட்டுக் கங்குல்வாய். (இ-ள்.) வேலை வேந்தனும் விளைவது தெரிகிலன் - கடற் கரசனாகிய வருணனும் மேலே விளைவதை உணராதவனாய், பேயும் கண்படை கொளவரும் - பேயும் கண்ணுறங்குமாறு வருகின்ற, நனந்தலை - நடு இரவின், குருட்டுக் கங்குல்வாய் - குருட்டிருளின்கண், வளவயல் மதுரையை வளைந்திட்டு - வளம் பொருந்திய கழனி சூழ்ந்த மதுரைப் பதியைச் சூழ்ந்து, இம் மெனக் களைவது கருதினான் - விரைய அழித்தலைக் கருதினான் எ-று. விளைவது - மேலே தனக்குண்டாகும் தீங்கு. தெரிகிலன்: முற்றெச்சம். வளைந்திட்டு, இடு : துணைவினை. இம்மென: விரைவுக் குறிப்பு. களைவது: தொழிற் பெயர். நனந்தலை - நடு; நள்ளிரவுக் காயிற்று. பார்வையுடைய விழிகளைக் குருடு போலாக்கும் கங்குலைக் குருட்டுக் கங்குல் என்றார். (6) (எழுசீரடி யாசிரிய விருத்தம்) கொதித்த லைக்க ரங்க ளண்ட கூட மெங்கு மூடுபோய் அதிர்த்த லைக்க வூழி நாளி லார்த்த லைக்கு நீத்தமாய் மதித்த லத்தை யெட்டி முட்டி வருமொ ரஞ்ச னப்பொருப் புதித்த தொத்து1 மண்ணும் விண்ணு முட்க வந்த துததியே. (இ-ள்.) உததி - கடலானது, கொதித்து - பொங்கி, அலைக் கரங்கள் - அலையாகிய கைகள், அண்ட கூடம் எங்கும் ஊடுபோய் - அண்டகூட முழுதும் ஊடுருவிச் சென்று, அதிர்த்து அலைக்க - நடுக்க முண்டாக்கி வருத்த, ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தமாய் - ஊழிக்காலத்தில் ஆரவாரித்து அழிக்கும் வெள்ளமாய், மதித்தலத்தை எட்டி முட்டி - சந்திர மண்டலத்தை எட்டிப் பொருந்தி, வரும் ஒரு அஞ்சனப் பொருப்பு உதித்தது ஒத்து - வருகின்ற ஒரு கரிய மலைதோன்றினாற்போல, மண்ணும் விண்ணும் உட்க வந்தது - மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் அஞ்சுமாறு வந்தது எ-று. உததி கொதித்து உட்க நீத்தமாய் வந்த தென்க. அதிர்வு நடுக்க மாகலின் அதிர்ந்து என்பதற்கு நடுக்க முண்டாக்கி யென்று பொருளுரைக்கப்பட்டது; முழங்கி யென்றுமாம். நீத்தமாய் - நீத்தம் போலாகி, அஞ்சனப் பொருப்புதித்த தொத்து என்றது இல் பொருளுவமை. மண்ணும் விண்ணும்: ஆகுபெயர்கள். இது முதல் ஒன்பது செய்யுட்கள் நாற்சீரடியாகவும் பிரித்தற் கமையுமாயினும் ஓசையை நோக்குழி எழுசீரடியாகக் கோடலே சிறப்புடைத்தென்க. (7) வங்க வேள் வெள்ள மாட2 மதுரை மீது வருசெயல் கங்குல் வாய திங்கண் மீது காரி வாய காருடல் வெங்கண் வாள ராவி ழுங்க வீழ்வ தொக்கு மலதுகார் அங்கண் மூட வருவ தொக்கு மல்ல தேது சொல்வதே. (இ-ள்.) வங்க வேலை வெள்ளம் - மரக்கலங்கள் செல்லும் கடலின் வெள்ளமானது, மாட மதுரை மீதுவரு செயல் - மாடங் களையுடைய மதுரைப்பதியின் மீது வருகின்ற தன்மை, கங்குல் வாய திங்கள் மீது - இரவினிடத்தாகிய சந்திரன்மேல், காரி வாய - நஞ்சு பொருந்திய வாயினையுடைய, கார் உடல் வெங்கண் வாள் அரா - கரிய உடலையும் வெவ்விய கண்களையும் உடைய கொடிய இராகு என்னும் பாம்பானது, விழுங்க வீழ்வது ஒக்கும் - அதனை விழுங்கு தற்கு விரைந்து வருதலைப் போலும்; அலது - அன்றி, கார் - மேகங்கள், அங்கண் மூடவருவது ஒக்கும் - அம் மதுரையை மறைத் தற்கு வருதலை ஒக்கும்; அல்லது - அல்லாமல், சொல்வதுஏது - வேறு கூறுவது யாது எ-று. வங்கத்தை யுடையவெனக் கடலுக்கு அடை கூறினார். கங்குல் வாயது காரி வாயது என்பன துவ்வீறு தொக்கு நின்றன. திங்களினமிழ் தால் தூய்மை செய்யப் பெற்ற மதுரைமீது கடல் வருவதற்குத் திங்கள்மீது கரும் பாம்பு வருதலை உவமையாகக் கூறியது பெரிதும் பொருத்த முடைத்தாம். கார் மூட வருவதென்றது பின்பு வருணனால் ஏவப்பட்டு ஏழுமேகங்களும் மதுரையை அழிக்க வென வருஞ் செய்தியை உட்கொண்டு கூறியது. வீழ்வது, வருவது என்பன தொழிற் பெயர்கள். அலது - அன்றி. ஒக்குமென்று கூறுவதல்லால் என விரிக்க. (8) வட்ட யாமை பலகை வீசு வாளை வாள்கள் மகரமே பட்ட யானை பாய்தி ரைப்ப ரப்பு வாம்ப ரித்திரள் விட்ட தோணி யிரத மின்ன விரவு தானை யொடுகடல் அட்ட மாக வழுதி மேல மர்க்கெ ழுந்த தொக்குமே. (இ-ள்.) வட்ட யாமை பலகை - (அன்றி) வட்டமாகிய ஆமைகள் கேடகங்களாக. வீசு வாளை வாள்கள் - எறிகின்ற வாளை மீன்கள் வாட் படைகளாக, மகரம் பட்ட யானை - சுறா மீன்கள் நெற்றிப் பட்டத்தையுடைய யானைகளாக, பாய் திரைப்பரப்பு வாம்பரித் திரள் - பரந்த அலைக்கூட்டங்கள் தாவுகின்ற குதிரைக்கூட்டங் களாக, விட்ட தோணி இரதம் - ஓடவிட்ட தோணிகள் தேர்களாக, இன்னவிரவு தானையொடு - இம்தன்மையன விரவிய சேனை யோடு, கடல் - கடலானது, அட்டமாக - எதிராக, வழுதிமேல் அமர்க்கு எழுந்தது ஒக்கு - உக்கிர பாண்டியன்மேல் போருக்கு எழுந்ததைப் போலும் எ-று. அட்டம் - எதிர், குறுக்கு; “ மஞ்சலைக்கு மாமலைச் சரிப்புறத்து வந்தமா அஞ்சவித் தடர்க்கு நாய்க ளட்டமாக விட்டு” என்பது திருத்தொண்டர் புராணம். அட்டம் என்பதற்குப் பகை யென்றும் பொருள் கூறுவர்; தமிழ் லெக்சிகன் காண்க. (9) இன்ன வாறெ ழுந்த வேலை மஞ்சு றங்கு மிஞ்சிசூழ் நன்ன கர்க்கு ணக்கின் வந்து நணுகு மெல்லை யரையிரா மன்ன வன்க னாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய் முன்னர் வந்தி ருந்த ரும்பு முறுவ றோன்ற மொழிகுவார். (இ-ள்.) இன்னவாறு எழுந்த வேலை - இங்ஙனம் எழுந்த கடலானது, மஞ்சு உறங்கும் இஞ்சி சூழ் நல் நகர் - முகில் உறங்கப் பெறும் மதில் சூழ்ந்த நல்ல அம்மதுரைப்பதியின், குணக்கின் வந்து நணுகும் எல்லை - கிழக்குத் திக்கில் வந்து நெருங்கு மளவில், அரை இரா - நடு இரவில், மன்னவன் கனாவில் - பாண்டி மன்னன் கனவின் கண், வெள்ளி மன்ற வாணர் - வெள்ளியம்பலவாணர், சித்திராய் - ஒரு சித்த மூர்த்தியாய், முன்னர் வந்திருந்து - முன்னே தோன்றி, அரும்பு முறுவல் தோன்ற மொழிகுவார் - அரும்புகின்ற புன்னகை தோன்ற மொழிகின்றார் எ-று. வாணர் : வாழ்நர் என்பதன் மரூஉ. மொழிகுவார், கு : சாரியை.(10) வழுதி யுன்ற னகர ழிக்க வருவ தாழி வல்லைநீ எழுதி போதி வென்றி வேலெ றிந்து வாகை பெறுகெனத் தொழுத செங்க ரத்தி னான்று திக்கு நாவி னானெழீஇக் கழுது றங்கு கங்கு லிற்க னாவு ணர்ந்து காவலான். (இ-ள்.) வழுதி - பாண்டியனே, உன் தன் நகர் அழிக்க - உனது நகரத்தை அழிக்கும் பொருட்டு, ஆழி வருவது - கடலானது வருகின்றது (ஆதலால்), நீ வல்ல எழுதி - நீ விரைந் எழுந்து, போதி - போய், வென்றி வேல் எறிந்து வாகை பெறுக என - வெற்றி பொருந்திய வேற்படையை விடுத்துவென்றி பெறுவாயாக என்று கூற, காவலான் - உலகினைப் பாதுகாத்தலை யுடைய உக்கிர வழுதி, தொழுத செங்கரத்தினான் - கூப்பிய சிவந்த கைகளை யுடையனாய், துதிக்கும் நாவினன் - துதிக்கின்ற நாவினையுடையனாய், எழீஇ - எழுந்து, கழுது உறங்கு கங்குலில் கனா உணர்ந்து - பேயும் உறங்குகின்ற நள்ளிரவில் தான் கண்ட கனவினை யுணர்ந்து எ-று. எழுதி - எழுவாய்; போதி - போவாய்; இவற்றை எச்சமாக்குக. வாகை - வென்றி யெய்தினோர் சூடும் மாலை; வெற்றியைக் குறித்தது. பெறுகென: அகரந்தொகுத்தல். எழீஇ: சொல்லிசை யளபெடை. கழுதுமென்னும் உம்மை தொக்கது. (11) கண்ணி றைந்த வமளி யிற்க ழிந்து வாயில் பலகடந் துண்ணி றைந்த மதிய மைச்ச ருடன்வி ரைந்து குறுகியே மண்ணி றந்த1 தெனமு ழங்கி வருத ரங்க வாரிகண் டெண்ணி றந்த2 வதிச யத்த னாகி நிற்கு மெல்லைவாய். (இ-ள்.) கண் நிறைந்த அமளியில் கழிந்து - கண்டுயின்ற சேக்கையினின்றும் நீங்கி, வாயில் பல கடந்து - அரண்மனை வாயில் பலவற்றையும் கடந்து, உள் நிறைந்த மதி அமைச்சருடன் - உள்ளே நிறைந்த அறிவினையுடைய மந்திரிகளுடன், விரைந்து குறுகி - விரைந்து சென்று, மண் இறந்தது என - நிலவுலகு அழிந்த தென்று கூறுமாறு, முழங்கி வரு தரங்கவாரி கண்டு - ஆரவாரித்து வருகின்ற அலைகளையுடைய கடலை நோக்கி, எண் இறந்த அதிசயத்தனாகி நிற்கும் எல்லைவாய் - அளவிறந்த வியப்படைந்தவனாகிய நிற்குங்கால் எ-று. (இ-ள்.) துயிலுதலைக் கண்வளர்தல் என்பவாகலின் வளர்தலை நிறைதலாக்கிக் ‘கண்ணிறைந்த’ என்றார்; கண்ணுக்கு நிறைந்த அமளியென்றும், கள் நிறைந்த மலரமளி யென்றும் கூறலுமாம். இறந்ததென, இறந்த காலத்தாற் கூற. (12) கனவில் வந்த சித்த வேடர் நனவில் வந்து காவலோன் நினைவு கண்டு பொழுது தாழ நிற்ப தென்கொ லப்பனே சினவி வேலை போல வந்த தெவ்வை மான வலிகெட முனைய வேலெ றிந்து ஞால முடிவு தீர்த்தி யாலென. (இ-ள்.) கனவில் வந்த சித்த வேடர் - கனவிலே தோன்றிய சித்த மூர்த்தி, நனவில் வந்து - நனவிலும் எழுந்தருளி வந்து, காவலோன் நினைவுகண்டு - மன்னனது எண்ணத்தை உணர்ந்து, அப்பனேபொழுது தாழ நிற்பது என் - அப்பனே நீ காலந்தாழ்க்க நிற்பது என்னை, சினவி வேலை போல வந்த தெவ்வை - சினந்து கடல் வடிவாக வந்த பகையை, மான வலிகெட - அதனது மிக்க வலிகெட, முனைய வேல் எறிந்து - கூரிய வேற்படையை எறிந்து (வென்று), ஞாலம் முடிவு தீர்த்தி என - உலகிற்கு வரும் அழிவை நீக்குவாய் என்று கூற எ-று. நனவிலுமென உம்மை விரிக்க. நினைவு - சிந்தனை செய்து தாழ்த்தல். கொல்: அசை. அப்பன் என்றது உவகையால்; மரபு வழுவமைதி; துறந்தோரான பெரியார் பிறரை விளிக்குங்காற் கூறும் மரபுச் சொல்லுமாம். சினவி - சினந்து. வேலையன்று, வேலைபோல வந்ததொரு பகை யென்றார். மான வலி - மிக்க வலி, மானமும் வலியும் எனலுமாம். முனை - கூர்மை; நுதி. முனைய: குறிப்புப் பெயரெச்சம். ஆல்: அசை. (13) எடுத்த வேல்வ லந்தி ரித்தெ றிந்த வேலை வேன்முனை மடுத்த வேலை சுஃறெ னவ்வ றந்து மான வலிகெட அடுத்து வேரி வாகை யின்றி யடிவ : ணங்கு தெவ்வரைக் கடுத்த வேல்வ லான்க ணைக் காலின் மட்ட மானதே. (இ-ள்.) எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை - (உடனே) எடுத்த வேற்படையை வலமாகச் சுழற்றி வீசியபோது, வேல் முனை மடுத்தவேலை - வேலின் நுதியிற் பொருந்திய கடலானது, சுஃறெனவறந்து - சுஃறென்னும் ஒலியுண்டாக நீர் வற்றி, மான வலி கெட - மிக்க வலியானது அழிய, அடுத்து - நெருங்கி, வேரி வாகையின்றி அடிவணங்கு தெவ்வரைக் கடுத்து - மணம் பொருந்திய வெற்றி மாலை இல்லையாகத் தோல்வியுற்று அடிகளில் வணங்கும் பகைவரைப்போன்று, அவேல் வலான் கணைக்காலின் மட்டம் ஆனது - அந்த வேற்போரில் வல்ல உக்கிரவழுதியின் கணைக் காலின் அளவில் ஆயிற்று எ-று. கூறியவுடன் அவன் எறிந்த பொழுது என வருவித்துரைக்க. சுஃறென: ஒலிக்குறிப்பு. வகரம் விரித்தல். வறந்து காலின் மட்ட மானது எனக் கூட்டுக; வறந்து அடுத்து ஆனது எனினும் பொருந்தும். வாகை யில்லையாகத் தோல்வி யுற்றென விரிக்க. அவ்வேல் என்பதில் வகரம் - தொக்கது. ஈற்றடியில் ஓரசைச்சீர் வந்தது. (14) சந்த வேத வேள்வி யைத்த டுப்ப தன்றி யுலகெலாஞ் சிந்த வேறு சூழ்ச்சி செய்த தேவர் கோவி னேவலால் வந்த வேலை வலிய ழிந்த வஞ்ச கர்க்கு நன்றிசெய் திந்த வேலை வலியி ழப்ப தென்று முள்ள தேகொலாம். (இ-ள்.) சந்த வேத வேள்வியைத் தடுப்பது அன்றி - பண் அமைந்த வேதத்திற் கூறிய வேள்வியைத் தடுப்பதல்லாமல், உலகு எலாம் சிந்த வேறு சூழ்ச்சிசெய்த - உலகனைத்தும் அழியுமாறு பிறிது சூழ்ச்சி செய்த, தேவர் கோவின் ஏவலால் - தேவேந்திரனின் ஏவலினால், வந்த வேலை வலி அழிந்த - பெருகிவந்த கடலானது வலியழிந்தது; வஞ்சகர்க்கு நன்றி செய்து இந்தவேலை வலி இழப்பது என்றும் உள்ளதே கொல் - வஞ்சனையுடைய தீயோர்க்கு உதவிசெய்து அதனால் இந்தக் கடலானது தன் வலிமையை இழப்பது எக்காலத்தும் உள்ள தொரு செயலே போலும் எ-று. வேள்வி தனக்கு இடையூறாயின் நேரே அதனைத் தடுத்தல் செய்யாது, உலகினை அழியச் செய்து அதனால் வேள்வியைத் தடுத்தல் கருதியது எத்துணையும் கொடியதொரு சூழ்ச்சியென்பார் ‘வேறு சூழ்ச்சி செய்த’ என்றார்; வேதத்திற் கூறப்பட்ட அறவினை யாகிய வேள்வியைத் தடுக்கக் கருதிய தீவினையே யன்றி உலகெலாம் அழிவெய்துமாறு சூழ்ந்த தீவினையும் உடையானென்பதோர் பொருளும் தோன்ற நின்றது. அழிந்தது என்பது ஈறுதொக்கது; முன் சூரபன்மன், விருத்திரன் முதலாயினார்க்கு இடங்கொடுத்து வலியிழந்தமையின் என்று முள்ளதே போலும் என்றார். இந்த என்னும் சுட்டு இகழ்தலைக் கருதிற்று. ஆம் : அசை. இது வேற்றுப்பொருள் வைப்பின் பாற்படும். (15) (அறுசீரடி யாசிரிய விருத்தம்) புண்ணிடை நுழைந்த வேலாற் புணரியைப் புறங்கண் டோன்பால் மண்ணிடை நின்ற சித்தர் வானிடை மறைந்து1 ஞானக் கண்ணிடை நிறைந்து தோன்றுங் கருணையால் வடிவங் கொண்டு விண்ணிடை யணங்கி னோடு விடையிடை விளங்கி நின்றார். (இ-ள்.) புண் இடை நுழைந்த வேலால் - பகைவருடலில் நுழைந்த வேலினால், புணரியைப் புறங் கண்டோன்பால் - கடலைப் புறங்கொடுக்கச் செய்த உக்கிர பாண்டியன் முன்னர், மண் இடை நின்ற சித்தர் - நிலத்தின்கண் நின்றருளிய சித்தமூர்த்தி, வான் இடைமறைந்து - விசும்பிலே மறைந்து (பின்), ஞானக்கண் இடைநிறைந்து தோன்றும் கருணையால் - ஞானக்கண்ணிலே நிறைந்து தோன்றும் தனது திவருளினால், வடிவம் கொண்டு - திருவுருவந் தாங்கி, அணங்கினோடு - உமை யம்மையாரொடும், விண் இடை - வானின்கண், விடை இடை விளங்கி நின்றார் - இடப ஊர்தியில் வெளிப்பட்டு நின்றருளினார் எ-று. இறைவன் ஞானக்கண்ணில் நிறைந்து தோன்றுதலை, “ ஊனக்கண் பாச முணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி” என்னும் சிவஞான போதத்தா னறிக. இடை எல்லாம் ஏழனுருபு. இச்செய்யுளை முன் மூன்றடியும் வேறுபடப் பாடங்கொண்டனர் இராமசுவாமிப் பிள்ளை; அது, “ புண்ணுடை வேலோ யாதித் தமிழ்ச்சங்கம் புணரி கொள்ள மண்ணிடைச் சங்க மின்று வைத்தனங் கடைச்சங் கந்தான் கண்ணிடைக் காணக் கங்கைக் கரையினா மென்று சித்தர் விண்ணிடை யணங்கி னோடு விடையிடை விளங்கி நின்றார்.” என்பது. (16) முக்கணும் புயங்க ணான்கு முளைமதிக் கண்ணி வேய்ந்த செக்கரஞ் சடையுங் காள கண்டமுந் தெரிந்து தென்னன் பக்கமே பணிந்தெ ழுந்து பரந்தபே ரன்புந் தானுந் தக்கவஞ் சலிசெய் தேத்தித் தரைமிசை நடந்து செல்வான். (இ-ள்.) முக்கணும் புயங்கள் நான்கும் - மூன்று கண்களையும் நான்கு திருத்தோள்களையும், முளை மதிக் கண்ணி வேய்ந்த செக்கர் அம் சடையும் - குழவித் திங்களைக் கண்ணியாக அணிந்த சிவந்த அழகிய சடையையும், காளகண்டமும் - நீல கண்டத்தையும், தென்னன் தெரிந்து - பாண்டியன் தரிசித்து, பக்கமே பணிந்து எழுந்து - அப்பக்கத்தையே நோக்கி வணங்கி எழுந்து, பரந்த பேர் அன்பும் தானும் - விரிந்த பெரிய அன்பும் தானுமாக, தக்க அஞ்சலி செய்து ஏத்தி - விதிப்படி அன்சலி செய்து துதித்து, தரைமிசை நடந்து செல்வான் - புவியின்மேல் நடந்து செல்கின்றான் எ-று. முளைமதி - குழவித் திங்கள்; புதுவதாகத் தோன்றிய மதி யென்னலுமாம். தான் அன்புடன் என்பதனை ‘அன்புந் தானும்’ என்றார்; அன்பும் தானுமாகச் செல்வானென்க; ‘நாணனு மன்பு முன்பு நளிர்வரையேற’ என்றாற்போல அன்பிற்கொரு வடிவு கொடுத்துக் கூறினார். பக்கமே நடந்து செல்வான் எனக் கூட்டினும் அமையும். (17) துந்துபி யைந்து மார்ப்பப் பாரிடந் தொழுது போர்ப்பத் தந்திர வேத கீதந் ததும்பியெண் டிசையுந் தாக்க அந்தர நாட ரேத்த வகல்விசும் பாற தாக வந்துதன் கோயில் புக்கான் வரவுபோக் கிறந்த வள்ளல். (இ-ள்.) வரவு போக்கு இறந்த வள்ளல் - பிறப் பிறப்பில்லாத இறைவன், துந்துபி ஐந்தும் ஆர்ப்ப - ஐந்து துந்துபிகளும் முழங் கவும், பாரிடம் தொழுது போர்ப்ப - பூதகணங்கள் வணங்கிச் சூழவும், கீதம் தந்திரம் வேதம் ததும்பி எண் திசையும் தாக்க - கீதத்தோடு கூடிய சிவாகமங்களும் வேதங்களும் நிறைந்து எட்டுத் திக்கிலும் ஒலிக்கவும், அந்தர நாடர் ஏத்த - வான நாடர்கள் துதிக்கவும், அகல்விசும்பு ஆறதாக வந்து தன் கோயில் புக்கான் - அகன்ற வான்வழியாக வந்து தனது திருக்கோயிலுட் புகுந் தருளினான் எ-று. தந்திரம் - நூல்; ஆகமம். தாக்க - நிறைய. ஆறது, அது : பகுதிப் பொருள் விகுதி. வரவு போக்கு என்பன பிறப்பிறப்பைக் குறிப்பன; “ போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே”” என்பது திருவாசகம்; எங்கும் நிறைந்த பொருளென்னும் உண்மைத் தன்மை கருதிக் கூறிற்றுமாம். (18) அஞ்சலி முகிழ்த்துச் சேவித் தருகுற வந்த வேந்தன் இஞ்சிசூழ் கோயி லெய்தி யிறைஞ்சினன் விடைகொண் டேகிப் பஞ்சின்மெல் லடியா ரட்ட மங்கலம் பரிப்ப நோக்கி மஞ்சிவர் குடுமி மாட மாளிகை புகுந்தான் மன்னோ. (இ-ள்.) அஞ்சலி முகிழ்த்து சேவித்து அருகுற வந்த வேந்தன் - அஞ்சலி கூப்பித் தொழுது அருகிலே வந்த பாண்டிய மன்னன், இஞ்சி சூழ் கோயில் எய்தி இறைஞ்சினன் - மதில் சூழ்ந்த திருக் கோயிலையடைந்து வணங்கி, விடை கொண்டு ஏகி - (அவரிடம்) விடைபெற்றுச் சென்று, பஞ்சின்மெல் அடியார் - பஞ்சினும் மெல்லிய அடிகளையுடைய மகளிர், அட்ட மங்கலம் பரிப்ப நோக்கி - எட்டு மங்கலங்களையும் தாங்கி எதிர்வரப் பார்த்து, மஞ்சு இவர் குடுமிமாட மாளிகை புகுந்தான் - மேகந் தவழும் சிகரத் தையும் மேன்மாடத்தையு முடைய மாளிகையிற் புகுந்தான் எ-று. இறைஞ்சினன்: முற்றெச்சம். செம்பஞ்சி யூட்டிய அடியென்னலு மாம். மன்னும் ஓவும் அசைகள். (19) வளையெயின் மதுரை மூதூர் மறிகட லிவற்றி னாப்பண் விளைவய னகர மெல்லாம் வெள்ளியம் பலத்து ளாடுந் தளையவிழ் கொன்றை வேணித் தம்பிரான் றனக்கே சேர்த்துக் களைகணா யுலகுக் கெல்லா மிருந்தனன் காவல் வேந்தன். (இ-ள்.) வளை எயில் மதுரை மூதூர் மறி கடல் இவற்றின் நாப்பண் - வளைந்த மதில் சூழ்ந்த மதுரையாகிய தொன்மையுடைய நகரமும் அலைமடங்கும் கடலுமாகிய இவற்றின் நடுவிலுள்ள, விளைவயல் நகரம் எல்லாம் - விளை கழனிகளும் ஊர்களுமாகிய எல்லாவற்றையும், வெள்ளி அம்பலத்துள் ஆடும் - வெள்ளியம் பலத்திலே திருநிருத்தம் புரியும், தளை அவிழ் கொன்றை வேணித் தம்பிரான் தனக்கே சேர்த்து முறுக்கவிழ்ந்த கொன்றை மலர் மாலை யணிந்த சடையையுடைய இறைவனுக்கே சேர்த்து, காவல் வேந்தன் - புரவலனாகிய உக்கிர பாண்டியன், உலகுக்கு எல்லாம் - உலகங்களுக்கெல்லாம், களைகணாய் இருந்தனன் - பற்றுக் கோடாகி இருந்தான் எ-று. கடலால் அழிவுறாமற் காத்தது சொக்கலிங்கப் பெருமான் திருவருளென்னுங் கருத்தால், மதுரைக்கும் கடலுக்கும் இடைப் பட்டவற்றை யெல்லாம் இறைவனுக்குரியவாக்கினன் என்க. வயல்களுடன் கூடிய நகர மென்னலுமாம். (20) ஆகச் செய்யுள் - 1051. இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம் (அறுசீரடி யாசிரிய விருத்தம்) மின்னவிர் மணிப்பூண் மார்பன் வேலையை வேலால் வென்று பொன்னவிர் வாகை வேய்ந்த புகழுரை செய்தே நாக நன்னக ராளி செம்பொ னகைமுடி சிதற வந்த மன்னவன் வளைகொண் டோச்சி வென்றதும் வகுத்துச் சொல்வாம். (இ-ள்.) மின் அவிர் மணிப் பூண் மார்பன் - மின்போல் விளங்கும் மணிகள் பதித்த அணிகலன் விளங்கும் மார்பினை யுடைய உக்கிரவழுதி, வேலையை வேலால் வென்று - கடலை வேற்படையினால் வென்று, பொன் அவிர் வாகை வேய்ந்த புகழ் உரைசெய்தேம் - பொன் போல விளங்கும் வாகை மாலை சூடிய புகழாகிய திருவிளையாடலைக் கூறினேம்; நல் நகர் ஆளி - (இனி) நல்ல வானுலகை ஆளும் இந்திரனது, செம் பொன் நகை முடிசிதற - சிவந்த பொன்னாலாகிய ஒளியினையுடைய முடி சிதறுமாறு, அந்த மன்னவன் - அவ்வுக்கிர பாண்டிய மன்னன், வளைகொண்டு ஓச்சி வென்றதும் - திகிரி கொண்டு எறிந்து வெற்றிபெற்ற திருவிளை யாடலையும், - வகுத்துச் சொல்வாம் - வகுத்துக் கூறுவாம் எ-று. வாகை வேய்ந்து புகழ்கொண்ட திருவிளையாட லென்க. ஆளி - ஆள்பவன்; இ : வினைமுதற்பொருள் விகுதி. கொண்டு: மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு; இரண்டன் பொருளின் வந்தது. (1) கோமக னிகழு நாளிற் கோணிலை பிழைத்துக் கொண்மூ மாமழை மறுப்பப் பைங்கூழ் வறந்துபுற் றலைக டீந்து காமரு நாடு மூன்றுங் கையற வெய்த மன்னர் தாமது தீர்வு நோக்கித் தமிழ்முனி யிருக்கை சார்ந்தார். (இ-ள்.) கோமகன் நிகழும் நாளில் - (இங்ஙனம்) உக்கிர வழுதி செங்கோல் ஓச்சுங் காலத்தில், கோள் நிலை பிழைத்து - ஒன்பது கோட்களும் தத்தம் நிலையினின்றும் பிறழ்தலால், மாகொண்மூ மழைமறுப்ப - கரிய முகில்கள் மழை பெய்யாதொழிய, காமரு நாடு மூன்றும் - அழகிய தமிழ் நாடு மூன்றும், பைங்கூழ் வறந்து - பயிர்கள் தீந்து, புல் தலைகள் தீந்து - புல்லின் தலைகளுங் கருகி, கையறவு எய்த - வறுமை மிக, மன்னர் - அந்நாட்டினை ஆளும் வேந்தர் மூவரும், அது தீர்வு நோக்கி - அவ்வறுமை ஒழிதலைக் கருதி, தமிழ் முனி இருக்கை சார்ந்தார் - அகத்திய முனிவரின் இருப்பிடமாகிய பொதியின்மலையை அடைந்தனர் எ-று. பிழைத்து - பிழைத்தலால்; கோள் நிலை திரிதலால் மழையின் றாகு மென்பதனை, “ கோணிலை திரிந்திடின் மாரி வறங்கூரும் ” என மணிமேகலை கூறுதலானு மறிக. மா - கருமை; பெருமையு மாம். காமரு, உ : சாரியை; விருப்பம் பொருந்திய வென்றுமாம். கையறவு - மிக்க துன்பம்; ஈண்டு வறுமைத்துன்பம்; “ இன்மையி னின்னாத தியாதெனி னின்மையின் இன்மையே யின்னா தது” என்று தமிழ் மறை கூறுவது காண்க. தாம்: அசை. நோக்கி, நோக்கனோக்கம். (2) முனிவனை யடைந்து வேந்தர் மூவருந் தங்க ணாட்டிற் பனிவரு மாரி யின்றி வறந்தமை பகர மேருக் குனிவரு சிலையார்க் கன்பன் கோணிலை குறித்து நோக்கி இனிவரு மாரி யில்லை யாதினா லென்னிற்1 கேண்மின். (இ-ள்.) வேந்தர் மூவரும் - மூவேந்தரும், முனிவனை அடைந்து - அகத்திய முனிவனை அடைந்து, தங்கள் நாட்டில் பனிவரு மாரி இன்றி - தங்கள் நாட்டினில் குளிர்ச்சிபொருந்திய மழை இன்மை யால், வறந்தமை பகர - வறுமை மிக்கதைக் கூற, மேரு குனிவரு சிலையார்க்கு அன்பன் - மேருமலையாகிய வளைந்த வில்லை யுடைய சிவபெருமானுக்கு அன்பனாகிய அம்முனிவன், கோள் நிலை குறித்து நோக்கி - கோட்கள் நிற்கும் நிலையை ஆராய்ந்து பார்த்து, இனிவரும் மாரியில்லை - இனியும் மழை பெய்தல் இல்லை; யாதினால் என்னில் - எதனாலென்றால், கேண்மின் - கேளுங்கள் எ-று. மாரி இன்றி வறந்தமை - மழை பெய்யாது வறங்கூர்ந்தமையு மாம். குனிவரு - வளைதல் பொருந்திய; குனி: முதனிலைத் தொழிற் பெயர். குறித்து நோக்கல் - நூலானும் மனத்தானும் ஆராய்ந்து காண்டல்; குறித்துணர்தலால் சோதிடம் குறியென்றும் பெயர் பெறும். வருமாரி என்பதனை மாரிவருதல் எனக் கொள்க. கூறுதும் கேண்மின் என்க. (3) காய்சின வெய்யோன் சேயோன் முன்செலக் கதிர்கால் வெள்ளித் தேசிகன் பின்பு சென்று நடக்குமிச் செயலான் முந்நீர்த் தூசின வுலகிற் பன்னீ ராண்டுவான் சுருங்கு மென்று பேசின நூல்கள் மாரி பெய்விப்போற் சென்று கேண்மின். (இ-ள்.) காய் சின வெய்யோன் சேயோன் - மிக்க சினமுள்ள சூரியனும் செவ்வாயும், முன் செல - முன்னே நடக்க, கதிர்கால் வெள்ளித் தேசிகன் - ஒளி வீசும் சுக்கிரனாகிய குரவன், பின்பு சென்று நடக்கும் இச்செயலால் - அவற்றிற்கும் பின்னே செல்லும் இந்தச் செயலினால், முந்நீர்த் தூசின உலகில் - கடலாகிய ஆடையையுடைய இந்நிலவுலகில், பன்னிரு ஆண்டு - பன்னிரண்டு ஆண்டுகள் வரை, வான் சுருங்கும் என்று நூல்கள் பேசின - மழையில்லை என்று நூல்கள் கூறின (ஆதலால்), மாரி பெய்விப் போன் சென்று கேண்மின் - மழையைப் பெய்விப்போனாகிய இந்திரனிடத்திற்சென்று அவனைக் கேளுங்கள் எ-று. காய் சினம் - சுடுகின்ற சினமுமாம்; பரிதியின் வெம்மையைச் சினமென்று கூறுதல் கவிமரபு. ஆதித்தன் செவ்வாய்க்கு முன்செல்ல வென்று கூறுதற்கும் சொற்கிடக்கை இடந்தரும். தானவர்க்குக் குருவாகலின் ‘தேசிகன்’ என்றார். மிகவும் பின்னே தள்ளிச்செல்லு தலால் என்பது கருத்து; வெள்ளி மழைக் கோளாதல் உணர்க. கேண்மின் - பெய்விக்கவேண்டுமெனக் கேளுங்கள். (4) என்றவ னெதிர்யா மெவ்வா றேகுது மென்றா ரைந்தும் வென்றவன் சோம வார விரதநீர் நோற்று வெள்ளி மன்றவ னருளைப் பெற்று வான்வழிச் சென்மி னென்றக் குன்றவன் சிலையா னோன்பின் விதியினைக் கூறுகின்றான். (இ-ள்.) என்றவன் எதிர் - என்று கூறிய அகத்திய முனிவனெதிரே, யாம் எவ்வாறு ஏகுதும் என்றார் - யாங்கள் அங்கு எங்ஙனம் செல்வோம் என்று வினாயினார்; ஐந்தும் வென்றவன் - (அதற்கு) ஐம்புலன் களையும் வென்றவனாகிய குறுமுனிவன், நீர் சோமவார விரதம் நோற்று - நீவிர் சோமவார விரதம் அனுட்டித்து, வெள்ளி மன்றவன் அருளைப் பெற்று - வெள்ளியம்பலவாணன் திருவருளைப் பெற்றுக் கொண்டு, வான் வழிச் சென்மின் என்று - வானின் வழியே செல் வீராக வென்று, அ குன்ற வன் சிலையான் நோன்பின் விதியினை கூறுகின்றான் - அந்த மேருமலையாகிய வலிய வில்லையுடைய சிவபிரானது விரதத்தின் விதியினைக் கூறுகின்றான் எ-று. ஐந்து : தொகைக் குறிப்பு. சிலையானாகிய அவனது என்க. (5) உத்தம வானோர் தம்மு ளுத்தம னாகு மீசன் உத்தம சத்தி மாரு ளுத்தமி யுருத்தி ராணி உத்தம விரதந் தம்மு ளுத்தமந் திங்க ணோன்பென் றுத்தம மறைநூ லாதி யுரைக்குமிச் சோம வாரம். (இ-ள்.) உத்தம வானொர்தம்முள் ஈசன் உத்தமன் ஆகும் - மிக்க மேன்மையுடைய தேவர்களுள் சிவபிரான் மேலோனாவன், உத்தம சத்திமாருள் உருத்திராணி உத்தமி - மிக்க மேன்மையுடைய சத்திகளுள்ளே உமாதேவியார் மேன்மையுடையராவர், உத்தம விரதம் தம்முள் - மிக்க மேன்மையுடைய விரதங்களுக்குள்ளே, திங்கள் நோன்பு உத்தமம் - சோமவார விரதம் மேன்மையுடையது, என்று உத்தமமறை நூல் ஆதி உரைக்கும் - என்று மிக்க மேன்மை யுடைய வேதமுதலிய நூல்கள் கூறாநிற்கும்: இச்சோமவாரம் - இந்தச் சோமவார விரதமானது எ-று. உத்தமம் - எல்லாவற்றிலும் சிறந்த தன்மை; மிக்க மேன்மை. சோமவாரம் என்பது அடுத்த செய்யுளில் ‘தந்திடும் பயனில்’ என்பதனோடு பொருந்தும். (6) மந்தரங் காசி யாதிப் பதிகளில்1 வதிந்து நோற்கத் தந்திடும் பயனிற் கோடி தழைத்திடு மதுரை தன்னில் இந்தநல் விரத நோற்போர்க் கதிகம்யா தென்னிற் சோம சுந்தர னுரிய வார மாதலாற் சோம வாரம். (இ-ள்.) மந்தரம் காசி ஆதி பதிகளில் - மந்தரம் காசி முதலிய திருப்பதிகளில், வதிந்து நோற்கத் தந்திடும் பயனில் - இருந்து அனுட்டிக்கத் தருகின்ற பயனிலும், இந்த நல்விரதம் மதுரை தன்னில் நோற்போர்க்கு - இந்த நல்ல விரதத்தை மதுரைப்பதியில் இருந்து நோற்பவர்களுக்கு, கோடி தழைத்திடும் - கோடி பங்கு பயன்மிகும்; அதிகம் யாதென்னில் - அங்ஙனம் மிகுதற்குக் காரணம் யாதென்றால், சோமவாரம் சோமசுந்தரன் உரிய வாரம் ஆதலால் - சோமவாரமானது சோமசுந்தரக் கடவுளுக்கு உரிய வாரம் ஆகை யால் எ-று. நோற்போர்க்கும் கோடிமடங்கு பயன் மிகும் என்க. சோம வாரம் சோமசுந்தரக் கடவுளுக்கு உரியதாகலானும், அவ்விறைவன் எழுந்தருளி யிருப்பது மதுரையிலா கலானும் மிகுமென்றார். (7) அங்கதி னதிகப்பேறுண் டருக்கனின் மதிதோய்ந் தொன்றித் தங்கிய திங்க ணோன்பு தகுதியி னோற்க வல்லார்க் கிங்கதி னதிக நீதி யீட்டிய பொருள்கொண் டாற்றும் மங்கல விரதப் பேறொன் றனந்தமாய் வளரு மன்றே. (இ-ள்.) அங்கு - அம் மதுரைப்பதியில், அருக்கனின்மதி தோய்ந்து ஒன்றித் தங்கிய திங்கள் நோன்பு - சூரியனோடு சந்திரன் பொருந்த அந்நாளுடன் கூடிய சோமவார விரதத்தை, தகுதியில் நோற்க வல்லார்க்கு - விதிப்படி நோற்க வல்லவர்க்கு, அதின் அதிகப் பேறு உண்டு - அப்பயனிலும் அதிகப்பயன் உண்டு; இங்கு - இப்பதியில், நீதி ஈட்டிய பொருள் கொண்டு ஆற்றும் - நீதிவழியாக ஈட்டிய பொருளினால் இயற்றும், மங்கல விரதப்பேறு - நன்மையாகிய அவ்விரதப் பயன், அதின் அதிகம் ஒன்று அனந்தமாய் வளரும் - அதனிலும் அதிக முடைய தாய் ஒன்று பலவாகப் பெருகும் எ-று. அதனின் என்பது அதின் என விகார மாயிற்று. அருக்கனுடன் மதி கூடிய நாள் அமாவாசை; தலையுவா. ஒன்றியென்பதனை ஒன்ற வெனத் திரிக்க. தோய்ந் தொன்றல்: ஒருபொருளன. அவ்விரதப் பேறு அதிகமாய அனந்தமாய் வளருமென்க. அன்று, ஏ : அசைகள். (8) நலமலி விரத நோற்கத் தொடங்குநா ணவில்வாந் தேளிற் சிலையினி லாத லன்றி யிரட்டிய தெரிசஞ் சேர்ந்த மலமதி யொழித்து மற்றை மதியிலு முந்தைப் பக்கத் தலர்கதிர் வாரத் தல்லூ ணயின்றிடா தயலிற் றுஞ்சா. (இ-ள்.) நலம் மலி விரதம் நோற்கத் தொடங்கும் நாள் நவில் வாம் - நன்மை நிறைந்த அச்சோமவார விரதத்தினை நோற்பதற்குத் தொடங்குகின்ற நாளைக் கூறுதும்; தேளில் சிலையினில் ஆதல் - கார்த்திகை மாதத்திலாவது மார்கழி மாதத்திலாவது, அன்றி - அல்லாமல், இரட்டிய தெரிசம் சேர்ந்த மலமதி ஒழித்து - இரண்டு அமாவாசை சேர்ந்த மலமாதங்களை நீக்கி, மற்றை மதியிலும் - மற்றைய மாதங்களிலாவது, முந்தை பக்கத்து - முற்பக்கத்தில், அலர் கதிர் வாரத்து - பரந்த கிரணத்தையுடைய ஞாயிற்றுக்கிழமையின், அல் - இரவில், ஊண் அயின்றிடாது - உணவு கொள்ளாது, அயலில் துஞ்சா - வேற்றிடத்தில் துயின்று எ-று. தேள் - விருச்சிகம்; சிலை - தனுசு; இவ்விராசிகளில் ஆதித்தன் இருக்கும் கார்த்திகை மார்கழி மாதங்களென்க. இரட்டிய தெரிசம் - இரண்டாகிய அமாவாசை. மலமதி - குற்ற முடைய மாதம். முந்தைப் பக்கம் - பூர்வ பக்கம்; சுக்கில பட்சம். அயின்றிடா : ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். துஞ்சா: செய்யா என்னும் உடன்பாட்டெச்சம். இடக்கரடக்கல் வகையால் அயலிற்றுஞ்சி என்றார்; மனைவியுடன் துயிலாம லென்பது கருத்து. வேறிடத்தில் துயிலாமல் என்று பொருளுரைப்பாருமுளர். (9) வைகறை யெழுந்து சேற்கண் மணாளனை யுள்கி யற்றைச் செய்கட னிறீஇக்கா மாதி சிந்தைநீத் தலர்பொற் கஞ்சப் பொய்கையை யடைந்து கையிற் பவித்திரம் புனைந்து வாக்கு மெய்கருத் தொருப்பா டெய்தச் சங்கற்பம் விதந்து கூறி. (இ-ள்.) வைகறை எழுந்து - விடியற் காலையில் எழுந்து, சேல்கண் மணாளனை உள்கி - அங்கயற்கண்ணம்மையின் மணாள ராகிய சோமசுந்தரக் கடவுளைச் சிந்தித்து, அற்றைச் செய்கடன் நிறீஇ - அன்று செய்ய வேண்டிய கடன்களைச் செய்து முடித்து, காமாதி சிந்தை நீத்து - காம முதலிய குற்றங்களை மனத்தினின்றும் நீக்கி, அலர் பொன் கஞ்சப் பொய்கையை அடைந்து - மலர்ந்த பொற்றாமரை வாவியை அடைந்து, கையில் பவித்திரம் புனைந்து - விரலில் பவித்திரம் தரித்து, வாக்கு மெய் கருத்து ஒருப்பாடு எய்த - உரையும் உடலும் உள்ளமும் ஒன்றுபட, சங்கற்பம் விதந்து கூறி - சங்கங்கற்பம் சிறந்தெடுத்துச் சொல்லி. எ-று. பரிதியுதித்தற்கு ஐந்துநாழிகையின் முன் எழுந்தென்க. சேற்கண்ணி யென்பது சேற்கண் என நின்றது பிராட்டியுடனுஞ் சிந்திக்க வேண்டுமென்பது தோன்றச் ‘சேற்கண் மணாளனை’ என்றா'fa காமாதி - காமம் வெகுளி மயக்கம்; அறுவகைக் குற்றமுமாம். ஒருப்பாடு - ஒன்று படல்: தொழிற்பெய'fa. விதந்து கூறல் - சிறப்பு வகையாற் கூறல். (10) கடம்படி முளைத்த முக்கட் கரும்பினை நினைந்து ஞாலத் திடம்படு தீர்த்த மெல்லா மாடிய பயனை யீண்டுத் திடம்படத் தருதி யென்னாத் திரைத்தடம் படிந்து வெண்ணீ றுடம்பணிந் தக்க மாலை யாளிபெற விதியாற் றாங்கி. (இ-ள்.) கடம்பு அடி முளைத்த முக்கண் கரும்பினை - கடப்ப மரத்தின் அடியிலே தோன்றிய மூன்று கண்களையுடைய கரும்பு போன்ற சோமசுந்தரக் கடவுளை, நினைந்து - சிந்தித்து, ஞாலத்து இடம் படு தீர்த்தம் எல்லாம் - நிலவுலகிற் பொருந்திய தீர்த்தங்கள் எல்லாவற்றிலும், ஆடிய பயனை - மூழ்கிய பயனை, ஈண்டு திடம்படத்தருதி என்னா - இங்கு உறுதி பெறத் தருவாயாக என்று வேண்டி, திரைத்தடம் படிந்து - அலைகளையுடைய பொற்றா மரையில் நீராடி, வெள் நீறு உடம்பு அணிந்து - வெள்ளிய திரு நீற்றை உடம்பில் தரித்து, அக்கமாலை ஒளிபெற விதியால் தாங்கி - உருத்திராக்க மாலையை ஒளியுண்டாக விதிப்படி தாங்கி எ-று. கண் - விழி, கணு. இறைவனைக் கரும்பென்றவர் இக்கரும்பு கடம்படியில் முளைத்ததென்றும், மூன்று கண்ணினையுடைய தென்றும் நயந்தோன்றக் கூறினார். முன்னரும் இங்ஙனங் கூறி யிருத்தல்காண்க. “ கண்கள்மூன் றுடையதோர் கரும்பே ” என்பது திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா; இறைவனை ‘ஞானக்கரும்பின் றெளி’ என்றார் மாணிக்கவாசகப் பெருமானார். படுதீர்த்தம் - உண்டாகிய தீர்த்தம்; இடம்படு எனப் பிரித்து மிக்கவாகிய என்றுரைத்தலுமாம். விதியால் என்பதனை வெண்ணீறணிந் தென்பதனோடும் கூட்டலுமாம். ஒளி - ஞானமுமாம். (11) வெள்ளைமந் தார முல்லை மல்லிகை வெடிவாய்ச் சாதி கள்ளவிழ் மயிலை யாதி வெண்மலர் கவர்ந்து வேழப் பிள்ளையை முந்தப் பூசித் திரந்துசங் கற்பம் பேசி உள்ளணைந் துச்சி மேற்பன் னிருவிர லுயர்ச்சிக் கும்பர். (இ-ள்.) வெள்ளைமந்தாரம் முல்லை மல்லிகை வெடிவாய் சாதி - வெள்ளைமந்தாரை மலரும் மல்லிகை மலரும் வெடித்த வாயையுடைய சாதி மலரும், கள் அவிழ் மயிலை ஆதிவெண்மலர் கவர்ந்து - தேனொடு மலர்ந்த இருவாட்சி மலரும் முதலிய வெள்ளை மலர்களை எடுத்து, வேழப்பிள்ளையை முந்தப்பூசித்து - சித்தி விநாயகக் கடவுளை முன்னே வழிபட்டு, இரந்து - குறை யிரந்து, சங்கற்பம் பேசி - சங்கற்பங் கூறி, உள் அணைந்து - உள்ளே சென்று, உச்சிமேல் பன்னிரு விரல் உயர்ச்சிக்கு உம்பர் - முடியின் மேல் பன்னிரண்டு அங்குல அளவின் உயர்ச்சிக்குமேல் எ-று. வெடித்தல் - மலர்தல். பன்னிரு விரல் உச்சிக்கு மேல் - துவாத சாந்தத்தில். (12) சத்திய ஞானா னந்த தத்துவந் தன்னை யுள்கி வைத்ததன் வடிவங் கொண்டு மண்முதற் சிவமீ றான அத்துவ விலிங்கந் தன்னை யாசன மூர்த்தி மூல வித்தைமற் றாலு நூலின் விதியினாற் பூசை செய்க. (இ-ள்.) சத்திய ஞான ஆனந்த தத்துவம் தன்னை உள்கிவைத்து- உண்மையறிவானந்த வடிவாகிய சோமசுந்தரக் கடவுளைச் சிந்தித்து வைத்து, அதன் வடிவம் கொண்டு - அச்சிவ வடிவாயிருந்து, மண் முதல் சிவம் ஈறு ஆன அத்துவ இலிங்கம் தன்னை - மண்முதலாகச் சிவம் ஈறாக வுள்ள தத்துவாத்துவாவின் வடிவமான சிவலிங்கப் பெருமானை, ஆசனம் மூர்த்தி மூல வித்தை மற்றாலும் - ஆசனமும் மூர்த்தியும் மூலமும் முதலிய மந்திரங்களாலும். நூலின் விதியினால்- ஆகம விதிப்படி, பூசை செய்க - பூசிக்க எ-று. சச்சிதானந்தமாகிய தத்துவத்தை யென்க; தத்துவம் - மெய்ப் பொருள். உள்கி வடிவங் கொண்டு என்பது அந்தரியாக மென்னும் அகப் பூசையை யுணர்த்திற்று. மண் முதல் சிவம் ஈறாகவுள்ள தந்துவம் முப்பத்தாறும் தத்துவாத்துவா எனப்படும்; இஃது ஆறு அத்துவாக்களுள் ஒன்று; அத்துவா - வழி; சிவலிங்கத்தின் அடியில் ஆன்ம தத்துவமான அயன் பாகமும், நடுவில் வித்தியா தத்துவமான திருமால் பாகமும், முடியில் சிவ தத்துவமான உருத்திரன் பாகமும் தோன்றும் (உள்ளன) என்று வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலத்திற் கூறப் பெற்றுள்ளது. ஆசனமந்திர மூர்த்திமந்திர மூலமந்திரங்களாலும் பிறவற்றாலு மென்க. வித்தை - மந்திரம். (13) ஐந்தமு தாவி னைந்து நறுங்கனி யைந்து செந்தேன் சந்தன தோயம் புட்பத் தண்புனன் மணிநீ ராட்டிச் சுந்தர வெண்பட் டாடை கருப்புரச் சுண்ணஞ் சாந்தங் கந்தமல் லிகைமுன் னான வெண்மலர்க் கண்ணி சாத்தி. (இ-ள்.) ஐந்து அமுது - பஞ்சாமிர்தமும், ஆவின் ஐந்து - பஞ்ச கவ்வியமும், நறுங்கனி ஐந்து - நறிய கனிகள் ஐந்தும், செந்தேன் - சிவந்த தேனும், சந்தன தோயம் - சந்தனக் குழம்பும், புட்பத் தண்புனல் - மலர் பெய்த குளிர்ந்த நீரும், மணிநீர் - தூய நீருமாகிய இவைகளால், ஆட்டி - திருமஞ்சனஞ் செய்து, சுந்தர வெண் பட்டாடை - அழகிய வெண் பட்டாடையும், கருப்புரச் சுண்ணம்- பச்சைக் கர்ப்பூரச் சுண்ணமும், சாந்தம் - சந்தனமும், கந்த மல்லிகை முன் ஆன வெண்மலர்க் கண்ணி - மணம் பொருந்திய மல்லிகை முதலான வெள்ளிய மலராலாகிய மாலையும், சாத்தி - அணிந்து எ-று. ஐந்தமுது முதலியன முற்கூறப்பட்டன. தோயம் - நீர்; சந்தன தோயம் - சந்தனத்துடன் கலந்த நீர்; சந்தனச் சேறு. புட்பத் தண்புனல் - பனிநீருமாம். கண்ணி - இண்டை முதலியன. (14) காசணி பொலம்பூண் சாத்திக் கனைகழ லாதி யங்க பூசனை செய்து சேற்கட் பூரண பரையை யவ்வா றீசனைந் தெழுத்தைப் பெண்பாற் கிசையவுச் சரித்துப் பூசித் தாசறு சுரபித் தீம்பா லட்டவின் னமுதி னோடும். (இ-ள்.) காசு அணி பொலம் பூண் சாத்தி - மணிகள் இழைத்த பொன்னாலாகிய திருவா பரணஞ் சாத்தி, கனைகழல் ஆதி அங்க பூசனை செய்து - ஒலிக்கின்ற வீரகண்டை யணிந்த திருவடி முதலாகத் திருவங்கங்களைப் பூசித்து, சேல் கண் பூரண பரையை - கயல்போலுங் கண்ணினையுடைய எங்கும் நிறைந்த பராசக்தியை, அவ்வாறு - அவ்வாறே, ஈசன் ஐந்து எழுத்தைப் பெண்பாற்கு இசைய உச்சரித்துப் பூசித்து - இறைவனுடைய திருவைந்தெழுத்தைப் பெண்பாலுக்குப் பொருந்த உச்சரித்துப் பூசித்து, ஆசு அறு சுரபித் தீம்பால் அட்ட இன் அமுதினோடும் - குற்றமற்ற இனிய ஆன் பாலுடன் கலந்து சமைத்த இனிய திருவமுதுடன். காசணியும் பொலம் பூணும் என்றுமாம். அங்கயற் கண்ணி யாகிய பராசக்தி. பாலுடன் கலந்து அட்டவென விரிக்க. (15) பண்ணிய வகைபா னீய நிவேதனம் பண்ணி வாசம் நண்ணிய வடைக்காய் நல்கி நறுவிரைத் தூபந் தீபம் எண்ணிய வகையாற் கோட்டிக் கண்ணடி யேனை மற்றும் புண்ணியன் றிருமுன் காட்டி வில்வத்தாற் பூசை செய்தல். (இ-ள்.) பண்ணிய வகை பானீயம் நிவேதனம் பண்ணி - பல காரவகைகளும் பானக்கமும் ஆகிய இவைகளை நிவேதித்து, வாசகம் நண்ணிய அடைக்காய் நல்கி - மணம் பொருந்திய தாம்பூலம் கொடுத்து, நறுவிரைத் தூபம் தீபம் எண்ணிய வகையால் கோட்டி- நறிய மணமுள்ள தூபத்தையும் தீபத்தையும் வரையறுத்தவாறு சுழற்றி, கண்ணடி ஏனை மற்றும் புண்ணியன் திருமுன் காட்டி - கண்ணாடி முதலிய மற்றை உபசாரங்களையும் சோமசுந்தரக் கடவுள் திருமுன் காண்பித்து, வில்வத்தால் பூசை செய்தல் - வில்வத்தினால் அருச்சனை செய்க. பண்ணியம் - பண்ணிகாரம். பானீயம் - பருகற்குரியது. கோட்டி வளைத்து. கண்ணடியும் மற்று ஏனையவு மென்க. மற்று : அசை. செய்தல் : வியங்கோள். (16) புரகர னிச்சா ஞானக் கிரியையாய்ப் போந்த வில்வ மரமுத லடைந்து மூன்று வைகலூ ணுறக்க மின்றி அரகர முழக்கஞ் செய்வோ ரைம்பெரும் பாத கங்கள் விரகில்சேய் கொலைக டீரு மாதலால் விசேடம் வில்வம். (இ-ள்.) புரகரன் இச்சாஞானக்கிரியையாய்ப் போந்த வில்வமர முதல் அடைந்து - திரிபுரம் எரித்த இறைவனின் இச்சா ஞானக் கிரியை வடிவாயுள்ள வில்வமரத்தினடியைச் சார்ந்து, மூன்று வைகல் ஊண் உறக்கம் இன்றி - மூன்று நாட்கள்வரை உணவுந் துயிலும் இல்லாமல், அரகர முழக்கம் செய்வோர் - அரகரவென்று முழங்குவோர் செய்த, ஐம்பெரும் பாதகங்கள் - ஐந்து பெரிய பாவங்களும் விரகு இல் செய் கொலைகள் - அறிவின்றிச் செய்த கொலைப்பாவங்களும், தீரும் - நீங்கும், ஆதலால் - ஆகலின், வில்வம் விசேடம் - வில்வம் சிறந்தது. புரகரன் - புரத்தை யழித்தவன். வில்வ இலையின் மூன்று கவர்களும் இறைவனுடைய மூன்று சத்திகளின் வடிவம் என்க. விரகின்மையாவது அதனாற் றமக்கு ஊதியஞ் சிறிது மின்றி ஏதமே மிகுமென்னும் அறிவு இல்லாமை; “ விரகின்மையின் வித்தட் டுண்டனை ” எனப் புறத்துள் வருதலுங் காண்க. கொலைகள் என வேறு கூறினமையால் ஐம்பெரும் பாதகங்கள் அஃதல்லாத ஐந்தாதல் பெறப்படும். விரகிற்செய் கொலைகள் எனப் பாட மிருப்பின் சூழ்ச்சியாற் புரிந்த கொலைகள் என்று பொருள்படும். (17) மடங்கிதழ் சுருங்கல் வாடி யுலர்ந்தது மயிர்ச்சிக் குண்டல் முடங்குகாற் சிலம்பிக் கூடு புழுக்கடி முதலாங் குற்றம் அடங்கினுங் குற்ற மில்லை1 யுத்தம மாகும் வில்வந் தடங்கை கொண்டீச னாம மாயிரஞ் சாற்றிச் சாத்தல். (இ-ள்.) மடங்கு இதழ் சுருங்கல் - இதழ் மடங்கிச் சுருங்கியிருத் தலும், வாடி உலர்ந்தது - வாடிக் காய்ந்திருத்தலும், மயிர்ச்சிக் குண்டல் - மயிர்ச் சிக்குண்டிருத்தலும், முடங்குகால் சிலம்பிக் கூடு - வளைந்த கால்களையுடைய சிலம்பிப்பூச்சி கூடுகட்டியிருத்தலும், புழுக்கடி - புழுக்கள் கடித்திருத்தலும், முதலாம் குற்றம் அடங்கினும் குற்றம் இல்லை - முதலிய குற்றங்கள் அடங்கியிருந்தாலும் குற்ற மாகா; வில்வம் உத்தமம் ஆகும் - வில்வஞ் சிறந்ததாகும்; தடங்கை கொண்டு - நீண்டகையில் அதனைக் கொண்டு, ஈசன் ஆயிரம் நாமம் சாற்றிச் சாத்தல் - சிவபெருமானுடைய ஆயிரந் திருநாமங் களையுங் கூறி அருச்சிக்க எ-று. இதழ் சுருங்கல் முதலியன குற்றமேனும் வில்வத்திற்காயின் அவை குற்றமாகா என வில்வத்தின் பெருமை கூறியவாறு. சாத்தல்: வியங்கோள். (18) அடியனேன் செய்யுங் குற்ற மன்றைக்கன் றனந்த மாகுங் கொடியநஞ் சமுதாக் கொண்டாய் குற்றமுங் குணமாக் கொண்டு படியெழு தரிய நங்கை பங்கனே காத்தி யென்று முடியுற வடியில் வீழ்ந்து மும்முறை வலஞ்செய் தேத்தி. (இ-ள்.) படி எழுதரிய நங்கை பங்கனே - ஒப்பெழுதலாகாத உமையை ஒரு பாகத்தி லுடையவனே, அடியனேன் செய்யும் குற்றம் அன்றைக்கு அன்று அனந்தம் ஆகும் - அடியேன் செய்கின்ற குற்றங்கள் ஒவ்வொருநாளும் எண்ணிறந்தனவாம்; கொடிய நஞ்சு அமுதாக்கொண்டாய் - கொடிய நஞ்சினையும் அமுதாகக் கொண்ட நீ, குற்றமும் குணமாக் கொண்டு காத்தி என்று - யான் செய்யும் குற்றங்களையும் குணமாகக் கொண்டு காத்தருள்வாய் என்று வேண்டி, அடியில் முடிஉற வீழ்ந்து - திருவடியில் முடி பொருந்துமாறு வீழ்ந்து வணங்கி, மும்முறை வலம் செய்து ஏத்தி - மூன்றுமுறை வலஞ்செய்து துதித்து எ-று. அன்றைக்கன்று - அன்றன்று; ஒவ்வொரு நாளும். குற்றமுங் குணமாகக் கொண்டு என்பது. “குன்றே யனைய குற்றங்கள் குணமா மென்றே நீ கொண்டால்” என்னும் திருவாசகத்தை நினைப்பிக்கின்றது. குற்றமும் குணமாக் கொள்ளுதற்கு உரியை யென்பார் கொடிய நஞ்சமுதாக் கொண்டாய் என்றார்; இது கருத்துடையடைகொளியணி. படி - ஒப்பு; “ படியெடுத் துரைத்துக் காட்டும் படித்தன்று படிவம்” என்பது இராமாயணம். படிவம் என்பது ஈறு தொக்க தென்னலு மாம். அங்ஙனம் அருச்சித்துக் காத்தி யென்று வீழ்ந்து வலஞ்செய்து ஏத்தி என மேலைச் செய்யுளோடியைத்துரைக்க. (19) வன்மனங் கரைய நின்று வேண்டிய வரங்கள் வேண்ட நன்மணப் பேறு மக்கட் பேறுநல் வாக்குக் கல்வி பொன்மனக் கினிய போகந் தெவ்வரைப் புறகு காண்டல் இம்மையி லரசு மற்று மெண்ணியாங் கெய்து மன்னோ. (இ-ள்.) வல் மனம் கரைய நின்று வேண்டிய வரங்கள் வேண்ட- வலிய மனமானது கரைந்துருக நின்று வேண்டிய வரங்களைக் கூறிக்குறையிரக்க, நல்மணப் பேறு - நல்ல கல்யாணப் பேறும், மக்கள் பேறு - நன் மக்கட்பேறும், நல்வாக்கு கல்வி பொன் - நல்ல வாக்கும் கல்வியும் பொருளும், மனக்கு இனிய போகம் - மனதிற்கு இனிய போகமும், தெவ்வரைப் புறகு காண்டல் - பகைவரைப் புறங்காணுதலும், இம்மையில் அரசும் மற்றும் - இப்பிறப்பிலே அரசுரிமையும் பிறநலங்களும், எண்ணியாங்கு எய்தும் - எண்ணிய வாறே உண்டாகும் எ-று. “ இருப்பு நெஞ்ச வஞ்ச னேனை யாண்டு கொண்ட நின்னதாள் ” “ வன்னெஞ்சக் கள்வன் மனவலிய னென்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினா லாண்டு கொண்ட” “ அன்பினா லடியே னாவியோ டாக்கை யானந்த மாய்க்கசிந்துருக” “ அரைசனே யன்பர்க் கடியனே னுடைய வப்பனே யாவியோ டாக்கை, புரைபுரை கனியப் புகுந்து நின்றுருக்கி” என்னும் திருவாசகங்கள் இங்கே சிந்திக்கற்பாலன. மணமாகிய பேறும் மக்களாகிய பேறும் என்க. மனக்கு : அத்துச் சாரியை தொக்கது. மன்னும் ஓவும் அசைகள். (20) ஆதியிவ் விலிங்கந் தீண்டற் கருகரல் லாத வேத வேதியர் முதலோ ரிட்ட விலிங்கத்திவ் விதியா லர்ச்சித் தோதிய விரத நோற்க வர்ச்சனைக் குரிய ரல்லாச் சாதியர் பொருணேர்ந் தாதி சைவராற் பூசை செய்தல். (இ-ள்.) ஆதி இவ்விலிங்கம் தீண்டற்கு - முதன்மையான இச்சொக்கலிங்கப் பெருமானைத் தொட்டுப் பூசித்தற்கு, அருகர் அல்லாத வேத வேதியர் முதலோர் - உரியரல்லாத வேதம் உணர்ந்த வேதியர் முதலோர், இட்ட இலிங்கத்து - ஆன்மார்த்த இலிங்கத் தின்கண், இவ்விதியால் அர்ச்சித்து - இம் முறைப்படி வழிபட்டு, ஓதியவிரதம் நோற்க - மேலே கூறிய சோமவார விரதம் நோற்கக் கடவர்; அர்ச்சனைக்கு உரியர் அல்லாச் சாதியர் - அவ்வான்மார்த்த பூசனைக்கு உரிமையளிக்கப்படாத சாதியார், பொருள் நேர்ந்து ஆதி சைவரால் பூசை செய்தல் - பொருள் கொடுத்து ஆதி சைவராற் பூசித்து நோற்கக்கடவர் எ-று. திருக்கோயில்களில் சிவலிங்கத்தைத் தொட்டுப் பூசித்தற் குரியார் ஆதி சைவரே யென்பதும் வைதிகப் பிராமணர் முதலிய ஏனையோர் உரியரல்ல ரென்பதும் சிவாகம நூற் கொள்கை; “ முப்பொழுதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்” என ஆளுடையநம்பிகள் விதந்தோதுதலுங் காண்க. செய்தல்: வியங்கோள். இவ் விரதம் நோற்கக் கடவர் என வருவித்துரைக்கப் பட்டது. (21) (எழுசீரடி யாசிரிய விருத்தம்) பொருவிலிவ் விரத மைவகைத் துச்சிப் போதிலூ ணிரவிலூ ணிரண்டும் ஒருவுத லுறங்கா திருத்தலர்ச் சனைநால் யாமமு முஞற்றுத லென்னக் கருதினிவ் வைந்து மொன்றினுக் கொன்று கழியவு மதிகமா நோற்கும் வருடமொன் றிரண்டு மூன்றுபன் னிரண்டு வருடம்வாழ் நாளள விவற்றுள். (இ-ள்.) உச்சிப்போதில் ஊண் - உச்சிப் பொழுதில் உண்ணுதலும், இரவில் ஊண் - இரவிலுண்ணுதலும், இரண்டு ஒருவுதல் - இரண்டு வேளை உணவையும் நீக்குதலும், உறங்காது இருத்தல் - துயிலா திருத்தலும், நால் யாமமும் அர்ச்சனை உஞற்றுதல் என்ன - நான்கு சாமமும் அருச்சனை புரிதலும் என்று, பொருவு இல் இவ் விரதம் ஐவகைத்து - ஒப்பற்ற இவ்விரமானது ஐந்து வகையினை யுடையது; கருதின் - ஆராய்ந்து பார்க்கின், இவ்வைந்தும் - இவ்வைந்து வகையும், ஒன்றினுக்கு ஒன்று கழியவும் அதிகம் ஆம் - ஒன்றைக் காட்டினும் ஒன்று மிகவுஞ் சிறந்ததாகும்; நோற்கும் வருடம் - நோற்கும் ஆண்டின் அளவு, வாழ் நாள் அளவு - ஒன்று இரண்டு மூன்று பன்னிரென்டு வருடம் வாழ்நாள் அளவு ஒன்றும் இரண்டும் மூன்றும் பன்னிரண்டும் ஆகிய ஆண்டினளவும் வாழ் நாளளவும் ஆகும்; இவற்றுள் - இவற்றினுள் எ-று. உச்சிப் போதில் உண்டு இரவில் நீக்கலும், இரவில் உண்டு உச்சிப்போதில் நீக்கலும் என்க. உறங்காதிருத்தல் அர்ச்சனை இவற்றுடன் ஊணொருவுதலையுஞ் சேர்த்துக் கொள்க. ஒன்றினுக் கொன்று ஒன்றினொன்று: வேற்றுமை மயக்கம். (22) உடலள வெண்ணி நோற்பவர் முந்த வுத்தியா பனஞ் செய்து நோற்கக் கடவரவ் வருடக் கட்டளைக் கிறுதி கழிப்பதுத் தாபன விதிதான் மடலவிழ் மாலை மண்டபங் குண்ட மண்டலம் வகுத்துமா பதியைப் படரொளி வெள்ளி முப்பது கழஞ்சிற் படிமையா னிருமிதஞ் செய்து. (இ-ள்.) உடல் அளவு எண்ணி நோற்பவர் - வாழ் நாளளவு கருதி நோற்கின்றவர் (தமக்கு உத்தியாபனம் இல்லை யாகலின்), முந்த உத்தியாபனம் செய்து நோற்கக் கடவர் - முதலில் அவ்விரதம் பூர்த்தியாதற்காக முன் செய்யும் கிரியையைச் செய்து நோற்கக் கடவர்; அவ்வருடக் கட்டளைக்கு - மேற்கூறிய அவ்வாண்டு களினளவில் நோற்கும் விரதத்திற்கு, இறுதி கழிப்பது - (உத்தியா பனம்) முடிவிற் செய்யம் தக்கதாகும்; உத்தாபன விதி - அவ்வுத்தி யாபன விதியாவது, மடல் அவிழ் மாலை மண்டபம் - இதழ் விரிந்த மாலை நாற்றிய மண்டபமும், குண்டம் மண்டலம் வகுத்து - குண்டமும் மண்டலமும் வகுத்து, உமாபதியை - உமை கேள்வனாகிய சிவபெருமானை, படர் ஒளி வெள்ளி முப்பது கழஞ்சில் படிமை நிருமிதம் செய்து - பரந்த ஒளியையுடைய முப்பது கழஞ்சு வெள்ளியினால் திருவுருவம் அமைத்து எ-று. உத்தியாபனம் - குறித்த ஆண்டுவரை விரதம் நோற்று முடிக்கும்பொழுது செய்யுஞ் சடங்கு; இஃது உத்தாபனம் எனவும் திரிந்தது. தான், ஆல், அசைகள். (23) காலையி லாசான் சொல்வழி நித்தக் கடன்முடித் துச்சி தொட் டந்தி மாலையி னளவும் புராணநூல் கேட்டு மாலைதொட் டியாமமோர் நான்குஞ் சேலன கண்ணாள் பங்கனைப் பூசை செய்கவப் பூசனை முடிவின் மூலமந் திரநூற் றெட்டுநூற் றெட்டு முறையினா லாகுதி முடித்தல். (இ-ள்.) காலையில் ஆசான் சொல்வழி - விடியற்காலையில் ஆசிரியனது சொல்லின் வழியே, நித்தக்கடன் முடித்து - நாட் கடமைகளை முடித்து, உச்சிதொட்டு அந்தி மாலையின் அளவும் - உச்சிப்பொழுது தொடங்கி மாலைப்பொழுது வரையும், புராண நூல் கேட்டு சிவபுராணங்களைக் கேட்டும், மாலை தொட்டு யாமம் ஓர் நான்கும் -மாலைப் பொழுது தொடங்கி நான்கு யாமத்தினும், சேல் அன கண்ணாள் பங்கனைப் பூசை செய்க - கயல் போலும் கண்களையுடைய இறைவியை ஒரு கூற்றிலுடைய சிவ பெருமானைப் பூசிக்கக் கடவர்; அப்பூசனை முடிவில் - அப்பூசை இறுதியில், மூலமந்திரம் நூற் றெட்டால் நூற்றெட்டு முறையின் ஆகுதி முடித்தல் - சிவ மூலமந்திரம் நூற்றெட்டினால் நூற்றெட்டு முறை ஆகுதி செய்யக் கடவர் எ-று. மூன்றனுருபு பிரித்துக் கூட்டப்பட்டது. முடித்தல் : வியங்கோள். (24) வில்வமா யிரங்கொண் டாயிர நாமம் விளம்பிநால் யாமமுஞ் சாத்தல் நல்லவைந் தெழுத்தா லைந்தெழுத் துருவி னாதனுக் கருக்கியங் கொடுத்தல் எல்லையின் மூல மந்திரத் தாலு மேனைமந் திரங்களி னாலும் வில்லழ லோம்பிப் பூரணா குதிசெய் தீறிலான் வேள்வியை முடித்தல். (இ-ள்.) வில்வம் ஆயிரம் கொண்டு ஆயிர நாமம் விளம்பி - ஆயிரம் வில்வங்களைக்கொண்டு ஆயிரம் திருப்பெயர்களையும் கூறி, நால்யாமமும் சாத்தல் - நான்கு யாமங்களினும் அருச்சிக்கக் கடவர்; நல்ல ஐந்து எழுத்தால் - நல்ல திருவைந்தெழுத்தினால், ஐந்து எழுத்து உருவின் நாதனுக்கு அருக்கியம் கொடுத்தல் - அவ் வைந்தெழுத்தினையும் உருவமாகவுடைய இறைவனுக்கு அருக்கியங் கொடுக்கக் கடவர்; எல்லைஇல் மூல மந்திரத்தாலும் - அளவிறந்த மூலமந்திரங்களாலும், ஏனை மந்திரங்களினாலும் - மற்றைய மந்திரங்களினாலும், வில் அழல் ஓம்பிப் பூரணாகுதி செய்து - விளங்குகின்ற வேள்வித்தீயை வளர்த்துப் பூரணாகுதி செய்து, ஈறு இலான் வேள்வியை முடித்தல் - முடிவில்லாத சோமசுந்தரக் கடவுளின் வேள்வியை முடிக்கக்கடவர் எ-று. இறைவன் மந்திர வடிவமாதலை. “ சுத்தமாம் விந்து தன்னிற் றோன்றிய வாத லானும் சத்திதான் பிரேரித் துப்பின் றானதிட் டித்துக் கொண்டே அத்தினாற் புத்தி முத்தி யளித்தலா லரனுக் கென்றே வைத்ததா மந்தி ரங்கள் வடிவென மறைக ளெல்லாம்.” “ மந்திர மதனிற் பஞ்ச மந்திரம் வடிவ மாகத் தந்திரஞ் சொன்ன வாறிங் கென்னெனிற் சாற்றக் கேணீ முந்திய தோற்றத் தாலு மந்திர மூலத் தாலும் அந்தமில் சத்தி யாதிக் கிசைத்தலு மாகு மன்றே.” என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தங்களால் உணர்க. அருக்கியம்- நீராற்செய்யும் ஒருவகை உபசாரம். வில் அழல் - வில் வடிவாகச் செய்த குண்டத்தின் அழலுமாம். சாத்தல், கொடுத்தல், முடித்தல் என்பன வியங்கோள். (25) புலர்ந்தபின் னித்த வினைமுடித் தரம்பைப் பொதுளும்பா சிலைபதின் மூன்றின் நலந்தரு தூவெள் ளரிசிபெய் தினிய நறியகாய் கறியொடு பரப்பி அலந்தர வான்பா னிறைகுடம் பதின்மூன் றரிசிமேல் வைத்தர னடியிற் கலந்தவன் பினராய்ச் சிவார்ச்சனைக் குரிய கடவுள்வே தியர்களை வரித்து. (இ-ள்.) புலர்ந்தபின் - விடிந்தபின், நித்த வினை முடித்து - நித்தியக் கடன்களைச் செய்து முடித்து, அரம்பை பொதுளும் பாசிலை பதின்மூன்றில் - வாழையின் செழித்த பசிய இலைகள் பதின்மூன்றில், நலம் தரு தூ வெள் அரிசி பெய்து - நன்மையைத் தருகின்ற தூய வெள்ளிய அரிசியை நிரப்பி, இனிய நறிய காய்கறி யொடு பரப்பி - இனிமையுடைய நல்ல காய்கறிகளைப் பரப்பி, அலந்தர - அமைவுபெற, ஆன்பால் நிறை குடம் பதின்மூன்று - ஆவின் பால் நிறைந்த குடங்கள் பதின்மூன்றனை, அரிசி மேல் வைத்து - அவ்வரிசியின் மேலே வைத்து, அரன் அடியில் கலந்த அன்பினராய் - சிவபெருமான் திருவடியில் ஒன்றுபட்ட அன்பினையுடையவராய், சிவார்ச்சனைக்கு உரிய கடவுள் வேதியரை வரித்து - சிவ பெருமானை அருச்சித்தற்குரிய ஆதிசைவர்களை அழைத்து எ-று. அரம்பை - வாழை; அரம்பை யிலையெனக் கூட்டுக. கறியொடு ஒடு: இசை நிறை. காய்கறி. வழக்கு. கடவுள் வேதியர் - சிவவேதியர். வரித்தல் - அழைத்தல், நியமித்தல். (26) காதணி கலனுங் கையணி கலனுங் கவின்பெற வளித்தர னாக ஆதரம் பெருக நினைந்தருச் சனைசெய் தரியதக் கிணையொடும் பாதப் போதணி காப்பு விசிறிதன் கவிகை பூந்துகின் முதற்பல வுடனே மேதகு தானஞ் செய்துபின் குருவைக் கற்புடை மின்னிடை யோடும். (இ-ள்.) காது அணி கலனும் - காதிலணியுங் குண்டலமும், கை அணி கலனும் - கையி லணியுங் காப்பும், கவின் பெற அளித்து- பொலிவுபெறத் தந்து, ஆதரம் பெருக - அன்பு மிக, அரனாக நினைந்து - (அவர்களைச்) சிவபெருமானாகவே கருதி, அருச்சனை செய்து - அருச்சித்து, அரிய தக்கிணையொடும் - பெரிய தக்கிணையுடன், பாதப்போது அணி காப்பு - பாதமாகிய மலரிலணியும் பாதுகையும், விசிறி தண்கவிகை பூந்துகில் முதல் பலவுடனே - விசிறியும் குளிர்ந்த குடையும் அழகிய ஆடையுமாகிய இவை முதலிய பலவற்றையும், மேதகுதானம் செய்து - சிறந்த தானமாகக் கொடுத்து, பின் - பின்பு, குருவைக் கற்பு உடை மின் இடையோடும் - குரவனை அவனுடைய கற்பு நிறைந்த மின்போலும் இடையினை யுடைய மனைவியுடன் எ-று. பாத காப்பு - பாத ரட்சை; பலவுடன் - பலவற்றையும் என்க. மேதகு- மேன்மை பொருந்திய. மின்னிடை : அன்மொழித் தொகை. (27) ஆசனத் திருத்திப் பொலந்துகில் காதுக் கணிகள்கைக் கணிகளு மணிந்து வாசநன் மலரிட் டருச்சனை செய்து மலைமக டலைவனை வரைந்து பூசனை செய்த படிமையோ டம்பொன் பூதலம் பதாதிகள் பிறவுந் தூசலர் மாலைகோட்டணி புனைந்த சுரபிமா தானமுஞ் செய்து. (இ-ள்.) ஆசனத்து இருத்தி - தவிசில் இருக்கச் செய்து, பொலம்துகில் - பொன்னாடை (தரிப்பித்து), காதுக்கு அணிகள் கைக்கு அணிகளும் அணிந்து - காதுக்கு அணிகலன்களும் கைக்கு அணிகலன்களும் அணிவித்து, வாசம் நல் மலர் இட்டு அருச்சனை செய்து - மணமுள்ள நல்ல மலர்களால் அருச்சித்து, மலை மகள் தலைவனை வரைந்து பூசனை செய்த படிமையோடு - மலை யரையன் புதல்வியாகிய உமை கேள்வனை நிருமித்துப் பூசிக்கப் பெற்ற திருவுருவத்துடன், அம்பொன் பூதலம் பதாதிகள் பிறவும் - அழகிய பொன்னும் நிலமும் ஏவலாளர்களும் பிறவுமாகிய தானங் களையும், தூசு அலர் மாலை - ஆடையும் மலர்மாலையும், கோட்டு அணி - கொம்பினணியும். புனைந்த - அணிந்த, மா சுரபி தானமும் - பெரிய பசுவாகிய தானமும், செய்து - புரிந்து எ-று. (28) இனையவா றுத்தா பனமுடித் தாசா னேவலாற் சிவனடிக் கன்பர் தனையரோ டொக்க லுடனமு தருந்த றகுதியிவ் விரதமுன் கண்ணன் நனையதா மரையோ னிந்திரன் முதல்வா னாடவர் மூவறு கணத்தோர் அனைவரு நோற்றார் மனிதரு மனுட்டித் தரும்பெறற் போகம்வீ டடைந்தார். (இ-ள்.) இனையவாறு உத்தாபனம் முடித்து - இம்முறையாக உத்தியாபனத்தை முடித்து, ஆசான் ஏவலால் - ஆசிரியன் கட்டளை யினால், சிவன் அடிக்கு அன்பர் - சிவபிரான் திருவடிக்கண் அன்புடைய அடியார்களுடனும், தனையரோடு ஒக்கல் உடன் - மக்களோடும் சுற்றத்தோடும், அமுது அருந்தல் தகுதி - அமுதுண்ணல் முறையாகும்; இவ்விரதம் - இச் சோமவார விரதத்தை, முன் - முன்னே, கண்ணன் - திருமாலும், நனைய தாமரையோன் - தேனையுடைய தாமரை மலரில் வதியும் பிரமனும், இந்திரன் முதல் வானாடவர் - இந்திரன் முதலிய தேவர்களும், மூவறு கணத்தோர் - பதினெண் கணத்தாரும் ஆகிய, அனைவரும் - எல்லாரும், நோற்றார் - அனுட்டித்தார்; மனிதரும் அனுட்டித்து அரும் பெறல் போகம் வீடு அடைந்தார் - மனிதர்களும் நோற்றுப் பெறுதற்கரிய போகத்தையும் வீடுபேற்றையும் அடைந்தனர் எ-று. அன்பரோடும் என விரிக்க. மூவறுகணம் முற் கூறப்பட்டன. பெறலரும் என மாற்றுக. எண்ணும்மைகள் தொக்கன. (29) ஈதுநோற் பவர்வெம் பகைமனத் துயர்தீர்ந் தாயிரம் பிறவியி லியற்றுந் தீதுசேர் வினைதீர்ந் தெடுத்தயாக் கையினிற் சிவகதி யடைவரிவ் விரதம் ஓதினோர் கேட்டோர் மனைவியர் மக்க ளொக்கலோ டினிதுவாழ்ந் தும்பர் மேதகு பதினா லிந்திரன் பதத்தில் வீற்றினி திருப்பரென் றறவோன். (இ-ள்.) ஈது நோற்பவர் - இவ்விரதத்தை நோற்பவர், வெம்பகை மனத்துயர் தீர்ந்து - கொடிய பகையும் மனத்துன்பமும் நீங்கி, ஆயிரம் பிறவியில் இயற்றும் தீது சேர் வினை தீர்ந்து - அளவிறந்த பிறவிகளிற் செய்த தீமை பொருந்திய வினைகள் நீங்கி, எடுத்த யாக்கையினில் சிவகதி அடைவர் - எடுத்த பிறப்பிலேயே வீடுபேறெய்துவர்; இவ்விரதம் ஓதினோர் கேட்டோர் - இவ்விரதத்தைக் கூறினவர் களும் கேட்டவர்களும், மனைவியர் மக்கள் ஒக்கலோடு இனிது வாழ்ந்து - மனைவியர் புதல்வர் சுற்றத்துடன் இன்பத்தோடு வாழ்ந்து, உம்பர் - தேவருலகில், மேதகுபதினால் இந்திரன் பதத்தில் - சிறந்த பதினான்கு இந்திரப் பட்டமளவும் அவன் பதத்தில், இனிது வீற்றிருப்பர் என்று - இனிதாக வீற்றிருப்பாரென்று, அறவோன் - அகத்திய முனிவன் (அருளிச் செய்தனன்) எ-று. ஆயிரம் - அளவின்மை. இவ்விரதத்தின் வரலாற்றையும் பயனையும் ஓதினோரும் கேட்டோரு மென்க. அறவோன் அருளிச் செய்தனன் என வருவித்து முடிக்க. (30) (அறுசீறுரடியாசிரிய விருத்தம்) சொல்லிய நெறியாற் சோம சுந்தரன் விரத நோற்பான் வில்லிடு மணிப்பூண் வேந்தர் முனிவனை விடைகொண் டேகி அல்லியங் கனகக் கஞ்சத் தாடியங் கயற்கண் வல்லி புல்லிய பாகன் றன்னை வழிபடீஇப் போற்றி நோற்றார். (இ-ள்.) சொல்லிய நெறியால் - அங்ஙனம் அவன் அருளிச் செய்த முறைப்படி, சோம சுந்தரன் விரதம் நோற்பான் - சோம சுந்தரக் கடவுளுடைய சோமவார விரதத்தை நோற்கும் பொருட்டு, வில்இடுமணிப் பூண் வேந்தர் - ஒளிவீசும் மணிக்கலன்களை யணிந்த மன்னர் மூவரும், முனிவனை விடைகொண்டு ஏகி - அம் முனிவனிடத் தில் விடை பெற்றுச் சென்று, அம் அல்லி கனகக் கஞ்சத்து ஆடி - அழகிய அகவிதழ்களை யுடைய பொற்றாமரை வாவியில் நீராடி, அங்கயற்கண்வல்லி புல்லிய பாகன்தன்னை- அங்கயற்கண் அம்மையையும் அவர் ஒரு பாகத்திற் பொருந்திய சோமசுந்தரக் கடவுளையும், வழிபடீஇப் போற்றி நோற்றார் - வழிபட்டுப் பரவி அவ்விரதத்தை அனுட்டித்தார்கள் எ-று. நோற்பான்: வினையெச்சம். முனிவனை - முனிவன்பால். அல்லி : தாமரை மலருக்கு அடை. (31) சுந்தரன் றன்னைப் பூசைத் தொழில்செய்து வரம்பெற் றேகி அந்தரத் தாறு செல்வா ரஃதறிந் தமரர் வேந்தன் வந்தவ ரிருக்க வேறு மடங்கன்மான் றவிசு மூன்று தந்திடப் பணித்தா னிட்டார் தனதரி யணையிற் றாழ. (இ-ள்.) சுந்தரன் தன்னைப் பூசைத் தொழில் செய்து - சோம சுந்தரக் கடவுளைப் பூசித்து, வரம் பெற்று ஏகி - வரம்பெற்று நீங்கி, அந்தரத்து ஆறு செல்வார் - வான்வழியாகச் செல்வாராயினர்; அமரர் வேந்தன் அஃது அறிந்து - தேவேந்திரன் அவ் வருகையை உணர்ந்து, வந்தவர் இருக்க - வந்த மன்னர்கள் இருத்தற்கு, வேறு மடங்கல்மான் தவிசு மூன்று - வேறு மூன்று சிங்காதனங்கள், தனது அரி அணையில் தாழத் தந்திடப் பணித்தான் - தனது சிங்காதனத்திற் றாழ்ந்திருக்குமாறு அமைக்குபடி கட்டளையிட்டான், இட்டார் - (பணியாளர் அவ்வாறே) அமைத்தனர் எ-று. பூசைத் தொழில் செய்து என்பது ஒரு சொல்லாய் இரண்டாம் வேற்றுமைக்கு முடிபாயிற்று. அவர் வந்து இருக்க என்றுமாம்; மடங்கல் மான்: இரு பெயரொட்டு. (32) வான்வழி வந்த மூன்று மன்னரும் பொன்னா டெய்தி ஊன்வழி குலிச வைவே லும்பர்கோன் மருங்கிற் புக்கார் தேன்வழி போந்தின் கண்ணிச் சேரனு மார்த்தார் வேந்துங் கான்வழி தாரு நாடன் காட்டிய தவிசில் வைக. (இ-ள்.) வான் வழி வந்த மூன்று மன்னரும் - வானின் வழியாக வந்த மூன்று வேந்தரும், பொன் நாடு எய்தி - பொன்னுலகத் தையடைந்து, ஊன் வழி குலிசவைவேல் உம்பர்கோன் மருங்கில் புக்கார் - ஊன் சிந்துகின்ற கூரிய வச்சிரப் படையையுடைய இந்திரன் அருகிலுற்றனர்; தேன் வழி போந்தின் கண்ணிச் சேரனும் - (அவருள்) தேன் ஒழுகும் பனம்பூமாலை யணிந்த சேரமன்னனும், ஆர்த்தார் வேந்தும் - ஆத்திப் பூமாலை யணிந்த சோழமன்னனும், கான்வழி தாருநாடன் காட்டிய தவிசின்வைக - மணம் வீசும் கற்பகத் தருவையுடைய நாட்டினையுடைய இந்திரன் காட்டிய இருக்கையில் அமர எ-று. பகைவர் ஊன் சிந்துகின்ற. குலிசமாகிய வேல் : இன் சாரியை அல்வழிக் கண்வந்தது. போந்தாகிய கணி, ஆராகிய தார் என்க. தாரு: நீட்டல் விகாரம். (33) மைக்கடல் வறப்ப வென்ற வாகைவேற் செழியன் மெளலிச் செக்கர்மா மணிவிற் காலத் தேவர்கோன் றவிசி லேறி ஒக்கவீற் றிருந்தா னாக வும்பர்கோ னழுக்கா றெய்திப் பக்கமே யிருந்த வேனைப் பார்த்திபர் முகத்தைப் பாரா. (இ-ள்.) மைக்கடல் வறப்ப வென்ற வாகை வேல் செழியன் - கரிய கடலானது வறக்குமாறு வென்ற வெற்றிமாலை தரித்த வேற்படையை யுடைய உக்கிர பாண்டியன், மெளலிச் செக்கர் மாமணிவில் கால - முடியிற் பதித்த சிவந்த பெரிய மணிகள் ஒளி வீச, தேவர் கோன் தவிசில் ஏறி - தேவேந்திரனது ஆதனத்திலேறி, ஒக்க வீற்றிருந்தான் - அவனுடன் பெருமிதமாக இருந்தான்; ஆக - அங்ஙனம் இருக்க, உம்பர்கோன் அழுக்காறு எய்தி - தேவர்க்கரசன் பொறாமையுற்று, பக்கம் இருந்த ஏனைப் பார்த்திபர் முகத்தைப் பாரா - அருகிலிருந்த மற்றைச் சேர சோழ மன்னர்களின் முகத்தை நோக்கி எ-று. செக்கர் - செம்மை: பண்புப் பெயர். ஒக்க - சமமாக என்னலுமாம். வீற்றிருத்தல் - வீறுடனிருத்தல்; வீறு - பெருமிதம். ஆக : அசையுமாம். (34) முகமனன் கியம்பி நீவிர் வந்ததென் மொழிமி னென்ன மகபதி யெங்க ணாட்டின் மழைமறுத் தடைந்தே மென்றார் அகமலர்ந் தனையார் நாட்டி னளவும்வான் சுரக்க நல்கி நகைமணிக் கலம்பொன் னாடை நல்கிநீர் போமி னென்றான். (இ-ள்.) முகமன் நன்கு இயம்பி - நன்றாக உபசார மொழிகூறி, நீவிர் வந்தது என் - நீங்கள் வந்த காரணம் என்னை, மொழிமின் என்ன - கூறுங்கள் என்று சொல்ல, மகபதி - இந்திரனே, எங்கள் நாட்டில் மழை மறுத்து அடைந்தேம் என்றார் - எங்கள் நாட்டில் மழை இன்மையால் (அதனைவேண்டி) இங்கு வந்தேம் என்று கூறினர்; அகமலர்ந்து - (இந்திரன்) மனமகிழ்ந்து, அனையார் நாட்டின் அளவும் வான் சுரக்க நல்கி - அவ்விருவர் நாடுகளின் அளவும் மழைபெய்ய அருளி, நகை மணிக்கலம் பொன் ஆடை நல்கி - ஒளிபொருந்திய நவமணியாலாகிய அணிகலன்களும் பொன்னாடைகளும் தந்து, நீர் போமின் என்றான் - நீவிர் செல்லுங்கள் என்று விடையளித்தான் எ-று. மகபதி : விளி: மறுத்தலால் என்பது மறுத்தெனத் திரிந்து நின்றது. (35) அன்னவ ரகன்ற பின்னை யமரர்கோன் கன்னி நாடன் தன்னரி யணைமே லொக்கத் தருக்கினோ டிருக்கு மாறும் பின்னரு மாரி வேண்டாப் பெருமித வீறு நோக்கி இன்னது புலப்ப டாமை யினையதோர் வினைய முன்னா. (இ-ள்.) அன்னவர் அகன்ற பின்னை - அம்மன்னவர்கள்போன பின்பு, அமரர் கோன் - தேவேந்திரன், கன்னி நாடன் - கன்னி நாடனாகிய உக்கிரவழுதி, தன் அரி அணை மேல் ஒக்கத் தருக்கி னோடு இருக்குமாறும் - தனது சிங்காதனத்தின்கண் சமமாக இறுமாப் புடன் இருக்குந் தன்மையையும், பின்னரும் மாரி வேண்டாப் பெருமித வீறும் நோக்கி - பின்னும் மழையை வேண்டாதிருக்கும் மிக்க பெருமிதத்தையும் நோக்கி, இன்னது புலப்படாமை - இது வெளிப்படாதவாறு, இனையது ஓர் வினையம் உன்னா - இங்ஙன மாய் ஒரு சூழ்ச்சியைக்கருதி எ-று. பெருமித வீறு : ஒரு பொருட் பன்மொழி. இன்னதென்றது தன்மனக் கோளினை. இனையது என்றது பின் வருவதனைச் சுட்டிற்று. முன்னா வெனப் பிரித்தலுமாம்: (36) பொற்புற வரிசை செய்வான் போலள விறந்தோர் தாங்கி வெற்புறழ் திணிதோ ளாற்றன் மெலிவதோ ராரந்தன்னை அற்புற வளித்தான் வாங்கி யலர்மதுத் தார்போ லீசன் கற்புடை யுமையாண் மைந்தன் கதுமெனக் கழுத்தி லிட்டான். (இ-ள்.) பொற்பு உற வரிசை செய்வான்போல் - அழகு பொருந்தச் சிறப்புச் செய்கின்றவனைப்போல, அளவு இறந்தோர் தாங்கி - அளவற்றவர்களாலே தாங்கிவரப்பட்டு, வெற்பு உறழ் திணிதோள் ஆற்றல் மெலிவது ஓர் ஆரந்தன்னை - (அவர்கள்) மலையையொத்த திண்ணிய தோளின்வலி குறைதற்குக் காரணமான தோர்முத்து மாலையை, அற்பு உற அளித்தான் - அன்பு பொருந்தக் கொடுத்தான்; ஈசன் கற்பு உடை உமையாள் மைந்தன் - சோமசுந்தரக் கடவுளின் கற்பு நிறைந்த தேவியாகிய தடாதகைப் பிராட்டியாரின் புதல்வனாகிய உக்கிரவழுதி, வாங்கி - (அதனை) ஏற்று, மது அலர்தார்போல் கதுமெனக் கழுத்தில் இட்டான் - தேன் ஒழுகும் மலர் மாலைபோல விரைந்து கழுத்தில் அணிந்து கொண்டான் எ-று. அளவிறந்தோர் - கிங்கரர். தாங்கி யென்னும் எச்சம் மெலிவது என்னும் வினைகொண்டது. முன் ஏனையோர் பலரால் தாங்கப் பட்டு அவர் தோளாற்றல் மெலிதற்கேதுவாயிருந்த ஆரம் என்றுரைப் பாரு, முளர், எளிதினேந்தினானென்பார் ‘தார்போல் கதுமென இட்டான்’ என்றார். கதுமென: விரைவுக்குறிப்பு. பாண்டியன் ஆரம் பூண்ட இவ்வரலாறு சிலப்பதிகாரத்திற் பலவிடத்திற் குறிக்கப் பெற்றுள்ளமை பின் வருவனவற்றால் அறிக. “ திங்கட் செல்வன் றிக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் றிறல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி ” “ தேவர்கோன் பூணராந் தென்னர்கோன் மார்பினவே” “ தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே” “ வானவர்கோ னாரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல்” (37) கண்டனன் கடவு ணாதன் கழியவு மிறும்பூ துள்ளங் கொண்டன னின்று தொட்டுக் குரையளி துழாவு நிம்பத் தண்டழை மார்ப வாரந் தாங்குபாண் டியனென் றுன்னை மண்டல மதிக்க வென்றான் வானநா டுடைய மன்னன். (இ-ள்.) கடவுள் நாதன் வானநாடு உடைய மன்னன் - தேவர்கள் தலைவனாகிய வானநாட்டையுடைய இந்திரன், கண்டனன் - (அதனைக்) கண்டு, கழியவும் உள்ளம் இறும்பூது கொண்டனன் - மிகவும் உள்ளத்தில் வியப்படைந்தவனாய், குரை அளிதுழாவு நிம்பத்தண் தழைமார்ப - ஒலிக்கின்ற வண்டுகள் மகரந்தத்தில் அளையும் வேம்பினது குளிர்ந்த மாலை பொருந்திய மார்பினையுடைய உக்கிரவழுதியே, உன்னை - நின்னை, மண்டலம் - உலகமானது, இன்று தொட்டு - இன்று முதல், ஆரம்தாங்கு பாண்டியன் என்று மதிக்க என்றான் - ஆரந்தாங்கு பாண்டியன் என்று மதிப்பதாக என்று கூறினான் எ-று. கடவுணாதனாகிய மன்னன் எனக் கூட்டுக. தழை : மாலைக்கு ஆகுபெயர். மண்டலம் - மண்டலத்திலுள்ளார். (38) அன்னது சிறிது மெண்ணா தங்குநின் றிழிந்து தென்னன் தன்னக ரடைந்தா னிப்பாற் சதமக னாணை யாலம் மன்னவ ரிருவர் நாடு மழைவளம் பெருகப் பெய்த தென்னவ னாடு பண்டைச் செயலதா யிருந்த தன்றே. (இ-ள்.) தென்னன் - உக்கிரவழுதி, அன்னது சிறிதும் எண்ணாது - அப்புகழ்ச்சியைச் சிறிதுங் கருதாது, அங்கு நின்று இழிந்துதன்நகர் அடைந்தான் - அவ் வாதனத்தினின்றும் இறங்கித் தனது நகரத்தை யடைந்தான்; இப்பால் - பின், சதமகன் ஆணையால் - இந்திரன் கட்டளையால், அம் மன்னவர் இருவர் நாடும் வளம் பெருகமழை பெய்த - அச் சேர சோழ வேந்தர் இருவர் நாட்டிலும் வளம் பெருகுமாறு மழைகள் பொழிந்தன; தென்னவன் நாடு பண்டைச் செயலதாய் இருந்தது - பாண்டியன் நாடு முன்னைத் தன்மை யாகவே மழையின்றி யிருந்தது எ-று. எண்ணாது - மதியாது. வளம் பெருக மழை பெய்தன வெனமாறுக. அன்று, ஏ: அசைகள். (39) ஆயதோர் வைகல் வேட்டை யாடுவா னண்ணல் விண்ணந் தாயதோர் பொதியக் குன்றிற் சந்தனச் சார னண்ணி மேயதோ லரிமா னேனம் வேங்கையெண் கிரலை யின்ன தீயதோர் விலங்கு வேட்டஞ் செய்துயிர் செகுக்கு மெல்லை. (இ-ள்.) ஆயது ஒர் வைகல் - அங்ஙனமாகியதொரு நாளில், அண்ணல் வேட்டை ஆடுவான் - உக்கிரவழுதி வேட்டை யாடுதற் பொருட்டு, விண்ணம் தாயது பொதியக் குன்றில் - வானுலகை ஊடுருவிச் சென்றதாகிய பொதியின் மலையில், சந்தன சாரல் நண்ணி - சந்தன மரங்கள் நெருங்கிய சாரலை அடைந்து, மேய தோல் அரிமான் ஏனம் வேங்கை எண்கு இரலை இன்ன - அங்குள்ள யானையும் சிங்கமும் பன்றியும் புலியும் கரடியும் மானும் என்னும் இவை முதலாகிய, தீயது ஒர் விலங்கு - தீமைமையக் கருதும் விலங்குகளை, வேட்டம் செய்து உயிர் செகுக்கும் எல்லை - வேட்டையாடி (அவைகளின்) உயிரைப் போக்கும் பொழுது எ-று. அங்ஙனம் மழையின்றி யிருக்கு நாளில் ஓருநாள் என்க. விண்ணம் என்பதில் அம்மும், தாயதோர் என்பதில் ஓரும் அசைகள். தோல் - யானை. எண்கு - கரடி. இரலை - புல்வாயின் ஆண். ஆகியது, தாவியது, மேவிய என்பன ஆயது, தாயது, மேய என விகாரமாயின. தீயது அது : பகுதிப் பொருள் விகுதி; ஓர்தல் - கருதுதல். (40) பொன்றத்து மருவிக் குன்றிற் புட்கலா வருத்த மாதி மின்றத்து மேக நான்கும் வீழ்ந்தன மேயக் கண்டு குன்றத்தி னெடிய திண்டோட் கொற்றவ னவற்றைப் பற்றிக் கன்றத்திண் களிறு போலக் கடுந்தளை சிக்க யாத்தான். (இ-ள்.) பொன் தத்தும் அருவிக் குன்றில் - பொன்னை (வாரிக் கொண்டு) தாவும் அருவிகளையுடைய அம்மலையின்கண்,புட்கலா வருத்தம் ஆதி - புட்கலா வருத்தம் முதலிய, மின் தத்தும் மேகம் நான்கும் வீழ்ந்தன மேயக்கண்டு - மின் வீசும் முகில்கள் நான்கும் வீழ்ந்து மேய்வதைப் பார்த்து, குன்றத்தின் நெடிய திண் தோள் கொற்றவன் - மலையினும் பெரிய திண்ணிய தோளையுடைய உக்கிரவழுதி, அவற்றைப் பற்றி - அவற்றைப் பிடித்து, கன்று- வருந்து மாறு, திண்களிறு போல - வலிய யானைகளைப் போல, கடுந்தளை சிக்க யாத்தான் - கடிய விலங்கால் அகப்படப் பிணித்து எ-று. மேகம் நான்கு - புட்கலா வருத்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி என்பன; இவை முறையே பொன், பூ, மண், கல் என்பவற்றைப் பொழிவன. தளை - இருப்புத் தொடர். சிக்க - இறுக என்றுமாம். வீழ்ந்தன, யாத்தான் என்பன முற்றெச்சங்கள். (41) வேட்டத்திற் பட்ட செங்கண் வேழம்போற் கொண்டு போகிக் கோட்டத்தி லிட்டா னாகக் குன்றிற கரிந்த வென்றி நாட்டத்துப் படிவத் தண்ட நாடன்மற் றதனைக் கேட்டுக் காட்டத்துக் கனல்போற் சீறிக் கடுஞ்சமர் குறித்துச் செல்வான். (இ-ள்.) வேட்டத்தில் பட்ட செங்கண் வேழம் போல் - வேட்டையில் அகப்பட்ட சிவந்த கண்களையுடைய யானையைக் கொண்டு போதல் போல, கொண்டு போகிக் கோட்டத்தில் இட்டான் - கொண்டு சென்று சிறைக்கோட்டத்தி லிட்டனன்; அதனை - அச்செய்தியை, குன்று இறகு அரிந்த வென்றி - மலைகளின் சிறைகளை அறுத்த வெற்றியையுடைய, நாட்டத்துப் படிவத்து அண்ட நாடன் கேட்டு - கண்கள் பொருந்திய உடலையுடைய வான் நாடனாகிய இந்திரன் கேட்டு, காட்டத்துக் கனல் போல் சீறி - விறகிற் பற்றிய தீப்போல வெகுண்டு, கடுஞ்சமர் குறித்துச் செல்வான் - கடிய போரைக் குறித்துச் செல்வானாயினான் எ-று. ஆக:அசை; இட்டானாக என எச்சமுமாம். திருமுருகாற்றுப் படையில் “ நூற்றுப் பத்தடுக்கிய நாட்டத்து” எனவும், சிலப்பதிகாரத்தில் “ செங்கணா யிரத்தோன்” எனவும் கூறப்பட்டுள்ளமை காண்க. மற்று : அசை, முகிலைச் சிறையிட்ட தென்பது ஆராய்ச்சிக் குரியது. (42) வாங்குநீர் வறப்ப வேலை விடுத்ததும் வலிய வாரந் தாங்கிய செருக்குங் காரைத் தளையிடு தருக்கு நோக்கி ஈங்கொரு மனித யாக்கைக் கித்துணை வலியா தென்னா வீங்கிய மான மூக்க மீனவன் மதுரை சூழ்ந்தான். (இ-ள்.) வாங்கு நீர் வறப்ப வேலை விடுத்ததும் - வளைந்த கடல் சுவற வேற்படையை விடுத்ததனையும், வலிய ஆரம் தாங்கிய செருக்கும் - வலிய மாலையைத் தாங்கிய பெருமிதத்தையும், காரைத் தளை இடுதருக்கும் நோக்கி - முகிலை விலங்கிட்ட செருக்கையும் நோக்கி, ஈங்கு ஒரு மனித யாக்கைக்கு இத்துணை வலியாது என்னா - இங்கு ஒரு மனித உடம்பிற்கு இவ்வளவு வலிமை வந்தது என்னை என்று, வீங்கியமானம் ஊக்க - மேலெழுந்த மானம் செலுத்த, மீனவன் மதுரை சூழ்ந்தான் - பாண்டியனது மதுரையை வளைந்தான் எ-று. வெறுப்பால் ‘ஈங்கொரு மனிதயாக்கை’ என இகழ்ந்தா னென்க. ஊக்க - ஊக்க முண்டாக்க, செலுத்த. (43) (கலிவிருத்தம்) ஓடின ரொற்றர்போய்ச் செழிய னொண்கழல் சூடினர் நகர்ப்புறஞ் சுரர்கள் சேனைகள் மூடின வென்னலு முனிவு மானமும் நீடின னரியணை யிருந்து நீங்குவான். (இ-ள்.) ஒற்றர் ஓடினர் போய் - ஒற்றர்கள் ஓடிச்சென்று, செழியன் ஒண்கழல் சூடினர் - பாண்டியனின் ஒள்ளிய திருவடி களைச் சிரத்திற்சூடி. நகர்ப்புறம் சுரர்கள் சேனைகள் மூடின என்னலும் - நகரின் புறத்தே தேவர் படைகள் வளைந்தன என்று கூறலும், முனிவும் மானமும் நீடினன் - கோபமும் மானமும் மிக்கவனாய், அரி அணை இருந்து நீங்குவான் - சிங்காதனத் தினின்றும் நீங்கிப் போருக்குச் செல்கின்ற அப்பாண்டியன் எ-று. ஓடினர், சூடினர், நீடினன் என்பன முற்றெச்சங்கள். நீங்குவான்: பெயர். (44) பண்ணுக தேர்பரி பகடு வீரர் முன் நண்ணுக கடிதென நடத்தி யாவரென் றெண்ணலன் மதமலை யெருத்த மேற்கொடு கண்ணகன் கடிநகர்க் காப்பு நீங்குமுன். (இ-ள்.) தேர் பரி பகடு பண்ணுக - தேரையும் குதிரையையும் யானையையும் பண்ணுக, வீரர் கடிது முன் நண்ணுக - வீரர்கள் விரைந்து முன் செல்லுக, என - என்றுகூறி, நடத்தி - (அவற்றை) முன்னே நடப்பித்து, யாவர் என்று என்ணலன் - போருக்கு வந்தவர் யாவர் என்று கருதாது, மதமலை எருத்தம் மேற்கொடு - யானையின் பிடரியிலேறி, கண் அகன் கடிநகர் காப்பு நீங்கு முன் - இடமகன்ற விளக்கமுள்ள நகரின் காவலாகிய மதிலைக் கடக்கும் முன் எ-று. பண்ணுதல் - புறப்படுதற் கேற்பச் சமைத்தல், ஒப்பனை செய்தல். அகன் : மரூஉ. (45) அடுத்தனர் வானவ ரார்த்துப் பல்படை எடுத்தனர் வீசினர் சிலையி லெய்கணை தொடுத்தன ரிறுதிநாட் சொரியு மாரிபோல் விடுத்தனர் மதிக்குல வீரன் சேனைமேல். (இ-ள்.) வானவர் அடுத்தனர் ஆர்த்து - தேவர்கள் நெருங்கி ஆரவாரித்து, பல்படை எடுத்தனர் வீசினர் - பல படைகளையும் எடுத்து வீசி, சிலையில் எய்கணை தொடுத்தனர் - வில்லின்கண் எய்யுங் கணைகளைத் தொடுத்து, மதிக்குல வீரன் சேனைமேல் - சந்திர குலத்து வீரனாகிய உக்கிர வழுதியின் சேனையின்மேல், இறுதிநாள் சொரியும் மாரிபோல் விடுத்தனர் - ஊழிக்காலத்திற் பொழியும் மழைபோலச் சொரிந்தார்கள் எ-று. வானவர் வீரன் சேனைமேல் மாரிபோல் விடுத்தனர் என்க. முற்றுக்கள் எச்சமாய் வருவன காண்க. (46) ஆர்த்தனர் மலயவெற் பரையன் சேனையோர் பார்த்தனர் வேறுபல் படைக்க லக்குவை தூர்த்தனர் குனிசிலை தொடுத்து வாளியாற் போர்த்தன ரமரர் மெய் புதைத்த வென்பவே. (இ-ள்.) மலய வெற்பு அரையன் சேனையோர் ஆர்த்தனர் - பொதியின் மலையையுடைய பாண்டியன் படைவீரர் ஆரவாரித்து, பார்த்தனர் வேறுபல் படைக்கலக் குவை தூர்த்தனர் - பார்த்து வெவ்வேறு பலபடைக்கலக் கூட்டங்களை வீசி, குனி சிலை தொடுத்து வாளியால் போர்த்தனர் - வளைந்த வில்லிற்பூட்டி அம்புகளால் மூடினர்; அமரர் மெய்புதைத்த (அவ்வம்புகள்) தேவர்கள் மெய்யில் தைத்தன எ-று. பார்த்தனர் - ஆராய்ந்து; வானவர் விடுத்தமையை நோக்கி என்றுமாம். புதைந்த வென்பது புதைத்த வென வலிந்தது; மெய்யை மறைத்தன என்னலுமாம். என்ப, ஏ: அசைகள். (47) தறிந்தன தாள்சிரந் தகர்ந்த தோள்கரம் பறிந்தன குருதிநீர் கடலிற் பாய்ந்தன செறிந்தன பாரிடஞ் சேனங் கூளிகள் முறிந்தன வானவர் முதல்வன் சேனையே. (இ-ள்.) தாள் தறிந்தன - (சிலருக்குக்) கால்கள் அறுபட்டன; சிரம் தகர்ந்த - (சிலருக்குத்) தலைகள் உடைந்தன; தோள் கரம் பறிந்தன - (சிலருக்குத்) தோளும் கையும் குறைபட்டன; கடலில் குருதி நிர் பாய்ந்தன - கடலில் உதிரநீர்கள் ஓடிப்பாய்ந்தன; பாரிடம் சேனம் கூளிகள் செறிந்தன - பூதங்களும் பருந்துகளும் பேய்களும் வந்து நெருங்கின; வானவர் முதல்வன் சேனை முறிந்தன - தேவர் தலைவனாகிய இந்திரன் சேனைகள் நிலைகெட்டோடின எ-று. பறிதல் - நீங்குதல். முறிதல் - கெடல். (48) ஆடின குறைத்தலை யவிந்த போர்க்களம் பாடின பாரிடம் விந்தைப் பாவைதாள் சூடின கூளிகள் சோரி சோரப்பார் மூடின பிணக்குவை யண்ட முட்டவே. (இ-ள்.) குறைத்தலை ஆடின - கவந்தங்கள் ஆடின; போர்க் களம் அவிந்த - போர்க்களத்திற் போர் ஒழிந்தன; பாரிடம் பாடின - பூதங்கள் பாடின; கூளிகள் விந்தைப் பாவை தாள் சூடின - பேய்கள் கொற்றவையின் திருவடியை (முடியிற்) சூடின; பிணக்குவை சோரி சோர அண்டம் முட்ட பார் மூடின - பிணக் குவியல்கள் குருதி ஒழுகாநிற்க வானை அளாவ நிலவுலகை மூடின எ-று. குறைத்தலை - தலையற்ற உடல். போர் அவிந்ததனைப் போர்க்களம் அவிந்தன வென்றார்; அவிதல் - அடங்குதல். விந்தையாகிய பாவை யென்க. (49) வெஞ்சின வலாரிதன் வீரச் சேனைகள் துஞ்சின கண்டெரி சொரியுங் கண்ணனாய்ப் பஞ்சின்மு னெரியெனப் பதைத்துத் தெய்வத வஞ்சினப் படைகளான் மலைவ துன்னினான். (இ-ள்.) வெஞ்சின வலாரி - கொடிய சினத்தையுடைய இந்திரன், தன் வீரச்சேனைகள் துஞ்சின கண்டு - தனது வீரமுள்ள சேனைகள் இறந்தனவற்றை நோக்கி, எரி சொரியும் கண்ணனாய் - அழல் சிந்துங் கண்களை யுடையனாய், பஞ்சின் முன் எரி எனப் பதைத்து - பஞ்சின் முன்னே நெருப்பு (விரைந்து பற்றல்) போல் (சினம் விரைந்து பற்றப்) பதைத்து, வஞ்சினம் தெய்வதப் படைகளால் மலைவது உன்னினான் - நெடு மொழி கூறித் தெய்வத் தன்மையையுடைய படைக் கலங்களினால் போர்செய்தலைக் கருதினான் எ-று. வலாரி - வலனுக்குப் பகைவன். துஞ்சின - வலி கெட்டன என்னலுமாம்; தொழிற் பெயருமாம். வீரச் சேனை யென்றது இகழ்ச்சி யென்றும், வஞ்சினப் படைகள் என்றது வீரர் வஞ்சினஞ் கூறிப்பொருதலைப் படைகள் மேலேற்றிய தென்றும் கொள்ளலு மாகும். மலைவது: தொழிற்பெயர். (50) (அறுசீரடி யாசிரிய விருத்தம்) வெங்கதிர்ப் படைவிட் டார்த்தான் விண்ணவ னதனைத் திங்கட் பைங்கதிர்ப் படைதொட் டோச்சி யவித்தனன் பாராள் வேந்தன் சிங்கவெம் படைவிட் டார்த்தான் தேவர்கோ னதனைச் சிம்புட் புங்கவன் படைதொட் டோச்சி யடக்கினான் புணரி வென்றோன். (இ-ள்.) விண்ணவன் வெங்கதிர்ப் படை விட்டு ஆர்த்தான் - இந்திரன் கொடிய பரிதிக்கணையை விட்டு ஆரவாரித்தான்; அதனை - அக் கணையை, பார் ஆள் வேந்தன் - நில வுலகை ஆளுகின்ற பாண்டி மன்னன், பைங்கதிர்ப் படை தொட்டு ஓச்சி அவித்தனன் - இளங்கிரணத்தையுடைய திங்கட் கணையை (வில்லிற்) பூட்டி விடுத்து அழித்தான்; தேவர் கோன் சிங்க வெம்படை விட்டு ஆர்த்தான் - தேவேந்திரன் கொடிய நரசிங்கக் கணையை விடுத்து முழங்கினான்; அதனை - அந்தக் கணையை, புணரி வென்றோன் - கடலை வென்றவனாகிய உக்கிரவழுதி, புங்கம் வன் சிம்புள் படை தொட்டு ஓச்சி அடக்கினான் - மிக்க வலிமையுடைய சரபக் கணையை (வில்லிற்) பூட்டிவிடுத்து அழித்தான் எ-று. புங்கம் - உயர்ச்சி. (51) தானவர் பகைவன் மோக சரந்தொடுத் தெறிந்தா னாக மீனவ னதனை ஞான வாளியால் விளித்து மாய்ந்து போனபின் மற்போ ராற்றப்1 புக்கனர் புக்கார் தம்மில் வானவன் மண்ணி னான்மேல் வச்சிரம் வீசி யார்த்தான். (இ-ள்.) தானவர் பகைவன் - அசுரர்கள் பகைவனாகிய இந்திரன், மோகசரம் தொடுத்து எறிந்தானாக - மோகனக் கணையை (வில்லிற்) பூட்டி விடுக்க, அதனை - அக் கணையை, மீனவன் - பாண்டியன், ஞானவாளியால் விளித்து - ஞானக் கணையால் அழித்தலால், மாய்ந்து போனபின் - (அஃது) அழிந்த பின், மல்போர் ஆற்றப் புக்கனர் - (இருவரும்) மற்போர் புரியத் தொடங்கினார்கள்; புக்கார் தம்மில் - அங்ஙனம் தொடங்கினவர் களுள், வானவன் - இந்திரன், மண்ணினான்மேல் வச்சிரம் வீசி ஆர்த்தான் - பாண்டியன்மேல் வச்சிரப் படையை விடுத்து ஆரவாரித்தான் எ-று. மோக சரம் - அறிவை மயக்கும் அம்பு. விளித்து - விளியச் செய்து: பிறவினை; விளித்தலாலென்பது திரிந்து நின்றது. (52) காய்சின மடங்க லன்னான் கைவளை சுழற்றி வல்லே வீசினன் குலிசந் தன்னை வீழ்த்தது1 விடுத்தான் சென்னித் தேசினன் மகுடந் தள்ளிச் சிதைத்தது சிதைத்த லோடுங் கூசின னஞ்சிப் போனான் குன்றிற கரிந்த வீரன். (இ-ள்.) காய்சின மடங்கல அன்னான் - மிக்க சினத்தையுடைய சிங்கத்தை ஒத்த உக்கிரவழுதி, கைவளை சுழற்றி வல்லே வீசினன் - கையிலுள்ள திகிரிப்படையைச் சுழற்றி விரைந்து வீசினன்; குலிசம் தன்னை வீழ்த்து - (அப்படை) வச்சிரப் படையை அழித்து, அது விடுத்தான் - அப்படையை விடுத்தவனாகிய இந்திரனது, சென்னி தேசின் நல் மகுடம் தள்ளிச் சிதைத்தது - தலையிலுள்ள ஒளி வீசும் நல்ல முடியைக் கீழே வீழ்த்தி அழித்தது; சிதைத்த லோடும் - (அங்ஙனம்) சிதைத்த வளவில், குன்று இறகு அரிந்த வீரன் கூசினன் அஞ்சிப் போனான் - மலையின் சிறைகளை அறுத்த வீரனாகிய இந்திரன் நாணமும் அச்சமும் உடையனாய் ஓடினான் எ-று. காய் சினம் - சுடு சினம்; மிக்க சினம். கூசினன் - நாணினனாய்: முற்றெச்சம். வீரனென்றது இகழ்ச்சிக் குறிப்பு முன்பு வீரனானவன் என்றுமாம். இந்திரன் முடியைத் தகர்த்த இச்செய்தி; “ வச்சிரத் தடக்கை யமரர் கோமான் உச்சிப் பொன்முடி யொளிவளை யுடைத்தகை” என்று சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுளது. (53) இந்திரண் டனைய கூர்ம்பல் லிருள்வரை நெஞ்சு போழ்ந்த மைந்தனில் வலிய காளை வரைந்தெறி நேமி சென்னி சிந்திடா தாகி யம்பொன் மணிமுடி சிதறச் சோம சுந்தர நாதன் பூசைத் தொழிற்பய னளித்த தென்னா. (இ-ள்.) இரண்டு இந்து அனைய கூர்ம்பல் - இரண்டு பிறைமதி போன்ற கூரிய பற்களையுடைய, இருள் வரை நெஞ்சுபோழ்ந்த மயக்கத்தைச் செய்யும் மலை வடிவாயுள்ள கிரவுஞ்சனது நெஞ்சைப் பிளந்த, மைந்தனில் வலிய காளை - முருகக் கடவுள் போலும் வலியுடைய உக்கிரவழுதி, வரைந்து எறி நேமி - கையிற்கொண்டு எறிந்த திகிரிப்படையானது, சென்னி சிந்திடாதாகி - தலையைச் சேதிக்காமல், அம்பொன் மணி முடி சிதற - அழகிய பொன்னா லாகிய மணிகள் பதித்த முடியையே சிதறுமாறு, சோமசுந்தர நாதன் பூசைத்தொழில் பயன் அளித்தது என்ன - சோமசுந்தரக் கடவுளின் பூசைப்பயன் காத்தது என்று எ-று. அசுரனாகிய வரை யென்பார் ‘கூர்ம்பல் இருள் வரை’ என்றார் எனலுமாம். கூர்ம்பல், மெல்லெழுத்து மிக்கது; “ ஆரும் வெதிரும் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்” (தொல்) என்பதன் இலேசாற் கொள்க. பூசையாகிய நல்வினையின் பயன். (54) போரினுக் காற்றா தோடிப் பொன்னகர் புகுந்த வென்றித் தாரினுக் கிசைந்த கூர்வேற் சதமகன் பின்பு நின்னாட்1 டூரினுக் கெல்லா மாரி யுதவுவே னிகள நீக்கிக் காரினைத் தருக வென்னாக் கவுரியற் கோலை விட்டான். (இ-ள்.) போரினுக்கு ஆற்றாது ஓடி - போருக்கு ஆற்றாது புறங்கொடுத்தோடி, பொன் நகர் புகுந்த - பொன்னுலகிற் புகுந்த, வெற்றித் தாரினுக்கு இசைந்த - வெற்றி மாலைக்கு அமைந்த, கூர்வேல் சதமகன் - கூரிய குலிசப் படையை யுடைய இந்திரன், பின்பு - பின், நின்நாட்டு ஊரினுக்கு எல்லாம் மாரி உதவுவேன் - நினது நாட்டிலுள்ள ஊர் முழுதுக்கும் மழைவளந் தருவேன்; நிகளம் நீக்கிக் காரினைத் தருக என்னா - விலங்கினின்றும் நீக்கி முகில்களைத் தருவாயாக என்று, கவுரியற்கு ஓலை விட்டான் - உக்கிரவழுதிக்குத் திருமுகம் அனுப்பினான் எ-று. இசைந்த சதமகன் என்க. தாரினுக்கு என்பதனை உருபு மயக்கமாக்கித் தாரினை யணிந்த என்னலுமாம்; இதுவும் இகழ்ச்சி நாடு முழுதுக்கும் என்க. நிகளத்தை நீக்கி யென்றுமாம். விட்டான் - விடுத்தான். (55) முடங்கல் கொண்டணைந்த தூதன் முடிகெழு வேந்தன் பாதத் தொடுங்கிநின் றோலை நீட்ட வுழையுளா னொருவன் வாங்கி மடங்கலே றனையான் முன்னர் வாசித்துக் காட்டக் கேட்டு விடங்கலுழ் வேலான் விண்ணோர் வேந்துரை தேரா னாகி. (இ-ள்.) முடங்கல் கொண்டு அணைந்த தூதன் - ஓலை கொண்டு வந்த தேவ தூதன், முடி கெழுவேந்தன் பாதத்து ஒடுங்கி நின்று ஓலை நீட்ட - முடியினையுடைய பாண்டி மன்னன் திருவடியின்கீழ் அடங்கி நின்று ஓலையைக் கொடுக்க, உழையுளான் ஒருவன் வாங்கி - அருகிலுள்ள ஒருவன் அதனை வாங்கி, மடங்கல் ஏறு அனையான் முன்னர் வாசித்துக் காட்ட - ஆண்சிங்கத்தை ஒத்த உக்கிரவழுதியின் முன்படித்துக் காட்ட, கேட்டு - அதனைக் கேட்டு, விடம் கலுழ்வேலான் - நஞ்சுமிழும் வேற்படையையுடைய அம் மன்னன், விண்ணோர்வேந்து உரை தேரானாகி - தேவேந்திர னுடைய வார்த்தையைத் தெளியாதவனாய் எ-று. முடியை யிழந்த வேந்தன் றூதன், முடியையுடைய வேந்தன் பாதத்தில் ஒடுங்கி நின்றானென்க. உழையுளான் - கரணத்தான்; திருமுகம் வாசிப்பான். மெய்யெனத் தெளியாமல் என்க. (56) இட்டவன் சிறையை நீக்கி யெழிலியை விடாது மாறு பட்டசிந் தையனே யாகப் பாகசா தனனுக் கென்றும் நட்டவ னொருவே ளாள னான்பிணை யென்று தாழ்ந்தான் மட்டவிழ்ந் தொழுகு நிம்ப மாலிகை மார்பி னானும். (இ-ள்.) இட்டவன் சிறையை நீக்கி எழிலியை விடாது - இடப் பட்ட வலிய சிறையினின்றும் நீக்கி முகில்களை விடாது, மாறுபட்ட சிந்தையனே ஆக - மாறுகொண்ட உள்ள முடையனாக, பாகசா தனனுக்கு என்றும் நட்டவன் ஒரு வேளாளன் - இந்திரனுக்கு எப் பொழுதும் நண்பினனாயுள்ள ஒரு வேளாளன், நான் பிணை என்று தாழ்ந்தான் - நான்பிணை என்று வணங்கினான்; அவிழ்ந்து மட்டு ஒழுகு நிம்பமாலிகை மார்பினானும் - மலர்ந்து தேனொழுகும் வேப்ப மலர் மாலையை யணிந்த மார்பினையுடைய பாண்டியனும் எ-று. பாகசாதனனை நட்டவன் என உருபு மயக்கமுமாம். பிணை - புணை; ஈடு. (57) இடுக்கண்வந் துயிர்க்கு மூற்ற மெய்தினும் வாய்மை காத்து வடுக்களைந் தொழுகு நாலா மரபினா னுரையை யாத்தன் எடுத்துரை மறைபோற் சூழ்ந்து சிறைக்களத் திட்ட யாப்பு விடுத்தனன் பகடு போல மீண்டன மேக மெல்லாம். (இ-ள்.) இடுக்கண் வந்து உயிர்க்கும் ஊற்றம் எய்தினும் - துன்ப முண்டாகி உயிர்க்கும் இடையூறு வந்தாலும், வாய்மை காத்து - மெய்ம்மையைப் பாதுகாத்து, வடுக்களைந்து ஒழுகும் - குற்றத்தையகற்றி ஒழுகும், நாலாம் மரபினான் உரையை - நான்காங் குலத்தினனாகிய அவன் கூறிய மொழியை, ஆத்தன் எடுத்து உரைமறைபோல் சூழ்ந்து - இறைவன் (உயிர்களின் பொருட்டு) எடுத்துக் கூறிய மறை மொழிபோல் மதித்து, சிறைக் களத்து இட்ட யாப்பு விடுத்தனன் - சிறைச்சாலையின்கண் இட்டிருந்த தளையினை நீக்கினான்; மேகம் எல்லாம் பகடுபோல மீண்டன - முகில்கள் நான்கும் யானைகள் போல மீண்டு சென்றன எ-று. இடுக்கண் - வறுமை முதலிய துன்பம்; உயிர்க்கும்: உம்மை எச்சமும் சிறப்புமாம். ஊற்றம் - ஊறு. வாய்மை காத்தலை ‘வழுக்கறு வாய்மை மாண்பும்’என மேலே உரைத்ததனுள்ளுங் காண்க. வேதமொழிபோற் பொய்யாதெனக் கருதி, களவேள்வி நாட்டில் ஏழுர்களையுடைய ஒருவன் ‘நாம் முன்’ என்று கூறிப் புணை நின்றான் என நம்பி திருவிளையாடல் கூறும். (58) தேவர்கோ னேவ லாலே திங்கண்மும் மாரி பெய்து வாவியுங் குளனும் யாறு மடுக்களு மடுத்துக் கள்வாய்க் காவிசூழ் வயலுஞ் செய்யுஞ் செந்நெலுங் கன்னற் காடும் பூவிரி பொழிலுங் காவும் பொலிந்தது கன்னி நாடு. (இ-ள்.) தேவர்கோன் ஏவலாலே - தேவேந்திரன் கட்டளை யாலே, திங்கள் மும்மாரி பெய்து - மாதம் மூன்று மழை பெய்துவர, வாவியும் குளனும் யாறும் மடுக்களும் மடுத்து - வாவிகளும் குளங்களும் ஆறுகளும் மடுக்களும் நிறைதலால், கள்வாய் காவி சூழ்வயலும் செய்யும் - தேன் ஒழுகும் வாயினையுடைய குவளைகள் வயல்களிலும் செய்களிலுமுள்ள, செந்நெலும் கன்னல் காடும் - செந்நெற் காடுகளாலும் கரும்பின் காடுகளாலும், பூவிரி பொழிலும் காவும் - மலர் விரிந்த பூஞ்சோலைகளாலும் இளமரக்காக்களாலும். கன்னிநாடு பொலிந்தது - கன்னி நாடு பொலிவு பெற்று விளங்கியது எ-று. பெய்ய வென்பது பெய்து என்றும், மடுத்தலால் என்பது மடுத்து என்றும் திரிந்து நின்றன. செந்நெலும் கன்னற்காடும் உடைய வயல் களாலும் செய்களாலும் என்று கருத்துக் கொள்க. செய் - படுகர் போலும். (59) ஆகச் செய்யுள் - 1100. மேருவைச் செண்டாலடித்த படலம் (எழுசீரடி யாசிரிய விருத்தம்) அண்ட ரஞ்ச வமரு ழந்த வமரர் கோனை யரசர்கோன் வண்ட லம்பு மெளலி சிந்த வளையெ றிந்து வெந்புறங் கண்ட வண்ண மின்ன தன்ன கன்னி நாடன் மேருவிற் செண்டெ றிந்து வைப்பெடுத்த செயலு நன்கு செப்புவாம். (இ-ள்.) அரசர் கோன் - மன்னர் மன்னனாகிய உக்கிரவழுதி, அமர் உழந்த அமரர் கோனை - தன்னுடன் போர் புரிந்த தேவர்க்கரசனை, அண்டர் அஞ்ச - தேவர்கள் அஞ்சுமாறு, வண்டு அலம்பு மெளலி சிந்த - வண்டுகள் ஒலிக்கும் (மாலை சூடிய) முடி தகர, வளை எறிந்து வெந் புறம் கண்ட வண்ணம் இன்னது - திகிரிப் படையை ஓச்சிப் புறங் கண்ட திருவிளையாடல் இதுவாகும்; அன்ன கன்னி நாடன் - (இனி) அந்தக் கன்னி நாடனாகிய பாண்டியன், மேருவில் செண்டு எறிந்து - மேருமலையின் மேல் செண்டினை ஓச்சி, வைப்பு எடுத்த செயலும் நன்கு செப்புவாம் - சேமநிதி எடுத்த திருவிளையாடலையும் நன்கு கூறுவாம் எ-று. உழத்தல் - வருந்திச் செய்தல், வண்டலம்பு என்னும் அடையால் மாலை சூடிய என வருவிக்கப் பட்டது. வெந், புறம்; ஒருபொருளிரு சொல். இச் செய்யுளில் சந்த நலந் தோன்றச் சீரெதுகை பல அமைந்திருத்தல் காண்க. (1) மன்ன வன்ற னக்கு முன்னர் மலய வெற்பின் முனிவர்கோன் சொன்ன திங்கள் விரத மன்று தொட்டு நோற்று வரலுமந் நன்ன லஞ்செய் பேறு போல நங்கை காந்தி மதிவயிற் றுன்ன ருஞ்ச யங்கொண் மைந்த னொருவன் வந்து தோன்றினான். (இ-ள்.) மன்னவன் - உக்கிரவழுதி, முன்னர் - முன்பு, மலயவெற்பின் முனிவன் கோன் - பொதியின் மலையையுடைய முனிவர் தலைவனாகிய அகத்தியன், தனக்கு சொன்ன திங்கள் விரதம் - தனக்குக் கூறிய சோமவார விரதத்தை, அன்று தொட்டு நோற்று வரலும் - அற்றை நாள் முதல் நோற்று வரவும், அந்நல் நலம் செய்பேறுபோல - அந்த நல்ல விரதம் அருளிய பயன்போல, நங்கை காந்திமதி வயிற்று - பெண்களுட் சிறந்த காந்திமதியின் வயிற்றிலே, உன் அரும் சயம் கொள்மைந்தன் ஒருவன் வந்து தோன்றினான் - நினைத்தற்கரிய வெற்றியைப் பெறும் புதல்வன் ஒருவன் வந்து உதித்தான் எ-று. மூவேந்தர்க்குங் கூறியதனைத் தனக்குக் கூறிய தென்றது தனக்கும் அவ்வுரிமை யுண்மையால்; எவ்வுயிர்க்கும் அப்பனா யுள்ளானை என்னப்பன் என்பது போல. நல மென்றது விரதத்தை யுணர்த்திற்று. உன் : முதனிலைத் தொழிற்பெயர். (2) வயந்த னைப்ப யந்த தென்ன மைந்த னைப்ப யந்தபோ தியந்து வைத்து நகர் களிப்ப வினிதி ருந்த புரவலன் சயந்த ழைக்க விந்தி ரன்ச யந்த னைப்ப யந்தநாள் வியந்த கத்த டைந்த வின்பம் விளைம கிழ்ச்சி யெய்தினான். (இ-ள்.) வயந்தனைப் பயந்தது என்ன - மன்மதனைப் பெற்றாற் போல, மைந்தனைப் பயந்தபோது - புதல்வனைப் பெற்ற பொழுது, நகர் இயம்துவைத்து களிப்ப - நகரத்திலுள்ளவர்கள் இயங்களை ஒலிப்பித்துக் களிகூர, இனிது இருந்த புரவலன் - இனிதாக இருந்த உக்கிரவழுதி, இந்திரன் சயம்தழைக்க சயந்தனைப்பயந்த நாள் - இந்திரனானவன் வெற்றி பெருகச் சயந்தனைப் பெற்ற பொழுது, வியந்து அகத்து அடைந்த இன்பம் - வியப்புற்று உள்ளத்திலுற்ற மகிழ்ச்சிபோல, விளை மகிழ்ச்சி எய்தினான் - மிக்க மகிழ்ச்சியை அடைந்தான் எ-று. வயந்தன் - வேனிலுக் குரியவன். வயம் தனை எனப் பிரித்து வெற்றியையே பெற்றாற் போல என்றுரைத்தலுமாம். துவைத்து: ஈண்டுப் பிறவினை. சயந்தன் - இந்திரன் மகன். சயந் தழைக்கச் சயந்தனைப் பயந்த என்பதன் நயத்தினை ஓர்க. இன்பம் போலவென உவமச் சொல் விரிக்க; இன்பம் விளைக்கும் மகிழ்ச்சி போலும் மகிழ்ச்சியை யென்றலுமாம். (3) தென்ன ரேறு சாத காதி செய்து வீர பாண்டியன் என்ன நாம வினை நிரப்பி யெழுதொ ணாத கலைமுதற் பன்னு கேள்வி கரிக டேர்கள் பரிப டைக்க லம்பயின் றன்ன காத லான்வி ளங்க வகம கிழ்ச்சி யடையுநாள். (இ-ள்.) தென்னர் ஏறு - பாண்டியருள் ஆண் சிங்கம் போன்ற உக்கிரவழுதி, சாதகாதி செய்து - சாத கன்ம முதலிய சடங்குகளைச் செய்து, வீரபாண்டியன் என்ன நாம வினை நிரப்பி - வீரபாண்டியன் என்று பெயரிட்டு, எழுத ஒண்ணாத கலை முதல் பன்னு கேள்வி - எழுதலாகாத மறை முதலாகக் கூறப்பட்ட பல நூல்களையும், கரிகள் தேர்கள் பரி - யானை தேர் குதிரைகளின் ஏற்றங்களையும், படைக்கலம் - படைக்கல வித்தையையும், பயின்று - கற்று, அன்னகாதலான் விளங்க - அந்தப் புதல்வன் விளங்க, அகம் மகிழ்ச்சி அடையும் நாள் - (அதனைக் கண்டு) மனமகிழ்ச்சி யடையுங் காலையில் எ-று. சாதகாதி: நெடிற் சந்தி. பெயரிடுதலும் சடங்காகலின் ‘நாம வினை நிரப்பி’ என்றார். எழுதொணாத: அகரம் தொகுத்தல்; ஒன்றாத வென்பது மரூஉவாயிற்று. பயிற்றுவித்து, அவற்றைப் பயின்று விளங்கக் கண்டு என விரித்துரைத்துக் கொள்க. (4) மல்கு மாறில் கோடி ரிந்து மழைசு ருங்கி நதியுநீர் ஒல்கு மாறு பருவ மாறி யுணவு மாறி யுயிரெலாம் மெல்கு மாறு 1 பசியு ழந்து வேந்த னுக்கு விளைபொருள் நல்கு மாறி லாமை யின்ன னலிய வந்த நாடெலாம். (இ-ள்.) மல்கு மாறு இல் - நலம் பெருகுந் தன்மை இல்லையாக, கோள் திரிந்து - கோட்கள் தத்தம் நிலையினின்றும் மாறுதலால், மழை சுருங்கி நதியும்நீர் ஒல்குமாறு - மழை வளக்சுருங்கி நதியும் நீர்க, பருவம் மாறி உணவுமாறி - பருவங்கள் மாறுபட்டு உணவு இன்றாகி, உயிர் எலாம் மெல்குமாறு - உயிர்களனைத்தும் மெலியுமாறு, பசி உழந்து - பசியால் வருந்தி, வேந்தனுக்கு விளை பொருள் நல்குமாறு இலாமை - அரசனுக்கு விளைபொருள் கொடுத்தலும் இல்லையாக, நாடு எலாம் இன்னல் நலிய வந்த - நாடு முழுதும் வறுமைத் துன்பம் வருத்துமாறாயின எ-று. இல் - இல்லையாக. ஒல்குமா றென்பதனை ஒல்க வெனத் திரிக்க. பருவம் மாறுதலாவது கார் கூதிர்ப் பருவங்களில் மழை யின்மையின் எல்லாப் பருவங்களும் தம் இயல்பு மாறுதல். திரிதலால் சுருங்கி ஒல்க அதனால் பருவமாறி உணவுமாறி உழந்து இல்லையாக நாடெலாம் நலிய வந்தன எனக் கூட்டி வினைமுடிவு செய்க. இன்னல்கள் வந்தன என்னலுமாம். (5) மழைவ றந்த தென்கொ லென்று வழுதிகூற முழுதுணர்ந் தழிவி லாத பிரம கற்ப மளவு மெல்லை கண்டநூல் உழவர் கோள்க ளிரவி தன்னை யுற்று நோக்கி நிற்றலால் தழையு மாரி வருடி யாதொர் வருட மென்று சாற்றினார். (இ-ள்.) மழை வறந்தது என்கொல் என்று வழுதிகூற - மழைவறந்ததற்குக் காரணம் யாதென்று பாண்டியன் வினவ (அதற்கு), முழுது உணர்ந்து அழிவு இலாத பிரமகற்பம் அளவும் இல்லை கண்ட நூல் உழவர் - சோதிட நூல் முழுதும் உணர்ந்து அழியாத பிரமகற்பம் வரையும் காலவளவைத் தேர்ந்துணர்ந்த புலவர்கள், கோள்கள் இரவி தன்னை உற்று நோக்கி நிற்றலால் - ஏனைய கோட்கள் சூரியனைப் பொருந்தி நோக்கி நிற்றலால், ஓர் வருடம் தழையும் மாரி வருடியாது என்று சாற்றினார். ஓராண்டுவரை (உலகைச்) செழிப் பிக்கும் மழையானது பொழியாது என்று கூறினார்கள் எ-று. பிரம கற்பம் - பிரமனுக்கு ஒருபகல்; பதினான்கு இந்திரர் அழியுங்காலம். அக்காலம் என்றும் வந்து கொண்டிருத்தலின் அழிவிலாத என்றார்; உபசாரமுமாம். நூலுழவர் - புலவர்; சொல்லேருழவர் என்பது போலும் வழக்கு. எல்லை கண்ட நூல் எனலுமாம். வருடியாது: வடசொற்றிரிபு. (6) (அறுசீரடியாசிரிய விருத்தம்) மகவுறு நோயை நோக்கி வருந்துறு தாய்போன் மன்னன் பகவுறு மதியஞ் சூடூம் பரஞ்சுடர் முன்போய்த் தாழ்ந்து மிகவுறு பசியால் வைய மெலிவதை யைய வென்னாத் தகவுற விரங்கிக் கண்ணீர் ததும்பி1 நின் றிரந்து வேண்ட. (இ-ள்.) மகவு உறு நோயை நோக்கி வருந்துறு தாய்போல் - பிள்ளையுற்றபிணியை நோக்கி வருந்துகின்ற தாயைப்போல, மன்னன் - பாண்டி மன்னன், பகவு உறு மதியம் சூடும் பரஞ்சுடர் முன்போய் - பிளவு பொருந்திய மதியையணிந்து சிவபரஞ்சோதி யின் திருமுன்சென்று, தாழ்ந்து - வணங்கி, ஐய - ஐயனே, வையம் - உயிர்கள், மிக உறுபசியால் மெலிவது என்னா - மிகவும் உற்ற பசியினால் வருந்துகின்றனவே என்று, தகவு உற இரங்கி கண்ணீர் ததும்பி நின்று இரந்துவேண்ட - மிகவும் இரங்கிக் கண்ணீர் பொழிய நின்று குறையிரந்து வேண்ட எ-று. குழவியுற்ற நோயைக் கண்டு எல்லையின்றி வருந்துதலும், அந்நோயைப் போக்குதற்குத் தான் மருந்துண்டலும் உடைய தாயினுங் காட்டில் அன்பிற்கு எடுத்துக்காட்டு வேறில்லை; “ தாயொக்கு மன்பின்” என்றார் கம்பநாடர். “ ஓத நீருல கொப்ப நிழற்றலால் தாதையே ” என்றார் திருத்தக்கதேவர். தாய்போல் இரங்கித் ததும்பி நின்று வேண்ட எனக் கூட்டுக. வையம்: ஆகுபெயர். மெலிவகை, ஐ: சாரியை; வினைத்திரிசொல்லுமாம். தகவுற - மிக வென்னும் பொருட்டு. (7) திரைக்கடல் விடஞ்சேர் கண்டன் காலத்தின் செவ்வி நோக்கி இரக்கமில் லவர்போல் வாளா விருத்தலு மருத்தார் மார்பன் கரைக்கரி தாய துன்பக் கடலில்வீழ்ந் திருக்கை புக்கான் அரக்கர்போர்க் கடலி னீந்தி யருக்கனீர்க் கடலில் வீழ்ந்தான். (இ-ள்.) திரை கடல் விடம் சேர் கண்டன் - அலைகளை யுடைய கடலிற்றோன்றிய நஞ்சு பொருந்திய திருமிடற்றையுடைய சோம சுந்தரக் கடவுள், காலத்தின் செவ்வி நோக்கி - காலத்தின் இயல்பைக் கருதி, இரக்கம் இல்லவர்போல் வாளா இருத்தலும் - கருணையில்லாதவர் போலச் சும்மா இருக்கவும், மருத்தார் மார்பன் - மணம் பொருந்திய மாலையை யணிந்த மார்பினையுடைய உக்கிரவழுதி, கரைக்கு அரிதாய துன்பக்கடலில் வீழ்ந்து இருக்கை புக்கான் - கரையில் அடங்குதலில்லாத துன்பக்கடலில் விழுந்து இருப்பிடம் சென்றான்; அருக்கன் - சூரியன், அரக்கர் போர்க் கடலின் நீந்தி நீர்க்கடலில் வீழ்ந்தான் - அரக்கர்கள் செய்யும் போர்க்கடலினின்று நீங்கி நீர்க்கடலிற் குளித்தான் எ-று. வானோரைப் புரத்தற்குக் கொடிய நஞ்சையும் அயின்ற பேரருளாளன் இப்பொழுது மக்களுறுந் துயரை நோக்கியும் வாளா விருத்தல் இரக்க மின்மை யன்றென்பார், ‘காலத்தின் செவ்வி நோக்கி இரக்கமில்லவர்போல் ’ என்றார். காலத்தின் செவ்வியாவது உயிர்களின் வினைக்கீடாகத் தனது ஆணைவழி நடக்கும் காலத்தின்நிலைமை. கரைக்கு: உருபு மயக்கம்; கரைதற்கு என்பதன் தொகுத்தலாக்கிச் சொல்லுதற் கரிய என்னலுமாம். போர் மிகுதி தோன்றப் ‘போர்க்கடல்’ என்றார்; “ வாளமர் நீழ்ந்தும் போழ்தின்” என்பது சிந்தாமணி. போர்க்கடல் என்றமைக் கேற்ப நீர்க்கடல் என்றார். மந்தேகா என்னும் ஒருவகை அரக்கர் ஆதித்தனுடன் பொருது அவன் தேரைத் தடுப்பர் என்று உருவக வகையாற் புராணங் கூறும். (8) வள்ளறன் குடைக்கீழ்த் தங்கு முயிர்ப்பசி வருத்த மெல்லாங் கொள்ளைகொண் டிருந்த நெஞ்சிற் குளிர் முகச் செவ்வி குன்றத் தள்ளருந் துயரின் மூழ்கித் தரையிடைத் துயின்றா னாக வெள்ளிமன் றுடையார் சித்த வேடராய்க் கனவில் வந்தார். (இ-ள்.) வள்ளல் - உக்கிர வழுதி, தன் குடைக்கீழ் தங்கும் உயிர் பசிவருத்தம் எல்லாம் - தனது குடைநிழலிற்றங்கிய உயிர்களின் பசி வருத்த மனைத்தையும், கொள்ளை கொண்டு இருந்த நெஞ்சில் - கவர்ந்து கொண்டிருந்த உள்ளத்தினால், குளிர்முகச் செவ்வி குன்ற - குளிர்ந்த முகத்தின் பொலிவு குறைய, தள் அரும் துயரில் மூழ்கித் தரையிடைத் துயின்றானாக - நீக்குதற் கரிய துன்பக் கடலில் அழுந்தி நிலத்திலே கிடந்து உறங்கா நிற்க, கனவில் - அவனது கனவின்கண். வெள்ளி மன்று உடையார் சித்த வேடராய் வந்தார் - வெள்ளியம் பலவாணர் சித்த மூர்த்தியாய் எழுந்தருளினார் எ-று. உயிர்களை யெல்லாம் காத்தற்கு விரையும் பேரருளுடைமை பற்றி ‘வள்ளல்’ என்றார். கொள்ளை கொண்டு - ஏற்றுக் கொண்டு. “ அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் கடுத்தது காட்டு முகம் ” என்ப வாகலின் ‘முகச் செவ்விகுறை’ என்றார். அணையின்றி வறிதாகிய தரையிலென்க. (9) அடற்கதிர் வேலோய் மாரி யரிதிப்போ ததனை வேண்டி இடர்ப்படல் வரைக்கு வேந்தா யிருக்கின்ற வெரிபொன் மேருத் தடப்பெரு வரையின் மாடோர் தனிப்பெரு முழையி லிட்டுக் கிடப்பதோ ரெல்லை யில்லாக் கேடிலாச் சேமவைப்பு. (இ-ள்.) அடல் கதிர் வேலோய் - வெற்றியை யுடைய ஒளி பொருந்திய வேற்படை ஏந்திய உக்கிரகுமார, இப்போது மாரி அரிது - இப்பொழுது மழை பெய்தல் இல்லை (ஆதலால்), அதனை வேண்டி இடர்ப்படல் - அதனை விரும்பி வருந்தற்க; வரைக்கு வேந்தாய் இருக்கின்ற - மலைகட்கு அரசாக இருக்கும், எரி பொன் மேருத் தடப்பெருவரையின்மாடு - விளங்குகின்ற பொன் வடிவாகிய மேரு வென்னும் மிக்க பெருமையுடைய மலையின் பக்கத்தில், ஓர் தனிப்பெருமுழையில் - ஒரு ஒப்பற்ற பெரிய குகையில், ஓர் எல்லை இல்லாக்கேடு இலாச் சேம வைப்பு இட்டுக் கிடப்பது - ஓர் அளவில்லாத அழியாத சேமநிதி வைக்கப்பட்டிருக்கின்றது எ-று. இடர்ப்படல், அல்லீற்று எதிர்மறை வியங்கோள். தடப்பெரு; ஒருபொருளிருசொல், இட்டு - இடப்பட்டு. ஓரெல்லையில்லா என்றது ஒருவாற்றானும் அளக்க முடியாத என்றபடி. சேமவைப்பு - பின் உதவுதற்கென்று வைக்கப்படும் நிதி. சேமம் - காவல். வைப்பு- வைத்தல்: வைக்கப்படும் பொருளை உணர்த்துகின்றது. (10) கிடைத்துமற் றனைய மேரு கிரிசெருக்1 கடங்கச் செண்டாற் புடைத்துநின் னாணைத் தாக்கிப் பொன்னறை பொதிந்த பாறை துடைத்துநீ வேண்டுங் காறுந் தொட்டெடுத் ததனை மீள அடைத்துநின் குறியிட் டைய வருதியென் றடிகள் கூற. (இ-ள்.) ஐய - ஐயனே, கிடைத்து - (அதனை) அடைந்து, அனைய மேருகிரி செருக்கு அடங்க - அந்த மேருமலையானது செருக்கடங்குமாறு; செண்டால் புடைத்து - செண்டாலடித்து, நின் ஆணைத்து ஆக்கி - நினது ஆணை வழிப்படுத்தி, பொன் அறை பொதிந்த பாறைதுடைத்து - பொன் வைப்பிருக்கும் அறைமேல் மூடியுள்ள பாறையை நீக்கி, நீ வேண்டுங்காறும் தொட்டு எடுத்து - நீ வேண்டுமளவும் (பொன்னை) வாரி யெடுத்து, அதனை மீள அடைத்து - அவ்வறையைத்திரும்ப மூடி, நின் குறிஇட்டுவருதி என்று - நினது இலச்சினையைப் பொறித்துவரக் கடவாய் என்று, அடிகள் கூற - (அங்ஙனம் வந்த) சித்த மூர்த்திகள் கூறியருள எ-று. செருக்கடக்கி என்றமையால் முன் அது செருக்குடைத்தெனக் கொள்க. ஆணைத்து - ஆணையின் கீழது. துடைத்தல் - நீவுதல். கிரிச்செருக் கென்பது பாடமாயின் கிரியினது செருக்கென்க. (11) விழித்தன னெழுமான் றேரோன் விழிக்குமுன் கடன்களெல்லாங் கழித்தனன் மீன நோக்கி கணவனை வலமாப் போந்து சுழித்தெறி கடல னீகத் தொகைபுறஞ் சூழக் கொண்டல் கிழித்தெழு வாயி னீங்கிக் கீழ்த்திசை நோக்கிச் செல்வான். (இ-ள்.) விழித்தனன் - (உக்கிர பாண்டியன் உடனே) விழித்து, ஏழுமான் தேரோன் விழிக்கு முன் கடன்கள் எல்லாம் கழித்தனன் - ஏழு குதிரைகள் பூட்டிய தேரினையுடைய சூரியன் தோன்றுவதற்கு முன்பே நாட்கடன் அனைத்தையும் முடித்துக் கொண்டு, மீன நோக்கி கணவனை வலமாப்போந்து - அங்கயற்கண்ணம்மையின் மணாளனாகிய சோமசுந்தரக் கடவுளை வலம் வந்து, சுழித்து எறி கடல் அனீகத்தொகை புறம் சூழ - சுழித்து அலைகள் வீசும் கடல் போன்ற சேனைக் கூட்டம் புறத்தேசூழ்ந்துவர, கொண்டல் கிழித்து எழுவாயில் நீங்கி - முகில் மண்டலத்தை ஊடுருவி ஓங்கிய கோபுரவாயிலைக் கடந்து, கீழ்த்திசை நோக்கிச் செல்வான் - கீழைத்திசை நோக்கிச் செல்வானாயினன் எ-று. விழிக்கு முன் விழித்தன னென்பது நயமுடைத்தேனும் கனவு கண்டவுடன் விழித்தனன் என்பதே பொருட் பொருத்த முடைத் தாம். விழித்தனன், கழித்தனன்: முற்றெச்சங்கள். வலமா: விகாரம். அனீகம் - சேனை. (12) அதிர்ந்தன முரசஞ் சங்க மதிர்ந்தன வியங்களண்டம் பிதிர்ந்தன வென்ன வார்ப்பப் பெயர்ந்துவெண் கவரி துள்ள முதிர்ந்தநான் மறையோ ராசி மொழியநா வல்லோ ரேத்தப் பதிந்துபார் கிழியத் திண்டேர் பாகுமுன் செலுத்த வூர்ந்தான். (இ-ள்.) முரசம் அதிர்ந்தன - பேரிகை ஒலிக்கவும், சங்கம் அதிர்ந்தன - சங்கு ஒலிக்கவும், இயங்கள் அண்டம் பிதிர்ந்தன என்ன ஆர்ப்ப - இயங்களெல்லாம் அண்டங்கள் பிளந்தன என்னுமாறு ஒலிக்கவும், வெண் கவரி பெயர்ந்து துள்ள - வெள்ளிய சாமரைகள் எழுந்து துள்ளவும், முதிர்ந்த நான் மறையோர் ஆசி மொழிய - நான்கு மறைகளிலும் பயிற்சி மிக்க அந்தணர்கள் வாழ்த்துக் கூறவும் நாவல்லோர் ஏத்த - புலவர்கள் புகழ்ந்து பாடவும், பதிந்து பார்கிழிய- உருள் பதிதலால் பிளக்குமாறு, திண் தேர் பாகு முன் செலுத்த ஊர்ந்தான் - வலிய தேரைப் பாகன் முன்னே செலுத்தச் சென்றான் எ-று. அதிர்ந்தன வென்பன அதிர வென்னும் பொருள் குறித்தன; ஆர்ப்ப என்பதனோடியைத்து, அதிர்ந்தன வாய் ஆர்ப்ப எனலுமாம். பாகு - பாகன்; சொல்லால் அஃறிணை. முன்பாகன் செலுத்த என்ற மையால் ஊர்ந்தான் என்பதற்குச் சென்றான் என்பது பொரு ளாயிற்று. (13) பவளக்காற் பிச்சம் பொற்காற் பன்மணிக் கவிகை முத்தத் தவளக்காற் பதாகைக் காடுந் தானவா னருவி தூங்குங் கவளக்காற் பொருப்பும் பாய்மாக் கடலுமண் மடந்தை யாகந் துவளக்கால் வயவர் மான்றேர்த் தொகுதியுஞ் சூழல் போக. (இ-ள்.) பவளக்கால் பிச்சம் - பவளத்தாற் செய்த காம்பினை யுயைடய பீலிக் குடையும், பொன்கால் பல் மணிக் கவிகை - பொன்னாற் செய்த காம்பையுடைய பல முத்துக்குடைகளும், முத்தம் தவளக்கால் பதாகைக் காடும் - முத்துக்கள் கோத்த வெள்ளிய காம்பையுடைய வெற்றிக் கொடியின் காடும், தானவான் அருவி தூங்கும் கால்கவளம் பொருப்பும் - மதமாகிய பெரிய அருவி ஒழுகும் காலையுடைய கவளம் உண்ணும் மலைபோன்ற யானை களும், பாய்மாக்கடலும் - தாவுகின்ற குதிரை வெள்ளமும், கால் வயவர் மான் தேர்தொகுதியும் - வீரர்கள் கூட்டமும் குதிரை பூட்டிய தேர்க் கூட்டமும், மண் மடந்தை ஆகம்துவள சூழல்போக - நிலமகளின் உடல் வருந்தச் சூழ்ந்து வரவும் எ-று. பதாகை - பெருங்கொடி. காடு போறலின் காடு என்றார். காடும் மலையும் கடலும் என ஓர் நயம்படக் கூறினார். காலாள் என்பவாகலின் கால்வயவர் என்றார். வயவர் தொகுதியுமென்க. சூழல்போக - சூழ்போக. (14) கோழிணர் ஞாழ லன்ன கோட்டுகிர்ப் புலவப் பேழ்வாய்த் தாழ்சின வுழுவை யொற்றைத் தனிப்பெருங் கொடியுங் கூனற் காழ்சிலை கொடியுஞ் சூழக் கயற்கொடி நிலந்து ழாங்கை ஏழுயர் வரைமேற் றோன்றி யிருவிசும் பகடு கீற. (இ-ள்.) கோழ் இணர் ஞாழல் அன்ன கோட்டு உகிர் - கொழுவிய பூங்கொத்தினையுடைய ஞாழலின் பூவையொத்தவளைந்த நகத்தையும், புலவுப்பேழ்வாய் - புலால் நாற்றத்தையுடைய பிளந்த வாயையும், தாழ்சினம் - அடிப்பட்ட சினத்தையும் உடைய, உழுவை ஒற்றைத் தனிப்பெருங் கொடியும் - புலி எழுதிய ஒப்பற்ற பெரிய கொடியும், கூனல் காழ் சிலைக் கொடியும் சூழ - வளைவினை யுடைய வலிய வில் எழுதிய கொடியும் சூழ்ந்து வர, கயல்கொடி - மீனக் கொடியானது, நிலம் துழாம் கை ஏழு உயர் வரைமேற் தோன்றி - நிலத்தைத் தடவுகின்ற துதிக்கையையுடைய ஏழு முழம் உயர்ந்த மலைபோன்ற யானை மேலே தோன்றி, இரு விசும்பு அகடு கீற - பெரிய வானின் வயிற்றைக் கிழித்துச் செல்லவும் எ-று. ஞாழல் - புலிநகக் கொன்றை, தாழ்தல் - தங்குதல், அடிப் படுதல். உழுவை - புலி. ஒற்றை, தனி என்பன ஒப்பற்ற வென்னும் ஒருபொருளில் வந்தன. காழ் - காம்புமாம். சோழ சேரர்களின் கொடிகள் கீழ்ப்பட்டுவர என்றார்; மூவேந்தருள் ஒருவர் பிற நாட்டின்மேற் செல்லும் பொழுது ஏனையிருவர் கொடியும் உடன்வரச் செல்லுதல் மரபு. துழாவு மென்பது விகார மாயிற்று. ஏழென்னும் எண்ணுப் பெயர் ஏழு முழத்திற் காயிற்று. யானைக்கு உத்தம விலக்கணம் ஏழுமுழ வுயரம் என்ப; சிந்தாமணியில், “ ஏழுயர் போதகம்” என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறிய பொருள் காண்க. (15) தென்கடல் வடபா னோக்கிச் செல்வது போலத் தென்னன் றன்கட லனிகங் கன்னித் தண்டமிழ் நாடு நீந்தி வன்கட நெறிக்கொண்டேகி வளவர்கோ னெதிர்கொண் டாற்றும் நன்கடன் முகம னேற்று நளிர்புன னாடு நீந்தி. (இ-ள்.) தென்னன் - உக்கிர பாண்டியன், தென்கடல் வடபால் நோக்கிச் செல்வதுபோல - தெற்குக் கடலானது வடதிசையை நோக்கிச் செல்லுவதுபோலச் செல்லா நின்ற, தன் கடல் அனிகம் தண் தமிழ் கன்னி நாடு நீந்தி - தனது கடல் போன்ற சேனயோடு குளிர்ந்த தமிழ வழங்கும் கன்னி நாட்டைக் கடந்து, வன்கடம் நெறிக்கொண்டு ஏகி - வலிய காட்டுவழியாற் சென்று, வளவர் கோன் எதிர்கொண்டு ஆற்றும் நன் கடன் முகமன் ஏற்று - சோழ மன்னன் எதிரேற்றுச் செய்யும் நல்ல வரிசையாகிய உபசாரங்களை ஏற்றுக்கொண்டு, நளிர் புனல் நாடு நீந்தி - குளிர்ந்த நீர் நாடாகிய அச்சோழ நாட்டைக் கடந்து எ-று. செல்லா நின்ற அனிகத்தோடு என விரிக்க. தண்டமிழ் நாடாகிய கன்னி நாடு. கடன் என்றது வரிசையை; முகமனாகியகட னென்றுமாம். (16) தண்டக நாடு தள்ளித் தெலுங்கநா டகன்று சாய்தாட் கண்டகக் கைதை வேலிக் கருநடங் கடந்து காடுந் தொண்டகந் துவைக்குங் குன்று நதிகளுந் துறந்து கள்வாய் வண்டக மலர்க்கா வேலி மாளவ தேச நண்ணி. (இ-ள்.) தண்டக நாடு தள்ளி - தொண்டை நாட்டைக் கழித்து, தெலுங்க நாடு அகன்று - தெலுங்க நாட்டினீங்கி, சாய் தாள் கண்டகம் கைதை வேலிக் கருநடம் கடந்து - வளைந்த அடியையும் முள்ளையு முடைய தாழையை வேலியாகவுடைய கருநட நாட்டைக் கடந்து, காடும் தொண்டகம் துவைக்கும் குன்றும் நதிகளும் துறந்து - காடும் தொண்டகப்பறைஒலிக்கும் மலையும் ஆறுகளுமாகிய இவற்றை நீத்து, கள்வாய் வண்டு அகம் மலர்க்காவேலி - தேன் பொருந்தியவண்டுகளைத் தம்மிடத்திலுள்ள மலர்கள் நிறைந்த சோலைகளை வேலியாகவுடைய, மாளவதேச நண்ணி - மாளவ தேயத்தைச் சேர்ந்து எ-று. தொண்டகம் - குறிஞ்சி நிலப்பறை. கள்வாய் மலர் என்க. (17) அங்குநின் றெழுந்து தீவா யருஞ்சுர நெறிப்பட் டேகி மங்குனின் றதிருஞ் செம்பொன் மாடநீள் விராட நண்ணிக் கொங்குநின் றவிழுங் கானங் குன்றொரீஇ வாளை பாயத் தெங்குநின் றிளநீர் சிந்து மத்திய தேயத் தெய்தி. (இ-ள்.) அங்கு நின்று எழுந்து - அந்நாட்டினின்றும் புறப்பட்டு, தீவாய் அருஞ்சுரம் நெறிப்பட்டு ஏகி - தீவாய்ந்த செல்லுதற் கரியபாலை நிலத்தின் வழிப்பட்டுச் சென்று, மங்குல் நின்று அதிரும் செம்பொன் மாடம் நீள்விராடம் நண்ணி - முகில்நின்று முழங்கும் சிவந்த பொன்னாலாகிய மாடங்கள் நெருங்கிய விராட நாட்டை யடைந்து, கொங்கு நின்று அவிழும் கானம் குன்று ஒரீஇ - மகரந்தம் பொருந்தி மலரும் மலர்கள் நிறைந்த முல்லை நிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும் நீங்கி, வாளை பாயத் தெங்கு நின்று இளநீர் சிந்தும் - வாளை மீன் பாய்தலினால் தென்னைமரத்தினின்றும் இளநீர் சிந்தா நின்ற, மத்திய தேயத்து எய்தி - மத்திய தேசத்தை யடைந்து எ-று. கொங்கு நின்றவிழும் என்றமையால் மலர்கொள்க. தெங்கினின்று எனற்பாலது சாரியையின்றி நின்றது; தெங்கு சிந்தும் என்னலுமாம்; இக்கருத்து, “ வாளை தாவிமுப் புடைக்காய்த் தெங்கின் படுபழ முதிர்க்குஞ் சூழற் பல்லவதேய வேந்தே” என நைடதத்தில் வந்துளது. (18) அந்நெடு நாடு நீங்கி யாடலே றுயர்த்த தோன்றல் பொன்னெடுஞ் சடையிற் றாழ்ந்து புனிதமாந் தீர்த்த காசி நன்னெடு நகர மெய்தி நளிர்புனற் கங்கை நீந்திக் கன்னெடு நெறிய னேக காவதங் கடந்த பின்னர். (இ-ள்.) அந்நெடு நாடு நீங்கி - அந்த நெடிய நாட்டினைக் கடந்து, ஆடல் ஏறு உயர்த்ததோன்றல் - வெற்றியையுடைய இடபக்கொடியை உயர்த்திய சிவபெருமானது, பொன் நெடுஞ் சடையில் தாழ்ந்து - பொன் போன்ற நீண்ட சடையினின்றும் இழிந்து, புனிதம் ஆம் தீர்த்தம் - தூய்மையாகிய கங்கையை யுடைய, காசி நல் நெடு நகரம் எய்தி - நல்ல நெடிய காசிப்பதியை அடைந்து, நளிர் புனல் கங்கை நீந்தி - குளிர்ந்த நீரையுடைய கங்கையாற்றைக் கடந்து, கல் நெடு அனேக காவதம் நெறி கடந்த பின்னர் - கற்கள் செறிந்த நீண்ட அனேககாத வழியைக் கடந்த பின் எ-று. ஆடல் - வெற்றி. சடையிற் றாழ்தலால் புனிதமாகிய வென்க; இவ்வரலாறு முன் உரைக்கப் பட்டது; தாழ்ந்து - தங்கி யென்று மாம். காவத நெறியை யெனக் கூட்டுக. (19) மடங்கன்மா நாகம் யாளி வழங்கலான் மனிதர் செல்லா இடங்கடந் தாக வைஞ்ஞூ ற் றிரட்டியோ சனைத்தா மெல்லைக் கடங்கெழு குமரி கண்டங் கடந்துமற் றதுபோ லெட்டுத் தடங்கெழு கண்டங் கொண்ட பாரத வருடந் தள்ளி. (இ-ள்.) மடங்கல் மா நாகம் யாளி வழங்கலால் - சிங்கங்களும் பெரிய யானைகளும் யாளிகளும் இயங்குதலால், மனிதர் செல்லா இடம் கடந்து - மக்கள் வழங்குதல் இல்லாத இடங்களைக் கடந்து, ஆக ஐஞ்ஞூற்று இரட்டி யோசனை எல்லைத்து ஆம் - இவை யெல்லாமாக ஆயிரம் யோசனை அளவை யுடையதாகிய, கடம் கெழு குமரி கண்டம் கடந்து - காடுகள் பொருந்தி குமரி கண்டத்தை இங்ஙனம் கடந்து, அதுபோல் எட்டுத் தடம் கெழு கண்டம் கொண்ட பாரத வருடம் தள்ளி - அது போல விரிவு பொருந்திய எட்டுக் கண்டங்களைக் கொண்ட பாரத வருடத்தைக் கழித்து எ-று. ஆக வென்றது முற்கூறிய வெல்லாம் சேர என்றபடி. யோசனை யெல்லைத்தாம் எனப் பிரித்துக் கூட்டுக. மற்று : அசை. ஒன்பான் கண்டங்களின் பெயர்களை, “ வடபால் விதேகம் தென்பால் விதேகம் கீழ்பால் விதேகம் மேல்பால் விதேகம் வடபா லிரேவதம் தென்பா லிரேவதம் வடபாற் பரதம் தென்பாற் பரதம் மத்திம கண்டமென் றித்திற மென்ப நாவலந் தீவின் நவகண்டப் பெயரே”” என்று திவாகரம் கூறுகின்றது. (20) யாவையு மீன்றா டன்னை யீன்ற பொன் னிமயந் தன்னைத் தாவியப் புறம்போய்ப் போகந் ததும்புகிம் புருட கண்டம் யேவியங் கதுநீத் தேம வெற்படைந் ததுபின் னாக ஓவியப் புறத்துத் தோன்று மரிவரு டத்தை யுற்று. (இ-ள்.) யாவையும் ஈன்றாள் தன்னை ஈன்ற - எல்லா வுலகங்ககளையும் பெற்ற உமாதேவியைப் பெற்றதாகிய, பொன் இமயம் தன்னைத் தாவி அப்புறம் போய் - பொன் வடிவாகிய இமயமலையைத் தாண்டி அப்பாற் சென்று, போகம் ததும்பு கிம்புருட கண்டம் மேவி - போகம் நிரம்பிய கிம்புருட கண்டத்தை யடைந்து, அங்கு அதுநீத்து - அங்கு அதனைக் கடந்து, ஏம வெற்பு அடைந்து - ஏம வரையை அடைந்து, அது பின்னாக ஓவி - அம் மலை பின்னாக ஒழித்து, அப்புறத்துத் தோன்றும் அரி வருடத்தை உற்று - அந்தப் புறத்திற் காணப்படும் அரி வருட கண்டத்தை அடைந்து எ-று. இமயமும் பொன்மலை யெனப்படும். ஓவி - கிழித்தெனப் பிறவினைப் பொருட்டாய் நின்றது. (21) உற்றது கழிந்தப் பாற்போய் நிடதவெற் பொழிந்து சம்புப் பொற்றருக் கனிகால் யாறு போகிளா விருத கண்டத் துற்றனன் கண்டான் மூன்றூ ரொருங்கடு ஞான்று கூனி வெற்றிவெஞ் சிலையாய் நின்ற வெற்பினை மலய வெற்பன். (இ-ள்.) உற்றது கழிந்து - அடைந்த அவ்வரி வருட கண்டத்தைக் கடந்து, அப்பால் போய் நிடத வெற்பு ஒழிந்து - அப்புறஞ்சென்று நிடத மலையினீங்கி, சம்புப் பொன் தரு கனிகால் யாறு போகு - நாவல் மரத்தின் - பொன்போலும் கனிகள் சிந்தும் சாறாகிய ஆறு செல்லா நின்ற, இளாவிருத கண்டத்து - இளாவிருத கண்டத்தை, மலய வெற்பன் - பொதியின் மலையை யுடையவனாகிய உக்கிர பாண்டியன், உற்றனன் - அடைந்து, மூன்று ஊர் ஒருங்கு அடும்ஞான்று - திரிபுரங்களையும் ஒரு சேர அழிக்குங் காலத்தில், கூனி - வளைந்து, வெற்றிவெஞ் சிலையாய் நின்ற வெற்பினைக் கண்டான் - வெற்றியை யுடைய வெவ்விய வில்லாக நின்ற மேருமலையைக் கண்டான் எ-று. உற்றது : வினையாலணையும் பெயர். சம்புத்தருப் பொற்கனி எனமாறுக. மேல் பதினாறாஞ் செய்யுளிலுள்ள தென்னன் என்பத னோடு மலய வெற்பன் என்பதனையும் கூட்டி, வெற்பினைக் கண்டான் எனமுடிக்க; அச்செய்யுள் முதலாகக் கூறப்பட்ட வினையெச்சங்கள் இம்முற்றுவினைகொண்டு முடியும். இங்கே கூறப்பட்ட கண்டங்கள் முதலியவற்றைக் கந்தபுராணத்து அண்ட கோசப்படலம் முதலியவற்றானும் அறிக. (22) வெம்படைமறவர் சேனை வெள்ளநீத் தேகித் தென்பாற் சம்புவின் கனியின் சாறு வலம்படத் தழுவி யோடும் அம்பொனீ ராறு மாற்றி னருகுபொன் மயமாய் நிற்கும் பைம்புனங் கானும்1 நோக்கி வளைந்துதென் பால்வந் தெய்தா. (இ-ள்.) வெம்படை மறவர் சேனை வெள்ளம் நீத்து ஏகி - கொடிய படையை யேந்திய வீரர்களை யுடைய சேனை வெள்ளத்தை நீக்கித் (தனியே) சென்று, தென்பால் சம்புவின் கனியின் சாறு - தென்புறத்தில் நின்ற நாவற் கனியின் சாறானது, வலம் படத் தழுவி ஓடும் அம்பொன் நீர் ஆறும் - வலமாகத் தழுவி ஓடாநின்ற அழகிய பொன்மயமாகிய நீர் நிறைந்த ஆற்றையும், ஆற்றின் அருகு பொன் மயமாய் நிற்கும் - அந் நதியின் அருகில் பொன்மயமாய் நிற்கும், பைம்புனம் கானும் நோக்கி - பசிய கொல்லைகளையும் காட்டையும் பார்த்து, வளைந்து - சூழ்ந்து, தென்பால் வந்து எய்தா - அந்நாவல் மரம் நின்ற தென்பக்கத்தை வந்தடைந்து எ-று. சேனை வெள்ளத்தை நிறுத்தித் தனியே சென்றென்க. சம்புவின்: வடசொல் லாகலின் உகரங் கெடாது நின்றது. புனத்தையும் கானையும் என விரிக்க. (23) அவ்வரை யரசை நோக்கி வரைகளுக் கரசே யெந்தை கைவரி சிலையே பாரின் களைகணே யளவில் வானந் தைவரு சுடருங் கோளு நாள்களுந் தழுவித் சூழந் தெய்வத வரையே மேலைத் தேவரா லயமே யென்னா. (இ-ள்.) அவ்வரை அரசை நோக்கி - அம் மேருமலைத் தலைவனை நோக்கி, வரைகளுக்கு அரசே, மலைகளனைத்திற்கும் வேந்தே, எந்தை கைவரி சிலையே - எம் தந்தையாகிய சிவபெருமானது திருக்கரத் திலுள்ள கட்டமைந்த வில்லே, பாரின் களைகணே - நிலவுலகின் ஆதாரமே, அளவு இல் வானம் தைவரு - அளவிறந்த வானை அளாவி வருகின்ற, சுடரும் - சூரிய சந்திரரும், கோளும் - நாள்களும் - ஏனைக் கோள்களும் - நாண் மீன்களும், தழுவிச் சூழுந் தெய்வத வரையே - பொருந்திச் சூழ்ந்து வருகின்ற தெய்வத்தன்மையை யுடைய மலையே, மேலைத் தேவர் ஆலயமே என்னா - வானுல கிலுள்ள தேவர் வசிக்குங் கோயிலே என்று எ-று. புவியைத் தாங்குதலின் ‘பாரின் களைகண்’ என்றார்; பூதரம் என்னும் பெயரும் நோக்குக. சுடரெனப் பிரித்தமையால் கோள் என்றது ஞாயிறு திங்கள் ஒழிந்தவற்றை. இருபத்தேழு நாண் மீன்களும் ஏனை விண்மீன்களும் ‘நாள்கள்’ எனப்பட்டன. கோளும் நாளும் முதலியன சூழ்ந்து வருதலையும், மேருவானது தேவர்களுக்கு இருப்பிடமாதலையும் கந்தபுராணம் முதலியவற்றா னறிக. (24) மாணிக்க மிமைக்கும் பூணான் விளித்தலும் வரைக்கு வேந்தன் பாணித்து வரவு தாழ்ப்பப் பாகசா தனனை வென்றோன் நாணித்தன் சினமு மேரு நகைவரைச் செருக்கு மாறச் சேணுற்ற சிகரந் தன்னிற் செண்டினா லடித்து நின்றான். (இ-ள்.) மாணிக்கம் இமைக்கும் பூணான் விளித்தலும் - மாணிக்கள் ஒளி வீசும் அணியை யணிந்த உக்கிரவழுதி இவ்வாறு அழைத்தலும், வரைக்கு வேந்தன் வரவு பாணித்துத் தாழ்ப்ப - அம் மலையரசனது வருகை காலம் நீட்டித்துத் தாழ்த்தமையால், பாகசாதனனை வென்றோன் - இந்திரனை வென்ற அப் பாண்டியன், நாணி - நாணமுற்று, தன் சினமும் நகை மேருவரைச் செருக்கும் மாற - தன் வெகுளியும் விளங்குகின்ற மேரு மலையின் தருக்கும் நீங்கு மாறு, சேண் உற்றசிகரம் தன்னில் செண்டினால் அடித்து நின்றான் - வானை யளாவிய (அம் மலையின்) முடியில் செண்டினாற் புடைத்து நின்றான் எ-று. பாணித்தலும் தாழ்த்தலும் ஒரு பொருளன. வரவு தாழ்ப்ப என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு, வேந்தன் தாழ்க்க என்னலு மாம். தான் புகழ்ந்துரைத்து அழைக்கவும் வந்திலாமையால் நாணும் சினமும் உளவாயின. (25) அடித்தலு மசையா மேரு வசைந்துபொற் பந்து போலத் துடித்தது சிகர பந்தி சுரர்பயில் மாடப் பந்தி1 வெடித்தன தருண பானு மண்டலம் விண்டு தூளாய்ப் படித்தலை தெறித்தா லென்னப் பன்மணி யுதிர்ந்த வன்றே. (இ-ள்.) அடித்தலும் அசையாமேரு அசைந்து பொன் பந்து போலத்துடித்தது - (அங்ஙனம்) அடித்த வளவில் ஒருகாலும் சலியாத மேருமலையானது சலித்துப் பொன்னாற் செய்த பந்து (துடித்தாற்) போலத் துடித்தது; சிகரபந்தி சுரர் பயில் மாடப்பந்தி வெடித்தன - முடிவரிசைகளும் தேவர்கள் வசிக்கும் மாடவரிசை களும் வெடித்தன; தருணபானு மண்டலம் விண்டு தூளாய்ப் படித்தலை தெறித்தால் என்ன - இளஞாயிற்றின் மண்டலம் பிளந்து தூளாகிப் புவியிற் சிந்தினாற்போல, பல் மணி உதிர்ந்து - பல மணிகளும் சிதறின எ-று. அசைவின்மையால் மலை அசலம் எனப்படும்; ஏனை மலைகள் அசையினும் அசையாத வென்க; நிலத்தில் அடித்த பந்து துள்ளுதல்போல. பொன் வரையாகலின் பொற்பந்துபோல வென்றார். தருணம் - இளமை. அன்று,: அசைகள். (26) புடைவரைக் குலங்க ளெட்டும் புறந்தழீஇக் கிடக்குஞ் செம்பொன் அடைகலோர் நான்கு நான்கு கிடங்கரு மலர்ந்த நான்கு தடமலர்ப் பொழிலு நான்கு தருக்களுஞ் சலித்த வம்மா உடையவ னிடையூ றுற்றா லடுத்தவர்க் குவகை யுண்டோ. (இ-ள்.) புடைவரைக் குலங்கள் எட்டும் - (மேருவின்) பக்கத்திற் சூழ்ந்த குல மலைகள் எட்டும், புறம் தழீஇ கிடக்கும் செம்பொன் அடைகல் ஒர் நான்கும் - நான்கு புறங்களிலும் தழுவிக் கிடக்கும் செம்பொன் வடிவாகிய பக்க மலைகள் நான்கும், நான்கு கிடங்கரும் - கிடங்குகள் நான்கும், அலர்ந்த நான்கு தடமலர்ப் பொழிலும் - மலர்ந்த பெரிய பூம்பொழில் நான்கும், நான்கு தருக்களும் சலித்த - மரங்கள் நான்கும் நடுங்கின; உடையவன் இடையூறு உற்றால் - தலைவன் துன்பமுற்றானாயின், அடுத்தவர்க்கு உவகை உண்டோ - (அவனைச்) சார்ந்தவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகுமோ (ஆகாது) எ-று. அடைகல் - ஆதாரமாய் அடுத்த கல். கிடங்கர் : ஈற்றுப் போலி. அம்மா : அசை. வரைகள் எட்டு - தெற்கில் கந்தமாதனம்; நிடதம், ஏமகூடம், வடக்கில் - நீலம் சுவேதம், சிருங்கம்; கிழக்கில் - மாலியவான். அடைகல் நான்கு - கிழக்கில் மந்தரம், தெற்கில் கந்தமாதனம், மேற்கில் விபுலம், வடக்கில் பார்சுவம். கிடங்கர் நான்கு - கிழக்கில் அருணவோடை, மேற்கில் அசிதோத வோடை, தெற்கில் மானதவோடை, வடக்கில் மாமடு வோடை. பொழில் நான்கு - கிழக்கில் சயித்திரதம், தெற்கில் நந்தனம், மேற்கில் வைப்பிரசம், வடக்கில் திருதாக்கியம். தருநான்கு - கிழக்கில் கடம்பு, தெற்கில் நாவல், மேற்கில் அரசு, வடக்கில் ஆல். இவை யெல்லாம் கந்தபுராணத்து அண்டகோசப் படலத்திற் கூறப் பட்டுள்ளன. இச் செய்யுள் வேற்றுப்பொருள் வைப்பணி. (27) புடைத்தபின் மேருத் தெய்வம் புடைக்குல வரையெட் டென்னப் படைத்தவெண் டோளு நான்கு முடியுமேற் படுவெண் சோதி உடைத்தனிக் குடையுங் கொண்ட வுருவினோ டெழுந்து நாணிக் கிடைத்தது கருணை வேந்தன் கிளர்சினந் தணிந்து நோக்கா. (இ-ள்.) புடைத்தபின் மேருத் தெய்வம் - (அங்ஙனம்) அடித்த பின்பு மேருமலைத் தெய்வமானது, புடைக்குல வரை எட்டு என்ன - பக்கலிலுள்ள குலவரைகள் எட்டினையும் போல, படைத்த எண்தோளும் - கொண்ட எட்டுத் தோள்களும். நான்கு முடியும் - நான்கு தலைகளும், மேல்படு வெண் சோதி உடைத்தனிக் குடையும் - மேலே கவிக்கும் வெள்ளிய ஒளியையுடைய ஒப்பற்ற குடையும் ஆகிய இவைகளை, கொண்ட உருவினோடு எழுந்து நாணிக் கிடைத்தது - கொண்ட வடிவத்தோடு எழுந்து வெள்கி எதிர்ப் பட்டது; கருணை வேந்தன் - அருளையுடைய உக்கிர பாண்டிய வேந்தன், கிளர் சினம் தணிந்து நோக்கா - மிக்கு எழுந்த சினந் தணிந்து நோக்கி எ-று. மேருத் தெய்வம் - மேருவாகிய தெய்வம், மேருவின் அதி தெய்வம். கிடைத்தது - அடுத்தது. (28) இத்தனை வரவு தாழ்த்த தென்னென மேருத் தெய்வம் வித்தக நம்பி கேட்டி மீனெடுங் கண்ணி யோடும் பைத்தலை யரவும் பூண்ட பரனையிப் படிவங் கொண்டு நித்தலும் போகிப் போகி வழிபடு நியமம் பூண்டேன். (இ-ள்.) இத்தனை வரவு தாழ்த்தது என் என - இதுவரை நினது வரவு தாழ்த்ததற்குக் காரணம் யாதென்று வினவ, மேருத் தெய்வம் - அம் மேருத் தெய்வமானது, வித்தக நம்பி கேட்டி - சதுரப்பா டுடைய நம்பியே கேட்பாயாக, மீன் நெடுங் கண்ணியோடும் பைத்தலை அரவம் பூண்ட பரனை - அங்கயற்கண் ணம்மையோடும் படத்தையுடை தலையினை யுடைய பாம்பை அணிந்த சோம சுந்தரக் கடவுளை, இ படிவம் கொண்டு நித்தலும் போகிப் போகி வழிபடும் நியமம் பூண்டேன் - இந்த வடிவத்தோடும் நாடோறும் சென்று சென்று வழிபடும் நியதியைக் கொண்டிருந்தேன் எ-று. தாழ்த்தது என் - தாழ்த்தமைக்குக் காரணம் என். வித்தகம் - சதுரப்பாடும். “ வித்தகர்க் கல்லா லரிது” என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையை நோக்குக. அடுக்கு இடை விடாமைப் பொருட்டு. (29) இன்றுகேட் டிலையோ வைய1 வேந்திழை யொருத்தி காமந் துன்றுமா கடலின் மோகச் சுழித்தலைப் பட்டு வெள்ளி மன்றுளா டிய பொற் பாதம் வழிபடன் மறந்து தாழ்த்து2 நின்றுளே னினைய தீங்கி னிமித்தினா லடியும் பட்டேன். (இ-ள்.) ஐய இன்று கேட்டிலையோ - ஐயனே இன்று நடந்த தொரு செய்தியைக் கேட்பாயாக, ஏந்திழை ஒருத்தி காமம் துன்றுமாகடலில் - பெண் ஒருத்தியின் காமமாகிய பெரிய கடலிலுள்ள, மோகமாகிய சுழியில் ஆழ்ந்து, வெள்ளி மன்றுள் ஆடிய பொன்பாதம் வழிபடல் மறந்து - வெள்ளியம்பலத்தில் ஆடியருளும் பொன் போலும் திருவடிகளை வணங்குதலை மறந்து, தாழ்த்து நின்றுளேன் - தாமதித்து நின்றேன் இனைய தீங்கின் நிமித்தினால் அடியும் பட்டேன் - இந்தத் தீங்கு காரணத்தால் அடியும்பட்டேன் எ-று. கேட்டிலையோ என்றது கேட்பாயாக வென்னும் குறிப்பிற்று. ஏந்திழை யென்பது அன்மொழித்தொகைப் பெயராய்ப் பின் ஒருத்தி யென்பதனோடுந் தொக்கது; ஏந்திய அணிகளையுடைய ஒரு பெண் எனலுமாம். சுழித்தலை, தலை : ஏழனுருபு; பட்டு - அகப்பட்டு, ஆழ்ந்து நிமித்தத்தினால் என்பது நிமித்தினால் என விகாரமாயிற்று. தீங்கின் நிமித்தம் - தீங்காகிய நிமித்தம். (30) திருவடி பிழைத்த தீங்கு தீர்த்தனை யிதனி லையன் தருவதோ ருறுதி தானுந் தக்கதோர் கைம்மா றென்னால் வருவது முண்டாங் கொல்லோ மற்றது நிற்க மன்றற் பருவரை மார்ப வந்த பரிசென்கொல் பகர்தி யென்ன. (இ-ள்.) திருவடி பிழைத்த தீங்கு தீர்த்தனை - சிவபெருமான் திருவடிக்குத் தவறுசெய்த தீமையை நீக்கினை, இதனில் ஐயன் தருவது ஓர் உறுதி தானும் - இதனிலும் ஐயனே நீ செய்வதொரு நன்மையும், தக்கது ஓர் கைம்மாறு என்னால் வருவதும் - (அதற்குத்) தகுதியாகிய ஒரு கைம்மாறு என்னாற் கிடைப்பதும், உண்டாம் கொல் - உண்டாமோ (இல்லை), அது நிற்க - அஃதிருக்க, மன்றல் பருவரைமார்ப - மாலையை யணிந்த பருத்த மலை போலும் மார்பினையுடையவனே, வந்த பரிசு என் பகர்தி என்ன - நீ வந்த காரணம் கூறுவாயாக என்ன எ-று. எல்லாப் பிழையினும் திருவடிக்குச் செய்யும் பிழை பெரிதென்பது, “ அடியேன் பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன்” என நம்பியாரூரர் கூறுதலா னறிக. தீர்த்தனை - ஓறுத்தலால் தீர்த்தாய்; தீர்க்க வொண்ணாத தோர் தீங்கினைத் தீர்த்தருளினை ஆதலின் இதனினும் தருவதோர் உறுதியுண்டோ என்றவாறு. கைம்மாறு - எதிர்நன்றி. மன்றல் - மணம்; மாலைக்காயிற்று. பரிசு - விதம்; காரணத்தை யுணர்த்திற்று. தான், கொல், மற்று என்பன அசைகள். (31) மன்னவன் வெறுக்கை வேண்டி வந்தன னென்றா னைய உன்னது புலத்தோர்க் கேற்ப வுரைபடு மாற்ற தாய பொன்னவிர் தேமா நீழற் புதைபடக் கிடக்குஞ் செம்பொன் என்னவங் கையாற் சுட்டிக் காட்டிய தெரிபொற் குன்றம். (இ-ள்.) மன்னவன் வெறுக்கை வேண்டி வந்தனன் என்றான் - (அதற்கு) உக்கிர பாண்டியன் நிதிபெறுதலை விரும்பிவந்தேன் என்றான்; ஐய - ஐயனே, உன்னது புலத்தோர்க்கு ஏற்ப உரை படு மாற்றது ஆயசெம்பொன் - உன்னுடைய நாட்டிலுள்ளோர்க்கு இசைய உரைக்கப்படும் மாற்றினை யுடையதாகிய செம் பொன், பொன் அவிர் தேமா நீழல் புதைபடக் கிடக்கும் - பொன் போலவிளங்கும் தளிர்களை யுடைய இத்தேமாமரத்தின் நிழலின்கீழ் (ஓர் அறையில் பாறையால்) மூடப்பட்டுக்கிடக்கும், என்ன - என்று கூறி, எரி பொன் குன்றம் அங்கையால் சுட்டிக் காட்டியது - விளங்கும் மேருமலைத்தெய்வம் அழகிய கைவிரலால் அவ்விடத்தைச் சுட்டிக் காட்டியது எ-று. உன்னது : விரித்தல். உரைபடும் - உரைத்துக் காட்டப்படும். மாற்றதாய செம் பொன் எனக் கூட்டுக. மாற்றுமிக்க பொன்னும் இங்குளது; அஃது நினக்கு வேண்டா என்று குறிப்பிட்டவாறாயிற்று. என்ன - என்றுகூறி; கூறி யென்பது வருவிக்கப்பட்டது. (32) மின்னகு வேலான் முந்நீர் வேலையை வணக்கங் கண்டோன் பொன்னறை மருங்கிற் போகிப் பொத்திய பாறை நீக்கித் தன்னவா வளவிற் றாய தபனிய முகந்து மூடிப் பின்னதுந் தன்ன தாகப் பெயரிலச் சினையுந் தீட்டா. (இ-ள்.) மின்நகு வேலால் முந்நீர் வேலையை வணக்கம் கண்டோன் - மின்போல விளங்கும் வேற்படையால் மூன்று நீர்களை யுடைய கடலைத் தனதடிக்கீழ்ப் படுத்திய உக்கிரவழுதி, பொன் அறை மருங்கில் போகி - நிதியறையின் அருகிற் சென்று, பொத்திய பாறை நீக்கி - மூடிய பாறையை நீக்கி, தன் அவா அளவிற்று ஆய தபனியம் முகந்து தனது விருப்பின் அளவினதாய பொன்னை அள்ளிக் கொண்டு, மூடி - அப்பாறையை மீண்டும் மூடி. பின்னது தன்னதாகப் பெயர் இலச்சினையும் தீட்டா - எஞ்சிய பொன்னையும் தன்னுடையதாக (வைத்துத்) தன் பெயர் முத்திரையும் அப்பாறைமேல் எழுதி எ-று. வணக்கங் கண்டோன் - வணங்குவித்தோன். பொத்திய - மூடிய. தன்னதாக - தனக்குரியதாக வைத்து. பெயராகிய இலச்சினை யென்க. பெயரும் இலச்சினையுமென்றும் ஆம்; இதற்குச் சேல் இலச்சினை யென்க. (33) மின்றிகழ் மணிப்பூண் மார்பன் மீண்டுதன் றானை யோடுந் தென்றிசை நோக்கிப் பாகன் செலுத்தமான் றடந்தே ரூர்ந்து பொன்றிகழ் வரையும் போக பூமியும் பிறவு நீத்து நன்றிகொண் மனிதர் வைப்பி னண்ணுவா னண்ணு மெல்லை. (இ-ள்.) மின் திகழ் மணிப்பூண் மார்பன் - மின்போல விளங்கும் மணிகள் குயிற்றிய அணிகளையுடையமார்பனாகிய உக்கிரபாண்டியன், மீண்டு தன் தானையோடும் - திரும்பித் தன் சேனையோடும், தென் திசை நோக்கி - தெற்குத்திசையை நோக்கி, மான் தடம்தேர் பாகன்செலுத்த ஊர்ந்து - குதிரை பூண்ட பெரிய தேரினைப் பாகன் செலுத்தாநிற்க ஏறிச்சென்று, பொன் திகழ் வரையும் போக பூமியும் பிறவும் நீத்து - பொன் மலையாகிய மேருவையும் போக பூமியையும் மற்றுள்ள நாடுகளையும் துறந்து, நன்றி கொள் மனிதர் வைப்பில் நண்ணுவான் - நன்மையைக் கொண்ட மக்கள் வசிக்கும் நாட்டின்கண் வருவானாயினன்; நணுகும் எல்லை - அங்ஙனம் வரும் பொழுது எ-று. மின் - ஒளியுமாம். (34) மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப் பார்த்திபர் பிறருந் தத்தம் பதிதொறும் வரவுநோக்கித் தேர்த்திக ழனிகத் தோடுஞ் சென்றெதிர் முகமன் செய்யத்1 தார்த்திரு மார்பன் கன்னித் தண்டமிழ் நாடு சார்ந்தான். (இ-ள்.) மாத்திமர் விராட மன்னர் மாளவர் தெலுங்க தேயப் பார்த்திபர் பிறரும் - மத்திம நாட்டு மன்னரும் விராடநாட்டு மன்னரும் மாளவநாட்டு மன்னரும் தெலுங்க நாட்டு மன்னரும் ஏனை மன்னர்களும், தத்தம் பதிதொறும் - தம் நகரங்கள் தோறும், வரவு நோக்கி - (தனது) வருகையை எதிர்நோக்கி, தேர்திகழ், அனிகத் தோடும் சென்று எதிர் முகமன் செய்ய - தேருடன் விளங்கும் சேனைகளோடும் சென்று எதிர்கொண்டு உபசாரஞ் செய்ய (அதனை யேற்று), தார்திருமார்பன் - மாலை யணிந்த அழகிய மார்பினை யுடைய உக்கிரகுமாரன். தண் தமிழ் கன்னி நாடு சார்ந்தான் - தண்ணிய தமிழ் (வழங்கும்) பாண்டி நாட்டை அடைந்தான் எ-று. மாத்திமர் முதலியவற்றில் எண்ணும்மை விரிக்க. எதிர் - எதிர்கொண்டென்க. கன்னித் தமிழ் - அழியாத தமிழ், இளமை மாறாத தமிழ் எனத் தமிழுக்கு அடையாக்கலுமாம். (35) கன்னிப்பொன் னெயில்சூழ் செம்பொற் கடிநகர்க் கணிய னாகிப் பொன்னிற்செய் திழைத்த நீள்கோ புரத்தினைக் கண்டு தாழ உன்னித்தே ரிழிந்தெட் டோடைந் துறுப்பினாற் பணிந்தெழுந்து வன்னிச் செஞ்சுடர்க்க ணெற்றி மன்னவன் மதுரை சார்ந்தான். (இ-ள்.) கன்னிப் பொன் எயில் சூழ் செம் பொன் கடி நகர்க்கு அணியனாகி - அழியாத பொன்னாலாகிய மதில்சூழ்ந்த செம் பொன் நிறைந்த காவலையுடைய மதுரைப்பதிக்கு அணிமையனாகி, பொன்னிற் செய்து இழைத்த நீள் கோபுரத்தினைக் கண்டு தாழ உன்னி - பொன்னாற் செய்து மணிகள் இழைத்த நீண்ட கோபுரத்தைக் கண்டு வணங்கக் கருதி, தேர் இழிந்து - தேரினின்றும் இறங்கி, எட்டோடு ஐந்து உறுப்பினால் பணிந்து எழுந்து - எட்டு உறுப்பி னாலும் ஐந்து உறுப்பினாலும் வணங்கி எழுந்து, நெற்றி செஞ்சுடர் வன்னி கண் மன்னவன் மதுரை சார்ந்தான் - நெற்றியில் செவ்வொளி பொருந்திய அழற்கண்ணையுடைய சோமசுந்தரக் கடவுளின் மதுரையை அடைந்தான் எ-று. செய்திழைத்த: ஒருபொருள் குறித்தனவுமாம். எட்டுறுப்பும் ஐந்துறுப்பும் தோயப் பணிந்தெனக். (36) அறத்துறை யந்த ணாளர் துறந்தவ ரரன்றாள் பற்றிப் புறத்துறை யகன்ற சைவ பூதியர் புனிதன் கோயிற் றிறத்துறை யகத்துத் தொண்டர் திரண்டெதிர் கொள்ள முத்தின் நிறத்துறை வையை நீத்து நெடுமதில் வாயில் புக்கான். (இ-ள்.) அறத்துறை அந்தணாளர் - அறநெறியிற் பிழையாத அந்தணர்களும், துறந்தவர் - துறவிகளும், அரன் தாள் பற்றி புறத்துறை அகன்ற சைவ பூதியர் - சிவபிரான் திருவடியைப் பற்றிக் கொண்டு புறமாகிய நெறிகளின் நீங்கிய சைவப்பெருவாழ்வினரும், புனிதன் கோயில் திறத்துறை அகத்துத் தொண்டர் - சோம சுந்தரக் கடவுளின் திருக்கோயிலிற் பூசனை வகைகளை நடத்தும் அகத் தொண்டர்களும், திரண்டு எதிர் கொள்ள - ஒருங்கு கூடி எதிர்கொள்ள, முத்தின் நிறத்துறை வையை நீத்து நெடுமதில் வாயில் புக்கான் - முத்துக்களின் ஒளி விளங்கும் நீர்த்துறைகளை யுடைய வையை யாற்றினைக் கடந்து நீண்ட மதில் வாயிலிற் புகுந்தான் எ-று. புறத்துறை - பாவநெறி; “ முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே” என்னும் தமிழ்த் திருமறையுங் காண்க. பூதி - செல்வம். திறம் - நித்தம் நைமித்திகம் முதலியன, (37) கொங்கலர் கோதை மாதர் குங்குமம் பனிப்பச் சிந்தும் மங்கல மறுகி னேகி மறைகள்சூழ் கோயி லெய்தித் தங்கணா யகனைச் சூழ்ந்து தாழ்ந்தெழுந் தேத்திப் போந்து திங்களூர்1 குடுமிச் செல்வத் திருமணிக் கோயில் புக்கான். (இ-ள்.) கொங்கு அலர்கோதை மாதர் - மணம் பரந்த கூந்தலையுடைய மகளிர், குங்குமம் பனிப்பச் சிந்தும் மங்கல மறுகின் ஏகி - குங்கும நீரைக் குளிரச் சிந்திய மங்கல நிறைந்த வீதியிற் சென்று, மறைகள் சூழ் கோயில் எய்தி - வேத ஒலி சூழ்ந்த திருக்கோயிலையடைந்து, தங்கள் நாயகனைச் சூழ்ந்து - தங்கள் தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளை வலம்வந்து, தாழ்ந்து எழுந்து ஏத்தி - வணங்கி எழுந்து துதித்து, போந்து - சென்று, திங்கள் ஊர் குடுமிச் செல்வத் திருமணிக் கோயில் புக்கான் - சந்திரன் தவழுஞ் சிகரத்தை யுடைய செல்வ மிக்க பொலிவையுடைய மணிகள் இழைத்த (தனது) கோயிலை யடைந்தான் எ-று. கோதை - மாலையுமாம். (38) பொன்மலைக் கடவு ளீந்த புண்ணிய நிதியை யந்த நன்மலை மானக் கூப்பி நல்கிப்பல் குடியு மோம்பித் தென்மலைக் கிழவன் றெய்வந் தென்புல வாண ரொக்கல் தன்மனை விருந்து காத்துத் தருக்கினா னிருக்கு நாளில். (இ-ள்.) பொன்மலைக் கடவுள் ஈந்த புண்ணிய நிதியை - (பின்பு) மேருமலைத் தெய்வம் கொடுத்த அத்தூய்மையாகிய பொருளை, அந்த நல்மலை மானக் கூப்பி - அந்த நல்ல மேரு மலையைப் போலக் குவித்து, பல் குடியும் நல்கி ஓம்பி - பல குடிகளுக்கும் கொடுத்துப் பாதுகாத்து, தென்மலைக் கிழவன் - பொதியின் மலைக்கு உரியவனாகிய உக்கிரவழுதி, தெய்வம் தென்புல வாணர் ஒக்கல் தன்மனை விருந்துகாத்து - தெய்வத்தையும் தென்புலத்தாரையும் சுற்றத்தாரையும் தனது இல்லில் வந்த விருந்தினரையும் ஓம்பி, தருக்கினான் இருக்கும் நாளில் - களிப்புடன் இருக்கும் காலத்தில் எ-று. புண்ணிய நிதி - குற்றமற்ற நிதி; அறஞ்செய்தற்குரிய நிதியு மாம். தென்புல வாணர் - பிதிரர்; வாழ்நர், வாணர் என மருவிற்று. “ தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங் கைம்புலத்தா றோம்பல் தலை” என்னும் குறளிற் கூறியவற்றுள் தன்னை யொழித்துக் கூறினார்; தான் என்றது தன் மனைவி மக்கள் முதலாயினாரை யெனக் கருத்துக் கொண்டு தன் மனை எனக் கூறினா ரென்னலுமாம். ஆன் : ஒடுவின் பொருட்டு. (39) ஐவினை நடாத்துமீச னாணையா னடக்குங் கோளுஞ் செய்வினைத் திரிவு மாறத் தென்னனா டெங்கு மாரி பெய்வினை யுடைய தாகிப் பெருவளம் பகிர்ந்து நல்க உய்வினை யுடைய வாகி யுயிரெலாந் தழைத்த வன்றே. (இ-ள்.) ஐவினை நடாத்தும் ஈசன் ஆணையால் நடக்கும் கோளும் - ஐந்து தொழில்களையும் நடாத்தும் சிவபிரான் ஆணை யினால் நடவாநின்ற கோள்களும், செய்வினைத் திரிவு மாற - செயற்கையாகிய நிலைமாறுதற் றொழிலினின்றும் நீங்குதலால், தென்னன் நாடு எங்கும் - பாண்டியனது நாடு முழுதும், மாரி பெய் வினை உடையதாகி - மழையானது பொழியுந் தொழிலை யுடைய தாகி, பெருவளம் பகிர்ந்து நல்க - பெரிய வளத்தைப் பங்கிட்டளிக்க, உயிர் எலாம் உய்வினை உடையவாகித் தழைத்த - எல்லாவுயிர் களும் (பசியினீங்கிப்) பிழைத்தலுடையனவாய்ப் பல்கின எ-று. ஐவினை - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. செய் - செயற்கையை யுணர்த்திற்று; முன்செய்த என்றுமாம். திரிவு வினையென மாறுக. கோளும் உயிர்களின் வினையும் திரிவுமாற என்றுரைத்தலுமாம். பெய்வினை - பெய்தலை யென்றுமாம்; இதற்குப் பெய்வு தொழிற்பெயர், இன் : சாரியை. பகிர்ந்து நல்க - எவ்வுயிர்க்கும் நல்க வென்னுங் குறிப்பிற்று. தழைத்தல் - பெருகல். அன்று, ஏ: அசைகள். (40) (எழுசீரடி யாசிரிய விருத்தம்) புவனியிம் முறையாற் புரந்தளித் தாரம் பூண்டபாண் டியன்றிரு மகனுக் கவனியே ழறிய வீரபாண் டியனென் நணிமுடி கவித்தர சளித்து நவநிர திசய பூரண வின்ப ஞானநோக் கருளிய மதுரைச் சிவனடி நிழலிற் பிளப்பறப் பழைய தேசொடு நிறைந்துவீற் றிருந்தான். (இ-ள்.) ஆரம்பூண்ட பாண்டியன் - ஆரந்தாங்கு பாண்டிய னென்னும் உக்கிரவழுதி, புவனி இம்முறையால் புரந்து அளித்து - நிலவுலகை இம்முறையினால் நன்றாகப் பாதுகாத்து, திருமகனுக்கு - தன் திருமைந்தனுக்கு, அவனி ஏழ் அறிய - ஏழுலகும் அறியுமாறு, வீர பாண்டியன் என்று - வீரபாண்டியன் என்று கூறி, அணிமுடி கவித்து - அழகிய முடிசூட்டி, அரசு அளித்து - அரசுரிமையைத் தந்து, நவநிரதிசய பூரண இன்பம் ஞான நோக்கு அருளிய - புதுமையாகிய ஒப்பற்ற நிறைந்த இன்பத்திற் கேதுவாகிய ஞான நாட்டத்தை அருளாநின்ற, மதுரைச்சிவன் அடி நிழலில் - மதுரைப் பதியில் எழுந்தருளி யிருக்கும் சோமசுந்தரக் கடவுளின் திருவடி நீழலில், பிளப்பு அற பழைய தேசொடு நிறைந்து வீற்றிருந்தான் - இரண்டறப் பழைய ஒளியொடு நிறைந்து வீற்றிருந்தான் எ-று. புரந்து அளித்து, ஒரு பொருளன. ஏழும் என்னும் உம்மை தொக்கது. அருளிய - அருளாநின்ற வென்க; அருளும் பொருட் டென்பாரும் உளர். சிவபெருமானது நுதற் கண்ணினின்றும் தோன்றிய முருகவேளே உக்கிரவன்மனாக அவதரித்தானாகலின் ‘பழைய தேசொடு’ என்றார். (41) ஆகச்செய்யுள் - 1151 வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம் (எழுசீரடி யாசிரிய விருத்தம்) உலம்பொரு தடந்தோ ளுக்கிரச் செழிய னுயரிய மேருமால் வரையைப் பொலம்புரி செண்டாற் புடைத்துவைப் பெடுத்துப் போந்தரு ளடைந்தவா புகன்றும் வலம்படு திணிதோள் வீரபாண் டியன்கோல் வழங்குநாண் மதுரையெம் பெருமான் புலம்பொரு முனிவர் தேறநால் வேதப் பொருளுணர்த் தியதிறம் புகல்வாம். (இ-ள்.) உலம் பொருதடம்தோள் உக்கிரச் செழியன் - திரண்ட கல்லுப் போலும் பெரிய தோளையுடைய உக்கிரவழுதி, உயரிய மேருமால்வரையை - உயர்ந்த மேரு என்னும் பெரிய மலையை, பொலம் புரி செண்டால் புடைத்து - பொன்னாற் செய்த செண்டினால் அடித்து, வைப்பு எடுத்துப் போந்து - நிதியை எடுத்து வந்து, அருள் அடைந்தவ'fa புகன்றும் - திருவருளைப்பெற்ற திருவிளையாடலைக் கூறினாம், வலம்படு திணிதோள் வீர பாண்டியன் - (இனி) வெற்றி பொருந்திய வலிய தோள்களையுடைய வீர பாண்டியன், கோல் வழங்கும் நாள் - செங்கோலோச்சும் பொழுது, மதுரை யெம்பெருமான் - மதுரையில் எழுந்தருளிய எம் பெருமானாகிய சோமசுந்தரக் கடவுள், புலம்பொரு முனிவர் தேற - புலன்களை வென்ற முனிவர்கள் தெளிய, நால்வேதப் பொருள் உணர்த்திய திறம் புகல்வாம் - நான்கு வேதங்களின் பொருளை அறிவுறுத்திய திருவிளையாடலைக் கூறுவாம் எ-று. உலம் - திரண்ட கல். பொரு - மாறுபடுகின்ற எனினுமாம். அருள் அடைதல் - திருவடிநீழலிற் கலத்தல். அடைந்தவா: ஈறுதொக்கது. புகன்றும் : இறந்த காலத்தன்மைப் பன்மை முற்று. புலம்பு ஒரு எனப் பிரித்துத், துன்பம் நீங்கிய என்றுரைத்தலுமாம். (1) ஐம்பெரும் பூதநிலைதிரிந் தீரே ழடுக்கிய வுலகொடு மயன்மால் உம்பர்வான் பதமு முதித்தவா றொடுங்க வுருத்ததோ ரூழிவந் தெய்தச் செம்பொருண் மறையு மொடுங்கிய வழிநாட் செஞ்சுடர்க் கடவுள்முன் மலரும் வம்பவிழ்கமல மெனவரன் றிருமுன் மலர்ந்ததா லகிலமு மாதோ. (இ-ள்.) ஐம்பெரும் பூதம் நிலை திரிந்து - ஐந்து பெரிய பூதங் களும் தத்தம் நிலையில் மாறுபட்டு, ஈர் ஏழ் அடுக்கிய உலகொடும் - பதினான்காக அடுக்கப்பட்ட உலகங்களுடன், அயன்மால் உம்பர்வான் பதமும் - பிரமன் திருமால் ஏனைத் தேவர்கள் ஆகிய இவர் களின் பெரிய பதங்களும், உதித்தவாறு ஒடுங்க - தோன்றியவாறே ஒடுங்க, உருத்தது ஓர் ஊழி வந்து எய்த - உட்குந் திறத்ததாகிய ஒர் ஊழிக்காலம் வந்து பொருந்த, செம்பொருள் மறையும் ஒடுங்கிய - மெய்ப்பொருளை யுடைய மறைகளும் ஒடுங்கின; வழிநாள் - பின்னாளில், செஞ்சுடர்க் கடவுள் முன் - சிவந்த கிரணங்களையுடைய ஆதித்தன் முன்னே, மலரும் வம்பு அவிழ் கமலம் என- மலருகின்ற மணங்கமழும் தாமரைமலர்போல, அரன் திருமுன் - சிவபெருமான் திரு முன்னர், அகிலமும் மலர்ந்தது - யாவுந் தோன்றின எ-று. அயன் மால்களின் மேலிடத்துள்ள பெரிய பதம் என்னலுமாம். உதித்தவா றொடுங்கல் - எது எதனிடத்திற் றோன்றியதோ அது அதனிடத்தில் ஒடுங்கல். உருத்தது : உரு என்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்தது; வெகுண்ட தென்றும், தோன்றிய தென்றும் கூறலுமாம். ஒடுங்கிய: முற்று. இறைவன் ஒரு தொழிலுமின்றி யிருப்ப அவனது சந்நிதிக்கண்ணே உலகங்கள் தோன்றின என்றார்; சந்நிதி - சத்தி சங்கற்பம். “ மன்னுசிவன் சந்நிதியின் மற்றுலகஞ் சேட்டித்த தென்னு மறையி னியன்மறந்தாய்” என்பது சிவஞானபோதம். மலர்ந்தது - மலர்ந்தன : பன்மையி லொருமை. மாது, ஒ : அசைகள். (2) பண்டுபோற் பின்னு முத்தொழி னடாத்தப் பராபரஞ் சுடர்திரு வுள்ளங் கொண்டு போர்த்திகிரி வலவனைத் தாவிக் குரிசிறன் னாபிமுண் டகத்தில் வண்டுபோற் பிரம னுதித்துமூ வுலகும் வரன்முறை படைக்குநா ணஞ்சம் உண்டுபோற் றியவா னவர்க்குயி ரளித்த வும்பர் நாயகன்றிரு வாக்கில். (இ-ள்.) பண்டுபோல் பின்னும் முத்தொழில் நடாத்த - முன்புபோலப் பின்னும் ஆக்கலாதி மூன்று தொழிலையும் நடாத்தி யருள, பராபரஞ் சுடர்திருவுள்ளம் கொண்டு - சிவபரஞ்சுடர் திருவுள்ளங் கொண்டு, போர்த் திகிரி வலவனைத்தா - போர் செய்தற்குரிய திகிரிப்படை ஏந்திய திருமாலைத் தோற்றுவிக்க, இக் குரிசில் தன் நாபி முண்டகத்தில் வண்டுபோல் பிரமன் உதித்து - அத்திருமாலின் உந்திக் கமலத்தினின்றும் வண்டுபோலப் பிரமன் தோன்றி, மூவுலகும் வரன்முறை படைக்கு நாள் - மூன்று உலகங் களையும் முறையாகப் படைக்கும்போது, நஞ்சம் உண்டு போற்றிய வானவர்க்கு உயிர் அளித்த - நஞ்சினை உண்டு வணங்கிய தேவர்களுக்கு உயிரைத் தந்தருளிய, உம்பர் நாயகன் திருவாக்கில் - தேவதேவனாகிய சிவபெருமான் திருவாக்கின்கண் எ-று. ஐந்தொழிலை முத்தொழிலுள் அடக்கிக் கூறுதலும் பெருவழக்கு; “ விண் முதல் பூதலம் ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும் படைத்தளி தழிப்பமும் மூர்த்திக ளாயினை” என்பது திருவெழுகூற்றிருக்கை; சிவஞான போத முதற் சூத்திரமும், “அவனவ ளதுவெனும் அவைமூ வினைமையின்” என்று கூறிற்று. பராபரம்; பரஞ்சுடர் என்னும் இருதொகைகள் ஒருதொடராய்த் தொக்கன. முண்டகத்தினுள்ளிருந்து வெளிப்பட்டமை கருதி ‘வண்டுபோல் ’ என்றார். உண்டு அளித்த வெனக்கூட்டுக. (3) பிரணவ முதித்த ததனிடை வேதம் பிறந்தன நைமிசா ரணியத் தருணிறை முனிவர் கண்ணுவர் கருக்க ராதியோ ரதிகரித் தவற்றின் பொருணிலை தெரியா துள்ளமு முகமும் புலர்ந்தன ரிருப்பவப் போதத் திருண்மல வலிவென் றவனர பத்த னென்றொரு வேதியன் வந்தான். (இ-ள்.) பிரணவம் உதித்தது - பிரணவந் தோன்றியது; அதனிடை வேதம் பிறந்தன - அதனிடத்து மறைகள் தோன்றின; நைமி சாரணியத்து அருள் நிறை முனிவர் கண்ணுவர் கருக்கர் ஆதியோர் - நைமிசாரணியத்தில் உள்ள கருணை நிறைந்த முனிவ ராகிய கண்ணுவர் கருக்கர் முதலியோர், அதிகரித்து - பயின்று, அவற்றின் பொருள் நிலை தெரியாது - அம்மறைகளின் உட்கிடை யாகிய பொருளை உணராமல், உள்ளமும் முகமும் புலர்ந்தனர் இருப்ப - மனமும் முகமும் வாடியிருக்க, அப்போதத்து - அப்பொழுது, இருள் மலவலி வென்றவன் - ஆணவ மலத்தின் சத்தியை வென்ற வனாகிய, அரபத்தன் என்று ஒருவேதியன் வந்தான் - அரபத்தன் என்னும் பெயரினையுடைய ஒருமுனிவன் வந்தான் எ-று. அதிகரித்து - கற்று என்னும் பொருட்டு. புலர்ந்தனர் என்பது வினையெச்சமும், வென்றவன் என்பது பெயரெச்சமும் ஆயின. அப்போதத்து, அத்து : சாரியை. ஆதியோ ரோதலுற்று என்று பாடங்கொண்டாரு முளர். (4) வந்தவே தியனை யிருந்த வேதியர்கள் வரவெதிர்ந் திறைஞ்சிவே றிருக்கை தந்தவே லையிலம் மறையவன் முனிவர் தமைமுக நோக்கியீ துரைப்பான் பந்தவே தனைசா லவாவெறுப் பிகந்த பண்பின ராயினீர் நீவிர் சிந்தைவே றாகி முகம்புலர்ந் திருக்குஞ் செய்தியா தெனவவர் சொல்வார். (இ-ள்.) வந்த வேதியனை இருந்த வேதியர்கள் வரவு எதிர்ந்து - (அங்ஙனம்) வந்த முனிவனை இருந்த முனிவர்கள் வரவேற்று, இறைஞ்சி - வணங்கி, வேறு இருக்கை தந்த வேலையில் - வேறு ஆதனம் அளித்த பொழுது, அம் மறையவன் - அம் முனிவன், முனிவர் தமைமுகம் நோக்கி ஈது உரைப்பான் - கண்ணுவர் முதலிய முனிவர்கள் முகத்தை நோக்கி இங்ஙனம் கூறுவான்: நீவிர் பந்த வேதனை சால் அவா வெறுப்பு இகந்த பண்பினர் ஆயினீர் -நீங்கள் பந்த வேதனையும் மிக்க விருப்பு வெறுப்பு நீங்கிய தன்மையினரா யிருந்தும், சிந்தை வேறாகி முகம் புலர்ந்து இருக்கும் செய்தியாது என - மனம் வேறுபட்டு முகம்வாடி இருக்கும் செய்தியாது என்று வினவ, அவர் சொல்வார் - அம் முனிவர்கள் கூறுவார்கள் எ-று. முகநோக்கி யென்பது ஒரு சொல்லாய் இரண்டாவதற்கு முடிபாயிற்று. இங்ஙனம் உரைப்பான், எங்ஙனம் எனின் செய்தியா தென்று கூற வென்க. பந்தவேதனை - கட்டினாகிய துன்பம்; வேதனை யமைந்த அவாவெறுப்பென்னலுமாம். ஆயினீர் - ஆகியும். (5) மருட்படு மாயை கழிந்தவன் மொழிந்த மறைபயின் றுரைசெய்தே சிகனற் றிருட்படு மனத்தே மிருத்துமா லைய யாதுசூ ழிதற்கெனக் கேட்ட தெருட்படு மனத்தோன் செப்புவான் வேதஞ் செப்பிய சிவபரஞ் சுடரே அருட்படி வெடுத்துப் பொருளையு முணர்த்து மல்லது சூழ்ச்சியா தறைவீர். (இ-ள்.) ஐய - ஐயனே, மருள் படு மாயை கழிந்தவன் - மயக்கத்திற் கேதுவாகிய மாயையை இயல்பாகவே நீங்கிய இறைவன், மொழிந்தமறை பயின்று - திருவாய் மலர்ந்தருளிய வேதங்களை ஓதி, உரைசெய் தேசிகன் அற்று - அவற்றின் பொருளை உணர்த்தும் குரவனில்லாமல், இருள்படு மனத்தேம் இருத்தும் - அஞ்ஞானம் நிறைந்த மனத்தையுடையேமாக இருக்கின்றேம் (ஆதலால்), இதற்குச் சூழ் யாது என - இதற்கு ஆலோசனை யாது என்று வினவி, கேட்ட தெருள்படு மனத்தோன் செப்புவான் - அதனைக் கேட்ட தெளிவு பொருந்திய மனத்தையுடைய அரபத்தன் கூறுகின்றான்; வேதம் செப்பிய சிவபரஞ் சுடரே - அம் மறைகளைக் கூறியருளிய சிவபரஞ் சோதியே, அருள் படிவு எடுத்து - அருளுருக் கொண்டு, பொருளையும் உணர்த்தும் - பொருளையும் அறிவிக்கும்; அல்லது சூழ்ச்சி யாது அறைவீர் - அஃதன்றி வேறு ஆலோசனை யாது உளது சொல்வீர் (எனக் கூறி) எ-று. “ மாயை மயக்கத்திற்கேது வென்பதனை. வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யு மன்றே” என்னும் சிவஞான சித்தியாலறிக. மாயை கழிந்தவன் - மாயைக்கு அப்பாற்பட்டவன் எனலுமாம். இருத்தும் - இருக்குதும்: தன்மைப் பன்மை முற்று; தும் விகுதி நிகழ் காலத்தில் வந்தது. ஆல் : அசை. உணர்த்துமல்லது என்பதற்கு உணர்த்தினன்றி என்றுரைத் தலுமாம். (6) பண்ணிய தவத்தா லன்றியா தானும் படுபொருள் பிறிதிலை தவமும் புண்ணிய தலத்தி னல்லது பலியா புண்ணிய தலத்தினும் விழுப்பம் நண்ணிய சைவ தலத்தினி லியற்றி னல்குமச் சிவதலங் களினும் எண்ணிய வதிக தலத்தினி லியற்றி னிருத்தவ மெளிதுடன் பயக்கும். (இ-ள்.) பண்ணிய தவத்தால் அன்றி - செய்த தவத்தினாலல் லாமல், பிறிது யாதானும் படுபொருள் இலை - வேறு யாதொன்றி னாலும் கைகூடும் பொருள் இல்லை; தவமும் புண்ணிய தலத்தின் அல்லது பலியா - அத்தவங்களும் புண்ணியப் பதிகளினன்றிச் சித்திக்கமாட்டா; புண்ணிய தலத்தினும் விழுப்பம் நண்ணிய சைவ தலத்தினில் இயற்றின் நல்கும் - அந்தப் புண்ணியப் பதிகளினும் சிறப்புப் பொருந்திய சிவத் தலங்களிற் செய்தால் (எளிதிற்) பயனளிக்கும்; அச் சிவ தலங்களினும் - அந்தச் சைவ தலங்களினும், எண்ணிய அதிக தலத்தினில் இயற்றின் - மதிக்கப்பெற்ற சிறந்த சிவத்தலத்தில் செய்தால், இருந்தவம் எளிது உடன் பயக்கும் - அப்பெரிய தவங்கள் எளிதாக விரைந்து பயனளிக்கும் எ-று. பிறிது யாதானும் எனக் கூட்டுக. யாதானும் - யாதினானும். படுபொருள் இலை என்பதனைப் பொருள் படுதல் இலையெனப் பிரித்தியைக்க; “ வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம் ஈண்டு முயலப் படும்” (திருக்குறள் - 265) என்னும் திருக்குறள் இங்கு நோக்கற்பாலது. தலத்தினுள்ளும் தலங்களினுள்ளும் என உள்ளுருபு விரிக்க. எண்ணிய - ஆன்றோ ரால் எண்ணப்பட்ட. அதிக தலம் - விசேடத்தலம். (7) அத்தகு தலமற் றியாதெனி னுலக மகிலமுந் தன்னுடம் பான வித்தகன் சென்னிப் பன்னிரு விரன்மேல் விளங்கிய தலமது சீவன் முத்தரா யெண்ணில் வானவர் முனிவோர் முயன்றுமா தவப்பய னடைந்து சித்தமா சகன்று வதிவதென் றறநூல் செப்பிய மதுரையந் நகரில். (இ-ள்.) அத்தகு தலம் யாது எனில் - அந்தச் சிறந்த பதி யாதெனில். அது - அஃது, உலகம் அகிலமும் தன் உடம்பான வித்தகன் - உலகமனைத்தும் தனது வடிவமாகவுள்ள விராட்புருடனது, சென்னிப் பன்னிரு விரல்மேல் விளங்கிய தலம் என்று - முடியின் மேல் பன்னிரண்டங்குலத்துக்கு மேலாக விளங்கிய தலம் என்றும், எண் இல்வானவர் முனிவோர் முயன்று மாதவப்பயன் அடைந்து - அளவிறந்த தேவர்களும் முனிவர்களும் நோற்றுப் பெரிய தவப் பயனை எய்தி, சித்தம் மாசு அகன்று சீவன் முத்தராய் வதிவது என்று - மனக் குற்றங்கள் நீங்கிச் சீவன் முத்தராய் வசிக்கப் பெறுவது என்றும், அறநூல் செப்பிய மதுரை - தரும நூல்கள் எடுத்துக்கூறும் மதுரைப் பதியாம்; அந்நகரில் - அத் திருப்பதியிலே எ-று. அது என்பதனை யாதெனில் அது எனக் கூட்டி யுரைக்க: அகிலம் - எல்லாம். பன்னிரு விரன்மேல் விளங்கிய தலம் - துவாதசாந் தத்தலம்; தல விசேடத்திற் காண்க. என்று என்பது முன்னுங்கூட்டி யுரைக்கப்பட்டது. (8) தெளிதரு விசும்பி னிழிந்ததோர் விமான சிகாமணி யருகுதென் மருங்கின் முளிதரு பராரை வடநிழல் பிரியா முழுமுதல் வழிபடு மறவோர்க் களிதரு கருணை முகமலர்ந் தளவா வருங்கலை யனைத்தையுந் தெளிவித் தொளிதரு மனைய மூர்த்தியே நுங்கட் கோதிய மறைப்பொரு ளுணர்த்தும். (இ-ள்.) தெளிதரு விசும்பின் இழிந்தது ஓர் விமான சிகாமணி அருகு - தெளிந்த வானினின்றும் இறங்கியதாகிய ஒப்பற்ற விமானங்களுக்கெல்லாம் சூளா மணியாயுள்ள விமானத்தின் அருகில், தென்மருங்கில் - தென்பாலில், முளிதரு பராரை வடநிழல் பிரியா முழுமுதல் - உலர்ந்த (பொருக்குள்ள) பருத்த அரையை யுடைய கல்லாலமரத்தி னிழலினின்றும் நீங்காத முழுமுதற் கடவுள், வழிபடும் அறவோர்க்கு - வழிபடாநின்ற முனிவர்க்கு, அளிதரு கருணை முகம் மலர்ந்து - முதிர்ந்த கருணையுடன் முகமலர்ச்சி யுற்று, அளவா அருங்கலை அனைத்தையும் தெளிவித்து - அள விறந்த அரிய நூல்கள் அனைத்தையும் தெளிவுறுத்தி, ஒளி தரும் - விளங்கா நிற்பர்; அனைய மூர்த்தியே - அச்சிறந்த தென்முகப் பெருமானே, ஓதிய மறைப்பொருள் நுங்கட்கும் உணர்த்தும் - (தாம்) அருளிய வேதத்தின் பொருளை உங்கட்கு அறிவிப்பர் எ-று. விமான சிகாமணி - விமானங்கள் முடியிற் றரிக்கும் மணி போலும் சிறப்புடையது. பருஅரை பராரை யென்றாயது. அரை - அடிமரம். வடம் - ஆல். அறவோர் - சனகர் முதலிய முனிவர். அளிதல் - முதிர்தல்; அளிதரு கருணை என்பதற்கு அன்பு பெற்ற அருள் என்று கூறுவது ஈண்டுச் சிறப்பின்று. அளவில்லாத என்பது அளவா என நின்றது. ஒளிதரும் - ஞானத்தைத் தரும் என்றுமாம். (9) அங்கவன் றிருமு னருந்தவ விரத மாற்றுவான் செல்லுமி னெனவப் புங்கவ னருள்போல் வந்தமா தவன்பின் புனிதமா முனிவரு நங்கை பங்கவன் மதுரைப் பதிபுகுந் தம்பொற் பன்மணிக் கோயில்புக் காழிச் சங்கவன் கைபோல் வளைசெறி செம்பொற் றாமரைத் தடாகநீ ராடி. (இ-ள்.) அவன் திருமுன் அருந்தவ விரதம் ஆற்றுவான் அங்கு செல்லுமின் என - அந்த மூர்த்தியின் திருமுன்னர் இருந்து அரிய தவமாகிய நோன்பைச் செய்தற்கு அங்கே செல்லுங்கள் என்று கூற, அப் புங்கவன் அருள்போல் வந்த மாதவன் பின் - அந்தத் தேவனது திருவருளே போலும் வந்த மாதவனாகிய அரபத்தன் பின்பு, புனிதம் மாமுனிவரும் - தூய பெருமையுடைய முனிவர்களும், நங்கை பங்கவன் மதுரைப் பதி புகுந்து - உமையொரு பாகனாகிய சோமசுந்தரக் கடவுளின் மதுரைப்பதியிற்சென்று, அம்பொன் பல்மணிக் கோயில் புக்கு - அழகிய பொன்னாற் செய்த பல்வகை மணிகள் இழைத்த திருக்கோயிலுட்புகுந்து, ஆழிச் சங்கவன் கைபோல் - திகிரிப்படையை யுடைய திருமாலின் சங்கை ஏந்திய கைபோல, வளைசெறி செம்பொன் தாமரைத் தடாகம் நீராடி - சங்கு பொருந்திய சிவந்த பொற்றாமரையையுடைய வாவியில் நீராடி எ-று. மாதவன் பின் என்றமையால் அவனும் சென்றா னென்பது பெறப்பட்டது. இறைவனை வழிபடுதற்கு அம்முனிவன் அழைத்துச் செல்லுதலை அவனது அருளேவந்து ஈர்த்துச் செல்வது போலும் என உவமை கூறியது சாலவும் பொருந்த முடைத்து; “ அவனரு ளாலே யவன்றாள் வணங்கி” என்று திருவாசகத் திருமறை அருளிச்செய்தல் காண்க. பங்கவன்: வகரம் விரித்தல். ஆழியான் சங்கக் கைபோல் என விகுதி பிரித்துக் கூட்டுக. சங்கு தாமரை மேல் இருக்குமென்றார்; “ முட்டாட் டாமரை முறுக்கவிழ் மலர்மேல் வலம்புரி கிடக்கும் வாதவூ ரன்ப.” என நால்வர் நான்மணி மாலை கூறுவதுங் காண்க. (10) கரைகடந் துள்ளங் கடந்தவன் புந்தக் கடிதுபோய் நான்கிரு வெள்ளி வரைகடம் பிடரிற் கிடந்ததோர் மேரு வரைபுரை விமானமேற் காணா உரைகடம் பொருளைக் கண்களாற் கண்டாங் கும்பர்தம் பிரானைநேர் கண்டு திரைகடந் திடும்பே ரின்பவா ரியிலுஞ் சேணிலத் திலும்விழுந் தெழுந்தார். (இ-ள்.) கரை கடந்து உள்ளம் கடந்த அன்பு - எல்லையின்றி உள்ளத்தை விழுங்கி எழுந்த அன்பானது, உந்த - செலுத்த, கடிதுபோய் - விரைந்துபோய், நான்கு இரு வெள்ளி வரைகள் தம்பிடரில் கிடந்தது ஓர் மேருவரை புரை விமானம் மேல் - எட்டு வெள்ளிமலைகளின் பிடரியிலே தங்கியதாகிய ஒரு பொன் மலையைப் போலும் விமானத்தின்கண், காணா உரைகள் தம் பொருளைக் கண்களால் கண்டாங்கு - தம் அகக்கண்ணாற் காணக் கூடாத மறைகளின் பொருளைப் புறக்கண்ணாற் கண்டது போல, உம்பர்தம்பிரானை நேர் கண்டு - தேவதேவனாகிய சொக்கலிங்கக் கடவுளை நேரிற்பார்த்து, திரை கடந்திடும் பேரின்ப வாரியிலும் சேண் நிலத்திலும் விழுந்து எழுந்தார் - அலையொழிந்த பேரின்பக் கடலினும் சேய்மை யாகிய நிலத்தினும் விழுந்து எழுந்தார்கள் எ-று. எட்டு வெள்ளை யானைகளால் தாங்கப்பட்டிருக்கும் பொன் விமானம் எட்டு வெள்ளி மலைகளின் மேற் பொருந்திய மேரு மலையை ஒக்குமென்றார். உரைகள் என்றது வேதங்களை யுணர்த்திற்று; ‘அவற்றின் பொருணிலை தெரியா துள்ளமுமுகமும் புலர்ந்தனர்’ என மேலே கூறினராகலின், ஈண்டு அங்ஙனம் காணப்படாப் பொருளையே கண்களாற்கண்டாங்குப் பிரானை நேர்கண்டு என்றார். விமான மேற்கண்டு என இயையும். முழு நிறைவுடைத் தாகலின் திரை கடந்திடும் என்றார்; “ திரை பொரா மன்னும் அமுதத் தெண் கடலே.” என்னும் திருவாசகமும் நோக்குக; திரைகள் தந்திடும் எனப் பிரித்தல் பொருந்து மேனுங் கொள்க. நிலத்திலும் வாயிலும் ஒருங்கு விழுந்தாராகக் கூறியது ஓர் அணி கருதிற்று. வரைகடம், உரைகடம் என்பவற்றில் தம் சாரியை. (11) கைதலை முகிழ்த்துக் கரசர ணங்கள் கம்பிதஞ் செய்துகண் ணருவி பெய்தலை வெள்ளத் தாழ்ந்துவாய் குழறிப் பிரமன்மா லின்னமுந் தேறா மைதழை கண்ட வெள்ளிமன் றாடும் வானவர் நாயக வானோர் உய்தர விடமுண் டமுதருள் புரிந்த வுத்தம போற்றியென் றேத்தா. (இ-ள்.) கைதலை முகிழ்த்து - கைகளைத் தலைமேற் குவித்து, கரசரணங்கள் கம்பிதம் செய்து - கைகளும் கால்களும் நடுங்கப் பெற்று, கண் அருவி பெய்து - ஆனந்தக் கண்ணீராகிய அருவியைப் பொழிந்து, அலை வெள்ளத்து ஆழ்ந்து - அலை வீசுகின்ற அவ் வெள்ளத்தில் மூழ்கி, வாய்குழறி - நாத்தடுமாறி, பிரமன் மால் இன்னமும் தேறா மைதழை கண்ட - பிரமனும் திருமாலும் இன்னமும் காணப்பெறாத கருமைமிக்க திரு மிடற்றை யுடையவனே, வெள்ளிமன்று ஆடும் வானவர் நாயக - வெள்ளியம்பலத்தில் திருக் கூத்தாடி யருளும் தேவதேவனே, வானோர் உய்தர விடம் உண்டு அமுது அருள்புரிந்த உத்தம - தேவர்கள் (உயிர்) பிழைக்குமாறு நஞ்சினை அருந்தி அமுதத்தை அளித்தருளிய உத்தமனே, போற்றி - எங்களைக் காத்தருள்க, என்று ஏத்தா - என்று துதித்து எ-று. கர சரணம் : வடசொற்றொடர், கம்பிதம் செய்து - கம்பித்து; நடுங்கி. கம்பித்தல் முதலியன அன்பின் நிகழ்ச்சிகள். சினை வினைகள் முதன்மேல் நின்றன. இன்னமுந் தேறா என்றது, “ தேவரு மறையு மின்னமுங் காணாச்செஞ்சடைக் கடவுளைப் பாடி யாவரு மதித்தோர் மூவரி லிருவர் பிறந்தநா டிந்தநன் னாடு” என்னும் வரந்தருவார் கூற்றை நினைவுறுத்துகிறது. பிரமன் மால் தேறாமையும் மன்றிலாடுதலும் ஒருங்கு கூறியிருப்பது, “ மன்றுளே மாலயன் றேட ஐயர்தாம் வெளியே யாடுகின்றாரை.” என்னும் அருண்மொழித் தேவர் திருவாக்கைச் சிந்திக்கச் செய் கின்றது. ஏனோர்க்கு அமுதளித்துத் தான் நஞ்சுண்ட பெருந் தகைமையாளன் என்பதுபற்றி ‘உத்தம’ என்றார். எங்களுத்தமனே என்பர் வாதவூரடிகள். (12) மறைபொருள் காணா துள்ளமா லுழந்து வாடிய வெமக்குநீ யேயந் நிறைபொரு ளாகி நின்றனை யதற்கு நீயலாற் பொருள்பிறி தியாதென் றிறைவனை யிறைவன் பங்கிலங் கயற்க ணிறைவியை யம்முறை யேத்தி முறைவலஞ் செய்து வடநிழ லமர்ந்த மூர்த்திமுன் னெய்தினார் முனிவோர். (இ-ள்.) முனிவோர் - கண்ணுவர் முதலிய அம்முனிவர்கள், மறைபொருள் காணாது - (மறைகளின்) மறைந்த பொருளைக் காண மாட்டாது, உள்ளம் மால் உழந்து வாடிய எமக்கு - உள்ளம் மயங்கி வாடிய எமக்கு, நீயே அ நிறை பொருள் ஆகி நின்றனை - நீயே அம்மறையின் நிறைந்த பொருளாகி நின்றாய், அதற்கு நீ அலால் பிறிது பொருள் யாது என்று - அம்மறைக்கு நின்னை யல்லால் வேறுபொருள் யாதென்று, இறைவனை (ஏத்தி) - சொக்கலிங்கக் கடவுளைத் துதித்து, இறைவன் பங்கில் அங்கயற்கண் இறைவியை அம்முறை ஏத்தி - அப்பெருமானது ஒரு பாதியிலமர்ந்த அங்கயற்கண் ணம்மையையும் அங்ஙனமே துதித்து, முறைவலம் செய்து - முறை யாக வலம்வந்து, வடநிழல் அமர்ந்த மூர்த்தி முன் எய்தினார் - கல்லாலின் நிழலிலமர்ந்தருளிய தட்சிணா மூர்த்தியின் திருமுன்னர் அடைந்தார்கள் எ-று. மறைந்த பொருளுடைமையால் மறையெனப்படுதலைத் தொல்காப்பியப்பா யிரத்தில் ‘நான்மறை’ என்பதற்கு நச்சினார்க் கினியர் கூறிய உரையானுமறிக. நீயே அந்நிறை பொருளாகி நின்றனை என்ற கருத்தை, “ மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே” என்னும் திருவாசகத்தானும் ஓர்க. ஏத்தி யென்பதனை இறைவனை யென்பதனோடுங் கூட்டி யுரைக்க. முனிவோர், அகரம் ஓகாரமாதல் தொல்காப்பியத்து உடம்பொடு புணர்த்தலாற் கொள்க. (13) சீதளப் பளிக்கு மேனியும் பளிக்குச் செழுமலை பதித்ததுப் பன்ன பாதமுஞ் செவ்வாய் மலருமுக் கண்ணும் பங்கயச் செங்கர நான்கும் வேதபுத் தகமு மமுதகும் பமுந்தன் விழிமணி வடமுமெய்ஞ் ஞான போதமுத் திரையுந் தரித்ததோர் தனிமைப் போதன்முன் றாழ்ந்தெழுந் தேத்தா. (இ-ள்.) சீதளம் பளிக்கு மேனியும் - குளிர்ந்த பளிங்கு (மலைபோன்ற வெள்ளிய) திருமேனியும், செழுபளிக்கு மலை பதித்த துப்பு அன்ன பாதமும் - ஒளி நிறைந்த அப்பளிக்கு மலையின் அடியிற் பதித்த பவளம் போன்ற திருவடிகளும், செவ்வாய் மலரும் - சிவந்த திருவாயாகிய தாமரை மலரும், முக்கண்ணும் - மூன்று கண்களும், பங்கயச் செங்கரம் நான்கும் - தாமரை மலர்போன்ற சிவந்த திருக்கைகள் நான்கும், வேத புத்தகமும் - வேதத் திருமுறையும், அமுத கும்பமும் - அமுதம் நிறைந்த கலசமும், தன்விழி மணிவடமும் - உருத்திராக்க மணிமாலையும், மெய்ஞ்ஞான போத முத்திரையும் - சிவஞானத்தைத் தெளிவித்தருளும் சின்முத்திரையும். தரித்தது ஓர் தனிமைப் போதன்முன் - தரித்த ஒப்பற்ற தேசிகனாகிய தட்சிணாமூர்த்தி திருமுன்னர், தாழ்ந்து எழுந்து ஏத்தா - வணங்கி துதித்து எ-று. வேத புத்தகம் முதலியவற்றை நான்கு கையிலும் தரித்தவென்க. வேத புத்தகம் என்பது சிவஞான போதத்தைக் குறிக்கும் என்பர் : பின் இவ்வாசிரியரே, “ போதம்வரை புத்தக மிடக்கையது பொற்ப.” “ புத்தகத் தெழுதிய சிவஞான மெய்ப்போதம் கைத்தலந்தரித் திருப்பதோர் கருணையைக் கண்டார்.” என்றும் கூறுவர்; புத்தகம் தரித்தல் - சிவஞானத்தை யுணர்த் துவதோர் குறிப்புப் போலும். தன்விழி - உருத்திராக்கம். சின் முத்திரையின் பொருட் குறிப்பானது. “ மும்மலம் வேறுபட் டொழிய மொய்த்துயிர் அம்மலர்த் தாணிழ லடங்கு முண்மையைக் கைம்மலர்க் காட்சியிற் கதுவ நல்கிய செம்மலை யலதுளஞ் சிந்தி யாதரோ.” என்று கச்சியப்ப முனிவரால் திருவானைக்காப் புராணத்தில் உணர்த்தப்பட்டுளது. தரித்தது என்பதனைத் தரித்தவென எச்சமாகக் கொள்க. தரித்ததாகிய கரம் நான்கும் எனக் கூட்டி யுரைத்தலுமாம். (14) வடநிழ லமர்ந்த மறைமுதன் மேதா மனுவெழுத் திருபது மிரண்டுந் திடமுற வரபத் தன்றனாற் றெளிந்து தேணிறை மதிமுத லடைவிற் படுமதி யளவுந் தருப்பண மோமம் பார்ப்பன வுண்டிமுப் போதும் அடைவுற நுவன்று நோற்குமா தவர்மு னருமறைப் பொருள்வெளி வருமால். (இ-ள்.) வடநிழல் அமர்ந்த மறைமுதல் மேதா - கல்லாலின் நிழலிலமர்ந்தருளிய வேத முதலாகிய தட்சிணாமூர்த்தியின், இருபதும் இரண்டும் எழுத்து மனு - இருபத்திரண்டு எழுத்து வடிவமாகிய மந்திரத்தை, அரபத்தனால் திடம் உற தெளிந்து - அரபத்த முனிவனால் உறுதிபெறத் தெளிந்து, தேள்நிறை மதிமுதல் - கார்த்திகைத் திங்களின் பூரணை வரையும், அடைவிற் படுமதி அளவும் - அடுத்த கா'faத்திகைத் திங்களின் பூரணைவரையும், தருப்பணம் ஒமம் பார்ப்பன உண்டி முப்போதும் அடைவுற - தருப்பணமும் ஒமமும் பார்ப்பனவுணவும் மூன்று காலமும் பொருந்துதலுற, நுவன்று நோற்கும் மாதவர்முன் - செபித்து நோற்கின்ற முனிவர்கள் முன், அருமறைப் பொருள் வெளிவரும் - அறிதற்கரிய மறைகளின் பொருளாயுள்ள இறைவன் (அவர்களறிய) வெளிப்பட்டு வருகின்றான் எ-று. மேதா - ஞானி; தென்முகப் பெருமான்; மந்திரத்தின் பெயராகக் கொண்டு மேதாமனு வென்றும் உரைப்பர். அடைவுற என்றமையால் அவற்றைச் செய்து என்க. தெளிந்து நுவன்று நோற்கும் எனக் கூட்டுக. ஆல் : அசை. (15) (கலி விருத்தம்) மானமுனி வோரதி சயிப்பவட நீழல் மோனவடி வாகிய முதற்குரவ னெண்ணான் கூனமி லிலக்கண வுறுப்பகவை நானான் கானவொரு காளைமறை யோன்வடிவ மாகி. (இ-ள்.) மானம் முனிவோர் அதிசயிப்ப - பெருமை பொருந்திய அம்முனிவர்கள் அதிசயமெய்த, வடநீழல் மோனவடிவு ஆகிய முதல்குரவன் - கல்லாலின் நிழலிலமர்ந்த மெளன வடிவத்தை யுடைய பரமகுருவானவன், ஊனம் இல் எண்ணான்கு இலக்கண உறுப்பு - குற்றமில்லாதமுப்பத்திரண்டு இலக்கணமுடைய உறுப்புக் களுடன் கூடிய, நானான்கு அகவை ஆன - பதினாறு வயதுள்ள, ஒரு காளை மறையோன் வடிவம் ஆகி - ஒரு குமாரனாகிய வேதிய னுருவங் கொண்டு எ-று. சின்முத்திரையை மோனமுத்திரை யென்றுங் கூறுவர்; திருமுருகாற்றுப்படையில், ஒருகை மார்பொடு விளங்க என்பதற்கு ‘முனிவர்க்குத்’தத்துவங்களைக் கூறி உரையிறந்த பொருளை யுணர்த்துங்காலத்து ‘ஒருகை மார்போடே விளங்கா ’நிற்க எனவும், ‘இறைவன் மோனமுத்திரை யத்தனாய்த்தானாயே யிருந்து காட்ட ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தாற்போல ஆனந்த மயமான வொளி மாணாக்கர்க்கு நிறைதலின் அதற்குரிய மோன முத்திரைகூறிற்று’ எனவும் நச்சினார்கினியர் உரை விரித்தமை காண்க. காளை யென்பது கட்டிளமையை உணர்த்துகிறது. (16) நீண்டதிரி முண்டமழ னெற்றிவிழி பொத்தக் காண்டகைய கண்டிகை வளைந்தொழுகு காதிற் பூண்டகுழை கெளவிய பொலன் செய்பல காசு சேண்டவ ழிளங்கதிர் சிரித்திருள் சிதைப்ப. (இ-ள்.) நீண்ட திரி முண்டம் நெற்றி அழல் விழிபொத்த - நீண்ட திரிபுண்டரமானது நெற்றியிலுள்ள அனற் கண்ணை மறைக்கவும், காண் தகைய கண்டிகை - காணத்தக்க அழகினையுடைய (கழுத்திலணிந்த) கண்டிகையோடு, வளைந்து ஒழுகு காதில் பூண்ட குழைகெளவிய - வளைந்து நீண்ட திருச்செவியில் அணிந்த குண்டலங்கள் கெளவியுள்ள, பொலன் செய் பல காசு - விளக்கஞ் செய்யும் பலமணிகளும், சேண் தவழ் இளங்கதிர் சிரித்து - வானிற்றவழும் இளஞாயிற்றைச் சிரிப்பது போலும் ஒளி வீசி, இருள் சிதைப்ப - இருளை ஓட்டவும் எ-று. திரிமுண்டம் - திருநீற்றின் மூன்று கீற்று. கண்டிகையும் குழையும் கெளவிய வென்க. கெளவுதல் - அகப்படப் பற்றிக் கொள்ளுதல். பதிக்கப்பட்ட வற்றைக் கெளவிய வென்றார். சிரித்து- சிரிப்பது போலும் ஒளிவிட்டு; சிரித்தல் - எள்ளி நகுதல். (17) உத்தரிய வெண்படம் வலம்பட வொதுங்க முத்தவள நூலினொடு முத்தமிடை யிட்டு வைத்தணியு மக்கவட மாலையெறி வாளாற் பத்தரை மறைத்தமல பந்தவிருள் சிந்த. (இ-ள்.) வெள் உத்தரியபடம் வலம்பட ஒதுங்க - வெள்ளிய உத்தரியமாகிய ஆடை வலத்திற் பொருந்த ஓதுங்கவும், தவள முந்நூலினொடு, வெள்ளிய பூணூலொடு, முத்தம் இடை இட்டு வைத்து அணியும் அக்கவட மாலை - முத்துக்களை இடையிட்டுக் கோவைசெய்து அணிந்த உருத்திராக்க மணி மாலை, எறி வாளால் - வீசும் ஒளியால், பத்தரை மறைத்த மலபந்த இருள் சிந்த - அன்பர்களை மறைத்த ஆணவ பந்த மாகிய இருள் சிதறவும் எ-று. உத்தரியம் - மேலாடை. வடம், மாலை ஒருபொருளன. நூலும் மாலையும் எறியு மென்க. எறிகின்ற வாட்படை யென்பதோர் பொருளும் தோன்ற நின்றது. பந்த இருள் - செறிந்த இருள் என்னலுமாம். மேற் செய்யுளிற் புறவிருளை யோட்டுதல் கூறி, இச்செய்யுளில், அகவிருளை யோட்டுதல் கூறினார். (18) கண்டிகை தொடுத்திரு கரத்தினொடு வாகு தண்டனிடு மாலைவிட வாளரவு தள்ள வெண்டுகிலி னானவிரி கோவண மருங்கிற் றண்டரிய பட்டிகை வளைந்தொளி தழைப்ப. (இ-ள்.) கண்டிகை தொடுத்து - உருத்திராக்க மணிகளைக் கோத்து, இரு கரத்தினொடு தண்டு வாகின் இடுமாலை - இரண்டு கைகளிலும் தண்டினை யொத்த தோள்களிலும் அணிந்த மாலை, விடம்வாள் அரவு தள்ள - நஞ்சினையுடைய கொடிய பாம்பணி களை ஒழிக்கவும், வெண்துகிலின் ஆனவிரி கோவணம் மருங்கில் - வெள்ளிய ஆடையாற் போக்கிய விரிந்த கோவணத்தின் பக்கத்தில், தண்டு அரிய பட்டிகைவளைந்து ஒளிதழைப்ப - நீங்குதலில்லாத பட்டிகை சூழ்ந்து ஒளி மிகவும் எ-று. கண்டிகை - உருத்திராக்கம். தொடுத்து இடுமாலை, அரவினை யொழித்து மாலை யணிந்ததனை ‘மாலை விடவாளரவு தள்ள’ எனறார்; அரவின் விடமென மாற்றி, அடியார்களின். மாயையாகிய விடத்தை யொழிக்க வென்பதோர் பொருளுங் கொள்க; “ உலோகா யதனெனு மொண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிட மெய்தி அதிற்பெரு மாயை யெனைப்பல சூழவும்” என்பது திருவாசகம். தண்டல் - நீங்குதல். பட்டிகை - அரைப்பட்டிகை (19) வண்டுவரி பாடுவன போலமலர் பாத புண்டரிக மேலுழல் சிலம்புகள் புலம்பத் தொண்டரக மாசிரு டுணித்துமுடி சூட்டும் முண்டக மலர்ப்புறம் விறற்கழன் முழங்க. (இ-ள்.) வண்டு வரிபாடுவன போல - வண்டுகள் இசை பாடுதல் போல, மலர்பாதபுண்டரிகம் மேல் உழல் சிலம்புகள் புலம்ப - மலர்ந்த திருவடித் தாமரையின்மீது சூழ்ந்த சிலம்புகள் ஒலிக்கவும், தொண்டர் அகமாசு இருள் துணித்து - அடியார்களின் அக வழுக்காகிய ஆணவ இருளைப் போக்கி, முடிசூட்டும் முண்டக மலர்ப்புறம் - அவர்கள் முடியிற் சூட்டுகின்ற தாமரை மலர்போலும் திருவடியின்கண், விறல்கழல் முழங்க - வெற்றியை யுடைய வீரகண்டை ஒலிக்கவும் எ-று. வரி - இசைப்பாட்டு. உழலல் - அசைதலுமாம் முண்டக மலர் திருவடிக்கு ஆகுபெயர். (20) ஏதமில் பவித்திரம் வலக்கர னிமைப்பப் போதம்வரை புத்தக மிடக்கையது பொற்ப ஓதியுண ராதலறி யோலமிடும் வேதம் பாதுகைக ளாகியிரு பாதமலர் சூட. (இ-ள்.) ஏதம் இல் பவித்திரம் வலக்கரன் இமைப்ப - குற்றமில்லாத பவித்திரம் வலத்திருக்கையில் விளங்கவும்; போதம் வரை புத்தகம் இடக்கை பொற்ப - சிவஞானபோதம் எழுதப்பெற்ற திருமுறை இடத் திருக்கரத்தில் அழகு செய்யவும், ஓதி உணராது அலறி ஓலமிடும் வேதம் - பலவாறு கூறி அறியாது கதறி ஓலமிடு கின்ற மறைகள், பாதுகைகளாகி இருபாத மலர் சூட - பாதுகை களாகி இரண்டு திருவடி மலர்களையும் சூடவும் எ-று. கையது : அது பகுதிப்பொருள் விகுதி; கையினிடத்ததாய் எனவுரைத்தலுமாம். ஓதவும் உணரவும் கூடாமல் எனினுமாம். வேதங்கள் இறைவனை உணரப் பெறாமல் ஓலமிடுதலை, “ அருமறை முறையிட் டின்னு மறிவதற் கரியான்” என்றும், “ மயக்கறு மறையோலிட்டு மாலயன்றேட நின்றான்” என்றும் திருத்தொண்டர் புராணங் கூறுதல் காண்க. இறைவனை அறியமாட்டாது ஓலமிட்ட வேதங்கள் இப்பொழுது ஓர் உபாயத்தை யுன்னிப் பாதுகைகளாயின என்றார். மலர் என்றதற்கேற்பச் சூட என்றார். போதம் வரை புத்தகம் இடக்கையிற் பொற்ப என்றும், ஓலமிடும் வேதம் பாதமலர் சூட என்றும் கூறியது சிவஞான போதத்திற்கும் வேதத் திற்குமுள்ள வாசியை விளக்கியவாறு மாயிற்று. (21) கள்ளமுள ரிக்குண்முரல் காளையறு கால புள்ளொலியி னாவுமித ழும்புடை பெயர்ந்து துள்ளவெழு வேதவொலி தொண்டர்செவி யாற்றால் உள்ளவயல் புக்குவகை யொண்பயிர் வளர்ப்ப. (இ-ள்.) கள்ள முளரிக்குள் முரல் அறுகால காளை புள் ஒலியின் - தேனையுடைய கமல மலரினுள் முழங்கும் ஆறு கால்களை யுடைய ஆண் வண்டின் ஒலிபோல, நாவும் இதழும் புடை பெயர்ந்து துள்ள எழு வேத ஒலி - நாவும் இதழும் எழுந்து துள்ளத் தோன்றும் மறை யொலியானது, தொண்டர்செவி ஆற்றால் - அடியார்களின் செவியாகிய கால்வழியால் ஓடி, உள்ளம் வயல் புக்கு - உள்ளமாகிய கழனியிற் பாய்ந்து, உவகை ஒண்பயிர் வளர்ப்ப - மகிழ்ச்சியாகிய ஒள்ளிய பயிரை வளர்க்கவும் எ-று. கள்ள - தேனையுடைய: குறிப்புப் பெயரெச்சம்; கால என்பதும் அது. முளரி மலருக்கு ஆகுபெயர். காளையாகிய புள் எனக் கூட்டுக. புள் -வண்டு. வேதவொலி திருவாயினுள்ளிருந்து வருதலின் அதற் கேற்ப முளரிக்குள் முரல் ஒலியின் என்றார். வேத வொலியாகிய நீர் என்க. உருவகவணி. (22) சீதமணி மூரறிரு வாய்சிறி தரும்ப மாதவர்கள் காணவெளி வந்துவெளி நின்றான் நாதமுடி யாயளவி னான்மறையி னந்த போதவடி1 வாகிநிறை பூரண புராணன். (இ-ள்.) திருவாய் சீதம் மணிமூரல் சிறிது அரும்ப - திருவாயிலே குளிர்ச்சியும் அழகுமுள்ள புன்னகை சிறிது தோன்றவும், நாத முடிவாய் - நாத தத்துவத்தின் முடிவாகியும், அளவு இல் நான்மறையின் அந்தம் - அளவிடலாகாத நால்வேதங்களின் முடிவில், போதவடிவு ஆகி - ஞான வடிவாகியும், நிறை பூரண புராணன் - நிறைந்த பூரணத் தன்மையுடைய பழையோனாகிய தட்சிணாமூர்த்தி, மாதவர்கள் காண எளி வந்து வெளி நின்றான் - அம்முனிவர்கள் தரிசிக்குமாறு எளிதின் வந்து வெளியே நின்றருளினான் எ-று. எளிவந்து : ஒருசொல். நிறை பூரணம் - முழு நிறைவு. புராணன்- முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொருளானவன். (23) (அறுசீரடியாசிரியவிருத்தம்) வட்டவாண்1 மதிகண் டார்க்கு 2முவாக்கடன் மானமாண்ட சிட்டரா முனிவர் காளைத் தேசிக வடிவு நோக்கி ஒட்டறா வுவகை வெள்ள மேற்கொள வுருத்த கூற்றை அட்டதா மரைதஞ் சென்னிக் கணிமல ராகத் தாழ்ந்தார். (இ-ள்.) உவா வட்டம் வாள் மதி கண்டு ஆர்க்கும் கடல்மான - உவா நாளிலே வட்டமாகிய ஒள்ளிய திங்களைக் கண்டுமுழங்கு கின்ற கடலை ஒப்ப, மாண்ட சிட்டராம் முனிவர் - மாட்சிமைப் பட்ட பெரியோராகிய முனிவர்கள், காளைத் தேசிக வடிவம் நோக்கி - காளைப் பருவமுடைய ஆசான் வடிவத்தைக் கண்டு, ஒட்டு அறா உவகை வெள்ளம் மேற்கொள - வற்றுதலில்லாத மகிழ்ச்சிவெள்ளம் மேலெழ, உருத்த கூற்றை அட்ட தாமரை - வெகுண்டெழுந்த கூற்றுவனை உதைத்தருளிய திருவடித் தாமரை, தம் சென்னிக்கு அணிமலராகத் தாழ்ந்தார் - தங்கள் முடிக்குச் சூடும் மலராக வணங்கினார்கள் எ-று. உவாமதி கண்டார்க்கும் கடல் என மாறுக. சிட்டர் - பெரியோர். உருத்த - மார்க்கண்டியைச் சினந்த. கூற்றையட்ட என்னும் அடையால் தாமரை திருவடியை உணர்த்திற்று. தாமரை அணி மலராக அதனை வணங்கினார்கள் என்க. (24) அளவறு கலைகட் கெல்லா முறைவிட மாகி வேத விளைபொரு ளாகி நின்ற வேதிய சரண மென்ற வளைவுறு மனத்தி னாரைத் தேசிக வள்ள னோக்கிப் பளகறு தவத்தீர் வேட்கை யாதெனப் பணிந்து சொல்வார். (இ-ள்.) அளவு அறு கலைகட்கு எல்லாம் உறைவிடம் ஆகி - அளவிறந்த கலைக ளெல்லாவற்றிற்கும் உறையுளாகி, வேத விளைபொருள் ஆகி நின்ற வேதிய சரணம் என்ற - வேதங்களில் விளையும் பொருளாய் நின்ற வேதியனே அடைக்கலம் என்ற, வளைவு உறுமனத்தினாரை - வணக்கம் பொருந்திய மனத்தை யுடைய முனிவர்களை, வள்ளல் தேசிகன் நோக்கி - அருட் கொடையையுடைய குரவன்நோக்கி, பளகு அறு தவத்தீர் - குற்றமற்ற தவத்தினையுடைய முனிவர்களே, வேட்கை யாது என - நுங்கள் விருப்பம் யாதென்று வினவ, பணிந்து சொல்வார் - அவர்கள் வணங்கிக் கூறுகின்றார்கள் எ-று. கலைகள் எல்லாவற்றுக்கும் என உருபு பிரித்துக்கூட்டுக. எல்லா வித்தைகளும் ஈசானனிடத்தினின்றும் தோன்றியன வென்னும் உண்மை கூறியவாறு. வளை வெனினும் வணக்க மெனினும் ஒக்கும்: குற்றம் அறுதற்குக் காரணமாகிய தவமுமாம். (25) அடியரே முய்யு மாறு முகமெலா யளிக்கு மாறும் படியிலா வரத்த வேதப் பயனருள் செய்தி யென்னக் கொடியமா பாசந் தீர்ப்பான் குரவனம் முனிவ ரோடு முடிவிலா விலிங்க முன்போய்மறைப்பொருண் மொழிவதானான். (இ-ள்.) அடியரேம் உய்யுமாறும் - அடியேங்கள் உய்தி கூடும் வண்ணமும், உலகு எலாம் அளிக்குமாறு - உலகம் அனைத்தையும் ஓம்பும் வண்ணமும், படி இலா வரத்த வேதப் பயன் அருள் செய்தி என்ன - ஒப்பற்ற சிறப்பினையுடைய மறைகளின் பொருளை அருளிச் செய்வாய் என விண்ணப்பிக்க, கொடிய மா பாசம் தீர்ப்பான் குரவன் - (உயிர்களின்) மிகக் கொடிய பாசங்களைப் போக்கி யருளும் அக்குரவன், அம்முனிவரோடு - அந்த முனிவர் களுடன், முடிவு இலா இலிங்கம் முன்போய் மறைப்பொருள் மொழிவது ஆனான் - அழிவில்லாத இலிங்கத்தின் திருமுன் சென்று வேதங்களின் பொருளை அருளுவானாயினன் எ-று. அளிக்குமாறு - அளிக்கப்படுமாறும் என்றுமாம். வரத்த - மேன்மையுடைய: குறிப்புப் பெயரெச்சம். தீர்ப்பான் : பெயரெச்சப் பொருட்டாய் நின்றது; முனிவர்களின் பாசத்தைத் தீர்க்க வென்றுரைப்பாருமுளர். முடிவிலா என்றமையால் முதலுமில்லா வென்பது கொள்க. மொழிவது : தொழிற்பெயர். (26) அந்தணிர் கேண்மின் சால வருமறைப் பொருள்க ளெல்லாம் மந்தண மாகு மிந்த மறைப்பொரு ளறித றானே நந்தலில் லாத போகப் பயனுக்கு நலியும் பாச பந்தனை கழிக்கும் வீட்டின் பயனுக்குங் கருவி யாகும். (இ-ள்.) அந்தணிர் கேண்மின் - முனிவர்களே கேளுங்கள், அரு மறைப்பொருள்கள் எல்லாம் சால மந்தணம் ஆகும் - அரிய வேதங்களின் பொருள்களனைத்தும் பெரிதும் இரகசியமாகும்; இந்த மறைப்பொருள் அறிதல் தானே - இந்த வேதப்பொருளை அறிதலே, நந்தல் இல்லாத போகப் பயனுக்கும் - கெடுதலில்லாத போகப் பேற்றிற்கும், நலியும் பாச பந்தனை கழிக்கும் வீட்டின் பயனுக்கும் - வருத்துகின்ற பாச பந்தத்தைப் போக்கும் வீடு பேற்றிற்கும், கருவி ஆகும் - சாதனமாகும் எ-று. சால மந்தணம் எனக் கூட்டுக. தானே யென்பதில் ஏகாரம் தேற்றம். போகப்பயன் - போகமாகிய பயன். கழிக்கும் வீடு - கழித்தெய்தும் வீடு. வீட்டின் : இன்சாரியை அல்வழிக்கண் வந்தது. ‘மறைப்பொருள் கேட்டலாலே, நந்திடு துக்கமெல்லா நண்ணுறா தகலும் ’ எனப் பாடங் கொண்டாரு முளர். (27) உத்தம சயம்புக் குள்ளு முத்தம தரமாய் மேலாந் தத்துவ மாகு மிந்தச் சுந்தர சயம்பு லிங்கம் நித்தமாய் மறைகட் கெல்லா நிதானமாம் பொருளா யுண்மைச் சுத்தவத் துவித மான சுயம்பிர காச மாகும். (இ-ள்.) உத்தம சயம்புக் குள்ளும் உத்தம தரமாய் - உத்தமமான சுயம்புலிங்கங்களுக்குள்ளும் மேலான உத்தமமாகி, மேலாம் தத்துவம் ஆகும் இந்தச் சுந்தரசயம்புலிங்கம் - மேன்மையான தத்துவங்களின் வடிவமாகிய இந்தச்சுயம்புவாகும் சொக்கலிங்கம், நித்தமாய் - என்றும் அழியாததாய், மறைகட்கு எல்லாம் நிதானம் ஆம் பொருளாய் - வேதங்களனைத்திற்கும் ஆதி காரணமாகிய பொருளாய், உண்மைச் சுத்த அத்துவிதமான சுயம்பிர காசமாகும் - உண்மையாகிய சுத்தாத்துவிதமான சுயம்பிரகாசமாக விளங்கும் எ-று. உத்தமம் - எல்லாவற்றுள்ளும் மேம்பட்டது; அதனைப் பின்னும் சிறப்பித்து ‘உத்தமதரம்’ என்றார். அத்துவிதம் என்பதற்கு இதுவே பொருளென்பார், ‘உண்மை’ என்றார்; சுத்தம் என்றதும் இக்கருத்துப் பற்றியே யென்க. அத்துவிதம் என்பது ‘வேறன்மை’ என்னும் பொருட்டு; சிவஞானபோதம் இரண்டாஞ் சூத்திரத்தில் வரும் ‘அத்து விதமென்ற சொல்லானே ஏக மென்னில் ஏகமென்று சுட்டுவ துண்மையின் அத்துவித மென்ற சொல்லே அந்நிய நாத்தியை யுணர்த்துமாயிட்டு’ என்னும் பொழிப்பும், அதற்கு மாதவச் சிவஞானயோகிகள் தம்மதிவன்மையால் விரித்த வுரையும் நோக்குக. நிதானமதாகி, நீங்காச் சத்தியப் பொருளுமாகித் தயங்குறு மென்பர் நூலோர் எனப்பாடங்கொண்டாருமுளர்; இங்ஙனம் மிக்க வேற்றுமையுடையாய்க் காணப்படும் பாடமெல்லாம் மதுரைக் காண்ட வளவிற் பொழிப்புரை யெழுதி வெளிப்படுத்தினார் ஒருவரே கொண்டனவாகும். (28) நிறைபரா பரம்விஞ் ஞான நிராமய மென்று நூல்கள் அறைபரம் பிரம மாகு மிதனுரு வாகு மேக மறையிதன் பொருளே யிந்தச் சுந்தர வடிவா யிங்ஙன் உறைசிவ லிங்க மொன்றே யென்பர்நூ லுணர்ந்த நல்லோர். (இ-ள்.) நிறை பராபரம் விஞ்ஞானம் நிராமயம் என்று நூல்கள் அறை - எங்கும் நிறைந்த பராபரமென்றும் விஞ்ஞான மென்றும் நிராமய நூல்கள் கூறுகின்ற, பரம் பிரமமாகும் இதன் உரு - பரப் பிரமமாகிய இந்த மூர்த்தியின் திருவுருவமே, ஏக மறை ஆகும் - ஒன்றாயுள்ள வேதமாகும்; இதன் பொருள் - இந்த வேதத்தின் பொருளூம், இந்தச் சுந்தரவடிவாய் இங்ஙன் உறை சிவலிங்கமே - இந்தச் சுந்தர மூர்த்தமாய் இங்கே எழுந்தருளிய சிவலிங்கமே ஆகும்; நூல் உணர்ந்த நல்லோர் - உண்மை நூல்களைக் கற்றுணர்ந்த நல்லறிவுடையோர், ஒன்றே என்பர் - (இச்சிவலிங்கமும் வேதமும்) வேறல்ல என்று கூறுவர் எ-று. நிராமயம் - நோயின்மை. பராபரம் உண்மையையும், விஞ்ஞானம் அறிவையும், நிராமயம் ஆனந்தத்தையும் குறிப்பனவாகக் கொள்க. உருவேயாகும் என்றும், பொருளும் சிவலிங்கமேயாகும் என்றும் ஏகாரத்தையும் ஆகும் என்பதனையும் பிரித்துச் கூட்டியுரைக்க. ஒன்றே யென்ற கருத்தினை, “ மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் மனத்திடை மன்னிய மன்னே” என்னும் திருவாசகம் வலியுறுத்துதல் காண்க. முற்கூறப்பட்டவர் இச்செய்யுள் முழுவதையும் மாற்றி வேறுபாடங் கொண்டனர். (29) ஆகையான் மறையு மொன்றே யருமறைப் பொருளுமொன்றே சாகையா லனந்த மாகித் தழைத்ததச் சாகை யெல்லாம் ஓகையா லிவனை யேத்து முலகுத யாதிக் கிந்த ஏகனா ணையினான் மூன்று மூர்த்தியா யிருந்தா னன்றே. (இ-ள்.) ஆகையால் ‘மறையும் ஒன்றே அருமறைப் பொருளும்’ ஒன்றே - ஆதலால் வேதமும் ஒன்றே அரிய அவ்வேதத்தின் பொருளும் ஒன்றே, சாகையால் அனந்தமாகித் தழைத்தது - (அவ்வேதம்) சாகைகளால் அளவிறந்த பேதமாகித் தழைத்துள்ளது; அ சாகை எல்லாம் ஓகையால் இவனை ஏத்தும் - அந்தச் சாகை களனைத்தும் மகிழ்ச்சியோடு இவனையே துதிக்கும்; உலகு உதய ஆதிக்கு இந்த ஏகன் ஆணையினால் மூன்று மூர்த்தியாய் இருந்தான் - உலகத்தின் தோற்ற முதலிய மூன்றுதொழிற்கும் இந்த ஒருவனாகிய சொக்கலிங்க மூர்த்தி (தனது) சத்தியால் மூன்று மூர்த்தியாய் இருந்தருளினான் எ-று. ஆகையால் மறையு மொன்றே அருமறைப் பொருளு மொன்றே என்றது மேற் செய்யுளிற் கூறியதனை அநுவதித்தவாறு; வேதமும் ஒன்றே இறைவனும் ஒருவனே என்னும் பொருள் இரட்டுற மொழிதலாற் கொள்க. உதயாதி - தோற்றம் நிலை இறுதி என்பன; தோற்றுவித்தல் முதலியவற்றுக்கு அயன் மால் உருத்திரனாகி யிருந்தானென்க. ஏகனென்பது இறைவனுக்கோர் பெயர்; “ ஏக னநேக னிருள் கரும மாயையிரண் டாகவிதை றாதியில்” என்று திருவருட்பயன் கூறுதலுங் காண்க. அன்று, ஏ : அசைகள். இச்செய்யுளையும் திரித்துப் பாடங்கொண்டனர். (30) மலர்மக னாகி மூன்று வையமும் படைத்து மாலாய் அலைவற நிறுத்தி முக்க ணாதியா யழித்தம் மூவர் தலைவனாய்ப் பரமா காச சரீரியாய் முதலீ றின்றித் தொலைவருஞ் சோதி யாமிச் சுந்தர விலிங்கந் தன்னில். (இ-ள்.) மலர் மகனாகி மூன்று வையமும் படைத்துப் - பிரமனாகி மூன்றுலகங்களையும் ஆக்கி. மாலாய் அலைவு அறநிறுத்தி - திருமாலாகி (உயிர்கள்) வருத்தமற அளித்து, முக்கண் ஆதியாய் அழித்து - மூன்று கண்களையுடைய உருத்திரனாகி அழித்து, அம் மூவர் தலைவனாய் - அந்த மூன்று மூர்த்திகளுக்குந் தலைவனாகியும், பரமாகாச சரீரியாய் - சிதாகாயமே திருமேனியாயுள்ளவனாகியும், முதல் ஈறு இன்றித் தொலைவு அருஞ் சோதியாம் - ஆதி அந்த மில்லாது என்றுங்கெடாத ஒளிவடிவாகியு முள்ள, இ சுந்தர இலிங்கம் தன்னில் - இந்தச் சொக்கலிங்கமூர்த்தி யிடத்தில் எ-று. நான்முகன் திருமாலினும் சங்காரத் தொழில் நடத்தும் உருத்திரனுக்கு முதன்மை கூறுவார், ‘முக்கணாதியாய்’ என்றார். மூவரிடத்து நின்றும் முத்தொழில் நடாத்துபவன் அம்மூவர்க்கும் தலைவனாகிய முதல்வன் ஒருவனே யாமென்பார், ‘ஆகி’ யென உபசரித்துக்கூறினார் மூவர் தலைவனாதலை ‘மூவர்கோனாய் நின்ற முதல்வன்’ என்னும் திருவாசகத்தானும் அறிக. பரம ஆகாசம் - ஞான மாகிய சூக்கும ஆகாயம்; வடமொழி நெடிற்சந்தி. ஞானமே திருவுருவா யென்க. (31) (எழுசீரடி யாசிரிய விருத்தம்) ஆதியி லான்ம தத்துவ மான வலர்மகன் பாகமு நடுவில் நீதியில் விச்சா தத்துவ மான நெடியவன் பாகமு முடிவில்1 ஓதிய சிவதத் துவமென லான வுருத்திர பாகமு முதிக்கும் பேதியிம் மூன்றி லெண்ணிறத் துவங்கள் பிறக்குமிம் மூன்றினு முறையால். (இ-ள்.) ஆதியில் ஆன்மதத்துவம் ஆன அலர்மகன் பாகமும் - முதலில் ஆன்ம தத்துவமான பிரமன் பாகமும், நடுவில் நீதியில் விச்சாதத்துவமான நெடியவன் பாகமும் - இடையில் முறைப்படி வித்தியாதத்துவமான திருமாலின் பாகமும், முடிவில் ஓதிய சிவதத்துவம் எனலான உருத்திர பாகமும் - இறுதியில் சிறப்பித் தோதப்பட்ட சிவதத்துவம் என்னலான உருத்திர பாகமும், உதிக்கும் - தோன்றும், பேதி இ மூன்றில் - இங்ஙனம் வேறுபட்ட இந்த மூவகைத் தத்துவங்களில், எண் இல் தத்துவங்கள் பிறக்கும் - அளவிறந்தனவாய ஏனைத் தத்துவங்கள் தோன்றும்; இம் மூன்றினும் முறையால் - (இன்னும்) இந்த மூன்று தத்துவங்களினும் முறைப்படி எ-று. ஆதி - அடிப்பகுதி. முடிவு - மேற்பகுதி. ஆன்ம தத்துவம் - பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன் மேந்திரியம் ஐந்து, அந்தக் கரணம் நான்கு ஆகிய இருபத்து நான்கு மாம். வித்தியா தத்துவம் - காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை ஆகிய ஏழுமாம். சிவ தத்துவம் - சுத்த வித்தை, ஈச்சுரம், சாதாக்கியம் சத்தி, சிவம் ஆகிய ஐந்துமாம். ஓதிய - ஏனைத் தத்துவங்களினும் சிறந்தனவென்றோதப்பட்ட; “ வித்தையோ டீசர் சாதாக் கியஞ்சத்தி சிவங்க ளைந்தும் சுத்ததத் துவஞ்சி வன்றன் சுதந்தர வடிவமாகும் ” என்று சிவஞானசித்தியார் கூறுதல் காண்க. பேதி - பேதித்த; வேறுபட்ட. இம்மூன்று என்றது சமட்டி தத்துவங்களை யெனவும், எண்ணில் தத்துவங்கள் என்றது ஆன்மாக்கள் தோன்றும் வெவ்வேறாய தத்துவங்களை யெனவும் கொள்க. ஈற்றடி முழுதும் மாற்றியமைத்தனர் ஒருவர். (32) ஓதரு மகார முகாரமே மகார முதித்திடும் பிரணவம் விந்து நாதமோ டுதிக்கும் வியத்ததா ரகத்தி னல்லகா யத்திரி மூன்று பேதமாம் பதத்தாற் பிறக்குமிக் காயத் திரியிரு பேதமாம் பேதம் யாதெனிற் சமட்டி வியட்டியென் றிரண்டு மேதுவாம் வேட்டவைக் கெல்லாம். (இ-ள்.) ஓது அரும் அகாரம் உகாரம் மகாரம் உதித்திடும் - ஓதுதற்கு அரிய அகாரமும் உகாரமும் மகாரமும் தோன்றும்; பிரணவம் விந்து நாதமோடு உதிக்கும் - பிரணவமானது விந்து நாதங்களோடும் அவை கூடுதலாற் றோன்றும்; வியத்த தாரகத்தில் - சிறந்த அப்பிரணவத்தில், நல்ல காயத்திரி மூன்றுபேதமாம் பதத்தால் பிறக்கும் - நன்மை தருகின்ற காயத்திரி மூன்று பேதமாகிய பதங்களாலேதோன்றும்; இக்காயத்திரி இருபேதம் ஆம் - இந்தக் காயத்திரி இரண்டு வேற்றுமையாகும்; பேதம் யாது எனில் - அவ்வேற்றுமை என்னவென்றால், சமட்டி வியட்டி யென்பனவாம்; என்ற இரண்டும் வேட்டவைக்கு எல்லாம் ஏதுவாம் - என்று கூறப்பட்ட இவ்விரண்டும் விரும்பிய பொருள்களனைத்தையும் பெறுதற்குக் காரணங்களாகும் எ-று. அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் என்னும் ஐந்துங் கூடிப் பிரணவமாகும்; இவை சூக்கும பஞ்சாக்கரம் எனவும் பெறும்; “ அகார வுகார மகங்காரம் புத்தி மகார மனஞ்சித்தம் விந்துப் - பகாதிவற்றை நாத முளவடிவா நாடிற் பிரணவமாம் போதங் கடற்றிரையே போன்று.” என்னும் சிவஞானபோத வெண்பாவும், அதற்கு மாதவச் சிவஞான யோகிகள் உரைத்த விரிவுரையும் ஈண்டு உணரற்பாலன. வியத்த - மேன்மையுடைய. தாரகம் - பிரணவம். மூன்று வாக்கிய வடிவமான பதங்களாலென்க. பேதமென்னும் பொதுமை பற்றி ‘யாதெனில்’ என ஒருமை கூறினார். சமட்டி, வியட்டி என்பவற்றின் பொருள் முன் உரைக்கப்பட்டது. முற்கூறிய பதிப்பாளர் இச் செய்யுளை முழுதும் மாற்றியமைத்தனர். (33) இன்னவை யிரண்டு மிவனருள் வலியா லீன்றநான் மறையையந் நான்கும் பின்னிவ னருளா லளவில வான பிரணவ மாதி மந்திரமும் அன்னவா றான தாரகத் தகார மாதியக் கரங்களு முதித்த சொன்னவக் கரத்திற் சிவாகம நூலிச் சுரவர னடுமுகத் துதித்த. (இ-ள்.) இன்னவை இரண்டும் இவன் அருள் வலியால் ஈன்ற நான் மறையை - இவை இரண்டும் இந்தச் சொக்கலிங்க மூர்த்தியின் திருவருட் சத்தியால் நான்கு வேதங்களையும் தந்தன; அ நான்கும் - அந்த நான்கு வேதங்களும், பின் - பின்பு, இவன் அருளால் அளவு இல ஆன - இவன் திருவருளால் அளவிறந்தனவாய் விரிந்தன; பிரணவம் ஆதி மந்திரம் அன்னவாறு ஆன - பிரணவத்தை முதலாக வுடைய மந்திரங்களும் அவ்வாறே விரிந்தன. தாரகத்து அகாரம் ஆதி அக்கரங்களும் உதித்த - (இன்னும்) அப் பிரணவத்தில் அகர முதலிய எழுத்துக்களெல்லாம் தோன்றின; சொன்ன அக்கரத்தின் சிவாகம நூல் இச்சுரவரன் நடு முகத்து உதித்த - கூறிய அவ்வெழுத்துக்களினாலே சிவாகம நூல் இச்சொக்கலிங்க மூர்த்தியின் நடுமுகத்தில் தோன்றின எ-று. ஈன்ற, உதித்த என்பன அன்சாரியை பெறாது வந்த பலவின்பால் முற்று. ஆன, ஆயின வென்பதன் விகாரம். சுர வரன் - தேவர்களில் மேலாயவன். நடு முகம் - ஈசானமுகம். சிவாகமம் - காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், சீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், இரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோக்தம், பாரமேச்சுரம், கிரணம், வாதுளம் என இருபத்தெட்டாம்; இவைதனித்தனி ஞானபாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என நான்கு பாதங்களை உடையனவாம். இச் செய்யுளையும் பிறர் மாற்றியமைத்தனர். (34) கீட்டிசை முகத்தொன் றடுத்தநா லைந்திற் கிளைத்ததா லிருக்கது தென்பால் ஈட்டிய விரண்டாம் வேதநூ றுருவோ டெழுந்தது வடதிசை முகத்தில் நீட்டிய சாம மாயிர முகத்தா னிமிர்ந்தது குடதிசை முகத்தில் நாட்டிய வொன்ப துருவொடு கிளைத்து நடந்தது நான்கதா மறையே. (இ-ள்.) கீழ்த்திசை முகத்து ஒன்று அடுத்த நாலைந்தில் இருக்கு கிளைத்தது - தற்புருட முகத்திலே இருபத்தொரு சாகை களோடு இருக்கு வேதம் தோன்றியது; தென்பால் இரண்டாம் வேதம் ஈட்டிய நூறு உருவோடு எழுந்தது - அகோர முகத்தில் யசுர்வேதம் நெருங்கிய நூறு சாகைகளோடும் தோன்றியது; வடதிசை முகத்தில் சாமம் நீட்டிய ஆயிரம் முகத்தால் நிமிந்தது - வாமதேவ முகத்தில் சாமவேதம் நீண்ட ஆயிரம் சாகைகளோடும் தோன்றியது; குடதிசை முகத்தில் நாட்டிய ஒன்பது உருவொடு கிளைத்து நான்காம்மறை நடந்தது - சத்தியோசாத முகத்தில் நாட்டப் பட்ட ஒன்பது சாகைகளோடுந் தோன்றி அதர்வவேதம் நடந்தது எ-று. கீழ்த்திசை என்பது கீட்டிசை யென மருவிற்று. ஒன்றடுத்த நாலைந்து - இருபத்தொன்று. ஈண்டிய, நீண்ட என்பன ஈட்டிய, நீட்டிய என விகாரமாயின. இருக்கது, நான்கது என்பவற்றில் அது பகுதிப்பொருள் விகுதி. ஆல், ஆம், ஏ என்பன அசைகள். (35) அருமறை நால்வே றாகையால் வருண மாச்சிர மங்களு நான்காந் தருமம்யா காதி கருமமு மறையின் றகைமையிற் றோன்றின மறையுங் கருமநூன் ஞான நூலென விரண்டாங் கருமநூ லிவனருச் சனைக்கு1 வரும்வினை யுணர்த்து ஞானநூ லிவன்றன் வடிவிலா வடிவினை யுணர்த்தும். (இ-ள்.) அருமறை நால் வேறு ஆகையால் - அரிய வேதங்கள் நான்குவகை ஆகலின், வருணம் ஆச்சிரமங்களும் நான்காம் - வருணங்களும் நிலைகளும் தனித்தனி நான்கு ஆகும்; தருமம் யாகாதி கருமமும் மறையின் தகைமையின் தோன்றின - தருமங் களும் வேள்வி முதலிய வினைகளும் வேதங்களின் நெறியிலே தோன்றின; மறையும் கருமநூல் ஞானநூல் என இரண்டாம் - அவ்வேதங்களும் கரும காண்டமும் ஞானகாண்டமுமென இரண்டு வகைப்படும்; கருமநூல் இவன் அருச்சனைக்கு வரும்வினை உணர்த்தும் - கரும காண்டமானது இச்சொக்கலிங்கமூர்த்தியின் பூசனைக்குரிய வினைகளை அறிவிக்கும்; ஞானநூல் இவன் தன் வடிவிலா வடிவினை உணர்த்தும் - ஞான காண்டமானது இவனது சச்சிதானந்த வடிவத்தை அறிவிக்கும் எ-று. ஆச்சிரமம் - நிலை; அது பிரமசரியம், கிருகத்தம், வானப் பிரத்தம், சன்னியாசம் என நான்காம். தகைமை - கூறுபாடு. நூல் என்றது காண்டத்தை. வடிவிலா வடிவு - சொரூப மெனப்படும் சச்சிதானந்த வடிவு; நிட்களமுமாம். (36) முதனுகர் நீராற்சினை குழைத் 2 தாங்கிம் முழுமுதற் கருத்துநல் லவியின் பதமிவன் வடிவப் பண்ணவர் பிறர்க்குந் திருத்தியாம் பரனிவன் முகத்தின் விதமுறு நித்த மாதிமூ வினைக்கும் வேண்டியாங் 3 குலகவர் போகங் கதிபெற வியற்றுஞ் சிவார்ச்சனை வினைக்குங் காரண மிச்சிவ கோசம். (இ-ள்.) முதல் நுகர் நீரால் சினை குழைத்தாங்கு - வேர் நுகரும் நீரினாலே கிளைகள் தளிர்த்தாற்போல, இம்முழு முதற்கு அருத்தும் நல் அவியின் பதம் - இம்முழுமுதற் கடவுளுக்கு ஊட்டும் நல்ல அவியுணவு, இவன் வடிவப் பண்ணவர் பிறர்க்கும் திருத்தியாம் - இவ்விறைவனது வடிவமாகிய தேவர்கள் பிறருக்கும் நிறைவினைச் செய்யும்; பரன் இவன் முகத்தின் - இப்பரமன் திருமுன்னர், விதம் உறுநித்தம் ஆதி மூவினைக்கும் - (இயற்றும்) வெவ்வேறு வகைப் பட்ட நித்திய முதலிய மூன்று வினைகளுக்கும், உலகவர் போகம் கதிவேண்டியாங்கு பெற இயற்றும் சிவார்ச்சனை வினைக்கும் - உலகத்தவர் இன்பப் பேற்றினையும் வீடு பேற்றினையும் வேண்டிய வண்ணமே பெறும் பொருட்டுச் செய்யும் சிவார்ச்சனைக்கும், இச் சிவகோசம் காரணம் - இச்சிவலிங்கமே காரணமாயுள்ளது எ-று. முதல் நுகர் நீரால் சினை குழைத்தாங்கு என்னும் இவ்வுவமை, முன் மூர்த்தி விசேடப் படலத்திலும், “ வேரூட்டு நீர்ப்போய் மற்றைய சினைகளெல்லாந் தழைவிக்கு மரத்தின்” என இவ்வாசிரியராற் கூறப்பட்டது. அவியின் பதம் - அவியாகிய பதம்; இன் : சாரியை. ஏனைத்தேவரெல்லாம் உடலாக இவன் உயிராக நிற்றலின் ‘பிறர்க்குந் திருத்தியாம்’ என்றார். மூவினை - நித்தியம், நைமித்தியம், காமியம் என்பன. போகமும் கதியும் பெற எனவிரிக்க. அருச்சனையாகிய வினை. சிவகோசம் - சிவலிங்கம். இச்செய்யுளின் பிற்பகுதி பிறரால் மாற்றி யுரைக்கப்பட்டது. (37) மறைபல முகங்கொண் டலறிவா யிளைத்து மயங்கவே றகண்டபூ ரணமாய் நிறைபரம் பிரம மாகுமிக் குறியைக் கருமநன் னெறிவழாப் பூசை முறையினு ஞான நெறியினிப் பொருளை யருளினான் முயக்கற முயங்கும் அறிவினுந் தெளிவ துமக்குநா முரைத்த அருமறைப் பொருள்பிறர்க் கரிதால். (இ-ள்.) மறை பல முகம் கொண்டு அலறி வாய் இளைத்து மயங்க - வேதங்கள் பல முகங்களைக்கொண்டு (தேடியு முணராது) கதறி வாய் சோர்ந்து மயங்க, வேறு அகண்ட பூரணமாய் நிறை பரம்பிரமமாகும் இக்குறியை - (அவற்றிற்கு) வேறாய் அகண்ட பரிபூரணமாய் நிறைந்த சொரூப சிவமாகிய இச்சிவலிங்கத்தை, நல் கருமம் நெறிவழாப் பூசை முறையினும் - நல்ல கரும காண்டத்திற் கூறிய நெறியினின்றுந் தவறாத பூசை முறையினாலும், ஞான நெறியின் - ஞான காண்டத்திற் கூறிய நெறியினின்று, அருளினால் இப்பொருளை முயக்கு அறமுயங்கும் அறிவினும் - திருவருளால் இதனைக் கலவாது கலக்கும் உணர்வினாலும், தெளிவது - தெளிக; உமக்கு நாம் உரைத்த அருமறைப் பொருள் - நுங்கட்கு நா முணர்த்திய அரிய வேதங்களின் உட்கிடைப் பொருள், பிறர்க்கு அரிது - ஏனையோர்க்கு அறிதற்கரிது எ-று. முகம் என்றது சாகையினை. சொரூப சிவமே இவ்விலிங்க மாகவுள்ள தென்றார். திருவருளா லன்றி உணர்தல் கூடா தென்பார் ‘அருளினால் ’ என்றார் முயக்கற முயங்கல் - ஒன்று மாகாது வேறு மாகாது கலத்தல்; சிவோகம் பாவனை யெனலுமாம். தெளிவது : வியங்கோள். ஆல் : அசை. உறை பரம் என்றும், உறுகன்ம நெறிவழாப் பூசை என்றும் பாடங் கொண்டார் பிறர். (38) (அறுசீரடியாசிரியவிருத்தம்) கருமத்தான் ஞான முண்டாங் கருமத்தைச் சித்த சுத்தி தருமத்தா லிகந்த சித்த சுத்தியைத் தரும நல்கும் அருமைத்தாந் தருமத் தாலே சாந்தியுண் டாகு மாண்ட பெருமைத்தாஞ் சாந்தி யாலே பிறப்பதட் டாங்க யோகம். (இ-ள்.) கருமத்தால் ஞானம் உண்டாம் - நல்வினையினாலே ஞானம் கைகூடும்; கருமத்தை சித்த சுத்தி தரும் - அந்நவ்வினையை உளத்தூய்மை கொடுக்கும்; மத்தால் இகந்த சித்த சுத்தியைத் தருமம் நல்கும் - மயக்கத்தினின்றும் நீங்கிய உளத் தூய்மையை அறம் கொடுக்கும்; அருமைத்து ஆம் தருமத்தாலே சாந்தி உண்டாகும் - அருமையையுடையதாகிய அவ்வறத்தாலே சாந்தி உண்டாகும்; மாண்ட பெருமைத்து ஆம் சாந்தியாலே அட்டாங்க யோகம் பிறப்பது - மாட்சிமைப்பட்ட பெருமையை யுடைய அச் சாந்தியி னாலே அட்டாங்கயோகந் தோன்றும் எ-று. கருமம் என்றது சிவபூசனையை என்றும், தருமம் என்றது சிவபுண்ணியத்தை யென்றும் கொள்க. கருமத்தால் ஞானமுண்டா மென்பது, “ கிரியையென மருவுமவை யாவுஞானங் கிடைத்தற்கு நிமித்தம் ” எனச் சிவப்பிரகாசம் கூறுதலானறிக; சிவனை நோக்கிச் செய்யும் உண்மைச் சரியை கிரியை யோகங்களினாலே ஞான முண்டா மென்பது கருத்தாகக் கொள்க, மதத்தால் என்பது விகாரமாயிற்று; ஆல் இன்னுருபின் பொருளில் வந்தது. சாந்தி - அகக்கரண அடக்கம். அட்டாங்கயோகம் முன் உரைத்தமை காண்க. சிவபுண்ணியத் தால் சித்த சுத்தியும், அதனால் சிவபூசனையாகிய கிரியையும், அதனால் சாந்தியும், அதனால் யோகமும், அதனால் ஞானமும் முறையே உண்டாமென்பது இச்செய்யுளின் கருத்தாகும்: “ நித்தியநை மித்தியகன் மங்கணிட்கா மியமாகப் பத்தியுறச் செய்வதனாற் பாவமெலா நாசமுறும் ஒத்தியன்மற் றதனானே யொழியாம லுறுசித்த சுத்தியுள தாமென்று சொல்லுமால் மறையனைத்தும்” என்னும் சூதசங்கிதைச் செய்யுள் இங்கு உணர்தற் பாலது. இது முதல் நான்கு செய்யுட்களையும் பிறர் பாடம் மாற்றி யமைத்தனர். (39) கிரியையான் ஞானந் தன்னாற் கிளர்சிவ பத்தி பூசை தரிசனஞ் சைவ லிங்க தாபனஞ் செய்த லீசற் குரியமெய் யன்பர் பூசை யுருத்திர சின்னந் தாங்கல் அரியதே சிகன்பாற் பத்தி யனைத்தையுந் தெரிய லாகும். (இ-ள்.) கிரியையால் ஞானம் தன்னால் - கிரியையினாலும் ஞானத்தினாலும், கிளர் சிவபத்தி பூசை தரிசனம் - விளக்கந்தரும் சிவபத்தியும் சிவபூசையும் சிவதரிசனமும், சைவலிங்க தாபனம் செய்தல் - சிவலிங்கம் தாபித்தலும், ஈசற்கு உரிய மெய் அன்பர்பூசை - சிவபெருமானுக்குரிய மெய்யடியார் பூசையும், உருத்திர சின்னம் தாங்கல் - சிவசின்னந்தாங்குதலும். அரிய தேசிகன் பால் பத்தி - அரிய குருபத்தியும் ஆகிய இவை, அனைத்தையும் தெரியலாகும் - எல்லாவற்றையும் அறியலாகும் எ-று. ஞானத்தாற் சீவன் முத்தரானவர்களும் பாச வாசனை தாக் காமைப் பொருட்டுத் திருவைந் தெழுத்தோதலும், சிவனடியார் திரு வேடத்தையும் திருக்கோயிலையும் சிவனெனவே தேறி வழி படுதலும் செய்வராகலின் ‘ஞானந்தன்னால்’ என்றுங் கூறினார் வேதத்தின் கரும காண்டத்தாலும் ஞான காண்டத்தாலும் என்றும், ஆகமத்தின் கிரியாபாதத்தாலும் ஞான பாதத்தாலும் என்றும் உரைத்தலுமாம். (40) மறைவழி மதங்கட் கெல்லா மறைபிர மாணம் பின்சென் றறைதரு மிருதி யெல்லாம் வைக்கனு குணமா மின்ன முறையினான் மார்த்த மென்று மொழிவதம் மார்த்தஞ் சேர்ந்த துறைகள்வை திகமா மேலாச் சொல்வதிச் சுத்த மார்க்கம். (இ-ள்.) மறைவழி மதங்கட்கு எல்லாம் மறை பிரமாணம் - வேதத்தின் வழிப்பட்ட மதங்களனைத்திற்கும் வேதம் பிரமாண மாகும்; பின்சென்று அறைதரும் மிகுதி எல்லாம் அவைக்கு அனுகுணமாம் - அவ்வேதத்தின் வழியேசென்று அதற்குப் பொருந்தக் கூறும் மிருதிகளனைத்தும் அம்மதங்களுக்கு ஏற்பனவாகும்; இன்ன முறையினால் மார்த்தம் என்று மொழிவது - இங்ஙனம் வேதத்திற்குப் பொருந்தக் கூறும் முறையினாலே அம்மிருதிக் கொள்கைகள் மார்த்தம் என்று கூறப்படும்; அம்மார்த்தம் சேர்ந்த துறைகள் வைதிகம் ஆம் - அந்த மார்த்தத்தைத் தழுவிய வேத நெறிகள் வைதிகம் என்று கூறப்படும்; மேலாச் சொல்வது இச் சுத்த மார்க்கம் - அவற்றுள் மேன்மை யுடையத்தாகச் சொல்லப்படுவது இந்தச் சுத்த சன்மார்க்க மாகிய வைதிகசைவமாகும் எ-று. ‘மறைவழி மதங்கட்கெல்லாம் மறை பிரமாண ’ என்றமையால் வேதம் பொதுநூல் என்பதும், வேதாந்தத் தெளிவாகிய சைவ சித்தாந்தங் கூறும் சிவாகமம் சிறப்பு நூல் என்பதும் பெறப்படும்; “ வேதநூல் சைவநூ லென்றிரண்டே நூல்கள் வேறுரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்கள்” என்றும் “ மிருதிபுராணங் கலைகண் மற்றுமெல்லாம் மெய்ந்நூலின் வழிபுடையாம்” என்றும் சிவஞானசித்தியார் கூறுவன நோக்கற்பாலன. ‘பின்சென்று அறைதரும்’ என்றமையால் மிருதிகளுள்ளும் வேதத்திற்கு முரணாகாதவையே கொள்ளற்பாலன வென்பது பெற்றாம். அநுகுணம் - பொருந்துவது, உதவியாவது. மார்த்த மென்றும் ஓர் பெயர் கூறுவது என்க. சுத்தமார்க்கம் என்றது வைதிக சைவத்தை; இதனை, “ சன்மார்க்கஞ் சகலகலை புராண வேத சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவு முணர்ந்து பன்மார்க்கப் பொருள் பலவுங் கீழாக மேலாம் பதிபசுபா சந்தெரித்துப் பரசிவனைக் காட்டும்” என்னும் சித்தியார் அருண்மொழியாலும், “ அந்தோவி ததிசயமிச் சமயம் போலின் றறிஞரெல்லா நடுவறிய வணிமா வாதி வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கு மற்று மற்றும் இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும் இதுவன்றித் தாயகம்வே றில்லை யில்லை சந்தான கற்பகம்போ லருளைக் காட்டத் தக்கநெறி யிந்நெறியே தான்சன் மார்க்கம் ”” என்னும் தாயுமானசுவாமிகள் திருப்பாட்டாலும் தெளிக. (41) (எழுசீரடி யாசிரிய விருத்தம்) தெருட்பெறு போகம் வீடுகா ரணமாய்ச் சிவமய மாமறைப் பொருளை இருட்கெட வுரைத்தே மிப்பொருட் கதிக மில்லையிப் பொருளெலா முமக்கு மருட்கெடத் தெளிவ தாகென வினைய வழிவழா மாதவர் புறத்தை அருட்கையால் தடவி யிலிங்கத்துட் புகுந்தா னருள்பழுத் தன்னதே சிகனே. (இ-ள்.) தெருள் பெறு போகம் வீடு காரணமாய் - தெளிவு பெற்ற போகத்திற்கும் வீட்டிற்கும் காரணமாகி, சிவமயமாம் மறைப்பொருளை - சிவமயமாகிய மறைகளின் பொருளை, இருள் கெட உரைத்தேம் - அறியாமை நீங்கக்கூறினேம்; இ பொருட்கு அதிகம் இல்லை - (நாம் கூறிய) இந்தப் பொருளுக்கு மேலான பொருள் இல்லை; இ பொருள் எல்லாம் உமக்கு மருள்கெட தெளிவது ஆகென - இப்பொருளனைத்தும் நுமக்கு மயக்கந்தீர விளங்குவதாக என்று, அருள் பழுத்தன்ன தேசிகன் - அருள் கனிந்தா லொத்த வடிவத்தையுடைய சிவபெருமானாகிய குரவன், இனைய வழிவழா மாதவர் புறத்தை - இந்த வழியினின்றும் வழுவாத முனிவர்கள் முதுகை, அருள் கையால்தடவி இலிங்கத்துள் புகுந்தான் - அருளாகிய தமது திருக்கரத்தாலே தடவிச் சிவலிங்கத்துட் புகுந்தருளினான் எ-று. போகத்திற்கும் வீட்டிற்கும் என விரிக்க. தெளிவது : பன்மையி லொருமை வந்தது. ஆகென: விகாரம். ‘அரன்றன் கரசரணாதி சாங்கம் தருமருள்’ என்பதனால், அருளாகிய கை என உரைக்கப் பட்டது. பழுத்தாலன்ன என்பது தொக்கது. (42) ஆகச் செய்யுள் - 1193. மாணிக்கம்விற்ற படலம் (கலி நிலைத்துறை) சுகந்த வார்பொழின் மதுரையெம் பிரான்றன துணைத்தாள் உகந்த வாவறு கண்ணுவ முனிமுத லோதும் அகந்த வாதபே ரன்பருக் கருமறைப் பொருளைப் பகர்ந்த வாறிது மாணிக்கம் பகர்ந்தவா பகர்வாம். (இ-ள்.) சுகந்தம் வார் பொழில் மதுரை எம்பிரான் - நறுமண முடைய நெடிய சோலைகள் சூழ்ந்த மதுரைப்பதியில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானாகிய சோமசுந்தரக்கடவுள், தன துணைத் தாள் உகந்து அவா அறு கண்ணுவ முனி முதல் ஓதும் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும் பற்றி (யான் என தென்னும் இருவகைப்) பற்றும் நீங்கிய கண்ணுவர் முதலாகக் கூறப்படும், அகம் தவாதபேர் அன்பருக்கு - உள்ளத்தினீங்காத பெரிய அன்பினையுடைய முனிவர்களுக்கு, அருமறைப் பொருளைப் பகர்ந்தவாறு இது - அரிய வேதங்களின் பொருளைக் கூறிய திருவிளையாடல் இதுவாகும்; மாணிக்கம் பகர்ந்தவா பகர்வாம் - (இனி அப்பெருமான்) மாணிக்கம் விற்ற திருவிளையாடலைக் கூறுவாம் எ-று. சுகந்தம் - நன்மணம். தன் : அகரம் ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபு. உகந்து - விரும்பி; ஈண்டு விரும்பிப்பற்றி யென்னும் பொருட்டு; “ முதல்வன் பாதமே பற்றாநின் றாரைப் பற்றா பாவமே ” என்னும் தமிழ்மறை சிந்திக்கற்பாலது. ஓதப்படும் அன்பருக்கு என்க. தவாத என்னும் பெயரெச்சம் அன்பர்என்பதன் பகுதியைக்கொண்டு முடியும். பகர்தல் - விற்றல், கூறுதல். பகர்ந்தவா : ஈறு தொக்கது. (1) அன்ன நாள்வயின் வீரபாண் டியற்கணங் கனைய மின்ன னாருளைம் போகமும் விளைநில மனைய பொன்ன னார்பெறு காளைய ரைங்கணைப் புத்தேள் என்ன வீறினார் வான்பயிர்க் கெழுகளை யென்ன. (இ-ள்.) அன்ன நாள் வயின் - அக்காலத்திலே, வீரபாண்டியற்கு அணங்கு அனைய மின்னனாருள் - வீரபாண்டியனுக்குத் தெய்வ மகள் போலும் மகளிருள், ஐம்போகமும் விளை நிலம் அனைய பொன் அனார் - ஐந்து போகங்களும் விளைகின்ற நிலத்தை யொத்த காமக் கிழத்தியர், பெறு காளையர் - பெற்ற புதல்வர்கள், வான் பயிர்க்கு எழு களை என்ன - சிறந்த பயனைத் தரும் பயிருக்கு மாறாக வளர்கின்ற களைபோல, ஐங்கணைப் புத்தேள் என்ன வீறினார் - ஐந்து பாணங்களையுடைய மதவேள் என்று கூறுமாறு வளர்ந்தனர் எ-று. மின் அனார் - மின்னை யொத்தவர்; பொன் அனார் - திருமகளை யொத்தவர்; இரண்டும் கிழத்தியர் என்னும் பெயர் மாத்திரமாய் நின்றன. மனைவியையும் உளப்படுத்தி ‘மின்னனாருள்’ என்றார். பொன்னனார் காமக் கிழத்திய ரென்பதனைப் பின் ஏழாஞ் செய்யுளிற் கூறுவதானறிக. ஐம்போகம் - ஐம்புல இன்பங்கள்; “ கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள”” (திருக்குறள் - 1101) என முப்பானூல் கூறுவது காண்க. ஐந்து போகம் விளையும் நிலம் போல் ஐந்து போகமும் விளையும் கிழத்தியர் என நயம் படக் கூறினார்; நிலத்திற்கு ஐம்போகமாவது ஆண்டொன்றில் ஐந்து முறை விளையும் விளைவு. பயிருக்கு மாறாக வளர்கின்ற வென விரிக்க. தருக்கி வளர்ந்தாரென்பார், ‘வீறினார்’என்றார். புத்தே ளென்ன அழகிற் சிறந்தும், களையென்ன மாறாகியும் வளர்ந்தா ரென்க. (2) பின்ன ரும்பெறற் குமரனைப் பெறுவது கருதி மன்ன னுங்குலத் தேவியுங் கயற்கணி மணாளன் தன்னை நோக்கியட் டமிசதுர்த் தசிமதி வாரம் இன்ன நோன்புநோற் றொழுகுவா ரிறைவனின் னருளால். (இ-ள்.) பின் - பின்பு, அரும் பெறல் குமரனைப் பெறுவது கருதி - பெறுதற் கரிய பண்புடைய மகனைப்பெறுவது குறித்து, மன்னனும் குலத் தேவியும் - அரசனும் அவன் குல மனைவியும், கயற்கணிமணாளன் தன்னை நோக்கி - அங்கயற் கண்ணம்மையின் மணவாளனாகிய சொக்கலிங்கப் பெருமானை நோக்கி, அட்டமி சதுர்த்தசி மதிவாரம் இன்ன நோன்பு நோற்று ஒழுகுவார் - அட்டமி நோன்பு, சதுர்தசி நோன்பு சோமவாரநோன்பு ஆகிய நோன்புகளை அனுட்டித்து ஒழுகுவாராயினர்; இறைவன் இன் அருளால் - இறைவனது இனிய திருவருளால் எ-று. அரும் பெறற் குமரன் - குலமனைவி வயிற்றுப் பிறந்து அரசாளுதற்குரியனாகும் பண்புடைய புதல்வன். பெறலரும் என மாறுக. குலத்தேவி - முறைப்படி மணந்த பட்டத்து மனைவி. அட்டமி முதலியவற்றோடு நோன்பு என்பதனைக் கூட்டுக. நோன்பு நோற்றொழுகுவார் என்றமையால், நெடு நாளாகியும் மனைவி வயிற்றுப் புதல்வன் பிறந்திலன் என்பது தெளிவாகின்றது. (3) சிறிது நாள்கழிந் தகன்றபின் கங்கையிற் சிறந்த மறுவி லாவட மீன்புரை கற்பினாள் வயிற்றிற் குறிய வாலவித் தங்குரம் போன்றொரு குமரன் நிறையு நீருல கருட்குடை நிழற்றவந் துதித்தான். (இ-ள்.) சிறிதுநாள் கழிந்து அகன்ற பின் - சில நாட்கள்சென்று நீங்கிய பின், கங்கையில் சிறந்த மறுவுஇலா வடமீன் புரைகற்பினாள் வயிற்றில் - கங்கையினுஞ் சிறந்த தூய்மையுடைய குற்றமில்லாத அருந்ததிபோலும் கற்பினையுடைய அத்தேவியின் வயிற்றிலே, குறியஆலம் வித்து அங்குரம் போன்று - சிறிய ஆலம் வித்தில் தோன்றிய முளைபோல, நிறையும் நீர் உலகு அருள் குடை நிழற்ற ஒரு குமரன் வந்து உதித்தான் - கடல் சூழ்ந்த உலகிற்கு அருளுடன் கூடிய குடை யால் நிழலைச் செய்ய ஒரு புதல்வன் வந்து தோன்றினான் எ-று. கங்கை தூய்மைக்கு எடுத்துக் காட்டு; “ வான்யாறன்ன தூய்மையும்” என்னும் ஆத்திரையன் பேராசிரியனது சூத்திரமும் காண்க. சிறந்த என்னும் பெயரெச்சமும், புரை என்னும் பெயரெச்ச முதனிலையும் முறையே கற்பினாள் என்பதன் விகுதியையும், பகுதியையும் கொண்டு முடியும். அங்குரம் போன்று நிழற்றுமாறு உதித்தான் என்க. சிறிய ஆலம் வித்திற் றோன்றிய முளை பின் பணைத்து வளர்ந்து பெரிய நிழலைச் செய்வதுபோல் இவ்விளங்குமரன் ஒருவனே பின் உலக முழுதும் நிழல் செய்வான் என்றார்; “ ஆலம்வித் தனைய தெண்ணி” என்றார் சிந்தாமணியுடையாரும்; ஆலம் வித்து நிழல் செய்தல், “ உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாங்கு” என்று பிறராலும் கூறப்பட்டது. நிறையுநீர் - நிறைந்த நீரினை யுடையது; கடல். குடை நிழல் செய்தலை, ‘கண்பொர விளங்குநின் விண்பொருவியன் குடை, வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய, குடிமறைப்பதுவே’ என்னும் புறப்பாட்டாலறிக. (4) அத்த னிச்சிறு குமரனுக் ககங்களி சிறப்ப மெய்த்த நூன்முறை சாதக வினைமுதல் வினையும் வைத்த னான்பொலி வெய்துநாள் மன்னவ னூழ்வந் தொத்த நாள்வர வேட்டைபுக் குழுவைகோட் பட்டான். (இ-ள்.) அத்தனிச் சிறுகுமரனுக்கு - அந்த ஒப்பற்ற சிறிய புதல் வனுக்கு, அகம் களி சிறப்ப - மனமகிழ்ச்சி மிக, மெய்த்த நூல் முறை - உண்மையையுடைய வேத நூலிற் கூறிய முறைப்படி, சாதகவினை முதல் வினையும் வைத்து - சாதகன்ம முதலாகப் பிறசடங்கு களையுஞ் செய்து முடித்து, அன்னான் பொலிவு எய்துநாள் - அப்புதல்வன் விளக்கமுடன் வளர்ந்து வருங்காலத்தில், மன்னவன் - வீரபாண்டியன், ஊழ்வந்து ஒத்த நாள் வர - போகூழ் வந்து பொருந்திய நாள் வந்தமையால், வேட்டை புக்கு உழுவை கோட்பட்டான் - வேட்டமாடுவான் சென்று புலியினாற் பற்றப்பட்டான் எ-று. தனிக் குமரன் - ஒருவனாகிய குமரனுமாம். மன்னவன் வைத்து எய்து நாள் புக்குக் கோட்பட்டான். என்க வேட்டையிற் புக்கென ஏழாம் வேற்றுமை, இது சிறுபான்மை இயல்பாதல் கொள்க. உழுவை கோட்பட்டான்: மூன்றாம் வேற்றுமையில் தம்மினாகிய தொழிற்சொல் முன்வர வலி யியல்பாயிற்று. (5) வேங்கை வாய்ப்படு மீனவன் விண்விருந் தாக வாங்கு நூன்மருங் கிறக்கர மார்பெறிந் தாரந் தாங்கு கொங்கைசாந் தழிந்திடத் தடங்கண்முத் திறைப்ப எங்க மாதர்டொன் னகருளார் யாவரு மிரங்க. (இ-ள்.) வேங்கை வாய்ப்படும் மீனவன் விண் விருந்து ஆக - (இங்ஙனம்) புலியின் வாய்ப்பட்ட வீரபாண்டியன் விண்ணுல கிலுள்ள தேவர்க்கு விருந்தாயினமையால், வாங்கு நூல் மருங்கு இற கரம்மார்பு எறிந்து - துவளுகின்ற நூல்போலும் இடையானது முறியுமாறு கையினால் மார்பில் அடித்துக்கொண்டு, ஆரம் தாங்கு கொங்கை சாந்து அழிந்திட - முத்து மாலையைத்தாங்கிய கொங்கை களிற் பூசிய சாந்து அழிய, தடம் கண் முத்து இறைப்ப - நீண்ட கண்கள் நீர்த்துளி சிந்த, மாதர் ஏங்க - மகளிர் வருந்தவும், டொன் நகருளார் யாவரும் இரங்க - அழகிய நகரத்திலுள்ள அனைவரும் கவலவும் எ-று. உயிர் துறந்து விருந்தாயினா னென்க. ஈண்டு அறஞ் செய்தமை யால் விண் விருந்தாயினான்; “ செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு ” என்று தமிழ் மறை கூறுவது காண்க. சாந்தழிந்திடுமாறு கண் முத்திறைப்ப வென்க. மாதர் எறிந்து இறைப்ப ஏங்கவெனக் கூட்டுக. மாதர் - மனைவியும், காமக்கிழத்தியரும் முதலாயினார். (6) மற்ற வேலைகா மக்கிழத் தியர்பெறு மைந்தர் அற்ற நோக்கியீ தமையமென் றானைமா வாதி உற்ற பல்பிற பொருணிதி யொண்கல னோடுங் கொற்ற மெளலியுங் கவர்ந்தனர் கொண்டுபோய் மறைந்தார். (இ-ள்.) அ வேலை - அங்ஙனம் வருந்தும் பொழுது, காமக் கிழத்தியர் பெறுமைந்தர் - காமக் கிழத்தியர் பெற்ற பிள்ளைகள், அற்றம் நோக்கி - சோர்வு பார்த்து, ஈது அமையம் என்று - இதுவே ஏற்றசமயம் என்று கருதி, ஆனை மா ஆதி - யானை குதிரை முதலியனவும், உற்ற பிற பல்பொருள் - பொருந்திய ஏனைப் பல பொருள்களும், நிதி ஒண்கலனோடும் கொற்ற மெளலியும் - திரவியங்களும் ஒள்ளிய அணிகலன்களும் வெற்றியையுடைய முடியுமாகிய இவைகளை, கவர்ந்தனர் கொண்டு போய் மறைந்தார் - வெளவிக் கொண்டுபோய் மறைந்தார்கள் எ-று. மற்று : அசை. ஆதியாக உற்ற பிற பல் பொருளும் என்னலு மாம். கவர்ந்தனர் : முற்றெச்சம். (7) மன்ன னாணையா றொழுகிய மந்திரக் கிழவர் மின்னு வேலிளங் குமரனைக் கொண்டுவிண் ணடைந்த தென்னர் கோமகற் கிறுதியிற் செய்வினை நிரப்பி அன்ன காதலற் கணிமுடி சூட்டுவா னமைந்தார். (இ-ள்.) மன்னன் ஆணை ஆறு ஒழுகிய மந்திரக் கிழவர் - அரசனது ஆணைவழி நடந்த அமைச்சர்கள், மின்னுவேல் இளங் குமரனைக் கொண்டு - ஒளிவிடும் வேற்படை ஏந்திய இளமையை யுடைய புதல்வனால், விண் அடைந்த தென்னர் கோமகற்கு - துறக்கம் புக்க செழியர் தலைவனாகிய வீரபாண்டியனுக்கு, இறுதியில் செய் வினை நிரப்பி - முடிவிற் செய்யவேண்டிய ஈமக் கடன்களை நிறைவித்து, அன்ன காதலற்கு அணிமுடி சூட்டுவான் அமைந்தார் - அந்தப் புதல்வனுக்கு அழகிய முடிசூட்டத் தொடங்கி எ-று. மந்திரம் - சூழ்ச்சி; கிழவர் - உரிமையுடையவர். கொண்டு : மூன்றாவதன் சொல்லுருபு. இறுதியிற் செய்வினை - பிற்கடன். சூட்டுவான் : வானீற்று வினையெச்சம். அமைந்தார் : முற்றெச்சம். (8) நாடிப் பொன்னறை திறந்தனர்1 நவமணி மகுடந் தேடிக் கண்டிலர் நிதிசில கண்டிலர் திகைத்து வாடிச் சிதைந்தநோ யுழந்திவை2 மாற்றலர் கூட்டுண் டோடிப் போயின3 வாகுமென் றுணர்ந்திது நினைவார். (இ-ள்.) நாடிப் பொன் அறை திறந்தனர் - கருவூலத்தினைத் திறந்து பார்த்தனர்; நவமணி மகுடம் தேடிக் கண்டிலர் - ஒன்பான் மணிகளும் இழைத்தியற்றிய முடியினைத் தேடிக் காணா ராயினர் : சில நிதி கண்டிலர் - வேறு சில பொருள்களையும் காணாதவ ராயினர்; திகைத்து வாடி சிந்தைநோய் உழந்து - மயங்கி வாட்ட முற்று மனம் வருந்தி, இவை மாற்றலர் கூட்டுண்டு ஓடிப்போயின ஆகுமென்று உணர்ந்து - இவைகள் பகைவரால் கவர்ந்து கொண்டு போகப் பட்டனவாகும் என்று அறிந்து, இது நினைவார் - இதனைக் கருதுவா ராயினர் எ-று. திறந்து நாடினர் என விகுதி பிரித்துக் கூட்டுக. போயின - போகப்பட்டன. திறந்தனர், கண்டிலர் என்பவற்றை எச்சமாக்கி யுரைத்தலுமாம். (9) வேறு மாமுடி செய்துமா லென்னினோ விலைமிக் கேறு மாமணி யிலையர சிருக்கையின் றின்றேற் றேறு நீருல கலையுமென் செய்வதிங் கென்னா ஆறு சேர்சடை யாரருள் காண்டுமென் றமைச்சர். (இ-ள்.) வேறு மாமுடி செய்தும் என்னினோ - வேறு சிறந்த முடி செய்வோம் என்று கருதினாலோ, விலை மிக்கு ஏறு மாமணி இலை - விலைமிகுந்து உயர்ந்த பெரிய மணிகள் இல்லை; அரசு இருக்கை - இன்று - (முடி இல்லையானால்) அரசிருக்கையு மில்லை; இன்றேல் - அரசில்லையானால், தேறு நீர் உலகு அலையும் - தெளிந்த கடல் சூழ்ந்த உலகு வருந்தும்; இங்கு செய்வது என் என்னா - இங்கு நம்மாற் செய்யத் தகுவது யாது என்று (கவலையுற்றுப் பின்), ஆறுசேர் சடையார் அருள்காண்டும் என்று - கங்கையை யணிந்த சடையையுடைய சொக்கலிங்கப் பெருமானது திருவருளைக் காண்போமென்று, அமைச்சர் - மந்திரிகள் எ-று. ஆல் : அசை. முடியில்லையேல் என்பதும், அரசு என்பதும் அவாய் நிலையால் வருவிக்கப்பட்டன. தேறுநீர் - கடல். என் செய்வதென்று கவன்று, பின், அருள் காண்டுமென் றெண்ணினா ரென்க. செய்தும், காண்டும் என்பன தன்மைப் பன்மையெதிர்கால முற்றுக்கள். (10) கரைசெ யாப்பெருங் கவலைசூழ் மனத்தராய்க் கறங்கும் முரசு கண்படாக் கடிமனை முற்றநீத் தருமை அரசி ளந்தனிக் கொழுந்தினைக் கொண்டுபோ யம்பொன் வரைசெய் கோபுர வாயின்முன் வருகுவார் வருமுன். (இ-ள்.) கரை செயாப் பெருங் கவலைசூழ் மனத்தராய் - எல்லைகாண முடியாத பெரிய துன்பம் நிறைந்த மனத்தினை யுடையவராய், கறங்கும் முரசு கண்படாக் கடிமனை முற்றம் நீத்து - ஒலிக்கும்முரசு துயிலாத காவலையுடைய அரண்மனையின் முற்றத்தினின்றும் நீங்கி, அருமை அரசு இளந்தனிக் கொழுந்தினை - பெறுதற்கரிய அரசனின் ஒப்பற்ற இளம் புதல்வனை, கொண்டு போய் - கொண்டு சென்று, அம்பொன் வரைசெய் கோபுர வாயில் முன் வருகுவார் - அழகிய பொன் மலையைக் கோபுரமாகச் செய்துவைத்தா லொத்த திருக்கோபுர வாயிலின்முன் வருவா ராயினர்; வருமுன் - அவர் வருதற்கு முன் எ-று. அரசு என்னும் பெயருக்கேற்ப இளங்கொழுந்து என நயம்படக் கூறினார். செய் : உவமச் சொல்லுமாம். என்று மொலிக்கு மென்பார், ‘கண்படா’ என்றார்; “ முழவுங் கண்டுயி லாதது முன்னவன் கோயில்” என முன்னரும் கூறின்மை காண்க; இதனைக் குணவணி என்ப. (11) எற்ற தும்புகோ வணவுடை யிடம்படப் பிறங்கத் துற்ற பல்கதிர் மணிப்பொதி சுவன்மிசைத் தூங்க மற்ற டம்புய வரைமிசை வரம்பிலா விலைகள் பெற்ற வங்கதம் பரிதியிற் பேர்ந்துபேர்ந் திமைப்ப. (இ-ள்.) எல் ததும்பு கோவண உடை - ஒளி மிகுந்த கோவண மாகப் போக்கிய ஆடையானது, இடம்படப் பிறங்க - விசாலமாக விளங்கவும், துற்ற பல்கதிர் மணிப் பொதி சுவல்மிசைத் தூங்க - நெருங்கிய பல ஒளியினையுடைய அரதனங்களின் பொதி பிடரியின் மேல் தூங்கவும், மல் தடம் புயவரை மிசை - மற்போருக்குரிய பெரிய தோளாகிய மலையின்மேல், வரம்பு இலா விலைகள் பெற்ற அங்கதம் அளவிறந்த விலைகள் பெற்ற வாகுவலயம், பரிதியில் பேர்ந்து பேர்ந்து இமைப்ப - சூரியனைப் போல விட்டுவிட்டு ஒளி வீசவும் எ-று. துற்ற - நெருங்கிய; துறு : பகுதி; துன்றவுமாம். பொதி - பொதியப்பட்டது; சுமை. தூங்கல் - தங்குதல், தொங்குதல். விலைகள், கள் : பகுதிப்பொருள் விகுதி. (12) மந்தி ரப்புரி நூலது வலம்படப் பிறழ இந்தி ரத்திரு வில்லென வாரமார் பிலங்கச் சுந்த ரக்குழை குண்டலந் தோள் புரண் டாடத் தந்தி ரத்தரு மறைகழி1 தாணிலந் தோய. (இ-ள்.)மந்திரப் புரிநூல் வலம்படப் பிறழ - மந்திரத் தாலமைந்த பூணூலானது வலப்பாலிற் புரளவும், இந்திரத் திருவில் என ஆரம் மார்பு இலங்க - அழகிய இந்திர வில்லைப்போல அரதன மாலை மார்பில் விளங்கவும், சுந்தரம் குழைகுண்டலம் தோள் புரண்டு ஆட - அழகிய குழையும் குண்டலமும் தோளிற் புரண்டு ஆடவும், அருமறை தந்திரத்து கழி தாள் நிலம் தோய - அரிய வேதங்களின் சூழ்ச்சியினின்றும் நீங்கிய திருவடிகள் நிலத்திற் பொருந்தவும் எ-று. புரிநூல் - மூன்று புரியாகவுள்ள நூல். நூலது, அது : பகுதிப் பொருள் விகுதி. இந்திரவில்லாகிய திருவில் என்க. குழை, குண்டலம்: சாதி வேற்றுமை; ஒரு பொருள் குறித்தனவுமாம்; குழையைக் காது என்னின், குழைக் குண்டலம் என ஒற்று மிகுதல் வேண்டுமென்க. தந்திரம் - தீண்டுதற்குரிய உபாயம். தீண்டப்படாது நீங்கியவென்க. களியெனப் பாடமோதிக், களிக்கும் என்றுரைப்பாரு முளர். (13) (கலிவிருத்தம்) பொன்னவிர்ந் திலங்குகோ புரமுன் போதுவார் முன்னவர் துனிவுகூர் முன்ன நீக்கிய தென்னவர் குலப்பெருந் தெய்வ மாகிய மன்னவர் வணிகராய் வந்து தோன்றினார். (இ-ள்.) பொன் அவிர்ந்து இலங்கு கோபுரமுன் போதுவார் முன் - பொன்னாலாகி ஒளிவிட்டு விளங்கும் திருக்கோபுர வாயிலின் முன் வருகின்றவர்களுக்கு எதிரே, அவர் துனிவு கூர் முன்னம் நீக்கிய - அவர்களின் துன்ப நிறைந்த எண்ணத்தை ஒழிக்கும் பொருட்டு, தென்னவர் குலப்பெருந் தெய்வமாகிய மன்னவர் - பாண்டியர்கள் குலத்திற்குப் பெரிய தெய்வமாகிய சுந்தரேசர், வணிகராய் வந்து தோன்றினார் - வணிகராக வந்து தோன்றி யருளினார் எ-று. கூர் - மிக்க : உரிச்சொல். முன்னம் - குறிப்பு. நீக்கிய : செய்யிய வென்னும் வாய்பாட்டு வினையெச்சம். (14) வந்தவ ரெதிர்வரு வாரை மம்மர்கொள் சிந்தைய ராய்வரு செய்தி யாதென முந்தையில் விளைவெலா முறையிற் கூறினார்க் கெந்தையாம் வணிகரீ தியம்பு வாரரோ. (இ-ள்.) வந்தவர் எதிர் வருவாரை - அங்ஙனம் வந்த பெரு மானார் எதிரில் வரும் அமைச்சர் முதலியோரை (நோக்கி), மம்மர்கொள் சிந்தையராய் வருசெய்தி யாது என - மயங்கிய மனத்தினராய் நீவிர் வரும் செய்தி யாதென்று வினவ, முந்தையில் விளைவு எலாம் முறையில் கூறினார்க்கு - முன் நிகழ்ந்த செய்திக ளனைத்தையும் முறைப்படி கூறிய அவர்களுக்கு, எந்தையாம் வணிகர் ஈது இயம்புவார் - எம் தந்தையாகிய வணிகர் பெருமானார் இதனைக் கூறுவார் எ-று. முந்தை - முன்பு; இல் : ஏழனுருபு. எந்தையாம் வணிகர் : ஒருமையிற் பன்மை வந்தது அரோ : அசை. (15) என்பட ரெய்துகின் றீர்க ளென்வயின் ஒன்பது மணிகளு முள்ள வாலவை பொன்பதி னாயிரங் கோடி1 போனவென்2 றன்புற மணியெலா மடைவிற் காட்டுவார். (இ-ள்.) என் படர் எய்துகின்றீர்கள் - என்னை துன்ப முறுகின்றீர்கள், என்வயின் - என்னிடத்தில், ஒன்பது மணிகளும் உள்ள - ஒன்பதுவகை மணிகளும் உள்ளன; அவை அம்மணிகள் பதினாயிரங்கோடி பொன்போன என்று - பதினாயிரங்கோடி பொன் விலையேறின என்று, அன்பு உற மணி எலாம் அடைவில் காட்டுவார் - விருப்பம் பொருந்த அவற்றையெல்லாம் முறையே காட்டத்தொடங்கி எ-று. படர் - துன்பம். இனித் துன்பமுற வேண்டா என்பார், ‘என்பட ரெய்துகின்றீர்கள்’ என்றார். ஆல் : அசை. போன - விலையேறின, விலையாகப் பொருந்தியன. (16) இருந்தனர் கீழ்த்திசை நோக்கி யிட்டதோர் கருந்துகி னடுவுமிந் திராதி காவலர் அருந்திசை யெட்டினு மடைவிற் செம்மணி பெருந்தண்முத் தாதியெண் மணியும் பெய்தரோ. (இ-ள்.) கீழ்த்திசை நோக்கி இருந்தனர் - கிழக்குத் திக்கை நோக்கி இருந்து, இட்டது ஓர் கருந்துகில் நடுவும் - விரித்ததாகியஒரு கரிய கம்பலத்தின் நடுவிலும், இந்திராதி காவலர் அருந்திசை எட்டினும் - இந்திரன் முதலிய திசைக் காவலரின் அரிய திக்குகள் எட்டினும், அடைவில் - முறையே, செம்மணி பெருந்தண் முத்தாதி எண்மணியும் பெய்து - மாணிக்கத்தையும் பெரிய குளிர்ந்த முத்து முதலிய எட்டு மணிகளையும் வைத்து எ-று. நடுவில் மாணிக்கமும், கிழக்கு முதலிய எண்டிசையிலும் முத்து முதலிய எண்வகை மணியும் வைத்தென்க. இருந்தனர் : முற்றெச்சம். அரோ : அசை. (17) இம்மணி வலனுடற் சின்ன மென்னவக் கைம்மறி கரந்தவர் கூறக் கற்றநூற் செம்மதி யமைச்சரச் செம்மல் யாரவன் மெய்ம்மணி யாயதென் விளம்பு கென்னவே. (இ-ள்.) இம் மணி வலன் உடல்சின்னம் என்ன - இந்த மணிகள் வலன் என்னும் அவுணனது உடலின் பகுதிகளென்று, அக் கை மறிகரந்தவர் கூற - கையிலுள்ள மானை ஒளித்து வந்த அவ்வணிகர் கூற, நூல் கற்ற செம்மதி அமைச்சர் - பல நூல்களையும் கற்ற நுண்ணிய அறிவினையுடைய அமைச்சர்கள், அச் செம்மல் யார் - அவ்வலன் என்பான் யாவன், அவன் மெய் மணி ஆயது என் - அவன் உடல் மணிகள் ஆயினமை எங்ஙனம், விளம்புக என்ன - கூறுக வென்று கேட்க எ-று. உடற் சின்னம் - குருதி முதலிய தாதுக்களும், பல் முதலியவும் ஆம். அகரச் சுட்டு கரந்தவர் என்பதன் விகுதியோடியையும். நூலறிவும், இயற்கையாகிய நுண்ணறிவு முடையாரென்பார், ‘கற்ற நூற் செம்மதி யமைச்சர் ’ என்றார்; “ மதிநுட்பம் நூலோ டுடையார்க்கு ” என்றார் திருவள்ளுவதேவரும். விளம்புக என்பதன் அகரம் தொக்கது. (18) மேவரும் வலனெனு மவுணன் மேலைநாள் மூவரின் விளங்கிய முக்கண் மூர்த்திசெஞ் சேவடி யருச்சனைத் தவத்தின் செய்தியால் யாவது வேண்டுமென் றிறைவன் கூறலும். (இ-ள்.) மேவரும் வலன் எனும் அவுணன் - (பகைவர்) கிட்டு தற்கரிய வலன் என்னும் அசுரன், மேலை நாள் - முன்னாளில், மூவரின் விளங்கிய முக்கண் மூர்த்தி - மும்மூர்த்திகளினும் சிறந்து விளங்கும் சிவபெருமானுடைய, செம் சேவடி - செவ்விய திருவடிகளில், அருச்சனை தவத்தின் செய்தியால் - அருச்சித்தலாகிய திருத்தொண்டில் செய்கையால், இறைவன் - அப்பெருமான், யாவது வேண்டும் என்று கூறலும் - நினக்கு யாதுவேண்டு மென்று வினாவிய வளவில் எ-று. பகைவர் அணுகுதற்கரிய வென்க. செம்மைப் பண்பு அடுக்கி வந்தது; ஒன்று செந்நிறத்தையும், ஒன்று விகார மின்மையையும் குறிப்பன எனலுமாம் அருச்சனையே தவமென்றார். தவத்தின் சாரியை அல்வழிக்கண் வந்தது. யாவது : வகரம் விரித்தல். அவுணன் தன் செய்தியால் இறைவன் கூறலும் என இயையும். (19) தாழ்ந்துநின் றியம்பும்யான் சமரில் யாரினும் போழ்ந்திற வாவரம் புரிதி யூழ்வினை சூழ்ந்திறந் தாலென்மெய் துறந்த மாந்தரும் வீழ்ந்திட நவமணி யாதல் வேண்டுமால் (இ-ள்.) தாழ்ந்து நின்று இயம்பும் - வணங்கி நின்று கூறுவா னாய், யான் சமரில் யாரினும் போழ்ந்து இறவா வரம் புரிதி - யான் போரின்கண் யாராலும் பிளவுண்டு இறவாத வரத்தையருளுக; ஊழ்வினை சூழ்ந்து இறந்தால் - (அங்ஙன மன்றி) ஊழ் வினையாற் சூழப்பட்டு இறப்பேனாயின், என் மெய் - என் உடம்பு, துறந்த மாந்தரும் வீழ்ந்திட - பற்றுக்களை விடுத்த துறவினரும் விரும்பும் வண்ணம், நவமணி ஆதல் வேண்டும் - ஒன்பான் மணிகளாக வேண்டும் எ-று. இயம்பு மென்பதனை எச்சப்படுத்துக. யாரினும் - எவராலும்; இன்னுருபு மூன்றன் பொருட்டு. போழ்ந்து - வெட்டுண்டு: செயப்பாட்டுவினைப் பொருளது; சூழ்ந்து என்பதும் அது. மாதரும் என்னும் உம்மை உயர்வு சிறப்பு. மணியின் விசேடத்தால் விரும்ப வென்க. ஆல் : அசை. (20) என்றுவேண் டலும்வர மீச னல்கினான் அன்றுபோ யமர்குறித் தமரர் கோனொடு சென்றுபோ ராற்றலுந் தேவர் கோனெதிர் நின்றுபோ ராற்றல னீங்கிப் போயினான். (இ-ள்.) என்று வரம் வேண்டலும் - என்று வரம் கேட்க. ஈசன் நல்கினான் - இறைவன் (அங்ஙனமே) அருளினான்; அன்று அமர் குறித்துப்போய் - அப்பொழுதே போரினைக் குறித்துச் சென்று, அமரர்கோனொடு சென்று போர் ஆற்றலும் - தேவேந்திரனொடு எதிர்த்துப் போர் புரியவும், தேவர்கோன் - அவ்விந்திரன், எதிர்நின்று போர் ஆற்றலன் - நேர் நின்று போர் புரியும் வலியிலனாய், நீங்கிப் போயினான் - புறங்கொடுத் தேகினான் எ-று. போய் என முன் வந்தமையின் சென்று என்பதற்கு எதிர்த்தென உரைக்கப்பட்டது. ஆற்றலன் - செய்ய மாட்டானாய்; முற்றெச்சம். (21) தோற்றவா னாடவன் மீண்டு சூழ்ந்தமர் ஆற்றினும் வெல்லரி தழிவி லாவரம் ஏற்றவ னாதலா லிவனைச் சூழ்ச்சியாற் கூற்றினூ ரேற்றுதல் குறிப்பென் றுன்னியே. (இ-ள்.) தோற்ற வான் நாடவன் - இங்ஙனம் தோல்வியுற்ற இந்திரன், அழிவு இலா வரம் ஏற்றவன் ஆதலால் - இறவாத வரம் பெற்றவன் ஆதலால், மீண்டும் சூழ்ந்து அமர் ஆற்றினும் வெல் அரிது - திரும்பவும் வளைந்து போர் செய்தாலும் இவனை வெல்லுதல் கூடாது; இவனைச் சூழ்ச்சியால் கூற்றின் ஊர் ஏற்றுதல் குறிப்பு என்று உன்னி - இவனை வஞ்சத்தால் கூற்றுவன் ஊரிற் குடியேற்றுதலே செயற்பாலது என்று கருதி எ-று. ஆலோசித்து மீள அமர் புரியினும் என்றுரைத்தலுமாம். வெல்: முதனிலைத் தொழிற் பெயர். குறிப்பு - கருத்து. (22) விடங்கலுழ் படைக்கல னின்றி விண்ணவர் அடங்கலுந் தழீஇக்கொள வடுத்துத் தானவ மடங்கலை வருகென நோக்கி வானவக் கடங்கலுழ் யானைபோற் கரைந்து கூறுவான். (இ-ள்.) விடம் கலுழ் படைக்கலம் இன்றி - நஞ்சு சிந்தும் படைக்கலம் இல்லாமல். விண்ணவர் அடங்கலும் தழீஇக்கொள - தேவரனைவரும் சூழ்ந்து வர, கடம் கலுழ் வானவ யானைபோல் அடுத்து - மதம் பொழியும் தேவயானைபோல் போர்க்களத்தையடுத்து, தானவ மடங்கலை நோக்கி வருக எனக் கரைந்து - அசுர சிங்கத்தை நோக்கி வருக என்று அழைத்து, கூறுவான் - சொல்லுவான் எ-று. யானையானது சிங்கத்தை நோக்கி அழைப்பது போல் இந்திரன் அவுணனை நோக்கி அழைத்தான் என்பது கருத்தாகக் கொள்க. கரைதல் - அழைத்தல். (23) விசையநின் றோள்வலி வென்றி வீக்கமெத் திசையினும் பரந்ததச்1 சீர்த்தி நொக்கியுள் நசையறா மகிழ்ச்சியா னல்கு வேனுனக் கிசையவேண் டியவரம் யாது கேளென. (இ-ள்.) விசைய - வெற்றியை யுடையோய், நின் தோள்வலி வென்றி வீக்கம் எத்திசையினும் பரந்தது - உன் தோளின் வலிமையும் வெற்றிப் பெருக்கமும் எல்லாத் திசைகளிலும் பரவின; அ சீர்த்தி நோக்கி - அந்தப் புகழ்ச்சியை நோக்கி, உள் நசை அறா மகிழ்ச்சியால் உனக்கு இசைய நல்குவேன் - உள்ளத்தில் விருப்பம் நீங்காத மகிழ்ச்சி யால் உனக்குப் பொருந்த வரம் அளிப்பேன்; வேண்டிய வரம் யாதுகேள் என - நீ விரும்பிய வரம் யாதோ அதனைக் கேட்பாய் என்று கூற எ-று. பரந்தது : பன்மையி லொருமை; தோள் வலியானாய வென்றி யென உரைத்தலுமாம். நோக்கி - மனத்தால் நோக்கி; கருதி. பொருந்த வேண்டிய வரம் கேள் அதனை நல்குவேன் என இயைத்தலுமாம்.(24) கடிபடு கற்பக நாடு காவலோன் நொடியுரை செவித்துளை நுழையத் தானவன் நெடியகை புடைத்துட னிமிர்ந்து கார்படும் இடியென நகைத்திகழ்ந் தினைய கூறுவான். (இ-ள்.) கடிபடு கற்பகநாடு காவலோன் நொடி உரை - மணம் பொருந்திய கற்பகத் தருவையுடைய விண்ணுலகிற் கிறைவனாகிய இந்திரன் கூறிய உரை, செவித்துளை நுழைய - செவிகளின் தொளைகளிற் புகுதவும், தானவன் - அவுணன், நெடிய கை புடைத்து - நீண்ட கைகளை ஒன்றோடொன்று தாக்கி. உடல் நிமிர்ந்து கார் படும் இடி என நகைத்து இகழ்ந்து - உடல் நிமிர்ந்து முகிலிற் றோன்றும் இடிபோலச் சிரித்து இகழ்ந்து, இனைய கூறுவான் - இத்தன்மையன கூறுவான் எ-று. நொடி - கூறிய. நொடியுரை : வினைத்தொகை. இடிபோல் ஒலியுண்டாக நகைத்தென்க. (25) (அறுசீரடி யாசிரிய விருத்தம்) நன்றிது மொழிந்தா யாரு நகைக்கநீ யெனைவெந் கண்ட வென்றியு மதனாற் பெற்ற புகழுநின் வீறு பாடும் இன்றுநின் போரிற் காணப் பட்டவே யிசைபோ யெங்கும் நின்றதெ யிதுபோ னின்கை வண்மையு நிற்ப தன்றொ. (இ-ள்.) யாரும் நகைக்க நன்று இது மொழிந்தாய் - எவரும் நகையாடுமாறு நல்லதாகிய இந்தமொழியைக் கூறினாய்; நீ எனை வெந்கண்ட வென்றியும் - நீ என்னைப் புறங்கண்ட வெற்றியும், அதனால் பெற்ற புகழும் - அவ்வெற்றியால் அடைந்த கீர்த்தியும், நின் வீறுபாடும் - நினது பெருமிதமும், இன்று நின் போரில் காணப்பட்டவே - இன்று நீ என்னோடு செய்த போரிற் காணப் பட்டனவே; இசைபோய் எங்கும் நின்றதே - புகழானது எங்கும் பரந்து சென்று நிலை பெற்றதே;இது போல் நின்கை வண்மையும் நிற்பது அன்றோ - இதுபோல உனது வள்ளன்மையும் நிலைபெறுவதல்லவா எ-று. நன்று இது - நல்லதாகிய இதனை : இகழ்ச்சிக் குறிப்பு, பகைவர், அயலார், நண்பர் என்னும் யாவரும் நகைக்க வென்க. புறங்காட்டிய தோல்வி வெந்கண்ட வென்றி யென்றும். அதனா லுண்டாய பழி புகழென்றும், சிறுமை வீறுபாடடென்றும், இகழ்ச்சி தோன்றக் கூறப்பட்டன. காணப்பட்டவே, நின்றதே என்னும் ஏகாரங்கள் இவற்றை நீயும் அறிதியே என்னும் வினாப்பொருள் தோன்ற நின்றன. இதுபோல் - இச்செயல் போல்; இசை நிலை பெற்றதுபோல என்றுமாம். (26) ஈறிலா னளித்த நல்ல வரமெனக் கிருக்க நின்பால் வேறுநான் பெறுவ துண்டோ வேண்டுவ துனக்கியா தென்பாற் கூறுநீ யதனை யின்னே கொடுக்கலே னாகி னின்போற் பாறுவீழ் களத்திற் றோற்ற பழிப்புகழ் பெறுவ னென்றான். (இ-ள்.) ஈறு இலான் அளித்த நல்ல வரம் எனக்கு இருக்க - தனக்கோர் இறுதியில்லாதவனாகிய சிவபெருமான் அருளிய நல்லவரங்கள் எனக்கிருக்கவும், வேறு நான் நின்பால் பெறுவது உண்டோ - அவற்றிற்கு வேறாக நான் உன்னிடம் பெறுவ தொன்று உண்டோ, என்பால் உனக்கு வேண்டுவது யாது - என்னிடம் நினக்கு வேண்டியது யாது, நீ கூறு - நீ சொல், அதனை இன்னே கொடுக்க லேனாகில் - அதனை இப்பொழுதே கொடேனாயின், பாறுவீழ் களத்தில் - பருந்துகள் வீழ்கின்ற இப்போர்க்களத்தில், நின்போல் தோற்ற பழிப்புகழ்பெறுவன் என்றான் - நின்னைப் போன்றே தோல்வி யுற்ற பழியாகிய புகழைப் பெறுவேன் என்று கூறினான் எ-று. ஈறிலான் என்றமையால் முதலும் நடுவும் இல்லாதவ னென்பதும் பெறப்படும். ஈறுடைய நின்பால் நன்மை யில்லாத வேறு எனஅடை களை எதிர் மறுத்துக்கொள்க. ‘வேண்டுவதுனக் கியாதென்பாற் கூறுநீ’என்றது நின்பதவியினும் பெரிய செல்வங்களை யான் அளித்தற்குரியேன் என்று குறிப்பிட்டவா றாயிற்று. தோற்றமையா லாகிய பழி எனப்பெயரெச்சம் காரணப் பொருட்டாயது. பழிப் புகழ் - பழியாகிய புகழ்; பழியையே புகழாகப் பெற்றுளாய் எ- று. (27) மாதண்ட வவுணன் மாற்ற மகபதி கேட்டு வந்து கோதண்ட மேருக் கோட்டிக் கொடும்புரம் பொடித்தான்வெள்ளி வேதண்ட மெய்தி யாங்கோர் வேள்வியான் புரிவ னீயப்1 போதண்டர்க் கூட்ட வாவாய்ப் போதுவாய் வல்லை யென்றான். (இ-ள்.) மாதண்ட அவுணன் மாற்றம் - பெரிய தண்டினை யேந்திய அசுரனது வார்த்தையை, மகபதி கேட்டு உவந்து - இந்திரன் கேட்டு மகிழ்ந்து, கோதண்டம் மேரு கோட்டி - வில்லாக மேரு மலையை வளைத்து, கொடும்புரம் பொடித்தான் - கொடிய அவுணர் களின் திரிபுரத்தை நீறாக்கிய சிவபிரானது, வெள்ளி வேதண்டம் எய்தி - வெள்ளி மலையை அடைந்து, ஆங்கு ஓர் வேள்வி யான் புரிவன் - அங்கு ஒரு வேள்வியினை யான் செய்வேன்; அப்போது அண்டர்க்கு ஊட்ட - அப்பொழுது தேவர்களுக்கு அவியூட்ட, நீ ஆவாய் வல்லைபோதுவாய் என்றான் - நீ வேள்விப்பசுவாகி விரைந்து வருவாயாக என்று கூறினான் எ-று. மாற்றம் - மறுமொழி. தான் நினைத்தது கைகூடிற்றென உவந்தென்க. கோதண்டம் - வில்லின் பொதுமையை உணர்த்துவது. மேருவாகிய வில்லை யெனலுமாம். கேட்டு உவந்து போதுவாய் என்றான் என முடிக்க. (28) அன்றொரு தவத்தோ னென்பு வச்சிர மொன்றே யாக ஒன்றிய கொடையாற் பெற்ற புகழுடம் பொன்றே யென்போல் வென்றியி னாலும் வீயா மெய்யெலா மணிக ளாகப் பொன்றிய கொடையி னாலும் புகழுடம் பிரண்டுண் டாமே. (இ-ள்.) அன்று ஒரு தவத்தோன் - அக்காலத்திலே ஒருதவப் பெரியானாகிய ததீசிமுனிவன், என்பு ஒன்றே வச்சிரம் ஆக - (பூத உடலின்) முதுகந்தண்டாகிய எலும்பு ஒன்றே வச்சிரப்படை ஆமாறு, ஒன்றிய கொடையால் பெற்ற புகழ் உடம்பு ஒன்றே - மனமிசைந்து கொடுத்த கொடையினாற் பெற்ற புகழுடம்பு ஒன்றேயாகும்; வென்றியினாலும் - (பிறரை வெல்லும்) வெற்றியினாலும், - வீயா மெய் எலாம் மணிகளாக - பிறரால் அழியாத உடல் முழுதும் நவமணிகளாகுமாறு, பொன்றிய கொடையினாலும் - இறத்தலா லாகும் கொடையினாலும், என் போல் - என்னைப் போல, புகழ் உடம்பு இரண்டு உண்டாமே - (அம்முனிவனுக்குப்) புகழுடம்பு இரண்டு உள்ளனவோ எ-று. ததீசி முனிவன் பெற்றது கொடையாலாகிய புகழொன்றே; யானோ வென்றியினாலும் கொடையினாலும் இருவகையான புகழினை எய்துதற் குரியனானேன்; அவன்பெற்ற கொடைப்புகழ் ஒன்றுதானும் ஓர் என்பை ஒரு படைக்கலமாக ஒருவன்பெற அளித்தமையாலாயது; என் கொடைப்புகழோ உடம்பின் எல்லா உறுப்புக்களும் ஒன்பது வகை மணிகளாக எக்காலத்தும் யாவரும் பெறுமாறு அளிக்கும் கொடையா லாயது; எனத் தன் புகழ்ப் பேற்றினை வியந்துரைத் தானென்க. ஒன்றிய கொடை - மனம் பொருந்தி யளித்த கொடை. பொன்றிய கொடை - பொன்றினமையா லாகிய கொடை. உண்டாமே - உள்ளனவோ; ஏகாரம் எதிர்மறைப் பொருட்டு. (29) மேவல னல்லை நீயே நட்டவன் மேலை வானோர் யாவரு மருந்து மாற்றா லறம்புக ழெனக்கே யாக ஆவுரு வாதி யென்றா யன்னதே செய்வே னென்றான் ஈவதே பெருமை யன்றி யிரக்கின்ற திழிபே யன்றோ. (இ-ள்.) மேவலன் அல்லை - நீ எனக்குப் பகைவன் அல்லை; நீயே நட்டவன் - நீயே நண்பன்; மேலை வானோர் யாவரும் அருந்தும் ஆற்றால் - விண்ணுலகிள்ளதேவர்களனைவரும் உண்ணு மியல்பினால், அறம் புகழ் எனக்கே ஆக - புண்ணியம் புகழும் எனக்கு உளவாக, ஆ உரு ஆதி என்றாய் - ஆனின் உருவாகி வருவாய் என்றாய், அன்னதே செய்வேன் என்றான் - அங்ஙனமே செய்வேன் என்று கூறினான், ஈவதே பெருமை அன்றி - (எஞ்ஞான்றும்) கொடுத்தலே பெருமையல்லாமல், இரப்பது இழிபே அன்றோ - இரத்தல் இழிபல்லவா எ-று. எனக்கு அறமும் புகழும் உண்டாக இங்ஙனங் கூறினமையால் நீ பகைவனல்லை நண்பனாவாய் என்றானென்க. நீ நண்பனே என ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டலுமாம். மேற் செய்யுளில் நவமணிகளா தலால் எய்தும் கொடைப் புகழைக் கூறிவைத்து, இச்செய்யுளில் தேவர் யாவரும் அருந்துமா றளிக்கும் கொடையினையும் அதனாற் புகழேயன்றி அறமும் உளதாதலையும் கூறினானென்க. யானொருவனே சிறப்பெய்தினேன் என்பான்: ‘அறம்புகழ் எனக்கேயாக’ என்றான். ஆதி - ஆவாய்: த்: எழுத்துப்பேறு, இ : எதிர்கால விகுதி. ஈவதே பெருமை யன்றி இரக்கின்றது பெருமையன்று: அதன்மேலும் அஃது இழிபே யாகும்: என விரித்துரைத்துக் கொள்க. ஈதல் இரத்தல்களின் பெருமை சிறுமைகளை, “ நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினு மீதலே நன்று ”” (திருக்குறள் - 222) என்னும் திருக்குறளானும், “ ஈயென விரத்த லிழிந்தன்று..... கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன்று” என்னும் புறப்பாட்டாலு மறிக. இது வேற்றுப்பொருள் வைப்பணி. (30) அதற்கிசைந் தவுணர், வேந்த னமரர்வேந் தனைமுன் போக்கி மதர்க்கடுங் குருதிச் செங்கண் மைந்தனுக் கிறைமை யீந்து முதற்பெருங் கலையாம் வேத மொழிமர பமைந்த வானாய்ப் புதர்க்கடு வேள்விச் சாலைப் புறத்துவந் திறுத்து நின்றான். (இ-ள்.) அதற்கு இசைந்த அவுணர் வேந்தன் - அங்ஙனம் பசுவாய் வர உடன்பட்ட அவுணர் தலைவனாகிய வலன், அமரர் வேந்தனை முன்போக்கி - தேவர்க்கரசனாகிய இந்திரனை முன்னே அனுப்பிவிட்டு, மதர் கடுங் குருதிச் செங்கண் மைந்தனுக்கு இறைமை ஈந்து - மதர்த்த கொடிய உதிரம்போற் சிவந்த கண்களை யுடைய புதல்வனுக்கு அரசுரிமையைத்தந்து, முதல்பெருங் கலை யாம் வேதமொழி மரபு அமைந்த ஆனாய் - கலைகட்கெல்லாம் முதன்மையாகிய பெரியமறை நூலிற் கூறிய முறையே இலக்கண மமைந்த பசுவாகி, புதர்க்கு அடுவேள்விச்சாலைப் புறத்துவந்து இறுத்து நின்றான் - தேவர்கட்கு அவியுணவு ஆக்கும் வேள்விச் சாலையின்கண் நிலைபெயராது நின்றான் எ-று. இசைந்த வென்னும் பெயரெச்சத்து அகரந்தொக்கது. இறைமை இறையினது தன்மை: இறை - அரசன். மொழிமரபு - மொழிந்த முறைமை. புதர் - தேவர்: புலவரென்னும் பொருட்டு. (31) வாய்மையான் மாண்ட நின்போல் வள்ளல்யா ரென்று தேவர் கோமகன் வியந்து கூறத் தருக்குமேற் கொண்டு மேரு நேமியோ டிகலும் விந்த வரையென நிமிர்ந்து வேள்விக் காமெனை யூபத் தோடும் யாமினென் றடுத்து நின்றான். (இ-ள்.) வாய்மையால் மாண்ட நின்போல் - மெய்ம் மொழியால் மாட்சிமைப்பட்ட நின்னைப்போல, வள்ளல் யார் என்று தேவர் கோமகன் வியந்து கூற - வள்ளன்மை யுடையார் யாவருளர் என்று தேவேந்திரன் வியந்து கூற, தருக்கு மேற்கொண்டு - செருக்கினை மேற்கொண்டு, மேருநேமியோடு இகலும் விந்த வரை என - மேருமலையோடு பகைத்து ஓங்கிய விந்தமலை போல, நிமிர்ந்து - உயர்ந்து, வேள்விக்கு ஆம் என - வேள்விக்குப் பயன்படும் என்னை, யூபத்தோடும் யாமின் என்று அடுத்து நின்றான் - யூபத் தம்பத்தோடுங் கட்டுங்கள் என்று அதனை அடுத்து நின்றான் எ-று. நேமி - மலை. யூபம் - வேள்வித்தூண். யாமின் - பிணியுங்கள்; யா: பகுதி. (32) யாத்தனர் தருப்பைத் தாம்பா லூர்ணையால் யாத்த சிங்கப் போத்தென நின்றான் வாயைப் புதைத்துயிர்ப் படங்க வீட்டி மாய்த்தனர் மாய்ந்த வள்ளல் வலனுமந் தார மாரி தூர்த்திட விமான மேறித் தொல்விதி யுலகஞ் சேர்ந்தான். (இ-ள்.) தருப்பைத் தாம்பால் யாத்தனர் - தருப்பைக் கயிற்றாற் கட்டி, ஊர்ணையால் யாத்த சிங்கப்போத்தென நின்றான் வாயைப் புதைத்து - சிலம்பி நூலினாற் கட்டப்பட்ட ஆண் சிங்கம் போல நின்ற அவன் வாயைப் பொத்தி, உயிர்ப்பு அடங்க வீட்டி மாய்த்தனர் - மூச்சு அடங்கக் கொன்றனர்; மாய்ந்த வள்ளல் வலனும் - இறந்த வள்ளலாகிய வலனும், மந்தார மாரி தூர்த்திட - கற்பக மலர் மழைபொழிய, விமானம் ஏறித் தொல்விதி உலகம் சேர்ந்தான் - விமானத்திலேறிப் பிரமன் உலகத்தை அடைந்தான் எ-று. தானாக வாய்மையால் அடங்கி நின்றமை தோன்ற ‘ஊர்ணை யால் யாத்த சிங்கப் போத்தென நின்றான்’ என்றார். ஊர்ணை: மயக்க விதியின்றேனும் வட சொல்லாகலின் அமையும். போத்து: ஆண்பால் உணர்த்துஞ் சொல். வீட்டி வீழ்த்தி என்பதன் மரூஉ. வீட்டி மாய்த்தல் : ஒரு பொருள் குறித்தன. வானோர் தூர்த்திட என விரித்துரைத்தலுமாம். பிரமன் பிதாமகன் எனப்படுவ னாகலின் ‘தொல்விதி’என்றார். (33) மணித்தலை மலையின் பக்க மாய்த்தவன் வயிர வேலாற் பிணித்துயிர் செகுத்த வள்ளற் பெருந்தகை யாவாய்1 வேதம் பணித்திடும் வபையை வாங்கிப் படரெரி சுவைமுன் பார்க்கக் குணித்தவா னாடர்க் கூட்டிக் கோதிலா வேள்வி செய்தான். (இ-ள்.) மணித்தலை மலையின் பக்கம் மாய்த்தவன் - மணிகள் பொருந்திய முடிகளையுடைய மலைகளின் சிறகை அரிந்த இந்திரன், பிணித்து உயிர் செகுத்த வள்ளல் பெருந்தகை ஆவாய் - தூணிலே கட்டி உயிர் போக்கப்பட்ட வள்ளன்மையும் பெருந்தகுதியு முடைய வலனாகிய ஆவினிடத்திருந்து, வயிர வேலால் வேதம் பணித்திடும் வபையை வாங்கி - வச்சிரப் படையினால் வேதம் விதித்த வபையினை எடுத்து, படர் எரி சுவை முன் பார்க்க - படர்ந்த வேள்வித் தீயானது முன்னே சுவை பார்க்க (இட்டு), குணித்த வானாடர்க்கு ஊட்டி - கருதப்பட்ட தேவர்களுக்கு உண்பித்து, கோது இலா வேள்வி செய்தான் - குற்ற மில்லாத வேள்வியைச் செய்து முடித்தான் எ-று. பக்கம் - சிறை; இது வடமொழியில் பக்ஷம் எனப்படும். ஆவாய் - ஆவினிடத்து; வாய் : ஏழனுருபு. வபை - நிணம். வேலால் வாங்கி யெனக் கூட்டுக. பார்க்க இட்டு என ஒருசொல் வருவிக்க. குணித்த - மதிக்கப்பட்ட. வானாடர்க்கு - தேவரை : உருபு மயக்கம். (34) அத்தகை யாவின் சோரி மாணிக்க மாம்பன் முத்தம் பித்தைவை டூய மென்பு வச்சிரம் பித்தம் பச்சை நெய்த்தவெண் ணிணங்கோ மேதந் தசை துகிர் நெடுங்க ணீலம் எய்த்தவை புருட ராக மிவைநவ மணியின் றோற்றம். (இ-ள்.) அத்தகை ஆவின் சோரி மாணிக்கம் ஆம் - அந்தப் பசுவினது குருதி மாணிக்கமாம்; பல் முத்தம் ஆம் - பற்கள் முத்தமாம்; பித்தை வைடூயம் ஆம் - மயிர் வயிடூரியமாம்; என்பு வச்சிரம் ஆம் - எலும்பு வயிரமாம்; பித்தம் பச்சை ஆம் - பித்தம் மரகதமாம்; நெய்த்த வெள்நிணம் கோமேதம் ஆம் - நெய்ப்பினை யுடைய வெள்ளிய நிணம் கோமேதமாம்; தசை துகிர் ஆம் - தசை பவளமாம்: நெடுங்கண் நீலம் ஆம் - நீண்ட கண்கள் நீலமாம்; எய்த்த ஐ புருடராகம் ஆம் - இளைத்தாற் கேதுவாகிய கோழை புருடராகமாம்; இவை நவமணியின் தோற்றம் -இவையே நவமணிகள் தோன்றிய முறைமையாம் எ-று. ஆம் என்பதனை முத்தம் முதலியவற்றோடும் கூட்டுக. பச்சை- மரகதம். எய்த்த - இளைத்தற்குக் காரணமான; ஐ - கபம். (35) இவ்வடி வெடுத்துத் தோன்றி யிருண்முகம் பிளப்பக் காந்தி தைவரு மணியொன் பானுஞ் சார்விட நிறங்கள் சாதி தெய்வத மொளிமா செள்ளிச்1 சோதனை செய்து தேசு மெய்வர வணிவோ ரெய்தும் பயனிவை விதியாற் கேண்மின். (இ-ள்.) இ வடிவு எடுத்துத் தோன்றி - இந்த உருவங்களை யெடுத்துத் தோன்றி, இருள் முகம் பிளப்பக் காந்தி தைவரும் மணி ஒன்பானும் - இருளின் முகம் பிளக்க ஒளிவீசும் ஒன்பது மணிகளும், சார்விடம் - பொருந்து மிடங்களும், நிறங்களும் - (அவற்றின்) நிறங் களும், சாதி - சாதியும், தெய்வதம் - தெய்வமும், ஒளி - ஒளியும், சோதனை செய்து மாசு எள்ளி - ஆராய்ந்து குற்றங்களை நீக்கி (நல்லனவற்றை), தேசு மெய்வர அணிவோர் எய்தும் பயன் - ஒளி பொருந்த உடலில் அணிகின்றவர் அடையும் பயனும், இவை விதியால் கேண்மின் - (ஆகிய) இவற்றை முறைப்படி கேளுங்கள் எ-று. இருள் கெடுதலை ‘இருள் முகம் பிளப்ப’ என்றார். முகத்தைப் பிளக்கவென இரண்டாம் வேற்றுமையாகக் கொள்ளுதலும் பொருந்தும். தேசுவர மெய் அணிவோர் என மாறுக. (36) (மேற்படி வேறு) வாளவிரு மாணிக்கங் கிரேதமுத லுகநான்கும் வழியே மக்கம் காளபுரந் தும்புரஞ்சிங் களமிந்நான் கிடைப்படுமக் கமல ராகம் ஆளுநிற மொன்பதர விந்தமா துளம்பூவித் தழல்கல் லாரங் கோளரிய கச்சோத நரந்தநறும் பலந்தீபங் கோப மென்ன. (இ-ள்.) வாள் அவிரும் மாணிக்கம் - ஒளி விளங்கும் மாணிக்க மானது, கிரேதம் முதல் உகம் நான்கும் - கிருதயுக முதல் நான்கு உகங்களிலும், வழியே - முறையே, மக்கம் காளபுரம் தும்புரம் சிங்களம் இ நான்கு இடைபடும் - மக்கமும் காளபுரமும் தும்புரமும் சிங்களம் ஆகிய இந்நான்கு இடங்களிலும் தோன்றும்; அ கமலராகம் ஆளும் நிறம் - அப் பதுமராகம் ஆளா நின்ற நிறம், அரவிந்தம் - தாமரை மலரும், மாதுளம் பூ - மாதுளை மலரும், வித்து - மாதுளை விதையும், அழல் - நெருப்பும், கல்லாரம் - செங்குவளை மலரும், கோள் அரியகச்சோதம் - குற்றமற்ற மின்மினிப் பூச்சியும், நரந்த நறும்பலம் - நாரத்தையின் நறியபழமும். தீபம் - விளக்கும். கோபம் - இந்திர கோபமும், என்ன ஒன்பது - என ஒன்பது வகையாம் எ-று. கிருதயுகத்தில் மக்கத்தினும், திரேதாயுகத்தில் காளபுரத்திலும், துவாபர யுகத்தில் தும்புரத்திலும், கலியுகத்தில் சிங்களத்திலும் தோன்றுமென்க. மாணிக்கத்திற்குப் பதுமராகமென்பது ஒரு பெயர். முன் குறிப்பிட்டு வந்த பதிப்பொன்றிலே இது முதற் பல செய்யுட்கள் பாடம் மாறியும், பல செய்யுட்கள் மிக்கும் உள்ளன. (37) இந்நிறத்த பொதுவாய மாணிக்க மறையவர்முன் னியனாற் சாதி தன்னியல்பாற் சாதரங்கங் குருவிந்தஞ் செளகந்தி கங்கோ வாங்கம் என்னுமிவற் றாற்சிறந்து நான்காகு மிவ்வடைவே யிந்நான் கிற்குஞ் சொன்னவொளி பத்திருநான் கிருமூன்று நான்கவையுஞ் சொல்லக் கேண்மின். (இ-ள்.) பொதுவாய இநிறத்த மாணிக்கம் - பொதுவாகிய இவ்வொன்பது நிறங்களையுடைய மாணிக்கம், மறையவர் முன் இயல் நால்சாதி தன் இயல்பால் - அந்தணர் முதலாக வமைந்த நான்கு சாதியாகி வழங்கு மாற்றால், சாதரங்கம் குருவிந்தம் செளகந்திகம் கோவாங்கம் என்னும் இவற்றால் சிறந்து நான்கு ஆகும் - சாதரங்கமும் குருவிந்தமும் செளகந்திகமும் கோவாங்கமும் என்று சொல்வப்படும் இப்பெயர்களாற் சிறந்து நான்கு வகைப் படும்; இ நான்கிற்கும் சொன்ன ஒளி - இந்த நான்கு வகைக்கும் நூலிற் கூறிய ஒளி, இ அடைவே - இந்தமுறையே, பத்து இருநான்கு இரு மூன்று நான்கு - பத்தும் எட்டும் ஆறும் நான்குமாகும்; அவையும் சொல்லக் கேண்மின் - அவற்றையும் சொல்லக் கேளுங்கள் எ-று. மேலே மாணிக்கத்தின் பொதுநிறங்களைக் கூறிப் பின் நாற் சாதிக்கும் உரிய நிறங்களைக் கூறுகின்றார். சாதரங்கம் பதுமராக மெனவும், குருவிந்தம் இரத்த விந்து எனவும், செளகந்திகம் நீலகந்தி யெனவும், கோவாங்கம் படிதமெனவும் பெயர் கூறப்படுதலு முண்டு; “ பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்” என்று சிலப்பதிகாரம் கூறுவது காண்க. சாதுரங்கம், செளகந்தி, கோவாங்கு என்றும் சிறிது உருவு திரிந்து காணப்படுகின்றன. தன் : சாரியை. (38) சாதரங்க நிறங்கமலங் கருநெய்த லிரவியொளி தழல்கச் சோதம் மாதுளம்போ ததன்வித்துக் கார்விளக்குக் கோபமென வகுத்த பத்தும் மேதகைய குருவிந்த நிறங்குன்றி முயற்குருதி வெள்ள லோத்தம் போதுபலா சலர் திலகஞ் செவ்வரத்தம் விதாரமெரி பொன்போ லெட்டு. (இ-ள்.) சாதரங்க நிறம் - சாதரங்கத்தின் நிறம், கமலம் - தாமரை மலரும், கருநெய்தல் - கருநெய்தல்மலரும், இரவி ஒளி - சூரியனொளியும், ‘தழல் - நெருப்பும், கச்சோதம் - மின்மினியும், மாதுளம் போது - மாதுள மலரும், அதன் வித்து மாதுளவித்தும் - வித்தும், கார் - முகிலும், விளக்கு - தீபமும், கோபம் - இந்திர கோபமும், என வகுத்த பத்தும் - எனப் பாகுபாடு செய்த பத்துமாகும்; மேதகைய குருவிந்த நிறம் - சிறந்த தன்மையையுடைய குருவிந்தத்தின் நிறம், குன்றி - குன்றி மணியும், முயற் குருதி - முயலிரத்தமும் வெள்ள லோத்தம்போது - வெள்ள லோத்த மலரும், பலாசு அலர் - முண் முருக்க மலரும், திலகம் - மஞ்சாடி மலரும், செவ்வரத்தம் - செவ்வரத்த மலரும்; விதாரம் - முள்ளிலவ மலரும், எரி பொன்போல் - விளங்கும் பொன்னும் ஆகிய இவைகளைப்போல, எட்டு - எட்டு வகையாகும் எ-று. “ தாமரை கழுநீர் சாதகப் புட்கண் கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு மாதுளைப் பூவிதை வன்னியீ ரைந்தும் ஓதுசா துரங்க வொளியா கும்மே” என்னும் பழைய நூற்பாவிலும், “ சாதகப் புட்கண் டாமரை கழுநீர் கோப மின்மினி கொடுங்கதிர் விளக்கு வன்னி மாதுளம் பூவிதை யென்னப் பன்னு சாதுரங்க வொளிக்குணம் பத்தும் ” என்னும் கல்லாட அகவற் பகுதியினும் சாதுரங்க நிறத்துள் கார் கூறப்படாது சாதகப் புள்ளின்கண் கூறப்பட்டிருத்தலும்; “ திலக முலோத்திரஞ் செம்பருத் திப்பூக் கவிர்மலர் குன்றி முயலுதி ரம்மே சிந்துரங் குக்கிற் கண்ணென வெட்டும் எண்ணிய குருவிந்த மன்னிய நிறமே ” என்னும் நூற்பாவிலே, குருவிந்த நிறத்துள் செவ்வரத்தம், விதாரம் பொன் என்பன வின்றிச், செம்பருத்திப்பூ, சிந்துரம், குக்கிற்கண் என்பனவும், “ செம்பஞ் சரத்தந் திலக முலோத்திரம் முயலின் சோரி சிந்துரங் குன்றி கவிரல ரென்னக் கவர்நிற மெட்டும்” என்னும் கல்லாடப் பகுதியிலே விதாரமும் பொன்னும் இன்றிச், செம்பஞ்சு, சிந்துரம் என்பனவும் கூறப்பட்டிருத்தலும் அறியற் பாலன. (39) களிதருசெள கந்திகத்தி னிறமிலவம் போதுகுயிற் கண்ண சோகந் தளிரவிர்பொன் செம்பஞ்சி யைவண்ண மெனவாறு தகுகோ வாங்க ஒளிகுரவு குசும்பைமலர் செங்கல்கொவ் வைக்கனியென் றொருநான் கந்த மிளிர்பதும ராகத்தைப் பொதுமையினாற் சோதிக்க வேண்டு மெல்லை. (இ-ள்.) களிதரு செளகந்திகத்தின் நிறம் - களிப்பைத்தருகின்ற செளகந்திகத்தின் நிறம், இலவம்போது குயிற்கண் அசோகந் தளிர் அவிர் பொன் செம்பஞ்சி ஐவண்ணம் என ஆறு - இலவமலரும் குயிலின் கண்ணும் அசோகந்தளிரும் விளங்கும் பொன்னும் செம்பஞ்சியும் மருதோன்றியும் என ஆறு வகையாகும்; தகு கோவாங்க ஒளி - தக்க கோவாங்கத்தின் ஒளி, குரவு குசும்பை மலர் செங்கல் கொவ்வைக் கனி என்று ஒரு நான்கு - குராமலரும் குசும்பைமலரும் செங்கல்லும் கொவ்வைக்கனியும் என்று ஒரு நான்கு வகையாகும்; அந்த மிளிர் பதுமராகத்தைப் பொதுமை யினால் சோதிக்க வேண்டும் எல்லை - அந்த விளக்கமுள்ள மாணிக்கத்தைப் பொதுவாக ஆராயவேண்டுமிடத்து எ-று. ஐவண்ணம் - மருதோன்றி. “ கோகிலக்கண் செம்பஞ்சு கொய்ம்மலர்ப் பலாசம் அசோகப் பல்லவம் அணிமலர்க் குவளை இலவத் தலர்க ளென்றாறு குணமும் செளகந் திக்குச் சாற்றிய நிறனே” என்னும் நூற்பாவில், செளகந்திகத்தின் நிறத்துள் பொன், ஐவண்ணம் என்பன வின்றிப் பலாசம், குவளை என்பனவும், “ அசோகப் பல்லவம் அலரிசெம் பஞ்சு கோகிலக் கண்ணீ ளிலவலர் செம்பெனத் தருசெள கந்தி தன்னிற மாறும்”” என்னும் கல்லாடத்தில் பொன், ஐவண்ணம் என்பன வின்றிச் செம்பு, அலரி என்பனவும் கூறப்பட்டிருத்தலும்; “ கோவைநற் செங்கல் குராமலர் மஞ்சளெனக் குங்கும மஞ்சிற் கோவாங்கு நிறமும்” என்னும் கல்லாடத்தில், குசும்பை மலரின்றி மஞ்சள் கூறிக் குங்குமம் ஒன்று மிகுதியாகக் கூறப்பட்டிருத்தலும் அறியற்பாலன. (40) திண்ணியதாய் மேல்கீழ்சூழ் பக்கமுற வொளிவிடுதல் செய்தாற் செவ்வே அண்ணியவுத் தமமுதன்மூன் றாமென்பர் சாதரங்க மணிவோர் விச்சை புண்ணியவான் கன்னியறு சுவையன்ன முதலான புனித தானம் பண்ணியதும் பரிமேத யாகமுதன் மகம்புரிந்த பயனுஞ் சேர்வர். (இ-ள்.) திண்ணியது ஆய் மேல் கீழ் சூழ் பக்கம் உற ஒளி விடுதல் செய்தால் - திட்பமுடையதாய் மேலும் கீழும் சுற்றுப் பக்கமுமாகிய இவற்றில் ஒளி வீசினால், செவ்வே - முறையே, அண்ணிய உத்தமம் முதல் மூன்று ஆம் - பொருந்திய உத்தமம் முதலிய மூன்று வகைப்படும், என்பர் - என்று கூறுவர்; சாதரங்கம் அணிவோர் - சாதரங்கத்தினை அணிகின்றவர்கள், விச்சை புண்ணிய ஆன் கன்னி அறு சுவை அன்னம் முதலான புனிததானம் பண்ணியதும் - கல்வியும் அறவடிவாகிய பசுவும் கன்னியும் அறுசுவை யமைந்த உண்டியும் முதலான தூய தானஞ் செய்த பயனையும், பரிமேத யாகம் முதல் மகம் புரிந்த பயனும் - பரி வேள்வி முதலிய பல வேள்விகளைப் புரிந்த பயனையும், சேர்வர் - அடைவர் எ-று. மேலே ஒளி விடில் உத்தமம், கீழே ஒளி விடில் அதமம், பக்கத்தில் ஒளி விடில் மத்திமம் என்க. பண்ணியது - பண்ணிய பயன். (41) குருவிந்தந் தரிப்பவர்பார் முழுதுமொரு குடைநிழலிற் குளிப்ப வாண்டு திருவிந்தை யுடனிருப்பர் செளகந்தி கந்தரிப்போர் செல்வங் கீர்த்தி மருவிந்தப் பயனடைவர் கோவாங்கந் தரிப்போர்தம் மனையிற் பாலும் பெருவிந்த மெனச்சாலி முதற்பண்ட முடன்செல்வப் பெருக்கு முண்டாம். (இ-ள்.) குருவிந்தம் தரிப்பவர் பார் முழுதும் ஒரு குடை நிழலில் குளிப்ப ஆண்டு - குரு விந்தத்தினை அணிகின்றவர் நில வுலக முற்றும் தமது ஒரு குடை நிழலின் கீழ்த் தங்க அரசாண்டு, திருவிந்தை உடன் இருப்பர் - திருமகளோடும் வீரமகளோடுங் கூடியிருப்பர்; செளகந்திகம் தரிப்போர் - செளகந்திகத்தினை அணிவோர், செல்வம் கீர்த்தி மருவு இந்தப் பயன் அடைவர் - செல்வமும் புகழுமாகிய பொருந்திய இந்தப் பயன்களை யடைவார்; கோவாங்கம் தரிப்போர் தம் மனையில் - கோவாங்கத்தினை அணிவோரின் வீட்டில், பாலும் பெரு விந்தம் என சாலி முதல் பண்டமுடன் செல்வப்பெருக்கும் உண்டாம் - பாலும் பெரிய விந்த மலையைப் போல நெல் முதலிய பல பண்டங்களின் குவைகளோடு செல்வப் பெருக்கமும் உண்டாகும் எ-று. நிழலின் கீழிருத்தலை ‘நிழலிற் குளிப்ப’என்றார். திருவுடனும் விந்தையுடனும் என்க. (42) எள்ளியிடு குற்றமெலா மிகந் துகுண னேற்றொளிவிட் டிருள்கால் சீத்துத் தள்ளியவிச் செம்பதும ராகமது புனைதக்கோர் தம்பா லேனைத் தெள்ளியமுத் துள்ளிட்ட பன்மணியும் வந்தோங்குஞ் செய்யா ளோடும் ஒள்ளியநற் செல்வமதற் கொப்பநெடும் பாற்கடலி னோங்கு மானே. (இ-ள்.) எள்ளியிடு குற்றம் எலாம் இகந்து - விலக்கப்பட்ட குற்றங்களெல்லாவற்றினின்றும் நீங்கி, குணன் ஏற்று ஒளிவிட்டு இருள் கால் சீத்துத் தள்ளிய - சிறந்த குணங்களைத் தன்னகத்தே கொண்டு ஒளி வீசி இருளைப் பற்றறக் கெடுத்துப் போக்கிய, இ செம்பதும ராகமது புனை தக்கோர் தம்பால் - இந்தச் சிவந்த பதுமராக மணியை அணிகின்ற தக்கோரிடத்து, ஏனை தெள்ளிய முத்து உள்ளிட்ட பல் மணியும் வந்து ஓங்கும் - மற்றைச் சிறந்த முத்து முதலிய பல மணிகளும் வந்து பெருகும்; அதற்கு ஒப்ப - அதற்குப் பொருந்த, செய்யாளோடும் ஒள்ளிய நல் செல்வம் - திருமகளோடும் புகழைத் தருவதாகிய நல்ல செல்வமும், நெடும்பாற்கடலின் ஓங்கும் - நெடிய பாற்கடலைப் போல வளரும் எ-று. கால் சீத்து - அடியுடன் கெடுத்து; ஒரு சொல்லுமாம். பதுமராகமது; அது : பகுதிப் பொருள் விகுதி. தம் : சாரியை. ஆல், ஓ : அசைகள். மாணிக்கத்தின் குற்றம் பதினாறு எனவும், குணம் பன்னிரண்டு எனவும் கூறப்படும் : அதனை, “ மாணிக் கத்தியல் வகுக்குங் காலைச் சமனொளி சூழ்ந்த விருநான் கிடமும் நால்வகை வருணமு நவின்றவிப் பெயரும் பன்னிரு குணமும் பதினறு குற்றமும் இருபத் தெண்வகை யிலங்கிய நிறமும் மருவிய விலையும் பத்தி பாய்தலும் இவையென மொழிப வியல்புணர்ந் தோரே” என்னும் பழைய நூற்பாவால் அறிக. (43) (மேற்படி வேறு) பிறநிறச் சார்பு புள்ளி புள்ளடி பிறங்கு கீற்று மறுவரு1 தராச மென்ன வகுத்தவைங் குற்றந் தள்ளி அறைதரு பண்பு சான்ற வரதன மணியும் வேந்தன் செறுநர்வா ளூற்ற மின்றிச் செருமகட் கன்ப னாவான். (இ-ள்.) பிறநிறச் சார்பு - (அவ்வவற்றி ற்குரிய நிறமொழிந்த) வேறு நிறம் பொருந்தலும், புள்ளி - விந்துவும், புள் அடி - காக பாதமும், பிறங்கு கீற்று - விளங்குகின்ற தாரையும், மறு வரு தராசம் - குற்றம் பொருந்திய ஒளி சலித்தலும், என்ன வகுத்த ஐங்குற்றம் தள்ளி - என்று பாகுபாடு செய்த ஐந்து குற்றங்களையும் ஒழித்து, அறை தரு பண்பு சான்ற அரதனம் அணியும் வேந்தன் - (அவ்வவற்றிற்குக்) கூறிய குணம் நிறைந்த மணிகளை அணிகின்ற மன்னன், செறுநர் வாள் ஊற்றம் இன்றி - பகைவரது வாளினால் இடையூறில்லாமல், செருமகட்கு அன்பன் ஆவான் - வீரமகளுக்குத் தோழனாவன் எ-று. சரை மலம், கீற்று, சம்படி, பிளத்தல், துளை, கரு, விந்து, காகபாதகம், மிருத்து, கோடியில்லன, கோடிமுரிந்தன, தாரை மழுங்கல், கருகல், வெள்ளை, கல், மணல், பரிவு, தார், சாயையிறுகுதல், கருப்பத்துளை, கல்லிடை முடங்கல், திருக்கு என்பன வாதியாகக் குற்றங்கள் பலவாகும்; அவற்றுள், ஐந்து குற்றங்களைப் பொது வகையால் ஈண்டெடுத்துக் கூறினார். புள்ளடி - காகபாதம்; புள் - காக்கை. ஊற்றம் - ஊறு; அம் : பகுதிப்பொருள் விகுதி. (44) குறுநிலக் கிழவ னேனு மவன்பெருங் குடைக்கீழ்த் தங்கி மறுகுநீர் ஞால மெல்லாம் வாழுமற் றவனைப் பாம்பு தெறுவிலங் கலகை பூதஞ் சிறுதெய்வம் வறுமை நொய்தீக் கறுவுகொள் கூற்றச் சீற்றங் கலங்கிட வாதி யாவாம். (இ-ள்.) குறுநிலக் கிழவனேனும் - (இம்மணிகளை யணிபவன்) குறுநில மன்னனாயினும், அவன் பெருங் குடைக்கீழ் - அவனது பெரிய குடை நிழலின் கீழ், மறுகு நீர் ஞாலம் எல்லாம் தங்கி வாழும் - கடல் சூழ்ந்த உலக மனைத்தும் பொருந்தி வாழும்; பாம்பு தெறுவிலங்கு அலகை பூதம் சிறு தெய்வம் வறுமை நோய் தீ - பாம்பும் கொல்லும் விலங்குகளும் பேயும் பூதமும் சிறு தெய்வங் களும் மிடியும் நோயும் நெருப்பும், கறுவுகொள் கூற்றச் சீற்றம் - கறுவுதலைக் கொண்ட கூற்றின் சினமும், கலங்கிட அவனை வாதியா - கலக்கமடையும்படி அவனைத் துன்புறுத்தமாட்டா எ-று. மறுகுதல் - சுழலுதல், மறுகு நீர் - கடல்; ஆகுபெயர். தெறு விலங்கு - கொலைத் தொழிலையுடைய விலங்கு; சிங்கம் புலி முதலியன. மற்று, ஆம் என்பன அசைகள். (45) முன்னவ ரென்ப கற்றோர் வச்சிர முந்நீர் முத்தம் மன்னவ ரென்ப துப்பு மாணிக்கம் வணிக ரென்ப மின்னவிர் புருட ராகம் வயிடூயம் வெயிற்கோ மேதம் பின்னவ ரென்ப நீல மரகதம் பெற்ற சாதி. (இ-ள்.) கற்றோர் - கற்று வல்லோர், பெற்ற சாதி - பொருந்திய சாதி வகையால், வச்சிரம் முந்நீர் முத்தம் முன்னவர் என்ப - வயிரத்தையும் கடலிற்றோன்றிய முத்தையும் அந்தணர் என்று கூறுவர்; துப்பு மாணிக்கம் மன்னவர் என்ப - பவளத்தையும் மாணிக்கத்தையும் அரசரென்று கூறுவர்; மின் அவிர் புருடராகம் வயிடூயம் வெயில் கோமேதம் வணிகர் என்ப - மின்போல விளங்கும் புருடராகத்தையும் வயிடூரியத்தையும் ஒளி பொருந்திய கோமேதகத் தையும் வணிகர் என்று கூறுவர்; நீலம் மரகதம் பின்னவர் என்ப - நீலத்தையும் மரகதத்தையும் சூத்திரரென்று கூறுவர் எ-று. பொருந்திய சாதி வகையால் என விரித்துத் தனித்தனி கூட்டுக. வெண்மை முதலிய நிறம்பற்றி வயிரம் முதலியவற்றை அந்தணர் முதலிய சாதியுட் படுத்துக் கூறுவது புனைந்துரை வகை யாயதொரு வழக்கு. (46) பார்த்திவர் மதிக்கு முத்தம் பளிங்கன்றிப் பச்சை தானுஞ் சாத்திகந் துகிர்மா ணிக்கங் கோமேதங் தாமே யன்றி மாத்திகழ் புருட ராகம் வயிடூயம் வயிரந் தாமும் ஏத்திரா சதமா நீலந் தாமத மென்ப ராய்ந்தோர். (இ-ள்.) ஆய்ந்தோர் - நூல்களை ஆராய்ந்தோர், பார்த்திவர் மதிக்கும் முத்தம் - அரசர்கள் மதிக்கின்ற முத்தும், பளிங்கு - பளிங்கும், அன்றி - இவையல்லாமல், பச்சைதானும் - மரகதமும், சாத்திகம் - சாத்துவிக குணமுடையனவாம், துகிர் மாணிக்கம் கோமேதம் - பவளமும் மாணிக்கமும் கோமேதமும், அன்றி - இவையல்லாமல், மாதிகழ் புருடராகம் வயிடூயம் வயிரமும் தாமும் - பெருமை விளங்கும் புருடராகமும் வயிடூரியம் வயிரம், ஏத்து இராசதம் ஆம் - பலரும் போற்றும் இராசத குணம் உடையனவாம், நீலம் - நீலமானது, தாமதம் - தாமத குணம் உடையதாம், என்பர் என்று கூறுவர் எ-று. நவமணிகளின் வேறாய பளிங்கும் இதிற் கூறப்பட்டது. சாத்திகம் என்பதன் திரிபு, சாத்துவிகம் முதலிய குணவகை சிறிது வேறுபடக் கூறுவாருமுளர். தான், தாம், ஏ என்பன அசைகள். (47) இனையவை யளந்து கண்டு மதிக்குநா ளெழுமான் பொற்றேர் முனைவனாண் முதலா வேழின் முறையினாற் பதும ராகங் கனைகதிர் முத்தந் துப்புக் காருடம் புருட ராகம் புனையொளி வயிர நீல மென்மனார் புலமை சான்றோர். (இ-ள்.) இனையவை அளந்து கண்டு மதிக்கும் நாள் - இம்மணிகளை ஆராய்ந்து பார்த்து மதிப்பிடும் நாட்கள், எழுமான் பொன் தேர் முனைவன் நாள் முதலா - ஏழு குதிரைகளைப் பூட்டிய பொன்னாலாகிய தேரினையுடைய சூரியனுக்குரிய ஞாயிற்றுக் கிழமை முதலாக, ஏழின் முறையினால் - ஏழு கிழமைகளின் முறையே, பதுமராகம் கனைகதிர் முத்தம் துப்பு காருடம் புருட ராகம் - பதுமராகமும் செறிந்த ஒளியினையுடைய முத்தும் பவளமும் பச்சையும் புருடராகமும், புனை ஒளி வயிரம் நீலம் - அழகிய ஒளியினை யுடைய வயிரமும் நீலமும் (என்பவற்றிற்குரியன), என்மனார் புலமை சான்றோர் - என்று கூறுவர் அறிவின் மிக்க பெரியோர் எ-று. நாள் முறையினால் உரியன வென விரித்து முடிக்க. காருடம்- பச்சை. (48) வெய்யவன் கிழமை தானே மேதக மணிக்கு மாகும் மையறு திங்க டானே வயிடூய மணிக்கு மாகும் ஐயற விவையொன் பானு மாய்பவ ரகம்பு றம்பு துய்யரா யறவோ ராய்முன் சொன்னநா ளடைவே யாய்வர். (இ-ள்.) வெய்யவன் கிழமை தானே - ஞாயிற்றுக் கிழமையே, மேதக மணிக்கும் ஆகும் - கோமே தகமணிக்கும் உரியதாகும்; மை அறு திங்கள் தானே - குற்றமற்ற திங்கட்கிழமையே, வயிடூய மணிக்கும் ஆகும் - வயிடூய மணிக்கும் உரியதாகும்; இவை ஒன்பானும் ஐயம் அற ஆய்பவர் - இவை ஒன்பது மணிகளையும் ஐயுறவு நீங்க ஆராய்பவர், அகம் புறம்பு துய்யராய் - உள்ளும் புறமும் தூய்மையுடையவராய், அறவோராய் - அறநெறியிற் செல்பவராய், முன் சொன்ன நாள் அடைவே ஆய்வர் - முன் கூறிய கிழமைகளில் முறையே ஆராயக் கடவர் எ-று. பதுமராகத்திற்குக் கூறிய ஞாயிற்றுக் கிழமையே கோமேதகத் திற்கும், முத்திற்குக் கூறிய திங்கட்கிழமையே வயிடூயத்திற்கும் ஆகுமென்றார். கோமேதகம் என்பது முதற்குறையாய் நின்றது. ஐயமற என்பது ஐயற எனத் தொகுத்தல் விகாரமாயிற்று. அகமும் புறம்பும் எனவிரிக்க. ஆய்வர் - ஆயக்கடவரென்க. (49) அல்லியம் பதுமஞ் சாதி யரத்தவா யாம்பல் கோடல் வல்லிசேர் மெளவற் போது நூற்றிதழ் மரைகா லேயம்1 மெல்லிதழ்க் கழுநீர் பேழ்வாய் வெள்ளைமந் தார மின்ன சொல்லிய முறையால் வண்டு சூழத்தன் முடிமேற் சூடி. (இ-ள்.) அல்லி அம் பதுமம் - அகவிதழையுடைய அழகிய செந்தாமரை மலரும், சாதி - சிறுசண்பக மலரும், அரத்தவாய் ஆம்பல் - சிவந்த வாயையுடைய ஆம்பன் மலரும், கோடல் - செங்காந்தண் மலரும், வல்லிசேர் மெளவல்போது - கொடியாய்ப் படர்ந்த மல்லிகையின் மலரும், நூறு இதழ்மரை - நூறு இதழ்களையுடைய வெண்டாமரை மலரும், காலேயம் - மரமஞ்சள் மலரும், மெல் இதழ் கழுநீர், மெல்லிய இதழையுடைய நெய்தல் மலரும், பேழ்வாய் வெள்ளை மந்தாரம் - பிளந்த வாயையுடைய வெள்ளை மந்தார மலரும், இன்ன - ஆகிய இம்மலர்களை, சொல்லிய முறையால் வண்டு சூழத் தம் முடிமேல் சூடி - முன்னர்க் கூறிய முறையினால் வண்டுகள் சூழத் தமது முடியிற் சூடி எ-று. அல்லி - அகவிதழ். மரை : முதற்குறை. முன்னே பதுமராகம் முதலியவற்றைக் கூறிய முறையே அவற்றுக்கு உரியவாகக்கொண்டு சூடி என்க. (50) தலத்தினைச் சுத்தி செய்து தவிசினை யிட்டுத் தூய நலத்துகில் விரித்துத் தெய்வ மாணிக்க நடுவே வைத்துக் குலத்தமுத் தாதி யெட்டுங் குணதிசை முதலெண் டிக்கும் வலப்பட முறையே பானு மண்டல மாக வைத்து. (இ-ள்.) தலத்தினைச் சுத்தி செய்து - நிலத்தைத் தூய்மை செய்து, தவிசினை இட்டு - ஆதனத்தைஇட்டு, தூயநலம்துகில் விரித்து - அதன்மேல் வெள்ளிய நன்மையாகிய ஆடையை விரித்து, தெய்வ மாணிக்கம் நடுவே வைத்து - தெய்வத் தன்மை பொருந்திய மாணிக்கத்தை இடையில் வைத்து, குலத்த முத்து ஆதி எட்டும் - சிறந்த முத்து முதலிய மணிகள் எட்டினையும், குணதிசை முதல் எண் திக்கும் முறையே வலப்பட - கிழக்குத் திக்கு முதல் எட்டுத் திக்குகளிலும் முறையே வலமாக, பானு மண்டலமாக வைத்து - பரிதி மண்டலம் போல வைத்து எ-று. நலத்துகில் - நன்மையாகிய துகில் : பண்புத் தொகை. குலத்த- சிறப்பினையுடைய: குறிப்புப் பெயரெச்சம். மண்டலமாக வலப்பட வைத்து என்க. வலம்பட என்பது வலித்தலாயிற்று. வட்டமாக வென்பார் ‘பானு மண்டலமாக’என்றார். சூரிய மண்டிலம் சிவந்த கதிருடன் ஏனைக் கதிர்களையும் உடையதாதலும் கொள்க. (51) அன்புறு பதும ராக மாதியா மரத னங்கள் ஒன்பதுங் கதிரோ னாதி யொன்பது கோளு மேற்றி முன்புரை கமலப் போது முதலொன்பான் மலருஞ் சாத்தி இன்புற நினைந்து பூசை யியன்முறை வழாது செய்தல். (இ-ள்.) அன்பு உறு பதுமராகம் ஆதியாம் அரதனங்கள் ஒன்பதும் - விருப்ப மிக்க பதுமராகம் முதலாகிய ஒன்பதும் மணிகளின் மேலும், கதிரோன் ஆதி ஒன்பது கோளும் ஏற்றி - ஞாயிறு முதலிய ஒன்பது கோட்களையுந் தாபித்து, முன்பு உரை கமலப்போது முதல் ஒன்பான் மலரும் சாத்தி - முன்னே கூறிய தாமரை மலர் முதலிய ஒன்பது மலர்களையும் சாத்தி, இன்பு உற நினைந்து - இன்ப மிகச் சிந்தித்து இயல் முறை வழாது - விதி முறை வழுவாமல், பூசை செய்தல் - பூசனைபுரிக எ-று. ஏற்றுதல் - ஆவாகித்தல். செய்தல் - செய்க: அல்லீற்று வியங்கோள். மாணிக்கம் ஞாயிற்றுக்கும், முத்து திங்களுக்கும், பவழம் செவ்வய்க்கும், மரகதம் புதனுக்கும், புட்பராகம் வியாழனுக்கும், வயிரம் வெள்ளிக்கும், இந்திர நீலம் சனிக்கும், கோமேதம் இராகுவுக்கும், வைடூரியம் கேதுவுக்கும் மகிழ்ச்சி தருவன என்று சுக்கிரநீதியுட் கூறப்பட்டுளது.1 (52) தக்கமுத் திரண்டு வேறு தலசமே சலச மென்ன இக்கதிர் முத்தந் தோன்று மிடன்பதின் மூன்று சங்கம் மைக்கரு முகில்வேய் பாம்பின் மத்தகம் பன்றிக் கோடு மிக்கவெண் சாலி யிப்பி மீன்றலை வேழக் கன்னல். (இ-ள்.) தக்க முத்து தலசமே சலசமே என்ன இரண்டு வேறு - குற்றமில்லாத முத்துக்கள் தலச மென்றும் சலச மென்றும் இரண்டு வகைப்படும்; இ கதிர் முத்தம் தோன்றும் இடன் பதின்மூன்று - இந்த ஒளியையுடைய முத்துக்கள் தோன்றும் இடம் பதின்மூன்றாம்; சங்கம் மைக்கரு முகில் வேய் பாம்பின் மத்தகம் பன்றிக்கோடு - சங்கும் மிகக்கரிய முகிலும் மூங்கிலும் அரவின் தலையும் பன்றிக் கொம்பும், மிக்க வெண்சாலி இப்பி மீன் தலை வேழக் கன்னல் - மிகுந்த வெண்ணெல்லும் சிப்பியும் மீனினது தலையும் வேழக்கரும்பும் எ-று. தலசம் - நிலத்திற் றோன்றுவது. சலசம் - நீரிற் றோன்றுவது. தலசமே: ஏகாரம் எண்ணுப் பொருட்டு. என்ன இரண்டு வேறாம் என்க. வேழக் கன்னல் - வேழமாகிய கன்னல்: இருபெய ரொட்டு; வேழம் - கரும்பின் ஒருவகை. இச்செய்யுளை வருஞ் செய்யுளோடு ஒரு தொடராக்கி, தோன்றுமிடன் கொக்கின் கண்டம் எனப்பதின் மூன்றாம் என முடிக்க. (53) கரிமருப் பைவாய் மான்கை கற்புடை மடவார் கண்டம் இருசிறைக் கொக்கின் கண்ட மெனக்கடை கிடந்த மூன்றும் அரிபன வாதிப் பத்து நிறங்களு மணங்குந் தங்கட் குரியன நிறுத்த வாறே யேனவு முரைப்பக் கேண்மின். (இ-ள்.) கரிமருப்பு ஐவாய் மான்கை கற்புடை மடவார் கண்டம் - யானையின் தந்தமும் சிங்கத்தின் கையும் கற்புடை மகளிரின் கழுத்தும், இருசிறைக் கொக்கின் கண்டம் என - இரண்டு சிறைகளையுடைய கொக்கின் கழுத்தும் என்று; கடை கிடந்த மூன்றும் அரியன - ஈற்றிற் கூறிய மூவகையும் கிடைத்தற்கரியன; ஆதிப்பத்து நிறங்களும் - முதற் கண் உள்ள பத்துவகை முத்துக்களின் நிறங்களும், தங்கட்கு உரியன அணங்கும் - அவற்றிற்கு உரியவாகிய தெய்வங்களும், ஏனவும் - பிறவும், நிறுத்தவாறே உரைப்பக் கேண்மின் - நிறுத்த முறையே சொல்லக் கேளுங்கள் எ-று. விரிந்த முகமுடையது என்னும் பொருளில் சிங்கத்திற்குப் பஞ்சானனம் என்பது ஒருபெயர்; பஞ்ச என்பது ஐந்து எனவும் பொருள்படு மாகலின் சொல் நோக்கி ‘ஐவாய்’எனக் கூறினார்; இங்ஙனம் மொழி பெயர்த்த லுண்டென்பது ‘குஞ்சர நகரம்’ முதலியவற்றாலறிக. அவை தங்கட்கு என்க. (54) மாடவெண் புறவின்முட்டை வடிவெனத்திரண்ட பேழ்வாய்1 கோடுகான் முத்தம் வெள்ளை நிறத்தன2 கொண்மூ முத்தம் நீடுசெம் பரிதி யன்ன நிறத்தது கிளைமுத் தாலிப் பீடுசா னிறத்த ராவின் பெருமுத்த நீலத் தாமால். (இ-ள்.) மாடப் புறவின் வெள்முட்டை வடிவு எனத்திரண்ட- மாடப் புறவின் வெள்ளிய முட்டையின் வடிவினைப்போலத் திரட்சி வாய்ந்த, பேழ்வாய் - பிளந்த வாயினையுடைய இப்பியும், கோடு - சங்கும், கால் - ஈன்ற, முத்தம் - முத்தங்கள், வெள்ளை நிறத்தன - வெள்ளை நிறத்தினையுடையன; கொண்மூ முத்தம் நீடு செம்பரிதி அன்ன நிறத்தது - முகிலீன்ற முத்து மிக்க செந்நிறம் வாய்ந்த சூரியனை ஒத்த நிறத்தினை யுடையது; கிளைமுத்து - மூங்கிலீன்ற முத்து, ஆலிப் பீடுசால் நிறத்து - மழைக் கட்டிபோலப் பெருமை நிறைந்த நிறத்தினை யுடையது; அராவின் பெருமுத்தம் - பாம்பீன்ற பெரியமுத்து, நீலத்து ஆம் - நீல நிறத்தினை யுடைய தாகும் எ-று. பேழ்வாய் - பிளந்தவாயையுடையது என இப்பிக்குக் காரணக்குறி. கோடு - சங்கு. கிளை - மூங்கில். ஆலி - ஆலங்கட்டி; மழை பெய்யும் பொழுது விழும் நீர் திரண்ட கட்டி; ஆலம் - நீர். நிறத்தது நீலத்தது என்பன நிறத்து நீலத்து என விகாரமாயின. ஆல், அசை. (55) ஏனமா வாரஞ் சோரி யீர்ஞ்சுவைச் சாலி முத்தம் ஆனது பசுமைத் தாகும் பாதிரி யனைய தாகும் மீனது தரளம் வேழ மிரண்டினும் விளையு முத்தந் தானது பொன்னின் சோதி தெய்வதஞ் சாற்றக் கேண்மின். (இ-ள்.) ஏனம் மா ஆரம் சோரி - பன்றிக்கொம்பின் பெருமை யுடைய முத்தானது குருதியினிறத்தினையுடையது; ஈர் சுவைச் சாலி முத்தம் ஆனது பசுமைத்து ஆகும் - தண்ணிய சுவையினையுடைய வெண்ணெல்லின் முத்தம் பசிய நிறத்தினையுடையது; மீனது தரளம் பாதிரி அனையதாகும் - மீன்றலையின் முத்தம் பாதிரி மலர் போலும் நிறத்தினையுடையது; வேழம் இரண்டினும் விளையும் முத்தம் - யானைக் கொம்பும் கரும்பும் ஆகிய இவ்விரண்டினும் உண்டாகின்ற முத்துக்கள், பொன்னின் சோதி - பொன்னின் நிறத்தினையுடையன; தெய்வதம் சாற்றக் கேண்மின் - அவ்வம் முத்தங்களுக்குரிய தெய்வங்களையும் கூறக்கேளுங்கள் எ-று. ஈர்ஞ்சுவை, ‘மெல்லெழுத்து மிகுதல் மெய் பெறத் தோன்றும்’ என்பதன் இலேசால் மெலி மிக்கது. ஆனது, முதல் வேற்றுமைச் சொல். வேழம் - யானை, கரும்பு. தான், அது என்பன அசைகள். (56) பான்முத்தம் வருணன் முத்தம் பகன்முத்தம் பகலோன் முத்தம் மான்முத்த நீல முத்த மாசறு குருதி முத்தங் கான்முத்தம் பசிய முத்தங் காலன்றன் முத்தந் தேவர் கோன்முத்தம் பொன்போன் முத்தங் குணங்களும் பயனுஞ் சொல்வாம். (இ-ள்.) பால் முத்தம் வருணன் முத்தம் - பால் போன்ற வெள்ளிய முத்தங்கள் வருணனுக்குரிய முத்தங்களாகும்; பகல் முத்தம் பகலோன் முத்தம் - சூரியன் போன்று செந்நிறம் வாய்ந்த முத்தங்கள் - சூரியனுக்குரிய முத்தங்க ளாகும்; நீல முத்தம் மால் முத்தம் - நீல நிறமுடைய முத்தங்கள் திருமாலுக்குரிய முத்தங் களாகும்; மாசுஅறு குருதி முத்தம் கால் முத்தம் - குற்றமற்ற குருதி நிறத்தினையுடைய முத்தங்கள் வாயு தேவனுக்குரிய முத்தங் களாகும்; பசிய முத்தம் காலன் முத்தம் - பசிய நிறத்தினையுடைய முத்தங்கள் கூற்றுவனுக்குரிய முத்தங்க ளாகும்; பொன்போல் முத்தம் - பொன்னைப் போலும் நிறம் வாய்ந்த முத்தங்கள், தேவர்கோன் முத்தம் - தேவேந்திரனுக்குரிய முத்தங்க ளாகும்; குணங்களும் பயனும் சொல்வளம் - (இனி) அவற்றின் குணங் களையும் அணிவோ ரடையும் பயனையும் கூறுவோம் எ-று. (57) கால் காற்றுத் தெய்வம். தன் : சாரியை. உடுத்திர ளனைய காட்சி யுருட்சிமா சின்மை கையால் எடுத்திடிற் றிண்மை பார்வைக் கின்புறல் படிக மென்ன1 அடுத்திடு குணமா றின்ன வணியின்மூ தணங்கோ டின்மை விடுத்திடுந் திருவந் தெய்தும் விளைந்திடுஞ் செல்வம் வாழ்நாள். (இ-ள்.) உடுத்திரள் அனையகாட்சி - உடுக் கூட்டத்தினை ஒத்த தோற்றமும், உருட்சி - திரட்சியும், மாசு இன்மை - குற்றங்களில் லாமையும், கையால் எடுத்திடில் திண்மை - கையினால் எடுத்தால் திண்ணென் றிருத்தலும், பார்வைக்கு இன்புறல் - நோக்கத்திற்கு இன்பஞ் செய்தலும், படிகம் - படிகம்போன்று தெளிந்திருத்தலும், என்ன அடுத்திடு குணம் ஆறு - என்று பொருந்திய குணங்கள் ஆறாகும்; இன்ன அணியின் மூதணங்கோடு இன்மை விடுத்திடும் - இம் முத்துக்களை அணிந்தால் (அணிவோரைத்) தவ்வையும் வறுமையும் (விட்டு) நீங்கும்; திருவந்து எய்தும் - திருமகள் வந்து சேருவாள்; செல்வம் வாழ்நாள் விளைந்திடும் - செல்வமும் வாழ் நாளும் மிகும் எ-று. உடு - விண்மீன். மூதணங்கு - மூதேவி. குற்றங்களாவன - காற்றேறு, மணலேறு, கல்லேறு, நீர்நிலை என்பன முதலாயின; “ காற்றினு ம;ண்ணினுங் கல்லினு நீரினும் தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும் சந்திர குருவே அங்கா ரகனென வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்” என்னும் சிலப்பதிகாரத்து ஊர்காண் காதை யடிகளும், அவற்றின் உரையும் நோக்குக. (58) மாசறு தவத்தோ னென்பும் வலாசுர னென்பும் வீழ்ந்த கோசல மாதி நாட்டிற் பட்டது குணத்தான் மாண்ட தேசதா யிலேச தாகித் தெள்ளிதா யளக்கி னெல்லை வீசிய விலைய தாகி மேம்படு வயிரந் தன்னை. (இ-ள்.) மாசு அறு தவத்தோன் என்பும் - குற்றமற்ற தவத் தினையுடைய ததீசி முனிவன் முதுகந் தண்டெலும்பும், வலாசுரன் என்பும் - வலாசுரனுடைய எலும்பும், வீழ்ந்த கோசலம் ஆதி நாட்டில் - சிந்திய கோசல முதலிய நாட்டினில், பட்டது - தோன்றி, குணத்தால் மாண்ட தேசது ஆய் - குணங்களால் மாட்சிமைப் பட்ட விளக்க முடையதாய், இலேசது ஆகி - (கையால் எடுப்பின்) இலேசாய், தெள்ளி தாய் - சருச்சரை யகன்றதாய், அளக்கின் எல்லை வீசிய விலையது ஆகி - (விலையை) வரையறுத்தால் அளவு கடந்த விலையை யுடையதாகி, மேம்படு வயிரம் தன்னை - சிறந்த வயிரத்தை எ-று. பட்டது - தோன்றியதாய்; எச்சம். எல்லை வீசிய - அளவினைப் போக்கிய. “ வைராகர மேருப் பிமவா னேம கூடம் துங்கசவாலக்க மவந்திக மாதங்கந் தொகுமருண மெனுமெட்டா கரமேதோற்றம்” என வயிரம் தோன்றுமிடம் எட்டென்பர் பெரும்பற்றப்புலியூர்நம்பி ‘குணத்தால் ’ மாண்ட எனவே குற்ற மின்மையுங் கொள்க; “ சரைமலங் கீற்றுச் சம்படி பிளத்தல் துளைகரி விந்து காக பாதம் இருத்துக் கோடிக ளிலாதன முரிதல் தாரை மழுங்கல் தன்னோ டீராறும் வயிரத் திழிபென மொழிப ” என்பதனால் வயிரத்தின் குற்றம் பன்னிரண்டு எனவும்; “ காகபாதமுங் களங்கமும் விந்துவு மேகையு நீங்கி ” என்னும் சிலப்பதிகார அடிகளாலும், “ காக பாத நாகங் கொல்லும்” “ மலம்பிரி யாதது நிலந்தரு கிளைகெடும்” “ விந்து சிந்தையிற் சந்தா பந்தரும்”” “ கீற்று வரலினை யேற்றவர் மாய்வர்” என்னும் நூற்பாக்களாலும் அவற்றுள் மிக்க குற்றம் நான்கு எனவும்; “ பலகை யெட்டுங் கோண மாறும் இலகிய தாரையுஞ் சுத்தியுந் தராசமும் ஐந்துங் குணமென் றறைந்தனர் புலவர் இந்திர சாபத் திகலொளி பெறினே” என்பதனால் வயிரத்தின் குணம் ஐந்து எனவும் அறியப்படுகின்றன. (59) குறுநிலத் தரசுந் தாங்கிற் குறைவுதீர் செல்வ மெய்தி உறுபகை யெறிந்து தன்கோன் முழுதுல கோச்சிக் காக்கும் வறுமைநோய் விலங்கு சாரா வரைந்தநா ளன்றிச் செல்லுங் கறுவுகொள் கூற்றம் பூதங் கணங்களு மணங்கு செய்யா. (இ-ள்.) குறுநிலத்து அரசும் தாங்கின் - குறுநில மன்னனும் (இதனை) அணியில், குறைவுதீர் செல்வம் எய்தி - குறைவற்ற செல்வத்தை அடைந்து, உறுபகை எறிந்து - மிக்க பகைவரை அழித்து, தன்கோல் உலகு முழுதும் ஓச்சிக் காக்கும் - தனது செங்கோல் உலக முழுதுஞ் செல்ல நடாத்திக் காப்பான்; வறுமைநோய் விலங்குசாரா - (அவ்வரசனை வருத்த) வறுமையும் பிணியும் விலங்குகளும் அடையாவாம்; வரைந்தநாள் அன்றிச் செல்லும் கறுவுகொள் கூற்றம் - வரையறுத்த நாளிலல்லாமல் இடையில் வரும் சினங் கொண்ட கூற்றமும், பூதம் கணங்களும் அணங்கு செய்யா - பூதங்களும் பேய்களும் துன்பம் செய்யமாட்டா எ-று. உறு-மிக்க: உரிச்சொல்; உறுகின்ற பகையென வினைத் தொகையுமாம். முழுது -எஞ்சாமைப் பொருட்டு. உலகு முழுதும் என மாறுக. கூற்றமும் பூதமும் என உம்மை விரிக்க. அணங்கு - வருத்தம். (60) மாமணி மரபுக் கெல்லாம் வயிரமே முதன்மைச் சாதி ஆமென வுரைப்பர் நூலோ ரதிகம்யா தென்னி னேனைக் காமரு மணிகட் கெல்லாந் தமரிடு கருவி யாமத் தூமணி தனக்குந் தானே துளையிடுங் கருவி யாகும். (இ-ள்.) நூலோர் - மணி நூலாராய்ச்சி வல்லுநர், மாமணி மரபுக்கு எல்லாம் வயிரமே முதன்மைச் சாதி ஆம் என உரைப்பர் - பெருமை பொருந்திய மணிகளின் மரபுகளுக் கெல்லாம் வயிரமே முதற் சாதியாம் என்று கூறுவர்; அதிகம் யாது என்னில் - அம் முதன்மை எதனா லென்னில், அ தூமணி - அந்தத் தூய்மையுடைய வயிரமணி, ஏனை காமரு மணிகட்கு எல்லாம் தமர் இடு கருவியாம் - மற்றை விருப்பம் பொருந்திய மணிகளனைத்திற்கும் தொளை யிடுங் கருவியாகும் (அன்றி), தனக்குத் தானே துளை இடும் கருவி யாகும் - தனக்கும் தானே தொளை செய்யும் கருவியாகும் (ஆதலின்) எ-று. ‘நவமணிகளுள் வயிரமே எல்லாவற்றினுஞ் சிறந்ததாகும்; கோமேதகமும், பவழமும் எல்லாவற்றினும் தாழ்ந்தனவாகும்; மரகதமும், மாணிக்கமும், முத்தும் தலையாய மணிகளாம்; இந்திர நீலமும், புட்பராகமும், வைடூரியமும் இடையாய மணிகளாகும். என்று சுக்கிர நீதியிற் கூறப்பட்டுளது. வயிரம் எல்லாவற்றினும் திட்பமுடைத் தென்பது கூறப்பட்டது; “ வயிர வூசியு மயன்வினை யிரும்பும் செயிரறு பொன்னைச் செம்மைசெ யாணியும் தமக்கமை கருவியுந் தாமா மவைபோல் உரைத்திற முணர்த்தலு முரையது தொழிலே” என்னும் சூத்திரம் இங்கு நோக்கற் பாலது. (61) மரகதத் தோற்றங் கேண்மின் வலாசுரன் பித்தந் தன்னை இரைதமக் காகக் கெளவிப் பறந்தபுள் ளீர்ந்தண் டில்லித் தரைதனிற் சிதற வீழ்ந்து தங்கிய தோற்ற மாகும் உரைதரு தோற்ற மின்னும் வேறுவே றுள்ள கேண்மின். (இ-ள்.) மரகதத் தோற்றம் கேண்மின் - மரகதத்தின் தோற்றத் தினைக் கேளுங்கள்; வலாசுரன் பித்தந்தன்னை - வலாசுரன் பித்தத்தை, இரை தமக்காகக் கெளவிப் பறந்த புள் - தமக்கு உணவாகக் கெளவிப் பறந்த கலுழன், ஈர்தண் டில்லித்தரையினில் சிதற வீழ்ந்து தங்கிய தோற்றம் ஆகும் - மிக்க தண்ணிய டில்லி நாட்டிற் சிதறலால் வீழ்ந்து தங்கிய (இடங்களில்) தோற்றமாகும்; உரைதரு தோற்றம் - சொல்லப்படும் தோற்றங்கள், இன்னும் வேறுவேறு உள்ள கேண்மின் - இன்னம் வெவ்வேறு உள்ளன கேளுங்கள் எ-று. ‘வலனுடைய வயிற்றின் புறத்தைக் கொத்தி விழுங்கிய கருடன் நகைத்தலானுமிழ, அஃது இமவான் முதலிய பன் மலைகளினும் ஊறிப் பிறத்தலிற் கருடோற்காரம் என்று பெயர் பெற்ற மரகதச் சாதி என்று அடியார்க்கு நல்லார் கூறுவர். (62) விதிர்த்தவே லனைய வாட்கண் வினதைமா தருணச் செல்வன் உதிர்த்தவான் முட்டையோட்டை உவணவேற்றரையில் யாப்பக் கதிர்த்தவோ டரையிற் றப்பி வீழ்ந்தொரு கடல்சூழ் வைப்பில் உதித்தவா றாகு மின்னு முண்டொரு வகையாற் றோற்றம். (இ-ள்.) விதிர்த்த வேல் அனைய வாள் கண் வினதை மாது - அசைத்தலுடைய வேல்போன்ற ஒளிபெற்ற கண்ணையுடைய வினதை என்பாள், அருணச் செல்வன் உதித்தவால் முட்டை ஓட்டை - அருணன் உதித்த வெள்ளிய முட்டையின் ஓட்டினை, உவண ஏற்று அரையில் யாப்ப - கருடனது அரையிற் கட்ட, கதிர்த்த ஓடு அரையில் தப்பிவீழ்ந்து ஒருகடல் சூழ்வைப்பில் உதித்தவாறு ஆகும் - விளங்கிய வோடானது அதன் அரையினின்றும் தவறி விழந்து ஒரு கடல் சூழ்ந்த நிலத்தில் உதித்த விதம் ஒன்றாம்; இன்னும் ஒருவகையால் தோற்றம் உண்டு - இன்னும் ஒருவகையினாலும் தோற்றம் உண்டு எ-று. வினதை : தக்கன் புதல்வி; காசிபன் மனைவி; அருணனுக்கும் கலுழனுக்கும் தாய். அருணச் செல்வன் - அருணனாகிய புதல்வன். வைப்பில் வீழ்தலால் உதித்த வாறாகும் என்க. (63) முள்ளரை முளரிக் கண்ணன் மோகினி யணங்கா யோட வள்ளரை மதியஞ் சூடி மந்தர வரைமட் டாகத் துள்ளரி யேறு போலத் தொடர்ந்தொரு விளையாட் டாலே எள்ளரி தாய செந்தீ யிந்தியக் கலனஞ் செய்தான். (இ-ள்.) முள் அரை முளரிக் கண்ணன் - முட்கள் பொருந்திய நாளத்தினையுடைய தாமரையின் மலர்போலும் கண்களையுடைய திருமால், மோகினி அணங்காய் ஓட - மோகினிப்பெண் வடிவாகி ஓட, வள் அரை மதியம் சூடி - அழகிய பாதி மதியினைச் சடையிற் சூடிய சிவபெருமான், ஒரு விளையாட்டால் - ஒரு திருவிளை யாட்டாக, மந்தர வரை மட்டு ஆக - மந்தரமலையின் எல்லையள வாக, துள் அரி ஏறுபோலத் தொடர்ந்து - துள்ளுகின்ற ஆண்சிங்கம் போல அம் மோகினியைத் தொடர்ந்து சென்று, எள் அரிதாய செந்தீ இந்தியக்கலனம் செய்தான் - பழிப்பில்லாத சிவந்த தீயாகிய இந்திரியத்தைச் சிந்தினான் எ-று. மதியம், அம் : சாரியை. சூடி - அணிந்தவன்; இ : வினை முதற் பொருள் விகுதி, காமனை முனிந்த கண்ணுதற் பெருமான் இங்ஙனம் புரிந்தது ஒரு விளையாட்டே என்றார். இறைவனுக்கு இந்திரிய மாவது செந்தீ என்பது நூற் கொள்கை. (64) அப்பொழு தமல வித்தி லரிகர குமரன் கான வைப்புறை தெய்வத் தோடும் வந்தன னந்த விந்து துப்புறு கருடன் கெளவிக் கடலினுந் துருக்க நாட்டும் பப்புற விடுத்த வாறே பட்டது கலுழப் பச்சை. (இ-ள்.) அப்பொழுது அமலவித்தில் அரிகர குமரன் - அக்காலையில் தூய அவ்விந்தில் ஐயன் என்பான், கான வைப்பு உறை தெய்வத்தோடும் வந்தனன் - காட்டிலுறையும் பரிவார தெய்வங் களோடும் வந்தனன்; அந்த விந்து - அந்த விந்தினை, துப்பு உறு கருடன் கெளவி - வலமிக்க கருடன் கெளவி, கடலினும் துருக்க நாட்டும் பப்பு உற விடுத்தவாறே - கடலிலும் துருக்க நாட்டிலும் பரவ விடுத்த வழியே, கலுழப் பச்சை பட்டது - கலுழப் பச்சை தோன்றியது எ-று. வித்து - விந்து. அரிகர குமரன் - திருமாலுக்கும் சிவனுக்கும் பிறந்த புதல்வன்; ஐயனார்; மகா சாத்தா. பப்புற - பம்புதலுற. ஐயனார் தோன்றிய வரலாறு, “ இந்த வண்ண மிருக்க முராரியும் அந்தி வண்ணத் தமலனு மாகியே முந்து கூடி முயங்கிய வேலையில் வந்த னன்னெமை வாழ்விக்கு மையனே” “ அத்த குந்திரு மைந்தற் கரிகர புத்தி ரன்னெனு நாமம் புனைந்துபின் ஒத்த பான்மை யுருத்திரர் தம்மொடும் வைத்து மிக்க வரம்பல நல்கியே”” எனக் கந்தபுராணத்துட் கூறப்படுதல் காண்க. (65) காடமே சுப்பிரமே காளமெனக் குணமூன்றாங் கருடப் பச்சைக் கீடறுகி னிதழ் நிறத்த காடமது சாதியினா லிருவே றாகுஞ் சாடரிய சகுணமெனச் சதோடமென வவையிரண்டிற் சகுண மாறாம் பீடுபெறு காடமொடு முல்லசிதம் பேசலம் பித்தகமே முத்தம். (இ-ள்.) கருடப் பச்சைக்குக் காடமே சுப்பிரமே காளமெனக் குணம் மூன்றாம் - கருடப்பச்சை என்னும் மரகதத்திற்குக் காடம் என்றும் சுப்பிரம் என்றும் காளம் என்றும் குணங்கள் மூன்று வகையாம், ஈடு அறுகின் இதழ்நிறத்த காடமது - பெருமை பொருந்திய அறுகினிதழ் போலும் நிறத்தையுடைய காடமானது, சாடு அரிய சகுணமெனச் சதோடமெனச் சாதியினால் இருவேறு ஆகும் - கெடுதலில்லாத சகுணம் எனவும் சதோடம் எனவும் சாதியினால் இரண்டு வகைப்படும்; அவை இரண்டில் - அவ்விரண்டினில், பீடுபெறு காடமொடும் உல்லசிதம் என பேசலம் என பித்தகம் என முத்தம் என - பெருமை பொருந்திய காடமொடு உல்லசிதம் எனவும் பேசலம் எனவும் முத்தம் பித்தகம் எனவும் எனவும் எ-று. ஏ என என்பன எண்ணிடைச் சொற்கள். காடமது, அது : பகுதிப் பொருள் விகுதி. சகுணம் ஆறாம் என்பது வருஞ் செய்யுளிற் கூட்டி முடிக்கப்படும். (66) புல்லரிய பிதுகமென விவையாறிற் காடமது புல்லின் வண்ணம் உல்லசித மெலிதாகும் பேசலமே குளச்செநெலொண் டரளம் போலும் அல்லருடம் பித்தகமே பசுங்கிளியின் சிறைநிறத்த தாகு முத்தங் குல்லைநிறம் பிதுகமரை யிலையினிறஞ் சதோடத்தின் குணனைந் தாகும். (இ-ள்.) புல் அரிய பிதுகம் என - அடைதற்கரிய பிதுகம் எனவும், சகுணம் ஆறாம் - சகுணம் ஆறு வகைப்படும்; இவை ஆறில் - இவ்வாறனுள், காடமது புல்லின் வண்ணம் ஆகும் - காடமானது புல்லைப் போன்று பசிய நிறமுடையதாம்; உல்ல சிதம் மெலிது ஆம் - உல்ல சிதம் மென்மைத் தன்மையுடையதாம்; பேசலாம் குளச் செந்நெல் ஒண்தரளம் போலும் - பேசலமானது குளநீரால் விளையும் செந்நெற் பயிரிற்றோன்றிய ஒள்ளிய முத்துப்போலும் பசிய நிறத்தினை யுடையதாம்; அல் அடரும் பித்தகமே பசுங் கிளியின் சிறை நிறத்தது ஆகும் - இருளை ஓட்டும் பித்தகமானது பசிய சிறையின் நிறத்தினை யுடையதாம்; முத்தம் குல்லை நிறம் - முத்தமானது துளவத்தி னிறத்தினையுடைய தாம்; பிதுகம் மரை இலையின் நிறம் - பிதுகமானது தாமரை இலையின் நிறத்தினையுடையதாம்; சதோடத்தின் குணன் - சதோடத்தின் குணங்கள் எ-று. மரை : முதற்குறை. ஐந்தாகும் என்பது வருஞ்செய்யுளிற் கூட்டி முடிக்கப்படும். (67) தோடலே சாஞ்சிதமே துட்டமே தோடமூர்ச் சிதமே வெய்ய தோடலே சத்தினொடு சூழ்மந்த தோடமெனத் தொகுத்த வைந்தில் தோடலே சாஞ்சிதஞ்சம் பிரவிலையா மலரியிலை துட்ட நீலத் தோடதாம் புல்லினிறந் தோடமூர்ச் சிதமுளரி தோட லேசம். (இ-ள்.) தோடலே சாஞ்சிதமே துட்டமே தோட மூர்ச்சிதமே- தோடலேசாஞ்சிதம் எனவும் துட்டம் எனவும் தோட மூர்ச்சிதம் எனவும், வெய்ய தோடலே சத்தினொடு சூழ் மந்த தோடம் என - வெவ்விய தோடலேசம் எனவும் நீங்காத மந்த தோடம் எனவும், ஐந்து ஆகும் - ஐந்து வகைப்படும்; தொகுத்த ஐந்தில் - தொகுத்துக் கூறிய சதோடமைந்தினுள், தோடலே சாஞ்சிதம் சம்பிர இலையாம் - தோடலே சாஞ்சிதமானது எலுமிச்சை யிலையின் நிறத்தினை யுடையதாம்; துட்டம் - துட்டமானது, அலரி இலை - அலரியிலையின் நிறத்தையும், நீலத்தோடது ஆம் - கருங்குவளையின் இதழ்நிறத்தையும் உடையதாம்; தோட மூர்ச்சிதம் புல்லின் நிறம் - தோட மூர்ச்சித மானது புல்லின் நிறத்தினையுடையதாம்; தோடலேசம் முளரி - தோட லேசமானது தாமரையிலையின் நிறத்தினை யுடையதாம் எ-று. தோட மூர்ச்சிதமானது நீலத்தோடாகிய புல்லின் நிறம் என்னலுமாம். (68) மந்ததோ டங்கலப மயிலிறகி னிறமாமிவ் வகுத்த தோடஞ் சிந்தவா னாதகுண மணியணிவோர் நாற்கருவிச் சேனை வாழ்நாள் உந்தவாழ் வார்வலன்க ணீலமிரண் டரன்கண்டத் தொளிவிட் டோங்கும் இந்திரநீ லந்தான்மா நீலமென வேறிரண்டுண் டிந்த நீலம்.1 (இ-ள்.) மந்ததோடம் கலபமயில் இறகின் நிறமாம் - மந்த தோடமானது கலாபத்தையுடைய மயிலிறகின் நிறத்தினை யுடையதாம்; இவ்வகுத்த தோடம் சிந்தகுணம் ஆனாதமணி அணிவோர் - இங்கு வகுத்துக் கூறிய குற்றம் நீங்க (முன் கூறிய) குணத்தினின்றும் நீங்காத மரகதத்தை அணிகின்றவர், நாற்கருவிச் சேனை வாழ்நாள் உந்த வாழ்வார் - நான்கு கருவியாகிய தானை யொடு வாழ்நாளும் பெருக வாழ்வார்; வலன்கண் நீலம் இரண்டு - வலனுடைய இருகண்களாகிய நீலம் இரண்டு உண்டு; இந்த நீலம் - இந்நீலத்தில், அரன் கண்டத்து ஒளிவிட்டு ஓங்கும் இந்திர நீலம் - சிவபெருமான் திருமிடற்றைப்போல் ஒளிவிட்டு விளங்கும் இந்திர நீலம் எனவும், மாநீலம் என - மாநீலம் எனவும், வேறு இரண்டு உண்டு - வேறு இரண்டுவகை எ-று. “ கருகுதல் வெள்ளை கல்மணல் கீற்று பரிவுதார் சாயை யிறுகுதல் மரகதத் தெண்ணிய குற்ற மிவையென மொழிப” என்பதனால் மரகதத்தின் குற்றம் எட்டு எனவும், “ ஏகையு மாலையு மிருளொடு துறந்த” என்னும் சிலப்பதிகார அடியால் அவற்றுள் மிக்க குற்றம் மூன்று எனவும், “ நெய்த்த மயிற்கழுத் தொத்தபைம் பயிரிற் பசுத்தல் பொன்மை தன்னுடன் பசுத்தல் வக்கி பாய்தல் பொன்வண்டின் வயி றொத்துத் தெளிதலோ டெட்டுங் குணமே” என்பதனால் மரகதத்தின் குணம் எட்டு எனவும் அறியப்படுகின்றன. (69) முந்தியவிந் திரநீலம் விச்சுவரூ பனைமகவான் முடித்த நாளின் நந்தியடு பழிதவிர்ப்பான் புரியுமகப் பரிமகத்தி னறிய தூமம் உந்தியரும் பரியிமையா நாட்டநுழைந் தளிசேற்றி னொழுகும் பீளை சிந்தியவாற் றிடைப்படுமொன் றிந்திரவின் னீலமெனத் திகழு நீலம். (இ-ள்.) முந்திய இந்திர நீலம் - முன்னர்க் கூறிய இந்திரநீல மானது, விச்சுவரூபனை மகவான் முடித்த நாளில் - விச்சுவவுருவனை இந்திரன் கொன்ற பொழுது, நந்தி அடு பழி தவிர்ப்பான் - வளர்ந்து வருத்தும் பழியினை நீக்கும் பொருட்டு, புரியும் மகம் - செய்த வேள்வியாகிய, பரிமகத்தின் நறியதூமம் - புரவி வேள்வியில் எழுந்த நறுமணமுடைய புகையானது, உந்தி அரும் பரி இமையா நாட்டம் நுழைந்து - ஓங்கி அரிய குதிரையின் இமையாத கண்ணுள் நுழைதலால், அளிசேற்றின் - இளகிய சேற்றைப்போல, ஒழுகும் பீளை சிந்திய ஆற்றிடைப் படும் - ஒழுகிய பீளையானது சிதறிய இடத்தினின்றும் தோன்றும்; நீலம் - இந்நீலமானது, இந்திரவில் ஒன்று நீலம் எனத்திகழும் - இந்திர வில்லிற்பொருந்திய நீல நிறம்போல விளங்கா நிற்கும் எ-று. விச்சுவவுருவனைக் கொன்ற வரலாற்றை இந்திரன் பழிதீர்த்த படலத்திற் காண்க. நந்தி - பெருகி. மகப்பரிமகம் என்பதற்குப் பெரிய அசுவமேதம் என்றுரைப்பாரு முளர். உந்தி - தாவி. (70) சஞ்சையாம் பகற்கடவுண் மனைவியவன் கனலுடலந் தழுவ லாற்றா தஞ்சுவா டன்னிழலைத் தன்னுருவா நிறுவிவன மடைந்து நோற்க விஞ்சையா லறிந்திரவி பின்றொடர மாப்பரியா மின்னைத் தானுஞ் செஞ்செவே வயப்பரியாய் மையல்பொறா திந்தியத்தைச் சிந்தி னானே. (இ-ள்.) சஞ்சை ஆம் பகல் கடவுள் மனைவி - சஞ்சை என்னும் பெயரையுடைய சூரியன் மனைவியானவள், அவன் கனல் உடலம் தழுவல் ஆற்றாது அஞ்சுவாள் - அவனது தழல் வடிவத்தைத் தழுவு தற்குப் பொறாமல் அஞ்சுவாளாகி ‘தன் நிழலைத் தன் உருவா நிறுவி - தனது உடல் நீழலைத் தனது வடிவாக நிறுத்தி’ வனம் அடைந்து நோற்க - காட்டிற் சென்று தவஞ்செய்ய, விஞ்சையால் இரவி அறிந்து - (அதனை) ஞானத்தாற் சூரியன் உணர்ந்து, பின்தொடர - பின் தொடர்ந்து செல்ல, மாப்பரி ஆம் மின்னை - (அப்பொழுது) பெருமை பொருந்திய பெண் குதிரை வடிவாகி (ஓடிய) மனைவியை, தானும் செஞ்செவே வயப் பரியாய் - அச்சூரியனும் செவ்வனே அமைந்த ஆண் குதிரை வடிவாய் (பின் சென்று), மையல் பொறாது இந்தியத்தைச் சிந்தினான் - காமம் பொறுக்கலாற்றாது இந்திரியத்தைச் சிந்தினான் எ-று. சஞ்சையாம் மனைவி யென்க. நிழலுருவின் பெயர் சாயாதேவி. நோற்க வென்னும் எச்சம் தொடர வென்பதனையும், தொடர வென்னும் எச்சம் ஆம் என்பதனையும் கொள்ளும். தானும் பரியாய்த் தொடர்ந்து என விரித்துரைக்க. செஞ்செவே - மிகச்செவ்வே. (71) அவைசிதறும் புலந்தோன்று நீலமா நீலமிவை யணிவோர் வானோர் நவையறுசீர் மானவரிந் நகைநீலஞ் சாதியினா னால்வே றந்தக் கவலரிய வெள்ளைசிவப் பெரிபொன்மை கலந்திருக்கிற் கரிதாய் முற்றுந் தவலரிதா யிருக்கிலிரு பிறப்பாளர் முதன்முதனாற் சாதிக் காகும். (இ-ள்.) அவை சிதறும் புலம் தோன்றும் நீலம் மாநீலம் - அவ்விந்திரியங்கள் சிந்திய இடங்களிற் றோன்றும் நீலம் மாநீல மாகும்; இவை அணிவோர் வானோர் நவை அறுசீர் மானவர் - இம்மணிகளை அணிபவர் தேவர்களும் குற்றமற்ற சிறப்பினை யுடைய மக்களுமாவர்; இ நகை நீலம் சாதியினால் நால்வேறு - இவ்வொளியுள்ள மாநீலமானது சாதியினால் நான்கு வகையாகும்; அந்தக் கவல் அரிய வெள்ளை சிவப்பு எரி பொன்மை கலந்திருக்கில் - (பிறிதொன்று) பற்றுதலில்லாத அந்த வெண்மையும் சிவப்பும் விளங்கும் பொன்மையும் கலந்திருக்கினும், கரிதாய் முற்றும் தவல் அரிதாய் இருக்கில் - முற்றும் கரியதாய்க் கெடுதலில்லாததாய் இருக்கினும், இரு பிறப்பாளர் முதல் - அந்தணர் முதல், முதல் நால்சாதிக்கு ஆகும் - முதன்மையையுடைய நான்கு வருணத்திற்கும் உரியதாகும் எ-று. கவல் - கவ்வுதல்; பிறிதொன்று பற்றுதல். வெண்மை கலந்தால் அந்தணனும், செம்மை கலந்தால் அரசனும், பொன்மை கலந்தால் வைசியனும், முற்றும் கரிதாகில் சூத்திரனும் ஆம் என்க. சாதிக் காகும் சாதி எனப்படுதற் குரியவாகும். சிலப்பதிகாரத்து ஊர்காண் காதையுரையில், “ நீலத் தியல்பு நிறுக்குங் காலை நால்வகை வருணமு நண்ணு மாகரமும் குணம்பதி னொன்றுங் குறையிரு நான்கும் அணிவோர் செயலு மறிந்திசி னோரே”” “ வெள்ளை சிவப்புப் பச்சை கருமையென் றெண்ணிய நாற்குலத் திலங்கிய நிறமே” “ கோகுலக் கழுத்துக் குவளை சுரும்பர் ஆகுலக் கண்க ளவிரிச் சாறு காயா நெய்தல் கனத்தல் பத்தி பாய்த லெனக்குணம் பதினொன் றாமே” என அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டிய நூற்பாக்கள் இங்கு அறியற் பாலன. (72) இலங்கொளிய விந்நீல மெய்ப்படுப்போர் மங்கலஞ்சேர்ந் திருப்பா ரேனை அலங்குகதிர் நீலத்திற் பெருவிலையா யிரப்பத்தி னளவைத் தாகித் துலங்குவதான் பாற்கடத்தி னூறுகுணச் சிறப்படைந்து தோற்றுஞ் சோதி கலங்குகட லுடவைப்பி லரிதிந்த விந்திரன்பேர்க் கரிய நீலம். (இ-ள்.) இலங்கு ஒளிய இ நீலம் - விளங்குகின்ற ஒளியினையுடைய இந்நீல மணிகளை, மெய்ப்படுப்போர் மங்கலம் சேர்ந்து இருப்பார் - அணிகின்றவர்கள் நலங்களெய்தி யிருப்பர்; ஏனை அலங்கு கதிர் நீலத்தின் பெருவிலை ஆயிரப்பத்தின் அளவைத்து ஆகி - மற்றை விளங்காநின்ற ஒளியினையுடைய மா நீலத்தினும் பதினாயிர மடங்காகிய பெரிய விலையினை உடையதாகி, துலங்குவது - விளங்குவதாகிய, இந்த இந்திரன் பேர்க்கரிய நீலம் - இந்த இந்திரநீலம், ஆன்பால் கடத்தின் - ஆனின்பால் நிறைந்த குடத்தில் இட்டால், நூறுகுணம் சிறப்பு அடைந்து சோதி தோற்றும் - (அப்பால் நிறத்தைக் கீழ்ப்படுத்தி) நூறு மடங்கு தன் குணம் மேம் பட்டு ஒளி தோன்றச் செய்யும்; கலங்கு கடல் உடைவைப்பில் அரிது - (இஃது) ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இந்நிலவுலகில் அரியதாகும் எ-று. மெய்ப்படுத்தல் - மெய்யின்கட் சேர்த்தல்; அணிதல். ஏனை அலங்கு கதிர் நீலம் என்றது இந்திரநீல மென்னில் ‘நீலத்தின் பெருவிலை’ என்றிருத்தல் வேண்டும். ஊறுகுணம் எனப் பிரித்து, மேம்பட்டுச் சுரக்கின்ற குணம் என்றலுமாம். சோதி தோற்றுவது மாநீலம் என்றுரைப்பாரு முளர். சீவகந்தாமணியிலே ‘கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படிலாய்’ என்பதன் குறிப்பாகக் ‘கருமணியைப் பாலிற் பதித்தால் பால்நிறங் கெடுமென்றுணர்க’ என நச்சினார்க் கினியர் கூறியிருப்பது இங்கு நினைக்கற்பாலது. (73) மைந்துறுசெம் மணிமுத்து வாள்வயிரம் பச்சையொளி வழங்கு நீலம் ஐந்திவைமேற் கோமேத முதற்பவள மீறாக வறைந்த நான்கும் நந்தொளிய வேனுமவை சிறுவேட்கை பயப்பவழ னகுசெங் குஞ்சி வெந்தறுகண் வலனிணங்கள் சிதறுமிடைப் படுவனகோ மேத மென்ப. (இ-ள்.) மைந்து உறு செம்மணி முத்து வாள் வயிரம் பச்சை ஒளிவழங்கும் நீலம் ஐந்து இவைமேல் - வன்மை மிக்க மாணிக்கமும் முத்தும் ஒளிபொருந்திய வயிரமும் மரகதமும் ஒளியைக் கொடுக்கும் நீலமும் ஆகிய இவ்வைந்தின் மேல், கோமேத முதல் பவளம் ஈறாக அறைந்த நான்கும் - கோமேதகம் முதலாகப் பவளம் இறுதியாகக் கூறிய நான்கு மணிகளும், நந்து ஒளியவேனும் - மிக்க ஒளியினை யுடையவேனும், அவை - அம் மணிகள், சிறுவேட்கை பயப்ப - சிறிய விலையுள்ளன; அழல் நகு செங்குஞ்சி வெந்தறுகண் வலன் நிணங்கள் சிதறு மிடை - நெருப்பைப் போலும் விளங்காநின்ற சிவந்த சிகையையும் கொடிய அஞ்சாமையையும் உடைய வலனுடைய நிணங்கள் சிந்திய இடத்தில், கோமேதம் படுவன என்ப - கோமேதகங்கள் தோன்றுவன என்பர் எ-று. இதுகாறும் கூறியவற்றைச் சுட்டி ‘ஐந்திவை’ என்றார். நான்கு - கோமேதகம், புருடராகம், வைடூரியம், பவளம் என்பன. வேட்கை விருப்பம்; ஈண்டு விலை. (74) உருக்குநறு நெய்த்துளிதேன் றுளிநல்லான் புண்ணியநீ ரொத்துச் சேந்து செருக்குபசும் பொன்னிறமும் பெற்றுமெலி தாய்த்தூய்தாய்த் திண்ணி தாகி இருக்குமது தரிக்கினிருட் பாவம்போம் பரிசுத்தி யெய்தும் வென்றித் தருக்குவலன் கபம்விழுந்த விடைப்புருட ராகமொளி தழையத் தோன்றும். (இ-ள்.) உருக்கும் நறு நெய்துளி - உருக்கிய நறிய நெய்த் துளியும், தேன் துளி - தேன்றுளியும், நல் ஆன் புண்ணிய நீர் ஒத்துச்- சேந்து - நல்ல பசுவின் கோசலமும் ஆகிய இவற்றை ஒத்துச் சிவந்து, செருக்கு பசும்பொன் நிறமும் பெற்று - உயர்ந்த பசிய பொன்னிறத் தையும் பெற்று, மெலிதாய் தூய்தாய் திண்ணிதாகி - சருச்சரை அகன்றதாய்த் தூயதாய்த் திண்ணியதாய், இருக்குமது தரிக்கின் - இருக்கின்ற கோமே தகத்தை அணிந்தால், இருட்பாவம்போம் - கருமையாகிய பாவம் நீங்கும்; பரிசுத்தி எய்தும் - புனிதம் வந்து பொருந்தும்; வென்றித்தருக்கு வலன் கபம் விழுந்த இடை - வெற்றிச் செருக்கினையுடைய வலனது கபம் விழுந்த விடத்தினின்றும், புருட ராகம் ஒளி தழையத்தோன்றும் - புருடராகமணி ஒளிமிகத் தோன்றும் எ-று. புண்ணிய நீர் - கோசலம். மாற்றுயர்ந்த பொன்னைச் ‘செருக்கு பசும்பொன்’ என்றார். இருட்பாவம் - அஞ்ஞானத்தா லாகிய பாவம் என்றும், நிரயத்திற் கேதுவாகிய பாவம் என்றும் கூறலுமாம். ‘மஞ்சளும் சிவப்பும் கலந்தா லொத்த நிறத்தையுடைய கோமேதக வருக்கமும்’ என்பர் அடியார்க்கு நல்லார். (75) தாழ்ந்தபிலத் திழிந்தெரிபொற் கண்ணவுண னுயிர்குடிக்குந் தறுகட் பன்றி போழ்ந்தமுழை வாய்திறந்து திசைசெவிடு படநகைத்துப் பொன்போற் கக்கி வீழ்ந்தகபம் படுதீவிற் படுமுச்சி வட்டமாய் மெலிதாய்ப் பொன்போற் சூழ்ந்தொளிவிட் டவிர்தழல்போற் றெளிவெய்தி மனங்கவர்ந்து தோற்றஞ் செய்யும். (இ-ள்.) தாழ்ந்த பிலத்து இழிந்த எரிபொற்கண் அவுணன் உயிர் குடிக்கும் - ஆழ்ந்த பாதலத்தில் (பூமியைப் பாயாகச் சுருட்டிச் கொண்டு) சென்றொளித்த இரணியாக்கன் என்னும் அவுணனது உயிரைப் பருகிய, தறுகண் பன்றி போந்த முழைவாய் திறந்து - அஞ்சாமையையுடைய (திருமாலாகிய) பன்றி தனது பிளந்தகுகை போன்ற வாயினைத் திறந்து, திசைசெவிடுபட நகைத்துக் கக்கி - திக்குகள் செவிடாம்படி நகைத்துக் கக்குதலால், பொன்போல் வீழ்ந்த கபம்படு தீவில் படும் - பொன்னைப்போற் சிதறி வீழ்ந்தகபம் பொருந்திய தீவிலும் உண்டாகும்; உச்சி வட்டமாய் மெலிதாய் - (அது) உச்சியில் வட்ட வடிவாய் மென்மையுடையதாய், பொன் போல் அவிர் தழல்போல் சூழ்ந்து ஒளிவிட்டு - பொன்போலும் விளங்கும் தீப்போலும் சுற்றிலும் ஒளிவீசி, தெளிவு எய்தி மனங் கவர்ந்து தோற்றஞ்செய்யும் - தெளிவு பொருந்திக் கண்டோர் மனத்தைக் கவர்ந்து பொலியும் எ-று. இழிந்த என்பதன் அகரம் தொக்கது; இழிந்து உயிர் குடிக்கும் எனப் பன்றிக்கேற்றி உரைத்தலுமாம். பொற்கண்ணன் - இரணியாக்கன்; புவியைப் பாய்போற் சுருட்டிப் பாதலத்திற் புக்கொளிக்கத், திருமால் வெள்ளைப் பன்றியுருவெடுத்துச்சென்று அவனைக்கொன்று, தமது கோட்டின் நுதியால் புவியைப் பண்டுபோற் கொணர்ந்து நிறுத்தினர் என்பது வரலாறு. கக்குதலால் பொன்போல் வீழ்ந்தஎன விரித்துரைக்க. தீவிலும் படும் என இறந்தது தழுவிய எச்சவும்மை விரித்துரைக்க. தோற்றஞ் செய்யும் - விளங்கும். (76) இந்தமணி பாரியாத் திரகிரியிற் கொடுமுடியா யிலங்குந் தெய்வ மந்தரமால் வரைப்புறஞ்சூழ் மேகலையா மயனிந்த மணியி னாலே அந்தரநா டவனகரு மரசிருப்பு மண்டபமு மமைத்தா னிந்தச் சந்தமணி தரிப்பவரே தரியார்வெந் நிடவாகை தரிக்க வல்லார். (இ-ள்.) இந்தமணி பாரியாத்திர கிரியின் கொடு முடியால் இலங்கும் - இந்த மணியானது பாரியாத்திர மலையின் சிகரமாய் விளங்கும்; தெய்வ மந்தரமால் வரை புறஞ்சூழ் மேகலையாம் - தெய்வத்தன்மை பொருந்தி பெரிய மந்தரமலையின் புறத்திற் சூழ்ந்த மேகலையாகவும் விளங்கும்; மயன் இந்த மணியினாலே - தெய்வத் தச்சன் இந்த மணியினாலே, அந்தர நாடவன் நகரும் அரசு இருப்பு மண்டபமும் அமைத்தான் - தேவேந்திரனது நகரத்தையும் அவன் அரசு வீற்றிருக்கு மண்டபத்தையும் ஆக்கினான்; இந்தச் சந்தமணி தரிப்பவரே - இந்த அழகிய புருடராகமணியை அணிபவரே, தரியார் வெந் இட வாகைதரிக்க வல்லார் - பகைவர் புறங்கொடுக்க வெற்றிமாலை தரிக்க வல்லராவர் எ-று. புருடராகமானது பூசத்தினது உருவினையுடைய பொன்னை மாசறத் தெளிய வைத்தா லொத்தது எனச் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுள்ளது. (77) வலன்மயிராம் வயிடூய மிளாவிருத கண்டத்தில் வந்து தோன்றிப் பலர்புகழுங் கோரக்க மகதஞ்சிங் களமலயம் பார சீகம் இலகுதிரி கூடாதி தேயங்கள் பிறதீப மெங்குந் தோற்றும் அலைகடலும் படுமிறுதிக் காரிடிக்கும் போதுநிற மதற்கியா தென்னில். (இ-ள்.) வலன் மயிராம் வயிடூயம் இளாவிருத கண்டத்தில் வந்து தோன்றி - வலன் மயிராகிய வயிடூரியமானது இளாவிருத கண்டத்திற் றோன்றி, பலர் புகழும் கோரக்கம் மகதம் சிங்களம் மலயம் பாரசீகம் - பலரும் புகழுகின்ற கோரக்கத்திலும் மகதத் திலும் சிங்களத்திலும் பொதியின் மலையிலும் பாரசீகத்திலும், இலகு திரிகூடாதி தேயங்கள் - விளங்காநின்ற திரிகூடம் முதலான தேயங்களிலும், பிற தீபம் எங்கும் - வேறு தீவுகளனைத்திலும்; தோற்றும்- உண்டாகும்; அலை கடலும் இறுதிக்கார் இடிக்கும் போதும் படும்- அலைகின்ற கடலிலும் ஊழிக்காலத்தில் முகில் இடிக்கும் பொழுதிலும் தோன்றும்; அதற்கு நிறம் யாது என்னில் - அம்மணிக்கு ஒளியாதென்றால் எ-று. ஊழிக்காலத்து மேகம் முழங்கும் பொழுது அலைகின்ற கடலிலும்படும் என ஒன்றாக்கி யுரைத்தலுமாம். (78) கழையிலைகார் மயிலெருத்தம் வெருகின்கண் ணிறத்ததாய்க் கனத்த தாகி விழைவுதரு தெளிதாகித் திண்ணிதாய் மெலிதாகி விளங்கு மீதில் அழகுபெற வலமிடமேல் கீழொளிவிட் டனமுறையே யறவோ ராதித் தழைவுறுநாற் சாதிகளாந் தினமிதனைப் பூசித்துத் தரிக்க சான்றோர். (இ-ள்.) கழை இலை கார் மயில் எருத்தம் வெருகின்கண் நிறத்த தாய் - மூங்கில் இலையும் கரிய மயிலின் கழுத்தும் பூனையின் கண்ணுமாகிய இவற்றின் நிறத்தினையுடையதாய், கனத்தது ஆகி - கனமுடையதாய், விழைவுதரு தெளிதாகி - விருப்பத்தைத் தரும் தெளிவுள்ளதாகி, திண்ணிது ஆய் - திண்மை யுடையதாய், மெலிதாகி விளங்கும் - மென்மைத்தன்மை யுடையதாய் விளங்கா நிற்கும்; ஈதில் - இம்மணியில், வலம் இடம் மேல் கீழ் ஒளி விட்டன - வலத்தினும் இடத்திலும் மேலும் கீழும் ஒளி வீசுவன, முறையே - முறையாக, அறவோர் ஆதி - அந்தணர் முதலான, தழைவு உறு நால்சாதிகளாம் - செழிப்பினையுடைய நான்கு வருணங்களாம்; சான்றோர் இதனைத் தினம் பூசித்துதரிக்க - அரிவுடையோர் நாளும் இம்மணியைப் பூசித்து அணியக்கடவர் எ-று. நிறம் யாதென்னில் கழையிலை மயிலெருத்தம் வெருகின்கண் என்னு மிவற்றின் நிறம் என முடித்துப், பின், அஃது அந்நிறத்ததாய்க் கனத்ததாகித் தெளிதாகித் திண்ணிதாய் மெலிதாகி விளங்கும் என்றுரைத்துக் கொள்க. தெளிது தெள்ளிது. இதனில் எனற்பாலது ஈதில் என நின்றது. அறவோர் - அந்தணர் என்னும் பொருட்டு. வைடூரியமானது ஞாயிற்றின் ஒளியும், தேன்றுளியும் போலுமெனச் சிலப்பதிகாரத்தற் கூறப்பட்டுளது. (79) வலத்தவுணன் றசைவீழ்ந்த வழிப்படுதுப் ப1யன்சந்தி வடிவ மாத்தென் புலத்தவரை விதிக்குமிடத் தவனுடன்மா சிழிபுலத்தும் புயல்போல் வண்ணன் வலத்தமது கைடவரைக் குறைகுருதி வழிநிலத்தும் மகவான் வெற்பின் குலத்தையிற கரிசோரி சிதறிடத்தும் வந்துகுடி கொண்டு தோன்றும். (இ-ள்.) வலத்தவுணன் தசைவீழ்ந்த வழிப்படு துப்பு - வலனென்னும் அவுணனது தசைவீழ்ந்த இடத்துத் தோன்றிய பவளம், அயன் சந்தி வடிவமாதென் புலத்தவரை விதிக்கு மிடத்து - பிரமன் சந்திக்கால வடிவமாக விருந்து தென்புலத்தவரைப் படைக்கும் பொழுது, அவன் உடல்மாசு இழி புலத்தும் - அவனது உடலின் அழுக்கு வீழ்ந்த இடத்திலும், புயல்போல் வண்ணன் - முகில்போலும் நிறத்தினையுடைய திருமால், வலத்த மது கைட வரைக் குறை குருதிவழி நிலத்தும் - வலியினையுடைய மதுகைடவர் களைச் சேதித்த குருதி ஒழுகிய இடத்திலும், மகவான் - இந்திரன், வெற்பின் குலத்தை இறகு அரிசோரி சிதறு இடத்தும் - மலையின் கூட்டத்தைச் சிறகு அரிந்த குருதி சிதறிய இடத்திலும், வந்து குடிகொண்டு தோன்றும் - வந்து குடிகொண்டு விளங்கும் எ-று. வலனாகிய அவுணனை ‘வலத்தவுணன்’ என்றார். பிரமன் பிதிரரைப் படைக்கும்பொருட்டுக்கொண்ட உடலை விடுத்த பொழுது சந்திக்காலம் ஆகலின் சந்தி யெனப்படும் என்று புராணங் கூறும். மதுகைடவர் - மதுவும் கைடவனும் : உம்மைத்தொகை. அயன் உந்தித் தாமரையில் இருக்க அரி திருப்பாற் கடலில் அறிதுயில் கொள்ளும் பொழுது அவருடைய இரு செவிகளிலு மிருந்து மதுகைடவன் என்னும் அசுரர் இருவர் தோன்றி அண்டங்கள் நடுங்க உலவும்பொழுது பிரமன் துணுக்க முறத் திருமால் ‘அஞ்சேல்’ எனக் கூறி, விட்டுணு, சிட்டுணு என்று இருவரைப் படைத்து ஏவ, அவர்கள் மதுகைடவரைக் கொன்றனர் என்று கூர்ம புராணங் கூறும். (80) அவ்வழியிற் படுபவள முருக்கம்பூப் பசுங்கிளிமூக் கலர்ந்த செவ்விச் செவ்வரத்த மலர் கொவ்வைக் கனிபோலுங் குணங்குற்றந் திருகிக் கோடல் எவ்வமுறப் புழுவரித்தன் முகமொடிதல் பெரும்பாலு மிப்பூ ணேந்தல் பெய்வளையார் தமக்கேயாந் தரிக்கின்மகப் பேறுமுதற் பேறுண்டாகும். (இ-ள்.) அ வழியில் படுபவளம் குணம் - அவ்விடங்களிற் றோன்றிய பவளத்தினது நிறமானது, முருக்கம்பூ பசுங்கிளி மூக்கு அலர்ந்த செவ்வி செவ்வரத்த மலர் கொவ்வைக் கனிபோலும் - முருக்க மலரையும் பசிய கிளியின் மூக்கையும் மலர்ந்த பருவத்தை யுடைய செவ்வரத்த மலரையும் கொவ்வைக்கனியையும் ஒக்கும்; திருகிக்கோடல் எவ்வம் உறப் புழு அரித்தல் முகம் ஒடிதல் குற்றம் - திருகிக் கோணுதலும் குற்றம் பொருந்தப் புழு அரித்தலும் முகமொடிதலும் (அதற்குரிய) குற்றங்களாகும்; இ பூண் ஏந்தல் பெரும்பாலும் பெய்வளையார் தமக்கே ஆம் - இப் பவளங்களைத் தரித்தல் பெரும்பாலும் வளையலை யணிந்த மகளிருக்கே உரியதாகும்; தரிக்கின் - அவர்கள் அணிந்தால், மகப்பேறு முதல்பேறு உண்டாகும் - மக்கட்பேறு முதலாகிய பயன்கள் உண்டாகும் எ-று. முருக்கம்பூ முதலியவற்றின் நிறத்தைப்போலும் என்க. குண மென்றது நிறத்தை. இப்பூண் - இதனாலாகிய அணியை. பெரும் பாலும் என்றமையால் சிறுபான்மை பிறவற்றுடன் கலந்து ஆடவர் அணிதலுண்டென்க. “ கருப்பத் துளையவுங் கல்லிடை முடங்கலும் திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும் ” என்னும் சிலப்பதிகார அடிகளும், இனிக் குணமிக்குக் குற்றங் கணீங்கியன நிறமும் உருட்சியும் சிந்துரமும் ஈச்சங்காயும் முசு முசுக்கைக் கனியும் தூதுவழுதுணம் பழமும் போல்வன வெனக்கொள்க என்னும் அடியார்க்கு நல்லார் உரையும் இங்கு அறியற்பாலன. (81) இரவியெதி ரெரியிறைக்குங் கல்லுமதி யெதிர்செழுநீ ரிறைக்குங் கல்லும் உரையிடுமொன் பதினொன்றி னுட்கிடையாய்க் கிடக்குமென வொன்பான் வேறு மரபுரைத்து வணிகரே றாகியவா னவரேறு வடபா னோக்கிப் பரவியிருந் தருச்சித்து மணிகைக்கொண் டெதிர்மதுரைப் பரனை நோக்கா. (இ-ள்.) இரவி எதிர் எரி இறைக்கும் கல்லும் - சூரியன் முன்தீயை உமிழும் சூரிய காந்தக்கல்லும், மதிஎதிர் செழுநீர் இறைக்கும் கல்லும்- சந்திரன் முன்தண்ணிய நீரைச்சிந்தும் சந்திரகாந்தக்கல்லும், உரையிடும் ஒன்பதில் ஒன்றில் உட்கிடையாய்க் கிடக்கும் என - முன் கூறிய ஒன்பது மணிகளுள் ஒன்றின் உட்கிடையாக அடங்கி யிருக்கு மென்று, ஒன்பான் வேறு மரபு உரைத்து - நவமணிகளின் வெவ்வேறாகிய தன்மையைக் கூறி, வணிகர் ஏறு ஆகிய வானவர் ஏறு - வணிகர் சிங்கமாக வந்த வானவர் சிங்கமாகிய இறைவன், வடபால் நோக்கி இருந்து பரவி அருச்சித்து - வடக்கு முகமாக நோக்கி யிருந்து துதித்துப் பூசித்து, மணி கைக் கொண்டு மதுரைப் பரனை எதிர் நோக்கா - மணிகளைக் கையில் எடுத்து மதுரைச் சொக்கலிங்க மூர்த்தியை எதிரேபார்த்து எ-று. கிடைக்குமெனக் கூறி. இங்ஙனம் மரபுரைத்து என்க. தலைமை யுடையா ரென்பதனை ஏறு என்பதனாற் கூறினார். முன் கிழக்கு நோக்கியிருந்து மணி களினியல்பு கூறியவர், இப்பொழுது வடக்கு நோக்கியிருந்து அருச்சித்தாரென்றார்; அவ்வாறிருத்தல் மரபு போலும்; மதுரைப் பரனை எதிர் நோக்குதற் பொருட்டு வடக்கு நோக்கினாருமாம். (82) அஞ்சலிசெய் தகநோக்கா லிக்குமரற் களவிறந்த வாயுள் செல்வம் விஞ்சுகவென் றளித்தருள விறைமகனும் விண்ணிழிந்த விமான நோக்கிச் செஞ்சரணம் பணிந்திருகைத் தாமரையும் விரித்தேற்றான் செல்வ நாய்கர் மஞ்சனையும் புடைநின்ற வமைச்சரையு நோக்கிமுக மலர்ந்து சொல்வார். (இ-ள்.) அஞ்சலி செய்து அக நோக்கால் இ குமரற்கு அளவு இறந்த ஆயுள் செல்வம் விஞ்சுக என்று அளித்தருள - அஞ்சலித்துத் திருவுளக் குறிப்போடு இவ்வரசிளங் குமரனுக்கு அளவற்ற வாழ் நாளும் செல்வமும் ஓங்குக என்று கூறிக் கொடுத்தருள, இறை மகனும் - அரச குமாரனும், விண் இழிந்த விமானம் நோக்கி - வானுலகினின்றும் இறங்கிய விமானத்தைப் பார்த்து, செஞ்சரணம் பணிந்து - சொக்கலிங்க மூர்த்தியின் சிவந்த திருவடிகளை வணங்கி, இருகைத் தாமரையும் விரித்து ஏற்றான் - தாமரை மலர்போலும் இரண்டு கைகளையும் விரித்து வாங்கினான்; செல்வ நாயகர் - (அப்பொழுது) செல்வத்தையுடைய வணிகராகிய சோமசுந்தரக் கடவுள், மஞ்சனையும் புடை நின்ற அமைச்சரையும் நோக்கி - அந்தப் புதல்வனையும் அருகில் நின்ற மந்திரிகளையும் நோக்கி, முக மலர்ந்து சொல்வார் - முக மலர்ச்சியுடன் சொல்வாராய் எ-று. கூறியதுடன் அங்ஙனம் ஆக வென்று திருவுளம் பற்றியருளினா ரென்பார், அகநோக்கால் என்றார். மஞ்சன்: மைந்தன் என்பதன் போலி. சொல்வார்: எச்சம். (83) இம்மணியா லிழைத்துநவ முடிசூட்டி யிச்சிங்க விளவெ றன்ன செம்மறனை யபிடேக பாண்டியனென் றியம்புமெனச் செம்பொன் றூக்கிச் கைம்மறியில் வணிகருக்கு விலைகொடுப்பான் வருவார்முன் கருணை நாட்டம் அம்மகன்மெ னிரப்பியிள நகையரும்பி நின்றாரை யங்குக் காணார். (இ-ள்.) இ மணியால் இழைத்து நவமுடி சூட்டி - இந்த மணிகளைக் கொண்டு புதிய மகுடஞ்செய்து சூட்டி, இசிங்க இள ஏறு அன்ன செம்மல்தனை - இவ்விளமையையுடைய ஆண் சிங்கம் போன்ற இறைமகனை, அபிடேக பாண்டியன் என்று இயம்பும் என - அபிடேக பாண்டியனென்று பெயரிட்டழையும் என்று சொல்ல, செம்பொன் தூக்கி - செம்பொன்னைத் துலையாற் றூக்கி, கைம் மறி இல் வணிகருக்கு விலை கொடுப்பான் வருவார் - கையின்கண் மானைக்கரந்து வந்த வணிகருக்கு விலை கொடுப்பதற்கு வருகின்ற அமைச்சர்கள், முன் - முன்பு, அம்மகன்மேல் கருணை நாட்டம் நிரப்பி - அவ்வரச குமரன்வேல் அருள் நோக்கினை மிகச் செலுத்தி, இளநகை அரும்பி நின்றாரை - புன்னகை அரும்பி நின்ற வணிகேசரை. அங்குகாணார் - அவ்விடத்திற் காணாதவராயினர் எ-று. நவமுடி இழைத்துச் சூட்டி யென்க; நவம் - புதுமை; இந் நவமணியால் என்றியைத் துரைத்தலுமாம். என - என்ற பொழுது. சிவபிரானாகிய வணிக ரென்பார், ‘கைம்மறியில்’ வணிகர் என்றார். வருவார் காணாராயினாரென்க. வருவார் : பெயர். (84) ஓருருவாய் நேர்நின்ற வணிகேசர் விடையின்மே லுமையா ளோடும் ஈருருவாய் முக்கண்ணு நாற்கரமு மஞ்சமர ரிறவா வாறு காருருவா யெழுமிடறுங் காட்டித்தங் கோயில்புகக் கண்டா ரின்று பாருருவாய் நின்றவணி கேசரிவ ரெனவேபின் பற்றிப் போவார். (இ-ள்.) ஓர் உருவாய் நேர் நின்ற வணிகேசர் - ஓர் உருவாகி நேரே நின்ற வணிகர் பெருமான், விடையின்மேல் உமையாளோடும் ஈர் உருவாய் - இடபவூர்தியின்மேல் உமைப் பிராட்டியோடும் இரண்டு திருவுருமாய், முக் கண்ணும் நால் கரமும் - மூன்று கண்களையும் நான்கு கைகளையும், அஞ்சு அமரர் இறவாவாறு - அஞ்சிய தேவர்கள் இறவாத வண்ணம், கார் உருவாய் எழுமிடறும் - கரியவுருவாய் எழுந்த திருமிடற்றினையும், காட்டி - தோன்றச் செய்து, தம் கோயில் புகக் கண்டார் - தமது திருக்கோயிலுட் போதலைக் கண்டவர்கள், இன்று பார் உருவாய் நின்ற வணிகேசர் இவரே என - இன்று பாரின்கண் வணிகர் தலைவர் வடிவினராய் நின்றவர் இவரே என்று, பின் பற்றிப்போவார் - பின்றொடர்ந்து சென்றனர் எ-று. சிவபெருமான் ஒருவரே ‘படைப்பாதித் தொழிலும் பத்தர்க் கருளும் பாவனையும்’ முதலியன நிகழ்த்துதற்குச் சிவமும் சக்தியு மென ஈருருவாயினர் என்பது தோன்ற ‘ஈருருவாய்’ என்றார். வணிகேசர்: குணசந்தி. திருமிடற்றின் கருமைக்கு நஞ்சினையுண்டல் காரணமா கலின் ‘இறவாவாறு காருருவா யெழுமிடறு’ என்றார். வணிகேசர் உருவாய் நின்றவர் இவர் என விகுதி பிரித்துக் கூட்டுக; பார் என்பதனை ஆகு பெயராக்கி,மனிதருருவாய் நின்ற என்றுரைத் தலுமாம். இச்செய்யுளில் ஒன்று முதல் ஏழு எண்களின் பெயர் கூறியது எண்ணலங்காரம்; அஞ்சு, ஆறு, ஏழு என்பன ஈண்டு எண்ணுப் பெயர்களல்லவேனும் சொல்லொப்புமை நோக்கி எண்ணாகக் கொள்ளப்படும்; எழுகூற்றிருக்கை முதலியவற்றிலும் இங்ஙனம் வருதல் காண்க. (85) தேன்செய்த கொன்றைநெடுஞ் சடையார்முன் றாழ்ந்தெழுந்து செங்கை கூப்பி யான்செய்யுங் கைம்மாறா யெம்பிராற் கொன்றுண்டோ யானு மென்ன தூன்செயுட லும்பொருளு முயிருமெனி னவையாவு முனவே யையா வான்செய்யு நன்றிக்கு வையகத்தோர் செய்யுங்கைம் மாறுண்டேயோ. (இ-ள்.) தேன் செய்த கொன்றை நெடுஞ் சடையார் முன் - தேன் பொருந்திய கொன்றை மலர்மாலையை யணிந்த நீண்ட சடையையுடைய சொக்கலிங்கக் கடவுளின் திருமுன், தாழ்ந்து எழுந்துசெங்கை கூப்பி - வீழ்ந்து வணங்கி எழுந்து சிவந்த கைகளைத் தலைமேற் குவித்து, எம்பிராற்கு - எம் பெருமானாகிய நினக்கு, யான் செய்யும் கைம்மாறாய் ஒன்று உண்டோ - அடியேனாற் செய்யப்படும் எதிருதவியாக ஒன்றுண்டோ, யானும் என்னது ஊன்செய் உடலும் பொருளும் உயிரும் எனின்- யானும் என்னுடைய தசையமைந்த உடலும் பொருளும் ஆவியும் என்றால், ஐயா அவையாவும் உனவே ஐயனே அவை முற்றும் உன்னுடையனவே - வான்செய்யும் நன்றிக்கு - முகில் செய்த உதவிக்கு, வையகத்தோர் செய்யும் கைம்மாறு உண்டோ - நிலவுலகத்தார் செய்கின்ற கைம்மாறு உண்டோ (இல்லை யென்றபடி) எ-று. யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையானாகிய பெருமான் யாவர்க்கும் கீழாகிய என்னை ஆட்கொண்ட பெருங்கருணைக்குக் கைம்மாறாவது யாதொன்றும் இல்லை யென்பான், ‘யான் செய்யுங் கைம்மாறா யெம்பிராற் கொன்றுண்டோ’ என்றும், யானும் என் உடல் முதலியவும் நின் உதவிக்கு ஈடாகாவேனும் அவற்றை யளித்து ஒருவாறாக என் கடப்பாட் டுணர்ச்சியை வெளிப்படுத்தலா மென்னின் அவை யெல்லாம் நின்னுடையவேயாகலின் யானென்றும் என்னுடைய தென்றும் கூறுதற் கொன்றுமில்லை யென்பான், ‘அவை யாவும் உனவே’ என்றும் கூறினானென்க; “ பண்டாய நான்மறையும் பால ணுகா மாலயனுங் கண்டாரு மில்லைக் கடையேனைத் - தொண்டாகக் கொண்டருளுங் கோகழியெங் கோமாற்கு நெஞ்சமே உண்டாமோ கைம்மா றுரை” “ அன்றே யென்ற னாவியு முடலு முடைமை யெல்லாமுங் குன்றேயனையா யென்னையாட்கொண்ட போதே கொண்டிலையோ” என்னும் திருவாசகத் திருப்பாட்டுகள் இங்குச் சிந்திக்கற்பாலன. யானும் உயிரும் என வேறு கூறியது முதலும் சினையுமாகக் கொண்டென்க; ‘ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வு கெட்டெனுள்ளமும் போய், நான் கெட்டவா பாடி’ என்பதும் நோக்குக. “வான் செய்யு நன்றிக்கு வையகத்தோர் செய்யுங் கைம்மா றுண்டேயோ” என்றது இறைவன் பிறர்பால் உதவிபெறுதற்கோர் குறைபாடுடைய னல்லன் என்பதும், அவன் உயிர்களுக்குச் செய்யு முதவியெல்லாம் கைம்மாறு கருதியன அல்லவென்பதும் தோன்ற நின்றமையால் பிறிதுமொழிதல் என்னும் அணி. “ கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு” என்னும் திருக்குறள் நோக்குக. என்னது : விரித்தல். உன : குறிப்பு வினைமுற்று. (86) என்னாமுன் வழுத்தலுறும் விறன்மாறன் கோக்கொழுந்தை இகல்வேல் விந்தை மன்னாகு மிவற்குமன வாக்கிறந்த பூரணமா மதுரை நாதன் பொன்னாரு1 மணிமகுடஞ் சூடமணி நல்குதலாற் புவிய னேகம் பன்னாளு முறைபுரியத் தக்கதென வாழ்த்தினார் பல்சான் றோரும். (இ-ள்.) என்னா முன் வழுத்தல் உறும் விறல்மாறன் கோக் கொழுந்தை - என்றிங்ஙனமாகத் துதிக்கும் வெற்றியையுடைய வீரபாண்டியன் புதல்வனை, பல் சான்றோரும் - பல அறிவுநிறைந்த பெரியாரும், இகல்வேல் விந்தைமான் ஆகும் இவற்கு - போருக் குரிய வேற்படை ஏந்திய வீரமகளின் தலைவனாகிய இவ்வழுதிக்கு, மனம் வாக்கு இறந்த பூரணம் ஆம் மதுரை நாதன் - உள்ளத்தையும், உரையையும் கடந்த முழு நிறைவானவாகிய மதுரை நாயகனாகிய சொக்கலிங்கப் பெருமான், பொன் ஆரும் மணிமகுடம் சூட - அழகு பொருந்திய மணி முடியினினைச் சூடுதற்கு, மணி நல்குதலால் - மணிகளை அளித்தருளினமையால், புவி அனேகம் - உலக முழுதும், பல் நாளும் - எக்காலமும், முறை புரியத் தக்கது என வாழ்த்தினார் - (இவனால்) ஆட்சி செய்யத் தக்கது என்று வாழ்த்தினார்கள் எ-று. பின்பற்றிப் போனார்; அவருள் வழுத்தலுறும் கோக்கொழுந்தைப் பல் சான்றோரும் வாழ்த்தினார் என முடிக்க. கொழுந்து - கொழுந்து போலும் இளம்பிள்ளை; கோக்கொழுந்து - அரசிளங்குமரன். பொன்னாரும் - பொன்னாற் செய்த என்றுமாம். அனேகம் - முழுது மென்னும் பொருட்டு. பன்னாளும் - பல்லூழிக் காலமும்; எந்நாளும். புரியத் தக்கது - புரிகவென வியங்கோளுமாம். (87) ஏத்திவலங் கொண்டிருநான் கிபந்தழுவப் பெற்றோங்கி யிருக்க மட்ட மூர்த்திவிடை யருள்பெற்று மூவாநன் மறையாசி முனிவர் கூறப் பார்த்திவன்றன் பொலன்மாட மனைபுகுந்தா னிறைமணிப்பண் பாயுங் கேள்விச் சாத்திரரு மந்திரரு மணிநோக்கி வியப்படைந்தார் சங்கை கூர்ந்தார். (இ-ள்.) பார்த்திவன் - அரச குமாரன், ஏத்தி வலம் கொண்டு - துதித்து வலம் வந்து, இருநான்கு இபம் தழுவப்பெற்று ஓங்கி இருக்கும் அட்டமூர்த்தி - எட்டு யானைகளாற் சுமக்கப் பெற்று வீற்றிருக்கும் அட்டமூர்த்தியாகிய சொக்கலிங்கப் பெருமானின், விடை அருள் பெற்று - அருள் விடை பெற்று, மூவா நல்மறை முனிவர் ஆசி கூற - அழியாத சிறந்த மறைகளை உணர்ந்த அந்தணர்கள் வாழ்த்துக் கூற, தன் பொலன்மாட மனை புகுந்தான் - தனது பொன் னாலாகிய மேன்மாடத்தையுடைய கோயிலிற் புகுந்தான்; நிறை மணிப் பண்பு ஆயும் கேள்விச் சாத்திரரும் - இலக்கணம் நிரம்பிய மணி களின் குணங்களை ஆராயும் நூற்கேள்வி வல்லுநரும், மந்திரரும் - அமைச்சரும், மணி நோக்கி வியப்பு அடைந்தார் - மணிகளைப் பார்த்து வியப்புற்று, சங்கை கூர்ந்தார் - ஐயங்கொண்டவர்களாய் எ-று. ‘என்னாமுன்வழுத்தலுறும்’ என்பதனுள் ‘என்னா’ என்பதனுடன் ‘ஏத்தி’ என்பதனை இயைத்துரைக்க. தழுவப்பெற்ற விமானத்தில் இருத்தலைத் ‘தழுவப் பெற்றிருக்கும்’ என்றார். அட்டமூர்த்தி - நிலம், நீர், தீ, வாளி, விசும்பு, நிலா, பகலோன், இயமானன் என்னும் எட்டுரு வாயவன். அருள் விடையெனமாறுக. நிறை பண்பு என இயைத்தும், இறைமணி எனப் பிரித்தும் உரைத்தலுமாம். சாத்திரக் கேள்வியர் என விகுதி பிரித்துக் கூட்டுக; கேள்வியும் சாத்திரமும் ஒரு பொருட் சொற்களுமாம். அடைந்தார், கூர்ந்தார் என்பன முற்றெச்சங்கள். சங்கை கூர்தலை வருஞ்செய்யுளிற் காண்க. (88) (மேற்படி வேறு) வேளென வந்த நாய்கர் சுந்தர விடங்க ரானால் நாள்களும் கோளும் பற்றி நவமணி யாக்கி னாரோ தாள்களுந் தோளு மார்புந் தரித்தநீ ணாக மீன்ற வாள்விடு மணியோ வீந்தார் யாதென மதிக்கற் பாலேம். (இ-ள்.) வேள் என வந்த நாய்கர் சுந்தர விடங்கர் ஆனால் - முருக வேளைப் போல வந்த வணிகர் சோமசுந்தரக் கடவுளானால் (அவர்), நாள்களும் கோளும் பற்றி நவமணி ஆக்கினாரோ - நாண் மீன்களையும் கோள்களையும் பிடித்து நவமணிகாளகச் செய்து நல்கியருளினாரோ (அன்றி), தாள்களும் தோளும் மார்பும் தரித்த - திருவடிகளிலும் திருத்தோள்களிலும் மார்பிலும் அணிந்த, நீள் நாகம் ஈன்ற வாள்விடும் மணி ஈந்தாரோ - நீண்ட பாம்புகள் கான்ற ஒளி வீசும் மணிகளைத் தந்தருளினாரே, யாது என மதிக்கற்பாலேம் - யாதென்று கருதும் பகுதியையுடையேம் எ-று. சுந்தரவிடங்க ரென்பது உண்மையாயின் அவர் இவை செயற் பால ரென்பார் ‘விடங்கரானால்’ என்றார். ஈந்தார் என்பதனை முன்னுங்கூட்டி ஆக்கி யீந்தாரோ என்க. மணியோ ஈந்தார் என்பதில் ஓகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. சங்கை கூர்ந்து இங்ஙனங் கூறி யென்க. (89) இந்திரக் கடவு ணாட்டு மிம்மணி யரிய வென்னா மந்திரக் கிழவர் நல்கி மயனினு மாண்ட கேள்வித் தந்திரக் கனகக் கொல்லர்க் குவப்பன ததும்ப வீசிச் செந்திரு மார்பி னாற்குத் திருமணி மகுடஞ் செய்தார். (இ-ள்.) இந்திரக் கடவுள் நாட்டும் இம்மணி அரிய என்னா - இந்திரனது உலகத்திலும் இம் மணிகள் கிடைத்தற்கரியன என்று வியந்து, மந்திரக்கிழவர் - சூழ்ச்சிக்குரிய அமைச்சர், மயனினும் மாண்ட கேள்வித் தந்திரக் கனகக் கொல்லர்க்கு உவப்பன ததும்ப வீசி - மயனைக் காட்டிலும் மாட்சிமையுடைய சிற்பநூலில் வல்ல பொற் கொல்லருக்கு அவர் உவப்பனவாய பல வரிசைகளை நிறைய அளித்து, நல்கி - (அம்மணிகளைக்) கொடுத்து, செந்திரு மார்பி னாற்குத் திருமணி மகுடம் செய்தார் - சிவந்த திருமகள் தங்கும் மார்பினையுடைய அரசகுமாரனுக்குத் தெய்வத்தன்மை பொருந்திய மணிக ளழுத்திய முடியினைச் செய்வித்தனர் எ-று. இந்திரனாகிய கடவுள் என இருபெய ரொட்டு; இந்திரனது கடவுள் நாடு எனக் கொண்டு உயர்திணைப் பெயர் விகாரமாயிற்று எனலுமாம். சாத்திரரும் மந்திரரும் அரிய வென்னா வியந்தார் என முடித்து, அவருள் மந்திரர் மகுடஞ் செய்தார் என்க. தந்திரக் கேள்வி எனமாறுக. செய்தார் : பிறவினைப் பொருட்டு. (90) மங்கல மரபான் மாலை மணிமுடி சூட்டி நாமஞ் செங்கணே றுயர்த்த நாய்கர் செப்பிய முறையால் வேத புங்கவ ரிசைப்ப வீதி வலஞ்செய்து புனிதன் பாத பங்கய மிறைஞ்சி வேந்தன் பன்மணிக் கோயி லெய்தா. (இ-ள்.) மங்கல மரபால் - மங்கல முறைமையால், மாலை மணி முடிசூட்டி - மாலையை யணிந்த மணிமகுடத்தை அணி வித்து, செங்கண் ஏறு உயர்த்த நாய்கர் செப்பிய முறையால் - சிவந்த கண்ணையுடைய இடபத்தைக் கொடியாக உயர்த்திய வணிகர் கூறிய முறைப்படி, வேத புங்கவர் நாமம் இசைப்ப - மறைகளை யுணர்ந்த அந்தணர் அபிடேக பாண்டியனென்று பெயர் கூற, வேந்தன் - அவ்வரசன், வீதி வலம் செய்து - வீதியை வலம் வந்து, புனிதன் பாத பங்கயம் இறைஞ்சி - தூயனாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவடித் தாமரைகளை வணங்கி, பல்மணிக் கோயில் எய்தா - பல மணி களழுத்திய அரண்மனையிற் சென்று எ-று. மகுடாபிடேக விழாவானது தொல்காப்பியத்தில் ‘மண்ணு மங்கலம் ’ என்னும் பெயராற் கூறப்படுகின்றது. புங்கவர் முறையால் நாமம் இசைப்ப என்க. (91) போர்மகட் குறையு ளான புயத்தபி டேகத் தென்னன் தேர்முதற் கருவித் தானைத் தெவ்வர்நீண் முடியெ லாந்தன் வார்கழற் கமலஞ் சூட மனுமுறை பைங்கூழ் காக்குங் காரெனக் கருணை பெய்து வையகங் காக்கு நாளில். (இ-ள்.) போர்மகட்கு உறையுள் ஆன புயத்து அபிடேகத் தென்னன் - போருக்குரிய வீரமகளுக்கு இருப்பிடமாகிய தோளையுடைய அபிடேக பாண்டியன், தேர்முதல் கருவித்தானைத் தெவ்வர் நீள் முடி எலாம்- தேர் முதலிய கருவியாகிய படையினையுடைய பகைவருடைய நீண்ட முடிகள் அனைத்தும், தன் வார்கழல் கமலம்சூட - தனது நெடிய வீரகண்டையை யணிந்த அடியாகிய தாமரை மலரைச் சூட, மனுமுறை - மனுநூல் வழியே, பைங்கூழ் காக்கும் கார் என - (மழை பொழிந்து) பயிரை ஓம்பும் முகில்போல, கருணைபெய்து - கருணை சொரிந்து, வையகம் காக்கும் நாளில் - உலகத்தைப் புரக்கும் நாளிலே எ-று. கருவித்தானை - கருவியாகிய தானை; இருபெயரொட்டு. கருணைபெய்து என்பதற்கேற்ப மழை பொழிந்து என விரித் துரைக்க. தென்னன் மனுமுறை காக்குநாளில் என இயையும். (92) (எழுசீரடி யாசிரிய விருத்தம்) தந்தைதன் காமக் கிழத்திய ரீன்ற தனயராய்த் தனக்குமுன் னவராய் முந்தைநா ளரசன் பொன்னறை முரித்து முடிமுதற் பொருள்கவர்ந் துட்குஞ் சிந்தைய ராகி மறுபுலத் தொளித்த தெவ்வரைச் சிலர்கொடு விடுப்ப வந்தவர் கவர்ந்த தனமெலா மீள வாங்கினா னீர்ங்கதிர் மருமான். (இ-ள்.) தந்தை தன் காமக்கிழத்தியர் ஈன்ற தனயராய் - தன் தந்தையின் காமக்கிழத்தியர் பெற்ற புதல்வராய், தனக்கு முன்ன வராய் - தனக்கு மூத்தவர்களாய், முந்தை நாள் அரசன் பொன் அறை முரித்து, முன்னொரு நாளில் மன்னனது கருவூலத்தின் தாழைமுரித்து, முடி முதல் பொருள் கவர்ந்து - முடி முதலிய பொருள்களை வெளவி, உட்கும் சிந்தையராகி - (அதனால்) அஞ்சியசிந்தையையுடையராய், மறு புலத்து ஒளித்த தெவ்வரை - வேற்றூரிற் புகுந்து ஒளித்த பகைவரை, சிலர் கொடுவிப்ப - சிலர் பிடித்துக் கொண்டு வந்து விடுக்க, வந்தவர் கவர்ந்த தனம் எலாம் - வந்தவராகிய அன்னோர் கவர்ந்த பொருளனைத்தையும், மீளவாங்கினான் ஈர்ங்கதிர் மருமான் - திரும்பவும் வாங்கினான் குளிர்ந்த ஒளியையுடைய திங்களின் மரபில் வந்தவனாகிய அபிடேக பாண்டியன் எ-று. முரித்து - தாழைப் போக்கி, தந்தையின் கிழத்தியர் ஈன்ற தனயராயும் தனக்கு முன்னவராயு மிருப்பினும் முடி முதலியவற்றைக் கவர்ந்து ஒளித்தாராகலின் ‘ஒளித்த தெவ்வரை ’ என்றார். அவர், முறையின்றிக் கவர்ந்த பொருள்களை மீட்டு வாங்கியதன்றி, அவர்க்குயாதும் இன்னல் விளைத்தில னென்பது தோன்ற ‘தனமெலா மீள வாங்கினான்’ என்று கூறிவிடுத்தார். தந்தைதன், தன்: சாரியை. ஈர்ங்கதிர், கதிரையுடைய திங்களுக்கு ஆகுபெயர். (93) ஆகச்செய்யுள் - 1287. வருணன்விட்டகடலை வற்றச்செய்த படலம் (அறுசீரடி யாசிரிய விருத்தம்) காழ்கெழு கண்டத் தண்ணல் கெளரியன் மகுடஞ்சூட வீழ்கதிர் மணிக ளீந்த வியப்பிது விடையோன் சென்னி வாழ்கரு முகிலைப் போக்கி மதுரைமேல் வருணன் விட்ட ஆழ்கடல் வறப்பக் கண்ட வாடலைப் பாடல் செய்வாம். (இ-ள்.) காழ்கெழு கண்டத்து அண்ணல் - கருமை பொருந்திய திருமிடற்றினையுடைய சோமசுந்தரக் கடவுள், கெளரியன் மகுடம் சூட - பாண்டியன் முடி சூட, வீழ் கதிர் மணிகள் ஈந்த வியப்பு இது - விரும்பப்படுகின்ற நவமணிகளை அளித்தருளிய திருவிளையாடல் இது; (இனி), விடையோன் சென்னி வாழ் கருமுகிலைப்போக்கி - இடபவூர்தியையுடைய அப்பெருமான் தம் திருமுடியிற் றங்கிய கரியமுகில்களை விடுத்து, மதுரைமேல் வருணன் விட்ட ஆழ்கடல் வறப்பக் கண்ட - மதுரையின்மேல் வருணன் ஏவிய ஆழ்ந்த கடலானது சுவறுமாறு செய்தருளிய, ஆடலைப் பாடல் செய்வாம் - திருவிளையாடலைப் பாடுவோம் எ-று. காழ் - கருமை; காழகம் என்னும் பெயருங் காண்க. ஞாயிறு முதலிய கதிர்களும் விரும்பும் மணி என்னலுமாம். வியப்பு - மேன்மை. மேன்மையாகிய திருவிளையாடல். போக்கி வறப்பக் கண்ட வென்க. (1) சித்திரை மதியிற் சேர்ந்த சித்திரை நாளிற் றென்னன் மைத்திரண் மிடற்று வெள்ளி மன்றுளாற் களவு மாண்ட பத்திமை விதியிற் பண்டம் பற்பல சிறப்ப நல்கிப் புத்தியும் வீடு நல்கும் பூசனை நடத்த லுற்றான். (இ-ள்.) தென்னன் - அபிடேக பாண்டியன், சித்திரை மதியில் சேர்ந்த சித்திரை நாளில் - சித்திரைத் திங்களில் வந்த சித்திரைநாளில் மைத்திரள் மிடற்று வெள்ளிமன்றுளாற்கு - கருமை மிக்க மிடற்றினை யுடைய வெள்ளியம்பல வாணனுக்கு, அளவுமாண்ட பத்திமை - அளவிறந்த அன்பினால், விதியில் - ஆகம நெறிப்படி, பண்டம் பற்பல சிறப்ப நல்கி - பூசைப் பொருள்கள் பலவற்றைச் சிறக்க அளித்து, புத்தியும் வீடும் நல்கும் பூசனை நடத்தலுற்றான் - போகத்தையும் வீடுபேற்றையும் அளிக்கும் பூசையை நடாத்தத் தொடங்கினான் எ-று. சித்திரைத் திங்களில் நிறைமதியுடன் கூடிய சித்திரைநாளில் என்க. பத்திமையால் என உருபு விரிக்க. சிறப்ப - மிக. விதியின் நடத்தலுற்றான் என இயையும். புத்தி தத்துவத்தின் பரிணாமமாகிய போகத்தைப் புத்தி என்றார்; புத்தி - ஞானமுமாம். (2) நறியநெய் யாதி யார நறுங்குழம் பீறா வாட்டி வெறியகர்ப் புரநீ ராட்டி யற்புத வெள்ளம் பொங்க இறைவனை வியந்து நோக்கி யேத்துவா னெறிநீர் வையைத் துறைவநீ யென்கர்ப் பூர சுந்தர னேயோ வென்றான். (இ-ள்.) நறியநெய் ஆதி - நறுமணங் கமழும் நெய் முதலாக, நறும் ஆரக் குழம்பு ஈறா ஆட்டி - நறிய சந்தனக் குழம்பு இறுதியாக உள்ள இவற்றால் அபிடேகித்து, வெறிய கர்ப்புர நீர் ஆட்டி - மிக்க மணத் தினையுடைய கர்ப்புரநீரினால் ஆட்டி, அற்புதவெள்ளம் பொங்க- அன்பின் பெருக்கு மேன்மேலெழ, இறைவனை வியந்து நோக்கி ஏத்துவான் - சோமசுந்தரக் கடவுளை வியப்புடன் தரிசித்துத் துதிப்பவன், எறிநீர் வையைத்துறைவ - அலைவீசும் வையையாற்றின் நீர்த்துறையை யுடைய பெருமானே, நீ என் கர்ப்பூர சுந்தரனோ என்றான் - நீ அடியேனுடைய கர்ப்பூர சுந்தரனோ என்று துதித்தான் எ-று. ஆதியாக ஈறாக உள்ளவற்றால் என விரிக்க. வெறிய - மணமுடைய: குறிப்புப் பெயரெச்சம். சிறப்பு நோக்கிக் கர்ப்புரத்தைப் பிரித்துக் கூறினார். அற்புதம் - ஈண்டு அன்பு; இன்பமுமாம்; இறைவனது அழகாகிய வெள்ளம் பெருக என்னலுமாம். அன்புரிமை யால் என் என்றான். ஓகாரம் வியப்பின்கண் வந்தது. (3) பூசனை புரியு மெல்லைப் பொன்னகர்க் கிறைமை பூண்ட வாசவன் வருடந் தோறும் பூசித்து வருவா னன்ன காசறு மனத்தான் பூசை கழிவுறு மளவுந் தாழ்த்துத்1 தேசமை சிறப்பார் பூசை செய்துதன் னாடு புக்கான். (இ-ள்.) பூசனை புரியும் எல்லை - இங்ஙனம் பூசைசெய்யும் பொழுது, வருடம் தோறும் பூசித்து வருவான் - ஆண்டுகள் தோறும் (சித்திரைத்திங்களின் சித்திரைநாளில்) பூசித்து வருபவனாகிய, பொன்நகர்க்கு இறைமை பூண்ட வாசவன் - பொன்னுலகத்திற்குத் தலைமை பூண்ட இந்திரனானவன், அன்ன காசு அறு மனத்தான் பூசை கழிவுறும் அளவும் தாழ்த்து - அந்தக் குற்றமற்ற உள்ளத் தினையுடைய பாண்டியனது பூசை முடியும் வரை தாமதித்து (முடிந்தபின்), தேசு அமைசிறப்பு ஆர் பூசை செய்து - விளக்கமமைந்த சிறப்புமிக்க பூசையைச்செய்து முடித்து, தன் நாடு புக்கான் - தனது நாட்டிற்குச் சென்றான் எ-று. வருவான் : வினையாலணையும் பெயர். வருவானாகிய வாசவன் எனக் கூட்டுக. அமை பூசை ஆர் பூசையெனப் பெயரெச்ச முதனிலைகளைத் தனித்தனி கூடுக. (4) அன்றுநீர்க் கடவுள் வேள்வி நாயக னவையத் தெய்தி நின்றவன் றன்னோய் தீருஞ் செவ்வியி னிகழ்ச்சி தோன்றக் குன்றவன் சிறக ரீர்ந்த கொற்றவன் முகத்தை நோக்கி இன்றுநீ சிறிது தேம்பி யிருத்தியா லிதென்கொ லென்றான். (இ-ள்.) அன்று - அப்பொழுது, நீர்க்கடவுள் - வருணதேவன், வேள்வி நாயகன் அவையத்து எய்திநின்றவன் - வேள்வித் தலைவனாகிய இந்திரனது அவையின்கட் சென்று நின்று, தன் நோய் தீரும் செவ்வியின் நிகழ்ச்சி தோன்ற - தனது நோயானது நீங்கும் பருவத்தின் நிகழ்ச்சி கைகூட, குன்றவன் சிறகர் ஈர்ந்த கொற்றவன் முகத்தை நோக்கி - மலைகளின் வலிய சிறைகளை யறுத்த இந்திரன் முகத்தை நோக்கி, இன்று நீ சிறிது தேம்பி இருத்தி - இன்று நீ சற்று வாடியிருக்கின்றாய், இது என் என்றான் - இதற்குக் காரணம் யாது என்று வினவினன் எ-று. வேள்வி நாயகன் - மகபதி. நின்றவன்: முற்றெச்சம். நோய் - வயிற்று நீர் நோய் என்பர். நிகழ்ச்சி - ஏதுத்தோற்றம். சிறகர்: ஈற்றுப்போலி. ஆல், கொல் என்பன அசைகள். இதென்: விகாரம். (5) சிலைப்படு முகிலூ ரண்ணல் செப்புவா னிருடீ ரன்பின் வலைப்படு பெருமா னெம்மான் மதுரையெம் பிரானை யன்பு தலைப்படு பூசை செய்யத் தாழ்த்ததின் றதனா லிப்போ தலைப்படச் சிறிதெ னுள்ள மாகுல மடைந்த துண்டால். (இ-ள்.) சிலைப்படும் முகில் ஊர் அண்ணல் - வில்லுடன் கூடிய முகிலை ஊர்தியாகக்கொண்டு நடாத்தும் பெருமயினை யுடைய இந்திரன், செப்புவான் - சொல்லுவான், இருள் தீர் அன்பின் வலைப்படு பெருமான் எம்மான் மதுரை எம்பிரானை - மயக்கத்தி னீங்கிய அன்பாகிய வலையிற்படுகின்ற பெருமானும் எம்மானும் மதுரைப் பிரானுமாகிய சோமசுந்தரக் கடவுளை, அன்பு தலைப்படு பூசை இன்று தாழ்த்தது - அன்போடு கூடிய பூசனை புரிய இன்று (வழுதியால்) காலந் தாழ்த்தது; அதனால் - அக் காரணத்தால், இப்போது என் உள்ளம் சிறிது அலைப்பட - இப்பொழுது என் மனம் சிறிது அலைவுற, ஆகுலம் அடைந்தது உண்டு - துன்ப மெய்திய துண்டு எ-று. சிலை - திருவில்; இந்திரவில். செப்புவான் - செப்புகின்றவன் எனப் பெயராகக்கொள்க; செப்புதல் - விடையிறுத்தல். அன்பின் வலைப்படுதலை. “ பத்திவலையிற் படுவோன் காண்க” என்னும் திருவாசகத்தா னறிக. ஆல்: அசை. (6) என்னவவ் விலிங்கந் தான்மா விலிங்கமோ வென்று முந்நீர் மன்னவன் வினவ லோடு மகபதி மொழிவான் முன்பென் றன்னரும் பழியும் வேழச் சாபமுந் தொலைத்த தன்றோ அன்னதை யறிந்தி லாய்கொ லென்னநீ ரண்ணல் கூறும். (இ-ள்.) என்ன - என்று இந்திரன் கூற, அ இலிங்கம் மா இலிங்கமோ என்று முந்நீர் மன்னவன் வினவலோடும் - அந்தச் சொக்கலிங்கம் (ஏனைய பதிகளின் இலிங்கங்களைவிடச்) சிறந்த இலிங்கமோ என்று கடல் மன்னனாகிய வருணன் கேட்ட வளவில், மகபதி மொழிவான் - இந்திரன் கூறுவான், முன்பு - முன்னாளில், என் அரும் பழியும் - என்னுடைய போக்குதற்கரிய பழியையும், வேழச்சாபமும் தொலைத்தது அன்றோ - வெள்ளை யானையின் சாபத்தையும் போக்கியதல்லவா, அன்னதை அறிந்திலாய் கொல் என்ன - அச்செய்தியை நீ அறியாயோ என்று செப்ப, நீர் அண்ணல் கூறும் - வருணன் கூறுவான் எ-று. மா இலிங்கம் - மகாலிங்கம். பிறவாற்றாற் போக்குதற்கரிய பழியென்பான், ‘அரும்பழி’ என்றான். அன்னதை - அவ்விலிங்கத்தின் மேன்மையை யென்றுமாம். தான், தன் என்பன அசைகள். (7) அற்றது வாகிற் றெய்வ மருத்துவ ராலுந் தீரச் செற்றிட வரிதா யென்னைத் தெறும்பெரு வயிற்று நோயை வற்றிடுமாறு தீர்க்குங் கொல்லென வலாரி யையம் உற்றுநீ வினாய தென்னென் றுண்ணகை யரும்பிச் சொல்வான். (இ-ள்.) அது அற்று ஆகில் - அவ்விலிங்கம் அத்தன்மையை யுடையதானால், தெய்வ மருத்துவராலும் தீரச்செற்றிட அரிதாய் - தேவமருத்துவர்களாலும் முற்றக் கெடுத்தற்கு அரியதாய், என்னைத் தெறும் பெரு வயிற்றுநோயை - என்னை வருத்துகின்ற பெரிய வயிற்று நோயை, வற்றிடுமாறு தீர்க்கும் கொல் என - ஒழியும்படி தீர்க்குமோ என்று வினவ, வலாரி - இந்திரனானவன், நீ ஐயம் உற்று வினாயது என் என்று - நீ சந்தேகித்து வினவியது என்னையென்று. உள் நகை அரும்பிச் சொல்வான் - புன் முறுவல் செய்து கூறுவான் எ-று. தெய்வ மருத்துவர் - அச்சுவினி தேவர். தீர - முற்ற; நீங்க என்றுமாம். ஐயுற்றதுதகாதென்பான், ‘ஐயமுற்று நீ வினாயதென்’ என்றான். உண்ணகை யரும்பல் அவனது அறியாமை பற்றிய எள்ளலால் நிகழ்ந்தது; “ எள்ளல் இளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான் கென்ப” என்பது தொல்காப்பிய மெய்ப்பாட்டியல். (8) அரியய ராலுந் தீராப் பிறவிநோ யறுக்க வல்ல பெரியவ னிந்த யாக்கைப் பெரும்பிணி பிறவுந் தீர்த்தற் கரியனோ வையன் செய்யுந் திருவிளை யாட்டை யின்னே தெரியநீ சோதி யென்னத் தெண்கடற் சேர்ப்பன் சொல்வான். (இ-ள்.) அரி அயராலும் தீராப் பிறவி நோய் அறுக்கவல்ல பெரியவன் - திருமால் பிரமர்களாலும் நீங்காத பிறவி நோயினைப் போக்கவல்ல பெரியவனாகிய சொக்கலிங்க மூர்த்தி, இந்தயாக்கைப் பெரும் பிணி பிறவும்தீர்த்தற்கு அரியனோ - இந்த உடலிலுள்ள பெரிய பிணியைம் பிறநோயையும் போக்குதற்கு அரியவனோ, ஐயன் செய்யும் திருவிளையாட்டை இன்னே தெரிய நீ சோதி என்ன - இறைவன் செய்யும் திருவிளையாடலை இப்பொழுதே விளங்க நீ சோதிப்பாய் என்று கூற, தெண் கடல் சேர்ப்பன் சொல்வான் - தெளிந்த கடற்கிறைவனாகிய வருணன் கூறுவான் எ-று. அரியயர்: உம்மைத் தொகை. பிணியும் பிறவுமென்க. தெரிய - உணர வென்றுமாம். சேர்ப்பன் - நெய்தற்றலைவன். (9) கல்லிற கரிந்தோ யிங்கு நான்வருங் காலை வேட்டார்க் கெல்லையில் காம நல்குஞ் சுரபியு மின்பால் சோரப் புல்லிய கன்று மாற்றுப் பட்டவப் போது கண்ட நல்லசோ பனத்தா லிந்த நன்மொழி கேட்டே னென்னா. (இ-ள்.) கல் இறகு அரிந்தோய் - மலைகளின் சிறைகளை அரிந்த இந்திரனே, இங்கு நான் வருங்காலை - இங்கு யான் வரும்பொழுது வேட்டார்க்கு - விரும்பினாருக்கு, எல்லை இல் காமம் நல்கும் சுரபியும் - அளவிறந்த விரும்பப்பட்ட பொருள்களைக் கொடுக்கும் தேனுவும், இன்பால் சோரப் புல்லிய கன்றும் - இனிய பால் ஒழுக (அதனால்) தழுவப்பட்ட கன்றும், ஆற்றுப்பட்ட - வழியில் எதிர்ப் பட்டன; அப்போது கண்ட நல்ல சோபனத்தால் - அப்பொழுது பார்த்த அந்த நல்ல சகுனத்தால், இந்த நல்மொழி கேட்டேன் என்னா - இந்த நல்ல சொல்லைக் கேட்டேனென்று கூறி எ-று. காமம் - விருப்பம்; விரும்பிய பொருள்கள். காம நல்குஞ் சுரபி - காமதேனு. புல்லிய : செயப்பாட்டு வினைப்பொருளது. பட்ட: அன்பெறாத பலவின் பால் முற்று. சோபனம் - ஈண்டு நிமித்தம். பாற்பசுவும் கன்றும் எதிர் வருதல் விரும்பியவற்றைப் பெறுதல் காட்டும் நன்னிமித்த மென்க. (10) வருணனு மேகி வெள்ளி மன்றுடை யடிகள் செய்யுந் திருவிளை யாடல் கண்டு வயிற்றுநோய் தீர்ப்பா னெண்ணி முரசதிர் மதுரை மூதூர் முற்றுநீ யழித்தி யென்னாக் குரைகட றன்னை வல்லே கூறினா னேவி னானே. (இ-ள்.) வருணனும் ஏகி - வருணனானவன் சென்று, வெள்ளி மன்று உடை அடிகள் செய்யும் திருவிளையாடல் கண்டு - வெள்ளியம் பலத்தையுடைய பெருமான் செய்யும் திருவிளையாடலைப் பார்த்து, வயிற்று நோய் தீர்ப்பான் எண்ணி - வயிற்று நீர் நோயை நீக்கிக்கொள்ளக் கருதி, குரை கடல் தன்னை வல்லே கூவினான் - ஒலிக்கின்ற கடலை விரைய அழைத்து, முரசு அதிர் மதுரை மூதூர் முற்றும் நீ அழித்தி என்னா ஏவினான் - முரசுகள் ஒலிக்கின்ற தொன்மையுடைய மதுரைப் பதியை முழுதும் நீ அழிப்பாயென்று ஏவினான் எ-று. தீர்ப்பான் : வினையெச்சம். அழித்தி: ஏசலொருமை முற்று; த்: எழுத்துப் பேறு, இ : விகுதி. கூவினான்: முற்றெச்சம். கண்டு, தீர்ப்பான், எண்ணி, கூவினான் என்னும் வினையெச்சங்கள் முறையே ஒன்று ஒன்றனைக் கொண்டன. (11) (கொச்சகக்கலிப்பா) கொதித்தெழுந்து தருக்களறக் கொத்தியெடுத் தெத்திசையும் அதிர்த்தெறிந்து வரைகளெல்லா மகழ்ந்துதிசைப் புறஞ்செல்லப் பிதிர்த்தெறிந்து மாடநிரை பெயர்த்தெறிந்து பிரளயத்தில் உதித்தெழுந்து வருவதென வோங்குதிரைக் கடல்வருமால். (இ-ள்.) ஒங்கு திரைக்கடல் - (அப்பொழுது) உயர்ந்த அலைகளையுடைய கடலானது, கொதித்து எழுந்து - பொங்கி மேலெழுந்து, தருக்கள் அறக் கொத்தி எடுத்து - மரங்கள் முறியக் கல்லி எடுத்து, அதிர்த்து எத்திசையும் எறிந்து - ஆரவாரித்து எல்லாத் திசைகளிலும் வீசியும், வரைகள் எல்லாம் அகழ்ந்து பிதிர்த்து திசைப்புறம் செல்லஎறிந்து - மலைகளை யெல்லாம் தோண்டிப் பொடி செய்து திசைப்புறங்களிற் செல்லுமாறு வீசியும், மாட நிரை பெயர்த்து எறிந்து - மாடவரிசைகளைப் பெயர்த்து வீசியும், பிரளயத்தில் உதித்து எழுந்து வருவதென வரும் - ஊழிக்காலத்திற் பொங்கிமேலெழுந்து வருவதுபோல வாரா நின்றது எ-று. பிதிர்த்து - பொடியாக்கி; பிதிர் - பொடி. உதித்தல் - பொங்குதல் என்னும் பொருட்டு. ஆல் : அசை. (12) கந்தமலர்த் தனிக்கடவுள் கற்பத்து மழியாத இந்தவளம் பதிக்கிடையூ றெய்தியதெம் பதிக்குமினி வந்ததெனச் சுந்தரனை வந்திறைஞ்சி வானவருஞ் சிந்தைகலங் கினர்வருணன் செய்தசெய றெளியாதார். (இ-ள்.) வானவரும் - தேவர்களும், வருணன் செய்த செயல் தெளியாதார் - வருணன் செய்த சூழ்ச்சியினை அறியாதவர்களாய், கந்தமலர்த் தனிக் கடவுள் கற்பத்தும் அழியாத - மணம் பொருந்திய தாமரை மலரில் இருக்கும் ஒப்பற்ற பிரமனது கற்பத்தினும் அழியாத, இந்த வளம் பதிக்கு இடையூறு எய்தியது - இந்த வளம் பொருந்திய மதுரைக்கும் அழிவு வந்தது; இனி எம்பதிக்கும் வந்தது என - இனி எமது பதிக்கும் அழிவு வந்தது என்று கருதி, சிந்தை கலங்கி வந்து சுந்தரனை இறைஞ்சினர் - மனங் கலங்கி வந்து சோமசுந்தரக் கடவுளை வணங்கினார்கள் எ-று. ‘கற்பத்தும் அழியாத இந்த வளம்பதி’என்றமையால், எம்பதி கற்பத்தில் அழிவதென்றவா றாயிற்று. வளம் பதிக்கும் என்னும் உயர்வு சிறப்பும்மை தொக்கது. எம்பதிக்கும் இடையூறு வந்தது எனவிரித்துரைக்க; வந்ததென: காலவழுவமைதி, வானவரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பும் எச்சமுமாம். கலங்கி இறைஞ்சினர் எனவிகுதி பிரித்துக் கூட்டப்பட்டது. தெளியாதார். முற்றெச்சம். (13) சூலமோ டழலேந்துஞ் சொக்கர்திரு விளையாட்டின் சீலமோ நாமிழைத்த தீவினையின் றிறமிதுவோ ஆலமோ வுலகமெலா மழியவரும் பேரூழிக் காலமோ வெனக்கலங்கிக் கடிநகரம் பனிப்பெய்த. (இ-ள்.) இது சூலமோடு அழல் ஏந்தும் சொக்கர் திருவிளை யாட்டின் சீலமோ - இந்நிகழ்ச்சி சூலப்படையையும், அங்கியையும் ஏந்திய சொக்கலிங்கப் பெருமானது திருவிளையாட்டின் செய்கையோ, நாம் இழைத்த தீவினையின் திறமோ - (அன்றி) நாம் செய்த தீவினையின் பாகு பாடோ, ஆலமோ - (தேவர்களை அழிக்க வந்த) கொடுவிடமோ, உலகம் எலாம் அழிய வரும் பேர் ஊழிக்காலமோ - உலக முழுதும் அழியும்படி வரும்பெரிய ஊழிக் காலமோ, என - என்று, கடி நகரம் - காவலையுடைய மதுரை நகரிலுள்ளா ரனைவரும், கலங்கி பனிப்பு எய்த - கலக்க மடைந்து நடுக்கமுறா நிற்க எ-று. உலகமுழுதும் அழித்தலையும் ஒரு திருவிளையாடலாக உடையவரென்பது தோன்றச் ‘சூலமோ டழலேந்துஞ் சொக்கர்’ என அடைகொடுத்தார். சீலம் - தன்மை: செய்கை. இது திறமோ எனப் பிரித்தியைக்க. நகரம் : ஆகுபெயர். (14) மண்புதைக்கத் திசைபுதைக்க மயங்கிருள்போல் வருநீத்தம் விண்புதைக்க வெழுமாட வியனகரின் புறத்திரவி கண்புதைக்க வருமளவிற் கண்டரச னடுநடுங்கிப் பெண்புதைக்கு மொருபாகப் பிரானடியே சரணென்னா. (இ-ள்.) மண் புதைக்கத் திசை புதைக்க மயங்கு இருள் போல் வரு நீத்தம் - மண்ணுலகை மறைக்கவும் திசைகளை மறைக்கவும் மயங்குதற் கேதுவாகிய இருளைப்போல் வருகின்ற கடல்வெள்ளம், விண்புதைக்க எழு மாட வியன் நகரின் புறத்து - விண்ணுலகை மறைக்குமாறு மேல் ஓங்கிய மாடங்களை யுடைய மதுரை நகரின் புறத்தில், இரவி கண்புதைக்க வரு மளவில் - பரிதியும் அச்சத்தாற் கண்ணை மூடுமாறு வரும் பொழுது, அரசன் கண்டு நடு நடுங்கி - அபிடேக பாண்டியன் அதனைப் பார்த்து மிக நடு நடுங்கி, பெண் புதைக்கும் ஒருபாகப்பிரான் அடியே சரண் என்னா - உமைப் பிராட்டியால் மறைக்கப்பட்ட ஒரு பாகத்தினையுடைய பெருமானுடைய திருவடிகளே அடைக்கலம் என்று கருதி எ-று. புதைக்க என்பவற்றுக்குப் புதைய வெனப் பொருள் கூறலுமாம். இப்பொருளில் கு சாரியை; புதைய - மறைய. இருள் போலும் நீத்தம் இருளையோட்டும் இரவியும் கண் புதைக்க வரும் என்ற நயம் உணர்தற் பாலது. பிராட்டி ஒரு கூறாக இருத்தலைப் பிராட்டியால் மறைக்கப் பட்ட ஒரு கூற்றினையுடைய என்றார். பெருமானது திருவடியன்றி வேறு புகலிடமில்லை யென்பான் பிரிநிலையும் தேற்றமுமாகிய ஏகாரங்ககொடுத்து ‘அடியே சரண் ’ என்றானென்க. இச் செய்யுள், “ தேரொலிக்க மாவொலிக்கத் திசையொலிக் குந்திருக்காஞ்சி” என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் போன்று ஒசை யின்பமும் சொல்லழகும், பின்வருநிலையணியும் உடைத்தாய் விளங்குவது காண்க. (15) ஆலமெழுந் திமையவர்மே லடர்க்கவரும்1 பொழுதஞ்சும் மாலெனவுந் தன்னுயிர்மேன் மறலிவரும் பொழுதஞ்சும் பாலனென வுங்கலங்கிப் பசுபதிசே வடியில் விழுந் தோலமென முறையிட்டா னுலகுபுக ழுறையிட்டான். (இ-ள்.) உலகு புகழ் உறை யிட்டான் - உலகத்தார் புகழும் புகழாகிய கவசத்தை யணிந்த அபிடேக பாண்டியன், ஆலம் எழுந்து அடர்க்க இமையவர்மேல் வரும் பொழுது - நஞ்சானது பாற்கட லினின்றும் தோன்றிக் கொல்லுதற்குத் தேவர்மேல் வருங் காலத்தில், அஞ்சும் மால் எனவும் - அஞ்சுதலுற்ற திருமாலைப் போலவும், தன்உயிர் மேல் மறலி வரும்பொழுது அஞ்சும் பாலன் எனவும் - தனது உயிரின்மேல் கூற்றுவன் வரும் பொழுது அஞ்சிய மார்க் கண்டனைப் போலவும், கலங்கி - மனங்கலங்கி, பசுபதி சேவடியில் விழுந்து ஓலமென முறையிட்டான் - உயிர்களுக்கு இறைவனாயுள்ள சோமசுந்தரக் கடவுளின் சிவந்த திருவடிகளில் விழுந்து ஓல மென்று முறையிட்டான் எ-று. ஆலத்தினையும் மறலியையும் போன்று வரும் வெள்ளத்தின் கொடுமையையும், அரசன் பிறவுயிர்க்கும் தன்னுயிர்க்கும் அஞ்சும் அச்சத்தையும், அவனது அன்பின் மிகுதியையும், இறைவன்பால் அடைக்கலம் புகுந்து காப்பாற்றப்படுதலையும் உணர்த்தத் திரு மாலையும், மார்க்கண்டனையும் உவமை கூறினார். அஞ்சுதல், கலங்குதல், சேவடியில் விழுந்து முறையிடல், இவற்றை மூவர்க்குங் கொள்க. புகழும் புகழாகிய உறையென விரிக்க; உலகிற்குப் புகழாகிய உறையினையிட்டான் எனலுமாம்; இதற்கு உலக முழுதும் தன்புகழ் பரக்கவென்பது கருத்து. ஈற்றடியில் முறை யிட்டான் உறையிட்டான் என இயைபு நயம் அமைந்துளது. (16) முறையிட்ட செழியனெதிர் முறுவலித்தஞ் சலையென்னாக் கறையிட்டு விண்புரந்த கந்தரசுந் தரக்கடவுள் துறையிட்டு வருகடலைச் சுவறப்போய்ப் பருகுமெனப் பிறையிட்ட திருச்சடையிற் பெயனான்கும் வரவிடுத்தான். (இ-ள்.) முறையிட்ட செழியன் எதிர் - அங்ஙனம் முறையிட்ட பாண்டியன் எதிரே, கறை இட்டு விண்புரந்த கந்தரசுந்தரக் கடவுள் - நஞ்சக்கறையைப் பொருந்தித் தேவர்களைக் காத்தருளிய திருமிடற் றினையுடைய சோமசுந்தரக்கடவுள், முறுவலித்து - புன்னகை புரிந்து, அஞ்சலை என்னா - அஞ்சாதே என்றருளி, துறை இட்டு வருகடலை - பலதுறைகளையிட்டு வருகின்ற கடலை, சுவறப் போய்ப் பருகும் என - அது வற்றுமாறு போய் உண்ணுங்கள் என்று, பிறை இட்ட திருச்சடையில் பெயல் நான்கும் வரவிடுத்தான் - குழவித்திங்களையணிந்த திருச்சடையிலுள்ள முகில் நான்கனையும் செல்ல விட்டான் எ-று. புரந்தமை கந்தரத்திற்கேற்றி யுரைக்கப்பட்டது. கந்தரத்தினது சுந்தரத்தையுடைய என்பதோர் பொருள் தோன்றுமாறும், கந்தர சுந்தரம் என்னும் சொல்லழகும் நோக்குக. பெயல் - பெய் தலையுடைய முகிலுக்காயிற்று. (17) (அறுசீரடி யாசிரிய விருத்தம்) நிவப்புற வெழுந்த நான்கு மேகமு நிமிர்ந்து வாய்விட் டுவர்ப்புறு கடலை வாரி யுறிஞ்சின வுறிஞ்ச லோடுஞ் சிவப்பெருங் கடவுள் யார்க்குந் தேவெனத் தெளிந்தோ ரேழு பவப்பெரும் பெளவம் போலப் பசையற வறந்த தன்றே. (இ-ள்.) நிவப்புற எழுந்த நான்கு மேகமும் - உயர எழுந்த அந்நான்கு முகில்களும், நிமிர்ந்து வாய்விட்டு - நிமிர்ந்து முழங்கி, உவர்ப்பு உறு கடலை வாரி உறிஞ்சின - உவர்ப்பினை யுடைய கடல் நீரை அள்ளி உறிஞ்சின; உறிஞ்சலோடும் - அங்ஙனம் உறிஞ் சினவளவில் (அக்கடல்) சிவப் பெருங் கடவுள் யார்க்கும்தேவு எனத் தெளிந்தோர் - சிவமாகிய பெரிய கடவுளே யாவருக்கும் தேவனெனத் தெளிந்தவர்களின், ஏழுபவப் பெரும் பெளவம்போல - எழுவகைப் பட்ட பிறவியாகிய பெரிய கடல் வற்றுதல்போல, பசை அற வறந்தது - பசையின்றாக வற்றியது எ-று. உறிஞ்சுதல் - உட்புக இழுத்தல். கடவுளே யெனப் பிரிநிலை யேகாரம் வருவித் துரைக்க. தெளிந்தோராவர் ஐயமின்றித் துணிந்தவர் என்க. “ ஐயத்தி னீங்கித் தெளிந்தார்க்கு” என்பது தமிழ் மறை. யார்க்கும் என்றது, அயன்மால் உள்ளிட்ட தேவர்க்கும் என்றவாறு; “ பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால் தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.” எனத் திருநாவுக்கரசர் இரங்கித் கூறுதல் காண்க. மறை முதற்கலைக ளெல்லாம் மணிமிடற்றவனே யெங்கும், நிறைபரமென்றும் ..........அறைகுவது என இவ்வாசிரியர் முன் கூறினமையும் நோக்குக. அன்று ஏ : அசைகள். (18) அந்நிலை நகரு ளாரும் வானவ ராதி யோருந் தென்னவர் பிரானு மெந்தை திருவிளையாட னோக்கிப் பன்னரு மகிழ்ச்சி பொங்கப் பன்முறை புகழ்ந்து பாடி இன்னறீர் மனத்த ராகி யீறிலா லின்பத் தாழ்ந்தார். (இ-ள்.) அ நிலை - அப்பொழுது, நகருளாரும் வானவர் ஆதியோரும் - நகரத்திலுள்ளாரும் தேவர் முதலானவர்களும், தென்னவர் பிரானும் - பாண்டியர்கள் தலைவனாகிய அபிடேக பாண்டியனும், எந்தை திருவிளையாடல் நோக்கி - எம் தந்தை யாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலைப் பார்த்து, பன் அரும் மகிழ்ச்சி பொங்க - சொல்லுதற்கரிய மகிழ்ச்சி மிக, பல் முறை புகழ்ந்து பாடி - பலமுறை புகழ்ந்து துதித்து, இன்னல் தீர் மனத்தராகி - துன்ப நீங்கிய மனத்தினையுடையராய், ஈறு இலா இன்பத்து ஆழ்ந்தார் - முடிவில்லாத இன்பவெள்ளதில் மூழ்கினார்கள் எ-று. அன்பு ஆராமையாற் பாடினாரென்பார். ‘பன்முறை புகழ்ந்து பாடி’ என்றார். ஆழ்ந்தார் என்றமையால் இன்பமாகிய வெள்ளத்தில் என விரிக்கப்பட்டது; கடல் வெள்ளமும் அதனாலாய துன்ப வெள்ளமும் ஒழிய இன்பவெள்ளத்தில் மூழ்கினார் என்பதுதோன்ற, ‘இன்னல் தீர் மனத்தராகி யீறிலா வின்பத் தாழ்ந்தார்’ என்றார். (19) ஆகச் செய்யுள் 1306 மதுரைக்காண்டம் முற்றிற்று. செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை அகவடி யங்கை 97 அங்கதி னதிகப் 159 அங்கது கேட்டோர் 129 அங்கமுண் மறைந்து 126 அங்கவன் வரவுக் 76 அங்கவன் றிருமு 222 அங்குநின் றெழுந்து 200 அஞ்சலிசெய் தகநோக்கா 300 அஞ்சலி முகிழ்த்துச் 153 அஞ்சி லோதியை 27 அடற்கதிர் வேலோய் 195 அடித்தலு மசையா 204 அடியரே முய்யுமாறு 233 அடியரேம் பொருட்டு 13 அடியனேன் செய்யுங் 165 அடியிற நெடுவரையுதை 38 அடுக்க நின்றகுண் 23 அடுத்தனர் வானவ 182 அடுத்தா னதியின் 44 அட்டில்வா யடுக்குஞ் 132 அணைந்து கோயி 117 அண்ட ரஞ்ச வமரு 190 அதற்கிசைந் தவுணர் 264 அதிர்ந்தன முரசஞ் 197 அத்தகு தலமற் 220 அத்தகை யாவின் 266 அத்த யிர்ப்பதக் 32 அத்த னிச்சிறு 251 அத்தெய் வவிமா 65 அந்தணர் மகிழ்ச்சி 80 அந்தணிர் கேண்மின் 234 அந்நிலை நகரு ளாரும் 319 அந்நிலை மணநீ ராட்டி 130 அந்நெடு நாடு 200 அப்பொழு தமல 286 அராமுனி யீதுவேண்டு 14 அரிய ராலுந் 313 அருமறை நால்வே 241 அரும்பரி மகந்தொணூற் 144 அரைக்குமே லுலகே 3 அலகி லாவுத யந்தொறு 111 அலங்க லோதிகண் 26 அல்லியங் கமலக் 127 அல்லியம் பதிமஞ் 277 அவைசிதறும்புலந்தோன்று 291 அவ்வரை யரசை 203 அவ்வவர் மனைக டோறு 86 அவ்வழியிற் படுபவள 298 அளவறு கலைகட் 232 அளவி லாதநின் 22 அறக்கொடிபின் னிறை 69 அறத்துறை யந்த 211 அற்றது வாகிற் 312 அனந்தனா முனிவர் 10 அனித்த மாகிய 15 அனைய னாகியுநீர் 33 அன்புறு பதும 278 அன்றுநீர்க் கடவுள் 311 அன்று மெம்பிரா 34 அன்றொரு தவத்தோ 263 அன்னது சிறிது 178 அன்னதோர் தவசி 6 அன்ன நாள்வயின் 248 அன்ன மிறைகொள் 104 அன்ன மூன்று படைக்கல 139 அன்னவ ரகன்ற 176 ஆகையான் மறையு 236 ஆசனத் திருத்திப் 172 ஆடின குறைத்தலை 183 ஆடினா னமல 9 ஆதலாற் கன்றின்வால் 59 ஆதி சைவர் முதற்சைவ 115 ஆதியி லான்ம தத்துவ 237 ஆதியிவ் விலிங்கந் 167 ஆத்தன் றிருவுள் 61 ஆயதோர் வைகல் 178 ஆரொடுமட லவிழ்பனை 42 ஆர்த்தனர் கணத்தோர் 15 ஆர்த்தனர் மலயவெற் 182 ஆர்த்தன வியங்க 134 ஆலத்தை யமுத 81 ஆலமெழுந் திமையவர்மே 317 ஆவி யன்னவர்ப் 33 ஆனா வாறு சுவையடிசி 138 இடுக்கண்வந் துயிர்க்கு 187 இடைமயிர் நரம்பற் 125 இட்டவன் சிறையை 187 இத்தகு பண்பு 98 இத்தனை வரவு 206 இந்தமணி பாரியாத் 295 இந்திரக் கடவு 306 இந்திர சால விச்சை 75 இந்திரண்டனைய 185 இந்நிறத்த பொதுவாய 268 இமையக் குன்றமு 20 இம்மணியா லிழைத்துநவ 301 இம்மணி வலனுடற் 257 இம்மை தனிலு நன்மதரு 137 இரவிதன் மருமான் 131 இரவி மருமான் 107 இரவியெதி ளரியிறைக்குங் 299 இருந்தனர் கீழ்த்திசை 257 இலங்கொளிய விந்நீல 292 இவ்வடி வெடுத்துத் 267 இனையவா றுத்தா 172 இனையவை யளந்து 276 இன்றுகேட்டி லயோ 207 இன்னணங் களிப்ப 88 இன்ன வாறெழுந்த 148 இன்னவை யிரண்டு 239 ஈதுநோற் பவர்வெம் 173 ஈறிலா னளித்த 261 உடலள வெண்ணி 168 உடுத்திர ளனைய 281 உத்தம சயம்புக் குள்ளு 234 உத்தம வானோர் 158 உத்தரிய வெண்படம் 229 உருக்குநறு நெய்த்துளி 294 உருக்குந் திறலுக் 101 உலகிய னிறுத்து 1 உலம்பொரு தடந்தோர் 215 உள்ளக் கமல முககமல 104 உற்றது கழிந்தப் 202 உன்னதமாறு 95 எடுத்த வேல்வ லந்தி 150 எடுத்தனண் மோந்து 81 எண்ணி லாத வளத்தினொடு 135 எண்ணிறந்த தேவர்க்கும் 70 எந்தையித் திருக்கூத் 14 எல்லையில் கலைக ளெல்லா 91 எல்லையின் மூர்த்தி 98 எழுகட லழைத்தவா 56 எழுந்தது விமானம் 66 எள்ளியிடு குற்றமெலா 273 எற்ற தும்புகோ 254 என்பட ரெய்துகின் 256 என்ற போதிறை 21 என்றவ னெதிர்யா 157 என்றிவை யாதி யாய 99 என்றுநின் றேத்தி 13 என்றுமுனி விளம்பக்கேட் 52 என்றுவேண் டலும்வர 259 என்னலு மந்தக் 3 என்னவவ் விலிங்கந் 312 என்னவு மெளிய 77 என்னாமுன் வழுத்தலுறும் 304 ஏதமில் பவித்திரம் 230 ஏத்திவலங் கொண்டிருநான் 305 ஏனமா வாரஞ் 280 ஐந்தமு தாவி னைந்து 162 ஐம்பெரும் பூத 216 ஐய வின்னுமிக் 27 ஐவினை நடாத்து 213 ஒண்கொண் டன்மிடற் 64 ஒன்றாகி யைந்தா 12 ஒன்றினைச் செய்கை 74 ஓடின ரொற்றர் 181 ஓதரு மகார 238 ஓதவரும் பொருள் 47 ஒருருவாய் நேர்நின் 302 கங்கையா றலம்பு 9 கடம்படி முளைத்த 161 கடலு முள்ளமுங் 111 கடிபடு கற்பக 260 கட்டவிழ் கண்ணி 129 கண்கடை சிவந்தான் 119 கண்டனன் கடவுணாதன் 178 கண்டிகை தொடுத்திரு 229 கண்ணி றைந்த வமளி 149 கந்தமலர்த் தனிக்கடவுள் 315 கரியமருப் பைவாய் 279 கரியவெண் டிரைநீர்ச் 88 கருங்குழற் கற்றை 128 கருமணிச் சிகரச் 76 கருமத்தான் ஞான 243 கரைகடந் துள்ளங் 223 கரைசெ யாய்பெருங் 254 கல்லார் கவிபோற் 42 கல்லிற கரிந்தோ 314 கவன மால்விடை யாளி 30 கழையிலை கார் மயிலெருத் 297 களிதருசெள கந்திகத்தி 270 கள்ளமுள ரிக்குண் முரல் 231 கள்ளவினைப் பொறிகடந்து 48 கனவில் வந்த சித்த 149 கன்றக லான்போ 67 கன்னிப்பொன் னெயில்சூழ் 210 கன்னியர்க்கர 18 காசணி பொலம்பூண் 163 காடமே சுப்பிரமே 287 காணுமா நகர்பனிப்பக் 54 காதணி கலனுங் 171 காய்சின மடங்க 185 காய்சின வெய்யோன் 157 காலையி லாசான் 169 காழ்கெழு கண்டத் 309 காற்றினுங் கடியமாவிற் 92 கிடைத்துமற் றனைய 196 கிரியையான் ஞானந் 244 கீட்டிசை முகத்தொன் 240 குடபுலத் தரசும் 83 குடைந்தார் கரையே 63 குடையெ டுக்குமிக் 23 குரும திக்குல 31 குருமுகத் தறியவேண்டு 90 குருவிந்தந் தரிப்பவர் 272 குலனுங் குடியுங் 106 குறுநிலக் கிழவ 274 குறுநிலத தரசுந் 283 குனிவி லாதிரைத் 16 கைதலை முகிழ்த்துக் 224 கையர் முப்புரத் 29 கொங்கலர் கோதை 211 கொதித்த லைக்கரங்க 146 கொதித்தெழுந்து தருக்க 315 கொய்யுஞ்செங் கமலப் 8 கொவ்வைவா யதரந் 121 கோடு வில்லொடு மேகக் 110 கோதறு கற்பினாய் 58 கோமக னிகழு 155 கோழிணர் ஞாழலன்ன 198 சங்க வார்குழைக் 28 சஞ்சையாம் பகற்கடவுண் 290 சத்திய ஞானா னந்த 162 சந்தவெற் படைந்து 93 சந்த வேத வேள்வி 150 சந்நிதி யடைந்து 155 சரியவன் கமலச் சலத்தலைக் கிடக்கைப் 82 சாதரங்க நிறங்கமலங் 269 சித்திரை மதியிற் 309 சிலம்பு நூபுரச் 24 சிலைப்படு முகிலூ 311 சிலையத் திரியார் 60 சிறிது நாள்கழிந் 250 சிறிது வாணகை 21 சிறுகிய வயிறுந் 94 சீதமணி மூரறிரு 231 சீதளப் பளிக்கு 226 சீனர் சோனகர் சிங்களர் 113 சுகந்த வார்பொழின் 248 சுண்ணமு பொரியுந் 87 சுந்தரனென் றெழுதியகூட சுந்தரன் றன்னைப் 174 சுருங்கு மிடையார் 136 சூட்சி வினையிற் 140 சூர்முத றடிந்த 93 சூலமோ டழலேந்துஞ் 316 செக்கரஞ் சடையுந் 8 செங்கைநீண் டுருண்டு 123 செம்பொன்செய் துருத்தி 87 செல்வ மாநக 81 சேணுற் றவனைச் 62 சொல்லிய நெறியாற் 174 சோம சேகரன் 117 தக்கமுத் திரண்டு 278 தங்குடிமைத் தச்சனையோர் தண்டக நாடு 199 தண்டே மொழிவேள் 62 தண்ணிலா மெளலி 72 தந்தி டப்பணிக் 36 தந்தைதன் காமக் 308 தருமமா தவத்தின் 85 தலத்தினைச் சுத்தி 277 தவவலியா லுலகீன்ற 49 தஷூந்தன தாள்சிரந் 182 தன்வண்ண மெழுகடலின் 54 தன்னமர் காதலி 57 தன்னரு ளதனா 5 தன்னுயிர்க் கிழவனை 59 தாதவிழ் மல்லிகை 57 தாழ்ந்தபிலத் திழிந்தெரி 295 தாழ்ந்துநின் றியம்பும்யான் 258 தானவர் பகைவன் 184 திகழ்தருகரி பரிகவரிகள் 41 திங்களி னுக்கிரச் 143 திண்ணியதாய் மேல்கீழ்சூழ் 271 திண்மதவேழ மத்தகம் 119 திருத்தயாத் திரையதிக 51 திருவடி பிழைத்த 207 திருவள ராரூர் 4 திரைக்கடல் விடஞ்சேர் 194 திரைவளைக் கழுத்துத் 123 திரைவளையணி கரமுடை 36 தீந்தண் பாற்கடல் 115 தீந்தண் புனல்சூழ் 103 தீர்த்தனிதழிச் 45 தீர்த்தன் சடைநின் 44 துங்கக் கலைவே 63 துண்டமதத் திரளனைய 53 துந்துபி யைந்து 153 தெய்வ நீறுமைந் தெரிசித் தோர்படிந் 35 தெருட்பெறு போகம் 246 தெளிதரு விசும்பி 221 தென்கடல் வடபா 199 தென்ற னாடன் ஷூருமகளைத் 108 தென்ன ரேறு சாத 191 தென்னர்மர பிறந்ததெனப் 71 தேங்கு நீர்த்திரை 34 தேமா ரியெனும் 65 தேவர்கோ னேவ 188 தேவிதிரு மொழிகேட்டு 53 தேன்செய்த கொன்றை 302 தொக்க மள்ள 112 தோடலே சாஞ்சிதமே 288 தோற்றவா னாடவன் 259 நட்ட மாடிய 28 நலமவி விரத நோற்கத் 159 நறியநெய் யாதி 310 நறிய பூங்குஞ்சி 96 நன்றிது மொழிந்தா 261 நாடிப் பொன்னறை 253 நாலாகு மதியிற் 89 நாற்ற டந்திசைத் 31 நித்த நியமக் கடனிரப்பி 105 நிருத்தனுறை பதிபல 50 நிவப்புற வெழுந்த 318 நிறைபரா பரம்விஞ் 235 நீடியபில முறுநிலையன 40 நீண்டதிரி முண்டமழ 228 நூலொ டுந்துவக் 113 நென்ன லெல்லை மணம்பேச 106 பங்கயச் செவ்வித் 94 படைக்க ணேவல 24 பணிந்தொ துங்கிநின் 20 பண்டுபோற் பின்னு 216 பண்ணிய தவத்தா 220 பண்ணிய வகைபா 163 பண்ணுக தேர்பரி 181 பதிநிரை பாழிசாகை 90 பராபர முதலே 11 பல்ப ழக்குவை 25 பவளக்காற் பிச்சம் 198 பன்ன கேசனு 18 பன்னருங் கணங் 141 பாட்டின் பொருளா 45 பாரித் துள்ளவிப் 26 பார்த்திபர் மதிக்கு 275 பான்முத்தம் வருணன் 281 பிணையொடு கலைபிடியொடு 37 பிரணவ முதித்த 217 பிளிறொலியின முதுமரமகள் 39 பிறநிறச் சார்பு 274 பிறைதவழ் கயிலைக் 4 பின்ன ருக்கிரப் 142 பின்னரும் பெறற் 249 புகர்மத வேழ முட்டிப் 91 புடைத்தபின் மேருத் 206 யுடைவரைக் குலங்க 205 புண்ணிடை நுழைந்த 151 புண்ணிய மலர்மென் 1 புண்ணிய முனிவர் 78 புரகர னிச்சா ஞானக் 164 புரவலன் தடாதகைப் 56 புரவி வெள்ளமும் 110 புலர்ந்தபின் னித்த 170 புல்லரிய பிதுகமென 287 புவலோகங் கடந்துபோய்ப் 68 புவனியிம் முறையாற் 213 பூசனை புரியு 310 பூசு கின்றவு 19 பெருக நீண்டறவுங் 118 பெருவிலை யாரப் 133 பொதியவிழ் கடப்பந் 134 பொருங்கடல் வேந்தனைக் 145 பொருங்கட னிறத்த 7 பொருவிலிவ் விரத 167 பொற்புற வரிசை 177 பொன்மலைக் கடவு 212 பொன்றத்து மருவிக் 179 பொன்னவிர் கமலம் 2 பொன்னவிர் திலங்குகோ 255 போரினுக் காற்றா 186 போர்மகட் குறையு 307 மகவுறு நோயை 193 மங்கல நீரா னம்பி 130 மங்கல மரபான் 307 மஞ்சோ தியகாஞ் 63 மடங்கன்மா நாகம் 201 மடங்கிதழ் சுருங்கல் 165 மடந்தையு மன்னையைக் 57 மடைவளத் தொழிற் 20 மணித்தலை மலையின் 266 மண்ணகல்தலின் வளையணி 40 மண்புதைக்கத் திசைபுதை 316 மண்பே றடைவான் 60 மதுமுகத் தலர்ந்த 7 மந்ததோ டங்கலப 289 மந்தரங் காசி 158 மந்தி ரப்புரி 255 மரகதத் தோற்றங் 285 மருட்படு மாயை 219 மலர்மக னாகி மூன்று 236 மல்கு மாறில் கோடி 192 மழைவறந்த 193 மறைபல.....டலறிவா 242 மறைபொருள் காணா 225 மறையவர் வாய்மைபொன் 58 மறைவழி மதங்கட் 245 மற்றதற் கிசையத் 74 மற்ற வேலைகா 252 மனிதர்வான் றவமோ 85 மன்ன வன்குல சேகரன் 72 மன்னவன் வெறுக்கை 208 மன்ன வன்ற னக்கு 190 மன்ன னாணையா 252 மன்னனைத் தேவி தன்னை 83 மன்னிய நாடெலாம் 144 மாசறத் துறந்தோ 78 மாசறு தவத்தோ 282 மாடம் புதுக்கிப் 108 மாடவென் புறவின் 280 மாணிக்க மிமைக்கும் 204 மாதண்ட வவுணன் 262 மாத்திமர் விராட 210 மாமணி மரபுக் 284 மானதமே வாசிகமே 49 மானமனி வோரதி 228 மின்பயில் பரிதிப் 5 மின்ஷூகழ் மணிப்பூண் 209 மின்னகு வேலான் 209 மின்னவிர் மணிப்பூண் 155 மின்னேர் பொன்னந் 135 மீன வேலையிற் கந்துக 112 முகமனன் கியம்பி 176 முக்கணும் புயங்க 152 முடங்கல் கொண்டணைந்த 187 முடங்கன்மதி முடிமறைத்த 47 முண்ட நெற்றியர் 114 முதனுகர் நீராற் 241 முத்தணி தனங்கள் 124 முந்தியவிந் திரநீலம் 290 முந்துறு கணங்கண் 6 முந்தைநான் மறைக 79 முரவை போகிய 25 முள்ளரை முளரிக் 286 முறையிட்ட செழியனெதிர் 318 முனிவர்கந் தருவர் 10 முனிவனை யடைந்து 156 முன்புதம் முருவாய் 66 முன்னர் மாலை முடியணி 109 முன்னவ ரென்ப 275 முன்னைத் தவமெய் 61 முன்னைவல் வினையால் 67 மெல்லியதாய்ச் சிவந்து 122 மேவரும் வலனெனு 258 மேவல னல்லை 263 மைக்கடல் வறப்ப 175 மைந்த கேட்டி யிருந்திரனுங் 139 மைந்துறுசெம் மணிமுத்து 293 மைந்துறு மடங்கற் 131 யாத்தனர் தருப்பைத் 265 யாவையு மீன்றா 202 வங்க வேள்வெள்ள 146 வடநிழ லமர்ந்த 227 வட்ட நீர்க்கலக் 114 வட்ட யாமை பலகை 147 வட்டவாண் மதிகண் 232 வண்டுவரி பாடுவன 230 வண்டோதை மாறா 43 வண்மாந் தளிர்போற் 127 வந்தவ ரெதிர்வரு 256 வந்தவே தியனை 218 வந்தான் மருகன் 61 வயந்த னைப்ப யந்த 191 வயிறுதோ ணெற்றி 96 வருணனு மேகி 314 வலத்தவுணன் றசைவீழ்ந்த 298 வலம்புரி யென்ன 95 வலன் மயிராம் வயிடூய 296 வழுதியர் பெருமான் 84 வழுதி யுன்ற னகர 148 வளையெயின் மதுரை 154 வளையொடு செண்டுவேன் 143 வள்ளறன் குடைக்கீழ்த் 195 வள்ள றன்னை வள்ளைபோல் வார்ந்து 120 வன்மனங் கரைய 166 வாங்கி வாங்கிவாய் 32 வாங்குநீர் வறப்ப 180 வாசிகமைந் தெழுத்தோத 50 வாய்மையான் மாண்ட 265 வாளவிரு மாணிக்கங் 267 வான மதிசேர் 137 வான்வழி வந்த 175 விசையநின் றோள்வலி 260 விடங்கலுழ் படைக்கல 259 விண்ணின் றுவழுக் 64 விதிர்த்தவே லனைய 285 விரைசெய் தார்முடிச் 117 விரைபடுமகி லரைபொரி 37 வில்வமா யிரங்கொண் 169 விழித்தன னெழுமான் 196 விளைவது தெரிகிலேன் 145 விளைவொடு மூன்றுமூதூர் 133 வெங்கதிர் படைவிட் 184 வெஞ்சின வலாரிதன் 183 வெண்க ளிற்றவன் 116 வெம்படை மறவர் சேனை 203 வெய்யவன் கிழமை 276 வெய்யவேற் காளை 141 வெல்லுதற் கரியார் 99 வெள்ளைக் களிற்றின் 103 வெள்ளைமந் தார முல்லை 161 வேங்கை வாய்ப்படு 251 வேட்டத்திற்பட்ட 180 வேத நாயகன் 30 வேதமுனி கோதமனுந் 48 வேளென வந்த 306 வேறு மாமுடி 253 வைகறை யெழுந்து 160 வையைக் கிழவன் 102 ந.மு.வே.நாட்டார் வாழ்க்கைச் சுவடுகள் பிறப்பு: - நடுக்காவிரி, 12. 3. 1884 திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தந்தை - வீ.முத்துசாமி நாட்டார் தாய் - திருமதி தைலம்மை இளமைக் கல்வி: திண்ணைப்பள்ளி - நடுக்காவிரி தொடக்கப்பள்ளி - 3,4 ஆம் வகுப்புகள் நடுக்காவிரி தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1905 - பிரவேச பண்டிதம் 1906 - பாலபண்டிதம் 1907 - பண்டிதம் ஆறு ஆண்டுகள் படிக்க வேண்டியதை மூன்றே ஆண்டுகளில் படித்து முதல் வகுப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற பாராட்டுக்குரியவர். பொற் பதக்கம், தங்கத்தோடா, அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். ஆசிரியர் பணி 1908 - பிசப் ஈபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 1909 - தூய மைக்கேல் உயர் நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் 1910-1933 - தமிழ்ப் பேராசிரியர் பணி (22 ஆண்டுகள்) எஸ்.பி.ஜி. கல்லூரி , திருச்சிராப்பள்ளி 1933-1940 - தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் 1940 - சென்னை மாகாண தமிழர் மாநாட்டில் ‘நாவலர்’ பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டவர். 1941-1944 - மதிப்பியல் முதல்வர் கரந்தைப் புலவர் கல்லூரி தஞ்சாவூர் 28.3.1944 - இவ்வுலக வாழ்வில் இருந்து மறைந்தார். குறிப்பு : நாட்டார் தொடர்பான வரலாற்றுச் சுவடுகளின் விரிவான செய்திகளை பதிப்பாசிரியரின் முன்னுரையிலும், நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண். 22 லும் பார்க்க) நாவலர் ந.மு.வே நாட்டார் எழுதிய நூல்கள் / உரைகள் நூல்கள் 1915 - வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 1919 - நக்கீரர் 1921 - கபிலர் 1923 - கள்ளர் சரித்திரம் 1926 - கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் 1928 - சோழர் சரித்திரம் உரைகள் 1925 - இன்னாநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஆத்திச்சூடி,கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை, மூதுரை, உலகநீதி, நல்வழி, நன்னெறி திரிகடுகம் - கையெழுத்துப் படியாகக் கிடைத்து முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் தொகுதி எண் : 20 இல் பார்க்க. 1925 - 1932 - திருவிளையாடற்புராணம் 1940 - சிலப்பதிகாரம் 1942 - மணிமேகலை 1940 - 42 - கட்டுரைத்திரட்டு (இரண்டு தொகுதிகள்) 1944 - அகநானூறு உரைத்திருத்தம் : 1940 - தண்டியலங்காரப் பழைய உரை யாப்பருங்கலக்காரிகை அகத்தியர் தேவாரத்திரட்டு 1930 - பிப்ரவரி 11,12,13,14 ஆகிய நாட்களில் சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளை சார்பாக தொல்காப்பிய ஆராய்ச்சி சொற்பொழிவு. (இந்த சொற்பொழிவு இதுவரை வெளிவராதவை கையெழுத்துப் படியாகக் கிடைத்தது. முதன் முதலாக வெளிவருகிறது. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் தொகுதி எண் - 17 இல் 15-வது கட்டுரையில் பார்க்க .) நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் நூல்கள் / கட்டுரைகள் 24 தொகுதிகளாக வெளிவருகின்றன. நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் சிலப்பதிகாரம் தொகுதி 1 1) புகார்க் காண்டம் தொகுதி 2 2) மதுரைக் காண்டம் தொகுதி 3 3) வஞ்சிக் காண்டம் மணிமேகலை தொகுதி 4 4) மணிமேகலை 1 தொகுதி 5 5) மணிமேகலை 2 அகநானூறு தொகுதி 6 6) களிற்றியானைநிரை தொகுதி 7 7) மணிமிடை பவளம் தொகுதி 8 8) நித்திலக் கோவை திருவிளையாடற்புராணம் தொகுதி 9 9) மதுரைக் காண்டம்-1 தொகுதி 10 10) மதுரைக் காண்டம்-2 தொகுதி 11 11) மதுரைக் காண்டம்-3 தொகுதி 12 12) கூடற் காண்டம் -1 தொகுதி 13 13) கூடற் காண்டம் -2 தொகுதி 14 14) திருவாலவாய்க்காண்டம் -1 தொகுதி 15 15) திருவாலவாய்க்காண்டம் -2 தொகுதி 16 16) இலக்கியக் கட்டுரைகள் 17) இலக்கணக் கட்டுரைகள் தொகுதி 17 18) சொற்பொழிவுக் கட்டுரைகள் 19) வரலாற்றுக் கட்டுரைகள் தொகுதி 18 20) வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி 21) சோழர் சரித்திரம் 22) கள்ளர் சரித்திரம் தொகுதி 19 23) நக்கீரர் 24) கபிலர் 25) அகத்தியர் 26) இளம்பூரணம் நீதிநூல்கள் + பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் தொகுதி 20 27) ஆத்திசூடி 28) கொன்றைவேந்தன் 29) மூதுரை 30) நன்னெறி 31) நல்வழி 32) உலகநீதி 33) நறுந்தொகை 34) இன்னா நாற்பது 35) களவழி நாற்பது 36) கார்நாற்பது 37) திரிகடுகம் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 21 38) நாட்டார் நாட் குறிப்பு -1 - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 22 39) நாட்டார் நாட் குறிப்பு -2 மற்றும் வாழ்க்கை வரலாறு - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 23 40) கல்வெட்டுகளின் குறிப்புகள், சாசனங்கள் - முதன் முதலில் வெளிவருகிறது. தொகுதி 24 41) நாட்டார் புலமையும் பண்பும் L L L குறிப்புகள் (பா-ம்) 1. காவே நாபி. (பா-ம்) 1. கண்ணீரு நணைந்து, (பா-ம்) 1. நெடியநற் பரமானந்த; நெடியவ பரமானந்த (பா-ம்) 1. நின்றியார்க்கும் (பா-ம்) 2. பரித்தருள் (பா-ம்) 1. உறைகின்றாம் (பா-ம்) 1. இனிது வைகியாயிரத்தெட்டம் மந்திரமெண்ணி. (பா-ம்) 1. ஏனையோர் செல்லுநர் (பா-ம்) 1. வருக்கமுமனைய; வருக்கமு மனைத்தே (பா-ம்) 1. களையடைந்தவராக (பா-ம்) 1. அகட்டிடை யழலை யிடுக்கண் செய்திடு வடவைபோ லெரிவுற நினைத்தான் துடைக்கு மால முண்டாங்குடன் சேர்ந்து. (பா-ம்) 1. கண்புதைத்திருந்தார். (பா-ம்) 1. சுந்தரன்றாளில். (பா-ம்) 1. நனைய வார்குழ லோதியை. (பா-ம்) 1. அதிகத் திருநதிகள். (பா-ம்) 1. உதைந்து (பா-ம்) 1. வெள்ளி மன்றுணின்றாடும் (பா-ம்) 1. மாதருந் தொடுத்திட (பா-ம்) 1. பாவியெற்கு. (பா-ம்) 1. சுராதியார். (பா-ம்) 1. வேட்டல் (பா-ம்) 1. மங்கலங்க ளார்ப்பு (பா-ம்) 1. சிந்தத்தக்க காரணமே யன்றி, உரியதன் பெயர்க்கு மேற்பவுக் கிர வரும் னென்றான். (ம.இராம) (பா-ம்) 1. பூணனூல் (பா-ம்) 1. மூட்டிப் (பா-ம்) 1. விருந்தூண் (பா-ம்) 1. கைவிடா காக்கு. (பா-ம்) 1. சொல்லுதற்கரிய கீர்த்தி (பா-ம்) 1. வரைவில் கால்வலி (பா-ம்) 1. கொண்டன. (பா-ம்) 1. குறுகிடாதாகி. (பா-ம்) 2. கடையதாய், நெறிந்து, புன்மையதாகி, நெய்த்து. (பா-ம்) 1. இனியது (பா-ம்) 1. வெள்கிச் சிறிதுயர்ந்திருப்பினன் கென்பர் (பா-ம்) 1. சிபுகம் (பா-ம்) 1. செங்கையங் குலிநீண் டுருண்டுகண் மரீஇநேர் சிறுத்திடில் (பா-ம்) 1. உக்கிரகுமரன். (பா-ம்) 2. மானமத்தமான். (பா-ம்) 1. என்பேர் (பா-ம்) 1. அரசுரிமை தனிச் செங்கோலும். (பா-ம்) 1. சுரும்பரினிசைத்தருத் தோன்றல் (பா-ம்) 1. உதித்த லொத்து (பா-ம்) 2. வெள்ளை மாடம் (பா-ம்) 1. மண்ணிறைந்த (பா-ம்) 2. எண்ணிறைந்த (பா-ம்) 1. நிறைந்து (பா-ம்) 1. யாதினாலென்று (பா-ம்) 1. காசியாதிபதிகளில். (பா-ம்) 1. முதலவான அடங்கலுங் குற்றமேயாம். (இராமசுவாமிப் பிள்ளை) (பா-ம்) 1. ஆற்றிப் (பா-ம்) 1. விண்டது (பா-ம்) 1. தன்னாட் (பா-ம்) 1. மல்குமாறு (பா-ம்) 1. ததும்ப (பா-ம்) 1. கிரிச்செருக் (பா-ம்) 1. கான நோக்கி (பா-ம்) 1. மாடபந்தி (பா-ம்) 1. ஐயா (பா-ம்) 2. தாழ்ந்து (பா-ம்) 1. முகமன் செப்பத். (பா-ம்) 1. திங்கள் சூழ். (பா-ம்) 1. போதமுடி (பா-ம்) 1. வட்டவான். (பா-ம்) 2. உவர்க்கடல் (பா-ம்) 1. முடியில் (பா-ம்) 1. இவனையர்ச்சிக்க. (பா-ம்) 2. கிளைத்தாங்கு (பா-ம்) 3. வேண்டியங்கு (பா-ம்) 1. புகுந்தனர். (பா-ம்) 2. உழந்திது. (பா-ம்) 3. போயீனதாகும் (பா-ம்) 1. மறைகளி (பா-ம்) 1. பதினாயிரகோடி (பா-ம்) 2. போனதென்று (பா-ம்) 1. பரந்தவச் சீர்த்தி (பா-ம்) 1. புரிவனானப் (பா-ம்) 1. பெருந்தகை யாவை. (பா-ம்) 1. மாசெண்ணி (பா-ம்) 1. மறுவுறு (பா-ம்) 1. மரைகள் வாய. (பா-ம்) 1. பண்டிதர், மு. கதிரேசச் செட்டியாரவர்கள் மொழி யெர்த்த - ‘சுக்கிர நீதி ’ 185,186 ஆம் பக்கங்களிற் காண்க. (பா-ம்) 1. பேழ்வாய்க்கோடு (பா-ம்) 2. வெள்ளை நிறுத்தது (பா-ம்) 1. புடிதமென்ன. (பா-ம்) 1. இன்னுநீலம். (பா-ம்) 1. வழிபடுந்துப்பு (பா-ம்) 1. பொன்னாகும். (பா-ம்) 1. தாழ்ந்து (பா-ம்) 1. அடரவரும்.